Venmurasu X
- Get link
- X
- Other Apps
- அணிமுகப்பு
- களம் ஒன்று, சித்திரை
- [ 2 ]
- [ 3 ]
- [ 4 ]
- [ 6 ]
- [ 8 ]
- [ 11 ]
- பகுதி இரண்டு: வைகாசி
- [ 3 ]
- [ 5 ]
- [ 7 ]
- [ 9 ]
- [ 11 ]
- [ 13 ]
- [ 15 ]
- [ 17 ]
- பகுதி மூன்று : ஆனி
- [ 4 ]
- பகுதி நான்கு : ஆடி
- [ 4 ]
- [ 6 ]
- [ 8 ]
- பகுதி ஐந்து : ஆவணி
- [ 2 ]
- [ 4 ]
- [ 6 ]
- [ 9 ]
- [ 11 ]
- [ 12 ]
- [ 14 ]
- பகுதி ஆறு : பூரட்டாதி
- [ 3 ]
- [ 5 ]
- [ 7 ]
- பகுதி ஏழு : ஐப்பசி
- [ 4 ]
- [ 6 ]
- [ 8 ]
- [ 10 ]
- [ 12 ]
- [ 14 ]
- [ 16 ]
- [ 17 ]
- பகுதி எட்டு : கார்த்திகை
- [ 4 ]
- [ 7 ]
- [ 8 ]
- [ 10 ]
- [ 12 ]
- [ 14 ]
- [ 16 ]
- [ 17 ]
- [ 20 ]
- [ 22 ]
- பகுதி ஒன்பது : மார்கழி
- [ 3 ]
- [ 4 ]
- [ 6 ]
- [ 8 ]
- [ 9 ]
- [ 10 ]
- பகுதி பத்து : தை
- [ 3 ]
- [ 4 ]
- [ 6 ]
- [ 8 ]
- [ 10 ]
- [ 12 ]
- [ 14 ]
- [ 15 ]
- [ 17 ]
- [ 18 ]
- [ 21 ]
- [ 24 ]
- பகுதி பதினொன்று : மாசி
- [ 2 ]
- [ 4 ]
- [ 6 ]
- [ 7 ]
- [ 9 ]
- [ 11 ]
- [ 13 ]
- [ 14 ]
- [ 16 ]
- [ 17 ]
- [ 20 ]
- [ 21 ]
- பகுதி பன்னிரண்டு : பங்குனி
10-பன்னிரு படைக்களம்
ஜெயமோகன்
Panniru Padaikkalam tells the story of the Rajasuya ritual held by Pandavas in Indraprastha and the incidents leading to Draupadi's arrival at Asthinapuri, Slayings of Jarasandhan and Sisupalan and Draupadi vastraharan.!
அணிமுகப்பு
எழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம் எழுக! எழுந்தெழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம்! அம்மா, பன்னிரு படைக்களம். பன்னிரு படைக்களம் தாயே! மாகாளி, கருங்காளி, தீக்காளி, கொடுங்காளி, பெருங்காளியே! உருநீலி, கருநீலி, விரிநீலி, எரிநீலி, திரிசூலியே! காளி, கூளி ,கங்காளி, செங்காலி முடிப்பீலியே! எழுக, பன்னிரு பெருங்களத்தில் எழுக! எழுக, பன்னிரு குருதிக்குடங்களில் எழுக! எழுக பன்னிரு கொலைவிழிகள்! எழுக பன்னிரு பெருங்கைகள்! எழுக பன்னிரு தடமுலைகள்! எழுந்தெழுக பன்னிரு கழல்கால்கள்! எழுக அன்னையே! எழுக முதற்சுடரே! எழுக முற்றிருளே! எழுக அன்னையே, எழுந்தெரிக இக்களத்தில்! நின்றாடுக இவ்வெரிகுளத்தில்! எழுக பன்னிரு படைக்களம்! படைக்களமாகி எழுக அன்னையே!
ஐந்து ஆறுமுகம் கொண்ட அன்னை நீ. நீ துர்க்கை. நீ லட்சுமி. நீ சரஸ்வதி. நீ சாவித்ரி. நீ ராதை. இன்மையென்றிருந்து இருப்பென்றாகி இவையனைத்துமென இங்கெழுந்து ஆறாகப்பிளந்து எழுந்த அலகிலி நீ. கங்கையே, துளசியே, மானசையே, தேவசேனையே, மங்களசண்டிகையே, பூமியே! நீ அணுகருமை . நீ அப்பாலப்பாலப்பாலென்று அகலும் அண்மை. அன்னையே, உடைந்து உடைந்து பெருகும் உருப்பெருவெளி நீ.
அன்னையே, ஸ்வாகை, தட்சிணை, தீக்ஷை, ஸ்வாதை, ஸ்வஸ்தி என்றெழுக! புஷ்டி, துஷ்டி ,ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி ஆகி எழுக! வருக, கொலைக்காளி! குருதிநாக் கூளி! பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி, மேதா என்றாகி நிற்க! இல்லிதிறந்த எரிகுளமே. இற்றிறுந்து மாயை அடங்கும் மடிப்பே. எழுந்தெழுந்து இவையனைத்தும் தோன்றும் வெடிப்பே. திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்தியை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை என்றெழுக! ஆக்கி நிறைப்பவளே, அனைத்தும் உண்டு எழுபவளே. ஆடுக நின்றாடுக! நீ தழல். நீ நீர். நீ நாகம். நீ நெளிவு. நீ நாக்கு. நீ நஞ்சு. நீ சொல். நீ பொருள். நீயே இன்மை. தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா, பக்தி என எழுந்த துளிகடல் நீ. இங்கமர்க! இப்பன்னிரு படைக்களத்தில் அமர்க!
பன்னிருபடைக்களத்தில் உருளும் பகடை நான். பன்னிருமுறை புரள்கிறேன். பன்னிரு முகம் பூண்டு அவிழ்க்கிறேன். பன்னிருமுறை இறந்து எழுகிறேன். பன்னிரு ஆதித்யர்களின் விடியல். தேவி, பன்னிரு ஆதித்யர்களின் அந்தி. தேவதேவி, பன்னிரு ஆதித்யர்களின் இரவு. குன்றா ஒளியே. குறையாக் கதிரே. கருநிற வருணன் மணியொளிவிடும் வானம். இது முட்டத்தலையெடுக்கும் ஆடு என நீ. தேவி, உன் புன்னகை என சூரியன் எரியும் வானம். இதில் நீ திமிலெழுந்த காளை. குருதிமழை என சகஸ்ராம்சு எரியும் வானம். அன்னை, அது நீ உன்னை புணரும் இணை. தேவி, பொன்னிற தாதா. விழிபடைக்கும் வானம். நாற்றிசையும் கால் நீண்டு திசையழிந்த பெருநண்டு நீ. தேவி, கலங்கி எழுந்து தபனன் மிளிரும் வானம். முகிலனலென சிம்மம் உறுமும் வெளி. தூயவளே, இன்மையெனத் தெளிந்து சவிதா புன்னகைக்கும் வானம். அது உன் கன்னியெழில்.
இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. காளி, கன்னங்கருங்காளி, செம்பழுப்பு நிற கபஸ்தியின் கதிர்விரிக்கும் வானம். அது நீ நடுமுள்ளென நின்றாடும் துலா. ஒளிக்கதிர் சவுக்குகள் ஏந்திய ரவி அதிரும் வானம். தேவி, நீ நின்ற வானமோ ஒளிர்மஞ்சள். நீ சொடுக்கி வாலெழுந்த சீறும் கருந்தேள். பச்சைநிறப் பேரொளி கொண்டவன் யார்? பர்ஜன்யன் என்கின்றனர் அவனை. நீயோ அவன் முன் விரிந்த வில். பாலொளி பெருகிய திருஷ்டா உன் முடிமணி. நீ ஆழமறிந்த அன்னைப்பெருமீன். புகைமூடிப்பொலியும் மித்ரனின் வானில் நீ ஓர் அமுதகலம். நீலப்பெருக்கென எழுந்த விஷ்ணுவின் ஒளிவிரிவில் நீ ஒரு மூடா விழி. அன்னையே, பன்னிரு களங்களில் நிறைந்தவளே. அமுதமாகி எழுக!
இங்கென்றும் இவையென்றும் இனியென்றும் இருந்தவளே. தங்காத தழல்பெருக்கே. என்றென்றும் ஏதென்றும் நன்றென்றும் அன்றென்றும் கடந்தவளே. தணியாத பெருங்கடலே. இதுவென்று தொட்டு, ஈதென்று அறிந்து, அதுவென்று சுட்டி, அவையென்று கொண்டு, ஆதலென்றமைந்து, அல்லவென்று கடந்து, ஆமென்று உணரும் அளப்பரிதே. ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம். இறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக! ஓம் அவ்வாறே ஆகுக!
களம் ஒன்று, சித்திரை
முதற்படைக்களத்தில் எழுந்தவளே, நீ யார்? சொல்! உன் பத்து வலக்கைகளில் முப்புரிவேலும், வாளும், அம்பும், வேலும், ஆழியும், வடமும், கேடயமும், உடுக்கையும், மின்னலும் பொலிகின்றன. கீழ்க்கை அஞ்சலென எழுந்திருக்கிறது. தேவி, உன் இடது கைகளில் அரவம், வில், வல்லயம், மழு, துரட்டி, வடம், மணி, கொடி, கதை ஒளிர்கின்றன. கீழ்க்கை அருளலென கவிந்திருக்கிறது. உன் முகம் முடிவிலாது இதழ்விரியும் தாமரை. உன் விழிகளோ ஆக்கும் கனலும் அழிக்கும் கனலுமென இரு அணையா எரிதல்கள். தேவி, உன் புன்னகையோ அனைத்தையும் கனவில் மூழ்கடிக்கும் கோடிக்குளிர்நிலவு.
உன்னை சண்டிகை என்று அழைக்கிறேன். முதற்பேரியற்கையின் முகத்திலிருந்து முளைத்தவள் நீ. அன்னமென மாயம் காட்டி இங்கு அமைந்திருக்கும் அலகிலிகள் அனைத்தையும் ஈன்றமையால் அன்னையென்றானவள். அதுவல்ல என்று உணர்ந்து அன்னம் தானென்று தருக்கியபோது அது நீயே என்று வந்தமைந்தவள். அவையமைந்த வானம். அவையென்றாகிய ஒளி. நீ மாயையில் முதல்வி. மூவியல்பும் முழுதமைந்த உன்னை நீயே ஒளிர்புன்னகையால் கலைத்து ஆடல்கொண்டவள். மூவாயிரம்கோடி முகங்களென்றாகி இங்கு நின்றிருப்பவள்.
தேவி, தொல்பழங்காலத்தில் இப்புவியென்றிருந்த ஏழுபெருந்தீவுகளை ஒன்றென ஆண்ட கசன் என்னும் மங்கலமைந்தன் கனவிலெழுந்த உருவம் நீ. அவனால் மழைநீர் விழுந்த இளங்களிமண்ணில் மும்முறை அள்ளி உருட்டி உருவளிக்கப்பட்டவள். அவன் மடந்தையின் கைகளால் மலர்சூட்டப்பட்டவள். அவன் வேள்விக்குத் தலைவி என அமர்ந்தவள். அவன் குலத்திற்கு முதல் அன்னை. அவன் தொட்டில்களை மைந்தர்களால் நிறைத்தாய். அவன் வட்டில்களை அன்னத்தால் நிறைத்தாய். அவன் கொட்டில்களை கன்றுகளால் நிறைத்தாய். அவன் தலைமேல் மணிமுடியென அமர்ந்திருந்தவை உனது பொன்னிற பூவடிகள். முப்புரமெரித்த மூவிழியன் உன்னை வணங்கி உன் தாள்களை சென்னிசூடிச் சென்றான் என்கின்றனர் கவிஞர். அவர்கள் வாழ்க! அவர்கள் சொற்களைச் சூடும் என் சித்தம் வெல்க! ஆம், அவ்வாறே ஆகுக!
[ 1 ]
ஏழ்நிலமாண்ட அசுரகுலத்தின் முதல்மூதாதையின் பெயர் கசன். பன்னிரு பெருங்கைகளும் ஆறுமுகமும் கொண்டவன் அவன் என்றன அசுரபுராணங்கள். அவன் வழிவந்த ஆயிரத்தெட்டாவது மாமன்னனை தனு என்றழைத்தனர். கருமுகில்குவைகளால் கோட்டையமைக்கப்பட்ட விந்தியமலையின் சரிவிலிருந்த அவன் மாநகர் தானகம் ஆயிரம் குவைமாடங்கள் எழுந்த அரண்மனைநிரைகள் கொண்டது. அதன் நடுவே அமைந்த அவன் மாளிகைமுகட்டில் அசுரகுலத்தின் எருமைக்கொடி பறந்தது. விண்ணில் சென்ற தேவர்கள் குனிந்து வியந்து நின்று கடந்துசென்றனர் அம்மாநகரை. அவன் குலம் விந்தியமலையில் பன்னிரு மடிப்புகளின் நூற்றெட்டு சரிவுகளிலும் நடுவே விரிந்த ஐம்பத்தாறு தாழ்வரைகளிலும் தழைத்து நிறைந்திருந்தது. அவர்கள் அளித்த திறைச்செல்வத்தால் அவன் கருவூலம் நிறைந்தது. அவர்கள் வாழ்த்திய சொற்களால் அவன் மூதாதையர் உளம் நிறைந்தனர்.
தானகத்தின் மையத்தில் அமைந்திருந்தது அசுரர்களின் குடிதெய்வமான மங்கலசண்டிகையின் குகைநிலை. உள்ளே கரும்பாறையில் கீறலோவியமென அன்னை இருபது கைகளுடன் எரிவிழி மலர்ந்து நின்றிருந்தாள். அவளை வணங்கி நகரும் கொடியும் செல்வமும் புகழும் பெற்ற தனு தன் குலம்பெருகும் மைந்தரைப் பெறவேண்டுமென்று அவள் குகைக்குள் நாற்பத்தொருநாள் நீர் மட்டும் உண்டு தனித்துத் தவமிருந்தான். குகையிருள் கொழுத்து பருத்தபோது சுவரோவியம் புடைத்தெழுந்தது. அன்னை தோன்றி அவனிடம் “மைந்தா, நீ விரும்புவதென்ன?” என்றாள். “மைந்தன். மூவுலகும் வெல்பவன்” என்றான் தனு. அன்னை அருகே ஓடிய சிறு சுனை ஒன்றைச் சுட்டி “இவனை கொள்க!” என்றாள். அதில் கரியபேருடலுடன் தெரிந்த மைந்தனை நோக்கிய தனு அதிர்ந்து “அன்னையே, இவன் விழியற்றவன்” என்றான். “ஆம், மூவுலகை வெல்பவன் தன்னை நோக்கும் விழியற்றிருப்பான். தன்னுள்ளிருந்து எழும் தன் பாவையால் வெல்லப்படுவான்” என்றாள் மங்கலசண்டிகை.
“அன்னையே, தன்னைவெல்லும் மைந்தனை எனக்கருள்க! விழிகொண்டவனை அருள்க!” என்றான் தனு. “தன்னை வெல்பவன் செல்வதற்கு திசைகள் அற்றவன் என்றறிக!” என்று அன்னை சுனையைத் தொட்டு அலையெழுப்பி அப்பாவையை அழித்து பிறிதொன்று காட்டினாள். அங்கே ஒளிவீசும் மெல்லுடலுடன் எழுந்த மைந்தன் கால்களற்றிருந்தான். சூம்பிய சிறுகைகள் நெஞ்சோடு சேர்த்து வணங்கி தலை கவிழ்ந்திருந்தது. "அன்னையே, இவன் ஆற்றலற்றவன்” என்று தனு கூவினான். “ஆம், இவன் ஆற்றலனைத்தும் விழிகளிலேயே” என்றாள் அன்னை. “அன்னையே, நான் விழைவது இவ்வுலகையும் வெல்பவனை…” என்று தனு தவித்தான்.
“இருவரில் ஒருவரை தெரிவுசெய்க! இத்தருணம் இதோ முடியவிருக்கிறது” என்றாள் மங்கலசண்டிகை. “அன்னையே! அன்னையே!” என்று அவன் கூவினான். “என் செய்வேன்? என் செய்வேன் எந்தையரே?” அன்னையின் உருவம் இருளில் கரையத்தொடங்கியது. தனு “இவனை… கரியோனை கொள்கிறேன். வெல்க என் குடி!” என்றான். “ஆம்” என அன்னையின் அருட்கை எழுந்த கணமே “நில்! தன்னையறியாதவன் வென்றவை நிலைக்கா. மற்றவனை அருள்க! விழியோனை” என்றான். “அருள்கொள்க!” என அன்னை மொழிந்ததுமே “நில்! நில்! உலகை ஆளாதவன் என் குடிபிறந்து பயனென்ன?” என்றான் தனு. நெஞ்சுழன்று “என்ன செய்வேன்? என் தவநிறைவுக்கு என்ன செய்வேன்?” என்று அழுதான். “நீ விழைந்தால் நிகழ் மட்டும் நோக்கும் விழிகளும் இயல்வதை ஆற்றும் தோள்களும் கொண்ட எளிய மைந்தர் நூற்றுவரை உனக்களிக்கிறேன்” என்றாள் அன்னை. நெஞ்சில் கைவைத்து சற்றுநேரம் எண்ணியபின் தனு “இல்லை. முடிகொண்டு ஆளும் அசுரர்குடியில் எளியோர் பிறத்தல் இழிவு” என்றான்.
“முடிவுசூழ்க! இதோ இக்கணம் மறைகிறது” என அன்னை உருவழிந்துகொண்டிருந்தாள். கைகள் அலையலையாக ஓய்ந்து மறைந்தன. தோள்கள் கரைந்தழிந்தன. இதழ்களும் உருவழிந்தன. விழியொளிகள் மட்டும் எஞ்சிய இறுதிக்கணத்தில் சித்தம் துடித்து எழ “இருவரிலும் பாதி… அன்னையே இருவரிலுமே பாதி” என்று தனு கூவினான். கண்மணிகளால் நகைத்து “அவ்வாறே ஆகுக!” என்றருளி அன்னை மறைந்தாள். சுவரோவியம் விழிதீட்டி நின்ற இருள்குகைக்குள் மூச்சிரைக்க கண்ணீருடன் தனு தன்னையுணர்ந்து நின்றான். “அன்னையே!” என்று நெஞ்சில் கைதொட்டு கூவினான். “விடையின்றி வினாகொள்பவரின் தீயுலகைச் சென்றடைந்து மீண்டுள்ளேன். ஆவது அணைக!” என்று நீள்மூச்செறிந்தான்.
அவன் அச்செய்தியை சொன்னதும் அவன் துணைவி ரம்பை திகைத்து வாய்மேல் கைவைத்து சொல்லிழந்தபின் “என்ன சொல்லவருகிறீர்கள் அரசே? என் இரு மைந்தருமே குறையுள்ளவர்களா?” என்று கூவினாள். “இல்லை அரசி, இருவகை நிறையுள்ளவர் அவர்” என்றான் தனு. “விழியற்றவன் ஒருவன். பிறிதொருவன் காலற்றவன்… என் தவம்பொலிந்து மண்நிகழ்பவர்கள் அவர்களா?” என்று ஏங்கி அழுதபடி அவள் சென்று அரண்மனையின் இருள்மூலையில் உடலொடுக்கி அமர்ந்தாள். “இருநிறைகளும் இல்லாத இயல்மைந்தர் நூற்றுவரை அளிக்கிறேன் என்றாள் அன்னை. உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர். நான் நிகரற்ற வல்லமைகொண்ட மைந்தர் வேண்டுமென்றேன்” என்றான் தனு. கண்ணீர் வழிய முகம் தூக்கி “அவர்களில் ஒருவர் அமைந்தாலே நிறைந்திருப்பேனே. நான் விழைவது மைந்தனை மட்டுமே. என் தூண்டிலில் வைக்கும் புழுக்களை அல்ல” என்றாள் ரம்பை. “நீ பெண், நான் அரசன்” என்றான் தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்றாள் அவள்.
“அஞ்சுவதல்ல அசுரர் இயல்பு. என் இரு மைந்தரும் பிறிதென்றிலாது இணைந்து ஒருவரென்றாகி இப்புவி புரக்கட்டும்” என்றான் தனு. “அரசே, எண்ணித் துணிந்திருக்கவேண்டும் இச்செயல். ஓருடலுக்குள் ஈருயிராகி நிற்பவரே மண்ணுளோர். ஈருயிர் ஓருடலாவது தெய்வங்களுக்கும் அரிது” என்றார் அமைச்சர் காமிகர். “ஆம் அறிவேன். ஆனால் நாம் அசுரர். அரிதனைத்தும் ஆற்றுவதற்குரிய ஆற்றல் கொண்டவர்கள். தேவர் வணங்கித்திறக்கும் வாயில்களை தன் தலையால் முட்டித்திறந்தவர்கள் என் முன்னோர். என் மைந்தரால் அது இயலும்” என்றான் தனு. “நன்று நிகழ்க!” என்று நீள்மூச்செறிந்தார் அமைச்சர்.
தனு தன் பட்டத்தரசி ரம்பையின் ஒரே பேற்றில் இரு மைந்தரை பெற்றான். கருநிறம் கொண்ட பெருந்தோளன் விழியற்றிருந்தான். அவனுக்கு ரம்பன் என்று பெயரிட்டனர். வெண்ணிறம்கொண்ட மெலிந்தவனை குரம்பன் என்று அழைத்தனர். இளமையிலேயே அவர்களை எப்போதும் அருகருகே உடலொட்டி படுக்கவைத்தனர். ஒருவன் அழுதால் இருவருக்கும் ஊட்டினர். ஒருவன் துயின்றால் பிறிதொருவனையும் துயிலச்செய்தனர். அவர்கள் இருவர் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியலாகாது என்று தனுவின் ஆணை இருந்தது. எனவே ஒவ்வொரு சொல்லும் எண்ணிச் சொல்லப்பட்டன. இணைந்து அழுது, இணைந்து உண்டு, இணைந்து ஓடி வளர்ந்தனர். தன் உடலின் பிறிதொரு பக்கம் என்றே இன்னொருவனை இருவரும் நினைத்தனர். ஒளியென்பது குரல் என ரம்பன் நம்பினான். காலென்பது ஓர் எண்ணம் என்று குரம்பன் நினைத்தான்.
அவர்களை ரம்பகுரம்பன் என்று ஒற்றை மானுடனாக அழைத்தனர் அனைவரும். நான்கு கைகளும் நான்கு கால்களும் இருதலைகளும் கொண்டு அசுரகுலமாளப்பிறந்த பேருருவன் அவன் என அவன் எண்ணுமாறு செய்தனர். பறக்கும் குருவியின் இறகை எய்து வீழ்த்தும் விற்திறன் கொண்டிருந்தான் ரம்பகுரம்பன். புரவிக்கு நிகராக ஓடவும் யானையை கொம்புபற்றி அழுத்தி நிறுத்தவும் ஆற்றல்கொண்டிருந்தான். நுண்ணியநூல் கற்றான். அவைகளில் எழுந்து சொல்நிறுத்தினான். அவன் வெல்லற்கரியதென ஏதுமிருக்கவில்லை. அவன் செயற்கெல்லை என ஒன்றும் துலங்கவில்லை. எளியமானுடருக்கு மேலெழுந்து நின்றிருந்த அசுரமைந்தனை அஞ்சியும் வியந்தும் அடிபணிந்தனர் அனைவரும்.
உளமொன்றான அவர்கள் வளரும்தோறும் ஒற்றையுடலென உருகியிணைந்தனர். ஓருடலுக்கான அசைவு அவர்களில் கூடியபோது நோக்குவோர் விழிகள் அவர்களின் சித்தங்களை மாற்றியமைத்தன. ஆண்டுகள் சென்றபின் தானகத்தில் எவரும் அவரை இருவரென்றே அறியவில்லை. தந்தையும் தாயும்கூட அவர்களை ஒருவரென்றே எண்ணினர். இறுதிப்படுக்கையில் ரம்பகுரம்பனை நெஞ்சுதழுவி “வாழ்க என் குடி” என்று கண்ணீர்விட்டு தனு மறைந்தான். அவன் சிதையேறி ரம்பை விண்புகுந்தாள். நான்குகைகளும் இரட்டைத்தலையும் கொண்டு அரியணையமர்ந்த பேராற்றல் கொண்ட மன்னரின் ஆட்சியில் அசுரகுலம் வெற்றி ஒன்றையே அறிந்திருந்தது. தானகம் மண்ணின் விழிப்புள்ளியென பொலிந்தது.
கோல்தாழாது நூறாண்டு மண்ணாண்டவன் விண்ணுக்கும் உரிமைகொண்டவன் என்பது நெறி. விண்ணமர்ந்த இந்திரன் நிலையழிந்தான். தன் மாயப்படைக்கலங்களுடன் தானகத்தை அணுகி பொற்சிறைப் புள்ளாகவும் செவ்விழிப் பருந்தாகவும் சுற்றிவந்தான். ஆனால் அருந்தவத்தாருக்கு நிகரான அறிவும் பாதாளநாகங்களுக்கு ஒப்ப தோள்வலியும் கொண்டிருந்த ரம்பகுரம்பனை அணுக அவனால் இயலவில்லை. உளம்சோர்ந்து அவன் தன் நகர்மீண்டு அமர்ந்திருக்கையில் அங்கே வந்த நாரதர் “நாள் ஒன்று வரும் அரசே. அது வரை காத்திருங்கள்” என்றார். “இணைக்கப்பட்டவை அனைத்தும் பிரிந்தே தீருமென்பது இப்புடவியின் பெருநெறி. நாள் என்று காட்டி வாள் என்று எழும் காலமே அவர்களை பிளக்கட்டும். உங்கள் படைக்கலம் அதை தொடரட்டும்.”
விண்ணவர்க்கரசனுக்காக கோள் தேர்ந்த நிமித்திகர் “அரசே, அவர்களின் கோட்டை உருகியிணைந்து ஒன்றேயானது. அதில் இன்று நுழைய தங்களால் இயலாதென்றறிக. ஆனால் அவர்களே உங்களை அழைத்து தங்கள் மன்றில் நிறுத்தும் தருணமொன்று அணையும். அன்று நீங்கள் அவர்கள் கொடியில் காற்றாகவும், அனலில் சுடராகவும், மூச்சில் விழைவாகவும் நுழையமுடியும். அதன்பின்னரே உங்கள் வெற்றிகள் எழும்” என்றனர். உளம் மகிழ்ந்த இந்திரன் “ஆம், அதுவரை அவன் அரண்மனைவாயில் மணியொன்றில் அமைக என் ஆயிரம் விழிகளில் ஒன்று” என்றான். அந்த மணியில் அதன்முன் நடப்பவர்களின் பாவை தெரிவதில்லை என்பதை அங்கிருந்த எவரும் அறியவில்லை. ஆனால் அதை துலக்குபவர்கள் மட்டும் அவ்வப்போது சித்தமழிந்து சிதைவுற்றுப் போயினர்.
கீழ்நிலமான தாருகத்தை ஆண்ட அசுரமன்னர் கும்பரின் இரட்டைமகள்களான ரக்ஷிதையையும் அர்ஹிதையையும் ரம்பகுரம்பன் மணந்தான். இருதலை நாற்கரத்து இறைவனின் அஞ்சும் ஆற்றலை அவர்குலத்துப் பாணர் பாடி அவர்கள் அறிந்திருந்தனர். அவன் சித்திரப்பாவையைக் கண்டு காதலுற்றிருந்தனர். இருவரும் இருபக்கம் நின்று அவன் கைபற்றி அனல்வலம் வரும்போது எண்ணுவது இயற்றும் தெய்வமொன்றை மணந்தவர்கள் என உளம் தருக்கினர். ஏழுபுரவிகள் இழுத்த தேரில் அவனுடன் தானகம் வந்தபோது விண்ணெழுபவர்கள் என்றே உணர்ந்தனர்.
எளிய உருவம் கொண்ட அசுரகுடிகளை ரக்ஷிதையும் அர்ஹிதையும் தங்களுக்கு நிகரென எண்ணவில்லை. ரம்பகுரம்பனின் பேருடல் சித்திரங்களாகவும் சிலைகளாகவும் அவர்களை சூழ்ந்திருக்கச்செய்தனர். அவன் வெற்றியும் புகழும் பாடல்களென அவர்களின் செவிநிறைத்தது. நாள்போக்கில் இருகை ஒருதலை உருவங்களெல்லாம் அவர்களுக்கு எள்ளலுக்குரியவை ஆகின. குரங்குகள் போல கைவீசி தளர்ந்து நடக்கும் சிற்றுயிர்கள். நோக்கும் செயலும் ஒன்றே என ஆன சிற்றுள்ளங்கள். தங்கள் கரு நிறைத்து நான்குகைகளும் இரட்டைத்தலையும்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தரை அகமெழக் கனவுகண்டனர்.
அரசமணம் நிகழ்ந்து நீணாட்களாகியும் மைந்தர் பிறக்காமை கண்டு தானகம் கவலைகொண்டது. குடித்தலைவர் அமைச்சருக்கு உரைக்க அவர்கள் அரசனிடம் சென்று உணர்த்தினர். மைந்தரின்மையை அப்போதுதான் உணர்ந்த ரம்பகுரம்பன் நிமித்திகரை அழைத்து குறிசூழ்ந்து பொருளுரைக்கும்படி ஆணையிட்டான். பன்னிருகளம் அமைத்து அதில் சோழிக்கரு விரித்து நோக்கிய முதுநிமித்திகர் சூரர் “அரசே, நாளும் கோளும் நலமே உரைக்கின்றன. உங்கள் பிறவிநூலோ பெருவல்லமை கொண்ட மூன்று மைந்தர் உங்களுக்குண்டு என்று வகுக்கின்றது. ஆயினும் ஏன் என்றறியேன், மைந்தரை அருளும் தெய்வங்கள் திகைத்து அகன்றே நிற்கின்றன” என்றார். “எங்களுருவில் எழும் மைந்தனால் பொலியவேண்டும் இந்நகர். அதற்குத் தடையென்ன என்று ஆய்ந்து சொல்க!” என்று ரம்பகுரம்பன் ஆணையிட்டான்.
சுக்ரரின் வழிவந்த அசுரர்குலத்து ஆசிரியர் சரபர் ஆய்ந்து இட்ட ஆணைப்படி ரம்பகுரம்பன் தன் தலைநகர் நடுவே அமைந்த ஆயிரத்தெட்டு தூண்கள் மேல் வெண்விதானமெழுந்த வேள்விச்சாலையில் மூவெரி எழுப்பி நூற்றெட்டு நாட்கள் பூதவேள்வி நிகழ்த்தினான். அதன் எரிகாவலனாக இருபுறமும் ரக்ஷிதையும் அர்ஹிதையும் உடனமர இருந்தான். நூற்றெட்டாவது நாள் வேள்வியில் அழகிய பெண்ணுருக் கொண்டு இடைவரை அனலாக எழுந்த கன்னித்தெய்வம் நெளிந்தாடி “நான் அர்ஹிதை. இரண்டாம் அரசியின் பெண்மையை காப்பவள். அவள் பிறந்ததும் முலைமொட்டுகளில் வாழ்ந்தேன். உடல் பூத்ததும் கனிந்தெழுந்தேன். அவள் உள்ளத்தில் இனிமையென உடலில் புளகமென பெருகினேன். அவள் குருதியில் வெண்பாலென ஓடுகிறேன். அவள் கனவுகளில் மைந்தரைக் காட்டி விளையாடுகிறேன். இங்கு எனக்கிடப்பட்ட அவியில் மகிழ்ந்தேன். நன்று சூழ்க!” என்றது.
அப்பால் பிறிதொரு எரிகுளத்தில் இருபெருந்தோள்களுடன் எழுந்த காவல்தெய்வம் கொழுந்துவிட்டு நெளிந்து “என் பெயர் ரம்பன். நான் முதலரசனின் காவலன்” என்றது. ரம்பகுரம்பன் திகைத்து “முதலரசனா? யார் அது?” என்றான். அமைச்சரும் நிமித்திகரும் நடுங்கி ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் மூத்தவனாகிய ரம்பனின் காவலன். நான் உமிழும் மூச்சையே அவன் இழுக்கிறான். அவன் எழுப்பும் எண்ணங்களை சொல்லாக்குபவன் நானே” என்றது ரம்பன் எனும் தெய்வம். “நான் கேட்பதென்ன? ஆசிரியரே, இவன் சொல்வதுதான் என்ன?” என்று ரம்பகுரம்பன் கூவினான். அமைச்சர்கள் ஒருவரோடொருவர் உடல்நெருங்கி நிற்க சபரர் “அரசே அறிக! ரம்பன் என்பது உங்களில் ஒருபாதி” என்றார். “ஆள்பாதிக்கு ஆட்கொள்ளும் தெய்வங்களுண்டா அமைச்சரே?” என்றான் ரம்பகுரம்பன். “நிகழ்வதென்ன என்றறியாது திகைக்கிறேன் அரசே” என்றார் அமைச்சர்.
“நான் இவரை அறிவேன். இவரையே என் கணவனென ஏற்றேன். இவருடன்தான் நான் காமம் கொண்டாடினேன்” என்றது அர்ஹிதையெனும் தெய்வம். உளம்பதறி கைநீட்டிய இளைய அரசி அர்ஹிதை “இல்லை. இவரை நான் அறியேன்… என் மூதன்னையர் மேல் ஆணை. இந்த அயலானை நான் உள்ளாலும் தொட்டதில்லை” என்று அலறினாள். ரம்பன் எனும் தெய்வம் “ஆனால் நான் அறிவேன், நீ நான் புணர்ந்தவளின் நிழல். உன் அனலுக்கும் புனலுக்கும் அடியிலுள்ளவை அனைத்தையும் கொண்டவன் நான்” என்றது. "இல்லை! இல்லை” என்று இளைய அரசி கதற அப்பால் பிறிதொரு எரிதழலில் படபடத்து எழுந்த ரக்ஷிதை என்னும் தெய்வம் “நான் குரம்பனை காமத்தில் அடைந்தேன்” என்றது. வேறொரு தழலில் பற்றி எழுந்து உடல்கொண்டு நின்றாடி “ஆம், நான் அவளுடன் ஆடினேன். அவளுடன் கலந்தமைந்தேன்” என்றது குரம்பன் எனும் தெய்வம்.
கைகளை ஓங்கி அறைந்து "யாரிவர்? அமைச்சர்களே, நிமித்திகர்களே, இவர்கள் சொல்வதென்ன?” என்று ரம்பகுரம்பன் கூச்சலிட்டான். ஆற்றாதெழுந்த அகவிசையால் நான்கு கைககளாலும் நெஞ்சில் அறைந்து கூவினான். "இவர்கள் சொல்வதென்ன? இக்கணமே சொல்லுங்கள்... என்ன இதெல்லாம்?” குரம்பன் எனும் தெய்வம் “நானறிந்த பெண் இவள்” என முதலரசியை சுட்டியது. “இல்லை! நானறிந்ததில்லை இவனை” என்று கூவியபடி ரக்ஷிதை மயங்கி மண்ணில் விழுந்தாள். ரம்பனெனும் தெய்வம் “என்னை காமுற்று இழுத்தவள் அவள்” என அர்ஹிதையை சுட்டிக்காட்டியது. “இல்லை! இல்லை!” என்று அவள் நெஞ்சில் அறைந்தறைந்து வீரிட்டாள்.
கைகளை விரித்து எழுந்து ஓடிவந்து நெய்க்கலத்தை உதைக்க கால்தூக்கிய ரம்பகுரம்பன் “நிறுத்துக வேள்வியை! இது வேள்வியல்ல. இவை நம் தெய்வங்களுமல்ல. அனைத்தும் நம் மீது அழுக்காறுகொண்ட தேவர்களின் மாயம்” என்று அலறினான். “பூதவேள்வியை இடையறுக்க முடியாது அரசே” என்றார் நிமித்திகர் சூரர். “ஆம், எழுந்த தெய்வங்கள் நிறைவுறாது மண்நீங்கலாகாது. மைந்தரென இங்கு எழவிருக்கும் மூதாதையர் எழுக!” என்றார் சபரர். “எழுக எரி!” என்றார் வேள்வித்தலைவர். நெளிந்தாடி எரிகுளத்தில் எழுந்த கரியபேருருவன் “இக்குலத்தின் முதுமூதாதையாகிய கசன் நான். நான் பிறந்தெழும் கருக்கலம் அமையவில்லை. எவர் வயிற்றில் எவர் வடிவில் நான் பிறப்பதென்று அறியாமல் மூச்சுலகில் நின்று தவிக்கிறேன்” என்றான். வெடிப்பொலியுடன் எழுந்த பிறிதொருவன் “ஆம், மூதாதையாகிய தனு நான். இக் கருவறையில் எவரை தந்தையெனக் கொண்டு நான் எழுவேன்?” என்றான்.
அவையோர் மூச்சுகள் மட்டும் ஒலிக்க செயலற்று நின்றனர். நான்கு கைகளும் தளர்ந்து விழ ரம்பகுரம்பன் பீடத்தில் சரிந்தான். "நிமித்திகர்களே, என் ஒளி எங்ஙனம் வெறும் சொற்களென்றாகியது?” என்று கூவினான். திகைப்புடன் நான்குபக்கமும் கைகளால் துழாவி “அமைச்சர்களே, அருகெழுக! ஆசிரியர்களே, என் கால்கள் எங்ஙனம் அசைவிழந்தன?” என்று கேட்டான். அவன் உடல் துடித்தது. “என்ன நிகழ்கிறது? எப்படி என் உடல் செயலிழந்தது?” முழு உயிரையும் திரட்டி அவன் எழுந்தான். “இது வேள்வியல்ல. எங்களை அழிக்கச்செய்யும் வஞ்சம்...” என்று இரைந்தபடி அவிக்கூடையை ஓங்கி மிதிக்க முனைந்தான். அவன் உடல் நிலையழிந்து ஆடி பேரொலியுடன் மண்ணில் விழுந்து அதிர்ந்து இழுத்துக்கொண்டு விதிர்த்தது. துள்ளிவிழுந்து கைகால்கள் வெவ்வேறாக விலகித்துடிக்க இரண்டாகப்பிரிந்தது.
இரு தேவியரும் பதறி எழுந்து நெஞ்சைப்பற்றியபடி நோக்கி நின்றனர். காலற்ற உடலொன்று ஒருபக்கம் தவித்து மண்ணில் தத்தி விலகிச்செல்ல மறுபக்கம் கண்ணற்ற உடல் கரிய புழுவெனக் கிடந்து நெளிந்தது. “எந்தையரே! அன்னையரே! இவர் இருவர்!” என்று ரக்ஷிதை கூவினாள். ஒருகணம் நின்று உடலதிர்ந்தாள். பின்பு நெஞ்சிலறைந்து அலறியபடி எரிந்தெழுந்த வேள்விப்பெருநெருப்பில் பாய்ந்தாள். “மூத்தவளே…” என்று அலறியபடி அர்ஹிதை உடன் பாய்ந்தாள். இருவரையும் தழுவி இதழ்குவித்து மேலெழுந்தது எரி. உயிரை அவியெனக்கொண்ட தெய்வங்கள் விண்மீண்டன. தழல் மட்டும் நெளிந்துகொண்டிருந்தது.
[ 2 ]
அமைச்சர்களும் நிமித்திகர்களும் திகைத்து நிற்க சபரர் “அரசர்களை எடுத்துச்சென்று அரண்மனை மஞ்சங்களில் கிடத்துங்கள்” என்று ஆணையிட்டார். ஒற்றையுடலாக அதுவரை அவர்களைப்பார்த்திருந்த ஏவலர் கைநடுங்கினர். வெட்டுண்டு துடிக்கும் உடலைப்பார்க்கும் உணர்வே அவர்களுக்கு ஏற்பட்டது. “தூக்குங்கள்!” என்று சபரர் மீண்டும் கூவ தலைமை ஏவலன் பிறரை நோக்கி கைகாட்டிவிட்டு ரம்பனின் எடைமிக்க உடலை தூக்கினான். அது உயிருள்ள உடலுக்குரிய நிகர்நிலை இல்லாமல் பல பக்கங்களிலும் அசைந்து சரிந்தது. உள்ளமென்பது உடலில் கூடிய நிகர்நிலையே என ஏவலன் உணர்ந்தான். உள்ளமிழந்த உடல் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற வெவ்வேறு தசைத்துண்டுகளின் பொருளற்ற திரள். பன்னிரு ஏவலர்களின் கைகளில் ரம்பன் ததும்பினான். இரு ஏவலர் குரம்பனை தூக்கிக்கொண்டுவந்து ரம்பன் அருகே படுக்கச்செய்தனர். ரம்பன் உடல் தன் மேல் பட்டதும் குரம்பன் “ஆ!” என விலங்குபோல ஊளையிட்டபடி துடித்து கைகளை நிலத்தில் அறைந்து உந்தி விலகினான். ரம்பன் “யார் அது? யார் அது?” என்று கூச்சலிட்டான்.
மூங்கில்கட்டிலில் ரம்பனைத் தூக்கி படுக்கச்செய்தனர். புரண்டுபுரண்டு தவித்தபடி “யாரது? இங்கே யார்?” என்று எச்சில்வழிய கூவிக்கொண்டிருந்தான். அவன் அருகே குரம்பனை படுக்கச்செய்ய ஏவலர் முயன்றபோது சபரர் “வேண்டாம்” என்று கைநீட்டி தடுத்தார். அவர்களை தனித்தனியாக அரண்மனைக்குள் கொண்டுசென்றனர். முதல்முறையாக அவர்கள் தனித்தனியான மஞ்சங்களில் படுக்கவைக்கப்பட்டனர். அகன்ற மஞ்சத்தின் வலது மூலையில் ஒதுங்கிக்கொண்ட ரம்பன் எஞ்சிய இடத்தை கையால் துழாவியும் அறைந்தும் “எங்கே? எங்கே?” என்று அரைமயக்கில் என அரற்றினான். தன் மஞ்சத்தின் இடது மூலையில் ஒடுங்கிய குரம்பன் எஞ்சிய இடத்தை நோக்கி பதைத்து மேலும் மேலும் ஒடுங்க முயன்று “அமைச்சரே! அமைச்சரே!” என்று அழுதான். “அகிபீனா கொண்டுவருக! அகிபீனா!” என்று சபரர் ஆணையிட்டார்.
அகிபீனா உண்டு சிவமூலிப்புகையும் அளிக்கப்பட்டதும் அவர்களின் நரம்புகள் அவிழ்ந்தன. தசைகள் தளர்ந்தன. நீண்ட மூச்சு வரத்தொடங்கியது. தாடை விழுந்து வாய் திறந்தது. துயிலில் ரம்பன் புன்னகைத்து “நான்!” என்றான். கையை மஞ்சத்தின் எஞ்சிய இடத்தில் ஓங்கி அறைந்து “நான்!” என்றான். குரம்பன் ஒடுங்கி உடல் சுருக்கி மெல்ல அதிர்ந்தபடியே இருந்தான். பின்னர் “இந்த இடம்!” என்று முனகினான். இதழ்கோண புன்னகைசெய்து “இடம்!” என்றான். அவர்கள் தூங்கும்போதுகூட அந்த எஞ்சிய இடம் மஞ்சத்தில் அப்படியேதான் இருந்தது என்பதை சபரர் கண்டார். நிமித்திகர் சூரர் “என்ன செய்வது ஆசிரியரே?” என்று மெல்ல கேட்டார். “நீறும் நெருப்பு அடுத்தகணம் எடுக்கப்போகும் வடிவமென்ன என்று தெய்வங்களாலேயே சொல்லமுடியாது... அவர்கள் விழித்தெழட்டும். காத்திருப்போம்” என்றார் சபரர்.
இரவெல்லாம் மஞ்சத்தறை வாயிலிலேயே அமைச்சர்கள் அமர்ந்து துயின்றனர். காலையில் ரம்பனின் பெருங்குரல் அலறலை கேட்டுத்தான் அவர்கள் விழித்தெழுந்தனர். உள்ளே கைகால்களை அறைந்து வாய்திறந்து தொண்டைநரம்புகள் புடைக்க ரம்பன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். “விடு... என்னை விடு...” அறியாச்சரடுகளை அவிழ்க்க விழைபவன்போல் அவன் திமிறி எழுந்து மீண்டும் விழுந்தான். அப்பால் குரம்பன் விழித்துக்கொண்டு ரம்பனை நோக்கி இளித்துக்கொண்டிருந்தான். ரம்பன் “கட்டுக்கள்! கட்டுக்கள்!” என்று கூவியபடி மஞ்சத்திலிருந்து எழமுயன்று மறுபக்கம் சரிந்து விழுந்தான். அவ்வொலி கேட்டு உடல் அதிர்ந்த குரம்பன் தன் மஞ்சத்திலிருந்து புழுபோல தவழ்ந்து அப்பால் இறங்கினான். இருவரும் அறையின் இருமூலைகளை நோக்கி சென்றனர்.
“அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு கொண்டுசெல்லுங்கள். ஒருவரை ஒருவர் நினைவூட்டும் எதுவும் அங்கிருக்கலாகாது. அவர்களின் உள்ளம் இவ்வுலக விழைவுகளை நோக்கி செல்லட்டும்” என்று சபரர் ஆணையிட்டார். “அவர்கள் இருவரையும் தனித்த ஆளுமைகள் என்றே எண்ணி பேசுங்கள். மூத்தவரே என்றும் இளையவரே என்றும்கூட அழைக்கவேண்டியதில்லை. ஒருவர் உலகில் இன்னொருவர் இல்லாதவரே ஆகுக! இவர் ரம்பர். தானகத்தின் ஒரே அரசர். அசுரசக்ரவர்த்தி தனுவின் ஒரே மைந்தர். அவர் குரம்பர். தானகத்தின் ஒரே அரசர். அசுரசக்ரவர்த்தி தனுவின் ஒரே மைந்தர். இவ்வெண்ணம் நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் உறைக! நம் சொல்லில் மட்டும் அல்ல, கண்களிலும் உடலசைவுகளிலும் அதுவே எழுக!”
அவரது ஆணையின்படி ரம்பனும் குரம்பனும் வெவ்வேறு அரண்மனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பன்னிருநாட்கள் அவர்கள் அகிபீனாவும் சிவமூலியும் அளித்த களிமயக்கிலேயே இருந்தனர். அவ்விரவு விடியத்தொடங்கியபோது அவர்களின் உலகில் இன்னொருவர் முற்றிலும் இல்லாமலாகியிருந்தனர். வியப்பளிக்கும்வகையில் ரம்பனும் குரம்பனும் அந்த தனியாளுமையை தங்களுக்கென எளிதில் சூடிக்கொண்டனர். ரம்பன் உணவிலும் கதைப்போரிலும் ஈடுபட்டான். அவனுக்கென உணவுவகைகளை சமைத்துப் பரிமாறும் அடுதிறனர் வரவழைக்கப்பட்டனர். அவனுடன் தோள்நின்று கதையாடும் மல்லர்கள் வந்துகொண்டிருந்தனர்.
குரம்பன் நூல்களில் மூழ்கினான். அறநூலும் கவிநூலும் கற்ற புலவர்கள் அவை கூடிக்கொண்டே இருக்க அவர்கள் நடுவே அவன் மகிழ்ந்திருந்தான். “இத்தனை விரைவில் இவர்கள் தகவமைந்துவிடுவார்கள் என்று எண்ணவே இல்லை ஆசிரியரே” என்றார் சூரர். அருகே நின்று அவையமர்ந்து சொல்லாடிக்கொண்டிருந்த குரம்பனை நோக்கிய சபரர் நெடுமூச்செறிந்து “இல்லை நிமித்திகரே, அத்தனை எளிதாக இரண்டு ஒன்றாகாது” என்றார். “தனித்திருப்பதன் பெருவலியை அவர்கள் அடைந்துவிட்டனர். அதை வெல்லும்பொருட்டு முழுமூச்சாக முயல்கிறார்கள். விழிப்புள்ளத்தைப் பழக்கி எடுக்க முயன்று வென்றுவிட்டார்கள். ஆனால் விழிப்புள்ளம் வலுப்பெறும்தோறும் அதன் பேரெடையால் கனவுள்ளம் அழுத்திச் சுருக்கப்படுகிறது. அது நுண்ணுள்ளத்தை அடைந்து அங்கு ஒரு அணுவென மாறி புதைந்திருக்கிறது. ஆலமரம் குடிகொள்ளும் விதை கடுகளவே.”
சூரர் “நீங்கள் தீது சூழ்ந்து கவலைகொள்கிறீர்கள் ஆசிரியரே. மீளவும் வாழவும்தான் வாழ்பவர் உள்ளம் என்றும் விழைகிறது. புண்களை ஆற்றிக்கொள்ள உடல் விழைவதனால்தான் நாம் மீண்டுஎழுகிறோம்” என்றார். சபரர் ஐயம்நிறைந்த விழிகளுடன் திரும்பி நோக்கி “ஆம்” என்றார். தாடியைத் தடவியபடி “ஆனால் உடல் போல கள்ளமற்றதல்ல உள்ளம். அது அழியவும் விரும்பக்கூடும்” என்றார். “ஆசிரியரே, அது இயற்கையின்நெறிக்கு எதிரானதல்லவா?” என்றார் சூரர்.
“இயற்கையின் நெறிதான் என்ன? அத்தனை எளிதாக அதை சொல்லிவிடமுடியுமா? கூட்டம்கூட்டமாக மீன்களும் பறவைகளும் இறப்பை நாடிச்செல்வதை தற்கொலை செய்வதை நானே கண்டிருக்கிறேன். இங்குள்ள உயிர்கள் அனைத்திலும் செயல்படும் உள்ளமும் அத்தனை உயிர்களாகவும் நின்று தொழில்படும் பேருள்ளமும் ஒன்றுதானா? கடலும் துளியுமா அவை? எதன் விழைவை ஒட்டி வாழ்க்கை அமைகிறது இங்கு? எவரால் சொல்லிவிடமுடியும்?” சபரர் மிகைப்படுத்துகிறார் என்றே சூரர் எண்ணினார். ஒவ்வொன்றும் எளிதாக ஒன்றுடன் ஒன்று அமைந்து எழுந்துகொண்டிருந்தது. எப்பிழையும் கண்ணுக்குப்படவில்லை. “நான் எதையும் காண்கிலேன் ஆசிரியரே” என்றார் சூரர். “அவர்களின் உடலை பாரும். உள்ளம் உடலுக்குள் ஒளிந்திருக்கிறது. ஆனால் முழுதும் ஒளிய அது விழைவதில்லை. தன்னை வெளிக்காட்ட அது விழைகிறது. உடலில் எங்கோ தன்னை கரந்துவெளிப்படுத்துகிறது உள்ளம்... நோக்கும்.”
சூரர் குரம்பனையும் ரம்பனையும் மறைந்து நின்று நுணுக்கமாக நோக்கினார். சிலநாட்களுக்குப்பின் ரம்பன் தன் இடத்தொடையை கையால் எப்போதும் வருடிக்கொண்டே இருப்பதை கண்டார். அந்தப் பழக்கம் முன்பு இருந்ததா என்று உசாவி இல்லை என்று அறிந்தார். உண்ணும்போதும் போரிடும்போதும்கூட அவன் அறியாத பிறிதொரு தெய்வத்தால் இயக்கப்படுவதுபோல கை அதை செய்துகொண்டிருந்தது. துளைத்து உட்புகத் தவிக்கும் பாம்பு போல. இரவில் துயில்கையிலும் அக்கை அதை செய்துகொண்டிருப்பதைக் கண்ட சூரர் சபரரிடம் அதை சொன்னார். “குரம்பனிடமும் அவ்வகையில் ஏதேனும் உடற்பழக்கம் இருக்கிறதா?” என்றார் சபரர். நுண்ணிதின் நோக்கியும் குரம்பனிடம் அப்படி எந்த அசைவும் தெரியவில்லை.
சிலநாட்கள் நோக்கியபின் இயல்பாகவே தான் குரம்பனின் வலப்பக்கத்தை மட்டும் நுணுகியதை உணர்ந்த சூரர் குரம்பனின் முழுதுடலையும் சிலநாட்கள் நோக்கினார். “இல்லை, ஆசிரியரே. அவரிடம் ஏதும் அவ்வகையில் தெரியவில்லை” என்றார். “இருக்கும்... இல்லாமலிருக்காது” என்றார் சபரர். மீண்டும் அவையமர்ந்து பலநாட்கள் குரம்பனின் செயல்களை நோக்கியபின் அப்படி ஏதுமில்லை என்னும் முடிவை அடைந்தபின் அம்முயற்சியை நிறுத்திக்கொண்டார். ஆனால் அந்த நுண்ணோக்கு அவரது கனவுள்ளத்திற்குச் சென்றது. அங்கே அது தவித்து தேடிக்கொண்டே இருந்தது. ஒருநாள் புலவர் அவையில் பேசிக்கொண்டிருந்த குரம்பன் ஒரு பேச்சுக்கு நடுவே வெறுமனே வாயசைப்பதை சூரர் கண்டார்.
ஒருகணம் நெஞ்சு துடிப்புதவறியது. மீண்டும் கூர்ந்துநோக்கியபோது அது ஒரு சொல் என தெரிந்தது. ஒலியாக ஆகாது உதடுகளில் மட்டும் நிகழ்ந்து மறைந்தது அச்சொல். அதைக் கண்டபின் விழிகள் அதையே கண்டன. ஒவ்வொரு சொற்றொடர் நடுவிலும் அச்சொல் நிகழ்ந்து மறைந்தது. ஒலிகொண்ட சொற்களுக்கு நடுவே அச்சொல் அசைந்து அழிவதை சொல்பவனும் சொல்முன் அமர்ந்திருப்பவர்களும் அறியவேயில்லை. சூரர் அச்சொல்லை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். அது அவரிடம் மட்டுமென சொல்லப்பட்டதாக ஆகியது. நாலைந்து சொற்களுக்கொருமுறை அக்கேளாச்சொல் வந்து சென்றது. பின்னர் அச்சொல்லின் விரிபரப்பின்மேல்தான் கேட்கும்மொழியின் அத்தனை சொற்களும் ஒலிக்கின்றன என்று தெரிந்தது. சொல்லிடைவெளி விழும்போதெல்லாம் அந்த ஒலியிலாச் சொல் எழுந்தது.
சூரர் அச்சொல்லை அனைத்து இதழ்களிலும் நோக்கத் தொடங்கினார். பேச்சுகளில் குவிந்து விரிந்து இழுபட்டு மடிந்து அசையும் இதழ்களில் நினைத்திராத கணத்தில் அச்சொல் நிகழ்ந்து மறைகையில் அவர் உள்ளம் திடுக்கிட்டது. பின்பு ஒருநாள் விடியலில் துயில்மறையத் தொடங்கும் தருணம் தன் உதடுகள் அச்சொற்களை சொல்லிக்கொண்டிருப்பதை அவரே உணர்ந்து உடலதிர எழுந்தமர்ந்தார். என்ன சொல் அது என உசாவிக்கொண்டார். ஏதும் நெஞ்சுள் தோன்றவில்லை. விழிக்கையில் எழுந்த கனவில் அவர் தன் மைந்தனிடம் பூசலிட்டுக்கொண்டிருந்தார். “நீ என் மகனே அல்ல. மகன் என்றால் நான் சொல்வன உனக்கு ஆணையென்றிருக்கும்” என்றார். மைந்தன் சொன்னவை காதில் விழவில்லை. அவனை தெளிவாக நோக்கவும் முடியவில்லை. “நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை...” என்றபடி விழித்துக்கொண்டார்.
சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டு எழுந்தபோது தலையை ஏதோ முட்டியதுபோல அச்சொல் தெளிந்தது. ”நீ!” படபடப்புடன் முகம்கழுவி இன்னீர்கூட அருந்தாமல் குரம்பனின் அவைக்குச் சென்றார். முதற்புலரியில் எழுந்து நூல்நோக்கும் பழக்கம் குரம்பனுக்கு இருந்தது. தூவிமஞ்சத்தில் மெலிந்த கால்களை இயல்பற்ற முறையில் மடித்து ஒடுங்கி அமர்ந்து மடியில் விரிப்பலகை வைத்து அதில் பரப்பிய ஓலையில் எழுத்தாணியால் எழுதிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் “நீ, நீ, நீ” என உச்சரித்துக்கொண்டே இருந்தன. தீயதெய்வமொன்றை எதிரில்கண்டவர் போல சூரர் அங்கேயே உடல்சிலிர்த்து நின்றுவிட்டார்.
திரும்பி ஓடி சபரரின் தவக்குடிலை அடைந்து “ஆசிரியரே! அவர் சொல்லும் சொல் என்ன என்று கண்டேன். நீ” என்றார். “அச்சொல்லைத்தான் அவர் உதடுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.” சபரர் பெருமூச்சுடன் “ஆம், நான் சிலநாட்களுக்கு முன்னரே அதை கண்டறிந்தேன்” என்றார். “அவன் ஒருபோதும் அச்சொல்லை உரையாடல்களில் சொல்வதில்லை என்பதை கண்டேன்.” சூரரும் அதை அப்போது உணர்ந்து “ஆம்” என்றார். அதன்பின் குரம்பனின் அனைத்து உரையாடல்களையும் கூர்ந்து நோக்கினார். அவனுடைய உரையாடல்களில் இயல்பாகவே அச்சொல் இல்லாமலாகிவிட்டிருந்தது. அவன் அதை தவிர்க்கவில்லை, அது தானாகவே மூழ்கி மறைந்திருந்தது.
சூரரும் சபரரும் அச்சத்துடன் காத்திருந்தனர். ஆனால் அனைத்தும் இயல்பாகவே நிகழ்ந்தன. பிறிதொருவர் இருப்பதையே அறியாதவர்களாக ரம்பனும் குரம்பனும் தங்கள் மாளிகைகளில் வாழ்ந்தனர். தனித்தனியாக அவைகூட்டி தனித்தனியாக நாடாண்டனர். அவர்களுக்கு தனித்தனியாக இளவரசிகளை மணம்புரிந்துவைக்கவேண்டும் என்று அமைச்சர்கள் சொன்னார்கள். சபரர் “அதுவும் நல்லதே. நன்மைநிகழ நாம் தெய்வங்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்” என்றார். நிமித்திகர் சூரர் “ஆனால் அவர்களின் பிறவிநூல்குறிகள் நன்று எதையும் சுட்டவில்லை ஆசிரியரே” என்றார். “நன்று நோக்கி செயலாற்றுவதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார் சபரர். “நன்றும் தீதும் தெய்வங்கள் முடிவெடுப்பவை.”
ஒவ்வொன்றும் நன்றென்றே சென்றுகொண்டிருக்கையில் அதுவரை இருந்த கூர்திட்டங்கள் அவிழத்தொடங்கின. மங்கலசண்டியின் ஆலயத்தில் காலைபூசனைக்கு முதல்முரசு ஒலிக்கையில் குரம்பன் சென்றுவழிபடுவதே வழக்கம். அவனை மறுபக்கமிருந்த பாதைவழியாக அரண்மனைக்கு கொண்டுசெல்லும்போது இரண்டாவது முரசு முழங்கும். ரம்பன் அன்னையை வணங்க அழைத்துவரப்படுவான். ஒருநாள் முதல்முரசு முழங்கியதை இரண்டாம்முரசு என்று எண்ணி ஏவலர் ரம்பனை அன்னைமுன் கொண்டுவந்து நிறுத்தினர். அவ்வேளையில் குரம்பனும் ஆலயமுகப்புக்கு வந்தான். அவர்களிருவம் எதிரெதிர் நின்றபின்னரே நிகழ்ந்தது என்ன என்று ஏவலரும் அமைச்சர்களும் அறிந்தனர். சிற்றமைச்சர் மெல்லியகுரலில் “அரசரை பின்னால்கொண்டுசெல்... பின்னால்” என்று குரம்பனின் பல்லக்கைத் தூக்கியவர்களிடம் ஆணையிட அவர்கள் அதை சரிவர உணராமல் பல்லக்கை தரையில் வைத்துவிட்டனர்.
“தூக்கு! தூக்கு!” என்று அமைச்சர் பதற அவர்கள் “அடியார் என்ன செய்யவேண்டும் அமைச்சரே?” என்றனர். அதற்குள் பல்லக்கிலிருந்து நீள்மூச்சு எழுந்தது. “அது யார்?” என்று குரம்பன் கேட்டான். அமைச்சர் விடையிறுப்பதற்குள்ளாகவே “மூத்தவர்!” என்று கூவியபடி பல்லக்கிலிருந்து தவழ்ந்திறங்க முற்பட்டான். “மூத்தவரே! மூத்தவரே” என்று கூவியபடி தவித்தான். ரம்பன் “யார்?” என்று கூவினான். “யாரது? யாரது?” என்று கைகளை விரித்து தலையை உருட்டியபடி அலறினான். “மூத்தவரே, இது நான்... உங்கள் இளையோன். என்பெயர் குரம்பன்” என்றான் குரம்பன்.
“நீயா? நீயா? இளையோனே, நீயா?” என்று கூவி கைகளை விரித்தான் ரம்பன். “என்னை மூத்தவரிடம் கொண்டுசெல்லுங்கள்... கொண்டுசெல்லுங்கள்” என்று குரம்பன் கூவினான். போகிகள் அமைச்சரை நோக்க அவர் தவித்தார். “கொண்டுசெல்லுங்கள்... கொண்டுசெல்லுங்கள்” என கண்ணீருடன் கூவியபடி குரம்பன் தரையில் தவழ்ந்தான். அமைச்சர்களால் ஆணையிடமுடியவில்லை. எதிரே கரியபேருருவாக நின்ற ரம்பனைக்கண்டு அவர்கள் அச்சத்தில் செயலற்றிருந்தனர்.
ரம்பன் “இளையோனே… இளையோனே…” என்று கைகளை காற்றில் வீசினான். பின்பு காலடிகள் ஓசையிட ஓடிவந்து குனிந்து குரம்பனை தரையில் இருந்து தூக்கிச் சுழற்றி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இளையோனே! நான் எப்படி உன்னை மறந்தேன்! எப்படி நீ இல்லாமல் இருந்தேன்!” என கண்ணீர்விட்டபடி மாறி மாறி முத்தமிட்டான். “மூத்தவரே, தனியனாகிவிட்டேன் மூத்தவரே” என்று குரம்பன் அழுதான். அவர்கள் விடாய்தீராது மீண்டும் மீண்டும் கட்டிக்கொண்டார்கள். கண்ணீர் முகமெங்கும் வழிய சிரித்தார்கள். அமைச்சர்களும் கண்ணீருடன் வந்து அவர்களின் கால்களைத் தொட்டு தலையில் சூடிக்கொண்டார்கள்.
சூரர் ஆடை நெகிழ பாய்ந்துசென்று சபரரின் தவக்குடிலை அடைந்து “அனைத்தும் சீரடைந்துவிட்டன ஆசிரியரே. அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர்” என்றார். “அது கண்டடைதல் மட்டுமே. இணைப்பு அல்ல. இரட்டைநிலை நீடிக்கவேண்டும் என்றால் ஒருமைநிலை சற்று தேவையாகிறது” என்றார் சபரர். “என்ன சொல்கிறீர்கள் ஆசிரியரே?” என்றார் சூரர். “எழுந்தாலன்றி வீழமுடியாது” என்றார் சபரர். “வளர்வதிலிருக்கும் இன்பத்துக்கு நிகரான இன்பம் சிதைவதிலும் உண்டு என்பதை உடல் அறியாது, உள்ளம் அறியும்.” சூரர் தளர்ந்து பீடத்தில் அமர்ந்து “அனைத்தும் சீரமையும் என்ற நம்பிக்கையே என்னை இதுவரை கொண்டுவந்தது ஆசிரியரே” என்றார். “சீரமையவும்கூடும்” என்றார் சபரர்.
சிலநாட்கள் ரம்பனும் குரம்பனும் ஒருவரோடொருவர் தழுவி ஒட்டிக்கொண்டே இருந்தனர். ஒவ்வொருகணமும் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் உச்சிகளில் உலவினர். இருவரும் இணைந்து வாழ்ந்த அரண்மனையில் அவர்களின் பெருஞ்சிரிப்பொலி ஓயாது ஒலித்தது. குலைந்த அனைத்தையும் சீரமைத்துவிடவேண்டும் என்றும் மூவுலகையும் வென்று அடக்கிவிடவேண்டும் என்றும் வெறிகொண்டனர். இரவும் பகலும் துயிலாதிருந்தனர். அரண்மனையின் ஏவலரும் அமைச்சர்களும் அவர்களின் உளவிரைவுக்கு நிகர்நிற்கவியலாமல் தவித்தனர். தூண்மூலைகளில் நின்றபடி துயின்றும் ஒளிந்தமர்ந்து ஓய்வெடுத்தும் உடன் விரைந்தனர். அமைச்சர்கள் எச்சம் வைத்த ஓராண்டுகால அரசுப்பணிகள் அனைத்தும் ஒரிரு வாரங்களில் முடிவடைந்தன. மேலும் பணிகள் தேவை என்றுணர்ந்து கருவூலத்தையும் ஆட்சியோலைப் பதிவகத்தையும் துழாவி புதிய திட்டங்களை கண்டடைந்தனர்.
அரண்மனையில் ஒவ்வொருவரிலும் வெறி எழுந்தது. அத்தனை விழிகளிலும் காய்ச்சல் படிந்திருந்தது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் சொல்லெடுப்பதே குறைந்தது. அனைவரிடமும் அரசர்களே பேசிக்கொண்டிருந்தனர். ரம்பகுரம்பர் கருக்கிருட்டில் கதையேந்தி களம்புகுந்தனர். புரவியேறி மலைச்சரிவுகளில் விரைந்தனர். நான்குபேருக்கான உணவை ஒருவரே உண்டனர். அவையமர்ந்து ஏழு அமைச்சர் வாசித்துக்காட்டிய ஓலைகளை ஒரேசமயம் கேட்டு முடிவுகள் சொன்னார்கள். வணிகர்களை சந்தித்தபடியே அமைச்சர்களுக்கு ஆணையிட்டனர். நிலவுமுதிர்ந்த இரவுவரை கலைகளில் ஈடுபட்டனர். அவர்கள் எப்போது துயில்கிறார்கள் என்பதை எவரும் அறியவில்லை.
என்று என்று என சூரரும் சபரரும் காத்திருந்த தருணம் ஒருநாள் காலையில் வந்தது. மஞ்சத்தறையில் குரம்பனின் அலறலோசை கேட்டு ஏவலர் உள்ளே புகுந்து நோக்க ரம்பன் தன் ஒருவயிற்றனை நிலத்தோடு அழுத்தி ஏறியமர்ந்து வலக்கையால் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தான். அவன் இடக்கையில் இருந்த கட்டாரியுடன் அதை குரம்பனின் வலக்கை இறுகப்பற்றியிருந்தது. இடக்கையால் ரம்பனின் தோளை ஓங்கி அறைந்து குரம்பன் கூச்சலிட்டான். உள்ளே சென்ற ஏவலர் திகைத்து நிற்க பின்னால் வந்த சூரர் அருகே இருந்த பெரிய பீடத்தை எடுத்து ஓங்கி ரம்பனின் தலையில் அடித்தார். அலறியபடி அவன் சரிய அந்த சிறிய தருணத்தை பயன்படுத்திக்கொண்டு தன்னை மீட்ட குரம்பன் உருண்டுகிடந்த பித்தளை உமிழ்கலத்தை எடுத்து ரம்பன் தலைமேல் மீண்டும் அறைந்தான். விலங்கென அலறியபடி புரண்ட ரம்பன் எழுவதற்குள் கைகளை ஊன்றி தவழ்ந்து அறைமூலைக்குச் சென்ற குரம்பன் “என் ஆணை! கொல்லுங்கள் இந்த விலங்கை... இக்கணமே கொல்லுங்கள்!” என்று கூச்சலிட்டான். ரம்பன் “அவனை என்னிடம் பிடித்துக்கொடுங்கள்... புழு... இழிந்த புழு...” என்று பற்கள் கிட்டிக்க கூவினான்.
சூரர் ஆணையிட ஏவலர் குரம்பன் மேல் பாய்ந்து பற்றி இறுக்கி பட்டுத்துணிகளால் கைகால்களை சேர்த்துக்கட்டினர். ரம்பனை கட்டச்சென்ற இருவர் தூக்கிவீசப்பட பன்னிருவர் ஒரே சமயம் அவன் மேல் பாய்ந்து இறுக்கினர். சூரர் பீடத்தின் உடைந்த கால்களால் அவன் தலையை அறைந்துகொண்டே இருந்தார். தலையுடைந்து குருதி வழிய மெல்ல அவன் தளர்ந்தபோது ஏவலர் அவனையும் துணிகளால் இறுக்கிக் கட்டினர். அவன் மூக்கின்கீழே சிவமூலிப்புகை காட்டி மயங்கச்செய்து தூக்கிச் சென்றனர். இருவரையும் அவர்களின் பழைய தனியரண்மனைகளுக்கே கொண்டுசென்று படுக்கச்செய்தனர்.
அவர்கள் விழித்தெழுகையில் தோள்வலுத்த ஏவலரும் மருத்துவரும் உடனிருக்கவேண்டும் என சபரர் ஆணையிட்டிருந்தார். அவர்கள் காலையில் மஞ்சத்தருகே காத்திருந்தனர். முதலில் விழித்தெழுந்த ரம்பன் எங்கிருக்கிறோம் என்றறியாமல் திகைத்து கைகளை மெத்தைமேல் அடித்தபடி ஓலமிட்டான். “ஆ! ஆ!” என்று அலறியபடி எழுந்தான். “யார்? யாரது? யார்?” என்று திகைப்புடன் சுற்றுமுற்றும் தலைதிருப்பி செவிகூர்ந்து கூவினான். “அரசே, நாங்கள்தான்...” என்று சூரர் சொன்னார். “யார்? யார்?” என்றான் ரம்பன். உடனே தன் நெஞ்சில் ஓங்கியறைந்தபடி எழுந்தோடி மஞ்சத்தறையின் சாளரம் வழியாக வெளியே குதிக்கப்பாய்ந்தான். அவனை பாய்ந்து பற்றி இழுத்துச் சுழற்றி தரையோடு அழுத்தினர். அவன் “நான்! நான்!” என்று கூவியபடி தரையில் மண்டையை அறைந்தான். நெற்றி உடைந்து குருதி வழிந்து தரையில் சிதறியது.
அவனைப் பற்றி இழுத்துச்சென்று தனியறையில் அடைத்தனர். நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “நான்! நான்!" என்று கூவினான். தரையையும் சுவர்களையும் ஓங்கி ஓங்கி மிதித்தான். அறைந்து வெறிக்கூச்சலிட்டான். தலையை கதவுகளிலும் சாளரங்களிலும் மாறி மாறிமுட்டினான். தன் உடலை தானே நகங்களால் கிழித்தான். உதடுகள் கடிபட்டு குருதி பெருகியது. அலறி அலறி தொண்டை கமறி ஒலியழிந்தபோது மல்லாந்து தரையில்படுத்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்தான். கட்டுண்டவன் சிறைச்சரடுகளை அறுக்கமுனைவதுபோல தவித்து துடித்தான். வெறிகொண்டு மீண்டும் எழுந்து கதவுகள் மேல் பாய்ந்தான்.
உச்சிவேளையில்தான் குரம்பன் விழித்தெழுந்தான். உடலைச் சுருக்கியபடி கண்களை விழித்து மச்சுப்பரப்பை நோக்கி சற்றுநேரம் படுத்திருந்தான். பின்பு தன்னிரக்கம் கொண்டு விசும்பி அழத்தொடங்கினான். அவனருகே குனிந்த சூரர் “அரசே, நான் நிமித்திகன் சூரன்” என்றார். அவர் சொற்கள் அவனை சென்றடையவில்லை என்பதுபோல நோக்கினான். சிந்தனைகளுக்கு நடுவே இருந்த தொடர்பு அறுபட்டுவிட்டதுபோல விழிகள் மட்டும் உருள உடல் சோர்ந்து மஞ்சத்திலேயே இருந்தான். அவனை தூக்கிச்சென்று நீராட்டினர். உணவூட்டப்பட்டதும் உண்டான். பேசப்பட்ட எதையும் உள்வாங்கவில்லை. அவன் விழிகளுக்குப்பின்னால் ஆன்மா இல்லையோ என்ற ஐயத்தை சூரர் அடைந்தார்.
குரம்பன் அறைக்குள் புகுந்த கருவண்டு ஒன்று அவனைச் சுற்றிச்சுற்றி வந்ததைக் கண்டு அவன் அசையாமல் அமர்ந்திருப்பதை சூரர் கண்டார். அவன் விழிகள் அதை தொடர்ந்தன. உடல் பதறிக்கொண்டிருந்தது. ஆனால் கையைத் தூக்கி அந்த வண்டைத் துரத்த அவனால் முடியவில்லை. குரல்கொடுக்கவும் இயலவில்லை. கைகள் சோர்ந்தவை போல இருபக்கமும் கிடக்க நோக்கியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு ஏவலன் ஓடிவந்து வண்டைத் துரத்தியபோது அவன் உடல் ஆறுதல்கொண்டு நெகிழ்ந்தது. தொண்டை ஒரு சொல்லுக்கென அசைந்தது. ஆனால் ஒலி எழவில்லை.
ரம்பன் தனியறையிலேயே கிடந்தான். அவனுக்களிக்கப்பட்ட உணவை அருந்தவில்லை. விடாய்கொண்டு அவன் நீர் கேட்கும்போது வெல்லம் சேர்த்த பால் அளிக்கும்படி சபரர் ஆணையிட்டிருந்தார். அதைமட்டுமே உண்டு அவன் உடல் உயிர்த்தது. ஒருமாதகாலம் கடந்து மெலிந்து எலும்புருவான ரம்பன் வெளியே கொண்டுவரப்பட்டான். அவனை கண்காணித்தபடி எப்போதும் ஏவலர் உடனிருந்தனர். தன் தலையின் வலப்பக்கத்தை காதுக்குமேல் வலக்கையால் தட்டிக்கொண்டே இருந்தான். காதுக்குள் நீர் சிக்கிக்கொண்டதுபோல தலையை உதறினான். நிலையற்று அறைக்குள் சுற்றிச்சுற்றிவந்தான். திடீரென்று நின்று “ஆ!ஆ!” என்று அலறினான். காதை கையால் தட்டிக்கொண்டு “யார்? யாரது? யார்?” என்று கூச்சலிட்டான். மூக்கைச் சுளித்து ஏதோ மணத்தை முகர்ந்தான். ஐயத்துடன் அறைமூலைகளை நோக்கி திரும்பி “யாரது? யாரது?” என்றான்.
அவன் படுப்பதே இல்லை. மஞ்சத்திலோ தரையிலோ சற்றுநேரம் அமர்ந்தால்கூட உடனே எழுந்தான். தலையை சுழற்றிக்கொண்டு நடந்துகொண்டே இருந்த நிலையில் உடல்விதிர்க்க விரைத்து நின்று கழுத்துத் தசைகள் இழுபட கைகள் உதறியசைய “ஆஆஆ” என்று ஓசையிட்டான். மெல்லிய காலடியோசைக்கும் அவன் உடல் அதிர்ந்தபடியே இருந்தது. “யார்? யாரது?” என்று கூவியபடி அருகே இருந்த எப்பொருளையும் தூக்கிக்கொண்டு பாய்ந்தெழுந்து தாக்கப்போனான். அவனைச்சுற்றி மெல்லிய பஞ்சணைவுகள் மட்டுமே இருக்கும்படி செய்தனர். அவனை அறிந்த ஏவலர் மட்டுமே அவன் அறைக்குள் செல்லத்துணிந்தனர். அவன் முழுமையாகவே துயிலிழந்திருந்தான். கண்கள் மூடி சற்றுநேரம் அமர்ந்திருக்கையிலும் கைகளால் வலதுகாதுக்குமேல் தட்டிக்கொண்டே இருந்தான்.
குரம்பன் எப்போதுமே படுக்கையில் இருந்தான். அவன் உடலில் இருந்து முழு உயிராற்றலும் விலகிச்சென்றதுபோலிருந்தது. கைகளும் கால்களும் எப்போதும் வியர்த்துக் குளிர்ந்திருந்தன. நூல்களை அவன் முன் கொண்டுசென்றனர். அவனால் அவற்றை எழுத்துசேர்த்து வாசிக்கமுடியவில்லை. எதையும் நிலையாக நோக்கவே இயலவில்லை. ஆனால் அவன் பசி கூடிக்கூடி வந்தது. உணவுவேண்டும் என்பதை அவன் கேட்பதில்லை. உறுமியபடி தலையை அசைப்பான். விழிகளிலிருந்து நீர் வழியும். உணவு அருகே வந்ததும். நடுங்கும் உடலுடன் அதை அணுகி விலங்கு போல குனிந்து உதறும் கைகளால் அள்ளி மெல்ல உண்பான். நாளெல்லாம் அவன் உண்டுகொண்டிருந்தான். அவன் உடல் உப்பிப்பெருத்து வெளிறியது.
ஏதோ ஒருகணத்தில் ஒவ்வொருவரும் அவர்களின் இறப்பை எதிர்நோக்கத் தொடங்கினர். முதலில் அவ்வெண்ணத்துடன் அவர்கள் எதிர்பொருதினர். பின்னர் அதுவே அவர்களுக்கு நல்லது என்று சொல்சூழத் தலைப்பட்டனர். பின்னர் அதற்காக விழைந்தனர். பின்னர் பொறுமையிழந்து காத்திருந்தனர். அவர்களின் விழிகளுக்கு முன்னால் இருவரும் மெல்ல அழிந்துகொண்டிருந்தனர்.
[ 3 ]
ஒவ்வொருநாளும் என மடிந்துகொண்டிருந்த ரம்பனையும் குரம்பனையும் கண்டு சபரர் ஆழ்துயரில் அமைந்தார். சூரர் “நாம் செய்வதற்கொன்றில்லை என்றே எண்ணுகிறேன் ஆசிரியரே. அவர்களின் உள்நிறைந்து மண்வந்த ஒன்று தன்னை விடுவித்துக்கொள்ள விழைந்தால் நாம் என்ன செய்ய முடியும்?” என்றார். சபரர் எண்ணச்சுமையுடன் தலையை அசைத்து “அவ்வாறல்ல, இது விழிப்புள்ளமும் கனவுள்ளமும் நுண்ணுள்ளமும் கொள்ளும் ஒத்திசைவின்மை மட்டுமே. ஒரு நோயே இது. இதற்கு மருத்துவமென ஒன்று இருந்தாகவேண்டும்” என்றார்.
“உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு நுனியைப் பொருத்தி, துரியப்பெருவிரிவுக்கு அப்பால் நின்றிருக்கும் நுண்மையில் மறுநுனியைப் பொருத்தி நின்றிருக்கும் அலகிலி. பருவும் அருவும் முயங்கும் களம். அது இதுவாக ஆகவும் இது அதுவென்றறியவும் உள்ளமென்பதே ஊடகம். அதை இங்குள எதைக்கொண்டும் முற்றறியவியலாது” என்றார் சபரர். “ஆனால் அது தன் நோயை நமக்குக் காட்டுவது வரை நாம் நம்பிக்கை கொள்ள இடமுள்ளது. நோயை காட்டுகையில் என்னை சீரமை என்று நம்மிடம் அது கோருகிறது. நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.”
“எழுக நம் ஒற்றர்படை! பாரதவர்ஷத்தின் பெருமருத்துவர் அனைவரும் இங்கு அணைக!” என ஆணையிட்டார் சபரர். ஒவ்வொருநாளும் மருத்துவர் வந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒருநோய் காட்டி நின்றிருந்தனர் இருவரும். ஒவ்வொரு மருத்துவரும் ஒரு மருந்தை அளிக்க அம்மருந்துக்கு அப்பால் நின்றிருந்தது நோய். “உளநோய் என்பது ஆடி. மருத்துவன் தன்னை அதில் காண்கிறான்” என்றார் சபரர். "முற்றிலும் தன்னை மறைத்து உளநோயை நோக்கும் மருத்துவர் ஒருவர் தேவை நமக்கு. நாம் அவருக்காக காத்திருப்போம்.”
தென்னகத்திலிருந்து இறுதியாக வந்த முதுமருத்துவர் சாத்தன் அகத்தியர்வழித்தோன்றல் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். நீள்தாடி நிலம்தொடும் குற்றுருவத்தினர். ஒளிக்கண்களும் மணிக்குரலும் கொண்டவர். அரசர் இருவரையும் அணுகி நோக்கி, நாடிதேர்ந்தபின் திரும்பி “நோயென ஏதுமில்லை” என்றார். சூரர் புருவம் சுருக்கி நோக்கினார். சபரர் புன்னகை செய்து சூரரிடம் மெல்லியகுரலில் “ஏனென்றால் மருத்துவன் நோயற்றவன்” என்று சொன்னார். “அவர் எதை காண்கிறார்?” என்றார் சூரர். “ஒவ்வொரு மருத்துவனிடமும் ஒவ்வொருவகையில் நடிக்கும் உள்ளத்தை எங்கு சென்று தொடுவார் இவர்?” சபரர் “நோயில் மருந்துக்கு விழையுமிடம் எதுவோ அதைமட்டும் அறிபவனே மருத்துவன்” என்றார்.
சாத்தன் ரம்பனை தொட்டும் அழுத்தியும் விழியுள் நோக்கியும் ஆராய்ந்தபின் திரும்பி “சபரரே, உடலென்பது செயலுக்கென இயற்றப்பட்டது. அசுரர் உடலோ அருஞ்செயலுக்கென யாக்கப்பட்டது என்று அறிக! இவர்கள் இணைந்து செயல்படவே இதுவரை கற்றிருந்தனர். பிரிந்தபின் செயல்படத்தெரியாதவர்களாக ஆகிவிட்டனர். செயலின்மையால் உடல்சூம்பும். உள்ளம் சிதறும்” என்றார்.
“விழிப்புளமும் கனவுளமும் நுண்ணுளமும் மூன்றும் ஒன்றேயாயினும் வெவ்வேறென்றே செயல்கொள்ளும். அவற்றின் அறிதல்களும் ஆதல்களும் வேறு. அவற்றிடையே உள்ள பொதுமை அவைமூன்றும் அமைந்திருக்கும் உடலென்பது ஒன்று என்பது மட்டுமே. எனவே உடல் தொழிற்படுகையிலேயே அவை தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்கின்றன. இவ்விரு உடல்களையும் செயல்கொள்ளச் செய்வோம். உடலுக்குள் வாழும் மூவுளமும் இணைந்து ஓருருவாகும். அரசர் அகம் திரண்டு மீள்வர்” என்றார். சபரர் ஒன்றும் சொல்வதற்கின்றி நீள்மூச்செறிய சூரர் “நாங்கள் என்ன செய்யலாகும்?” என்றார். “அரசரிடம் விழைவை மூட்டுக! செயலுக்கு அனல் விழைவே. அதன்பின் அருஞ்செயல் ஒன்றை அவருள் கூட்டுக! அதில் தன்னைச் செலுத்துகையில் அவர்கள் ஆற்றலுறுவர்.”
சூரர் “ஆவன ஆணையிடுங்கள் மருத்துவரே” என்றார். “இங்கு விழைவின் தெய்வம் எழுக! நகர்நடுவே பெருவேள்வி ஒன்று கூட்டி இந்திரனை வரச்செய்வோம்” என்றார் சாத்தன். “நாங்கள் அசுரர்கள். இந்திரனுக்கு எதிரிகள். எங்கள் மூதாதையர் எவரும் இன்றுவரை இந்திரனுக்கு அவியிட்டதில்லை” என்றார் சூரர். “ஆம், அவர்களெல்லாம் இந்திரனே அஞ்சும் பெருவிழைவு கொண்டிருந்தனர். அருந்தவம் இயற்றி அரியநற்சொல் பெற்றனர். விண்வென்றனர். தெய்வங்களுடன் சமர்புரிந்தனர். விழைவு அணைந்த அசுரர் இவர்கள் மட்டுமே” என்றார் மருத்துவர்.
எண்ணித்தயங்கிய சூரர் சபரரை நோக்க அவர் “இந்திரன் அருளால் இவர்கள் உயிர்மீள்வதென்றால் அது நடக்கட்டும்” என்றார். சூரர் மேலும் சொல்லெடுக்க முயல “எதிரியை வாழவிடுபவனே வீரன் எனப்படுவான். இந்திரன் அருளியாகவேண்டும்” என்றார் மருத்துவர். சூரர் நீள்மூச்செறிந்தார். சபரர் “பிறிதொரு வழியில்லை சூரரே. மைந்தரில்லாமல் இவ்விருவரும் இறப்பார்களென்றால் நூறு யுகங்களாக இங்கு அழியாது வாழ்ந்த அசுரர்குடிக்கு அரசக்கொடிவழி இல்லாமலாகும்” என்றார்.
சாத்தன் முகம் மலர்ந்து “அவ்விழைவையே முன்வைப்போம். விழைவுகளில் தலையாயது மைந்தர்பேறு அல்லவா? இருவரிலும் அதை எழுப்புவோம்” என்றார். “ஆம், அதுவே நன்று” என்றார் சபரர். “தெய்வங்கள் துணைநிலைகொள்க!” சூரர் நிலையழிந்த உள்ளத்துடன் அமைச்சர்களை நோக்கி “நிமித்த நூலும் சென்றடையாதவை தெய்வங்களின் ஆடல்களங்கள். ஆவன செய்க!” என ஆணையிட்டார். அமைச்சர் ஒருவரையொருவர் நோக்கினர். தலைமையமைச்சர் “ஆணை!” என தலைவணங்கினார்.
மறுநாள் அடுமனையில் மணையிட்டு, இலைவிரித்து குரம்பனுக்கான உணவை குவித்துவிட்டு ஏவலர் பணிந்து விலகிநின்றனர். உணவுக்கு இருவர் குரம்பனை மெல்ல தூக்கிக்கொண்டுவந்து அமர்த்தினர். உணவைக் கண்டபின்னரும் எந்த மெய்ப்பாடுமில்லாமல் எங்கோ நோக்கும் விழிகளுடன் இருப்பது அவன் வழக்கம். அமரச்செய்தபின் அவன் கைகளை உணவின்மேல் எடுத்து வைப்பார்கள் ஏவலர். அவன் அக்கை அசையாமல் உணவின்மேல் விழுந்துகிடக்க செயலிழந்து அமர்ந்திருப்பான். உணவுகுறித்த விழைவு உடலில் தெரியத்தொடங்கியபின்னரும் அவன் கை செயலாற்றத் தொடங்காது. ஏதோ ஒருகணத்தில் அது மெல்ல அசைந்து உணவை அள்ளி மெல்ல வாய்க்குள் கொண்டுசெல்லத்தொடங்கும்.
அன்று வாயருகே சென்ற உணவு அசையாமல் நின்றது. குரம்பனின் மூக்கு சுளித்தது. இருமுறை குமட்டிவிட்டு உணவை இலையில் போட்டான். விழிதிருப்பி ஏவலரை நோக்கிவிட்டு மீண்டும் உணவை அள்ளினான். அதை மூக்கருகே கொண்டு செல்வதற்குள்ளாகவே குமட்டலுடன் போட்டுவிட்டான். மேலும் சற்றுநேரம் அவன் உள்ளம் சேற்றுவிழுக்கில் சிக்கி வழுக்கிக்கிடந்தது. பின்பு பெரிய ஒலியுடன் குமட்டியபடி கையூன்றிச் சரிந்தான். ஏவலர் ஓடிவந்து குனிந்து “அரசே!” என்றனர். “என்ன ஆயிற்று?” என்று தலைமை ஏவலர் அவனிடம் கேட்டார். “உணவு! உணவில் நாற்றம்!” என்றான் குரம்பன். “அதில் மலம்...” அவர்கள் அதை அள்ளி முகர்ந்தனர். “இல்லை அரசே... உணவில் நறுமணமே வீசுகிறது. தங்கள் உளமயக்கு அது” என்றார் தலைமை ஏவலர். “இல்லை... அது மலநாற்றம்... மலம்” என்றான் குரம்பன்.
தலைமை அடுமனையாளர் வந்து உணவை அள்ளி முகர்ந்துநோக்கிவிட்டு வாயிலிட்டு மென்று உண்டார். “நல்லுணவு அரசே... தாங்கள் உளம்குழம்பியிருக்கிறீர்கள்” என்றார். “வேறு உணவு... வேறு உணவு கொண்டுவருக!” என்றான் குரம்பன். அடுமனையாளர் ஓடிச்சென்று வேறு உணவைக்கொண்டு வந்து அவன் முன் பரப்பினர். அதில் ஒரு கவளம் அள்ளுவதற்குள்ளாகவே அவன் குமட்டி வாயுமிழ்ந்தான். “மலம்! மலம் நாறுகிறதே!” என்று கூவினான். அவனை கொண்டுசென்று வேறு அறையில் அமரச்செய்தனர். வேறு அடுமனையிலிருந்து வேறு உணவு கொண்டுவரப்பட்டது. அவ்வுணவைக் கண்டதுமே அவன் குமட்டி அதிர்ந்தான். அவனுக்குக் கொண்டுவரப்பட்ட அத்தனை உணவும் மலம்நாறின. உணவின்றி படுக்கையில் படுத்துக்கொண்டு பசியுடன் புரண்டான். “உணவு! உணவு வருக!” என்று கூவினான். மெல்ல அவன் குரல் மேலெழுந்தது. கைகளால் சேக்கைப்பரப்பை அறைந்தான். பற்களைக் கடித்து “உணவு! உணவு வேண்டும்!” என்று அலறினான். எவ்வுணவையும் அவனால் ஏறிட்டு நோக்கமுடியவில்லை.
மறுநாள் ரம்பனின் படுக்கையறையில் மேலிருந்து குருதித்துளிகள் சொட்டத் தொடங்கின. அவன் அறைச்சுவர்களில் குருதி வழிந்தது. முதலில் அதை மழைத்துளி என எண்ணி அவன் தொட்டுப்பார்த்தான். முகர்ந்து நோக்கி குருதி என அறிந்ததும் கூச்சலிட்டு ஏவலரை அழைத்தான். “குருதி சொட்டுகிறது என் மேல்! இதோ குருதி!” என்று கூவினான். ஏவலர் அதை ஒற்றி எடுத்து “அரசே, குருதியல்ல இவை. உங்கள் வியர்வைத்துளிகள்தான்” என்றனர். “மூடா, அறைந்தே கொல்வேன்... அவை குருதிச்சொட்டுக்கள். என் மூக்கு அறிகிறது” என்றான் ரம்பன். “எங்கள் விழிகள் வண்ணம் காட்டவில்லை. எங்கள் மூக்குக்கும் ஏதும் தெரியவில்லை அரசே” என்றார் தலைமை ஏவலர்.
“குருதி! எவர் குருதி அது?” என்று ரம்பன் அரற்றினான். “எவர் குருதியில் நான் கிடக்கிறேன்?” அவனை இடம் மாற்றி அமரச்செய்தனர். அங்கும் குருதித்துளிகள் அவன் மேல் சொட்டின. அவை ஏவலருக்கு வியர்வையென்றே தெரிந்தன. எழமுயன்ற ரம்பன் குருதிவழுக்கி விழுந்தான். குருதி அவன் கண்களில் வழிந்தது. இதழ்களில் உப்பென சுவைத்தது. அவன் உடல் நனைந்து விலாவில் கைகள் வழுக்கின. “எங்கும் குருதி! இவ்வரண்மனை எங்கும் குருதி பெய்கிறது!” என்று அவன் கதறினான்.
நான்குநாட்கள் குரம்பன் ஒருவாய் நீரும் இன்றி பசித்திருந்தான். ரம்பன் குருதிபெருகிய அறையில் புழுவென தவழ்ந்துகொண்டிருந்தான். “என்ன நடக்கிறது? அமைச்சர்களே! ஆசிரியரே!” என அவர்கள் கூவினர். ஐந்தாம்நாள் அவர்கள் முன் அமர்ந்த நிமித்திகர் சூரர் “அரசே, உங்கள் உலகவாழ்க்கை முடிவடையவிருக்கிறது. இன்னும் சிலநாட்களே எஞ்சியுள்ளன. நீங்கள் செல்லவிருக்கும் புத் என்னும் பெருநரகக்குழியின் வாழ்க்கை இப்போதே தொடங்கிவிட்டது” என்றார். “அங்கே மலம்நாறும் உணவே அளிக்கப்படும். குருதிமழை பொழியும்.”
“அரசே, மைந்தரைப்பெற்று விண்வாழும் மூதாதையருக்கு மண்ணிலிருந்து நீரும் உணவும் அளிக்கும்படி அமைத்துச்செல்வதென்பது அனைவருக்கும் கடனே. நீங்கள் மைந்தரின்றி இறக்கிறீர்கள். மூதாதையரின் கண்ணீரும் பழிச்சொல்லும் உங்களை குருதியென்றும் இழிமணமென்றும் சூழ்ந்திருக்கும்” என்றார் சூரர். ரம்பன் சோர்ந்த குரலில் “விழியிழந்த நான் செய்வதற்கென்ன உள்ளது? என் ஊழ் இது” என்றான். குரம்பன் கண்ணீருடன் “என் உடல் செயலற்றிருக்கிறது நிமித்திகரே” என்றான். “அரசே, உடலில் உயிர் எஞ்சியிருக்கும் வரை செயல்கொள்ள வாய்ப்பும் உள்ளது. விழைவு எஞ்சியிருந்தால் போதும். விழைவுக்கிறைவனை அவியளித்து எரியில் எழுப்புவோம்... நீங்கள் இருவரும் வந்து வேள்விக்காவலர்களாக அமர்க!” என்றார் சூரர்.
தானகத்தின் பெருமுற்றத்தில் இந்திரனுக்குரிய அக்னிசூடாமணி வேள்வி தொடங்கியது. நூற்றெட்டு வைதிகர் கூடி ஏழுநாட்கள் அவ்வேள்வியை நிகழ்த்தினர். அவியுண்ட எரி எழுந்து விண்ணை வருடியது. அவ்வழைப்பை இந்திரன் கேட்டான். விண்ணெங்கும் முகில்கள் கூடிச்செறிந்தன. இடியோசையும் மின்னல்துடிப்பும் எழுந்தன. கீழ்ச்சரிவில் இந்திரவில் வளைந்தது. கோட்டைக்காவல் நின்ற வீரன் ஒருவன் அங்கே வாயிலில் பதித்த மணியில் இந்திரவில் தெரிவதைக் கண்டு கூர்ந்து நோக்கினான். நண்பனை “இதோ!” என்று அழைப்பதற்குள் நாதளர்ந்து விழுந்தான்.
அந்த அருமணி ஒரு கனல்துளியாக எரிந்தது. எரிவண்டென மாறி எழுந்து சிறகொளிரப் பறந்து வேள்விக்கூடம் மேல் சென்று விழுந்தது. வேள்விக்கூடம் பற்றிக்கொள்ள வேள்விமரமென நின்றிருந்த கல்லாலமரத்தின் கிளையில் அனல்வடிவமாக இந்திரன் எழுந்தான். “தேவர்க்கரசே, இங்கு விழைவென எழுக! இந்த அவியை உண்டு எங்களுக்கு அருள்க!” என்றார் வேள்வித்தலைவர். “ஆம், மகிழ்ந்தேன். என் அருள் இங்கு நிறையும். இவ்வரசர் இருவரும் விழைவுகொள்வர். செயல்விரைவு அடைவர்” என்றான் இந்திரன்.
வேள்விக்குப்பின் இருவரும் பெருங்காமம் கொள்ளலாயினர். உடலென்பது காமத்திற்கான கருவி மட்டுமே என்பதுபோல. உள்ளமென்பது காமம் நிகழும் நுண்களம் மட்டுமே என்பதுபோல. “அது நீர்பட்டு உயிர்கொண்ட விதையின் விரைவு. நன்று!” என்றார் மருத்துவர். “நோயுற்றவர்களுக்கு மணமகள் தேர்வது இப்போது இயல்வதல்ல. எங்கு எவர் வயிற்றிலாயினும் மைந்தர் எழுக!” என்றார் சபரர். நாளென்றும் பொழுதென்றுமில்லாமல் இருவரும் காமமாடினர்.
காமம் அவர்கள் ஐம்புலன்களையும் விழித்தெழச் செய்தது. ஏழுசக்கரங்களையும் உயிர்கொள்ளச்செய்தது. உண்டு பயின்று உடல்தேறினர். அணிசூடினர். கலையும் இசையும் கவியும் தேர்ந்தனர். மணமும் சுவையும் நாடினர். அவர்களின் மூச்சு வலுப்பெற்றது. சொல் கூர்மைகொண்டது. விழிகளில் நகைப்பு நின்றது. அவர்களின் மஞ்சங்களுக்கு தானகத்தின் அழகியபெண்கள் சென்றபடியே இருந்தனர். காமம் என்பது தனிமையின் கொண்டாட்டம். அவர்கள் இருவருமே பிறனை மறந்தனர்.
ஓராண்டாகியும் அவர்களைக்கூடிய பெண்கள் எவரும் கருவுறவில்லை என்று கண்டனர் அமைச்சர். ஒவ்வொருநாளும் காலையில் ரம்பனும் குரம்பனும் “என்ன செய்தி? எவரேனும் கருசூடியிருக்கின்றனரா?” என்றனர். முகம் குனித்து “இல்லை அரசே. செய்தியேதும் இல்லை” என்ற மறுமொழியையே ஏவலரும் அமைச்சரும் சொல்ல நேர்ந்தது. நாட்கள் அடுக்கடுக்காக விழும்தோறும் சலிப்பும் சினமும் கொண்டு அவர்கள் கூச்சலிட்டனர். “என்ன நிகழ்கிறது? நாங்கள் முளைக்கா விதைகளா? அழையுங்கள் நிமித்திகர்களை” என்று ரம்பன் கூவினான். “இப்போதே அறிந்தாகவேண்டும். எங்கள் மைந்தர்கள் எவ்வுலகில் இருக்கிறார்கள்? எந்தத்தெய்வங்களால் காக்கப்படுகிறார்கள்? மும்மூர்த்திகளென்றாலும் அவர்களை வென்று எங்கள் மைந்தரை அடைவோம்” என்றான் குரம்பன்.
நிமித்திகர் களம் அமைத்து கருவுருட்டி “அரசே, உங்கள் மைந்தர்கள் நுண்ணுலகில் சித்தமாகி நின்றிருக்கிறார்கள். அவர்கள் மண்நிகழ பிரம்மனின் ஒப்புதல் கிடைக்கவில்லை” என்றார். “இதோ, பிரம்மனை வரவழைத்து அவன் சொல்லை பெறுகிறேன். எண்ணுவது எய்தாது அமையேன்” என்று ரம்பன் எழுந்தான். “ஆம், மைந்தரைப் பெற்றே மறுஎண்ணம் கொள்வேன்” என்று குரம்பன் வஞ்சினம் உரைத்தான். இருவரும் தோள்தட்டி எழ அமைச்சர்கள் அசுரகுடியின் ஆற்றல் எழுந்தது என உளம் மகிழ்ந்தனர்.
சூரர் களம்தேர்ந்து அவர்களுக்குரிய தவமுறைகளை கண்டடைந்தார். “அசுரர் தலைவர்களே, நீங்கள் இருவரும் ஒற்றையுடலும் ஓருள்ளமும் கொண்டு எழுகையிலேயே முழுமைகொள்வீர்கள். முழுமையின் கணத்திலேயே தெய்வங்கள் எழுகின்றன என்றறிக!” ரம்பன் சினத்துடன் தன் கையை நெஞ்சில் அறைந்து “அதற்குரிய வழி என்ன என்று சொல்லுங்கள்!” என்றான். “அரசர்களே, இருவரும் பிரிந்து சென்றுவிட்ட தொலைவனைத்தையும் திரும்ப வந்தாகவேண்டும். உங்கள் உடல் முன்பென பிறிதிலாது ஒன்றாகவேண்டும். உள்ளம் ஒன்றென்றே ஆகவேண்டும். ஒற்றைஎண்ணம் உங்கள் சித்தத்தில் எழுந்து ஒற்றைச்சொல்லாகி உங்கள் உதடுகளில் எழும்போது தெய்வங்கள் அருளும்” என்றார் சபரர். “அனல்கொண்டு விலகியவர் குரம்பன். அவர் நீருள் அமர்ந்து தவமியற்றட்டும். நீர்கொண்டு அகன்ற ரம்பன் அனலில் அமர்ந்து தவமியற்றட்டும். தவமென்பது இழப்பதனூடாக அடைவதே. அது நிகழ்க!” ரம்பனும் குரம்பனும் வணங்கி “ஆணை ஆசிரியரே!” என்றனர்.
ரம்பனும் குரம்பனும் தங்கள் ஆசிரியரை வணங்கி கங்கைக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினர். நிலைமூச்சுக்கலை பயின்ற குரம்பன் கங்கையின் நீலநீருக்குள் மூழ்கி அடித்தட்டு தொட்டு அமர்ந்து ஒற்றைச்சொல்லில் உளம்குவித்து தவத்தில் ஆழ்ந்தான். வைரவுடல் பெற்றிருந்த ரம்பன் ஐந்து தீ வளர்த்து அதன்நடுவே உருகாத பீடத்தில் அமர்ந்து சொல்குவித்து ஊழ்கம் கொண்டான். குரம்பன் குளிர்ந்து குளிர்ந்து அமிழ்ந்தான். ரம்பன் எரிந்து எரிந்து எழுந்தான். இன்மை என குரம்பன் சென்றான். இனி இனி என ரம்பன் விம்மினான். ஒவ்வொன்றும் எடைகொண்டன குரம்பனுக்கு. ஒவ்வொன்றும் ஆவியென்றாயின ரம்பனுக்கு. பின்பொரு மாயகணத்தில் ரம்பன் நீரின் தண்மையை நெருப்பில் அறிந்தான். அக்கணமே குரம்பன் நெருப்பென நீருள் எரிந்தான்.
விண்ணில் சென்ற கருமுகில் குவை ஒன்று யானையென்றாகி துதிக்கை நீட்டி ரம்பனை பற்றியது. அவன் உதறித் திமிற அவன் கைசுற்றி இறுக்கி மேலே இழுத்தது. நீருள் மூழ்கி வந்த முதலை ஒன்று குரம்பனை கால்பற்றி ஆழம்நோக்கி இழுத்தது. மூச்சுக்குமிழியை நெஞ்சில் நிறுத்தி அவன் நீந்தி மேலெழ உன்ன மேலும் கவ்விப்பற்றி அவனை உள்ளே கொண்டுசென்றது. தங்கள் உடல் இரண்டாகப் பிளப்பதை இருவருமே உணர்ந்தனர். உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் சவ்வென அரக்கென இழுபட்டுக் கிழிந்தன. வலி பெருகிப்பெருகி வந்து உச்சத்தில் இனியதோர் விதிர்ப்பென்றாகியது. அக்கணத்தின் முடிவிலியில் இருவரும் நின்று திளைத்தனர்.
பின்னர் ரம்பன் தன் உடலில் அதுவரை இருந்துவந்த மாறாஎடை ஒன்று உதிர்வதை உணர்ந்தான். உயிர்த்துளி சீறிப்பிரிவதைப்போல, உடல்நீர்கள் வழிந்து ஒழிவதுபோல, விழிசொக்கும் இனிமையில் அவன் “நான் நான் நான்” என சொல்லிக்கொண்டான். நீண்டு இழுபட்டு இறுதிச்சரடும் அறுந்ததை ஓர் உலுக்கலுடன் உணர்ந்தான். பெருமூச்சுடன் உடல் தளர்ந்து நெருப்பின் நடுவே தவபீடத்தில் தொய்ந்தான். எண்ணங்களில்லாமல் காலமில்லாமல் அங்கிருந்தான். உடலின் ஒரு தசையையேனும் அசைக்கமுடியாதென்று தோன்றியது. இமைகள் எடைதாளாது விழிகள் மேல் கிடந்தன. இதழ்கள் நீரிலாது சொல்லிலாது அசைவழிந்தன. எங்கோ சென்று சென்று எங்கென்றில்லாது மறைந்தான்.
தன்னை கட்டிவைத்திருந்த ஒன்றிலிருந்து விடுபட்டு உதிர்ந்தான் குரம்பன். இறுதித்தசைநாரும் அறுந்து விடுபட்டதும் விசைகொண்ட ஆழ்நீர் ஒழுக்கில் கொண்டுசெல்லப்பட்டான். செதில்வால்சுழல அவனை கவ்விக்கொண்டுசென்ற முதலையின் அலையுடலை ஒன்றும் செய்வதற்கில்லாது நோக்கிக்கொண்டிருந்தான். “நீ! நீ!” என ஒலித்துக்கொண்டிருந்தது உள்ளம். ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒன்றுடன் ஒன்றெனக் கோத்து உடலென்றாக்கிய விசையிலிருந்து விடுபட்டன. ஒவ்வொன்றும் ஒரு மீனாயின. விழிகள் துள்ளும் கெண்டைகள். செவிகள் அகன்ற பொத்தைகள். மீசையுடன் மூக்குகள் கெளுத்தியாக மாறின. விரல்கள் துள்ளின. தோள்களும் கால்களும் திளைத்தன. மார்பு ஓங்கிலென்றாகி புரண்டது. அவற்றின் வாய் உமிழ்ந்த குமிழிகள் மேலெழுந்து ஒளியாக வெடித்தன.
விழிதிறந்த ரம்பன் மேலே எழுந்த யானையை நோக்கி என்ன நிகழ்ந்தது என்றறியாது திகைத்தான். “உன்னைப் பிளந்தேன்” என்றான் யானைமேலிருந்த இந்திரன். “நூறு யுகங்களுக்கு முன்பொரு நிலத்து யானையை நீர்முதலை கவ்வியது. ஆழம் இருப்புடன் போரிட்டது. அப்போர் முடிவதற்குள் ஆழியுடன் இறைவன் எழுந்தான். இன்று நான் ஆழமென வந்து முழுமையாக உன்னை வென்றுள்ளேன்.” மயக்கம் சொக்கும் விழிகளுடன் குரம்பன் “நான் நிறைந்துள்ளேன். நான் முழுமைகொண்டுள்ளேன்” என்றான். “மூடா, அது உன்னுள். வெளியே நீ குறைந்துள்ளாய். சிறுத்துள்ளாய்” என்றான் இந்திரன். திடுக்கிட்டு விழித்துக்கொண்ட குரம்பன் எழமுயன்றபோது வலப்பக்க உடல் இரும்பாலானதுபோல் எடையிழுக்க சரிந்து விழுந்தான். மீண்டும் மீண்டும் எழமுயன்று நிலையழிந்தான். அவன் இடப்பக்க மெல்லுடல் தீயில் வெந்துருகத் தொடங்கியது.
ஒருகணத்தில் முடிவெடுத்து தன் வலப்பக்க வைரங்கொண்ட உடலை உதிர்த்தான். “என்ன செய்கிறாய்? மூடா!” என்று இந்திரன் வியந்து கூவ அவன் இடப்பக்கம் மென்மைகொண்டு தீயில் வெந்துருகத்தொடங்கியது. அலறிச் சிதைந்துகொண்டிருந்த விரைவின் ஒருகணத்தில் அவன் உடலின் இருபகுதிகளும் முற்றிலும் நிகர்நிலைகொண்டன. எரிதழல்கள் செந்தாமரையிதழ்களென்றாயின. அதன் நடுவே எழுந்த நீலச்சுடர்மேல் வெண்பனிநிறக் குழலும் தாடியும் சூடி நான்கு திசையையும் ஆளும் முகங்களுடன் பிரம்மன் எழுந்தருளினார். வலது மேற்கையில் மின்படைக்கலம் துடித்தது. இடக்கையில் அமுதகலம் ததும்பியது. அஞ்சலும் அருளலும் காட்டிய கீழ்க்கரங்கள் தளிர்மை கொண்டிருந்தன. “நில் மைந்தா! கனிந்தது உன் தவம்” என்றார் பிரம்மன். “முற்றும் துறப்பதன் முழுமைக்கணம் உனக்கு வாய்த்தது. நீ வென்றாய்!”
பிரம்மனை வணங்கிய ரம்பன் “எந்தையே, என் சொற்களை கேட்டருள்க!” என்றான். “சொல், அருள்கிறேன்” என்றார் பிரம்மன். “இருமையழிந்து நான் ஒருமைகொள்ளவேண்டும்” என்றான் ரம்பன். “மைந்தா, உன் அகம் என்பது ஆழிருள். அகமனைத்தும் இருளென்றறிக! ஒளிநாட்டமே உன்னைப் பிளந்து இருவராக்கியது” என்றார் பிரம்மன். “ஒளிநாடமாட்டேன். இருளே எனக்கு ஒப்புதல். பிளவிலாத ஒருமைநிலையை மட்டும் அருள்க!” என்றான் ரம்பன். “அசுரேந்திரனே, முற்றிருள் பாதாளமூர்த்திகளுக்குரியது. முற்றொளியோ தெய்வங்களுக்குரியது. இருமையே இங்கு அனைவரையும் நிலைநிறுத்துகிறது என்று அறிக! அது நிலைகொள்ளாமை. அதுவே இருப்புப்பெருந்துயர். ஆயினும் இருநிலையே இயல்பு” என்றார் பிரம்மன்.
“நான் விழைவது நிறைநிலை மட்டுமே” என்றான் ரம்பன். “இருநிலையின் பெருவலியை இனி ஒரு துளியும் நான் தாளமாட்டேன்.” அவன் தலையைத் தொட்டு “இளையவனே, இருநிலையின் வாள்நுனியிலேயே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அமைந்துள்ளன. இருநிலையறுக்கும் வீடு அம்மூன்றும் அடையும் நிறைவிலேயே கைகூடும். நீ துறப்பது அனைத்தையும் என்று அறிவாயா?” என்றார் பிரம்மன். “ஆம் அறிவேன்” என்றான் ரம்பன். “நான் விழைவது ஆற்றலை மட்டுமே.” பிரம்மன் “ஆற்றல் இன்பத்தை அளிக்கும் என்பதைப்போல் அறிவின்மை ஏதுமில்லை” என்றார். “எனக்கு ஆற்றலே வேண்டும். இன்பங்களையும் அதன்பொருட்டு துறக்கிறேன். வீடுபேற்றையும் புறக்கணிக்கிறேன்” என்றான் ரம்பன்.
திகைத்து நின்ற பிரம்மனை நோக்கி “எந்தையே, ஒன்று சொல்க! ஆற்றல்மிக்கது எது, இருநிலையா ஒருமையா?” என்றான் ரம்பன். “அதிலென்ன ஐயம்? ஒருமையே ஆற்றலின் உச்சம். இருளாயினும் ஒளியாயினும்” என்றார் பிரம்மன். “அந்நிலையை மட்டுமே நான் வேண்டுகிறேன். சிதறாத பேராற்றல். பிறிதொன்றிலாத குவிதல்” என்றான் ரம்பன். அப்போது விண்ணிலெங்கோ ஓர் அவலக்குரலின் மெல்லிய அழைப்பை அவன் கேட்டான். அதை தவிர்த்து “ஆம், அதுவே நான் கோருவது” என்று மீண்டும் சொன்னான். “நீ விழைவதை அனலோன் அருள்க!” என்று சொல்லி பிரம்மன் மறைந்தார்.
அவனைச்சூழ்ந்து அலையடித்த அனலில் இருந்து உருவெடுத்து மேலெழுந்த எரியன் “வேண்டுவதென்ன?” என்றான். “உன் கரிநிழலை வெல்லும் ஆற்றல் கொண்ட ஒரு மைந்தன். உன் செங்கனலை வெல்லும் சினம் கொண்ட பிறிதொரு மைந்தன். அவனுக்குத்துணையாக உன் வெடிப்பொலியை வெல்லும் குரல் கொண்ட ஒரு மைந்தன்” என்றான் ரம்பன். அவ்வண்ணமே ஆகுக என்று சொல்லி அனலவன் உருவழிய ரம்பன் அனல்குவை நடுவே கன்னங்கரிய உருவுடன் குளிர்ந்து பெருகி எழுந்தான்.
ரம்பன் விழிப்படைந்ததும் தன்னைச்சூழ்ந்து பறந்துகொண்டிருந்த பொற்சிறைப் பூச்சிகளனைத்தும் யட்சர்கள் என்பதை உணர்ந்தான். அவர்களில் ஒருவரிடம் “யார் நீங்கள்?” என்றான். “இக்காட்டை ஆளும் மாலயட்சனின் கணங்கள் நாங்கள். இசையால் இவ்வெளியை நிறைக்கிறோம்” என்றார்கள். “முதலில் அவனை வெல்கிறேன். அவனளிக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொள்கிறேன்” என்று ரம்பன் எழுந்தான். “அவர் வெல்லற்கரியவர் அசுரனே” என்றான் யட்சன். “நீ கொண்டுள்ள அனைத்து ஆற்றலையும் வெல்லும் பேராற்றலை அவர் தன்னிடம் வைத்துள்ளார்.” நெஞ்சிலறைந்து “என்ன ஆற்றல் அது? சொல்க!” என்றான் ரம்பன். “இசை. இவ்வேழு உலகிலும் மெல்லியது அதுவே. ஆயின் உரிய முறையில் அமைகையில் இவ்வேழு உலகிலும் எடைமிக்கதும் அதுவே.”
ஏளனமாக நகைத்தபடி ரம்பன் எழுந்து மண்ணதிர காலடிகள் வைத்து நடந்தான். அவன் வைரப்பேருடலின் அழுத்தத்தில் மண் நீரென புதைந்தது. கரும்பாறை சேறெனக் குழைந்தது. மலர்ப்பொடிகளை காற்றில் கலந்து கட்டப்பட்ட மாலயட்சனின் கோட்டையை நோக்கி அவன் போரொலி எழுப்பியபடி நடந்தான். அக்கோட்டைமுகப்பில் கொடியென எழுந்து இதழ்விரித்து நின்றிருந்த செந்நிறப்பெருமலரின் நறுமணம் அவனை வந்தடைந்தது. அம்மணத்தின் குரல் என இசை ஒலிக்கத் தொடங்கியது. மெல்லச் சூழ்ந்து தழுவி நெளிந்த இன்னிசையால் அவன் உடல் இனிதாகத் தளர்ந்தது. இமைகள் மெல்ல சரிந்தன. தலை எடைகொண்டு கழுத்தை வளையச்செய்தது. ஒவ்வொரு அசைவுக்கும் அவன் உடல் எடைகூடியபடியே வந்தது. ஒவ்வொரு காலடியையும் அவன் இழுத்துப்பிடுங்கிச் சுமந்து வைக்கவேண்டியிருந்தது.
பெருகி நிறைந்த எடைதாளாமல் உடல் நீரில் என அமிழத்தொடங்கியது. பதறி இரு கைகளையும் விரித்து எதையேனும் பற்றிக்கொள்ள முயன்றான். அருகே நின்றிருந்த பனைமரம் ஒன்றை பிடித்துக்கொண்டான். அது வேருடன் பிடுங்கப்பட்டு அவனுடன் வந்தது. கைநீட்டி அங்கே நின்றிருந்த காட்டெருமை ஒன்றின் பின்னங்காலை பிடித்தான். அதையும் இழுத்துக்கொண்டு மண்ணில் மூழ்கி ஆழத்தில் புதைந்து மறைந்தான். மூதாதையரின் குரல்கள் மேலே அவனை நோக்கி பதறியழைத்து தலைக்குமேலே மறைந்தன.
[ 4 ]
ஏழடுக்குகளாக ஆழ்ந்துசென்ற ஆழுலகங்களின் இருளுக்குள் ரம்பன் அமிழ்ந்து சென்றான். தன் அரண்மனையின் படுக்கையில் படுத்திருந்து வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் ஆழுள்ளம் மயங்கியது. அவனைச்சூழ்ந்து மாநாகங்கள் நாபறக்க நெளிந்தன. எரியும் விழிகளுடன் பாதாளதெய்வங்கள் மிதந்தலைந்தன. பின்பு அவன் சென்று விழுந்த இடத்திலிருந்து மலைபோல பேருடல் கொண்டவனாக எழுந்தான். இருகைகளையும் மார்பில் ஓங்கி அறைந்து இருண்டு சூழ்ந்திருந்த திசைகள் அதிரும்படி பேரொலி எழுப்பினான். அவன் கால்களை எடுத்துவைத்தபோது சூழ்ந்திருந்த உலகின் மலைகள் மேல் இருந்த பெரும்பாறைகள் அதிர்ந்து உருண்டன. நீர்நிலைகளில் அலைகளெழுந்து கரைகளை நக்கிச்சுருண்டன.
காலடியில் அவன் கொண்டுவந்த கரும்பனையும் காரானும் கிடந்தன. இரண்டுவயதான கன்னிஎருமை இருளில் வழித்து எடுத்து சமைக்கப்பட்ட மின்னும் உடலுடன் ஒளிரும் கண்களுடன் காலடியில் நின்றது. அவன் குனிந்து “நீ பெண்ணாகி எழுக!” என்றான். எருமைவிழிகளுடன் அது கைகள்கொண்டு முலைகள் கொண்டு இடைவிரிந்து தொடைமுழுத்து பெண்ணென்றாகி எழுந்தது. அவள் குழல்கற்றைகள் எருமைக் கொம்புகள் போல பின்னால் நீண்டிருந்தன. கரிய மென்னுதடுகள் எருமைமூக்கென ஈரவெம்மை கொண்டிருந்தன. அவள் கண்கள் எருமைவிழிகளுக்குரிய மிரட்சியால் பேரழகுடன் திகழ்ந்தன. வலக்கையால் கரும்பனையை எடுத்துக்கொண்டு மீண்டும் பாதாளஉலகம் நடுங்க பிளிறியபடி ரம்பன் நடந்தான்.
அவன் உடலின் ஒவ்வொரு தசையும் ஆற்றல்முழுத்து பருத்திருந்தது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றிலும் வல்லமை இழுபட்டு நின்றது. நெஞ்சில் ஓங்கியறைந்து “தெய்வங்களே அறைக! எனக்கு நிகராற்றல் கொண்டவன் எவன்?” என்றான். வானம் அச்சொற்களைக் கேட்டு எதிரொலி முழக்கியது. “சொல்க! எவன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். காலால் நிலத்தை ஓங்கி உதைத்து “சொல்க! எனக்கு நிகராற்றல் கொண்டவன் எவன்?” என்றான். விண்ணிருளில் நீர்த்துளியெனக் கனிந்து முழுத்துவந்த பிரம்மன் கரிய முகத்தில் புன்னகையுடன் “நீயே அதை அறிவாய் மைந்தா” என்றார். “இவ்வுலகம் எது?” என்றான் ரம்பன். “இது உனக்கென அமைந்த கீழுலகம். இங்கு நீயே முழுமுதல்வன்” என்றார் பிரம்மன். “இங்கு நான் தோல்வியற்றவன் அல்லவா?” என்றான் ரம்பன். பிரம்மன் புன்னகைத்து “அதை நீ அறியுமாறு ஆகுக!” என்று சொல்லி மறைந்தார்.
இருளால் ஆன மலைகள், இருளேயான மரங்கள், இருட்சிறகுள்ள புட்கள், இருள்குவிந்த விலங்குகள், இருள் ஒழுகும் ஆறுகள், இருள் அலைக்கும் சுனைகள் கொண்ட அவ்வுலகில் பிறிதொருவனின்றி அவன் வாழ்ந்தான். தன் துணைவியாகிய மகிஷியுடன் காதலாடினான். ஒருதுளி எஞ்சாமல் அவள் அவனுக்கு தன்னை அளித்தாள். அந்த முழுப்படையலால் அவன் ஆணவம் நிறைவுற்றுத் தருக்கியது. மேலும் மேலுமென அவள்மேல் கவிந்து கடந்து மீண்டும் அணைந்தான். பின்பு அவளிடம் சலிப்பு கொண்டான். “காற்றாலான கோட்டையைக் கடப்பதென உன்னை அடைகிறேன்” என்று அவளிடம் சொன்னான். “நான் என்னை முழுதளிக்கிறேன். என் உள்ளத்தில் எச்சமின்றி நிறைந்திருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். "ஆம், அதை அறிவேன். ஆனால் ஒரு சிறு தடை எனக்குத் தேவை. நான் உடைத்துச் செல்ல ஒரு வாயில். தாவிக்கடக்க ஓர் அகழி” என்றான். அவள் “என்னுள் அவை எவையும் இல்லையே அரசே!” என்றாள்.
ஒவ்வொருமுறை அவளுடனிருக்கையிலும் அவன் கேட்டான் “உன்னுள் இல்லையா ஒரு துளி நச்சு? ஒரு தீப்பொறி?” அவள் “என்னுள் நானன்றி ஏதுமில்லை. நானோ உங்கள் அடிபணிபவள் அன்றி வேறல்ல” என்றாள். அவன் ஒரு சிறுபூச்சியாக மாறி அவளுக்குள் சென்றுவிட விழைந்தான். அவள் கண்களுக்குள் கருத்துக்குள் கருப்பைக்குள் சென்று தேட எண்ணினான். “நீ எனக்கு உன்னை முழுதளிக்கவேண்டும் என்றால் உன்னுள் முழுமை கொண்டிருக்கவேண்டும். இருமையென ஏதும் இருக்கலாகாது” என்று அவளிடம் சொன்னான். “இருமையகற்றி முற்றொருமை கொண்டவள் என்றால் நீ எனக்கிணையானவள். அல்லது என்னைவிட மேலான இறைவடிவம். சொல், உன்னில் எங்குள்ளது அந்த எச்சம்?” அவள் விழிகள் கண்ணீரணிந்தன. “அறியேன், நான் ஏதுமறியேன்” என்றாள். “இல்லை, எங்கோ உள்ளது அத்துளி. அது எழவேண்டும். அதை நான் வென்றாகவேண்டும். என் ஆற்றல் அங்கே முழுதெழவேண்டும்.” அவள் தழைந்த மென்குரலில் “நான் எளியோள். உங்கள் காலடி தொடரும் நிழல்” என்றாள்.
கரியநீரோடையில் அவளுடன் ஆடுகையில் அவனுள் ஓர் எண்ணம் எழுந்தது. “இன்று ஒரு புதிய ஆடல். நீ நானாகுக! நான் நீயாகிறேன்” என்றான். “இல்லை, நடிப்பிலும் அவ்வண்ணமென்றாக என்னால் இயலாது” என்றாள் மகிஷி. “இது என் ஆணை” என்றான் ரம்பன். அவள் பணிந்தாள். “நீ என்னைப்போல் பேருருவும் முழுவலிவும் கொண்டவள் என எண்ணுக! உன் தோள்கள் எழட்டும். உன் நெஞ்சு விரியட்டும். உன் குரல் முழங்கட்டும்“ என்றான் ரம்பன். அவள் நடுங்கியபடி “என்னால் இயல்வதல்ல அது” என்றாள். “நான் சொல்வதைப்போல் நடி. நீ எனக்கு அடிபணிந்தவள் என்றால் என்னை மகிழ்வி” என்றான் ரம்பன். “ஆண். உன் கால்களில் கழல் அணிந்துள்ளாய். உன் நெஞ்சில் ஆரமும் இடையில் சல்லடமும் உள்ளன.” அவள் "ஆம்” என்றாள். அவள் விழிகள் மெல்ல மாறுதலடைந்தன. “நீ ஆள்பவள். வென்று செல்பவள். எங்கும் பணியாதவள். கொள்பவள். கொன்று உண்டு வளர்பவள். நீ அன்றி பிறிதை ஏற்காதவள். நீ மட்டுமே எஞ்ச நின்றிருப்பவள்.”
அவள் “உம்” என்றபோது அது எருமையின் உறுமலோசை போலிருப்பதாக ரம்பன் எண்ணினான். உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று அசைந்தது. அச்சமா என அதை நோக்கி வியந்தான். ஆம் என்று தோன்றியபோது அங்கு வந்ததுமுதல் அறியாத இனிய பதற்றம் ஒன்றை அடைந்தான். அதை மேலும் அறியவேண்டுமென விழைவெழுந்தது. “நீ நிகரற்றவள். நீ சூழ்பவள். மையமும் ஆனவள்.” அவள் மேலும் உரக்க உறுமினாள். அவள் கூந்தலிழைகள் எருமைக்கொம்புகளென்றாயின. கைகளிலும் கால்களிலும் பருத்த கரிய குளம்புகள் எழுந்தன. அச்சத்துடன் ரம்பனின் உள்ளம் பின்வாங்கிக்கொண்டே இருந்தது. வட்டத்தின் மறுபகுதியென அவ்விசையை தான் ஏற்று பிறிதொரு உள்ளம் அவளை அணுகியது. அவள் எழுந்து இருளென்றான விண்பரப்பு அதிர பெருங்குரலெடுத்து பிளிறினாள். அவன் தலைக்குமேல் அவளுடல் பெருகிக்கொண்டே சென்றது. கரிய மலைபோல அவள் எழ அவன் அவள் காலடியில் சிறுத்து கீழிறங்கினான்.
ஆனால் உடல்குளிர்ந்து செயலிழந்த அவ்வச்சத்திலும் அவளைவிட்டு விலக அவனால் இயலவில்லை. அவனை சூழ்ந்திருந்த இருளே கைகளாக மாறி அவளை நோக்கி அழுத்தியது. சூழ்ந்த மலைகள் அதிர்ந்து நடுங்க அவள் ஒலியறைந்தாள். குளம்புகளால் தரையை மிதித்து அமறினாள். தனக்குப்பின்னால் எவரோ நின்றிருக்கும் உணர்வை ரம்பன் அடைந்து திரும்பி நோக்கியபோது தன் நிழல் அவளுக்கு நிகரான ஓர் எருமைக்கடாவாக எழுந்து நிற்பதை கண்டான். இரு எருமைகளும் மூச்சு சீற, தலைதாழ்த்தின. கண்ணிமைகள் மூடித்திறக்க உடல் சிலிர்த்தன. எருமைக்கடா முக்காரமிட்டபடி முன்னங்காலால் மண்ணை உதைத்து பின்தள்ளியது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை மண்முட்டி கழுத்துமயிர்கள் விடைக்க நின்றது. எருமை அதன் கொம்புகளில் தன் கொம்புகளால் மிகமெல்ல முட்டியது. ஆனால் அவ்விசையில் இரு எருமைகளின் உடல்களிலும் தசைகள் அதிர்ந்தன. கடா கொம்பைச் சரித்து மேலும் வலுவாக முட்டியது. இரு விலங்குகளும் சேர்ந்து மூச்சுவிட்டன. மீண்டும் கொம்புகளால் முட்டியபின் பின்கால் எடுத்துவைத்து பிரிந்தன.
ஒன்றையொன்று நோக்கியபடி அவை அசைவற்று நின்றன. இரு உடல்களிலும் சிலிர்ப்புகள் அசைந்தபடி இருந்தன. விழிகள் கரியஒளியுடன் உருண்டன. கடா மூச்செறிந்தகணம் எருமை உறுமியபடி மண்பறிந்து பறக்க பாய்ந்துவந்தது. அவ்விசையில் முன்னால் பாய்ந்த கடாவின் பெருந்தலையில் எருமையின் நெற்றி இடியோசையுடன் முட்டியது. அவ்வதிர்வில் இருவிலங்குகளும் அசைவற்று நின்று உடல்துடித்தன. பின்னர் பாய்ந்து பின்வாங்கி மீண்டும் பேரொலியுடன் முட்டின. கொம்புகளைக் கோத்தபடி கால்கள் மண்ணில் ஆழப்பதிந்து கிளற, வால்கள் சுழல, சுற்றிச்சுற்றி வந்தன. பிரிந்து மீண்டும் மோதிக்கொண்டன. மீண்டும் மீண்டும் மோதித் தளர்ந்தபோது நீள்மூச்சுகளுடன் நின்றன. எருமை கடாவின் முகத்தை நீலநாக்கைநீட்டி நக்கியது. கடா மூக்கைச்சுளித்து வெண்பற்களைக் காட்டி முனகியது. எருமை தன் விலாவை கடாவின் முகத்தில் உரசியபடி ஒழுகி வளைந்து பின்பக்கம் காட்டியது. முகர்ந்து மூச்செறிந்த கடா காமம் கொள்ளலாயிற்று.
அக்கணம் எழுந்த பெருஞ்சினத்துடன் ரம்பன் அதை நோக்கிப்பாய்ந்தான். தன் பனைமரத்தடியால் கடாவை ஓங்கி அறைந்து கூச்சலிட்டான். சினந்து திரும்பிய கடா அவனை தலைசரித்து கொம்பால் குத்தி தூக்கி வீசியது. அவன் அலறியபடி மல்லாந்து மண்ணில் விழுந்தபோது உறுமலோசையுடன் பாய்ந்து வந்து குனிந்து மேலும் குத்தி கொம்பில் தூக்கி மும்முறை சுழற்றி வீசியது. விலாவெலும்புகள் உடைந்து நெஞ்சக்குலையும் குடல்தொகுதியும் பிதுங்கிச்சரிய தன் வெங்குருதிமேலேயே ரம்பன் விழுந்தான். தன் குருதியின் மணத்தை அறிந்தவனாக இருளில் விழித்துக்கிடக்கையில் எங்கோ ஓர் அரண்மனை சேக்கையில் நோய்கொண்டு கிடப்பதாக கனவுகண்டான். அவன் கண்முன் இருளுடன் இருள் சேர்வதுபோல எருமைகள் இணைசேர்ந்துகொண்டிருந்தன.
தன்னினைவு அணைந்தபோது மகிஷி தன்னருகே குருதியிலாடி உடல்சிதைந்து கிடந்த ரம்பனைக் கண்டு அதிர்ந்தாள். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி கதறி அழுது இருள்பரவிய பாதாளவெளியில் சுற்றி வந்தாள். “தெய்வங்களே! எங்குளான் என் கொழுநனின் கொலைஞன்? எவர் கொண்ட பழி இது?” என்று கைநீட்டி கூவினாள். தலைமயிர் பற்றி இழுத்து பற்கள் இறுகக் கடித்து “கணவனில்லாத உலகில் நான் வாழ்வதில் பொருளில்லை. தெய்வங்களே! என் உயிர்கொள்க!” என்று அலறினாள். எருமைத்தலையுடன் கருநீர் மணிவிழிகளுடன் இருளில் எழுந்த அவள் மூதாதை தெய்வம் “நீ நம் குலத்து மைந்தனை கருக்கொண்டிருக்கிறாய்” என்றது. “இல்லை, நான் கருக்கொள்ள மாட்டேன். என் கொழுநனைக் கொன்றவனை பழிகொள்ளாமல் நான் உயிர்வாழமாட்டேன்” என்றாள் மகிஷி. மூதாதைதெய்வம் முக்காரமிடும் ஒலியில் நகைத்து “உன் கொழுநனைக் கொன்றவன் உன் கருவில் எழும் மைந்தன். அவன் பெயர் மகிஷன்” என்றது. அக்கணமே அவள் அவனைக் கண்டதை நினைவுகூர்ந்தாள். திகைத்து “எந்தையரே” என்று வீரிட்டாள். “என்ன இது? என்ன இது?” என்றாள்.
புன்னகைத்த எருமைமூதாதை “அவன் வெற்றிகொள்பவன். நம் குடிச்சிறப்பை நிலைநிறுத்துபவன்” என்றார். “அவனை வெறுக்கிறேன். அவனுக்கு ஒருதுளியும் முலையூட்டமாட்டேன்” என்றாள் மகிஷி. "ஆம், அவனுக்கு அன்னைமுலை உண்ணும் ஊழ் இல்லை” என்று புன்னகைத்தார் மூதாதை. “உண்ணாத முலைப்பாலுக்கென அவன் அலைவான். அன்னையால் கைவிடப்பட்டவன் அன்னையை தேடியலைவான். அடைந்து அவள் அடிசேர்ந்து முழுமைகொள்வான்." மகிஷி சீறும் மூச்சுடன் “ஈன்று மண்ணில் விழுந்தால் அவனை அரைக்கண் திரும்பிநோக்கவும் நான் மறுப்பேன். தொப்புள்கொடியை பிடுங்கி வீசிவிட்டு விலகிச்செல்வேன்” என்றாள். “ஆம், அவன் தன் குருதிக்கொடியைத்தான் முலையெனச் சப்பி உண்பான்” என்றபின் எருமைமூதாதை மறைந்தார்.
அவள் இருளில் அமர்ந்து அழுதாள். ஒவ்வொரு கணமும் என தன் வயிறு எடைகொண்டு வருவதை உணர்ந்தாள். அச்சமும் தயக்கமும் கொண்டு தன் வயிற்றின்மேல் கைவைத்துப் பார்த்தாள். உடல் மெய்ப்புகொள்ள நீள்மூச்சுவிட்டாள். “மைந்தா” என்று தன்னுள் என அழைத்தாள். உடனே தன்மேல் ஒரு நோக்கை உணர்ந்து திரும்பிப்பார்த்தாள். அங்கே எரிவிழிகளால் அவளை நோக்கியபடி இருவர் நின்றிருந்தனர். கரிய உருவம் கொண்டவனை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். திகைப்புடன் எழுந்தபடி “தாங்களா?” என்றாள். வெறுப்புடன் நோக்கியபடி “ஆம், என் குருதியை நீ உண்டாய்” என்றான் ரம்பன். "இல்லை, நானறியேன். நானறிந்து எப்பிழையும் இயற்றவில்லை” என்று மகிஷி அழுதாள். “உன்னில் எழுந்த தெய்வம்... ஆனால் விறகிலெழும் தழல் அதனுள் தளிரிலேயே குடிகொண்டது” என்றான் ரம்பன். தன்னருகே நின்றிருந்த உயரமற்ற மெலிந்தவனைச் சுட்டி “என் உடன்வயிற்றன் இவன். இவனை உண்டவளும் நீயே” என்றான். கரம்பன் “ஆம், என் உடன்வயிற்றனின் உடலில் ஓர் எண்ணமென நுண்வடிவில் நானுமிருந்தேன். அவர் குருதிக்கூழெனெச் சிதைந்தபோது நானும் அழிந்தேன்” என்றான்.
அவள் கைநீட்டி மறுத்து “இல்லை... இல்லை... என்னை பழிசொல்லாதீர். நான் பத்தினி என்பதை நெருப்பறிய ஆணையிடுகிறேன்” என்றாள். “நெருப்பறியாதவற்றை நீர் அறியும். பெண்ணின் கருவறை நீரால் ஆளப்படுகிறது” என்றான் ரம்பன். கரம்பன் “இதோ, உன் வயிற்றுக்குருதியில் ஊறியிருக்கிறோம். உன்னைப்பிளந்து முளைத்தெழுவோம்” என்றான். அவள் கண்ணீருடன் “என்னை நம்புங்கள்... நான் பிழை செய்யவில்லை...” என்றாள். “உன்னை வெறுக்கிறோம். உன் முகம் காணவும் விழையமாட்டோம்” என்றான் ரம்பன். “மண்பிறந்து எழுந்தால் உன்மேல் கொண்ட வெறுப்பால் பெருவலிமை பெறுவோம்.” கரம்பன் “அறிக! துளியொன்றும் விதையென்றாகும் வல்லமைகொண்டது வெறுப்பே” என்றான். அவள் கைகூப்பி கண்ணீர்விட அவர்கள் மறைந்தனர். அவள் தன் வயிற்றை சுமந்தபடி தனிமையின் இருளில் கண்ணீர்வழிய அமர்ந்தாள்.
தன்னுள் கருவளர்ந்து முழுமைபெறும் வரை மகிஷி இருளில் முற்றொடுங்கி ஒற்றைச் சொல் மட்டும் துணைநிற்க அமர்ந்து தவம்செய்தாள். எண்ணரிய கனவுகளால் அவள் சுழற்றியடிக்கப்பட்டாள். இருளலைகளின் பெருக்குக்கு மேல் எழுந்த குருதியொளியை இடியோசையுடன் கண்டாள். ஆயிரம் சுருள்கொண்ட கன்னங்கரிய நாகமென அவள் சுருண்டு கிடப்பதாகவும் அச்சுருள்களுக்குள் இருந்து மூன்று மரங்கள் முளைத்தெழுவதாகவும் உணர்ந்தாள். குருதி பெருகியோடும் பெருநதி ஒன்றில் அவள் மெல்லிய படகில் சென்றுகொண்டிருந்தாள். அப்படகின் நெஞ்சத்துடிப்பை உணர்ந்து குனிந்து நோக்கினாள். அது ரம்பன் என்று உணர்ந்து விதிர்த்தாள். பின்னர் அது ரம்பகரம்பன் எனும் இரட்டையுடல் என தெளிந்தாள். நீருக்குள் பெருகிநிறைந்த மீன்களெல்லாம் தன் விழிகள். நீர்ப்பரப்புக்கு அப்பால் எழுந்த காட்டின் மரங்களாக நின்று ஆடிக்கொண்டிருந்தவை கரிய நாகங்கள். எங்கோ குருதி ஓர் பேரருவியென விழுந்துகொண்டிருந்தது.
அதன் சாரலை நோக்கிச் சென்றது படகு. பின் அவளை தன் கைகளால் பற்றிக்கொண்டு அருவிப்பெருக்கில் நனைந்து வழுக்கும் பாறைகளில் தொற்றி ஏறி மேலே சென்றது. அப்பாறைப்பரப்புகள் தசையென அதிர்ந்துகொண்டிருந்தன. மேலேறிச்சென்றபோது அப்பெருக்கால் சூழப்பட்ட கரும்பாறைக்குமேல் அமைந்த ஆலயம் ஒன்றை கண்டாள். அதை நோக்கி நான்கு கால்களால் நடந்தது அவள் ஊர்ந்த அவ்விலங்கு. இரட்டைத்தலைகளால் பெருமூச்சுவிட்டது. அது காலூன்றி கைதொட்டு பாய்ந்துசென்ற பாறைகளனைத்தும் எருமையுடல்கள். தலையறுந்தவை. அள்ளிக்குவிக்கப்பட்டவை. அறுந்த தலைவாய்களிலிருந்து கொழுங்குருதி ஊறிப்பெருகிக்கொண்டிருந்தது. வளைகொம்புகளுடன் எருமைத்தலைகள் குவிக்கப்பட்ட மேட்டில் அமைந்திருந்தது அவ்வாலயம். மின்னும் விழிகளும் குழைந்து ஓரம்சரிந்த தடித்த நாக்குகளும் சோழிநிரையென வெண்பற்களும் சாணியுருட்டிவைத்ததுபோன்ற கருமூக்குமாக குவிந்திருந்த எருமைத்தலைகள் மேல் ஏறிச்சென்றது அவள் ஊர்தி. எருமைமூச்சுக்களின் ஆவிவெம்மை. அவற்றின் தொண்டைக்குரல் கமறல்.
மேலே சிற்றாலயத்தின் கருவறைக்குள் தேவி அமர்ந்திருந்தாள். கால்களில் அவுணர்நிரைகளின் அறுபட்ட தலைகள் குருதியுமிழும் செந்நாவுகளுடன் குவிந்திருந்தன. கணுக்கால் கழலில் கண்மணிப்பரல்கள் மின்னின. அடுக்காடை. இடைமேகலை. உருண்ட கொழுமுலைகள். மண்டையோட்டு மாலை. எட்டு பெருங்கைகளில் பாசமும் அங்குசமும் மழுவும் வாளும் வில்லும் அம்பும் அடைக்கலமும் அருளும். எருமைமுகம். நீண்ட கருங்கொம்புவளைவுகள். தாழ்ந்த நீள்செவிகள். கருநீர்மை மின்னும் விழிகள். அவள் கைகூப்பினாள். தன் உடலெங்கும் வெம்மை பரவுவதையும் இடதுகால் துடித்து மெல்ல நீள்வதையும் உணர்ந்தாள். சூடான குருதி அவள் உடலில் இருந்து வழிந்தது. அது தன்னுடலில் இருந்து எழுவதென உணர்ந்ததும் வாள் போழ்ந்த வலியை அறிந்தாள். தன் உடல் கிழித்து வெளிவந்த மகவை கால்களால் உணர்ந்தும் அவள் விழிதிருப்பி நோக்கவில்லை. இரண்டாவது மைந்தன் எழுந்தபோது கைகளைப் பற்றி இறுக்கி கண்மூடிக்கொண்டாள். மூன்றாவது மைந்தன் வெளிச்சென்றபோது தன்னுள் நிறைந்த வெறுமையை உணர்ந்து நீள்மூச்சுடன் கண்மூடிக்கொண்டாள்.
குளிர்ந்த காற்றெனத் தெரிந்தது அவ்வெறுமை. அக்குளிர் உடலில் படர்ந்து கால்விரல்களை விரைக்கச்செய்தது. கெண்டைக்கால் தசை இழுபட்டு இறுகியது. கைகளும் கழுத்தும் மெய்ப்புகொண்டன. வலக்கையை மண்ணில் ஊன்றி கால்மடித்து எழுந்து இருள்சூழ்ந்த தென்திசை நோக்கி சென்றாள். அவளைச் சூழ்ந்து காற்று குளிர்ந்து பறந்தது. பின் அதில் மூச்சுக்களை உணர்ந்தாள். மெல்லிய குரல்கள் கேட்கத்தொடங்கின. “அன்னையரே!” என்றாள். “சொல் குழந்தை” என்றது தளர்ந்த முதுகுரல் ஒன்று. “குளிர்கிறது. என் தசைகள் விதிர்க்கின்றன.” அன்னை நீள்மூச்செறிந்து “ஆம், குருதியே வெம்மை. அது முழுக்க வெளியேறியிருக்கிறது” என்றாள். மகிஷி “நான் அனலை விழைகிறேன். எரிய விரும்புகிறேன்” என்றாள். அன்னை பெருமூச்சுவிட்டாள். “எனக்கு சிதை ஒருக்குக!” என்றாள் மகிஷி. “ஆம்” என்றாள் அன்னை.
அவள் தன்னெதிரே எரிந்து எழுந்த தழலைக் கண்டாள். அதை அணுகியபோது அவள் உடலில் வெம்மை குடியேறியது. நரம்புகள் மீண்டும் இறுகி தசைகள் உயிர்ப்படைந்தன. கைகூப்பியபடி அதை அணுகினாள். “நான் சிந்தையாலும் பிழை செய்யவில்லை எனில் இந்நெருப்பு என்னை விண்சேர்க்கட்டும்” என்றாள். மெல்ல காலடி எடுத்துவைத்து நெருப்புள் புகுந்தாள். அவளை அணைத்து உள்ளிழுத்துக்கொண்ட நெருப்புக்கு அடியில் ஒரு சிறிய பாதை இருப்பதை கண்டாள். அவள் உடல் உருகி அதில் வழிந்தது. ஆவியென்றாகி அவள் நெருப்பின் செந்நிறப்படிக்கட்டுகளில் ஏறி அதன் கருநிற நூலேணியை பற்றிக்கொண்டு மேலெழுந்தாள். நிறமற்ற சிறகுகள் சூடி வானிலெழுந்து பறந்தாள். அங்கே நூறு கைகள் அவளுக்காக நீண்டிருந்தன. நூறு கனிந்த புன்னகைகள் அவளை எதிர்கொண்டன. அவற்றால் அள்ளித்தூக்கப்பட்டு அவள் விண்ணில் அமர்ந்தாள்.
“அன்னையரே, நான் பிழை செய்யவில்லை” என்றாள் மகிஷி. “ஆம், நீ பிழை ஏதும் செய்யவில்லை. அது எவ்வண்ணமோ அவ்வண்ணமே உன்னிலும் நிகழ்ந்தது” என்றாள் மூதன்னை. “அதை அவர்கள் இப்போதேனும் உணர்ந்தார்களா?” என்றாள் மகிஷி. “அவர்கள் என்றால் யார்?” என்றாள் இன்னொரு மூதன்னை. “என் கொழுநர்” என்றாள். “பெண்ணே, இங்கு கொழுநரென்றும் மைந்தரென்றும் எவருமில்லை. ஏனென்றால் இங்கு ஆண்கள் என எவருமில்லை” என்றாள் ஒரு முதியவள் இனிய புன்னகையுடன். "அவர்கள் எளிய கூழாங்கற்கள். அங்கே பெருகியோடும் விரைவாறு ஒன்றின் கரையில் அவர்கள் பரந்திருக்கிறார்கள். அப்பெருக்கு அவர்களை கொண்டுசெல்லும்.” மகிஷி அவர்களை மறக்கத் தொடங்கினாள். அவள் கூந்தல் நரைகொண்டது. பெருமுலைகள் சுருங்கிச்சரிந்தன. இனிய சுருக்கங்கள் முகத்தில் பரவின. நரம்பு புடைத்து கைகள் மெலிந்தன. கண்கள் சுருங்க அவள் அவர்களை நோக்கி புன்னகைசெய்தாள்.
[ 5 ]
மகிஷியின் குருதியில் பிறந்த மூன்று மைந்தர்களை வண்ணச்சிறைப் பூச்சிகளெனப் பறந்த மாலயட்சனின் தூதர்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். முதல் மைந்தன் கரிய நிறத்தவன். எருமைத்தலை கொண்டிருந்தான். இளங்கொம்புகள் மொட்டுபோல தலையில் முளைவிட்டிருந்தன. நீண்ட முகத்தில் தொங்கிய காதும் கரிய குளிர்மூக்கும் சப்பைப்பற்கள் நிரைத்த பெரியவாயும் கொண்டிருந்தான். இரண்டாவது மைந்தன் செங்குருதி நிறத்தவன். சிம்மமுகம் கொண்டிருந்தான். விரிந்த வாய்க்குள் குருதிக்கீற்றுபோல நாக்கு நெளிந்தது. முழவுபோல் ஒலித்தான் மூன்றாவது மைந்தன். இருகைகளாலும் தரையையும் மார்பையும் அறைந்துகொண்டிருந்தான். அவன் முகத்தில் விழிகள் இரு குருதிக்குழிகளாக இருந்தன.
மைந்தர்களை யட்சர்கள் அள்ளி எடுத்து மாலயட்சனின் மாளிகைக்கு கொண்டுசென்றனர். “நம் குடிப்பிறந்த பெண்ணின் மைந்தர் இவர்” என்றான் மலர்முடி சூடி மகரயாழுடன் ஒரு பாதிரிமலரை பீடமாகக் கொண்டு அமர்ந்திருந்த மாலயட்சன். “இவர்கள் இங்கு வளரட்டும். இசையும் மலரும் இவர்களின் இளமையை சமைப்பதாக!” முதல் மைந்தனை அவர்கள் மகிஷாசுரன் என்றழைத்தனர். இரண்டாம் மைந்தன் ரக்தபீஜன் என்று பெயர்பெற்றான். மூன்றாம் மைந்தன் ரம்பாசுரன் என்று அழைக்கப்பட்டான். மாலயட்சனின் உலகில் அவர்கள் மலர்களில் ஆடியும் காற்றை இசையென்றே உணர்ந்தும் வளர்ந்தனர். ஒவ்வொரு மலர்மொக்கையும் முலைக்கண் என மயங்கி இதழ்குவித்து முகம்நீட்டினான் மகிஷன். ஒவ்வொரு இலைத் தொடுகையையும் அன்னையின் கை என எண்ணி சினந்து சீறி பல்காட்டி எழுந்தான் ரக்தபீஜன். ஒவ்வொரு ஒலியையும் அன்னைமூச்சென்று எண்ணி நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டான் ரம்பாசுரன்.
[ 6 ]
கொதிக்கும் உடல் கொண்டிருந்தான் ரக்தபீஜன். மகவென அவனை எடுத்த யட்சர்கள் சற்றுநேரத்திலேயே கை சுட கீழே வைத்துவிட்டனர். பின்னர் கொடிகளில் தூளிகட்டி அவனை தூக்கிவந்தனர். குழந்தையை கையில் வாங்கிய மாலயட்சன் அதன் வெம்மையைத் தொட்டு “எதன்பொருட்டு எரிகிறான் இவன்?” என்றான். சிவந்து கனிந்து அதிர்ந்துகொண்டிருந்த சிற்றுடலை நோக்கி குனிந்து “எங்குளது இவ்வெரிதலின் நெய்?” என்றான். எரியும் மைந்தனை மெல்ல தன் யாழின் குடத்தின்மேல் வைத்தான். யாழ் இசைக்கத்தொடங்கியது. பாலைப்பண் எழுந்தது. தனித்து அது முடிவின்மையில் நெளிந்து அலைந்தது. “எளியோன், அளியோன்” என்றான் மாலயட்சன்.
ரக்தபீஜன் செவ்வுடலும் செங்குழலும் செங்குருதி படர்ந்த விழிகளும் கொண்டிருந்தான். அனலும் அமிலமும் நிறைந்த பையெனத் தோன்றினான். உள்ளிருந்து அந்நீர்மை கொதித்து வெடித்தெழ விழைவதுபோல அவன் மென்தோற்பரப்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவன் வந்தநாளிலேயே முலையூட்டும்படி யட்சிகளிடம் மாலயட்சன் ஆணையிட்டான். எருமையுருக்கொண்ட தீர்க்கை என்னும் யட்சி மகிஷாசுரனுக்கு முலையூட்டியபின் அவனை தொட்டாள். கையை உதறி பின்னுக்கிழுத்து அலறினாள். அவள் தொடுகையில் கனலெனச் சிவந்து, சுளித்த வாய்திறந்து வீரிட்டது குழந்தை. இரு கைகளையும் அசைத்து கால்களால் உதைத்து துள்ளிவிழுந்தது.
பசுவுருக்கொண்ட ஹரிதை என்னும் யட்சிணியிடம் முலையூட்ட ஆணையிட்டான் மாலயட்சன். அவள் தொட்டபோது மைந்தனின் கூந்தல் தழலாக புகைந்து எரிந்தது. அவள் சுட்டு கொப்பளித்த கையை எடுத்தபடி எழுந்து நின்று கூச்சலிட்டாள். பன்றியுருக்கொண்ட வராஹி என்னும் யட்சிணியும் யானையுருக்கொண்ட கரிணி என்னும் யட்சிணியும் அவனைத் தொட்டு அலறி விலகினர். அவர்களின் தொடுகையில் வெம்மைகொண்ட அவனருகே இருந்த தளிர்கள் பற்றி எரிந்தன. பாறைகளும் உருகி பள்ளமாயின.
மாலயட்சனின் ஆணைப்படி சிம்மவடிவம் கொண்ட சிம்ஹி என்னும் கந்தர்வப்பெண் அவனை அணைத்தபோது அவள் செஞ்சடைகள் தழலென பற்றி எரிந்தன. அவளிடமிருந்து அறைதலோசை எழுந்தது. அதற்கு நிகராக எதிரோசை எழுப்பி தானும் தழலென்றாகி முலைபற்றி உண்டான் மைந்தன். சற்றுநேரத்தில் அவள் குழந்தையை தன் முலைக்காம்பிலிருந்து விலக்க முயன்றபடி அலறினாள். பெருவலியுடன் கைகளால் நிலத்தை அறைந்தும் பற்களைக் கடித்தும் கூச்சலிட்டாள். மைந்தன் அவளில் உருகிஒட்டியவன் போலிருந்தான். அவன் இதழ்கள் பிடிவிட்டதும் அவள் அவனை உதறிவிட்டு பாய்ந்தெழுந்து குருதி வழியும் முலைக்கண்ணுடன் நின்று நடுங்கினாள். அவன் வாயிலிருந்து குருதி ததும்பி கன்னங்களில் வழிந்தது.
அஞ்சி நின்ற சிம்ஹியிடம் “அவனுக்கு உணவு நீ” என மாலயட்சன் ஆணையிட்டான். அழுதபடி “ஆணை” என்றாள். ஒவ்வொரு நாளும் அவள் முலைவழியாக குருதியையும் நிணத்தையும் அவன் உண்டான். முலையுண்ணும் நேரம் மட்டுமே சிம்ஹி குழந்தையை தொடமுடிந்தது. பிற தருணங்களில் அவள் கை அவன்மேல் பட்டால் நாகம்போல சீறி, வெண்பற்களைக்காட்டி அவன் கடிக்கவந்தான். பசித்தபோது உடல்நெளித்து ஓலமிட்டான். அஞ்சியும் அழுதும் அருகணைந்த சிம்ஹியை அள்ளிப்பற்றி அவள் நெஞ்சக்குலையை உறிஞ்சினான். நிறைந்ததும் பிடிவிலகி உதிர்ந்து கடைவாயில் குருதி உறைய துயின்றான்.
குருதியுண்டமையால் அவனை ரக்தபீஜன் என்று அழைத்தான் மாலயட்சன். “உண்ணும் முலைப்பால் விதையாகிறது. இக்குருதி எழப்போகும் காடு ஏதென்று தெய்வங்களே அறியும்” என்றான். மெலிந்து உடல்வெளுத்து ஒடுங்கிய சிம்ஹி மறைந்தபோது கூருகிர் எழுந்த கைகளும் செம்பிடரி பறக்கும் சிம்மத்தலையும் ஓங்கிய செந்நிற உடலும் கொண்டு ரக்தபீஜன் வளர்ந்தெழுந்தான். மாலயட்சன் அவனிடம் அவன் குலக்கதையை சொல்லும்படி காதிகன் என்னும் முதிய யட்சனிடம் சொன்னான். பாதிரிமலரின் குவைவழியாக மட்டுமே ஓசையிடத்தெரிந்த காதிகன் அவ்வொலியில் இசையெழுப்பி அசுரகுலத்தின் கதையை சொன்னான். தன்னுடைய நாடு விந்தியமலையுச்சியில் காத்திருப்பதை ரக்தபீஜன் அறிந்தான். மாலயட்சனின் கால்களைத் தொட்டு வணங்கி வாழ்த்துரை பெற்று மண்ணவர் உலகுக்குச் சென்றான்.
தானவம் புழு சிறகுபெற்று விட்டுச்சென்ற கூடுபோல் சிதைந்து கிடந்தது. அங்கு அசுரகுடிகள் பிறர் அறியாது அஞ்சி இடிபாடுகளுக்குள் ஒடுங்கி வாழ்ந்தனர். வேள்வியறியாத நகரில் இருள்தெய்வங்கள் குடியேறியமையால் அங்கே ஒவ்வொருவருக்கும் பலநூறு நிழல்கள் எழுந்து உடன் அசைந்தன. நிழல்களை அஞ்சி அவர்கள் விழிமூடி கைகளை நீட்டி தொட்டறிந்து நடமாடினர். உற்றாரின் மூச்சொலிகளுடன் ஏதேதோ நகைப்புகளும் கனைப்புகளும் ஊடுகலந்தன. அகச்சொற்களுடன் அறியாச் சொற்கள் வந்து இணைந்துகொள்ளவே அவர்களின் உள்ளம் அவர்கள் அறியாத பேருருவம் கொண்டு விரிந்தது. தங்களுள் ஓடும் எண்ணங்களை தாங்களே உணரும் கணங்களில் அவர்கள் அலறியபடி தலையை கைகளால் அறைந்துகொண்டனர். கைகளை விரித்தபடி எழுந்து வெட்டவெளிநோக்கி ஓடினர். ஆடைகளை கழற்றிவிட்டு நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு நடுங்கி உடல்குறுகினர். தங்களுக்குள் குடியேறியவற்றை பிடுங்கி வெளியே வீசுவதுபோல கைகளை அசைத்தனர். அவர்கள் வாயிலிருந்து அவர்கள் எண்ணாத சொற்கள் ஓயாது வெளியே கொட்டிக்கொண்டிருந்தன.
சொற்கள் பொருளிழந்து ஒலிகளே என்றானபோது தானவத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் பெயரை இழந்தது. பெயரிழந்தவை பொருளையும் இழந்தன. பொருளிழந்த பொருட்கள் வெற்றிருப்பாயின. வெற்றிருப்புகள் அவர்கள் மேல் முட்டின. அவர்களை வீழ்த்தின. அவர்களைச் சூழ்ந்து உளம்பதைக்கச்செய்யும் அமைதியுடன் அமர்ந்திருந்தன. மொழிப்பொருளென்றாகி அவர்களைப் பிணைத்திருந்த ஒவ்வொன்றும் சிதற உருவாகி வந்த பெரும் பொருளின்மையில் ஒவ்வொருவரும் முழுத்தனிமையை அடைந்தனர். ஒருவரோடொருவர் விழிமுட்டாது உடலுரச அங்கே அவர்கள் சுற்றியலைந்தனர். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நிழலுருவென அணிவகுத்த இருள்தெய்வங்களின் நெரிசலால் நகர் இருண்டு கிடந்தது.
பொருளிழந்து கிடந்த தானவத்தை நோக்கி ரக்தபீஜன் தன் உகிர்க்கைகளை விரித்து செம்பிடரித்தழல் பறக்க வந்தபோது இருள்தெய்வங்கள் கோட்டைகளின் மேலேறி அவனை நோக்கின. அச்சத்துடன் அவை மெல்ல நடுங்கின. அவற்றின் விழிகளைச் சூடியபடி வெளியே வந்த அசுரர் அவனைக் கண்டு அஞ்சி ஒடுங்கினர். சிலர் சீறியபடி தாக்கவந்தனர். அவன் அவர்களின் நிழல்களை ஒருகாலால் மிதித்துப் பற்றியபடி அவர்களை அறைந்து தெறிக்கச்செய்தான். நகரின் உளுத்தமைந்த கோட்டைக்கதவை காலால் உதைத்து உடைத்து உள்ளே சென்றான். அங்கே மட்கி வடிவிழந்துகிடந்த பொருட்கள் அனைத்தையும் அள்ளி ஒழிந்து மண்மூடிக்கிடந்த எரிகுளத்தில் குவித்து நெருப்பிட்டான். தங்கள் பொருளின்மையின் பொருண்மையிலிருந்து விடுபட்டு பொருட்கள் தழலென எழுந்து படபடத்து நின்றாடின. உருவழிந்து மறைந்ததுமே அவை தாங்கள் இழந்த பொருட்களை மீண்டும் அடைந்தன.
எரியில் விழுந்த அவிகொள்ள யட்சர்களும் யட்சிணிகளும் முதலில் வந்தனர். விண்ணகத்தெய்வங்கள் ஒன்றொன்றாக எழ நிழல்கள் சுருங்கி இழுபட்டு தழலை அணுகி உள்ளே நுழைந்து மறைந்தன. நகரம் செவ்வொளி கொண்டதும் கனவிலிருந்து விழித்தெழுந்தவர்கள்போல அசுரர் நிலைமீண்டனர். நகர்நடுவே நின்றிருந்த பேருருவனைக் கண்டதுமே அவன் தங்களவன் என அவர்கள் உணர்ந்துகொண்டனர். கண்ணீருடன் கைநீட்டி அவனை அணுகினர். முதிய அசுரன் ஒருவன் உரத்தகுரலில் “ஐயனே, தாங்கள் யார்?” என்றான். “நான் அசுரேந்திரன். ரம்பனின் இரண்டாவது மைந்தன். என்பெயர் ரக்தபீஜன்” என்றான். “என் நகரை கொள்ள இங்கு வந்துள்ளேன். இனி இங்கிருந்து இவ்வுலகங்களை ஆள்வேன்.” வாழ்த்தொலிகளுடன் விம்மல்களுடன் கதறல்களுடன் அசுரர் வந்து அவன் காலடியில் விழுந்தனர்.
ரக்தபீஜனை அணுகிய சபரரின் மைந்தர் சித்ரர் அவன் காலடிகளின் சிம்மநகங்களை தொட்டார். “எந்தை சொன்னார், குருதிபடிந்த காலடிகளுடன் நம் அரசர் நகர்புகுவார் என்று. இதோ!” என்று கூவினார். “மீட்பு வந்தது அசுரர் குலத்திற்கு. விலகுக மிடிமை! இனி எல்லாம் நலமே!” என்றனர் அசுரகுலப் பாடகர்கள். “தானவத்தின்மேல் இனி என் சிம்மக்கொடி பறக்கட்டும்” என்று ரக்தபீஜன் ஆணையிட்டான். போருக்கென குருதிப்பொட்டு தீற்றிய வீரன்முகம் போல தானவத்தின் கோட்டைமுகப்பு கொடி கொண்டது. “உங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ரக்தபீஜன் ஆணையிட்டான். அசுரர் தங்கள் படைக்கலங்களை எங்கோ கைவிட்டுவிட்டிருந்தனர். அவை தானவத்தின் புழுதியில் புதைந்து மறைந்துவிட்டிருந்தன. படைக்கலங்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் பதறி அலைந்தனர். “சொல்கொண்டு தேடவேண்டாம். சினம் கொள்ளுங்கள். கடும்சினம் எரிய கைகளையே தேடவிடுங்கள். அவை கண்டடையும் உங்கள் படைக்கலம் புதைந்த இடத்தை” என்றார் சித்ரர்.
படைக்கலங்களை எடுத்ததுமே அசுரர் தங்கள் தன்னியல்பை அடைந்தனர். கொன்றும் இறந்தும் குருதிமணமென அப்படைக்கலங்களில் வாழ்ந்த மூதாதையர் எழுந்து அவர்களுள் நிறைந்தனர். “போர்! போர்!” என்று படைக்கலங்கள் எழுந்து ஆடின. “குருதி! வெங்குருதி!” என அவை விடாய்கொண்டு கூவின.
[ 7 ]
தானவம் மீண்டும் பேருருவம் கொண்டு எழுந்தது. மேலும் மூன்றடுக்குகளுடன் கோட்டை வலுவாக கட்டப்பட்டது. நகரின் நடுவே இருந்த தனுவின் மாளிகை மேலும் எட்டடுக்குகளுடன் ஓங்கி எழுந்தது. அதன்மேல் சிம்மக்கொடி பறந்தது. ஏவலரும் காவலரும் நிறைந்து அரண்மனை இரவிலும் பகலிலும் உறங்காமலிருந்தது. அதன் நடுவே செந்தழலெனச் சுடரும் மணிகளால் அமைந்த அரியணையில் அமர்ந்து ரக்தபீஜன் அசுரர்களை ஆண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் அவனுக்கென குருதிதொட்டு வஞ்சினம் உரைத்தனர். தங்கள் எண்ணங்களிலும் கனவுகளிலும் அவனையே எண்ணியிருந்தனர். அவன்மேல் கொண்ட பற்றே அவர்கள் மனைவியரில் மைந்தரென பிறந்தது. தவழ்ந்து அமர்கையிலேயே கைநீட்டி படைக்கலம் தேடினர் அம்மைந்தர்.
குருதி கொந்தளிக்கும் உடல்கொண்டிருந்தான் ரக்தபீஜன். அவன் துயில்வதேயில்லை. எங்கும் படுக்க அவனால் முடியவில்லை. பீடங்களில் அமர்ந்தபடியே விழிதுயில்கையிலும் அவன் செவிகள் ஓசைகளுக்கேற்ப அசைவுகொள்ளும். அவன் கைகளிலும் கால்களிலும் கூருகிர் விரல்கள் மெல்ல அசைந்துகொண்டிருக்கும். சினந்தெழும்போது அவன் மூக்கிலும் செவிகளிலும் குருதி பெருகிவழியும். பெருஞ்சினம்கொண்டு தன் கைகளை சேர்த்து அறைந்து பேரொலி எழுப்பி அவன் பாயும்போது விழிகளிலிருந்தும் குருதி வழியும். நூற்றெட்டு அசுரமல்லர்களை தன்னந்தனியாக நின்று தோள்கோத்து எதிரிடும் மற்போரின்போது அவன் தசைகள் இறுகி வெம்மைகொள்ளும்போது தோலில் வியர்வையென செங்குருதித்துளிகள் முளைத்து உருண்டு வழியும். தலைமயிர் நுனிகளில் குருதிமணிகள் தோன்றிச் சிதறும்.
பெருஞ்சினமே உருவானவனாக அவன் இருந்தான். மறுசொல் கேட்க ஒப்பான். அவனிடம் அறைபட்டு உடல்கிழிந்து நாளும் ஓர் அசுரக்காவலன் அவன் காலடியில் இறந்துவிழுந்தான். நிலையழிந்தவன் போல அரண்மனையில் எந்நேரமும் சுற்றிவந்தான். புரவியேறி நகரில் இரவும் பகலும் அலைந்தான். மலைச்சரிவுகளில் பாய்ந்திறங்கி தன் நாடெங்கும் தோன்றினான். தன்னைப்பார்த்த எவரும் அக்கணமே பணியவேண்டுமென்று விழைந்தான். மறுஎண்ணம் தோன்றிய உள்ளம் அதை அறிவதற்குள்ளாகவே அவ்வுடல் அவனால் கிழித்தெறியப்பட்டது. கொன்றபின்னரும் வெறியகலாது கிழித்து குருதிகுளித்து தாண்டவமாடினான். உடலெங்கும் வழியும் குருதி ஒன்றே அவனை குளிர்விக்குமென்று அசுரர் கண்டனர்.
அவனை அசுரர் அஞ்சினர். அவ்வச்சமே அவன் மேல் பெருமதிப்பை உருவாக்கியது. அந்த மதிப்பு அன்பாகியது. அவனுக்கு அடிபணிந்த அசுரர் ஒவ்வொருவரும் அவனாக தாங்கள் மாறுவதை அகத்தில் உணர்ந்தனர். எனவே அவன் செய்யும் கொடுஞ்செயல் ஒவ்வொன்றையும் அவர்களும் உள்ளத்தால் செய்தனர். அவர்களை அவன் கிழிக்கையில்கூட அவர்கள் அவனாகி நின்று அதை அகம்நடித்தனர். அவன் ஆறாப்பெருஞ்சினம் தங்கள் குலத்திற்கு கிடைத்த நல்லூழ் என்று அசுரமுதியோர் சொன்னார்கள். “நம் எரிகுளத்து தழல் அவர். நாம் அணையாது காத்த வஞ்சம். நம் நாவில் குடிகொள்ளும் நச்சு. தெய்வங்களும் அஞ்சும் நமது படைக்கலம்” என்றனர் கவிஞர்.
தானவத்திலிருந்த மூதன்னையர் ஆலயங்கள் அனைத்தையும் ரக்தபீஜன் இடித்து அழித்து சுவடறுத்தான். அன்னையர் எவரும் அவன் முன் தோன்றுதலை அவன் விரும்பவில்லை. அவன் ஓசைகேட்டதுமே அவர்கள் மைந்தரை அணைத்தபடி இருளறைகளுக்குள்ளோ புதர்களுக்குள்ளோ பதுங்கிக்கொண்டனர். தவறி எதிர்பட்டவர்களின் முலைகளை அறுத்துவீசும்படி அவன் ஆணையிட்டான். முலைகளறுக்கப்பட்ட அன்னையரின் கருப்பைகள் குருதிவடிந்து சுருங்கின. அவர்கள் பெண்மையை இழந்து, விழியில் கொடுமை குடிகொண்டு, அசுரர்களாக உருமாறினர். நெஞ்சில் அறைந்து அமலையெழுப்பியபடி வந்து அவன் தாள்பணிந்தனர். தானவத்திலும் ஆசுரநாட்டிலும் எவ்விலங்கும் முலைகளுடன் பொதுவில் வரலாகாது என்று ஆணையிருந்தது. அசுரர்களின் நூல்கள் அனைத்திலும் அன்னை என்னும் சொல்லே இல்லாமலாக்கப்பட்டது. எங்கும் எவரும் நாமறந்தும் அச்சொல்லை உச்சரிக்கலாகாதென்று அரசாணை இருந்தது. நாளடைவில் அச்சொல்லே அவர்களின் மொழியிலிருந்து மறைந்தது.
தானவத்திலிருந்து கிளம்பிய அசுரப்படைகள் சூழ்ந்த நாடுகளை முழுதும் வென்றன. ரக்தபீஜனின் விழிதொட்ட இடமெங்கும் அவன் சிம்மக்கொடி மட்டுமே பறந்தது. வெல்லற்கு எதிரிகள் இல்லாமை கண்டு விண்ணேறிச்சென்று இந்திரநாட்டையும் வெல்ல அவன் விழைந்தான். அசுரகுரு சித்ரரை அழைத்து விண்ணைவெல்லும் படைஎடுப்புக்கு ஆவனசெய்யும்படி சொன்னான். “அரசே, அசுரர் நேராக விண்ணில் பறக்கவியலாது. ஏழுலகங்களையும் முறையே வெல்லவேண்டும். முதலில் கின்னரரை. பின்னர் கிம்புருடரை. பின்னர் கந்தர்வரை. ஒவ்வொரு உலகிலிருந்தும் அடுத்த உலகிற்குச்செல்லும் சிறகுகளை பெறவேண்டும்” என்றார் சித்ரர். “அதற்குரிய வழி ஒவ்வொரு உலகுக்கும் உரிய வேள்விகளை செய்வதுதான்.”
தானவத்தின் நகர்ச்சதுக்கத்தில் வேள்விச்சாலை எழுந்தது. எரிஎழுப்பி அவியளித்து அசுரவேதங்களை உச்சரித்தனர் அசுரவைதிகர். கின்னர உலகுக்குள் செல்லும் நறுமணங்களை முதலில் அடைந்து அதனூடாகச் சென்று அவர்களை வென்றனர். கிம்புருடர் உலகுக்குச் செல்லும் இசையை பின்னர் அடைந்தனர் அசுரர். யட்சர்களின் வண்ணங்களை பின்னர் கொண்டனர். தேவருலகுக்குச் செல்லும் பாதை ஒவ்வொரு வேள்விக்குப்பின்னும் மேலும் துலங்கிவர ரக்தபீஜன் களிவெறிகொண்டான். “வெல்லற்கரியவன்! தேவர்களின் இறைவன்! மூன்றுதெய்வங்களுக்கும் நிகரானவன்!” என அவனை போற்றினர் அசுரர்களின் கவிஞர். தன்னைப்பற்றிய புகழ்ச்சொற்களை தானே கேட்டுப்பழகி, அவை தன் உளச்சொற்களாக ஓடுவதை உணர்ந்து, பின்பு அவையே தானென்று ஆனான்.
குருதியுலராத படைக்கலங்களுடன் அவன் விண்ணுலகங்களில் ஏறிச்சென்று வெற்றிகொள்கையில் ஒருமுறை அவன் தன்னெதிரே ஸ்தன்யை என்னும் யட்சியை கண்டான். பன்னிருமுலைகள் கொண்ட அவள் விழியும் கால்களும் அற்றவள். சாயாதலம் என்னும் ஆயிரம் விழுதுகொண்ட பேராலமரத்தின் அடியில் அவள் வாழ்ந்திருந்தாள். அவ்வாலமரத்தின் தசைப்பற்று மிகுந்த கனிகளை அவள் உணவெனக் கொண்டாள். பன்னிரு முலைகளிலும் வற்றாது பாலூறிப்பெருகிய அவளை பசித்த குழவிகள் அனைத்தும் தேடிவந்து முலையுண்டு சென்றன.
யட்சர் அவளை யட்சியாகக் கண்டனர். மானுடர் அவளை கனிமரமென நோக்கினர். விலங்குகள் அவளை பன்னிரு ஊற்றுகளென அறிந்தன. அவளை மகவுகள் உண்ணும் ஓசை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. உண்டு நிறைந்த குழவிகள் அவள் அடியில் விழுந்து துயின்றன. அவள் தன் பன்னிரு கைகளால் அவற்றின் தலைமயிரை கோதினாள். செவிகளை இழுத்து வருடினாள். தோள்களையும் நெஞ்சையும் அடிவயிற்றையும் தடவி மெல்லிய குரலில் உறக்குபாட்டுகளை பாடிக்கொண்டிருந்தாள். அவள் உலகில் குழந்தைகள் அன்றி தெய்வங்களும் இருக்கவில்லை.
போர்க்குரலுடன் வந்த ரக்தபீஜன் அவளை ஒரு மாபெரும் பன்றி என கண்டான். முலைக்குவைகள் கொழுத்துச்சரிந்த கரிய உடலுடன் அது ஒருக்களித்துப்படுத்து மதம்சொக்கும் விழிகளை பாதிமூடி வெண்பற்கள் தெரியும் வாய்திறந்து இன்மயக்கில் கிடந்தது. அதன் வால் மெல்ல சுழித்து அசைந்தது. அதன் முலைகளில் பன்றிக்குட்டிகளும் சிம்மக்குருளைகளும் மான்குழவிகளும் வால்சுழற்றி தோள்முட்டி மோதித்ததும்பி பால்குடித்தன. அருந்தும் ஒலி கேட்டு அது ஒரு சுனை என எண்ணி திரும்பி நோக்கிய ரக்தபீஜன் முலைகளை கண்டான். கால்களை நிலத்தில் ஓங்கி மிதித்து அவன் அமறியபோது குட்டிகள் திகைத்து பின்வாங்கின. விடுபட்ட முலைக்குமிழ்களில் இருந்து வெண்நூல்கள் போல பால் பீரிட்டது. சினத்தில் பதறிய உடலுடன் கண்மறைத்த வெம்மைப்படலத்துடன் பாய்ந்துசென்ற ரக்தபீஜன் அதன் முலைத்தொகையை தன் வாளால் வெட்டிவீசினான்.
உறுமிய ஸ்தன்யை பேருருவ நிழலென எழுந்தாள். “வீணனே, நான் அளித்த முலைப்பாலின் நலப்பேறு ஒன்றாலேயே உன்னையும் உன் ஏழுதலைமுறைகளையும் எரித்தழிக்க முடியும். ஆனால் இன்று உன்னை விட்டுவிடுகிறேன். ஏனென்றால் எதன்பொருட்டென்றாலும் அன்னை என்றே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறாய். உன் நாட்டில் நீ அழித்த அன்னை எனும் சொல்லால் நிறைந்துள்ளது உன் அகம். அதன் நலனை நீ அடையவேண்டும். அன்னை உன்னை வெல்க! நீ அன்னையை அறிக!” என்று சொல்லி விழுந்து மடிந்தாள். அவள் உடலில் இருந்து குருதிக்கு மாறாக வெண்ணிறப் பாலே பெருகி பரவிக்கொண்டிருப்பதை ரக்தபீஜன் கண்டான். இறந்த அவள் விழிகளை நோக்கிக் கொண்டு நின்றான். அவன் வாள் அறியாது தாழ்ந்தது.
தானவத்திற்கு மீண்ட ரக்தபீஜன் சித்ரரை அழைத்து நிமித்திகர் அவையை கூட்டும்படி ஆணையிட்டான். நூற்றெட்டு நிமித்திகர் கூடிய அவையில் முதல்முறையாக கைகூப்பி பணிந்து “அறிந்தவரே சொல்க! எப்படி அமையும் என் இறுதி? எங்கு நான் தோற்பேன்?” என்றான். அவர்கள் தயங்க “எந்த மறுமொழி என்றாலும் சினம்கொள்வதில்லை என உறுதியளிக்கிறேன். சொல்க!” என்றான். அனைவர் விழிகளையும் மாறிமாறி நோக்கியபின் அச்சம் விலகாது எழுந்த முதிய நிமித்திகர் “பிறவிக்குறிகளின்படி நீங்கள் முலைகனிந்து எழுந்துவரும் தெய்வப்பேரன்னை ஒருத்தியால் வெல்லப்படுவீர்கள். அவள் காலடியில் இறப்பீர்கள். அவள் முலையுண்டு முழுமைகொள்வீர்கள்” என்றார்.
இருகைகளையும் குவித்து அதில் தலைதாங்கி அமர்ந்திருந்த ரக்தபீஜன் “நான் அவளை வெல்வது எப்படி இயலும்?” என்றான். நிமித்திகர் அவை அமைதியாக அமர்ந்திருந்தது. “சொல்க! அவள் இயல்பென்ன? அவள் எல்லை என்ன?” என்றான் ரக்தபீஜன். முதுநிமித்திகர் “அரசே, அன்னை என்பதே அவள் இயல்பு. எனவே எல்லையற்றவள்” என்றார். “இல்லை, தெய்வமே என்றாலும் உருவெனக் கொண்டு இருப்பென வந்தால் இயல்பு என சில உள்ளதே. இயல்பென சில உள்ளதென்றால் இயல்பல்லாதவை என சிலவும் உண்டு. அவை அவள் எல்லை” என்றான் ரக்தபீஜன். நிமித்திகர் சொல்லின்றி அமர்ந்திருக்க இளைய நிமித்திகன் ஒருவன் எழுந்து “அரசே, அவள் பெருங்கருணை கொண்டவள் என்கின்றன இக்குறிகள். அதுவே அவள் இயல்பு. அதற்கு மாறானதே அவளால் இயலாதது. அதுவே அவள் எல்லை எனக்கொள்க!” என்றான்.
ஒருகணம் உளம் நின்று உடனே சொல்கொண்டு எழுந்து “ஆம்! அதுவே அவளை வெல்லும்வழி. அன்னையென வந்தால் அவளுக்கு அனைவரும் மைந்தரே. மைந்தனைக் கொல்ல அவளால் எளிதில் இயலாது” என்றான். “அரசே, கைக்குழந்தையின் பூநகத்தை பல்லால் கடித்து வெட்டும் அன்னைபோல அவள் உங்கள் தலைகொய்வாள்” என்றார் முதுநிமித்திகர். “ஆம், ஆனால் அதையும் அவள் நெஞ்சுநடுங்கியபடியே செய்வாள். தன் உள்ளத்தை வைரமாக்கியே அவள் என்னை கொல்லமுடியும்” என்ற ரக்தபீஜன் கைகளை தட்டியபடி அவையில் சுற்றிவந்தான். “நான் ஒருவன் என்றால் கொன்று மேல் செல்வாள். நான் பலர் என்றால்? முடிவற்றவன் என்றால்? எத்தனைமுறை ஓர் அன்னை தன் மைந்தரை கொல்வாள்?”
“அரசே, முடிவின்மை என்பது தெய்வங்களுக்கு மட்டுமே உரியது” என்றார் முதுநிமித்திகர். “ஆம், அதையும் அறிவேன். அன்னையென்றாகி வரும் தெய்வம் அவள். ஆகவே அவள் முடிவிலி. அவள் செயலும் முடிவற்றது. அவள் செயலே என்னை பெருக்குவதாக! ஆக்கி ஆக்கி அவளே அழிக்கட்டும். மைந்தரைக்கொன்று அவள் செல்லும் உச்சத்தொலைவென்ன என்று அவளே அறியட்டும்.” மகிழ்ந்து தன் நெஞ்சிலறைந்தபடி அவன் அவையில் சுற்றிவந்தான். “என் உடற்குருதி அனைத்தும் விதைகள் என்றார் என் தந்தை. அவை முளைக்கட்டும். ஆம், நான் அதைத்தான் படைக்கலமெனக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.”
“இதோ கிளம்புகிறேன், எரிவண்ண இறைவனை என் முன் வரச்செய்து அருட்கொடை கொண்டுதான் மீள்வேன்” என்று வஞ்சினம் உரைத்து ரக்தபீஜன் அரண்மனை நீங்கினான். விந்தியமலையின் உச்சிமுனையில் ஒற்றைக்காலில் நின்று தவம்செய்தான். மண்ணிலிருந்து பெற்றவை அனைத்தையும் மலையில் குவித்தான். மலையுச்சியில் சேர்த்து தன் காலில் ஏற்றினான். உடலில் கூர்த்து கைகளில் சேர்த்து விரல்முனையில் செறித்தான். விண்ணுக்கு அதை ஏவினான். ஏதுமற்ற வெறுங்கலமாக அங்கே நின்றான். விண்ணிலிருந்த மூவிழிமூத்தோன் அந்த அழைப்பை அறிந்தான். மின்பிளந்த முகிலில் தன் வெள்விடையேறி தோன்றினான். “கொள்க அருள்!” என்றான்.
“எந்தையே, நான் பெருகவேண்டும். என் குருதியிலிருந்து நான் முளைத்தெழவேண்டும்” என்றான் ரக்தபீஜன். “என் உடலில் படும் புண்சொட்டும் ஒவ்வொரு குருதியும் இன்னொரு நான் என எழவேண்டும்.” கரியுரித்த அண்ணல் புன்னகைசெய்து “மைந்தா, குருதிமுளைத்துப் பெருகும் அருள் என்பது அனைத்துத் தந்தையருக்கும் உரியதே. தவளைமுட்டைகளின் நாடாபோல மானுடர் அசுரர் அனைவரிலிருந்தும் காலமென அவை நீண்டு நெளிகின்றன. காலத்தில் தோன்றுபவை அனைத்தும் மறையும் என்றறிந்திருப்பாய். நீ இதோ அது காலமிலாகணத்தில் நிகழவேண்டுமென கோருகிறாய். தோன்றுவதுபோல அவை கணத்திரும்பலில் அழிவதையும் நீ காணலாகும்” என்றார். “ஆம், அவ்வாறே ஆகுக! நான் பெருகவேண்டும். என் துளிகளிலிருந்து முடிவிலாது எழவேண்டும்” என்றான் ரக்தபீஜன். “அருளினேன்” என்று உரைத்து இறைவன் மறைந்தார்.
சொற்கொடை கொண்டு நகர்மீண்டான் ரக்தபீஜன். சித்ரரிடம் “அழியாப் பேறு கொண்டேன் ஆசிரியரே” என்றான். “பெருகும் பேறையே கொண்டிருக்கிறீர்கள் அரசே” என்றார் அவர். “ஆம், பெருகுவன அழிவதில்லை” என்றான் ரக்தபீஜன். “இனி என்றும் இங்கிருப்பேன்” என்று சொல்லி நகைத்தான்.
[ 8 ]
நூறாயிரம்கோடிமுறை தன்னுள் பெருகிக்கொண்டிருந்தான் ரக்தபீஜன். தன்னுள் செறிந்த தான்களின் எடைதாளாது கால்கள் தெறிக்க உடல் அலைபாய நடந்தான். "நான்!” என அவன் சொல்லும்போது ஒரு பெருந்திரளையே எண்ணினான். "இங்கே” என்று சொல்லும்போது அவ்விடத்தை மையம்கொண்டு விரிந்த வெளியையே சுட்டினான். அவன் நெஞ்சில் கைவைத்தபோது உள்ளே செறிந்த நுண்ணுருவ ரக்தபீஜர்கள் “நான்! நான்!” எனப் பொங்கி எழுந்து அவன் கைகளை முட்டினர். அவன் கண்களை மூடினால் இமைகளுக்குள் செந்நிறக்குமிழிகளாக அவர்கள் மிதந்தனர். சற்றே சித்தம் மயங்கும்போது அவர்கள் “நாங்கள் நாங்கள்” என முந்தி எழும் குரல்கள் காதில் விழுந்து பதறி எழச்செய்தன.
அவன் அரண்மனையில் எங்கும் ஒன்றையொன்று நோக்கிப் பெருக்கும் ஆடிகள் பொருத்தப்பட்டன. ஒன்றிலிருந்து ஒன்று துளிகுறையாமல் மொண்டு பெருகிச்சூழ்ந்த முடிவிலா பாவையுருவங்கள் நடுவேதான் எப்போதும் அவனிருந்தான். அவனுடன் பேசும் அமைச்சரும் பணியாட்களும் அவ்வாடிகளுக்கு அப்பால் அவற்றால் நோக்கப்படாமல் நின்றனர். அவர்களின் சொற்களை பல்லாயிரம் செவிகள் கேட்டன. அவர்களைநோக்கி பல்லாயிரம் ரக்தபீஜன்களின் முகங்கள் விழிகூர்ந்தன. பல்லாயிரம் உதடுகள் ஒற்றைச் சொல்லை எடுத்தன. ஒரே ஆணை முடிவிலாது எழுந்துகொண்டே இருந்தது.
நாளடைவில் அசுரகுலத்தவர் அவன் ஒருவன் என்பதையே உளம்மறந்தனர். அரண்மனையில் புளித்த கள் கலவிளிம்பு ததும்பி நுரைமறிய எழுந்ததுபோல ரக்தபீஜன் நிறைந்திருப்பதாக எண்ணத்தலைப்பட்டனர். முடிவிலா கைப்பெருக்கில் கொல்படைக்கலங்கள் கொண்டு பெருகியெழுந்த அசுரமூதாதையரின் படையே அவன் என்றனர் அக்குலக் கவிஞர். "இங்குள்ள நாமனைவரும் இன்று அவனே ஆனோம். அங்கு அரண்மனை நிறைத்துப் பெருகியிருப்பது நம் உடல்வெளியே” என்றனர். "எண்ணுக அவனை. அவனாகுக. அதுவே இறப்பறுத்து சிறப்புறும் பெருநிலை.”
அந்நம்பிக்கை காலப்போக்கில் அசுரர்களிடையே பரவியது. அசுரர் எண்ணி எண்ணி அவனாயினர். சொல்லிச்சொல்லி பெருகினர். பலமுகம் கொண்டு நகரெங்கும் அவன் நிறைந்தான். ஏர்தொட்டு மண் உழுதான். வடம்பற்றிப் புரவி புரந்தான். கூடம் எடுத்து இரும்பு அடித்தான். கோல்கொண்டு காவல் நின்றான். மொழியறிந்து நூல் பயின்றான். நெஞ்சுகனிந்து இசை மீட்டினான். நாடென்றும் நகரென்றும் அவையென்றும் அரசனென்றும் அவனே அமர்ந்திருந்தான்.
அவன் உடல் ஒரு ஆழ்கோட்டையின் வாயில் என்றனர் ஒற்றர். ஈசல் எழும் புற்றுவாய். அதிலிருந்து முடிவிலாது ஊறிப்பெருகி அவன் ஒருவனே படையாகி வருவான் என்று அயலார் நம்பினர். அவன் தலைமை கொண்டு எழுந்துவந்த அசுரப்படையை அவன் உடலே என்று அவ்வச்சம் கொண்ட விழிகள் மயங்கின. ரக்தபீஜன் நகரங்களைச் சூழ்ந்து வளைத்து இறுக்கினான். மலைத்தொடர்களை அணைத்து வழிந்தோடி கடந்தான். சமவெளிகளில் பரவினான். விண்முகில்களில் படர்ந்து ஏறிச்சென்றான். நீர்ப்பரப்புகளிலும் பனிமணிகளிலும் விழியொளிகளிலும் அவன் பெருகுகிறான் என்றனர்.
"அவன் பெயரைச் சொல்லாதீர், அவன் ஊரையும் குலத்தையும் உரைக்காதீர், சொல்லாச்சொல் இல்லாதொழியும்" என்றனர் அறிஞர். சொல்லப்படாதபோது அவன் விழிகளில் மின்னும் எண்ணமென்றானான். விழிகளிலிருந்து விழிகளுக்கு சென்றான். "அச்சமே அவனை பெருக்குகிறது, அவனை ஒன்றென எண்ணுங்கள். அவ்வெண்ணத்தைக் கடக்க அவனால் இயலாது" என்றனர் மூத்தோர். "எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்" என்றனர் இளையோர். "போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி?" எனக் குமைந்தனர்.
அனைத்துலகங்களிலும் அவனே எண்ணமென எஞ்சினான். எண்ணத்துடன் எண்ணம் பொருத பெருகிச்சூழ்ந்தான். படைகொண்டு எழுந்து தேவருலகை அவன் அடைந்தபோது முகில்கள் அனைத்தும் அவன் குரலை எதிரொலித்தன. அமராவதிநகரின் தெருக்களில் பொற்புழுதிகள் அதிர்ந்தமைந்தன. தன் மாளிகை உப்பரிகையில் இந்திராணியுடன் அமர்ந்து கந்தர்வர்களையும் யட்சர்களையும் கருக்களென அமைத்து நாற்களம் ஆடிக்கொண்டிருந்த இந்திரன் அவ்வோசை பெருகி அணுகுவதைக் கண்டு அஞ்சி எழுந்தான். “அது என்ன? வானத்து ஆழியா? இருளின் அறைகூவலா?” என்று அமைச்சரிடம் கேட்டான்.
“அரசே, வெல்லற்கரியவன், ரக்தபீஜன் என்னும் அசுரன்” என்றார் அமைச்சர். தேவதேவன் தோள்தட்டி “எழுக படைகள்! எங்கே என் மின்படை?” என்று கூவினான். “பொறுங்கள் அரசே! அவன் முக்கண்ணனிடம் சொற்கொடை பெற்றவன். அவன் உடல் உதிர்க்கும் ஒவ்வொரு துளியும் விதையென்றாகி அவனென எழும். தன்னை பெருக்கிக்கொண்டு தேவருலகை நிறைக்க அவனால் இயலும்” என்றார் அமைச்சர். "எங்கனம் அது?” என்றான் இந்திரன். “அரசே, குருதியின் அணு ஒவ்வொன்றும் விதையே. இவன் அனைத்தும் முளைத்தெழும் சொல்பெற்றுள்ளான்.”
திகைத்து நின்ற இந்திரன் “நாம் என்ன செய்யமுடியும்? அவனை தடுக்காவிடில் நம் நகரம் அழியுமே?” என்றான். “அவன் குருதியுதிராமல் போர்புரிக!” என்றார் அமைச்சர். "அவன் உள்ளம் அச்சுறட்டும். அவ்வச்சத்தால் உடல் தளரட்டும். அக்கணம் வரை போரைக்கொண்டுசெல்க.” இந்திரன் “ஆம்” என்றான். “நாற்களத்தில் இருவரும் உங்கள் அச்சத்தையும் ஆண்மையையும் வீரத்தையும் வெறுமையையும் காய்களாக்கி ஆடுவது இப்போர். வெல்லும் விழைவே வெல்லும் என்றறிக.”
மின்படையுடன் வெண்களிறுமேல் ஏறி படைமுகம் சென்றான் இந்திரன். ஆழியும் மழுவும் வேலும் வில்லும் ஏந்திய தேவர்கள் திரண்டு அவனை பின்தொடர்ந்தனர். “அவன் குருதி உதிரலாகாது. புண்ணெழாது தாக்குங்கள். அவன் விழிகள் மயங்கட்டும். கால்கள் தளரட்டும்” என்று இந்திரன் தேவர்படைகளுக்கு ஆணையிட்டான். நகரெல்லையில் இருந்த சப்தமேருக்கள் என்னும் ஏழுபொன்மலைகளுக்குமேல் படைதிரண்டு தேவர்கள் நிற்க தென்திசையிலிருந்து கரிய ஒழுக்கென அசுரர் முகில்களின் மேல் ஏறி வான் கிழித்து அணுகினர்.
வாள்தூக்கி "ஏழுக போர்” என்றான் இந்திரன். அரசனை வாழ்த்தி போர்க்குரலெழுப்பியபடி தேவர்படைகள் அசுரர்களை எதிர்கொண்டன. "எழுக போர்” என்றான் ரக்தபீஜன். அசுரர்க்கரசனை வாழ்த்திய கரும்படைகள் களம்கண்டன. படைக்கலங்கள் பேரொலியுடன் மோதி பொறிசிதறின. போர்க்குரலும் இறப்புக்குரலும் எழுந்து சூழ்ந்தன. மண்ணில் கூடிநின்ற உயிர்கள் விண்ணில் எழுந்த மின்னொளியையும் இடியொலியையும் உலைத்துச் சுழன்ற புயலையும் கண்டனர்.
இந்திரன் சூழ்ந்திருந்த மலைகளை மின்படையால் பிளந்தெடுத்து ரக்தபீஜன் மேல் வீசினான். விண்ணில் பால்நிற ஒளியைப்பெருக்கி அவன் கண்களை மயங்கச்செய்தான். திசைகளைத் திருப்பித்திருப்பி அமைத்து அவன் சித்தம் குழம்பச்செய்தான். தேவர்படைகளின் வல்லமைமுன் அசுரர் மடிந்தழிந்தனர். தன்குலத்தார் சிதறிக்கிடந்த களம்நடுவே ஒருகணமும் விழியோ, காலோ, எண்ணமோ பதறாமல் நின்று போரிட்டான் ரக்தபீஜன்.
அவன் தோள்களில் மறைந்த அசுரமூதாதையர் குடிவந்தனர். அவன் கூருகிர்களில் அவர்களின் அணையா பெருவஞ்சம் வந்தமைந்தது. அவன் கைகளை விரித்து அலறி குரலெழுப்பி இந்திரனை தன் எறிபடைகளால் தாக்கினான். அவற்றை உடல்வளைத்துத் தவிர்த்து ஒருகணமும் ஓயாது மின்படையைச் சுழற்றி பெருமலைகளை அள்ளி ரக்தபீஜன் மேல் எறிந்தான் இந்திரன். தேவர்கள் ஒவ்வொருவராக புண்பட்டுச்சரிந்தனர். அசுரர் தலையறுந்து அவர்கள்மேல் விழுந்து மூடினர். பின்னர் களத்தில் அவர்கள் இருவரும் எதிரெதிர் எஞ்சினர்.
ஆயிரம் விழிகளையும் அவன்மேல் நட்டு எண்ணம் குவித்தான் இந்திரன். ‘இவன் அசுரன். என் அச்சமே இவன் முதற்படைக்கலம். அதை நான் இவனுக்களிக்கப்போவதில்லை. இவன் வெறும் அசுரன். வென்று மேலெழும் வல்லமை இவர்களுக்குண்டு. குவிந்து கூர்பெறும் வஞ்சமும் இவர்களுக்குண்டு. சோர்ந்து பின்னடையாத துணிவும் இவர்களுக்குரியதே. ஆனால் இறுதியில் இவர்கள் தோற்றாகவேண்டும். அதுவே விண்சமைத்து மண்படைத்து முரண் அமைத்து வினையாடும் தெய்வங்களின் ஆணை’ என்று தன்னுள் எழுந்த சொற்களால் தனக்கு ஆணையிட்டான். கைகள் போர்தொடுக்கையில் உள்ளம் சொல்கோத்தது. ‘இவனை அஞ்சமாட்டேன். என் முன் இவன் பெருக விடமாட்டேன். இவன் ஒருவன் மட்டுமே. என் ஆயிரம் விழிகளுக்கு முன் எழுந்த ஓருடல் மட்டுமே...’
தன் உள்ளத்தை தானே நோக்கிக்கொண்டிருந்தபோது எங்கோ ஒரு மெல்லிய விழைவு முளைப்பதை அவன் கண்டான். ஒரு துளி குருதி நிலம்தொடுமென்றால் என்ன நிகழும்? அது என் அச்சம் மட்டும்தானா? அவ்வெண்ணம் எழுந்ததுமே அது எத்தனை வல்லமைகொண்டது என உணர்ந்து அவன் திடுக்கிட்டான். அதன்மேல் தன் உளச்சொற்கள் அனைத்தையும் அள்ளிப்போட்டு மூடினான். அவற்றை உண்டு பெருத்து அது எழுந்தது.
என்ன நிகழும்? அது தன் எளிய அச்சமென்றால் வென்றாலும் இழிவுசூடியவன் ஆவேனல்லவா? அச்சமறுக்க உறுதிகொண்டவன் இவ்வச்சத்தை மட்டும் ஏன் அகத்தே பேணிக்கொள்கிறேன்? ஒருதுளிக்குருதி. அசுரனின் சொற்கொடையின் கதை உண்மை என்றால்கூட எழுபவன் பிறிதொருவன் மட்டுமே அல்லவா? அவன் உள்ளத்தில் எழுந்த ஆயிரம் நூல்வலர் மறுக்கமுடியாமையை சமைத்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு முன் அவன் விரும்பித் தோற்றான். மிகமெல்லியவை எத்தனை வல்லமைகொண்டவை. மறைந்து நின்று மன்றாடுபவை போல் வெல்லமுடியாதவை உண்டா என்ன?
அவன் அதை எண்ணினானா என அவன் அறிவதற்குள்ளாகவே அவன் கையிலிருந்த மின்படைக்கலம் சென்று ரக்தபீஜனின் தோளைச் சீவி மீண்டது. குருதி எழுந்து மண்ணில் விழுந்ததை இந்திரன் நோக்கினான். இருகைகளிலும் கூருகிர்கள் எழ அலறியபடி அங்கே எழுந்த பிறிதொரு ரக்தபீஜனைக்கண்டு அவன் உள்ளமர்ந்த சிறுவன் உவகைகொண்டு கூவியபடி எழுந்தான். “இதோ நான் என்னைக் கடந்தேன். இதோ செய்யலாகாததைச் செய்தேன். இதோ நான்.”
ஆம், அது உண்மை. அவன் பெருகுபவன். இதோ நான் இருவரையும் வெல்லவிருக்கிறேன். தன் ஆயிரம் விழிகளை இருபகுதிகளாகப் பிரித்து இருவரையும் நோக்கி நின்று இந்திரன் போரிட்டான். இருபக்கங்களிலும் நின்று கைகளை விரித்து படைகளை ஏவியபடி ரக்தபீஜன் எதிர்கொண்டான். இதோ இருவர். என் கை படைத்தவன் இவன். இந்திரன் அப்போது அறிந்தான், மீண்டுமொருவனை உருவாக்காது அமையாது தன் உள்ளம் என. இவன் என் ஆக்கம். என் கையால் ஆயிரம் அசுரர்களை உருவாக்க என்னால் முடியும். அவர்களை அழித்து முன்செல்லும் வல்லமையும் எனக்குண்டு. இந்த ஆடலை நடத்தாமலிருக்க என்னால் முடியாது. தொடங்கிய எவராலும் இதை நிறுத்த இயலாது. தொடங்காமலிருக்கவே எவராலும் இயலாது. தெய்வங்களாலும்!
அவன் வாள் பட்டு உதிர்ந்த துளிகளில் இருந்து ரக்தபீஜர்கள் எழுந்தனர். அவர்கள் பெருகப்பெருக இந்திரன் உள்ளத்தில் களிப்பும் அச்சமும் வளர்ந்தது. அச்சமே களிப்பாவதன் முடிவற்ற மாயம். ஆட்டிவைக்கும் தெய்வங்களின் சூழ்ச்சி. ‘நிறுத்திக்கொள்! இதுவே எல்லை, போதும்’ என அவன் உள்ளத்தின் ஆழம் பதறி குரலெழுப்பியதை அவன் அயலான் என கேட்டுக்கொண்டிருந்தான். ‘இன்னும் ஒரு துளி. இதோ இந்தத் துளியுடன் முடிப்பேன். மேலும் ஒரு சிறு துளி’ என அவன் விழைவுள்ளம் முன் சென்றபடியே இருந்தது.
ஒரு தருணத்தில் நிழலெழுந்து சூழ்ந்ததுபோல தன்னைச்சுற்றி பலநூறு ரக்தபீஜர்களை அவன் கண்டான். ஆயிரம் விழிகளுக்குமுன் பல்லாயிரம் உருவம் கொண்டான் ரக்தபீஜன். அச்சம்கொண்டு மெய்சிலிர்த்து கைசோர்ந்தபோது ஒரு தினவுபோல மேலும் ரக்தபீஜர்கள் எழட்டும் என்னும் விழைவு அவனில் ஊறியது. குருதிவழிய தசையைக் கிழித்து உடலை பிடுங்கி வீசுவதுபோன்ற பேருவகை அவனை சொக்கச்செய்தது. அவன் பதறி நோக்கி நின்றிருக்க அவனில் பிறிதொருவன் எழுந்து சிரித்தான். அவன் கையிலிருந்த வாளும் மின்படையும் ரக்தபீஜன் உடலில் புண்பெருக்கி அசுரர்களை விரித்துப் பரப்பிக்கொண்டிருந்தன.
பின்பு அவன் தன்னை உணர்ந்தபோது பெரும்படையெனச் சூழ்ந்து இருளாகி வான்நிறைத்து இடியோசை பெருக்கி நின்றிருந்த பல்லாயிரம் ரக்தபீஜர்களை கண்டான். அவன் ஆயிரம் விழிகளும் அச்சத்தால் விழித்தன. இந்திரன் எனும் ஆணவம் முறியும் ஒலியை அவன் கேட்டான். மறுகணம் தன் மின்படையை வீசிவிட்டு ஐராவதத்திலிருந்து பாய்ந்து இறங்கி ஒரு சிட்டுக்குருவியென்றாகி சிறகடித்து திரும்பிப் பறந்தான்.
அவனைப்பிடிக்க வந்த கூருகிர்களின் காட்டில் வளைந்து நெளிந்து விரைந்தான். துரத்திய இருள்பெருக்கிலிருந்து தப்பி கூவியபடி அகன்று வானத்தின் அறியா இருள்மடிப்புகளுக்குள் சென்று மறைந்தான். அவனுக்குப்பின்னால் ரக்தபீஜர்களின் பெருக்கு பேரொலியுடன் அமராவதியை சூழ்ந்துகொள்வதை உணர்ந்தான். ரக்தபீஜர்களின் அலை வந்தறைந்து நகர கோபுரங்கள் சரிந்தன. மரங்கள் குடைசரிந்தன. முனிவரும் தேவகன்னியரும் எழுப்பிய அலறல் அவனை தொடர்ந்து வந்தது.
[ 9 ]
இருளில் ஒரு கரிக்குருவியென்றாகி ஒளிந்த இந்திரன் இன்மையென்றாகி வெறுமொரு எண்ணமென தன்னை உணர்ந்து பறந்து அகன்றான். ஒவ்வொரு தொலைவுக்கும் அவன் எண்ணி எண்ணி சிறுத்தபடியே சென்றான். ஏழு இருளடுக்குகளுக்கு அப்பால் சென்றபோது அவன் ஒரு சிறு கரும்பூச்சியாக மாறிவிட்டிருந்தான். சிறகுகளின் ரீங்காரமென்று மட்டுமே எஞ்சினான். தன் இசையால் அவ்விருள் வழியில் ஓர் இசைமீட்டலெனச் சென்ற நாரதரை எதிர்கொண்டான். கண்ணீருடன் சென்று அவர் கால்களைப் பணிந்து “இசைப்படிவரே, என் அரசும் கொடியும் குலமும் அசுரனால் கைப்பற்றப்பட்டன. நான் என் அச்சத்தாலும் இழிவாலும் துரத்தப்படுகிறேன். என்னை காத்தருள்க!” என்றான்.
“நிகழ்வன நிரைவகுத்துவிட்டன அரசே” என்றார் நாரதர். “அஞ்சற்க! அலகின்மை அன்னை என எழும் தருணம் கனிந்துள்ளது. அவளை எண்ணி தவமிருங்கள். அவள் நிகழ்க!” என்றார். அவரிடமிருந்து தேவியின் ஒலிவடிவமான ஸ்ரீம் என்னும் நுண்சொல்லை இந்திரன் பெற்றான். அதை தன்னுள் நிரப்பினான். உள்ளும் புறமும் அவ்வொலியே நிறைய அவன் முற்றழிந்தான். அச்சொல் மட்டுமே என எஞ்சினான். அதன் ஒளியிலிருந்து மீண்டும் எழுந்தபோது தன் உடல் சுடர்விடுவதை கண்டான். தன் ஒளியை ஏற்று சூழ்ந்திருந்த இருள்முகில்கள் பருவடிவம் கொள்வதை அறிந்தான். அவற்றில் எதிரொளித்துத் தெரிந்த தன்னுரு முலைமாறா குழந்தையுடையதாக இருக்கக்கண்டு “அன்னையே!” என வீரிட்டான். அவ்வொலி கைக்குழந்தையின் அழுகையென ஒலித்தது. அவன் பாய்ந்தெழ முயல திருந்தா அசைவுகளுடன் குழவியுடல் ததும்பியது.
அவ்வொலி கேட்டு எழுந்த எதிர்வினை என அருகே மெல்லிய கொஞ்சல்குரல் ஒன்று கேட்டது. பொருளிலா சொல்கொண்ட அன்பின் மெல்லொலி. அவன் தலைதிருப்பி நோக்கி உளம் மலர்ந்து புன்னகைத்தான். கைகளை விரித்தபடி ‘தா தா’ என்று தாவினான். அவனருகே குனிந்த ஒளிகொண்ட பெண்முகம் கண்கனிய இதழ்விரிய சிரித்து “என்ன? என்னவேண்டும் என் அரசனுக்கு?” என்றது. “ம்மா ம்மா” என்று அவன் எம்பினான். அவள் அவனை அள்ளி எடுத்து தன் மென்முலைகளுக்குமேல் அணைத்துக்கொண்டாள். கண்கள் சொக்கி புதைந்து அவன் முனகினான். தன்னைமறந்து துயிலத் தொடங்கினான். அவன் தலையின் புன்மயிரை வருடியபடி அன்னை அவனை மடியிலமர்த்தி தாலோலமாடினாள்.
அவன் துயிலுக்குள் அவள் குரலில் எழுந்த தாலாட்டை கேட்டுக்கொண்டிருந்தான். ஏழுலகென புடவியென இயல்பவை அனைத்தையும் அவனுக்கென அள்ளிக்கொடுப்பதாக சொன்னாள் அன்னை. அவனை முனிபவரை எல்லாம் அவள் தண்டிப்பதாக கூறினாள். அவன் அன்னையே அன்னையே என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவள் இருமுலைகளின் கருங்காம்புகளை அன்றி பிறிதெவற்றையும் அவன் விழையவில்லை. அவள் அவனை அணைத்து முலைமொட்டுகளை இதழிலமைத்தாள். இனிய அமுதை கடைவாய் நுரைத்துவழிய அவன் உண்டான். கால்விரல் சுழித்து, கைகள் சுருட்டி ஆட்டி மெல்ல முனகியபடி அச்சுவையிலாடி அரைத்துயிலில் இருந்தான். பின்பு விழித்துக்கொண்டு அண்ணாந்து அவள் புன்னகையையும் விழியொளியையும் கண்டு சிரித்தான்.
ஊற்றறியாத துயர் அவனுள் எழ அவன் முகம் சுளித்து அழத்தொடங்கினான். அன்னை அவனை அருகே தூக்கி “என்ன? என்ன வேண்டும் என் செல்லத்திற்கு? ஏன் இந்தக் கண்ணீர்?” என்றாள். “யாரடித்தார் சொல்லி அழு. என் கண்ணே. எவர் முனிந்தார் சொல்லி அழு” என்றாள். அவன் சிற்றிதழ்கள் கோணலாயின. அவள் மடி அவன் விழிநீரால் நனைந்தது. அவன் சொன்ன ஒற்றைச்சொல்லில் இருந்து அன்னை அனைத்தையும் உணர்ந்தாள். அவள் உடலில் எட்டு கைகள் படைக்கலங்கள் கொண்டு எழுந்தன. அவள் செம்பொன்னிறப் பட்டாடையின் முந்தானை உறுமும் சிம்மம் என முகம்கொண்டு உடல்கொண்டு எழுந்தது. அவள் விழிகளின் சினம் சிவந்து கனன்றது. வெறிகொண்டு எழுந்து சிம்மம் மேல் அமர்ந்தாள். “செல்க!” என்று ஆணையிட்டாள்.
சிம்மம் மீதேறி அன்னை அமராவதிமேல் போருக்கெழுந்தாள். அப்போரை பார்க்க தேவர்கள் விழிகள் விரித்து வான்வெளியில் நிறைந்தனர். மூன்று முதற்தெய்வங்களும் புன்னகையுடன் எழுந்து வந்தனர். தவத்தில் மூழ்கிய யோகியர் அதை தங்கள் சித்தப்போராக அறிந்தனர். மண்ணில் கவிஞர் அதை புல்லிலும் புழுவிலும் புள்ளிலும் எங்கும் நிகழ்ந்த சமர் எனக் கண்டனர். சொல்லிலும் கல்லிலும் அதை பொறித்தனர் கலைஞர்.
[ 10 ]
அமராவதியில் ரக்தபீஜன் அரசமாளிகையில் இந்திரனை வென்ற பெருஞ்சினம் உடலெங்கும் ததும்ப நிலையழிந்திருந்தான். விஸ்வகர்மன் அமைத்த பொன்மாளிகையின் அறைகள் தோறும் முட்டிமோதினான். உப்பரிகைகளில் நின்று பிளிறினான். நகரத்தெருக்களில் அலைந்தான். தளர்ந்து சற்றே அமர்ந்து கண்ணயர்கையில் தன்னைத்திறந்து வெளியேறி தன்னைச்சூழும் பல்லாயிரம் ரக்தபீஜர்களை கண்டான். விழித்துக்கொண்டு நீள்மூச்சுடன் சூழலை உணர்ந்து ஒரு கணம் வெறுமையில் அமர்ந்தான். உடனே உள்ளே எழுந்த பெருஞ்சினத்தால் கைகளை நிலத்தில் ஓங்கி அறைந்து அலறியபடி எழுந்தான். எதிர்வந்தவர்களை எல்லாம் கூர்நகங்களால் கிழித்தபடி கொந்தளித்து சுற்றிவந்தான். மீண்டும் களைத்து விழுந்து உள்ளம் மயங்கும்போது நிழல்கள் எழுவதுபோல ஓசையின்றி தன்னை வந்துசூழ்ந்த ரக்தபீஜர்களின் உருவங்களை கண்டான். கூச்சலிட்டபடி எழுந்து கைவிரித்து நின்று அவற்றை எதிர்கொண்டான்.
பாவை ரக்தபீஜர்கள் சினமற்றவர்களாக இருந்தனர். அவர்களின் விழிகள் அவன்மேல் பதிந்திருக்க உகிர் கூர்ந்த கைகளை விரித்து செஞ்சடைப்பிடரி சிலிர்க்க சற்றே தலைதாழ்த்தி குருதிவாய் திறந்து வெண்பற்களைக் காட்டி உறுமியபடி அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்கள் மேல் பாய்ந்து அறைந்து கிழிக்கத் தொடங்கினான். அவனை அவர்களின் உகிர்கள் கிழிக்க அப்புண்களின் குருதியிலிருந்து அவர்கள் மேலும் மேலும் பெருகினர். தன்குருதியில் அவன் கால்வழுக்கி விழுந்தான். அவ்விழுக்கில் புழுவென நீந்தித் திளைத்து எழுந்தான். மீண்டும் சறுக்கிவிழுந்தான். அவன் உடல்மேல் கவிந்த அவர்கள் பெரும்பசியுடன் உறுமியபடி அவன் ஊனைக்கிழித்து உண்டனர். ஒருவரோடொருவர் முண்டி மோதி ஊனை பிடுங்கினர். சீறி கைதூக்கி ஊனுக்காக பூசலிட்டனர். அவன் நெஞ்சக்குலைபிடுங்கிய ரக்தபீஜன் ஒருவன் இளித்தபடி அதில் வழிந்த ஊனை நக்கினான்.
அஞ்சி எழுந்து அவன் ஓடி அரண்மனை உப்பரிகைக்கு வந்தபோது நகரெங்கும் நிறைந்திருந்த எக்காள ஒலியை கேட்டான். நூறாயிரம் முரசுகளின் ஓசை. எவருடைய போர்முரசு அது என்று அவன் செவிகூர்ந்தான். “அமைச்சரே! எவர் கொண்டுவரும் படை அது?” என்று கூவினான். இறங்கி ஓடி அரண்மனைக் கூடத்திற்கு வந்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஏவலரும் காவலருமெல்லாம் கண்ணயர்ந்திருப்பதையே கண்டான். அவர்களை உதைத்தும் உலுக்கியும் எழுப்ப முயன்றான். இன்னிசை கேட்டு முகம் மலர்ந்தவர்களாக அவர்கள் துயின்றனர். அன்னை தாலாட்டில் மயங்கிய மகவுகள் போல. செய்வதறியாது அவன் அரண்மனையிலிருந்து இறங்கி முற்றத்திற்கு ஓடினான். அங்கும் அனைவரும் துயின்றுகொண்டிருந்தனர். அந்நகரில் அவனன்றி எவரும் விழித்திருக்கவில்லை.
திரும்பி தன் அறைக்கு வந்த ரக்தபீஜன் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு போருக்கு கிளம்பினான். அவனுக்கென அமைக்கப்பட்ட நூற்றெட்டு வெண்புரவிகள் கொண்ட வெள்ளித்தேர் கொட்டிலில் சித்தமாக இருந்தது. அதில் ஏறிக்கொண்டு அவன் போருக்கு கிளம்பினான். அவன் பாதைக்குக் குறுக்காக கரியகுருவி ஒன்று கூவியபடி இடமிருந்து வலமாக பறந்தது. தீயநிமித்தம் கண்டு அவன் ஒருகணம் கடிவாளத்தை இழுத்தான். பொன்னிறசிறகுள்ள குருவி ஒன்று வலமிருந்து இடமாக பறந்தது. நன்னிமித்தம் கண்டு முகம் மலர்ந்து அவன் படைக்களம் சென்றான்.
தொலைவிலேயே இளஞ்சூரியன் எழுந்ததுபோல வானத்தில் செவ்வொளி எழுந்திருப்பதை அவன் கண்டான். “செல்க! செல்க!” என்று அவன் தன் புரவிகளை விரையச்செய்தான். “இதோ இதோ” என ஏன் தன் உள்ளம் துள்ளுகிறது என்று அவன் அறியவில்லை.
[ 11 ]
தென்திசையில் எழுந்து பற்றி எரிவதுபோல் ஒளிவிட்ட முகில்குவையை அணுகும்தோறும் ரக்தபீஜன் உடலும் செவ்வொளி கொண்டு அனல்போல் ஆயிற்று. அவன் நெஞ்சில் இனிய நினைவுகள் எழுந்தன. எங்கோ இனிய இசை ஒன்றை கேட்டான். நறுமணங்களை அறிந்தான். நாவிலினித்தது அவன் வாய்நீர். விழிகள் அழகை மட்டுமே கண்டன. அலையடித்து திரைவிலகுவதுபோல முகில்கள் வழிவிட அவன் சென்றுகொண்டே இருந்தான். பின்னர் அறியாது அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. முகில்முடிகளுக்கு அப்பால் எழுந்து தெரிந்த தேவியின் மணிமகுடத்தை அவன் கண்டான்.
விண்ணில் ஒரு மணியோசை எழுந்தது. மங்கலச்சங்குகள் ஓம் ஓம் என்றன. பொன்னிறச்சிறகுகளுடன் முகில்களில் மூழ்கியும் துழாவியும் களித்தனர் கந்தர்வர்கள். மேலும் மேலுமென சுடர்கொண்டன முகில்கள். அவன் அன்னையின் திருவுருவை அருகிலென கண்டான்.
கரியவழிவாக விரிந்திருந்தது கூந்தல். நடுவே சூரியவட்டமென அவள் முகம். கனிந்து பாதிமலர்ந்து குனிந்த விழிகள். வெண்பல்நிரை மின்ன புன்னகைத்தன இதழ்கள். கன்னத்தில் குறுநிரை ஆடியது. காதில் தழைந்த மணிக்குழை கண்ணொளிக்கு நிகர்நின்றது. மூக்கில் தொங்கிய புல்லாக்கு பல்நிரைக்கு எதிர்நின்றது. அவன் மண்ணில் விழும் எடைபோல அவளை நோக்கி சென்றுகொண்டே இருந்தான். விழிகளிலும் உள்ளத்திலும் அவளன்றி வேறின்றி இருந்தான்.
அவள் காலடியில் நின்றிருந்தது செம்பிடரி எழுந்த சிம்மம். அதன் சிப்பிவிழிகள் அவனை நோக்கி சொல்லின் ஒளிகொண்டன. வாய் திறந்து நாக்கு வளைந்து அச்சொல் வடிவு கொண்டது. அவ்விழிகளை அவன் அறிந்திருந்தான். அவ்வுகிர்களை முன்பும் பலமுறை கண்டிருந்தான். அவ்வெண்ணம் எழுந்ததுமே அமிழ எதிரே பொன்மலை என எழுந்தது அன்னையின் உருவம்.
அன்னை தன் இரு கைகளையும் விரித்து அவனை அருகே அழைத்தாள். அவன் கால்தயங்கி நிற்க, அவள் புன்னகையுடன் மேலும் குனிந்து “வருக என் கண்ணே!” என்றாள். அவன் பின்னடி எடுத்துவைத்து மாட்டேன் என தலையசைத்தான். “என் அமுதல்லவா? என் துளியல்லவா?” என்று அன்னை கொஞ்சினாள். அவன் மேலும் அடி வைத்து பின்னகர்ந்து மாட்டேன் என்று தலையசைத்தான். “உனக்கு இனியன தருவேன். உன் இரு கன்னங்களிலும் முத்தாடுவேன்” என்றாள் அன்னை.
அவன் காலை உதைத்து முகம் சுளித்து உரத்தகுரலில் “விலகு!” என்றான். மூச்சிரைத்தபடி “விலகிச்செல்... விலகு!” என்று கூவினான். தன் கண்களை மூடி அவள் உருவத்தை அகற்ற முயன்றான். இமைகள் அவள் தோற்றத்தை தடுப்பதில்லை என்று உணர்ந்து சினத்துடன் விழிதிறந்து “அகன்றுபோ! போய்விடு!” என்றான். அவள் சிரித்து “உன்னிலிருந்து எப்படி அகல்வேன்? நீ என்னிடமிருந்து எங்கு செல்வாய்?” என்றாள்.
அவன் அவள் கைகளை பார்த்தான். எங்கோ எவ்வெவ்வடிவிலோ கண்டுமறந்தவை அவை. சிம்மம்போல் உகிர்கொண்டவையா அவை? அன்றி, நாகம்போல் நெளிபவையா? அவன் விழிகள் அவளுடைய எடுத்த இணைமுலைகளை பார்த்தன. தன் கைவிரல்நுனிகளில் ஒரு நடுக்கமென சினமெழுவதை உணர்ந்தான். அதை அறிந்ததுமே அவன் உள்ளம் விரைவுகொண்டது. ஊதி ஊதி கனல்பெருக்கி அச்சினத்தை தன் உடலெங்கும் நிறைத்துக்கொண்டான். நெஞ்சை கைகளால் அறைந்து பேரொலி எழுப்பியபடி நீட்டிய கைகளுடன் அவன் அவளை நோக்கி பாய்ந்து சென்றான். அவன் கொண்ட சினத்தை அறிந்து களிவெறிகொண்டது அவன் கையமைந்த வாள்.
“நில்! நில்!” என்று அன்னை கூவினாள். “உன் மேல் முனிந்து இங்கு வந்தேன். உன் பால்படியா செவ்வுதடுகளை கண்டபின்பே கனிந்தேன். என் அமுதை கொள்க! நீ அழிவற்றவனாவாய்” என்றாள். “விலகு! என் முன் எழுந்த முலைகள் எவற்றையும் கொய்யாமல் நான் அமைந்ததில்லை... இழிமகளே, இன்று உன் முறை” என்று ரக்தபீஜன் முழக்கமிட்டான். தன் வலக்கையில் ஏந்திய வைரவாளை சுழற்றியபடி அவள் அமர்ந்திருந்த சிம்மம் நோக்கி சென்றான். “இன்று நான் விழைவது உன் முலையமுதல்ல. வெங்குருதியை மட்டுமே. உன் முலையரிந்து வீசி அதை பருகித் திளைக்கிறேன். உன் நெஞ்சு பிளந்து துடிக்கும் குலையை கையில் எடுத்துப்பார்க்கிறேன், அதிலுள்ளதா என் பெயர் என்று!”
அன்னை கைகளை வீசித்தடுத்து “வேண்டாம், மைந்தா. அன்னையை வென்றவன் எவனுமில்லை” என்றாள். “வெல்லமுடியாதெனில் அழிகிறேன். வீண்மகளே, ஊட்டப்படாத முலைப்பால் போல் நஞ்சு பிறிதில்லை” என்றான் ரக்தபீஜன். “அன்னையிடம் பால் எஞ்சுவதில்லை மைந்தா” என்றாள் அன்னை. “சொல்வேண்டாம். எடு படைக்கலங்களை. இங்கு முடியட்டும் நமது முரண்” என்றான் ரக்தபீஜன். “ஆம், இக்களம் அதுவே” என்று அன்னை சொன்னாள். நீள்மூச்சுடன் அவள் ஒளிமங்கலானாள். அவளைச்சூழ்ந்த சுடர்முகில்கள் திரிதாழ்த்தி அணையத்தொடங்கின.
அவன் அணுகும்தோறும் அன்னை இருண்டு உருவிரியத் தொடங்கினாள். அவள் தோள்களில் எட்டு கைகள் எழுந்தன. அவற்றில் வாளும் கேடயமும் முப்புரிவேலும் உடுக்கும் வடமும் அங்குசமும் கதையும் உழலைத்தடியும் தோன்றின. இருளுருவான முகத்தில் விழிகள் எரிமீன்களென தழல்விட்டன. செந்நா எழுந்த குருதிவாய் திறந்து அவள் பிளிறிய ஒலியில் முகில்கள் சிதறி விலக வானம் வெளித்தது. அதில் அவள் மட்டுமே எஞ்சுவதுபோல் அவன் தலைக்குமேல் எழுந்து தெரிந்தாள். வாளேந்தி மறுகையில் உகிர்நீட்டி போர்க்குரல் எழுப்பி அவன் அவள் எட்டு கைகளுடனும் போரில் தன்னை தொடுத்துக்கொண்டான்.
அவனைச்சூழ்ந்து பல்லாயிரம் இடியோசைகள் எழுந்தன. பல்லாயிரம் மின்னல்கள் துடிதுடித்தன. அவன் நின்ற நிலமும் அந்நிலம் சூடிய விண்ணும் அதிர்ந்து நடுங்கின. அவள் கைகளின் படைக்கலங்கள் வளர்ந்து வெற்பெழுச்சி என, வான்வளைவென அவனை சூழ்ந்தன. அவன் அவள் முலைகளை அன்றி பிறிதெதையும் நோக்கவில்லை. அப்படைக்கலங்களை தன் வாளால் எதிர்கொண்டான். அவை பேரொலியுடன் முட்டிச் சிதறின. ஒவ்வொரு கணமும் தன்னைத் திரட்டி ஒன்றே நிலையென அவன் அவளுடன் போரிட்டான். அவன் உடலுக்குள் நுண்வடிவில் செறிந்த பல்லாயிரம்கோடி ரக்தபீஜர்கள் உயிர்கொண்டு துள்ளித்தவித்தனர். அவர்களின் விசையால் அவன் தசைத்திரள்கள் அனைத்தும் புடைத்துச்சுருண்டன. அவன் தோள்கள் விம்மி எழுந்து அதிர்ந்தன.
விண்ணவர் அப்போர் கண்டு வியந்தனர். மலை மலையுடன் என என்றனர் முதல்வானில் நின்றிருந்த கந்தர்வர். கடல் கடலுடன் என என்றனர் இரண்டாம் வானில் நின்றிருந்த யட்சர். மூன்றாம் வானில் நின்றிருந்த கிம்புருடர் முகில் முகிலுடன் என என்றனர். நான்காம் வானில் நின்ற தேவர்கள் அதை விண்ணகமும் மண்ணகமும் மோதுவதாக எண்ணினர். ஐந்தாம் வானில் அமைந்த முனிவர் அதை விழைவும் வெறுமையும் கொண்ட வெறியாட்டெனக் கண்டனர். ஆறாம் வானில் நின்றிருந்த பிரம்மன் அழிவும் ஆக்கமும் என்று அறிந்தான். ஏழாம் வானில் நின்றிருந்த இருவர் அதை அன்னை முலையருந்த முட்டும் சிறுமைந்தன் என உணர்ந்து புன்னகை செய்தனர்.
அன்னையின் வேல்நுனி வந்து அவன் தோளை தொட்டுச்சென்றதும் குருதி பீரிட்டு நிலத்தில்விழ அங்கிருந்து போர்வெறிக்கூச்சலுடன் ரக்தபீஜர்கள் எழுந்தனர். களிகொண்டு நகைத்து ரக்தபீஜன் “இதோ நான். வெறியாடும் கொற்றவையே, வெளிநிறைத்த வெறுமையே, இதோ நாங்கள்… எங்கள் அனைவருக்கும் நிறையும்படி அமுதுள்ளதா உன்னிடம்?” என்று கேட்டான். ரக்தபீஜர்களின் உடல்களிலிருந்து விழுந்த குருதித்துளிகள் மேலும் ரக்தபீஜர்களாயின. ஒன்றுபல்லாயிரமெனப் பெருகி வெளிநிறைத்தன. உகிர்கள் நீட்டி பிடரி சிலிர்த்து அலறி ஆர்த்து தேவியை அவர்கள் சூழ்ந்துகொண்டனர்.
தேவி தன்னை மாயையால் பல்லாயிரங்களின் பல்லாயிரம் மடங்கென பெருக்கினாள். கைகளின் கிளைக்காடு. கால்களின் வேர்க்காடு. செவிகளின் இலைக்காடு. விழிகளின் மலர்க்காடு. அக்காட்டை எதிர்கொண்டது ரக்தபீஜர்களின் முள்பெருத்த பாலைக்காடு. திசையெங்கும் நடந்தது பெரும்போர். தேவியின் மாயைப்பெருக்கே ரக்தபீஜர்களின் பெருக்கை உருவாக்கியது. தன்னை நுரைக்கச்செய்து அந்நுரைக்குமிழிகளுடன் போர்புரிந்துகொண்டிருந்தாள் அன்னை. முடிவிலாது பெருகி முடிவிலாது பொருது முடிவிலாது வென்று முடிவிலாது தோற்றாள்.
பெருகி உருவெடுத்து படையெனப் பொருதி நின்றிருக்கையிலும் அவள் முலைகள் சுரந்து வழிந்துகொண்டிருந்தன. அவள் முடிவிலா மாயைகளிலிருந்து பெருகிய அமுது பெருகி குருதியுடன் கலந்து களம் நிறைத்தோடியது. வெட்டுண்டும் சிதைந்தும் சரிந்த ரக்தபீஜர்களின் உடல்களுக்குமேல் அவள் முலைப்பால் வெண்சரடுகளாக வழிந்தது. துடிக்கும் உடல்களுக்குமேல் இழுபட்டுத்திறந்த வாய்களில் இதழ்கள் குவிந்து அதை சுவைத்துண்டன.
அவள் கண்முன் மலைகளென குவிந்துகிடந்தனர் கொல்லப்பட்ட ரக்தபீஜர்கள். அவற்றின்மேல் கால் நாட்டி தலை எழுந்து நின்ற அன்னை ஒருகணம் உளம்சோர்ந்தாள். அவள் முலைப்பால் சொரிவு மிகுந்தோறும் கொலைக்கைகளின் விரைவு குறைந்தது. நகைத்து வெறியாடி பெருகிக்கொண்டிருந்த ரக்தபீஜன் அக்கணத்தின் இடைவெளியை தான் நிறைத்து பன்மடங்கானான். பிறிதொருகணம் அமையும் எனில் வெற்றி தனக்கே என்று அவன் எக்களித்தான். அக்கணம் அன்னையின் வலத்தோளில் ஆடிய குழையில் எழுந்த சிவம் “நீ வென்றாகவேண்டியது என்றும் உன்னையே தோழி” என்றது. “உன் கன்னியை துணைவி வென்றாள். துணைவியை அன்னை வென்றாள். அன்னையை இன்று அறம்சூடிய பேரன்னை வென்றாக வேண்டும்!”
காலமென்றான அக்கணத்தில் நின்று கைசோர்ந்து அன்னை நீள்மூச்செறிந்தாள். “அன்னையென்றிருப்பதன் களிப்பெருக்கைக் கடக்க என்னால் இயலாது” என்றாள். “கடந்தாகவேண்டும். இப்புடவி உன் மடிசேர்ந்த மகவு” என்றார் வலபாகத்தன். “இது என் மைந்தர்நிரை” என்றாள் ஆவுடையாள். “மைந்தரென்பது உன்னில் கருக்கொண்டு உன் உதிரமுண்டு எழும் உன் துளிகளே தேவி... வெல்வதும் வீழ்வதும் நீயே” என்றார் தாதை. “என் செய்வேன்? பிறிதொன்று அறிந்திலேன்” என்றாள் தாய். “உன்னில் எழுந்ததை நீயே உறிஞ்சிக்கொள்க! நீரை எல்லாம் கடலே ஆக்கி உண்கிறது என்றறிக!” அன்னை நெஞ்சுலைந்து நின்றாள். “உன்னிலெழுக உன் பிறிதுரு!” என்றது பதி. “ஆம்” என்றாள் அன்னை.
அன்னை தன் வாளை தூக்கி தன் நெற்றிப்பொட்டில் வைத்தாள். வெறிக்குரல் எழுப்பியபடி தன்னை வெட்டி இரண்டாகப்பிளந்தாள். துடித்துவிழுந்த ஒருபாதி கருநிறம் கொண்டு அவளுக்குப்பின்னால் நிழலென எழுந்தது. நிழலற்ற ஒளிகொண்டிருந்த அன்னைக்கு நிழலெழுந்ததும் விண்ணவர் வாழ்த்தொலி எழுப்பி அம்மறுவுருவை வணங்கினர். விண்ணிலெழுந்த நிழல் மேலும் கருமைகொண்டு பருவுருத் திரட்டி சாமுண்டி என ஓங்கி நின்றது. கருநாகங்கள் சடைகளென நெளிந்த மண்டையில் எரிகுழிகளென விழிகள். எலும்புருவான உடலில் சுருங்கி உள்வலிந்திருந்த முலைகள். கருகிய சுள்ளிகளென எட்டு கைகள் விரிந்து அவற்றில் எரிகலமும் மண்டையும் வாளும் சூலமும் துடியும் கோடரியும் மின்படையும் கதையும் அமைந்தன.
சாமுண்டியின் வாயிலிருந்து செந்நிறப்பெருக்காக நாக்கு நீண்டு நெளிந்து துழாவியது. அன்னையின் படைக்கலங்கள் வெட்டி ரக்தபீஜனின் உடலில் இருந்து ஊறிச்சிதறிய குருதித்துளிகள் மண் தொடுவதற்குள் அந்த நெடுநாக்கால் நக்கிச்சுருட்டி உண்ணப்பட்டன. பாலைநிலம் நீரை உறிஞ்சுவதுபோல அவளுக்குள் அக்குருதிப்பெருக்கு சென்று மறைந்துகொண்டே இருந்தது. தேவியின் வேல்பட்டும் அம்புதைத்தும் கதைஉடைத்தும் விழுந்த ரக்தபீஜர்களின் உடல்கள் குருதியின்றி அசைவிழந்தன. அலையடங்குவதுபோல அவளைச்சூழ்ந்திருந்த அவன் தணிந்துகொண்டிருந்தான்.
தங்கள் குருதி உண்ணப்படுவதை ரக்தபீஜர்கள் நோக்கினர். ஆனால் சாமுண்டியை நோக்கி சற்றே விழிதிருப்பினாலும் போர்க்குவியம் மாறுவதை உணர்ந்து தேவியிலேயே விழிநிலைத்து போரிட்டனர். ஓரக்கண்ணால் சாமுண்டியின் நாக்கை நோக்காமல் அமையவும் இயலவில்லை. அனல்கதிரென அது களமெங்கும் பரவி குருதியை பொசுக்கியது. காற்றுச்சுழலென அலைந்து ஈரத்தை உலரச்செய்தது. தன்னை உண்ணும் அந்நாக்கின் தொடுகையை ரக்தபீஜன் ஒரு விதிர்ப்பாக உடலில் உணர்ந்தான். ஒருமுறை அதன் மென்வெம்மை வந்து அவன் கால்களை தொட்டுச்சென்றபோது உடல்சிலிர்த்து விழியூறினான். அவன் உள்ளம் உவகை கொண்டது. “உண்ணுக! மேலும் உண்ணுக!” என அவன் அறியா ஆழம் கரைந்தது. முலையூட்டும் அன்னையென அவன் கனிந்து ஊறிக் கொண்டிருந்தான்.
குருதியுண்டு சாமுண்டி திமிறிப்பரக்க முலையூறி அன்னை நின்றிருக்க களமெங்கும் வெண்ணிற அமுதம் நிறைந்தது. அப்பெருக்கில் ரக்தபீஜன் கால்வழுக்கி விழுந்தான். எழமுயன்று மீண்டும் விழுந்தான். எழும் முயற்சியிலேயே அவன் தவழ்ந்தும் துழைந்தும் புரண்டும் எழுந்தும் குழவியென்றானான். மூழ்கி மூச்சுதவறி எம்பி எழுகையில் உண்ட முதல்வாய் அமுது கடும்கசப்பு கொண்டிருந்தது. நாவில் எரிந்து தொண்டையில் கமறி வயிற்றில் குமட்டியது. பின்பு அடிநாக்கில் ஓர் இனிமையென எஞ்சியது. அவ்வினிமையை தேடிய அவன் நாக்கு அடுத்த மிடறை தேடி உண்டது. மேலும் மேலுமென உண்டு இனிமையில் திளைத்தது.
தன்னருகே பிடரிமயிர் பறக்க அணுகிய சிம்மத்தின் முகத்தை அருகே கண்டான். அதன் விழிகளிலிருந்த அணுக்கத்தை உணர்ந்து துணுக்குற்றான். “தாங்களா?” என்றான். கைதொழுது “பிழைபொறுக்கவேண்டும்” என்றான். சிம்மம் தன் குளிர்ந்த மூக்கால் அவன் சிம்மமுகத்தின் மூக்கை தொட்டது. அதன் செந்நா வெளிவந்து அவன் உதடுகளை மெல்ல முத்தமிட்டது. அதன் இனிய உறுமலை அவன் அருகென கேட்டான்.
தன்னைச்சூழ்ந்த பால்பெருக்கில் விழுந்தான் ரக்தபீஜன். அள்ளி அள்ளிக் குடித்து அமுதால் நிறைந்தான். தன் உடலெங்கும் பரவிய அமுதை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தான். கொதித்தும் குமிழியிட்டும் அவனுள் செறிந்திருந்த குருதி முழுக்க வழிந்தோடி அங்கே குளிரென அமுது நிறைந்தது. கால்நுனிகளில், கைவிரல்முனைகளில், செவிமடல்களில், மூக்குக்குவியத்தில் குளிர்ந்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் இனித்தது. சொற்களில் எண்ணத்தில் கனிந்தது. “அம்மா” என்று அவன் சொன்னான். அவன் மேல் குனிந்த அன்னை நீண்டு வளைந்த கொம்புகளுடன் எருமைமுகம் கொண்டிருந்தாள். மெல்லிய ஆழ்குரலில் “மைந்தா” என்றாள்.
[ 12 ]
வேதம் கதிரெழுந்த காலத்தின் புலரியில் இது நடந்தது. கன்னங்கரியவனாகிய வருணனால் ஆளப்பட்ட முதல் கட்டத்தில் அமைந்த வேள்விக்களத்தில் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் அமர்ந்து மேதாதிதி என்னும் மூதாதைமுனிவர் எரி எழுப்பி அவியளித்தார். கிழக்கு அதன் திசை. காலைவிடியல் அப்பொழுது.
வேதம் தொட்டெழுப்ப விண் வழிந்து மண்ணைத் தொட்டது. முதற்களத்தின் தெய்வங்கள் உருத்திரட்டி மண்ணிறங்கின. இரண்டு செங்கைகளிலும் நெய்க்கரண்டிகளுடன் அனலோன் துணைவியாகிய அன்னை ஸ்வாகை எழுந்துவந்தாள். நான்கு வளைக்கைகளில் பொற்காசுகளுடன் வேள்விதேவனின் மூத்த துணைவியாகிய தட்சிணை தேவி எழுந்தாள். ஆறுகரங்களில் ஏடும் எழுத்தாணியும் தாமரையும் மின்படையும் அஞ்சலும் அருளலுமாக தீக்ஷை தோன்றினாள். அவர்களால் அழைத்துவரப்பட்டவள் போல் அன்னை மங்கலசண்டிகை இருளென ஒளியென எழுந்தாள். அவள் நெற்றிசூடிய சிந்தாமணியில் சுடரென துர்க்கை தோன்றினாள்.
“முடிவிலா இருமை கொண்டவளை, ஈன்றும் கொன்றும் ஆடுபவளை வணங்குக! ஆதலும் அழிதலுமென ஆடுபவளை பணிக! தன்னை தான் ஈன்று தன்னை தானுண்டு நிறைபவளை அணைக! அவள் நமக்கு அருள்க!” என்றார் மேதாதிதி. “ஓம் ஓம் ஓம்” என்றனர் மாணவர். “இப்புடவி அவள் இருமை. இதையறியும் சித்தமும் அவள் இருமைத்தோற்றமே. ஒருமையென அவளை உணர்கையில் அவ்வுணர்வென ஆகி நின்று நகைக்கிறாள். இங்கு அவள் எழுக! நம் அவியுண்டு அன்னை நிறைக!”
அன்னையருக்கு அவியிட்டு நிறைவுறச்செய்தார் மேதாதிதி. அன்னையர் நிறைவுற்றபோது விண்நிறைந்த மூதாதையர் விடாய்தீர்ந்தனர். வெளிநிறைந்த தேவர்கள் மகிழ்ந்தமைந்தனர். வெளியாளும் தெய்வங்கள் கனிவுற்றன. “எழுக இக்களம்!” என்று வானொலி எழுந்தது. அத்தருணத்திற்குரிய விண்மீனை எரிதழல்திரையில் மேதாதிதி நோக்கினார். வெள்ளாட்டின் தலையென செம்பிடரி பறக்க செந்நா நீண்டு வளைய தோன்றி மறைந்தது அது.
“இது எரிவடிவென கிழக்கே சுடரும் மேடம். அவியிடுக இளையோரே!” என்றார் மேதாதிதி. நூற்றெட்டு மரக்கரண்டிகளில் அள்ளி அள்ளி விடப்பட்ட அவிநெய்யை உறிஞ்சி உண்டது வெள்ளாட்டின்தலை. “மேலும்! மேலும்! தீராவிடாய் கொண்டவன் போலும் இவன். இக்களத்திற்குரியோர் அனலடங்காதவர். தன்னை உண்டு தணியாதவர்” என்றார் மேதாதிதி.
மேலும் மேலுமென அவி சென்றுகொண்டிருக்கையில் அவ்வாட்டுத்தலையில் மின்னிய விழிகளை ஒருகணம் கண்டு நெய்க்கரண்டி அசைவிழக்க கைகாட்டி “நிறுத்துங்கள்” என்றார். உரத்த குரலில் “இந்திரனே, விழைவெரியும் இவ்விழிகளை நான் நன்கறிவேன். வெளியே வருக!” என ஆணையிட்டார். வெள்ளாடு அனலில் இருந்து எழுந்து முன்னங்கால்களைத் தூக்கி வைத்து வெளியே வந்தது. இளவைதிகர் வியப்பொலி எழுப்பினர்.
“இவ்வண்ணம் நீ கரந்து வந்தது ஏன்?” என்றார் மேதாதிதி. “அங்கே கீழ்ச்சரிவின் பெருந்தனிமையில் இன்னும் தோன்றாத சூரியனுக்காக காத்திருக்கிறான் மேடன். அவன் தயங்குவதைக் கண்டு நான் உட்புகுந்தேன்” என்றான் இந்திரன். “நீ இளையமேடன் என்று ஆகுக! சித்திரை முழுப்பதுவரை நீ இவ்வுடலுடன் இருப்பாய். இவ்வண்ணமே விண்ணகமும் அணைவாய். அங்கு உன்னவரால் இளிவரல் செய்யப்படுவாய்” என்றார் மேதாதிதி. “கதிர்காத்துத் தயங்கியவன் உனக்கு முன்னவன் என்றாகுக! உன்னுள் அவனும் அவனுள் நீயும் என்றும் குடிகொள்க! இருபாற்பட்ட எதுவும் கொள்ளும் முடியா ஆடல் உங்களுள் நிகழ்க! ஆம் அவ்வாறே ஆகுக!”
வெள்ளாட்டின் வடிவில் தலைகுனிந்து அமராவதியை அணைந்தான் இந்திரன். அவனைக்கண்டு தேவரும் முனிவரும் மேடன் என்று நகையாடினர். சித்திரை விடியும்வரை வியோமயானத்தில் அமர்ந்து விண்நோக்கி காத்திருந்தான். விரியும் கதிர்வளையத்துடன் சூரியன் எழுந்தபோது தன் ஆட்டுருவம் உருகி வழிந்து தேவருடல் மீள்வதை கண்டான். கதிரவனை வணங்கி தன் நகர்மீண்டான்.
பகுதி இரண்டு: வைகாசி
[ 1 ]
மகதத்துக்கு கிழக்கே, கங்கையின் கரையில், ஜராவனம் என்னும் காட்டில் வாழ்ந்த தொல்குடியினர் ஜரர்கள் என்றழைக்கப்பட்டனர். எப்போதும் மழைபொழியும் அக்காடு இலையும் கிளையும் செறிந்து செம்போத்துகளும் ஊடுருவிப் பறக்கமுடியாததாக இருந்தது. அதனூடாக குனிந்தும் தவழ்ந்தும் அலைந்தமையால் ஜரர்கள் குறிய உடல்கொண்டனர். சிறுவளைகளிலும் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் உடல்சுருட்டி ஒடுங்கி வாழ்ந்தனர். மழையீரம் ஒழியாத அவர்களின் உடலின் தோல் இளமையிலேயே வரிசெறிந்து வற்றிச் சுருங்கியது. முடிநரைத்து விழிகள் மங்கின. இளமையிலாதவர் எனும்பொருளில் அவர்களை ஜரர் என்றனர் மலைப்பொருள் கொள்ளவந்த வணிகர்.
ஜராவனத்தில் சிறிய அருமணிகள் மண்ணில் கிடைத்தன. அவற்றை ஊனும் நெய்யும் மரவுரியும் உப்பும் கொடுத்து பெற்றுக்கொண்டனர் ஊர்வணிகர். மணிதேடி மண்ணைநோக்கியபடி அலைந்து ஜரர்கள் மேலும் கூன்கொண்டனர். மண்நோக்கி நோக்கி மேலும் முதுமைகொண்டனர். அவர்கள் சந்தைகளுக்கு வருகையில் தொலைவில் முதியோரை சிறுவர் என்றும் அணுக்கத்தில் சிறுவரை முதியோர் என்றும் மயங்கினர் அயலார். வலுவிழந்த உடல்கொண்டிருந்தாலும் பிறர் அறியாத நச்சுக்களைக் கொண்ட ஜராவனத்தை அறிந்தவர்கள் என்பதனால் அவர்களை அஞ்சவும் செய்தனர்.
ஜராவனத்தின் நடுவே இருந்த விருத்தகிரி என்னும் மலையுச்சியில் இருந்தது ஜரையன்னையின் குகையாலயம். குகையின் பாறைச்சுவரில் அறியாதொல்பழங்காலத்தில் கூரிய கல்லால் கீறி வரையப்பட்ட அன்னையின் ஓவியம் அங்கு சென்றதும் உடனே தென்படுவதில்லை. குகைவிரிசல்களிலிருந்து ஊறிவழியும் நீரால் பச்சைப்பாசி படிந்த பாறைப்பரப்பில் மெல்லிய பள்ளமாகவே ஓவியக்கோடுகள் தெரியும். அதன்மேல் விரல்களை ஓட்டியபடி கண்களை மூடிக்கொண்டு அகத்தால்நோக்கினால் அவள் உருவம் மெல்ல எண்ணத்திரையில் புடைத்தெழும். உடனே விழிதிறந்தால் பாறைப்பரப்பிலும் அவளை காணமுடியும்.
அன்னை இடையில் குழந்தையுடன் பெரிய கண்களும் வாயில் நிறைந்த கூரிய பற்களுமாக நின்றிருந்தாள். அவளைச்சூழ்ந்து வானில் பறவைகளும் தரையில் விலங்குகளும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றும் அவற்றின் விரைவு நிலையில் செதுக்கப்பட்டிருந்தமையால் விலங்குகளுக்கு கால்கள் இருக்கவில்லை. பறவைகளுக்கு சிறகுகள் மட்டுமே இருந்தன. அன்னை தன் வலக்கையை வான்நோக்கி நீட்டியிருந்தாள். அவள் எதையோ சொல்வதுபோல தோன்றியது. மீண்டும் ஒருமுறை விழிமூடினால் அவள் குரலை கேட்கமுடியும். அவள் அலறிக்கொண்டிருந்தாள்.
அன்னையின் இடையில் எருதுகொம்புகளுடன் பாதியுடலே அமைந்த ஒரு குழந்தை இருப்பதை மீண்டும் விழிதிறந்தால் காணலாம். அதன் உடல் இடைவரைதான் இருந்தது. பெரியவிழிகளுடன் வலக்கையை தன் வாயில் வைத்து இடக்கையால் அன்னையின் நீண்டு தொங்கிய முலையை பற்றிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வியப்பையும் அச்சத்தையும் நோக்கி சிலகணங்கள் நின்றிருந்தால் அது முன்னரே இறந்துவிட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். அதன் விழிகளில் இருக்கும் திகைப்பு தன் காலமிலா உலகிலிருந்து தன்னை நோக்குபவர்களை அது நோக்குவதனால்தான் என்று தெரியும். ஓவியத்தில் அதன் விழியில் மட்டுமே நேர்நோக்கு இருந்தது.
நூறாண்டுகள் மைந்தரில்லாமல் உளம்வருந்தியவள் அவ்வன்னை என்றன அவர்களின் கதைகள். வாழ்ந்திருக்கும் காலமெல்லாம் மகவொன்றுக்காக ஏங்கினாள். அறிந்த தெய்வங்களை எல்லாம் தொழுது நோன்பெடுத்தாள். முதுமகளாகி உடல் நைந்து உயிர்நீங்கும்பொருட்டு மண்ணில் ஒட்டிக்கிடந்தபோது இறுதிமூச்சை எஞ்சவைத்து பற்றிக்கொண்டாள். வ்யாதி, விஸ்மிருதி, நித்ரை என்னும் தோழியருடன் வந்த மிருத்யூதேவி அவள் அருகே அணைந்து புன்னகைத்தபோது முனகலுடன் கண்களை மூடிக்கொண்டாள்.
வ்யாதி மெல்ல அவள் நெற்றியை வருடி பொட்டுப்புள்ளியில் சுட்டுவிரலை வைத்தபோது கைகளால் அதை தள்ளிவிட்டாள். “என்ன செய்கிறாய்? நான் உனக்களித்த துயரையெல்லாம் மீளப்பெற்றுக்கொள்கிறேன். உன் உடலில் நிறைந்திருக்கும் அனைத்து வலிகளும் விலகும். உன் கட்டுகளனைத்தும் அவிழும். இன்று பிறந்த குழந்தையென தூய உடல்கொண்டவள் ஆவாய்” என்றாள் வ்யாதி. “விலகு. நான் வலியை விழைகிறேன். ஒருதுளியையும் விட்டுத்தரமாட்டேன்” என்றாள் ஜரை.
அவள் இமைகள் மேல் மெல்ல முத்தமிட்டாள் விஸ்மிருதி. அவள் இமைகளைத் திறந்து தலையை இருபக்கமும் அசைத்தாள். “அன்னையே கேள்! உன்னில் எடையுடன் அமைந்த நினைவுகள் ஒவ்வொன்றாக விலகச்செய்வேன். துயரங்கள் சிறுமைகள் ஏக்கங்கள் நினைவெச்சங்கள் அனைத்தும் அகலும். எண்ணச்சுழல் ஓயும். வண்ணத்துப்பூச்சியை நோக்கி சிரிக்கும் இளங்குழவியாக ஆவாய்” அன்னை வேண்டாம் என்று தலையை அசைத்துக்கொண்டே இருந்தாள்.
அவள் கூந்தலை வருடி, செவியில் இசையென ஒலித்தாள் நித்ரை. “உடல்முதிர்கையில் நீ இழந்தது இது. ஒவ்வொருநாளும் உன் அகத்தால் அழுத்தப்பட்டு சோர்ந்து மயங்கியதன்றி நீ தெளிதுயிலை அறிந்ததே இல்லை. இன்று உன்னை மெல்ல தூக்கி இளவெம்மை சூழ்ந்த மஞ்சமொன்றில் படுக்கவைப்பேன். இனிய நெஞ்சுத்தாளம் அங்கே ஒலிக்கும். கருவறையில் வாழ்ந்த காலத்துக்குப்பின் நீ அறியும் இனிய துயில் இதுவே. கொள்க!” என்றாள். அவள் உதடுகுவித்து “துயிலமாட்டேன்... ஒருகணமும் என்னை இழக்கமாட்டேன்” என்றாள்.
நூற்றெட்டுநாட்கள் அவளருகே நான்கு தேவியரும் காத்துநின்றனர். ஒவ்வொருவராக விலகிச்சென்றபின்னர் அவள் மட்டும் சருகுமெத்தையில் காட்டுப்புதருக்குள் தன்னந்தனியாகக் கிடந்தாள். அவள் உடலை சிதல்கள் அரிக்கத் தொடங்கின. கூந்தல் மண்ணில் படிந்து பூவேர் போல பரவியது. உடல்துளைத்து உட்புகுந்தன செடிகளின் வேர்கள். அவள் உடல்மேல் காளான்கள் குடைபூத்தெழுந்தன. ஒவ்வொரு கணுவிலும் வலிதுடிக்கையிலும் முழுதுள்ளமும் விழித்திருக்க அவள் அங்கே கிடந்தாள்.
அவள் கிடந்த புதர் அருகே ஓங்கிநின்றிருந்த அத்திமரத்தில் அருகே நின்ற எட்டிமரம் தழுவிச்சுற்றி வளர்ந்திருந்தது. எட்டிமரத்திற்குரிய அருசி என்னும் தேவதை அவளை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் மட்கி உப்பானதும் அவளை வேர்கொண்டு கவ்வி உறிஞ்சி உண்ண அவள் விழைந்தாள். ஜரையின் கொடுந்துயர் கண்டு மெல்ல அவள் உள்ளம் இரங்கியது. முந்நூறாவது நாள் அவள் தன் கூந்தலையே ஆடையாக்கி வெள்ளி நகங்கள் நீண்ட சாம்பல்நிற உடலுடன் மரத்திலிருந்து இறங்கிவந்து தன் குளிர்ந்த கைகளால் ஜரையை தொட்டாள். கண்விழித்த முதுமகளிடம் “சொல்க! நீ உயிர் பற்றி இங்கிருப்பது எதன்பொருட்டு?” என்றாள்.
“நான் அன்னையாக விழைந்தேன். என் கருவறை மூடிக்கொண்டிருக்கிறது. அன்னையென்றல்லாமல் இவ்வுலகவாழ்க்கையை முடிக்கமாட்டேன்” என்றாள் அன்னை. “முதுமகளே, அன்னைமை என்பது துயரே என நீ ஏன் இன்னும் அறியவில்லை? தெய்வங்கள் மட்டுமே துயரற்ற தாய்மையை அறியமுடியும்” என்றாள் அருசி. “அறிவேன். என்னைச்சூழ்ந்து கண்ணீர் உதிர்க்கும் அன்னையரையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுள்ளும் கண்ணீரே நிறைந்திருக்கிறது. ஒரு மைந்தனுக்காக அதை பொழிக்கவே நான் விழைகிறேன்” என்றாள் ஜரை.
“அறிக, ஊழ்நெறியை அறுத்து ஊடு புகுந்த எவரும் மகிழ்ந்ததில்லை” என்றாள் அருசி. “நான் கோருவது துயரை. நூறு மைந்தரைப்பெற்று நூறாண்டுகாலம் விழிநீர் வார்க்கும் வல்லமை கொண்டிருக்கிறது என் நெஞ்சு. என்னுள் நிறைந்த இம்முலைப்பாலையும் விழிநீரையும் ஒழிக்காமல் நான் விண்ணேற இயலாது” என்றாள் அன்னை. அருசி அவளை நோக்கி கருணை நிறைந்த குரலில் “இப்பிறவியில் நீ கொண்ட ஏக்கமனைத்தும் உன்னைத் தொடரும் முதியவளே. மீளப்பிறந்து நூறு மைந்தரைப் பெற்று விழிதுஞ்சாமலிருப்பாய்” என்றாள். “நான் இப்பிறவியிலேயே அதை விழைகிறேன். வேறெதற்கும் ஒப்பேன்” என்றாள் ஜரை.
பெருமூச்சுவிட்டு அவள் திரும்பி அத்திமரத்தில் வாழ்ந்த தன் துணைவனாகிய ரிஷபன் என்னும் தெய்வத்தை அழைத்தாள். திமில்பெருத்த கரியநிற காளையென ரிஷபன் வந்தான். அவன் தன்னருகே வந்ததுமே என்றோ மறந்த நறுநாற்றமொன்றை உணர்ந்து முகம் மலர்ந்தாள். “தேவா, எனக்கருள்க!” என்றாள். தன் குளிர்ந்த கரியமூக்கால் அவளைத் தொட்டு “நீ விழைவதே ஆகுக!” என்றான் ரிஷபன். அன்னை கைகூப்பி நிறைவுடன் உயிர்த்தாள்.
அவள் மேல் சரிந்திருந்த கனிமரக்கிளை காற்றில் குலுங்க சாறுநிறைந்த பழங்கள் அவள் முகத்தருகே உதிர்ந்தன. அவற்றை கவ்வி உண்டு உயிர்மீட்டாள். மெல்ல கையூன்றி எழுந்து அமர்ந்தாள். கூந்தல் மண்ணில் ஒட்டி பிரிந்து செல்ல மண்டையோடு போன்ற தலையும் எலும்புச்சிறைக்குள் துடிக்கும் நெஞ்சுமாக நடந்து தன் குடியினரை அடைந்தாள்.
இறந்தவள் மீண்டதைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடினர். மைந்தரை அணைத்தபடி அன்னையர் குகைகளுக்குள் பதுங்க கழிகளும் கூரெலும்புகளுமாக ஆண்கள் அவளை தாக்க வந்தனர். “மைந்தரை உண்ணும் கூளி. விலகிச்செல்!” என்று கூவினர். காட்டுவிளிம்பில் அவள் வெறுமை நிறைந்த நோக்குடன் நின்றாள். பின்னர் ஒருசொல் உரைக்காது திரும்பிச்சென்றாள். காட்டை வகுந்தோடிய ஆற்றின் கரையில் அவள் ஒரு சிறு மரப்பொந்தில் வசிப்பதை பின்னர் அவர்கள் கண்டனர்.
காட்டில் பொறுக்கிய கனிகளையும் நாணல்கொண்டு ஆற்றில் பிடித்த மீன்களையும் அவள் உண்டாள். பிறரில்லாத தனிமையில் அங்கே வாழ்ந்தாள். அவளுக்கு கடுங்கசப்பின் தெய்வம் துணையிருப்பதைக் கண்டதாக முதியோர் சொன்னார்கள். அவள் அமர்ந்திருக்கையில் நிழல் எழுந்து குடைபிடித்தது. அவள் நின்ற இடத்தில் நீர் கசந்தது. அவள் உண்டு மிச்சமிட்ட கனிகளை அணில்களும் குரங்குகளும் தொடவில்லை. அவள் வாழ்ந்த ஆற்றங்கரையிலிருந்து பறவைகள் விலகிச்சென்றன. பூச்சிகள் சிறகு பொழிந்து மறைந்தன. அங்கே காற்று கருங்கல்லென ஆனதுபோல் மூச்சடைக்கச்செய்யும் அமைதியே நிறைந்திருந்தது.
ஆனால் அவள் ஒவ்வொருநாளும் இளமைகொள்ளத் தொடங்கினாள். அவள் நகங்கள் உதிர்ந்து முளைத்தன. கரும்பாறையில் புல் எழுந்ததுபோல தலையில் முடி தோன்றியது. தோலில் உயிர்வந்தது. எலும்புகள் மேல் தசை மூடியது. ஆனால் அவள் விழிகள் அப்போதும் முன்னரே இறந்தவள் போலவே இருந்தன. அவள் கருவுற்றதை பிந்தித்தான் குலத்தார் அறிந்தனர். காட்டுஎருது ஒன்றின் குழவி அது என்றனர் குலநிமித்திகர். அவளிருக்கும் காட்டில் திமிலெழுந்த வெள்ளெருது ஒன்றை ஆற்றில் மீன்பிடிக்கச்சென்றவர்கள் கண்டனர். அவளுடன் இணைந்து அது வேர்ப்பற்று இறங்கிய சேற்றுக்கரைவிளிம்பில் குனிந்து நீர் அருந்தியது. “எருதின் மைந்தன்” என்றார் நிமித்திகர். “ஆனால் அவள் மைந்தனைப் பெறுவாளென்று வான்குறியும் மண்குறியும் சொல்லவில்லை.”
வைகாசிமாதம் அவள் மைந்தனை பெற்றெடுத்தாள். விரித்த கால்களின் நடுவே கருக்குழியின் வெந்நீர் ஊற்றுவழியாக வழிந்திறங்கி வந்தான் அவள் மைந்தன். மைந்தன் வருவதை நோக்கவேண்டும் என்று அவள் ஆற்றுவிளிம்பில் படுத்து நீர்ப்பாவையை நோக்கிக்கொண்டிருந்தாள். இரு குளம்புகள் வெளிவருவதைக் கண்டாள். திகைப்புடன் “மைந்தா!” என்று அவள் அழைத்தாள். குருதிநனைந்த உடலுடன் இரு கைகளையும் சுருட்டி நெஞ்சோடணைத்தபடி மைந்தன் நழுவி சலக்குழம்பலில் விழுந்தான். அவன் தலையில் இரு சிறு எருதுக்கொம்புகள் இருந்தன. அவள் திகைத்து “மைந்தா!” என்று மீண்டும் அழைத்தாள்.
அத்தருணம் தன்மேல் பதிந்திருக்கும் நோக்கை அவள் உணர்ந்தாள். அச்சத்துடன் திரும்பிநோக்க இரு விழிகளை சந்தித்தாள். குனிந்து தாமரைக்கொடியுடன் மைந்தனை அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டு எழும்போது குருதிநெடி அறிந்து தேடிவந்து காத்திருந்த சிம்மம் உறுமியபடி அவள் மேல் பாய்ந்தது. அருகே கிடந்த முள்மரத்தடியை எடுத்து அவள் அதை அடித்தாள். அவள் அலறலும் அதன் அமறலும் இணைந்து காட்டில் எதிரொலித்தன. சிம்மம் அவள் கையிலிருந்த குழந்தையின் கீழ்ப்பாதியை கடித்து துண்டாக்கி வாயில் எடுத்தபடி பாய்ந்து புதருக்குள் சென்று வால்சுழல தாவித்தாவி மறைந்தது.
தன் கையிலிருந்து துடித்த குழந்தையுடன் செய்வதறியாது அவள் அலறினாள். கால்களால் நிலத்தை உதைத்தும் கையால் மரங்களை அறைந்தும் கதறினாள். குழந்தையை தலைமேல் தூக்கி வானைநோக்கிக் காட்டி கூச்சலிட்டாள். அதை நீரில் கழுவினால் உயிர்கொண்டுவிடுமென எண்ணியவள் போல ஆற்றில் பாய்ந்தாள். கரையிலேறிவந்து கையில் சிக்கிய பச்சிலைகளை எல்லாம் பிடுங்கிக் கசக்கி அதன் மேல் ஊற்றினாள். விழித்த கண்களில் திகைப்புடன் அது தசைத்துண்டாக ஆகிவிட்டிருந்தது. அதை மறைத்துவைத்து பதைபதைத்துத் தேடி மீண்டும் கண்டடைந்தாள். அங்கும் அது பாதியுடலுடன் இருக்கக் கண்டு நெஞ்சில் அறைந்து அழுதாள்.
அவ்வூன்துண்டை இடையில் வைத்தபடி அவள் காடெங்கும் ஓடினாள். மலையுச்சிகளில் ஏறிநின்று முகில்களை நோக்கி கைசுருட்டி ஓங்கி வெறியோசை எழுப்பினாள். காடு கதறுவதைக் கேட்டு அவள் குடியினர் திகைத்தனர். கொடுஞ்சினத் தெய்வமொன்று கொடைதேடி எழுந்துவிட்டதுபோலும் என்று அஞ்சினர். தயங்கி காலெடுத்துவைத்து காட்டுக்குள் சென்று அவளைக் கண்டபோது வெறியெழுந்த வேட்டையணங்கே அவள் என்று மயங்கினர். “அன்னையே அடங்குக! உனக்குரிய கொடையும் பலியும் அளிக்கிறோம். தணிக உன் அனல்! அணைக உன் சினம்!” என்று மன்றாடினர். அவள் விழிகள் எவரையும் நோக்கவில்லை. அவள் கூவியழைத்தவர்கள் அனைவரும் அவளிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தனர். அங்கே வஞ்சம் மின்னும் விழிகளுடன் புன்னகையுடன் குனிந்து மானுடரை நோக்கிக்கொண்டிருந்தனர்.
அவள் கையிலிருந்த அக்குழவியுடல் அழுகியது. அதில் புழுக்கள் நெளிந்து அசைவுவந்தபோது பெருங்களிப்புடன் அவள் அதை முத்தமிட்டு நெஞ்சோடணைத்து ஆடலிட்டாள். மெல்ல அது தசையுதிர்ந்து வெள்ளெலும்பானபோதும் இடையிலேயே வைத்திருந்தாள். நாளடைவில் அவள் குரல் நாகடக்காமல் உள்ளேயே நின்றது. விழிநீர் மட்டும் வழிந்துகொண்டிருந்தது. துயிலிலும் அவள் கண்களிலிருந்து ஊற்று நிலைக்கவில்லை. தனித்திருந்து அவள் அழுகையில் காற்றுபட்ட சுனைபோல உடல் மெய்ப்புகொண்டு சிலிர்த்துக்கொண்டே இருந்தது.
அவள் இடையில் எலும்புகள் உதிர்ந்து அந்த சிறிய வெண்மண்டை ஓடும் முதுகெலும்புச்சரடும் மட்டும் எஞ்சியது. அவள் கண்ணீர்பெருக அதை மாறி மாறி முத்தமிட்டு கொஞ்சினாள். முலைகளுடன் அணைத்து பாலூட்டினாள். அதன் மண்டையை வருடி சொல்லில்லாது அரற்றி அழுதாள். அதை அணைத்தபடி படுத்து வண்டுமுரள்வதுபோல தாலாட்டு பாடினாள். கனியும் மீனும் கொண்டு உணவூட்டினாள். ஆற்றில் நீராட்டி மலர்பறித்துச் சூட்டினாள். இலை கொய்து ஆடையணிவித்தாள். அப்போதும் அவளுள் அமைந்த தெய்வமொன்று கலுழ்ந்துகொண்டே இருந்தது. கண்ணீர்த்துளிகள் வழிந்து மார்பிலும் வயிற்றிலும் சொட்டிக்கொண்டே இருந்தன.
முழுநிலவுநாட்களில் அவள் அமைதி கலைந்தது. வெறிகொண்டு காடெல்லாம் ஓடி மலையுச்சிமேல் ஏறிநின்று வெறியோசையிட்டாள். நெஞ்சில் அறைந்தறைந்து உடைக்க முயல்வதுபோல் சன்னதம் கொண்டாள். தளர்ந்து விழுந்து தன் அடியில் அக்கூடை வைத்துக்கொண்டு ஐயமும் அச்சமும்கொண்டு வானை நோக்கினாள். அங்கே எழுந்த அறியாத்தெய்வங்களை நோக்கி பல்காட்டி சீறினாள். மண்ணையும் கல்லையும் அள்ளி வீசினாள். பன்னிரு ஆண்டுகாலம் அன்னை அவ்வாறு ஒவ்வொரு நாளும் கணமும் கண்ணீர்வடித்தாள்.
பன்னிரண்டு ஆண்டுகாலம் அவள் முலைகளிலிருந்து வெண்குருதி வழிந்தபடியே இருந்தது. பின்பொருநாள் அவள் தன் சிறுகூட்டுப்பாவையை நெஞ்சோடணைத்தபடி அடர்காட்டைக் கடந்து மலைமேல் ஏறி இருண்ட குகைக்குள் சென்று மறைந்தாள். கல்மணிபொறுக்கிய குடியினர் அவள் செல்வதை கண்டனர். அவள் மீண்டுவருவாள் என நோக்கி அங்கே அமர்ந்திருந்தனர். இரவும் பகலும் அவளைக்காத்து அங்கே காவலிருந்தனர். பன்னிரு நாட்களுக்குப்பின் அங்கே ஒரு குடிலமைத்து காவலமர்த்தினர். அவள் கதைகளைப் பாடியபடி அங்கே காத்திருந்தனர்.
ஓராண்டு கடந்தும் அன்னை மீளாமை கண்டு அவள் உள்புகுந்த வைகாசிமாதம் முதல்விடியல் நேரத்தில் ஏழு மூத்தோர் கூடி குகைக்குள் சென்று நோக்கினர். முடிவில்லாது இருண்டு வளைந்திறங்கிச்சென்றது அக்குகை. முதல் வளைவில் குடிமூத்தார் ஒருவர் நின்றார். இரண்டாம் வளைவில் பிறிதொருவர் நின்றார். ஏழாம் குடிமூத்தார் மட்டும் இருளுக்குள் சென்று மறைந்தார். அவர்கள் கூப்பிய கைகளுடன் அங்கே காத்துநின்றனர்.
மூன்றாம் நாள் உள்ளிருந்து கண்களில் நீர்வழிய கைகூப்பியவராக ஏழாம் மூத்தார் திரும்பிவந்தார். “நான் அவளை கண்டேன். அங்கு அழியா இளமைகொண்ட அழகிய மைந்தனுடன் அவள் நின்றிருந்தாள். அவள் கண்களும் இதழ்களும் புன்னகையால் நிறைந்திருந்தன. அவள் முலைகளில் வெண்ணிற அமுது சுரந்து வழிந்தது. அவள் நோக்கு என்னை அறியவில்லை. நான் அவள் அடிதொட்டு வணங்கி மீண்டேன்” என்றார்.
அவர் அக்குகைவிட்டு வர ஒப்பவில்லை. அவரை அங்கேயே விட்டுவிட்டு எஞ்சியோர் மீண்டனர். அவர் கனியும் சிற்றூனும் உண்டு அங்கேயே இருந்தார். அவர் கையில் வெறியாடி எழுந்த அன்னை தன்னை அக்குகைச்சுவரில் வரைந்துகொண்டாள். வைகாசிமாதம் இடபநாளில் குகையமர்ந்த அன்னைக்கு உணவும் நீரும் மலர்களும் கொண்டு சென்று படையலிட்டனர் ஜரகுடியினர். அவள் முன் தங்கள் மைந்தரை படுக்கவைத்து வணங்கி அருள்வேட்டனர். அக்குகையிலோடிய ஓடையின் நீரை அவள் முலையமுதென்று அள்ளி அம்மைந்தருக்கு ஊட்டினர்.
மூதன்னை ஜரை கருவுற்ற பெண்களுக்குக் காவல் என்று எண்ணி வேண்டி அருள் பெற்றனர். முலையருந்தும் மைந்தரின் மென்தலைமயிரை காற்றென வந்து அவள் தழுவிச்செல்கிறாள் என்றும் அவர்களின் செம்மொட்டு இதழ்களை சுட்டுவிரலால் தொட்டு தலையெழச்செய்கிறாள் என்றும் அவர்களின் துயிலில் முலைப்பால் சொட்டி சப்புகொட்டச்செய்கிறாள் என்றும் அன்னையர் சொன்னார்கள். மைந்தர் இமைக்குள் அவளைக் கண்டே துயிலில் புன்னகைக்கின்றனர் என்றனர். மைந்தரற்ற மகளிர் அன்னை ஜரையை வணங்கி முலையூட்டும் அருள்பெற்றனர். அவளை அக்குலம் வரமாதா என்றழைத்தது.
[ 2 ]
விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்து அத்ரியெனும் பிரஜாபதியை படைத்தான். அவரிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன். புதனிலிருந்து புரூரவஸ். அவன் குலநிரை ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என நீண்டது. குருவின் மைந்தன் சுதன்வா. சியவனன் அவன் குருதியில் பிறந்தான். அவனிடமிருந்து கிருதியும் உபரிசிரவசுவும் பிறந்தனர்.
புரு வம்சத்து உபரிசிரவசுவின் மைந்தன் விருஹத்ரதன் தன் குலமூதாதைபெயர் கொண்டிருந்தமையால் அவனை குடிகளும் புலவரும் சார்வன் என்றும் ஊர்ஜன் என்றும் ஜது என்றும் அழைத்தனர். அவன் மைந்தன் பிருஹத்ரதன் குடிமூதாதை பிருஹத்ஷத்ரரின் முகம் கொண்டிருந்ததாகக் கூறினர் நிமித்திகர். எனவே அவனை சாம்ஃபவன் என்றழைத்தனர் புலவர்.
மூத்தோரின் போர்த்திறம் முழுதமைந்த பிருஹத்ரதன் பாரதவர்ஷத்தை வென்று செல்லும் கனவுகொண்டிருந்தான். மாறுதோற்றத்தில் பாரதவர்ஷத்தின் நகர்கள்தோறும் சென்று படைவலிவும் வழித்தெளிவும் அறிந்துவந்தான். பொன்சேர்க்கும் கருமியென ஒவ்வொரு ஊரிலிருந்தும் வீரர்களைச் சேர்த்து பெரும்படையை உருவாக்கினான். அவர்களுக்கு பீதர்நாட்டு எரிபடைகளையும் யவனநாட்டு பொறிபடைகளையும் தென்னாட்டு எறிபடைகளையும் ஒருக்கினான். அவன் வல்லமை கண்டு அணுக்கநாடுகள் அனைத்தும் அவனுக்கு அடிமை சொல்லின. அவர்கள் அளித்த திறைவந்து சேரச்சேர மகதம் மேலும் வல்லமை கொண்டது. பாரதவர்ஷத்தின் தலைநிகர்நாடு என்று அதை சூதர்கள் பாடத்தொடங்கினர்.
காசிமன்னன் பீமதேவன் வங்க மன்னன் நரகசேனன் மகளை மணந்து பெற்ற இரு மகள்களை பிருஹத்ரதன் மணந்தான். படைப்பெருமையும் நகர்ப்பெருமையும் கொண்ட மகதம் அதனூடாக குலப்பெருமையையும் பெற்றது. அணிகை, அன்னதை என்னும் அவ்விரு இளவரசிகளும் இரட்டையர். ஆடிப்பாவைபோல் அமைந்த அழகியர் இருவரை மணந்த பிருஹத்ரதன் மகதத்தை பாரதவர்ஷத்தின் கொடியென விண்ணிலேற்றும் மைந்தரைப் பெறுவான் என்று வாழ்த்தினர் மூத்தோர். ஆனால் நிமித்திகரோ “தெய்வங்களின் விருப்பம் ஏதென்றும் களம் அமைந்த சோழிகள் சொல்லவில்லை அரசே. அவை செவியும்சொல்லும் இழந்தவைபோல் எதையும் கேளாது அமர்ந்திருக்கின்றன” என்றார்கள்.
“தெய்வங்களுக்குரியதை அளிப்போம். நம் கருவூலம்தான் நிறைந்திருக்கிறதே. வேள்விகள் தொடங்கட்டும்” என்றான் பிருஹத்ரதன். மணநிகழ்வை ஒட்டியே புத்ரகாமேஷ்டி வேள்வி தொடங்கியது. நூற்றெட்டு நாட்கள் நடந்த அவ்வேள்வியின் இறுதியில் வேள்விக்களத்தில் தெய்வங்கள் எவையும் வந்தமரவில்லை. அதன்பின் ஒவ்வொரு நாளுமென அவர்கள் மைந்தருக்காக காத்திருந்தனர். அரசியர் சந்தானகோபால யக்ஞங்களை செய்தனர். நோன்புகள் கொண்டனர். ஆலயங்களில் அமர்ந்து பூசனை மேற்கொண்டனர். அரசனின் அவியை வாங்க விண்ணில் தெய்வங்கள் எழவேயில்லை.
அரசனையும் அரசியரையும் முதுமை வந்தணைந்தது. அரண்மனை மருத்துவர் சூத்ரகர் “மைந்தரைப்பெறும் அகவையை தாங்கள் கடந்துவிட்டீர்கள் அரசே. அரசியரும் அவ்வெல்லையை கடந்துவிட்டனர்” என்று அறிவித்தார். அன்றிரவு பிருஹத்ரதன் அரசியர் மாளிகையில் துணைவியருடன் இருக்கையில் துயர்தாளாது கண்ணீர்விட்டார். “வாழ்நாளெல்லாம் கடலோடி ஈட்டிய செல்வமனைத்தையும் கலமுடைந்து நீரில் விட்ட வணிகன் போலிருக்கிறேன். செல்வமென்பது இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்பின் நல்லூழையும் பெற்றுத்தரக்கூடியதென்று இளமையில் கற்றேன். என் கருவூலச்செல்வமனைத்தையும் வேள்வியறங்களுக்கு அளித்துவிட்டேன். வெறுங்கையுடன் விண்செல்லப்போகிறேன். புத் என்னும் இழியுலகுக்குச் சென்று இருளில் அமைவேன்” என்றார்.
அவரைத் தேற்றுவதெப்படி என்று அறியாமல் அரசியரும் விழிநீர் சொரிந்தனர். மூத்தவளான அணிகை “அரசே, உங்களுக்கு இவ்விழிவு சூழ நாங்களே வழிவகுத்தோம். இது எங்கள் குலம் மீது விழுந்த தீயூழ். எங்கள் தந்தை தன் முதலரசி புராவதியின் முதல்மகள் அம்பையை ஈவிரக்கமின்றி கையொழிந்தார். அவள் நெஞ்சுருகி விழுந்த பழி எங்களையும் தொடர்கிறது” என்றாள். “இனி நாங்கள் செய்யக்கூடுவதொன்றே. எரிவளர்த்து அதிலிறங்கி எங்கள் பழிதீர்க்கிறோம். புகழ்கொண்ட காசியின் கொடிச்சரடு எங்களுடன் அறுபடட்டும்” என்றாள் இளையவள் அன்னதை.
“எரியேறுவதனால் பழி அழிவதில்லை” என்றார் பிருஹத்ரதன். “நீங்கள் இங்கிருங்கள். நான் முடிதுறந்து காடுசெல்கிறேன். அரசன் என சேர்த்த பொருளனைத்தையும் கொண்டு அறம்செய்துவிட்டேன். அரசனென அமர்வதனால் சேரும் பழி ஒன்றே இனி எஞ்சுகிறது. காட்டில் ஓர் எளிய வேடனாக வாழ்கிறேன். மண்குடிலில் படுக்கிறேன். மழையிலும் வெயிலிலும் அலைகிறேன். இப்பிறவியில் எஞ்சும் வினையையும் அறுத்தபின் அங்கே உயிர்துறக்கிறேன். நான் நீத்த செய்தி வந்ததும் நீங்களும் நெருப்புசூழலாம்.”
மறுநாள் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு பிருஹத்ரதன் நகர்நீங்கினார். அவரை காட்டின் எல்லைக்குக் கொண்டுசென்று விட்டுவிட்டு திரும்பியது அரசமணித்தேர். கண்ணீருடன் நோக்கி நின்று மீண்ட ஏவலன் அரசர் கூடுதிறந்துவிடப்பட்ட வேங்கை என காடுநோக்கிச் சென்றார் என்று சொன்னான். அமைச்சரும் குடிமூத்தவரும் கண்கரைந்தனர். அரசியர் தங்கள் மாளிகைக்குள் பட்டாடை களைந்து மரவுரி அணிந்து, புல்லுணவு உண்டு, வெறுந்தரையில் துயின்று நோன்புகொண்டனர்.
ஏழுபெருங்காடுகள் வழியாகச் சென்று ஜரவனத்தை அடைந்தார் பிருஹத்ரதன். அங்கே தன் கையால் வெட்டிய மூங்கில்கொண்டு ஏறுமாடம் அமைத்து அதில் கனியும் மீனும் உண்டு முழுத்தனிமையில் வாழ்ந்தார். சொல்லப்படாததனால் மொழியை நாக்கு இழந்தது. நாவிழந்த மொழி சித்தத்தில் நெருக்கியடித்தது. பெருங்கூச்சலென்றாகியது அவர் அகம். பின் அந்திப்பறவைகள் என அவை ஒவ்வொன்றாக அமைய அவருள் அமைதி நிறைந்தது.
அவர் விழிகள் தெளிந்தன. உடலெங்கும் இனிய ஒழுங்கு கூடி அசைவுகள் விரைவழிந்தன. அங்குள மரங்களின் அசைவுகளிலிருந்து அவர் அசைவு மாறுபடவில்லை. அங்கே வந்த மானும் முயலும் கூட அவரைக் கண்டு அஞ்சவில்லை. அவர் கங்கையில் இறங்கியபோது நீர் நலுங்கவில்லை. எண்ணமற்றிருப்பவனை மானுடர் காண்பதில்லை, தெய்வங்கள் அறிகின்றன. அவரைக் கடந்து சென்ற ஜரர் அங்கொருவர் வாழ்வதையே அறியவில்லை. தன் குடிலைச்சூழ்ந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் கந்தர்வர்களும் யட்சர்களுமென்று அவரும் அறிந்திருக்கவில்லை.
ஒருநாள் நள்ளிரவில் அவரை வண்டுகள் தங்கள் இசையால் எழுப்பின. அவர் சருகுப்படுக்கையில் எழுந்தமர்ந்தபோது ஒளிரும் சிறகுகளுடன் மின்மினிகள் அவரைச் சூழ்ந்து பறந்தன. அவை தன்னிடம் பேசவிழைவதை அவர் புரிந்துகொண்டார். அவர் எழுந்து நின்றபோது அவை அவருக்கு வழிகாட்டியபடி பறந்தன. அவர் காட்டுக்குள் இருளில் ஊடுருவிச்சென்றார். தொலைவில் எழுந்த மலைக்குமேல் பந்தங்களின் ஒளியை கண்டார். அங்கே முழவுகளின் ஒலியும் மானுடக்குரல்கள் கரைந்த முழக்கமும் கேட்டுக்கொண்டிருந்தது. அத்திசைநோக்கிச் சென்று மலையேறி ஜரையின் குகைவாயிலை அடைந்தார்.
குகைச்சுவரில் ஓவியமென எழுந்த அன்னை ஜரை அக்காட்டைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு ஊர்களின் மக்களால் வரமாதா என்று வழிபடப்பட்டாள். வைகாசிமாதம் இடபநாளில் அவளுக்கு உப்பில்லாது சுட்ட அப்பமும் இன்கள்ளும் மலர்களும் கொண்டுவந்து படைத்து வணங்கினர். அவர்களில் முதியோரும் மூதன்னையரும் மைந்தரும் மிகுந்திருப்பதை பிருஹத்ரதன் கண்டார். மைந்தரை மண்ணில் நிரையென படுக்கச்செய்து அவர்களுக்குமேல் மலரும் நீரும் தெளித்து அன்னைக்கு படையலாக்கினர். வேலேந்தி வெறியாட்டுகொண்ட பூசகன் அவர்கள்மேல் கால்பறக்க பாய்ந்து மும்முறை கடந்தான். வேல்நுனியால் அவர்களின் தலைகளைத் தொட்டு “முழுவாழ்வு அமைக! அன்னை வாழ்த்துகிறேன்! நலம் சிறக்க!” என்றான்.
குகைவிளிம்பில் இருளில் கைகட்டி நின்றிருந்த பிருஹத்ரதனை நோக்கி பூசகனின் வெறிவிழிகள் திரும்பின. “மைந்தனுக்காக ஏங்கி நின்றிருக்கிறாய்! வருக! பாரதவர்ஷம் என்றும் பாடும் பெருவீரனை மைந்தனாகப் பெறுவாய்! அவன் தந்தையென்றே அறியப்படுவாய்! நலம்சூழ்க!” என்று நற்குறியுரைத்து நீர்மலர் அள்ளி அவர் தலைமேல் வீசியபின் மல்லாந்து மண்ணில் விழுந்தான். மெய்விதிர்த்த பிருஹத்ரதன் கூப்பியகைகளுடன் கண்ணீர் வழிய நின்றார்.
அங்கிருந்த முதியோர் பிருஹத்ரதனை நோக்கித் திரும்பி “அன்னை அருட்சொல் பிழைத்ததில்லை. அவள் முதியோருக்கு மைந்தரை அருளும் தேவி. எனவே வரமாதா என்று வணங்கப்படுகிறாள். இவ்வூர்களில் எங்கும் அவள் உருவத்தையே வைத்து வழிபடுகிறோம். நல்லூழ் கொண்டீர்” என்றார்கள். கைகூப்பி தலைவணங்கி “நன்று நிகழட்டும்” என்றார் பிருஹத்ரதன்.
பிருஹத்ரதன் வரமாதாவின் உருவம் மீது களிமண்ணைப் பரப்பி ஒற்றி எடுக்கப்பட்ட புடைப்போவியத்தை கொண்டுசென்று தன் அரண்மனையில் அமைந்த ஆலயத்தில் அமைத்தார். ஒவ்வொரு நாளும் தன் துணைவியருடன் சென்று அன்னையை வழிபட்டார். ஆலயச்சுவரில் எவரையும் நோக்காத துயர்விழிகளுடன் அன்னை நின்றாள். கைகூப்பி வணங்குபவரை நோக்கி திகைத்து அமைந்திருந்தான் அவள் இடையமைந்த மைந்தன்.
[ 3 ]
பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார்.
தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து மெய்மையை அடைந்தார். அம்மெய்மையை பிறருக்களித்து ஆசிரியரென கனிந்தார். கௌசிக குலத்து குமுதையை மணந்து ஏழு மைந்தருக்கு தந்தையானார். ஆயிரம் மாணவர்களுக்கு முப்பதாண்டுகாலம் சொல்லளித்துக் கனிந்து முழுமையை சென்றடைந்தார். மிருத்யூதேவி அவர் கால்களை தன் குளிர்ந்த கைகளால் மெல்ல தொட்டாள். “விடாய்! விடாய்!” என்று அவர் நாதுழாவினார். மிருத்யூவின் குளிர்கைகள் அவர் உடலைத் தழுவி மேலேறி வந்தன. தலையருகே ஒளிரும் பொற்கலத்துடன் நின்றிருந்த தேவியை காக்ஷீவான் கண்டார். “அன்னையே, நீ யார்?” என்றார்.
“என் பெயர் அமிர்தை. இம்மெய்மை நீங்கள் ஈட்டியது” என்றாள் அமிர்தை. “அதை எனக்களிக்க என்ன தயக்கம்? இதோ என்னை இறப்பரசி தழுவிக்கொண்டிருக்கிறாள்” என்றார் காக்ஷீவான். “இதன் வாய் மூடப்பட்டிருக்கிறது. இதில் ஒருதுளியும் சொட்டவில்லை. நான் என்ன செய்வேன்?” என்றாள் அமிர்தை. “அன்னையே! அன்னையே!” என காக்ஷீவான் தவித்தார். “அதில் ஒருதுளியேனும் எனக்களிக்கலாகாதா? கற்றும் கற்பித்தும் நான் வாழ்ந்த பெருவாழ்வை அணையா விடாய்கொண்டுதான் நீத்துச்செல்லவேண்டுமா?”
“இதை மெல்லிய படலம் ஒன்று மூடியிருக்கிறது. அதை கிழிக்க என்னால் இயலவில்லை” என்றாள் அமிர்தை. அதற்குள் அவர் நெஞ்சை அடைந்து மூச்சை குளிரச்செய்தாள் மிருத்யூ. நாவை செயலிழக்கச்செய்தாள். கண்முன் வெண்ணிறத்திரையானாள். நெற்றிப்பொட்டில் எஞ்சும் துளி ஒளியானாள். ஒளித்துளியாக மாறி உச்சிவாயில் திறந்து மேலெழுந்த காக்ஷீவான் ஒரு வெள்ளெருதாக மாறி விண்ணில் ஏறினார். கீழே தன் முதிய உடல் குளிர்ந்து கிடப்பதை காக்ஷீவான் கண்டார். அவரைச்சூழ்ந்து துணைவி குமுதையும் மைந்தர்களும் துயருற்றமர்ந்து கண்ணீர் சிந்தினர்.
துயர்நிறைந்த உள்ளத்துடன் முகில்களில் ஏறி மூச்சுலகை அடைந்த காக்ஷீவான் அங்கே ஈரப்பஞ்சு போல எடைகொண்டவராக இருந்தார். எவரிடமும் சொல்லெடுக்காது தனித்திருந்தார். ஒவ்வொரு கணமும் தான் அன்றாடம் தவம்செய்த நால்வேதங்களையே எண்ணிக்கொண்டிருந்தார். ஒருநாள் நால்வேதங்களும் தேவியர் வடிவில் அவர் முன் தோன்றினர். ரிக் தேவி வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். யஜூர் தேவி பச்சைநிறத்தில் ஆடைபுனைந்திருந்தாள். சாமதேவி இளஞ்சிவப்பு நிறம் கொண்டிருந்தாள். நீலநிறம் கொண்டிருந்தாள் அதர்வதேவி.
“அன்னையரே, உங்களில் எவருக்கு நான் பிழைசெய்தேன்?” என்றார் காக்ஷீவான். மூன்று முதல்தேவியரும் கனிந்து புன்னகைத்து “உன் முழுப்படையலால் உளம்நிறைந்தோம். மைந்தா, உனக்கு எங்கள் அமுதை அளிக்கவும் செய்தோம்” என்றார்கள். அதர்வதேவி முகம் திருப்பி நின்றாள். “அன்னையே, நான் செய்த பிழை என்ன?” என்றார் காக்ஷீவான். “முதல்மூவருக்கும் இணையானவளல்ல என என்னை உன் உள்ளத்தின் ஆழத்தில் நீ எண்ணினாய். நான் என் அருளை உனக்களிக்கவில்லை” என்றாள் அதர்வதேவி.
அது உண்மை என்றுணர்ந்து சொல்லின்றி காக்ஷீவான் கைகூப்பினார். “நான் இருளின் வேதம். தீமையின் ஒலிவடிவம். ஆழங்களின் மொழி” என்றாள் அதர்வதேவி. முதல்மூவரை ஒளியால் நன்மையால் உயர்வுகளால் ஆக்கிய தெய்வங்கள் அவர்களுக்கு நிகர் எடைகொண்டவளாக என் ஒருத்தியையே ஆக்கின. அதை உணராதவர் வேதமெய்மையை அறியாதவர்.” காக்ஷீவான் கண்ணீருடன் “ஆம், இப்போதறிகிறேன் அதை. என்னை முற்றிலும் ஓளிநோக்கி திருப்பிக்கொண்டேன். நன்மையை மட்டுமே நாடினேன். உயர்வையே உன்னினேன்” என்றார்.
“சிறியோனே, ஊசல் ஒருதிசை மட்டும் செல்லவியலாதென்று நீ அறிந்திருக்கவில்லை. நீ சென்ற பயணங்களுக்கெல்லாம் நிகர்விசையை அறியா ஆழத்தில் அடைந்தாய். அங்கே உன் விழியேதும் செல்லவியலா அடித்தளத்தில் குவிந்துள்ளன நீ தவிர்த்தவை அனைத்தும். அவையே படலமென மாறி உன் அமுதகலத்தை மூடின” என்றாள் அதர்வதேவி. “அன்னையே, நான் இனி செய்யவேண்டியவை யாவை?” என்றார் காக்ஷீவான்.
“தந்தையர் வெல்லாது கடந்தவை மைந்தரில் கூடுக என்பது ஊழ்நெறி. உன் மைந்தனுக்கு அவற்றை அளி. அவன் அவற்றை என் சொல்துணையால் வெல்லட்டும். அவனால் நீ முழுமையடைவாய். அவனோ அவன் மைந்தரால் விடுதலைபெறுவான்” என்றாள் அதர்வை. “அவ்வண்ணமே” என்று கைகூப்பி கண்மூடி தன் ஆழத்தை உதிர்த்தார் காக்ஷீவான். அது கரியமுகிலென மண்ணிலிறங்கியது. இரவின் இருளுக்குள் குளிர்ந்த புகை என ஓசையின்றி நடந்தது. தன் தவக்குடிலில் துயின்றுகொண்டிருந்த அவர் மைந்தன் கௌசிகனை தழுவியது.
குடிலின் தனிமையில் அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. அவனுள் நுழைந்து கனவுகளாக பெருகியது அவ்விருள். விழைவும் வஞ்சமும் அச்சமும் ஆணவமும் கொண்டு அங்கே நூறாயிரம் ஓவியங்களாக மாறியது. அங்கே அவன் புணர்ந்தும் கொன்றும் ஒளிந்தும் பல்லுருக்கொண்டு வாழ்ந்தான். அடைந்த மூன்றுவேதங்களையும் பயின்ற வேதமுடிபையும் மறந்து காலையில் பிறிதொருவனாக எழுந்தான்.
அவன் விழிகள் மாறியிருப்பதைக் கண்டதுமே அன்னை அறிந்தாள். “மைந்தா, இனி உனக்கு இக்குருநிலையம் இடமல்ல. உனக்கான நச்சுமுள்காட்டை தேடிச்செல்க!” என்று அவள் ஆணையிட்டாள். கௌசிகன் அன்னையை மட்டும் வணங்கி ஆசிரியரிடம் ஒரு சொல்லும் உரைக்காமல், தோழர் விழிநோக்காமல் குருநிலையம் விட்டு அகன்றான். ஏழுகாடுகளைக் கடந்து தீர்க்காரண்யம் என்னும் அடர்காட்டை அடைந்தான். அங்கே பன்னிரு ஆண்டுகாலம் தவம்செய்து அதர்வ வேதத்தின் ஒவ்வொரு சொல்லிலும் உறைந்த தேவதைகளை தொட்டெழுப்பினான்.
அவனால் அக்காடு தமஸாரண்யம் என்று பெயர் பெற்றது. அதர்வத்திலிருந்து எழுந்த ஆழுலக தெய்வங்கள் ஒளிவிடும் சிறகுகளும் நச்சுக்கொடுக்குகளும் சுழலும் சினவிழிகளும் கொண்ட பூச்சிகளாக அங்கே சுழன்று பறந்தன. பிறிதெங்கும் இல்லாத விலங்குகள் அங்கிருப்பதை மானுடர் கண்டனர். ஏழுகால்கள் கொண்ட வேங்கை இரண்டுதலைகள் கொண்ட மான்களை வேட்டையாடி உண்டது. முன்னும்பின்னும் துதிக்கைகள் கொண்ட வேழங்கள். சிறகுகள் கொண்ட எருமைகள். கால்களில் எழுந்த பாம்புகள். கொம்புகள் கொண்ட முதலைகள்.
இருண்ட பசுங்காட்டின் ஆழங்களுக்குள் அவற்றின் முழங்கும் குரல்களும் மின்னும் விழிகளும் நிறைந்திருந்தன. அக்காட்டின் ஒவ்வொரு இலைநுனியும் நச்சு சொட்டியது. ஒவ்வொரு முள்முனையும் நாகப்பல் என்றாகியது. சொல்லெல்லாம் நச்சுத்துளியான காற்று அங்கே நிறைந்தது. அதில் இரவும்பகலுமென்றிலாது அதர்வவேதம் ஒலித்துக்கொண்டிருந்தது.
அதர்வவேதம் பயில மாணவர்கள் கௌசிகரைத் தேடி வந்தபடியே இருந்தனர். அவர் சண்டகௌசிகர் என்று பாரதமெங்கும் புகழ்பெற்றார். அக்காட்டின் நடுவே ஒரு கையில் அமுதமும் மறு கையில் கொலைவாளும் அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கும் அதர்வையின் சிலை அமைந்த கோயில் எழுந்தது. அங்கே நாளும் பூதவேள்விகள் நிகழ்ந்தன. அவியுண்டு எழுந்தனர் கீழுலக தேவர்கள். பேருடல் கொண்ட பாதாள நாகங்கள்.
[ 4 ]
மகதத்தின் அரண்மனைச் சுவரிலிருந்தது களிமண்பலகையில் அமைந்த ஜரையின் புடைப்புக்கோட்டோவியம். நோக்க நோக்க தெளியும் அதன் வடிவம் பிருஹத்ரதனுக்கும் அவர் இருமனைவியருக்கும் அணுக்கமான எவரைவிடவும் ஆழ்ந்துசெல்வதாக ஆயிற்று. அணிகையும் அன்னதையும் பகலெல்லாம் அதன் முன்னால் அமர்ந்திருந்தனர். அணிகை அன்னை ஜரையின் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தாள். அன்னதை அவள் கைமகவின் கண்களில் கருத்தூன்றினாள்.
இருவரும் ஒருவரோடொருவர்கூட சொல்லாடுவது இல்லாதாயிற்று. ஏவலர் விழிக்குறியிலேயே என்னவென்று உணர்ந்து முகக்குறியாலேயே ஆணைகளை இட்டனர். அதன் முன் அமர்ந்து நூலாய்ந்தனர். இசை கேட்டனர். பின் அவையும் நின்றுபோய் வெறுமனே தாங்களும் ஓவியங்களே என அமர்ந்திருந்தனர். நாளும் மெலிந்து அவர்களின் உடல் நிறமிழந்தது. விழிகள் ஒளிமங்கி வரையப்பட்டவை என்றாயின. மூச்சோடுவதே உடலில் தெரியாமலாயிற்று. ஓவியப்பாவைகளாக மாறி அவ்வோவியம் அமைந்த உலகுக்குள் நுழைய அவர்கள் முயல்வதாக சேடியர் சொல்லிக்கொண்டனர்.
ஒருநாள் இரவில் அந்த ஓவியம் இருவரிடமும் உரையாடியது. அணிகையிடம் அன்னை ஜரை உதடசைத்து ஓசையில்லாது ஒரு சொல் சொன்னாள். அன்னதையிடம் அம்மகவும் இதழ்கோட்டி பிறிதொரு சொல்லை சொன்னது. இருவரும் பின்னிரவில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டனர். விடாய் தவிக்கும் நெஞ்சை அழுத்தியபடி இருளில் அமர்ந்து நடுங்கினர். பின்னர் கூவியபடி எழுந்து அரசரின் மஞ்சத்தறை நோக்கி ஓடினர். அவர் நெஞ்சின் இருபக்கமும் விழுந்து தோள்சுற்றி அணைத்துக்கொண்டு கண்களை மூடி அழுதனர்.
அச்சொற்களென்ன என்று அறிய நிமித்திகரை அழைத்து அவைகூட்டி ஆணையிட்டார் அரசர். சொற்குறிநோக்குபவர்களும் முகக்குறி தேர்பவர்களும் பிறவிநூல் ஆய்பவர்களும் இரு அரசியரையும் கண்டு நுண்ணிதின் ஆய்ந்தனர். அவர்களை ஆழ்துயிலில் படுக்கச்செய்து அச்சொற்களை அவர்களின் உதடுகளில் எழச்செய்தனர். அது ஜரர்களின் மொழியிலமைந்த சொல் அல்ல என்று அறிந்தனர்.
பதினெட்டு நிமித்திகர் ஒரு மாதம் அமர்ந்து ஏழு முறை உசாவி நோக்கியும் அச்சொற்களெவை என்று அறியக்கூடவில்லை. பாரதவர்ஷத்தின் அத்தனை மக்கள் மொழிகளிலும் அச்சொற்களுக்கு பொருள் தேடினர். ஆசுரமொழிகளிலும் ராக்ஷச பைசாசிக மொழிகளிலும் கூட தேடிநோக்கினர். இறுதியில் அது பொருளிலாச் சொல் என்று அறிவித்தனர்.
“தெய்வங்கள் வீண்சொல் உரைப்பதில்லை. அவை நாமறியா சொற்கள்” என்றார் அமைச்சர் பத்மர். சோர்ந்திருந்த பிருஹத்ரதன் “ஆம், நானும் அவ்வாறே உணர்கிறேன். ஆனால் எங்ஙனம் அதை நாம் அறியமுடியும்? அத்தெய்வமே மீண்டு வந்து உரைப்பது வரை காத்திருப்போம்” என்றார்.
“அரசே, மைந்தனுடன் சென்ற அன்னை ஜரை அக்குகையின் இருள்பாதை வழியாக பாதாள உலகங்களுக்குச் சென்றாள் என்று அறிவோம். இச்சொல் அங்கிருந்து அவளால் உரைக்கப்பட்டது. ஆழுலக தெய்வங்கள் எழும் களமொன்றை அறிந்தவரே இச்சொல்லுக்கு பொருள் காணமுடியும்” என்றார் பத்மர். “வடக்கே தமஸாரண்யம் என்னும் காட்டில் சண்டகௌசிகர் என்னும் வைதிகர் குருநிலை அமைத்துள்ளார் என்று நூல்கள் சொல்கின்றன. அந்நச்சுக்காட்டில் அதர்வவேதம் தழைக்கிறது. அங்கே அடியுலகங்களின் அத்தனை தெய்வங்களும் வந்து அவியுண்டு செல்கின்றன. அவர்களே இச்சொற்களுக்கு பொருள் சொல்ல முடியும்.”
பத்மரும் அரசரும் இருதேவியரும் தமஸாரண்யத்தை சென்றடைந்தனர். “இக்காட்டுக்குள் செல்ல நமக்கு ஒப்புகை இல்லை. இதன் எல்லையென்றோடும் சுருதவாகினி என்னும் இச்சிற்றோடையின் கரையில் நாம் தவமிருப்போம். சண்டகௌசிகர் உளம் கனிந்தால் நம்மை அழைக்கக்கூடும்” என்றார் பத்மர். காட்டின் ஓரத்தில் ஒரு குடிலமைத்து அவர்கள் தங்கினர். நோன்பிருந்து காத்திருந்தனர். பன்னிரண்டுநாட்களுக்குப்பின் காட்டிலிருந்து ஒருவன் வெளியே வந்தான். அவன் உள்ளங்கைகளிலும் முகம் முழுக்கவும் கரிய மயிர் பரவியிருந்தது. கரடிக்குரலில் “உங்களை என் ஆசிரியர் அழைத்துவரச்சொன்னார்” என்றான்.
அவனுடன் அவர்கள் காட்டுக்குள் சென்றனர். “நான் செல்லும் வழியில் மட்டுமே வருக! இருபக்கமும் விழிசெலுத்தாதீர்” என்றான் அவன். விந்தை விலங்குகளையும் நச்சுச்செடிகளையும் சுற்றும் பூச்சிகளையும் புட்களையும் கடந்து அவர்கள் சண்டகௌசிகரின் தவக்குடிலை அடைந்தனர். ஒவ்வொன்றும் கனவெனத் தோன்றின. “இதை நான் முன்னரே கனவில் கண்டுள்ளேன்” என்றாள் அணிகை. “ஆம், நானும் கண்டுள்ளேன்” என்றாள் அன்னதை. “ஒவ்வொருவரும் அறிந்தவையே இவை” என்றான் அவன்.
தொலைவிலேயே அதர்வம் முழங்கக்கேட்டனர். எதிரொலி நிரைவகுத்த இடியொலி என, சினந்த வேழப்பிளிறல் என, பிளவுண்டு சரியும் மரம் என, உருளும் மலைப்பாறை என, குருதியுண்ட சிம்மம் என, புண்பட்டு சாகும் களிற்றெருது என, மரங்களில் அறைபடும் காட்டுக்கொடி என அது ஒலித்தது. அணுகும்தோறும் அதன் ஒலி குறைந்து வந்தது. கூகையெனக் குழறியது. பின் கருங்குருவி என குறுகியது. எரிகுளத்தை அவர்கள் நோக்கியபோது வண்டென மிழற்றியது. அருகணைந்தபோது அங்கே பதினெட்டு ஹோதாக்கள் சூழ்ந்தமர்ந்து எரிகுளத்தில் அவியிட்டு வேள்விநிகழ்த்தக் கண்டனர். அவர்களின் உதடுகள் ஓசையின்றி அசைந்து அதர்வத்தை ஓதிக்கொண்டிருந்தன.
சண்டகௌசிகரின் கால்களை நால்வரும் பணிந்தனர். “உங்கள் வரவுகுறித்து அறிவேன்” என்றார் அவர். “இன்றைய வேள்வியின் எரியெழலில் உங்களிடம் உரையாடியவளை எழுப்புகிறேன். அவள் சொல்வதென்ன என்று உசாவுகிறேன்” என்றார். அன்று அவருடன் அவர்கள் தங்கினர். இரவெழுந்ததும் தொடங்கிய விபூதயாகத்தில் தர்ப்பைப்பாய் மேல் கைகட்டி அமர்ந்தபோது நால்வரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். அணிகை “நான் அஞ்சுகிறேன்” என்றாள். அன்னதை “சென்றுவிடுவோம்” என்றாள். பிருஹத்ரதன் “இதுவரை வந்தோம். இனி மீள்வதில்லை” என்றார்.
நெருப்பில் எழுந்தவளை மூவரும் அக்கணமே கண்டுகொண்டனர். இடையில் ஒளிரும் உடலமைந்த மைந்தனுடன் எழுந்த ஜரை குருத்திளமை கொண்டிருந்தாள். அவள் இடையிலிருந்த மைந்தன் புன்னகைக்க அவள் இதழில் தாய்மையின் கனிவு நிறைந்திருந்தது. “அன்னையே, உன் ஆழுலகில் மகிழ்ந்திருக்கிறாயா?” என்றார் சண்டகௌசிகர். “ஆம், இங்கு அனைவரும் மகிழ்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் இங்கிருக்கையில் மட்டும் மகிழ்பவர்களே இங்கு வருகிறார்கள்” என்றாள் ஜரை.
சண்டகௌசிகர் “இவர்கள் உன்னை வணங்கும் அடியார். இவர்களிடம் நீ எழுந்து சொன்னதென்ன?” என்றார். “இவர் இருவர் துயர்கண்டு இரங்கினேன். அருள்செய்ய எண்ணினேன்” என்றாள் ஜரை. “நீ சொன்னதென்ன என்று அறிய விழைகிறேன்” என்று சண்டகௌசிகர் கேட்டார். அவளும் அவள் மைந்தனும் இணைந்த குரலில் “மாவீரன் எழுக!” என்றனர். அப்போதுதான் அவ்விருவர் குரல்களையும் இரண்டாகக் கேட்டதே பொருளின்மையை உருவாக்கியது என்பதை அரசனும் அமைச்சரும் உணர்ந்தனர்.
“அன்னையே, உன் அருள் எழுக!” என்றார் சண்டகௌசிகர். “இங்குள்ளவை அனைத்தும் அணுவடிவம் கொண்டவை. அவ்வுலகோ இந்நுண்மைகளின் நூறாம்நிழல்” என்று அவள் சொன்னாள். சண்டகௌசிகர் “அந்த மாமரத்தில் உன்னை ஒருகணம் நிறுத்துகிறேன். அன்னையே, அங்கு உன் சொல் கைதொடும் பொருளென கனிக!” என்றார். அதர்வவேதச் சொல்லெடுத்து முழங்கி, அப்பமும் மதுவும் மலருடன் சேர்த்து அவியிட்டு இருகைவிரல் கூட்டி அவர் இருள்முத்திரை காட்டினார். அருகே நின்றிருந்த மாமரம் காற்றெழுந்து குலுங்கி உலைந்தது. அதிலிருந்து ஒரு கனி உதிர்ந்து அவர் மடியில் விழுந்தது.
சண்டகௌசிகர் அதை எடுத்து அரசரிடம் அளித்தார். “இதை உண்க! இப்புவியின் எடையனைத்தையும் தாங்கும் ஆழங்களின் வல்லமை கொண்ட மைந்தன் அமைவான். நன்றுசூழ்க!” என்றார். கைகூப்பி அதை வாங்கி தன் தலைமேல் சூடி அவரை வணங்கினார் பிருஹத்ரதன். முனிவருக்கு அவர் விழைந்த காணிக்கை அளித்து ஏழுமுறை மண்டியிட்டு வணங்கி அவர் கால்புழுதியை சென்னிசூடினார். “இன்று நான் மீண்டேன். இன்று என் தந்தையருக்கு மைந்தரானேன்” என்றார்.
“செல்க!” என்றார் சண்டகௌசிகர். “இவ்விரவுக்குள் தமஸாரண்யத்தின் எல்லையென்றமைந்த சுருதவாகினியை நீங்கள் கடந்தாகவேண்டும். முதற்கதிர் எழுந்தபின் இங்கிருந்தீர்கள் என்றால் நிறைவடையா ஆத்மாக்களாக இக்காட்டில் ஆயிரமாண்டுகாலம் அலைந்து திரியநேரும்.” பிருஹத்ரதன் “இதோ கிளம்புகிறோம்” என்றார். “இங்குள்ள ஒவ்வொன்றும் அவ்வாறு சிக்கிக்கொண்ட ஆன்மாக்களே. அவை உங்களையும் இங்கு நிறுத்தவே முயலும். ஒரு குரலுக்கும் செவிகொடுக்காதீர். எவ்வுருவுக்கும் விழியளிக்காதீர்” என்றார் சண்டகௌசிகர்.
அங்கிருந்து தன் துணைவியரையும் பத்மரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கனியுடன் பிருஹத்ரதன் ராஜகிருஹம் மீண்டார். செல்லும் வழியெல்லாம் அவர் உவகைதாளாது அழுதுகொண்டிருந்தார். “எந்தையரே! எந்தையரே!” என்று விண்நோக்கி விம்மினார். “இதோ, என் கடன் கழித்தேன். இதோ, என் வாழ்க்கையை நிறைவுசெய்தேன்” என்று கூவினார். அவர் கால்களை வேர்களென எழுந்து வளைத்து தடுமாறச்செய்தன நாகங்கள். அவர் கைகளில் கொடிகள் சுற்றி இழுத்தன. அவருக்குக் குறுக்காக சிறகடித்துச் சென்றன இருண்ட பறவைகள். அவர் உளச்சொற்களுடன் ஒலியிணைந்து திரிபுசெய்தன சிறுபூச்சிகள். ஆனால் அவர் அக்கனியை அன்றி எதையும் எண்ணவில்லை. அவர் கண்ணீர் காணத்தேவையற்ற அனைத்தையும் மறைத்தது.
ஆனால் அவரைத்தொடர்ந்து வந்த இரு துணைவியரும் தனிமையில் நடந்தனர். ஒவ்வொரு ஒலிக்கும் அவர்கள் திடுக்கிட்டு நின்று செவிபொத்தினர். ஒவ்வொரு தொடுகைக்கும் கால் விதிர்த்து மூச்செறிந்தனர். அணிகையின் செவியை அணுகிய கருவண்டு ஒன்று “அன்னதை அல்லவா நீ? மைந்தனைப்பெற்று விண்ணகம் செல்லும் பேறு பெற்றாய். வாழ்க!” என்றது. அவள் திடுக்கிட்டு திரும்பி நோக்க ரீங்கரித்து பறந்தகன்றது.
அன்னதையின் செவியருகே சென்று “அணிகை, நீ வென்றாய். மைந்தரைப் பெறாது அவள் ஒரு மலைப்பாறையாக ஏழு ஊழிக்காலம் பாழ்நிற்கப்போகிறாள்” என்றது. அவள் திகைத்து நெஞ்சைப்பற்றியபடி நின்றாள். மெல்லிய தடமாகத் தெரிந்த பாதை இருவருக்கும் இருதிசைகளிலாக பிரிந்தது. இருவரும் இருபக்கமாகப் பிரிந்து காலடியெடுக்கக் கண்டு பின்னால் வந்துகொண்டிருந்த அமைச்சர் பத்மர் உரத்தகுரலில் “அரசியரே, இருவரும் வழிதவறிவிட்டீர்கள்” என்றார். பிருஹத்ரதன் திடுக்கிட்டு விழித்து “என்ன?” என்றார். “அரசியர் பாதைபிரிந்துவிட்டனர் அரசே” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் திரும்பி நோக்கி “என்ன நிகழ்ந்தது? பாதைநோக்கி பின் தொடர்க!” என்றார். இருவரும் அசைவில்லாது நிற்கக் கண்டு “என்ன?” என்று கேட்டார். “சொல்லுங்கள், இக்கனியை உண்டு மைந்தனுக்கு அன்னையாகப்போவது யார்?” என்றாள் அணிகை. “ஆம், அதை அறியாது இனி இக்காடுவிட்டு ஓர் அடிவைக்க என்னால் இயலாது” என்றாள் அன்னதை.
அதுவரை அதை எண்ணியிராத பிருஹத்ரதன் “அதை நாம் அரண்மனைக்குச் சென்று முடிவுசெய்வோம். நூலறிந்தவரும் நிமித்திகரும் குலமூத்தோரும் மூதன்னையரும் முடிவெடுக்கட்டும்” என்றார். “எனக்கு அக்கனி இல்லை என்றால் இக்காட்டைவிட்டு நான் வரப்போவதில்லை” என்று அன்னதை சொன்னாள். “ஆம், இங்கேயே நின்று இறக்கவே நானும் எண்ணுகிறேன்” என்றாள் அணிகை.
“என்ன இது? பிறந்த கணம் முதல் ஓருடலும் ஓருயிரும் என்றே வாழ்ந்தவர் நீங்கள் என்று அறிந்தவன் அல்லவா நான்? ஒருவர் குழல்சீவ பிறிதொருவர் முகத்தை நோக்குவதுண்டு என்று செவிலியர் உங்களை பகடி சொல்லவும் கேட்டிருக்கிறேன். இக்கணம் வரை இருவரும் இருசொல் பேசி நான் கேட்டதுமில்லை” என்றார் பிருஹத்ரதன். “ஆம், ஆனால் இணைந்த எதுவும் பிரியும் ஒரு கணம் உண்டு” என்றாள் அன்னதை. “அரசே, விண்ணுலகு செல்பவர் இணைந்திருப்பதில்லை” என்றாள் அணிகை.
என்னசெய்வதென்றறியாமல் பிருஹத்ரதன் திகைத்து நின்றார். மீண்டும் மெல்லியகுரலில் “இவ்விடத்தில் முடிவெடுக்க என்னால் இயலவில்லை. இந்நாள் வரை இருவர் என் துணைவியர் என்றே நான் எண்ணியதில்லை. அரண்மனைக்கு வருக! எனக்கு அவைகூடி முடிவெடுக்க மூன்றுநாட்களை அருள்க!” என்றார். “இக்காட்டில் நாங்கள் இரண்டானோம். இனி எப்போதும் ஒன்றென ஆகமுடியாதென்றும் அறிந்தோம்” என்றாள் அன்னதை. “எங்களில் ஒருவரை உதறி இன்னொருவரை அழைத்துச்செல்லுங்கள்” என்றாள் அணிகை.
அரசர் கண்களை மூடி ஒருகணம் நின்றார். பத்மர் “பொழுதுவிடியப்போகிறது அரசே” என்று கூவினார். “புட்குரல்களில் விடிவெள்ளியெழுவதை கேட்கிறேன்.” பிருஹத்ரதன் தத்தளித்து “எண்ணிச்சொல்லுங்கள்... அரசியரே, இது தீயூழ் ததும்பும் இருட்காடு. இங்கு நின்றிருப்பதென்பது அடியிலியில் விழுவதற்கு நிகர்” என்றார். “ஆம், மைந்தரில்லாதவள் விண்ணுலகேக முடியாது. அவள் மகிழ்ந்திருக்கும் இடம் அடியிலிகளின் ஏழடுக்குகள் மட்டுமே” என்றாள் அன்னதை. “மைந்தரில்லையேல் அன்னை ஜரையுடன் சென்று நானும் அங்கமையவே விழைவேன்” என்றாள் அணிகை.
தொலைவில் தெரிந்த சுருதவாகினியைக் கண்டு பிருஹத்ரதன் தவித்தார். “எண்ணிச்சொல்லுங்கள்... இரட்டையரே, என் மேல் கருணைகொள்ளுங்கள்” என்றார். அவர்கள் இதழ்பூட்டி விழியிறுக்கி உறைந்து நின்றனர். “சொல்லுங்கள்... வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்றார் பிருஹத்ரதன். அவர்கள் மலைப்பாறையின் குளிர்ந்த அமைதியை கொண்டிருந்தனர்.
“அரசே, விடியலாயிற்று... இதோ” என்றார் பத்மர். “இதோ இருவருக்கும் அளிக்கிறேன் இக்கனியை. இருவரும் பகிர்ந்துண்ணுங்கள்” என்றார் பிருஹத்ரதன். இருவரும் ஒரே கணத்தில் மலர்ந்து உவகையொலி எழுப்பினர். “விடிகிறது... என்னுடன் ஓடுங்கள்...” என்று கூவியபடி பிருஹத்ரதன் சுருதவாகினியை நோக்கி பாய்ந்தார். அரசியரும் அமைச்சரும் அவரைத் தொடர்ந்து விரைந்தோடினர். மூச்சிரைக்க கண்ணில் அனல் பறக்க கால்களில் முட்களும் கற்களும் கிழித்து குருதி வழிய அவர்கள் சுருதவாகினியை அடைந்து மறுபக்கம் தாவினர்.
அவர்களைத் தொடர்ந்தோடி வந்தன பல்லாயிரம் கால்கள். பறந்து வந்து மொய்த்தன கரிய சிறகுகள். பல்லாயிரம் இருண்ட கைகள் அவர்களை அள்ளிப்பற்றத் துடித்தன. அணிகையின் ஆடைநுனியைப்பற்றியது ஒரு கை. அன்னதையின் கூந்தலிழையைப் பற்றி இழுத்தது பிறிதொரு உகிர். சுருதவாகினியைக் கடந்ததும் பிருஹத்ரதன் ஏறிட்டு நோக்கியபோது விண்ணில் விடிவெள்ளியை கண்டார். மூச்சிரைக்க கண்ணீரும் சிரிப்புமாக “தெய்வங்களே, தப்பிவிட்டோம்” என்று கூவினார்.
அவர் காலடியில் களைத்து விழுந்தனர் அரசியர். அவர்கள் இருவர் கையிலும் அக்கனியை அவர் அளித்தார். அவர்கள் நெஞ்சு விம்ம அழுதுகொண்டிருந்தனர். அவர்களை அணைத்துக்கொண்டு “மீண்டுவிட்டோம்... மீண்டு வந்துவிட்டோம்” என்று பிருஹத்ரதன் கூவினார். “இனி துயரில்லை... இனியெல்லாம் நலமே” என்று விம்மி அழுதார்.
ஆனால் விண்ணில் தோன்றி கீறிமறைந்த எரிமீன் ஒன்றை நோக்கி நின்றிருந்த அமைச்சர் பத்மர் மட்டும் நீள்மூச்செறிந்தார். “செல்வோம்” என்றார் பிருஹத்ரதன். “ஆம், செல்வோம்” என்றபின் அமைச்சர் எரியம்பு ஒன்றை விண்ணிலெழுப்பி காவலரை தேர்கொண்டுவர ஆணையிட்டார்.
[ 5 ]
பிரம்மனின் ஆணைப்படி தேவசிற்பியான விஸ்வகர்மன் இப்புடவியின் பருப்பொருட்களை தன் சித்தப்பெருக்கின் வண்ணங்களாலும் வடிவங்களாலும் படைத்து, பாழ்வெளியெங்கும் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தொடக்கத்தில் ஒருநாள் தன் தனிமையை அழகால் நிறைத்த ஓர் அறியா உணர்வை என்னவென்று அறியத்தலைப்பட்டு இயல்பாக நிகழ்ந்த உணர்வெழுச்சியால் ஓவியம் வரையலானான். இரு கைகளிலும் தூரிகைகளை எடுத்து ஒற்றை அசைவால் அவன் வரைந்த இரு திரைச்சீலைகளில் ஒன்றுபிறிதேபோன்ற இரு பேரழகுப் பாவைகள் விழிநாணி இதழ்மலர்ந்து அவனை நோக்கின.
திகைத்து வலப்பாவையை நோக்கி “யார் நீ?” என்றான். அவள் உயிர்கொண்டு “சற்றுமுன் உங்கள் உளம்நிறைத்த ஒன்றின் வரைவடிவம்” என்றாள். “நீ ஒரு பெண்ணா? மகளா? கன்னியா? அன்னையா?” என்றான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “அப்பால் அப்பால் என்று மட்டுமே எப்போதும் அறியலாகும் ஒன்று அது. அதை அறிவதற்கான முதற்புள்ளியே நான்.” விஸ்வகர்மன் “உன்னை அறிவதெப்படி?” என்றான். “நான் ஒரு விரல்குறி. நான் சுட்டுவதை அறிக! நான் ஒரு மொழித்துளி. அதை என் பெயரென இடுக!” என்றாள். விஸ்வகர்மன் “உணரப்படுவதன் அறிபடுவடிவமான உன்னை சம்க்ஞை என்றழைக்கிறேன்” என்றான்.
அவன் திரும்பி இடப்பாவையை நோக்கி “இனியவளே, நீ யார்?” என்றான். “உருவென்று ஒன்று எழுந்ததுமே உடன் தோன்றும் நிழல் நான். உருவும் பிறிதொரு நிழலே என்றறிபவன் என்னை அறிகிறான்” என்றாள். “தொடர்பவள். வளர்ந்தும் குறுகியும் உடனிருப்பவள். ஒலியற்றவள். ஒளியில் உருக்கொள்பவள். இருளில் இன்மையென்றாகுபவள்.” விஸ்வகர்மன் அவளை நோக்கி “உன்னை சாயை என்றழைக்கிறேன்” என்றான்.
இரு கன்னியரையும் அவன் சிறுகுழவிகள் என இரு கைகளில் எடுத்துக்கொண்டான். தன் இருதோள்களிலும் தொடைகளிலும் வைத்து அவர்களை வளர்த்தான். மகவாகி அவனில் அமுதுநிறைத்தனர். அன்னையராகி அவனுக்கு அமுதூட்டினர். தோழியராகி அவனை அலைக்கழித்தனர். அருகமர்ந்து அறிவூட்டினர். கன்னியராகி அவனுக்கு பேரழகு காட்டினர். அவன் படைத்த உலகை எல்லாம் அவர்கள் அவன் முன் ஒவ்வொரு கணமும் நடித்தனர். தன் அகமே மகளிரென எழுந்து கண்முன் அழகுகொண்டது என அவன் எண்ணினான்.
ஒவ்வொன்றிலும் உறையும் உள்ளழகை அவர்களின் உடல்களில் அவன் கண்டான். பின் அவர்களை கனவில் காண்கையில் ஒவ்வொன்றும் அடையாதுபோன பிறிதொன்றை அவர்களின் அசைவுகள் காட்டின. அது என்ன என்று அவன் ஒவ்வொரு கணமும் தவித்தான். தான் படைத்த புடவியை சுற்றிச்சுற்றி நூறுமுறை நோக்கினான். அனைத்தும் முழுமையாகத் தெரிந்தன. பிழைகள் இல்லை. முழுமையை உணர்த்தும் பிசிறுகளன்றி ஏதுமில்லை. ஆனால் போதாமையை உணர்ந்த உள்ளம் தேடித்தேடி அலைந்தது. பிழைநோக்குவோன் பிழைகளையே காண்கிறான். பிழைகளோ நோக்க நோக்க பெருகுபவை. ஏனென்றால் நோக்குபவனின் விழைவை அவை புரிந்துகொள்கின்றன.
பிழை தெரியத்தெரிய படைப்பின் ஒருமை விழிவிட்டு மறைந்தது. பிழைகளும் பிழைகளுக்கான வாய்ப்புகளுமாக அவன் படைப்பு சிதறிப்பரவிக் கிடந்தது. அதன் முன் சோர்ந்து நின்றான். ஒற்றைச்சொல்லில் அனைத்தையும் அழித்துவிட எண்ணினான். ஆக்குபவன் அவனாயினும் அழிப்பதற்கு ஆற்றலற்றவன் என்று உணர்ந்து கலுழ்ந்தான். செயலாற்றல் முற்றழிய தோள்தொங்கலென கைகள் பொருளிழக்க தன் இடம் மீண்டு முழுத்தனிமையில் ஆழ்ந்தான். ஒவ்வொரு படைப்பையும் உதறியுதறி அப்படைப்புகள் கருவடிவில் உறையும் பெருவெளியின் முடிவிலா வெறுமையை சென்றடைந்தான்.
அவன் சோர்ந்திருப்பதைக் கண்டு இரு இளமகள்களும் ஓடிவந்து அவன் இரு கைகளையும் பற்றி தாங்கள் சமைத்த சிற்றில் ஒன்றை காண அழைத்தனர். முதல்முறையாக அவர்களை முனிந்து அகற்றினான். முகம் சிறுத்து, கண்களில் நீர் வார அவர்கள் அகன்றனர். அச்செயலின் துன்பத்தை தன் நெஞ்சிலிறக்கிய கூர்வாளின் தினவென அவன் நுகர்ந்தான். தன் குருதியை தானே சுவைத்துண்டு அங்கே தனித்திருந்தான். அவ்வண்ணமே துயின்று கனவில் அவர்களை கண்டான். இருவரும் சினந்திருந்தனர். தங்கள் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினர். “நில்லுங்கள்! நில்லுங்கள்!” என அவன் கூவினான். அது ஒலியாகவில்லை. அவன் உடல் அசைவை மறந்திருந்தது.
அவர்கள் செல்வதை அவன் மரப்பாவை என நோக்கி அமர்ந்திருந்தான். அகன்று அகன்று அவர்கள் செல்ல, காலடிகள் ஓய, சிலம்பொலிகள் தேய, வண்ணங்கள் கலந்து தூரிகைத்தீற்றலென மாற, தொலைவில் அவர்களிருவரும் ஓன்றென இணைந்தனர். திகைப்பால் துடித்த உடலுடன் அவன் எழுந்து நின்றான். முற்றிலும் ஒருவருடன் ஒருவர் பொருந்தி அவர்கள் மெல்ல தொலைவுநோக்கி விழுந்துகொண்டிருந்தனர். “நில்லுங்கள்!” என்று அவன் கூவினான். அவர்கள் திடுக்கிட்டு நின்று திரும்ப அவர்களை அப்போதுதான் முழுமையழகுடன் அவன் கண்டான்.
அக்கணமே விழித்துக்கொண்டான். அகலே விளையாடிக்கொண்டிருந்த இருவரும் “தந்தையே” என ஓடி அருகணைந்தனர். இருவரும் பொலிந்த பேரழகின் பொருளென்ன என்று அவன் அறிந்தான். “எத்தனை எளியது! தெய்வங்களே, எத்தனை வெளிப்படையானது! எங்ஙனம் என் உள்ளம் இதை மறந்தது?” என்று அவன் கூவினான். தன் தூரிகையையும் வண்ணங்களையும் தேடி பரிதவித்தான். அவற்றை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி தான் படைத்த அனைத்துக்கும் நிழலை படைக்கலானான்.
அன்றுவரை இப்புடவி திரைச்சீலைப்படம் போல தட்டையாக இருந்தது. தூரிகை வரைந்த நிழல்வந்து வடிவங்களுடனும் வண்ணங்களுடனும் முயங்கியதும் ஒவ்வொன்றும் முழுப்பு கொண்டு எழுந்தது. உருள்வுகள் ஒளி கொண்டன. பரப்புகள் அகல்வு கொண்டன. எழுகைகள் ஆழம் கொண்டன. வண்ணங்கள் பீடம் கொண்டன. சேய்மைகளும் அண்மைகளும் உருவாகி வந்தன. ஒவ்வொரு பொருளிலும் அதற்குரிய தெய்வம் வந்து அமர்ந்து புன்னகைத்தது. நெஞ்சைப்பற்றியபடி நின்று கண்ணீருடன் புன்னகைத்தான் விஸ்வகர்மன்.
அவர்களிருவரும் கன்னிமை கனிந்து நின்றதைக் கண்டு அவர்களுக்குரிய மணமகன் எவன் என்று நோக்கினான். ஒவ்வொன்றிலும் எழும் பொருண்மையை சமைப்பவன் சூரியன் என கண்டான். ஒவ்வொன்றுக்கும் நிழல் என இன்மையை பின்னுக்கு அமர்த்துபவனும் அவனே. தன் இரு கன்னியருக்கும் மணமகனாக சூரியனை தேர்ந்தான். ஆனால் சூரியனுக்கு முன்னால் கொண்டுசென்று தன் பெண்களை நிறுத்தியபோது அவர்கள் முழுதிணைந்து ஒருவராக நிற்பதை கண்டான். “மகளே நீ யார்?” என்றான். “நான் சம்க்ஞை. அவள் என்னுள் புகுந்துவிட்டாள்” என்றாள் சம்க்ஞை.
விஸ்வகர்மன் சூரியனை நோக்கி “தேவா, இவள் என் மகள். சம்க்ஞை என இவளை நான் அழைக்கிறேன். இவள்கொண்ட கரவுகளெல்லாம் உன் தழுவலால் பொலிக! உன்முன் இவள் நிறைவுறுக!” என்றான். புன்னகைத்து தன் கதிர்க்கைகள் நீட்டி அவளை தொட்டான் சூரியன். சம்க்ஞை முடிவின்மை கொண்டாள். “இனியவர்களே, உங்கள் கொழுநருடன் ஆடுக! உங்கள் பிறவி நிறைவடைக!” என்று வாழ்த்தி அவர்களை வழியனுப்பினான் தந்தை.
சூரியனை மணந்த சம்க்ஞை மூன்று மைந்தரை பெற்றாள். ஆக்கும் மனு, அழிக்கும் யமன், துணைக்கும் யமி என அவர்கள் உருவெடுத்து உலகுபுரந்தனர். கதிரவனுடன் கூடும்போது தன்னிலெழும் முடிவிலியைக் கண்டு சம்க்ஞை அஞ்சினாள். அவள் கொண்ட ஒவ்வொன்றும் எரிந்தழிந்தன. ஒவ்வொரு கணமும் அவள் ஒன்றுநூறாயிரமென தன்னில் கிளைத்து எழுந்துகொண்டுமிருந்தாள். ஒருநாள் “இவ்விருநிலையில் ஆடிச் சலித்துவிட்டேன். என்னை ஒருநிலையில் தொகுக்க விழைகிறேன். நீ என் வடிவாக இங்கிரு” என்று அவள் சாயையிடம் சொன்னாள்.
“உடன்பிறந்தவளே, எங்கும் நான் தனித்திருக்க முடியாது என்பதல்லவா நெறி?” என்றாள் சாயை. “ஆம், ஆனால் நீ நான் என தனித்திருக்கலாம். நீயென நான் அங்கு என் தவச்சாலையில் வாழ்கிறேன்” என்றாள். பின்னர் அவள் சூரியனின் மாளிகையை நீங்கி சாயாவனம் என்னும் அடர்காட்டுக்குள் சென்று மறைந்தாள். சாயை சம்க்ஞையென தன்னை ஆக்கி சூரியனுக்காக காத்துநின்றாள்.
காலை எழுந்து கதிர்நீட்டி அவளைத் தொட்ட சூரியன் அவள் புதியவளென எழுந்திருப்பதைக் கண்டான். “ஒவ்வொருநாளும் உன்னில் ஊறும் புதிர்களை அள்ளிச் சுவைப்பதற்காகவே இங்கே அணைகிறேன். இன்று நீ கொண்டுள்ள உட்குறிப்புகள் முற்றிலும் புதியவை” என்றான். “ஒவ்வொன்றாய் தொட்டு அவற்றை அவிழ்க்கிறேன். மலர்மொக்குகளின் முடிச்சுகள் ஒவ்வொன்றும் ஒருவகை. மெல்ல விரல்தொட்டு அவற்றை விரிப்பதற்குரியவை என் எழுகதிர்கள். இருளில் பறவைகளின் முட்டைகளை தொட்டு உடைப்பவை என் சாய்கதிர்கள். மண்புகுந்து விதைகளை எழுப்புபவை என் நிலைக்கதிர்கள்.”
ஒவ்வொருநாளும் அவள் அவனுக்களித்த புதிர்க்குறிப்புகளை அவன் ஆராய்ந்தான். மீண்டும் மீண்டும் தோற்று மேலும் மேலும் ஆர்வம்கொண்டு அணைந்தான். “நீ முடிவற்றவள் என்று அறிந்தேன். நான் கடந்துசெல்லமுடியாதவள் நீ” என்றான். அவள் அவன் காமத்தால் மூன்று மைந்தரை பெற்றாள். நிழல்வெளியின் படைப்புத்தெய்வமான மனு, நீல இருளான சனைஞ்சரன், எரியும் வெம்மையென தபதி. மூன்று குழவிகள் பிறந்து வளர்ந்தபின்னரும் அவள் அளித்த புதிர்களில் ஒன்றையும் அவனால் அவிழ்க்க இயலவில்லை.
முற்றிலும் முயன்றுதோற்றபோது ஒருநாள் அவன் சினந்து தன் முழுவெம்மை எழ பெருகி அவளை நோக்கினான். அஞ்சி அவள் பின்னகர மூன்று குழவிகளும் நடுங்கி அவளுக்குள் ஒண்டிக்கொண்டன. சினம் மூத்து அவன் அவள் அருகணைந்தபோது அவள் பெருகி எழுந்தாள். ஐயம் கொண்டு நின்றபின் அவன் பின்னால் நகர அவள் சிறுத்தாள். மேலும் மேலும் பின்னகர்ந்து அவளை சிற்றுருவாக்கினான். பின்பு தணிந்த குரலில் கேட்டான் “சொல், நீ யார்?”
“நான் சாயை, என் உடன்பிறந்தவள் தன்னைத் தொகுத்து முழுமைகொள்ளும்பொருட்டு காட்டுக்குச் சென்றிருக்கிறாள்” என்றாள். “நான் இங்கு அவள் வடிவென இருந்தேன்.” சூரியன் “ஆம், இப்போது அனைத்தும் புரிகிறது” என்றான். ஒரே கணத்தில் அவள் விடுத்த அனைத்து புதிர்களையும் அவிழ்த்தான். “நீ வினா அல்ல, வினாவின் நிழல். நான் அணுகியதிசைக்கு எதிரே சென்று உன்னை அவிழ்த்திருக்கவேண்டும். உன்னை விடையெனக்கொண்டு நான் வினா எழுப்பியிருக்கவேண்டும்.”
அவளை நீங்கி சூரியன் சாயாவனத்திற்குள் நுழைந்தான். அங்கே நிழலுருக்களாக செறிந்திருந்த மரங்களுக்கு நடுவே நிழல்கள் நெளிந்த ஆறு ஒன்று ஓடியது. அதன்கரைகளில் சம்க்ஞை ஒரு கரியநிறப் புரவியென தன்னை ஆக்கி துள்ளித்திரிந்து கொண்டிருந்தாள். புன்னகையுடன் சூரியன் தன் கதிர்களைக் குவித்து ஒரு வெண்புரவியாக ஆகி சாயாவனத்திற்குள் நுழைந்தான்.
தன்னருகே எழுந்த வெண்ணிழலைக் கண்டு சம்க்ஞை திகைத்தாள். “யார் நீ?” என்றாள். “உன் நிழல். என்னுடன் இழைகையிலேயே நீ முழுமை கொள்கிறாய்” என்றான் சூரியன். அவள் அஞ்சி விலகி ஓடினாள். அவன் நகைத்தபடி அவளை துரத்திப்பிடித்தான். அவள் அவன் தொடுகையை உதறிச் சீறி சிலிர்த்தாள். அவன் அவளைத் தழுவி “நீ என் நிழல் வடிவம்” என்றான். அவள் நாண அணைத்துக்கொண்டான்.
சம்க்ஞை இரட்டை மைந்தரை பெற்றாள். வெண்குதிரைமுகம் கொண்டவனை அவன் தந்தை சத்யன் என்றழைத்தான். அன்னை அவனை அஸ்வன் என்றழைத்தாள். அவன் நிழலுரு போல எழுந்த கருங்குதிரை முகத்தானை நாசத்யன் என்றான் தந்தை. அப்பெயரை மறுத்து அவனை தஸ்ரன் என்றாள் அன்னை. இரட்டைக்குதிரைகள் என சாயாவனத்தில் வளர்ந்த அவர்களை அஸ்வினி தேவர்கள் என்றழைத்தனர் தேவர். பிரியாதிருப்பவர் என்று அவர்களை தெய்வங்கள் வாழ்த்தின. பிரியலாகாதவர் என்று அவர்களை முனிவர்கள் உணர்ந்தனர்.
[ 6 ]
காசிமன்னன் பீமதேவன் வங்க இளவரசியை மணந்து நீணாள் குழவிகள் இன்றி இருந்தான். குலதெய்வங்களையும் குடிநீத்தாரையும் பூசனைசெய்து பிழையறுத்தான். வேள்விகள் செய்து தேவர்களை மகிழ்வித்தான். அவிபெற்று எழுந்த அஸ்வினி தேவர்கள் அவனுக்கு அருளினர். அவியாக அளித்த பசுந்தழையிலிருந்து ஒரு சிறுபசும் விதை தெறித்து அவன் மடியில் விழுந்தது. இருபருப்புகள் தழுவி இணைந்த அவ்விதையை அவன் தன் துணைவிக்கு அளித்தான். அவள் கருவுற்று இரட்டை மகள்களை பெற்றாள். அவர்களுக்கு அணிகை என்றும் அன்னதை என்றும் பெயரிட்டு அவன் வளர்த்தான்.
இருவருக்கும் அவன் அமைத்த தன்மணப் பந்தலில் கூடியிருந்த அரசர்கள் ஆடிப்பாவைகள் மாலைகொண்டு வருவதை கண்டனர். அவர்கள் அழகில் விழிமயங்கி தத்தளித்த ஒவ்வொருவரும் மாறி மாறி அவர்களை நோக்கினர். அவர்கள் நடுவே மகத இளவரசன் பிருஹத்ரதன் மட்டும் அசையா விழிகளுடன் ஒரே நோக்கில் இருவரையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அலைபாயும் விழிமணிகள் நடுவே இளவரசியர் மாலையுடன் அணுகினர். அசையா விழிகளைக் கண்டதும் நின்று அவன் கழுத்தில் மாலையை சூட்டினர்.
இருவரை மணந்தாலும் பிருஹத்ரதன் ஒருவரையே அடைந்தான். இளமையிலேயே சித்தமும் செயலும் ஒன்றென ஆகியிருந்தனர் அணிகையும் அன்னதையும். ஒருவர் உண்டால் இருவரும் நிறைவதை ஒருவர் கற்பதை இருவரும் அடைவதைக் கண்டு காசிநாட்டு அரண்மனை நிமித்திகரும் மருத்துவரும் வியந்து நூலில் பொறித்தனர். அவர்களில் ஒருவர் எண்ண ஒருவர் மொழியும் விந்தையை கவிஞர் பாடினர்.
தமஸாரண்யத்திற்கு அவர்கள் ஒருவராகச் சென்று இருவராக மீண்டனர். ஒரே அரண்மனையின் இருமூலையில் ஒடுங்கி சொல்துறந்து அமர்ந்தனர். அவர்களின் விழிகள் மாறுபட்டன. பின் உடலசைவுகள் வேறிட்டன. நேர்கண்டு உரையெடுத்தாலும் எவரென்று அறியாமல் மயங்கியிருந்த பிருஹத்ரதன் அவர்கள் நிழல்கண்டே பிரித்தறியலானார். அவர்கள் ஒருவரையொருவர் நேரில் காணும்போது அயவலர்போல் புன்னகைகாட்டி பொதுச்சொல் பேசினர்.
ஒரேநாளில் இருவரிலும் கருவுற்ற உடற்குறிகள் வெளிப்பட்டன. அணிகை புளிப்பை நாடினாள். அன்னதை கசப்பை. அணிகை இடக்கை ஊன்றி எழுந்தாள். அன்னதை வலக்கையை. அணிகை வலப்பக்கம் ஒசிந்து அமர்ந்தாள். அன்னதை இடப்பக்கம் அமைந்து நீள்மூச்சுவிட்டாள். அணிகை கருநிறத்தை விழைந்தாள். அன்னதை வெண்ணிற ஆடையை அணிந்தாள். அணிகையின் கனவில் வெள்ளெருது திமில்குலுக்கி நடந்தது. அன்னதையின் கனவில் கரிய எருது ஒன்று தெரிந்தது. “இருவர் கருக்கொண்ட கணமும் ஒன்றே. ஆனால் இருவர் காட்டும் குறிகள் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன அரசே” என்றனர் நிமித்திகர். “நன்றுசூழ்க! எனக்கு பெருந்திறல் கொண்ட வீரர் இருவர் பிறக்கட்டும். ஒருவரையொருவர் நிகர்செய்து பிறர் எதிர்நிற்காத வல்லமை கொள்ளட்டும்” என்றார் பிருஹத்ரதன்.
பத்மர் மட்டும் நாளுக்குநாள் அமைதியிழந்தவரானார். வயற்றாட்டிகளிடம் ஒவ்வொருநாளும் கருக்குறிகளை உசாவியறிந்தார். அணிகை கருவுற்றிருப்பது ஆண் என்றும் அன்னதை பெண்ணை சுமக்கிறாள் என்றும் முதுவயற்றாட்டி நீலி சொன்னாள். அணிகையின் வயிற்றின் வலப்பக்கம் பெருத்துக்கொண்டே வந்தது. அன்னதையின் இடவயிறு மட்டும் வீங்கியது. “இதுபோல் இதுவரை கண்டதில்லை அமைச்சரே. அவர்களால் உடல்நிலைகொண்டு நிற்கவும் இயலவில்லை” என்றாள் நீலி. எப்போதும் ஏவல்பெண்டிர் அவர்களை தோளணைத்து தூக்கியே கொண்டுசென்றனர். “அவர்களின் விழிகளும் மாறிவிட்டன. அணிகை இடப்பக்கத்தில் பார்வையிழந்துள்ளாள். அன்னதையின் வலப்பக்கம் கண்மறைந்துவிட்டது” என்றாள் நீலி.
பாதியுலகில் அவர்கள் வாழ்ந்தனர். பாதியுடல் கொண்டவர்களாக உணர்ந்தனர். அவர்களின் கனவுகளில் பறவைகள் ஒற்றைச்சிறகு கொண்டிருந்தன. மானுடர் ஒற்றைக்கைகளுடன் திரிந்தனர். விலங்குகள் இரு பக்கக்கால்களுடன் பாய்ந்தன. ஒவ்வொரு நாளும் அவர்கள் துயிலில் திகைத்து எழுந்து அலறினர். “தீக்குறிகள் தோன்றுகின்றன அமைச்சரே” என்றனர் நிமித்திகர். “நேற்று மட்டும் வானில் பன்னிரு எரிமீன்கள் வடக்குநோக்கி சரிந்தன. இரட்டைத்தலைப் பாம்பு ஒன்று தோட்டத்தில் தென்பட்டது. இருதலையும் எட்டு கால்களும் கொண்ட காளைக்கன்று ஒன்று இன்று பிறந்தது.”
வைகாசிமாதம் பின்புலரி நேரம் இடப நேரத்தில் இருவருமே மைந்தரை ஈன்றனர். வலிகண்ட செய்தியறிந்து உவகையில் தன்னை மறந்த பிருஹத்ரதன் வந்து ஈற்றறையின் வாயிலில் நின்றார். அருகே அமைச்சர்களும் நிமித்திகர்களும் நின்றனர். எண்மங்கலங்கள் ஏந்திய சேடியரும் இசைச்சூதரும் அப்பால் காத்து நின்றிருந்தனர். அரண்மனை புரியாத அச்சமும் அச்சம் பெருக்கிய கிளர்ச்சியும் கொண்ட ஏவலர்களாலும் சேடியராலும் வீரர்களாலும் நிறைந்து சிம்மத்தை உணர்ந்த மானின் உடலென விதிர்த்தும் சிலிர்த்தும் அசைவற்று நின்றது.
வெளியே ராஜகிருஹ நகரின் அத்தனை கோட்டைமுகப்புகளிலும், காவல்மாடத்து முகடுகளிலும் பெருமுரசுகளுக்கு அருகே கோல் கொண்டு வீரர் எரியம்பு எழுவதை எதிர்நோக்கினர். அருகே கொம்புகளும் சங்குகளும் மணிகளும் ஏந்திய வீரர் நின்றிருந்தனர். நகர் மாந்தர் அனைவரும் துயில்நீத்து இல்லத்துத் திண்ணைகளிலும் முற்றங்களிலும் இருண்ட வானை நோக்கியபடி குவிந்திருந்தனர். நிமித்திகர்கள் மீன்நோக்கினர். புலவர் நூல் நோக்கினர்.
இரு அரசியரும் ஒரே கணத்தில் குழவிகளை ஈன்றனர். இரு அழுகைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒலித்தன. முகம் மலர்ந்த பிருஹத்ரதன் “மைந்தர்களா? சொல்லுங்கள் மைந்தர்களா?” என்றார். ஈற்றறைக்கதவை மெல்லத்திறந்து வெளியே எட்டிப்பார்த்த வயற்றாட்டி “ஆம் அரசே, மைந்தர்” என்றபின் மறைந்தாள். “எந்தையரே, என் கைகளுக்கு மீண்டு வந்தீர்” என்று கூவியபடி கைகளைத் தூக்கி துள்ளிக்குதித்தார் பிருஹத்ரதன் அவர் கையசைக்க அமைச்சர்கள் வெளியே ஓடினர். இரு எரியம்புகள் எழுந்து வானில் விரிந்தன. நகரம் சங்குமணி முரசறைதல்களாலும் வாழ்த்தொலிகளாலும் பொங்கி பேரொலியாகி இருளில் எழுந்தது.
பத்மர் வயற்றாட்டியின் முகத்தில் புன்னகை இல்லை என்பதைத்தான் நோக்கினார். “அரசே! அரசே!” என்று அழைத்தார். “பொறுங்கள்... சற்று பொறுங்கள்” என்று பிருஹத்ரதனின் கைகளைப்பற்றியபடி மென்குரலில் சொன்னார். “ஏன் பொறுக்கவேண்டும்? என் குடிசெழிக்கும் மாவீரர்கள் பிறந்திருக்கிறார்கள். இதோ மகதம் காலத்தில் எழுகிறது!” என்றார் பிருஹத்ரதன். “உண்டாட்டு தொடங்கட்டும். இன்றுமுதல் ஏழுநாட்கள் நகரம் களி கொண்டாடட்டும். கவிஞர் யாக்கட்டும். சூதர்கள் பாடட்டும். விறலியர் ஆடட்டும். இங்கே இனி துயரென்பதே இல்லை என்று தேவர்கள் அறியட்டும்.” பத்மர் “நாம் மைந்தரை இன்னும் பார்க்கவில்லை அரசே” என்றார்.
அமைச்சரின் குரலில் இருந்த ஐயத்தை அப்போதுதான் பிருஹத்ரதன் உணர்ந்தார். “குழந்தைகள் உயிருடன் இருக்கின்றன அல்லவா?” என்றார். “ஆம்” என்றாள் முதுசெவிலி. “குழந்தைகளை எனக்குக் காட்டுக... உடனே” என்றார். “அரசே...” என அவள் தயங்க பிறிதொரு செவிலி “தெய்வங்களின் ஆடல். நம் பணியை நாம் இயற்றுவோம்...” என்றபின் உள்ளே சென்றாள். இரு இளஞ்செவிலியர் மைந்தர்களை வெளியே கொண்டுவந்தனர்.
நெஞ்சு துடிக்க பத்மர் குனிந்து அவர்களின் கையில் வெண்பட்டுத்துணிச்சுருளில் ததும்பிக்கொண்டிருந்த மைந்தர்களை நோக்கினார். செவிலியர் முகங்கள் சித்திரமென இறுகியிருந்தன. குனிந்து மைந்தரை நோக்கியபின்னரும் அவருக்கு ஏதும் புரியவில்லை. இரு குழவிகளும் முற்றிலும் ஒன்றைப்போல் பிறிது உருக்கொண்டிருந்தன. “இரட்டையர்! இருவயிற்றில் இரட்டையர் பிறப்பதை இப்போதுதான் காண்கிறேன்!” என்றார் பிருஹத்ரதன். “என் குடிக்கு இரு அரசர்கள்! பாரதவர்ஷத்தை வெல்லும் இரு பேரரசர்கள்!”
“அரசே” என்று சொல்லி பத்மர் அவர் கையை பற்றினார். அப்போதுதான் பிருஹத்ரதன் அக்குழவிகளை கண்டார். அஞ்சியவர்போல பின்னால் நகர்ந்து சுவரில் முட்டிக்கொண்டு அனல் பட்ட விலங்குபோல அலறினார். அவர் உடல் நடுங்கியது. முகம் வலிப்புபோல இழுபட கைகள் நீண்டு துடித்தன. பொருளில்லாது அலறிக்கொண்டே இருந்தார். பற்களைக் கடித்தபடி பத்மர் “அரசரை அவரது மஞ்சத்திற்கு கொண்டுசெல்லுங்கள். அவரை எவ்வண்ணமேனும் துயிலச்செய்யுங்கள்” என்றார்.
அங்கிருந்தோர் அனைவருமே நடுங்கிக்கொண்டிருந்தனர். “அமைச்சரே, என்ன இது? அமைச்சரே” என்று உடைந்த குரலில் கூவியபடி கால்தளர்ந்து பிருஹத்ரதன் விழப்போனார். அவரை அமைச்சர்களும் படைத்துணைவரும் பிடித்துக்கொண்டனர். “கொண்டுசெல்லுங்கள்” என்று பத்மர் குரல் அழுத்தி ஆணையிட்டார். “இங்கு கண்டவை எவர் நாவிலும் இனி ஒரு சொல்லென ஆகக்கூடாது” என்றார்.
செவிலியர் கைகளில் இருந்த மைந்தர் இருவரும் உடலின் ஒருபாதியை மட்டுமே கொண்டிருந்தனர். அணிகையின் மைந்தனுக்கு வலப்பக்கத்தில் மட்டுமே கையும் காலும் இடையும் செவியும் கண்ணும் இருந்தன. அன்னதையின் குழவி இடப்பக்கம் மட்டுமே கைகால்களும் இடையும் செவியும் கண்ணும் கொண்டிருந்தது. செவிலியர் அக்குழவிகளை உள்ளே கொண்டுசென்றதும் நீள்மூச்சில் கலைந்து “வாளால் நேர்பாதியாக அறுத்ததுபோல” என்றார் முதிய குலத்தலைவர் ஒருவர்.
பத்மர் சினத்துடன் அவரை நோக்கி திரும்பி “சொற்கள் தேவையில்லை” என்றார். “என் நாக்கை அறுத்தாலும் சரி. என் தலை விழுந்தாலும் சரி, குலத்தலைவனாக நான் இதை சொல்லாமலிருக்க இயலாது. மகதத்தின் அரசனை தெய்வங்கள் இதோ இரண்டாகப் போழ்ந்து அளித்துள்ளன. அமைச்சரே, அது எந்த வாள்? அவ்வாளை அமைத்த பெரும்பழி எது?” அவர் அருகே நின்றிருந்த இன்னொரு முதுகுலத்தலைவர் “ஆம், நாங்கள் அறிந்தாகவேண்டும். எங்கள் குடிமேலும் இந்நகர்மீதும் கவிந்திருப்பது எவர்விடுத்த தீச்சொல்?” என்றார்.
பிறிதொருவர் “நேற்றும் பிறந்தது எட்டுகால் காளை ஒன்று. அதை வாள்போழ்ந்து புதைத்தோம்” என்றார். பிறிதொரு குரல் “ஆம், தீக்குறிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்றும் இருதலைப்பாம்பொன்று கொற்றவை ஆலயத்து முகப்பில் படமெடுத்து எழுந்தது” என்றார். “இம்மண்ணில் நாங்கள் வாழவேண்டும்... இது எங்கள் மூதாதையர் மண். இம்மைந்தர் இங்கிருக்கலாகாது” என்றார் இன்னொருவர். பத்மர் “அமைதி!” என்று கைதூக்கி கூவினார். ஆனால் சூழ்ந்திருந்த எவரும் அவர் சொல்லுக்கு விழியொப்புகை தரவில்லை.
தளர்ந்த குரலில் “ஆவன செய்கிறேன்” என்றார் பத்மர். “ஆவன ஒன்றே. இனி ஒருகணமும் இவை இங்கிருக்கலாகாது. இவ்விரவு இவற்றுடன் இங்கு விடியுமென்றால் நாங்கள் இந்நிலத்தை விட்டு விலகிச்செல்கிறோம்” என்றார் முதுகுலத்தலைவர். “ஆம்! ஆம்! ஆம்!” என்றனர் அவர் தோழர். அங்கிருந்த விழிகள் அனைத்தும் அச்சொற்களைச் சொன்னதை பத்மர் கேட்டார். எழுந்த வாழ்த்தொலிகளும் இசையும் நின்றுவிட்டிருப்பதை அவர் செவிகள் உணர்ந்தன.
ஈற்றறைக்குள் உரத்த அலறல்கள் எழுந்தன. பத்மர் பதறி “என்ன? என்ன?” என்று கேட்டார். வெளியே வந்த முதுசெவிலி “மைந்தர் இருவரையும் அவர்களின் அன்னையர் இப்போதுதான் பார்க்கிறார்கள். அஞ்சி அலறியபடி ஓடி மாற்றறைக்குள் சென்று ஒருவரையொருவர் தழுவி நடுநடுங்கி அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். தங்களை அணுகிய சேடியரைக் கண்டு அவர்கள் மீண்டும் அலறும் குரல்கள் கேட்டன.
“செய்வதற்கொன்றே உள்ளது” என்றனர் முது நிமித்திகர். “இம்மைந்தனை இன்றே காட்டில் கையொழியலாம். இவனுக்குரிய ஈமக்கடன்களை நாற்பத்தெட்டுநாட்களுக்குப்பின் அரசர் செய்யட்டும். இருதலைகொண்டு பிறந்த எருது இது. இதை தெய்வங்களே வாள்போழ்ந்துள்ளன.” அவர் துணைவர் “ஆம், நீர்க்கடன் செய்து நினைப்பொழிந்தால் இக்குழவி பிறந்த பழி இம்மண்ணிலிருந்து அகலும். இந்த மாந்தரும் விலங்குகளும் மூதாதையரும் துயர் நீங்குவர்” என்றார்.
ஈற்றறைக்குள் சென்று குழவியரை நோக்கி மீண்ட மருத்துவர் சூத்ரகர் “அமைச்சரே, அக்குழவிகள் இருநாழிகைக்குமேல் உயிர்தொடர்வதற்கு வாய்ப்புகளே இல்லை. அவை இரண்டின் குடல்களும் நெஞ்சக்குலைகளும் கூட ஒருபக்கம் மட்டுமே உள்ளன. அவை உண்ணவோ உயிர்க்கவோ இயலாது. விரைவில் அவை இறக்கலாகும்” என்றார்.
முதுவயற்றாட்டி நீலி “அமைச்சரே, மைந்தர் பிறந்து அரைநாழிகை ஆகப்போகிறது. அன்னையர் அவற்றுக்கு முலையூட்ட மறுக்கிறார்கள். அவர்கள் இவற்றை ஏறிட்டும் நோக்குவர் என நான் எண்ணவில்லை. உண்ணாது பசித்து இவை இறக்கும் என்றால் நம் மண்ணையும் குடியையும் கொலைப்பழியும் சூழும்” என்றாள்.
இருகைகளையும் இறுக்கியபடி தலையை ஆட்டிக்கொண்டு சுற்றிவந்த பத்மர் நின்று “வேறுவழியில்லை. இரு மைந்தரையும் ஜரவனத்தினுள் கொண்டுசென்று விட்டுவரவேண்டுமென ஆணையிடுகிறேன்” என்றார். “இவ்வரண்மனைச் சுவரில் உள்ள ஜரையன்னையின் களிமண்சித்திரத்தையும் உடன்கொண்டு சென்று அருகே விட்டுவாருங்கள். அன்னையால் பிறந்த மைந்தரை அவளுக்கே திருப்பி அளிப்போம்.”
“ஆம்” என்று அங்கிருந்தோர் சொன்னார்கள். அக்கணம் வரை அவர்களிடமிருந்த கொந்தளிப்பு ஒற்றை நரம்புமுடிச்சு அவிழ்ந்ததுபோல் இல்லாமலாயிற்று. அவர்கள் ஏமாற்றமும் துயரும் குற்றவுணர்வும் கொண்டவர்களானார்கள்.
“இளவரசர் நகர்நீங்குவதற்குரிய அனைத்து முறைமைகளும் செய்யப்படட்டும். பொற்தொட்டிலில் பட்டுச்சேக்கைமேல் அரசணிக்கோலத்தில் அவர்களை வையுங்கள். நால்வகைப் படைகளும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அவர்களை வணங்கி வழியனுப்பட்டும். நகரே அணிகொண்டு நிரைநின்று அவர்களுக்கு வாழ்த்துரைக்க வேண்டும். அரசர்களென வந்தவர்கள் அரசர்களென்றே இம்மண்ணை நீங்கட்டும்” என்றார் பத்மர்.
“ஆம், ஆம்” என்றனர் அனைவரும். ஆனால் அவர்களின் குரல்கள் மிகத்தாழ்ந்திருந்தன. தலைகுனிந்து ஒருவர் விழியை ஒருவர் நோக்காமல் அவர்கள் பிரிந்துசென்றனர்.
[ 7 ]
முதல்கதிர் எழுவதற்குள்ளாகவே இருமைந்தரையும் அரசத்தேரில் ஏற்றி அகம்படியினர்தொடர, மங்கல இசை முன்செல்ல நகரிலிருந்து கொண்டுசென்றனர். அரசமைந்தர் நகர்நீங்குகிறார்கள் என்னும் செய்தியை முரசங்கள் நகருக்கு அறிவித்தன. சாலையின் இருமருங்கும் கூடி நின்றிருந்த ராஜகிருஹத்தின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி அவர்களை வழியனுப்பி வைத்தனர். அரண்மனை முகப்பில் பத்மர் தலைமையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் கூடிநின்று முறைமைசெய்து தேரை அனுப்பிவைத்தது. கோட்டை முகப்பில் குடிமூத்தார் எழுவர் நின்று வாழ்த்தி விடையளித்தனர்.
முரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருந்தமையால் அச்சடங்குகள் நடந்துகொண்டிருக்கையில் எப்போதோ மக்களின் வாழ்த்தொலிகள் முற்றிலும் நின்றுவிட்டிருப்பதை எவரும் உணரவில்லை. அரசத்தேரும் அகம்படித்தேர்களும் இருளில் புதைந்து மறைந்தபின் பெருமுரசம் மீட்டலுடன் ஓய்ந்தபோதுதான் நகரமே ஆழ்ந்த அமைதிகொண்டிருப்பதை அனைவரும் உணர்ந்தனர். அறைபட்டு ஓய்ந்த முரசுத்தோல் என விம்மிக்கொண்டிருந்தது அவர்களின் உள்ளம்.
அன்னையர் ஓசையின்றி இருளுக்குள் கண்ணீர் வடித்தனர். கன்னியர் தங்கள் இருள்மூலைகளில் சென்றமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு முட்டில் முகம்புதைத்து விசும்பினர். ஆண்கள் அந்த இரவு எவ்வண்ணமேனும் விடியலாகாதா என ஏங்கினர். மறுநாள் என்பது ஒன்றும் நிகழாத முந்தையநாள் விடியலாக இருக்குமென பேதைமை கொண்டனர். நகரம் மழைநனைந்த பறவைக்கூட்டம்போல ஓசையின்றி இருளில் ஒடுங்கிக்கொண்டது.
முதல்கதிர் முட்டைஓட்டைக் கொத்தி உடைத்து ஈரக்குருதிச்சிறகுகளுடன் வெளிவரும் குஞ்சுபோல வானில் எழுந்தது. மணிவண்ணன் கோட்டத்திலும் அனல்வண்ணன் கோட்டத்திலும் கொற்றவைக் கோயிலிலும் மணிகள் ஒலிக்கத்தொடங்கின. பறவைக்குரல்கள் விண்ணிலெழுந்தன. மாளிகைக்குவைமாடங்களை நனைத்தது புலரியின் ஊமையொளி. நகரம் நீரில் கரைந்த சுவரோவியம் போலிருந்தது. எங்கும் எவரும் நடமாடவில்லை. ஒருவரோடொருவர் பேசவும் ஆற்றலில்லாதவர் என தோன்றினர். ஆலயக்கருவறைகளில் விழிமலர்ந்து அமர்ந்திருந்த தெய்வங்களுக்கு பூசகர் தனிமையில் நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் நிகழ்த்தினர். மங்கலச்சங்குகள் ஓலங்கள் என ஒலித்தன.
அரண்மனையின் தாழ்வாரங்களில் உடல்சோர்ந்து அரைத்துயிலில் என தலை எடைகொண்டுசரிய அமர்ந்திருந்தனர் குலமூத்தார். முதுநிமித்திகர் ஒருவர் மெல்ல உடல் நெளித்து நீள்மூச்சு விட்டு “வைகாசி மாதம் இடப நன்னாள். வெண்களிற்று விடையேறுபவனுக்குரிய மீன் இது” என்றார். அச்சொற்கள் சவுக்கென ஒவ்வொருவரையும் அறைய துடித்து எழுந்தமர்ந்தனர். இளவரசருக்கு எதிராக முதற்சொல் எடுத்த முதுகுலமூத்தார் உரக்க “எழுக! இப்போதே சென்று மைந்தரை மீண்டும் அழைத்து வருவோம். நம் குடியும் நகரும் அழிந்தாலும் சரி. அடியுலகாளும் தெய்வங்கள் அனைத்தும் இங்கே செறிந்தாலும் சரி. நம் இளவரசருடன் நாம் வாழ்வோம்... அவர்களுடன் மடிவோம். அதுவே முறை” என்றார்.
“ஆம், நம் மடியை நம்பி தெய்வங்கள் அம்மைந்தரை இட்டனர். கையொழிய நாம் யார்?” என்றார் பிறிதொரு குலமூத்தார். “பெரும்பிழை செய்துவிட்டோம். தன்னலம் மட்டுமே சூழ்ந்தோம்” என்றார் ஒருவர். “கண்விழித்தெழும் அரசரின் முகத்தை நோக்கும் தகுதி நமக்குண்டா? நாளை எங்கே என் மைந்தர் என்று அவ்வன்னையர் கேட்டால் எதிர் உரைக்க சொல் நம்முள் உண்டா?” என்றார் இன்னொருவர். “கிளம்புக! இனி இங்கிருந்தால் நம் தெய்வங்களின் பழிகொள்வோம்” என்றார் முதல்வர்.
அவர்கள் தங்கள் கோல்களுடன் இறங்கி அரண்மனை முற்றத்தை கடந்தோடினர். “எழுக! தேர்கள் எழுக! விரைவுத்தேர்கள் எழுக!” என்று கூவினர். பாகர்கள் புரவிகளைத் தேடி ஓடினர். தேர்கள் திடுக்கிட்டு சகடங்கள் ஒலிக்க உயிர்கொண்டன. சவுக்குகள் சொடுக்கும் ஒலி மஞ்சள் ஒளி எழுந்த காலையை விதிர்க்கச்செய்தது. புரவிக்குளம்புகள் தெருக்களில் அறைபட தேர்கள் ஒலித்தோடின. எழுந்தோடி வந்து இல்ல முகப்புகளில் நின்று அன்னையர் “என்ன? என்ன?” என்று கூவினர். எவரோ “இளவரசர்களை மீட்டுவரச்செல்கிறார்கள்” என்றனர். “ஓ!” என்ற பெருங்கூச்சலுடன் நகரம் உயிர்கொண்டது.
“இளவரசர்கள் மீண்டு வருகிறார்கள்!” “இளவரசர்கள் நகர்நுழையவிருக்கிறார்கள்!” என்று மாறி மாறி கூவிக்கொண்டனர். ஆடைகளைச் சுழற்றி காற்றில் வீசி துள்ளிக்குதித்தனர். சிரித்தும் அழுதும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். “தெய்வங்கள் அளித்த கொடை அவர்கள். நாம் அஞ்சிவிட்டோம்” என்றார்கள். “நம் எதிரிகளும் அவர்களை அஞ்சுவார்கள். முன்பு ரம்பகரம்பர் இணைந்து உடல்கொண்டு ஏழுலகையும் வென்றனர். அவர்களைப்போன்றவர்கள் நம் இளவரசர்கள்” என்று எக்களித்தனர். எங்கும் களிவெறிகொண்ட முகங்கள் ததும்பின.
இல்லத்திண்ணையில் கைத்தடியுடன் அமர்ந்திருந்த நூறகவை கண்ட முதுமகள் “என்னடி நிகழ்கிறது?” என்றாள். “அவ்வையே, இளவரசர்களை கொண்டுவரச் சென்றிருக்கிறார்கள்” என்றாள் அவள் பெயர்த்தி. “அவர்களை கையொழிந்தவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்றாள் முதுமகள். “அவர்கள்தான் சென்றிருக்கிறார்கள்” என்றாள். முதுமகள் முகச்சுருக்கங்கள் விரிய நகைத்து “மானுடரைப் புரிந்துகொள்ளாமல் தெய்வங்களுக்கு பித்தேறுகிறது” என்றாள். பின்பு நீள்மூச்சுடன் தன் கழியால் தரையைத் தட்டி “எத்தனை நடிப்புகளினூடாக மானுடரென்று இங்கே நிகழவேண்டியிருக்கிறது!” என்றாள். “பிச்சி எனப்பேசுகிறாள். முதுமை அவள் சொல்லுக்குப்பின் சித்தமிலாதாக்கியிருக்கிறது” என்றாள் அவள் முதிய மகள். அவள் பெயர்த்தியர் வாய்பொத்திச் சிரித்தனர்.
ராஜகிருஹநகரிலிருந்து சென்ற அரசப்பாதையின் பன்னிரண்டாவது கணுவிலிருந்தது ஜராவனத்துக்குச் செல்லும் பாதை. அச்சந்தியில் இருந்த அந்திச்சந்தையில் அவ்வேளையில் எவருமிருக்கவில்லை. தலைவனில்லாத தெருநாய்கள் குளிருக்கு உடல்சுருட்டிக் கிடந்தன. தேரொலி கேட்டு அவை எழுந்து ஊளையிட்டு வால் அடக்கி குறுகி ஓடி நல்ல இடம் தேர்ந்து நின்றபின் திரும்பி குரைக்கத்தொடங்கின. முன்பே சென்ற தேர்களின் சகடத்தடம் தேர்ந்து அவர்கள் சென்றனர். இருபக்கமும் முட்புதர்களிலிருந்து காலைக்குருவிகள் எழுந்து இளவெயிலில் சிறகுகளை துழாவிச் சுழன்றமைந்தன.
சாலை தேய்ந்து நடைவழியாகியது. காலைப்பனிப்புல் மேல் தேர்த்தடங்கள் விழுந்துகிடந்தன. அவர்கள் தொலைவில் தேர்கள் அணையும் ஒலியை கேட்டனர். தயங்கியபோது எதிரே வந்த தேர்களின் அசைவுகளை தொலைவில் கண்டனர். அணுகிய தேரிலிருந்த முதன்மைக்காவலன் தலைவணங்கி “ஆணைப்படி மைந்தரை அடர்காட்டின் விளிம்பில் விட்டுவிட்டோம் மூத்தவரே” என்றான். “மூடா! மூடா!” என்று குலமூத்தார் கூவினர். “விட்ட இடத்தைக் காட்டு. இக்கணமே காட்டு அதை” என்று கூவினர். அவன் புரியாமல் திகைத்து அவர்களை நோக்கியபின் தேரை திருப்பினான். “விரைக! விரைக!” என்று குலமூத்தார் கூவினர். “இன்னும் விரைவு! இன்னும்!” என சவுக்குளை சுழற்றினர். தேர்கள் ஜராவனத்தின் அருகணைந்தபோது தேர்த்தட்டுகள் மேல் எழுந்து நின்று “எங்கே? எங்கே?” என்று கூச்சலிட்டனர். “அதோ” என்று ஏவலன் ஒருவன் கூவினான். “செல்க! செல்க!” என்று தேர்த்தட்டில் நின்று தவித்தனர்.
அருகணைந்தபோது அங்கே குருதிபடிந்த தொட்டிலை மட்டுமே கண்டனர். அருகே ஜரையன்னையின் ஓவியம் எழுந்த களிமண் பலகை உடைந்து கிடந்தது. “தேடுங்கள்... நாயோ நரியோ எடுத்திருக்கலாம்” என்று குலத்தலைவர் கூச்சலிட்டார். தன் கைத்தடியுடன் தேர்விட்டு பாய்ந்திறங்கி “இளவரசே! எங்கள் குலம் வாழவந்த தெய்வங்களே!” என்று கதறியபடி முட்புதர்களுக்கு நடுவே நிலைபதறி ஓடினார். காட்டுவிளிம்பின் சிறுபாறையின்மேல் இளவரசர்களை பொதிந்து வைத்த வெண்பட்டுச்சுருள்கள் குருதியுடன் நாரெனக் கிழிந்து பறந்து முட்புதர்களில் சிக்கி காற்றில் பறந்தன.
குனிந்து துணிநாரை எடுத்து நோக்கிய வீரன் “சிறுத்தை! ஐயமே இல்லை! இது அதன் உகிர்” என்றான். அதற்குள் ஒருவன் அங்கே ஈரமண்ணில் பதிந்த சிறுத்தையின் காலடிகளை சுட்டிக்காட்டினான். அதன் விரல்பதிந்த குழிகளில் குருதித்துளிகள் விழுந்து கிடந்தன. “தேடுங்கள்... தேடுங்கள்” என்று குலத்தலைவர் நெஞ்சில் ஓங்கியறைந்தபடி அழுதார். வீரர்கள் அக்குருதித்தடத்தை தேடிச்சென்றனர். இலைகள் நாநுனிகள் போல குருதிசொட்டி நின்றன. செஞ்சோரி கருமைகொள்ள அதன்மேல் சிறுபூச்சிகள் மொய்க்கத்தொடங்கியிருந்தன.
சிற்றோடை ஒன்றுக்கு அப்பால் சிறுத்தை பாய்ந்து கால்பதித்த தடம் கண்ட ஒருவன் “இனிமேல் செல்வதில் பொருளில்லை மூத்தவரே. சிறுத்தை கழுத்தையே முதலில் கவ்வும்” என்றான். பெருத்த கேவலுடன் கதறியபடி முதியகுலத்தலைவர் தரையில் அமர்ந்தார். தலையில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி “எல்லாம் என் பிழை. என் அச்சம் என்னை பேதையாக்கியது. என் தன்னலம் என்னை பழிகொள்ளச்செய்தது. என் குடிக்கே தீச்சொல் சேர்த்தேன்” என்று அழுதார். வெறிகொண்டு எழுந்து தன் குத்துவாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சப்போனார். அவரை அள்ளித்தூக்கி இறுக்கி தேரிலேற்றிக்கொண்டு அவர்கள் திரும்பினர்.
அரண்மனையில் பத்மர் பதைப்புடன் அவர்களுக்காக காத்திருந்தார். மைந்தருடன் அவர்கள் திரும்பி வரலாகாதென்றே அவர் விழைந்தார். மீண்டுவந்து வளர்ந்து எழும் இளவரசர்களைப்போல மகதத்திற்கு இழிவுதேடித்தருவது பிறிதில்லை என்று அவர் அறிந்திருந்தார். தெய்வங்களின் தீச்சொல் அமைந்த குலம் அதுவென்று அரசர்கள் எண்ணுவார்கள். மகதத்திற்கு மணக்கொடையளிக்க மாட்டார்கள். பெருவீரர் மட்டிலுமே பிறந்தமையால் அஞ்சப்பட்ட மகதம் இளிவரலுக்குள்ளாகும். புரவிக்குளம்புகளை எதிர்நோக்கியபடி அரண்மனை உப்பரிகையில் அவர் நின்றார். அனைத்துக்கும் மேலாக அறிவுதெளிந்தபின் அந்த இளவரசர்களை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று உள்ளம் திகைத்தது.
தொலைவில் குலத்தலைவர்களின் கொடிபறக்கும் தேர்களைக் கண்டதும் அவர் சற்றுநேரம் சொல்லில்லா உள்ளம் கொண்டு கைசோர்ந்து நின்றார். மறுகணம் அத்தேரில் உயிருடன் மீளும் மைந்தரைப்பற்றிய உளச்சித்திரம் எழுந்தது. உவகை பீரிட படிகளில் இறங்கி முற்றம் நோக்கி ஓடினார். ஆனால் தேர்கள் ஓசையின்றி வந்து நின்றதைக் கண்டதுமே என்ன என்று உய்த்துணர்ந்து மூச்சிரைக்க நின்றுவிட்டார். ஒருகணம் ஏன் அவ்வாறு உள்ளம் எழுந்தது? ஏனென்றால் ஆயிரம் முறை அத்தருணத்தை அகம் நடித்துவிட்டிருந்தது. அவர் உள்ளம் கண்ணீருடன் கூம்பியது. உடலின் எடைபெருகி கால்கள் தள்ளாடின. அருகே நின்ற வீரன் தோள்பற்றியபடி தள்ளாடி நடந்து அவர் தன் அறைக்கு மீண்டார்.
[ 8 ]
ஜரர் குலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெயரிடும் வழக்கமிருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் தோற்றத்தால் அடையாளம் கண்டனர். ஜரர்களாகிய ஆண்கள் உடல்குறிகளால் சுட்டப்பட்டனர். ஜரைகள் அவர்களின் மைந்தர்களினால் சொல்லப்பட்டனர். அவர்குடியின் மூதன்னையாகிய ஜரையை அவர்கள் இன்மையைச் சுட்டும் ஐந்துவிரல் குவிப்பால் காட்டினர். அவள் மைந்தரற்றவள் என்றே இளையோரிடம் அறியப்பட்டாள்.
ஆனால் தன் பன்னிரு வயதில் அவள் முதல் மகவை ஈன்றாள் என்றாள் முதுஜரை. அன்று அவள் குனிந்துநோக்கவேண்டிய சிற்றுரு கொண்டிருந்தாள். இருகைகளையும் மண்ணிலூன்றி விரைபவளாதலால் முயல்களைச் சுட்டும் கைக்குறியால் அவளை சொன்னார்கள் ஜரர்கள். அவள் கருவுற்றபோது வயிறு பெருகி மண்ணில் இழைந்தது. அதற்குள் எடைமிக்க குழவியொன்று இருப்பதை அறிந்த ஜரைகள் அவளை கல்லைவிழுங்கியவள் என்று பகடியாடினர். அவள் கண்பூத்து நகைத்தாள். தனிமையில் அமர்ந்து தன் வயிற்றை வருடியபடி புன்னகையுடன் விழிமயங்கினாள்.
காலம்முழுத்து கரு வெளிவந்தபோது அவள் புல்வெளியில் கிழங்கு தேடிக்கொண்டிருந்தாள். ஓர் எண்ணமெழுவதுபோல வலி தோன்றியது. அது புன்னகையென்றாவதுபோல உடல் விரிந்தது. இனிய சொல் போல மைந்தன் பிறந்தான். அவள் புல்கீற்றால் தன் வயிற்றுக்கொடியை அறுத்தாள். நெஞ்சோடு சேர்த்து முலையூட்டினாள். ஓடையில் மைந்தனைக் கழுவி முலைகள் மேல் அணைத்தபடி கிழங்குகளும் கனிகளும் கொண்டு குடிதிரும்பினாள்.
கல்லென எடைகொண்டிருந்த மைந்தனை ஜரர்கள் கூடி குரவை எழுப்பி வரவேற்றனர். மண்சாறையும் தேனையும் கலந்து இதழில் வைத்தனர். குடிமூத்தார் தன் கைக்குருதித் துளியொன்றை அவன் நெற்றியில் வைத்து அவனை ஜரன் என்று ஆக்கினார். அன்றிரவு மைந்தனை பாளைமேல் படுக்கச்செய்து ஜரர்கள் சுற்றிலும் கூடி கைதட்டி ஆடினர். அவனை இடக்கையில் தூக்கி வலக்கையில் கோலுடன் பூசகர் வெறியாட்டு கொண்டார். “இம்மைந்தன் நம் குடியின் பெயர் நிற்க வாழ்வான். இறந்து பிறப்பான்! வென்று எழுவான்!” என்று குறியுரைத்தார்.
அன்னை நெஞ்சில் எப்போதும் ஜரன் இருந்தான். அவள் அவனுடன் காட்டுக்குள் சென்று கல்மணியும் கனிகளும் தேடினாள். சிறுதேன் கூட்டைப்பிதுக்கி அவன் சிற்றிதழ்களில் பூசினாள். கனிகளையும் காய்களையும் கசக்கி அவனுக்கு ஊட்டி மண்ணின் ஆறுசுவைகளை அறியச்செய்தாள். விழிகளால் அவன் வானை அறிந்தான். காதுகளால் காட்டை கேட்டான். நாவால் மண்ணையும் மூக்கால் எரியையும் அறிந்தான். உடலால் அன்னையை அறிந்து அவளே பிறநான்கும் என மயங்கினான்.
ஜராவனத்தின் விளிம்பிலிருந்த மலைப்பாறை ஒன்றில் தன் மைந்தனை படுக்கச்செய்து அவன் மேல் காட்டுச்செடிகளை பிடுங்கி வைத்து விழியறியாது மூடி அருகே காவலுக்கொரு கல்லையும் வைத்தபின் ஜரை அருகே ஓடிய சிற்றோடையில் இறங்கி அகழ்ந்தெடுத்த கிழங்குகளை கழுவிக்கொண்டிருந்தாள். அப்போது தரையதிர குதிரைக்குளம்புகள் எழும் ஒலியைக்கேட்டு இயல்பான அசைவுகளுடன் புதர்களில் பதுங்கிக்கொண்டாள். பன்னிரு புரவிகள் வால்சுழற்றி கனைப்பொலி எழுப்பி காட்டுக்குள் இருந்து வெளியே வந்தன.
ஜராவனத்தில் தன் பத்து வேட்டைத்துணைவருடனும் அம்புதாங்கும் அணுக்கனுடனும் காட்டெருது வேட்டைக்குச் சென்றிருந்த மகதமன்னன் விருஹத்ரதன் தன் வேட்டைத்துணைவருடன் வந்தான். அவர்கள் துரத்திவந்த மான் துள்ளி மலைப்பாறை ஒன்றை கடந்தது. விருஹத்ரதன் புதருக்குள் அந்த மானின் அசைவை கண்டான். தன் தோளிலிருந்து பிறையம்பை எடுத்து எய்து அதன் தலையை துணித்தான். இலைகளில் குருதி தெறிக்க மான் இறந்தது.
புரவியை உந்திச்செலுத்தி அப்பாறையை அணுகி இறங்கி நோக்கியபோது அங்கே இலைகளால் மறைக்கப்பட்ட இளமைந்தன் ஒருவன் தலைமுதல் இடைவரை நெடுக்குவாட்டாக இரண்டாகப் பிளக்கப்பட்டு குருதியில் துடிப்பதைக் கண்டான். அதன் வலப்பாதி ஒற்றைக்கையையும் ஒற்றைக்காலையும் ஊன்றி துள்ளித்துள்ளி விலகியது. இடப்பாதி பாறைப்பரப்பை ஒற்றைக்கையால் அள்ளிப்பற்றி குதிகாலால் உந்தி எழமுயன்றது. இருபகுதிகளிலும் ஒற்றைவிழிகள் திகைத்து நோக்கி அதிர்ந்தன.
திகைத்து நின்ற அரசனை அணுகிய படைத்தலைவன் “இக்காட்டில் வாழும் அரக்கர்களின் குழவி இது. இவர்களை எப்படியாயினும் நாம் களத்தில் கொல்லத்தான் வேண்டும். ஆலமரத்தை விதையிலேயே வெட்டியதுபோன்றதே இது” என்றான். அணுக்கனும் சிற்றமைச்சனுமாகிய பத்மன் “மானுடரெனில் இப்படி இருபிளவாகியும் உயிர் எஞ்சுமா? அரக்கரைக் கொல்லுதல் அரசரின் கடமையே. துயருறவேண்டாம்” என்றான். அவர்கள் அரசனை மேலும்மேலும் சொல்லடுக்கி சிந்தை அமையச்செய்து அழைத்துச்சென்றனர்.
ஓசையில்லாது அலறியபடி ஓடிவந்த ஜரை தன் மைந்தனின் இரு துண்டுகளை அள்ளி கையில் எடுத்தாள். அவள் கையிலிருந்து அவை இறுதித்துடிப்பில் துள்ளின. அவற்றை ஒன்றாகச்சேர்த்து இணைத்து இறுகப்பற்றிக்கொண்டாள். நெஞ்சோடணைத்து உரக்க அலறினாள். அவள் உடலில் ஒட்டி அவை மெல்ல அடங்கின.
அந்த உடல்பகுதிகளை காட்டுக்கொடிகளால் ஒன்றாகச்சேர்த்துக் கட்டியபடி அவள் குடிமீண்டாள். பித்துகொண்டவளாக அலறிக்கொண்டிருந்த அவள் தலையை தடியால் அடித்து மயங்கச்செய்தார் குடிப்பூசகர். அவள் கையிலிருந்த உடல்பகுதிகளை கொண்டுசென்று இறந்தவர்களை வீசும் மலைப்பிளவில் இட்டார்கள். இரவெல்லாம் அவள் முனகியழுதபடியும் கனவில் தன் மைந்தனைக் கண்டு மலர்ந்து சிரித்தபடியும் புரண்டுகொண்டிருந்தாள். காலை எழுந்தபோது அவள் கண்கள் அணங்கு கொண்டிருந்தன.
அவள் தன்னுள் ஏதோ பேசியபடி ஓடிச்சென்று அருகே கிடந்த இரு கற்களை எடுத்து சேர்த்துவைத்தாள். கையருகே வந்த அனைத்தையும் எடுத்து சேர்த்துக் கட்டினாள். அவளுக்கு அணங்குஎழுந்தது என்று பூசகர் வெறியாட்டு கொண்டார். உடுக்கு கொட்டி கோல்சுழற்றி ஆடி மலரில் தொட்ட குருதித்துளிகளை எட்டுதிக்குகளுக்கும் வீசி தெய்வங்களை நிறைவுசெய்தார். உருளைக்கல்லை குருதியில் முக்கி மண்ணில் புதைத்து அணங்கை ஆழுலகுக்கு திருப்பினார். ஆனால் அவளில் நுழைந்த தெய்வம் இறங்கவில்லை. அவள் மீண்டு வரவேயில்லை.
அவளைப் பார்த்தபடி தலைமுறைகள் பிறந்து இறந்து பிறந்து வந்தன. அவள் உடல்வற்றி முதுமகளானாள். அவளை முதுமகளாகக் கண்ட குழந்தைகளும் முதுமகள்களானார்கள். அவள் குடிநீங்கி காட்டுக்குள் அலைந்தாள். காடெங்கும் சேர்த்துவைக்கப்பட்ட கற்களையும் சுள்ளிகளையும் முட்டைகளையும் கண்டு அவளை அவர்கள் அறிந்தனர். எப்போதேனும் புதர்களுக்குள் இருந்து செதில்படிந்த தோலும், முடியுதிர்ந்த கொப்பரைத் தலையும், பற்களில்லாத கரிய வாயும் நிலம் தொடக் குனிந்த உடலுமாக அவள் எதிர்பட்டபோது கைகூப்பி விலகி நின்றனர். அவள் மானுடரையும் விலங்குகளையும் மரங்களையும் பாறைகளையும் ஒன்றென்றே எண்ணும் விழிகள் கொண்டிருந்தாள்.
ஜராவனம் முழுக்க பல்லாயிரம் இணைக்கற்கள் இருந்தன. அக்காட்டின் அத்தனை கற்களையும் இணையென ஆக்கியபின்னரே அவள் உயிர்மீள்வாள் என்று வெறிகொண்டாடிய பூசகன் சொன்னான். “ஒருநாள் விண்ணேகி சூரியனையும் சந்திரனையும் அவள் இணைப்பாள்” என்று அவன் சொன்னபோது அவள் குலம் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பியது.
நூறாண்டுகளுக்கொருமுறை அன்னை வரமாதா மானுடவடிவு கொண்டு எழுவாள் என்றனர் பூசகர். அவளை வாழும் வரமாதா என்று வணங்கினர். குடியில் மைந்தர் பிறக்கையில் கொண்டுசென்று காட்டில் அவள் காலடிகளை தேடிச்சென்று அவள் இறுதியாக இணைத்த கற்களின் அருகே படுக்கவைத்து தொழுதனர். அங்கே அவளுக்கு உணவும் மலரும் படைத்து மீண்டனர்.
அன்றொருநாள் இரவெல்லாம் துயிலாது காட்டுக்குள் அலைந்துகொண்டிருந்த அன்னை ஜரை அவள் சித்தம் செலுத்திய வழி என காட்டு எல்லையில் அமைந்த சிறுபாறையருகே வந்தாள். இருள் வழிந்து இலைகள் தெளியும் முதற்காலையில் புதர்களுக்குள் இருந்து கையூன்றி தவழ்ந்து வெளிவந்தபோது அவளருகே அவளைப்போலவே மண்ணுடன் வயிறொட்ட கால்பரப்பி தவழ்ந்துசென்றது ஒரு சிறுத்தை. அவளுக்கு முன்னரே அது பாய்ந்துசென்று அங்கே சிறுபாறைமேல் கிடந்த இரு குழவிகளையும் கவ்விக்கொண்டது.
கைகளை ஓங்கி மண்ணிலறைந்து ஜரை பிளிறினாள். அவ்வொலி கேட்டு சிறுத்தை திகைத்து நின்றது. அவள் இருகைகளையும் கால்களையும் ஊன்றி அதன் மேல் பாய்ந்து தன் கையிலிருந்த கூரிய எலும்புக்கத்தியால் அதன் வலக்கண்ணை குத்தினாள். வலியுடன் உறுமியபடி அது தன் வலக்கையால் அவள் விலாவை அறைந்தது. அன்னை அதை புரட்டித்தள்ளி அதன் மேல் ஏறி அதன் வாய்க்குள் குத்தினாள். குருதிகக்கியபடி அது துள்ளி எழுந்து ஓலமிட்டபடி பாய்ந்து புதர்களைக் கடந்து ஓடையைத்தாண்டி காட்டுக்குள் தாவிச்சென்றது.
அன்னை குழவியரை எடுத்து ஒன்றுடன் ஒன்று சேர்த்துவைத்தாள். புலியின் பல்பட்ட வலப்பக்கக் குழவி குருதிவழிய துடித்து இறந்துகொண்டிருந்தது. அதன் ஒற்றைக்கையும் காலும் இழுத்து அதிர்ந்தன. நெஞ்சில் ஆழப்பதிந்த சிறுத்தைப்பல்லின் புண்ணிலிருந்து சிறிய குமிழிகளுடன் புதுக்குருதி எழுந்தது. ஒற்றைக்கையையும் காலையும் அசைத்து உள்தவித்து நெளிந்துகொண்டிருந்த இடப்பாதியின் உதடுகளில் அக்குருதி பட்டதும் அது உயிர்விசை கொண்டு கால்களை உந்திச் சரிந்து இதழ்குவித்து அக்குருதியை உறிஞ்சி உண்டது.
அன்னை அக்குழவிகளை சேர்த்துக்கட்டினாள். அவற்றை அள்ளி வலக்கையால் நெஞ்சோடணைத்தபடி நின்றபோது அவள் உடலுக்குள் நாகம் ஒன்று புகுந்து படமெடுப்பதுபோன்ற இறுக்கம் ஏற்பட்டது. தலைதூக்கி விண்ணை நோக்கி அண்ணாந்து நெஞ்சில் இடக்கையால் ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். கால்களை ஓங்கி நிலத்தில் அறைந்து தாண்டவமாடினாள். களிக்கூவலுடன் புதர்கள் மேல் பாய்ந்து காட்டுக்குள் ஓடினாள்.
உவகை எழுந்த உடலுடன் அவள் தன் குடியை அடைந்தபோது இடப்பக்கக் குழவியால் குருதி உண்ணப்பட்டு வலப்பக்கக்குழவி உயிரிழந்திருந்தது. அன்னை நெடுநாட்களுக்கு முன் அக்குடியிலிருந்து இடையில் குழந்தையுடன் சென்ற சிறுமியாக சிரிப்பாலும் உடலசைவாலும் இளமை மீண்டிருந்தாள். “பசித்திருந்தான். உணவூட்டிக்கொண்டே வந்தேன்” என்று அவள் சிறுமியின் குரலில் சொன்னாள். “உண்டு நிறைந்து துயில்கிறான். அவனைக் கிடத்தும் இலைமஞ்சம் எங்கே தோழியரே?” அக்குழவிகளை அசைத்தபடி மென்குரலில் தாலோலித்தாள்.
அவளை ஒருநோக்குகூட கண்டிராதவர்கள் அங்கிருந்த அவள் குடியினர். கதைகளாக மட்டுமே அறிந்திருந்தவர்கள். வரமாதா நேரில் எழுந்ததைக் கண்டதுபோல் அவர்கள் மெய்ப்புகொண்டு கைகூப்பினர்.
[ 9 ]
ஜரையன்னையின் இளையமைந்தன் அவன் குடியினரால் பாதியுடல்கொண்டவன் என்றழைக்கப்பட்டான். சுட்டுவிரலில் பாதியை கட்டைவிரலால் தொட்டு அவனை அவர்கள் குறிப்பிட்டனர். குழவியென அவன் குடிக்கு வந்தபோது தன் உடன்பிறந்தானின் உடலை ஒட்டி ஒற்றைக்கையால் கவ்வி அவன் புண்ணில் வாய்பொருத்தி உறிஞ்சிக்கொண்டிருந்தான். வாயிலும் மார்பிலும் செங்குருதி வழிந்தது. அவன் புலிக்குருளை போன்றவன் என்று முதுஜரை ஒருத்தி சொன்னாள். அவனை அவர்கள் அஞ்சினர். ஜரர்களில் எவருமே அவனை தங்கள் கைகளால் தொடவில்லை.
இரவெல்லாம் தன் உடன்பிறந்தவனை கவ்வி உறிஞ்சிக்கொண்டிருந்தான் பாதியுடல் கொண்டவன். இறந்த உடல் வீங்கி குருதியுறைந்தபோது கையால் நிலத்தை அறைந்து அறைந்து கூச்சலிடத் தொடங்கினான். அவன்அழுகை புலிக்குருளையின் குரல்போலிருந்தது. அவன் பசியைக்கண்டு அன்னை ஜரை தன் முலைக்காம்பை அவன் வாயில் வைத்தாள். முலையூறாமை கண்டு ஜரகுடியில் புதுமகவீன்று முலைபெருகிக்கொண்டிருந்த அன்னையொருத்தி அவனை அள்ளி தன் முலைக்காம்பை அளித்தாள். பாலின் சுவை அவனுக்கு உவக்கவில்லை.
ஜரர்குடியின் முதுமருத்துவச்சி குழந்தையை அகலே நின்று நோக்கிவிட்டு “அவனுக்கு குருதியையே கொடுப்போம். அவனுக்கு இனி முலைப்பாலில் சுவையிருக்காது” என்றாள். ஜரை உடனே தன் விரல்நுனியை வெட்டி பெருகிய குருதியை அவன் வாயில் வைத்தாள். ஓசையடங்கி பாய்ந்து அவ்விரலை கவ்வி உறிஞ்சத்தொடங்கினான். அவன் கடைவாயில் செங்குருதி நுரையெழ சப்பி உண்ணும் ஒலி அக்குடிலில் நிறைந்த அமைதியில் ஒலித்தது. விழிகள் தெறித்து நிற்க ஜரர்குலத்து அன்னையர் அவனை நோக்கி நின்றனர்.
குருதி ஊறி தன் உடல்விட்டு வழிந்தோட ஜரை விழிசொக்கி உடல் தளர்ந்து அவனருகே படுத்தாள். அவள் கைகால்கள் வெம்மைகொண்டு உடலில் இருந்து பிரிந்தவைபோலாகி மண்ணில் பதிந்தன. வாய் உலர்ந்து நெஞ்சக்குழியின் துடிப்பு மென்மையாகியது. இனிய கனவுகளில் அவள் பெருநகர் ஒன்றின் அரசவீதியில் பட்டத்துயானைமேல் வைரமுடியும் பொற்கவசமும் அணிந்து தோளில் கதைப்படை ஏந்தி அமrந்து செல்லும் பேருடலன் ஒருவனை கனவுகண்டாள். அங்கே ஒரு சிறுதூண் மறைவில் நின்று அவள் அவன் தோள்கண்டு காமம் கொண்டாள். தூணை இருகைகளால் அணைத்து விழிசொக்கினாள். அவள் உடல் சொடுக்கிக்கொண்டது.
தன்னுணர்வடைந்தபோது தன் நெஞ்சும் தோளும் குளிர வியர்வை வழிந்துகொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவள் ஆடைகள் கொழுங்குருதியால் நனைந்திருந்தன. மீண்டும் விழித்தெழுந்த மைந்தன் குருதிதேடி கூச்சலிட்டான். அதற்குள் காட்டுக்கு ஓடியிருந்த அக்குடி அன்னையர் முயல் ஒன்றை பொறிவைத்துப்பிடித்து கொண்டுவந்து அதன் குருதிநாளத்தை மெல்ல வெட்டி அவன் வாயில் பொருத்தினர். முலையுறிஞ்சுவதுபோல அவன் முயலை உண்டான். வயிறுநிறைந்ததும் வல்லமைகொண்ட ஒற்றைக்கையால் முயலை இறுகப் பற்றியபடி துயிலில் ஆழ்ந்தான்.
“இவன் மானுடன் அல்ல. பாதாள உலகங்களில் இருந்து வந்த தெய்வம்” என்றார் பூசகர். “நன்றோ அன்றோ நம்மை இவன் தேடிவந்துள்ளான். நம்முடன் இவன் வளரட்டும்.” ஜரை தன் மைந்தனன்றி பிற எண்ணமேதும் இல்லாதவளானாள். அவளுடலின் வெம்மையில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்தான் பாதியுடலன். முயலைப்பிடித்து கால்களை கைகளால் பற்றிக்கொண்டு குருதிக்குழாய் கிழித்து தன் முலைநடுவே வைத்து அவனுக்கு ஊட்டினாள்.
“உன் குருதியை அவனுக்கு அளிக்காதே. அச்சுவை அறிந்தால் பின் அவன் எதையும் உண்ணமாட்டான்” என்றனர் மருத்துவச்சிகள். ஆனால் எவருமிலாதபோது அவள் தன் கைவிரலை நுனிவெட்டி அவன் வாயில் வைத்து உண்ணக்கொடுத்தாள். விழிசொக்கி உடல் தளர்ந்து மெல்ல மீட்டப்பட்டு உச்சம் கொண்டு பின் ஒரு கனவில் அவள் விழித்தெழும் உலகிலேயே அவள் உண்மையில் வாழ்ந்துகொண்டிருந்தாள்.
சுவைகண்டபின் அவன் பசித்தால் அவள் உடலையே கடித்து குருதியுண்ணலாலான். அவனுக்கு குருதியூட்டுவதற்காகவே அவள் பெரும்பசிகொண்டாள். காட்டுவிலங்குகளைப் பிடித்து குருதிவெம்மையுடன் கிழித்து உண்டாள். குடிவிட்டு நீங்கி இரவும் பகலும் காட்டுக்குள் உணவுதேடி அலைந்தாள். உண்பதும் மைந்தனுக்கு குருதி கொடுத்தபடி துயில்வதுமே அவள் வாழ்க்கை என்றாயிற்று. அவள் வறுந்தலைப்பரப்பில் புதிய கூந்தல் எழுந்தது. ஈறு சுருங்கிய வாயில் ஒளிகொண்ட பற்கள் முளைத்தன. சிப்பிகள் போல் நகங்கள் கொண்டாள். நீர் நிறையும் சவ்வுப்பை தோற்சுருக்கங்கள் விரிந்து உடல் மெருகடைந்தது. அவள் நாளும் இளமை கொள்வதாக ஜரர் சொன்னார்கள்.
குருதியுண்டு அவள் மைந்தன் வளர்ந்தான். எந்நேரமும் அவன் உடல்மூடியிருந்த குருதியை அவள் துடைப்பதில்லை. எனவே அவன் உலர்ந்த குருதியின் கரும்பசை மூடி ஈயும் எறும்பும் மொய்க்க மண்ணிn ஆழத்திலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அவள் உடலில் அவன் பல்பட்ட புண்கள் நோக்கற்ற விழிகள் போல திறந்திருந்தன. எப்போதும் புதுப்புண்ணில் குருதி வழிந்தது. ஆனால் அவள் முகம் தெய்வங்களுக்குரிய மலர்வுடன், விழிகள் பெரும்பித்துடன் தோன்றின. அவளைப் பார்ப்பவர்கள் “வரமாதா!” என்று கூறி கைதொழுதனர்.
மூன்றாவதுமாதம் முதல் குழந்தையின் வலப்பக்கம் மெல்லப்பருத்து வளரத்தொடங்கியது. வலது தோள்முனையில் சிறிய தசைமொட்டாக அசைந்துகொண்டிருந்த குறுங்கை நீண்டு எழுந்து அதன் முடிவில் வாழைப்பூவின் உள்வருக்கை போல சிறிய விரல்கள் எழுந்தன. அவன் வலதுகாலும் வளரத்தொடங்கியது. ஓராண்டிலேயே அவன் உடல் இருபக்கமும் நிகரென ஆகியது. ஈராண்டில் அவன் எழுந்து நின்று இருகைகளையும் விரித்து புலிபோல் ஒலியெழுப்பி மேலும் குருதி கோரினான். அன்னை அவனை அழைத்துச்சென்று புதர்களுக்குள் மேயும் காட்டெருதின் கழுத்தில் சிறிய கீறலிட்டு அதன்மேல் அவனை பற்றிக்கொள்ளச்செய்தாள். திகைத்துத் துள்ளி கனைத்து கொம்புகுலுக்கி சுரைமாந்தி காட்டுக்குள் ஓடும் எருதின் கழுத்தில் வல்லமை கொண்ட கைகளால் இறுகப்பற்றியபடி இளையஜரன் தொங்கிக்கிடந்தான்.
நாளெல்லாம் எருதுக்கள் மேலேயே அவன் இருந்தான். மேலும் உடல் வல்லமைகொண்டபோது முயல்களையும் மான்களையும் துரத்திச்சென்று வெறும் கைகளால் பற்றி கிழித்து உண்ணத் தொடங்கினான். ஜரர்களின் குறுகி வெளிறிச் சுருங்கிய உடலுக்கு மாறாக ஓங்கிப்பருத்த பேருடலும், நெய்மின்னும் தோலும் கொண்டிருந்தான். அவன் சிறிய விழிகளில் அவர்கள் அனைவரையும் அஞ்சவைத்த ஒளி ஒன்றிருந்தது. அவன் உடல் இறுகிப்பெருகிய பின்னரும் நாவில் மொழியெழவில்லை. ஏனென்றால் அவன் அன்னை அவனிடம் மொழியால் பேசவில்லை. விலங்குகள் அறியும் உறுமலும் சீறலும் கூவலும் குழறலுமே அவன் உரையாட்டாக இருந்தன.
ஒவ்வொருநாளும் என அவன் வளர்ந்துகொண்டிருந்தான். எருதின் திமில் போன்றிருந்தன அவன் தோள்புடைப்புகள். எருதுவிழிகளின் கன்மதம் அவன் விழிகளில் இருந்தது. எருதின் மதர்த்த நடை அவனில் கூடியது. அவர்கள் அவனை, கையின் நான்கு விரல்களைக் குவித்து, கட்டைவிரலையும் சிறுவிரலையும் கொம்புகளாக்கி, எருது என்று சுட்டத் தொடங்கினர். அவன் அன்னை அவனுக்கு தலையில் எருதின் கொம்புகளை கட்டிவைத்து அணிசெய்யும் வழக்கம் கொண்டிருந்தாள். அதுவே அவன் முகமென்று அவனும் எண்ணினான். அவர்கள் அவனை எருதன் என்றழைத்தனர்.
ஜரர்குடியின் சிறுமியர் அவனை தங்கள் கனவுகளில் கண்டதும் நாணினர். சிறுவர் கைகள் முறுக்கி பல்லிறுக்கி முனகினர். அவன் ஜரகுடியின் காவலன் என்று பூசகர் வெறியாடி எழுந்து குறியுரை சொன்னார். இரவின் தொடக்கத்தில் எப்போதாவது குருதியின் பச்சைநெடி வீசும்போது ஜரர்கள் அவன் வருவதை உணர்ந்தனர். அவர்களின் மைந்தர் கூச்சலிட்டபடி அவனை நோக்கி ஓடிச்சென்று வரவேற்றனர். அவனைச்சூழ்ந்து நின்று குழவிகள் கொண்டாட்டமிட்டன.
அவன் கொன்று தூக்கிவந்த காட்டெருதையோ எருமையையோ அவர்களுக்கு அளித்தான். அதை அவர்கள் அனல்காட்டிச் சுட்டு பகுத்து சூழ அமர்ந்து ஊண்களியாட்டு கொண்டபோது அவர்களுடன் அமர்ந்து உணவுண்டான். இரவெல்லாம் அவர்களுடன் கோல் சுழற்றி தாளக்கால் வைத்து தோள்சுழற்றி வெறிநடனமிட்டான். அனைவரும் துயின்றபின் இரவுக்காற்று விடியலில் என அவர்கள் எவரும் அறியாது மறைந்தான். அவன் சென்றபின்னரும் அங்கே எஞ்சிய பசுங்குருதி மணத்தை அவர்கள் உணர்ந்தனர்.
பெருஞ்சாலைச் சந்தையில் ஜரர்கள் விற்ற அருமணிகளை அவர்கள் மேலும் சேர்த்து வைத்திருக்கக்கூடும் என்று எண்ணிய புறநாட்டுக் கள்வர்குழு ஒன்று வேல்களும் வில்லம்புகளுமாக குதிரைகளில் ஜராவனத்திற்கு வந்தது. காட்டின் எல்லைக்கு வந்து அங்கு அவர்களை நோக்கி கல்மணியுடன் வந்த சிறுவனொருவனைப் பிடித்து அவன் கைகால்களைக் கட்டி புரவியில் தூக்கிக்கொண்டனர். அவனை வேல்முனையில் அச்சுறுத்தி ஜரர்களின் குடிலைக் காட்ட ஆணையிட்டனர். சிறுவன் வழிகாட்ட அடர்காட்டில் ஜரர்கள் வாழ்ந்த மண்துளைகளை கண்டடைந்தனர்.
புரவிகள் இலைத்தழைப்பை ஊடுருவி வருவதை ஜரர்கள் கண்டனர். அவர்கள் அதை எண்ணியிருக்கவில்லை என்பதனால் செயலற்று நிலத்தோடு முகமும் மார்பும் சேர்த்து படுத்துக்கொண்டு கண்மூடினர். பெண்கள் மைந்தரை நெஞ்சோடணைத்தபடி வளைகளுக்குள் சுருண்டனர். ஜரர் மானுடரிடம் போரிட்டு அறியாதவர். அதற்குரிய படைக்கலங்களும் அவர்களிடமிருக்கவில்லை. “தெய்வங்களே! மூதாதையரே” என முனகியபடி அவர்கள் மேலும் மேலும் மண்ணுடன் ஒட்டிக்கொண்டனர்.
கள்வர் அச்சிறுவனை தலைகொய்து வீசிவிட்டு அவர்கள் குலமூத்தவர்களை பிடித்து கைகள் சேர்த்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு சவுக்கால் அடித்து கல்மணிகள் இருக்குமிடத்தை காட்டும்படி கோரினர். கள்வரின் மொழியறிந்த ஜரகுலத்தவர் சந்தைக்குச் சென்றிருந்தனர். அஞ்சி நடுங்கிய மூத்தாரும் பெண்டிரும் மொழியை உள்விழுங்கி கண்ணீர் வார நின்று பதைத்தனர். சவுக்காலடித்தும் வேலால் கிழித்தும் சொல்லும்படி கேட்டு அச்சுறுத்திய கள்வர் சினம் மூத்து ஏழு மூத்த ஜரர்களை தலைவெட்டி வீழ்த்தினர்.
தலையறுந்த உடல்கள் மண் துளைத்து உட்புக முயல்பவை போல கைவிரித்து குருதிக்குழம்பில் கிடந்து உளைந்தன. விழித்த கண்களுடன், அடிப்பற்கள் தெரிய, குருதியூறிய குழல்சுருட்கள் மண்ணிலிழைபட, தலைகள் புழுதியில் உருண்டு கிடந்தன. ஜரர்கள் உருவான நாளிலிருந்து அவ்வண்ணம் ஒரு கொலையாட்டு நடந்ததில்லை. பிறந்ததுமே முதுமைகொள்ளும் அவர்களை பிறர் மூதாதையர் வடிவென்றே எண்ணினர். உடல்வலுவோ விழிக்கூரோ அற்ற அவர்களை அனைவரும் பரிவுடனே நடத்திவந்தனர். இறப்பின் உறைவுக்கு அப்பால் அவ்விழிகளில் இருந்தது மூதாதையரின் திகைப்பு.
மண்குழிக்குள் ஆழத்தில் மைந்தரைத் தழுவி ஒடுங்கியிருந்த ஜரை ஒருத்தி அலறியபடி வெளியே ஓடிவந்து அவ்வுடல் ஒன்றை இரு கைகளாலும் அள்ளிக்கொண்டாள். தொடர்ந்து அத்தனை வளைகளிலிருந்தும் ஜரைகளும் இளமைந்தர்களும் வெளியே ஓடிவந்தனர். அத்தனை சிறிய வளைகளுக்குள் மானுடர் வாழமுடியுமென எண்ணாத கள்வர் முதலில் திகைத்து பின் களிப்புகொண்டு பெருங்குரலில் நகைத்தபடி அவர்களின் கூந்தலைப்பற்றி சுழற்றி இழுத்து மண்ணிலிட்டு வேல்முனையால் அடித்தனர்.
அவ்வோசை கேட்டு காட்டெருதின் கொம்புகள் கொண்ட ஒருவன் மரக்கிளைகள் வழியாக அவர்களுக்கு நடுவே வந்து குதித்தான். அங்கே அத்தனைபெருந்தோள் கொண்ட இளையவனை எதிர்பாராத கள்வர் திகைத்தனர். தலைவன் அவனை கொல்லும்படி ஆணையிட வேலுடன் பாய்ந்த மூவரை விழிதொடா விரைவுடன் அவன் கழுத்துமுறித்து தூக்கி வீசினான். ஒடிந்த தலைகளுக்கு கீழே கிடந்து காலுதைத்து அரைவட்டம் சுற்றின கள்வர் உடல்கள். அவர்களின் வேல்களை இரு கைகளாலும் பிடுங்கிச்சுழற்றி அவர்களை தாக்கினான் எருதன். அச்சமென்பதை அறியாதவனை வெல்ல படைக்கலங்களால் இயலாதென்று அவர்கள் அறிவதற்குள்ளாகவே கள்வர் பன்னிருவரும் வீழ்த்தப்பட்டனர்.
அவர்கள் சிதறிப்பரந்த அம்மன்றில் அவன் குனிந்தமர்ந்து அவர்களின் தலைவனின் வெட்டுண்ட கழுத்தில் பீரிட்ட குருதியை ஓசையெழ உறிஞ்சிக்குடித்தான். அப்போதும் உயிரிழந்திராத கள்வர் தலைவன் பேரச்சத்துடன் விழிகள் பிதுங்கித்தெறிக்க விந்தை ஒலி எழுப்பி கூச்சலிட்டு காலால் மண்ணை உதைத்து விலகிச்செல்ல முயன்றான். அவன் குருதி உண்ணப்படும்தோறும் மெல்ல உடல்தளர்ந்து விழிமயங்கி வியர்வைகொண்டு பின் குளிர்ந்தான். எருதன் எழுந்தபோது இறக்காது துடித்துக்கொண்டிருந்த கள்வர்கள் அலறியபடி கண்களை மூடிக்கொண்டு நடுங்கினர். அவன் குடியினர் கைகளை மேலே தூக்கி குரவையிட்டு அவனை வாழ்த்தினர்.
அன்றுமுதல் அவன் ஜரர்களின் தெய்வமாக ஆனான். வரமாதாவின் குகைக்குள் சென்ற பூசகன் அங்கே கல்லால் தோண்டி எருதுக்கொம்புகள் கொண்ட தங்கள் காவல்தெய்வத்தின் தோற்றத்தையும் வரைந்திட்டான். அவனைச்சூழ்ந்து அவன் குருதியுண்டு உதிர்த்த சடலங்கள் கிடந்தன. அவனுக்கும் அவர்கள் ஊனும் கள்ளும் கொண்டுசென்று படைத்து பூசையிட்டனர். இருகற்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்துவைத்து அவனை வணங்கவேண்டும் என்றனர் இறையாட்டு எழுந்த பூசகர். காட்டில் மணிபொறுக்கவோ உணவுசேர்க்கவோ செல்லும்போது அவர்கள் அங்கே கிழக்குமூலையில் இரு கற்களைச் சேர்த்து வைத்து வணங்கிவிட்டுத் தொடங்கும் வழக்கம் உருவானது. அக்கற்களுக்கு அடியில் சருகுப்பரப்புக்குக் கீழே தொன்மையான இணைக்கற்கள் பாசியும் சேறும் மூடி மறைந்துகிடந்தன.
வரமாதா குகையோவியத்தில் எருதனின் இடக்கை வலக்கையை விட இருமடங்கு பெரியதாக வரையப்பட்டிருந்தது. ஏனென்றால் எருதனின் இரு கைகளும் கால்களும் பார்வைக்கு நிகரானவை என்றாலும் அவற்றில் இடக்கையே வல்லமை கொண்டது என அவர்கள் அறிந்திருந்தனர். கிளைகளிலும் கொடிகளிலும் அவன் இடதுகையாலேயே தாவிச்சென்றான். பாறைகளை எடுத்து அறைந்து எருதுகளைக் கொன்று ஊன் கொள்கையிலும் இடக்கையையே பயன்படுத்தினான். இடக்கை எழுந்திருக்க வலம்சரிந்தே துயின்றான். அவன் இடப்பக்கம் தெய்வங்களுக்குரியதென்றும் வலப்பக்கம் மானுடருக்குரியதென்றும் சொன்னார்கள் குலப்பாடகர்.
கள்வரை அவன் கொன்ற செய்தியை அவன் அன்னை ஜரை அறியவில்லை. பலநாட்களாகவே அவள் காட்டுக்குள் அவன் அமைத்த மரப்பொந்தில் சருகுமெத்தைமேல் நோயுற்றுக்கிடந்தாள். எங்கிருக்கிறோம் என்னும் உணர்வையே முற்றும் இழந்து, நினைவுகளின் களிகூர்ந்து முகம் மலர்ந்திருக்க, இதழசைத்து ஒலியில்லாமல் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். தன் கையில் இரு வெண்கற்களை இணைசேர்த்து நெஞ்சுடன் அணைத்திருந்தாள். காய்ச்சல் கண்ட உடல் சிவந்து சுருங்கியிருந்தது. அவ்வபோது அவள் சிரிக்கும் ஒலி கேட்டு அருகே அமர்ந்திருந்த எருதன் எழுந்து அவளுக்கு நீரோ கனியோ சோரியோ அளித்தான். இதழ்வழிய அதைப்பருகியபோதும் அவள் அவனை அடையாளம் காணவில்லை.
நாற்பத்தொன்றாம் நாள் ஜரர்குலப் பூசகர் பன்னிருவருடன் அவனைத்தேடி வந்தார். காட்டுக்கு வெளியே வீசப்பட்ட பன்னிருகள்வர்களின் தலையோடுகளை எடுத்து மரத்தாலத்தில் மலருடன் வைத்துக்கொண்டு வந்திருந்தார். அவற்றை அவன் கைதொட்டு வாழ்த்தியபின் தங்கள் குடித்தெய்வம் வாழும் குகைக்குள் பலித்தெய்வங்களாக நிறுவி கொடையளிக்கவேண்டும் என்று அவருள் கூடிய மூதாதையர் அருளுரைத்திருந்தனர். அவன் அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றான். பூசகரும் குலத்தவரும் அவன் முன் நெற்றி நிலம்தொட வணங்கி அந்த எலும்புக்கலங்களை தன் கைகளால் தொட்டு வாழ்த்தவேண்டும் என கோரினர்.
அவன் அவற்றைத் தொட்டு வாழ்த்தி மலர்கொள்ளும்போது மரக்குகைக்குள் இருந்து எழுந்து கையூன்றி வெளியே வந்த ஜரை கைநீட்டி உரக்கக் கூச்சலிட்டாள். அவன் திரும்பி அவளை நோக்கி ஓட அவள் உடல் நடுங்கி அதிர கைகள் அலைபாய மேலும் மேலும் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தாள். “அவள் அஞ்சுகிறாள்” என்றான் பூசகன். ஆனால் அன்னை அச்சமற்றவள் என்பதை எருதன் அறிந்திருந்தான். “அன்னையே அன்னையே” என்று அவன் அழைத்தான். அவன் பேசுபவன் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிந்தனர்.
“பன்னிரு தலைகள்... பன்னிருவர்!” என்று அவள் குழறினாள். “என்னை அங்கே கொண்டுசெல்... அங்கேதான் உன்னை அவர்கள் இரண்டாகப் பிளந்தனர்.” அவன் அன்னையின் தலையை தாங்கி “எங்கே?” என்றான். “அந்த எல்லைப்பாறையில். ஓடைக்கு அருகே” என்றாள் ஜரை. “நாங்கள் அறிவோம் அந்த இடத்தை” என்றார் பூசகர். அவன் அவளை தூக்கிக்கொண்டான். காட்டைக் கடந்து அப்பாறையை அடைந்தார்கள். செல்லும் வழியெல்லாம் பொருளற்ற சொற்களால் அரற்றியபடியே வந்தாள். நடுவே விம்மியழுதாள். ஊடாக சற்று மயங்கினாள்.
அப்பாறையை தொலைவில்கண்டதுமே நெஞ்சிலறைந்து வீரிட்டலறத்தொடங்கினாள் அன்னை. அவள் ஒருமுறையேனும் அங்குவந்ததில்லை என்பதை அப்போதுதான் எருதனும் பிறரும் உணர்ந்தனர். கைநீட்டி “அங்கே! அங்கே! அங்கே!” என்று கூச்சலிட்டாள். அவன் கைகளிலிருந்து இறங்கி ஓடவிழைபவள் போல துள்ளினாள். அவளை அங்கே கொண்டுசென்று இறக்கியதும் தவழ்ந்து சென்று அந்தப்பாறையை அடைந்து அதை தன் இரு கைகளால் அணைத்தபடி கதறியழுதாள். திரும்பி “இங்குதான் உன்னை இரண்டாகப்பிளந்தார்கள். என் மூதாதையே! என் குருதியே! உன்னை நெடுகப்பிளந்தார்கள்” என்று அலறியபடி நெஞ்சை உடைத்துவிட விழைபவள் போல ஓங்கி ஓங்கி அறைந்தாள்.
பின்பு மயங்கி அங்கேயே விழுந்து கிடந்தாள். அவள் உடலில் இருந்து விழிநீர் வழிந்தோடிக்கொண்டே இருக்க நெஞ்சு விம்மியதிர்ந்தது. பின்பு விழித்தபோது அவள் விழிகள் தெளிந்திருந்தன. அவள் அவர்களை அங்கே அப்போது வந்திறங்கிய ஒருத்தியைப்போல நோக்கினாள். “ஜரையின் மைந்தா, அதோ அந்த சிறிய பாறையை தூக்கிப்பார்” என்றாள். அவன் அதை ஓடிச்சென்று தூக்கிப்பார்த்தான். அடியில் வெண்பட்டில் பொதியப்பட்ட நகைகள் இருந்தன. அவை மகதத்தின் இளவரசர்களுக்குரியவை என்பதை நோக்கிய கணமே அவர்கள் அறிந்தனர்.
[ 10 ]
பன்னிரு கள்வருடன் வந்து அப்பால் ஆள்நோக்கி குறியுரைக்கும்பொருட்டு மரக்கிளைக்குமேல் பதுங்கி நின்றிருந்த ஒருவன் மட்டும் அனைத்தையும் பார்த்தபின் தப்பி ஓடினான். செல்லும் வழியெல்லாம் அச்சத்தில் முடிச்சவிழ்ந்த அவன் உடலில் இருந்து நீரும் மலமும் கொட்டின. எல்லைகடந்து சென்று விழுந்த அவன் மீண்டும் எழுந்து முதல் சிற்றூரில் சென்று விழுந்தான். நடந்தவற்றை காய்ச்சல்வெறியுடன் சொல்லிக்கொண்டே இருந்தான். சிற்றூர் மக்கள் வந்து நோக்கியபோது காட்டின் எல்லைக்கு வெளியே முப்பது சடலங்களை கண்டனர்.
பன்னிருநாள் காய்ச்சலில் தான் கண்டதை புலம்பிக்கொண்டே இருந்த அக்கள்வன் சொன்ன சிறுசொற்களிலிருந்து அவர்கள் அனைத்தையும் பொருத்தியறிந்தனர். “குருதியுறிஞ்சிக் குடிப்பவன்! பாதாளதேவன்!” என்று அவன் கூவியபடி விழித்துக்கொண்டான். “இடப்பக்கம்! இடப்பக்கம்!” என்று வெறித்த விழிகளுடன் சொல்லி எழுந்து ஓடப்போனான். “என்ன ஆயிற்று?” என்று அவனை உலுக்கியபோது “ஓடுங்கள். அவனுக்கு குருதி தேவை... அவன் குருதியருந்தி... குருதியை...” என்று சொன்னபடியே மயக்கமானான். வெம்மையிறங்காமலேயே உயிரிழந்தான்.
ஊர்களிலிருந்து ஊர்களுக்கு செய்தி பரவியது. ஜரர்களின் புதிய அரசன் எருதுபோன்ற உடல்கொண்ட இளைஞன் என்று சிறுவர்களுக்கு அன்னையர் கதைசொன்னார்கள். அவன் தெய்வமா, அரக்கனா, கந்தர்வனா என்று சூதர்கள் சொல்லாடினர். அவனைப்பற்றிய வியப்புறு கதைகள் மகதத்தை அடைந்தன. நகர்த்தெருக்களில் நின்று திகைப்புடனும் அச்சத்துடனும் பேசிக்கொண்டனர். “அரசனைவிட வல்லமைகொண்ட ஒருவன் அரசு எல்லைக்குள் வாழலாகாது. காட்டில் சிம்மமே உகிர்கொண்டிருக்கவேண்டும்” என்றனர் குலமூத்தார். “கொல்பவன் ஒருவனே இருக்கவேண்டும். அவன் கோல்கொண்டிருக்கவேண்டும் என்கின்றன நூல்கள்” என்றனர்.
அவர்களின் அச்சம் அவனை வளர்த்தது. பிருஹத்ரதனின் அவையில் எழுந்த எல்லைப்புறச் சிற்றூரின் நயமறியாச் சூதன் “மகதத்தின் மணிமுடி அமர்ந்திருப்பது உபரிசிரவசுவின் மைந்தர் பிருஹத்ரதரின் தலையில். மகதத்தின் வல்லமை மிக்க தலையோ ஒரு காட்டரசனுக்குரியது. தெய்வங்கள் ஆடுவதுதான் என்ன?” என்று பாடினான். அவை திகைத்து அமைதியடைந்தது. பிருஹத்ரதன் தன் அரியணையில் இருபுறமும் தன் நான்கு மைந்தருடனும் அரசியருடனும் அமர்ந்திருந்தார். அவன் வாய்திறப்பதற்குள் முதல்மைந்தன் கிருதி எழுந்து கை தூக்கித் தடுத்து “என்ன பாடுகிறீர்கள்? எங்கு பாடுகிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்லெடுத்தீரா?” என்று கூவினான்.
திகைத்த சூதன் “நான் எனக்கு கற்பிக்கப்பட்டதைத்தான் பாடினேன். இதை நான் யாக்கவில்லை. பெரும்புலவர் சோமரால் இயற்றப்பட்டது இப்பாடல்...” என்றான். “மூடா, ஓர் அவையில் பாடுவதென்ன என்பதை அறியாத உன்னை…” என்று கிருதி கூவுவதற்குள் தலைமைஅமைச்சர் பத்மர் எழுந்து “சூதர் சொல் தெய்வங்கள் வாழும் களம். இளவரசே, அமர்க!” என்றார். கிருதி “ஆனாலும்...” என்று மேலும் ஏதோ சொல்லப்போக “அமருங்கள்.. நான் பேசிக்கொள்கிறேன்” என்று அழுத்தமான குரலில் சொன்னார்.
கிருதி அமர்ந்தபடி “மூடன்” என்று தன் தம்பி பிருகத்புஜனிடம் சொன்னான். அவனுக்கு அப்பால் அமர்ந்திருந்த இளைய தம்பி பிருகத்சீர்ஷன் “இவனுக்கு ஏதோ திட்டமுள்ளது மூத்தவரே. இந்நகரிலிருந்து இவன் உயிருடன் திரும்பலாகாது” என்றான். அவன் தம்பி ஜயசேனன் புன்னகைத்து “அதை நான் முடிவுசெய்துவிட்டேன். சூதரை ஷத்ரியர்தானே கொல்லக்கூடாது? மதுநிலையத்தில் களிமகன் ஒருவன் மயக்கத்தில் குத்திக்கொன்றால் தெய்வங்கள் சினம் கொள்ளாதல்லவா?” என்றான். கிருதி புன்னகைத்தான். பிஹகத்ரதன் திரும்பி “என்ன பேச்சு?” என்றார். “இல்லை தந்தையே, இவன் எங்கெல்லாம் இவ்வண்ணம் பாடினான் என்று கேட்டேன்” என்றான் கிருதி.
“சூதர்கள் காற்றுபோல. அவர்களைத் தடுக்க எவராலும் இயலாது” என்றார் பிருஹத்ரதன். பத்மர் “அரசே, சூதருக்குரிய பரிசிலை கொடுத்தனுப்பலாமே!” என்றார். பிருஹத்ரதன் ஏவலன் கொண்டுவந்த பரிசில்களை அளிக்க சூதன் தலைவணங்கி வாழ்த்துரை சொல்லி அவற்றை பெற்றுக்கொண்டான். அவன் சென்றதும் அவை மெல்ல எளிதாயிற்று. பத்மர் ஒவ்வொருவர் விழிகளையும் நோக்கினார். அவை அவர் நோக்கை தவிர்த்தன. அங்கு நிகழ்ந்தது அத்தனை எளிதில் நினைவிலிருந்து அழிக்கத்தக்கதல்ல என்று பத்மர் புரிந்துகொண்டார்.
ஆனால் இளவரசர்கள் அதைப்பற்றியே கிளர்ச்சியுடன் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவைகலைந்து அரண்மனைக்குச் செல்லும்போது தமையனிடம் “பாடல் அழியாதது என்கிறார்கள். அது மூச்சு என்றும் சொல்கிறார்கள். மூச்சை நிறுத்துவதுபோல எளிதான பிறிதொன்றில்லை” என்றான் பிருகத்சீர்ஷன். “நான் நிறுத்திய மூச்சுக்கள் பல. சூதர்கள் அரசிளங்குமரர்களைப்பற்றி இழிசொல் பாடக்கூடாது என்பதை அவர்களுக்கு நான் பலமுறை உணர்த்திவிட்டேன்.” கிருதி “இவன் சொல்லும் அந்த எருதன் எவன்? எங்குளான்?” என்றான். “அவன் ஜரர்குலத்து காட்டான். அவர்கள் தங்களுக்குள் பாடிக்கொண்ட பாடலை இவர்கள் பெருக்கிப்பாடுகிறார்கள்” என்றான் பிருகத்சீர்ஷன்.
“அவன் எவனாயினும் வாழக்கூடாது” என்று கிருதி சொன்னான். “அச்சொல்லை அவன் பெற்றபோதே அரசவாளால் அவன் கொல்லப்படவேண்டுமென்பது உறுதியாகிவிட்டது.” ஜயசேனன் “அவனை நம்மில் ஒருவர் கொல்லவேண்டும். அதுவே நெறி” என்றான். பிருகத்சீர்ஷன் குரல்தணித்து “நாம் எதற்காக அவனை கொல்லவேண்டும்? அவனுக்கு கோயில் அமையும். கொடை அளிக்கப்படும். நம் மூதாதைநிரையுடன் அவனும் நினைக்கப்படுவான்” என்றான். அவர்களின் விழிகள் மாறுபட்டன. அப்பால் வந்துகொண்டிருந்த அரசரையும் பத்மரையும் நோக்கியபின் “இதை நாமே முடித்துவிடலாம்” என்றான்.
அவர்கள் அணுகி நடந்தனர். பிருகத்சீர்ஷன் மேலும் குரல்தணித்து “அவன் எங்கிருக்கிறான் என்று எவரும் அறியாமலேயே இறக்கட்டும். ஷத்ரியர்களைத்தான் படைக்கலங்களால் கொல்லவேண்டும் என நெறியுள்ளது. அரக்கர்களைக் கொல்ல நெறிகளென எவையுமில்லை. நச்சோ, அரவோ, உருளும்பாறையோகூட போதும்” என்றான். அவர்கள் நீள்மூச்செறிந்தனர். “நாம் ஒற்றர்களை காட்டுக்கு அனுப்புவோம். அவனை பரிசில்கொடுத்தோ போருக்கு அறைகூவியோ நகருக்கு அழைப்போம். வரும்வழியிலேயே அவன் நோயுற்று உயிர்துறக்கட்டும்.” அவர்கள் உடல்கள் மெல்ல நெகிழ்ந்தன. “ஆம், அதுவே சிறந்த வழி” என்று கிருதி பெருமூச்சுவிட்டான்.
ஆனால் அரசியர் நிலையழிந்திருந்தனர். அரசர் மஞ்சத்தறைசேர்ந்தது அணிகை அமைச்சரை அழைத்து “என்னசெய்தி அது அமைச்சரே?” என்றாள். அருகிருந்த அன்னதை “அந்த எருதன் எவன்?” என்றாள். பத்மர் “அது ஒன்றுமில்லை அரசியரே. சூதர்கள் எப்போதும் கூழாங்கல்லை மேருவாக்கும் சொற்றிறன்கொண்டவர்கள்” என்றார். “இல்லை அமைச்சரே. சிலநாட்களாகவே நாங்கள் தீக்கனவுகள் கண்டுகொண்டிருக்கிறோம்” என்றாள் அன்னதை. “நான்கு கைகளும் நான்கு கால்களும் இரட்டைத்தலையும் கொண்ட அரக்கன் ஒருவன் உடலெங்கும் குருதிவழிய நம் நகர்த்தெருக்களில் நடந்து வரும் காட்சியை நான் நேற்றும் கனவில் கண்டேன்.”
பத்மர் நடுங்கிய நெஞ்சுடன் நோக்கி நின்றார். “அவனுடன் ஒரு முதுமகள் கையில் பாதியுடல் போழ்ந்த குழவி ஒன்றை ஏந்தி வந்தாள். அவள் கண்கள் அனலென எரிந்தன. அவள் உடலிலும் குருதி வழிந்துகொண்டிருந்தது” என்றாள் அன்னதை. “இக்கதைகள் காற்றில் எங்குமுள்ளன அரசி. அவை நம் செவிகேளாது உள்நுழைந்து கனவுகளாகின்றன” என்றார் பத்மர். “நாளை கொற்றவை ஆலயத்தில் ஒரு பலிகொடை நிகழ்த்தி குருதிநிறைவு செய்வோம். இக்கனவுகள் நுரையென அணையும்” என்றபின் அமைதியிழந்த உள்ளத்துடன் தன் அலுவல்மன்றுக்கு சென்றார்.
[ 11 ]
ஜரையன்னை தன் மைந்தனுக்கு அணிகளை அளித்தபின்னர் அன்றே உயிர்துறந்தாள். காட்டின் எல்லையாகிய சிற்றோடையின் கரையில் அவள் அவன் கையால் இறுதிநீர் பெற்று அடங்கினாள். அவள் உடலை கையேந்தியபடி ஜராசந்தன் தன்னந்தனியாக நடந்தான். சற்று தள்ளி அவனை பின்தொடர்ந்த ஜரர்கள் அவன் வரமாதாவின் குகைக்குள் சென்று மறைந்தபோது வெளியே நின்றுவிட்டனர்.
பன்னிருநாட்கள் அவர்கள் அங்கே காத்திருந்தனர். எருதன் திரும்பிவரப்போவதில்லை என்னும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு திரும்ப முடிவுசெய்த அன்று அவன் குகைக்குள் இருந்து திரும்பி வருவதை ஒருவன் கண்டான். திறந்த வாய்க்குள் இருந்து நாக்கு வருவதைப்போல என்று அவன் சொன்னான். வளைவிட்டு நாகமெழுவதைப்போல என்று அதை குலப்பாடகன் மாற்றிப்பாடினான்.
குகைவிட்டெழுந்த எருதனை அணுகிய ஜரர்கள் “இளையோனே, எங்கள் காவல்தெய்வம் நீ. எங்களுடன் இரு” என்று வேண்டிக்கொண்டனர். அவன் அவர்களை மிகத்தொலைவிலெனத் தோன்றிய விழிகளால் நோக்கி “அக்குகைக்குள் சென்றவன் அல்ல நான்” என்றான். “அங்கே என்ன கண்டாய் மைந்தா?” என்று முதுஜரன் ஒருவன் கேட்டான். “கையில் பாதியுடல்கொண்ட அன்னையை. ஒளிரும் விழிகளும் குருதியுலராத நாவும் கொண்டிருந்தாள்” என்றான். “வரமாதா! அவள் வரமாதா!” என்று ஜரர்கள் கூவினர். கைகூப்பி அவன் காலடியில் அமர்ந்தனர். “சொல். என்ன கண்டாய்? அவள் என்ன சொன்னாள்?” என்றார் குலப்பூசகர்.
“நான் யாரென்றும் இங்கு ஆற்றவேண்டியது என்ன என்றும் அறிந்தேன். இன்றே கிளம்புகிறேன்” என்றான். “எங்கே?” என்றார்கள் ஜரர்கள். “என் வலது உடலின் நாட்டுக்கு. அதை ராஜகிருஹம் என்கிறார்கள்.” அவர்கள் திகைத்து நோக்கினர். “நம்மில் எவரும் அங்கு சென்றதே இல்லை” என்று ஒருவன் சொன்னான். “நான் உங்களில் ஒருவன் அல்ல” என்று அவன் சொன்னான். முதுமகன் “எப்போது மீண்டு வருவாய்?” என்றான். “இப்போது எழுந்ததுபோலவே பெருவினா ஒன்று என்னுள் எழுமென்றால் மீண்டும் அன்னையைப்பார்க்க இக்குகைக்குள் செல்வேன். அதுவரை வரமாட்டேன்” என்று அவன் சொன்னான்.
அன்றே அவன் கிளம்பினான். அவனுக்கு புலித்தோல் ஆடையும் இரும்புமுனைகொண்ட வேலும் குலமூத்தாரால் அளிக்கப்பட்டது. அவன் தன் உடலில் அன்னை அளித்த அரசகுலத்து நகைகளை அணிந்திருந்தான். சிறு கைவளைகளை காதுகளில் குழைகளைப்போல் அணிந்தான். கால்தண்டைகளை நெற்றியில் கட்டி தொங்கவிட்டான். கணையாழிகளையும் கயிற்றில் கட்டி கழுத்தில் அணிந்தான். ஆரங்களை கைகளில் சுற்றிக்கொண்டான். வெளிவானின் ஒளி அவன் கண்களை கூசச்செய்தது. எங்குசெல்லவும் வழிகள் தெரிந்திருக்கவில்லை. வற்றிய ஆறுபோல செல்பவை பாதைகள் என்றே அவன் அறிந்திருக்கவில்லை.
சாலையில் செல்பவர்களை பின்தொடர்ந்து அவன் சந்தைக்கு சென்றுசேர்ந்தான். அங்கே மணிவணிகம் காலையிலேயே முடிந்தபின் ஊனும் நெய்யும் உப்பும் மரவுரியும் விற்கும் வணிகர்கள் செறிந்திருந்தனர். அவன் சந்தைக்குள் நுழைந்தபோது பித்தன் என எண்ணிய காவலன் அருகே வந்து வேல்கொண்டு அவனை தடுத்தான். தடுத்தவனைத் தூக்கி அப்பால் எறிந்து அவன் உள்ளே நுழைந்தபோது காவலர் வேல்களுடன் திகைத்து நின்றனர். சந்தையின் அனைத்து முகங்களும் திரும்பி நோக்கின.
ஜரர்களுடன் மணிவணிகம் செய்யும் கோசலநாட்டுப் பெருவணிகன் “அவன்தான் எருதன். ஜரர்களின் காவல்தெய்வம்” என்று கைநீட்டி கூவினான். வியப்பொலியுடன் மக்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் உடலில் கிடந்த நகைகளைப் பார்த்த காவலர்தலைவன் “அரச நகைகள்! கள்வர்கள் கொண்டவைபோலும்!” என்று கூவினான். வில்லம்புகளுடன் காவலர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் சற்றும் அஞ்சவில்லை. திரண்டிருந்த மகதர்களை நோக்கி “நான் மகதமன்னர் பிருஹத்ரதரின் முதல் மைந்தன். இருவராகப் பிறந்தோம். ஜராவனத்தில் விடப்பட்டோம். என் இணையன் மறைந்தான். அவனை என்னுடன் இணைத்தாள் என் அன்னை ஜரை. நான் அவனையும் சேர்த்துக்கொண்டு வளர்ந்தேன்” என்றான்.
சிலகணங்கள் கூட்டம் திகைத்து நின்றது. எவனோ ஒரு சூதன் “மகத இளவரசர் ஜராசந்தர் வாழ்க!” என்று கூவினான். கூட்டம் அக்குரல் கேட்டு ஓசையிலாது உடல் அதிர்ந்தது. “மகதத்தின் வெற்றிப்பெருவீரர் வாழ்க!” என்று சூதன் மேலும் குரலெழுப்ப “வாழ்க!” என்று கூட்டம் வாழ்த்தோசை எழுப்பியது. சற்றுநேரத்தில் வாழ்த்தொலிகளுடன் அவனைச்சூழ்ந்து மகதமக்கள் அலையடித்தனர். மலர்களும் மஞ்சளரிசியும் அவன் மேல் அள்ளி வீசப்பட்டன. காவல் வீரர்கள் வேல்தாழ்த்தி வில் தணித்து பின்னகர்ந்தனர்.
அங்கிருந்து பெருந்திரளாக அவர்கள் ராஜகிருஹம் நோக்கி சென்றனர். செல்லச்செல்ல அக்கூட்டம் வளர்ந்தது. நகரின் கோட்டையை அடைந்தபோது மறுஎல்லை தெரியாதபடி தலைப்பெருக்காகத் தெரிந்தது. கோட்டைகளோ படைக்கலங்களோ தடுக்கமுடியாத விசைகொண்டிருந்தது. நகர்மக்கள் உப்பரிகைகளில் செறிந்து வாழ்த்தொலி எழுப்பினர். சாலையோரங்களில் எல்லாம் மக்களின் முகங்கள் ஒன்றுமேல் ஒன்றென சுவராகி எழுந்தன.
நடக்கநடக்க அவன் உறுதிகொண்டான். நகர்நுழைந்தபோது அவனுக்கு ஜராசந்தன் என்னும் பெயர் முற்றமைந்துவிட்டிருந்தது. ராஜகிருஹத்தின் அரசவை கூடுவதற்கு முன்பு ஐங்குலமூத்தாரும், அமைச்சர்களும், அவைப்புலவரும், அயலகத்தூதர்களும், சூதரும் கூடி நின்று சொல்லாடி மகிழ்ந்துகொண்டிருந்த அங்கணத்தை நோக்கி அந்தப் பெருநிரை வந்தது. உள்கோட்டைவாயிலில் நிறைந்து பெருகி முற்றத்தை முழுதும் நிறைத்து அரண்மனை இடைநாழிகளில் முட்டி அலையடித்தது. “ஜராசந்தர்! மகதப் பேரரசர்!” என்று அக்கூட்டம் வேதமென தாளத்தில் உரைத்துக்கொண்டிருந்தது.
அரண்மனை இடைநாழியில் எழுந்த ஜராசந்தன் “இங்கு அரசர் பிருஹத்ரதர் எவர்?” என்றான். அமைச்சர் பத்மர் ஓடிவந்து “யார் நீ? என்ன வேண்டும்? அரண்மனை எல்லைகளை மீறினால் கொல்லப்படுவாய்” என்றார். “நான் அரசரின் முதல்மைந்தன். இருவராகப்பிறந்து அன்னையால் ஒருங்கிணைக்கப்பட்டவன். ஜரையால் இணைக்கப்பட்டமையால் ஜராசந்தன்” என்றான். “அரண்மனைவிட்டு நீங்கிய இளவரசர்களின் அணிகள் இவை. இவற்றைக் கண்டெடுத்து அணிந்தமையால் நீ அரசக்குருதி என்றாவதில்லை” என்றார் பத்மர்.
அப்போது அங்கே ஓடிவந்த இளவரசர்கள் “இவனை எவர் உள்ளே விட்டது? அரண்மனை புகுவதற்கான நெறிகளேதும் இல்லையா இங்கே?” என்று கூச்சலிட்டனர். கிருதி “இவன் அணிந்திருக்கும் நகைகள் அரசகுலத்துக்குரியவை. இக்கள்வனை இப்போதே பிடித்துக்கட்டுங்கள்... தலைதிருகுங்கள்” என்று கூவினான். பத்மர் “இளவரசே, பொறுங்கள். பொறுங்கள். எதையும் நீதிக்குகந்த வகையில் ஆற்றுவதே மகதத்தின் முறை” என்றார். “எது நீதி? எவனோ ஒரு காட்டான் வந்து அரண்மனை இடைநாழியில் நின்று உரிமைபேசுவதா நீதி?” என்று பிருகத்சீர்ஷன் கத்தினான்.
“அரசர் வரட்டும். அரசியர் வரட்டும். நான் அவர்களின் மைந்தனல்ல என்று அவர்கள் சொல்லட்டும், நான் விலகிச்செல்கிறேன்” என்றான் ஜராசந்தன். “ஆம், அதுவே முறை. அரசர் வரட்டும்” என்றார் குலமூதாதை. ஏவலர் சூழ பிருஹத்ரதன் மெல்ல நடந்து வெளியே வந்தார். நரைத்த புருவம் கொண்ட விழிகள் கூர்ந்துநோக்கியபின் திகைத்தன. “பத்மரே, இவன்...” என்று அவர் சொல்லெடுக்க பத்மர் “அரசியர் சொல்லட்டும்” என்றார். “ஆம், அரசியர் சொல்லட்டும்… அரசியர் சொல்லட்டும்” என்று கூட்டம் முழங்கியது.
அணிகையும் அன்னதையும் சேடியர் சூழ அங்கே வந்தனர். கூடிநின்றிருந்த பெருங்கூட்டம் அமைதியடைந்து அவர்களின் காலடியோசை கேட்கும் அமைதி நிலவியது. பத்மர் உரத்தகுரலில் “அரசியரே, சொல்லுங்கள்! இதோ இங்கு நிற்பவன் காட்டாளன். உங்கள் இளமைந்தருக்குரிய அரசுரிமைக்கு தானே உரியவன் என்கிறான். உங்கள் கருவிலுதித்த முதல்மைந்தன் தானே என்கிறான்” என்றார். “உங்கள் மொழியில் இக்கூட்டம் முடிவெடுக்கட்டும். இவன் எவர் மைந்தன்?”
அன்னதை அணிகையின் தோளை பற்றிக்கொண்டாள். இருவராலும் நிற்கமுடியவில்லை. நடுங்கும் தலையுடன் அவனை கூர்ந்துநோக்கினர். பின் தன் மைந்தரை நோக்கினர். “நாங்களா இக்காட்டாளனா, எவர் நாடாளவேண்டும்? சொல்லுங்கள்!” என்றான் கிருதி. அன்னதை உதடுகளை அசைத்தாள். அவளால் சொல்லெடுக்க முடியவில்லை. “அன்னையே, நான் உங்கள் இருவரின் மைந்தன்” என்றான் ஜராசந்தன். “எவர் மைந்தன்? அதை சொல்க...” என்றான் கிருதி. “அதை நான் அறியேன்” என்றான் ஜராசந்தன். “ஓசையிடாதீர். அவர்களே சொல்லட்டும்” என்றார் பிருஹத்ரதன்.
அணிகை மிகமெல்லிய குரலில் “நானறியேன்” என்றாள். “இவன் என் மைந்தனென்று என் உள்ளம் சொல்லவில்லை.” அன்னதையை நோக்கி விழிகள் திரும்ப அவள் தலைகுனிந்து “ஆம், என் மைந்தன் என்று எனக்கும் தோன்றவில்லை” என்றாள். கிருதி “இனியென்ன கேள்வி? அணிகளைத் திருடிய இக்காட்டாளனை இக்கணமே சிறைபிடியுங்கள். படைத்தலைவர்களே...” என்று கூவினான். “ஆம், இனி இவன் இம்முற்றம் விட்டு அகலக்கூடாது” என்றான் பிருகத்புஜன். கூடியிருந்தவர்களில் ஒருவர் “இல்லை, தெய்வங்களுக்கு மானுடர் சான்றளிக்கமுடியாது” என்று கூவ மற்றவர்கள் “ஆம்!ஆம்!” என்று முழக்கமிட்டனர்.
“நாம் இதை பின்னர் முடிவுசெய்வோம்” என்றார் பிருஹத்ரதன். “அரசே, மக்கள் விந்தைகளையும் மாயங்களையும் நம்ப விழைபவர்கள். இவனைக்குறித்த கதைகளை அவர்கள் முன்னரே நம்பிவிட்டனர், ஆகவே இதையும் அவர்கள் நம்பியாகவேண்டும்” என்றார் பத்மர். “அவர்களை நிறைவுறச்செய்யாமல் நாம் இங்கிருந்து விலக முடியாது.” “இந்தக் கீழ்மக்களா இங்கே முடிசூட்டவேண்டியவர் எவர் என முடிவுசெய்வது? நம் கோல்கீழ் வாழும் எளியோர். நாம் போர்களில் கொன்று குவிக்கும் புழுக்கள்” என்று கிருதி சொன்னான்.
“இளவரசே, இச்சொற்களால்தான் இவ்வுணர்ச்சியே உருவாகியிருக்கிறது. இது இவனுக்கான ஏற்பு அல்ல. மகதத்தின் நான்கு இளவரசர்களுக்கான எதிர்ப்பு” என்றார் பத்மர். “வாயை மூடும்! இவர்களை எப்படி கலைப்பதென்று எங்களுக்குத் தெரியும். படைத்தலைவர்கள் எங்கே? நம் படைகள் எழுக... இவ் இழிமக்களில் நூற்றுவரின் தலைகள் நம் முற்றத்தில் உருளட்டும். எஞ்சியவர் எங்கே செல்வார்கள் என நான் அறிவேன்” என்று கிருதி இரைந்தான். பத்மர் “படைகளும் இம்மக்களிடமிருந்து வந்தவர்கள்தான்” என்றார்.
“படைத்தலைவர்களே...” என்று கிருதி கூவியபடி திரும்பி அவர்கள் அருகே எந்த உணர்வுமற்ற முகங்களுடன் கைகட்டி நின்றிருப்பதை கண்டான். “கலையுங்கள் இவர்களை” என்றான். “இது என் ஆணை! குருதியை காட்டுங்கள் இவர்களுக்கு!” பெரும்படைத்தலைவர் சிருங்கசேனர் “இளவரசே, நீங்கள் இன்னமும் முடிசூடவில்லை. இங்கே ஐங்குலமும் இணைந்து முடி எடுத்து வைத்து அரிசியிட்டு நீரூற்றியபின்னரே அரசர்கள் ஆணையிடும் நிலை கொள்கிறார்கள்” என்றார்.
“இழிமகனே, எதிர்ச்சொல் எடுக்கிறாயா?” என்று கைநீட்டியபடி கிருதி அவரை அடிப்பதற்காக பாய்ந்தான். அவன் தம்பியர் அவனை பிடித்துக்கொண்டனர். “இளவரசே, மக்களுக்கு எதிராக படையினர் எழமாட்டார்கள். அவர்கள் எங்கள் அன்னையரும் தந்தையரும் என்று அறிக!” என்றார் படைத்தலைவர். பிருஹத்ரதன் “இப்பேச்சு நிற்கட்டும்...” என்று உரத்த குரலில் கூவி கைதூக்கினார். “என் முன் பூசல் வேண்டாம். ஆவதென்ன என்று பார்ப்போம்.”
முதியகுலத்தலைவர் ஒருவர் “அனற்சான்று நோக்குவோம்” என்றார். “அனலின் சொல்லை அனைவரும் ஏற்போம்.” கூடிநின்றிருந்தவர்கள் “ஆம், அனல்சான்றை ஏற்போம்” என்றனர். “ஏற்போம் ஏற்போம்” என்று குரல்கள் எழுந்து பரவிச்சென்றன. கூட்டம் முட்டி நெரிசலிட்டு அருகே வந்தது. “அகல் விளக்கு கொண்டுவாருங்கள். ஓர் அகல்விளக்கு!” என்று சிற்றமைச்சர் ஒருவர் கூவினார். வைதிகர் மூவர் பொன்னாலான சிற்றகலைக் கொண்டு அக்கூட்டம் நடுவே வைத்தனர். அதில் சிறுசுடர் பொருத்தினர்.
“ஜரனே, நீ எவர் மைந்தன் என்று சொல். அனல் அனைத்தையும் அறியும். உன் சொல்லை ஏற்று இம்மணிச்சுடர் அணையுமென்றால் அதை இங்குள மக்களும் ஐங்குலத்தலைவரும் ஏற்பர். அவர்கள் ஏற்றால் அரசனும் ஏற்றாகவேண்டும்” என்றார் குலத்தலைவர். “ஆம், அனல்சான்றே பிறப்புக்குரியது” என்றார் முதுவைதிகர். “ஆம்! அனல் சொல்லட்டும்” என்று கூட்டம் கூச்சலிட்டது.
ஜராசந்தன் திகைத்து நிற்க பத்மர் “அனலே கூறுக! இதோ நின்றிருக்கும் இந்த இளைய ஜரன் முதல் அரசி அணிகையின் மைந்தன் அல்லவா?” என்றார். நெருப்பு அணையாதிருந்தது. “இளைய அரசி! அவர் இளைய அரசியின் மைந்தர்!” என்று மக்கள் கூச்சலிட்டனர். அவர்களை கையமர்த்திவிட்டு “இதோ நின்றிருக்கும் இந்த இளைய ஜரர் இளைய அரசி அன்னதையின் மைந்தரா?” என்றார் பத்மர். சுடர் அசையவில்லை. பத்மர் திரும்பி கூட்டத்தை நோக்கி “போதுமல்லவா? எரிசான்றை ஏற்று இல்லம் திரும்புக!” என்றார்.
கூட்டத்தினர் கலைந்த ஒலியுடன் சற்றே பின்னடைய ஜராசந்தன் தன் கையை நீட்டியபடி “நான் இரு அரசியரும் பெற்ற மைந்தன். என்பெயர் ஜராசந்தன்!” என்றான். சுடர் இழுபட்டதுபோல துடித்து அணைந்தது. கூட்டம் ஒருகணம் அசைவற்று நிற்க சூதன் ஒருவன் “மகத இளவரசர் ஜராசந்தர் வாழ்க!” என்று கூவினான். களிவெறி கொண்டு அக்கூட்டமே கொந்தளித்தது. மேலாடைகள் வானில் எழுந்து சுழன்று அமைந்தன. வாழ்த்தொலி முழக்கம் அரண்மனைச்சுவர்களை அதிரச்செய்தது.
“அன்னையரின் மூச்சு. அது அன்னையரின் மூச்சால் அணைந்தது!” என்றான் இளையவனாகிய ஜயசேனன். “தந்தையே, இதை ஏற்கலாகாது. இதை ஏற்றால் இப்படி எவர் வேண்டுமென்றாலும் அரண்மனைக்கு வந்து முடிகோரமுடியும்” என்றான் பிருகத்புஜன். “இவன் அரியணை ஏறுவான் என்றால் நான் இக்காட்டாளனுக்கு அடிமைசெய்யவேண்டுமா?” என்றான் கிருதி. “நான் இவனை நோக்கியதுமே ஐயுற்றேன். இவன் விழிகளை நான் ஒருகணமும் மறக்கவில்லை” என்றார் பிருஹத்ரதன். அப்போது அன்னதை நினைவிழந்து சரிய சேடியர் கூச்சலிட்டபடி அவளை பற்றிக்கொண்டனர். “விலகுக! காற்றுவரட்டும்! விலகுக!” என்று செவிலியர் கூச்சலிட்டனர்.
“இவன் இளவரசன் என நான் இப்போது ஏற்கிறேன். நாளை என் குலமூதாதையர் முன்றிலில் இவனை நிறுத்தி அவர்களின் அருட்கூற்றை கேட்கிறேன். அதன்பின் ஆவன செய்கிறேன்” என்று பிருஹத்ரதன் கைகூப்பியபின் திரும்பி நடந்தார். கூடியிருந்த மகதர் “முடிசூடும் இளவரசர் ஜராசந்தர் வாழ்க! மகதத்தின் மைந்தர் வாழ்க!” என்று கூவி ஆர்த்தனர். எங்கோ “திசையானைகள் ஒழிக!” என்று குரலெழுந்தது. கூடவே பெருஞ்சிரிப்பும் எழ பிருகத்புஜன் திரும்பி “யார் அது? கூவியவன் யார்?” என்றான். பின் நிரையில் “திசைப்பன்றிகள் அழிக!” என்று கூவ கூட்டமே கூச்சலிட்டு நகைத்தது.
பத்மர் “இனி இங்கு நிற்கவேண்டியதில்லை இளவரசே” என்றார். “பட்டத்து இளவரசே, குதிரைச்சாணியள்ள திசைக்கழுதைகளுக்கு தெரியுமா என்று கேளுங்கள்” என்று எவரோ கூவ மீண்டும் கூட்டம் வெடித்து நகைத்தது. திரும்பி நோக்கிய பத்மர் என்றும் அழியாத வஞ்சம் குடிகொண்ட பல்லாயிரம் கண்களை கண்டார். அவியிட்டு அவியிட்டு புரந்தாலும் அடங்கா பசிகொண்ட தேவர்கள்.
[ 12 ]
ஜராசந்தனிடம் அரண்மனையில் தங்கி இளைப்பாறும்படியும் மாலை அரசவையில் அனைத்தையும் இறுதியாக முடிவெடுக்கலாம் என்றும் பத்மர் சொன்னார். “ஆம், அதுவே முறை. ஆனால் நான் அரசகுடியினனாக இன்னும் மாறவில்லை. என் உணவும் உடையும் எளியவை. நான் இம்மக்களுடன் ஊர்மன்றிலேயே தங்குகிறேன்” என்றான் ஜராசந்தன். பத்மர் அவன் விழிகளை ஒருகணம் கூர்ந்து நோக்கினார். அதன்பின் அவர் அவனைப்பற்றிய எந்த ஐயமும் கொள்ள நேரவில்லை. இருவரும் ஒருவரையொருவர் நன்கறிந்துகொண்டனர்.
சொல்சூழ் சிற்றறையில் கிருதியும் இளையோரும் குமுறிக் கூச்சலிட்டனர். “என்ன நிகழ்கிறது? இந்த அறிவிலாச்செயல்களின் வழியாக அக்காட்டுவிலங்கு இந்நாட்டின் அரசனாகப்போகிறானா? நாங்கள் அவன் காலடியில் அமரவேண்டுமா? அதைவிட இந்நாட்டையே அனலால் கொளுத்தி அழிப்போம். தந்தையும் அன்னையரும் அமைச்சும் சுற்றமும் அனைத்தும் அழியட்டும்” என்று கிருதி கூவினான். “அமைச்சரே, உண்மையை சொல்லுங்கள். எதற்காக இந்த நாடகம்?” என்றான் பிருகத்புஜன்.
பத்மர் “இளவரசர்களே, அவன் எளியவன் அல்ல” என்றார். “உண்பதற்குப் போராடும் வாழ்க்கையிலிருந்து வென்றுசெல்லும் வேட்கைகொண்ட எவரும் எழுவதில்லை. ஏனென்றால் ஒவ்வொருநாளும் உண்பதற்குத் தேடியடைவதென்பது முழுஆற்றலையும் கொள்ளும் செயல். அத்துடன் அது ஒரு மானுடன் விழையும் முழு உவகையையும் அளிக்கும் வேட்டையும்கூட. வெற்றி என்பதும் வல்லாண்மை என்பதும் உண்பதற்கான வேட்டையை முற்றிலும் அறியாதவர்களுக்குரிய விழைவுகள்.”
“இளவரசர்களே, அரிதிலும் அரிதாக மிக எளியவாழ்க்கையிலிருந்து ஒருவன் வெல்லவும் ஆளவும் விழைந்தான் என்றால் அவன் இங்கு அரசுகளை அமைத்து போர்களை நிகழ்த்தி குருதியிலாடி அமையும் நாமறியா தெய்வங்களால் தொட்டெழுப்பப்பட்டவன் என்றறிக! அவனுக்கு நூலறிவு தேவையில்லை. சொல்லறிவு அளிக்க சுற்றமும் தேவையில்லை. அவனுக்குரிய அறிவனைத்தையும் அவன் விழைவென நெஞ்சில்கூடியிருக்கும் அந்த தெய்வமே சொல்லிக்கொடுக்கும். இவன் அத்தகையவன்” பத்மர் சொன்னார். “அக்குழந்தையரின் அணிகளுடன் அவன் சென்று எந்த குலத்தலைவர் இல்லத்திலும் நிற்கவில்லை. எந்தக் காவலர்மன்றையும் அணுகவில்லை. சந்தையில் சென்று நின்றான். அவன் தெய்வம் அவனுக்கிட்ட முதல் ஆணை அது.”
“அறிக, சந்தை என்பதுதான் என்ன? அது அரசவை அல்ல. நூல்மன்றும் அல்ல. அங்கே விற்கப்படும் வாங்கப்படும் ஒவ்வொன்றும் கண்முன் உள்ளன. ஒவ்வொன்றும் இன்னொன்றால் பொருள்கொள்கின்றன. பொருட்கள் இரக்கமற்றவை. அவற்றை நாம் விழிமூடி இல்லை என மறுத்துவிடமுடியாது. நம் விழைவுகளாலும் நோக்கங்களாலும் வளைத்துவிடவும் முடியாது. சந்தைகள் நுண்ணிய போர்க்களங்களங்கள் என்றறிக!” என்றார் பத்மர்.
“அங்கே அவன் சென்று நிற்கையில் காண்பது எவரை? எளியவரை. நூலறியாதவரை. மானுடர் எவராயினும் விழைவுகளாலேயே சமைக்கப்பட்டிருக்கிறார்கள். நூலறிந்தோர் அவற்றுக்கு மேல் கொள்கைகளை, மரபுகளை, கனவுகளை போர்த்தி மாயம் காட்டத்தெரிந்தவர். அதற்குரிய சொற்களை கொண்டவர்கள். சந்தையிலிருப்போர் சொற்திரைகள் அற்ற வெறும் விழைவால் மட்டுமே ஆனவர்கள்” பத்மர் சொன்னார். “அவன் அங்கே சென்று நின்று அவர்களின் விழைவுகளுடன் உரையாடினான். ஒரேநாளில் பல்லாயிரம்பேரை வென்றான். பெரும்படையெனத் திரண்டு நம் அரண்மனைமேல் வந்து அறைந்தான்.”
“இவர்களா பெரும்படை? இவர்களின் படைக்கலம் என்ன?” என்று கிருதி இளிவரலுடன் முகம் சுளித்தான். “பத்துபேர் குருதியூறி விழுந்தால் ஈக்களைப்போல கலையும் இழிசினர்” என்றான் பிருகத்புஜன். “ஆம், உண்மை. அவர்கள் அச்சத்தால் ஆனவர்கள். அச்சம் அவர்களை எளிதில் வெல்லும். ஆனால் அவர்கள் அவ்வச்சத்துக்காக எப்போதும் நாணமும் கொண்டிருக்கிறார்கள். அச்சத்தைக் கடக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள். கூட்டமாக ஆவதே அவர்களின் அச்சத்தை அழிக்கும் முறை. இளவரசே, நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள தளை என்பது அச்சமே. அச்சம் அழிந்த மக்கள்திரள் என்பது நம்மால் ஆளப்பட முடியாத நாடு.”
“அவன் அவர்களை நன்கறிந்திருக்கிறான். ஏனென்றால் அவன் அவர்களில் ஒருவன். நாம் அளித்த அழைப்பை ஏற்று அரண்மனையில் அவன் தங்கியிருந்தான் என்றால் இன்றே அவனும் ஓர் அரசகுலத்தான் ஆகியிருப்பான். உங்களுக்கு நிகரானவனாக அவனும் எண்ணப்பட்டிருப்பான். அத்துடன் மக்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒருசாரார் அவனையும் பிறிதொரு சாரார் உங்களையும் ஆதரித்திருப்பார்கள். அது அவர்கள் காலகாலமாக ஆடும் ஆடல். நுண்ணிய சொல்லாடல். வெட்டியும் ஒட்டியும் கடந்தும் அமைந்தும் போரிடுதல். இப்போர் மீண்டும் ஒரு கேளிக்கையென்றாகியிருக்கும். எவர் வென்றாலும் சின்னாளிலேயே வென்றவர் தரப்புக்கு அனைவரும் மாறிவிட்டிருப்பர். தோற்றவர்களுக்கு குற்றவுணர்சியின் விளையான ஒரு பொய்ப்புகழ் சின்னாள் நின்றிருக்கும். பின்னர் அனைவரும் வரலாற்றில் வெறும் பெயர்கள். வென்றவர் வென்றவை மட்டும் வரலாற்றில் பொருண்மையுடன் நின்றுகொண்டிருக்கும்.”
“இன்று அவன் அவர்களில் ஒருவன்” என்று பத்மர் தொடர்ந்தார். “மக்களின் உள்ளே குமுறிக்கொண்டே இருக்கும் ஒன்று உண்டு இளவரசர்களே. நம் நகருலாக்களில் களிவெறிகொண்டு நம்மை வாழ்த்திக் கூவும் குடிமகனும் சரி, நம் ஆணையை ஏற்று போர்கொண்டு உயிரளிக்கும் படைவீரனும் சரி, தங்கள் ஆழ்கனவுகளில் நாமாக ஆகி நடிக்கவும் செய்கிறார்கள். தங்களுக்குத்தாங்களே அவர்கள் சொல்லிக்கொள்ள அஞ்சுவது அது. இதோ அக்கனவுகளின் வடிவாக ஒருவன் எழுந்து வருகிறான். எளியவன். அவர்களில் ஒருவன். ஆனால் பேராற்றல் கொண்டவன்.”
“யுகயுகமாக நிகழ்வது இதுவே. அரசர்களுக்கு எதிராக எளியவன் ஒருவன் எழுந்துவந்து முடிகொள்வான். இங்குள்ள புதிய அரசுகளனைத்தும் அவ்வாறு எழுந்த மக்களில் ஒருவனாகிய மன்னர்களால் அமைக்கப்பட்டவை அல்லவா? இளவரசே, பேராற்றல் கொண்டெழுந்து விண்ணகங்களை வெல்லும் அரக்கர்களின் கதைகளை ஏன் மக்கள் விரும்புகிறார்கள்? ஏன் சொல்லிச் சொல்லி அவற்றை வாழச்செய்கிறார்கள்?” பத்மர் கேட்டார். “இவர்களை எளிதில் நாம் எதிர்க்கமுடியாது. நம் எதிர்ப்பிலிருந்தே வல்லமையை கொள்வார்கள். நாமளிக்கும் ஒவ்வொரு புண்ணுமிழ்க்குருதியிலிருந்தும் ஒருவர் எழுவார்கள்.”
இளவரசர்கள் அமைதியடைந்தனர். அவர்களின் விழிகள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன. “அத்துடன் அவன் அவர்களுடன் சென்று தங்குவது பெரும் போர்நுட்பமும் கூட. அவனுக்கு நாம் நஞ்சிட முடியாது. அவனை எவ்வகையிலும் கொல்லமுடியாது. அவனைச்சூழ்ந்து மக்கள் எழுப்பியிருக்கும் வேலியை கோல்கொண்டு அரியணை அமர்வதுவரை அவன் விடமாட்டான். அவர்களின் உணர்வெழுச்சி ஒருதுளியும் இறங்க ஒப்பமாட்டான்.”
“நாம் என்னதான் செய்வது?” என்று கிருதி கேட்டான். “எளிதாக எண்ணி எதையும் செய்யவேண்டாம் என்றே சொல்லவந்தேன்” என்றார் பத்மர். “அவனைச்சூழ்ந்துள்ள ஆற்றலென்பது மக்களின் எழுச்சி. அவன் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கை அதன் அடித்தளம். மிகையுணர்ச்சிகளால் அது நுரையென கலக்கப்பட்டு மேலெழுப்பப்படுகிறது. மக்களெழுச்சி எதுவானாலும் அதை வெல்ல காத்திருப்பதொன்றே வழி.”
“இளவரசர்களே, இவர்கள் யார்? வேளிர்கள், ஆயர்கள், கைவினையாளர்கள், வணிகர்கள். இவர்களுக்குத் தெரியும் இவ்வெற்றியால் இவர்களின் இல்லத்துக்கு கால்பணமோ கைப்பிடி நெல்லோ வந்து சேரப்போவதில்லை என. இது இவர்களுக்கு ஓர் ஆழ்கனவை நேரிலாடும் களியாட்டு மட்டுமே. எவரும் களியாட்டில் வாழ்ந்துவிடமுடியாது. மெல்லமெல்ல இவ்வெழுச்சி அடங்கும். இவன் மண்ணிறங்கி தரையில் நிற்பான். அப்போது நாம் போரிடுவோம். இவனை அழிப்போம்” பத்மர் சொன்னார். “அப்போது இவ்வெழுச்சி மண்ணிறங்கிய பெரும் சோர்விலிருப்பார்கள் மக்கள். இவனை நாம் எப்படி அழித்தாலும் அதை எவ்வகையிலும் பொருட்படுத்தமாட்டார்கள்.”
“அவன் அதற்கும் வழிகாணலாமே” என்றான் கிருதி. “இல்லை, வரலாற்றில் மிகமிகச் சிலரே இந்தப் பொறியில் சிக்காது கடந்து சென்றிருக்கிறார்கள். இப்போது இவ்வெழுச்சி தன்னால் உருவாக்கப்பட்டது என அவன் நம்பத்தொடங்கியிருப்பான். அவர்களின் கூட்டுக்கனவெழுச்சியின் நுரைக்குமிழியே அவன் என்பதை அவனிடம் சொல்ல அவன் தெய்வம் முயலும். அவன் தன் ஆணவத்தால் அக்குரலை விலக்கிக் கொள்வான். தனக்கு கார்த்தவீரியனைப்போல் ஆயிரம் கை இருப்பதாக எண்ணுவான். எனவே மக்களின் உணர்ச்சியை மேலும் மேலும் எழுப்புவான்.”
“அவன் அறிந்திருக்கமாட்டான், அதற்கு முடிவிலி வரை செல்லும் ஆற்றலில்லை என. மேலே எழுந்து சென்று ஒரு கட்டத்தில் தன் எடையாலேயே வீழும் அலை அது. அப்புள்ளியில் அது சரியத்தொடங்கும்போது அவன் தன் ஆயிரம் கைகளாலும் அதை அணைத்து நிறுத்த முயல்வான். தன்னந்தனியாக எஞ்சி நிற்பான். ஒரு பெருந்தோல்வியைக் கண்டவன் வேர் உளுத்த பெருமரம். ஒற்றைக்கையால் அவனை சாய்த்துவிடமுடியும். ஆகவே காத்திருப்போம்” பத்மர் சொன்னார்.
சற்றுநேரம் சொல்லறையில் அமைதி நிலவியது. கிருதி உடலசைத்து அமர்ந்தான். பிருகத்புஜன் தொண்டையை கனைத்தான். கிருதி இருமுறை வெறுமனே உதடசைத்துவிட்டு “பத்மரே, ஒருவேளை அவன் வென்றால் என்ன ஆகும்?” என்றான். “அவன் குருதிகுடிப்பவன் என்கிறார்கள். மகதம் குருதியால் கழுவப்படும்” என்றார் பத்மர். “அசுரப்பேரரசர்கள் ஒருவர்கூட நெறிவிலக்கில்லை. அவர்கள் குருதியுண்ணவே வருகிறார்கள். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் கனவின் ஆழத்திலும் வண்டலெனப் படிந்துள்ள குருதிவெறியின் பருவடிவம் இவன்.” நேரடியாக அதை சொல்லக்கேட்டபோது அவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கினர். அதைச்சொன்னதும் பத்மருமே சற்று உளத்தளர்ச்சியடைந்தார்.
[ 13 ]
அவ்விரவில் ஜராசந்தன் எங்கு தங்குகிறான் என்பதை நோக்கிவர பத்மர் தன் ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அவன் ஐங்குலத்தலைவர்களில் வல்லமைமிக்கவர் எவரோ அவருடன்தான் தங்குவான் என்று கணித்தார். மகதம் மருதநிலத்தவர்களின் நாடு. வேளிர்களின் தலைவரான உரகர் அரசருக்கு நிகரானவராகவே அவர்களால் மதிக்கப்பட்டார். அவரது வீட்டுக்கு அவன் சென்று தங்கினால் அவர் அவனை ஆதரிக்காமலிருக்க முடியாது. அதை பயன்படுத்தி பிற குலத்தலைவர்கள் ஓரிருவரை தன்பால் இழுக்கமுடியும் என அவர் எண்ணினார்.
ஆனால் ஒற்றர்கள் வந்து ஜராசந்தன் நகர்மன்றிலேயே இருக்கிறான் என்று சொன்னார்கள். அரண்மனைமுற்றத்திலிருந்து சென்ற மக்கள்திரள் நகர்மன்றை அடைந்ததும் நின்றது. அவர்கள் நடுவே ஓர் உடைந்த தேரின்மேல் ஏறி நின்ற ஜராசந்தன் உரத்த குரலில் “நான் காட்டிலிருந்து வருகிறேன்” என்று பேசத்தொடங்கினான். எந்த முகமனும் இல்லாமல் அவன் பேசத்தொடங்கியதே அவர்களை மகிழச்செய்தது. “நான் காட்டிலிருந்து வருகிறேன்” என்பதையே அவன் பலமுறை சொன்னான். அவர்கள் சிரித்தும், கூச்சலிட்டும், மெல்ல அமைவது வரை அவன் காத்துநின்றிருந்தான்.
“அங்கே மலைத்தெய்வங்கள் வாழ்கின்றன. அவை குருதிகொள்பவை. பலி கேட்பவை” என்று அவன் தொடர்ந்தபோது கூட்டம் முழுமையாக அமைதிகொண்டது. “அவை விண்ணில் வாழும் தெய்வங்கள் அல்ல. பாதாளத்தில் வாழ்பவை. பாதாளத்திலிருந்து மேலே வருவதற்கான வழி ஒன்று உள்ளது. அங்கே வரமாதாவின் சித்திரம் உள்ளது.” அவன் சொல்வன மிக எளிய நேரடிக்கூற்றாக இருந்தன. ஆனால் ஒவ்வொருவரும் அவற்றிலிருந்து மேலும் மேலும் பொருள்கொண்டனர்.
“அங்கே இருளில் மகாபலி வாழ்கிறார். அவரை வாமனன் தலையில் மிதித்து மண்ணுக்குள் செலுத்தினார். அங்கேதான் ராவணப்பிரபு வாழ்கிறார். ஹிரண்யகசிபு அங்கே வாழ்கிறார். கார்த்தவீரியனும் மகிஷாசுரனும் ரக்தபீஜனும் அங்கே வாழ்கிறார்கள். என் அன்னை அந்த வழியாக இருண்ட பாதாளத்திற்குச் சென்றாள். அவளை நான் தொடர்ந்துசென்றேன். என்னிடம் அன்னை பேசினாள். அங்கே இந்த மண்ணை ஆண்ட அசுரப்பேரரசர்கள் உணவும் நீருமில்லாமல் இருக்கிறார்கள் என்று அவள் சொன்னாள். தான் ஆண்ட மண்ணில் இப்போதும் அறம் தழைக்கிறதல்லவா என்று மகாபலி கேட்டதாக என் அன்னை சொன்னாள்.”
மிகச்சில சொற்களிலேயே அவன் அப்பெருங்கூட்டத்தை விழிகளின் திரளாக மாற்றி அமரச்செய்துவிட்டான் என்றனர் ஒற்றர். “எவ்வண்ணம் அது நிகழ்ந்தது என்று அறியேன் அமைச்சரே. தேர்ந்த சொல்வலர்கூட அத்தகைய முற்றான சூழ்கையை அவர்கள் மேல் நிகழ்த்திவிடமுடியாது. அவர்கள் பலதிறப்பட்டவர். சந்தைக்கு வந்த வணிகர்கள், வேளாண்குடிகள், சிறுவர்கள். தெருவில் அலையும் களிமகன்களும் புறகுடிகளும்கூட அவர்களில் இருந்தனர். சொல்லறியாத கூட்டம்” என்றான் ஒற்றன் கீர்த்திமான்.
“தற்செயலாக அமைந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் சரியாக அமைந்துவிட்டன” என்றார் பத்மர். “மாபெரும் உரைகள் அமைய நான்கு அடிப்படைகள் தேவை. ஒன்று, அதற்குரிய வரலாற்றுநாடகத்தருணம். இரண்டு, அதை சொல்பவனின் மாறுபட்ட உடற்தோற்றம். மூன்று, அவன் உருவாக்கும் தொல் நினைவுகள். நான்கு, அப்பேச்சு நேரடியாக நெஞ்சிலிருந்து எழுந்து வருவது.”
இரண்டாவது ஒற்றன் சர்வன் தலையசைத்து “ஆம், அவன் பேச்சு அத்தகையது. நெடுநேரம் அவன் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லிலும் ஏதோ உட்குறிப்பு இருந்தது” என்றான். “முதலில் மக்கள் அவனைநோக்கி சிரித்துக்கொண்டிருந்தனர். எப்போது அவனை அவர்கள் வணங்கத்தொடங்கினர் என்பதை என்னால் கணிக்கவேமுடியவில்லை.”
பத்மர் புன்னகைத்து “அதை வரலாற்றில் எவரும் கணித்ததில்லை. மக்களிலிருந்து ஒருவன் எழுந்து வருகிறான். அவன் பெரும்பாலும் அவர்களிலேயே கடையன். அவர்கள் அவனை குனிந்து நோக்கி அறிவிலி என்றும் அழுக்கன் என்றும் ஏளனம் செய்கிறார்கள். அவன் பேசும் நேரடிப்பேச்சுக்களை கனிவுடன் நகையாடியபடி கேட்கிறார்கள். தங்களைவிட கற்றவர்கள், பீடம்கொண்டவர்கள் பேசும் பேச்சுக்களை கேட்கையில் அவர்களிடம் முன்னரே உருவாகிவிடும் எதிர்ப்பு நிலை அப்போது இருப்பதில்லை. ஆகவே அவன் சொற்கள் நேரடியாக அவர்களின் உள்ளங்களுக்குள் செல்கின்றன. அவை அங்கே வளர்கின்றன. அவன் அவர்கள் அறியாமலேயே அவர்களுக்கு நெருக்கமானவனாக ஆகிவிடுகிறான்.”
சர்வன் “ஆம், அவர்கள் சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். அவன் துள்ளி தேர்த்தட்டின் மேல் ஏறியபோது சிறுவனைக்கண்டு சிரிக்கும் முதியவர் போலிருந்தனர்” என்றான். “அவன் சொற்கள் வல்லமைகொண்டவை. மூதாதையர் வாழும் காட்டை, மலைத்தெய்வங்கள் வாழும் காட்டைச் சேர்ந்தவன் என்கிறான். அவன் தெய்வங்கள் இருண்ட ஆழத்திலிருந்து எழுபவை. இங்கோ நகரில் அரசரின் தெய்வங்கள் விண்ணிலிருந்து வந்து பொற்பூச்சிட்ட கோபுரங்களுக்குக் கீழே மணியும் மலரும் சூடி காவியமும் இசையும் கேட்டு பூசனைபெற்று அமர்ந்திருக்கின்றன. இம்மக்கள் அனைவரும் விண்ணாளும் தெய்வங்களை வழிபடுகிறவர்களே. ஆனால் இவர்கள் அனைவரின் குலதெய்வங்களும் ஆழுலகில் வாழும் பேய்த்தெய்வங்கள். பலிகொள்ளும் காட்டுத்தெய்வங்கள். மிக எளிதாக அவன் எதிர்நிலை ஒன்றை உருவாக்கிவிட்டான்.”
உச்சிப்பொழுதில் வந்த ஒற்றர்கள் ஊர்மன்றில் கலைநிகழ்ச்சிகள் நடப்பதாக சொன்னார்கள். ஒற்றன் குசன் “அங்கே ஆடிக்கொண்டிருப்பவர்கள் நூலறிந்த அரண்மனைச் சூதர்கள் அல்ல. தெருமுனைப்பாடகர்கள். கழைக்கூத்தாடிகள். அவர்களுடன் கள்ளுண்டு நிலைமறந்த களிமகன்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அமைச்சரே, அவர்களுடன் அவனும் ஆடிப்பாடுகிறான். கழைக்கூத்தாடிகளே வியக்கும் வகையில் கயிற்றிலும் மூங்கிலிலும் ஏறி தாவுகிறான்” என்றான்.
இன்னொரு ஒற்றனாகிய சாம்பவன் “அவர்கள் நடுவே குரங்கு போல தாவுகிறான். எருதுபோல தசைவலிமை காட்டுகிறான். யானையைப்போல மற்போரிடுகிறான். இந்நகரில் உள்ள அத்தனை மல்லர்களையும் வென்றுவிட்டான். பன்னிரு மல்லர்களை ஒரே வீச்சில் தூக்கி வீசினான். பாரதவர்ஷத்தில் அவனுக்கு நிகரான மல்லர் என்று பீஷ்மரையும் திருதராஷ்டிரரையும் மட்டுமே சொல்லமுடியும் என்கிறார்கள் மக்கள்” என்றான்.
பத்மர் பெருமூச்சுவிட்டு “மிகச்சிறந்த உத்தி. அவன் மக்கள் எனும் நுரையை கலக்கிக்கொண்டே இருக்கிறான். நாளை அவைக்கு வரும்வரை அவர்களை கலையவிடமாட்டான்” என்றார். சாம்பவன் “இரவில் அவர்கள் கலைந்தாகவேண்டுமே?” என்றான். “விடமாட்டான். அவன் அங்கேயே இருப்பான். மக்களுக்கு அவன் ஒரு திருவிழாவை அளிக்கிறான். அவர்கள் செல்லமாட்டார்கள்.”
பின்னுச்சி வேளையில் வந்த ஒற்றன் “அனைவருக்கும் வணிகர்கள் உணவிடுகிறார்கள். உண்டாட்டு என்றே சொல்லவேண்டும். கள்ளும் ஊனும் கட்டின்றி கிடைக்கின்றன அங்கே” என்றான். பத்மரின் அருகே அமர்ந்திருந்த கிருதி “நன்றியற்ற நாய்கள். நம் கால்களை நக்கி நலம் கொண்டவர்கள். இவனை ஒழித்ததும் வணிகர்களின் குருதியால் சந்தையை கழுவுகிறேன்” என்று பற்களைக் கடித்தான். “இளவரசே, இத்தகைய திருவிழாக்கள் அனைத்திலும் வணிகர்கள் முன்னிற்பார்கள். அது அவர்களின் வணிகத்திற்காக மட்டும் அல்ல. அவர்களிடமிருக்கும் ஏதோ குற்றவுணர்ச்சி இத்தகைய தருணங்களில் மக்களுடன் சேர்ந்து நிற்கத் தூண்டுகிறது. அவர்களின் இயல்பு அது” என்றார் பத்மர்.
இரவும் ஜராசந்தன் அங்கேயே இருந்தான். மாலைசரிந்ததும் மன்றுமுழுக்க பல்லாயிரம் பந்தங்கள் எரியத்தொடங்கின. உப்பரிகையில் நின்றாலே அந்த வெளிச்சத்தை பார்க்கமுடிந்தது. “அது காட்டுத்தீ. எச்சரிக்கையாக இல்லையேல் முற்றழிவை அளிக்கும்” என்று பத்மர் சொன்னார். “ஆனால் பெரும்பாலான காட்டுத்தீக்கள் இயல்பாக உடனே அணைந்துவிடுகின்றன... பார்ப்போம்.” கிருதி பற்களைக் கடித்தபடி “நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம் அமைச்சரே. இங்கே இவர்களை பகுத்துப்பிரித்து அறிவதில் பொருளே இல்லை. இறங்கி தலைகளை வெட்டித்தள்ளுவோம். பகுப்பாய்வை பின்னர் அவையமர்ந்து குடித்தபடி செய்வோம்” என்றான். ஜயசேனனும் பிருகத்சீர்ஷனும் “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றார்கள்.
“இளவரசே, இவன் ஒரு முகம்தான். மக்களின் இவ்வெழுச்சியை சோர்வாக ஆக்காமல் இதை நம்மால் முழுதும் வெல்லமுடியாது” என்றார் பத்மர். “அமைச்சரே, மக்கள் என்றும் எப்போதும் படைவல்லமையால்தான் வெல்லப்படுகிறார்கள். எதிரிநாட்டினருக்கு மாற்றாகவே படைகள் உள்ளன என்பது மன்னர்கள் சொல்லும் பொய். அனைத்துப்படைகளும் மக்களுக்கு எதிரானவைதான்” என்றான் கிருதி. “அது பிருஹஸ்பதியின் ராஜ்யநீதியில் உள்ள வரி. நானும் அறிவேன்” என்றார் பத்மர். “நான் நோயை புரிந்துகொண்டு மருத்துவம் செய்வதைப்பற்றி பேசுகிறேன். நோய்கண்ட இடத்தை அறுத்துவீசலாம். அது சிறிய நோய்களுக்கே பொருந்தும்.”
கிருதி சினத்துடன் கைகளைத் தட்டியபடி எழுந்து “நாளை அவையில் நடக்கவிருப்பதை நாங்கள் முடிவுசெய்துவிட்டோம் அமைச்சரே. நாளை அவை கூடியதும் நேராக கொற்றவை ஆலயத்திற்குச் செல்ல அரசர் திட்டமிட்டிருக்கிறார். அங்கே வெறியாட்டுகொள்ளும் மூன்று பூசகர்களுமே அவனை மாறுதோற்றமிட்டு வந்த இழிமகன் என்றும் அவன் வருகையால் நகர் அழுக்குற்றது என்றும் அறிவிப்பார்கள். அவன் குருதியை கொற்றவை நாடுகிறாள் என்றும் அவன் தலை அவள் காலடியில் வைக்கப்பட்டாகவேண்டும் என்றும் கோருவார்கள். அங்கேயே அவனைக் கொன்று கொற்றவைக்கு பலியிட்டு மீள்வோம்” என்றான்.
பத்மர் “ஆனால் அங்கே உங்கள் அன்னையர் இருப்பார்கள். அரசரும் இருப்பார்” என்றார். “ஆம், அவர்கள் இருந்தாகவேண்டும்” என்றான் கிருதி. “இளவரசே, அவர்களுக்குத் தெரியும் அவன் அவர்களின் மைந்தன் என்று. பார்த்த முதல்கணத்திலேயே” என்றார் பத்மர். “அதெப்படி?” என்று பிருகத்சீர்ஷன் கேட்க “எனக்கும் தெரியும்” என்றார் பத்மர். “நான் தயங்குவது அதனால்தான். அவன் அரசேறலாகாது, நீங்களே முடிசூடவேண்டுமென அன்னையர் நேற்று முடிவெடுத்தனர். ஆனால் அவன் தங்கள் மகனல்ல என்று சொல்ல அவர்களின் உள்ளுறைந்த தெய்வங்கள் ஒப்பவில்லை. நாளை அவன் கொல்லப்படுவதையும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.”
கிருதி ஒருகணம் திகைத்தான். தம்பியரை நோக்கியபின் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது ஒரு வலிப்பு போல அவன் முகம் உருமாறியது. கழுத்துத்தசைகள் இழுபட்டன. “அவ்வண்ணமெனில் முன்னரே அவர்கள் அவன் குருதியை காணட்டும். அதற்குப்பின் இந்த ஊசலாட்டமே இராது” என்றபின் அவன் வெளியேறினான். அவர்களின் முகங்களை அவர்கள் சென்றபின்னரே பத்மர் நினைவுகூர்ந்தார். ஒற்றை உணர்ச்சியால் ஒன்றென்றே ஆகிவிட்டிருந்தன. அம்முகங்கள் அவர் முன் முடிவில்லாது சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது.
இரவெல்லாம் மன்றில் களியாட்டு நிகழ்ந்துகொண்டிருந்தது. “சலிக்காதவனாக இருக்கிறான் அமைச்சரே. அவன் இதுவரை குடித்த மதுவுக்கு எருதும் களிறும் கூட சரிந்திருக்கும். ஆடவும் பாடவும் போரிடவும் தெரிந்திருக்கிறான். அங்கே இப்போது நடந்துகொண்டிருப்பது கீழ்மையின் களியாட்டம்” என்றான் ஒற்றன். “அரசர் என்ன செய்கிறார்?” என்று பத்மர் கேட்டார். “அங்கு நிகழ்வன அனைத்தையும் வந்து சொல்லும்படி ஆணையிட்டார்” என்றான்.
பத்மர் பின்னிரவில் பிருஹத்ரதனின் மஞ்சத்தறைக்கு சென்றார். துயிலிழந்து சாளரத்திற்கு அருகே நின்றிருந்த பிருஹத்ரதன் கவலையுடன் திரும்பி “என்ன நிகழ்கிறது அமைச்சரே?” என்றார். “அங்கே இரவுபகலாக களியாட்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது...” என்றார் பத்மர். “ஆம், அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவன் என் மைந்தன் அல்ல. அதில் எனக்கு ஐயமே இல்லை” என்றார். பத்மர் ஒன்றும் சொல்லாமல் நோக்கி நின்றார். “என் குருதியிலிருந்து இப்படி ஓர் இழிமகன் உருவாக முடியாது. என் எதிரே வந்து தருக்கி நின்று பேசிய அக்காட்டாளனை நான் அறியேன்.”
பத்மர் “நாளை தெய்வங்கள் சொல்லட்டும்” என்றார். “ஆம், தெய்வங்கள் சொல்லும். சொல்லியாகவேண்டும்” என்றார். அமைச்சர் வந்திருப்பதை அறிந்து சிற்றறையிலிருந்து உடையை சீரமைத்தபடி வந்த அணிகையும் அன்னதையும் “அவனை நாம் ஏன் இன்னமும் விட்டுவைத்திருக்கிறோம்? எங்கள் மைந்தருக்கே அறைகூவலாக அவன் எழுவான் என்றால் எதற்காக தயங்குகிறோம்?” என்றனர்.
பத்மர் அவர்களின் விழிகளை நோக்கினார். நிலையின்மையின் துளிகூடத் தெரியாத தெளிந்த விழிகள். அவர் பெருமூச்சுவிட்டு “நம் மக்கள் அவனை நம்புகிறார்கள். அவர்களின் எழுச்சி சற்று தணியட்டும்” என்றார். “அதை அவன் தூண்டியல்லவா விடுகிறான்?” என்றாள் அன்னதை. “ஆம், ஆனால் நாளைக்குள் அவர்கள் தளர்ந்துவிடுவார்கள். பட்டம் ஒருநாளைக்குமேல் வானில் நிற்கமுடியாதென்பார்கள்” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் “இப்படி ஒரு நிகழ்வு இதற்கு முன் அமைந்ததில்லை” என்றார். “அவன் என் மகன் என்று சொன்னபோது ஒருகணம் என் உள்ளம் திகைத்தது உண்மை. நெடுநாட்களுக்குப்பின் அந்த நகைகளை பார்க்கிறேன். அத்துடன் அச்செயலின் குற்றவுணர்ச்சி என்னுள் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் மீண்டெழுந்து வருவதைப்பற்றிய ஆழ்கனவுகள் என்னுள் இருந்தன. அவையே எனக்கு ஆறுதலும் அளித்தன. அக்கனவை சென்று தொட்டது அந்த நகைகள்” என்றார். “ஆனால், அவன் தோள்களைப் பார்த்தேன். அவை எப்படி அவ்வாறு இருக்கமுடியும்? அவை…” என்றபின் அன்னதையை பார்த்தார். அவள் சாளரம் நோக்கி திரும்பிக்கொண்டாள். அணிகை “அதை நாம் ஏன் பேசவேண்டும்? அது என்றோ மறைந்த கதை” என்றாள். “ஆம் அரசி, அவை சென்றகதைகள். நாளையே இந்தக்கதையை முடிப்போம்” என்றார் பத்மர்.
[ 14 ]
பத்மர் மறுநாள் காலையை இரவின் நீட்சியென்றே அறிந்தார். அமைச்சில்லத்திலிருந்து தன் மாளிகைக்குச் சென்று நீராடி உடைமாற்றி மீளும்போதே ஒற்றர்கள் அவருக்காக காத்திருந்தனர். கீர்த்திமான் “அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்” என்றான். “துயின்றவர்கள் அனைவரும் விழித்துக்கொண்டார்கள். விழித்ததுமே மீண்டும் கள்ளுண்ணத் தொடங்கிவிட்டார்கள்.” பத்மர் முகத்தில் கவலையை காட்டிக்கொள்ளாமல் “அவன் அங்கிருந்தே அரண்மனைக்கு வர எண்ணுகிறானா?” என்றார். “ஆம் என்றே நினைக்கிறேன்” என்றான் கீர்த்திமான்.
“அவனிடம் குலத்தலைவர்களைக் கொண்டு பேசவையுங்கள். அவன் அப்பெருந்திரளுடன் அரண்மனைக்குள் நுழைய முடியாது. அவர்களில் தேர்ந்த பன்னிருவரை உடனழைத்து வரட்டும். அவர்களுக்கு அவையிலும் இடமளிக்கப்படும்” என்றார். “அப்பன்னிருவரை அவன் எப்படி தேர்வுசெய்வான்? அங்கே மேல் கீழென எவரும் இன்னும் உருவாகவில்லை” என்றான் சர்வன். “உருவாகியாகவேண்டும். ஒருவேளை அதன் வழியாகவே இப்போதிருக்கும் எழுச்சி அடங்கக்கூடும்” என்றபின் பத்மர் புன்னகைத்துவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தார்.
காலையில் முழுதணிக்கோலத்தில் அவைக்கு வந்து அமர்ந்திருந்தார் பிருஹத்ரதன். உடன் அவர் தேவியரும் இளவரசர்களும் இருந்தனர். “அரசே, ஒற்றுச்செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார் பத்மர். “ஆம், அச்செய்திகளை நானும் கேட்டேன். ஒன்றுமே நிகழவில்லை. குடி, களியாட்டு அவ்வளவுதான். அதைத்தவிர எதையும் சொல்லவில்லை எவரும்” என்றார் பிருஹத்ரதன்.
அணிகை “அவன் எப்போது இங்கு வருகிறான்?” என்றாள். “குடிமன்று கூடவேண்டும் அல்லவா? புலரிக்குப்பின் மூன்றாம் நாழிகை என்று வகுத்துள்ளோம்.” அன்னதை “இந்தக் குலத்தலைவர்கள் இங்கே என்ன செய்யவிருக்கிறார்கள்?” என்றாள். கிருதி “அவர்களுக்கு இடம் உருவாவதே இத்தகைய பூசல்களின்போதுதான். இதில் அவர்கள் நம்முடன் பேரம் பேசுவார்கள்” என்றான். “வேளிர்குடித்தலைவரிடம் ஒருசெய்தியை அனுப்பியிருக்கிறேன்” என்றார் பத்மர்.
அச்செய்தியை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது கிருதி அதைக்கேட்கும் பொறுமையில்லாமல் எழுந்து சென்று சாளரம் வழியாக நோக்கினான். அவர்கள் அந்தத் தருணத்தின் தயக்கத்தை வெல்ல வீண்சொற்களை கொண்டு தாயமாடினர். சலிப்புடன் அசைந்து அமர்ந்தனர். அவ்வப்போது பொருளில்லா நகைச்சுவை எழ அனைவரும் மிகையாகவே நகைத்தனர். “எப்படியாயினும் நம் நகரில் ஜரர்கள் வந்து வழிபடும் ஓர் ஆலயம் அமையவிருக்கிறது” என்று ஜயசேனன் சொன்னபோது பிருஹத்ரதன் வெடித்துச்சிரித்தார். ஆனால் அவர் விழிகளில் சிரிப்பே இருக்கவில்லை.
சர்வன் உள்ளே வந்து தலைவணங்கினான். “சொல்!” என்றார் பிருஹத்ரதன். “பெண்கள் பெருந்திரளாக அவனுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். பத்மர் திகைப்புடன் “பெண்களா? அவர்களாக வருகிறார்களா?” என்றபடி எழுந்தார். “இது அவர்களுக்கான திருவிழா அல்லவா? அவர்கள் வருவார்கள்” என்றார் பிருஹத்ரதன். “இல்லை அரசே, அன்னையர் உள்ளுணர்வு கொண்டவர்கள். பாதுகாப்பின்மையுணர்வே அவர்களின் படைக்கலம். அவர்கள் தன்னிச்சையாக எழமாட்டார்கள்” என்றார். “எத்தனை பெண்கள்?” என்றார் பிருஹத்ரதன். “பெருந்திரள். அவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பி களத்துக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.” பத்மர் “அது இயல்பானதல்ல” என்றார்.
பிருஹத்ரதன் “அவன் ஜரையின் மைந்தன். அது பெண்களை கவர்ந்திருக்கலாம்” என்றார். “பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து என் மைந்தர் இருவரும் காட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது நகர் ஒருவாரம் துயர்கொண்டது. அன்று உருவான குற்றவுணர்ச்சியை இப்போது ஈடுசெய்கிறார்கள்.” பத்மர் “இல்லை அரசே. பெண்களை கொண்டுவரும்படி அவன் ஆணையிட்டிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்ரதன் “எதற்காக? இங்கே அவைநுழைபவர்கள் மிகச்சிலர்தான். முற்றத்தில் பெண்கள் நின்றிருப்பதனால் என்ன நன்மை?” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பத்மர் அவை விட்டு வெளியே ஓடினார். அவரைத் தொடர்ந்து ஒற்றர்கள் சென்றனர்.
“படைத்தலைவர்களை அழையுங்கள்! நம் படைகள் கவசமும் கலமும் கொண்டு சித்தமாகட்டும். அரண்மனைக்கோட்டையின் வாயில்கள் உடனே மூடப்படவேண்டும்” என்று கூவியபடியே பத்மர் தன் அலுவல்மன்று நோக்கி ஓடினார். அவர் இடைநாழியை அடைவதற்குள்ளாகவே மக்களின் பேரொலி எழுந்து அரண்மனைச்சுவர்கள் அனைத்தையும் அறைந்தது. “என்ன நிகழ்கிறது?” என்று கூவியபடி பிருஹத்ரதன் தன் அவைக்கூடத்திலிருந்து வெளியே ஓடிவந்தார். பத்மர் “கதவுகளை மூடுக! அனைத்துக் காவலர்களும் அணிகொள்க!” என்று கூவியபடி கீழிறங்கி பெருங்கூடம் நோக்கி ஓடினார்.
உள்ளே ஓடிவந்த அரண்மனைக் காவலன் “அமைச்சரே, பெருந்திரளாக மக்கள் கோட்டையை மீறி உள்ளே நுழைந்துவிட்டனர். அரண்மனைக்குள் நுழையப்போகிறார்கள்” என்று கூவிக்கொண்டிருக்கையிலேயே உள்கோட்டையிலிருந்து பெயர்க்கப்பட்ட பெரிய கற்கள் வந்து அரண்மனைச் சாளரங்களை அறைந்தன. “நமது படைவீரர்கள் அவர்களை விட்டுவிட்டார்கள். முன்னிரையில் மைந்தரை ஏந்திய அன்னையரைக் கண்டதும் படைக்கலம் தாழ்த்திவிட்டனர்” என்று இன்னொரு படைத்தலைவன் கூவினான். “வெளிக்கோட்டைப் படைகள் வரட்டும்... உடனே” என்று கிருதி பின்னால் ஓடிவந்தபடி ஆணையிட்டான். “வெளிக்கோட்டைப்படைகள் நகருக்குள் நுழையவே முடியாது இளவரசே. அத்தனை தெருக்களும் மக்களால் மூடப்பட்டுள்ளன” என்றான் படைத்தலைவன்.
மேலும் மேலும் கற்கள் வந்து அரண்மனைமேல் விழுந்தன. முகப்புக்கதவை மூடமுயன்ற ஏவலர் தெறித்து பின்னால் விழ மக்கள்பெருக்கு பிதுங்கி கூச்சலிட்டபடி உள்ளே பீரிட்டது. அவர்கள் கைத்தடிகளையும் தேர்களில் இருந்து பிடுங்கிய ஆரங்களையும் ஆணிகளையும் பலவகையான எடைகொண்ட பொருட்களையும் படைக்கலங்களாக கையில் ஏந்தியிருந்தனர். சிரித்துக்கூச்சலிட்டபடியும் வெறிநடமிட்டபடியும் கண்ணில் கண்டதையெல்லாம் உடைத்தனர். “என்ன இது? இது நம் அரசரின் அரண்மனை” என்று கூவியபடி முன்னால் சென்று கைவிரித்து அவர்களைத் தடுத்த முதிய தலைமை ஏவலனை அவர்கள் சிரித்தபடி தூக்கி தலைமேல் வீசி பந்தாடினர். அவன் அலறியபடி மண்ணில் விழ அவன்மேல் பலநூறு கால்கள் மிதித்து துவைத்தன.
பத்மர் “அரசே, இளவரசே, அரண்மனைவிட்டு நீங்குவோம். வேறுவழியில்லை...” என்றபடி திரும்பி ஓடினார். “ஏன்? இந்த வெற்றுக்கூட்டத்தை அஞ்சியா நாம் ஓடுவது?" என்றபடி கிருதி பின்னால் வந்தான். “அவர்கள் பித்துகொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் எதையும் செய்யமுடியும்” என்றார் பத்மர். “இது அவனால் உருவாக்கப்படுவது. இப்போது அவன் அரண்மனையை கைப்பற்றுவான் என்றால் நம் படைகளும் அவனையே துணைக்கும்... அவன் தன்னை அரசகுருதி என்று சொல்லிக்கொள்கிறான். ஆகவே அவர்களுக்கு எந்தத்தடையும் இருக்காது” என்று பத்மர் சொன்னார். “பேசிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது. இப்போது நம்மை அவர்கள் சிறைப்பற்றுவார்கள் என்றால் அனைத்தும் முடிந்துவிடும். நாம் விலகிச்செல்லவேண்டும். உடனே செய்யவேண்டியது அதைத்தான்” என்றார்.
பிருஹத்ரதன் “அவனிடம் நான் பேசுகிறேன். இவர்களுக்காக நாம் விலகிச்சென்றால் எனக்குப் பெருமை இல்லை” என்றார். “அரசே, இப்போது செய்யக்கூடுவது ஒன்றும் இல்லை. வெறிகொண்டுவரும் இக்கூட்டம் உங்களை சிறுமைசெய்யக்கூடும். தாங்கள் அஞ்சுவதையும் மதிப்பதையும் ஒருமுறை சிறுமைசெய்துவிட்டால் மானுடருக்குள் உள்ள தீயதேவர்கள் எழுந்துவிடுவார்கள். அதை அவர்கள் பெரும் களியாட்டாகவே செய்யத்தொடங்குவார்கள். அதன்பின் அவர்கள் கண்ணில் நாம் மீளவே முடியாது” என்றார் பத்மர்.
“இப்போது அரண்மனைவிட்டு அகல்வோம். நம்மை இழந்தால் இவர்கள் அரண்மனையை சூறையாடுவார்கள். குருதியும் வீழும். அதை இந்நகரின் மூத்தவர் ஏற்கமாட்டார்கள். இன்று பெண்களை முன்னால் பார்த்து விலகிநின்ற படைகளும் குற்றவுணர்ச்சிகொள்வார்கள். அரசரைக் காக்க மறந்த பழியை அவர்கள் அடைவார்கள். நாம் வெளியே சென்று நாம் இருக்குமிடத்தை அரசுநிலை என அறிவிப்போம். இவனை தீயதெய்வங்களை வழிநடத்திவந்த காட்டாளன் என கூறுவோம். இவன் அரசகுருதி அல்ல என்று அறிவிக்கவேண்டும். ஷத்ரிய அரசர்களின் உதவியை நாடவேண்டும். இவனை களையெடுக்க அதுவே வழி.”
பிருஹத்ரதன் “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. என் மக்களா? நான் ஐம்பதாண்டுகாலம் குழவிகள் என புரந்தவர்களா?” என்றார். இன்னொரு பெருங்கதவு வீழும் ஓசை கேட்டது. படிகளில் மக்கள் கால்களின் பேரோசையும் குரல்களின் முழக்கமும் கலந்து பெருக ஏறிவந்தனர். “நேரமில்லை அரசே. இது அமைச்சனாக என் ஆணை!” என்றார் பத்மர். பிருஹத்ரதன் “ஆம், அமைச்சர் சொல் கேட்போம்” என்று ஆணையிட்டார்.
பிருஹத்ரதனும் இரு துணைவியரும் நான்கு இளவரசர்களும் பத்மரும் அரசரின் மஞ்சத்தறைக்குள் புகுந்து அங்கிருந்த சுரங்க அறைக்குள் சென்றனர். கரந்தமைந்த கதவுகளைத் திறந்து மண்ணுக்கு அடியில் சென்ற புதைபாதையினூடாக நடந்தனர். “அரசு துறந்துசெல்கிறோம் அமைச்சரே. உபரிசிரவசுவின் கொடிவழிவந்தவன் குடிகளுக்கு அஞ்சி தப்பி ஓடுகிறேன்” என்றார் பிருஹத்ரதன்.
“நாம் தப்பி ஓடவில்லை. நாம் இத்தாக்குதல் நிகழும்போது அரண்மனையிலேயே இல்லை. கொற்றவைக்கு பூசை செய்து குறிச்சொல் கேட்க வெளியே வந்திருக்கிறோம். நாமில்லாததை அறிந்த அக்கீழ்மகன் அரண்மனையை சூறையாடுகிறான்” என்றார் பத்மர். “நாம் வெல்லவேண்டும். இப்போது முதன்மையானது அதுவே. வென்றவன் எழுதுவதே வரலாறென்பது.”
குறுகியபாதையில் தவழ்ந்துசெல்லும்போது பிருஹத்ரதன் “நம் தலைக்குமேல் நகரம் கொந்தளிக்கிறது” என்றார். “அரசே, வீண் எண்ணங்களை நிறுத்துவோம்” என்றார் பத்மர். “அவன் என் மகன்!” என்று திடீரென்று அன்னதை கூவினாள். “நான் அவனிடம் சென்று பேசியிருப்பேன். என்னை அவன் ஏற்றுக்கொள்வான்.” கிருதி இருளில் விலங்குபோல முனகினான். “ஆம், எங்களை அவனுக்குத்தெரியும்! அவன் எங்கள் மைந்தன்!” என்றாள் அணிகை.
“வாயை மூடச்சொல்லும் அமைச்சரே. இவர்களை இங்கேயே வெட்டிப்போட்டுவிட்டுச் செல்லவும் தயங்கமாட்டோம்” என்றான் கிருதி. “வெட்டுவாயா? எங்கே வெட்டு பார்ப்போம்! இழிமகனே, நீ செய்த கீழ்ச்செயலால்தான் இப்படி ஒளிந்தோடுகிறோம். எல்லாம் உன்னால்தான்” என்றார் பிருஹத்ரதன். “வாயைமூடுங்கள். இனி ஒரு சொல் சொன்னாலும் வாளை எடுப்போம்” என்றான் பிருகத்புஜன். “வெட்டு! அடேய் ஆண்மையிருந்தால் வாளை எடு!” என்று பிருஹத்ரதன் திரும்பி அவன் கழுத்தைப்பிடித்தார்.
“அரசே, வேண்டாம். இது ஆழம். இங்கே எந்த நெறிகளுமில்லை...” என்று பத்மர் அவர் தோளைப்பிடித்து விலக்கினார். பிருஹத்ரதன் மூச்சிரைத்தபடி “இவர்களைவிட அவனைப்பெற்றமைக்கே மகிழ்கிறேன். கீழ்மக்கள். பிறரை புழுவென எண்ணும் பேதைகள்” என்றார். ஜயசேனன் “நீங்கள்தான் கீழ்மகன். உங்கள் கீழ்மை எழுந்து அதோ வந்து நின்றிருக்கிறது” என்று கூவ பிருகத்சீர்ஷன் “அவன் உங்கள் குருதி அல்ல. மைந்தனில்லை என்று காட்டுக்குச் சென்று அதர்வவேதம் பயிலும் இழிசினருக்கு மனைவியரை அளித்து பெற்றவன்... அவனுடன் சென்று அமர்ந்திருங்கள்...” என்றான்.
அணிகை “சீ, வீணனே” என்று அவனை அறைய அவன் அவளை திருப்பி அறைந்தான். “அறிவிலியே, இதுகூட தெரியவில்லையா உனக்கு? நீங்கள் ஒருநாள் கழுவில் அமர்ந்திருப்பீர்கள். ஆம், கழுவமர்ந்து நரகுலகு செல்வீர்கள்” என்று அணிகை கூச்சலிட்டாள். “அரசி, அரசே, வேண்டாம். சொல்லெடுக்கவேண்டாம். இவ்விருள்வழியை எப்படியேனும் கடப்போம்” என்றார் பத்மர். “ஆம், கடந்துசெல்வோம். வேறுவழியே இல்லை” என்றார் பிருஹத்ரதன் தளர்ந்த குரலில்.
கண்ணீரும் வசைச்சொற்களுமாக அவர்கள் இருண்ட பாதையில் நடந்தனர். கோட்டைக்கு வெளியே மேற்குபக்கம் இருந்த குறுங்காட்டிலமைந்த கொற்றவை ஆலயத்தின் தேவிசிலையின் பின்பக்கம் பதிக்கப்பட்டிருந்த கற்பலகையைத் தூக்கி வெளியே வந்தபோது பத்மர் ஆறுதலுடன் “தெய்வங்களே…” என்றார். கண்கள் கூசின. இருண்ட கனவொன்றை விட்டு வெளியே வந்தவர்களைப்போல அவர்களின் முகங்கள் திகைத்திருந்தன.
[ 15 ]
மேற்கு எல்லையிலிருந்த காவல்நிலையிலிருந்து தேர்களை பெற்றுக்கொண்டு குறுங்காடுவழியாகத் தப்பி கங்கைக்கு மறுபக்கமிருந்த கிருஷ்ணபாகம் என்னும் சிறுநகரை சென்றடைந்தனர் பிருஹத்ரதனும் அரசியரும் மைந்தரும். செல்லும் வழியெல்லாம் கிருதி வசைபாடிக்கொண்டே வந்தான். “நான் அப்போதே சொன்னேன், தொடக்கத்திலேயே அக்கீழ்மகனை எளிதில் வென்றிருக்கலாம். எதையும் ஒரு கொள்கையென்றாக்காமல் உங்களால் செயல்பட முடியாது... வாளால் வெட்டப்படவேண்டியவனை சொல்லால் வருடிக்கொண்டிருந்தீர்கள்.”
பத்மர் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. தொலைவிலிருந்து நோக்கியபோது ராஜகிருஹம் மழைபெய்யும் குளம்போல கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. பல இடங்களில் புகை எழுந்து வானில் கலைந்தது. “அவன் நகரை எரிக்கிறான்” என்றார் பிருஹத்ரதன். “இல்லை அரசே, அவன் மக்களின் எழுச்சிக்கு இடமளிக்கிறான். நகரிலும் அரண்மனையிலும் ஒரு சிறுபகுதியை எரிக்காமல் அவர்களால் அமையமுடியாது” என்றார் பத்மர். “அது அவர்களின் இறந்தகாலம்.”
பிருஹத்ரதன் பெருமூச்சுவிட்டு “இதைப்போல இதற்குமுன்பு நடந்ததே இல்லை” என்றார். “மூன்றுமுறை நடந்துள்ளது. இருநூறாண்டுகளுக்கொருமுறை இவ்வண்ணம் நிகழ்கிறது” என்றார் பத்மர். “கணக்குகளை சொல்லும். இந்த இழிமகனை வெல்லும் வழிகேட்டால் மட்டும் பொறுத்திருக்கும்படி சொன்னீர்கள்...” என்று ஜயசேனன் அவர் முகத்தின் நேராக கைநீட்டி சொன்னான்.
அவர்கள் கிருஷ்ணபாகத்தை அடைந்து அரண்மனைக்குள் சென்றபோது களைத்துச் சோர்ந்திருந்த பிருஹத்ரதன் “அமைச்சரே, எந்தை முன்பு ஒரு ஜரர்குலத்துச் சிறுவனை நெடுகப்போழ்ந்தார் என்று சொல்கிறார்களே, உண்மையா?” என்றார். பத்மர் தலையசைத்தார். “அப்பழியே இன்று இந்த காட்டாளனாக எழுந்து வந்து நம் முன் நிற்கிறது என்கிறார்கள். அதை உண்மை என்றே கொள்கிறேன்” என்றார். பத்மர் தலைகுனிந்து உடன் நடந்தார்.
அன்று முழுக்க பறவைச்செய்திகள் வந்துகொண்டே இருந்தன. ராஜகிருஹ நகரத்தில் ஒருபகுதி கொந்தளிக்கும் மக்களால் எரிக்கப்பட்டது. பெரும்பாலானவை வணிகர் இல்லங்களும் பண்டநிலைகளும்தான். அரண்மனையில் ஊழியர்குடியிருப்புகள் எரிந்தன. அரசவையை அவர்கள் உடைத்துச் சூறையாடினர். ஆனால் கருவூலம் வீரர்களால் காக்கப்பட்டது. “விந்தை, வணிகர்கள் அவர்களுக்கு துணைநின்றனர் அல்லவா?” என்றார் பிருஹத்ரதன்.
“அரசே, எளியவர்களின் முதல்சினம் எப்போதும் வணிகர்களிடம்தான். அவர்கள் வணிகர்களிடம்தான் நாளும் போரிலிருக்கிறார்கள்.” பிருஹத்ரதன் “அதை வணிகர்களும் அறிந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு உணவளிக்கிறார்கள்” என்றார். “ஆம், உணவளிக்கும் வணிகர்கள்தான் மக்களின் சினத்தை மட்டுப்படுத்துகிறார்கள்” என்றார் பத்மர். "கருவூலத்தை அவர்கள் ஏன் சூறையாடவில்லை?” என்றார் பிருஹத்ரதன்.
“அவர்களுக்கு அது கோயில்கருவறை. சினமிருந்தாலும் அச்சமும் எஞ்சியிருக்கும். ஜராசந்தன் நேற்றே கருவூலத்திற்கு காவலிட்டிருப்பான்” என்றார் பத்மர். “நம் உண்மையான கருவூலம் அங்கே அரசமாளிகைக்கு அடியில் ஒளிந்திருக்கிறது. அதை அவனால் அடையமுடியாது. அரசரோ அரசியரோ அன்றி பிறருக்கு அவ்வழி தெரியாது” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் பெருமூச்சுடன் “அனைத்தும் கைவிட்டுச்சென்றுவிட்டன என்னும் உணர்வை நான் அடைந்துவிட்டேன் அமைச்சரே. இனி போரிட என்னால் இயலாது” என்றார். “அரசே, ஷத்ரியர்களின் வழி அதுவல்ல” என்றார் பத்மர். “ஆம். ஆனால் என் இம்மைந்தர் இன்னமும் கடையர். நான் எவருக்காக போரிடவேண்டும்?” என்றார் பிருஹத்ரதன்.
பத்மர் ஒன்றும் சொல்லாமல் எழுந்து சாளரம் வழியாக அந்தச் சிறியநகரை நோக்கினார். அங்குள்ளவர்கள் ராஜகிருஹ நகரில் நிகழ்ந்தவற்றை அறிந்திருந்தனர். பரபரப்புடன் சாலையில் நடந்துகொண்டிருந்தனர். அவர்களை அவர் நோக்கிக்கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஓடும் எண்ணம் என்ன? எந்த ஆட்சியாளனாவது அவர்களை முழுமையாக அறிந்துவிடமுடியுமா என்ன? அங்கே ராஜகிருஹ நகரில் வெறிகொண்டு கூத்தாடும் எளிய மக்கள் முந்தையநாள் வரை ஆட்டுமந்தைகளாக இருந்தவர்கள் அல்லவா?
அந்தியில் வந்த செய்திகள் அச்சுறுத்தின. எங்கோ ஒரு புள்ளியில் மக்களின் களிவெறியாட்டு கொலைநோக்கி சென்றது. அவர்களிடம் பணம்பெருக்கு வணிகம் செய்யும் ஒருவனை அவர்கள் கிழித்துக்கொன்று முச்சந்தியில் தொங்கவிட்டனர். அதைச்சூழ்ந்து நின்று குருதியை அள்ளி தங்கள் முகங்களில் பூசிக்கொண்டு நடனமிட்டனர். அதன்பின் கொலைகள் தொடர்ந்து நடக்கத் தொடங்கின. வணிகர்கள், நாள் காவல்வீரர்கள், ஆலயப்பொறுப்பாளர்கள் என அவர்களால் வெறுக்கப்பட்டவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர். பின்னர் கொலைக்காகவே கொலை என்றாயிற்று.
“ராஜகிருஹ நகர்த்தெருக்களில் சேறென குருதி மிதிபடுகிறது. அத்தனை மக்களும் குருதியிலாடி ரத்தபீஜர்கள் போல தெரிகிறார்கள்” என்று ஒற்றனின் ஓலை சொன்னது. இரவு கொழுக்கும்தோறும் கொலைவெறியாட்டு விரைவுகொண்டது. “இப்போது படைவீரர்களும் கொலைக்கலங்களுடன் இறங்கிவிட்டனர். தங்கள் தலைவர்களை கொல்கிறார்கள். ஷத்ரியப் படைத்தலைவர்கள் எவரும் இப்போது எஞ்சவில்லை” என்றது மந்தணச்செய்தி.
நள்ளிரவுக்குப்பின் “இங்கே நிகழ்வது பொருளற்ற கொலை. ஒரு கொலையாவது செய்துவிடவேண்டும் என்னும் எளிய மானுடனின் விழைவின் வெளிப்பாடு மட்டுமே. நகர் முழுக்க சிதைந்த உடல்களும் குருதியும் மிதிபடுகின்றன. இருளில் குருதிவாடையும் அலறல்களும் வெறியாட்டுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன” என்றது ஓலை. இரவு முழுக்க கொலைவெறியாடலின் செய்திகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. விடியலில் “விடிந்தது. வானைவிட சிவந்துள்ளது நகரம்” என்று செய்திவந்தது.
“அங்கே உள்ள படைகள் என்னதான் செய்கிறார்கள்?” என்று பத்மர் செய்தியனுப்பினார். “ஷத்ரியப்படைகள் நகரத்தின் தெற்குவாயிலைத் திறந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன. அடித்தளப்படைகள் நகரை முழுமையாக கையகப்படுத்திக்கொண்டிருக்கின்றன” என்றது ஒற்று. “ஷத்ரியப்படைகள் நிலைகுலைந்துள்ளன. அவர்களிடம் தலைமை இல்லை. அரசர் உயிருடனிருக்கும் செய்தியை இங்கே அறிவித்தாகவேண்டும். அரசரையும் இளவரசர்களையும் ஜராசந்தன் கொன்று உண்டுவிட்டான் என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள்.”
பத்மர் அரசரிடம் “ஆம், தாங்கள் இருப்பதை அறிவித்தாகவேண்டும். இல்லையேல் நகரில் நம்மைச்சார்ந்து எண்ணுபவர்களும் நம்பிக்கை இழப்பார்கள். நம்பிக்கையிழந்தால் அவர்கள் அவனை ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்கள். மானுட இயல்பே அதுதான்” என்றார்.
“ராஜகிருஹநகருக்கு வெளியே கொற்றவை வழிபாட்டுக்கு வந்திருக்கும் அரசர் பிருஹத்ரதன் நகரில் நிகழும் கிளர்ச்சியை அறிந்திருக்கிறார். விரைவிலேயே பெரும்படையுடன் நகர் புகுவார். கிளர்ச்சிசெய்பவர்கள் கழுவிலேற்றப்படுவார்கள்” என்று ஒரு பறவைச்செய்தியை பத்மர் ராஜகிருஹ நகருக்கு அனுப்பினார். அதை பட்டோலைகளில் எழுதி நகர்மூலைகளில் தொங்கவிடும்படி ஒற்றர்களுக்கு ஆணையிட்டார். “அவை உடனடியாக அகற்றப்படும். ஆனால் செய்தி வந்தது என்பதை வாயும்செவியும் கொண்டுசெல்லும்” என்றார் பத்மர்.
அன்றுகாலை ராஜகிருஹத்திலிருந்து முதல் ஷத்ரியப்படைப்பிரிவு கிருஷ்ணபாகத்துக்கு வந்தது. அவர்கள் சோர்ந்துபோய் துயிலில் என நடந்தனர். பலருக்கு உடலில் காயங்கள் இருந்தன. அரசரைப்பார்த்ததும் வீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி போர்முழக்கமிட்டனர். மேலும் மேலும் ஷத்ரியப்படைகள் வந்துகொண்டிருந்தன. “நாம் இங்கிருக்கிறோம் என்பதை இனிமேல் மறைக்கமுடியாது” என்றார் பத்மர். “அவன் நம்மை நாளையே தாக்கக்கூடும்... அதற்குள் நாம் கோட்டையை வலுப்படுத்தியாகவேண்டும். படைகளை சீரமைக்கவேண்டும். நோயுற்றவர்கள், காயம்பட்டவர்கள் எவரும் படைமுன் செல்லவேண்டாம். அவர்களின் சோர்வு பிறருக்கும் பரவக்கூடியது.”
உச்சிப்பொழுதுக்குள் ராஜகிருஹநகரிலிருந்து வந்த ஷத்ரியப்படைகளால் கிருஷ்ணபாகம் நகர் நிறைந்து விம்மத்தொடங்கியது. வீரர்கள் தெருக்களிலும் மன்றுகளிலும் தங்கினர். “அவன் இப்போது நகரைவிட்டு வரமுடியாது. இன்றைக்குள் நகரத்தை அவன் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் மக்கள் அவனை எதிர்க்கத் தொடங்கிவிடுவார்கள்” என்றார் பத்மர். “வன்முறையாடும் மக்கள் சிறுபகுதியினரே. இல்லங்களில் ஒளிந்திருப்பவர்களே மிகுதி.” பிருஹத்ரதன் “அவனிடம் படைகள் இல்லை. அடித்தளப்படைகளைக்கொண்டு அவன் நகரை ஆள முடியாது” என்றார்.
பத்மர் பகல்முழுக்க படைகளைச் சீரமைக்கும் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். கிருதி மட்டிலுமே அரண்மனையில் இருந்தான். பிறமூவரும் நகரில் புரவிகளில் அலைந்துகொண்டிருந்தனர். “நாளை பகலிலேயே ஜராசந்தனின் படைகள் கிருஷ்ணபாகநகரை தாக்கக்கூடும்” என்று ஒற்றுச்செய்தி வந்தது. “அது எப்படி?” என்று பத்மர் கேட்டார். “அந்நகரைப் பாதுகாக்கவே அவனிடம் படைகள் இல்லையே?” கிருதி “அவன் வரட்டும். ஷத்ரியர் ஆற்றல் என்ன என்று அவனுக்குக் காட்டுவோம்” என்று சொன்னான்.
ஆனால் அன்று அந்தியிலேயே ஜராசந்தன் படைகொண்டுவந்து கிருஷ்ணபாகநகரை தாக்கினான். முதலில் அரையிருளில் பிருஹத்ரதனையும் இளவரசர்களையும் வாழ்த்தியபடி பந்தங்களுடன் குறுங்காடுவழியாக வந்தவர்கள் எஞ்சிய ஷத்ரியப்படைகள் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். அவர்களின் முதல்நிரை கோட்டைவாயிலைத் தாக்கி உட்புகுந்து வெட்டத்தொடங்கியபின்னரே அவர்கள் ஜராசந்தனின் படைகள் என்றறிந்தனர்.
போர்முரசுகள் ஒலிக்கக்கேட்ட பின்னரும்கூட பத்மர் என்ன நிகழ்கிறதென்பதை புரிந்துகொள்ளவில்லை. கிருதி வந்து “போர்முரசல்லவா?” என்றபோது “பிழையாக முழக்குகிறார்கள் போலும்” என்றார். மேலும் மேலுமென ஜராசந்தனின் படைகள் உள்ளே வந்தன. சற்றுநேரத்திலேயே கிருஷ்ணபாகநகரம் அவர்களால் நிறைந்தது. “இளவரசே, தப்பி ஓடுங்கள். இந்நகரைக் காக்க நம்மால் முடியாது” என்றார் பத்மர். “வீணன்... அவனுக்கு எப்படி இத்தனை படைவல்லமை?” என்றான் கிருதி.
குருதி வழியும் உடலுடன் படைமுகப்பிலிருந்து அப்படியே ஓடி உள்ளே வந்த பிருகத்சீர்ஷன் “மூத்தவரே, அவர்கள் அசுரப்படையினர். அவன் சுற்றுமுள்ள ஆசுரநாடுகள் அனைத்துக்கும் நேற்றே செய்தியனுப்பி படைகளை கொண்டுவரச்சொல்லியிருக்கிறான்” என்றான். பின்னால் ஓடிவந்த ஜயசேனன் “அசுரப்படைகள். காட்டுமக்கள்” என்று கூவினான்.
ஆசுரநாட்டு சிற்றரசர்கள் அனைவருக்கும் கிளர்ச்சி தொடங்கியநாளே ஜராசந்தன் ஓலைகளுடன் தூதர்களை அனுப்பியிருந்தான். அவர்களை ராஜகிருஹநகருக்கு வராமல் கிருஷ்ணபாகநகருக்குச் செல்லும்படி பணித்திருந்தான். அசுரப்படைகளை நடத்திவந்த வஜ்ரபாகு மூன்றுமுறை மகதத்தின் ஷத்ரியர்களால் வெல்லப்பட்டவன். அவன் ஊர்கள் சூறையாடப்பட்டன. அவன் குடியினர் கொன்றழிக்கப்பட்டனர். அவன்படைகள் பெருவஞ்சம் கொண்டிருந்தன.
கிருஷ்ணபாகம் தெருக்களில் குருதி ஓடத்தொடங்கியது. நான்கு இளவரசர்களும் அரண்மனைக்குள் வந்ததும் “தப்பிச்செல்வோம். நமக்கு வலுவான போர்முனை இனிமேல்தான் உள்ளது. அசுரர் நமக்கெதிராக வந்ததை பாரதவர்ஷத்தின் ஷத்ரிய மன்னர் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அத்தனை ஷத்ரியநாடுகளும் அசுரர்களின் நாடுகளுக்குமேல்தான் தங்கள் அரசுகளை அமைத்துள்ளன. அசுரர் எழுவதென்பது அடிமண் வெடிப்பதுபோல. இவனை முளையிலேயே அவர்கள் கிள்ளுவார்கள்...” என்றார் பத்மர்.
கிருதி பதைப்புடன் “இப்போது எங்கே செல்வது பத்மரே?” என்றான். “இங்கிருந்து வெளியேறுவோம். முதலில் வங்கத்திற்குச் செல்வோம். புண்டர நாட்டின் வாசுதேவன் அசுரர்களுக்கு எதிராக படைகொண்டு நின்றிருக்கும் தருணம் இது. நாம் அவனுடன் இணைந்துகொள்வோம்.” கிருதி “சொல்லறிந்த நாள்முதல் வங்கர்கள் நம் எதிரிகள்” என்றான். “ஆம், ஆனால் அசுரர்கள் நம் அனைவருக்கும் பொது எதிரிகள்” என்றார் பத்மர்.
பிருஹத்ரதன் “நான் வரப்போவதில்லை” என்றார். “என்ன சொல்கிறீர்கள் அரசே?” என்றார் பத்மர். “நான் என்றும் பௌண்டரிக வாசுதேவனை என் எதிரி என்றே நினைத்திருக்கிறேன். குலமிலியான அவனை எந்த அவையிலும் நிகராக நடத்தியதில்லை. இன்று அவன் அவையில் சென்று அடிபணிந்து அமர்வதைவிட என் மைந்தன் கையால் இறக்கிறேன்” என்றார்.
சினத்துடன் ஏதோ சொல்லவந்த கிருதியை கையமர்த்தித் தடுத்து பத்மர் “அதுவும் நன்றே. அரசே தாங்கள் ஜராசந்தனிடம் அடைக்கலமாகுங்கள். என்ன செய்தாலும் அவனை அரசன் என்றோ மைந்தன் என்றோ ஏற்கவேண்டாம்” என்றார். “ஆம், அவனை என்னால் ஏற்கமுடியாது. உபரிசிரவசுவின் அரியணையில் ஜரன் அமர்ந்தால் என் முன்னோர் என்னை பொறுத்தருளமாட்டார்கள்” என்றார் பிருஹத்ரதன்.
வெளியே செல்கையில் கிருதி “அவர் இங்கே இருக்க நாங்கள் செல்வதெப்படி?” என்றான். பத்மர் “புரிந்துகொள்ளுங்கள் இளவரசே. அவனுடன் இருக்கையில் அரசர் அவனை ஏற்கவில்லை என்றால் அதுவே மக்களிடையே பேச்சாகும்” என்றார். கிருதி “அவன் அவரை கொல்வான்” என்றான். “அப்படி நிகழ்ந்தால் அதுவும் நன்றே. அவன் பெரும்பழி சூழ்ந்தவனாவான். அவனை வென்றபின் நம்மால் அவனை எளிதில் கழுவேற்ற முடியும்.”
வஜ்ரபாகுவின் படைகள் அரண்மனையை வென்று உள்ளே வந்தபோது அங்கே அரசரும் தேவியரும் மட்டுமே இருந்தனர். அமைச்சரும் இளவரசர்களும் கரவுப்பாதை வழியாக தப்பிச் சென்றுவிட்டிருந்தனர். கங்கையில் சென்ற வணிகப்படகு ஒன்றில் மாறுதோற்றத்தில் ஏறி புண்டரநாட்டின் எல்லைக்குச் சென்றிறங்கியபோது அரசரும் தேவியரும் சிறைபிடிக்கப்பட்டு ராஜகிருஹத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட செய்தியுடன் பறவை அவர்களைத் தேடி வந்தது.
இரவில் அவர்கள் புண்டரநாட்டின் தலைநகரான புண்டரவர்த்தனத்தை அடைந்தனர். அங்கு முன்னரே அவர்கள் வரும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. காவலர்தலைவன் அவர்களை அரண்மனைக்கு அழைத்துச்சென்றபோது அவர்கள் களைத்திருந்தனர். கிருதி “இவர்கள் நம்மை எப்படி நடத்துவார்கள் அமைச்சரே? படைகளின்றி வந்துள்ளோம்…” என்றான். “படைகளை நாம் திரட்டமுடியும். அதற்கு இன்னும் வாய்ப்புள்ளது. ஷத்ரியர் அவனை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை” என்றார் பத்மர். தங்களுக்கான அரண்மனையில் அவர்கள் தங்கியபோது உளச்சோர்வை உடற்களைப்பு மறைத்தது.
வெயிலெழுவது வரை ஓய்வெடுத்து எழுந்து அணிகொண்டு பௌண்டரிக வாசுதேவனின் அவைக்குச் சென்றனர். அவர்களை அழைத்துச்செல்ல இளைய அமைச்சன் ஒருவன் வந்திருந்தான். “இவன் அமைச்சனா, வெறும் கணக்கனா? நாம் புண்டரநாட்டினும் மும்மடங்கு பெரிய மகதத்தின் அரசகுலம். நம்மை அழைத்துச்செல்ல மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்புவதல்லவா முறை?” என்றான் கிருதி.
“நாம் இங்கே அவர்களின் உதவிகொள்ள வந்தவர்கள். அரசமுறையாக வரவில்லை” என்றார் பத்மர். “அதை நாம் உணரவேண்டுமென விரும்புகிறான் வாசுதேவன்.” பிருகத்சீர்ஷன் “மகதத்தை நாம் வென்றால் படைகொண்டு வரப்போவது புண்டரத்தின்மேல்தான். இந்த இழிசினன் அணிந்துள்ள மணிமுடியை நம் கால்களால் பந்தாடி விளையாடவேண்டும்” என்றான். பத்மர் புன்னகைசெய்தார்.
அவர்களை இருநாழிகைநேரம் அவைக்கு வெளியே நிற்கச்செய்தனர் ஏவலர். “அரசர் அமைச்சு சூழ்கிறார். காத்திருக்கும்படி கோரினார்” என்றார் அவையமைச்சர். “என்ன இது அமைச்சரே? அரசதூதர்களைக்கூட இப்படி நிற்கச்செய்யும் வழக்கமில்லை” என்றான் ஜயசேனன். “நாம் பொறுத்துதான் ஆகவேண்டும். நமக்கு வேறுவழியே இல்லை” என்றார் பத்மர்.
அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டபோது பத்மர் மெல்ல “இப்போது நமக்கு மாற்று ஏதுமில்லை. அவனுக்கு அவைபுகும் குடிகள் அரசனுக்கு அளிக்கும் வணக்கத்தை அளிப்போம்” என்றார். “என்ன சொல்கிறீர்கள்? நம் மூத்தவர் மகதத்தின் பட்டத்து இளவரசர்” என்றான் பிருகத்சீர்ஷன் பல்லைக் கடித்தபடி. “ஆம், ஆனால் இப்போது நம் அரசருக்கே மணிமுடி இல்லை” என்றார் பத்மர்.
கிருதி “ம்?” என்று உறும அவன் விழிகளை நோக்கி “ஆம், அதுவே நடைமுறை உண்மை. அதனுடன் பொருந்துவோம். நாம் இன்று இவ்வரசனை வென்றெடுத்தாகவேண்டும். இவன் உதவியில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது” என்றார் பத்மர். “இவன் பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனை அஞ்சுகிறான். அவன் நரகாசுரனின் குருதிவழிவந்தவன். அசுரர்களைபற்றிய இவன் அச்சத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நாம் இவனுக்கிழைத்த சிறுமைகளுக்கு ஈடுசெய்ய விழைவான். அதை அவனுக்கு அளிப்போம். இது நம் களம் அல்ல, அவனுடைய களம். அவனுடைய நீக்கம்” என்றார். கிருதி பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.
அவர்கள் அவை நுழைந்து பௌண்டரிக வாசுதேவனுக்கு முழுத்தலைவணக்கம் அளித்தனர். “பெரும்புகழ்கொண்ட புண்டரநாட்டின் அரியணை வீற்றிருக்கும் பாலியின் கொடிவழிவந்த பேரரசர் வாசுதேவரை வணங்குகிறேன். இவர் மகதத்தின் பட்டத்து இளவரசர் கிருதி. இவர்கள் இளையோர் பிருகத்சீர்ஷரும் பிருகத்புஜரும் ஜயசேனரும். இவர்கள் தங்கள் அடிபணிகிறார்கள்” என்றார் பத்மர்.
இளவரசர்கள் தலைவணங்கி முகமன் சொன்னபோது பௌண்டரிக வாசுதேவன் உதடுகளில் பெருஞ்சிரிப்பு பரவியது. கரியதோள்களும் நீண்ட கைகளும் கொண்டிருந்த வாசுதேவன் தலையில் மயிற்பீலி சூடியிருந்தான். யாதவ வாசுதேவனுக்கு மாற்றாக தன் பெயரும் பேசப்படவேண்டும் என்று விழைவுகொண்டிருந்தான். தன்னை பௌண்டரிக வாசுதேவன் என சூதர்கள் பாடுவதை விரும்பினான். அதைக்குறித்த பல பகடிகளை பத்மர் கேட்டிருந்தார். “தங்கள் கரியபெருந்தோள்களே பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படைக்கலங்கள் என்று அறிந்திருக்கிறேன். இப்போது கண்டேன். வாசுதேவர் என்றால் அது தாங்களே என்றுணர்ந்தேன்” என்றார்.
தொடையிலறைந்து உரக்க நகைத்த பௌண்டரிக வாசுதேவன் “நன்று... நீங்கள் என் அவைக்கு வந்ததும் நல்லூழே. உங்களுக்கு ஆவன செய்ய நான் உளம்கொண்டிருக்கிறேன். இந்த அவையும் உங்களிடம் கருணைகொண்டிருக்கிறது. அமர்க!” என்றான். “நான் செய்யக்கூடுவது யாது?” என்றான். “மகதத்தின் மணிமுடிக்குரியவர் இவர். இவரது முடியை அசுரர் முறையிலாது கைப்பற்றியிருக்கிறார்கள். ஷத்ரியர் அதற்கெதிராக அணிதிரளவேண்டும். படையும் துணையும் அளித்து அக்காட்டாளனை வெல்ல உதவவேண்டும்” என்றார் பத்மர்.
“பத்மரே, இன்றுகாலை வந்த செய்தி இது. இன்று மாலை அங்கே ராஜகிருஹத்தில் ஜராசந்தனை தன் முதல்மைந்தனாக அறிவித்து முறைப்படி மகதத்தின் முடியை சூட்டுகிறார் மகத அரசர் பிருஹத்ரதன். உடனமர்கிறார்கள் அவரது அரசியர். தனக்குப்பின் தன்மூதாதையர் மணிமுடியை எவர் சூடவேண்டும் என்பது அரசர்கள் எடுக்கும் முடிவு. அதில் பிறநாட்டவர் தலையிடுவதில்லை” என்றான் பௌண்டரிக வாசுதேவன்.
[ 16 ]
ஓராண்டுகாலம் மகதம் கொலைப்பித்துகொண்ட மலைத்தெய்வங்களால்தான் ஆட்டிப்படைக்கப்பட்டது. பௌண்டரவர்த்தனத்திற்கு ஒவ்வொருநாளும் ராஜகிருஹத்தில் நிகழ்ந்த கொலையாட்டின் செய்திகள்தான் வந்துகொண்டிருந்தன. காலையில் அன்றைய தலையெண்ணிக்கையுடன்தான் பறவைச்செய்திகள் வந்தன. படைத்தலைவர்கள், அமைச்சர்கள், அரசுப்பொறுப்பாளர்கள், சுங்கநாயகங்கள், ஓலைக்காரர்கள், ஒற்றர்கள் என கொலைக்களம் சென்றுகொண்டே இருந்தனர். குருதி பெறுந்தோறும் மேலும் விடாய்கொண்டன அத்தெய்வங்கள். வணிகர்களும் குலத்தலைவர்களும் கொலையுண்டனர்.
கொலைகள் அனைத்தும் வெளிப்படையாக பொது இடங்களில்தான் நடைபெற்றன. கொலைகளுக்கான புதியவழிகள் கண்டடையப்பட்டன. முச்சந்தியில் நெய்யூற்றி எரிக்கப்பட்டார்கள். தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு உடல்நீர் வழிந்தோடி இறந்தனர். வெல்லப்பாகு தூவி கைகள் கட்டப்பட்டு பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் உணவாக்கப்பட்டனர். மெல்லியதோல்சவ்வு ஒட்டப்பட்ட தோலுடன் கைகள் கட்டி வெயிலில் போடப்பட்டனர். அத்தோலை உரித்தெடுத்த புண்ணில் உப்பு பூசப்பட்டு மீண்டும் வெயிலில் விடப்பட்டனர். கங்கையின் பொரிமணலை இரைப்பை நிறைத்து ஊட்டி ஊர்மன்றில் விடப்பட்டனர். மெல்லிய சுருள்கம்பிகளை அழுத்திச்சுருட்டி அப்பங்களில் வைத்து விழுங்கும்படிச் செய்யப்பட்டனர். யானைகள் இருபக்கமும் நின்றிழுக்க இரண்டாக கிழிக்கப்பட்டனர். குதிரைகளில் கட்டப்பட்டு நகர்முழுக்க இழுத்துச்செல்லும்படிச் செய்யப்பட்டனர். ஒவ்வொருநாளும் உடல்வெட்டப்பட்டு அந்த ஊனையே சமைத்து உணவாக அளிக்கப்பட்டனர்.
ராஜகிருஹம் வெறிகொண்டு குருதியாடியது. அதன் வானில் ஊன் தின்று சுவைகண்ட பறவைகள் எப்போதும் சூழப்பறந்தன என்றார்கள். அங்கிருந்து ஷத்ரியர் தப்பி ஓடி பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்துகொண்டிருந்தனர். எல்லைகாத்த பன்னிரு படைப்பிரிவுகள் பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்து சேர்ந்தபோது கிருதி தன்னம்பிக்கை கொண்டான். “அங்கே அந்த அரக்கன் மேல் மக்களின் கசப்பு எழுந்துள்ளது. அவனை நாம் நம் தேர்க்காலில் கட்டி நகரெங்கும் இழுத்துச்செல்லும் நாள் அணுகிவருகிறது” என்றான். “ஒவ்வொருநாளும் கனவில் அவன் குருதியை நான் குடிக்கிறேன்” என்றான் ஜயசேனன்.
ஆனால் நேர்மாறாகவே மக்களின் உள்ளம் செல்கிறது என்பதை பத்மருக்கு வந்த தூதுச்செய்திகள் உணர்த்தின. ஓர் அரசன் அக்கொடுமைகளில் ஒன்றைச்செய்தால்கூட மக்கள் அவனை தலைமுறைகளுக்கு வெறுப்பார்கள். பழிகொண்ட மண்ணிலிருந்து குடிகளுடன் கிளம்பிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் செய்யும் அத்தனை கொடுமைகளுடனும் அவர்களின் கனவுகள் இணைந்துகொண்டன. அவர்கள் அக்கொடுநிகழ்வுகளை ஆதரித்தனர். ஆதரிப்பதற்குரிய தொடக்கச்சொற்களை மட்டும் சூதர்கள் உரியமுறையில் எடுத்தளித்தால்போதும். அவற்றை அவர்கள் நெய்யெரி என வளர்த்துக்கொண்டனர்.
“அவர்கள் ஒவ்வொருவரும் அவனாக நின்று அவற்றை இயற்றுகிறார்கள். அவன் அரசன் அல்ல, வீரத்தலைவன். மக்கள் வீரர்களை வழிபடுகிறார்கள். வீரர்களுக்கு தங்கள் குருதியை மகிழ்வுடன் அளிக்கிறார்கள். அவன் உண்ட குருதியின்பொருட்டே அவனை கொண்டாடி தெய்வமாக்குகிறார்கள்” என்றார் பத்மர். “கார்த்தவீரியன் குடித்த குருதிக்கு இன்னமும் இவன் நிகர்செல்லவில்லை.” கிருதி “இந்தக்கொள்கைகள் எவையும் எனக்கு புரியவில்லை. மக்கள் அவனை வெறுக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்” என்றான்.
“வெறுப்பார்கள். அதற்கு அவன் வெல்லப்படவேண்டும். அவன் தோற்ற மறுகணமே அவர்கள் அவன் கொடுமைகளை காணத் தொடங்குவார்கள். அவனை இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். அவன் வெல்லற்கரியவன் என்பதனால்தான் கொண்டாடுகிறார்கள். தோற்றுவிட்டான் என்றால் அவன் எளியவன் ஆகிவிடுகிறான். வெல்லற்கரிய தேவனுக்கு கொடுமைகளை ஆற்றும் உரிமையுண்டு என எண்ணுகிறார்கள். அவன் தங்களைப்போன்றவனே என்றால் தங்களைக் கட்டுப்படுத்தும் நெறிகளும் நம்பிக்கைகளும் அவனுக்கும் இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள்.”
எரிச்சலுடன் தலையை அசைத்து கிருதி எழுந்துசென்றான். “அவன் குருதியை என் கைகளில் அள்ளி முகத்தில் பூசவேண்டும். அதன்பின்னரே இச்சொற்களை புரிந்துகொள்ளும் தெளிவெனக்கு அமையும்” என்றான். “அமைச்சர் சொல்வது உண்மை. அவர் மக்களுடன் சேர்ந்து களியாடுகிறார். ஒவ்வொருநாளும் ஒருவர் இல்லத்தில் உணவருந்துகிறார். அவர்களின் குழந்தைகளை அரண்மனைக்கு கொண்டுசென்று விளையாடுகிறார். அன்னையர் அவரை தங்கள் மைந்தன் என்றே நினைக்கிறார்கள்” என்றான் ராஜகிருஹத்திலிருந்து வந்த ஒற்றன்.
“ஏழைகளின் விழிநீரை அறிந்தவர் என்று அவரை சொல்கிறார்கள்” என்று ஒற்றன் சொன்னான். “ஒருமுறை குழந்தை ஒன்று பாழ்கிணற்றில் விழுந்தது. வீரர் குதிப்பதற்கு முன்னரே தான் குதித்து அதை மீட்டார். அவரே மருத்துவரிடம் கொண்டுசென்றார். அக்குழந்தை கண்விழித்தெழும்போது அள்ளி நெஞ்சோடணைத்து கண்ணீர்விட்டார்.” கிருதி “நடிகன்” என்று சினத்துடன் சொன்னான். “இல்லை இளவரசே, அது நடிப்பல்ல. நடிப்பை எளியோர் எளிதில் உணர்ந்துகொள்வர். அத்துடன் அத்தனைநாள் தொடர்ச்சியாக சலிப்பின்றி நடிக்கவும் எவராலும் இயலாது” என்றார் பத்மர்.
“அவர் ஒருவரல்ல இருவர் என்கிறார்கள்” என்று கீர்த்திமான் சொன்னான். “அவரது இடப்பக்கமும் வலப்பக்கமும் நிகரானவை அல்ல. இடப்பக்கத்திற்கு இருக்கும் வல்லமை வலப்பக்கத்திற்கு இல்லை. மக்களுக்கு வலப்பக்கத்தையும் கொடியோருக்கு இடப்பக்கத்தையும் காட்டுபவர் என்று அவரைப்பற்றி சூதர்கள் பாடுகிறார்கள்.” கிருதி சலிப்புடன் “கதைகள்... கதைகளுடன் போரிடுவதைப்போல கடினமானது பிறிதொன்றில்லை” என்றான்.
மகதத்தின் ஷத்ரியர்கள் பௌண்டரிகவர்த்தனத்தில் ஒன்றுகூடினர். நகருக்கு வெளியே அவர்களின் படைகள் குறுங்காட்டில் குடில்களில் வாழ்ந்தன. புண்டரநாட்டின் படைகளை போருக்கனுப்ப இயலாது என்று பௌண்டரிக வாசுதேவன் சொல்லிவிட்டான். “மகதம் பெரும்நாடு. அதை நான் பகைத்துக்கொண்டால் எனக்கு இருபக்கமும் அசுரர்கள் அமைவார்கள். ஜராசந்தன் பகதத்தனுடன் கைகோத்துக்கொண்டால் நான் அழிவது திண்ணம்” என்றான். “பிற ஷத்ரியர்களின் உதவியை நாடுங்கள். அஸ்தினபுரியின் உதவி பெற்றால் நீங்கள் வெல்லக்கூடும்.”
மகதப்படைகள் ஒவ்வொரு கணமும் என பெருகிக்கொண்டிருந்தன. “அவன் ஜரையின் மைந்தன். ஆசுர குடியே அவனுக்குத் துணைவர அது ஒன்றே போதும்” என்றார் பௌண்டரிக வாசுதேவனின் அமைச்சர் சுபத்ரர். “மதுராவின் சூரசேனனின் மைந்தன் கம்சனின் ஆதரவுப்படைகள் இன்று நகரை அடைந்துவிட்டன என்றார்கள். சேதியின் தமகோஷனின் படைகள் முன்னரே வந்துவிட்டன. மகதம் எவ்வகையிலும் வல்லமை குன்றவில்லை. அதை வெல்லும் ஆற்றல் கொண்டது அஸ்தினபுரி. ஆனால் அங்கே அரசர்கள் இல்லை. முடிசூடிய பாண்டு காட்டிலிருக்கிறார். விழியற்ற திருதராஷ்டிரர் களம்நிற்க இயலாதவர். சூதர் விதுரரின் ஆட்சியில் அரசு நிகழ்கிறது. இன்று ஷத்ரியர் எவரும் உங்களுடன் வரப்போவதில்லை.”
ஒவ்வொருநாளும் ஷத்ரிய அரசர்களுக்கு தூதனுப்பிக் கொண்டிருந்தார் பத்மர். எவரும் உதவவில்லை. கலிங்கமும் மாளவமும் மட்டும் சிறிய நிதிக்கொடை அளித்தன. பத்மர் உளம்தளர்ந்தார். “நாம் போரில் வெல்லப்போவதில்லை இளவரசர்களே. நாம் போரிடக்கூடும் என்பதை மட்டுமே இந்தப் பகடைக்களத்தில் காய் என முன்வைக்கமுடியும். அதைக்கொண்டு ஆடுவோம். ஒருசில ஊர்களாவது எஞ்சுமென்றால் அதுவே நமக்கு நன்று” என்றார். “அவ்வூர்களில் அமர்ந்து நாம் அந்த இழிசினனுக்கு கப்பம் கட்டி வாழவேண்டுமா என்ன? அமைச்சரே, நான் உபரிசிரவசுவின் கொடிவழி வந்தவன்” என்றான் கிருதி.
“ஆம், ஆனால் பிருஹத்ரதரும் அக்கொடிவழி வந்தவரே. அவர் அங்கே ஜராசந்தனின் அரண்மனையில் மகிழ்ந்திருக்கிறார். ஆலயங்களில் பூசனைகள் செய்கிறார். நூலறிவோருடன் மன்றுகூடுகிறார். அவரது அரசியர் தங்கள் முதல்மைந்தனுடன் கலைக்கூடங்களில் அமர்ந்து இசையும் நடனமும் சுவைக்கிறார்கள்” என்றார் பத்மர். “ஆம், அதற்கான விலையை அவர்கள் அளிப்பார்கள்” என்று கிருதி வஞ்சத்துடன் கைகளை இறுக்கினான். பத்மர் சோர்வுடன் “அவன் எதிர்ப்பவர்களால் வளர்க்கப்படுகிறான்” என்றார். கிருதி “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். பத்மர் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார்.
[ 17 ]
பேரெடை பள்ளம் நோக்கி செல்வதுபோல வேறுவழியில்லாமல் போரை நோக்கி சென்றனர் கிருதியும் தம்பியரும். எங்கோ ஒரு தருணத்தில் அப்போர் வெல்லாதென்பதை அவர்களே நன்கறிந்தனர். ஆனால் அவர்கள் அதுவரை சொன்ன வஞ்சினங்களே அவர்கள் பின்னகர முடியாது தடுத்தன. அவர்கள் ஒவ்வொருவரும் பிறரை அதன்பொருட்டு அஞ்சினர். சற்றே பின்னகரும் பொருள்கொண்ட சொல்லை ஒருவன் சொன்னால் இன்னொருவன் உணர்ச்சிப்பெருக்குடன் அதை எதிர்த்தான். “அவ்விழிமகனுடன் ஒத்துப்போய் இவ்வுலகில் வாழ்வதைவிட உயிர்நீப்பதையே நம் மூதாதையர் விரும்புவர்” என்று அவன் கூறும்போது “ஆம், வாள்முனை இறப்பே ஷத்ரியர்களின் முழுமை” என்று அனைவரும் சொல்லியாகவேண்டியிருந்தது.
பத்மர் அவர்களிடம் ஆகக்கூடுவதைச் சொல்லி விளங்கச்செய்ய முயன்றார். ஆனால் அவர் சொல்லச்சொல்ல அவர்கள் மேலும் உணர்வெழுச்சிகொண்டனர். உள்ளூர ஐயம் கொண்டிருக்கையில் உணர்ச்சிகளை மிகையாக்க வேண்டியிருக்கிறது. மிகையான உணர்ச்சிகள் மெல்ல நிலைபெற்று அவற்றை நடிப்பவரே நம்பும்படி ஆகின்றன. ஒரு கட்டத்தில் இளவரசர்கள் உச்சகட்ட உளஎழுச்சியிலேயே இருந்தனர். எதிர்மறை உணர்வுகளுக்கு மட்டுமே உரிய மிகுவிரைவு அவர்களை அடித்துக்கொண்டுசென்றது. அவர்கள் அந்த வெறியுடன் ஷத்ரியப் படைவீரர் முன் பேசியபோது அவர்களும் அவ்வுணர்ச்சிக்கு ஆளாயினர்.
முடிந்தவரை அப்போரை வெல்ல பத்மர் முயன்றார். போருக்கு ஜராசந்தன் சற்றே தயங்குவான் என்றாலும் அதுவே வெற்றி என அவர் எண்ணினார். மகதத்தின் வைதிகரவையின் நூற்றெட்டுவைதிகர்களை அவரது ஒற்றர்கள் சென்று சந்தித்தனர். ஷத்ரியர் குருதியில் கைநனைத்த இழிசினனை வென்றாகவேண்டும் என்று அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி அவர்கள் ஒருநாள் முதற்புலரியில் ராஜகிருஹ நகரின் வாயிலில் மூன்று கற்களை சேர்த்துவைத்து தீச்சொல்லிட்டு நாடுநீங்கி வங்கத்தின் காடுகளில் குடியேறினர். “வேதங்களின் எதிரியான அசுரனைக் கொன்று மூதாதையர் நெறிகளைக் காக்கும் ஷத்ரியர்களை வைதிகர்கள் வாழ்த்துகிறார்கள்” என்னும் செய்தி அவர்களால் வெளியிடப்பட்டது.
வேள்விமிச்சத்துடன் அச்செய்தி குலத்தலைவர்களையும் குடிமூத்தவர்களையும் சென்றடைந்தது. முதல்முறையாக மகதத்தின் குடிகளிடையே பிளவு உருவானது. முன்னரே அசுரப்படைகள் நகரில் ஓங்கியமையால் சினம் கொண்டிருந்த வேளிரும் ஆயரும் அச்சொல்லை ஓர் ஆணையெனக் கொண்டனர். அவர்களிடையே மந்தணச்செய்தி பரவிக்கொண்டிருந்தது. ஒருநாள் வேளிரும் ஆயரும் கொல்லரும் கலந்த ஒரு குழு அரண்மனை முற்றத்தில் கூடி கூச்சலிட்டது. “வைதிகர் தீச்சொல்லிட்ட அரசன் கழுவாய் செய்யவேண்டும்” என்று அதற்குத் தலைமைகொண்டுசென்ற வேளிர்குலத்தலைவர் கூர்மர் கூறினார்.
ஆனால் அரசப்படைகள் அப்போதே அவர்கள் அனைவரையும் வெட்டிக்கொன்று அத்தலைகளைக் கொய்து நகர்த்தெருக்களில் நிரையாக காட்சிக்கு வைத்தனர். திகைத்த விழிகளுடன் வாய்திறந்து அமைந்திருந்த தலைகள் ராஜகிருஹ நகரை அச்சுறுத்தி ஆழ்ந்த அமைதிக்கு தள்ளின. அன்று உச்சிப்பொழுதிலும் சூரியன் எழவில்லை. நகரே இருண்டு குளிர்ந்து கிடந்தது. அதன்பின் எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் நகரைவிட்டு ஓடிவந்து இளவரசர்களின் படையில் சேரும் ஆயர்களும் வேளிர்களும் கூடிவந்தனர்.
கிருதி மகிழ்ந்து “அங்கே அச்சத்தால்தான் அமைந்திருக்கிறார்கள் அமைச்சரே. நம் படைகள் ராஜகிருஹ நகரை அணுகுமென்றால் உள்ளிருந்தே அவனுக்கு எதிர்ப்பு எழும்” என்றான். பத்மர் புன்னகையுடன் “இத்தனைக்கும் பிறகு மக்களைப்பற்றி எதைச்சொல்லவும் நான் தகுதியற்றவன்... எதுவும் நிகழலாம் என்பதற்கு அப்பால் எதையும் சொல்லமாட்டேன்” என்றார். மகதம் போருக்கு கிளம்பவில்லை. “நாம் கிளம்பி வரட்டும் என நினைக்கின்றனர். அது நல்ல போர்முறைதான்” என்றார் பத்மர். “நாம் கிளம்பினால் அவர்களுக்கு உகந்த இடத்தில் நம்மை எதிர்கொள்ளமுடியும்.” இளிவரலுடன் இதழ்கோட நகைத்த கிருதி “எங்கு எதிர்கொண்டாலும் நாம் வெல்வோம். நம்மிடம் மூதாதையரின் நற்சொல் உள்ளது” என்றான்.
படைகள் கிளம்பவிருக்கையில் மகதத்திலிருந்து தூதுவந்தது. மகதத்திலேயே நின்றுவிட்ட ஷத்ரியப் படைப்பிரிவான கிரௌஞ்சத்தின் தலைவர் சுருதவர்மர் ஜராசந்தனின் செய்தியுடன் பௌண்டரிகவர்த்தனத்திற்கு வந்தார். அவர் வந்த செய்தியறிந்ததும் “அவனா? அவன் முகத்தை நான் நோக்கமாட்டேன். காட்டிக்கொடுத்தவன். குலப்பகைவன்” என்று கிருதி சினம் கொண்டு கூவினான். பிருகத்புஜன் “சிறியன்... அவனை அனுப்பி நம்மை அச்சுறுத்துகிறானா அரியணை அமர்ந்த இழிசினன்?” என்றான்.
பத்மர் “இளவரசே, நாம் நம்பும் ஒருவரை நம்மிடம் அனுப்ப எண்ணியிருக்கிறார் மகதமன்னர். அது நன்று. தகுதிகொண்ட ஷத்ரியரை அனுப்பியதை நமக்களித்த மதிப்பென்றே கொள்வோம். அவரது படையின் அசுரப்படைத்தலைவர் ஒருவர் வந்திருந்தால் நாம் ஏற்றிருப்போமா?” என்றார். “அவனிடம் நாம் பேச ஏதுமில்லை. அவனுக்கு நான் பீடமும் அளிக்கப்போவதில்லை” என்று கிருதி சொன்னான். “ஆம், அவனை மூத்தவர் சந்திக்கவேயில்லை என்று உலகம் அறியட்டும்” என்றான் ஜயசேனன்.
அவர்கள் நால்வருமே சுருதவர்மரை சந்திக்கவில்லை. பத்மர் அவரை சந்திக்கச்சென்றபோதே சுருதவர்மரின் முகம் மாறியது. பத்மர் பலவகை முகமன்களைச் சொல்லி அத்தருணத்தை எளிதாக்க முயன்றாலும் கிருதவர்மர் மேலும் மேலும் இறுகியபடியே சென்றார். விழிகள் உறைந்திருக்க “அரசர் எச்சரிக்கை அளித்துவரவே என்னை அனுப்பினார். அரசர் இன்னமும் இந்நால்வரையும் தன் இளையவராகவே எண்ணுகிறார். அவர்கள் அதை ஏற்று வந்து அவரை பணிவார்கள் என்றால் அரசில் ஒருபகுதியை அவர்கள் நால்வரும் சேர்ந்து ஆள்வதற்காக அவர் அளிப்பார். கொடியும் குடையும் முடியும் கோலும் கொண்டு மகதர்களாகவே அவர்கள் அங்கே ஆளமுடியும். எந்த அரசரும் அத்தகைய வாய்ப்பை எதிரே படைகொண்டு நிற்பவர்களுக்கு அளிக்கமாட்டார். அரசர் இதைச் செய்வது அங்கே இருக்கும் இளவரசர்களின் அன்னையருக்காக மட்டுமே” என்றார்.
பத்மர் வியந்து “ஆம், உண்மை. இதைவிட பெரிதை நாங்கள் எதிர்பார்க்கவியலாது” என்றார். “இது ஜராசந்தரின் உறுதி. அவர் சொல் தவறுபவர் அல்ல” என்றார் சுருதவர்மர். “ஆனால் அவரது ஆணையை மீறுபவரை தண்டிப்பதில் அவர் மகிஷாசுரனுக்கும் ரக்தபீஜனுக்கும் நிகரானவர். அன்றாடம் குருதியில் நீராடுபவர் அவர். அவரை வெல்ல இன்று பாரதவர்ஷத்தில் எவருமில்லை.” சிலகணங்களுக்குப்பின் பத்மர் “சுருதவர்மரே, அவர் அசுரர் அல்லவா?” என்றார். சுருதவர்மரின் விழிகள் மாறுபட்டன. “அரசரைப்பழிப்பதை நான் ஒப்பமாட்டேன்” என்றபின் எழுந்துகொண்டார். பின்னர் அவர் விழிகளை நோக்கி “நானும் உங்களுடன் ஒருமுறை ஜராவனத்திற்கு வந்துள்ளேன் அமைச்சரே” என்றார்.
பத்மர் திடுக்கிட்டார். “அன்று நான் இளைஞன். அரசர் பிருஹத்ரதருடன் வில்லேந்தி அகம்படி சென்றேன்” என்றார் சுருதவர்மர். “நான் இன்று பிழைநிகர் செய்கிறேன்.” அதன்பின் ஒருசொல்லும் சொல்லாமல் அவர் திரும்பிச்சென்றார். நெடுநேரம் பத்மர் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். பின்பு நீள்மூச்சுடன் எழுந்து இளவரசர்களை பார்க்கச்சென்றார்.
தூதுச்சொற்களை கேட்டதும் பிருகத்புஜன் ஓங்கி காறித்துப்பி “நாங்கள் இரவலராக அவன் இல்லத்துக்கு முன் சென்று நின்றோமா? அவன் எங்களை தம்பியராக ஒப்புகிறானா? இழிமகன். காட்டாளன். அவனை நாங்கள் உடன்பிறந்தவனாக ஏற்கவேண்டும் அல்லவா? அவன் மானுடனே அல்ல. குருதியுண்ணும் அசுரன்...” என்றான். கிருதி “அவனை நாங்கள் எவ்வகையிலும் ஏற்கவில்லை அமைச்சரே. தூதனை திருப்பியனுப்பும்” என்றான். “இளவரசே…” என்று பத்மர் சொல்லவர “செல்லுங்கள்” என்று சொல்லி அவன் திரும்பிக்கொண்டான்.
கிருதியின் தலைமையில் பன்னிரு ஷத்ரியப்படைப்பிரிவுகளின் நிரை போருக்கு கிளம்பியது. பௌண்டரவர்த்தனத்திலிருந்து ராஜகிருஹத்திற்குச் செல்லும் பெருஞ்சாலையில் அமைந்த சப்தவனம் என்னும் ஊரில் நிகழ்ந்த போரில் மகதப்படைகள் முன் முதல்நாழிகையிலேயே கிருதியின் படைகள் தோற்றோடின. “வாளை பத்துமடங்கு எடையுள்ள கதாயுதத்தைக்கொண்டு உடைத்து வீசுவதுபோல” என்று அப்போரைப்பற்றி படைத்தலைவன் வஜ்ரபுஜன் சொன்னான். முழுக்கூர்மையுடன் திட்டமிடப்பட்டு விலங்குகளுக்கு நிகரான வெறியுடனும் இரக்கமின்மையுடனும் அப்போர் நடந்தது.
முறைப்படி அணிநிரந்து அந்தக் குறுங்காட்டை கடந்துகொண்டிருந்த கிருதியின் படைகளை புதர்மறைவிலிருந்து திடீரென்று எழுந்து சூழ்ந்துகொண்டன அசுரப்படைகள். அங்கே அவர்கள் ஒருநாளுக்கு முன்னரே வந்து பதுங்கியிருந்தனர் என்பதை பின்னர்தான் பத்மர் அறிந்தார். முதலில் நச்சு அம்புகளும் எரியம்புகளும் எழுந்து படைகள் மேல் பொழிந்தன. அவர்களைச் சூழ்ந்த குறுங்காடு பற்றிக்கொண்டது. அதன் மேல் வந்துவிழுந்த நச்சுவிதைகள் வெடித்து புகை கக்க வீரர்கள் மூச்சுத்திணறி இருமியபடி அலைக்கழிந்தனர். ஈரத்துணியால் முகத்தை மூடியபடி புகைநடுவே வந்து ஷத்ரியர்களை தாக்கியது அசுரப்படை.
அவர்கள் கொலையாட்டில் ஓராண்டுகாலம் பயிற்சி கொண்டிருந்தனர். உடலைவெட்டும் நுட்பம் கைகளிலேயே அமைந்துவிட்டிருந்தது. மிகக்குறுகிய வளைவில் மிகக்குறைந்த விசையில் வந்து விழுந்தன வாள்வீச்சுகள். வெட்டுண்டு உருண்ட தலைகளை அவர்கள் ஏறிட்டும் பார்க்கவில்லை. குருதிமேல் நடந்தபோது தடுமாறவுமில்லை. குற்றுயிர் உடல்கள் துடித்துக்கொண்டிருந்த களத்தில் மகதத்தின் கொடி குருதியில் நனைந்து ஈரத்தின் ஓசையுடன் காற்றில் படபடத்து விரிந்தது. “ஜரைமைந்தர் வாழ்க! வெற்றிகொள் மகதர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. வாள்கள் காற்றிலுயர்ந்து ஆடின. நச்சுநாகங்களின் படங்கள் என. விண்ணுக்கு அறைகூவல் என.
அதன்பின் பாரதவர்ஷத்தின் அனைத்துப் போர்நெறிகளுக்கும் மாறாக புண்பட்டு விழுந்தவர்களை தேடித்தேடி கொன்றனர். நீண்ட ஈட்டிகளுடன் அசுரவீரர்கள் களத்தில் பிணங்களின் மேல் கால் வைத்து தாவித்தாவிச்செல்வதை பத்மர் நோக்கி நின்றார். தலையுடன் கிடந்த அனைத்து உடல்களையும் ஈட்டியால் மெல்ல குத்தினர். அவ்வுடல் வலியில் அதிரக்கண்டால் கழுத்துக்குழியில் ஆழமாக ஒரு குத்து குத்திவிட்டு முன்னால் சென்றனர். காட்டில் கிழங்கு தேடுபவர்களைப்போல அத்தனை இயல்பாக, பேசியபடியும் சிரித்தபடியும் அதை செய்தனர்.
களம்நடுவே திகைத்துநின்ற இளவரசர்களை அவர்கள் பற்றி இழுத்து கைபிணைத்தனர். “நான் அவனை பார்க்கவேண்டும். நாங்கள் இளவரசர்கள். அரசமுறைப்படி அவனை நாங்கள் பார்க்கவேண்டும்” என்று கிருதி கூவினான். “போரில் வென்றவர்கள் காட்டும் நெறிமுறை சில உள்ளன... நாங்கள் அரசகுடியினர்” என ஜயசேனன் சொன்னான். அசுரபடைத்தலைவன் தன் ஈட்டியின் முனையால் அவன் தலையை ஓங்கி அறைந்தான். சினந்து திரும்பிய பிருகத்புஜனின் முகத்தில் கொழுத்த எச்சிலை காறி உமிழ்ந்தான். கிருதியின் நீண்டகூந்தலைப்பற்றி இழுத்து குனித்து அவன் பிடரியில் ஓங்கி அறைந்து கீழே விழுந்தவனை கீழ்மைச்சொற்களுடன் காலால் மாறி மாறி மிதித்தான். குழல்சுருளைப்பற்றி இழுத்துக்கொண்டுசென்று தேரிலேற்றினான்.
[ 18 ]
பழைய தேர்த்தட்டின்மேல் தூணில் விலங்குகள் பூட்டப்பட்டு அழைத்துவரப்பட்ட கிருதியையும் இளையோரையும் பத்மர் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவர் விழிகள் அவர்களுக்காக எதிர்நோக்கி இருந்தன. சிறு அசைவைக்கண்டே திடுக்கிட்டன. இறுதியில் அரசப்பெருஞ்சாலையில் அவர்களின் தேர் வருவதைக் கண்டபோது நினைத்திருந்த அளவுக்கு படபடப்பு எழவில்லை. பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டார். மறுகணம் திடுக்கிட்டு மீண்டும் நோக்கினார். நான்கு இளவரசர்ளும் உடைகளில்லாமல் இருந்தனர். கிருதியின் தலை தொங்கி ஆடியது. பிருகத்புஜன் பற்களைக் கடித்தபடி தன்னைச்சுற்றி நிறைந்திருந்த முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவருக்கு அருகே ஜராசந்தனுக்கு எதிராக வைதிக அறிவிப்பை வெளியிட்ட நூற்றெட்டு அந்தணர்குடியினரும் ஒருவரோடு ஒருவர் உடல் நெருக்கி ஒற்றைவிலங்குபோல நின்றிருந்தனர். அவர்கள் விழிகளெல்லாம் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல் விதிர்ப்பதும் சிலிர்ப்பதும்கூட ஒன்றாகவே நிகழ்ந்தது. அவர்களை பலமுறை விழிதொட்டார். அவர்கள் அவரை அறிந்திராதவர்கள் போலிருந்தனர். தொலைவில் அரசப்பெருமுரசு விம்மிக்கொண்டிருந்தது. அரண்மனையின் படிகளில் வேல்களுடன் ஜராசந்தனின் மெய்க்காவலர் நின்றிருந்தனர்.
முற்றத்தில் அவர்களைச் சூழ்ந்திருந்த வீரர்கள் வேல்களைத் தூக்கி உரக்க கூச்சலிட்டனர். தேர்களைச்சூழ்ந்து வந்த வீரர்கள் மறுமொழியாகக் கூவினர். அத்தேர்களுக்குப்பின்னால் பெருந்திரளாக மக்களும் கூச்சலிட்டபடி வருவது தெரிந்தது. அவர்கள் தலைப்பாகைகளை தூக்கி வானில் வீசி கையாட்டி கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தனர். பலர் நடனமிட்டனர். அணுகும்தோறும் தெளிவான அவர்களின் முகங்களில் தெரிந்த வெறியை பத்மர் திகைப்புடன் நோக்கினார். தெய்வமெழுந்தவர்கள் போலிருந்தனர். மானுடரை உள்ளிருந்து ஆட்டிவைக்கும் தெய்வங்கள் சிலசமயம் உடலுக்கு வெளியே வந்து நின்றுகொள்கின்றன.
அந்த ஊர்வலம் அரண்மனையின் செண்டுவெளி முற்றத்தை அடைந்தது. தேர்நின்றதும் வீரர்கள் அதன் மேல் ஏறி கட்டுக்களை அவிழ்த்து இளவரசர்களை முடியைப்பிடித்து இழுத்து தரையில் தள்ளினர். ஒரு காவலன் அங்கே நின்று கைதூக்கி கூச்சலிட்ட சிறுவர்களை நோக்கி ஏதோ சொல்ல சிறுவர்கள் கூச்சலிட்டபடி வந்து இளவரசர்களை மிதிக்கத்தொடங்கினர். முதலில் சிரித்துக்கொண்டு விளையாட்டாக மிதித்தவர்கள் மெல்லமெல்ல வெறிகொண்டனர். உறுமியபடி காட்டுவிலங்குகள் போல மிதித்தனர். வீரர்கள் “போதும் போதும்” என்று அவர்களை விலக்கியும் அடங்கவில்லை. இளவரசர்களை இழுத்துக்கொண்டு வந்தபோதுகூட சில சிறுவர்கள் வெறியுடன் கூவியபடி ஓடிவந்து எட்டி உதைத்தனர். கற்களால் அவர்களை அடித்து கைசுருட்டி கூச்சலிட்டனர்.
நால்வரும் கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே இறந்தவர்கள் போலிருந்தனர். கிருதி விழிதூக்கி நோக்கினான். அவன் கண்கள் சிவந்து கலங்கி தெய்வமெழுந்த விழிகள்போலிருந்தன. பிருகத்புஜன் பித்தனைப்போல தலையை அசைத்தபடி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களை விழிஎடுக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார் பத்மர். அவர்கள் விழியில் உயிர்கொண்டு தன்னை நோக்குவார்கள் என்றால் அதை தாளமுடியுமா என எண்ணியபோது நெஞ்சு நடுங்கியது. ஆயினும் விழியகற்ற இயலவில்லை.
முரசுகளும் கொம்புகளும் முழங்கின. அரண்மனைவாயிலில் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கேட்டன. திரும்பிப்பார்க்கலாகாது என பத்மர் தனக்கு ஆணையிட்டுக்கொண்டார். எங்கோ இருந்த இளவரசர்களுக்கும் அது செவியில் விழவில்லை. முன்னால் அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் இரு நிரைகளாக வந்தனர். இசைச்சூதர் தொடர்ந்தனர். பின்னர் வண்ணப்பட்டுப்பாவட்டாக்களும் கின்னரிகளும் ஏந்திய அணிவீரர் வந்தனர். கொடியும் கோலும் ஏந்திய நான்கு ஏவலர் முன்னால் வர அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அகம்படி சேர்க்க வெண்குடைக்குக் கீழே ஜராசந்தன் நடந்துவந்தான்.
ஜராசந்தன் மகதத்தின் மணிமுடியை சூடியிருந்தான். காதுகளில் மணிக்குண்டலங்களும் நெஞ்சில் ஏழு நிரைகளாக மணியாரங்களும் முத்தாரங்களும் பொளியாரங்களும் மின்னின. தோள்வளையும் கைவளையும் கங்கணமும் கணையாழிகளும் அணிந்திருந்தான். பொற்பட்டு ஆடைக்குமேல் எரிவிழி மணிகள் பதித்த சிம்மமுகம் பொறித்த பிடிகொண்ட உடைவாள் செருகப்பட்ட கச்சை. அதற்குமேல் தொடைவரை இறங்கிய மணிகள் மின்னும் சல்லடம். கழல்களில்கூட வைரங்கள் மின்னின. ஓவியத்திலிருந்து இறங்கி வந்தவன் போலிருந்தான். அவன் குறடுகள் அருகே ஒலிப்பதைக் கேட்டபடி பத்மர் கண்களை மூடிக்கொண்டார்.
“வணங்குகிறேன் அமைச்சரே” என்றான் ஜராசந்தன். “நான் சந்திக்கவிழைந்த மனிதர் நீங்கள்தான். ஓராண்டுக்கும் மேலாக ஒவ்வொருநாளும் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான். எதிர்பாராதபடி குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். “நீங்கள் என் ஆசிரியர் பத்மரே. எளிய மலைமகனாக இங்கே வந்தேன். மொழிகளையே நான் கற்றுக்கொள்ளவேண்டியிருந்து. அரசுமொழி என்பது மீனுக்குள் மீன்போல மொழிக்குள் ஒரு மொழி. செத்தமொழி. அதையும் கற்றேன். அரசு சூழ்தலோ இருபக்கமும் முனைகொண்ட கூர்வாள். அத்துணை கூரிய செயல்பாடுகளை அத்தனை மழுங்கியமொழியில் சொல்வதும் கேட்பதும் தனிப்பயிற்சியால் மட்டுமே வெல்லக்கூடுபவை. வென்றேன். அதற்கு எதிர்முனையில் நீங்கள் இருந்ததுதான் அடிப்படை. ஒவ்வொரு தருணத்திலும் என் நுண்கணிப்பால் உங்களை வென்றேன்.”
பத்மர் அவனையே விழிசலிக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். “உங்கள் குறை என்ன என்று கண்டுகொண்டேன். நீங்கள் அந்தணர். ஓர் எல்லைக்கு அப்பால் குருதியை உங்களால் உளம் கொள்ளமுடியவில்லை. எப்போதும் நீங்கள் எண்ணுவதற்கு ஓர் அடி முன்னால் சென்றால் உங்களை வென்றுவிடலாமென்று கண்டுகொண்டேன்” என்ற ஜராசந்தன் உரக்கநகைத்து “உங்களை வென்றேன். பாரதவர்ஷத்தின் அந்தணர்கள் அனைவரையும் வென்றதற்கு நிகர் அது” என்றான். அவன் இளவரசர்களை திரும்பியே பார்க்கவில்லை. “எனக்கு பல ஐயங்கள் பத்மரே. பலநாட்களாக நான் சொல்சூழ்தலும் அரசநெறியும் காவியமும்தான் கற்றுவருகிறேன். வேதநூலும் ஓதுகிறேன். இவையனைத்தும் முடிந்தபின் ஒரு ராஜசூயம் நிகழ்த்துவதாகவும் உள்ளேன்.”
பத்மர் பெருமூச்சுவிட்டார். அவன் விளையாடுகிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அனைத்தும் விரைந்து முடியவேண்டும் என்று மட்டுமே அவர் உள்ளம் எண்ணிக்கொண்டது. “என் முதல் ஐயம் இது, பத்மரே. கடகவியூகத்தில் எதிரி படையமைக்கையில் நாம் கழுகுப்படை அமைக்கலாமென்கின்றன நூல்கள். ஏன் நரிப்படை அமைக்கக்கூடாது? நரி நண்டுக்கு தன் வாலை அளிக்கும். நண்டு கவ்வியதும் அதை மேலே எடுத்து சுவைத்துண்ணும்.” பத்மர் பேசாமல் நோக்கினார். “சொல்லுங்கள்” என்றான் ஜராசந்தன். “நீங்கள் உரிய முறையில் பேசாவிட்டால் இளவரசர்களில் ஒருவர் கழுவேற நேரும்.”
பத்மர் நடுங்கி “ஆம், அவ்வாறு அமைக்கலாம்” என்றார். ஜராசந்தன் உரக்க நகைத்து “பிழை... என்னை மகிழ்விக்க அதை சொல்கிறீர்கள். நண்டுக்கு முன் வாலை விட்டுக்கொடுப்பதைப்போல அறியாமை வேறில்லை. ஏனென்றால் வளையிலிருப்பது நண்டா தேளா என எப்படி அறிவது?” என்றான். கைகளால் தாளமிட்டபடி “பிழை சொல்லிவிட்டீரே பத்மரே! இவ்வறியாச்சிறுவனை கழுவேற்றிவிட்டீரே! இந்தப் பழியை உங்கள் குலமூத்தார் எப்படி தாங்குவார்கள்?” என்றபடி திரும்பி நோக்காமலேயே கையசைத்தான்.
மரப்பீடம் ஒன்று இழுத்துவரப்பட்டது. அதன்நடுவே ஒரு பிரம்பு நடப்பட்டிருந்தது. வெண்ணைபூசப்பட்டு மழுங்க மென்மையாக்கப்பட்டிருந்த அது ஒரு தசைநீட்சி என்றே தோன்றியது. ஜயசேனனை நான்கு வீரர்கள் பிடித்து தூக்கினர். அவன் கைகளை பின்னால் இழுத்துக்கட்டினர். அவன் “மூத்தவரே, மூத்தவரே” என்று கூவினான். “நான் உங்கள் இளையோன். நான் உங்கள் குருதி. வேண்டாம்... வேண்டாம்…” என்று கண்ணீருடன் கதறினான்.
அவனைத் தூக்கி அந்தப்பிரம்பின் மேல் அமரச்செய்தனர். இரு கழுமருத்துவர்கள் அவன் வயிற்றை மெல்ல பலவகையாக அழுத்திப்பிசைந்து குடல்சுருளை நீட்டி அதற்குள் அந்தப்பிரம்பு குத்தாமல் மெல்ல வழுக்கி உள்ளே செல்லும்படி செய்தனர். அவனுக்கு வலியிருக்கவில்லை. ஆனால் அச்சத்துடன் “மூத்தவரே... இரங்குங்கள். நான் உங்கள் இளையோன்... வேண்டாம்” என்று கூவிக்கொண்டிருந்தான். முழுக் கழுவும் உள்ளே சென்றதும் அவனை அப்படியே விட்டுவிட்டனர். இயல்பாக பீடத்தில் அமர்வதுபோல அவன் அங்கிருந்தான்.
பிருகத்புஜனும் பிருகத்சீர்ஷனும் கால்வழியாக சிறுநீர் கழித்தனர். அவர்களின் கண்களிலிருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. கிருதி பற்களால் இதழ்களை இறுகக்கடித்து கழுத்துத்தசைகள் துடிக்க நின்றான். “மூத்தவரே… மூத்தவரே…” என அழைத்துக்கொண்டிருந்த ஜயசேன்ன் அமைதியடைந்து மெல்ல விம்மத் தொடங்கினான்.
ஜராசந்தன் திரும்பி பத்மரிடம் “நாம் அடுத்த வினாவுக்கு செல்வோம் பத்மரே. இது அரசு சூழ்தலின் நெறி. மலர்களில் தேனெடுப்பதுபோல வணிகர்களிடம் வரிகொள்ளவேண்டும் அரசன். அதற்கு நிகராக வணிகர்களுக்கு அவன் அளிக்கவேண்டியது என்ன?” பத்மர் கண்களில் கண்ணீர் வழிய பேசாமல் நின்றார். “சொல்லுங்கள் பத்மரே. உங்கள் அமைதியால் மூன்றாமவன் கழுவேறினால் நீங்கள் வருந்துவீர்கள் அல்லவா?”
பத்மர் அடைத்த குரலில் “அரசன் தோட்டக்காரனாக மாறி அச்செடிகளுக்கு நீரூற்றவேண்டும்” என்றார். “கேட்கவில்லை” என்று அவன் செவிகளை அருகே கொண்டுவந்தான். அவர் தொண்டையை காறிவிட்டு மீண்டும் சொன்னார். “ஆ! மீண்டும் பிழை! என்ன இது பத்மரே? எளிய காட்டாளனிடம் தோற்கலாமா?” என்றான். “காட்டுப்பூக்களிலும் தேனீ மதுகொள்கிறதே? அக்காட்டை எவர் பேணமுடியும்?” அவன் சிரித்துக்கொண்டு அவர் முகமருகே முகம் வைத்து “அரசன் அம்மலர்களின் மகரந்தப்பொடியை பரப்பினாலே போதும்...” என்றான்.
திரும்பாமலேயே அவன் கைகாட்ட வீரர்கள் பிருகத்சீர்ஷனை தூக்கினர். அவன் விலங்குபோல அலறி திமிறித்துள்ள அழுத்திப்பற்றி இழுத்துச்சென்று கழுமேல் வைத்தனர். “மூத்தவரே! மூத்தவரே! நான் உங்கள் அடிமை. நான் ஏதும் செய்யவில்லை. இம்மூவரும் என்னை இழுத்துச்சென்றார்கள்” என்றான். கழுவிலமர்ந்திருந்த ஜயசேனன் “மூத்தவரே, அவன்தான் அனைத்தையும் செய்தான். அவர்கள் மூவரும்தான். நான் அறியாதவன். இளையோன்” என்று கூவினான்.
ஜராசந்தன் அவர்களை நோக்கவேயில்லை. புன்னகையுடன் “அடுத்த வினா காவியத்திலிருந்து. பத்மரே, தடாகங்களால் பூமி சூரியனை நோக்கி புன்னகை செய்கிறது. அவ்வாறென்றால் இரவில் நிலவை அத்தடாகங்கள் என்ன செய்கின்றன?” பத்மர் மிகத்தாழ்ந்த குரலில் “அஸ்வபாதரின் காவியமீமாம்சமாலிகையில் உள்ள வரி அது. இரவில் அவை நிலவொளியில் கனவுகாண்கின்றன” என்றார்.
“அடடா! பிழை! கருநிலவுநாளில் அவை எப்படி கனவுகாணமுடியும்? உவமை என்றால் அது முற்றிலும் பொருந்தவேண்டாமா? பத்மரே, இரவில் அவை அவ்வாறு புன்னகைபுரிந்தமைக்காக வஞ்சம் கொள்கின்றன. முழுநிலவில் வஞ்சத்தை புன்னகையால் மறைக்கின்றன, அவ்வளவுதான்” அவன் திரும்பி பிருகத்புஜனை நோக்கி “இளையோனே, காவியத்தின்பொருட்டு கழுவேறுவதென்பது பெரும் நல்லூழ். உன்னை காவியதேவதை விண்ணுக்குக் கொண்டுசெல்லும்” என்றான்.
“மூத்தவரே, மூத்தவரே, மூத்தவரே” என்று அவன் தொண்டை நரம்புகள் புடைக்க கதறினான். அவனை அவர்கள் அவனை கழுவிலமரச்செய்தபோது ஜராசந்தன் பரிவு தெரிந்த முகத்துடன் “மெல்ல மெல்ல...” என்றான். பின்னர் திரும்பி “இறுதியாக, மெய்யியல். பத்மரே, உயிருள்ள பசு ஏன் இறந்த கன்றை ஈன்றது?” என்றான். பத்மர் கண்களை மூடிக்கொண்டார். “அல்லது பசு இறந்தது என்றால் கன்று எப்படி பிறந்தது?” பத்மர் உதடுகளை அழுத்தி பேசாமல் நின்றார். “சொல்லமாட்டீரா?” என்றான் ஜராசந்தன் “சொல்லும் பத்மரே, நம் சொல்லாடலில் நான்குநிலையிலும் நானே வென்றேன் என்று நான் ஒரு கல்வெட்டை இங்கே அமைக்கவேண்டும் அல்லவா?”
பத்மர் பெருமூச்சுவிட்டார். “நீங்கள் அமைதியாக நின்றாலும் நானே வென்றேன்” என்று சொல்லி திரும்பிய ஜராசந்தன் “ஆகவே என் முதல் உடன்பிறந்தானாகிய கிருதியையும் நான் கழுவிலேற்றுகிறேன்” என்றான். கிருதி தருக்குடன் தலைதூக்கி “நான் ஷத்ரியன். என்னை கழுவிலேற்றினால் பழிசூழும். இருள்தெய்வமாக வந்து உன் குடியை சூறையாடுவேன்” என்றான்.
“நன்று நன்று... தெய்வங்களுடன் போரிடுவதும் உவகைக்குரியதே” என்றான் ஜராசந்தன் சிறுவனைப்போல நகைத்தபடி “கேட்டீர்களா, பத்மரே? என்னுடன் அடுத்த களத்தை குறித்துவிட்டார். அக்களத்திலும் நீங்கள் வருவீர்களா? வருவீர்களா பத்மரே?” என்றான். அருகே வந்து தன் மூக்கால் அவர் மூக்கை உரசி “வரமாட்டீர்களா?” என்றான். அவர்கள் கிருதியை கழுவமர்த்துவதை பத்மர் உள்நடுக்கத்துடன் நோக்கிநின்றார். அவன் பற்களை இறுகக்கடித்து தலையை அசைத்துக்கொண்டிருந்தான்.
“அவ்வண்ணமென்றால் நமது போர் முடிந்தது” என்று ஜராசந்தன் கைகளை தட்டினான். “நீங்கள் அந்தணர். ஆகவே கொல்லப்போவதில்லை. ஆனால் நான் அரசன். பிழைசெய்தவர்களை தண்டித்தாகவேண்டும். நாரதஸ்மிருதியில் அரசவஞ்சம் செய்த அந்தணனை நாவறுத்து நாடுகடத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. யமஸ்மிருதி அவன் தலையை மொட்டையடித்து நெற்றியில் இழிமங்கலக்குறி வரையலாம் என்கிறது. கார்த்தவீரியஸ்மிருதி அவனுக்கு மிலேச்சர் வெட்டிய அன்னைப்பசுவின் ஊனை அளித்து குலம்அழித்து இழிசினனாக ஆக்கலாம் என்கிறது. அவன் கண்களைப்பிடுங்கவும் ஒரு ஸ்மிருதி சொல்கிறது. ஸ்வாகைதேவியின் உத்தரஸ்மிருதி. என்ன செய்வது? ஒரே குழப்பம். ஆகவே இவையனைத்தையும் செய்யலாம் என முடிவெடுத்தேன்.”
பத்மர் பெருமூச்சுவிட்டார். “ஆனால் இப்போதல்ல. நாளை. இன்று இவர்கள் கழுவில் அமர்ந்திருப்பதை நோக்கவேண்டும் அல்லவா?” அவன் வைதிகர்களை நோக்கி திரும்ப முதியவைதிகர்தலைவர் “இழிசினனே, உன்னை முறைமீறி விலக்கு செய்தோமா என்ற சிறு ஐயம் எங்களுக்கு இருந்தது. அது இன்றோடு முற்றழிந்தது. நிறைவுடன் வாழ்வை முடிக்கிறோம். நீ எங்களுக்கு என்ன தண்டம் அளித்தாலும் வேதம் சொல்லி நீர் அள்ளி இந்நகர்மேல் வீசி பழிச்சொல்லிட்டுவிட்டு நாடு நீங்குவோம். எதிர்வரும் முதல் ஆற்றங்கரையில் சிதையமைத்து அதிலேறி இறப்போம். எங்கள் நாவில் வாழும் வேதம் மீதும் வேதமுனிவர் மீதும் அவியுண்ணும் அத்தனை தேவர்மீதும் ஆணை” என்றார்.
ஜராசந்தன் நகைத்தபடி “ஆம், இதையே நான் எதிர்பார்த்தேன். நான் வேதஎதிரியாகவேண்டும். அசுரர்களைத் திரட்டும் வழி அது ஒன்றே. நன்று நன்று” என்றான். முதியவைதிகரின் சொற்கள் வைதிகர்களை இறுக்கமழியச்செய்தன. பெருமூச்சுகள் தொடர்ந்து எழுந்தன. அவர்கள் மெல்ல இயல்பாயினர். உடல்முடிச்சுகள் அவிழ்ந்தன். முகங்கள் மலரத்தொடங்கின.
பீடமொன்றை போட்டு ஜராசந்தன் அவர்களருகே அமர்ந்துகொண்டான். “நான் இதுவரை கழுவேற்றலை முழுமையாக நோக்கியதில்லை அமைச்சரே” என்றான். “தந்தையையும் அன்னையரையும் அழைத்தேன். அவர்கள் வர விரும்பவில்லை. இது ஓர் இனியநினைவாக எஞ்சுமென எண்ணுகிறேன்.”
ஜயசேனன் முதலில் அலறத்தொடங்கினான். அவன் உடலுக்குள் குடல்கள் சுருளவிழத்தொடங்கின. அவை கழுவை முட்டி பிழித்து இழுத்தன. வலி கூடிக்கூடி வர அவன் வெறிகொண்டவன் போல துள்ளி கழுவிலேயே சுழன்றான். “மூத்தவரே! மூத்தவரே” என்று கதறினான். பின்னர் “தெய்வங்களே! தெய்வங்களே!” என்று கூச்சலிட்டான். சற்றுநேரத்தில் பிறரும் அலறத்தொடங்கினர்.
இசைகேட்கும் முகத்துடன் கைகால்களை நீட்டிக்கொண்ட ஜராசந்தன் “குருதிப்பெருக்கு இருக்காது. உள்ளே சீழ்கட்டும் புண்ணும் அமையாது. எனவே இவர்கள் பன்னிருநாட்கள் வரை முழுநினைவுடன் உயிருடன் இருந்து முழுக்கழுவின்பத்தையும் நுகர்வார்கள் என்கிறார்கள். அது உண்மையா என்று பார்க்கப்போகிறேன். பன்னிருநாட்களும் நான் இங்கேயே இருப்பேன். உணவும் ஓய்வும் இங்குதான். நீங்களும் இங்குதான் இருப்பீர்கள்.” திரும்பி வைதிகர்களிடம் “நீங்களும் இங்கிருப்பீர்கள் உத்தமரே” என்றான்.
“கீழ்மகனே, இப்புவியே ஒரு கழுமேடை. உயிர்கள் துடித்திறக்கின்றன. அதை நாளும் பார்ப்பவர்கள் நாங்கள். மூடா, இது உனக்குமட்டுமே இன்பம்” என்றார் முதியவைதிகர் அமைதியான குரலில். “தெய்வங்களே தெய்வங்களே” என்று கதறிக்கதறி மெல்ல தொண்டை அடைக்க ஓசையின்றி உடல்குலுங்கினர் இளவரசர்கள். “நீர் கொடுங்கள்... இன்னீர் கொடுங்கள்” என்று ஜராசந்தன் ஆணையிட்டான்.
அவர்களுக்கு வெல்லம்கலந்த நீர் அளிக்கப்பட்டது. அதை குழவிகள் பாலருந்துவதுபோல பாய்ந்து நா நீட்டி அருந்தினர். நீர் உள்ளே சென்றதும் வலி மேலும் பெருக, தொண்டை திறக்க, மீண்டும் கூச்சலிட்டு சுற்றிவந்தனர். “பாடலுக்கேற்ற ஆடல்” என்று ஜராசந்தன் தொடைதட்டி நகைத்தான். “பன்னிருநாட்கள்... மகதத்தினர் அனைவரும் இங்கு வந்து பார்க்கவேண்டும் என்று அரசாணை” என்று தன் அமைச்சரை நோக்கி சொன்னான்.
பகுதி மூன்று : ஆனி
[ 1 ]
ஆயிரம் கவசங்களால் காக்கப்பட்ட பெருவிழைவு கொண்ட ஓர் அசுரன் இருந்தான். அவன் பெயர் தம்போத்பவன். அவனை சகஸ்ரகவசன் என்று கவிஞர்கள் பாடினர். விண்ணைத்தொட்ட தம்பகிரி என்னும் மலைநகரை ஆண்ட தம்பன் என்னும் அசுரனின் மைந்தன்.
மண்ணிலும் விண்ணிலும் தனக்கு நிகரென எவருமில்லை என்று தருக்கியிருந்த தம்பாசுரன் தம்பகிரியின் அரண்மனை வளாகத்தின் நடுவே அமைந்த பெருவேள்விக்கூடத்தில் எரிகுளம் அமைத்து மழையென நெய்பெய்து, மானுடம் அறிந்த அன்னங்கள் அனைத்தையும் அவியெனச் சொரிந்து, வேள்விநிறைவு செய்தான். ஆயிரத்தெட்டு மாவைதிகர் ஆற்ற, நூற்றெட்டுநாள் நீண்டமைந்த அவ்வேள்வியில் எட்டு திசைக்காவலர்களையும், ஏழு ஆழுலக தெய்வங்களையும், ஏழு விண்ணுலக தேவர்களையும் மகிழ்வித்தனர்.
“அணுகமுடியா பேராற்றல் கொண்ட தெய்வம் எதுவோ அது இங்கு எழுக!” என்றான் தம்பன். “அசுரர்க்கரசே, அணுகவியலாதவன் என்றால் சூரியனே. அவன் தானன்றி பிறரில்லா பாதை கொண்டவன். அவனே கலைக்கவியலா தனிமையும் கொண்டவன்” என்றனர் வைதிகர். “அவன் என் வேள்விமரத்தில் எழுக!” என்றான் தம்பன். வைதிகர் சூரியனுக்குரிய வேதமந்திரங்களை முழக்கினர். பன்னிரண்டாவது நாள் வேள்விமரம் பற்றி எரிய செஞ்சுடர்விட்டுத் தோன்றிய சூரியனிடம் “உனக்கு நிகரான பேராற்றல் கொண்ட மைந்தன் எனக்கு வேண்டும்” என்றான் தம்பன்.
“என் ஆற்றலென்பது ஒவ்வொரு கணமும் நின்றெரியும் என் நெருப்பே” என்றான் சூரியன். “அவ்வெரியாலான மைந்தனை எனக்கு அருள்க!” என்றான் தம்பன். “எரிதலென்பது ஆற்றல். அவ்வாற்றல் கொண்டவனுக்கு இன்பமென ஒன்றில்லை” என்றான் சூரியன். “ஆற்றலுள்ள மைந்தன் போதும் எனக்கு. அவன் என் உருவாக எழுந்து இப்புவியையும் அவ்விசும்பையும் ஆளவேண்டும்” என்றான் தம்பன். “அவ்வண்ணமே ஆகுக!” என்றுரைத்து சூரியன் மறைந்தான்.
வென்றேன் என்று மேலும் தருக்கிய தம்பன் தன் மனைவி சுரை கருவுற்றபோது விண்ணக தேவர்களையும் வென்றதாக எண்ணி பெருமகிழ்வடைந்தான். தம்பகிரியில் நாளும் உண்டாட்டும் நீத்தோரூட்டும் நிகழ்ந்தன. சுரை கருவுற்றமைக்கான உளக்குறிகளையும் உடல்குறிகளையும் அடைந்தாள். ஆனால் அவள் வயிறு பெருக்கவில்லை. மருத்துவச்சிகள் அவளை நன்கு ஆராய்ந்து அவள் வயிற்றில் கரு வளர்வதை உறுதிசெய்தனர். “மிகச்சிறிய குழவி அரசே” என்றாள் முதுமருத்துவச்சி. “சிறிய உடல் கொண்டது. ஆனால் உயிருடன் அசைகிறது.”
தம்பன் சினத்துடன் “வெற்பசைக்கும் பெருந்தோள் கொண்டவன் நான். சூரியனை வரவழைத்து வரம்பெற்றவன். எனக்குப்பிறக்கும் மைந்தன் சிற்றுருக்கொண்டிருக்க மாட்டான்” என்றான். “ஆனால்...” என்று அவர்கள் சொல்லத்தொடங்க “விண் முட்டும் பேருடலன் அவன். நான் அறிவேன்” என்றான் தம்பன். “அது உங்கள் ஆணவம் அரசே” என்றார் முதுநிமித்திகர் கும்பர். “ஆம், என் ஆணவம் என் குலமளவுக்கே பெரியது. என் தவம்போல் விண்முட்டுவது” என்றான் தம்பன்.
கருமுதிர்ந்தபடியே இருந்தாலும் அரசியின் இடை பெருக்கவில்லை. பன்னிரண்டு மாதம் அவள் வயிறு சுமந்தாள். ஆனிமாதம் இணையருக்குரிய நன்னாளில் முதற்கதிர் எழும்பொழுதில் ஒரு மைந்தனை பெற்றாள்.
கருவறைக்குள் பேற்றின் அரைமயக்கில் கிடந்த சுரை “இன்னும் எத்தனை நேரம்? வலி எழவேயில்லையே?” என்றாள். அவள் உடலுக்குக் கீழே குனிந்து நின்றிருந்த மருத்துவச்சி “அரசி, மைந்தன் பிறந்துவிட்டான்” என்றாள். “மைந்தனா? எங்கே? ஏன் அவன் அழவில்லை?” என்றாள் சுரை. மருத்துவச்சி ஒன்றும் சொல்லாமல் குனிந்தாள். சுரை “மைந்தன் எங்கே? என் மைந்தன் எங்கே?” என்று பதற்றத்துடன் கூவினாள்.
வயற்றாட்டி நடுங்கும் கைகளில் அக்குழவியை எடுத்துக்காட்டினாள். அது அவள் உள்ளங்கையளவே இருந்தது. அவள் சுட்டு விரலைவிடச் சிறிய கைகளை நெஞ்சோடு சேர்த்து விதைக்குள் அமைந்த முளைபோல சுருண்டிருந்தது. சுரை ஒருகணம் குளிர்ந்து உறைந்தபின் உடல்துடிக்க எழுந்து வயற்றாட்டியின் கையை தன் காலால் தட்டினாள். கீழே விழுந்த குழவி மெல்ல முனகி உடலை நெளித்தது. “புழு! இது அசுரனல்ல, புழு!” என்று அவள் கைநீட்டி கூச்சலிட்டாள். “இதை இனி ஒருமுறை நான் பார்க்கலாகாது. தெய்வங்கள் மேல் ஆணை! இது என் விழிகளுக்கு முன் இன்னொரு முறை வரலாகாது.”
மருத்துவச்சி “அரசி, முழுவளர்ச்சியடையாத குழவிகள் பிறப்பது எங்கும் உள்ளதே. அன்னைமுலை ஊட்டாவிடில் இச்சிற்றுயிர் இப்போதே இறக்கும்” என்றாள். “இல்லை, இதை என் கையாலும் தொடேன். கொண்டுசென்று காட்டில் வீசுங்கள்” என்றாள். குழவியை கையில் வைத்தபடி “குறையுடல் மகவு. அது வளர்வதற்கான அனல் உங்களுக்குள் இருந்தே வரவேண்டும் அரசி” என்றாள் மருத்துவச்சி. “கொண்டுபோ!” என்று பித்தெழுந்த கண்களுடன் கூவியபடி அதை மீண்டும் அடிக்க எழுந்தாள் சுரை. மருத்துவச்சி விலகிக்கொண்டாள்.
பேற்றறைக்கு வெளியே காத்திருந்த தம்பன் குழவியைக் கண்டதும் திகைத்து பின்னடைந்தான். “என்ன இது?” என்று நடுங்கும் குரலில் கேட்டான். மருத்துவச்சி தலைகுனிந்தாள். “அமைச்சரே, என்ன இது? இதுவா சூரியனிடமிருந்து நான் பெற்ற நற்கொடை?” என்றான். அமைச்சர் சூக்தர் “அரசே, நாம் பெறும் ஊழ்கொடைகள் அனைத்திலிருந்தும் நம் ஆணவமும் பழியும் கழிக்கப்படுகிறது என்றறிக! உங்களுக்கு எஞ்சியது இவ்வளவே” என்றார்.
அதை நோக்கியபோது தம்பனின் கைகள் தளர்ந்தன. “என்னால் இதை நோக்க முடியவில்லை அமைச்சரே... இன்னொருமுறை இதை நோக்கினால் நான் வாளை உருவி என் கழுத்தை வெட்டிக்கொள்வேன்” என்றபின் திரும்பி ஓடினான். தன் அறைக்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டு இருளில் உடல்குவித்து அமர்ந்தான். கதவைத்தட்டிய நிமித்திகர் “அரசே, இது தெய்வங்கள் உங்களுக்கு அருளிய நற்தருணம். உங்கள் தோளை அழுத்தும் ஆணவத்தை உதறிவிட்டு வெளியே வருக! அதன் விடுதலையை அடைக!” என்றார். “விலகிச்செல்லுங்கள்” என்று தம்பன் கூச்சலிட்டான். “இன்னொரு சொல் என் செவியில் விழுந்தால் உங்கள் தலைகொய்ய எழுவேன்.”
மருத்துவச்சி அக்குழவியை செவிலியர் அறைக்கு கொண்டுசென்று இளஞ்சூடான செங்குழம்புத்தைலத்திற்குள் போட்டு காப்பாற்றினாள். மூத்த அரசுமருத்துவர் காஞ்சனர் அதன் உதடுகளை சுட்டுவிரலால் மெல்ல தொட்டபோது அது சிறகுமுளைக்காத குஞ்சு போல் வாய் நீட்டி எழுந்தது. “உள்ளே அனல் உள்ளது. மூண்டெழுவதற்கான உயிரின் விசை அது. இது இறக்காது” என்றார்.
அதற்கு முலையூட்ட செவிலியர் அமர்த்தப்பட்டனர். அக்குழவியின் பெரும்பசி அவர்களை திகைக்கச்செய்தது. அட்டை என்று அவர்கள் அதை அழைத்தனர். “சற்று சிந்தை மாறி அமர்ந்திருந்தால் குருதியையே உறிஞ்சிவிடும்” என்றாள் முலைச்செவிலி. முதல்நாள் முலையூட்டிய அன்னை மறுநாள் போதாமலானாள். ஒவ்வொருநாளும் முலையூட்டும் அன்னையர் பெருகிவந்தனர். விழித்திருக்கும் நேரமெல்லாம் அதற்கு எவரோ முலையூட்டிக்கொண்டே இருந்தனர்.
அதை தந்தை பேணவில்லை. அன்னை அது உயிர்வாழ்வதையே அறியவில்லை. பெயரிடுதலோ அரைமணி சூட்டலோ ஐம்படைத்தாலி பூட்டலோ அதற்கு நிகழவில்லை. அவர்கள் அவனை மறக்க விழைந்தனர். எனவே எளிதில் மறந்தனர். முப்பது நாளில் குழவி எண்ணைக்கலம் விட்டு வளர்ந்து வெளிவந்தது. அறுபது நாளில் மார்பை கைகளால் அறைந்து கூகைபோல் ஒலியெழுப்பி பால் கோரியது. முலைப்பால் போதாமல் அதற்கு பசும்பால் ஊட்டினர். பின்னர் யானைப்பால் ஊட்டப்பட்டது.
ஆறுமாதத்திலேயே ஊனுண்ணத் தொடங்கியது. ஒரு வயதில் எழுந்து வெளியே சென்று கற்களைக் கொண்டு ஏவலரையும் விலங்குகளையும் தாக்கியது. அருகே செல்பவர்களை கூரிய பற்களால் கடித்தது. அதன் குரல் சிம்மக்குருளையின் உறுமல் போலிருந்தது. இரண்டுவயதில் மரங்களில் ஏறி சிற்றுயிர்களை தானாகவே வேட்டையாடி உண்டது. எட்டுவயதில் அவன் அரண்மனையில் இருப்பதே அரிதாயிற்று. பின்னர் அவன் முற்றிலும் மறைந்துபோனான்.
அசுரர்களின் இளவேனில்விழா குன்றைச்சுற்றி ஓடிய கிருஷ்ணவாகா என்னும் ஆற்றின் கரையில் நிகழ்ந்தது. நூற்றெட்டு அசுரகுடியினரும் கூடி அங்கே ஊனுண்டு, மதுவருந்தி, காமம் கொண்டாடினர். கதைகள் சொல்லப்பட்டன. ஆடலும் பாடலும் நிகழ்ந்தன. நீச்சல்முந்துகையும் புரவிகடத்தலும் நடந்தன. மல்லர்கள் தோள்கோத்தனர். கதைகொண்டு களிப்போரிட்டனர்.
அசுரகுடிகளில் தம்பன் பெரும் தோள்வலன் என்று அறியப்பட்டான். மேலாடை நீக்கி தோலாடை இடைசுற்றி அவன் கைகளை விரித்து நின்றிருக்கையில் தனித்துப் பொருத அசுரர்களில் எவரும் துணிவதில்லை. ஒரேநேரத்தில் எண்மரை எதிர்கொள்ள அவனால் முடியும் என்பது அனைவரும் அறிந்திருந்தது. அந்த இளவேனில்விழவில் பன்னிரு பெருமல்லர்களை அவன் தன்னுடன் பொருத அறைகூவினான். அவர்கள் தோள் தட்டி தொடையறைந்து போர்க்கூச்சலுடன் அவனுக்கு எதிர்கொடுத்தனர்.
தசைகளோடு தசைகள் முயங்கி மூச்சுக்கள் இறுகி நரம்புவேர்ப்பின்னல்கள் புடைக்க அவர்கள் பொருதினர். உச்சகணத்தில் தம்பன் அவர்களை தூக்கி வீசினான். மூவர் விழுந்து கழுத்துடைந்து இறந்தனர். நால்வரின் கைகள் முறிந்தன. இருவர் முதுகெலும்பு ஒடிய அலறி மண்ணுடன் சேர்ந்தனர். கால்கள் ஒடிந்த பிறர் உருண்டு எழுந்து விலகி ஓடினர். தன்னைச்சூழ்ந்து துடித்துக்கிடந்த உடல்கள் நடுவே கைதூக்கி நின்று பேருடல்தசைகள் அதிர தம்பன் பிளிறினான். அவனுக்கு எதிர்நிற்க எவரும் இருக்கவில்லை. அசுரகுடியினர் நூற்றெண்மரின் தலைவன் அவனே என்பது உறுதியாகியது.
“எவருமுண்டா? இனி எவரேனும் உண்டா?” என்று அவன் அறைகூவியபடி ஆடைக்குவை நோக்கி சென்றபோது காட்டுவிலங்கின் ஊளையுடன் அவனைவிட பேருடல்கொண்ட இளைஞன் ஒருவன் களத்திற்குள் நுழைந்தான். அவனை எவரும் அடையாளம் காணவில்லை. “யார் நீ?” என்று தம்பன் கேட்டான். “நான் அசுரன், அதை என்னைப்பார்த்தாலே உணரமுடியும். பிறிது எதற்கு?” என்றான் தம்போத்பவன். “உன்னை இக்களத்திலேயே கொன்று அசுரகுடியின் அரசனாகும்பொருட்டு வந்துள்ளேன்.”
பெரும்சினம்கொண்ட தம்பன் தன் தோள்களைத் தட்டி வெடிப்பொலி எழுப்பியபடி பிளிறினான். “வா! வா!” என்று அழைத்தான். இரு உடல்களும் ஒன்றை ஒன்று சுற்றிவந்தன. தசைகள் தசைகளை நோக்கின. பின் ஒரு பெருங்கணத்தில் இரு உடல்களும் மோதி அதிர்ந்தன. துடித்தும் துள்ளியும் உறைந்தும் உறுமியும் மூச்சொலித்தும் பிணைந்து போரிட்டன. தம்பனின் கைகளை விலக்கி வளைத்து அவனைத் தூக்கி மண்ணில் அறைந்த தம்போத்பவன் அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்து விலாவெலும்புகளை உடைத்தான். நெஞ்சக்குலை சிதைந்து வாயிலும் மூக்கிலும் குருதிக்குமிழிகள் வெடித்து எழ உடல் உதறி தம்பன் உயிர் துறந்தான். இருகைகளையும் தூக்கி பிளிறிநின்ற தம்போத்பவனைக் கண்ட தம்பன் இறுதிக்கணத்தில் அவன் யாரென்று அறிந்தான்.
சூழ்ந்து நின்றிருந்த அசுரகுடியினர் கைகளைத்தூக்கி உவகைக்குரலெழுப்பி நடமிட்டனர். அவன்மேல் அரிசியும் மலரும் தூவி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்களின் நடுவே பீடத்தில் முடிசூடி அமர்ந்திருந்த சுரை நினைவிழந்து விழுந்தாள். மகளிர்மாளிகையில் விழித்தெழுந்ததும் “என் மகன்! என் மகன் அவன்! அவனைக்காண விழைகிறேன்!” என்று கண்ணீர்விட்டு கதறினாள். ஆனால் தம்போத்பவன் அவளைப்பார்க்க மறுத்துவிட்டான். அவன் ஆணைப்படி சுரை மறுநாளே கூண்டுவண்டியில் கிருஷ்ணவாகாவின் தோற்றுவாயிலிருந்த தப்தம் என்னும் சோலைக்கு அனுப்பப்பட்டாள். அங்கேயே அவள் வாழ்ந்து மறையவேண்டும் என்று ஆணையிட்டான் அவள் மைந்தன்.
[ 2 ]
தம்பகிரியின் அரசனாகவும் அசுரகுடிகளின் முதல்வனாகவும் தம்போத்பவன் முடிசூடிக்கொண்டான். சூழ்ந்திருந்த அனைத்துநிலங்களையும் வென்றான். ஒவ்வொருநாளும் காலையில் ஒரு வெற்றிச்செய்தி தன்னை வந்தடையவேண்டும் என அவன் ஆணையிட்டிருந்தான். ஒருநாள் அவன் அவைக்கு விண்ணுலாவியாகிய நாரதர் வந்தார். ஏழுலகச்செய்திகளையும் சொன்னார். அன்றுவந்த வெற்றிச்செய்தியை படைத்தலைவன் சொன்னபோது தம்போத்பவனின் அவை வாழ்த்தொலிகளால் எழுந்தமைந்தது.
அமைதியாக அமர்ந்திருந்த நாரதரைக் கண்ட தம்போத்பவன் “நாரதரே, தாங்கள் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்?” என்றான். “அரசே, ஒவ்வொரு வெற்றியும் இன்றியமையாத தோல்வியை நோக்கி செல்கிறது என்று அறிந்தவன் உவகை கொள்ள என்ன உள்ளது?” என்றார் நாரதர். சினத்துடன் “என்ன சொல்கிறீர்?” என்றான் தம்போத்பவன். “ஒரு வெற்றிக்குப்பின் நாம் மேலும் பெரிய எதிரியையே நாடுகிறோம். அப்பயணத்தில் நாம் நம்மால் வெல்லமுடியாத எதிரியை நெருங்குகிறோம்” என்றார் நாரதர். “ஆகவே அறிவுடையோன் வெற்றிகளை விரைந்து கொள்ளமாட்டான்.”
“என்னை வெல்ல இப்புவியில் எவர்? அவ்விண்ணில் எவர்?” என்றான் தம்போத்பவன். நாரதர் “எவரென்று நானறியேன். அவனைத்தேடியே நீங்கள் சென்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றார். “என்னை வெல்லும் எவனும் இல்லை. இருந்தால் அவனை நான் வெல்லவேண்டுமென்பதே இல்லை. அவன் இருக்கிறான் என்பதே என்னை அமைதியற்றவனாக்கும்” என்றான் தம்போத்பவன்.
ஆனால் அன்றிரவு தனிமையில் அவன் அறிந்தான், நாரதர் சொன்னதன் பொருளை. காலையிலேயே கிளம்பி கிருஷ்ணவாகாவின் ஊற்றுமுகத்தை அடைந்தான். கிருஷ்ணசூசி என்னும் அம்மலையுச்சியில் நின்று சூரியனை எண்ணி தவம்செய்தான். கொண்டுள்ள அனைத்தையும் இழந்து செய்யும் தவம் தியாஜ்யம் எனப்படும். கொண்டவை அனைத்தையும் பெருக்கிப்பெருக்கிச் செய்யப்படும் தவம் க்ரஸ்தம் எனப்படும். தன் ஆணவத்தைப் பெருக்கி அதன்மேல் ஏறி நின்ற தம்போத்பவன் சூரியன் செல்லும் பாதையை இரு கைகளாலும் மறித்தான்.
“எனக்கு அருள்க! அன்றி நான் வழிவிட்டுச் செல்லமாட்டேன்” என்றான் தம்போத்பவன். “நீ என் மைந்தன். உன்னை நான் கொல்லமுடியாது” என்று சூரியன் சொன்னான். “சொல், நீ வேண்டுவதென்ன?” தம்போத்பவன் “வெல்லப்படமுடியாமை” என்றான் தம்போத்பவன். “முழுமுதல் என அமைந்த அது அன்றி எதுவும் வெல்லப்படக்கூடியதே. ஏனென்றால் அது மட்டுமே பிறிதொன்றிலாமையின் வெளியில் அமைந்துள்ளது” என்றான் சூரியன். “வேறு ஒருவரம் கேள். அளிக்கிறேன்.”
“எனக்கு ஆயிரம் செம்மணிக் கவசங்கள் வேண்டும்” என்றான் தம்போத்பவன். “கொல்லாமை பேணி படைக்கலம் எடுக்கா நெறிகொண்டு ஆயிரமாண்டுகாலம் தவம்செய்தவன் மட்டுமே என் கவசங்களை உடைக்க வேண்டும். என் கவசங்களில் ஒன்றை உடைப்பவன் அக்கணமே தலையுடைந்து உயிர்துறக்கவும் வேண்டும்.” புன்னகையுடன் சூரியன் “அவ்வண்ணமே ஆகுக!” என்றான். “இனி என்னை எவர் வெல்ல முடியும்?” என்றான் தம்போத்பவன். “மைந்தா, மாற்றொன்றிலா பெருக்கெனும் ஊழ் உனக்கென உருவெடுக்கும்” என்று சொல்லி சூரியன் மறைந்தான்.
தம்போத்பவன் காலைக்கதிர் என ஒளிவிடும் ஆயிரம் பொற்கவசங்களால் காக்கப்பட்டவனானான். அக்கவசங்களின் அடியில் கடல் அலைகளுக்கடியில் எரிமலை என அவன் உள்ளம் அனல் கொண்டிருந்தது. அவனை சகஸ்ரகவசன் என்று அசுரகுடியினர் புகழ்ந்தனர். அவன் இருளிலும் ஒளிவிட்டான். அணையாத எரிகனல் அவன் என்றனர் அசுரர்களின் கவிஞர்.
விண்ணிலும் மண்ணிலும் வெற்றிகொள்ள எவருமில்லை என்று அறிந்தபின்னரே தன் அரியணையில் அமர்ந்தான் தம்போத்பவன். ஒவ்வொருநாளும் “வெற்றிகொள்ளப்படமுடியாதவரே” என்றுதான் அவனை அவன் அவையும் குடியும் அழைத்தது. அவன் குலமொழியின் நூல்களில் அவன் அஜயன் என்னும் பெயரையே கொண்டிருந்தான். தன் அரண்மனையில் நூற்றெட்டு முதன்மைத்தேவர்களும் அணையாச்சுடராக அகல்களில் எரியவேண்டுமென ஆணையிட்டான். அவன் ஆணைப்படி தேவர்கள் அங்குவந்து எரிந்தனர். அதில் ஒரு திரிமட்டும் எத்தனைமுறை பற்றவைத்தும் சுடர்கொள்ளவில்லை.
செய்தியறிந்து வந்து நோக்கிய தம்போத்பவன் “அத்தேவன் எவன் என நோக்குக!” என்றான். “அரசே, அவன் தர்மன் என்னும் பெயருள்ள தேவன். அன்னைக்கும் தந்தைக்கும் ஆற்றவேண்டிய கடன்களை கணக்குவைக்கும் தெய்வம். முதன்மைப்பிரஜாபதியாகிய தட்சனின் மகள் மூர்த்திகையை மணந்தவன்” என்றனர் பூசகர். “அவனை சிறைகொண்டு வருக!” என்று தம்போத்பவன் ஆணையிட்டான். அவன் ஆணைப்படி வைதிகர் வேள்வி செய்து அதில் தர்மனை கொண்டுவந்து நிறுத்தினர்.
“அரசே, உன் தந்தைக்கும் அன்னைக்கும் பழிசெய்தாய். உன்னை நான் ஏற்கவியலாது” என்றான் தர்மன். “என்னை ஏற்க நீ யார்? நீ என் அடிமை. என் அடிபணிவதுவரை இங்கே தொழும்பர் பணிசெய்” என்றான் தம்போத்பவன். தம்பகிரியின் அழுக்குநீரோடும் வழியில் ஒரு கல்லில் அவனை கட்டி நிறுத்தினான். “நாளும் இந்நகரின் கழிவுகளில் ஆடு. தூய்மை வேண்டுமென்றால் என் அடிபணிந்து அருள்கொள்” என்றான் தம்போத்பவன்.
“என் கடன் அன்றி பிறிதொரு நிலை எனக்கில்லை. ஆணவம்கொண்டவனே கேள். ஈரேழுலகிலும் எந்த ஒரு நெறி வழுவினாலும் ஒன்றிலிருந்து பிறிது என இங்குள்ள அனைத்தும் அழியும். எறும்பு பிணத்தை உண்ணாமலானால் விண்மீன்கள் தடம்மாறும். நீர்த்துளியை ஒளி ஊடுருவாவிடில் கடல்கள் எல்லைமீறும். அந்நெறிகளைக் காப்பவர்கள் தேவர். மூத்தவரையும் நீத்தவரையும் பேணும் அறம் இங்கு அழியும் என்றால் மானுட மொழி அழியும். மொழி அழிந்தால் அன்பு அழியும். அன்பில்லையேல் வேள்விகள் அழியும். வேள்விகள் அழிந்தால் தேவர்கள் அழிவர். தேவர்கள் அழிந்தால் அனைத்தும் அழியும்” என்றான் தர்மன். “எனவே நான் என் நெறிவிட்டு ஓர் அணுவும் விலகமாட்டேன்.”
தர்மனின் துணைவி மூர்த்திகை தன் கொழுநன் இருக்கும் நிலையை அறிந்தாள். தன் கூந்தலில் சூடிய மலர்மாலையை எடுத்து ஒவ்வொரு மலராக கிள்ளி வீசியபடி “என் நெறிமேல் ஆணை. இம்மலர்கள் ஒழிவதற்குள் இங்கு மும்மூர்த்திகளும் எழுக! இல்லையேல் என் சொல்லால் மூவரையும் சுட்டழிப்பேன்” என்றாள். இறுதியில் எஞ்சிய இருமலர்களை அவள் எறிவதற்குள் அவள் முன் மும்மூர்த்திகளும் வந்தனர்.
விண்ணளந்தோன் அவளிடம் சொன்னான் “உன் ஆணை எங்களை ஆள்க! தவத்தோளே, உன் கருவில் என் ஆழியும் பணிலமும் இரு மைந்தரென பிறப்பர். அவர்களால் சகஸ்ரகவசன் கொல்லப்படுவான். உன் கணவன் உன்னை வந்தடைவான். அவர்களுக்கு நரன் என்றும் நாரணன் என்றும் பெயரிடுக!” அவ்வாறே அவள் இரட்டைமைந்தரை பெற்றாள். செந்நிறம் கொண்டவனை அவள் நரன் என்றாள். கருநிறத்தவனை நாரணன் என்றாள். அவர்கள் ஈருடல்களில் எழுந்த ஓருயிர் என வளர்ந்தனர்.
[ 3 ]
நரனும் நாரணனும் தங்களை இருவரென்றே அறியவில்லை. கோடானுகோடி உடல்களுக்குள் வாழ்வது ஒன்றே. பொறிகளைக் கொண்டு உடல் அறியும் தன்னைத்தான் அது தானென்று எண்ணி தனித்து எழுகிறது. நரன் தொட்டதை நாரணன் அறிந்தான். நாரணன் உண்டதை நரன் சுவைத்தான். ஒரே இசையை இருவரும் கேட்டனர். மொழியிலிருந்து ஒற்றைப்பொருளை இருவரும் அறிந்தனர். அவர்களுக்குள் ஒன்று தன்னை ஒன்றென்றே உணர்ந்திருந்தது. அன்னை அவர்களை இருவரென்று சொல்லவில்லை. அவர்களின் தவச்சாலை மாணாக்கரும் அவ்வாறு எண்ணவில்லை. அங்குள்ள மான்களும் மயில்களும் அவர்களை ஒருவரென்றே கண்டன.
இருவருக்கும் ஏழுவயதானபோது அவர்களின் தவக்குடிலுக்கு நாரதர் வந்தார். இளையோர் அவருடன் இசையாடி, சொல்லாடி மகிழ்ந்திருக்கையில் அவர் இயல்பாக “உங்களில் எவர் எந்தத் தவம் செய்யப்போகிறீர்கள்?” என்றார். புரியாது விழித்த இளையோரை நோக்கி “ஒவ்வொருவரும் அவர் செய்யப்போகும் தவமென்ன என்பதை தெரிவுசெய்தாகவேண்டும் இளையோரே” என்றார் நாரதர். “சிலருக்கு தவமென்பது விரிதல். சிலருக்கு குவிதல். சிலர் சொல்லில் தவம் செய்வார்கள். சிலர் செயலில் தவம் செய்வார்கள். வென்றும் இழந்தும், சென்றும் அமர்ந்தும், இணைந்தும் தனித்தும் தவங்கள் செய்யப்படுகின்றன. பாதைகள் பல, எய்துவதுதான் ஒன்று.”
“நாங்கள் ஒற்றைத்தவத்தை தெரிவுசெய்கிறோம்” என்றனர் சிறுவர். “ஏனென்றால் நாங்கள் ஒருவரே”. நாரதர் புன்னகைத்து “நீங்கள் உடலால் இருவர் இளையோரே. எனவே உள்ளத்தாலும் இருவரே” என்றார். “ஆம், எங்கள் உடல் இரண்டென்பதை அறிவோம். ஆனால் ஒரே உள்ளம் ஏன் அதில் வாழக்கூடாது?” என்றனர். “உடல் செய்யும் பிழைகள் உள்ளத்தை அடையும் என்றால் உடல்வேறு உள்ளம் வேறல்ல. உடலென்பது பருவடிவ உள்ளம். உள்ளம் நுண்வடிவ உடல்” என்றார் நாரதர்.
“உங்கள் உடல்கள் வெவ்வேறு. இவர் கருநிறம் கொண்டவர். மற்றவர் செந்நிறம். இவர் உடலோ கூர்மையும் விரைவும் கொண்டது. அவர் உடலோ நுண்மையும் முழுமையும் கொண்டது. உடல்கள் தேரும் தவம் என்ன என்பதே உள்ளத்தின் பாதையாகும்” என்று நாரதர் சொன்னார். “ஒரு தேர்வு வைக்கிறேன். உங்கள் உடல் செல்லும் வழியென்ன என்பதை அப்போது அறிவீர்கள்.”
நாரதர் அவர்களை காட்டுக்குள் அழைத்துச்சென்றார். அங்கே புதர்நடுவே இருந்த செம்போத்தின் கூட்டில் இருந்த ஒற்றைக்குஞ்சை நோக்கி கருநாகம் ஒன்று வாய்பிளந்து கவ்வச்சென்றதை அவர்கள் கண்டனர். “ஆ!” என்று ஒன்றாக அலறியபடி அவர்கள் அதை நோக்கினர். அறியாது நரன் அருகே கிடந்த கல்லொன்றை எடுத்து அதன்மேல் எறிந்தான். அக்கணத்திலேயே நாரணன் இடியோசையை நாவால் எழுப்பினான். திகைத்தெழுந்த நாகத்தின் படம் மீது கல்பட்டது. துடித்துச் சுருண்டு அது புதரிலிருந்து கீழே விழுந்தது. அருகே ஓடிச்சென்ற இருவரும் அக்குஞ்சை எடுத்து அன்புடன் இறகுநீவி மீண்டும் கூண்டில் வைத்தனர்.
நாரதர் புன்னகையுடன் “இப்போது அறிந்திருப்பீர் இளையோரே, உங்கள் உள்ளம் செல்லும் வழி வெவ்வேறு. கல்தேர்ந்தவன் வில்லை எடுத்து பொருள்வெளியென விரிந்த இவற்றை இலக்காக்கட்டும். சொல் தேர்ந்தவன் தன்னுள் நுழையட்டும்” என்றார். அவர்கள் தலைவணங்கினர். “வடக்கே மேருமலையின் அடியில் ஹிரண்யதலம் என்னும் மலையடிவாரம் உள்ளது. அங்கு சென்று நாரணன் தவமிருக்கட்டும். தெற்கே சிலாமுகம் என்னும் காடு உள்ளது. அங்கே நரன் வில்பயிலட்டும்” என்றார் நாரதர்.
அன்றே அவர்கள் ஒருவரை ஒருவர் உடல்பிரிந்தனர். நாரணன் தன்னுள் நோக்கி அமர்ந்தான். அடைதலை, ஆதலை, இருத்தலை, எஞ்சுதலை கடந்தான். எங்குமிருக்கும் ஒன்றென ஆகி அங்கிருந்தான். நரன் அருகிருக்கும் இலக்கை நோக்கி அம்புகளை தொடுக்கக் கற்றான். இலக்குகள் அகன்று அகன்று செல்ல அவன் உலகம் விரிந்தது. இலக்குகள் அற்ற வெறுமையில் ஒருகணம் அவன் அம்புகள் என்றால் என்ன என்று அறிந்தான்.
[ 4 ]
சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை அணிந்துகொண்டான். மாலை துணைவியர்மாளிகைக்குச் செல்கையில் மென்பட்டாடைகளை சுற்றிக்கொண்டான். அசுரர்களின் வசந்தகாலக் கொண்டாட்டங்களில் மலராடை அணிவதும் அவற்றின் மேல்தான். புதுப்புனல் பெருகும் நதியிலிறங்கி நீர்விளையாடுவதும் கவசங்களுடனேயே. மகளிருடன் மந்தணம் கொள்வதும் கவசங்களுடன்தான்.
அசுரகுடிகள் அவன் உடலே அக்கவசம்தான் என்று எண்ணத்தலைப்பட்டனர். பிறந்துவந்த புதுத்தலைமுறைகள் அவன் உடல் பொன்னாலானது என்று அன்னையரால் கதைசொல்லப்பட்டனர். ஆகவே அவன் சூதர்களால் ஹிரண்யாஃபன் என்று அழைக்கப்பட்டான். அந்திச்சூரியன் உருகிவிழுந்த ஒருதுளி என்று அவனை கவிஞர் பாடினர். அத்தனை உயிர்களாலும் ஏத்தப்படுபவன், அத்தனை உயிர்களுக்கும் வானமுதானவன், எந்த உயிராலும் எட்டப்படமுடியாதவன். “அருஞ்சினத்தை அழகென்றாக்கிச் சூடியவர் இருவர். பொன்மயமான சூரியன் முதல்வன். அவனை ஹிரண்யன் என்றனர் வேதஞானியர். பொன்னுடல் கொண்ட நம் அரசர் அவன் மைந்தன். அவர் வாழ்க!” என்றனர் அவைக்கவிஞர்.
அவனுடன் அமையும் பெண்கள் அந்தக் கவசங்களையே சுற்றி கைவளைத்து அணைத்து அவன் என அறிந்தனர். அது ஆழ்நீர்வாழும் மீனின் செதில் போல எப்போதும் குளிர்ந்திருந்தது. இருளில் அதன் சித்திரச்செதுக்கல்களை தொடும்போது அவனை ஓர் ஆமை என்று அவர்கள் உணர்ந்தனர். அவர்களிடம் அவன் எண்ணி எடுத்த சொற்களால் பேசினான். எண்ணங்களை மொழியிலும் உணர்வுகளை உடலிலும் காட்டாமலிருந்தான். அவனுடன் அவர்கள் இருக்கும் அறைச்சுவர்கள் நீரலைகொண்டவைபோல குளிர்கொண்டன. பின்னர் மஞ்சமும் குளிர்ந்தது. அவன் அவர்களுக்கு அளிக்கும் முத்தங்களும் கோடைமழையின் பனிக்கட்டிகள் போல குளிர்ந்து வந்து விழுந்தன.
அவனுடைய இருதுணைவியர்களான சுஜனையும் சுகதையும் அவனை மணந்து கொண்டபோது மணப்பந்தலில் அந்த ஒளிவிடும் கவசத்தைக் கண்டு மெய்ப்பு கொண்டனர். “அணுகினால் எரித்தழிக்கும் அனல் என்றார்களே தோழி, அவை குளிர்ந்தல்லவா உள்ளன?” என்றாள் சுஜனை சுகதையிடம். “அணுக்கமானவர்களுக்கு அவர் குளிர்ந்தவர் போலும்” என்றாள் சுகதை. அவனை அவர்கள் மஞ்சம் அணைந்த முதல்நாள் அவன் அவர்களை அணைத்தபோதும் அந்தக் கவசத்தை கழற்றவில்லை என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.
சுகதை அக்கவசத்தை கழற்ற முற்பட அவன் அவள் கையைப்பிடித்து மெல்லிய நகைப்பில் இதழ் வளைய “இக்கவசத்தை நீக்குபவர் தலைசிதறி இறப்பார்கள் என்று இறைச்சொல் உள்ளது அரசி” என்றான். அவள் திகைத்து கைவிலக்கிக்கொண்டாள். சுஜனை “இக்கவசத்தை நீங்களே விலக்கினால்?” என்றாள். “இக்கவசங்கள் கட்டப்பட்டவை அல்ல. உருகி உடலுடன் ஒன்றானவை. உடைத்துவிலக்குபவன் இறப்பது ஊழ். நான் விலக்கினாலும் அவ்வாறே” என்றான்.
அவள் நடுங்கும் கைகளால் அதை வருடி “இவை குளிர்ந்துள்ளன” என்றாள். “ஆம்” என்றாள் சுகதை. “நீங்கள் அனல்கொண்டவர் என்றார்கள். இக்கவசங்களுக்கு அடியில் நீங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறீர்களா?” சகஸ்ரகவசன் சிரித்து “இப்புவியே குளிர்ந்த கவசங்கள் அணிந்த அனல் அல்லவா?” என்றான். அவள் அக்கவசத்தை கைகளால் நெருடிக்கொண்டே இருந்தாள். “சொல்” என்றான். “அனல் மேல் கவிழ்த்த உலைமூடி...” என்றாள். “அதற்கு மேல் இத்தனை அணிமலர்கள் ஏன் செதுக்கப்பட்டுள்ளன?”
சகஸ்ரகவசன் அதற்கு விடையளிக்காமல் நகைத்தான். “சொல்லுங்கள்” என்றாள். “அழகுக்காக” என்றான் சகஸ்ரகவசன். அவள் “என்ன அழகு?” என்றாள். “இம்மலர்ச்செதுக்குகளால் அல்லவா இது ஓர் அணிகலன் ஆகிறது? நீ அணிந்துள்ள பொன்னணிகளும் அவ்வாறே அல்லவா? இல்லையேல் அவை வெறும் சங்கிலிகள்தானே?” அவள் அதை கையால் தடவி “ஆம்” என்றாள். சுஜனை அவனிடம் உடல் பிணைத்தபடி “நான் ஒன்று கேட்கவா?” என்றாள். “சொல்” என்றான். “எவரை அஞ்சி இதை அணிந்திருக்கிறீர்கள்?” சகஸ்ரகவசன் ஒருகணம் சினம்கொண்டாலும் “நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான்.
“அஞ்சாவிட்டால் எதற்கு இந்தக் கவசம்?” என்றாள். “இக்கவசம் இருப்பதுவரை நான் அஞ்சவேண்டியதில்லை” என்றான். “அப்படியென்றால் இக்கவசத்தின் பின்னால் அஞ்சி ஒளிந்துள்ளீர்கள் என்றல்லவா பொருள்?” அவன் பெருமூச்சுவிட்டான். பின்பு “ஆம், அஞ்சுகிறேன். அசுரப்பிறப்பை” என்றான். “பிறவிகொண்டு எழுந்ததுமே உள்ளே குடிகொண்டு ஒவ்வொரு கணமும் உடன் வளரும் ஊழை. ஊழ்முடிவான இறப்பை. அதை வெல்லவே இக்கவசம்” என்றான். அவள் “அவ்வண்ணமென்றால் நீங்கள் அஞ்சுவது உங்களையேதானா?” என்றாள். “ஆம், என்னைத்தான். என்னை மட்டும்தான்” என்றான் அவன்.
“நீங்கள் இங்கே இவ்வுடலில் மட்டுமே இருப்பீர்கள் என்று எவ்வண்ணம் சொல்லமுடியும்? பிறிதொன்றில் ஏறி நீங்களே வந்து இவ்வுடலை வென்றால் என்ன செய்வீர்கள்?” என்றாள் சுஜனை. “என்ன சொல்கிறாய்?” என்று சீறினான். “மைந்தரில் நீங்கள் வரக்கூடுமே? ஆடிப்பாவையில் எழுவதும் நீங்களல்லவா?” அவன் தன் தலையைத் தடவியபடி அமைதியடைந்தான். சுகதை அவன் உள்ளத்தைக் கலைக்க அவன் குழல்மேல் கைகோத்து “இவள் எப்போதும் இப்படித்தான், வீண்சொல்லெடுப்பதே விளையாட்டெனக் கொண்டவள்” என்றாள்.
சகஸ்ரகவசன் அதன்பின் சொல்லெடுக்கவில்லை. அக்கவசங்களுக்குள் அவன் மறைந்துவிட்டது போலிருந்தது. அவனை வெளியே கொண்டுவர அவர்கள் முயன்றனர். ஆயிரம் கோட்டைச்சுவர்களுக்கு அப்பால் மெல்லிய நிறத்தீற்றலென அவன் தெரிந்து மறைந்தான். அன்றிரவு அவர்கள் அக்கவசங்களுடன் காமம் கொண்டனர். அதன்பின் ஒவ்வொருநாளும் அக்கவசங்களுக்கு அப்பாலிருக்கும் அவனை எட்டிவிட அவர்கள் முயன்றனர். ஒவ்வொரு கவசமும் ஒன்றால் ஆனது என்று கண்டனர்.
முதற்கவசம் ஆண்மையெனும் நிமிர்வால். இரண்டாம் கவசம் தனிமையால். மூன்றாம் கவசம் சொல்லெண்ணும் கூர்மையால். நான்காம் கவசம் விளைவு உன்னும் தயக்கத்தால். ஐந்தாம் கவசம் சினத்தால். ஆறாம் கவசம் தன்னை நோக்கித் திரும்பிய நோக்கால். சென்று சென்று முடிவிலாதிருந்தன அவை. அக்கவசங்களுக்கு வெளியே நின்று அவர்கள் தட்டிக்கொண்டிருந்தனர். அவன் அவற்றைத் திறந்து வெளிவந்தாகவேண்டுமென பின்னர் உணர்ந்தனர். அவனாலும் அது இயலாதென்று பின்பு அறிந்தனர்.
மெல்லமெல்ல அந்தக் கவசப்பரப்புக்கு அவர்கள் பழக்கப்பட்டனர். அதன் ஒவ்வொரு பூச்செதுக்கும் வளைவும் அவர்களுக்குத் தெரிந்தவையாக ஆயின. அவை அவர்களின் கனவில் எழத்தொடங்கின. அவையே அவன் என ஆனபோது அவற்றையே அவர்கள் விரும்பத்தொடங்கினர். அக்கவசத்தின் மலர்களை மெல்ல விரலால் தொடும்போதே அவர்கள் உணர்வெழுச்சி கொண்டனர். அக்கவசங்களுக்குள் எங்கோ அவன் இருக்கிறான் என்பதை அவர்கள் முற்றிலும் மறந்தனர். ஆயிரம்கவசங்களின் மனைவியரென்றே அவர்களின் ஆன்மா நம்பத்தலைப்பட்டது.
பின்பொருநாள் சுஜனை ஒரு கனவுகண்டாள். அதில் அவள் ஒரு குழந்தைக்கு அன்னையாக இருந்தாள். அவனைப்போலவே கரிய நிறம் கொண்ட குழந்தை. பொன்னாலான கவசங்கள் அணிந்திருந்தது. கவசத்திற்கு வெளியே அதன் மெல்லிய குழவிக் கைகளும் கால்களும் நெளிந்தன. எச்சில் வழியும் சிவந்த உதடுகளுக்குள் இருவெண்பற்களுடன் அது அவளது நீட்டிய முழங்கால் மேல் படுத்து எம்ப முயன்றது. அதன் கொழுதொடை மடிப்பில் மெல்ல அடித்து அவள் அதை நீராட்டிக்கொண்டிருந்தாள்.
அருகிருந்த கலத்திலிருந்த நறுமணவெந்நீரை அள்ளி அதன்மேல் ஊற்றினாள். தேய்த்துக் குளிப்பாட்டியபோது மெல்லிய தோல் என அக்கவசம் உரிந்துவருவதை கண்டாள். கைகளால் வலிக்காமல் உரித்தெடுத்தாள். பொன்வண்டின் ஓடு போல ஒளியுடன் இருந்தது. அதற்கடியில் இன்னொரு கவசம். மேலும் ஒன்று. பரபரப்புடன் அவள் அவற்றை உரித்தபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளை ஓர் அச்சம் கவ்வியது. குழந்தையின் உடல் சிறுத்தபடியே வந்தது. வேண்டாம் வேண்டாம் என உள்ளம் தடுத்தாலும் கைகள் கவசங்களை கழற்றிக்கொண்டே இருந்தன.
கவசங்களுக்கு அடியில் மேலும் கவசங்கள். ஒவ்வொரு கவசம் கழற்றப்படும்போதும் குழவி மேலும் மேலும் உவகை கொண்டது. இறுதிக்கவசம் அணிந்த அதன் உடல் மிகச்சிறிதாக தெரிந்தது. அதன் தொடைகளும் கைகளும் தலையும் அதற்கேற்ப சிறுத்திருந்தன. நிறுத்திவிடலாமென நினைத்தாள். ஆனால் அத்தனைக்கும்பின் அதை கழற்றாமலிருக்க தன்னால் முடியாதென்றே அவள் உணர்ந்தாள். நடுங்கும் கைகளால் அவள் அக்கவசத்தை கழற்றினாள். அவள் அதுவரை அஞ்சிவந்ததே நிகழ்ந்தது. அக்கவசத்துக்கு அப்பால் இருண்ட குளிர்ந்த வெற்றிடமே இருந்தது.
அவள் பதைப்புடன் அதை கைகளால் துழாவினாள். கைகள் தவித்தன. ஓசையின்றி அழுதபடி திரும்பிப்பார்த்தாள். அதன் கவசங்கள் குவிந்துகிடந்தன அருகே. அக்கவசங்களை அவள் கலைத்தாள். அவை தனித்தனியாக சிதறி காற்றில் அலைபாய்ந்தன. குழவியிருந்த இடத்தில் குழவியின் இருப்பை எஞ்சவைத்த வெற்றிடம். “என் கண்ணே! என் கண்ணே” என்று கூவியபடி அவள் அதை தடவினாள். மெல்ல அந்த இருப்புணர்வும் அழிவதை கண்டாள். “என் செல்லமே! என் அமுதே!” என்று அவள் வீரிட்டலறினாள்.
விழித்துக்கொண்டபோது உடல்நடுங்க கண்ணீர் மார்பில் சொட்ட அவள் அழுதுகொண்டிருந்தாள். விசும்பியபடி எழுந்தோடி அருகே பிறிதொரு அறையில் துயின்றுகொண்டிருந்த சுகதையைப் பிடித்து உலுக்கி “எழுந்திரடீ!” என்று கூவினாள். “கண்கள்!” என்று கூச்சலிட்டபடி அவள் விழித்துக்கொண்டு “கண்கள்! பார்... நான்...” என்றபின் “நீயா? நீ எப்போது?” என்றாள். அவளும் நடுங்கிக்கொண்டிருந்தாள். சுஜனை அவளைத் தழுவியபடி அமர்ந்து அழுதாள். “என்ன? என்ன? சொல்லடி!” என்றாள் சுகதை. “நான் ஒரு கனவு கண்டேன்... கொடுங்கனவு” என்றாள்.
அக்கனவை அவள் சொல்லவும் “நானும் அதே கனவைக் கண்டேனடி” என்று கூவியபடி அவளை கட்டிக்கொண்டாள் சுகதை. “நான் கவசங்களைக் கழற்றியபோது கண்டது இரு கண்கள். உயிருள்ள கண்கள். இமைக்காது என்னை அவை நோக்கிக்கொண்டிருந்தன.” தீக்குறிகளை அவர்கள் எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் அவர்களுக்கு கடும் காய்ச்சல் எழுந்தது. உடல்வாடிக் கிடந்த அவர்களை நோக்கிய மருத்துவர் அவர்கள் உளம்தாங்கா கனவுகண்டதை கண்டடைந்தார்.
நிமித்திகர் குறிநோக்கி அவர்கள் அன்னையராகப்போவதை அறிவித்தனர். அக்கனவு அவர்களிருவரும் கொள்ளப்போகும் மைந்தரைப் பற்றியது. இளையவளின் மைந்தன் போரில் இறக்கலாம். மூத்தவளின் மைந்தன் நாடாளலாம். “விழிகள் அவன் வாழ்வான் என்பதற்குச் சான்று அரசி” என்றார் நிமித்திகர். “விழிகளே ஆன்மா எனும் பறவை. அது வந்தமரும் கிளையே உடல் என்கின்றன நூல்கள்.”
அவர்கள் உரைத்ததற்கிணங்க அவர்கள் இருவரும் கருவுற்றனர். இருவருமே ஒரேநாளில் மைந்தர்களை ஈன்றனர். முதல் மைந்தனுக்கு சலன் என்றும் இரண்டாவது மைந்தனுக்கு அசலன் என்றும் பெயரிடப்பட்டது. மைந்தர்களுக்குரிய வேள்விச்சடங்குகள் முறைப்படி நிகழ்ந்தன. சகஸ்ரகவசனின் ஆட்சியின்கீழிருந்த அனைத்துலகின் தலைவர்களும் வந்து குழந்தைகளுக்கு சீர் செய்து வணங்கிச்சென்றனர்.
சலன் வெண்ணிறமும் அசலன் கரிய நிறமும் கொண்டிருந்தனர். இருவரும் தந்தையின் இரண்டு தோள்களில் வளர்ந்தனர். இருசெவிகளிலும் “தந்தையே” என்று ஒரே குரலில் அழைத்தனர். அவர்கள் இருபக்கமும் இருந்து பேசுவது தன் தலைக்குள் நிகழ்வதாகவே அவனுக்குத் தோன்றியது.
ஒருநாள் இரவு இருமைந்தரையும் மார்பின் மேல் போட்டுக்கொண்டு சகஸ்ரகவசன் துயின்றான். அவர்கள் அவன் கவசங்களின்மேல் தலைவைத்து விளையாடி அவ்வாறே துயில்கொண்டனர். அவன் தன் துயிலில் அவர்கள் இருவரையும் கண்டான். தொலைவில் ஒரு வெண்புரவியில் அவர்கள் வந்தனர். அணுகும்தோறும் தெளிவடைந்து அவர்கள் ஒற்றை உடலில் இரு தலையுடன் இருப்பதை கண்டான். அகலே குழவிகளெனத் தெரிந்தவர்கள் அருகணைந்தபோது இளைஞர்களாகிவிட்டிருந்தனர்.
“மைந்தா, என்ன செய்கிறாய்?” என்று அவன் கேட்டான். சலன் தன் கையில் பெருவில் ஒன்றை எடுக்க அசலன் அதை நாணிழுத்து அம்பு தொடுத்தான். “மைந்தா” என்று சகஸ்ரகவசன் கூவினான். அவர்களின் அம்பு வந்து அவன் நெஞ்சை துளைத்தது. அவன் “வேண்டாம் வேண்டாம்” என்று கூவும்தோறும் அவன் கவசங்கள் உடைந்து விழுந்தபடியே இருந்தன. “மைந்தா, வேண்டாம்!” என்று அவன் கூவினான். அவர்கள் அவனை கேட்கவில்லை. “மைந்தா, திரும்பிச்செல்! இது முறையல்ல. வேண்டாம்…” என்று அவன் கூவிக்கொண்டே இருந்தான்.
இறுதிக்கவசம் உடைந்தபோது அவன் மண்ணில் விழுந்திருந்தான். அவன் நெஞ்சுக்குள் ஒரு சிறிய குருவிக்குஞ்சு பதுங்கி இருந்தது. சலன் கையால் துழாவி அதை பிடித்தான். அசலன் அதை வாங்கி அதன் கண்களை கூர்ந்துநோக்கி புன்னகைசெய்தான். அவர்கள் அதை காற்றில் விட்டனர். அது பறந்து செல்வதை அவர்கள் நோக்கி நின்றனர். அங்கே பறந்து எழுந்தபின்னர் அவன் திரும்பி நோக்கினான். தரையில் அவன் கவசங்கள் மட்டும் குவிந்துகிடந்தன. அவன் விம்மியபோது அப்பால் தன் தந்தை தம்பனின் முகம் புன்னகைப்பதை கண்டான்.
அக்கனவை அவன் அவைநிமித்திகர்களால் விளக்கமுடியவில்லை. ஆளுக்கொரு விளக்கம் சொல்லி அவனை சினம்கொள்ளச்செய்தனர். அவன் மைந்தரை தொடாமலானான். தன் அறையில் தனித்து உலவினான். கவசங்கள் மேல் கையால் அறைந்தபடி பற்களைக் கடித்து உறுமினான். இரவும்பகலும் துயிலாமலானான். மனைவியரும் அமைச்சரும் அவனை அணுகமுடியவில்லை.
நாள் செல்லச்செல்ல அவன் வெம்மை கூடிக்கூடி வந்தது. அவன் அறையின் இரும்புத்தூண்கள் உருகி சற்றே வளைய மேற்கூரை கீழிறங்கியது. புலரிவரை இருளில் செவ்வொளி எழ அவன் நின்றிருந்தான். நகர்மக்கள் அவன் அறை அனல்எழு உலை என ஒளிவிடுவதை தொலைவில் நின்றே நோக்கினர். காலையில் சூரியன் எழுந்தபோது அவ்வொளியில் அவன் ஒளி மங்கியது. நின்றபடி அவன் கண்மூடினான். அவன் மேல் அனலின் அலைகள் பறந்தன.
அவன் உருகிக்கொண்டிருந்தபோது நாரதர் அவனைத்தேடி வந்தார். அவையமர்ந்த அவரிடம் அவன் நின்றெரியும் வண்ணத்தை அவையத்தார் உரைத்தனர். அவர் அவன் அறைக்குச் சென்று வாயிலில் நின்றார். அனலில் உருகியதுபோலிருந்த அறைக்குள் அவன் வெளியே எரிந்த சூரியனை நோக்கி நின்றிருந்தான். “அக்கனவின் பொருளை நான் அறிவேன்” என்றார் நாரதர். “அதைச் சொல்லவே உங்களைத் தேடிவந்தேன்.” அவன் திரும்பி சிவந்த விழிகளால் நோக்கினான். “அணியப்பட்டவை அனைத்தும் கழற்றப்பட்டாகவேண்டும். அதுவே வீடுபேறு என்பது. அதற்கான தருணம் அமைந்துவிட்டது” என்றார்.
கடுஞ்சினத்துடன் தூணை அறைந்து “என்ன சொல்கிறீர்?” என்றான். “உங்கள் ஆயிரம் கவசங்களும் உடைபடும். சிறையுடைந்து உங்கள் உள்ளமைந்த ஒன்று வானறியும்.” அவன் இரு கைகளாலும் மார்புக்கவசத்தை ஓங்கி அறைந்து “என் கவசங்களை வெல்ல எவராலும் இயலாது” என்றான். “இயலும். இரு இளம்படிவர்கள் அதற்கென்றே பிறந்துள்ளனர். அவர்களை நரநாரணர் என்கிறார்கள். இங்கு உங்கள் அடிமையாக இருக்கும் தர்மதேவனின் மனைவி மூர்த்திகையின் மைந்தர் அவர்கள்.”
அவரை நோக்கி சிலகணங்கள் நின்றபின் சகஸ்ரகவசன் புன்னகைத்தான். “ஆம், அதுதான் அக்கனவுக்கான பொருள். அவர்களை தேடிச்செல்கிறேன். அந்த வாய்ப்பையும் அவிக்கிறேன். அதன்பின் இங்கு என்னை வெல்ல எவருமில்லை என்றாகும்” என்றான். இரு தோள்களிலும் ஓங்கி அறைந்து “என் கவசங்களை நானே அறியும் ஒரு தருணம். அதையே நாடுகிறது என் உள்ளம்” என்றான்.
[ 5 ]
பெருவல்லமையுடன் விண்ணுக்கு பெருகி எழுந்தான் சகஸ்ரகவசன். மண்வாழும் முனிவர் அன்று விண்ணில் இரண்டு சூரியன்களைக் கண்டு அஞ்சி கைகூப்பினர். இடியோசையில் மலைகள் விதிர்த்து மேலே அமைந்த பெரும்பாறைகள் தவம்கலைந்து சரிவில் உருண்டன. நதிகளில் அலைகள் எழுந்து கரையை அறைந்தன. பறவைகள் அஞ்சி நடுப்பகலிலேயே கூடணைந்தன. குழவிகளை அழைக்கும் அன்னைவிலங்குகளின் ஒலிகள் எங்கும் எழுந்தன.
நரநாரணரைத் தேடிச்சென்ற சகஸ்ரகவசன் தன் தவக்குடிலில் வாழ்ந்த மூர்த்திகையை கண்டான். “உன் மைந்தர் வந்து உன்னை மீட்கட்டும்...” என்று சொல்லி அவளை சிறைப்பிடித்து தன் தேரிலேற்றிக்கொண்டு திரும்பினான். தென்னிலத்தில் வில்பயின்ற நரனின் அம்புக்கு மேல் எரிவிண்மீன் ஒன்று சீறி அவிந்தது. வடநிலத்தில் ஊழ்கம் பயின்ற நாரணனின் தலைக்குமேல் வந்தமர்ந்த பறவை ஒன்று ஒற்றைச் சொல் உரைத்தது. இருவரும் அதன் பொருளை ஓர் அச்சமென உணர்ந்தனர். அக்கணமே கிளம்பி அன்னையின் தவச்சாலையை அடைந்தனர். அங்கே அவளில்லை என்று உணர்ந்து தரையை நோக்கியபோது அசுரனின் ஆழ்ந்த காலடிகளை கண்டனர். வடுவென விழுந்த அவன் தேர்க்கால் தடத்தைக் கண்டனர். காட்டுமான் ஒன்றின் மேல் ஏறி அதை பின் தொடர்ந்தனர்.
மலைச்சரிவில் காத்திருந்த சகஸ்ரகவசன் சுஜனை கண்ட கனவில் என காட்டுக்கலைமான் மேல் ஏறிவந்த இளைஞர்களை கண்டான். பேரொலியுடன் உறுமியபடி தன் மின்கதிர்வில்லையும் எரியுமிழ் அம்புகளையும் எடுத்துக்கொண்டு போருக்கு புறப்பட்டான். அவர்கள் நாணொலித்தபடி எதிரே வந்தனர். வில்குலைத்து கலைமான் மேல் எழுந்த நரன் “அசுரனே, உன்னை எதிர்கண்டதுமே என் பிறப்பின் நோக்கமென்ன என்றறிந்தேன். ஆயிரம் ஆண்டுகாலம் நான் செய்த தவம் உன் உயிர்கொள்ளும் பொருட்டே...” என்றான்.
“என் கவசங்களுக்கு அப்பால் நின்று பேசிக்கொண்டிருக்கிறாய். ஆயிரம் ஊழிக்காலத்திற்கு அப்பால் நின்றிருக்கும் நீ இன்னமும் பிறக்கவே இல்லை” என்று சகஸ்ரகவசன் சொன்னான். ஒற்றைக்கணத்தில் இருவரும் அம்பு தொடுத்தனர். அம்புகள் இரண்டும் அடுத்த கணத்தில் முனைமுட்டிக்கொண்டன. விண்ணவர் விழிபதைக்க நோக்கி நின்ற பெரும்போர் தொடங்கியது. ஒவ்வொரு கணம் என முடிவிலா காலம் என மாறி மாறி உளமயக்கு கூட்டியது அப்போர்.
கலைமான்மேல் அமர்ந்திருந்த இருவரில் நரன் மட்டும் போர்புரிவதை சகஸ்ரகவசன் கண்டான். நாரணன் அப்போதும் கைவிரல் கூட்டி இன்மை முத்திரை கொண்டு விழியமைந்து ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தான். தன் முதல் கவசம் உடைபட்டதும் சகஸ்ரகவசன் திகைத்து பின்னடைந்தான். நரனின் தலை நீர்க்குமிழி என வெடிக்க அவன் மண்ணில் சரிந்தான். அக்கணமே நாரணன் நரன் என உருக்கொண்டு எழுந்து அவன் வில்லையும் அம்பறாத்தூணியையும் பற்றிக்கொண்டான். நரன் நாரணன் என உருவெடுத்து எழுந்து கலைமான் மேல் ஏறிக்கொண்டு கைவிரல் கோத்து விழிகூம்பி ஊழ்கத்திலமர்ந்தான்.
சகஸ்ரகவசன் திரும்பி ஓடி மலைமடக்குகளில் நின்று மூச்சிரைத்தான். இரு கைகளையும் ஓங்கி அறைந்து கூவினான். “எந்தையே! எந்தையே!” என்று கூச்சலிட்டான் “உங்கள் சொல் தவறக்கண்டேன். ஏழுலகாளும் உங்கள் நெறி பிழைக்குமென்றால் இனி இங்கு எஞ்சுவது என்ன?” மலைகளுக்குமேல் சூரியவட்டம் எழுந்தது. முகில்களில் பெருங்குரல் ஒலித்தது. “மைந்தா, அவர்கள் ஒருவரே. ஆயிரமாண்டுகாலம் படைக்கலம் ஏந்தாது தவம்செய்தவனும் ஆயிரம் ஆண்டுகாலம் படைக்கலமென்றே வாழ்ந்தவனும் ஒருவனே. ஒருபாதி உன்னை வெல்லும் வில்திறனை அடைந்தது. மறுபாதி இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சயத்தை அடைந்தது.”
அறைகூவியபடி மலைகளின் நடுவே கலைமான் தோன்றியது. “ஆம், நான் அறிவேன். இது இறுதி. இக்கவசங்களால் அல்ல, இனி என் குலம் கொண்ட வீரத்தால் பொருதுகிறேன்” என்று அவன் கூவினான். வில்குலைத்து கலைமான் ஊர்ந்த இரட்டைவீரரை எதிர்கொண்டான். விடிந்து இருண்டு விடிந்து என போர் நிகழ்ந்தது. அவன் கவசங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. அவை உடல் விட்டு நீங்கும்தோறும் எடையின்மையின் விடுதலையை உணர்ந்தான். அவ்வாறு உணரும்தோறும் சினம் கொண்டான். பேரொலியுடன் வெறிகொண்டு எழுந்து அவர்களை தாக்கினான்.
கவசங்கள் மறைய மறைய அவன் உள்ளம் துள்ளத் தொடங்கியது. தன் உள்ளை தானே காணவிழைவதை உணர்ந்தபோது உட்சினத்தை ஊதி எரியவைத்தான். ஆனால் மெல்ல அவ்வனல் அணைந்தபடியே வந்தது. பின் முற்றிலும் குளிர்ந்தது. இறுதிக் கவசம் எஞ்சியபோது அவன் நீள்மூச்சுடன் கைகளை தூக்கினான். “போர் புரிக! போர்புரியாதபோது உன்னைக் கொல்ல என்னால் முடியாது” என்றான் நரன். அவன் “நன்று” என்றபடி வெறும் கையுடன் அவர்களை நோக்கி சென்றான்.
நரனின் அம்பு வந்து தன் கவசத்தை உடைத்தபோது பதற்றத்துடன் குனிந்து நெஞ்சை பார்த்தான். அங்கே பொன்னொளியே தெரிந்தது. கவசம் எஞ்சுவதாக எண்ணி பதைப்புடன் தொட்டான். தொடுவுணர்ச்சி எழ திகைத்து நரனை நோக்கினான். “அது உன் நெஞ்சு...” என்றான் நரன். “நீ சூரியனின் மைந்தன் என்பதன் பொன்னொளி அது.”
இறுதி அம்பு வந்து அவன் நெஞ்சில் ஆழ்ந்திறங்கியது. செப்பொன்பரப்பில் செங்குருதி ஊறிப்பெருகுவதை கண்டான். ஒருகையால் நெஞ்சை அழுத்தியபடி இடப்பக்கம் சரிந்து தன் தேர்க்காலில் விழுந்தான். கீழே ஆழத்தில் தன் இறுதிப்பொற்கவசம் விழுந்து மறைவதை இறுதியாக நோக்கி புன்னகைசெய்தான்.
பகுதி நான்கு : ஆடி
[ 1 ]
பிரம்மனின் மைந்தராகிய மரீசிக்கு மைந்தராகப் பிறந்தவர் காஸ்யப பிரஜாபதி. அவர் தட்சனின் மகள்களாகிய அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரஸை, கசை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவசை, இரை, கத்ரு, முனி என்பவர்களை மணந்தார். ஒவ்வொருவரும் பெருவல்லமை கொண்ட மைந்தர்களைப்பெற்று புவியை நிறைத்தனர். தாம்ரை கனவுகாண்பவளாக இருந்தாள். கனவுகளுக்கு எடையில்லை என்பதனால் அவள் கருவுற்றபோதிலும் வயிறுபெருக்கவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவள் தன் கனவுக்குள் இனிதே சுருண்டிருந்தாள். விழித்துக்கொண்டபோது அவள் உடலில் இருந்து சிறகுகளுடன் ஆயிரம் பெண்குழவிகள் பிறந்தெழுந்தன. தன் உடலின் உள்ளே நிழலும் ஒளியுமென ஆடிய கனவுகளே அவை என அவள் கண்டாள். மகள்களுக்கு காகி, ஸ்யேனி, ஃபாஸி, கிருத்ரிகை, சூசி, க்ரீவை என நீளும் பெயர்களை இட்டாள். “கனவுகளெனப் பெருகுக! விண்நிறைத்து வாழ்க!” என்று வாழ்த்தினாள்.
அவர்கள் ஒவ்வொருவரிலிருந்தும் பறவைகள் பிறந்தன. கரியவளும் மூத்தவளுமாகிய காகி பிறரால் வெறுக்கப்பட்டாள். அவள் தனித்திருந்து தன் கனவுகளுக்குள் மட்டுமே வாழ்ந்தாள். அவள் கனவுகளும் கரிப்பிசிறுகள் போன்று நிழல்களாக இருந்தன. ஆயிரமாண்டுகாலம் அவள் அக்கனவுகளில் அலைந்தபின் விழித்துக்கொண்டு நீள்மூச்சுவிட்டபோது அவள் உடலில் இருந்து பிறந்தது கரிய சிறகுகளும் கரிய கூரலகும் கொடுங்குரலும் கொண்ட காகம்.
கரிய பறவையை விண்நிறைத்துப் பறந்த பிற பறவைகள் கசந்தன. “நீ பறவையே அல்ல, பிறவிகொள்ளாத பறவை ஒன்றின் நிழலுரு மட்டுமே” என்றாள் ஸ்யேனியின் மகளாகிய சிட்டுக்குருவி. “நீ இருளின் துளியென்று பகலில் வாழ்பவள். உன்னை வெய்யோன் வெறுப்பான்” என்றாள் ஃபாஸியின் மகளாகிய செஞ்சிறைக்கோழி. “உன் குரல் இனிதல்ல. எங்களுடன் நீ இணைந்தால் வண்ணங்கள் அணையும்” என்றாள் கிருத்ரிகையின் மகளான கொக்கு.
துயரம் கொண்ட காகம் தன்னந்தனிமையில் அலைந்தது. அன்னங்கள் நீரடியில் மின்னிய முத்துக்களை உண்டன. சிட்டுக்கள் தேனை உண்டன. கோழிகள் உதிர்ந்த கதிர்மணிகளை உண்டன. கொக்குகள் வெள்ளிச்சிறகுகொண்ட மீன்களை உண்டன. காகம் அவற்றால் தவிர்க்கப்பட்ட அனைத்தையும் உண்டது. அழுகியவையும் இழிந்தவையும் பொழிந்தவையும் அதன் இரையென்றாயின. அதன் குரல்கேட்டதுமே மானுடர் சீறியபடி கல் எடுத்து வீசினர். அதை எதிர்கண்டால் அன்றையநாளே இருள்கொண்டது என்று துயருற்றனர்.
காகம் பகலில் வெளிவருவதை தவிர்த்தது. இருட்டுக்குள் இருட்டாக அது சிறகடித்தது. அதை இன்னதென்றறியாத சிறகடிப்பாகவே இரவுலாவிகள் அறிந்தன. பின்னர் அது நூல்களிலிருந்து மறைந்தது. மொழியிலிருந்தும் அழிந்தது. அதை உருவாக்கிய அன்னைத்தெய்வம் மட்டுமே அவ்வண்ணமொரு பறவை வாழ்வதை இருளில் ஒரு தென்மூலை தனிவிண்மீன் என எழுந்து நோக்கிக்கொண்டிருந்தாள்.
அரக்கர்கோன் ராவணன் தேவர்களை வென்று இலங்கையை மையமாக்கி ஏழுலகையும் ஆண்ட காலத்தில் மருத்தன் என்னும் அரசன் ராவணனுக்கு நிகராக பெருவல்லமை கொண்டு எழ விழைந்தான். நிமித்திகர்களைக் கூட்டி நெறிகோரினான். அவர்கள் மகேஸ்வரசத்ரவேள்வி ஒன்றைச்செய்து குளிர்முடி அமர்ந்த சிவனை வரச்செய்து நற்சொல் பெற்று எழும்படி சொன்னார்கள். அவ்வாறே தன் நகரான மருத்தகிரியில் அவன் ஒரு பெரும் வேள்வியை தொடங்கினான்.
அரக்கர்கோனுக்கு அஞ்சி மறைந்துதிரிந்த வைதிகர் அனைவரும் அங்கே வந்து குழுமினர். அவர்களின் வேதச்சொல்லும் அவிப்புகையும் எழுந்து விண்முட்டின. அவிகொள்ள திசையாளும் எட்டுதேவர்களும் வந்தனர். விண்ணகரிலிருந்து இந்திரன் வந்து நடுவே அமர்ந்தான். பாதாளமூர்த்திகள் நிழல்களென வந்து சூழ்ந்து நடமிட்டனர். அவியுண்டு மகிழ்ந்த தேவர்கள் ஒவ்வொருவரும் மருத்தனுக்கு தென்பெருக்காக எழும் காற்றுக்கு நிகரான தோள்வல்லமையை அளித்தனர்.
இலங்கைநகரில் தன் அரியணையில் அமர்ந்திருந்த ராவணன் அவைநடுவே பிரஹஸ்பதி முனிவர் அளித்த ஒரு பொற்கலத்தை வைத்திருந்தான். அதில் மேலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க அதனூடாக ஓடிக்கொண்டிருந்தது அவன் காலம். அவனுக்கு நிகராக எவரேனும் மண்ணில் எழுந்தால் அக்கலம் நிறையும் என்று அவனுக்கு சொல்லளித்திருந்தார் பிரஹஸ்பதி. நெடுங்காலம் அதன் அடிவளைவுக்கு அப்பால் நீர் எழுந்ததில்லை. அன்று அக்கலத்தின் விளிம்பைத் தொட்டு நீர் கொப்பளிப்பதைக் கண்டு திகைத்தெழுந்து “என்ன நிகழ்கிறது?” என்று நிமித்திகர்களிடம் கேட்டான்.
“அரசே, வடக்கே மருத்தகிரி என்னும் ஊரில் மருத்தன் என்னும் அரசன் செய்யும் மகேஸ்வரசத்ரவேள்வியில் சிவன் எழவிருக்கிறார்” என்றார்கள் நிமித்திகர்கள். தன் தம்பியர் சூழ கதாயுதம் ஏந்தி தோள்தட்டி ஆர்ப்பரித்து ராவணன் விண்ணெழுந்தான். மருத்தகிரியின் வேள்விக்களத்தில் ஒரு கருமுகிலென வந்திறங்கினான். இடியோசையும் புயல்முழக்கமும் கேட்டு மருத்தன் எழுந்து ராவணனை எதிர்கொண்டான். அவர்கள் தோள் கோத்ததும் தேவர்கள் அஞ்சி அங்கிருந்து பறவைகளாக மாறி பறந்தகன்றனர். இந்திரன் ஒரு வெண்ணிற நாரையானான். சிறு செங்குருவியாக அனலோன் மறைந்தான். நீலப்பறவை என ஆனான் வருணன். சோமன் மஞ்சள்நிறப்பறவை ஆனான்.
தன் கருநிறத்துக்குரிய பறவை எது என திகைத்து அறிவிழி சுழற்றிய யமன் காகத்தை கண்டுகொண்டான். காகமென மாறி எழுந்து வானிருளில் மறைந்தான். யமபுரியை அடைந்ததும் காகத்தை அங்கே வரவழைத்தான். “நீ விழைவதென்ன?” என்றான். “என்னை மானுடர் வணங்கவேண்டும்” என்றது காகம். “மானுடருக்கு நீத்தோர் தேவர்களுக்கு நிகர். இனி மானுடவுலகுக்கு நீத்தோர் வருவது உன் வடிவிலேயே ஆகுக! அவர்கள் வருகையறிவிப்பது உன் குரலில். பலியுணவுகொள்வது உன் அலகால். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றான் யமன்.
நற்சொல் பெற்ற காகம் கரிய சிறகுகளை விரித்து வந்து ராவணனின் இலங்கைப்பெருநகரின் பொன்னொளிர் அரண்மனை முகப்பில் அமர்ந்தது. தன் மூதாதையரின் அழைப்பு அது என்று உணர்ந்த ராவணன் இரு கைகளையும் கூப்பியபடி வந்து வணங்கி நின்றான். எள்ளன்னத்தை நீருடன் படைத்தான். காகம் அலகால் அவ்வுணவைக் கொத்தியபின் எழுந்து சிறகடித்து அவனை வாழ்த்தியது.
[ 2 ]
அஸ்தினபுரியில் காகங்கள் வந்து நிறையத்தொடங்கின. முதலில் அவை பெருகுவதை நகரத்திலுள்ளவர்கள் உணரவில்லை. குழந்தைகள்தான் காகங்கள் பெருகுவதை முதலில் உணர்ந்தன. அவை அவற்றை மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவுப்பொருட்களை வீசி எறிந்து கைதட்டிக் கூவின. துள்ளிக்குதித்து துரத்தின. சிலநாட்களுக்குப்பின்னர் காகங்களின் பெருக்கெடுப்பை நிமித்திகர் கண்டடைந்தனர். “மூதாதையர் நகரை நிறைக்கிறார்கள். அவர்கள் அச்சம்கொண்டிருக்கிறார்கள்” என்றனர் முதுநிமித்திகர். “இந்நகரில் வாழ்ந்து மறைந்தவர்கள் மீண்டும் எழுகிறார்கள். நாம் அவர்களுக்கு அன்னமும் நீரும் குறைவைத்திருக்கக் கூடும்” என்றனர்.
அச்சம் வளரத்தொடங்கியது. இல்லறத்தார் நிமித்திகர்களின் சொல்லேற்று மீண்டும் கங்கைக்குச் சென்று நீத்தாருக்கு உணவும் நீரும் அளித்து நிறைகொடுத்தனர். ஆலயங்களில் அவர்களின் பெயரும் மீனும் சொல்லி நெய்விளக்கேற்றினர். அந்தியில் சுவடிகளைப்பிரித்து அவர்களின் பெயர்களை வாசித்து அவர்களின் வாழ்வையும் இறப்பையும் வழுத்தி வணங்கினர். ஆனால் மேலும் மேலும் காகங்கள் வந்துகொண்டே இருந்தன. “அவை நாம் அன்றாடம் காணும் காகங்கள் அல்ல. அவற்றின் கழுத்தில் சாம்பல்பூப்பு இல்லை. அலகுகள் தடித்துள்ளன. கண்களில் மணியொளி உள்ளது. அவை ஆழ்குரலில் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன” என்றார்கள்.
ஒவ்வொருநாள் காலையிலும் காகங்கள் பெருகியிருந்தன. இல்லங்களின் கூரைவிளிம்புகளில் அவை விடிந்தபின்னரும் அகலாத இருள் என அமர்ந்திருந்தன. மரக்கிளைகள் எடைகொண்டு தழைய, இலைகள் கருமைகொண்டனவா என்று விழிமயக்கூட்டி நிறைந்தன. கோட்டைச்சுவர்களில், மாடங்களில் கருமையை பூசின. நகரம் அவற்றின் கருமையால் இருள்கொண்டது. இருளை குளிரென விழியறியாது உணரவும் முடிந்தது. கனவுகளில் அவை இருண்ட சிறகசைவுகளும் மணிவிழியொளித்துளிகளுமாக பறந்தன. அவை எதையோ சொல்வதுபோலிருந்தது. சிலசமயம் வினவுவதுபோல. சிலசமயம் வியப்பதுபோல. ஆனால் அவற்றில் எப்போதும் மாறாத்துயரம் நிறைந்திருந்தது.
அவை மறைந்த மூதாதையர் என்பதில் எவருக்கும் ஐயமிருக்கவில்லை. குடிநிரை எழுதிய ஏடுகளை வாசிக்கும்தோறும் அவர்களின் நெஞ்சு அறியாத்துயர் கொண்டு ஈரமாகி எடைபெற்றது. சொல்லென எடுக்க முடியாத எண்ணம் ஒவ்வொரு விழிக்குப் பின்னாலுமிருந்தது. மூத்தோர் மன்றுசூழ்கையில் ஊடே புகுந்த முதிரா இளைஞன் ஒருவன் “நீத்தார் நிரையை நான் பன்னாட்களாக பார்க்கிறேன். அத்தனைபேரும் படுகளம் கண்டு மாய்ந்தவர். பாரதவர்ஷத்தின் அறியாநிலங்களில் அவர்கள் கல்நிற்கிறார்கள்” என்றான். புருவம் சுருக்கி “ஆம்” என்றார் அவைமூத்தவர். “அவைமூத்தாரே, அவர்கள் மாய்ந்தது எவருக்காக? அஸ்தினபுரியில் ஓங்கிப்பறக்கும் கொடி அவர்களின் குருதியால் ஆனதுதானா? நாம் பாடி வழுத்தும் அரசகுடியின் சிறப்பெல்லாம் அவர்களின் கைம்பெண்களின் விழிநீர்தானா?”
சிலகணங்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அமர்ந்திருந்தனர். ஒருவர் “சீ, எழுக சிறியோனே! மூத்தோர் அவையில் உனக்கென்ன பேச்சு? நீ சொன்ன சொற்களால் எவரை இழிவுபடுத்துகிறாய் அறிவாயா? இக்கொடியை இவ்வரசுப்புகழை காக்க களம்பட்ட பெருந்தகையோர் அனைவரையும் வீணிறப்பு கொண்டவர்கள் என்கிறாய்... வீணன் நீதான். சொல்லறியாத சிறுக்கன் நீதான்” என்று கூச்சலிட்டார். அவையினர் அனைவரும் “ஆம், வீண் சொல்! பழிச்சொல்!” என்றனர். “இழிசொல் சொன்னவனை அவை தண்டிக்கவேண்டும்” என்று ஒருவர் கூவினார். “இனி ஐந்தாண்டுகளுக்கு எந்த அவையிலும் நீ அமரலாகாது. இது குடிமன்றின் ஆணை!” என்றார் மூத்தார். “ஆம்! ஆம்! ஆம்!” என்றது கூடியிருந்த திரள். இளைஞன் சொல்லெடுக்க வாய் அசைத்து பின் தலைவணங்கி வெளியேறினான்.
அன்றிரவு இருளின் தனிமையில் தங்கள் இல்லம் நோக்கி நடக்கையில் குடிமூத்தவரிடம் பிறிதொரு இளையவர் “இளையோர் சொல்வதிலும் பொருளுண்டு மூத்தவரே. அவையில் சொல்லாவிட்டாலும் அனைவரும் உணர்வது இதுவே” என்றார். “என்ன?” என்றார் குடிமூத்தார். “நகரை போர்சூழ்கிறது. நம் மூதாதையர் அதை விழையவில்லை” என்றார் இளையவர். “அவர்களின் விழிகள் துயர்கொண்டிருக்கின்றன. நம் பலிகளை அவர்கள் கொள்ளவில்லை.” மூத்தார் நீள்மூச்செறிந்தார். “அங்கே விண்ணென விரிந்த வெறுமையில் நின்றபடி இவற்றின் பொருளின்மையை அவர்கள் உணர்கிறார்கள் போலும்” என்றார் இளையவர். “நாம் இதை எண்ண உரிமைப்பட்டவர் அல்ல. அரசரும் அவையும் அதை செய்யவேண்டும்” என்றார் மூத்தார்.
“அரசர் எங்கிருக்கிறார்? இந்திரப்பிரஸ்த நகர்கோள் விழவுக்குப்பின் அவர் ஒருமுறைகூட அரசவை அமர்ந்து கோல்கொள்ளவில்லை. தம்பியருக்கும் அவர் விழியளிப்பதில்லை என்கிறார்கள். முழுத்தனிமையில் குடியாட்டில் மூழ்கியிருக்கிறார். அவர் சொல்லெடுத்தே பலநாட்களாகின்றன என்கிறார்கள்” என்றார் இளையவர். “இரவும் பகலும் அவர் துயில்வதே இல்லை என்று அவைக்காவலன் ஒருவன் ஒருமுறை சொன்னான். நிலையழிந்தவராக அரண்மனை எங்கும் சுற்றிவருகிறார். எவர் விழிகளையும் நோக்குவதில்லை. விழியெதிர் நோக்குகையில் நெஞ்சு நடுங்குகிறதாம். அவை மானுடவிழிகள் அல்ல. அவருக்குள் அறியாத்தெய்வம் ஒன்று குடியேறிவிட்டிருக்கிறது என்கிறார்கள் அனைவருமே.”
மூத்தவர் சொல்லெடுக்காமல் நடக்க இளையவர் தொடர்ந்தார். “அவர் காட்சிக்கு பேரழகு கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அது மானுட அழகே அல்ல. தெய்வங்கள் ஏறியமர்ந்த தேர் அவர் உடல். அந்தத் தேவன் எவன்?” சற்றுநேரம் கழித்து மூத்தவர் “கார்த்தவீரிய விஜயம் நூலில் இது சொல்லப்பட்டுள்ளது” என்றார். இளையவர் உம் கொட்டினார். “ஒவ்வொருநாளும் கார்த்தவீரியன் ஒளிகொண்டபடியே சென்றான் என்கிறது அந்நூல். அவன் உடலொளியால் இருளிலும் நெடுந்தொலைவுக்கு அவனை காணமுடிந்தது. அவன் உடல்முன் நின்ற பொருட்களின் நிழல் நீண்டது என்கிறது.” அவர் மீண்டும் நீள்மூச்சுவிட்டு “குருதியாடும்தோறும் வாள் ஒளிகொள்கிறது என்பார்கள்” என்றார். “என்ன நிகழவிருக்கிறது மூத்தவரே?” என்றார் இளையவர். “அஸ்தினபுரியை ஆளும் தெய்வங்கள் அறியும்” என்று மூத்தவர் சொன்னார்.
“அங்கே இந்திரப்பிரஸ்தம் பெருவல்லமைகொண்டு எழுகிறது என்கிறார்கள். நாளும் அதன் கரையில் பெருங்கலங்கள் அணைகின்றன. அதன் கருவூலம் பெருத்தபடியே செல்கிறது. அங்குசெல்லும் வணிகர்களை அரசியே அவையழைத்து அமரச்செய்து பட்டும் வளையும் அளித்து அவைமதிப்பு செய்கிறாள். அங்கே சுங்கமில்லாமையால் கொள்மிகை வேறெங்கும் விட கூடுதல்” என்றான் அஸ்தினபுரிக்கு வந்த அயல்வணிகன். அவனைச்சூழ்ந்து அமர்ந்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.
“மகதத்தின் ராஜகிருஹத்திற்கு வணிகர்கள் செல்வது நாளும் குறைகிறது. ஆகவே ஜராசந்தர் கங்கையிலேயே காவல்நிலைகளை உருவாக்கி தன் எல்லையை கடந்துசெல்லும் அனைத்துப் படகுகளுக்கும் சுங்கம் கொள்கிறார். அதை இந்திரப்பிரஸ்தம் மிகக்கடுமையாக எதிர்க்கிறது. நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் தூதர்கள் சென்று ஜராசந்தரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் முறுக்கப்படும் வடம் முறியும் ஓசைகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது.”
“மகதர் என்ன சொல்கிறார்?” என்றார் ஒருவர். “இந்திரப்பிரஸ்தமும் மகதமளவுக்கே சுங்கம் கொள்ளவேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு சொற்சாத்து நிகழவேண்டும் என்றும் சொல்கிறார். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி அதை ஏற்கவில்லை. சென்றவாரம் அமைச்சர் சௌனகரே அரசியின் செய்தியுடன் சென்று ஜராசந்தரை பார்த்தார். அவரை ஜராசந்தர் ஒரு ஆற்றங்கரையில் சந்தித்தார். குலக்குறையும் உடற்குறையும் அளிக்கப்பட்ட நூற்றெட்டு அந்தணர்கள் அங்குதான் நீராடி எரிபுகுந்தனர். அந்த எரிகுழியை நிரப்பி மேலே ஓர் அழகிய பளிங்குமாளிகையை ஜராசந்தர் எழுப்பியிருக்கிறார். அந்த மாளிகையில் அந்தணர்களின் எரிபுகுதல் ஓவியங்களாக சுவரெங்கும் வரையப்பட்டுள்ளது. பேசிக்கொண்டிருக்கையிலேயே சௌனகர் மயங்கி விழுந்தாராம். நீர் அளித்து எழுப்பிய மகதர் அவரை நோக்கி சிரித்து அங்கே ஓடும் ஆற்றின் நீர் அந்தணர்களின் பசுங்குருதி என்று ஒரு சொல்பழி உள்ளது என்றும், அந்நீரை அருந்தியமையால் அவரும் பழிகொண்டவரே என்றும் சொன்னாராம். இவ்வாறு பல்வேறு கதைகள்...”
மூத்தவீரன் ஒருவன் “இந்திரப்பிரஸ்தமும் மகதமும் போர்கொள்ளுமென்றால் அஸ்தினபுரிக்கு நன்று அல்லவா?” என்றான். “அஸ்தினபுரி மகதருடன் இணையும் என்று சொல்கிறார்கள். மகதமன்னரும் நம் அரசரும் தோள்கோத்து இந்திரப்பிரஸ்தவிழவுக்குச் சென்றதை அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் வணிகன். அதை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். ஆயினும் அச்சொல் கேட்டு அவர்கள் நடுங்கினர். “இப்போது தெரிகிறது, மூதாதையரின் துயரம். உடன்வயிற்றரின் போர் எழவிருக்கிறது” என்றார் நூறகவை முதிர்ந்த வீரர் ஒருவர். “வந்தமர்ந்திருக்கும் கருநிழல் பறவைகளில் இருப்பார்கள் பாண்டுவும், விசித்திரவீரியரும், சித்ராங்கதரும், சந்தனுவும், பிரதீபரும், ஹஸ்தியும்...”
காகங்கள் பெருகப்பெருக நகரில் பிற பறவைகள் இல்லாமலாயின. ஆனிமாதத்தின் இளஞ்சாரலில் காகங்கள் நனைந்து நீர்வழியும் சிறகுகளைக் குவித்து தலையை உடலுக்குள் செருகி அமர்ந்திருந்தன. “பெருகிக்கொண்டே இருக்கின்றன. இவை எவற்றை உண்ணும்?” என்றனர் வேளிர். “அவற்றின் விழிகளில் இப்போது தெரிவது வஞ்சம். அவை நம் விழிகளை சந்திக்கின்றன” என்றனர். “என்னிடம் ஒரு காகம் பேசியது” என்றான் இரவுக்காவல் புரிந்த படைவீரன். “என்னிடம் அது உரைத்தது, வா என்று.”
அவனைச்சூழ்ந்து நின்றிருந்த வீரர்கள் அச்சொற்களைக் கேட்டு நகைக்கவில்லை. இளையவீரன் ஒருவன் “ஏன் என்றுதானே அது கேட்கும் என்பார்கள்?” என்றான். இன்னொரு வீரன் “என்னிடம் அது அகல்க என்றது” என்றான். அவர்கள் அமைதியடைந்தனர். இளையவீரன் “இன்றிரவு எனக்கு புறக்கோட்டைக்காவல். என்னிடம் அது எதைப்பேசும்?” என்றான். மறுநாள் காலை அவன் உடல் கோட்டைக்கு அப்பால் புதரில் இளமழையில் நனைந்துகிடந்தது. அவன் உதடுகளையும் விழிகளையும் ஆண்குறியையும் காகங்கள் அமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன.
காகங்களின் எச்சம் வழிந்த சுவர்களில் இருந்து ஒரு கரியபாசி உருவாகி எங்கும் படர்ந்தது. சிலநாட்களுக்குள்ளாகவே அனைத்துச் சுவர்களும் கருமைகொண்டன. கோட்டைசூழ்ந்த நகரம் கரிபடிந்த அடுப்பு போல ஆகியது. அதை அகற்ற முயன்றவர்கள் அது நஞ்சு என்று கண்டனர். அதை கையால் சுரண்டிவிட்டு வாயில் வைத்தவர்களுக்கு நோய் கண்டது. முதியோரும் இளையோரும் நஞ்சுகொண்டு இறக்கலாயினர். அதிலூறிவழிந்த நீரை அருந்திய குதிரைகளும் யானைகளும் இறந்தன. காடுகளுக்குள் விலங்குகள் செத்துக்கிடக்கின்றன என்றனர் வேடர். காகங்கள் இரவில் அவற்றைத்தான் உண்கின்றன என்றனர்.
காகங்களின் விழிகளை அஞ்சி மக்கள் பகலிலும் வெளியே செல்லாமலானார்கள். நோய் நிறைந்த ஆனிமழை அவர்களின் கூரைக்குமேல் இடைவிடாது பொழிந்துகொண்டிருந்தது. அது மீளமீள ஒற்றைச் சொல்லை சொல்லிக்கொண்டிருந்தது. கூரைததும்பிச் சொட்டிய துளிகளில் இலைகளின் சலசலப்பில் அந்த ஓசை இருந்துகொண்டே இருந்தது.
[ 3 ]
ஆடி எழுந்த முதல்நாள் வானத்தில் இணையரைக் கண்டதாக அஸ்தினபுரியின் இளைய நிமித்திகன் சோமன் சொன்னான். முதற்கதிர்வேளை. முதற்புள் குரல் கேட்டு எழுந்து அவன் கண்மூடியபடி கைகூப்பி நடந்து தன் தவக்குடிலில் இருந்து இறங்கி கங்கைநோக்கி சென்று நீரில் கண்விழித்து, நீர் அள்ள குனிந்துநோக்கியபோது அங்கே விரிந்த வானத்தின் அலைப்பரப்பில் ததும்பிய இருவரையும் கண்டான். கலைமான்மீது அவர்கள் உடலிணைந்து அமர்ந்திருந்தனர். ஆண் கரியவன். பெண் சிவந்தவள். இருவர் விழிகளும் இருதிசைகளை நோக்கிக்கொண்டிருந்தன. பெண்ணின் கையில் வில்லும் ஆணின் கையில் சங்கும் இருந்தன.
திகைத்து மேலே நோக்க அக்காட்சி முதல்கணம் மிக அருகே என தெளிவாகத் தெரிந்தது. பின்னர் முகில்களாக மாறி கலையத்தொடங்கியது. சிலகணங்களில் அது முகில்குவை ஒன்றை தன் உளமயக்கால் கண்டு அடைந்த விழித்தோற்றம் மட்டும்தான் என்ற எண்ணத்தை அடைந்தான். குளித்துக் கரையேறி மீண்டும் தன் குடில்நோக்கிச் செல்லும்போது கல் தடுக்கியதுபோல அந்தக் காட்சியை மீண்டும் சித்தத்தில் கண்டான். அதன் உட்பொருட்கள் துலங்கும்தோறும் பதற்றம் கொண்டு அரண்மனை நோக்கி ஓடலானான்.
அஸ்தினபுரியின் அரண்மனைக்கு தென்னிலத்திலிருந்து நிமித்திகர் சாரங்கர் வந்திருந்தார். தன் மாணவர்களுடன் அவர் அவைகூடியிருக்கையில் அங்கே வந்த சோமன் பதற்றத்துடன் வணங்கி தான் கண்டதைப்பற்றி சொன்னான். சாரங்கரின் மாணவர்கள் ஐயத்துடனும் இளிவரலுடனும் சோமனை நோக்க சாரங்கர் புருவம் சுளித்து அதைக்கேட்டபின் பிறிதொருமுறை அவன் கண்டதை சொல்லும்படி கோரினார். மும்முறை தெளிவுறக்கேட்டபின் திரும்பி தன் மாணவர்களிடம் “ஆனிமுடிந்து ஆடி எழும் நாள் இன்று. நண்டு வளைவிட்டு எழுவதற்கு முந்தைய கணம் இவர் விண்ணிணையரைக் கண்டது” என்றார். அவர்கள் அப்போதுதான் அதை உணர்ந்தனர். முகங்கள் மாறுபட்டன. “நான் உடனே அரசரைப் பார்க்கவேண்டும்” என்றார் சாரங்கர்.
இளவெயில் எழுந்தபின்னர் சாரங்கர் அரண்மனைக்குச் சென்றார். அவரை எதிர்கொண்ட விதுரர் அமைச்சவையில் அமரச்செய்து அவர் சொன்னதை கேட்டார். புன்னகையுடன் “இதில் என்ன உள்ளது நிமித்திகரே?” என்றார். “இணையர் தோன்றும் காலம் அது. உளம் கண்டதை விழிகாண்பது நிமித்திகருக்கு அவ்வப்போது நிகழ்வது அல்லவா?” சாரங்கர் சற்றுதயங்கி “அவர்கள் போர்க்கோலத்தில் இருக்கிறார்கள் அமைச்சரே” என்றார். “அது இயல்பான நிகழ்வு அல்ல. ஒருவர் போரொலி எழுப்பும் சங்குடன் பிறிதொருவர் குலைத்தவில்லுடன் இருக்கிறார்.” விதுரர் அப்போதுதான் அதை முற்றிலும் புரிந்துகொண்டு “ஆம்” என்றார்.
சிலகணங்கள் இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். விதுரர் “போர் தொடங்கவிருக்கிறதா?” என்றார். சாரங்கர் “ஆம், எங்கென்றும் ஏதென்றும் என்னால் சொல்லமுடியாது. ஆனால் போர் எழுகிறது” என்றார். விதுரர் “நன்று சாரங்கரே, நான் இதை அரசரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “நிமித்திகநூலின்படி இரு மூன்றாமிடங்கள். சிம்மம் முன்னகர்கையில். எருது பின்னகர்கையில். இரு வாய்ப்புகள்” என்றார் சாரங்கர். “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “உண்மையில் இரு வாய்ப்புகளுக்குமே இடமிருக்கிறது.” சாரங்கர் “ஒற்றர்செய்திகள் ஒத்துப்போகின்றனபோலும்” என்றார். “ஆம்” என்று சுருக்கமாகச் சொன்ன விதுரர் “நன்று நிமித்திகரே” என்று கைகூப்பினார்.
நிமித்திகர் சென்றபின் விதுரர் கைகளை ஊன்றி அதில் முகவாயை வைத்து விழிசரித்து அமர்ந்திருந்தார். கனகர் வந்து அருகே நின்றதை அவர் உணரவில்லை. கனகர் செருமியபோது அரைநோக்கை அவருக்களித்தார். பின்பு பெருமூச்சுடன் கலைந்து “அரண்மனையில் என்ன நிகழ்கிறது?” என்றார். “அரசர் இன்னமும் துயில்விழிக்கவில்லை” என்றார் கனகர். “அங்கர் இருந்தவரை மஞ்சத்தறைக்கே சென்று அவரை அழைக்க ஒருவர் இருந்தார் என்றாவது இருந்தது. இப்போது அவரிடம் எவருமே உரைகொள்ள முடியவில்லை…” விதுரர் தலையசைத்தார். “அவர் அங்கிருப்பதாகவே உணரமுடியவில்லை அரசே” என்றார் கனகர்.
விதுரர் நீள்மூச்சுடன் எழுந்து “கணிகர் எங்குள்ளார்?” என்றார். கனகர் “அவர் வழக்கம்போல...” என்றபின் கூர்ந்து நோக்கினார். “இன்றோ நாளையோ மகதத்திலிருந்து நமக்கு செய்திவரும் கனகரே” என்றார். “இந்திரப்பிரஸ்தம் படைகொண்டு எழுந்துவிட்டதென்பதே அக்காட்சியின் பொருள். தவநிலை கலையாது நீரிலிறங்கியமையால் அந்நிமித்திகன் அதை கண்டிருக்கிறான்.” விதுரர் இடைநாழியில் நடக்க கனகர் எடையுடல் ததும்ப மூச்சிளைத்தபடி உடன் சென்றார். “இந்திரப்பிரஸ்தம் வணிகம் செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது. போர் என்பது வணிகத்தின் அழிவு. அதை இத்தருணத்தில் அரசுமுறை அறிந்தோர் விழையமாட்டார்கள்” என்றார் கனகர்.
“இது இந்திரப்பிரஸ்தத்தின் போர் அல்ல, இளைய யாதவரின் போர். மகதம் நெடுங்காலமாகவே படையாழியின் நிழலில்தான் நின்றுகொண்டிருக்கிறது” என்றார் விதுரர். கனகர் புரிந்துகொண்டு “ஆம்” என்றார். பின்பு “அதை ஜராசந்தர் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை. மகதத்தின் தென்மேற்குபுலக்காவலை நிஷாதகுலத்து ஹிரண்யதனுசின் மைந்தன் ஏகலவ்யனிடமே அளித்திருக்கிறார்” என்றார். விதுரர் “அறியாமல் அல்ல. அது அவரது அறைகூவல்” என்றார். “ஏகலவ்யன் இருக்கும்வரை யாதவர் இறுதிவெற்றியை அடையவில்லை என்றே பொருள்.”
கனகர் “ஆம், ஒவ்வொரு யாதவரும் அதை உணர்ந்திருக்கிறார்” என்றார். “இந்திரப்பிரஸ்தத்தின் இணையர் படைகொண்டு எழுந்துவிட்டனர் என்றால் ஜராசந்தர் அழிந்தார் என்றே கொள்ளலாம்” என்றார். “ஆனால்...” என்று கனகர் சொல்லத்தொடங்க “மூடா, இப்புவியில் அவர்கள் இணைந்தால் எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட எவரேனும் உள்ளனரா?” என்றார். கனகர் நீள்மூச்சுடன் “ஆம்” என்றார். “ஜராசந்தர் நம்மை இயல்பான படைக்கூட்டாக எண்ணுகிறார். நம் அரசர் அளித்த சொல்லென்ன என்று நாம் அறியோம். அங்கரும் சொல்லளித்திருக்கக் கூடும். நல்லவேளையாக அவர் இங்கில்லை. நாம் ஒருநிலையிலும் மகதத்தை துணைக்கலாகாது.”
“அம்முடிவை அரசர் அல்லவா எடுக்கவேண்டும்?” என்றார் கனகர். “ஆம், அதற்கு முன் அவை எடுக்கட்டும்” என்றார் விதுரர். “அரசரின் இளையோர் என்ன எண்ணுகிறார்கள் என்று அறியோம்” என்று கனகர் சொன்னார். “அதை நான் அறிவேன். அவர்கள் மகதத்தின் தூதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாம் மகதத்துடன் சென்றாலும் ஜராசந்தர் வெல்லமுடியாது. வென்றாலும் தோற்றாலும் உடன்வயிற்றர் களமெதிர் நிற்பர். அதை நான் ஒப்பமுடியாது.”
கனகர் “நாம் பேரரசரிடம் அதை பேசுவோம்” என்றார். “ஆம், அதை காந்தாரர் சொல்லவேண்டும்” என்றார் விதுரர். சால்வையை சீரமைத்தபடி நடக்கையில் “நெறியற்ற அசுரன். அவன் பழிகளில் அஸ்தினபுரிக்கு பங்கிருக்கலாகாது. அவன் வீழ்வதே இம்மண்ணுக்கும் உகந்தது” என்றார்.
[ 4 ]
அஸ்தினபுர நகரமே நோயில் கருமைகொண்டிருந்தது. கண்களில் பீளை திரண்டிருந்த கன்றுகள் தலைதாழ்த்தி உலர்ந்த மூக்குடன் நின்றன. அன்னைப்பசுக்களின் நீலநாக்கு நீரின்றி வெளியே தொங்கியது. புரவிகள் அடிக்கொருமுறை நின்று உடல்சிலிர்த்து பெருமூச்சுவிட்டன. நிலையழிந்த யானைகள் ஓயாது துதிக்கை சுழற்றின. குழந்தைகள் பெருத்த வயிறும் உலர்ந்த கன்னங்களும் வெளுத்த விழிகளுமாக இல்லங்களின் திண்ணைகளில் அமர்ந்து நீர் சொட்டும் கூரைக்கு அப்பால் தெரிந்த தெருவில் வண்ணக்கரைசல்கள் என அசைந்த மரங்களையும் மானுடரையும் நோக்கிக்கொண்டிருந்தனர்.
நீலப்பாசியில் ஊறிவழிந்த மழைநீரையோ மழை தேங்கிய சுனைநீரையோ அருந்தலாகாது என்று அரசாணை ஈரத்தோல் அதிரும் முழவொலியுடன் நகரில் கேட்டுக்கொண்டே இருந்தது. பெரிய செம்புக்கலங்களை மழையில் திறந்துவைத்து அதில் நேராக விண்ணிழிந்து விழுந்த நீரை அள்ளி கொதிக்கச்செய்து அருந்தினர். காய்களையும் கனிகளையும் அந்நீரைக்கொண்டு ஏழுமுறை கழுவினர். குழவியர் கைகளை வாயில் வைக்கக்கூடாது என்பதனால் அவற்றின் விரல்களை துணிகொண்டு சுற்றி வைத்திருந்தனர். அவை அந்தத் துணிப்பொதிகளை மார்போடணைத்து இனிய சுவையுள்ள தங்கள் விரல்களை கனவுகண்டன.
மழைமூடிய அஸ்தினபுர நகரிலிருந்து மட்கும் வாசனை எழுந்தபடியே இருந்தது. அது ஓர் அழுகியபுண் எனத் தோன்றியது. எருக்குழியின் வெம்மைநிறைந்த ஆவி நள்ளிரவில் எழுந்து காற்றில்கலந்து வந்தது. இருளுக்குள் கூந்தல் பறக்க விழியொளிரச் செல்லும் மிருத்யூதேவியைக் கண்டதாக சூதர் கதைசொன்னார்கள். அவளுக்கு வலப்பக்கம் வெளுத்த புகைபோல வெண்குழலும் பச்சைநிற ஒளிகொண்ட கண்களும் கொண்ட வியாதிதேவி சென்றாள். இடப்பக்கம் ஏழாகப்பகுத்த குழலுடன் விஸ்மிருதிதேவி சென்றாள். இருளில் அவர்களின் காலடிகள் நீர்த்துளி உதிர்வதுபோல கேட்டன.
எழுந்து நோக்கலாகாது என்று மீளமீள எச்சரித்திருந்தபோதிலும்கூட ஆவல் தாளாது பலர் சாளர இடுக்குகள் வழியாக நோக்கினர். மிருத்யூதேவியைக் கண்டவர்கள் அப்போதே உயிர்துறந்து சாளரக்கம்பிகளைப் பற்றியபடி அமர்ந்தனர். அவர்களின் முகங்களில் தசைகள் வலிப்புகொண்டு வாய் இழுபட்டமையால் உவகைமிக்க நகைப்பு ஒன்று சிலைத்திருந்தது.
வியாதிதேவியைக் கண்டவர்கள் காலையில் நோயுற்று நடுநடுங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் அழுகல்வாடை எழுந்தது. சொற்களில் வலி நிறைந்திருந்தது. தளர்ந்து சுருண்டு படுத்து அவர்கள் கனவுகளில் மூழ்கினர். அக்கனவுகளில் அவர்களின் வாய்க்குள் கரிய சிறுபூச்சிகள் நுழைந்தன. அவை உடல்பையை நிறைத்து விம்மி பெருகி அனைத்துத் துளைகள் வழியாகவும் வெளியேறின. அவை உள்ளே உள்ளே எனச்சென்று அங்கே சிறிய செஞ்சிமிழில் வாழ்ந்த பொன்னிறச்சிறகுள்ள சிறிய பூச்சியை கண்டுகொண்டன. அச்சிமிழை உடைத்து அதை வெளியே எடுத்தன.
பொற்சிறைப்பூச்சி ரீங்கரித்தபடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. அதன் உடல் கனலாகியது. ஒளிப்புள்ளியாகியது. எரிந்தபடி எழுந்து அது அவர்களின் உடலுக்குள் வெளியேறும் வழிதேடித் தவித்தது. அருகே திறந்த வாயிலினூடாக அது வெளியே சென்றபோது உடன் நின்று பதைத்த அவர்களின் சித்தமும் அதைத் தொடர்ந்தது. விண்ணிலெழுந்ததும் பல்லாயிரம் பொற்சிறைப்பூச்சிகள் விண்மீன்பெருக்கென பறந்தலையும் ஒரு பெருவெளியை அவர்கள் கண்டனர்.
விஸ்மிருதிதேவியைக் கண்டவர்கள் காலையில் அனைத்துநினைவுகளும் அழிக்கப்பட்டவர்களாக எஞ்சினர். உற்றாரையும் உறைவிடத்தையும் அவர்கள் நினைவில்கொள்ளவில்லை. உண்பதையும் உடுப்பதையும் அறியவில்லை. அவர்களை சிலநாள் பிறர் ஊட்டி உடுப்பித்து படுக்கச்செய்தனர். பின்னர் ஆர்வமிழந்து அவர்களை அவ்வாறே விட்டுவிட்டனர். சிலர் அவர்களை அருகே இருக்கும் ஆலயமுகப்புகளில் கொண்டு அமரச்செய்தனர். உயிரிலா விழிகளுடன் அவர்கள் அங்கே அமர்ந்திருந்தனர். மெலிந்து சிறுத்து அமர்ந்தபடியே உயிர்துறந்தனர். அவர்களும் காகங்களாகி நனைந்த கரிய சிறகுகளுடன் கழுத்து புதைத்து சில்லைகளில் அமர்ந்திருந்தனர். மணிக்கண்களால் மானுடரை நோக்கி எப்போதாவது “ஏன்?” என்றனர்.
ஒவ்வொரு துளி உணவையும் நீரையும் கணித்து நுகர்ந்தபின்னரும் விதுரர் நோயுற்றிருந்தார். மூச்சிளைப்பும் துயிலின்மையும் அவரை வருத்தின. இருண்ட கனவுகளில் அவர் மீண்டும் மீண்டும் சத்யவதியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் ஒரு மரம்போல மழைபொழியும் காட்டில் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அவளருகே இரு தனிமரங்களாக அம்பிகையும் அம்பாலிகையும் நின்றனர். “அன்னையே, தாங்கள் நிறைவுறவில்லையா?” என்று அவர் கேட்டார். அவரது குரல் மழைத்திரைக்கு இப்பால் ஒலித்தது. நெடுந்தொலைவிலென அவர்கள் நீர் உதிர்த்து நின்றிருந்தனர். மழையோசைக்குள் சிறகுகளின் ஓசை. தன் நச்சுமூச்சை தானே அறைக்குள் உணர்ந்தபடி விழித்தெழுந்து வியர்த்துப்பூத்து மூச்சுவாங்க மஞ்சத்தில் படுத்திருப்பார்.
காந்தாரமைந்தர் சகுனியும் நோயுற்றிருந்தார். அவரது காலின் புண் வீங்கி சிவந்து மேலும் விரிந்தது. அதை அசைப்பதே உயிர்வலியளித்தது. ஆனால் அதைப்பற்றிய எண்ணமே அதனுள் அசைவாக ஆகி சாட்டையென வலியை சொடுக்கியது. மூச்சுக்கள் வலியாக அறைந்தன. காலையில் எழுந்து மெல்ல காலை அசைத்து சென்றமர்ந்து பகடைக்களத்தை விரித்து காய்களைப் பரப்பி அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். காய்கள் அவர் கைபடக் காத்திருந்தன.
அவை அவருடன் உரையாடின. ‘இதோ, இதுதான் நீ செய்யவேண்டியது’ என்றது அரசன். ‘ஏனென்றால் நீ செய்யவேண்டியதை முன்னரே வகுத்துவிட்டிருக்கிறது இக்களம்.’ அவர் அதை நோக்கி பழுத்த விழிகளை நாட்டியிருந்தார். ‘களமென ஒன்றைத் தேர்ந்தபோதே நீ அதன் நெறிகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டாய். ஆடுவதற்குரிய வழிகளும் எல்லைகொண்டுவிட்டன. செல்நெறி சிலவே. உன் உளம்செல்லும் நெறி அதனுடன் இயையவேண்டும். அது ஒன்றே.’ அரசி சிரித்தபடி அருகணைந்து ‘நீருக்கும் நெருப்புக்கும் நெறிகள் அவற்றின் இருப்பிலேயே அமைந்துள்ளன’ என்றாள்.
ஆனால் கணிகர் ஒவ்வொருநாளும் நோய்நீங்கி நலம்பெற்றார். அவருடைய வலி முழுதும் மறைந்தது. இரவில் தன்னை முற்றிலும் மறந்து துயின்று நீர்த்துளிகள் கதிரொளிகொண்ட பின்காலையில் விழித்தெழுந்தார். நினைவுக்கு அப்பாலிருந்த இளமையில்தான் துன்பம் தராத காலையொளியை அவர் கண்டிருந்தார். மூச்சை இழுத்துவிட்டபோது இனிய குளிர்காற்று சென்று உள்ளறைகள் அனைத்தையும் நிரப்பி மீள்வதை உணர்ந்தார். தசைகளில் புதுக்குருதி ஓடியது. எண்ணங்கள் ஒவ்வொன்றும் தளிர்போலிருந்தன. முதல்முறையாக அவர் முகத்தில் அவரறியாமலேயே புன்னகை தங்கியிருந்தது. ஆடியில் தன் முகத்தை நோக்கி அவர் திகைத்தார். பின் முகத்தசைகளை மெல்ல வருடியபடி ஆம் என தலையசைத்தார்.
தன் உடல்நலம் அந்தக் கரும்பாசியால் வந்தது என அவர் கண்டடைந்தார். கையூன்றி நடந்து மீண்டபோது ஒருமுறை தும்மலில் அறியாது கையை வாயில் வைத்தார். அதன் மெல்லிய சுவை எதையோ நினைவுறுத்தியது. பச்சை ஊனின் உப்புச்சுவை அது. அல்லது பிறிதொன்று. அன்றிரவு அச்சுவையை எண்ணிக்கொண்டிருந்தபோது தன் உடலின் வலிகள் அகன்றிருப்பதை கண்டார். அது உளமயக்கா என்று எண்ணி கண்மூடி காத்திருந்தார். பின்னர் உடலை அசைத்துப்பார்த்தார். மெல்ல துணிவுகொண்டு உடைந்த இடையை ஒசித்து வலியிருக்கிறதா என்று நோக்கினார். உடல் இனிதாக வளைந்தது.
உவகையுடன் “தெய்வங்களே! மூதாதையரே” என்று அவர் கூவினார். நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் ஏங்கினார். பின்பு உடலை பலவாறாக அசைத்து வலியில்லை என்பதை நிறுவிக்கொண்டார். அன்றிரவு தன்னை முற்றிலும் இழந்து முழுமையான துயிலில் ஆழ்ந்தார். துயில்கொண்டதுமே அவரது இருண்ட ஆழத்திலிருந்து எழுந்துவரும் நிழல்கள் அடங்கியிருந்தன. அடியிலியின் கூச்சல்களும் உடல்கூசச்செய்யும் கெடுமணங்களும் இல்லாதிருந்தன. எங்கோ எவரோ சொல்லும் ஒற்றைச் சொல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மழைத்துளி போல ஓயாது உதிர்ந்துகொண்டே இருந்தது அச்சொல்.
மறுநாள் காலையில் அவர் எழுந்ததும் முதலில் தோன்றிய உணர்வு கால்களில் வலியிருக்கிறதா என்பதுதான். கால்களை அசைத்தும் இடையை ஒசித்தும் நோக்கினார். வலியின்மை என்பது தன் உளமயக்கல்ல என்று உறுதியானதும் கைகளை ஊன்றி எழுந்தார். மஞ்சத்தைப்பற்றியபடி நிலத்தில் ஊன்றி இறங்கினார். அவரது தளர்ந்து குழைந்த கால்கள் மழைச்சாரலின் ஈரம்படிந்து புல்லரித்திருந்த மரத்தரையில் தடம்பதித்தபடி இழுபட்டன. கைகளை ஊன்றியபடி மெல்ல நடந்தார். தன் கைகளில் அத்தனை ஆற்றலிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். முழு உடலையும் தூக்கியபடி பிறர் நடக்கும் விரைவில் கைகளால் சென்றார்.
அவரை இடைநாழியில் கண்ட ஏவலன் திகைத்து பின்னகர்ந்தான். பற்களைக் காட்டி மெல்ல நகைத்து “நீராட்டறை அமைந்துவிட்டதா?” என்றார். அவன் “ஆம், அமைச்சரே” என்றான். “நன்று” என்றபடி அவர் கடந்துசென்றார். அன்று அவரே வெந்நீரில் இறங்கி நீராடினார். ஆடைகளை அணிந்துகொண்டார். உணவுண்டுவிட்டு நடந்து சகுனியின் பகடையறைக்குச் சென்றார்.
அவரைக் கண்டதும் திகைத்து வாய்திறந்த சகுனி இமைகளை மட்டும் இருமுறை அசைத்தார். முகம் சுளித்து இழுபட்டது. “என் தெய்வங்கள் உடல்கூடின” என்றார் கணிகர். “நலம்பெற்றுள்ளேன்.” சகுனி அவரை நோக்கியபின் நீள்மூச்சுவிட்டு “நன்று. களம் நிரத்தவா?” என்றார். “இல்லை, இனி சிலநாள் இக்களமாடுதலில் எனக்கு ஆர்வமில்லை. நான் வெளியே சென்று இந்நகரை நோக்கவிழைகிறேன்” என்றார் கணிகர்.
அவர் நலம்பெற்ற செய்தியை நகர் அன்றே அறிந்தது. அனைவரும் அதில் அச்சமூட்டும் ஒன்றைத்தான் கண்டனர். படிகளில் அவர் கையூன்றி ஏறுவதை, புரவிச்சேணத்தில் தொற்றி அமர்வதைக் கண்டு வியந்து விழிபரிமாறினர். அவைக்காவலன் ஒருவன் அவரை நண்டு என்று அழைத்தான். அச்சொல்லைக் கேட்டதுமே அனைவரும் அதை முன்னரே எண்ணியிருப்பதை உணர்ந்தனர்.
நண்டு என்ற சொல் ஒரே நாளில் நகரில் புழங்கத் தொடங்கியது. மறுநாளே அச்சொல்லை கணிகரும் அடைந்தார். ஆனால் அது அவருக்கு உவகையையே அளித்தது. இரு பெருங்கைகளையும் தூக்கி விரித்து நோக்கியபடி அவர் புன்னகை செய்தார். கைகளை பலவாறாக அசைத்தும் விரல்களை விரித்தும் குவித்தும் நோக்கினார்.
கைகளும் காலாகும் நண்டு. அதன் கால்களுக்கு திசை என்பது இல்லை. முன்னோக்கி மட்டுமே செல்லமுடியும் என்பது மானுடனுக்கு இறையாற்றல்கள் அவன் உடலில் பொறித்து அளித்த ஆணை. கால்களிலிருந்தே விழிகள் திசைகொள்கின்றன. உடல் முன் பின் என்றாகிறது. சித்தம் காலத்தையும் தொலைவையும் பகுத்துக்கொள்கிறது. அதன்பின் ஓயாத ஊசலாக உள்ளம். நண்டு தன்னை மையமெனக்கொண்டு புடவியை ஒரு சுருளென தன் மேல் சுற்றிக்கொண்டிருக்கிறது.
கணிகர் வாய்க்குள் நண்டு நண்டு என சொல்லிக்கொண்டார். நண்டென தன்னை எண்ணி இரு பெருங்கைகளையும் தூக்கி அசைத்தார். அருவாக அங்கிருந்த எதிரி ஒருவன் அக்கைகளில் சிக்க அவனை அழுத்தி நெரித்தார். அவன் அவர் பிடிக்குள் துடித்து மெல்ல உயிரடங்கினான். அவர் உடல் விதிர்த்தது. இனியவெம்மை ஒன்று அவருள் நிறைந்து கண்களை கசியச்செய்தது. இமைகள் சரிய, இதழ்களில் மென்னகை படர அவர் நீள்மூச்சுக்கள் விட்டார். உடல் மெல்லத்தளர இளந்துயிலில் ஆழ்ந்தார்.
அங்கே அவர் குருதிபரவிய களத்தில் கைகளால் நடந்துகொண்டிருந்தார். வழுக்கிய சிதைந்த தசைகளையும் உறுத்திய உடைந்த எலும்புகளையும் விரல்களால் பற்றியும் ஊன்றியும் கடந்தார். அவர் எதைத் தேடுகிறார் என்பதை கனவுக்குள் அறிந்திருந்தார். கனவுக்கு வெளியே அறியாது வியந்தார். கையூன்றி உந்திச் செல்கையில் குருதி நிறைந்த குளத்தில் நீராடுவதுபோன்ற உணர்வை அடைந்தார்.
அவர் எண்ணியதை தொலைவிலேயே கண்டுகொண்டார். இரு கால்கள் குருதிவழிய நீண்டிருந்தன. ஒருகால் புண்ணுடன் சற்று மடிந்திருந்தது. அவ்வுடல்மேல் மேலும் சடலங்கள் விழுந்து குருதி வழிந்து உறைந்திருந்தன. அவற்றுக்கு அடியிலிருந்து வில்லுடன் வலக்கை நீண்டிருந்தது. மறுகை நெஞ்சைத் துளைத்து நின்றிருந்த அம்பைப் பற்றியிருந்தது.
அவர் அருகே நெருங்கி அதன்மேல் கிடந்த சடலங்களை புரட்டினார். அறுபட்ட தலை அப்பால் உருண்டு கிடந்தது. பீதர்நாட்டு வெண்ணிறக் கலம்போன்ற முகம். புடைத்த பெரிய மூக்கு. இமைகள் திறந்திருக்க பச்சைக்கூழாங்கற்கள்போல விழிகள் தெரிந்தன.
அருகே நின்றவனின் குருதிபடிந்த கால்களை அப்போதுதான் அவர் கண்டார். நிமிர்ந்து அவனை நோக்கி புன்னகைசெய்தார். அவன் கசப்புடன் கையில் வில்லும் அம்பும் ஏந்தி நின்றிருந்தான். வெண்ணிறமானவன். தலைப்பாகை விழுந்திருக்க தோளில் சுருள்குழல்கள் சரிந்திருந்தன. அவனிடம் அவர் “என்ன மீன்?” என்றார். அவன் சொல்ல விழையாதவன் போல ஒருகணம் தயங்கி பின் “கடகம்” என்றான். “அப்படியென்றால் தோள் அல்லவா?” என்றார். “ஆம், தோள்வழியாகவே” என்றான் அவன்.
அவர் ஐயத்துடன் குனிந்து அந்த வலக்கையை பற்றி இழுத்தார். அது முன்னரே துண்டாகி குருதிஉறைந்த நிணக்கூழுடன் இழுபட்டு வந்தது. “நன்று” என்று அவர் சொன்னார். அவன் அவரை நோக்கி நின்றபின் திரும்பி நடந்தான். தொலைவில் விண்மூட எரியெழுந்துகொண்டிருந்தது. போர்முரசு பொழுதடைவதைச் சுட்டி முழங்கியது. எரிபுகைக்கு அப்பால் அணைகதிர் கனன்றது.
அவர் விழித்துக்கொண்டபோது உடலெங்கும் இருந்த இனிய உவகையை உணர்ந்தார். இதழ்கள் புன்னகைத்தன. அவர் அருகே வந்தணைந்து வணங்கிய ஏவலன் அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் அவரையும் காந்தாரரையும் காணும்பொருட்டு வந்திருப்பதாக அறிவித்தான். அவர் “நன்று” என்றபடி தன் கைகளை ஊன்றி கால்களை மேலே தூக்கி இறங்கினார்.
[ 5 ]
நான்கு கருக்களுடன் விதுரர் வந்திருந்தார். நாற்களம் விரிக்கப்பட்டதுமே முகமன்களில்லாது கருக்களைப் பரப்பி முதற்கருவை நீக்கி முன்னால் வைத்தார். “காந்தாரரே, இன்று அஸ்தினபுரியின் அரசர் நோயுற்றிருக்கிறார். அவர் வாழும் உலகத்திற்குள் நம் சொற்கள் செல்வதில்லை. அவர் பொருட்டு நாமே முடிவெடுக்கவேண்டியிருக்கிறது. அவர் தன் முழுச்சொல்லை அளிக்காமல் அஸ்தினபுரியை பெரும்போர் ஒன்றில் ஆழ்த்துவதற்கு நமக்கு உரிமையில்லை.”
புன்னகையுடன் அதை கணிகர் எதிர்கொண்டார். “ஆம், ஆனால் ஒருவேளை அவருடைய அகம் விழைவதும் இப்போராக இருக்கலாம். இப்போர் மூலம் அவர் மீண்டு எழக்கூடும்.” சகுனி திரும்பி நோக்கினார். கணிகர் “அவர் உள்ளத்தில் நிறைந்துள்ள வஞ்சமே அவரது நோய். ஒருபோரில் அது குருதியும் சலமுமென பெருகி வெளியே வழிந்தால் அவர் விடுதலைகொள்வார். அது அவரது குருதியாகக்கூட இருக்கலாம். அதுவும் நன்றே” என்றார்.
நுணுக்கமாகச் சொல்லாய்ந்து சுவடு வைத்து பின்னெட்டு வைத்து விதுரர் மீண்டும் வந்து அடுத்த கருவை நீக்கி முன்னால் வைத்தார். “அஸ்தினபுரியின் படைகள் இன்று ஒரு போருக்குச் சித்தமானவையாக இல்லை. நோய் அவர்களை சீர்குலைத்துள்ளது.” புன்னகையுடன் அதை கணிகர் தன் கருவால் வெட்டினார். “ஆம், ஆனால் அவர்கள் மீண்டெழுவதற்கும் போரே வழிவகுக்கலாம். விதுரரே, நோயில் இறப்பவர் என்றும் முதியவர்களே. நம் படைகள் புலி குட்டிபோட்ட காடுபோல் இளமையோடிருக்கின்றன.”
விதுரரின் சொல்லின்மையை கணிகர் சிரித்தபடி கடந்தார். “மேலும் இன்று அவர்களைக் கவ்வியிருக்கும் சோர்வே பெருநோய். சலிப்பும் அச்சமுமே நோய்க்கான வாசல்களாக அமைகின்றன. அவர்கள் இளையோர். அவர்கள் காணும் முதற்போர் இது. போர்முரசு கொட்டுகையில் அவர்களின் குருதி குமிழியிட்டெழக்கூடும். இந்நகரில் நிறைந்திருக்கும் இருள்நிறைந்த அமைதி விலகி இதன் சுவர்கள் உயிரதிர்வு கொள்ளக்கூடும். ஒருவேளை இப்போரே அதற்கென அமைந்ததாக இருக்கலாம்.”
மூன்றாவது கருவுடன் விதுரர் நெடுநேரம் தயங்கினார். வெற்று அணிச்சொற்கள் இருபக்கமிருந்தும் எழுந்து மறைந்துகொண்டிருந்தன. வலியால் சுளித்த உதடுகளுடன் சகுனி அதை கேட்டுக்கொண்டிருந்தார். விதுரர் பலாமுள்ளில் படர்ந்த முடியிழை என அச்சொற்களினூடாக ஓடிக்கொண்டிருந்த தன் எண்ணத்தை மீட்டுத் தொகுத்தார். நீள்மூச்சுடன் “நமது படைகளை நடத்துவது யார்? இதோ காந்தாரர் நோயுற்றிருக்கிறார். அங்கே அரசரும் கருமை கொண்டிருக்கிறார்” என்றார்.
“இருள் நிறைந்துள்ளது இந்நகரம் என்பது உண்மை” என கணிகர் அச்சொற்களை குறுக்காகக் கடந்தார். “காரிருளை வெல்வது கதிரவனால் மட்டுமே கூடுவதென்பதை அறியாதவர் எவர்?” சகுனி “ஆம்” என்றார். “விதுரரே, படையையும் படைத்தலைமையையும் விடுங்கள். அங்கனுக்கு செய்தியனுப்புவோம். அவன் வில்லேந்தி முன்நின்றாலே போதும். எதிரே நிற்க இன்று பாரதவர்ஷத்தில் எவருமில்லை.”
கணிகர் “விஜயனுக்கு அங்கனும் பீமனுக்கு மகதனும் நிகர்” என்றார். பின்பு உரையாடல் முடிந்துவிட்டது என்பதுபோல தன் கைகளைத் தூக்கி ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டார். விதுரரின் உளப்பதைப்பு உடலில் தெரிந்தது. நான்காவது கருவை கையில் வைத்தபடி அவர் தயங்கிக்கொண்டிருந்தார். பின்பு மெல்ல அதை முன் நீட்டினார். “இது வெல்லாப்போர்.” சகுனி திரும்பியதும் “இது பாண்டவர்களின் போரல்ல. ஆழியேந்தியவனின் வஞ்சினம்” என்றார். “அவன் இத்தருணத்தில் இப்படியொரு போரை நிகழ்த்துகிறான் என்றால் நான்கையும் கணித்திருப்பான். வெல்லாத போரைத் தொடங்குவதில்லை அவனைப் போன்றவர்கள்.”
“உண்மை, ஆனால் அதுவே நம் நல்வாய்ப்பு. இப்போரில் வென்றால் பாண்டவர்களை கடப்போம். அன்றெனினும் நாம் இழப்பதொன்றில்லை. அது அங்கனுக்கே இழிவு. ஜராசந்தனுக்கு மட்டுமே அழிவு. அஸ்தினபுரிக்கோ நட்பரசனுக்காக அது களம் சென்றது என்னும் புகழே எஞ்சும்” என்றார் கணிகர். “இன்றுவரை அஸ்தினபுரி அதைச் செய்ததில்லை. அது பிற மன்னர்களுக்கொரு செய்தி. இப்போருடன் மகதம் அழியப்பெறுமென்றால் அதுவும் நன்றே. இந்திரப்பிரஸ்தத்தின் எதிரிகளனைவரும் நம்மை மையமாக்கி திரள்வார்கள். அது ஒரு தொடக்கமென்றாகும்.”
அனைத்துச் சொற்களையும் இழந்து விதுரர் நீள்மூச்சு விட்டு உடல்தளர்ந்தார். “விதுரரே, நாம் மகதத்துடன் இணைந்து களம்புகவிருக்கிறோம் என்று பாண்டவர் அறிந்தாலே இப்போர் நிகழாது. உமித்தீ என பகை நீறி நின்றிருக்கும். அதுதான் நாம் விழைவதும். நாம் ஆயிரம் படம் விரித்து எழுவது வரை இங்கு போர் நிகழக் கூடாது. நமது ஆற்றல் பெருகுவதற்குரிய பகைமை அதுவரை நீடிக்கவும் வேண்டும்” என்றார் கணிகர்.
சகுனி மெல்ல அசைந்து “கணிகர் சொல்வதையே நானும் சொல்ல விழைகிறேன் விதுரரே. மகதத்தின் தூது வரட்டும். அங்கனையும் அவை அணையச்செய்வோம். மகதத்தின் அரசனுடன் அஸ்தினபுரி தோள்நிற்கும் என்று அறிவிப்போம். அங்கனை நாற்படைத்தலைவனாக கங்கணம் கொள்ளச் செய்வோம். அச்செய்தி இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்லட்டும்” என்றார். “அவர்களும் நம் முடிவுக்காக காத்திருப்பார்கள்.”
விதுரர் தரையை நோக்கியபடி “காந்தாரரும் அவ்வண்ணம் சொன்னால் அதையே ஏற்றாகவேண்டும் நான். போர்சூழ்தலை நான் அறியேன். என் கணிப்புகள் அதில் எப்போதுமே பிழையென்றாவதையும் கண்டிருக்கிறேன்” என்றார். சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டு எழப்போகும் அசைவைக் காட்டியபடி “ஆனால் நான் இங்கு வந்தபோது முன்பு விருகத்ரதர் காந்தாரத்திற்கு அனுப்பிய அந்த குதிரைச்சவுக்கைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அது இன்னமும்கூட அங்கே அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றே நான் அறிந்திருந்தேன்” என்றார்.
சகுனி வலியுடன் முகம் இழுபட கண்களை மூடிக்கொண்டார். வெண்சுண்ணநெற்றியில் நீலநரம்புகள் எழுந்தன. வெளிறிய உதடுகள் குருதிகொண்டன. தாடை இறுகி அசைந்தது. “ம்ம்ம்” என அவர் முனகினார். கணிகர் விதுரரின் விழிகளை நோக்கியபின் விழிகளை திருப்பி கைகளைச் சேர்த்து அசையாது அமர்ந்திருந்தார். அவர் எதையோ சொல்லப்போகிறார் என்று விதுரர் எண்ணினார். ஆனால் அந்தத் ததும்பும் கணத்திலேயே அவர் புன்னகையுடன் நீடித்தார்.
சகுனி கண்களைத் திறந்து “உண்மை, விதுரரே” என்றார். “என் வஞ்சம் அழியாதிருக்கிறது. இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் எழுந்து பெருகிச் சூழ்ந்து மகதத்தை நொறுக்கவேண்டும். அந்த அசுரப்பிறவியின் நெஞ்சை பீமன் உடைத்துப்பிளந்து குருதியாடவேண்டும். ராஜகிருஹநகர் மேல் எரிபரந்தெடுத்தலின் கரும்புகை மூடவேண்டும். என் உள்ளம் விழைவது அதுவே. அது நிகழாமல் என் மூதாதையர் காலடியில் நான் முழுதமையமாட்டேன்” என்றார்.
“ஆனால், இத்தருணம் அரியது. இது நான் உளம்நிலைத்து எண்ணிச்சூழவேண்டிய ஒன்று. இந்திரப்பிரஸ்தம் இத்தருணத்தில் ஒரு பெருவெற்றியை அடையலாகாது. வெற்றிகொள்ளும் நாடு என்னும் எண்ணம் ஆரியவர்த்தத்தில் அதைப்பற்றி எழக்கூடாது. இப்போதிருக்கும் நிலையே நீடிக்கவேண்டுமென்றால் நிகரெடை கொண்டு இருதரப்பும் அசைவின்மையை அடைந்தாகவேண்டும். யாதவர்கள் இந்திரப்பிரஸ்தத்துடன் இருப்பதனால் நம் உதவி மகதத்திற்குத் தேவை. காத்திருப்போம்.”
அவர் கண்கள் சிறுத்தன. “ஒரு தருணம் வரும். முதலில் பாரதவர்ஷத்தின் அரியணையில் என் மருகன் அமரட்டும். அவன் காலடியில் கப்பத்துடன் வந்து மகதன் அமரும்போது அந்த குதிரைச்சவுக்கை பொற்பேழையில் அமைத்து அவனுக்குப் பரிசாக அளிக்கிறேன். அனைத்தும் நிகர்கொண்டுவிடும்.” கணிகர் புன்னகைத்து “ஆம், அதுவே முழுவெற்றி. இந்திரப்பிரஸ்தம் மகதத்தை வென்றால் அதில் காந்தாரம் பெருமைகொள்ள ஏதுமில்லை” என்றார்.
விதுரர் தலைவணங்கி எழுந்தார். “விதுரரே, தாங்கள் விழைவது போர் நிகழலாகாதென்றுதானே?” என்றார் சகுனி. “போர் நிகழாமலிருக்கும் வழி இது ஒன்றே என்று கொள்க!” விதுரர் சோர்ந்த தோள்களுடன் “ஆனால் இப்போது தவிர்க்கப்படும் போர் மேலும் பெரிதென வளரும். விசித்திரவீரியரின் குருதியினர் ஒருவருக்கொருவர் படைக்கலம் கோப்பர்” என்றார்.
சகுனி புன்னகையுடன் “அதை இருசாராருக்கும் நிகர்பங்காக நாட்டைப் பிளக்கையில் பீஷ்மரும் நீங்களும் எண்ணியிருக்கவேண்டும் அல்லவா? விதுரரே, என் மருகன் முடிசூடியது இந்தத் தொல்நகரை ஆளும்பொருட்டல்ல, பாரதவர்ஷத்தை முழுதாளும்பொருட்டு. அது அவன் உடன்பிறந்தாரின் குருதிக்குமேல் அன்றி நிகழாது” என்றார்.
விதுரர் “என் கடனை ஆற்றுவதொன்றை அன்றி எதையும் இனி நான் எண்ணப்போவதில்லை...” என்றபின் மீண்டும் தலைவணங்கினார். கணிகர் “ஒரு போர் நிகழாது இவை அமையாதென்றறிய அரசுசூழ்தலை கற்கவேண்டியதில்லை அமைச்சரே. அன்று நாடு பகுக்கப்பட்டபோது முதிய குதிரைச்சூதன் ஒருவனே அதை சொன்னான். அக்கீழ்மகனுக்குத் தெரிந்தது பீஷ்மருக்குப் புரியவில்லை” என்றார்.
பொருளில்லாத புன்னகை ஒன்றை அளித்துவிட்டு விதுரர் சிற்றடிகளுடன் அறைவாயிலை நோக்கி சென்றபோது சகுனி உரக்க “நில்லுங்கள் அமைச்சரே” என்றார். கணிகர் திகைத்து சகுனியை திரும்பி நோக்கினார். சகுனி கைநீட்டி பெருங்குரலில் “மகதத்திற்கு நாம் படைத்துணை அளிக்கவேண்டியதில்லை. அதுவே என் முடிவு. அதை பேரரசரிடம் நானே சொல்கிறேன்” என்றார்.
விதுரர் நம்பமுடியாமல் கணிகரை நோக்கிவிட்டு சகுனியை பார்த்தார். “அழியட்டும் மகதம். அழியட்டும் ஜராசந்தன். பிறிதெல்லாம் பின்னால் நிகழட்டும்” என்றார் சகுனி. தன் தலையை கையால் தட்டி “ஏன் இம்முடிவை எடுத்தேன் என்று தெரியவில்லை. இக்கணம் இதுவன்றி சொல் பிறிதில்லை என்று தோன்றுகிறது. என்னைக் கடந்து இச்சொற்கள் எழுகின்றன” என்றார். கணிகர் இருகைகளையும் தூக்கியபின் மெல்லத்தழைத்து மடியிலேயே வைத்துக்கொண்டார். உதடுகளை அழுத்தி தலையை சற்று சரித்தார்.
புன்னகையுடன் “இதில் வியப்பதற்கேதுமில்லை காந்தாரரே. வரலாறெங்கும் பெருமுடிவுகள் எப்போதும் அந்தந்தக் கணத்தில்தான் எடுக்கப்படுகின்றன என்று நூல்கள் சொல்கின்றன” என்றார் விதுரர். “எந்தக் கணிப்புகளும் இல்லாமல், அதைச் சொல்பவரும் அறியாமல் அவை எழுந்து விடுகின்றன. பின்னர் ஆயிரம் கணக்குகளை நூலோர் சொல்வர். நாமே அவற்றை உருவாக்கவும் செய்வோம். எதற்கும் பொருளில்லை.”
அத்தருணத்தில் சொல்லெல்லாம் ஆணவமே என்றறிந்திருந்தாலும் மேலும் சொல்லாமலிருக்க அவரால் இயலவில்லை. “நம்மைச் சூழ்ந்திருப்பது அறியமுடியாமையின் வெளி. அங்கே தெய்வங்கள் வாழலாம். தெய்வங்கள் திளைக்கும் பாழே நிறைந்திருக்கலாம். நாம் ஒவ்வொரு உச்சதருணத்திலும் அறியும் பொருளின்மை அது கனிந்து சொட்டிய துளியாக இருக்கலாம்.”
“நான் என் இந்த முடிவின் மேல் சித்தத்தால் முட்டுகிறேன் விதுரரே” என்றார் சகுனி. “பாறையென என்னுள் அமைந்திருக்கிறது.” கணிகர் மெல்ல அசைந்து அமர்ந்து “ஒருவகையில் அதுவும் நன்றே” என்றார். “இம்முடிவுக்கு எதிரான அனைத்துச் சொல்லெடுப்புகளையும் ஆராய்ந்துவிட்டோம். அதன்பின்னரும் இம்முடிவு நிற்கிறதென்றால் இது அதற்கான வல்லமை கொண்டதுதான்.”
சகுனி சற்று கலங்கிய கண்களுடன் அவரை நோக்கி “இல்லை, நான் அவ்வண்ணம் உறுதியாக இல்லை. என்னால் பிறிதொன்றை எண்ணக்கூடவில்லை. அவ்வளவுதான்” என்றார். “இனி எண்ணவேண்டியதில்லை. இதுவே நம் இறுதிமுடிவாக இருக்கட்டும். இதற்கு உகந்த சொல்நிலைகளை விதுரரே சற்றுமுன் சொல்லிவிட்டார்” என்றார் கணிகர்.
தலையசைத்தபடி “என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் இதை சொல்கிறேன்?” என்றார் சகுனி. “அதன் விழுப்பொருள் ஒன்றே” என்று விதுரர் புன்னகைத்தார். “மகதனின் ஊழ். பிறிதொன்றுமில்லை.” கணிகரின் கண்களை நோக்கியபின் அவர் வெளியே சென்றார்.
[ 6 ]
அஸ்தினபுரியின் எல்லைக்குள் கர்ணன் நுழைந்தபோது பொழுது நன்றாகவே விடிந்திருந்தது. ஆனால் கிழக்கை மூடியிருந்த முகில்களில் சூரியன் கலங்கி உருவழிந்து பரந்திருந்தது. குறுங்காட்டின் இலைகளனைத்தும் நீர்சொட்ட அசைந்துகொண்டிருந்தன. இளந்தூறலில் அவன் அதுவரை அறிந்திராத ஒரு சேற்றுவாடை இருந்தது. கைகளில் நீரைப் பிடித்து குவித்து நோக்கியபோது நீர் சற்று வண்ணம் மாறியிருப்பதை கண்டான். மூக்கருகே கொண்டுசென்று அதன் கெடுமணம்தான் என்று உணர்ந்தான். அண்ணாந்தபோது வானமே கரியநிற வண்டல்பரப்பாக தெரிந்தது. அதிலிருந்து புழுக்கள் போல் நெளிந்திறங்கின மழைச்சரடுகள்.
அவன் மையப்பெருஞ்சாலையிலும் கோட்டைமுகப்பிலும் இருந்த செயலின்மையை நோக்கிக்கொண்டே தேரில் சென்றான். அவன் புரவிகளின் குளம்படியோசையை காடு திருப்பியனுப்பிக்கொண்டிருந்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் வீரர்கள் எழவில்லை. ஒரு முரசுமட்டும் ஈரத்தோலின் சோர்வுடன் அதிர்ந்தடங்கியது. அவ்வோசை மழைத்தாரைகளுக்கிடையே மறைந்தது. கோட்டைக்காவலர் அவனை கண்டதாகத் தெரியவில்லை. அவன் தேரை இழுத்து நிறுத்தி அவர்களை நோக்கினான். அவன் நின்றதைக் கண்ட ஒரு முதுகாவலன் கையை ஊன்றி எழுந்து சுவரைப்பற்றியபடி நடந்து அருகே வந்தான். அவனை அடையாளம் கண்டதும் “வணங்குகிறேன் அங்கரே” என்றான்.
“என்ன நிகழ்கிறது இங்கே? கோட்டைக்காவல்நிரைகள் எங்கே?” என்று அவன் கேட்டான். “அனைவரும் இங்குதான் உள்ளனர். இங்கு நோய் பரவியிருக்கிறது அரசே. என்ன நோய் என்று தெரியவில்லை. சிலருக்கு உடல்வெப்பு. சிலருக்கு உடல்குளிர்கிறது. சிலர் நோக்கிழந்தனர். சிலர் சொல்லிழந்துள்ளனர். மூதாதைதெய்வங்களின் பழி என்கிறார்கள்” என்றான். கர்ணன் அப்பால் எட்டிப்பார்த்த படைவீரர்களின் முகங்களை பார்த்தான். அவை வெளிறிப்பழுத்து, சிவந்துகலங்கிய விழிகளும் உலர்ந்த உதடுகளும் உந்திய கன்ன எலும்புகளுமாக தெரிந்தன. மறுசொல்லெடுக்காமல் அவன் புரவியை செலுத்தினான்.
நகர்த்தெருக்களினூடாகச் செல்கையில் அது முற்றிலும் கைவிடப்பட்டிருப்பதை கண்டான். அங்காடிகளில் வணிகர்கள் சொட்டும் சாய்வுக்கூரைகளுக்குக் கீழே சோர்ந்து அமர்ந்து ஒளியற்ற விழிகளால் நோக்கினர். புரவிகள் உடல்சிலிர்த்தபடி மழைத்துளிகள் உருண்டு சொட்டிய உடல்களுடன் நின்றன. அவை ஓடிப்பயின்று நீணாட்களாகிவிட்டன என்பதை அவற்றின் வயிறு பருத்து தொங்கியதிலிருந்து கண்டுகொண்டான். உடல் எடையால் அவற்றின் ஊன்றிய கால்கள் சற்றே விலகி வளைந்திருந்தன. வண்டிகள் சகடங்கள் சேற்றில் புதைந்திருக்க மழைதெறித்த சேறு கொத்துக்கொத்தாக ஆரங்களில் தொங்க அசைவின்மையின் வடிவமென நின்றன.
உள்கோட்டையை அணுகும்போதுதான் அவன் காகங்களை கண்டான். மறுகணமே அவற்றை அவன் நகரை நெருங்கும் பாதையிலேயே கண்டிருந்ததை திகைப்புடன் நினைவுகூர்ந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட தேர்ப்புரவிகள் திகைத்து காலுதைத்து நின்றன. அவன் திரும்பித்திரும்பி கண்தொட்ட இடமெல்லாம் கரிய சருகுக்குவைகள் போல உடல்குறுக்கி அமர்ந்திருந்த காகங்களை நோக்கினான். மீண்டும் கடிவாளத்தைச் சுண்டி புரவியை செலுத்தியபோது அவன் பிடரி அச்சத்துடன் சிலிர்த்துக்கொண்டே இருந்தது.
அவற்றின் கண்கள் அவனை நோக்கவில்லை என்பதை விழிகள் கண்டன. அவற்றின் நோக்கை உடல் உணர்ந்துகொண்டுமிருந்தது. மிக அருகே அணுகியபின்னரும்கூட சுவரில் அமர்ந்திருந்த பருத்த காகங்கள் அசையாமல் இருந்தன. காற்றில் ஒன்றின் சிறகு சற்றே பிசிறிட்டது. கழுத்தை ஒசித்து அலகால் இறகை நீவியபின் அது கீழிமை மேலேற துயிலில் ஆழ்ந்தது.
அரண்மனையில் அவனை வரவேற்க அமைச்சர்கள் எவரும் இருக்கவில்லை. அமைச்சு மாளிகைக்குச் சென்றபோது கனகர் உள்ளறைக்குள் இருப்பதாக ஏவலன் சொன்னான். அமைச்சு மாளிகையிலும் பணிகள் நிகழ்வதாகத் தெரியவில்லை. சாளரங்களுக்கு அப்பால் மழைத்துளிகள் சொட்டிக்கொண்டே இருந்த ஓசைமட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. கனகர் ஏவலனுடன் உடல்குலுங்க ஓடிவந்தார். “தங்கள் வரவை எதிர்நோக்கியிருந்தோம் அரசே” என்றார். “நேற்றே தாங்கள் வரக்கூடுமென எதிர்நோக்கினோம். அமைச்சர் பின்னிரவு வரை இங்கிருந்தார். இன்றுகாலை அவருக்கும் நோய்கண்டுவிட்டதென்று சொன்னார்கள்.”
அவன் திரும்பி அமைச்சு மாளிகையை நோக்கிவிட்டு “என்ன நோய்?” என்றான். “விரிவாகச் சொல்கிறேன். தாங்கள் உடலை நன்கு கழுவிக்கொண்டாகவேண்டும். இதோ இந்த கரியபாசியால்தான் நோய் பரவுகிறது என்கிறார்கள். உண்மையில் இது என்ன என்றும் எவ்வண்ணம் இங்கு வந்தது என்றும் எவருமறியவில்லை. காகங்களால் கொண்டுவரப்பட்டது என்கிறார்கள்” என்றார் கனகர்.
அப்போதுதான் தன் கைகளும் உடலும் கரிபடிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். “எத்தனை கழுவினாலும் அகல்வதில்லை” என்றபடி கனகர் அவனை நீராட்டறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே கொதிக்கும் நீர் கொண்ட செம்புக்கலங்களில் வேம்பிலையும் எட்டிக்காயும் வில்வமும் வெந்த ஆவி எழுந்தது. “கழுவவேண்டும் என்பது மருத்துவர் வகுத்தது. அதனால் நோயை ஒத்திப்போடவே முடியும். இவ்வரண்மனையில் ஒவ்வொரு கணமும் விழிப்புடனிருந்தவர் விதுரர். அவரே நோய்கொண்டுவிட்டார்.”
கர்ணன் தன் கைகளை சிகைக்காய் பசையிட்டு நுரைக்கச்செய்து கழுவினான். பின்னர் சுண்ணம் கலந்த நீரால் கழுவினான். “நச்சு... ஆனால் அதன் இனிமை சொல்லற்கரியது. அங்கரே, அது உடலில் இருந்து உள்ளத்தை தனியாகப் பிரித்துவிடுகிறது. ஏழுலகங்களிலும் உள்ளம் பறந்தலைகையில் நனைந்த துணிச்சுருளென உடல் இங்கு அமைந்திருக்கிறது. இருள் நிறைந்த உலகங்கள். அங்கே விழிகள் மின்னுகின்றன. நெளிவுகளும் சுழிப்புகளுமென ஏதோ எவரோ நிறைந்துள்ளார்கள். இன்னும் இன்னுமென செல்லச்செல்ல எண்ணி அடுக்குபவை அனைத்தும் கலைகின்றன. உருவங்களே தங்களை முடிவிலாது கலைத்து அருவங்களாகும் ஆடல்...”
“செவிவிடைக்கும் பெருங்கூச்சல்களும் அலறல்களும் அங்கு நிறைந்துள்ளன. உடைவோசைகளும் பிளவோசைகளும் வெடிப்பொலிகளும்தான் எங்கும். ஆனால் சித்தம் அவற்றுடன் மோதி தானும் பேரொலி எழுப்புகையில் நம் உடல் ஒரு பழுத்த கட்டிபோல உடைந்து சலம்தெறிக்கப் பரவுகிறது” என்றார் கனகர். “இந்நகரில் நீங்கள் பார்த்த ஒவ்வொருவரும் உளம் அகன்ற வெறும் உடல்கள் மட்டுமே.”
கர்ணன் அவர்களின் விழிகளை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தான். “நோயுறுதல் இத்தனை இன்பமானதாக ஆகமுடியுமா? சோர்வு இத்தனை தித்திக்கலாகுமா? அரிது. அரிது. நான் இதுவரை கண்டதில்லை” என்றார் கனகர். “உடலை அசைக்கவும் உளம்கூடுவதில்லை. அசைவின்மையின் இனிமையையே சுவைத்துக் கொண்டிருப்போம். எங்கிருந்து வந்தோம் என்று எண்ணுகையில் எழும் திகைப்பு எல்லையற்றது. அங்கரே, இத்தனை முடிவிலியுலகுகளால் சூழப்பட்டா இங்கு இத்தனை சிறிய வாழ்க்கையை வாழ்கிறோம்?”
அவன் உடல்தூய்மை செய்து உடைமாற்றியதுமே விதுரரை பார்க்கச் சென்றான். அவரது மாளிகையின் முகப்பில் நின்றிருந்த காவலனும் நோயில் பழுத்திருந்தான். அவன் விழிகள் அனைத்தையும் கடந்து எங்கோ நோக்குபவை போலிருந்தன. உள்ளே மஞ்சத்தறையில் விதுரர் படுத்திருந்தார். மெலிந்த கரிய உடலில் விலா எலும்புகள் மணல் அலைகள் போல தெரிந்தன. உலர்ந்த உதடுகள் ஒட்டியிருக்க முகம் மலர்ந்திருந்தது. விழியுருளைகள் உருண்டுகொண்டிருந்தன.
ஏவலன் மெல்ல “அமைச்சரே” என்றான். மீண்டும் மீண்டும் அவன் அழைக்க மிகத்தொலைவில் எங்கோ அவர் அக்குரலை கேட்டார். “யார்? யாரது?” என்றார். “அங்கன், கர்ணன்” என்றான் கர்ணன். “நீயா?” என்று அவர் சொன்னார். “மத்ரநாட்டிலிருந்து எப்போது வந்தாய்?” கர்ணன் “அமைச்சரே…” என்று உரத்தகுரலில் அழைத்தான். “நான் கர்ணன். அங்கநாட்டரசன்.”
அவர் விழிதிறந்து அவனை பார்த்தார். “ஆம், நீ அங்கன்” என்றார். முகம் அப்போதும் மலர்ந்திருந்தது. “காகி” என்றார். “நான் அன்னையை கண்டேன்.” கர்ணன் அவரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் தன் வாயை துடைத்துக்கொண்டு “நான் என்ன சொன்னேன்?” என்றார். “காகியை பார்த்தீர்கள் என்று” என்றான். “ஆம், காகி. கரிய நீள்குழல் எழுந்து கற்றைகளாக பறந்தது. கைவிரல்கள் காகத்தின் அலகுகள் போல...” என்றபின் கையூன்றி எழுந்து அமர்ந்து “கனவு... நகரில் இப்போது ஒவ்வொரு மானுடரும் ஆயிரம்மடங்கு பெரிய கனவுகளின் குவியல்கள்” என்றார்.
கர்ணன் “அரசர் என்ன செய்கிறார்?” என்றான். “அவர் நோயுறவில்லை” என்று விதுரர் சொன்னார். “இந்நகரில் அவரும் கணிகரும் மட்டுமே நலமுடன் இருக்கிறார்கள். பலநாட்களாகவே பேரரசர் நோயில் இருக்கிறார். விழிமூடிப்படுத்து இரவும் பகலும் இசைகேட்டுக்கொண்டிருக்கிறார். பேரரசியும் நோயுற்றிருக்கிறார். அரசியரும் கௌரவர் நூற்றுவரும் அனைவரும் நோயிலேயே இருக்கிறார்கள்.”
“அனைவருமா?” என்றான் கர்ணன். “நோய் என்றால் படுக்கையில் அல்ல. நேற்று துர்முகனை பார்த்தேன். புன்னகைக்கும் முகமும் அலைபாயும் கண்களுமாக கைகளை வீசிக்கொண்டே சென்றான். என்னை அவன் விழிகள் பார்க்கவேயில்லை.” கர்ணன் நீள்மூச்செறிந்தான். “இந்நகர் முற்றிலும் இருளில் மூழ்கிவிடும் என்று தோன்றியது. ஆகவேதான் உங்களை வரச்சொல்லி ஓலை அனுப்பினேன்.”
கர்ணன் “நான் மகதத்திற்கு தூது அனுப்பப்பட்டதை அறிந்தேன்” என்றான். “ஆம், மகதத்தின் நட்புத்தூதை மறுத்தோம். அம்முடிவை நான் எடுத்தேன். சகுனித்தேவர் அதற்குரிய ஆணையை இட்டார். பேரரசரிடம் ஒப்புதல் பெறப்பட்டது” என்றார் விதுரர். “நீங்கள் அங்கநாட்டிலிருக்கையிலேயே அதை செய்யவேண்டுமென எண்ணினேன். அச்செய்தியை அறிந்து நீங்கள் சினம்கொண்டதையும் நான் அறிவேன்.”
கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “அங்கரே, நீரே பார்க்கலாம். இந்நகர் எப்படி போரில் இறங்கமுடியும்?” என்றார் விதுரர். “உண்மை. ஆனால் என் தோள்களில் ஜராசந்தரின் தழுவும் கைகளின் எடையும் வெம்மையும் இப்போதுமுள்ளது” என்றான் கர்ணன். “அவர் எளிதில் வெல்லப்படத்தக்கவர் அல்ல. ஒன்றை ஒன்று நோக்கும் இரு ஆடிகளைப்போன்றவர் அவர். முடிவிலாது பெருகுபவர்.” விதுரர் “ஆம், ஆனால் அவன் முன் நின்றிருப்பதும் ஒன்றை ஒன்று பெருக்கும் இணையாடிகளே” என்றார்.
இருவரும் சிலகணங்கள் அமர்ந்திருந்தனர். விதுரர் அவன் கைகளை எட்டிப்பற்றி “நான் சொல்வதற்கொன்றுமில்லை. இந்நகரும் அரசரும் உங்களால் காக்கப்பட வேண்டியவர்கள்” என்றார். “கணிகர் என்ன செய்கிறார்?” என்று அவரை நோக்காமலேயே கர்ணன் கேட்டான். “அவர் உடல் நலமுற்றுவிட்டது. புரவியேறி நகரில் அலைகிறார். காடுகளில் வேட்டையாடுவதுமுண்டு என்கிறார்கள்.” கர்ணன் எழுந்து விதுரரின் கைகளைப் பற்றியபடி “நான் பார்த்துக்கொள்கிறேன் அமைச்சரே” என்றான்.
[ 7 ]
துரியோதனனின் அரண்மனைப்படிக்கட்டில் ஏறும்போதே கர்ணன் ஒரு வேறுபாட்டை உணர்ந்தான். அந்நகரில் அத்தனை சுவர்ப்பரப்புகளும் பொருட்பரப்புகளும் சாம்பல்போன்ற கரும்பாசிப்பொடியால் மூடப்பட்டிருந்தன. துடைத்துத் துடைத்து சலித்து அதை விட்டுவிட்டிருந்தனர். அரண்மனை முகப்பில் பணியாளர்கள் அதை துடைத்துக்கொண்டிருந்தாலும் பாசிப்பரப்பு கூடவே தொடர்ந்து பரவிக்கொண்டிருந்தது.
எங்கும் தொடாமல் சற்று நடந்தால்கூட சிறிதுநேரத்தில் கைகள் கரிபடிந்திருந்தன. நடக்கும்போது கால்களின் கரிய அச்சுத்தடம் படிந்து ஓசையில்லாமல் பின்தொடர்ந்தது. அரண்மனைக்கோட்டையின் விளிம்பிலும் சாளரவிளிம்பிலும்கூட காகங்கள் செறிந்திருந்தன. அரண்மனைக்குள்ளும் அவை உத்தரச்சட்டங்களிலும் உயரமான வளைவுகளிலும் நிரைகட்டியிருந்தன.
ஆனால் துரியோதனனின் அரண்மனையைச்சுற்றி முற்றம் அப்போதுதான் துடைத்துக் கழுவிவைத்தது போலிருந்தது. மரக்கதவுகள் அரக்குமிளிர திறந்திருந்தன. மரத்தரைகளில் புதுமணல்வரி என வைரத்தின் கோடுகள் படிந்திருந்தன . படிகளின் கைப்பிடி புதியபிரம்பு போல ஒளிவிட்டது. அரண்மனைக்குள் ஓசையே இருக்கவில்லை. சாளரத்திரைச்சீலைகள் ஓசையின்றி அசைந்துகொண்டிருந்தன. அவன் தன் காலடிகளைக் கேட்டபடி நடந்தான்.
அவனை எதிர்கொண்ட இளையஅணுக்கன் தலைவணங்கி அரசர் உள்ளே அமர்ந்திருக்கிறார் என்று கைகாட்டினான். கர்ணன் தன்னை தொகுத்துக்கொண்டு துரியோதனனின் அறைக்குள் நுழைந்தான். வெண்ணிறமான திரைச்சீலைகளும் வெண்ணிறப் பீடவிரிப்புகளும் கொண்ட பெரிய அறையில் சாளரத்தின் அருகே துரியோதனன் அமர்ந்திருந்தான். வெண்பட்டாடையை இடையணிந்து வெண்ணிற யவனப் பூந்துகிலை சால்வையெனச் சுற்றியிருந்தான். புகைச்சுருள் போல அவன் மேல்கிடந்தது அது.
காலடியோசை கேட்டு அவன் திரும்பி நோக்கினான். “வணங்குகிறேன் கௌரவரே” என்றான் கர்ணன். முகம் மலர்ந்த துரியோதனன் “வருக அங்கரே. தாங்கள் வரும் செய்தியை நான் அறியவில்லை” என்றான். அவன் அமர கைகாட்டியபடி “தங்கள் வரவு இந்நாளை இனிதாக்குகிறது” என்றான். “நான் நேற்று முந்தையநாள்தான் கிளம்ப முடிவு செய்தேன். எதிர்க்காற்று இருந்தமையால் சற்று பிந்தினேன்” என்றபடி கர்ணன் அமர்ந்தான்.
துரியோதனன் பேரழகுகொண்டிருந்தான். உடலின் ஒவ்வொரு உறுப்பும் முழுமைகொண்டிருந்தது. புருவங்களில் மூக்கில் உதடுகளின் வளைவில் முகவாயில் மானுடத்தை மீறிய சிற்பக்கூர்மை. ஆனால் அவன் துரியோதனனாகவும் தெரிந்தான். இந்த உருவம் அந்த உடலுக்குள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மானுடருக்குள்ளும் அந்த தெய்வ உருவம் வாழ்கிறது. நீரடியில் கிடக்கும் அருஞ்சிலை. அதன்மேல் அலையடிக்கும் நீர்வளைவுகளால் அது நெளிந்தும் ஒடுங்கியும் காணக்கிடைக்கிறது போலும்.
துரியோதனன் அவன் மேல் விழிகளை நட்டு இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான். அவ்வினிய தோற்றத்திற்குள் தானறிந்த துரியோதனனைத் தேடி கர்ணனின் உள்ளம் தவித்தது. யார் இவன்? யயாதியா? ஹஸ்தியா? குருவா? பிரதீபனா? மானுடராகத் தோற்றமளிப்பது என்பது மாறாமை ஒன்றின் ஒரு காலத்தோற்றம். மாறாமையென்பது எவர் வடிவம்? யயாதியினூடாக ஹஸ்தியினூடாக குருவினூடாக பிரதீபனினூடாக கடந்துசெல்லும் அது என்ன? வரும்காலத்தில் எங்கோ பல்லாயிரமாண்டுகளுக்குப் பின்னர், பல்லாயிரம் வாழ்வடுக்குகளுக்கு அப்பால் இதே முகம் இங்கே அமர்ந்திருக்கும். இப்புவியில் அழியாமலிருப்பவை முகங்கள் மட்டும்தான்.
அவன் முன் அமர்ந்திருந்த துரியோதனனுடன் பேசுவதற்கேதுமில்லை என்று தோன்றியது. அவன் எதிர்நோக்கி வந்தவன் பிறிதொருவன். விதுரரும் மருத்துவரும் குறிப்பிட்ட துரியோதனன் எரிமீன் என கனன்று கொண்டிருந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்து துரியோதனன் புன்னகைத்தான். “ஆம், நான் தழல்விட்டுக்கொண்டிருந்தேன்” என்றான். “தீப்பற்றிக்கொண்டவன் போல இவ்வரண்மனையில் சுற்றியலைந்தேன். அதை அப்போது நான் உணரவில்லை. இப்போது உணர்கிறேன். இவ்வாறு அடங்கியபின்னர்...”
கர்ணன் “இவ்வகையில் தங்களை பார்ப்பது நிறைவளிக்கிறது அரசே” என்றான். “இங்கிருந்து எழுவதற்கோ இவ்விடம்விட்டு அகல்வதற்கோ தோன்றவில்லை. வெளியே சென்று நான் அறிவதற்கொன்றுமில்லை. விழிமூடி அமர்ந்தால் என்னுள் முடிவிலாது செல்லமுடிகிறது. ஒளிகொண்ட பேருலகங்கள். முழுமையான ஒத்திசைவால் ஆனவை. ஒத்திசைவு கொண்ட ஒலிகள் இசையாகின்றன. பொருட்களின் உள்ளுறை ஓசை என்றால் அங்குள்ளவை இசையாலான பொருட்கள்...”
அவன் விழிகளின் ஒளியை கர்ணன் திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அகிபீனா உண்டவனின் உச்சநிலைவலிப்பில் என அவை விரிந்து விரிந்து சென்றன. “அரசே, இந்நகரம் உங்கள் ஆட்சியிலிருக்கிறது. இது எந்நிலையில் உள்ளது என்று அறிவீர்களா?” துரியோதனன் புன்னகை மாறாமல் “ஆம், நான் இச்சாளரத்தருகே நின்று பார்ப்பதுண்டு. நகரம் பகலில் மெல்லிய பொன்மஞ்சள்நிற ஒளியால் மூடப்பட்டிருப்பதை பார்க்கிறேன். மழைச்சரடுகள் பொன்னூல்களென ஆகி அலைபாய்கின்றன. துளிகள் பொன்னென உதிர்கின்றன. ஓசைகளும் மழைப்பொழிவும் முழுமையாக ஒத்திசைந்துள்ளன” என்றான் துரியோதனன்.
பூசகர்களுக்குரிய மென்மையான உச்சரிப்பில் “இரவில் மென்பச்சை நிறமாக ஒளிவிடுகிறது நகரம். சுவர்ப்பரப்புகள் மேல் பல்லாயிரம்கோடி மின்மினிகள் உடலொட்டிச் செறிந்திருப்பதுபோல. சிலசமயம் நீலம் என்றும் சிலசமயம் சிவப்பு என்றும் மயங்கச்செய்யும் ஒளி. இரவொளியில் நகரம் நிழல்களே இல்லாமல் பெருகியிருப்பதை நோக்கியபடி நான் நிற்பதுண்டு. விண்ணிலிருந்து நோக்கினால் ஒரு மீன் என இந்நகர் தெரியக்கூடும். அங்கே விண்மீன்களெனத் தெரிபவையும் இதேபோன்ற நகரங்கள்தானா என வியப்பேன்” என்றான்.
கர்ணன் அவனை நோக்கியபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தான். ஒரு மெல்லிய தடை. பின்னோக்கித் தள்ளிச்செல்லும் பெருக்கு. அங்கிருந்து எழுந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அதை உந்தி முன்னகர்ந்து “அரசே, ஜராசந்தருக்கு நம் அரசு நட்பு மறுத்துள்ளது. அறிவீர்களா?” என்றான். துரியோதனன் அதே புன்னகையுடன் “அறிவேன்” என்றான். “விதுரர் சொன்னார். அதுவே உரியதென்றும் பட்டது. இந்த ஒத்திசைவிலிருந்து உதிர்ந்து எழ என்னால் இயலாது. இத்தருணத்தில் ஒரு போரை நான் விழையவில்லை.”
கர்ணன் எண்ணியிராதபடி சினம் கொண்டெழுந்தான். “அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் நீங்கள் அவள் காலடியில் விழுந்து கிடந்தீர்கள். அப்போது நமக்காகக் கனிந்த விழிகள் மகதருடையவை மட்டுமே” என்றான். துரியோதனன் கண்கள் விரிந்த மையங்களுடன் நோக்கி அசைவிழந்தன. “அவர்கள் அவரை கொல்லக்கூடும். அவர்களிருவரும் இணைந்தார்கள் என்றால் வெல்வது உறுதி.” துரியோதனன் புன்னகையுடன் “காலடியில் கிடந்தேன் அல்லவா?” என்றான். கர்ணன் வியப்புடன் நோக்கினான்.
“அக்காலடிகளை நான் கண்டேன்” என்றான் துரியோதனன். மேலும் மேலுமென அவன் விழிகள் விரிந்தபடியே சென்றன. “அக்காலடிகள். அவற்றின் ஒளிதான் அனைத்தும். ஆதித்யர்கள் அவ்வொளியை அள்ளிப்பருகும் விழிகள் மட்டுமே. நான் கண்டேன். மிகத்தொலைவில். முகில்களுக்கு அப்பால்.” அவன் திரும்பி “காலடியில் விழுந்துகிடந்தேன் அல்லவா? நீரும் அதைப்பார்த்தீரா?” என்றான். கர்ணன் மெல்லிய மூச்சுத்திணறலை அடைந்தான். “என்ன சொல்கிறீர்கள் அரசே?” என்றான். “காலடியில் விழுந்து கிடந்தேனா?” என்று மிக அணுக்கமான மந்தணம் ஒன்றை கேட்டறிவதுபோல துரியோதனன் கேட்டான்.
கர்ணன் எழுந்துகொண்டு “நான் சென்று படைகளை நோக்குகிறேன். நகரமே நோயில் மூழ்கியிருக்கிறது அரசே. படைகள் சிதைந்து கிடக்கின்றன. இந்நகரம் சேற்றில் யானையென மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கிறது” என்றான். துரியோதனன் “எந்நகரம்?” என்றான். கர்ணன் சிலகணங்கள் நோக்கி நின்றபின் தலைவணங்கி திரும்பி நடந்தான்.
தன் மாளிகைக்குத் திரும்பும்போதே நோயுற்றிருப்பதை கர்ணன் உணரத்தொடங்கினான். தேரிலேறும்போது மெல்லிய நிலையிழப்பு ஒன்றை உடலில் அறிந்தான். ஆடைதான் காலைத்தடுக்குகிறதோ என தோன்றியது. தேரிலேறி அமர்ந்து புரவிகள் கிளம்பியதும் அவன் உடல் எடையிழந்து பின்னோக்கிப் பறப்பதுபோல தோன்றியது. சாலையோரக்காட்சிகள் ஒன்றுடன் ஒன்று உருகிக்கலந்து வண்ணத்தீற்றல்களாக ஆயின.
கடையாணி உரசும் ஒலி போல ஒன்று தலைக்குப்பின்னால் கேட்கத்தொடங்கியது. அவன் தலையை கையால் தட்டிக்கொண்டே இருந்தான். மாளிகையில் சென்றிறங்கி படிகளில் ஏறும்போதும் அவ்வோசை நீடித்தது. கண்களை மூடி அதை கேட்டபோது அது சிவந்த குமிழிகளாக மாறி இமைக்குள் திளைக்கத் தொடங்கியது. படிகளில் ஏறும்போது உடல் எடைமிகுந்தபடியே வருவதை அறிந்தான். இறுதிப்படியில் மூச்சுவாங்க நின்றான். உடல் வியர்வையில் குளிர்ந்திருந்தது.
சுவர்களைப் பற்றியபடி தன் அறைக்குள் நுழைந்தான். ஏவலன் ஓடிவந்து அவனை பிடிக்கலாமா கூடாதா என்று தயங்கி நின்றான். மஞ்சத்தில் கையூன்றி அமர்ந்து ஏவலனை விழிதூக்கி நோக்கியபோது நீர்ப்பாவை என கலங்கி அசையும் உருவம் தெரிந்தது. “சூடான இன்னீர்...” என்றான். அவன் “யவன மதுவா?” என்றான். “இல்லை, இன்னீர்.” அவன் “அரசே, தாங்கள் நோய் கொண்டுவிட்டீர்கள்... மருத்துவரை அழைத்துவரச்சொல்கிறேன்” என்றான்.
“வேண்டியதில்லை. களைப்புதான்.” அதைச்சொல்லவே அவன் இதழ்கள் சலிப்புற்றன. இறுதி உச்சரிப்பு வெளிவரவே இல்லை. கண்களை மூடியபடி அவன் விழத்தொடங்கினான். இறகுச்சேக்கை மெல்ல மணல் என அவனை பெற்றுக்கொண்டது. நுரை என நெகிழ்ந்து இழுத்தது. புகை என மாறி உள்ளே விழச்செய்தது. ஒலிகள் எங்கோ கேட்டுக்கொண்டிருந்தன. மழைத்துளிகள் நிறைந்த இலைகளும் முட்களும் கொண்ட காடு அரையிருளில் நீர் ஒலிக்க நின்றிருந்தது. துளிஒளிகளுடன் விழிமணிகளும் கலந்திருந்தன காகங்கள். அவன் “காகங்கள்” என்றான். அவ்வொலியை அவனே எவருடையதோ என்று கேட்டான்.
உடல் உருகிப்பரவியது. கைகளும் கால்களும் தனித்தனியாக விலகின. அவன் சித்தம் மட்டும் மெல்லிய ஒளியுடன் ரசம் போல சேக்கைமேல் பரவிக்கிடந்தது. அறைக்குள் சுவர்கள் ஒளிகொண்டன. பச்சை ஒளி. நீலமோ என ஐயுறச்செய்யும் ஒளி. அனைத்து ஒலிகளும் இசைவுகொண்டன. அவன் துரியோதனனிடம் “ஆம், இசைவு” என்று சொன்னான். “இவை முற்றிலும் இசைவுகொண்டவை. அனைத்திலுமோடும் இசைவு என்பது ஒரு பெரும் மாயவலை. அந்தச் சிலந்தி நஞ்சுநிறைந்தது.” துரியோதனன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனுக்குமேல் இளநீல ஒளிகொண்ட மேகம் ஒன்று நின்றிருந்தது.
அவன் அவளை கண்டான். விழிநிறைத்து குருடாக்கிய பொன்னிறப் பேரொளி. அதை நோக்கி செல்லலாகாது என்று அவனிடம் எவரோ சொன்னார்கள். மேலும் மேலும் ஆழ்ந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அச்சொல்லே அவனை அங்கே உந்தியது. அங்கு நின்றிருந்தவள் அவன் நன்கறிந்தவள். வட்டக்கரியமுகத்தில் ஒளிமிக்க கண்களும் இனிய புன்னகையும் கொண்டிருந்தாள். அவன் அவளை அணுகிச் செல்லச்செல்ல இனிய பெண்ணுருவாக சிறுத்து அங்கே நின்றாள்.
அவனைக் கண்டதும் நாணம் கொண்டு விழிப்பீலிகளை சரித்தாள். கன்னங்களில் சிவந்த கனிவுகள் தோன்றித்தோன்றி மறைந்தன. அவன் காலடிகளே மெல்லிய அசைவாக அவள் உடலில் தெரிந்தன. அவன் அணுகியபோது அவள் விழிதூக்கி அவனை நோக்கினாள். அவன் நடுங்கும் கைகளால் அவள் இடையை தொட்டான். அவள் முகம் தூக்க கூந்தல் சரிந்து சுருள்களாக இறங்கியது. சுரிகுழல்கற்றைகள் முகத்தைச்சூழ்ந்து அசைந்தன. கரும்பளிங்கின் ஒளிவரிகள் படர்ந்த தோள்கள் மூச்சில் எழுந்தமைந்தன. அவன் அவள் அணிந்த பொற்கவசத்தை நோக்கினான்.
அவன் நோக்கை உணர்ந்து “என்னை சகஸ்ரகவசி என்கிறார்கள்” என்றாள். “ஆயிரம் கவசங்களா?” என்றான். “ஆம், ஆயிரம் வாயில்களுக்கு உள்ளே.” அவன் அக்கவசத்தை தொட்டான். அது அனலால் ஆனதென்று உணர்ந்தான். அவன் கை வெம்மையில் உருகத்தொடங்கியது. உடலெங்கும் வலியில் நரம்புகள் தளிர்க்கொடிகள் போல பொசுங்கிச்சுருண்டன. அவன் அக்கவசத்தை நீக்கி உள்ளமைந்த அடுத்த கவசத்தை கண்டான். “ஒன்றென ஆகுக!” என்றாள். அவள் விழிகள் அறியாத்தொலைவில் மின்னும் விண்மீன்கள். “இருமையழிக!” என்று எங்கோ வானம் சொன்னது. “யார்?” என்று அவன் கேட்டான். “இரண்டென இருத்தலின் பெருந்துயர்” என்று அவனே சொல்லிக்கொண்டதுபோல பிறிதொரு ஓசையை கேட்டான்.
திகைப்புடன் “யார்?” என்று அவன் கேட்டான். அவள் விழிகள் கருமைகொண்டு அகன்றன. இளம் எருமையின் கண்கள் அவை என அவன் எண்ணியபோதே அவள் எருமைமுகம் கொண்டிருந்தாள். நீண்டு வளைந்த கொம்புகளும் தொங்கும் வாழைப்பூமடல் காதுகளும் கரியநுங்கு மூக்கும் நீலநாக்கு அமைந்த வெள்ளாரங்கல் பல்நிரையும் என அவன் முன் நின்றாள். அவள் எழுப்பிய உறுமலை கேட்டான். சூழவிரிந்திருந்த முகில்கள் அனைத்தும் ஒளியணைந்து கருமைகொண்டன. இறுதி ஒளியும் அணைந்தபின் அவள் விழிகளே எஞ்சியிருந்தன. அவை நெடுந்தொலைவில் விண்மீன்கள் என தெரிந்தன.
மிக அருகே எருமைத்தோலின் வெம்மை. எருமைத்தோலின் இளஞ்சேற்றுமணம். அதன் குளம்படிகளால் அவன் அறை அதிர்ந்துகொண்டிருந்தது. எருமையின் முக்காரியை மிக அணுக்கமாக கேட்டான். கையை ஓங்கி சேக்கைமேல் அறைந்து அவ்விசையாலேயே விழித்துக்கொண்டான். உடலுக்குள் அவன் வந்து அமைய மேலும் கணங்கள் தேவைப்பட்டன. அதுவரை இருளுக்குள் நின்று ததும்பி தவித்தான். எழுந்தோடி வாயிலை அடைந்து “கனகரை வரச்சொல்லுங்கள். அத்தனை அமைச்சர்களும் இப்போதே இங்கு வந்தாகவேண்டும்...” என்று ஆணையிட்டான்.
கனகர் வருவதற்குள் அவன் மூன்றுமுறை யவன மதுவை குடித்திருந்தான். கனகர் கம்பிளியைப் போர்த்தி உடல்குறுக்கி நடுங்கிக்கொண்டிருந்தார். “நம் தூதுப்பறவைகள் பாரதமெங்கும் செல்லட்டும். அனைத்து மருத்துவநிலைகளுக்கும் அனைத்து தவச்சாலைகளுக்கும் செய்தி சென்றாகவேண்டும். இந்நோயை அறிவித்து மருத்துவர்களை தேர்க!” கனகர் “பிறர் இச்செய்தியை அறியவேண்டியதில்லை என இதுகாறும் மந்தணமாகவே வைக்கப்பட்டிருந்தது” என்றார். “இனி பொறுப்பதில் பொருளில்லை. இன்றே செய்திகள் எழுக!” என்றான் கர்ணன்.
[ 8 ]
காசிமன்னன் சகதேவனின் மகளாகிய கலாவதி உளம் அமையா சிற்றிளமையில் ஒரு சொல்லை கேட்டாள். அச்சொல்லில் இருந்தே அவள் முளைத்தெழுந்தாள். மானுடரை ஆக்குபவை ஒற்றைச்சொற்களே. அவர்கள் அதை அறிவதுதான் அரிது. ஒவ்வொருவருக்கும் உரிய தெய்வம் ஊழை ஒற்றைச் சொல்லென ஆக்கி அவர்கள் செவியில் ஓதுகிறது. பின்பு புன்னகையுடன் சற்று விலகி நின்று நோக்கிக்கொண்டிருக்கிறது.
கைக்குழவியாகிய அவளை கோட்டைப்புறவளைப்பில் குறுங்காடு நடுவே இருந்த கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்ற செவிலி ஆடையை திருத்தும்பொருட்டு அவளை நிலத்தில் அமர்த்திவிட்டு மடிப்புகளை நீவியபடி அருகிருந்த சேடியிடம் சொல்லாடினாள். சொல் அவளை இழுத்துச்சென்றது. ஒரு தருணத்தில் குழந்தையை உணர்ந்து குனிந்தபோது அங்கே அது இருக்கவில்லை. அலறியபடி அவள் சுற்றிலும் நோக்கினாள். சூழ்ந்திருந்த புதர்களையும் சரிவுகளையும் துழாவினாள். குழந்தை மறைந்துவிட்டிருந்தது.
மகவின் அழகில் மகிழ்ந்த கந்தர்வர்களோ குழவியின் இளம் ஊனை விரும்பும் கூளிகளோ கொண்டுசென்றிருக்கலாம் என்றாள் முதுசெவிலி. “இன்றே குழவி கிடைக்காவிட்டால் என் சங்கறுத்து சாவேன்” என்று செவிலி அலறினாள். அவளைப் பிடித்து துணியால் கைகளைக் கட்டி தேரில் அமர்த்தி அரண்மனைக்கு கொண்டுசென்றனர். அரசப்படைகள் வந்து அக்குறுங்காட்டை இலையொன்றையும் புரட்டித்தேடின. தேடத்தேட பதற்றம் கூடிக்கூடி வந்தது. எனவே மாறுபட்டு எவரும் எண்ணமாலாகி ஒரேபோல மீண்டும் மீண்டும் தேடினர். சலித்து ஒரு கணத்தில் குழந்தை கிடைக்காதென்ற எண்ணத்தை அடைந்தனர். பின் அவ்வெண்ணத்துடன் தேடினர். குழந்தையைக் கண்டடைவது அரிதாகியது.
குழந்தை நிலத்தில் விடப்பட்டதுமே வாய்நீர் ஒழுக, கிண்கிணி ஒலிக்க, தண்டை மண்ணில் இழுபட, வளையணிந்த சிறுகைகளை மண்ணில் அறைந்து ஊன்றி சிரித்தும் சிதர்ச்சொல் உரைத்தும் சாலையின் ஓரமாக சென்றது. அக்குழவியை கிளைமேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த அன்னைப்பெருங்கரடி ஒன்று தொங்கி இறங்கி ஒற்றைக்கையில் தூக்கிக் கொண்டது. அவளை மரக்கிளைகளின் பாதையினூடாக கொண்டுசென்று தான் தங்கியிருந்த மரப்பொந்துக்குள் வைத்துக்கொண்டது.
அங்கே இரண்டு கரடிக்குழவிகள் முன்பே இருந்தன. வெண்ணிறமான புதிய குருளையை அவை கைகளால் தழுவியும் மென்மயிர் உடலால் பொதிந்தும் ஏற்றுக்கொண்டன. அவை அன்னையிடம் முட்டிமுட்டி பால்குடிப்பதைக் கண்ட கலாவதி அதைப்போல் தானும் உண்டாள். அன்னையின் பேருடலின் வெம்மையில் உடல் அணைத்து இரவுறங்கினாள். பகலொளி எழுந்ததும் கையூன்றி புதர்களுக்குள் நடைசென்ற அன்னையைத் தொடர்ந்த குருளைகளுடன் தானும் சென்றாள். மூன்றாம்நாள் அதை வேடன் ஒருவன் கண்டடைந்தான். சிறிய பாறை ஒன்றின் மேல் கைகளை சேர்த்தமைத்து விழிவிரிய நோக்கி ஒற்றைச் சொல்லை நெளியும் உதடுகளால் சொல்லிக்கொண்டிருந்தது குழந்தை.
வேடன் அது அரசமகள் என்பதை உணர்ந்துகொண்டான். அதை அள்ளித்தூக்கி அரண்மனைக்கு கொண்டுவந்தான். அவன் குழவியுடன் கோட்டைக்குள் நுழைந்ததுமே எதிர்வந்த காவலர்தலைவன் அவன் தலையை ஒரே வாள்மின்னலால் வீழ்த்தினான். ஏந்திய கையில் குழந்தையுடன் உடல் மட்டும் நின்று நடுங்கியது. அதை காவலர்தலைவன் பெற்றுக்கொண்டதும் அப்படியே மல்லாந்து விழுந்து மண்ணில் காலுதைத்து கைதவிக்கத் துடித்தது. குழவியைத் தொடர்ந்து வந்த அன்னைக்கரடி தொலைவில் நின்று இரு கைகளையும் அசைத்தபடி துடிக்கும் உடலை நோக்கியது. அவர்கள் சென்றபின் மெல்ல வந்து உறைந்து கிடந்த உடலையும் விழிவெறித்த தலையையும் முகர்ந்து பெருமூச்சுவிட்டது.
காவலர்தலைவன் குழந்தையுடன் அரண்மனைக்குச் சென்று அதை தேடிக்கண்டடைந்ததை சொன்னான். அரசி ஓடிவந்து குழந்தையை அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். அரசன் தன் மார்பிலணிந்த மணியாரத்தைக் கழற்றி காவலர்தலைவனுக்கு அணிவித்து அவனை படைநிலை உயர்த்தினான். குழவியை திருடிச்சென்ற வேடனின் உடலை இரு இடங்களிலாக தெற்குச்சுடுகாட்டில் எரித்தனர். அங்கே செவிலி முந்தையநாள் காலை தலைவெட்டப்பட்டு எரிந்திருந்தாள்.
ஒற்றைச்சொல் குழந்தையின் வாயிலிருந்ததை இருநாட்கள் கழித்தே செவிலியர் புரிந்துகொண்டனர். அது என்ன என்று செவியும் விழியும் கூர்ந்தனர். குழந்தை சிலநாட்களிலேயே பேசத்தொடங்கியது. அன்னை என்றும் அத்தன் என்றும் அன்னம் என்றும் அமுது என்றும் சொல்லத்தொடங்கியது. அச்சொற்கள் பெருகி மொழியாகின. அது எழுந்து சிற்றடி வைத்தது. கைவீசி ஓடியது. பாவாடை அணிந்து மலர்கொள்ளச்சென்றது. எண்ணும் எழுத்தும் இசையும் இயலும் கற்றது. ஆனால் அதன் நாவில் அச்சொல் இருந்தபடியே இருந்தது. அவள் துயில்கையில் அச்சொல் நாவிலிருப்பதை செவிலியர் கவலையுடன் நோக்கினர். நிமித்திகரும் மருத்துவரும் கவிஞரும் படிவரும்கூட அச்சொல்லை அறியமுடியவில்லை. அவளுக்கு காட்டுத்தெய்வம் ஒன்று அளித்தது அது என்றான் சூதன். “அதில் காட்டின் பொருள் உள்ளது. அதை அவளுக்குள் வாழும் காடு மட்டுமே அறியமுடியும்” என்றான்.
அவள் கன்னியென்றானாள். காசியின் பெருமை அறிந்து அவளை மணம்கொள்ளவந்தனர் ஆரியவர்த்த மன்னர். அவள் நாவிலுறையும் அச்சொல்லைப்பற்றி அறிந்ததும் அஞ்சி பின்வாங்கினர். “அறியாச்சொல் என்பது அருளாத தெய்வம் போன்றது. நம் கொடை கொள்ளாதது. அதை நம் இல்லத்தில் குடியேற்றலாகாது” என்றார்கள் அவர்களின் நிமித்திகர்கள். கலாவதி நாளுமென வயது கொண்டாள். கைமேல் நீலநரம்புகள் தடித்தன. கழுத்து தடித்து குரல் ஆழ்ந்தது. முன்னெற்றி மயிர் மேலேறியது. மூக்கைச்சுற்றி ஆழ்ந்த கோடுகள் எழுந்தன. கண்ணுக்குக் கீழே நிழல் படிந்தது.
“இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை அமைச்சரே. கன்னி ஒருத்தி கொள்வாரின்றி இருந்தாள் என்றால் நம் குடிக்கே பழியாகும். இனி முதலில் வந்து கோரும் அரசனுக்குரியவள் இவள்” என்றான் சகதேவன். “அரசே, அது ஊழுடன் ஆடுவதுபோல” என்ற அமைச்சரை நோக்கி “ஆம், ஆனால் நான் முடிவுசெய்துவிட்டேன்” என்றான் அரசன். ஊழென அன்றுமாலையே மதுராவின் யாதவர்குலத்து அரசன் தாசார்கனின் மணத்தூது வந்தது. கார்த்தவீரியனின் நூற்றெட்டு மைந்தர்களில் கடையன். பரசுராமரால் எரிக்கப்பட்ட நகரின் எஞ்சிய பகுதியை கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் அன்னை நகருக்கு வணிகம்செய்யவந்த கீழைநிலத்து வைசியப்பெண். கார்த்தவீரியன் அளித்த ஒற்றைக் கணையாழியொன்றே அவனை அரசக்குருதியென்று காட்டியது.
கார்த்தவீரியனின் நூறுமைந்தர்கள் முடிசூடும்பொருட்டு பொருதி நின்றிருந்தனர். ஷத்ரியகுடிப்பிறந்த யாதவர்கள் படைபலத்தால் முந்தினர். யாதவர்கள் குடித்துணைகொண்டிருந்தனர். அசுரகுடி மைந்தரோ தயங்காமை என்னும் பேராற்றல் கொண்டிருந்தனர். எனவே நாளுமொருவர் என கொல்லப்பட்டனர். எட்டாவது மைந்தன் கிருதபாலன் அசுரகுடிப்பிறந்த கிருதை என்னும் மனைவிக்கு கார்த்தவீரியனில் தோன்றியவன். அவனுடன் இணைந்துகொண்டான் தாசார்கன்.
வைசியனின் கணக்குகள் அசுரனை ஆற்றல் மிக்கவனாக்கின. பன்னிரு அசுரகுடிகளை ஒன்றிணைத்து தன் மூத்தோர் தங்கியிருந்த கார்தகம் என்னும் சிறுநகரைத் தாக்கி அழித்து அனைவரையும் கொன்றான் கிருதபாலன். எஞ்சியவர்கள் அவன் முன் அடிபணிந்தனர். அவர்களை திரட்டிச்சென்று காடுகளில் ஒளிந்த மிஞ்சியவர்களை கொன்றான். படைத்துணை தேடி அயல்நாடுகளுக்குச் சென்றவர்களை ஒற்றர்களை அனுப்பி கொன்றான். முடிசூடி அமர்ந்த கிருதபாலனுக்கு படைநடத்துதல் கற்ற எந்த இளையோனும் பகைவனே என்று சொல்கூட்டி அளித்தான் தாசார்கன். தன்னுடன் இணைந்த உடன்பிறந்தார் அனைவரையும் கிருதபாலன் கொன்றான்.
எதிர்பிறரின்றி மதுராவின் முடிசூடி பன்னிரு மனைவியரை மணந்து தன்னிலை அமைந்த கிருதபாலனை துயில்கையில் வாள் செலுத்திக் கொன்றான் தாசார்கன். பிறரில்லாத நிலையில் மதுராவின் மன்னனென்றானான். மூத்தவனின் பன்னிரு மனைவியரை தான் கொண்டான். சிதறிப்பரந்த யாதவகுலங்களில் எஞ்சியவற்றைத் திரட்டி தன்னை அரண்செய்துகொண்டான். மதுராவின் நெய்வணிகம் அவனை நிலைநிறுத்தியது. ஆனால் குடிப்பிறப்பற்றவன் என்பதனால் ஆரியவர்த்தத்தின் அவைகள் எதிலும் அவனுக்கு இடமிருக்கவில்லை. காசியின் இளவரசி கொள்வாரின்றி இருப்பதை அவன் அறிந்திருந்தான். அங்கிருந்த அவன் ஒற்றன் அமைச்சரிடம் அரசர் உரைத்த வஞ்சினத்தை அவனுக்கு அறிவித்தான். அன்றே மணத்தூதுடன் அவன் அமைச்சன் காசிநகர்புகுந்தான்.
கலாவதியை மணந்து மதுராவை வந்தணைந்த தாசார்கன் முதல் மணவிரவில் அவள் மேல் கையை வைத்தபோது அலறியபடி எழுந்தான். அவள் “என்ன? என்ன?” என்றாள். அவன் கையை உதறியபடி அலறிக்கொண்டே இருந்தான். மருத்துவரும் ஏவலரும் ஓடிவந்தனர். “அனல் பழுத்த இரும்பு போலிருக்கிறாள். என் கை வெந்துவிட்டது” என்று தாசார்கன் கூவினான். அவள் திகைத்து எழுந்து நின்றாள். அவன் கையில் அனல்பட்ட தடமேதும் தெரியவில்லை. அவன் உளமயல் என்றனர் மருத்துவர். மறுநாள் மீண்டும் அவளை தொட்டபோதும் கைசுட கதறி விலகினான். அவளைத் தொடுவதைப்பற்றி எண்ணும்போதே அவன் அஞ்சி கையை வீசினான். கனவுகளில் அனலுருவாக வந்து அவள் அவனைத் தழுவி உருக்கினாள். எலும்புக்கூடாக அவனை மஞ்சத்தில் விட்டுவிட்டு காற்றில் அணைந்து புகையானாள்.
தாசார்கனின் உடல் கருமைகொள்ளத் தொடங்கியது. முதலில் அது நீலப்பயலை என்றனர் மருத்துவர். பின்னர் தோல்படர்நோய் என்றனர். பின்னர் தொழுநோயோ என்றனர். அவன் உடல்குறுகிக்கொண்டே வந்தது. கருகி சுருங்கி எரிந்தணைந்த காட்டுமரமென அவன் ஆனான். அவனுக்குத் தொழுநோய் என்று நகரில் செய்திபரவியது. “குருதிப்பழி தொடர்ந்துசெல்லும்” என்றனர் ஊர்மக்கள். “அவன் உள்ளம் கொண்ட தொழுநோயை உடல் இன்றுதான் அறிகிறது” என்றனர் மூதன்னையர். முதலமைச்சரிடம் அரசை அளித்துவிட்டு அவன் தன் மந்தணச்சாலையிலேயே வாழலானான். அவன் செவிகளும் கண்களும் அணைந்தபடியே வந்தன. சுவையும் மணமும் மறைந்தன. இருத்தலெனும் உணர்வு மட்டுமே எஞ்ச அந்தச் சிறுகுடிலின் வாயிலில் அமர்ந்து ஒளி எழுந்த வானை நோக்கிக்கொண்டிருந்தான்.
கண்ணீருடன் கலாவதி தவமிருந்தாள். அவள் உடல் மெலிந்து ஒடுங்கி முதுமைகொண்டது. அவளைச் சூழ்ந்து எப்போதும் மதுராநகரின் பெண்களின் இளிவரல் இருந்தது. “கைபிடித்த கணம் முதல் கணவனை கருக்கியவள்” என்று அவள் செவிபட எவரோ சொல்வது எப்போதும் நிகழ்ந்தது.
மாமுனிவர் கர்க்கர் இமயமலையின் அடியில் அமைந்த தன் குருநிலையில் வாழ்வதை நிமித்திகர் வழி அறிந்து அவரைச்சென்று கண்டாள். அவள் கைகளைப் பற்றி கண்மூடிய கர்க்கர் “அரசி, இரண்டு பழிச்சொற்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள்” என்றார். “உங்கள் செவிலியும் வேடன் ஒருவனும் உதிர்த்த விழிநீர் உங்களை சூழ்ந்துள்ளது. ஆகவேதான் பெரும்பழி சூழ்ந்த இக்கீழ்மகனின் மனைவியென்றானீர்கள். துணைவனின் பழிக்கும் அறத்துக்கும் பங்கென்றே துணைவியரை நூல்கள் உரைக்கின்றன.”
அரசி கைகூப்பி “நான் செய்யவேண்டுவதென்ன?” என்றாள். “உங்கள் சொற்களின் நடுவே நுண்சொல் என ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த விதை முளைத்தெழுக. அதை ஒலியென்றாக்குக. அவ்வொலி மந்திரமாகுக. அது உங்களை மீட்டுக்கொண்டுவரும்” என்றார் கர்க்கர். அரசி தலைவணங்கி மீண்டாள். திரும்பும் வழியெல்லாம் கண்ணீருடன் அதையே எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சேடியரிடமும் தோழியரிடமும் வினவினாள். “என் இதழ்சொல்லும் அந்த நுண்சொல் என்ன? நோக்கி உரையுங்கள்” என்றாள். அவர்கள் “இத்தனை ஆண்டுகாலம் நோக்கியும் நாங்கள் அதை உணரக்கூடவில்லை அரசி. அது தெய்வம் உரைத்த சொல். அதை தெய்வமே வந்து உரைத்தாகவேண்டும்” என்றனர்.
கலாவதி தன் பிறசொற்களனைத்தையும் அவித்துக்கொண்டாள். இதழ்கள் சொல்மறந்தபோது உள்ளம் சொற்பெருக்காகியது. அதை நோக்கியபடி சொல்லடக்கி அமர்ந்திருந்தாள். உள்ளம் சொல்லிழந்தபோது கனவுகள் கூச்சலிட்டன. கனவுகள் ஒலியற்றவையாக ஆனபோது ஆழத்து இருள் முனகியது. இருள் இறுகியபோது அப்பாலிருந்த ஒளி ரீங்கரித்தது. அதுவும் அடங்கியபோது அவள் செவிகளும் ஓசைமறந்தன. ஓசையற்ற வெளியில் சென்று அவள் தன் சொல்லை கண்டடைந்தாள். “சிவாய!”
பெருங்களிப்புடன் அவள் திரும்பிவந்தாள். கைகளை விரித்து துள்ளி நடமிட்டு கூவினாள். அழுதும் சிரித்தும் தவித்தாள். அச்சொல்லையே மொழியென்று ஆக்கினாள். அச்சொல்லே எண்ணமும் கனவும் என்றானாள். அருந்தவத்தால் வாடிய அவள் உடல் ஒளிகொண்டது. முகம் இளமகள் என வண்ணம் பொலிந்தது. ஒருநாள் தன் தவத்தின் ஆழ்கனவில் அவள் நீலநீர் சுழித்த ஒரு சுனையை கண்டாள். அது ஓர் கனிந்த விழியெனத் தோன்றியது. அன்றே கிளம்பி கர்க்கரைச் சென்று கண்டாள். “அது இமயத்திலுள்ள காகதீர்த்தம் என்னும் பாபநாசினிச் சுனை. அங்கே சென்று உன் கணவனை நீராட்டுக! உன் கைகளால் அள்ளி விடப்படும் நீரால் அவன் தூய்மைகொள்வான்.”
அவள் கர்க்கர் துணைவர தாசார்கனுடன் இமயம் ஏறிச்சென்று காகதீர்த்தத்தை அடைந்தாள். கரியசுனை அவளை நோக்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் தாசார்கன் அஞ்சி நின்றுவிட்டான். “இறங்குக அரசே! இதுவே உங்கள் மீட்புக்கான வாயில்” என்றார் கர்க்கர். அவன் நடுங்கி கைகளைக் கூப்பி கண்ணீருடன் நின்றான். “செல்க!” என்றார் கர்க்கர். அரசி “வருக அரசே” என்று சொல்லி அவன் கையைப்பற்றியபடி நடந்தாள். “சிவாய! சிவாய!” என்று உச்சரித்தபடி நீரில் இறங்கினாள். நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. அவன் அலறியபடி கரையேற முயன்றான். அவள் அவனை இறுகப்பற்றிக்கொண்டாள்.
நீரில் அவனைப்பிடித்து அழுத்தி நீராட்டினாள். அரசனின் உடல் துடித்தபடியே இருந்தது. அவன் உடலின் கரியதோல்பரப்பின் வண்ணம் நீரில் அலைபாய்ந்தது. அவ்வலைகள் இரு சிறகுகளென்றாயின. காகமென உருக்கொண்டு நீரை உதறி மேலெழுந்தன. “கா” என்று கூவியபடி காகம் காற்றில் சிறகடித்து வட்டமிட்டது. மேலுமொரு காகம் எழுந்தது. அவன் உடலின் கருமை காகங்களென எழுந்து சுழன்று நீர்த்துளிகள் மின்னிச்சிதற கூச்சலிட்டது. அவள் நாவில் சிவச்சொல் மட்டுமே நின்றது. காகங்கள் “ஏன்? ஏன்?” என்று கூவியபடி சிறகுகள் உரச சுழற்காற்றில் சருகுகள் என பறந்து சுழித்தன.
“எழுக!” என்று கர்க்கர் சொன்னார். “அவன் கொண்ட பழிகளெல்லாம் இதோ காகங்களென எழுந்து அகன்றுள்ளன. இக்கருவறையிலிருந்து புதிதாகப்பிறந்து வருக! அறம் திகழும் கோல் கொண்டு மக்களை தந்தையென காத்தருள்க!” அவள் கைகூப்பியபடி நின்றாள். மேனி ஒளிமீண்ட தாசார்கன் கைகூப்பி அழுதபடி நின்றான். “வருக அரசே!” என்றார் கர்க்கர். அவன் அவள் கைகளைப்பற்றியபடி “இருளில் இருந்து என்னை மீட்ட நீயே என் தெய்வமாகுக! என் குடிநிரை உன்னை மூதன்னையென ஆலயம் அமைத்து வணங்குக!” என்றான்.
அவனுடன் கைகூப்பியபடி மேலேறிய கலாவதி திரும்பி அக்காகங்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு காகமாக எழுந்து பறந்து வானில் மறைந்தது. “ஏன்?” என்று அவை கூவி உதிர்த்துச் சென்ற சொற்கள் மட்டும் அங்கு எஞ்சின. இறுதிக்காகமும் சென்றபின் அவள் நீள்மூச்சுடன் ஒரு காட்சியை நினைவுகூர்ந்தாள். இளங்குழவியாக அவள் ஒரு பாறைமேல் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வந்தமர்ந்த கரியகாகம் “ஏன்?” என்றது. அச்சொல்லைத்தான் அவள் இதழ்கள் அன்று பெற்றுக்கொண்டன.
[ 9 ]
காகதீர்த்தத்தின் நீரை ஏழு வைதிகர்கள் பொற்குடங்களில் அள்ளி கொண்டுவந்தனர். அஸ்தினபுரியின் நகரெல்லையிலேயே கனகரும் பன்னிரண்டு வைதிகர்களும் காத்திருந்தனர். நீலப்புலரியில் வந்துசேர்ந்த அந்த அணிநிரை நகரின் இருண்டு சொட்டிக்கொண்டிருந்த கூரைகளுக்கு நடுவே காலடியோசைகள் ஒலிக்க மெல்ல நடந்தது.
திண்ணைகளிலும் முகப்புகளிலும் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அஸ்தினபுரியின் குடிகளும் வேலும் வில்லும் ஏந்தி நின்ற காவலரும் அக்காட்சியை அகப்புலன்களால் அறியவில்லை. அரண்மனையின் ஏவலரும் அமைச்சர்களில் பலரும்கூட நோக்கியும் உணரவில்லை. வைதிகர்கள் நீர்வழிந்த உடல் நடுங்க ஆழ்ந்த குரலில் வேதச்சொல்லுரைத்தபடி நடந்தனர்.
அரண்மனை முற்றத்திற்கே வந்து கர்ணன் அவர்களை எதிர்கொண்டான். கர்க்க முனிவரின் குருமரபில் வந்த தீப்தர் அந்த வைதிகர்குழுவை தலைமைகொண்டு நடத்திவந்தார். கர்ணன் அவரை வணங்கி முகமன் சொன்னான். காகதீர்த்தத்தில் அள்ளிய நீரை எங்கும் நிலம்தொடாமல் கொண்டுவந்த வைதிகர் அக்கலங்களை கைமாற்றிவிட்டு அமர்ந்து ஓய்வெடுத்தனர். காத்திருந்த வைதிகர் நீர்க்கலங்களுடன் மேற்குநோக்கி சென்றனர். கன்றுநிரையின் மணியோசைபோல வேதச்சொல் அவர்களிடமிருந்து எழுந்தது.
கோட்டையின் மேற்குவாயிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் இருந்தது கரிய கற்களால் ஆன கலிதேவனின் சிற்றாலயம். அவர்கள் இளஞ்சாரல்மழை பொழிந்த புதர்களின் நடுவே வெட்டி உருவாக்கப்பட்ட சேற்றுப்பாதையில் கால்பதிய நடந்தனர். கலியின் ஆலயத்துக்குமேலே உருளைப்பாறைகளால் ஆன சரிவில் வழிந்தோடிவந்து சிறிய அருவியாகக் கொட்டி ஓசையிட்டு இறங்கிச்சென்ற ஓடைவழியாகவே மேலே செல்லும் வழி அமைந்திருந்தது. முன்னரே அங்கு சென்றிருந்த அரசப்படையினர் பாறைகளுக்கருகே கற்களை அடுக்கி ஏறிச்செல்லும் வழியை ஒருக்கியிருந்தனர். அவற்றில் கால்வைத்து உடல்நடுங்க நிகர்நிலை நிறுத்தி மேலே சென்றனர் வைதிகர்.
பாறைகள் முழுக்க கரிய களிம்பென பாசி படர்ந்திருந்தது. காடெங்கும் இலைததும்பிச் சொட்டிக்கொண்டிருந்த ஆடி மழையின் ஓசை அவர்களைச் சூழ்ந்து அவர்கள் எழுப்பிய வேதச்சொல்லை மூடியது. இறுதிவிடாயுடன் நீர்விளிம்பருகே வந்து உயிர்துறந்த விலங்குகளின் வெள்ளெலும்புக்குவைகள் சேற்றில் புதைந்தும் பற்களென எழுந்து நகைப்பு காட்டியும் பரவியிருந்தன. அவற்றின் மட்காத தோல்மயிர்ப்பரப்புகள் மென்புல் என்றும் மெத்தைப்பாசி என்றும் கால்களுக்கு மாயம் காட்டின.
ஆலயத்தின் அருகே ஓடைசுழித்துச் சென்ற இடத்தில் கற்கள் அடுக்கி கரைவளைக்கப்பட்டு ஒரு சுனை உருவாக்கப்பட்டிருந்தது. அதில் கரியநீர் சுழன்றுசென்றது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு ஆமையோடுபோல கரிய அலைவளைவுகள் ஒளிமின்ன தெரிந்தது. நீரிலிறங்க கற்களைக் கொண்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியின் புதர்ப்பரப்பு வெட்டிச்சீரமைக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடிகள் கட்டப்பட்டு சித்தமாக்கப்பட்டிருந்தது.
படைக்கலங்களேந்திய வீரர்கள் மெலிந்த உடலும் தளர்ந்த தோள்களும் பழுத்த விழிகளுமாக காவல் நின்றனர். ஏழுபேர்கொண்ட இசைச்சூதர் பீளைபடிந்த கண்களுடனும் உலர்ந்த உதடுகளுடனும் இசைக்கலங்கள் ஏந்தி காத்திருந்தனர். நோயுற்ற அனைவருக்குமே எரியும் மது ஒன்றே மருந்தாக இருந்தது. அது அவர்களின் நரம்புகளை இழுபடச்செய்து எழுந்து நின்றிருக்கும் ஆற்றலை அளித்தது. ஆயினும் அவர்களின் தலைகள் அவ்வப்போது எடைகொண்டு அசைந்தன. கால்கள் நிலையழிந்து பிறர்தோளை பற்றிக்கொண்டனர். எவர் சித்தமும் அவ்விடத்தில் இருக்கவில்லை.
அமைதியில் ஒருவர் விழித்துக்கொண்டு “என்ன?” என்று முனகினார். நால்வர் குருதிபடிந்த விழிகளால் திரும்பி நோக்கினர். அஸ்தினபுரியிலிருந்து வந்திருந்த சூதர்குலத்துப் பூசகர் கரிய ஆடை அணிந்து தோல்கச்சை கட்டி கைகளில் கரியநூலால் ஆன கங்கணத்துடன் உள்ளே நீளிருளைக் கல்லாக விழிவரையப்பட்டு நீலமலர்மாலைகள் சூடி அமர்ந்திருந்த கலிதேவனுக்கு பூசனை செய்துகொண்டிருந்தார். கலிக்கு உகந்த பறவை ஊனும், கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரிவிளக்குகள் தளர்ந்து எரிந்தன.
ஓடைச்சரிவில் வேதம் ஒலிக்கக்கேட்டு அவர்கள் எழுந்து நின்று நோக்கினர். பூசகர் உள்ளே சென்று கெண்டிநீரை தெளித்து கைமணியை சுழற்றி ஒலித்து கலிக்குரிய போற்றுகைகளை சொல்லத் தொடங்கினார். வேதமொலிக்க வைதிகர் மேலேறிவந்தனர். வழிகாட்டிவந்த தீப்தர் கைகளைக்கூப்பியபடி கண்களைத்திறக்காமல் வந்து கலிமுன் நின்றார். அவரைத் தொடர்ந்த வைதிகர்களும் கண்களை மூடியபடி கைகளில் நீர்க்குடங்களுடன் நின்றனர்.
மங்கலச்சூதரை நோக்கி படைத்தலைவர் கைகாட்ட அவர்கள் இசையெழுப்பத் தொடங்கினர். அஞ்சிய ஆட்டுக்கூட்டம்போல முற்றிலும் இசைவழிந்து செவிபதைக்கும் வெற்றொலிகளின் பெருக்காக இருந்தது அந்த இசை. பூசகர் நுண்சொற்களை நாவெழாது உரைத்தபடி அக்குடங்களைப் பெற்றுக்கொண்டு கலியின் முன் நிரைத்தார். நீலக்குவளையால் நீரைத் தொட்டு கலிவடிவம் மேல் தெளித்து மும்முறை வணங்கியபின் அக்குடங்கள் மேலும் தெளித்தார்.
கைகூப்பியபின் திரும்பியபோது அவரும் நோயுற்றிருப்பது தெரிந்தது. காய்ச்சலால் இழுபட்டிருந்த அவரது முகத்தசைகள் உறுமும் சிம்மம்போன்ற தோற்றத்தை அவருக்களித்தன. ஆழ்குரலில் “உடையவர் நீர்கொண்டிருக்கிறார். உடனிருப்பார், அருளுண்டு” என்றார். கண்களை மூடியபடியே தீப்தர் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார். அந்நீர்க்குடங்களை திரும்ப எடுத்து வைதிகர்களிடம் அளித்தார் பூசகர்.
தாளம் விரைவுகொள்ளும்தோறும் அங்கு நின்றிருந்த அத்தனை வீரர்களும் உடலில் அதன் கட்டற்ற அசைவுகளை அடைந்தனர். கால்கள் மண்ணில் நிற்காது எழுந்தன. இசைத்தலின் விரைவில் முகம் இழுபட்டு வாய்விரிந்து இளிக்கத் தொடங்கினர் சூதர்கள். அவ்விளிப்பு வீரர்களிடமும் பரவியது. வைதிகர்கள் நிரையாகச் சென்று அச்சுனையில் காகதீர்த்தத்தின் நீரை ஊற்றினர். ஒழிந்த கலங்களை திரும்பக்கொண்டுவந்து கலியின் ஆலயத்தருகே அமைத்தனர்.
கைகளைக்கூப்பியபடி கீழே இழிந்திறங்கும் ஓடையை நோக்கி வைதிகர் நின்றனர். அவர்களுக்குமேல் மென்மழை பொழிந்துகொண்டிருந்தது. தங்கள் மேல் விழிகள் பதிந்திருக்கும் உணர்வை வைதிகர் அடைந்தனர். இளையவர் ஒருவர் விழிசுழற்றும்போது ஈரப்புதர்களுக்குள் இரு நரிக்கண்களைக் கண்டு திடுக்கிட்டார். அச்சம் விழிகளை கூர்மைகொள்ளச்செய்ய மேலும் மேலும் என விழிகளைக் கண்டார். “என்ன?” என்றார் மூத்த வைதிகர். “நரிகள்... நிறைய அமர்ந்திருக்கின்றன.”
அவர் நோக்கிவிட்டு தணிந்த குரலில் “அவை இங்கே தலைமுறைகளென வாழ்பவை. இது நீர் அருந்தவரும் விலங்குகளை வேட்டைகொள்வதற்கு உகந்த இடம்” என்றார். அனைவரும் நரிகளை நோக்கிவிட்டனர். தீப்தர் அவர்கள் நோக்குவதை உணர்ந்தாலும் திரும்பவில்லை. “கூரிய நோக்குகள்” என்றார் ஒருவர். “அவை பசிகொண்டிருக்கின்றன. பசி கூரியது” என்றார் இன்னொருவர்.
ஓடைக்குக் கீழே அரசர் எழுவதை அறிவிக்கும் வலம்புரிப் பணிலம் முழங்கியது. இசையின் அதிர்வுகளில் நின்றாடிக்கொண்டிருந்த சூதரும் வீரரும் அதை அறிந்ததாகவே தெரியவில்லை. அவர்களின் முகங்கள் ஊனுண்டு களத்தில் களிக்கும் கூளிகளின் முகங்களுக்குரிய இளிப்பை கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மேலேறி வந்தது. ஈரத்தில் துவண்டு கழியில் சுற்றி இறந்துகொண்டிருக்கும் பறவையின் இறுதிச்சிறகடிப்பு என அது நுனியதிர்ந்தது.
தொடர்ந்து வாளேந்திய ஏழுவீரர்கள் வந்தனர். கர்ணன் இரு படைவீரர்களால் தோள்தாங்கப்பட்டு நடந்துவந்தான். அவன் உடல் எலும்புநிரை தெரிய மெலிந்து, தோள்கள் சாம்பல்பூத்து, விழிகள் ஒளியிழந்து குழிகளுக்குள் ஆழ்ந்திருந்தன. கன்னம் ஒட்டியமையால் பல்நிரையுடன் வாய் உந்தியிருந்தது. அவன் மிகைஉயரத்தால் கூன் விழுந்திருந்தது. வீரர்கள் அவனை ஒவ்வொரு காலடிக்கும் முன்செலுத்தி உடலை தூக்கிவைத்தனர்.
அவனுக்குப் பின்னால் செங்கோலேந்திய ஒரு வீரன் வர தொடர்ந்து மங்கலப்பொருட்களுடன் ஏழு சூதரும் இசைக்கலங்களுடன் மூன்று சூதரும் வந்தனர். துரியோதனன் கைகளைக் கட்டியபடி இருபக்கமும் நோக்கி நடந்து வந்தான். அவன் வெண்பட்டாடைகள் மழையால் நனைந்து உடலுடன் ஒட்டி நடக்கும்போது இழுபட்டு கொப்புளங்களாகி அலைகளாயின. அவன் தன்னந்தனிமையில் நடப்பவன் போலிருந்தான். முகம் மலர்ந்திருக்க விழிகள் கனவுக்குள் விரிந்திருந்தன.
தீப்தர் அவனை நோக்கிக்கொண்டு கைகளைக் கூப்பியபடி நின்றார். “இத்தனை ஒளியா?” என வைதிகர்களில் எவரோ கேட்டனர். அது அவரது எண்ணமாக இருந்தது. அவன் உடல் கரியமணி என ஒளிவிட்டது. ஈரம் வழிந்த இலைப்பரப்புகளில் அவன் உடலின் ஒளி அலைபடிவதுபோல் தோன்றியது. காட்டுக்குள் மழை காற்றுடன் இணைந்து சுழன்றது.
அவர்கள் மேலே வந்ததும் பூசகர் சென்று எதிர்கொண்டு வரவேற்று ஆலயமுகப்பிற்கு கொண்டுவந்தார். கலிதேவனுக்கு நேர்நிற்றலாகாதென்பதனால் கர்ணன் இடப்பக்கமும் துரியோதனன் வலப்பக்கமும் நிற்கப் பணிக்கப்பட்டனர். துரியோதனனுக்குப் பின்னால் கனகர் நின்றார். கர்ணன் கைகளைக் கூப்பியபடி தளர்ந்து கீழே சரியும் விழிகளுடன் நின்றான். அவனை பின்னால் இருவர் தாங்கிப்பிடித்திருந்தனர். அவன் கழுத்துத் தசைகள் சொடுக்கி அதிர்ந்துகொண்டிருந்தன. கெண்டைக்கால்தசைகள் உருண்டிருந்தன. துரியோதனன் வணங்காமல் கைகளை மார்பில் கட்டியபடி நோக்கி நின்றான்.
பூசகர் மலரும் நீரும் காட்டி சுடராட்டு நிகழ்த்தினார். செய்கைகளால் பலிகொடையும் சொற்கொடையும் ஆற்றிக்கொண்டிருந்தபோது துரியோதனன் மெல்ல நகர்ந்து கலிக்கு நேர்முன்னால் வந்து நின்றான். பூசகர் திரும்பி கையசைத்து விலக்கமுயன்று பின் தவிர்த்தார். நீரும் மலரும் கொண்டு வந்தளித்தபோது கர்ணன் கைநீட்டி பெற்றுக்கொண்டான். துரியோதனன் சுருங்கிய புருவங்களுடன் சிலைவிழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.
தீப்தரின் ஆணைப்படி மூன்று வைதிகர்கள் வந்து பணிந்து கர்ணனையும் துரியோதனனையும் சுனையருகே கொண்டுசென்றனர். தீப்தர் அருகே வந்து “ஆடையை கழற்றுக அரசே!” என்றார். “ஏன்?” என்று அவன் அவரை அப்போதுதான் நோக்குபவன் போன்ற திகைப்புடன் கேட்டான். “கலிதீர்த்தம் இது. இமயத்தின் காகதீர்த்தம் கலந்தது. நகரைக் கவ்விய நோய் நீங்க நீங்கள் இதில் கழுவாய்நீராட்டு இயற்றவேண்டும்.”
அவன் அச்சொற்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்விழிகளின் வெறுமையை நோக்கியபின் அவர் தலையசைக்க அகம்படிக்காரர்கள் அவன் ஆடைகளை களைந்தனர். முழுவெற்றுடலுடன் அவன் நிற்க தீப்தர் அகம்படியினரிடம் “ஒரு சிறு அணிகூட இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் இருக்கவேண்டும்” என்றார். ஓர் அகம்படியன் அவன் கைகளில் இருந்த கணையாழி ஒன்றை கழற்றினான். குழலில் மலர்கள் எஞ்சியிருக்கின்றனவா என ஒருவன் நோக்கினான்.
அவர்கள் பணிந்ததும் தீப்தர் துரியோதனனின் கைகளைப்பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக அரசே!” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக!” என்றார் தீப்தர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக!” என்றார் தீப்தர். அவன் குழந்தைபோல் அதை செய்தான்.
நீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதுபோல. “மூழ்குக!” என்றார் தீப்தர். அவன் கண்மூடி நீரில் மூழ்கி எழுந்தான். சொட்டும் குழலுடன் நின்ற அவனை நோக்கி “பிறிதொருமுறை! பிறிதொருமுறை!” என்றார் தீப்தர். கிளைகளுக்குள் இருந்து “கா!” என்னும் கூச்சலுடன் வந்த காகம் ஒன்று நீருக்குள் பாய்ந்தது. மீன்கொத்தி போல மூழ்கி மறைந்தது. அவன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் தீப்தர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் வந்து நீரை அறைந்து விழுந்து மூழ்கின.
படைவீரர்கள் வியப்பொலியும் அச்சக்கூச்சலுமாக வந்து குழுமினர். நான்கு பக்கமும் காட்டுக்குள்ளிருந்து காகங்கள் வந்து நீருக்குள் சென்றபடியே இருந்தன. நீரை அவை அறைந்து சிதறடித்து கற்களைப்போல மூழ்கி கருநிழலாக மாறி ஆழ்ந்து அங்கிருந்த இருள்கலங்கலுக்குள் மறைந்தன.
நீர் மேலும் மேலும் கருமைகொண்டது. “வைதிகரே, போதும்!” என்றான் கர்ணன். “மூன்றாம் முறை! மூன்றாம் முறை!” என்றார் தீப்தர். மீண்டும் துரியோதனன் மூழ்கியபோது நீரே தெரியாதபடி காகங்கள் வந்து விழுந்தன. உடல் பேரெடை கொண்டதுபோல துரியோதனன் தள்ளாடி நீருக்குள்ளேயே விழுந்தான். “அரசே, கரைசேருங்கள்... வந்துவிடுங்கள்” என்று கர்ணன் கூவினான். துரியோதனன் நடுங்கியும் தத்தளித்தும் காலெடுத்துவைக்க காகங்கள் அவனை அறைந்து அறைந்து நீரிலேயே மூழ்கடித்தன. அவனால் ஏறமுடியவில்லை.
“அவரால் அதைக் கடந்து வரமுடியவில்லை” என்றார் தீப்தர். “அவர் நோய்கொண்டிருக்கிறார்!” என்று கனகர் கூவினார். துரியோதனன் உடல் ஒளியிழந்து கருமைகொண்டு தசைகள் தளர்ந்து தொய்ந்தது. அவன் தோள்களும் கால்களும் நடுங்கின. உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. கண்ணிமைகள் தடித்துச் சரிந்தன. “நோய் கொள்கிறார். கணம் தோறும் நோய் முதிர்கிறது” என்றார் வைதிகர் ஒருவர். “ஆசிரியரே, அவர் இதைக் கடந்து மீளமுடியாது.”
உடல்குறுகி துரியோதனன் நீருக்குள்ளேயே விழுந்தான். இருமுறை எழமுயன்று மீண்டும் விழுந்து நீரில் முழ்கினான். அவனை சரியாகப் பார்க்கமுடியாதபடி சென்று விழும் காகக்கூட்டங்களின் சிறகுகள் மறைத்தன. கர்ணன் தன் ஆடைகளை களையத்தொடங்கினான். அதைக் கண்ட தீப்தர் “அரசே, வேண்டாம்... இது மீளமுடியாத ஆழம்” என்று கூவி கைநீட்டி தடுக்கவந்தார். ஆடைகளைக் கழற்றி வீசி அணிகளைப் பிடுங்கி உதிர்த்தபடி நீரை நோக்கிச்சென்ற கர்ணன் தள்ளாடி விழப்போனான். பிடிக்கவந்த ஒருவனை உந்திவிட்டு “அரசே! அரசே!” என வைதிகர்கள் கூவுவதை புறக்கணித்து நீருக்குள் பாய்ந்தான்.
நீரிலிறங்கியதுமே அவன் ஆற்றல்கொள்ளத் தொடங்கினான். முதல்முறை மூழ்கியதுமே அவன் விழிகள் எழுந்தன. மும்முறை மூழ்கி எழுந்ததும் பெருந்தோள்களும் நிமிர்வும் கொண்டவன் ஆனான். துரியோதனனை தன் தோள்களில் தூக்கிக் கொண்டு கரைநோக்கி நடந்து வந்தான். சேற்றுப்பரப்பில் அவனை படுக்கவைத்தான். அவனுக்குப் பின்னால் சுனைக்குள் புகுந்த காகங்கள் நிழல்களாக உள்ளே அசைந்து பின் மறைந்தன. அலையடங்கி அது அமைதிகொண்டது.
துரியோதனனின் அருகே வந்து குனிந்து தீப்தர் அவன் முகத்தை நோக்கினார். “அரசர் மீண்டுவிடுவார்... இனி சிலநாட்களில் முன்பென ஆகிவிடுவார்” என்றார். விழிதூக்கி கர்ணனை நோக்கி “அரசே, தாங்கள்...” என்றார். கர்ணன் ஆழ்ந்த குரலில் “அரசரை அரண்மனைக்கு கொண்டுசெல்வோம்” என்றான். இருவீரர் வந்து துரியோதனனை தூக்கிக் கொண்டனர்.
மழைநின்றுவிட்டதை அவர்கள் அறிந்தனர். இலைகள் சொட்டி ஓய்ந்துகொண்டிருந்தன. இனியகாற்றுகளால் இறுதித்துளிகளும் உதிர்க்கப்பட்டன. வேதம் முழங்க வைதிகர் முன் செல்ல அவர்கள் ஒருசொல்லும் பேசாமல் நடந்து இறங்கினர். கோட்டையை அடைவதற்குள்ளாகவே அவர்களில் பலர் நோய்நீங்கி ஆற்றல் பெற்றுவிட்டிருந்தனர்.
அஸ்தினபுரியில் மழை நின்றமையை உணர்ந்த மக்கள் எழுப்பிய ஓசை காலைப்பறவைகளின் குரலென ஒலித்துக்கொண்டிருந்தது. கறையென வானில் படிந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பாலிருந்து சூரியன் எழத்தொடங்கினான். கோட்டைப்பரப்பு சிலிர்த்தது. குறுங்காட்டின் அனைத்து இலைகளும் ஒளிகொண்டன. ததும்பிய நீர்த்துளிகள் சுடர் பெற்றன.
பகுதி ஐந்து : ஆவணி
[ 1 ]
ஆடிமழை முடிந்து ஆவணியின் முதல்நாள் காலையில் இந்திரப்பிரஸ்த நகரின் செண்டு வெளியில் இளைய யாதவரும் அர்ஜுனனும் படைக்கலப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்பால் தோல்கூரைப்பந்தலில் பலராமரும் யுதிஷ்டிரரும் அமர்ந்து அதை நோக்கினர். சாத்யகி இளைய யாதவர் அருகே நின்று படைக்கலத்துணை புரிந்தான். அர்ஜுனன் அருகே நகுலன் ஆவத்துணைக்கென நின்றிருந்தான்.
எட்டும் தொலைவில் மென்மரத்தால் செய்து தொங்கவிடப்பட்டு காற்றிலாடிய ஏழு நுண்ணிலக்குகளை அர்ஜுனன் தன் அம்புகளால் சிதறடித்து வில்தாழ்த்தினான். ஏவலன் அவன் வியர்வையை ஒற்றினான். அதே இலக்குகள் ஏழு அருகே காத்திருந்தன. இளைய யாதவரின் கையிலிருந்து எழுந்த படையாழி மிதந்து சுழன்று சென்று அவ்விலக்குகளை ஒருசேரப் பிளந்தபின் காலைவெயிலை சிதறடித்தபடி அவர் கையில் வந்து அமர்ந்தது.
“மேலும்...” என்றான் அர்ஜுனன். ஏவலர் ஓடி இலக்குகளை அமைத்தனர். பலராமர் உடலை நிமிர்த்தி அமர்ந்து உரக்க “இளையவனே, நேற்றைய இலக்கு எது?” என்றார். அர்ஜுனன் திரும்பி “இப்போது சிதறடித்தது... இது இன்று நான் எய்துவது” என்றான். பலராமர் கைகளைத் தட்டி சிரித்து “நன்று இளையோனே, இப்படியே சென்றால் நீ ஒருநாள் விண்மீன்களை எய்து வீழ்த்துவாய்” என்றார்.
யுதிஷ்டிரர் “ஒவ்வொரு நாளும் இலக்குகளை நீட்டி நீட்டிச் செல்வது குறித்து எனக்கு மாறுபாடு உண்டு மூத்த யாதவரே. அதை இளையோனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்றார். “எப்படியென்றாலும் இதற்கோர் எல்லை உள்ளது. தோளின் எல்லை. வில்லின் எல்லை. அம்பிற்கும் காற்றுக்குமான உறவின் எல்லை. உன்னுவது எதுவானாலும் அது பருப்பொருளில் வெளிப்பட்டாகவேண்டும் என்னும் இரக்கமற்ற நெறியால் கட்டுண்டிருக்கிறது இப்புடவி.”
பலராமர் புரியாமல் தலையசைக்க யுதிஷ்டிரர் தொடர்ந்தார் "இவன் இலக்குகளை அகற்றியபடியே செல்கிறான். அகன்றுசெல்லும் அப்பயணத்தில் தன் இயலாமையை அல்லவா நேருக்குநேர் சந்திப்பான். அந்தத் தோல்வியை நோக்கி ஏன் அத்தனை விரைந்துசெல்லவேண்டும்? இங்கு அவனால் இயல்வதையே முழுமையாகச் செய்து நிறைவடையலாமே?”
பலராமர் சகதேவனை நோக்கி “இளையோனே, நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். சகதேவன் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. நூல்கள் சொல்வதை சொல்கிறேன்” என்றான். “சொல்” என்றார் பலராமர். “மூத்தவரே, எய்தி எய்திச் சென்றடையும் அவ்வெல்லையில் மேலும் விரியும் முடிவிலியாக வந்து நிற்பதே பிரம்மம் என்பதே வேதாந்தம். இதம் இதம் என்று சொல்லிச்செல்லும் சொல் ஒழிகையில் எஞ்சும் அது. ஒழிந்த ஆவநாழியில் எஞ்சும் வானம்...”
பலராமர் ’பார்த்தாயா?’ என்பதுபோல யுதிஷ்டிரரை பார்த்தார். யுதிஷ்டிரர் தலையை அசைத்து “வெறும் ஏமாற்றம். தன்னிரக்கம். அதன் விளைவான அடங்காச்சினம்... அது ஒன்றே எஞ்சுவது. ஐயமே இல்லை” என்றார். “தொட்டெண்ணிக் கடந்துசெல்வதன் பேருவகையை எல்லைக்குள் சுற்றிவருவதனூடாக அடையமுடியாது தருமா. அதை வில்லெடுத்தவனே உணரமுடியும்” என்றார் பலராமர்.
அந்த நேரடிப்பேச்சு யுதிஷ்டிரரை சோர்வுறச்செய்தது. “படைக்கலம் கொண்டு களமாடுபவர்களுக்கு ஓர் எண்ணமுள்ளது, படைக்கலம் கொண்டால் மட்டுமே களத்தை புரிந்து கொள்ளமுடியும் என்று. களம் என்பது நூறாயிரம் கணக்குகளின் வெளி. அதை விலகிநின்று நோக்குபவனால் மேலும் நுணுக்கமாக சொல்லமுடியும்.”
பலராமர் சிரித்து “ஆம், சொல்லமுடியும். ஆனால் சொல்வது சரியா என்று நோக்கியறியவே இயலாது” என்றார். “ஆகவே அவை எப்போதும் வெற்றுச் சொற்கள். சொல்லப்படுபவர் தன் அறிவுக்கூரை வெளிப்படுத்தியிருப்பதனால் அவரது ஆணவத்தின் துளி அது. அதைக்காக்க அவர் உண்மையை அதன் முன் நூறுமுறை வெட்டிப் படையலிடவும் தயங்கமாட்டார்” என்றபின் சகதேவனை நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றார். அவன் புன்னகைசெய்தான்.
யுதிஷ்டிரர் “நான் இதற்குமேல் சொல்ல விரும்பவில்லை...” என்றார். பலராமர் அவர் தோளை ஓங்கி அறைந்து “நீ முதிர்ந்து களைத்தவனைப்போல பேசுகிறாய். நீ அரசன். நீ பேசவேண்டியது ஷாத்ரகுணத்தைப்பற்றி. வென்று மேற்செல்லுதல். நில்லாதிருத்தல். அடைதலும் அளித்தலுமே அரசர்களுக்குரிய நெறி. அளிப்பது மேலும் அடைவதன்பொருட்டே” என்றார்.
“ஆம்” என்றார் யுதிஷ்டிரர் பெருமூச்சுடன். “ஆனால் நான் இந்த நில்லாப்புரவிமேல் திகைத்து அமர்ந்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தம் என்னை அச்சுறுத்துகிறது.” பலராமர் “நீ பாரதவர்ஷத்தையே ஆள்வாய் என்கின்றன நிமித்திகநூல்கள். இந்நகரத்துக்கே அஞ்சுகிறாயா?” என்றார். யுதிஷ்டிரர் மேலும் பெருமூச்சுவிட்டு “ஆம், ஆளக்கூடும். ஆனால் எதற்கு? எனக்கு ஒன்றும்புரியவில்லை” என்றார்.
அர்ஜுனனின் ஏழு அம்புகளும் குறிபிழைத்தன. அவன் தன் வில்லை தொடையில் அடித்து சலிப்புடன் தலையசைத்தான். இளைய யாதவர் “வெல்லமுடியாதென்றே எண்ணிவிட்டாயா?” என்றார். “என் விழிகளுக்கும் தோளுக்கும் அப்பால் உள்ளன அவை” என்றான். “உன் நெஞ்சு சென்று அவற்றை தொடுகிறதல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அவற்றை நான் உள்ளத்தால் வென்றுவிட்டேன்.”
இளைய யாதவர் “அப்படியென்றால் அம்புகளும் அங்கே செல்லும். உன் தோளின் விழைவை அவை அறிந்தால் மட்டும் போதும்” என்றார். அர்ஜுனன் அம்பை எடுத்து வில்லில் தொடுத்து விழிகூர்ந்தான். “தசைகளை இழுப்பதும் விரிப்பதும் நம் விழைவே. அவை தங்களியல்பால் தளர்ந்தும் அமைந்தும் இருக்கவே முயல்கின்றன” என்றார் இளைய யாதவர். “முழுவிழைவையும் தசைகள் அறிக! தசைகள் நாணேறுக!”
அம்பு சென்று இலக்கை தைத்தது. நகுலனும் சகதேவனும் மகிழ்வுடன் கூச்சலிட்டனர். அவர்களை அறியாதவனாக அர்ஜுனன் இரண்டாவது அம்பை செலுத்தினான். அதுவும் சென்று தைத்தது. மூன்றாவது அம்பும் தைத்ததும் அவன் திரும்பி இளைய யாதவரை நோக்கி புன்னகைத்தான். அதற்கடுத்த அம்பு பிழைத்தது. இளைய யாதவர் புன்னகைசெய்தார்.
முகம் சிவந்த அர்ஜுனன் நாணை இழுத்து அம்பை செலுத்தினான். அது மிக விலகிச்சென்றது. அவன் சலிப்புடன் வில்தாழ்த்தினான். “இன்றைய அறைகூவல். இதை நீ கடந்துசெல்லவேண்டும்” என்றபடி இளைய யாதவர் பந்தல் நோக்கி திரும்பினார். “ஒவ்வொருநாளும் ஓர் அறைகூவலுடன் எழுபவனே தன் கலையை கடந்துசெல்கிறான்.” அர்ஜுனன் அந்த இலக்குகளை மீசையை நீவியபடி நோக்கி நின்றான்.
நகுலன் “கலையை கடந்துசெல்வதா?” என்றான். இளைய யாதவர் திரும்பி “எந்தக்கலையும் ஒரு கருவியே. இவ்வில்லை நீங்கள் ஏந்திய தொடக்கநாட்களில் இதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? இன்று பயின்று பயின்று வில்லை கடந்து விட்டீர்கள். அவ்வாறே வில்வித்தையையும் கடக்க முடியும்” என்றார். நகுலன் “எப்படி?"என்றபடி அவர் அருகே வந்தான்.
திரும்பிப்பாராமலேயே இளைய யாதவர் தன் படையாழியை ஏவ அது சென்று ஏழு இலக்குகளையும் சீவிவிட்டு திரும்பி வந்தது. அர்ஜுனன் அதை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். “இளைய யாதவரே, இலக்குகளும் அவ்வாறு இல்லாமலாகுமா?” என்றான் நகுலன். “கலையின் மறுஎல்லை என்பது அதுதான்” என்றார் இளைய யாதவர்.
அவர்கள் வியர்வையைத் துடைத்தபடி பந்தல் நோக்கி சென்றனர். அர்ஜுனன் “நான் எய்யும் அம்புகளுக்கு என் தோள்விசையை அளிக்கிறேன். உங்கள் படையாழி எவ்விசையால் திரும்பி வருகிறது?” என்றான். இளைய யாதவர் “அதன் அமைப்பு அத்தகையது. தான் அடையும் விசையில் நேர்பாதியை திரும்பி வருவதற்கு அது பயன்படுத்திக்கொள்கிறது” என்றார்.
அர்ஜுனன் “யாதவரே, அத்தனை விசையை தாங்கள் அதற்கு அளிக்கிறீர்களா என்ன?” என்றான். “இல்லை, அது கிளம்புவதற்குரிய விசையை மட்டுமே நான் அளிக்கிறேன். காற்றிலிருந்தும் புவியிலிருந்தும் தன் விசைகளை அதுவே திரட்டிக்கொள்கிறது. தன் அமைப்பைக்கொண்டு அவ்விசைகளை ஆள்கிறது” என்றார் இளைய யாதவர்.
“படையாழி கற்பதற்கு கடினமானது என்கிறார்கள்” என்று நகுலன் சொன்னான். “இதை போரில் தாங்களன்றி எவரும் கையாள்வதில்லை." “ஆம், இது படைக்கலமே அல்ல. களிப்பொருள். யாதவர் கன்றுமேய்க்கையில் கைகொள்வது. விளையாடுபவர்களுக்குரியது. எழுந்து நிற்கும் வயதில் இதை பயிலவேண்டும் என்பார்கள். நாவில் சொல்முதிர்வதற்குள்ளாகவே இக்கருவி கையகப்பட்டாகவேண்டும். விழியும் செவியும் நாவும் மூக்கும் தோலும் என இதுவும் நம்முடன் வளர்ந்து ஒன்றாகிவிடவேண்டும்.”
“அவ்வாறு ஆனபின் அது படைக்கருவியே அல்ல. பேசும்போது நாவு வளைவதையெல்லாம் நாம் அறிவதேயில்லை” என்றபடி இளைய யாதவர் அமர்ந்தார். சகதேவன் அதை கையில் வாங்கி “எப்போதும் என்னை அச்சுறுத்துகிறது இதன் நிலையின்மை. இதை கையில் வைத்திருக்கவே முடியவில்லை” என்றான். “அதன் விழைவு உருவாக்கும் நிலையின்மை அது. அது எழுந்து பறக்கவிழைகிறது.” சகதேவன் “ஆம், இப்போது நானும் இதையே எண்ணினேன். கையில் ஒரு செம்பருந்தை ஏந்தியதுபோலிருக்கிறது” என்றான்.
அவர்கள் அமர்ந்துகொண்டதும் ஏவலர்கள் வியர்வை ஒற்றி குடிக்க குளிர்நீர் அளித்தனர். வியர்வையை ஊதியபடி “ஆடிமாதத்தில் பெய்த மழையெல்லாம் ஆவியென்றாகி நகரை மூடியிருக்கிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அரண்மனைக்குள் குளிர்ந்த பளிங்குஅறைக்குள் கூட அமரமுடியவில்லை. சோலைகளில் மரநிழல்களில் அமர்ந்தால் மட்டுமே உடல் ஆறுதல்கொள்கிறது.”
பலராமர் “வெயிலும் குளிரும் இனியவை” என்றார். யுதிஷ்டிரர் அவரை நோக்கிவிட்டு “இளைய யாதவரே, தங்களிடம் சொல்சூழவேண்டுமென்று காத்திருந்தேன். மகதத்திலிருந்து வந்த ஒற்றுச்செய்திகளனைத்தையும் தொகுத்துவிட்டேன். நேற்றிரவெல்லாம் அதைத்தான் செய்துகொண்டிருந்தேன்” என்றார். “உண்மையில் நான் நேற்று துயில்கொள்கையில் முதற்புள் ஒலி எழுந்துவிட்டது.”
அர்ஜுனன் கைகளை விரித்து உடலை நிமிர்த்திவிட்டு எழுந்து வில்லைநோக்கி சென்றான். இளைய யாதவர் அவனை திரும்பி நோக்கினார். “நான் அரசு சூழ்ந்தலைப்பற்றி பேசினாலே எழுந்து சென்றுவிடுகிறான். இவன் மட்டுமல்ல, இவன் மூத்தவனும்தான்.” இளைய யாதவர் பலராமரை நோக்கி நகைத்து “பேசத்தொடங்குங்கள், அவரும் செல்வார்” என்றார்.
“ஆம், அரசு சூழ்தலில் எனக்கென்ன வேலை?” என்று பலராமரும் எழுந்து நின்றார். கைகளை ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்து “சற்று இரும்பை வளைத்துவிட்டு வருகிறேன். இன்று ஒரு சிறந்த உண்டாட்டு உண்டு என்றனர் அடுமனையாளர்" என்றார். யுதிஷ்டிரர் இளைய யாதவரை நோக்கி வெளிறிய புன்னகையை அளித்தார். “சொல்லுங்கள் மூத்தவரே, தங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்” என்றார் இளைய யாதவர்.
யுதிஷ்டிரர் உளக்குவிப்புடன் முன்னகர்ந்து “ஜராசந்தன் நம்முடன் போருக்கு சித்தமாகிவருகிறான் என்பதில் ஐயமில்லை” என்றார். “என்றாகிலும் நம்முடன் போரிலிறங்கவேண்டுமென அவன் அறிவான். இக்காட்டின் சிம்மம் ஏதென்று முடிவுசெய்தாகவேண்டும்.” இளைய யாதவர் “ஆம்” என்றார்.
“அவனுடைய முதல்துணை என இங்கே அமைச்சர்கள் சுட்டியது துரியோதனனை. நானும் அதை ஐயுற்றேன். ஆனால் அங்கே விதுரர் உள்ளார் என்னும் நம்பிக்கையையும் கொண்டிருந்தேன். அதுவே நிகழ்ந்தது. படைத்துணைக்கான அழைப்பை விதுரர் தவிர்த்துவிட்டார். ஆகவே அஸ்தினபுரி இப்போது இக்களத்தில் இல்லை.”
இளைய யாதவர் "அவர்கள் தவிர்த்தமையால் களத்தில் இல்லை என்று பொருளா என்ன?” என்றார். “அங்கே சகுனியும் கணிகரும் இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை." யுதிஷ்டிரர் “ஆம், நான் அதையும் எண்ணினேன். அங்கே பரவிய மாயநோய் மறைந்துவிட்டது. அஸ்தினபுரியின் கோட்டைகளும் மாளிகைகளும் மீண்டு எழுந்துவிட்டன. தாம்ரலிப்தியிலிருந்து உயர்தரச் சுண்ணம் நூறுகலங்களில் அஸ்தினபுரிக்கு சென்றுள்ளது. நகரம் ஒவ்வொரு நாளும் ஒளிகொண்டுவருகிறது” என்றார்.
“ஆனால் அஸ்தினபுரி இப்போது படையெழும் நிலையில் இல்லை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே இப்போரில் ஜராசந்தனின் முதன்மை நட்பு சிசுபாலன்தான்.” இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம்” என்றார். “மகதத்திடம் படையிணைவுக்கான ஒப்புகைச்சாத்தை சேதிநாடு செய்துவிட்டது. இன்னும் சிலநாட்களில் சேதியின் பன்னிரு படைப்பிரிவுகள் மகதம்நோக்கி செல்லும்.”
யுதிஷ்டிரர் தாடியை மெல்ல வருடியபடி கவலையுடன் “இளைய யாதவரே, துவாரகையின் வளர்ச்சி கண்டு அஞ்சிய அனைவரும் இப்போது ஜராசந்தனுடன் இணைந்துள்ளனர். கரூசநாட்டின் வக்ரதந்தன், இமயமலைநாடாகிய ஹிமகூடத்தின் மேகவாகனன், யவனனாகிய காலயவனன் ஆகியோர் முன்னரே தங்கள் படைகளில் ஒரு பகுதியை மகதத்திற்கு அனுப்பிவிட்டனர். பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனின் கீழெல்லைப் படைகளும் மகதத்துடன் இணைந்தே செயல்பட்டுவருகின்றன. புண்டரத்தின் வாசுதேவன் ஜராசந்தன் பக்கமே செல்வான். அவனுக்கு உங்களிடமிருக்கும் காழ்ப்பு நாம் அறிந்தது” என்றார்.
“தொல்குடி யாதவர்களிலேயே பன்னிரு போஜகுலங்களின் தலைவனாகிய பீஷ்மகன் ஜராசந்தனுக்குத்தான் ஆதரவளிக்கப்போவதாக செய்திவந்திருக்கிறது. விதர்ப்பநாட்டு ருக்மியும் ஜராசந்தனுடன் இணைவான்.”
“எதிரிகளை பட்டியலிட்டுவிட்டீர்கள்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் அதை பாராட்டாக எடுத்துக்கொண்டு “ஆம், வங்கம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறதென்பது தெளிவாக இல்லை. கலிங்கம் இப்போது இருபக்கமும் சாராமல் நிற்கவே விழையும்” என்றார்.
“கங்கை வணிகம் முற்றிலும் மகதத்தின் கையிலிருக்கிறது. வல்லமைவாய்ந்த பீதர்நாட்டுப் படைக்கலங்களையும் எரிபொருள்களையும் ஜராசந்தன் சேர்த்திருக்கிறான். போரில் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்ற விழைவுடன் முப்பதாண்டு காலமாக காத்திருக்கிறான்” என்று யுதிஷ்டிரர் . "தங்கள் மேல் அவன் கொண்டுள்ள வஞ்சம் பாரதவர்ஷம் அறிந்தது. ஆகவே நம் இருநாடுகளின் எதிரிகளும் அவன் எழுந்து வருவதையே விரும்புவார்கள்.”
“ஜராசந்தனிடம் இருக்கும் முதன்மையான ஆற்றல் அவன் அசுரர்களுக்கு உகந்தவன் என்பதிலிருந்து தொடங்குகிறது. காசிநாட்டரசனின் மகள்களின் குருதியில் வந்தவன். ஆனால் ஜராசந்தன் என்னும் பெயரே அவனை அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உகந்தவனாக ஆக்குகிறது. மலைநாட்டினராகிய உசிநாரர்களும் திரிகர்த்தர்களும் அவனுடன் சேர்ந்தே நிலைகொள்வார்கள். தென்னகத்து ஆசுரநாட்டு சிறுகுடிமன்னர்கள் நூற்றெண்மர் ஏகலவ்யனின் தலைமையில் அவன் படைகளில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றல்மிக்க வில்லவர்கள். நீரில் ஆடும் இலக்குகளை தொடுத்தவீழ்த்துவதில் பயிற்சிகொண்டவர்கள்.”
சகதேவனை கவலையால் தளர்ந்த விழிகளுடன் நோக்கியபின் யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “நம்மை ஆதரிக்கவேண்டியவர்கள் ஷத்ரியர்கள். ஆனால் அவர்களின் பார்வையில் நாம் யாதவக்குருதி கொண்டவர்கள். கௌந்தேயர்கள் என்னும் அடையாளத்திலிருந்து இன்னும் ஒருதலைமுறைக்காலம் நாங்கள் விடுபடமுடியாது. உண்மையில் நாமும் ஜராசந்தனும் போரிட்டு அழிவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.”
“நம் தரப்பில் எவருள்ளனர்?” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் நிமிர்ந்து நோக்கி “நமக்கு முதன்மை ஆதரவென்பது பாஞ்சாலம். ஆனால் இருமுறை ஜராசந்தனின் படைகளுடன் மோதி தோற்றோடியிருக்கின்றன துருபதரின் படைகள். அவர்கள் அவனை அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மணம்கொண்டவகையில் நமக்கு மத்ரம் உதவும். அவ்வளவுதான். நமக்கு ஆதரவென எவரும் இல்லை. இதுவே உண்மை."
“யாதவப்படைகளை திரட்டமுடியும். ஆனால் துவாரகையை கைவிடாமல் நம்மால் அத்தனைபெரிய படையை இங்கு கொண்டுவர முடியாது. கூர்ஜரனும் சைந்தவனும் துவாரகை வலுவிழப்பதற்காக அங்கே காத்திருக்கிறார்கள். இங்கே மதுராவைப்பிடிக்க போஜனாகிய பீஷ்மகன் நோற்றிருக்கிறான். நாம் கைகளில் பளிங்குக்கலங்களுடன் நிற்பவர்களைப்போல. இந்திரப்பிரஸ்தமும் துவாரகையும் நமக்கு படைக்கலங்கள் அல்ல. அணிகலன்கள். அவற்றைக் காக்க நாம் கோல்கொண்டு துயிலாது நின்றிருக்கவேண்டியிருக்கிறது.”
யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “ஒரு போர் நிகழக்கூடும். ஆனால் அது எளிய போர் அல்ல." கைகளை விரித்துக்காட்டி “நான் எண்ணியதே வேறு. துரியோதனனுடன் ஓர் நட்புத்தழுவல். அது பாரதவர்ஷத்தையே நம் காலடியில் கொண்டுவந்து வீழ்த்தும் என நினைத்தேன். ஊழ் பிறிதொன்று சூழ்ந்தது. இன்று அவன் நம்மை எண்ணி கொந்தளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்" என்றார்.
“ஆகவே தங்கள் எண்ணம் என்ன?” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் “ஒரு போரை இம்முறை தவிர்ப்பதுதான். நம் மீது கொண்ட அச்சமே அவர்களை ஒருங்குதிரளச்செய்துள்ளது. அவர்கள் நம் நிழல். நிழலுடன் பொருதி எவராலும் வெல்ல முடியாது” என்றார். “காத்திருப்போம். அவர்களின் ஒற்றுமை இயல்பானதல்ல. நாம் அஞ்சற்குரியவர்களல்ல என்று காட்டுவோம். அது அவர்களின் கூட்டை வலுவிழக்கச்செய்யும். ஆசுரநாடுகளும் மலைநாடுகளும் ஷத்ரியக்குடிகளும் இணைந்த ஒரு படைக்கூட்டு நெடுங்காலம் நீடிக்கமுடியாது.”
சகதேவன் “ஆனால்...” என்று சொல்லத்தொடங்க இளைய யாதவர் “நானும் தங்களைப்போலவே எண்ணிக்கொண்டிருக்கிறேன் மூத்தவரே” என்றார். “இந்திரப்பிரஸ்தம் இத்தருணத்தில் போருக்கு விரும்பி கூடி நின்றிருக்கும் இத்தனைபெரிய தொல்குடிக்கூட்டங்களை எதிர்கொள்வது எவ்வகையிலும் உகந்தது அல்ல.” சகதேவன் இருவரையும் நோக்கிவிட்டு நகுலனை நோக்க அவன் புன்னகைத்தபின் அம்புகளுடன் அர்ஜுனனை நோக்கி நடந்தான்.
யுதிஷ்டிரர் மகிழ்வுடன் “நான் தங்களை நன்கறிவேன் இளைய யாதவரே. நேற்று இதைப்பற்றி பேசுகையில் சௌனகர் சொன்னார், தங்கள் எதிரிகளனைவரும் ஒரே அணியில் திரண்டுள்ளார்கள் என்று. ஆகவே தாங்கள் படைகொண்டு எழ விரும்பலாம் என்றார். நான் இளைய யாதவர் எண்ணாமல் செயலெடுக்கமாட்டார் என்றேன்” என்றார். “பகைமுடிக்க தாங்கள் உள்ளூர விழைகிறீர்கள். ஆனால் தருணம்நோக்காது எழமாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது.”
“ஆம், பௌண்டரிக வாசுதேவனை நேருக்குநேர் எதிர்கொள்வதைக்குறித்து எண்ணும்போதே என் உள்ளம் எழுச்சிகொள்கிறது. ஆனால் அதற்குரிய தருணமல்ல இது” என்றார் இளைய யாதவர். “ஜராசந்தன் செய்துள்ள பெரும்பிழை என்பது படையை முன்னரே திரட்டிவிட்டதுதான். படைதிரட்டியபின் வெறுமனே அமர்ந்திருக்கமுடியாது. படைகளின் ஊக்கம் கெடாது இருக்க போர்களில் ஈடுபட்டேயாகவேண்டும். நாணேற்றி அம்புதொடுத்தவன் தன்னையறியாமலேயே இலக்குகளுக்காக தேடிக்கொண்டேதான் இருப்பான். அவன் முதற்பிழையை செய்யட்டும். அதுவரை காத்திருப்போம்.”
யுதிஷ்டிரர் சிரித்து “இதையே இன்று அவையிலும் சொல்லுங்கள் யாதவரே. இங்கே கருவறை அமர்ந்த கொற்றவைதான் போர் போர் என்று கழலொலி எழுப்பிக்கொண்டிருக்கிறாள்” என்றார். “உண்மையில் நான் நேற்றுமுதல் எண்ணிக்கொண்டிருக்கும் ஒன்றுண்டு. இளைய யாதவரே, நாம் யார்? நாம் சூத்திரர்கள். நாம் ஏன் ஷத்ரியர்களின் ஆதரவுக்கென கைநீட்டவேண்டும்? இந்த அசுரர்கள் அல்லவா நமக்கு மேலும் அணுக்கமானவர்கள்? ஜராசந்தனிடம் சென்று கைகோத்துக்கொண்டால் என்ன? கலிங்கனும் வங்கனும் கோசலனும் மாளவனும் அதன்பின் நம் முன் நிற்பார்களா என்ன?”
சகதேவன் “என்ன சொல்கிறீர்கள் மூத்தவரே?” என்று சொல்ல இளைய யாதவர் “நானும் அவ்வண்ணமே எண்ணத்தலைப்பட்டேன் மூத்தவரே” என்றார். “நாம் ஏன் ஜராசந்தரையும் அவருடனுள்ள மலைக்குடியினரையும் நம் குடிகளெனக் கொள்ளக்கூடாது? நம் எதிரிகளை பேணவேண்டுமென ஜராசந்தர் எண்ணியிருக்க மாட்டார். அவர்களை அவரிடமிருந்து பிரிக்க நம் நட்பால் முடியும்.” சகதேவன் இளைய யாதவரை விழியிமைக்காமல் நோக்கி நின்றான்.
“என்ன செய்யலாம்? நானே ஒரு நேர்த்தூது அனுப்புகிறேன். வேண்டுமென்றால் நேரில் சென்று அவனை நெஞ்சுதழுவிக்கொள்கிறேன். அவன் கோரும் அனைத்தையும் கொடுப்போம். நாம் இழப்பது ஒன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், ஆனால் அதற்கு ஒரு தருணம் தேவை. அதை நாம் உருவாக்குவோம்.” யுதிஷ்டிரரின் விழிகள் சுருங்கின. “என்ன தருணம்?” என்றார்.
“அரசே, நற்தருணம் என்பது எப்போதும் வேள்வியே. நாம் இங்கு ஒரு ராஜசூயம் செய்வோம்.” யுதிஷ்டிரர் திகைப்புடன் “ராஜசூயமா? என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “ஆம், அரசர்கள் ஆற்றும் இருபெரும் வேள்விகளில் ஒன்று அது. கருவூலச்செல்வம் அனைத்தையும் வைதிகர்களுக்கும் இரவலர்களுக்கும் கொடுத்துவிடவேண்டும். சுற்றத்தரசர் அனைவரும் வந்து தங்கள் அவை நிற்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஜராசந்தருக்கும் அவருடன் உள்ள மலையரசர்களுக்கும் அழைப்பு அளிப்போம். அவர்கள் வருவார்களென்றால் நம்முடன் நட்புகொள்கிறார்கள். அவர்களை நாம் ஷத்ரியர்களென ஏற்று வேள்விமேடையில் அமரவைப்போம்.”
“அதை ஏற்பார்களா ஷத்ரியர்கள்?” என்றார் யுதிஷ்டிரர். “ராஜசூயத்தில் ஷத்ரியர்களாக கோல்கொண்டு அவையமர்வதும் வைதிகர்களுக்கு கொடையளித்து நற்சொல் பெறுவதும் மலைக்குடியினரை பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தொல்குடியினருக்கு நிகராக நிறுத்துவதல்லவா?” இளைய யாதவர் “ஏற்காவிட்டால் அவர்கள் வந்து நம் வேள்விக்கூடத்தில் அவையமரட்டும். அவர்கள் நம்மை ஷத்ரியர்களாக ஏற்பது அது.”
யுதிஷ்டிரர் புரியாதவர் போல சகதேவனை நோக்கினார். பின்னர் இளைய யாதவரை நோக்கி “இதன் விளைவுகளென்ன? என்னால் எண்ணக்கூடவில்லை” என்றார். “ராஜசூயம் செய்த அரசனே சக்ரவர்த்தி எனப்படுவான். அள்ளக்குறையாத கருவூலமும் அதை நிரப்பும் படைவல்லமையும் அவனிடமிருக்கின்றன என்பது நிறுவப்படுகிறது” என்றார் இளைய யாதவர். “என்ன சொல்கிறாய் இளையவனே?” என்று சகதேவனிடம் கேட்டார் யுதிஷ்டிரர்.
“மூத்தவரே, அந்த வேள்வியை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் உதவினால் அவர்கள் தங்களை சக்ரவர்த்தி என ஏற்கிறார்கள். உதவாவிட்டால் நாம் அசுரர்களையும் மலைமக்களையும் அரசர்களாக ஆக்கி அவர்களால் ஏற்கப்பட்ட சக்ரவர்த்தியாக ஆகி ஷத்ரியர்களை ஒழிப்போம்” என்றான் சகதேவன். “இளைய யாதவர் சொல்வது இதையே. இதிலுள்ள செய்தியை அரசர்கள் மட்டுமல்ல ஜராசந்தரும் எளிதில் புரிந்துகொள்வார்.”
யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “எப்படியென்றாலும் போரைநோக்கியே செல்கிறது” என்றார். “போர் நிகழாதொழியலாம் மூத்தவரே. முற்றிலும் நிகர்நிலை ஆற்றல் போல போரைத்தவிர்ப்பது பிறிதில்லை” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் தலையசைத்து “நன்றுசூழ்க!" என்றபின் தன்னிகழ்ச்சியுடன் இதழ்வளைய புன்னகைசெய்து “ஆனால் இதை இந்திரப்பிரஸ்தத்தின் இறைவி ஏற்றுக்கொள்வாள் என்றே நினைக்கிறேன்” என்றார்.
[ 2 ]
ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக, வருக!” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம் இளவேனில் என்பது கவிஞர்கூற்று. ஆனால் அடுமனை போலிருக்கிறது நகரம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு அமரும்படி இருவருக்கும் கைகாட்டிவிட்டு அவர்கள் அமர்ந்ததும் தான் அமர்ந்து தன் நீள்குழல் பின்னலைத் தூக்கி வலப்பக்க கைப்பிடிமேல் போட்டுக்கொண்டு கால்மேல் கால் அமைத்துக் கொண்டாள்.
“எதற்காக நகைத்தீர்கள் அரசி?” என்றார் இளைய யாதவர். “ஒன்றுமில்லை” என்று சிரிப்பை அடக்கிய திரௌபதி “தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்று தருமனிடம் சொன்னாள். “ஆம், மிகவும் களைத்திருக்கிறேன். படைக்கலப்பயிற்சி என்பதே உடலை களைப்படையச்செய்து அந்நாளில் எதையும் எண்ணவிடாது ஆக்கிவிடுகிறது. இன்று இளைய யாதவர் சென்றதனால் நானும் உடன் சென்றேன்” என்றபடி அவர் நிமிர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “என்ன சிரிப்பு?” என்று இளைய யாதவர் மீண்டும் கேட்டார். “ஒன்றுமில்லை, என் எளிய உளவிளையாட்டு” என்றாள். “எதிரே ஒருவர் இருந்தால்தான் என்னால் ஆடமுடியும். ஆகவே ஆடிமுன் அமர்ந்து ஆடுகிறேன். வெல்லும் தருவாயில் ஆடியில் எதிரியென நீங்கள் தோன்றினீர்கள்.”
இளைய யாதவர் “அன்று, ஆனால் இவ்வறைக்குள் நுழையும் எவரும் உங்கள் எதிரியென்றே தெரிவார்களே அரசி?” என்றார். “ஆம், ஒவ்வொருவருடனும் ஆடுகிறேன்” என்றபின் அவள் பணிப்பெண்ணை நோக்கித் திரும்பி விழியசைக்க அவள் பணிந்து விலகிச்சென்றாள். இரு ஏவலர் குளிர்நீரை அவர்களுக்கு கொண்டுவந்தனர். தருமன் “நான் முன்பெல்லாம் இவளுடன் நாற்களமாடுவதுண்டு. இப்போது இவள் என்னுடன் ஆடுவதில்லை” என்றார். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “இவள் ஆடுவது யவன நாற்களம். அதில் பகடை என ஏதுமில்லை. கருக்களை எண்ணிஎண்ணிப் படைசூழ்ந்து முன்னகர்த்துவதே அதன் ஆடல்.”
இளைய யாதவர் “ஆம், அதுநன்று. நடுவே ஊழ் என ஏன் ஒரு பன்னிருஎண் வந்து புரளவேண்டும்?” என்றார். “பன்னிருகளம் என்பது பன்னிரு ராசிகள் யாதவரே. அவையே மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளைக் கொண்டவை. அவை உள்நுழையாத ஆடலென்பது வெற்றாணவம் மட்டுமே” என்றார் தருமன். “வென்றேன் என்று தருக்கலாம். அப்பாலிருந்து முடிவிலி சிரிக்கும்.” திரௌபதி சிரித்துக்கொண்டு “இக்களத்திற்குள்ளேயே முடிவிலி மடிந்து அமைந்துள்ளது அரசே” என்றாள். “எண்ணுவதும் உன்னுவதும்கூட பகடையின் புரளல்கள் அல்லவா?”
இளைய யாதவர் முகவாயில் கைவைத்து குனிந்து “என்ன ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் அரசி?” என்றார். “யவனநாற்களத்தின் நெறிகளின்படி இதை நானே அமைத்தேன்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். இளைய யாதவர் குனிந்து அக்களத்தை நோக்கி ஒரு கருவை கைகளால் தொட்டு எடுத்தார். எத்திசையில் கொண்டுசெல்வது என்பதை உன்னி அங்குமிங்கும் அசைத்தபின் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு “வழிகளே இல்லை” என்றார். “ஏன் இல்லை? இதோ இங்கே கொண்டுசெல்லுங்கள். அங்கே எதிரிகள் அகன்றிருக்கிறார்கள்” என்று கைசுட்டினார் தருமன். திரௌபதி சற்று சலிப்புடன் “அரசே, நீங்கள் அங்கு மட்டுமே செல்லவேண்டும் என்று முன்னரே வழியமைத்திருப்பதை காணவில்லையா? அதற்கடுத்து நிகழ்வனவும் அங்கே ஒருக்கப்பட்டுள்ளன. இது களமல்ல, சிலந்தியின் வலை” என்றாள்.
இளைய யாதவரை நோக்கி நகைத்து “உங்களுக்கு எக்களமும் விளையாடுமுற்றம் என்கிறார்களே?” என்றாள். “ஆம், ஆனால் நான் ஆடும் விளையாட்டின் அனைத்து நகர்வுகளும் முன்னரே வகுத்து இங்கே பொறிக்கப்பட்டிருக்கையில் நானும் வெறும் ஒரு கருதானோ என்ற திகைப்பை அடைகிறேன்.” குனிந்து ஒரு கருவை நோக்கி “எரி. அவனும் அதே திகைப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்பால் வருணன். அவனுக்கும் திகைப்புதான்” என்றார் இளைய யாதவர். “இது நானே எனக்குள் ஆடி முழுமைசெய்துகொண்ட களம். இன்று காலை முழுமையாக தன்னை அமைத்ததும் செயலற்றுவிட்டது. இதை எவரேனும் கலைக்காமல் இனி என்னாலும் ஆடமுடியாது” என்றாள் திரௌபதி.
தன் கன்னத்தை விரல்களால் தட்டியபடி இளைய யாதவர் களத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர்கொண்டுள்ளன. அப்படியென்றால் ஒவ்வொன்றுக்கும் நிகர்நிறைதானா இக்களத்தில்?” என்றார். “நிறையற்றவை விசைகொள்கின்றன” என்றாள் அவள். “ஏனென்றால் இங்கு பரப்பி வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் என் விழைவுகொள்ளும் வடிவங்கள் அல்லவா?” இளைய யாதவர் நிமிர்ந்து ஒருகணம் நோக்கியபின் குனிந்து ஒவ்வொன்றையாக தொட்டார். “காலமின்றி ஒவ்வொன்றும் அவ்வண்ணமே இங்கு அமைந்துள்ளவை போலுள்ளன. இனி ஒருகணமும் அவை அசையப்போவதில்லை என்பதுபோல.”
தருமன் “இவள் ஆடும் இந்த ஆடலை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. உண்மையில் இது என்ன? ஒவ்வொன்றையும் நிறைநிலை வரை எதிரெதிர்வைப்பது. முற்றிலும் அசைவிழக்கச்செய்வது. அசைவின் அடுத்த கணத்தைச் சூடி அமர்ந்திருக்கிறது இந்த மையம்” என்று விரலால் சுட்டினார். “இதை அரசி என்கிறார்கள். தேனீக்கூட்டின் அரசிபோல அவள் ஒரு பெருந்தாய். அவளை சற்றே நகர்த்தினால் ஒவ்வொன்றும் நிறைநிலை அழிகின்றன.” அவர் அந்த மையத்திலமைந்த அரசியைத் தொட்டு “ஆனால்...” என்றார். கையை எடுத்து “எங்கும் கொண்டுசெல்லமுடியாது. எல்லா இடங்களிலும் கருக்கள்” என்றார்.
இளைய யாதவர் “முடியும் அரசே. ஒருவழி உள்ளது” என்றபடி களத்தின் தெற்கு ஓரத்தில் நின்றிருந்த சிம்மத்தின்மேல் சுட்டுவிரலை வைத்தார். “சிம்மம் தன் வலப்பக்கத்தில் எருதை கொண்டுள்ளது. அதை அது கொல்லட்டும்” என்று கருவை நகர்த்தினார். காளை சரிந்துவிழுந்தது. அக்களத்தில் சிம்மத்தை வைத்தார். தருமன் முகம் மலர்ந்து “ஆம், வரிசையாக அனைத்தையும் நகர்த்திவிடலாம். அரசிக்கு அடுத்த களம் ஒழிகிறது... அவளையும் நகர்த்தமுடியும்” என்றார். இளைய யாதவர் “நகர்த்துங்கள்” என்று புன்னகைத்தார். தருமன் ஒவ்வொரு காயாக நகர்த்த அரசி இடம்பெயர்ந்து அமைந்தாள். “அவ்வளவுதான். இனி எல்லாவற்றையும் திருப்பியடுக்கவேண்டும். ஒவ்வொன்றும் தங்கள் முழுநிறைநிலையை கண்டடையவேண்டும். நிறையால், விசையால், இணைவால், பிரிவால்” என்றார் தருமன். இளைய யாதவர் திரௌபதியின் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் கைகளை கோத்தபடி சாய்ந்துகொண்டார்.
“நானும் யாதவரும் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் அரசி” என்று தருமன் சொன்னார். “அதை உன்னிடம் சொல்லவே வந்தோம்.” திரௌபதியின் விழிகள் மிகச்சிறிதாக அசைந்தன. தருமன் “நாம் ஓர் ராஜசூய வேள்வியை செய்யலாமென்று இளைய யாதவர் சொல்கிறார். முதலில் எனக்கு சற்று தயக்கமிருந்தது. வரும்வழியில் அவர் அதைப்பற்றி விரிவாகவே பேசினார். அது அழியா சுருதிகளின் அடிப்படையில் அமைந்தது. அதை நிகழ்த்த தைத்ரிய மரபைச்சேர்ந்த பெருவைதிகர் பன்னிருவர் இங்கிருக்கிறார்கள். அவர்களை தலைமையேற்று நடத்த தலைமைவைதிகர் தௌம்யர் இருக்கிறார். முறையாகவே செய்து முடித்துவிடலாம்” என்றார்.
திரௌபதி இளைய யாதவரிடம் “ராஜசூயம் ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது ஆபஸ்தம்பசூத்திரம்” என்றாள். “ஆம்” என்று தருமன் இடைபுகுந்தார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டு வந்தேன். அதை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் ஒத்துழைத்தார்கள் என்றால் நாம் ஷத்ரியர்கள் நடுவே சக்ரவர்த்திகளாவோம். இல்லையென்றால் ஆசுரகுடிகளைத் திரட்டி அதை செய்வோம். அவர்கள் அனைவருக்கும் வேள்வியில் பீடம் அளிப்போம். ஷத்ரியர் முடிந்தால் நம்மை எதிர்த்து வெல்லட்டும்.” அனைத்தையும் புரிந்துகொண்டு திரௌபதி புன்னகையுடன் கைகளைக் கோத்து சாய்ந்துகொண்டாள்.
இளைய யாதவர் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி” என்றார். “நம்மிடம் செல்வம் இருக்கிறது. அது இருப்பதை நாம் காட்டியாகவேண்டும். செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது. நாம் குடிப்பெருமையை வாங்குவோம்.” அவள் புன்னகையுடன் “ஆம்” என்றாள். பின்பு அவள் விழிகள் இளைய யாதவரின் விழிகளை சந்தித்தன. “இளையவர்கள் நால்வரிடம் அதைப்பற்றி பேசவேண்டும் அல்லவா?” என்றாள். ‘ராஜசூயத்தின் சடங்குகளில் முதன்மையானது ஆநிரை கவர்தல்.” தருமன் “அவைகூட்டி அறிவிப்போம். சடங்குகள் என்னென்ன என்று வைதிகர் சொல்லட்டும்” என்றார்.
[ 3 ]
இந்திரப்பிரஸ்தத்தின் பேரவையில் அரசர் தருமரும் அரசி திரௌபதியும் வந்தமர்ந்தபோது அவை நிறைத்திருந்த வணிகர்களும், குடித்தலைவர்களும், படைத்தலைவர்களும், அமைச்சர்களும் எழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். அவையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தேவலரை வணங்கி வாழ்த்துச்சொல் பெற்று தருமன் அரியணையில் அமர்ந்தார். அருகே திரௌபதி அமர்ந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் வைதிகர்தலைவர் தௌம்யர் இருவரையும் மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தி மணிமுடி எடுத்தளிக்க அவர்கள் அதை சூடிக்கொண்டதும் அவை மலர்வீசி வாழ்த்தியது. தருமர் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைவடிவச் செங்கோலை ஏந்தி வெண்குடைக்கீழ் அமர்ந்து அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
அவையிலிருந்த தைத்ரிய குருமரபினரான அஸிதர், சத்யர், சர்ப்பிர்மாலி, மகாசிரஸ், அர்வாவஸ், சுமித்ரர், மைத்ரேயர், சுனகர், பலி, தர்ப்பர், பர், ஸ்தூலசிரஸ் ஆகியோருக்கு முதலில் பொன்னும் அரிமணியும் மலரும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. வியாசரின் மாணவர்களான சுமந்து, ஜைமினி, பைலர், வைசம்பாயனர், தித்திரி, யாக்ஞவல்கியர், ரோமஹர்ஷனர் ஆகியோர் பட்டும் ஏடும் பொன்னெழுத்தாணியும் அளித்து வணங்கப்பட்டனர். கௌசிகர் தாமோஷ்ணீயர், திரைபலி, பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், சாரிகர், பலிவாகர், சினிவாகர், சப்தபாலர், கிருதசிரமர், சிகாவான், ஆலம்பர் என நீளும் நூற்றெட்டு தவசீலர்கள் அவையில் அமர்ந்து அரசரையும் அரசியையும் வாழ்த்தினர்.
அதன்பின் குடித்தலைவர்களும் வணிகர்களும் நிரைவகுத்து வந்து அரசனுக்குரிய காணிக்கைகளை வைத்து வாழ்த்தினர். அவைச்செயல்பாடுகளில் மகிழ்பவராகிய யுதிஷ்டிரர் சலிக்காமல் இன்சொல் சொல்லியும் உடல்வளைத்து வணங்கியும் அவற்றில் ஈடுபட்டார். அருகே அணிசெய்து ஊர்கோலமாக கொண்டுசெல்லப்படும் தேவிசிலைபோல ஒற்றை முகத்துடன் திரௌபதி அமர்ந்திருந்தாள். அவைமேடையின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் சலிப்பு தெரியும் உடலசைவுடன் அமர்ந்திருக்க நகுலனும் சகதேவனும் படைக்கலம் சூடி நின்றிருந்தனர். அவையின் தென்மேற்கு மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் பேரரசி குந்தியும் பிற அரசியரும் அமர்ந்திருந்தனர்.
முகமன்முறைமைகளும் கொடைமுறைமைகளும் முடிந்தபின் தருமன் விழிகளால் இளைய யாதவரைத் தொட்டு ஒப்புதல் பெற்றபின் எழுந்து வணங்கி “அவையோரே, நம் நகர் இந்திரப்பிரஸ்தம் இன்று பாரதவர்ஷத்தில் நிகரற்ற பெருவல்லமையை கொண்டுள்ளது. நம் கருவூலம் நிறைந்து கவிகிறது. இனி நாம் அடையவேண்டியதென்ன என்று நான் அறிந்தவிந்த ஆன்றோரிடம் உசாவினேன். நிறையும் கருவூலம் அறத்தின்பொருட்டு ஒழிந்தாகவேண்டும். ஒழிந்த கருவூலம் வீரத்தினால் மீண்டும் நிரப்பப்பட்டாகவேண்டும். தேங்கும் கருவூலம் வெற்றாணவமென்றாகும். பழுத்த கனியை காம்பு தாங்காததுபோல் அவ்வரசன் அக்கருவூலத்தை கைவிட்டுவிட நேரும் என்றனர். ஆகவே இங்கொரு ராஜசூய வேள்வியை நிகழ்த்தலாமென்றிருக்கிறேன். அவை ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார்.
அவையினர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனால் சற்றுநேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. குடித்தலைவர் முஷ்ணர் எழுந்து கைவிரித்து “ராஜசூயம் வேட்கும் பேரரசர் வாழ்க! பொன்னொளி கொள்ளவிருக்கும் அவர் வெண்குடை வாழ்க!” என்று கூவினார். அவையெங்கும் பெருமுழக்கமாக வாழ்த்தொலிகள் எழுந்து சற்றுநேரம் பிறிதொன்றும் எண்ணமுடியாதபடி சித்தத்தைக் கலைத்து பரப்பின. பின்னர் அக்கார்வை குவைமுகட்டில் முழங்க அவை அமைதிகொண்டது. தருமன் சௌனகரிடம் “அமைச்சரே, ராஜசூயத்திற்கான முறைமைகள் என்ன? தேவைகள் என்ன? இந்த அவைக்கு உரையுங்கள்” என்றார்.
சௌனகர் எழுந்து அவையை வணங்கி “முடிகொண்டு குடைசூடிய பெருவேந்தன் தன்னை தன் குடிக்கும் தன்நிலத்திற்கும் முதல்வன் என்று அறிவிப்பதற்குப் பெயரே ராஜசூயம் என்பது. அவ்வேள்வியை ஆற்றியவனின் குடையில் பொன்பூசப்படும். அவன் சத்ராஜித் என அழைக்கப்படுவான். சக்ரவர்த்தி என அவனை அவன் குடியினர் வழிபடுவார்கள். விண்ணிலிருக்கும் இந்திரனுக்கு நிகராக மண்ணில் அவன் இருப்பான்” என்றார். “அதற்கு முதலில் ராஜசூயவேள்விக்கான கொடிக்கால் கோட்டைமுகப்பில் நாட்டப்படவேண்டும். அதை பெரும்படைகள் ஒவ்வொருகணமும் காக்கவேண்டும். அக்கொடி முறிக்கப்படுமென்றால் அரசன் தோற்றவன் என்றே அறியப்படுவான்.”
“குலங்களனைத்துக்கும் ராஜசூயச் செய்தி முறைப்படி அனுப்பப்படவேண்டும். அவர்கள் அதை ஏற்று தங்கள் அணிவிற்களை அரசனின் காலடியில் கொண்டுவந்து வைக்கவேண்டும். முரண்கொள்பவர்களை அரசன் வென்று அழிக்கவேண்டும். அவன் ஆளவிருக்கும் நிலத்திலுள்ள அத்தனை அரசர்களுக்கும் ராஜசூயத்துக்கான செய்தி செல்லவேண்டும். அதன்பின் அத்தனைநாடுகளுக்கும் சென்று ஆநிரை கவர்ந்துவரவேண்டும். ஆநிரைகள் எங்கே மறிக்கப்பட்டாலும் போரில் மறிப்பவர்கள் வெல்லப்படவேண்டும். கவர்ந்துகொண்டுவரப்படும் ஆநிரைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேள்விக்கு அவியாகவும், வைதிகர்களுக்கு கொடையாகவும், வறியவர்க்கு அளியாகவும் அளிக்கப்படவேண்டும்.”
பீமன் உடலை நீட்டிய அசைவை அனைவரும் திரும்பி நோக்கினர். “செண்டுவெளியில் அரசர் தன் வில்லுடனும் கதையுடனும் நின்று தன் குடியிலோ தன் கோல்கீழ் அமையும் அரசிலோ தனக்கு நிகரான போர்வீரர் எவரேனும் உளரோ என்று அறைகூவ வேண்டும். எவர் அரசரை களத்தில் வென்றாலும் அவர் அரசமுடிக்கு உரியவராக ஆவார். அரசரின்பொருட்டு பிறரும் படைக்கலமேந்தி நிற்கலாமென்பது மரபு. பன்னிருநாள் நீளும் பெருவேள்வியில் அனைத்து மங்கலப்பொருட்களும் அவியிடப்படவேண்டும். ஒவ்வொருநாளும் நகருளோர் அனைவருக்கும் அவியுணவு அளிக்கப்படவேண்டும். வேள்விமுடிவன்று அரசன் தன் கருவூலத்தின் இறுதித்துளிச் செல்வத்தையும் வைதிகர்க்கும் இரவலருக்கும் கொடையாக அளித்துவிடவேண்டும். வைதிகர் ஒருவரிடமிருந்து ஒற்றைநாணயத்தையும் ஒருபிடி கூலமணியையும் கொடையாகக் கொண்டு மீண்டும் தன் அரியணை திரும்பவேண்டும்.”
“ராஜசூயம் வேட்ட மன்னன் தன் கொற்றக்குடைக்கு பொன்வேயலாம். தன் காலில் பொன்னாலான மிதியடி அணியலாம். செங்கோல்மீது அவன் சத்ராஜித் என்பதைச் சுட்டும் தாமரைமுத்திரையை பொறித்துக்கொள்லலாம். அதன்பின் அவன்முன் எவரும் மணிமுடியில் இறகுசூடி அமரலாகாது. எவருடைய புகழ்மொழியும் அவன் செவிகேள ஒலிக்கலாகாது. அவன் குடைக்குமேல் உயரத்தில் எக்குடையும் எழக்கூடாது. அவன் சொற்களுக்கு எவ்வரசரும் எதிர்ச்சொல்லெடுக்கலாகாது. அவன் ஒப்புதலின்றி எவரும் சத்ரவேள்விகள் செய்யலாகாது. சத்ரவேள்விகள் அனைத்திலும் அவன் அளிக்கும் அவியே முதலில் அனலில் விழவேண்டும். அவன் கோல்கீழ் வாழும் நாடுகளில் எந்த அவையிலும் அரசனுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் முதலில் அளிக்கப்படுவதும் மிகப்பெரியதும் அவனுக்குரியதே ஆகும். அவன் சொல் யானைபுரவிகாலாள்தேர் என்னும் நால்வகைப்படைகளால் காக்கப்படவேண்டும். அவன் முத்திரையை எங்கு எக்குடியினர் நோக்கினாலும் பணிந்தாகவேண்டும். அவன் கொடி நின்றிருக்கும் இடமெல்லாம் அவனுடையதென்றே ஆகும்.”
அவை முழுக்க நீள்மூச்சுக்கள் ஒலித்தன. அர்ஜுனன் ஏதோ சொல்ல எழுவதற்குள் பீமன் கைகளை விரித்தபடி எழுந்து “அரசே, நாம் ராஜசூயவேள்வியை செய்யப்போகிறோம் என்பதை முற்றறிவிப்பாக விடுத்துவிட்டோமா?” என்றான். “இல்லை, நான் அவைசூழ்கிறேன்” என்றார் தருமன். “அவ்வண்ணமென்றால் இது இப்போதே நின்றுவிடட்டும். அரசே, குலங்களையும், சூழ்ந்த அரசுகளையும் முற்றிலும் வென்றபின்னர் முதிரகவையில் மன்னர்கள் கொண்டாடும் கேளிக்கை இது. அவ்வரசர் மேலும் சில ஆண்டுகளே ஆள்வார் என்றறிந்த நிலையிலேயே பிற அரசுகள் அதற்கு ஒப்புகின்றன. நாம் இப்போதுதான் கோல்கொண்டு நகர் அமைத்து ஆளத்தொடங்கியிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருப்பவர்களோ ஆற்றல்மிக்க எதிரிகள்” என்றான்.
அர்ஜுனன் “ஆம், நான் எண்ணுவதும் அதையே” என்றான். “நாம் நூறுபோர்களை தொடுக்கவேண்டியிருக்கும். அவற்றை முடித்து இந்த வேள்வியைத் தொடங்க பல்லாண்டுகாலமாகலாம். எண்ணற்கரிய பொன் தேவைப்படலாம். நம் படைகள் முழுமையாக அழியவும்கூடும்” என்றான். அவையில் மெல்லிய பேச்சுமுழக்கம் எழ இளவரசர்களுக்குரிய பகுதியில் அபிமன்யு எழுந்து நின்றான். “எந்தையே, தங்களிடமிருந்து அச்சத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் விரும்பினால் இந்த வேள்வி கோரும் அனைத்துப்போர்களையும் நான் ஒருவனே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். அர்ஜுனன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் “அதற்கான ஆற்றல் எனக்குண்டு என்பதை தாங்களே நன்கறிவீர்கள். இந்த அவையும் அறியும்” என்றான்.
“தனிவீரத்திற்குரிய களமல்ல இது மைந்தா” என்று அர்ஜுனன் பொறுமையிழந்து சொன்னான். “நான் உரைப்பதே வேறு. நாம் பாரதவர்ஷமெனும் பெரும் களத்தில் ஆடப்போகிறோம்.” அபிமன்யு “ஆம், ஆனால் ஆடுவது நானோ நீங்களோ அல்ல. அன்னை. நான் அவர் அறைக்குள் செல்லும்போது நாற்களத்தை விரித்து அவர் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன். இது என்ன என்றேன். இது மகதம் இது புண்டரம் இது வங்கம் இது அங்கம் என்று எனக்கு சொன்னார்கள். எந்தையே, நாற்களத்தில் அவர் முன்னரே வென்றுவிட்டார். அவர் சொல்லட்டும்” என்றான்.
அர்ஜுனன் சினத்துடன் “நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றி” என்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அபிமன்யு. அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். தேவலர் “ஆம், அவை அரசியின் எண்ணத்தை எதிர்நோக்குகிறது. இவ்வேள்வி அவருக்கும் உவப்புடையதா?” என்றார். திரௌபதியின் முகத்தில் புன்னகை சிற்பங்களில் இருப்பதுபோல நிலைத்திருந்தது. “என் எண்ணத்தையே இங்கே அரசர் சொன்னார்” என்றாள். சௌனகர் “பிறகென்ன? இங்கு நாம் எண்ணுவது அரசி ஆணையிடுவதை மட்டுமே” என்றார்.
பீமன் “நான் என் எண்ணத்தை சொல்லிவிட்டேன். மைந்தன் சொன்னதே உண்மை. நாம் எளிய படைக்கலங்கள். நாம் கொல்பவர்களை தெரிவுசெய்யும் உரிமைகூட அற்றவர்கள்” என்றபின் கைகளை அசைத்தான். அவை அமைதியடைந்து காத்திருந்தது. அர்ஜுனன் “மூத்தவரே, இதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் நான் சொல்வதெற்கேதுமில்லை. என் கடமை தங்களின்பொருட்டு வில்லேந்துவது” என்றான். தருமன் “இளையோனே, இது நானும் அரசியும் இளைய யாதவரும் இணைந்து எடுத்த முடிவு” என்றார். அர்ஜுனன் தலைவணங்கினான்.
சௌனகர் “இந்த அவையில் எதிர்க்குரல் ஏதேனும் எழவிருக்கிறதா?” என்றார். “ஐங்குடிகளும் முனிவரும் எதிர்நிலை சொல்ல உரிமைகொண்டவர்கள். அமைச்சரும் படைத்தலைவரும் மாற்றுசொல்லும் கடமைகொண்டவர்கள். வரலாற்றைச் சொல்ல சூதருக்கும் கவிஞருக்கும் இடமுண்டு” என்றார். அவை கலைந்த ஒலியுடன் அமைந்திருந்தது. “அவ்வாறெனில் இது அவையின் ஒப்புதலென்றே கொள்ளப்படும்” என்று சௌனகர் சொல்லிமுடிப்பதற்குள் தௌம்யர் கைகளைக் கூப்பியபடி எழுந்தார். அப்போதெழுந்த ஓசை அப்படி ஒன்றுக்காக அவை காத்திருந்தது என்பதை உணர்த்தியது.
தௌம்யர் “அரசே, முனிவர்களே, அவையில் எதை சொல்லவேண்டுமென்பதை என் நாவிலெழும் மூத்தோரும் முனிவருமே முடிவுசெய்கிறார்கள். பிழைகளிருப்பின் என் சொல்லில் என்க!” என்றார். “ராஜசூயம் என்பது முன்னாளில் குடிமூப்பு நிறுவும்பொருட்டு உருவான ஒரு ஸ்ரௌதவேள்வி. சாமவேதத்தின் பாற்பட்டது என்பதனால் அரசும் குடியும் முடியும் கோலும் உருவானபின் வந்தது என்று சொல்லப்படுகிறது. அதன் முதல் வினாவே குடியும் குலமும் ஒருவரை வேள்விமுதல்வர் என ஒப்புக்கொண்டு முதல் அவிமிச்சத்தை அளிப்பதுதான்.”
அவர் சொல்லவருவதென்ன என்று அவைக்கு முழுமையாக புரிந்தது. “குருவின் கொடிவழிவந்த இரு அரசுகள் இங்குள்ளன. அஸ்தினபுரியே அதில் முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்திரப்பிரஸ்தம் அதில் கிளைத்ததே. அங்கே ஆளும் அரசர் துரியோதனரின் வில் வந்து நம் அரசரின் கால்களில் அமையாமல் இவ்வேள்வி நிகழமுடியாது.” அவை இறுக்கமிழந்து மெல்ல தளர்ந்தது. “அஸ்தினபுரி வந்து அடிபணியவேண்டியதில்லை. ஆனால் அக்கோல்கொண்டவரின் அவை ஒப்புதலேனும் தேவை. அன்றி வேள்விகூடுவதென்பது அவர்களை போருக்கு அறைகூவுவதேயாகும்.”
பீமன் சினத்துடன் எழுந்து கைகளை அறைந்து “அப்படியென்றால் போர் நிகழட்டும். அவனை இழுத்துவந்து வேள்விக்கூடத்தில் கட்டிப்போடுகிறேன். அதன்பின் நிகழட்டும் வேள்வி” என்றான். தௌம்யர் “அதை செய்யவும்கூடும். ஆனால் அதற்கு உங்கள் தந்தையின் ஒப்புதல் தேவை” என்றார். “நிமித்திகர் சொல்லட்டும், மூச்சுலகில் வாழும் பாண்டு அப்போர் எழுவதற்கு ஒப்புகிறாரா என்று. ஆமெனில் படை கிளம்பட்டும்.” பீமன் உரக்க “குருகுலத்துப் பாண்டு என் தந்தை அல்ல. நான் காட்டாளன். ஆம், காட்டின் பொன்றாப்பெருவிழைவு மட்டுமே கொண்ட தசைவடிவன். பிறகென்ன?” என்றான்.
“மந்தா, என்ன பேசுகிறாய்?” என்று தருமன் கூவியபடி எழுந்தார். “மூடா! அவையில் என்ன பேசுகிறாய்?” பீமன் “அறிந்தே பேசுகிறேன். நாம் ஏன் பாண்டுவின் குருதியை அடையாளம் கொள்ளவேண்டும்? நாடுவென்று முடிசூடியபின்னரும் நம்மை ஷத்ரியர் என்று ஏற்காத இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்களின் முன்னால் இரந்து நிற்கவா? நான் அசுரன், நான் அரக்கன். எனக்கு ஷத்ரிய நெறிகள் இல்லை. அவர்கள் ஜராசந்தனை ஏற்கிறார்கள் அல்லவா? அஞ்சிப்பணிந்து அவனுக்கு வில்லனுப்புகிறார்கள் அல்லவா? நானும் அவனைப் போன்றவனே” என்றான். தருமன் “இளையோனே…” என்று அழைத்தபின் அர்ஜுனனை நோக்க அவன் அசையாமல் நிலம்பார்த்து அமர்ந்திருப்பதை கண்டார்.
“தௌம்யரே, சொல்லுங்கள். நிஷாதனோ அரக்கனோ அசுரனோ ராஜசூயம் செய்ய வேதம் ஒப்புகிறதா?” தௌம்யர் “வேதம் பொதுவானது. வெற்றிகொள்பவனை அது அரசனென்று ஏற்கிறது. கற்றுச் சிறந்தவனை முனிவனென்று ஆக்குகிறது. ஆனால் நான் நிஷாதனையோ அசுரனையோ அரக்கனையோ அரசன் என்று ஏற்கமுடியாது” என்றார். “இளையபாண்டவர் சொல்லட்டும். சித்ரரதன் என்னும் கந்தர்வனால் அனுப்பப்பட்டு அவர் என்னை வந்து கண்டார். நான் என் தமையனுடன் தவச்சாலையில் இருக்கையில் தொலைவிலிருந்து கூவி அழைத்தார். ‘யார்?’ என்று கேட்டேன். ‘நான் பாண்டுவின் மைந்தன், விஜயன்’ என்று சொன்னார். அச்சொல்லில் இருந்தே இவ்வுறவு தொடங்குகிறது. உங்கள் மணநிகழ்வுகளை அனல்சான்றாக்கி நிகழ்த்தினேன். உங்கள் மைந்தருக்கு பிறவிமங்கலங்களை ஆற்றினேன். இந்நகரை கால்கோள் செய்வித்தேன். அணையாச்சுடர் ஆக்கி அளித்தேன். அனைத்தும் இது பாண்டவர்களின் நாடு என்பதற்காகவே. நெறியற்ற நிஷாதர்களின்நாடு என்பதனால் அல்ல.”
தருமன் “தௌம்யரே, அவன் இளையவன். அறியாச்சொல் எடுத்துவிட்டான். பொறுத்தருள்க!” என்றார். இளைய யாதவரை நோக்கி “சொல்லுங்கள் யாதவரே. என்ன பேசுகிறான் அவன்? நீங்கள் அவையமர்கையில் இச்சொல் எழலாமா?” என்றார். இளைய யாதவர் “அச்சொல்லுக்கு விடை வரவேண்டியது பட்டுத்திரைக்கு அப்பாலிருந்து அல்லவா?” என்றார். அவை திகைப்புடன் அமைதிகொண்டது. அனைவரும் திரும்ப மெல்லிய குரலில் குந்தி “தந்தை என்பது ஒரு ஏற்பு மட்டுமே” என்றாள். அச்சொல் அனைவரையும் சோர்வுற்று பீடங்களில் அமையச்செய்தது. சற்றுநேரம் அவைக்கூடத்தில் திரைச்சீலைகள் அலையடிக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
தருமன் பெருமூச்சுவிட்டதை அனைவரும் கேட்டனர். தௌம்யர் “நான் உணர்வதை சொல்லிவிடுகிறேன் அரசே. இவ்வேள்வி நன்றுக்கு அல்ல. அதை என் நெஞ்சு ஆழ்ந்துரைக்கிறது. மகதத்தின் ஜராசந்தன் அல்ல இங்கு மறுதரப்பு. அது அஸ்தினபுரியின் கலிவடிவனும் அவனுடன் இணைந்து நிற்கும் கதிர்மைந்தனும் மட்டுமே. பேரழிவை நோக்கி செல்லவிருக்கிறது அனைத்தும். பேரழிவு. பிறிதொன்றுமில்லை” என்றார். திரும்பி அவையை நோக்கி “என் நெற்றிப்பொட்டு துடிக்கிறது. நான் உள்ளே கண்டதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை” என்றபின் கைகளைத் தூக்கி ஆட்டினார். கண்ணீர் மல்க தொண்டை அடைக்க திணறி பின்பு வெடிப்போசையுடன் “அக்கலியும் இவ்வரசரும் இதோ அவையமர்ந்திருக்கும் நாம் அனைவரும் இணைந்து அரசியென அமர்ந்திருக்கும் அவ்வன்னையிடம் போர்புரிகிறோம். அனைத்துப்போரிலும் புண்படுவது நிலமே என்று காவியச்சொல் உரைக்கிறது. நாம் அன்னையின் குருதியை நாடுகிறோம்…” என்றார்.
திரௌபதி புன்னகையுடன் “தௌம்யரே, நான் அவ்வேள்வியில் அரியணையமர்ந்து கோல்கொள்ள விழைகிறேன்” என்றாள். “ஆனால் அரசி...” என்றார் தௌம்யர். “என் நாற்களத்தில் அத்தனை காய்களையும் பரப்பி நோக்கிவிட்டேன் தௌம்யரே” என்றாள் திரௌபதி. சிலகணங்கள் தொழுத கையுடன் நின்றபின் தௌம்யர் “அவ்வண்ணமென்றால் நான் சொல்வதற்கேதுள்ளது? அதுவே நிகழ்க!” என்றார். பின்பு “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை தேவி. என் சிற்றறிவு திகைக்கிறது” என்றார். திரௌபதி புன்னகைத்தபின் திரும்பி தருமரிடம் “இந்த அவை ஒப்புதலளித்தது என்றே கொள்வோம்” என்றாள்.
[ 4 ]
இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காடால் மறைக்கப்பட்ட, ஒற்றை யானை மட்டுமே செல்லத்தக்க அகலம் கொண்ட சிறுவாயிலினூடாக மறுபக்கம் இறங்கிச் சென்ற புரவிப்பாதை, இருபுறமும் செறிந்த பசுந்தழைப் புதர்களின் நடுவே தெளிந்தும் மறைந்தும் காட்டை சென்றடைந்து, புதைந்து, மரச்செறிவுகளினூடாக ஒழுகி எட்டிய கொற்றவை ஆலயம் ஒன்று இருந்தது. இந்திரப்பிரஸ்த நகரின் முதல்விதை அக்கொற்றவை ஆலயம் என்று சூதர்கள் பாடினர்.
இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்கான வாஸ்துமண்டல வரைவின்போது, எரிமூடி பின் முளைத்தெழுந்த காண்டவக்குறுங்காட்டுக்குள் அமைந்த தோற்கூடாரத்திற்குள் நள்ளிரவில் கனவு கண்டு விழித்தெழுந்த முதியசிற்பியாகிய சயனர் அருகே படுத்திருந்த தன் மைந்தன் பிரபவனை காலில் தட்டி மெல்லிய குரலில் “மைந்தா, வருக என்னுடன்!” என்றார். அவர் விழிகள் மாறுபட்டிருப்பதை அறிந்த மைந்தன் கைநீட்டி தொடும் தொலைவில் வைத்திருந்த உளிகளையும், கூடங்களையும் எடுத்து தோல்பைக்குள் போட்டு தோளில் ஏற்றிக் கொண்டு தொடர்ந்தான். அறியா பிறிதொன்றால் வழிநடத்தப்படுபவர் போல காட்டுக்குள் நுழைந்த சயனர் புதர்களினூடாக வகுந்து சென்று மரக்கூட்டங்களைக் கடந்து சேறும் உருளைக்கற்களும் பரவிய நிலத்தில் நிலைகொள்ளா அடிகளுடன் நடந்து மரங்களால் கிளைதழுவப்பட்டு வேர்கவ்வப்பட்டு சொட்டி ஒழியா நீரால் பட்டுப்பாசி படர்ந்து பசுமையிருளுக்குள் புதைந்து கிடந்த கரும்பாறை ஒன்றின் அருகே சென்று நின்றார். அவரைத் தொடர்ந்து வந்த மைந்தன் அக்கரும்பாறையில் தன் தந்தை காணும் கொற்றவையை தானும் கண்டு கொண்டான்.
அப்பால் அக்கரியபாறையின் பிளவுக்குள் குருளைகளை ஈன்று கிடந்த அன்னைச் சிம்மம் ஓசைகேட்டு வெருண்டு எழுந்து தன் முட்பொதி காலைத்தூக்கி சருகுமேல் வைத்து, விழிகள் ஒளிவிட, உலோகம் கிழிபடுவதுபோல உறுமியபடி அருகணைந்தது. மைந்தன் அறியாது ஓரடி பின்னகர்ந்து நின்றான். தந்தை கைகூப்பியபடி அசையாது நின்றார். அவர் முன் வந்து வளைந்து சுழன்ற நாவால் மூக்கை வருடியபடி விழியோடு விழி நோக்கி சிலகணங்கள் நின்றபின் சிம்மம் தலைதாழ்த்தி திரும்பி தன் அளைக்குள் சென்று மறைந்தது. அங்கே அதன் குருளைகள் எழுப்பிய சிற்றொலிகள் கேட்டன. அவை பால்குடிக்கும் ஒலி நீர்த்துளிகள் உதிர்வதுபோல எழுந்தது.
சயனர் திரும்பி மைந்தனிடம் “சிற்றுளி” என்றார். பிரபவன் “அப்பால் சிம்மம் மூன்று குருளைகளை ஈன்றிருக்கிறது தந்தையே. அதன் தாழ்முலைகளை பார்த்தேன்” என்றான். தந்தை பிறிதொன்று உணரா விழி கொண்டிருந்தார். முழந்தாளிட்டு அமர்ந்து சிற்றுளியை அக்கற்பாறையின் வலதுமுனையில் தெரிந்த சிறுகுமிழ்ப்பில் வைத்து சிறுகூடத்தால் மெல்ல தட்டி, பொளித்து அன்னையின் இடது காலின் கட்டை விரலை செதுக்கி எடுத்தார். பாறைத்திரை விலக்கி அன்னை முழுமையாக வெளிவர நாற்பத்திரண்டு நாட்களாயின.
தந்தையை அப்பணிக்கு விட்டுவிட்டு மைந்தன் திரும்பிச் சென்று அவருக்குரிய உணவையும் நீரையும் கொண்டு வந்தான். சிற்பிகள் வந்து சூழ்ந்து நின்று தெய்வமெழுவதை நோக்கினர். அங்கேயே அமர்ந்தும் நின்றும் செதுக்கி, அவ்வண்ணமே சரிந்து விழுந்து துயின்று, திகைத்து விழித்து அங்கேயே கையூன்றி எழுந்து, மீண்டும் உளிநாடி செதுக்கியபடி முதுசிற்பி அங்கிருந்தார். விழிக்கூர் கொண்டு அன்னை எழுந்தபோது எட்டடி பின்னகர்ந்து நின்று அவள் விழிகளையே நோக்கினார். அவர் உடலின் ஒவ்வொரு தசையும் மெல்ல தளரத்தொடங்கியது. மெல்ல ஊறிநிறைந்த சித்தத்தின் எடையால் அவர் கால்கள் தெறித்தன.
அன்று விழிதிறப்பென்று அறிந்து வந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் தலைமைச் சிற்பியும், மூத்த நிமித்திகரும், முதற்பூசகரும், காவலரும், பணியாட்களும், இசைச்சூதரும் சற்று அகன்று நின்றிருந்தனர். முதிய சிற்பி பித்தெழுந்த கண்களால் காலிலிருந்து தலை வரைக்கும் அன்னையை மாறி மாறி நோக்கினார். நடுங்கும் விரல் நீண்ட கைசுட்டி எதையோ சொல்லி தலையை அசைத்தார். தலைமைச்சிற்பி ஏதோ சொல்ல வாயெடுத்தபோது புதருக்குள் ஓசைகேட்டது. அனைவரும் அக்கணமே அது என்னவென்றறிந்து மெய்ப்புகொண்டனர்.
உளியோசை எழுந்த அன்றே அங்கிருந்து தன் குருளைகளுடன் அகன்று சென்றிருந்த அன்னைச் சிம்மம் சிறுசெவிகளை விதிர்த்தபடி, தலையைக் குடைந்து துடியோசை எழுப்பியபடி புதருக்குள்ளிருந்து எழுந்து சுண்ணக்கல்விழிகளால் நோக்கியது. அதன் வால் எழுந்து மூங்கில்பூ என ஆடியது. அவர்கள் ஓசையிழந்து நின்றிருக்க, அது மெல்ல உறுமியபடி உடல்தெரிய மேலெழுந்து அணுகி வந்தது. கூடி நின்றவர்கள் அச்ச ஒலி எழுப்பி பின் நகர காவலர் வில்பூட்டினர். காவலர்தலைவன் கையசைத்து அவர்களை தடுத்தான்.
சிம்மம் தொய்ந்தாடிய செம்பட்டை வயிறுடன் மிக மெல்ல காலெடுத்துவைத்து அருகணைந்து கொற்றவைச்சிற்பத்தை தலைதூக்கி நோக்கியது. பின்பு அதன் காலடியில் தன் முகத்தை உரசியபடி உடலை நீட்டி வாலைச் சுழற்றியபடி உடலுக்குள்ளேயே எதிரொலி எழுந்த குரலில் உறுமியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் அடிவயிற்றால் அவ்வொலியைக் கேட்டு கைகூப்பி மூச்சுக்குள் “அன்னையே!” என்றனர். திரும்பி தன் வெண்துளி விழிகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கியபடி நடந்து அப்பால் சென்று புதர்களுக்குள் இலையசையாது புகுந்து மூழ்கி மறைந்தது.
ஒவ்வொருவரும் உடல்நாண்கள் தளர்வுற மூச்சு அவிழ இயல்பாயினர். முதுபூசகர் கையாட்ட சூதன் தன் துடியை கையிலெடுத்து தாளம் மீட்டத் தொடங்கினான். பாணன் கிணையைத் தொட்டு எழச்செய்து உடன் இணைந்தவுடன் துடிப்பொலியில் காட்டிருளின் மென்பரப்பு அதிரத்தொடங்கியது. ஆயிரம் கால்களாக காட்டுக்குள் இறங்கி நின்றிருந்த சூரியக்கதிர்களில் தூசிகள் நடுங்கிச்சுழன்றன. பறவைகள் எழுந்து வானில் வட்டமிட்டு குரலெழுப்பின.
முதிய சிற்பியின் இடது கால் பாதம் துடித்து மண்ணை விலக்குவதை, அத்துடிப்பு அவர் முழங்காலை ஏறி அடைவதை அவர்களால் காணமுடிந்தது. அவர் இடது தோளும் கையும் நடுங்கின. பின்பு அவர் உடல் நின்று துள்ளியது. நிமித்திகர் அவரைச் சென்று பிடிக்கும்படி இதழசைவால் உடன் நின்ற பூசகரிடம் சொல்ல அவர் தலையசைத்தபடி, உடலெங்கும் தயக்கம் நிறைய, ஓர் அடி எடுத்து முன்வைத்தார். அஞ்சி, குழம்பி நிமித்திகரை திரும்பிப்பார்த்து விழிகளால் வினவ அவர் குழம்பிய விழிகளுடன் சிற்பியை நோக்கிக்கொண்டிருந்தார்.
நெஞ்சில் தங்கிய ஒலி எரிந்தெழுந்து தொண்டை கிழிபட்டு வெளிப்படுவது போல அலறியபடி சயனர் அச்சிற்பத்தை நோக்கி ஓடி அதன் மேல் விசையுடன் மோதி சுழன்றுவிழுந்தார். கல்லில் எலும்பு மோதும் ஒலி அவர்களின் தாடைகளை கிட்டிக்கச்செய்தது. அதில் உறைந்து உடனே மீண்டு நிமித்திகரும் பூசகரும் அவரை நோக்கி ஓடி அணுகுவதற்குள் சயனர் தன் இடைகரந்த சிற்றுளியை எடுத்து நடுக்கழுத்தை ஓங்கிக் குத்தி அழுத்தி இறக்கி கைகளைவிரித்து பின்னால் சரிந்து முழங்கால் மடிந்து கைகள் நிலத்தில் ஊன்ற மல்லாந்து சிற்பத்தின் கால்களில் விழுந்தார்.
மூச்சுடன் சீறித்தெறித்த கொழுங்குருதித் துளிகள் சிற்பத்தின் கால்சுற்றிய கழல்களில், நகவிழிகள் எழுந்த விரல்களில், விரலடுக்குகள் அணிந்த கணையாழிகளில், இடப்பாதம் பதிந்த தாமரையில், வலப்பாதம் பதிந்த ஆமையில் சிதறி சொட்டி தயங்கி இழுபட்டு வழிந்திறங்கின. குருதி வழுக்கிய தன் கைகளால் மண்ணை அறைந்தபடி, கால்கள் இழுபட்டு உதைக்க, தசைகள் தெறித்து தெறித்து அமைய, சிற்பி உயிர்துறந்தார். அவர் விழிகள் அன்னைச்சிலைமேல் பதிந்திருந்தன. கை ஓய, முழங்கிய துடியும் கிணையும் அவிந்தன. காட்டில் எங்கோ அவை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.
நிமித்திகர் அருகே வந்து சிற்பியின் விழிகளை நோக்கியபின் “முழுதெனக் கண்டுவிட்டான். பிறிதொன்றிலாதவள் முதற்பலி கொண்டிருக்கிறாள்” என்றார். சிலையின் கால்களை நோக்கி குனிந்து வணங்கி “அன்னை விழிகளை எவரும் நோக்காதொழிக!” என்றார். பூசகர் தன் கையிலிருந்த பூசைத்தாலத்தில் மஞ்சளையும் சந்தனத்தையும் குழைத்து பிசின்செய்து அன்னையின் இரு விழிகளையும் மூடினார். அவர்கள் அன்னைக் காலடியை வணங்கி ஒவ்வொருவராக திரும்பிச்சென்றனர். ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் சிம்மநோக்கை உணர்ந்தனர்.
குறுங்காடமைந்த கொற்றவைக்கு குருதிக் கொடையும், மலராட்டும், தீயாட்டும் நிகழ்த்தப்பட்டபின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் வாஸ்துபுனிதமண்டலம் வரையப்பட்டது. நகரின் கால்கோள் விழவன்று பாஞ்சாலத்தின் அரசி அவள் துணைவர் ஐவரும் உடன்வர அமைச்சர் சௌனகரும் பாஞ்சாலத்து இளவரசர் திருஷ்டத்யும்னனும் துணைக்க அங்கு வந்து அன்னைக்கு பலியளித்து தாள் சென்னிசூடி திரும்பினாள். அன்று சற்று வளர்ந்துவிட்டிருந்த சிம்மக்குருளைகள் மூன்றும் புதர்களினூடாக வந்து வால்களைத் தூக்கியபடி நின்று அவர்களை நோக்கின. அன்னையின் அழைப்பு புதர்களுக்கு அப்பால் எழ அவை சிற்றொலி எழுப்பியபடி துள்ளி திரும்பிச்சென்றன.
கொற்றவை குடியிருக்கும் காடென்பதனாலேயே பிறர் அங்கு வருவதும் அரிதாயிற்று. கருநிலவு நாளில் மட்டும் பூசகர் ஏழு படைவீரர்கள் வாளுடனும் வில்லுடனும் துணைவர நெய்ப்பந்தமேந்தி அப்பாதையினூடாக நடந்து காட்டுக்குள் வருவார். அவருடன் வருபவர்களில் மூவர் பின்நோக்கி விழிவைத்து பின்னடி எடுத்துவைத்து நடப்பார்கள். தங்கள் தலைக்குப் பின்புறம் பெரிய விழிகள் கொண்ட முகமூடியை அணிந்திருப்பது அவர்களின் வழக்கம். அச்சம் நிறைந்த முகமூடியின் கண்கள் அவர்களின் ஒளிவிழிகளறியா காடொன்றைக் கண்டு உறைந்திருக்கும். காட்டின் எல்லையை அடைந்ததும் பெருமுழவுகளை ஒலிக்க வைத்து “அம்பே! அரசியே! அலகிலாதவளே! விழியளே! வெற்றிகொள்பவளே! புடவியெனும் வெறியாட்டு கொண்டாடுபவளே! எங்கும் பூத்தவளே! எக்கணமும் புதியவளே!” என்று கூவியபடி உள்ளே செல்வார்.
கொற்றவை ஆலயத்தின் பின்னாலிருந்த அக்குகையில் எப்போதும் சிம்மங்கள் இருந்தன. அன்னைச் சிம்மம் ஈன்ற குட்டிகள் முழுப்பாதம் அடைந்து தங்கள் முத்திரைகளால் அந்நிலத்தை அடையாளப்படுத்தின. ஆலயத்தருகே அவர்கள் வரும்போது அவை உறுமியபடி சென்று அப்பாலிருந்த சிறிய பாறைகளில் ஏறி சொல்மறுக்கும் கண்களால் அவர்களை நோக்கிக் கொண்டிருக்கும். அன்னையின் சிறு கல்விளக்கில் நெய்யிட்டு சுடர்ஏற்றி, சிறுகுருதிக் கொடையளித்து, நெய்ப்பந்தம் கொளுத்தி சுடராட்டு நிகழ்த்தி வணங்கி மீண்டு செல்லும்போது அச்சத்தில் அவர்கள் உடல் மெய்ப்பு கொண்டிருக்கும்.
இந்திரப்பிரஸ்தத்தின் காவல் கொற்றவை நுதலணிந்த விழியும், பிறை சூடிய சடைமகுடமும், பைந்நாகக்கச்சையும் கொண்டவள். பதினாறுகைகளிலும் முப்புரிவேலும், உடுக்கும், மின்கதிரும், உழலைத்தடியும், வாளும், கேடயமும், வில்லும், அம்பும், கபாலமும், கனலும், வடமும், அங்குசமும், தாமரையும், அமுதகலமும் ஏந்தி அளித்து அருளி இடைஒசிந்து நின்றிருந்தாள். சிற்றிடைக்கு மேல் எழுந்த அமுதகுடங்களில் கருணையும், விரித்த கால்களின் நடுவே திறந்த அல்குலில் அனலும் வாழ்ந்தன. அவள் கால்களின் கழல்களில் மும்மூர்த்திகளின் முகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவள் கணையாழிகளில் சூரிய சந்திரர்களும் ஆதித்யர்களும் விழி திறந்திருந்தனர். அவளைச் சூழ்ந்திருந்த பிரபாவலயத்தில் எட்டு வசுக்களும் திசைத்தேவர்களும் நிரைகொண்டிருந்தனர்.
[ 5 ]
ஆவணிமாதக் கருநிலவு நாளில் இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவை அன்னைக்கு நிணக்கொடையும் தீயாட்டும் வெறியாட்டும் நிகழ்த்தும்பொருட்டு அரசி திரௌபதியும் அரசர் யுதிஷ்டிரரும் வந்திருந்தனர். அவர்களுடன் தம்பியர் நால்வரும், மதுராவின் மூத்த யாதவரும் துவாரகையின் இளைய யாதவரும் அமைச்சர் சௌனகரும் சென்றனர். தெற்குக் காட்டுக்குள் நுழைவதற்கான பாதை இருபுறமும் வளர்ந்த புதர்கள் வெட்டப்பட்டு, மென்மணல் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டிருந்தது. பல்லக்கில் ஏறி அடர்காட்டின் எல்லை வரைக்கும் வந்த அரசி அதன் பின் சந்தனக் குறடுகளை அணிந்துகொண்டு தன் கையிலேயே பூசனைப் பொருட்களை சுமந்தபடி நடந்தாள். அவள் அணுக்கத்தோழி மாயையும் உடன் நடந்தாள்.
முன்பே சென்ற இசைச்சூதர் தங்கள் கையில் இருந்த முழவை ஒலிக்க வைத்து அவர்களின் வருகையை அறிவித்தபோது அப்பால் காட்டுக்குள் இருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. எவரும் எச்சொல்லும் உரைக்கவில்லை. அவர்களின் உள்ளங்களும் சொல்லின்மையில் பிசிராடி நுனிபறந்துகொண்டிருந்தன. அடர்காடு தன்னைப்பற்றியே பிறர் நினைக்கவைக்கும் வல்லமை கொண்டது. இருண்ட குளிர்த்திரையென தன்னை முதலில் காட்டுகிறது. பின்பு ஆயிரம் விழிகளென நோக்குகிறது. பின்பு மறைந்திருக்கும் பல்லாயிரம் அறியாப் பார்வைகளென மாறுகிறது. அத்தனை நோக்குகளையும் ஒன்றிணைக்கும் ஒற்றை ரீங்காரமாக சூழ்ந்து கொள்கிறது.
திரௌபதி அக்காட்டில் எழுந்த ஒவ்வொரு விழியையும் தொட்டு சொல்லாட விழைபவள் போல் நோக்கியபடி வந்தாள். அவளருகே தலைகுனிந்து யுதிஷ்டிரர் நடந்தார். பெரிய கைகளை அசைத்தபடி தோளில் பரவிய நீள்குழலுடன் பீமனும், வில்லேந்தி அம்பறாத்தூணியுடன் அர்ஜுனனும், தொடர்ந்து நகுலனும் சகதேவனும் சென்றனர். முழவேந்திய இசைச்சூதர் மூவருக்கு பின்னால் இளைய யாதவரும் மூத்த யாதவரும் அருகருகே நடந்தனர். கொற்றவை ஆலயம் தொலைவில் தெரிந்ததும் யுதிஷ்டிரர் தலைதூக்கி நீள்மூச்செறிந்தார். சௌனகர் அருகே குனிந்து மெல்லிய குரலில் ஆணைபெற்று கையாட்ட முழவுகள் எழுந்தன.
ஆலயமுகப்பில் காத்து நின்றிருந்த சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் அருகணைந்து முகமன் உரைத்தனர். “அனைத்தும் சித்தமாக உள்ளன அமைச்சரே” என்றார் சுஷமர். அவர்கள் சென்று ஆலயத்தின் முன் நின்றதும் அங்கு நின்றிருந்த இசைச்சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் சல்லரிகளையும் முழக்கினர். பாறையை உள்ளமைத்து கட்டப்பட்ட ஆலயக்கருவறைக்குள் மூன்று பூசகர்கள் அன்னையின் ஓங்கியசிலைக்கு மஞ்சளும் சந்தனமும் அரைத்த குழம்பைத் தொட்டு உருட்டி எடுத்து வீசி விரல்களால் அழுத்திப்பரப்பி மெய்ச்சாத்து அணிவித்துக் கொண்டிருந்தனர். தலைமைப்பூசகர் மட்டும் திரும்பி அரசியையும் அரசரையும் வணங்கினார்.
கரும்பாறையிலிருந்து ஊறி எழுபவள்போல பொன்னுடலுடன் அன்னை உருத்திரட்டி வந்து கொண்டிருந்தாள். கருவறைக்கு முன்னிருந்த அகன்ற கருங்கல் முற்றத்தில் வாழையிலைகள் பரப்பி மலர்களும் பூசனைப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன. உடைவாளேந்திய காவலர்கள் சற்று விலகி மரங்களின் அடியில் நிலைகொண்டனர். அவர்கள் அனைவரையும் நோக்கால் இயக்கும் இடத்தில் படைத்தலைவன் தன் இடையில் சிறு கொம்புடன் நின்றான். அரசியும் அரசரும் அன்னைக்கு முன் நிற்க, இளையவர்கள் இருபக்கமும் நின்றனர். அருகே இளைய யாதவரும் மூத்த யாதவரும் நின்றனர்.
அவர்களுக்கு முன்னால் ஆலயமுற்றத்தில் பன்னிருநிலைக்களம் வெண்சுண்ணத்தால் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொன்றிலும் அதற்கான எண்கள் பொறிக்கப்பட்டு அருகே சிறிய உருளைக்கற்களாக அக்களத்திற்குரிய தேவர்கள் அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மலர்சூடி, அருகே சிறுமண்ணகலில் சுடர் எரிய, அந்நிழல் அருகே நீண்டு நின்றாட காத்திருந்தனர்.
முதுபூசகர் உள்ளிருந்து அன்னையின் காலடியிலிருந்து எடுத்த மலரும், அவள் உடலில் இருந்து தொட்டு எடுத்த சந்தனமஞ்சள் விழுதும் கொண்டு வந்து அரசருக்கும் அரசிக்கும் அளித்தார். அவர்கள் அதை நெற்றியில் அணிந்து கொண்டதும் “மாலை நான்காம் நாழிகையில்தான் கருநிலவு தொடங்குகிறது என்பது நிமித்திகர் கூற்று அரசி. அதன் பிறகே அணி செய்யத் தொடங்க வேண்டும். சற்று முன்னர்தான் தொடங்கினோம்” என்றார். யுதிஷ்டிரர் ”அன்னை எழுக!” என்று சொல்ல பூசகர் தலைவணங்கி உள்ளே சென்றார்.
சந்தனமஞ்சள் மெய்க்காப்பு கீழிருந்து சிதலெழுவதுபோல வளர்ந்து அன்னையின் தோளை சென்றடைந்தபோது மாலை கடந்துவிட்டிருந்தது. சுற்றிலும் இலைகளினூடாக சரிந்திருந்த ஒளிக்குழல்கள் விண்ணோக்கி இழுபட்டு மறைய இலைகளின் பளபளப்புகள் அணைந்தன. மெய்க்காப்பில் அன்னையின் முகம் முழுதமைந்தபோது சூழ்ந்திருந்த காடு இருளாகவும் ஒலியாகவும் மட்டுமே எஞ்சியது.
அணிப்பேழை கொண்டுவந்து வைத்து திறக்கப்பட்டது. பூசகர் அன்னையின் குழல் அலைகளுக்குமேல் நெய்க்கரிச்சாந்து குழைத்து காப்பிட்டு, அதில் அருமணிமலர்களையும் பொன்மணிகளையும் பதித்தார். அவள் மூக்கில் செம்மணிகள் ஒளிரும் வளையம் அணிவிக்கப்பட்டது. காதுகளில் நாகக்குழையும் தோள்களில் அணிவளைகளும் செறிவளைகளும் பதிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றென முத்தாரமும் மணியாரமும், சரப்பொளி மாலையும் அவள் முலைகள் மேல் அணிவிக்கப்பட்டன. இடையில் செம்மணிகள் சுடரும் மேகலையும், அதற்குக் கீழே தொடைச்செறிகளும் சூட்டப்பட்டன. தென்முத்துக்கள் ஒளிவிட்ட கழல்கள் புன்னகை சூடின. கணையாழிகளில் கண்கள் எழுந்தன. கல்லில் இருந்து பிறிதொரு அணிவடிவம் எழுந்து கண் முன் நின்றது.
பூசகர் வந்து பணிந்து “அன்னைக்கு விழிமலர்கள் பொருத்தலாம் அல்லவா?” என்று யுதிஷ்டிரரிடம் கேட்டார். அவர் தலையசைக்க திரும்பி இசைச்சூதரிடம் கைகளைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அன்னையின் கல்விழிகளை மூடியிருந்த செஞ்சாந்துமீது வைரங்கள் பதிக்கப்பட்ட விழிமலர்கள் பொருத்தப்பட்டன. விழியொளி கொண்டதும் அவள் முகத்தில் மெல்லிய துடிப்பு குடியேறுவது போல தோன்றியது. துடித்துத் திமிறி அலைத்த தாளத்துடன் இணைந்து அவள் உடலும் அசைந்தது. எக்கணமும் வீறிட்டலறியபடி அவள் எழுந்து நின்றாடத்தொடங்கிவிடுவாள் என்பது போல்.
இருகைகளையும் கூப்பி கால்களை அழுந்த ஊன்றி முற்றிலும் நிகர்நிலை கொண்ட உடல் அசைவற்றிருக்க நிலைத்த விழிகளால் அன்னையை நோக்கிக் கொண்டிருந்தாள் திரௌபதி. பூசகர் ஆணையிட துணைப் பூசகர்கள் அன்னை முன் ஐம்பருக்கள் குடிகொண்ட ஐந்து மங்கலங்களாகிய சுடரகல், வெண்கவரி, பொற்குடத்துநீர், வெள்ளிக்கிண்ணத்தில் கூலமணிகள், ஆடி ஆகியவற்றை நிரத்தினர். பூசகர் எழுந்து அரளியும், தெச்சியும், காந்தளும், செண்பகமும், தாமரையும் என ஐந்துசெம்மலர்களை அள்ளி அன்னையின் காலடிகளில் இட்டு வணங்கினர்.
முதற்பூசகர் வெளி வந்து கைகாட்ட இசைச்சூதர்கள் தங்கள் கலம் தாழ்த்தி அமைந்தனர். செவிதுளைக்கும் அமைதியில் காட்டின் ஒலிகள் உயிர்த்தெழுந்து வந்தன. சீவிடுகளின் ரீங்காரத்தால் இணைக்கப்பட்ட கூகைக்குழறலும் கானாடுகளின் செருமல்களும் மான்கூட்டமொன்றின் தும்மலோசைகளும் சூழ்ந்தன. பந்த ஒளி கண்டு கலைந்து மீண்டும் அமைந்த பறவைகளின் சிறகோசை தலைக்குமேல் சிதறியது. ஆலயத்தைச் சுற்றி நடப்பட்ட நூற்றியெட்டு நெய்ப்பந்தங்களின் சுடரசைவில் அப்பகுதி காற்றில் படபடக்கும் கொடி என தெரிந்தது.
முதற்பூசகர் அன்னக்குவியலின் அருகே முழந்தாளிட்டு அமர்ந்து கையில் சிறு துடி ஒன்றை ஏந்தி இருவிரலால் அதை மீட்டியபடி பாடத்தொடங்கினார். பண்படாத தொல்மொழியின் மன்றாட்டு போல, அறைகூவல் போல, வெறியாட்டு போல அப்பாடல் எழுந்தது. மீண்டும் மீண்டும் அன்னையே, விழிகொண்டவளே, முடிசூடியவளே, முற்றிருளே, முடிவிலியே என்னும் அழைப்பாக அது ஒலித்தது. துடிமேல் அதிர்ந்த விரல்கள் ஈயின் சிறகுகள் போல விழியறியா அசைவுகொண்டன. அத்தாளத்துடன் இணைந்து கொண்டிருந்த அவர்களின் உள்ளங்கள் அவ்விரைவை அடைந்தன. மேலும் மேலும் விரைவெனத்தாவி, தாங்கள் சுமந்திருந்த அனைத்தையும் உதறி, வெறும் இருட்பாய்ச்சலென மட்டுமே ஆகின.
மேலும் மேலும் என உன்னி குவிந்து முனைகொண்டு மேலும் கூர்ந்து சென்ற உச்சியில் வெடித்தெழுந்தது போல அலறல் எழுந்தது. ஆலயத்தின் பின்னாலிருந்து மாமல்லர்களுக்குரிய பெருந்தோள்கள் கொண்ட பூசகர் ஒருவர் மரத்தில் செதுக்கி விழியும் பிடரியும் அமைக்கப்பட்ட சிம்மமுகம் சூடி இருகைகளின் விரல்களிலும் ஒளிரும் இரும்புக்கூருகிர் அணிந்து பேரலறலுடன் பாய்ந்துவந்தார். அவர் கால்கள் நிலத்தைத் தொட்டு உந்தி துள்ளி எழ, கைகள் சிறகுகள் என சுழல அவரை காற்றிலேயே நிறுத்தியது அவ்வெறி. மரவுரியாலான செந்நிறப்பிடரிக்கற்றை காற்றில் எழுந்து குலைந்தாட, மார்பில் பரவியிருந்த செந்தாடி உலைந்து பறக்க, இழுபட்ட வாய்க்குள் வெண்ணிற கோரைப்பற்கள் செறிந்திருக்க சிம்மமுகம் வெறித்துச் சுழன்றாடியது.
பூசகரின் குரல் விலங்குகளின் தொண்டைகளுக்கே உரிய முறுக்கமும் துடிப்பும் கொண்டு ஓங்கியது. எழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம் எழுக! எழுந்தெழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம்! அம்மா, பன்னிரு படைக்களம். பன்னிரு படைக்களம் தாயே! மாகாளி, கருங்காளி, தீக்காளி, கொடுங்காளி, பெருங்காளியே! உருநீலி, கருநீலி, விரிநீலி, எரிநீலி, திரிசூலியே! காளி, கூளி, கங்காளி, செங்காலி முடிப்பீலியே! எழுக, பன்னிரு பெருங்களத்தில் எழுக! எழுக, பன்னிரு குருதிக்குடங்களில் எழுக! எழுக பன்னிரு கொலைவிழிகள்! எழுக பன்னிரு பெருங்கைகள்! எழுக பன்னிரு தடமுலைகள்! எழுந்தெழுக பன்னிரு கழல்கால்கள்! எழுக அன்னையே! எழுக முதற்சுடரே! எழுக முற்றிருளே! எழுக அன்னையே! எழுந்தெரிக இக்களத்தில்! நின்றாடுக இவ்வெரிகுளத்தில்! எழுக பன்னிரு படைக்களம்! படைக்களமாகி எழுக அன்னையே!”
“அன்னை முன் எழுக, அன்னை முன் எழுக ஆயிரம் பலிக்கொடைகள்! அன்னை முன் எழுக ஆயிரம் பெருநகர்கள்! அன்னை முன் எழுக பல்லாயிரம் குருதிக்கலங்கள்! அழிவின் அரசி இருளின் இறைவி இங்கெழுக! இங்கெழுக!” சிம்மமுகன் வேலை ஓங்கி மண்ணில் குத்தி நிறுத்தி தன் நெஞ்சை நோக்கி அறைந்து இரு கைகளையும் விரித்து பெருங்குரலெழுப்பி முழந்தாள் மடக்கி நிலத்தில் விழுந்தார். இரு கைகளிலும் உகிர்கள் மின்ன தூக்கி தலைக்குமேல் அசைத்து நடுநடுங்கினார்.
பூசகர்கள் இருவர் அப்பால் காட்டுக்குள் கட்டப்பட்டிருந்த வெண்ணிற எருதை இழுத்து வந்தனர். ஒளியைக் கண்டு நான்கு கால்களையும் ஊன்றி புள்ளிருக்கை விதிர்க்க தலைதாழ்த்தி மூச்சொலி எழுப்பி பின்னகர்ந்தது. அதன் பெரிய விழிகளுக்குள் பந்தங்களின் செவ்வொளி மின்னியது. பூசகர் அதை உந்தி முன்னெடுத்து வந்து அன்னையின் முன் நிறுத்தினர். அது கழுத்துத்தசைச்சுருள்கள் விரிந்து வளைய தலையை அசைத்து கொம்புகளைக் குலுக்க காதுகள் அடிபட்டு ஒலித்தன. பூசகர் அதன் கழுத்தில் செம்மலர்மாலையை அணிவித்தனர். முதுபூசகர் அதன் தலைமேல் நீரைத்தெளிக்க அது உடல் சிலிர்த்து மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி சிம்மமுகனை நோக்கி சென்றது.
சிம்மப் பேரொலியுடன் அவர் இருகைகளையும் விரித்து அமறியபடி அதை எதிர்கொண்டார். சிறியவிழிகளில் அச்சமின்மையுடன் அது கொம்புகளைத் தாழ்த்தி முன்னங்காலால் மண்ணைக் கிண்டியது. கொம்புகளை உலைத்தபடி மூச்சொலிக்க விழிகளை உருட்டியபடி அசைவற்று நின்றது. அதன் உடலில் தசைகள் அசைந்துகொண்டே இருந்தன. ஒரு கணத்தில் அது மண்பறக்க பாய்ந்து சிம்மமுகனை நோக்கி சென்றது.
சிம்மம் எழுந்து பாய்ந்து எருதின்மேல் விழுந்து இரு கைகளின் உகிர்களாலும் அதை கவ்விக்கொண்டது. அதன் கழுத்தைப்பற்றி குருதிக் குழாய்களை குத்திக்கிழித்து ஊற்றெடுத்த குருதியில் தன் வாயைப் பொருத்தி உறிஞ்சி சுவைத்து ஊதி கொப்பளித்தது. குருதித் துளிகள் மழையென அதன்மீதும் அருகே வணங்கி நின்றிருந்தவர்கள் மேலும் பொழிந்தன. வால் விடைக்க குளம்புகள் மண்ணில் உதைபட சுழன்று சுழன்று வந்த காளை இடதுவிலா அடிபட மண்ணில் விழுந்தது. அதன் வால் மண்ணில் இழுபட்டது. கால்கள் பரபரக்க விழிகள் உருண்டு உருண்டு தவிக்க உடல் அதிர்ந்து அடங்கிக்கொண்டிருக்க அதன் மேல் எழுந்தமர்ந்து நெஞ்சில் அறைந்து முழக்கமிட்டது சிம்மம்.
[ 6 ]
இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் உண்டு என்னும் செய்தியை இன்று அறிந்துகொண்டேன்” என்றாள் பிந்துமதி. முகம் சிவந்த தேவிகை “நான் எவரிடமும் சொல்லாட வரவில்லை” என்றாள்.
அவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த குந்தியின் உடல் நிலைகொள்ளவில்லை. விரைந்து நடந்து மூச்சிரைத்து நின்று மீண்டும் நடந்தாள். அவளுடன் சென்ற சுபத்திரை “கிளர்ந்திருக்கிறீர்கள் அன்னையே” என்றாள். “ஆம், இன்று அவையில் அச்செய்தியை யுதிஷ்டிரன் அறிவித்தபோது என் வாழ்வின் நிறைவு அணுகுகிறது என்றே உணர்ந்தேன்” என்றாள். “அதன்பின் என்னுள் எண்ணங்களே ஓடவில்லை. பொருளற்ற சொற்களாக பெருகிக்கொண்டிருக்கிறது என் உள்ளம். இளையவளே, என் வாழ்க்கையின் முதன்மைத்தருணங்களில் ஒன்று இது. நான் மீண்டும் மீண்டும் நாடும் ஒன்று” என்றாள். சுபத்திரை வெறுமனே நோக்க “அறியாசிற்றிளமையில் குந்திபோஜருக்கு மகளாகச்செல்லும் முடிவை நான் எடுத்தேன். அன்று என் உள்ளம் கிளர்ந்து கொந்தளித்ததை எண்ணும்போதெல்லாம் மீண்டும் அவ்வுணர்வை அடைவேன். உண்மையில் அத்தருணத்தை மீளவும் நடிப்பதற்காகவே இவ்வாழ்க்கை முழுக்க முயன்றேன் என்றுகூட எண்ணுவதுண்டு.”
கனவிலென அவள் சொன்னாள். “குடியவை. யாதவர்களின் குடித்தலைவர்கள் என்னை சூழ்ந்திருந்தனர். நானறியாத விழிகளுக்கு நடுவே என் தந்தையின் தளர்ந்த விழிகள். அவை என்னிடம் மன்றாடுவதென்ன என்று நன்கறிந்திருந்தேன். அவர் என் கைகளைப்பற்றி கண்ணீருடன் கோரியபோது நான் பிறிதொன்றையும் எண்ணியிருக்கவுமில்லை. உன் முடிவென்ன பிருதை என்று எவரோ கேட்டனர். மீண்டும் மீண்டும் வெவ்வேறு குரல்களில் அவ்வினா எழுந்தது. என் சித்தம் உறைந்துவிட்டது. அப்போது நான் விழைந்ததெல்லாம் அக்கணத்தை கடப்பதைக்குறித்து மட்டுமே. பதற்றத்துடன் ஆடையை நெருடியபடி வியர்த்த முகத்துடன் சுற்றிலும் விழியோட்டியபோது குந்திபோஜரின் அரசி தேவவதியை கண்டேன். அவள் தலையில் சூடியிருந்த மணிமுடியின் கற்கள் இளவெயிலில் மின்னின. அவள் தலைதிருப்பியபோது அவை இமைத்தன. அவள் இங்குநிகழ்வதை சற்றும் பொருட்படுத்தாமல் அருகே நின்றிருந்த சேடியிடம் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தாள்.”
“நான் அக்கணம் முடிவெடுத்தேன். குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல விழைவதாக சொன்னேன்” என்றாள் குந்தி. “அக்கணமே என் உள்ளம் கொந்தளித்தெழுந்தது. உடலெங்கும் அனல் நிறைவதுபோல. நரம்புகள் எல்லாம் இறுகி ரீங்கரிப்பதுபோல. அது நான் என்னை உணர்ந்த தருணம். அன்றுவரை நான் என்னை உணர்ந்ததே இல்லை என்றே இன்று எண்ணுகிறேன். ஏனென்றால் நான் மண்ணில் வாழவில்லை. கன்றுமேய்த்தும் ஆபுரந்தும் நெய்சமைத்தும் இல்லத்தில் இருந்தேன். மூத்தவருடன் சொல்லாடியபடி காடுகளில் அலைந்தேன். அவர் தன் கனவுகளை என்னுள் நிறைத்தார். நான் என் கனவுகளை அவற்றிலிருந்து உருவாக்கிக்கொண்டேன். அக்கனவுகளிலேயே வாழ்ந்தேன். அவள் வேறொரு பிருதை. அவளே வாழ்ந்தாள், நானல்ல.”
குந்தி நாணப்புன்னகையுடன் “அக்கனவுகளை மீண்டும் எண்ணும்போதெல்லாம் வியப்பேன். எப்படி அவை என்னிலூறின? அவை மண்ணில் நின்றிருப்பவையே அல்ல. என் தமையன் பாரதவர்ஷத்தை முழுதாள விரும்பினார். நான் என்னுள் எவருமறியாது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக விரும்பினேன். புரவிப்படை நடத்திச்சென்று யவனர்களை வெல்லவும், யானைகளை திரட்டிச்சென்று விந்தியனைக் கடக்கவும் எண்ணினேன். கங்கையிலும் சிந்துவிலும் அத்தனை கலங்களிலும் என் கொடி பறப்பதை கனவுகண்டேன். ஆனால் அவை கனவுகளென்று என் உள்ளம் அறிந்துமிருந்தது. அன்று, யாதவகுலமன்றில் என் கண்ணெதிரில் ஒருகணம் அக்கனவுகள் அனைத்தும் ஒருகணம் நனவாகி மறைந்தன. அன்று முதல் இப்புவியில் நான் இருக்கலானேன். ஒவ்வொன்றும் என்னிலிருந்து தொடங்கி வளர்ந்தன” என்றாள். அவள் குரல் பேசப்பேச விரைவுகொண்டபோது முதுமையை உதறி பின்னகர்ந்து இனிமையடைந்தது.
அவள் கண்களில் பேதமை நிறைந்த சிறுமி ஒருத்தி தோன்றினாள். “அப்போது நான் அடைந்த பேரின்பத்தை மீண்டும் தீண்டியதேயில்லை. அதை எண்ணி எண்ணி என்னுள் ஏங்கிக்கொண்டிருக்கிறது ஆழம். பாண்டுவின் துணைவியாக முடிவெத்தது அத்தகைய ஒரு தருணம். ஊழ் உதவ தேவயானியின் மணிமுடியை சூடியதருணம் பிறிதொன்று. சௌவீரநாட்டின் முடியை சூடியமைந்தபோது மீண்டும் அத்தருணத்தை அடைந்தேன். இந்திரப்பிரஸ்தத்தில் என் மைந்தன் முடிசூடியமர்ந்தபோது இதோ அது என எண்ணி திளைத்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அது ஒரு அணுவிடை குறைவானது என்றும் என் அகம் அறிந்திருந்தது. ஆனால் இன்றறிந்தேன், இதுவே அது. அன்று தொடங்கிய அப்பயணம் இதோ கனிகிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “அதன்பொருட்டு எனக்கு இனியவை என நான் எண்ணிய பலவற்றை இழந்திருக்கிறேன். காதலுள்ள துணைவியென்றோ கனிந்த அன்னையென்றோ நான் என்னை உணர்ந்ததில்லை. இக்களத்தில் ஒவ்வொரு கணமும் என் கருக்களை நகர்த்திக்கொண்டே இருந்தேன்.”
நீள்மூச்சுடன் “இன்று அவையில் ராஜசூயம் என்னும் சொல்லை கேட்டதுமே என் மெய் விதிர்ப்பு கொண்டது. அதன்பின் சொற்களைக்கேட்க என் செவியும் சித்தமும் கூடவில்லை. பெரும்பறையோசையின் முன் வாய்ச்சொற்களென உள்ளப்பெருக்கே மறைந்துவிட்டது. ஆனால் பிறிதொரு வடிவெடுத்து அங்கே அமர்ந்து அனைத்தையும் சொல்தவறாது கேட்டுக்கொண்டுருமிருந்தேன் என இன்று உணர்கிறேன். அதன்பின் பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என்னை பதற்றம் கொள்ளச்செய்தது. முறைமைகள், திட்டங்கள், அறங்கள். மூடர்கள். அவர்களின் வெற்றுச்சொல்லடுக்குகள். ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல விழைகிறார்கள். தங்கள் குரல்மேல் மானுடருக்குள்ள விருப்பம்போல் வெறுப்புக்குரியது பிறிதொன்றுமில்லை. இன்று ஒரு தருணத்தில் நிலைமீறி எழுந்து பீமனிடம் ‘மைந்தா, நீ காட்டாளனென்றால் அந்த வைதிகனின் தலையை வெட்டி இந்த அவையில் வை’ என்று ஆணையிட்டேன். அவ்வாணையை நானே கேட்டு உடல் விரைத்து அமர்ந்திருந்தேன்.”
சுபத்திரை வாய்பொத்தி சிரித்துவிட்டு திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த விஜயையும் தேவிகையையும் நோக்கினாள். “இறுதியில் தௌம்யரின் சொல் எழுந்து அவைமுடிவும் அறிவிக்கப்பட்டபோதே மெல்ல தளர்ந்து மண்ணுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்திருப்பாய், இன்குளிர்நீர் கொண்டுவரச்சொல்லி அருந்தியபடியே இருந்தேன். என்னுள் எழுந்த அனலை நீர் பெய்து பெய்து அவித்தேன்” என்றாள் குந்தி. “இன்றிரவு நன்கு துயிலுங்கள் அன்னையே” என்றாள் சுபத்திரை. “ஆம், இன்றிரவு நான் துயிலவேண்டும். ஆனால் ஏழுவயதில் நீத்த துயில். அதை மீண்டும் சென்றடைவதெப்படி? துயிலப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.” குந்தி விலகிநடந்து சாளரம் வழியாக பெருகியோடும் யமுனையை நோக்கினாள். அவள் முகத்தில் ஒளி அலையடித்தது. அரசியர் தயங்கி நிற்க அவர்கள் செல்லலாம் என்று சுபத்திரை கைகாட்டினாள்.
“ஒருவேளை ராஜசூயம் நிறைவுற்றால் நான் அகம் அடங்கி நற்துயில் கொள்ளக்கூடும். ஆனால் அது எளிதல்ல. இன்னும் பல படிகள். அஸ்தினபுரியின் ஒப்புதலின்றி இவ்வேள்வி தொடங்காது. ஜராசந்தனின் குருதிசிந்தாது இது முடியாது” என்றாள் குந்தி. சுபத்திரை “ஆனால் அது உங்களுக்கு உங்கள் மருகன் அளித்த சொல் அல்லவா? அவரால் இயலாதது உண்டா?” என்றாள். குந்தி திகைத்து அவளை நோக்கி “எனக்கா? கிருஷ்ணனா?” என்றாள். “சிலநாட்களுக்கு முன் உங்களிடம் அவர் சொல்லாடிக்கொண்டிருக்கையில் உளம்சோர்ந்து விழிநீர் விட்டீர்கள். ஏன் ஏன் என்று அவர் மீளமீள கேட்டார். அரசுதுறந்து காடேகவிருப்பதாகவும் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்ற காடே உகந்தது என எண்ணுவதாகவும் சொன்னீர்கள்.” குந்தி “ஆம், அப்போது உண்மையிலேயே அப்படி தோன்றியது. இங்கு இனி நான் ஆற்றுவதற்கேதுமில்லை என்று.”
“பேரரசி, விரையும் புரவியில் வால்பற்றாமல் உங்களால் இருக்கமுடியாதென்று அறிந்தவர் உங்கள் மருகர்” என்றாள் சுபத்திரை. குந்தி எண்ணத்திலாழ்ந்து சிலகணங்கள் நின்றபின் “இளையவளே, நீ உன் தமையனின் நிழல். நீ சொல், என் உள்ளம் விழைவதுதான் என்ன?” சுபத்திரை சிரித்தபடி ”அன்னையே, இங்குள்ள ஒவ்வொரு யாதவனுக்குள்ளும் வாழும் கனவுதான். நூற்றாண்டுகளாக புதைத்துவைக்கப்பட்ட விதை நாம். முளைத்துப்பெருகி இப்புவி நிறைக்க விழைகிறோம்” என்றாள். “கார்த்தவீரியன் முதல் நீளும் அப்பெருங்கனவின் இன்றைய வடிவே என் தமையன். நீங்கள் அவருக்கு முன்னால் வந்தவர், அவ்வளவுதான்.” குந்தி “நீ சொல்கையில் அதுவே என்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு முழுமையாக ஏற்கவும் உளம்கூடவில்லை” என்றாள். “உங்களுக்கு முன்னால் சத்யவதிக்கும் அதுவே தோன்றியது” என்றாள் சுபத்திரை. “ஆம்” என்றபின் குந்தி “அப்போதும் என் உள்ளம் அடங்குமா என்று அறியேன். அவிந்து அது அடங்குவதில்லை என்று தோன்றுகிறது. சத்யவதியைப்போல் ஒற்றைக் கணத்தில் உதிர்ந்து மறைந்தாலொழிய இச்சுழலில் இருந்து மீட்பில்லை.”
குந்தியின் மஞ்சத்தறை வரை சுபத்திரை வந்தாள். முதன்மைச்சேடி அவளுக்கு மஞ்சமொருக்கி விலகியதும் குந்தி அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டாள். சுபத்திரை அக்கால்களை மெல்லப்பற்றி அழுத்தியபடி “கதைபயிலும் பெண் நான். என் கால்கள்கூட இத்தனை வலுக்கொண்டவை அல்ல” என்றாள். குந்தி “நான் காடுகளில் அலைந்திருக்கிறேன்” என்றாள். சுபத்திரை “பேரரசி, மண்ணும் கொடியும் முடியும் அன்றி நீங்கள் வென்றெடுப்பதென பிறிதொன்று இல்லையா?” என்றாள். “என்ன?” என்று கோரியபோது குந்தியின் விழிகள் மாறுபட்டிருந்தன. “நான் விழையும் சில உள்ளன. அவற்றை நான் முதிர்ந்து பழுத்தபின் அபிமன்யுவின் மடிசாய்ந்து உயிர்விடுகையில் அவனிடம் சொல்வேன்” என்றாள் சுபத்திரை.
விழிகளை மூடியபடி “ஆம், அவ்வண்ணம் சில அனைவருக்கும் இருக்கும் அல்லவா?” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்?” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்?” என்று குந்தி அவளை செல்லமாக அடிக்க “அப்படியென்றால் சொல்லுங்கள்” என்றாள். குந்தி “சொன்னால் முழுதும் உனக்குப்புரியாது. ஆனால் அவ்வளவுதான் சொல்லமுடியும்” என்றாள்.
“போதும்” என்று சுபத்திரை சொன்னாள். “ராஜசூயம் வேட்டு சத்ராஜித்தாக அமர்ந்திருப்பவன் பிறிதொருவன்” என்றாள் குந்தி. சுபத்திரை விழிகள் விரிய நோக்கி அமர்ந்திருந்தாள். அவள் கைகள் அசைவிழந்திருந்தன. “அவன் முன் பணிந்து நிற்கும் மணிமுடிகளில் ஒன்று ஒருகணம் என் காலடியிலும் வைக்கப்படவேண்டும்.” சுபத்திரையின் புருவங்கள் முடிச்சிட்டன. “அவ்வெற்றி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு அல்ல, என்னுள் வாழும் பெண்ணுக்கு” என்று அவள் சொன்னாள். அவ்வெண்ணம் அளித்த கிளர்ச்சியால் என அவள் முகம் சிவந்தது. கண்கள் நீர்மைகொண்டன. எடைதூக்கி நிற்பவள் போல முகத்தசைகள் இழுபட்டன. பின்பு சிரித்தபடி “பெண்ணென்பவள் எத்தனை சிறுமைகொண்டவள் இல்லையா?” என்றாள். “மானுடரே சிறுமைகொண்டவர்கள்தான். பெண்ணுக்கு அச்சிறுமையை வெளிக்காட்ட தருணங்கள் அமைவதில்லை. ஆகவே அவள் மேலும் சிறுமைகொள்கிறாள்” என்றாள் சுபத்திரை.
[ 7 ]
இந்திரப்பிரஸ்தநகரில் ஆரியவர்த்ததின் முதன்மைராஜசூயம் நிகழவிருப்பதை அறிவிக்கும் அடையாளக்கொடி வளர்பிறை முதல் நாளில் நகரின் முகப்பிலிருந்த காவல் சதுக்கத்தின் நடுவே நடப்பட்ட ஓங்கிய கல்தூண் ஒன்றில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு நாள்குறித்த நிமித்திகர் சிருங்கபேரர் “நான்கு தடைகள் கடந்து இவ்வேள்வி முழுமைபெறும். இதன் அரசன் விண்ணவருக்கு நிகரென இங்கு வைக்கப்படுவான்” என்றார். “இந்நகரம் செல்வமும் புகழும் கொண்டு ஓங்குமா? மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா?” என்று சௌனகர் கேட்டார். “அவை தெய்வங்களின் கைகளில் உள்ளன. நிமித்திகநூல் ஒன்றைப்பற்றி ஒருசரடென ஊழை தொட்டறியும் கலைமட்டுமே” என்று சொல்லி சிருங்கபேரர் தலைவணங்கினார்.
வேள்விக்கான அறிவிப்பு மக்கள்மன்றுகளில் அரசறிவிப்பாளர்களால் முழக்கப்பட்டபோது ராஜசூயத்தின் பொருள் பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. “வரிப்பொருள் மிகுவது கண்டபோதே எண்ணினேன். அந்தணர் ஏடுகளை புரட்டத்தொடங்குவர்” என்று கள்ளுண்டு கண்மயங்கி நின்றிருந்த சூதனொருவன் சொன்னான். “இதனால் நமக்கு பன்னிருநாள் இன்னுணவு கிடைக்கும். பிறிதொன்றுமில்லை” என்று ஒரு முதியகுலத்தலைவர் இதழ்வளைத்தார். அரசவையில் அமரும் வழக்கமிருந்த இளங்கவிஞன் ஒருவன் உரக்க “அறியாது பேசுகிறீர். இது நம் அரசரே பாரதர்ஷத்தில் முதல்வர் என்று அறிவிக்கப்படுவது. அவ்வண்ணமென்றால் நாமே இந்நிலத்தின் முதற்குடிமக்கள்” என்றான். களிகொண்டிருந்த சூதன் “ஆம், அதோ நின்றிருக்கும் மன்றுநாய் இப்பாரதவர்ஷத்தின் முதன்மை நாய். ஆனால் பிறநாய்கள் அதை ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை” என்றான். மன்றில் சிரிப்பெழுந்தது.
ஆனால் மறுநாளே நகர்முழுக்க களியாட்டு எழத்தொடங்கியது. சொல்லியும் கேட்டும் அதை மக்கள் வளர்த்துக்கொண்டனர். “பாரதவர்ஷத்தின் எந்தச்சந்தையிலிருந்தும் இந்திரப்பிரஸ்தம் கரவும் வரியும் கொள்ளமுடியும். அரசகருவூலம் நிறையும். நம் களஞ்சியங்கள் ஒழியாது” என்றனர். “கங்கைமேல் செல்லும் கலங்கள் அனைத்திலும் மின்கதிர்கொடி பறக்கும். தெற்கே தாம்ரலிப்தியும் நமதென்றாகும்” என்றனர். வணிகர்கள் மட்டுமே அக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. “எந்த வேந்தன் எவ்வெற்றி அடைந்தாலும் செல்வம் தனக்குரிய வகையிலேயே ஒழுகுகிறது. நதிமீன்கள் நதியொழுக்கை மாற்றமுடியுமா என்ன?” என்று முதியவணிகர் சொன்னபோது இளையவர்கள் “ஆம், உண்மை” என்றனர். “நாம் செல்வத்தை ஆள்பவர்கள் அல்ல. செல்வத்தில் ஏறி ஒழுகும் கலைகற்றவர்கள்” என்றார் முதுவணிகர்.
முந்தையநாளிரவே இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் நகர்முற்றத்தில் கூடத்தொடங்கிவிட்டனர். முற்றத்தைச் சூழ்ந்து நின்ற தூண்களில் கட்டப்பட்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒவ்வொருவரும் ஒளிவிட்டனர். விடியும்போது தோளோடு தோள்முட்டி மக்கள் நிறைந்துவிட்டிருந்தனர். நூற்றெட்டு வைதிகர்களும் மங்கல இசைச்சூதர்களும் முற்றத்தில் நிரைகொண்டு நின்றனர். முதற்புள் கூவிய முன்புலரியிலேயே அரண்மனையிலிருந்து திரௌபதியுடன் கிளம்பி பொற்பூச்சுத் தேரிலேறி நகர்த்தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று வணங்கியபடி வந்த யுதிஷ்டிரர் கொடிச்சதுக்கத்தில் இறங்கியதும் அவரை வாழ்த்தி சூழ்ந்திருந்த அனைத்து காவல் மாடங்களிலிருந்தும் பெருமுரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறின. மக்களும் படைவீரர்களும் எழுப்பிய வாழ்த்தொலியில் காலையொளி அதிர்ந்தது.
தௌம்யரும் சௌனகரும் முன்னால் சென்று தேரிலிருந்து இறங்கிய அரசரையும் அரசியையும் வரவேற்று முற்றத்திற்குக் கொண்டுவந்தனர். அரசத் தேரினைத் தொடர்ந்து தனித்தேரில் பீமனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். இளைய யாதவரும் அர்ஜுனனும் பிறிதொரு தேரில் தொடர்ந்து வந்தனர். பெருங்களிறொன்றின் மீதேறி பலராமர் வந்தார். அவர்களனைவரும் வெண்ணிற ஆடையணிந்து மலர்மாலை சூடியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் எழுந்தன. அரசியருடன் குந்தி பல்லக்கில் வந்திறங்கினாள். குளிர்ந்த காற்று அனைவரையும் தழுவியபடி கடந்துசென்றது. விண்மீன்கள் நிறைந்த வானம் அதிர்ந்தபடி அவர்களுக்குமேல் வளைந்து நின்றது. ஒவ்வொன்றும் தெளிந்து வருவதுபோல தோன்றியபோது காலம் விரைவதாகவும் வானத்து இருள் மாறுபடவே இல்லை என்று தோன்றியபோது காலம் நிலைத்து நிற்பதாகவும் அவர்கள் மயங்கினர். கீழ்வானில் விடிவெள்ளி அசைவற்றதுபோல மின்னிக்கொண்டிருந்தது.
நிமித்திகர்கள் விண்ணை நோக்கிக்கொண்டிருந்தனர். மீன் தேர்ந்து பொழுது குறித்ததும் முதுநிமித்திகர் தன் கையை அசைக்க மங்கல இசை எழுந்தது. வேதம் முழங்க தௌம்யர் தலைமையில் வைதிகர் சென்று நூற்றெட்டுபொற்குடத்து யமுனைநீரை கொடிக்காலில் ஊற்றி அதை வாழ்த்தினர். தௌம்யர் யுதிஷ்டிரரை கைபற்றி அழைத்துச்சென்று கொடிக்கால் அருகே வரையப்பட்ட களத்தில் கிழக்குநோக்கி நிற்கச்செய்தார். வெற்றிலையில் வைக்கப்பட்ட மலரையும் மஞ்சள்கிழங்கையும் பொற்சரடில் கொடிக்காலில் கட்டினர். மஞ்சளரிசியும் மலரும் நீரும் இட்டு மும்முறை அரசரும் அரசியும் கொடிக்கம்பத்தை வணங்கினர். சூழ்ந்திருந்த பெண்கள் குரவையிட்டனர். மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.
ராஜசூயத்தின் பொற்கதிர் முத்திரை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடி நகர்நடுவே இருந்த இந்திரன் ஆலயத்தில் பூசனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அது ஆலயபூசகர் எழுவரால் பொற்பேழையில் வைக்கப்பட்டு வெண்ணிற யானை மேல் நகரத் தெருக்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இருபுறமும் மாளிகை உப்பரிகையில் கூடிய மக்கள் அதன் மேல் மலர் அள்ளிச் சொரிந்தனர். கொடி மரத்தின் பூசனை முடிந்து நிலம் தொட்டு சென்னி சூடி வணங்கி எழுந்து நின்றிருந்த அரசருக்கு முன் வெள்ளையானையிலிருந்து அக்கொடிப்பேழை இறக்கப்பட்டது. ஏழு பூசகர்கள் அதை சுமந்து சென்று யுதிஷ்டிரர் முன் வைத்தனர்.
வைதிகர் வேததௌம்யர் அப்பேழையைத் திறந்து கொடியை வெளியே எடுத்தார். ஏழாக மடிக்கப்பட்டிருந்த கொடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்து கொடிமரத்தின் அடியில் வைத்தார். அரசரும் அரசியும் அதற்கு மஞ்சள் அரசியும் மலரும் இட்டு வணங்கினர். பாண்டவ இளவரசர்கள் நால்வரும் அக்கொடியை முறைப்படி அரிமலரிட்டு வணங்கி பூசனை செய்தனர். வைதிகர் வேதம் முழக்க தௌம்யர் கொடியை விரித்து பட்டுக்கயிற்றில் கட்டினார். படைத்தலைவர் வாளை உருவி ஆட்ட இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைகளிலும் காவல்கோட்டங்களிலும் இருந்த அனைத்து முரசங்களும் ஒன்றிலிருந்து ஒன்றென ஓசை தொடுத்துக்கொண்டு முழங்கத்தொடங்கின. கொடிச் சதுக்கத்திலும் அப்பால் நகரெங்கிலும் நிறைந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் “ராஜசூயம் வேட்கும் யுதிஷ்டிரர் வாழ்க! குருகுலத்தோன்றல் வாழ்க! இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க! அரசி திரௌபதி வாழ்க! ஐங்குழல் அன்னை வாழ்க!” என்று பெருங்குரலெழுப்பினர்.
கொடிமரத்தின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் உருவிய வாளுடன் நின்றனர். இடப்பக்கம் பலராமரும் இளைய யாதவரும் வாளேந்தி நின்றனர். அரசருக்கு இடப்பக்கம் பின்னால் திரௌபதி நின்றாள். தௌம்யர் யுதிஷ்டிரரிடம் “அரசியின் கைபற்றி மும்முறை கொடிக்காலை வலம் வருக!” என்றார். அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக!” என்றார் தௌம்யர். “அவ்வண்ணமே” என்று சொல்லி கண்களை மூடி நடுங்கும் கைகளுடன் யுதிஷ்டிரர் பட்டுச்சரடை அவிழ்க்க ராஜசூயத்தை அறிவித்தபடி கொடி மேலெழுந்து சென்றது. யமுனைக்காற்றில் விரிந்து படபடத்தது. கீழே எழுந்த முழக்கத்திற்கு ஏற்ப அது அசைவதாக உளமயக்கு தோன்றியது,
கைகூப்பி மேலே நோக்கி நின்ற யுதிஷ்டிரர் உளம்பொங்கி விழிநிறைந்தார். உதடுகளை அழுத்தியபடி திரும்பி தௌம்யரையும் பிற வைதிகர்களையும் கால்தொட்டு வணங்கி அவர்களிடம் மலரும் நீரும் வாழ்த்தும் பெற்றார். அவருக்குப்பின் பாண்டவர் நால்வரும் கொடிக்காலை சுற்றிவந்து வணங்கி வைதிகர்களிடம் வாழ்த்துபெற்றனர். யுதிஷ்டிரர் வேள்விச்சாலை அமைப்பதற்கான ஆணையை விஸ்வகர்ம மரபைச்சார்ந்த சிற்பியாகிய தேவதத்தருக்கு அளித்தார். பொற்தாலத்தில் நாணயங்களுடனும் மலருடனும் வைக்கப்பட்ட ஓலையை வாங்கி சென்னி சூடி ”இன்றே நன்னாள். என் பணி தொடங்கிவிடுகிறேன் அரசே” என்றார் தேவதத்தர். “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் யுதிஷ்டிரர்.
“அன்னையிடம் நற்சொல் பெறுக!” என்று தௌம்யர் சொன்னார். யுதிஷ்டிரர் திரௌபதி தொடர கைகூப்பியபடி நடந்துசென்று அரசியர் பகுதியை அடைந்து அங்கே கைகூப்பி நின்ற குந்தியின் முன் குனிந்து கால்களைத் தொட்டு சென்னி சூடினார். அவள் “வெற்றியே சூழ்க!” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றாள். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக!” என்று சொல்லி அரிமலர் அள்ளி இருவர் மேலும் தூவி வாழ்த்தினாள்.
பொழுது எழுந்து அத்தனை உலோகப்பரப்புகளிலும் ஒளி விரிந்தது. இலைகள் பளபளக்கத் தொடங்கின. “மங்கலம் நிறைந்த நன்னாள்!” என்று சொல்லி நிமித்திகர் கைகூப்ப முரசொலிகள் முழங்கி அந்நிகழ்வு முடிந்ததை அறிவித்தன. அரசகுலத்தவர் செல்வதற்காக மக்கள் காத்திருந்தனர். வாழ்த்தொலிகள் நடுவே சுபத்திரையின் கைகளைப்பற்றியபடி குந்தி நடந்தாள். கால்தளர அவளால் பல்லக்குவரை செல்லமுடியவில்லை. “பேரரசி, தாங்கள் மெல்லவே செல்லலாம்” என்றாள் சுபத்திரை. மேலும் சற்று நடந்தபின் மூச்சுவாங்க அவள் நின்றாள். பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு முன்னால் சென்றாள். பல்லக்கில் ஏறியதும் கைகளில் முகம் புதைத்து சிலகணங்கள் குனிந்து அமர்ந்திருந்தாள். ”அத்தை” என்று அருகே அமர்ந்த சுபத்திரை அவள் தோளை தொட்டாள். அவள் அதை மெல்ல தட்டிவிட்டாள்.
[ 8 ]
தௌம்யரின் வழிகாட்டலில் தேவசன்மரின் தலைமையில் இந்திரப்பிரஸ்தத்தின் செண்டுவெளியில் பன்னிரண்டாயிரம் தூண்கள் நாட்டப்பட்டு அவற்றின்மேல் மென்மரப்பட்டைகளால் கூரை வேயப்பட்ட வேள்விக்கூடம் அமைந்தது. நடுவே ஆறு எரிகுளங்கள் கட்டப்பட்டன. சுற்றிலும் ஹோதாக்கள் அமரும் மண்பீடங்களும் அவிப்பொருட்கள் குவிக்கும் களங்களும் நெய்க்கலங்கள் கொண்டுவரப்படும் வழியும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. வலப்பக்கம் வேள்விக்காவலனாகிய இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரும் அவர் அரசி திரௌபதியும் அமரும் மேடை எழுந்தது. அவருக்கு முன்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அமர இடம் ஒருக்கப்பட்டது வைதிகரும் படிவரும் உள்ளே வரவும் அமர்ந்து வேதம் ஓதவும் தனி வழியும் இடமும் சித்தமாக்கப்பட்டன.
பல்லாயிரம் பணியாட்கள் இரவு பகலென உழைத்து அவ்வேள்விக்கூடத்தை அமைத்தனர். ஒவ்வொரு நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் மக்கள் வந்து அவ்வேள்விக்கூடம் அமைவதை நோக்கி சென்றனர். அதன் ஒவ்வொரு காலிலும் ஒவ்வொரு தேவர் காவலிருப்பதாக சூதர்கள் பாடினர். அவ்வெரிகுளங்களை காவல் காக்கும் திசைத் தேவர்கள் வருகை குறித்து சூதனொருவன் பாடிய நீள்பாடலை அங்காடி முற்றத்தில் கூடிய நகர்மக்கள் உவகையுடன் நின்று கேட்டனர். “திசைகள் காவலின்றி கிடக்கின்றன. ஏனென்றால் இந்திரப்பிரஸ்தம் இருக்கும்வரை தெய்வங்களும் ஆணைமீற எண்ணாது” என்று அவன் பாடியபோது அவர்கள் உரத்த குரலெடுத்து சிரித்தனர். வேள்விக்கூடம் அமைந்த முதல்நாளில் மாலையில் பெய்த இளமழையை “வானத்தின் வெண்சாமரம்” என்றுபாடிய சூதனுக்கு வேளிர் ஒருவர் தன் கணையாழியை உருவி அணிவித்தார்.
நகரெங்கும் அவ்வேள்வியைக் குறித்த கதைகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று கலந்து அனைவரையும் அணைத்துக்கொண்டு ஒற்றைப்படலமாக மாறின. அது ஒவ்வொருவரையும் மீறி வளர்ந்த பின்னர் அதைக் குறித்த எள்ளல்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். அவ்வெள்ளல்கள் வழியாக அதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியை ஈட்டிக்கொண்டனர். வேள்விக்கூடத்தை பகடியாடும் கதைகளைப்பாடிய சூதர்களுக்கு முன் மேலும் மக்கள் கூடி நின்று நகைத்தனர். அவிக்கலத்தில் நெய்பெறும்பொருட்டு இந்திரன் தன் துணைவியர் அனைவரையும் கூட்டி வந்த கதையைப் பாடிய இந்திரமத்தவிலாசம் என்னும் நகைநாடகத்தை தெருவிலேயே எட்டு பாடினியரும் அவர்களின் துணைவர்களாகிய நான்கு சூதர்களும் நடித்தனர். முன்பு பாற்கடல் கடைந்தபோது அமுதத்தைக் கொண்டு ஒளித்து வைத்து உண்ட இந்திரன் இம்முறை தருமன் அளவின்றி பெய்யும் நெய்யை வைக்க இடமில்லாது முகில் கூட்டங்களிடையே தவிப்பதை சூதனொருவன் நடித்துக்காட்ட அவர்கள் அவன்மேல் மலர்களையும் ஆடைகளையும் வீசி எறிந்து கூவி சிரித்தனர்.
வேள்விக்கூடம் எழுந்த ஏழுநாட்களும் குந்தி அரசமாளிகையின் உப்பரிகையில் நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தாள். இரவிலும் அவள் அங்கேயே நின்று நோக்கிக்கொண்டிருப்பதை சுபத்திரை பலமுறை வந்து பார்த்தாள். ஆனால் அவள் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லவில்லை. அங்கிலாதவள் போல் ஆகியிருந்தாள். ஒருநாள் விடியலில் கொற்றவை ஆலயத்தில் தொழுது திரும்புகையில் அவள் “வேள்விக்கூடத்திற்கு செல்க!” என்றாள்.
வேள்விக்கூடத்தில் அந்த இருள்காலையிலும் சிற்பிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவளைக் கண்டதும் அவர்கள் உளிகளுடனும் கோல்களுடனும் எழுந்து நின்று தலைவணங்கினர். அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தலைமைச்சிற்பி தேவதத்தர் எழுந்து ஓடி அணுகி கைகூப்பி நின்றார். குந்தி எவரையும் நோக்கவில்லை. கைகளைக் கூப்பியபடி வேள்விச்சாலையில் சுற்றிவந்தாள். ஒரு சொல்லும் உரைக்காது மீண்டும் வந்து பல்லக்கில் ஏறியபோது அவள் கைகளைப் பற்றி மேலேற உதவிய சுபத்திரை அவள் காய்ச்சல்கண்டவள் போல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
[ 9 ]
ராஜகிருஹத்தில் ஜராசந்தன் தன் புலவர்அவையில் நூல் ஆய்ந்துகொண்டிருக்கையில் ராஜசூய வேள்விக்காக இந்திரப்பிரஸ்தத்தில் கொடி ஏறிய செய்தி வந்தடைந்தது. ஓசையற்ற காலடிகளுடன் அவனை அணுகிய அமைச்சர் காமிகர் மெல்ல குனிந்து செவியில் அச்செய்தியைச் சொல்ல முகத்திலும் விழிகளிலும் இருந்த புன்னகை சற்றும் நலுங்காமல் அதைக் கேட்டு தலையசைத்து அவர் செல்லலாம் என்று கைவிரித்தபின் எதிரே அமர்ந்திருந்த உசிநார நாட்டுப் புலவரிடம் “சோமரே, நந்தி என்று வெள்ளெருது ஏன் சொல்லப்படுகிறது?” என்றான்.
சோமர் “அது தன் அழகால் உள்ளத்தை மகிழ்விப்பதனால்” என்றார். “இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் காணத்தெரிந்தவனுக்கு நந்தி மட்டுமே அளிக்கும் அழகு என்ன?” என்று ஜராசந்தன் கேட்டான். பிரக்ஜோதிஷ நாட்டு திரிகாலர் “நந்திதேவர் தாளத்தால் இறைவனை மகிழ்விப்பவர்” என்றார். “நன்று, இப்புடவியை இயக்கும் தாளத்தின் தலைமகன் நந்தி. இப்புவியில் இன்பமென்பதும் தாளமென்பதும் ஒன்றே” என்று ஜராசந்தன் சொன்னான்.
“அது எங்ஙனம்?” என்று தென்னகத்துப் புலவராகிய சடாதரர் கேட்டார். “இன்பமென்பது இது அது என்றிலாத பெருவெளியிலிருந்து நாம் மொண்டு எடுப்பது என்கின்றன நூல்கள். பெருவெளி என்பது பருவெனச் சமைந்த இசையே. அதன் நெறியென நின்றிருப்பது தாளம். தாளமே அதை துண்டுகளாக்குகிறது. முன்பின் என்றும் இன்றுநாளை என்றும் இருத்தலின்மை என்றும் பிரித்தாடுகிறது. இன்பமென்பது ஒரு தாளம் மட்டுமே” என்று ஜராசந்தன் சொன்னான். “நாம் அறிபவை அனைத்தும் அதிர்வுகளென அறியாத எவருளர்?”
சடாதரர் “அவ்வண்ணமெனில் துயரமும் ஒரு தாளமே” என்றார். “உண்மை, ஆனால் துயரமும் ஒருவகை இன்பமே” என்று ஜராசந்தன் சொன்னான். “அது தலைகீழாக திருப்பப்பட்டிருக்கிறது. அடைவதற்குமுன் சுவைப்பனவற்றை எளிய உள்ளங்கள் இன்பம் என்கின்றன. அடைந்தபின் சுவைகொள்வனவற்றை அவை துன்பம் என்று நினைவுகூர்கின்றன.” திரிகாலர் “ஆம், உண்மை” என்றார். “கடந்தகாலத்தின் இன்பங்களை பேசிக் கொண்டிருப்பவர்களை அரிதாகவே கண்டிருக்கிறேன். துன்பங்கள் காலப்பெருக்கில் எவ்வண்ணம் இன்பங்களாகின்றன என்ற விந்தையை தன்னுள் எண்ணி வியக்காத எவரும் இப்புவியில் இருக்க வாய்ப்பில்லை.”
“புடவி சமைத்துக்கலைத்து ஆடும் கூத்தன் இன்பத்தின் கைத்தாளத்தில் முழுதமைந்திருப்பது முற்றிலும் பொருத்தமே” என்றபடி சுவடியை மூடி பட்டுநூலில் சுற்றி பீடத்தில் வைத்துவிட்டு ஜராசந்தன் சாய்ந்துகொண்டான். கைலாசதர்சனம் என்னும் அக்குறுங்காவியத்தின் ஆசிரியராகிய நேத்ரர் ஜராசந்தன் மேலும் சொல்லும் பொருட்டு கைகட்டி அப்பால் நின்றிருந்தார். “இனிய சொல்லாட்சிகள். நவில்தொறும் விரியும் நூல்நயம். நன்று நேத்ரரே” என்றார் திரிகாலர். முகம் மலர்ந்த நேத்ரரைப் பார்த்து “கவிஞரே, வடபுலம் தொட்டு தென்கடல் வரை சிறகு விரிக்கும் புள்ளென வியாசர் தன் பெருங்காவியத்துடன் சொல்பெருக்கி நம்மைச் சூழ்கையில் இச்சிறு நூலின் இடமென்ன?” என்றான் ஜராசந்தன்.
நேத்ரரின் முகம் வாடியது. “ஆம் நானும் அதை அறிவேன்” என்றார். “ஆனால் ஒவ்வொரு இலைத்துளியிலும் சொட்டும் நீர் தானே கடலெனும் எண்ணம் கொண்டிருக்கிறது. அவ்வாறன்றி அது இங்கு திரண்டு உருப்பெற்று ஒளி கொள்ள முடியாது” என்றார். “நன்று” என்று தொடையில் தட்டியபடி ஜராசந்தன் நகைத்தான். “நீர் சொல்கூட்டுவதன் நோக்கமென்ன என்று உரைத்துவிட்டீர். அதன் பயனென்ன என்று நான் எண்ணவேண்டும்” என்றான். “அரசே, வண்ணமலர்கள் பூத்துக்குவிந்த மலர்வெளியிலும் நிறமற்ற மணமற்ற மிகச்சிறிய மலர்கள் விரிகின்றன. துளித்தேனுடன் வான் நோக்கி காத்திருக்கின்றன” என்று நேத்ரர் சொன்னார்.
“ஆம், அவற்றைத்தேடி மயிரிழைபோன்ற தேன்குழல் கொண்டு சிறுபூச்சிகள் சிறகுரீங்கரித்து வரும்” என்றபடி ஜராசந்தன் எழுந்தான். “நான் தேனருந்தும் யானை. பராசரரேகூட என் துதிக்கையின் என் ஒரு மூச்சை நிரப்பாதவர்தான். எனக்கு தென்கடல் என அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது.” அவன் திரும்பியபோது அருகே நின்றிருந்த அவன் செயலமைச்சன் சிறிய பொற்தாலமொன்றை நீட்டினான். அதில் நாணயங்களும் மலரும் மஞ்சளும் இருந்தன. அதைப்பெற்று நேத்ரருக்கு அளித்து “நன்று சூழ்க! புல்லில் ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு எழக்கூடும் என்று பராசரரின் காவிய மாலிகையில் ஒரு வரி உள்ளது. சொல் நிறைக! சித்தம் எஞ்சும் கணம் வரை சொல் துணைக்கலாகுக!” என்று வாழ்த்தினான்.
அவர் தலைவணங்கியதும் திரும்பி அவை அமர்ந்த புலவர்களை ஒவ்வொருவரையாக மலர்ந்த முகமும் இன்சொல்லும்கொண்டு வணங்கி விடைபெற்று அவைக்கூடம் விட்டு வெளியே வந்தான். அறைக்கு வெளியே காத்திருந்த அமைச்சர் காமிகர் ஓடிவந்தார். “என்ன சொன்னாய்? என்ன சொன்னாய், அறிவிலி. இறுதியாக வந்த செய்தியை சொல்!” என்று பற்களைக் கடித்தபடி ஜராசந்தன் கூவினான். “செய்தியைச் சொல்லிவிட்டு இங்கேயே நின்றிருக்கிறாயா? இழிமகனே, இன்றே உன்னை கழுவில் அமரச்செய்கிறேன். எங்கே நம் படைத்தலைவர்கள்? அத்தனைபேரும் இக்கணமே இங்கே வந்தாகவேண்டும்…” என்று கைவிரல்களைச் சுருட்டி காற்றில் வீசி கூச்சலிட்டான்.
காமிகர் அவன் கைகளுக்கு அப்பால் சென்று நின்றபடி “ஆணை அரசே. உடனே தங்கள் ஆணை நிறைவேற்றப்படும்…” என்றார். “புழுக்கள். கால்களால் தேய்த்தே அழிக்கப்படவேண்டிய சிற்றுயிர்கள்….” என்று அவன் தொண்டை நரம்புகள் புடைக்க கூவினான். “ராஜசூயமா? நான் அவர்களுக்கு காட்டுகிறேன் வேள்வி என்றால் என்னவென்று. அவர்களுக்கு பசுங்குருதியின் வேள்வியைக் காட்டுகிறேன்…” இருகைகளையும் ஒன்றுடனொன்று ஓங்கி அறைந்தான். செல்லும் வழியில் நின்றிருந்த மரத்தூணை ஓங்கி உதைத்தான். மேல்கட்டமைப்பே அதிர்ந்து தூசு உதிர்ந்தது. “இதற்காகவே காத்திருந்தேன்… என் கைகளால் ஐந்து குடியிலிகளின் தலைகளையும் கொய்கிறேன்.”
அவன் அனல்பட்ட யானை என உடல் கொந்தளிக்க அங்குமிங்கும் அலைமோதினான். கதவுகளை ஓங்கி அறைந்தான். தூண்களில் தோள்களால் முட்டினான். அவன் சினமறிந்த அரண்மனை ஏவலர் அங்குமிங்கும் பதுங்கிக்கொண்டனர். செல்லும் வழியில் வேலுடன் நின்றிருந்த காவலனை “என்ன செய்கிறாய் இழிமகனே? துயில்கிறாயா?” என்று கூவியபடிச் சென்று ஓங்கி அறைந்தான். சுருண்டு கீழே விழுந்து உடலதிர்ந்த அவனை எட்டி உதைத்தான். பற்களைக் கடித்தபடி வெறிமிக்க முகத்துடன் திரும்பி காமிகரை நோக்கி “இன்னுமா இங்கு நின்றிருக்கிறாய்? இழிமகனே, இதோ என் ஆணை. நமது படைகள் எழட்டும். இந்திரப்பிரஸ்தம் நோக்கி எட்டுத்திசைகளிலிருந்தும் சூழட்டும். ஒவ்வொரு இந்திரப்பிரஸ்தக் குடிமகனும் மறுசொல்லின்றி தலைகொய்யப்பட வேண்டியவனே… அந்நகர் இருக்குமிடத்தில் சாம்பலும் செங்கல்லும் எஞ்சியபிறகு மீள்வோம்” என்றான்.
காமிகர் “ஆணை அரசே! இதோ ஆணை படைகளுக்கு பிறப்பிக்கப்படும்” என்றபடி தொலைவிலேயே குறுகிய உடலுடன் நடந்தார். அவன் உறுமியபடி தன் அறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்தான். மெல்லிய வியர்வை பூத்திருந்த உடலுடன் அசையாமல் தலைகுனிந்து அவன் அமர்ந்திருக்க முதிய ஏவலன் கயிறுசுற்றிய கலத்தில் புளித்துக்கொதித்த இமயமலையடிவாரத்துத் தொல்மதுவுடன் வந்து நின்றான். மதுவின் வாடை விழித்தெழச்செய்ய அவன் அதை வாங்கி இருகைகளாலும் தூக்கி அருந்தினான். அவன் குடிக்கும் ஒலி மட்டும் அறைக்குள் கேட்டது. பெருமூச்சுடன் கலத்தை கீழே வைத்துவிட்டு மேலாடையால் வாயை துடைத்தான். நீள்மூச்சுகள் எழுந்தமைய தலைகவிழ்ந்து அசையாமல் அமர்ந்திருந்தான்.
காமிகர் அருகே வந்து “ஆணைகளை முழுமையாக உரைக்க அருள் புரியவேண்டும் அரசே” என்றார். அவன் நிமிர்ந்து தன் சிறிய சிவந்த விழிகளால் அவரை நோக்கினான். அவர் “இந்திரப்பிரஸ்தத்தில் நால்வகைப்படைகளும் இன்றுமுதல் குழுமத்தொடங்கிவிட்டன” என்றார். “ஆம், ராஜசூயத்தின் கொடி படைகளால் ஒவ்வொரு கணமும் காக்கப்படவேண்டுமென்று நெறியுள்ளது” என்றான். “அனைத்து தொல்குடிப்படைகளையும் திரட்டியிருக்கிறார்கள். மதுராவிலிருந்து யாதவப்படைகள் வந்துகொண்டிருக்கின்றன. யவன படைக்கலங்களும் பீதர்நாட்டு எரிபொருட்களும் அவர்களிடம் உள்ளன” என்றார். அவன் வியர்வை பொடிந்து துளிபரவிய நெற்றியுடன் அவரை எவர் என்பதுபோல நோக்கினான். ”‘நாளையே ராஜசூயத்தின் செய்தியுடன் இந்திரப்பிரஸ்தத்த்தின் தூதன் இங்கு வரக்கூடும்” என்றார் காமிகர்.
அவன் இலைவிழுந்த குளமென கலைந்து அசைவுகொண்டு “நான் நமது சிற்றரசர்கள் அனைவரையும் உடனே பார்க்க விழைகிறேன்” என்றான். காமிகர் “ஒரு போரை இந்திரப்பிரஸ்தத்தினர் உன்னுகிறார்கள் என்பதில் ஐயமில்லை” என்றார். ஜராசந்தன் கைகளைக் கோத்து உதடுகளை கைகளால் நீவியபடி “ஆம்” என்றான். காமிகர் “ஆநிரை கவர்தல் ராஜசூயத்தின் முதன்மை நிகழ்வுகளில் ஒன்று. பீமனின் படைகள் நம் எல்லைக்குள் புகுந்து ஆநிரை கவருமென்றால் அதை போருக்கான அறைகூவலாகவே நாம் எண்ணவேண்டும். நாம் ஆநிரைகளை மீட்டுவராவிட்டால் ராஜசூயத்திற்குப் பணிந்து தாள்வில் அனுப்பப்போகிறோம் என்றே பொருள் கொள்ளப்படும்” என்றார்.
ஜராசந்தன் அதற்கும் “ஆம்” என்றான். அமைச்சர் “நமது எல்லைகள் அனைத்திற்கும் ஓலை அனுப்பி அரசாணையை அறிவிக்கிறேன் எங்கும் இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் ஊடுருவ விடலாகாது. நம்மை அறியாது சில கன்றுகளை கொண்டு சென்றால்கூட அது தோல்வியென்றே பொருள்படும்” என்றார். ஜராசந்தன் நிமிர்ந்து புன்னகைத்து “அவ்வாறு நிகழாது. பீமன் நானறிய என் ஆணைக்குட்பட்ட நிலத்திலிருந்து மட்டுமே ஆநிரை கவர்ந்து செல்வான். அது எனக்கான அறைகூவலென ஒலிக்கவேண்டுமென்பதில் ஒவ்வொரு தளத்திலும் எண்ணம் கொள்வான்” என்றான். “எல்லைக்காவலுக்கு ஆணையிடுங்கள். பிறகென்ன என்பதை நான் உரைக்கிறேன்.”
தலைவணங்கி திரும்பிய அமைச்சரை ஜராசந்தன் பின்னாலிருந்து அழைத்தான். “அமைச்சரே, உடனடியாக நமது தூதன் சேதி நாட்டுக்கு செல்லவேண்டும். பிறிதொருவன் சிந்து நாட்டுக்கு செல்லட்டும். மேலும் ஒருவன் உத்தர பாஞ்சாலத்துக்குச் சென்று அஸ்வத்தாமனை சந்திக்கவேண்டும். மூவரும் செய்திகேட்ட கணமே அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனனை சந்திக்கும்படி கோருகிறேன்” என்றான். “அஸ்தினபுரியின் அரசனுக்கு அவர்கள் உணர்த்தவேண்டிய ஒன்றுண்டு. ராஜசூய வேள்வி என்பது இறப்புக்கான நாளை எண்ணிக்கொண்டிருக்கும் முதுபேரரசர்களை விண்ணில் நிறுத்தும்பொருட்டு வைதிகர் செய்யும் சடங்கு. பிறர் அவரை சத்ராஜித் என ஒப்புவது ஓர் மங்கலவழக்கு மட்டுமே. உருவாகி கொடி நிலைக்காத ஓர் அரசு அதை நிகழ்த்தவிருக்கிறதென்றால் பாரதவர்ஷத்தின் தலைநாடு என்று தன்னை அது அறிவிக்க எண்ணுகிறது என்றே பொருள்.”
“அது நிகழ்ந்தபின் உயிர்வாழும் காலம் வரை தருமனே குருகுலத்தின் முதல்வனும் பாரதவர்ஷத்தின் தலைவனுமாக இருப்பான். அவனை களத்தில் கொல்லாமல் துரியோதனன் தனிமுடி சூடி ஆளமுடியாது. எவ்வண்ணமாயினும் அஸ்தினபுரி இந்திரப்பிரஸ்தத்திற்கு ஆட்பட்டது என்றே நூலோர்களால் கொள்ளப்படும்” என்று ஜராசந்தன் தொடர்ந்தான். “ராஜசூயம் நிகழ்ந்தால் இழிவுகொள்வது பிற அரசர் எவரையும்விட துரியோதனனே. அது நிகழவேண்டுமா என்பதையும் அவனே முடிவெடுக்கவேண்டும்.”
காமிகர் “ஆம், அதையே நான் எண்ணினேன்” என்றார். “துரியோதனரின் ஒப்புதல் இன்றி ராஜசூயம் நிகழவிருக்காது. அதே போல் ஒப்புதல் அளிப்பார் என்றும் தோன்றவில்லை.” ஜராசந்தன் கையை வீசி “அரிது நிகழ்த்தும் சொல்வலன் ஒருவன் அவர்களிடம் இருக்கிறான். இத்தருணத்தில் அவனும் அஸ்தினபுரிக்கு கிளம்பிவிட்டிருப்பான். அவன் அங்கு செல்வதற்குள் நம் அரசர்கள் அங்கிருந்தாகவேண்டும். சகுனியையும் கணிகரையும் அவர்கள் சந்திக்கவேண்டும்” என்றான். “பாண்டவர்களுக்கு உகந்ததைச் சொல்லும் அமைச்சர் ஒருவர் அங்கிருக்கிறார். அவரது சொற்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்.”
“காந்தாரர் சகுனி உளம் தளர்ந்திருக்கிறாரோ என்று ஐயுறுகிறேன்” என்றார் காமிகர். “அவருக்கு மகதத்துடன் பகைமை உண்டு. அதை எண்ணுகிறாரா?” ஜராசந்தன் “ஆம், பகைமை உண்டு. ஆகவேதான் நம் படைக்கூட்டுக்கு அஸ்தினபுரி ஒப்பவில்லை. ஆனால் அத்தனை கூரிய பகையல்ல அது. எனக்கும் சகுனிக்கும் இடையே ஒன்றுமில்லை. பகை எந்தை பிருஹத்ரதருக்கும் அவருக்கும்தான்” என்றான் ஜராசந்தன். புன்னகையுடன் “ஒருவகையில் பிருஹத்ரதர் எனக்கும் பகைவரே.”
அமைச்சர் விழிகளில் கேள்வியுடன் நிற்க “இவையனைத்தும் சொல்சூழ்கையில் மானுட உள்ளம் செயல்படும் முறைமை. இவையனைத்துக்கும் அப்பால் உள்ளது சகுனி ஏன் அம்முடிவை எடுத்தார் என்னும் நுண்மை. ஆனால் நானும் அவ்வண்ணமே இயங்குபவன். என் வாழ்வெங்கும் பெரிய முடிவுகளை நானே அறியாத உள்விசையால்தான் எடுத்துள்ளேன்” என்றான் ஜராசந்தன். அமைச்சர் “அது உரியமுறையில் சொல்சூழ்ந்து எடுக்கப்பட்டதல்ல என்றால் நாம் முயன்று அதை மாற்றிவிடமுடியும்” என்றார். உறுதியான குரலில் “முடியாது” என்று சொல்லி ஜராசந்தன் புன்னகைத்தான். “அத்தனை சொல்சூழ்கைகளும் நிகழும் களத்துக்கு அப்பால் கருவறை இருளில் தெய்வம் அமர்ந்திருப்பதுபோல் அம்முடிவு அமர்ந்திருக்கும், அதை மாற்ற முடியாது.”
“இனி ஒருபோதும் மகதத்துடன் அஸ்தினபுரியின் படை இணைய சகுனி ஒப்பமாட்டார். ஆனால் இந்திரப்பிரஸ்தத்திற்கு ராஜசூயத்துக்கான ஒப்புதல் அளிக்காமல் இருக்க துரியோதனனை நம்மால் செலுத்த முடியும்.” உதடுகள் அசைய எழுந்த வினா ஒன்றை ஓசையின்றி அடக்கிக் கொண்டார் அமைச்சர். அவர் விழிகளைநோக்கியே அதை அறிந்து ஜராசந்தன் “நீங்கள் எண்ணுவது சரி, இத்தருணத்தில் இந்திரப்பிரஸ்தத்துடன் ஒரு போரை நான் விழையவில்லை” என்றான். “அது அச்சத்தினால் அல்ல. எதிரியின் வல்லமையை நான் இன்னும் முழுதாக அறிந்துகொள்ளவில்லை என்பதனால்.”
காமிகர் “அங்கு யாதவர்கள் அன்றி பிறிதெவரும் துணையில்லை” என்றார். ஜராசந்தன் “ஆம், நான் எண்ணுவது படைகளை அல்ல. ஒருவனை மட்டுமே” என்றான். “அவன் எண்ணம் ஓடும் வழிகளை மட்டுமே பாரதவர்ஷத்தில் இண்றுவரை என்னால் தொடரமுடியாமல் இருக்கிறது. என்றேனும் ஒருமுறை நான் எண்ணி கைவைக்கும் புள்ளியில் எண்ணியவாறு அவன் வந்து நின்றான் என்றால் அவனை ஒருமுறை வென்றேன் என்ற தருக்கை அடைவேன். அதன்பின் எக்களத்திலும் அவனை எதிர்கொள்ள என்னால் இயலும்.” நீள்மூச்சுடன் “பார்ப்போம்” என்றபின் அவன் கைகளை விரித்தான்.
“ஆணைகளை நிறைவேற்றுகிறேன் அரசே” என்றபின் காமிகர் மீண்டும் தலைவணங்கினார். சென்று தன் பீடத்தில் அமர்ந்தபின் ஜராசந்தன் “குருதி விழுமென்பதில் ஐயமில்லை. முதற்பலி எவரென்றுதான் என் உள்ளம் ஒவ்வொரு தலையாக தொட்டுச் செல்கிறது. எவர்?” அவன் தன் முன் நாற்களம் பரப்பிய குறுபீடத்தை இழுத்துப்போட்டு ஒவ்வொரு கருவாக எடுத்து அதில் பரப்பினான். “வேட்டைவிலங்குபோல நான் முகர்ந்து செல்லவேண்டியது அவன் காலடி மணத்தை மட்டுமே. அவனையன்றி பிறிதெவரையும் நான் அறியவேண்டியதே இல்லை. அவளைக்கூட…” நிமிர்ந்து காமிகரை நோக்கி “அமைச்சரே, அவனை முற்றறிதல் எவருக்காயினும் இயல்வதா? அவன் மாற்றுடல் எனத் தொடரும் இளையபாண்டவனுக்காயினும்?”
அமைச்சர் “எதிரிகளே நன்கறிகிறார்கள்” என்றார். ஜராசந்தன் “ஆம், ஆனால் நான் எதிரியும் அல்ல. அணுகும்தோறும் அவன் முற்றெதிரியின் உள்ளத்துடன் விளையாடி எதிரியல்லாதாக்குகிறான்” என்று தொடைகளில் அறைந்தபடி சாய்ந்தமர்ந்தான். “மீன் ஒவ்வொரு அசைவாலும் நீரைக்கலக்கி தன்னை மறைத்துக்கொள்வது. நூறு ஆயிரம் லட்சமென மாற்றுருக்களை உருவாக்கி தன்னைச்சுற்றி பரப்பி அதில் ஒளிந்தாடுவது. காமிகரே, அவன் வெற்றி என்ன என்றறிவீரா? அவன் தான் எடுக்கும் அத்தனை உருக்களையும் தானென்றே ஆக்கி அதில் முழுதமைகிறான். அவை மாற்றுரு என அவனே அறியாதபோது எதிர்நிற்பவன் அறிவதெப்படி?” தலையை அசைத்தான். “என்ன செய்கிறான் இங்கு? ஒவ்வொன்றையும் உள்நுழைந்தறிந்தபின் அவன் இங்கு அடைவதற்கேது? வெல்வதற்குத்தான் ஏது?”
எவர் முன்போ சொல்லிழந்து திகைத்தவன் போல அமர்ந்திருந்த ஜராசந்தன் கலைந்து திரும்பி “இத்தருணத்தில் அவன் செல்லவிருப்பது எவரிடமென்று நான் அறிகிறேன். அஸ்தினபுரியின் பேரரசி காந்தாரியிடம். அங்கே மகளிர்மாளிகையே அவனுக்கு அணுக்கமானது என்கிறார்கள். துரியோதனனின் துணைவி பானுமதி அவன் சொல்லையே ஏற்பவள். அதன்பின் திருதராஷ்டிரரிடம் செல்வான். வெல்லமுடியாதவன். அவர்களோ அவன் மேல் ஆழம் கனிந்த எளியோர்.” அவன் தலையசைத்தான். “ஆம், அங்குதான் செல்வான். அதற்குப்பின் அவன் கொள்ளப்போகும் முதற்களப்பலி எவரென்று இக்களம் சொல்கிறது.”
சுட்டுவிரலால் தொட்டுத்தொட்டு சென்று ஒரு காயில் நின்றான். “எளிய விலங்கு. ஆனால் முதற்பலி அவன்தான்” என்றான். “யார்?” என்றார் அமைச்சர். “நடிகன்… ஆடிப்பாவை” என்று ஜராசந்தன் நகைத்தான். புரிந்துகொண்ட காமிகர் “பௌண்டரிக வாசுதேவனை அவர் ஒரு பொருட்டென்றே எண்ணமாட்டார் என நான் எண்ணியிருந்தேன்” என்றார். “அவர் பேருருவுக்கு முன் அவன் ஒரு நுண்ணுயிர்.” ஜராசந்தன் நகைத்து “பெருங்களிறுகள் சிலசமயம் சிற்றுயிர்களை துரத்தித்துரத்தி மிதித்தழிப்பதை கண்டிருக்கிறேன்” என்றான். “காமிகரே, நாம் ஆணவத்தால் கொல்கிறோம். அச்சத்தால் கொல்கிறோம். அதற்கு நிகராகவே அருவருப்பினாலும் கொல்கிறோம்.” காமிகர் புரியாமல் தலையசைத்தார்.
[ 10 ]
ஏகசக்ரபுரியில் பெருவைதிகர் கலிகரின் மைந்தரான சுஃப்ரரின் இல்லத்தில் தங்கி வேதம் பயின்றுகொண்டிருந்தான் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் யுதிஷ்டிரரின் மைந்தன் பிரதிவிந்தியன். முன்பு கலிகர் பேருருவம் கொண்டு மலையமர்ந்து ஏகசக்ரபுரியை துயரிலாழ்த்திய பகனை கொன்றார் என்று தொன்மங்கள் பாடின. ஆகவே கலிகர் பிராமணர்களுக்கு வேதம் கற்பிக்கும் தகுதியை இழந்தார். ஆனால் ஷத்ரியர் அவரிடம் வேதம் கற்க வரலாயினர். நாளடைவில் அனைத்து அரசர்களின் மைந்தர்களும் கூடி வேதம்பயிலும் இடமாக ஏகசக்ரபுரி மாறியது. கலிகரின் மைந்தர் சுஃப்ரர் வைதிகர்களில் அரசன் என்று புகழ்பெற்றார். ஏகசக்ரபுரியின் முழு ஆட்சியுரிமையும் அவரிடமே இருந்தது. அவருக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெரும் செல்வக்கொடை அளிக்கப்பட்டது.
எக்காலத்திலும் ஏகசக்ரபுரி எவருடைய ஆட்சியிலும் இருக்கவில்லை என்று அவர்கள் பெருமைகொண்டிருந்தனர். வடக்கே உசிநாரர்களின் எல்லை முடிந்து கோசலத்தின் எல்லை தொடங்குவதற்கு முந்தைய விடுபட்ட நிலம் அது. இருபக்கமும் மலைகள் சூழ்ந்து அங்கு ஓர் நிலமிருப்பதையே எவருமறியாமலாக்கியிருந்தன. ஏகசக்ரபுரியின் மைந்தர் சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் சென்று அங்கிருந்து பிற ஊர்களுடன் வணிகமாடினர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்த கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிட அதற்கப்பால் நாணல்களால் ஆன ஏகசக்ரபுரியினரின் சிறுபடகுகள் மட்டுமே செல்ல முடிந்தது. பாறைகளில் தங்கள் படகுகளை கொடிச்சரடுகளில் கட்டி மேலேற்றி மீண்டும் எதிரொழுக்கில் செல்லும் பயிற்சி கொண்டிருந்தனர் அவர்கள்.
ஏகசக்ரபுரிக்கு வந்த இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர் சுரேசர் சுஃப்ரரின் கல்விநிலையை அடைந்து இளைப்பாறியபின் அரசமைந்தருக்குரிய வேதவகுப்பில் அமர்ந்திருந்த சுஃப்ரரிடம் தன் செய்தியை சொன்னார். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழும் ராஜசூயவேள்வியிலேயே பிரதிவிந்தியனுக்கு இளவரசுப்பட்டம் கட்டுவதாக அவை முடிவுசெய்திருப்பதாகவும் அதன்பொருட்டு அவனை அழைத்துச்செல்ல வந்திருப்பதாகவும் சொன்னார். அங்கிருந்த கலிங்க, மாளவ, விதர்ப்ப, கூர்ஜரநாட்டு இளவரசர்கள் அவைசூழ்ந்துகொண்டனர். “இவரா இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்?” என்று கலிங்கஅரசன் ஸ்ருதாயுஷின் மகன் சத்யதேவன் சிரித்தபடி கேட்டான். “வைதிகக் கல்வியை முடித்ததுமே இமயமலைக்குச் சென்று தவம்செய்யப்போவதாகத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறான்.”
சுரேசர் சிரித்தபடி “தவம்செய்வதில் என்ன பிழை? அரசர்கள் தவம்செய்து விண்ணகம் அடைந்த கதைகள் எத்தனை உள்ளன? ஆனால் அதற்கு இன்னமும் காலம் உள்ளது” என்றார். மூத்த கலிங்க இளவரசனாகிய சத்யதேவன் “எப்போது?” என்றான். சுரேசர் சிரிக்காமல் “நாற்பதாண்டுகளுக்கு முன்பு இமயம் சென்று தவம்செய்து முனிவராக ஆவதாக யுதிஷ்டிரர் முடிவெடுத்தார். அவருடைய பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. அவர் சென்றபின்னரே இளவரசரின் பணிகள் தொடங்குகின்றன. அவை முடிவுற்றபின்னர் இளவரசரும் காடேகலாம்” என்றார். கலிங்க இளவரசர்களில் இளையவனாகிய சத்யனுக்கு புரியவில்லை. “அப்படியென்றால் நெடுநாட்களாகுமா?” என்றான். அவன் மூத்தவனாகிய சக்ரதேவன் “போடா” என்று அவன் தலையை தட்டினான். “அப்போது அவர் முதியவராகிவிடுவாரே?” என்று மீண்டும் சத்யன் கேட்க அனைவரும் நகைத்தனர்.
பிரதிவிந்தியன் கிளம்பும்போது இளவரசர்கள் கூடி அவனை வழியனுப்பி வைத்தனர். “நான் அங்கிருக்கமாட்டேன். நகரம் எனக்கு சலிப்பூட்டுகிறது” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “நகர்கோள்விழவுக்குச் சென்று அங்கிருந்த ஒவ்வொருநாளும் நான் சலித்து தனிமைகொண்டிருந்தேன். அங்கிருந்து கிளம்பிய அன்றுதான் படகில் நன்கு துயின்றேன். என் இடம் இதுவே. இங்கு வருவேன்” என்றான். அவன் தோளைத்தொட்ட சுஃப்ரர் “இளவரசே, இந்திரப்பிரஸ்தத்தின் கொடியை விந்தியனுக்கு அப்பாலும் பறக்கவிடுபவர் என்று உங்களுக்கு பிரதிவிந்தியன் என்று பெயரிட்டார் உங்கள் அன்னை. நீங்கள் மண் நிகழ்ந்த நாள் முதலே மீண்டும் திரும்ப முடியாத பயணத்தில்தான் இருக்கிறீர்கள்” என்றார்.
“என்னால் அதையெல்லாம் செய்யமுடியாது. அந்த நகர் அசுரமன்னர்களின் மணிமுடிபோல ஆணவத்தின் அடையாளமாகவே எனக்கு தெரிகிறது. நான் இங்கு மீள்வேன்…” என்றான் பிரதிவிந்தியன். “என் பெயரின் பொருள் அதுவல்ல என்று எந்தை என்னிடம் சொன்னார். பேரறிவை நோக்கி செல்பவன் என்றே அதற்குப்பொருள்.” சுரேசர் “பெயர்களை பெற்றோர் எப்பொருளில் இட்டனர் என்பது எவ்வகையிலும் பொருட்டல்ல அரசே. பெயருக்கு பொருள் அளிப்பவர்கள் நாமே” என்றார். பிரதிவிந்தியன் பெருமூச்சுவிட்டான்.
ஏகசக்ரபுரியிலிருந்து படகில் சரயூ வழியாக பிரகதம் வந்து அங்கிருந்து தேரில் யமுனையை அடைந்து படகில் இந்திரப்பிரஸ்தத்தின் எல்லைக்கு முன்னதாகவே கரையணைந்தனர். சிறுபடகுகள் அணையும் அத்துறையில் இறங்கும்போது “ஏன் இங்கு இறங்குகிறோம்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “இளவரசே, தாங்கள் ஆநிரை கவர்ந்தபின்னர்தான் நகர்புகவேண்டும். அதுவே நெறி” என்றார் சுரேசர். “ஆநிரை கவர்வதா? நானா? பிறர்பொருளை கவர்வதற்கு நான் என்ன கள்வனா? அமைச்சரே, வேதநூல்பயில்பவனின் எட்டு அறங்களில் இரண்டாவது களவாமை” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், ஆனால் அரசர்கள் களவுதலுக்கு அப்பெயர் இல்லை. அது திறை என்றும், வரி என்றும், காணிக்கை என்றும், கவர்தலென்றும் பலபெயரில் அழைக்கப்படுகிறது” என்று சுரேசர் சொன்னார்.
“ஆநிரை கவர்தல் என்னால் இயலாது” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், அதை நன்கறிந்தே இங்கு அதற்கான முறைமைகளை செய்துள்ளோம்” என்றார் சுரேசர். அங்கே நூறு பசுக்கள் கொண்டுவந்து கட்டப்பட்டிருந்தன. “இவை கவரப்பட்டவையா?” என்று அவன் கேட்டான். “இல்லை, இந்திரப்பிரஸ்தத்திற்கு உரியவைதான். ஆயர்குடியிலிருந்து காணிக்கையாக பெறப்பட்டவை” என்றார் சுரேசர். அவ்வண்ணமாயினும்கூட இவற்றை களவாடினேன் என்று காட்டியபடி நான் நகர்புக முடியாது” என்றான் பிரதிவிந்தியன்.
“அரசே, ஆநிரைகவராது இளவரசன் நகர்புகுந்தால் முடிசூட நூலொப்புகை இல்லை.” பிரதிவிந்தியன் “எந்நூல் அதை உரைக்கிறது? களவுசெய்பவனே அரசன் என்றுரைக்கும் ஸ்மிருதி எது?” என்றான். “அரசே, முன்பு முதற்களவு செய்த ஒருவனிலிருந்தே தலைவன் உருவானான். பெருங்களவு புரிந்தவன் அரசன் என்றானான்” என்றார் சுரேசர். “என்னால் இயலாது. இதற்கு நான் ஒப்பமாட்டேன்” என்றான். “இது தங்கள் தந்தையின் ஆணை” என்று சுரேசர் சொன்னபோது “நான் என்னசெய்வேன்” என்று அவன் கலங்கினான்.
“அரசே, தாங்கள் புரவியேறி நகர்நுழையுங்கள். தாங்கள் சென்றபின் இந்த ஆவினங்கள் நகர்நுழையும்” என்று சுரேசர் சொன்னார். “நான் இவற்றை களவுகொண்டேன் என அறிவிக்கலாகாது. எவர் கேட்டாலும் அப்படி சொல்லலாகாது.” சுரேசர் “இல்லை, சொல்லப்போவதில்லை. ஆனால் நீங்கள் கொண்ட களவு இது என நகர்மாந்தர் பிழையாக எண்ணினால் அதை மறுக்கப்போவதில்லை” என்றார். சிலகணங்கள் எண்ணியபின் “அவ்வாறே ஆகுக!” என்றான் பிரதிவிந்தியன். சுரேசர் புன்னகைத்தார்.
இளவரசன் தன் புரவிநோக்கி சென்றபோது ஆநிரை காத்து நின்றிருந்த காவலர்தலைவன் சுரவர்மன் “ஒப்புக்கொண்டுவிட்டாரா?” என்றான். “அறம் பேசுபவர்கள் அனைவரும் அதை எப்படி கைவிடவேண்டும் என்பதற்கான நெறி ஒன்றையும் கற்றுவைத்திருப்பார்கள் சுரவர்மரே” என்றார் சுரேசர். “இவர் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் முனிவரின் மைந்தர்.” சுரவர்மன் சுற்றிலும் பார்த்துவிட்டு உரக்க நகைத்தான்.
[ 11 ]
சேதி நாட்டிலிருந்து சிசுபாலன் ஏழு வழித்துணைவர்களும் அமைச்சர் பாவகரும் உடன்வர கங்கைக்கரைக்கு வந்து அங்கிருந்து புரவிகளில் கிளம்பி பின்னிரவில் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய வரவறிவிக்கும் பறவைச்செய்தி அன்று உச்சிப்பொழுதில்தான் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்திருந்தது. கோட்டை வாயிலுக்கே கனகர் வந்து அவனை முகமன் சொல்லி வரவேற்று அரண்மனைக்கு கொண்டு சென்றார். அவன் வரவு மந்தணமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தமையால் அமைச்சர்கள் செல்லும் எளிய கூட்டுத்தேரில் நகர்த்தெருக்களினூடாக எவரும் அறியாது சென்று அவனுக்கென அளிக்கப்பட்டிருந்த மாளிகையை அடைந்தான்.
அன்று காலையிலேயே உத்தர பாஞ்சாலத்திலிருந்து அஸ்வத்தாமன் அஸ்தினபுரிக்கு வந்திருந்ததை செல்லும் வழியிலேயே கனகர் சொன்னார். சிந்துவிலிருந்து ஜயத்ரதன் வந்து கொண்டிருப்பதாகவும் மறுநாள் உச்சிக்குள் அவன் வந்து சேரக்கூடும் என்றும் தெரிவித்தார். சிசுபாலன் பதற்றத்தில் தேர்த்தட்டிலேயே நிலைகொள்ளாது அங்குமிங்கும் நடந்தான். கனகர் அவனுடைய அசைவுகளை ஓரக்கண்ணால் வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தார். சிசுபாலன் “அஸ்தினபுரியின் அரசர் எப்படி இருக்கிறார்? நோயுற்றிருக்கிறார் என்று ஒற்றர்கள் வழியாக அறிந்தேன்” என்றான். ஒற்றர்கள் என்ற சொல்லை சொல்லியிருக்கக்கூடாதென்று உடனே உணர்ந்து அவன் விழிகளை திருப்ப கனகர் கண்களில் பளிச்சிட்ட புன்னகையுடன் “தேறியிருக்கிறார். ஆனால் பலநாட்களாக அவை அமர்வதோ மக்களுக்கு முன் காட்சியளிப்ப்தோ இல்லை. அவர் உள்ளத்தில் நிகழ்வதென்ன என்று எவருக்கும் தெரியவில்லை” என்றார்.
சிசுபாலன் திரும்பி “ஏன்?” என்றான். அதையும் கேட்டிருக்கக் கூடாதென்று உடனே எண்ணினான் “அறியேன்” என்றார் கனகர். பின்பு “தங்கள் ஒற்றர்கள் அறிவித்திருப்பார்களே?” என்று அவனைப்பார்க்காமலே சொன்னார். சிசுபாலன் சீண்டப்பட்டு “ஆம் அறிந்தேன். அவர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசியின் காலில் குப்புற விழுந்தை நானே நேரில் பார்த்தேன்” என்றான். கனகரை புண்படுத்திவிட்டோம் என்று எண்ணி திரும்பி அவரைப்பார்த்து அவர் மாறாபுன்னகையுடன் இருப்பதைக் கண்டு விழிதிருப்பிக்கொண்டான். “அவரது வஞ்சம் அதுதான் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான் சிசுபாலன் தணிந்த குரலில். “மானுட உள்ளத்தை தெய்வங்கள் ஆள்கின்றன” என்று கனகர் பொதுவாக சொன்னார்.
மாளிகையின் முதன்மைஅறைக்குள் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தி கனகர் வணங்கினார். ஏவலர் வந்து பணிந்து நின்றனர். “தங்கள் வருகையை அரசருக்கு அறிவிக்கிறேன் அரசே. முறைப்படி தங்கள் தூதுச் செய்தியை இன்றே அரசருக்கு அறிவிக்க விழைகிறீர்களா?” என்றார். சிசுபாலன் “இல்லை. நான் அரசமுறைத்தூதாக வரவில்லை. சைந்தவரும் வரட்டும். நாங்கள் மூவரும் இணைந்து அவரிடம் பேசவிருக்கிறோம்” என்றான். உடனே ஏன் அனைத்தையும் இவரிடம் சொல்கிறேன் என எண்ணி சலித்தான். கனகர் மீண்டும் விழிகளில் மின்னி மறைந்த புன்னகையுடன் “நன்று, அதற்குமுன் தாங்கள் பேரமைச்சர் விதுரரையும் இளைய காந்தாரரையும் சந்திக்க விழையக்கூடும். இங்குதான் அஸ்வத்தாமன் இருக்கிறார். காலையில் அவரையும் சந்திக்கலாம்” என்றார்.
“அஸ்வத்தாமன் எங்கிருக்கிறார்? நான் இப்போதே அவரை பார்க்கலாமா?” என்றான் சிசுபாலன். “அவர் தன் தந்தையின் குருகுலத்திற்கு சென்றிருக்கிறார். அது கங்கைக் கரையில் இங்கிருந்து இரண்டு நாழிகை பயணத்தொலைவில் இருக்கிறது. தங்களை சந்திக்க காலையில் இங்கு வருவார்” என்றார் கனகர். “நன்று” என்று சிசுபாலன் தலைதாழ்த்தினான். வணங்கி கனகர் விடைபெற்றதும் மீண்டும் நிலைகொள்ளாதவனாக கூடத்தில் அலைந்தான். ஏவலர் வந்து அழைத்தபோது கலைந்து மீண்டு அவர்களுடன் சென்று நீராடி உடைமாற்றி மாளிகை முகப்பில் வந்தமர்ந்தான். இரவின் ஒலிகள் மாறுபடத்தொடங்கின. ஆவணி மாதத்து விண்மீன்கள் சாளரம் வழியாக தெளிவாக தெரிந்தன.
நில்லாது வந்த நீண்ட பயணத்தால் அவன் உடல் மிகவும் களைத்திருந்தது. மஞ்சத்திற்குச் சென்று படுக்க வேண்டுமென்று விழைந்தான். ஆனால் உளம் பரபரத்துக் கொண்டிருந்ததனால் துயில முடியாதென்றும் தோன்றியது. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து செய்திகளைப் பெற்று தனக்கு அளிக்க வேண்டுமென்று தன்னுடன் வந்த சேதி நாட்டின் அமைச்சர் பாவகரிடம் ஆணையிட்டிருந்தான். செய்தி ஏதும் வருமா என்று எண்ணியபோதே காலை வரை பாவகர் வந்து அழைக்கமாட்டார் என்று தோன்றியது. நீள்மூச்சு விட்டு எழுந்து மஞ்சத்துக்கு சென்று படுத்தான். அவன் எண்ணியதற்கு மாறாக படுத்ததுமே மஞ்சம் அவனை இழுத்து புதைத்துக் கொண்டது. சிதைந்து உருமாறிக்கொண்டே இருந்த காட்சிகளினூடாகச் சென்று துயிலில் ஆழ்ந்து பிறிதொரு பிறப்பில் என விழித்தெழுந்து இறுதியாக வந்த எண்ணத்தை நினைவுகூர்ந்தான். அவன் உடலில் அறியா பரபரப்பு ஒன்று நிறைந்திருந்தது.
அவன் கண்டது மின்னி சுழன்று அருகணைந்து பட்டாம்பூச்சி போல சுற்றிப்பறக்கும் ஒரு படையாழியை. சிற்றிளமைக்கனவிலேயே அது அவனுக்குள் வந்துவிட்டது. நெடுநாள் அதை ஒரு விந்தைப்பறவை என்றே எண்ணியிருந்தான். அல்லது அவன் வளரும்தோறும் அது தன்னை ஒரு படையாழியாக மாற்றிக்கொண்டது. அச்சுறுத்தியது, துரத்திவந்தது, குருதிவடிவாகவும் மின்வடிவாகவும் வந்து சூழ்ந்தது. அக்கனவை வெல்லும்பொருட்டு அதிலிருந்து விலகி ஓடிய நாட்களுக்குப்பின் ஒரு தருணத்தில் தானும் படையாழி பயில்வதே அதை வெல்லும் வழி என்று கண்டு கொண்டான். அவ்வெண்ணம் லகிமாதேவியின் ஸ்மிருதியை வாசித்துக்கொண்டிருந்தபோது தோன்றியது. “குருதிக்கு குருதி ஒன்றே நிறைநிற்கும்.”
படைக்கலப்பயிற்சி அளிக்கும் சித்ரசேனர் “அரசே, கண்ணும் கையும் உலகறிந்தபின் படையாழி கற்பது அரிது” என்றார். “நான் கற்க முடியும், கற்றே ஆகவேண்டும்” என்று அவன் சொன்னான். சித்ரசேனர் படையாழிகளில் பயில்வதற்குரிய ஒன்றை அவனுக்கென மதுராவின் கடைத்தெருவிலிருந்து வாங்கிவரச்செய்தார். கூரற்ற விளிம்புகள் கொண்ட இரும்புப் படையாழி உணவுண்ணும் சிறிய தட்டு போலிருந்தது. அதை கையில் முதலில் வாங்கியதுமே அதன் எடைதான் அவனை திகைப்புறச்செய்தது. “இத்தனை எடைகொண்டதா இது?” என்றான். “எடைதான் அதன் ஆற்றல்” என்றார் சித்ரசேனர். “இத்தனை எடையை எப்படி வீசுவது?” என்றான். “நேராக வீசினால் இது நெடுந்தூரம் செல்லாது. தோளும் சலிக்கும். இதை காற்றில் மிதக்கவிடவேண்டும்.”
அவன் அதன் முனையை விரலால் தொட்டு “இது கூரற்று உள்ளதே?” என்று கேட்டான். “அரசே, படையாழி கட்டற்றது. அது உடலுறுப்பு போல ஆன்மாவுடன் இணைந்தபின்னரே அதற்கு கூரமையமுடியும். இல்லையேல் எய்தவன் கழுத்தையே அது அறுக்கும்” என்றார் சித்ரசேனர். அக்கணமே அவன் தன் கழுத்தில் அதன் கூரிய முனை கிழித்துச்செல்லும் தண்மையை உணர்ந்தான். பிறகெப்போதும் கழுத்திலொரு நுண்தொடுகையை உணராமல் அதைத் தொட அவனால் முடிந்ததில்லை. பயிற்சியின் முதல் நாள் படையாழியை இலக்கு நோக்கி எறிந்தபோது அவன் முற்றிலும் நினைத்திருக்காத திசை நோக்கி அது காற்றில் எழுந்து வளைந்து சென்று எண்ணியிராதபடி வளைந்து திரும்பி அவன் தலைக்கு மேல் வந்து பின்னாலிருந்த மரத்தில் முட்டி விழுந்தது. அதன் வண்டுமுரள்தலை அவன் காதருகே கேட்டான். ஒரு கணம் அது தனக்கென திட்டங்களும் விழைவுகளும் கொண்ட பிறிதொரு இருப்பு என்னும் திகைப்பை அவன் அகம் அடைந்தது.
அன்று வெறிகொண்டு நூறு முறை அதை சுழற்றி எறிந்து முடித்தபோது எவ்வகையிலும் தன் கைக்கு அடங்காத தனி உள்ளம் அது என்று அவன் உறுதி கொண்டான். படைக்கலப் பயிற்சி நிலையத்தில் அதை கொக்கியில் மாட்டிவிட்டு திரும்பும்போது அவனுடன் வந்த சித்ரசேனர் ”அது எளிய படைக்கலமல்ல அரசே” என்றார். “ஒருவன் மட்டிலுமே இன்று போரில் அதை கையாள்கிறான்.” அவன் திரும்பி அவர் முகத்தை பார்க்காமல் நடந்து தன் மஞ்சத்தறையை அடைந்தான். பிறிதெவரையும் பார்க்க விழையாது நிலையற்று உலவிக்கொண்டிருந்தான்.
தன் எண்ணங்கள் எங்கெங்கு தொட்டு எத்திசையில் எல்லாம் சரிகின்றன என்று எண்ணியபோது ஒரு கணம் திகைத்து இத்தனை ஆணவம் கொண்டவனா நான் என்று கசந்தான். பின்பு அவ்வாணவத்தை தானன்றி பிறிதெவரும் அறியமாட்டார்களே என்று எண்ணி ஆறுதல்கொண்டான். பின்பு கூரிய நச்சுப்படைக்கலம் ஒன்றுடன் இருளில் ஒளிந்திருக்கும் உணர்வு ஏற்பட்டு தனக்குத்தானே புன்னகைத்தான். அன்றிரவு துயிலில் அப்படையாழியை அவன் மீண்டும் கண்டான். அது இளமை முதல் அவனை தொடர்ந்து சுழன்று பறந்த அப்படையாழி அல்ல என அறிந்ததும் உவகையில் தோள்கள் துள்ளின.
அனால் அது அன்று படைக்கலப் பயிற்சி சாலையில் அவன் கண்ட படையாழியும் அல்ல. முற்றிலும் புதிய ஒன்று. ஆனால் அவன் அதை நன்கறிந்திருந்தான். கூச்சலிட்டபடி தாவிச்சென்று கைநீட்டி அதை பற்றினான். அவன் கையில் பறவை என சிறகடித்து அதிர்ந்து நிலையழிந்து நிகர்மீண்டது. வீசும் காற்றுக்கேற்ப அசைந்து சிறகு ஒதுக்கி விரித்தது. அதன் கூர்முனையை அவன் தன் விரலால் வருடினான். நெஞ்சு அக்கூரை எங்கோ ஆழத்தில் உணர்ந்ததும் உடல் மெய்ப்புகொண்டது. அதை தூக்கி வீசியபோது தன் விருப்பால் என அவன் விரலில் இருந்து எழுந்து காற்றில் சறுக்கி மிதந்து சென்று அவன் நோக்கிய இலக்கை துண்டுபடுத்தி சற்றே சரிந்து காற்றிலேறி சுழன்றபடி அவன் விரல் நோக்கி வந்தது. நீட்டிய விரல் மீது பட்டாம்பூச்சி போல வந்தமர்ந்து எடையற்று அமைதிகொண்டது.
தன் அரண்மனையில் அன்று விழித்துக்கொண்டபோது அவன் உடல் உவகையில் பரபரப்பு கொண்டிருந்தது. எழுந்து படிகளில் இறங்கி படைக்கலப்பயிற்சி நிலைக்கு சென்றான். அங்கே தன் அறையில் துயின்றுகொண்டிருந்த சித்ரசேனரை எழுப்பி ”படைக்கலவீரரே, எழுக! இப்போது நான் படையாழி பயிலப்போகிறேன்…” என்றான். ”அரசே, இது பின்னிரவு” என்றார் அவர். “ஆம், படையாழியின் அகக்கணக்கை இப்போது நான் கற்றுக்கொண்டேன். முன்பு அதை கையில் எடுத்தபோது அது அசைவின்மையை உள்ளுறையாகக் கொண்ட ஒரு பருப்பொருளென்று என் விழியும் கையும் சித்தத்திற்கு சொல்லின. சித்ரசேனரே, படையாழி ஓர் உயிர். அசைவையே உள்ளுறையாகக் கொண்டது. அமர்ந்திருக்கையிலும் பறவையின் சிறகு செயல்பட்டபடியேதான் உள்ளது. வருக!” என்றபடி அவன் பயிற்சிக் களத்துக்குச் சென்று படையாழியை எடுத்தான்.
அதை கையால் வருடி விரலில் நிகர்நிலைகொண்டு நிலைக்கச்செய்தபின் தூக்கி மேலெறிந்து கையால் பற்றி ஒருகணம் நின்றான். பின்பு அதை நிலத்தில் வீசினான். “இது வெறும் தட்டு சித்ரசேனரே. உயிருக்கு அஞ்சி வெறும் தட்டில் பயின்றால் ஒருபோதும் கூரிய படையாழியை நான் கையிலெடுக்கப் போவதில்லை. படையாழியின் ஆற்றல் அதன் கூர்முனையில் உள்ளது. கூர்முனை அற்ற படையாழி அலகற்ற பறவை, அதற்கு காற்று வழிவிடுவதில்லை. கூர்கொண்ட படையாழியை கொண்டு வருக!” என்றான். “அரசே…” என்று சித்ரசேனர் சொல்லத்தொடங்கியதும் கையமைத்து “என் ஆணை” என்றான்.
“அரசே, இங்கு படையாழி ஏந்துபவர்கள் இல்லை. தங்கள் அன்னை யாதவநாட்டிலிருந்து இங்கு வந்தபோது கொண்டுவந்த பழைய படையாழி ஒன்றுள்ளது. மூதாதையருக்கு முன் பூசனைக்கு வைப்பதற்காக மட்டுமே அதை வைத்திருக்கிறோம். முன்பு தங்கள் தாய்வழி மூதாதை சூரசேனரால் போரில் பயன்படுத்தப்பட்டது. கார்த்தவீரியர் கையிலிருந்தது என்கிறார்கள். குருதிவிடாய் கொண்ட கூர் கொண்டது. எடுத்து மாற்றுகையிலேயே இதுவரை பன்னிருவர் கைகளை வெட்டி குருதிச்சுவை கண்டுள்ளது” என்றார். “கொண்டு வருக!” என்றான் சிசுபாலன்.
சித்ரசேனர் கொண்டுவந்த படையாழி இருமடங்கு எடையுடன் இருந்தது. அதை கையில் எடுத்ததுமே ஒருபுறம் சரிந்து நழுவி விழப்பார்த்தது. அவன் உடல்பதற அதைப்பற்றி தன் விரலில் நிலை நிறுத்தினான். காற்றில் சிறு சில்லையில் சிறகு குலைத்தும் வால்நீட்டியும் உடல்மாற்றி நிலையமைந்தும் அமர்ந்திருக்கும் பறவையென அது அவன் கையிலிருந்தது. அதன் முனைபட்டு விரல் வெட்டுண்டு குருதி சொட்டுவதை காலில் உணர்ந்தான். சித்ரசேனர் “முதற்குருதி” என்றார். “ஆம், அது என்குருதியே ஆகுக!” என்று அவன் அதை தூக்கி மும்முறை சுழற்றி வீசினான். மெல்லிய விம்மலுடன் காற்றில் எழுந்து சுழன்று சென்று இலக்கைத் தொட்டு கீறி துடித்து சரிந்து கீழிறங்கி மண்ணில் பதிந்து நின்றது.
அஞ்சி நின்ற சித்ரசேனர் நீள்மூச்செறிந்தார். “இதை நான் பயில்வேன்” என்றான் சிசுபாலன். மீண்டும் அதை கையில் எடுத்து மடியில் வைத்து அதன் கூர்முனையை சுட்டுவிரலால் மெல்ல வருடினான். “இதை நான் முன்னரே கண்டுள்ளேன்” என்றான். “அரசே, இதன் மறு இணையே இளைய யாதவரின் கையிலுள்ளது என்பார்கள். கார்த்தவீரியனின் அவைக்கொல்லனால் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவை இவை.” அவன் புன்னகையுடன் அதை நோக்கி “ஆம், இது என் நெஞ்சில் அமரவேண்டும் சித்ரசேனரே. இது என் உடலென்றாக வேண்டும்” என்றான்.
சித்ரசேனர் அவன் விழிகளை தவிர்த்தார். அவன் மீண்டும் அதை வீசினான். சீறிச்சென்று மரப்பாவை ஒன்றை வெட்டி அவனைநோக்கி உறுமியபடி வந்தது. நெஞ்சு திடுக்கிட்டு அப்படியே மண்ணில் குப்புற விழுந்தான். பின்னால் சென்று தூணைவெட்டி நின்றது. அவன் எழுந்து புழுதியை தட்டியபடி சென்று அதை அசைத்து உருவி எடுத்தான். தூண் முனகலோசையுடன் முறிந்து வளைந்தது. “ஆற்றல் மிக்கது” என்று அவன் சொன்னான். சித்ரசேனர் பெருமூச்சுவிட்டார்.
பல்லாண்டுகாலம் ஒவ்வொருநாளும் அவன் அதை பயின்றான் இரவுகளில் மஞ்சத்தில் அதை அருகே வைத்து துயின்றான். ஒவ்வொருமுறை அவன் இலக்குகளை சென்று வெட்டி மீண்டு அவன் கையில் வந்து அமர்ந்ததும் அது தினவடங்காது எழ முயன்றது. பின்பு அவன் இலக்குகளை அதுவே முடிவு செய்தது. சேதி நாடு அண்டை நாடுகளுடன் மோதிய படையெழுச்சிகளில் காற்றில் குருதி சிதறப்பறந்து சென்று உயிருண்டு மீண்டது. குருதி உண்ணும்தோறும் அதன் ஒளி மிகுந்து வந்தது. இலக்கு பிழைப்பது அதற்கே விருப்பமல்லாததாக ஆயிற்று.
என்றும் எங்கும் அவன் படையாழியுடன் சென்றான். அவனை எண்ணியவர்கள் அனைவரும் அப்படையாழியுடனேயே நினைவு கூர்ந்தனர். ஆனால் அவன் கனவிலிருந்து படையாழி முற்றிலும் அகன்றது. நெடுநாட்களுக்குப்பின் சத்யபாமையை வேட்கச்சென்று மீண்ட நாளில் நெஞ்சுள் எழுந்த அனல் தாளாமல் இரவெல்லாம் மது அருந்தி மத்தெழுந்த தலையை இறகுத் தலையணையில் புதைத்து துயிலாது புரண்டு ஒற்றைச் சொற்கள் கசிந்து சொட்டிய நாவுடன் தளர்ந்து சரிந்து மூடி பின் துடித்துத் திறந்து கலங்கி வழிந்து மீண்டும் இமைசரிந்த விழிகளுடன் தன் மஞ்சத்தறையில் இரவைக்கழித்து புலரிப் பறவைக்குரல் கேட்டபின்னரே சித்தம் மயங்கி துயிலில் ஆழ்ந்தபோது மீண்டும் அப்படையாழி அவன் கனவில் எழுந்தது.
பின்னர் ருக்மிணியை இழந்தபின். பின்னர் மதுராவின் படைகளை வென்று துரத்தி மீண்டபோது. உடல் நலமின்றி காய்ச்சலில் தலை கொதிக்கும் ஆழ்துயிலில் பலமுறை கண்டான். எப்போதேனும் எண்ணி எண்ணி துயில் மறக்கும்போது விடியலில் அவன் அரைமயக்கில் அப்பாலிருந்த இருளிலிருந்து மெல்லிய சிறகு முழக்கத்துடன் அது எழுந்து வந்தது. அதன் கூரின் ஒளி ஒரு புன்னகை. ஒரு விழிமின்னல். ஒரு சொல்லில் ஒளிந்த வஞ்சப்பொருள்.
மஞ்சத்திலிருந்து எழுந்து தாழ்ந்து எரிந்த நெய்விளக்கின் திரியை சற்று தூண்டியபின் ஏவலன் கொண்டு வைத்திருந்த தன் படைக்கலப் பொதியை அவிழ்த்து அதனுள் கரடித்தோல் உறையிட்டு வைக்கப்பட்டிருந்த படையாழியை எடுத்தான். அதன் கூரை நுனிவிரலால் வருடிக் கொண்டிருந்தபோது உடலில் எங்கும் பரவியிருந்த பதற்றம் மெல்லக்குறைவதுபோல் தோன்றியது. அழுத்தினாலென்ன என்று எப்போதும் போல் உள்ளம் எழ, மறுவிசையால் அதைத் தடுத்து அக்கூரிய முனைவழியாக மலர்மேல் என விரலின் தோல்பரப்பை ஓடவிடுவது அவன் வழக்கம். அது முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பை உருவாக்கி, மெல்ல உடலெங்கும் மெய்ப்பு என பரவி, விழிகசியவைக்கும் கிளர்ச்சியை அளிக்கும்.
அதை கையில் எடுத்தபடி எழுந்து சுடரின் ஒளியில் அதன் கூரிய நுனியை பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி மூடிய கதவை பார்த்தபின் அதை தூக்கி காற்றில் சுழற்றி பறக்கவிட்டான். சாட்டை என ஒலித்து அறைக்குள் சுழன்று அவனருகே வந்தது. கைநீட்டி அதைப்பற்றி விரலில் எடுத்தபின் மீண்டும் அதன் கூர்முனையை கையால் தொட்டான். இருளிலிருந்து கண்மின்ன எழும் பாதாளதெய்வம் போல் ஓர் எண்ணம் எழுந்து உள்ளங்கால் குழிவை கூசவைத்தது. இரும்பைக் கடித்ததுபோல் பற்கள் புளித்தன. வேண்டாம், வேண்டாம் என ஒவ்வொரு கணமும் அவன் எண்ணங்களின் அழுத்தத்தால் விம்மி விரைத்து ஒன்றிலிருந்து ஒன்றென செல்ல சட்டென்று அப்படையாழியை எடுத்து காற்றில் வீசினான்.
வீம்புடன் உறுமியபடி அறைக்குள் சுற்றி வந்து அவ்விசையில் சுழன்று அவன் கழுத்தை நோக்கி அது வந்தது. சட்டென்று குனிந்து அதை தவிர்த்தான். அவன் குழல் சுருளொன்றை சீவிச் சென்றபடி சுழன்று சுவரைக் கீறி ஓலமிட்டு மீண்டும் அவன் கழுத்தை நோக்கி வந்தது. குனிந்து அதை தவிர்த்தபோது காதின் மிக அண்மையில் ஒலித்த அதன் பாம்புச்சீறல் அவன் உள்ளத்தை கடும் குளிரென வந்து தொட்டது. விரைவழிந்து அவன் கைநோக்கி வந்த படையாழியை பற்றி அதன் சுழற்சியை நிறுத்தித் தூக்கி அதன் கூர்முனையை பார்த்தான். அதில் ஒரு குருதித்தீற்றலின் மென்கோடு இருப்பதாக விழியை சித்தம் மயக்கியது. அவன் பெருமூச்செறிந்து தளர்ந்தான்.
அதை மடியில் வைத்தபடி மஞ்சத்தில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். உடலிலிருந்து வெம்மையுடன் குருதி ஒழுகி வெளியேறிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. கைகளும் தோள்களும் உடற்கட்டிலிருந்து விடுபட்டு தளர்ந்தன. கால்விரல்கள், கைமுனைகள், காதுமடல்கள், மூக்குநுனி என ஒவ்வொன்றாக குளிர்ந்தன. விழிகள் சோர்ந்து அறை மங்கலாயிற்று. இமைகள் தாழ்ந்தன. இறுதியாக சித்தத்தில் எஞ்சிய உதிரிச்சொற்கள் சிறகு நனைந்த சிறு பூச்சிகள் போல ரீங்கரித்தபடி ஒன்றுடன் ஒன்று ஒட்டி அங்கேயே கிடந்தன. எவரோ எதையோ சொன்னார்கள். அவன் இறந்த உடலாக கிடந்தான். அவனது தளர்ந்த இருகைகளுக்குமேல் இரு கரியபெருங்கைகள் முளைத்தெழுந்தன. யாருடையவை இவை என அவன் திகைத்தான்.
“இல்லை, இவை என்னுடையவை அல்ல” என்று ஓசையற்று உள்ளம் கூவியபோது மூடியவிழிகளுக்குமேல் நெற்றியில் ஒரு விழி திறந்தது. அதன் சுழன்றநோக்கில் அவ்வறை செங்குருதிவழியும் சுவர்களும் நிணம்பரவிய தரையும் கொண்டிருந்தது. அகல்சுடர் குருதித்துளியாக எரிந்தது. அருகே அவன் ஒருவனை கண்டான். “நீயா?” அவன் கால்கள் மட்டுமே தெளிவாக தெரிந்தன. குருதியில் ஊன்றிநின்ற பாதங்கள் ஊன் நக்கி உண்ணும் புலியின் நாக்குபோலிருந்தன. “ஆம்” என்று அவன் சொன்னான். “துயில்க!” என்றான் அவன். “நான் துயின்றுகொண்டிருக்கிறேன்.” அவன் “உன் மூவாவிழி துயில்க!” என்றான். “ஆம்” என்று அவன் தன் மூன்றாம்விழியை மூடினான். இருவிழிகளும் விழித்துக்கொண்டன. அவன் மஞ்சத்தில் கிடந்தான். கதவை மெல்ல ஏவலர் தட்டிக்கொண்டிருந்தனர்.
அவன் விழித்தபோது அவன் மார்பின்மேல் படையாழி இருந்தது. எழுந்து கதவைத்திறந்தபோது உள்ளே வந்த அமைச்சர் பாவகர் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து செய்தி வந்துள்ளது அரசே” என்றார். அவன் தலையசைத்தான். “இளைய யாதவர் நேற்றே இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் அபிமன்யுவும் பிற இளவரசர்களும் தனித்தனியாக படைகொண்டு ஆநிரை கவர சென்றிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்த நகருக்கு யாதவப் படைகள் வந்து கொண்டுள்ளன.” அவன் கோட்டுவாய் விட்டு கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தான். “நன்று” என்றபின் திரும்பி படுக்கையருகே பீடத்தில் கிடந்த தன் சால்வையை நோக்கி சென்றான்.
“இளைய யாதவர் அஸ்தினபுரிக்கு இன்று வரக்கூடும் என்று அங்குள்ள நம் ஒற்றன் கருதுகிறான். அரண்மனையில் அவர் அஸ்தினபுரிக்கு வருகிறார் என்னும் பேச்சு நிலவுகிறது” என்றார் பாவகர். சிசுபாலன் திரும்பி “ஆம், நானும் அதை எதிர்பார்க்கிறேன்” என்றான். “அதற்கு முன் சைந்தவர் நகரடைந்துவிடுவார். இன்று மாலையிலேயே துரியோதனரிடம் நமது அமர்வு நிகழும்.” அமைச்சர் திரும்புகையில் அறைக்குள் கிடந்த குழல் கற்றையை நோக்கி திகைத்து குனிந்து அதை கையில் எடுத்தார். அச்சத்துடன் “அரசே!” என்றார். துடித்த கண்களால் திரும்பி சேக்கை மேல் கிடந்த படையாழியை பார்த்துவிட்டு “அரசே!” என்று மீண்டும் அழைத்தார்.
“பயின்றேன்” என்றான் சிசுபாலன். “இது தங்கள் குழல்சுருள்” என்றார் அமைச்சர். “ஆம்” என்றான். “அரசே, இது தங்களை நோக்கி வந்திருக்கிறது. அதற்கு தங்கள் உடலில் ஒரு துளி குருதியை இப்போதே கொடுப்பது நன்று” என்றார் பாவகர். சிசுபாலன் அவர் விழிகளை நோக்க ”படையாழிகளில் குருதி விடாய் கொண்ட தெய்வங்கள் உறைகின்றன. எண்ணி எழுந்தவற்றை அவை முடிக்காது அமைவதில்லை. தாங்கள் விரலால் தொட்டு ஒரு துளிக்குருதி அளித்தால் போதும், அவை இப்போதைக்கு அடங்கும்.” சிசுபாலன் “துளிக்குருதியில் விடாய் அடங்கும் தெய்வம் உள்ளதா?” என்றான். “இல்லை, தெய்வங்களுக்கு இம்மானுடத்தையே அருந்தினாலும் விடாய் அடங்குவதில்லை. ஆனால் ஒரு துளி குருதி அளிப்பதென்பது அவ்விழைவுக்கு முன் நம் ஆணவம் மண்டியிடுகிறது என்பதை காட்டுகிறது” என்றார் அமைச்சர்.
புன்னகையுடன் “என் ஆணவம் அதன்முன் தருக்கியே நிற்கட்டும்” என்றான் சிசுபாலன். “அரசே…” என அவர் ஏதோ சொல்லவர “மரங்களின் சாறுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையுணர்வு ஆத்மாவின் ஆழத்தில் உள்ளது அமைச்சரே. ஹிரண்யாசுரனுக்கு கட்டின்மை, ஹிரண்யகசிபுவுக்கு சினம், மகாபலிக்கு பெருந்தன்மை, ராவணப்பிரபுக்கு பெருவிழைவு, கார்த்தவீரியருக்கு அஞ்சாமை, கம்சருக்கு அறியாமை. தண்டும் இலையும் காயும் அச்சுவையே. கனிதலும் அச்சுவைதான்” என்றான் சிசுபாலன். பின் சிரித்து “என் சுவை ஆணவம் என்று கொள்க! அதனூடாகவே நான் வெல்வேன், கடந்துசெல்வேன்” என்றான். திரும்பி அப்பால் நின்ற நீராட்டறை ஏவலனை நோக்கி செல்வோம் என்று சிசுபாலன் கையசைத்தான்.
[ 12 ]
உச்சிப்பொழுதுக்கு முன்னரே ஜயத்ரதன் அஸ்தினபுரியை வந்தடைந்தான். தன் படைத்துணைவர் இருவருடன் புரவியிலேயே சுதுத்ரியின் கரையிலிருந்து நிற்காமல் வந்து புழுதிபடிந்த ஆடைகளுடன் கோட்டை வாயிலில் நின்ற அவனை அடையாளம் காணாமல் வழிமறித்தான் காவலன். அவன் படைத்துணைவன் சிந்துவின் இலச்சினையை காட்டிய பின்னரே சைந்தவனை அடையாளம் கண்டு திகைத்து காவலர்தலைவனை நோக்கி ஓடினான். அவன் வருகையை அறிவிக்கும் சங்கோ முரசோ முழங்கலாகாது என்று முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது. நகர்த்தெருக்களில் புரவியில் சென்றபடியே தன் படைத்துணைவரிடம் “நான் மாதுலர் சகுனியை பார்க்க விழைகிறேன் என்பதை அவருக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டு அனுப்பினான்.
தன் அரண்மனைக்கு வந்து விரைந்து நீராடி உணவுண்டு ஆடை மாற்றி வெளியே வந்து காத்து நின்றிருந்த கனகரிடம் “மாதுலர் சகுனியை நான் சந்திக்கச் செல்கிறேன். எப்போது அஸ்வத்தாமன் நகர்நுழைந்தாலும் எனக்கு செய்தி அறிவியுங்கள். அவருடன் அமர்ந்து சொல்லாடிவிட்டு இன்னும் மூன்று நாழிகைக்குள் அரசரை அவரது மந்தண அறையில் சந்திக்க விழைகிறேன்” என்றான்.
“அரசரிடம் தங்கள் வருகை அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் கனகர். “அங்கர் அங்குதான் இருக்கிறாரா?” என்றான். “அவர் எப்பொழுதும் அரசரின் அறைக்குள் அருகமர்ந்திருக்கிறார்” என்றார் கனகர். அச்சொல்லில் ஏதேனும் நச்சுக்கோடு உள்ளதா என்று ஒருகணம் எண்ணிவிட்டு ஜயத்ரதன் சித்தத்தை விலக்கினான். அதை உணர்ந்த கனகர் “அரசரிடம் பேசுபவர் இப்போது அங்கர் மட்டுமே” என்றார்.
சகுனியின் அரண்மனை முகப்பில் அவனுக்காகக் காத்திருந்த அணுக்கன் “தங்களுக்காக காந்தார இளவரசரும் அமைச்சர் கணிகரும் காத்திருக்கிறார்கள்” என்றான். “நன்று” என்றபடி படிகளின்மேல் ஏறும்போதே தன் சொற்களை எடுத்து கோத்தான். அவன் சிந்துவிலிருந்து கொண்டுவந்த சொற்கள் அல்ல அவை. அப்போது ஒவ்வொருபடியிலுமாக ஊறி எழுந்தவை. அவை மேலும் சுருக்கமாகவும் பொருத்தமானவையாகவும் இருந்தன. சகுனியின் மாளிகை சுண்ணப்பூச்சும் அரக்குப்பூச்சும் கொண்டு புதியதுபோல தோன்றியது.
சகுனி தன் அறையில் குறுபீடத்தில் விரிக்கப்பட்ட நாற்களத்தில் பரப்பப்பட்ட கருக்களை கூர்ந்து நோக்கி கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தார். அருகே அவரது கால் மென்பஞ்சு பீடத்தில் நீட்டப்பட்டிருந்தது. அவரது பச்சைவிழிகள் நிலைத்திருக்க தாடி மட்டும் மென்மையாக காற்றில் பறந்தது. எதிரில் தரையில் கணிகர் அமர்ந்திருந்தார். ஜயத்ரதன் தலைவணங்கி “மாதுலருக்கு வணக்கம்” என்றபின் கணிகரை நோக்கி “வணங்குகிறேன் அமைச்சரே” என்றான். கணிகர் “களைத்திருக்கிறீர்கள்” என்றார். “ஆம், தொலைதூரப்பயணம். நில்லாமல் வந்தேன்” என்றான். “அரசரை சந்திக்கவேண்டும். அஸ்வத்தாமனுக்காக காத்திருக்கிறேன்” என்றான். “அறிவேன்” என்ற சகுனி அமரும்படி கைகாட்டினார்.
ஜயத்ரதன் அமர்ந்தபடி “அனைத்தையும் தாங்கள் முன்னரே அறிந்திருப்பீர்கள் என்று நானும் அறிவேன் மாதுலரே” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்துக்கான கொடி ஏறிவிட்டது. அது பாரதவர்ஷம் முழுமைக்கும் விடுக்கப்படும் அறைகூவலன்றி வேறல்ல. கதைகளின்படி ராஜசூயவேள்வியை யயாதி மன்னர் நிகழ்த்தினார். அதன் பின்பு பிருதுமன்னர் நிகழ்த்தினார். மாமன்னர் பரதன் நிகழ்த்தினார்…” என்றான். மறித்து “அயோத்தியின் ராமனும் அதை நிகழ்த்தியதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. கணிகர் இருமுவதுபோல சிரித்து, “மன்னர்கள் இறந்தபின் ஓரிருதலைமுறைக்குப்பின் சூதர்கள் அவர்கள் ராஜசூயம் செய்ததாக சொல்வதுண்டு” என்றார்.
எரிச்சலுடன் ஜயத்ரதன் “நான் அதை சொல்லவரவில்லை. பாரதவர்ஷத்தை ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னர்கள் ஆற்றிய வேள்வி அது என்று குறிப்பிட்டேன். இன்னமும் ஆழவேரூன்றாத நகரம் அதை இயற்றப்போவதாக அறிவித்திருப்பது எளிய செய்தி அல்ல” என்றான். “உண்மை” என்றார் சகுனி. “மாதுலரே, நாம் இதற்கு ஒப்புதல் அளிக்கலாகாது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரின் ஒப்புதலின்றி ஒருபோதும் ராஜசூயம் நிகழ முடியாது” என்றான் ஜயத்ரதன். “நான் இங்கு வந்ததே தாங்கள் எந்த உளநிலையில் இருக்கிறீர்கள் என்று அறியாததனால்தான். தங்கள் உடல்நிலை நலிந்துள்ளது என்றும் ஊக்கமற்றிருக்கிறீர்கள் என்றும் அறிந்தேன்.”
சகுனி அதை செவிமடுக்காமல் “ராஜசூயத்திற்கு துரியோதனின் ஒப்புதல் வேண்டுமென்பதில்லை. ஒப்புதல் அளிக்க வேண்டியவர் திருதராஷ்டிர மாமன்னர் மட்டுமே” என்றார். “இந்நகரை இன்று ஆள்வது துரியோதன அரசர் அல்லவா?” என்று சற்று சினத்துடன் ஜயத்ரதன் கேட்டான். “ஆம், முடிசூடி அரியணையில் அமர்பவன் துரியோதனனே. ஆனால் ராஜசூயம் என்பது தொன்மையான குலமூப்புவேள்வி. குடிமூத்தாரின் ஒப்புதலே அதற்கு முதன்மையானதாகும். பீஷ்மரும் திருதராஷ்டிரரும் இருக்கும் வரை அவர்களின் சொல்லே தேவையானது.”
ஜயத்ரதன் இருவரையும் மாறி மாறி நோக்கி மேலே சொல்லெழாமல் அமர்ந்திருந்தான். கணிகர் புன்னகையுடன் ஒரு கருவை எடுத்து வைத்து “காளை அறிந்திருக்கிறது” என்றார். சகுனி அதை நோக்கியபின் புன்னகையுடன் அரசியில் விரலை தொட்டபடி “ஆம்” என்றார். எரிச்சலை வென்று “திருதராஷ்டிரரை பார்க்க யார் வரக்கூடும்? என்றான் ஜயத்ரதன். “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளைய யாதவர் கிளம்பிவிட்டதாக செய்திகள் வருகின்றன” என்று கணிகர் சொன்னார். “அது இயல்பானதே. ஏனெனில் அவரன்றி பிறர் இத்தருணத்தை கையாள முடியாது” என்றான் ஜயத்ரதன். “அவர் வருவாரென்றால் பேரரசரின் ஒப்புதலைப்பெற்றே செல்வார்.”
பற்களைக் கடித்து தலையை அசைத்தபடி “அவனை நான் அறிவேன். களம் நின்று போர் புரிய கற்றிருக்கிறானோ இல்லையோ சூதும் சொல்மயக்கும் அறிந்தவன்” என்று ஜயத்ரதன் சொன்னான். கணிகர் புன்னகைத்தார். ஜயத்ரதன் “இத்தருணத்தில் தங்களையே நான் நம்பியிருக்கிறேன் கணிகரே. தாங்கள் ஒருவரே இதற்கு வழி காணமுடியும். சொற்களத்தில் இளைய யாதவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் கொண்டவர் தாங்கள் மட்டுமே என்று நானறிவேன்” என்றான். கணிகர் “அவர் வரட்டும் அதன் பின்பு பார்ப்போம்” என்றார். ஜயத்ரதன் “ஏன்? வரமாட்டான் என எண்ணுகிறீர்களா?” என்றான். “வரக்கூடும். ஆனால் வருவதுவரை நான் அவர் வருவார் என்று எண்ணமாட்டேன்” என்று அவர் சிரித்தார்.
ஜயத்ரதன் சகுனியை நோக்கி “படைத்துணைக்கென கோரி மகதத்தின் செய்தி இங்கு வந்ததை அறிந்தேன். அஸ்தினபுரியின் அரசர் நானும் இருக்கையில் மகதரின் தோள்தழுவி அளித்த வாக்குறுதி அது. ஆனால் அஸ்தினபுரியால் அது தவிர்க்கப்பட்டது. மாதுலர் விருப்பப்படி அது நடந்ததாக எனக்கு சொல்லப்பட்டது” என்றான். “மாதுலர் அவ்வாறு ஆணையிட்டிருந்தால் அது ஏன் என்று அறிய விழைகிறேன்.” சகுனி அவனை நிமிர்ந்து நோக்காமல் அரசியை மெல்ல பின்னடையவைத்து அங்கே வில்லவனை நிறுத்தி “ஆணையிடுகையிலும் இப்போதும் அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது பிழையென இப்போதும் படவில்லை” என்றார்.
ஜயத்ரதன் பேச வாயெடுப்பதற்குள் கணிகர் “சைந்தவரே, இதன் எளிய விடைகூட தங்கள் உள்ளத்தில் எழவில்லையா? இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்தின் கொடியை ஏற்றிவிட்டு அமர்ந்திருப்பவர் யார்? சூத்திர குருதி கொண்ட யாதவர்கள். அவர்களுக்கு எதிர்நிற்கும் ஜராசந்தனோ அசுர வளர்ப்பு கொண்டவர். இருதரப்பிலும் சூழ்ந்திருப்பவர் இழிகுலத்தோர். அவர்கள் மோதி மடியட்டுமே? சூத்திரரும் நிஷாதரும் மோதும் போரில் ஒரு தரப்பை ஷத்ரியர் ஏன் எடுக்கவேண்டும்?” என்றார். ஜயத்ரதனின் விழிகள் மாறுபட்டன. “ஆம், நான் அவ்வாறு எண்ணிப்பார்க்கவில்லை” என்றான். சகுனி “அவர் சொல்லும்போது அதனால்தான் என தோன்றுகிறது. ஆனால் அதனால் அல்ல” என்றார்.
ஜயத்ரதன் “ஆனால் நாம் ஜராசந்தரை நம்முடன் இணைத்துக் கொண்டால் இந்திரப்பிரஸ்தம் எண்ணியும் பார்க்கமுடியாத படை வல்லமை கொள்வோம் அல்லவா?” என்றான். “கொள்வோம். ஆனால் நம்மைவிட அப்படைக்கூட்டில் படை வல்லமையும் பொருள் வல்லமையும் மிக்கவராக ஜராசந்தரே இருப்பார். துரியோதனர் அப்படைக்கூட்டின் இரண்டாம் இடத்திலேயே அமைவார். அவர்கள் மோதட்டும். எருதும் சிம்மமும் மோதி அழியட்டும். எருது உயிர் துறக்கும். சிம்மம் புண்பட்டு உடல் நலியும். அதன் பிறகு காடு களிறுக்குரியதாகும்” என்றார் கணிகர்.
ஜயத்ரதன் இரு கைகளையும் குவித்து அதன் மேல் மோவாயை வைத்து எண்ணத்தில் ஆழ்ந்தான். பின்பு மூச்செறிந்து “ஆம், அவ்வாறே எனக்கும் தோன்றுகிறது” என்றான். “இல்லை, அதுவும் உண்மையல்ல. அம்முடிவை வலுவாக்க சொல்லாடல் தேவைப்பட்டது, கணிகர் சொன்னதை உள்ளம் ஏற்றுக்கொள்கிறது” என்றார் சகுனி. ஜயத்ரதன் “நான் எளியவன். இந்த உளம்சூழ்நெறிகள் எனக்கு அயலானவை” என்று சொல்லி பெருமூச்சுவிட்டான். “இங்கு வரும்வரை அனைத்தும் எளிதென்று எண்ணியிருந்தேன். அனைத்தையும் செவ்வனே முடிக்கப்போகிறவன் நான் என நெஞ்சினித்தேன்.”
“நாம் இப்போது செய்வதற்கொன்றுமில்லை. நோக்கியிருப்போம்” என்று சொல்லி சகுனி “காளை” என்று ஒரு கருவை தட்டி வீழ்த்தினார். கணிகர் அதை நோக்கி புன்னகைசெய்து “ஆம்” என்றபின் அடுத்த உருட்டலுக்காக பகடையை கையிலெடுத்துக்கொண்டார். “அப்படியென்றால் ராஜசூயத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்கிறீர்களா?” என்று ஜயத்ரதன் கேட்டான். “ராஜசூயத்துக்கு ஒப்புதல் அளிப்பது என்பது எளிதல்ல. அது இன்றல்ல, என்றும் நமக்கெதிராக நின்றிருக்கும் ஒரு சான்று. தருமனையே குலமூத்தோனாக நாம் ஏற்றிருப்பதாக பொருள்படுவது அது. எனவே நாம் ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை” என்றார் கணிகர்.
“ஆனால் ஒப்புதல் மறுக்கப்படவும் வேண்டாம். திருதராஷ்டிரர் ஒப்புக்கொண்டு விதுரர் ஓலையெழுத முற்பட்டாலும்கூட முறைப்படி அழைப்பு வரவில்லை என்று அதை மறுப்போம். தருமனும் நேரில் வந்து பேரரசரிடம் அருள் பெற்று செல்லவேண்டுமென்பதே குலமுறைமை என்போம். அதற்குள் பீமன் மகதத்தின் ஆநிரைகளை கவராதிருக்க மாட்டான். இந்திரப்பிரஸ்தமும் மகதமும் படை முட்டி களம் காணாமல் இருக்காது. அது நிகழட்டும்.” அவர் சிரித்து “குலமுறைப்படி என்று எதை சொன்னாலும் நகரிலுள்ள முதியோர் அதை ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.
ஜயத்ரதன் நீள்மூச்சு விட்டபடி “இதை நான் சிசுபாலரிடமும் அஸ்வத்தாமனிடமும் எப்படி சொல்வது?” என்றான். “அரசே, எத்தனை அணுக்கமானவர்கள் எனினும் அவர்கள் இருவரும் ஷத்ரியர்கள் அல்லர். சிசுபாலர் யாதவக் குருதி கொண்டவர். அஸ்வத்தாமன் அந்தணன். ஷத்ரியர்களுக்கு ஷத்ரியர்களே உறுதியான துணையும் இறுதிவரை தொடரும் உறவும் ஆவார்கள்” என்றார் கணிகர். “குலமுறையை மட்டும் அவர்களுக்கும் சொல்லுங்கள். குடிமூத்தோரின் ஏற்பு தேவை என்றால் அவர்கள் மேலே ஏதும் சொல்லமுடியாது”
“ஆம், அஸ்தினபுரி காத்திருக்கட்டும்” என்றார் சகுனி. கணிகர் புன்னகையுடன் “அது களிறின் இயல்பு. அதன் கரிய நிறம் காட்டின் இருளுக்குள் முற்றிலும் மறைந்து நிற்பதற்குரியது. சைந்தவரே, யானையின் இயல்பென்பது தனக்குரிய தருணம் வரும்வரை முற்றிலும் விழைவடக்கி செவியிலும் விழியிலும் மட்டுமே உயிர் எஞ்ச காத்திருப்பது. தன் எதிரிக்காக ஆறுநாட்கள் ஒரே மறைவிடத்தில் உணவும் நீரும் இன்றி காத்திருந்த யானையைப்பற்றி வேட்டையாளரின் கதை ஒன்றுள்ளது” என்றார்.
ஜயத்ரதன் பெருமூச்சுவிட்டு “நான் இங்கு வருகையில் ஜராசந்தனின் விழைவை ஏற்றே வந்தேன். இக்கோணத்தில் எண்ணவில்லை தாங்கள் சொன்னபின்பு எனக்கு ஆணையிட அவன் யார் என்ற எண்ணமே எழுகிறது” என்றான். “ஆம் சைந்தவரே, வேதம் முளைத்த மண் சிந்துநிலம். அத்தொல்காலத்திலிருந்து இருந்து வரும் தொல்குடி அரசு தங்களுடையது. அவனோ அரக்கி ஜரையின் முலைப்பால் அருந்தியவன். இன்றல்லது நாளை அவன் ஷத்ரியரால் கொல்லப்பட்டாகவேண்டும். இன்றே அதை நம் குடிதோன்றிய யாதவன் ஒருவன் செய்வானென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் கணிகர்.
[ 13 ]
அஸ்வத்தாமன் புஷ்பகோஷ்டத்தின் முகப்புக்கு வந்தபோது முன்னரே சிசுபாலனும் ஜயத்ரதனும் அங்கு காத்து நின்றிருந்தனர். இருவரும் மூன்றடி எடுத்து முன்வைத்து அவனை முகமன் சொல்லி வரவேற்றனர். அஸ்வத்தாமன் மறுமுகமன் உரைத்து “பொறுத்தருள்க அரசர்களே, நான் எந்தையை சந்தித்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவர் உத்தரபாஞ்சாலத்துக்கு வருவதை விரும்புவதுமில்லை. எனவே இன்று காலை அவரது பயிற்சி வகுப்பு முடிந்த பின்னரே அங்கிருந்து கிளம்பினேன்” என்றான். சிசுபாலன் “நானும் திரும்பிச் செல்வதற்கு முன்பு ஆசிரியரை சந்தித்து நற்சொல் பெறவேண்டும்” என்றான். ஜயத்ரதன் “செல்வோம்” என்று சொல்லி அப்பால் நின்ற கனகரை நோக்கி கையசைக்க கனகர் அவர்களின் வருகையை அறிவிக்க விரைந்தார்.
மூவரும் இடைநாழியில் நடந்து படிகளில் ஏறுகையில் அஸ்வத்தாமனுக்கு ஜயத்ரதன் அவன் சகுனியுடன் பேசி எடுத்த முடிவை சொன்னான். “இப்போது நாம் குலத்தின் ஒப்புதல் இல்லையென்பதை சொல்ல இயலாது என்று காந்தாரர் எண்ணுகிறார். அதை பேரரசர் விரும்பமாட்டார். அவரது உள்ளம் யுதிஷ்டிரனை தன் மைந்தனாகவே எண்ணும். குருகுலத்தில் நிகழவிருக்கும் ஒரு ராஜசூயமென்பது இக்குடியின் மூதாதையருக்கு அளிக்கப்படும் நல்வணக்கமென்றே அவர் எண்ணுவார். எனவே அவர்கள் முறைமைப்படி தருமன் வந்து ஒப்புதல் கோரவேண்டுமென்று கோரலாம் என்று கணிகர் எண்ணுகிறார்” என்றான்.
“முறைமைப்படி வருவதற்கு தயங்குபவனல்ல தருமன்” என்றான் அஸ்வத்தாமன். “பணிவதில் பெருவிருப்புள்ளவனாக இருக்கிறான். பணியும்போது அவனுள் நான் அறத்தான் என ஒரு குருவி சிறகடித்துக் கூவுகிறது என ஒரு சூதர்சொல் உண்டு.” ஜயத்ரதன் “ஆம், ஆனால் அவர் மட்டும் வந்தால் போதாது. அவருடன் இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடிய அரசியும் வரவேண்டும். பேரரசர் குடி மூதாதை என்பதனால் பேரரசி குந்தியும் உடன் வரவேண்டும். பிறபாண்டவர் நால்வரும் துணை எழவேண்டும்” என்றான். அஸ்வத்தாமன் “அதுவும் நிகழக்கூடாதென்றில்லை” என்றான். “ஏனெனில் அப்படி வந்தாலொழிய ராஜசூயம் நிகழாதென்றால் அதை அவள் செய்யவும்கூடும்.”
“அதற்குள் நம் படைகளை ஜராசந்தன் படைகளுடன் இணைத்துக்கொண்டு அவர்களின் ஆநிரை கவர்தல் முயற்சிகளை முறியடிக்க முடியும். ராஜசூயம் எளிதல்ல என்று தன் படைகள் களத்தில் அழியும்போது, நதிகளில் தன் வணிகப்படகுகள் மூழ்கும்போது இந்திரப்பிரஸ்தம் புரிந்து கொள்ளும்” என்று சிசுபாலன் சொன்னான். அஸ்வத்தாமன் “காந்தாரர் சகுனி எதன் பொருட்டு வேள்வி ஒப்புதல் மறுக்கப்படலாகாது என்று எண்ணுகிறார்?” என்றான். அவன் கண்களில் தெரிந்த ஐயத்தைக் கண்ட ஜயத்ரதன் “ஒப்புதல் மறுக்கப்பட்டது என்னும் செய்தி அஸ்தினபுரியின் மக்களுக்கு தெரியுமென்றால் ஹஸ்தியின் மரபில் மீண்டும் ஒரு ராஜசூயம் நிகழ்வதை அஸ்தினபுரியின் அரசர் தடுத்துவிட்டார் என்னும் இழிபெயர் பரவலாகும். அது வேண்டியதில்லை என்று எண்ணுகிறார்” என்றான்.
அஸ்வத்தாமனின் இதழ்கள் வளைந்தன “இழிபெயருக்கு இனியும் அஞ்சுபவரா துரியோதனன்?” என்றான். “ஏன்?” என்று ஜயத்ரதன் கேட்டான். “சைந்தவரே, சில மாதங்களாக அஸ்தினபுரியில் நிகழ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். கொடிய நோய் ஒன்று இந்நகர்மேல் பரவியது. குடிகள் செத்தொழிந்தன. அரசன் ஒருமுறைகூட ஆலயங்களுக்குச் சென்று பிழைநிகர் செய்யவில்லை. மூதாதையருக்கும் நாகங்களுக்கும் உரிய கடன்களை செலுத்தவில்லை. துயர்கொண்ட மக்களின் ஆறுதலுக்காக உப்பரிகையில் வந்து நின்று அவர்களின் குறைகளை கேட்கவும் முன்வரவில்லை.”
“அன்று அவரும் நோயுற்றிருக்கலாம்” என்றான் ஜயத்ரதன். “இல்லை. இந்நகரிலேயே அவர் ஒருவரே பழுதற்ற உடல் நலத்துடன் இருந்தார். நகரம் நோய் நீங்கியதும் அவர் மேலும் இரக்கமற்ற ஆட்சியாளராக ஆனார். அஸ்தினபுரி இன்று அவரது ஆணைகளால் ஒவ்வொரு அணுவும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆட்சிக்கலையறிந்த எவரும் உணர்ந்திருக்கும் ஒன்றுண்டு சைந்தவரே, மானுட உடலோ உள்ளமோ புறநெறிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவை அல்ல. ஒவ்வொரு மனித உள்ளமும் தனக்கென்று விழைவுகளும் வழிகளும் கொண்டது. அதை அறியாது உடல் தன் வழிகளை தேர்கிறது. ஆகவே பிழை நிகழாது ஓர் அரசையோ ஓர் குடியைக்கூடவோ எவராலும் நடத்த முடியாது. நெறி நீடிக்கவேண்டுமென்று விழையும் அரசன் பிழை பொறுக்கும் உளவிரிவையும் அடைந்தாக வேண்டும்.”
“இங்கு அஸ்தினபுரியின் கொலைக்களத்தில் ஒவ்வொரு நாளும் படைவீரர்களும் வணிகர்களும் எளியகுடிகளும் ஒறுக்கப்படுகிறார்கள். உடலுறுப்புகளை வெட்டுவதும் கழுவிலே அமர்த்துவதும் நிகழாது ஒரு பொழுதேனும் இந்நகரில் கடந்து செல்வதில்லை என்கிறார்கள். இன்றே இந்நகரின் தெருக்களில் வரும்போது பார்த்திருப்பீர்கள், ஒவ்வொன்றும் முற்றிலும் ஒன்றோடொன்று பொருந்தி, தேர்ந்த சிற்பி அமைத்த பொறிபோல் இயக்கம் கொண்டுள்ளன. நான் அந்த பிழையின்மையைத்தான் பார்த்துக்கொண்டே வந்தேன். அதுவே என்னை பதற்றப்படுத்தியது. பிழையின்மை என்பது உயிரின்மைதான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
“ஆம், தன்னெழுச்சியாக எவ்வொலிகளும் வெளிப்படவில்லை. வாழ்த்தொலிகளோ உவகைக் குரல்களோ” என்று சிசுபாலன் சொன்னான். கனகர் அருகணைந்து “வருக” என்றார். மூவரும் துரியோதனன் அமர்ந்திருந்த அவைக்கூடத்திற்குள் நுழைந்து தலைவணங்கினர். துரியோதனன் பீடத்தில் கால்மேல் கால் வைத்து இடத்தொடையை மெல்ல வருடியபடி கூரிய விழிகளால் அவர்களை நோக்கி அமர்ந்திருந்தான். அவனருகே இருந்த கர்ணன் எழுந்து “வருக சைந்தவரே. சேதிநாட்டரசருக்கும் உத்தரபாஞ்சாலருக்கும் நல்வரவு” என்று முகமன் சொன்னான். அவர்களை அமரும்படி கைகாட்டிவிட்டு கனகரிடம் அறைவாயிலை மூடும்படி விழியசைத்தான்.
அஸ்வத்தாமன் துரியோதனனின் தோற்றத்தை நோக்கிக் கொண்டிருந்தான். பழுதற்ற இரும்புச்சிலை என தோன்றினான் முதற்கௌரவன். மரத்தரையில் முற்றிலும் இணையாக ஊன்றியிருந்த இருகால்களின் ஒளிவிட்ட கட்டைவிரல் நகங்கள். இறுகிய கெண்டைக்கால்தசைகள், கச்சை முறுக்கப்பட்ட இடை, இருபலகைகளும் முற்றிலும் ஒன்றே பிறிதென்று தோன்றிய நெஞ்சு, கூரிய மூக்குக்குமேல் கருங்குருவி இறகுபோன்ற புருவங்கள், மேடற்ற பரந்த நெற்றி. வகிட்டின் தொடக்கம் முதல் பின்கால்களின் இணைப்புப்புள்ளி வரை ஒரு பிழையற்ற நேர்கோடு. இடதுகை சுட்டுவிரல் முனை முதல் வலதுகை சுட்டுவிரல் முனை வரை சிற்பிவரைந்த காவடி வளைவு. யுகங்கள் தோறும் பல்லாயிரம் பலிகொண்டபின் குருதியால் ஒளி கொண்டு வந்தமர்ந்திருக்கும் போர்த்தேவன் என்று தோன்றினான்.
அஸ்வத்தாமன் “நாங்கள் சந்திக்க வந்திருக்கும் செய்தியை முன்னரே அறிந்திருப்பீர்கள் முதற்கௌரவரே. எதன் பொருட்டென்றும் உணர்ந்திருப்பீர்கள்” என்றான். துரியோதனன் விழியசைவால் தலையசைத்தான். “அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் ராஜசூயத்துக்கான கொடி ஏறியிருக்கிறது. ஆநிரை கவர பாண்டவர்களும் அவர்களின் இளவரசர்களும் படைகொண்டு சென்றிருக்கிறார்கள். மகதத்துடன் எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தம் ஒரு போரை தொடுக்கும் என்று ஒற்றர்கள் அறிவிக்கிறார்கள்” என்று சொன்னபடியே அவன் முகத்தில் தெரிந்த உணர்வின்மையையே நோக்கிக் கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். கர்ணன் அவ்வுணர்வின்மையை தானுமுணர்ந்தவன் போல சிறிய சலிப்பைக் காட்டி “ஆம், ஆனால் இங்கு அஸ்தினபுரியை ஆளும் அரசனின் ஒப்புதல் இன்றி அவ்வேள்வி நிகழாது” என்றான்.
“அதைத்தான் சற்றுமுன்பு காந்தாரரிடம் பேசினேன். ஒப்புதல் அளிக்கவேண்டியவர் பேரரசர் என்று அவர் சொன்னார். அதை பெறுவதற்கு இளைய யாதவர் வரக்கூடும் என்றார்.” “ஆம், இளைய யாதவர் கிளம்பிவிட்டார் என்று தெரியும். அவருக்காகவே இங்கு காத்திருக்கிறோம்.” அவர்கள் பேசிக்கொண்டிருப்பது முழுக்க அவனுடைய கூர்விழிகளின் பார்வையின்மைக்கு முன் என்று தோன்றியது. விழிகளுக்கு அப்பால் ஒரு நோக்கு அவர்கள் மேல் ஊன்றியிருந்தது. அறியாச்செவி ஒன்று ஒவ்வொரு சொல்லையும் பெற்றுக்கொண்டிருந்தது.
“ஆனால் காந்தாரர் சொன்னதுதான் உண்மை. ராஜசூயத்திற்கு முறையான ஒப்புதலை பேரரசரே அளித்தால் போதுமானது” என்றான் சிசுபாலன். கர்ணன் சினத்துடன் “தொடங்கலாம். ஆனால் அஸ்தினபுரியின் அரசர் படை கொண்டெழுந்தால் அவரை வெல்லாமல் ராஜசூயம் நிறைவடையாது” என்றான். அஸ்வத்தாமன் திகைத்து துரியோதனனை ஒரு கணம் நோக்கிவிட்டு “இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரி படைகொண்டெழுவதை பேரரசர் விழையமாட்டார்” என்றான். “நாம் படை கொண்டு செல்வது இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அல்ல. நம் அரசருடன் படைக்கூட்டு கொண்டுள்ள மகதத்திற்கு ஆதரவாக” என்றான் கர்ணன்.
“மகதத்துடன் படைக்கூட்டு இல்லை என்ற செய்தி இங்கிருந்து அனுப்பப்பட்டது அல்லவா?” என்று ஜயத்ரதன் கேட்டான். “ஆம், அச்செய்தி பிழையாக அனுப்பப்பட்டுவிட்டது” என்று கர்ணன் சொன்னான். “சற்று முன்புதான் முடிவெடுத்தோம். அரசர் நாளை இங்கிருந்து கிளம்பவிருக்கிறார். சிலநாள் ஜராசந்தரின் விருந்தினராக ராஜகிருஹத்தில் தங்கியிருப்பார். அப்போது மகதத்திற்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் பூசல் நிகழும் என்றால் அரசரின் பாதுகாப்பின் பொருட்டு அஸ்தினபுரியின் படைகள் மகதத்திற்கு செல்லும்” என்றான் கர்ணன். அஸ்வத்தாமன் உளத்தயக்கத்துடன் ஜயத்ரதனையும் சிசுபாலனையும் நோக்கிவிட்டு “ஆனால் காந்தாரர்…” என்று சொல்லவர துரியோதனன் “இங்கு நானே அரசன். என் சொற்களே இறுதியானவை” என்றான்.
மிகச்சீரான தாழ்ந்த குரலில் சொல்லப்பட்ட அச்சொற்கள் தன் உள்ளத்தை ஏன் அத்தனை அச்சுறுத்தின என்று அஸ்வத்தாமனுக்கு உளவியப்பு எழுந்தது. அரைநோக்கால் சிசுபாலனையும் ஜயத்ரதனையும் நோக்கியபோது அவ்வச்சம் அவர்களின் விழிகளிலும் தெரிவதை கண்டான். கர்ணன் ஒரு சரடை இழுக்க வெளியே மணி ஒலித்து கனகர் வந்து நின்றார். “விதுரரை வரச்சொல்லுங்கள்” என்று கர்ணன் சொன்னான். கனகர் தலைவணங்கி வெளியேறினார்.
ஜயத்ரதன் மெல்ல இயல்பாகி புன்னகைத்து “அப்படையை நான் நடத்தவேண்டுமென விழைகிறேன்” என்றான். கர்ணன் “தேவையிருக்காது. அரசர் அங்கு சென்றதுமே துலாவின் இரு தட்டுக்களும் நிகர்நிலைகொண்டுவிடும்” என்றான். இயல்பாக அங்கே பேச்சு அவிந்தது. வெளியே ஆடும் மரக்கிளைகளின் ஓசையை கேட்டபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். துரியோதனனின் இருப்பை மட்டுமே தன் அனைத்துப்புலன்களும் உணர்ந்துகொண்டிருப்பதை அஸ்வத்தாமன் அறிந்தான். ஜயத்ரதன் உள்ளத்தின் நிலையழிவை தொடைகளின் அசைவில் காட்டினான். சிசுபாலன் துரியோதனனை முற்றிலும் தவிர்த்து கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான்.
கதவின் ஒலி வலிக்கூச்சல் போல ஒலிக்கக் கேட்டு மூவரும் திரும்பி நோக்கினர். விதுரர் உள்ளே வந்ததும் கனகர் கதவைமூடி மறைந்தார். கர்ணன் “அமைச்சரே, நாளை அரசர் மகதத்திற்கு செல்லவிருக்கிறார். அகம்படிப்படைகளும் காவல்படைநிரைகளும் உடன் செல்லவேண்டும் என்று ஆணை” என்றான். விதுரர் திகைத்து “நாளையா? படைநகர்வை உடனே செய்வதென்றால்…” என்று சொல்ல கர்ணன் “அதை நான் செய்கிறேன். அரசுஆணைகளையும் முறையறிவிப்புகளையும் மட்டும் நீங்கள் இயற்றினால் போதும்” என்றான்.
“இந்திரப்பிரஸ்தம் மகதத்துடன் போர்தொடுக்கக்கூடும் என்கிறார்கள். நாம் மகதத்தை படைத்துணை செய்யப்போவதில்லை என்பது காந்தாரர் சகுனியின் எண்ணப்படி நாமிட்ட ஆணை” என்றார் விதுரர். அவரை இடைமறித்து மிகமெல்லிய குரலில் துரியோதனன் “இது என் ஆணை!” என்றான். அவன் உன்னிய பொருளனைத்தையும் உணர்ந்துகொண்டு விதுரர் உடல்குன்றினார். “செல்க!” என்றான் துரியோதனன்.
குருதியுறவு, கல்வி என அங்கு அவருக்கிருந்த அனைத்தையும் ஒரே கணத்தில் இழந்து அவர் வெறுமொரு சூதராக ஆவதை அஸ்வத்தாமன் கண்டான். அவன் உள்ளத்தில் இரக்கமெழுந்தது. அதை கடக்க அத்தருணத்தில் என்ன செய்யலாகுமென எண்ணி, எச்சொல்லும் எச்செயலும் பிழையென்றாவது ஒருவர் இழிவுபடுத்தப்படும்போது துணைநிற்கையிலேயே என்று தோன்றியது. அவன் விழிகளை திருப்பிக்கொண்டான். ஆனால் கேட்டதா உளமயக்கா என்று புரியாத அளவுக்கு மெல்லிய உடலசைவின் ஒலியிலேயே விதுரர் மீண்டு வந்து வஞ்சம் கொள்வதை அவன் உணர்ந்தான்.
“பிறிதொரு செய்தியை சொல்லிச்செல்லலாம் என்று நானே வந்துகொண்டிருந்தேன்” என்றார். “இளைய யாதவர் இங்கே வரவில்லை. அவரும் பார்த்தனும் புண்டரீக நாட்டுக்கு ஆநிரை கவர்ந்து விளையாடச் சென்றிருக்கிறார்கள்.” கர்ணன் திகைப்படைந்து துரியோதனனை நோக்குவதை அஸ்வத்தாமன் கண்டான். உடனே விழிதிருப்பி விதுரரின் கண்களை பார்த்தான். அவற்றில் மெல்லிய இடுங்கலாக வஞ்சம் ஒளிர்ந்தது. ஜயத்ரதன் “புண்டரநாட்டுக்கா?” என்றான். சிசுபாலன் “அவன் மகதனின் துணைவன். ஆனால் புண்டரம் மிகச்சிறியநாடு…” என்றான்.
விதுரர் பணிந்த புன்னகையுடன் “அத்துடன் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி கன்யாகுப்ஜ நகருக்கு அருகே கன்யாவனம் என்னும் காட்டில் தவக்குடிலில் வாழும் பீஷ்ம பிதாமகரை பார்க்கச் சென்றிருக்கிறார்” என்றபின் தலைவணங்கி திரும்பி நடந்தார். அவர் கதவைத்திறந்து வெளியே செல்வதை அனைவரும் நோக்கியிருந்தனர். கதவு முனகியபடி மூடிக்கொண்டது.
[ 14 ]
வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் பரந்து அமைந்திருந்த நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு புண்டரம் என்று அழைக்கப்பட்டது. முன்பு கிரிவிரஜத்தை ஆண்ட நிஷாதகுலத்தரசன் வாலியின் ஐந்து மனைவியரில் மாமுனிவராகிய தீர்க்கதமஸுக்குப் பிறந்த நான்கு மைந்தர்களால் அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் நாடுகள் அமைந்தன. கோரைப்புல் கொய்து மீன்பிடிக்கும் கூடைசெய்து வாழும் மச்சர்குலத்தில் பிறந்து வாலியின் அரசியாக ஆன பானுப்பிரபையில் பிறந்த மைந்தனுக்கு மீனவக் குடிகளன்றி பிறர் வாழா சதுப்பு நாடு பிற நால்வராலும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவன் புண்டரன் என்று அழைக்கப்பட்டான்.
கந்தகி சேற்றுமணம் சுமந்து ஒழுகும் பெருநதி. அதன் படுகையில் கோரைப்புல்வெளிகளுக்கு நடுவே மூங்கில்கழிகளை சதுப்பில் ஆழ ஊன்றி முனைபிணைத்துக் கட்டி உருவாக்கப்பட்ட கூம்புக் குடில்களில் வாழ்ந்த மீனவர்கள் நாணல்களைப் பின்னி உருவாக்கிய படகுகளில் சென்று சிற்றோடைகளில் மீன்பிடித்தனர். சதுப்பில் துஞ்சிய முதலைகளை வேட்டையாடி அவ்வூனை உண்டனர். அவர்கள் கொண்டு விற்கும் முதலைத்தோலிற்கு சந்தைகளில் மதிப்பு உருவாகத்தொடங்கியபோது காலப்போக்கில் புண்டரம் ஒரு சிறுநாடென ஆயிற்று. வங்கத்திற்கு திறை கொடுத்து பணிந்து அது வாழ்ந்தது.
எண்பத்தேழாவது புண்டர மன்னன் வசுவின் எட்டாவது மைந்தனாகப் பிறந்தவன் கன்னங்கரிய நிறமுடையவன் என்பதால் கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டான். வசுவின் இறப்புக்குப்பின் அவர் முதல் மைந்தன் வஜ்ரபாகு வங்கத்தைப் பணிந்து ஆணைபெற்று முடிசூடி புண்டரத்தை ஆண்டான். அவன் அமைத்த நகரம் புண்டரிகவர்த்தனம் என்றழைக்கப்பட்டது. நகரைச்சூழ்ந்து சதுப்புமரங்களாலான கோட்டை ஒன்றை அமைத்து நடுவே மூன்றடுக்கு அரண்மனை ஒன்றை கட்டினான். பொன்னில் பன்னிரு இலைகளைக்கொண்ட முடி ஒன்றைச்செய்து அணிந்தான். அவையில் புலவரும் சூதரும் வந்து பாடி பரிசில் பெற்றுச்சென்றனர். கந்தகிக்குள் நான்கு படகுத்துறைகளையும் கங்கைக்குள் நடுத்தரக் கலங்கள் அணையும் துறைமுகம் ஒன்றையும் அவன் அமைத்தான்.
கடல்வணிகம் உருவாகி தாம்ரலிப்தி பெருநகராக ஆனபோது அதன் உரிமையின்பொருட்டு கலிங்கத்திற்கும் வங்கத்திற்கும் நடந்த போரில் வங்கத்தின் சார்பாக மச்சர்படை ஒன்றுடன் சென்று பொருதினான் வஜ்ரபாகு. அப்போரில் வங்கம் தோற்கடிக்கப்பட்டபோது களத்தில் வில்லுடன் விழுந்து மடிந்தான். வங்கத்தை வென்று எரிபரந்தெடுத்த கலிங்கப்படைகள் கங்கையினூடாக வந்து புண்டரநாட்டில் பரவின. நகரம் எரியூட்டப்பட்டது. பொருதி மடிந்தனர் ஆண்கள். கலிங்கர் மச்சர்குலத்துப் பெண்டிரையும் குழந்தைகளையும் பிடித்து அடிமைகளாக கொண்டு சென்றனர்.
மூங்கில் கழிகளின்மேல் மரப்பட்டைகளால் கட்டப்பட்ட இல்லங்கள் கொண்ட புண்டரிகவர்த்தனம் கலிங்கர்களால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. தன் உடன்பிறந்தார் கலிங்கத்துடனான போரில் வெட்டி வீழ்த்தப்படுவதை ஆறுவயதுச் சிறுவனாகிய கிருஷ்ணன் கோரைப்புதர் மறைவுக்குள் அமர்ந்து கண்டான். அவன் உடல் நடுங்கி சிறுநீர் ஒழுகியது. பின்பு நீந்தி மேலெழுந்து நோக்கியபோது தன் ஊர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டான். மேலே வந்தபோது கோரைப்புற்களில் ஒளிந்தும் சதுப்பில் மூழ்கியும் உயிர்பிழைத்த அவனது குடிகள் நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கதறி அழுது கொண்டிருந்தனர். அவனைக் கண்டு எவரோ கைசுட்டி அணுகுவதைக் கண்டதும் அலறியபடி அவன் அவரை நோக்கி ஓடினான். செல்லும் வழியிலேயே கீழே விழுந்து வலிப்பு கொண்டான்.
கலிங்கம் வங்கத்தை முற்றாக அடக்கி ஆண்டபோது காட்டுக்குள் புண்டரீகர் மீண்டும் மெல்ல ஒருங்குதிரண்டனர். அதன் தலைவனாக அவர்கள் கிருஷ்ணனை தேர்வுசெய்தனர். அவன் தொடர்ந்து துயிலில் அஞ்சி சிறுநீர் கழித்தபடி எழுந்து கூச்சலிடுபவனாகவும் சினமோ உளஎழுச்சியோ ஏற்பட்டால் வலிப்பு கொள்பவனாகவும் வளர்ந்தான். வங்கமன்னன் சுபூதன் மறைந்து அவன் மைந்தன் சுகீர்த்தி அரசமைத்தபோது கலிங்கத்தை வங்கம் வென்று விடுதலைகொண்டது. அப்போது பதினெட்டு வயதடைந்திருந்த கிருஷ்ணன் எழுபதுபேர் கொண்ட சிறிய படை ஒன்றை நாணல்படகில் ஏற்றிக்கொண்டு சென்று புண்டரிகவர்த்தனத்தில் கலிங்கர் அமைத்திருந்த காவல்தளத்தை சூழ்ந்துகொண்டான். சதுப்பிலிருந்து அவ்வீரர்கள் வெளியேறும் வழியை எரித்தபின் உள்ளே சென்று கலிங்கப்படைநிலையை கைப்பற்றினான்.
அடிபணிந்து படைக்கலம் தாழ்த்தியபின்னரும் கலிங்கர்களை அவன் படைகள் வெட்டிக்குவித்தன. எரிந்தழிந்த மூங்கில் கழிகளால் ஆன தன் நகரை கைப்பற்றி மீண்டும் அங்கு இல்லங்களை எழுப்பினான். அதன்பின்னர் பல ஆண்டுகாலம் அவன் கலிங்கர்களை கொன்றபடியே இருந்தான். இருளுக்குள் ஓசையின்றி சிறியபடைகளாக நாணல்படகுகளில் ஏறிச்சென்று கங்கையில்செல்லும் கலிங்கப்படகுகளை அடைந்து அப்படகுக்குள் நச்சுப்புகை விடும் கலங்களை எறிந்துவிட்டு மீண்டன புண்டரப்படைகள். கலிங்க நகர்களில் ஒற்றர்களை அனுப்பி சதுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட நச்சை குடிநீர் ஊருணிகளில் கலந்தான். அவன் பெயரை ஐந்துநாடுகளும் அச்சத்துடன் சொல்லத் தொடங்கின.
வங்கனின் ஆதரவு அவனுக்கிருந்தமையால் விரைவிலேயே அவன் அஞ்சத்தக்கவனாக ஆனான். கங்கைப்படகுகள் அவனுக்கு சுங்கம் கொடுக்கத் தொடங்கின. கருவூலம் பெருகவே அவன் நகர் வளர்ந்தது. அங்கே துறைமுகம் மீண்டும் எழுந்து சந்தை உருவாகியது. கிருஷ்ணன் மீண்டும் மணிமுடி செய்து சூட்டிக்கொண்டான். கவிஞரும் சூதரும் கொண்ட அவை ஒன்றை அமைத்தான். வங்கம் அவனை அஞ்சத்தொடங்கியது. அவனிடம் அவர்கள் கோரிய கப்பம் ஒவ்வொருநாளும் கூடிவந்தது. ஒருநாள் கங்கைவழியாகச் சென்ற வங்கத்தின் கலங்களை கிருஷ்ணன் சூறையாடினான். அன்றே காணிக்கை பொருட்களுடன் படகிலேறி மகதத்திற்குச் சென்று மகத மன்னன் விருகத்ரதனைக் கண்டு அடிபணிந்து தன்னை சிற்றரசனாக ஏற்கவேண்டுமென்று கோரினான்.
கங்கை மேல் படைபரப்பி வந்த மகதம் கோரைப்புல்சதுப்பை ஆளும் புண்டரர்களின் ஆதரவை விரும்பியது. மகதத்தின் துணைப்படையுடன் திரும்பி வந்த கிருஷ்ணன் தாம்ரலிப்தியை தாக்கி அதன் வணிகக்கலங்களை கைப்பற்றினான். வங்கம் மகதத்திற்கு பணிந்தது. வங்கத்தின் கடல்முகம் வரை புண்டரத்தின் கொடிகொண்ட காவல்படகுகள் தடையின்றிச் சென்று சுங்கம் கொள்ளத்தொடங்கின. கிருஷ்ணன் புண்டரிகவர்த்தனத்தை முழுதெழுப்பி சுற்றிலும் நீர் மரங்களாலான வலுவான கோட்டை ஒன்றை அமைத்தான். அங்கு வாசுதேவன் என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டான். மகதத்தின் வணிகம் வாசுதேவனை நாளுமென வளரச்செய்தது. மகதப்படகுகள் புண்டரநாட்டின் எல்லையைக் கடந்து வங்கத்திற்கும் கலிங்கத்திற்கும் செல்லும்போது படைத்துணையாக விரைவு மிக்க விற்களுடன் புண்டரர் சென்றனர்.
வாசுதேவன் என்ற பெயர் வணிகர் நாவில் திகழவேண்டும் என்பதற்காக புண்டரம் அப்பெயருடன் கூடிய பொன்நாணயங்களை வெளியிட்டது. அப்போதுதான் யவன வணிகர் ஒருவரிடமிருந்து துவாரகை எனும் நகரம் மேற்கே எழுந்திருப்பதை அவன் அறிந்தான். அங்கிருக்கும் இளையோனை அவர்கள் வாசுதேவ கிருஷ்ணன் என்று அழைப்பதாகச் சொன்ன வணிகன் அவனை வணிகர்கள் பௌண்டரிக வாசுதேவன் என்று குறிப்பிடுவதாக சொன்னதைக் கேட்டு சினம் கொண்டு எழுந்து கையிலிருந்த ஓலையை நிலத்தில் வீசி சொல்லெழாமல் நா திணற நடுங்கினான். “வடமேற்குப்புலம் முழுக்க அவ்விளையோனை பாரதவர்ஷத்தை முழுதாளவிருப்பவன் என்கிறார்கள் அரசே” என்று அயல்சூதன் சொன்னதைக் கேட்டபோது கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பு கொண்டு மண்ணில் விழுந்தான்.
“பாரதவர்ஷத்தின் வாசுதேவன் என்பான் ஒருவனே. என் பெயர் கொண்டு நடிக்கும் அவ்வீண்சிறுக்கனை ஒரு நாள் களத்தில் காண்பேன்” என்று அவன் தன் அவையில் வஞ்சினம் உரைத்தான். அவனுடைய தூதர்கள் துவாரகைக்குச் சென்று இளைய யாதவன் தன் பெயரை வாசுதேவன் என்று வைத்துக் கொள்ளலாகாது என்று ஆணையிட்டனர். “என் தந்தை பெயர் வசுதேவர் என்பதனால் என்னால் அப்பெயரை மாற்ற முடியாது தூதர்களே” என்று மெல்லிய இளிவரலுடன் துவாரகைத் தலைவன் மறுமொழி சொன்னான். “தந்தைக்கு மைந்தர் பெயரிடும் வழக்கம் துவாரகையில் இல்லை.”
பௌண்டரிக வாசுதேவன் ஒவ்வொரு நாளும் துவாரகையின் வாசுதேவனின் புகழ் வளர்வதை தன்னைச்சுற்றி கண்டான். எப்படியோ எவரோ அவனைப்பற்றி சொல்ல அவன் பெயர் நாளும் காதில் விழுந்தது. வணிகர் அவன் நகரைப் புகழ்ந்தனர். சந்தைகளில் துவாரகையின் சங்குபணிலம் பொறித்த நாணயம் பெருமதிப்புடன் பெறப்பட்டது. கடற் சூதர்களின் மொழியில் ஒவ்வொருநாளும் அவன் வளர்ந்துகொண்டே இருந்தான். தன் அவையமர்ந்து துவாரகையிலிருந்து வந்த சூதனொருவனின் சொல்லில் இளைய யாதவனின் வெற்றியையும் புகழையும் கேட்டுக்கொண்டிருந்த பௌண்டரிக வாசுதேவன் அரியணையில் ஓங்கி அறைந்தபடி சினத்துடன் எழுந்து நின்றான். அவன் ஒரு கண் கலங்கி கன்னத்தில் வழிய இதழ்கோணலாகி முகம் இழுபட்டது. அவன் விழக்கூடும் என்றுணர்ந்த அமைச்சர் விழிகாட்ட ஏவலர் அவனை பிடித்து கொண்டுசென்றனர்.
அவனைத் தொடர்ந்து வந்த அமைச்சர் சரபர் “அரசே, இறுதி வெற்றி எவருக்கென்பதே வரலாற்றில் எவர் என்பதை முடிவுசெய்கிறது. மகதம் பாரதவர்ஷத்தை வெல்லும் என்பதில் ஐயமில்லை. அது இளைய யாதவனின் குருதியின் மீதுதான் நிகழும். மகதத்தின் எளிய நிஷாதகுலப் படைத்தலைவன் ஒருவனுக்கு அஞ்சி அரும்பாலையைக் கடந்து அப்பால் தன் அரசை அமைத்துக் கொண்டவன் எவ்வகையிலும் வீரனல்ல. என்றேனும் ஒருநாள் அவன் நகரில் சேர்த்து வைத்திருக்கும் பெரும்செல்வம் மகதத்தின் காலடியில் குவியும். அங்கு நாமும் வெற்றித்துணையாக இருப்போம். அப்போது அவ்விளையோன் சேர்த்து வைத்துள்ள அத்தனை புகழ்கதைகளும் நம் காலடியில் குவியட்டும்” என்றார்.
பௌண்டரிக வாசுதேவன் மஞ்சத்தில் எழுந்தமர்ந்து “அது எப்படி?” என்றான். “தாங்களும் அவனே ஆகுக! தங்கள் பெயர் கிருஷ்ணன், தாங்கள் வாசுதேவனும்கூட. பீலிமுடியும் ஆழிவெண்சங்கும் அவன் மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. அப்புகழ்மொழிகள் அனைத்தும் உங்களுக்கும் பொருந்துவன ஆகுக! நாளை அவன் இல்லாமல் ஆகும்போது முறிக்கப்பட்ட மரம் தேடி அலையும் பறவைகள் போல் தவிக்கும் அவன் புகழ்மேவிய பாடல்கள் அனைத்தும் உங்களையே வந்தடையும்” என்றார். முகம் மலர்ந்து “ஆம், அதுவே உகந்தது. நன்று” என்று பௌண்டரிக வாசுதேவன் சொன்னான். “நீங்கள் அவன் ஆடிப்பாவை ஆகவேண்டும் அரசே. ஆடியின் எப்பக்கம் உள்ளது மெய் என்று எவ்விழி சொல்லலாகும்?” என்றார் சரபர்.
பௌண்டரீக வாசுதேவன் தானும் முடியில் பீலியணிந்தான். இடையில் வேய்குழல் வைத்துக்கொண்டான். அவன் செல்லுமிடமெங்கும் ஆழியும் பணிலமுமாக ஏவலர் உடன் வந்தனர். மன்றுகள் அனைத்திலும் தன்னை ஆழிவெண்பணிலம் அமைந்த கிருஷ்ண வாசுதேவன் என்று நிமித்திகர் அறிவிக்கச்செய்தான். யாதவனின் ஓவியங்களை வரவழைத்தான். சூதர்களை அவனைப்போல் தோற்றம்புனைந்து நடிக்கச்செய்து நோக்கினான். ஒவ்வொருநாளும் ஆடிமுன் நின்று தன்னை அவன் என்றே எண்ணி நடித்தான். ஆடிக்குள் இருந்து எழுந்துவந்த ஒருவனால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டான்.
பின்பு அவன் தன்னை துவாரகையில் எட்டுதேவியருடன் அமர்ந்து அரசாளும் யாதவனாகவே உணர்ந்தான். சூதர் அவனைப்பற்றி பாடும் வரிகளெல்லாம் பௌண்டரிகனையும் உவகை கொள்ளச்செய்தன. விழிப்பும் கனவும் இளைய யாதவனைச் சூழ்ந்தே அமைந்தன. அவனைப் பற்றிய ஒரு மறுசொல்லும் உளம்பொறுக்காதவனாக அவன் ஆனான். தன் அறைக்குள் தனித்திருக்கும் நேரமெல்லாம் ஆடிமுன் அமர்ந்திருந்தான். அவை கூட அமைச்சர் வந்து அழைக்கையில் ஆடிக்குள் இருந்து பௌண்டரிக வாசுதேவன் எழுந்து செல்வதை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான்.
திரௌபதியின் மணத்தன்னேற்பில் பௌண்டரிக வாசுதேவன் முதல் முறையாக இளைய யாதவனை நேரில் கண்டான். தன் சமையர்களிடம் அவன் அரசணி புனைந்து கொண்டிருக்கையில் விரைந்து வந்த அமைச்சர் சரபர் “அரசே, விரைக! அங்கு யாதவ வாசுதேவன் இன்னும் அவை நுழையவில்லை. கிருஷ்ண வாசுதேவன் என்று நிமித்திகனின் குரல் எழுந்து அவை முழுக்க ஆவலுடன் திரும்பிப்பார்க்கையில் தாங்கள் பணிலமும் படையாழியுமாக அங்கு நின்றிருக்க வேண்டும்” என்றார். “ஆம், இதோ” என்று பௌண்டரிகன் தன் ஆடைகளை அள்ளி அணிந்து ஏவலரை கூட்டிக்கொண்டு அரசவைக்கு விரைந்தான்.
சரபர் முன்னால் விரைந்து சென்று அரசுமுறை அறிவித்த பாஞ்சாலனின் நிமித்திகனிடம் அவை அணைபவர் வாசுதேவ கிருஷ்ணன் என்று கூறியதும் அவன் ஐயம்கொண்ட விழிகளுடன் ஒருகணம் தயங்கி பின்பு தலைவணங்கி “அறிவிக்கிறேன் அமைச்சரே” என்றான். மேடை நின்று கோல் சுழற்றி அவன் அதை அறிவித்ததும் அரைவட்டமாக ஓசை அடங்க அவையமர்ந்திருந்த ஷத்ரியர் அனைவரும் திரும்பினர். இருபுறமும் ஏவலர் சங்கும் ஆழியும் சுமந்து வர தலையில் மயிற்பீலி சூடி கையில் வேய்குழலுடன் அவை புகுந்த பௌண்டரிகனின் தளர்ந்த தோற்றத்தைக் கண்டு ஒருகணம் திகைத்தனர். பின்பு அவை வெடித்து நகைத்தது.
தன்னைச் சூழ்ந்து ஒலித்த நகைப்பொலிகள் நடுவே பௌண்டரிகன் திகைத்து முன் செல்வதா பின் நகர்வதா என்று தெரியாமல் நின்றான். “அரசே, தொழுதபடி தங்கள் பீடம் நோக்கி செல்லுங்கள். இச்சிரிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. இவர்களின் மைந்தர்களை நாம் எண்ணினால் போதும்” என்று சரபர் அவன் காதில் சொன்னார். விடைத்த தலையுடன் கூப்பிய கைகளுடன் சீர் நடையிட்டு அரசர்களின் நிரை நோக்கி அவன் சென்றபோது எதிரே வந்த பாஞ்சாலச் சிற்றமைச்சர் “தாங்கள் தீர்க்கதமஸின் கொடிவழி வந்த புண்டரிக அரசைச் சார்ந்தவர் என்றால் தங்களுக்குரிய பீடம் அங்கு அமைந்துள்ளது” என்று கை காட்டினார். குருதிச்சிறப்பில்லா சிறுகுடி அரசர்களுக்குரிய நிரை என்பதைக் கண்டதும் கால் தளர்ந்து பௌண்டரிகன் நின்றான். “அரசே, தயங்க வேண்டியதில்லை. நாம் வெல்லும் வரை இவ்வஞ்சம் நம்முள் இருக்கட்டும்” என்றார் சரபர்.
ஒவ்வொரு அடியிலும் உடல் சுமந்து சென்று, பீடத்தில் விழுவது போல் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான். அவையில் நிகழ்ந்ததெதையும் அவன் அறியவில்லை. கிருஷ்ண வாசுதேவன் பெயர் மறுபடியும் அறிவிக்கப்பட்டபோது அவையில் எழுந்த பெருங்குரலையும் நகைப்பையும் பின் வாழ்த்து முழக்கங்களையும் மூடிய கண்களால் கேட்டான். அவை நிகழ்வுகள் அனைத்தும் வேறெங்கோ ஒலிக்க தன்னுள் ஓடிய எண்ணங்களை திகைப்புடன் நோக்கி செயலற்று அமர்ந்திருந்தான்.
அவை கலைந்து அவன் வெளியே சென்றபோது அமைச்சர் “அரசே, நேர் எதிரில் இளைய யாதவர் வருகிறார்” என்றார். அவன் உடல் நடுங்க கண்கள் ஒருகணம் இருட்டிவந்தன. வலிப்புகொண்டு விழுந்துவிடுவோம் என்று அஞ்சி ஏவலன் தோளை பற்றிக்கொண்டான். விழிகளை திருப்பிக்கொண்டு “செல்வோம்” என்றான். “அரசே, அவர் அருகணைகிறார். உங்களை பார்த்துவிட்டார்” என்றார் அமைச்சர். “நான் அவனை பார்க்கப்போவதில்லை” என்று பௌண்டரிகன் விழிகளை மூடிக்கொண்டான். “இருவரும் ஒருவரே போலிருக்கிறீர்கள் அரசே” என்றார் அமைச்சர். அவன் தலைதூக்காமல் படிகளில் இறங்கி தேர்நோக்கி சென்றான்.
[ 15 ]
பாஞ்சாலி மணநிகழ்வுக்குப் பின்னர் பௌண்டரிக வாசுதேவன் யாதவன் என்னும் பெயரையே வெறுக்கலானான். அவன் செவிபட யாதவனைக் குறித்து ஒரு சொல்லும் உரைக்கலாகாதென்று ஆணையிருந்தது. அவன் பொருள்பெற்றுச் சென்ற இசைச்சூதர் நகர்மன்றுகளில் நின்று இளைய யாதவனைப் பற்றிய பொய்க்கதைகளையும் இழிவுரைகளையும் பரப்பினர். பௌண்டரிகன் பிறகு ஒருபோதும் ஆடியை நோக்காதவனாக ஆனான்.
மகதத்தின் ஜராசந்தனுக்கு முதன்மையான அணுக்கர்களில் ஒருவனாக பௌண்டரிகன் மாறினான். அவையில் அவனை “சங்குசக்கரம் சூடிய கிருஷ்ண வாசுதேவன்” என்றே அழைக்கவேண்டும் என்றும் அனைத்து திருமுகங்களும் அப்பெயரிலேயே அனுப்பப்படவேண்டும் என்றும் ஆணையிருந்தது. இளைய யாதவன் துவாரகை அரசன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டான். ஜராசந்தன் மட்டுமே விழிகளுக்குள் எங்கும் ஒருதுளி விலக்கமோ நகைப்போ இல்லாமல் “கிருஷ்ணவாசுதேவரே” என்று பௌண்டரீகனை அழைத்தான். அதனால் பிற எங்குமிருப்பதைவிட மகதத்தின் அவையிலமர்ந்திருப்பதையே பௌண்டரீகன் விரும்பினான்.
மகதத்தில் இருந்து திரும்பி வங்க எல்லையில் அமைந்த தன் காவல்மாடத்தை பார்வையிட பௌண்டரீகன் சென்றிருந்தபோதுதான் புண்டரநாட்டுக்குள் இளைய பாண்டவன் பார்த்தன் ஆநிரை கவரும்பொருட்டு நுழைந்திருப்பதை ஒற்றர்கள் சொன்னார்கள். ராஜசூயத்திற்கான கொடி இந்திரப்பிரஸ்தத்தில் எழுந்திருப்பதையும், அது எவ்வண்ணம் நிகழுமென்றும் முன்னரே அவன் அறிந்திருந்தான். இந்திரப்பிரஸ்தம் அது அமைந்துள்ள உத்தரகாங்கேய நிலத்தின் அரசர்களிடம் மட்டுமே ஆநிரைகொள்ளும் என்றும், ராஜசூயத்திற்கு குலமும், நிலமும் வெல்லப்பட்டால்போதும் என்றும் சரபர் சொல்லியிருந்தார்.
“நம் எல்லைக்குள்ளா?” என்று அவன் நம்பாமல் கேட்டான். “இளைய பாண்டவரே வந்துள்ளாரா? ஒற்றர்கள் பார்த்தார்களா?” என்று அவன் திகைப்புடன் கேட்டான். “அரசே, அவர்கள் கமுக்கமாக வரவில்லை. போர்முரசு கொட்டியபடி தங்கள் அரசுக்கொடிகளுடன் படகுகளில் வந்து நம் எல்லைக்குள் இறங்கினர். காடுவழியாக ஆயர்குடிகளின் மன்றை அடைந்து அவர்களிடம் இந்திரப்பிரஸ்தம் ராஜசூயவேள்வியின் பொருட்டு அவர்களின் ஆநிரைகளை கொள்கிறது என்று அறிவித்தனர். ஆநிரைகளை மீட்க நம் படைகள் எழவேண்டும் என்பதற்காகவே அருகே தங்கி உண்டாட்டும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன்.
“அரசே, இத்தருணத்தில் அஞ்சலாகாது. மகதத்தின் படையொன்று நமக்காக வந்துகொண்டிருக்கிறது. நமது படைகளை முழுக்கத்திரட்டி அவர்களை எதிர்ப்போம். பெருந்திறல்கொண்ட பாண்டவனை நம்மால் வெல்லமுடியாது போகலாம். ஆனால் எல்லைவரைக்கும் அவனை நம்மால் துரத்திச்செல்ல முடியும். அவன் கவர்ந்துசெல்லும் ஆநிரைகளில் சிலவற்றை மீட்டாலே போதும், ஆநிரைகளை விட்டுவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர் என்பதை நாம் சூதர்சொல்லாக ஆக்கமுடியும்” என்றார் சரபர். ஆயர்பாடி நோக்கி புண்டரத்தின் எட்டு படைப்பிரிவுகளையும் இரண்டு கலநிரைகளையும் எழும்படி ஆணையிட்டுவிட்டு பௌண்டரீகன் விரைந்தான். அவன் செல்வதற்குள்ளாகவே மகதத்தின் படைகள் பன்னிருபெருங்கலங்களில் வந்து இறங்கியிருந்தன.
தன்னைச்சூழ்ந்த படைவிரிவைக் கண்டதும் பௌண்டரீகன் உளம் மலர்ந்து வாளை தூக்கினான். “இது நம் குடிப்புகழுக்காக நாம் காணும் களம். நாம் வேதமறிந்த பிரஜாபதியாகிய தீர்க்கதமஸின் குடியினர். பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுடியினர். நம்மை மச்சர்கள் என்று சிறுமைசெய்யும் ஷத்ரியர்களுக்கு உரிய மறுமொழியை அளிப்போம். வீரர்களே, நாளை எழப்போகும் நூறு தலைமுறைகளுக்காக இதோ நாம் படைக்கலம் கொண்டு எழுகிறோம்!” என்று வஞ்சினம் உரைத்தான். போர்க்கூச்சலுடன் அவன் படைகள் எழுந்து அவனை தொடர்ந்தன.
தேரிலேறி களம்நோக்கி செல்கையில் முதுமையின் களைப்பும் இளைப்பும் மெல்ல அவனிடமிருந்து அகலத்தொடங்குவதை உணர்ந்தான். முன்பெப்போதும் அறியாத களியொன்று நெஞ்சை நிறைத்திருந்தது. முதல் காமத்தை, முதல் போர்வெற்றியை, முதல் மணிமுடியை, முதல் மைந்தனை அடைவதற்கு முந்தைய கணம்போல. ஆனால் அணுகும்தோறும் அத்தருணங்கள் சிறுத்தன. அடைந்ததுமே அணைந்தன. போர்முனைப் பயணமோ ஒவ்வொரு புரவிக்காலடிக்கும் பெருகியது. தன் விழிகள் அத்தனை ஒளியுடன் முன்பிருக்கவில்லை என்றும் செவிகள் அத்தனை கூர்கொண்டிருந்ததே இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு இலைநுனியையும் கண்டான். ஒவ்வொரு பறவையோசையையும் அறிந்தான்.
இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடியை தொலைவிலேயே கண்டான். நெஞ்சு பறைமுழக்கமிட முழுதுடலிலும் குருதி நுரைகொப்பளித்தெழுந்தது. கைவிரல் நுனிகளில் உடலின் உள்விசை வந்து முட்டி தினவெடுத்தது. கண்களில் குருதிவெம்மை எழுந்தது. “போர்! வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவியபடி அவன் தன் வாளை ஆட்ட மகதத்தின் படைகளும் புண்டரத்தின் படைகளும் வில்லேந்தி அம்புதொடுத்தன. படைத்தலைவனின் கொடி எழுந்து தொலைவிலசைய பறவைக்குலமென அம்புகள் எழுந்து விண்ணில் வளைந்து இறங்கின.
மரக்கூட்டங்களுக்கு அப்பால் போர்முரசுகள் முழங்க பசுமைப்பரப்பை ஊடுருவியபடி பாண்டவர்களின் படைகள் தோன்றின. அம்புகள் வந்து அவனைச் சூழ்ந்திருந்த புண்டரிகப்படைகள் மேல் விழ இறப்போலங்களுடன் அக்கணமே போர் தொடங்கியது. அவன் தன் கைகளுக்கு அத்தனை ஆற்றலுண்டு என்று அன்று அறிந்தான். தன் இலக்குகள் ஒவ்வொன்றும் பிழைக்காது எய்தி உயிருண்பதைக் கண்டு அகம் திகைத்தான். மெய்யான பெருஞ்செயலென்பது அகம் விலகி நின்றிருக்க பிறிதொருவன் என்று உடல்நின்று ஆற்றுவதே என்று அறிந்தான்.
அகலே நின்று அணுகுகையில் ஆடியிலிருந்து எழுந்துவரும் பாவை போல இளைய யாதவன் புரவியூர்ந்து படைமுகப்பில் தோன்றுவதை பௌண்டரீகன் கண்டான். அக்கணமே அதுவே தருணமென அவன் முழுதுள்ளமும் உணர்ந்தது. வில்குலைத்து நாணொலி எழுப்பியபடி அவன் இளைய யாதவனை நோக்கி சென்றான். அவனுடைய புன்னகை நிறைந்த முகம் கடுகி அணுகி வந்தது. வலக்கையிலேந்தியிருந்த படையாழியின் கூர்முனை சுடர்விட்டது. பௌண்டரீகன் “என் எதிர்நில் இளையோனே. இன்றறிவோம் எவர் ஆடிப்பாவை என” என்று கூவியபடி அம்புகளை அவன் மேல் தொடுத்தான்.
காற்றிலெழுந்த படையாழியே அந்த அம்புகளை சிதறடித்தது. வெள்ளிப்பறவைக்கூட்டம் ஒன்று இளையோனைச் சூழ்ந்து பறப்பதுபோல் அது ஒளிவிட்டுச் சுழன்றது. பின்பு ஒளிவிடும் முகிலொன்றுக்குள் அவனும் புரவியில் அசையாமல் நின்றபடி ஆடிப்பாவைஎன விரிந்து அணுகிக்கொண்டிருப்பதாக பௌண்டரீகன் கண்டான். கைகள் அம்பெடுத்து வில்நிறைத்துத் தொடுக்க, அவன் விழிகள் கரியவனின் ஒளிவிடும் நகங்கள் கொண்ட கால்களை நோக்கின. மஞ்சளாடை அணிந்த தொடையை, கச்சையில் வேய்குழல்சூடிய இடையை, மென்மயிர்ச்சுருளணிந்த மார்பை, அணித்தோள்களை, குண்டலங்களாடிய காதை, இளநகை மலர்ந்த இதழ்களை. அவ்விழிகளை அவன் மிக அருகிலென கண்டான். அவன் ஆடியில் நாளும் கண்ட அதே விழிகள்.
அவன் தன்னைமறந்த கணத்தில் பாண்டவப் படைகளின் முகப்பில் புரவிமேல் வில்லுடனெழுந்த நிஷாதப்படைவீரன் ஒருவன் வில்வளைத்துத் தொடுத்த அம்பு அவன் வலதுகாலில் பாய்ந்தது. அவன் அலறியபடி குனிந்தபோது படையாழி வந்து அவன் தலையை கொய்து சென்றது. கூப்பியகைகளுடன் அவன் தேர்த்தட்டில் விழுந்தான். படையாழியைப் பற்றி தோளிலணிந்தபடி கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் அவனை நோக்கி வந்தார். அவனை நோக்கி புரவியில் வந்த அர்ஜுனன் “பொய்யுருவன் வீழ்ந்தான்!” என்றான். “இன்று ஒருமுறை இறந்தேன் பார்த்தா” என்றார் இளைய யாதவர்.
பகுதி ஆறு : பூரட்டாதி
[ 1 ]
படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்?” என்ற எண்ணம் பிரம்மன் உள்ளத்தில் எழுந்தது. “நீ ஆயிரமாண்டுகள் எந்தத் தடையும் அற்றவளாகுக!” என்று அவர் அருளுரைத்தார்.
குசை என்னும் அந்தச்சிறுபுல் அக்கணம்முதல் பெருகலாயிற்று. அங்கே பெரும்புல்வெளி ஒன்று எழுந்து விரிந்தது. அதில் தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் ஈக்களும் கொசுக்களும் பெருகின. பல்லாயிரம் பறவைகள் வந்தமைந்து வான்நிறைத்தன. முயல்களும், ஆடுகளும், மான்களும், பசுக்களும், யானைகளும் வந்தன. புலிகளும் சிம்மங்களும் உருவாயின. நள்ளென்று ஒலிக்கும் பெருங்காடொன்று அதன் மேல் கவிந்தது. உயிர்ததும்பி நிலம் துடித்தது.
அதை நோக்கி ஓர் ஆணும் பெண்ணும் தோளில் தோல்மூட்டையில் கருவிகளுடன் வந்தனர். அங்கே அவர்கள் குடில்கட்டி வாழ்ந்தனர். மண்புரட்டி கதிர்கொய்தனர். கன்றுகளைப் பிடித்து பால் கொண்டனர். மகவீன்று குடிபெருக்கினர். புல்வெளியில் உருவான அந்த மக்கள் குசர்கள் என்றழைக்கப்பட்டனர். குசர்களின் முதல்வன் குசன் என்னும் பிரஜாபதியாக அவர்களின் கோயில்களில் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒளிகொண்ட இளம்புல்லும் ஓடையின் தூயநீரும் படைத்து வழிபட்டனர்.
முதற்குசனின் மைந்தர்களாகிய குசாம்பன், குசநாபன், அசூர்த்தரஜஸ், வசு என்னும் நால்வரிலிருந்து பெருகிய குசர்குலம் அங்கே நான்கு சிற்றரசுகளாக ஆகியது. குசாம்பன் கங்கையும் யமுனையும் இணையும் இடத்தில் அமைத்த நகரம் கோசாம்பி என்றழைக்கப்பட்டது. குசநாபன் அமைத்த நகரம் மகோதயபுரம் என்று பெயர்கொண்டது. அசூர்த்தரஜஸின் நகரம் தர்மாரண்யம். வசுவின் நகரமே கிரிவிரஜம். நான்கு நகரங்களுக்கும் அடியில் வற்றாத பேரூற்றாக பசும்புல் எழுந்துகொண்டிருந்தது. கூலமணிகளாகவும் பசும்பாலாகவும் அது உருமாறியது. பொன்னென வடிவுகொண்டு அவர்களின் கருவூலத்தை நிறைத்தது. அப்பொன் கல்வியாகவும் வேள்வியாகவும் வடிவுகொண்டது. புகழென்றும் விண்பேறென்றும் ஆகி என்றும் அழியாததாகியது.
குசநாபனின் வழிவந்த நூற்றெட்டாவது மைந்தனின் பெயரும் குசநாபன் என்றே அமைந்தது. அவன் தன் நகர் அருகே இருந்த ஹிரண்யவனம் என்னும் காட்டில் வேட்டைக்குச் சென்றபோது அங்கே ஆடையற்ற உடலுடன் திரிந்த கட்டற்ற கானழகி ஒருத்தியை கண்டான். முதலில் மரங்களில் தாவி அலைந்த அவளை அவன் காட்டுக்குரங்கென்று எண்ணினான். பின்னர் கந்தர்வப்பெண் என மயங்கினான். அவள் கைகள் காற்றில் துழாவிப்பறந்தன. உடல் கிளைகளினூடாக நீந்திச்சென்றது. அவனைக் கண்டதும் பாய்ந்திறங்கி அச்சமின்றி அணுகி அவன்முன் இடையில் கைவைத்து நின்று “நீர் யார்? உம் உடலில் இருக்கும் இப்பொன்னிறத்தோல் எது?” என்றாள். “இதை ஆடை என்கிறார்கள் பெண்ணே. நான் மகோதயபுரத்தின் அரசன்” என்றான்.
“உம் உடலில் கட்டப்பட்டிருக்கும் அம்மஞ்சள் தண்டுகள் என்ன?” என்றாள். “அவை பொன்னணிகள். அரசர்களுக்குரியவை. பெருமதிப்புள்ளவை” என்றான். “அரசனென்றால் எவன்?” என்று அவள் கேட்டாள். “இந்நிலத்தை உரிமைகொண்டவன். இக்காட்டையும் ஆள்பவன்” என்றான். “காட்டை எவர் ஆளமுடியும்?” என்று அவள் வியந்தாள். “ஆம், உண்மை. அதை இப்போதே உணர்ந்தேன். கன்னியே, உன்னை ஆள விழைந்தேன்” என்று அவன் சொன்னான். “உன்னை மணம்கொள்வேன் என்றால் இப்பசுங்காடும் என்னுடையதென்றே ஆகும்.” “மணமென்றால் என்ன?” என்றாள் அவள். “உன் தந்தையின் பெயரை சொல். அவர் அறிவார்” என்றான் குசநாபன்.
அவள் பெயர் கிருதாசி. அரசன் அவள் தந்தையை அணுகி மணம்கோரினான். அரசனின் முடி தன் மகள் காலடியில் என்றுமிருக்கவேண்டும் என்று அவன் கோரினான். அமைச்சர்கள் “அரசே, நாடும் நகரமும் நெறிகளால் ஆனவை. நெறியின்மையே காடு. அரசிலும் நகரிலும் பெண் எனும் தெய்வத்தை பொற்பென்றும் பொறையென்றும் குலமென்றும் நெறியென்றும் அணியென்றும் ஆடையென்றும் ஆறுவகை மந்திரங்களால் கட்டி பீடத்தில் அமரச்செய்திருக்கிறோம். கட்டுகளே அற்ற காட்டுமகள் நம் குடிநின்று வாழமாட்டாள். அவ்வெண்ணம் ஒழிக!” என்றனர்.
“அமைச்சர்களே, விண்ணகம் ஒருவனுக்கென தெரிவுசெய்த பெண்ணை அவன் கண்டுவிட்டால் பின்னர் பிறிதொன்றும் அவனை தடுக்கமுடியாது. என் நாடும் நகரும் அழியுமென்றே ஆயினும் என் எண்ணம் மாறாது. அவளே என் அரசி” என்றான் குசநாபன். நிமித்திகர் “அவள் பொருட்டு இந்நகர் உருமாறும். இக்குலமும் வழிவிலகும்” என்றனர். “ஆமெனில் அது ஊழ். அவளை நோக்கி என்னை செலுத்துவதும் அதுவே” என்றான் குசநாபன். அவன் எண்ணம் மாறாதென்றறிந்த அமைச்சர்கள் மணச்சொல்லுடன் சென்று காட்டரசனை பார்த்தனர். நூறுபொற்காசுகளை இளந்தளிர்புல்லும் பொற்கலத்து நீரும் சேர்த்து தாலத்தில் வைத்து கன்யாசுல்கமாகக் கொடுத்து அவளை மணம்கோரினர்.
கிருதாசியின் பத்து உடன்பிறந்தாள்களுடன் அவளை குசநாபன் மணந்தான். பதினொரு காட்டுப்புரவிகள் என அவர்கள் அவன் அரண்மனையை நிறைத்தனர். கட்டற்றதே காமமென்றாகும் என அவன் அறிந்தான். ஆறுதளைகளையும் அறுத்து பெண்டிர் தன்னந்தனிமையில் விடுதலைகொள்ளும் அவ்விறுதிக்கணத்தில் எப்போதுமிருந்தனர் அவன் அரசியர். அங்கிருந்து எழுந்து காட்டின் இருண்ட ஆழத்திற்குள் சென்றனர். அங்கே விழியொளிர அமர்ந்திருந்த மூதன்னையராக ஆயினர். பதினாறு கைகளுடன் எழுந்த கொற்றவை என்று தோன்றினர். உடலே முலையென்று கனிந்த அன்னையராக அமைந்தனர். அவன் பிறிதொன்றும் எண்ணாது அவர்களில் ஆழ்ந்திருந்தான். வெளியே காலம் நீண்டு உருமயங்கி பிறிதொன்றாகியது.
பதினொரு மனைவியரில் அவன் நூறு மகளிரை பெற்றான். நூற்றுவரும் அன்னையரைப் போலவே காட்டுமகளிராக திகழ்ந்தனர். ஆயிரம் நெறிகளால் ஆன நகரம் அவர்களை அனைத்தையும் கலைத்துவீசும் காற்றுகளாகவே உணர்ந்தது. தங்கள் அன்னையரின் காட்டுக்குள் மட்டுமே அவர்கள் இயல்பாக மகிழ்ந்திருந்தனர். ஆகவே அவர்களை சிறுமியராகவே காட்டுக்கு அனுப்பி அங்கேயே வளரச்செய்தான். அவர்கள் கன்னியராயினர். கன்னியர் உடல்களை முதலில் கண்டுகொள்ளும் காற்று அவர்கள் மேல் காதல்கொண்டது. கன்னியரின் ஆடைகலைத்து அவர்களை நாணச்செய்வது அதன் ஆடல். அவர்களோ ஆடைகளையே அறியாதவர்களாக இருந்தனர். காட்டுமான்களை துரத்திப்பிடித்து தூக்கி ஆற்றில் வீசுவதிலும் அருவிப்பெருக்குடன் பாய்ந்து நீந்தி எழுந்து பற்கள் ஒளிரச் சிரிப்பதிலுமே முழு உவகையை கண்டடைந்தனர்.
அந்நாளில் ஒருமுறை காட்டுக்குச் சென்ற குசநாபன் அங்கே மான்களுடன் கலந்து ஆடித்திளைத்திருந்த தன் மகளிரை கண்டான். கருங்கற்சிலை போன்ற உருண்டு இறுகிய உடல்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் “தந்தையே!” என்று கூவியபடி முலைகள் துள்ள தொடைகள் ததும்ப வெண்பற்கள் ஒளிவிட கண்கள் மலர ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர். அவன் அவர்களை நோக்கக் கூசி தன் விழிகளை தாழ்த்திக்கொண்டான். “நீங்கள் ஆடைகளை அணிவதில்லையா?” என்றான். “இங்குள்ள குளிரும் மழையும் காற்றும் வெயிலும் எங்கள் உடலுக்குரியவை தந்தையே. காட்டில் எந்த உயிருக்கும் ஆடை தேவையில்லை” என்றாள் மூத்தவள். “ஆம்” என நகைத்தனர் பிற கன்னியர்.
அன்று திரும்புகையில் குசநாபன் அவர்களை மகோதயபுரத்திற்கு கொண்டுவரும்படி ஆணையிட்டான். அவர்களிடம் தந்தையின் ஆணை தெரிவிக்கப்பட்டபோது மறுப்பின்றி தேர்களில் ஏறிக்கொண்டனர். அவர்களின் மூதன்னையர் தேனும், கஸ்தூரியும், புனுகும், அகிலும், சந்தனமும் நிறைத்த கலங்களை அவர்களுக்கு பரிசில்களாக அளித்து விழிநீருடன் வழியனுப்பி வைத்தனர். தேரில் நகருக்கு வெளியே வந்துசேர்ந்ததும் அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்த அரண்மனைச் செவிலியர் தேர்களை அங்கிருந்த கோடைமாளிகையில் கொண்டு சென்று நிறுத்தி அவர்களை இறங்கச்செய்தனர். அவர்களை நீராட்டி பொன்னூல் பின்னலிட்ட பட்டாடைகளையும் மணிபதித்த அணிகளையும் அவர்களுக்கு அளித்து அணியச்செய்தனர்.
ஆடைபுனைய அவர்களுக்கு தெரியவில்லை. அணிகளுக்கான புழைகளேதும் அவர்களின் உடலில் இருக்கவில்லை. பொற்கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் காதுமடல்களும் மூக்குகளும் குத்தி துளைக்கப்பட்டன. முதிர்ந்த தசையில் குத்துண்டபோது குருதி வழிய அவர்கள் கண்ணீர்விட்டனர். “அன்னையரே, இதெல்லாம் எதற்காக? நாங்கள் ஏன் இந்தக் கண்கூசும் பொருட்களை எங்கள் உடல்களில் சுமக்கவேண்டும்?” என்றனர். “இளவரசியரே, நீங்கள் பாரதவர்ஷத்தின் தொல்குடியாகிய குசர்களின் வழிவந்தவர்கள். மகோதயபுர நகரை ஆளும் அரசரின் மகளிர். அரசர்களுக்கு மனைவியராகி முடிசூடி வாழவேண்டியவர்கள்” என்றனர் செவிலியர்.
“இன்னும் எத்தனை நேரம் இதை நாங்கள் அணிந்திருக்கவேண்டும்?” என்று இளையவள் கேட்டாள். “இதென்ன வினா? ஆடைகளும் அணிகளுமே உங்களை இளவரசியரென்றாக்குகின்றன. அவற்றை எப்போதும் அணிந்திருக்கவேண்டியதுதான்” என்றனர் செவிலியர். “ஆடையணிகளால் நாங்கள் இளவரசியர் ஆகிறோமென்றால் இவற்றை பிறிதெவரேனும் அணிந்துகொள்ளலாம் அல்லவா? அவர்களை அரசியராக்கி எங்களை கானகம் அனுப்ப அரசரிடம் சொல்லுங்கள்” என்றாள் ஒருத்தி. செவிலியர் “இளவரசி, அரசகுடி என்பது குருதியாலானது. நீங்கள் குசநாபரின் குருதிவிதையாகி எழுந்தவர்கள்” என்றனர்.
ஒருவரோடொருவர் ஒண்டிக்கொண்டபடி “நாங்கள் எப்போது இவற்றையெல்லாம் கழற்றமுடியும்?” என முதுமகள் ஒருத்தியிடம் கேட்டாள் இளைவள். “மகளே, இவற்றை அணிந்தபின் கழற்ற எவராலும் இயலாது. அரையணியும் கணையாழியும் இருபத்தெட்டாவது நாளில். ஐம்படைத்தாலி மூன்றாம் மாதத்தில். முதலாண்டில் குழையும் மாலையும். பதினெட்டில் மங்கலத்தாலியும் மெட்டியும். அவை பெருகிக்கொண்டேதான் இருக்கும்.” அவர்கள் நகர்நுழைந்தபோது நாட்டுமக்கள் கூடி நின்று வாழ்த்தொலி எழுப்பி மலர்சொரிந்தனர். மலர்களை கைதூக்கிப்பிடித்து ஒருவருக்கொருவர் வீசிச்சிரித்த இளவரசியரைக் கண்டு நகர்மூத்தார் திகைத்தனர். ஆடைவிலகி அவர்களின் உடல்கள் வெளித்தெரியக்கண்டு செவிலியர் அள்ளி அள்ளி மூடினர்.
அரண்மனையை அடைந்ததும் மூத்தநிமித்திகர் செவிலியரை அழைத்து அவர்களுக்கு ஆடைமுறைமையும் அவைநெறிகளும் கற்பிக்கவேண்டுமென்று ஆணையிட்டார். நூறு முதுசெவிலியர் அதற்கென பணிகொண்டனர். இளவரசியரை தனித்தனியாக பிரிப்பதே அவர்களை நெறிப்படுத்தும் வழி என்று கண்டனர். ஒவ்வொரு இளவரசிக்கும் ஒரு செவிலியும் இருசேடியரும் எப்போதும் உடனிருந்தனர். காலையில் நீராட்டி ஆடையணி பூட்டினர். சமையம் கொள்ளச்செய்தனர். உணவுண்ணவும் உரையாடவும் முறைமை பேணவும் ஓயாது கற்பித்தனர்.
முதற்சிலநாள் இளவரசியர் தங்கள் உடன்பிறந்தாரை காணவேண்டுமென விழைந்து சினந்தும் மன்றாடியும் திமிறினர். பின்னர் அடங்கி விழிநீர் சொரிந்தனர். பின்னர் அத்தனிமைக்குள் முற்றமைந்தனர். சொல்லிக்கொடுக்கப்பட்டவற்றை ஒப்பித்தனர். விழியாணைகளின்படி நடந்தனர். பிழையற்ற பாவைகளென அவர்கள் மாறிய பின்னர் அவர்களை குசநாபனின் அவையிலமரச் செய்தனர். முறைமைகளைப் பேணி இன்சொற்களுரைத்து அவைநிறைத்த மகளிரை நகர்மக்கள் வாழ்த்தினர். அவர்கள் ஆலயம்தொழச் செல்லும்போது இருபக்கமும் குடிகள் கூடி அரிமலர் வீசி புகழ்கூவினர். கவிஞர்கள் அவர்களைப்பற்றி பாடிய பாடல்களை சூதர்கள் நாடெங்கும் பாடியலைந்தனர்.
அவர்களின் அழகும் பண்பும் அறிந்து அயல்நாட்டரசர் மகட்கொடை கோரி செய்திகள் அனுப்பினர். உகந்த அரசனுக்கு அம்மகளிரை மணம்முடித்தனுப்புவதைப் பற்றி குசநாபன் எண்ணலானான். மகளிரை நோக்கவந்த கோசாம்பி நாட்டரசனின் தூதுச் செவிலியரில் மூத்தவள் “முதலிளவரசி ஏன் தோள்வளைத்திருக்கிறாள்? கூன் உள்ளதே?” என்றாள். அதையே அங்கிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதன்பின் அதுவன்றி பிறிது எதுவும் நோக்கில் நில்லாமலாயிற்று. இளவரசியர் நூற்றுவரிலும் சற்றே தோள்கூனல் இருந்தது. அவர்கள் காட்டுக்கன்னியராக நகர்நுழைந்தபோது முலைததும்ப தோள்நிமிர்ந்து தலை தூக்கி கைவீசி நடப்பவர்களாக இருந்தனர். நேர்கொண்டு நோக்கி உரத்த குரலில் பேசி கழுத்துபுடைக்க தலைபின்னோக்கிச் செலுத்தி வெடித்துச்சிரித்தனர்.
“முதலில் தோள்களை குறுக்குங்கள் இளவரசி. தோள்நிமிர்வென்பது ஆண்மை. தோள்வளைதலே பெண்மை” என்று செவிலியர் அவர்களுக்கு கற்பித்தனர். “தோள்கள் வளைகையில் இடை ஒசியும். கை குழையும். விழிகள் சரியும். குரல் தழையும். நகைப்பு மென்மையாகும். ஓரவிழி கூர்கொள்ளும். சொற்கள் கொஞ்சும். ஆண்களின் நிமிர்வை எண்ணுகையில் உடல்தளரும். வியர்வை குளிர்ந்து முலை விம்மும். நேர்நின்று நோக்காது தலைகவிழ்ந்து காலொன்று தளர இடை ஒசிய முலைதழைய நின்றிருப்பீர்கள். மேலுதட்டில் மென்னீர் பூக்கும். விழியோரம் கசியும். அத்தருணத்தில் நீங்கள் பெண்ணென்று உணர்வீர்கள். அதுவே பேரின்பம் என்பது.” ஒவ்வொரு நாளும் அவர்களின் தோள்களைப்பற்றி “சற்று தளர்வாக. சற்று குழைவாக. வீரன் நாணேற்றிய வில் என” என்று சொல்லிச்சொல்லி வளையச்செய்தனர். “காற்றில் ஆடும் கொடிபோல. கனி கொண்ட செடிபோல. வேள்விப்புகைபோல” என்று காட்டி பயிற்றுவித்தனர்.
கூன் குறித்த உசாவல்கள் செவிலியரை அஞ்சவைத்தன. முதலில் “தாழ்வில்லை, சற்று கூனல் என்பதே பெண்ணழகுதான்” என்று அவர்கள் ஆறுதல் கொண்டனர். ஆனால் அவர்களோ நாளும் என கூன் கொண்டனர். மேலும்மேலும் அவர்களின் தோள்வளைந்து முதுகு கூனக்கண்டு “போதும் இளவரசி. இதற்குமேல் கூன்விழலாகாது” என்றனர் செவிலியர். பின்னர் அஞ்சி மருத்துவரை அழைத்துவந்தனர். அவர்கள் நோக்கி நுணுகி “உடலில் எக்குறையும் இல்லை. உள்ளத்திலுள்ளதே உடலென்றாகிறது என்கின்றன நூல்கள். உள்ளத்தை அறிய மருத்துவநூலால் இயலாது” என்றனர். நிமித்திகர் குறிசூழ்ந்து “பண்டு காட்டிலிருக்கையில் காற்றரசன் இவர்களைக் கண்டு காமித்தான். அவனை இவர்கள் உதறிச்சென்றமையால் முனிந்து தீச்சொல்லிட்டிருக்கிறான்” என்றார்.
காற்றுத்தேவனுக்கு பழிதீர் பூசனைகள் செய்யப்பட்டன. அரசனும் அரசியரும் சென்று அவன் கோயில்கொண்டிருக்கும் மலையடிகளிலும் ஆற்றுக்கரைகளிலும் நோன்பிருந்தனர். அந்நோன்பே அவர்களின் கூனை உலகறியச் செய்தது. நூறு இளவரசியரும் கன்றுபோல் நிலம்நோக்கி நடப்பவர் என்பது சூதர் சொல்லாகி அங்காடிப் பேச்சாகி குழந்தைக் கதையாகியது. மகோதயபுரத்தின் பெயரே மாறுபட்டது. குனிந்தகன்னியர் என்று அதை கேலியாக அழைத்தனர் அயல்சூதர். அதை அனைவரும் சொல்லத்தொடங்க வணிகர் இயல்பாக அதை தங்களுக்குள் கொண்டனர். வணிகர் சொல்லில் இருந்து மக்களிடம் நிலைபெற்றது. கன்யாகுப்ஜம் கன்னியரின் பழிசூழ்ந்த நகர் என்று கவிஞர் பாடினர். அந்நகரை முனிவர் அணுகாதொழிந்தனர்.
தென்னகத்திலிருந்து வந்த முதுநிமித்திகர் சாத்தன் நூறு கூன்கன்னியரின் பிறவிநூல்களையும் அவர்களைச் சூழ்ந்த வான்குறிகளையும் தேர்ந்து அவர்களுக்கு மீட்புண்டு என்று கணித்தார். “எந்தப் பெண்ணும் அவளுக்குரிய ஆண்மகனை அடைகையில் முழுமைகொள்கிறாள். இக்கூனிகள் ஒவ்வொருவருக்கும் ஒருவன் இப்புவியில் பிறந்துள்ளான். அவன் அவர்களை தேடி வருவான். அவன் முன் சூரியனைக் கண்ட தாமரைகள் என இவர்கள் நிமிர்ந்து மலர்வர்” என்றார். “அவன் எங்குளான்?” என்றார் அரசர். “மண்ணில் உள்ள பலகோடி மானுடரில் ஒருவன் என்றே சொல்லமுடியும். அவனை தேடிக்கண்டடைதல் அரிது. அவனே வரட்டும். ஊழ் தன்னை நிகழ்த்துக!” என்றார் சாத்தன்.
“நாங்கள் எப்படி அவனை அறிவோம் நிமித்திகரே?” என்றாள் கூனிகளில் மூத்தவள். “அவனை நீங்கள் முன்னரே அறிவீர்கள் அரசி. உங்கள் கனவுகளுக்குள் அவன் இருக்கிறான், நீருக்குள் நெருப்பு போல. அகழ்ந்தெடுங்கள்” என்றார் அவர். அவர்கள் அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் ஆழங்களில் சொற்களால் துழாவத்தொடங்கினர். பின்பு சொற்களை இழந்து கனவுகளால் துழாவினர். பின்பு கனவுகளையும் கடந்த அமைதியில் அவனை கண்டனர். அவன் ஒருமுறையேனும் விழியறிந்தவன் அல்ல என்றாலும் அவர்களுக்கு மிகநன்றாகத் தெரிந்தவனாக இருந்தான்.
ஒவ்வொருவரும் கண்ட ஆண்மகன் ஒருவன். அவர்கள் அவன் இயல்புகளை சொல் பரிமாறிக்கொள்ளவில்லை. கனவுகளில் இருந்து சொல்லுக்கு அவனை எடுக்க அவர்கள் அறிந்திருக்கவில்லை. சொல்லப்படாமையால் அவன் அவர்களுக்கு மிகமிக அணுக்கமானவனாக இருந்தான். உடலில் உயிர் என அவர்களுக்குள் வாழ்ந்தான்.
[ 2 ]
ஊர்மிளை என்னும் கந்தர்வப்பெண்ணை கந்தர்வர்களின் அரசனாகிய சித்ரதேவன் தீச்சொல்லிட்டு மண்ணுக்கனுப்பினான். ஏழடுக்குள்ள மணிமுடிசூடி, தோள்வளையும் கவசங்களும் ஆரங்களும் கடகங்களும் கணையாழியுமாக வெண்ணிற யானைமேல் ஏறி அவன் நகருலா சென்றபோது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகைப்பெண்களும் வந்து நோக்கி உளம்பூத்தனர். ஒருத்தி மட்டும் தருக்கி விலகி தன் கையையே ஆடியென்றாக்கி தன் பாவையை அதில் நோக்கி மகிழ்ந்திருக்கக் கண்டு சினந்து அவளை அழைத்து தன் முன் நிறுத்தினான்.
ஊர்மிளை என்னும் அந்த கந்தர்வப்பெண் அச்சமில்லாத விழிகளுடன் அவனை நோக்கி நிமிர்ந்து நின்றாள். “உன் அரசனுக்குமுன் பணிவதில் உனக்கேது தடை?” என்று சித்ரதேவன் கேட்டான். “எவர்முன்னும் பணிய என்னால் இயலாது” என்று அவள் சொன்னாள் “என் முகத்தை ஆடியில் பார்க்கிறேன். குறையற்ற பேரழகு கொண்டிருக்கிறது. என் உள்ளம் கட்டின்றி இருக்கிறது. எவருக்கு நான் பணியவேண்டும்?” என்றாள். “பணியாவிடில் நீ இக்கந்தர்வ உலகில் வாழமுடியாது என்று அறிக!” என்றான் சித்ரதேவன். “நான் விழைவது விடுதலையை மட்டுமே” என்றாள் அவள். “இவ்வுலகிலிருந்து உதிர்க! எங்கு எவரும் அணியேதுமின்றி அலைகிறார்களோ அங்கு செல்க!” என்று அரசகந்தர்வன் தீச்சொல்லிட்டான். “அரசே, சொல்மீட்பு அளியுங்கள். நான் எப்போது மீள்வேன்?” என்றாள் ஊர்மிளை.
“எவனொருவன் பெண்ணை தனக்கு முற்றிலும் நிகரென நினைக்கிறானோ அவனை நீ அடைவாய். எவன் காதல் உன்னை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாதோ அதில் திளைப்பாய். எப்போதும் எதிலும் தளையுறாத மைந்தன் ஒருவனை பெறுவாய். அதன்பின் இங்கு மீள்வாய்” என்றான் சித்ரதேவன். ஊர்மிளை அவ்வண்ணமே மண்ணிழிந்தாள். கன்யாகுப்ஜத்தின் அருகே ஹிரண்யவனம் என்னும் காட்டில் வந்து தன்னை ஒரு காட்டுப்பெண்ணென உணர்ந்தாள். அங்கே ஆடையணிந்த எவருமிருக்கவில்லை. அவள் மான்களுடன் மானாகவும் குரங்குகளுடன் குரங்காகவும் மீன்களுடன் மீனாகவும் தன்னை உணர்ந்து அப்பசுமையுலகில் திளைத்தாள்.
ஒருநாள் காட்டில் கிளைகளிலாடிக் கொண்டிருந்தபோது கீழே ஓர் இளைஞர் ஆடையணி இன்றி நடந்துவருவதை கண்டாள். பாய்ந்து இறங்கி அவர் முன் சென்று நின்றாள். அவர் அவளை நிமிர்ந்து விழிகளை மட்டும் நோக்கி “நீ யார்?” என்றார். “நான் இக்காட்டை ஆளும் கந்தர்வப்பெண். நீங்கள் யார்?” என்றாள். “நான் சூளி என்னும் வைதிகன். தவம்செய்து வீடுபேறடைய குடி, பெயர், செல்வம், கல்வி நான்கும் துறந்து இக்காட்டுக்கு வந்தேன்” என்றார். “இங்கு நல்ல இடங்களுள்ளன. நான் அவற்றை காட்டுகிறேன்” என்றாள். “நன்று. நீ என் தோழியென இங்கிரு” என்று அவர் சொன்னார்.
அவள் காட்டிய சோலையில் குடிலமைத்து அவர் தங்கினார். மறுநாள் துறவை முழுமை செய்யும்பொருட்டு மூதாதையருக்கு இறுதிநீர் அளிக்கையில் காகம் வந்தமரவில்லை. பன்னிருமுறை அழைத்தும் காகம் வராமை கண்டு அவர் நீர்விட்டு எழுந்து மேலே வந்து கைகூப்பி கிழக்கு நோக்கி அமர்ந்து பன்னிருகளம் வரைந்து அதில் கற்களைப் பரப்பி குறிதேர்ந்தார். களத்தில் வந்தமைந்த அவர் தந்தை “மைந்தா, உன் குலநிரையை விண்ணிலமர்த்த ஒரு மைந்தன் தேவை. அவனை உலகளித்துவிட்டு நீ துறவுகொள்வதே முறை” என்றார். “ஆம், தந்தையே. ஆணை!” என்றார் சூளி.
விழிதூக்கி கந்தர்வப்பெண்ணை நோக்கிய சூளி “பெண்ணே, நீ இனியவள். இக்காட்டில் பிற பெண்களுமில்லை. எனக்கு ஒரு மைந்தனை அளிக்க அருள்கொள்க!” என்றார். “எனக்கு சற்றேனும் மேல்நிற்கும் ஒருவனையே கொழுநனாக ஏற்பேன்” என்று அவள் சொன்னாள். சூளி துயருற்று “அவ்வண்ணமாயின் நான் தகுதிகொண்டவன் அல்ல. இப்புவியில் அனைத்துயிரும் நிகரென்றே எண்ணும் நோன்புகொண்டவன். நீ என்னைவிட மேலானவளும் அல்ல கீழானவளும் அல்ல” என்றார்.
அச்சொல் கேட்டதுமே அவள் உவகைக்குரல் எழுப்பி அவர் அருகே சென்று “அந்தணரே, நான் தேடி இங்கு காத்திருந்த மானுடர் நீங்களே” என்றாள். அவளுக்கு அவர் குருதியில் பிறந்த மைந்தன் பிரம்மதத்தன் என்று பெயர்கொண்டான். மைந்தன் கால்முளைத்து நாடுகாண விலகிச்சென்றபோது ஊர்மிளை விண்புகுந்து கந்தர்வநாட்டை அடைந்து அங்கே அன்னையென்று அமைந்தாள். சூளி தன் தவத்திற்குள் புகுந்தார்.
அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் அறியாத அன்னையை மட்டுமே கண்டு வளர்ந்த இளைஞராகிய பிரம்மதத்தன் வெற்றுடலுடன் தனியாக நடந்து அருகிருந்த மகோதயபுர நகரை சென்றடைந்தார். ஆண்மையின் அழகு மிகுந்திருந்த அவருக்கு எதிர்வந்த அனைத்துப் பெண்களும் விழிதாழ்த்தி முகம்குனிந்து உடல்குறுக்கிச் சென்றதைக் கண்டு அவர்கள் ஏதோ நோயுற்றவர்கள் என்றே அவர் நினைத்தார். அணுகி வந்த ஒருவரிடம் “இங்குள்ள பெண்டிரெல்லாம் நோயுற்று தளர்ந்திருப்பது ஏன்?” என்று வினவினார். பகலிலேயே கள்ளுண்டு களிமயங்கி வந்த சூதன் ஒருவன் வெடித்து நகைத்து “அந்தணரே, அவர்கள் பெண்மையென்னும் பிறவிநோயால் பீடிக்கப்பட்டவர்கள்” என்றான். “தாங்கள் நோயற்றவர். ஆகவே காப்பில்லாதிருக்கிறீர். இன்னுமொரு குடம் கள்ளுண்டால் நானும் காப்பற்றவனே.”
நகரெங்கும் அவரைக் கண்டு மக்கள் அஞ்சி கூச்சலிட்டனர். மகளிர் நாணி இல்லம் புகுந்து கதவை மூடினர். இழிமகன்கள் சிரித்தபடி பின்னால் வந்தனர். அவருக்கு அவர்களின் அச்சமும் திகைப்பும் புரியவில்லை. அவர்கள் ஏதோ நோயுற்றிருப்பதனால் தங்கள் உடல்களை மூடிக்கொண்டிருப்பதாகவே எண்ணினார். “இங்கு உணவு எங்கு கிடைக்கும்?” என்று அவர் கேட்டபோது ஒரு முதியவர் “நீங்கள் நைஷ்டிகர் என நினைக்கிறேன் முனிவரே. நேராக சென்றால் அரண்மனை. அங்கே அரசகுடியினர் அளிக்கும் அறக்கொடை உள்ளது. செல்க!” என்றார்.
பிரம்மதத்தன் அரசகாணிக்கை கொள்ளும் பொருட்டு அரண்மனையை அடைந்தபோது அங்கே இளவரசியருக்கான பிழைபூசனையும் பலிகொடையும் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆயிரத்தெட்டு அந்தணர் அமர்ந்து அதர்வமுறைபப்டி பூதவேள்வி இயற்றிக்கொண்டிருக்க நடுவே அரசனும் அரசியரும் தர்ப்பைப்புல் இருக்கைகளில் உடல்சோர்ந்து அமர்ந்திருந்தனர். வேள்விமுடிந்து அவிபங்கிடுகையில் அதை தர்ப்பைப்புல்லால் பகிர்ந்த முதுவைதிகர் அந்நிமித்தங்களைக் கணித்து “அரசே, நற்குறிகள் தெரிகின்றன. தங்கள் இளமகளிர் நலம்பெற்று மணமகனைப் பெறுவர். நன்மக்கள் பேறும் அவர்களுக்குண்டு” என்றார்.
துயரில் உடல் தளர்ந்திருந்த அரசன் நலிந்த குரலில் “வைதிகரே, எனக்குப்பின் இந்நாட்டை ஆள மைந்தரில்லை. என் குருதியில் மகனெழுவானா?” என்றான். “ஆம், நற்குறிகளின்படி பெரும்புகழ்பெற்ற மைந்தன் உங்கள் குருதியில் எழுவான். அவனுக்குப் பிறக்கும் மைந்தன் முனிவர்களில் தலையாயவன் என்று விண்ணுறையும் தெய்வங்களால் வாழ்த்தப்படுவான். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவியுணவை அங்கிருந்தோருக்குப் பகிர்ந்தளிக்கையில் உணவின் மணமறிந்து வேள்விப்பந்தலுக்குள் நுழைந்த பிரம்மதத்தன் “நான் பசித்திருக்கிறேன்!” என்று கூவியபடி வந்தார்.
அனைத்து முறைமைகளையும் மீறி நூறு இளவரசியரும் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நுழைந்ததைக்கண்டு அரசகாவலர் வேல்களுடனும் வாள்களுடனும் அவரை நோக்கி பாய்ந்தனர். ஆனால் முதுவைதிகர் திகைத்த குரலில் “அரசே, வேண்டாம்” என்று கூவினார். அவர்கள் நிலைக்க “நோக்குக, இளவரசியர் நிமிர்ந்துள்ளனர்” என்றார். அரசன் அப்போதுதான் தன் நூறு மகளிரும் நிமிர்ந்த தலையுடன் ஒளிமிக்க விழிகளுடன் அவரை நோக்கி புன்னகைப்பதை கண்டான். “அவர்களின் நோய் நீங்கிவிட்டது. அரசே, இவனே நீங்கள் நாடிய மணமகன்” என்றார் வைதிகர்.
நூறு மகளிரும் நாணிழந்து, இடமும் காலமும் அழிந்து அவரையே நோக்கினர். அவர்களின் ஒளியிழந்த கண்கள் சுடர்விடத் தொடங்கின. வளைந்த முதுகுகள் நிமிர்ந்தன. தோள்கள் அகன்றன. புன்னகைகளில் இளமை நிறைந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் கனவில் கண்டிருந்த இளைஞர்கள் நூற்றுவரையும் அவ்வொருவரிலேயே அவர்கள் கண்டனர்.
அந்த வேள்விப்பந்தலிலேயே நூறு மகளிரையும் பிரம்மதத்தனுக்கு நீரூற்றி கையளித்தான் குசநாபன். கன்யாசுல்கமாகக் கொடுக்க அவரிடம் ஏதுமிருக்கவில்லை. காட்டிலிருந்து அவர் உடலில் ஒட்டி வந்த புல்லின் விதை ஒன்றை தொட்டெடுத்த முதுவைதிகர் “இதுவே கன்யாசுல்கமாக அமைக!” என்று சொல்லி மன்னருக்கு அளித்தார். வைதிகரின் ஆணையின்படி தர்ப்பைப்புல்லை தாலியென அவர்களின் கழுத்தில் கட்டி அவர்களை மணம்கொண்டார் பிரம்மதத்தன். அவர்களை கைபற்றி அழைத்துக்கொண்டு மீண்டும் ஹிரண்யவனம் மீண்டார்.
நகரெல்லை கடந்து காட்டின் காற்றுபட்டபோதே அக்கன்னியரின் ஆடைகள் பறந்தகன்றன. பச்சைவெளிக்குள் அவர்கள் கூவிச்சிரித்தபடி துள்ளிப்பாய்ந்து மூழ்கிச்சென்றனர். சிலநாட்களில் அவர்களின் உடல்நலிவு முற்றிலும் அகன்றது. புதியவிதைபோல் உடல் ஒளிகொண்டது. காட்டுக்குள் அவர்களின் சிரிப்பு மலையோடை நீரொலியுடனும் கிள்ளைகளின் குரல்களுடனும் வாகைநெற்றுகளின் சிலம்பொலியுடனும் கலந்து நிறைந்தது. ஹிரண்யவனம் அதன் பின் கன்யாவனம் என்று கவிஞரால் அழைக்கப்பட்டது. அருந்தவம் இயற்றும் நைஷ்டிகர் அன்றி பிறர் அங்கே நுழையலாகாதென்னும் நெறி உருவாகியது.
[ 3 ]
கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதி குசர்குலத்தின் முதன்மைப் பேரரசன் என்று கவிஞர்களால் பாடப்பட்டான். கங்கை ஒழுகிச்சென்ற நிலமெங்குமிருந்த பல்லாயிரம் ஊர்களில் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் அவனுடைய பேர்சொல்லி கதைகள் சொல்லப்பட்டன என்றனர் நிமித்திகர். விஷ்ணுவிலிருந்து பிரம்மன், பிரம்மனிலிருந்து சந்திரன், சந்திரனிலிருந்து புதன்... என நீளும் குலவரியில் குசநாபனுக்கும் கிருதாசிக்கும் மைந்தனாகப் பிறந்தான். பாடிப்பரவும் சூதர்களின் சொற்களனைத்தும் போதாத பெருந்திறல்வீரனென்று வளர்ந்தான். முடிசூடியமர்ந்ததும் காசிமன்னன் மகள் மோதவதியை மணந்தான்.
காதியின் பிறப்பின்போதே அவன் ஆரியவர்த்தத்தை வெல்வான் என்றும், காங்கேயநிலத்தில் ஓர் அஸ்வமேதத்தை செய்வான் என்றும் நிமித்திகரின் சொல் இருந்தது. அத்துடன் அவன் குருதியில் பிறக்கும் இரு குழந்தைகளில் ஆண் மாமுனிவராக ஆவான் என்றும் பெண் அருமுனிவருக்கு தவத்துணைவியென்றாகி புகழ்பெறுவாள் என்றும் நிமித்திகர் சொல் இருந்தது. இளமையிலேயே அச்சொல்லைக் கேட்டுவளர்ந்த காதி மணம் முடித்து அரியணையமர்ந்த பின்னர்தான் அதன் உண்மைப்பொருளை உணர்ந்தான். தன் மைந்தன் துறவியாகிவிடக்கூடும் என்னும் அச்சம் அவனை துயிலிலும் தொடர்ந்தது. ஒவ்வொருமுறை தன் அரசியை பார்க்கையிலும் ‘இவள் எனக்கு அரசனையும் அரசியையும் பெற்றுத்தரப்போவதில்லை’ என்ற எண்ணமே எழுந்து உளக்கசப்பை வளர்த்தது. அவளுடன் அவனுக்கு உறவென்பதே இல்லாதாயிற்று.
ஒருமுறை தென்னகத்து நிமித்திகர் ஒருவர் அவன் அவைக்கு வந்தார். பிறக்கவிருக்கும் மைந்தனின் நெறியென்ன என்று காதி அவரிடம் கேட்டான். அரசியை நடந்துசெல்லும்படி சொல்லி அக்காலடி பதிந்த கோணத்தைக்கொண்டு குறிதேர்ந்து நிமித்திகர் சொன்னார் “அரசே, இம்மைந்தன் அஸ்வமேதவேள்வி செய்வான். எங்குமில்லாத நாடொன்றை தனக்கென உருவாக்குவான். மண்ணில் பிறந்த பேரரசர்களில் முதலெழுவரில் ஒருவனென்றே திகழ்வான்.” காதி திகைத்து “நன்கு தேர்ந்து உரையுங்கள் நிமித்திகரே. இதற்கு முன் வந்த நிமித்திகர்கள் பிறிதொன்று உரைத்தனர்” என்றான். நிமித்திகர் சொல்கூர்ந்து “ஆம், பிறிதொரு குறியும் தென்படுகிறது. விண்ணோரும் தொழும் மாமுனிவனென்றே ஆவான்” என்றார்.
“அவன் நெறியென்ன என்று சொல்லுங்கள் நிமித்திகரே” என்றான் காதி. “அரசே, அது பகடையின் இரு பக்கங்களை போன்றது. உங்கள் ஊழும் அவனை ஆளும் தெய்வங்களும் அதை அமைக்கலாம். அல்லது அவற்றுக்கே தெரியாமலிருக்கலாம்” என்றார். “அதை நான் முடிவெடுக்கிறேன். என் மைந்தன் பேரரசன் என்றே வளர்வான். துறவென்று ஒன்று இருப்பதையே அவன் அறியப்போவதில்லை” என்று வஞ்சினம் உரைத்தான். “சிம்மத்துக்கு குருதியை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை அரசே” என்றார் நிமித்திகர். “சிம்மம் என்பது ஒரு குருளையில் காடு உருவாக்கி எடுக்கும் விலங்குதான். அரண்மனைகளில் பாலும் அமுதும் உண்டு குழவிகளுடன் களியாடி மகிழும் சிம்மங்களை கண்டுள்ளேன்” என்றான் காதி. “பதினெட்டாண்டுகாலம் மூதாதையர் ஆலயங்கள் அனைத்திலும் நோன்பு கைக்கொள்க! மைந்தன் விண்கனிந்து மண்நிகழவேண்டும்” என்று சொல்லி நிமித்திகர் சென்றார்.
மோதவதி தன் கணவனின் விழைவுப்படி பேரரசனை மைந்தனாகப் பெறுவதற்கே விழைந்தாள். அதன்பொருட்டே நோன்புகளும் இருந்தாள். ஆனால் சித்திரை முழுநிலவுநாளில் அவள் ஒரு கனவு கண்டாள். அதில் வெள்ளிநிற ஒளிவீசும் உடல்கொண்ட தன் மைந்தனை அவள் கண்டாள். அவன் அவள் கையை பற்றியபடி துள்ளியும் சிரித்தும் நகைமொழியாடியும் உடன் வந்தான். அவள் அவனிடம் இன்மொழிகள் சொல்லி கொஞ்சிக்கொண்டிருந்தாள். பூத்தமலர்களால் ஆன அச்சோலையில் அவர்களுக்கு எதிரிலொரு சிறுசுனையை கண்டார்கள். அடியிலி என சென்ற ஆழத்தால் அழுத்தமான நீலம் கொண்டிருந்தது அது. “அன்னையே, நான் அதில் இறங்க விழைகிறேன்” என்று அவன் சொன்னான். “இல்லை... நீ செல்லலாகாது” என்றாள். “நான் அதற்காகவே வந்தேன்” என்று சொல்லி அவன் அவள் கையை உதறிவிட்டு அதை நோக்கி ஓடினான்.
“மைந்தா! மைந்தா!” என்று நெஞ்சுடைந்து கதறி அவள் அழுதாள். அவன் அந்நீர்ச்சுழலில் விழுந்து மூழ்கி மறைந்தான். அவள் அலறியபடி விழித்துக்கொண்டாள். கைகளால் சேக்கையை அறைந்தபடி அழுத அவளை சேடியர் ஆறுதல்படுத்தினர். பன்னிருநாட்கள் அவள் அப்பெருந்தவிப்பில் அழுதுகொண்டும் விம்மிக்கொண்டும் இருந்தாள். மீண்டும் அக்கனவு வந்தது. அவள் அச்சுனையருகே அமர்ந்திருக்கையில் பொன்னுடல் கொண்டவனாக அவள் மைந்தன் எழுந்து வந்தான். “அன்னையே” என்று அவன் புன்னகை செய்தான். அவள் “மைந்தா!” என்று களிப்புடன் கைநீட்டி கூவினாள். “அன்னையே, மகிழ்க! நான் ஹிரண்யன் ஆனேன்” என்றான். “ஏன் சுனையில் நின்றிருக்கிறாய்? மேலே வா!” என்றாள். “என் இடைக்குக்கீழ் நீ நோக்கலாகாது” என்று அவன் சொன்னான்.
கனவு கலைந்தபோது அவள் புன்னகையும் பெருமூச்சுமாக படுக்கையில் புரண்டாள். அக்கனவை அவள் எவரிடமும் சொல்லவில்லை. பலநாள் தனக்குள்ளே அதை வருடியும் தழுவியும் அணைத்தும் ஒளித்தும் வைத்திருந்தாள். மோதவதிக்கு முதலில் பிறந்த மகள் சத்யவதி எனும் பெயர் கொண்டு வளர்ந்தாள். அவளை பிருகுகுலத்து முனிவர் ருசிகருக்கு மணம்முடித்தளித்தனர். மோதவதி பதினெட்டாண்டுகாலம் தவம்புரிந்து மைந்தனுக்காக காத்திருந்தாள். சத்யவதி பிருகுகுலத்தின் தோன்றலுக்காக காத்திருந்தாள். ஒருநாள் ருசிகரின் தவக்குடிலில் அன்னையும் மகளும் அவர் செய்யும் பித்ருவேள்வியொன்றில் கலந்துகொண்டனர். மூதாதையருக்கு அவியளித்து நிறைவுசெய்து விழிகள் அவர்களின் அருளால் ஒளிவிடத் திரும்பிய ருசிகர் இரு அன்னையரையும் நோக்கி “நன்மக்கள் பேறுக்கென இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் உள்ளம் விழைவது உடலில் நிறைக!” என்றார்.
அவியென படைக்கப்பட்ட கனிகளில் எஞ்சிய இரண்டை எடுத்து ஒன்றை மோதவதியிடம் அளித்து “அன்னையே, நாடாளும் பெருந்திறல் வீரனை மைந்தனாகப் பெறுக!” என்றார். இன்னொரு கனியை தன் மனைவியிடம் அளித்து “நம் குலத்தின் தவநெறியை வாழச்செய்யும் மைந்தனைப் பெறுக!” என்று வாழ்த்தினார். அப்போது மோதவதி அறிந்தாள், அவள் பெறவிரும்பிய மைந்தன் யாரென்று. ஆனால் அதை சொல்லென்று ஆக்கமுடியாமல் அவள் புன்னகையுடன் அதை பெற்றுக்கொண்டாள். ஹேகயர்களுடன் பூசலில் குடியழிந்து மண்ணிழந்து கன்யாகுப்ஜத்திற்கு வந்து குடியிருந்த பிருகுலத்தின் ருசிகரின் மனையாட்டியான சத்யவதி தன் கையிலிருந்த கனியை விரும்பவில்லை. அவளும் புன்னகையுடன் அக்கனியை பெற்றுக்கொண்டாள். பிரம்மத்தை அறிந்தும் இரு பெண்டிரின் உள்ளத்தை அறியாத ருசிகர் வாழ்த்தி விடையளித்தார்.
இரு அன்னையரும் கனிகளுடன் தங்கள் அரண்மனைக்குத் திரும்பியபோது சொல்லாமலேயே உள்ளங்கள் விழைவுகளை பரிமாறிக்கொண்டன. தேரிலிருந்து இறங்கும்போது சத்யவதி தன் அன்னையின் கனியை தன் கனியுடன் கைமாற்றிக்கொண்டாள். அன்னை கருவுற்று பிறந்த மைந்தனுக்கு கௌசிகன் என்று பெயரிட்டனர். மகள் ஈன்ற மைந்தன் ஜமதக்னி என்றழைக்கப்பட்டான். அரசனின் மைந்தன் வாள்கொடுத்து வளர்க்கப்பட்ட முனிவனாக இருந்தான். முனிவரின் மைந்தன் வேதம் அளித்து வளர்க்கப்பட்ட வீரனாக இருந்தான். வாளின் மெய்ஞானத்தை கௌசிகன் கற்றான். மெய்மையின் குருதிவிடாயை ஜமதக்னி அறிந்தான். இருவரையும் இரு களங்களில் வைத்தபின் தெய்வங்கள் நாற்களத்திற்குமேல் குனிந்து முகவாயில் கைசேர்த்தமர்ந்து விழிகூர்ந்தன.
[ 4 ]
காதி தன் மைந்தன் அறிந்த மொழியிலேயே துறவென்றும் தவமென்றும் முனிவரென்றும் ஒரு சொல்கூட இல்லாது சூழலை அமைத்தான். அரண்மனையிலும் கல்விச்சாலையிலும் ஆடுகளங்களிலும் கௌசிகனைச் சூழ்ந்த எவர் நாவிலும் அவை எழலாகாதென்ற ஆணை இருந்தது. அவன் முன் தவக்கோலத்துடன் எவரும் வரவில்லை. அவனுக்காக கதைகளும் நூல்களும் திருத்தியமைக்கப்பட்டன. அவன் அன்னைக்கு கணவனின் ஆணையிருந்தமையால் அவளும் மைந்தனிடம் தவமென்ற சொல்லில்லாமலேயே உரையாடினாள். ஆனால் அவள் கனவில் அவன் பொன்னுடலுடன் வந்துகொண்டே இருந்தான். எனவே அவன் விழிநோக்கிப் பேசுவதை அவள் தவிர்த்தாள். பின்னர் அவனை அவள் சந்திப்பதே அரிதென்றாயிற்று.
தேர்ந்த நூற்றெட்டு போர்வல்லுநர்களால் கௌசிகன் படைக்கலமும் களச்சூழ்கைகளும் பயிற்றுவிக்கப்பட்டான். பன்னிரு அரசியல் அறிஞர்கள் அவனுக்கு ஆட்சித்தொழில் கற்பித்தனர். வஞ்சம்கொண்டவனின் வாள் என ஒவ்வொரு சொல்லாலும் கூர்தீட்டப்பட்டான். ஏறுதழுவுதலுக்காக வளர்க்கப்படும் களிற்றேறு போல ஒவ்வொருநாளும் சினமேற்றப்பட்டான். கருமியின் கனவு என அவனுள் மண்ணாசை வளர்க்கப்பட்டது. மண்ணில் நிகரற்றவன் என்றும், மண்ணனைத்துக்கும் இயல்பாகவே உரிமைகொண்டவன் என்றும், வெல்வதற்கென்றே பிறந்தவன் என்றும் அவன் எண்ணலானான். சொல்லறிந்த நாள்முதல் வணங்காத எவரையும் அவன் தன் முன் பார்க்கவில்லை. மறுப்பென ஒருசொல்லும் கேட்கவில்லை.
ஆணவம் ஓர் அரிய படைக்கலம். பிற அனைத்துப் படைக்கலங்களையும் அது பன்மடங்கு ஆற்றல் கொள்ளச்செய்கிறது. அதை உடைக்காமல் பிற படைக்கலங்களை முறிக்க எவராலும் இயலாது. கௌசிகனின் படைகளுக்கு முன் ஆரியவர்த்தம் பணிந்தது. ஆசுரம் சிதறியது. அரக்கர்நாடுகள் அழிந்தன. வெண்பனிப்புகைக்குள் அமைந்த கின்னரகிம்புருட நாடுகளும் அவனுக்கு ஆட்பட்டன. அவன் ஓர் அஸ்வமேத வேள்வி நிகழ்த்தினான். ஆரியவர்த்தமெங்கும் அவன் செந்நிற வேள்விக்குதிரை பிடரிகுலைத்து தலை தருக்கி நிமிர்ந்து குளம்படி ஒலிக்க சுற்றிவந்தது. அதனெதிர் கோட்டைவாயில்கள் திறந்தன. அரண்மனைமுற்றங்களில் மங்கலப்பொருட்கள் நிரந்தன. சூரிய ஒளி பளிங்கிலென அது ஆரியநிலத்தை கடந்துசென்றது.
எண்ணியவற்றை எல்லாம் வென்று அமைந்தபின் கௌசிகன் மேலும் நிறைவற்றவன் ஆனான். வெல்வதற்கேது இனி என்று அமைச்சர்களை அழைத்து கேட்டான். “அரசே, இனி வெல்வதற்கு மண்ணில் ஏதுமில்லை. இந்திரனின் அரியணையை மட்டுமே நீங்கள் நாடவேண்டும்” என்றனர் அமைச்சர். ஒவ்வொருநாளும் நிலையழிந்தவனாக அரண்மனையில் சுற்றிவந்தான். “இல்லை, என்னிடம் பொய்யுரைக்கிறீர்கள். மண்ணில் நான் வென்றுகடக்க இன்னும் பல உள்ளன. என் உள்ளம் அறிகிறது அதை” என்று அவன் அவர்களிடம் சினந்தான். “அரசே, முடிகொண்டவர் வெல்வதற்கு இனி ஏதும் இம்மண்ணிலிருப்பதாக நாங்கள் கற்ற நூல்கள் சொல்லவில்லை” என்றார்கள். “இல்லை, என் அகம் சொல்கிறது. வெல்லற்கரியது, ஆனால் நான் வெல்லவும்கூடியது ஒன்றுள்ளது.”
கோடையிரவில் அவன் ஒரு கனவு கண்டான். துயில் எழுந்து தன் அரண்மனையின் உப்பரிகையில் சென்று நின்றிருக்கையில் அவன் ஒரு வெண்ணிறப்பசு இன்சோலையின் மறுஎல்லையில் மேய்ந்துகொண்டிருந்ததை கண்டான். காலையொளியில் அதனுடல் பளிங்கில் செதுக்கியதுபோல மின்னியது. வெண்தாமரை இதழ் என செவிகள் அசைந்தன. பீதர்நாட்டு வெண்பட்டுத் திரைவளைவுகள் போல அலைநெறி அமைந்த கழுத்து. வாழைப்பூநிறமான மூக்கு. கருங்கல்லுடைவு என நீர்மை ஒளிவிடும் விழிகள். அவன் அதை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் சிறுத்தபடியே சென்றான். அதன் நான்கு கால்களுக்கு நடுவே சென்று நின்றபோது கடுகெனச் சிறுத்து அண்ணாந்து நோக்கி அதை தலைக்குமேல் பரவிய வெண்முகில் குவை என உணர்ந்து திகைத்து நின்றான்.
அதன் குறியென்ன என்று நிமித்திகரை அழைத்து கேட்டான். அவர்கள் “அரசே, நீங்கள் விழைவது ஒன்றுள்ளது. அது உங்கள் நினைப்புக்கு வந்து நெஞ்சுக்கு எட்டாத ஒன்று” என்றார்கள். “அது எது? இன்றே அறியவேண்டும்” என்றான். நூறு நிமித்திகர் நூலாய்ந்த பின்னரும் அதை அவர்களால் சொல்லக்கூடவில்லை. “நீங்கள் விழைவது அது அரசே. அதை அடைந்தாலொழிய நீங்கள் நிறைவடையப்போவதில்லை. அதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் ஆழம் அறியும். ஆழமென மாறி நின்றிருக்கும் முடிவிலி அறியும்.” சினந்து கைகளை அறைந்து கூவினான் கௌசிகன். “நான் அறியேன். நான் விழைவதென்ன என்று நான் அறியேன்... இப்புவியில் நான் விழைவதற்கென ஏதுள்ளது?” நிமித்திகர் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.
அந்த வினா ஒவ்வொருநாளும் பேருருக்கொண்டது. எங்கு எதை நோக்கினாலும் இதுவா என்றே உள்ளம் ஏங்கியது. அடைந்தவையும் ஆள்பவையும் சிறுத்து பொருளற்றவையாக மாறின. ஒவ்வொன்றையும் கடும் சினத்துடனும் அருவருப்புடனும்தான் அவன் எதிர்கொண்டான். மனைவியர் அகன்றனர். மைந்தர் அஞ்சினர். செல்வம் குப்பையென்று தோன்றியது. நாடு வெறும் மண்ணென்றாகியது. முடியும் கோலும் கொடியும் அரியணையும் கேலிநாடகமாக தோன்றின. அவன் உடல்மெலிந்து கண்கள் குழிந்தன. வாய் வறண்டு தொண்டை முழை தள்ளி சிவந்து கலங்கிய விழிகளும் மெல்லிய நடுக்கமோடிய தோள்களுமாக உள்காய்ச்சல் கண்டவன் போலிருந்தான்.
அவனை ஆறுதல் கொள்ளச்செய்ய முயன்றனர் அமைச்சர். கலைகளும் களியாட்டும் அவனுக்கு உவகை அளிக்கவில்லை. அறியாத ஆழம் கொண்ட காடே ஈர்த்தது. எனவே அவன் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் அடர்காடுகளுக்கெல்லாம் வேட்டைக்கென கொண்டுசென்றனர். கைகொள்ளுமளவு தழையில் முழுக்க மறையும் புலியை, முழங்கால் நீரில் மூழ்கி காணாமலாகும் முதலையை, இன்மையிலிருந்து எழுந்து வரும் களிறை காண்கையில் அவன் அறியாத அகத்தூண்டலொன்றை அடைந்தான். “இது, இதனால் சொல்லப்படும் பிறிதொன்று. அதுவே அது” என அவன் உள்ளம் கூவியது. வேட்டையிலிருந்து வேட்டைக்கென சென்றுகொண்டிருந்தான்.
இமயமலையடிவாரத்தில் வாசிஷ்டம் என்னும் காட்டில் தங்கியிருந்த வசிஷ்டரின் குருகுலத்திற்கு ஒருமுறை அவன் சென்றான். களிறொன்றை தொடர்ந்து காட்டுக்குள் சென்று வழிதவறி அலைந்து ஓடையொன்றைப்பற்றி வந்துசேர்ந்த கோமதிநதியின் கரையில் அமைந்திருந்தது அந்த குடில்தொகை. தன் நூறு மாணவர்களுடன் அங்கே மெய்மையை சொல்லென்று சொல்லை மெய்மையென்று ஆக்கும் அலகிலா ஆடலில் ஈடுபட்டிருந்தார் வசிஷ்டர். விருந்தினனாக வந்த கௌசிகனை வரவேற்று அமரச்செய்து உணவும் இன்னீரும் அளித்தார். இளைப்பாற குளிர்பரவிய குடில்களை ஒருக்கினார். உண்டு, ஓய்வெடுத்து மறுநாள் காலை வசிஷ்டரின் சோலைக்குள் உலவிவந்த கௌசிகன் அங்கே அந்த வெண்பசுவை மீண்டும் கண்டான்.
அதை நோக்கி கைநீட்டியபடி ஓடியபோது அது திரும்பி அவனை நோக்கி அச்சக்குரல் எழுப்பியபடி ஓடி வசிஷ்டரின் தவச்சாலையின் தொழுவத்தை அடைந்து கன்றுடன் சேர்ந்து நின்றது. பின்னால் ஓடிவந்த கௌசிகன் அதன் கட்டுக்கயிற்றை பற்றி இழுக்க முயன்றதும் உள்ளிருந்து ஓடிவந்த வசிஷ்டரின் மாணவர்கள் “நில்லும்! என்ன செய்கிறீர்?” என்று கூவி அவனை தடுத்தனர். “இது விண்ணாளும் காமதேனுவின் மண்வடிவம் என ஆசிரியரால் உரைக்கப்பட்டது. இதன் நெய்கொண்டே இங்கு வேள்விக்கு முதல் அவி ஊட்டப்படுகிறது...” கௌசிகன் உரக்க “இது எனக்குரியது... ஏவலரே, இதை உடனே நம் அரண்மனைக்கு கொண்டுசெல்லுங்கள்” என ஆணையிட்டான். அங்கே வந்த வசிஷ்டர் “அரசே, வேண்டாம். இது வேள்விப்பசு. அரசர்கள் இதை ஆளமுடியாது” என்றார்.
“அரிதென்று சொல்கிறீர்கள். அரிதெல்லாம் அரசனுக்குரியதே...” என்ற கௌசிகன் “இதை இழுத்துக்கொண்டு வருக!” என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் வேல்களைத் தாழ்த்தி அசைவில்லாது நின்றனர். “ஏன் நிற்கிறீர்கள்? மூடர்களே...” என்று கூவியபடி அவன் பசுவை சுட்டிக்காட்டினான். “இது எனக்குரியது... என் உடைமை இது.” அவன் பித்தெழுந்தவன் போலிருந்தான். படைத்தலைவன் தலைவணங்கி “தவமுனிவரின் பொருள்கவர எங்களால் ஆகாது. அதை பாதுகாப்பதற்கே நாங்கள் ஷத்ரியர்களாகி வந்துள்ளோம்” என்றான். “இது என் ஆணை!” என்றான் கௌசிகன். “இந்த ஆணையை பிறப்பித்ததன் பொருட்டே உங்களைக் கொல்லக் கடமைப்பட்டவன் நான்” என்று படைத்தலைவன் வாளை உருவ கௌசிகனின் படைவீரர் அனைவரும் படைக்கலம் தூக்கினர்.
திகைத்து நின்ற கௌசிகனை நோக்கி “அரசே, உங்கள் குடிப்பிறப்பின்பொருட்டு இப்போது பொறுத்துக்கொள்கிறோம். பிறிதொரு சொல் எழுந்தால் உங்கள் தலைகொய்து கொண்டுசெல்வோம்” என்றார் அமைச்சர். உடல் நடுங்கித்துடிக்க கண்கள் இருள்கொள்ள வெறிகொண்டு அங்குமிங்கும் அலைமோதிய கௌசிகன் தன் வில்லை எடுத்தபடி “இழிசினரே, உங்கள் அச்சுறுத்தலுக்கு பணிவேன் என்றா நினைக்கிறீர்கள்? இதோ, நானே இதை கவர்கிறேன். எவர் தடுப்பார் என்று பார்க்கிறேன்” என்றான். அப்போது பின்நிரையிலிருந்து வந்த அவன் இளமைந்தன் “தந்தையே, தங்களைக் கொல்லும் பழி சூடமாட்டேன். ஆனால் என்னைக் கொல்லாது நீங்கள் அப்பசுவை கவரமுடியாது” என்றான். அவன் கண்களை நோக்கிய கௌசிகனின் கையில் இருந்து வில் நழுவியது.
தீயதெய்வம் ஒன்றால் துரத்தப்பட்டவனாக அவன் திரும்ப தன் அரண்மனைக்கு ஓடினான். தன் மஞ்சத்தறைக்குள் புகுந்து இருளுக்குள் உடல்குறுக்கி அமர்ந்துகொண்டு அதிர்ந்தான். அவனை அணுகிய மனைவியிடம் கேட்டான் “என் தலைகொய்ய வாளெடுத்தான் உன் மைந்தன். அவனை நீ எப்படி பெற்றாய்?” அவள் அவன் கண்களை நோக்கி “அங்கு நான் இருந்திருந்தால் வாள் எடுத்து அவன் கையில் அளித்திருப்பேன். என் குடி எனக்களித்த மெய்மையை அவன் என பெற்றேன்” என்றாள். திகைத்து எழுந்து அவன் விலகிச்சென்றான். நிலைகொள்ளாதவனாக இருளுக்குள் உலவிக்கொண்டிருந்தான். பின்பு ஒரு தருணத்தில் நகைக்கத் தொடங்கினான். பன்னிருநாட்கள் நினைத்து நினைத்து நகைத்துக்கொண்டிருந்தான்.
பின்பு ஓய்ந்து நீள்மூச்சுவிட்டு மெல்ல அடங்கி முழுச்சொல்லின்மையை அடைந்து அமர்ந்திருந்தான். அவன் அருகே வந்த பேரமைச்சர் “அரசே, இதில் சிறுமை ஏதுமில்லை. இப்பாரதவர்ஷம் முனிவர் தவம் செய்யும்பொருட்டு, மெய்மை விளையும்பொருட்டு விண்ணாளும் தெய்வங்களால் யாக்கப்பட்டது. இங்குள்ள அரசர் ஒவ்வொருவரும் படைக்கலம் கொள்வது தவத்தோரை பேணும்பொருட்டே. உழவர் அறுப்பதும் ஆயர் கறப்பதும் கொல்லர் உருக்குவதும் சிற்பி செதுக்குவதும் வணிகர் சேர்ப்பதும் தவம்பெருகுவதற்காக மட்டுமே. நீங்கள் அவ்வுண்மையை சற்று பிந்தி அறிந்திருக்கிறீர்கள். தெய்வநெறிக்கு முன் மானுடர் தோற்பதில்லை. பணிந்து வெல்கிறார்கள் என்று தெளிக!” என்றார்.
“நான் கொள்ளவிழைவது அந்தப் பசுவையே” என்றான் கௌசிகன். “அதைக் கொள்ளாது என்னால் அமைய முடியாது. அதை என்னுள் அறிகிறேன்.” அமைச்சர் “அரசே, அது காமதேனுவின் வடிவம். அதன் நான்கு கால்களும் வேதங்கள். வெண்ணிற உடலே மெய்மை. விழிகளே முதலொளி. அதன் பால் அமுது. அது மெய்மையை அறிந்த முனிவருக்கு மட்டுமே உரியது” என்றார் அமைச்சர். “அதை அடையாது நான் வாழ்ந்ததெல்லாம் வீணே” என்று தனக்கே என கௌசிகன் சொன்னான். “அரசே, அதை இப்பிறவியில் தாங்கள் அடைய இயலாது” என்றார் அமைச்சர். “ஏன்?” என்று கௌசிகன் கூவியபடி எழுந்தான். “நீங்கள் அரசர்” என்றார் அமைச்சர். “இல்லை, நான் கௌசிகன். கௌசிகனும் அல்ல, வெறும் மானுடன்” என்றான் கௌசிகன்.
“அது அரிது. அந்நினைப்பை ஒழியுங்கள்” என்றார் அமைச்சர். “நான் தவம்செய்கிறேன். மெய்மையை பற்றுகிறேன்” என்றான் கௌசிகன். “அரசே, காமத்தை குரோதத்தை மோகத்தை கடந்தவர்களே தவத்தின் முதல்படியில் கால்வைக்கிறார்கள். தாங்களோ அவற்றை இதுகாறும் பெருக்கிப்பெருக்கி சென்றவர். இன்றுவரை வந்தவழியெல்லாம் திரும்பிச்சென்றபின் அல்லவா தாங்கள் தொடங்கமுடியும்?” என்றார் அமைச்சர். “நான் உன்னுவது எதையும் அடையாமலிருந்ததில்லை. அடையவில்லையென்றால் அச்செலவில் அழிக என் உயிர்!” என்று கௌசிகன் எழுந்தான். “நான் இன்று அறிகிறேன், என்றும் நான் விழைந்தது இது ஒன்றையே. பொருந்தா இடத்தில் வீண்வாழ்க்கையில் இதுவரை இருந்தேன்.”
அவன் மூதன்னை அப்போது முதுமக்கள்கோட்டத்தில் கைம்மை நோற்றிருந்தாள். அவன் அவளைச்சென்று பணிந்தான். “அன்னையே, அனைத்தையும் உதறி காடேகிறேன். உன் சொல் கிடைத்தால் செல்கிறேன்” என்றான். “நீ பிறப்பதற்கு முன்னரே அன்னையின் சொல் உன்னுடன் இருந்தது மைந்தா. இத்தனைநாள் நான் காத்திருந்தது இதன்பொருட்டே. செல்க!” என்று அவள் விடைகொடுத்தாள்.
வசிஷ்டரின் தவக்குடிலை அடைந்து “சொல்லுங்கள் முனிவரே, இந்தப் பசுவை நான் அடைய என்ன செய்யவேண்டும்?” என்றான். “இது பிரம்மரிஷிகளுக்குரியது. பிரம்மம் கனிந்து உங்கள் உள்ளக்கொட்டிலில் கட்டுண்டு அமுதுசொரியும் என்றால் நானே இதை கொண்டுவந்து உங்கள் கொட்டிலில் நிறுத்துவேன்” என்றார் வசிஷ்டர். “நான் அதற்கு செய்யவேண்டியதென்ன?” என்றான் கௌசிகன். “தவம்செய்க... ஆனால் அது எளிதல்ல” என்றார் வசிஷ்டர். “ஏன்?” என்றான் கௌசிகன்.
“அரசே, நான்குவகை தவங்கள் உள்ளன இப்புவியில். தங்கள் செயல்களால் தவம் செய்வது கார்மிகம். செய்கைகளில் மூழ்கியவர்களுக்குரியது அது. தங்கள் விழைவால் தவம் செய்வது அரசர்களுக்குரியது. அதை ஷாத்ரம் என்கின்றன நூல்கள். தங்கள் வஞ்சத்தாலும் ஆணவத்தாலும் தவம் செய்வது அசுரர்களுக்குரிய வழி. அதை ஆசுரம் என்கின்றனர். மெய்மைக்கான நாட்டத்தை அன்றி பிறிதேதும் இல்லாது தவம்செய்பவனே பிரம்மஞானி. அதையே பிராம்மணம் என்கின்றனர். பிரம்மதவம் செய்து எய்தியவனே பிரம்மரிஷி எனப்படுவான்.”
வசிஷ்டர் சொன்னார் “நீங்கள் படைக்கலம் பயின்று நாடாண்டவர். ஷத்ரியர்களுக்குரிய தவத்தை அன்றி பிறிதொன்றைச்செய்ய உங்கள் உடல் ஒப்பாது. உள்ளம் அமையாது. ஆணவமும் விழைவும் சினமும் ஏற்காது. வீண்முயற்சி வேண்டியதில்லை” என்றார். “நான் பின் திரும்புபவன் அல்ல. உறுதிகொண்டபின் வெல்வதோ இறப்பதோதான் என் வழி” என்றான் கௌசிகன். “எனக்குரிய ஊழ்கம் என்ன? அதை எனக்கு உரையுங்கள்.” வசிஷ்டர் “எது ஓங்கியுள்ளதோ அதை பற்றுக! இப்பசுவே உங்கள் ஊழ்கச்சொல் ஆகுக” என்றார்.
இமயச்சாரலின் அடர்காட்டில் கௌசிகர் சென்றமர்ந்து தவம் செய்தார். அவ்வெள்ளைப்பசு அன்றி பிறிதெதுவும் தன் நெஞ்சிலுறையாமலானார். பின்பு அதை முற்றிலும் மறந்தார். அவர் உடலுருகி மறைய தோல்போர்த்த என்புக்குவை அங்கிருந்தது. மூச்சு துடிக்கும் மட்கிய உடலுக்குள் தவம் மட்டுமே எரிந்து நின்றது. அவர் உடலில் இருந்து ஐந்து நச்சுநாகங்கள் இறங்கிச்சென்று மறைந்தன. கொதிக்கும் நீரூற்று ஒன்று ஒழுகி ஒழிந்தது. அனல் எழுந்து அவரை விறகாக்கி நின்றெரிந்து அணைந்தது. அக்கரிக்குவைக்குள் இருந்து நீள்மூச்சென ஒரு காற்று எழுந்தது. அதன்பின் அது கல்லெனக் குளிர்ந்து காலமின்மையில் அங்கிருந்தது. அவர் புகைமுகிலென்றானார். வெள்ளைப்பசுவின் உருக்கொண்டு விண்ணிலேறினார். அங்கிருந்த வெண்பசு ஒன்றன் அகிடின்கீழ் நின்று அமுதுகுடித்தார். மீண்டெழுந்த முனிவர் விஸ்வாமித்ரர் என்றழைக்கப்பட்டார். அவரது கொட்டிலில் அமுதகலத்துடன் காமதேனு நின்றது என்றனர் கவிஞர்.
[ 5 ]
பிரம்மனுக்கு நிகரென திரிசங்குவுக்கென ஓர் உலகை அமைத்துக்கொடுத்தவர் என்று விஸ்வாமித்ரரை போற்றின காவியங்கள். அவரை மண்ணில் நிகரற்ற அரசமுனிவர் என்றனர். தன் உள்ளத்தை அவியாக்கி உள்ளனலை எரித்து மேலும் மேலும் மூண்டெழுந்தார். சுட்டுவிரல் நீட்டித் தொட்டு பச்சை மரத்தை எரிக்கும் ஆற்றல்கொண்டார். சொல்லால் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் திறல்கூடியவரானார். தெய்வங்கள் அஞ்சும் சினத்திற்குரியவர் என்று அவரை படிவர் பாடினர்.
அமர்தலின்மை என்பதே அரசனுக்குரிய இயல்பென்பதனால் அவர் மேலும் மேலும் என நாடிச்செல்பவராக இருந்தார். விண்ணாளும் இந்திரன் அவையில் முதல்முனிவரென அமரும் தகுதிக்காக விழைந்தார். அதற்கு ஆற்றவேண்டிய தவம் ஏது என வசிஷ்டரிடம் வினவினார். “அரசமுனிவரே, நீங்கள் அமையாது செல்வீரென்றால் அது முடிவற்ற பயணமே ஆகும்” என்றார் வசிஷ்டர். “வெல்வதன் மூலமே இருப்பவன் நான். எனக்குரிய வழியை சொல்லுங்கள்” என்றார் விஸ்வாமித்ரர்.
“பொய்யாமை, கொல்லாமை, விழையாமை மூன்றுமே எளிய மானுடருக்குரிய தவவழிகள். நீங்கள் அரசமுனிவரென்பதனால் ஆணவமின்மை, அறிவிலமையாமை, மையம்கொள்ளாமை என்னும் மூன்று நிறைகளையும் கொண்டு ஆற்றும் அணுவிடைபிறழா அருந்தவமே வழி” என்றார் வசிஷ்டர். “நீங்கள் விழைவதோ விழைவுக்கிறைவனுக்கு மேல் வெற்றியை. விழைவை முற்றறுத்து சுட்டுவிரல் புல்வளையம் என அணிந்தவனே அவன்முன் நிமிர்ந்து நின்றிருக்க முடியும்.”
“ஆம், அதை இயற்றி அவன் முன் காமனை எரித்த கைலாயன் போல் எழுவேன்” என்றார் விஸ்வாமித்ரர். “முனிவர்க்கரசே, அதன் களமென்பது பெருந்தவத்தோரும் அஞ்சும் கன்யாவனமே என்று உணர்க!” என்றார் வசிஷ்டர். “விழையாமையின் முழுமையை அங்குள்ள கன்னியரின் காடே சான்றளிக்கவேண்டும்.” விஸ்வாமித்ரர் “அவ்வண்ணமே ஆகுக! அதைவென்று மீள்வேன்” என எழுந்தார்.
“அது எளிதல்ல என்றுணர்க!” என்று வசிஷ்டர் சொன்னார். “அங்கே வாழ்பவர் உங்கள் மூதன்னையர். அவர்களின் கருவில் முளைத்தவர் நீங்கள். உங்களிடம் அவர்கள் அறியாத ஏதுமில்லை. அவர்களை வெல்ல உங்கள் சொல் ஏதும் துணையாகாது.” விஸ்வாமித்ரர் “ஆம், ஆனால் எனக்கு சொல்லல்ல, அணையா விசையே என்றும் முதற்படைக்கலம்” என்றார்.
அன்றே கிளம்பி அவர் கன்யாவனத்திற்குள் சென்றார். கன்யாவனத்திற்குள் முன்பு வாழ்ந்த நூறு கன்னியர் நிமிர்ந்து உடல்முழுமைகொண்டனர். உடலினூடாக உளமுழுமை பெற்றனர். அணங்குகளாகி அக்காட்டில் நிறைந்திருந்தனர். அவர்கள் இலைமுனை நீர்த்துளிகளாக விழிகொண்டு அவரை நோக்கி இருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் அவரது காலடிகளை காடெங்கும் எதிரொலித்துக்காட்டினர். அவர் முதுகில் பட்டுச்சால்வையை இழுத்ததுபோல் மென்காற்றாக தழுவிச்சென்றனர். அவர் காதுக்குப்பின் மெல்லிய சிரிப்பொலி எழுப்பி அவர் சித்தம் திரும்பியதும் நெற்றின் ஒலியென மாறினர்.
கன்யாவனத்தின் அணங்குகள் பார்ப்பவனின் விழைவுகளினூடாக மட்டுமே உருவம் கொள்பவை. வாழைத்தண்டின் வழுக்கில், தளிரிலையின் நெய்மெருகில், பிஞ்சுக்காய்களின் பூமுள் மயிர்ப்பரப்பில், கனிக்குவைகளில், மலர்ச்சுருள் குழிகளில், சேற்றுப்பரப்பின் கதுப்பில், பாறைக்கரவின் ஊற்றில் அவர்கள் தங்களை காட்டிக்கொண்டே இருந்தனர். ஒரு கணம் அவர்களை உளமறிந்தான் என்றால் அவன் ஊன்விழிகளுக்கு முன் அவர்கள் உருக்கொண்டு எழுந்துவந்தனர். கட்டின்மையை அணிந்தவர்கள். தடையின்மையில் திளைப்பவர்கள். இன்மைவரை செல்லும் விசைகொண்டவர்கள்.
அக்காட்டை அள்ளி உள்நிறைக்கவும் அக்காடென விரிந்து முழுதாகவும் கொண்ட விழைவே அவர்களின் விசை. மானுடராக வாழ்ந்து அவ்விசையின் உச்சம் கண்டு மேலும் செல்லும்பொருட்டு உடல் உதிர்த்து தெய்வமானவர்கள். அவர்கள் விஸ்வாமித்ரரை தொடர்ந்து வந்தனர். சூழ்ந்து விரிந்தனர். அவர் அவர்களின் குவைமுலைகள்மேல் மென்தொடைகள்மேல் நடந்தார். உந்தியில் கால்புதைந்தார். பின்பு அவர்களின் உள்ளங்கை கோடுகள் நடுவே நின்று அண்ணாந்து நோக்கினார். கால்தோயா காட்டில் எப்படி ஒற்றையடிப்பாதைகள் எழுந்து பின்னின என வியந்தார். மூச்சுவிட்டு தன்மேல்கவிந்த முகிலில் எழுந்த முகம் ஏதென வியந்தார்.
கன்யாவனத்தில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கிய விஸ்வாமித்ரரைச் சூழ்ந்தனர் சூர்கொண்ட அணங்குகள். நூறுமுறை அவர் அவர்களின் குரல்கேட்டு ஊழ்கத்திலிருந்து விழித்தெழுந்தார். முதல்முறை அவர் தன் அன்னையின் முலைப்பால் மணத்தை அறிந்தார். பாலுணவிட்ட செவிலியின் விரல்நுனியை. பிறிதொரு செவிலியின் முத்தத்தின் ஈரத்தை. இன்னொரு சேடியின் கழுத்திலணிந்த பொற்சங்கிலியின் உறுத்தலை. எவளோ ஒருத்தியின் முலையிடுக்கு வெம்மையை. யாரோ ஒருத்தியின் செம்பஞ்சுக்குழம்பிட்ட கால்களை. அன்னமளிக்கக் குனிகையில் எழும் பெருந்தோள்மஞ்சள். சாளரத்துக்கு அப்பால் மின்னி மறைந்த ஆடையின்மையின் மஞ்சள்பொன். கச்சு விலகிய முலைநிலவுக்கீற்று. சுடரகலுடன் செல்பவளின் காதுச்சரிவின் பொன்மயிர்ப்பரவல்.
களித்தோழியராகி வந்தவர்கள். ஈறுசிவந்த சிரிப்பு கொண்டவள் எவள்? தொட்டுவிட்டு ஓடும் அவள் சலங்கை. குழைந்தாடும் கூந்தல் இவள். கனிந்து கேட்கும் வினவுடன் சரிந்த இமைகள் அவள். தனித்திருப்பவள்மேல் கவியும் அறியாத்துயரம். செப்புவைத்து விளையாடுகையில் குவிந்த சிற்றுதட்டு மொட்டு. கன்னத்திலாடும் கருங்குழல்சுருள்நிழல். சாளரத்தருகே வந்தழைக்கும் குழலோசைக்குரல். வசந்தமென்னும் பாவாடைக் குடை. முகிழ்வுகள், கைமயிர் மென்மைகள், கரந்துகொண்டுவரும் சிறுபரிசுகள், உனக்கே என்னும் நோக்கு, இன்னதற்கென்றிலா சிரிப்பு, குமிழ்ஏந்தல், கையிணை இழைதல், முகம் திருப்பும் அறியா விலக்கம், விழியில் முளைக்கும் கூரிய பூமுள், எண்ணிச் சரியும் இமைகள், ஓரவிழிதொட்டுச்செல்லும் கூர்மை.
அகன்று நின்று நோக்கும் அரைச்சிரிப்பு என ஒருத்தி. இடையமர்ந்த குழவிக்கு ஈயும் முத்தத்திலிருந்து எழுந்து வந்து தொட்ட விழி. முகம்திருப்பி எவரோ என்று நின்று அயலவரிடம் சொல்லும் அரைச்சொல். அருகிருப்ப ஒருவனிடம் தயங்காது அணுகி நகையாடும் தலையாட்டல்களாகவா அவள் இன்னுமிருக்கிறாள்? கழுத்துச் சொடுக்கல். மூச்சுக்குழிப்பதைப்பு. வியர்வை பனித்த கழுத்தில் ஒட்டிய மயிர்கள். முலையிடையின் வாழையிலைத் தண்டுக்குழிவளைவு. நின்றுசலித்த இடைக்குழைவு. ஒற்றைக்காலின் தளர்வில் தாழும் தோள். கைவளைகள் விழுகின்றன. எழுந்த கைகளில் மீண்டும் ஒலிக்கின்றன. நாவந்து தொட்டுச்செல்லும் இதழ்கள். பற்களின் ஒளிநிரை. எண்ணத்தயக்கம் தெரியும் பேச்சு. சொல்லாச் சொல் இடைவெளி விழுந்த உரை. அதை சொல்லி மறையும் விழி. சொல்லித்தவித்து இதழை கடிக்கிறாள். அவ்விதழில் எஞ்சிய பற்தடமென ஒரு சொல். சொல்லொழுக்கு நடுவே மூச்சுவிழுங்குகிறாள். கழுத்துக்குழாய் அசைவாக காலத்தில் உறைந்தாள்.
அழியாநினைவின் பெருவெளி சூழ்ந்துள்ளது பெண்ணே! அறிவாயா நீ, இறப்பின் எருமைத்தலைமேல் கால்வைத்து அமுதகலம் ஏந்தி எழுந்துவிட்டய் என்பதை? விழியென உளமென நிகழ்ந்து நிகழ்ந்து மறையும் ஆண்களின் திரையில் அழியாத சித்திரம் நீ. கன்னியென்றானவள் எவள்? இங்கு அவள் ஆட விழைவதுதான் என்ன? அடையப்படாத பெண்களால் நிறைந்த சித்தம் எனும் சித்திரச்சுமையை முதுகொடிய சுமக்காத எவருளர்?
கன்னியராகி வந்தனர். ஆடும் குழைகளின் தொட்டுத்தொட்டு உடனாடும் நிழல்கள், கையெழுந்து கோதிய முடியிழை மீண்டும் சரியும் நெற்றி, சிவந்த மென்முத்துக்கள், அவற்றை அறியாது தொட்டுச்சுழலும் சிப்பிநகங்கள். புருவங்களின் அடர்த்தியாக ஒரு முகம். புருவங்களின் மென்மையாக ஒரு முகம். மூக்குச்சுளிப்பு, மேலுதட்டு மென்புகைப்பரவல், கீழுதட்டின் நடுக்கோடு, கழுத்திலெழும் வரி, கழுத்துக்குழியின் நீலநரம்பு, விலாவெலும்பு நிரைகள். படிகளில் இறங்குகையில் அறியாது துள்ளுகின்றன கால்கள். சுழல்கின்ற ஆடைக்குக் கீழே சிலம்பின் சிரிப்பொலி. தொலைவில் எழும் உன் வீட்டுவாயிலில் அந்திவெயில் நீட்டு நிழல் நீ. அந்திக்கருக்கலில் ஆடைவண்ணம் நீ. இருளுக்குள் காணா இருப்பு நீ. உன் நினைவென எழும் ஒரு விழிவீச்சு நீ. அறிதுயிலின் முழுவடிவம் என நீ.
கன்னித்தெய்வங்கள் ஆலயகோபுரங்களில் கனிவுடன் நோக்கி சிரிக்கின்றன. நெற்றியிலிட்ட குங்குமத்தின் எச்சம் தீற்றப்பட்ட கால்களுடன் கருவறைமுன் நின்றிருக்கிறான் உடலிலி. அவன் தொட்டு மீட்டும் முல்லைமொட்டு. அவனுக்கு முன் கல்லென எழுந்த அவன் கருங்கன்னி. அவள் ஊர்ந்த அன்னத்தின் நடனக்காலடிகள். அது இழையும் அலைப்பரப்பின் ஒளி. கன்னி கன்னி என்று ஓடும் அணையாச்சொல். முன்னிரவின் வெம்மை குளிர்ந்து வரும் முதற்தென்றல். முதல் காலைமலரின் மந்தணக் காமம், முதல் பறவையின் ஏக்கம், முதற்கதிரின் முதல்நினைவென ஒரு முகம். சேற்றில் படிந்த அவள் காலடி. தன் இல்லமுகப்பில் அவள் இட்ட சித்திரக்கோலம். அதன் மேல் அவள் வைத்த பூசணிப்பூவின் பொன். அதன்மேல் உதிர்ந்த மாவிலையின் பொன். அதன்மேல் பதிந்த இளங்கன்றின் குளம்புச்சுவடு. அவள் இல்லத்தில்எழும் முதற்காலைப் புகையின் இன்மணம். அவள் அன்னைக்கு மறுமொழிகூவும் குழலோசை. அவள் எங்கிருந்தோ நோக்கும் ஒரு உடல் தொடுகை. அவள் தன் நெஞ்சு தொட்டு ஏங்கி நினைப்பழிக்கும் மூச்சு. கன்னி. கன்னியென்றான அன்னை.
ஒற்றைச்சுனையில் எழுந்த அலைகளென வந்தபடியே இருந்தனர் பெண்கள். உண்டு முடியாத ஊற்று. அறிந்து கடந்து ஆற்றா பெருவெளி. அடங்கி அமைகையிலோ வென்று செல்லும் வெள்ளம். ஒருத்தியின் குழல்சுருளை எண்ணி இங்கு இருந்தேன். இன்னொருத்தியின் கன்னத்து முத்தை. பிறிதொருத்தியின் காதுமடலின் ஒளிச்சிவப்பை. கைவளை அழுந்திய அரைவளையத் தடம். மார்புக்குழைவில் ஆரத்தடம். முத்து பதிந்த சிவந்த புள்ளி. தோள்குழைவில் எழுந்த பசலை மென்கோடுகள். தோள்பொருத்தில் புதுமணல்போல் தசைவிரிவு வரிகள். கைமடிப்பின் மென்சுருக்கத்தில் வியர்வையின் பனி. உள்ளங்கையில் கசங்கிய ஒரு மலர். உந்திசூழ்ந்த கதுப்பு. குழைவுகள் என சரிவுகள் என அழுந்தல்கள் என திரள்தல்கள் என அசைவுகள் என ததும்பல்கள் என விழிகொண்டு விரல்கொண்டு கூர்கொண்டு அணைத்து தொட்டு கொதித்து நனைந்து குளிர்ந்து அமைந்து மூச்செழுந்து மூச்சமைந்து உடனிருக்கும் இணைகள்.
உடல் உடலென்று காட்டி உடலில்லை உடலில்லை என்று அலைத்து உடல்மட்டும் அளித்து ஒளிந்தும் காட்டியும் ஆடுதலே அது. இணைந்தமென்மைக்குள் கரந்த ஊற்று. யானைவிழி. மான்குளம்புத்தடம். கருஞ்சிவப்பு மலரடுக்குக்குள் அமர்ந்த சிறுவண்டு. சுனைகள். மென்மைகள். தனிமைகள். தவங்கள். முக்கடல்முனையின் ஒற்றைக்கால். மூவிழியன் தலைக்குள் குளிர்ப்பெருக்கு. அவன் இடப்பாதி. பிறிதொருவன் நெஞ்சின் மரு. மூன்றாமன் சொல்லின் பொருள். உடலாகிவந்து சூழ்ந்தது.
பருத்திறங்கிய பால்முலைகள்.கருத்து குவிந்த காம்புகள். கழுத்தின் கன்னல். கன்னத்தின் வெளிறல். இதழ்க்கதுப்பின் ஊன்மணம். கண்சாரலின் கருமை. வியர்வையின் உப்புமணம். முலையூற்றுநொதித்து மணக்கும் ஆடைகள். மைந்தன் சிறுநீர் நனைந்த மடி. துயிலில் பிறிதொருவனை நினைத்துக் குழியும் கன்னச்சிரிப்பு அளிக்கும் உவகையின் மாயம்.நெற்றிமயிர் ஏறுவது என்ன? காதோர நரையை காண்கிறேன். ஆழ்ந்தமைந்த குரல். தளர்ந்த நடையில் இடையில் கையூன்றி நின்று விடும் நீள்மூச்சு.
இவள் என் மகள். கைநிறைத்தவள். தொடைமடிப்புகள். இடுக்கிய சிறுகை மொட்டுகள். சிணுங்கி அதிரும் செவ்விதழ்க்குமிழ்.பால்விழி. வண்ணம் அறிந்த வியப்பு. பின் முகம் பார்த்துச்சிரிக்கும் விழியொளி. என் கைநோக்கி எம்பி எழும் சிற்றுடல். என் மடியிலமர்ந்து தலையில் தாடியை அறிந்து சிரிக்கும் குலுங்கல். கன்னத்தைக் கடிக்கும் ஈரப்பற்கள். சிற்றாடை சுழற்றி என் முற்றத்த்திலோடும் சிறுகால்கள். கடந்து கடந்து கடக்காத நூறு முகங்கள்.
நூறுமுகங்களையும் நூறுமுறை தவமழித்து மீண்டு கடந்தார் விஸ்வாமித்ரர். நூறுமுறை வழுக்கிய ஏணியின் உச்சிப்படியில் நின்று நீள்மூச்சுவிட்டார். அவர் தன்னை அணுகுவதை அப்போதுதான் இந்திரன் உணர்ந்தான். அவர் தவம் கலைக்க விண்கன்னி மேனகையை அனுப்பினான். நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம்.
[ 6 ]
பீஷ்மர் கன்யாகுப்ஜத்திற்கு எவரென்றறியாமல் வணிகர்குழு ஒன்றுக்கு வேலேந்திய காவலராக வந்தார். அவரது உயரம் அவரை யவனர் என்று வணிகர் எண்ணும்படி செய்தது. அவர் எவரிடமும் தேவைக்குமேல் ஒரு சொல்லும் சொல்வதில்லை என்பது அவருக்கு ஆரியமொழிகள் நன்கு தெரிந்திருக்கவில்லை என அவர்கள் எண்ணும்படி செய்தது. நகருக்கு வெளியே வணிகர்களுக்குரிய விடுதி ஒன்றில் வண்டிகளை அவிழ்த்துப்போட்டுவிட்டு அவரை காவலுக்கு அமர்த்தி அவர்கள் உணவுண்டு இளைப்பாறச் சென்றனர். வேலை கால்நடுவே ஊன்றியபடி உடல்மடித்து நிமிர்ந்த தலையுடன் அவர் அமர்ந்திருந்தார்.
உரத்த கள்புளித்த ஏப்பத்துடன் கடந்து சென்ற சூதர் ஒருவர் அவரைக்கண்டு அருகே அணைந்து “வீரரே, தாங்கள் யவனரா?” என்றார். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான் யவனர்களை நிறையவே கண்டிருக்கிறேன். என் ஊர் மாளவம்” என்றார் சூதர். “அங்கே யவன நாட்டில் அனைத்துக்கனிகளும் மிக உயரத்தில் காய்க்கின்றன என நினைக்கிறேன். அவற்றை எம்பிப்பறிக்க முயன்று இவர்கள் உயரமாக ஆகிவிட்டார்கள்...” அவர் புன்னகைத்தார்.
“அல்லது அன்னையர் அவர்களை கருவறையிலிருந்து தலையைப்பற்றி இழுத்து நீட்டி வெளியே எடுக்கிறார்கள்.” பீஷ்மர் புன்னகையுடன் விழிகளை திருப்பிக்கொள்ள அவர் “அஸ்தினபுரியின் பீஷ்மபிதாமகர்தான் இங்கே உங்கள் அளவுக்கு உயரமானவர் என்கிறார்கள். ஆனால் அவரது குருதி முளைத்து காலத்தில் நீடிக்கவில்லை. ஏனென்றால் அவர் நைஷ்டிக பிரம்மசாரி. அறிந்திருப்பீர்” என்றார்.
“ஆம்” என்றார் பீஷ்மர். சூதர் அவர் அருகே அமர்ந்து “அவர் வாழ்நாள் முழுக்க பெண்கொள்ளாமை நோன்பை நோற்பவர் என்கிறார்கள். எனக்கு அது வாழ்நாள் முழுக்க உண்ணாமை நோன்பு நோற்பதற்கு நிகர் என்று தோன்றுகிறது. இதைச்சொன்னால் என்னை குடிகாரன் என்பார்கள். நான் குடிப்பவன்தான். ஆனால் குடிகாரன் அல்ல. ஏனென்றால் பணமில்லையேல் நான் குடிப்பதில்லை” என்றார். பீஷ்மர் புன்னகைசெய்தார். “உண்மையிலேயே ஓர் ஆண்மகன் பெண்கொள்ளாமை நோன்பை நோற்கமுடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார் சூதர். “அறியேன்” என்றார் பீஷ்மர்.
“நீங்கள் பெண்ணை அடைந்தவர் அல்லவா?” என்றார் சூதர். பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. “நான் பெண்ணை அடைந்தவனே அல்ல” என்று சூதர் சொன்னார். “என்னை பலபெண்கள் அடைந்தார்கள். ஆடையிலிருந்து நாயுருவி முள்ளை என உதறிவிட்டுச் சென்றார்கள். பெண்களுக்கு ஆண்களை உதறும் கலை நன்கு தெரியும். நம்மை உதறிவிட்டு அவர்கள் நம்மால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று நம்மை நம்பவைக்கவும் அவர்களால் முடியும்.”
சூதர் பெருமூச்சுவிட்டு “என்னை கைவிட்ட ஒருத்தியின் துயர் கண்டு உளம் உடைந்தே நான் குடிக்கத் தொடங்கினேன்” என்றார். “நான் எதை சொல்லவந்தேன் என்றால் பெண்கொள்ளா நோன்பு என ஒன்று இல்லை. அப்படி எவர் தருக்கினாலும் சொல்லுங்கள், இங்கே அருகே கன்யாவனம் என்னும் காடு உள்ளது. அங்கு செல்லும்படி சொல்வோம். முன்பு இந்நகரை ஆண்ட குசநாபன் என்னும் அரசனின் நூறுமகளிர் கூனிகளாக இருந்தனர் என்பதை அறிந்திருப்பீர்கள். அவர்களை பிரம்மதத்தன் என்னும் மெய்ஞானி மணந்து காட்டுக்குள் கொண்டுசென்றார். அவர்கள் அங்கே கூன்நிமிர்ந்து பேரழகிகளாக மாறினர்.”
“ஆம்” என்றார் பீஷ்மர். “நீங்கள் அறியாக் கதை எஞ்சியிருக்கிறது” என்றார் சூதர். “நூறாண்டுகாலம் அங்கே அவனுடன் வாழ்ந்து நிறைந்து காட்டணங்குகளாக மாறினர். கன்யாவனத்தில் அவர்கள் நுண்வடிவாக நிறைந்துள்ளனர் என்கிறார்கள். நூறு கன்னியர் வாழும் காட்டுக்குள் உண்மையான நைஷ்டிக பிரம்மசாரிகள் மட்டுமே செல்லமுடியும். ஆகவே அக்காட்டில் இன்று மானுடரே இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதற்குள் அவ்வணங்குகள் ஆண்களையே காணாது தவம்செய்கிறார்கள். அரைக்கணம் விழிசலித்தாலும் அங்கேயே கொன்று சிதறடிக்கும் சினம் கொண்ட குருதிவிடாயினர் அவர்கள்...”
பீஷ்மர் அவரையே விழியசைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். “முன்பு ஒரே ஒரு ஆண் அக்காட்டுக்குள் நுழைந்தார். அவர் இந்நகரை ஆண்ட அரசர். தவம்செய்து முனிவரானார். கன்யாவனத்தில் புகுந்து அவர் தவமனைத்தும் இழந்தார். மேனகை என்னும் விண்மகளை புணர்ந்து சகுந்தலையை பெற்றார். அக்கதையை நீங்கள் நாடகங்களில் கண்டிருப்பீர்கள்” என்றார் சூதர். “நானே அவரைப்பற்றி ஒரு பாடலை அக்காலங்களில் பாடுவதுண்டு. அதை இப்போது முற்றாக மறந்துவிட்டேன். நல்ல மது என்றால் என்னையறியாமல் அதை நான் பாடிவிடுவதும் உண்டு.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டார்.
சூதர் “இச்செய்திகளை நான் உங்களுக்குச் சொன்னதன் பொருட்டு எனக்கு நீங்கள் சில வெள்ளிக்காசுகளை அளிக்கலாம், தாழ்வில்லை” என்றார். “எதற்கு?” என்றார் பீஷ்மர். “நான் தாங்கள் தங்கள் அகத்தை மெய்நோக்க ஒரு வாய்ப்பை சுட்டிக்காட்டினேன் அல்லவா?” என்றார் சூதர். பீஷ்மர் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றபின் ஒரு பொன் நாணயத்தை அளித்தார். சூதரின் கண்கள் மின்னின. புன்னகையுடன் “தன்னை கூர்நோக்குபவன் இருளை அன்றி எதையும் காணமாட்டான் என்பது சூதர்களில் குடிகாரர்களின் மெய்யறிதல்” என்றார். “பார்ப்போம்” என்றார் பீஷ்மர். தரைநோக்கி புன்னகைசெய்து “நன்று சூழ்க!” என்றார் சூதர்.
அன்றே வணிகர்களிடம் விடைபெற்று பீஷ்மர் கன்யாவனம் நோக்கி சென்றார். அதை அறியாத எவரும் கன்யாகுப்ஜத்தில் இருக்கவில்லை. அக்காட்டின் எல்லையில் கற்பாளங்களால் கூரையிடப்பட்ட விஸ்வாமித்ரரின் ஆலயம் இருந்தது. மையக்கருவறையில் வலக்கையில் மின்கதிர் படைக்கலமும் இடக்கையில் அமுதகலமும் ஏந்தி விஸ்வாமித்ரர் நின்றிருந்தார். அருகே வலப்பக்கம் காதியும் இடப்பக்கம் குசநாபரும் நின்றிருந்தனர். அங்கு முழுநிலவுநாளில் அன்றி வழிபாட்டாளர் வருவதில்லை என்றாலும் நாளும் நீர்மலர்காட்டி சுடராட்டு நிகழ்த்தும் பூசகர் இருந்தார். அவர் அங்கேயே தங்கியிருந்தார்.
அந்தியில் அங்கு சென்று சேர்ந்த பீஷ்மரிடம் பூசகர் அக்காட்டுக்குள் அவர் அறிய எவரும் சென்றதில்லை, அங்கு வாழும் அணங்குகளின் நகைப்பொலியை இரவின் இருளில் தொலைவிலென கேட்கமுடியும் என்றார். “அங்கு ஆண்மகன் என தன்னை உணரும் எவரும் செல்லமுடியாதென்கிறார்கள் யவனரே. மும்மூர்த்திகளே ஆயினும் ஆணால் வெல்லமுடியாத பெண்மையின் அழகும் வஞ்சமும் பேருருக்கொண்டிருப்பது அக்காடு. அங்கு சென்று மீண்டவர் விஸ்வாமித்ரர் ஒருவரே” என்றார் பூசகர். “நான் நாளை உள்ளே செல்லவிருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.
அன்று விஸ்வாமித்ரர் உள்ளே நுழைந்து நூறு அணங்குகளைக் கண்டு கடந்த கதையைப்பற்றி பவமானன் என்னும் கவிஞர் எழுதிய குப்ஜகன்யா வைபவம் என்னும் காவியத்தை பூசகர் பாட பீஷ்மர் கைகளை தலைக்குப்பின்னால் வைத்து கண்மூடிப்படுத்து கேட்டுக்கொண்டிருந்தார். "நூறு சுனைகளில் அவர் பெண்முகங்களை கண்டார். யவனரே, நூறுசுனைகளில் பல்லாயிரம் அலைகள். ஒன்று பிறிதெனப்பெருகுபவை. நூறாவது அலையில் அவர் கண்டவள் அவருக்கு இறுதிநீரூற்றும் மூதன்னை என்கிறது காவியம்” என்றார் பூசகர்.
பாடல் முடிந்தபின் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு பூசகர் புரண்டுபடுத்தார். பின்பு “நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம். நெஞ்சடைக்கச் செய்யும் வரி. நான் இதை நூறாயிரம் முறை சொல்லியிருப்பேன். இதை கடந்ததே இல்லை” என்றார். பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. "முதலில் ஆணவத்தை சீண்டி எழுப்புகிறது. பின்பு அடிபணியச்செய்து நிறைவளிக்கிறது. நோய்முதிர்ந்தவருக்கு இறப்பு போல இனியவள் அன்னை என்று சொல்கிறது காவியம். திகைக்கச் செய்யும் வரி.” பீஷ்மரிடமிருந்து சொல் ஏதும் எழவில்லை.
“துயின்றுவிட்டீரா யவனரே?” என்றார் பூசகர். பீஷ்மரின் மூச்சொலி கேட்காமை கண்டு “சரி” என்றபடி மீண்டும் பெருமூச்செறிந்து கண்களை மூடிக்கொண்டார். "எதன்பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?” பீஷ்மர் அங்கில்லாதவர் போலிருந்தார். பூசகர் அவர் உடலின் வெம்மையை அணுக்கமென உணர்ந்துகொண்டிருந்தார்.
காலையில் பீஷ்மர் படுத்திருந்த இடம் ஒழிந்துகிடக்கக் கண்டு எழுந்து சென்று காலடித்தடங்களை நோக்கினார் பூசகர். அவை கன்யாவனம் நோக்கிச் செல்வதை கண்டபின் தொடர்ந்து சென்று காட்டின் எல்லையென அமைந்த சிற்றோடையை அணுகி அவை தயங்கி நின்றிருந்த இடத்தை அடைந்து அவை கடந்து சென்றிருப்பதை உணர்ந்து அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். ஐம்பதாண்டுகாலமாக அவ்வெல்லையைக் கடக்க எண்ணி ஒவ்வொருநாளும் அதுவரை வந்து மீள்பவர் அவர்.
[ 7 ]
கன்யாவனத்தின் எழுபத்தேழாவது சுனை சௌபர்ணிகம் என்றழைக்கப்பட்டது. அதன் கரைகள் நீலநிறமான பாசிபடிந்த வழுக்குப்பாறைகளால் ஆனவை. உள்ளே நலுங்காத நீர் வானத்துளியாக கிடந்தது. அதன் பாசி படிந்த பரப்பைக் கடந்து வரையாடுகள்கூட நீர் அருந்த இறங்குவதில்லை. அந்நீரில் விழுந்த எவரும் நீந்தி கரையேறியதில்லை.
அதன் நீர் பனியைவிட குளிர்ந்தும் ஆயிரம் யானைகளின் துதிக்கைகளால் மையம்நோக்கிச் சுழற்றி இழுக்கும்படியான விசைகொண்டதாகவும் இருந்தது. நூற்றாண்டுகளாக எக்காலடியும் படாத பாறைகள் காத்திருப்பின் பருவடிவமென நின்றன. கைகளோ மூச்சோ படாத நீர் உறைந்த வஞ்சப்புன்னகை கொண்டிருந்தது.
அதன் கரைக்கு வந்த பீஷ்மர் அச்சுனையின் நீல ஒளியை நோக்கியபடி இடையில் கைவைத்து நின்றார். அவரது நீண்டகுழல் தோல்வாரால் கட்டப்பட்டு சடைத்திரிகளுடன் தோளில் புரண்டது. நரம்புகள் எழுந்த கைகள் முற்றிய கொடிகள் போல் உடலிலிருந்து தொங்கி முழங்காலை தொட்டன. நெஞ்சில் வலையென விழுந்துகிடந்த வெண்தாடியில் காற்று ஆடியது. அவர் முடிவெடுத்தபோது உடல் அதை ஏற்று அசைவுகொண்டது.
சீரான காலடிகளுடன் அணுகி அப்பாறைகள் மேல் ஏறினார். நிகர்நிலை கொள்வதற்காக கைகளை இருபக்கமும் விரித்து கிளைமேல் நடக்கும் பருந்தென சென்றார். ஒவ்வொரு அடிக்கும் கால்சறுக்கியது. ஆந்தையின் உகிர்களைப்போல விரல்களைக் குவித்து, நரம்பு புடைத்த நீண்ட பாதங்கள் தசையிறுகி அதிர மெல்ல நடந்தார். நீர் அருகே சென்றதும் உடல் எளிதானபோது கால்களின் பிடிவிட்டு சறுக்கிச் சென்று முழுதுடலையும் இறுக்கி சித்தத்தை அட்டையெனச் சுருட்டி முறுக்கி அசைவிழந்து நின்றார்.
அவருக்கு முன் சற்றே சரிந்த வானம் மீண்டும் நிலைகொண்டது. தன் முதன்மை உளச்சொல்லை அகக்குகைக்குள் முழங்கவிட்டு ஒவ்வொரு தசையாக உள்ளப்பிடிவிட்டு இயல்படையச் செய்தார். கண்களில் தேங்கிய வெங்குருதி குளிர உடலில் பொடிவியர்வை பரவி காற்றேற்று குளிராகியது. மீண்டும் மூச்சு சீரடைந்தபோது அனைத்தும் இயல்புநிலை மீண்டிருந்தன.
அவர் நீர்விளிம்பில் குனிந்து ஒரு கை நீரள்ளியபோது அலையின் வளைவில் விழி படிந்தது. திடுக்கிட்டு நீரை உதறி நிமிர்ந்தார். காதிலொரு சிரிப்பொலி கேட்ட கணம் கால்கள் பாறையிலிருந்து வழுக்கின. விழுந்துவிட்டோமென்றே உள்ளம் குலுங்கிய மறுகணமே அவர் பாய்ந்து அப்பாறைகள் மேல் கொக்கென கால்வைத்துத் தாவி கரைக்கு வந்தார். தொடைத்திரட்சி வயிற்றைத் தொடும் மென்கதுப்பு வளைவு. அலையென்றான உயிர்த்திளைப்பு. காட்டின் நடுவே கால்கள் தவிக்க நின்று சுனையைச் சூழ்ந்த பாறைகளை நோக்கிக்கொண்டிருந்தார்.
எப்படி கடந்தோம் என்று உள்ளம் வியந்து தவித்தபோது நாவில் ஒரு சொல் ஓடுவதை உணர்ந்தார். “தந்தையே!” என அலறிக்கொண்டு கரைநோக்கி பாய்ந்திருந்தார். “தந்தையே! தந்தையே!” என சொல்திகழ்ந்த உதடுகளுடன் எடைகொண்ட காலடிகளுடன் நடந்தார். வெல்லமுடியாத காடு அவரைச்சூழ்ந்து பச்சைப்பெருக்கென அடிமரநிரையென வேர்ச்செறிவென நின்றிருந்தது.
சிறிய பாறைமேல் முழங்கால் மடித்து அமர்ந்து அவற்றின் மேல் கைகளை ஊன்றிக்கொண்டார். கண்களைமூடியபோது வண்ணங்களின் குமிழ்கள் பறக்கக் கண்டார். எங்கோ நீர்த்துளி சொட்டிக்கொண்டிருந்தது. காட்டிலா, உடலுக்குள்ளா? எங்கோ ஒரு தனிப்பறவை கேவிக்கொண்டிருந்தது. எவரோ நோக்குவதை உணர்ந்து விழிதிறக்காமலேயே நிமிர்ந்தார். சடைமுடியும் மரவுரியும் அணிந்த சந்தனுவை அங்கே கண்டதும் ஏன் திகைப்பெழவில்லை என அவர் அகம் ஒருபக்கம் வினவ இன்னொரு அகம் “வணங்குகிறேன் தந்தையே!” என்றது.
சந்தனு களைத்த விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தார். சலிப்புடனும் துயருடனும் நீள்மூச்சுவிட்டு நோக்கை திருப்பினார். “இங்குதான் இருக்கிறீர்களா தந்தையே?” என்றார் பீஷ்மர். “ஆம், இதுதான் எங்களுக்கான இடம்” என்றார் சந்தனு. “தாங்கள் மட்டுமல்லவா?” என்றார் பீஷ்மர். “இது வழிதவறச்செய்யும் காடு. இங்கு வாழ்கின்றன கோடானுகோடி திசையழிந்த சிறகுகள்...” பீஷ்மர் “தந்தையே, இங்குள்ளவர்கள் எவர்?” என்றார்.
“நான் அறியேன். ஒருமுறை இங்கே மாமன்னர் யயாதியை கண்டேன். திகைத்து அருகே சென்று ‘மூதாதையே தாங்களா? இன்னுமா இங்கிருக்கிறீர்கள்?’ என்றேன். துயருடன் சிரித்து ‘தேவயானியை நான் இன்னமும் கடக்கவில்லை மைந்தா’ என்றார்.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். சந்தனு “நான் இன்னமும் சத்யவதியை கடக்கவில்லை என்றேன். ஆம் என தலையசைத்தார்” என்றார். “பிரதீபர் இன்னும் சுனந்தையின் கண்ணீரை கடக்கவில்லை. தபதியின் அனலை சம்வரணன் அறிந்து முடிக்கவில்லை.”
பீஷ்மர் “ஆம், அவர்கள் எவரும் கடந்திருக்க வாய்ப்பில்லை” என்றார். சந்தனு “கடத்தல் அத்தனை எளிதல்ல. இங்குள்ள ஒவ்வொரு இலைநுனியிலும் அமுதெனும் நஞ்சு. ஒவ்வொரு சுனையிலும் நஞ்செனும் அமுது. இதன் மாயங்களை எண்ணி எண்ணி பிரம்மன் சொல்மறக்கக்கூடும். இது அன்னையின் மேடை” என்றார். பீஷ்மர் “மானுடர் எவரேனும் கடக்கலாகுமா தந்தையே?” என்றார். “நீ கடக்கக்கூடும். ஏனென்றால் இதை நம் மூதாதை புரு கடந்தார்.”
பீஷ்மர் துயருடன் விழிதாழ்த்தி “முன்பொருமுறை நான் என் முகமெனக் கண்டது யயாதியின் முகத்தை தந்தையே” என்றார். “ஆம், அங்கே சிபிநாட்டு நாகசூதனின் நச்சுக்கலத்தில். மைந்தா, அது நச்சுக்கலம் அல்லவா?” பீஷ்மர் “அதுவல்லவா உண்மையை காட்டுவது?” என்றார். “ஆம்” என்றபின் சந்தனு புன்னகைத்து “புரு உண்மையில் யயாதியே அல்லவா?” என்றார். பீஷ்மர் அவரை விழி கொட்டாமல் நோக்கினார். “எந்த முகத்தை அவளிடம் காட்டுவதென்று இறுதியாக முடிவெடுக்கத் தெரிந்தவர் யார்?” என்றபின் அவர் பின்னகரத் தொடங்கினார். ஒரு பறவைச்சிறகடிப்பின் ஓசை.
“தந்தையே” என்றார் பீஷ்மர். “தாங்கள் இங்கே இன்னும் எத்தனை காலம்…?” அவர் பெருமூச்சுவிட்டபடி “காலமென்பது அங்குள்ளது” என்றார். “காத்திருப்பு உள்ளதல்லவா தந்தையே? அது காலமே அல்லவா?” சந்தனு “அறியேன். இங்குள்ளோம். முடிவிலியில்” என்றபடி மேலும் மேலும் பின்னகர்ந்தார். “அடைந்தவர்கள் அனைவரும் இழக்கும் இந்த ஆடலை ஏன் அமைத்தாள்? இதில் அவள் கொள்ளும் நச்சு உவகைதான் என்ன?”
பீஷ்மர் “இழந்தவர்களும் அடைவதில்லை தந்தையே” என்றார். “இழந்தவர்கள் செல்லும் தொலைவு குறைவே” என்றபடி சந்தனு பின்னால் சென்று புகை என அவ்விலைப்பரப்புகளில் படிந்தார். “தந்தையே, தந்தையே, அன்னையை பார்த்தீர்களா?” என்றார். “ஆம், அவளே இங்கெல்லாம் இருக்கிறாள். ஆனால் அங்கு அவள் கொண்டிருந்த அவ்வடிவில் ஓருடலாக திரண்டிருக்கவில்லை.” அவர் விழிகள் மட்டும் எஞ்சியிருந்தன. “மைந்தா, அவர்களெல்லாம் ஒன்றே. ஒரு மாயத்தின் ஆடல்கள்.” பீஷ்மர் “தந்தையே, அவளை நீங்கள் கண்டீர்களா?” என்றார். சந்தனு மறைந்த பின்னரும் விழிகளின் பார்வை சற்று எஞ்சியிருந்தது.
அவர் மடியில் வந்தமைந்த சிறு புறா சர்ர் சர்ர் என்றது. அவர் விழிதிறந்து அதன் மென்சிறைச் சங்குடலை கையிலெடுத்தார். அதன் மரமல்லிப்பூ போன்ற சிவந்த கால்களில் தோல்வளையம் கட்டப்பட்டிருந்தது. அவர் அதைப்பிரித்து கையிலெடுத்து புறாவை விடுவித்தார். அது சிறகடித்துப் பறந்து அப்பால் சென்றமைந்து புல்மணி ஒன்றைக் கொத்தி கழுத்துப்பூம்பரப்பு சிலிர்த்தசைய அண்ணாந்து உண்டது. கிள்ளிய நகம்போன்ற அலகுகளைப் பிளந்து ஓசையெழுப்பி கால்வைத்து தத்தி அகன்றது.
அச்செய்தியில் ஆர்வமில்லாது அவர் அமர்ந்திருந்தார். பின்பு ஒருகணத்தில் தன் கைகளில் இருந்து கசங்குவது அச்செய்தி என்று கண்டு திகைப்புடன் அது என்ன என்று நோக்கினார். இருவிரல்களால் விரித்து படித்தார். அஸ்தினபுரியின் மந்தணச்சொற்களில் அவரது முதன்மை மாணவர் ஹரிசேனர் எழுதியிருந்தார். அவரை பார்க்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி குந்தி கன்யாவனத்தின் விளிம்பிலமைந்த அவரது குருகுலத்திற்கு அன்று பின்னுச்சிப் பொழுதில் வந்திருந்தாள். முதலில் சொற்கள் பொருளென மாறாமல் அவர் அக்குறிகளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்பு திடுக்கிட்டு மீண்டும் வாசித்தார்.
எழுந்து சுற்றுமுற்றும் நோக்கியபின் அருகே நின்றிருந்த கள்ளிச்செடியின் சாறை இலையொன்றில் சொட்டி கீழிருந்து சிவந்த கல்லை எடுத்து உரசி அதில் கலந்து செந்நிற மைக்கலவை செய்து புல்நுனியால் தொட்டு எழுதினார். ‘எவரையும் சந்திக்க விழையவில்லை. அரசச்செய்திகள் வந்தணையவேண்டியதில்லை.’ அதை ஊதி கருமை கொள்ளச்செய்து உருட்டி புறாவை நோக்கி கைநீட்ட அது எழுந்து அவரை நோக்கி வந்து அருகே அமர்ந்தது. அதன் காலில் அச்செய்தியை கட்டி மும்முறை சுழற்றி காற்றில் வீசினார். சிறகுகள் காற்றில் துழாவ அது எழுந்து மரக்கிளைகளுக்குள் மறைந்தது.
பின்பு நீள்மூச்சுவிட்டு இடையில் கைவைத்தபடி இருண்டு வந்த காட்டை நோக்கி நின்றார். மெல்ல ஒலிமாறுபட்டபடியே வந்தது. மரங்களின் இலைக்கூரை அடர்வுக்குமேல் பறவைகளின் ஒலி செறிவுகொள்ளத் தொடங்கியது.
[ 8 ]
ஹரிசேனர் அவளை இன்சொல் உரைத்து வரவேற்று, இளைப்பாறச்செய்து, சொல்லாடத் தொடங்கியதுமே உறுதியாக சொன்னார் “பீஷ்மபிதாமகர் வருவது நடவாது பேரரசி. அவர் காட்டுக்குள் சென்று எட்டுமாதங்களாகின்றன. நாங்கள் இதுவரை பன்னிரு செய்திகளை அனுப்பியிருக்கிறோம். எதற்கும் அவர் மறுமொழி அளித்ததில்லை. அரசச்செயல்பாடுகளிலிருந்து முழுமையாகவே விலகி நின்றிருக்கிறார். அங்கே அவர் தன்னைக் கடந்து செல்லும் தவத்திலிருக்கிறார் என்கிறார்கள் இங்குள்ள பூசகர்கள்.”
குந்தி “அவர் வருவார் என்றே நினைக்கிறேன்” என்றாள். ஹரிசேனர் சிலகணங்கள் நோக்கிவிட்டு “எனக்கான ஆணையை நான் ஆற்றுகிறேன். செய்தி அனுப்புகிறேன்” என தலைவணங்கினார். குந்தி “ஆம், அவர் வரும்வரை நான் இங்கு காத்திருக்கிறேன். அவரிடம் மட்டுமே பேச வேண்டிய சொற்களுடன் வந்தேன்” என்றாள்.
இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போது அவளே அந்த எண்ணம்தான் கொண்டிருந்தாள். “பிதாமகருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் நெடுநாட்களாக இல்லை இளையவனே. நான் அவர் ஒருவர் இருப்பதையே மறந்தவள் போலிருந்தேன் நெடுநாட்களாக” என்றாள். “மாமன்னர் பாண்டுவின் இறப்புக்குப்பின் அவர் விழிநோக்கி நான் பேசியதேயில்லை.” இளைய யாதவர் அவருக்குரிய மாறா புன்னகையுடன் “ஆம், அதை எவர் அறியார்? அவர் பெண்விழிநோக்காத நெறிகொண்டவர்” என்றார். “ஆயினும் இத்தருணத்தில் அவர் தங்களை சந்திக்க வருவார் என்றே நினைக்கிறேன். தங்கள் சொற்களை செவிகொள்வார். வேண்டுவன நிகழும்.”
குந்தி “எதன்பொருட்டு என்றே எனக்கு புரியவில்லை. இளையோனே, அவருக்கு விழியிழந்த மன்னர் மேலுள்ள நிகரற்ற அன்பு எவரும் அறிந்தது. சிற்றிளமையில் ஒருமுறை விழியற்றவர் பிதாமகரின் படைக்கலநிலையின் முற்றத்திற்குச் சென்று அவரது கால்களில் விழுந்து நான் விழியிழந்தவன், உங்களிடம் அடைக்கலம் புகவந்தேன் என்று சொன்னாராம். அவரை அள்ளி மார்போடணைத்து தன் வாழ்வுள்ள நாள்வரை அவருடனேயே இருப்பேன், பிறிதொன்றையும் கொள்ளேன் என்று பிதாமகர் சொல்லளித்தாராம். சூதர்கதைகளை பல்லாண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதுவே இன்றுவரை நிகழ்கிறது. ஒருதருணத்திலும் விழியிழந்தவரையோ அவரது மைந்தர்களையோ விட்டு அகலமாட்டார்” என்றாள்.
“ஆம்” என்றார் அவர். “அத்துடன் காந்தாரருக்கு பிதாமகர் அளித்த சொல்லும் உள்ளது” என்றாள் குந்தி. இளைய யாதவர் சிரித்து “ஆம், அவர் தன் சொல்லை தெய்வங்களின் ஆணைக்கு நிகரென தன் தலைமேல் சூடிக்கொள்பவர். தன்னை தெய்வமென எண்ணும் நிமிர்வுகொண்டவர்கள் சிக்கிக்கொள்ளும் பொறி அது” என்றார். “நான் அவரிடம் என்ன பேசுவது? எப்படி இதை கோருவது?” என்றாள். “அதை நான் எப்படி சொல்லமுடியும்? நான் பெண்களின் உள்ளறிந்தவன் என்கிறார்கள் சூதர். உண்மை, ஆனால் நான் பெண்ணே ஆகிவிடமுடியாதல்லவா?” என்றார்.
குந்தி “விளையாடாதே” என்று முகம் சிவக்க சீறினாள். “இது இழிசொல்லாக எஞ்சுமோ என்று ஐயுறுகிறேன்.” இளைய யாதவர் “ஆகலாம். ஆனால் இன்று இதுவன்றி வேறுவழியில்லை. ராஜசூயம் இங்கு நிகழவேண்டும் என்றால் பிதாமகரின் சொல் தேவை. அச்சொல் அஸ்தினபுரியை கட்டுப்படுத்தும். விண்புகுந்த மூதாதையரையும் ஆளும்” என்றார். குந்தி பெருமூச்சுடன் “நானறியேன். இது பிழையென்றே என் உள்ளம் எண்ணுகிறது. ஆனால் இதை செய்தாகவேண்டும் இளையோனே. என் மைந்தன் ராஜசூயம் வேட்டு சத்ராஜித் என அமர்ந்தபின் எனக்கு இப்புவியில் எஞ்சுவதேதுமில்லை. முன்பு யாதவர் மன்றில் ஒரு கணத்தில் என்னுள் பற்றிய விழைவு அப்போது முழுதணைந்து குளிரும். அம்பு இலக்கடைந்தபின் வில் தளர்வதுபோல என்னில் முதுமை வந்து கூடும்” என்றாள். இளைய யாதவர் புன்னகையுடன் “எந்தக்காட்டுக்கு செல்லவிருக்கிறீர்கள்? தங்கள் கொழுநரும் இளையோளும் வாழும் சதசிருங்கத்து செண்பகக்காட்டுக்கா? அன்றி, சத்யவதியும் மருகியரும் புகுந்த காட்டுக்கா?” என்றார். “இரண்டுக்குமில்லை. நான் மதுவனத்திற்கு மீள விழைகிறேன். அங்கே எந்தை சூரசேனர் இப்போதும் இருக்கிறார். நான் மீண்டும் யாதவச்சிறுமியாகிய பிருதை என்று அவரிடம் சென்று நிற்பேன். எந்தையே துரத்திச் சென்றவற்றின் மறுபக்கத்தைக் கண்டு மீண்டிருக்கிறேன். பிழை செய்தவள் என என்னை எண்ணி தங்கள் கால்களின் மேல் தலைவைக்கிறேன். என்னை பொறுத்தருள்க என்று கோருவேன்.”
சொல்லத்தொடங்கியதுமே குந்தி அவ்வுணர்ச்சிகளால் அள்ளிச்செல்லப்பட்டாள். “அன்று நான் மேய்த்த கன்றுகளின் கொடிவழிக் கன்றுகள் அங்கே இருக்கும். அவற்றின் உரு மாறுவதில்லை. விழிகளும் குரல்களும்கூட மாறுவதில்லை. அன்றிருந்த மரங்கள் மட்டும் சற்றே முதிர்ந்திருக்கும். ஆனால் புல்வெளி புதியதாகவே இருக்கும். இன்னும் அக்காட்டில் கன்றுமேய்த்து அலைய என் கால்களுக்கு வலுவிருக்குமென்றே நினைக்கிறேன்” என்றாள்.
இளைய யாதவர் சிரித்து “அதுவே நிகழட்டும் அத்தை. அதற்கு இவ்வேள்வி நிகழ்ந்தாகவேண்டும். அது தங்கள் சொல்லில் உள்ளது. உரிய செஞ்சொற்கள் எழும் அகம் தங்களுக்குள் இருப்பதை நான் அறிவேன்” என்றார். “அறியேன். நான் இன்றுவரை உரிய சொற்களை சொல்லவில்லை என்றே ஒவ்வொரு அவைக்குப் பின்னும் ஒவ்வொரு சந்திப்புக்குப் பின்னும் உணர்கிறேன்” என்றாள். “நான் சொல்லாத சொற்களின் சிறையிலிருப்பவள் இளையோனே.” இளைய யாதவர் உரக்க நகைத்து “இச்சொற்களே அரியவை” என்றார்.
குந்தி அன்று பகல்முழுக்க குருகுலத்தின் ஈச்சையோலைக் குடிலில் காத்திருந்தாள். பயணக்களைப்பில் சற்றே துயின்றதும் உள்ளே விழித்துக்கொண்ட விழைவு அவளை எழுப்பி அமரச்செய்தது. காய்ச்சல் கண்டவள் போல் உடலெங்கும் வெம்மையையும் இனிய குடைச்சலையும் உணர்ந்தாள். உலர்ந்தபடியே இருந்த உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருந்தாள். அவளுடன் வந்த சிவிகைக்காரர்கள் அக்காட்டின் பசுமையில் மகிழ்ந்து நெருப்பிட்டு குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் பெரிய கருமுகத்தில் பல்வெண்மைகள் தெரிவதை நோக்கிக்கொண்டிருந்தபோது அவள் உடல்பதறுமளவுக்கு சினம் கொண்டாள். எழுந்துசென்று அவர்களை சொற்களால் அறையவேண்டுமென விழைவெழுந்த அகத்தை திருப்பி நிலைநிறுத்திக்கொண்டாள்.
இரவின் தொடக்கத்தில் புறா வந்துசேர்ந்தது. ஹரிசேனர் செய்தியுடன் அவள் குடிலை அணுகி பணிந்து “பிதாமகரின் செய்தி தெளிவாகவே உள்ளது பேரரசி. தாங்கள் மந்தணமொழி அறிந்தவர். பாருங்கள்” என்றார். அவள் அதை வாங்கி வாசித்தபோது அச்சொற்களை முன்னரே வாசித்துவிட்டதுபோல் உணர்ந்தாள். அச்சொற்களை அங்கு வந்த பயணம் முழுக்க அவள் வேறுவேறு வகையில் கற்பனை செய்திருந்தாள். முதலில் எண்ணியது நிகழ்ந்த மெல்லிய ஆறுதலே அவளுக்கு ஏற்பட்டது.
பின்பு கிளம்பவேண்டியதுதான் என எண்ணியபோது ஏமாற்றம் உருவாகியது. இரவில் அது வளர்ந்தது. இருளில் மின்னும் விண்மீன்களை பார்த்தபடி குடிலின் மண் திண்ணையில் அமர்ந்திருந்தாள். இருள் நகரத்தில் அத்தனை கெட்டியானதாக இருப்பதில்லை என்று தோன்றியது. விண்மீன்கள் அத்தனை பெரிதாக இருப்பதுமில்லை. அவை மிகத்தொலைவுக்கு நகர்ந்து சென்றிருக்கும். நகரத்தின் இரவொலிகளில் துயரம் இருக்கிறது. இங்கே காட்டின் இரவொலிகளில் அறியாத கொண்டாட்டம்.
முன்பு சதசிருங்கத்தில் அவள் விண்மீன்களை மிக அருகே பார்த்திருந்தாள். பிசின் போன்ற இருளுக்கு அப்பால் காட்டின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருக்க பாண்டுவுடனும் மாத்ரியுடனும் மைந்தர்களுடனும் அமர்ந்து குளிர்தாளமுடிவது வரை பேசிக்கொண்டிருப்பாள். இனிய மெல்லிய வீண்சொற்கள். அன்பு பொருளற்ற சொற்களாகவே வெளிப்படுகிறது. வெறுப்பும் பொருளற்ற சொற்கள் மேல்தான் ஏறுகிறது. பொருளுள்ள சொற்கள் உணர்வற்றவை போலும். அரசியலோ பொருள்பொதிந்த சொற்களின் நாற்கள ஆடல். சொற்களுக்குள் அளைந்தளைந்து நாட்கள் கடந்து சென்றிருக்கின்றன. எத்தனை நாட்கள்!
அவள் சதசிருங்கத்தை மீண்டும் எண்ணிக்கொண்டபோது அது மிகத்தொலைவில் எங்கோ இருந்தது. ஏன் அங்கே திரும்ப அவள் எண்ணவில்லை? திரும்பமுடியாத இடம் அது. ஏனென்றால் அவள் அங்கு வாழவே இல்லை. பாண்டு மைந்தர்களை மார்பில் போட்டுக்கொண்டு வானைநோக்கி படுத்துக்கொண்டு மாத்ரியிடம் மென்குரலில் பேசிக்கொண்டிருக்கையில் அவள் அஸ்தினபுரியிலிருந்து வந்த செய்திகளை அடுக்கிக்கொண்டிருப்பாள். ஒற்றுச்செய்திகளை திரட்டுவாள். புதிய ஆணைகளை எழுதுவாள். அவள் வேறெங்கோ இருந்தாள். விண்மீன்கள் நெடுந்தொலைவிலிருக்கும் காட்டில்.
அவள் உளம்கரைந்து அழத்தொடங்கினாள். அழும்தோறும் அவ்வினிமை அவளை முழுமையாகச்சூழ்ந்து கரைத்து உள்ளமிழ்த்திக்கொண்டது. அழுவது அவள்தானா என அவளே வியந்துகொண்டிருந்தாள். அழுதுமுடித்ததும் நிறைவுடன் மூக்கை முந்தானையால் அழுத்திப்பிசைந்து முகத்தைத் துடைத்து பெருமூச்சுவிட்டாள். புன்னகை எழுந்தது. அழமுடிகிறது இன்னமும். கன்னியைப்போல. சிற்றூரின் பேதை அன்னையைப்போல. பெண் என.
இளைய யாதவனின் முகம் நினைவிலெழுந்தது. சிரிக்கும் கண்களை மிக அருகே என கண்டபோது அவள் அறிந்தாள், அவனுக்கு அனைத்தும் தெரியும் என. பீஷ்மர் வராமலிருக்கப் போவதில்லை. அவர் வந்தாகவேண்டும். ஏனென்றால் வந்தபின் நிகழப்போவதைக்கூட இளைய யாதவன் வடிவமைத்துவிட்டிருக்கிறான். அவரிடம் அவள் என்ன சொல்லமுடியும்? மன்றாடமுடியுமா என்ன? எதன்பொருட்டு? அவர் அவளுக்கு என்றும் அயலவர். கண்ணீர் விட்டு நின்றிருக்கலாகுமா? அவள் அதை செய்யக்கூடியவள்தான். ஆனால் அயலவர்முன் என்றால் அது அவள் உள்ளத்திலிருந்து ஒருபோதும் இறங்கப்போவதில்லை.
ஆனால் அவள் அவரை சந்திப்பாள் என்றும் சொல்கோப்பாள் என்றும் நன்கறிந்திருந்தாள். அது எப்படி நிகழுமென்றே அவள் உள்ளம் வியந்துகொண்டிருந்தது. காலையில் ஹரிசேனர் வந்து அவள் கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொன்னபோது “கிளம்பவில்லை. பிதாமகர் வருவது வரை இங்கேயே காத்திருக்கிறேன்” என்றாள். அவர் “அரசி…” என்று சொல்லெடுக்க “நான் முடிவுசெய்துவிட்டேன்” என்றாள். அவர் தலைவணங்கினார்.
அன்று முற்பகல் முழுக்க அவள் காத்திருந்தாள். பலநாட்கள் காத்திருக்கவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனால் உள்ளம் நெடுநாட்களாக அறியாத உவகையை உள்ளே அடைந்துகொண்டிருந்தது. அது ஏன் என்றே அவளால் சொல்லக்கூடவில்லை. புல்வெளி வழியாகச் சென்று காட்டின் எல்லையை அடைந்து அங்கே நின்று இருண்ட பசுமை செறிந்த கன்யாவனத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.
பின்னர் திரும்பிவந்து நீராடி ஆடைமாற்றினாள். மீண்டும் கன்யாவனம் வரைக்கும் சென்றாள். அவ்வெல்லையை கடந்தாலென்ன என்று தோன்றியது. ஆனால் கடக்கவேண்டியதில்லை என உடனே ஆழுள்ளம் ஆணையிட்டது. கன்யாவனத்தின் அணங்குகள் பெண்களை விரும்புவதில்லை என்று அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது.
ஓடைக்கரை வழியாக ஓய்ந்த காலடிகளுடன் நடந்தபோது தன் இதழ்களில் ஒரு பாடலிருப்பதை உணர்ந்தாள். “இனிய கன்று! தொலைதூரப்பசுமையின் மைந்தன்!” எங்கு கேட்ட வரி அது? நெடுந்தொலைவில், நெடுங்காலத்திற்கு அப்பால். மதுவனத்தில் சிறுமியாக கன்றுமேய்த்த நாட்களில் பாடியது. அது இன்னமும் இருக்கிறது தனக்குள். நினைவில் இல்லை. எண்ணங்களில் இல்லை. இதழ்களில் இருக்கிறது.
“இனிய கன்று! தொலைதூரப்பசுமையின் மைந்தன்!” அடுத்த வரி என்ன? “விடாய்கொண்ட கன்று. கானலின் குழவி” ஆம். முழுப்பாடலையும் நினைவுகூர முடியும்போலிருந்தது. எண்ணலாகாது, இதழ்களை பாட விட்டுவிடவேண்டும். அது அறியும். முனகியபடி நடந்தபோது ஓடைக்கரையில் செறிந்திருந்த காட்டுப்பூக்களை கண்டாள். அவற்றிலொன்றை பறித்துச் சூடினாலென்ன? கைம்பெண் மலர்சூடலாகாது. ஆனால் இது கன்யாவனம். இங்கு பெண்களெல்லாம் எப்போதும் மாமங்கலைகள். நான் யாதவப்பெண். யாதவர்களில் கைம்பெண் என எவருமில்லை. கன்னியும் அன்னையும் முதுமகளும் மூதன்னை தெய்வமும் என ஒரே பாதைதான்.
வண்ணமலர்களை சூடலாகாது. ஏன் இவ்வெண்மலர்களை சூடக்கூடாது? இவை என் ஆடை போன்றவை. எதற்காக இதை சொல்லிக்கொள்கிறேன்? எவரிடம் சொல்சூழ்கிறேன்? அவள் ஒரு மலரைக் கொய்து கையில் வைத்துக்கொண்டாள். பின்பு ஓடையைக் கடந்து கன்யாவனத்திற்குள் கால்வைத்தாள். அம்மலரை அப்போது எந்த உளத்தடையும் இல்லாமல் சூடிக்கொள்ள முடிந்தது. மலர்சூடியதும் முதுமை மறைகிறது போலும். உடலே புன்னகை கொள்கிறது. அவள் புன்னகையுடன் விழிதூக்கி காட்டைநோக்கினாள். அதன் பசுமை அவளைச்சூழ்ந்து காற்றில் கொந்தளித்தது.
அவள் காட்டுக்குள் அசைவை ஓரவிழியால் கண்டாள். உடனே அதை அவள் உள்ளம் அறிந்துகொண்டமையால் உடல் விதிர்த்தது. ஆனால் முழு உளவிசையால் கழுத்தை திருப்பாமல் நின்றிருந்தாள். அவளுக்குப்பின்னால் வந்து நின்ற பீஷ்மர் தொண்டையை செருமினார். அவள் திரும்பி நோக்கியபோது அவர் மறுபக்கம் நோக்கி திரும்பி நின்றிருந்தார்.
“இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியை வணங்குகிறேன்” என்றார் பீஷ்மர் ஆழ்ந்த எடைமிக்க குரலில். “அங்கே அனைவரும் நலமென எண்ணுகிறேன்.” குந்தி “ஆம், அனைவரும் தங்கள் அருளால் நலம். தாங்கள் மூதாதையென அமர்ந்திருக்கையில் நன்றன்றி பிறிது கூடுவதும் அரிது” என்றாள். “தாங்கள் என்னை காணவந்தது எதற்காக? நான் ஆற்றுவதற்கேது உள்ளது?” என்றார் பீஷ்மர்.
“தங்கள் பெயரர் நிகழ்த்தவிருக்கும் ராஜசூயவேள்விக்கு தங்கள் ஒப்புதலை பெறவந்தேன்” என்றாள் குந்தி. அவள் சொல்லிமுடிக்கும்வரை அவர் அசையாமல் நின்று அதை கேட்டார். “ராஜசூயம் குடிமூத்தாரால் வாழ்த்தப்பட்டு நிகழவேண்டியது. அஸ்தினபுரிக்கு மூத்தவராகிய நீங்கள் மண்மறைந்த மூதாதையரின் முகமென வந்தமர வேண்டும். உங்கள் மைந்தராகிய திருதராஷ்டிரர் தன் இளையோன் மைந்தர்களை வந்து வாழ்த்தவேண்டும். அவர் மைந்தர் சூழ்ந்தமையவேண்டும்.”
“இது அரசியல். நான் என்னை விலக்கிக்கொண்டு இங்கிருக்கிறேன். நீங்கள் அஸ்தினபுரியின் பேரரசரிடமே பேசலாமே” என்றார் பீஷ்மர். “ஆம், அங்கே முறைப்படி என் மைந்தரே செல்வார்கள். என்னை தங்களிடம் அனுப்பியவன் என் குடியினனாகிய இளைய யாதவன்.” பீஷ்மரின் உள்ளம் அசைவதை உடல்காட்டியது. “இந்திரப்பிரஸ்தத்தில் நானே இன்று முதியவள். ஆகவே என்னை அனுப்பியிருக்கிறான்.”
“ஆம், அது முறைமைதான்” என்றார் பீஷ்மர். “ஆனால் இவற்றில் என் உள்ளம் அமையவில்லை. என்னை பேரரசி பொறுத்தருளல் வேண்டும்.” அவர் தலைதாழ்த்தி காட்டுக்குள் செல்லப்போகும் மெல்லிய உடலசைவைக் காட்டியதுமே குந்தியின் உள்ளம் இரைகண்ட பூனையின் உடலின் அனைத்து முடிகளும் எழுந்து கூர்கொள்வதைப்போல சொல்கொண்டது. “நான் இங்கு வருவதை அஞ்சினேன். பிதாமகர் பெண்நோக்கா நோன்புகொண்டவர் இளையோனே, அவ்வச்சத்தாலேயே அவர் மறுத்துவிடக்கூடும் என்றேன்” என்றாள்.
பீஷ்மரின் தோளில் ஒரு தொடுகை நிகழ்ந்ததுபோல எழுந்த மெல்லிய அசைவை அவள் கண்டாள். இதழ்களுக்குள் புன்னகைத்தபடி “தங்கள் நோன்பின் வல்லமையே குருகுலத்தின் தவச்செல்வமென உடனிருக்கிறது. அதை அணையாவிளக்கெனப் போற்றுவது குடியின் அனைத்துப்பெண்டிருக்கும் கடமை என்றேன். ஆனால் முதியவள் இருக்க இளையோர் வந்தால் அது முறைமை அல்ல என்றான். நான் அதன்பொருட்டே வந்தேன். பொறுத்தருளவேண்டும்.”
அவள் தலைவணங்கி திரும்புகையில் அவர் பின்னாலிருந்து “பேரரசி, தங்கள் மைந்தரிடம் சொல்லுங்கள், என் வாழ்த்துக்கள் அவருக்குண்டு என. அவர் நிகழ்த்தும் வேள்விக்கு நானும் என் மைந்தரும் பெயரரும் சூழ வந்து நின்று சிறப்புகொள்வோம் என்று கூறுக!” என்றார். குந்தி கைகூப்பி “என் மைந்தர் நல்லூழ் கொண்டவர். தங்கள் அடிகளில் இந்திரப்பிரஸ்தத்தின் முடி பணிகிறது” என்றாள். பீஷ்மர் இலைகளுக்குள் அமிழ்ந்து மறைவதை கூப்பிய கைகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள்.
பகுதி ஏழு : ஐப்பசி
[ 1 ]
ஐப்பசி தொடங்குவதற்குள் மழை அன்றி பிற எண்ணமே எழாதவர்களாக ஆயினர் அஸ்தினபுரியின் மாந்தர். ஆவணி இறுதியிலேயே கொதிக்கும் அண்டாக்கள் நிரைவகுத்த அடுமனையின் நீராவிப்புகை போல நகர்முழுக்க விண்ணிலிருந்து இறங்கிய வெம்மை நிறைந்திருந்தது. நாய்களின் நாக்குகள் சொட்டிக்கொண்டே இருந்தன. சாலையோரங்களில் பசுக்களும் கழுதைகளும் மீளமீள பெருமூச்சுவிட்டபடி கால்மாற்றின. வெயிலின் ஒளி மங்கலடைந்ததுபோலவும் அதன் வெம்மை மட்டும் கூடிவிட்டதுபோலவும் தோன்றியது. சாலைகளில் நடந்தவர்கள் வியர்வையை ஒற்றியபடி நிழலோரம் ஒதுங்கி அண்ணாந்து பெருமூச்சுவிட்டனர். குதிரைகளின் உடல்களில் வியர்வைத்துளிகள் உருண்டு தேர்களின் பாதைகளில் சொட்டின.
தெற்கே புராணகங்கைக்குள் செல்லும் வழியில் யானைக்கொட்டில்களில் நின்ற களிறுகளும் பிடிகளும் விடாய் தாளாது குரலெழுப்பிக்கொண்டே இருந்தன. ஆடிச்சாரலில் பசுமைகொண்ட செடிகள் அம்மெருகு குலையாமல் தழைசிலுப்பி காற்றிலாடின என்றாலும் கோடையில் தவிப்பதாகவே ஒவ்வொருவரும் உள்ளம்கொண்டிருந்தனர். “இம்முறை மழை வலுத்து பெய்யக்கூடும்” என்றார் முதுவேளிர் ஒருவர். “சிற்றீ கடிக்கிறது. அது மழைக்கான அறிவிப்பு.” நிமித்திகர் சுருதர் “தென்கடலில் இருந்து முகில்கள் சரடு அறாது விண்ணிலெழுகின்றன” என்றார். “அவை அங்கே நாகச்சுருள்களாகின்றன. இறுகி கருமைகொண்டு நாபறக்க காத்திருக்கின்றன. மழை எழவிருக்கிறது.”
ஆனால் காற்றில் சிறிய அசைவுகூட இருக்கவில்லை. இலைகள் அசைவற்று நின்றன. கோட்டை உச்சியில் கொடிகள் கம்பங்களில் சுற்றிக்கிடந்தன. அவ்வப்போது சருகும் புழுதியுமாக ஒரு காற்றுச்சுருள் வந்து சாலைவழியாக கடந்துசென்றபோது அவை ஏதோ எண்ணம் கொண்டவைபோல சற்றே அசைந்து மீண்டும் அமைந்தன. இரவும் பகலும் கை ஓயாது விசிறிக்கொண்டிருந்தனர். பனையோலை விசிறிகள் திண்ணைகளெங்கும் சிறகசைவை நிரப்பின. புறாக்குரல் போல தொங்குவிசிறிகளின் கீல் சுழலும் ஒலி மாளிகைகளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது.
அரண்மனைக்குள் எங்கும் அமர முடியாமல் வெளியே சோலைக்குள் பீடங்களைப்போட்டு துரியோதனனும் கர்ணனும் கௌரவர்களும் அவைகூட்டினர். அமைச்சரும் குடித்தலைவர்களும் பிறரும் அங்கு வந்து அவர்களிடம் ஆணை பெற்றுச் சென்றனர். அங்கும் காற்று எழாமையால் அவர்களுக்கு இருபக்கமும் ஏவலர் நின்று எப்போதும் நீர்தெளித்த வெட்டிவேர்த்தட்டிகளால் வீசிக் கொண்டிருந்தனர். பன்னீர்சந்தனத்தை உடலெங்கும் பூசிக்கொண்டு துரியோதனன் இரையுண்ட மலைப்பாம்புபோல பீடத்தில் அமர்ந்திருந்தான். கௌரவர்கள் அவனிடம் முகம்நோக்கி சொல்லெடுக்காமலாகியிருந்தனர். கர்ணன் சொல்லும் சொற்களை மீசையை நீவியபடி கேட்டபின் ஓரிரு சொற்களில் அவன் மறுமொழி சொன்னான். அவை தெய்வ ஆணையென்றே கொள்ளப்பட்டன.
இரவில் புரவிகளில் நகர்நோக்குக்கு சென்று மீண்ட உடனே நகர் மக்கள் அனைவரும், சாலைகளில் நீர்தெளித்து புழுதியடங்கச்செய்து அதன்மேல் பாய்விரித்து படுத்து வானில் உதிரிகளாக மின்னிக் கொண்டிருந்த விண்மீன்களை நோக்கி மழைகுறித்து பேசினர். “மழை வரப்போகிறது. இன்னும் சிலநாட்கள் பிறிதெதையும் எண்ணமுடியாது” என்றார் ஒருவர். “மழை நன்று” என்றார் நூறுநிறைந்த முதியவராகிய சம்பர். “மாமழையும் நன்றோ?” என்று ஒருகுரல் எழுந்தது. “இந்நகர் முன்பொருமுறை பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அன்று இறந்தவர்களுக்கு இன்றும் நீர்க்கடன் கொடுத்து நினைவுகூர்கிறோம்.”
முதியவர் “மாமழையே ஆயினும், கொலைப்படை ஏந்தி வரினும் அது நன்றே” என்றார். “மழையே அன்னம். அன்னத்தில் இருந்து முளைக்கிறது சொல். சொல்லில் வந்து அமர்கிறார்கள் தேவர்கள். மழையின்றி ஏதுமில்லை. அள்ளி அளிப்பவளுக்கு சிரித்து அழித்து விளையாடவும் உரிமையுண்டு.” இருளுக்குள் யாரோ ஓர் இளையோன் “சரி, இம்முறை பெருவெள்ளம் வந்தால் நாம் பெரியவரை முதலில் அதில் இறக்கிவிடுவோம்” என்றான். வியர்வை வழிய பனைஓலை விசிறிகளால் விசிறிக் கொண்டு படுத்திருந்த பலர் நகைத்தனர். முதியவர் “இளையோனே, நான் சொல்லும் சொற்களை வந்தடைய உனக்கின்னும் அறுபதாண்டுகாலம் இருக்கிறது” என்றார்.
விதுரரின் ஆணைப்படி செலுத்தப்பட்ட பலநூறு ஏவலரும், நகர்ச்சிற்பிகளும் நீர்வடிகால்களில் அடைப்புகளை அகற்றினர். ஓடைகளின் கரைகளை தொடுப்புக் கல்லடுக்கி செப்பனிட்டனர். மேற்குப் பகுதியிலிருந்த ஏரியின் மதகுகளை சீர்நோக்கினர். இல்லக்குறைகளை சரிசெய்யும் தச்சர்களும் சிற்பிகளும் எந்நேரமும் குடிமக்களால் சூழப்பட்டிருந்தனர். “நாளை… நாளைக்கே” என அவர்களிடம் சலிக்கசலிக்க சொல்லிக்கொண்டிருந்தனர் தோல்பைகளில் உளிகளும் கூடங்களும் கருவிகளுமாக சென்றுகொண்டிருந்த தச்சர். “மழைவரப்போகிறது தச்சரே” என்று கெஞ்சியவர்களிடம் “மழைவருமென ஆடியிலேயே அறிந்திருக்கிறீர்களல்லவா? ஆவணி பழுக்கையில்தான் நினைப்பெழுமோ?” என்றார் முதிய தச்சர் ஒருவர். “ஊழ் வந்து தொடாமல் உள்ளம் எண்ணம் கொள்வதில்லை தச்சரே” என்றான் அவ்வழி சென்ற சூதன்.
இரவுப்பொழுதுகளில்கூட எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து கூரைகளில் அமர்ந்து பணியாற்றினர். முற்றத்தில் படுத்திருந்தவர்களில் சிறுவன் ஒருவன் “அவர்கள் ஆந்தைகளைப்போல் கூரை மேல் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான். அவனருகே படுத்திருந்தவர்கள் நகைத்தார்கள். ஒருவர் “இரவெல்லாம் என் கனவுக்குள் மரங்கொத்தியின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. காலையில் விழித்துப்பார்த்தபோதுதான் அது சிற்பிகளின் உளியின் ஓசை என்று தெரிந்தது” என்றார். “துயில்மயக்கில் அவர்கள் வீட்டுக்கூரையை கலைத்துவிடப்போகிறார்கள்” என்றார் இன்னொருவர்.
“இன்னும் எத்தனை நாள்? எப்போது மழைவரும்?” என்று ஓர் இளையோன் கேட்டான். “அதை நிமித்திகர்தான் சொல்லவேண்டும்” என்றார் ஒருவர். தெருமூலையில் துயில் வராது எழுந்தமர்ந்து வெற்றிலைச்செல்லத்தை திறந்த நிமித்திகர் பத்ரர் “இளையோனே, மழை மூவகை. சோமனின் மழை இளஞ்சாரல். இந்திரனின் மழையோ இடியும் மின்னலும் கொண்டது. வருணனின் மழை அதிராது அணைந்து சிறகுகளால் மூடி அவியாது நின்று பெருகும்” என்றார். “வான்குறி சொல்கிறது, வரப்போவது வருணனின் கொடை.”
“எப்போது?” என்று இளையோன் மீண்டும் கேட்டான். “இன்று விண்மீன் குறிகளை பார்த்தேன். கரு நிறைந்த பெண்ணின் முலைக்கண்களைப்போல மழைக்கருமை செறிவுகொள்கையில் விண்மீன்கள் ஒளிகொள்கின்றன. இன்னும் மூன்று நாட்கள் அல்லது இன்னொரு பகற்பொழுது” என்றார் நிமித்திகர். “ஆம், எழுக மழை! கருங்கற்களும் விடாய்கொண்டுவிட்டன” என்றாள் திண்ணையில் படுத்திருந்த முதுமகள். “எத்தனை மழைக்காலம்! எத்தனை கோடைகள். இப்படியே சென்று அணையும் வாழ்க்கை” என்று ஒரு முதியவர் சொல்ல அதுவரை இருந்த அனைத்தும் அகன்று மழை காலமென்றாகி அவர்கள் முன் நின்றது. முதியவர்கள் நீள்மூச்செறிந்தனர்.
[ 2 ]
மூன்றுநாட்களில் மழை எழும் என அரண்மனையில் நிமித்திகர் குறித்து அளித்திருந்தனர். அரண்மனையின் ஒவ்வொரு செயல்பாடும் மழையை எண்ணியே கோக்கப்பட்டது. விதுரர் அவைக்குச் சென்று அங்கே சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்த கர்ணனிடம் “அங்கரே, மழை எழுந்தபின்பு எந்தப் படைநகர்வும் இயல்வதல்ல. ஆணைகளை இப்போதே பிறப்பித்தீரென்றால் படை அமைவுகளை முடித்துவிட முடியும்” என்றார். கர்ணன் சலிப்புடன் அவருக்கு தலைவணங்கி, சுவடிகளை மேடைமேல் வீசிவிட்டு “ஆம். ஆனால் இன்னமும் என்னால் முடிவெடுக்க இயலவில்லை. ஆவணி முழுக்க இளைய யாதவன் என்ன செய்யப்போகிறான் என்பதிலேயே போயிற்று. மகதத்தின்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் படை எழும் என்று எண்ணினேன். அவனோ முயல்வேட்டையாடும் புலிபோல புண்டரநாட்டை வென்று அந்த மணிமுடியைக் கொண்டு திரும்பியிருக்கிறான்” என்றான்.
“அவர்களின் ஆநிரை கவர்தல் அனைத்து திசைகளிலும் நடக்கிறது. பீமன் திரிகர்த்தத்திலும் உசிநாரத்திலும் சென்று ஆநிரை கவர்ந்து மீண்டிருக்கிறான். அர்ஜுனனின் படைகள் கிழக்கே வங்கத்தையும் கலிங்கத்தையும் அடைந்து ஆநிரை கொண்டு மீண்டிருக்கின்றன. அபிமன்யுவின் படைகள் ஆசுரநாடுகளிலும் மச்சர்நாடுகளிலும் ஆநிரை கொள்கின்றன. இன்னும் இரு நாட்களுக்குள் ஆகோள்சடங்கே முடிவடையும்” என்றான். “மழையில் ஆகோள் நிகழ்வதற்கு வழியில்லை” என்றார் விதுரர். “ஆம்” என்று கர்ணன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றி, விழிகளைத் தாழ்த்தியபடி சொன்னான்.
“அவன் என்ன எண்ணுகிறான் என்பதை எவ்வகையிலும் தொட்டறிய இயலவில்லை. ஒவ்வொரு முறை நான் அரசர் முன் செல்லும்போதும் அவரது வினா அது ஒன்றே. அவன் எண்ணுவதென்ன? அச்சுறுத்தியும் விழைவுகளை ஊட்டியும் இன்சொல் உரைத்தும் உறவுமுறைகளை கையாண்டும் ஆரியவர்த்தத்தின் அனைத்து நாடுகளில் இருந்தும் ஆகோள் முடித்து வேள்விக்கொடியருகே ஆநிரை பெருக்கிவிட்டான்” என்றான் கர்ணன். “ஆனால் மகதத்தின் வில் வந்து சேராது, அஸ்தினபுரியின் சீர் சென்று சேராது அங்கே ராஜசூயம் எவ்வகையிலும் தொடங்க முடியாது.”
விதுரர் “மழைமுடிந்தே ராஜசூயம் நிகழமுடியும். இன்னமும் ஒருமாதம் இருக்கிறது” என்றார். “ஆம், இருபத்தேழுநாட்கள் மழை நீடிக்கும் என்கிறார்கள். கார்த்திகையில் வான் தெளியும்போது ராஜசூயத்தை தொடங்குவார்கள்” என்றபடி கர்ணன் எழுந்தான். “இம்மழைக்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள்? கொடுமழையில் படைகொண்டு மகதத்தைச் சூழும் அளவுக்கு அறிவிலி அல்ல இளைய யாதவன்.”
கர்ணன் கைகளை வீசியபடி “மகதம் கங்கைப்பெருக்கால் காக்கப்படுவது. கண்டகி, மகாசோணம், சதாநீரை, சரயூ என நீர்ப்பெருக்குள்ள ஆறுகளால் சூழப்பட்டது. நூற்றுக்கணக்கான சிற்றாறுகள் மழைக்காலத்தில் சினம்கொண்டிருக்கும். பத்மசரஸையும் காளகூடத்தையும் ஏகபர்வதத்தையும் கடந்து மழைக்காலத்தில் படையென எதுவும் ராஜகிருஹத்தை நெருங்க முடியாது. சிறு படைப்பிரிவுகளை மழைக்குள் ஒளித்து அனுப்பி ராஜகிருஹத்தை அவன் தாக்கக்கூடுமா என்று எண்ணினேன். அதற்குரிய அனைத்து வழிகளையும் நேற்றுவரை எண்ணிச்சூழ்ந்தேன். சலித்து அனைத்து ஓலைகளையும் அள்ளி வீசிவிட்டு எழுந்துவிட்டேன்” என்றான்.
விதுரரின் கண்களில் மெல்லிய ஏளனம் ஒன்று கடந்து செல்கிறதா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அது அவன் சினத்தை எழச்செய்ய “இத்தனை எண்ணுகிறான், இவ்வளவு நாள் ஒடுங்கி இருக்கிறான் என்பதே அவனது அச்சத்தை, ஆற்றலின்மையை காட்டுகிறது” என்றான். “பாம்பு மண்ணுக்குள் நூறு வளைப்பின்னல்களை வைத்திருக்கலாம். எங்கோ வளை வாயில் தலை எழாமல் போகாது. அங்கு மிதிக்கிறேன்.”
விதுரர் “அவ்வண்ணமென்றால், நமது படைகள் இப்போதைக்கு எங்கும் நகரவேண்டியதில்லை என்பதுதான் இறுதி ஆணையா?” என்றார். அவரது அந்த நேரடிச்சொல் ஒரு நுண்ணிய நடிப்பென்பதை அக்கண்களிலிருந்து அறிந்து கர்ணன் மேலும் சினம் கொண்டான். “இல்லை, எக்கணமும் ஆணையிடுவேன். பெருகும் மழையிலும் அஸ்தினபுரியின் படைகளை மகதத்திற்கு நடத்திச் செல்ல என்னால் முடியும். யமுனையில் நுழைந்து இந்திரப்பிரஸ்தத்தைச் சூழ்ந்து அந்த இந்திரன் ஆலயத்தின் உச்சியில் அமுதகலசக்கொடியை ஏற்றவும் என்னால் முடியும்” என்றான். “நன்று” என்றபடி விதுரர் எழுந்துகொண்டார். “அது நிகழும்” என்றான் கர்ணன் உரக்க. “இவை அனைத்தும் அரசர்களுக்குரிய சொற்கள் அங்கரே. நான் அமைச்சன், சூதன்” என்றபின் விதுரர் தலைவணங்கி வெளியேறினார்.
சினம் உடலெங்கும் பரவியிருக்க கர்ணன் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து மதர்க்கும் தோள்களுடன் இடைநாழியில் நடந்து துரியோதனன் அவை கூடியிருந்த சோலை நோக்கி சென்றான். செல்லும் வழியெங்கும் அவன் கனன்று கொண்டிருந்தான். எழுந்த தூண்களை ஓங்கி உதைக்கவேண்டும் என்றும், எதிர்வரும் ஏவலரை அறையவேண்டும் என்றும் உள்ளம் பொங்கியது.
சோலை அவையில் துரியோதனன் தன் முன் நின்றிருந்த படைத்தலைவர்களிடம் படைநிலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தான். அவன் வருகை அறிவிக்கப்பட்டதும் அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அப்பார்வைகளை சுமந்தபடி அவன் அருகணைந்து தலைவணங்கினான். “மூத்தவரே, என்ன நிகழ்கிறது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அரசர். நமது படைகள் இங்கிருந்து மகதம் வரை செல்ல எவ்வளவு பொழுதாகும் என்கிறார். நமது படைகளை கங்கைக்கரையிலேயே நிறுத்தி வைப்பது நல்லதல்லவா என்று படைத்தலைவர்கள் கேட்கிறார்கள்” என்றான் துச்சாதனன்.
கர்ணன் சலிப்புடன் தலையசைத்தபடி அமர்ந்து “பெருமழை வரவை நிமித்திகர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கங்கைப்பெருக்கு கரைமீறும் என்றால் நமது படைகள் சிதறும். நமது கலங்கள் அழியவும் கூடும்” என்றான். “பிறகு என்னதான் செய்வது?” என்றான் துர்மதன். “இங்கு சொல்லெண்ணி சொல்லெண்ணி காத்திருக்கிறோம். ஆவணிமாதம் முழுமையும் வீணாகப்போயிற்று. அன்றே திட்டமிட்டபடி அரசர் தன் படைகளுடன் மகதத்திற்கு சென்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் வந்திருக்காது. துலாவின் இருதட்டுகளும் நிகர்நிலைகொண்டிருக்கும்.”
“ஆம், ஆனால் புண்டரீக வாசுதேவனை தாக்க யாதவன் சென்றது என்னை குழப்பிவிட்டது. இப்போதுகூட மகதத்திற்காக நாம் முழுப்படையுடனும் நகர்நீங்கிச் செல்லாதது ஒருவகையில் நன்று என்றே தோன்றுகிறது. நமது படைகள் மகதத்திற்கு சென்றிருக்கையில் ஒரு பெரும் படையுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் அஸ்தினபுரி நோக்கி வந்திருந்தான் என்றால் என்ன ஆகியிருக்கும்? பேரரசரை அவனால் சிறைப்பிடிக்க முடியும். குருகுலத்தின் மண் அனைத்தும் அவன் கைக்கு வந்துவிட்டால் அதன்பின் மகதத்துடன் ஒரு போர் மட்டுமே அவன் முன் எஞ்சும்” என்றான் கர்ணன்.
துச்சாதனன் “அதை அவர்கள் செய்யப்போவதில்லை” என்றான். கர்ணன் “ஆம், அதை தருமன் செய்ய மாட்டான். ஆனால் எவரும் எண்ணாத ஒன்றை இளைய யாதவன் செய்வான் என்ற எண்ணத்திலிருந்தே நான் அவனைப்பற்றி எண்ணத்தொடங்குகின்றேன்” என்றான். “பார்ப்போம் என தயங்கினேன். பீஷ்மரை சந்திக்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி சென்றிருக்கையில் நாம் பெருமுடிவுகளை எடுக்கவேண்டியதில்லை என்று கணித்தேன்” என்றான். துச்சலன் பொறுமையின்றி அசைந்து “அப்படியானால் இப்போது நாம் செய்யப்போவது என்ன?” என்றான்.
“மகதம் அடிபணிந்து வில்லளிக்காமல் ராஜசூயம் நிகழாது. அது ஒன்றே உறுதியான புள்ளி. அங்கிருந்தே நான் சொல்லெடுக்கத் தொடங்குகிறேன்” என்றான் கர்ணன். “மகதத்திற்கு எதிராக இன்றோ நாளையோ அவன் படைகள் எழவேண்டும். எழவில்லையென்றால் அதன் பொருள் ஒன்றே. நாம் அறியாத ஏதோ கொடுக்கலும் வாங்கலும் ஜராசந்தனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் நடுவே நிகழ்கிறது.” துரியோதனன் மெல்லிய குரலில் “அவ்வாறு நிகழாது” என்றான். கர்ணன் “ஆம், அவ்வாறு நிகழாது. நான் நன்றாகவே மகதரை அறிவேன். ஆனால் இளைய யாதவனை இன்னும் நான் அறிந்திலேன்” என்றான்.
“அவ்வாறு நிகழாது” என்று மேலும் உரத்த குரலில் துரியோதனன் சொன்னான். கர்ணன் ஒருகணம் தயங்கி “ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால்…” என்று சொல்லத் தொடங்க “அவ்வாறு நிகழாது” என்று மேலும் உரத்த குரலில் சொன்னபடி தன் தொடையில் ஓங்கி அறைந்தான் துரியோதனன். அந்த ஓசை அங்கிருந்த அனைவரையும் விதிர்க்கச் செய்தது. கர்ணன் அடங்கி “ஆம், அவ்வாறே கொள்வோம்” என்றான். சிலகணங்கள் அங்கு அமைதி இறுகி நின்றது. பின்பு ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். கர்ணன் “குந்திதேவி பீஷ்மரைக் கண்டு பெற்ற சொல் என்ன என்று தெரியவில்லை” என்றான். “அவர் ஒப்பமாட்டார். அரசநிகழ்வுகளிலிருந்து முற்றாக விலகிச்சென்றிருக்கிறார் என்றனர்” என்றான் துச்சாதனன். “ஆம். ஆனால் பெண்களை வெல்லும் சொற்கலை பெண்கொள்ளா நோன்புகொண்டவர்களுக்கு தெரியாது. பெண் என்பவள் அவர்களுக்கு வெளியே ஊனுடல்கொண்டு நின்றிருப்பவள் அல்ல. அவர்களுக்குள் முடிவிலா உள்ளப்பாவைகளாக பெருகி நிறைபவள். அவர்கள் அவளை அஞ்சுவர். அச்சத்தாலேயே முரண்கொள்வர். சினந்தும் சீறியும் எழுவர். ஆனால் இலக்கும் பொறுமையும் கொண்ட பெண் அவர்களை எளிதில் வென்றுமீளமுடியும். விஸ்வாமித்ரரை மேனகை வென்று போந்த காடு அது என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை.”
“ஒப்புதல் பெற்றால் என்ன நிகழும்?” என்றான் துச்சாதனன். கர்ணன் “பீஷ்ம பிதாமகர் இங்கு வரக்கூடும்” என்றான். துரியோதனன் புருவம் சுளித்து “இங்கென்றால்?” என்றான். “பேரரசரிடம் ஆணை பிறப்பிக்க” என்றான் கர்ணன். “பேரரசரின் ஆணை நம்மையும் கட்டுப்படுத்தும்.” துரியோதனன் “எவருடைய ஆணையும் என்னை கட்டுப்படுத்தாது” என்றான். “தங்களை என்றால் தங்கள் மணிமுடியை. இன்றும் ராஜசூயத்திற்கு ஒப்புதல் கொடுக்கும் உரிமை திருதராஷ்டிரருக்கே உள்ளது” என்று கர்ணன் சொன்னான்.
துரியோதனன் சினத்துடன் எழுந்தபடி “இத்தருணத்தில் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை” என்றான். கர்ணன் “அரசே, இது அவருடைய முடி. மண்துறப்பதினூடாக ஒன்றின்மேல் மும்மடங்கு உரிமை கொள்ளமுடியும். பீஷ்மரை இந்நகரம் ஒரு தருணத்திலும் துறந்ததில்லை. இவர்கள் அனைவர் உள்ளங்களிலும் வாழும் அரசர் அவரே” என்றான். துரியோதனன் அச்சொற்களை உள்வாங்காதவனாக நோக்கி நின்றான்.
“நாம் துலாமுள் என நின்றிருக்கிறோம் அரசே” என்றான் கர்ணன். “இரு தட்டுகளும் கணம்தோறும் துளித்துளியாக நிறைகொண்டு நிகர்நிலை மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் தத்தளிப்பது அதனால்தான். இப்போது துலாதட்டுகள் நிலைகொண்டுவிட்டன. நாம் அசைவற்று காத்திருக்கிறோம். அடுத்த துளி எடை நம் அசைவை அமைக்கும்வரை நமக்கு வேறுவழியில்லை.” மெல்ல உடல்தளர்ந்து பீடத்தில் அமர்ந்த துரியோதனன் உடலெங்கும் வழிந்த வியர்வையை உணர்ந்து அருகே நின்றிருந்த ஏவலனை நோக்கி இன்குளிர்நீர் கொண்டுவரும்படி கைகாட்டினான்.
[ 3 ]
ஒவ்வொரு கணமும் என காற்றின் இறுக்கம் ஏறிவந்தது. “இனி எங்கேனும் நீருக்குள்தான் சென்று அமர்ந்திருக்க வேண்டும்” என்று கனகர் சொன்னார். அன்று மாலையில் மேலும் வெம்மை கூடியது. கதிர் இறங்கிய பின்னும் உடல் ஊறிவழிந்தது. படைவீரர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டிகளை நோக்கிச் சென்று கூடி மரமொந்தைகளில் நீரள்ளி குடித்தனர். மிச்சத்தை தலையிலும் உடலிலும் ஊற்றிக்கொண்டு வாய்திறந்து மூச்சுவிட்டனர். பறவைகள் கிளைகளுக்குள் சிறகு ஒடுக்கி கழுத்து உள்ளிழுத்து அமர்ந்தன. நகரம் சோர்ந்து முனகிக்கொண்டிருந்தது.
வானில் முகில்கள் தென்படவில்லை. “மழை வருமென்கிறார்கள். ஆனால் முகில்கள் இல்லை” என்றார் கனகர். சிற்றமைச்சர் பிரபவர் “நிமித்திகர் சொன்ன நாளில் மழை வராமல் இருந்ததில்லை” என்றார். “மாமழை வந்து இந்நகரம் உப்புக்குவியலென கரைந்து போனாலும் சரி, இதற்கு மேல் இந்த இறுக்கத்தை தாளமுடியாது” என்றார் கனகர்.
அந்தியின் இருளில்கூட அனல் நிறைந்திருந்தது. அமைச்சுநிலையின் அறைகள் அனைத்திலும் நீராவி செறிந்து மூச்சடைக்க வைத்தது. “இந்த மழை வருணனுக்குரியது என்கிறார்கள். அவன் மருத்துக்களை சிறையிட்டிருக்கக்கூடும்” என்றார் அவைப்புலவர் பலிதர். இருள் செறிந்ததும் பறவை ஒலிகள் அடங்கி சீவிடுகளின் ரீங்காரம் எழுந்தது. கனகர் பெருமூச்சுடன் மீண்டும் தன் அலுவல்பீடத்தருகே வந்து அமர்ந்தார். பணிகள் நிறைந்திருந்தமையால் அவர் பலநாட்களாக தன் இல்லம் திரும்பவில்லை. எப்பொழுது வேண்டுமென்றாலும் படைநகர்வுக்கான ஆணை கர்ணனிடமிருந்து வரக்கூடும் என்று விதுரர் சொல்லியிருந்தார்.
அஸ்தினபுரியின் அனைத்து எல்லைகளில் இருந்தும் ஒவ்வொருநாளும் பகலும் இரவும் படைநிலைகளைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவற்றை கால வரிசைப்படி தொகுத்தெழுதி ஒற்றைத்திருமுகமாக ஆக்கி நாளும் இருமுறை விதுரருக்கு அளிக்கவேண்டியிருந்தது. இரவில் பறக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த பருந்துகள் பகலில் செய்தி கொண்டுவருவதில்லை. பகல் பருந்துகள் இரவுகளில் அணைவதில்லை. எனவே எப்போதும் சிறகோசையுடன் ஒரு புள் வந்து சாளரத்தை அணைந்துகொண்டிருந்தது.
முழுதுள்ளத்தையும் குவித்து அகல்சுடர்முன் குனிந்தமர்ந்து அனைத்து ஒற்றுச்செய்திகளையும் தொகுத்து எழுதிவிட்டு உடலில் பெருகிய வியர்வையைத் துடைத்தபடி எழுந்தபோதுதான் கனகர் தவளைகளின் ஓசையை கேட்டார். முதலில் அந்த முழக்கம் என்ன என்று அவருக்குப் புரியவில்லை. தொலைவில் பெரியதொரு பறவைக்கூட்டம் கலைந்து பறந்து அணுகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. பின்னர்தான் அது தவளை ஒலி என்று தெரிந்து உடல் குலுங்க பக்கத்து அறைக்கு ஓடினார். அங்கு சுடர்களைச்சூழ்ந்து அமர்ந்து மெல்ல பேசியபடி பணியாற்றிக்கொண்டிருந்த அமைச்சர்களை நோக்கி “தவளைக்குரல்கள்!” என்று கூவினார். “ஆம்! தவளைக்குரல்களேதான்!”
அவர்களும் நிமிர்ந்து அப்போதுதான் அதை கேட்டனர். பிரபவர் முகம் மலர்ந்து எழுந்து சாளரத்தின் வழியே நோக்கி “இங்கு எத்தனை தவளைகள் இருக்கின்றன!” என்றார். “இவ்வளவு ஒலி எழுப்ப வேண்டுமென்றால் இங்குள்ள மக்களைவிட அதிகம் தொண்டைகள் இங்கிருக்க வேண்டும்.” கருவூலச் சிற்றமைச்சர் பாரிப்ளவர் “அவை மழை மழை என்று கூவுகின்றன. விண்வாழும் தேவர்கள் மழையை அளிப்பதே அவற்றுக்காகத்தான். அவைபெறும் மழையில்தான் வையம் விடாய் தீர்க்கிறது என்கிறார்கள்” என்றார்.
பிரபவர் “ஓசை வலுக்கிறதா இல்லை அவ்வாறு நமக்குத் தோன்றுகிறதா?” என்றார். “வலுக்கிறது” என்றான் ஏவலன். “இல்லை, அலையலையென எழுந்தபடியேதான் இருக்கும்” என்றார் பிரபவர். “இன்றிரவே மழை வந்துவிடுமா?” என்றார் கனகர். “மாலையில் இருள்கவியும் தருணம் வரை வானில் முகில்கள் இல்லை.” “காற்றரசன் தன் புரவிகளை அவிழ்த்துவிட்டான் என்றால் முகில்களை இழுத்துக் கொண்டு நிரப்பிவிடும் அவை” என்றார் முதியகாவலர்தலைவர் கருடர்.
“ஆனால் நகரில் ஓர் இலைகூட அசையவில்லை. பலநாட்களாக இங்கு எந்தச் சுவடிக்கு மேலும் எடை வைப்பதில்லை. இதோ இந்தத் திரைச்சீலை அசைந்து நான் பார்த்தே நெடுநாட்களாகிறது” என்றார் சிற்றமைச்சர் பவமானர். மிகத்தொலைவில் உறுமலோசை ஒன்று கேட்டது. “இடியா?” என்றபடி கனகர் வாசலை நோக்கி சென்றார். “தெற்குக்கோட்டையில் களிறு உறுமுவதுபோல் உள்ளது” என்றார் பிரபவர். சாளரம் வெண்ணிற ஒளிகொண்டு அதிர்ந்தடங்கியது. “மின்னல்!” என்று சொல்லி கனகர் திரும்பியபோது அறைமுழுக்க ஒளியில் அதிர்ந்து அணைந்தது.
“ஆம், மின்னல்!” என்றபடி பிறர் எழுந்து சாளரத்தருகே வந்து வெளியே பார்த்தனர். அனைவரையும் திடுக்கிடச் செய்தபடி தலைக்கு மிக அருகே இடி வெடித்து எதிரொலிகளென அதிர்ந்து அவர்களைச் சூழ்ந்தது. “இந்திரன் கட்டியம் உரைத்துவிட்டான்!” என்றார் கனகர். மீண்டும் மின்னலில் அறை துடித்தது. அஸ்தினபுரியின் தெருக்கள் அனைத்திலுமிருந்து மக்கள் எழுப்பிய கூக்குரல் இருளில் முழக்கமென சூழ்ந்தது. பிரபவர் எட்டிப்பார்த்து “சாலைகளை நிறைத்துப் படுத்திருந்தவர் அனைவரும் பாய்களை சுருட்டிக்கொண்டு திண்ணைக்குச் செல்கிறார்கள்” என்றார். “ஏன் ஓடுகிறார்கள்? இந்த மழையில் அவர்கள் நனையலாமே? உடலில் ஊறிய உப்பையாவது கழுவமுடியும்” என்றார் கனகர்.
இடியும் மின்னலுமென மாறி மாறி அஸ்தினபுரி அதிர்ந்து கொண்டிருந்தது. துடித்து அணைந்த மின்னலின் ஒளியில் நகரின் தெருக்களெங்கும் மக்கள் கூச்சலிட்டபடியும் கூவி ஒருவரையொருவர் அழைத்தபடியும் அலைபாய்வது தெரிந்தது. பலர் கைகளை விரித்து நடனமிட்டனர். ஆடையைச் சுழற்றி விண்ணுக்கே எறிந்து பற்றி கூச்சலிட்டனர். சிலர் உப்பரிகைகளிலும் வீட்டுக்கூரைகளிலும் நின்று கைவீசி ஆர்ப்பரித்தனர். “இந்நகரம் இதுவரை இத்தனை பேருவகையுடன் மழையை எதிர்கொண்டதில்லை” என்றார் கனகர். அவரது இறுதிச்சொல் முற்றிலும் மறையும்படி செவி அடைபட பேரிடித்தொடர் எழுந்தது. மின்னல் எரிந்தணைய அவர் செவிமூடினார். இடியோசையுடன் அடுத்த மின்னல் விழிகளைப் பறித்து மறைந்தது.
ஒற்றை எண்ணத்தால் அள்ளித்தூக்கப்பட்டவைபோல அனைத்து திரைச்சீலைகளும் எழுந்து படபடவென உதறிக்கொண்டன. “மாளிகையே சிறகடித்தெழும் பறவைபோல் தோன்றுகிறது” என்றார் ஒருவர். சாளரங்களிலிருந்து கிழிந்து பறந்தகல்பவை போல திரைச்சீலைகள் துடிதுடித்தன. அரண்மனையின் அனைத்துக் கதவுகளும் சுவர்களில் அறைந்து ஒலியெழுப்பின. நூற்றுக்கணக்கான தாழ்ச்சங்கிலிகள் குலுங்கின. கீல்கள் முனகின. எங்கெங்கோ உலோகப்பொருள்கள் உருண்டோடின. எவரோ எவரையோ கூவி அழைத்தனர். தெற்குவாயில் பகுதியில் களிறுகள் பிளிறின. முகமுற்றத்திலிருந்து புரவிகள் கனைக்கத்தொடங்கின.
அமைச்சர் அனைத்து சுவடிகளையும் அள்ளி மரப்பெட்டிகளில் இட்டு மூடினர். அதற்குள் மேலாடைகள் பறந்து சுவரில் முட்டி வழுக்கிச் சரிந்தன. “இடையாடைகளை பற்றிக் கொள்ளுங்கள்” என்று கனகர் சிரித்தபடி கூவினார். அறைக்குள் பெருகிவந்து சாளரங்களினூடாக பீறிட்டகன்றது குளிர்காற்று. சற்று நேரத்திலேயே உடல் குளிர்ந்து மயிர்ப்புள்ளிகள் நிறைந்து நடுங்கத்தொடங்கியது. “இத்தனை விரைவில் குளிரும் என்று எவர் எண்ணியிருப்பார்கள்?” என்றார் பிரபவர். கனகர் எழுந்து அறைவாயிலைக் கடக்கையில் அவரது குடுமியை காற்றே அவிழ்த்து பறக்கவிட்டது. அவர் திரும்பி உரக்க “குடுமிஅவிழ்க்கும் காற்று இதுதான்” என்றார்.
“எங்கு செல்கிறீர்கள்?” என்றார் சிற்றமைச்சர். “மழைத்துளியை ஏந்த விழைகிறேன். மழையை இத்தருணத்திலென பிறிது எப்போதும் நான் விழைந்ததில்லை” என்றபடி கனகர் இறங்கி முற்றத்தை நோக்கி சென்றார். அங்கு நின்றிருந்த புரவிகளின் குஞ்சி மயிர்கள் அலைய வால்களும் எழுந்து பறந்துகொண்டிருந்தன. அனைத்துத் தேர்களின் திரைச்சீலைகளும் பிடுங்கப்பட்டு கோட்டை மடிப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்தன. எங்கிருந்தென்றறியாமல் ஒடிந்த கிளைகளும் சருகுகளும் கிளைகளும் முற்றமெங்கும் பரந்து விழுந்து சுழன்று ஆங்காங்கே ஒன்றாகிக் குவிந்தன.
எங்கோ மண்மணம் எழுவதை கனகர் உணர்ந்தார். ஆவியெழ அவித்து அள்ளிப்பரப்பிய புதுநெல்லின் மணம். இளமையில் அவரை பித்தெழச்செய்த மணம். சாலைகளில் சில புரவிகள் கட்டின்றி கனைத்தபடி ஓட சிரித்தபடி அவற்றை துரத்திச் சென்றனர் வீரர்கள். அவர்மேல் குளிர்ந்த பித்தளைக் குமிழ்களை விசையுடன் அள்ளி எறிந்ததுபோல் மழைத்துளிகளின் அறைவை உணர்ந்தார். சிலிர்த்து உடல்குறுக்கி கூவிச்சிரித்தபடி திரும்பி இருகைகளையும் விரித்தார். எண்ணி சிலகணங்களுக்குள் அவர் உடல் நனைந்து தாடியும் தலைமயிரும் சொட்டத்தொடங்கின. மழை அஸ்தினபுரியை முழுமையாக மூடிக்கொண்டது. அனைத்து ஒலிகளையும் அதன் பெருமுழக்கம் தன்னில் அடக்கியது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அதிர்ந்து துடித்து அணைந்தன. இடியோசை பல்லாயிரம் மெத்தைகளால் போர்த்தப்பட்டதுபோல் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது. கூரைவிளிம்புகள் விழுதிறங்கி வேர்கொண்டன. சாலைகளிலெல்லாம் செந்நிற நாகங்களென நீர் நெளிந்து விரைந்தோடியது. கனகர் தளர்ந்து மேலேறி முகப்பில் நின்றபடி சொல்லற்று மழையை நோக்கிக்கொண்டிருந்தார்.
[ 4 ]
இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளைய யாதவரும் பீமனும் கிளம்பியபோது நகரம் மழை சரித்த பல்லாயிரம் பட்டுத்திரைகளால் மூடப்பட்டிருந்தது. நகரின் அரசப்பெருஞ்சாலையில் அவர்களுடைய தேர் சென்றதை அதற்கு முன்னும் பின்னும் சென்ற தேர்கள்கூட அறியவில்லை. யமுனை முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. அதற்குள் நின்றிருந்த கலங்களின் விளக்கொளிகள் மட்டும் நீர்த்திரைமீது கலங்கி அசைந்து கொண்டிருந்தன. மழையில் நனைந்தபடியே தேரிலிருந்து இறங்கி சிறிய படகில் ஏறிக்கொண்டதும் இளைய யாதவர் அது கிளம்பலாம் என்று கையசைவால் ஆணையிட்டார். அர்ஜுனன் தலைகுனிந்தபடி அவரைத் தொடர்ந்து சென்று ஏற பீமன் தோள்களில் விழுந்து சிதறிய நீர்த்துளிகளுடன் மெல்ல நடந்து படகில் ஏறினான்.
இளைய யாதவர் மரக்கூரையிட்ட சிற்றறைக்குள் சென்று ஈரமான ஆடைகளை களையத்தொடங்கினார். அணுக்க ஏவலர் மாற்றாடையை அவருக்கு அணிவிக்க அவர் எதையோ எண்ணி புன்னகைப்பதுபோல தெரிந்தது. அர்ஜுனன் அவர் அருகே சென்று நின்றதும் அவன் ஆடைகளை அணுக்கர் களைந்தனர். அவன் கைகளைத் தூக்கி எதையோ எண்ணி கவலைகொண்டதுபோல நின்றான்.
பீமன் மழையின் அறைதலை தோள்களிலும் நெஞ்சிலும் வாங்கியபடி படகின் விளிம்பில் கால்தூக்கி வைத்து, மெல்ல அசைந்து நீர்த்திரைக்குள் ஒடுங்கி மறைந்த நகரையும் துறைமுகப்பையும் நோக்கிக் கொண்டிருந்தான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கே மஞ்சங்களில் அமர்ந்து மரவுரிச்சால்வையை போர்த்தியபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். பீமன் தன்னைச் சூழ்ந்திருந்த நீர்வெளியை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தான்.
படகு மழை நிறைந்த வானத்தில் ஒரு தனிப்பறவைபோல் சென்றுகொண்டிருந்தது. நீர்ச்சரிவு வழியாகவே வானிலிருந்து இருட்டு இறங்கி வந்து சூழ்ந்தது. யமுனையின் இருகரைகளிலும் எரிந்த விளக்குகள் மெல்லிய செந்தீற்றல்களாக இருளுக்குள் தத்தளித்தன. அலையே இன்றி படகையும் கூரையையும் சீராக அறைந்துகொண்டிருந்த மழையின் முழக்கம் செவிகளுக்குப் பழகி அமைதியின் ஒரு பகுதியாக மாறியது. பொன்வண்டு போல விளக்குகள் ஒளிவிட ஒரு கலம் மிகஅருகே கடந்துசென்றது. கூம்பிய பூவரசுமலர்போல அதன் பாய்கள் சுருங்கி கொடிமரத்தில் ஒண்டியிருந்தன.
பீமன் தன் அறைக்கு வந்து ஆடை மாற்றியபோது பெரிய மரக்குடுவையில் கொதிக்கும் இன்கூழை ஏவலன் அளித்தான். அதை இருகைகளாலும் பற்றியபடி தலைகுனிந்து அமர்ந்து அவன் அருந்தியபோது கீழிருந்து மேலே வந்த இளைய யாதவர் “மெல்லவே போகமுடியும் பாண்டவரே. நாம் நாளைப் புலரியில் மகதத்தை அடைந்துவிடுவோம்” என்றார். “என்னை கலிங்க நாட்டு வணிகன் என்றும் உங்களை எனது பீதர் நாட்டு அடிமை என்றும் சொல்லும்படி ஆணையிட்டிருக்கிறேன். பார்த்தன் என் வில்லவர். கலிங்கத்தில் என்னைப்போல் கரியவர்கள் மிகுதி. அவர்களுக்கு எடைதூக்கும் ஆற்றல் கொண்ட பீதர்நாட்டு அடிமைகளும் காவல்வில்லவர்களும் உண்டு.”
பீமன் விழிகளை தூக்கினான். இளைய யாதவர் புன்னகைத்தபடி “பார்ப்போம்” என்றார். அத்தருணத்தை எளிதாக்கும் பேச்சு என அவனுக்குத் தெரிந்தாலும் அப்பேச்சு அவனை எளிதாக்கியது. பார்த்தன் பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “துயில்வோம்… நாளை நாம் ஆடலுக்குள் இறங்குகிறோம்” என்றார் இளைய யாதவர். மூவரும் படகறைக்குள் இட்ட தோல்பரப்பிய சேக்கைகளில் படுத்தனர்.
இளைய யாதவர் “முன்பு ஆரியவர்த்தம் எங்கும் மழைவிழா பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது என்று நூல்கள் காட்டுகின்றன. இப்போது மழை குறைவான பாலைப்பகுதிகளில் மட்டுமே இவ்விழவு உள்ளது. இது உண்மையில் நாகர்களின் விழவு. இடியற்ற மழையை அவர்கள் விண்ணருள் என கொண்டாடுகிறார்கள். மகதத்தில் நின்றுபோன இவ்விழவை ஜராசந்தர் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் கொண்டு வந்துள்ளார்” என்றார்.
பீமன் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். அச்சொற்களுக்குப்பின் இளைய யாதவரின் உள்ளம் இல்லை என அவன் அறிந்திருந்தான். தொடர்பற்ற, மேலோட்டமான உரையாடலைப்போல உள்ளத்தை ஒளிக்கும் முறை பிறிதொன்றில்லை என்று அறிந்தவர் அவர். அன்று காலைதான் அவனுக்கு இளைய யாதவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் அவனை மகதத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்று செய்தியோடு வந்த சாத்யகி சொன்னான். “மகதத்திற்கா? படைகளுடனா?” என்று சிறிய வியப்புடனும் உவகையுடனும் அவன் கேட்டான். “இல்லை, நீங்கள் மூவரும் தனியாகவே செல்கிறீர்கள். நானும் வரலாமா என்று அரசரிடம் கேட்டேன். மாற்றுருவில் நீங்கள் மூவர் மட்டும் செல்வதாக சொன்னார்” என்றான் சாத்யகி.
“மகதத்திற்கு என்றால்…?” என்று பீமன் தாழ்ந்த உள்ளத்துடன் கேட்டான். “ராஜகிருஹத்திற்கு” என்றான் சாத்யகி. “தூதாகவா?” என்றான் பீமன். “பாண்டவரே, யாதவ அரசரின் உள்ளத்திலிருப்பது என்னவென்று என்னால் சொல்லமுடியாது. எவரும் அவரை முழுதறிய முடியாதென்றும் நீங்கள் அறிவீர்கள்” என்றான் சாத்யகி. “இப்போதைக்கு ஜராசந்தரிடம் ஒரு நேருக்கு நேர் சந்திப்பும், அரசமுறைச் சொல்லாடலும்தான் அவர் உள்ளத்தில் உள்ளது என்று நான் உய்த்துணர்கிறேன்.”
“அதனால் எப்பயனும் இல்லை” என்று பீமன் கையை வீசினான். “மகதமோ இந்திரப்பிரஸ்தமோ இரண்டில் ஒன்றே இப்புவியில் நீடிக்கமுடியும் என்பதை அவனும் அறிவான் நாமும் அறிவோம்.” சாத்யகி “இச்சொற்கள் எதையும் இளைய யாதவரிடம் சொல்லமுடியாது. அவர் புன்னகையுடன் ஆணையிட்டே பழகியவர்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்தவன்போல் பீமன் அவன் விழிகளை பார்த்தான். பின்பு “ஆம், இதுவரை அவர் எனது கருத்துகளை கேட்டதில்லை. நாங்கள் விவாதித்ததில்லை. ஆணைகளை மட்டுமே பிறப்பிக்கிறார். என்னிடம் மட்டுமல்ல, இங்குள்ள அனைவரிடமும்” என்றான். சாத்யகி சிரித்து “கைக்குழந்தை ஆணைகளை மட்டுமே பிறப்பிக்கிறது, பார்த்திருப்பீர்கள்” என்றான். பீமன் வாய்விட்டு உரக்க சிரித்தான்.
அவன் இளைய யாதவரின் அரண்மனைக்குச் சென்றபோது பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் அவர் கிளம்பி நின்றிருப்பதை கண்டான். “கிளம்புங்கள் பாண்டவரே, தேர் சித்தமாக உள்ளது” என்றார். “நான் எவரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை” என்றான் பீமன். “செய்திகளை நான் அரசருக்கும் அரசிக்கும் அறிவித்துவிட்டேன்” என்றார் இளைய யாதவர். அந்தக் கூடத்தில் இருந்தே நடந்து சென்று அவருடன் தேரிலேறினான். அத்தேரில் பார்த்தன் இருப்பதை அதன்பின்னரே கண்டான். படித்துறைவரை அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.
“நாம் குருஷேத்ரத்தை கடந்துகொண்டிருக்கிறோம். குருஜாங்கலம் வழியாக பத்மசரஸின் சோலையை தாண்டுவோம். காளகூட மலையும் ஏகபர்வதமும் கடந்தால் கண்டகி நதி. அதற்கப்பால் மகாசோணமும் சதாநீரையும் சரயூவும் ஓடிக் கிழிக்கும் நிலம். கோசலத்தையும் மிதிலையையும் கடந்து சர்மாவதியின் முகப்பை அடைந்தால் கோரத மலை” என்றார் இளைய யாதவர். “கோரதமே மகதத்தின் எல்லை. அதை கருக்கிருட்டில் கடப்போம் என நினைக்கிறேன்.” பீமன் அந்தப் பயணத்தை தன் அகவிழிகளால் கண்டான். அனைத்து மலைகளும் ஆறுகளும் இருளில் மழையால் அறைபட்டு ஓலமிட்டுக்கொண்டிருந்தன.
இளைய யாதவர் புரண்டுபடுத்தபடி “நாம் ஒரு சிறந்த விழவுகூடி நெடுநாட்களாகிறது. இங்குள்ள விழவுகள் அனைத்தும் வேள்விகள், அரசமுறை நிகழ்வுகள். உண்மையான விழவென்பது பருவநிலையை கொண்டாடுவதாகவே இருக்கும். மழையை, இளவேனிலை… தென்னகத்தில் முதுவேனிலில் சுட்டெரிக்கும் அனல்மழையைக்கூட விழவாக கொண்டாடுகிறார்கள்” என்றார். மிக இயல்பாக ஆரியவர்த்தத்தின் விழவுகளைக் குறித்து பேசிக்கொண்டே சென்றார்.
“இளவேனிலின் முதல் புல்லை விழவெடுத்துக் கொண்டாடுகிறார்கள் யாதவர். மீனவர்கள் மழைக்காலம் முடிந்துவரும் சேற்றுப்படலத்தை கடலன்னை விடாய் கொள்வதென்று கருதி மலரும் அரிசியும் வீசி வணங்கி வழிபடுகிறார்கள். முதல் மீன் அன்னைக்கே திருப்பி படைக்கப்படுகிறது. இமயச்சரிவுகளில் முதல் வெண்பனி இறங்குகையில் விழவு எழுகிறது. அது விண்ணாளும் அன்னையொருத்தியின் முந்தானையின் சரிவு என்கிறார்கள் கவிஞர்கள்” என்றார். “அத்தனை விழவுகளிலும் ஆடவேண்டும் என்று எண்ணிக்கொள்வேன், பாண்டவரே.”
அவரே சிரித்துக்கொண்டு “ஒரு விழவிலிருந்து பிறிதொன்றுக்கென சென்றுகொண்டே இருக்கவேண்டும். பாரதவர்ஷம் முழுக்க ஒருவன் அலைவான் என்றால் ஒவ்வொரு நாளும் விழவிலேயே வாழ்ந்து முதிர்ந்து மறைய முடியும்” என்றார். பீமன் அதை தன் கற்பனையில் எண்ணிப்பார்த்தான். அறைக்குள் எரிந்த சிற்றகல் ஒளியில் அவன் புன்னகையைப் பார்த்த இளைய யாதவர் தலை தூக்கி அதை கையில் தாங்கியபடி “எத்தனை இனியது அது, அல்லவா? விழவுகளில் நம்மைச்சுற்றி மானுடர் இருக்கிறார்கள், ஆனால் உறவுகள் என்று ஏதுமில்லை. காற்றில் கொந்தளிக்கும் இலைப்பரப்புகள்போல் முகங்கள். அவை அனைத்தும் உவகை நிறைந்திருக்கும். அவ்வுவகையின் அடிப்படையே அப்போது உறவுகள் என்று ஏதுமில்லை என்பதுதானா? எவருக்கும் நாம் கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதனால்தானா விழவுகளில் நாம் நிலையழிந்து கொண்டாடுகிறோம்?” என்றார்.
பீமன் “விழவு சிலநாட்களே. அதற்கென்று ஆண்டு முழுக்க ஈட்டுகிறோம்” என்றான். “அவ்வாறில்லை” என்று மீண்டும் மல்லாந்து படுத்தபடி இளைய யாதவர் சொன்னார். “ஈட்டுபவர்கள் ஆணவத்தை சேர்க்கிறார்கள். ஆணவம் தனிமையை அளிக்கிறது. அவர்களால் கரைந்து கொண்டாட முடியாது. விழவிலாடுபவர் சிறுவரும் மகளிருமே. வணிகர்கள் விழாவில் ஆடிப் பார்த்திருக்கிறீர்களா?” பீமன் “ஆம்” என்றான். “நான் காட்டில் அரக்க குடிகளையும் அசுர குடிகளையும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் விழவென்று வாழ்ந்து முடிப்பவர்கள். அவர்கள் ஈட்டுவதில்லை, எனவே செலவழிப்பதும் இல்லை.”
“அவர்களிடம் நாளை இல்லை. எனவே அவர்களால் இன்றில் திளைக்கமுடிகிறது. விழவென்பது என்ன? இன்று என பக்கவாட்டில் திறந்து முடிவின்மைகொள்ளும் காலம் அல்லவா?” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “பழங்குடிகளிடம் களஞ்சியங்கள் இல்லை. மாளிகைகள் இல்லை. எனவே கோட்டைகள் இல்லை. அவர்கள் காத்துக்கொள்ள ஏதுமில்லை.” பீமன் “ஆம், ஆகவேதான் நாம் அவர்களைச் சூழ்ந்து கைப்பற்றி, கைத்தளையும் கால்தளையும் இட்டு இழுத்துக் கொண்டுவருகிறோம். அவர்களின் நாக்கை இழுத்து அறுத்து வீசிவிட்டு நம் கொட்டடிகளிலும் மரக்கலங்களிலும் துடுப்பு அறைகளிலும் அடிமைகளாக்கி வைக்கிறோம்” என்றான். இதழ்கோணச் சிரித்தபடி “இன்றில் வாழ்பவர்கள்போல சிறந்த அடிமைகள் எவர்? நாளை அற்றவர்கள் விடுதலையை கனவுகாண்பதும் இல்லை” என்றான்.
இளைய யாதவர் “அப்படியென்றால் மானுடர் சொல்தொகுத்து இங்கு உருவாக்கி இருக்கும் பண்பாடென்பதே விழவுக்கு எதிரானது என்று கொள்ளலாமா? பண்பாட்டில் இருந்து திமிறி விடுபடுவதனால்தான் விழவுகளில் இத்தனை களியாட்டு உள்ளதா?” என்றார். பீமன் “நாம் நாளை மகதத்தின் விழவுக்குச் சென்று இறங்கப்போகிறோம் அல்லவா?” என்றான். “ஆம்” என்றார் இளைய யாதவர். “இத்தனை சொல்எண்ணி இரவை நிறைப்போம் என்றால் அவ்விழவில் நம்மால் களியாட முடியாது” என்றான் பீமன். “ஆம், உண்மை” என்றபடி இளைய யாதவர் கைகளை நீட்டினார். “அங்கே நாளை மற்போரில் நீங்கள் மகதரை கொல்லப்போகிறீர்கள்.”
“யாரை?” என அறியாமல் கேட்டு உடனே பீமன் திகைத்து எழுந்தமர்ந்தான். “என்ன சொல்கிறீர்கள் யாதவரே?” இளைய யாதவர் “அதுவும் ஒரு போரே. அதற்கென ஓர் முறைமை உள்ளபோது ஏன் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாகாது?” என்றார். அவர் அதுவரை சொன்ன அனைத்துச்சொற்களும் அதன்பொருட்டே என்று உணர்ந்து பீமன் மெல்லிய நடுக்கத்துடன் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “அது எளிதல்ல, யாதவரே” என்றான்.
“ஆம்” என்றபடி யாதவர் கால்களை தளர்த்தி நீட்டினார். அவர் ஏதோ சொல்லப்போகிறார் என்று பீமன் எதிர்பார்க்க அவரிடமிருந்து சீரான மூச்சொலி வரத்தொடங்கியது. அர்ஜுனன் துயின்றுவிட்டானா என்று பீமன் எழுந்து தலைதூக்கி நோக்கினான். அவன் கண்மூடிக்கிடந்தாலும் துயிலவில்லை என்று தெரிந்தது. இளைய யாதவரின் இரு கைகளும் இருபக்கத்தில் விலகிப் படிய, கால்கள் மலர்ந்து மலரிதழ்கள் போல் இருபக்கமும் தளர, சிறு குழந்தைகளுக்கே உரிய சீரான மூச்சுடன் அவர் துயின்று கொண்டிருந்தார். முகம் உவகை கொண்டு மலர்ந்து அத்தசைவிரிவை அப்படியே நிலைக்கவைத்ததுபோல் இருந்தது.
இசை கேட்டு கனவில் ஆழ்ந்த கந்தர்வனின் ஓவியம் போல. அல்லது அருள்புரிய கை மலர்ந்து நிற்கும் விண்ணளந்தோனின் கருவறைச்சிலை போல. அகல்விளக்கின் ஒளியில் ஆடுவதுபோலத் தெரிந்த அம்முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். நெற்றி வளைவில், மூக்கின் கூர்மையில், கன்னங்களில், தோளில் எங்கும் உடற்செதுக்கின் முழுமை என்பது இருக்கவில்லை. ஒவ்வொன்றிலும் ஒரு சிறு குறை, ஒரு வளைவு. ஆம், இவர் யாதவக்குடிகள் கொண்டாடுவதுபோல தெய்வம் அல்ல. மானுடரே. ஆனால் அவை இணைந்து உருவான உடல் பிழையற்ற முழுமை கொண்டிருந்தது. அவ்வாறன்றி பிறிது அமைய முடியாது என்பதுபோல அங்கே கிடந்தது.
நோக்கியிருக்கவே அவர் இளமை கொள்வதுபோல் தோன்றியது. அங்கு படுத்திருப்பவன் நகர் அமைத்து முடிசூடியவன் அல்ல. அரசுகளை வைத்து பகடையாடுபவன் அல்ல. பெண்டிருடன் களியாடி, இளைஞருடன் விழவாடி திரியும் இளைய மைந்தன். அத்தோற்றத்திலேயே அவன் காலத்தை கடந்து செல்வான். தான் நோக்கும்போது அவனும் தன்னை நோக்கிக்கொண்டிருப்பதாக ஏன் தோன்றுகிறதென்று பீமனின் உள்ளத்தில் எழுந்த ஐயம் இயல்பாக கண்களைத்திருப்பி அவன் தலையில் சூடிய பீலியின் விழியை நோக்கியபோது தெளிந்தது.
அவ்விழி அவனை நோக்கிக் கொண்டிருந்தது. உன்னை அறிவேன் என்பது போல். அவன் கண்களை மூடியபோது உள்ளே மேலும் தெளிவாக அவ்விழியை கண்டான். ஒற்றை விழியென்பது நிகரற்ற கூர்மை கொண்டது. அசைவற்ற, விலக்கமற்ற நோக்கு. அதன் நிழலில் படுத்து தான் துயின்று கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது உடலைச்சுருட்டி இளவெம்மை நிறைந்த தோல் சேக்கையில் ஒண்டி கண்வளரும் சிறுகுழவி போல.
[ 5 ]
காலையில் கிரிவிரஜத்தின் படித்துறையை படகு சென்றணைந்தது. புலரியின் முதற்பறவைக்குரல் எழுந்தபோது இளைய யாதவர் எழுந்து படகிலேயே நீராடி வெண்ணிற ஆடை அணிந்து இடையில் மரவுரிக்கச்சை கட்டி சித்தமாகி வந்து பீமனையும் அர்ஜுனனையும் எழுப்பினார். அவர் வரும் ஒலியிலேயே எழுந்து கண்களை மூடியபடி “வாழ்த்துகிறேன், யாதவரே” என்றான் அர்ஜுனன். கைகளைக் கூப்பியபடியே கண்களைத்திறந்து அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான்.
“மல்லரை எழுப்பு, பார்த்தா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பீமனின் கால்களைத்தட்டி “மூத்தவரே, கிரிவிரஜம் நெருங்குகிறது” என்றான். மூன்றாவது உசுப்பலில் நினைவடைந்து “யார்?” என்றபடி கண்களைத் திறந்த பீமன் படகின் ஆட்டத்தை உணர்ந்ததும் எழுந்தமர்ந்து ஆடையை சீரமைத்தபடி கைகளை விரித்து சோம்பல் முறித்தான். “புலரி இன்னும் அணுகவில்லையே?” என்று சாளரத்தைப் பார்த்தபடி கேட்டான். “மழை சற்று விட்டிருக்கிறது. நாம் நகர் நுழைவதற்குரிய தருணம்” என்றார் இளைய யாதவர். “மேலும் நாம் ஸ்நாதக பிராமணர்களின் தோற்றத்தில் நகர் நுழையலாம் என்றிருக்கிறோம். இங்கே அவர்கள் கூட்டம்கூட்டமாக சென்றுகொண்டிருப்பதை காண்கிறேன். அவர்கள் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து தங்கள் வைதீகக்கடன்களை முடிக்க வேண்டுமென்று நெறியுள்ளது.”
“ஸ்நாதக பிராமணர்கள் குறைவாக உணவுண்ணவேண்டும் என்று நெறியில்லையல்லவா?” என்றான் பீமன். சிரித்தபடி “பிராமணர்கள் குறைவாக உணவுண்ணவேண்டும் என்ற நெறி பாரதவர்ஷத்தில் எங்குமில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். அவர்களின் நகையாட்டில் அர்ஜுனன் கலந்துகொள்ளவில்லை. “இளைய பாண்டவன் மகதனை எண்ணிக்கொண்டிருக்கிறான்” என்றார் இளைய யாதவர். “அஞ்சுகிறானா?” என்றான் பீமன். “அவனை நான் கொல்வேன்.” அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “சற்றேனும் அறமீறல் இன்றி வெல்லமுடியாது என பார்த்தன் எண்ணுகிறான்” என்றார் இளைய யாதவர். பீமன் “ஆம், அப்படித்தான் எனக்கும் படுகிறது. ஆனால் அவனுக்கும் அறத்திற்கும் என்ன தொடர்பு?” என்றான்.
அவர்கள் உடைமாற்றி படகின் விளிம்பிற்கு வந்தனர். ராஜகிருஹத்தின் வணிகப்படகுகளுக்கான துறைமேடை அவ்வேளையிலேயே செறிந்த தலைகளும், அப்பரப்பிற்கு மேலெழுந்து சுழன்ற துலாக்களுமாக அசைவுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தது. “மழை தொடங்கிய பின்னரும் இங்கு வணிகம் குறையவில்லை” என்றான் பீமன். “மழை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. அதற்குள் கலமிறக்கிவிடலாம் என்று எண்ணிக் கிளம்பியவர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் துறைகளில் கலங்கள் நனைந்த பறவைகள்போல் சிறகொதுக்கி ஒதுங்கிவிடும்” என்று இளைய யாதவர் சொன்னார்.
அவர்கள் துறைமேடையில் இறங்கி படைவீரர்களின் வாழ்த்துகளைப் பெற்றபடி நடந்து நகருக்குள் நுழைந்தனர். மகதத்தின் தலைநகரம் மூன்று நகர்களின் கூட்டு என்று பீமன் அறிந்திருந்தான். கிரிவிரஜம் என்று அழைக்கப்பட்ட மூன்று சிறிய குன்றுகளால் ஆன பகுதி கங்கையின் ஓரமாக இருந்தது. அக்குன்றுகளின் நடுவே கங்கைநீர் உள்ளே புகும் வளைவுகளின் இருபுறமும் படகுத்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு படகுத்துறை முழுமையாகவே அரசகுடியினர் அரசியல் செயல்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு படகுத்துறை பெருங்கலங்களுக்கும் பிறிதொன்று சிறுகலங்களுக்குமென அமைந்திருந்தது.
கிரிவிரஜத்துக்குள் நுழைந்த மூன்று அரசப்பாதைகள் அங்கிருந்த ஏழு அங்காடி நிரைகளைக் கடந்து அமைச்சர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் உரிய மாளிகைகள் அமைந்த நான்கு சாலைவளையங்களைக் கடந்து ராஜகிருஹம் என்று அழைக்கப்பட்ட உள்கோட்டைக்குள் நுழைந்தன. அதற்குள் மகதத்தின் தொன்மையான பன்னிருகுடிகளின் தலைவர்களும், வைதிகர்களும், அரசகுடியினரும் மட்டுமே இல்லம் கொண்டிருந்தனர். அரண்மனையின் உள்கோட்டைக்குள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரண்மனைத் தொகுதிகளில் ஒன்றாகிய மாகதம் நின்றிருந்தது.
அரண்மனைச்செண்டின் மையத்தில் பன்னிரு அடுக்குகள் கொண்ட மரத்தாலான மாளிகை ஜராசந்தனுடையது. அதன் இருபுறமும் எட்டு கைகளைப்போல் விரிந்துசென்ற மாளிகை நிரைகளில் அரசு அலுவலகங்களும் பேரவைகளும் குடியவைகளும் கருவூலங்களும் அறமன்றுகளும் இருந்தன. ஜராசந்தனின் அரண்மனை முன்பக்கம் மிகப்பெரிய பிறைவடிவச் செண்டுவெளியும் பின்பக்கம் நீள்சதுர வடிவான இளஞ்சோலையும் கொண்டிருந்தது.
ராஜகிருஹத்திற்கு அப்பால் குறுங்காடொன்று பேணப்பட்டது. அதற்குள் செல்லும் தேர்ச்சாலைகள் இரண்டு அங்கிருந்த சைத்யகம் என்னும் சிறிய மலையை சென்றடைந்தன. உயரமற்ற சாலமரங்களும் பலாசமரங்களும் கிளை பின்னிச் செறிந்து அந்த மலையே மகதர்களின் தொல்குடி இருந்த இடமென்று அழைக்கப்பட்டது. ஏழு காவல்கோட்டங்களால் அது காக்கப்பட்டது. அப்பால் அரசமுறையினர் அன்றி பிறர் செல்ல ஒப்புதல் இருக்கவில்லை.
நகரை மூடி பெய்து கொண்டிருந்த மழையின் ஊடாக மூவரும் நடந்தனர். நீர்த்திரையே அவர்களுக்கு மறைவென ஆயிற்று. பீமனின் பெருந்தோள்களைக்கூட எவரும் காணவில்லை. மிக அண்மையில் அவனைக் கண்ட சிலர் திகைத்து விழிதூக்கி சொல்லெடுக்க வாய்திறப்பதற்குள் அவன் நீருக்குள் மறைந்தான். அவர்கள் நகருக்குள் விழவு காண இறங்கி மக்களுக்குள் கலந்துள்ள கந்தர்வர்களோ தேவர்களோ என்று எண்ணி மயங்கினார்கள்.
நகர்மக்களில் அப்போது கள்ளுண்ணாதவர்கள் சிலரே. மகதத்தின் மழைவிழா தொடங்கி மூன்றாவது நாளாகியிருந்தது. பன்னிரண்டாவது நாள் விழவு முடிவது வரை நகரின் மக்கள் களிமயக்கில் காலமோ இடமோ இன்றி எங்கும் நிறைந்திருப்பார்கள். எங்கு விழித்தெழுகிறார்கள் என்றோ எங்கு விழுகிறார்கள் என்றோ எங்கு மீண்டும் துயில்கிறார்கள் என்றோ அவர்கள் அறிந்திருப்பதில்லை. விண்ணுலாவிகளான தெய்வங்கள் ஒவ்வொரு மனிதரையும் மேலே நின்று நோக்கி சுட்டுவிரல் தொட்டு தெரிவு செய்து தங்களை அவர்கள் மேல் பொழிந்துகொள்கின்றனர். பின்பு நிகழ்பவை அத்தெய்வங்களின் களியாட்டு. நுகரப்படுபவை அனைத்தும் அத்தெய்வங்களுக்குரியவை. விழவு முடிந்து சிறகுகொண்ட பட்டாம்பூச்சிபோல கூட்டை உடைத்து அவர்கள் செல்வர். தளர்ந்து விழுந்து கிடக்கும் மக்கள் தங்கள் கனவுகளுக்குள் தெய்வமென்றாகி அவ்விண்ணுலகுக்குச் சென்று அத்தெய்வங்கள் ஆடும் களியாட்டை தாங்கள் ஆடத்தொடங்குவார்கள்.
நகரத்திலுள்ள அனைவருமே பசுநெய்யும் எண்ணையும் அரக்கும் கலந்த பூச்சை உடம்பெங்கும் அணிந்திருந்தனர். அது ஓயாது பெய்து கொண்டிருந்த மழையிலிருந்து தோலுறை என அவர்களை காத்தது. நெய்ப்பூச்சு பெற்ற உடல்கள் மின்ன மக்கள் மழைக்குள் செல்வது நீருள் மீன்களெனத் தோன்றியது. மூவரும் அங்காடிக்குள் புகுந்து கடைநிரைகளுக்குள் சென்றனர். நின்று பெய்த மழைக்குள்ளேயே கடைகளில் பொருட்களை விற்றும் வாங்கியும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் மக்கள். மழைக்குப் பழகிய கடை நாய்கள்கூட அவ்வப்போது உடல் உதறி நீர் சிதறடித்தபடி அவர்களுக்கிடையே வால்குழைத்து உடல் வளைத்து சென்றன. தங்கள் மேல் சொரிந்த மழைத்தாரைகளை உடல்தசைகளை விதிர்த்து உதறியபடி குஞ்சிரோமம் நீர்வழிய கழுத்தில் ஒட்டியிருக்க ஒற்றைக்கால் தூக்கி நின்றிருந்தன புரவிகள்.
அனைத்து அங்காடிகளிலும் காய்கறிகளையும் தேன்புட்டிகளையும் நறுமணச்சாறுகள் கொண்ட மூங்கில் குழாய்களையும், பித்தளையும் வெள்ளியும் கொண்டு சமைத்த அணிகளையும், பலவகை படைக்கலங்களையும் பரப்பி வைத்து “வருக! வருக!” என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர் பீதர் நாட்டு வணிகர். கையெட்டும் தொலைவுக்கொன்றென மதுக்கடைகள் நுரைத்து வழிந்த பெருங்கலங்களுடன் ஈ என மாந்தர் மொய்க்க இரைந்துகொண்டிருந்தன. பீமன் “லேபனங்களுக்கென்று ஒரு கடை” என்றான். “இந்த மழை அவற்றை உடனே கழுவிவிடும். எனவே மீளமீள தேவைப்படுகிறது போலும்” என்றார் இளைய யாதவர்.
பீமன் அக்கடைக்குள் நுழைந்து செம்மஞ்சள் பொடியும், செம்பஞ்சுக் குழம்பும், வெண்சுண்ணமும், மலர்ச்சாறுகளும், புனுகும் சவ்வாதும் கஸ்தூரியும் நிறைந்திருந்த யானங்கள் நடுவே நடந்தான். “மல்லரே, வருக! தங்கள் உடலணியும் நறுமணமொன்று இங்குள்ளது” என்று அங்கு நின்றிருந்த யவனப்பெண் உடல் வளைத்து அழைத்தாள். பீமன் சென்று அவளிடம் குனிந்து பொன்நாணயம் ஒன்றை எடுத்து அவளுக்குமுன் இருந்த பெட்டியில் இட்டான். “பொன்நாணயம்! பொன்நாணயம் கொண்ட ஒரு பிராமணர்!” என்று அவள் கூவினாள். சிரித்தபடி மேலும் யவனப்பெண்கள் பீமனை சூழ்ந்தனர்.
“என்ன நறுமணம் வேண்டும்? தேர்ந்தெடுங்கள், மல்லரே” என்றாள் யவனப்பெண். “இங்குள்ள மிகச்சிறந்த அனைத்து நறுமணங்களும்” என்றான் பீமன். அவள் “அதை நீங்கள் எளிதில் வாங்கிவிடமுடியாதே” என்றாள். அவன் “நான் அவற்றை சூடுவதுண்டு, வாங்குவதில்லை” என்றான். அவர்கள் சிரித்தபடி மஞ்சள் பொடியையும் இளநெய்யையும் கலந்து குழம்பாக்கி அவன்மேல் அள்ளி அடித்தனர். அவன் முகத்திலும் கைகளிலும் தோள்களிலும் வாரிப்பூசி சுவரில் வழிப்பதுபோல தேய்த்தனர். “இங்குள்ள அனைத்து லேபனங்களைப் பூசினாலும் தங்கள் உடலில் இடம் எஞ்சியிருக்கும், மல்லரே” என்றாள் ஒருத்தி.
பெண்கள் உரக்க சிரித்து அவனை சூழ்ந்துகொண்டனர். கீழே சிந்திய விழுதில் வழுக்கி அவன் மேல் விழுந்த ஒருத்தி இருமுறை எழமுயன்று அவன் மடியிலேயே சரிந்தாள். பிறிதொருத்தி நகைத்தபடி அருகில் நின்றவளைப்பிடித்து அவன்மேல் தள்ளினாள். அவன் உடல் அணிந்த லேபனத்தில் பிடி வழுக்கி விழுந்து எழுந்து நின்று மீண்டும் வழுக்கி அவனை அணைத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் அப்பெண்கள் அனைவருமே அவன் உடலில் ஒட்டி வழுக்கி அந்த லேபனங்களை தங்கள் உடல்களில் அணிந்து கொண்டனர். “நறுமணம் எப்படி உள்ளது, வீரரே?” என்றாள் ஒருத்தி. “உணர்கிறேன்” என்றான் பீமன்.
அர்ஜுனன் முதல்முறையாக முகம் மலர்ந்து திரும்பிப் பார்த்து “எந்தப் பெண்ணும் மூத்தவரின் உடலை கடந்து சென்றதே இல்லை. அவர்களின் கனவுகளுக்குள் இருந்து அவர் எழுந்து வருகிறார் என்று தோன்றும்” என்றான். அருகிலிருந்த யவனப்பெண் பாரிஜாத மலர்மாலையொன்றை எடுத்து அவன் கழுத்தில் அணிவித்து “இது உங்களுக்குரியது வில்லவரே” என்றாள். இன்னொருத்தி இளைய யாதவரிடம் மந்தார மலர்மாலையொன்றைக் கொடுத்து “இது உங்களால் மணம் பெறுகிறது கரியவரே” என்றாள். அங்கிருந்த நறுமணத் தைலங்களையும் சாந்துகளையும் அப்பெண்கள் அவர்கள் மேல் பூசினர்.
ஒருத்தி எழுந்து அர்ஜுனனின் தோளைப்பற்றி “சற்று தலைகுனியுங்கள் அந்தணரே” என்றாள். அவன் குடுமியைச் சுழற்றி அதில் செவ்வரளி மாலையை சுற்றிவைத்தாள். “நான் அந்தணன். செந்நிற மலர்கள் எனக்குரியவை அல்ல” என்றான் அர்ஜுனன். “தாங்கள் அரசகுணம் கொண்ட அந்தணர். தோள்களில் அம்புபட்ட தழும்பும் கைகளில் நாண் வடுவும் கொண்ட வேறெந்த அந்தணர் இப்புவியில் இருக்கிறார்கள் என்று அறியேன்” என்றாள். “நன்கு நோக்குகிறாய்” என்றபடி அவன் அவள் இடையில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு இதழ்களில் முத்தமிட்டான்.
அவள் மூச்சு வாங்கியபடி அவன் தோள்களில் கைவைத்து “தாங்கள் பெண்தேர் நெறிக்கு வந்துவிட்டீர்களோ?” என்றாள். “ஸ்நாதகர் கல்விமுடித்து குடியமைக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்றல்லவா அறிந்துள்ளேன்?” “நான் இதோ குடி அமைக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “என்னை தேர்வு செய்யுங்கள், அந்தணரே” என்றாள் ஒரு கரியபெண். “நான் கல்வி முடித்து இங்கு அரசனைக்கண்டு பொன் பெற்றுச் செல்வதற்காக வந்தேன்” என்றான் அர்ஜுனன்.
இளைய யாதவருக்கு அணி செய்த பெண் “என்னவென்று அறிந்திலேன் அந்தணரே, என் தோழி ஒருத்திக்கு அணி செய்யும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது” என்றாள். “உன்முன் பெண்ணென்று நின்றிருக்கிறேன் அமுதே” என்றார் இளைய யாதவர். “ஆண்களுக்கு முன் ஆணென்று நிற்பீரோ?” என்றாள் அவள் கொஞ்சலாக. “போரில் ஆணென்றும் களியாட்டில் பெண்ணென்றும் அன்னையர் முன் குழவியென்றும் ஆவதே அணுக்கத்தின் கலை” என்றார் யாதவர்.
அவள் அவர் கையை தன் கையில் கோத்து காதருகே இதழ் கொண்டுவந்து “மஞ்சத்தில்?” என்றாள். “நாகம்” என்றார். அவள் வாய் பொத்தி நகைத்து “அய்யோ” என்றாள். “இருளில் நாகம். ஒளியில் புள். நீரில் முதலை” என்றார். “நீங்கள் சொன்னவை புரியவில்லை” என்றாள். “நீ காமத்தை முழுதறியவில்லை கண்ணே” என்று சொல்லி அவள் பின் தொடையில் தட்டினார் யாதவர். இன்னொருத்தி அருகே வந்து “என்ன நிகழ்கிறது? காமக்கலை போலுள்ளதே?” என்றாள். இளைய யாதவர் சிரித்து “எந்த நிகழ்வையும் அவ்வண்ணம் ஆக்கிக்கொள்ள முடியும், நெஞ்சில் விழைவிருந்தால் போதும்” என்றார்.
அர்ஜுனன் “செல்வோம், இளைய யாதவரே” என்றான். சாந்தணிந்த உடலுடன் மழைக்குள் இறங்கி நடந்தனர். ராஜகிருஹத்தின் உள்கோட்டை கரிய பரப்பென மழைக்கு அப்பால் தெரிந்தது. அதன் முதற்பெருவாயிலின் மேடைமேல் ஏழு சிறுமுரசுகள் இருந்தன. இளைய யாதவர் “இவை மகதத்தின் குல அடையாளங்களாக நெடுங்காலமாக கொள்ளப்படுகிறது, இளையோனே. முன்பொரு காலத்தில் இவர்கள் கன்று மேய்க்கும் குலமென இங்கிருந்தபோது கன்றுகளை உண்ணும் ஏழு எருதுகள் இவர்கள் மேல் போர் தொடுத்தன என்கிறார்கள். இவர்களின் முதல் பெருமன்னனாகிய பிருகத்ஷத்ரன் தன் வில்லை எடுத்து ஏழு துணைவர்களை அழைத்துக்கொண்டு இவ்வெருதுகளை காட்டில் துரத்திச் சென்றார். கங்கைக்குள் அவை நீர் அருந்த இறங்குகையில் அவர் அவற்றுடன் போரிட்டு கொன்றார். அவற்றின் தோலைக் கொண்டுவந்து இந்த முரசுகளை அமைத்தார் என்கிறது மாகதவைபவம்” என்றார்.
“ஒருநாளில் ஒருபொழுது மட்டுமே இவை முழக்கப்படும். மகதம் எனும் எருதின் உறுமலோசை இது என்று கவிஞர்கள் பாடுகிறார்கள்.” பீமன் “ஆம், இன்றுடன் இதை நிறுத்துவோம்” என்றபடி கோட்டையின் புடைப்புக்கற்களை பற்றி கால்வைத்து தொற்றி மேலேறினான். மழைக்குள் அவன் வருவதைக் கண்ட காவலன் வேலுடன் ஓடி வருவதற்குள் ஓங்கி அறைந்து அவனை தூக்கி வீசினான். முரசுகளுக்கு காவல் நின்ற வீரர்கள் ஒவ்வொருவராக மேலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அர்ஜுனன் கீழிருந்து அம்புகளை ஏவி ஓடி வந்த எழுவரை வீழ்த்தினான். பீமன் அருகிருந்த வேலொன்றை எடுத்து ஏழுமுரசுகளின் தோல்களையும் கிழித்தான். இளைய யாதவர் “போரை தொடங்கிவிட்டோம், பார்த்தா” என்றார்.
[ 6 ]
ஜராசந்தன் மழைவிழவுக்கென முழுதணிக்கோலத்தில் கிளம்பும்போதே நகர் ஒற்றன் ஏழு முரசுகளும் கிழிக்கப்பட்ட செய்தியுடன் அரண்மனையை வந்தடைந்திருந்தான். அமைச்சர் காமிகர் அதை அவனிடம் அறிவிப்பதற்காக அணுகி சற்று அப்பால் நின்றபடி தலைவணங்கினார். அவர் முகக்குறியிலிருந்தே தீய செய்தி என்று அறிந்து கொண்ட ஜராசந்தன் “ம்” என்றான். அவர் மேலும் தயங்கி அவன் உடலை நோக்கினார். பின்பு துணிந்து “அரசே, நம் குலத்தின் பெருமைக்குறிகளான ஏழு ஏறுமுரசுகளும் இன்று அயலவர் இருவரால் கிழிக்கப்பட்டுள்ளன” என்றார்.
ஜராசந்தன் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. “இன்று காலை” என்று அவர் மேலும் சொன்னார். ஒரு சினப்பெருங்குரலை எதிர்பார்த்துவிட்டிருந்தமையால் அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் மெல்லிய குரலில் ஜராசந்தன் “இருவரா?” என்றான். “ஆம்” என்றார். இக்கணம் இதோ என அகம் தவித்தது. ஜராசந்தன் இருபுருவங்களும் சுருங்க ஆம் என்பதுபோல தானே தலையை அசைத்தான். “வில்லவன் ஒருவன் வில்லுடன் கீழே நிற்க பேருருக் கொண்ட ஒருவன் கோட்டையில் தொற்றி ஏறி வென்று முரசுத்தோல்களை கிழித்திருக்கிறான்” என்றார் காமிகர். அச்சொற்கள் அரசனை பற்றி எரிந்தேறச்செய்யும் என அவர் உள்ளம் நம்பியது.
மேலும் குளிர்ந்த குரலில் “நம் வீரர்கள் எத்தனை பேர் அங்கிருந்தனர்?” என்றான் ஜராசந்தன். “நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். பொதுவான காவலர்கள்தான். நாம் அம்முரசுகளுக்கு வழக்கமான காவலுக்கு அப்பால் ஏதும் அமைப்பதில்லை” என்றார் காமிகர். “அவர்களில் எட்டுபேர் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அனைவருமே புண்பட்டுள்ளனர்.” ஜராசந்தனின் முகம் இயல்படைந்தது. புன்னகையுடன் “நன்று” என்றான். திரும்பி தன்னை நோக்கி வந்த மைந்தனிடம் “வருக இளையவனே, நல்ல நேரம் நெருங்கிவிட்டது என்று நிமித்திகர் மும்முறை சொல்லிவிட்டனர்” என்றான்.
பட்டத்து இளவரசனாகிய சகதேவன் அவனை அணுகி வணங்கி “எந்தையே, நான் முன்னரே கிளம்பிவிட்டேன்” என்றான். அவன் முகக்குறியை பார்த்து “அன்னை பிந்தச்சொன்னாளா?” என்றான் ஜராசந்தன். “ஆம், மகளிர் அறையில் ஏதோ தீய நிமித்தம் ஒன்றை அவர் கண்டிருக்கிறார்” என்றான் சகதேவன். ஜராசந்தன் கண்களில் சிரிப்புடன் “அவள் ஒவ்வொருநாளும் அதை காண்கிறாள். அச்சம் நம்மைச் சூழ்ந்துள்ள பொருட்கள் மேலும் படிகிறது” என்றபின் திரும்பி காமிகரிடம் “சூக்தரின் வேதாந்த மஞ்சரியில் ஒரு வரி வருகிறது. ஆத்மாவின் இருப்பைப்பற்றி பேசும்போது அனைத்துப் பொருள்களிலும் அது உட்பொருளாக விளங்குகிறது என்கிறார். புறப்பொருட்களில் எப்படி ஆன்மா உட்பொருளாக விளங்கமுடியும் என்று சென்ற வாரம் அவையில் இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம்” என்றான்.
“அரைநாழிகை பிந்தும்படி அன்னை ஆணையிட்டார்” என்றான் சகதேவன். வேதாந்தப் பொருள் அவனுக்கு புரியவில்லை. “தெய்வங்கள் அமைத்த தீயூழை காலத்தை சற்று இழுத்து விலக்கிவிட்டாள் அல்லவா?” என்றான். சகதேவன் சிரித்து “ஆம், அப்படித்தான் நம்புகிறார். ஆகவே சற்று பிந்தினேன்” என்றான். “செல்வோம்” என்று அவன் தோளை மெல்ல அணைத்தபடி ஜராசந்தன் நடந்தான். சகதேவன் பூமீசை கருக்க வளர்ந்திருந்தாலும் சற்றே ஒடுங்கிய தோள்களும் மெலிந்த மார்பும் சிறுவர்களுக்குரிய சிரிப்பும் கொண்டிருந்தான். முதிரா இளைஞனுக்குரிய உடைந்த குரலில் “மழையில் நெடுநேரம் ஆடவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு என் பின்னால் வந்தார் அன்னை” என்றான்.
“உன்னை ஏதோ தீயூழ் வந்து பற்றப்போகிறது என்னும் அச்சம் நீ கருவிலிருந்தபோதே அவளில் எழுந்துவிட்டது” என்றான் ஜராசந்தன். “அன்றுமுதல் உன்னை இரு கைகளாலும் பொத்தித்தான் வளர்க்கிறாள். உனக்கு இங்கு இளிவரல் சூதர் பிறைவிளக்கு என்றே பெயரிட்டிருக்கிறார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “காட்டுத்தீயில் கொளுத்திய பிறைவிளக்கு என்கிறார்கள்” என்றான். காமிகர் சிரிப்பதுபோல உதடைக் குவித்து தலைவணங்கினார்.
பெருவாயிலைக் கடந்து அரண்மனையின் இடைநாழியில் அவர்கள் தோன்றியதும் கூடி நின்றிருந்த குலத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். மங்கல இசை எழுந்து மழைக்குள் படர்ந்தது. மழை நின்றுபெய்த பெருமுற்றத்தில் பலநூறு ஓலைக்குடைகள் யானைக்கூட்டங்கள் போல செறிந்து நிறைந்தன. தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்முடைவால் ஆன மடிப்புக்கூரை ஒன்றை ஒன்றிலிருந்து ஒன்றாக நீட்டி அரண்மனை வாயிலில் இருந்து தேர்த்தட்டு வரை கொண்டு சென்று மெல்லிய மூங்கில் கால்களில் நிறுத்தி பற்றிக் கொண்டனர் ஏவலர். மைந்தனின் தோளில் இருந்து கையெடுக்காமல் இருபக்கமும் நோக்கி தலையசைத்து முதிய குலத்தலைவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் முகமன் சொல்லி ஜராசந்தன் தேர்த்தட்டு நோக்கி சென்றான்.
காமிகர் பின்னால் வந்து “இளவரசருக்குரிய தேர் பின்புறம் சித்தமாகி நிற்கிறது” என்று சொன்னார். “அவன் என்னுடன் வரட்டும்” என்று சொன்னபடி ஜராசந்தன் தேரிலேறிக் கொண்டு கைநீட்டினான். சகதேவன் அக்கையை பற்றியவுடன் தூக்கி தன் அருகே அமரவைத்தான். பெருமூச்சுவிடும் ஒலியில் “செல்க!” என்றான். தேர் ஒருமுறை குலுங்கியபின் மழையில் புகுந்தது. சூழ்ந்து ஒலித்த படைவீரர்களின் வாழ்த்தொலிகள் நீர்சவுக்குகளின் உள்ளே சிதறிப்பரவின. ஈரமான கற்சாலையில் குளம்புகள் ஒலிக்கத்தொடங்கின. மழைக்கு அப்பால் நகரம் கரைந்து வழிந்துகொண்டிருப்பதுபோல தெரிந்தது.
ஜராசந்தன் “நீ மிகவும் இளையோன் என்ற எண்ணம் இன்று காலை வரை எனக்கிருந்தது. எனவேதான் எந்த அரசலுவலிலும் உன்னை நான் இணைத்துக்கொள்ளவில்லை” என்றான். சகதேவன் புன்னகைத்தான். “இங்கு நீ இவ்வணிக்கோலத்தில் அங்கிருந்து வரக்கண்டதும் அரசனாகிவிட்டாய் என்ற எண்ணம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. அன்னையின் அச்சத்தைப்பற்றி சொல்லி நீ புன்னகைத்ததனால்தான் அது என தேரில் ஏறியபின் தோன்றியது.”
சகதேவன் “தந்தையே, நான் பட்டத்து இளவரசனாகும்போதே அரசனாவது முடிவாகிவிட்டதல்லவா?” என்றான். அந்த வெள்ளையான சொற்கள் ஜராசந்தனை எங்கோ சற்று உளம்சுளிக்கவைத்தன. அதைக்கடந்து வந்து “ஆம். ஆனால் இப்போது நீ அரசனாகவே ஆகிவிட்டாய்” என்றான். அச்சொற்கள் புரியாமல் சகதேவன் நோக்கினான். “நான் இந்நகருக்குள் புகுந்தபோது உன் வயதே இருந்தேன். உன்னைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டிருந்தேன். நீ கற்ற நூலறிவோ அடைந்த அவைப்பழக்கமோ தேறிய படைக்கலப் பயிற்சியோ எனக்கிருக்கவில்லை. ஆனால் இந்நகர் என்னுடையது என்ற உறுதியும் இம்மண்ணை நான் ஆள்வேன் என்ற கனவும் பிறிதொன்றையும் எண்ணாது அதை நோக்கிச்செல்லும் ஒருமுனைப்பும் கொண்டிருந்தேன். எண்ணியபடி எழுந்து வந்தேன்” என்றான்.
அவன் உள்ளம் எங்கோ ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த சகதேவன் மறுசொல்லின்றி கேட்டுக்கொண்டிருந்தான். “உன் அன்னைக்கு முன் இங்குள்ள குலமுறைப்படி நான் ஏழு மனைவியரை கொண்டேன். அவர்களில் பிறந்த நாற்பத்தெட்டு மகள்களும் வளர்ந்து மைந்தரை பெற்றிருக்கிறார்கள். ஆனால் என் குருதியில் எழுந்து இந்நகரை நான் என அமர்ந்து ஆள மைந்தரில்லை என்று என் ஆழுளமும் குடிமக்களும் துயருறத்தொடங்கிய பின்னர்தான் முதல்முறையாக வாழ்வு என்றால் என்ன என்று எண்ணத்தலைப்பட்டேன். அதில் இறுதிவெற்றி என்பது ஊழால் அமைவதே என்று தெளிந்தேன்.”
“வைதிகர் சொற்படி பெருவேள்விகளை நிகழ்த்தினேன். கொடைகள் ஆற்றினேன். பயனில்லை என்று கண்டபோதுதான் உன் அன்னையர் சொல்லத்தொடங்கினர், நான் செய்த கொடுஞ்செயல்களின் பழி என்னை சூழ்ந்துள்ளது என்று. காட்டில் ஒரு சிம்மம் செய்யும் கொடுஞ்செயல்களில் ஒருபகுதியையேனும் நான் செய்யவில்லை என்று அதற்கு நான் மறுமொழி சொன்னேன்” என்றான் ஜராசந்தன். “அந்நாளில் ஒருமுறை நம் குலத்தின் முதுபூசகர் சர்மர் வெறியாட்டு கொண்டு எழுந்து கோலுடன் சுழன்றாடி என்னருகே வந்தார். அவரில் பீடம்கொண்டிருந்த அறியா மலைத்தெய்வம் எனக்கு ஆணையிட்டது. இம்மழைவிழவை இங்கு தொடங்கும்படி.”
“இது ஒரு வேள்விச்சடங்கு இளையோனே. வைதிக வேள்வி அல்ல, நாகர் குலத்து பூசகர்களை கொண்டுவந்து நாகர் வேதங்களை ஓதி செய்யப்படும் நாகவேள்வி இது…” என்றான் ஜராசந்தன். மழை பரவிய தெருக்களில் நீர்த்துளிகளை சிதறடித்துக்கொண்டு சென்ற தேரில் ஜராசந்தனின் உடலுடன் தோள் ஒட்டி வெம்மையை உணர்ந்தபடி சகதேவன் அமர்ந்திருந்தான். எப்போதுமே கைவெள்ளையின் வெம்மைக்குள் ஒடுங்கும் புறாக்குஞ்சுபோல தந்தையுடன் ஒண்டிக்கொள்வதே அவன் வழக்கம். அவனிடம் மட்டும் பேசுவதற்கென்று ஒருகுரல் ஜராசந்தனிடம் இருந்தது. கனிந்து மென்மையாகி செவியறியாமலேயே நெஞ்சுக்குள் ஒலிப்பதாக அது ஆகிவிடும். ஒற்றைக் கனவில் இருவரும் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரே உணர்வுநிலையின் உச்சத்தில் விழித்தெழுந்து ஒருவரை ஒருவர் உணர்வார்கள். அப்போது அணையும் விலக்கத்தை வெல்ல சகதேவன் தந்தையின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து தோளுடன் சாய்ந்துகொள்வான்.
“இங்குள்ள ஒவ்வொரு நகரமும் நாகர்களுக்கோ, அரக்கர்களுக்கோ, அசுரர்களுக்கோ உரியதாக இருந்திருக்கிறது இளையோனே” என்றான் ஜராசந்தன். “அவர்களே இன்றும் இந்நகர்கள் அனைத்திலும் அடிமண்ணாக, வேர்ப்பற்றாக விழிதெரியாது மறைந்திருக்கிறார்கள். சைத்யகம் எனும் இக்குன்று மகதர்களிடம் வருவதற்கு முன்பு நான்கு நாகர்குடியினருக்கு உரியதாக இருந்தது. அவர்கள் இங்கே தங்களுக்கென ஓர் அரணை உருவாக்கிக் கொண்டு பிற உலகுடன் தொடர்பற்று வாழ்ந்தார்கள். மந்தணப் பாதைகளினுடாக பாதாளங்களுக்கு செல்லவும் தங்கள் குடி தெய்வமான வாசுகியுடன் தொடர்பு கொள்ளவும் அவர்களால் முடிந்தது என்கின்றன குலக்கதைகள்.”
“மகதம் என்று இன்று அழைக்கப்படும் பன்னிரு பெருங்குடிகளும் அன்று காட்டில் கன்று மேய்த்தும் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்தனர். பெண் கொடுத்தும் மைந்தரை பெற்றுக்கொண்டும் அக்குடிகள் ஒன்றாயின. கங்கையின் இந்தப்பகுதி அன்று அரைச்சதுப்பும் குன்றுகளும் கொண்டது. இவர்கள் இவ்வெல்லைக்கு அப்பால் எங்கும் செல்லாதவர் என்பதனால் அயல்வணிகர் இவர்களை அகதர் என்று அழைத்தனர். பின்னர் அச்சொல்லை இவர்கள் மாகதர் என்று மாற்றிக்கொண்டனர்.”
“இப்பகுதி வற்றாது சுரக்கும் புல்பெருக்கு கொண்டது என்பதனால் ஆபுரத்தல் பெருந்தொழிலாயிற்று. ஆனால் கன்று பெருகியபோது இங்கு துலாமாதத்தில் பெய்து நிறையும் மழை அதற்கு பெருந்தடையாக மாறியது. எனவே விண்ணவர்கோனை விரட்டி வெயிலைக் கொண்டுவரும் பொருட்டு கதிரவனுக்குரிய கொடைச்சடங்குகளைத்தான் அவர்கள் செய்து வந்தனர். அவர்களின் கன்றுகள் பெருகின. கலங்களில் நெய் நிறைந்து கருவூலங்களில் பொன் முளைக்கத்தொடங்கியது. அவர்கள் வாழ்வதை பிறர் அறிந்தனர். கீழே வங்கத்திலிருந்தும் மேலே கோசலம், பாஞ்சாலம் முதலிய நாடுகளிலிருந்தும் சிறுகுடி அரசர்கள் ஆநிரை கவரும்பொருட்டு அவர்களின் ஊர்களுக்கு வந்தனர். அவர்களின் இளமைந்தரைக் கொன்று பெண்டிரையும் கன்றுகளையும் கவர்ந்து சென்றனர். அக்கள்வர்களுக்கு எதிராகவே இப்பன்னிரண்டு குடிகளும் மூதரசர் அம்வுவிச்சரின் கோலின்கீழ் ஒன்றாகி ஒரு நாடென்று ஆயின. அவரது வல்லமை வாய்ந்த அமைச்சர் மகாகர்ணி குடிகளை ஒன்றாக்கி மகத அவையை அமைத்து நாட்டின் எல்லைகளை புரந்தார்.”
“மகதம் கொடியும் முடியும் கொண்டு கோல் நிறுத்தியபோது அருகில் இருந்த நாடுகளில் இருந்து பெருங்குடி அரசர்கள் வெற்றிச்சிறப்புக்கென ஆநிரை கவர வந்தனர். பெரும்படைகளுடன் வந்த அரசர்களை வெல்ல மகதர்களால் இயலவில்லை. அவர்களில் ஒருவருக்கு கப்பம் கட்டினால் பிறிதொருவர் படைகொண்டுவந்தனர். அவர்களை அஞ்சி மேலும் மேலும் காடுகளுக்குள் புகுந்து கொள்வதே அவர்களுக்கு எஞ்சிய வழியாக இருந்தது” என்றான் ஜராசந்தன். “இங்கே கன்றுகள் பெருகும் வேனிற்காலத்தில் ஆநிரை கவர்தல் நிகழ்வதில்லை. அவை காடெங்கும் ஒன்றிரண்டு என பரவியிருக்கும். அவற்றை ஓரிடத்தில் சேர்க்கும் மழைக்காலமே ஆநிரை கவர்வதற்குரியது. குன்றுகளில் கன்றுகளைச்சேர்த்து சுற்றிலும் குடிலமைத்து காவலிருப்பதே மகதர்களின் வழக்கம். மேலும் மேலும் உள்காடுகளின் குன்றுகளை நோக்கி அவர்கள் சென்றனர்.”
“அவ்வாறுதான் சைத்யகம் என்னும் இந்தக்குன்றை அவர்கள் கண்டு கொண்டனர். நான்கு நீர்நிறை ஆறுகளால் சூழப்பட்ட சைத்யகத்தை எதிரிமன்னர்கள் மழைக்காலத்தில் அணுக முடியாதென்றறிந்தனர்” ஜராசந்தன் சொன்னான். “கோசலத்தின் பெரும்படையை அஞ்சி மகதர் காடுகளுக்குள் புகுந்து இக்குன்றைக் கண்டு இதை நோக்கி கன்றுகளுடன் வரும்போது இங்கிருந்த நாகர்கள் சினந்து அவர்களிடம் போர் புரிந்தனர். மூன்று முறை கடும் போரிட்டும் மகதர்களால் நாகர்களை வெல்ல முடியவில்லை. மறுபக்கம் கோசல மன்னன் பிரஸ்னஜித்தின் படைகள் வலையென இறுகிக்கொண்டிருதன. காடுகளுக்குள்ளிருந்து நஞ்சு நிறைந்த நாணல் அம்புகளுடன் நாகர்கள் எழுந்தனர். எங்கு செல்வதென்றறியாது திகைத்து நின்றழுத மகதர்களில் மூதன்னையொருத்தி தன் கையில் இரு குழந்தைகளை எடுத்தபடி அழுதுகொண்டு நாகர்களை நோக்கி சென்றாள்.”
“அன்று இங்கிருந்த சைத்யர் என்னும் நாகர்கள் ஆறு பெருங்குடிகளாக பிரிந்திருந்தனர். அர்ப்புதன், சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் என்னும் ஆறு நாகர்தலைவர்களால் அவர்கள் ஆளப்பட்டனர். தொலைவில் கையில் மைந்தருடன் ஓடிவந்த முதுமகளைக்கண்ட படைத்தலைவனாகிய ஸ்வஸ்திகன் அம்புதாழ்த்தும்படி ஆணையிட்டான். நாகர்களின் அம்புகள் முதல் முறையாக அயலவரிடம் தணிந்தன. அவ்வாறுதான் சைத்யகம் மகதர்களுக்குரியதாயிற்று. நாகர் குடியினர் மகதர்களிடம் மண உறவு கொண்டனர். முதல் அரசியாக நாகர் குலத்துப் பெண்களையே நெடுங்காலம் மகத மன்னர்கள் மணக்க வேண்டுமென்று நெறியிருந்தது. அவர்களின் குருதியிலேயே மகதமன்னர்களின் நிரை எழுந்தது.”
“இங்கு சைத்யகத்தில் அர்ப்புதன், சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் என்னும் ஆறு மூதாதைநாகர்களும் கோயில்கொண்டு அருள்கிறார்கள். அவ்வாலயங்களுக்கு நடுவே கண்டநாகனாகிய சிவனும் கங்கணநாகினியாகிய கொற்றவையும் கோயில் கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஜராசந்தன். “வெறியாட்டு கொண்ட பூசகர் மகதத்தின் அரியணை அமர்ந்த எனக்கு நாகப்பிழை இருப்பதாக சொன்னார். நான் அப்பிழை தீர்த்தாலொழிய மைந்தனை அடையமாட்டேன் என்றார். அதன்பின்னரே நான் தொல்நிமித்திகரை அழைத்து இக்குன்றின் புதர்களுக்குள் கைவிடப்பட்டு மறைந்து கிடந்த நாகர்களின் ஆலயங்களை மீட்டெடுத்தேன். அவர்களுக்கு நாளும் மலரும் நீரும் சுடரும் காட்ட ஏற்பாடு செய்தேன் ஒவ்வொரு கருநிலவு நாளிலும் நானே வந்து இங்கு வழிபடத் தொடங்கினேன்.”
“இது நாகர்களின் விழவு இளையவனே. நாகர்களுக்கு பெருமழை என்பது தவளைகளைப் பெருக்கும் அருள். நாகங்கள் அத்தவளைகளை உண்டு பெருகி வேனிலில் முட்டையிடுகின்றன. தவளைகள் பெருகும் பொருட்டு நாகர்கள் இங்கு ஆற்றும் வேள்வியே மாண்டூக்யம் எனப்படுகிறது. அவ்வேள்வியில் அளிக்கப்படும் குருதி விண்ணுக்குச் சென்று நீராக மாறி மண்ணுக்கு மழையென வருகிறது” என்று ஜராசந்தன் சொன்னான். “இவ்விழவை நான் மீட்டெடுத்தபோது என் அமைச்சர்கள் அதற்கு ஒப்பவில்லை. ஏனென்றால் பலநூறாண்டுகளுக்கு முன்னரே மகதத்தின் அரசர் தங்கள் நாகர் குலக் குருதியை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தனர். தொடர்ந்து பாரதவர்ஷத்தின் பல்வேறு தொன்மையான குடிகளிலிருந்து பெண்கொண்டும் பெண்கொடுத்தும் அவ்வரலாறு மொழிக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டுள்ளது.”
“நாகர்களின் குருதிவழி என்பது இன்று அரசர்களுக்கு குடியிழிவு. நாகர்களின் விழவை மீட்டெடுப்பதென்பது நான் என்னை ஷத்ரியனல்ல என்றும், என் மைந்தனாகிய நீ நாகர் குலத்தவனென்றும் அறிவிப்பதுமாகும் என்றனர் அமைச்சர். நான் அவ்வண்ணமே ஆகுக என்று ஆணையிட்டேன்” என்று ஜராசந்தன் சொன்னான். “உன் அன்னை என் காலில் விழுந்து மன்றாடினாள். மைந்தரின்றி இறந்தாலும் குடியிலி ஒருவனுக்கு அன்னையாவதை அவள் விழையவில்லை என்றாள். மகதம் தன் அடையாளத்தை இழக்குமென்றால் அதைச் சூழ்ந்துள்ள ஷத்ரிய அரசர்களால் தலைமுறைகள் தோறும் அது வேட்டையாடப்படும் என்றார்கள் அமைச்சர். என் முன் இருந்தது இரண்டு வழிகள். மைந்தனின்றி இந்நகரை அழியவிடுவது. நாகர்குல மைந்தனென்னும் கொடி அடையாளத்துடன் மைந்தனை அமரவிடுவது. நாகர்கள் இல்லையேல் மகதம் உருவாகியிருக்காது. தலைமுறை தலைமுறையாக மகதர் இழைத்த பிழைக்கு ஈடு செய்யும் வாய்ப்பு என்றே நான் எண்ணினேன். அதன்பொருட்டு மைந்தன் பரிசென்றும் வருவான் என்றால் அதைவிட சிறப்பு ஏது?”
“ஒருவேளை இவ்விழவுக்குப்பிறகு நீ முடிசூடக்கூடும்” என்றான் ஜராசந்தன். “இவ்விழவுக்குப் பிறகா? தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் சகதேவன். “அறியேன் அவ்வண்ணமாயின் உன் கழுத்தில் நீ பிறந்த அன்று நான் அணிவித்த நாகபடத்தாலியையோ உன் கையில் நீ அணிந்திருக்கும் நாகநெளிக் கணையாழியையோ ஒருபோதும் கழற்றலாகாது. நாகன் என்று ஷத்ரியர் இகழட்டும் உன்னை. ஒவ்வொரு கணமும் அவர்களின் பகைமை உன்னை சூழட்டும். ஆனால் நாகர்களின் கருணையே இந்நாடு. அவர்களின் அருளே நீ. அந்த அடையாளம் நமக்குச் சிறப்பே” என்றான் ஜராசந்தன். “ஆம் தந்தையே, தங்கள் ஆணை” என்றான் சகதேவன்.
[ 7 ]
சைத்யகத்தின் அடர்ந்த குறுங்காட்டைச்சூழ்ந்து அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான உயரமற்ற முரசுமேடைகளில் மழை பெருகி வழிந்த கூரைகளுக்குள் நிறுத்தப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. ஜராசந்தனின் தேர் அணுகியபோது முதற்கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து அனைத்து கொம்புகளும் முரசுகளும் மணிகளும் சேர்ந்து முழங்கின. வாழ்த்தொலிகள் மழையினூடாக வந்து சூழ தேர் உள்ளே நுழைந்தது.
சைத்யகத்தின் மலைச்சரிவுப்பாதையில் தேரும் புரவிகளும் செல்லும்பொருட்டு மரப்பட்டைகளைப் பதித்து பாதையமைத்திருந்தனர். தேர்ச்சகடங்கள் அதில் நுழைந்ததும் கூழாங்கற்கள் உருளும் ஓசை எழுந்தது. பாதையின் இருபக்கங்களிலும் மரத்தாலான நீரோடைகளில் மழைநீர் மிகவிரைவாக சுழித்தும் முறுகியும் நெளிந்தும் ஓடியது. ஓயாமழை தொடங்கி சிலநாள் ஆகிவிட்டிருந்தமையால் நீர் தெளிந்து, சருகுகளும் குப்பைகளும் இன்றி தெரிந்தது.
ஜராசந்தனும் சகதேவனும் இறங்கியதும் மகதத்தின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்து பணிந்து வரவேற்றனர். அவர்களுக்குமேல் விரிந்த பச்சையிலைத்தழைப்பின் கூரையிலிருந்து மழை பெரிய துளிகளாக அவர்கள் மேல் பொழிந்தது. காற்று வீசுகையில் சாமரக்குவைகளாக அவர்களை அறைந்தது. அவர்கள் மழையில் நனைந்து ஒளிகொண்ட தோள்களும் தளிரிலை என சுருக்கங்கள் பரவிய விரல்களும் நடுங்கும் கால்களுமாக நின்றனர். ஜராசந்தன் நீர் பெருகி சொட்டிய தன் குழலை கையால் அள்ளி பின்னால் தள்ளிவிட்டான். உடலுடன் ஒட்டி குமிழிகள் கொண்ட பட்டுச்சால்வையை உரித்தெடுத்து அகம்படியினரிடம் அளித்தான்.
அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஜராசந்தனின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் அவர்களின் வணக்கங்களையும் முகமன்களையும் ஏற்று நடந்து சென்றபோது அவன் காலடிகளை நோக்கினர். அரசனின் உடல் இருபகுதிகளாக இருந்து ஜரையன்னையால் இணைக்கப்பட்டது என்பதை சூதர்கள் பாடிப்பாடி குழந்தைகளும் அறிந்திருந்தனர். உடற்குறி நோக்கும் நிமித்திகர் அவன் இரு முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகளின் இணைப்பு என்றனர். நூலறியும் நுண்மையும் உணர்வுகளை ஆளும் வல்லமையும் கொண்டவன் அவன் இடப்பகுதியில் இருந்தான். அவனை வாமன் என்றனர். கட்டற்ற சினமும் அணையா வஞ்சமும் கொண்ட தட்சிணன் ஜரர்களின் கொடுங்காட்டிலிருந்து நேரடியாக வந்தவன்.
அரசனை நுணுகியறிந்திருந்த ஏவலர் அவர்களின் கூற்று உண்மை என்றறிந்திருந்தனர். அவன் இடத்தோள் நிமிர்ந்து, இடக்கால் அழுந்தியிருந்தால் மட்டுமே அணுகி சொல்லளித்தனர். வலப்பக்கம் நிமிர்ந்த ஜராசந்தன் குருதிவிடாய்கொண்ட கொடுந்தெய்வம். ஜராசந்தனின் இடக்கால் அழுந்தியிருப்பதைக் கண்ட அமைச்சர் காமிகர் ஆறுதலுடன் படைத்தலைவர் பத்ரசேனரை பார்த்தார். அவர் விழிகளாலேயே புன்னகைசெய்தார். ஜராசந்தன் மைந்தனின் தோளிலிருந்து அகலாத கையுடன் தலைகுனிந்து நடந்தான். காமிகர் “அனைவரும் சித்தமாக உள்ளனர் அரசே. அரவரசர்களின் ஆலயங்களில் குருதிகொடைக்குரிய எருதுகள் வந்தணைந்துவிட்டன” என்றார். அவன் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறான் என்பதற்காகவே அவர் அதை சொன்னார். அவன் “நன்று” என்றான்.
மகதத்தின் பன்னிரு குலங்களின் தலைவர்கள் பருந்திறகு சூடிய மரமுடி சூடி கல்மாலை அணிந்து தங்கள் குலக்குறி பொறிக்கப்பட்ட கைக்கோல்களை ஏந்தி நிரை வகுத்து நின்று அவனை வரவேற்றனர். முதற்குடித்தலைவர் அவன் அருகே வந்து கோல்தாழ்த்தி பீடம் கொண்டு அருளவேண்டும் என்று கோரினார். அவன் முறைமைச்சொற்களில் அதை ஏற்றுக்கொண்டதும் அவர்கள் தங்கள் கொம்புகளை எடுத்து மும்முறை ஊதி கோல்தூக்கி தெய்வங்களிடம் அவன் வருகையை அறிவித்தனர். பன்னிரு குலத்தலைவர்களும் இணைந்து அவனுக்குரிய கோலை அளிக்க அதை பெற்றுக்கொண்டு அவன் அவர்களை தொடர்ந்தான். அவனை அழைத்துச்சென்று குன்றின் உச்சிமையத்தில் அமைந்திருந்த உருத்திரனின் சிற்றாலயத்தின் முற்றத்தை அடைந்தனர்.
ஆலயமுற்றத்தில் நூற்றுக்கால் பந்தலிடப்பட்டு ஆறு எரிகுளங்கள் அமைக்கப்பட்டு மகாநாகவேள்வி நடந்துகொண்டிருந்தது. நாகர் குலத்துப்பூசகர் நூற்றுவர் நாகவேதம் ஓதி அவியளிக்க எரியெழுந்து புகைசூடி நடமிட்டது. ஜராசந்தன் குலத்தலைவர்களுடன் சென்று வேள்விக்காவலனுக்குரிய கல்பீடத்தை அணுகியதும் ஒருகணம் தயங்கி நின்று திரும்பி சகதேவனை நோக்கி “மைந்தா, நீ அதில் அமர்க!” என்றான். “தந்தையே” என்றான் சகதேவன் திகைப்புடன். “இம்முறை நீயே வேள்விக்காவலனாகுக!” என்றான் ஜராசந்தன்.
“அரசே, பன்னிருகுடிகளுக்கும் தலைவனும் மகதத்தின் அரியணைக்கு உரியவனுமாகிய வீரன் அமரவேண்டிய பீடம் அது” என்றார் குலத்தலைவர். “ஆம், அப்பீடம் இனி என் மைந்தனுக்குரியது” என்ற ஜராசந்தன் கோலை சகதேவனிடம் அளித்தான். “மகதத்தின் செங்கோல் அவனால் சிறப்புறுக!” குடித்தலைவர்களும் அமைச்சர்களும் திகைப்படைந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. அவனிடம் எதிர்ச்சொல் எடுக்கும் வழக்கம் அவர்களிடமிருக்கவில்லை. சகதேவன் கோலை பெற்றுக்கொண்டு கல்லிருக்கையில் அமர்ந்தான். நாகபடம் பொறிக்கப்பட்ட மரத்தாலான முடியை அவன் தலையில் முதுகுடித்தலைவர் அணிவித்தார்.
மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்கள் நிரை நின்று கோல்தாழ்த்தி அவனை வணங்கினர். அவர்களில் ஒருவர் தன் இடையில் அணிந்திருந்த கொம்பை எடுத்து ஊதியதும் எங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் முழவுகளும் சங்கும் அதில் கலந்து ஓங்கின.
[ 8 ]
சைத்யகத்தின் உச்சியில் நாகருத்திரனின் சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த வேள்விக்கூடத்தின் ஈச்சையோலைக்கூரையில் இருந்து ஊறி சுருண்டு எழுந்த புகை மழைபெருக்கால் கரைக்கப்பட்டு, நறுமணங்களாக மாறி அங்கு சூழ்ந்திருந்த காட்டின் இலைகளின் மேல் பரவியது. வேதஒலியைச் சூழ்ந்து மழை ஒலிபெய்தது. வேள்விப்பந்தலில் சகதேவனைச்சூழ்ந்து மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்களும் நகரின் மூத்தகுடியினரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஆறு எரிகுளங்களில் நூற்றெட்டு நாகவைதிகர் ஓநாய்த்தோல் போர்த்தி அமர்ந்து வேதமோதியபடி மரக்கரண்டியால் நெய்யை அள்ளி ஊற்றி அவியிட்டு வேள்வி இயற்றினர். வேள்வித்தலைவர் அப்பால் தாமரைபீடத்தில் அமர்ந்திருந்தார்.
அவியளிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட தேர்வுசெய்யப்பட்ட நூற்றெட்டு ஆடுகளின் நிரை வெண்மலர்ச் சரமென வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தது. மலர்மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் மங்கலம் பூசப்பட்ட முதல் வெள்ளாடு எரிகுளத்தின் அருகே வந்ததும் வேள்விபடைப்பவர் அதன் சிறு கொம்புகளை கையால்பற்றி கழுத்தை வளைத்தார். புடைத்த குருதிக்குழாயை சிறிய கத்தியால் கிழித்து பீரிட்ட குருதியை நேரடியாகவே எரிகுளத்தில் வீழ்த்தினார். காலுதறி திமிறிய ஆட்டின் மூச்சு குருதியுடன் தெறித்தது. குருதியை மும்முறை பொழிந்தபின் அதைத்தூக்கி மறுபக்கம் விட்டனர் இருவர். அங்கு நின்றவர்கள் அதைத் தூக்கி வெளியே போட்டனர்.
வேள்விச்சாலையில் நிறைந்திருந்த புகையில் விழிமயங்கிய ஆடுகள் பின்னால்வந்த நிரையால் முட்டிச்செலுத்தப்பட்டு அறியாத தெய்வங்களால் கைநீட்டி அழைக்கப்பட்டவைபோல சீராக காலெடுத்து வைத்து எரிகுளங்களை அணுகி கழுத்து நீட்டி குருதி அளித்து கால் துடித்து சரிந்தன. குருதிஅவி உண்ட தழல் தளர்ந்து பரவி சமித்துகளில் வழிந்து, பின் தளிர்விட்டு எழுந்து தயங்கியது. அதன்மேல் நெய் ஊற்றப்பட்டதும் தவிப்புடன் தாவி நக்கி, சீறி சுடர்கொண்டு, கிளைவிட்டு எழுந்து, இதழ்களாக விரிந்து நின்றாடியது.
நாகவைதிகர் ஓதிய தொன்மையான நாகவேதம் பாதாள நாகங்களின் சீறல்மொழியில் அமைந்திருந்தது. அறிந்த சொல் என சித்தத்தை தொட்டுத் துடிக்க வைத்து, அகமொழி அதை பொருள் தேடி தவிக்கையில் அறியா ஒலியென்றாகி விலகி, மீண்டும் மயங்குகையில் அணுகி தொட்டுச் சீண்டியது. செவியறியாது சித்தமறியாது ஆழத்தைச் சென்றடைந்து ஒவ்வொருவர் விழிகளையும் சுடர்கொள்ளச் செய்தது அது. அவர்களினூடாக மண்மறைந்த முன்னோர் பிறக்காத கொடிவழியினரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.
பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் விண்ணிலிருந்து வேதங்கள் இறங்கி வந்தன என்றனர் குடிப்பாடகர். அரக்கர்களும், அசுரர்களும், நாகர்களும், மானுடரும் அவர்கள் குடியில் பிறந்த முனிவர்களின் உள்ளம் தொட்ட முடிவிலியில் இருந்து வேதங்களை பெற்றுக்கொண்டனர். அரக்கர்களின் வேதம் கைவிரித்து உலகை வெல்லும் பெருவிழைவு கொண்டது. அசுரர் வேதமோ தன்னை வென்று கடந்து செல்லும் அகத்தவிப்பு கொண்டிருந்தது. நாகர்வேதம் தன் வாலை தான் கவ்வி சுருண்டு முழுமை கொள்ளும் விடாய் கொண்டது. மானுடர் வேதமோ மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் கனவாய் அமைந்திருந்தது.
அந்நான்கு வேதங்களிலிருந்தும் வேதமாமுனிவர் தொட்டெடுத்து நினைவில் தொகுத்த வேதப் பெருவெளி யுகங்கள் தோறும் மறக்கப்பட்டபடியே வந்தது. வேதங்களைவிட நாளும் சிறியதாகின உள்ளங்கள். குடிபெருத்து நாடாகி, முடியாகி, போராகி, அழிவாகி, கதையாகி வாழ்வு விரிந்தபோது வேதங்களை நினைவில்கொள்ளும் திறன் அழிவதைக்கண்ட தொல்வியாசர் எண்ணித் தொட்டெடுத்து அமைத்த வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என நான்கு. அவற்றுக்கு நெறியமைவும் கான்முறையும் அமைத்து சொல்மரபும் ஒலியிசைவும் வகுத்தனர் பிறகுவந்த வியாசர்கள். குருநிரைகளும் பயிற்றுநெறிகளும் வைதிகக் கொடி வழிகளும் பின்னர் உருவாகின.
பாரதவர்ஷமெங்கும் அரசவைகளில் ஓதப்படுவதும், வேள்விகளில் முழங்குவதும், ஆலயங்களில் அளிக்கப்படுவதுமான எல்லை வகுக்கப்பட்ட நான்கு மானுட வேதங்களுக்கு அப்பால் கடல் விரிவென, காற்று வெளியென சொல்லெனப் பிறிதிலாத முழுமுதல் வேதம் விரிந்துகிடந்தது. அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஒற்றைவேதம். கேட்கப்படாமையால் குறையற்ற தூய்மை கொண்டது. ஒவ்வொரு துளியிலும் முழுமை கொண்டு ஒவ்வொரு கணமும் பெருகியது அது.
வகுக்கப்பட்ட மானுடவேதம் வைதிகர் சொல்லென எங்கும் பரவி பிறகுடிகளின் தொல் வேதங்களை அவர்களின் சித்தத்திலிருந்து கனவுக்குத் தள்ளியது. அங்கிருந்து ஆழிருப்புக்கும் அப்பாலுள்ள இன்மைக்கும் செலுத்தியது. வேதச்சொல்லிணைவுகளுக்கு அடியில் அறியப்படாத வெளியென அவ்வேதம் இருந்தது. தழலாட்டத்தில் கண்மாயமோ உளமாயமோ என்று திகைக்க வைத்து தோன்றி மறையும் தெய்வமுகங்கள் போல நான்கு நூல் வேதங்கள் ஓதப்படுகையில் மறைந்த வேதங்கள் தெரிந்து மறைவதுண்டு என்றனர்.
கூவும் கிள்ளைகளில் சில சொற்சாயல்களாவும், பிள்ளைமொழியில் எழும் புதுச்சொற்களாகவும், கைபட்ட யாழோ காற்றுதொட்ட குழலோ உதிர்க்கும் இசைத்துளியாகவும், உணர்வெழுந்த நா அறியாது தொட்டுச்செல்லும் உதிரிவரிகளாகவும், வெறியாட்டெழும் பூசகனின் குரலில் வரும் மிழற்றல்களாகவும், கனவுகளில் ஒலித்து திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தெய்வக்குரல்களாகவும் அந்த ஆழ்வேதங்கள் வாழ்ந்தன. அவையே மறைகள் என்று அறியப்பட்டன.
மழைவிழவையும் நாகவேள்வியையும் தொடங்க முடிவெடுத்தபோது ஜராசந்தன் நாகவேதம் அறிந்தவர்களைத் தேடி பாரதவர்ஷமெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பினான். நாக நாடுகள் அனைத்திலும் அரசர்களுக்காகவும் குடியவைகளுக்காகவும் பூதவேள்விகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் நாகவேதத்திலிருந்து எடுத்து அதர்வவேதத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளை மட்டுமே கொண்டு அதர்வமுறைப்படி அவ்வேள்விகளை செய்து வந்தனர். அவற்றைச் செய்பவர் நாகர்குலத்து அந்தணர் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குரிய குருமுறையும் சடங்குகளும் உருவாகியிருந்தன. ஒவ்வொரு குடிக்கும் அதர்வ வேதத்தின் எப்பகுதி அவர்களுக்குரியதென்று தெரிந்திருந்தது.
அவை ஒவ்வொன்றையும் தவிர்த்து தவிர்த்து தேடி இறுதியில் காமரூபத்திற்கும் அப்பால், மணிபுரத்தையும் கடந்து, கீழைநாகர்களின் கொடுங்காட்டுக்குள் மொழியும் நூலும் அறியாது மறைந்துவிட்டிருந்த நாகர்குலமொன்றை கண்டடைந்தனர். அங்கு நிகழ்ந்த நாகவேள்வியில் மறைந்த நாகவேதத்தின் ஒரு பகுதி அம்மொழியில் அச்செய்கைகளுடன் அந்த நடையில் அதற்குரிய சடங்குமுறைமைகளுடன் நாகவைதிகர்களால் ஓதப்படுவதை கண்டனர். மகதத்தின் நாகர்களை அங்கே அனுப்பி அவர்களிடமிருந்து அவ்வேதத்தை கற்றுவரச்செய்தான் ஜராசந்தன். நூறு தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறையும் இழந்தவைபோக எஞ்சிய அவ்வேதம் பன்னிரு நாட்கள் இடைவிடாது ஓதி முடியுமளவுக்கு நீளம் கொண்டிருந்தது.
[ 9 ]
கதிரெழுநிலத்தில் நாகவேதம் பயின்று மீண்ட நாகவைதிகர்கள் சைத்யக மலையின் உச்சியில் நாகருத்திரனின் ஆலயத்திற்கு முன்பு வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்து முதல் நாகவேள்வியை நடத்தினர். ஆனால் மகதத்தின் பன்னிருகுடிகளும் அவ்வேள்வியை ஏற்க மறுத்துவிட்டனர். ஜராசந்தனுக்கு குலப்பூசகர் சொன்ன குறியுரையை முன்னரே அவர்கள் அறிந்திருந்தனர். முதலில் அவ்வேள்வி நாகபூசகர் நிகழ்த்தும் வழக்கமான அதர்வவேத வேள்வி என்று எண்ணியிருந்தனர். அதை நிகழ்த்துவதேகூட நாட்டுக்கு நலம்பயப்பதல்ல என்ற பேச்சு வெளிக்கிளம்பாமல் சுழன்றுவந்தது. மழைவிழவுடன் முழுமையான நாகவேள்வி நிகழவிருப்பதை மகதத்தின் வைதிகர்கள் வழியாக அறிந்ததும் அவர்கள் உளக்கொதிப்படைந்தனர்.
“வேதமென்பது ஒன்றே. பலவென பிரிந்துகொண்டிருப்பதே புடவியின் பருப்பொருளின் இயல்பு. ஒன்றென மையம்கொண்டிருப்பது அதன் சாரமென அமைந்த கரு. அது ஓங்காரம். அதன் அலகிலா முழுமையை மானுடர் அறியவியலாது. மானுடர் அறியக்கூடுவது அக்கடலின் துளி. அறிகையிலேயே கலையும் ஓரம். அதில் அள்ளி அதற்கே படைக்கப்படுவதனால் படையல் எனும் பொருளில் அதை வேதம் என்றனர் முன்னோர். அறிபடுவதிலிருந்து அறியத்தருவதை நோக்கிய பயணமே வேதம். ஓங்காரத்திலிருந்து ஓங்காரம் வரையிலான பெருவெளி என அதை மொழியிலாக்கினர்” என்றார் பூர்வகௌசிக குலத்து முதுவைதிகரான சந்திரசன்மர்.
“இங்குள்ள புடவிப்பொருட்கள் நம் அறிவால் நமக்கென கோக்கப்பட்டவை குலத்தோரே. வேதமெனும் மையம் சிதையுமென்றால் புடவியை அறிவென ஆக்கும் தொடர்பு அழிகிறதென்றே பொருள். பொருண்மைக்கும் நுண்மைக்கும் இடையே ஒத்திசைவு அழிந்தால் இங்குள்ள ஒவ்வொன்றும் அறியப்படாததாக ஆகும். அந்தப் பானை பானையெனும் அறிவிலிருந்து விடுபடுமென்றால் அது என்ன? இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா? வேதம் அறிவின் மையமுடிச்சு. அதை அவிழ்ப்பதென்பது நாம் நிழல்தங்கி, குடியமைத்து, குலம்பெருக்கி வாழும் கூரையின் மையக்குடத்தை உடைத்து நம் தலைமேல் வீழ்த்துவதேயாகும்.”
“ஆம்” என்று முதுகுலத்தலைவர் மூஷிகர் சொன்னார். “நாம் இங்கு எதை நம்பி வாழ்கிறோமோ அதை அழிப்பவனை அரசனென ஏற்றுக்கொண்டால் நாம் நம் மூதாதையருக்கு பழி சமைக்கிறோம். நம் மைந்தர்நிரைக்கு தீங்கை கையளிக்கிறோம்.” அத்தனை குடித்தலைவர்களும் அதை ஏற்றனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். சிலர் கைகளால் ஆடைகளை நெருடினர்.
“அழிவும் ஆக்கமும் இனி உங்கள் முடிவில்” என்றபின் சந்திரசன்மர் தன்னுடன் வந்த வைதிகருடன் எழுந்துகொண்டார். “இந்நகரில் நாகவேதம் எழும் என்றால் இதை உதறி நாங்கள் செல்வதைத்தவிர வேறு வழி இல்லை. முன்பு நூற்றெட்டு தொல்குடியினர் இங்கே எரிபுகுந்தபின்னர் மழை பொய்க்காமலிருக்கும்பொருட்டு எங்களை கொண்டுவந்தார் உங்கள் அரசர். எங்கள் சொல்லில் வாழ்ந்தது உங்கள் குடி. அச்சொல்லை எங்கள் நாவுடன் எடுத்துச்செல்வோம். நாகவேதம் உங்களுக்கு மழையும் விளையும் பொன்னும் அறமும் ஆகுமென்றால் அதை நம்பி வாழுங்கள்.”
முன்பு மகதத்தை தொல்குடிவைதிகர் கைவிட்டபோது ஜராசந்தன் வைதிகச்சடங்குகளுக்கு வரும் அந்தணர்களுக்கு பத்துமடங்கு பொன் பரிசளித்தான். ஆரியவர்த்தத்தின் வைதிகர் மகதத்தை புறக்கணித்தாலும் அங்கே கிடைத்த பெரும்பொருள் நாடி தெற்கே விந்தியனுக்கு அப்பாலிருந்து சிறுகுடி வைதிகர் வந்துகொண்டிருந்தனர். மெல்ல அவர்களில் பலர் அங்கேயே தங்கினர். அவர்களின் குலங்கள் பெருகின. அன்றாட வாழ்க்கை ஒவ்வொன்றையும் இயல்பாக்குவதையே நெறியென கொண்டிருக்கிறது, கற்கள் அனைத்தையும் உருளைகளாக மாற்றவிரும்பும் நதிப்பெருக்கைப்போல. முன்பு அந்நகரில் வைதிகருக்கு இழைக்கப்பட்ட பழியை மக்கள் மறந்தனர்.
ஆரியவர்த்தத்தின் வைதிககுடிகள் மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருநாளும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறுநாடுகளின் பெயர்களை அவர்கள் சொல்லி அவியிடுகையில் மகதத்தின் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தேவர்கள் மகதத்திலேயே மண்ணிறங்குகிறார்கள் என்று ஜராசந்தனின் பொன்பெற்ற சூதர்கள் பாடினர். பிறந்துவந்த ஒருதலைமுறை அச்சொல்லிலேயே வளர்ந்தது.
பொருள்கொண்டு பெருகி, வேதக்கல்விபெருக்கிய மகதத்தின் சிறுகுடிவைதிகர் தங்களை மூத்தமுதல்குடி என சொல்லத்தலைப்பட்டனர். தங்கள் இழிவுணர்வால் அதை ஐந்துமடங்கு மிகைப்படுத்தினர். அதில் பாதி நம்பப்பட்டது. கௌசிகராகிய விஸ்வாமித்ரரால் உருவாக்கப்பட்டு விந்தியனுக்கு அப்பால் வேதம் பெருகும்பொருட்டு நிறுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்றனர். பூர்வகௌசிககுல அந்தணர் பிறரை நிகரென கொள்ளலாகாது என்றனர். மகதம் அவர்களின் நகரென்று ஆகியது. பூர்வகௌசிக அந்தணர் சொல்லை மக்கள் இறையாணை என எண்ணினர்.
“இதை நாம் ஒப்பலாகாது. நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சூட்டுவதற்கு நிகர் இது” என சிறுமன்றுகள் தோறும் மகதக்குடியினர் உள்ளம் குமுறினர். ஆனால் ஜராசந்தனிடம் எவர் சொல்வதென்று அவர்கள் குழம்பினர். இறுதியில் பேரன்னை ஆலயத்தில் கூடிய முழுமன்றில் மூத்த குலத்தலைவர் மூஷிகர் ஜராசந்தனின் அவையில் அதை சொல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. முதியவரான மூஷிகர் “அவன் அரக்கியின் மைந்தன். நாமறிவோம் அவன் இயல்பென்ன என்று” என்றார். அவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் அச்சொல்லைச் சொல்லி அங்கேயே இறக்கக்கூடும்” என்றார் அவர்.
“அதை நாம் மென்மையாக சொல்வோம். அவர் உள்ளம் குளிரும்படி சொல்வோம்” என்றார் சந்திரசன்மர். “அவரது வெற்றியின்பொருட்டும் அவர் மைந்தனின் வாழ்வின்பொருட்டும் பெருவேள்வி ஒன்றைச்செய்ய ஒப்புதல் கோருவோம். அவ்வேள்வி அன்றி பிற வேள்வியை இங்கே நாம் ஒப்பமாட்டோம் என்றும் அறிவிப்போம்.” அவை முகம் மலர்ந்து “ஆம், ஆம், அதுவே நல்ல சொல்” என்றது. “இனிய சொல். அதுவே நல்ல படைக்கலம்” என்றார் குலத்தலைவராகிய அச்சுதர்.
அச்சுதரும் பிறரும் துணைவர பெரும் காணிக்கைகளுடன் குலத்தலைவர்களின் குழு ஒன்று ஜராசந்தனை காணச்சென்றது. அவையிலமர்ந்திருந்த அரசனின் முன் நிரை நின்று முகமனும் வாழ்த்தும் சொன்னபின் அனைவரும் மூஷிகரை நோக்கினர். அவர் இருண்ட முகமும் தளர்ந்த தோள்களுமாக நடைதடுமாற வந்துகொண்டிருந்தார். அவைபுகுந்தபின்னர் அவர் சித்தப்பெருக்கு விழிகளையும் காதுகளையும் முற்றாக மறைத்துவிட்டிருந்தது. ஆனால் அமைதியை அவர் திடீரென்று கேட்டார். விழிகளை உணர்ந்தார். பதறும் கைகளை கூப்பியபடி எச்சில் விழுங்கினார். சொல்லெழாமல் உதடுகளை அசைத்தார்.
அத்தருணம் எத்தனை கூரிய முனை என அப்போதுதான் அவர் முழுதுணர்ந்தார். ஆயிரம் முறை ஒத்திகை செய்த அனைத்துச்சொற்களும் அவரை விட்டு அகன்றன. முதிய குலத்தலைவராக, கற்றறிந்த சான்றோனாக, தந்தையாக, அரசுசூழ் திறனாளனாக, எளிய குடிமகனாக அவர் நின்றுநடித்த அத்தருணத்தை முற்றிலும் புதியதென உணர்ந்தார்.
“நாங்கள் ஒருபோதும் நாகவேள்வியை ஒப்பமாட்டோம்” என்றார் மூஷிகர். அச்சொற்களைக்கேட்டு அவரே திகைத்தார். யார் இதைச் சொல்வது? “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது? நானா? “நீங்கள் அரக்கியின் மைந்தராக இருக்கலாம். நாங்கள் மூதாதையருக்கு நீரளிக்கும் தொல்குடிகள்.” நிறுத்து! நிறுத்து! நிறுத்து! “இந்நகரையும் எங்கள் குடியையும் நீங்கள் அழிப்பதை நாங்கள் நோக்கி வாளாவிருக்க இயலாது.”
சொல்லிமுடித்ததுமே மூஷிகர் உடல்தளர, உள்ளம் தென்றலை உணர, இயல்பானார். பலநாட்களாக அவர் சுமந்திருந்த பேரெடை விலக தோள்கள் எளிதாயின. புன்னகையுடன் ஜராசந்தனின் முகத்தை நோக்கியபடி நின்றார். ஜராசந்தன் புன்னகை செய்தான். “நன்று. உங்கள் நிலைபாட்டை அறிய முடிந்தது உவகை அளிக்கிறது” என்றான். “முறைமைகள் முதன்மையானவை. குடிகளை உருவாக்கி நிறுத்துபவை அவையே. அவற்றைக் காப்பதே அரசனின் கடன்” என்றான். அவர்கள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கினர்.
ஜராசந்தன் “ஆனால் அந்த முறைமைகள் இங்கே முன்னரே மீறப்பட்டுள்ளன முதியவர்களே. முன்பு இந்நகரை நான் வென்று அரசை கைப்பற்றியபோது இங்குள்ள குடித்தலைவர்கள் என்னை ஏற்கவில்லை. முறைமைமீறல் என்றனர். அவர்களை ஒறுத்து அக்குடியில் இருந்து உங்களை தெரிவுசெய்து குலத்தலைமையின் கோல்களை அளித்தேன். அது முதல் நெறிமீறல். அதற்கென இப்போது உங்களை தண்டிப்பதே அரசமுறை என எண்ணுகிறேன்” என்றான். அவர்கள் பெருமூச்சு விட்டனர். ஒவ்வொருவரும் அத்தருணத்தில் அதிலிருந்த தவிர்க்கவியலாமையை உணர்ந்தனர். அச்சுதர் “ஆம், நாங்கள் அதை உணர்கிறோம் அரசே. இளமையில் நாங்கள் கொண்ட பொருந்தா விழைவுக்காக இப்போது கழுவிலேறியாகவேண்டும். அது மட்டுமே எங்களை நிறைவுசெய்யும்” என்றார்.
பன்னிரு குடித்தலைவர்களும் அன்றே சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் மைந்தர்களையும் கொடி வழியினரையும் சிறையில் அடைத்து நாகவேள்வி ஏற்றுக்கொள்பவர்களை குடித்தலைவர்களாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். குலத்தலைவர்களின் மூத்தமைந்தர் எவரும் அதற்கு ஒப்பவில்லை, அவர்கள் குலத்தலைவர்களாக முன்னரே உள்ளத்தால் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு குலத்திலும் இளையவர் ஒருவர் அதற்கு முன்வந்தார். முன்பு அவனிடம் கோல்பெற்று குலத்தலைமை ஏற்றவர்களும் அதைத்தான் செய்தனர். அவர்கள் எப்போதும் எழுந்துவருவார்கள் என ஜராசந்தன் அறிந்திருந்தான்.
அவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்.
தங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனைகள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்.
புதிய குடித்தலைவர்களின் ஒப்புதலோடு முதல் நாகவேள்வி சைத்யக மலையில் நடைபெற்றது. மகதத்தின் குடிமக்கள் அவ்வேள்வி அங்கு நிகழ்வதை அறிந்திருந்தனர். சைத்யக மலைக்குள் செல்லவோ வேள்வியை பார்க்கவோ எவருக்கும் ஒப்புதல் இருக்கவில்லை. கண்களால் பார்க்கப்படாத ஒன்றை நினைவில் நெடுநாள் நிறுத்திக்கொள்ள மக்களால் இயல்வதில்லை. அவை வெறும் கற்பனைகளென ஆகி பிற கற்பனைகளுடன் கலந்து கதைளாகி அகன்று செல்லும். கதைகள் ஆர்வமூட்டும்படி வளர்க்கப்பட்டால் மட்டுமே வாழக்கூடியவை. மகதத்தில் நாகவேள்வி குறித்த பலநூறு கதைகள் இருந்தன. அங்கே ஆயிரத்தெட்டு கன்றுகள் கொல்லப்படுவதாக சொன்னார்கள். அது ஆயிரம் மானுடர் என்றாகியது. அடங்காத ஷத்ரிய அரசர்களை கொண்டுவந்து சிறையிட்டு பலிகொடுக்கிறார் அரசர் என்று ஒரு சூதர் சொன்னதும் அதன் நம்பமுடியாமையே அதை அனைவர் நினைவிலும் நிறுத்தியது. நினைவில் நின்றமையால் அது நிலைபெற்றது.
மழைவிழவை பெருநிகழ்வாக மகத அரசு ஆக்கியது. அப்பன்னிருநாளும் நகரில் கொலையன்றி அனைத்தும் குற்றமே அல்ல என்றாகியது. அன்று ஆற்றுபவை அனைத்தும் இறுதிமழைத்துளி ஓய்ந்ததும் நினைவிலிருந்தும் அகன்றாகவேண்டும் என்று பூசகர் ஆணையிட்டனர். நினைவுகூர்தலே மானுடருக்கு கடினம். கணந்தோறும் வளர்ந்து பிறிதொன்றாகும் மானுட உடலோ மறப்பதையே இயல்பாகக் கொண்டது. அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் என்பதே ஓர் பெருந்தூண்டுதலாகியது. அனைவரும் ஆற்றுகிறார்கள் என்பதே பிழையும் பழியும் இல்லையென்றாக்கியது. அவர்களுக்குமேல் பெய்து நின்றிருந்த பெருமழை தெய்வங்கள் அமைத்த திரையாகியது.
பன்னிருநாட்களும் இழிபெருங்கனவொன்றிலாடினர் மகதர். மழை மகதத்தின் குடிகள் அனைவரையும் தழுவி பிறிதொருவராக ஆக்கியது. களிமகன்களும் படைவீரர்களும் வணிகர்களும் மட்டுமன்றி இல்லறத்தாரும் பெண்டிரும் குழந்தைகளும் அதில் திளைத்தனர். அவர்களின் முதலியல்பே அதுவென்பதுபோல. அவ்விழவின் கட்டின்மைக்காக ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் அன்றாடக் கட்டுகளுக்குள் பொறுத்தமைந்து அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் அகக்குகைஇருளில் விழிமட்டுமே மின்னும் விலங்கொன்று நாசுழற்றி வெம்மூச்சு விட்டு ‘இந்நாள்! இனியொரு நாள்! இனியொரு நாள்!’ என்று பொறுமை இழந்து கால்மாற்றி செவிசாய்த்து அமர்ந்திருந்தது.
வேனில் முதிர்ந்து மழைவிழவுக்கான முரசறையப்படும்போது ஒவ்வொருவரும் அவ்வொலியை தங்கள் நெஞ்சறைதல் என உணர்ந்தனர். அவ்வொலி கேட்டு அவர்கள் கொந்தளித்து கூச்சலிடுவதில்லை. அச்சமூட்டும் ஒன்றை கேட்டதுபோல் அம்முரசுமேடைகளில் இருந்து விலகிச் சென்று அதை கேட்காதவர்கள்போல நடித்தனர். பொருள்களை விலைபேசினர். கன்றுகளை ஓட்டிச்சென்றனர். அருகிருப்பவருடன் நகையாடினர். உள்ளத்தை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாது கரந்தனர். கரந்தவை கொள்ளும் குளிர்ந்த கூர்மையை உள்ளூர உணர்ந்தனர். கூர்முனையை வருடும் கூச்சத்தை அறிந்து சிலிர்த்தனர். முரசறைவு முடிந்தபின் நகரில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் தனித்துச் சென்று நீள்மூச்செறிந்தனர்.
துணைவியரின் முகங்களை இல்லறத்தார் நோக்கவில்லை. துணைவியரும் விழிதூக்காது தங்களுக்குள் அமைந்து கனவிலென உலவினர். அவ்வறிவிப்பு நிகழவேயில்லை என்ற நடிப்பு அனைவரும் நடித்தமையால் இயல்பென்றாகியது. இரவில் அணுகும் மழையின் புழுக்கத்தில் வியர்வை வழிய படுத்திருந்தவர்கள் கைவிசிறிகளால் விசிறியபடி பெருமூச்சுவிட்டு விடியும்வரை புரண்டு படுத்தனர். விடியலின் கனவில் திகைத்தெழுந்து கூசிச்சிலிர்த்தனர். துயிலிழந்த கண்கள் உறுத்த காலையில் எழுந்து உலர்ந்த வாயுடன் தெருக்களில் விழிநட்டு அமர்ந்திருந்தனர். மழை வருகிறதா என்று விண்ணைப்பார்ப்பதுகூட பிறிதெவரேனும் அறியலாகும் என்பதற்காக புழுதி படிந்த தெருக்களையே நோக்கினர்.
ஒரு சொல்லும் ஒருவரும் உரைக்கவில்லையென்றாலும் ஒவ்வொருவரும் தன்னியல்பிலேயே அதற்கென ஒருங்கினர். இல்லங்களில் மழைவிழவுக்கான பொடியும் பூச்சும் சாந்தும் சாறும் சமைக்கப்பட்டன. மழை விழவுக்கென அமைந்த தேன்மெழுகு பூசப்பட்ட ஆடைகள் இருண்ட பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து புதுக்கப்பட்டன. மழை விழவு தொடங்குவதற்கான கொம்பு காலையில் ஒலித்தபோது பறக்கத்தயங்கி கூண்டில் அமர்ந்து சிறகதிரும் குஞ்சுப்பறவைபோல தங்கள் இல்லங்களுக்குள்ளேயே இருந்தனர்.
முதல்கார் வியர்வைபெருக்கென வான்நிறைந்து குளிர்காற்றென ஆகி இருட்டென மின்னல் அதிர்வென இடிமுழக்கென சூழ்ந்தது. முதல்மழை அம்புப்பெருக்கென சாய்ந்து வந்தறைந்தது. நகரம் “மழை! மழை!” என ஓலமிடத் தொடங்கியது. கூரைவிளிம்புகள் சொட்டி விழுதாகி அருவிநிரைகளென மாறின. தெருக்களெங்கும் புழுதி கரைந்து செங்குருதி போல நீர் வழிந்தது. கோட்டைச் சுவர்கள் ஈரத்தில் கருகி, குவைமாடங்கள் ஒளிவழிந்து மெருகேறி, உச்சிக் கொடிகள் நனைந்து கம்பங்களில் சுற்றிக்கொள்ள மழை மூடியிருந்தது விண்முதல் மண்வரையிலான வெளியை. அனைத்து ஓசைகளுக்கும் மேல் மழையின் ஓசை அழியாச்சொல்லொன்றை சொல்லிக் கொண்டிருந்தது.
முதலில் நாணிழப்பவை கன்றுகளும் குதிரைகளும். புதுமழை மணத்தை முகர்ந்து கட்டுகளிலிருந்து துள்ளி கால் உதறி கனைத்தன. அறுத்துக்கொண்டு தெருவில் இறங்கி வயிறதிரப்பாய்ந்தன. பின்னர் தெருநாய்கள் வாலைத்தூக்கிச் சுழற்றி மழையில் பாய்ந்திறங்கி தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டன. சங்கிலியை அறுத்துக்கொண்ட களிறுகள் தெருக்களில் பிளிறியோடின. பின்பு எப்போதோ எங்கோ களியாட்டின் மெல்லிய ஓசை ஒன்று எழுந்தது. ஒவ்வொரு முறையும் நகரின் எப்பகுதியிலிருந்து அது எழுகிறது என்பது முன்பு உய்த்துணரமுடியாததாகவே இருந்தது.
அவ்வொலி கேட்டு கல்விழுந்து திடுக்கிட்டு துயில் கலையும் புரவிபோல நகரம் எழுந்தது. சற்று நேரத்தில் அனைத்து இல்லங்களிலிருந்தும் அனைவரும் தெருக்களுக்கு இறங்கினர். லேபனங்கள் பூசப்பட்ட உடலும் நீர் ஒட்டா ஆடையுமாக மழையில் புகுந்து தனித்தனர். கள்ளுண்டனர். காமம் கொண்டனர். கட்டின்றி அலைந்தனர். தினவெடுத்து மற்போரிட்டு சேற்றில் படுத்துருண்டனர். புழுக்களுக்கு மட்டுமே தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ள உடலொன்றேயான முழுதிருப்பில் திளைத்தனர்.
உடல் நலிந்து மழைக்கு அப்பால் திண்ணையில் அமர்ந்து நைந்த விழிகளால் நோக்கியிருந்த முதியவர் கைத்தடிகளால் தரையைத்தட்டி நிலையழிந்தனர். “உங்கள் நகருக்கு நடுவே அங்கே நாகவேள்வி நடந்துகொண்டிருக்கிறது மூடர்களே” என்று கூவினர். “இங்கு கட்டவிழ்ந்திருக்கும் களியாட்டின் ஊற்று அங்கே சுருளழியும் நாகங்கள். வானிழிவது மழையல்ல, நாக நஞ்சென்று அறியுங்கள். உங்கள் உடல்களில் நெளிவது கைகளும் கால்களும் அல்ல, நாகவளைவுகள். அத்தனைபேரும் நாகங்களாகிறீர்கள். நாகங்களே! இளநஞ்சுகளே! இமையா வேட்கை விழிகளே!” என்று கூவினர்.
அவர்களின் சொற்களுக்கு மேல் அடைத்து நின்று பெய்தது மழை. முதல் நாகவேள்வி நிகழ்ந்து அதன் விளைவென அரசனுக்கு மைந்தன் பிறந்தபோது மகதத்தின் வைதிக அந்தணரும் அதைப்பற்றி பேசாதாயினர். சிறைகளில் அடைக்கப்பட்ட குலமூத்தோர் விடுதலை செய்யப்பட்டனர். உடல் நலிந்து முதுமை சூடி வந்த அவர்கள் சித்தம் கலங்கியபடி நகரை வெறித்து நோக்கினர். தோல்பையை இழுத்து புறம் திருப்புவது போல உள்ளிருந்து பிறிதொருவர் எழக்கூடுவதெப்படி? நாமறியாத ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது. இவ்வரக்கன் அதை தொட்டு எழுப்பியிருக்கிறான். நாமறியாத நஞ்சொன்றை ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டிருக்கிறோம். கூட்டரே, நாம் நாமல்ல. நம்முள் வாழ்வது நம்மை ஊர்தி என படையல் என கொண்டு இங்கு வாழும் தெய்வங்களின் வாழ்க்கை. சில ஆண்டுகளிலேயே தங்களால் அறிந்து கொள்ள முடியாத உலகிலிருந்து உதிர்ந்து மறைந்தனர்.
மழை எழுந்தபின்னர் மகதர் மானுடரல்ல என்று சூதர் பாடினர். அவர்களின் விழிகள் மெல்ல மெல்ல இமையாதாயின. உடல்கள் நெளிவுகொண்டன. மூச்சு சீறலாகியது. அவர்கள் குரலில் அழிந்து மறைந்த தொல்நாக மொழி எழுந்துவந்தது. நாகவேள்வியின் அவிகொள்ள தட்சனும் கார்க்கோடகனும் வாசுகியும் பாதாளங்களிலிருந்து எழுந்து வந்தனர். இருளுக்குள் நெளிவென அவர்கள் அந்நகருக்குள் பரவினர். அவர்களுக்கு மேல் கொடுநாகக் கோதை அணிந்து ஆடினான் ஒருவன். அவனுடன் காலிணைந்து கையிணைந்து ஆடினாள் நச்சரவக் கங்கணம் அணிந்த கரியபேரன்னை.
[ 10 ]
ஜராசந்தன் மகதத்தின் செங்கோலை ஏந்தி அருகமைந்த நாடுகள்மேல் மேல்கோன்மை கொண்டபின்னர் ஒருநாள் தன் படைக்கலப்பயிற்சிநிலையில் அரசுத்துணைவர்களான விதர்பத்தின் ருக்மியும், சேதியின் சிசுபாலனும், பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனும், புண்டரத்தின் வாசுதேவனும் சூழ கதை சுழற்றிக்கொண்டிருக்கையில் பெருந்தோளராகிய பகதத்தன் தன் கதையைச் சுழற்றி நெடுந்தொலைவுக்கு வீசினார். பின் ஒவ்வொருவரும் கதையை சுழற்றிவீசி விளையாடினர். “உங்கள் முறை மகதரே” என்றான் சிசுபாலன். ஜராசந்தன் தன் கதையைத் தூக்கி வீச அது பெருமதிலைக் கடந்து அப்பால் சென்று குறுங்காட்டில் விழுந்தது.
அச்செய்தியை அன்று அவையில் பாடிய சூதராகிய வராகர் “ஆரியவர்தத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் சென்று விழுந்தது அந்த கதாயுதம். அதை அசைத்து எடுத்து திருப்பிவீசும் வல்லமை எவருக்குமிருக்கவில்லை” என்று பாடினார். அவையிலிருந்த அரசர்கள் நகைத்தனர். அந்நகைப்பில் கலந்துகொண்டு தானும் நகைத்த ஜராசந்தனின் சிறியவிழிகள் சற்றே சுருங்கின. அன்று மாலையே தன் படைத்தலைவர்களான ஹம்சனையும் டிம்பகனையும் அழைத்து அந்த கதாயுதத்தை தேரிலேற்றி படைகளுடன் தன்னைச் சூழ்ந்த நாடுகளுக்கெல்லாம் கொண்டுசெல்ல ஆணையிட்டான்.
கதாயனம் என்று புலவர் அழைத்த அப்பயணம் நான்காண்டுகாலம் நடைபெற்றது. அதன் பொருளென்ன என்று அனைவரும் அறிந்திருந்தாலும் அது ஒரு விளையாட்டு எனக் கொண்டு நகையாடியபடி திறைசெலுத்தி திருப்பியனுப்பினர். சூழ்ந்திருந்த நாடனைத்தும் மகதத்திற்கு அடிப்படுவதை பிற ஷத்ரியர் திகைப்புடன் நோக்கியிருந்தனர். முதலில் மகதம் நுழைந்த நாட்டில் அரசமாளிகை எரிக்கப்பட்டது. அரசகுலத்தவர் முற்றாக கொன்றொழிக்கப்பட்டனர். கோட்டைகள் யானைகளால் இடித்து அழிக்கப்பட்டன. கருவூலம் சூறையாடப்பட்டது. பன்னிருநாட்கள் நடந்த எரிபரந்தெடுத்தலில் முனிவரும் அந்தணரும் கவிஞரும் சூதரும் சிற்பியரும் மட்டுமே உயிரும் மதிப்பும் அளிக்கப்பட்டனர். பெண்டிருக்கு சிறுதீங்கும் நிகழலாகாதென்று ஜராசந்தனின் ஆணை இருந்தது.
மழைக்குமுன் குளிர் என அச்சம் ஜராசந்தனின் படைகளுக்கு முன் சென்றது. உள்ளம் தோற்கடிக்கப்பட்ட படைகளின் உடல்களை அரிந்து வீழ்த்தினர் ஹம்சனும் டிம்பகனும். ஒவ்வொருநாளும் பலநூறுபேர் கழுவிலேற்றப்பட்டனர். கழுவிலமர்ந்து கதறுபவர்களின் நடுவே மஞ்சம் அமைத்துத் துயில்பவர்கள் அவர்கள் என்று சூதர்களின் சொல் பரவியது. மனித உடல்களை நெடுகப்போழ்வதில் அவர்களுக்கு பேருவகை இருந்தது. எடைமிக்க பெருவாளால் இரண்டாக வெட்டப்பட்டனர் எதிரிகள். யானைகளிலும் குதிரைகளிலும் இருகால்களும் விரித்துக்கட்டப்பட்டு இரண்டாக கிழிக்கப்பட்டனர். விசைமிக்க ஆழிகளால் நடுவே உடைத்து அகற்றப்பட்டனர். அவர்களை எண்ணியபோதே உடல்பிளக்கும் உணர்வை அடைந்தனர் அரசர்கள்.
ஒற்றைவீழ்வென ஷத்ரியகுலங்கள் மகதத்தின் முன் தாள்மடிந்ததை எண்ணி திகைத்தனர் பிற பேரரசர்கள். “அரசே, இடிந்துவிழுவது பெரிய கட்டடம் என்றால் இடிதலே மேலும் இடித்தலை நிகழ்த்தும். பெரிய அமைப்புகள் தங்களை உடைத்துக்கொள்ளும் விழைவு கொண்டவை. ஏனென்றால் பிரிதலே பருப்பொருளின் தன்னியல்பு” என்றார் கோசல மன்னனின் அவையில் கௌசிக குலத்து அந்தணராகிய பிரபாகரர்.
எதையும் செய்யக்கூடியவன் என்று அறியப்பட்ட அரக்கிமகனிடம் போர் தொடுக்கலாகாது என அவர்களின் அமைச்சர்கள் அவர்களை எச்சரித்தனர். “ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு காலமும் தனக்கென ஓர் அரக்கனை உருவாக்கி எடுக்கிறது அரசே. அது மண்ணிலுள்ள ஒரு நிலையியல்பு. அதன் வெளிப்பாடென ஒரு மனிதனை அது கண்டடைகிறது” என்றனர். “அவ்வரக்கன் தன் அரக்கத்தன்மையாலேயே பிற அரக்கர்களை கவர்கிறான். அரக்கர்களுக்கு அமைவதுபோல் அர்ப்பணிப்புள்ள அணுக்கரும் அடிப்படையினரும் பிறருக்கு அமைவதில்லை.”
“அப்படியென்றால் என்னதான் செய்வது? வெல்லட்டும் அவன் என இங்கு வாளாவிருப்பதா?” என்றான் பாஞ்சால மன்னன் துருபதன். “எழுவதுபோல் அது அடங்கவேண்டும் என்பதே புடவியின் நெறி. எழுவது அடிப்படைவிசை என்பதனால் அதனுடன் போர்புரிபவன் அழிவான். அது விழுவதும் அடிப்படைநெறி என்பதனால் அதைத் தடுக்க தெய்வங்களாலும் ஆகாது” என்றார் துர்வாசர். “முட்டக்கொழுக்கும் விலங்கு தெய்வங்களுக்குரிய இனிய பலி என்று சொல்லப்படுவதுண்டு. அக்காளை அன்னைக்குரிய கொடை.”
ஜராசந்தனின் கதாயுதம் நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தபோதுதான் மதுராவில் கம்சனை மதுவனத்து யாதவர் இருவரும் மற்போரில் கொன்றனர். கம்சனின் துணைவியரான ஆஸ்தியும் பிராப்தியும் கண்ணீருடன் ராஜகிருஹத்தை வந்தடைந்தனர். தன் மகள்கள் அடைந்த சிறுமையால் கொந்தளித்த ஜராசந்தன் ஹம்சனுக்கும் டிம்பகனுக்கும் மதுராவை வெல்லும்படி ஆணையிட்டான். அவர்களின் படைத்துணைவனாகிய ஏகலவ்யன் படைகொண்டுசென்று மதுராவை அழித்தான். யமுனையை கடந்துசென்று மதுவனத்தையும் எரித்தான்.
ஆனால் யாதவகுடிகளைத் திரட்டி அஸ்தினபுரியின் படைத்துணைகொண்டு வந்த இளைய யாதவர் மீண்டும் மதுராவை வென்றார். அவர் தந்தை வசுதேவர் மதுராவின் அரசனானார். ஜராசந்தனின் கதை மீண்டும் மதுரா நோக்கி சென்றது. படைகொண்டு வந்த பலராமர் அதை யமுனைக்கரையின் கோமஸ்தகம் என்னும் குன்றருகே தடுத்து சிதறடித்தார். பதினைந்து முறை மதுராவின் எல்லைகளைத் தாக்கிய கதாயுதம் தடுக்கப்பட்டது. ஜராசந்தன் வெறிகொண்டு ஹம்சனை அறைந்தான். டிம்பகனை எட்டி உதைத்தான். “இழிமகன்களே, உங்களால் இயலாதென்றால் உரையுங்கள். நான் வெல்கிறேன்” என்றான். “எளிய யாதவர். கன்றோட்டி காட்டில் வாழும் கீழ்மக்கள். அவர்களிடம் தோற்குமென்றால் மகதம் அழிவதே மேல்.”
“அரசே, இம்முறை வென்று மீள்வோம். இல்லையேல் திரும்பமாட்டோம்” என்று வஞ்சினம் உரைத்து ஹம்சனும் டிம்பகனும் கிளம்பிச்சென்றனர். பன்னிரு கால்படைப்பிரிவுகளும் எட்டு புரவியணிகளும் ஏழு களிற்றுநிரைகளும் வில்லவர் தேர்களும் மதுரா நோக்கி சென்றன. மதுராவின் எல்லையில் அப்படைகளை பலராமர் சந்தித்தார். போரில் யாதவர் சிதறியோடினர். நெய்யூற்றி காடுகளை எரித்து புகைசூழச்செய்து நீர்நிலைகளில் நஞ்சுகலக்கி கடக்கமுடியாததாக ஆக்கி மதுராவுக்கு மீண்டார்.
வசுதேவரின் அச்சம் நிறைந்த ஓலை கண்டு துவாரகையிலிருந்து இருந்து இளைய யாதவர் மதுராவுக்கு வந்தார். “நாம் எண்ணமுடியா பெரும்படை, இளையவனே. மதுராவை கல்மேல் கல்லின்றி அழிக்கும் வஞ்சினம் உரைத்து வந்துள்ளது” என்றார் பலராமர். “நாம் இயற்றக்கூடுவது ஒன்றே. அஸ்தினபுரியின் படைத்துணை இன்றி நாம் இவர்களை வெல்லல் இயலாது.”
தன் கைகளை கட்டியபடி யமுனையை நோக்கி நின்ற இளைய யாதவர் “அஸ்தினபுரியில் அத்தையும் பாண்டவரும் இல்லை, மூத்தவரே” என்றார். “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றும் எவரும் அறியக்கூடவில்லை. அவர்களை கண்டடைந்தாலும் அவர்களால் ஆகக்கூடுவதொன்றில்லை.” பலராமர் “நான் சென்று துரியோதனனிடம் கோருகிறேன். என் சொல்லை அவனால் தட்டமுடியாது” என்றார். “மூத்தவரே, அரசு துரியோதனரிடம் இல்லை. விழியிழந்த அரசரிடம் உள்ளது.” சற்றுநேரம் விழியிமைக்காமல் நோக்கியபின் “ஆம், பிறர்காலில் நாம் நடக்கமுடியாது” என்றார் பலராமர். “போரிடுவோம், மடிவதும் வீரருக்கு உகந்ததே.”
“மடிவதற்காக நாம் நம் குடிகளை இத்தனை தொலைவுக்கு இழுத்துவரவில்லை” என்றார் இளைய யாதவர். “எளிய கன்றோட்டிகளாக அவர்கள் வாழ்ந்திருக்கலாம். அரசக்கனவை அவர்களுக்கு ஊட்டினோம். இனி பின்னகர்வதற்கு இடமில்லை. நாம் வென்றே ஆகவேண்டும்.” அவர் குரல் உணர்வெழுச்சி கொண்டது. “மூத்தவரே, கார்த்தவீரியர் தோற்ற இடம். காலமெல்லாம் நாம் தோற்றுக்கொண்டே இருக்கும் இடம். நாம் வெறும் யாதவர் அல்ல. ஏணியில் முதலில் செல்பவர். நாம் விழுந்தால் பின்ஏறுபவர் அனைவரையும் சரித்துவிடுவோம்.” பலராமர் தோள்தளர்ந்து “ஆம்” என்றார். “நாம் வெல்வோம். ஏனென்றால் வென்றேயாகவேண்டும்” என்றார் இளைய யாதவர்.
“இன்று நாம் வெல்லவேண்டியவர்கள் ஹம்சனும் டிம்பகனும்தான், இளையோனே” என்றார் பலராமர். “வற்றாத கொலைவெறியால் நிகரற்ற வல்லமை கொண்டவர்கள். கொலையை விரும்பத்தொடங்குபவனை நோக்கி பாதாள தெய்வங்கள் வந்து சூழ்கின்றன. அவன் படைக்கலங்கள் ஒளிகொள்கின்றன. நான் கம்சனின் வாளை ஒருநாள் கையிலெடுத்துப் பார்த்தேன். அதன் ஒளி என்னை அச்சுறுத்தியது. அது உருவற்று நின்றிருக்கும் குருதிவிடாய்கொண்ட விலங்கொன்றின் நெளிநாக்கு என்று தோன்றியது.” இளைய யாதவர் “இரண்டியல்புகளால் ஆனவன் அரசன். அவன் தன் ஒற்றை இயல்பை மட்டும் எடுத்து இவர்களை அமைத்துள்ளான்” என்றார்.
கிரிவிரஜத்தின் முதல்மலையான விபுலத்தில் பிறந்தவன் ஹம்சன். வராகமலையில் டிம்பகன் பிறந்தான். ஹம்சன் பிறப்பிலேயே வலதுகையும் காலும் மட்டும் செயல்கொண்டவனாக இருந்தான். சொல்லிலும் சித்தத்திலும் வலப்பக்கம் மட்டுமே அவனுக்கிருந்தது. டிம்பகன் இடப்பக்கம் மட்டும் கொண்டிருந்தான். போர்த்தொழில் பயின்று படைநடத்தும் குடியில் பிறந்த அவ்விருவருமே பிறர் உதவியின்றி நடக்கவும் முடியாதவர்களாக இருந்தனர். செயலற்ற ஊன் தடிகள் என்றே அக்குடிகளால் எண்ணப்பட்டனர். அன்னையரின் கருணையால் அவர்கள் உணவுண்டு உயிர்வாழ்ந்தனர்.
மகதத்தின் இளவேனில் விழவொன்றில் அன்னையால் அழைத்துச்செல்லப்பட்ட சிறுவனாகிய ஹம்சன் அங்கிருந்த காளிகோயில் ஒன்றின் திண்ணையில் விடப்பட்டான். அருகே டிம்பகனின் அன்னையும் அவனை விட்டுச்சென்றிருந்தாள். இரு உடல்களும் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. அன்னையர் மீண்டு வந்தபோது தோள்கோத்து ஒற்றை உடலென்றாகி துள்ளி அலைந்து விளையாடிக்கொண்டிருந்த ஹம்சடிம்பகர்களை கண்டனர். அன்னையர் அவர்களக் கண்டு அறியாத அச்சமொன்றால் பீடிக்கப்பட்டு நெஞ்சை அழுத்தி விழீநீர் விட்டனர். பின்னர் பேருவகை ஒன்றால் கிளர்ந்தெழுந்து ஓடிச்சென்று அவர்களை தழுவிக்கொண்டனர்.
அவர்கள் ரம்பகரம்பர்களின் மறுபிறப்பென்று நிமித்திகர் சொன்னார்கள். அவர்களின் தந்தை ஒருவரே என்று குலம் கண்டடைந்தது. ஓருடலான இருவர் அதன்பின் ஒவ்வொருநாளும் படைக்கலப்பயிற்சிகொண்டு மேலேறினர். அவர்கள் முன் நின்று வில்குலைக்கும் திறன் கொண்ட எவரும் மகதப்பெருங்குடிகளில் இருக்கவில்லை. ராஜகிருஹத்தை ஜராசந்தன் வென்றபோது அவர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டனர். அவன் முதன்மைப்படைத்தலைவர்கள் ஆனார்கள். பாரதவர்ஷத்தின் நாடுகளை அவன் பொருட்டு அவர்களே படைநடத்தி வென்றனர்.
யாதவகுடிகளின் எல்லையைச் சூழ்ந்திருந்த மகதத்தின் படைகளுடன் மதுராவின் படைகள் நாளும் சிறுபூசல்களில் ஈடுபட்டிருந்தனர். அஸ்தினபுரியின் படைத்துணை வருமா என்றறிய ஹம்சடிம்பகர் காத்திருந்தார்கள். யாதவர்களின் குடிகளைத்திரட்ட முடியாமையை மறைத்துக்கொண்டு அஞ்சிய விலங்கின் சிலிர்த்த மயிரும் சீற்றமும் காட்டி மதுரா பதுங்கியிருந்தது.
ஒருநாள் எல்லையில் நிகழ்ந்த போரில் மகதத்தின் சிறுபடைத்தலைவனாகிய ஹம்சனை பலராமர் கொன்றார். அவரது கதைபட்டு தலைசிதறிக்கிடந்தவன் எவன் என்று அறியாத பலராமர் படைக்களச்சூதன் ஒருவனிடம் அவனைப்பற்றி கேட்டார். “பிருங்கபேரத்தின் சிற்றரசனும் வீதபயன் மைந்தனுமாகிய இவன் பெயர் ஹம்சன்” என்றார் சூதர். “சிறுகுடி ஷத்ரியன். கோசலத்தின் சிற்றரசன். மகதத்துடன் இணைந்துகொண்டவன்.”
அதைக் கேட்டுநின்ற இளைய யாதவர் வேதம் திகழும் பொய்யற்ற நாவுகொண்டவரான சாம்யகர் என்னும் வைதிகரை களத்திற்கு அழைத்துவந்தார். இறந்தவனுக்குரிய ஈமக்கடன்களை கூட்டிக்கொண்டிருந்தனர் எரிகூட்டுநர். அப்போது சூதன் ஹம்சனின் போர்த்திறனை பாடிக்கொண்டிருந்தான். “வைதிகரே, நீர் ஹம்சனின் உடலை கண்களால் பார்த்தீர் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்று அவர் சொன்னார். “அங்கே யமுனாமுகத்தில் படைநிலைகொண்டிருக்கும் டிம்பகன் என்னும் படைத்தலைவனிடம் இச்செய்தியை சொல்லும்” என்று சொல்லி இளைய யாதவர் அவரை அனுப்பிவைத்தார்.
யமுனாமுகத்தில் ஆற்றின் கரையில் படைநிலைகொண்டிருந்த டிம்பகனை புலரிப்பொழுதில் சென்றடைந்தார் சாம்யகர். வணங்கி முகமனுரைத்து செய்தி என்ன என்று வினவிய டிம்பகனிடம் “படைத்தலைவரே, ஹம்சன் மறைந்த செய்தியை சொல்லும்படி வந்த அந்தணன் நான்” என்றார். திகைத்து நின்ற டிம்பகன் உரக்கக் கூவியபடி அவரை அணுகினான். “இந்த நீரைத் தொட்டு ஆணையிடுக” என்றான்.
கள்ளமற்ற முகத்துடன் சாம்யகர் “ஆணை! நான் ஹம்சனின் உடலை கண்டேன்” என்றார். நரம்பொன்று சுண்டி இழுக்கப்பட்டு துடித்து டிம்பகனின் வலதுகையும் காலும் தளர்ந்தன. அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. வாய் கோணலாகி உமிழ்நீர் வழிய, விழிகள் திசைவிலகி நோக்கு குலைய அவன் தள்ளாடினான். இருமுறை கைகளை ஆட்டி ஏதோ சொல்லவந்தபின் திரும்பி இடக்காலால் உந்தி தாவி யமுனையில் விழுந்து நீர்க்குமிழிகள் கொப்பளித்தெழ மூழ்கி மறைந்தான். ஓடிவந்த படைத்துணைவர் கூச்சலிட்டபடி நீரில் பாய்ந்து மூழ்கி அவனை துழாவினர். அடிப்பெருக்கு நிறைந்த யமுனை அவனை திருப்பியளிக்கவில்லை.
கோபுச்சம் என்னும் யாதவச்சிற்றூரில் படையுலா சென்றிருந்த ஹம்சன் டிம்பகன் இறந்த செய்தியை தூதன் சொல்லி அறிந்ததுமே இடப்பக்கம் இடிந்து சரிந்து விழுந்தான். வாய்கோணலாகி கைகள் இழுத்தசைந்துகொண்டிருந்த அவனை பல்லக்கிலேற்றி யமுனை கரைக்கு கொண்டுவந்தனர். “எங்கே?” என்று ஹம்சன் கேட்டான். “இங்கேதான், படைத்தலைவரே” என்றனர் படைத்துணைவர். குளிர்கொண்டவன் போல நடுங்கியபடி கிட்டித்த பற்களுடன் அங்கே தன்னையும் வீசும்படி ஹம்சன் செய்கையால் ஆணையிட்டான்.
அவர்கள் கண்ணீருடன் தயங்கி நிற்க “வேறுவழியில்லை. இது என் ஆணை!” என்றான். அவர்கள் அவ்விணையை நன்கறிந்திருந்தனர். ஒருவரின்றி ஒருவர் வாழமுடியாதவர்கள். அவ்விரு உடல்நடுவே பெண்ணென்றோ மைந்தென்றோ எவரும் நுழைந்ததில்லை. அவ்விரு உள்ளத்தினூடாக தெய்வம் கடந்ததில்லை. ஒருபாதி துயில மறுபாதி விழித்திருக்க எப்போதும் படுக்காது வாழ்ந்த உடல். ஒருபாதி சினக்க மறுபாதி சிரிக்க உணர்வுகளை வென்ற உள்ளம். ஒருபாதி பேச மறுபாதி நோக்க எதிர்நிற்கமுடியாத சித்தம்.
அவர்கள் அவனை அதே இடத்தில் யமுனையில் வீசினர். மூன்றுநாட்களுக்குப்பின் ஹம்சனின் உடலுடன் பிணைந்த டிம்பகனின் உடல் நாணல்புதர் ஒன்றில் மகதவீரர்களால் கண்டெடுக்கப்பட்டது. தயங்கிக்குழம்பிய மகதத்தின் படைகளை மூன்று திசைகளிலிருந்தும் இளைய யாதவரும் பலராமரும் வசுதேவரும் சூழ்ந்து தாக்கினர். சிதறி ஓடிய மகதப்படைகள் பின்பு மீளவில்லை. கதைப்படை நின்று திரும்பிய ஊரை கதாவசானம் என்று யாதவர் அழைத்தனர். அங்கே யாதவர்களின் காவல்கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டது.
படைகொண்டு மீண்டு வந்து யாதவரை வெல்ல ஜராசந்தன் வஞ்சினம் உரைத்து நாகருத்திரனின் ஆலயத்தில் வைத்து பூசெய்து எடுத்த கங்கணம் ஒன்றை கட்டிக்கொண்டான். ஆனால் அஸ்தினபுரியில் பாண்டவர் மீண்டுவந்தனர். மதுரா விரிந்து பரவியது. துவாரகை பெருகி எழுந்தது. ஆயினும் ஆண்டுதோறும் தன் கங்கணத்தை மீளுறுதிசெய்து ஜராசந்தன் கட்டிக்கொண்டிருந்தான்.
யாதவநிலமும் அஸ்தினபுரியும் அதன் துணைநிலங்களும் அன்றி பிற நாடுகளனைத்தும் ஜராசந்தனுக்கு அடங்கியவை ஆகின. எழுபத்தெட்டு நாட்டின் குருதி படிந்த அரசக் கொடியுடன் கதாயுதம் மகதத்திற்கு திரும்பி வந்தது. அதை தன் கோட்டைவாயிலில் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் பீடத்தில் நிறுத்தி மக்கள் வழிபடவேண்டுமென ஆணையிட்டான். ‘மகாபுஜம்’ என்ற தெய்வமாக அது ஆகியது. அதை மகதத்தின் காவல்தெய்வம் என்று ஏத்தினர் சூதர்.
[ 11 ]
மகதத்திலிருந்து கிளம்பிய பூர்வகௌசிககுலத்து வைதிகர் நாடெங்கும் சென்று நாகவேள்வியின் செய்தியை பரப்பினர். “நஞ்சென்பது சீர்கெட்ட உணவே. அரசர்களே, சிதைந்த வேதம் இருளின் ஒலி” என்றனர். மகதத்தின் சிற்றரசர்கள் நடுவே சினமெழுந்தது. அவர்களில் ஷத்ரியர் அதை தங்களுக்குள் சொல்லிச்சொல்லி குமுறினர். ஷத்ரியர் அல்லாதோர் மேலும் ஷத்ரியத்தன்மைக்கென நோற்பவர்கள் என்பதனால் அவர்கள் மேலும் குமுறினர். மண்ணுக்கடியில் அனல் என அச்சினம் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்தது.
ஜராசந்தன் மீதான அச்சம் அவர்களை கட்டுக்குள் நிறுத்தியது. ஒவ்வொரு மழைவிழவுக்கும் அவர்கள் தங்கள் அரச உடையணிந்து வாளேந்தி அடையாளவில்லை பல்லக்கிலேற்றி ஊர்வலமாக மகதத்திற்கு கொண்டுவந்தனர். ராஜகிருஹத்தின் வாயிலில் அமைந்த மகாபுஜத்தின் முன்னால் அவ்விற்களை வைத்து தலைவணங்கி வாள் உருவி நிலம்தொட்டு வஞ்சினம் உரைத்தனர். நாகருத்திரனின் ஆலயமுகப்பில் நிகழும் நாகவேள்வியில் அமர்ந்து அனல் வணங்கி அவிமிச்சம் உண்டனர். பன்னிரண்டாவது நாள் ஜராசந்தனின் அவையில் அமர்ந்து அவன் அளிக்கும் முறைவரிசைகளையும் பரிசில்களையும் பெற்று மீண்டனர்.
இந்திரப்பிரஸ்தத்தின் எழுச்சி அவர்களை மீண்டும் ஷத்ரியர்களென உணரச்செய்தது. பதினெட்டு ஆண்டுகாலம் நிகழ்ந்தவை அனைத்தையும் அவர்களில் எவருமே அறியாதவர்கள்போல அன்று நிகழ்ந்ததை அறிந்தவர் என சினம் கொண்டனர். “வேதம் அமுதாலானது. நாகவேதம் நஞ்சாலானது” என்றார் பாண்டர நாட்டு அரசர் வக்ரதந்தர். “அது ஒலித்தால் நம் நகரங்களுக்கு அடியில் இருந்து நச்சுச்சுருள்கள் படம்கொண்டு எழும்.”
“ஆம், நம் நாடும் நகரும் மாநாகங்களுக்கு மேல் இருக்கும் சிறு பொருக்குகளே என்றறிக! துயிலும் நஞ்சை நாகவேதமெனும் மகுடி ஊதி எழுப்புகிறான் மகதத்தின் அரக்கன். நாம் அழிவது திண்ணம்” என்றார் மிதிலையின் அரசராகிய பிரபாதத்தர். மகதத்தின் சிற்றரசர்கள் திரிகர்த்த நாட்டின் எல்லையில் அமைந்த சாரதாசலம் என்னும் சிறுமலையில் எவரும் அறியாது ஒன்று கூடியிருந்தனர். “ஷத்ரிய மன்னர்களுக்கு கப்பம் அளித்தபோது நமக்கு குலமும் புகழும் எஞ்சியிருந்தது. நாகவேதம் ஒலிக்கும் மண்ணில் இனி நம் மூதாதையரும் வாழமாட்டார்கள்” என்றார் மச்சநாட்டு சூரசேனர்.
“அதை நாம் அரசரிடம் சொல்லியாகவேண்டும்” என்றார் சால்வசேனர். “அரசன் அல்ல, இனி நம் எதிரி” என்று உரக்க குரல்கொடுத்தான் நாசிகேயநாட்டின் அபிமன்யூ. அக்குரல் அனைவரையும் அச்சுறுத்தி அமைதியடையச் செய்தது. சில பீடங்கள் மெல்ல முனகின. “நாம் சொல்லெடுப்பது எளிது” என எவரோ சொல்ல அது யாரென விழிகள் திரும்பி நோக்கின. சொன்னவர் முகக்குறி காட்டவில்லை. எனவே அச்சொற்கள் தெய்வச்சொற்கள் என எடைகொண்டன.
“நம் வில் செல்லாது அங்கே வேள்வி எழமுடியாது” என்று அபிமன்யூ மீண்டும் குரலெழுப்பினான். “என் வில் செல்லாது. ஆண்மைகொண்டவர் இருப்பின் என்னுடன் இணைக!” சற்று நேரம் கழித்து மல்லநாட்டரசன் சுதேவன் “நாம் எத்தனைபேர்?” என்றான். அபிமன்யூ “ஷத்ரியர்கள் மட்டும் எழுபத்திரண்டு பேர். கிராதர்களும் அசுரர்களுமாக மேலும் எண்பது பேர் உள்ளனர்” என்றான். சூரசேனர் “அவர்கள் நம்முடன் இணைவார்களா?” என்றார். “இங்கேயே அறுபத்தேழுபேர் இருக்கிறோம். நாம் இணைந்தால் அவர்கள் இணைந்தாகவேண்டும்.”
சற்று நேரம் அமைதி நிலவியது. “ஆம்” என பெருமூச்சுடன் சொன்ன சூரசேனர் “நான் இணைகிறேன்” என்றார். சுதேவன் “நானும்” என்றான். மெல்ல ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர். கைகளைத்தட்டியபடி “பிந்தி எழும் பறவைகளும் குரலெழுப்புக!” என்றான் அபிமன்யூ. “இல்லையேல் நாகம் கிளையிலேறி உங்களை கவ்வும்.” சிரித்தபடி எஞ்சியவர்களும் ஒப்புதல் சொன்னார்கள்.
“நாம் இந்திரப்பிரஸ்தத்தை ஏற்போம். நமக்குப்பின் யாதவப்படைகளும் எழுமென்றால் அவ்வரக்கனின் தலைகொய்து கொண்டுசென்று பாஞ்சாலத்து அரசியின் கால்களில் வைப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். இந்திரப்பிரஸ்தம் என்னும் சொல் அவர்களை எளிதாக்கியது. அதையே அத்தனைபேரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அச்சொல் காதில் கேட்டபோது அதை புதிதென உணர்ந்தனர். அவர்களின் முகங்கள் மலர்ந்தன.
“பீமனின் தோள்களால் அவ்வரக்கன் கிழிக்கப்படுவான்” என்றார் சூரசேனர். “என் நிமித்திகர் அதை ஏழாண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.” சுதேவன் “ஆம், என் நிமித்திகரும் அதை சொன்னார்” என்றான். பின்னர் அனைவரும் அதையே சொல்லத்தொடங்கினர். சொல்லச்சொல்ல ஒவ்வொருவர் கண்களும் ஒளிகொண்டன. சொற்களினூடாக அவர்கள் அதை வளர்த்து எடுத்துக்கொண்டனர். ஒருகட்டத்தில் போரே முடிந்துவிட்டது என்னும் நிறைவை அடைந்தனர். இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துகொண்டபின் அடையப்போகும் நலன்களைப்பற்றி உள்ளூர கனவுகாணத்தொடங்கினர்.
“நாம் இம்முறை நம் விற்களை அனுப்புவதில்லை என முடிவெடுப்போம். நாகவேதத்தையும் வேள்வியையும் நம்மால் ஒப்பமுடியாது என்று அறிவிப்போம்” என்று அபிமன்யூ சொன்னான். “அது ஓர் அறிவிப்பு. ஜராசந்தனிடம் நாம் போர் தொடுக்கிறோம், ஆனால் போரை அவன் தொடங்கியாகவேண்டும். அவன் நம் மீது சினம் கொள்வான். மகதப்படைகளைப் பிரித்து நம் மீது அனுப்புவான். அவன் படை சிதறுவதென்பது இந்திரப்பிரஸ்தம் ராஜகிருஹம் மீது பாய்வதற்குரிய நற்தருணம்.”
புரியாது நோக்கிய அரசர்களை நோக்கி சூரசேனர் “நாம் இத்தனைபேர் இருக்கிறோம் ஷத்ரியர்களே. நம்மை வெல்ல அவன் எழுபத்திரண்டு படைப்பிரிவுகளை அனுப்பியாகவேண்டும்” என்றார். அப்போதுதான் அனைத்தையும் புரிந்துகொண்ட சுதேவன் “படைகள் வரட்டும். அவற்றை களத்தில் வெல்வோம். நம் அரசை நாமே காத்தோம் எனும் புகழும் நமக்கு எஞ்சும்” என்றான். “ஆம், மகதப்படைகளுக்கு நான் சொல்லவேண்டிய மறுமொழி ஒன்றுள்ளது” என்றார் பாண்டரத்தின் வக்ரதந்தர்.
சீற்றம் கொண்டு தன் உடைவாளை ஒலியுடன் உருவி தூக்கி ஆட்டி “அவர்களுக்கு நாம் குருதியை திருப்பியளித்தாகவேண்டும்” என்றார் அஸ்மாகநாட்டின் இளைய அரசன் சௌதாசன். “ஹம்சனும் டிம்பகனும் நடத்திய காலம்வரைதான் மகதம் வெற்றிகளை அடைந்தது கூட்டரே. அவர்கள் மறைந்த பின்பு மகதம் அடைந்த வெற்றி என்ன?” என்றார் சூரசேனர். “ஆம்! உண்மை!” என்றான் சுதேவன். “இவன் வெறும் காட்டாளன். கொடுமைசெய்யத் தயங்காதவன். ஆனால் களம் நின்று படைநடத்துவதற்கு ஷத்ரியக்குருதி தேவை...” என்றார் தசார்ண அரசராகிய சுதர்மன்.
அனைவரின் உள்ளமும் கற்பனைகளில் விரிந்து எழ அப்போரின் இயல்தகவுகளைப்பற்றி பேசத் தொடங்கினர். “இக்கட்டான நேரத்தில் உடன்நின்றதை இந்திரப்பிரஸ்தம் மறக்கப்போவதில்லை. அங்கே நம் இடம் மேலும் சிறந்ததாகவே இருக்கும்” என்றார் ரிசிக அரசர் திவோதாசர். “அவர்கள் முழுமைகொண்ட ஷத்ரியர்கள் அல்ல. நம்மைப்போன்றவர்களின் உறவு அவர்களுக்கு நிறையளிக்கும்” என்றார் ஆஃபிர நாட்டின் உக்ரதண்டன். பல ஷத்ரியர்கள் உதடுகளை இறுக்கி புன்னகைசெய்தனர். ஆஃபிர அரசகுலம் வழிப்பறித்திருடர்களில் இருந்து உருவாகி வந்தது என அனைவரும் அறிந்திருந்தனர்.
அவர்கள் எண்ணியதற்கு மாறாக விற்கள் சென்று சேராதது ஜராசந்தனை சினம் கொள்ளச் செய்யவில்லை. மகதம் இந்திரப்பிரஸ்தத்தை அஞ்சி அமைந்துள்ளது என்று அனைவரும் தெரிந்துகொண்டனர். வில் அனுப்பப்படமாட்டாது என்னும் செய்தி சென்றதுமே ஒவ்வொரு ஷத்ரிய அரசருக்கும் ஜராசந்தனின் நேரடி ஓலையுடன் தூது வந்தது. நாகவேதத்தை ஏற்கவேண்டும் என எவரும் கோரப்படமாட்டாகள் என்று அவன் வாக்களித்தான். இந்திரப்பிரஸ்தத்துடன் போர் எழலாம் என்றும் அப்போரில் மகதத்தை துணைப்பவர்கள் அனைவருக்கும் கப்பவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர்கள் நட்புநாடுகளாக கருதப்பட்டு திருச்சாத்து செய்யப்படுவார்கள் என்றும் ஜராசந்தன் வாக்களித்தான். அவர்கள் அப்படைக்கூட்டை விரும்பினால் வில்லின்றி நட்புநாட்டரசர்களாகவே மகதத்திற்கு வந்து நாகவேள்வி முடிந்தபின் கூடும் அவையில் முடிசூடி கோல்கொண்டு அமர்ந்திருக்கலாம் என்றான்.
மகதம் பணிந்துவிட்டதை அறிந்ததும் ஷத்ரியர் மகிழ்வுகொண்டாடினர். அவர்கள் வில்லனுப்பப் போவதில்லை என்ற செய்தியை இந்திரப்பிரஸ்தத்திற்கும் அனுப்பியிருந்தனர். நிகழவிருக்கும் போரில் இந்திரப்பிரஸ்தத்துடன் இணையலாகுமா என்று கோரி அனைவருக்கும் சௌனகரின் ஓலை வந்திருந்தது. “இங்கு நாம் நட்புநாடுகள். முடிசூடி அமர்ந்தால் ஜராசந்தனைவிட குலமேன்மை கொண்டவர்கள். நாளை நம் மகளிர் மகத அரியணை அமரலுமாகும்” என்றார் சூரசேனர். “இந்திரப்பிரஸ்தத்தில் நாம் என்றும் யாதவர்களுக்கு கீழேதான் இருப்போம். அதை மறக்கலாகாது.”
அறுபத்திமூன்று ஷத்ரியர்கள் நட்பரசர்களாக ராஜகிருஹத்திற்கு ஓலை அனுப்பியபின் அகம்படிப்படையுடன் கொடியும் கோலும் கொண்டு முடிசூடி யானைமேல் அமர்ந்து ராஜகிருஹத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அனைவரையும் ஜராசந்தனே கோட்டைமுகப்புக்கு வந்து வணங்கி வரவேற்றான். அரசமுறைப்படி அவர்கள் அரண்மனைகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜராசந்தனே அரண்மனையில் விருந்தளித்தான். தன் கைகளாலேயே அவர்களுக்கு உணவு பரிமாறினான். யவன மதுவை பொற்கிண்ணங்களில் ஊற்றி அளித்தான். அவனுடைய பேச்சுவன்மையில் அவர்கள் திளைத்தனர். காவியநுட்பங்களில் இருந்து கீழ்மைநிறைந்த இளிவரல்களுக்கு தாவும் அவனை அனுமனுக்கு நிகரானவன் என்றார் சூரசேனர். “தோள்விரிந்தோர் பேச்சு அமையாதவர் என்பார்கள். இவன் யார்? ஒருவனே மல்லனும் சொல்வலனும் ஆவது எப்படி இயலும்?”
ஜராசந்தன் களிமயக்கில் இளையவனாகிய அபிமன்யூவை இழுத்து தன் இடதுமடியில் அமரச்செய்து முத்தமிட்டான். “நீ என் மைந்தன்! உனக்கு வேண்டியதென்ன? மகதத்தின் மணிமுடியா? இதோ” என்று கூவினான். “அடேய், எடுத்துவாடா என் மணிமுடியை. என் மைந்தனுக்கு இப்போதே சூட்டுகிறேன். மைந்தா, என் கோல் உனக்கு. இனி நீயே மகதத்தின் அரசன்” என அவன் தோள்களை அறைந்து உரக்க நகைத்தான். கண்ணீர் மல்க கைகூப்பி அதை ஏற்றுக்கொண்டான். “ஆனால் நாங்கள் அவனை ஏற்கமாட்டோம்” என்றான் சுதேவன் “எங்களுக்கு அரசனாக அரக்கனே வேண்டும்.” மற்ற ஷத்ரியர்கள் உரக்க நகைத்தனர்.
இரவெல்லாம் குடித்துக்குழைந்தும் சிரித்துக்கூத்தாடியும் அவர்கள் அவன் அவையிலிருந்தனர். “நான் உங்கள் அடிமை. உங்கள் கால்களுக்கு பணிவிடைசெய்யும் அரக்கன். ஷத்ரியர்களே, உங்கள் கால்கள் எங்கே? உங்கள் கால்களை காட்டுங்கள்” என்று ஜராசந்தன் குழறினான். தள்ளாடியபடி எழுந்து சூரசேனரின் கால்களை பற்றிக்கொண்டான். “பிழைசெய்துவிட்டேன் ஷத்ரியர்களே. சூரசேனரே, நீங்கள் என் தந்தைக்கு நிகரானவர், நான் எளிய அரக்கன்... இழிமகன்” அவன் இடக்கண்ணிலிருந்து மட்டும் விழிநீர் வழிந்தது. விம்மியழுதபடி ஒவ்வொரு ஷத்ரிய அரசர்களின் கால்களையும் தொட்டுத் தொட்டு சென்னி சூடினான்.
“அரசே, என்ன இது?” என்று பதறிய சுதேவனிடம் “நான் மகதத்தை துறந்து கானேகிறேன். என் ஜரையன்னையின் குகைக்குள் புகுந்து இருளாழத்தில் மறைகிறேன். என் மைந்தன் முடிசூடட்டும். அரசர்களே, நான் அவனை உங்களுக்கு அளிக்கிறேன். அவனை கைக்குழவி என்றே இதுநாள் வரை வளர்த்துவிட்டேன். என் வல்லமைகொண்ட தோள்களில் இருந்து அவனை இறக்கியதே இல்லை. தொட்டியில் வளர்ந்த மீன் அவன். அவனை நீங்கள் உங்கள் திண்ணைகளில் தவழவிடுங்கள். அவனுக்கு உணவூட்டுங்கள். அவனை கைபொத்தி காத்துநில்லுங்கள்” என்று கைகூப்பி கேட்டபடி அழுது தளர்ந்து தரையில் அமர்ந்தான். கால்நீட்டிப் படுத்து “எதை வென்றேன்? எதை அடைந்தேன்? எல்லாம் வீண். என் காடு என்னை கைவிட்டது. என் காட்டில் எனக்கு இடமில்லை. அன்னையே, உன் காட்டுக்கு நான் அயலவன் ஆனேன்” என்று அழுதான்.
கள்மயக்கில் பிற அரசரும் அழுது அவனை தழுவிக்கொண்டனர். “அரசே, நான் உங்களுக்காக உயிர்துறப்பேன்!” என்று கூவியபடி அபிமன்யூ அவன் கால்களில் விழுந்தான். சுதேவன் “நான் வாள்தொட்டு ஆணையிடுகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகனாகிய யுதிஷ்டிரனை என் வாளால் போழ்ந்து உங்கள் கால்களில் போடுவேன்” என்றான். சூரசேனர் “நான் யாதவனை கொல்வேன். கன்றோட்டும் இழிமகன். முடிசூடி அரியணை அமர்கிறானா அவன்? மூடன்” என்றார். வக்ரதந்தர் “சத்ராஜித்தாக யாதவகுருதிகொண்டவன் அமர ஒருபோதும் ஒப்பமாட்டோம்” என்று கூவியபடி எழுந்து பற்களைக் கடித்து “ஒப்பமாட்டேன்! நான் என் இறுதிக்குருதிவரை ஒப்பமாட்டேன்” என்றார்.
அழுகைவழியாக அவர்கள் சிரிப்பை சென்றடைந்தனர். “இரண்டு பகுதிகளாகப்பிரிந்த ஓர் அரசர்... அரசே, நான் உங்கள் உடலை தொட்டுப்பார்க்கலாமா?” என்றான் அபிமன்யூ. “தொட்டுப்பார்... என் மைந்தன் நீ... வா!” என்று ஜராசந்தன் அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்தான். “துலாக்கோலின் முள் இந்தத்தலை ஆஹ்ஹாஹாஹா!” என்று அபிமன்யூ நகைத்தான். “நம் அரசர் துலா என்றால் சேதிநாட்டுச் சிசுபாலன் ஒரு தேள். சைந்தவனாகிய ஜயத்ரதன் நழுவும் மீன்” என்றார் சூரசேனர். “அரக்கி ஒன்றாகச்சேர்த்த உடல். அவள் கண் தெரியாமல் நம் அரசரைக் கிழித்து கால்மாற்றி கைமாற்றிப் போட்டிருந்தால் என்ன ஆகும்? இப்படி...” அபிமன்யூ கைகால்கள் நான்குபக்கமும் விரிந்து தத்தளிக்க தரையில் தவழ்ந்து காட்டினான். ஷத்ரியர் வெடித்துச்சிரித்தனர். சிரித்து களைத்து உருண்டனர். சிரிப்பை நிறுத்தமுடியாமல் மீண்டும் மீண்டும் சிரித்து கண்ணீர்வழிய களைத்து அறியாது துயின்றனர். காலையில் உடற்குவியலாகக் கிடந்த அவர்கள் நடுவே ஜராசந்தனும் கலந்திருந்தான்.
மறுநாள் அவையில் அனைவரும் வந்தமர்ந்தபோது ஜராசந்தன் எழுந்து அவையமர்ந்த அரசர்கள் அனைவரையும் வரவேற்று முறைமைச்சொல் உரைத்தான். அவர்கள் நட்பரசர்களுக்குரிய முறைமைப்படி மணிமுடி சூடி செங்கோல் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் குடியையும் புகழையும் நிமித்திகர் அறிவித்தனர். சூரசேனரையும் சுதேவனையும் வக்ரதந்தரையும் வணங்கி முறைமைசொல்லி பரிசிலளித்து அவையமரச்செய்தான் ஜராசந்தன். மலர்ந்த புன்னகையுடன் அபிமன்யூ அருகே வந்தபோது உரக்க நகைத்தபடி “வருக, இளையோரே வருக!” என இரு கைகளையும் விரித்து அள்ளி நெஞ்சோடணைத்தான்.
அவன் இடக்கால் சற்றே தடுக்குவதுபோலிருந்தது. அவர்கள் நிலைதடுமாற காமிகர் திகைத்து பின்னடைந்தார். ஜராசந்தனின் பற்கள் கிட்டித்தன. தோள்களின் தசைகள் இறுகி உடல் விம்மிப்பெருத்தது. அபிமன்யூ கழுத்தறுபட்ட விலங்குபோல கூச்சலிட்டான். அவன் கால்கள் துடித்து நிலத்தைவிட்டு மேலெழுந்தன. கைகளால் ஜராசந்தனின் பெரிய தோள்களில் ஓங்கி ஓங்கி அறைந்தான். முதலில் சிரித்துக்கொண்டிருந்த அரசர்கள் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்வதை உணர்ந்து பதைப்புடன் எழுந்தபோது மகதத்தின் காவல்படை அவையை படைக்கலங்களுடன் சூழ்ந்திருப்பதை கண்டனர்.
மூக்கிலும் வாயிலும் குருதி மூச்சுடன் கொப்பளித்து வழிய அபிமன்யூ துவண்டான். அவன் தலை சொடுக்கி இழுக்க கால்கள் நீண்டு அதிர்ந்து மெல்ல ஓய்ந்தன. தலை தொய்ந்து ஜராசந்தனின் தோளில் கைக்குழந்தை போல விழுந்தான். அவனைத் தூக்கி அருகே இருந்த தூணில் ஓங்கி அறைந்த ஜராசந்தன் இரு தோள்களையும் மாறி மாறி அறைந்தபடி மதகளிறுபோல முழக்கமிட்டான். அவையமர்ந்த அரசர்கள் கால்கள் நடுங்க பீடங்களில் ஒண்டி அமர்ந்தனர். சிலர் கைகளால் முகம் பொத்தி உடல்குறுக்கினர். “சிறையிலடையுங்கள்... இந்த இழிமகன்களை இருட்டுக்குள் தள்ளுங்கள்” என்று ஜராசந்தன் கூச்சலிட்டான்.
படைகள் ஷத்ரிய மன்னர்கள் மேல் பாய்ந்து அறைந்து இழுத்து கைகள் பிணைத்தன. அனைவரும் இழுத்துச்செல்லப்பட்டு ராஜகிருஹத்தின் மண்ணுக்கு அடியில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இருண்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். “நாகவேதத்தின் அவியை அவர்களுக்கு நானே ஊட்டுகிறேன். உண்ணாதவர்களுக்கு அவர்களின் மைந்தர்களின் பச்சை ஊனை ஊட்டுவேன்” என்றான் ஜராசந்தன். தன் உடலை கைகளால் அறைந்தபடி “எப்போது இந்திரப்பிரஸ்தத்துடன் சொல்லாடினார்களோ அப்போதே அவர்கள் சாகவேண்டுமென்ற ஆணையை என் தெய்வம் பிறப்பித்துவிட்டது” என்று வெறியுடன் கூவினான். உடல்பற்றி எரிபவன் போல அரசவையில் நின்று உடல் கொப்பளித்தான். வெறிச்சிரிப்பும் பிளிறலுமாக ஆர்ப்பரித்தான்.
[ 12 ]
நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான்.
சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். அப்போதுதான் அவ்வாலயத்தை நோக்குபவன் போல. உள்ளிருக்கும் தெய்வத்துடன் விழிகளால் உரையாடுவதுபோல. அவன் திரும்பியபோது விழிகளில் பிறிதொருவன் எழுந்திருந்தான்.
அணுகி வணங்கிய காமிகரிடம் “ரிஷபரையும் தமாலரையும் மகாவீர்யரையும் உடனே என் அவைக்கு வரச்சொல்க!” என்றான். நெஞ்சு படபடக்க “ஆணை” என்றார் காமிகர். ஜராசந்தன் தேர்நிலை நோக்கி செல்லக்கூடுமென எதிர்பார்த்தார். அவன் அடுத்த நாகதெய்வத்தின் ஆலயம் நோக்கிச் செல்ல அவர் தேர்நிலை நோக்கி சென்று அங்கிருந்த வீரர்களிடம் அரசர் அவை புகவிருக்கிறார் என்றும், மூன்று நாகர்குலப் படைத்தலைவர்களும் எங்கிருந்தாலும் அவைக்கு வரவேண்டும் என்றும் ஆணையிட்டார். “விரைவில்... அவர்கள் எல்லை மலைகளில்தான் இருப்பார்கள். உடனே...” என்றார்.
ஜராசந்தன் சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் ஆகியோரின் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் நின்று வணங்கி மலர்கொண்டான். அவனிடம் எந்த விரைவும் வெளிப்படவில்லை. தலைநிமிர்ந்திருக்க குழல்சுருள்களிலிருந்து நீர்த்துளிகள் முகத்திலுதிர கைகளை வீசியபடி நடந்தான். தேர் வந்து நின்றதும் எடைமிக்க உடலை எளிதாக ஏற்றி தேர்த்தட்டில் கைகளை கட்டியபடி நிலைத்த விழிகளுடன் அசையாமல் நின்றான்.
நகர் வழியாக தேர் சென்றபோது அவன் மெழுகுடல்கள் நீர்ப்பெருக்குக்குள் திளைத்த தெருக்களை விழிகளால் தொட்டுத்தொட்டு சென்றான். அரண்மனை முகப்பில் தேர் நின்றபோது அக்குலுக்கலால் விழிப்படைந்து இறங்கி இளைப்பாறவோ உடைமாற்றவோ செய்யாமல் நேராக மந்தணஅவை நோக்கி சென்றான். அவனுடன் விரைந்து நடந்தபடி பெரும்படைத்தலைவனாகிய சக்ரஹஸ்தன் “ஏழுமுரசுகளை கிழித்தவர்களை பிடிக்க நகரெங்கும் படைகள் சென்றுள்ளன அரசே. நகரம் மழைவிழவில் பித்தெடுத்திருக்கிறது. அனைவரும் நெய்மெழுகுப்பூச்சுக்குள் இருக்கிறார்கள். இங்கே மானுடரை பிரித்தறிவது கடினம். அரண்மனை நோக்கிய அனைத்து வாயில்களிலும் கடுமையான காவலுக்கு ஆணையிட்டிருக்கிறேன். ஒற்றர்கள் நாழிகைக்கு ஒருமுறை அறிக்கையளிக்கிறார்கள்” என்றான். துணைப்படைத்தலைவர்களான சித்ரசேனரும் கௌசிகரும் உடன்சென்றனர்.
ஜராசந்தன் தன் பீடத்தில் அமர்ந்ததும் நீள்மூச்சுவிட்டு உடலை சற்றே சரித்து “நாகர்கள் எங்கே?” என்றான். காமிகர் மூச்சிரைக்க உள்ளே வந்து “வந்துகொண்டிருக்கிறார்கள் அரசே” என்றார். ஜராசந்தன் “இங்கு நிகழ்வன அனைத்தும் முறையாக அஸ்தினபுரியின் அரசருக்கும் சேதிநாட்டு சிசுபாலனுக்கும் சைந்தவனாகிய ஜயத்ரதனுக்கும் தெரிவிக்கப்பட்டாகவேண்டும். இது என் ஆணை!” என்றான்.
அவன் சொல்வதென்ன என்று புரியாமல் திகைத்தாலும் காமிகர் “ஆம் அரசே” என்றார். “எனக்குப்பின் என் மைந்தனுக்கு சித்ரசேனரும் கௌசிகரும் படைத்துணையாக அமையட்டும்” என்றான். காமிகர் தலைவணங்க “நான் இல்லை என்றாலும் அவ்வாணை உம்மை கட்டுப்படுத்தும் காமிகரே” என்றான்.
அறியாதெழுந்த உணர்ச்சியால் காமிகர் கண்ணீர் மல்கினார். “ஆம் அரசே. என் வாழ்க்கை உங்களுக்குரியது” என்றார். ஜராசந்தன் அவரை நோக்கவில்லை. காமிகர் வெளியே ஓடி இடைநாழியில் நின்றிருந்த ஏவலர்களிடம் “எங்கே நாகர்கள்?” என்று அதட்டினார். தன் உள்ளம் நெகிழ்ந்திருப்பதை மறைக்கவே அந்தச் சீற்றம் என உணர்ந்ததும் அந்த உளக்குழைவு எதற்காக என எண்ணிக்கொண்டார். அரக்கன் என்றல்லாது ஒருபோதும் அவர் ஜராசந்தனைப்பற்றி எண்ணியதில்லை.
‘அவன் செய்த அனைத்துப்பழிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன், அதனால்தான்’ என தன்பழிப்புடன் எண்ணிக்கொண்டார். ஆனால் உடனே தெரிந்தது அதனால் அல்ல என்று. அவன் முழுமையாக அவர் உள்ளத்தையும் கனவுகளையும் நிறைத்தவன். பல்லாண்டுகாலமாக அவனுடன் பிறிதிலாதிருந்தது அவர் வாழ்க்கை. உடனே உளம் அதிர அதை உணர்ந்தார். அவர் அவனாக ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டிருந்தார். கனவுக்கும் அப்பால் அவனாக இருந்தார்.
‘வல்லமை பெரும் ஈர்ப்புகொண்டது’ என்று அவருள் ஒரு சொல்தொகை எழுந்தது. அது எவ்வல்லமை என்றாலும் பெருவிசையுடன் மானுடரை ஈர்க்கிறது. இளைய யாதவனைச் சுற்றி எப்படி மானுடர் செறிந்திருக்கிறார்களோ அப்படித்தான் இந்த அரக்கனைச்சுற்றிலும் மானுடர் சேர்ந்திருக்கிறார்கள். அவன் ஆற்றல் அதனால் மேலும் வளர்ந்து மேலும் மக்களை ஈர்க்கிறது.
உடலெங்கும் பிழையாக நகையணிந்து சொல்திரளா நாவுடன் நகர்புகுந்த நாள்முதல் அவன் ஆற்றல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவன் ஆற்றிய ஒவ்வொரு பழிச்செயலும் அவனை நோக்கி மேலும் மக்களை ஈர்த்தன. அவன் ஆற்றல்கொண்டவனாக ஆகும்தோறும் பாதுகாவலன் என்னும் அவனுடைய தோற்றம் வலுப்பட்டது. மேலும் அவனை நம்பினர். மேலும் அவனை சார்ந்தனர்.
‘தந்தையும் தலைவனும் தண்டிக்கையில் மேலும் அன்பை பெறுகிறார்கள்’ என்று காமிகர் மேலுமொரு சொல்லை வந்தடைந்தார். அச்சொல்லாட்சிகளை எங்கேனும் சொல்லத்தான் வகுத்துக்கொள்கிறோமா என எண்ணியதும் புன்னகைத்தார். அப்புன்னகை வழியாக அந்த நெகிழ்வை கடந்துவந்தார்.
கொம்பொலிகள் எழுந்தன. ரிஷபர் தன் புரவியில் பாய்ந்து வந்து தாவி இறங்கி கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு இடைநாழியில் ஏறியபோது பின்பக்கம் மேலும் இரு கொம்பொலிகள் எழுந்தன. தமாலரும் மகாவீர்யரும் இணைந்தே வந்தனர். “உங்களை அரசர் எதிர்நோக்கியிருக்கிறார் நாகர்களே” என்றார் காமிகர். ரிஷபர் மறுமொழி சொல்லாமல் அவைக்குள் சென்றார். தமாலரும் மகாவீர்யரும் வந்ததும் காமிகர் “வலப்பக்கம்” என்றார். அவர்கள் விழியசைவால் அதை ஏற்றனர்.
அவைநுழைந்த ரிஷபரிடம் ஜராசந்தன் “நம் நகருக்குள் அவர்கள் புகுந்துவிட்டனர்” என்றான். தொடர்ந்து வந்த தமாலர் “நான் அதை உணர்ந்தேன். நானே சென்று தேடினேன்” என்றார். மகாவீர்யர் “அவர்கள் தங்கள் வருகையை நமக்கு அறிவிக்க விழைந்துள்ளனர்” என்றார். காமிகர் கதவருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தார். தமாலர் “நாம் அவர்களை இங்கே எளிதில் பிடிக்கமுடியாது... இவ்விழவு நாம் நம் எதிரிகளுக்கு அளிக்கும் வாய்ப்பு. நம் படைத்திறன் மீதான நம்பிக்கையால் அனைத்து வாயில்களையும் திறந்து விட்டிருக்கிறோம்” என்றார். மகாவீர்யர் “நம் கோட்டையும் காமம் கொண்டிருக்கிறது என்பார்கள்” என்றார்.
வெளியே ஒற்றன் வந்து தயங்கினான். கதவிடுக்கின் ஒளியசைவாக அவனைக்கண்டு வெளியே சென்ற காமிகர் “என்ன?” என்றார். “சைத்யகத்தில் நுழைந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “யார்?” என அவர் அறியாது கேட்டுவிட்டார். “இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது அமைச்சரே. இளையபாண்டவர்களும் யாதவரும். அவர்கள் சைத்யகத்தின் நுழைவாயிலில் இரு காவல்நிலைகளை உடைத்தனர். வேள்விக்கூடத்திற்குள் புகுந்து அதன் கூரையை நொறுக்கினர். எரிகுளங்கள்மேல் மழை விழுந்து அனல்கருத்தது. நாகவைதிகரை அறைந்து சிதறடித்தான் பீமன். அர்ஜுனனின் அம்புகளால் நம் வீரர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். அப்பால் ஒரு மரத்தடியில் கைகளைக்கட்டியபடி யாதவன் நோக்கி நின்றிருந்தான்.”
“எதிர்நிற்க இயலாமல் நம் வீரர்கள் இளவரசரை இழுத்துக்கொண்டுசென்று காட்டுக்குள் ஓடி தப்பினர்” என்று ஒற்றன் தொடர்ந்தான். “வேள்வி நிறுத்தப்பட்ட செய்தியை இன்னமும் நகரம் அறியவில்லை. ஆனால் அங்கே ஏராளமான வீரர்கள் இருந்தனர். அவர்கள் நாவை எவரும் அடக்கமுடியாது. நாளை காலை நகரமே செய்தியை அறியும். பாரதவர்ஷமே ஒருநாளைக்குள் அதை பேசவும் தொடங்கும்.”
காமிகர் “அவர்கள் எங்கே?” என்றார். “அங்கிருந்து மறைந்துவிட்டனர். காட்டுக்குள் பெருமழை இறங்கிக்கொண்டிருக்கிறது. கைநீட்டும் தொலைவுக்கு அப்பால் ஏதும் தெரியவில்லை” என்றான் ஒற்றன். காமிகர் பெருமூச்சுவிட்டார். சரி என கையசைத்து அவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்றார்.
அவர் முகத்தை நோக்கியதுமே ஜராசந்தன் இயல்பான முகத்துடன் “சைத்யகத்திற்கா சென்றார்கள்?” என்றான். அவன் இயல்புநிலையை அறிந்திருந்தமையால் “ஆம்” என்றார் காமிகர். “இளவரசர் பாதுகாப்பாக இருக்கிறார்” என்று உடனடியாக சேர்த்துக்கொண்டார். ஜராசந்தனின் பற்கள் அரைபடும் ஒலியை உடல்கூசும்படி கேட்டார். கைகளை இறுக்கி தன் பீடத்தில் அறைந்து தலையை அசைத்தான். சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து “ஷத்ரிய அரசர்களில் ஐவரை கோட்டை முகப்பில் கொண்டுசென்று தலைகொய்யுங்கள்” என்றான்.
“ஆணை!” என்றார் தமாலர். “அவர்களின் தலைகள் நம் கோட்டைமேல் ஈட்டிகளில் குத்தி வைக்கப்படட்டும்” என்றபடி எழுந்துகொண்டான். புன்னகையுடன் ஒருவரையொருவர் விழிநோக்கியபடி நாகர்கள் திரும்பினர். காமிகர் பதைப்புடன் “அரசே…” என்றார். கடும் வலிகொண்டவனுடையவை போலிருந்தன ஜராசந்தனின் விழிகள். “என்ன?” என்றான். “அரசே, அவர்கள் நம் சிற்றரசர்கள்.” ஜராசந்தன் “நம்மை எதிர்க்க எண்ணியபோதே அவர்களை நான் கொல்வது உறுதியாகிவிட்டது” என்றபின் நாகர்களிடம் “நாளை சைத்யகத்தில் எஞ்சிய ஷத்ரியர்களை தலைகொய்து பலியிடுவோம் என்று முரசுகள் அறையப்படட்டும்” என்றான்.
[ 13 ]
தன் மஞ்சத்தறை நோக்கி செல்லச்செல்ல ஜராசந்தன் உடல்தளர்ந்து களைப்படைந்தான். கதவைத் திறந்த ஏவலன் வழிவிட உள்ளே சென்று மஞ்சத்தின் கால்கள் ஓசையிட சேக்கைமேல் விழுந்து கைகளை விரித்து மேல்மச்சின் பலகைப்பரப்பை நோக்கியபடி படுத்திருந்தான். ஏவலன் ஆணைக்காகக் காத்திருந்தபின் மெல்ல கதவை மூடி பின்னகர்ந்தான்.
துயிலுக்கும் அரைவிழிப்புக்கும் நடுவே இமைசரியாமல் விழி அசையாமல் படுத்திருந்தான். வெளியே மரப்பட்டைக்கூரையை அறைந்து விளிம்புகளில் சொரிந்துகொண்டிருந்தது மழை. அதை கேட்கக் கேட்க அணுகி வந்து அவனைச் சூழ்ந்தது. அதை மட்டுமே கேட்கத்தொடங்கி அதையன்றி பிறிதை உளமறியாதாகி அதுவென்றே ஆகி மயங்கிச்சென்ற ஒரு கணத்தில் அவன் அம்மழையின் ஒவ்வொரு துளியொலியையும் தாரொலியையும் தனித்தனியாக கேட்டான்.
பின்பு விழித்தெழுந்தபோது அவன் உடல் முற்றிலும் இளைப்பாறியிருந்தது. உள்ளம் அப்போது கழுவப்பட்ட பளிங்காடி என அனைத்தையும் உள்வாங்கி தானாகி தானற்றிருந்தது. அவன் புன்னகை நிறைந்த முகத்துடன் எழுந்து வெளியே வந்தான். அங்கே காமிகர் நின்றிருந்தார். “ம்” என்றான். “சுபலநாட்டரசர் பிரபோதரையும், மச்சநாட்டு சூரசேனரையும், மல்லநாட்டரசன் சுதேவரையும், விபூத நாட்டு விஸ்வசேனனையும், பூகர்த்த நாட்டு பார்ஸ்வசேனரையும் கோட்டைச்சதுக்கத்தில் வைத்து தலையரிந்தார்கள். அவர்களின் தலைகள் கோட்டைமுகப்பில் நிரையாக ஈட்டிமுனைகளில் நின்றுள்ளன.”
காமிகரின் விழிகளை நோக்கி புன்னகைசெய்து “நன்று” என்றான் ஜராசந்தன். காமிகர் தலைவணங்கி “பிறிதொருசெய்தி அரசே. நம் அரண்மனையின் அயலக பிராமணர்களுக்குரிய மாளிகைக்கு மூன்று ஸ்நாதகர் வந்துள்ளனர். ஒருவர் பேருடலர். இருவர் கரியவர்” என்றார். காமிகரின் விழிகளை சந்தித்தபின் அதே புன்னகையுடன் “நள்ளிரவிலா?” என்றான். காமிகர் “ஸ்நாதகர் எப்போதும் வரலாமென்று நெறியுள்ளது” என்றார். “ஆம். அவர்களுக்குரிய அனைத்து முறைமைகளையும் செய்க!” என்று ஜராசந்தன் சொன்னான்.
இருளில் சென்று கைப்பிடியை பற்றியபடி உப்பரிகையில் நின்று நகரை நோக்கிக்கொண்டிருந்தான். நீராலான காட்டுக்குள் எங்கிருந்தென அறியாமல் ஒளி பரவியது. கோட்டையின் முகப்பிலிருந்த காவல்மாடத்தில் புலரிமுரசுகள் மிகமெல்ல முழங்கின. கொம்பொலி பலவகையில் சிதறி திசைசுழன்று வந்தது. அரண்மனையில் இருந்த சிற்றாலயங்களிலெல்லாம் கொம்புகளும் முழவுகளும் மணிகளும் ஒலிக்கத்தொடங்கின.
ஏவலன் வந்து அருகே நின்றிருந்ததைக் கண்டு விழித்தான். நீராட்டறைக்குச் சென்று காலையாடி அரசணிக்கோலத்தில் அவன் தன் பேரவைக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் காத்திருந்தனர். விழவு எழுந்துவிட்டிருந்தமையால் குடிமக்களிலிருந்து எவரும் வந்திருக்கவில்லை.
சகதேவன் அவைக்கு வந்தபோது அனைவரும் அவனை நோக்கியபின் விழியகற்றினர். அவன் ஒரேநாளில் பல ஆண்டு முதுமைகொண்டவன் போலிருந்தான். கண்கள் சோர்ந்து முகம் வெளுத்திருந்தது. “தந்தையே, வணங்குகிறேன்” என்று அவன் சொன்னதும் ஜராசந்தன் அவனை அருகே வரும்படி கைநீட்டி அணைத்தான். அவன் அருகணைந்ததும் அவன் தோள்களைத் தழுவி “அஞ்சிவிட்டாயா?” என்றான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.
“அஞ்சவேண்டியதில்லை. என் மைந்தன் நீ” என்றான் ஜராசந்தன். சகதேவன் தலைகுனிந்து “நேற்று அன்னை சொன்னார், அதனால்தான் நான் அஞ்சவேண்டும் என்று. பாரதவர்ஷத்தில் பெருவீரர் அனைவருமே என்னைக் கொல்லும் வஞ்சினம் உரைத்திருக்கிறார்கள் என்றார்” என்றான். ஜராசந்தன் உரக்க நகைத்தான். “அதுவே ஒரு சிறப்பல்லவா அரசனுக்கு?” என்றான்.
“தந்தையே, நான் நேற்று கோட்டை முகப்பில் ஐந்து அரசர்களின் தலைகளை கண்டேன்” என்றான் சகதேவன். “முடிசூடி அரியணை அமர்ந்தவர்கள்தான் அவர்களும். என் தலையும் அதைப்போல ஏதோ கோட்டைமேல் அமர்வது உறுதி என நினைத்தேன். நான் எளியவன். படைநடத்தவோ களம்நின்று போரிடவோ ஆற்றலற்றவன். அரசுசூழ்தலறியாதவன்.”
அவன் குரல் சற்றே சீற்றம் கொண்டெழுந்தது. “நீங்கள் எனக்கு அரசைமட்டும் அளித்துச்செல்லவில்லை தந்தையே. நீங்கள் ஈட்டிய பகைகள் அனைத்தையும் அளித்துச்செல்கிறீர்கள்...” அவன் உடனே தளர்ந்து பெருமூச்சுவிட்டான். “பெரும்பழிகளை எனக்கென விட்டுச்செல்கிறீர்கள். ஆனால் அதை நான் பெற்றுக்கொள்வதே முறை. ஏனென்றால் நான் உங்கள் குருதியிலிருந்து முளைத்தவன்.”
“நான் அனைத்துக்கும் ஈடுசெய்கிறேன். நீங்கள் தோற்காத களங்களில் எல்லாம் நான் தோற்கிறேன். உங்களுக்காக குருதியும் கண்ணீரும் கொடுக்கிறேன். மைந்தன் என உங்களுக்குப் புகழும் பெருமிதமும் ஈட்டியளிக்க இயலாதவன். உங்களுக்கென இதைமட்டும் நான் அளிக்க இயலும். இளமையிலேயே நோயில் விழுந்து உடலும் உள்ளமும் உரம்பெறாது நான் வளர்ந்தமை இதற்காகத்தான்போலும்.”
காமிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க ஜராசந்தன் கையசைத்து அவரைத்தடுத்து “உன் சொற்கள் அனைத்தும் உண்மைதான் மைந்தா. வல்லமை வாய்ந்த தந்தையர் எளிய மைந்தரையே விட்டுச்செல்கிறார்கள்” என்றான். “முளைஎழும் செடிமேல் பாறை என உன்மேல் படிந்திருந்தேன் போலும். நீ என் பிழைகளில் முதன்மையானது போலும்...”
ஜராசந்தன் தலைகுனிந்தான். கடுமையாக ஏதோ சொல்லிவிட்டோமோ என எண்ணி சகதேவன் பேசத் தொடங்குவதற்குள் “ஆனால் நான் அறிந்து உனக்கு ஏதும் பிழை செய்யவில்லை. உன்னிடம் முற்றிலும் கனிவதன் வழியாகவே நான் அனைத்துக் கொடுமைகளையும் ஈடுசெய்தேன். உன்னை அணைக்கும்போது மட்டுமே அன்னையென்று உணர்ந்தேன். முலையூற முற்படும் கணமே ஆணுக்கு மண்ணில் பேரின்பம் அமைகிறது. உன் மைந்தனை கையிலெடுக்கையில் அதை அறிவாய்.”
காமிகர் அவையினரை மாறிமாறி பார்த்தார். அச்சொல்லாடல் அங்கே நிகழ்வதை அவர் விரும்பவில்லை. அக்கண்களில் எவற்றிலேனும் இளிவரலோ நகையோ தெரிகிறதா என்று அவர் உள்ளம் பதைத்தது. ஜராசந்தன் மீண்டும் மைந்தனின் தோளை தழுவிவிட்டு கை எடுத்த தருணத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்து “அரசே, இன்று நமக்கு அலுவல்கள் மிகுதி. விழவின் பதின்மூன்றாவது நாள் இது. நாளை சதுர்த்தசியில் விழவு நிறைவு...” என்றார்.
“ஆம், அவை நிகழ்க!” என்றான் ஜராசந்தன். அவைமுகமன்கள் முடிந்ததும் காமிகர் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி சொன்னார். “மகதத்தின் வரலாற்றில் முதன்முறையாக குலமுரசு கிழிக்கப்பட்டுள்ளது, வேள்வி தடைபட்டிருக்கிறது. அதைச்செய்தவர்களைப் பிடிக்க நம் படைகள் நகரை சூழ்ந்துள்ளன. பிடித்து அரசர் முன் கொண்டுவந்து நிறுத்த அனைத்துப்படைகளுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது” என்றார் காமிகர். தலைமைப்படைத்தலைவர் சக்ரஹஸ்தனும் நாகர்படைத்தலைவர்களான ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் கைகள் கட்டி தோள் தணிந்து நின்றனர். அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. அனைவரும் காத்திருந்தனர்.
சாளரத்துக்கு அப்பால் மழைச்சரடுகள் பளிங்கொளி கொண்டிருந்தன. கூரையின் ஓசை செவிகளை சூழ்ந்திருந்தது. தொடர்மழையால் அனைத்து சுவர்ப்பரப்புகளும் ஈரம்படர்ந்து சிலிர்த்து குளிரை உமிழ்ந்தன. அனைவரும் சால்வைகளை நன்றாகப் போர்த்தியிருந்தாலும் காற்றில் பிடரியும் தோளும் சிலிர்த்துக்கொண்டிருந்தன.
ஏவலன் வந்து சிற்றமைச்சர் புராவதரிடம் ஸ்நாதகபிராமணர்கள் அரசரை பார்க்கவிழைவதை அறிவித்தான். அவர் காமிகரிடம் ஓடிவந்து மெல்ல அதைச்சொல்ல அவர் ஜராசந்தனை பார்த்தார். அவர் சொல்லவா வேண்டாமா என்று உளம் ஊசலாடும்போதே சிறிய விழியசைவால் ஜராசந்தன் ஆணையிட்டான். “வரச்சொல்க!” என்றார் காமிகர்.
முப்பத்தெட்டு ஸ்நாதக பிராமணர்கள் வரிசையாக வேதம் முழங்கியபடி அவை நுழைந்தனர். அவர்களில் முன்னால் வந்தவர் “மகதத்தில் வேதம் தழைக்கட்டும். மன்னன் கோல் அதற்கு காவல்நிற்கட்டும். மழைபொழிந்து நிலம் செழிக்கட்டும். அவன் முடி ஒளிகொள்க! அவன் கருவூலம் மறுகால் பெருகுக! அவன் புகழ் பொன்னெழுத்தாகுக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.
ஜராசந்தன் எழுந்து கைகூப்பி அவர்களை வணங்கி “ஸ்நாதக பிராமணர்ளை மகதத்தின் அரசும் அவையும் குடிநான்கும் தலைவணங்குகிறது. தங்கள் சொற்கள் இந்நகரில் பொன்விதைகளாக விழுக!” என்று முகமன் உரைத்தான். அவர்கள் அரிமலரிட்டு வேதமோதி அவனை வாழ்த்தினர். ஜராசந்தன் “நீங்கள் அயலகபிராமணர் என உய்த்தறிகிறேன். ஆரியவர்த்த அந்தணர் இந்நகருக்கு அருள்வதில்லை” என்றான்.
முதல் ஸ்நாதக பிராமணர் “ஆம், அதை இங்கே வந்தபின் அறிந்தோம். ஆனால் ஸ்நாதகபிராமணர்களுக்கு ஏதும் விலக்கல்ல. நாங்கள் வேள்வித்தொழில் செய்ய இங்கே வரவில்லை. குருகுலக்கல்வி முடித்தபின் இல்லறம் கொள்வதற்கு முன் வாழ்க்கை என்றாலென்ன என்று காணும்பொருட்டு பயணம் செய்பவர்கள் நாங்கள். அறிவு என்பது எவ்வகையிலும் நன்றே” என்றார். இரண்டாவது ஸ்நாதக பிராமணர் “நாங்கள் வேதங்களால் அனைத்தையும் எரித்துக்கடக்கமுடியும் அரசே” என்றார்.
“நன்று நன்று” என ஜராசந்தன் உரக்க நகைத்தான். “இங்கே நீங்கள் அறியவேண்டுவனவும் கடக்கவேண்டுவனவும் பேருருக்கொண்டு நின்றிருக்கக் காண்பீர்கள். மானுட நால்வேதத்தைப் பயின்றவர் எவராயினும் இங்குவந்து வேதமென்பதன் வியனுருவைக் கண்டு தெளிந்தாலன்றி மெய்மையை நோக்கி செல்லவியலாது.” மேலும் சிரித்து “அதை நான் வேதத்தின் விழைவுருவம் என்றும் சொல்லத்துணிவேன்” என்றான்.
ஜராசந்தன் கைகாட்ட ஏவலர் பரிசில்தட்டுகளுடன் வந்து நிரைவகுத்து நின்றனர். ஜராசந்தன் எழுந்து நின்று அணுகிவந்த ஸ்நாதப் பிராமணர்களை முடிதாழ்த்தி வணங்கி கையில் தர்ப்பைப்புல் கணையாழி அணிந்து பரிசில் தட்டை கீழே வைத்து அவர்களின் கை மேலிருக்கும்படி அளித்தான். அவர்கள் வேதச்சொல்லுடன் அதை பெற்றுக்கொண்டனர். அவை முறைமைக்குரிய வாழ்த்தொலிகளை எழுப்பியது.
அனைவர் விழிகளும் ஸ்நாதக பிராமணர் தோற்றத்தில் பின்னால் வந்த பீமனையும் அர்ஜுனனையும் இளைய யாதவரையுமே நோக்கிக்கொண்டிருந்தன. ஸ்நாதக பிராமணர்கள் மட்டுமே அங்கு நிகழ்வதை அறியவில்லை. ஒவ்வொருவராக வந்து பரிசில் பெற்றுச்செல்ல அவர்கள் மூவர் மட்டும் எஞ்சினர். முதலில் வந்த இளைய யாதவர் “ஓ மகதரே, உன் அரசை நான் வாழ்த்துகிறேன்” என்றார். ஜராசந்தன் புன்னகையுடன் “முழுவாழ்வுக்கு சொல்லளிப்பது அந்தணர் முறைமை” என்றான். “அறம் ஒன்றே முழுவாழ்வுக்கு உறுதியளிக்கமுடியும். வேதமும் அறத்திற்குக் கட்டுப்பட்டதே” என்றார் இளைய யாதவர்.
ஜராசந்தன் ஏவலனிடமிருந்து தாலத்தை வாங்கி இளைய யாதவருக்கு அளித்தான். இளைய யாதவர் அதிலிருந்து வெற்றிலைபாக்கை மட்டும் எடுத்துக்கொண்டு “நாங்கள் நகர்நோக்க வந்தவர்கள். பரிசில்கொள்வது எங்கள் குருமரபால் ஏற்கப்படவில்லை” என்றார்.
ஜராசந்தன் புன்னகைத்து “நன்று. அறம்நிற்கும் அந்தணர் எந்நகருக்கும் அணிகளே” என்றான். “நீங்கள் நள்ளிரவில் வந்ததை ஏவலர் சொல்லி அறிந்தேன். ஸ்நாதக பிராமணர் எவரும் இன்றுவரை நீங்கள் வந்த கோலத்தில் நகர்புகுந்ததில்லை. உடலெங்கும் தைலலப்பூச்சு, பூசியிருந்தீர்கள் என்றும் கழுத்தில் மலர்மாலைகளை அணிந்திருந்தீர்கள் என்றும் சொன்னார்கள்” என்றான். “ஒருவர் தலையில் மயிற்பீலி சூடியிருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். அது களியாட்டின் அடையாளம் அல்லவா?”
இளைய யாதவர் மாறா புன்னகையுடன் “அரசே, ஸ்நாதக பிராமணர் என்பவர்கள் குருகுல நெறிகளிலிருந்து விடுபட்டவர்கள். வைதிகநெறிகளுக்குள் நுழையாதவர்கள்” என்றார். “அவர்கள் போர்த்தொழிலும் பழகலாமென எண்ணுகிறேன்” என்று சொன்ன ஜராசந்தன் கைசுட்டி அர்ஜுனனின் தோளின் தழும்புகளை சுட்டிக்காட்டி “அந்தணர்களில் விற்தொழிலர் குறைவென்பது சூதர்களின் கூற்று. துரோணருக்கும் கிருபருக்கும் பின்பு ஒரு பெரும்வில்லவர் எழுந்திருப்பதை இன்னமும் அவர்கள் அறியவில்லை” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “விற்கலையும் வேதமே” என்றான்.
“நன்று, நான் தங்களுக்கு அளிக்கவேண்டிய கொடை என ஏதும் உள்ளதா?” என்று ஜராசந்தன் கேட்டான். “நீங்கள் எண்ணியதுபோல எங்கள் வேதக்கல்வியில் போர்க்கலையும் உண்டு. எங்களில் ஒருவருடன் நீங்கள் போர்புரியவேண்டும். வில்லோ படையாழியோ கதையோ நீங்கள் தெரிவுசெய்யலாம்” என்றார் இளைய யாதவர். “மகதரிடம் போரிட்டோமெனும் நற்பெயர் எங்களுக்கு பாரதவர்ஷமெங்கும் அடையாளமாகட்டும்.”
“நான் மற்போரையே விரும்புகிறேன். தோள்களைப்போல அணுக்கமான படைக்கலங்கள் பிறிதில்லை. ஏனென்றால் அவற்றுக்குள் நம் குருதி பாய்கிறது” என்றான் ஜராசந்தன். “எங்களில் மற்கலை வீரர் இவர். கஜபாகு என அழைக்கப்படுகிறார்” என்றார் இளைய யாதவர். விழிகளில் சிரிப்பு ஒளியாக நின்றிருக்க “அவர் தோள்களில் அவ்விழைவு தெரிகிறது” என்றான் ஜராசந்தன். “ஆம், இங்கே மழைவிழவின் பெருங்களியாட்டிலாட எண்ணுகிறார்” என்று இளைய யாதவர் சொன்னார்.
ஜராசந்தன் “நான் களியாட்டுகளில் மக்கள் நடுவே வெறுமனே நகையாட்டுக்கென தோள்கோப்பதில்லை. இறப்புவரை போர் என்றால் மட்டுமே இறங்குவேன்” என்றான். “ஆம் அதன்பொருட்டே வந்துள்ளோம்” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் மேலும் பேசுவதற்குள் காமிகர் உள்நுழைந்து “ஸ்நாதக பிராமணர்களே, இங்கல்ல, எங்குமுள்ள மற்போர்நெறி ஒன்றே. களியாட்டில் நிகழும்போர்களில் வஞ்சமும் சினமும் சற்றும் இருக்கலாகாது” என்றார். “வஞ்சம் போர்க்களங்களில் மட்டுமே ஒப்பப்படுகிறது. இவ்விழாநகர் தேவர்கள் விளையாடும் நிலம்.”
“ஆம், அது உண்மை” என்றார் இளைய யாதவர். “அதை இப்போதே நோக்கிவிடுவோம்” என்ற காமிகர் திரும்பி ஓர் ஏவலனை நோக்கி சென்று அவனிடம் ஆணையிட்டார். அகன்ற யானம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதில் நுனிததும்ப நீரூற்றப்பட்டது. “தரங்கபிரஸ்னம் என இதை நூலோர் அழைக்கிறார்கள். இதைத் தொடுபவர் சினமற்றவர், வஞ்சம் அறியாதவர் என்றால் இது அவரது உள்ளம்போலாகும். இதன் நீர் ஒருதுளியும் ததும்பாது” என்றார். “முதலில் அறைகூவல் விடுக்கும் மல்லர் இதை தொடுக!”
புன்னகையுடன் பீமன் எழுந்து வந்து அணுகி யானத்தின் அலையற்ற நீர்வட்டத்தின் நடுப்புள்ளியை தொட்டான். நீர் அசைவற்று பளிங்குபோலிருந்தது. அமைச்சர் இருவர் குனிந்து நீர் ததும்புகிறதா என்று நோக்கினர். “நீர் சினமும் வஞ்சமும் அற்றவர் வீரரே. நன்று. உமது அழைப்புக்கு அரசரும் அவையும் செவிசாய்க்கிறது” என்றார் காமிகர்.
இளைய யாதவர் “அந்நீர்ப்பரப்பை அரசரின் விரலும் தொடக்காண விழைகிறேன்” என்றான். அனைவரும் ஜராசந்தனை நோக்க அவன் வணங்கி எழுந்து அணுகி வந்தான். அவை முழுக்க மெல்லிய உடலசைவு உருவாகியது. ஜராசந்தன் குனிந்து இடக்கையை நீட்டி நீர்மையத்தை தொட்டான். நீர்ப்பரப்பு சுடர்கதிர் விழுந்ததுபோல மெல்ல ஒளிகொண்டது. அறியாது அனைவரும் மேலிருந்து அதில் ஒளிபடுகிறதா என்று அண்ணாந்து நோக்கினர். ஜராசந்தன் கையை எடுத்துக்கொண்டதும் நீர்ப்பரப்பு அணைந்தது. புன்னகையுடன் அவன் பீமனை நோக்கி “நான் சினமோ வஞ்சமோ கொண்டிருக்கவில்லை அந்தணரே. மாறாக, உங்கள்மேல் பெருங்காதலே கொண்டிருக்கிறேன்” என்றான்.
இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம், அதை அறிந்தே இந்நகருக்கு வந்தோம். அரசே, பருப்பொருட்கள் பிரம்மத்தால் பொருளேற்றம் செய்யப்பட்டவை. மானுடன் அறிந்தும் அறியாமலும் அவற்றின் சாரமென உறைவது அதுவே. மானுடன் தன் உள்ளமைந்த சாரத்தால் பருப்பொருட்களின் சாரத்தை சற்றே அறிகிறான். அவ்வறிவால் மீண்டும் அறியமுயன்று அறிவு அளிக்கும் பொய்த்தோற்றத்தையே அப்பொருட்களென அறியத் தொடங்குகிறான்” என்றார். “தசை என்னும் பொருளின் சாரம் அதை ஏந்தும் மானுடனுக்குரியதல்ல. அப்பொருளில் உறையும் அது இணையவும் தழுவவுமே விழைகிறது.”
ஜராசந்தன் இரு கைகளையும் விரித்து பீமனை அழைத்தான். பீமனும் இருகைகளையும் விரித்து அருகே சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். ஜராசந்தன் பெருமூச்சுடன் “நிகரென அமைந்த தோளொன்றைத் தழுவுகையில் முழுமைகொள்கிறேன் வீரரே. முன்பு அஸ்தினபுரியின் அரசரை புல்கியபோது அப்பேறைப் பெற்றேன். இன்று மீண்டும் ததும்புமளவுக்கு நிறைந்தேன்” என்றான்.
பீமன் குனிந்து ஜராசந்தன் கால்களைத் தொட்டு “அரசே, மூத்த மல்லர் என்னும் நிலையில் உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன்” என்றான். ஜராசந்தன் முகம் கனிந்தது. குனிந்து அவன் தலையைத் தொட்டு “நலம் திகழ்க!” என்றான். அடுத்தசொல் அவனை மீறியதென வெளிவந்தது. “வெற்றிகொள்க!”
மகதத்தின் அவை நின்ற அனைவருமே அவர்கள் மீது அச்சொல் விசையுடன் விழுந்ததுபோல் உணர்ந்து உடலதிர்ந்தனர். காமிகர் அறியாது இருகைகளையும் கூப்புவதுபோல நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். சகதேவன் சக்ரஹஸ்தரை அணுகி அவர் தோளை நடுங்கும் கையால் பற்றிக்கொண்டான்.
ஜராசந்தன் “வைதிகரே, என் மைந்தனை நீங்கள் வாழ்த்தியருள வேண்டும்” என்றான். அவன் திரும்பி கைநீட்ட சகதேவன் கைகூப்பியபடி வந்து இளைய யாதவர் முன் நின்றான். “மைந்தா, நிகரற்ற ஆற்றல் கொண்டவர்களும் அறம் அறிந்தவர்களும் சொல்லில் வாழ்பவர்களுமான இந்த ஸ்நாதக பிராமணரை வணங்கி அருள்பெறுக!” என்றான் ஜராசந்தன்.
சகதேவன் குனிந்து இளைய யாதவர் கால்களைத் தொட்டு வணங்கினான். “எந்நிலையிலும் உங்களுடன் என் அருள் திகழும் இளவரசே” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் புன்னகைத்து “அது போதும். அது பேரரசுகளும் பெருவீரர்களும் துணைநிற்பதற்கு நிகர்” என்றான். சகதேவன் பீமனை வணங்க அவன் மைந்தனைத் தூக்கி நெஞ்சோடணைத்து “நீடுவாழ்க!” என்றான். அர்ஜுனன் அவன் குழலை கைகளால் வருடி “அரசச் சிறப்புறுக!” என்றான்.
ஜராசந்தன் காமிகரிடம் “முறையறிவிப்பு எழட்டும் அமைச்சரே. நாளை ஊர்மன்றில் இந்த ஸ்நாதக பிராமணருடன் நான் தோள்கோக்கிறேன். இறப்புவரை போர் நிகழும்” என்றான். காமிகர் தலையசைத்தார்.
[ 14 ]
பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது. மகத அரசவையிலிருந்து திரும்பியதுமே இளைய யாதவர் அந்த ஓடைக்கரையில் நிழல் மரத்தடியில் சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டார். பீமன் அடுமனைக்குச் சென்று அங்குள்ள மடைப்பணியாளர்களிடம் உரையாடத்தொடங்க அர்ஜுனன் அம்மாளிகையின் தனியறைக்குள் சென்று மஞ்சத்தில் கண்மூடி படுத்தான்.
உணவுண்டு உடல் மதர்க்க திரும்பிவந்த பீமன் அவன் அறையின் வாசலைத் தட்டி ஓசையிட்டபின் அது மூடப்படவில்லை என்று உணர்ந்து உள்ளே வந்தான். அர்ஜுனன் எழுந்து அமர்ந்ததும் அவன் அருகே நின்றபடி “நல்ல உணவு பார்த்தா. இங்குள்ள அடுமனையாளர்கள் சிலரை நாம் இந்திரப்பிரஸ்தத்துக்கு அழைத்துச் செல்லலாம். நல்லவர்கள்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “நாளை என்ன சமைப்பதென்று அவர்களிடன் உரைத்துவிட்டேன்” என்றான் பீமன்.
அர்ஜுனன் “நன்று” என்றான். பீமன் ஒரு பீடத்தை ஓசையுடன் இழுத்துப்போட்டு அமர்ந்து தன் பெரிய கைகளை கோத்தபடி “இளைய யாதவர் எங்கே?” என்றான். அர்ஜுனன் “அவர் சோலைக்குள் சென்றிருக்கிறார். நீரோடைக்கரையில் இருக்க வாய்ப்பு” என்றான். “அங்கு செல்வோம். பகலில் இங்கு ஏன் படுத்திருக்கிறாய்?” என்றான் பீமன். அர்ஜுனன் புன்னகைத்தான். “இங்கு கிளம்பி வருகையிலேயே உன் முகத்தை பார்த்தேன். நீ உளம்சோர்ந்திருக்கிறாய்” என்றான் பீமன். அர்ஜுனன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன்.
அர்ஜுனன் இருமுறை எடுத்த சொல்லை இதழசைவாக மாற்றிவிட்டு “ஒன்றுமில்லை” என்றான். “ஏன் என்று என்னால் எளிதில் உய்த்துணர முடியும்” என்றான் பீமன். அர்ஜுனன் விழிதூக்கினான். “இங்கு இவ்வாறு ஒரு குறுக்குவழியை தேர்ந்தெடுத்தது பிழை என்று எண்ணுகிறாய்” என்றான். “ஆம், மகதம் நம் தந்தையின் காலம்முதல் அஸ்தினபுரிக்கு முதல் எதிரி. அதை நாம் வென்றுகாட்டுவதே தந்தைக்கும் பெருமை. நாம் இந்திரப்பிரஸ்தம் அமைத்தபோது எதிர்கொண்ட மிகப்பெரிய மறுவிசை இதுவே. இதை எளிய சூழ்ச்சியினால் நாம் வென்றோமென்றால் என்றும் அது சூதர் பாடல்களில் வாழும்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, படை கொண்டு வந்து நாம் மகதத்தின் வாயிலில் நின்றிருக்க வேண்டாமா? இந்நகரை நம் ஆற்றலால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? பாரதவர்ஷம் முழுக்க அது நம்மைப்பற்றிய செய்தியை அடையச்செய்யுமல்லவா?”
பீமன் “நான் அதை இளைய யாதவரிடம் கேட்கலாம் என்று எண்ணினேன்” என்றான். “ஆனால் அவர் உள்ளம் எப்படி செல்கிறது என்று என்னால் அறிய முடிகிறது.” அர்ஜுனன் “அது மிக எளிது” என்றான். “மகதன் ஷத்ரிய அரசர்களை இங்கே கொண்டு வந்து சிறையிட்டிருக்கிறான். அவர்களை நாகருத்திரனுக்கு பலியிடப்போவதாக அறிவித்திருக்கிறான். நாம் ஜராசந்தனை எப்படி தோற்கடித்தாலும் சிறுகுடி ஷத்ரியர்கள் நம்மை கொண்டாடுவார்கள். ஷத்ரியர்களை காக்கும் பொருட்டே நாம் படை திரட்டவும் நேரமின்றி மாறு தோற்றத்தில் இங்கு வந்தோம் என்று கூட சொல்ல முடியும்.”
பீமன் புன்னகைத்து “அதுவே உண்மை என்று நம்பத்துவங்குவோம்” என்றான். “உண்மையென்பது என்ன என்று அனைவருக்கும் தெரியும் மூத்தவரே. நாம் உச்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கூர் அணுகும்தோறும் குறுகுவது. அங்கு அறங்களும் நெறிகளும் மயிரிழை வேறுபாட்டிலேயே முடிவு செய்யப்படுகின்றன. ஷத்ரியர் அறிவர், என்ன நிகழ்ந்ததென்று. அதை அவர்கள் ஒருபோதும் சொல்லாமலும் இருக்க மாட்டார்கள். வென்றவனின் குறைகளை சொல்ல விழைவதே மக்களின் இயல்பும்” என்றான்.
பீமன் “என்னை சோர்வுறுத்துவது அதுவல்ல. இன்று நான் பாரதவர்ஷத்தின் மாபெரும் மல்லனிடமிருந்து அவனைக் கொல்லும் ஒப்புதலை பெற்றிருக்கிறேன்” என்றான். உடனே சிரித்து “உளச்சோர்வெழுகையில் விலா புடைக்க உண்பது சிறந்த விடுதலைவழி என்று அறிந்திருக்கிறேன். பார்த்தா உனக்கும் அதையே சொல்வேன்” என்றான். அர்ஜுனன் “உளச்சோர்வை வெல்லும் வழியொன்று எனக்கும் உண்டு. நாம் ஐவரும் ஒன்றை கண்டடைந்துள்ளோம்” என்றான். பீமன் தொடைகளில் அறைந்தபடி சிரித்தான்.
வாயிலில் ஏவலன் வந்து பதற்றத்துடன் தலைவணங்கி “அரசர் வந்துளார்” என்றான். அர்ஜுனன் எழுந்து “யார்?” என்றான் திகைப்புடன். “மகதப்பேரரசர் ஜராசந்தர்! நம் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்” என்றான் ஏவலன். பீமன் “எங்கு செல்கிறார்?” என்றான். “தேர் இறங்கியதுமே இளைய யாதவரை பார்க்க வேண்டுமென்றார். ஒரு ஏவலன் வழிகாட்ட தோட்டத்திற்குள் சென்றார். நான் இங்கே ஓடிவந்தேன்” என்றான். “வா” என்றபடி பீமன் விரைய அர்ஜுனன் சால்வையை எடுத்து தோளிலிட்டு குழல்கற்றைகளை அள்ளி பின்னால் முடிந்தபடி அவனைத் தொடர்ந்து சென்றான்.
அவர்கள் மலர்ச்சோலையின் ஓடைக்கரையை அடைந்தபோது ஜராசந்தன் இடையில் கைவைத்து நின்று அங்கே கடம்பமரத்தடியில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவரிடம் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பதை கண்டார்கள். “பூசலா?” என்றான் பீமன். “அவர் பிறிதொருவராகத் தெரிகிறார்” என்றான் அர்ஜுனன்.
[ 15 ]
ஜராசந்தன் உரத்த குரலில் கைகளை வீசி “இப்போதே அதை முடிவு செய்வோம் இளைய யாதவரே. சொற்களை உண்மையை அறிவதற்கென்று பயன்படுத்த நீங்கள் ஒப்புவீர்கள் என்றால், இத்தருணத்திலேயே நாம் இறுதியை வகுத்துவிடலாம்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அண்ணாந்து “சொற்கள் ஒருபோதும் இறுதியை அடைவதில்லை மகதரே” என்றார். “தொடங்கிவிட்டீர்கள் உங்கள் வீண் பசப்புரையை” என்று கசப்புடன் ஜராசந்தன் நகைத்தான். சற்றே குனிந்து வெறுப்புடன் “சொல்லுங்கள், இங்கு பாண்டவர் இருவருடன் நீங்கள் வந்தது நாகவேதத்தை நிறுத்தும்பொருட்டு அல்லவா?” என்றான்.
இளைய யாதவர் திரும்பி பீமனையும் அர்ஜுனனையும் பார்த்தார். ஜராசந்தன் அவர்களை பொருட்டாக எண்ணவில்லை. “யாதவரே, உங்களுக்கும் எனக்குமான பூசல் என்பது மண்ணுக்காக அல்ல. மணிமுடிக்காகவும் அல்ல. இருவரின் ஆணவத்திற்காகவும் அல்ல. நம் எல்லைப்பூசல்கள் மிகச்சிறியவை. யாதவம் மகதத்திற்கு இனி அடிபணியப்போவதில்லை என நானும் அறிவேன். மகதத்தை ஆளவியலாதென்று நீங்களும் அறிவீர்கள்.”
“நாம் கொண்டுள்ள வேதத்துக்காகவே இப்போர்” என்று ஜராசந்தன் சொன்னான். “என் வேதத்தை வெல்லவே வந்திருக்கிறீர்கள். அங்கே நாகவேள்வியை குலைத்து அதை எனக்கு அறிவுறுத்தவும் செய்தீர்கள்.” இளைய யாதவர் “ஆம், உம் வேதம் அழிவுக்குரியது” என்றார். “வேதம் என்பது என்ன?” என்றான் ஜராசந்தன் உரக்க. “நீர் கொண்டிருப்பதே மெய்வேதமென எவர் சொன்னார்கள்? வேதமறிந்தோர் வரட்டும், அவர்களிடம் நான் பேச சித்தமாக உள்ளேன். எவர் வேதம் மெய்யென்று மன்றுகூடி மெய்ப்பிப்போம்.”
இளைய யாதவர் “மானுடர் எவரும் வேதத்தை முற்றறிந்துவிட முடியாது. இங்குள்ள நம்மைச் சூழ்ந்துள்ள ஒலி அனைத்தையும் கேட்டுவிட முடியும் என்றால் மட்டுமே அது இயல்வது. அறிவு அறியப்படுவது என்பதனாலேயே அறியும் தரப்பின் இயல்பின் எல்லைக்குட்பட்டது. பேரறிவு என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்க முடியும்” என்றார். “அறியமுடியாமையைப்பற்றி விவாதிப்பதில் பொருளேதுமில்லை.”
உரக்க உறுமியபடி ஜராசந்தன் இளைய யாதவரை அறைபவன் போல அணுகினான். “நான் அறிந்தேன் மெய்வேதம் எதுவென்று. யாதவரே, நான் வந்தபோது அறிந்தேன், ஒவ்வொரு நாளும் வேதமோதப்படும் இந்நகரில் ஒருவராலும் உச்சரிக்கப்படாமல், ஒவ்வொரு சொல்லிலும் ததும்பி நிற்கும் அறியப்படாத வேதம் ஒன்றுள்ளது என்று. பலநூறுமுறை அதை கனவில் கேட்டேன். விழித்தெழுந்து அச்சொற்களை எங்கு கேட்டேன் என்று என் நெஞ்சை துழாவினேன். பின்பு ஒருநாள் உணர்ந்தேன், என் அன்னை ஜரை சென்று மறைந்த அக்குகைக்குள் இளமையில் நுழைந்து இருளில் அலைந்தபோது அதை கேட்டிருக்கிறேன். அக்குகை இருள்முன் வெறியாட்டெழும் என்குலத்து பூசகர் மொழியில் அதன் சொற்கள் எழுந்ததை நினைவுகூர்ந்தேன்.”
அவன் குரல் தாழ்ந்தது. “அழியாத ஒன்று. இங்கெங்கும் உளது. அதன்மேல் அமைந்துள்ளன நம்மால் அறியப்படும் அனைத்தும். அதை உணர்ந்தபின் ஒருபோதும் நான் எளிதமையவில்லை. யாதவரே, அதன் பொருட்டே பாரதவர்ஷத்தின் அனைத்து வைதிகர்களையும் இங்கு வரவழைத்தேன். அத்தனை சூதர்களையும் இங்கு வந்து பாடவைத்தேன். அத்தனை பூசகர்களையும் இங்கு வெறியாட்டெழச்செய்தேன். வீண்முயற்சி என்று எப்போதும் தோன்றினாலும்கூட என் தவம் எங்கோ திரண்டுகொண்டிருந்தது. அதுவே என் குலத்துப் பூசகனாக வெறியாட்டெழுந்து வந்து என் முன் நின்று உரைத்தது.”
“பூசகன் வெறியாட்டு கொண்டு மிழற்றிய குரலில் மூன்று நாகவேதச் சொற்களை கேட்டேன். ஸ்வம், ஸ்ரீம், ஹம். அவை வேதமொழியில் என்ன பொருள் கொள்கின்றன என்று வைதிகரிடம் கேட்டேன். வேதங்கள் அனைத்திலும் அச்சொற்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன. ஆனால் வேறெங்கிலோ இருந்து வேதத்துக்குள் கலந்தவை போலும் உள்ளன. அவற்றை வழிகாட்டு பறவைகளெனக்கொண்டு பாரதமெங்கும் என் சித்தத்தால் அலைந்து திரிந்தேன். என் ஒற்றர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு வேதத்தையும் அவற்றைக் கொண்டு ஆராய்ந்தறிந்தேன். பின்பு கிழக்கே மேருவின் கரையில் இருந்து மறைந்த நாகவேதத்தை இங்கு கொண்டு வந்தேன். அதை இங்கு முளைத்தெழச்செய்தேன்.”
“மண்ணுக்குள் உப்பென நிறைந்து கரந்த வேதம். அதன் சொற்களிலிருந்து மறைந்த குலங்களனைத்தும் எழுந்துவரக் கண்டேன். துயர்விழிகளுடன் மறக்கப்பட்ட மூதாதையர் எழுந்தனர். அழிந்த நகரங்கள், புதைந்து மறைந்த நாடுகள், துளியும் எஞ்சாதொழிந்த நூல்கள், சொல் சொல்லென சிதறிப் பரவிய மொழிகள் மீண்டு வந்தன. அது இங்கு வாழும் என்று உறுதி கொள்ளவே கோலுடன் இங்கு அமர்ந்தேன். அழியாத முழுமை வேதமொன்றின் காவல் அமர்ந்திருக்கும் அரசன் நான்.”
“நீர் யார்? நீர் விழைவதென்ன? ஓடும் பெருநதியில் அள்ளி கையில் தேக்கிய நீரை வேதம் என்கிறார்கள் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள். அதன்பொருட்டு அரியணை அமர்ந்து கொன்றும் கவர்ந்தும் கொடுத்தும் குலம் வளர்க்கிறார்கள். அந்நிரையில் ஒரு பெயரென அமைவதற்கு அப்பால் நீர் கொண்டிருக்கும் விழைவுதான் என்ன?” என்று ஜராசந்தன் கேட்டான். “ஆம், நான் குலங்களை அழித்திருக்கிறேன். குருதியில் ஆடியிருக்கிறேன். ஆனால் தலைமுறை தலைமுறையாக இந்த ஷத்ரியர் ஆடாத குருதியா? இங்கு இவர் கொள்ளாத பழியா? எவ்வகையில் இவர்களிடமிருந்து நான் இழிந்தவன் ஆனேன்? சொல்க!”
இளைய யாதவர் ஜராசந்தனின் உணர்வெழுச்சியை மாறாமுகத்துடன் நோக்கி “மகதரே, மறைந்த தொல்வேதமொன்றை மீட்பதனூடாக நீங்கள் அடைவதென்ன?” என்றார். “அது முதன்மைவிழைவுகளின் கட்டற்றப் பெருக்கென்பதை இந்நகரைப் பார்க்கும் எவரும் உணரமுடியும். அனைத்துக் கட்டுகளையும் அவிழ்த்து இம்மானுடரை விலங்குகளென திளைக்கவிட்டு நீங்கள் அடையும் வெற்றிதான் என்ன?” என்றார்.
“அறியேன். அதை நான் அறிவதற்கு இன்னமும் தருணமும் கூடவில்லை” என்றான் ஜராசந்தன். “ஆனால் அது தோற்கடிக்கப்பட்டதென்பதனாலேயே வெல்வதற்குரியது. அழிக்கப்பட்டதென்பதனாலேயே வாழவேண்டியது.” அவன் வலத்தோளும் காலும் பிறிதொருவனாக பிரிந்துசெல்ல விழைவதுபோல துடித்தன. அவன் உடலுக்குள்ளேயே அவன் நின்று கொப்பளித்து ததும்பி எழுந்துகொண்டிருந்தான்.
“என் முன் இருவாய்ப்புகள் வந்தன. மானுடர் சேர்த்த எளிய நால்வேதத்தை ஏற்றிருந்தேன் என்றால் ஷத்ரியர்களின் தலைமையை நான் அடைந்திருக்கக்கூடும். இந்த அரியணையில் என் கொடிவழியினர் நெடுந்தூரம் நிரை வகுத்திருக்கவும் கூடும். ஆனால் என் அறையிருளில் மஞ்சத்தில் தனித்து படுத்திருக்கையில் நான் ஜரை அன்னையின் மைந்தன் மட்டுமே என்றறிந்தேன். என் அன்னை புகுந்துமறைந்த அக்குகைப் பாதையின் குரல்களே என்னை ஆள்கின்றன. இங்கிருக்கும் அத்தனை சொற்களாலும் தள்ளி அக்குகைக்குள் செலுத்தி இருளில் ஆழ்த்தப்பட்டவை அவை. பெருமொழி ஒன்றிலிருந்து ததும்பும் சில துளிகளாகவே அவற்றை அறிந்துள்ளேன். நெஞ்சுருகி எங்கள் அன்னையர் ஒப்பாரி பாடும்போது எழுகிறது அது. எங்கள் பூசகரின் வெறியாட்டில் ஒலிக்கிறது. அந்தமொழியின் மைந்தன் நான். என் கடன் அன்னைக்கு மட்டுமே என்று என்றோ ஒரு நாள் இரவில் உறுதி பூண்டேன். அதன் விளைவுகளை நான் எண்ணவேண்டியதில்லை. அதன் பொருட்டு களம் படுவேன் என்றால் என் அன்னையின் கடன் தீர்த்தவன் ஆவேன்.”
“நீங்கள் ஓதும் நாகவேதம் கட்டற்றது என்பதனாலேயே பயனற்றது” என்றார் இளைய யாதவர். “தொல்வேதங்கள் இங்கே மானுடரை உள்ளங்கை புழுதியென வைத்து மூச்சுக்காற்றால் ஆட்டுவிக்கும் பெருந்தெய்வங்கள் போல் இறங்கி வந்தவை. அன்று மானுடத்தின்மேல் பிரம்மத்தின் முதல் ஆணை வளர்க, பெருகுக என்பது மட்டும்தான். அவ்விரிவுக்குரியவை அவை. மகதரே, நிற்க, அமர்க, நிலைக்க என்னும் ஆணைகளாக மானுடர் பிரம்மத்தை உணரத்தொடங்கியபின் அவ்வேதங்கள் பொருளிழந்து புறம்சென்றன.”
“எண்ணிப்பாருங்கள், என்றோ ஒருநாள் இதை கட்ட வேண்டுமென்றும், வகுக்க வேண்டுமென்றும், விளக்க வேண்டுமென்றும் ஏன் முன்னோருக்குத் தோன்றியது? தொல்வியாசனின் அவையிலமர்ந்த ஆயிரத்தெட்டு மாமுனிவர் எதை அஞ்சினர்? எதை விலக்கினர்? வேதத்தில் எதை அவர்கள் வைத்து அளித்தனர் என்பது முதலறிதல். எதன்பொருட்டு பிறவற்றை விலக்கினர் என்பதை எஞ்சுவதிலிருந்து அறிவதே முழுமையறிதல்.”
காட்டுக்குரிய கீழ்வசைகளை கூவியபடி ஜராசந்தன் கடம்பமரத்தை ஓங்கி அறைந்தான். “விலக்குவதற்கும் சுருக்குவதற்கும் அவர்கள் யார்? எளிய மானுடர். தோள்மெலிந்த வயிறொட்டிய சொல்குழறும் முதியவர். மானுடத்தின் பாதையை அவர்களா முடிவுசெய்வது?” அவன் கைகளைச் சுருட்டி போரிலென ஆட்டி கூவினான். “ஏன் குறுக்க வேண்டும்? இங்கு விண்ணிலிருந்து வந்த மாமழை அது. இங்குள்ள ஒவ்வொரு புல்வேரையும் தளிர்க்க வைப்பது. புழுவுக்கும் பூச்சிக்கும் புள்ளுக்கும் உரிய பெருக்கு அது. அதைக் குறுக்கி அமைக்கும் உரிமையை இவர்களுக்கு அளித்த தெய்வம் எது?”
“எது இங்கு அவர்கள் வாழவேண்டுமென்று விழைகிறதோ அது” என்றார் இளைய யாதவர். “குறுக்குவதல்ல அது, கூர்மையாக்குவது. அலகிலாதது அறியக்கூடுவதே அல்ல. அறிபடுவது எல்லைக்குட்பட்டது. மகதரே, நீர் சொல்லும் அரக்கவேதமும் அசுரவேதமும் நாகவேதமும் கூட முடிவிலாப்பெருக்கிலிருந்து அள்ளி வைக்கப்பட்டவைதான். அவற்றிலிருந்து அள்ளப்பட்டது முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”
“ஜராசந்தரே, இன்று நால்வேதமென திரண்டிருப்பது சென்றகாலத்தின் சித்தப்பெருக்கு. அதன் கர்ம காண்டம் எனப்படுவது முக்குணங்களுடனும் கிளைபிரிந்து நின்றிருக்கும் ஒன்று. வெற்று விழைவின் மூன்று கிளைகள். அதை வேருடன் கெல்லிச் சரித்து வென்று செல்லாது மானுடருக்கு விடுதலை இல்லை. அதுவும் தொல்விழைவுகளின் சித்தம் தெறித்துச் சிதறும் பெருவிசை. அதில் ஏறிச்சென்று தொல்முனிவர் அடைந்த உச்சமே அதன் சாரம். அம்மெய்யையே வேதாந்தம் என்கின்றனர் முனிவர்.”
“இந்திரனுக்குரிய வேதத்தை என் மக்களிடமிருந்து விலக்கினேன். அதன் பலிக்கொடைகளையும் சடங்குகளையும் ஒறுத்தேன். ஆம், இன்றிருக்கும் வேதமும் முனை கொள்ளவேண்டுமென்று உரைப்பவன் நான். நீரோ வேதத்தில் இருந்தும் பின்னகர்ந்து சென்று முந்தைய விரிவை நாடுபவர். நமது திசைகள் வேறு. இன்று இரண்டிலொன்றென முடிவாக வேண்டும்.”
பெருங்குரலில் “ஏன்?” என்றான் ஜராசந்தன். “ஏன் நீங்கள் அதை செய்ய வேண்டும்? கானகத்தில் கன்றோட்டி வாழும் யாதவன் எதன் பொருட்டு வேதத்திற்கும் வேதமுடிவுக்கும் காவலென படையாழி ஏந்தி நின்றிருக்க வேண்டும்? யாதவரே, நீர் அறியாதவர் அல்ல. இம்மண்ணில் வாழ்ந்த எத்தனை அரக்கர் குடிகள் கொன்றொழிக்கப்பட்டன? எத்தனை அசுரப் பேரரசுகள் சிதைந்தன? நாகர்கள் சுவடின்றி மண்ணுக்குள் அழுத்தப்பட்டதன் மேல் அல்லவா நின்றிருக்கிறோம் நாம்? எத்தனை குலங்கள்! எத்தனை கொடி வழிகள்! எத்தனை மொழிகள்! எத்தனை பண்பாடுகள்! வென்று நின்றிருப்பதனாலேயே இவை சரியானவை என்று ஆகிவிடுமா என்ன? தோற்றவை என்பதனாலேயே அவை பிழையானவையா? அழிந்தவை என்பதனாலேயே அவை மறக்கப்படவேண்டுமா?”
“யாதவரே, அறமென ஒன்றுண்டென்றால் அது வீழ்ந்தவரின் விழிநீரையல்லவா பொருட்படுத்தவேண்டும்? நான் விழிநீர் கண்டு வளர்ந்தவன். அதன் பொருட்டு மட்டுமே என்னால் வாளேந்த முடியும். என் கைகள் குருதி படிந்தவை என்கின்றனர் உங்கள் சூதர். ஆம், என் ஆத்மா பழியின் களிம்பு படிந்தது. என் ஆணையின்படி மேலும் மேலும் பழி கொள்ளவே என் காட்டிலிருந்து உங்கள் நகர்களுக்கு வந்தேன். என் பழி மண்மறைந்த குலங்களின் வஞ்சத்திலிருந்து எழுந்தது. அவர்களின் கண்ணீரிலிருந்து அனல்கொண்டது. ஆளவரவில்லை, இக்காட்டில் எரிமூட்டிவிட்டுப் போகவே வந்தேன்.”
“அது நிகழப்போவதில்லை” என்றார் இளைய யாதவர். “இங்கு தூய அறிதலின் வேதமே வாழும். விழைவுப்பெருக்கின் தொல்வேதங்கள் அழியும். அவை கவிஞரின் கனவுகளில் சொற்சிதறல்களாக மட்டுமே இனி எழும். அதற்குத் தடைநிற்பவர் பலியாவார்கள்.” ஜராசந்தன் கைகளைத் தட்டி வெறியுடன் நகைத்து “அச்சுறுத்துகிறீரா? நான் அறிவேன் என்னை எதிர்கொள்வதென்ன என்று. இளைய யாதவரே, நான் பிரலம்பனோ பாணாசுரனோ முஷ்டிகனோ நரகாசுரனோ அல்ல. இந்திரதபனோ, கேசியோ, காலயவனனோ, கம்சனோ அல்ல” என்றான்.
புன்னகையுடன் “ஆம், ஹிரண்யகசிபுவோ, ஹிரண்யாக்ஷனோ, ராவணனோ கூட அல்ல. ஆனால் அந்நிரையில் வருபவன்” என்றார் இளைய யாதவர். “அவர்களனைவருமே மானுடம் கட்டுப்படுத்தி மேலேறியவற்றை கட்டவிழ்க்க முயன்றவர்கள். ஒவ்வொரு யுகத்திலும் அவர்கள் எழுந்தபடியேதான் இருப்பார்கள். ஏனென்றால் புதையுண்ட மரம்போல தொல்வேதம் மானுடனுக்குள் உயிர்திமிறிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவிலாத முளைக்கணுக்கள். என்றேனும் ஒருநாள் அது எழுந்து புடவியை மூடக்கூடும். அன்று இங்கே அனைத்தும் அழியும். ஊழி எழும்.”
இளைய யாதவர் எழுந்து அணுகிவந்து மிகமெல்ல ஜராசந்தனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் “மகதரே, நான் அரக்கர்களிலோ அசுரர்களிலோ நாகர்களிலோ ஒருவனாகக் கூட பிறந்திருக்கலாம். அப்போதும் இச்சொற்களையே சொல்வேன் என்று உமக்கு உறுதியளிக்கிறேன். ஆம், உண்மை அதுவே. வெல்வது வெல்வதனாலேயே வெல்லும் தகுதி கொண்டது. காலத்தை இடத்தைக் கடந்து விண்ணிலென நின்று நோக்குபவர் அறிவது அதையே. இப்புடவி வல்லமைகளின் முடிவற்ற மோதலால் தன்னை நிகழ்த்துகிறது.”
“எது அரக்கர்களை வீழ்த்தியதோ அரக்கர்களுடன் அது மண்ணிலிருந்து மறைவதாக! எது அசுரர்களை அழித்ததோ அது அவர்களுடனேயே பழங்கதையாக மாறக்கடவதாக! எது நாகர்களை அழுத்தியதோ அது என்றென்றும் நம்முள் ஆழ்ந்தே கிடப்பதாக!” அவர் குரல் எங்கோ எவரோ செவிகொள்வதற்காக ஒலிப்பது போலிருந்தது. “இப்புவியில் மானுடம் வாழவேண்டும் என்றால் எது வெல்லத்தக்கதோ அது வென்றாக வேண்டும். கட்டின்றி விரியும் எதன் பொருட்டும் இப்புவியை ஒப்படைக்கலாகாது. ஏனெனில் இது மானுடர்க்கோ அரக்கர்க்கோ அசுரருக்கோ நாகருக்கோ உரித்தானதல்ல. புல்லுக்கும் புழுவுக்கும் புள்ளுக்கும் விலங்குக்கும் உரியது.”
அவன் பேசுகிறானா, அல்லது அச்சொற்களை தன் உள்ளமே உருவாக்குகிறதா என ஜராசந்தன் வியந்தான். அவர் மிக அணுகி வரும்தோறும் அவர் முகமே காட்சியிலிருந்து மறைந்து சிவந்த இதழ்கள் மட்டுமே தெரிந்தன. திரும்பி பாண்டவர்களை நோக்கினான். அவர்கள் மிக அப்பால் நின்றிருந்தனர்.
இளைய யாதவரின் விழிகளில் சினமா வஞ்சமா களியாடலா என்றறியா ஒளி ஒன்று வந்தது. “இந்த எளியமானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக்கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”
ஜராசந்தன் “நீங்கள்…” என்று கைசுட்டினான். பின்பு நடுங்கும் குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். அவன் செவிகளுக்குள் ஒலித்த குரலில் “எடைமாறி ஊசலாடும் பல்லாயிரம் கோடி துலாத்தட்டுகள் நடுவே அசைவுறாது நின்றிருக்கும் முள் ஒன்றுண்டு ஜரைமைந்தா” என்றார் இளைய யாதவர். ஜராசந்தனின் இரு தோள்களும் துடித்தன. கால்களை முன்னெடுத்து வைத்து “தாங்கள்…” என்றபின் திகைத்தவன்போல பின்னுக்கு வந்தான்.
கால்கள் வலுவிழக்க முழந்தாள் மடித்து மண்ணில் விழுந்து தலை ஊன்றி சரிந்தான். அவன் இரு கால்களும் கைகளும் துடித்து இழுத்துக்கொண்டன. பீமன் ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்தான். அர்ஜுனன் ஓடையில் இருந்து இலையில் நீர்மொண்டு வந்து அவன் முகத்தில் அறைந்தான். ஜராசந்தனின் இரு கைகளும் வலிப்பு கொண்டு இழுபட்டன. பற்கள் கிட்டித்திருக்க இதழ்கள் கோணலாகி அதிர்ந்து கொண்டிருந்தன. வாயோரம் எச்சில் நுரை கொப்பளித்து வழிந்தது.
பீமன் நீரை மும்முறை அறைந்தபோது இமைகள் துடித்து கண்கள் திறந்தன. விழிகளுக்குள் மறைந்திருந்த கருவிழிகள் மேலே எழுந்து வந்தன. மெல்ல கைகள் தளர உடல் குழைந்தது. இலையில் இருந்த நீரை அர்ஜுனன் அவனுக்கு ஊட்டினான். சிலமிடறுகள் நீர் அருந்தியபின் கண்களை மூடி உடலெங்கும் பொடித்த வியர்வையுடன் ஜராசந்தன் படுத்திருந்தான். “மகதரே! மகதரே!” என்று பீமன் அழைத்தான். “என்ன நிகழ்ந்தது யாதவரே? அவர் நிலைகுலையும்படி எதை சொன்னீர்கள்?” இளைய யாதவர் புன்னகைசெய்தார்.
ஜராசந்தன் கண்களைத் திறந்து அவர்களை மாறி மாறி நோக்கியபின் “அவன்! அவன்!” என்றான். “மகதரே!” என்றான் அர்ஜுனன். “அவன்…” என்றபின் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். மெல்ல முழுமையாகத் தளர்ந்து கண்களை மூடினான். “ஜரையன்னையால் இணைக்கப்பட்டமையால் வலுவற்ற நரம்புகள் கொண்டவர். அவருக்கு வலிப்பு வருவதுண்டு என்று ஒற்றர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் பீமன். “வலிப்பு வலுவான உளமயக்குகளை உருவாக்கும்” என்ற இளைய யாதவர் அர்ஜுனனிடம் “ஏவலரை அழையுங்கள். அரசரை மஞ்சத்திற்கு கொண்டுசெல்வோம்” என்றார்.
[ 16 ]
புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் விடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது.
மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் நகரின் ஒவ்வொரு இடத்தில் உதிர்ந்து விழுந்தவர்கள்போல் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள். எங்கிருக்கிறோம், என்ன செய்தோம் என்பதை நினைவுகூர முயன்று சலித்தனர். தலை எடை கொள்ள, கால்கள் குழைய, உடலில் அழியாதிருந்த நினைவால் தங்கள் இல்லம் மீண்டனர். அரைத்துயிலில் திண்ணைகளிலும் இடைநாழிகளிலும் அறைகளிலும் படுத்து ராஜகிருஹத்தின் கோட்டைமுரசுகளையும் புலரிமணிகளையும் வானைக்கூவி அழைத்த சங்குகளின் முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இருத்தலென இயல்பென தொகுத்துக்கொண்ட ஒவ்வொன்றும் சிதறிப்பரவ எஞ்சிய வெறுமையை உணர்ந்து அவர்களின் கண்களிலிருந்து தடையின்றி கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. உதடுகளை இறுக்கி ஏறி இறங்கும் தொண்டையுடன் இருளில் முழுமுற்றான தனிமையில் கிடந்தனர். அவர்களுக்கு மேல் முடிவிலி வரை இருண்ட வானம் ஏறி அமர்ந்திருந்தது. பின்னர் சாளரங்களின் பிளவுகளினூடாக தீட்டிய வாள் என, திறந்த வாயிலுக்கு அப்பால் அழுக்குவெண்திரை என புலரியை அவர்கள் உணர்ந்தனர்.
புலரி என்பது ஓர் அறிதலாக இருந்தபோது பொருளற்றதாக எங்கோ நிகழ்ந்தது. அவ்வறிதலை புலரியெனும் சொல் சென்று தொட்டபோது அவர்களின் உடல் விதிர்க்க உவகை எழுந்தது. “புலரி! புலரி! ஆம் புலரி!” என்று நெஞ்சுக்குள் கூவினர். உடல் திறக்குமளவுக்கு விசை கொண்டு விம்மினர். ‘புலரி! புலரி!’ என்று உள்ளம் உழற்றிக்கொண்டிருக்க எழுந்து நீராடி ஆடை மாற்றி புதியவர்களென பிறந்து வந்தனர். அவர்களுக்காக கழுவப்பட்டு எடுத்துப் பரப்பப்பட்டிருந்தது நகரம்.
எழுந்தமர்ந்தபோது கலங்கியஒளி நின்றிருந்த தெருவில் அடிவயிற்றின் பேற்றுவரிகள் போல நீர்த்தடங்கள் விரிந்த மென்மையான செம்மணல் பரவியிருக்க அதன்மேல் மெல்லிய சிறுகால்களால் அழுத்தி அழுத்தி நடந்து கொண்டைகளை ஆட்டி மேய்ந்த சிறுகுருவிகள் கத்தி தீட்டும் ஒலியில் பேசிக்கொண்டன. சுவர்களில் ஈரத்தின்மேல் ஒளி வழிந்தது. அனைத்து இலைகளும் தளிர்மெருகு கொண்டிருந்தன. சேற்றுப்பரப்புகளில் ஒளி உருகி வழிந்தது.
அப்போதுதான் நகர் மையங்கள் அனைத்திலும் அன்று நிகழவிருக்கும் இரட்டையர் மற்போர் குறித்த அறிவிப்பு ஒலித்தது. அறிவிப்பாளனின் குரல் மழையை விரட்டிய காற்றில் தெறித்துச்சுழன்ற நீர்ப்பிசிர்களுடன் கலந்து ஒலித்தது. தெருவிலிருந்து பாய்ந்து இல்லத்திற்குள் நுழைந்த சங்குகர்ணர் உரத்த குரலில் “மற்போர்! அரசருக்கும் அயல்நாட்டிலிருந்து வந்த ஸ்நாதக பிராமணருக்கும் மற்போர்” என்றார். “அரசருடனா? மற்போரா?” என்று அதிர்ந்து கேட்டபடி அங்கிருந்தவர்கள் எழுந்து வந்தனர். “ஆம், இறப்பு வரை போர்!” என்ற சங்குகர்ணர் உரக்க நகைத்து “எவருடைய இறப்பு என்பதில் என்ன ஐயம்? ஜராசந்தர் எப்படி அபிமன்யூவை நெரித்துக்கொன்றார் என்று பார்க்கப்போகிறோம்” என்றார்.
இளையவனாகிய பால்குனன் “இல்லை, பொதுமன்றில் ஓர் எளிய ஸ்நாதக பிராமணனுடன் தோள்கோக்க அரசர் ஒப்பமாட்டார். இறப்பு வரை போர் என்றால் எதிர்நிற்பவன் இறக்கும் கணம் வரை போரிடுபவன் என்றே பொருள்” என்றான். உரக்க “ஐயமென்ன, அவன் பீமன்!” என்றான். சங்குகர்ணர் அக்கணமே அதை உண்மையென உணர்ந்து விழிநிலைக்க வாய்திறந்தார். “பீமனும் அர்ஜுனனும் நகர்நுழைந்துள்ளனர் என்று சொன்னார்கள். ஏழுமுரசுகளை அவர்கள் கிழித்தனர். நாகவேள்விச்சாலையை உடைத்தனர்… போருக்கென்றே இங்கு வந்துள்ளனர்” என்றார் முதியவராகிய தாம்ரர்.
நகரெங்கும் பீமன் என்ற பேச்சே இருந்தது. தெருவில் இயல்பாக நடந்து செல்கையிலேயே அச்சொல் காதில் மீளமீள விழுந்து கொண்டிருந்தது. “முற்றிலும் நிகரானவர் போரிடுகையில் தெய்வங்கள் இறங்கிவருகின்றன என்கிறார்கள். அதன் பொருட்டே மழை நின்றுள்ளது” என்றான் சாலையில் நின்றிருந்த நிமித்திகன் ஒருவன். “இந்தப் பொன்னொளியும் இளங்காற்றும் அவர்களுக்குரிய ஊர்திகள். மூக்கு கூருங்கள், மலர்களின் நறுமணம். இச்சிறுபறவைகளில் எவை விண்புரக்கும் தேவர்கள் என நாமறிய முடியாது. இச்சிறகுகளில் எவை விசும்பை அறிந்தவை என எவரும் சொல்லிவிடமுடியாது.”
ஒவ்வொருவரும் வானை நோக்கிக் கொண்டிருந்தனர். மலைத்தொடர்கள் போல, பாறைக் குவியல்கள் போல, கருகிய காடுகள் போல, உறைந்த கடலலைகள் போல வானில் நிறைந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பால் இருந்து நாளவன் கதிர்கள் கிழித்துப் பீரிடத்தொடங்கின. அவை எரித்து எரித்துத் திறந்த வழிகளினூடாக மேலும் கதிரொளி மண்ணில் சரிந்தது. “விண்ணவர் எழும் தருணம்” என்ற முதியோர் முற்றங்களுக்கு இறங்கி நின்று கைகூப்பி கதிரவனை வணங்கினர்.
‘எங்கோவாழ்!’ என்றன நாகணவாய்கள். ‘இளங்கதிரே இங்கெழுகவே’ என்றன கூரையேறி நின்ற சேவல்கள். ‘ஒளிநீயே’ என்றன குயில்கள். ‘ஒளி! பொன் ஒளி!’ என்றன சிட்டுக்கள். ‘எந்தையே போற்றி! எழுகதிரே போற்றி! முந்தை வினைகள் அழிக்க மூண்டெழும் அனலே போற்றி!’ என்று வான் நோக்கி வணங்கி வாழ்த்தினர் பூசகர். ஒன்றிலிருந்து ஒன்றென முகில்திரள்கள் பற்றிக் கொண்டன. நகருக்கு மேல் சூட்டப்பட்ட மாபெரும் மணிமுடியென பெருமுகில் குவை ஒன்று வந்தமர்ந்தது. “அது விண்தேர். மற்களத்தில் மாள்பவரை பொன்னுலகுக்கு அழைத்துச்செல்ல தேவர்களும் கந்தர்வகன்னியரும் அதில் அமர்ந்துள்ளனர்” என்றார் முச்சந்தியில் முழவிசைத்துப்பாடிய சூதர் ஒருவர்.
ஒளிகொண்ட முகில்களிலிருந்து தைல மழையென இளஞ்செந்நிற ஒளி கசிந்து நகரெங்கும் பரவியது. நனைந்து ஊறியிருந்த கூரைகள் அனைத்தும் எண்ணெய் மெருகுடன் மின்னத்தொடங்கின. ஈரம்சுமந்து துவண்டிருந்த கொடிகள் காய்ந்து எழுந்த காற்றில் உதறிக்கொண்டன. ஒளியில் எழுந்து சிறகுதறி சுழன்று பறந்த பறவைகளின் இறகுகளின் பிசிர்கள் விலகி தெரியத்தொடங்கின. நகரம் ஓசை கொண்டது. மெல்லத் தொட்டு மீட்டி, பின் தட்டி அதிரச்செய்து, அறைந்தறைந்து முரசை அறையச்செய்யும் கோல் போல கதிரவன் ராஜகிருஹத்தை முழங்க வைத்தான்.
அனைத்து தெருக்களிலிருந்தும் பெருகிய வண்ண உடைகள் அணிந்த மக்கள்திரள் செண்டுவெளிக்குள் நுழைந்து பெருஞ்சுழற்சியாக மாறியது. அதன் நடுவே மற்போருக்கென வைக்கப்பட்ட களம் கங்கையின் செந்நிறப் பூழி நிரப்பப்பட்டு சிறியதோர் சுனை போல காத்திருந்தது. அதை ஒருக்கிய வீரர்கள் சிறிய கூழாங்கற்கள் எங்கேனும் இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் அப்பூழியைக் கிளறி அரித்து நோக்கிக் கொண்டிருந்தனர். மற்களத்தின் இருபக்கமும் மல்லர்கள் அமர்வதற்கான பீடமும் அருகே அவர்களின் களத்துணைவர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
போரை நடத்தும் நடுவர்கள் அமர்வதற்கென சிறிய மேடை களத்தின் இருபக்கமும் அமைந்திருந்தது. அப்பால் அரசமேடையில் மகதத்தின் கொடி பொன்மூங்கிலின் மேல் பறந்தது. அதனருகே மகதத்தின் யானைமுத்திரை வரையப்பட்ட வெண்திரை மூடிய பீடம் ஒன்றிருக்க இருபக்கமும் வீரர்கள் ஒளிவிட்ட வேல்முனைகளுடன் அதற்கு காவல் நின்றனர்.
மெல்ல நிறைந்த அவை கிளர்ச்சி கொண்ட குரல்களால் ததும்பி முழங்கியது. வியர்வையின் ஆவி எழுந்து மூச்சை நிறைத்தது. களமெழுந்த முழக்கத்தின் கார்வையை ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர அவர்கள் விழிகளைச் சுருக்கி சொல்லிழந்தனர். சற்று நேரத்தில் பல்லாயிரம் தலைகள் நிறைந்த அந்தச் செண்டுவெளி முற்றிலும் அமைதி கொண்டதாக ஆகியது அதன் நடுவே சிவந்த விழி போல மற்களம் காத்திருந்தது.
மகதத்தின் அரண்மனையிலிருந்து ஜராசந்தன் கிளம்பியபோது எழுந்த முரசொலி தொடர்முரசுகளால் செண்டுவெளியை வந்தடைந்து அவர்களைச் சூழ்ந்து நின்று அதிர்ந்தது. எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. அரசன் எழும் முரசு செவியில் விழுந்ததுமே அறியாது நா வாழ்த்துரைக்கும்படி குரலெழுந்த நாள் முதல் பழகியவர்கள் தாங்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை என்பதை முன்னணியில் நின்றிருந்த சிற்றமைச்சர் இருகைகளையும் விரித்து “மகதப் பேரரசர் ஜராசந்தர் வாழ்க! வெற்றிகொள் திறல்வீரர் வாழ்க! பிருகத்ரதர் மைந்தர் வாழ்க!” என்று கூவியபோதே உணர்ந்தனர்.
திடுக்கிட்டு விழித்துக்கொண்டு கூட்டம் கைகளைத்தூக்கி ஒரே குரலில் அவ்வொலியை திருப்பி எழுப்பியது. ஆனால் ஒரு விளியிலிருந்து பிறிதொருவிளிக்கு தொற்றி ஏறி மேலே செல்லும் வழக்கமான உளப்பெருக்கமின்றி மெல்ல தழைந்து சரிந்து ஆங்காங்கே ஒலித்த உதிரிக் குரல்களாக மாறி அது அவிந்தது. படைவீரர்கள் மட்டுமே அவ்வாழ்த்தொலியை தொடர்ந்து எழுப்பினர்.
செறிந்து நின்றவர்கள் காலை வெயிலில் மண் உமிழ்ந்த நீராவியால் உடல் புழுங்கி வியர்வை பெருக கால்மாற்றிக் கொண்டனர். விடாய் உடலெங்கும் நிறைய எச்சில் கூட்டி விழுங்கினர். நீர் எங்கேனும் உண்டா என்று தலைதிருப்பி நோக்கினர். ஒருவர் உடலை ஒருவர் செறுக்க இறுகி உருவான அந்த ஒற்றைத் தசைப்படலத்தில் எவரும் எங்கும் நகரமுடியாதபடி சேர்த்து பின்னப்பட்டிருந்தனர்.
மழையால் தூசியறக் கழுவி துடைக்கப்பட்ட காற்றில் ஊடுருவி எழுந்த வெயில் தோலை பொசுக்கியது .கண்களைக்கூசி பார்வையை அழித்தது. ஜராசந்தன் அரசப்பொற்தேரில் செண்டுவெளிக்குள் நுழைந்தபோது காவல்கோட்டங்களில் எழுந்த முரசொலியுடன் படைவீரர்கள் இணைந்துகொண்ட வாழ்த்தொலியும் எழுந்தது. மங்கல இசை முழங்கியது. அதன் பின்னே சூழ்ந்திருந்த கூட்டம் மகதனை வாழ்த்தி குரலெழுப்பியது.
முன்பு இந்திரனால் பிருகத்ஷத்ரருக்கு அளிக்கப்பட்டதென புராணங்கள் சொன்ன மகதத்தின் அரசப்பொற்தேரான சைத்ரம் மகதத்தின் களிற்றுக்கொடி பறக்க அந்திமுகில் போல ஒளிவிட்டு, கன்னியிடை போல தட்டு உலைய, அவள் இணைமுலைகள் போல் குவைமுகடுகள் நெகிழ சாலையிலிருந்து செண்டுவெளிமேல் ஏறிவந்து நின்றது. களத்தில் நின்றிருந்த அமைச்சர் காமிகரும் படைத்தலைவர்களான சக்ரஹஸ்தரும் ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் அத்தேரை நோக்கி சென்றனர். அவர்கள் பணிந்து முகமன் உரைக்க ஜராசந்தன் உள்ளிருந்து தன் இரு இளையமைந்தர்களான சோமன், துரியன், சுருதஸ்ரூ ஆகியவர்களுடன் இறங்கினான்.
இருமைந்தர்களின் தோளில் கைகளை இட்டபடி வந்த ஜராசந்தன் மகதத்தின் அரச உடையணிந்திருந்தான். சிம்மமுகம் கொண்ட பொற்பாதக்குறடுகள். முழங்கால் வரை எழுந்த இரும்பு உறைகளின் மேல் பொன்பூச்சுப்பணிகள் மின்னின. இடைக்கச்சைக்குமேல் ஒளிரும் வைரங்கள் பதிக்கப்பட்ட சல்லடத்தில் உடைவாள் தொங்கியது. அதன் பொன்னுறைமேல் நாகங்கள் செவ்வைரங்கள் மின்னும் விழிகளுடன் உடல்பிணைத்து பரவியிருந்தன. செம்பட்டுக் கீழாடைக்கு மேல் அலையலையென வளைந்து தொங்கிய முத்தாரங்களின் படலம்.
மார்பிலணிந்த பொற்கவசம். தாமரையிதழென நீண்டு மலர்ந்த தோள்வளைகள். நாகமுடிச்சுகொண்ட கங்கணங்கள். விழிகள் எழுந்த கணையாழிகள். தலையில் சுதேஜஸ் என்று அறியப்பட்ட மகதத்தின் மணிமுடியை அணிந்திருந்தான். தேரில் அவனுக்குப்பின் இருவீரர் வெண்குடையை பிடித்திருந்தனர். அவன் இறங்கியதும் அவர்கள் அவன் பின்னால் அக்குடை சுமந்து வந்தனர். மிதப்பவன் போல சீராக கால் வைத்து நடந்து மற்களத்தை வந்தடைந்தான்.
மகதர் வெறிகொண்டவர்கள் போல வாழ்த்தி கூச்சலிட்டனர். நெஞ்சில் அறைந்தும் கைகளை வீசி துள்ளிக்குதித்தும் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் எடுத்து வீசியும் கண்ணீர் வழிய தொண்டை நரம்புகள் இறுகித் தெறிக்க கூவினர். ஒற்றைமுழக்கமென்றாகிச் சூழ்ந்த மக்கள் வாழ்த்தொலிகள் நடுவே நடந்து அவன் வந்ததும் வெண்திரை விலக்கப்பட்டது. அங்கே மகதத்தின் மகாஜோதிஷ் என்னும் அரியணை இருந்தது. நான்குசிம்மங்கள் முதுகொட்டி ஓருடல்கொண்டு நின்று விழிவைரங்கள் ஒளிர வாய்திறந்து உறுமி நிற்கும் கால்களுக்குமேல் எழுந்து வளைந்த சுடர்வளையத்தில் மகதத்தின் குடித்தெய்வங்களான ஏழன்னையரின் முகங்கள் செங்கனல்துளியெனச் சுடரிட்ட விழிகளுடன் பொறிக்கப்பட்டிருந்தன. மையத்தில் அரசனின் மணிமுடிக்குமேல் அமையும்படி மூவிழியனின் யோகத்திலமர்ந்த சிலை இருந்தது.
ஜராசந்தன் அரியணை அமர்ந்ததும் அவன் மணிமுடிக்குமேல் சிவனின் கால்கள் அமைந்தன. சக்ரஹஸ்தரும் காமிகரும் இணைந்து கொண்டுவந்தளித்த செங்கோலை வலக்கையில் வாங்கினான். அவனுக்குப் பின்னால் மகதத்தின் மகாசத்ரம் நிலவென எழுந்தது. இருபுறமும் சேடியர் அலைநுரைபோல் கவரிகளை வீசினர். அவனுக்கு இருபக்கமும் மைந்தர்கள் அரசணிக்கோலத்தில் வைரம்பதித்த தலைப்பாகைகளுடன் நின்றனர். மங்கல இசை எழ நாகவைதிகர் பன்னிருவர் நிரைகொண்டு வந்து அவன் மீது மஞ்சளரிசியும் மலரும் வீசி நாகவேதம் ஓதி வாழ்த்தினர். அதன்பின்னர் மகதத்தின் பூர்வகௌசிக அந்தணர் நிரைவகுத்துச்சென்று அவனுக்கு அரிமலர் தூவி கங்கைநீரால் வாழ்த்தளித்தனர்.
மெல்ல அக்கூட்டம் விழிநிலைத்து ஒலியமைந்தது. “இளங்கதிரவன் போல” என எவரோ அவர்களனைவரும் கொண்ட எண்ணத்தை சொன்னார்கள். அவனையன்றி பிறரை அங்கு எவரும் உணரவில்லை. அவன் தலைக்குமேல் எழுந்த முகில் ஒன்று ஒளிகொண்டு பொற்புகை என மாறியது. அதிலிருந்து திரண்டு உதிர்ந்த துளியென அவன் அங்கிருந்தான். காமிகர் திரும்பி இரு கைகளையும் காட்ட படைவீரர்கள் “மகதர் வாழ்க1 வென்றெழும் திறல் வீரர் வாழ்க! ஜராசந்தர் வாழ்க! மெய்வேதக்காவலர் வாழ்க!” என்று குரலெழுப்பினர்.
மக்கள்திரளிலிருந்து எவரோ ஒருவர் “மற்போருக்கு அரச உடையில் வரும் மரபில்லையே?” என்றார். அங்கிருந்த ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லாகையால அனைவரும் அவரை திரும்பி நோக்கினர். பிழையொன்றை சொல்லிவிட்டதைப்போல் அவர் முகங்களுக்கிடையில் தன்னை இழுத்துக் கொண்டார். அப்பால் எவரோ ஒருவர் “பட்டத்து இளவரசர் எங்கே?” என்றார். அனைவரும் விழிகளால் சகதேவனை தேடினர். “ஆம், பட்டத்து இளவரசர் வந்தாகவேண்டுமே?” என்றார் ஒரு முதியவர். “ஏன்?” என்று அருகில் நின்றவர் கேட்டார். முதியவர் “ஒருவேளை அரசர் களம்படுவார் என்றால் மணிமுடிசூடவேண்டியவர் அல்லவா” என்றார். “என்ன சொல்கிறீர்? இங்கு களத்திலா மணிமுடி சூட்டப்படுகிறது?” என்றான் அப்பால் நின்ற ஒருவன்.
மெல்லிய உரையாடல்கள் கலந்த ரீங்காரமாக செண்டுவெளி நிறைந்து மற்களத்தைச் சூழ்ந்து அவர்கள் காத்திருந்தனர். “பீமன் எவ்வடிவில் வரவிருக்கிறான்? இளைய பாண்டவனாக இம்மற்களத்துக்குள் அவன் நுழைய வாய்ப்பில்லை” என்றார் முதிய படைவீரர் ஒருவர். “ஸ்நாதக பிராமணனுடன் போர் என்றுதானே அரசு அறிவித்துள்ளது? அவ்வடிவிலேயே அவர்கள் வருவார்கள்“ என்றார் பிறிதொரு முதிய குடித்தலைவர்.
பீமன் வருவதைக் குறிக்கும் முரசு கோட்டை முகப்பில் எழுந்தது. அவ்வொலியின் கார்வையென கூட்டத்திலிருந்து எழுந்த முழக்கம் மேலும் மேலும் பெருகியது. ஒருவர் தோளை ஒருவர் பற்றி எட்டிப்பார்த்தனர். மகதத்தின் கொடி பறந்த அரண்மனைத் தேரில் பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் புகுந்தனர். மூவரும் ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடை அணிந்து தர்ப்பை திரித்த புரிநூல் அணிந்திருந்தனர். அவர்களை வரவேற்று மகதத்தின் மங்கல இசைச்சூதர் இசைக்க, சங்குகள் முழங்கின.
செண்டுவெளியில் இருந்த அத்தனை விழிகளுக்கும் அவர்கள் எவரென தெரிந்திருந்தது. எனவே அவர்களை எவ்வாறு வரவேற்பது என்றறியாமல் கலைந்த ஓசைகளாக கூட்டம் தயங்கியது. முன்நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் வலக்கையைத்தூக்கி வேதக்குரல் எழுப்பி அரிமஞ்சள் அள்ளி அவர்கள் மேல் வீசி வாழ்த்தினர். அவ்வொலி கேட்ட பின்னரே “களம் நிற்கும் அந்தணர் வாழ்க! பெருமல்லர் வாழ்க!” என்று நிமித்திகன் ஒருவன் தன் கோலைத்தூக்கி மக்களை நோக்கி கூவினான். அவர்கள் தயங்கி கலைந்தபடி அவ்வாழ்த்தொலியை திருப்பி கூவினர்.
பீமன் தேரிலிருந்து இறங்கி தன்னை வரவேற்ற காமிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் அவர் தலையில் கை வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். நிரைநின்ற பூர்வகௌசிக அந்தணரை வணங்கி மலர்கொண்டபடி அவன் களம் நடுவே சென்றான். அர்ஜுனனும் இளைய யாதவரும் இறங்கியதும் கூடி நின்ற மகதத்தின் மக்களை நோக்கி கை கூப்பியபின் அரியணையில் அமர்ந்திருந்த ஜராசந்தனை அணுகி தலைவணங்கினர். ஜராசந்தன் அவர்களை கை தூக்கி வாழ்த்தினான்.
மக்களை நோக்கி தலைவணங்கிவிட்டு பீமன் தன் பீடத்தில் வந்து அமர்ந்தான். அர்ஜுனனும் கிருஷ்ணனும் அவன் பீடத்தின் இருபக்கங்களிலும் சென்று அமர்ந்தனர். கூடி நின்றவர்கள் இருபெருந்தோளர்களையும் மாறி மாறி நோக்கினர். “யாதவரே, இவன் யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “பண்டு பாரதவர்ஷத்தை ஒருங்காண்ட மாபெரும் அசுரசக்ரவர்த்திகளுக்கு நிகரான ஒளி கொண்டிருக்கிறான்.” பீமன் “ஆம், ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் மகாபலியும் நரகாசுரனும் நினைவில் எழுகிறார்கள்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “உண்மை, என் மூதாதை கார்த்தவீரியனும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்” என்றார்.
ஒரு சூதர் “இளைய யாதவன் இத்தனை எளிய தோற்றம் கொண்டவனென நான் எண்ணியிருக்கவில்லை. கன்றோட்டும் ஆயர்மகன் போலிருக்கிறான்” என்றான். “இளைய பாண்டவனும் எளியவன் போலிருக்கிறான்” என்றான் ஒருவன். ஒரு சூதர் “பீமன் பெருந்தோளராகிய பலாஹஸ்வமுனிவர் போலிருக்கிறான்” என்றார். மிக மெல்லவே அவர் சொன்னாலும் சற்று நேரத்தில் செவிகளினூடாக அச்சொல் அனைவரையும் சென்றடைந்தது. “ஆம், பலாஹஸ்வர்! அவரேதான்! என்றார் ஒரு முதியவவர்.
“பலாஹஸ்வர் ரிக்வேதி அல்லவா?” என்று எவரோ கேட்டார். “மூன்று முதன்மைவேதங்களிலும் முற்றறிவு கொண்டவர்.” கூட்டத்திற்குள் இருந்து “இவர் எந்த வேத குலம்?” என்றார் எவரோ. “இவர் அடுமனையில் எரிவளர்ப்பவர். இவரது வேதத்தில் சொல் இல்லை, ஏப்பம் மட்டுமே” என்றார் ஒரு இளிவரல்சூதர். அவரைச் சுற்றி கூடி நின்றவர்கள் நகைத்தனர்.
ஜராசந்தன் தன்னைச்சூழ்ந்து நின்ற குடிகள் ஒவ்வொருவரையும் தன் விழிகளால் தொட விழைபவன் போல சுற்றி நோக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவனுக்கு இருப்பக்கமும் சென்று நிரைவகுத்தனர். காமிகர் வாய்பொத்தி “தங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம் அரசே” என்றார்.
“எனது ஆணைகளை முன்னரே பிறப்பித்துவிட்டேன் காமிகரே” என்றான் ஜராசந்தன். “இங்கு என் மக்கள் முன்னிலையில் களமிறங்கி வென்று செல்லப்போகிறேன்.” காமிகர் “அவை இறையாணையென கொள்ளப்படும்” என்றார். “அறிவிப்பு எழட்டும்” என்றான் ஜராசந்தன். காமிகர் கைகாட்ட அரசநிமித்திகன் அறிவிப்பு மேடையிலேறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் களம் முற்றாக ஓசை அவிந்தது. அக்களத்தின் வெவ்வேறு இடங்களில் அறிவிப்பு மேடைகளில் எழுந்த துணை நிமித்திகர்கள் தங்கள் கோல்களை சுழற்றினர்.
நிமித்திகர் உரத்த குரலில் “மாகதரே! குடித்தலைவரே! அந்தணரே! முனிவரே! விண்ணிழிந்து சூழ்ந்துள்ள தேவர்களே! விண்ணமர்ந்து நோக்கும் மூதாதையரே! உங்கள் அனைவரையும் மகதத்தின் பேரரசனின் கோலின் நிழலென இங்கு நின்று வணங்குகிறேன். தொன்மையான நாகர் குடி வழிவந்த மழைவிழவு இங்கு நிகழ்கிறது. மழை கொணரும் தவளைகள் பெருகவும் நாகங்கள் செழிப்புற்று எழவும் இவ்வேள்வி நெடுங்காலமாக நடந்து வந்தது. இன்று பாரதவர்ஷத்தின் நலன் பொருட்டு அவ்விழவை இங்கு மீண்டும் எழச்செய்தோம். அது என்றும் தொடர்க!” என்றார்.
“ஆம்! ஆம்! ஆம்!” என மக்கள் குரலெழுப்பினர் “மழைவிழவின் மையமென இங்கே நிகழ்ந்த நாகவேதவேள்வி நேற்று இங்கெழுந்த இம்மூன்று ஸ்நாதக பிராமணர்களால் நிறுத்தப்பட்டது. வேள்வி முறையின்படி வேள்விக்காவலராகிய மகதப்பேரரசர் அம்மூவரையும் வென்றபின்னரே அவ்வேள்வியை மீண்டும் தொடங்க முடியும். அவர்கள் மகதரின் அவை புகுந்து தனிப்போருக்கு அறைகூவினர். அதன்பொருட்டு அவர்களில் பெருமல்லரை இன்று இக்களத்தில் மகதப்பெருங்குடிகள் மத்தியில் பேரரசர் ஜராசந்தர் எதிர்கொள்ளவிருக்கிறார்” என்றார் நிமித்திகர்.
அவர் குரல் எதிரொலிகள் போல கூட்டமெங்கும் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி கடந்துசென்றது. “இங்கு நிகழும் இப்போரில் ஷத்ரிய குலங்களுக்கிடையே கடைபிடிக்கப்படும் மற்போர் நெறிகள் அனைத்தும் பேணப்படும். இருவரில் ஒருவர் மடியும் வரை இப்போர் நீடிக்கும். இது இங்கு எவ்வேள்வி நிகழவேண்டுமென்பதை முடிவு செய்யும் போருமாகும். தெய்வங்கள் இதன் வெற்றியையும் தோல்வியையும் முடிவெடுக்கட்டும். ஊழெனச் சூழும் காலம் நின்று நோக்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார். துணை நிமித்திகர்களால் அவ்வறிவிப்பு மீண்டும் மீண்டும் கூவப்பட்டு அங்கிருந்த அனைவரையும் சென்றடைந்தது.
மகத மக்கள் அனைவரும் அவர்களைத் தாங்கி நின்ற விசைகளால் கைவிடப்பட்டு உடல் தளர்வது போல ஒருமித்த அசைவொன்றை ஏற்படுத்தினர். களமாடலை அறிவிக்கும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் இளங்களிறுகள் போல மும்முறை முழங்கி அமைந்தன. ஜராசந்தன் எழுந்து தன் மக்களை நோக்கி கைகூப்பினான். அவர்கள் அமைதியாக அவனை நோக்கி நின்றனர். அறியாத ஏதோ உணர்வால் அவர்களில் பலர் விழிததும்பினர். ஜராசந்தன் திரும்பி தன் ஏவலரை நோக்கி விழியசைக்க அவர்கள் அருகணைந்து அவன் மணிமுடியை எடுத்து அரியணை மேல் வைத்தனர். அதன் குறுக்காக செங்கோலை சாய்த்தனர். அவன் ஆடைகளை ஒவ்வொன்றாக அவர்கள் களைந்தனர். அவன் மைந்தர் நோக்கி அசையாது நின்றனர்.
ஜராசந்தன் இடைக்கச்சையை அவிழ்த்துவிட்டு இறுகிய தோல் ஆடையை அணிந்தான். வலக்கையின் ஆழிவிரலில் அரசுமுறைக் கணையாழியன்றி பிறிதொரு அணியுமின்றி தோளில் புடைத்த பெருந்தசைகளும் விரிந்தமார்பின் கற்பலகைகளும் கைகளிலோடிய கொடிவேர்களுமாக தன் மைந்தர்களின் தோள்களைத் தொட்டு புன்னகையுடன் ஓரிரு சொற்கள் சொன்னான். இளையவனாகிய சுருதஸ்ரூ அழுகை வந்தவன் போல விழிகளைத் தாழ்த்த அவன் காதைப்பிடித்து இழுத்து ஏதோ சொன்னான். அவன் நாணத்துடன் நகைக்க மீண்டும் தோளைத்தட்டியபின் திரும்பி நடந்தான்.
ஜராசந்தன் வந்து தன் மல்லர் பீடத்தில் அமர்ந்ததும் அவனைச்சுற்றி நாகர்குல படைத்தலைவர் மூவரும் நின்றனர். அவன் குழலை ஏவலன் ஒருவன் கொம்புச் சீப்பால் சீவி பின்னால் கொண்டு சென்று தோல்பட்டையால் இறுகக்கட்டி முடிந்து முதுகில் இட்டான். களநிகழ்வு நடத்துவதற்கென இருபுறமும் நடுவர்கள் கைகளில் வெண்ணிறக்கொடியும் செந்நிறக்கொடியுமாக வந்து நின்றனர். காமிகர் நிமித்திகனை நோக்கி கையசைக்க அவன் தன் கோலைச் சுழற்றி இடுப்பிலிருந்த சிறிய கொம்பை எடுத்தூதினான். வானத்தில் அலறியபடி ஒரு பறவை சென்று கடந்தது போல அக்கொம்பொலி எழுந்து ஓய்ந்தது.
ஜராசந்தன் எழுந்து களத்தை அணுகி குனிந்து அப்புழுதியைத் தொட்டு தன் சென்னியில் சூடிவிட்டு செந்நிற பூழியில் கால்புதைய நின்றான். பீமன் இளைய யாதவரை நோக்கி தலைவணங்கிவிட்டு அர்ஜுனனின் தோளை மெல்லத்தட்டியபடி கூர்ந்த விழிகளுடன் ஜராசந்தனை பார்த்துக்கொண்டு நடந்து களவிளிம்பை அடைந்து பணிந்து அம்மண்ணைத் தொட்டு சென்னி சூடி பூழியில் இறங்கி நின்றான்.
[ 17 ]
ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர்.
புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து இறுக்கப்பட்ட முரசுப்பட்டைகள். விரிந்த மார்பின் பாறைமேல் பற்றி கிளைவிரித்த மாணைக்கொடிகள். சின்னஞ்சிறிய விழிகள். குவிந்த உதடுகள். கருப்பசுவின் வயிற்றின் அசைவென தாடை.
அங்கிருந்தவர்கள் இருவரையும் தனித்தனியான மானுடராக பார்க்கவில்லை. உறுப்புகள்தோறும் தாவிய விழிகள் தசையென, நரம்பென, எலும்பென, கையென, காலென, மார்பென, தோளென அறியாத்தெய்வங்கள் உருக்கொண்டு வந்து திரண்டு எதிர்நிற்பதாகவே உணர்ந்தனர்.
மெல்ல பீமன் வலக்காலை எடுத்துவைத்து அசைய அதே அசைவை ஜராசந்தன் இடக்கால் இயற்றியது. ஆடிப்பாவைகள் என ஒருவரை ஒருவர் நோக்கியபடி அவர்கள் ஒற்றைச்சுழியின் விளிம்புவட்டத்திலென களத்தின் மையத்தை சுற்றிவந்தனர். கணங்கள் எடைகொண்டு எடைகொண்டு அசைவிழந்தன. பார்த்து நின்ற ஒவ்வொருவரின் நரம்புகளும் இறுகி உச்சம்கொண்டு உடையத் துடித்தன.
அக்கணம் பீமன் களிறெனப் பிளிறியபடி பாய்ந்து வலக்கையால் ஜராசந்தனை அறைந்தான். ஜராசந்தன் கை அவ்வறையைத் தடுத்த ஒலியின் அறைதலை அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மேல் என உணர்ந்தனர். இரு உடல்களும் தழுவிக்கொண்டன. கைகள் கைகளை கால்கள் கால்களை மார்பு மார்பை. பாகுபாசமெனும் கைசூழ்கையின் முழுநிலை. விசைநிகரின் உச்சிப்புள்ளியில் இருவரும் அங்கு உருவான சுழியொன்றின் மையத்தில் மெல்ல சுற்றிவந்தனர்.
கணம் கணம் கணம். காமிகர் நோக்க முடியாதவராக விழிகளை விலக்கிக்கொண்டார். இத்தனை விரைவானதா இப்புடவிக்காலம்? அங்கு நின்றிருக்கும் அசைவிலா காலத்தில் இது சென்று விழுந்து மறைகிறதா? ‘ஆ’ என்னும் பேரொலி கேட்டு காமிகர் விழிதிடுக்கிட்டார். ஜராசந்தன் பீமனைத் தூக்கி வீசிவிட்டு கைகளை விரித்து நின்றான்.
பீமன் புழுதியில் விழுந்து உருண்டு எழுந்து தன் தொடைகளையும் தோள்களையும் ஓசையெழத் தட்டிக்கொண்டு உறுமலுடன் பாய்ந்து மீண்டும் ஜராசந்தனை நோக்கி வந்தான். ஜராசந்தனின் வலக்கையின் அறை அவன் தலைமேல் வெடித்தது. நிலைதடுமாறி விழப்போய் காலை ஊன்றி நிலைகொண்டு பின்னால் சென்றான். தலையை உலுக்கியபடி விடுபட்டு கால்களை ஊன்றிக்கொண்டு நின்றான். எதிரியின் ஆற்றலை உணர்ந்தவனாக அவன் மெல்ல உடல் பின்னடைந்து சித்தம் நிலைகொள்வதை கண்டார்.
சிட்டுக்குருவிச் சிறகுபோல விரல்களை அசைத்தபடி மீன்சிறகுகள் போல கைகளை வீசியபடி பீமன் ஜராசந்தனின் விழிகளை தன் மேல் கவர்ந்து நிறுத்தி அவனை எடைபோட்டான். கழுகின் இறகென கைகளை வீசினான். கலைமானின் கொம்புகள்போல் திருப்பினான். யானைத்துதிக்கைபோல தூக்கித் துழாவியமைந்தான்.
சித்ரஹஸ்தங்கள் எதிரியின் கைகளுக்கும் விழிகளுக்குமான ஒத்திசைவையும் உடலின் நிகர்நிலையையும் மதிப்பிடுவதற்கானவை என்று அறிந்திருந்த சூழிருந்தோர் அந்நோக்கில் ஜராசந்தனை பார்த்தனர். அவன் இடமும் வலமும் இரு வேறு மானுடர் என்பதை கதைகளினூடாக அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் எவ்வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை. அதேநேரம் ஏதோ வேறுபாடொன்றைக் கண்டதாக உள்ளாழம் உணர்ந்தும் கொண்டது.
நினைத்திருக்காத கணத்தில் இருமல்லர்களும் மீண்டும் தோள் பின்னி கைதூக்கிப் பிணைத்து ஒற்றைக்கூம்பென ஆனார்கள். கால்களை மண்ணிலூன்றி மாறிமாறி உந்தி வீழ்த்தமுயன்றபடி களத்தை சுற்றிவந்தனர். பூர்ணகும்பமெனும் ஆடல் மற்போரை நிகழ்த்தும் அடிக்கூறுகளில் ஒன்றான கெண்டைக்கால் தசைகளையும் தொடைத்தசைகளையும் அளவிடுவது. இருவரும் முற்றிலும் நிகர்நிலையில் நின்று சுற்றி உச்சம்கொண்ட கணத்தில் பீமனை ஜராசந்தன் தூக்கி தலைக்குமேல் உருட்டி முதுகு பட நிலத்திலறைந்தான்.
ஓங்கி மிதித்த அவன் காலில் இருந்து புரண்டு தப்பி கையூன்றி எழுந்து வெட்டுக்கிளி என தாவி அப்பால் விலகி நின்று பீமன் மூச்சிளைத்தான். பிருஷ்டபங்கம் அடைந்த மல்லன் பாதி தோற்றுவிட்டவன் என்பதனால் மகதத்தின் வீரர்கள் கைதூக்கி கூச்சலிட்டனர். சிலர் வேல்களைத் தூக்கி வீசிப்பிடித்தனர். ஆனால் சூழிருந்த மக்கள் குரலெழுப்பவில்லை. அவர்கள் பீமனில் விழிநட்டு வியர்த்து துளித்த புருவங்களை வழித்தபடி ஒளிக்கு கண்சுருக்கி நின்றனர்.
அர்ஜுனன் நிலையழிவதை காமிகர் கண்டார். அவன் முகம்திருப்பாமல் கிருஷ்ணனை நோக்க அவர் இயல்பாக மார்பில் கைகளைக் கட்டியபடி இசைகேட்டு அமர்ந்திருக்கும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீமன் மிகுந்த எச்சரிக்கை கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. ஜராசந்தன் புன்னகையுடன் கைகளை நண்டுபோல அசைத்தபடி சுற்றிவந்தான். பீமன் அவனிடமிருந்து விழிகளை விலக்காமல் அகன்றே சுற்றினான்.
மீண்டும் இருவரும் கைகளை கோத்துக்கொண்டனர். கைகள் முற்றிலும் பின்னி இறுகி புல்முடைந்த கயிறுபோல ஆயின. “திருணபீடம்... நிகர்வல்லமை அற்றவர்களின் கைகளை உடைக்கும்” என்றார் அருகே நின்ற சக்ரஹஸ்தர். காமிகர் திரும்பி நோக்கிவிட்டு பெருமூச்சுடன் அவர்கள் சுற்றிவருவதை நோக்கினார். சட்டென்று பீமன் முழுவிரைவுடன் ஜராசந்தனை உந்தி பின்னுக்குத்தள்ளி மலர்ந்துவிழச்செய்தான். ஜராசந்தன் மேல் பின்னிய கைகளுடன் அவனும் விழுந்தான்.
இருவரும் கால்கள் புழுதியளைய உருண்டு சுடுமண்சிற்பங்கள் போலாயினர். பிணைநாகங்கள் என நெளிந்து புரண்டு ஒருவர் உடலை ஒருவர் முற்றிலும் கவ்வி அசைவிழந்தனர். கூட்டம் காத்திருந்தது. அவர்களிடம் அசைவே எழவில்லை. காமிகர் ஒவ்வொரு நெஞ்சத்துடிப்பையும் தனித்தனியாக கேட்டபடி காத்திருந்தார். உடலெங்கும் ஓடிய குருதிக்குழாய்த் துடிப்புகளை வெவ்வேறென கேட்டார். தொண்டையிலிருந்து பரவி உடலை எரித்தது விடாய்.
“பூர்ணமூர்ச்சை...” என்றார் சக்ரஹஸ்தர். “பல மல்லர்கள் மூச்சிழந்திருக்கிறார்கள். ஒருமுறை இருவரும் சேர்ந்து மூச்சிழந்ததும் உண்டு. இருவர் உடலையும் பிரிக்கவே முடியவில்லை. சேர்ந்தே சிதையேறினர்.” காமிகர் அங்கிருந்து அகன்றுசெல்ல விரும்பினார். தன்னைத்தவிர அங்கே நோக்கி நின்றிருந்த அனைவரும் அப்போரில் தாங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பிரித்து விலக்கினர். இருவரும் மூச்சிரைக்க கைகளும் கால்களும் தளர்ந்து அவர்களின் கைகளில் இழுபட்டபடி விலகினர்.
இருவரையும் பீடங்களில் அமரச்செய்து ஈச்சமரச்சாறைக் காய்ச்சிய இன்னீர் அளித்தனர். வாய் நிறைந்து உடல்வழிய குடித்து குடம்நிறையும் ஒலியுடன் மூச்சு சீறி கலத்தை அப்பால் இட்டான் பீமன். அர்ஜுனன் அவன் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றினான். மகதத்தின் இரு ஏவலர்கள் பீமனின் தோள்களையும் கைகளையும் முயல்தோலின் மென்மயிரால் நீவி இழுத்து தசைகளை சீரமைத்தனர். அவன் மார்பிலும் தோளிலும் தொடையிலும் அடிபட்டுக் கன்றிய தசைகள் சிவந்தும் நீலம்கொண்டும் தடித்தும் இருந்தன. அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் புன்னகை செய்தார்.
கூட்டம் தங்கள் இடத்தையும் இருப்பையும் உணர்ந்து தளர்ந்து முழங்கத் தொடங்கியது. நீர்க்குடங்கள் தலைப்பரப்புக்கு மேல் மிதந்து தளும்பி அலைந்தன. “நீர்! இங்கே!” என்னும் கூச்சல்கள். வெயில் நன்றாக ஏறி மண்ணில்பரவ ஈரநிலம் சூடான அப்பமென ஆவியுமிழத் தொடங்கியது. புல் வேகும் மணம் எழுந்தது. பாசிபடிந்த கோட்டைச்சுவர்களில் இருந்து தேமல் விழுந்த உடலின் வாடை வந்தது. நெடுநாள் வெயிலறியாது நின்றிருந்த புரவிகள் அவ்வெக்கையால் நுரைச்சல்லடை தொங்கும் வாயுடன் தலைதாழ்த்தி மூச்செறிந்தன.
மீண்டும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறியபோது அனைவரும் எழுந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு புத்தார்வத்துடன் நோக்கத் தொடங்கினர். இம்முறை பீமன் பாய்ந்து முழுவிரைவில் ஜராசந்தனை குத்தினான். முதலில் தாக்கத்தொடங்கியது முஷ்டிகத்தில் முன்னிலையை அவனுக்களித்தது. விழிகளை ஏமாற்றி கைகளைச் சுழற்றி ஜராசந்தனின் விலாவிலும் காதிலும் தாடையிலும் அடிவயிற்றிலும் அடித்தான். அடிதாளாது பின்னால் நகர்ந்த ஜராசந்தன் குருதிக்கோழையுடன் இரு பற்களை துப்பினான். பீமன் புன்னகையுடன் முழங்கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டான்.
மீண்டும் இருவரும் மோதிக்கொண்டபோது பீமன் ஜராசந்தனை இடக்காலைத் தூக்கி உதைக்க அதை தன் வலத்தொடையால் அவன் தடுத்தான். இருவரின் குதிரைகள் போரிடுவது போல கால்கள் மாறிமாறி உதைத்தன. முழங்காலால் ஜராசந்தனின் வயிற்றை உதைத்த பீமனைத் தடுத்து எம்பி தன் குதிகாலால் அவன் அடிவயிற்றை உதைத்தான். இரண்டாக மடிந்து முன்னால் விழுந்த பீமன் வயிற்றை அழுத்தியபடி புழுதியில் புரண்டான். ஜராசந்தன் அவனை மேலுமொருமுறை ஓங்கி அடிவயிற்றில் மிதிக்க அக்காலைப்பற்றிச் சுழற்றி அவனை மண்ணில் வீழ்த்தி அவன் கைகளை பற்றிக்கொண்டான் பீமன். ஜராசந்தன் திமிற பீமன் அவனைப் பற்றியபடி மண்ணில் எடையுடன் இழுபட்டான்.
நடுவர்கள் வந்து ஜராசந்தனை இழுத்து விலக்கினர். பீமன் தரையில் மயங்கிக்கிடந்தான். அர்ஜுனன் எழுந்துவந்து பீமனின் தலையை அசைத்தான். இரு ஏவலர் பீமனைத் தூக்கி இழுத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்த்தி முகத்தில் நீரள்ளி அறைந்தனர். அவன் விழித்துக்கொண்டு தலையை உதறினான். அருகே அமர்ந்திருந்த இளைய யாதவர் “ஈரலில் அடிபட்டு வரும் மயக்கம். அதை பூர்ணயோகம் என்கின்றனர்” என்றார். “அது ஒரு சிறிய துயில். அதன் கனவுகள் மிக உதவியானவை...”
பீமன் “நான் கனவுகாணவில்லை” என்றான். “என்ன கண்டீர்கள், இளைய பாண்டவரே?” என்றார் இளைய யாதவர். “நான் என்னுடன் இருவர் போரிடுவதை கண்டேன்” என்றான் பீமன். “ஆனால் அது கனவல்ல... நான் என் விழிகளால் கண்டேன். அவர்களில் ஒருவன் போரிடுகையில் இன்னொருவன் என்னை கூர்ந்துநோக்கி பயின்றான். ஒருவன் சினந்து அடிக்கையில் இன்னொருவன் புன்னகைசெய்தான்.” இளைய யாதவர் “ஆம், நான் கேட்டது அதையே” என்றார். “அவர்கள் எப்படி ஒன்றாக இருந்தனர்?”
“அவர்கள் கைகோத்து தோள்தழுவியிருந்தனர்” என்றான் பீமன். “அந்த இணைவிடமே அவர்களின் வழுமுனை. அங்கே அடியுங்கள்.” பீமன் “ஆனால்...” என்றான். “அதை இங்கிருக்கையில் காணமுடியாது. அவன் முன் மல்லாடுகையில் காண்பீர்கள். பாண்டவரே, போரில் அச்சம் நன்று. அது சிறந்த வழிகாட்டியும் துணையுமாகும்” என்றார். பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மீண்டும் நீர் வாங்கி குடித்தான்.
“அவனிடமிருக்கும் நிலையழியாமை அச்சுறுத்துகிறது, யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவன் முற்றிலும் நிகர்நிலை கொண்டிருக்கிறான்” என்றார் இளைய யாதவர். “ஆனால் அது அவன் பயின்று அடைந்தது. பயின்றவை அனைத்தும் விலகிச்செல்லும் தருணங்களுண்டு மானுடர்களுக்கு.” பீமனை நோக்கித் திரும்பி “சினமும் காமமும் அச்சமும் கொள்கையில் மானுடர் விலங்குகளாகிறார்கள்” என்றார். பீமனின் விழிகள் அவர் விழிகளை ஒருகணம் தொட்டுமீண்டன.
மீண்டும் இருவரும் எதிரெதிர் நின்றபோது கூடிநின்றவர்கள் மெல்லிய சலிப்பு கொண்டிருந்தனர். பலர் அவர்களை நோக்கியபடி தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க படைவீரர்கள் ஈட்டிகளை ஊன்றி அதன் மேல் உடல் எடையை சேர்த்து கால் தளர்த்தி நின்றனர். சக்ரஹஸ்தர் “இருவரும் நிகர்நிலை கொண்டவர்கள். எளிதில் களைப்பும் அடையாதவர்கள். இப்போர் இன்று முழுக்க நீளுமென நினைக்கிறேன்” என்றார்.
காமிகர் மேலே எழுந்து முகில்விலகிய வெளியில் முழுமையாக நின்றிருந்த சூரியனை நோக்கியபின் மேலாடையால் வியர்வையை துடைத்தார். பலர் தங்கள் மேலாடையை தலைக்குமேல் குடைபோல விரித்துப் பிடித்திருந்தனர். கூட்டத்திற்குள்ளேயே பலர் குந்தி அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் மேலும் நீர் கோரி கைகளை வீசினர். நீர்க்குடங்கள் கைகளுக்கு மேல் அலையமைந்து எழுந்து கடந்துசென்றன. பொறுமையிழந்த புரவி ஒன்று எள்ளல் நகைப்பு போல கனைத்தது.
பீமனும் ஜராசந்தனும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். பாய்ந்து கைகளால் அறைந்து பின்னிக்கொண்டனர். துதிக்கை பின்னிய வேழங்கள் மத்தகங்களால் உந்திக்கொண்டன. பின்பு உருவி விலகி வரையாடுகள் என மண்டை தெறிக்க முட்டினர். கழுத்தால் அறைந்துகொள்ளும் புரவிகள். உதைத்து சுழலும் கழுதைகள். தலைகளில் கைகளைச் சுருட்டி அறையும் குரங்குகள். முகத்தால் முட்டி உந்திச்சென்றன பன்றிகள். கைநகங்களால் கிழித்தன கரடிகள்.
அங்கிருந்த இரு மானுடரும் அகன்றனர். உறுமல்கள். முழக்கங்கள். பிளிறல்கள். செருமல்கள். அறைதல்கள். எங்கு எவர் என்ன செய்கிறார்கள் என்றறியாமல் கைகளும் கால்களுமான ஒற்றைத்தசையிருப்பு அங்கு நின்று தன்னுள் தான் ததும்பியது. போரின் நெறிகளனைத்தும் சிதறின. இருமுறை நடுவர்கள் அவர்களை நெருங்கி விலக்க முயல பீமன் ஒரு நடுவரை காலால் உதைத்து தெறிக்கச்செய்தான். மீண்டும் அணுகிய இன்னொரு நடுவரை ஜராசந்தன் ஓங்கி அறைந்து வீழ்த்தி அவர் மேல் மிதித்து பிளிறியபடி பாய்ந்தான்.
பீமன் ஜராசந்தனின் தலைமயிரைப்பற்றிச் சுழற்றி இழுக்க அவன் இடையை ஓங்கி அறைந்தான் ஜராசந்தன். வலியலறலுடன் பீமன் சுருள அவனை அள்ளி தோளிலேற்றி காவடியென சுழற்றினான் ஜராசந்தன். அவனை நிலத்தில் அறையும்பொருட்டு அவன் தூக்கிச்சுழற்ற தன்னைச்சூழ்ந்து பறந்து ஒற்றை வரம்பென உருகி இணைந்து ஓடிய உடல்களாலான வண்ணத்தீற்றலில் பீமன் இளைய யாதவரின் முகத்தைக் கண்டான். அவ்விரைவிலும் அவர் விழிகளை சந்தித்துச் சென்றான். மீண்டும் வருகையில் அவர் தன் கையிலிருந்த தர்ப்பையை இரண்டாகக் கிழிப்பதை கண்டான்.
தன்னை தலைக்குமேல் தூக்கி வெறியுடன் ஆர்ப்பரித்தபடி சுற்றி நிலத்திலறையப்போன ஜராசந்தனின் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான் பீமன். அனல்பட்டது போல துடித்து கால்தடுமாறி ஜராசந்தன் பேரோசையுடன் விழுந்தான். அவன் மேல் விழுந்த பீமன் அவனைப்புரட்டி மீண்டும் அதே இடத்தில் ஓங்கி அறைந்தான். அங்கிருந்த பல்லாயிரம்பேரும் அவ்வோசையை தங்கள் மேல் விழுந்ததெனக் கேட்டு பல்கூசி கண்ணீரம் கொண்டனர்.
ஜராசந்தனின் கைகளும் கால்களும் இருவேறு திசைகளில் ஒன்றுடனொன்று இசைவிலாது துடித்துத் தவித்தன. அவன் விழிகளும் இருதிசைகள் நோக்கி உருண்டன. வெட்டுண்ட பலிவிலங்கின் உடல்போல பூழியில் கிடந்து அவன் இழுபட்டு விதிர்த்து வலிப்புகொண்டான்.
பீமன் தள்ளாடியபடி எழுந்தான். கண்களில் ஒளிதிரண்டு நோக்குமறைய காதுகளில் முழக்கம் எழ அவன் நிலையழிந்து பின்னடி எடுத்து வைத்து சரிந்து பூழியில் பின்எடை அறைபட விழுந்தான். கூட்டம் “ஹோ” என ஓசையிட்டது. கையை பூழியில் ஊன்றி உந்தி எழுந்து மீண்டும் விழுந்தான். பின் இருகைகளையும் ஊன்றி எழுந்து கால்களை விரித்து கை நீட்டி நின்றான்.
சிதறியலைந்த தன் கைகால்களை திரட்டியபடி ஜராசந்தன் எழுவதை காமிகர் கண்டார். அவன் பூழியில்கிடந்து தவித்தபோது முகம்நோக்க அறியாத கைக்குழந்தைபோல் தோன்றியதை நினைவுகூர்ந்தார். குழந்தைகள் அனைத்துமே வலமும் இடமும் இசையாத ஊன்திரள்களாகத்தான் பிறக்கின்றன என்று எண்ணினார். அவை நான் என உணர்ந்து அகமென்று ஆகி திரட்டிக்கொண்ட ஒன்றால் தொடுக்கப்பட்டவை கைகளும் கால்களும் விழிகளும் செவிகளும்.
ஜராசந்தன் திரண்டு எழுந்து பெருஞ்சினத்துடன் அலறிப்பாய்ந்து பீமனை ஓங்கி அறைந்தான். அவன் தோற்கத்தொடங்கிவிட்டான் என்பதை காமிகர் கண்டார். அவன் வலத்தோள் துடித்து மேலெழ இடப்பக்கம் வலுவிழந்து வலப்பக்கத்தால் இழுத்துச்செல்லப்பட்டது. பீமன் அவன் அறையை விலக்கி உடல் சுழற்றிப்பாய்ந்தான். அவன் அறைந்ததை தன் வலக்கையால் பற்றிய ஜராசந்தன் அவனைத் தூக்கி வீசினான். பீமன் விழுந்து புரள்வதற்குள் ஜராசந்தன் அவன் உடல்மேல் பாய்ந்தான். ஆனால் உடல்நிகர் அழிந்தமையால் இலக்குவிலக பீமனருகே மண்ணில் விழுந்தான். பூழிபறக்க புரண்டவன் மேல் ஏறி அவனை ஓங்கி அறைந்தான் பீமன். ஜராசந்தன் வலியுடன் அமறினான். அவன் தலைமயிரைப்பற்றி பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான்.
வலக்கையை மண்ணிலறைந்து உடலை உந்திப்புரண்டு அப்பால் சென்று விழுந்த ஜராசந்தன் மீண்டும் கைகால்களின் இசைவழிந்து நெளிந்து துடித்தான். பீமன் கைகளை விரித்து இறந்தவன்போல பூழியில் கிடந்தான். நடுவர்கள் இருவரையும் நோக்கியபடி செயலற்று நின்றனர். ஜராசந்தனின் உறுமல் கழுத்தறுபட்ட புரவியின் எஞ்சும் மூச்சிலிருந்து எழும் பாழ்கனைப்பு போன்றிருந்தது. பீமன் அவ்வொலி கேட்டு உடலதிர்வதை காணமுடிந்தது. அவன் கால்களை மடித்து உடலைப்புரட்டி எழுந்து அமர்ந்தான். இளைய யாதவர் கைகளால் ‘கொல்... கொல் அவனை!’ என்று செய்கை காட்டி ஊக்கினார். அதை புரிந்துகொள்ளாதவன் போல பீமன் நோக்கி அமர்ந்திருந்தான்.
ஜராசந்தன் தலையறுபட்ட விலங்கின் அசைவுகளுடன் வலக்கையை ஊன்றி இழுத்து இழுத்து களத்தின் எல்லைநோக்கி சென்றான். வலக்கையால் செயலற்றிருந்த இடக்கையைத் தூக்கி அதன் எடைதாளாமல் விட்டான். வலக்காலை ஊன்றி எழுந்து வலக்கையை முழங்காலில் தாங்கி நின்றான். ‘அடி அவனை’ என்று இளைய யாதவர் கையசைத்தார். அதற்குள் ஜராசந்தன் முழுவிரைவுடன் பாய்ந்து பீமன் மேல் முட்டி அவனை களத்திற்கு அப்பால் தெறிக்கச்செய்தான். அவன் சினம்கொண்ட களிறென ஓசையிட்டு காலால் மண்ணை உந்தி புழுதிகிளப்பி மீண்டும் பாய்வதற்குள் பகடைக்காய் என பீமன் உருண்டு அப்பால் நகர்ந்து கையூன்றி எழுந்தான். விலா எலும்பு உடைந்து இடப்பக்கம் தளர நிற்கமுடியாமல் உடல்குழைந்தான். அவன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி வழிந்து மூச்சில் தெறித்தது. புறங்கையால் அவன் மூக்கைத் துடைத்தபோது விரல்களில் பரவி அவன் கையை உதறியபோது புழுதியில் உதிர்ந்தது.
ஒற்றைக்கையுடன் பாய்ந்து பீமனை நோக்கிச்சென்ற ஜராசந்தன் அவ்விரைவிலேயே இடக்காலின் இசைவை அடைந்தான். இடக்கையும் செயல்கொண்டு எழ பீமனை அணுகி அவனை அறைந்தான். பீமன் அவ்வடிகளை தோளில் ஏற்றபடி திரும்பி உடல்காட்டி பின்னகர்ந்தான். பீமனை ஓங்கி அறைந்து அவ்விசையாலேயே தூக்கி தரையிலடித்து அவன் நெஞ்சை மிதித்தான் ஜராசந்தன்.
பீமன் அக்காலை பிடித்துக்கொள்ள அவன் மேல் அழுந்திய காலின் எடையால் நெஞ்செலும்புகள் தெறித்தன. மூச்சில் சிதறிய குருதி ஜராசந்தனின் கால்களில் பட்டு வழிந்தது. ஜராசந்தன் வெறிகொண்டு அலறினான். தெய்வமெழுந்த அரக்கர்குலத்துப் பூசகன் போல கழுத்து நரம்புகள் புடைக்க உடல் அதிர கூச்சலிட்டான். பீமன் அக்காலைப் பற்றிபயடி தன் இறுதியாற்றலைத் திரட்டிச் சுழற்ற ஜராசந்தன் கீழே விழுந்தான். பாய்ந்து அவன் மேலேறி அவன் பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான் பீமன்.
கைகளும் கால்களும் இசைவழிந்து புழுதியில் திளைத்த ஜராசந்தனை நோக்கியபடி பூழியில் கையூன்றி கால்கள் தளர்ந்து நீண்டு கிடக்க தலை நடுநடுங்க வியர்வை உதிர பீமன் அமர்ந்திருந்தான். தன் தொடையில் இளைய யாதவர் ஓங்கியறைந்துகொண்ட ஒலி கேட்டு அவன் விழிதிருப்ப அவர் தர்ப்பையைக் கிழித்து இருபகுதிகளையும் திசை மாற்றியதை கண்டான். அதை அக்கணமே உணர்ந்த காமிகர் அச்சத்துடன் சக்ரஹஸ்தரை நோக்கினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று கண்டார். எவரும் அதை கண்தொட்டிருக்கவில்லை.
அர்ஜுனன் “வேண்டாம், மூத்தவரே” என கை நீட்டியபடி எழ இளைய யாதவர் அவன் தோளைப்பற்றி அழுத்தினார். பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கினான். அவன் தாடை இறுகியது. உறுமலுடன் பாய்ந்து சென்று கீழே விழுந்துகிடந்த ஜராசந்தன் மேல் விழுந்து அவன் கைகளைப்பற்றி முறுக்கி வளைத்து காலால் ஓங்கி உதைத்து முறித்தான். “கூடாது! நெறியில்லை இதற்கு!” என்று கூவியபடி ஓடிவந்த நடுவரை இடக்கையால் அறைந்து தன் காலடியில் வீழ்த்தினான். பின்பு வலக்கையைப் பிடித்து முறுக்கி எலும்பு உடையும் ஒலி நீருக்குள் பாறைபிளப்பதுபோல் எழ முறித்தான்.
அவன் ஜராசந்தனின் கால்களை பற்றித் தூக்கி பாதத்தைப் பிடித்து சுழற்றி இடுப்புப்பொருத்தில் உதைத்து மறுபக்கமாகத் திருப்பி உடைப்பதை கூட்டம் அதிர்வுகளுடன் நோக்கி நின்றது. அவ்வுடலைத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நிலத்தில் அறைந்தான். கைகால்கள் தனித்தனியாக போழ்ந்திடப்பட்டதுபோல ஜராசந்தனின் உடல் துள்ளிக்கொண்டிருந்தது.
எழுந்து சற்றே தலைகுனிந்து அதை நோக்கியபடி பீமன் நின்றான். கால்தளர்ந்து அவ்வுடல் மேலேயே விழப்போகிறவன் போல ஆடினான். ஜராசந்தனின் வலப்பக்கம் முற்றடங்க இடப்பகுதி மட்டும் மெல்லிய துடிப்புடன் இருந்தது.
காமிகர் ஓடிச்சென்று கால்மடித்து குனிந்து அமர்ந்து “அரசே” என்றார். ஜராசந்தனின் முகம் அவர் அதுவரை கண்டிராத பேரழகுடன் இருந்தது. விழிகளில் ஒளியுடன் புன்னகைத்து இதழ்களை அசைத்து ஏதோ சொன்னான். காமிகர் “அரசே! அரசே!” என கண்ணீருடன் கூவி அவன் உடலை உலுக்கி அசைத்தார்.
நிலமதிர அணுகி அவர் தோளை கையால் உந்தி அப்பால் விலக்கிய பீமன் ஜராசந்தனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்தான். நீருக்குள் பாறைமேல் பாறை விழுவதுபோல் அவன் உள்ளுடையும் ஓசை கேட்டது. கொப்புளங்களாக குருதி வெடித்து மூக்கிலும் வாயிலுமாக பீரிட்டுத் தெறித்தது. உடன் எழுந்து சிதறியது “அன்னையே!” என்னும் சொல்.
காமிகர் “அரசே! அரசே!” என்று வீரிட்டபடி தன் தலையை கைகளால் அறைந்துகொண்டு அலறி மயங்கிச் சரிந்தார். பீமன் குனிந்து ஜராசந்தனின் உடலைத் தூக்கி தலைக்குமேல் எழுப்பி நாற்புறமும் சுற்றிக்காட்டினான். ஜராசந்தனின் கால்விரல்கள் அப்போதும் எஞ்சிய உயிருடன் நாகவால் என நெளிந்துகொண்டிருந்தன. விரல்கள் ஏதோ செய்கையால் சொல்லின. சடலத்தைத் தூக்கி பூழிமேல் அறைந்து வீழ்த்தியபின் பீமன் எவரையும் நோக்காமல் திரும்பி களம்விட்டு விலகிச்சென்றான்.
பூர்வகௌசிக குலத்து அந்தணர்கள் தங்கள் கைகளைத் தூக்கி பீமனை வாழ்த்தி வேதமொழி எழுப்பினர். அவர்களில் இளையோர் சிலர் உவகையுடன் “அழியாச் சொல் ஆக்காச் சொல் ஆழத்துச் சொல் என்றும் வாழ்க!” என்று கூவினர். மகதமக்கள் காற்றில்லாத காட்டின் மரங்களென இமைகளும் அசையாமல் சூழ்ந்து நின்றிருந்தனர். ஜராசந்தனின் மைந்தர் மூவரும் உடலிலோ விழியிலோ எவ்வசைவும் காட்டாமல் நின்றிருக்க நாகர்படைத்தலைவர்கள் தங்கள் வாள்களை உருவியபடி அவர்களருகே சென்றனர். சோமன் இதழசையாது சொல்லிய ஒற்றைச்சொல்லால் கட்டுண்டு தோள்பதைக்க நின்றனர்.
கூட்டத்தை திரும்பி நோக்கியபடி எழுந்த இளைய யாதவர் “செல்வோம், பார்த்தா. நம் பணி முடிந்தது” என்றார். அர்ஜுனன் கண்ணீருடன் உதட்டை அழுத்தியபடி அமர்ந்திருந்தான். அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார் இளைய யாதவர். “எந்த வீரனின் இறப்பும் துயருக்குரியதே. ஆனால் இருப்போர் இறப்போர் எவர் பொருட்டும் துயருறாதவனே வீரன் எனப்படுகிறான். மெய்மை வீரர்களுக்கு மட்டுமே கைப்படுவது.”
அர்ஜுனன் எழுந்து இளைய யாதவரிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் நடந்து தேரை நோக்கி சென்றான். கூடிநின்ற மகதமக்களை இளைய யாதவர் நோக்கினார். அவர்கள் அங்கிலாதவர் போலிருந்தனர். சோமனும் இளையோரும் வந்து ஜராசந்தனை அணுகி குனிந்து அவனை தூக்கியபோது அவர்களும் காற்றுபட்ட காட்டின் மழைத்துளிகள் போல கலைந்து உதிர்ந்து பேரொலி எழுப்பியபடி பெருகியோடி ஜராசந்தனை சூழ்ந்துகொண்டனர்.
வானில் ஒளியுடன் நின்றிருந்த முகில்மலை மெல்ல அணையத்தொடங்கியது. விழியிருண்டதுபோல எங்கும் இருள் பரவியது. கோட்டைச்சுவர்கள் கருமைகொண்டு குளிர்ந்தன. இலைகள் பளபளத்து காற்றிலாடின. வண்ணங்கள் ஆழ்ந்தன. மென்காற்று காதுமடல்களை குளிரச்செய்தது. பிடரி சிலிர்த்தது.
மக்கள் ஜராசந்தனைச் சூழ்ந்து செறிந்து அடர்ந்தனர். ஒருவரோடொருவர் முட்டி மோதி எம்பித்தாவினர். எவரோ எங்கோ விம்மியழத்தொடங்க சற்றுநேரத்தில் அப்பெருங்கூட்டமே கதறி அழுதது. “எந்தையே, மகதத்தின் தலைவனே! நாகர்களுக்கு முதல்வனே!” என்றது சூதர் ஒருவரின் பெருங்குரல். “நிகரற்றவனே, அன்னைசொல் நின்றமையால் நீ மானுடன்! அஞ்சாமையால் நீ வீரன்! அளியால் நீ அரசன்! அறிவால் நீ முனிவன்! தன்வழியை தான் வகுத்தமையால் நீ இறைவன்!” நெஞ்ச விம்மலென அவரது கைத்தாளம் முழங்கியது.
அவர்கள் களம் நீங்கும்போது பல முனைகளில் சூதர்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டனர். “வென்றவர் எவர்? இப்புவியில் நின்றவர்தான் எவர்? பிழையென்றும் நேரென்றும் வகுத்தவர் எவர்? நன்றென்றும் தீதென்றும் முற்றறிந்தவர்தான் எவர்? முடிசூடி அமர்ந்த உன் முழுதணிக்கோலம் காட்டியது உன்னை. உன் விழியணிந்த ஒளி காட்டியது உன்னை. எந்தையே, எம் குலத்தோர் சொற்களில் வாழ்க நீ! இறைவனே, என் மகளிர் கருவில் மீண்டும் எழுக நீ!”
அரண்மனை முகப்பில் சகதேவன் அமைச்சர்களான சித்ரரதரும் கௌசிகரும் துணையமைக்க அவர்களைக் காத்து நின்றிருந்தான். தேர் அணைந்து பீமன் அவன் அருகே சென்றதும் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அருகே இளைய யாதவர் சென்று நிற்க அர்ஜுனன் தயங்கி பின்னால் நின்றான்.
சகதேவன் அணுகி வந்து கைகூப்பி “இளைய பாண்டவரே, நீங்கள் வெற்றிகொண்டு வரும்போது மகதத்தின் அரசத்தேரை உங்களுக்கு அளிக்கவேண்டுமென எந்தை ஆணையிட்டிருந்தார். சைத்ரம் என்னும் பெயருள்ள அந்தப் பொற்தேர் இந்திரனுக்குரியதென்றும் எங்கள் மூதாதையான பிருகத்ஷத்ரரால் வெல்லப்பட்டதென்றும் சூதர்கள் பாடுகிறார்கள். அதை ஏற்று அருள்க!” என்றான்.
அருகே நின்றிருந்த ஏவலன் கெண்டியில் நீரை ஊற்ற சகதேவன் அதை அளிக்கும்பொருட்டு வாழைக்கூம்பென கைகுவித்து நீட்டினான். பீமன் அவன் நீட்டிய கைக்குக் கீழே தன் கையை வைத்து நீரூற்றி அளிக்கப்பட்ட தேரை பெற்றுக்கொண்டான். சகதேவன் “பாண்டவரே, முறைப்படி இந்நகரும் முடியும் தங்களுக்குரியவை. நான் எந்தைக்குரிய எரிசடங்குகளை செய்யவேண்டும். அதற்கு மட்டும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான்.
பீமன் அவன் தோளைத் தொட்டு “மைந்தா, நான் மானுடனல்ல. வெறும் காட்டுவிலங்கு. காட்டுவிலங்குகள் மேல் மானுடர் பகைகொள்வதில்லை என்று மட்டும் உன்னிடம் சொல்ல விழைகிறேன்” என்றான். “என்னைக் கொல்ல எவரும் எவ்வறமும் பேணவேண்டியதில்லை. நஞ்சூட்டியும் சதிக்குழியமைத்தும் எரியிட்டும் அழிக்கலாம். என்றேனும் ஒருநாள் அவ்வாறு நான் கொல்லப்படுவேன் என்றால் என்னைக் கொல்பவன்மேல் முழு அன்புடன் இறப்பேன் என்பது மட்டுமே நான் சொல்லக்கூடுவது.”
கசப்புடன் மெல்ல சிரித்து திரும்பி இளைய யாதவரை நோக்கியபின் “இம்மணிமுடி அல்ல, எந்த முடியையும் காட்டாளன் சூடுதல் தகாது. என் தலைமேல் மானுடரின் எச்சிறப்பும் எப்போதும் அமையலாகாது. எனவே ஒருகணம் உன் முடியை கொள்வதும் எனக்கு உகந்ததல்ல. அனைத்தையும் நிகழ்த்தி அறியாதவராக நின்றிருக்கும் இளைய யாதவரே அதை உனக்களிக்கட்டும்” என்றான்.
இளைய யாதவர் புன்னகையுடன் அருகே வந்து “வெற்றிகொண்டவர் பொருட்டு நான் இந்நாட்டை அடைகிறேன். அவர் பொருட்டு உன்னை இந்நாட்டின் அரசனென அமர்த்துகிறேன். அறம் உன்னைச் சூழ்ந்து காக்கட்டும்” என்றார். அதுவரை காத்திருந்த கண்ணீர் விழிமீற இதழ்களை இறுக்கியபடி சகதேவன் திரும்பிக்கொண்டான். அவன் தோள் குலுங்க அமைச்சர் அவனைப்பற்றி அழைத்துச்சென்றனர்.
அவர்கள் மகதத்தின் அரசத்தேரில் நகர்நீங்கும்போது மழை நகரை மீண்டும் மூடியிருந்தது. திரைதிரையெனக் கிழித்து அவர்கள் சென்றனர். கோட்டைமுகப்புக் காவல்கோட்டத்தில் வேல்தாழ்த்தி கண்ணீருடன் அமர்ந்திருந்த படைவீரர்களை சூழ அமர்த்தி சூதன் பாடிக்கொண்டிருந்தான் “ஜரைமைந்தா, நீ விண்ணேகவில்லை. இந்த மண்புகுந்து வேர்ப்பரப்பில் கலந்தாய். எங்கள் காலடியில் உள்ளங்கையென விரிந்து தாங்குகிறாய். என்றுருமிருப்பாய்...”
தொண்டையைச் செருமிய அர்ஜுனன் அடைத்த குரலில் “யாதவரே, எப்பழியின் பொருட்டு ஜராசந்தன் கொல்லப்பட்டான்?” என்றான். “பழியின் பொருட்டா மானுடர் கொல்லப்படுகிறார்கள்? ஊழ் என்று அதை சொல்கிறார்கள்” என்றபின் நகைத்து “பாழ் என்று சொல்ல அஞ்சி ஊழ் என்கிறார்கள்” என்றார் இளைய யாதவர்.
அர்ஜுனன் “இப்பெருவீரன் மேல் நாம் கொண்ட இச்சிறுவெற்றியின் பொருளென்ன என்று கேட்டேன்” என்றான். “அப்பொருள் மிகமிக விரிந்தது, பார்த்தா. பொருளின்மை என்றாகும் அளவுக்கு விரிந்தது” என்றார் இளைய யாதவர் மீண்டும் நகைத்தபடி.
தேர் முன்னகர்ந்தபோது சூதனின் வரி பின்னால் ஒலித்தது “இறப்பென்பதுதான் என்ன? இறவாமையின் அலைகடல் கரையில் ஒரு நீர்க்குமிழி!”
பகுதி எட்டு : கார்த்திகை
[ 1 ]
சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே கிளம்பிய சிசுபாலன் அஸ்தினபுரியை அடைந்து கோட்டை வாயிலில் தன் முத்திரைக் கணையாழியை காட்டியபோதுதான் அவனது வருகையை நகரம் அறிந்தது. அச்செய்தியைக் கொண்டு பறந்து சென்ற புறா அரண்மனையை அடைந்து, தோல்சுருள் விதுரரின் கைகளுக்குச் சென்றபோது அரண்மனை முற்றத்தில் குளம்புகள் ஒலிக்க சிசுபாலன் புரவியில் வந்து நின்றான். தாவி இறங்கி தனது கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு குறடுகள் ஒலிக்க படிக்கட்டில் ஏறி இடைநாழியில் நடந்து அவன் வருவதைக் கண்ட விதுரர் முகமன் உரைத்து வணங்கியபடி எதிரே வந்தார்.
“நான் அரசரை காண விழைகிறேன்” என்று சிசுபாலன் உரக்க சொன்னான். “அரசர் மேலே சொல்சூழ் அறையில் இருக்கிறார்” என்றார் விதுரர். “தாங்கள் இளைப்பாறி…” என்று அவர் சொன்னதை கையசைத்து தடுத்தபின் படிகளில் ஓசையுடன் ஏறி இடைநாழியில் விரைந்த சிசுபாலன் துரியோதனன் அறை வாயிலில் காவலுக்கு நின்ற துர்மதனின் தோளைத்தட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அறைக்குள் துரியோதனனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் திகைப்புடன் அவனை நோக்க உரத்த குரலில் “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன். செய்தி வந்திருக்கும். அரசே, நாம் நம் வீண் திட்டங்களால் அதற்குப் பின்னிருந்த பொருளற்ற தயக்கங்களால் இணையற்ற தோழர் ஒருவரை இழந்துவிட்டோம்” என்று கூவினான். கர்ணன் எழுந்து சிசுபாலன் அருகே வந்து தோளில் கைவைத்து “பொறுங்கள், அரசே” என்றான். அவன் கையை விசையுடன் தட்டிவிட்டு “பொறுப்பதா? என்ன நிகழ்ந்திருக்கிறது என முழுக்க உணர்ந்திருக்கிறீர்களா எவரேனும்? நமது ஒரு பாதி வெட்டப்பட்டுவிட்டது. என்றேனும் ஒரு நாள் இதன் பொருட்டு நாம் நம் மூதாதையரின் ஏளனத்தை காண்போம்” என்றான்.
“அமருங்கள். நிகழ்ந்ததன் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொறுங்கள்” என்றான் கர்ணன். பெரும் சினத்துடன் திரும்பி “பொறுப்பை ஏற்றுக் கொள்ள நீ யார்? சவுக்கேந்தி குதிரையில் நிற்க வேண்டிய சூதன். துணிந்து களமிறங்குதல் ஷத்ரியனின் இயல்பு. உன் சொற்களைக் கேட்டு தயங்கியமையால் நாங்களும் இன்று இழிமக்களாக நிற்கிறோம்” என்றான் சிசுபாலன். கர்ணன் ஏதோ சொல்லவந்தபின் பின்னடைந்தான்.
சிசுபாலன் துரியோதனனை நோக்கி சென்று “அரசே, இனியும் ஒரு கணம் மாற்று எண்ணம் நம்மில் எழுந்தால் நாம் ஷத்ரியர்கள் அல்ல என்றே பொருள். சூதரோ அந்தணரோ சொல்கொண்டு இனி நம் முன் வரவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்ததென்று அறிந்திருப்பீர்கள். படை கொண்டு சென்று மகதத்தை அவர்கள் வென்றிருந்தால்கூட அது ஷத்ரியர்களின் அறம் என்று எண்ணி ஆற்றியிருக்கலாம். இழிமக்கள் போல மாறுதோற்றம் கொண்டு நகர் நுழைந்து களத்திற்கு அவரை இழுத்து பிழையான போரில் அவரைக் கொன்று மீண்டிருக்கிறார்கள் அவ்விழிமகன் கிருஷ்ணனும் பாண்டவர்களும்” என்றான்.
அக்காட்சியை உளவிழியால் கண்டு சிசுபாலன் தளர்ந்தான். துச்சலன் எழுந்து அளித்த இருக்கை நோக்கி சென்று எடையுடன் அதில் விழுந்து பெருமூச்சுவிட்டு தலைதாழ்த்தி “எண்ணக்கூடவில்லை. எண்ணி ஓரிடத்தில் அமரமுடியவில்லை. சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே இத்தனை தொலைவு வந்தேன். உடல் புரவிமேல் பறந்து கொண்டிருந்ததனால் மட்டுமே உள்ளத்தின் எடை வீங்கி உடையாது இருந்தேன்” என்றான்.
கையை வீசி தனக்குத்தானே என “என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எள்ளிநகையாடிய சிறியோர் இதோ கைமுளைத்து தலை எழுந்து பேருருவம் கொண்டு வான் தொட்டு நிற்கிறார்கள். ஷத்ரியக் குடி பிறந்து சிறுமை கொண்டு அவர்களின் காலடியில் நாம் நின்றிருக்கிறோம்” என்றான். உடனே வெறிகொண்டு உரக்க தொடையில் அறைந்து “இதை நீங்கள் எவரும் உணரவில்லையா? இவ்வுணர்ச்சி எனக்கு மட்டும்தான் எழுகிறதா?” என்றான்.
துரியோதனன் மீசையை முறுக்கியபடி ஒளிநின்ற விழிகளுடன் அசைவின்றி நோக்கிக் கொண்டிருந்தான். சகுனி தன் புண்காலை சற்றே அசைத்து மெல்ல எழுந்தமர்ந்து “சேதி நாட்டரசே, உங்கள் உணர்வுகள் அனைத்தையும் நாங்களும் அடைந்தோம். ஷத்ரிய தந்தைக்குப் பிறந்த அரசன் ஒருவன் அவ்வாறு கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் இழிவே” என்றார். “ஆனால் அன்று உடனே படைகொண்டு சென்று மகதத்தை துணைக்கவேண்டாம் என்று சொன்னது கர்ணனல்ல, நான். இன்றும் அது சரியான முடிவென்றே எண்ணுகிறேன்” என்றார்.
சிசுபாலன் “இன்று இதோ மகதம் முறிந்துவிட்டது. மகதத்தின் அரசனுக்கு தன் கையாலேயே முடிசூட்டிவிட்டு திரும்பியிருக்கிறான் உங்கள் இளைய யாதவன். என்றேனும் நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படைதிரண்டு நிற்போமென்றால் நம்முடன் இருந்திருக்கக்கூடிய படைகளில் பாதி அழிந்துவிட்டது. நெஞ்சு திறந்து நம்மை தோள் தழுவிய தோழன் மண் புகுந்துவிட்டான்” என்றான்.
மெல்ல அசைந்து முனகி சொல்லெடுத்து “உண்மை. நாம் மிகப்பெரிய நட்பையும் படைத்துணையையும் இழந்திருக்கிறோம். ஆனால் மகதத்துடன் அஸ்தினபுரி உறவு வைத்திருந்தால் என்ன ஆகும் என்பதை மட்டும் எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசே, அவன் ஷத்ரிய அரசனல்ல. ஜரை மைந்தன். அவன் தந்தை அவனுக்கிட்ட பெயர் பிருஹத்பாகு. ஒருமுறையேனும் அப்பெயர் சூதர்களால் சொல்லப்பட அவன் ஒப்புக் கொண்டதில்லை. ஒரு நூலிலும் அது பொறிக்கப்பட்டதில்லை. ஜராசந்தன் என்றே தன் பெயர் வாழவேண்டும் என்ற அவன் ஆணையிட்டிருந்தான். ஏனெனில் தன்னை அரக்கர் குடியினனாகவே அவன் முன்வைத்தான்.”
“அங்கு நிகழ்ந்ததென்ன என்றும் அறிந்திருப்பீர்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாக வேள்வி! அதன் பொருட்டு மண்மறைந்த நாகவேதம் மீட்டெடுக்கப்பட்டது.” சிசுபாலன் பற்களைக் கடித்தபடி “நன்று! தொல்வேதம் கட்டற்ற பேராற்றல் கொண்டது. அதில் பறந்து அவன் தன் விசையனைத்தும் அடைந்தான்” என்றான். “ஆம், அவ்வண்ணமே விசையடைந்தவர் பலர் இருந்தனர் நமது தொல்கதைகளில். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன் என பெருநிரை அது. அரசே, அரக்க வேதத்தை முழுதறிந்து உருத்திரனை அணுகிக் கண்டவன் இலங்கைவேந்தன் என்கின்றன நூல்கள்” என்றார் கணிகர். “எனில் ஏன் அவர்கள் அழிந்தனர்?”
அவரது மெல்லிய குரலில் பிறிது எண்ணவிடாது கவ்வும் ஒன்று இருந்தது. “ஏனெனில் அது இக்காலத்துக்குரிய வேதம் அல்ல. இங்கு வாழும் மாந்தர் அதிலிருந்து விலகி வந்து நெடுநாட்களாகின்றன. அதை இங்கு நிலை நிறுத்த முடியாது. படைக்களத்தின் சிறிய கணக்குகளுக்குள் மேன்மைகள் சில இருக்கலாம். ஆனால் அவனுடன் துணை கொண்டிருந்தால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களையும் நாம் எதிரிகளாக்கிக் கொண்டிருப்போம். அவ்வெதிர்ப்பு எளிதல்ல. ஒவ்வொரு நாளும் கணுக்கணுவாக முளைத்து வளர்வது அது. அஸ்தினபுரி என்றல்ல எந்த அரசனும் அதை எதிர்கொண்டிருக்க முடியாது. இளைய யாதவர் மிக எளிதாக நால்வேதத்திற்கும் தொல்வேதத்திற்கும் இடையேயான போரென அதை காட்டியிருப்பார்.”
அவையில் மெல்ல ஒரு உளத்தளர்வு ஏற்பட்டது. சிசுபாலன் கைகளை அசைத்து “நானறியேன். எதையும் நீண்டகாலத்தை வளைத்து எண்ணப்புகுந்தால் செயலின்மை ஒன்றே எஞ்சும். செய்யக்கூடுவன ஒருபோதும் செய்யப்படமாட்டாது. நான் ஷத்ரியன். அக்கணம் உளம் எதை சொல்கிறதோ அதை ஏற்பதும் ஏற்றதன் பொருட்டு வாளேந்தி களம் காண்பதும் மட்டுமே எனக்குரியது. இக்கணக்குகள் அல்ல. இவற்றை என்னிடம் சொல்லவேண்டியதில்லை” என்றான்.
கர்ணன் “இக்கணக்குகளை நானும் சொல்ல வரவில்லை, சேதி நாட்டரசே” என்றான். “மகதத்தின் தலைவனின் இறப்புக்கு நானே பொறுப்பென்று எண்ணி நான் உறக்கிழந்தேன். அன்று படைகிளம்பும்போது வந்த செய்தியால் இளைய யாதவன் கணக்கென்ன என்று அறியாமலே ஒருகணம் தயங்கினேன். பௌண்டரிக வாசுதேவன் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் மகதனை அச்சுறுத்துவதற்கல்ல, நம்மை திசைமாற்றி அஸ்தினபுரிமேல் படைகொண்டு வருவதற்கான சூழ்ச்சி என்னும் ஐயம் எனக்கெழுந்தது. அது வீண் ஐயமென்று இப்போதும் நான் எண்ணவில்லை.”
“மகதத்தின் படை வல்லமையை இந்திரப்பிரஸ்தம் அறியும் என்பதனால் எளிதில் ஒரு போர் நிகழும் என்று நான் எண்ணவில்லை. நமது ஒற்றர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் படைக்கூட்டு நிகழும் செய்தியை நமக்கு அனுப்பவும் இல்லை” என்று கர்ணன் தொடர்ந்தான். உளத்தளர்வுடன் “ஆனால் இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் ஒருபோதும் கணித்ததில்லை. நிகரற்ற சூழ்ச்சியாளராகிய ஜராசந்தர் எப்படி இதில் சிக்கிக்கொண்டார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் தொட்டறிய இயலவில்லை. இளைய யாதவனின் எண்ணத்தைத் தொடரமுயன்று தோற்றேன்” என்றான்.
சிசுபாலன் “அவன் செய்கைகள் எதையாவது முன்னரே கணித்திருக்கிறீர்களா?” என்றான். “ஆம், அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்” என்றார் கணிகர். “ஏன்?” என்று சிசுபாலன் உரக்க கூவினான். “ஏன் அவன் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவன் தெரியுமா? நாம் ஷத்ரியர்களைப்போல் எண்ணுகிறோம். அரசர்களைப்போல் மதிசூழ்கிறோம். அவன் கீழ்மகனைப்போல் எண்ணுகிறான். தெருவில் விளையாடும் சிறுவனைப்போல் செயல்சூழ்கிறான்.”
“ஆம்” என்றார் கணிகர் சிரித்தபடி. “நேற்றிருந்த எனக்கும் இன்றிருக்கும் எனக்கும் இடையே இன்றியமையாத ஒரு தொடர்ச்சி உள்ளது. அவனோ ஒவ்வொரு நாளும் புதிதெனப் பிறந்து அழிகிறான். ஒவ்வொரு கணமும் பிறிதொருவனாக மாறிக்கொண்டிருக்கிறான். ஒன்று மட்டும் உணருங்கள். நான் நன்கறிந்தது இது. அவனை ஒரு மனிதன் எனக்காட்டுவது அவன் உடல் மட்டுமே. அவன் ஒரு சிறு துளையினூடே மறுபக்கம் தெரியும் காட்சி. துளை என்பது ஒரு பொருளல்ல, ஒரு நிகழ்வு அது.”
சகுனி “தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், சிசுபாலரே. இனி நாம் செய்வதற்கேதும் இல்லை. மகத நாட்டரசன் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்துடன் நட்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கிறான்” என்றார். “எப்போது?” என்றான் சிசுபாலன். “நேற்று அச்செய்தியுடன் மகதத்தின் அமைச்சர் காமிகர் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்பியிருக்கிறார்.” சிசுபாலன் “அது அவன் சூழ்ச்சி” என்றான். கர்ணன் “இனி போர் நமக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் மட்டும்தான். ஒருவகையில் அது நன்று. இருமுனைகளும் கூர்கொண்டுவிட்டன” என்றான்.
“ஷத்ரியர்களை சிறைமீட்ட இளைய யாதவன் என்று சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் பாடத்தொடங்கிவிட்டார்கள். அக்குலமிலியின் பின்னால் ஷத்ரியர்கள் அணி திரள்வார்கள் என்றால் அதன்பின் என்றோ ஒருநாள் நானும் சென்று அங்கு முடி தாழ்த்த வேண்டியிருக்கும். அஸ்தினபுரிக்கரசே, உங்கள் மணிமுடியும்...” என்று சிசுபாலன் சொல்வதற்குள் கைநீட்டி “நிறுத்துக!” என்றான் துரியோதனன். சிசுபாலன் திறந்த வாயுடன் அசைவிழந்தான். துரியோதனன் எழுந்து “அங்கரே, நமது படைகள் எழட்டும் இப்பொழுதே” என்றான்.
சகுனி சற்று திகைத்து “மருகனே…” என்று அழைக்க துரியோதனன் உரக்க “நான் இனி தயங்கி பழிகொள்ளப்போவதில்லை. வேறு எதன்பொருட்டும் இல்லையென்றாலும் என் தோழன் ஜராசந்தன் பொருட்டு அவ்விழிமகனின் குருதியை என் கைகளில் பூசிக்கொண்டாக வேண்டும். ஆம். இது என் ஆணை! படை எழுக!” என்றான். சகுனி சலிப்புடன் தலையை அசைத்தபடி மெல்ல சாய்ந்து அமர்ந்தார்.
[ 2 ]
அன்று மாலையே படை எழுச்சிக்கான முரசுகள் அஸ்தினபுரியின் அனைத்து காவல் மாடங்களிலும் முழங்கின. நகரமெங்கும் போர்அழைப்பு பரவ படைவீரர்களின் நடைகளும் விழிகளும் மாறுபட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்தவர்களை அவர்கள் அதட்டி வழிவிலக ஆணையிட்டனர். வணிகர்கள் படைவீரர்களைக் கண்டதும் பணிந்து விலகினர். எளிய காவல்குழு சாலையில் சென்றபோதுகூட மக்கள் திண்ணைகளுக்கு வந்து அவர்களை நோக்கி நின்றனர். அந்நோக்குகள் அவர்களின் மிடுக்கை கூட்டின. அனைத்துப் படைக்கலமுனைகளும் ஒளிகொண்டுவிட்டதைப்போல் தோன்றியது.
தெற்குக் கோட்டைக்கு அப்பால் புராணகங்கைக்குள் உருவாகியிருந்த காந்தாரக் குடியிருப்புகளில் வீரர்கள் படைக்கலங்களுடன் எழுந்து போர்க்குரலுடன் அணிவகுத்து நகருக்குள் நுழைந்து செண்டுவெளிகளிலும் குதிரைவெளிகளிலும் அணிநிரைத்தனர். மேற்குக் குறுங்காட்டுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த அஸ்தினபுரியின் காலாள் படைகளும் கங்கைக் கரையோரமாக நூற்றியெட்டு படைநிலைகளில் இருந்த அஸ்தினபுரியின் விற்படைகளும் வெவ்வேறு படைசூழ்கைகளாக தங்களை தொகுத்துக் கொண்டன. கர்ணன் சிசுபாலனுடன் புரவியில் படைநிலைகள்தோறும் சென்று அணிகள் ஒருங்கு திரள்வதை பார்வையிட்டான்.
ஒவ்வொரு படையணிக்கும் அதற்குரிய வண்ணக்கொடிகளும் கொம்பொலி முறைமைகளும் முரசுத்தாளமும் இருந்தன. அவை விண்ணிலிருந்து எழும் ஆணைகள் போல காற்றில் பரவி ஒவ்வொரு வீரனையும் தொட்டு பேசின. அவர்கள் அறியாத கைகளால் நகர்த்தப்படும் நாற்களக்காய்கள் போல விலகியும் இணைந்தும் திரண்டு ஒற்றை உடலென ஆனார்கள். கோட்டைக் காவல் மேடையில் மேலிருந்து நோக்கிய கர்ணன் ஆணைகளை இட அருகே நின்றிருந்த வீரர்கள் அவ்வாணைகளைப் பொறித்து புறாக்களில் கட்டி அனுப்பினார்கள். புறாக்கள் விண்ணிலெழுந்து காற்றுக்கு அப்பால் மறைந்த சற்று நேரத்திலேயே அந்தப்படைகள் ஆணைக்கு ஏற்ப உருமாறுவதை காணமுடிந்தது.
சிசுபாலன் ”தெய்வங்கள் மானுடரை வைத்து விளையாடுவதுபோல” என்றான். கர்ணன் தொலைவில் இருதலை ராஜாளியென உருக்கொண்ட படைப்பிரிவின் வலச்சிறகு தொய்வாக இருப்பதைக்கண்டு “இருதலை ராஜாளியின் வலச்சிறகு விரைவில்லை” என்றான். அச்செய்தி உடனே புறாவின் கால்களில் ஏற புறா சிறகோசையுடன் காற்றில் ஏறியது. “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை எதிர்கொள்ள இவர்களால் இயலுமா?” என்றான் சிசுபாலன். கர்ணன் திரும்பி நோக்க “போரென்று ஒன்றை அஸ்தினபுரி கண்டு ஒரு தலைமுறை கடந்துள்ளது, அங்கரே. யாதவப் படைகளோ மகதத்துடனும் கூர்ஜரத்துடனும் கிழக்கே மாளவத்துடனும் ஆண்டுக்கு ஒருமுறை போர் புரிந்து கொண்டிருக்கின்றன” என்றான்.
கர்ணன் மீசையை கைகளால் நீவியபடி “ஆயினும் அவர்கள் யாதவர்” என்றான். “ஆம், ஆனால் அவர்களை நடத்துபவன் வெற்றிக்கென எதையும் செய்யும் தயங்காமை கொண்டவன்” என்றான் சிசுபாலன். கர்ணன் எரிச்சலுடன் கையை வீசி “போர்க்களத்தில் நாம் எவரும் இன்னும் அவனை சந்தித்ததில்லை. சூதர் கதைகளிலிருந்து சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள நான் விழையவில்லை. பரசுராமரின் வில் என் கையில் இருக்கும் வரை பாரதவர்ஷத்தில் எவர் முன்னும் நான் தோற்கப்போவதில்லை” என்றான்.
சிசுபாலன் மேலும் ஏதோ சொல்ல வந்தபின் அதைத் தவிர்த்து கீழே விழிதொட்ட இடமெங்கும் நண்டாகவும் தேளாகவும் பூரானாகவும் இருதலைப்பாம்பாகவும் மூன்று தலைப்பாம்பாகவும் உடல் கொண்டு உருண்டு கொண்டிருந்த அஸ்தினபுரியின் படைகளை நோக்கினான். அப்பெருக்கு தன் சோர்வை மிகச்செய்வது ஏன் என அவனே வியந்தான். கர்ணன் “நாளை அந்திக்குள் படை எழும். இந்திரப்பிரஸ்தத்தை தரை வழியாக படைகள் சென்றணையட்டும்” என்றான். சிசுபாலன் “தரைவழியாக என்றால் பத்து நாட்கள் ஆகும். ஊடாக மூன்று சிற்றாறுகள் ஓடுகின்றன” என்றான்.
“ஆம், சிற்றாறுகளின் மேல் படகுப்பாலம் அமைக்கலாம் ஊர்கள் வழியாகச் செல்வது நன்று. அஸ்தினபுரியின் எல்லை கடந்தால் அனைத்து ஊர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்குரியவை. செல்லும் வழியிலேயே நம் படைகளுக்குத் தேவையான அனைத்தையும் திரட்டிக் கொள்ளலாம். நாம் உருவாக்கும் எரிபரந்தெடுத்தலின் புகை இந்திரப்பிரஸ்தத்தை சென்று மூடியபின் நம் படைகள் அங்கு சென்றால் போதும்” என்றான்.
சிசுபாலன் “ஜராசந்தனின் பொருட்டு நாம் படைகொண்டு எழுகிறோம் என்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களுக்கு வேறு வழியில்லை. இளைய யாதவனால் உயிர்மீண்ட சிறுகுடி ஷத்ரியர்கள் இந்திரப்பிரஸ்தத்துடன் நிற்கலாம். பெருங்குடியினர் நம்மை ஆதரித்தே ஆகவேண்டும். வங்கமும், கலிங்கமும், கூர்ஜரமும், உசிநாரமும், திரிகர்த்தமும், கோசலமும், கேகயமும், மாளவமும், விதர்ப்பமும் நம்முடன் நிற்குமென்றால் இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்து நொறுக்கமுடியும்” என்றான்.
படிகளில் இறங்கிய கர்ணனுடன் நடந்தபடி “அனைத்து அரசர்களுக்கும் ஓலை சென்று விட்டது. சிந்துவிலிருந்து ஜயத்ரதனின் படைகள் நாளையே கிளம்பும் என்று எதிர்பார்க்கிறேன். நான் நாளை காலை கிளம்பி சேதி நாடு சென்று என் படைகளுடன் எழுந்து ருக்மியின் தலைமையில் திரளும் விதர்ப்பத்தின் படைகளுடன் இணைந்து கொள்கிறேன்” என்றான். “காட்டுநெருப்பை தொடக்கத்திலேயே அழிப்பது நன்று. எண்ணிப்பார்க்கையில் இதுவன்றி பிறிதொரு தருணம் அமையாதென்று தோன்றுகிறது” என்றான்.
கர்ணன் “நீர் அஞ்சுவது எதை?” என்றான். “யார் அஞ்சுகிறார்கள்?” என்றான் சிசுபாலன் விழிகளில் சினத்துடன். “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய நாடுகள் அனைத்தும் நம் அணியில் திரளும் என்று உமது வாயால் சொன்னீர். ஆனால் ஐயமும் கொண்டிருக்கிறீர்” என்றான் கர்ணன். சிசுபாலன் விழிகளைத் தாழ்த்தி “ஆம், அஞ்சுகிறேன். படைகளை அல்ல. பாண்டவர்களின் படைக்கலன்களையும் அல்ல. அவன் ஒருவனை” என்றான்.
“சிசுபாலரே, வரலாற்றில் எப்போதும் நிகழ்வது இது. சிறுவிரிசல் வழியாகப் பீறிடும் ஆறு கீழிறங்கும் விசையாலேயே பாறையைப் பிளந்து பிலம் ஒன்றை உருவாக்கி வழிகண்டுபிடிப்பது போல எளிய குடிப்பிறந்த ஒரு வீரன் சிலதருணங்களின் வழியாக எழுந்து அரசொன்றை அமைப்பது பலமுறை பாரதவர்ஷத்தில் நடந்துள்ளது. அவன் அவ்வாறு எதிர்பாராது எழுவதனாலேயே மாமனிதனாகவும் மாயங்கள் அறிந்தவனாகவும் எளிய மனிதரால் எண்ணப்படுவான். அவ்வெண்ணமே அவனை மேலும் அச்சத்திற்குரியவனாக்கும். அச்சம் அவனது படைக்கலமாகி வெற்றிகள் அவனைத் தொடரும்” என்றான் கர்ணன்.
“ஆனால் எங்கோ ஓர் இடத்தில் தன்னைப் பற்றி பிறர் சொல்வதை அவன் நம்பத்தொடங்குவான். அந்த இடத்தில் இருந்து அவனது சரிவு தொடங்கும். ஜராசந்தரின் கதையும் வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “இளைய யாதவன் இன்று தன்னை மண்வந்த தெய்வம் என்று சூதர் பாடுவதை ஏற்கிறான். தெய்வம் என தன்னை எண்ணத்தலைப்பட்டவன் தெய்வங்களின் பகையை ஈட்டிவிட்டான் என்றே பொருள். உறுதி கொள்ளுங்கள், இப்போரில் அவன் வீழ்வான். அவன் தலை அணிந்த பீலியை கொண்டுவந்து அஸ்தினபுரியின அரசரின் பாதக்குறடுகளில் நாம் வைப்போம்” என்றான். “ஆம். அது நிகழவேண்டும்” என்றான் சிசுபாலன்.
படை எழுச்சிகளுக்கான ஆணைகளை முழுமை செய்துவிட்டு இறுதியாக யானைக் கொட்டிலுக்குச் சென்று போர்யானைகளின் கவசங்களையும் அவற்றுக்குரிய சங்கிலியுருளைகளையும் பூண்தண்டுகளையும் பார்வையிட்டுவிட்டு கர்ணன் தன் மாளிகைக்குச் சென்றான். நீராடி அவைக்குரிய ஆடைகளை அணிந்து அரண்மனையை அடைந்தபோது விதுரர் அவனை இடைநாழியிலேயே எதிர் கொண்டார். முகம் கவலையால் நிறைந்திருக்க “அங்கரே, தங்களிடமிருந்தேனும் சற்று எண்ணி செய்யும் பொறுப்பை எதிர்பார்த்தேன்” என்றார்.
கர்ணன் நில்லாமல் அவரை கடந்துசென்றபடி “சற்றே எண்ணி நின்றதன் சிறுமையை அவையில் நான் அடைந்துவிட்டேன், விதுரரே. உண்மையில் தங்கள் சொற்களால் என் சித்தம் திரிபடைந்தது. உங்கள் அச்சத்தை நான் பொறுமையென புரிந்துகொண்டேன். இனி பொறுப்பது பிழை. ஜராசந்தரின் தோளணைத்த தொடுகையும் என் உடலில் இன்னும் உள்ளது. குருதியால் அதைக் கழுவாது நிறைவு கொள்ளமாட்டேன்” என்றான்.
விதுரர் அவனுக்குப் பின்னால் ஓடி வந்தபடி “இத்தருணத்தில் ஒரு போர் என்றால் அஸ்தினபுரி தாங்காது. அஸ்தினபுரி பெரும்போர் என எதையும் இதுவரை கண்டதில்லை” என்றார். கர்ணன் கசப்புடன் நகைத்து “அதனாலேயே ஒரு போர் இன்றியமையாதது. இளமையில் வேல் தூக்கிய வீரர்கள் மீசை பழுத்த பின்னும் உயிரோடிருக்கிறார்கள். காட்டில் முதிய விலங்குகள் கொல்லப்படவேண்டும். இல்லையேல் காடு நோயுறும்” என்றான்.
அவன் படிகளில் ஏற உடன் மூச்சிரைத்தபடி ஏறி “படையெழுச்சிக்கு காந்தாரர் அவையில் ஒப்புதல் அளிக்கவில்லை. மகதத்தின் பொருட்டு படை எழவேண்டாம் என்று அவர்தான் முன்பு சொன்னார்” என்றார். “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்குமுன் தலைவணங்குவதாக அவையில் நேற்றே அறிவித்துவிட்டார்” என்றான் கர்ணன். “கணிகரும் போரை தவிர்க்கும்படி பலமுறை சொன்னார் என்று அறிந்தேன்” என்றார் விதுரர். “அமைச்சரே, தாங்களும் கணிகரும் போரை அறிந்தவர்கள் அல்ல. வாளேந்தத் தெரிந்தவர்கள் போர் குறித்து பேசிக் கொள்கிறோம்” என்றபின் நழுவிய சால்வையை இழுத்து போட்டுக்கொண்டு தலைதூக்கி நீண்டகால்களை எடுத்துவைத்து இடைநாழியில் கர்ணன் நடந்தான்.
விதுரர் கண்களில் சினத்துடன் “அங்கரே, இன்னமும் இவ்வரசின் மணிமுடி என் தமையனின் தலையில்தான் உள்ளது” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து திரும்பிப் பார்த்தான். “தன் மைந்தர் களத்தில் போரிட்டு அழிவதை ஒருபோதும் அவர் ஒப்பமாட்டார்.” கர்ணன் “நான் அவரிடம் பேசுகிறேன். அஸ்தினபுரியின் அரசனுக்கெதிராக அவர் என்ன சொல்கிறாரென்பதை கேட்கிறேன்” என்றான். விதுரர் சீறிய முகத்துடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “கேட்பதற்கொன்றுமில்லை. என் தமையன் வாழும்வரை இந்நகரில் என் சொல்லே ஆளும். அஸ்தினபுரியின் படைகள் இந்நகர்விட்டெழாது” என்றபின் விசையுடன் தன் சால்வையை அள்ளித்தோளிலிட்டு திரும்பி படிகளில் இறங்கி நடந்தார்.
[ 3 ]
கர்ணன் துரியோதனனின் அறைக்குள் நுழைந்தபோது அங்கு சகுனியும் கணிகரும் துச்சாதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனன் சாளரத்தில் கையூன்றி வெளியே சாலையை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து பார்க்கையில் மேற்குச்சாலை வழியாக ஏரியில் நீராடி அணிவகுத்து கோட்டை முகப்புக்கு சென்று கொண்டிருந்த களிற்றுநிரையை காணமுடிந்தது. கர்ணன் நுழைந்ததை அவன் அறிந்தது உடலில் தெரிந்தது. துச்சாதனன் தலைவணங்கி அமரும்படி கைகாட்டினான். கர்ணன் சகுனிக்கும் கணிகருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பீடத்தில் அமர்ந்தான்.
“நாளை அந்தியில் கொற்றவை ஆலயத்தில் பூசனைமுடித்து அரசரும் படையுடன் கிளம்புகிறார்” என்றான் துச்சாதனன். கர்ணன் “படைகள் சென்று சேர நாளாகும். அதற்குள் நமது தூதர்களும் எச்சரிக்கைச் செய்திகளுடன் இந்திரப்பிரஸ்தத்தை அணுகுவார்கள். படைகள் யமுனைக் கரையை அடைந்தபின் அரசர் படகு வழியாகச் சென்று இணைந்து கொள்வதே நன்று” என்றான் சகுனியை நோக்கி. “அவ்வாறுதான் இதுவரை திட்டமிடப்பட்டது.”
துரியோதனன் திரும்பி “நான் அந்தியில் இந்நகர் மாந்தர் வாழ்த்துக்களைப் பெற்று நகர்நீங்கவும் ஊர்களினூடாக களிறு மேல் அமர்ந்து செல்லவும் விழைகிறேன். நாளை காலை நம் எல்லைக்கு அப்பால் முதல் ஊரை சென்றடையவேண்டும். நான் இழந்த நிலங்கள் வழியாக முடிசூடியமர்ந்து அரசன் என்று கடந்து செல்வேன். குறுகிய காலம் பிறிதொரு அரசின் குடிகளாக இருந்த மக்கள் அறியட்டும் அவர்களை ஆளும் மணிமுடி எவருடையதென்று” என்றான்.
கர்ணன் “ஆனால்…” என்று தொடங்க கணிகர் “அரசர் சொல்வது நன்று. படை எழுந்து செல்லும்போது அரசர் உடன் சென்றால் வீரர்களின் விரைவு கூடும். வெற்றி உறுதி என்ற நம்பிக்கை வெற்றிக்குரிய முதன்மை படைக்கலம். வெற்றிக் கூச்சலுடன் களியாடிச் செல்லும் அஸ்தினபுரியின் படை யாதவ குடிகளை அச்சுறுத்தும். அவர்கள் படையெனத் திரள அஞ்சுவர். ஆனால் நாம் செல்லும் வழியில் யாதவரல்லாதவர் அனைவரும் நம்முடன் இணைந்து கொள்வர். அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் யாதவர்கள் அடைந்துள்ள முன் தூக்கத்தைக் குறித்து ஒவ்வாமை கொண்டிருப்பார்கள். நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை அணுகும்போது இருமடங்கு பெருகியிருக்கும்” என்றார்.
சகுனி “ஆம், இன்றிருக்கும் நிலையில் நம் அரசர் தன்முன் வரும் எவர் மேலும் மறுக்கமுடியாத ஆணையை செலுத்தக்கூடியவர். பணிக என்னும் சொல்லுடன் அவர் நகர்களின் மேல் ஊர்ந்து செல்வது நன்றே” என்றார். கர்ணன் “செல்லும் வழியை வரைபடத்தில் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு இறுதியாக என் முடிவை தெரிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் “என் முடிவுகள் இறுதியானவை” என்றான். விழிகள் ஒருகணம் திகைத்து பின் இயல்பாக கர்ணன் “ஆம், அரசே” என்று தலைவணங்கினான்.
ஏவலன் வந்து விதுரர் பார்க்கவிழைவதாக சொன்னான். துரியோதனன் உள்ளே வரும்படி கை அசைத்தான். கர்ணன் மெல்லிய பதட்டத்தோடு துரியோதனனிடம் விதுரரை இப்போது பார்க்கவேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தபின் அது நிகழப்போவதில்லை என உணர்ந்து தனக்குள்ளேயே தலையசைத்தான். கதவு திறந்து உள்ளே வந்த விதுரர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கும் மாதுலருக்கும் அங்கருக்கும் வணக்கம். அஸ்தினபுரியின் பேரரசரும் மூதாதை வடிவமென அமர்ந்திருப்பவருமான திருதராஷ்டிர மாமன்னரின் ஆணையுடன் இங்கு வந்துள்ளேன். அஸ்தினபுரியின் படைநகர்வு அனைத்தையும் நிறுத்தி வைக்க அவர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.
“யார்? யார் அந்த ஆணையிட்டது?” என்றபடி கைகளை விரித்து தரையை அறைந்த கால்களின் ஓசையெழ துரியோதனன் நெருங்கி வந்தான். விதுரர் நிமிர்ந்த தலையுடன் “உங்கள் தந்தை. அவரது கொடையாக அஸ்தினபுரியின் மணிமுடி தங்கள் தலைமேல் உள்ளது. இது அவரது ஆணை” என்றார்.
துரியோதனன் இடக்கை விரல்களைச் சுருட்டி அடிப்பதுபோல ஆட்டி உரத்த குரலில் “என் மீது எவரது ஆணையையும் ஏற்கமுடியாது. அஸ்தினபுரியின் படைகள் நாளை எழும். எவர் மறுப்பதென்பதை பார்க்கிறேன். இப்போதே சென்று அவரை சந்திக்கிறேன்” என்றான். “படைகள் இன்றே நிலைதிரும்ப பேரரசர் ஆணையிட்டிருக்கிறார். அவர் இதைப்பற்றி சொல்லாட விழையவில்லை” என்றார் விதுரர்.
கடும்சினத்தால் தோள்கள் திமிற நின்று ஒருகணம் தவித்த துரியோதனன் திரும்பி கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே, நான் இவ்வாணையை மீற முடியுமா?” என்றான். கணிகர் மெல்ல உடலை அசைத்து வலியுடன் முனகி, பிறிதொரு வகையில் கால்களை மடித்து அமர்ந்தபின் “நெறிப்படி தாங்கள் தங்கள் தந்தையை மீறல் இயலாது. இம்மணிமுடி அவருக்கே உரித்தானது. அதை பிறிதொருவருக்கு அளிக்கும் உரிமையும் அவருக்கு இன்று உண்டு” என்றார். “அதைப்பெற நான் என்ன செய்ய வேண்டும்? என் மணிமுடிக்கு அப்பால் ஒரு சொல்லில்லாமல் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் துரியோதனன்.
“ஷத்ரிய நெறிகளின்படி ஒன்றும் செய்யமுடியாது. லகிமாதேவியின் ஸ்மிருதி மட்டும் பிறிதொரு விதியை சொல்கிறது. ஆனால் அது காட்டுக் களிறுகளுக்குரியது. அதை அசுரர்களும் அரக்கர்களும் மட்டுமே கடைபிடிப்பார்கள் என்கிறது” என்றார் கணிகர். நெஞ்சில் அறைந்து அவரை நோக்கி சென்றபடி “நான் அரக்கன். நான் அசுரன். நான் கீழ்மகனாகிய நாகன். நான் ஷத்ரியனோ அரசனோ அல்ல, மதம்கொண்ட காட்டுக்களிறு. சொல்லுங்கள், என்ன வழி?” என்றான் துரியோதனன்.
“அவரை தாங்கள் போருக்கு அழைக்கவேண்டும். ஒற்றைக்கொருவர் தோள்பொருதி களத்தில் கொன்று அவரை நெஞ்சில் மிதித்து நின்று நீங்கள் அரசர் என்று அறிவிக்கவேண்டும். இந்நகரில் பிறிதெவரும் உங்களை வெல்ல இயலாதென்றால் நீங்களே அரசர். பிறிதொருவர் எழுந்து உங்கள் தோள்களுக்கு அறைகூவல் விடும்வரை மணிமுடி உங்களுடையதே” என்றார் கணிகர்.
“ஆம், இப்போதே அதை செய்கிறேன். அதுதான் வழியென்றால் அதற்கும் நான் ஒருக்கமே” என்றபடி துரியோதனன் திரும்பினான். “சொல்லுங்கள் அரசரிடம்! நான் அவருடன் போருக்கெழுகிறேன்.” கர்ணன் “அரசே!” என்று பதறி எழுந்தான். “விலகும்! எவரும் எச்சொல்லும் எனக்களிக்க வேண்டியதில்லை. நாளை இப்படை எழும். இல்லையேல் முதியவரின் காலடியில் நான் இறந்துகிடப்பேன்…” என்றான் துர்யோதனன். விதுரர் நடுங்கும் உடலுடன் பின்காலெடுத்து வைத்து சுவர் சேர்ந்து நின்றார். கைகளை மார்பில் கட்டியபடி விழியசையாது சகுனி நோக்கி அமர்ந்திருந்தார்.
கர்ணன் உரக்க “அதை நான் ஒப்பப்போவதில்லை” என்றான். அவனை நோக்கி சீறித்திரும்பி அணுகிய துரியோதனன் “நீர் யார் இங்கு ஒப்புவதற்கு? விலகும்!” என்றான். “நெறிப்படி நான் உங்களை என்னுடன் தோள்கோக்க அறைகூவுவேன். எவருக்கும் அவ்வுரிமை உண்டு. ஐயமே தேவையில்லை துரியோதனரே, உங்களை களத்தில் அடித்து வீழ்த்த என்னால் இயலும்” என்று கர்ணன் அருகே வந்தான். “களம் எதற்கு? என் கைகளைக் கடந்து இவ்வறைவிட்டு நீங்கள் வெளியே செல்லப்போவதில்லை.”
துரியோதனன் சினத்துடன் முன்னால் பாய்ந்து கர்ணனை ஓங்கி அறைய வெடிப்பொலியுடன் அதைத் தடுத்து அவன் கையைப்பற்றித் திருப்பி வளைத்து கைபின்னிக்கொண்டான் கர்ணன். அவர்கள் இருவரும் உறுமியபடி சுழல துச்சாதனன் “அங்கரே!” என்று கூவியபடி அவர்கள் இருவருக்கும் நடுவே கைநுழைத்தான். “அங்கரே… நிறுத்துங்கள்… வேண்டாம்” என்றான். கர்ணன் திருணபீடத்தை தளர்த்தி கையை உதற துரியோதனன் கால்கள் தரையில் மிதிபட்டு ஒலிக்க பின்னால் நகர்ந்தான்.
இருவரும் ஓடி நின்ற யானைகள்போல் மூச்சிரைத்தனர். இருவருக்கும் நடுவே நின்ற துச்சாதனன் “வேண்டாம், அங்கரே… மூத்தவரே, வேண்டாம்…” என்றான். சகுனியை நோக்கி “மாதுலரே, என்ன நிகழ்கிறது இங்கே? எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். சகுனி “மருகனே, இன்று சொல்லாடுவதில் பொருளில்லை. புலரட்டும். நாளை காலை திருதராஷ்டிரப் பேரரசரின் அவைக்கு செல்வோம். என்ன நிகழ்கிறது என்று விளக்கிச் சொல்வோம். அமைச்சரின் சொல்கேட்டு அவர் எடுத்த முடிவென்றால் அதை மாற்ற நம்மால் முடியும்” என்றார்.
“எவர் முன்னிலையிலும் கையேந்தி நிற்க நான் விழையவில்லை. அஸ்தினபுரியின் படைகள் நாளை இங்கிருந்து எழும்” என்றான் துரியோதனன். கர்ணன் “எழும், அவ்வுறுதியை நான் பேரரசரிடமிருந்து பெற்றுத்தருகிறேன்” என்றான். “நாளை அவரிடம் செல்வோம்… பொறுங்கள்” என்று துரியோதனனின் அருகே சென்று அவன் கைகளை பற்றினான். அவன் கைகளை உதறிவிட்டு துரியோதனன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். “அவ்வண்ணமெனில் என் ஆணை அது. நாளை பேரரசர் ஏற்றாகவேண்டும்” என்றான்.
[ 4 ]
இரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார்.
காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் எழுந்து வந்து நிற்பதுபோல. தொடும்போது ஏதோ ஒன்று உள்ளே திடுக்கிட்டது. அரிதான தருணங்களில் சினந்தோ கனிந்தோ விழிகோக்கையில் பிறிதொன்றிலாது இணையவும் முடிந்தது. அத்தருணங்களில் முன்பு திரையென்றான காமம் அப்போது இல்லாமலிருந்தது. உடல்தொடுகை உடலுக்கு அப்பாலிருப்பதனால் அறியப்பட்டது.
அவர் சுருதையிடம் முந்தைய நாளே அனைத்தையும் சொல்லியிருந்தார். அவரது அலைக்கழிப்புடன் உடனமர்ந்து இரவுகளை கழித்தவள். முதியவளானபோது இயல்பாக அவரை அவர் நெஞ்சுடன் தனித்திருக்கவிட்டு எழுந்து சென்று தன் மஞ்சத்தறையில் துயின்றாள். இளமையில் ஆண்களின் உலகுக்குள் நுழைந்துவிடலாம் என்னும் விழைவு அவளை செலுத்தியது. முதுமையில் அது இயலாதென்ற அறிதல் அவளை இயல்பமையச் செய்தது. அனைத்துக்கும் அப்பால் பகலெல்லாம் அம்மாளிகையின் அத்தனை அலுவல்களையும் இயற்றிய முதிய உடல் துயிலை நாடியது.
அவள் முகத்தை அவர் அகத்தால் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் எதையோ சொல்லப்போகிறாள் என்று அவரது செவிகள் கூர்ந்தன. அவர் மேலாடையை அணிந்துவிட்டுத் திரும்பியபோது அவள் “இது மைந்தனுக்கும் தந்தைக்குமான போர். என்றோ ஒருநாள் அது நிகழ்ந்துதானே ஆகவேண்டும்?” என்றாள். ஒவ்வொருமுறையும் தன் உச்சகட்ட இக்கட்டுகளை அவள் எளிதாக எடுத்துக்கொள்கிறாள் என்றெண்ணி கடும்சினம் கொள்வது அவரது வழக்கம். எரிச்சலுடன் “இது ஒரு குலப்பேரழிவுக்குச் செல்லும் பாதை” என்றார்.
“ஆம், அவ்வாறெனில்கூட அது அவர்களின் வாழ்க்கை” என்றாள் சுருதை. “எனது வாழ்க்கை தமையனின் வாழ்க்கையிலிருந்து பிறிதொன்றல்ல. இங்கு அவர் உயிர்வாழும் நாள் வரை மைந்தர் பூசலிடுவதை விரும்பமாட்டார். நானும் அதை ஒப்பப்போவதில்லை” என்றார். அவளை முன்னிறுத்தி எவரிடமோ அறைகூவுவதுபோல “அதன் பொருட்டு நிலை கொள்வதே என் கடமை” என்றபின் மூச்சிரைத்தார். “வருவது வந்தே தீரும்” என்றாள். அவர் “அப்படியென்றால் எதற்கு அமைச்சு? எதன்பொருட்டு அரசு சூழ்தல்? இந்தக் கிழட்டுச்சொற்கள் செயலின்றி ஓய்ந்தவர்களுக்குரியவை” என்றார்.
சுருதை “மைந்தனுக்கும் தந்தைக்குமான இப்பூசலில் எவரும் ஏன் காந்தாரப் பேரரசியை கருத்தில் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள். விதுரர் தயங்கி “பேரரசி என்ன செய்ய முடியும்?” என்றார். “மைந்தனுக்கும் தந்தைக்குமான போரில் எப்போதும் இடைநிற்கும் ஆற்றல் கொண்டவர் அன்னை மட்டுமே” என்றாள் சுருதை. “இது அரசியல், நீ அறிந்த அடுமனைப்பூசல் அல்ல” என்றார் விதுரர். “அடுமனைப்பூசலும்கூட” என்று அவள் சொன்னாள். “அப்படி எண்ணி அதை அணுகும்போது எளிதாகிறது. எதையும் அதன் மிக எளிய பக்கத்திலிருந்து தொடங்குவதே நல்லது.”
தலையை அசைத்த விதுரர் “பேரரசி அரசியலுக்கு முற்றிலும் அப்பால் நின்றுகொண்டிருக்கிறார். இவற்றை அவரிடம் முதலில் விரிவாக விளக்கவேண்டும். தந்தைக்கெதிராக மகன் சினந்தெழுந்தான் என்று கேட்டால் அதுவே அவருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம்” என்றார். சுருதை புன்னகைத்து “நீங்கள் எவரும் சொல்லாமலேயே அவர் இத்தருணத்தை உணர்ந்திருப்பார், உண்மையில் நெடுங்காலமாக எதிர்நோக்கியும் இருந்திருப்பார்” என்றாள்.
விதுரர் இடைக்கச்சையை கட்டிய கை செயலற்று நிற்க சற்றுநேரம் தலைகுனிந்து எண்ணம்சூழ்ந்து மீண்டு “ஆம், அதை நானும் உணர்கிறேன். ஒரு முறை முயன்று பார்ப்பதில் பிழையில்லை” என்றார். சுருதை “அவரும் உள்ளே வரட்டும். எது நிகழ்ந்தாலும் அவருக்கும் ஒரு சொல் இருக்கட்டும் அதில்” என்றாள். பெருமூச்சுடன் “நன்று சொன்னாய்” என்றார். “இப்பூசல்கள் அனைத்திற்கும் முதல்வேர் என்பது காந்தாரத்து அரசியின் மண்விழைவு அல்லவா?” என்றாள் சுருதை.
“அவரா? அவரில் எப்பற்றையும் நான் காணவில்லை” என்றார் விதுரர். “விழைவையும் வஞ்சத்தையும் அச்சத்தையும் நம்பொருட்டு நமக்கு அணுக்கமான ஒருவர் அடைவாரென்றால் நம் நனவுள்ளம் விடுதலை கொள்கிறது” என்று சுருதை சொன்னாள். “நம் கனவுள்ளம் நம்மிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்படுவதைப்போல இனியது பிறிதென்ன?”
அவர் அவளை விழிதூக்கி நோக்கினார். அவள் விழிகளும் அவரை சந்தித்தன. அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. அவர் அருகே வந்து அவள் தோளை மெல்ல தொட்டு “முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய். என்றேனும் சூதர் உன்னை அறிவாரா? ஒரு சொல்லிலேனும் உன் பெயர் உரைக்கப்படுமா?” என்றார்.
அவள் சிரித்து “சூதர்கள் உரைக்காதவற்றால்தானே நாடும் நகரங்களும் ஆட்டிவைக்கப்படுகின்றன?” என்றாள். விழிகள் தொட்டபோது அவர்கள் மிக அணுகியமையால் அவர்களுக்குள் மட்டுமே பரிமாறப்படும் மிகக்கூரிய முள் ஒன்று அதில் இருப்பதை உணர்ந்த விதுரர் விழிகளை திருப்பிக் கொண்டார். சுருதை “நன்று, தாங்கள் அரசி ஆலயவழிபாட்டை முடித்துவருவதற்குள் அவரை சந்திக்கலாம்” என்றாள்.
“ஆம்” என்றபோது அவர் அச்சிறு அகவிலக்கத்திற்காக வருந்தினார். மீண்டும் அவள் தோளைத் தொட்டு கைவழியாக விரலோட்டி நீல நரம்புகள் புடைத்து மெலிந்த கையை தன் விரல்களுக்குள் எடுத்து “என்றும் என் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் துணையாக இருக்கிறாய்” என்றபின் உடனே அச்சொல்லின் நெகிழ்வை உணர்ந்து நாணி விழிவிலக்கி அவளைக் கடந்து வெளியே சென்றார்.
[ 5 ]
அரண்மனை வளாகத்தை அவரது தேர் அடைந்தபோது கனகர் அவருக்காக காத்து நின்றார். அவர் இறங்கியதுமே அருகே வந்து “பீஷ்மரின் முறைசார் ஆணை வந்துள்ளது” என்றார். திகைப்புடன் விதுரர் “எப்போது?” என்றார். கனகர் “சற்றுமுன். சுவடியுடன் தங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கிளம்பிவிட்டதாகத் தோன்றியது. ஆகவே காத்திருந்தேன்” என்றார். விதுரர் கைநீட்ட மெல்லிய தோல்சுருளை கனகர் அளித்தார். அதை நீவி மந்தணச் சொற்களில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்த விதுரர் “இது போதும். இதற்கப்பால் என்ன?” என்றார்.
சொல்லுங்கள் என்பதுபோல கனகர் நோக்கினார். விதுரர் அவரைத் தவிர்த்து “அரசர் எங்கிருக்கிறார்?” என்றார். கனகர் “அவர்கள் நேற்றிரவு துயில் நீத்திருக்கிறார்கள். பின்னிரவில் அரசர் கிளம்பி படைநிலைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு சற்றுமுன்தான் மீண்டார். இந்நேரம் நீராடி மீண்டும் தன் சொல்சூழ் அறைக்கு வந்திருப்பார்” என்றார். அதைக் கேட்டபடியே விதுரர் படிகளில் ஏறி மேலே சென்றார்.
அவர் எண்ணியது போலவே துரியோதனன் அறையில் கர்ணனும் இருந்தான். ஏவலன் அறிவிப்பு அளித்து கதவைத் திறந்ததும் மூச்சிழுத்து நிமிர்வை உருவாக்கிக்கொண்டு உள்ளே சென்று தலைவணங்கினார். இருவர் விழிகளும் அவர்மேல் படிந்தன. அவர் துரியோதனன்மேல் விழிநிறுத்தி “பிதாமகரின் ஓலை வந்துள்ளது” என்றார். கர்ணன் “ம்?” என்றான். அவர் அவனை நோக்காமல் “பிதாமகர் இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவை முறைப்படி ஒப்புக்கொண்டு தன் அரசாணையை அதன்படி அனுப்பியிருக்கிறார்” என்றார்.
“என்ன?” என்றான் துரியோதனன் உரக்க. “அஸ்தினபுரியின் பிதாமகராக இந்நகரின் அனைத்துக் குடிகளும் ராஜசூய விழவில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். பேரரசரும் அரசரும் துணையரசர்களும் உறவரசர்களும் தங்கள் அரசியருடன் அதில் அவை அமரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்.” சில கணங்கள் கர்ணனும் துரியோதனனும் அமைதியாக இருந்தனர். கர்ணனின் பீடம் முனகியது. விதுரரின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. எண்ணியிரா கணத்தில் கர்ணன் பேரோசையுடன் பீடம் பின்னகர எழுந்து “இச்சொற்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இதை நீங்கள் அவருக்கு அனுப்பினீர்கள்… இது உங்கள் சொற்கள்” என்றான்.
அவன் சினம் விதுரரை எளிதாக்கியது. “அவ்வண்ணமெனில் ஆமென்றுரைக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சற்றுமுன்னர்தான் இவ்வாணை என் கைக்கு வந்தது. இது அவரது கை ஒற்று எழுத்தா இல்லையா என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளலாம்” என்றார். துரியோதனன் “இவ்வாணைக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்? எங்கோ காட்டிலிருந்து ஒருவர் இந்நகரை ஆள நான் ஒப்ப வேண்டுமா என்ன?” என்றான். “ஒப்ப வேண்டியதில்லை. ஆனால் இந்நகரின் தொல்குடிகள் அனைத்தும் பீஷ்மரின் சொல்லுக்கே நின்றிருக்கும். இந்நகரில் வாழும் மூதாதை இன்று அவர்தான். நீத்தோருக்கான நீர்க்கடன்களில் முதல் கைப்பிடி அவருடையதுதான். அவர் வாழும் வரை இங்கெவரும் அச்சொல்லை மீறமுடியாது” என்றார் விதுரர்.
“எவர் சொல்லுக்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. இன்று மாலை என் படை எழும். அதில் எந்த ஐயமும் இல்லை” என்றான் துரியோதனன். விதுரர் அச்சினவெளிப்பாடுகளால் மேலும் மேலுமென உளச்சீர்மை அடைந்தார். அது அவருள்ளத்தில் கூரிய படைக்கலன்கள் எழச்செய்தது. “அவ்வண்ணமெனில் நீங்கள் பீஷ்மரைக் கடந்து செல்கிறீர்கள்” என்றார். “சினம்கொண்டு அவர் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தானும் வில்லேந்தி நின்றால் அங்கர் ஒருவரை நம்பியா நீங்கள் களம் நிற்கப்போகிறீர்கள்?” என்றார்.
துரியோதனன் உணர்வெழுச்சியால் இழுபட்ட முகத்துடன் “வரட்டும், களத்தில் அவருக்கு எதிர்நிற்கிறேன். பீஷ்மர் கையால் இறக்கிறேன். இன்று எந்தை ஒப்பவில்லை என்றால் அவர் கையாலேயே இறப்பேன். இனி இம்முதியவர்களுக்கு கட்டுப்பட்டு சிறுமை சேர்ந்த ஊன்தடியாக வாழும் எண்ணமில்லை எனக்கு. வெல்வேன், அன்றி என் தலையை இவர்களின் இரும்புக்கோட்டைகளில் முட்டி சிதறடிப்பேன். அதுவொன்றே என் வழி” என்றான்.
கர்ணன் “எவராயினும் அவர்கள் முற்றாணைகளை இடும் காலம் கடந்துவிட்டது, அமைச்சரே. ஜராசந்தரின் மறைவுக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் வாளாவிருப்பார் என்றால் அதன் பின் பாரதவர்ஷத்தின் அரசரவைகளில் அவருக்கென தன்மதிப்பேதும் இருக்காது. இத்தருணம் ஷத்ரியர் அனைவரும் ஒருங்கு திரள்வதற்கு உகந்தது. இது மீண்டும் அமையாது” என்றான்.
“உடன்பிறந்தார் மோதி குருதி சிந்துவதை ஒருபோதும் நான் அனுமதியேன்” என்றார் விதுரர். “ஏனெனில் இருவருக்கு மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவன் நான். இங்கு ஒருவர் இருக்கிறார். விழியிழந்தவர். அவர்முன் சென்று நின்று நீங்கள் சொல்லெடுக்கலாம். விழிநீர் சிந்தலாம். ஒருவேளை உளமிரங்கி அவர் ஒப்பவும் கூடும். பிறிதொருவர் இங்கில்லை. நம் சொற்கள் சென்று எட்டாத பொன்னுலகொன்றில் வாழ்கிறார். அங்கிருந்து உளம் கனிந்து நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வெண்ணத்தை விலக்குக! எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரியின் படை எழாது” என்றார்.
“நான் உயிர் துறக்கிறேன். நான் உயிர் துறந்தபின் அம்முடிவை எடுங்கள். இன்று இதோ, கிளம்பிச்செல்கிறேன். எந்தையின் முன் சென்று நிற்கிறேன். அவர் என் நெஞ்சு பிளந்து தன் காலடியில் இடட்டும். அதன்பிறகு இப்பாழ்முடியைச்சூடி இங்கு அமர்ந்து இந்நகரத்தை ஆளட்டும்” என்றான் துரியோதனன். விதுரர் “அரசே, ஒரு தந்தையென அவ்வுள்ளத்தை புரிந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் வௌவால்கள் குழந்தை முகத்துடன் தொங்கும் கனிமரம் போல் இதுகாறும் வாழ்ந்தவர் அவர். நாளை அம்மைந்தரின் குருதியை உடலெங்கும் அணிந்து இங்கே அவர் நின்றிருக்க வேண்டுமா? உளம் உடைந்து அவர் இறப்பாரென்றால் அவர் விட்டுச் செல்லும் இறுதிச் சொல்லின் பழிச்சுமையைத் தாங்குமா உமது கொடி வழிகள்?” என்றார்.
“வேண்டியதில்லை. என் குலம் அழியட்டும். காலமுனைவரை என் கொடி வழி பழிசுமக்கட்டும். இத்தருணத்தில் பிறிதொரு முடிவை நான் எடுக்கப்போவதில்லை” என்றான் துரியோதனன். “அங்கரே!” என்று துயர்மிகுந்த குரலில் கர்ணனை நோக்கினார் விதுரர். “இனி பிறிதொரு எண்ணமில்லை. எது அஸ்தினபுரி அரசரின் எண்ணமோ அதுவே என் எண்ணமும். எது அவரது விழைவோ அதன் பொருட்டு உயிர் துறப்பது என் கடன்” என்றான் கர்ணன்.
விதுரர் உளம்விம்ம “எந்தையரே!” என்றார். கர்ணன் “இதுவே ஒரே வழி. படைஎழுதல், அல்லது எங்களிருவரின் குருதியையும் அவர் சூடட்டும்… இதையே என் சொல்லென அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள். குருகுலத்து பிதாமகரிடம் தெரிவியுங்கள்” என்றான்.
[ 6 ]
விதுரர் வெளியே வந்ததும் கனகர் பின்னால் வந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “இது மானுடரின் ஆடல் அல்ல. நாமறியா தெய்வமொன்று அரசரில் குடியேறிவிட்டது. இனி செய்வதொன்றே உள்ளது, நம் தெய்வங்களை வணங்குவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம். பெருங்களத்தில் குருதி கண்டு உளமுடைந்து அழிவதுதான் நமது ஊழென்றால் அவ்வாறே ஆகுக!” என்றார் விதுரர். “நான் பேரரசரின் அவைக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் அளிக்கும் ஓலையுடன் பேரரசியைச் சென்று பாரும்.”
“ஓலையால் சொல்லப்படுவது அல்ல இங்கு நிகழ்வது” என்றார் கனகர். “அரசி தன் விழியின்மையின் உலகில் வாழ்கிறார். இங்குள்ள எவையும் அவர் அறிந்தவையல்ல.” விதுரர் “ஒற்றை வரிக்கு அப்பால் அவருக்கு சொல்லவேண்டியதில்லை என்று இன்று காலை சுருதை சொன்னாள்” என்றார். கனகர் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக் கொண்டார்.
விதுரர் தன் அறைக்குச் சென்று ஓலை ஒன்றை எடுத்து ஒற்றை வரி ஒன்றை எழுதிச் சுருட்டி மூங்கில் குழாயில் இட்டு “அரசிக்கு” என்றார். தலைவணங்கி அதை கனகர் பெற்றுக்கொண்டார். பீடத்தில் சாய்ந்தமர்ந்த விதுரர் சிரித்த ஓசையைக் கேட்டு திரும்பிப்பார்த்தார். விதுரர் உடல்குலுங்க தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தார். கனகர் நின்று “அமைச்சரே…” என்றார். விதுரர் விழிகள் நனைந்திருக்க “ஒன்றுமில்லை” என்றபின் மீண்டும் சிரித்தார். வாயில் நோக்கி அடிவைத்த கனகர் திரும்பிவந்தார்.
“எனக்கு சித்தம் கலங்கவில்லை” என்றார் விதுரர். அடக்கமுயன்று மேலும் சிரித்தபடி “நினைத்துப்பார்த்தேன். மேலிருந்து நம்மை குனிந்து நோக்கும் மூதாதையர் எப்படி திகைப்பார்கள், எப்படி நகைப்பார்கள் என்று! ஒருவேளை விண்ணுலகில் அவர்களுக்கிருக்கும் பேரின்பமே இதுதானோ என்னவோ?” என்றார். கனகர் திகைப்பு மாறாத விழிகளுடன் நோக்கி நின்றார். “நீர் செல்லும்… ஓலை உடனே பேரரசியின் கைக்கு செல்லவேண்டும்” என்றார் விதுரர்.
கனகர் அமைச்சுநிலையில் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்று திரும்பி நோக்கினார். “எனக்கு சித்தம் நிலையாகவே உள்ளது. அஞ்சவேண்டாம்” என்றார் விதுரர். “இங்கே நாம் ஆடும் இந்த இளிவரல் நாடகமே அவர்களுக்காகத்தான் போலும். அவ்வண்ணமென்றால் மேலே நோக்கியிருக்கும் அன்னை சத்யவதி இப்போது அடிவயிற்றில் கைதாங்கி நகைத்துக்கொண்டிருப்பார்.” கனகர் ஆறுதல் கொண்டு “ஏன்?” என்றார். விதுரர் “இதே அரண்மனையில் என் இளமையில் அன்னையிடம் நான் சொன்னேன், பாரதவர்ஷத்தில் ஒரு பெரும்போர் நிகழவேண்டும் என்று. பல்லாயிரம் பேர் மடியவேண்டும் என்று” என்றார்.
விதுரரின் முகம் நகைமறைந்து இறுகியது. “ஒரு குருதிப்பெருக்கில்லாமல் பாரதவர்ஷம் இனி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லமுடியாது என்று அன்னையிடம் சொன்னேன். காட்டுத்தீ எழுந்து பெருமரங்கள் மண்படாமல் புதுமுளைகள் எழாது என்று சொல்லாடினேன். இளமையின் துடுக்கில் அனைத்தும் என் பத்துவிரல்களால் தொட்டெண்ணிவிடக்கூடியவை என்று தோன்றின. அப்போது என்னைச் சூழ்ந்தமர்ந்து தெய்வங்கள் புன்னகை புரிந்ததை இப்போது காண்கிறேன்.” மீண்டும் கசப்புடன் நகைத்து “இதோ, இருபதாண்டுகாலமாக என் முன் ஒவ்வொருகணமும் போர் முற்றிப்பழுத்துக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்கும்பொருட்டு இறுதியாற்றலையும் கொண்டு முயல்கிறேன்” என்றார்.
கனகர் “அதைத்தான் முந்தையோர் ஊழ் என்னும் சொல்லால் விளக்கினர். கடமையை ஆற்றுவோம். ஊழுக்கு முன் பணிவோம்” என்றார். “இதைச் சொல்லாத எவரும் இல்லை. மானுடர் எவரேனும் ஊழ்முன் விழிநீரின்றி உளக்குமுறலின்றி அடிபணிந்ததை கண்டிருக்கிறீரா?” என்றார். “நான் கண்டதெல்லாமே இவ்வரண்மனைக்குள்தான். இங்கே ஊழுக்கு எதிராக வாளேந்தி நின்றிருப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்” என்றபின் கனகர் கிளம்பிச்சென்றார்.
விதுரர் சற்றுநேரம் சாளரம் வழியாக ஆடும் மரக்கிளைகளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். மரங்கள் எக்கவலையும் அற்றவை என்ற எண்ணம் வந்தது. அக்கிளைகளில் இருக்கும் சொல் கவலையின்மை என்பதுதான். அப்பால் காற்றில் பறக்கும் பறவைகளும் கவலையில்லை கவலையில்லை என்றே சிறகசைக்கின்றன. அல்லது காலமில்லை என்றா? கவலையும் காலமும் ஒன்றா? இவ்வீண் எண்ணங்களை ஏன் அடைகிறேன் என்று அவர் தன்னுணர்வுகொண்டார். ஆனால் அவ்வெண்ணங்கள் வழியாக அவர் நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டிருந்தார்.
பெருமூச்சுடன் எழுந்து புஷ்பகோஷ்டத்தை நோக்கி சென்றார். தன் காலடிகளையே கேட்டுக்கொண்டிருந்தார். இந்த இடைநாழியில் எத்தனை விதமான அச்சங்களுடனும், பதற்றங்களுடனும், உவகைகளுடனும் உள எழுச்சியுடனும் கடந்து சென்றிருக்கிறோம் என்று ஓர் எண்ணம் உள்கடந்து சென்றது. அனைத்தும் ஒற்றைக் கணத்தில் கண்டு கலைந்த கனவுபோல் இருந்தது. காற்றில் ஆடும் அக்கிளை போல வானிலெழுந்து மண்ணுக்கு மீண்டும் ஆடி ஆடிச் சலித்து ஓய்வதுதானா தன் வாழ்வு?
படிகளில் ஏறும்போது எங்கோ ஒரு புள்ளியில் அவர் உள்ளம் அனைத்திலிருந்தும் முற்றும் விலகியது. அவர் உடலெங்கும் இனிய உவகையொன்று பரவியது. இவை அனைத்தும் கனவே. நான் எங்கோ அமர்ந்து இவற்றை கண்டு கொண்டிருக்கிறேன். கனவில் எழும் துயர் துயரல்ல. வலி வலியல்ல. கனவில் இழப்புகள் பிரிவுகள் ஏதுமில்லை. புஷ்பகோஷ்டத்தின் வாயிலை சென்றடைந்தபோது அவர் சீரான காலடிகளுடன் இயல்பான முகத்துடன் இருந்தார். வாயிற்காவலனிடம் “பேரரசரைப் பார்க்க விழைகிறேன்” என்றார்.
“அவர் இசை கேட்டுக்கொண்டிருக்கிறார். அருகே சஞ்சயனும் அமர்ந்திருக்கிறார்” என்றான் காவலன். “நன்று, விப்ரரிடம் ஒப்புதல் பெற்று வருக!” என்றார் விதுரர். உள்ளே சென்று மீண்ட ஏவலன் “வருக!” என்றான். கதவைக் கடந்து உள்ளே சென்று அங்கே குறுபீடத்தில் உடல் குறுக்கி பஞ்சடைந்த விழிகளுடன் அமர்ந்திருந்த விப்ரரிடம் “வணங்குகிறேன், விப்ரரே” என்று தலைவணங்கினார். விப்ரர் “ம்” என்று முனகினார். அனைத்திலிருந்தும் விலகி பிறிதொரு உலகில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது.
விதுரர் உள்ளே சென்று இசைக்கூடத்தில் ஏழு இசைச்சூதர் மிழற்றிக் கொண்டிருந்த யாழ் இசையைக் கேட்டபடி கையைக் கட்டி நின்றார். திருதராஷ்டிரர் தன் பெரிய உடலை பீடத்தில் விரித்து கால்களைப் பரப்பி கைகளை மார்புடன் கட்டி குழல்சுருள்கள் முகத்தில் சரிய தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் முன் இருந்த நீர் நிறைந்த தடாகம் அவரைப்போலவே அவ்விசைக்கேற்ப அதிர்வு கொண்டிருந்தது. ஒருகணத்தில் விதுரர் அனைத்தையும் கண்டார். அவர் உடலே விம்மி வெடிக்கும்படி பெருந்துயர் எழுந்து முழுக்க நிறைந்தது.
[ 7 ]
இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது! வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார்.
“வணங்குகிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி தலைவணங்கி அவைவிட்டகன்றனர். “இசைக்குள் நீ வருவதுபோல் ஒரு உளக்காட்சி எழுந்தது. உன் காலடி ஓசையை நான் கேட்டிருக்கிறேன் என்பதை நான் அறியவில்லை. ஆனால் நீ இருக்கிறாய் என்னும் உணர்வு இசை முழுமையடைந்ததும் எஞ்சியது” என்றார். “அரசர் தங்களைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார்” என்றார் விதுரர்.
முகம் சுளிக்க தலைசரித்து “அவனிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. சொல்லும் அனைத்தையும் முன்னரே வகுத்துரைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் அவற்றை மும்முறைக்கு மேல் அரசரிடம் சொன்னேன். மதமெழுந்த களிற்றேறு போல விழிதொடாத முகம் கொண்டிருக்கிறார். அவருடன் உரையாட வாயில்கள் ஏதுமில்லை” என்று விதுரர் சொன்னார். “அங்கன் என்ன செய்கிறான்? அவனை வரச்சொல்! அவனிடம் சொல்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் இருவரும் உருகி ஒன்றாகிவிட்டதுபோல் இருக்கிறார்கள். அரசர் முகத்தையே அங்கரிடம் காண்கிறேன்” என்றார் விதுரர்.
“மூத்தவன் கற்றறிந்தவன். பரசுராமனின் மாணவன் அவன். அவன் எங்ஙனம் இப்படி ஆனான்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அறியேன். அன்று மருத்துவ நீராட்டில் கரிய காகங்கள் அனைத்தும் அரசரின் உடலில் புகுந்துகொண்டன என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள். அத்தெய்வங்களை நாமறியோம். அவை இந்நகரத்தை எங்கு எடுத்துச் செல்கின்றன என்றறியாது அஞ்சுகிறேன்” என்றபடி விதுரர் அருகே வந்து அமர்ந்தார்.
“மூடா, நான் இங்கிருக்கும்வரை இந்நகரம் எங்கும் செல்லப்போவதில்லை. யயாதியின் ஹஸ்தியின் குருவின் பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியனின் நகரமாக மட்டுமே இது இங்கு இருக்கும். இளையோனே, நடுவயது வரை ஒவ்வொருவரும் தானென உணர்கிறார்கள். நடுவயது கடந்ததும் தங்களை மூதாதையரின் தரப்பிற்கு மாற்றிக்கொள்கிறார்கள். இங்கு இப்பீடத்தில் அமர்ந்திருப்பது திருதராஷ்டிரன் அல்ல. இம்மண்ணில் எஞ்சும் மூதாதையர்களின் ஊன் சிறு துளி மட்டுமே. எனக்குக் கடன்கள் இப்புவியில் எவரிடமும் இல்லை. இங்கு எவரிடமும் நான் கேட்டறிய ஏதுமில்லை. விண்ணமைந்த மூதாதையர் சொல் ஒன்று என்னில் உள்ளது. அதுவே நான்.”
விதுரர் பெருமூச்சுவிட்டு “நான் அதை அறிவேன்” என்றபின் “பிதாமகர் பீஷ்மரின் ஓலை வந்தது” என்றார். “பிறிதொன்றையும் பிதாமகர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் பிதாமகராக நின்று நம்மனைவருக்கும் அவர் ஆணையிட்டிருக்கிறார். குருவின் கொடிவழியினர் நடத்தும் ராஜசூயத்தை அவர் ஏற்றிருக்கிறார். இந்நகரும் அரசரும் குடிகளும் அந்த வேள்வியில் பங்கெடுத்து மகிழவேண்டுமென்று விழைகிறார்.” திருதராஷ்டிரர் “ஆம், அது எனது ஆணையும் கூட” என்று தலைவணங்கினார்.
ஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். விதுரர் திரும்பியதும் மெல்லிய குரலில் “அரசரும் இளையோரும் அங்கரும் சேதிநாட்டரசரும்” என்றான். விதுரர் “வரட்டும்” என்று சொன்னபின் திருதராஷ்டிரரிடம் “அரசர் பார்க்க வந்திருக்கிறார்” என்றார். திருதராஷ்டிரர் தாடியை நீவியபடி மெல்ல உறுமினார். தன் உடலில் ஏன் பதற்றம் கூடவில்லை, ஏன் நெஞ்சு பொங்கி எழவில்லை என்று விதுரர் வியந்தார். ஒவ்வொன்றும் பலமுறை படித்த காவியத்தில் நிகழ்வதுபோல தெளிவாக வேறெங்கோ நிகழ, துளித்துளியாக அவற்றை அறிந்தபடி அவர் அங்கு நின்றிருந்தார்.
கதவு திறக்கும் ஒலி கேட்டபோது ஒரு கணமென அதே நிகழ்வு முன்பு நிகழ அவர் கண்டதுபோல் உணர்ந்தார். அல்லது தொல்காவியம் ஒன்றில் படித்ததைப்போல. பாரதவர்ஷத்தில் நிகழ்வன அனைத்தையும் வியாசர் பாடல்களாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் அவற்றையே தாங்கள் பாடுவதாகவும் சூதர்கள் சொல்வதுண்டு. இந்நிகழ்வை மூதாதைக்கவிஞர் முன்னதாகவே எழுதிவிட்டாரா என்று எண்ணியபோது விதுரர் இதழ் வளைய புன்னகை செய்தார்.
துரியோதனன் அரச உடையணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் துச்சாதனனும் துச்சகனும் துர்மதனும் ஓசையற்ற நிழல்கள் போல் வந்தனர். கர்ணனும் சிசுபாலனும் சற்று விலகி பின்னால் வந்தனர். துரியோதனன் தந்தையை அணுகி முழந்தாள் மடித்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். திருதராஷ்டிரர் தன் படர்ந்த கைகளை அவன் தலைமேல் வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். பிற கௌரவரும் தந்தை காலடியைத் தொட்டு வாழ்த்து பெற்று விலகி நின்றனர். துரியோதனன் திரும்பி கர்ணனை அருகே வரும்படி அழைத்துவிட்டு “என்னுடன் அங்கரும் சேதி நாட்டரசரும் வந்துள்ளனர்” என்றான்.
திருதராஷ்டிரர் அதற்கும் தலையசைத்து உறுமினார். கர்ணன் அவர் கால்தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், தந்தையே” என்றான். சினம் பற்றிக்கொள்ள அவர் உறுமியபடி அவன் தலைமயிரை தன் கைகளால் பற்றி “நான் உன்னை நம்பியிருக்கிறேன், கர்ணா” என்றார். கர்ணன் “எந்நிலையிலும் தங்கள் மைந்தருடன் இருப்பேன் அரசே” என்றான். சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். “உன் தலை அதிர்கிறது” என்றார்.
“அரசே!” என்றான் சேதிநாட்டான். “உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறது” என்றார் திருதராஷ்டிரர். “ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது…” சிசுபாலன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “உனக்கு உடல் நலமில்லையா என்ன?” சிசுபாலன் “இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் குழப்பத்துடன். “கனவுகள் காண்கிறாயா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன்.” திருதராஷ்டிரர் “அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய்” என்றார்.
சிசுபாலனை அகன்று போகும்படி துரியோதனன் விழிகாட்டினான். பின்னர் “தந்தையே, தாங்கள் அறிந்திருப்பீர்கள், இன்று மாலை அஸ்தினபுரியின் படைகளுடன் இந்திரப்பிரஸ்தத்தின்மேல் எழுகிறேன். என் தோள்தோழர் ஜராசந்தரின் இறப்புக்கு ஈடுசெய்யாமல் இங்கு அமர்ந்திருப்பது குருகுலத்தோன்றல் என்றும், தங்கள் மைந்தன் என்றும் நான் கொண்டுள்ள நிமிர்வுக்கு இழுக்கு. தங்கள் ஆணை பெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.
முகவாயை நீவியபடி “எனது ஆணையை முன்னரே அளித்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், அது போர் அறியாத சூதர்களால் அளிக்கப்பட்டது” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “மூடா!” என்று கூவியபடி எழுந்த திருதராஷ்டிரர் தன் பெருங்கையைச் சுழற்றி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அவ்வோசை இசைக்கூடத்தை அதிரச்செய்தது. தரை அதிரும் ஒலியுடன் மண்ணில் விழுந்த துரியோதனனை நோக்கி காலடி எடுத்து வைத்து முன்னால்சென்று ஓங்கி மிதித்தார் திருதராஷ்டிரர். அவன் மேலும் சுருண்டு விலகிச்சறுக்கி தூணில் முட்டி கையூன்றி எழுந்தான்.
“மூத்தவரே…” என்றபடி திருதராஷ்டிரரின் கையை சென்று பிடித்துக்கொண்டார் விதுரர். “பேரரசே, நிறுத்துங்கள்” என்று கர்ணன் அவரது வலது கையை பிடித்தான். அவர்களைத் தூக்கி இருபக்கமும் வீசிவிட்டு அவர் சினம்கொண்ட களிறென முழக்கமிட்டு முன்னால் செல்ல துரியோதனனை தம்பியர் தூக்கி அகற்றினர். “எவர் முன் நின்று அச்சொல்லை எடுத்தாய்? இழிமகனே! என் இளையோன் கால்களைத் தொட்டு வணங்கி பிழைபொறுக்கக் கோரிவிட்டு அதன் பின் அடுத்த சொல் எடு! அதுவரைக்கும் நீ என் மைந்தன் அல்ல” என்றார் திருதராஷ்டிரன். பதறும் கைகளுடன் யானை என ததும்பினார். “எந்தத் துணிவில் என் முன் அச்சொல்லை எடுத்தாய்? இன்றுவரை எவரும் அதைச் சொல்ல நான் ஒப்புக் கொண்டதில்லை. இந்நகரில் நான் வாழும்வரை எவரும் அதை சொல்லப்போவதில்லை.”
“பொறுத்தருள்க, சிறிய தந்தையே!” என்று துரியோதனன் விதுரரிடம் சொன்னான். “என்ன இது, அரசே? இச்சொற்கள் வேண்டியதில்லை. அவர் உணர்வுகள் வேறு. தாங்கள் இந்நாட்டு அரசர்” என்றார் விதுரர். “அவன் என் இளையோன். என் தந்தையின் எஞ்சிய மண்வடிவம்… இப்புவியில் எவரும் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து திருதராஷ்டிரர் கூவினார். “பொறுத்தருளுங்கள், தந்தையே! என் உடலெங்கும் நிறைந்திருக்கும் சினம் சொற்களை சிதறடிக்கிறது. ஆனால் நான் சொன்னதில் எந்த மாறுதலும் இல்லை. இங்கு இனிமேலும் தொட்டில் குழந்தையென சுருண்டிருக்க என்னால் இயலாது. மகதரின் இறப்புக்கு நிகரீடு செய்தாகவேண்டும். இல்லாமல் நான் ஆணென அமையமுடியாது” என்றான் துரியோதனன்.
“ஆம், அவனுக்கு ஒரு வாக்களித்திருந்தாய் என்றால் அதைச் செய்வதே முறை. ஆனால் குருகுலத்துத் தோன்றல்களிடையே ஒருபோதும் போர் நிகழாது. அதன் பின் இங்கிருந்து விண்ணேறிச்சென்று நான் என் மூதாதையர் முகத்தை நோக்க இயலாது. அவ்வெண்ணத்தை ஒழி. இதோ பிதாமகரின் ஆணை வந்துள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்தில் அஸ்தினபுரியின் அரசரும் குடிகளும் அந்தணரும் கலந்துகொள்வார்கள். அதுவே என் சொல்” என்றார் திருதராஷ்டிரர். உரக்க இடைமறித்து “அது நிகழாது. ஒரு தருணத்திலும் அதற்கு நான் ஒப்பேன்” என்றான் துரியோதனன்.
“என் எதிர் நின்று சொல்லெடுக்கிறாயா, மூடா?” என்றபடி திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தார். மீண்டும் அவரைப்பற்ற வந்த கர்ணனை ஒற்றைக்கையால் தூக்கி விலக்கிவிட்டு மற்போருக்கென விரித்த கைகளுடன் துரியோதனனை நோக்கி சென்றார். துரியோதனன் அதேவிரைவில் முன்னால் வர இருவர் கைகளும் மரக்கட்டைகள் உரசும் ஒலியுடன் பிணைந்து கொண்டன. இருவர் தோள்களும் இறுகிப்பிணைய முகங்களில் தந்தையென்றும் மைந்தனென்றுமிருந்தவை அகன்று இரு கொலைவிலங்குகள் எழுந்தன.
கர்ணனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருவரையும் பிடித்து இழுத்தனர். விதுரர் “அரசே! அரசே!” என்று கூவியபடி பதைத்து சுற்றிவந்தார். துச்சாதனன் திருதராஷ்டிரரின் உதைபட்டு தெறித்துவிழுந்தான். துர்மதன் பின்னால் சரிய கர்ணன் மட்டும் அவர்களுடன் சுற்றினான். விதுரர் “அரசே, நிறுத்துங்கள்! இக்கணம் உங்கள் கை தளரவில்லை என்றால் என் கழுத்தில் கத்தியை பாய்ச்சிக்கொள்வேன்” என்று கூவினார். திருதராஷ்டிரரின் தசைகள் மெல்ல தளர்ந்தன. உறுமலுடன் அவர் துரியோதனனை தூக்கி வீசிவிட்டு திரும்பி “எல்லாம் உன்னால்தான், மூடா! இவ்விழிமகன்களை இப்படி வளர்த்தவன் நீ. அடேய், நான் விழியற்றவன். நீ நூல்கற்றவன் அல்லவா? உன் முன் உன் மைந்தர் ஏன் இப்படி வளர்ந்தனர்? கீழ்மகனே, முதலில் உன் மண்டையை உடைக்கவேண்டும்” என்றார்.
மூச்சிரைக்க எழுந்து தள்ளாடி நின்று “தந்தையே, நான் செய்வதற்கொன்றே உள்ளது. என் சொல் மாறாது” என்றான் துரியோதனன். திரும்பி வெண்பற்கள் தெரிய முகம் சுளிக்கச் சீறி “வா! என்னுடன் களம்நின்று பொருது. என்னைக் கொன்று நெஞ்சை மிதித்து நின்று கூவி இந்த மக்களுக்கு சொல் நீ என் அரசன் என்று! அதன் பின் உன்னைத்தடுக்க தெய்வங்கள் இல்லை. உன்னைத் துணைக்க பாதாளத்திலிருந்து மண்மறைந்த அரக்கர் அனைவரும் எழுந்து வருவார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.
“அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! நாள் குறியுங்கள்” என்றான் துரியோதனன். “என்ன சொல்கிறாய், மூடா?” என்று மீண்டும் எட்டு வைத்து ஓங்கி அவனை அறைந்தார் திருதராஷ்டிரர். அவன் அவர் கைகளைப்பற்றி உடலெங்கும் தசைகள் புடைக்க வளைத்து தாழ்த்தி “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே! நானறிவேன், அரைப்பொழுதுக்குமேல் உங்கள் முன் நிற்கும் ஆற்றல் கொண்டவன் அல்ல நான். களத்தில் என் நெஞ்சு பிளந்தெடுங்கள். என் குருதி பூசி வந்து உங்கள் மூதாதையரின் பீடத்தில் அமருங்கள். நண்பனின் குருதிக்குப் பழியீடு செய்யாமல் அஞ்சி அரண்மனையில் அமர்ந்திருந்தேன் என்ற இழிசொல்லில் இருந்து நான் விடுபடுவேன். உங்கள் கையால் இறந்தால் எத்தயக்கமும் இன்றி சென்று சந்தனுவும் விசித்திரவீரியனும் அமர்ந்திருக்கும் நிரையில் நானும் அமர்வேன்” என்று அவன் கூவினான். தொண்டை நரம்புகள் புடைத்து குரல் உடைந்து ஒலித்தது. விழிகள் சுரந்து இமைகளில் சிதறி நின்றன.
திருதராஷ்டிரர் தளர்ந்து அவன் கையை விட்டார். மெல்ல பின்னடைந்து “விதுரா, மூடா, பிடி என்னை!” என்றார். சஞ்சயன் எழுந்து அவரை பற்றிக்கொண்டான். அவர் தளர்ந்த கால்களும் உடலும் நடுங்க பேரெடை அழுந்த பீடத்தில் விழுந்தார். “என்ன சொல்கிறான் இந்த அறிவிலி?” என்று தலையை அசைத்தார். “ஒன்று என்னை கொல்லுங்கள், தந்தையே. அல்லது ஆணையிடுங்கள். இன்று இரண்டில் ஒன்று நிகழாது இப்பகல் தாண்டிச் செல்லாது” என்றான் துரியோதனன். “இன்று மாலை நான் உயிருடன் இருந்தேன் என்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக நம் படைகள் எழும்.”
திருதராஷ்டிரர் விண்ணுக்கென இரு கைகளையும் விரித்து “மூதாதையரே, இங்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்?” என்று ஓலமிட்டார். “விதுரா! மூடா!” என்று பெரும் சினத்துடன் அழைத்தபடி பீடத்தை தன் இரு கைகளாலும் அறைந்தார். “சொல், உன் நெறி நூலில் என்ன சொல்லப்பட்டுள்ளது? சொல், இழிமகனே!” என்றார். விதுரர் “என் சொற்கள் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன, அரசே. இறுதி நிலைப்பாடொன்றை ஒருவர் எடுத்துவிட்டால் அதற்கப்பால் இருப்பது இறப்பொன்றே” என்றார்.
“ஒன்று செய்கிறேன், நான் இறக்கிறேன்” என்றபடி பீடத்தில் கையூன்றி திருதராஷ்டிரர் எழுந்தார். “நான் இறக்கிறேன். அதன்பின் இந்நகருக்கான பொறுப்பை நான் சுமக்க வேண்டியதில்லை. மூதாதையருக்கு நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்று உடைந்த குரலில் கூவி திரும்பி “விப்ரா!” என்று அழைத்தார். தன் பீடத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்த விப்ரர் “அரசே, எந்தத் தந்தையும் வாழ்நாளில் ஒருமுறை மைந்தனிடமிருந்து எதிர்கொள்ளவேண்டிய தருணம் இது. இதைக் கடந்து செல்லாமல் எவரும் வாழ்க்கை முதிர்ந்து சிதையேற இயலாது” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும் சொல்! அறிவிலியே, சொல்! நான் என்ன செய்யவேண்டும்?”
“தாங்கள் சொன்னதுதான் முறை. அந்த அரசணிகளை கழற்றி வையுங்கள். தேர் ஒருக்கச் சொல்கிறேன். நாம் இருவரும் இந்நகர் உதிர்ந்து கிளம்புவோம். பேரரசி சத்யவதியும் தங்கள் அன்னையரும் எரிந்த காட்டுத்தீ இன்னும் அக்காடுகளுக்குள் இருந்து கொண்டிருக்கும். அங்கே சேர்ந்து எரிவோம்” என்றார் விப்ரர். “ஆம், அது அணையாது” என்றார் திருதராஷ்டிரர். “அதுவே வழி. அந்தச் சிதையே எனக்குரியது…”
துரியோதனன் உரக்க “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! இனி எந்த உணர்வுகளுக்கும் நான் உளம் மடியப்போவதில்லை. தந்தை இறப்பதென்றால் அப்பழியை என் தலை அணியட்டும். என் குடிகள் இழிவு சூடட்டும். மூத்தார் சொல் கேட்டு உகந்தவை ஆற்றாது அரண்மனைக்குள் குறுகி அமர்ந்திருந்தேன் என்னும் சிறுமைக்கு அதுமேல்” என்றான். “தந்தையே, தங்கள் மைந்தன் என்று நான் இதுகாறும் இங்கு பணிந்திருந்தேன். என் தந்தையென்று தாங்கள் சற்றேனும் செருக்கி இருந்தால் பாஞ்சாலத்து இழிமகளின் காலடியில் நான் விழுந்து நகைப்புக்கிடமானபோது அக்கணமே கிளர்ந்தெழுந்து படைகொண்டு எழ நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரையும் தமது துணைவியுடன் இங்கு வந்து என்னிடம் பிழைபொறுக்கும்படி கோர பணித்திருப்பீர்கள்.”
“அவர்கள் என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல” என்றார் திருதராஷ்டிரர் தணிந்த குரலில். “அப்படியென்றால் அவர்களை எதிரியென்று கருதுங்கள். உங்களை தந்தையென்று கருதாதவர்களிடம் உங்களுக்கென்ன கடன்?” என்றான் துரியோதனன். “எனது கடன் எனது இளையோனிடம். மைந்தா, நீத்தவருக்கு இருப்போர் ஆற்றும் கடனுக்கு மாற்றே இல்லை. அவர்கள் நம்மிடம் ஆணையிடமுடியும், நாம் அவர்களிடம் பிறிதொரு சொல் சொல்ல இயலாது.”
“இழிவுகளைத் தாங்கி சிறுத்துவிட்டேன், தந்தையே. நெறிமீறியவனாக என்னை உலகு அறியட்டும். அரக்கனாக அசுரனாக என்னை சூதர் பாடுக! கோழையாக கீழ்மகனாக ஒருபோதும் சொல்லலாகாது” என்று துரியோதனன் சொன்னான். “ஒருபோதும் நடவாது… நான் இருக்கும் வரை… நான் இருக்கும் வரை…” தனக்குள் என திருதராஷ்டிரர் சொல்லிக்கொண்டார். காற்று தடித்து குளிர்ந்து நனைந்த மெத்தை என அவர்களை மூடிக்கொண்டது. பற்களைக் கடித்தபடி துரியோதனன் தலைதாழ்த்தி நின்றான்.
விப்ரர் அங்கிருந்தே “பேரரசி வந்திருக்கிறார்” என்றார். “வசுமதியா? இங்கா?” என்றார் திருதராஷ்டிரர் திகைப்புடன். “ஆம் அரசே, நான் அவர்களை இங்கு வரச்சொன்னேன்” என்றார் விதுரர். “இங்குவந்து இவை அனைத்தையும் அவள் ஏன் அறியவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அன்னையர் மேலும் நுட்பமாக அறிகிறார்கள் என்று இன்று காலை எனக்கு சொல்லப்பட்டது” என்றார் விதுரர். “சுருதையா சொன்னாள்? அவள் அறிவுடையவள்” என்றார் திருதராஷ்டிரர். திரும்பி விப்ரரிடம் “வரச்சொல்லும், விப்ரரே” என்றார். வாயில் திறக்க காந்தாரி பானுமதியின் கைகளைப் பற்றியபடி வந்தாள். அவளுக்குப்பின் அசலையும் சத்யசேனையும் வந்தனர்.
துரியோதனன் ஒருகணம் என்ன செய்வதென்றறியாமல் தவித்து பின்பு மெல்ல தணிந்து உடல் இயல்பாகி முன்னால் சென்று குனிந்து அவள் தாள் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவன் தலையில் கைவைத்து “நிறைவடைக!” என்று வாழ்த்தினாள் காந்தாரி. “விதுரர் என்னை வரச்சொன்னார்” என்று சொன்னாள். அது திருதராஷ்டிரரிடம் சொல்லப்பட்டதென்பது அதன் ஒலியாலேயே தெரிந்தது. அவர் “ம்” என்றார். அவள் துரியோதனனிடம் “மைந்தா, இங்கு நிகழ்வன அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருந்தேன். என் சொல்லை வைக்கும் ஒரு தருணம் இது என உணர்கிறேன்” என்றாள்.
துரியோதனன் தவிப்புடன் பானுமதியை நோக்கியபின் அவள் கைகளைப்பற்றி “அன்னையே, தாங்களும் என்னை சிறுமை கொள்ளச் செய்யாதீர்கள். கல்லா இளஞ்சிறுவனாக அரண்மனையில் ஒடுங்க ஆணையிடாதீர்கள். அதுவன்றி தங்கள் மைந்தனாக நான் கோர ஏதுமில்லை” என்றான். அவள் அவன் கைகள்மேல் கையை வைத்து “சுயோதனா, இங்கு நான் வந்தது அதற்கே. இப்படை நகர்வை நீ நிகழ்த்தலாகாது” என்றாள்.
“அன்னையே, என் இறப்புக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான் துரியோதனன். “நான் பெண். இங்குள்ள பிறரைப்போல் சொல்லடுக்கி என் உள்ளத்தை முன் வைக்க அறியாதவள். இதுவன்றி இப்போது பிறிதெதுவும் சொல்வதற்கில்லை. இன்று நீ வாளாவிருந்தே ஆகவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஏன்?” என்றான் துரியோதனன். “என் சொல்லை மீறி நீ செல்வதாக இருந்தால் செல்லலாம். உன் முன் எதிர்நிற்பவர் எவர் என்று நான் அறிவேன். மைந்தா, எவரும் அவனை வெல்ல முடியாது.”
துரியோதனன் புரியாதவன் போல கர்ணனைப் பார்க்க கர்ணன் “அன்னையே, களத்தில் வெல்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றான். காந்தாரி அதுவரை இருந்த கனிவு மாறி முகம் சிவக்க “சீ, மூடா! மூத்தவன் என்று உன்னை இவன் கைபற்றச் சொன்னேன். இழுத்து பெருவெள்ளத்திலா விடுகிறாய்? அறிவிலியே!” என்றபடி கையை ஒங்கினாள். கர்ணன் கைகூப்பி “நான் தங்கள் மைந்தனன்றி பிறனல்ல” என்றான். “அவனுக்கிடும் ஆணையே உனக்கும். இங்கே இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை எழலாகாது. எந்நிலையிலும் இருதரப்பும் எதிர்நிற்கலாகாது. அவர்கள் இயற்றும் ராஜசூயவேள்வியில் நான் பேரரசருடன் சென்று அமர்வேன். என் மைந்தர்களும் அங்கு வருவார்கள்” என்றபின் கைநீட்ட அதை பானுமதி பற்றிக்கொண்டாள்.
“இதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வவைக்கு வந்து அதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இத்தனை தொலைவு நடந்தேன். என் மைந்தன் நீ என்றால் நான் எதையும் உனக்கு விளக்கவேண்டியதில்லை, என் ஆணையே போதும்” என்றபின் செல்லலாம் என்று தலையசைத்தாள். பானுமதி அவள் கைகளைப்பற்ற சிறிய வெண்ணிற அடிகள் மரத்தரையை ஓசையில்லாது ஒற்ற, எடைமிக்க உடல் ததும்ப, திரும்பிச் சென்றாள்.
அங்கிருந்த அனைவரும் காற்று விலக திரைகள் அடங்குவதுபோல் உடல் தணிந்தனர். திருதராஷ்டிரரும் “ஆம், அதுவே உகந்த வழி. எவ்வில்லத்திலும் இறுதி முடிவை அன்னையர் வந்து எடுப்பதே நன்று” என்றார். கர்ணன் “அரசே, நீங்கள் துணிந்து முடிவெடுத்துவிட்டீர்கள். உங்களுடன் நான் இருப்பேன். பிறிதெவரும் என்னவர் அல்ல” என்றான். துச்சாதனன் “ஆம் மூத்தவரே, நாங்களும் உங்களுடையவர்களே” என்றான். துர்மதனும் துச்சகனும் “ஆம்” என்றனர்.
திருதராஷ்டிரர் உரத்த குரலில் கை நீட்டி “இன்னமும் விளங்கவில்லை என்றால் நீ அரசன் என்று அமர்ந்திருக்கத் தகுதியற்றவன். இது ஆற்றியழிக்கும் அன்னையரின் ஆடல். நீயும் நானும் அவ்விசைகளுக்கு நடுவே ஆடும் துகள்கள்” என்றார். துரியோதனன் அவரை தளர்ந்த விழிகளால் நோக்கியபின் “படை எழவேண்டியதில்லை, அங்கரே. அன்னையின் சொல் நிற்கட்டும்” என்றான். கால்குழைய கர்ணனின் தோளைப் பற்றியபடி “செல்வோம்” என்றான். சொல்லில்லாது தலைவணங்கி கர்ணன் திருதராஷ்டிரரிடம் விடைபெற்றான். விடைபெறாது தன் உடல் எடை முழுக்க அவன் மேல் சுமத்தி துரியோதனன் நடந்தான்.
அவர்கள் ஒவ்வொருவராக அறைவிட்டு நீங்குவதை விதுரர் நோக்கி நின்றார். தன் முகத்தில் புன்னகை இருக்கிறதா என்ற எண்ணம் அதன் பின்னரே அவருக்கு எழுந்தது. அப்பால் நின்றிருந்த விப்ரரின் விழிகளை சந்தித்தார். “விப்ரரே!” என்று திருதராஷ்டிரர் கைநீட்டினார். “என்னை அழைத்துச் செல்லும். என்னுடன் இரும். இந்நாளை ஒவ்வொரு கணமாக நான் கடந்து செல்ல வேண்டும்” என்றார். விப்ரர் அணுகி திருதராஷ்டிரரின் கைகளை பற்றினார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் விதுரர் வெளியே நடந்தார்.
[ 8 ]
அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி கங்கைத்துறை நோக்கிய சாலையில் தனியாக சென்று கொண்டிருக்கையில் தன் உடல் மெல்ல இறந்து ஊன் பொதியென ஆகி புரவி மேல் படிவதை சிசுபாலன் உணர்ந்தான். கைகால்கள் ஒவ்வொன்றும் உடலிலிருந்து உருகும் அரக்கால் ஆனவை போல் விடுபட்டு குழைந்து பரந்து கொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. ஒரு கட்டத்தில் தன்னிலை அழிந்து புரவியின் கழுத்திலேயே முகம் பரப்பி கைகள் அதன் விலாவில் இருபுறமும் தொங்க நினைவிழந்து கிடந்தான். பெருநடையிட்டுச் சென்ற புரவி அவன் கடிவாளத்தை விட்டுவிட்டதை அறிந்து குறுங்காட்டின் ஓரமாக சென்று நின்றது.
சிசுபாலன் தன்னுள் கொப்பளித்த முகங்களினூடாக சென்று கொண்டிருந்தான். தொலைவில் எவரோ “இவ்வழி! ஆம், இவ்வழி!” என்றனர். “யார்?” என்று அவன் கேட்டான். வேறெங்கோ நகைப்பொலி எழுந்தது. “யார்?” என்று அவன் மீண்டும் உரக்க கேட்டான். “இவ்வழி!” என்றது மிக அருகே ஒரு குரல். அவன் விழித்துக்கொண்டு தன் உடலை உணர்ந்தான். தொலைவில் ஏதோ பறவை சிறகடித்துச்செல்ல மிக அப்பால் நீர் பாயும் ஒலி எழுந்தது.
எழுந்து அமர்ந்தபோது நீண்டஓய்வும் உணவும் பெற்றபின் என உடல் புத்துயிர் கொண்டிருந்தது. சேணத்தின் மேல் சீரமைந்து கால்களை வளையத்தில் செலுத்தி புரவியை தட்டினான். அது விரைவு கொண்டபோதுதான் சிந்து நாட்டுக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. சேதிநாட்டுக்குத் திரும்பும்பொருட்டே அவன் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பினான். திருதராஷ்டிரரின் அவைக்கு வெளியே அவன் வந்தபோது கர்ணனும் துரியோதனனும் முன்னால் சென்றுவிட்டிருந்தனர். அவன் கைகளை இறுகப்பற்றி பற்களைக் கிட்டித்தபடி விதுரருக்காக காத்து நின்றான். அவர் வெளியே வந்ததும் அவனைப்பார்த்து தயங்கி நின்றார்.
“நன்று!” என்று கசந்து சுருங்கிய முகத்துடன் அவன் சொன்னான். “இந்த நாடு ஷத்ரியர்களுடையது என்று எண்ணினேன். அல்ல என்று இப்போது தெளிந்தேன்.” விதுரர் புன்னகையுடன் “இது குருகுல மூதாதையரின் நாடு. அவர் மைந்தர் ஒத்துவாழும் நிலம்” என்றார். “இனி இங்கு நான் இருப்பதில் பொருளில்லை. இன்றே கிளம்புகிறேன். விதுரரே, பாரதவர்ஷத்தில் ஷத்ரிய நாடென்பது அஸ்தினபுரி மட்டுமல்ல. கூர்ஜரமும் சேதியும் விதர்ப்பமும் சிந்துவும் வல்லமை கொண்டிருக்கின்றன. அங்கு செல்கிறேன். அவர்களை திரட்டுகிறேன். ஜராசந்தரின் இறப்புக்கு நிகரீடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான்.
விதுரர் புன்னகையுடன் “நன்று” என்றார். சிசுபாலன் தன் பேச்சு அதன் சினத்தை தவிர்த்தால் சிறுவனின் வீம்புபோல ஒலிப்பதை உணர்ந்து மேலும் சினம்கொண்டு காற்றில் சீறும் வாளோசையுடன் சால்வையைச் சுழற்றி தோளில் இட்டபடி இரண்டடிகள் சென்று திரும்பி “அவ்வாறு ஷத்ரிய நாடுகள் எழுந்து அந்த யாதவ இழிமகனின் நகர்களை அழிக்கும்போது அதனுடன் சேர்ந்து உறவு நாடென அஸ்தினபுரியும் அழியும். அதை நினைவில் கொள்ளுங்கள். செயலாற்றாது இருக்கும் உடலுறுப்பு சூம்பும். உயிர் இழந்து அழுகும் இந்நகரம் என்றோ செயலிழந்துவிட்டது. இதன் அழுகல் மணத்தை இத்தெருக்கள் அனைத்திலும் உணர்கிறேன். இதை வீழ்த்த ஒருநாள் வாளுடன் வருவேன்” என்றபின் படியிறங்கிச் சென்றான்.
தன் அறைக்குச் சென்று உடனே கிளம்பி எவரிடமும் விடைபெறாது நகர்விட்டு கிளம்பினான். ஆனால் கோட்டையை விட்டு வெளியே வந்ததுமே உள்ளம் தளர்வடைந்தது. சேதிநாட்டுக்குச் செல்வதைப்பற்றிய உணர்வே கல்லைத்தூக்கி எண்ணங்களின் மேல் வைத்தது போலிருந்தது. ஆனால் புத்துணர்வு மீண்டதும் அனைத்தும் எளிதெனத் தோன்றலாயின. ஜயத்ரதன் மட்டும் ஒத்துழைத்தால்போதும். ஒரு படை எழுந்தால் பிற ஷத்ரியர் வாளாவிருக்கமுடியாது. அது அவர்களுக்கு தங்கள் ஷத்ரியப்படைவீரர் நடுவே தீராப்பழியை ஏற்றிவைக்கும்.
சுதுத்ரிக்கான வழியிலேயே சேதிநாட்டு ஒற்றனொருவனை சந்தித்தான். அவனிடம் சேதி நாட்டுக்கு செய்தி அனுப்பிவிட்டு சுதுத்ரியின் கரைக்குச் சென்று படகில் ஆற்றைக் கடந்து வணிகர் குழு ஒன்றிலிருந்து புதுப்புரவியைப்பெற்று பயணம் செய்தான். சிந்துநிலத்தின் மென்பூழி உடம்பெல்லாம் படிந்து செம்மண்திரிகளாகச் சுருண்டு தொங்கிய தாடியும் தலைமயிருமாக ஏழாம் நாள் சிந்துவின் தலைநகரான விருஷதர்ஃபுரத்தை சென்றடைந்தான்.
சேற்றுப்பாறைக் கற்களை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டிருந்த விருஷதர்ஃபுரத்தின் கோட்டை மண்ணிலிருந்து உந்தி எழுந்ததுபோலிருந்தது. அதன் வாயிலில் அவன் கணையாழியைப்பார்த்த காவலர் அவனை நோக்கித் திகைத்து பின்பு தலைவணங்கினர். அவன் உள்ளே நுழைந்ததுமே அவன் வருகையை அறிவிக்கும் முரசொலிகள் கோட்டைமேல் எழுந்தன. அவன் நகருக்குள் சென்றதும் அவனுக்குப்பின்னால் சற்று தொலைவில் சிந்துவின் காவலர்தலைவன் புரவியில் வந்தான்.
அரண்மனை வாயிலிலேயே அவனை எதிர்கொண்ட ஜயத்ரதன் கைவிரித்து வந்து தழுவிக்கொண்டு “வருக சேதி நாட்டரசே! தாங்கள் முதல் மூறை இந்நகருக்குள் நுழையும்போது அதை ஒரு பெருவிழாவென எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். எதிர்பாராமல் வந்து திகைக்கவைக்கிறீர்கள்” என்றான். அப்புன்னகையும் தழுவலும் சிசுபாலன் உடலை எரியச்செய்தன. சினத்துடன் “நான் இங்கு விருந்து கொண்டாட வரவில்லை சைந்தவரே” என்றான். “நம்முடன் விருந்து கொண்டாடி தோள்தழுவி மகிழ்ந்த ஒருவன் கொல்லப்பட்டிருக்கிறான். இங்கு இருந்து நாம் பேசும் ஒவ்வொரு இன்சொல்லும் அவனுக்கெதிரானது. ஒவ்வொரு உணவுக் கவளமும் அவன் குருதி படிந்தது.”
ஜயத்ரதனின் முகம் இறுகியது. “ஆம் சிசுபாலரே, அச்செய்தியிலிருந்து மீள எனக்கு இரண்டு வாரமாகியது. அந்நாட்களில் இங்கு மழை பெருகி வழிந்து நதிகளில் வெள்ளம் நகர் புகுந்தது. என் படை முகாம்கள் அனைத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இடிந்த இல்லங்களை சீரமைத்து கூரைகளை செப்பனிட்டு முடிப்பதற்குள் கார்த்திகை எழுந்தது. அச்செயல்கள் இல்லையென்றால் ஒருவேளை சினத்தில் மெய்மறந்து படைகொண்டு எழுந்திருப்பேன். அச்செயல்களில் மூழ்கியமையால் என் தலைக்குள் நிறைந்த அனல் சற்று அவிந்தது” என்றான். சிசுபாலன் தோள் தழுவி “வருக!” என்றான்.
சிசுபாலன் அத்தொடுகையையே உடல்விதிர்ப்பென உணர்ந்தான். அக்கையை தவிர்த்து “இன்னும் பிந்தவில்லை சைந்தவரே, இப்போதும் நாம் ஐந்து பேர் எஞ்சியிருக்கிறோம். நாம் குருதிநிகர் கொள்வோம்” என்றான். “துரியோதனரை பீஷ்மரின் ஆணை கட்டுப்படுத்துகிறது என்று செய்தி வந்தது…” என்றான் ஜயத்ரதன். அதை மறித்து உரக்க “இனி அஸ்தினபுரியைப்பற்றிய எப்பேச்சையும் நான் விழையவில்லை” என்றான் சிசுபாலன். “விதர்ப்பத்தின் ருக்மி அனல் தின்று இதுநாள் வரை உயிர்வாழ்கிறார். இங்கு என்னுள்ளும் நஞ்சு நிறைந்திருக்கிறது. நீங்கள் இருக்கிறீர். கூர்ஜரனோ ஒவ்வொரு தருணத்திலும் துவாரகையை வெல்ல சித்தமாக இருக்கிறான். அங்கத்தின் மேல் சினம் கொண்டிருக்கிறான் வங்கன். போதும், நாம் ஐவர் இருக்கிறோம். நாம் படைகொண்டு எழுவோம். நாம் படைகொண்டு எழுந்த பின்னும் நம்முடன் சேராதிருப்பவர்கள் எவரும் ஷத்ரியர்கள் அல்ல என்று அறிவிப்போம். அவர்களுக்கு வேறு வழியில்லை.”
ஜயத்ரதன் “தாங்கள் நீராடி வாருங்கள். இங்கு அவைகூடி நாம் அனைத்தையும் பேசுவோம்” என்றான். சிசுபாலன் “பேசுவதற்கொன்றுமில்லை. என் படைகளை சித்தமாக நிற்கும்படி ஆணையிட்டுவிட்டே இங்கு வந்தேன். தங்கள் படைகள் சித்தமா என்பதையன்றி பிறிதெதையும் நான் விழையவில்லை” என்றான். ஜயத்ரதன் அவன் விழிகளைத் தவிர்த்து “ஜராசந்தன் ஷத்ரியர்களைச் சிறையிட்டு அவர்களை நாகருத்திரனுக்கு பலி கொடுக்கப்போவதாக அறிவித்ததுபோல் நம் தரப்பின் பிழை வேறொன்றுமில்லை. ஒரே செய்தியால் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஜராசந்தன் அரக்கனும் நிஷாதனுமாகிவிட்டான். அவன்பொருட்டு படை கொண்டு செல்ல ஷத்ரியர்களை நாம் அழைப்பது இன்று இயலாது” என்றான்.
அவனை பேசவிடாமல் உரக்க கூவினான் சிசுபாலன் “நாம் படை கொண்டு செல்வோம். போர் நமக்கும் யாதவர்களுக்கும் என்னும்போது ஷத்ரியர்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.” தணிந்த குரலில் சற்றே சலிப்புடன் “தாங்கள் நீராடி வருக!” என்றான் ஜயத்ரதன். அச்சலிப்பை உணராமல் “இதுவே தருணம்… இதை விட்டால் நாம் வீழ்வோம். நம் புகழ் அழியும்…” என்று சிசுபாலன் கூவினான். “ஆம், பேசுவோம்” என்றான் ஜயத்ரதன்.
சிசுபாலன் ஜயத்ரதனின் மாளிகைக்குச் சென்று நீராடி உணவுண்டு முடிக்கையிலேயே களைப்பு மிகுந்து உடல் சரிவதை உணர்ந்தான். எழுந்து மஞ்சத்துக்கு செல்வதற்குள்ளாகவே தலைக்குள் துயில் நிறைந்து எண்ணங்கள் மயங்கி இடமும் காலமும் அகன்றன. வானிலிருந்து மண்ணுக்கு உதிர்வதுபோல் மஞ்சத்தில் விழுந்து புதைந்து புதைந்து செல்வதுபோல் இருளுக்குள் மறைந்தான். பின்பு விழிமணிகள் ஒளிரும் நாகங்கள் நிறைந்த ஆழ் உலகொன்றுக்குள் கால்களில் வேர்களென நாக வளைவுகள் தடுக்க, நாக நெளிவுகள் உடலெங்கும் வழுக்கி இறங்க, குளிர்ந்து நடுங்கியபடி சென்று கொண்டிருந்தான்.
மிகத்தொலைவில் மீண்டும் அக்குரலை கேட்டான். “இவ்வழி! ஆம் இவ்வழிதான்! இவ்வழி!” அவன் “யார் நீ?” என்று உரக்க கூவினான். இருளதிரும்படி அது நகைப்பது தெரிந்தது. “இது மிகக்குறுகலான வழி. ஆனால் வழிகளில் அண்மையானது இதுவே.” அவன் “யார்? யார்?” என்று கூவியபடி கால் தடுக்கி நாக உடலொன்றில் நிலையழிந்து விழுந்தான். நாகங்கள் அவன்மேல் அருவிகள்போல் பொழிந்து வளைத்துக் கொண்டன. நாக நெளிவுகளில் நீச்சலிட்டு எழுந்து கரைநீண்டிருந்த விழுதொன்றைப் பற்றி ஏறி அதுவும் ஒரு நாகம் என்று உணர்ந்து பிறிதொரு ஆலமரத்தை தழுவி அதன் கிளைகளில் ஏறி அதுவும் ஒரு பெருநாகமென்றுணர்ந்தான்.
மிக அப்பால் அக்குரல் “அணுகிவிட்டாய்” என்றது. “யார்? யார் அது?” என்று உரக்க கூவியபடி அவன் விழித்துக்கொண்டான். புலரி ஒளி சாளரத்தினூடாக உள்ளே விழுந்து கிடந்தது. எங்கிருக்கிறோம் என ஒரு கணம் திகைத்தபின் எழுந்து மஞ்சத்தை அறைந்து ஏவலனை அழைத்தான் “எவ்வளவு நேரமாயிற்று?” என்றான். “தாங்கள் நேற்று பிற்பகல் முதல் துயின்றுகொண்டிருக்கிறீர்கள் அரசே. தங்களை எழுப்ப வேண்டாமென்றார் அமைச்சர்” என்றான் ஏவலன். பாய்ந்து எழுந்து “நான் அரசரை பார்த்தாகவேண்டும், உடனே” என்றான் சிசுபாலன். “தெரிவிக்கிறேன்” என்றபடி ஏவலன் விரைந்தான். “என் நீராட்டறை ஒருக்குங்கள்… ஆடைகளை எடுங்கள்…” என்று அவன் இரைந்தான்.
நீராடி உணவுண்டு ஆடைகள் மாற்றிக்கொண்டு அவன் ஜயத்ரதனின் மந்தண அறைக்குச் சென்றபோது அங்கே அவன் அமைச்சர்கள் அனைவரும் இருந்தனர். உள்ளே நுழைந்து முகமன் சொல்லி ஜயத்ரதனை வணங்கியபின் பீடத்தில் அமர்ந்தான். அவன் பேசத்தொடங்குவதற்குள் ஜயத்ரன் “நேற்று அஸ்தினபுரியிலிருந்து விரிவான செய்தி வந்துவிட்டது” என்றான். “அதை தங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு இங்கு அமைச்சர் அனைவரையும் வரச்சொன்னேன். வந்திருப்பது பீஷ்மரின் ஆணை. அது என்னையும் கட்டுப்படுத்தும்.”
ஜயத்ரதனை நோக்கி மூச்சு சீறியபடி எழுந்து “என்ன சொல்கிறீர் சைந்தவரே?” என்றான் சிசுபாலன். “நான் கௌரவர்களின் உறவரசன். விதுரரின் ஆணை தெளிவாக உள்ளது. பீஷ்மரின் சொல் அஸ்தினபுரியை ஆள்கிறது. அதன் துணை அரசுகளையும் உறவரசுகளையும் ஆள்வது அதுவே. அதை மீறினேன் என்றால் நான் முதலில் படை நிறுத்தவேண்டியது அஸ்தினபுரிக்கெதிராக” என்றான் ஜயத்ரதன். “அமைச்சர்களும் அதையே சொல்கிறார்கள்.”
சிசுபாலன் “சிறுமை! இது சிறுமையின் எல்லை!” என்று குரல் உடைய கூச்சலிட்டான். “ஜயத்ரதரே, சைந்தவம் உங்கள் அரசு. இந்த மணிமுடி உங்களுடையது அல்லவா?” என்றான். “ஆம், என் அரசு என்னுடையதாக இருப்பதற்கு அஸ்தினபுரியே அடிப்படை. நீங்கள் அறிவீர்கள், என்னைச் சூழ்ந்திருக்கும் நாடுகள் என்னவென்று. அப்பால் இருக்கிறது காந்தாரம். கூர்ஜரன் இன்று வரை என்னை நண்பனாக ஏற்கவில்லை. சிபிநாடும் சௌவீரர்களும் என்னால் முன்பு வெல்லப்பட்டவர்கள். அஸ்தினபுரியுடனான குருதி உறவே இவர்கள் நடுவே என் கொடி தாழாது எழுந்து பறக்க வைக்கிறது.”
சிசுபாலன் நடுவே புகுந்து பேச கையெடுக்க ஜயத்ரதன் கையை ஆட்டி மறித்து “பொறுத்தருள்க சிசுபாலரே! அஸ்தினபுரியுடன் நிற்பதன்றி எனக்கு வேறு வழியில்லை. என் அமைச்சர்களும் சொல்வது அதுவே” என்றான். மீண்டும் சிசுபாலனை கையமர்த்தி “மகதரின் தழுவல் உங்கள் தோள்களில் இருக்கிறது என்றீர்கள். என் தோள்களிலும் அதுவே உள்ளது. அவருக்கு நான் செய்யும் கடன் ஒன்றுள்ளது, தருணம் வர காத்திருக்கிறேன்” என்றான்.
“காத்திருத்தல்! அது நாய்களின் வழி. நான் சிம்மம். என் பாதை தடைகளற்றது. எவருமில்லை என்றால் நானே சென்று பழி தீர்க்கிறேன்” என்று சிசுபாலன் திரும்பி வாயில்நோக்கி சென்றான். “அமருங்கள் சிசுபாலரே! நாம் பேசுவோம்” என்று ஜயத்ரதன் எழுந்து கை நீட்டியபடி பின்னால் வந்தான். “இனி எவரிடமும் பேசுவதற்கேதுமில்லை” என்றபின் அறைவிட்டு வெளியே சென்றான் சிசுபாலன்.
[ 9 ]
பன்னிருநாட்கள் புரவிமாற்றி பயணம் செய்து சிசுபாலன் விதர்ப்பத்தை சென்றடைந்தபோது உடல் மெலிந்து அடர்ந்த தாடிக்குள் வெறிமின்னும் செவ்விழிகளும் ஓயாது நெறிபடும் பற்களும் முறுகி நெளியும் கைவிரல்களுமாக பித்தனைப்போல் இருந்தான். கார்த்திகைமாதத்துக் குளிரில் வெட்டவெளியில் துயின்று அவன் முகமும் தோள்களும் சுட்ட கனியெனக் கன்றி கருமைகொண்டிருந்தன. வரதா ஐப்பசி மழையின் சேற்றுக்கலங்கல் குறையாது சுழித்தோடிக்கொண்டிருக்க மென்சதுப்பாகிக் கிடந்த குதிரைச்சாலையில் அவன் காற்றில் தளர்ந்து நீந்தும் வலசைப்பறவை போல சென்றான்.
விதர்ப்பத்தின் தலைநகர் கௌண்டின்யபுரியைச் சூழ்ந்து வரதாவின் புதுச்சேறு வற்றி அலையலையாக படிந்திருந்தது. அவ்வண்டலில் வெற்றிலையும் காய்கறிகளும் பயிரிடும் உழவர்கள் திரும்பிப் பறக்கும் தாடியுடன் புரவியில் விரைந்துசெல்லும் சிசுபாலனை வியந்து நோக்கினர். ஒளி பளபளத்த நீர்ப்பரப்பின் பகைப்புலத்தில் அவன் நிழல் என கடந்துசென்றான்.
கோட்டைவாயிலில் அவனது கணையாழியைக் கண்ட கோட்டைக்காவலன் மும்முறை அதை நோக்கிவிட்டு உள்ளே சென்று தலைவனை அழைத்துவந்தான். கணையாழியை மீண்டும் நோக்கிய தலைவன் “முனிவரே தாங்கள்?” என்றான். அவன் பொறுமையிழந்து கையசைத்து “நான் சேதி நாட்டரசன் சிசுபாலன்” என்றான். அதற்குள் உள்ளிருந்து வந்த முதிய காவலன் அவனை அடையாளம் கண்டு “அரசே… தாங்கள் இக்கோலத்தில்…” என்றபின் உள்திடுக்கிடல் ஒன்றை அடைந்து தலைவணங்கினான். “உங்கள் அரசரை நான் உடனே பார்க்க வேண்டும்” என்றான் சிசுபாலன்.
முதியதலைவர் “வருக அரசே!” என்று தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றார். சிசுபாலன் வருகையை அறிவிக்கும் முரசுகள் கௌண்டின்யபுரியின் கோட்டையில் முழங்கின. மழை முடிந்தமையால் கௌண்டின்யபுரியின் கற்பலகைக் கூரையிட்ட வீடுகள் அனைத்துக்கு மேலும் புதுமலர்களோடு செடிகள் அடர்ந்திருந்தன. படிப்படியாக ஏறிச்சென்ற நகரத்தின் ஏணிபோன்ற பாதையில் புரவியில் சென்று கொண்டிருந்தபோது “இங்கு இப்போதுதான் புதுவெள்ளவிழா முடிந்தது. அன்னையருக்கான விழவு அணுகுகிறது” என்றார் காவலர்தலைவர். சிசுபாலன் பற்களைக்கடித்து பேசவேண்டாம் என்று கைகாட்டினான். சொற்கள் அனைத்தும் கூரிய முள் போல் உடலைத் தொட நோய் கண்ட யானை போல் அவன் உடல் ஆங்காங்கே நடுங்கிக் கொண்டிருந்தது.
மாளிகை முற்றத்தில் அவனை எதிர்கொண்டழைத்த ருக்மி அவன் தோற்றத்தைக் கண்டதும் திகைத்தான். அருகே வந்து கைகளைப்பற்றிக்கொண்டு “சிசுபாலரே தாங்கள்…” என்றான். சிசுபாலன் “உன்னிடம் பேச வந்தேன். முறைமைகள் முகமன்கள் எதுவும் தேவையில்லை. இங்கேயே அமர்ந்து பேசுவதென்றாலும் அவ்வாறே” என்றான். ருக்மி “அவைக்கு வராது பேசலாகாது அரசே. உணவுண்டு இளைப்பாறுங்கள். பேசுவோம்” என்றான். “உணவும் இளைப்பாறலும் இப்போதில்லை. உன் சொல் கேட்ட பின்னரே இந்நகரில் நீர் அருந்துவதா என்று நான் முடிவெடுக்க வேண்டும்” என்றான் சிசுபாலன்.
ருக்மி “அரசே, நான் என்றும் தங்கள் நண்பன். சேதிநாட்டு அரண்மனையில் பல நாள் விருந்துண்டவன். என் நகரில் நீர்அருந்துவதில் உங்களுக்கென்ன தடை?” என்றான். “ஆம், அருந்துகிறேன். வரதாவின் நீரனைத்தையும் குடித்து வற்றச்செய்கிறேன். ஆனால் அதற்குமுன் உன் சொல் ஒன்று போதும்” என்றான் சிசுபாலன். “அதைக் கேட்காது என்னால் எதையும் உளம்கொள்ள முடியாது… சொல்! இப்போதே பேசிவிடுவோம்.”
அருகே நின்ற அணுக்கரை ஐயத்துடன் நோக்கிவிட்டு “வருக!” என்று ருக்மி சிசுபாலனை அழைத்துச் சென்று தன் அறைக்குள் நுழைந்தான். முன்னரே அங்கு இருந்த அமைச்சர்களும் படைத்தலவர்களும் அவைக்குள் நுழைந்த சிசுபாலன் தோற்றத்தைக் கண்டு திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கினர். அரியணைக்கு அருகே போடப்பட்ட பீடத்தில் அமர்ந்து கால் மேல் கால் வைத்து “எந்த முகமனும் தேவையில்லை. சொற்கள் சலிப்பூட்டுகின்றன. நான் கோர விழைவது ஒன்றே. இந்திரப்பிரஸ்தத்தின் மேல் படை கொண்டு செல்ல விதர்ப்பம் என்னுடன் துணை நிற்குமா?” என்றான்.
ருக்மி பேசுவதற்குள் தலைமை அமைச்சர் “சேதிநாட்டரசரே, விதர்ப்பம் இன்னும் முடி மாற்றம் செய்யவில்லை. பீஷ்மகரே இந்நாட்டின் அரசர். முடிவெடுக்கவேண்டியவர் அவரே” என்றார். சிசுபாலன் பாய்ந்தெழுந்து “அவ்வண்ணமெனில் நான் அவரிடம் பேசுகிறேன். படைபொறுப்பற்ற எவரிடமும் ஒரு சொல்லும் பேசுவதற்கில்லை எனக்கு” என்றான். “அமருங்கள் அரசே, நான் பேசுவதை மட்டும் கேளுங்கள். ஒருசில சொற்கள்தான்… கருணைகூர்ந்து என் உரையை கேளுங்கள். அமருங்கள்” என்று ருக்மி வேண்டினான்.
“உன் முடிவு என்ன? உன் தந்தைக்கு முன் எழுந்து நின்று என்னுடன் படை கொண்டு வருவதாக அறிவிக்க நீ சித்தமா? அதைமட்டும் சொல்” என்றான் சிசுபாலன். “சிசுபாலரே, இன்று பாரதவர்ஷத்தில் நிகழ்வதென்ன என்று தாங்கள் அறியாதிருக்கிறீர்கள். விடுவிக்கப்பட்ட ஷத்ரியர் அனைவரும் ராஜசூயத்திற்கு ஆநிரை அளித்துவிட்டனர். அர்ஜுனன் வடக்கும் பீமன் கிழக்கும் நகுல சகதேவர்கள் தெற்கும் தருமன் மேற்கும் அபிமன்யு வடகிழக்குமாக சென்று பாரதவர்ஷத்தின் அனைத்து அரசரிடமிருந்தும் ஆநிரையும் திரையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ருக்மி.
“இம்மாத இறுதிக்குள் ராஜசூயம் நிகழும். அதை தடுக்கும் வல்லமை உங்களுக்கோ எனக்கோ இல்லை. இன்று நம்முடன் இருப்பவர் மிகச்சிலரே. பாரதவர்ஷம் அவர்களின் காலடியில் விழுந்துவிட்டது. அதுதான் உண்மை” என்று சொன்ன ருக்மியைத் தடுத்து வெறிக்குரலில் “பாரதவர்ஷம் விழவில்லை மூடா! எண்ணிச் சில கோழைகள் விழுந்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஒரு ஷத்ரியன் வாளெடுத்து எதிர்நின்றால் இவர்கள் சரிந்திருக்க மாட்டார்கள்” என்று சிசுபாலன் ஓசையிட்டான்.
“சரியாதிருக்க வழியில்லை” என்றான் ருக்மி. அவனுக்கும் சினம் எழத்தொடங்கியது. “தனஞ்செயன் அந்தர்கிரி, வகிர்கிரி, உபகிரி என்னும் மலைநாடுகளை மூன்று நாட்களில் வென்றிருக்கிறான். உலூக நாட்டின் பிரஹந்தனை அரை நாளில் வென்றான். உலூகத்தைக் கடந்து சென்று மோதாபுரம் வாமதேவம் சுசங்குலம் என்னும் ஷத்ரியக் குறுநாடுகளை வென்றான். பஞ்சகர்ணத்தின் தலைநகர் தேவப்பிரஸ்தத்தில் அவன் நிலைகொண்டபோது அருகிலிருந்த அத்தனை நாடுகளிலிருந்தும் அரசர்கள் தங்கள் கன்றுகளுடன் பட்டத்து இளவரசர்களை அவனுக்கு அனுப்பிவைத்தனர்.”
“கனி உதிர்வது போல நாடுகள் அவன் கால்களில் உதிர்கின்றன. ஒரு வெற்றி பிற வெற்றியை உறுதி செய்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் வெல்ல முடியாதவர்கள் என்னும் எண்ணம் பாரதவர்ஷத்தில் பரவுகிறது. அது அவர்களின் படை செல்வதற்கு முன்னரே சென்றுவிடுகிறது” என்று ருக்மி சொன்னான். “கேளுங்கள் அவர்களின் வெற்றிச்செய்தியை. சொல்லுங்கள் மாதவரே!” என்று அமைச்சரிடம் சொன்னான். மாதவர் “விதேகநாட்டு கண்டகர்களை பீமன் வென்ற செய்தி நேற்றுமுன்நாள் வந்தது. இன்று இதோ புளிந்த நாட்டின் ஒருவயிற்று அரசர்களான சுகுமாரன் சுமித்ரன் இருவரையும் வென்றதாக ஓலைவந்துள்ளது.”
படைத்தலைவரான கஜசேனர் “சகதேவன் செல்வதற்குள்ளாகவே சூரசேனரும் மச்சநாட்டரசரும் ஆகொடைக்கு ஓலை அனுப்பிவிட்டனர். நிஷாதர்களின் கோசிருங்கத்தை அவன் இன்று சென்றடைந்துள்ளான். அவன் செல்வதற்குள்ளாகவே அவர்கள் மலையை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். சகதேவனின் படைத்தூதன் தெற்கே கடல் எல்லைவரை சென்றதாகவும் சோழர்களும் பாண்டியர்களும் கூட ஆநிரை அளிப்பதாக ஒப்புக்கொண்டு ஓலையனுப்பியிருக்கிறார்கள் என்றும் செய்தி வந்துள்ளது” என்றார்.
பயிற்சி செய்து வைத்திருந்தவர்போல மாதவர் தொடர்ந்தார். “நகுலன் மேற்கே ரோஹீதக நாட்டு அரசர்களான மத்தரையும் மயூரரையும் வென்றான். சைரீஷத்தை வென்றபின் ஆக்ரோசன் ஆளும் மகோதத்தை நோக்கி சென்றுள்ளன அவன் படைகள்.” ருக்மி “இதுவரை இதைப்போல பாரதவர்ஷத்தில் நடந்ததில்லை. ஷத்ரியர் எங்கும் ஒன்றிணையவில்லை. அசுரரும் நிஷாதரும்கூட ஒருங்குகூடவில்லை. நேற்று ஒரு சூதன் இங்கு பாடினான், இருளில் வெடிக்கும் எரியம்பின் கதிர்கள் போல இந்திரப்பிரஸ்தத்தில் இருந்து பாண்டவர்கள் பாரதவர்ஷத்தில் பரவுகிறார்கள் என்று… இப்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.”
வாள் காற்றைக்கிழிக்கும் ஒலியுடன் உறுமியபடி சிசுபாலன் எழுந்தான். “செய்வதற்கென்னவென்று நான் அறிவேன். அதை செய்கிறேன். விதர்ப்பரே, நீங்கள் என்ன இறப்பையா அஞ்சுகிறீர்கள்? அவ்வண்ணம் அவர்கள் வென்று செல்வார்கள் என்றால் அவர்கள் நேர் நின்று நெஞ்சுகொடுப்பதற்காவது இங்கே ஷத்ரியர் வேண்டாமா? யாதவ கீழ்மக்களிடம் எதிர்ப்பின்றி பணிந்தனர் ஷத்ரியர் என்றால் நமது கொடி வழிகள் நாணுவர்” என்றான். ருக்மி “ஆம், ஆனால்…” என்று சொல்ல சிசுபாலன் கையசைத்து “வஞ்சம் தீர்ப்பதெற்கென்று சிவருத்ரனிடம் ஏழு வரங்கள் பெற்று அனல் வடிவானவர் நீங்கள் என்று பாடியலைகிறார்கள் வீணர்களாகிய சூதர்கள். நீங்களோ இங்கு அமர்ந்து கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.
ருக்மி “நான் என் வஞ்சத்திற்க்காக இக்குடிகளை களம் நிறுத்த விரும்பவில்லை. என் தந்தையின் ஆணைக்கு அப்பால் இங்கிருந்து படைகளை கிளம்பவும் என்னால் முடியாது” என்றான். “நன்று. நான் கூரஜரத்துக்கும் மாளவத்துக்கும் செய்தியனுப்பியிருந்தேன். அவர்கள் அஞ்சிப்பின்னடைந்த போது எஞ்சிய உங்களிடம் மட்டும் ஒரு சொல் கேட்க வேண்டுமென்று எண்ணினேன். போதும், நிறைவுற்றேன்” என்றபடி திரும்பி நடந்தான் சிசுபாலன்.
“சிசுபாலரே, என் நகர் நுழைந்தபின் ஒரு வாழ்த்தும் சொல்லாமல், ஒரு வாய் நீரருந்தாமல் கிளம்புகிறீர்கள். இது நீங்கள் எனக்கிழைக்கும் பிழை” என்றான் ருக்மி. திரும்பிப்பாராமல் “என் குடிகள் இனி இந்நகரில் நீரருந்தாது” என்றபடி சிசுபாலன் கௌண்டின்யபுரியின் சிற்றவை விட்டு வெளி வந்தான். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த தன் புரவியை நோக்கி சென்று ஒரே தாவில் அதன் மேல் ஏறி சவுக்கைச் சுழற்றி அதை அறைந்தான். பேய் கொண்டது போல அது கனைத்து குளம்புகள் தடதடக்க முற்றத்தைக் கடந்து நகர் தெருக்களில் இறங்கி அதன் படித்தட்டுகளினூடாக பாய்ந்து சென்றது.
[ 10 ]
உபாசனையால் வெறியாட்டெழுந்த இருட்தெய்வம் ஒன்றை தன் மேல் ஏற்றிக் கொண்டவன் போல சிசுபாலன் புரவியிலேயே சேதி நாட்டை வந்தடைந்தான். வேத்ராவதியில் தேன் நிறத்தில் வெள்ளம் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஓடைகள் சிற்றருவிகளாக வேத்ராவதிக்குள் விழுந்த ஓசையை கேட்டபடி நதிக்கரை மேட்டில் அமைந்த சாலையில் அவை தன் புரவியின் குளம்போசை சூழ்ந்து துரத்திவர விரைந்தான்.
சூக்திமதியின் கோட்டைக்காவலர்கூட முதலில் அவனை அடையாளம் காணவில்லை. புரவியில் இருந்தபடியே அவன் உரக்க “வாயிலை திறவுங்கள்” என்று ஆணையிட்டபோது “யார் அது?” என்றபடி சினந்த படைவீரன் வெளியே வந்தான். “யாரது, பத்ரரே?” என எட்டிப்பார்த்த காவலர்தலைவனை நோக்கி “அடேய், திற கதவை!” என்றான் சிசுபாலன். அக்குரலை அடையாளம் கண்டு உடல் அதிர “வாழ்க அரசே!” என்றான் காவலர்தலைவன். ஏழெட்டுபேர் ஓடிவந்து திட்டிவாயிலைத் திறந்து அவனை உள்ளே விட்டபின் ஓடி மேலே சென்று முரசுகளை ஒலிக்க வைத்தார்கள்.
மெலிந்து கடையெலும்பு கட்டம் புடைத்து, விலா எலும்புகள் நிரைவகுத்த வெண்புரவி தானும் கொடுந்தெய்வம் ஒன்றால் நிறைக்கப்பட்டதுபோல் கனைத்தபடி சூக்திமதியின் கருங்கல் பாளங்கள் பரப்பப்பட்ட தெருவில் குளம்போசை பெருகி உடன் வர ஓடியது. சேதி நாட்டு மக்கள் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் ஓடிச்சென்று மொய்த்து குழல்பறக்க தாடி கொந்தளிக்க சிதையிலிருந்து எழுந்து உடல் பற்றி எரியச்செல்லும் சாக்தனைப்போல் கடந்து சென்ற சிசுபாலனை பார்த்தனர்.
தன் அரண்மனைக்குச் சென்று புரவியிலிருந்து இறங்கி இடைநாழியை அவன் அடைவதற்குள் அமைச்சரும் படைத்தலைவரும் அவனை சூழ்ந்தனர். அவன் எவர் விழிகளையும் பார்க்காமல் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைத்துச்செய்திகளுடன் என்னை வந்து பாருங்கள்” என்றபடி நடந்தான். பதைப்புடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவன் மாடிக்குச் சென்று தன் அறையில் அமர்ந்து ஏவலன் கொண்டு வந்த இன்கூழை வாங்கி அருந்தி கலத்தை அப்பால் வைத்துவிட்டு “எங்கே அமைச்சர்கள்? எங்கே படைத்தலைவர்கள்?” என்று இரைந்தான்.
அஞ்சியபடி அறைக்குள் வந்த முதன்மை அமைச்சர் நிஸ்ஸீமரிடம் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? வந்த செய்திகள் என்னென்ன?” என்றான். அவர் மேலும் பணிந்து “ஒவ்வொரு நாளும் வருபவை பாண்டவர்களின் திசை வெற்றிகளின் செய்திகள்தான், அரசே. நேற்று வடதிசையில் தன் போர்ப்பயணத்தை முடித்து அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தம் திரும்பத் தொடங்கிவிட்டான். இமயமலையின் மேல் வெண்பனியில் உறையும் கிம்புருடநாட்டை வென்றான் என்றும் அதன் அரசன் துருமபுத்திரனை கப்பம் கட்டச்செய்தான் என்றும் சொல்கிறார்கள்” என்றார்.
“அதன்பின் யட்சர்களால் காக்கப்படும் ஹாடகம் என்னும் பனிநாட்டினர் அவனை எதிர்க்காமலேயே ஏற்றனர். ரிஷிகுல்யம் என்னும் நூற்றெட்டு கால்வாய்கள் ஓடும் அந்நிலத்தையும் அவை ஊறி எழும் மானசரோவரம் என்னும் நீலஏரியையும் அவன் வென்றான் என்று அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் சொல்கிறார்கள். நிஷதம், இலாவிரதம் ஆகிய மலைநாடுகளைக் கடந்து அவன் கைலாயமெனும் மேருவைக் கண்டு மீண்டான் என்கிறார்கள். அவன் வரவை இந்திரப்பிரஸ்தம் நேற்றுமுதல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏழுநாட்களில் அவன் நகரணையக்கூடும்.”
“பீமன் குமாரவிஷயத்தின் அரசன் சிரேணிமானை வென்றான் என்னும் செய்தி வந்தது. கோசலத்தையும் மல்லநாட்டையும் அவன் முன்னரே வென்றமை தெரிந்திருக்கும். விந்தியனைக்கடந்து சென்ற சகதேவனும் பெரும்பொருளுடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். நகுலன் மேற்கிலிருந்து சகரர்களையும் யவனர்களையும் வென்று மீண்டு வந்துகொண்டிருக்கிறான். அரசே, பெரும்பாலான இடங்களில் போர் நிகழவேயில்லை. எல்லையில் அவர்களின் படைகளை சந்தித்து சிறியதொரு முறைமைப் போருக்குப்பின் ஷத்ரியர்கள் சரணடைகிறார்கள். பிரக்ஜ்யோதிஷத்தின் பெருமன்னனும் நரகாசுரனின் வழி வந்தவனுமாகிய பகதத்தனே அர்ஜுனன் முன் பணிந்து விட்டான் என்கிறார்கள்.”
பெருமூச்சுடன் தரையை நோக்கியபடி சிசுபாலன் அமர்ந்திருந்தான். “கூர்ஜரனும் சைந்தவனும் மாளவனும் இந்திரப்பிரஸ்தத்திற்கு வில்லனுப்பிவிட்டனர் என்று செய்திவந்தது. இனி விதர்ப்பம் என்ன செய்யும் என்பதே ஐயம்” என்றார் அமைச்சர். “விதர்ப்பன் வில்லனுப்பியிருப்பான் இந்நேரம்” என்றான் சிசுபாலன். “ஆம், பீஷ்மகரின் தூதனை முன்னரே பாஞ்சாலி சந்தித்ததாக செய்தி வந்தது” என்றார் நிஸ்ஸீமர்.
சிவந்த விழிகளுடன் ஒவ்வொருவரையும் கடந்து அப்பால் பார்ப்பவன் போல சிசுபாலன் நோக்கியிருந்தான். அமைச்சர் சில முறை தயங்கி பின்பு “சேதிநாட்டுக்கும் செய்தி வந்துள்ளது, அரசே” என்றார். சிசுபாலன் விழிகள் சற்றே தூக்கி நோக்க நிஸ்ஸீமர் “நாம் வில்லனுப்பி ராஜசூயத்தை வணங்க வேண்டும் என்றும், நம் அரசும் குடிகளும் விழவுக்குச் சென்று அங்கு சிறப்பு கொள்ள வேண்டும் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் அரசியும் அழைத்திருக்கிறார்கள்” என்றார். அவன் உடல் மெல்ல மெய்ப்பு கொள்வதைக் கண்டு அவர் திரும்பி தன்னருகே நின்றிருந்த படைத்தலைவர் மத்தசேனரை நோக்கினார்.
பெருமூச்சுடன் கலைந்து நிமிர்ந்து தாடியை கையால் அள்ளிப்பற்றி முறுக்கியபடி “நமது படைகள் ஒருக்கமா?” என்றான் சிசுபாலன். மத்தசேனர் சற்று அதிர்ந்து அமைச்சரை பார்த்தபின் “படைகள் எப்போதும் போல சித்தமாக உள்ளன, அரசே. நமக்கு நிகரான அரசுடன் எப்போதும் களம் நிற்க முடியும்” என்றார்.
அச்சொல்லின் பொருளை உடனே உணர்ந்து சினந்து முகம் சுளிக்க “நிகரான அரசுடன் மட்டும் களம் நிற்பதற்கா நாம் படைதிரட்டி வைத்துள்ளோம்?” என்று சிசுபாலன் கூவினான். அவன் சினமடைந்ததும் மத்தசேனர் அமைவடைந்தார். “ஆம், அதுவே அரசமுறை. நாடுகள் தற்கொலை செய்துகொள்வதில்லை“ என்றார். “என்ன சொல்கிறாய், மூடா? என்று கூச்சலிட்டபடி சிசுபாலன் எழுந்து அவரை அறைய கை ஓங்கினான். அவர் தலைவணங்கி அசையாமல் நிற்க அவன் கை தாழ்ந்தது.
நிஸ்ஸீமர் “அரசர்கள் மக்களை காக்கும் பொருட்டு படைக்கலம் ஏந்த வேண்டும், அரசே. அரசனைக் காக்கும் பொருட்டு படைக்கலம் ஏந்தும் பொறுப்பு மக்களுக்கில்லை” என்றார். அவர் விழிகளை உற்று நோக்கியபடி சிசுபாலன் சற்று நேரம் நின்றான். பின்பு தளர்ந்து பீடத்தில் அமர்ந்தான். “அரசே, பேரரசர் தமகோஷர் வாழும் வரை இந்நாடு அவர் சொல்லுக்கே முதன்மையாக கட்டுப்பட்டது” என்றார்.
அவன் சிவந்து கலங்கிய விழிகளை தூக்கிப்பார்த்தான். “பேரரசர் இப்போது நாம் இந்திரப்பிரஸ்தத்துடன் போரிட ஒப்பவில்லை. என்றும் நாம் அந்நாட்டுடன் போரிடும் நிலையை அடையப்போவதுமில்லை” என்றபின் நிஸ்ஸீமர் தலைவணங்கி வெளியே சென்றார். மத்தசேனரும் தலைவணங்கி வெளியேறினார்.
[ 11 ]
சிசுபாலன் தமகோஷரின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஏவலன் முகத்தில் அவனை முன்னரே எதிர்பார்த்திருந்த இயல்பு தெரிந்தது. அவன் வருகையை அறிவித்து ஓசையின்றி தலைவணங்கி அவனை உள்ளே செல்லும்படி சொன்னான். அவன் உள்ளே சென்ற ஓசையைக்கேட்டு விழிதிருப்பிய தமகோஷர் அவன் விழிகளை சந்தித்ததும் உடனே திரும்பிக்கொண்டார். அவர் அருகே நிஸ்ஸீமர் நின்றிருந்தார். சிசுபாலன் உரக்க “நான் தந்தையிடம் தனியாக பேச விழைகிறேன்” என்றான். அவர் தலைவணங்கி விலகிச்சென்றார்.
“வணங்குகிறேன், தந்தையே” என்றான் சிசுபாலன். அவர் “நலம் திகழ்க!” என்றார். அவன் அமர்ந்து “நான் தங்களிடம் பேச வந்திருப்பதென்ன என அமைச்சரே இதற்குள் சொல்லியிருப்பார்” என்றான். தமகோஷர் தலையசைத்தார். “தந்தையே, நான் போர்வெறியுடன் பேசவில்லை. வெற்றியோ சிறப்போ அல்ல என் இலக்கு. நான் ஷத்ரியன் என்று காட்டவிரும்புகிறேன்” என்றான். “ஏன்? உன் அன்னை யாதவகுலப்பெண் என்பதனாலா?” என்றார் தமகோஷர்.
கைகால்கள் அனைத்திலிருந்தும் ஒரே கணத்தில் உயிர் அகன்றுவிட்டதைப்போல சிசுபாலன் உணர்ந்தான். சிலகணங்களுக்கு சிந்தையே எழவில்லை. எண்ணம் மீண்டபோது தன் நெஞ்சின் இடித்தலை கேட்டான். பெருமூச்சுடன் “தந்தையே…” என்றபோது உரிய சொற்கள் நாவிலெழவில்லை. மீண்டும் பெருமூச்சுவிட்டான்.
கசப்பு நிறைந்த முகத்துடன் தமகோஷர் “நீ சிந்துவுக்குச் சென்ற செய்தியை கேட்டபோதே இதை நான் உன்னிடம் சொல்ல எண்ணினேன். ஓலையில் எழுத முடியாது, ஆகவே இதை சொல்கிறேன்” என்றார். “மூடா, எந்த நம்பிக்கையில் நீ அஸ்தினபுரி சென்றாய்? எப்படி சைந்தவனையும் விதர்ப்பனையும் சென்று நோக்கினாய்? உன்னை அவர்கள் எப்படி பார்த்திருப்பார்கள் என்று உன்னால் காணமுடியவில்லை என்றால் நீ எவ்வகையான சிற்றறிவாளன்?”
சிசுபாலன் “நான்...” என்றபின் எச்சிலை விழுங்கி “நான் அவ்வாறு உணரவில்லை” என்றான். “உணர்கிறாய். இல்லையேல் உனக்கு மட்டும் ஏன் இந்த பதற்றம்? மகதன் உனக்கு மட்டும்தான் நண்பனா? அஸ்தினபுரியின் அரசனுக்குத்தான் அவன் முதன்மைநண்பன். அவனுக்கு இல்லாத உளத்தவிப்பு எதற்கு உனக்கு?” என்று தமகோஷர் சுளித்த முகமும் வெறுப்பு நிறைந்த விழிகளுமாக சொன்னார். “நான் உன் உள்ளத்தை என் உள்ளங்கை வரிகளென காண்கிறேன்.”
சிசுபாலனின் உடல் அவனை மீறி ஆடிக்கொண்டிருந்தது. விரைந்து சரல்பாறைகள் மேல் ஓடும் தேரிலிருப்பவனைப்போல் உணர்ந்தான். அதை அவர் அறியலாகாதென்பதற்காக தன் தோள்களைக் குறுக்கி தசைகளை இறுக்கி பற்களைக் கடித்து அமைத்து விழிகளை அவர்மேல் தைத்து நிறுத்தினான். அவன் உள்ளத்தையும் உடலையும் முற்றிலும் அறிந்தவராக அவர் பேசிக்கொண்டே சென்றார்.
“அஸ்தினபுரியின் சகுனியும் துரியோதனனும் உன்னை மட்டும் மந்தணச்சொல்லாடலுக்கு எப்போதேனும் அமரச்செய்திருக்கிறார்களா? அறிவிலி! அவர்கள் தூய ஷத்ரியர். ஜயத்ரதன் அவர்களின் தனியவையில் அமர்வான். நீ அமரமுடியாது. அஸ்வத்தாமன் அமரமுடியாது.” அவர் தன் விழிகளை ஊன்றி சொன்னார் “சகுனியின் எண்ணம் எதுவாக இருக்கும்? ஜராசந்தன் தூய ஷத்ரியன் அல்ல. அரக்கர் குலத்தில் வளர்ந்தவன். ஒருவேளை அவன் அரக்கனாகவே இருக்கவும் வாய்ப்புண்டு. ஷத்ரியர்களை பலிகொடுக்கத் துணிந்தவன். அவனை பாண்டவர் கொன்றால் அது நன்றே என்றுதான் அவர்கள் எண்ணினர். அதன்பொருட்டே அஸ்தினபுரி மகதத்திடம் படைக்கூட்டை தவிர்த்தது. இன்று மாளவமும் சிந்துவும் கூர்ஜரமும் விதர்ப்பமும் போர்தவிர்ப்பதும் அதனால்தான்.”
“உன் கொந்தளிப்புக்கு அடிப்படை என்ன? அறிவிழந்தவனே, நீ உன்னை மகதனுடன் இணைத்துக்கொள்வதா? அவன் உன் தோள்தழுவினான் என்பதா? யாரிடம் சொல்கிறாய்? மகதன் எப்போதேனும் உன்னை ஒரு பொருட்டென எண்ணினானா? அவன் அஸ்தினபுரியின் அரசனையும் இந்திரப்பிரஸ்தத்தின் இரண்டாமவனையும் மட்டுமே ஆணென எண்ணியிருப்பான். உன்னை அல்ல. அதை அறியாத மூடனல்ல நான்.”
“இல்லை, இதை வேண்டுமென்றே என்னை வருந்தச்செய்வதற்காக சொல்கிறீர்கள்... என்னை சொற்களால் தாக்குகிறீர்கள்” என்று கூச்சலிட்டபடி சிசுபாலன் எழுந்தான். “அப்படி நம்பி செல்வதென்றால் செல். ஆனால் அது உண்மை” என்றார் தமகோஷர். “நீ மகதனிடம் உன்னை அடையாளம் காணவில்லை. நீ அடையாளம் காண்பது பாண்டவர்களிடம்... ஏனென்றால் நீயும் அவர்களைப்போல யாதவ அன்னைக்கு ஷத்ரியனின் குருதியில் பிறந்தவன். மாற்றுக்குறைவான ஷத்ரியன். களம் வென்று உன் முதன்மையை நிலைநாட்டும் கனவுகொண்டிருந்தாய். அது இன்றுவரை நிகழவில்லை. இதோ உன்னைப் போன்றவர்கள் வென்று செல்கிறார்கள். சத்ராஜித் என தருமன் அங்கே அரியணை அமர்ந்து பாரதவர்ஷத்தின் கொடியை சூடப்போகிறான். அதுதான் உன்னை நிலையழியச்செய்கிறது... இல்லை என்று என் விழிகளைநோக்கி சொல்... சொல் பார்ப்போம்.”
“இல்லை! இல்லை! இல்லை!” என்று சிசுபாலன் வீரிட்டான். “என்னை சிறுமைசெய்து தளர்த்த எண்ணுகிறீர்களா? அது நடவாது. நான் ஷத்ரியன். அதை என் ஒவ்வொரு துளிக் குருதியிலும் உணர்பவன் நான்...” தமகோஷர் இகழ்ச்சியுடன் இதழ்களை வளைத்து “அவ்வாறெனில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். சிசுபாலன் நெஞ்சை அறைந்து “நான் கேட்கவந்தது ஒன்றே. இந்நாட்டின் மணிமுடிக்குரியவன் நான் அல்லவா? இங்கே என் தன்மதிப்பிற்கு சற்றேனும் இடமுள்ளதா?” என்று கூவினான்.
“ஷத்ரியர்களுக்கு என தன்மதிப்பு ஏதுமில்லை” என்றார் தமகோஷர். “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளைக் கண்டு கன்று அளித்து வணங்கும் ஷத்ரியர் அனைவரும் கோழைகள் என்றும் நீ மட்டும் வீரம் சிறந்த பெருமகன் என்றும் எண்ணிக்கொள்கிறாயா? அவர்கள் தங்கள் நாட்டின் மக்களுக்கு காவல் நிற்கிறார்கள். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னையைப்போன்றவன் நல்ல ஆட்சியாளன். அன்னை தன் உயிரை மட்டுமல்ல கற்பையும் குலத்தையும் விண்ணுலகையும்கூட தன் குழந்தைகளின்பொருட்டு இழப்பாள்.”
சிசுபாலன் சட்டென்று அனைத்து ஆற்றலையும் இழந்து உளம்சோர்ந்து கண்ணீர் மல்கினான். “தந்தையே, எனக்கு பன்னிருபடைப்பிரிவுகளை மட்டும் கொடுங்கள். நான் இந்திரப்பிரஸ்தத்திடம் போரிடுகிறேன். உயிர்துறக்கிறேன்” என்று உடைந்தகுரலில் சொன்னான். “இங்கே அடங்கியிருந்தால் என்னால் வாழமுடியாது. பித்தனாகிவிடுவேன். என்னை ஆண்மகனாக சாக விடுங்கள்...” தமகோஷர் “இல்லை, படைப்பிரிவுகள் என்பவை சேதிநாட்டு வீரர்களால் ஆனவை. அவர்களின் குருதிக்கு நான் பொறுப்பு. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தின் பொருட்டு அன்றி அவர்களை களம்காணச்செய்ய ஒப்பமாட்டேன்” என்றார்.
“தந்தையே…” என கைகளை விரித்து சிசுபாலன் கண்ணீருடன் கேட்டான். “நான் வாழமாட்டேன். பித்தனாகிவிடுவேன்.” தமகோஷர் “ஆம், அது தெரிகிறது. ஆகவே இதுதான் உனக்கான தெரிவு. நீ இந்த இக்கட்டை எப்படி கடந்துவருகிறாய் என்று பார்க்கிறேன். கடந்துவந்தாய் என்றால் மட்டுமே நீ எனக்குப்பின் இந்நாட்டை ஆளும் தகுதிகொண்டவன். இது மூதாதையர் அமைத்த அறைகூவல் என்றே கொள்கிறேன்” என்றார். சிசுபாலன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விம்மினான். விரல்கள் வழியாக புண்ணுமிழ் குருதி என விழிநீர் வழிந்தது.
தமகோஷர் மிக அகலே என வெறுமனே நோக்கியிருந்தார். அவன் தான் அழுவதை அவர் பார்ப்பதாக உணர்ந்ததுமே கூசித் துடித்து மீண்டான். அழுததை அவனே உணர்ந்து உருவான சீற்றத்துடன் “நான் ஷத்ரியனாகப் பிறந்தேன், ஷத்ரியனாகவே வாழ்வேன்” என்றான். “ஷத்ரியர்கள் அழுவதில்லை” என்றார் தமகோஷர். அவன் பீடத்தின் இருகைகளையும் அறைந்தபடி எழுந்து “என்ன செய்யவேண்டும்? உங்கள் தலையை வெட்டி இக்கோட்டைவாயிலில் வைத்துவிட்டு சேதிநாட்டை ஆளவேண்டுமா? படையெழும் ஆணையை பிறப்பிக்கவேண்டுமா? செய்கிறேன். செய்துகாட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்றான்.
“செய்!” என்று அவர் சற்றே பல்தெரிய புன்னகைத்து சொன்னார். “உன் இடையில் வாள் இருக்கிறது. ஆனால் உன்னை இக்குடிகள் அரசனாக ஏற்றாகவேண்டுமென்பதில்லை. ஷத்ரிய அரசர்கள் உன்னை எதிர்த்து எழவும் ஆகும். ஏனென்றால் நீ யாதவப் பெண்ணின் மைந்தன். என் சொல்லால் மட்டுமே நீ ஷத்ரியன்.” சிசுபாலன் “நிறுத்துக! பலமுறை சொல்லிவிட்டீர்கள், நான் யாதவக்குருதி என்று” என்றான். அவனால் நின்றிருக்கமுடியவில்லை. மீண்டும் அமர அரைக்கணம் எண்ணி உடனே தவிர்த்தான். ஆனால் அதற்குள் உடலில் அவ்வசைவு எழுந்து மறைந்தது.
“ஆம், அதுதான் உன் இடர்ப்பாடு” என்றார் தமகோஷர். “இளைய யாதவனுக்கு எதிராக நீ கொண்டிருக்கும் நோய்க்கூறான காழ்ப்பு அதனால் மட்டுமே. தீராப்பெருங்காழ்ப்புகள் எப்போதுமே தாழ்வென உணர்பவர்களால் அடையப்படுபவை.” சிசுபாலன் ஏளனமாகச் சிரித்து “தாழ்வுணர்வா? எனக்கா?” என்றான். “தாழ்வுணர்வினால் காழ்ப்புகொண்டவர்கள் தங்களை ஆணவம்கொண்டவர்களாக ஆக்கிக்கொள்வார்கள்.”
சிசுபாலன் சிலகணங்கள் அவரை நோக்கியபடி அமர்ந்துவிட்டு எழுந்தான். “நன்று, நான் இனிமேல் தங்களிடம் பேசுவதற்கேதுமில்லை” என்றான். “நீ பேச வந்தவற்றையே இதுவரை பேசியிருக்கிறோம். நான் எண்ணியதை இன்னமும் பேசவில்லை” என்றார் தமகோஷர். அவன் நிற்க “நாளை மறுநாள் இளையபாண்டவர் பீமசேனர் இங்கே வருகிறார்” என்றார். “யார்?” என அவன் மூச்சொலியுடன் கேட்டான். “பீமசேனர். இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படைத்தலைவர்” என்றார் தமகோஷர்.
“நாம் நம் வில்லை இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிக்கப்போகிறோமா மறுக்கிறோமா என்று கேட்டு ஓலை வந்தது. மறுக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. வங்கமும் கலிங்கமும் மாளவமும் கூர்ஜரமும் விதர்ப்பமும் அளித்தபின் நாம் எண்ணுவதற்கும் ஏதுமில்லை. ஆகவே ஒப்புதல் தெரிவித்து செய்தியளித்துவிட்டேன். வில்கொள்ள பீமசேனரே வருகிறார்” என்றார் தமகோஷர்.
“தந்தையே…” என்று இழைந்த குரலில் சிசுபாலன் அழைத்தான். “தாங்கள் செய்வது என்ன என்று உணர்கிறீர்களா? வில்லளிப்பதென்பது நாம் அவர்களுக்கு கட்டுப்பட்ட நாடென ஏற்றுக்கொள்வதற்கு நிகர். அவர்களுக்கு கப்பம் கட்ட சித்தமாக இருக்கிறோமென்னும் அறிவிப்பு அது...” தமகோஷர் “ஆம், உண்மை” என்றார். “ஆனால் எவருக்கேனும் கப்பம் கட்டாமல் நாம் இங்கே வாழமுடியாது. ஜராசந்தனுடன் இருந்தோம். நீ சென்று துரியோதனனை இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிர்நிற்கச் சொல். அவனுடன் சேர்ந்துகொள்வோம். இன்று நமக்கு வேறுவழியில்லை.”
சற்றுநேரம் தலைகுனிந்து நின்றபின் “இனி நான் சொல்வதற்கேதுமில்லை, தந்தையே. தாங்கள் விழைவதை செய்யலாம்” என்று சிசுபாலன் கிளம்பினான். “நான் சொல்லவந்தது ஒன்றுண்டு. சேதிநாட்டின் அரசன் நீ. இளைய பாண்டவரை கோட்டைவாயிலில் எதிர்கொள்ளவேண்டியது உன் கடமை. கோல்தாழ்த்தி வரவேற்கவேண்டும். உன் முடியைச்சூடி அவர் நம் அரியணையில் அமர்கையில் அருகே வாள் ஏந்தி நின்றிருக்கவேண்டும். அவருக்கு பரிசில்களும் ஆநிரையும் அளித்து விடைகொடுக்கவேண்டும். வில்லனுப்பி பணிந்தபின் ராஜசூயத்தில் வாளுடன் சென்று படைக்காவல் நிற்கவும் வேண்டும்.”
“என்னால் முடியாது. ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்று சிசுபாலன் கூவியபடி அவரை நோக்கி சென்றான். “முடியாதென்றால் நீ முடிசூடி அமரலாகாது. உன் இளையோனுக்கு முடியளித்து எளிய படைவீரனாக நில்! அப்போதுகூட அவன் ஆணையிட்டால் நீ பணிந்தேயாகவேண்டும்” என்றார் தமகோஷர். “மாட்டேன். என் இறுதித்துளி உயிர் எஞ்சுமென்றால்கூட ஒப்பமாட்டேன்” என்று உளம்பிறழ்ந்தவர்களுக்குரிய உடலசைவுகளுடன் சிசுபாலன் ஓசையிட்டான். “இது என் ஆணை!” என்றார் தமகோஷர்.
அகம் உடைய “தந்தையே!” என மீண்டும் அழைத்தான் சிசுபாலன். “ஆம், அதுவே பாரதவர்ஷத்தின் நடைமுறை...” சிசுபாலனின் உடலில் ஒரு திமிறலசைவு வெளிப்பட்டது. “முன்பு பாதுகாஃபரணம் என்னும் சடங்கு இருந்தது. அது இருந்திருந்தால் பீமசேனர் தன் பாதணியை இங்கே நம் அரியணையில் வைப்பார். நாமும் நம் குடியும் அதை வணங்கி பூசை செய்யவேண்டும். அப்பாதணியை அரியணையில் வைத்து நாம் அதற்குக் காவலாக வாளேந்தி நின்று நாடாளலாம். பிருதுவும் பரதனும் யயாதியும் தசரதரும் பாரதவர்ஷத்தை வென்றடக்கி ஆண்டதெல்லாம் அம்முறைப்படிதான்.”
“சீ” என்று பற்களைக் கடித்தான் சிசுபாலன். “இப்படித்தான் இங்கே ஷத்ரியர் ஆண்டிருக்கிறார்கள். பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே எவருக்கும் தலைவணங்காது ஆண்ட ஷத்ரிய அரசர் எத்தனைபேர்? ஐம்பதுபேர் இருப்பார்களா? அவர்களே வரலாற்றில் நின்றிருக்கும் சக்ரவர்த்திகள். பிற அனைவரும் அடிபணிந்து முடிதணித்து ஆண்டவர்கள்தான். ஷத்ரியர்களுக்கென ஏது நிமிர்வு? ஏது தருக்கு? அதெல்லாம் சூதர்கள் அவர்களைப்பற்றி பாடும் பொய்க்காவியங்களின் வரிகள். அவ்வரிகளை உண்மையென நம்பும் ஷத்ரியர்கள் உண்டு. அவர்கள் களத்தில் நெஞ்சு விரித்துச் சென்று நின்று தலைகொய்யப்பட்டு சாகிறார்கள்” என்றார் தமகோஷர்.
சிசுபாலன் அவரை சிவந்த விழிகளால் நோக்கினான். “அப்படி சாவது அல்லவா ஷத்ரியர்களுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது?” தமகோஷர் சிரித்து “சரி, அப்படியென்றால் ஏன் அத்தனை ஷத்ரியர்களும் சாகவில்லை? ஏன் இத்தனைபேர் இங்கே கப்பம்கட்டி வாழ்கிறார்கள்?” என்றார். “கோழைகள்” என்றான் சிசுபாலன். “என்னை நான் கோழை என எண்ணவில்லை. நடைமுறை அறிந்தவன் என்றே சொல்வேன். மூடா, ஜராசந்தன் களத்தில் இறந்தான். சூதர்பாடல்களில் வாழ்வான். ஏனென்றால், அவன் வெற்றிகொள் திறல்வீரன் கையால் இறந்திருக்கிறான். அவனை சொல்லில் நிறுத்தப்போகிறவர்கள் பீமசேனரை பேருருவாக வரலாற்றில் வாழவைக்க முயலும் சூதர்களும் காவிய ஆசிரியர்களும்தான்.”
“ஏனென்றால் ஜராசந்தன் மிகையுரு கொள்ளும்தோறும் வளர்வது பீமசேனரே” என தமகோஷர் தொடர்ந்தார். “எத்தனையோ ஷத்ரியர் இங்கே போரில் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். களத்தில் பலியானால் சொல்லில் வாழலாமென நம்பி படையெதிர்நின்று மறைந்த பலநூறு சிறுகுடி ஷத்ரியர்கள் இங்கே இருந்தனர். ஒவ்வொருநாளும் அவ்வாறு மறையவும் செய்கின்றனர். எந்தச் சூதன் அவர்களை பாடுகிறான்? பெருங்குடி பிறந்து அரியணை அமர்ந்த சக்ரவர்த்திகளின் புகழ்பாடும் காவியங்களில் பெயர்நிரையில் ஒன்றென ஆகும் நல்லூழ் கொண்டவர்களே மிகச்சிலர்தான்.”
“பிறரை அவர்கள் வீழ்ந்துபட்ட மண் உண்டு செரிக்கிறது. அவர்களின் குலமுறையினரின் மூதாதைநிரை ஒக்கலில் இடுக்கிக்கொள்கிறது. அதற்கப்பால் அவர்கள் அடைவதுதான் என்ன?” தமகோஷர் தொடையை மெல்லத்தட்டி உரக்க நகைத்து “மூடா, களச்சாவு என்பது ஷத்ரியர்களுக்கு அவர்கள் குழந்தைகளாக இருக்கையில் அளிக்கப்படும் பொய்க்கதைகளில் ஒன்று மட்டுமே. என்றேனும் இறக்க நேர்ந்தால் அது வீணெனத் தெரியவேண்டாம் என்பதற்கான முன்னேற்பாடு அது. படைக்கலம் பயில்கையில் களச்சாவு குறித்த சொற்கள் உருவாக்கும் உணர்வெழுச்சி அக்கல்வியை விரைவும் செறிவும் கொண்டதாக ஆக்குகிறது. அதற்கப்பால் அச்சொல்லை நம்பும் மூடன் அரசமரத் தகுதியற்றவன்.”
“நான் சாகிறேன். எவர் எங்கே சொல்லெடுத்தாலும் என் பெயர் சொல்லாதொழியாமல் ஆக்குகிறேன்” என்று சிசுபாலன் கிழிபட்ட குரலில் கூவினான். சிறுவனைப்போல கைகளை வீசியபடி “வாழ்ந்து என்னை காட்டமுடியவில்லை என்றால் செத்து என்னை எழவைக்கிறேன். என்னை ஷத்ரியன் என அனைவரும் பேசவைக்கிறேன்...” தமகோஷர் புன்னகையுடன் “அதற்கு மிகச்சிறந்த வழி ஒன்றுள்ளது. பீமசேனர் வரும்போது நீ அவரை ஒற்றைப்போருக்கு அழைக்கலாம். தோள்கோக்கலாம்” என்றார்.
புன்னகை விரிய “போருக்கு அழைக்கப்படுபவரே படைக்கலமெடுக்க உரிமையுள்ளவர். அவர் தோளையோ கதையையோதான் தெரிவுசெய்வார். அவருடன் நீ கால்நாழிகை நேரம் களம்நிற்கமுடியும். தலையுடைந்து மண்ணில் விழுந்தால் நீ அவரால் வெல்லப்பட்டவர்களின் நிரையில் இடம்பிடிப்பாய்” என்றார். இகழ்ச்சியுடன் நகைத்து “யாதவனைக் கொன்றார் எனும் பழி யாதவர் நடுவே பீமசேனருக்கு வரலாலாது என்பதனால் உன்னை எல்லா பாடல்களிலும் ஷத்ரியன் என்றே சொல்வார்கள்” என்றார் தமகோஷர்.
ஒன்றும் சொல்லாமல் சிசுபாலன் வாயிலை நோக்கி சென்றான். “நீ அவரை வரவேற்றாகவேண்டும். இது என் ஆணை... இச்சொற்களுடன் நீ செல்வது நன்று” என்று அவர் அவன் முதுகுக்குப்பின் சொன்னார். அவன் கதவைத்திறந்து வெளியே வந்தபோது இடைநாழியில் ஓடிக்கொண்டிருந்த காற்றின்பெருக்கை உடலெங்கும் உணர்ந்தான். உடல்தளர்ந்து கண்களை மூடி ஒருகணம் நின்றான். எடையற்று பறக்கவிழைந்தான். அவ்வெண்ணமே உடலை பேரெடையென உணரச்செய்தது.
[ 12 ]
தமகோஷரின் அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது புரவியிலேறி சூக்திமதியின் எல்லையைக் கடந்து முழுவிரைவில் அறியாதிசை ஒன்றுக்கு பாய்ந்தகன்று சென்றுவிட வேண்டுமென்றுதான் சிசுபாலன் எண்ணினான். ஆனால் உடல்சுமந்து தளர்ந்த காலடிகளுடன் முற்றத்தில் அவன் இறங்கியபோது ஓடிவந்து வணங்கிய தேர்ச்சூதனிடம் சொல்லெழுப்பி ஆணையிடும் உளவிசை அவனிடம் இருக்கவில்லை. புரவியை கொண்டு வரும்படி கையசைத்துவிட்டு காற்றில் சரிந்த தன் தலைமயிரை நீவி காதுக்குப் பின்னால் வைத்தான். அது மீண்டும் சரிய சலிப்புடன் கையை தாழ்த்தினான்.
அவன் ஆணையை பிழையாகப் புரிந்துகொண்ட தேர்ச்சூதன் மூன்று புரவிகள் கட்டப்பட்ட அரசத்தேர் ஒன்றை அவன் பக்கத்தில் கொண்டு வந்தான். சினம் மீறி எழுந்தபோதும்கூட குரலென அதை மாற்ற அவன் நெஞ்சில் மூச்சழுத்தம் இருக்கவில்லை. கையைத் தூக்கி ஏதோ சொல்ல முயன்று தளர்ந்து தோள்முனைத் தொங்கலென விட்டு தேரில் ஏறி அமர்ந்தான். “அரண்மனைக்கா, அரசே?” என்று சூதன் கேட்ட உதடசைவையே நோக்கிக்கொண்டிருந்தான். இருமுறை அவன் கேட்டபின் ஆம் என்று கையசைத்தான்.
தேர் ஓடத்தொடங்கியபோது எதிர்காற்று உடம்பில் படப்பட மெல்ல இளைப்பாறி கால் நீட்டி கண்களை மூடிக்கொண்டான். களைப்பு எத்தனை இனியது! இருப்பின் எடையை அதைப்போல பிறிதொன்று குறைப்பதில்லை. களைப்பைப்போல் ஆறுதலளிப்பது ஏது? இறப்பா? களைப்பென்பது நீர்த்த இறப்புதானா? என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? எங்கோ விழுவது போல, புதைவது போல, தன்னுள் என செல்லும் சிறுதுயில் மயக்கில் மீண்டும் அக்குரலை கேட்டான். “இவ்வழி! இவ்வழி! ஆம் இவ்வழிதான்!” உரத்த குழறலாக “யார்?” என்று கேட்டுக்கொண்டு அவன் விழித்துக் கொண்டான்.
தேர்ப்பாகன் திரும்பி “அரசே…” என்றான். சிசுபாலன் “எங்கு செல்கிறாய்?” என்றான். “அரசியின் அரண்மனை அணுகிவிட்டது” என்றான் தேர்ப்பாகன். “யாருடைய அரண்மனை?” என்றான். “அரசே!” என்று தயங்கி “யாதவ அரசியின் அரண்மனை” என்றான் தேர்ப்பாகன். சினம் அனைத்து தசைகளையும் அடிபட்டதுபோல் துடிக்கவைத்தாலும் சொல் நெஞ்சுக்குள்ளேயே நின்றது. அச்சினத்தின் விசையை தாங்க முடியாமலேயே மீண்டும் தளர்ந்து சரி என்பது போல் அவன் கையசைத்தான். மீண்டும் களைப்பின் மென்வெம்மை கொண்ட பிசினுக்குள் ஆழ்ந்திறங்க விழைந்தன உடலும் உள்ளமும்.
தேர்ப்பாகன் சிசுபாலனின் மூத்த அரசி விசிரையின் அரண்மனை முற்றத்தில் தேரைத் திருப்பி நிறுத்தினான். அரண்மனைக்காவலர் இருவர் தேரை நோக்கி ஓடி வந்தனர். சிசுபாலன் அவ்வசைவால் விழித்துக்கொண்டு “பத்ரையின் அரண்மனைக்கு செல்!” என்றான். திகைப்புடன் “அரசே!” என்றான் தேர்ப்பாகன். தான் சொன்னதை தானே அப்போதுதான் கேட்டவன்போல தலையசைத்து வேண்டாம் என்றபின் படிகளில் கால்வைத்து இறங்கி நின்று நிலைதிரட்டிக்கொண்டான்.
வணங்கியபடி அணுகிய ஸ்தானிகரிடம் “அரசியை நான் பார்க்கவேண்டும்” என்றான். “தாங்கள் மந்தண அறைக்கு செல்லுங்கள். அரசியை உடனே வரச்சொல்கிறேன், அரசே” என்றார் ஸ்தானிகர். கால்கள் பிசினால் தரையுடன் ஒட்டியவை போலிருந்தன. ஒவ்வொரு அடியாக உடலை ஊன்றி படிகளில் தன்னைத் தூக்கி மேலேறி தூணில் கைசேர்த்து சில கணங்கள் நின்று நிலையழிந்து வலப்பக்கமாக சரிந்த உடலை மீட்டு அவன் நடந்தான்.
ஏவலர் தொடர இடைநாழியில் நடந்து படிகளில் ஏறி மந்தண அறைக்கு சென்றான். அங்கிருந்த காவலன் அவனை வணங்கி வாழ்த்துரைத்து அவன் உள்ளே சென்றதும் அமர்வதற்கு பீடத்தை ஒருக்கினான். இளங்காற்றில் மந்தண அறையின் அனைத்துச் சாளரங்களிலும் திரைச்சீலைகள் நெளிந்து கொண்டிருந்தன. மென்மயிர் சேக்கையிட்ட பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டதும் உடலின் அனைத்து உறுப்புகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகி உதிர்ந்துகிடப்பது போல் தோன்றியது. தலையை பின்னுக்குச் சரித்து கண்களை மூடினான். தொண்டை உப்பை உண்டதுபோலிருந்தது. நெஞ்சத்தின் ஓசை உடலெங்கும் கேட்டது.
மீண்டும் அதே விழும் உணர்வு. மீண்டும் அக்குரல் “இவ்வழி! இவ்வழியே!” என்றது. இம்முறை அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அதை கேட்கவில்லை, நோக்கிக் கொண்டிருந்தான். இருளசைவென அவ்வொலியை காணமுடிந்தது. “இவ்வழி! இவ்வழியே!” எங்கிருக்கிறோம் எனும் உணர்வு அம்மயக்கிலும் உடனிருந்ததை உணர்ந்தான். அவ்வாறு எண்ணும் சித்தமும் ஊடே ஓடுவதை அறிந்து அரைத்துயிலில் புன்னகைத்தான். திரைச்சீலைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய சிறகு கொண்ட நாகங்கள் இருளைத் துழாவியபடி கரிய நெளிவுடன் அவன் தலைக்கு மேல் பறந்து சென்றன. பெரிய ஒளிவிடும் குமிழிகளென நீர்க்கொப்புளங்கள் அலைந்தன. இளம் குளிரலைகளாலான நீர்வெளி ஒன்றுக்குள் கருக்குழந்தையென உடல் ஒடுக்கி கண்மூடி சுருண்டிருந்தான். கண்மூடியிருந்தால் அக்கொப்புளங்களை எப்படி பார்க்கிறேன்? அவை இமைகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன. குருதிக்குமிழிகள் அவை.
மிக அப்பால் இனிய நறுமணம் ஒன்று அக்குரலென வந்தடைந்தது. “இவ்வழி!” எரிதலின் மணம். அரக்கு அல்லது தேவதாரு. அல்லது எரியும் தசையா? அது மணக்குமா? “இவ்வழியே!” மிக அண்மையில் எவரோ நின்றிருந்தனர். மெல்லிய கையொன்று அவன் தலையை தொட்டது. அத்தொடுகையை அக்குரலென உணர்ந்தான். “இவ்வழியே!” குரல் அவன் தோள்களைத் தொட்டு விரல் வரை வழிந்துசென்றது. “இவ்வழி!” உடலெங்கும் குருதிவழிவென அதை உணர்ந்தபடி அதற்கு தன் ஒவ்வொரு தசையையும் ஒப்புக்கொடுத்தபடி மேலும் மேலும் என தளர்ந்தான். முற்றிலும் உடலிலிருந்து விடுபட்டு பிறிதென்று எங்கோ இருந்தான். இருண்ட குகையொன்றின் சேற்றுப்பரப்பில் ஒட்டியிருக்கும் மின்மினி. மெல்லப்பெருகும் நதிவிரிவில் ஓசையிலாது அலைவளையங்களுமிலாது உதிர்ந்த சருகிலை. காற்றில் குவிந்து அதிர்ந்த சிலந்தி வலையில் கூத்திடும் சிறு துரும்பு.
கதவு கிறீச்சிட்ட ஒலி கேட்டு உடல் துள்ளி எழுந்து வாயைத் துடைத்தபடி நோக்கினான். கண்களின் படலத்தில் குருதியின் வெம்மைபடர்ந்து காட்சி தெளிவுறவில்லை. விசிரை எளிய உடையுடன் கதவோரம் தயங்கி நின்றிருந்தாள். பெரிய இடை சற்றே ஒசிய கதவைப் பற்றிய கையில் புயத்தின் மென்தசை தளர்ந்து தொங்க, சிறிய உதடுகள் அழுந்தியிருக்க அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். மூக்கின்மேலும் மேலுதட்டிலும் வியர்வைப்பனி இருந்தது. கழுத்து பளபளத்தது. விரைந்து படியேறியதன் இளைப்பு முலையிணைநடுவிலும் கழுத்துக்குழியிலும் அசைந்தது.
வருக என்று அவன் கை காட்டினான். அவள் சிலம்பும் கைவளையும் ஒலிக்க சிறிய காலடிகளை எடுத்து வைத்து அருகே வந்து மீண்டும் தயங்கி நின்றாள். அவள் வியர்வையின் அல்லித்தண்டு மணம் எழுந்தது. மூச்சொலியை கேட்கமுடிந்தது. “அமர்க!” என்று எதிரில் இருந்த பீடத்தை காட்டினான். அவள் ஆடையை ஒதுக்கி மெல்ல அமர்ந்தாள். உதட்டைக் கவ்வியபடி பதற்றம் தெரியும் கண்களுடன் கைவளைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டாள்.
அவன் சற்றுநேரம் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழிகளை சந்தித்தபின் அவள் தலைதிருப்பி அலைபாயும் சாளரத்திரைச்சீலையை பார்த்தாள். அவன் நோக்கியபடி அமர்ந்திருக்கிறான் என்னும் உணர்வால் உடலில் நீர்த்துளிபோல் ஒரு நிலைகொள்ளாமை வந்தது. அதை வெல்லும்பொருட்டு மேலாடை நுனியால் வியர்த்த மேலுதட்டை ஒற்றியபின் “தாங்கள் வந்ததை ஏவலர் சொன்னார்கள்…” என்றாள்.
“ஆம், தந்தையை சந்திக்கப்போயிருந்தேன்” என்றான். அவளிடம் அவன் ஒருபோதும் அரசுநிகழ்வுகளை சொல்வதில்லை. எளிய யாதவப்பெண் என்னும் வடிவை தனக்கென சூடிக்கொண்டு அவளும் அவற்றிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக்கொண்டிருந்தாள். “நாளைமறுநாள் இங்கே இந்திரப்பிரஸ்தத்தின் ஆகோள்படை நுழைகிறது. பீமசேனர் நடத்திவருகிறார்.” அவள் தலையசைத்தாள். அதிலிருந்த விலகலால் சினம் கொண்டு அவன் “அப்படையை நான் சென்று எதிர்கொள்ளவேண்டும் என்றும், இளையபாண்டவரின் காலடிகளை சென்னி சூடி அழைத்துவந்து சேதிநாட்டு அரியணையில் அமரச்செய்து வாளேந்தி காவல்நிற்கவேண்டும் என்றும் தந்தை ஆணையிட்டிருக்கிறார்” என்றான்.
சரி என்பதுபோல் அவள் தலையசைத்தாள். வாளை உருவி அவள் கழுத்தில் பாய்ச்சவேண்டுமென அவன் உள்ளம் எழுந்தது. நீள்தொலைவு சென்று தன்னைக் கடந்து “நான் ஒப்பமுடியாது என்றேன்” என்றான். அவள் விழிகளை நோக்கியபடி “நான் அதற்கு மாறாக பீமனுடன் தோள்கோக்கிறேன் என்று சொன்னேன். நான் அழைத்தால் படைக்கலம் தேரும் உரிமை அவருக்குரியது. கதையோ தோளோ எனில் கால்நாழிகைநேரம்கூட நான் அவருடன் இணைநிற்க முடியாது” என்றான்.
அவள் மீண்டும் சரி என தலையசைத்தாள். சிசுபாலன் “என் தலை உடைந்து சிதறும். களப்பூழியில் குருதிசிதறிக்கிடப்பேன்” என்றான். அவள் வெற்றுவிழிகளுடன் நோக்கினாள். அவன் இதழ்களைக் கோட்டி “உன் உள்ளம் உவகைகொள்வதை அறிகிறேன். நீ காத்திருந்த தருணம்” என்றான். “யார்?” என்றாள் அவள் புருவம் சுருங்க. “உன் வஞ்சம் ஈடேறுகிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் மெல்லியகுரலில் கேட்டாள். “ஏன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள்? நான் என்ன பிழை செய்தேன்...? நான் இதற்குமேல் என்ன செய்வேன்?”
மெல்ல விசும்பி அவள் அழத்தொடங்கினாள். அவ்வழுகை நோக்கி அவள் வந்துகொண்டிருந்தாள் என்பதனால் தடைகளற்று கண்ணீர் வழிய தோள்கள் குலுங்க கொதிகலனில் ஆவியென விசும்பல் ஓசைகளுடன் அழுதாள். உதட்டைக் கவ்வி அழுகையை நிறுத்த முயன்று கழுத்து அதிர திணறி மீண்டும் அழுதாள்.
“நான் உன் பிழையென அதை சொல்லவில்லை” என்று தணிந்தகுரலில் சிசுபாலன் சொன்னான். “என் பிழையைச் சுட்டவே அதை சொன்னேன்.” அவள் கழுத்தின் மென்மயிர்ப்பரப்பை நோக்கியபோது அவனுள் காமம் எழுந்தது. “செய்தவை அனைத்தும் எழுந்துவந்து என்னை சூழ்கின்றன. எது பிழை எது சரி என எண்ணக்கூடவில்லை. ஆணவம் கொள்ளவேண்டும், மேலும் ஆணவம் கொள்ளவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். விழியறியா எதையோ சீண்டிக்கொண்டிருந்தேன்” என்றான். “இனி செய்வதற்கோ சொல்வதற்கோ ஏதுமில்லை. இவ்வாறு முடியும்போது அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இசைவுகொள்ளுமென தோன்றுகிறது.”
அவள் “என்ன பேசுகிறீர்கள்? நீங்கள் வெற்றிகொள்வீர்கள்... நீடூழி வாழ்வீர்கள்” என்றாள். “நான் வேண்டிக்கொள்கிறேன்... என் தெய்வம் உடனிருக்கும்.” அச்சொற்களிலிருந்த பேதைமை அவனை மீண்டும் சினம் கொள்ளச்செய்தது. சற்றே எழுந்த கனிவு மறைய “வெற்றியா? நான் சாவதற்காக செல்கிறேன். நீ வேண்டிக்கொள்வதன்படியே சாகவிருக்கிறேன்” என்றான். “இல்லை…” என்று அவள் சொல்லத்தொடங்க “செல்...” என்று கைநீட்டி கூவினான். “உன்னிடம் ஏன் இதை சொல்லவந்தேன்! உன்னிடம் போய்... செல்க...!” என்று இரைந்தபடி எழுந்து நின்றான்.
அவள் எழுந்து தலைகுனிந்து கைகூப்பியபடி கதவைநோக்கி சென்றாள். அவள் கை எழுந்து கதவுத்தாழை தொட்டபோது அவன் ஏனென்றறியாது மீண்டும் கனிந்தான். “விசிரை, என் மேல் சினம் கொள்ளாதே. இவை நாமறியாத ஊழென்று எண்ணுக! என் மைந்தனிடம் சொல், அவனை நான் இப்புவியில் முதன்மையான உறவென எண்ணினேன் என்று” என்றான். அவள் கைதாழ்த்தி நெஞ்சைத் தொட்டு தலைகுனிந்து விம்மினாள். “அழாதே... செல்க!” என்றான். அவள் தலையசைத்தபின் தாழை விலக்கினாள். மிக இயல்பாக கை சென்று கன்னத்தில் சரிந்த குழலை அள்ளி ஒருமுறை சுழற்றி காதில் செருகியது.
அவ்வசைவு அவனை திடுக்கிடச்செய்தது. நெஞ்சு அறைபட அவன் ஒரு காலடி எடுப்பதற்குள் அவள் வெளியே செல்ல கதவு மூடிக்கொண்டது. கதவைத்திறந்து பின்னால் ஓடி அவளைப்பற்றி இழுத்துத் திருப்பி ‘என்ன செய்தாய்? இப்போது என்னசெய்தாய் என அறிவாயா?’ என்று கூவவேண்டுமென உளம் பொங்கியது. பின்பு தளர்ந்து தன் இருக்கையில் வந்தமர்ந்துகொண்டான்.
[ 13 ]
களிந்தகத்தை ஆண்ட அந்தகக் குலத்து யாதவ மன்னர் சத்ராஜித்தின் மகள் சத்யபாமையை மணக்க விழைந்து ஹரிணபதத்திற்குச் சென்று அவள் முன் வலிப்புகொண்டு விழுந்து சிறுமைக்காளாகி மீண்டபின் சிசுபாலன் சினத்தால் நிறைந்தவனாக இருந்தான். அவன் சூக்திமதிக்கு திரும்புவதற்குள்ளாகவே அங்கே என்ன நிகழ்ந்தது என்பது அந்நகரை வந்தடைந்துவிட்டிருந்தது. தமகோஷர் அவனிடம் ஒருசொல்லும் கேட்கவில்லை. அமைச்சரோ பிறரோ அச்செய்தியை அறிந்தவர்களாக காட்டிக்கொள்ளவுமில்லை.
அவன் அன்னை சுருதகீர்த்தி மட்டும் அவன் விழிகளை நோக்காமல் அதைப்பற்றி உசாவினாள். “உன் உடல்நிலையை மருத்துவர்களிடம் காட்டி அறிந்துகொள்வதில் பிழையொன்றுமில்லை” என்றாள். அவள் முன் அமர்ந்திருந்த சிசுபாலன் “என்ன?” என்றான். “நீயே அறிவாய்...” என்று சொல்லி அவள் எழுந்துகொண்டாள். “எரிந்துகொண்டிருக்கிறாய். முடிவிலாது எரிய ஆதித்யர்களாலும் இயலாது என்று சூதர் சொல் உண்டு.” அவன் அவள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தான்.
சூக்திமதியில் விழிகள் சூழ இருக்கமுடியாமல் அவன் சௌவீர நாட்டுக்கு சென்றான். ஆனால் அங்கு அவனுக்கு முன்னரே அனைத்துச்செய்திகளும் சென்றுவிட்டிருந்தன. சௌவீரபுரிக்குள் நுழைந்ததுமே இளவரசனாகிய சுப்ரதீபன் அவனிடம் “களிந்தகத்தின் இளவரசி இளைய யாதவனை மணம்கொள்ளும்பொருட்டு துவாரகைக்குச் சென்றிருப்பதாக நேற்று செய்தி வந்தது, சிசுபாலரே” என்றான். அக்கணமே அங்கிருந்து புரவியைத்தட்டித் திருப்பி விரைந்தகலவேண்டுமென அவன் உள்ளம் சீறியது. பற்களைக் கடித்து புன்னகை என இதழ்களை விரித்து “ஆம், அறிந்தேன்” என்றான்.
சௌவீரபுரியின் தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று தேரில் அரண்மனைக்குச் செல்லும்போது அவன் கால்கள் நீர் விரையும் குழாய்கள் என அதிர்ந்துகொண்டிருந்தன. பாறையின் பச்சோந்திபோல விடாய்கொண்ட நா தவித்தது. ஒவ்வொரு கணமாக அந்தப் பயணத்தை முடித்து அரண்மனைக்குச் சென்று நீராடி மீளும்போது மெல்லிய வலிப்பு வந்தது. காலடி நிலம் மரவுரிபோல இழுபடுவதாக உணர்ந்தான். நின்றிருந்த தூண்கள் வளைந்தன.
நிலையழிந்து விழுந்த அவனை ஏவலர் ஓடிவந்து தூக்கினர். அரை நினைவு மீண்ட அவன் “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று கூவி அவர்களை ஓங்கி அறைந்தான். அவர்கள் விலகியதும் எழ முயன்று கால்கள் உடலுடன் ஒட்டாமல் நழுவியகல மீண்டும் விழுந்து நினைவழிந்தான். பற்கள் நாவை இறுகக் கடித்திருக்க அவன் இடது தோள் நடுங்கிக்கொண்டிருந்தது. நெற்றியின் நடுவே ஆழமான வெட்டுபோல ஒரு சுளிப்பு உருவாகியிருக்க அவன் உடல் அறைபடும் முரசென அதிர்ந்துகொண்டிருந்தது.
ஏழுநாட்கள் சௌவீரத்தின் மருத்துவர் குடிலில் அவன் இருந்தான். அவன் நரம்புகளின் முடிச்சுகள் அவிழ்ந்திருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். “பிறவியிலேயே இப்படி அமைவதுண்டு. தாளாத உளக்கொந்தளிப்புகளாலும் வருவதுண்டு” என்றார் மருத்துவர். “எனக்கு ஒன்றுமில்லை, நான் சூக்திமதிக்கே செல்கிறேன்” என்றான். “தங்களால் இப்போது பயணம்செய்யமுடியாது, அரசே” என்றார் மருத்துவர். “நான் கிளம்பியாகவேண்டும். இங்கே என்னால் இருக்கமுடியாது” என்றான் சிசுபாலன்.
விடைபெறுகையில் சௌவீர மன்னர் சத்ருஞ்சயரை சென்று வணங்கி முகமன் உரைத்தான். “இளையவனே, அரசர்கள் பகடையாடுபவர்கள். அவர்கள் பகடைக்காய்களாக ஆகக்கூடாது” என்று அவர் சொன்னார். அவன் அவர் விழிகளைத் தவிர்த்து “ஆம், அவ்வண்ணமே” என்றபின் சுப்ரதீபனின் தோளைத் தொட்டு “கிளம்புகிறேன்” என்றான். சுப்ரதீபன் அவனுடன் நகர் எல்லை வரை வந்தான். “உங்களுடன் மலையாட்டு ஒன்று செய்யலாமென எண்ணினேன், சிசுபாலரே. மலையுச்சிகளில் வெண்பனி இறங்கும் பருவம் இது” என்றான். சிசுபாலன் “மீண்டும் வருகிறேன்” என்றான்.
சௌவீரத்திலிருந்து ரைவத மலைக்குச் செல்லலாம் என்று சிசுபாலன் கிளம்பியபின்னர் முடிவெடுத்தான். அவனுடன் வந்த காவலர்தலைவர் கீர்மீரர் “ஆணை!” என்று தலைவணங்கினார். அவன் புரவியில் நிமிர்ந்து அமர்ந்து விழிகள் நிலைகுத்தியிருக்க ஊர்வலம் செல்லும் தெய்வச்சிலை போல அவர்களுடன் வந்தான். தங்களுடன் தெய்வம் ஒன்று உடன்வரும் எண்ணமே அவர்களிடமிருந்தது. அவனிடம் படைத்துணைவர்கள் தேவையின்றி ஒரு சொல்லும் பேசவில்லை. எச்சொல்லும் அவன் ஆன்மாவின் மிக மென்மையான புண் ஒன்றில் மட்டுமே சென்று தைக்கும் என்று அறிந்திருந்தனர்.
ஒளிந்தவிழியால் அவனை கீர்மீரர் நோக்கிக்கொண்டே வந்தார். இளைப்பாறும் சோலைகளில் தனித்துச் சென்றமர்ந்து தலைமயிர் முகத்தில் சரிய விழிகள் மெல்லிய ஈரத்துடன் உருள அவன் எதை எண்ணிக் கொள்கிறான்? தலையை அசைத்து அசைத்து தனக்கெனவும் தன் மேல் எழுந்து நிற்கும் வானுக்கெனவும் எதை மறுக்கிறான்? பித்தனைப்போல் அவன் இதழ்கள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் ஓசையிலா சொல் எது? பின்னி நெருடிக் கொள்ளும் விரல்கள் வெறி எழுந்து முறுகி நரம்பு புடைக்க செறிந்து பின் தளர்ந்து அடையும் பதைப்புதான் என்ன?
உள்ளத்தின் துன்பத்தை உடல் அறிகிறது, கருக்குழந்தையின் நோய் அறியும் அன்னை போல என்ற சூதர்மொழியை கீர்மீரர் எண்ணிக்கொண்டார். “அவருடன் நாமிருப்பதை அவர் உணரவேண்டியதில்லை” என்று ஆணையிட்டார். அணுக்கர் சிசுபாலனை ஓசையின்றி சூழ்ந்து விழிகளாலேயே தங்களுக்குள் சொல்லாடி வலசைநாரைகளின் படலமென மாறி அழைத்துச் சென்றனர்.
அன்றுகாலை எழுந்ததுமே உள்ளம் அசைவிழந்து குளிர்ந்து கிடந்தது. மெல்ல எண்ணங்களால் அதை எழுப்பி செயல்கொள்ள வைத்தான். ஆனால் ஒவ்வொரு கணமும் என அவன் உள்ளம் சோர்ந்து தணிந்துகொண்டிருந்தது. சௌவீரத்திலிருந்து கிளம்பியபோது சிசுபாலன் நெய்யூற்றி பற்றவைக்கப்பட்ட பசுமரம்போல் பொசுங்கி படபடத்து அதிர்ந்து கொண்டிருந்தான். எரிதழலாக மாறி தன்னைத் தானே உண்டு அணைந்து முழுவெறுமையை அடைந்தான். கண்களில் பார்வையும் செவிகளில் ஒலிகளும் உடலில் இட உணர்வும் இருக்கும்போதே அவற்றுக்கு அப்பால் எங்கோ இருந்து தன்னிலை திகைத்துக் கொண்டிருந்தது.
வெறுமை பெருவிசைகொண்டு ஈர்ப்பது. வெள்ளம் அடியிலா குழியை என வெறுமையை நாடிச்செல்கிறது உள்ளம். இனியில்லை, இதுவே, இவ்வாறே என அரற்றிய சொல்நிரை என அகம். கண்கனியும் அளவுக்கு உருகி நீர்மைகொண்டது இருப்பு. வீரிட்டலறியபடி தலையில் ஓங்கி ஓங்கி அறையவேண்டுமென நெஞ்சு எழுந்தது. அடுத்த கணமே வாளெடுத்து கழுத்தை வெட்டிக் கொள்ளப்போகிறான் என்று நுனிகொண்டது சித்தம். அவ்வுச்சத்திலும் அள்ளித்திருப்பும் விசையென எஞ்சும் இருப்பிற்கான விழைவுதான் என்ன? சூழ்ந்திருந்த பொருட்கள் அனைத்தும் உள்ளுறையும் அறிவணுவை இழந்து அவன் எண்ணமெனும் அலைகளில் நெற்றுகளாகி அப்பால் அப்பால் என விலகிச் செல்ல இன்மையால் சூழப்பட்டு நின்றிருந்தான்.
அந்த ஒருகணம் மயங்கி பிறிதொரு கணம் எழும் எனில் இறப்பே என உணர்ந்த உச்சப் புள்ளியில் விழித்தெழுந்து கொடுங்கனவில் இருந்து என தன்னைக் கிழித்தெடுத்து தன்னிலையை திரட்டிக் கொண்டான். அதை சினமென வஞ்சமென ஆக்கி மேலும்மேலும் வெறி கொள்ளச்செய்து உருவடையச்செய்தான். சினம் போல் திரட்டிக்கொள்ள எளிதானது பிறிதொன்றுமில்லை. நெடுநேரம் அச்சினமாகவே தன் அனைத்திருப்பையும் மாற்றினான். சினம் ஓர் எண்ணமாக, பின்பு ஒரு பொருண்மையாக, பின்பு பற்றி எரியும் வலியாக, பின்பு எரிதலின் பேருவகையாக மாறி எரிந்து எரிந்து அணைந்து சாம்பலாகிப் பறந்து ஒழிந்து மீண்டும் அதே வெறுமை.
சீதவாகினி ஆற்றின் கரையில் அவனும் வழித்துணைவர்களும் புரவியிறங்கி மரநிழலில் வேர்களில் அமர்ந்து இளைப்பாறினர். களைத்த புரவிகளுக்கு வீரர்கள் சிலர் நீர் காட்டிக் கொண்டிருந்தனர். சிலர் பச்சையிலை பறித்து அவற்றின் உடல்தசைகளை நீவினர். கால் மாற்றி உதைத்தும் செவியடித்தும் அவை சீறின. திரும்பி உழிபவனை நக்கி தலை குலுக்கின. அவன் அச்செய்கைகளை பொருளெனத் திரளா உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான்.
ஆற்றின் மறுகரையில் கொம்பும் முழவும் எழுந்தன. மரக்கிளைகளுக்கு நடுவே வண்ணங்கள் கலந்தும் தெளிந்தும் அசைந்தன. நெடுமரத்தின் மேல் ஏறி நோக்கியபின் ஒரு வீரன் கீர்மீரரிடம் சொல்ல அவர் வந்து சிசுபாலன் அருகே பணிந்து “அரசே, கோபாகத்தை ஆளும் அந்தகக் குலத்து சிற்றரசர் பஃப்ருவின் கொடி அது. வெண்ணிற பிறை இருப்பதனால் அவர் அரசி வருகிறார்களென தெரிகிறது. கோபாகத்தின் அரசி விசிரை மாமங்கலைப் பூசனைக்காக சௌவீர நாட்டிற்கு வரவிருப்பதாக நேற்று அங்கே பேசிக் கொண்டிருந்தனர்” என்றார்.
சிசுபாலன் ஆர்வமில்லாமல் “நன்று” என்றபின் மெல்ல அசைந்து அமர்ந்து “நாம் ஏதேனும் முறைமை செய்ய வேண்டுமா?” என்றான். “வேண்டுமென்பதில்லை. பஃப்ரு உண்மையில் அரசர் அல்ல, யாதவர்களின் குடித்தலைவர் மட்டுமே. முடியும் கொடியும் முரசும் கொண்டு தன்னை ஓர் அரசரென்று அவர் அறிவித்திருந்தாலும் பாரதவர்ஷத்தின் அவைகள் எதிலும் அவருக்கு மன்னர்களுக்குரிய பீடம் அமைக்கப்படவில்லை” என்றார் கீர்மீரர்.
“ஆனால் தாங்கள் விழைந்தால் ஓரிரு நற்சொற்களை அரசியிடம் சொல்லலாம். அவர் பெண்ணென்பதனால் அது நன்றென கொள்ளப்படுகிறது. அக்குடிக்கும் அது பெருமை” என்ற கீர்மீரர் ஒருகணம் இடைவிட்டு “தங்கள் அன்னையும் அதை விழையக்கூடும்” என்றார். விழிதூக்கி நோக்கியபின் மெல்ல உறுமி சிசுபாலன் திரும்பிக் கொண்டான்.
ஆற்றின் மறுகரையில் யாதவர்களின் பசுக்கொடி நன்றாக தெரிந்தது. பல்லக்குகளை போகிகள் ஆற்றங்கரை புல்பரப்பில் இறக்கி வைத்தனர். அதிலிருந்து வண்ண ஆடைகளுடன் இறங்கிய அரசியும் தோழியரும் மரவேர்களில் அமர்ந்தனர். அவர்கள் ஆற்றைக்கண்டு அடைந்த உவகையை உடலசைவுகளிலேயே காணமுடிந்தது. அங்கிருந்து ஒரு வீரன் நீள்மரமொன்றின் மேலேறி கொடியை ஆட்டி இக்கரையில் இருந்த படகுக்காரர்களை அழைத்தான். மாற்றுக்கொடி அசைத்தபின் படகோட்டி வந்து கீர்மீரரிடம் “நாம் சென்றால்தான் அவர்கள் இக்கரைக்கு வரவியலும், வீரரே” என்றான்.
கீர்மீரர் அருகே வந்ததுமே சிசுபாலன் எழுந்து படகை நோக்கி சென்றான். குகர்கள் படகுகளின் மேல் பலகைகளை வைத்து அவன் ஏறும்பொருட்டு விலகினர். அவன் படகில் ஏறி நின்றதும் கீர்மீரர் ஏறினார். தொடர்ந்து பிற படகுகளில் புரவிகளை ஏற்றினர். பலகைகள் அருகே கொண்டுவரப்பட்டதும் சிசுபாலனின் வெண்புரவி அதை குனிந்து முகர்ந்து மெல்ல தும்மியது. கண்களை உருட்டி ஏவலனை நோக்கியபின் நின்ற இடத்திலிருந்தே காலெடுத்துவைத்து நடப்பதாக காட்டியது. அவன் அதன் கழுத்தில் வருடி முதுகைத்தட்டி மெல்லியகுரலில் ஆணையிட தயங்கியபடி காலெடுத்து வைத்தது. பலகை அசைய அஞ்சி காலை திரும்ப எடுத்தது.
ஏவலன் அதை மெல்லிய குரலில் ஊக்கினான். நினைத்திராத கணத்தில் அது பேருடலுக்கு ஒவ்வாத எளிய அசைவுடன் பாய்ந்து படகிலேறி ஊசலாடிய படகின்மேல் ஊன்றிய கால்களை அசைக்காமல் உடலை மட்டும் திருப்பி நிலைகொண்டது. அதன்பின் பிற புரவிகள் அதேபோல பாய்ந்து படகிலேறிக்கொண்டன. அவை ஏறியதும் நான்குவிரற்கடை அளவுக்கே படகின் விளிம்பு நீரில் எழுந்திருந்தது. அகன்றுசென்றபோது புரவிகள் அன்னங்கள் என நீர்ப்பரப்பில் அலைத்தடம் கிழித்து முன்சென்றன.
சிசுபாலன் அலைகளில் ஏறியமைந்து சென்ற படகில் கைகட்டி நின்று ஆற்றின் மறுகரையில் நீருக்குள் இறங்கி நின்ற ஆலமரத்து வேர்களில் வண்ணங்களெனச் செறிந்திருந்த பெண்களை அரைக்கணம் நோக்கிவிட்டு விழிதிருப்பி நீரலைகளை பார்த்தான். அவன் காற்றில் பறக்கும் கொடி கட்டப்பட்ட மூங்கில்கழி போலிருப்பதாக படகோட்டி நினைத்தான். அலைகளை நோக்கியமையால் அவன் முகத்திலும் அலைகளே தெரிந்தன. அவன் சால்வை எழுந்து படபடத்துக்கொண்டிருந்தது.
படகு மறுகரையை அடைந்தபோது கீர்மீரர் அவனை அணுகி மிக மெல்ல “அரசே” என்றார். ஓங்கி அறைபட்டவன் போல் அவன் உடல் துள்ள “ஆம்!” என்றான். “படித்துறை” என்றார் கீர்மீரர். “ஆம், ஆம்” என்று அவன் சொன்னான். படகு ஆலமரத்து வேர்பின்னி உருவான படகுத்துறையைச் சென்றடைந்து மெல்ல முட்டியது. குகன் கரைக்குப் பாய்ந்து வடத்தைப்பற்றி வேர்வளைவுக்குள் விட்டு இழுத்து அதை சேர்த்துக் கட்டினான்.
முன்னால் சென்ற படகுகள் வேர்ப்புடைப்புகளை அடைந்து தொட்டுத்தொட்டு அசைந்தன. நீட்டி நிலம் தொடவைத்த பலகைகளின் மீது சிசுபாலனின் புரவி கால்களை எடுத்து வைத்து உடல் சிலிர்க்க, பிடரி உலைய, மெல்ல நடந்து மறுபுறம் சென்று கரையில் பாய்ந்து, உறுதியான நிலத்தை உணர்ந்ததுமே கனைத்தபடி துள்ளிச் சுழன்று வால் குலைத்தது. ‘நிலம்!’ என்று முதற்புரவி சொன்னதைக் கேட்டு பிற புரவிகள் கனைத்தபடி தாவி மறுபக்கம் சென்றடைந்தன.
வேர்கள் மேல் கால் வைத்து விழுதொன்றைப் பற்றி மேலேறி நின்ற சிசுபாலன் அப்போதுதான் என அங்கிருந்த பெண்களை பார்த்தான். யார் இவர்கள் என்பதுபோல் அவன் காவலர் தலைவரை நோக்கி விழிதிருப்ப அவர் மென்குரலில் “கோபாகத்தை ஆளும் அந்தகக்குலத்து யாதவர்தலைவர் பஃப்ருவின் துணைவி” என்றார். “யார்?” என்று அவன் மீண்டும் கேட்டான்.
கண்களில் ஒரு மெல்லிய நிழல் கடந்து செல்ல கீர்மீரர் தலைவணங்கி “துவாரகையின் இளைய யாதவருக்கு உடன் பிறந்தவர் முறை கொண்டவர் கோபாகத்தின் அரசர் பஃப்ரு. இளைய யாதவருக்கு முறைப்பெண்ணென பிறந்தவர், பகபிந்துவின் யாதவர் குலத்தலைவரான சுமூர்த்தரின் மகள் இவர்” என்றார். உடனே கடிவாளத்தை இழுத்து “பஃப்ருவை இவர் மணந்து ஒன்பது மாதங்களாகின்றன” என்றார்.
விழிகளுக்குள் சினம் தோன்றி மறைய “உம்” என்று சொல்லி சிசுபாலன் அடுத்த வேர்புடைப்பில் ஏறி மறுபக்கம் சென்றான். கீர்மீரர் “தாங்கள் ஒரு முறை வணக்கத்தை அளித்துவிட்டுச் செல்வது நன்று” என்றார். மெல்லிய சலிப்புடன் இடையில் கைவைத்து “ஆம்” என்று சொல்லி திரும்பினான் சிசுபாலன்.
கீர்மீரர் கைகாட்ட அப்பால் காத்து நின்றிருந்த சேடியர் தலைவி திரும்பி தன் குழுவினருக்கு மெல்லிய குரலில் ஆணையிட்டாள். நிரைவகுத்து திரையென நின்ற பெண்களுக்குப் பின்னால் நின்றிருந்த விசிரை தன் கூந்தலுக்கு மேல் மேலாடையை இழுத்துவிட்டபடி அவன் அருகே வந்து வணங்கி “சேதிநாட்டு அரசரை வணங்குகிறேன்” என்றாள். அவள் குரலை அவன் எங்கோ என கேட்டான். தன் புரவியின் செருக்கடிப்பொலியையே அவன் சித்தம் எடுத்துக்கொண்டது.
அவன் ஆர்வமற்ற விழிகள் அவள் முகத்தை தொட்டு விலக அவள் புன்னகையுடன் “தங்கள் அன்னை எனக்கு முறைப்படி சிற்றன்னை. சிறுமியாயிருக்கையில் குலவிழவொன்றில் அவர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவியுங்கள்” என்றாள். சிசுபாலன் “ஆம், வணங்குகிறேன். யாதவர் பஃப்ருவிடம் என் வணக்கத்தை தெரிவியுங்கள்” என்றான். நிலைகொள்ளா விழிகளுடன் தோழியரை நோக்கிவிட்டு கீர்மீரரிடம் “புரவிக்கு நீர் காட்டவில்லையா?” என்றான்.
அவளை அறியாமலேயே மெல்லிய அசைவொன்று அவள் உடலில் கூடியது. முகவாயை அவள் தூக்கியபோது நீள்கூந்தலை மறைத்திருந்த மென்பட்டு ஆடை பின்னால் நழுவியது. வெண்ணிற கன்னங்களும் செம்முத்தாரம் அணிந்த கழுத்தும் தெரிந்தன. கண்கள் சற்று சுருங்க, சிறிய உதடுகளை வளைத்து “சேதி நாட்டரசரைப்பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் பார்க்க வாய்த்தது” என்றாள். விழிகளிலும் உதடுகளிலும் மென்னகை பரவ “எப்போதெல்லாம் இளைய யாதவரைப்பற்றி எண்ணுகிறேனோ அப்போதெல்லாம் தங்களின் எண்ணமும் இணைந்தே வருகிறது” என்றாள்.
சினம்கொண்டு அவன் திரும்பி அவள் விழிகளை பார்த்தான். அச்சமின்றி அவ்விழிகள் அவனை சந்தித்தன. “ஏன்?” என்று அவன் கேட்டான். தலை சரித்து மெல்ல சிரித்து “தெரியவில்லை. சூதர்கள் உங்கள் இருவரையும் சேர்த்தே பாடி அவ்வாறு நிலைநிறுத்துகிறார்கள் போலும்” என்றாள். அதை சொன்னபடியே மிக இயல்பாக தலைசரித்து கன்னத்திலாடிய குழல்கற்றையை அள்ளி காதுக்குப்பின் செருகினாள்.
“நாங்கள் அரண்மனைப்பெண்கள். பாடல்கள் வழியாகவே உலகை அறிகிறோம்.” அவன் உடல் பதற, குரலிழந்து நின்றபின் புரவியை கொண்டுவரும்படி கையசைத்தான். ஓரடி எடுத்து வைத்தபின் அவளிடம் முறைப்படி விடைபெறவில்லையோ என்று எண்ணி மீண்டும் தலையசைத்துவிட்டுச் சென்று தன் புரவியை அணுகி அதன் முதுகை ஒருமுறை தட்டிவிட்டு கால் சுழற்றி ஏறி வீரர்களுக்கு கைகாட்டிவிட்டு குறுங்காட்டுக்குள் பாய்ந்தான்.
புரவியின் குளம்படிகள் கூச்சலிடும் பறவைகள்போல தன்னைச்சூழ சென்று கொண்டிருக்கையில் பின்னால் இருந்து சுருண்டெழுந்து வந்து அறைந்து தூக்கிச் சுருட்டிச்சென்ற அலை போல ஓர் உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான். திமிறி மீண்டு கடிவாளத்தை இழுத்து புரவியை கனைத்துச் சுழன்று திரும்பச்செய்தான். “கீர்மீரரே” என்று காவலர் தலைவனை அழைத்துக்கொண்டே குளம்படிப்பெருக்கின் மேல் மிதந்தவன்போல விரைந்தான்.
சேடியர் படகில் ஏறியிருந்தனர். இரண்டாவது படகில் பலகை வழியாக விசிரை ஏறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளைக் கேட்டு திகைத்து திரும்பி நோக்குகையில் பறக்கும் தலைமயிரும் மின்னும் விழிகளும் திறந்த வாயில் வெண்பற்களுமாக அவன் வந்துகொண்டிருப்பதை கண்டாள். புடைத்த வேர்களின் மேல் தாவி வந்து அணுகிய புரவியிலிருந்தபடியே சரிந்து கைநீட்டி அவள் இடைவளைத்துப் பற்றி சுழற்றித் தூக்கி தன் புரவிமேல் ஏற்றிக் கொண்டான். அனைத்துப் பெண்களும் அலறியபடி ஓடி ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர்.
“அரசே… அரசே, வேண்டாம்!” என்று கீர்மீரர் கூவினார். அவளை தன் முன் அமரவைத்து அவள் கழுத்தில் அணிந்திருந்த யாதவ குலத்துக் கருகுமணிமாலையை அறுத்து சுழற்றி வீசினான். புரவியைத் திருப்பிப் பாய்ந்து தன்னைத் தொடர்ந்து வந்த காவலர்கள் விலகி வழிவிட்ட இடைவெளியினூடாக பாய்ந்து சென்றான்.
[ 14 ]
யாதவக் குலமகளை அவள் விழைவிற்கு மாறாகக் கவர்ந்து கருகுமணித்தாலியை அறுத்தெறிந்து கவர்ந்துசென்ற சிசுபாலனின் செயல் யாதவக்குடிகளை நடுங்கச்செய்தது. அதுவரைக்கும் அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததில்லை. துவாரகைக்கு யாதவர்களின் குடித்தலைவர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வந்துசேர்ந்தனர். பிரக்ஜ்யோதிஷ நாட்டுக்கு கரவுருவாடலுக்குச் சென்றிருந்த இளைய யாதவருக்காக அவர்கள் காத்திருந்தனர்.
பலராமர் “அவனுக்காக காத்திருக்கவேண்டியதில்லை யாதவரே என் தோள்களுக்கு அவ்விழிமகன் நிகரல்ல. அவன் தலையை நான் உடைக்கிறேன்” என்று சூளுரைத்தார். அக்ரூரர் “எளிய முடிவல்ல இது. எதையெண்ணி அவன் இதைச்செய்தான் என்று அறிந்தாகவேண்டும். அசுரரோ நாகரோ அரக்கரோ அவனை துணைக்கிறார்கள், ஐயமில்லை” என்றார். சாத்யகி “ஷத்ரியர்களின் துணை தனக்கிருப்பதாக எண்ணுகிறான்” என்றான். “ஷத்ரியர்கள் ஒருபோதும் இவ்விழிசெயலுக்கு ஒப்பமாட்டார்கள்” என்றார் அக்ரூரர்.
கடும்சினத்துடன் தொடைதட்டி “சொல்லெண்ணிச் சொல்லெண்ணி காத்திருக்கிறீர்கள் மூடர்களே. அங்கே நம் குலமகள் சிறைகொண்டிருக்கிறாள்” என்று கூவினார் பலராமர். அக்ரூரர் “ஆம், அவளை மீட்பது நம் கடன். அதற்கு முன் அவள் நம்முடன் மீண்டுவர விழைகிறாளா என்று அறியவேண்டும்” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்று கூவியபடி அக்ரூரரை நோக்கி வந்தான் பஃப்ரு. “பெண்களின் உள்ளம் நாமறிவதல்ல. அவள் இன்று சேதிநாட்டரசனால் விரும்பப்படுகிறாள். அவளை அவன் அரசியாக்கவும் கூடும்” என்றார் அக்ரூரர். “அவளை கொல்வேன்... ஒற்றர்களை அனுப்பி நஞ்சூட்டுவேன். அவன் அரண்மனைமுற்றத்தில் நெஞ்சில் வாள்பாய்ச்சி செத்துவிழுவேன்” என்று பஃப்ரு அழுகையும் வெறியுமாக கூச்சலிட்டான்.
“இவ்வுள்ள எழுச்சிகளை நான் புரிந்துகொள்கிறேன்” என்றார் அக்ரூரர். “ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே நின்றாடும் தெய்வங்களை நாம் அறிந்துமுடிப்பதே இல்லை... இளையவர் வரட்டும்.” பஃப்ரு கால்கள் தளர பீடத்திலமர்ந்தான். “அவளை நான் விரும்பியிருந்தேன். என் நெஞ்சில் மணியெனச் சூடியிருந்தேன்” என்றபின் கைகளால் முகம்பொத்தி அழத்தொடங்கினான்.
மறுநாளே சேதிநாட்டிலிருந்து ஒற்றர்களின் செய்தி வந்தது. சிசுபாலன் விசிரையை பட்டத்து யானைமேல் ஏற்றிக்கொண்டு நகருலா சென்றான் என்றனர். அவள் உடல்மின்னும் நகைகளும் பொன்னூல்பட்டாடையும் மணிமுடியும் அணிந்து யானைமேல் புன்னகைத்தும் நாணியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். “இனி நாம் செய்வதற்கென்ன?” என்றார் அக்ரூரர். “அவள் தலைகொய்து மீள்வோம்... யாதவர்களின் மானமென்ன என்று அவ்விழிமகனுக்கு காட்டுவோம்” என்று யாதவர்தலைவர்கள் கொந்தளித்தனர். “இளைய யாதவர் வந்தும் ஒன்றும் நிகழப்போவதில்லை. பெண்ணின் விழைவுக்கு எதிராக அவர் நிற்கப்போவதில்லை” என்றார் அக்ரூரர்.
கவர்ந்து வரப்பட்ட அன்று சேதிநாட்டு அரண்மனையின் மகளிர்கோட்டத்தின் உள்ளறையில் விசிரை தன் ஆடைக்குள் கரந்து கொண்டுவந்த வாளால் கழுத்தை அறுத்து உயிரிழக்க முயன்றாள். அவளை விழிகொட்டாது காத்துநின்றிருந்த சேடிகளில் ஒருத்தி தன் கையிலிருந்த தாலத்தை வீசி அந்த வாளை சிதறடித்தாள். சேடியர் பாய்ந்து அவளை பற்றிக்கொண்டனர். அவளை இழுத்துச்சென்று தனியறைக்குள் அடைத்தனர். வெறிகொண்டு திமிறி கதவிலும் மரச்சுவர்களிலும் கைகளால் மாறி மாறி அறைந்து அவள் வீரிட்டாள். தன் தலையிலும் நெஞ்சிலும் அறைந்துகொண்டாள்.
சிசுபாலன் அவள் இடைசுழற்றித் தூக்கி கருகுமணித்தாலியை அறுத்து வீசி தூக்கிவந்தபோது என்ன நிகழ்கிறதென்றே அவள் உள்ளம் அறியவில்லை. அது அவள் எண்ணத்தைவிட பெரிதென்பதனால் கனவென மயங்கி அதைத் தவிர்த்து செயலற்றிருந்தது. பின்னர் விழிப்புகொண்டு அவன் கைகளை அறைந்தும் இறுகிய தசைத்திரளைக் கடித்தும் கூச்சலிட்டாள். கால்களை உதைத்து திமிறி பாய்ந்துவிட முயன்றாள். அவன் பிடிக்கு அவள் எளிய குழவிபோல் இருந்தாள்.
புரவியின் விரைவைக் குறைக்காமலேயே அணுகி வந்த சோலை ஒன்றுக்குள் புகுந்து நீரோடை ஒன்றை தாவிக் கடந்து பசுந்தழை அடர்வுக்குள் புதைந்து சென்றான். அவன் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கீர்மீரர் பிறரை கைகாட்டி நிறுத்தி ஓடைக்கு அப்பால் காவலரண் அமைத்தார். புரவியை நிறுத்தி பாய்ந்திறங்கி புரவியின் மேல் தளர்ந்து விழுந்து கிடந்த அவளை கூந்தலைப்பற்றி இழுத்து நிலத்தில் இட்டான். கதறியபடி திமிறி ஓட முயன்ற அவளைப் பற்றி இருகைகளாலும் மாறி மாறி அறைந்து வீழ்த்தினான்.
திகைத்தவள் போல கைகளால் கன்னத்தை பொத்தியபடி நிலத்தில் விழுந்து கிடந்த அவளை ஆடைகளைந்து விலங்கெனப் புணர்ந்தான். அவள் தனக்கு நிகழ்வதை வேறெங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அக்கனவிலிருந்து எக்கணமும் விழித்துக்கொள்ளலாமென எண்ணினாள். அவன் எழுந்து தன் ஆடைகளை அணிந்து கொண்டிருந்தபோது அவள் ஒரே கணத்தில் அனைத்தையும் உணர்ந்து அலறியபடி தன் தலைமேல் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாள்.
அவளை குனிந்து கைபற்றித்தூக்கி ஆடையை உடல் மேல் சுற்றி மீண்டும் புரவி மேல் அமர்த்திக் கொண்டான். புரவியின் கடிவாளத்தைப்பற்றியபடி அவன் சோலையை விட்டு வெளியே வந்தபோது வீரர்கள் அனைவரும் விழிகளை விலக்கிக் கொண்டனர். “இவள் உயிருடன் சேதி நாட்டுக்கு வந்து சேரவேண்டும். அருகிருக்கும் ஊரிலிருந்து பெண்களை அழைத்து இவளுக்கு உரிய ஆடை அணிவித்து கூட்டி வாருங்கள்” என்று காவலர் தலைவனிடம் ஆணையிட்டுவிட்டு புரவியிலேறி விரைந்தான்.
தன் உடலெங்கும் பரவியிருந்த மதர்ப்பை அவன் அறிந்தான். நாட்கணக்காக அவனை தளர்வுறச்செய்தவை அனைத்தும் தொலைநினைவென அகன்றிருந்தன. தோள்கள் அகன்று நெஞ்சு விரிந்ததுபோல் உணர்ந்தான். புரவியின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் புத்துயிர் பெற்றுக்கொண்டே இருந்தான். அப்போதுதான் முதன்முறையாக அவன் “இவ்வழி” என்னும் அக்குரலை கேட்டான். அது உண்மையில் கேட்டது என உணர்ந்து திரும்பிப்பார்த்து உளமயக்கென உணர்ந்து புன்னகைத்தான். மீண்டும் அக்குரல் கேட்கிறதா என்று கண்களை மூடி காத்திருந்தான். அது வேறேதோ ஒலியின் செவிக்குழப்பம் என எண்ணி விழிதிறந்தபோது அருகே ஒரு காகத்தின் குரலில் “இவ்வழியே” என்னும் சொல் எழுந்தது.
சூக்திமதியை சென்றடைந்தபோது அவன் முகம் பொலிவுற்றிருந்தது. மாலை ஒளிபரவிய நகர்வெளியை புன்னகையுடன் நோக்கியபடி, வாழ்த்தொலி எழுப்பிய கோட்டைக் காவலர்களை நோக்கி கைவீசிக் கொண்டு, நகர்த்தெருக்களின் வழியாக புரவியில் பெருநடையிட்டு அரண்மனை நோக்கி சென்றான். ஒவ்வொன்றும் புதிதெனத் தெரிந்தன. ஒவ்வொருவர் விழிகளையும் தனித்தனியாக நோக்கமுடியும் என்று தோன்றியது.
அவன் அரண்மனைக்குச் செல்வதற்குள் செய்தி அங்கு சென்றடைந்திருந்தது. அவன் தன் அறைக்குச் சென்றதுமே நிஸ்ஸீமர் வந்து சற்று அப்பால் நின்று தலை வணங்கினார். அவர் முகத்தின் கசப்பில் அச்செய்தி இருந்ததைக் கண்டு அவன் புன்னகையுடன் பீடத்தில் காலை நீட்டி சாய்ந்தமர்ந்து அவரை நோக்கி “என்ன செய்தி அமைச்சரே?” என்றான். அவர் விழிகொடுக்காமல் “யாதவர்கள் இந்நேரம் அனைத்தையும் அறிந்திருப்பார்கள்” என்றார். “ஆம் அறிந்திருக்கவேண்டுமல்லவா?” என்றான் சிசுபாலன் உரக்க நகைத்தபடி.
“இதுபோன்று பிறிதொருமுறை முன்பு நடந்ததில்லை” என்றார் நிஸ்ஸீமர். “முறைப்படி பஃப்ரு படைகொண்டு வந்து அவளை மீட்டுச் செல்ல வேண்டும். அது முடியாதபோது அவன் தன் குலத்திடம் சென்று முறையிடவேண்டும். அவளை மீட்பது அவர்களின் கடன். அவளை மீட்காவிட்டால் என்றென்றைக்கும் அது கறையென வரலாற்றில் எஞ்சும்” என்றார் அமைச்சர். “ஆம், அந்தக் கறை எப்போதும் எஞ்சும். யாதவர்களில், அந்தகக்குலத்தில், துவாரகையின் அரசனில்… பார்ப்போம்” என்றான் சிசுபாலன்.
“இப்போது துவாரகை நகர் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களைச்சூழ்ந்து எதிரிகள் உள்ளனர். எனவே யாதவப் படைகள் கூர்ஜர எலlலைக்கும், சிந்துவின் கரைகளுக்கும், மாளவ எல்லைக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. கடலோரக்காவலுக்கும் யாதவப்படைகள் நின்றுள்ளன. சததன்வா கொல்லப்பட்டமையால் யாதவர்களிடையே ஒற்றுமையும் இல்லை” என்றார் நிஸ்ஸீமர். “ஆயினும் இது யாதவ குலத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. இவ்வொரு செயலாலேயே அவர்கள் ஒருங்கிணையக்கூடும். அவர்கள் நம்மீது படைகொண்டு வந்தால் ஒருவேளை ஷத்ரியர்களும் நமக்குத் துணைவராது போகக்கூடும்” என்றார் அமைச்சர். “பார்ப்போம்… இத்தருணத்தில் எவர் நம்முடனிருக்கிறார்கள் என்று” என்றான் சிசுபாலன். நிஸ்ஸீமர் தலைவணங்கி அவன் மறுமொழிக்கு காத்திராமல் வெளியே சென்றார்.
அன்று தன்னை அணுகிய சிசுபாலனை விசிரை வெறிகொண்ட பூனை போல கைநகங்களாலும் பற்களாலும் தாக்கினாள். அவன் அவளை ஆட்கொண்டபோது அழுதபடி உடல் அடங்கி ஒசையின்றி அழுதுகொண்டிருந்தாள். அவளைத் தழுவி அருகே படுத்தபடி அவன் அவளிடம் இனிய மென்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தான். வாக்குகுறுதிகளை அளித்தான். சேதிநாட்டின் அரசியாக அவள் அமரலாம் என்றான். அவள் வயிற்று மைந்தர் ஷத்ரியர்களாக அரசாள்வர் என்றான்.
பின்பு கண்டுகொண்டான், அவை அனைத்துக்கும் மேலாக அவள்மேல் அவன் கொண்ட காமத்தைப்பற்றி பேசுவதே அவளை கவர்கிறது என. அவள் உடல்மேல் கொண்ட விழைவைப்பற்றி சொல்லச் சொல்ல அவள் ஆன்மா அதை வாங்கி சூடிக்கொண்டு தருக்குவதை அறிந்தான். அவ்வழியாகச் சென்று அவளுக்குள் சொல்நிறைத்தான். மெல்ல அவள் அவனுடன் உரையாடலானாள். அவனுடைய வன்போக்கைப் பழித்து வசையுமிழ்ந்தாள். பின்பு தன்னிரக்கம் கொண்டு அழுதாள். அவ்வழுகையை அவன் ஆறுதல்படுத்தியபோது முதலில் தட்டினாள். பின்பு இடம் கொடுத்தாள். மெல்ல அத்துயருக்குள் அவனும் உள்ளே நுழைய ஒப்பினாள். அதனூடாக அவனுடன் அவள் ஒட்டிக்கொண்டாள். துயருற்ற, தனித்த, ஏதிலியான பெண்ணென தன்னை காட்டினாள். அவளுக்கு அடைக்கலம் அளித்துக் காக்கும் ஆண்மகனென அவன் தன்னை முன்வைத்தான். அந்த உளநாடகத்தில் ஒருவர் பூணவேண்டிய உருவை பிறிதொருவர் நுண்மையாக அறிந்துகொண்டனர். அவற்றை மாறி மாறி அணிந்து நடித்தனர். அறியா ஒரு கணத்தில் அவர்கள் உடல்தழுவினர். உளமிணைந்து துய்த்தனர். அக்காமத்தின் ஊடலும் உவத்தலுமாக ஆகின அனைத்தும். அத்தனை நடிப்புகளுக்கும் அடியில் அவளுள் விழிமின்னிக் காத்திருந்தது காமமே என அவன் தன் காமத்தால் அறிந்திருந்தான். அவள் அவ்விழிகளை ஒருமுறையேனும் நோக்காமல் இருக்கும் கலையை அறிந்திருந்தாள்.
யானைமேல் அவளுடன் நகருலா சென்ற மறுநாளே அவன் தூதன் செய்தியுடன் சென்று ஜராசந்தனை சந்தித்தான். மகதத்திற்கு சேதிநாடு என்றும் தோளிணைவுடன் இருக்கும் என்று வாக்குறுதி அளித்தான். சிசுபாலன் விரும்பி கொண்டுவந்த யாதவப்பெண்ணை மீட்டு கவர்ந்துசெல்ல யாதவக்குடிகள் படைதிரள்வதாகச் சொன்னபோது ஜராசந்தன் மகதத்தின் முழுப்படைவல்லமையும் சிசுபாலனுடன் நின்றிருக்குமென வாக்களித்தான். பிரக்ஜ்யோதிஷத்திற்குச் சென்றிருக்கும் இளைய யாதவன் வருவதற்குள் மதுராவைப் பிடித்து மகதத்திடம் ஒப்படைப்பதாக சிசுபாலன் வாக்களித்தான். மகதத்தின் பதினெட்டு படைப்பிரிவுகள் அவனுக்காக அனுப்பப்பட்டன.
தன் தோள்துணைவனாகிய கரூஷநாட்டு தந்தவக்த்ரனுடன் இணைந்து அப்படைப்பிரிவுகளை நடத்திக்கொண்டு மதுராவை தாக்கினான் சிசுபாலன். மதுராவுக்கு அருகே கதாவசானத்தை வந்தடைந்த சிசுபாலனின் படையை வசுதேவரின் தலைமையில் அந்தகர்களும் விருஷ்ணிகளும் குங்குரர்களும் கூடி எதிர்த்தனர். மகதத்தின் பெரும்படையை எதிர்கொள்ளமுடியாமல் வசுதேவர் படைகளை பின்னிழுத்து மதுராவுக்குச் சென்றார். சிசுபாலன் யாதவப்படைகளை களத்தில் சிதறடித்தான். மதுராவின் கோட்டையை அடைந்து சூழ்ந்துகொண்டான். மந்தணப்பாதை வழியாக வசுதேவர் யமுனைக்குள் சென்று படகில் தப்பி மதுவனத்திற்கு ஓடினார்.
சிசுபாலன் கோட்டையை உடைத்து மதுராவை கைப்பற்றி அரண்மனைக்குள் நுழைந்தான். கருவூலத்தை கொள்ளையிட்டபின் வசுதேவரின் அரியணையில் அமர்ந்து முடிசூட்டிக்கொண்டான். மதுராவின் கருவூலச்செல்வத்துடன் திரும்பி வந்து அதை முழுமையாகவே மகதத்திற்கு கப்பமாக அனுப்பினான். அசுரர்களுக்குரிய வளைந்த பெரிய பற்கள் கொண்டிருந்தமையால் யாதவர்களால் முழுமையாகவே விலக்கப்பட்டிருந்த தந்தவக்த்ரன் அந்தகர்குலத்திலிருந்து சௌமித்ரை சௌரப்யை என்னும் இரு பெண்களையும் குங்குரர்குலத்திலிருந்து அமிதை, அனசூயை என்னும் இரு பெண்களையும் கவர்ந்து கரூஷநாட்டுக்கு கொண்டுசென்றான்
கதாவசானத்தில் நடந்த முதற்பெரும்போரில் அவன் படைகளை அந்தகக்குலத்து பஃப்ரு எதிர்த்து நின்றான். அவன் வில்லேந்தி வந்து நின்றிருந்ததே அவன் போர்க்கலை தேராத எளிய யாதவன் என்று காட்டியது. அப்பாலிருந்து “நில்! நில்! பிறன்மனை கவர்ந்த இழிமகனே! நில்! இன்றோடு உன் வாழ்வு அழிந்தது!” என்று கூவியபடி அவன் புரவியில் பாய்ந்து வந்தான். அவனைச்சூழ்ந்திருந்த யாதவர்களே அதைக்கண்டு புன்னகைத்தனர். “எந்த சூதர்பாடலில் இவ்வரிகளைக் கற்றாய் மூடா” என்றான் சிசுபாலன். முதல் அம்பை பஃப்ரு தொடுப்பதற்குள்ளாகவே அவன் வில்லை ஒடித்தான். இன்னொரு அம்பை எடுக்கையில் அவன் தலைப்பாகையை தெறிக்கவைத்தான்.
சினத்தால் அனைத்தையும் மறந்து “கொல்! கொல் என்னை!” என்று கூவியபடி பஃப்ரு முன்னால் வந்தான். அவன் இடைக்கச்சையை அம்பால் கிழித்து ஆடையை கால்நழுவச்செய்தான். அவன் அதை குனிந்து பிடிப்பதற்குள் படையாழி அவன் தலையை கொய்தெறிந்தது. அது திரும்பி வந்தபோது அதிலிருந்த குருதியை தன் சுட்டுவிரலால் தொட்டு நெற்றியிலணிந்துகொண்டான். மகதப்படைகள் போர்க்கூச்சலெழுப்பின.
பஃப்ருவின் குருதிபடிந்த இடைக்கச்சையை எடுத்துவரச்சொன்னான் சிசுபாலன். சேதிநாட்டுக்கு மீண்டபோது அதைக்கொண்டுசென்று விசிரையிடம் காட்டினான். இரவில் அவர்களின் மந்தண அறைக்குள் மஞ்சத்தில் அவள் அவன் தோள்தழுவி சாய்ந்திருந்தாள். “உனக்கு ஒரு பரிசு...” என்று சொல்லி அவன் அந்தத் துணிச்சுருளை எடுத்து விரித்தான். அவள் அதன் முத்திரையை உடனே அடையாளம் கண்டுகொண்டாள். குருதியையும் அக்கணமே அவள் விழிகள் கண்டன. முகம் மரப்பாவையென ஆயிற்று.
“என் எதிர்நின்று நான்கு அம்புகளை தொடுக்க முயன்றான் எளிய யாதவன்...” என்று சிசுபாலன் நகைத்தான். “அந்த அளவுக்கு அவனுக்கு துணிவிருக்குமென நான் எண்ணவில்லை.” அவள் பெருமூச்சு விட்டு மெல்ல எளிதானாள். சற்றே கொழுத்த வெண்தோள்கள் தளர்ந்தன. கைநீட்டி அந்தக் கச்சையை வாங்கி முகத்தருகே தூக்கிப்பார்த்தாள். அதன் குருதிக்கறை உலர்ந்திருந்தது. மெல்லிய சுட்டுவிரலால் அதைத் தொட்டு சுரண்டுவதுபோல நகம் அசைத்தாள். விழிதூக்கி அவனை நோக்கினாள்.
“துயரா?” என்று அவன் கேட்டான். இல்லை என்று தலையசைத்தபோது குழைகள் ஆடின. காதில் குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி அதை அப்பால் வைத்தாள். “பின்?” என்று அவன் கேட்டான். அவளிடம் எதை எதிர்பார்க்கிறோம் என வியந்துகொண்டான். “உன்னை நுகர்ந்த ஒருவன் இருக்கிறான் என்னும் முள் என்னுள் இருந்துகொண்டே இருந்தது” என்றான். “அவன் இல்லை என்றானதும் ஆறுதல்கொண்டேன்.” அவள் புன்னகைசெய்தாள்.
[ 15 ]
விசிரையை சேதிநாட்டின் அரசியாக்க தமகோஷர் மறுத்துவிட்டார். அவன் அவளை கவர்ந்து வந்ததை அவர் விரும்பவில்லை என்று நிஸ்ஸீமர் சிசுபாலனிடம் தெரிவித்தார். சேதிநாட்டின் இரண்டாவது தலைநகரமான கராளமதியின் கோட்டையில் தமகோஷர் அப்போது தங்கியிருந்தார். அங்கிருந்து சூக்திமதிக்கு வரவோ, சிசுபாலனை கராளமதிக்கு அழைக்கவோ செய்யவில்லை. அவரது சினத்தை அறிந்திருந்தாலும் சிசுபாலன் அதை பொருட்படுத்தவில்லை. “வெற்றிகளால் அவருக்கு மறுமொழி உரைக்கிறேன்” என்று சுருதகீர்த்தியிடம் சொன்னான்.
ஆனால் அவன் விசிரையை அரசியாக்கக் கூடும் என்ற செய்தியை அறிந்ததும் அங்கிருந்து திட்டவட்டமான ஓலை வந்தது. பிறிதொருவனின் துணையாக இருந்தவளும், சிறுகுடி யாதவப்பெண்ணுமாகிய விசிரையை சேதிநாட்டின் அரசியாக்க அவருடைய ஒப்புதல் இல்லை என. அவன் கராளமதிக்கு நேரில் சென்றான். அவர் அவனைப் பார்க்க ஒப்பவில்லை. அவரது அமைச்சர் சூக்திகர் “பேரரரசர் தன் ஆணை தெளிவானது என்று அறிவித்துவிட்டார் அரசே” என்றார்.
நான்குநாட்கள் கராளமதியிலேயே சிசுபாலன் காத்திருந்தான். இறுதியில் அவனை தன் மந்தண அறைக்கு தமகோஷர் அழைத்தார். அவன் உள்ளே நுழைந்து முகமனும் வாழ்த்தும் உரைத்ததுமே நேரடியாக “உன் கோரிக்கையை நான் ஏற்கப்போவதில்லை. அதை என் வாயிலிருந்தே கேட்பதுதான் உன் நோக்கமென்றால் அவ்வாறே ஆகுக!” என்றார். “நான் வாக்களித்துவிட்டேன் தந்தையே” என்றான் சிசுபாலன். “பெண்களுக்கு அளிக்கும் வாக்குகள் அரசியல்நிகழ்வுகளை கட்டுப்படுத்தாது. தசரதன் செய்த பிழையை பிற மன்னர்கள் செய்யவேண்டியதில்லை” என்றார் தமகோஷர்.
“நான் அவளை கைவிடமுடியாது.... “ என்று சொல்லத் தொடங்கிய சிசுபாலனைத் தடுத்து “கைவிடும்படி நான் சொல்லவில்லை. அவள் அரசியாக இருக்கட்டும், பட்டத்தரசி என ஷத்ரியப்பெண் வரவேண்டும்” என்றார். “நான் மகதத்திடம்கூட இவளைப்பற்றி பேசிவிட்டேன்” என்றான் சிசுபாலன். “மூடா, மகதனே அரக்ககுலத்தவன். அவன் ஒப்புதலுக்கென்ன இடம்? ஷத்ரியர் அவையில் நீ எங்கே அமர்வாய்? அதை மட்டும் பார்” என்று தமகோஷர் உரக்க சொன்னார்.
பின்னர் தணிந்து “மைந்தா, உன் குருதியே தூயதல்ல என்று இங்கே ஷத்ரியர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பாய். உபரிசிரவசுவின் குருதியில் பிறந்த நான் உன் அன்னையை மணந்ததே ஒரு கட்டாயத்தால்தான். என் தந்தை சுசேனர் மறைந்தபின் என் அரசை நிஷாதர்களின் துணையுடன் வங்கமன்னன் கைப்பற்றி எந்தையின் முறைசாரா மைந்தனாகிய பிரமோதனை அரசனாக்கியிருந்தான். என்னுடன் நின்ற உதிரிப்படைகளுடன் நான் அன்று சிற்றூராக இருந்த இக்கராளமதியில் ஒளிந்திருந்தேன். செல்வமில்லை, வரியளிக்க குடிகளும் இல்லை. எப்போது வேண்டுமென்றாலும் வங்கன் என்மேல் படைகொண்டெழக்கூடுமென்ற நிலை இருந்தது. நான் முந்திக்கொண்டாகவேண்டும். ஒவ்வொருநாளும் என்னை நோக்கி அழிவு வந்துகொண்டிருந்தது.”
“அன்று யாதவர் படையெழுச்சி அடைந்து கொண்டிருந்தனர். மதுவனத்தை ஆண்ட ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் சுருதகீர்த்திக்கு மணம்நாடுவதாக அறிந்தேன். ஹ்ருதீகரின் மைந்தர்களான தேவவாகர், கதாதன்வர், கிருதபர்வர் மூவருக்கும் வலுவான படைகள் இருந்தன. அவர்கள் விழைந்தது ஓரு ஷத்ரிய அரசனின் உறவை. மதுராவின் கம்சன் சுருதமதியை அடைய விழைந்திருந்தான் என்றும் அவனுக்குத்தெரியாமல் கிருதபர்வர் சிறுகுடி ஷத்ரியர்களுக்கெல்லாம் மணஓலை அனுப்பிக்கொண்டிருந்தார் என்றும் அறிந்தேன். என் தூதனை அனுப்பி பெண்கேட்டதுமே கிருதபர்வர் கைகூப்பியபடி அரியணையிலிருந்து எழுந்துவிட்டார். ‘உபரிசிரவசுவின் குருதி என்குடியில் கலக்குமென்றால் அது என் மூதாதையர் தவப்பயன்’ என்றார்.”
“ஆனால் சூழிருந்தவர் என்னை எதிர்த்தனர். யாதவர் உறவு என் குடித்தூய்மையை அழிக்குமென்றார்கள் அமைச்சர்கள். என்னுடனிருந்த நான்கு குடித்தலைவர்களில் இருவர் யாதவப்பெண்ணை நான் மணந்தால் என்னை அரசனென ஏற்கவியலாதென்று சினந்தனர். அவர்கள் ஏற்றாலும் என் குருதியில் பிறந்த மைந்தனை அரசனென ஷத்ரியர் ஏற்கமறுப்பர் என்றார்கள் அமைச்சர்கள். யாதவக் குடியவை ஒற்றைச் சொல்லையே எனக்கு முன் நிறுத்தியது, சுருதகீர்த்தியை நான் பட்டத்தரசியாக்கவேண்டும். அவள் வயிற்றில் பிறந்த மைந்தன் அரசாளவேண்டும். எனக்கு வேறுவழியில்லை, என் வாள்தொட்டு அவ்வாக்கை அளித்து உன் அன்னையை மணந்தேன்.”
“மணப்பந்தலிலிருந்தே படையுடன் சூக்திமதியை நோக்கி சென்றேன். வங்கனை வென்று என் இளையோனைச் சிறையிட்டு அரசை கைக்கொண்டேன். என்னை விலக்கிய குடித்தலைவர்களை ஒறுத்து முடிசூடி அரியணை அமர்ந்தேன்” தமகோஷர் சொன்னார். “ஆனால் ஷத்ரியர்கள் உன்னை ஏற்கவில்லை. நீ முடிசூடிய நாளில் இங்கே யாதவரும் சிறுகுடி ஷத்ரியர்களும் மட்டுமே வந்தனர் என்பதை நீயே அறிவாய். நீ யாதவப்பெண்ணை மணந்தால் உனக்குப்பிறக்கும் மைந்தன் ஒருபோதும் ஷத்ரியனாக அரசாள முடியாது.”
தளர்ந்து சிசுபாலன் சூக்திமதிக்கு திரும்பிவந்தான். அவனால் விசிரையை எதிர்கொள்ள முடியவில்லை. முதல்நோக்கு முதல் அவன் அவளை உள்ளூர ஒரு பொருட்டென்றே எண்ணியிருக்கவில்லை. பஃப்ருவின் குருதிபடிந்த கச்சையைக் கண்டு அவளில் விரிந்த புன்னகையின் தருணத்தில் நெஞ்சு நடுங்க ஒன்றை உணர்ந்தான், அவள் அவன் எண்ணியதுபோல எளியவள் அல்ல. அன்று அவளுடனான காமத்தில் அவளை கொற்றவை என்றே அறிந்தான். அன்று எழுந்த அச்சம் அவனுள் குளிர்ந்த துளியென எப்போதுமிருந்தது. அவ்வச்சம் அவளை ஈர்ப்புமிக்கவளாக்கியது. அவளையன்றி பிறரை எண்ணாதொழியச் செய்தது. அவளுடனான காமத்தை எரிபுகுந்து எழுதல்போல் மாற்றியது.
பன்னிருநாட்களுக்குப்பின் அவன் அவளிடம் தமகோஷரின் எண்ணத்தை சொன்னான். “மதுராவை நான் தாக்கியபின்னரும்கூட இளைய யாதவனும் யாதவகுலங்களும் இன்று என்னை அஞ்சி வாளாவிருக்கின்றன. மகதத்தின் படைகள் என்னுடன் இருக்கையில் அவர்கள் பொறுத்திருப்பார்கள். ஆனால் நான் மகதத்தை முழுதும் நம்பமுடியாது. எனக்கு ஷத்ரியர்களின் உறவு தேவை. உரிய மணவுறவு வழியாகவே அதை அமைக்க முடியும். சொல்லெண்ணச் சொல்லெண்ண வேறு வழி ஏதும் என் முன் தெரியவில்லை” என்றான்.
அவள் அதை முன்னரே அறிந்திருந்தாள். அவன் எப்படி சொல்வான் என்று மட்டுமே காத்திருந்தாள். இயல்பான முகத்துடன் “ஆம், அறிந்தேன்” என்றாள். “நான் உனக்களித்த சொல்லே என்னை கட்டுப்படுத்துகிறது” என்றான். “அச்சொல்லை எனக்களித்த பரிசென்றே கொண்டேன். அதை திருப்பியளிக்கிறேன்” என்றாள். அவன் தன் அச்சங்களும் தயக்கங்களும் விலகிய அத்தருணத்தில் ஏன் அகம் ஏமாற்றம் கொள்கிறது என வியந்தான். அவள் எளிதாக அதை புறந்தள்ளியதை ஓர் சிறுமையென்று அவன் ஆழம் எடுத்துக்கொண்டது.
“ஷத்ரியப்பெண் என்றால் உன்னை நிகரென எண்ண மாட்டாள்” என்றான். “ஆம், அவர்களின் இயல்பு அது” என்றாள் அவள். சிசுபாலன் மேலும் சீற்றம் கொண்டு “மேலும் அவள் உன்மேல் காழ்ப்புகொள்ளலுமாகும். உன் மைந்தருக்கு இங்கு இடமிருக்காது” என்றான். அவள் புன்னகைத்து “ஆம், ஆனால் மைந்தரின் இடம் நீங்கள் அளிப்பதல்லவா?” என்றாள். மெல்ல அவன் தணிந்தான். அவளை வெல்லமுடியாதென்று தோன்றியது. அவள் பல அடுக்குகளாக சுவர்களமைத்து அப்பால் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறாள். அவன் ஒருபோதும் அங்கு சென்று சேரமுடியாது.
அன்று அவளிடம் இணைந்திருக்கையில் தன் உடலெங்கும் சினமிருப்பதை அவன் உணர்ந்தான். “உனக்கு நான் ஒரு பொருட்டு இல்லையா?” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “சொல்!” என்றான். “நீங்கள் எதை எண்ணிக்கொள்ள விரும்புகிறீர்கள்?” என்றாள். “உண்மையை” என்றான். “எனக்கு தெரியவில்லை. நான் இத்தருணங்களில் முடிந்தவரை உகந்தமுறையில் இருக்க விழைகிறேன்” என்றாள். “இதுவல்ல என் வினாவுக்கான விடை. நீ எனக்காக போரிடுவாயா? எனக்காக அழுவாயா? எனக்காக இறப்பாயா?” என்றான். அவள் “இறப்பேன்” என்றாள். “எப்போது?” என்றான். “மூத்தவளாதலால் நான் உடன்கட்டை ஏறவேண்டும் அல்லவா?”
அவன் சினம்பெருகிய உடலை மெல்ல தளர்த்தி “அதுகூட முறைமை என்பதனால்தான் இல்லையா?” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல், மறுமொழி சொல்!” என்று அவன் குரலெழுப்பினான். “நான் உகந்த முறையில் இருக்க விழைகிறேன்” என்றாள். “சீ” என சீறியபடி அவன் எழுந்தான். “நீ ஒரு இழிமகள். உடலளிக்கும் பரத்தைக்கு நிகரானவள்...” அவள் அசையாமல் அவனை நோக்கியபடி படுத்திருந்தாள். அவன் அவள் ஏதேனும் சொல்வாள் என எண்ணினான். சொல்லாமலிருப்பதன் வல்லமையை அவள் அறிந்திருந்தாள்.
கைநீட்டி “உன் குலத்தின் இழிவை இப்போது காண்கிறேன். யாதவப்பெண்கள் எவருடனும் உடல்பகிர்வார்கள் என்று ஷத்ரியர் சொல்வதுண்டு” என்றான். மேலும் வெறியெழ “உடலை பகடைக்களமாக்கி உலகை வெல்லத்துடிப்பவர்கள். உன்குலத்துப்பெண் அங்கே அஸ்தினபுரிக்கு அரசியாக இருக்கிறாள். கருவறையை பகிர்ந்தளித்து மைந்தரைப்பெற்ற இழிமகள்.”
அதைச்சொன்னதுமே அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்குத்தெரிந்தது. மேலும் வெறிகொண்டு உரத்தகுரலில் “ஆம், என் அன்னையையும் சேர்த்தே சொல்கிறேன். இழிகுலம். இழிந்த இயல்பு... பரத்தையர்...” என்று சொல்லி ஒரு கணம் நின்றபின் கதவை உதைத்துத் திறந்து அறையைவிட்டு வெளியேறினான்.
[ 16 ]
எதிர்பார்த்தது போலவே விசால நாட்டு மன்னர் சமுத்ரசேனரிடமிருந்து தமகோஷர் அனுப்பிய மணத்தூதை மறுத்து ஓலை வந்தது. தமகோஷர் தன் அவையில் அமர்ந்து தூதன் கொண்டுவந்த அந்த ஓலையை ஓலைநாயகத்திடமிருந்து வாங்கி மும்முறை சொல்கூர்ந்து வாசித்தபின் இதழ்கோட புன்னகைத்து அருகிலிருந்த அமைச்சரிடம் அளித்தார்.
குலமுறை கிளத்தல்களுக்கும் முறைமைச் சொற்களுக்கும் நலம் உசாவல்களுக்கும் பின்னர் தன் மகள் பத்ரைக்கு மாளவம், வங்கம் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் மணவிழைவுச் செய்திகள் வந்திருப்பதாகவும், தூயகுருதி கொண்ட ஷத்ரியர்களை மறுத்து தமகோஷரின் யாதவக்குருதிகொண்ட மைந்தனுக்கு மகட்கொடை கொடுத்தால் அவர்களின் சினத்துக்கு ஆளாகவேண்டியிருக்குமென்றும், அதற்குரிய படைவல்லமை தனக்கில்லையென்றும் சமுத்ரசேனர் எழுதியிருந்தார். ஷத்ரியர்கள் குருதித் தூய்மையையே தலைகொள்வார்கள் என்றும் அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்றும் அவர் அறிவார் என்று நம்புவதாக சொல்லி, பொறுத்தருளும்படி கோரியிருந்தார்.
அமைச்சர் ஓலையை மடித்து பெட்டிக்குள் இட்டபின் “எண்ணியது போலவே” என்றார். “குருதித் தூய்மைக்கென எந்த எல்லைக்கும் செல்வான் அவன்” என்றபின் தமகோஷர் “மூடன்!” என்றார். “அதை அவ்வாறு சொல்ல முடியாது, அரசே” என்றார் நிஸ்ஸீமர். “எங்கும் ஊடுருவும் படைவல்லமை உள்ள ஓர் அரசன் குலத்தூய்மை குறித்து எண்ணாதிருக்கலாம். விசால மன்னனோ ஒரு புறா நில்லாது பறந்து அமையும் அளவுக்கே நாடுள்ளவன் என்று சூதர்களால் பாடப்படுபவன். அரசர்கள் நிரையில் அவனுக்கொரு இடம் இருப்பது குருதியால் மட்டுமே” என்றார்.
“நம் குலத்தைவிட மேலான குலக்குருதி கொண்டவனா அவன்?” என்றார் தமகோஷர். “தங்களது தந்தை வரை அவ்வாறல்ல” என்றார் நிஸ்ஸீமர். “எவ்வண்ணம் நாம் சொல்லெடுத்தாலும் அரசரின் அன்னை யாதவப் பெண் என்பதை எவராலும் கடந்து செல்ல முடியாது”. அவர் விழிகளை சீற்றத்துடன் நோக்கி மெல்ல அணைந்து மேல்மூச்சுவிட்டு எழுந்து “ஆம், இல்லையேல் இந்த சின்னஞ்சிறு நாட்டுக்கு மணஓலை அனுப்புவேனா என்ன? பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தொல்முடிகளில் ஒன்று சேதி. இவன் தன்னை ஷத்ரியக் குருதி என்கிறான். பன்னிரண்டு தலைமுறைகளுக்கு அப்பால் சென்றால் அவன் வேடனா மச்சனா என்று எவரும் கண்டறியமுடியாது. பெயரறியாச் சூதன் எழுதிய புராணக்கதை ஒன்றில் சென்று முட்ட வேண்டியிருக்கும்” என்றார் தமகோஷர்.
சினத்துடன் அரியணை விட்டு அகன்று வாயிற்கதவை அடைந்து நின்று திரும்பி நிஸ்ஸீமரிடம் “இனி செய்வதற்கு ஒன்றே உள்ளது. அப்பெண்ணை கவர்ந்து வரச்சொல்லும் உங்கள் அரசரிடம்” என்றார். “அரசே!” என்றார் நிஸ்ஸீமர். “அதுவும் ஷத்ரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முறையே. என் சொல்லை ஒருவன் மறுத்தபின் நான் இங்கு அரியணையமர்தல் இழிவு” என்றபின் தமகோஷர் வெளியே சென்றார்.
பேரரசரின் ஆணையை நிஸ்ஸீமர் தன்னிடம் சொன்னபோது சிசுபாலன் சினத்துடன் “படைகொண்டு சென்று கவர்ந்து வருவதென்றால் இந்தச் சிறிய நாட்டின் பேதைப்பெண் எதற்கு? மாளவத்திற்கோ கூர்ஜரத்திற்கோ செல்கிறேன். ஏன், பாஞ்சாலத்திற்கும் செல்ல என்னால் இயலும்” என்றான். நிஸ்ஸீமர் “நாம் இத்தருணத்தில் ஒரு பெரும்போரை நிகழ்த்தும் நிலையில் இல்லை. யாதவ அரசியை நீங்கள் அரியணை அமர்த்தக்கூடுமென்னும் செய்தி ஷத்ரியர் நடுவே சுற்றிவருகிறது. ஷத்ரியப் பெண்ணொருத்தி இங்கு வந்து பட்டத்தரசியாக முடிசூடிய பின்னரே நாம் மற்ற ஷத்ரியர்களுடன் உறவை பேண முடியும். இன்னும் சில நாட்களில் இங்கொரு அரசி வரவேண்டுமென்றால் இது ஒன்றே வழி. எண்ணித்துணிந்தே பேரரசர் இம்முடிவை எடுத்திருக்கிறார். அவர் தங்களுக்கென கண்டடைந்த துணைவி இவர்” என்றார்.
சிசுபாலன் “அவள் முகத்தை பட்டுத்திரையில் பார்த்தேன். ஓவியன் கற்பனையைக் கலந்து வரைந்த பின்னரும்கூட சேடிப்பெண் போலிருக்கிறாள்” என்றான். நிஸ்ஸீமர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவர்களின் முன்னோர் மலைவேட்டுவர் என நினைக்கிறேன். அப்பகுதியின் வேட்டுவர்களைப் பார்த்தால் இவர்கள் எங்கிருந்து எழுந்தனர் என்று தெரிந்துவிடும்” என்றான். அவர் ஒன்றும் சொல்லப்போவதில்லை என உணர்ந்ததும் மேலும் சினத்துடன் எழுந்த சிசுபாலன் “சரி, அவ்வண்ணமே ஆகட்டும். கவர்ந்து வருகிறேன் அவளை” என்றான்.
மறுநாள் அவன் துயில் எழுந்து படைக்கலம் பயில சென்று கொண்டிருக்கையிலேயே நிஸ்ஸீமர் உடல் குலுங்க விரைந்து அவனை அடைந்தார். “அரசே, இனி பிந்துவதில் பொருளில்லை. இன்று உச்சிப்பொழுதுக்குள் தாங்கள் அங்கு சென்று வைசாலியாகிய பத்ரையை கவர்ந்து வந்தாக வேண்டும். இன்றிரவு அவளை கோசல நாட்டு இளவரசருக்கு மணமுடிக்கும் ஓலைமாற்று நிகழவிருக்கிறது என்று ஒற்றர் செய்தி வந்துள்ளது” என்றார். “என்ன செய்கிறார்கள் நம் ஒற்றர்கள்? இப்பேச்சு நிகழ்வதை அறியாமல் இருந்தார்களா?” என்று சிசுபாலன் சினத்துடன் கேட்டான். “இன்று காலை வரை சமுத்ரசேனர் தவிர பிறர் அறியாத செய்தி இது. இன்று தலைமை வைதிகரை அரசர் சந்தித்தபோதுதான் அரசிக்கே தெரிந்தது” என்றார் நிஸ்ஸீமர்.
மறுசொல் உரைக்காது சிசுபாலன் நீராட்டறைக்குச் சென்றான். சற்று நேரத்திலேயே உடை மாற்றி சித்தமாகி அரண்மனை முற்றத்திலிருந்து புரவியில் அணுக்கப்படையினர் பன்னிருவரை அழைத்துக்கொண்டு கிளம்பினான். நிஸ்ஸீமர் கோட்டை வாயில் வரை அவனுடன் வந்தார். “இச்சிறுபடையுடன் சென்று தாங்கள்…” என்று அவர் சொல்லவர கையமர்த்தி “அந்தப் புறாமுட்டையை உடைக்க நான் தடியெடுத்தேன் என்று தெரிந்தால் அதைவிட இழிவு பிறிதொன்றுமில்லை. அவளைக் கொண்டுவர இச்சிறு படையே போதும்” என்றான். நிஸ்ஸீமர் “ஆனால்…” என்று மறுபடியும் சொல்ல அவன் நகைத்து “அமைச்சரே, ஒருநாட்டின் படைவீரன் என்பவன் அவ்வரசனின் முத்திரைக்கணையாழி போன்றவன். கணையாழிக்குப்பின் செங்கோல் காணாது நின்றிருக்கிறது. நம் படைவீரனுக்குப்பின் சேதியின் இரண்டரைலட்சம் வீரர் கொண்ட படை இருக்கிறது” என்றான்.
வழியில் எங்கும் நில்லாமல் முழுவிரைவில் சென்று உச்சி எழுவதற்குள் விசால நாட்டின் தலைநகர் வைசாலியை அடைந்தான் சிசுபாலன். உயரமற்ற கோட்டையால் சூழப்பட்ட சிறிய நகரான வைசாலி கருகிய மரப்பட்டையாலான கூம்புக்கூரைகொண்ட கட்டடங்களும் மரப்பட்டைத்தரையிடப்பட்ட இடுங்கலான தெருக்களும் கொண்டது. பீதவாகினி என்னும் சிற்றாறின் கரையில் அமைந்திருந்தது. ஆற்றின் குறுக்காக பாறைகளுக்குமேல் மூங்கில்நாட்டி அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்தினூடாக குளம்புகள் தடதடத்த பதின்மூன்று புரவிகளும் நகர் நோக்கி சென்றன.
அவன் படைகள் வருவதை முந்தைய ஊர்களிலிருந்து அறிந்து ஒற்றர்கள் அனுப்பிய புறாக்கள் அதற்கு முன்னரே வைசாலியை சென்றடைந்திருந்தன. கோட்டை வாயில் மூடப்பட்டு அவர்களை எதிர்கொள்ள வில்லவர் நிரைவகுத்த படைப்பிரிவொன்று காத்திருந்தது. தொலைவிலேயே வைசாலர்களின் கோடரிக்கொடியை பார்த்த சிசுபாலன் திரும்பி தன் படைத்துணைவனிடம் “போருக்கென நின்றிருக்கிறார்கள் போலும்” என்றான். அவன் புன்னகைத்தான். படைவீரர் பன்னிருவரும் பாலத்தைக் கடந்து கோட்டைமுகப்பின் களமுற்றம் நோக்கி வெண்கொக்குகள் போல கூம்பு வடிவம் கொண்டு சென்றனர். கூம்பு முகத்தில் தன் வெண்புரவியில் ஒளிரும் கவசஉடை அணிந்து, இடையில் படையாழியும் தோளில் அம்பறாத்தூணியும் வில்லும், கையில் வேலுமாக சிசுபாலன் சென்றான்.
கோட்டை முன் நின்றிருந்த வைசாலர்கள் ஒளிரும் பாதரசத் துளி ஒன்று உருண்டு வருவதுபோல அவன் வருவதைக் கண்டனர். தன் படையிலிருந்து விலகியவன் போல் அவன் முன்வந்து நின்றான். உரத்த குரலில் “இங்கு படைத்தலைவன் யார்?” என்றான். வைசாலர்களின் படைத்தலைவனாகிய பத்மசேனன் தன் தலைக்கவசத்தை தள்ளி மேலே தூக்கி முகத்தைக் காட்டியபடி கடிவாளத்தை இறுக்கி விலாமுள்ளால் சுண்டி கபிலநிறப் புரவியை செலுத்தி முன்னால் வந்தான். “வணங்குகிறேன், சேதிநாட்டரசே! படைத்தலைவனாகிய என் பெயர் பத்மசேனன். தங்களை இங்கே தடுத்து நிறுத்தும்படி எனது அரசரின் ஆணை. அதன்பொருட்டு என் கடமையைச் செய்ய துணிந்துள்ளேன்” என்றான்.
சிசுபாலன் “நன்று! வீரனொருவனை எதிர்கொள்வது பெருமையளிக்கிறது” என்றபின் “பத்மசேனரே, என்னுடன் பன்னிரு வீரர்களே வந்துளார்கள். எங்களை இங்குள்ள ஆயிரம் வீரர்கள் கொண்ட உங்கள் படை தாக்கும் என்றால் வைசால நாட்டிலுள்ள பத்தாயிரம் பேர் கொண்ட படையை சேதியின் இரண்டரை லட்சம் பேர் கொண்ட படை வந்து கொன்று குவிப்பது முறையே என்றாகிவிடும். இந்நகரின் அனைத்துக் கூரைகளையும் எரித்து, அத்தனை கன்றுகளையும் கொன்று, நீர்நிலைகள் அனைத்திலும் நஞ்சு கலந்து, சோலைகளை எரியூட்டி, ஆண்களனைவரையும் கொன்று பெண்களை சிறைப்பிடித்து திரும்பிச் செல்வது இயல்பே என்றாகிவிடும் அல்லவா?” என்றான்.
பத்மசேனனின் முகம் ஒரு சொல்லில் நின்று தயங்கியது. இருமுறை அவன் இதழ்கள் திறந்தன. பின்னர் “ஆம் அரசே, தாங்கள் சொல்வது சரியே” என்றான். “அவ்வண்ணமெனில் இந்நகரின் பன்னிரண்டு வீரர்களுடன் முன்வருக! எங்களை வெல்ல முடிந்தால் அவ்வாறாகுக!” என்றான் சிசுபாலன். “ஆம், அது முறையே” என்றான் பத்மசேனன். திரும்பி தன் புரவியை ஓட்டி படைக்குள் சென்று அங்கிருந்த பிற படைத்துணைவர்களுடன் சொல்கலக்கத் தொடங்கினான். புரவியில் அசையாது நின்று அதை ஏளனம் நிறைந்த முகத்துடன் சிசுபாலன் பார்த்தான். உச்சி வெயிலில் சூரியனிலிருந்து உடைந்து விழுந்த சிறு துண்டென அவன் ஒளிவிட்டுக் கொண்டிருந்தான்.
பத்மசேனன் மீண்டு வந்து “அரசே, தங்கள் கோரிக்கையை படைத்துணைவரிடம் சொன்னேன். நாங்கள் பதின்மூவர் தங்கள்முன் படைக்கலங்களுடன் வருகிறோம். இங்கு நாங்கள் அன்றி பிறிதெவரும் உங்களை தடுக்கமாட்டார்கள். இப்போருக்கு நீங்கள் ஒப்புவதாலேயே எத்தருணத்திலும் மிகுதியான படைகளுடன் இந்நகர்மேல் எழமாட்டீர்கள் என்று ஒப்புக் கொண்டவராகிறீர்கள். இன்றல்ல, தங்கள் கொடிவழியினர் சேதியை ஆளும் காலம் வரை. ஏனெனில் அரசர்களின் சொற்கள் அழியாத மூச்சுக்காற்றில் எழுதப்படுகின்றன” என்றான்.
சிசுபாலன் உரக்க நகைத்து “நன்று. வாளேந்தி என் எதிர்நிற்பவராக தாங்கள் இல்லையென்றால் சேதி நாட்டின் படைத்தலைவர்களில் ஒருவராக இக்கணமே தங்களை ஆக்குவேன்” என்றான். “இது என் மண்” என்று பத்மசேனன் சொன்னான். “வணங்குகிறேன், வீரரே! எவர் இறந்தாலும் தோள்தழுவும் தோழராக அவ்வுலகில் சந்திப்போம்” என்றான் சிசுபாலன். பத்மசேனன் தலைவணங்கி “தங்கள் அன்புக்கு என் மூதாதையர் சார்பில் தலைவணங்குகிறேன்” என்றான்.
பத்மசேனன் திரும்பி கைகாட்ட வைசால நாட்டிலிருந்து பன்னிரண்டு படைவீரர்கள் முழுக்கவச உடைகளுடனும், படைக்கலங்களுடனும் புரவிகளில் முன்னால் வந்தனர். வைசாலியின் படைகள் காற்றில் நுரை விலகுவதுபோல் அகன்று களம் ஒன்றை சமைத்தன. இருதரப்பும் பிறைவடிவில் நிரைகொண்டு ஒருவரை ஒருவர் நோக்கியபடி புரவிகளில் அசையாமல் நின்றன. குதிரைகள் குளம்புமாற்றும் ஒலியும் செருக்கடிப்புகளும் மட்டும் கேட்டன. மறுபக்கத்திலிருந்து வந்த காற்றில் வைசாலர்களின் வியர்வை மணத்தை சிசுபாலன் அறிந்தான்.
பத்மசேனன் கவசத்தால் தன் முகத்தை மூடிக்கொண்டான். சிசுபாலன் கைதூக்க “வெற்றிவேல்! வீரவேல்! சேதி வெல்க! சிசுபாலர் வெல்க!” என்று கூவியபடி அவனுடன் வந்த பன்னிருவரும் வைசாலர்கள் பன்னிருவருடன் மோதிக் கலந்தனர். புரவிக் குளம்புகள் ஒன்றுகலந்து துள்ளும்தாளத்தின் முரசுத்தடிகளென மண்ணை அறைந்தன. பற்களைக் காட்டி கனைத்தும் கழுத்துகளால் அறைந்துகொண்டும் புரவிகள் போரிட்டன.
ஒளிக்கதிர்கள் போல் மின்னிச் சுழன்ற வாள்கள் உலோக ஒலிகளுடன் ஒன்றுடன் ஒன்று அறைந்து, இழுபட்டு, கூவி, சிலம்பி, ரீங்கரித்து மீண்டும் அறைந்தன. கவசங்களின் மேல் வாள்கள் அறைந்திழுபட்டு விலகின. வெட்டுண்ட புரவிகள் கனைத்தபடி நீள்தலை மண்ணில் அறைய, கால்கள் காற்றில் உதைத்து நெளிய, உருண்டு விழுந்தன. கண்கள் உருள வாய் திறந்து மூச்சு சீறி குருதி தெறிக்க எழுந்து மீண்டும் சரிந்து விழுந்தன. இறப்போலங்கள் போர்க்கூச்சல்களுடன் கலந்தன. சிசுபாலன் தன் படையாழியை கையிலெடுத்து வீச அது வெள்ளிப்பறவை போல் சிறகுசீற காற்றில் மிதந்து தலைகளை வெட்டி மீண்டது.
பத்மசேனன் தன் வாளால் சேதியின் வீரன் ஒருவனை வெட்டிச்சரித்து பிறிதொருவனை வெட்டிய விரைவில் தன் பின்னால் சரிந்துவிழுந்த படைவீரனை நோக்க முகம் திருப்பிய கணத்தில் தலைக்கவசத்திற்கும் மார்புக்கும் இடையே புகுந்து அவன் கழுத்தை துண்டித்தது ஆழி. குருதி அரைவட்டமாகச் சிதறி சரிந்து நிலம் தொட சுழன்று வளைந்து மேலேறி மீண்டும் சிசுபாலனிடமே வந்தது. சற்று நேரத்தில் வைசாலர் பன்னிருவரும் வெட்டுண்டு குருதிக் குமிழிகள் வெடிக்க, கொழுஞ்செம்மை நிணத்துளிகளுடன் பூழியில் ஊறிப்பரவ, உடல்போழ்ந்தும் தலைவெட்டுண்டும் நிலம்பட்டனர். புரவியிலேறுபவர்களைப்போல காலுதைத்தும் காற்றை அள்ள கைவிரல்களைப் பிசைந்தும் அதிர்ந்து கொண்டிருந்தனர்.
புண்பட்ட சேதி நாட்டு வீரர்கள் நால்வர் புரவிமேல் குவிந்து படுத்திருக்க ஐவர் மண்ணில் கிடந்தனர். உடலெங்கும் வழிந்த குருதியும் சொட்டும் வாள்களுமாக எஞ்சிய மூவர் சிசுபாலன் அருகே வந்தனர். ஒருவன் ஏதோ சொல்ல வாயெடுக்க குருதி பீரிட்டது. சரிந்து கையை அசைத்தபடி மண்ணில் விழுந்தான். எடையிழந்த அவன் குதிரை அடிவைத்து முன்னால்சென்று திரும்பி நோக்கி மூச்சு சீறியது.
சிசுபாலன் கை தூக்கி கோட்டைவாயிலை திறக்கும்படி ஆணையிட்டான். கோட்டைக் கதவுகள் வலியோசையுடன் மெல்ல விரிய அவர்கள் உள்ளே நுழைந்தனர். புரவிகள் செல்லும் வழியெங்கும் குருதிமணிகள் சிதறி பூழியில் உருண்டன. குளம்படித்தடங்கள் மீதெல்லாம் குருதிபடிந்திருந்தது. திண்ணைகளிலும் உப்பரிகைகளிலும் கூடிய வைசாலர் அவர்கள் செல்வதை ஓசையின்றி நோக்கி நின்றனர். சமுத்ரசேனரின் அரண்மனை முற்றத்தில் சென்று நின்று சிசுபாலன் “எங்கே இளவரசி?” என்றான். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களும் விழிதிறந்து அவனைப் பார்ப்பது போல் தோன்றியது. “இளவரசி வருக!” என்று அவன் மீண்டும் உரக்க கூவினான். அவ்வொலி கேட்டு அஞ்சும் குகைவிலங்கென அரண்மனை அதிர்ந்து குன்றுவதாகத் தோன்றியது.
“இளவரசி வெளியே வருக! இல்லையேல் நான் அரண்மனைக்குள் புகுவேன்” என்றான் சிசுபாலன். அரண்மனை முகவாயில் மெல்ல திறக்க கையில் ஏந்திய தாலத்தில் ஐந்து மங்கலங்களும் அகல்விளக்கும் ஏந்தி குழைந்த கால்களுடன் பத்ரை மெல்ல நடந்து வந்தாள். அவள் உதடுகளை இறுகக் கடித்து கண்ணீர் வார அழுது கொண்டிருப்பதை அவன் கண்டான். குதிமுள்ளால் புரவியை ஊக்கி அரண்மனைப் படிகளில் ஏறி குனிந்து அவள் இடையை சுற்றித்தூக்கி புரவிமீது வைத்துக்கொண்டு திரும்பி தன்னைத் தொடருமாறு வீரர்களுக்கு ஆணையிட்டுவிட்டு வைசாலியின் செம்புழுதி படிந்த தெருக்களினூடாக நனைந்த முரசுத் தோலில் கோல் விழுந்ததுபோல் குளம்படிகள் ஒலிக்க விரைந்தோடி கோட்டையைக் கடந்து அகன்றான். நகரெங்கும் நிறைந்திருந்த மக்களும் காவல் மாடங்களிலும் கோட்டை முகப்பிலும் கூடியிருந்த வீரர்களும் சித்திரத்தில் எழுதப்பட்டவர்கள்போல் ஓசையின்றி அதை நோக்கி நின்றனர்.
சேதி நாட்டு எல்லையிலேயே பத்ரை பல்லக்கில் ஏற்றப்பட்டு மங்கல இசையும் அணிச்சேடியர் அகம்படியுமாக சூக்திமதிக்கு கொண்டுவரப்பட்டாள். சாலையெங்கும் ஊர்முகப்புகளில் அணிப்பந்தல் அமைத்து குடித்தலைவர்களும் மூதன்னையரும் கூடிநின்று அவளை வாழ்த்தி குங்குமமும் மஞ்சளும் மலரும் நீரும் தூவி வழியனுப்பினர். சூக்திமதியின் கோட்டை முகப்பில் நிஸ்ஸீமரும் தலைமை வைதிகர் பிரபாகரரும் அவரது நூற்றெட்டு மாணவர்களும் அவளை எதிர்கொண்டனர். வேதம் ஓதி அரிமலர் தூவி வாழ்த்தி வைதிகர்கள் அவளை நகரத்திற்குள் வரவேற்றனர்.
அவளை வரவேற்று காவல் மாடங்கள் அனைத்திலிருந்தும் முரசுகள் முழங்கின. நகரின் தெருக்கள் எங்கும் அவளுக்காக தோரணங்களும் பட்டுப்பாவட்டாக்களும் வண்ணக்கொடிகளும் புதுமலர்த் தார்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஈச்சையோலைகளும் தளிரிலைகளும் குலைவாழைகளும் கொண்டு பசுமை பூத்த காடென அணிசெய்யப்பட்டிருந்த இல்லநிரைகளின் நடுவே அரசமணித்தேரில் முழுதணிக்கோலத்தில் மலர்மாலை அணிந்து கைகூப்பி நின்று சேதி நாட்டின் தெருக்களினூடாக அவள் சென்றாள். சூதர்களின் இசைத்தேர்கள் அவளுக்கு முன்னால் சென்றன. வாழ்த்தொலி எழுப்பியபடி அணிச்சேடியர் அதை தொடர்ந்தனர்.
உப்பரிகைகளில் இருந்தும் மாடங்களில் இருந்தும் அவள் மேல் மலர்மழை கொட்டிக்கொண்டிருந்தது. நகரமே அவளுக்கென களி கொண்டு துள்ளுவதுபோல் இருந்தது. அரண்மனைக்குச் சென்றதும் அரண்மனை முற்றத்தில் பேரரசி சுருதகீர்த்தியும் அவளுடைய சேடிகளும் அவளுக்காக காத்திருந்தனர். அருகே யாதவ அரசி விசிரையும் சேடிகளும் மங்கலத்தாலங்களும் சுடர் அகல்களுமாக நின்றிருந்தனர். தேர் வந்து நின்றதும் வாழ்த்தொலிகள் நடுவே வலக்காலெடுத்து வைத்து முற்றத்தில் இறங்கிய அவளை அருகணைந்து நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு சுருதகீர்த்தி “வருக! இந்நாடும் இவ்வரண்மனையும் மங்கலம் பொலிக! பெருந்திறல் வீரர்களை மைந்தரெனப் பெற்று என் குடி வெல்லச் செய்க!” என்றாள்.
சற்றே தலைவணங்கி அவ்வாழ்த்தை ஏற்றபின் அவள் முன்னால் நடந்தாள். சேடியர்கள் முகங்களில் மெல்லிய மாறுதல்கள் ஏற்பட்டன. சுருதகீர்த்தியின் தாள்தொட்டு இளவரசி சென்னி சூடவில்லை என்பதை விழிகளினூடாகவே அவர்கள் பரிமாறிக்கொண்டனர். சுருதகீர்த்தி சற்றே விழியசைத்து விசிரையை நோக்கினாள். அவள் முகத்தில் ஏதும் தெரியவில்லை. விசிரை தாலத்துடன் முன்னால் வர தனக்குப் பின்னால் சென்று அணிமங்கையருடன் சேர்ந்து கொள்ளும்படி மிகச்சிறிய கையசைவால் ஆணையிட்டு பத்ரை அரண்மனையின் படிக்கட்டில் இடக்கையில் ஏந்திய நெய்யகலும் வலக்கையில் நிறைகுடமுமாக வலக்காலெடுத்து வைத்து ஏறிச்சென்றாள்.
அவள் உள்ளே நுழைந்த மறுகணமே முற்றத்தில் இருந்த சேடியர் பறவைக்கூட்டம் கலைந்ததுபோல் பேசத்தொடங்கினர். இளவரசியின் ஒவ்வொரு அசைவும் தெளிவான செய்திகளை அவர்களுக்கு அளித்தது. “ஆம், அது சரிதான். ஷத்ரியர்கள் எங்கும் தலைவணங்கலாகாது” என்று முதிய சேடி சொன்னாள். “வெல்லப்பட்டபின் அவள் எப்படி ஷத்ரியப்பெண் ஆவாள்?” என்றாள் ஒருத்தி. “தன்னை வென்ற அரசனின் அன்னையை வணங்குவதில் ஏது தடை அவளுக்கு?” என்றாள் இன்னொருத்தி. “வணங்காத பெண் வேண்டுமென்றல்லவா தொலைவு சென்று கவர்ந்து வந்திருக்கிறார்?” என்றாள் ஒரு முதுமகள். “எங்கும் வணங்கும் பெண் இங்குதான் இருக்கிறாளே” என்றாள் இன்னொருத்தி.
“என்ன ஓசை?” என்று சுருதகீர்த்தி கைதூக்க அவள் அகம்படி செவிலி “அமைதி! அமைதி!” என்று கூவினாள். ஒவ்வொரு விழியையும் நோக்கி நடந்த சுருதகீர்த்தி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணர்வு இருந்ததைக் கண்டு திகைத்தாள். உவகை, நிறைவு, கசப்பு, இளிவரல், திகைப்பு, புரியாமை… படியேறிய பிறகு திரும்பி தன்னருகே வந்த விசிரையின் தோளைத் தொட்டு ஏதோ சொல்ல எண்ணியவள் அச்சொற்கள் அனைத்தும் பொருளற்றவை போல் தோன்ற கையை முழங்கால் வரையில் தாழ்த்திக் கொண்டு வந்து விசிரையின் சிறிய விரல்தொகையை தன் கைக்குள் எடுத்து மெல்ல அழுத்தியபின் திரும்பி நடந்தாள்.
[ 17 ]
சூக்திமதியின் அரண்மனை மகளிரறையில் நடந்த தொடர் குடியமைவுச் சடங்குகளிலும், மங்கலநிகழ்வுகளிலும் சேதிநாட்டுக் குடித்தலைவர்களின் துணைவியரும், வணிகர்களின் மனைவியரும், மூதன்னையரும் புதிய அரசியை வந்து பார்த்து வணங்கி பரிசில் கொடுத்து மீண்டனர். அந்நிகழ்வுகளில் தான் இருந்த கூடத்திலும் உள்ளறையிலும் எங்கும் உடனிருந்த விசிரையை கண்டதாகவே பத்ரை காட்டிக்கொள்ளவில்லை. அந்த முழுமையான புறக்கணிப்பே அவள் விசிரையை உள்ளூர எத்துணை பொருட்படுத்துகிறாள் என்பதை அனைவருக்கும் காட்ட சேடியரும் செவிலியரும் விழிகளுக்குள் நோக்கிக் கொண்டனர்.
அவள் தன்னை புறக்கணிப்பதை உணர்ந்தும் முறைமைச் செயல்கள் அனைத்திலும் இயல்பாக உடனிருந்த யாதவ அரசி பின்னர் அவள் கொண்ட தத்தளிப்பை உணர்ந்ததும் தன் சிறிய உதடுகளில் புன்னகை குடியேற வேண்டுமென்றே அவள் அருகே வந்து நின்றாள். இயல்பாக தொட்டு குழலையும் ஆடையையும் சீரமைத்தாள். அவள் அருந்த நீர் கேட்டபோது தானே கொண்டு வந்து கொடுத்தாள். எவ்வகையிலும் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் விழிகளுக்கு முன் தோன்றினாள். அவளை முகம் நினைவுகூரத் தேவையில்லாத சேடிப்பெண்ணென்ற நிலையிலேயே பத்ரை நடத்தினாள். இருவரும் ஆடிய அந்த நாற்களச் சூழலை கண்டிருந்த சேடியர் அவர்கள் முன்னிருந்து விலகியதுமே ஒருவருக்கொருவர் கைகொட்டி சிரித்தனர். அச்சிரிப்பு எஞ்சியிருக்கும் விழிகளுடன் மீண்டும் அவர்கள் இருந்த அறைக்குள் வந்து உதடுகளை இறுக்கியபடி பணியேற்றனர்.
நள்ளிரவில் சடங்குகள் அனைத்தும் முடிந்து அரசணியைக் கழற்றி நீராடி வெண்பட்டாடை அணிந்து சிசுபாலனின் மந்தண அறைக்குள் வந்து அவனருகே அமர்ந்ததுமே பத்ரை அதுவரை அவளைப்பற்றி மட்டுமே தான் எண்ணிக் கொண்டிருந்ததை உணர்ந்து கடும் சினம் கொண்டாள். அவள் முகம் அச்சினத்தால் நோயுற்றது போலிருந்தது. அவளை அழைத்து வந்த சேடியர் மந்தண அறைவாயிலை மூடிவிட்டு விலகிச் செல்ல சிசுபாலன் மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அவனுடலில் இருந்து எழுந்த புனுகும் சவ்வாதும் கலந்த மணம் அவளை எரிச்சல்படுத்தியது. காற்றிலாடிய தன் மேலாடையை சலிப்புடன் இழுத்தபடி அவள் கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பவள்போல பார்வையை திருப்பிக்கொண்டாள்.
சிசுபாலன் மென்குரலில் “பெண்கவர்தல் அரசர்களுக்குரிய மணமுறை என்று இருப்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. கடுஞ்செயல்தான். ஆயினும் ஓர் ஆடலென எண்ணி பொறுத்தருள்க, தேவி!” என்றான். அவள் தலைநிமிர்ந்து “அந்த யாதவப்பெண் இங்குதான் இருப்பாளா?” என்றாள். “யார்?” என்றான். “உங்கள் துணைவி. யாதவ பஃப்ருவின் மனைவி” என்றாள். “பஃப்ரு இன்றில்லை” என்றான். “அவள் உடலில் அவன் மணம் இருக்கும்” என்றாள். அவன் கூசி விழிகளை திருப்பிக்கொண்டான். சினமெழுகையில் பெண்களுக்கு ஆண்களின் அனைத்து நரம்புமுடிச்சுகளும் தெரியும் விந்தை. “அவளுக்கு இங்கு என்ன வேலை?” என்றாள். சிசுபாலன் சினத்துடன் “அவளையும் நான் துணைவி என்றே கவர்ந்து வந்தேன்” என்றான். அவள் அவன் உளவலியை உணர்ந்து மேலும் கூர்மைகொண்டாள். “பிறிதொருவனுடன் இருந்தவள் ஒருபோதும் ஒருவனுக்கு முழுமனைவியாவதில்லை” என்றாள்.
சிசுபாலன் “இத்தருணத்தில் நாம் ஏன் அவளைப்பற்றி பேசுகிறோம்?” என்றான். “அவளைப்பற்றி மட்டுமே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவன் தன் உடல் மெல்ல களைப்புறுவதை உணர்ந்தான். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். கேட்டதுமே அதிலிருந்த களைப்பு ஆணைக்குப் பணிவதுபோல் ஒலித்துவிட்டதை உணர்ந்தான். ஆனால் மேற்கொண்டு ஒன்றும் செய்யவியலாதென்றும் அறிந்தான். “அவள் இவ்வரண்மனைக்குள் இருக்கலாகாது. நகரில் சூத்திரர்களுக்குரிய பகுதியில் அவளுக்கொரு அரண்மனை அமையுங்கள். அவள் அங்கு இருக்கட்டும்” என்றாள் பத்ரை. அவன் “அவள் அரசி!” என்றான்.
“அரசியென அவளை எவரும் சொல்லலாகாது. அதற்கெனவே சூத்திரர் பகுதியில் மாளிகை அமைக்கச் சொன்னேன். அது எத்தனை பெரிய மாளிகையாகவேனும் இருக்கட்டும், அங்கு சேதி நாட்டின் கொடி பறக்கட்டும். அம்மாளிகை அங்கு இருக்கும் வரை அவளை அரசி என்று எவரும் சொல்லமாட்டார்கள்” என்றாள். சிசுபாலன் “இதை நாம் பிறகு பேசலாமே” என்றான். “இப்போது பேசவேண்டியது இது ஒன்றுதான். பிறிதொன்றுமல்ல” என்று அவள் சொன்னாள். “உங்கள் உள்ளத்தை அவளே நிறைத்திருக்கிறாள். நீங்கள் அங்கேதான் விழுந்துகிடப்பீர்கள்.” அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “அவள் உடலில் தெரிந்த மிதப்பே அதை சொன்னது. ஆணை வென்ற பெண்ணின் அசைவுகள் அவை.”
அவன் அவளருகே சற்று நெருங்கி அமர்ந்து கைகளை மீண்டும் பற்றிக்கொண்டு “உன் உள்ளம் நிலையழிந்திருப்பது எனக்குத் தெரிகிறது. இதை நாம் சற்று இயல்பானபின்பு பிறிதொருமுறை பேசுவோம்” என்றான். அவன் கைகளை உதறி எழுந்து “இன்று இத்தருணத்தில் இவ்வாக்குறுதியை எனக்களித்தபின் அன்றி உங்களை என் கொழுநனாக ஏற்கமாட்டேன்” என்றாள். “வேண்டுமென்றால் என்னை நீங்கள் உடலாளலாம். கவர்ந்துவந்தவருக்கு உரிய காதல் அதுவே.” விழிகள் சுருங்க சினந்து “என்ன சொல்கிறாய்?” என்றான் சிசுபாலன். “ஆனால் அது உயிரற்ற உடலாகவே இருக்கும். நான் என் கழுத்தை உடைவாளால் வெட்டிக்கொள்ள முடியும் அல்லவா?” என்றாள் அவள். தளர்ந்து “சொல்லெண்ணி பேசு! நீ அரசி” என்றான். “இதற்கப்பால் ஒரு சொல்லும் நான் சொல்வதற்கில்லை” என்றாள் அவள்.
சிசுபாலன் அமைதியாக தலைகுனிந்து சொல்லிழந்து அமர்ந்திருந்தான். களைப்பு எழுந்து கண்பார்வை மங்கலாகியது. உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் கழன்று அகல்வதாக எப்போதும் எழும் உளமயக்கு அவனுக்கு ஏற்பட்டது. வலிப்பு வந்துவிடுமோ என அஞ்சியதுமே அவன் உடல் மேலும் நடுங்கத்தொடங்கியது.
அவள் கதவைத் தொட்டு “முடிவெடுத்தபின் அழையுங்கள். காத்திருக்கிறேன்” என்றாள். சிசுபாலன் தலை தூக்கி “நில்!” என்றான். அவள் புருவம் தூக்கி திரும்பிப் பார்த்தாள். “இன்று இக்கதவைத் திறந்து நீ வெளியே சென்றால் அரண்மனை முழுக்க அலராகும். எண்ணிப்பார்” என்றான். “அதைப்பற்றி நான் ஏன் கவலைகொள்ள வேண்டும்?” என்றாள். “நீ என் துணைவி. இந்நகரின் பட்டத்தரசி. என் மதிப்பு உனக்கு ஒரு பொருட்டல்லவா?” என்றான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “என் மதிப்பைக் குறித்து மட்டுமே நான் எண்ணமுடியும். என் மதிப்பின் மீதுதான் உங்கள் மதிப்பு அமர்ந்திருக்கிறது. நீங்களும் அதைக் குறித்து எண்ணவேண்டும்” என்றாள்.
மூச்சிரைக்க “இங்கு நான் பட்டத்தரசி என்றால் இவ்வரண்மனை வளாகத்தில் அவள் இருக்கமாட்டாள்” என்றபின் மேலாடையை இழுத்து வளைத்தணிந்து “நன்று” என கதவை தட்டினாள். சிசுபாலன் “பிறிதொருமுறை நாம் இதைக் குறித்து…” என்று இழைந்தகுரலில் சொல்ல “இதைக் குறித்து நான் சொல்லும் இறுதி வார்த்தை இது” என்றபின் அவள் கதவை இழுத்தாள். மறுபக்கம் சேடியர் வந்து “அரசி!” என்றனர். “நில்” என்றபடி சிசுபாலன் எழுந்து அவள் அருகே வந்தான். “இதோ என் சொல். அவளை சூதர்கள் பகுதிக்கு அனுப்புகிறேன். ஒருபோதும் அரசியென அரண்மனை விழவுகளில் அவள் கலந்து கொள்ள மாட்டாள். எத்தருணத்திலும் உன் விழிமுன் அவள் வரமாட்டாள். போதுமா?” என்றான்.
ஆனால் அவள் கண்கள் மேலும் ஐயமும் துயரமும்தான் கொண்டன. “ஒருசொல்லிலும் சேதி நாட்டரசி என்று அவள் குறிப்பிடப்படலாகாது” என்றாள். “ஆம், உறுதி அளிக்கிறேன்” என்றான் சிசுபாலன். அவள் வெறுப்புடன் புன்னகைத்து “நன்று” என்றாள். அவள் மேல் அவனுக்கு எப்போதும் காமம் எழுந்ததில்லை. அழகற்ற பெண் என்றே அவளை ஓவியத்தில் கண்டதுமுதல் எண்ணியிருந்தான். ஆனால் அவள் விழிகள் அப்போது கொண்டிருந்த கூர்மை அவனை கிளரச்செய்தது. வென்றடக்கவேண்டும் என்றும் அவளை முழுமையாக வெற்றுடலெனச் சுருக்கிவிடவேண்டும் என்றும் அவன் உடல் வெறிகொண்டது.
[ 18 ]
சிசுபாலன் மஞ்சத்தறையில் பத்ரையுடன் இருக்கையில்தான் இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் சேதி நாட்டெல்லைக்குள் புகுந்த செய்தி வந்தது. வாயிற்கதவை மெல்ல தட்டிய சேடிப்பெண் “அரசே!” என்று மும்முறை அழைத்தாள். துயில்கலைந்து எழுந்த சிசுபாலன் உடைவாளை கையிலெடுத்து இடையில் அணிந்தபடி வந்து கதவைத் திறந்தான். சேடி தலைவணங்கி “அமைச்சர் இச்செய்தியை தங்களிடம் அளிக்கச்சொன்னார்” என்றாள். ஓலையை வாங்கி விரித்ததுமே மந்தணச்சொற்களில் அதில் எழுதியிருந்த செய்தியை ஒரே கணத்தில் அவன் வாசித்துவிட்டான். ஓலைச்சுருளை கையில் அழுத்தி நொறுக்கியபடி உள்ளே சென்று கதவை மூடினான்.
மஞ்சத்தில் கையூன்றி எழுந்தமர்ந்து மேலாடையை எடுத்து தோளிலிட்டபடி துயிலில் சற்றே வீங்கிய முகத்துடன் “என்ன செய்தி?” என்றாள் பத்ரை. மணமாகிவந்த நாட்களிலிருந்த எரியும் முகம் அணைந்து மிதப்பும் கசப்பும் நிறைந்தவளாக அவள் உருமாறியிருந்தாள். “இளைய பாண்டவரின் படைகள் சேதி நாட்டு எல்லைக்குள் நுழைந்துவிட்டன. இன்று புலரிக்குள் அவை நகர்நுழையும்” என்றான். அவள் புன்னகையுடன் குழலை அள்ளிக்கோதி முடிந்தபடி “ஆகவே இன்று அவருடன் களம் கோக்கவிருக்கிறீர்கள்?” என்றாள்.
காலிலிருந்து அமிலம் என கொப்பளித்து தலையை அடைந்த சினத்துடன் “ஆம், பெரும்பாலும் இன்று உச்சிப்பொழுதில் நீ கைம்பெண்ணாவாய்” என்றான். “ஷத்ரியப் பெண்களுக்கு அதுவும் வாழ்வின் ஒருபகுதியே” என்றாள் அவள். இதழ்களைக் கோணியபோது கன்னத்தில் ஒரு மடிப்பு விழுந்து அவள் முகம் ஏளனத்திற்கென்றே அமைக்கப்பட்டதுபோல் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சினமூட்டியே அவனை தன்னைநோக்கி ஈர்த்துக்கொண்டிருந்தாள். ஏளனம் வழியாக வெல்லமுடியாதவளாக தன்னை ஆக்கிக்கொண்டு அவனை தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.
“ஷத்ரியப்பெண்ணாக அன்றி நீ ஒருபோதும் வாழ்வதில்லையா?” என்றான் சிசுபாலன். “வைசாலியில் இருக்கையில் ஷத்ரியப்பெண் என்று ஒரு கணமும் எண்ணியதில்லை. கவர்ந்து வரப்பட்ட பின்பு அதையன்றி வேறேதும் எண்ணியதில்லை” என்றாள். சிசுபாலன் “உன்னை தீயதெய்வமொன்று ஆட்கொண்டிருக்கிறது” என்றான். “ஆட்கொண்டிருப்பவர்கள் எனது மூதன்னையர். ஆயிரம் ஆண்டுகாலம் அவர்கள் காத்த என் குருதித் தூய்மை” என்றாள் அவள். “உன்னை அறிந்த நாளிலிருந்து பிறிதொரு உரையாடல் நமக்குள் நிகழ்ந்ததில்லை” என்றான். “நமக்குள் குருதித் தூய்மை அன்றி பிற ஏதாவது உள்ளனவா?” என்று அவள் கேட்டாள். “எதன் பொருட்டு என்னை மணந்தீர்கள் என்பது பாரதவர்ஷம் முழுக்க தெரியும். வேறு எதைப்பற்றி நாம் பேச முடியும்?”
“நாம் பேசாமல் இருப்பதே நன்று” என்றபடி சிசுபாலன் சென்று பீடத்தில் அமர்ந்து கைகளைக்கட்டி கால்களை நீட்டிக்கொண்டான். அவள் எழுந்து தன் இடையாடையை நன்றாகச் சுற்றி சீரமைத்து அதன் நுனியை தோளில் போட்டபடி “மூத்தவள் என்ற நிலையில் உடன்கட்டை ஏற விழைவதாக அவள் சொல்லியிருப்பாளே?” என்றாள். “ஏன்? நீ உடன்கட்டை ஏற விழைகிறாயா?” என்றான். “ஒருபோதும் இல்லை” என்று அவள் சொன்னாள். “எனது மைந்தன் அரசாளவேண்டுமென்றால் நான் இருந்தாக வேண்டும்.”
சிசுபாலன் “நீ இதையன்றி பிறிதெதையும் எண்ணாதவள் என்று அறிவேன். ஆனால் உன் சொற்களில் அதை கேட்கையில் இழிவுகொள்கிறேன். உன் பொருட்டல்ல, என் பொருட்டு” என்றான். “இதில் இழிவு கொள்ள என்ன இருக்கிறது? இது உண்மையென்று நாமிருவரும் அறிவோம். உங்கள் தந்தையும் தாயும் அறிவர். உங்கள் நாட்டுக் குடிகள் அறிவர்” என்றாள் பத்ரை. “என் மைந்தனைவிட அவள் மைந்தன் இரண்டாண்டு மூத்தவன். உங்கள் அரசத்தோழர்களும் குடித்தூய்மை இல்லாதவர்கள். மகதத்தின் அரையரக்கன் போல. உதிரி யாதவர்கள். நாளை முடி அவனுக்குரியதென்று ஒரு சொல் எழுமென்றால் பட்டத்தரசியென்று நின்று நான் எதிர்ச்சொல்லெடுக்கவேண்டும். என் குலத்தால் ஷத்ரியர்களைத் திரட்டி என் மைந்தனுக்காக அணிநிரத்தவேண்டும்.”
“பட்டத்து இளவரசன் என்று முன்னரே முடி சூட்டப்பட்டுவிட்டதே?” என்றான் சிசுபாலன். “ஆம். ஆனால் வாளெடுத்து களம் நிற்பதுவரை அவனை காத்து நிற்கவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. பூஞ்சீப்பு முதிரும்வரை வாழைமடல் காத்து நிற்க வேண்டும், வளைந்து மேலெழும் தருணத்தை அது அறிந்திருக்கவும் வேண்டும் என்று சொல்வார்கள்” என்றபடி பத்ரை கழற்றி ஆமாடச்செப்பில் இட்டு பீடத்தின் மேல் வைத்திருந்த தன் அணிகளை எடுத்து பூணத்தொடங்கினாள்.
“ஒருவகையில் இத்தனை வெளிப்படையாக நீ இருப்பதும் நன்றே. எதையும் எண்ணி ஏமாற நீ இதுநாள்வரை இடமளித்ததில்லை” என்றான். “ஆம், எண்ணி ஏமாற்றிக் கொண்டிருப்பவள் அவள். அழியா பத்தினியாக உடன்கட்டை ஏறி சூதர் சொல்லில் வாழலாம் என்று எண்ணுகிறாள்.” சிசுபாலன் சீற்றத்துடன் “ஏன், அவள் பத்தினி அல்லவா?” என்று கேட்டான். தலையை பின்னுக்குத்தள்ளி சிரித்தபடி பத்ரை வாயிலை நோக்கி சென்றாள். “நில்! ஏன் அவள் பத்தினி அல்லவா?” என்றான். அவள் சிரித்தபடியே தாழை விலக்கினாள்.
“சொல்! சொல்லிவிட்டுச் செல்!” என்று சிசுபாலன் சினத்துடன் அவள் பின்னால் வந்தான். “அவளென்ன உங்கள் உடலை மட்டுமே அறிந்தவளா?” என்றாள் பத்ரை. “இன்று என்னுடன் இருக்கிறாள், முழுமையாக” என்றான் சிசுபாலன். “உடல் தன் நினைவுகளை விடுவதில்லை” என்றபின் “பத்தினி என்று உங்களுக்கு அமைவது அவளே என்றால் அது உங்கள் ஊழ்” என்றபடி வெளியே சென்றாள்.
உடல் தளர்ந்தவனாக சிசுபாலன் மீண்டும் வந்து மஞ்சத்தில் அமர்ந்தான். பின்பு எப்போதோ விழித்துக் கொண்டபோது வானிலிருந்து கீழே விழுந்து அம்மஞ்சத்தில் கைகால் விரித்து துயின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். எழுந்து வாயிலுக்கு வந்தபோது நீராட்டறை ஏவலன் காத்து நின்றிருந்தான். விரைந்து அவனுடன் சென்றபடி “இளைய பாண்டவர் வந்துவிட்டாரா?” என்றான். “நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது” என்றான் ஏவலன்.
[ 19 ]
நீராடி உடைமாற்றி இடைநாழிக்கு சிசுபாலன் வந்தபோது நிஸ்ஸீமர் அவனுக்காக காத்திருந்தார். “வணங்குகிறேன், அரசே!” என்றார். அவன் அவர் விழிகளை நோக்கினான். “இளைய பாண்டவர் நகர்புகவிருக்கிறார். முறைப்படி தாங்கள் நகர்முகப்பில் அவரை வரவேற்று வாள் தாழ்த்த வேண்டும்.” அவன் பேச வாயெடுப்பதற்குள் “அதற்கு விருப்பமில்லையென்றால் அங்கேயே அவரைத் தடுத்து ஒற்றைப்போருக்கு அறைகூவலாம். படைக்கலத்தை அவர் தேர்வு செய்ய அங்கேயே போர் நிகழவேண்டும். உங்களை அவர் வென்று நகர்புகலாம். தோற்றால் படையுடன் திரும்பிச் செல்லவேண்டும். அதுவே முறை” என்றார்.
சிசுபாலன் அவர் விழிகளைப் பார்க்காமல் “அது நிகழட்டும்” என்றான். நிஸ்ஸீமருக்குப் பின்னால் நின்றிருந்த ஏவலர் அனைவர் முகமும் இறுகியிருப்பதை அவன் உணர்ந்தான். இடைநாழியில் அவன் இறங்குகையில் அவர்கள் அவனைத் தொடர்ந்து வந்த காலடி ஓசையிலேயே அவர்களின் உள்ளத்தின் முறுக்கம் தெரிந்தது. முற்றத்தில் அவனுக்காக அணுக்கர்களும் படைத்துணைவர்களும் காத்து நின்றிருந்தனர். தேரில் அவன் ஏறிக்கொண்டதும் அரண்மனைக்கோட்டையின் முகப்பிலும் இரு காவல் கோட்டங்களிலும் பெருமுரசுகள் எழுந்தன. முற்றத்தில் கூடி நின்ற வீரர்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர்.
அவ்வோசைகள் நடுவே சென்று முற்றத்தைக் கடந்தபோதுதான் அவ்வாழ்த்தொலிகளில் எப்போதுமிராத உணர்வெழுச்சி இருப்பதை அவன் அறிந்தான். அறியாது திரும்பி வீரர்களின் முகங்களை ஒருநோக்கு கண்டு உடனே தலை திருப்பிக்கொண்டான். அவ்வொரு கணத்திலேயே பலநூறு விழிகளை சந்தித்துவிட்டதை அவன் உணர்ந்தான். அனைத்திலும் எப்போதும் அவன் அறிந்திராத நெகிழ்விருந்தது. பல விழிகள் மெல்லிய ஈரம் கொண்டிருப்பதைப் போன்று தோன்றின. புன்னகையுடன் தேரில் கைகளை கட்டிக்கொண்டு நின்றான். நகரின் இருபுறமும் தெய்வ ஊர்கோலம் காண்பதற்கு நிற்பது போல் சூக்திமதியின் குடிகள் செறிந்திருந்தனர். அவன் தேர் கடந்து சென்றபோது அழுபவர்கள் போல், களிவெறி கொண்டவர்கள் போல், சினம் எழுந்தவர்கள் போல் கைகளை வீசி தொண்டை நரம்புகள் புடைக்க வாழ்த்தொலி எழுப்பினர்.
புலரி ஒளி தரையை துலங்க வைக்கத் தொடங்கியது. இலைகள் மிளிர்ந்தன. ஓசைகள் கார்வையிழந்து தனித்துப் பிரிந்து கேட்டன. மணியோசைகளும் ஆலயங்களின் குந்துருக்க, அகில்புகை மணமும் காற்றில் நிறைந்திருந்தன. தலைமுடியை அளைந்த இளங்காற்றில் கோட்டைக் கரும்பரப்பில் முளைத்திருந்த புற்களின் பசும்பரப்பு பெருநடையிடும் புரவியின் மென்மயிர்த்தோல் வளைவுகளென அலையடித்தது.
கோட்டைக் கதவு மூடப்பட்டிருந்தது. உள்முற்றத்தில் சேதி நாட்டின் மூன்று வில்லவர்படை வீர்ர்கள் முழுக்கவச உடைகளும் நாய்வால்களென தோளில் வளைந்தெழுந்த விற்களுமாக காத்து நின்றனர். அவன் அணுகியதும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் நடுவே துலங்கி வந்த பாதை வழியாகச் சென்று கோட்டைக் கதவை அடைந்து தேரிலிருந்து இறங்கினான். காவலர்தலைவன் வணங்கி திறந்தளித்த திட்டிவாயிலினூடாக மறுபக்கம் சென்றான். வெளிமுற்றத்தில் ஐந்து படைப்பிரிவுகள் போரணிக்கோலத்தில் நிரை வகுத்திருந்தன. வில்லவரும் வேல்படையினரும் இரு பக்கமும் நின்றிருக்க நடுவே தேர்களும் யானைகளும் நின்றன.
படைமுகப்பை அவன் அடைந்தபோது அங்கு நின்றிருந்த படைத்தலைவன் மத்தசேனன் இரும்புக்கவசம் அணிந்த உடல் மின்ன அருகே வந்து தலைவணங்கி “அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அரசே” என்றான். “நன்று” என்றபடி முன் நிரையில் சென்று சிசுபாலன் நின்றான். அருகே நின்ற வீரன் அவனது கவசங்களைக் காட்ட தேவையில்லை என்று மறுத்தான். காலைக்காற்றில் அவன் அணிந்திருந்த பட்டுச் சால்வை உடல் சுற்றி நெளிந்து கொண்டிருந்தது. குழல் சுருள்கள் காற்றில் பறந்து தோளில் விழுந்து எழுந்தன. நீண்ட தாடி எழுந்து தோளுக்குப்பின்னால் பறந்தது.
தன் உள்ளம் அதுநாள் வரை அடைந்த அனைத்து அலைக்கொந்தளிப்புகளையும் முற்றிலும் இழந்து காற்றுபடாத குளம் என குளிர்ந்து கிடப்பதை அவன் உணர்ந்தான். அந்த அமைதி இனிதாக இருந்தது. அனைத்திலிருந்தும் விடுதலை. ஒருபோதும் கடிவாளம் இழுத்து நிறுத்த முடியாத உணர்வெழுச்சிகள். வடிவற்றுச் சிதறும் எண்ணங்கள். கலைந்து தோன்றி மீண்டும் கலையும் நினைவுகள். ஒருங்கு குவிந்த மனம் ஒரு பருப்பொருள் போல இருந்தது. தன் வடிவை தானே மாற்றிக்கொள்ள இயலாது வடிவெனும் சிறைக்குள் இருப்பை சுருக்கிக் கொண்டது. உடலுக்குள் கைவிடமுடிந்தால் உள்ளத்தை கையால் தொட்டு அழுத்திப் பார்க்க முடியும் போலிருந்தது. வெளியே எடுத்தால் பந்துபோல் கையில் வைத்து ஆட முடியும். பிறர்மேல் வீசியெறிய முடியும். அதோ ஓடும் அந்த ஓடையில் ஒழுக்கிவிட்டு ஒழிந்த அகத்துடன் அரண்மனை மீளமுடியும்.
அந்த வீண் எண்ணங்களை எண்ணி அவனே புன்னகைத்தான். சற்று நேரத்தில் அவ்வமைதி சலிப்பூட்டத் தொடங்கியது. விரையாத உள்ளம் காலத்தின் விரைவை காட்டி நின்றது. பொருண்மை கொண்டுள்ள அனைத்தையும் தழுவி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் காலம். கணங்கள் கணங்களென அவன் காலத்தை உணரத்தொடங்கினான். ஒவ்வொரு இலையசைவையும் கண்டான், ஒவ்வொரு மணல் பருவின் புரளலையும் காண்கிறோம் என்று மயங்கினான். அங்கு பிறவிகள்தோறும் நின்று கொண்டிருக்கிறேனா? சினமோ, வஞ்சமோ, அச்சமோ, செயலூக்கமோ கொள்ளாதபோது உள்ளம் எத்தனை வீண் செயல்பாடென்று தெரிகிறது. செயல்விழைவுடன் முனைகொள்ளாதபோது உள்ளம் தன்னையே பகடி செய்துகொள்ளும் பொருட்டு இயங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
தொலைவில் கொம்பொலி எழுந்தபோது அவன் நீள்மூச்சு விட்டான். கோட்டை மேலிருந்த கொம்புகளும் முரசுகளும் முழங்கத்தொடங்கின. சாலைக்கு மறுபக்கம் அணுகிவரும் கொம்பும் முரசும் முழங்கின. இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட பட்டுப்பெருங்கொடியுடன் கரிய புரவியில் முதற்படைவீரன் நிலமுதைத்துச் சுழலும் குளம்புகள் புழுதியைக் கிளப்பி பின்னால் பறக்கவிட நீர்ப்பெருக்கிலேறி வருபவன் போல அணுகினான். அவன் படைகளெங்கும் மெல்லிய உடலசைவு கவசங்களின் படைக்கலங்களின் ஒலியாக மூச்சாக பரவியது.
சிசுபாலன் கைகாட்ட சேதிநாட்டின் பன்னிரு வீரர்கள் வேல்களுடன் முன்னால் சென்று கொடி ஏந்தி வந்த வீரனை மறித்து வேல்களை சரித்து நாட்டினர். அவன் புரவியிலிருந்து இறங்கி அக்கொடியை தரையில் ஊன்றி கால் சேர்த்து அசையாது நின்றான். துவண்டு கம்பத்தில் சுற்றி இளங்காற்றில் படபடத்தது கொடி. அவனுக்குப் பின்னால் தாவிவந்த பாண்டவப்படையின் பன்னிரண்டு வெண்புரவிகள் கவச உடையணிந்த வீரர்களுடன் தயங்கி மெல்ல பெருநடையாகி அணுகின.
அவன் மறிக்கப்பட்டதைக் கண்டதும் அவர்களில் முன்னால் வந்த தலைவன் கைதூக்க ஒவ்வொரு புரவியாக ஒன்றுடன் ஒன்று முட்டி குளம்புகளின் ஒலியுடன் நிரை கொண்டன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தைத் தூக்கி மெல்ல கனைத்தன. தூக்கிய குளம்புகளால் தரையை தட்டின. பொறுமை இழந்து முன்னும் பின்னும் அசைந்தன. ஆணை பின்னுக்கு பரவிச் செல்ல வேலேந்தி வந்த காலாள் படையும் அவர்களுக்குப் பின்னால் வந்த தேர்வரிசையும் அசைவிழந்து நின்றன.
தொலைவில் பாதைவளைவு வரை வேல்களின் ஒளிவிடும் கூர்முனைகள் அலையலையென அசைந்தன. அங்கு ஒரு கொம்பொலி எழ படைகள் பிளந்து வழிவிட்ட இடைவெளி வழியாக தன் வெண்புரவியில் பீமன் அவர்களை நோக்கி வந்தான். சீரான குளம்படிகளுடன் அவன் புரவி தலையசைத்து பெருநடையிட்டு வந்தது. ஆடும் கிளையில் தொற்றி அமர்ந்திருக்கும் பறவை போல அதன் முதுகின்மேல் இருவிரல்களால் கடிவாளத்தைப் பற்றியபடி பீமன் அமர்ந்திருந்தான். அவர்கள் அனைவரும் தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த சிசுபாலன் தன் உடலிலிருந்த இறுக்கத்தை மெல்லத் தளர்த்தி இடக்காலை ஊன்றி வலக்காலை நெகிழ்வாக்கி சற்றே தோள்வளைத்து நின்றான். அது உடல்தளர்வைக் காட்டுகிறதா என்ற எண்ணம் வர மீண்டும் கால்களைச் சேர்த்து தோள்களைத் தூக்கி நின்றான்.
பீமன் புரவியை இழுத்து நிறுத்தி கால்சுழற்றி இறங்கி கடிவாளத்தை அருகே நின்ற காவலனிடம் கொடுத்துவிட்டு அவனை நோக்கி வந்தான். காலை இளவெயிலில் இடையில் புலித்தோல் ஆடை மட்டும் அணிந்து தோளில் புரண்ட நீள்குழலுடன் வெண்கலத்தில் வார்த்த பெருஞ்சிலைபோல் நடந்து வந்த அவனை சிசுபாலன் நோக்கி நின்றான். நீலநரம்பு புடைத்துப்பின்னிக் கட்டிய தோள்கள். நரம்புவிழுந்திறங்கிய புயங்கள். இருபிளவென நெஞ்சு. ஒவ்வொரு தசையும் முழுவளர்ச்சி கொண்டு முழுத்து இறுகி நெகிழ்ந்து அசைந்தது. உடல் அதன் வடிவிற்குள்ளேயே சிற்றலைகளாக ததும்பியது.
புன்னகையுடன் இரு கைகளை விரித்து சிசுபாலனை அணுகி “வணங்குகிறேன், சேதி நாட்டரசே. மீண்டும் தங்களை சந்தித்தமை எனது இந்நாளை ஒளி பெறச்செய்கிறது” என்று முகமன் உரைத்தான். சிசுபாலன் இருகைகளையும் தடுப்பதுபோல் விரித்தபடி உரத்த குரலில் “இளைய பாண்டவரே, இந்நகரை வென்று ஆநிரை கொள்ள தாங்கள் வந்தீர்கள் என்றால் நகர் வாயிலில் தங்களைத் தடுக்கும்பொருட்டு இங்கு நிற்கிறேன். சேதி நாடு எந்தக் கொடிக்கும் தலைவணங்காது என்று அறிவிக்க விழைகிறேன்” என்றான்.
பீமன் நின்று அவனையும் அருகில் நின்ற படைத்தலைவனையும் நோக்கியபின் உரக்க நகைத்து “இது என்ன குழப்பம்? அரசே, இது ஓர் எளிய சடங்கு. இதன் பொருட்டு என் சிறிய தாயாரின் நாட்டுடன் எங்ஙனம் போர் தொடுப்பேன்? இந்திரப்பிரஸ்தம் சென்று என் அன்னைக்கு என்ன மறுமொழி உரைப்பேன்? அவர் இங்கே நான் செல்வது என் பிறந்த மண்ணுக்குச் செல்வதுபோல என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்” என்றான்.
அவன் தோளில் கைவைத்து “அரசே, நான் ஆநிரை கவரவோ சூக்திமதியின் கொடியை வெல்லவோ இங்கு வரவில்லை. விரிந்த கரங்களுடன் நட்புகொள்ளவே இங்கு வந்தேன். எங்கள் வேள்வியை சேதி நாடு ஏற்கிறதென்றால் ஒற்றைப் பசுக்கன்றை மட்டும் அன்பளிப்பாக கொடுங்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறேன். மறுத்தீர்கள் என்றால் இந்நகர்வாயிலில் தலைவணங்கி உங்களுக்கு வாழ்த்து சொல்லி என் சிறிய அன்னைக்கும் பேரரசருக்கும் வணக்கமுரைத்து திரும்பிச் செல்கிறேன்” என்றான் பீமன்.
சிசுபாலன் அக்கையின் எடையை உணர்ந்தபடி தன்னருகே நின்ற இரு வீரர்களையும் நோக்கி விழிசலித்து “எவ்வகையில் எனினும் ஆகொள்ளுதல் ஒருநாட்டை வெல்லுதலே ஆகும். தாங்கள் கோரியபடி கன்று தர இயலாது” என்றான். “நன்று. எனில் தங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். நகர் நுழைந்து சிற்றன்னையைக் கண்டு நான் கொண்டு வந்த பரிசிலை அளித்து வாழ்த்து பெற்று மீள தங்கள் ஒப்புதல் உண்டா?” என்றான் பீமன். சிசுபாலன் “ஆம், அது தங்கள் உரிமை” என்றான்.
பீமன் அருகே வந்து இருகைகளையும் விரித்து “குருதி முறையில் நாம் உடன்பிறந்தோர். தங்களை நெஞ்சு தழுவும் உரிமையும் எனக்குண்டு என்று எண்ணுகிறேன்” என்றான். சிசுபாலன் சற்று பின்னடைந்து “ஜராசந்தனைக் கொன்ற கைகள் அவை” என்றான். “ஆம், அவரால் கொல்லப்பட வாய்ப்பிருந்த நெஞ்சு இது. சிசுபாலரே, முற்றிலும் முறைமைப்படி அப்போர் நிகழ்ந்தது. விலங்குமுறைமை. போரின் எங்கோ ஓரிடத்தில் ஷத்ரிய முறைமை அழிந்து அரக்கர் முறை எழுந்தது. அது விலங்குமுறைமையென்றாகியது. அதன் தொடக்கம் என்னிடமிருந்தல்ல. அம்முறைப்படி போரை முடித்துவைப்பதல்லாமல் பிறிதொன்றும் நான் செய்வதற்கில்லை” என்றான் பீமன். “விண்ணேறி வீரர் உலகில் ஜராசந்தரை பார்ப்பேன் என்றால் என் தோள்கள் விரிவதற்குள்ளேயே உவகையுடன் அவர் தோள்கள் விரியும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.”
சிசுபாலன் “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான். “தாங்கள் விழையவில்லை என்றால் தோள் தழுவுதலை தவிர்க்கிறேன்” என்று பீமன் அருகே நின்ற மத்தசேனனை நோக்கி கைகளை விரித்தான். அவன் அலையொன்றால் தள்ளப்பட்டவனைப்போல ஓரடி எடுத்து முன்சென்று இருகைகளையும் விரித்து பீமனின் தோள்களைத் தழுவி தன் தலையை அவன் தலை அருகே சாய்த்தான். அவன் விலகியதும் சிசுபாலனின் மறுபக்கம் நின்றிருந்த துணைப்படைத்தலைவனை பீமன் தழுவிக்கொண்டான். தன் படைகளனைத்தும் அறியாக் கைகளால் அப்போது அந்த மாமல்லனைத் தழுவுவதை சிசுபாலன் விழியோட்டி கண்டான். அவர்களின் உடல்களனைத்தும் ததும்பிக்கொண்டிருந்தன. விழிகள் ஒளிகொண்டிருந்தன. முகங்கள் கந்தர்வர்களுக்குரிய மலர்வுகொண்டிருந்தன.
பீமன் சிசுபாலன் கைகளை பற்றிக்கொண்டு “சேதி நாட்டு அரசரை வணங்குகிறேன். நாம் நகர்புகலாம். என் படைகள் கோட்டைக்குள் வரா. என் சிற்றன்னையைக் கண்டு பாதங்களை சென்னிசூடி மீள்கிறேன்” என்றான். அப்பெருங்கைக்குள் தன் கை அடங்கியபோது அவை கற்பாறையின் உறுதியுடன் இருப்பதையும் தனது கை அதிர்ந்து கொண்டிருப்பதையும் சிசுபாலன் உணர்ந்தான். பீமன் அவன் கையைப்பற்றியபடி ஓரடி எடுத்து வைக்க சிசுபாலன் இருகைகளையும் விரித்தான். உரக்க நகைத்தபடி பீமன் அவனை நெஞ்சுடன் தழுவிக்கொண்டான்.
பீமனின் விரிந்த மார்பில் தன் தலையை சாய்த்து மெல்ல அதிர்ந்த உடலுடன் சிசுபாலன் “எடுத்துக் கொள்ளுங்கள், இளைய பாண்டவரே! இந்நகரின் அனைத்து ஆநிரைகளும் தங்களுக்குரியவை” என்றான்.
[ 20 ]
வழக்கமான கனவுடன் சுருதகீர்த்தி விழித்துக்கொண்டாள். நெடுந்தொலைவிலென ஒரு யானையின் பிளிறலை கேட்டாள். அது ஒரு மன்றாட்டுக்குரலென ஒலித்தது. கோட்டையின் மேற்குப் பக்கமிருந்த கொட்டிலில் இருந்து முதிய பிடியானையாகிய சபரி பிளிறுகிறது என்று மேலும் விழிப்புகொண்ட பின்னரே அவள் சித்தம் அறிந்தது.
நெடுநாட்களாகவே அது நோயுற்றிருந்தது. முதுமை உலர்ந்த சேற்றிலிருந்து புதைந்து மட்கிய மரத்தடிகள் எழுந்து வருவதுபோல அதன் உடலில் எலும்புகள் புடைத்தெழச்செய்தது. கன்ன எலும்புகள் எழுந்தபோது முகத்தில் இரு ஆழமான குழிகள் விழுந்தன. நெற்றிக்குவைகள் இரும்புக்கம்பிச்சுருள்கள் போன்ற முடிகளுடன் புடைத்தன. அமரமுடியாதபடி முதுகெலும்பு குவிந்தெழுந்தது. தொடையெலும்புகளும் மேலெழுந்து வந்தபோது அதன் கால்கள் வலுவிழந்தன. அது படுக்க விழைந்தது. “படுத்தால் அதன் எடை அப்பகுதியின் தோலை கிழிக்கும். புண் வந்து புழுசேரும். துயரமான இறப்பு அது” என்றார் யானைமருத்துவரான குந்தமர்.
அதன் கால்களுக்குக் கீழே மரத்தாலான பெரிய தூண் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்மேல் பரப்பப்பட்ட மரவுரிவளைவின் மேல் தன் வயிற்றை அழுத்தி எடையை கால்களிலும் அத்தூணிலுமாக பகிர்ந்து சபரி நின்றது. ஒவ்வொருநாளும் சூடான மூலிகைநீரை ஊற்றி அதன் சுருங்கிக்கொண்டிருந்த தசைகளை வெம்மையூட்டி மரவுரியால் நீவி உயிர்கொள்ளவைத்தனர் யானைப்பாகர். செக்கிலிட்டு ஆட்டிய பசுந்தழையுடன் கம்புசோறும் வெல்லமும் கலந்த கூழை சிறிய அளவில் இருமுறையாக அதற்கு ஊட்டினர்.
சபரி எப்போதும் தன்னருகே பாகர்கள் எவரேனும் இருக்கவேண்டுமென விரும்பியது. அதன் விழிகள் பார்வையை இழந்து வெண்சோழிகள் போல ஆகிவிட்டிருந்தன. மெல்ல அசைந்தும் நிலைத்துக்குவிந்து சிற்றொலிகளையும் தேரும் செவிகளாலும் நிலையற்று அலைந்து காற்றை துழாவித்தவிக்கும் சுருங்கிய துதிக்கையின் முனையாலும் அது தன் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. எதன்பொருட்டேனும் அணுக்கப்பாகன் விலகிச்சென்று, அவன் ஓசையும் கேட்காமலானால் பெருமுரசில் துணிமுண்டுகொண்ட கோல் விழுந்ததுபோல மெல்ல அதிர்ந்து அழைத்தது. அவ்வழைப்புக்கு மறுமொழி உடனே எழாவிட்டால் அஞ்சி பிளிறத்தொடங்கியது.
“எதை அஞ்சுகிறது அது?” என்று ஒருமுறை சுருதகீர்த்தி குந்தமரிடம் கேட்டாள். “பிடியானை பெருங்குலத்தின் பேரரசி அல்லவா? காட்டில் அவளுக்கு தனிமையென ஒன்றில்லை, பேரரசி” என்றார் குந்தமர். “ஆனால் அவள் தனிமையில்தானே இறந்தாகவேண்டும்?” என்றாள் சுருதகீர்த்தி. குந்தமர் புன்னகைத்து “எவராயினும் தனிமையில்தான் இறக்கவேண்டும்” என்றார். சுருதகீர்த்தி புன்னகைத்து “ஆனால் பெருங்குடிபுரந்த அன்னைக்கு பேருருக்கொண்ட தனிமையாக வருகிறது சாவு” என்றாள்.
சூக்திமதியின் யானைக்கொட்டிலில் நின்றிருந்தவற்றில் இருபத்துமூன்று களிறுகளும் முப்பத்தாறு பிடிகளும் அவள் குருதிநிரையிலெழுந்தவர்கள் என்று அரண்மனைக் கணக்குகள் சொல்லின. அவையனைத்தும் அவளை வாசனையால் அறிந்திருந்தன. காலையில் தளையவிழ்க்கப்படுகையில் அவை அவளருகே வந்து துதிக்கை தூக்கி மூக்குவிரல் அசைய மூச்சு சீறி அவளை வாழ்த்திச் சென்றன. எப்போதாவது அன்னைப்பிடி மெல்ல உறுமி அவளிடம் ஒரு சொல் பேசியது.
மூதன்னை அவர்கள் வந்துசெல்வதை அறியாதவள்போல தன் இருண்ட தவிப்புக்குள் உழன்றுகொண்டிருப்பாள். அவள் அவர்களை அறியவேயில்லை என்று தோன்றும். ஆனால் எப்போதாவது இளங்கன்று ஒன்று உடல்நலமிழந்தால் முதலில் அதை அறிபவளும் மூதன்னையே. நிலையற்ற துதிக்கையுடன் உடலை அசைத்தபடி அவள் மெல்ல பிளிறிக்கொண்டே இருப்பாள். தன் கொடிவழிவந்த யானை இறந்ததென்றால் இருநாட்கள் உணவும் நீருமின்றி நிலத்தில் ஊன்றிய துதிக்கையுடன் செவியசைய இளங்காற்றில் ஆடும் மரம்போல நின்றுகொண்டிருப்பாள்.
அவள் குலத்தின் பெருங்களிறான அம்புஜன் துவாரகையுடனான ஓர் எல்லைப்போரில் நச்சுவாளி ஏற்று நோய்கொண்டு இறந்தான். அவள் அவ்விறப்பை அறியவேண்டாம் என்று நோயுற்ற அம்புஜனை அப்பால் கொண்டுசென்று சத்ரபாகம் என்னும் குறுங்காட்டில் கட்டியிருந்தனர். ஆனால் அம்புஜன் நோயுற்றிருப்பதை மூதன்னை அறிந்திருந்தாள். அவன் இறந்த செய்தியை அவன் அருகே இருந்த பாகன் அறிந்த கணமே நெடுந்தொலைவிலிருந்த மூதன்னையும் அறிந்தாள். துதிக்கையை தூக்கி தொங்கிய வாய்க்குள் எஞ்சிய கரிய ஒற்றைப்பல் தெரிய பிளிறிக்கொண்டே இருந்தாள்.
“களிறுகள் அவற்றுக்குரிய காணாத்தேவர்களால் ஆளப்படுபவை, அரசி... அத்தெய்வங்கள் சொல்லியிருக்கும்” என்றான் பாகன். “அவை தங்கள் நுண்மணங்களால் இணைக்கப்பட்டவை” என்றார் குந்தமர். அவள் பழுத்து அழுகிய கனிபோல தெரிந்த முதியவளின் கண்களை நோக்கிக்கொண்டு நின்றாள். அதிலூறிய விழிநீர் வெண்பீளையுடன் உருகிவழிவதுபோல வெடித்த சேற்று நிலமெனத் தெரிந்த கன்னங்களில் தயங்கிப்பிரிந்து வழிந்தது. ஒருகணம் அந்த இருட்குவைக்குள் நுழைந்து வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்ட உணர்வு எழ அவள் அஞ்சி திரும்பி ஓடினாள். அதன் பின் அவள் சபரியை நேரில் காணவே இல்லை.
ஆனால் ஒவ்வொருநாளும் அவள் குரலைக் கேட்டே விழித்தாள். எங்கோ அந்நகரின் ஒலிப்பெருக்கின் அடியில் அக்குரல் ஒலித்துக்கொண்டே இருப்பதை எப்போதும் அவள் சித்தம் உணர்ந்திருந்தது. மெல்ல அதை அவள் தவிர்க்கத் தொடங்கினாள். தவிர்க்கத்தவிர்க்க அது பெருகியதென்றாலும் ஒரு கட்டத்தில் பொருளிழந்தது. பொருளற்றவற்றை சித்தம் அறிவதேயில்லை.
அன்று ஏன் அதை கேட்டோம் என எண்ணியபடி அவள் நீராட்டறைக்குச் சென்றாள். “சபரி மேலும் நோயுற்றிருக்கிறதா?” என்று அணுக்கச்சேடி ரம்யையிடம் கேட்டாள். “ஆம் பேரரசி, சென்ற ஒருவாரமாகவே அதன் நோய் முதிர்ந்துள்ளது. பின்காலில் பெரிய நெறிகட்டியிருக்கிறது. நகவளையங்களுக்குமேலாக பெரிய புண் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கிறது. அது மேலும் ஒரு வாரம் உயிர்வாழலாமென்று சொல்கிறார்கள்” என்றாள் ரம்யை. அதன் பின் மேற்கொண்டு கேட்க ஆர்வமில்லாதவளாக அவள் விழிகளை மூடிக்கொண்டாள்.
ஆனால் அவள் எண்ணங்கள் அந்தப்புள்ளியிலேயே முளைகட்டப்பட்டிருந்தன. அதை தவிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அதையே எண்ணத்தொடங்கினாள். அவள் மணமுடித்து சூக்திமதியில் நகர்நுழைந்தபோது கோட்டைமுகப்பில் பொன்முகபடாமணிந்து சிறுகொம்புகளில் பொற்பூண் மின்ன பட்டுத்திரை நலுங்க வந்து மாலைசூட்டி வரவேற்றவள் சபரிதான். அத்தனை பெரிய பிடியானையை அவள் அதற்கு முன் பார்த்ததில்லை என்பதனால் அது அணுகும்தோறும் அச்சம் எழ தேரின் பீடத்திலிருந்து அறியாது எழுந்துவிட்டாள்.
கல்மண்டபம் போல அவள் பார்வையை முழுமையாக மறைத்து அது அருகணைந்தது. அஞ்சி அமர்ந்த அவள் விழிகளுக்கு நேராக யானையின் தலை வந்தபோது தேர்வாயிலை அதன் கன்னம் மட்டுமே முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. கற்பாறை வைத்து குகைவாயிலை மூடியதுபோல. தோலின் விரிசல்களின் சந்திப்பில் மின்னும் ஒற்றைவிழி ஏதோ கனவில் ஆழ்ந்தது என தெரிந்தது.
“எழுந்திருங்கள், அரசி” என்று அணுக்கச்சேடி ரம்யை சொன்னாள். அவள் எழுந்து தேர்த்தூணை பிடித்துக்கொண்டாள். “வலக்காலெடுத்து வைத்து இறங்குங்கள்... இனி இது உங்கள் மண்” என்று சொன்ன ரம்யை அருகிலிருந்த பொற்குடத்து நீர்மேல் ஒரு செந்தாமரையை வைத்து அவளிடம் அளித்தாள். அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டு அவள் வலக்கால் எடுத்து வைத்து தேரிலிருந்து இறங்கினாள். சபரியின் துதிக்கை அவள் தலைக்குமேல் ஆலமரக்கிளை என எழுந்தது. அது தாழ்ந்து வந்து அவள் கழுத்தில் ஓர் வெண்மலர் மாலையை சூட்டியது. அதன் தண்மையும் ஈரமும் எடையும் அதை ஒரு நாகம் என அவள் உடல் எண்ணி சிலிர்க்கவைத்தது.
“ஏறிக்கொள்ளுங்கள், அரசி” என்றாள் ரம்யை. அவள் தயங்க சபரி அவள் இடையை வளைத்துத் தூக்கி தன் மத்தகத்தின்மேல் அமர்த்திக்கொண்டது. அவள் பதறி அதன் கழுத்தைச்சுற்றி கட்டப்பட்டிருந்த பட்டுவடத்தை கால்களால் பற்றிக்கொண்டாள். கையில் பொற்குடத்துடன் அவளைக்கண்டதும் சூக்திமதியின் படைவீரர்களும் குடிகளும் எழுப்பிய வாழ்த்தொலி பொங்கி வந்து அவளைச் சூழ்ந்தது. அப்போதுதான் அவள் முதல்முறையாக தன்னை அரசியென உணர்ந்தாள்.
[ 21 ]
மதுவனத்தின் ஹ்ருதீகரின் கொடிவழிவந்த இளவரசி அவள் என இளமையிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் சுருதகீர்த்தி வாழ்ந்த ருதுவனம் என்னும் ஆயர்பாடியில் காடுகளில் கன்றோட்டியும் பால்கறந்தும் வெண்ணைதிரட்டி நெய்யுருக்கியும்தான் அவள் வளர்ந்தாள். இளவரசி என்னும் அழைப்பை ஒரு பெயர் என்றே அவள் உணர்ந்திருந்தாள். ஆயர்குல முறைமைகளுக்கு அப்பால் அரசச்சடங்குகளையோ அரண்மனைநடத்தைகளையோ அவள் அறிந்திருக்கவில்லை.
அவள் பெரிய தந்தையரான தேவவாகரும் கதாதன்வரும் ருதுவனத்தின் இளவேனில் விழவுக்கு வந்து உணவுக்குப் பின்னர் குடிமன்றின் சாணிமெழுகிய பெரிய திண்ணையில் படுத்து பனையோலை விசிறிகள் ஒலிக்க தளர்ந்த அரைத்துயில் குரலில் சொல்லாடிக்கொண்டிருக்கையில் அவள் முதல்முறையாக தான் ஓர் எளியபெண் அல்ல என்றும் தன்னைச்சூழ்ந்து அரசியல் அலையடிப்பதையும் அறிந்தாள்.
அவள் அருகிருந்த சிறிய வைப்பறைக்குள் ஒளிந்திருந்தாள். கண்டுபிடியாட்டத்தில் அவள் தோழிகள் அவளை அங்குள்ள புதர்களிலும் மரக்கிளைகளிலும் இல்லங்களிலும் தேடிக்கொண்டிருந்தனர். ஒலிகேட்டு அவள் எட்டிப்பார்த்து தந்தையர் படுத்திருப்பதை உணர்ந்து பின்னடைந்தாள். புரண்டு படுத்த தேவவாகர் “எளிதில் முடிவெடுக்கக் கூடியதல்ல அது, இளையோனே. நீ பெற்றிருப்பது ஒற்றை மகளை. உனக்கு மைந்தருமில்லை. யாதவமுறைப்படி மகளூடாகச் செல்வது கொடிவழி என்பதனால் அவளை கொள்பவன் உன் குடியை அடைகிறான்” என்றார்.
கிருதபர்வர் “ஆம், அதைத்தான் அத்தனைபேரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அரசியலோ நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. நான் எம்முடிவையும் எடுப்பதாக இல்லை. நீங்களிருவரும் சொல்லுங்கள், செய்வோம்” என்றார். “பத்மாவதியின் மைந்தன் கம்சனைப்பற்றி கேள்விப்படுவன எவையும் நன்றாக இல்லை” என்று தொடர்பில்லாமல் கதாதன்வர் சொன்னார். “அவன் ஒரு விழியற்ற காட்டெருமை என்று ஒரு சூதன் சொன்னான். மிகச்சரியான சொல்லாட்சி அது. அவனுக்கு இருப்பது விழியின்மை மட்டுமே அளிக்கும் பேராற்றல்.”
கிருதபர்வர் “ஆம்” என்றார். கதாதன்வர் தொடர்ந்து “விழியற்ற காட்டெருமை பாறையை எதிரியென எண்ணி தன் தலையுடைத்துச் சாகும் என்றான் சூதன்” என்றார். “ஆனால் நாம் என்னதான் சொன்னாலும் இன்று யாதவர்களிடமிருக்கும் வலுவான அரசென்பது மதுரா மட்டுமே. மகதத்தின் படைக்கூட்டு இருக்கும் வரை ஷத்ரியர் எவராலும் வெல்லப்பட முடியாததாகவே அது நீடிக்கும்” என்றார் தேவவாகர். “ஆனால்...” என்று சொன்னபின் “ஒன்றுமில்லை” என்று கதாதன்வர் கையை வீசினார்.
“அதையெல்லாம் நாம் பார்க்கவேண்டியதில்லை. நாம் எளிய யாதவக்குடி அல்ல இன்று. அரசு என்று வந்துவிட்டால் பிறகெல்லாமே அரசுசூழ்தல்தான். நம் பெண்டிரின் மணம் என்பது இனி அவர்களின் நலனுக்குரியது அல்ல, நம் குடியின் நலம் சார்ந்தது மட்டுமே. அதை அவர்களும் உணர்ந்தாக வேண்டும்.” ஏதோ சொல்லவந்த தந்தையை தடுத்து “உண்மை, அவன் கொடியவன். ஆனால் வல்லமை மிக்கவன்” என்றார் தேவவாகர். கிருதபர்வர் “நான் சொல்லவருவது அதுவல்ல, மூத்தவரே, குந்திபோஜனின் எடுப்புமகள் பிருதையை கம்சன் மணக்கக்கூடும் என சொல்கிறார்களே?” என்றார்.
“அவன் அவ்வாறு விழைகிறான் என்கிறார்கள். அவன் கணக்குகள் அப்படிப்பட்டவை. அவனுடன் அமைச்சனாகவும் தோழனாகவும் இருப்பவன் பிருதையின் தமையன் வசுதேவன். யாதவர்களுக்கு இன்றிருக்கும் பிற மூன்று அரசுகள் உத்தரமதுராவின் தேவகனின் அரசு. குந்திபோஜனின் மார்த்திகாவதி. சூரசேனரின் மதுவனம். குந்திபோஜன் மகளை மணந்து வசுதேவனுக்கு தேவகன் மகளை மணம்புரிந்து உடன் வைத்துக்கொண்டால் நான்கு யாதவ அரசுகளும் இணையும் என்பது அவன் கணக்கு.”
“அவனுக்கு மகதமன்னன் பிருஹத்ரதரின் தங்கைமகளின் புதல்விகளை மணம்புரிந்து வைக்கப்போவதாக செய்தி உள்ளது” என்று தேவவாகர் சொன்னார். “ஆம், அது ஒரு அழியா முடிச்சு. ஆனால் அப்பெண்கள் அரசரின் நேரடிக்குருதியினர் அல்ல. பிருஹத்ரதரின் தந்தைக்கு சூத்திரப்பெண்ணில் பிறந்த மகளின் புதல்விகள். ஆஸ்தி, பிராப்தி என அவர்களுக்கு பெயர்.” கிருதபர்வர் “மகளை கம்சனுக்கு அளிக்க குந்திபோஜனுக்கு எண்ணமிருக்குமா?” என்றார்.
“கம்சனைப்பற்றி அவனும் அறிவான். அவன் மகள் அவனைவிட நன்கறிந்தவள்” என்றார் தேவவாகர். “அவள் ஒருநாள் பாரதவர்ஷத்தை முழுதாளும் பேரரசி ஆவாள் என நிமித்திகர் குறியுரைத்துள்ளனர். இந்த யாதவச்சிற்றரசனை மணந்து அவள் எப்படி பேரரசி ஆகமுடியும்?” கிருதபர்வர் “அவள் வயிற்றில் இன்னொரு கார்த்தவீரியன் பிறக்கலாகுமே? அவன் பாரதவர்ஷத்தை வென்று மணிமுடியை அவள் தலையில் கொண்டுவந்து வைக்கக்கூடும் அல்லவா?” என்றார்.
அச்சொற்கள் தலையைச்சுற்றி ரீங்கரிக்க அதன்பின் அவள் நிழலென உலவினாள். தோழியரிடமிருந்து விலகி தனிமையிலமர்ந்து கனவுகண்டாள். அக்கனவில் மதுராவின் கம்சன் முகமும் விழிகளும் நகைப்பும் குரலும் கனிவும் காதலும் கொண்டு எழுந்துவந்தான். அவனுடைய கொடுமைகுறித்த செய்திகளெல்லாம் ஆற்றல்குறித்தவை என அவளுக்குத் தெரிந்தன. அவனுடைய அறிவின்மை குறித்தவை வேடிக்கைகளென்றாயின. சின்னாட்களிலேயே அவள் அவனுக்கு மணமகளென்றாகி அகத்தே வாழ்ந்துகொண்டிருந்தாள்.
மார்த்திகாவதியில் பிருதையின் தன்மண நிகழ்வுக்கான செய்தி அறிந்ததும் அவள் கைகள் குளிர்ந்து நடுங்க கால்கள் தளர சுவருடன் சாய்ந்து நின்றாள். பேசிக்கொண்டிருந்த ஆய்ச்சியர் மேலும் மேலும் அக எழுச்சி கொண்டனர். பத்மை அத்தை “வேறெவர் வருவார்? சிறுகுடி ஷத்ரியர் வரக்கூடும். அவர்களில் கம்சரின் ஒரு கைக்கு இணையானவர் எவருமில்லை” என்றாள். “பிருதையை அவர் மணந்தால் மகதத்துடன் போர் வரும்... ஐயமில்லை” என்றாள் சுருதை மாமி. “போரில் கம்சர் வெல்வார்... அவர் கார்த்தவீரியனின் பிறப்பு” என்று முதுமகளாகிய தாரிணி சொன்னாள்.
கண்ணீருடன் சென்று தனித்தமர்ந்து தானறிந்த தெய்வங்களை எல்லாம் எண்ணி எண்ணி வேண்டிக்கொண்டாள். “அன்னையரே! அன்னையரே!” என அரற்றிக்கொண்டே இருந்தது உள்ளம். இரவெல்லாம் துயிலழிந்து மறுநாள் உலர்ந்த உதடுகளும் நிழல்பரவிய விழிகளுமாக எழுந்தாள். அவளுக்கு வெம்மைநோய் என்று அன்னை எண்ணி சுக்குநீர் செய்து அளித்தாள். இருளுக்குள் உடல்சுருட்டி படுத்துக்கொண்டு ஓசையின்றி கண்ணீர் விட்டாள். உள்நிறைந்த எடைமிக்க ஒன்று உருகி கண்ணீராக சேக்கையை நனைத்தது. மறுநாள் அவளால் எழவே முடியவில்லை. தன்னினைவில்லாது அவள் “காட்டெருமை! கொம்புகள்!” என்று பிதற்றிக்கொண்டிருந்தாள்.
அவளைச்சூழ்ந்து பெண்கள் நிறைந்திருந்தபோதிலும் தமையன் சக்ரகீர்த்திதான் அவள் உள்ளத்தை புரிந்துகொண்டான். அவளருகே அமர்ந்து அவள் கால்களின் சிலம்பை கையால் அசைத்து ஓசையெழுப்பியபடி மெல்லியகுரலில் “எதன்பொருட்டு துயருறுகிறாய் இளையோளே?” என்றான். யாதவரில் என்றுமே பெண்ணுக்கு அணுக்கமானவன் தமையனே. அவள் உளமுருகி அழத்தொடங்கினாள். “நீ கம்சரை எண்ணுகிறாயா?” என்றான். அவள் தன் ஆழம் வரை வந்த அவன் உள்ளத்தை உணர்ந்து திடுக்கிட்டாள். மறுகணமே ஆறுதல் கொண்டாள். ஆம் என தலையசைத்து சுருண்டு படுத்தாள்.
“அஞ்சாதே... நான் அனைத்தையும் ஒழுங்குசெய்கிறேன். அவளை கம்சர் மணந்தால்கூட நீ அவரை மணக்கலாம். பிருதை உன் தமக்கைதான்” என்றான். சீறி எழுந்து “சீ” என்றாள். அவள் உதடுகள் துடித்தன. “வேண்டாம்” என்று சொல்லி படுத்துக்கொண்டாள். அவன் அந்த எல்லைக்கும் அவளுடன் வந்து “ஆம், அதை உன்னால் ஏற்கமுடியாது. வேண்டியதில்லை. கம்சர் பிருதையை மணக்காமல் போனால் நீ மதுராவின் அரசியாவாய்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் அவள் கால்சிலம்பை அசைத்துவிட்டு அவன் எழுந்து அகன்றான்.
நான்காம்நாள் செய்திவந்தது, பிருதை அஸ்தினபுரிக்கு அரசியென சென்றுவிட்டாள் என்று. முதலில் அதை ஆய்ச்சியர் நம்பவில்லை. “யார்? அஸ்தினபுரியின் இளவரசனா?” என்று மாறிமாறி கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் அவனைப்பற்றிய செய்திகள் வரத்தொடங்கின. வெண்சுண்ணநிறமானவன் என்றனர். “அவ்வண்ணமென்றால் அவனால் தந்தையென்றாக முடியாது” என்றாள் மருத்துவச்சியான காரகை. “ஏன்?” என்று கேட்ட இளம்பெண்ணிடம் “எழுந்து போடி” என்று அவள் அத்தை சீறி அடிக்க கையோங்கினாள்.
“ஏன் அவனை தெரிவுசெய்தாள் பிருதை? மூடச்சிறுமகள்!” என்றாள் அவள் அன்னை. “சாத்வி, உனக்கு அவளை தெரியாது. அவள் எட்டுகைகளும் நூறுவிழிகளும் கொண்டவள், பிறவியிலேயே பேரரசி என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவள் பிறவிநூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியென முடிசூடுவாள் என்று எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.” யாரோ சிலர் சிரித்தனர். “அதை நம்பி இம்முடிவை எடுத்துவிட்டாள் போலும்... சூதர்கள் எழுதியபடி மானுடர் வாழ்கிறார்கள். மானுடர் வாழ்வதை சூதர் பாடுகிறார்கள்” என்றாள் பத்மை அத்தை. மீண்டும் சிரிப்பு எழுந்தது.
ஒரு முதுமகள் “உண்மைதானோ?” என்றாள். அனைவரும் அவளை திரும்பி நோக்கினர். “மூத்த இளவரசர் திருதராஷ்டிரர் விழியற்றவர். அப்படியென்றால் இப்பாண்டுவே அரசன். எண்ணிநோக்குக, யயாதியின் குலத்திற்கு யாதவப்பெண் அரசியாக செல்கிறாள். தேவயானியும் சத்யவதியும் அமர்ந்த அரியணையில் அமரவிருக்கிறாள். அவள் மைந்தர்கள் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் அமைந்த அரசநிரையில் எழுவார்கள். யாரறிவார், பரதனைப்போன்ற சக்ரவர்த்தி அவள் கருவில் விதையென உறங்கிக்கொண்டிருக்கக் கூடும்.” ஆய்ச்சியர் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர்.
அவள் அரையிருளில் மூலையில் அமர்ந்து அவ்விழிகளின் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்லிய தசைநூல் ஒன்று அவளுக்குள் அறுபடுவது போல உணர்ந்தாள். வலியும் ஆறுதலும் கலந்த ஒன்று. அதன்பின் அவள் கம்சனைப்பற்றி எண்ணவில்லை. கம்சனைக் கடந்து மாலையுடன் செல்லும் பிருதையின் காட்சியை தன்னுள் எழுப்பிக்கொண்டாள். ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் தெளிவடைந்து நுணுக்கமாகியது அது. முதலில் படபடப்பை அளிப்பதாக இருந்தது மெல்ல மெல்ல உருமாறி உள்ளாழத்தில் இனிய சிலிர்ப்பை நிறைப்பதாக மாறியது.
சக்ரகீர்த்தி தந்தையிடம் பேசி கம்சருக்கு மணத்தூதனுப்ப அவரை ஒப்பவைத்ததையும் அச்செய்தியை அவர் யாதவர்களின் குடியவையில் முன்வைத்ததையும் மதுவனத்தின் சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்து கொந்தளித்ததையும் அவள் பின்னர்தான் அறிந்தாள். “தந்தையைச் சிறையிட்டு முடிசூடிய இழிமகனுக்கு மகள்கொடையளித்துத்தான் முடிப்பெருமை கொள்ளவேண்டுமா கிருதபர்வரே? நாணில்லையா உமக்கு?” என்று அவர் கூவியபோது குங்குரர்களும் அந்தகர்களும் போஜர்களும் விருஷ்ணிகளும் “ஆம்! கீழ்மை!” என்று கூவியபடி எழுந்தனர்.
தேவவாகர் “பொறுங்கள்... இளையோனே பொறு. இது பெண்ணின் விழைவு. நம் யாதவக்குடிகளின் நெறிப்படி பெண்ணின் விழைவை எவரும் விலக்க இயலாது” என்றார். “மூத்தவரே, பெண் தன் குடிக்கு உரிமையானவள் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சூரசேனர். “எதற்கு வீண் சொல்லாடல்? அவள் வந்து இந்த அவைநின்று சொல்லட்டும், மதுராவின் அரசனுக்கு மணமகளாக விழைகிறாள் என்று...” என்றான் சக்ரகீர்த்தி. “ஆம், அதுவே முறை” என்றார் தேவவாகர்.
சக்ரகீர்த்தி அவள் இருந்த அறைக்குள் வந்து “இளையோளே, அவைபுகுந்து உன் விழைவை சொல். நீ யாதவப்பெண். உன் விழைவை மறுக்க பன்னிரு யாதவரும் ஒருங்கே எண்ணினாலும் இயலாது” என்றான். அவள் பெருமூச்சுடன் ஆடைதிருத்தி எழுந்தாள். அவன் அவள் அருகே வந்தபடி “முன்பு பிருதை இதேபோன்ற தருணத்தில் எடுத்த முடிவால்தான் அவள் குந்திபோஜருக்கு மகளானாள்” என்றான்.
யாதவமன்று நடுவே சென்றுநின்ற கணம் வரை அவள் எம்முடிவும் எடுக்கவில்லை. கம்சனைப்பற்றிய எண்ணமேகூட அப்போதுதான் எழுந்தது. உடனே உடல் அருவருப்புடன் உலுக்கிக்கொண்டது. குனிந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆழியைத் தொட்டு “நான் யாதவப்பெண். யாதவக்குலமன்றுக்கு முழுமையாக கட்டுப்பட்டவள். கம்சரை விலக்குகிறது இந்த அவையென்றால் அது என் கடமை” என்றாள். திரும்பி தந்தையரையும் சூரசேனரையும் அக்ரூரரையும் வணங்கிவிட்டு தமையனின் கண்களை நோக்கினாள். அதில் தெரிந்த திகைப்பைக் கடந்து அப்பால் சென்றாள். அவன் அவளை தொடர்ந்து வரவில்லை. அவள் மெல்ல தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள்.
சிலநாட்களிலேயே கம்சன் மகதத்தின் ஜராசந்தனின் இரு குலமுறை மகள்களை மணந்துகொண்ட செய்தி வந்தது. மகதத்தின் முடிசூடி அமர்ந்த பிருஹத்ரதரின் மைந்தன் ஜராசந்தன் போரில் கணவனை இழந்த தன் முறைப்பெண்ணின் புதல்வியரை குலமுறைப்படி புதல்வியராக ஏற்றான். அவர்கள் சூத்திரக்குருதிகொண்டவர்கள் என்றாலும் ஜராசந்தன் பிராப்தியையும் ஆஸ்தியையும் மகதத்தின் முதன்மை இளவரசிகளாக அறிவித்தான். அரசமுறைமைப்படி நிகழ்ந்த மணம் கம்சனை மகதத்தின் மணவுறவுநாட்டின் அரசனென நிலைநிறுத்தியது.
அதன்பின் அவள் அவ்வெண்ணங்களை முழுமையாகவே தன் உள்ளத்திலிருந்து விலக்கிக்கொண்டாள். மீண்டும் இடைச்சியென்றாக முயன்றாள். பால்கறக்கவும் சாணியள்ளவும் கன்றுமேய்க்கவும் புல்லரியவும் சென்றாள். செயல்கள் மெல்ல உள்ளத்தை மாற்றும் விந்தையை உணர்ந்தாள். சிலநாட்களிலேயே அவையெல்லாம் பொய்க்கதையாய் பழையநினைவாய் மாறின. அவள் உலகில் அன்றைய ஆபுரத்தல் மட்டுமே எஞ்சியது. உடல் மீண்டும் உரம் கொண்டது. உள்ளம் அதில் செழித்து அமைந்தது.
தமகோஷரின் மண ஓலை அவள் தந்தையை வந்தடைந்த செய்தி அவளுக்கு எந்த எழுச்சியையும் உருவாக்கவில்லை. தேவவாகர் “அவன் அரசனே அல்ல. அவனிடமிருப்பவர்கள் நாநூறு படைவீரர்கள். அவன் வாழ்வது நூற்றியெட்டு வீடுகள் கொண்ட மண்கோட்டைக்குள். முடிகொண்டு ஆண்ட அரசனின் மைந்தன் என்பதற்கு அப்பால் அவனிடம் நாம் கருதுவதொன்றுமில்லை” என்றார். கதாதன்வர் “நாம் படையளிப்போம். நம் மூவரின் படைகள் சென்றால் சூக்திமதியை வெல்லமுடியும்... ஆனால் அவன் வாக்களிக்கவேண்டும், நம் குலமகள் அரசியாகவேண்டும்” என்றார்.
அரசி என்னும் சொல் அப்போது அவளுக்குள் முற்றிலும் பொருளிழந்திருந்தது. மணமாகிப்போனால் தன் கன்றுகளை பிரியவேண்டுமே என்னும் எண்ணமே எழுந்தது. அவளுடைய பசு ஆதிரை தன் முதல் கன்றை ஈனும் நிலையிலிருந்தது. அதைப்பற்றியன்றி அவள் எதையும் எண்ணவில்லை. ஓரிருநாட்களிலேயே அனைத்தும் முடிவாயின. சிறியதொரு குழுவுடன் வந்த தமகோஷர் அவளுக்கு மலராடை அளித்து கருகுமணி சூட்டி மாலையிட்டு மணமகளாக்கிக்கொண்டார். அவர் தன்னைவிட இருமடங்கு வயதானவர் என்பதை அவள் அந்த மலராடையை பெறும்போதுதான் பார்த்தாள். அப்போதிருந்த பதற்றத்தில் அது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
ஒரே வாரத்தில் யாதவப்படை கிளர்ந்துசென்று சூக்திமதியை கைப்பற்றியது. தமகோஷர் அதன் அரசராக முடிகொண்டார். அவளை அழைத்துச்செல்ல சூக்திமதியிலிருந்து அகம்படிப்படையும் பல்லக்குகளும் வந்தன. ருதுவனத்தை நீங்கும்போது ஆதிரையின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்தாள். “அன்னையே, அவள் எப்படி இருக்கிறாள் என எனக்கு செய்தியறிவியுங்கள்” என்று சொன்னபோது “போடி, கன்றுகளை கட்டிக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை போதும். இனி நீ அரசி” என்றாள் அன்னை. அவள் “அன்னையே, அவளைப்பற்றி சொல்லியனுப்புங்கள்... மறந்துவிடாதீர்கள்” என்று பல்லக்கிலேறி திரைமூடும் கணம் வரை சொல்லிக்கொண்டிருந்தாள்.
சூக்திமதியின் தெருக்களினூடாக பிடியானை மேல் அமர்ந்து கையில் மலர்நீர்க் குடத்துடன் சென்றுகொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அவள் வளர்ந்துகொண்டிருந்தாள். மிகத்தொலைவில் ஒரு சிறுபுள்ளியெனத் தெரிந்த பறவை சிறகும் அலகும் உகிரும் கொண்டு பெருகியணுகுவதுபோல. பிறகு பலநூறுமுறை அந்தப் பயணத்தை அவள் கணம் கணமாக நினைத்ததுண்டு. அன்று யானை எடுத்துவைத்த ஒவ்வொரு காலடியையும் அவளால் தன் உடலதிர்வாக அப்போது உணரமுடியும். சூழ்ந்தொலித்த வாழ்த்துக்களை, மங்கல இசையை, சிரிக்கும் முகங்களை சித்தத்திலிருந்து முடிவிலாது சுருளவிழ்த்து நீட்டிக்கொண்டே இருக்கமுடியும்.
அப்போது அவள் உள்ளத்தில் தமகோஷர் ஒரு கணமும் எழவில்லை. அன்னையோ தந்தையோ அவள் விட்டுவந்த ருதுவனமோ கிளம்பும் கணம் வரை பதைப்புடன் எண்ணிக்கொண்ட பசுவோ அவளுக்குள் இருக்கவில்லை. அவள் குந்தியையும் கம்சனையும் மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தாள். அக்கூட்டத்தில் மின்னிய ஒரு முகம் குந்தியாகியது. நெஞ்சு அதிர விழி சலித்தபோது கம்சனை கண்டாள். பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரையும் நேரில் கண்டதேயில்லை என்னும் எண்ணம் பின்னர் எழ சிரித்துக்கொண்டாள்.
அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கியபோது அவள் நோக்கும் உடலசைவும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. சபரி துதிக்கையை மேலே சுழற்றித்தூக்க அதன் மீது காலெடுத்துவைத்து இறங்கி தரையில் நின்று அதன் சிறிய கொம்பைப் பற்றியபடி நடந்து அரண்மனைமுகப்பில் நின்ற அணிச்சேடியரை நோக்கி சென்றாள்.
மங்கல இசை அவளைச்சூழ்ந்து எழுந்தது. தமகோஷரின் தமக்கையான பார்வதி அவள் நெற்றியில் செம்மஞ்சள் குறியிட்டு அரிமலர்தூவி வாழ்த்தினாள். மஞ்சள்நீரில் காலாடி அவர்கள் அளித்த நிறைநாழியும் குத்துவிளக்கும் ஏந்தி அரண்மனைவாயிலைக் கடந்தபோது தனக்குப்பின்னால் சபரி மட்டுமே காதசைய நின்றிருப்பதாக உணர்ந்தாள். அது அகன்று பரவி இருட்டாகி இரவாகி நகரை மூடியது.
[ 22 ]
சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள்.
சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி கேட்டுக்கொண்டிராததனால்தான் அது என்று எண்ணிக்கொண்டாள். அதைப்பற்றி கேட்கவேண்டுமென்று தோன்றினாலும் உடனே தவிர்த்தாள். காலையுணவுக்குப்பின் அவளுக்காக சூதப்பெண் ஒருத்தி யாழிசைக்க மஞ்சத்தில் படுத்தபடி அதை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உள்ளம் இசையில் படியவில்லை. எப்போதுமே அவள் இசையை செவிகொடுத்து கேட்டதில்லை. இளைப்பாறுதலுக்குரிய ஓர் ஒலி என்றே இசையை அறிந்திருந்தாள்.
விசிரையை வரச்சொல்லவேண்டுமென்று தோன்றியது. அவள் மாளிகை அரசமாளிகைத் தொகுதியிலிருந்து விலகியிருந்தது. அவளை எண்ணும்போதெல்லாம் அந்தத் தொலைவும் சேர்ந்தே எண்ணத்தில் எழுந்தது. சபரியை பார்ப்பதென்றால் விசிரையுடன் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். பார்க்கப் போகாமலிருக்கமுடியாது. அவள் அதை பார்க்கவருவாள் என்று அங்கே அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.
தமகோஷர் அவளை பார்க்கவிழைவதாக சேடிவந்து சொன்னாள். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார், பேரரசி” என்றாள். அவர் பெரும்பாலான நேரங்களில் சூக்திமதியில் இருப்பதில்லை. சூக்திமதியை வென்று முடிசூடி கொண்டாட்டங்கள் முடிந்தபின்னர் அந்நகரம் அவருக்கு ஒரு பொறுப்பு என்று பொருள் அளிக்கத் தொடங்கியது. அரசப்பணிகளுக்கு அப்பால் அங்கு அவர் ஆற்ற ஏதுமில்லையென்று உணர்ந்தார். களியாட்டும் ஓய்வும் கராளமதியில்தான் நிகழ்ந்தன. நாள் செல்லச்செல்ல அவர் பெரும்பாலான நாட்களில் கராளமதியிலேயே இருந்தார். சிசுபாலன் முடிசூட்டிக்கொண்டபின் அரிதாகவே தலைநகருக்கு வந்தார். கராளமதியில் அவரால் தன் இளமைக்குள் செல்ல முடிந்தது. அச்சமும் பதற்றமுமாக அரசிழந்திருந்த இளமைநாட்களின் துடிப்பையும் கனவையும் அங்கு மீட்டெடுத்தார்.
அவளறிந்த தமகோஷரின் முகம் கவலையும் நிலையின்மையும் கொண்டதாகவே இருந்தது. இளம்மனைவியாக அவள் அங்கே வந்தபோது அவர் நிலைகொள்ளாத அரசின் தலைவராக ஒவ்வொருநாளும் பதற்றம் கொண்டிருந்தார். யாதவர்களின் உதவியுடன் அவர் அரசை வென்றதை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் ஏற்கவில்லை. அவர்கள் படைதிரள்வதைத் தடுத்தது மகதத்துடன் அவர் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயம். மகதத்தின் புதிய அரசன் ஜராசந்தன் கம்சனுக்கு அணுக்கமானவனாக இருந்தான். கம்சனுக்கு யாதவர் மணம் மறுத்துத்தான் அவளை சேதிநாட்டுக்கு அரசியென்று அனுப்பியிருந்தனர்.
அந்த ஊடுபாவுகளில் ஒவ்வொரு கணமும் தமகோஷர் ஈடுபட்டிருந்தார். முதல் மந்தணஇரவில்கூட அவர் அரச ஓலைகளை கொண்டுவந்து இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தார். “நீ துயில்கொள்க… நம் அரசுக்கு எதிராக வங்கமும் கலிங்கமும் படைகொண்டு எழக்கூடும் என்கிறார்கள். மாளவப்படைகள் முன்னரே கிளம்பி எல்லைவரை வந்துவிட்டன” என்றார். அவள் மஞ்சத்தில் சுருண்டு படுத்து நெய்யகலின் செவ்வொளியில் தெரிந்த அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களைத்த விழிகளுக்குக் கீழே இருமடிப்புகளாக தசைவளையங்கள். உலர்ந்து சுருங்கிய கனிபோல கரியதடம். உதட்டைச்சுற்றி வெடிப்பு போல கன்னமடிப்பு. கண்கள் நீர்மைகொண்டிருந்தன. கராளமதியில் முடிவில்லாத காத்திருப்பில் தமகோஷரை ஆற்றுப்படுத்தியது மதுதான் என அவள் அறிந்திருந்தாள்.
ஏவலர் கதவைத்தட்டி புதியசெய்திகளை அளித்துக்கொண்டே இருந்தனர். அவள் எப்போதோ துயின்று அதில் கம்சனை கண்டாள். விழித்தபோது சாளரங்கள் ஒளிகொண்டிருந்தன. அருகே அவர் படுத்திருந்த சேக்கையின் குழி குளிர்ந்திருந்தது. அவள் எழுந்து நீராடி மகளிர்கோட்டத்திற்கு சென்றாள். மீண்டும் அவரை பதினெட்டு நாட்களுக்குப் பின்னர்தான் கண்டாள். அன்று அவர் அவளுடன் இருக்கையிலேயே பதற்றம் கொண்டிருந்தார். வாயிலிருந்து மட்டுமல்லாது வியர்வையிலும் யவனமதுவின் நாற்றம் எழுந்தது.
மூன்றுமாதங்களுக்குள் துலா நிகர்நிலைகொண்டது. தமகோஷர் அஸ்தினபுரியின் பாண்டுவிடம் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயத்தை உருவாக்கினார். அதை பயன்படுத்தி மகதத்துடன் படைக்கூட்டு செய்துகொண்டார். ஜராசந்தனுக்கு பரிசில்கள் அனுப்பி பரிசில்கள் பெற்றார். அவள் தமகோஷருடன் அரசமுறைப்பயணமாக ராஜகிருஹத்திற்கு சென்றாள். முதல்முறையாக ஜராசந்தனை அப்போதுதான் பார்த்தாள். அவனை யாரோ அரசிளங்குமரன் என்றே எண்ணினாள். மீசையற்ற மஞ்சள்நிற முகமும் கரிய நீள்குழலும் விரிந்த பெருந்தோள்களுமாக அவன் சிறுவனைப் போலிருந்தான்.
“சிறுவர் போலிருக்கிறார், இத்தனை இளையோன் என்று நான் எண்ணவேயில்லை” என்றாள். “ஏன், அவனுக்கு அரசியென்றாக விழைவு எழுகிறதா?” என்றார் தமகோஷர். “இதென்ன கேள்வி? அரசர்களின் சொற்கள் மூதாதையரால் எண்ணப்படுகின்றன” என்றாள். “பெண்களின் எண்ணங்களை பாதாளமூர்த்திகள் ஆள்கின்றன” என்றார் தமகோஷர். “இழிமகனைப்போல பேசவேண்டாம்” என்று அவள் சொன்னதும் கையை ஓங்கியபடி எழுந்து “இழிமகள் நீதான். கன்றோட்டி வாழ்ந்த சிறுகுடிப்பெண். உன் குலத்தில் பசு சூல்கொள்வதுபோல பெண்கள் கருவுறுகிறார்கள் என உலகே அறியும்” என்றார்.
அவள் புன்னகைத்து “அந்தக் குடியின் வாளால்தான் உங்கள் முடி அமைந்தது” என்றாள். “சீ! வாயை மூடு. சிறுமகளே” என்றபடி அவர் அவளை அடிக்க கையோங்கினார். “அடிக்கலாம்… உபரிசிரவசுவின் குருதியில் ஒரு களிமகன் பிறந்ததை அவர் கொடிவழிமூதாதையர் விண்ணிலிருந்து நோக்கட்டும்” என்றாள். அவர் மூச்சிரைக்க கை தாழ்த்தி “உன்னை மணந்தது என் வாழ்வின் வீழ்ச்சி. அவ்விழிசெயலுக்கு தண்டனையாக அத்தனை ஷத்ரிய அவையிலும் கூசி நிற்கிறேன். இதோ இந்த அரக்கமைந்தன் முன் முடிதாழ்த்துகிறேன்…” என்றார். “வாள்கொண்டு வெல்லாத முடியை சூடலாகாது. அது பாறையென எடைகொள்ளும். கழுத்தெலும்பை முறிக்கும்” என்றாள் சுருதகீர்த்தி.
அவளை வெல்வதற்காக அவர் உள்ளம் பரபரத்தது. கிடைத்த நுனியைப்பற்றி உவகைகொண்டு எழுந்தது. “உன் உள்ளமுறையும் கரவுருவோனும் வருகிறான்… மகதத்தின் சிற்றரசனாக எனக்குப்பின்னால் அவையமர்கிறான்” என்றார். “இல்லை, மதுராவின் கம்சரின் பீடம் முன்னிரையில்தான். அவர் மகதத்தின் மணமுறையரசர்” என்றாள் சுருதகீர்த்தி.
ஒருகணம் பதைத்து என்ன செய்வதென்றறியாமல் திகைத்தபின் “முறையிலி, ஒருநாள் உன் கழுத்தில் வாள்பாய்ச்சுவேன். அன்றுதான் முழு ஆண்மகனாவேன்” என்றார். “ஆம்” என்று அவள் மெல்லிய புன்னகையுடன் அவர் விழிகளை நோக்கி சொல்ல உளம் நடுங்கி கைகள் பதற வெளியே செல்ல முயன்றவர் கைகால்கள் இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து பின்னால் சரிந்து மரத்தரையில் ஓசையுடன் விழுந்தார். அவர் உடல் அதிர வலிப்புகொண்டு கிடப்பதை அவள் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவர் நெற்றிமடிப்பில் ஒரு ஆழ்ந்த குழி விழுந்தது. கைகால்கள் உடலில் இருந்து விலகியவை போல திசையழிந்து அசைந்தன. ஏவலர் உள்ளே வந்து அவரை நோக்கி குனிந்து மெல்ல தலையைத்தூக்கி வாய்க்கோழை புரைக்கேறாமல் வெளியே வழியும்படி செய்தனர். அவரது விழிகள் செருகி உள்ளே சென்றன. களைத்த கைகள் இருபக்கமும் சரிய விரல்கள் இல்லையென விரிந்தன. முழுமையாக தோல்வி கண்டவரைப்போல.
முதல்முறையாக அன்று அவள்முன் வலிப்பு வந்தபின் அவர் அவளை தவிர்க்கத் தொடங்கினார். எப்போதாவது மகளிர்கோட்டத்திற்கு வரும்போதும் மூக்குவழியக் குடித்து ஏவலரால் தாங்கப்பட்டு வந்தார். அவளுடன் விலங்கென உறவுகொண்டார். அவளை அறைந்து வீழ்த்தி புணர்ந்து விலகியபின் “நீ இழிமகள்… உன் உள்ளத்தில் உறைபவனை அறிவேன்” என்று குழறிக்கொண்டிருப்பார். அவரது வன்முறைக்கு அப்போதுதான் அவளால் நிகரீடு செய்யமுடியும். புன்னகையுடன் ஒருசொல்லும் பேசாமல் படுத்திருப்பாள்.
“பேசு… இழிமகளே!” என்று அவர் அவளை அறைவார். “என்ன எண்ணுகிறாய்? எதற்காக சிரிக்கிறாய்? கீழ்பிறவியே!” என்று அவளை உதைப்பார். ஆனால் அவர் உடல் நான்குபக்கமும் முடிச்சவிழ்ந்து சரியும். அவரது அடிகளில் பெரும்பகுதி சேக்கைமேல்தான் விழும். மெல்ல தளர்ந்து “தெய்வங்களே! மூதாதையரே! இழிமகன் ஆனேன்! இழிவுசூடினேன்!” என்று அவர் அழத்தொடங்குவார். விம்மி அழுது மெல்ல ஓய்வார். ஒருமுறை அவ்வழுகையின் உச்சத்தில் அவருக்கு வலிப்பு வந்தது. அவள் அருகே படுத்தபடி அவ்வுடலை நோக்கிக்கொண்டிருந்தாள். நான்கு பக்கமும் கண்ணுக்குத்தெரியாத கந்தர்வர்கள் சூழ்ந்து அதை ஓங்கி ஓங்கி மிதிப்பதுபோலிருந்தது.
கம்சன் கொல்லப்பட்ட செய்தியை அவர்தான் அவளிடம் வந்து சொன்னார். அது பறவைத்தூதாக வந்ததுமே அவர் மகளிர்கோட்டத்திற்கு வந்தார். அவள் இசைகேட்டு அரைத்துயிலில் இருந்தாள். அரசர் வருவதை செவிலி அறிவிப்பதற்குள் அவர் உள்ளே வந்தார். “அரசச்செய்தி, உன்னிடம் அறிவித்தாகவேண்டும்” என்றார். அவள் எழுந்து புருவம் சுருக்கி நோக்க “இன்று உச்சிப்பொழுதில் மதுவனத்தின் யாதவ இளையோர் இருவரும் தங்கள் தாய்மாமனாகிய கம்சனை மற்போரில் கொன்றனர்” என்றார். அவள் அவரது உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
“யாதவர்களில் அது தந்தைக்கொலைக்கு நிகரானது. குங்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் சினம் கொண்டிருக்கிறார்கள். இளையோர் மதுராவை கைப்பற்றி மதுவனத்தின் கொடியை கோட்டைமேல் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். விருஷ்ணிகள் அதை கொண்டாடுகிறார்கள். விருஷ்ணிகளும் பிறரும் போரிலிறங்கக்கூடும் என்று செய்தி வந்தது.” அவள் ஒரு பெருமூச்சில் தன்னுள் நிறைந்த அனைத்தையும் ஊதி வெளியே விட்டாள். ஏன் தன் உள்ளம் கொந்தளிக்கவில்லை, ஏன் சினமோ துயரோ எழவில்லை என்று வியந்துகொண்டாள்.
“நெஞ்சைப்பிளந்து குருதியாடியிருக்கிறார்கள்… அதிலும் யாதவ இளையோனை கார்த்தவீரியனுக்கு நிகரான கருணையின்மை கொண்டவன் என்கிறார்கள்.” அவள் முற்றிலும் தொடர்பில்லாமல் “நான் கருவுற்றிருக்கிறேன்” என்றாள். “என்ன?” என்றார் அவர் புரியாமல். “நான் கருவுற்றிருக்கிறேன். மருத்துவச்சி அது சேதியின் இளவரசன் என்கிறாள்” என்றாள். அவர் வாய் திறந்திருக்க அவளை அலையும் விழியிணைகளுடன் நோக்கினார். “நன்று” என்றார். “முறைமைச் சடங்குகளுக்கான அரசாணைகளை பிறப்பிக்கவேண்டும். நான் மருத்துவச்சியிடம் ஆணையிட்டிருக்கிறேன். அவள் நிஸ்ஸீமரிடம் சொல்வாள்” என்றாள்.
அன்று மாலையே திருமுகமறைவோர் சபரியின் மேலேறி இரட்டைமுரசை முழக்கி அவள் கருவுற்றிருக்கும் செய்தியை சூக்திமதிக்கு அறிவித்தனர். “உபரிசிரவசுவின் கொடிவழியில் ஒரு இன்மலர். சேதிக்கு ஓர் இளவரசர். தமகோஷ மாமன்னரின் அரியணைக்கு உரியோர். பாரதவர்ஷத்தின் பெருவீரர்!” என அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் இருளசைவாகத் தெரிந்த சபரியின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
தமகோஷர் களைத்த நடையுடன் வந்து அவருக்கான மந்தண அறைக்குள் செல்வதைக் கண்டபின்னரே அவள் எழுந்து அவ்வறைக்குள் சென்றாள். அவர் மஞ்சத்தில் அமர்ந்து மார்பின்மேல் கைகளை கட்டிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தியதும் “உன் மைந்தனை சந்தித்தாயா?” என்றார். “ஆம்” என்றபடி அவள் அருகே அமர்ந்தாள். “இப்போது அவன் மறுஎல்லைக்கு சென்றுவிட்டான். ராஜசூயவேள்விக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நாட்கணக்காக நிகழ்கின்றன. கருவூலத்தையே கொண்டுசென்று அங்கே கவிழ்த்துவிட்டு மீள்வான் என அஞ்சுகிறேன்” என்றார்.
அவள் புன்னகை செய்தாள். “அவனைப்பற்றி பேசவே உன்னிடம் வந்தேன்” என்றார். “அவன் இருக்கும் நிலையை நீ அறியமாட்டாய். அந்நிலையிலிருந்து நான் மீண்டு கடந்து முதுமையை வந்தடைந்தேன்…” அவள் “அவன் உடல்நிலை உங்களைப் போன்றதே” என்றாள். “அது மட்டும் அல்ல…” என அவர் தடுமாறினார். “எந்தப் பெண்ணிடமும் உறவு சீரமையவில்லை” என்றார். அவள் புன்னகை புரிந்தாள். “எனென்றால் அவன் உடல் முழுமையாக இறுக்கி நரம்புகளால் கட்டப்பட்டிருக்கவில்லை… அவன்…” என்றபின் அவள் கையை எட்டி தொட்டு “நான் அஞ்சுகிறேன் சுருதை…” என்றார்.
“அவன் பாரதவர்ஷத்தின் மாவீரன்” என்றாள். “ஆம், ஆனால் அவன் வெற்றியை நோக்கி செல்லவில்லை. பலிபீடத்தை தேடிக்கொண்டிருக்கிறான். மண்டையை கற்பாறையில் முட்டி உடைத்து உதிரும் வரையாட்டின் வெறிகொண்டிருக்கிறான்.” அவள் “உங்கள் உளமயக்கு அது” என்றாள். “இருக்கலாம். நீ அவனிடம் பேசு. அவன் எல்லைகளைப்பற்றி சொல்.” அவள் முகம் இறுகியது. “எல்லை என்றால்?” என்றாள். “சுருதை, அவன் மாவீரன். ஆனால் இளைய யாதவனுக்கு எவ்வகையிலும் நிகரானவனல்ல.”
“அது உங்கள் எண்ணம்” என்று சுருதகீர்த்தி பற்களைக் கடித்தபடி சொன்னாள். “அவர்களிருவரும் ஒரே துலாவின் இருதட்டுகள். முள் எங்கு நிற்கவேண்டுமென ஊழ் முடிவுசெய்யட்டும்.” அவர் சலிப்புடன் “நான் பலமுறை உன்னிடம் சொன்னது இது. இளமைமுதலே அவன் உள்ளத்தில் இளைய யாதவன்மேல் காழ்ப்பை உருவாக்கிவிட்டாய். அவன் வாழ்க்கையையே அவ்வாறாக நீ வடித்தாய்” என்றார். சுருதகீர்த்தி “ஆம், ஆகவேதான் அவன் பாரதவர்ஷத்தின் முதன்மை வீரர்களில் ஒருவனானான். வீழ்ந்தாலும் அவ்வாறே எண்ணப்படுவான்” என்றாள்.
“சூதர் பாடுவதென்ன என்றறிவாயா?” என்றார் தமகோஷர். “உன் கோரிக்கைக்கு ஏற்ப இளைய யாதவன் உன் மைந்தனின் நூறுபிழைகளை பொறுத்தருள்வதாக வாக்களித்திருக்கிறானாம். ஒன்றுகுறைய நூறுபிழை ஆகிவிட்டது என்கிறார்கள்.” அவள் புன்னகைத்து “அந்த ஒன்று என்ன என்கிறார்கள்?” என்றாள். “சிரிப்பதற்குரியதல்ல இது. அப்பாடலைக் கேட்டபோது என் உள்ளம் நடுங்கிவிட்டது. எங்கோ என் அகம் அது உண்மை என்று சொன்னது.” அவர் மீண்டும் அவள் கையைப்பற்றி “அவன் சென்றுகொண்டிருப்பது அந்த நூறாவது பிழையை நோக்கித்தான்…” என்றார்.
“நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “அவன் ராஜசூயவேள்விக்கு செல்லவேண்டியதில்லை… நீ ஆணையிட்டால் மட்டுமே அவன் அதை கேட்பான். அவன் இளைய யாதவனை நேர்கொள்ளலாகாது.” அவள் “உங்கள் வீண் அச்சத்திற்காக…” என்று சொல்லப்போக அவர் தடுத்து “ஆம், வீண் அச்சம்தான். அப்படியே கொள். ஆனால் அதன்பொருட்டு நீயும் உன் மகனும் என்மேல் இரக்கம் கொள்ளலாம். முதிய வயதில் மைந்தர்துயர் போல பெருங்கொடுமை பிறிதில்லை. அதை எனக்கு அளிக்கவேண்டாமென அவனிடம் சொல்… நான் உன்னிடம் கோரும் ஒரே வேண்டுகோள்” என்றார்.
அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். “சொல்” என்றார் தமகோஷர் “ஆம், சொல்கிறேன்” என்றாள். “எனக்கு ஆணையிட்டு உறுதிகொடு” என்றார். “ஆணையிடமாட்டேன். என் அன்னைதெய்வங்களின் விழைவுப்படியே என் நா எழும்” என்று அவள் சொன்னாள். அவர் பெருமூச்சுடன் தளர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். பின்னர் அவர் எழுந்து “நான் செல்கிறேன்… அங்கே அவை எனக்காக காத்திருக்கிறது” என்றார். அவளும் எழுந்தாள்.
வெளியே சபரியின் பிளிறல் கேட்டது. “அன்னைக்களிறு… அது இன்றிரவு விண்புகும் என்று மருத்துவர் சொன்னார்கள்” என்றார் தமகோஷர். அவள் “ஆம்” என்றாள்.
[ 23 ]
அந்தியில் அவள் அழைப்பை ஏற்று சிசுபாலன் அவளைப்பார்க்க மகளிர்கோட்டத்திற்கு வந்தான். அவள் தன் மஞ்சத்தறைக்குள் இருந்தாள். உச்சியுணவுக்குப்பின் அவளுக்கு கடும் உளச்சோர்வும் தலைவலியும் ஏற்பட்டிருந்தது. மருத்துவச்சியர் அளித்த மலைப்புல் தைலத்தை தேய்த்துக்கொண்டு படுத்திருந்தாள். வெளியே திறந்த சாளரம் வழியாக குளிர்ந்த ஒளி உள்ளே வந்து அலையடித்தது. சிசுபாலன் வாயிலில் வந்து வணங்கி “அன்னையே, நலம் அல்லவா?” என்றான். “வருக!” என்றாள். அவன் வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்தான்.
அவன் உடல்நிலை தேறியிருந்தான். தாடியும் தலைமுடியும் நீண்டு வளர்ந்திருந்தபோதிலும் கரியபளபளப்புடன் நெய்பூசப்பட்டு சீவி முடிச்சிட்டு கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் செம்மணி ஆரம் அணிந்து பட்டாலான இடைக்கச்சை கட்டியிருந்தான். அதில் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிடியும் சிப்பியாலான உறையும்கொண்ட குத்துவாள் இருந்தது. முகம் தெளிந்து கண்களில் சிரிப்பு கொண்டிருந்தான். “நீ உளம் தேறியிருப்பதை கண்டு மகிழ்கிறேன்” என்றாள். “ஆம், இப்போது என்னிடம் அல்லல்கள் ஏதுமில்லை” என்றான்.
“இளையவளை பார்த்தாயா?” என்றாள். “இல்லை, அதனால்தான் அல்லல்கள் இல்லையோ என்னவோ” என்றான். அவள் புன்னகைத்து “அவள் உள்ளத்தை புரிந்துகொள்... அவள் அஞ்சுவதும் முறையானதே” என்றாள். “ராஜசூயத்திற்கு கிளம்புவதற்குமுன்னர் அவள் மைந்தனை முறைப்படி பட்டத்திளவரசனாக சேதியின் எண்வகைக் குடிகளின் தலைவர்களுக்கும் அறிவித்து ஓலையளிப்பதாக ஒப்புக்கொண்டேன். ஓலைகள் நாளைக்கே சென்றுவிடும். விடைபெறும்போது புன்னகைப்பாள் என நினைக்கிறேன்” என்றான்.
“நீ ராஜசூயத்திற்கு செல்லக்கூடாதென்று ஆணைபெறும்படி உன் தந்தை என்னிடம் கோரினார்” என்றாள். “என்னிடம் முதலில் அதை சொன்னார். நான் மறுத்துவிட்டேன்” என்றான். “சூதர்கதை எதையோ கேட்டு நிலையழிந்திருக்கிறார்.” அவன் சிரித்து “துவாரகையின் யாதவன் என் நூறுபிழை பொறுப்பதாக வாக்களித்திருக்கிறான் என்னும் கதை அல்லவா?” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “அதை அவன் அனுப்பிய சூதர்களே பாடியிருக்கலாம். அன்னையே, பாரதவர்ஷத்தை சூதர்கதைகள் வழியாக வெல்லமுடியுமென்றால் அவன் ஏழுமுறை வென்றுவிட்டான்” என்றான்.
“ஆனால் அது உண்மை” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் சிரிப்பு மாறாமலேயே கேட்டான். “அவன் கம்சரைக் கொன்ற அன்று காலைதான் மருத்துவச்சி நான் கருவுற்றிருப்பதை சொன்னாள். அச்செய்தியை அவள் சொன்னபோது நான் உவகைகொள்ளவில்லை. ஏதோ வரவிருப்பதான பதைப்பை அடைந்தேன். உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. உன் தந்தை வந்து கம்சர் கொலையுண்டதை சொன்னார். அதுவும் என்னை நிலையழிய வைக்கவில்லை. ஆனால் இருசெய்திகளும் ஒரு துலாவின் இருமுனைகளையும் நிகர்செய்வதாக ஓர் எண்ணம் எழுந்தது.”
“அன்று இரவு நான் துயிலவில்லை. தாளாவலிகொண்டவள் போல படுத்துப்புரண்டும் எழுந்து இருள்நோக்கி நின்றும் மீண்டும் படுத்தும் கங்குல்பெருக்கை நீந்திக்கடந்தேன். அன்றும் இன்றுபோல சபரியின் பிளிறல் எழுந்துகொண்டிருந்தது. இன்றைய பட்டத்துயானை காரகனை அவள் கருவுற்றிருந்த நாள் அது. இரவெல்லாம் அலறிக்கொண்டிருந்து காலையில் அவள் அவனை பெற்றாள். நம் நாட்டின் பெருங்கொம்பர்களில் அவனே தலையாயவன். அன்னை உடல்கிழித்தே பிறந்தான். பேரெடை கொண்டிருந்தான். அவன் விழுந்த ஓசையை அன்று விடியலில் இங்கிருந்தே கேட்டேன். அன்னையின் குருதி நின்று அவள் உணவு கொள்ள ஏழுநாட்களாயின.”
“உன் கருநாட்களில் கனவுகளால் சூழப்பட்டிருந்தேன். இன்று எக்கனவையும் என்னால் எண்ணமுடியவில்லை. இருளுக்குள் அலைந்துகொண்டிருப்பதைப்போல. சில சமயம் சில முகங்கள் மின்னி அணையும். மகதத்தில் முதல்முறையாகக் கண்ட கம்சரின் முகம். ஓவியத்தில் கண்ட இளைய யாதவனின் முகம். ஒவ்வொருமுறையும் கடும் சினத்துடன் விழித்துக்கொள்வேன். சினம் எவரிடம் என்று நான் அறிந்திருக்கவில்லை. எண்ணி எண்ணி நோக்கியும் ஏதும் புலப்படவில்லை. ஆனால் உச்சகட்ட சினத்தில் உடல்நடுங்கிக்கொண்டிருக்க எழுந்தமர்ந்து என்னை உணர்கையில் கைகள் இறுகி சுருண்டிருக்கும். பற்கள் கடிபட்டு அரையும் ஒலி எழும். முகம் இழுபட்டு வலிப்புகொண்டிருக்கும்...”
“அந்நாளில் எனக்கு வந்த கனவுகளில் இன்றும் நினைவிலிருப்பது ஒன்றே. இன்றும் அவ்வப்போது அக்கனவு மீள்வதுண்டு. ஒரு மென்மணல் பரப்பை நான் கையால் அள்ளி அள்ளி அகற்றுகிறேன். ஒரு கை கிடைக்கிறது. உயிருடன் அசையும் விரல்களுடன் வெம்மைகொண்ட குழவிக்கை. மீண்டும் அள்ளும்போது இன்னொரு கை. நான்கு கைகள். அவற்றை எடுத்து அருகே வைத்தபின் உன் உடலை காண்பேன். நெற்றியில் ஆழ்ந்த ஒற்றைவிழி திறந்து என்னை நோக்கிக்கொண்டிருப்பாய். பிற இரு விழிகளும் வெறும் தசைக்குழிகள்.”
“உன்னை அகழ்ந்தெடுப்பேன். உன் கால்கள் தனியாக அடியில் கிடக்கும்... அவற்றை உன் உடலுடன் பொருத்தி வைப்பேன். உன்னை என் கைகளால் தடவித்தடவி உலுக்குவேன். மைந்தா மைந்தா என்று அழைப்பேன். உன் உடல் நான்குபக்கமும் குழைந்து சரியும். நான் அலறியழுதுகொண்டே இருப்பேன். என் மேல் நிழல் விழும். நிமிர்ந்து நோக்கினால் நான்கு கைகளும் நுதல்விழியுமாக ஒரு தெய்வம் நின்றிருக்கும். அதை நான் அறிவேன். கருமுழுமைகொள்ளாது பிறக்கும் குழவிகளைக் காக்கும் தெய்வம் அது. சிசுபாலன் என்று அதை சொல்வார்கள்.”
“ருதுவனத்திற்கு அருகே உள்ள சப்தமம் என்னும் காட்டுக்குள் ஒரு கரும்பாறையில் புடைப்புச்சிற்பமாக அது செதுக்கப்பட்டிருக்கும். கருவிளையாத குழவியரை அங்கே கொண்டுசென்று தைலக்கிண்ணத்திலிட்டு உயிர்மீட்க முயல்வார்கள். உயிரிழந்தால் வாளால் நெடுகப்போழ்ந்து அத்தெய்வத்தின் காலடியிலேயே புதைத்துவிட்டு மீள்வார்கள்” என்றாள் சுருதகீர்த்தி. “முதல்கனவில் அத்தெய்வத்தைக் கண்டு நான் என் மூதாதையே, என் மைந்தனை எனக்களி என்று கூவினேன். தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அவன் நடக்க நான் உன்னை கையிலேந்தியபடி உடன் சென்றேன். நீ நீர்நிறைந்த வடிவற்ற தோல்பை போல என் கையில் ததும்பினாய். புதர்களில் கால்கள் சிக்க தள்ளாடியபடி சென்றேன். காட்டுக்குள் செறிந்த இருளுக்குள் அவன் நுழைந்தான்.”
“அதன்பின் அவனை நான் கேட்கவில்லை. ஒரு குரல் மட்டும் என்னை வழிநடத்தியது. இவ்வழி இவ்வழியேதான் என அது என் காதருகே சொன்னது. செவிகூர்ந்தால் மிகத்தொலைவில் ஒலித்தது. இருளுக்குள் அப்பால் ஓர் வெள்ளி ஒளியை கண்டேன். அது ஒரு படையாழி. நான் அணுகியபோது அக்குரல் இங்கே இதுவரையில் என்றது. நான் விழித்துக்கொண்டேன்” என்று சுருதகீர்த்தி சொன்னாள். “நிமித்திகரிடம் கனவைப்பற்றி கேட்டேன். குழவி குறைமாதத்தில் பிறக்கக்கூடும் என்றார். ஆனால் தெய்வம் கனவில் வந்தமையால் நீ பிழைத்தெழுவாய் என்றும் சொன்னார்.”
“பிழைத்தெழுந்தால் உனக்கு சிசுபாலன் என்றே பெயரிடுவதாக வேண்டிக்கொண்டேன்” என்றாள் சுருதகீர்த்தி. “எண்ணியதுபோலவே நீ ஏழாம் மாதத்தில் பிறந்தாய். உன் உடல் என் கருவில் உருவாகிய சித்தத்தால் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. வலியே இல்லாமல் மிக எளிய ஓர் எண்ணம் போல வெளிப்பட்டுவிட்டாய். உன் உடல் பலபகுதிகளாக சிதறி தன் கைக்கு வந்ததாக வயற்றாட்டி சொன்னாள். உனக்கு மூன்று விழிகளும் நான்கு கைகளும் இருந்ததாக அவளுக்கு தோன்றியது. அலறியபடி உன்னை கீழே போடப்போனாள். செவிலி உன்னை பிடித்துக்கொண்டாள். வயற்றாட்டி வலிப்பு கொண்டவள்போல விழுந்துவிட்டாள். அவள் அந்த உளமழிவிலிருந்து மீளவேயில்லை.”
“உன் நெற்றியில் ஆழமான வடுபோல குழி ஒன்றிருந்தது. ஒரு வெட்டுப்புண் போல. தசை மடிப்பு போல. பார்வையற்ற விழி என. பிறந்த அன்று செவிலியின் கையிலிருந்தபோதே உனக்கு மூன்றுமுறை வலிப்பு வந்தது. கைகால்கள் அதிர கரைவந்த மீன்போல நீ வாய் குவித்து காற்றை உண்டு விக்கிக்கொண்டிருப்பதை கண்டபோது என் உடலில் இருந்து உதிர்ந்த புழு என்றே எண்ணினேன். அருவருப்புடன் விழிகளை விலக்கிக்கொண்டேன். நீ உயிர்வாழ வாய்ப்பே இல்லை என்றனர் மருத்துவர். ஆனால் முலைச்சேடியரின் பாலை நீ உண்ணும் விரைவை வைத்து நீ வாழ்வாய் என கணித்தனர் முதுசெவிலியர்.”
“நீ வளர்ந்தாய். ஆனால் வலிப்புநோய் எப்போதுமிருந்தது. உன் உடல் ஓராண்டுகாலம் வரை ஒருங்கிணையவே இல்லை. எதிரெதிர் திசைகளில் அமைத்து சேர்த்துக் கட்டி நிலத்திலிட்ட இரு தேள்களைப்போல நீ தோன்றினாய் என்று ஒரு செவிலி ஒருமுறை சொன்னாள். நீ எழுந்து நடப்பாய் என்றே நான் எண்ணவில்லை. உன் அழுகையொலியே மானுடக்குழவிக்குரியதாக இருக்கவில்லை. அது கழுதையின் ஒலி என இங்கே செவிலியர் நடுவே பேச்சு இருந்தது. பின்னர் அதை சூதர்கள் பாடலாயினர்.”
“குழவியென உன்னை நான் தொட்டதே இல்லை. உன்னை காணவும் அஞ்சினேன். உன் நினைவை அழிக்கவே முனைந்தேன். ஆனால் ஒவ்வொருகணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுருதகீர்த்தி. “நீ இறந்தால் நான் விடுதலை பெறுவேன் என எண்ணினேன். அதற்கென தெய்வங்களை வேண்டினேன்.” சிசுபாலன் புன்னகைத்து “இவையனைத்தையும் முன்னரும் பலமுறை சொல்லிவிட்டீர்கள், அன்னையே” என்றான். “உங்கள் ஆழத்தில் உறையும் இருளொன்றின் சான்று நான்.”
அவள் விழிதூக்கி நோக்கி “ஆம்” என்றாள். பின்னர் “நீ ஒருங்கிணைந்தது உன் மாமனின் மடியமர்ந்தபோதுதான்” என்றாள். சிசுபாலன் “கதைகளை கேட்டுள்ளேன்” என்றான். “முதல்முறையாக இளைய யாதவனும் மூத்தவனும் சேதிநாட்டுக்கு வந்தது உன் ஓராண்டு நிறைவுநாளன்று. நாம் மகதத்தின் நட்புநாடானபோதே எனக்கும் என் குலத்திற்குமான உறவு முறிந்தது. யாதவர் அஸ்தினபுரிக்கு அணுக்கமாக ஆனபின்னர் அவர்கள் சேதிக்கு எதிரிகளென்றே ஆனார்கள். ஆனால் எந்தப் பகைக்கும் நடுவே குறுகிய நட்புக்காலங்கள் உண்டு. அத்தகைய காலத்தில் உன் முதல் ஆண்டுமங்கலம் வந்தது.”
“விழவு முழுக்க நீ தொட்டிலில்தான் கிடந்தாய். உன் உடலசைவைக்கொண்டு உன்னை தேள் என்றே சொன்னார்கள் அனைவரும். விருச்சிகன் என்று உன் தந்தையே உன்னை அழைத்தார். சிசுபாலன் என்று அழைத்தவள் நான் மட்டுமே. விழவில் உன் மேல் அரிமலரிட்டு வாழ்த்தியவர் அனைவருக்குள்ளும் எழுந்த இளிவரல் நகைப்பை நான் என் உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் உன்னை குனிந்து தூக்கவில்லை. இளைய யாதவன் உன்னை கையிலெடுத்து தன் மடியில் வைத்தான். மைய முடிச்சு சரியாக கட்டப்படாத கூடைபோலிருக்கிறான் என்றான். அவையோர் நகைத்தனர்.”
“அவன் உன் கழுத்துக்குப்பின் ஏதோ எலும்புமுடிச்சை தன் சுட்டுவிரலால் ஓங்கி சுண்டினான். உன் உடல் துள்ளி அதிர்ந்து வலிப்புகொண்டது. உன் கைகளையும் கால்களையும் அவ்வலிப்பின்போதே பிடித்து அழுத்தி சேர்த்துவைத்தான். என்ன செய்கிறாய் இளையோனே என உன் தந்தை பதறினார். முடிச்சிடுகிறேன் என்று சிரித்தான். நான் அவனையே நோக்கிக்கொண்டிருந்தேன். உன்னை மீண்டும் அவன் தொட்டிலில் படுக்கவைத்தபோதே தெரிந்துவிட்டது, உன் நரம்புகள் சீராகிவிட்டன என்று. ஏழுமாதங்களில் நீ எழுந்து நடந்தாய்.”
“பதறும் நரம்புகள் கொண்டவன் என்று சிரித்தபடியே சொல்லி உன்னை படுக்கவைத்தான். தன் உடலைச் சுண்டி தெறித்துச்செல்லும் புல்புழு போன்றவன், அவ்விசையாலேயே மாவீரனாவான் என்று அவன் சொன்னபோது நான் சிரித்தபடி யாதவனே, இவன் யாதவர்களின் எதிரிநாட்டரசனாகப் போகிறவன். நாளை அவன் உனக்கு எதிர்வந்து நின்றால் என்ன செய்வாய் என்றேன். இந்த முடிச்சு நான் போட்டதென்பதனால் இவனை பொறுத்தருள்வேன் அத்தை என்றான். எத்தனை முறை பொறுப்பாய் என்றேன். நூறுமுறை பொறுப்பேன், போதுமா என்றான். மூத்த யாதவன் உரக்க நகைத்து பாவம், நூறு பிழை செய்ய இவன் மொத்த வாழ்க்கையையே செலவிடவேண்டுமே என்றான். அவையே சிரித்துக்குலுங்கியது அன்று.”
சிசுபாலன் அவளை நோக்கியபடி அமைதியாக அமர்ந்திருந்தான். “நீ வளர்ந்தபோது உன்னிடம் ஒருமுறை சொன்னேன், நீ இளைய யாதவனால் அமைக்கப்பட்ட உடல்கொண்டவன் என்று.” அவன் “ஆம்” என்றான். “பிறகு ஒருபோதும் நான் அவனைப்பற்றி உன்னிடம் பேசவில்லை” என்றாள் சுருதகீர்த்தி. சிசுபாலன் தலையசைத்தான். இருவரும் சொல்முடிந்த வெறுமையில் சற்றுநேரம் அமர்ந்திருந்தனர். வெளியே பறவைகளின் ஓசை கேட்டது. மிக அப்பாலென சபரியின் உறுமல் ஒலித்தது.
சிசுபாலன் “அன்னையே, அவ்வாறென்றால் ஏன் இளைய யாதவன் மேல் தீரா வஞ்சத்தை என்னுள் வளர்த்தீர்கள்?” என்றான். அவள் அவனை புரியாதவள் போல நோக்க உதடுகள் மட்டும் மெல்ல பிரிந்தன. “நீங்கள் ஊட்டிய நஞ்சு அது. என்னுள் இக்கணம் வரை அதுவே நொதிக்கிறது. சொல்க, அவ்வஞ்சத்தின் ஊற்றுக்கண் எது?” அவள் பெருமூச்சுவிட்டு “அறியேன்” என்றாள். பின்பு “ஒருவேளை இம்மண்ணில் வைத்து அதை புரிந்துகொள்ளவே முடியாதுபோலும்” என்றாள்.
“நான் நாளை முதற்புலரியில் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன்” என்றான் சிசுபாலன். “தந்தையின் விழைவை சொன்னீர்கள். உங்கள் ஆணையை சொல்லுங்கள். நான் செல்லலாமா?” அவள் அவனை நடுங்கும் தலையுடன் நீர்மை மின்னிய விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு துரும்பு விழுந்த நீர்ப்பாவை என அசைவுகொண்டு “செல்க!” என்றாள். அவன் மறுமொழி ஏதும் சொல்லாமல் எழுந்து அவள் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், அன்னையே” என்றான். “நிறைவுறுக!” என்று அவள் அவன் தலைதொட்டு வாழ்த்தினாள்.
அவன் திரும்பி அறைக்கதவைத் திறந்து வெளியே சென்றான். கதவு மூடப்படவில்லை. இடைநாழியில் ஏற்றப்பட்டிருந்த சுடர்களின் ஒளியில் அதன் நீள்பிளவு செஞ்சதையால் ஆன தூண் போல தெரிந்தது. அவள் அதையே இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். நெஞ்சம் முற்றிலும் அமைதியாக இருந்தது. முதியசேடியின் முகம் அதில் எழுந்தபோது என்ன செய்தி என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
பகுதி ஒன்பது : மார்கழி
[ 1 ]
மார்கழித்திங்கள் முதல்நாள் இந்திரப்பிரஸ்தப் பெருநகரியில் ராஜசூய வேள்விக்கான அறிவிப்பு எழுந்தது. இருள் விலகா முதற்புலரியில் மயில்நடைத்தாளத்தில் ஒலித்த விடிமுரசின் ஓசை அடங்கி, நூற்றியெட்டு முறை பிளிறி பறவைகளை வணங்கிய கொம்புகள் அவிந்து, கார்வை நகருக்குள் முரசுக் கலத்திற்குள் ரீங்காரம் என நிறைந்திருக்க அரண்மனை முகப்பின் செண்டுவெளியில் அமைந்த ராஜசூயப்பந்தலின் அருகே மூங்கிலால் கட்டி உயர்த்தப்பட்ட கோபுரத்தின்மீது அமைந்த பெருங்கண்டாமணியின் நா அசைந்து உலோக வட்டத்தை முட்டி “இங்கே! இங்கே! இங்கே! இங்கே!” என்று முழங்கி வேள்வியை அறிவித்தது.
அன்று ராஜசூய வேள்வி தொடங்குவதை முன்னரே அறிந்திருந்தபோதிலும்கூட அந்த மணியோசை நகர்மக்களை உளஎழுச்சி கொள்ள வைத்தது. நீராடி, புத்தாடை அணிந்து, விழித்திருந்த நகர்மக்கள் கைகளைக் கூப்பியபடி இல்லங்களிலிருந்து வெளிவந்து முற்றங்களிலும் சாலையோரங்களிலும் கூடி ராஜசூயப்பந்தல் இருந்த திசை நோக்கி “எங்கோ வாழ் எந்தையே! மூதாதையரே! துணை நின்றருள்க! எண்ணிசை தேவர்களே சூழ்க! தெய்வங்களே மண்ணிறங்குக! சிறகொளிர் பூச்சிகளே, இன்குரல் புட்களே, விழிகனிந்த விலங்குகளே, ஐம்பெரும் ஆற்றல்களே இங்கு வந்தெங்களை அருள்க!” என்று வாழ்த்தினர்.
நகரெங்கும் வேள்வி அறிவிப்பை முழக்கியபடி பெருமுரசுகள் யானைநடைத் தாளத்தில் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் அவற்றுடன் இணைந்துகொண்டன. மார்கழியின் குளிர் எழத் தொடங்கியிருந்தமையால் கைக்குழந்தைகள் நடுங்கி தோள்சுற்றி அணைத்து அன்னையர் உடம்பில் ஒட்டிக்கொண்டன. முதியோர் மரவுரிச் சால்வைகளை உடலெங்கும் சுற்றிக்கொண்டு மெல்லிய நடுக்கத்துடன் நின்று இருளுக்குள் வாழ்மரங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்த வௌவால்களின் சிறகடிப்பை பார்த்தனர். கீழ்ச்சரிவில் வலசைநாரைகளின் மெல்லிய அசைவு தெரிந்தபோது “புலரிகொணரும் புட்களே எழுக! இரவாளும் புட்களே நிறைவுகொள்க!” என்று கூவினர்.
வானை முகில் மூடியிருந்ததனால் விடிவெள்ளி கண்ணுக்கு தென்படவில்லை. காற்று இல்லாதபோது மழை ஓய்ந்த துளிகளென மரங்களிலிருந்து பனி சொட்டும் தாளம் அவர்களை சூழ்ந்தது. உடல் சிலிர்க்க வடக்கிலிருந்து வீசிய குளிர்காற்று பனித்துளிகளை அள்ளி சுவர்கள் மேல் பொட்டுகள் வைத்து கடந்து சென்றபின் சற்று நேரம் செவிகளை வருடிச்செல்லும் அமைதி நிலவியது. அமைதிகேட்டு துயில் கலைந்த சிறுபறவை அன்னையை உசாவ ‘விடியவில்லையே’ என்று சொல்லி சிறகுகளால் மூடிக்கொண்டது அன்னை.
முந்தி எழுந்த காகங்கள் சில கருக்கிருட்டின் அலைகளின் மீது சிறகடித்து சுழலத்தொடங்கின. விண்ணில் மெல்ல தணிந்து திரண்ட விண்மீன்கள் குளிருக்கென நடுங்கி அதிர்ந்து இருளில் மீண்டும் புதைந்து மறைந்தன. தெற்கிலிருந்து முகில்நிரைகள் வடக்கு நோக்கி செல்லத் தொடங்கியிருந்ததனால் நகரெங்கும் மெல்லிய நீராவி நிறைந்திருந்தது. வெட்டவெளியில் குளிரையும் அறைகளுக்குள் நீர்வெம்மையையும் உணரமுடிந்தது. காலைக்குளிரை விரும்பிய காவல்புரவிகள் வால்சுழற்றி குளம்போசையுடன் கடந்துசென்றன.
இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைப்பெருவாயிலில் நூற்றெட்டு வைதிகர்கள் கங்கையும் யமுனையும் நிறைந்த பொற்கலங்களும், மஞ்சளரிசியும், பொன் மலர்களுமாக காத்து நின்றிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் இசைச்சூதர்களும் அணிச்சேடியரும் நிரை வகுத்து நின்றனர். அரண்மனைக்குள்ளிருந்து சிற்றமைச்சர் சுரேசர் வெளியே ஓடிவந்து கைகளை அசைக்க வெள்ளிக்கோலேந்திய நிமித்திகர் இருவர்
“ஓம்! ஓம்! ஓம்!” என்று கூவியபடி அவற்றைச் சுழற்றி வான் நோக்கி தூக்கினர். வேத ஒலி எழுந்தது. மங்கல இசை அதை சூழ்ந்தது. அனைத்து வீரர்களும் ஏவலர்களும் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினர். “விண்சுடர் சூடிய பெருநகர் ஆளும் வேந்தர் வாழ்க! மின்கதிர் நகர் வெல்க! எரியெழுந்த மங்கை ஒண்மலர் சூடுக! வில்திறல் விஜயனும் தோள்திறல் பீமனும் இணைதிறல் இளையரும் வாழ்க! இந்திரப்பிரஸ்தம் எழுக! விண்ணவர் இங்கு இறங்குக!”
நகரின் மாபெரும் முற்றம் மீனெண்ணெய் பந்தங்களால் எரியெழுந்த காடுபோல் செவ்வொளி அலைகொண்டிருந்தது. புரவிகளின் விழிகளில், தேர்களின் உலோகச்செதுக்குகளில், படைக்கலங்களில் பளிங்குத் தூண் வளைவுகளில் எல்லாம் சுடர்கள் எழுந்திருந்தன. அரண்மனையின் உள்ளிருந்து வெள்ளிக் கோலேந்தியபடி நிமித்திகன் வெளியே வந்தான். மும்முறை அதைச் சுழற்றி மேலே தூக்கி “பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசர்! இந்திரப்பிரஸ்தம் ஆளும் பாண்டவர்குடி மூத்தோர்! யயாதியின் குருவின் ஹஸ்தியின் சந்தனுவின் விசித்திரவீரியனின் பாண்டுவின் கொடிவழி வந்த கோன்! அறம்வளர்ச்செல்வர், தென்திசை தெய்வத்தின் மைந்தர் யுதிஷ்டிரர் எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான்.
அவனைத் தொடர்ந்து வந்த இரண்டாவது நிமித்திகன் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி! எரியெழுந்த கொற்றவை! ஐங்குழல் கொண்ட அன்னை! பாஞ்சாலி, திரௌபதி எழுந்தருள்கிறார்!” என்று அறிவித்தான். அவனைத் தொடர்ந்து இசைச்சூதர்கள் முழங்கியபடி வர, நூற்றெட்டு அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களில் நெய்யகல்கள் சுடர, பொன்னணிகள் பந்தங்களில் அனலுருவாகி வழிய, சீர்நடையிட்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் எட்டு வீரர்கள் வாளேந்தி வர நடுவே தருமனின் செங்கோலை படைத்தலைவன் ஒருவன் ஏந்தி வந்தான். அவர்களுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியைச் சூடி தருமன் நடந்து வந்தார். அவர் இடக்கையை பற்றியபடி மணிமுடிசூடி திரௌபதி வந்தாள். அவர்களுக்கு மேல் வெண்குடை முத்துச்சரம் குலுங்க முகில்பிசிறு ஒளிர கவிந்த பிறை நிலவென வந்தது. தருமனுக்குப் பின்னால் அரசஉடையில் பீமனும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் வாள்களை ஏந்தி நடந்து வந்தனர்.
செங்கோல் ஏந்திய வீரன் முற்றத்தில் இறங்கியதும் வாழ்த்தொலிகள் உச்சம் கொண்டன. முற்றத்தில் காத்து நின்ற வைதிகர்களின் தலைவர் சிரௌதர் முன்னால் சென்று அரசனையும் அரசியையும் அரிமலரிட்டு வாழ்த்தினார். வைதிகர்கள் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதினர். சுரேசர் அருகே வந்து “தேர்கள் சித்தமாக உள்ளன, அரசே” என்றார். தருமன் மெல்ல தலையசைத்தபின் காத்து நின்றிருந்த தன் அரசப்பொற்தேர் நோக்கி சென்றார். அவர்கள் தேரில் ஏறிக்கொண்ட அசைவை உணர்ந்ததும் நெடுநேரம் நின்றிருந்த அதன் ஏழு புரவிகளும் குளம்புகளை தூக்கிவைத்து உடலில் பொறுமையின்மையை காட்டின. மணிகளுடன் தேர் குலுங்கியது.
சுரேசர் கையசைக்க எழுந்த பீடத்தில் அமர்ந்திருந்த சூதன் ஏழு கடிவாளங்களையும் மெல்ல சுண்டினான். மணிகள் சலங்கைகள் ஒலிக்க நடனமங்கை அவையேறுவதுபோல இடையொசிந்து அசைய, கொண்டைச்சரங்கள் உலைந்தாட, செம்பட்டுத்திரைகள் அசைய தேர் மேட்டிலேறியது. எதிர்காற்றில் மின்கதிர்க் கொடி எழுந்து பறந்தது. பந்தங்களின் செவ்வொளியில் அனல் உருகி வழிவது போல தேர் முற்றத்தைக் கடந்து சாலையில் நுழைந்தது. அதைச்சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் முழங்கின.
[ 2 ]
யுதிஷ்டிரரின் அரசத்தேர் வேள்விக்கூடத்தின் பெருமுற்றத்தை வந்தடைந்ததும் அங்கு நான்கு நிரைகளாக நின்ற வைதிகர்கள் வேதம் ஓதி, அரிமலர் தூவி, கங்கைநீர் தெளித்து அவரையும் அரசியையும் வரவேற்றனர். அமைச்சர் சௌனகர் முன்னால் வந்து அரசரையும் அரசியையும் முகமன் உரைத்து செய்கையால் வழிநடத்தி உள்ளே கொண்டு சென்றார். நிமித்திகர் குறித்த நற்தருணத்தில் மீனும் கோளும் நோக்கி நின்றிருந்த வானுக்குக் கீழ் தருமன் கைகளைக் கூப்பியபடி தேவியும் தம்பியரும் உடன் வர ராஜசூயப்பந்தலுக்குள் வலக்காலை வைத்து நுழைந்தார்.
ஆயிரத்தெட்டு பெருந்தூண்களின் மேல் நூற்றியெட்டு வெண்குடைக்கூரைகளாக கட்டப்பட்டிருந்த மையப்பந்தலுக்கு வலப்பக்கம் நகர்மக்களும் அயல்வணிகரும் அமர்ந்து வேள்வியை பார்ப்பதற்கான துணைவிரிவுப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கம் படைவீரரும் அவர்களின் குடும்பங்களும் அமர்வதற்கான பந்தல் விரிந்திருந்தது. மையப்பெரும்பந்தலில் பாரதவர்ஷத்தின் அரசர்களும் இந்திரப்பிரஸ்தத்தின் இணை அரசர்களும் முறை அரசர்களும் அசுர குடித்தலைவர்களும் நிஷாத குடித்தலைவர்களும் நாகர் குடித்தலைவர்களும் அமர்வதற்கான பீடங்கள் ஒருக்கப்பட்டிருந்தன.
நீண்ட மையப்பந்தல் பருந்தின் உடல் போலவும், இரு இணைப்பந்தல்கள் அதன் விரிந்த சிறகுகள் போலவும், வேள்வி மரம் நின்ற முகப்பு அதன் கூர் அலகு போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்துத் தூண்களும் பசுந்தழைகளும் அன்றலர்ந்த மலர் தொடுத்த மாலைகளும் கொண்டு அணி செய்யப்பட்டிருந்தன. வேள்விப்பந்தலில் மலரும் தளிருமன்றி பிற தோரணங்களோ பாவட்டாக்களோ பட்டுத் திரைகளோ அமைக்க வைதிக முறைமை இல்லை என்பதால் அக்கூடம் இளவேனில் எழுந்த குறுங்காடென உயிர் வண்ணத்தால் நிறைந்திருந்தது. மலர் நாடி வந்த வண்டுகளும் பட்டாம் பூச்சிகளும் அங்கிருந்தவர்களின் தலைக்குமேல் வண்ணச்சிறகடித்தும் யாழ் மீட்டியும் பறந்தலைந்தன. அவை வேள்விக்கு வந்த கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் தேவர்களும் என்று நூல்கள் உரைத்தன.
சிறிய அரைவளையங்களாக அலைகளால் ஆன பேரலை என்னும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்தப்பீடங்களில் காலை முதலே அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வந்து அமர்ந்துகொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்தின் சார்பில் சௌனகர் முதலான அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துணைசெய்ய திருஷ்டத்யும்னனும் சஞ்சயனும் பூரிசிரவஸும் சாத்யகியும் வேள்விக்கூடத்தின் வாயில்களில் நின்று அரசர்களை வரவேற்று உரிய பீடங்களில் அமர்த்தினர். விதுரர் அவற்றை ஒருங்கிணைத்தார். வேள்விப்பந்தலாதலால் வாழ்த்தொலிகளோ வரவுரைகளோ எழவில்லை. வேதமன்றி பிற ஒலி ஏதும் அங்கு எழலாகாது என்ற நெறி இருந்தது.
உடை சரசரக்கும் ஒலிகளும் படைக்கலங்களின் மணியோசையுமாக மெல்லப் பெருகி நிறைந்துகொண்டிருந்தன வேள்விக்கூடத்தின் சிறகுகள். அரசர்களின் அவைகள் அனைத்தும் நிறைந்தன. ஒழிந்து கிடந்த ஒருசில பீடங்களை நோக்கி பிந்தி வந்தவர்களை வழிகாட்டி கொண்டு சென்றவர்கள் மிகமெல்ல ‘அரசே!’ என்றும் ‘உத்தமரே!’ என்றும் அழைத்தனர். அரசர்கள் அவையமர்ந்த பின்னரே வேள்விக்கு வந்த வைதிகரும் முனிவர்களும் முன்னணியில் அவை அமரத்தொடங்கினர். வைதிகர்களை அவையமரச்செய்வது அஸ்வத்தாமனின் தலைமையில் நடந்தது. அக்ரூரர் அவனுக்கு துணைநின்றார். வைதிகர்கள் தங்கள் குருகுலத்து அடையாளச் சால்வைகளை அணிந்தபடி வந்து அரிமஞ்சள் கூடைகளையும் மலர்க்குடலைகளையும் கைகளில் பெற்றுக் கொண்டு தங்கள் குருகுலத்து முறைப்படி சிறு குழுக்களாக அமர்ந்தனர்.
பல்வேறு குருகுலங்களைச் சேர்ந்த முனிவர்கள் தங்கள் மாணவர்கள் சூழ வந்தனர். அவர்களை வரவேற்க துரோணரும் கிருபரும் வேள்விக்கூட முகப்பில் தங்கள் மாணவர்களுடனும் துணைவருடனும் நின்றனர். முனிவர்கள் தங்களுக்கான பகுதிகளில் மாணவர்கள் சூழ அரை வளையங்களாக எரி நோக்கி அமர்ந்தனர். தனஞ்சய கோத்திரத்தைச்சேர்ந்த முனிவரான சுஸாமர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் வந்தார். யாக்ஞவல்கிய குருகுலத்தைச்சேர்ந்த பதினெட்டாவது யாக்ஞவல்கியரும் அவரது நூற்றெட்டு மாணவர்களும் தொடர்ந்து வந்தனர். வசிட்ட, வாமதேவ, கௌசிக, விஸ்வாமித்திர குருகுலங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்தனர்.
வேள்விச் செயலர்களான ஆயிரத்தெட்டு வைதிகர்கள் தங்கள் அவியூட்டுமுறைமைக்கான தோல் போர்வைகளுடன் வலக்கையில் சமித்தும் இடக்கையில் நெய்க்குடமுமாக வந்து வேள்விக்கூட மையத்தில் அமைக்கப்பட்டிருந்த முப்பத்தாறு எரிகுளங்களைச் சுற்றிலும் அமர்ந்தனர். எரியூட்டுக்குத் தலைமைகொண்டிருந்த வசு மைந்தரான பைலர் அவர்களை வாழ்த்தி அமரச்செய்தார்.
பீமனாலும் அர்ஜுனனாலும் எதிர்கொண்டழைக்கப்பட்டு பீஷ்மர் அவைபுகுந்து பீடத்தில் அமர்ந்தார். திருதராஷ்டிரர் சஞ்சயனால் வழிநடத்தப்பட்டு அவைக்கு வந்தபோது பீமன் எதிர்கொண்டு அவையமரச் செய்தான். கர்ணனுடன் துரியோதனன் உள்ளே வந்தபோது நகுலனும் சகதேவனும் அவர்களை வரவேற்று கொண்டுசென்று அமரச்செய்தனர். காந்தாரத்தின் சுபலர் தன் மைந்தர்களுடன் வர பின்னால் சகுனி வந்தார். உடன் கணிகர் ஒரு வீரனால் தூக்கப்பட்டு மெல்ல வந்தார். சௌவீர பால்ஹிக சிபிநாட்டு அரசர்கள் அவைபுகுந்தனர். சல்யர் அவர்களுக்கு மேல் எழுந்த தோள்களுடன் நீண்ட கால்களை எடுத்துவைத்து உள்ளே வந்தார்.
மாளவனும் கூர்ஜரனும் ஜயத்ரதனுடன் இணைந்து அவைபுகுந்தனர். துருபதன் அவைபுகுந்தபோது அபிமன்யு அவரை வரவேற்று கொண்டுசென்றான். ஜராசந்தனின் மைந்தன் சகதேவன் தன் மாதுலமுறைகொண்ட பிரக்ஜ்யோதிஷத்தின் முதியமன்னர் பகதத்தருடன் அவைக்கு வந்தபோது அனைத்து விழிகளும் அவர்களை நோக்கின. பீமன் அவர்களை அவைக்கு கொண்டுவந்து அமரச்செய்தான். விதர்ப்பத்தின் ருக்மி தன் தந்தை பீஷ்மகர் உடன்வர அவைக்கு வந்தான். சேதியின் தமகோஷரை சகதேவன் அவையமரச் செய்தான். சிசுபாலன் தனியாக வந்தபோது பீமன் அவனை எதிர்கொண்டழைத்தான்.
அனிருத்தன், கங்கன், சாரணன், கதன், பிரத்யும்னன், சாம்பன், சாருதோஷ்ணன், உல்முகன், நிசடன், அங்காவகன் என்னும் பத்து யாதவக்குடியினருடன் மதுராவின் வசுதேவர் அவைக்கு வந்தார். பலராமர் வந்து முறைமைகளைத் தவிர்த்து துரியோதனன் அருகே அமர்ந்தார். அயோத்தி நாட்டரசனுடன் மச்சநாட்டு சூரசேனர் வந்தார். கௌசிகி நாட்டு மஹௌஜசனுடனும் காசி நாட்டு சுபாகுவுடனும் கோசலத்தின் பிரகத்பலன் அவைபுகுந்தான். அர்ஜுனனால் வெல்லப்பட்ட உலூகநாட்டு பிரஹந்தனும் காஷ்மீரநாட்டு லோகிதனும் இணைந்து அவைபுகுந்தனர். அவர்களை அபிமன்யு வரவேற்று அவையிலமர்த்தினான். திரிகர்த்தர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் தங்கள் மலைநாட்டு மயிராடைகளுடன் அவைக்கு வந்தனர்.
சகதேவன் தன்னால் வெல்லப்பட்ட கோசிருங்கத்தின் சிரேணிமானை பணிந்து வரவேற்று அவையிலமர்த்தினான். அவனால் தோற்கடிக்கப்பட்ட அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வந்தபோதும் அவனே சென்று தலைவணங்கி அவைக்கு கொண்டுவந்தான். தென்னகத்திலிருந்து சகதேவனால் வெல்லப்பட்ட வாதாதிபன், திரைபுரன், பௌரவன் என்னும் அரசர்கள் வந்தனர். அவை முழுமையாக நிறைந்ததும் முற்றிலும் ஓசையடங்கி வண்ணங்களும் ஒளிச்சிதறல்களும் மட்டுமானதாக ஆகியது.
இளைய யாதவர் அவைபுகுந்தபோது அர்ஜுனனும் பீமனும் நகுலசகதேவர்களும் அபிமன்யுவும் சாத்யகியும் அவரை நோக்கி சென்று வணங்கி முகமனுரைத்து அழைத்துவந்தனர். அவர் தன் முடியில் சூடிய பீலிவிழி வியந்தமைய புன்னகை மாறா கண்களுடன் அனைவரையும் தழுவி இன்சொல் பேசி அவைக்குள் வந்தார். அவையின் வலப்பக்க மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த அரசியர் நிரை நோக்கி சென்று அங்கே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த குந்தியிடமும் அருகே அமர்ந்திருந்த காந்தாரியிடமும் தலைவணங்கி மென்சொல் பேசினார்.
அவர்களைச் சூழ்ந்து காந்தார அரசியரும், பானுமதியும், துச்சளையும், அசலையும், சுபத்திரையும், தேவிகையும், பலந்தரையும், விஜயையும், கரேணுமதியும் அமர்ந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் ஓரிரு சொல் பேசினார். அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கௌரவர்களின் துணைவியர் நூற்றுவரிடமும் அவர் ஒருசொல் தனியாக பேசினார் என்று அவர்கள் உணர்ந்தனர். திரும்பி வருகையில் பீஷ்மரையும் துரோணரையும் வணங்கிவிட்டு தன் தமையனருகே சென்று அமர்ந்தார்.
தர்ப்பைப் பீடத்தில் முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் அமர்ந்திருந்தார். இடப்பக்கம் சிறிய மேடைமேல் போடப்பட்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் அரியணைகளில் வெண்பட்டு மூடப்பட்டிருந்தது. சௌனகரால் அழைத்து வரப்பட்ட தருமனும் துணைவியும் வேள்விப்பந்தலின் நுழைவாயிலில் அமர்ந்து தங்கள் உடலை தூய்மை செய்துகொள்ளும்பொருட்டு அங்கு அமைந்த சிறிய எரிகுளத்தில் வைதிகர் மூவர் அமைத்த தென்னெரியில் பலாச இலைகளை அவியளித்து தர்வி ஹோமத்தை செய்தனர். புலனின்பத்தால் மாசடைந்த உடலை அப்புகையால் மீட்டனர். மூன்று அழுக்குகளையும் அவ்வெரியில் விட்டு சிவந்த விழிகளுடன் எழுந்தனர். அவர்களின் ஆடைகளை சேர்த்துக்கட்டினர் வைதிகர். அரசியின் கைபற்றி இடம் வரச்செய்து தருமன் வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தார்.
ஆரம்பனீயம், க்ஷத்ரம், திருதி, வியுஷ்டி, திவிராத்ரம், தசபேயம் என்னும் ஆறுவகை எரிகளுக்கான ஆறு எரிகுளங்களாக முப்பத்தாறு எரிகுளங்களைச்சூழ்ந்து அவியூட்டுநர் அமர்ந்திருந்தனர். தருமனும் அரசியும் அவர்களை வணங்கி முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் குடிகளையும் தொழுது எரிகுளங்களை வலம்செய்து கூப்பிய கைகளுடன் தௌம்யரை நோக்கி சென்றனர். தருமன் நெற்றி நெஞ்சு இடை கால் கை என ஐந்துறுப்புகளும் நிலம் தொட விழுந்து தௌம்யரை வணங்கினார். அவர் “வேதச்சொல் துணை நிற்க! எரி அணையாதிருக்கட்டும்! கொடி என்றும் இறங்காதிருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.
அரசி கை நெற்றி முழங்கால் என மூன்று உறுப்புகள் நிலம் படிய தௌம்யரை வணங்கினாள். “அறம் வளர உடனுறைக! எரி என நெறி கொண்டிருக்க! அன்னையென கொடிவழிகள் நினைவில் வாழ்க! ஓம், அவ்வாறே ஆகுக!” என்று தௌம்யர் வாழ்த்தினார். தௌம்யரின் மாணவராகிய பதினெட்டு வைதிகர்கள் வந்து தருமனை எதிர்கொண்டழைத்து வேள்வி மரத்தை நோக்கி கொண்டு சென்றனர். இளைய பாண்டவர்கள் நால்வரும் உருவிய வாட்களுடன் அவரைத் தொடர்ந்து சென்றனர்.
வேள்வியறிவிக்கப்பட்டதுமே இடம்பார்த்து வரையப்பட்ட வாஸ்துமண்டலத்தில் செம்பருந்தின் அலகில் நடப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்டு தளிரெழுந்த இரு மென்கிளை கொண்டிருந்த அத்தி மரத்தின் அருகே சென்று இருவரும் பணிந்தனர். பொற்குடங்களில் மும்முறை அதற்கு நீரூற்றினர். வைதிகர் அளித்த மஞ்சள் சரடை வேதம் ஒலிக்க அம்மரத்தில் கட்டி அதை அவ்வேள்விக்குரிய இறை எழவேண்டிய உயிர்ப்பீடமென ஆக்கினர்.
தருமன் அருகே அறத்துணையென நின்றிருந்த திரௌபதி தர்ப்பையால் கங்கை நீர் தொட்டு அதை வணங்கி அகல்சுடராட்டினாள். மலர்தூவி வணங்கி மீண்டாள். தம்பியர் புடை சூழ மும்முறை வேள்வி மரத்தைச் சுற்றி வணங்கி தனது அரியணை நோக்கி நடந்தார் தருமன். தௌம்யரும் பைலரும் அவரை வரவேற்று எதிர்கொண்டு அழைத்துச் சென்று அரியணை பீடத்தருகே நிறுத்தினர். ஐந்து ஏவலர் வந்து பட்டுத்திரையை விலக்க இந்திரப்பிரஸ்தத்தின் செவ்வொளிமணிகள் பதிக்கப்பட்ட அரியணை வேள்விக்கூடத்தின் பலநூறு பந்தங்களின் ஒளியில் கனல்குவையென ஒளியசைவுகொண்டது. தௌம்யர் அரியணைக்குமேல் கங்கைநீர் தெளித்து தூய்மை செய்து முறைப்படி தருமனை அழைத்தார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! குருகுலத்து விசித்திரவீரியனின் வழித்தோன்றலே! சௌனக வேதமரபின் புரவலரே! பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் தலைவரே! இங்கு யயாதியின் பெயரால் ராஜசூய வேள்வி ஒன்று நிகழவிருக்கிறது. இவ்வேள்வியை முடித்து பாரதவர்ஷத்தின் சத்ராஜித் என அரியணை அமரும்படி சௌனக வேத மரபின் வசிஷ்ட குருகுலத்தின் வைதிகனாகிய தௌம்யன் என்னும் நான் உங்களை வாழ்த்தி கோருகிறேன்.”
தருமன் தன் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி “யயாதியின் வழிவந்தவனும் குருகுலத்தவனும் விசித்திரவீரியனின் வழித்தோன்றலும் யாதவப் பேரரசி குந்தியின் குருதியுமாகிய நான் இவ்வேள்வியை என் உடல் பொருள் உயிர் என மூன்றையும் அளித்து காப்பேன் என்று உறுதி கொள்கிறேன். துணை நிற்கட்டும் என் தெய்வங்கள்! அருளட்டும் என் மூதாதையர்! கனியட்டும் ஐம்பெரும் பருக்கள்! காக்கட்டும் எண்திசை தேவர்! அருகணைக என் ஆற்றலுக்கு உறைவிடமாகிய என் அறத்துணைவி! அருகமைக என்னிலிருந்து பிறிது அல்லாத என் இளையோர்!” என்றார். நான்கு பாண்டவர்களும் தங்கள் வாட்களை தௌம்யரின் காலடியில் தாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர்.
உருவிய வாளுடன் தருமன் ராஜசூய காவலனாக அரியணை அமர்ந்தார். அவர் அருகே திரௌபதி அமர்ந்தாள். தௌம்யர் அரிமலரும் கங்கைநீரும் தூவி அவரை வாழ்த்தியபின் திரும்பி அவை நோக்கி இருகைகளையும் விரித்து “அவையோரே! இன்று இவ்வேள்விக்கூடத்தில் பாரதவர்ஷத்தின் நூற்றுப்பன்னிரண்டாவது ராஜசூய வேள்வி நிகழவிருக்கிறது. இதுவரை இவ்வேள்வியை இயற்றி சத்ராஜித் என அறியப்பட்ட நூற்றுப்பதினொரு அரசர்களும் விண்ணுலகில் எழுந்தருளி இவ்வேள்வியை வாழ்த்துவார்களாக! அவர்களின் பெயர்களை இங்கு அறிவித்து எரிகுளத்தில் அவியளித்து நிறைவு செய்வோம். யயாதியும், ஹஸ்தியும், குருவும், சந்தனுவும், பிரதீபரும், விசித்திரவீரியரும் என நீளும் அழியாத அரசநிரையின் பெயரால் இங்கு இவ்வேள்வி நிகழவிருக்கிறது” என்றார்.
“அவ்வரசர் அமர்ந்த அரியணையையும் முடியையும் பாரதவர்ஷத்தின் முதன்மை அரசென்று ஒப்புக் கொண்டு இங்கு வந்திருக்கும் ஐம்பத்துஐந்து தொல்குடி ஷத்ரியர்களையும் அவர்களுடன் வாள் கொண்டு நிகர் நிற்கும் நூற்றுஎட்டு சிறுகுடி ஷத்ரியர்களையும் மண் வென்றதனால் முடி கொண்ட பிற அரசர்கள் அனைவரையும் தலைவணங்கி வரவேற்கிறேன். இங்கு தேவர்கள் எழுக! அவி கொள்ள தெய்வங்கள் எழுக! அவர்கள் அருள் பெற்ற மூதாதையர் வருக! ஐம்பெரும்பருக்கள் நிறைக! எண்திசைக்காவலர் சூழ்க! அவர்கள் அனைவரையும் உணவூட்டிக் காக்கும் எரி ஓங்குக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். வைதிகர்களும் முனிவர்களும் கைகளைத் தூக்கி “ஓம்! ஓம்! ஓம்!” என்று வாழ்த்தினர்.
[ 3 ]
இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம்! ஓம்! ஓம்!” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க!” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது.
பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் செங்கோலுடன் அமர்ந்திருந்த தருமன் “தெய்வங்கள் அருள்க! வேள்வியில் எரியெழுக!” என்று ஆணையிட்டார். “அவ்வாறே” என்றபின் பைலர் வைதிகர் நிரையின் முகப்பில் எழுந்த பன்னிரு இளையோரிடம் “இளைய வைதிகரே, வேள்விக்கென ஆறுவகை எரிகளை எழுப்புமாறு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் ஆணை வந்துள்ளது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
அவர்கள் தலைவணங்கி நிரை வகுத்துச்சென்று தௌம்யரை வணங்கினர். தௌம்யர் அளித்த உலர்ந்த தர்ப்பைச் சுருளை வாங்கிக்கொண்டு வந்து பைலருக்கு முன் நின்றனர். பைலர் எரி எழுப்புவதற்கான அரணிக்கட்டைகளை அவர்களுக்கு அளித்தார். அவற்றை கொண்டுவந்து ஆறு வரிகளாக அமைந்த முப்பத்து ஆறு எரிகுளங்களில் ஒவ்வொரு நிரையின் தொடக்கத்திலும் நின்று வணங்கினர்.
எரிகுளங்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்த வைதிகர்கள் தர்ப்பை சுற்றிய கைகளைத்தூக்கி “ஆகவனீயம் எரி எழுக! கார்கபத்யம் எழுக! தட்சிணம் எழுக!” என்று வாழ்த்தினர். இளைய வைதிகர் இடக்கால் மடித்து நிலத்தில் அமர்ந்து அரணிக்கட்டையின் அடிக்குற்றியை தரையில் வைத்து உள்ளங்கைக் குழிவில் நிலைக்கழியை நாட்டி அவற்றில் சுற்றப்பட்ட கயிற்றை மத்துபோல விரைந்து இழுத்து சுழலச்செய்தனர். புறா குறுகும் ஒலி போல அரணிக்கட்டைகளின் ஒலி எழுந்தது.
குழிக்குள் சுழன்ற கட்டை வெம்மை கொள்ள அனைத்து விழிகளும் அவற்றையே நோக்கிக் கொண்டிருந்தன. முதல் எரி எது என்பது வேள்வியில் எழுந்து வரும் முதல் தெய்வம் எது என்பதன் அறிவிப்பு. மூன்றாவது கட்டையில் தர்ப்பைச் சுருள் புகைந்து பற்றிக்கொண்டதும் வைதிகர்கள் தங்கள் வலக்கையைத் தூக்கி “வெற்றி கொள்பவனாகிய இந்திரனே இங்கெழுக! உன் இடியோசை எழுக! மின்கதிர் எழுக!” என்று வாழ்த்தினர். ஆறாவது கட்டை அடுத்ததாக பற்றிக்கொண்டது. நான்காவது கட்டையும் ஒன்றாவது கட்டையும் இரண்டாவது கட்டையும் ஐந்தாவது கட்டையும் இறுதியாக பற்றிக்கொள்ள ஆறு தீயிதழ்களுடன் வைதிக இளைஞர்கள் எழுந்தனர்.
பைலர் முதலில் எரிந்த இந்திரனின் சுடரை எடுத்து முதல் எரிகுளத்தில் அடுக்கப்பட்டிருந்த பலாச விறகின் அடியில் வைத்தார். தர்ப்பையை உடன் வைத்து தர்ப்பையாலான விசிறியால் மெல்ல விசிறியபோது பலாசம் சிவந்து கருகி இதழ் இதழாக தீ எழுந்தது. சூழ்ந்தமர்ந்திருந்த அவியளிப்போர் உரக்க வேதம் முழங்கினர். நெய்விட்டு அத்தழலை எழுப்பி அதிலிருந்து அடுத்தடுத்த எரிகுளங்களை அனல் ஆக்கினர். ஆறு எரிகளும் முப்பத்தாறு எரிகுளங்களில் மூண்டெழுந்தபோது வேதப்பேரொலி உடன் எழுந்தது. வேதத்தின் சந்தத்திற்கு இயைந்தாடுபவைபோல நெளிந்தாடின செந்தழல்கள். ‘இங்கு!’ ‘இங்கு!’ என்றன. ‘இதோ!’ ‘இதோ!’ என்றன. ‘அளி!’ ‘அளி!’ என நா நீட்டின. ‘இன்னும்!’ ‘இன்னும்!’ என்று உவகை கொண்டன. ‘கொள்க!’ ‘கொள்க!’ என்று கையசைத்தன.
நெய்யும் மலர்களும் அரிமஞ்சளும் எண்மங்கலங்களும் முறை அவியாக்கி வேள்வித்தீயை நிறுத்தினர் வைதிகர். நறும்புகை எழுந்து குவைக்கூரைகளில் திரண்டு மெல்ல தயங்கி பிரிந்து கீழிறங்கி வேள்விச்சாலையை வெண்பட்டுத்திரையென மூடியது. வெளியிலிருந்து பதினெட்டு பெருவாயில்களினூடாகவும் உள்ளே வந்த காற்று வெண்பசுக்களை இடையன் என அப்புகையைச் சுழற்றி ஓட்டிச் சென்றது. காற்று வந்தபோது அசைவு கண்ட நாகமெனச் சீறி மேலெழுந்து நாநீட்டி நெளிந்தாடிய தழல்கள் காற்று மறைந்ததும் மீண்டும் அடங்கி பறந்து விறகில் வழிந்து நெய் உண்டு பொறி சிதற குவிந்து கிழிந்து பறந்து துடித்தாடின.
பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவித்தார். வைதிகர் அனைவரும் வலக்கையை தூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” எனும் ஒலியெழுப்பி அதை ஏற்றனர். பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக்குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்தனர். அவற்றை தௌம்யரிடம் காட்டி வாழ்த்து பெற்ற பின்னர் அவையமர்ந்திருந்த முனிவர்களிடமும் வைதிகர்களிடமும் அவற்றைக்காட்ட ஒவ்வொருவரும் தங்கள் தர்ப்பை மோதிரம் அணிந்த வலக்கையால் அவற்றைத் தொட்டு வாழ்த்தினர். பதினெட்டு சோமக்கொடிச்சுருள் கூடைகளும் எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன.
பைலர் தருமனை வணங்கி சோமச்சாறு எடுக்க அனுமதி கோரினார். “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டார். மரத்தாலான நூற்றெட்டு உரல்கள் அமைக்கப்பட்டன. வைதிகர்கள் எடுத்தளிக்க இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கினர். பின்னர் அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்கினர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதினர் வைதிகர். அதன்பின் அன்னம் ஆகுதியாக்கும் இடா அளிக்கையையும் நெய்யை அனலாக்கும் ஆஜ்யம் என்னும் அளிக்கையையும் தொடங்க தௌம்யரிடம் ஆணை பெற்று தருமனிடம் ஒப்புதல் பெற்று பைலர் அறிவித்தார். மரச்சக்கரங்கள் கொண்ட நூற்றெட்டு வண்டிகளில் அமைந்த மூங்கில் கூடைகளில் ஆவியெழும் அன்ன உருளைகள் கொண்டுவரப்பட்டன. எரிகுளங்களுக்கு அருகே அவை நிறுத்தப்பட்டு கூடைகள் இறக்கப்பட்டன.
ஒவ்வொரு கூடையிலிருந்தும் ஒரு கவளம் அன்னம் எடுத்து எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்தனர். எண்திசை தேவர்களுக்கும் எட்டு முறை அன்னம் அளிக்கப்பட்டது. அதன்பின் தேனும் இன்கனிச்சாறும் பாலும் கலந்த மதுபர்க்கம் அவியாக்கப்பட்டது. சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. முதலில் மதுபர்க்கமும் பின்னர் சோமமும் இறுதியாக அன்னமும் உண்ட அவர்கள் கைகூப்பி எரிகுளத்தில் எழுந்த தேவர்களை வாழ்த்தி வணங்கினர். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெருங்குடிகளும் வணிகர்களும் அமர்ந்த கிளையவைகளுக்கு மதுபர்க்கமும் சோமமும் அன்னமும் சென்றன. ஓசையின்றி அவை இறுதி வரை கைமாறி அளிக்கப்பட்டன.
அன்ன அளிக்கை முடிந்ததும் தௌம்யர் எழுந்து வந்து அவையை வணங்கி “இங்கு தேவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவ்வேள்வி நிகழும் பன்னிரு நாட்களும் இந்நகரை வாழ்த்தியபடி அவர்கள் இவ்வெளியில் நின்றிருப்பார்கள். தேவர்கள் எழுந்த மண் தீங்கற்றது. விண்ணுக்கு நிகரானது. இதில் நடமாடுபவர்கள் அனைவரும் தேவர்கள் என்றே கருதப்படுவார்கள். உவகை கொள்வோம். அன்பில் தோள் தழுவுவோம். மூதாதையரை எண்ணுவோம். தெய்வங்களுக்கு உகந்த உணவை உண்போம். தேவர்கள் மகிழும் சொற்களை பேசுவோம். ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையமர்ந்திருந்த வைதிகர்கள் வேதம் ஓதியபடி திரும்பி அரிமலரையும் கங்கைநீரையும் அரசர் மீதும் குடிகள் மீதும் தெளித்து வாழ்த்தினர்.
தருமன் எழுந்து அவையோரை வணங்கி “இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உகந்த உணவு அனைத்தும் சித்தமாக உள்ளன. ஒவ்வொருவரின் கால்களையும் தொட்டு சென்னி சூடி உணவருந்தி மகிழ்க என்று யயாதியின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின் பெயரால் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் உணவுண்ட மிச்சில் என் மூதாதையருக்கு உகந்த பலியாக ஆகுக!” என்று வேண்டிக் கொண்டார். உணவுக்கூடத்தை நடத்திய யுயுத்ஸுவும் துச்சாதனனும் அவைக்கு வந்து வணங்கி அனைவரையும் உணவுண்ணும்படி அழைத்தனர்.
துச்சாதனன் உரத்தகுரலில் “அனல் தொடா உணவுண்ணும் முனிவர்களுக்கு கிழக்கு வாயிலினூடாக செல்லும் பாதையின் இறுதியில் அமைந்த சோலைக்குள் கனிகளும் தேனும் காய்களும் கிழங்குகளும் ஒருக்கப்பட்டுள்ளன” என்றான். “உயிர் கொல்லப்படாத உணவுண்ணும் வைதிகர்களுக்காக மேற்கு வாயிலின் வழியாக சென்றடையும் உணவுக்கூடத்தில் அறுசுவைப் பண்டங்கள் சித்தமாக உள்ளன. ஊனுணவு விழையும் ஷத்ரியர்களுக்காக பின்பக்கம் தெற்கு வாயிலினூடாக செல்லும் பாதை எட்டு உணவுப் பந்தல்களை சென்றடைகிறது.”
ஷத்ரியர் கைகளைத் தூக்கி ‘ஆஆஆ’ என கூவிச் சிரித்தனர். துச்சாதனன் “வடக்கே குளிர்நிலத்து அரசர்களுக்குரிய உணவு முதல் பந்தலிலும், மேற்கே பாலை நில அரசர்களுக்கு உரிய உணவு இரண்டாவது பந்தலிலும், காங்கேய நிலத்து அரசர்களுக்குரிய கோதுமை உணவு மூன்றாவது பந்தலிலும், காமரூபத்துக்கும் அப்பால் உள்ள கீழைநாட்டு அரசர்களுக்கான அரிசியுணவு நான்காவது பந்தலிலும், மச்சர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உரிய மீனுணவு ஐந்தாவது பந்தலிலும், விந்திய நிலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய உணவு ஆறாவது பந்தலிலும், எரியெழும் தென்னகத்து உணவுகள் ஏழாவது பந்தலிலும், பீதர் யவனர் நாட்டு உணவுகள் எட்டாவது பந்தலிலும் அமைந்துள்ளன. அனைத்துப் பந்தல்களிலும் உணவுண்ணும் மல்லர்களையே மூதாதையர் விழைவர்” என்றான். அவை சிரிப்பால் நிறைந்தது.
துச்சாதனன் “வணிகர்களுக்கும் பெருங்குடிமக்களுக்குமான உணவுச்சாலைகள் அவர்களின் பந்தல்களிலிருந்து பிரிந்து செல்லும் பாதைகளின் இறுதியில் அமைந்துள்ளன. உணவுக் குறை ஏதும் சொல்ல விழைபவர்கள் தங்கள் மேலாடையை தலைக்கு மேல் தூக்க வேண்டுமென்றும், அடுமனையாளர்களும் அவர்களை அமைத்திருக்கும் நானும் யுயுத்ஸுவும் அவர்களை தேடிவந்து குறைகளைக் கேட்டு ஆவன செய்வோம் என்றும் அரசரின் சார்பில் அறிவிக்கிறோம்” என்றான்.
எரிகுளங்களின் முன் அமர்ந்திருந்த அவியளிப்போரின் முதல் நிரை நெய்யூற்றி வேதம் ஒலித்தபடியே எழ அவர்களுக்கு வலப்பக்கமாக வந்த அடுத்த நிரையினர் அணுகி அவர்களின் நெய்க்கரண்டியை வாங்கி வேதமோதியபடியே அமர்ந்தனர். உணவுண்பதற்காக முனிவர்களும் வைதிகர்களும் அரசர்களும் குடிகளும் வணிகர்களும் ஓசையின்றி எழுந்து இயல்பாக அணிவகுத்து பாதைகளினூடாக மெல்ல வழிந்தோட சற்று நேரத்தில் எரியூட்டுபவர்கள் அன்றி பிறிதெவரும் இன்றி அம்மாபெரும் வேள்விக்கூடம் ஒழிந்தது. தருமன் திரௌபதியுடன் எழுந்து அவையை வணங்கி அரியணை மேடையிலிருந்து இறங்கினார்.
சௌனகர் வந்து அவரை வணங்கி “முறைப்படி இன்று தாங்கள் மூதாதையருக்கு உணவளித்து நிறைவூட்டிய பின்னரே விருந்துண்ணவேண்டும், அரசே” என்றார். இளைய பாண்டவர்கள் சூழ வேள்விக்கூடத்திலிருந்து தெற்கு வாயிலினூடாக வெளியே சென்ற தருமன் அங்கிருந்த சிறு மண்பாதை வழியாக சென்று சோலைக்குள் ஓடிய சிற்றோடைக்கரையில் கூடிய வைதிகர் நடுவே தன் தேவியுடன் தர்ப்பை மேல் அமர்ந்தார். ஏழு கவளங்களாக பிடிக்கப்பட்ட அன்னத்தை நுண்சொல் உரைத்து நீரில் இட்டு மூழ்கி விண்வாழ் மூதாதையருக்கு உணவளித்து வணங்கினார். ஈரத்துடன் கரையேறி தென்திசை நோக்கி மும்முறை வணங்கி உணவுண்டு அமையுமாறு தென்புலத்தாரை வேண்டினார்.
ஏவலர் வெண்திரை பிடிக்க உள்ளே சென்று ஆடை மாற்றி மீண்டும் அரச உடையணிந்து வெளிவந்து உணவுப்பந்தலை அடைந்தார். அங்கு பல்லாயிரம் நாவுகள் சுவையில் திளைத்த ஓசை பெருமுழக்கமென எழுந்து சூழ்ந்தது. “வேள்விக்கூடத்தைவிட மிகுதியான தேவர்கள் இங்குதான் இறங்கியிருப்பார்கள்!” என்றான் பீமன். தருமன் “இளிவரல் வேண்டாம், மந்தா. இது நம் மூதாதையர் உலவும் இடம்” என்றார். பீமன் “ஆம், வேறு எவர் இங்கு வந்திராவிட்டாலும் ஹஸ்தி வந்திருப்பார். அதை என்னால் உறுதிபட சொல்லமுடியும்” என்றான்.
தருமன் சினத்துடன் “பேசாதே! முன்னால் போ!” என்றார். பீமன் சிரித்தபடி முன்னால் செல்ல இடைப்பாதையினூடாக ஓடி வந்த துச்சாதனன் “அரசே, உணவுக்கூடங்கள் அனைத்தும் நிறைந்து நெரிபடுகின்றன. இதுவரை ஒரு மேலாடைகூட மேலெழவில்லை” என்றான். பீமன் “மேலாடை எழாதிருக்காது. இப்போதுதானே அனைவரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்? மதுவை குறை சொல்வது எவருடைய இயல்பும் அல்ல. உணவு உண்டு முடிக்கையில் மேலாடைகள் எழும்” என்றான். துச்சாதனன் புரியாமல் “ஏன்?” என்றான். பீமன் “மேலும் உண்ணமுடியவில்லை என்னும் குறையை உணராத ஊண் விருப்புள்ளவர்கள் எவரிருக்கிறார்கள்?” என்றான்.
துச்சாதனன் நகைத்தபடி “முனிவர்களையும் வைதிகர்களையும் இன்மொழி சொல்லி ஊட்டும் பொறுப்பை யுயுத்ஸுவிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றான். பீமன் “ஆம், அவன் அதற்குரியவன்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் அஸ்தினபுரியில் ஒரு விதுரர் இருக்கிறார்” என்றான். “மந்தா, உன் சொற்கள் எல்லை மீறுகின்றன” என்று தருமன் மீண்டும் முகம் சுளித்தார்.
“மூத்தவரே, நாம் ஏன் இங்கு வீண் சொல்லாட வேண்டும்? நாம் இருக்க வேண்டிய இடம் உணவுக்கூடம் அல்லவா?” என்றான் துச்சாதனன். அவர்கள் இருவரும் தோள் தழுவிச்செல்ல புன்னகையுடன் திரும்பிய தருமன் அர்ஜுனனிடம் “இளையவனே, நான் விழைந்த காட்சி இதுவே. நகர் நிறைவு நாளில் நிகழ்ந்தவற்றுக்குப் பிறகு இப்படி ஓர் தருணம் வாய்க்குமென்று எண்ணியிருக்கவே இல்லை” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.
அவன் முகத்தில் புன்னகை வரவில்லை என்பதைக் கண்டு “துரியோதனன் இருண்டிருக்கிறான். அருகே அங்கனும் அதே இருள் கொண்டிருக்கிறான். அதை நான் பார்த்தேன். ஆனால் இளைய கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வந்த சற்று நேரத்திலேயே உவகை கொள்ளத்தொடங்கிவிட்டனர்” என்றார் தருமன். “அவர்கள் எளியவர்கள்” என்றான் அர்ஜுனன்.
தருமன் “ஆம், அவ்வெளிமையே அவர்கள்மேல் பெரும் அன்புகொள்ள வைக்கிறது” என்றார். “காட்டு விலங்குகளின் எளிமை” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி நோக்கி அவன் எப்பொருளில் அதை சொன்னான் என்று உணராமல் தலையை மட்டும் அசைத்தார். உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் பீமனை அழைத்தபடி உள்ளே நுழைந்தனர்.
தருமன் முதலில் முனிவர்கள் உணவுண்ட சோலைக்கு சென்றார். திரௌபதி பெண்டிரின் உணவறைகளுக்கு சென்றாள். ஒவ்வொரு குருகுலத்தையும் சார்ந்த முனிவர்களை அணுகி தலைவணங்கி இன்சொல் உரைத்து உண்டு வாழ்த்தும்படி வேண்டினார் தருமன். அவர்கள் உணவுண்ட கையால் அவன் தலைக்கு மேல் விரல் குவித்து “வளம் சூழ்க! வெற்றியும் புகழும் நிறைக!” என்று வாழ்த்தினர். பின்னர் வைதிகர் உணவுண்ட கூடங்களுக்கு சென்றார். அங்கு காட்டுத்தீ பற்றி எரியும் குறுங்காடுபோல் ஓசையும் உடலசைவுகளும் நிறைந்திருந்தன. பரிமாறுபவர்களை வைதிகர்கள் பிடித்திழுத்து உணவை தங்கள் இலைகளில் அள்ளிக் கொட்ட வைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து உணவை பாராட்டியும், வசைபாடியும், வெடித்து நகைத்தும் உண்டனர்.
அர்ஜுனன் “இவர்களுக்கு உகந்த வேள்வி இதுதான் போலும்!” என்றான். “வேண்டாம்! அத்தகைய சொற்களை நான் கேட்க விழையவில்லை” என்றார் தருமன். “என் அரசில் உணவருந்தும் ஒலிக்கு இணையானது பிறிதில்லை, இளையோனே.” அர்ஜுனன் ”வருந்துகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் நால்வருமே பலநாட்களாக நிலையழிந்திருக்கிறீர்கள். தீயதென எதையோ எதிர்பார்க்கிறீர்கள்” என்றார் தருமன். “இதுவரை இவ்வேள்வி வந்துசேருமென எவர் எண்ணினீர்கள்? இது மூதாதையர் அருள். அது நம்மை இறுதிவரை கொண்டுசெல்லும்.” அர்ஜுனன் “ஆம்” என்று பெருமூச்சுவிடுவதைப்போல சொன்னான்.
தருமன் வைதிகர்களின் பந்திகளினூடாக கை கூப்பி நடந்து உணவிலமர்ந்த மூத்தவர்களிடம் குனிந்து இன்சொல் சொன்னார். “உண்ணுங்கள்! உவகை கொள்ளுங்கள்! உத்தமர்களே, உங்கள் சுவைநாவுகளால் என் குலம் வாழ வாழ்த்துங்கள்!” என்றார். “குறையேதும் உளதோ?” என்றொரு முதியவரிடம் கேட்டார். “ஒரு வாயும் இரு கைகளும் கொடுத்த இறைவனிடம் அன்றி பிறரிடம் சொல்ல குறைகள் ஏதும் இல்லை” என்றார் அவர். அருகிலிருந்த இன்னொரு முதியவர் “தன் வயிறைப்பற்றி அவருக்கு எந்தக் குறையும் இல்லை பார்த்தீர்களா?” என்றார். சூழ்ந்திருந்த வைதிகர்கள் உரக்க நகைத்தனர்.
அரசர்களின் உணவறையில் சிறுசிறு குழுக்களாகக் கூடி அமர்ந்து நகைத்தும் சொல்லாடியும் உணவுண்டு கொண்டிருந்தனர். மூங்கில் குவளைகளில் மதுவும் ஊனுணவும் அனைத்து திசைகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. பீமனும் கௌரவர்களும் அவர்கள் நடுவே உலவி ஒவ்வொருவரையும் நோக்கி பரிமாற வைத்துக்கொண்டிருந்தனர். “ஒரு நோக்கிலேயே பாரதவர்ஷத்தின் அரசியலை காணமுடிகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று தருமன் புன்னகை செய்தார்.
தருமன் பீஷ்மரை அணுகி வணங்கி “இன்னுணவு கொள்ளுங்கள், பிதாமகரே” என்றார். பீஷ்மர் “நான் அரண்மனை உணவு உண்டு நெடுநாட்களாகிறது. நாவு சுவை மறந்துளதா என்று பார்த்தேன். இல்லை. சொல் மறந்தாலும் அது சுவை மறப்பதில்லை” என்றார். தருமன் “நாங்கள் உங்களை பிதாமகர் என எண்ணியிருப்பது வரை உங்கள் சுவை நாவில் அழியாமலிருக்கும், பிதாமகரே” என்றார். “அவ்வண்ணமென்றால் எனக்கு விடுதலையே இல்லை என்று பொருள்” என்று பீஷ்மர் சிரித்தார்.
திருதராஷ்டிரர் உணவுண்ட இடத்தை அணுகிய தருமன் தலைவணங்கி “உகந்த உணவு என்று எண்ணுகிறேன், தந்தையே” என்றார். இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவர் குரல் கேட்டு தலையை சற்றே சரித்து “உண்கையில் பேசுவது என் வழக்கமல்ல. இருப்பினும் இந்நல்லுணவுக்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்றபின் செல் என்பது போல கையசைத்தார்.
மீண்டும் தலைவணங்கி அகன்று புன்னகையுடன் தருமன் துரியோதனனை அணுகினார். அவன் அருகே அமர்ந்திருந்த கர்ணன் மெல்லிய குரலில் “அரசர்!” என்றான். துரியோதனன் திரும்பிப் பார்த்து மீசையை நீவியபடி புன்னகைத்தான். “அஸ்தினபுரியின் அரசே, இவ்வேள்வியில் தாங்களும் அன்னம் கொள்ள வந்தமைக்காக பெருமை கொள்கிறேன்” என்றார் தருமன். துரியோதனன் “நன்று” என்று மட்டும் சொல்லி விழிதிருப்பிக் கொண்டான். கர்ணன் “நல்லுணவு, அரசே” என்றான். தருமன் அவர்கள் மேலும் ஒரு சொல்லேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தவர் போல நின்றார். அவர்கள் விழிதிருப்பவில்லை.
தருணமறிந்த அர்ஜுனன் “பகதத்தர் அங்கு உணவுண்கிறார், மூத்தவரே” என்று தருமனை மெல்ல தொட்டு சொல்ல தருமன் அவர்களிருவருக்கும் தலைவணங்கி பகதத்தரை நோக்கி சென்றார். திருதராஷ்டிரரைப் போலவே கால்விரித்தமர்ந்து இரு ஏவலரால் பரிமாறப்பட்டு படைக்கலப் பயிற்சி கொள்பவர் போல உணவுண்டுகொண்டிருந்த பகதத்தர் தொலைவிலிருந்தே அரசரை நோக்கி “இந்திரப்பிரஸ்தம் இனி முதன்மையாக உணவுக்கென்றே பேசப்படும், தருமா” என்றார். தருமன் “அவ்வாறே ஆகுக, மூத்தவரே! அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றார்.
கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்த பலராமரையும் வசுதேவரையும் சல்யரையும் சென்று பார்த்து முகமன் சொன்னார். சௌனகர் வந்து அவரருகே நின்று ஒவ்வொரு அரசரையாக நினைவூட்டி அழைத்துச்சென்று ஊண்முகமன் சொல்ல வைத்தார். பின்னர் குடியவையிலும் வணிகர் அவையிலும் சென்று கைகூப்பி அனைவரையும் உண்டு மகிழும்படி வேண்டி முகமன் உரைத்தார்.
உணவு முதற்பந்தி முடிந்ததும் அனைவரும் எழுந்து கைகழுவச் சென்றனர். நீர்த் தொட்டி அருகே நின்று முதலில் வந்த வைதிகர் கைகழுவ தருமனே நீரூற்றி அளித்தார். பின்பு வைதிகர் உண்ட பந்தலுக்குள் நுழைந்து முதல் பன்னிரண்டு எச்சில் இலைகளை அவரே தன் கைப்பட எடுத்து வணங்கி தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலரின் கூடையிலிட்டு வணங்கினார். ஒவ்வொரு பந்தியிலும் சென்று முதல் பன்னிரு எச்சில் இலைகளை எடுத்து அகற்றினார். இரவலருக்கான பந்தியின் எச்சில்மீதாக ஓடிய ஒரு சிறு கீரியைக் கண்டு அவர் சற்று விலக “கீரி!” என்றான் அர்ஜுனன்.
ஏவலர் அதை ஓட்டுவதற்காக ஓடினர். “வேண்டாம்! அது தேவனோ தெய்வமோ நாமறியோம்” என்று தருமன் சொன்னார். “பழிசூழ்ந்த தேவனாக இருக்கும், அரசே. இரவலர் உணவுண்ட மிச்சிலில் புரள்வது பழிபோக்கும் என்று சொல்லுண்டு” என்றார் உடன் வந்த அடுமடையர். அவர் புன்னகையுடன் “இந்த அனைத்து மிச்சில் இலைகளிலும் மும்முறை புரளவிழைகிறேன், நாமரே” என்றார். அவர் “நல்லூழ் என்பது கருவூலச்செல்வம் போல. எத்தனை சேர்த்தாலும் பிழையில்லை” என்றார்.
எட்டு பந்திகளிலாக வேள்விக்கு வந்த பல்லாயிரம் பேரும் உணவுண்டு முடித்தனர். பீமன் வந்து தருமனிடம் “மூத்தவரே, இனி தாங்கள் உணவருந்தலாம்” என்றான். “நீ உணவருந்தினாயா?” என்று தருமன் கேட்டார். “இல்லை மூத்தவரே, தாங்கள் உணவருந்தாது நான் உண்ணலாகாது என்பது முறை” என்றான். தருமன் விழிகளைச் சுருக்கி “நீ உண்மையிலேயே உணவருந்தவில்லையா?” என்றார். “உணவருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு உணவும் உகந்த முறையில் அமைந்திருக்கிறதா என்று சுவை பார்த்தேன். அதை உணவுண்டதாகச் சொன்னால் அவ்வாறும் சொல்லலாம்” என்றான்.
தருமன் மெல்லிய புன்னகையுடன் “எத்தனை கலங்களில் சுவை பார்த்தாய்?” என்றார். பீமன் அவர் விழிகளைத் தவிர்த்து “இங்குதான் பல நூறு கலங்கள் உள்ளனவே?” என்றான். தருமன் புன்னகையுடன் அருகே நின்ற நகுலனை பார்க்க அவனும் புன்னகைத்தான். “அமரலாமே” என்றார் நாமர். “இல்லை, சென்று கேட்டுவருக! ஒருவரேனும் பசியுடனிருக்கலாகாது” என்றார் தருமன்.
இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலர்களும் அமைச்சர்களும் வேள்விச்சாலைச்சூழலின் ஒவ்வொரு மூலையிலும் சென்று “எவரேனும் உணவுண்ண எஞ்சியிருக்கிறீர்களா?” என்று கூவி அலைந்தனர். நகரில் அனைவரும் உணவுண்டுவிட்டார்களா என்று அறிவதன் பொருட்டு ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிற்றமைச்சர் மேடையேறி “அனைவரும் உண்டு விட்டீர்களா?” என்று மும்முறை வினவினர். அனைவரும் உண்டாகிவிட்டது என்று அறிந்ததும் தம் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதினர். நகரெங்குமிருந்து கொம்போசைகள் ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு பறவைக்கூட்டங்கள் போல வேள்விச்சாலையை அடைந்தன.
அர்ஜுனன் “அரசே, நகரில் உணவுண்ணாதவர் எவரும் இல்லை” என்றான். “நன்று” என்று கைகூப்பியபடி தருமன் எழுந்து சென்று உணவுண்பதற்காக பந்தியில் அமர்ந்தார். திரௌபதியும் பிற அரசியரும் பெண்களுக்கான தனியறையில் உணவருந்த அமர்ந்தனர். தருமனுக்கு இருபக்கமும் அவன் உடன் பிறந்தோர் அமர துச்சாதனனே உணவு பரிமாறினான். முதல் உணவுக்கவளத்தை எடுத்து கண் மூடி “தெய்வங்களே, மூதாதையரே, நிறைவடைக!” என்றபின் தருமன் உண்டார்.
[ 4 ]
உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர்.
அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி கோரினர் பெருவணிகர். குடித்தலைவர்கள் தங்கள் குடிப்பெருமைகளை பாடப்பணித்தனர். அவர்கள் முன் தங்கள் கோரைப்புல் பாயை விரித்து அமர்ந்து தண்ணுமையையும் மகரயாழையும் மீட்டி பாணர்கள் பாட விறலியர் உடன் இணைந்தனர். மண்மறைந்து பாடலில் வாழ்பவர்கள் அன்றுபிறந்தவர்கள் போல் எழுந்து வந்தனர். நாவிலிருந்து நாபற்றி அழியாது என்றுமிருக்கும் சொற்களில் அவர்கள் இறப்பெனும் நிழல்தொடா ஒளிகொண்டிருந்தனர். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வணிகர் தங்கள் கை கீழிருக்க பரிசில்களை அளித்தனர். குடித்தலைவர் தங்கள் கோல்களைத் தாழ்த்தி வாழ்த்தி பொன்னளித்தனர்.
மாமுனிவர் பராசரர் கங்கையில் மச்சகந்தியைக் கண்ட கதையை ஒருவன் பாடினான். ஐந்து பருவாக அமைந்த தெய்வங்கள் அமைத்த திரைக்குள் முனிவர் மீனவப்பெண்ணை மணந்தார். “அறிக அவையீரே, ஆன்றதவம் காமத்தை தொடுகையிலேயே முழுமைகொள்கிறது. அனைத்தையும் கடந்த மெய்யறிவு அடிமண்ணில் நிற்பவர்களிடமே தன்னை உணர்கிறது. தேவர்களின் இசை அசுரர்களின் தாளத்துடன் இணையாது இனிமைகொள்வதில்லை. விண் இறங்கி மண் தொடுகையிலேயே மழை உயிர் என்றாகிறது. அத்தருணத்தை நறுமணங்களால் வாழ்த்துகின்றன தெய்வங்கள்.”
விறலி சொன்னாள் “கிருஷ்ணதுவைபாயனன் என்று அவரை அழைத்தனர் மக்கள். அறிஞர் அவரை வியாசர் என்று அறிந்தனர். அவர் பராசரரை அறிந்தவர்களுக்கு கங்கையை கற்பித்தார். கங்கையிலிருந்து பராசர மெய்ஞானத்தை கற்றறிந்தார்.” சூதன் நகைத்தான். “காட்டாளனின் குருதி கலக்காமல் கற்றறிந்த சொல் காவியமாவதில்லை, தோழி.”
புதுமழையின் மணம் கொண்டவளானாள் மச்சகந்தி. அஸ்தினபுரியின் சந்துனு அறிந்தது அந்தப் புதுமணத்தைத்தான். இளம்களிற்றேறு என அவன் சித்தத்தை களிவெறி கொள்ளச்செய்தது அது. அவள் தாள்பணிந்து தன் அரண்மனைக்கு அணிசெய்யக் கோரினான். அறுவடை முடிந்த புதுக்கதிரால் இல்லம் நிறைப்பதுபோல அவளை கொண்டுவந்து தன் அரண்மனையில் மங்கலம் பெருகச்செய்தான். அவள் வெயில்விரிந்த வயலின் உயிர்மணத்தை அந்த இருண்ட மாளிகைக்குள் நிறைத்தாள். அவன் பாலையில் அலைந்த களிறு குளிரூற்றின் அருகிலேயே தங்கிவிடுவதைப்போல அவளருகிலேயே இருந்தான்.
தேவவிரதன் தந்தைக்கென அழியா காமவிலக்கு நோன்பு பூண்ட கதையை பிறிதொரு இடத்தில் பாடிக்கொண்டிருந்தனர். “தந்தையின் காமம் பெருகுமென்றால் மைந்தர் ஈடுசெய்வார்கள் என்பதை யயாதியின் கதையிலிருந்தே அறிகிறோம் அல்லவா?” என்றான் சூதன். விறலி “ஆனால் காமம்கொண்டவன் உள்ளத்தில் உறையும் விலக்கையும் விலக்கு கொண்டவனுள் கரந்திருக்கும் காமத்தையும் எவரறிவார்?” என்றாள். “நாம் சொல்லாத சொல்லால்தான் இங்கு அனைத்தும் புரிந்துகொள்ளப்படுகின்றன, தோழி” என்றான் சூதன். அவையமர்ந்தோர் நகைத்தனர்.
இருமைந்தரை ஈன்று சத்யவதி அரியணை அமர்ந்ததும், முதல் மைந்தன் தன் ஆடிப்பாவையாக எழுந்த கந்தர்வனால் கொல்லப்பட்டதும், இரண்டாம் மைந்தன் இருமைந்தரை ஈன்று விண்புகுந்ததும் பன்னிரு பகுதிகள் கொண்ட பெருங்காவியமாக விஸ்வகர் என்னும் சூதரால் பாடப்பட்டிருந்தது. எரிமலர் என்னும் பெயரில் காசியின் அரசி அம்பை பீஷ்மரால் கவரப்பட்டு சால்வனால் ஈர்க்கப்பட்டு அவன் முன் சென்று சிறுமைகொண்டு மீண்டு அவர்முன் நின்று பெண்மை கொண்டு எழுந்து கொற்றவையென்றாகி கங்கைக் கரையில் கோயில் கொண்ட கதையை சூதர் பாடினர்.
தன்னந்தனி மரமாக பாலையில் நின்றிருந்த தாலிப்பனையொன்றின் கதையை அயல் சூதன் ஈச்சமரத்தணலில் அமர்ந்து பாடினான். அதிலிருந்து விரிந்த காந்தாரத்தின் பெருவிழைவின் கதை அங்கிருந்தவர்களை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தது. கதைகள் ஒவ்வொன்றாக எழுந்து கொடிச் சுருள்களென திசை தேர்ந்து ஒன்றோடொன்று பின்னி ஒற்றைப்பெரும்படலமாகி அவர்களை சூழ்ந்தது. தாங்களும் ஒரு சரடென அவற்றில் சேர்த்து பின்னப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். குடித்தலைவர்களில் ஒருவர் கண்ணீருடன் “அன்று நானும் இருந்தேன். பேரரசி சத்யவதி தன் இரு மருகிகளுடன் தேரில் ஏறி இந்நகர்விட்டுச் சென்றபோது சிறுவனாக அத்தேருக்குப்பின்னால் கதறியழுதபடி நானும் ஓடினேன்” என்றார்.
பிறிதொருவர் “பாண்டு மாமன்னரின் எரிமிச்சத்துடன் யாதவ அரசி நகர்புகுந்தபோது முன்நிரையில் நின்றவன் நான்” என்றார். அவர்கள் அறிந்த ஒவ்வொன்றும் காலத்தால் மும்மடங்கு பெருக்கப்பட்டிருந்தன. ஐந்து மடங்கு உணர்வு கொண்டிருந்தன. நூறு மடங்கு பொருள் கொண்டிருந்தன. ஆயிரம் மடங்கு அழுத்தம் கொண்டிருந்தன. கதை என்பது மொழி வடிவான காலமே என்று அவர்கள் அறிந்தனர். காலம் என்பதோ தன்னை நிகழ்த்தி தான் நோக்கிக் கொண்டிருக்கும் பிரம்மம்.
வைதிகர் கூடிய சோலைகளில் பல்வேறு அறிவு முறைமைகளைச் சார்ந்த அந்தணர் அமர்ந்து நூல் தேர்ந்தனர். தங்கள் தொல் மரபில் திரட்டிய அறிவை முன் வைத்து நிகர் நாடினர். வசிஷ்ட குருகுலத்தின் முன் வந்து நின்ற கௌசிக குருகுலத்தின் பிரசண்ட மத்தர் என்னும் அறிஞர் தன் கையை மும்முறை தட்டி அனைவரையும் அழைத்தபின் வலக்கையிலிருந்த நுனி கூர்ந்த கோலை ஆழ நிலத்தில் நாட்டி உரக்க சொன்னார் “கேளுங்கள் வசிட்டமரபினரே, பிரம்மம் ஒருநிலையிலும் பிறிதொன்றாவதில்லை. பிறிதொன்றாகுமென்றால் இங்கிருப்பவை அனைத்தும் பிரம்மம், இவற்றுக்கு அப்பால் அங்கென ஏதுமில்லை என்றாகும். இங்குள்ள முக்குணமும் மும்மலமும் பிரம்மத்தின் குணங்களே என்றாகும். பிரம்மம் செயலுடையது குறையுடையது என்றால் அது முழுமையல்ல. ஏனென்றால் முதல்முழுமை என்றுணரப்படும் எட்டு இயல்புகளையே பிரம்மம் என்றனர் முன்னோர்” என்றார்.
“பிரம்மம் என்றும் அங்குள்ளது. இங்குள்ளது நம் அறிவினால் உருவாக்கப்படும் உருமயக்கங்களே” என்றார் பிரசண்ட மத்தர். “இச்சொல்லே மையமென கொண்டு என் கோலை இங்கு நாட்டுகிறேன். எதிர்கொள்க!” என்றபடி தனது தண்டத்தினருகே கைகட்டி நின்றார். வசிஷ்ட குருகுலத்தின் ஏழுமாணவர்கள் எழுந்து அவரருகே சென்றனர். முதல் மாணவராகிய பிரபாகரர் “அந்தணரே, தங்கள் ஆசிரிய மரபெது? முதன்மை நூல் எது? சொல்சூழ் முறைமை எது?” என்றார். பிரசண்ட மத்தர் “மாமுனிவர் கௌசிகரின் மரபில் வந்தவன் நான். இன்று அமர்ந்துள்ள நூற்றேழாவது கௌசிகரே எனது ஆசிரியர். ஞானகௌசிகம் என்னும் எழுபத்துஎட்டு பாதங்கள் கொண்ட நூல் என்னுடையது. சப்தநியாயம் என்னும் சொல்சூழ் முறைமை நூலை ஒட்டி என் தரப்பை முன்வைக்கிறேன்” என்றார்.
“இங்குள்ளவற்றில் இருந்து அங்குள்ளவை நோக்கி செல்லும் முறைமை என்னுடையது. மண்ணை அறிந்தால் மண்ணென்றானதை அறிய முடியும் என்பதே அதன் முதல் சொல்லாகும்” என்றார் பிரசண்ட மத்தர். பிரபாகரர் “அந்தணரே, இங்குள்ளவை அனைத்தும் அறிவு மயக்கம் என்றால் இவற்றை ஆக்கிய அது அவ்வறிவு மயக்கத்திற்கு ஆளாவது என்றல்லவா பொருள்? மூன்று இயல்புகளுடன் முடிவிலி எனப்பெருகி நிற்கும் இப்பெருவெளியை அறிவு மயங்கிய எளியோன் ஆக்கினான் என்றால் அதற்கப்பால் நின்றிருக்கும் அது ஆற்றுவதுதான் என்ன?” என்றார். பிரசண்ட மத்தர் உரக்க “அது ஆற்றுவதில்லை. ஆவதும் இல்லை. தன் உள்ளில் தானென நிறைந்து என்றுமென அங்குள்ளது” என்றார்.
“அதிலிருந்து முற்றிலும் அப்பாலுள்ளதோ இது?” என்றார் பிரபாகரர். “அல்ல. அதுவே என்றுமாகும் அதற்கப்பால் இவை ஏதுமில்லை. இவை அதிலிருந்து வேறுபட்டவை என்றால் அது குறைவுள்ளது என்று பொருள். அதில் இது குறைவுபடும் என்றால் அதை முதல் முழுமை என்று எப்படி சொல்லலாம்? அதுவே அனைத்தும். அதுவன்றி பிறிதில்லை” என்றார் பிரசண்ட மத்தர். “அந்தணரே, அறிதலும் அறிபடுபொருளும் அறிவும் ஒன்றே. அவ்வண்ணமெனில் அறிவு மயக்கமும் அதுவே என்றாகும் அல்லவா?” என்றார் பிரபாகரர். அவர் செல்லும் திசையை அறிந்த பிரசண்ட மத்தர் “அது மயங்குதலற்றது” என்றார்.
உரக்க நகைத்து “ஊன்றிய கோலை நீரே சற்று அசைத்துவிட்டீர், பிரசண்டரே. தண்டமின்றி விதண்டாவாதம் செய்ய நீர் வந்திருக்கலாம்” என்றார் பிரபாகரர். “அறிக, ஐந்துவகை வேறுபாடுகளால் பிரம்மம் இவையனைத்தையும் ஆக்கியிருக்கிறது. பிரம்மமும் ஆத்மாவும் கொள்ளும் வேறுபாடு. பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. ஓர் ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. இவ்வேறுபாடுகளில் ஒன்றை உடனே நீர் அறியலாம். நீர் வேறு நாங்கள் வேறு. அவ்வண்ணமே, நீர் வேறு மெய்யறிதல் வேறு” என்றார் பிரபாகரர். அவரது தோழர்கள் நகைத்தனர்.
“பிரம்மம் கடலென்றறிக! மழை பெருகி ஆறாகி மீண்டும் கடலாகிறது. அலகிலாது பிறப்பித்தாலும் துளிகுறையாது நின்றிருக்கும் முதல்முழுமை அது. உங்களைப் போன்றோர் அதை உணராது உங்கள் மடிச்சீலைப் பொன் என்றே எண்ணுகிறீர்கள். எண்ணி எண்ணிப் பார்த்து மனம் வெதும்புகிறீர்கள். உருமயக்க வாதமும், வளர்ச்சிநிலை வாதமும் எண்ணியறிவோர் கொள்ளும் மயக்கம். நுண்ணிதின் அறிந்தோர் அதை கடந்திருப்போர். அவர்கள் சொல்லுக்கு அப்பால் சென்று அறிவர். நெல்மணி கொத்தும் குருவிகள் அறிவதில்லை விண்மணி கொத்தி வந்து நம் முற்றத்து மரத்திலமரும் செம்பருந்தை.” அவரது மாணவர்கள் “ஆம்! ஆம்! ஆம்!’ என்றனர். பிரசண்ட மத்தர் தன் கோலை எடுத்துக்கொண்டு தலைகவிழ்ந்து சென்றார். “மீண்டும் வருக! மெய்மை என்பது எம்மரத்திலும் கனிவதென்கின்றன நூல்கள்” என்றார் பிரபாகரர்.
[ 5 ]
உணவு மயக்கத்தில் அரண்மனைப் பெருங்கூடங்களில் விருந்தினர்களாகிய அரசர்கள் சிறுமஞ்சங்களில் சாய்ந்தும் சாய்விருக்கைகளில் கால்நீட்டி தலைசரித்தும் ஓய்வெடுத்தனர். மேலே ஆடிய இழுவிசிறிகளின் குளிர்காற்றும் வெட்டிவேரின் ஈரமணமும் விறலியரும் பாணரும் இசைத்த பாடல்களும் அவர்களின் விழிகளை நனைந்த பஞ்சென எடைகொள்ளச்செய்தன. அரைத்துயிலில் ஒவ்வொருவரும் தாங்கள் இயற்றிய ராஜசூயத்தில் சத்ராஜித்துகளாக வெண்குடை சூடி அமர்ந்திருந்தனர். அம்மலர்வு அவர்களின் முகங்களை இனியதாக்கியது.
மஞ்சத்தில் இறகுச்சேக்கை தலையணைகளின் மேல் கைமடித்து கால்நீட்டி அமர்ந்து அரவென விறலிபாடிய இசையை விழிகளால் கேட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். அவனருகே கர்ணனும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அமர்ந்திருந்தனர். பின்னால் துச்சகனும் துச்சலனும் துர்மதனும் இருந்தனர்.
பர்ஜன்யபதத்தில் அர்ஜுனனை மண்ணுக்கு வரவேற்க எழுந்த பல்லாயிரம் விண்விற்களைப்பற்றி விறலி பாடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பனித்துளியும் ஏழு வண்ணம் சூடியது. ஒவ்வொரு மலரும் பனித்துளி சூடியது. வண்ணத்துப்பூச்சிகளின் இறகில் சிட்டுக்குருவிகளின் மென்தூவிகளில் ஏறி கந்தர்வர்கள் மண்ணில் பறந்தலைந்தனர். விண்ணிறங்கிய ஒளிநீர்ச் சரடுகளினூடாக தேவர்கள் மண்ணுக்கு வந்தபடி இருந்தனர். அவர்களின் உடலொளியால் வெயிலின்றியே அனைத்தும் மிளிர்ந்தன. அரை நாழிகை நீண்ட பேரிடி ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து அனைத்துப் பாறைப்பரப்புகளையும் ஈயின் இறகுகள் போல் அதிர வைத்தது. அனைத்து விழிகளையும் வெண்குருடாக்கிய மின்னல் ஆயிரம் முறை துடித்தமைந்தது. பின்னர் செவிகளும் விழிகளும் மீண்டபோது அவர்கள் மண்ணுக்கு வந்த இந்திரமைந்தனின் அழுகையை கேட்டனர்.
கர்ணன் சற்றே சரிந்து துரியோதனனிடம் “கதைகளை உருவாக்குவதில் இவர்களுக்கு இணை எவருமில்லை. ஆயிரம் சரடுகளால் இடைவிடாது பின்னிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாமும் கதைகளாகி விடுகிறோம்” என்றான். “இப்போது இவை எளிய முடைவுகள். நாளை நாமறியாமலேயே இறுகி இரும்புக்கோட்டைகளாகிவிடும்.” அஸ்வத்தாமன் புன்னகைத்து “மண் மறைந்தோர் கதைகளின் கோட்டைகளுக்குள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள் என்று சூதர் சொல்லுண்டு” என்றான்.
“இந்நகர் முழுக்க கேட்டேன். பாண்டவர் ஐவரின் திசைவெற்றிகளைப்பற்றிய பாடல்கள் மட்டுமே இங்கு ஒலிக்கின்றன. எளியோனாகிய நகுலன்கூட மேற்கே சென்று நூற்றெட்டு கீழை நாடுகளை வென்று வந்ததாக சூதர் பாடிக்கொண்டிருந்தார். காமரூபத்தைச் சுற்றி நூற்றெட்டு நாடுகள் இருக்கும் செய்தியையே அப்போதுதான் அறிந்தேன்” என்றான் ஜயத்ரதன். “அவை வெற்றிகளல்ல. ராஜசூயத்தை ஒப்பி அளிக்கும் ஆகொடைகள் மட்டுமே” என்றான் துச்சகன். “ஆனால் அவை வெற்றிகளல்ல என்று இச்சூதர்களிடம் யார் சொல்வார்கள்? இவர்கள் சொல் என்றும் நிற்பது. அதை வெல்ல வாளால் இயலாது” என்றான் கர்ணன்.
“அர்ஜுனன் வடக்கே பனிமலை அடுக்குகளில் இருந்த நாடுகளை வென்றான். பீமன் நடுநாடுகள் அனைத்தையும் வென்று மேற்கு எல்லை வரை சென்றான். அபிமன்யுகூட மச்சர்நாடுகளை வென்று ஆநிரை கொண்டு வந்திருக்கிறான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “இப்பாடல்கள் அளிக்கும் செய்தி ஒன்றே. இந்திரப்பிரஸ்தம் பாரதத்தை வெல்லும் ஆற்றல் கொண்டது.” கர்ணன் “வெல்லக்கூடுமென்னும் அச்சம்போல வெல்லும்படைக்கலம் வேறில்லை. சூதர்கள் வாளும் வேலும் ஆக்கும் கொல்லர்களைவிட திறன்வாய்ந்தவர்கள்” என்றான்.
“சூதர்களை வெல்லும் வழி ஒன்றே, மேலும் சூதர்கள்” என்றான் அஸ்வத்தாமன். “நாம் அஸ்தினபுரியில் ஒரு அஸ்வமேதத்தை நிகழ்த்துவோம். பாரதவர்ஷத்தின் அரசர்களை அங்கு அணிவகுக்கச் செய்வோம். ஆயிரம் சூதர்கள் இதைப்பாடினர் என்றால் பத்தாயிரம் சூதர்கள் அதைப்பாட வைப்போம்.” ஜயத்ரதன் “அங்கு ஒரு ராஜசூயமென்றால் முதல் வில்லென வந்து நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்திலிருந்துதான் அல்லவா?” என்றான். “ஏன் வராது? எந்த மூதாதையர் ஆணையால் அஸ்தினபுரியின் அரசர் இங்கு வந்திருக்கிறாரோ அந்த மூதாதையர் அப்போதும் இருப்பார்களல்லவா? பீஷ்மர் வந்து ஆணையிடட்டும், தருமன் வருவார்” என்றான் அஸ்வத்தாமன்.
சினம்கொண்டு திரும்பி “வரவில்லை எனில் படைகொண்டு அவனை இழுத்து வருவோம். அஸ்தினபுரியில் ராஜசூயமும் அஸ்வமேதமும் நடக்கும், இது என் சொல்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “அதை பீஷ்மர் மட்டும் முடிவெடுக்க முடியாது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இறைவன் இளைய யாதவன். இந்திரப்பிரஸ்தம் அடைந்த இப்பெருவெற்றி இவர்கள் திரட்டி வைத்திருக்கும் இப்படைகளால் ஆனதல்ல, ஒழியா கருவூலமும் யவனர் படைக்கலமும் கொண்ட துவாரகையின் யாதவப் பெருந்திரள் அடைந்த வெற்றி இது” என்றான்.
“பாரதவர்ஷத்திற்கு மேல் தனது செங்கோலை நிறுத்த விழைகிறான் இளைய யாதவன்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவன் ராஜசூயம் செய்தால் ஷத்ரியர்களை எதிராக ஒருங்கிணைக்கவே அது வழிகோலும் என்பதனால் தொல்புகழ் கொண்ட யயாதியின் கொடிவழி வந்த தருமனை இந்திரப்பிரஸ்தத்தில் அமர்த்தி இதை செய்ய வைக்கிறான். இங்குள்ள ஒவ்வொரு மன்னருக்கும் தெரியும், இது எவருடைய செங்கோல் என்று. தங்களுக்குத் தாங்களே இது ஷத்ரியர் நிகழ்த்தும் வேள்வி என்று சொல்லி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”
அஸ்வத்தாமன் சிரித்து “அப்படி பலநூறு ஏமாற்றுகளினூடாக கடந்து செல்லும் ஒரு கலைக்கே அரசு சூழ்தல் என்று பெயர்” என்றான். “நான் வேடிக்கை சொல்ல விரும்பவில்லை. இளைய யாதவனின் ஒப்புதலின்றி அஸ்தினபுரியில் பெருவேள்வி எதுவும் நிகழாது, ஐயம் வேண்டாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் உரக்க “இளைய யாதவனை போரில் வெல்ல என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றான். ஜயத்ரதன் ஏதோ சொல்வதற்கு முன் மறித்து “நாணில்லையா உனக்கு? பின் என்ன எண்ணத்தில் துவாரகைக்கு எதிராக அங்கு எல்லைகளில் படை நிறுத்தியிருக்கிறாய்?” என்று கர்ணன் கூவினான்.
“இதோ அஸ்வத்தாமன் இருக்கிறான். அர்ஜுனன் அவன் முன் நிற்க இயலுமா என்ன? யாதவனின் படையாழியை நான் வெல்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனர் வெல்லட்டும். எவரையும் ஏமாற்றி நம் அரசர் வெண்குடை சூடவேண்டியதில்லை. வாளெடுத்து வென்று சூட முடியும். இதோ இங்கு நிகழ்வது ராஜசூயமல்ல, இது இவ்வரசர் அளிக்கும் ஒப்புதலின் மேல் நிகழும் ஒரு வெற்றுச் சடங்கு. வாள் கொண்டு வென்று செய்யப்படுவதே உண்மையான ராஜசூயம். அது அஸ்தினபுரியில் நிகழட்டும்” என்றான் கர்ணன்.
சிலகணங்கள் அங்கு பேச்சு அவிந்தது. அர்ஜுனனை வாழ்த்த வந்த திசைத்தேவர்களின் உருவை விறலி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் ஆயிரம் நாவுடன் அனலோனும், அலைக்கைகளுடன் ஆழியோனும் எழுந்து வந்தனர். கதிர்விரித்து சூரியன் வந்தான். அல்லி மலர் ஏந்தி சந்திரன் வந்தான். தென்திசை தலைவன் எருமையில் எழுந்தான். வடவன் பொருட்குவையுடன் வந்தான். இன்மதுவின் இறைவன் அமுதகலத்துடன் வந்தான். அவள் உடல் வழியாக அவர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனர். இசை அவள் அணிந்த ஆடைபோல அவளைத் தழுவி சூழ்ந்திருந்தது.
பேச்சை மாற்றும் பொருட்டு உடலை அசைத்தமர்ந்த அஸ்வத்தாமன் ஜயத்ரதனிடம் “சிசுபாலன் எங்கே?” என்றான். அவ்விறுக்கத்தை கடந்து செல்ல விரும்பிய ஜயத்ரதன் மிகையான ஆர்வத்துடன் “நேற்றுமாலையே இங்கு வந்துவிட்டார். அவர் வந்த செய்தி அறிந்து நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வெடுப்பதாகவும் எவரையும் பார்க்க விரும்பவில்லையென்றும் ஏவலர் சொன்னார்கள். இன்று காலை வேள்விச்சாலை புகுந்தபோது இளைய பாண்டவரை அன்றி பிற எவரையும் அவர் விழிநோக்கவில்லை. அவர்கள் தோள் தழுவிக்கொண்டார்கள். நான் அணுகி முகமன் உரைத்தபோது வெற்றுச் சொல் ஒன்று உரைத்து கடந்து சென்றார்” என்றான்.
“விதர்ப்பத்தின் ருக்மியும் இதையே சொன்னார்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவரையும் அவர் தன்னருகே அணுகவிடவில்லை. அவர் அன்று சிந்துநாட்டில் என்னைப் பார்க்க வந்தபோது கொலைவஞ்சம் கொண்ட மலைநாட்டு முனிவர் போலிருந்தார். இன்று இங்கு களியாட்டுக்கு வந்தவர் போல ஆடையும் அணியும் புனைந்துள்ளார்.” அஸ்வத்தாமன் “ஜராசந்தனுக்கான வஞ்சத்திற்கு நாம் துணை நிற்கவில்லை என்று சினம் கொண்டிருக்கலாம்” என்றான். “சினம் கொண்டிருந்தால் ஜராசந்தனைக் கொன்ற இளைய பாண்டவனை ஏன் தழுவிக் கொள்கிறார்? உத்தர பாஞ்சாலரே, அவர் நோக்கம் வேறு. இங்கு வந்த பிறகுதான் அதை ஒவ்வொன்றாக புரிந்து கொள்கிறேன். அவர் ஜராசந்தனுக்காக வஞ்சத்திற்காக நம்மைத்தேடி வரவில்லை. அது சேதியின் அரசு சூழ்தலின் ஓர் அங்கம்” என்றான் ஜயத்ரதன்.
கர்ணன் புருவம் சுளித்து “என்ன?” என்றான். “ஜராசந்தனுக்காக சேதியின் தலைமையில் நாம் படைகொண்டிருந்தால் பழிநிகர் செய்த பெருமை அனைத்தும் சேதிக்கு சென்று சேரும். யாதவக்குருதி கலந்தவர் என்ற குலஇழிவு கொண்டிருப்பவருக்கு ஷத்ரியரின் முற்றாதரவு கிடைக்கும்” என்ற ஜயத்ரதன் புன்னகைத்து “என்ன இருந்தாலும் அவரும் அரசர். என்றோ ஒருநாள் சத்ராஜித் என ஒரு ராஜசூயப்பந்தலில் அமர்ந்திருக்கும் கனவு அவருக்கும் இருக்காதா என்ன?” என்றான். “மிகையாக சொல்கிறீர், சைந்தவரே. வெறுப்பைப் போல நாம் ஒருவரை புரிந்து கொள்ளாமலிருக்கும் வழி பிறிதொன்றில்லை” என்றான் அஸ்வத்தாமன். சினத்துடன் “வேறென்ன? இது கீழ்மை அல்லது சிறுமை. பிறிதென்ன? எப்படி அவர் பீமனை தோள் தழுவலாகும்?” என்றான் ஜயத்ரதன். “அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அனைத்து வழிகளும் மூடும்போது நேர்எதிர்திசையில் திரும்புகின்றன விலங்குகள். மானுடரும் அப்படித்தான்” என்றான் அஸ்வத்தாமன்.
“அத்தனை எளியவரென்று நான் சிசுபாலனை சொல்லமாட்டேன். அவரில் தொழில்படுவது பிறிதொன்று…” என்றான் ஜயத்ரதன். “இன்று அவர் உள்ளம் செல்வதெப்படி என்று அறிய நாம் நூறுமுறை அவையமர்ந்து சொல்சூழவேண்டியிருக்கும்.” கர்ணன் அஸ்வத்தாமனை நோக்கி “அரசுசூழ்தலில் அடிப்படை நெறியென ஒன்றை பரசுராமர் சொல்வதுண்டு, பாஞ்சாலரே. அரசுச் செயல்பாடுகளின் ஓர் எல்லையில் அரசர்களின் உள்ளாழம் உள்ளது. அவர்களின் விழைவுகளும், கனவுகளும், ஐயங்களும், அச்சங்களும் அவை முதிர்ந்தும் கனிந்தும் ஒருவரொடு கொள்ளும் மாளாத உறவுச் சிடுக்குகளும் அங்குள்ளன. அவற்றை எண்ணி அரசுசூழ்ந்து முடிவுதேர்வதென்பது ஒரு போதும் நிகழாது.”
“ஆகவே இந்த எல்லைக்கு வரவேண்டும். இங்குள்ளது அரசுகளின் வல்லமைகளும் விழைவுகளும் வாய்ப்புகளும் மட்டுமே. அவை பருவுருவானவை. கைக்கு சிக்குபவை. அவற்றைக் கொண்டு மட்டுமே புறவயமான அரசுசூழ்தலை நிகழ்த்த முடியும். நாம் அறியாதவற்றைப் பற்றி எண்ணி உளவிசையை வீணடிக்கவேண்டியதில்லை. அவ்வறியா ஆற்றல்கள் நாம் அறிந்தவற்றில் வெளிப்படுகையில் மட்டும் அவற்றை கையாள்வோம்” என்று கர்ணன் சொன்னான். “சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.”
ஜயத்ரதன் “ஆம், அதை நான் பல்முறை எண்ணியதுண்டு. உண்மையில் இளைய யாதவரின் உடனுறை உறவாகவும், வெற்றிகளில் பங்காளியாகவும் அமைந்திருக்கும் அனைத்து வாய்ப்புகளும் அவருக்குள்ளன. இருவரும் ஒரே குலம். ஒரே கொடிவழியினர். இருவரும் கைகோத்துக் கொள்வார்களென்றால் இளைய யாதவருக்கு பிறிதொரு ஷத்ரிய நாட்டின் உதவியே தேவையில்லை. சேதிக்கோ பாரதவர்ஷத்தையே ஆளும் பெருஞ்செல்வமும் படை வல்லமையும் கிடைக்கும். ஆம், அவர்கள் இணைந்திருப்பதற்கான அனைத்து வழிகளும் தெளிந்துள்ளன. வேற்றுமை கொள்வதற்கான ஓர் அடிப்படைகூட தென்படுவதில்லை” என்றான். அஸ்வத்தாமன் நகைத்து “நிகரற்ற பெருவஞ்சம் எப்போதும் அத்தகையோருக்கு இடையேதான் உள்ளது, அறிந்திருக்கிறீர்களா?” என்றான்.
ஜயத்ரதன் இயல்பாக “தங்களுக்கும் இளைய பாண்டவருக்கும் இடையே இருப்பது போலவா?” என்றான். வேல்குத்தியவன் போல திரும்பிய அஸ்வத்தாமன் முகம் சிவந்து எரிய “மூடா! என்ன சொல்லெடுக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருக்கிறாயா?” என்றான். “தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்” என்றான் ஜயத்ரதன். “இச்சொல்லுக்காக உன்னை போருக்கு அழைக்கிறேன். என் எதிர்நின்று வில்லம்பால் மறுமொழி சொல். இல்லையேல் உன் நெஞ்சு பிளந்து குருதி அள்ளி என் முகத்தில் பூசிக் கொள்வேன், சிறுமையாளனே” என்றான் அஸ்வத்தாமன்.
துரியோதனன் எழுந்து “போதும் சொல்லாடல்! இது பூசலுக்கான இடமல்ல” என்றான். ஜயத்ரதன் தணிந்து “பொறுத்தருளுங்கள், உத்தரபாஞ்சாலரே! சூதர் சொல்லில் வந்த ஒன்றை சொன்னேன்” என்றான். அஸ்வத்தாமன் மெல்ல உறுமியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.
மீண்டும் அங்கு சொல்லின்மை ஊறி நிறைந்தது. கர்ணன் “இன்றென்ன நாமனைவருமே நிலையழிந்து அவைக்கு வந்திருக்கிறோமா? எதை பேசினாலும் உச்சத்திற்கு செல்கிறோம்?” என்றான். “நாம் பேசாமலிருப்பதே நன்று. எவருள் எவர் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி சொல்லாடுவது?” என்றான் ஜயத்ரதன். அஸ்வத்தாமன் எழுந்து நடந்து வெளியே சென்று மறைந்தான். அவன் செல்வதை அவர்கள் நோக்கியிருந்தனர். துரியோதனன் அதை அறிந்ததுபோலவே தோன்றவில்லை.
கர்ணன் ஜயத்ரதனிடம் “மனிதர்களை தெரிந்து கொள்வதில் முதன்மையானது இது. அவர்கள் முற்றிலும் வெறுக்கும் ஒன்று, ஒருபோதும் ஒப்பாத ஒன்று, தங்களுக்குத் தாங்களே கூட அவர்கள் சொல்லிக் கொள்ளாத ஒன்று அவர்களுக்குள் எங்கோ இருக்கும். அதை அறிந்து பின் முழுமையாக மறந்தால் மட்டுமே நாம் அவர்களிடம் அணுக முடியும்” என்றான். ஜயத்ரதன் சிரித்து “மூத்தவரே, தங்களிடம் அவ்வாறு எது உள்ளதென்று தாங்களே சொல்லிவிடுங்கள். நானே எக்காலத்திலும் அதை கண்டறியப்போவதில்லை. தங்களுக்கு என்மேல் சினம் வர விழையவும் இல்லை” என்றான். கர்ணன் சிரித்து அவன் தோளை மெல்ல தட்டினான்.
[ 6 ]
விறலியின் கதை முடிவடைந்தபோது கர்ணனும் ஜயத்ரதனும் அழுத்தமான தனிமை ஒன்றை அடைந்தனர். அவள் ஆடிக்கொண்டிருந்த கதையே தங்களின் நிலையழிவை உருவாக்கியதென்பதை அவர்கள் ஆழத்தில் உணர்ந்தனர். அது ஏன் ஏன் என எண்ணி முன்சென்ற சித்தம் சலித்து விட்டுவிட்டு அமைந்தது. அந்தச் சலிப்பு நெஞ்சை அமைதிகொள்ளச் செய்தது. விழிகள் எடைகொள்ள அவர்கள் துயிலத் தொடங்கினர். கர்ணன் தன் குறட்டையொலியைக் கேட்டு விழித்துக்கொண்டபோது அங்கிருந்த ஷத்ரியர் பலரும் துயில்கொண்டிருப்பதை கண்டான்.
அவன் விழித்தெழுந்து உடலை அசைத்த ஒலி கேட்டு ஜயத்ரதன் விழிப்பு கொண்டான். “நெடுநேரமாயிற்றா, மூத்தவரே?” என்றான். கர்ணன் “இல்லை” என்றான். அவர்கள் துயிலாது விழிகளை தொலைவில் நட்டு இறுகிய உடலுடன் படுத்திருந்த துரியோதனனை நோக்கினர். கர்ணன் “நான் சென்று முகம்கழுவி வரவேண்டும்…” என்றான். ஜயத்ரதன் “நானும் எதையாவது அருந்த விழைகிறேன். திரிகர்த்தநாட்டின் கடும் மதுவை அருந்தினேன். என் உடலெங்கும் அதன் மணம் நிறைந்திருக்கிறது” என்றான்.
கர்ணனின் உடலில் தெரிந்த அசைவைக்கண்டு ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது எதிர் வாயிலினூடாக சிசுபாலன் உள்ளே வருவதை பார்த்தான். கர்ணனைத் தொட்டு “மூத்தவரே, அவரில் இருக்கும் தனிமையை பாருங்கள். விரும்பினாலும்கூட அவருடன் எவரும் இருக்க முடியாதென்பதைப்போல” என்றான். கர்ணன் “ஆம், இங்கு இருப்பவன் போல் அல்ல, எங்கோ சென்று கொண்டிருப்பவன் போலிருக்கிறான்” என்றான்.
அங்கிருந்த எவரையும் பார்க்காமல், நிமிர்ந்த தலையுடன், சொடுக்கிய உடலுடன், நீண்ட தாடியை கைகளால் நீவியபடி உள்ளே வந்த சிசுபாலன் தன்னை நோக்கி வந்து பணிந்த அக்கூடத்தின் ஸ்தானிகரிடம் தனக்கொரு மஞ்சம் ஒருக்கும்படி சொன்னதை அவர்கள் கண்டனர். அவனையே விழித்திருந்த அத்தனை ஷத்ரியர்களும் நோக்கினர். அவர்கள் கொண்ட அந்த உளக்கூர்மையை அரைத்துயிலில் உணர்ந்தவர்கள்போல பிறரும் விழிப்பு கொண்டனர். அவர்களும் உடல் உந்தி எழுந்து அவனை நோக்கினர்.
ஸ்தானிகர் சிசுபாலனை அழைத்துச் சென்று கர்ணனுக்கும் ஜயத்ரதனுக்கும் பின்னால் இருந்த ஒழிந்த பீடமொன்றில் அமரச்செய்தார். “இன்னீர் அருந்துகிறீர்களா, அரசே?” என்று அவர் கேட்க அவன் “செல்க!” என்பதுபோல கையசைத்துவிட்டு மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். தன்னைச் சுற்றிலும் சிறகதிரும் பூச்சிகள்போல் மொய்த்த விழிகளுக்கு நடுவே அவன் படுத்திருந்தான்.
கண்களை மூடிக்கொண்டபோதுதான் முகம் எத்தனை ஒடுங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கண்ணுருளைகள் இரு எலும்புக்குழிக்குள் போடப்பட்டவை போலிருந்தன. பல்நிரையுடன் முகவாய் முன்னால் உந்தியிருந்தது. கன்ன எலும்புகள் மேலெழுந்திருந்தன. கழுத்தின் நரம்புகள் புடைத்து, தொண்டை எலும்புகள் அடுக்கப்பட்ட வளையங்கள் போல புடைத்திருக்க கழுத்தெலும்புகளின் வளைவுக்குமேல் ஆழ்ந்த குழிகள் மூச்சில் எழுந்தமைந்தன. அவற்றில் இரு நரம்புகள் இழுபட்டிருந்தன. ஒடுங்கிய நெஞ்சப்பலகைகள் நடுவே மூச்சு அதிர்ந்த குழிக்கு இருபக்கமும் விலாநிரைகள் நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன.
ஜயத்ரதன் அவனை நோக்கிக் கொண்டிருக்க கர்ணன் அவன் தோளை தொட்டான். “உருகிக்கொண்டிருக்கிறார், அரசே” என்றான் ஜயத்ரதன். “ஆம்” என்றான் கர்ணன். “அவருள் எரிவது எது?” கர்ணன் “ஆழமான புண்கள் உடலில் இருந்து அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொள்கின்றன என்பர் மருத்துவர்” என்றான். ஜயத்ரதன் நோக்க “வெளியே இருந்து உருவாகும் புண்களை உடல் நலப்படுத்திக்கொள்ளும், அதுவே உருவாக்கிக்கொள்ளும் புண்களே அதை கொல்பவை என்பார்கள்” என்று அவன் தொடர்ந்தான்.
சிசுபாலனுக்கு அப்பால் படுத்திருருந்த உலூகநாட்டு பிரகந்தன் கையூன்றி எழுந்து “சேதி நாட்டரசே, தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை கொண்டு வருவதாகவும், மகதரின் இறப்பிற்கு பழியீடு செய்யப்போவதாகவும் சூதர் பாடல்கள் உலவியதே? ஒருவேளை ராஜசூயத்திற்குப் பிறகு அப்படைப் புறப்பாடு நிகழுமோ?” என்றார். கண்கள் ஒளிர பல ஷத்ரியர் நோக்கினர். கோசலநாட்டு நக்னஜித் “அவர் தவம் செய்கிறார். படைக்கலம் கோரி தெய்வங்களை அழைக்கிறார்” என்றார்.
சிசுபாலன் எதையும் கேட்டதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் தாடை இறுகி அசைவதை கால்களின் இரு கட்டைவிரல்கள் இறுகி சுழல்வதை கர்ணன் பார்த்தான். “மூடர்கள்!” என்றான். “அது அரசர் இயல்பு, மூத்தவரே. ஒருவரை இழிவுபடுத்துவதனூடாக தங்கள் மேன்மையை அவர்கள் நிறுவிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவருமே தோற்றவர்கள்” என்றான் ஜயத்ரதன். “இவ்விளிவரலுக்கு சில உயர்குடி ஷத்ரியர்கள் புன்னகைப்பார்கள் என்றால் சிறுகுடியினர் அனைவரும் இதை தொடர்வார்கள்.”
கலிங்கனும் மாளவனும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரிக்க அவந்தியின் விந்தன் “அவர் படைதிரட்டிக் கொண்டிருக்கிறார். இளைய யாதவர் அவருக்கு உதவுவதாக சொல்லியிருக்கிறார் என்று அறிந்தேன். அவர்கள் ஒரு குலம் அல்லவா?” என்றான். அனுவிந்தன் உரக்க நகைத்தான். அவனுடன் மேலும் ஷத்ரியர் இணைந்துகொண்டனர். “ஆனால் இளைய யாதவர் தன் மாமனை கொன்றவர். இளைய யாதவர் இவருக்கு மாமன் மகன் அல்லவா? மாமன்குலத்தை அழிப்பது ஒரு அரசச் சடங்காகவே யாதவர்களில் மாறிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.” மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.
கர்ணன் “எத்தனை பொருளற்ற சொற்கள்!” என்றான். “இளிவரல் என்றாலும்கூட அதில் ஒரு நுட்பமோ அழகோ இருக்கலாகாதா?” என்றான். ஜயத்ரதன் சிரித்து “அவர்கள் அருந்திய மதுவுக்குப் பிறகு அவர்கள் இத்தனை பேசுவதே வியப்புக்குரியதுதான்” என்றான்.
“ஆனால் சேதிநாடு ஷத்ரியர்களின் அரசாயிற்றே?” என்று கௌசிகி நாட்டு மஹௌஜசன் கேட்டான். “சேதி நாடு ஷத்ரியர்களைவிட மேம்பட்ட குலப்பெருமை கொண்டது. ஷத்ரியர்கள் என்னும் ஈயமும் யாதவர்கள் என்னும் செம்பும் கலந்துருவான வெண்கலம் அது” என்றான் காஷ்மீரநாட்டு லோகிதன். “அவ்வாறென்றால் தேய்த்தால் பொன் போல் ஒளிரும்” என்றான் தென்னகத்து பௌரவன். “ஆம், நாளும் தேய்க்காவிட்டால் களிம்பேறும்” என்று அவனருகே அமர்ந்திருந்த வாதாதிபன் சொன்னான். நகைப்பு அந்தக்கூடமெங்கும் நிறைந்தது.
சிசுபாலன் எழுந்து அவர்களை நோக்காமல் கூடத்திலிருந்து வெளியே சென்றான். அவன் எழுந்ததுமே சிரிப்புகள் அடங்கி இளிவரல் நிறைந்த முகங்களுடன் நஞ்சு ஒளிவிடும் கண்களுடன் அவர்கள் அவன் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் வாயிலைக் கடந்ததும் மீண்டும் அக்கூடமே வெடித்துச் சிரித்தது.
[ 7 ]
மீண்டும் வேள்விக்கான அவை கூடுவதற்கான மணியோசை கோபுரத்தின் மேல் எழுந்தது. விண்ணில் முட்டி அங்கிருந்து பொழிந்து அனைவர் மேலும் வருடி வழிவது போலிருந்தது அதன் கார்வை. மரநிழல்களிலும் அணிப்பந்தல்களிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வைதிகர்களும், மாளிகைகளில் துயின்ற அரசர்களும் விழித்து முகமும் கைகால்களும் கழுவி மீண்டும் வேள்விக்கூடத்தை நிறைத்தனர்.
அதுவரை வேள்விக்கு அவியளித்தவர்கள் எழுந்து புதிய அணியினர் அமர்ந்தனர். ஓய்வெடுத்து மீண்ட தௌம்யர் எழுந்து அவையை வணங்கி “அவையீரே, வைதிகரே, முனிவரே, இந்த ராஜசூயப் பெருவேள்வியின் முதன்மைச் சடங்குகளாகிய வில்கூட்டலும் ரதமோட்டலும் ஆநிரை படைத்தலும் நடைபெறும்” என்று அறிவித்தார். பைலர் சென்று தருமனை வணங்கி வில்குலைக்கும் முதற்சடங்கு நிகழவிருப்பதாக அறிவித்தார். அவர் தலையசைத்து செங்கோலை அருகில் நின்ற ஏவலனிடம் அளித்துவிட்டு எழுந்து அவைமுன் வந்து நின்றார். புதிய மஞ்சள்மூங்கிலால் ஆன வில் ஒன்றை மூன்று வைதிகர் அவர் கையில் அளித்தனர். அதில் மஞ்சள்கொடி சுற்றப்பட்டிருந்தது. பிரம்புக் கொடியால் ஆன நாணை இழுத்துப்பூட்டி மும்முறை மூங்கில் அம்பை தொடுத்து தௌம்யரின் முன் அதை தாழ்த்தி தலைசுண்டி நாணொலி எழுப்பினார் தருமன்.
அவர் சென்று தௌம்யரை வில்தாழ்த்தி வணங்க அவர் தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு தருமன் தலையில் தெளித்து வேதமோதி வாழ்த்தினார். வைதிகர்கள் அவர் மேல் மலர் தூவி வாழ்த்த வில்லுடன் வேள்விச்சாலைக்கு வெளியே சென்றார். அவருடன் நான்கு தம்பியரும் தொடர்ந்தனர். முதல் அம்பை குறிவைத்து மூன்றுமுறை தாழ்த்தி ஏற்றியபின் இந்திரனின் கிழக்குத்திசை நோக்கி எய்தார். கூடிநின்றவர்கள் கைதூக்கி “ஹோ! ஹோ! ஹோ!” என்று ஓசையிட்டனர்.
எட்டு திசைகளுக்கும் எட்டு அம்புகளை எய்தபின் வில்லுடன் நடந்து அங்கு நின்ற தேரை அடைந்தார். மென்மரத்தாலான சகடங்களும் மூங்கில்தட்டுகளும் கொண்ட அந்த எளிமையான தேர் மலைப்பழங்குடிகளின் வண்டி போலிருந்தது. சௌனகரும் இளைய பாண்டவர் நால்வரும் அவரை வழிநடத்திச் செல்ல, அத்தேரில் ஏறி வில்லுடன் நின்றார்.
மூன்று வெண்புரவிகள் பூட்டப்பட்ட தேர் வேள்விச்சாலையை மும்முறை சுற்றி வந்தது. தேரில் நின்றபடியே தருமன் ஒவ்வொரு மூலையிலும் அம்பு எய்தார். நான்காவது மூலையில் மரத்தில் கட்டப்பட்டிருந்த அத்தி, மா, வாழை எனும் மூன்றுவகை கனிகளை நோக்கி அவர் அம்புவிட அவற்றை அவிழ்த்து அவர் தேரில் வைத்தனர் ஏவலர்.
தேரிலிருந்து இறங்கி வில்லுடன் சென்று வேள்விச்சாலைக்கு இடப்பக்கமிருந்த திறந்த பெருமுற்றத்தை அடைந்தார். பாரதவர்ஷமெங்கிலுமிருந்து கவர்ந்துகொண்டு வரப்பட்ட ஆநிரைகள் அங்கே கட்டப்பட்டிருந்தன. மூன்று வீரர்கள் இடையில் புலித்தோலாடையும் உடம்பெங்கும் சாம்பலும் தலையில் பன்றிப்பல்லாலான பிறையும் அணிந்த காட்டாளர்களாக உருமாற்று கொண்டு அவரை எதிர்கொண்டனர். அவர்கள் மூன்று அம்புகளை தருமனை நோக்கி எய்தனர். அவர்கள் கையை வாயில் வைத்து குரவையொலி எழுப்பினர். தருமன் தன் இடையிலிருந்த சங்கை ஊதினார்.
தருமன் மூன்று அம்புகளை அவர்களை நோக்கி எய்தார். அச்சடங்குப்போர் முடிந்ததும் அவர்கள் மும்முறை நெற்றி நிலம்பட குனிந்து வணங்கி அந்த ஆநிரைகளிலிருந்து குற்றமற்ற சுழிகள் கொண்டதும், செந்நிற மூக்கும் கரிய காம்பும் உடையதுமான பசு ஒன்றை அவரிடம் அளித்தனர். அப்பசுவை ஓட்டியபடி அவர் வேள்விச்சாலை நோக்கி வந்தார். அவருக்குப்பின் தம்பியர் தொடர்ந்தனர்.
வேள்விச்சாலையிலிருந்த மக்களைக் கண்டு பசு திகைத்து நிற்க ஏவலன் ஒருவன் அதன் கன்றை முன்னால் இழுத்துச் சென்றான். கன்றை நோக்கி நாநீட்டி மூச்செறிந்த பசு தலையைக் குலுக்கியபடி தொடர்ந்து சென்று வேள்விச்சாலைக்கு முன் வந்து நின்றது. அதன் கழுத்தில் வெண்மலர் மாலை சூட்டப்பட்டது. கொம்புகளுக்கு பொற்பூண் அணிவிக்கப்பட்டது. நெற்றியில் பொன்குமிழ் ஆரமும் கழுத்தில் ஒலிக்கும் சிறு மணிமாலையும் சூட்டினர்.
பசுவின் கன்று அதன் முன் காட்டப்பட்டபின் வேள்விச்சாலைக்குள் கொண்டு சென்று மறைக்கப்பட்டது. ஐயுற்று தயங்கி நின்றபின் பசு மெல்ல உடல் குலுங்க தொடை தசைகள் அதிர காலெடுத்துவைத்து கிழக்கு வாயிலினூடாக வேள்விச் சாலைக்குள் நுழைந்தது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து வைதிகரும் வேதக்குரல் ஓங்கி முழங்க அதன் மேல் அரிமஞ்சள் தூவி வாழ்த்தினர். மஞ்சள் மழையில் நனைந்து உடல் சிலிர்த்தபடி பசு நடந்து வேள்விச்சாலை அருகே தயங்கி நின்று “அம்பே” என்றது. நற்தருணம் என்று வைதிகர் வாழ்த்தொலி எழுப்பினர்.
பசுவை பைலர் வந்து தர்ப்பையில் கங்கைநீர் தொட்டு நெற்றியில் வைத்து வாழ்த்தி அழைத்துச் சென்றார். முதல் எரிகுளத்தருகே நிறுத்தப்பட்ட பசுவின் நான்கு காம்புகளில் இருந்தும் பால் கறக்கப்பட்டு ஒரு புதிய பாளைக்குடுவையில் சேர்த்து பின் ஆறு மூங்கில் குவளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆறு தழல்களுக்கும் அவியாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்ட பசுவின் கருவறைவாயிலை வைதிகர் பூசை செய்து வணங்கினர்.
அப்பசுவை மஞ்சள் கயிற்றால் கட்டி அரியணைக்கு முன் நின்ற தருமன் அருகே கொண்டுவந்து நிறுத்தினர். அவர் அதன் கயிற்றை வாங்கி கொண்டுசென்று தன் பீடத்தில் அமர்ந்திருந்த தௌம்யரின் அருகே காலடியில் வைத்தார். தௌம்யர் அப்பசுவை கொடையாக பெற்றுக்கொண்டு அவர் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார்.
ஆநிரை கொள்ளலில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்துசேர்ந்த அனைத்துப் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு வைதிகக்கொடையாக வழங்கப்பட்டன. முதல் நூற்றெட்டு பசுக்களும் தௌம்யரின் குருகுலத்திற்கு அளிக்கப்பட்டன. தௌம்யரின் சார்பில் அவற்றில் ஒரு பசுவின் கயிற்றை அவரது மாணவன் தருமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். ஒவ்வொரு வைதிகர் குலத்துக்கும் பசு நிரைகள் அளிக்கப்பட்டன. இந்திரப்பிரஸ்தத்தின் இருபத்து மூன்று பெருமுற்றங்களிலும், நகரைச்சூழ்ந்த பன்னிரண்டு குறுங்காடுகளிலுமாக கட்டப்பட்டிருந்த எழுபத்தெட்டாயிரம் பசுக்களும் அங்கிருந்த அந்தணர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அந்தணர் எழுந்து தருமனை வாழ்த்தி அவர் குலம் சிறக்க நற்சொல் அளித்தனர்.
பைலரின் வழிகாட்டலின்படி அன்னம்கொள்ளலுக்காக தருமன் அரியணையிலிருந்து எழுந்து அரசணிகோலத்தில் திரௌபதியுடன் வேள்விப்பந்தலை விட்டு வெளியே வந்தார். அங்கு காத்திருந்த பன்னிரு வேளாண்குடித்தலைவர்கள் அவர்களை வழிநடத்தி அழைத்துச்சென்று வேள்விப்பந்தலுக்கு இடப்பக்கமாக செம்மைப்படுத்தப்பட்டிருந்த சிறிய வயல் அருகே கொண்டு சென்றனர். அங்கு தொல்குடிகள் பயன்படுத்துவது போன்ற ஒற்றைக்கணுவில் செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய கைமேழி மூங்கில் நுகமும் எருமையின் தொடை எலும்பால் ஆன மண்கிளறியும் மூங்கில் கூடையும் இருந்தன.
பைலர் வயலருகே தருமனை நிறுத்தி “வளம் பெருகுக! விதைகளில் உறங்கும் பிரஜாபதிகள் இதழ்விரியும் காலத்தை கண்டு கொள்க! அன்னம் அன்னத்தை பிறப்பிக்கட்டும். அன்னம் அன்னத்தை உண்ணட்டும். அன்னம் அன்னத்தை அறியட்டும். அன்னத்தில் உறையும் பிரம்மம் தன் ஆடலை அதில் நிகழ்த்தட்டும். அன்னமென்று இங்கு வந்த அது நிறைவுறட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி திரும்பி வேள்விக்கூடத்திற்கு சென்றார்.
வேளிர்களால் அழைத்துச் செல்லப்பட்ட யுதிஷ்டிரர் தன் மிதியடிகளை கழற்றிவிட்டு மரத்தாலான கைமேழியை எடுத்து கிழக்கு நோக்கி மண்ணில் வைத்தார். அதன் சிறு நுகத்தை அர்ஜுனனும் பீமனும் பற்றிக் கொண்டனர். கரையில் நின்றிருந்த முன்று வைதிகர்கள் வேதச் சொல் உரைக்க அதைக் கேட்டு திரும்பச் சொன்னபடி அவர்கள் நுகத்தைப்பிடித்து இழுத்துச்சென்றனர். தருமன் அவ்வயலை உழுதார். நகுலனும் சகதேவனும் இருபக்கமும் மண் குத்திகளால் நிலத்தைக் கொத்தியபடி உடன் வந்தனர். திரௌபதி மூங்கில் கூடையை இடையில் ஏந்தி அதிலிருந்த வஜ்ரதானிய விதைகளை அள்ளி வலக்கை மலரச்செய்து விதைத்தபடி பின் தொடர்ந்தாள்.
ஏழுமுறை உழுது சுற்றிவந்து விதைத்ததும் அவர்கள் கரையிலேறி ஓரிடத்தில் அமர்ந்தனர். வைதிகர் சொல்லெடுத்தளிக்க “விடாய் அணையாத அன்னையின் வயிறே! ஊற்று அணையாத முலைக்கண்களே! அளித்துச்சோராத அளிக்கைகளே! எங்களுக்கு அன்னமாகி வருக! எங்கள் சித்தங்களில் அறிவாகவும் எங்கள் குல வழிகளில் பணிவாகவும் இங்கு எழுக!” என்று வாழ்த்தினர். குலமுறை கூறுவோர் தருமனுக்கு முன்னால் வந்து யயாதியிலிருந்து தொடங்கும் அவரது குலமுறையை வாழ்த்தி ஒவ்வொருவருக்கும் உணவளித்த மண் அவர்களுக்கும் அமுதாகுக என்று வாழ்த்தினர்.
பன்னிரு ஏவலர் கதிர் முதிர்ந்த வஜ்ரதானியத்தின் செடிகளை அவ்வயலில் நட்டனர். தருமன் தன் துணைவியுடன் மண் கலங்களில் நீரேந்தி வயலுக்குள் இறங்கி அவற்றுக்கு வலக்கை மேல் இடக்கை வைத்து நீர் பாய்ச்சினார். பின்னர் கிழக்கு நோக்கி திரும்பி நின்று “எழுகதிரே, இங்கு அன்னத்திற்கு உயிரூட்டுக! அமைந்துள்ள அனைத்திற்குள்ளும் அனலை நிறுத்தி அசைவூட்டுக! ஒவ்வொன்றிலும் எழும் தவம் உன்னால் நிறைவுறுக!” என்று வணங்கினார்.
தொன்மையான முறையில் எருதின் வளைந்த விலா எலும்புகளில் கல்லால் உரசி உருவாக்கப்பட்ட அரம் கொண்ட கதிர் அரிவாளை வேதியரிடமிருந்து பெற்று வயலில் இறங்கி அதைக் கொண்டு அக்கதிர்களை கொய்தார். அவற்றை அவருக்குப் பின்னால் சென்ற திரௌபதி பெற்று தன் கூடையில் நிறைத்தாள். பத்தில் ஒரு பங்கு கதிரை பறவைகளுக்கென நிலத்திலேயே விட்டுவிட்டு கரையேறினர்.
வரப்பில் நின்று மண் தொட்டு சென்னி சூடி தருமன் “அன்னையே, உன்னிடமிருந்து இவ்வன்னத்தை எடுத்துக் கொள்கிறோம். பெற்றுக் கொண்டவற்றை இம்மண்ணுக்கே திருப்பி அளிப்போம். இங்கு உணவுண்ணும் பூச்சிகள் புழுக்கள் விலங்குகள் அனைவருக்கும் நீ அமுதாகி செல்க! உயிர்க்குலங்கள் அனைத்தும் உன்னால் பசியாறுக! உன்னை வணங்கும் என் சென்னி மீது உன் கருணை கொண்ட கால்கள் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வேண்டி திரும்பி நடந்தார். அவர் தோளில் அந்த மேழியும் வலக்கையில் கதிர் அரிவாளும் இருந்தன. கொய்த கதிர்களுடன் திரௌபதி அவருக்குப் பின்னால் செல்ல இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர்.
அவர்களை வேள்விப்பந்தலருகே எதிர்கொண்ட பைலரும் வைதிகரும் “நிறைகதிர்களுடன் இல்லம் மீளும் குலத்தலைவரே, பெற்றுக் கொண்டவர்கள் திருப்பி அளிக்க கடமைப்பட்டவர்கள். மண் அளிப்பவை அனைத்தும் விண்ணுக்குரியவை என்றுணர்க! விண்ணோக்கி எழுகிறது பசுமை. விண்ணோக்கி நா நீட்டி எழுகிறது அனல். விண்ணோக்கி பொருள் திரட்டி எழுகிறது சொல். விண்ணிலுறையும் தெய்வங்களுக்கு மண் அளித்த இவ்வுணவை அளிக்க வருக!” என்றனர்.
அவர்கள் வழிகாட்ட தருமனும் துணைவியும் பந்தலுக்குள் சென்று எரிகுளங்களுக்கு நடுவே அமர்ந்தனர். திரௌபதி அவ்வஜ்ரதானியங்களை மென்மரத்தாலான கட்டையாலடித்து உதிர்த்தாள். கையால் அம்மணிகளை கசக்கி பிரித்தெடுத்தாள். மூங்கில் முறத்தில் இட்டு விசிறி, பதரும் உமியும் களைந்து எடுத்த மணிகளை ஐந்து பிரிவாக பிரித்தாள். முதல் பிரிவை தனக்குரிய மூங்கில் நாழியில் இட்டாள். இரண்டாவது பிரிவை அவள் முன் வந்து வணங்கிய வேள்வி நிகழ்த்தும் அந்தணருக்கு அளித்தாள். மூன்றாவது பிரிவை கையில் முழவுடனும் கிணைப்பறையுடனும் விறலியுடன் வந்த பாணன் பெற்றுக்கொண்டான். நான்காவது பிரிவு தென்திசை நோக்கி விலக்கி வைக்கப்பட்டது. ஐந்தாவது பிரிவு தெய்வத்திற்கென சிறு கூடையில் இடப்பட்டது.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்று ஐம்புலத்தாரும் ஓம்பி அமர்ந்த அவளை தௌம்யர் வாழ்த்தினார். வேள்விக்கென அளிக்கப்பட்ட வஜ்ரதானியம் முப்பத்தியாறு சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு எரிகுளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு அவியிடப்பட்டது. தௌம்யர் “ஆவும் மண்ணும் அன்னையும் என வந்து நம்மைச்சூழ்ந்து காக்கும் விண்கருணையே! இங்கு அனலென்றும் விளங்குக! இவை அனைத்தையும் உண்டு எங்கள் மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அளிப்பாயாக! அவர்களின் சொற்கள் என்றும் எங்களுடன் நிறைந்திருக்கட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார். “ஓம் ஓம் ஓம்” என்று அவை முழங்கியது.
[ 8 ]
இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கே யமுனைக்கு அப்பால் மரக்கூட்டங்களின் நிழற்கடலுக்குள் சூரியன் சிவந்து மூழ்கத்தொடங்கினான். நகரின் அனைத்து காவல்கோட்டங்களிலும் மாலையை அறிவிக்கும் முரசுகள் முழங்கின. சங்குகள் கடல் ஒரு பறவையெனக் குரல்கொண்டதுபோல் கூவி அமைந்தன. ராஜசூயப்பந்தலின் அருகே பெருங்கண்டாமணி ஓங்காரமெழுப்பி ரீங்கரித்து ஒடுங்கியது. வேள்வித்தீயிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அனலால் நகரின் கொற்றவை ஆலயத்தில் முதல்விளக்கு ஏற்றப்பட்டது.
ஒன்றிலிருந்து ஒன்றென அந்நெருப்பு பரவி முக்கண்ணன் ஆலயத்திலும் முழுமுதலோன் ஆலயத்திலும் உச்சியிலமைந்த இந்திரனின் பேராலயத்திலும் விளக்குகளாக சுடர்கொண்டது. அரண்மனையிலும் தெருக்களிலும் இல்லங்களிலும் பரவி இந்திரப்பிரஸ்தத்தை செந்நிற ஒளியால் மலையின் அணியென ஆக்கியது.
அந்தியின் நீர்ச்செயல்கள் முடிந்து முனிவரும் அந்தணரும் நிரைவகுத்து வந்து வேள்விச்சாலையில் அமர்ந்தனர். அவியிடுவோர் இடம் மாறினர். புத்தாடை அணிந்து புதிய மாலைமலர்கள் தொடுத்த தார் சூடி தருமன் தன் அரசியுடன் வந்து அரியணையில் கோல்கொண்டு அமர்ந்தார். அவையெங்கும் அரசர்களும் குடிகளும் வணிகரும் நிறைந்தனர். தௌம்யர் ஆணையிட ராஜசூய வேள்வியின் அந்திக்கான சடங்குகள் தொடர்ந்தன. இரவரசியை வரவேற்கும் வேதப்பாடல் ஒலித்தது.
இரவரசி எழுகிறாள்
விழி திகழ நோக்குகிறாள்
மின்னும் அணிகள் பூண்டு
மங்கலம் கொள்கிறாள்
முடிவிலா வெளியையும்
ஆழங்களையும் எழுச்சிகளையும்
நிறைத்துப்பரவுகிறாள்
தன் ஒளியால் இருளை விரட்டுகிறாள்
காக்கும்பணியை
காலையரசியிடமிருந்து பெற்றுக்கொள்கிறாள்
அஞ்சுகிறது சூழ்ந்த இருள்.
சேக்கேறும் பறவைகளென
உன்னருளால் இல்லம் மீள்கிறோம்
குடிகள், கன்றுகள், புட்கள்
பெருஞ்சிறைப் பருந்துகள் கூட
குடி சேர்கின்றன
அலையலையென எழும்
இரவெனும் இறைவி
ஓநாய்களை விரட்டுக!
அஞ்சாது நாங்கள் பாதைதேரவேண்டும்
கரிய ஆடைபூண்டு
முற்கடனென வந்துசூழும்
இவ்விருளை அகற்றுக!
அன்னைதேரும் கன்றென
எளியோனின் வேண்டுதல்
உன்னைத் தேடிவரவில்லையா?
இரவெனும் செல்வி!
வெற்றிகொள்பவளே!
புகழ் மாலையென
இப்பாடலை அணியமாட்டாயா?
மும்முறை இரவுப்பாடல் முழங்கி ஓய்ந்ததும் அங்கிருந்த முனிவரும் வைதிகரும் “ஓம்! ஓம்! ஓம்!” என முழங்கினர். வேள்விச்சாலையின் அத்தனை நெய்விளக்குகளும் எரிகுளத்தின் ஆறுநெருப்புகளுடன் இணைந்து எழுந்தாடின. அனலால் சூழப்பட்டிருந்தவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமைகள் மறைந்தன. ஒவ்வொரு எண்ணமும் சிறகு கொண்டது. அத்தருணத்தில் அனைவரும் தேவர்களென்றாயினர்.
தௌம்யர் வணங்கி “அந்தி வேள்விக்கு பெண்டிர் சூழவேண்டுமென்பது தொல்நெறி. இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எழுந்தருள்க!” என்றார். வைதிகர் இருவர் அளித்த மண்ணகல்விளக்கில் நெய்ச்சுடரை ஏந்தி கற்சிலைமுகத்தில் செவ்வொளி ஒளிவிட திரௌபதி அரசமேடைவிட்டு இறங்கினாள். இந்திரப்பிரஸ்தத்தின் பிற அரசியரான சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் கரேணுமதியும் கையில் ஒளி நின்ற அகல்களுடன் எழுந்து அவளுக்குப் பின்னால் நடந்தனர். அவர்கள் சென்று தௌம்யரை வணங்கி முதல் எரிகுளத்தருகே நின்றனர்.
பைலர் தர்ப்பையில் நீர்தொட்டு அவர்களை வாழ்த்த அவர்கள் அச்சுடர்களை எரிகுளத்தருகே நிரையாக வைத்துவிட்டு குனிந்து மலரும் அன்னமும் எடுத்து அவியளித்து எரியூட்டினர். முப்பத்தாறு எரிகுளங்களையும் மும்முறை சுற்றிவந்து வணங்கி அவற்றுக்கு இடப்பக்கமாக அமர்ந்தனர். பைலர் அவர்களின் நெற்றியில் மஞ்சள்பொடியிட்டு வாழ்த்தினார். அவர்களுக்கு முன்னால் ஆறு செங்கற்கள் கூட்டப்பட்ட அடுப்புகள் வைக்கப்பட்டன. அவற்றில் விறகு அடுக்கப்பட்டது. அவர்களின் இடப்பக்கம் சிறுவட்டில்களில் ஒன்பதுமணிகளின் கலவையும் யமுனைநீரும் வைக்கப்பட்டன.
“அவையோரே, அரசர்குலம் தோன்றுவதற்கு முன்னரே உருவான சடங்கு இது. அன்று இல்லத்தலைவரே வேள்விக்காவலர். இல்லத்தரசி வேள்வியின் அன்னத்துக்கிறைவி. இன்று அரசனும் அரசியுமென அவர்கள் உருமாறியிருக்கின்றனர். இல்லத்தரசி சமைத்தளிக்கும் அன்னத்தை அவியாக்கி இறையை எரியிலெழுப்பி நிறைவளித்த பின்னரே இன்றைய இரவுக்கொடை தொடங்கும்” என்றார் தௌம்யர்.
“வேள்விக்கு அவ்வேள்வியை நிகழ்த்தும் குடியின் தலைவர் வந்து அமர்ந்து முதல் கைப்பிடி தானியத்தை எடுத்து அளிக்கவேண்டும் என்றும் தலைமை வைதிகர் அவியெரியை எடுத்தளித்து அடுப்புமூட்டவேண்டும் என்றும் நெறியுள்ளது. அவரே வேள்விமுடிந்ததும் அவியன்னத்தை அவ்வேள்வி நடத்தும் குடிக்கு உரியமுறையில் பகிர்ந்தளிக்கவும் வேண்டும்” தௌம்யர் சொன்னார். “ராஜசூயம் போன்ற பெருவேள்விக்கு பாரதவர்ஷமே ஒற்றைக்குலமென்று கொள்கிறோம். அதன் குடித்தலைவரென அவ்வேள்விக்கு அமைந்தவர்களால் ஏற்கப்படும் அவைமூத்தவரை அழைத்து அமரச்செய்வது வழக்கம். இவ்வேள்வியின் அவைத்தலைவர் என நீங்கள் சுட்டும் ஒருவர் கைதொட்டு மணியள்ளி அளிக்க இங்கே ஆறு தேவியரால் அவிக்குரிய அன்னம் ஆக்கப்படும்.”
அவையின் தலைகளனைத்தும் திரும்பி பீஷ்மரை நோக்கின. பீஷ்மர் அந்நோக்கை உணராதவர் என வளையாத நீளுடலின் மேல் எழுந்த தலையும் மார்பில் காற்றிலாடிய வெண்ணிறதாடியுமாக அமர்ந்திருந்தார். அவர் அருகே அமர்ந்திருந்த துரோணர் மெல்ல குனிந்து தௌம்யரின் சொற்களைச் சொல்ல அவர் சித்தம் மீண்டு எவருக்கென்றில்லாமல் கைகளை கூப்பினார்.
தருமன் “இங்கு எங்கள் குடித்தலைவரென இருப்பவர் பிதாமகர் பீஷ்மரே” என்றார். “ஆம்! ஆம்!” என்று அவையில் ரீங்காரமென ஒப்புதலோசை எழுந்தது. தௌம்யர் “அரசரின் சார்பில் இங்கு அவைநின்று வேள்விநடத்தும் இளையவரான சகதேவர் பிதாமகரை வரவேற்று அழைத்துவருக!” என்றார். சகதேவன் பீஷ்மரை நோக்கி சென்று தலைவணங்கினான்.
பீஷ்மர் கைகூப்பியபடியே எழுந்து “அவையமர்ந்தோருக்கு வணக்கம். எரியெழுந்து நம் தெய்வங்களை நாடும் வேளை. முன்னோரின் விழிகள் நம் மீது பதிந்திருக்கின்றன. இக்குடியின் மூத்தோன் என நான் வந்து இவ்வேள்வியன்னத்தை அள்ளி அளிப்பது குலமுறைப்படி சரியே. ஆனால் அவை என்னை பொறுத்தருளவேண்டும்” என்றார். “அதற்குரியவனல்ல நான் என்றே உணர்கிறேன். இத்தனை ஆண்டு கானகங்களிலும் அறியா நிலங்களிலும் தனித்தலைந்தும் அம்புகளாலும் சொற்களாலும் ஆழ்ந்து சென்று தவம்பயின்று நான் அறிந்த ஒன்றுண்டு. மரத்திலூறிய சாறு தேனென்றும் கனியென்றும் ஆகவேண்டும். அன்றேல் அது தன் வேரிலூறும் கசப்பையே தளிர்களிலும் நிறைத்துக்கொண்டிருக்கும்.”
அவர் என்ன சொல்கிறார் என்றறியாமல் அவை விழிதிகைத்து அமர்ந்திருந்தது. “தோகைமயில்கள் போல அழகிய மகளிர் இதோ சுடரேந்திச் சென்றனர். அழகாக கால்மடித்து அமர்ந்து தங்கள் மலர்க்கைகளால் அன்னம் சமைக்க காத்திருக்கின்றனர். எத்தனை யுகங்களாக அவர்கள் அமுது ஆக்கி நமக்கு ஊட்டியிருக்கின்றனர்! அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். மெலிந்து உலர்ந்த என் கைகளால் மணி அள்ளி அவர்களின் கலத்தில் இடுவேனென்றால் அது எவ்வகையிலும் மங்கலம் அல்ல.”
“மூப்போ தவமோ அல்ல வேதங்களில் முதன்மை கொள்வது. துளி கோடியாகப் பெருகும் பிரஜாபதிகளையே அது வாழ்த்துகிறது. அவையீரே, அவர்களே தேவர்களுக்கு உகந்தவர்கள். வாழ்வென்றானவர்கள். தென்கடல் பொங்கி வரும் மழைபோல செல்லுமிடமெல்லாம் செழிக்கவைப்பவர்கள். அணைத்து துயரழிப்பவர்கள். அடைக்கலம் அளித்து காத்து நிற்பவர்கள். அவர்களில் ஒருவர் அள்ளி அன்னமிட்டால் மட்டுமே மானுடத்தை ஆளும் தேவர்கள் உவகையுடன் அவிகொள்வார்கள். அவர்களில் ஒருவர் எழுக!”
பீஷ்மர் உரக்க சொன்னார் “ஆயிரம் மனைவியர் கொண்டவர். பல்லாயிரம் மைந்தர் கொண்டவர். இளவேனிலில் எழும் முதற்புல்போல இப்புவியையே நிறைத்துச்சூழும் முடிவிலா பெருவிழைவு கொண்டவர். அத்தகைய பிரஜாபதி ஒருவர் இவ்வேள்விக்கு முதன்மை கொள்க!” அவையெங்கும் மெல்லிய கலைதலோசை எழுந்தது. தருமன் ஏதோ சொல்ல விழைபவர் போல உடலசைத்தார். அவருக்குப்பின் வாளேந்தி நின்றிருந்த அர்ஜுனன் விழிநீர் கனிந்தவன் போலிருந்தான்.
“நான் முதியோன். இங்கிருக்கும் அத்தனை பேரையும் கைக்குழந்தைகளென கண்டவன். உங்களனைவருக்கும் தந்தையென நின்றிருக்க காலத்தால் அருளப்பட்டவன். அவையோரே, சென்ற சிலநாட்களுக்கு முன் என் உளம்வெடிக்குமளவுக்கு பெருந்துயர் ஒன்றை அடைந்தேன். சென்று சொல்ல எனக்கொரு தந்தையில்லையே என எண்ணினேன். அன்றிரவு ஒரு கனவு கண்டேன். நான் துவாரகைக்குச் சென்று இளைய யாதவரைக் கண்டு என் குறையை சொல்வதைப்போல. அக்கனவில் அவர் என் தந்தையென்றிருந்தார். நான் ஆற்றவேண்டியதென்ன என்று எனக்கு அவரே உரைத்தார்.”
“ஏனென்று இங்கு என்னால் உரைக்கவியலாது. நான் மெய்யறிந்த முனிவனல்ல. மொழியறிந்த கவிஞனும் அல்ல. எளிய வீரன். ஆனால் அப்புன்னகை என் தந்தை சந்தனுவின் புன்னகை என அறிந்தேன். அவையோரே, வைதிகரே, முனிவரே, பிரஜாபதியாக இங்கு அவைமுதன்மை கொள்ளத்தக்கவர் அவரே. பிறிதொன்றும் எனக்கு சொல்வதற்கில்லை” என்றார்.
அவர் அமர்வதற்குள்ளாகவே தருமன் எழுந்து “ஆம், நான் என் உள ஆழத்தில் எண்ணியதும் அதுவே. கணுதோறும் முளைக்கும் பெருமரம் என்று நான் எப்போதும் உணரும் இளைய யாதவரே என் குடித்தலைவரென இங்கமர்ந்து அன்னம் அளிக்கவேண்டியவர்... அவர் அருளவேண்டும்” என்றார். பீமன் உரக்க “ஆம், பிறிதொன்றும் பாண்டவர்களால் எண்ணப்படவில்லை” என்றான். “இது புவிவென்று அரியணை அமர்ந்து வேள்விக்கோல் கொண்டிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் ஆணை” என்றான் அர்ஜுனன்.
துரோணர் “அது நன்று. முடிவெடுக்க வேண்டியவர்கள் பாண்டவர்களே” என்றார். “குலமுறைப்படி மறுப்புரைக்க உரிமைகொண்டவர்கள் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் மட்டுமே. பீஷ்மர் சொல்லிவிட்டார். அஸ்தினபுரியின் பேரரசர் தன் எண்ணத்தை உரைக்கட்டும்.” திருதராஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி எழுந்து “வேதம் மானுடருடன் முடிவிலாது விளையாடுகிறது என்கிறார்கள். அவ்வண்ணம் என்றால் பாரதவர்ஷத்தில் எவ்வேள்விக்கும் முதல்வராக இளைய யாதவர் மட்டுமே அமரத்தக்கவர்” என்றார்.
தௌம்யர் “முன்பு தேவபாக ஷ்ரௌதர் பிழையின்றி அவிபகுந்ததைப்போல இங்கு இளைய யாதவர் எழுந்தருளி வேள்வியை சிறப்பிக்கட்டும். முன்னோர் அருளும் தேவர்களின் அளியும் தெய்வங்களின் நோக்கும் இக்குடிமேல் நிறையட்டும்” என்றார்.
துரோணர் “இளைய பாண்டவரே, முறைப்படி இளைய யாதவரை வேள்விமுதன்மைகொள்ள அழையுங்கள்” என்றார். சகதேவன் கைகூப்பியபடி இளைய யாதவரை அணுகி “எங்கள் குடியின் மூத்தவராக அமர்ந்து இவ்வேள்விக்கு அன்னமளிக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன், யாதவரே” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் எழுந்து திரும்பி அவையமர்ந்த முனிவர்களையும் வைதிகரையும் அரசர்களையும் குடிகளையும் வணங்கி “ஆம், அது இனிய பொறுப்பு, இளையோனே” என்றார்.
சகதேவன் அவர் முன் தலைவணங்கி “வருக!” என்று அழைத்தான். அவனருகே வந்து நின்று “இவ்வழி” என்றான் பீமன். “இவ்வழியே” என்று அர்ஜுனன் அழைத்தான். மஞ்சள்பட்டாடை உலைய முடிசூடிய பீலி காற்றிலாட இளைய யாதவர் நடந்தார். “இவ்வழி” என்று தருமன் அரியணையிலிருந்து எழுந்து நின்று அவரை வேள்விமையம் நோக்கி வழிகாட்டினார்.
அரசரவையிலிருந்து “நில்லுங்கள்!” என்னும் குரலுடன் சிசுபாலன் எழுந்தான். “நில்லுங்கள்! நான் ஒரு வினாவுடன் உள்ளேன்.” அவை திகைத்து அவனை திரும்பி நோக்கியது. “இங்கு துவாரகையின் தலைவன் வேள்வித்தலைமை கொள்வதன் பொருள் என்ன? அவன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசகுலத்திற்கு முதல்வனா? அஸ்தினபுரியின் கொடிவழியினருக்கு முதல்வனா? இல்லை இங்கு அவைநிறைத்திருக்கும் அனைவருக்கும் முதல்வனா?”
பைலர் “அரசே, அவரை தங்கள் குலமுதல்வராக இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் அறிவித்திருப்பதனால் அவர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசகுலத்திற்கும் அஸ்தினபுரியின் கொடிவழியினருக்கும் முதல்வராகிறார். அவர் இங்கு அவையமர்ந்த அத்தனை அரசர்களிடமும் வில்பணிதலையும் ஆவளித்தலையும் கொண்டவர் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் இளைய யாதவரே முதல்வராகிறார்” என்றார்.
“நான் இந்திரப்பிரஸ்தத்திற்கு அடிபணியவில்லை!” என்றான் சிசுபாலன். “நான் அளித்தது ஆகொடை மட்டுமே.” சகதேவன் சினத்துடன் கையைத்தூக்கி ஏதோ சொல்ல அவனை அணுகியபோது பீஷ்மர் கையசைத்து அவனைத் தடுத்து “சேதிநாட்டரசே, ஆகொடை முடிந்துவிட்டது. உங்கள் கன்றும் இங்கே அளிக்கப்பட்டுவிட்டது. மாற்றிருந்தால் இவ்வேள்வி முடிந்தபின்னர் படைகொண்டுவந்து இந்திரப்பிரஸ்தத்தை வெல்லலாம். சூக்திமதியில் ஒரு ராஜசூயத்தை நிகழ்த்தலாம். அதுவே முறை” என்றார்.
“அதற்கு காலமிருக்கிறது. மகதத்தில் ஜராசந்தர் மறுபிறப்பு எடுத்து பதினெட்டு வயதாகி வரவேண்டும் அல்லவா?” என்றார் மச்சநாட்டு சூரசேனர். அவை நகைத்தது. குன்றாச்சீற்றத்துடன் சிசுபாலன் பீஷ்மரை நோக்கி கைசுட்டி “வாயை மூடுக, முதியவரே! நீர் யார்? இது ஷத்ரியர் அவை. ஷத்ரியன் ஒருவன் கங்கத்துப்பெண்ணை புணர்ந்தான் என்பதற்காக நீர் ஷத்ரிய அவையில் நிற்கும் தகுதிகொள்வீரா என்ன? அப்படி பார்த்தால் நான் நீராடிய ஆற்றின் மீன்களெல்லாம் சேதிநாட்டுக்கு இளவரசர்களாவார்கள்” என்றான்.
“சேதிநாட்டரசே, நீர் எங்கள் விருந்தினர் என்பதனால்...” என்று சகதேவன் பற்களைக் கடித்தபடி சொல்ல அவனை மறித்து “விலகி நில், சிறுவனே! நான் உன்னிடம் பேச வரவில்லை. இங்கு யார் யாரை ஷத்ரியரவைக்கு முதல்வரென அழைத்தார்கள்? கங்கர்குலத்தான் யாதவனை சுட்டுகிறான். குலமேதென்றறியாத ஐவருக்குப் பிறந்தவரில் முதல்வன் அவனை அவையழைத்து பாரதவர்ஷத்தின் முதல்வன் என்கிறான். இனி இந்த யாதவன்தான் பாரதவர்ஷத்தின் அவை முதல்வனா? குடத்தில் பிறந்த அரைஅந்தணன் அதை சொல்லலாம். நாணிலாது ஏற்ற இங்குள்ள ஷத்ரியர் தங்கள் அன்னையின் கற்பினை ஐயுற்று அமர்ந்திருக்கிறார்களா? சொல்க!” என்றான்.
அவன் எல்லைமீறிவிட்டான் என்று அனைவருக்கும் தெரிந்தது. சினத்தில் உடல் வெறியாட்டெழுந்த வேலன் போல துள்ளித்துள்ளிவிழ முகம் கோணலாகி கழுத்துத்தசைகள் இழுபட சிசுபாலன் கூவினான். உடலுடன் தொடர்பற்றவை போல அவன் கைகள் இருபக்கமும் எழுந்து அதிர்ந்தன. “எங்கே குருதிகொண்ட ஷத்ரியர்? அஸ்தினபுரியின் அரசன் சொல்லிழந்து விட்டானா? சிந்து நாட்டரசனும் விதர்ப்பத்தின் அரசனும் அஞ்சி உடல்சுருட்டி அட்டைபோல் அமர்ந்திருக்கிறார்களா? கோசலனும் மிதிலனும் வங்கனும் கலிங்கனும் மாளவனும் கூர்ஜரனும் என்ன சொல்கிறார்கள்?”
“இந்த அவையில் இப்படி ஒரு வினா எழுந்தது என்பதை பதிவுசெய்யட்டும் சூதர் சொல். பாரதவர்ஷமெங்கும் பாடப்படட்டும் என் சினம். அவையோரே, இவன் யார்? மதுவனத்தில் கன்றோட்டும் சூரசேனரின் பெயரன். தாய்மாமனை கொன்ற பாவி. போரில் அடிபணிந்த படைவீரர்களைக் கொன்று அழித்த நெறியிலி. ஷத்ரியர்குலத்துப் பெண்களை ஏமாற்றி திருடிச்சென்ற பெண்கள்வன். கீழ்குருதிகொண்ட அயலோருடன் வணிகம் செய்து பொருளீட்டியதனால் இவன் அரசனாகிவிடுவானா?” கையைத் தட்டி அவன் அறைகூவினான். “எந்தப்போரில் இவன் எதிரியை நேர்நின்று வென்றிருக்கிறான்? நேர்போருக்கு படைகொண்டுவந்த ஹம்சனையும் டிம்பகனையும் பொய்சொல்லி கொன்றவன். மதுவனம் வரை படைகொண்டுவந்த மகதமன்னனை இளைய பாண்டவனை அனுப்பி காட்டுப்போரில் கொன்றவன். இவனை வீரனென்று ஒப்புக்கொண்ட ஷத்ரியன் நம்மில் எவன்? சொல்க! எவன்? அவன் முகத்தை நோக்கவிழைகிறேன், எவன்?”
வெறிகொண்டு முன்னால் சென்ற சிசுபாலன் “முதலில் இவனை முடிசூட ஒப்புக்கொண்டவர் எவர்?” என்று அருகே நின்றிருந்த தூணிலறைந்து குரலெழுப்பினான். “யாதவர் முடிசூடி ஆளலாமென்றால் ஷத்ரியர் இனி கன்றுமேய்க்கச் செல்வரா? ஷத்ரியர்களே, அரசர்களே, ஷத்ரியரன்றி பிறர் ஏன் நாடாளலாகாது என்று வகுத்தனர்? படைப்பவர்கள் அல்ல என்பதனால் ஷத்ரியர் ஒருபோதும் ஒருநாட்டிலும் பெரும்பாலானவர்களாக இருக்கலாகாது. காட்டில் புலி சிலவே இருந்தாகவேண்டும். அவர்களின் ஆட்சியுரிமை என்பது அக்குடியின் பொது ஒப்புதலால் வருவது.”
“ஒவ்வொரு குடியும் நாடாளவிரும்பும் நாட்டில் ஒவ்வொருநாளும் போரே நிகழும். யாதவர் நாடாளத்தொடங்கினால் வேளிர் வெறுமனே இருப்பார்களா? குயவரும் கொல்லரும் விழைவுகொள்ளமாட்டார்களா? அரசனாகும் விழைவுகொண்டு பிறிதொருவன் தன் நாட்டுக்குள் இருக்க அரசன் ஒப்பலாகாது. ஷத்ரியரல்லாத குடி அரசாள்வதை ஷத்ரியர் ஏற்கலாகாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒவ்வொரு புல்லிதழும் வாளென்றாக வழிகோலும். அதன்பின் இம்மண்ணில் குருதி உலராது.”
“அரசர்களே, நீங்கள் கொண்டுள்ள இந்த வாள் குருதியை பெருக்குவதற்கானது என்று எண்ணவேண்டாம். இங்கு மண்ணை ஊறிச்சேறாக்கிய ஒழியாக் குருதியை நிறுத்தியது ஷத்ரியர்களின் வாளே என்றறிக! விளைநிலத்திற்கு இட்ட முள்வேலி இது! அரசர்களே, ஒவ்வொரு குடிக்கும் உரிய எல்லைகளை வகுக்க இங்கே முனிவர்கள் சொல்லெண்ணி தவம்செய்திருக்கிறார்கள். நம் முன்னோர் களம் நின்று உயிர்துறந்திருக்கிறார்கள். அவ்வெல்லைகள் இருக்கும் வரை மட்டுமே இங்கே மானுடர் வாழமுடியும் என்று உணர்க!”
“எவர் இவனுக்கு முடிசூட்டினர்? எந்த முனிவர்? பரசுராமரா? வசிட்டரா? விஸ்வாமித்திரரா? எவர்? நான் அறியவிழைகிறேன். வேடனையும் காடனையும் வேந்தராக்கும் வல்லமை கொண்டவர்கள் முனிவர்கள் மட்டுமே. வேதமே குடித்தலைவனை அரசனாக்குகிறது. இவனுக்கு அரிமலர் தூவி அரசிருத்தி நீராட்டு நிகழ்த்தியவர் எவர்? எச்சொல்லில் எழுந்தது இவன் உரிமை? இதோ, இந்த அவையில் அறியவிழைகிறேன்.”
“எல்லைமீறுபவர்களை கொல்வதற்கு உரிமைகொண்டவன் அரசன். தகுதியற்ற முடியெதையும் கொய்துவரவேண்டியவர் ஷத்ரியர். ஷத்ரியராகிய நம் படைகள் செல்லமுடியாத தொலைவில் நகரமைத்தமையால் மட்டுமே இவன் இன்றும் அரசனென நின்றிருக்கிறான். வளைக்குள் ஆழத்தில் அமர்ந்திருந்து உயிர் தப்புவதனால் மலையெலி சிம்மத்திற்கு நிகராக ஆகிவிடாது என்று இந்த வீணனுக்கு சொல்கிறேன்.”
அவையெங்கும் மெல்லிய ஓசைகளாக அவனுக்கு ஆதரவு எழுந்தது. “தேள் கொட்டத்தொடங்கிவிட்டது” என்றான் மாளவன். “முழுநஞ்சையும் கொட்டிவிட்ட தேள் உயிர்வாழமுடியாது என்பார்கள்” என்றான் அருகிருந்த கூர்ஜரன்.
“எப்படி இந்த அவையில் நின்றான் இவன்? எந்தத் தகுதியில்?” என்று சிசுபாலன் கூவினான். “இன்று வினவுகிறேன். இவன் அவையின் வைதிகர் எவர்? இதுவரை வேள்வியென எதை செய்திருக்கிறான்? ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக யாதவர் இந்திரனுக்கு அளித்துவந்த வேள்விக்கொடையை நிறுத்தியவன் எப்படி இந்திரனின் நகரில் மண்வேந்தன் விண்வேந்தனை வேட்கும் நிகழ்வின் தலைவனாக ஆனான்? இந்திரனே மின்படையும் இடிமுரசும் பெருமழையுமாக எழுந்து இவன் குடிகளுடன் போரிட்டான் என்று இவன் குலக்கதைகளே சொல்கின்றன என்பதை அறியுங்கள்!”
“நாம் ஷத்ரியர். விண்ணாளும் இந்திரனின் மண்வடிவர் என நம்மை போற்றுகின்றன நூல்கள். அரசர்களே, அவையோரே, இவன் இத்தனைநாளும் போரிட்டது இந்திரனுடனும் நம்முடனும்தான் என்று அறியாத மூடர்களா நாம்?” பேசப்பேச மேலும் மேலுமென அவன் வெறிகொண்டான். அவன் உடலில் இருந்தா அத்தனை பெரிய ஓசை எழுகிறதென வியந்தனர் அவையோர். அவன் உடல் மையமுடிச்சு அவிழ்ந்த பாவை போல நாற்புறமும் தள்ளாடியது. வாயின் ஓரம் நுரை தள்ளியது. மூச்சு எழுந்து விலாக்கூடு அலையடித்தது.
“வேதவேள்விக்கு முதல்வனாக நிற்க இவனுக்கிருக்கும் உரிமைதான் என்ன? இங்கு எரியூட்டி அமர்ந்திருக்கும் வைதிகர் சொல்லட்டும். வேதம் ஓதும் முனிவர் சொல்லட்டும். மும்முதல் விழைவெனும் முப்பிரிக்கிளைகொண்ட வேதத்தை வெட்ட வந்த கோடரி அல்லவா இவன்? மரத்தை யானைகள் உண்ணட்டும், இலையை எருதுகள் உண்ணட்டும், கனியை மானுடர் உண்ணட்டும், மலர்த்தேனை மெய்ஞானியர் உண்ணட்டும் என்று இவன் உரைத்ததுண்டா இல்லையா?”
“இங்கு சொல்லட்டும் இவன், நான்கு வேதத்தையும் இவன் முழுதேற்கிறான் என்று. இங்கு நாவெடுத்து ஆணையிடட்டும் வேதச்சொல் என்பது மாறாமெய்மை என இவன் ஒப்புகிறான் என்று” என்றான் சிசுபாலன். “ஏன் இவன் ஜராசந்தனை கொன்றான்? ஏன் நாகவேதத்தை மண்ணிலிருந்து அழித்தான்? விழைவெனும் பெருநெருப்பு அது. அம்முதல் வேதத்திலிருந்தே நாம் ஆற்றல்கொண்டு எழுந்தோம். அதில் மொண்டு நாம் கொண்டுள்ள அனலே இதோ இந்த எரிகுளத்தில் நின்றாடுகிறது. இதையும் அழித்து நம்மை மண்பாவைகளென ஆக்க விழைகிறான் இவன். இதற்கு இவனையே தலைவனென அமரச்செய்திருக்கும் நாம் மூடர்களா? பித்தர்களா? சொல்க!”
சகதேவன் “எங்கள் அவை நின்று பேச எவரிடமும் இளைய யாதவர் ஒப்புதல் கோரவேண்டியதில்லை, அறிவிலியே” என்றான். மாளவமன்னன் எழுந்து “சேதிநாட்டரசர் கேட்பதில் பொருளுள்ளது. இளைய யாதவரை அரசரென அமர்த்திய முனிவரோ வைதிகரோ எவரேனும் உள்ளனரா? அவர் அவையின் வைதிகர்தலைவர் எவர்? அங்கே துவாரகையில் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் எவை?” என்றான். “அதையே நானும் வினவ எண்ணுகிறேன்” என்று சுஸாமர் எழுந்து கூறினார். “இளைய யாதவர் வேள்விகளை ஏற்கிறாரா? வேதங்களை ஒப்புகிறாரா? நானறிந்தவரையில் அவர் வேதமுடிவை மட்டுமே வலியுறுத்தும் சாந்தீபனி குருமரபை சேர்ந்தவர். உஜ்ஜைனியில் அங்கபாத குருகுலத்தில் வேதம் கடந்த சொல்பயின்று எழுந்தவர் என்கிறார்கள். அவர் இந்த அவைக்கு சொல்லட்டும் அவர் எவரென்று.”
அவை அமைதியடைந்தது. பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை கையசைவால் தடுத்து இளைய யாதவர் எழுந்தார். அவர் முகம் ஆயிரம்பேர் உணர்வுக் கொந்தளிப்புடன் கூவி வணங்கி கண்ணீர்விட்டு அரற்றுகையில் கருவறையொளியில் அப்பால் அப்பால் என நின்றிருக்கும் தெய்வச்சிலைகளுக்குரிய அழகை கொண்டிருந்தது. விழிகள் மட்டும் அவர் சொல்லுடன் இணைந்து ஒளிவிட்டன.
“மாளவரே, நான் என் குலத்து கார்த்தவீரியர் சூடிய முடியையே கொண்டிருக்கிறேன். அவர் ஏந்திய படைக்கலங்களும் மதுராவிலுள்ளன” என்றார். “ஆம், வைதிகரோ முனிவரோ நீராட்டி அமைத்தால் முடிகொண்டோர் ஷத்ரியராவார்கள் என்கின்றது பராசர ஸ்மிருதி. ஆனால் எனது நெறி நீங்கள் அறியாத நூலொன்றிலுள்ளது” என்றார்.
கை தூக்கி உரத்தகுரலில் அவர் “நன்னீராட்டில்லை. காட்டில் சிம்மத்தை முடிசூட்டும் எச்சடங்குமில்லை. தன் ஆற்றலாலேயே அது அரசனாகிறது” என்றபோது அவையமர்ந்திருந்த ஷத்ரியரல்லாத அரசர்கள் அனைவரும் கைகளைத் தூக்கி “ஆம்! ஆம்! அவ்வாறே ஆகுக!” என்று குரலெழுப்பினர்.
சுஸாமரை நோக்கி திரும்பி “முனிவரே, நீங்கள் உரைத்தது உண்மை. நான் அனைத்தையும் ஒளிகொள்ளச் செய்யும் சாந்தீபனி குருகுலத்தின் மாணவன். வேதமுடிவே மெய்மை என்றுரைக்கும் கொள்கை கொண்டவன். வேட்டும் வென்றும் கொண்டு எவரும் நிறையமுடியாதென்றும், அறிந்தும் ஆகியும் அவிந்துமே அமையமுடியும் என்றும் சொல்பவன். அழியாத வேதமுடிவெனும் மெய்ப்பொருளை இங்கும் நிலைநிறுத்தவே வந்தேன்” என்றார்.
“ஏன் இவ்வேள்விக்கு நான் தலைவனாகக் கூடாது? ஆம், நான் இங்கு அறைகிறேன். நான் வேதத்தை முழுதேற்பவன் அல்ல. பாலுண்பவன் பசுவின் ஊனையும் உண்டாகவேண்டும் என்பதில்லை. பசுவுக்கு புல்லும் நீரும் ஊட்டிப் புரப்பவன் அதன் பாலைமட்டும் உண்ணும் மைந்தனென்றே ஆகமுடியும்” என்றார் இளைய யாதவர். “அவையோரே, கேளுங்கள்! வேதங்களுக்காக சொல்லாடி அதைவிட மேலானதென்று ஏதுமில்லை என்று சொல்லும் மணமுள்ள சொற்களுக்குரியவர்கள் யார்? இவ்வுலக இன்பங்களில் முடிவிலாது திளைத்து விண்ணுலகையும் விழைந்து அங்குமிங்குமாடும் முடிவிலா ஊசலில் ஆடி அழியும் சிறியோர் அல்லவா? இவர்கள் விழைவதென்ன? இங்கும் அங்கும் இன்பம், பிறிதேது? இவர்களின் உள்ளம் எங்கு மையம் கொள்ளமுடியும்?”
“கேளுங்களிதை! வேதங்கள் நேர், எதிர், நிகர் என்னும் முக்குணங்களை பேசுபவை. மூன்று துலாக்களின் முடிவிலா ஆடல் கொண்டவை. அந்த முக்குணங்களை வென்று செல்பவனே யோகி என்றறிக! இருமையறுத்து தன்னொளியில் தான் விழிகொள்பவனே மெய்மைக்கு அணுக்கமானவன். அரசரே, எதை விழைகிறீர்? வைதிகரே, எதை வேட்கிறீர்? முனிவரே, எதை எண்ணி தவம் கொள்கிறீர்? இலைநுனிதொட்டு பெருவெள்ளம் பரந்தொழுகுகையில் உங்கள் கிணறுகளுக்கு என்ன பொருள்?”
“உயிரென்று வந்தமையால் இங்கு செயலாற்ற கடமை கொண்டிருக்கிறீர். தனக்கென்றில்லாது விளைவுகளில் சித்தமில்லாது விழைவிலாது ஆற்றும் செயலே தவம். ஆடும் துலாக்கோல்களின் நடுவே அசைவிலாது நின்றிருத்தலே யோகம்.”
“வேள்விகள் காமகுரோதமோகங்களெனும் முக்குணங்களால் ஆனவை. ஏனென்றால் அச்சரடுகளின் ஊடுபாவால் ஆனதே இப்புடவி. அரசர்களே, இங்குள்ளவை அனைத்தும் நெறிநின்று நாடாளும் நல்லோர் பொருட்டே என்றுணர்க! எனவே வேட்டு அடைவது விழுப்பொருள் மட்டுமாகவே இருக்கவேண்டுமென்று இங்கே அறைகிறேன். அவையீரே, தன்னை வென்று பொதுநலனுக்கென ஆற்றப்படும் எச்செயலும் வேள்வியென்றே அறிக!”
“ஆம், மேழிபிடிப்பது வேள்வி. ஆழிகொண்டு கலம் வனைவதும் வேள்வியே. ஆபுரப்பது வேள்வி. மீன்பிடிப்பதும் வேள்வியே. செயலென்று தன்னை முழுதுணரும் அழிவிலா வேள்வியால் இனி இப்புவி தழைக்கட்டும். அனைவருக்குமென சமைக்கப்படும் அன்னமெல்லாம் வேள்விமிச்சமே. வேள்வியென ஆற்றப்படும் செயல்களன்றி பிறவற்றால் சிலந்திவலையில் சிறகுள்ள பூச்சிகள் என சிக்கிக்கொண்டிருக்கின்றனர் மானுடர். எனவே வேள்வி நிகழ்க! நிகழ்வனவெல்லாம் வேள்வியென்றே ஆகுக!”
“அரசர்களே, முன்பு முதற்பிரஜாபதி இவையனைத்தையும் படைத்தது விழைவுடன் அல்ல. விளைவெண்ணியும் அல்ல. ஆகவே அது வேள்வியாயிற்று. அவர் ஒவ்வொரு உயிரிடமும் சொன்னார். நீங்கள் பெருகுவீராக! இங்கு உங்கள் விழைவுகள் நூறுமேனி எழுக! உங்கள் குலங்கள் முடிவிலாது வளர்க என்று. நாம் இங்கு உருவானோம். இங்கு நாமியற்றும் வேள்வி அதன்பொருட்டே அமைக! வெற்றிக்கோ புகழுக்கோ அல்ல. வெண்குடைக்கோ அரியணைக்கோ அல்ல. இங்கு அன்னம் பெருகுக என்று எரி மூளுக! அன்னம் சொல்லாகுக என்று அவிசொரிக! சொல் மெய்மையாகுக என்று முகிலெழுக! மெய்மை விண் தொடுக என்று சொல்இசை ஓங்குக!”
“எங்கும் வேள்விகள் எழுக! அடைவதற்கான வேள்விகளல்ல, அளிப்பதற்கான வேள்விகள். இங்கு நாம் கொண்டவற்றை எண்ணி இம்மண்ணை வாழ்த்துவோம். நம்மைச் சூழ்ந்து காத்தவற்றை எண்ணி திசைகளை வணங்குவோம். நம்மை கனிந்து நோக்குவதன்பொருட்டு தெய்வங்களை வழுத்துவோம். இங்கு எழும் வேள்வி அதன்பொருட்டே. இந்த வேள்வியால் தேவர்கள் பெருகுக! அத்தேவர்கள் நம்மை பெருகச்செய்க! ஒருவரை ஒருவர் பெருகச்செய்து முழுமைகொள்வோம்.”
அனைத்து வாயில்களினூடாகவும் வேள்விக்கூடத்தில் புகுந்த காற்றில் முப்பத்தாறு எரிகுளங்களிலும் தழல் எழுந்து நின்றாடியது. எவரோ “ஆ!” என்று அலற அனைவரும் நோக்கியபோது வேள்விப்பந்தல்மேல் பற்றி ஏறி வெடித்துச் சீறி கிளைவிரித்து எழுந்து பறந்து பேருருவம் கொண்டது நெருப்பு.
கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் சுஸாமர். “ஓம்! ஓம்! ஓம்!” என முழங்கியது வைதிகர் பெருநிரை. “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர் முனிவர்.
[ 9 ]
பீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம் கைகளில் படைக்கலம் கொண்டு என்னுடன் நானே போரிட்டு நான் சென்றடைந்த வினாவிலிருந்து விடையென எழுந்தவை இங்கு ஒலிக்கக் கேட்டேன். வேத மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்த நிறைநிலையே என்ற உண்மை இவ்வவையில் நிலைபெறுவதாக!”
“சொல்லெண்ணித் தவமிருக்கும் கவிஞரும் ஐந்தவித்து ஆழ்ந்து செல்லும் முனிவரும் அடையாதவற்றை வீட்டு முற்றத்தில் சிறு செப்புடன் மண்ணில் விளையாடும் குழந்தை சொல்லிவிடுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். இங்கு அறமெனத் திகழும் இப்பெரு வேள்வியில் குலமுதல்வராக அமர தகுதிகொண்டவர் இளைய யாதவர் ஒருவரே” என்று சொன்னபின் மேலும் சொல்ல உன்னுபவர்போல உதடு துடித்து முதுமையின் நடுக்கத்துடன் கண்ணீருடன் செயலற்று நின்று பின் அமர்ந்துகொண்டார்.
அச்சொல்லுக்கு அவையில் எங்கும் ஆழ்ந்த அமைதி எதிர்வினையாக எழுந்தது. சிசுபாலன் தன் எஞ்சிய சினத்தைத் திரட்டி “ஏன் இந்த அமைதி? இங்கு இவன் சொன்னதென்ன? வேதம் முக்குணம் கொண்டதென்றால் எரியூட்டி அம்முக்குணத்தை ஓம்பும் இச்செயலில் இவனுக்கு உரிய பங்கு எது? இயற்றுவதெல்லாம் வேள்வியே ஆகுமென்றால் இங்கு இயற்றப்படும் இவ்வேள்வியின் பொருளேது? வீண் சொற்கள்!” என்றான்.
சீற்றத்துடன் திரும்பி அவையை நோக்கி “அரசர்களே, சூதரிடம் இருந்து சொல்கற்ற ஒருவன் தன்னை மெய்யறிந்தோன் என்றும் தவமுணர்ந்தோன் என்றும் முன்வைப்பான் என்றால் அதைக்கேட்டு ஆரியவர்த்தத்தின் அரசரும் முனிவரும் வைதிகரும் அவனுக்கு அவைமுதன்மை அளிப்பார்கள் என்றால் அதைவிட இளிவரல் பிறிதேது? இதை ஒப்ப இயலாது. இவன் இழிமகன். சொல்லாயிரம் எடுத்து சூடிக்கொண்டாலும் மாமனைக் கொன்றவன் இவன் என்பது இல்லாதாவதில்லை. எதிரிகளை ஒளிந்து ஒறுத்தவன் என்பது மறைவதில்லை. இவ்வேள்வி மறுப்பாளனை இங்கே அவை விலக்கம் செய்யவேண்டும். ஒருபோதும் நானிருக்கையில் இவன் அவைமுதன்மை கொள்ள முடியாது” என்றான்.
வெறிகொண்டவனாக சிசுபாலன் கூவினான் “இங்கிருக்கிறார் இவர்களின் குடிமூத்தவரான சல்யர். இதோ இருக்கிறார் விதர்ப்பத்தின் பீஷ்மகர். அவர் மைந்தன் ருக்மி இருக்கிறான். மூத்தவர் பகதத்தர் இருக்கிறார். அருந்தவத்தாரான முனிவர் அவைநிறைத்துள்ளார்கள். பெருவீரர்களான ஷத்ரிய அரசர்கள் அணிவகுத்திருக்கிறார்கள். இவனுக்களிக்கப்படும் ஒவ்வொரு மேன்மையும் ஷத்ரியர்கள் மேல் உமிழப்படும் வாய்நீரென்றே பொருள். எழுக! உண்மை ஷத்ரியனின் குருதியில் பிறந்த வீரன் இங்குண்டெனில் எழுக!”
சகதேவன் தன்னை விலக்க எழுந்த அர்ஜுனனின் கையை தட்டிவிட்டு முன்னால் வந்து “எழுபவர் எழுக! இது பாண்டவர்களின் அவை. யயாதியின் கொடிவழி வந்தோரின் அரச வேள்வி. இங்கு எவரையும் தலைவணங்கி அவையமரச் செய்யவில்லை. வென்று கொணர்ந்திருக்கிறோம். எழுபவர் ஒவ்வொருவரும் இந்திரப்பிரஸ்தத்தின் கோலுக்கு எதிராக எழுகிறீர்கள். அவர்களின் தலைக்கு மேல் திசை வென்று மீண்ட என் கால் இதோ அமர்ந்திருக்கிறது” என்று தூக்கிக் காட்டினான்.
சினந்தெழுந்த கலிங்கன் “இளைய பாண்டவா, வணங்கி வந்து என் வாயிலில் நின்றவன் நீ. இம்மாநிலத்தில் ஒரு போர் வேண்டாம் என்று ஆநிரை கொடுத்ததனால் உன் அடிபணியும் இழிமகனாக நான் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து கூவினர். மாளவன் “போர் நிகழலாகாதென்று வேள்விக்கு வந்தவர்கள் சிறுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுகுடி யாதவனுக்காக ஷத்ரியரை இழிமதிப்புடன் பேசிய இவன் நாவை அறுங்கள்” என்று கூவினான். “பொறுங்கள்… பொறுங்கள்” என்று பகதத்தர் கைதூக்கி எதிர்கூவினார்.
பீமன் சினத்துடன் நெஞ்சை உந்தி முன் வந்து “அடிபணிய விழையாதவர் எழுக! குருதியினால் இங்கு வேள்வி நிகழுமென்றால் அதுவே ஆகுக! கொள்வதற்கும் கொடுப்பதற்கும் குருதி நிறைய உள்ளது எங்களிடம்” என்றான். துரோணர் எழுந்து கைவிரித்து “அவையோரே, அமர்க! அமர்க, சான்றோரே! இது போர்க்களமல்ல, வேள்விப்பந்தல். இங்கு பூசல் நிகழவேண்டியதில்லை” என்றார். கிருபர் “அமர்க! ஷத்ரியர்களே, அந்தணர் முன் படைக்கலமெடுப்பதை ஒப்புகிறதா உங்கள் குடிநெறி? அமர்க!” என்று முறையிட்டார்.
சினந்த ஓநாய் என பற்கள் தெரிய சீறி “ஆசிரியரே, இங்கு நிகழ்வது ஆளொழிந்த பந்தியில் அமுதத்தை நாய் நக்கியதுபோல் ஓர் இழிமகன் முதன்மை கொள்ளும் நிகழ்வு. பூசலல்ல” என்றான் சிசுபாலன். பீஷ்மர் “இளையோனே, உன் நெஞ்சு எண்ணுவதுதான் என்ன? எதன்பொருட்டு இங்கெழுந்து நின்று எரிகிறாய்?” என்றார். “என்றோ எரியத்தொடங்கிய உலை இது, பிதாமகரே. எதையும் எதிர்நிற்காமல் ஒருவன் வென்று செல்லமுடியும் என்றால், எங்கும் சொல் நிகர் வைக்காமல் ஒருவன் அவைமுதன்மை கொள்ள முடியுமென்றால் எதை நம்பி நான் இதுவரை வாழ்ந்தேனோ அவையனைத்தும் அழிகின்றன என்றே பொருள்” என்று சிசுபாலன் சொன்னான்.
“இவனால் இங்குள்ள வேள்விகள் வீண் நடிப்பென்றாகின்றன. அறிஞர் அவைகள் வெறும் கூச்சல்களாகின்றன. போர்கள் இளிவரல் நடிப்புகளாகின்றன. ஆயிரம் ஆண்டுகளாக இங்கு ஆன்றோர் அமைத்த அனைத்தையும் குலைத்து நிற்கும் இவ்விழிமகன் அவையிலிருந்து விழிநீருடன் இறங்கிச் சென்றாலொழிய என் நெஞ்சு அமையாது. மூத்தோரே, இவன் யார்? எதன் பொருட்டு துளித்துளியாக இங்கு சேர்க்கப்பட்ட அனைத்தையும் சிதறடிக்கிறான்? கூடாரத்தை அவிழ்த்து நிலம்படியச் செய்பவன்போல் அனைத்தையும் முடிச்சறுத்து தாழ்த்தியபின் இவன் அமைக்கப்போவதுதான் என்ன?”
“அனைத்தையும் இங்கே ஆக்குவது என்ன மாயம் என்று நான் சொல்கிறேன். இவன் அழகு. அவையீரே, அழகை நன்றென்று நம்பும் பேதைமையை கடக்காமல் விடுதலை எவருக்குமில்லை. பாம்பும் அழகே. காட்டெரியும் அழகே. நச்சூறிய மதுவும் நற்குடுவையில் அழகே. இன்று என் நெஞ்சில் கைவைத்தறிகிறேன். நான் நின்றிருக்கும் மண்ணை நெருப்பாக்க வந்த கீழ்மகன் இவன். உயிருடன், தோள்களுடன், சொல்லுடன், அனலுடன் நான் எஞ்சும் வரை இவன் இங்கு அவைமுதன்மை கொள்ள முடியாது.”
“ஏன்? ஒற்றைச் சொல்லில் அதை சொல்க!” என்றான் அர்ஜுனன். “ஒற்றைச் சொல் வேண்டுமென்றால் இதோ, இவன் ஷத்ரியன் அல்ல. பிற அனைத்தையும் பேச வேறு களம் தேவை. இது சடங்குமுகப்பு. ஆகவே இதுவே என் சொல். இவன் ஷத்ரியனல்ல” என்றான் சிசுபாலன். “ஆம், இவன் ஷத்ரியனல்ல” என்றான் ருக்மி. இருகைகளையும் விரித்து “அவையீரே, கேளுங்கள்! விதர்ப்பம் வில்லனுப்பியது ஷத்ரியர் ஆள்கின்ற இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்திற்கு. விண்வேந்தன் இறங்கி அருளும் வேள்விப்பந்தலுக்கு. கன்றோட்டி காடளக்கும் கீழ்மகன் தலைமை கொள்ளும் அவைக்கு அல்ல. விதர்ப்பம் இதை ஏற்காது” என்றான்.
ஜயத்ரதனும் எழுந்து “ஆம், சிந்து நாட்டிற்கு சொல்லப்படவில்லை, இவ்வவையில் இவன் அவைத்தலைமை கொள்வான் என்று” என்றான். அவர்களிருவரும் எழுந்ததும் சிறுகுடி ஷத்ரியர்கள் பலர் ஆங்காங்கே எழுந்தனர். “ஆம், ஷத்ரியநெறிப்படி நாங்கள் வேதத்தால் அரியணை அமர்த்தப்படாத ஒருவனை எங்கள் தலைவன் என ஏற்கமுடியாது” என்றனர். “ஆம், இங்கு இந்த அவையில் களத்தில் எந்த ஷத்ரியனை இவன் எதிர்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்புகிறேன்” என்று தன் கையைத்தூக்கியபடி எழுந்தான் மாளவன்.
கூர்ஜரன் “அதையே நானும் கேட்க விழைகிறேன். இவ்வவையில் இவன் முதன்மை கொண்டானென்றால் நாளை காடு தெளித்து கன்றுநிலை உருவாக்கி, குடித்தலைமை கொண்டு, வளைகோலேந்தி நிற்கும் ஒவ்வொரு யாதவனும் தன்னை அரசனென்று அறிவிப்பானல்லவா? சொல்லுங்கள், பாரதவர்ஷத்தில் இனி எத்தனை அரசர்கள்?” என்றான். வங்கன் “பீஷ்மர் இதற்கு விடை சொல்லட்டும். அவருக்கு சொல்லில்லை என்றால் வேதம் பழித்து வெறுஞ்சொல் எடுத்து நிற்கும் இந்த யாதவன் சொல்லட்டும். இனி எவர் வேண்டுமானாலும் அரசர் என்று தன்னை அறிவிக்கலாகுமா? அரசர் என்று அமைவதற்கான நெறிகள் என்ன?” என்றான்.
துரோணர் “இது கொள்கைசூழும் அறிஞரவையல்ல, வேள்விச்சாலை. இங்கு சொல்லெண்ணி முடிக்கும் வினாவல்ல நீங்கள் எழுப்புவது. அதை குருகுலங்களில் முனிவர் செய்யட்டும். வைதிகர் அவைகளில் வேதம் உணர்ந்தோர் செய்யட்டும். நாம் இங்கு ஆற்றுவது வேறு” என்றார். “அவ்வண்ணமெனில் இன்று இந்த அவை விட்டு இவன் இறங்கட்டும். பீஷ்மரோ சல்யரோ அல்லது தாங்களோ குடித்தலைமை கொள்வதில் எங்களுக்கு மாற்றில்லை. முனிவரும் வைதிகரும் புலவரும் கூடி முடிவெடுக்கட்டும், நிலம் வென்று நாடாளும் உரிமை எவருக்குண்டென்று. எவன் சூடும் முடி பிற அரசரால் ஏற்கப்படவேண்டுமென்று” என்றான் ருக்மி.
ஜயத்ரதன் “நாளை கிளைதோறும் தாவும் குரங்கொன்று தூங்கும் அரசனின் முடியொன்றை எடுத்துச்சூடி வந்தமர்ந்தாலும் வைதிக வேள்விகளில் பீடம் அமையுமா என்றறிய விழைகிறேன்” என்றான். ஷத்ரியர் அவையெங்கும் சிரிப்பலை எழுந்தது. “நிறுத்துங்கள்!” என்று சகதேவன் கூவினான். “இங்கு எழுந்து குரலெழுப்பும் ஒவ்வொருவரையும் என்னுடன் போருக்கழைக்கிறேன்” என்றபடி தன் வாளை உருவிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.
இடையில் கைவைத்து நாடகமொன்றைப் பார்த்து மகிழ்ந்து நிற்பவர்போல தெரிந்த இளைய யாதவர் இரண்டு கைகளையும் தூக்கி “செவி கொடுங்கள்! ஓசையடங்கி செவி கொடுங்கள்!” என்று கூவினார். துரோணர் எழுந்து “அவர் சொல்வதை கேளுங்கள்!” என்று ஷத்ரியர்களை நோக்கி சொன்னார். கலைந்து ஓசையிட்டுக் கொண்டிருந்த ஷத்ரியர்கள் மெல்ல கைதாழ்த்தி அமைந்தனர். இளைய யாதவர் முகத்தில் முதன் முறையாக சினத்தை அனைவரும் கண்டனர். உரத்த குரலில் “அவையீரே, அரசர்களே, எந்த நெறிப்படி நான் துவாரகையின் முடி சூடிக் கொண்டேனோ, என்னை இங்கு அரசனென முன் வைத்தேனோ, அந்த நெறிப்படியே உங்கள் வினாக்களுக்கான விடையை சொல்கிறேன்” என்றார்.
உறுதியான குரலில் “அறிக, ஷத்ரியன் என்பவன் ஷத்ரியர்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். கன்றோட்டி பால் கறந்து நெய்யெடுப்பவன் யாதவன் என்றால், உழுது அமுது விளைவிப்பவன் வேளிர் என்றால் வெல்லற்கரிய வாளை ஏந்துபவன் ஷத்ரியன்” என்றார். தன் படையாழியைத் தூக்கி அறைகூவினார் “இதோ, என் படைக்கலம். என்னை ஷத்ரியனல்ல என்றுரைக்க இவ்வவையில் துணிபவர் எவரேயாயினும் எழுக! ஆயிரம் செவிகள் மலர்ந்துள்ள இந்த அவையில் சொல்கிறேன், தெய்வங்கள் நுண்ணுருவாக எழுந்த இக்காற்றிலெழுக என் வஞ்சினம்! எவன் அவ்வண்ணம் இந்த அவையில் கைதூக்கி எழுகிறானோ அவன் குடியின் இறுதிக்குழந்தையின் தலையையும் அறுத்த பின்னரே இப்படையாழி அமையும். என் கொடிவழியின் இறுதி மைந்தன் எஞ்சுவதுவரை அவ்வஞ்சம் நீடிக்கும். அச்சமற்றவர் எவரேனும் இருந்தால் எழுக! ஐம்பத்தாறு ஷத்ரியர்களில் ஒருவர் துணிந்தால் எழுக!”
அக்குரல் கேட்டு அங்கிருந்த அனைவருமே உளம் நடுங்குவதை காணமுடிந்தது. அங்கு கவிந்த முற்றமைதியில் எரி எழுந்து படபடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. “எவர்வேண்டுமென்றாலும் எழுக! ஆனால் எண்ணி எழுக! எழுந்தபின் உங்கள் மூதாதையர் பிறகொருபோதும் விண்ணில் அன்னமும் நீரும் கொள்ளப்போவதில்லை என்றுணர்க!” என்று அவைசூழ்ந்து முழங்கிய பெருங்குரலில் அவர் சொன்னார்.
“நான் அறைகூவுகிறேன்!” என்றபடி சிசுபாலன் முன்னே வந்தான். “நீ இழிமகன் என்றும் ஷத்ரியன் அல்ல என்றும் நான் உரைக்கிறேன். உனக்கிணையாக படையாழி ஏந்தி நின்று போரிட நான் சித்தமாக உள்ளேன்” என்றான். “இவனுடன் படைத்துணை கொள்ள இங்கெவரேனும் உளரா?” என்றார் இளைய யாதவர். சிசுபாலன் திரும்பி நோக்காமல் உரக்க நகைத்து “எவரும் இருக்க மாட்டார்கள் என்று நானறிவேன். யாதவனே, இந்நகரில் காலெடுத்துவைத்த முதற்கணமே உணர்ந்தேன் இத்தருணத்தை” என்றான்.
வங்கனும் மாளவனும் கலிங்கனும் சொல்லிழந்தவர்களாக பீடங்களில் ஒட்டி அமர்ந்திருந்தனர். ஜயத்ரதன் குனிந்து கர்ணனிடம் ஏதோ சொல்ல அவன் அதை கேளாதவன்போல் அமர்ந்திருந்தான். பீஷ்மர் சிசுபாலனை நோக்கி “மூடா! எங்கு செல்கிறாய் என்று அறிந்திருக்கிறாயா? செல், இளமையில் உன்னை இத்தோள்களிலும் மடியிலும் ஏந்தியவன் என்ற உரிமையில் சொல்கிறேன், செல்! விலகிச் செல்!” என்றபின் “யாதவரே, மீண்டும் நீங்கள் பொறுத்தருளவேண்டும். இவன் ஆணவத்தால் அறியா சொல்லெடுத்தான்” என்றார். “என் குடியின் இளையோர் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்தீர். இவனுக்கும் அளிகூர்க!” என்றார்.
இளைய யாதவர் “பொறுத்தருள்க, பிதாமகரே! இவன் என் அத்தை மகன். என் மடி அமர்ந்த சிறுவன். அன்று இவன் அன்னைக்கு ஒரு சொல்லளித்தேன், நூறு முறை இவன் பிழை பொறுப்பதாக. இது நூற்றொன்றாவது பிழை என்று உணர்கிறேன்” என்றார். “ஆம், நூறுமுறை உன்னை எதிர்கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் நான் ஆற்றல் பெற்றவனானேன்” என்று சிசுபாலன் சொன்னான். “இன்று எழுந்து நின்று உன் முன் இப்பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் உரைக்கத் துணியாத சொல்லை உரைக்கிறேன். நீ கொண்டிருக்கும் முடி பொய். உன் குலம் இழிந்தது” என்றான் சிசுபாலன்.
“உன்னை நான் போருக்கு அழைக்கிறேன், இளையோனே” என்றார் இளைய யாதவர். “அழைத்தது நானென்பதால் விரும்பிய படைக்கலம் எடுக்க உனக்கு ஒப்புதல் அளிக்கிறேன். விரும்பிய இடத்தில் விரும்பிய படைத்துணையுடன் நீ போருக்கு வரலாம். ஆனால் போருக்கெழுந்துவிட்டபின் ஒரு தருணத்திலும் என் படையாழி உன்னை பொறுத்தருளாது என்றுணர்ந்துகொள்!” சிசுபாலன் பெருங்குரலில் “இங்கேயே இத்தருணத்திலேயே எதிர்கொள்கிறேன். இதைக்கடந்து சென்று முடிந்தால் நீ இவ்வேள்விக்கு தலைவனாக ஆகு” என்றான்.
“உன்னை கொல்வதைப்பற்றியே நாற்பதாண்டுகாலம் கனவுகண்டவன். நாற்பதாண்டு என் உயிரென எரிந்த சுடர் அவ்வஞ்சம்” என்று அவன் தொடர்ந்தான். “படைத்துணை தேடி சிந்துவுக்கும் மாளவத்துக்கும் கூர்ஜரத்துக்கும் விதர்ப்பத்துக்கும் சென்றிருந்தேன். இன்றறிந்தேன், தனித்து நிற்பவனே உன்னை எதிர்கொள்ள முடியுமென்று. ஏனெனில் பல்லாயிரம்பேர் சூழ நிற்கையிலும் நீ தனித்திருக்கிறாய். உனது தனிமையின் நிழலென இங்கு நின்றிருக்கிறேன். இது கருவில் முதல் துளி பெறுகையில் என் அன்னைக்கு கொடுத்த வாக்கென்றுணர்க! இழிமகனே, உன் படையாழி என் படையாழியை எதிர்கொள்ளட்டும்” என்றான் சிசுபாலன்.
துரோணர் அவை நோக்கி “அவ்வண்ணமெனில் இங்கு இரட்டையர் போருக்கு முடிவெடுப்போம். இணையாத பாதைகள் சென்று முட்டும் இறுதியிடம் அதுவே. போர்வீரர்களுக்கு உகந்தது என நூல்களால் கூறப்பட்டுள்ளதும், வீழ்ந்தாலும் வென்றாலும் புகழ் அளிப்பதும், களம்பட்டால் விண்ணுலகு சேர்ப்பதுமான இரட்டையர் போர் இங்கு நிகழ்வதாக!” என்றார். “ஆம், அது நிகழட்டும்” என்று பின்னிலிருந்து எவரோ குரல் எழுப்பினர். ஆனால் ஷத்ரியர்கள் திகைத்தவர்கள்போல் அசையாதிருந்தனர்.
அசுரகுடித் தலைவராகிய வஜ்ரநந்தர் “களம் அமையுங்கள். நடுநிற்போரை அறிவியுங்கள். இன்றே இங்கு இதற்கொரு முடிவு எழட்டும்” என்றார். தருமன் தன் அரியணையில் எழுந்து “இந்த அவையின் கோரிக்கைக்கு ஏற்ப வேள்விப்பந்தலுக்கு வடக்கே அமைந்துள்ள களத்தில் விருஷ்ணிகுலத்தவரும், மதுவனத்தின் சூரசேனரின் பெயரரும், மதுராவின் வசுதேவரின் மைந்தரும், துவாரகையின் அரசருமான வாசுதேவ கிருஷ்ணனுக்கும், ஷத்ரிய குடியில் உபரிசிரவசுவின் கொடி வழிவந்தவரும், சேதி நாட்டு தமகோஷரின் மைந்தரும், சேதிநாட்டரசருமாகிய சிசுபாலனுக்கும் நடுவே இரட்டையர் போரை நான் அறிவிக்கிறேன்” என்றார்.
போர் அறிவிப்புகளை கைதூக்கி ஓசையிட்டு வரவேற்கும் முறைமை இருந்தும் அவை அமைதியாகவே இருந்தது. தருமன் “இப்போருக்கு மூவரை நடுவராக இருக்க வேண்டுமென்று கோருகிறேன். வில்லவர்க்கு முதல்வராகிய சல்யரும், முதற்பெரும் ஆசிரியராகிய துரோணரும், போர்க்கலையறிந்த அந்தணராகிய கிருபரும் அப்பொறுப்பை ஏற்றருள வேண்டுகிறேன்” என்றார். பீஷ்மர் “ஆம். அவர்களே உகந்தவர்கள்” என்றார். கிருபரும் சல்யரும் துரோணரும் எழுந்து தலைவணங்கி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
“போருக்கு நற்பொழுது குறிக்கும் வழக்கமுண்டு. ஆனால் வஞ்சினம் உரைத்தபின் எப்பொழுதும் நன்றே என்று நூல்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். “இங்கு இப்போர் முடிந்தபின்னரே வேள்வி எழும் என்பதனால் உடனே போர் தொடங்குகிறது. போருக்கு களம் சென்று நிற்பது வரை போரிலிருந்து விலக இருவருக்கும் உரிமையுண்டு. களம் சென்று கச்சை கட்டிய பின்னர் தோல்வியை ஏற்காது விலகலாகாது” என்றார் கிருபர். “பார்த்துவிடுவோம். எங்கே சூதர்கள்? எங்கே புலவர்கள்? எங்கே விண்ணெழுந்த தேவர்கள்? மூதாதையர்கள்? நீங்கள் அறிக! இக்கணத்தின் உண்மை எதுவென்று அறிவீர்கள்” என்று சிசுபாலன் சொன்னான்.
நடுவர் மூவரும் எழுந்து அவை வணங்கி வடக்கு வாயிலினூடாக களம் நோக்கி சென்றனர். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் மாணவர்களும் பிற ஷத்ரியர்களும் செல்லத்தொடங்கினர். அரசர்கள் எழுந்து தங்களுக்குள் கலைந்து பேசிக்கொண்டு ஏவலர்களை அழைத்துக்கொண்டு களம் நோக்கி செல்ல கர்ணன் துரியோதனனிடம் “மூடன்! இவன் என்னதான் எண்ணுகிறான்?” என்றான். ஜயத்ரதன் “அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். களப்பலி ஆகி நூல்களில் புகழ்பெற விழைகிறான்” என்றான்.
கர்ணன் “இப்போது தெரிகிறது. அவனை முதற்கணம் பார்த்தபோதே அவனில் நிகழ்வதென்ன என்று என் உள்ளம் திகைத்தது. எங்கோ சென்று கொண்டிருப்பவனை இடைவெளியில் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இருகைகளையும் முறுக்கி தன் பீடத்தின் மேல் ஓங்கி அறைந்தபடி துரியோதனன் எழுந்தான். “அரசே!” என்று அவன் தோளைத் தொட்ட கர்ணனின் கைகளை தட்டியபடி பலபீடங்களை காலால் தட்டி விலக்கியபடி திமிரெழுந்த யானைபோல முன் நிரையில் அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி சென்றான். உரத்த குரலில் “பிதாமகரே, இங்கு நிகழவிருப்பது என்னவென்று அறியவில்லையா? என் தோழன் இதோ களம்படவிருக்கிறான்” என்றான்.
பீஷ்மர் தன் தாடியை நீவியபடி “அவன் வீரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கை உனக்கில்லை போலும்” என்றார். துரியோதனன் “அவன் வீரத்தை நம்புகிறேன். அதைவிட இவன் சூழ்ச்சியை அஞ்சுகிறேன்” என்றான். “தான் வெல்லமுடியும் என்று ஐயத்திற்கிடமின்றி தெரியவில்லை என்றால் இவன் களமிறங்கமாட்டான், பிதாமகரே.” பீஷ்மர் “போரில் வெல்வதும் வீழ்வதும் தெய்வங்களின் எண்ணம். இளையோனே, நீ படைக்கலம் பயின்றவன். நீ அறிந்திருப்பாய், எப்போரிலும் படைக்கலங்களின் எண்ணம் என ஒன்று உண்டு. பெருவீரர்களை அறியாச்சிறுவர் வீழ்த்தலாகும். எவரும் தங்கள் படைக்கலன்களைக் கடந்த சித்தம் கொண்டவர்கள் அல்ல. ஆழியில் உறையும் தெய்வம் முடிவெடுக்கட்டும்” என்றார்.
துரியோதனன் “இது ஒவ்வாதது. என்னால் உடன்பட ஒப்பாதவை இச்சொற்கள். இங்கு வெறும் விழிகொண்டவனாக நான் இருக்க இயலாது” என்றான். பீஷ்மர் “இதில் நீயோ நானோ செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “நான் களமிறங்குகிறேன். அவனுக்கு படைத்துணையாக நான் களமிறங்குகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். பீஷ்மரின் முகம் இறுகியது. “இறங்கலாம், ஆனால் அஸ்தினபுரியின் முடியை அகற்றிவிட்டு என் குலக்கொடி வழி என்பதை மறுத்துவிட்டுத்தான் அது நிகழவேண்டும்” என்றார்.
தளர்ந்த குரலில் “பிதாமகரே, ஒவ்வொரு தோழனும் களம்படும்போது கையறுநிலையில் நோக்கி நிற்கவா என்னை ஆணையிடுகிறீர்கள்?” என்றான் துரியோதனன். “இளையோனே, உன் களங்களை நீயே அமை. அதில் நின்றாடு.” அவர் குரல் கனிந்தது. “மைந்தா, அரசன் என்பவன் தன் குடிகளின் நலன் பொருட்டன்றி வேறெந்த நோக்கத்துடனும் படைக்கலம் ஏந்தும் உரிமையற்றவன். மலைவேடனுக்கு, ஏன் ஒரு காட்டுவிலங்குக்கு இருக்கும் உரிமைகூட ஓர் எளிய ஷத்ரியனுக்கு இல்லை என்பதை அறிக! அவர்கள் சினம்கொண்டு படைக்கலம் ஏந்தலாம். வஞ்சத்தில் களம் புகலாம். களியாட்டெனவும் கொல்லலாம். ஆனால் குடிநலனன்றி வேறு எந்த நோக்கத்துடனும் படைக்கலன் ஏந்தும் அரசன் இழிவை தன் மூதாதையருக்கு தேடிக் கொடுக்கிறான்.”
“ஏனெனில் அரசனாகிய நீ முறைப்படி தெய்வங்களை வணங்கி படைக்கலம் பயின்றவன். அக்கலையை உனக்களிக்கும் தெய்வங்கள் உனது நாட்டு மக்களின் காவலன் என்று மட்டுமே உன்னை காண்கின்றன. வேலியின் முள் பயிர்களின் ஏவலன் என்பதை மறவாதே.” துரியோதனன் பொறுமையிழந்து கையை வீசி “பிதாமகரே, என்றேனும் ஒரு நாள் உங்கள் முன் என் நெஞ்சை அரிந்து குருதியுடன் இறந்துவிழுவேன். நீங்களும் தந்தையும் அன்று அதை அள்ளி முகத்தில் பூசி கொண்டாடுங்கள்” என்றான்.
பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் நெகிழ்ந்த குரலில் “பிதாமகரே, சங்கிலிகளால் தளைக்கப்பட்டு சிறையிடப்பட்ட யானை கைகளிலும் கால்களிலும் ஆறாப்புண்ணுடன் மட்டுமே வாழமுடியும் என்பதை நான் இறந்தபின் உணர்வீர்கள்” என்றபின் திரும்பிச் சென்றான்.
அவனுக்குப்பின்னால் வந்த கர்ணன் அவன் தோள்களில் கைவைத்து “அரசே, இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவன் தன் இறப்பை தான் நாடிச்செல்கிறான். பலிபீடம் நோக்கி செல்லும் விலங்குகள் அங்கிருக்கும் தெய்வத்தின் விழி ஒளியால் விட்டில்கள் போல் ஈர்க்கப்படுகின்றன என்பார்கள். அவன் உடலைப் பாருங்கள்! அவன் நடையில் எழுந்திருக்கும் மிடுக்கே காட்டுகிறது, அவன் முற்றிலும் பிறிதொருவனாக ஆகிவிட்டான் என்று. அறியாதெய்வம் வெறியாட்டெழுந்த பூசகன்போல் தோன்றுகிறான்” என்றான்.
“இனி அவன் நம்மவன் அல்ல. அவன் தந்தைக்குரியவன் அல்ல. அவன் குடிகளுக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லை. அவன் செல்லும் வழி வேறொன்று. நம்மனைவரையும் கையிலிட்டு ஆட்டும் அறியாமெய்மையால் வழிநடத்தப்படுகிறான் அவன்” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கையை விலக்கிவிட்டு கொந்தளிப்பான முகத்துடன் முன்னால் சென்றான். ஜயத்ரதனும் ருக்மியும் அவனருகே வந்து நின்றனர். அவர்களுக்கப்பால் எவரையும் நோக்காதவனாக கையில் தன் படையாழியுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்காற்றில் எழுந்து பறந்த குழல்களுடன் சிற்றலைகளாக நெளிந்த தாடியுடன் சிசுபாலன் வெளியே சென்றான்.
[ 10 ]
ராஜசூயப்பந்தலுக்கு வடக்காக அமைந்த சிறுகளத்தில் அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் வந்து சூழ்ந்து நிற்பதற்குள்ளாகவே ஏவலர் விரைந்து நிலத்தை தூய்மைப்படுத்தி களம் அமைத்தனர். களத்தைச் சூழ்ந்தமைந்த தூண்களில் கட்டப்பட்ட பந்தங்களின் செவ்வொளியில் களம் ஏற்கெனவே குருதியாடியிருந்தது. அரசர்களுக்குப் பின்நிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குடிகளும் வணிகர்களும் சூழ்ந்தனர். சற்று நேரத்தில் முகங்களால் ஆன கரை கொண்ட நீள்வட்டவடிவ அணிச்சுனை போல அக்களம் மாறியது. அதன் தென்மேற்கு மூலையில் மண்பீடம் அமைக்கப்பட்டு அதில் உருளைக்கல்லில் விழிகள் எழுதப்பட்ட கொற்றவை பதிட்டை செய்யப்பட்டாள். களத்தின் நான்கு எல்லைகளிலும் போருக்கான கொடிமரங்கள் நிறுத்தப்பட்டன. தருமன் அங்கே போடப்பட்ட பீடத்திலமர்ந்தார். பின்னால் தம்பியர் நின்றனர்.
இளைய யாதவருக்கு களத்துணையாக சாத்யகி வந்தான். அவர்களிருவரும் களத்தின் கிழக்கு மூலையில் இருந்த சிறு மரமேடைக்கு சென்று அமர்ந்தனர். சாத்யகி இளைய யாதவரின் அணிகலன்களையும் பொற்பட்டுக் கச்சையையும் கழற்றி ஒரு கூடையில் வைத்தான். இளைய யாதவர் புன்னகை படிந்த முகத்துடன் மிக இயல்பான அசைவுகளுடன் இருந்தார்.
மேற்கு மூலையில் களத்துணை இன்றி தனியாக சிசுபாலன் நடந்து வந்தான். அரசர்களிலிருந்து ருக்மி எழுந்து களத்துணையாகும்பொருட்டு அவன் பின்னால் செல்ல சிசுபாலன் திரும்பி அவனை எவரென்றே அறியாத விழிகளுடன் “உம்!” என்று உறுமி விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினான். “சேதிநாட்டரசே, தங்கள் படைத்துணைவராக…” என்று அவன் சொல்ல காட்டுப்பன்றி என சிலிர்த்து சிவந்த மதம் கொண்ட விழிகளால் அவனை நோக்கி “உம்” என்றான் சிசுபாலன் மீண்டும்.
ருக்மி நின்றுவிட்டான். இறுக நாணேற்றிய வில்லெனத் தெறித்து நின்ற உடலுடன் களத்துக்கு வந்து தன் அணிகளையும் எழிற்கச்சையையும் இடக்கையால் அறுத்து அப்பால் வீசினான் சிசுபாலன். அடியிலணிந்திருந்த தோற்கச்சையை இழுத்து மீண்டும் கட்டி தோளில் புரண்ட குழல்களை கொண்டையாக்கி பின்னாலிட்டு தாடியை கையால் சுழற்றி முடிச்சிட்டான். தன் படையாழியை எடுத்து இயல்பாக ஒருமுறை மேலே சுழற்றி கையில் பிடித்தபடி கால் விரித்து களத்தில் நின்றான்.
அறைகூவலை சிசுபாலன் முன்னரே விடுத்துவிட்டதைக்கண்ட சாத்யகி குனிந்து கிருஷ்ணனிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் புன்னகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு தன் படையாழியை எடுத்தபடி எழுந்தார். இருவருடைய படையாழியும் ஒரே அளவில் ஒரே ஒளியுடன் ஒன்றின் இருபக்கங்களென தோன்றின. களத்தில் இறங்கி பூழியில் காலூன்றி நிலைமண்டலத்தில் இளைய யாதவர் நிற்க களமையத்தில் நின்றிருந்த சல்யரும் கிருபரும் துரோணரும் எழுந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ஓசை அறும்படி கைகாட்டினர்.
துரோணர் உரத்த குரலில் “அவையீரே, இன்று இக்களத்தில் எதிர்நிற்கப்போகும் இருவரும் தாங்கள் தேர்ந்த படைக்கலங்களால் போரிடப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் தொன்மையான போர்நெறிகளின்படி இப்போர் நிகழும். தோற்றுவிட்டேன் என்று அறிந்தபின்னரும் அடைக்கலம் புகுந்தபின்னரும் போர் நிகழலாகாது. படையாழியே படைக்கலம் என்பதால் பிறிதொரு படைக்கலம் பயன்படுத்தலாகாது. பூழியோ காற்றோ அல்லது பிற பொருட்களோ பார்வையை மறைக்கும்படி கையாளலாகாது. படைபொருதும் வீரரன்றி பிறர் களமிறங்கலாகாது. வென்றபின் தோற்றவனை வணங்கி அவனை விண்ணேற்றிவிட்டே வென்றவன் களம் விலகவேண்டும்” என்றார். “ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார் கிருபர். “ஓம்! ஓம்! ஓம்!” என்று சூழ்ந்திருந்த ஷத்ரியர் முழங்கினர்.
களமூலைகளில் நின்ற கொடிமரங்களில் போர் தொடங்குவதற்கான செங்குருதிக் கொடி ஏறியது. கூடிநின்றவர்கள் “மூதாதையரே! கொற்றவை அன்னையே! அருள்க தேவர்களே!” என்று கூவினர். செம்பட்டு உடுத்த முதியபூசகர் வந்து உடுக்கோசையுடன் தென்மேற்குமூலையில் அமைந்த கொற்றவைக்கு ஒரு சொட்டுக் குருதி அளித்து பூசனைசெய்தார். அவர் வணங்கி பின்னகர்ந்ததும் தருமனும் இளையோரும் அன்னையை வணங்கினர். துரோணர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து முழக்கியதும் களம் ஒருங்கியது. பந்த ஒளியில் அக்காட்சி சற்றே நடுங்க அது தங்கள் கனவோ விழிமயக்கோ எனும் எண்ணத்தை கூடியிருந்தோர் அடைந்தனர்.
சிசுபாலன் தன் படையாழியை கையில் சுழற்றியபடி மூன்றடி முன்னெடுத்து வைத்து இளைய யாதவரை நோக்கி ஏளனப்பெருங்குரலில் நகைத்து “இழிமகனே, உன் தலையை துணிக்கப்போகும் படையாழி இது. இதன் நிழலையே இது நாள்வரை உன் இல்லத்தில் வைத்து வணங்கினாய்” என்றான். “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் இறப்பையே முதன்மையாக வழிபடுகிறார்கள். நீ இதுநாள் வரை படைக்கலமெனப் பயின்றது உன் இறப்பையே!”
இளைய யாதவர் புன்னகைத்தார். சிசுபாலன் “உன் பயின்றமைந்த ஆணவப் புன்னகையை கடந்து செல்ல என்னால் இயலும், யாதவனே. உன் இல்லம் விட்டு கிளம்புகையில் உன் துணைவியரிடம் விடைபெற்று வந்தாய் அல்லவா? இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா? ஏனெனில் உனக்கு முன்னரே அவர்களை உளம் மணந்தவன் நான். என்னைக் கண்டபின்னே உன்னைத் தெரிவு செய்திருப்பவர்கள் அவர்கள். எனவே நீ திகழும் வெளியின் விரிசல்கள் அனைத்திலும் ஆழ்ந்திருப்பவன் நானே. நீ தோற்ற களங்கள் அனைத்திலும் நான் வெல்வேன்” என்றான்.
உரக்க நகைத்து சிசுபாலன் சொன்னான் “நீ விண் வாழும் ஆழிவண்ணனின் மண் வடிவம் என்கின்றனர் சூதர். இழிமகனே, விண் தெய்வமே ஆனாலும் பெண் உளம் கடத்தல் இயலாது என்று அறிக!” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே? உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா?” என்றார். “ஆம், உன் அரண்மனை வாழும் பெண்டிரின் நிழல்வடிவுகளையே நான் என் அரண்மனையில் வைத்துள்ளேன். நான் திகழும் மஞ்சங்களில் எப்போதும் நீ இருந்தாய் என்று அறிந்தேன். எனவே நீ திகழும் இடங்களில் எல்லாம் நான் இருப்பதையும் உறுதிசெய்துகொண்டேன்.”
“அடேய் கீழ்மகனே, இங்கு போரிடுவது நீயும் நானும் அல்ல. நீயென்றும் நானென்றும் வந்த ஒன்று” என்றான் சிசுபாலன். “உன் பெண்டிர் உள்ளத்தின் கறை நான். உன் அச்சங்களில் எழும் விழி நான். நீ குலைந்தமைந்த வடிவம் நான்.” இளைய யாதவர் ”ஆம், நான் போரிடுவது எப்போதும் என்னுடன் மட்டுமே” என்றார்.
“வீண்சொல் வேண்டாம், எடு உன் படைக்கலப்பயிற்சியை” என்றான் சிசுபாலன். அவன் தன் படையாழியைச் சுழற்றி வீச அதே கணத்தில் எழுந்த இளைய யாதவரின் படையாழி அதை காற்றில் சந்தித்தது. இருபடையாழிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி திடுக்கிட்டுத் தெறித்து ரீங்கரித்து சுழன்று மீண்டும் அவற்றை ஏவியவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தன. காற்றில் ஒன்றை ஒன்று போரிடும் பறவைகளென துரத்தித் துரத்தி, கொத்தி, சிறகுரசி, உகிர் கொண்டு கிழித்து மேலும் கீழுமென பறந்து எழுந்து அமைந்து போரிட்டன. அக்களத்தைச் சுற்றியும் கால்மடித்தெழுந்தும், கை சுழற்றி இடை வளைத்தும், தோள்வளைந்து எழுந்தும், தாவியும் இருவரும் அப்படையாழியை ஏவினர். பறந்து மரத்திற்கு வந்து மீளும் பறவைகள் போல அப்படையாழிகள் அவர்கள் கைகளுக்கு வந்தன.
இருவர் முகமும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி கனவில் ஆழ்ந்திருந்தன. “பெருங்காதல் கொண்ட இருவர் மட்டுமே இப்படி ஒருவரில் ஒருவர் ஆழ முடியும்” என்றான் ஜயத்ரதன். “பெருங்காதல் ஒருவரை பிறிதொருவர் உண்ணுவதில் முடியும்” என்று கைகளைக் கட்டியிருந்த கர்ணன் சொன்னான். படையாழிகள் சுழன்று மண்ணை சீவித் தெறித்து பறக்கவிட்டு மேலெழுந்தன. செங்குத்தாக பாய்ந்து மேழியென உழுது மேலேறின. அங்கு கூடி நின்றவர்களின் செவிகளில் காற்றின் ஓசை எழுப்பி மிக அருகே பறந்து சென்றன. அவற்றின் பரப்பு திரும்பிய கணங்களில் கண்ணை அடைத்து மறைந்த மின்னலைக் கண்டனர். சினந்த கழுகுகள் போல் அவற்றின் அகவலை கேட்டனர்.
இரண்டு படையாழிகளும் ஒன்றெனத் தோன்றின. “இதில் எது அவனுடையது?” என்றான் ருக்மி. அப்பால் நின்றிருந்த முதிய ஷத்ரியர் “இரண்டும் அவனுடையதே” என்றார். ருக்மி திரும்பி நோக்கி பல்லைக் கடித்தபடி சொல்லெடுக்காமல் முகம் திருப்பிக்கொண்டான். நத்தை நீட்டிய ஒளிக்கோடென சென்றது ஓர் ஆழி. அதைத் தொட்டு தெறிக்க வைத்து வானில் எழுப்பியது பிறிதொரு ஆழி. அனல்பொறிகள் பறக்க ஒன்றையொன்று தழுவியபடி வானில் எழுந்து சுழன்று மண்ணில் அமைந்தன. உருண்டு காற்றில் ஏறி மிதந்து தங்கள் உடையவன் கைகளை அடைந்தன.
இருவரும் முற்றிலும் இடம் மாறி இருப்பதை கர்ணன் கண்டான். இருவரும் அங்கிலாதிருப்பதை பின்பு உணர்ந்தான். படையாழிகள் மீள மீள ஒற்றைச் சொல்லை சொல்லிக் கொண்டிருந்தன. ஊழ்கத்தில் அமர்ந்த முனிவரின் உளத்தெழுந்த நுண்சொல் போல. சிறகுரீங்கரிக்கும் வண்டுகள். சிதறிச்சுழலும் நீர்வளையங்கள். இரும்பு ஒளியென்றாகியது. ஒளிகரைந்து வெளியாகியது. பொருளென்று அறிபவை அசைவின்மையின் தோற்றங்களே என்று கர்ணன் நினைத்தான். விரைவு அவற்றை இன்மையென்றாக்கிவிடுகிறது.
“இது வெறும்படைக்கலப் பயிற்சி அல்ல. பருப்பொருளொன்று எண்ணமென்றும் உள்ளமென்றும் ஊழ்கமென்றும் ஆவது” என்றான் தருமனின் அருகே நின்றிருந்த பீமன். களத்திலிட்ட மரத்தாலான பீடத்தின் நுனியில் உடல் அமைத்து கைபிணைத்து பதறிய உடலுடன் அமர்ந்திருந்த தருமன் “எத்தனை பொழுதாக நடைபெறுகிறது இந்தப்போர்? ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது?” என்றார். நகுலன் அவருக்குப் பின்னால் நின்றபடி “இது ஊழிப்போர், மூத்தவரே” என்றான். “முடிவற்றது. முடிவில் மீண்டும் முளைப்பது.”
பெண்டிர் அணிவகுத்த தென்மேற்குப் பகுதியின் மையத்திலிட்ட பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குந்தி புன்னகை நிறைந்த விழிகளுடன் இளைய யாதவரின் உடலில் மட்டுமே விழிநட்டு அமர்ந்திருந்தாள். மைந்தன் நடைபழகக் காணும் அன்னையைப்போல. அங்கு நிகழ்வதென்ன என்று முற்றிலும் அறியாதவள் போல் விழிநோக்கு மறைய முகம் கற்சிலையென இறுக நிகரமைந்த நெடுந்தோள்களுடன் அசைவற்று அமர்ந்திருந்தாள் திரௌபதி.
இருவீரர்கள் கால்களையும் ஜயத்ரதன் நோக்கிக் கொண்டிருந்தான். அவை முற்றிலும் தாளத்தில் அமைந்த மிக அழகிய நடனமொன்றை மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருந்தன. மெல்லிய சிலிர்ப்புடன் அவன் நிமிர்ந்து அவர்களின் கைகளை பார்த்தான். அவை காற்றில் நெளிந்தும், சுழித்தும், சுழன்றும் பறந்தன. விரல்கள் மலர்ந்தும், குவிந்தும் பேசும் உதடுகள் போல் முத்திரைகொண்டன. பெரும் உள எழுச்சியுடன் அவன் கர்ணனின் கையை பற்றினான். “இது போரல்ல, நடனம் மூத்தவரே!” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்!” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை!” என்றார்கள்.
கர்ணன் “அவ்விரல்கள் சொல்லும் சொற்கள் என்ன? அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே?” என்றான் துச்சாதனன். கர்ணன் “அறியேன். ஆனால் அவை உரையாடிக் கொள்கின்றன” என்றான். இரு கைகளையும் சேர்த்தபடி சற்றே முன்னகர்ந்து அவன் அவ்விரு உடல்களிலும் எழுந்து நெளிந்து கொண்டிருந்த கைகளையே நோக்கினான். நடனக் கலை தேர்ந்த பெரும் சூதர்கள் ஆடும் நாடகக் காட்சி.
“சொல்!” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்!” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே?” என்றான். “நாம்!” என்று மீண்டும் கர்ணன் சொன்னான். பின் கனவிலென “ஒருவர்!” என்று ஓசையிலாது சொன்னான்.
இனிய பாடலென்றாகின அச்சொற்கள். இருமை என்பது ஒன்றில்லை. இருவரென்றும் இங்கில்லை. ஒன்றெனப்படுவது நின்றருளும் வெளி. இருமையென்று ஆகி தன்னை நிகழ்த்தி ஆடி வீழ்ந்து புன்னகைத்து மீண்டும் கலைந்துகொள்கிறது. அது இதுவே. இதுவும் அதுவே. இது மெய்மை. இது மாயை. இது இருத்தல். இது இன்மை. இது அண்மை. இது சேய்மை. இது ஆதல். இது அழிதல். இரண்டின்மை. ஒருமையென எஞ்சும் அதன் என்றுமுள பேதைமை.
துரியோதனன் “ஹா!” என்று ஒரு ஒலியெழுப்ப கர்ணன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்த சிசுபாலனை பார்த்தபோது அவனும் “ஆம்!” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன?” என்றான் ஜயத்ரதன். “மஹத்!” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே!” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா?” என்றான் ஜயத்ரதன்.
“ஒருகணம்” என்றான் கர்ணன். “புரியும்படி சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “ஒருகணம். ஒருமை இழந்து அனைத்தும் குலைந்துவிடுகிறது அப்போது. அவ்வொரு கணத்தில் காலம் பெருகி விரிந்து வெளி நிகழ்கிறது.” ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது சிசுபாலனின் உடலசைவுகள் இளைய யாதவரின் உடலசைவுகளிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பதை கண்டான். அது ஒரு விழிமயக்கா என்று ஐயம் எழுமளவுக்கு மெல்லியது. இல்லை விழிமயக்கே என்று அவன் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்வேறுபாடு மேலும் தெரிந்தது.
நோக்கியிருக்கவே அவ்விரு உடல்களும் முற்றிலும் வேறுபட்டன. ஜயத்ரதன் கர்ணனின் கைகளைப்பற்றி “விழுந்து கொண்டிருக்கிறான்” என்றான். சிசுபாலன் உடலசைவின் ஒத்திசைவு குறைந்தபடியே வந்தது. சினம்கொண்ட அசைவுகள் அவன் கைகளில் எழுந்தன. அவன் கால்களின் தாளம் பிறழ்ந்தது. ஜயத்ரதன் “என்ன செய்கிறான்? அனைத்தும் பிழையாகிறது” என்றான். கர்ணன் “ஒரு பிழையசைவு போதும். படையாழி அவன் தலையை அறுத்துவீசிவிடும்” என்றான். அறியாது விழிதூக்கி பீடமருகே நின்ற அர்ஜுனனை பார்த்தான். இருவர் நோக்குகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டபோது அர்ஜுனன் புன்னகையுடன் மெல்ல இதழசைத்தான். அவன் சொன்னதென்ன என்று உணர்ந்ததும் திகைத்து கர்ணன் பார்வையை விலக்கிக்கொண்டான்.
பீமன் குனிந்து தருமனிடம் “முடிந்துவிட்டது, அரசே!” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று? அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன!” என்றார். பீமன் “மைய முடிச்சு அவிழ்ந்த தோல்பாவையைப்போல இருக்கிறான்” என்றான். சிசுபாலன் பூசனைகளில்லாது கைவிடப்பட்ட காட்டுத்தெய்வம்போல் இருந்தான். நெஞ்சை வலக்கையால் அறைந்து பேரோசையிட்டு பற்களைக் கடித்தபடி எருதென காலால் நிலத்தை உதைத்து புழுதி கிளப்பி முன்னால் பாய்ந்தான். தொடையை ஓங்கித்தட்டி கைதூக்கி ஆர்ப்பரித்தான். அவன் படையாழி கூகையென உறுமியபடி இளைய யாதவரின் படையாழியை அடித்து தெறிக்கவைத்தது. விம்மிச் சுழன்று அவனிடம் மீண்டு வந்தது.
சினத்தின் வெறியில் அவன் கைகளும் கால்களும் உடலிலிருந்து பிரிந்து தனித்தெழுந்து சுழன்றன. “அவன் உடலின் நான்கு சினங்கொண்ட நாகங்கள் எழுந்தது போல்” என்றான் நகுலன். சகதேவன் “அவனுக்கு வலிப்பு எழுகிறது போல் தோன்றுகிறது” என்றான். அவன் நெற்றியில் ஆழ்ந்த வெட்டுத்தடமென ஒன்று எழுவதை தருமன் கண்டார். “ஆ! நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல!” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ! இதோ!” என்று கூவியபடி அவன் தன் படையாழியை வீசினான். அது குறிபிழைத்தது.
இளைய யாதவர் நகைத்து “இவ்வழி!” என்றார். “இவ்வழியே!” என்று தன் படையாழியை செலுத்தினார். “ஆம்!” என்று சிசுபாலன் அலறிய மறுகணம் படையாழி அவன் தலையை துணித்து மேலேறியது. குருதி செம்மொட்டு மாலையை சுழற்றி வீசியதுபோல் மண்ணில் விழுந்து மணிகளெனச் சிதறி புழுதிகவ்வி உருண்டது. குருதி சூடிய படையாழி ஒன்று பறந்து சென்று இளைய யாதவரின் வலக்கர சுட்டுவிரலில் அமைந்தது. ஒளிரும் புன்னகையுடன் பிறிதொரு ஆழி அதைத் தொடர்ந்து வந்து அதன் மேல் அமர்ந்தது. இரண்டும் இணைந்து ஒன்றென ஆயின.
சிசுபாலனின் தலை தாடியும் தலைமுடியும் சிதறிப்பரக்க விண்ணிலிருந்து மண்ணுக்கு விழுந்த விதை போல தெறித்து புழுதியில் உருண்டு கிடந்தது. அவன் தலையற்ற உடல் கால்களில் நின்று வலிப்பு கொண்டு இழுபட்டுச் சரிந்து துள்ளி வலப்பக்கமாக விழுந்து மண்ணில் நெளிந்தது. கட்டை விரல்கள் இறுகி பின்பு தணிந்தன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக சொடுக்கி நிமிர்ந்து அதிர்ந்து பின் அணைந்தன. இருகைகளிலும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் சின்முத்திரையென இணைந்து உறைந்தன. தருமன் பீமனைத் தொட்டு மூச்சுக்குரலில் “அவன் நெற்றியில் இப்போது அந்த மூவிழி இல்லை” என்றார். “அது ஒரு விழிமயக்குதான், மூத்தவரே” என்றான் பீமன்.
சுவரோவியம்போல் சமைந்து நின்ற கூட்டத்திலிருந்து தமகோஷர் இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்தார். “இளைய யாதவரே, சேதியின் அரசனை தனிப்போரில் கொன்றமையால் அந்நாட்டு முடியும் மண்ணும் தங்களுக்குரியதாயின. என் மைந்தனை இக்களம் விட்டு எடுத்துச்செல்லவும் அரசனுக்குரிய முறையில் சிதையேற்றவும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றார். அவரது முதிய உடல் தோள் குறுகி மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. இடக்கால் தனித்து ஆடியது. கூப்பிய கைகள் இறுகியிருந்தன.
இளைய யாதவர் தன் படையாழியை இடை செருகி அவர் அருகே வந்து கைகூப்பி “தந்தையின் துயரை நான் அறிவேன், மூத்தவரே. ஆனால் படைக்கலம் ஏந்துபவன் எவனும் குருதி கொடுக்கும் நாளுக்காக காத்திருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இருந்தவர்க்கோ இறந்தவர்க்கோ துயருறார் அறிவுடையோர்” என்றார். “ஆம், உண்மை. நான் காத்திருந்த தருணம் இது. ஆகவே துயருறவில்லை. மண்ணிலிருந்து நூலுக்கு என் மைந்தன் இடம் பெயர்ந்துவிட்டான் என்றே கொள்கிறேன்” என்றார் தமகோஷர்.
“பட்டத்து இளவரசராக இவர் எவரை அறிவித்திருக்கிறார்?” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி கை நீட்டினார். ஏவலன் ஒருவன் தொலைவிலிருந்து மரக்கிண்டியில் நீருடன் அவர் அருகே ஓடிவந்தான். அதை வலக்கையில் விட்டு தமகோஷரின் கைகளுக்கு ஊற்றி சேதி நாட்டை அவருக்கு நீரளித்தார்.
“வணங்குகிறேன் யாதவரே, உம் நிகரழியாப் பெருநிலை மண்ணில் உள்ளோர் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையட்டும்!” என்றார் தமகோஷர். இளைய யாதவர் குனிந்து சிசுபாலனின் தலையை எடுத்து வீழ்ந்துகிடந்த அவன் உடல் கழுத்துப் பொருத்தில் வைத்தார். நான்கு பக்கங்களிலுமென முறுகித் திரும்பியிருந்த கைகளையும் கால்களையும் பற்றி மெல்லத்திருப்பி சீரமைத்தார். திறந்திருந்த அவன் விழிகளை கைகளால் தொட்டு மூடினார். துயிலும் குழந்தையை தந்தை என கனிந்து நோக்கி சிலகணங்கள் இருந்தார்.
அவன் நெற்றிமேல் கைவைத்து முடியை கோதி பின் செருகி “செல்க! வீரர் உலகில் எழுக! அங்கொருநாள் நாம் சந்திப்போம், இளையோனே! அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து எவரையும் நோக்காது அர்ஜுனனை அணுகி அவனையும் கடந்து சீரான காலடிகளுடன் வேள்விப்பந்தலை நோக்கி சென்றார்.
பகுதி பத்து : தை
[ 1 ]
இந்திரப்பிரஸ்தத்தின் அரசவிருந்தினர்களுக்கான மாளிகைநிரையின் இறுதியில் அமைந்திருந்த துரியோதனனின் மாளிகையின் முன்பு முதற்புலரியிலேயே சகட ஒலி சூழ தேர்கள் வந்து நின்றன. துர்மதனும் துச்சலனும் துர்முகனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்து நின்ற தேர்களிலிருந்து பீமவேகனும் சுஜாதனும் விகர்ணனும் இறங்கினர். காத்து நின்ற ஸ்தானிகரிடம் “மூத்தவர் சித்தமாகிவிட்டாரா?” என்றான் துர்முகன். அவர் முகமனுரைத்து “சற்று முன்னர்தான் இளையவர் வந்தார். மூத்தவரை அழைக்கும் பொருட்டு மேலே சென்றார்” என்றார்.
அவர்கள் கீழேயே காத்து நின்றனர். அடுத்து வந்த தேரிலிருந்து சுபாகுவும் சலனும் இறங்கினர். அதற்கடுத்த தேரிலிருந்து இறங்கிய பிற கௌரவர்கள் அங்கேயே நின்று என்ன நிகழ்கிறது என்று பார்த்தார்கள். மேலிருந்து எடைமிக்க காலடிகளுடன் படியிறங்கி வந்த துச்சாதனன் காத்து நின்றிருந்த தம்பியரை அணுகி விழிசுருக்கி “அங்கநாட்டரசர் வரவில்லையா?” என்றான். “அவர் கிளம்பிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்” என்றான் துர்மதன். “நீங்கள் படகுக்கு செல்லுங்கள்” என்றான் துச்சாதனன்.
“மூத்தவர் நகர்நீங்குவது ஒரு சடங்காக இங்கே கொண்டாடப்படுகிறது என்றார்கள்” என்றான் துர்மதன். “ஆம். மதுபர்க்க முறைமைகள் உள்ளன. வழியனுப்புவதற்கு பாண்டவர்களின் மூத்தவர் வருவாரென்று சொன்னார்கள்” என்று துச்சாதனன் சொன்னான். “அப்போது நாங்கள் உடனிருப்பதே முறைமை” என்றான் துச்சலன். “ஆம், ஆனால் இப்போது சடங்குகளை எளிமையாக்கி விடலாம் என்று மூத்தவர் எண்ணுகிறார். அவர் இன்னும் சித்தமாகவில்லை. நீங்கள் கிளம்புங்கள்” என்றான் துச்சாதனன்.
அவர்கள் குழப்பத்துடன் தலைவணங்கி ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர். அவர்களிடம் இருந்து செய்தியை பெற்றுக்கொண்ட பிற கௌரவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியபடி தேர்களில் ஏறி யமுனைக்கரை நோக்கி சென்றனர். அவர்கள் செல்வதை இடையில் கைவைத்து நோக்கி நின்ற துச்சாதனன் ஸ்தானிகரிடம் “அங்கர் வந்தவுடன் மேலே அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு தளர்ந்தவன்போல படிகளின் கைப்பிடியை பற்றியபடி ஏறி மேலே சென்றான்.
கௌரவர்களின் தேர்நிரை முற்றத்துக்குள் புகுந்து மறுபக்கம் வழியாக வெளியேறி யமுனைக்குச் செல்லும் சரிந்த பாதையில் சகடங்கள் ஒலிக்க குளம்புத் தாளத்துடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒலி தன்னைச்சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருக்க நின்ற ஸ்தானிகர் விளங்கிக்கொள்ள முடியாத அச்சமொன்றை அடைந்தார். துரியோதனனிடமிருந்து அவனுடைய ஆடிப்பாவைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பி விலகிச் செல்வதைப்போல் அவருக்குத் தோன்றியது. சென்றவர்களில் ஒருவராக துரியோதனனும் இருந்திருப்பாரா என்ற எண்ணம் எழுந்தவுடன் அவர் தனக்குத்தானே என தலையசைத்துக் கொண்டார்.
முற்றத்தில் இறங்கி கர்ணனின் தேர் வருகிறதா என்று நோக்கி நின்றார். தொலைவில் அங்கநாட்டின் யானைச்சங்கிலிக் கொடி பறந்த தேர் அணுகி வருவதை கண்டவுடன் ஏவலனை அழைத்து அதை எதிர்கொள்ளச் சொன்னார். தேர்வந்து முற்றத்தில் நிற்க அதன் படியில் கால்வைக்காமல் நேராகவே தரையில் காலூன்றி நிமிர்ந்த நீள் உடலுடன் முழு அரசகோலத்தில் கர்ணன் அவரை நோக்கி வந்தான். அருகே வந்ததும் தன் தலைக்கு மேல் சென்ற அவன் முகத்தை அண்ணாந்து நோக்கி கைகூப்பி “அங்க நாட்டரசருக்கு வணக்கம். தங்களை அரசர் அறைக்கு செல்லும்படி இளையவர் துச்சாதனர் சொன்னார்” என்றார்.
“இளையவர்களெல்லாம் இங்கு இருக்கிறார்களல்லவா?” என்றான் கர்ணன். “அவர்கள் படகுத்துறைக்குச் செல்லும்படி இளையவரின் ஆணை” என்றார். “மதுபர்க்கச் சடங்கு இங்குதானே?” என்று புருவத்தை சுளித்தபடி கர்ணன் கேட்டான். “தெரியவில்லை. அது இளையவருக்குத்தான் தெரியும். என்னிடம் செய்தி ஏதுமில்லை” என்றார் ஸ்தானிகர். ஒருகணம் கண்ணில் எழுந்த சினத்துடன் அவரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கைவீசி அதைத்தவிர்த்து கர்ணன் படியேறி மேலே சென்றான்.
துரியோதனனின் மஞ்சத்தறை வாயிலில் இரண்டு ஏவலர்கள் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தலைவணங்கி விலகினர். கர்ணன் ஒப்புதல் கோராமல் மஞ்சத்தறை வாயிலைத் திறந்து உள்ளே சென்றான். விரிந்த அரசமஞ்சத்தில் துரியோதனன் தலைக்கு இரு தலையணைகளை வைத்து சற்றே நிமிர்ந்ததுபோல் படுத்திருந்தான். கண்கள் மூடியிருந்தன. கைகள் மார்பில் கோக்கப்பட்டிருந்தன. அவன் அருகே நின்றிருந்த துச்சாதனன் கர்ணனைக் கண்டதும் உடலில் கூடிய விரைவுடன் அருகணைந்து “மூத்தவருக்கு கடும் காய்ச்சல் கண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான்.
கர்ணன் குனிந்து துரியோதனனை பார்த்தபின் “எப்போதிலிருந்து?” என்றான். துச்சாதனன் “நேற்று இரவு முழுக்க துயிலாமல் இருந்தார் என்று ஏவலர்கள் சொல்கிறார்கள். பொருளின்றி எதையோ கூவிக்கொண்டிருந்ததாகவும் அரண்மனை முழுக்க சுற்றி அலைந்ததாகவும் ஏவலரை அறைந்ததாகவும் சொன்னார்கள். அதன் பிறகு வெளியே சென்று தோட்டத்தில் நெடுநேரம் நின்றிருக்கிறார்” என்றான்.
“மது அருந்தினாரா?” என்று கர்ணன் கேட்டான். “நேற்று இரவு முழுக்க மது அருந்திக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் கடுமையான மது கேட்டிருக்கிறார். சற்றே பிந்தியபோதுதான் ஏவலரை அறைந்திருக்கிறார்” என்று துச்சாதனன் மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். “முன்னரே இப்படித்தான் இருந்தார். இங்கு வந்த ஒருநாள் சற்றே மீண்டுவிட்டார் என்று எண்ணினேன். ஆனால்…”
கர்ணன் மீண்டும் திரும்பி துரியோதனனை பார்த்தான். இரவு முழுக்க அருந்திய மது அவனுடைய முகத்தை நீரில் ஊறிய நெற்று போலாக்கியிருந்தது. கண்களுக்குக் கீழே திரைச்சுருக்கங்கள்போல மூன்று மடிப்புகளாக தசைவளைவுகள். வாயைச் சுற்றி அழுத்தமான கோடுகள் விழ கன்னங்கள் தொய்ந்திருந்தன. கழுத்துக்குக் கீழிருந்த தசை தொய்ந்து சுருங்கியிருந்தது. ஓரிரு நாட்களுக்குள் பல்லாண்டு முதியவனாக அவன் ஆகிவிட்டது போல. கர்ணன் வெளியே சென்று ஏவலனிடம் “மருத்துவரை அழைத்து வா!” என்றான்.
துச்சாதனன் தொடர்ந்து வெளியே வந்து கர்ணனிடம் “மருத்துவரை அழைத்துவர வேண்டுமா என்று கேட்பதற்காகவே நான் தயங்கினேன். மூத்தவர் இத்தருணத்தில் உடல் நலமில்லாமல் இருப்பது வெளியே தெரிய வேண்டுமா?” என்றான். “ஆம். அது முதன்மையானது. இன்று மதுபர்க்கம் கொண்டு அரசர் அஸ்தினபுரிக்கு செல்ல வேண்டும். மூத்தவராக அவர் தம்பியரையும் தருமனையும் வாழ்த்தி பரிசில் அளிக்கவேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொல்லாவிட்டால் நாம் அதை தவிர்த்தோம் என்றாகிவிடும்” என்றான்.
“மதுபர்க்கச் சடங்கு எங்கு நடக்கிறது?” என்று துச்சாதனன் கேட்டான். குழப்பம் கொண்டு உடனே சினம் எழ “இங்கு யாரும் தெரிவிக்கவில்லையா?” என்று கேட்டான் கர்ணன். “தங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்றான் துச்சாதனன். கர்ணன் தலையசைத்து “மூன்று நாட்களாக ஒவ்வொரு நாளும் மதுபர்க்கம் நடந்துகொண்டே இருக்கிறது. அரசர்கள் விடைபெற்று சென்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றான்.
இறுதியாக செல்பவர்களாகத்தான் அஸ்தினபுரி அரசரும் இளவரசரும் இருக்கவேண்டுமென்று பீஷ்மர் ஆணையிட்டார். ஆகவே வேள்வி முடிந்து தருமன் அரியணை அமர்ந்து சத்ராஜித்தாக முடிசூட்டிக் கொண்ட நிகழ்வுக்குப்பின்னரும் மூன்று நாட்கள் அவர்கள் அங்கே தங்க வேண்டியிருந்தது. பேரரசர்கள் முதலிலும் சிற்றரசர்கள் பிறகுமாக கிளம்பிச்சென்றனர். அனைவரையும் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் துரியோதனனும் உடன் நின்று அனுப்பி வைத்தனர்.
மருத்துவர் இரு உதவியாளர்களுடன் வரும்வரை இருவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். துச்சாதனன் அடிக்கடி கதவைத் திறந்து உள்ளே நோக்கி “முற்றிலும் நினைவிழந்தவர் போல் இருக்கிறார். மூச்சு அன்றி வேறு ஓசையில்லை. இருமுறை அவரை அழைத்தேன். மிக ஆழத்தில் இருந்து ஒரு சிறு முனகலாக மறுமொழி வருகிறது” என்றான். கர்ணன் “மருத்துவர் பார்த்து சொல்லட்டும். அனேகமாக நீரிழப்பாக இருக்கும். மிதமிஞ்சி மது அருந்தினால் அவ்வாறு ஆவதுண்டு” என்றான்.
மருத்துவர் வந்ததும் தலைவணங்கி கர்ணன் சொல்வதை எதிர்பார்த்து நின்றார். கர்ணன் சுருக்கமாக “அரசர் மிதமிஞ்சிய உளக்கொந்தளிப்பில் இருக்கிறார். துயில் நீப்பு இருந்தது. நேற்றிரவு சற்று கூடுதலாகவே மது அருந்திவிட்டார் என்று சொன்னார்கள்” என்றான். புரிந்துகொண்டு தலையசைத்தபின் மருத்துவர் உள்ளே சென்றார். அவர்கள் தொடர்ந்தனர்.
மருத்துவர் துரியோதனனின் அருகே மண்டியிட்டமர்ந்து அவன் கையைப்பற்றி நாடி பார்த்தார். விழிகளை இழுத்து கண்களுக்குள் குருதியோட்டத்தையும் உதடுகளை மெல்ல இழுத்து வாயின் ஈரத்தையும் தேர்ந்தார். உள்ளங்கையை தன் கையால் சற்று சுரண்டிப் பார்த்தபின் நிமிர்ந்து “மிகுதியான நீரிழப்பு” என்றார். “நீரே சேர்க்காமல் திரிகர்த்த நாட்டு கடும் மதுவை மிகையாக அருந்தியிருக்கிறார். அது நீரை எரிக்கும் அனல். நீர் அருந்த வைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடுவது.”
“இன்நீர் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றான் துச்சாதனன். “இருங்கள். இன்நீரல்ல, எதுவும் கலக்கப்படாத குடிநீர் மட்டுமே” என்று சொன்ன மருத்துவர் தன் மாணவர்களிடம் ஆணையிட்டார். பெரிய குடுவையில் குளிர்ந்த குடிக்கும் நீர் கொண்டுவரப்பட்டது. துரியோதனனை சற்று மேலேறியதுபோல படுக்க வைத்து அவனது கழுத்தைச் சுற்றி மரவுரியை அமைத்து அதில் குளிர்நீர் ஊற்றினார்கள். அவன் வாயை மரக்கரண்டியால் மெல்ல நெம்பித் திறந்து செம்புக்கெண்டியின் கூரிய மூக்கு நுனியை உள்ளே நுழைத்து ஊற்றி நீரை குடிக்க வைத்தனர்.
முதலில் ஊற்றிய நீர் இருபக்கமும் வழிந்தது. அதன் பின்பு அரைத் துயிலிலேயே அவன் பாய்ந்து இருகைகளாலும் குடுவையை பற்றிக்கொண்டு நீரை அருந்தலானான். அந்த ஒலி பாலைவனத்தில் குதிரை நீர் அருந்துவதுபோல ஒலித்தது. அவன் உடலில் பல இடங்கள் புல்லரிப்பில் மயிர்ப்புள்ளிகளை அடைந்தன.
“காய்ச்சலுக்கு குளிர்நீர் கொடுப்பதில்லையே?” என்று துச்சாதனன் கேட்க “நீரிழப்பினால் வந்த வெம்மை இது. ஒருமுறை உடல் நீர் பிரிந்துவிட்டால் சீரடைந்துவிடுவார்” என்றார் மருத்துவர். நீரை அருந்திவிட்டு துரியோதனன் பின்னால் தளர்ந்தான். “சிறிது சிறிதாக நீர் கொடுத்துக் கொண்டிருப்போம். ஒரு நாழிகைக்கு மேல் ஆகும். தாங்கள் வெளியே காத்திருக்கலாம்” என்றார் மருத்துவர். கர்ணனும் துச்சாதனனும் வெளியே சென்றனர்.
“எப்போது மதுபர்க்கச் சடங்கு நிகழும் என்று கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன் மூத்தவர் எழுவாரென்றால் நன்று” என்றான் துச்சாதனன். கர்ணன் கைவீசி அப்பேச்சை நிறுத்தும்படி சொல்லிவிட்டு சாளரத்தினூடாக வெளியே நோக்கி நின்றான். துச்சாதனன் பெருமூச்சுடன் விலகிச்சென்று நின்றான். பிறகு உடலை அசைத்து கைகள் உரசல் ஒலியுடன் சரிய “அனைத்தும் சீரமைந்துவிட்டதென எண்ணினேன்” என்றான். அதை கர்ணன் கேட்கவில்லையோ என எண்ணி “எவரோ திட்டமிட்டுச் செய்வதுபோல நிகழ்கின்றன ஒவ்வொன்றும், மூத்தவரே” என்றான்.
[ 2 ]
இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவுக்கு கப்பத்துடனும் பரிசில்களுடனும் முன்னரே சென்று அங்கே தருமனுக்குக் கீழே அவைஅமரவேண்டும் என்றும், அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடி செங்கோலுடன் செல்லவேண்டும் என்றும் துரியோதனனுக்கு பீஷ்மர் ஆணையிட்டார். மூத்தவனாகச் சென்று வெறுமே வாழ்த்து அளித்து மீள்வதற்கு அவன் காந்தாரியிடம் ஒப்புக்கொண்டிருந்தான். முடிசூடிச்செல்லவேண்டும் என்பதன் பொருளை அவன் முதலில் உணரவில்லை.
அது அவன் கற்பனையை தொட்டதும் அரியணையிலிருந்து உறுமலுடன் எழுந்து அந்த ஓலையைக் கிழித்து அதை அமைச்சரின் முகத்தில் வீசிவிட்டு “அதைவிட நான் இறப்பேன். என் உடைவாளை கழுத்தில் பாய்ச்சிக் கொள்ள ஒருகணம் போதும் எனக்கு” என்று கூவியபடி முன்னால் பாய்ந்தான். கர்ணன் அவன் கைகளைப்பற்றி “அமருங்கள், அரசே! அமருங்கள். நான் சொல்கிறேன்” என்று அழுத்தி அமரவைத்தான்.
“என்ன சொல்கிறார்கள் மூத்தவர்கள்? மீண்டும் சிறுமை அடையச் சொல்கிறார்களா? ஹஸ்தியின் முடிசூடி அச்சிறுமகள் காலடியில் நான் சென்று அமரவேண்டுமா?” என்று துரியோதனன் கூவினான். என்ன செய்வதென்றறியாமல் தன் உடைவாளை எடுத்து அவை நடுவே வீசினான். அவையினர் அதிர்ந்து அமர்ந்திருந்தனர். விதுரர் அவையில் இல்லை. பின்நிரையிலிருந்து கனகர் எழுந்து அவரை அழைத்துவர ஓடினார்.
மூச்சிரைக்க தவித்து சற்றே அடங்கி “என்ன எண்ணுகிறார்கள் முதியவர்கள்?” என்றான். மீண்டும் சினம் தலைக்கேற கர்ணனை தள்ளிவிட்டு எழுந்து அருகே நின்றிருந்த வீரனை ஓங்கி அறைந்தான். பெருமல்லனின் அறை பட்டு எந்த ஓசையுமில்லாமல் சுருண்டு நிலத்தில் விழுந்து ஒருமுறை அதிர்ந்து அவன் அடங்கினான். கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி துரியோதனன் தத்தளித்தான். அப்போது அவன் திருதராஷ்டிரரைப் போலவே தோன்றினான்.
விழுந்தவனை அகற்றும்படி விழிகளால் அருகே நின்ற காவலருக்கு சொல்லிவிட்டு மீண்டும் அரசன் கைகளை பற்றிக்கொண்டான் கர்ணன். “அரசே, தாங்கள் இச்சினத்தில் எச்சொல்லையும் சொல்ல வேண்டியதில்லை. சற்று நேரமாகட்டும். இச்சினம் கடந்து போகட்டும். அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றான்.
“முடிவா? அஸ்தினபுரியின் முடியைத் துறக்கிறேன். விழியிழந்தவருக்கு இனி நான் மகனல்ல என்று அறிவிக்கிறேன். எங்காவது அடர்காட்டில் சென்று வேடனாக வாழ்கிறேன். அப்போது இம்முதியவர்களின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது அல்லவா?” என்று துரியோதனன் கண்களில் ஒளியாகத்தெரிந்த நீருடன் கூறினான். “இச்சிறுமைக்குக் கீழே இனி நான் செல்ல இடமில்லை, அங்கரே” என்றபோது அவன் உடல் ஏதோ தடுக்கியதுபோல இடறியது. கைகால்கள் தளர்ந்தவன்போல அரியணையில் ஓசையுடன் அமர்ந்து தலையை இருகைகளாலும் தாங்கிக்கொண்டான்.
கர்ணன் அவன் அருகே அமர்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு “பிற அனைவரையும்விட தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்பவன் நான். அரசே, தாங்கள் அடையும் அதே சிறுமையை நானும் அடைந்தேன். அங்கு சென்றால் அடையவும் இருக்கிறேன். ஆனால்…” என்றபின் ஆனால் என்ற சொல்லைக் கேட்டு சொடுக்கி தலைநிமிர்த்திய துரியோதனனின் தோளில் கைவைத்து அழுத்தி “இதை கடந்து செல்வோம். இச்சினத்தை வென்றபின் என்ன செய்வதென்று எண்ணுவோம்” என்றான்.
“எண்ணுவதற்கேதுமில்லை. இதற்கப்பால் ஒரு சிறுமை எனக்கில்லை. முடியாது… ஒருபோதும் முடியாது” என்றபின் துரியோதனன் எழுந்து தன் சால்வைக்காக கைநீட்டினான். ஏவலன் அதை அருகணைந்து நீட்டியதும் அவன் கைநடுங்கி அதன் மடிப்பு சரிந்து விழுந்தது. “மூடா” என்று கூவியபடி அவனை ஓங்கி அறைந்தான். மரத்தரையில் ஓசை எழ பதிந்து அவன் விழுந்தான்.
வெறியடங்காது ஓங்கி அருகே நின்ற தூணை மாறிமாறி மிதித்தான். அவன் வெறியை நோக்கியபடி அவை விழிவெறித்து நின்றிருந்தது. பலர் வெளியேறினர். துரியோதனன் ஓடியமைந்த புரவி என மூச்சிரைக்கச் சோர்ந்து “என் தலையை வரையாடுபோல பாறையில் முட்டிச் சிதறடிக்க வேண்டும் போல் இருக்கிறது. சிறுமை அடைந்து இழிமகனாக சாவதற்கென்றே பிறப்பெடுத்திருக்கிறேன்” என்றான்.
பெருங்குரல் உடைய “அங்கரே, கார்த்தவீரியனும் ஹிரண்யனும் இலங்கை ஆண்ட ராவணப்பிரபுவும் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்? எங்கும் தலைவளையாது எதிரிமுன் நின்று சாகும் பேறுபெற்றவர்கள்! நானோ ஈ முன்னும் எறும்பின் முன்னும் குறுகிச் சிறுக்கிறேன். நான் அடைந்த சிறுமையின் பொருட்டே நாளை சூதர்களால் பாடப்படுவேன்” என்றான்.
கர்ணன் அவனை அணுகி “எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் பெருக்கிக்கொள்வதில் எப்பொருளும் இல்லை அரசே. தன்னிரக்கம் போல பற்றிக்கொள்ளும் தீ ஏதுமில்லை என்று சூதர் சொல் உண்டு” என்றான். மேலும் வெறியுடன் ஏதோ சொல்ல வந்த துரியோதனன் அனைத்துக் கட்டுகளையும் இழந்து தன்னிரு கைகளாலும் தலையை மாறி மாறி அறைந்து கொண்டான்.
கர்ணன் அவன் இருகைகளையும் பற்றி முறுக்கி பின்னால் அமைத்துப் பிடித்தான். “வேண்டாம்! இந்த அவைக்கு வெளியே தாங்கள் நிலையழிந்திருக்கும் ஒரு செய்தியும் எவருக்கும் தெரியக்கூடாது” என்றான். “நான் உயிர்வாழமாட்டேன்... இனி உயிர்வாழமாட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். “அவை நிகழட்டும், அரசே. வேறு அலுவல்களில் சித்தம் ஓட்டுக!” என்றான் கர்ணன்.
“இல்லை… இதன்மேல் மதுவூற்றி அணைக்கவிருக்கிறேன். இன்றிரவு முழுக்க மதுவில் துயில்கிறேன். நாளை காலை பார்ப்போம்” என்றபின் துரியோதனன் நடந்தான். “அப்படியென்றால் மகளிர் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு வரை நான் துணை வருகிறேன்” என்றான் கர்ணன். துரியோதனன் வெண்பற்கள் தெரிய நகைத்தான். விழிகளில் நீருடன் அந்நகைப்பு வெறியாட்டாளனின் மருள்முகம் போலிருந்தது. “மகளிரறை வரைக்கும் துணைவருவதற்கு நீங்கள் ஒன்றும் பாங்கன் அல்ல. அங்க நாட்டு அரசன்.” அவன் முகம் உடனே அழுவதுபோலாகியது. “நீங்களாவது ஆண் என வாழுங்கள். எச்சிறுமையும் அடையாமல் இருங்கள், அங்கரே!” என்றான்.
“நான் வருகிறேன்… பாங்கனாக அல்ல தோழனாக” என்று கர்ணன் உடன் நடந்தான். “அல்ல. அங்க நாட்டரசர் என் நண்பர் என்பதற்கு அப்பால் ஒரு அணுவும் கீழிறங்க வேண்டியதில்லை” என்றபின் துரியோதனன் வெளிச்செல்லும் கதவை காலால் உதைத்துத் திறந்து திடுக்கிட்டு தலைவணங்கிய ஏவலனிடம் “மகளிர் மாளிகைக்கு” என்றான். அவன் தலைவணங்கி முன்னால் செல்ல அவன் பின்னால் சென்றான். திரும்பி “நான் செய்ததில் பெரும்பிழை உங்களை அங்கே அழைத்துச்சென்றது. உங்களையும் சிறுமைகொள்ளச் செய்துவிட்டேன், அங்கரே... என்னை பொறுத்தருள்க!” என்றான்.
கர்ணன் அவன் செல்வதை விரித்த கைகளுடன் நோக்கி நின்றான். பின் உடல் சோர்ந்து அவைக்கு மீண்டு வந்து தலையை கைகளால் தாங்கிக்கொண்டு தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். “அரசே…” என்று அணுகிய அவைநாயகத்திடம் அவை கலையட்டும் என்று கைகாட்டி ஆணையிட்டான். பின்பு நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்து வெளியே சென்று அங்கிருந்த ஏவலனிடம் “அரசர் மகளிரறையில்தான் இருக்கிறாரா என்று நோக்கி என்னிடம் சொல்” என்றான்.
தன் அரண்மனைக்குத் திரும்பலாம் என்று எண்ணி அரண்மனை முற்றத்திற்கு வந்தான். ஆனால் அவன் தேர் வந்து அருகே நின்றபோது அதில் ஏறி தன் அரண்மனைக்கு செல்லத் தோன்றவில்லை. அதை திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டுவிட்டு மீண்டும் துரியோதனனின் அரண்மனைக்குள் வந்து மந்தண அவையில் சென்று அமர்ந்தான்.
துச்சாதனன் துச்சலன் சுபாகு மூவரும் அவனுக்காக அங்கே காத்து நின்றிருந்தனர். “என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “ராஜசூயத்திற்கு அஸ்தினபுரியின் முடியைச் சூடிச் செல்லும்படி பிதாமகரின் ஆணை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். துச்சாதனன் உரக்க “என்ன சொல்கிறீர்கள்? ஹஸ்தியின் ம்டியைச்சூடி சென்று அவையமர்வதா? விழவுக்கு மூத்தவரெனச் சென்று அமர்வதாகவே சொல்லப்பட்டது... இன்று எவர் மாற்றினர் அதை?”
துச்சாதனன் அருகணைந்து “அங்கு நிகழ்ந்தது அனைத்தும் முதியவருக்குத் தெரியும் அல்லவா? அதன்பிறகு அங்கு சென்று சிறுமை கொள்ளும்படி ஆணையிடுகிறார் என்றால் அவர் மூத்தவரை என்னவென்று எண்ணுகிறார்?” என்று கூவினான். நெஞ்சில் ஓங்கியறைந்து “போதும் சிறுமை… இனி சிறுமையென்றால் நாங்கள் ஆணென்று சொல்லி மண்ணில் வாழ்வதில் பொருளில்லை” என வீரிட்டான்.
சுபாகு வெறிக்குரலில் “தந்தையைக் கொன்றவன் என்ற பழி வந்தாலும் சரி. நான் சென்று அவர்முன் நிற்கிறேன். நான் கேட்கிறேன்…” என்றான். துச்சலன் “நான் செல்கிறேன், தந்தையின் கையால் கொல்லப்படுகிறேன். இதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளலாகாது” என்றான். அவன் தொண்டைநரம்பு பாம்புக்குஞ்சுகளைப்போல நெளிந்தது. “அமருங்கள்” என்று கூரிய குரலில் கர்ணன் சொன்னதும் அவர்கள் அமர்ந்தனர்.
“என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்று துச்சலன் கேட்டான். சுபாகு “அவர்கள் நோக்கும் கோணமென்ன என்று எனக்குப் புரிகிறது. தற்செயலாக ஒரு இழிவு நிகழ்ந்துவிட்டது என எண்ணுகிறார்கள். அரசர் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும்போது பாண்டவர் ஐவரும் நீர்முகப்பிற்கு வந்து வரவேற்கும்படியும் வந்திருக்கும் அத்தனை அரசர்களுக்கும் நடுவே முதன்மை வரவேற்பு அளிக்கும்படியும் பீஷ்மர் அவர்களுக்கு ஆணையிட்டிருப்பார். அவர்களின் பணிவும் வரவேற்பும் முன்பு நிகழ்ந்த அச்சிறுமையை நிகர்செய்து அழித்துவிடும் என்று எண்ணுகிறார்” என்றான்.
“அதெப்படி?” என்று துச்சாதனன் இரைந்தான். “அன்று அவள் சிரித்தாள். ஓராயிரம் வருடம் கண்ணீர் விட்டாலன்றி அச்சிரிப்பை அவள் கடந்து செல்லமுடியாது.” கர்ணன் கையசைத்து அவனை பேசாதிருக்கும்படி சொல்லிவிட்டு “தந்தையர் அப்படி மட்டுமே எண்ண முடியும். தன் தனயர்களுக்குள் நடக்கும் எந்தப்பூசலையும் ஒருவரை ஒருவர் தோள் தழுவினால் கடந்து செல்லக்கூடியது என்று மட்டுமே அவர்கள் எண்ணுவார்கள். பூசல் பெருகுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பெருகக்கூடும் என்பதை கற்பனை செய்யவும் மாட்டார்கள்” என்றான்.
சுபாகு “ஆம், நான் சென்றவாரம்கூட தந்தையிடம் பேசினேன்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு நடந்ததை சொன்னபோது சிரித்து இவன் என்ன கதாயுதம் பயிலும்போது கால் தவறி விழுந்ததே இல்லையா என்றார். நான் சினந்து அவர் ஏன் விழுந்தார் என்று தெரியாமல்தான் பேசுகிறீர்களா தந்தையே என்றேன். எது என்றார் புரியாமல். அசைவற்ற துலாபோல நிகர் நிலைகொண்ட அவர் உடலின் ஒருபகுதியை அடித்து சிதைத்தவர் நீங்கள். அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு என்றேன்.”
“அவர் வாய் திறந்து கேட்டிருந்தார். அன்று படுத்து எழுந்தபின்பு மூத்தவரின் கதாயுதப்பயிற்சியே மாறிவிட்டது என்றேன். அவரது அடிகள் இலக்கை அடையாமல் தவறின. கடும்பயிற்சியினூடாக அவர் தன்னை மீட்டுக்கொண்டாலும்கூட முன்பிருந்த நிகரற்ற கதாயுதவீரனாக பின்பு ஆகமுடியவில்லை. அவரை நிலையழித்தது நீங்கள். அதனால்தான் அவர் அன்று வி்ழுந்து சிறுமை அடைந்தார். அது நீங்கள் அவருக்கு அளித்த சிறுமை என்றேன்” சுபாகு தொடர்ந்தான்.
“ஆனால் தந்தை சினத்துடன் கைவீசி என்னைத் தடுத்து நீ அவ்வாறு எண்ண விரும்பினால் ஆகுக! அவன் அதற்குப்பின் புதிய ஒருவனாக ஆனதைத்தான் நான் பார்க்கிறேன். தன் உடலின் நிகர்நிலை பற்றியும் கதாயுதத்தின் குறிதவறாமை பற்றியும் அவன் கொண்டிருந்த மிகையான நம்பிக்கைகளை இழந்திருப்பான் என்றால் அதுவும் நன்றே. அவன் அங்கு நிகர்நிலையழிந்ததற்கு தெய்வங்களையோ மானுடரையோ குறைசொல்ல வேண்டியதில்லை. அங்கு அளிக்கப்பட்ட உயர்காரமுள்ள மதுவை வரைமுறையில்லாமல் அருந்தியிருப்பான். அவன் எப்படி அருந்துவான் என்று எனக்குத் தெரியும் என்றார்.”
“பின்பு சிரித்தபடி விருந்துகளில் அரசர்கள் மதுவால் நிலைதவறி விழுவதும் வாய்தவறி உளறுவதும் ஒன்றும் புதிதல்ல. இந்த நகர் கட்டப்பட்டபோது அளிக்கப்பட்ட விருந்தில் மாமன்னர் ஹஸ்தியே ஒவ்வொரு வாயிலுக்கும் தவறி விழுந்தார் என்று ஒரு சூதன் பாடியிருக்கிறான். இந்த முறை அதே அளவுக்கு மதுவை பீமனுக்கு ஊற்றிக்கொடுங்கள். இவன் முன் அவனும் ஒரு முறை தவறி விழட்டும். நீங்கள் சிரியுங்கள், சரியாகப்போகும் என்றார். பிறகு அவர் சொன்னதை அவரே எண்ணி மகிழ்ந்து தன் இரு தொடைகளில் தட்டிக்கொண்டு வெடித்துச் சிரித்தார். அவரிடம் பேசிப்பயனில்லை என்று சொல்லி நான் எழுந்து வந்துவிட்டேன்” என்றான் சுபாகு.
“ஆம், அதுதான் முதியவர்களின் எண்ணம். அவர்களால் பிறிதொரு வகையில் எண்ணமுடியாது” என்றான் கர்ணன். அவர்கள் சற்றுநேரம் சொல்லெழாது இருந்தனர். சுபாகு “மூத்தவரே, நம்மை எதுவரை அவர்கள் மைந்தர்மட்டுமே என எண்ணுவார்கள்?” என்றான். கர்ணன் உதடுகள் வளைய புன்னகைத்து “அவர்கள் உயிருடன் இருக்கும்வரை” என்றான்.
[ 3 ]
அரசியின் அரண்மனையில் இருந்து ஏவல்பெண்டு ஒருத்தி வந்து அறைவாயிலில் நின்றாள். துச்சலன் “வருக!” என்றதும் அவள் வந்து கர்ணனை வணங்கி “தங்களை மகளிரறைக்கு வரும்படி காசிநாட்டரசி கோரியிருக்கிறார், அரசே” என்றாள். கர்ணன் எழுந்து “நான் சென்று அவளை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றான். “நானும் உடன் வரவா?” என்றான் துச்சாதனன். “வேண்டாம்” என்றபின் கர்ணன் நடந்தான்.
செல்லும் வழியில் ஏவல்பெண்டிடம் “அரசர் அங்கு இருக்கிறாரா?” என்றான். “இருந்தார். இப்போது கிளம்பிச் சென்றுவிட்டார்” என்றாள். “எங்கு?” என்றான். “இளைய அரசியின் அரண்மனைக்கு என்று தோன்றுகிறது” என்றாள். அவள் முகத்தில் மீண்டும் ஏதோ எஞ்சியிருக்கக்கண்டு கர்ணன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். அவள் “அரசியிடமே தாங்கள் பேசிக் கொள்ளலாம்” என்றாள். அந்தக்கடுமை அவனை திகைக்கச்செய்தது.
மகளிர் மாளிகையை சென்றடைந்ததும் முதல் முறையாக அங்கு வந்திருக்கக்கூடாதோ என்னும் உணர்வை கர்ணன் அடைந்தான். அவ்வுணர்வு ஏன் எழுந்தது என்னும் எண்ணமே அவனை குழம்பச் செய்தது. நடையில் அந்தத் தயக்கம் தெரிய, தன்னை அணுகிய சேடிப்பெண்ணிடம் தன் வரவை அறிவிக்கும்படி கைகாட்டினான். அவள் உள்ளே செல்ல சற்று நேரத்தில் மேலிருந்து செவிலி வந்து ஒருசொல்லும் இல்லாமல் தலைவணங்கி “வருக!” என்றாள். உள்ளறைக்குள் அவன் சென்று அமர்ந்ததும் செவிலி தலைவணங்கி வெளியேறினாள்.
பீடத்தில் அமர்ந்து இரு கைகளையும் தொடைமேல் வைத்து சற்றே தலைகுனிந்து மீசையை நீவியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். உடையசைவின் ஒலி அவனை கலைத்தது. உள்ளே வந்த பானுமதி முகத்தின் மேல் மேலாடையை முழுக்க இழுத்து மூடியிருந்தாள். சற்றே தளர்ந்த காலடிகளுடன் பட்டாடைகளும் அணிகளும் ஒலிக்க அவன் முன் வந்து தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு வணக்கம்” என்று முகமன் உரைத்தாள். “நன்று!” என்று சொல்லி அவன் அமரும்படி கைகாட்ட ஆடையை ஒதுக்கி அமர்ந்தாள்.
அவன் முன் அவள் முகத்தை மூடுவதில்லை என்பதனால் அவள் விழிகளை சந்திக்காமல் கர்ணன் சற்று தத்தளித்தான். முதலில் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பொருத்தமான ஒரு பொது வினாவை எழுப்பவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அவன் எண்ணியே இராத வினாவாகிய “அரசர் இங்கில்லையா?” என்பதை கேட்டுவிட்டான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “இங்கு வந்தாரல்லவா?” என்றன அவன் உதடுகள். அவள் “ஆம்” என்றாள்.
“நிகழ்ந்ததை அறிந்திருப்பாய்…” என்று கர்ணன் தொடங்கினான். “அனைத்தையும் அவரே சொன்னார்” என்றாள் பானுமதி. “இங்கு வந்தால் சற்று அமைதி கொள்வார் என்று எனக்குத் தோன்றியது” என்றான். “இங்கு வந்து என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும்போதே அவருக்குள் உணர்வுகள் மட்டுப்படத் தொடங்கிவிடும் என்று எண்ணினேன்... வேறெங்கும் அவர் தன் முடிச்சுகளை அவிழ்ப்பதில்லை.”
“இங்கு வந்து அவை மேலும் பற்றிக் கொண்டன” என்று அவள் சொன்னாள். கேட்கலாமா என தயங்கி “என்ன நிகழ்ந்தது?” என்று அவன் கேட்டான். சற்று நேரம் தலைகுனிந்து விரல்களைக் கோத்து அமைதியாக இருந்தபின் அவள் நிமிர தலையிலிருந்து மேலாடை நழுவி முகம் தெரிந்தது. கர்ணன் அவள் விழிகள் அழுதவை போல வீங்கிச் சிவந்திருப்பதை கண்டான். கன்னம் இருபுறமும் சிவந்திருந்தது. ஒருகணத்திற்குப் பிறகுதான் அவை அடிபட்டதன் வீக்கங்கள் என்று தெரிந்து திகைத்து எழுந்து “என்ன நடந்தது? என்ன நடந்தது?” என்றான். “யார்? அவரா?” என்று மறுபடியும் கேட்டான். “ஆம்” என்று அவள் சொன்னாள்.
அவனால் மேற்கொண்டு சொல்லெடுக்க இயலவில்லை. மெல்ல சென்று சாளரத்தருகே நின்று நோக்கியபடி “நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் இதை அவர் செய்வாரென்று எதிர்பார்க்கவில்லை” என்றான். “நானும் எண்ணியிருக்கவில்லை. நாளை ஒருவேளை இதற்கு அவர் மிக வருந்தக்கூடும் என்பதே மேலும் துயரை அளிக்கிறது” என்றாள் பானுமதி. “ஆனால் இது அவரது எல்லை. இதுவே கீழ்மையின் இறுதி எல்லை” என்றான் கர்ணன். அதற்குள் அவள் உணர்வுகள் மீதூர தொண்டை ஏறியிறங்கி கண்கள் கலங்கின. “எப்படி இதை அவரால் செய்ய முடிந்தது?” என்றான்.
“இங்கு வந்தபோது அவரில் ஏறி பிறிதொரு இருள்தெய்வம் அணுகியதாக உணர்ந்தேன். வந்ததுமே என்னிடம் உரத்தகுரலில் நகைகள் அனைத்தையும் கழற்றி வீசி மரவுரி ஆடை உடுத்து கிளம்பும்படி சொன்னார். என்ன நிகழ்ந்தது என்று கேட்டேன். தன் அணிகளையும் ஆடைகளையும் கழற்றி அறைமூலையில் வீசிவிட்டு கிளம்பு என்னுடன் என்றார். என்னை பேசவே விடவில்லை. வேறு எதுவும் கேட்காதே, ஒருசொல்லும் கேட்காதே, கிளம்பு என்று கூவினார்.”
“என்ன நிகழ்ந்தது சொல்லுங்கள் என்று நான் கேட்டேன். மணிமுடி துறக்கத் தயங்குகிறாயா இழிமகளே என கூவினார். நாம் கிளம்புகிறோம். அஸ்தினபுரி இனிமேல் உனக்கும் உரியதல்ல எனக்கும் உரியதல்ல. என்னுடன் காட்டில் விறகு பொறுக்கி வாழ். நான் கொண்டு வரும் ஊனை சமைத்துக் கொடு. எங்காவது குகைகளில் ஒடுங்கிக் கொள்வோம். அஸ்தினபுரியின் அரசன் இன்றோடு இறந்துவிட்டான். காட்டுவிலங்குகளுக்குமுன் செத்துவிழுவது இங்கே சிறுமைகொண்டு புழுவாக வாழ்வதற்கு மேல் என்றார்.”
“அவரைப் பற்றி அமரச்செய்தேன். மது அளித்தபோது மீண்டும் மீண்டும் குடித்தார். சற்றே தணிந்தபோது என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்டேன். ஹஸ்தியின் மணிமுடியுடனும் குருவின் செங்கோலுடனும் அந்தச் சிறுமகளின் முன் மீண்டும் சென்று வணங்கி நிற்கும்படி உனது பிதாமகர் எனக்கு ஆணையிட்டிருக்கிறார் என்றார். மறுகணம் அத்தனை மதுவும் தீயாக பற்றிக்கொண்டது போலிருந்தது. எங்கிருந்து முளைத்தன என்று தெரியவில்லை. மிகக்கீழ்மையான சொற்களில் பீஷ்மபிதாமகரையும் தன் தந்தையையும் வசை பாடினார். கதவுகளை ஓங்கி உதைத்தார். தூண்களை அறைந்தார்” என்றாள் பானுமதி.
கர்ணன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ சொல்லத்தயங்கியவள் போல ஆனால் நெஞ்சுக்குள்ளிருந்து அது எழுந்து வந்து உதடுகளை முட்டுவது போல தோன்றியது. பற்களைக் கடித்து தலைகுனிந்து இருமுறை இல்லையென்பது போல ஆட்டிவிட்டு ஒருகணத்தில் பிறிதொருவளாக ஆகி சீற்றத்துடன் “என் முன் நின்று அவர் ஒரு சொல் சொன்னார். அதை நான் மறுத்தேன்” என்றாள். கர்ணன் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவன் நெஞ்சு படபடத்தது “பீஷ்மபிதாமகரின் பிறப்பையும் தன் தந்தையின் பிறப்பையும் இழித்துரைத்தார்” என்றாள்.
அதை துரியோதனன் சொல்லியிருப்பான் என்பதை அக்கணமே தன் உள்ளம் ஏற்றுக்கொள்வது எப்படி என்று கர்ணன் வியந்தான். சினம் மீறும்போது தானும் அப்படித்தான் சொல்லக்கூடுமோ? பிறப்பை வசையாக்குவதே ஆணவம்கொண்ட ஆணின் இயல்பான வழியாக இருக்குமோ? பானுமதி “என் முன் நின்று அவற்றை சொல்லவேண்டாம் என்றேன். அவரது தந்தையின் பிறப்பு பிழையானதென்றால் அவரும் பிழைப்பிறவிதானே, அரசன் என்று அமர்ந்திருக்க அவருக்கென்ன உரிமை என்று கேட்டேன்” என்றபின் தணிந்த குரலில் “ஆனால் நான் அப்படி கேட்டிருக்கக்கூடாதென்று இப்போது உணர்கிறேன்” என்றாள்.
உடனே சீற்றம் கொண்டு “ஆனால் இனி என் முன் நின்று மீண்டும் அதை சொன்னால் அங்கேயே கத்தியை எடுத்து என் குரல்வளையை அறுத்துக்கொள்வேன்” என்றாள். கர்ணன் “அப்போதுதானா…?” என்றான். “ஆம், நான் சொல்லி முடித்ததும் என்னை அறைய ஆரம்பித்தார். இரண்டு முறை அடிவாங்குவதற்குள் நான் சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். விழுந்த என்னை உதைத்தார். நான் தெறித்து சுவரில் முட்டி சுருண்டேன். அதற்குள் அனைத்து ஏவல்பெண்டிரும் வந்து அவர் கைகளையும் கால்களையும் பற்றிக் கொண்டனர். இரு செவிலியர் என்னை இழுத்து இன்னொரு அறைக்கு கொண்டு சென்றனர்” என்றாள்.
“எவரையாவது அடித்துக் கொன்றுவிடுவார் என்றால் நாம் நகர் மக்களிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது” என்றான் கர்ணன். “ஏன் மறைக்கவேண்டும்?” என்று பானுமதி சினத்துடன் கேட்டாள். “இவர் இப்படி இருப்பது தெரியட்டுமே அனைவருக்கும்” என்றாள். “எண்ணித்தான் சொல்லெடுக்கிறாயா பானுமதி?” என்று கர்ணன் சினத்துடன் கேட்டான். “அஸ்தினபுரியின் அரசர் இவர். இவர் உளநிலை சீராக இல்லையென்று மக்களுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? முன்னரே இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் யுதிஷ்டிரனின் புகழ்பாடத் தொடங்கியுள்ளனர்.”
பானுமதி மெல்ல அடங்கி “என்ன ஆயிற்று இவருக்கு? தங்களுக்கும் தெரிந்திருக்கும், கணவராக நான் இவரை அணுகி விழிநோக்கி இன்சொல் பேசியது இந்திரப்பிரஸ்தத்தின் அணையா விளக்கு விழவுக்கு இவர் கிளம்பிச் செல்வதற்கு முந்தைய நாள். திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றாள். “ஆம், மெய்யாகவே திரும்பி வந்தவர் பிறிதொருவர்” என்றான் கர்ணன். “இங்கு வந்த நச்சு நோயினால் அவர் மாறிவிட்டாரா?” என்றாள். “அந்த நோயே அவர் கொண்டு வந்ததுதான்” என்றான் கர்ணன். அவன் சொல்வதென்ன என்று அறியாததுபோல் அவள் பார்த்தாள்.
கண்ணீர் பெருகிய அவள் விழிகளை பார்த்தபின் அவன் மெல்ல தணிந்து “அங்கு அவர் சிறுமை செய்யப்பட்டார், பானுமதி” என்றான். “அதை பலமுறை பலரும் சொல்லிவிட்டீர்கள். அப்படியென்ன சிறுமை நிகழ்ந்தது? நானும் அங்கு இருந்தேனே. கால் இடறி விழுந்தது இவரது பிழை. மதுமயக்கிலிருந்த சில அரசர்கள் நகைத்தனர்.” கர்ணன் “அவள் நகைத்தாள்” என்றான். “அவள் நகைக்கவில்லை. அவளுக்கு மிக அருகே நான் இருந்தேன். அவள் விழிகளையும் உதடுகளையும் நான் பார்த்தேன். உறுதியாக அவள் நகைக்கவில்லை. இயல்பாக ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு அவ்வாறு பார்க்காததுபோல் திரும்பிக்கொண்டாள்” என்றாள்.
“இல்லை, அவள் நகைத்தாள். அவ்விழிகளை நானும் பார்த்தேன்” என்றான் கர்ணன் சீற்றத்துடன். “அது உங்கள் உளமயக்கு” என்றாள் பானுமதி. “இருக்கலாம். ஆனால் ஆண்கள் மட்டும் பார்க்கும் ஒரு நகைப்பு அது. அதை நான் பார்த்தேன். அஸ்தினபுரியின் அரசரும் பார்த்தார்” என்றான் கர்ணன். “உங்கள் உளமயக்கினால் அனைத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள்.
கர்ணன் தன் தலையை கையால் தட்டி “இல்லை, ஒவ்வொரு கணமும் அதை சிறிதாக்கி கடந்துசெல்ல முயல்கிறேன். முயல முயல அது வளர்கிறது. அந்த நாளிலிருந்து ஒரு கணம்கூட நான் விலகவில்லை, அதை எண்ணாது ஓர் இரவும் துயின்றதில்லை. ஒருகாலையும் அந்நினைப்பில்லாது விடிந்ததும் இல்லை. அரசர் நிலையை என்னால் எண்ணிப்பார்க்கவே கூடவில்லை” என்றான்.
“அதன் பொருட்டு இவ்வளவு வஞ்சமா? ஒரு நகரத்தையே நஞ்சூட்டி, தன் ஆன்மாவையே கடுங்கசப்பால் நிறைத்து மூதாதையருக்கு அளிக்கும் அன்னத்தில்கூட அதைக்கலந்து… அந்த அளவுக்கு இதில் என்ன உள்ளது? உண்மையிலேயே என்ன வெறி இது என்று எனக்குப் புரியவில்லை” என்றாள். “நீ பெண். உன்னால் உணரமுடியாது” என்றான் கர்ணன்.
“அவர் இருக்கும் அறைக்குள் எட்டிப்பார்ப்பேன். தன் மூச்சுக்காற்றால் அவ்வறையை நச்சால் நிரப்பி அதையே திரும்ப மூச்சாக இழுத்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். சற்று நேரம்கூட அவரருகே என்னால் இருக்க முடிந்ததில்லை. அவர் அறைக்குள் சென்றதுமே அந்நச்சுக்காற்று என் நெஞ்சை நிரப்ப மூச்சுத் திணறத்தொடங்கிவிடும். அவரும் ஓரிரு சொற்களுக்கு அப்பால் என்னிடம் பேசுவதில்லை. அச்சொற்கள் எதுவுமே நான் அறிந்த அஸ்தினபுரியின் அரசருக்குரியதல்ல.”
“எப்போதாவது அவர் என்னை தொட்டால்…” என்று இயல்பாக சொல்லிவந்தவள் உதடுகளை அழுந்தக் கடித்து தலைகுனிந்தாள். இமைப்பீலிகளிலிருந்து கண்ணீர் அவள் மடியில் விழுந்தது. “அங்கரே, அவர் என்னைத் தொடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நானறியாத பிறிதெவரோ என்னைத் தொடுவதுபோல் உணர்கிறேன். என் உடம்பு கூசி அதிர்கிறது.”
கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவள் விழிதூக்கி “உண்மையிலேயே இவ்வுடலுக்குள் பிறிதொருவர் குடியேறிவிட்டாரா? கூடு பாய்ந்து பிறிதொன்று வந்து இதற்குள் வாழ்வதற்கு வழியுள்ளதா?” என்றாள். பதைப்பு தெரிந்த விழிகளுடன் “என் நெஞ்சின் ஆழம் நன்கு அறிகிறது, இது அவரல்ல. அவரில் குடியேறிய பிறிதெவரோ, ஐயமில்லை” என்றாள். கர்ணன் சிரித்து “கூடு ஒன்றுதான், பானுமதி. உள்ளே அனைத்து மானுடரும் மாறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவ்வாறு முற்றிலும் மாறுவது என் வாழ்க்கையிலும் இது இரண்டாவது முறை” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்பது போல அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “பல ஆண்டுகளுக்கு முன்பு துரோணரின் கல்விநிலையிலிருந்து சிறுமைப்பட்டு நான் ஓடினேன். அன்று இந்த உடலைத் திறந்து வெளியேறிவிட விழைந்தேன். மண்ணோடு மண்ணாகப் படுத்து புதைந்துவிடவேண்டும் என்று துடித்தேன். பெரும் சிறுமைகளின் முன் நாம் நமது உடலை அத்தனை அழுக்கானதாக, எடை மிக்கதாக, சீரற்றதாக உணர்கிறோம். கிழித்து அதிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று தவிக்கிறோம். நம் முதுகெலும்பு கரைந்து நாம் புழுவாகிவிடுகிறோம்...”
“அந்தப் பதினெட்டு நாட்களைக் கொண்டு அஸ்தினபுரியின் அரசரின் இந்த ஒரு கணத்தை நான் புரிந்து கொள்கிறேன். அக்கணத்தில் நான் முடிவிலாது வாழ்கிறேன்” என்றான். அவள் அவனையே நோக்கிக் கொண்டிருந்தாள். “சிறுமை என்பதே ஆண் கொள்ளும் உச்ச துயரம்” என்றான் கர்ணன். “இறப்பல்ல, இழப்புகள் அல்ல.”
தணிந்த குரலில் “சிறுமை அனைவருக்கும் உரியதே” என்று பானுமதி சொன்னாள். “இல்லை, அன்னையர் என்றே மண்ணில் பிறக்கும் பெண்கள் ஆணவத்தைச் சுருக்கவும் சிறுமைகளை கடக்கவும் இயல்பிலேயே கற்றிருக்கிறார்கள். சிறுமையை மாறா வஞ்சமென ஆக்கிக்கொண்ட பெண்கள் எவரையும் நான் இதுவரை கண்டதில்லை” என்றான் கர்ணன்.
பானுமதி “இதே நகர் முற்றத்தில்தான் ஒருத்தி சிறுமையின் உச்சத்தை அடைந்தாள். அதை வஞ்சமென மாற்றிக்கொண்டு இந்நகர் மேல் தன் கண்ணீரை நெருப்புத்துளியாக்கி எறிந்துவிட்டுச் சென்றாள்” என்றாள். “ஆம், பற்றி எரிந்து புரமழிக்கும் கொற்றவைகள் உண்டு. ஆனால் அம்பை உயிர் வாழ்ந்திருந்தால் ஒரு கைக்குழந்தையை அவர் தன் கையில் எடுத்திருந்தால் முலைப்பாலின் தண்மையால் அந்த அனலை கடந்து சென்றிருப்பார். ஆணுக்கு முலையூற்றுக்கள் இல்லை. சில அனல்களை ஆண்களால் ஒருபோதும் அணைக்கமுடியாது” என்றான்.
“அவரால் மீளவே முடியாதா?” என்று தாழ்ந்த குரலில் பானுமதி கேட்டாள். “முடியும். அச்சிறுமைக்கு நிகரான வஞ்சமொன்றை அவர் இழைக்கும்போது. ஒருகணமெனில் ஒருகணம் இந்திரப்பிரஸ்தத்தின் அச்சிறுமகள் வந்து அவர் முன் தலை பணிந்தாள் என்றால் அன்று அவர் வெல்வார். அவ்வனலை அணைக்கும் குளிர்நீர் அது மட்டுமே” என்றான் கர்ணன். பானுமதி “என்ன சொல்கிறீர்கள்? நீங்களே உருவாக்கிக்கொண்ட வஞ்சத்திற்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எதற்கு சிறுமை கொள்ள வேண்டும்?” என்றாள். “இது எவரும் உருவாக்கியதல்ல. வேண்டுமென்றால் தெய்வங்கள் உருவாக்கியதென்று சொல்லலாம்” என்றான் கர்ணன்.
இருவரும் நினைத்த சொற்களை இழந்து ஒருவருக்குள் ஒருவர் மறந்து அசையாதிருந்தனர். தோட்டத்தில் தொலைவில் ஆடிய மரக்கிளை ஒன்றில் விழிநட்டு நின்றிருந்த கர்ணனை பானுமதியின் நீள்மூச்சு கலைத்தது. “இங்கிருந்து அதே வெறியுடன் இறங்கி இளைய அரசியின் அரண்மனைக்குச் சென்றார்” என்றாள். “நான் பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.
உலுக்கப்பட்ட மரத்திலிருந்து பனித்துளிகள் கொட்டுவது போல ஒரு விசும்பலோசையுடன் பானுமதி அழத்தொடங்கினாள். அவன் ஒரு சொல்லுமின்றி அவளை பார்த்துக்கொண்டிருந்தான். பலமுறை தன் அழுகையை அடக்க அவள் முயன்றாலும் அவள் உடலை மீறி அது வந்து கொண்டிருந்தது. கண்களை அழுந்தத் துடைத்து மூக்கையும் வாயையும் பொத்தி சின்ன விசும்பலுடன் மீண்டு மீண்டும் அழுகை பீரிட அதன் ஒழுக்கில் சென்றாள். மெல்ல அடங்கி நீள்மூச்சுடன் மீண்டாள்.
கண்களை அழுந்தத் துடைத்தபடி “அழக்கூடாது என்று எண்ணும்தோறும் அழுகை பெருகுகிறது” என்றாள். கர்ணன் “ஆம், இச்சிறுமையை நீ கடந்து சென்றே ஆகவேண்டும்” என்றான். “சிறுமையா? என்ன சிறுமை?” என்று கண்களைச் சுருக்கியபடி பானுமதி கேட்டாள். “அஸ்தினபுரியின் அரசர்களில் எவரும் பட்டத்தரசியை அறைந்திருக்கமாட்டார்கள்” என்றான்.
பானுமதி “அங்கரே, நான் அழுதது காசிநாட்டரசியாகிய என்னை அஸ்தினபுரியின் அரசர் அறைந்தார் என்பதற்காக அல்ல. இங்கு நான் வந்தபோது என் நெஞ்சை தகழியாக்கி ஏற்றிவைத்த சுடர் ஒன்று இருந்தது. நானறிந்த அரசரை முழுமையாக இழந்துவிட்டேன் என்று என் உள்ளம் சொல்கிறது” என்றாள்.
கர்ணன் “அவ்வாறல்ல. இது சில நாட்கள் நீடிக்கும் ஒரு வஞ்சம் மட்டுமே. நானும் இதைப்போன்ற வஞ்சங்களின் ஊடாக சென்றிருக்கிறேன். அவை மெல்ல அணைந்து குளிரும்” என்றான். “அழியுமா?” என்று அவள் கேட்டாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இவ்வஞ்சம் அனைத்தையும் சினமாக அன்றி வெறுப்பாகவோ காழ்ப்பாகவோ மாற்றி தனக்குள் கரந்துகொண்டிருந்தாலும்கூட அவர் நானறிந்த துரியோதனர் அல்ல. மணமுடித்து நான் வருகையில் நான் கண்ட அவ்வரசரை மீண்டும் பெறுவேன் என தோன்றவில்லை” என்றாள். “நான் என் மைந்தனைப் பெற்றது அந்த அரசரிடம்தான். இன்று அவ்வுடலேறி நின்றிருக்கும் வஞ்சத்தெய்வத்திற்கு அல்ல.”
“அனைத்தும் மீளும். அதற்கு வழியுள்ளது. அதற்கென்றே என் உயிர். அதற்கப்பால் நான் சொல்ல ஒன்றுமில்லை” என்றான் கர்ணன். “மீளுமெனில் நன்று. ஆனால் இப்போது அழுதுகொண்டிருக்கையில் என்னுள் ஒன்றை கண்டுகொண்டேன்” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “நான் என் முழு உள்ளத்தாலும் விரும்பிய அந்த அரசரைத்தான் மைந்தனாகப் பெற்றிருக்கிறேன். அவரை இழந்தாலும் நான் விரும்பிய அந்த அரசர் என் மடியில் மைந்தனாக இருக்கிறார். அவன் காலடி தொடர்ந்து எஞ்சிய வாழ்நாளை நான் கடந்துவிட முடியும்” என்றபின் அவள் எழுந்தாள்.
“நான் உங்களை அழைத்தது ஒன்று சொல்வதற்காகவே” என்றாள். கர்ணன் அவளை வெறுமனே நோக்கினான். “அவரை நீங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றான் கர்ணன். “நீங்கள் அழைத்துச் சென்றாக வேண்டும். இது என் ஆணை. நீங்கள் என் தமையன் என்ற வகையில் இதை கூறுகிறேன்” என்றாள். கர்ணன் “நீ எண்ணிச் சொல்லவில்லை” என்றான். “அனைத்துச் சொற்களையும் எண்ணியே சொல்கிறேன். நீங்கள் அழைத்துச் சென்றாகவேண்டும்.”
கர்ணன் உரக்க “அவன் அங்கு அடைந்த சிறுமையை நீ அறிவாயா? மீண்டும் ஒருமுறை…” என்று சொல்லத் துவங்க அவள் கைநீட்டித் தடுத்து “அது ஒரு சிறு தற்செயல். உங்கள் உளம் உறைந்த கசப்பால் அதை பெரிதுபடுத்திக் கொண்டீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு நான் ஓர் ஓலை அனுப்புகிறேன். இவர் விழைவதென்ன? அவள் வந்து இவர் முன் முடிதாழ்த்த வேண்டும் என்பதுதானே? அதை அவள் செய்வாள். பொறுத்தருளும்படி கோருவாள். அவையில் முதன்மையாக அமர்த்துவாள். போதுமல்லவா?” என்றாள்.
கர்ணன் இல்லை என்பது போல் தலையசைத்தான். “நான் கூறுகிறேன். என் சொல்லை அவள் தட்டமாட்டாள்” என்றாள் பானுமதி. “இனி இவரது அனல் அணைந்து பழையவராக மீளக்கூடுமென்றால் அதற்கொரு வாய்ப்பு இது மட்டுமே.” கர்ணன் “நீ உன்னால் அறிந்துகொள்ள முடியாதவற்றுடன் போரிடத் திட்டமிடுகிறாய்” என்றான். “என் மேல் கருணை கூருங்கள். எனக்கென இதை மட்டும் செய்யுங்கள். இந்த ஒருமுறை எவ்வண்ணமேனும் இவரை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றாள் பானுமதி. நெடுமூச்சுடன் “பார்ப்போம்” என்றான் கர்ணன்.
அவர்கள் சொல்லவேண்டியதை முழுக்க சொல்லிவிட்டதாக உணர்ந்தனர். கர்ணன் எழுந்தான். அவளிடம் ஆறுதலாக எதையேனும் சொல்லவேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒருசொல்லும் தன்னிடம் மிஞ்சியிருக்கவில்லை என்று தோன்றியது. தலைவணங்கி அமைதியாக விடைபெற்றான். ஆனால் மறுபக்கக் கதவை அணுகி கையை வைத்ததும் “மூத்தவரே!” என்று மெல்லிய குரலில் அவள் அழைத்தாள். கர்ணன் திரும்பி நோக்க “இரண்டாவது சிறுமை எதுவென்று தாங்கள் சொல்லவில்லை. ஆனால் என்னால் உணரமுடிகிறது” என்றாள். அவன் தன் உடலில் மெல்லிய துடிப்பை உணர்ந்தபடி விழிதிருப்பிக் கொண்டான்.
“உங்கள் துயருடன்தான் எப்போதும் நான் அணுக்கமாக இருக்கிறேன். அதிலிருந்து மீண்டு வாருங்கள். வஞ்சமோ கசப்போ கொண்டு மறைக்கும் அளவுக்கு எளியதல்ல இவ்வாழ்க்கை. எண்ணி முடிப்பதற்குள் ஆண்டுகள் கடந்துபோகும். முதுமை வந்து உங்களை மூடுகையில் இழந்தவற்றை எண்ணி ஏங்குவீர்கள் என்றால் அதுவே வாழ்வின் மிகப்பெரிய துயரமாகும்” என்றாள்.
ஒரே சமயம் அவள் மேலே பேசவேண்டும் என்றும் அச்சொற்களை தான் கேட்கக்கூடாதென்றும் எப்படி தோன்றுகிறதென்று அவன் வியந்து நின்றான். அவள் அணிகளும் ஆடைகளும் ஓசையிட சற்று முன்னால் வந்து “வேண்டாம், மூத்தவரே! கடந்து மறந்துவிடுங்கள். இவையெல்லாம் எளிமையானவை. ஒரு அடி எடுத்துவைத்தால் கடந்துவிடக்கூடிய அளவுக்கு சிறியவை. கனவிலிருந்து விழித்துக் கொள்வதைப்போலத்தான் அது. நான் சொல்வதை கேளுங்கள்” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை.
அவள் “இம்முறை இந்திரப்பிரஸ்தத்திற்கு நீங்கள் செல்லும்போது அவளிடம் சென்று பேசுங்கள்” என்றாள். கர்ணன் சீற்றத்துடன் திரும்பி “எவரிடம்?” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியிடம். என்னிடம் பேசுவது போல் பேசுங்கள்… விழிகளைப்பார்த்து.”
அவன் “அவள் பேரரசி, நான் அஸ்தினபுரியின் சிற்றரசன்” என்றான். “அல்ல. ஒருமுறை அணுகி அவள் விழிகளை நீங்கள் பார்த்தீர்களென்றால் உங்கள் இரண்டாவது வஞ்சத்தின் இறுதி முள்ளும் அகன்று போகும்” என்றாள். “என்ன சொல்கிறாய்?” அவளை நோக்காமலே கர்ணன் கேட்டான். அவள் “நீங்கள் அறிவீர்கள்” என்றாள். “சரி” என்றபடி அவன் கதவை திறந்தான். அவள் மேலும் ஓரடி வைத்து “நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். அவளிடம் அணுகி விழி நோக்கி பேசுங்கள். ஒரு சொல் போதும்” என்றாள்.
திடீரென்று தன்னை மீறிய சீற்றத்துடன் திரும்பிய கர்ணன் “போதும்! நீயே உருவாக்கிக்கொண்ட கீழ்மையை என்மேல் சுமத்த வேண்டியதில்லை” என்று கூவினான். “நான் என்ன சொல்கிறேன்…” என்று அவள் சொல்லத்தொடங்க “நீ ஒரு சொல்லும் சொல்ல வேண்டியதில்லை. உன் சொற்களைக் கேட்பதற்காக நான் இங்கு நிற்கவும் இல்லை. உன் கணவன் என் அரசன் என்பதனால் அவனைப்பற்றி பேசுவதற்காக இங்கு வந்தேன். எனது ஆழங்களை நீ கடந்து வர வேண்டியதில்லை” என்றான்.
“பின் எவர்தான் கடந்து வருவார்கள்?” என்று அவள் உரக்க கேட்டாள். “அங்கே அங்க நாட்டில் உங்களுக்கு இரு அரசிகள் இருக்கிறார்கள். இரு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் சில நாட்கள்கூட இருக்கவில்லை. அங்கிருந்த நாட்களிலும் அரசியரின் அந்தப்புரத்திற்கு மிகச்சில நாட்களே சென்றிருக்கிறீர்கள். இருமைந்தரையும் தொட்டு தோள் தூக்கவில்லை. மார்பில் அணைக்கவில்லை. அங்கிருந்த போதெல்லாம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தீர்கள். இங்கு உங்களுக்கு அணுக்கமானவர் அரசர். அவரோ உங்களை முற்றிலும் புறக்கணித்து தன் உலகத்தில் இருக்கிறார். நானும் அணுகக்கூடாதென்றால் எவரும் கடந்து வராத இருட்டு அறையாகவா உங்கள் உள்ளத்தை வைத்திருக்கப்போகிறீர்கள்? ஒட்டடையும் தூசியும் படிந்து மூத்தவள் குடியிருக்கும் இல்லமாகவா?” என்றாள்.
கர்ணன் “ஆம், அது பாழடைந்துவிட்டது. உனக்கென்ன? நான் உன்னிடம் வந்து கோரவில்லை, எனக்குத் துணை கொடு ஆறுதல் கொடு என்று. என் அரசி நீ. அரசனின் துணைவி நீ. அதற்கப்பால் ஏதுமில்லை” என்றான். பானுமதி கன்னங்களில் குழிவிழ விழி ஒளிர புன்னகைத்து “அரசரின் துணைவியை ஏன் ஒருமையில் அழைக்கிறீர்கள்?” என்றாள். “அப்படியென்றால் இனி முறைமை சொல்லி அழைக்கிறேன். அரசி, பொறுத்தருளுங்கள்! தங்கள் எல்லைகளுக்குள் தாங்கள் அமையுங்கள். இந்தச் சிற்றரசனிடம் எது பேசவேண்டும் எது பேசக் கூடாதென்று எண்ணிக் கொள்ளுங்கள்!” என்றான்.
பானுமதி “அந்த எல்லையை நான் வகுத்துக் கொள்ளப்போவதில்லை. என்றும் என் மூத்தவராகவே உங்களை எண்ணுவேன்” என்றபின் “இறுதியாக ஒன்றை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வஞ்சத்தை அவர்மேல் ஏற்றவேண்டாம்” என்றாள். கர்ணன் சினத்துடன் அவளை நோக்க அவள் ஒருகணம் அவன் விழிகளை சந்தித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
உடல் முழுக்க சினத்துடன் அவன் திரும்பி வந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவள் சொன்ன இறுதிச் சொற்களிலிருந்து அவன் உள்ளம் மேலும் மேலும் சொற்களை உருவாக்கி எரிந்தது. திரும்பி துரியோதனனின் அரண்மனைக்கு செல்லத்தோன்றவில்லை. காவலனிடம் புரவியை வாங்கிக்கொண்டு தன் அரண்மனைக்கு சென்றான்.
[ 4 ]
எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கால்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான்.
அவன் திரும்பி வந்து அங்கு அரசர் சென்றபோது இளைய அரசி ஓடிச்சென்று உள்ளே தன் அறைக்குள் புகுந்து கதவை சார்த்திக்கொண்டதாகவும் அரசர் அங்கிருந்த வாசல்களை உடைத்து தூண்களை உதைத்து விரிசலிடச்செய்து கூச்சலிட்டபின் திரும்பி தன் அரண்மனைக்கே சென்றுவிட்டதாகவும் சொன்னான். சற்று நேரத்தில் இளைய அரசியின் செய்தியே வந்தது. அவள் கலிங்கத்துக்கே மீள விழைவதாக சொல்லியிருந்தாள்.
சற்று நேரத்தில் துர்மதன் ஓடிவந்து “மூத்தவரே, தாங்கள் வரவேண்டும். அரசரை தாங்கள்தான் கட்டுக்குள் நிறுத்தவேண்டும். துச்சாதனரையும் துர்முகரையும் சுபாகுவையும் அறைந்துவிட்டார். பீமபலன் அடிவாங்கி விழுந்து நினைவிழந்துவிட்டான். அவரை மருத்துவ அறைக்கு கொண்டு சென்றிருக்கிறோம்” என்றான். கர்ணன் சற்று நேரம் தன் தலையை தாங்கி அமர்ந்திருந்தபின் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “குறைந்தது தாங்கள் அவரைப்பிடித்து நிறுத்தமுடியும். இழுத்துச் சென்று இன்றிரவுக்கு மட்டுமாவது எங்காவது அறைக்குள் அடைத்துவிட முடியும்” என்றான்.
“இத்தருணத்தில் நான் அவரை எதிர்கொள்ள விரும்பவில்லை” என்றான் கர்ணன். “இத்தருணத்தில்தான் தாங்கள் எங்களுக்குத் தேவை, மூத்தவரே” என்றான் துச்சலன். உரத்த குரலில் “அவரைப்போலவே நானும் இருக்கிறேன், மூடா. அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன். புரிகிறதா? செல்!” என்றான் கர்ணன். திகைத்து பார்த்த துச்சலன் வெளியே சென்ற சற்று நேரத்திலேயே துர்முகனும் விகர்ணனும் ஓடிவந்தனர். “மூத்தவரே, தாங்கள் வந்தாகவேண்டும். இல்லையேல் இன்றிரவு என்ன நடக்குமென்றே தெரியாது” என்றனர்.
கர்ணன் “என்ன சொல்கிறார்?” என்றான். “தந்தைக்குமுன் சென்று போருக்கு அறைகூவப்போவதாக சொல்கிறார். கதாயுதத்தை எடுப்பதற்காக பயிற்சிக்கூடத்திற்கு ஓடினார். அங்கே அவரைத் தடுத்த வீரர்களை அறைந்து வீழ்த்தினார்.” தலையை அசைத்து “அவர் செல்ல மாட்டார்” என்றான் கர்ணன். “செல்வார். இன்றிருக்கும் நிலையில் தந்தைக்கு முன் அவர் உறுதியாக சென்று நிற்பார். இப்போதிருக்கும் சொற்களுடன் அவர் சென்றால் தந்தையின் ஓர் அறையிலேயே உயிர்விடுவார். வாருங்கள் மூத்தவரே, இத்தருணத்தில் வராவிட்டால் பிறகு அவரை பார்க்கவே முடியாது போகலாம்” என்றான் விகர்ணன்.
கர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்துப் போட்டபடி நடந்தான். அறைக்கு வெளியே வந்தவுடன் “இன்னும் சற்று மது கொண்டு வரச்சொல்” என்றான். “போதும், மூத்தவரே. தாங்கள் இப்போதே கால் தள்ளாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களால் நடக்க முடியாது” என்றான். “நீ எனக்கு சொல் சூழ வேண்டியதில்லை. விலகு, மூடா!” என்று கர்ணன் கையை ஓங்கினான். விகர்ணன் சற்று பின்னடைந்தான். கர்ணன் விகர்ணனைப் பார்த்து “உன்னை தோளில் தூக்கி நான் வளர்த்திருக்கிறேன். என் முன் சிறுவனாக அன்றி நீ நின்றதில்லை. நான் நடக்க முடியுமா இல்லையா என்று சொல்வதற்கு நீ யார்?” என்றான். விகர்ணன் “பிழைதான். பொறுத்தருளுங்கள், மூத்தவரே! விரைவில் வாருங்கள்! அரசர் எந்நிலையில் இருக்கிறாரென்றே தெரியவில்லை” என்றான்.
துரியோதனனின் மாளிகை முகப்பில் கௌரவர்கள் அனைவருமே நின்றிருந்தனர். கர்ணனைக் கண்டதும் அவர்களில் சிலர் அவனை நோக்கி ஓடி வந்தனர். சுஜாதன் கர்ணனின் கையை பற்றிக்கொண்டு “மூத்தவரே…” என்று அழுதான். “என்ன? என்ன?” என்றான் கர்ணன். “அவர் பிறிதொருவராக ஆகிவிட்டார். அவர் எங்கள் மூத்தவரே அல்ல. வேறு ஏதோ தெய்வம் அவருக்குள் குடியேறிவிட்டது” என்றான் சுஜாதன். கர்ணன் “பொறு பொறு” என்று அவன் தோளை தட்டியபடி முன்னால் நடந்தான். துர்மதன் “எதிர்ப்படும் அத்தனை பேரையும் அறைகிறார். தந்தையிடம் போர் புரியப்போவதாக அறைகூவுகிறார்” என்றான்.
“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். துச்சாதனன் “படைக்கலச்சாலையில் கதை சுழற்றிக் கொண்டிருக்கிறார். தந்தையை போருக்கு அறைகூவுவதாகச் சொல்லி நான்கு வீரர்களை தூதனுப்பிவிட்டார். நால்வரையும் நாங்கள் தடுத்துவிட்டோம். தந்தை வரவில்லை என்று கண்டால் அவரே கதையுடன் கிளம்பி புஷ்பகோஷ்டத்துக்கு செல்லக்கூடும்” என்றான். கர்ணன் நின்று ஒரே கணத்தில் அந்தப்போரை கண்ணுக்குள் கண்டான். “ஆம், அவர் போருக்குத்தான் சித்தமாகிவிட்டிருக்கிறார்” என்றான். தம்பியர் உடல்தளர்வதை அவன் ஓரக்கண் கண்டது.
கர்ணன் வலச்சுற்றைக் கடந்து படைக்கலப் பயிற்சிசாலைக்கு சென்றான். நான்குபக்கமும் கதைப்பயிற்சிக்களத்தில் நிழல்களாடுவது சூழ்ந்திருந்த வலச்சுற்றின் சுதைத்தூண்களில் ஒளியாடலாகத் தெரிந்தது. அவன் படைக்கலப் பயிற்சிசாலைக்குள் நுழைந்தபோதே சாயும் வெயிலில் கதை சுழற்றிக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். கதை காற்றில் உறுமியபடி சுழன்று காட்சியில் உருகி இரும்பாலான ஒரு நீள் சுழலாக மாறியது. விண்ணிலிருந்து ஒரு பாம்பு துரியோதனனைச் சுற்றி பிணைந்து சீறுவது போலிருந்தது. பெருக்கெடுத்தெழுந்த ஓடை ஒன்று அவனை அள்ளிச் சுழற்றிச் சென்றது போல.
அவனைப் பார்த்தபடி கர்ணன் செய்வதறியாது நின்றான். துர்மதன் “அருகே செல்ல வேண்டாம், மூத்தவரே” என்றான். “செல்வதென்றால் ஒரு கதையுடன் செல்லுங்கள்” என்றான் துர்முகன். கர்ணன் அவர்கள் இருவரையும் தட்டி விலக்கிவிட்டு களமுற்றத்தில் இறங்கினான். “வேண்டாம், மூத்தவரே” என்று சொன்னபடி விகர்ணன் மேலும் சற்று அணுக அப்பால் செல் என்பது போல் விழிகளை அசைத்து “ம்” என்றான். அவன் நின்றுவிட்டான். கர்ணன் துரியோதனனை நெருங்கினான்.
துரியோதனன் அவன் வந்ததை முதலில் பார்க்கவில்லை என்று தோன்றியது. பின்பு ஒரு கணம் அவன் நோக்கு வந்து தொட்டுச் சென்றது. அவன் கண்களில் இருந்த வெறி எந்த மனிதரையும் அடையாளம் காண்பதல்ல என்று புரிந்தது. சீரான காலடிகளுடன் கர்ணன் அவனை நெருங்கிச் சென்றான். அவனுக்குப் பின்னால் படைக்கலச்சாலையில் கௌரவர்கள் அனைவரும் கூடி உடல் விரைப்பு கொள்ள நின்றனர். துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் காலெடுத்து வைக்க துர்மதன் அவன் தோளை பற்றினான். அவன் கையை தட்டியபடி துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.
கர்ணன் துரியோதனனின் கதை உருவாக்கிய சுழல் வளையத்தை ஒரு கணத்தில் கடந்து அவன் கையைப்பற்றி நிறுத்தினான். காலை அவன் இருகால்களுக்கு நடுவே கொண்டு வந்து உந்தி நிலையழியச் செய்து இன்னொரு கையால் அவன் இடைக்கச்சையைப் பற்றி தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி தரையில் ஓங்கி அறைந்தான். துரியோதனனின் கையிலிருந்த கதை உருண்டு தெறித்து அப்பால் சென்றது. இருகால்களையும் மடித்து துரியோதனனின் இரு தொடைகள் மேல் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டு தன் இருகைகளாலும் அவன் இரு தோள்களையும் பற்றி நிலத்தில் அழுத்தி அசையாது நிறுத்தினான்.
வெறிகொண்ட பன்றி போல் உறுமியபடி துரியோதனன் கர்ணனின் பிடியிலிருந்து தப்பமுடியாமல் திமிறி நெளிந்தான். கர்ணன் குனிந்து அவன் விழிகளைப் பார்த்து “அஸ்தினபுரியின் அரசே! என் சொற்களை கேளுங்கள். நாம் இந்திரப்பிரஸ்தம் செல்வோம்” என்றான். அச்சொற்கள் புரியாதது போல் துரியோதனன் உறுமினான். “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வோம். அவளை பார்ப்போம். எதையும் பொறுத்தருளுவதற்காக நாம் செல்லவில்லை. அங்கு நாம் அடைந்த சிறுமைக்கு நிகர் செய்வோம்” என்றான். உச்ச இறுக்கத்தில் என நின்றிருந்த துரியோதனன் தசைகள் மெல்ல அசைந்தன. “ஆம், அதற்காகவே சொல்கிறேன். நாம் அங்கு செல்வோம். அவள் விழிகளைப் பார்த்து பேசுவோம், அதற்காக” என்றான் கர்ணன்.
[ 5 ]
கதவு மெல்லிய புறாக்குறுகலோசையுடன் திறக்க மருத்துவர் வெளியே வந்து “சீரடைந்து வருகிறார். ஏழுமுறை நீரருந்திவிட்டார், ஒருமுறை நீர் பிரிந்துவிட்டது” என்றார். “மேலும் இருமுறை உடல்நீர் பிரிந்துவிட்டால் வெம்மை குறையத்தொடங்கிவிடும். ஆனால் விழித்தெழுந்து மீண்டும் மதுவை கோரினாரென்றால் எதன் பொருட்டும் ஒரு துளிகூட உள்ளே அது செல்லக்கூடாது. அது என்னால் ஆகக்கூடியதல்ல. தாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். கர்ணன் தலையசைத்தான்.
துச்சாதனன் “என்ன செய்வதென்று தெரியவில்லை, மூத்தவரே. நானோ நீங்களோ அவர் மது அருந்துவதை தடுக்க முடியுமா?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. கீழே தேர்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது. “அவர்கள்தான்” என்றான் துச்சாதனன். கர்ணன் தன் அனைத்து உளச்சொற்களையும் திரட்டிக்கொண்டான். உடலை எளிதாக்குவதனூடாக உள்ளத்தையும் நிகர் நிலைப்படுத்தினான். ஆனால் அவனால் தன்னை முன்செலுத்த முடியவில்லை.
“நீ சென்று அவர்களை வரச்சொல்! நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். துச்சாதனன் “இல்லை மூத்தவரே, என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. தாங்கள் வாருங்கள்” என்றான். “நான் அரசரை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன். நீ செல்! முகமன்கள் அனைத்தையும் சொல்!” என்று துச்சாதனின் தோளைத்தட்டி அனுப்பிவிட்டு அவன் துரியோதனன் அறைக்குள் நுழைந்தான்.
துரியோதனன் அப்போதும் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் அருகே இரு மருத்துவ உதவியாளர்களும் கையில் நீள்மூக்குக் கெண்டிகளுடன் நின்றிருந்தனர். துரியோதனன் வாயுமிழ்வது போல் சற்று ஓசை எழுப்ப “நெஞ்சை தடவுங்கள்” என்றார் மருத்துவர். அவன் நெஞ்சை தடவினான். மருத்துவர் அவன் இருகைகளையும் பிரித்துப்பார்த்து “உள்ளங்கைகளில் நீர்மை சற்று கூடியிருக்கிறது” என்றார்.
சுரைக்காய் குடுக்கை ஒன்று துரியோதனனின் இரு கால்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்தது. “நினைவு மீண்டுவிட்டாரா?” என்றான் கர்ணன். “நினைவு மீளவேண்டுமென்றால் உடல் வெம்மை குறைய வேண்டும். குறைந்து வருகிறது” என்றார் மருத்துவர். கர்ணன் இடையில் கைவைத்து துரியோதனனை நோக்கி நின்றான். இரு மருத்துவ உதவியாளர்களும் துரியோதனனை மெல்லத்தூக்கி அமர்வது போல நகர்த்தி மீண்டும் குடுவையை அவன் இடைநடுவே வைத்தனர்.
ஓங்கரித்து உடல் எம்பி எழுந்து துரியோதனன் குமட்டி குடித்தநீரை வாயுமிழ்ந்தான். “ஏன் நீர் வெளிவருகிறது?” என்று கர்ணன் கேட்டான். மருத்துவர் “உடல்நீர் பிரியவில்லை. உடல்நீர் பிரியாவிடில் குடிநீர் குமட்டும்” என்றார்.
“இத்தருணத்தில் அவரால் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?” என்று கர்ணன் கேட்டான். “இருமுறை உடல் நீர் பிரிந்தால் எழுந்து நடக்கவே முடியும். சோர்விருக்கும், ஆனால் நடக்க முடியும்” என்றார் மருத்துவர். கர்ணன் “அவர் சித்தமானதும் எனக்கு தெரிவியுங்கள்” என்றபின் அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கினான்.
கீழே கூடத்தில் அரசணிக்கோலத்தில் தருமனும் அணியாடையில் நான்கு தம்பியரும் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தருமன் முன்னால் வந்து “எப்படி இருக்கிறார்?” என்றார். “சீரடைந்து வருகிறார்” என்றான் கர்ணன். “மதுவை சற்று மிகுதியாகக் குடித்துவிட்டார் என்று இளையவன் சொன்னான். இத்தனை நாள் இங்கு மதுக் களியாட்டு நடந்தது. அப்போதெல்லாம் அஸ்தினபுரி அரசர் மிகையாக அருந்தவில்லை. நேற்றென்ன நடந்தது?” என்றார் தருமன்.
“நேற்று தனிமையில் இருந்தார். சற்று களைப்பாக இருந்ததனால் நான் என் அரண்மனைக்குச் சென்று துயின்றுவிட்டேன்” என்றான் கர்ணன். “ஆம், தனிமை மதுவை மிகச்செய்கிறது” என்றார் தருமன். “எவராவது ஒருவர் இருந்திருக்கலாம். தாழ்வில்லை, மது அருந்தியதுதான் நோய்முதல் என்றால் ஒருநாழிகைக்குள் சரியாகிவிடுவார். மருத்துவர் இருக்கிறாரல்லவா?”
“ஆம்” என்றான் கர்ணன். தருமன் “இன்று அஸ்தினபுரியின் அரசர் கிளம்புவதாக சொன்னார்கள். மதுபர்க்கம் அளித்து அனைவருக்கும் விடைகொடுப்பதற்காக வந்தோம். இளையோர் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள்” என்றார். “ஆம். ஒரு விரிவான மதுபர்க்கச் சடங்கு நிகழ்த்துவதற்கு அரசரின் உடல் நிலை ஒத்துழைக்காதென்பதால் அவர்களை நான்தான் அனுப்பினேன்” என்றான் கர்ணன்.
“அவர்களுக்கு மதுபர்க்கம் அளித்திருக்கலாமே? அஸ்தினபுரியின் அரசர் தம்பியருடனும் மைந்தருடனும் துணைவியருடனும் இங்கு வந்திருப்பதுதான் உண்மையில் என்னை சத்ராஜித்தாக உணரச்செய்தது. பிறிதொருவருக்காக அல்ல. என் மூதாதையருக்காகவும் உடன் பிறந்தாருக்காகவும் இச்செங்கோலை ஏந்துகிறேன் என்று எண்ணிக் கொண்டேன்” என்று தருமன் சொன்னார்.
அவர் விழிகளைத் தவிர்த்து “வருக அரசே, அமர்வோம்!” என்றபடி கர்ணன் சென்று பீடத்தில் அமர தருமன் அவனருகே அமர்ந்தார். அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் சற்று பின்னால் நின்றுகொண்டனர். துச்சாதனன் போய் அவர்களோடு இணைந்து நின்றான். பீமனின் விழிகள் அவன் விழிகளுடன் உரையாடுவதை கர்ணன் ஒரு கண விழியசைவில் கண்டான்.
தருமன் நீள்மூச்சுடன் “உண்மையில் அஸ்தினபுரியின் அரசர் வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் விரும்பவில்லை என்றும் பிதாமகரின் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதை அவர் மீறக்கூடும் என்றும் எனக்குச் செய்தி வந்தது. அவர் வரவேண்டுமென்று என்னுடைய தெய்வங்களையும் மூதாதையரையும் வேண்டிக்கொண்டேன். அவரை அழைக்கும்பொருட்டு நானே தம்பியருடன் அஸ்தினபுரிக்கு வந்து பணிந்தால் என்ன என்றுகூட கேட்டேன். அது முறையல்ல. பிற அரசர்களும் அம்முறைமைகளை எதிர்ப்பார்க்கத் தொடங்கினால் நம்மால் அதை ஈடேற்ற முடியாது என்று அமைச்சர் சௌனகர் சொன்னார்” என்றார்.
“அப்படியென்றால் தனிப்பட்ட முறையில் ஓர் ஓலை அனுப்பலாம் என்று எண்ணினேன். அதற்குள் அவர் வர முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்கள். உண்மையில் அஸ்தினபுரியின் அரசப் படகு வந்து இங்கே படித்துறையில் நிற்பது வரைக்கும் நான் முள்முனையில் இருந்தேன். படகிலிருந்து அரசணிக்கோலத்தில் அஸ்தினபுரியின் அரசர் தோன்றியபோது என் நெஞ்சு நிறைந்தது. விழிநிறைய தெய்வங்களே என்று எனக்குள் கூவிவிட்டேன்” என்று தருமன் தொடர்ந்தார்.
“இங்கு அவர் வந்தது ஒவ்வொரு அரசரிடமும் உருவாக்கிய மாறுதலை பார்த்தேன். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஒரு பூசல் நிகழும் என்பதே அவர்கள் இறுதி எதிர்பார்ப்பாக இருந்தது. நாம் போரிட்டு அழிவோம் என்றால் அதிலிருந்து தங்கள் வெற்றியை ஈட்டலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை ஒற்றர் செய்திகள் மூலம் நான் உணர்ந்தேன். வேள்விப்பந்தலின் முதல் அவையில் பீஷ்மபிதாமகரும் தந்தை திருதராஷ்டிரரும் இளையவர் துரியோதனனும் நூற்றுவரும் அமர்ந்திருக்கக் காண்கையில் அவர்களின் முகங்கள் இறுகின. பிறகு என்னிடம் பேசும் ஒவ்வொருவருடைய மொழியிலும் மாறுதல் வந்தது.”
அவர் உள்ளத்தினூடாக ஒரு நிழல் கடந்துசெல்வதை கர்ணன் அவர் முகத்தில் கண்டான். விழிகளை சரித்து “சிசுபாலரின் இறப்பு பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரியர்களை கொதித்தெழச் செய்திருக்கும். அஸ்தினபுரியே எனக்கு அருகில் அரணாக அமர்ந்திருக்கையில் ஒரு சொல்லெடுக்கும் துணிவு எந்த ஷத்ரியருக்கும் வரவில்லை. இனி எப்போதும் எழப்போவதுமில்லை” என்றார் தருமன்.
“ஆம்” என்றான் கர்ணன். தருமன் முகம் மலர்ந்து திரும்பி துச்சாதனனின் கைகளைப் பற்றியபடி “உணவுச்சாலைக்குப் பொறுப்பேற்று இளையவன் துச்சாதனன் பணியாற்றியதைக்கண்டு நானடைந்த நிறைவுக்கு அளவே இல்லை” என்றார். உடனே அக்காட்சியை உளக்கண்ணில் கண்டு வாய்விட்டுச் சிரித்து “இந்த மல்லர்கள் அனைவரும் உள அளவில் நிகரானவர்கள். இவ்வேள்விச்சடங்கில் பெரும்பாலான நேரம் பீமனும் துச்சாதனனுடன் உணவறையில்தான் இருந்தான்” என்றார். கர்ணன் புன்னகைத்தான்.
மேலிருந்து இறங்கி வந்த மருத்துவ உதவியாளன் “விழித்துக் கொண்டார்” என்றான். “நான் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “நானும் வருகிறேனே?” என்றார் தருமன். “நான் பார்த்துவிட்டு அவர் விரும்பினால் மறுகணம் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்றபடி கர்ணன் மேலே சென்றான்.
துரியோதனன் எழுந்து அமர்ந்திருந்தான். அவன் நீர் வெளியேற்றியிருப்பது குடுவையில் தெரிந்தது. மீண்டும் அவன் நீரருந்த வேண்டுமென்று குடுவையை நீட்டிய மருத்துவ உதவியாளரை விலகிச் செல்லும்படி சொல்லிவிட்டு “நாம் கிளம்ப வேண்டும், அங்கரே” என்றான். கர்ணன் “கீழே மதுபர்க்கச் சடங்கிற்காக வந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம். அறிந்தேன். ஆனால் அச்சடங்குக்கு நான் நிற்கப்போவதில்லை” என்றான்.
கர்ணன் “அரசரே வந்திருக்கிறார்” என்றான். “அவன் எனக்கு அரசனல்ல” என்று உரத்தகுரலில் துரியோதனன் சொன்னான். “ஆம், அதை நானும் அறிவேன். ஆயினும் இங்கு இவ்வளவு தொலைவுக்கு வந்திருக்கிறார். இளையவர் நால்வருடன் வந்திருக்கிறார்” என்றான் கர்ணன்.
“மதுபர்க்கச் சடங்கை புறக்கணித்து தம்பியர் சென்றதே அவருக்கு துயரளித்திருக்கிறது. நாம் இங்கு வந்ததே தனக்களிக்கப்பட்ட பெருமதிப்பாக எண்ணுகிறார். எளிய மனிதர்… அவரை நாம் துயருறச்செய்ய வேண்டியதில்லை. மிக எளிமையானது மதுபர்க்கச் சடங்கு. அரைநாழிகை நேரம் கூட ஆகாது. அவரளிக்கும் தேன்பாலமுதை உண்டு முறைப்படி விடைபெற்று நாம் கிளம்புகிறோம்” என்றான்.
துரியோதனன் உறுதியான குரலில் “இல்லை, நான் எவரையும் சந்திப்பதாக இல்லை” என்றான். “அது அலருக்கு இடமாகும். இப்போதுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இணைந்திருப்பது ஷத்ரியர்களில் உருவாக்கிய அச்சத்தைப்பற்றி. இரு அரசுகளும் பூசலிடுவதை அனைவரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.
சினத்துடன் “பூசல் தொடங்கிவிட்டதென்று அனைவருக்கும் தெரியட்டும்” என்று கூவி “போய் சொல்லுங்கள், அவர்களை திரும்பிப் போகும்படி! இன்னும் சற்று நேரத்தில் நான் இந்நகரில் இருந்து கிளம்புகிறேன். இங்கு நானிருக்கப்போவதில்லை ஒருகணமும்” என்றான். ஏவலரை அழைத்து “என் உடைகளை சித்தமாக்குங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் கிளம்பவேண்டும்” என்றான்.
கர்ணன் “அரசே…” என்று சொல்லத்தொடங்க போதும் என்று கைகாட்டி “அவர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கர்ணன் “நன்று” என்று தலைதாழ்த்தி கீழே வந்தான். எப்படி எச்சொற்களில் அதை முன்னெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வருவதைக் கண்டதுமே தருமன் எழுந்து “என்ன சொல்கிறார்? நினைவு மீண்டுவிட்டதா?” என்றார். “நினைவு மீண்டுவிட்டது” என்றான் கர்ணன். “உடைமாற்றி வர சற்று பிந்தும்.”
“நான் காத்திருக்கிறேன். இன்று மதுபர்க்கச் சடங்குகள் பிறிதேதுமில்லை. இறுதியாக கிளம்பிச் செல்பவர்கள் இவர்களே” என்றார் தருமன். திரும்பி நகுலனிடம் “இளையோனே, மதுபர்க்கத்துக்குரிய அனைத்தும் அங்கு சித்தமாகட்டும். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் ஒருங்குக!” என்றார்.
கர்ணன் அப்போதுதான் வெளிமுற்றத்தில் இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் வைதிகர்களும் அரசவைக்காவலரும் அகம்படியினரும் திரண்டிருப்பதை கண்டான். தயங்கியபிறகு “ஒரு பெரிய சடங்கிற்கு அவர் சித்தமாக இல்லை. அவர் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது. தன் உடல்நிலை சீர்கெட்டிருப்பதை அனைவரும் பார்க்கவேண்டுமா என்று நினைக்கிறார். இங்கு இந்தக் கூடத்திலேயே எளிய முறையில் விடைபெறும் சடங்கை முடிப்போம்” என்றான்.
“இனியோர் வருகையிலும் செல்கையிலும் மதுபர்க்கம் நிகழவேண்டுமென்பது ஒரு முறைமை அல்லவா? ராஜசூயம் நிகழ்ந்தபிறகு மதுபர்க்கம் இன்றி அவர்கள் கிளம்பிச்சென்றால் அது எனக்கு மதிப்பு அளிப்பதல்ல” என்றார் தருமன். “மதுபர்க்கம் நிகழட்டும். தாங்கள் தேன்பழக்கூழை அவருக்கு அளியுங்கள். அவர் உண்டு ஐவரிடமும் விடைபெற்று வெளியே செல்வார்.”
பீமன் “அவர் நம் மூத்தவர். மங்கல வாழ்த்தும் இசையும் இன்றி அவர் எப்படி செல்லமுடியும்?” என்றான். கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் “இவ்வழியாகத்தானே அவர் வெளியே செல்வார். செல்லும் வழியில் மங்கல இசையும் வாழ்த்துக்களும் எழட்டுமே!” என்றான். கர்ணன் அவன் விழிகளைப் பார்த்து பார்வையை திருப்பிக்கொண்டு “ஆம்” என்றான்.
மேலே சென்று துரியோதனனிடம் என்ன சொல்வது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே படிகளில் துரியோதனன் விரைந்திறங்கி வரும் ஓசை கேட்டது. “அவர்தான் இளையோரே, துரியோதனர். பீமனின் காலடியோசை போன்றது அவரது காலடியோசை” என்றபடி தருமன் எழுந்தார். விரைந்த ஓசையுடன் படிகளில் இறங்கி வெளியே வந்த துரியோதனன் அவர்களை அணுகாமல் இடைநாழி வழியாகவே நடந்து கூடத்தை அடைந்து வெளியே சென்றான்.
“வெளியே செல்கிறார். வழி தவறிவிட்டார் போல” என்று சொல்லியபடி தருமன் எழுந்து அவனுக்குப் பின்னால் ஓடினார். “மூத்தவரே!” என்று பீமன் உரத்த குரலில் அழைத்தான். தருமன் நின்று “இங்கு உள்ளே வராமல் செல்கிறார். நாமிருப்பது தெரியாது போலிருக்கிறது” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே! தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. எவர் பின்னாலும் தாங்கள் ஓட வேண்டியதில்லை” என்றான் பீமன் உரத்த குரலில். தருமன் “என்ன சொல்கிறாய்? அவர் வெளியே போய்விட்டார்” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.
துரியோதனன் வெளியே சென்றதும் அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்றறியாமல் குழம்பி எழுப்பிய ஒலிகள் கேட்டன. கர்ணன் அவருக்குப் பின்னால் செல்ல முயல தருமன் “அவரை நிற்கச் சொல்லுங்கள், அங்கரே! என்ன பிழை என்றாலும் நான் பொறுத்தருளும்படி கோருகிறேன் என்று சொல்லுங்கள்! மதுபர்க்கம் நிகழாது செல்லவேண்டாம் என்று சொல்லுங்கள், அங்கரே!” என்றபடி பின்னால் வந்தார்.
கர்ணன் வெளியே சென்றபோது துரியோதனன் மங்கல இசைச்சூதரைக் கடந்து அப்பால் சென்று அங்கு நின்றிருந்த புரவி மேல் ஏறிக்கொண்டதை கண்டான். அவன் பின்னால் செல்லப்போகும் போது யாரோ கைகாட்ட மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெடித்தன. கர்ணன் ஓடிச்சென்று இன்னொரு புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப்பற்றி ஏறி முன்னால் சென்ற துரியோதனனைத் தொடர்ந்து சென்றான்.
[ 6 ]
துரியோதனனின் புரவி யமுனையை அடைந்ததும் நில்லாமல் பக்கவாட்டில் நீர்ப்பெருக்குக்கு இணையாகச் சென்ற பெருஞ்சாலையில் திரும்பி அங்கு கரைமுட்டி பெருகிச் சென்றுகொண்டிருந்த மக்கள்திரளில் மறைந்ததும் கர்ணன் தன் புரவியின் சேணத்தின்மேல் காலூன்றி எழுந்து தொலைவில் அவன் செல்வதை விழிகளால் குறித்துக் கொண்டு புரவியைத் தட்டி இருபக்கங்களிலும் அழுத்தி நெருக்கிய தோள்களையும் அத்திரிகளையும் விலக்கி தொடர்ந்தான்.
பல மாதங்களாக இந்திரப்பிரஸ்தத்தில் வந்து செறிந்திருந்த மக்கள் அனைவரும் அன்று ஒரு நாளிலேயே நகர்விட்டுச் செல்ல முயன்றமையால் விழிதொடும் இடமெங்கும் தலைகளும் ஆடைகளுமாக மக்கள் அலையடித்தனர். மன்னர்கள் செல்லும் பொருட்டு மூன்று நாள் பிறர் கலத்துறைகளை பயன்படுத்த தடை இருந்தது. ஈசல்புற்று வாயில்களைப்போல அனைத்துத் தெருக்களின் முனைகளும் திறந்து கொண்டன. எங்கும் வண்டிகளின் சகட ஓசைகளும் புரவிகளின் குளம்போசைகளும் மக்களின் குரலும் கலந்த இரைச்சல் மாமழை போல ஒலித்துச் சூழ்ந்து செவிகளை இன்மையென உணரவைத்தது.
படித்துறைகளில் நூற்றுக்கணக்கான வணிகப்படகுகளும் பயணியர் படகுகளும் மொய்த்திருந்தன. பலநூறு படகுகள் யமுனையின் பெருக்கில் அலைகளில் எழுந்தாடியபடி காத்து நின்றிருந்தன. தொலைவில் யமுனைக்கு குறுக்கே படகுகளை நிறுத்தி கட்டப்பட்டிருந்த பாலங்களினூடாக மக்கள் வண்ண ஒழுக்காக மறுகரைக்கு சென்று கொண்டிருந்தனர். கர்ணன் திரளினூடாக தன்னை வளைத்து வளைத்து செலுத்திக் கொண்டு தொலைவில் சென்று கொண்டிருந்த துரியோதனனின் புரவியின் மேல் விழிநட்டிருந்தான்.
காலைவெயில் நன்கு எழுந்த பின்னரே இந்திரகீலத்தின் பெருஞ்சிலையை அவர்களால் கடக்க முடிந்தது. அதன் பின் மையச்சாலை நான்கு கிளைகளாக பிரிந்தபோது கூட்டத்தின் நெரிசல் சற்று குறைந்தது. மேலும் நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் கர்ணனால் துரியோதனனை அணுக முடிந்தது. அங்கிருந்து நோக்கியபோது மரக்கிளைகளின் செறிவுக்கு ஊடாக இந்திரனின் தலை எழுந்து தெரிந்தது. அவன் கையிலிருந்த மின்கதிர் வானைத்தொடுவது போல் எழுந்திருந்தது.
கர்ணன் நெஞ்சு நிறைந்த அழுத்தத்துடன் ஒன்றை உணர்ந்தான், பிறகொருபோதும் அந்நகரத்தில் அவன் நுழையப்போவதில்லை. அவ்வுணர்வு ஏன் எழுகிறது என்று உடனே அவன் அகம் வியந்தது. ஆனால் அழுத்தம் கொண்ட எண்ணங்கள் காலத்திற்கிணையாகத் தாவுகையில் மிகுவிரைவு கொண்டு காலத்தையும் கடந்து சென்றுவிடுகின்றன. நாளையும் நாளைக்கு அப்பாலும் சென்றடைந்துவிடுகின்றன. “ஆம்” என்று அவன் எவரிடமோ தலையசைத்தான்.
நெஞ்சில் அந்த அழுத்தம் ஏன் நிறைந்துள்ளது என்று அவனுக்குத் தெரியவில்லை. தன் உடலில் திமிறியெழுந்த அறியாத சினம் ஒன்றால் உந்தப்பட்டு சம்மட்டியால் புரவியை அடித்து குதிமுள்ளால் அதை குத்தினான். வெருண்டு கால்தூக்கிக் கனைத்தபடி அது அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரு அத்திரிகளையும் ஒரு பொதி வண்டியையும் முந்தி முன்னால் பாய்ந்தது. அதன் விரைந்த குளம்படி கேட்டு இருபக்கமும் மக்கள் பிளந்து வழிவிட அவன் மூச்சிரைக்க இடை புரவியின் முதுகில் படாமல் நின்று காற்றில் பாய்ந்தான்.
துரியோதனனை அணுகி அவனுக்கிணையாக புரவியை செலுத்தி மூச்சிரைத்தபடி அமர்ந்தான். துரியோதனனும் விரைந்து வந்தமையால் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். அவன் எடை அப்புரவியை களைப்படையச்செய்து அதன் உடலெங்கும் வியர்வை ஊறி உருளச்செய்தது. ஆனால் அவன் கர்ணன் வருவதை அறிந்ததுபோல் தெரியவில்லை. கர்ணன் அவனை அழைக்கவும் இல்லை. இணையான விரைவில் இருவரும் அச்சாலையினூடாகச் சென்றனர்.
உச்சிப் பொழுதுக்குள் மேலும் ஆறேழு இடங்களில் சாலைகள் பிரிய கூட்டம் குறைந்தது. கூட்டம் குறையக்குறைய அவர்களின் விரைவும் குறைந்தது. தண்ணீர் பந்தலொன்று வழியோரமாக தென்பட கர்ணன் “அரசே, நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான். அவன் யார் என்பதைப்போல துரியோதனன் திரும்பிப் பார்த்தான். “இன்று நீரின்மையால்தான் நோயுற்றிருந்தீர்கள். நீரருந்திவிட்டுச் செல்லலாம்” என்றான் கர்ணன் மீண்டும்.
தலையசைத்து துரியோதனன் புரவியை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த தண்ணீர்பந்தலை நோக்கி செலுத்தினான். அதன் பெருமுற்றத்தில் இறங்கி புரவிகளை நீரருந்த விட்டனர். நீரைப்பார்த்ததும் பெருமூச்சுவிட்டு பிடரி சிலிர்த்து, தொடைத்தசைகள் விதிர்க்க, ஒற்றைப் பின்னங்காலைத் தூக்கி நின்று அவை நீரருந்தின. கர்ணன் இரு புரவிகளின் கடிவாளங்களையும் பற்றிக்கொண்டான். துரியோதனன் நீர்ப்பந்தலில் பெரிய பாளைத் தொன்னைகளில் அளிக்கப்பட்ட இன்நீரை வாங்கி அருந்தினான்.
நீரை கொண்டுபோக விரும்புபவர்களுக்காக பாளையால் செய்யப்பட்ட குடுவைகளில் நீரை அளித்தனர். கர்ணன் இரு குடுவைகளை வாங்கி தன் புரவியின் சேணத்தில் கட்டி தொங்கவிட்டான். புரவிகளை அங்கே நின்ற சாலமரத்தடியில் கொண்டு சென்று நிறுத்தி மரத்திலிருந்து தழைகளை பறித்துவந்து அவற்றின் கழுத்தையும் விலாவையும் பின்தொடைகளையும் வயிற்றையும் அழுத்தி நீவிவிட்டான். அவன் புரவிகளை நீவுவதைப் பார்த்தபடி அருகே இருந்த பாறையொன்றில் துரியோதனன் வந்து அமர்ந்தான்.
கர்ணன் சாலையைக் கடந்து மறுபக்கம் இறங்கிச் சென்று யமுனையின் நீர்க்கரை மணல் விளிம்பில் நின்று கைகளையும் முகத்தையும் கழுவிய பின்பு மேலே வந்தான். அவன் வருவதை துரியோதனன் எப்பொருளும் துலங்காத விழிகளால் நோக்கியிருந்தான். கர்ணன் வந்து துரியோதனன் அருகே இன்னொரு சிறு கல்லில் அமர்ந்தான். துரியோதனன் அவனிடமல்ல என்பது போல “படகில் செல்ல என்னால் இயலாதென்று தோன்றியது” என்றான். “அதன் அமைதியான ஒழுக்கு என் அகத்தை அலறச்செய்கிறது. வரும்போது பித்தெழுந்து நீரில் குதித்துவிடுவேன் என்றே அஞ்சினேன்.”
கர்ணன் “ஆம். புரவியில் வரும்போது நானும் அதை எண்ணிக் கொண்டேன்” என்றான். துரியோதனன் “ஆறு அசைவற்றிருப்பது போல் ஒரு உளச்சித்திரம் எழுகிறது படகில் இருக்கும்போது. எப்போதும் ‘விரைவு, மேலும் விரைவு’ என்று உள்ளம் கூவிக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் புரவி படகைவிட விரைவு குறைவாகவே செல்கிறது. இருந்தாலும் புரவியில் செல்வது காலத்தில் விரைவதுபோல் தோன்றச்செய்கிறது” என்றான். கர்ணன் “ஆம்” என்றான்.
துரியோதனன் பேச விழைவது போல் தோன்றியது. நெடுநேரம் பேசாமல் இருப்பவர்களுக்கே உரிய முறையில் விரைவாக சொல்லடுக்கி ஆனால் கூரிய பொருளேதும் திரளாமல் அவன் பேசிக் கொண்டிருந்தான். “காலத்தில் நின்று கொண்டிருக்க விழைகின்றன அத்தனை பொருட்களும் என்று தோன்றுகிறது. இதோ இங்கிருக்கும் அத்தனை கற்களும் காலத்தில் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றுடன் ஒப்புநோக்குகையில் யமுனை விரைகிறது. ஆனால் அதுவும் காலத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது.”
“அதன் விரைவு ஒரு பொய். அதன்மேல் பாய்விரித்து படகில் செல்பவன் தான் காலத்தில் நின்று கொண்டிருப்பதாக உணர்கிறான். அதுவும் பொய். நமது உடல்கள் காலத்தில் சென்றுகொண்டிருக்கின்றன… உடலில் குருதி ஓடுவது காலமே என்று ஒரு சூதர் சொல்லுண்டு. உள்ளமாக துடிப்பதும் உணவை எரிப்பதும் விழிகளாக அசைவதும் எண்ணங்களாக கொப்பளிப்பதும் காலமே என்பர். பொய்! காலத்தில் நாம் செல்வதில்லை. காலம் நம்மைச் சுற்றி பெரும்புயல்போல சுழன்றடித்துச் சென்று கொண்டிருக்கிறது. காலத்தில் செல்ல முடிந்தால் எந்தத் துயரும் இல்லை. காலப்பெருக்கின்முன் அசைவற்று நிற்பதுதான் துயர்.”
அவன் என்ன சொல்கிறான் என்று விளங்கிக்கொள்ள முயன்று பின் அதை சொற்களாகவே விட்டுவிட்டு கர்ணன் வெறுமனே நோக்கியிருந்தான். “நான் அஸ்தினபுரிக்கும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை, அங்கரே. உண்மையில் கிளம்பும்போது எங்காவது சென்றுவிட வேண்டுமென்று விழைந்தேன்” என்றான். கர்ணன் “இங்கு தங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியும். ஆகவேதான் தங்களுடன் வரவேண்டுமென்று முடிவு செய்தேன்” என்றான்.
“எனக்குத் தெரியும் இங்கு என்ன நிகழுமென்று. இங்கே வந்து அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாமென்று தாங்கள் சொன்னபோது ஒருதுளியும் என் உள்ளம் அதை நம்பவில்லை. ஆனால் உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். அத்தனை நம்பிக்கையுடன் என் விழிகளை நோக்கி நீங்கள் சொல்லும்போது அதை மறுக்க என்னால் இயலவில்லை. ஆனால் நான் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பும்போது இன்னும் பெரிய ஒன்றை எதிர்கொள்ளப் போகிறேன் என்று எனக்குத் தோன்றியது.”
“அங்கரே, இது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அன்று இச்சிறுமகள் முன் நிலைதவறி விழும்போது அது ஒரு தொடக்கம் என்று என்னுள் எங்கோ ஓர் எண்ணம் வந்தது” என்று துரியோதனன் தொடர்ந்தான். “அன்று இங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்குச் செல்லும்போது ஒவ்வொரு கணமும் அது வளர்ந்து ஒரு பெரும் அச்சமாகியது. இதைவிடப் பெரிதாக ஒன்று, இன்னும் பெரிய ஒன்று வரவிருக்கிறது என்ற அச்சமே என்னை சினமும் வெறியும் கொள்ளவைத்தது. என் நகரம் நோயில் மூழ்கி அழியும்போது என்னுள் அச்சத்தைத் தவிர்க்கவே சினத்தை நிரப்பிக் கொண்டு அங்கிருந்தேன்.”
“ஜராசந்தனின் இறப்புச் செய்தி காதில் விழுந்தகணம் மீண்டும் தோன்றியது இன்னும் பெரிய ஒன்று அணுகுகிறது என. எனக்குத் தெரியவில்லை, அதை வந்து என் செவியில் மெல்ல சொல்லும் தெய்வம் எது என்று. அங்கரே, நான் அதை அஞ்சுகிறேன். உங்களுடன் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி படகேறும்போதும் என் செவியில் அத்தெய்வம் சொன்னது இன்னும் பெரிய ஒன்று என்று” துரியோதனன் சொன்னான்.
“எதுவும் நம் கையில் இல்லை” என்று கர்ணன் தளர்ந்த குரலில் சொன்னான். “பானுமதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசிக்கு எழுதிய ஓலையை எனக்குக் காட்டினாள். உங்களை பழைய துரியோதனராக மீட்டு தனக்கு அளிக்கும்படி அவள் கோரியிருந்தாள். எனக்குத் தெரியும், இந்திரப்பிரஸ்தத்தின் அரசி யாரென்று. கோரப்பட்ட எதையும் மறுக்கக்கூடியவள் அல்ல அவள். பேரரசியரால் அது இயலாது. இந்திரப்பிரஸ்தத்தையேகூட கோரி பெற்றுவிட முடியுமென்று தோன்றியது. ஆகவே நான் கிளம்பும்போது முற்றிலும் நம்பிக்கையுடன் இருந்தேன்.”
“உண்மையில் படகில் ஒவ்வொரு கணமும் இந்திரப்பிரஸ்தம் அணுகுவதை காத்திருந்தேன். நீங்கள் தனிமையும் துயரும் கொண்டிருப்பதையும் நிலைகொள்ளாது படகில் உலாவிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். இன்னும் சற்று நேரம், இதோ அணுகிவிட்டது அனைத்தும் முடியும் மையம் என்றே என் உள்ளம் தாவிக் கொண்டிருந்தது” என்று கர்ணன் தொடர்ந்தான். “இப்போது எண்ணும்போது ஏக்கம் நிறைகிறது. எவ்வளவு எதிர்பார்ப்பு! எவ்வளவு நம்பிக்கை!”
அவன் பேச்சை நிறுத்தி கீழே கிடந்த சிறு குச்சியை எடுத்து தரையில் கோடுகளை இழுத்துக் கொண்டிருந்தான். துரியோதனன் அவன் சொல்வதை செவி கொள்ளாதவன் போல தொலைவில் ஓடிய யமுனையின் ஒளிமிக்க நீர்ப்பரப்பை நோக்கிக் கொண்டிருந்தான். “நான் எதிர்பார்த்தவை அனைத்தும் நடந்தன” என்று கர்ணன் தொடர்ந்தான். “பாண்டவர் ஐவரும் தங்கள் அரசியுடன் படித்துறைக்கு வந்து உங்களை வணங்கி எதிர்கொண்டனர். அவர்களின் ஐந்து மைந்தரும் வந்து உங்கள் கால்களைத் தொட்டு வணங்கி நகருக்குள் வரவேற்றனர். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி உங்களிடம் வந்து வணங்கி முகமன் உரைத்து இந்திரப்பிரஸ்தத்தை வாழ்த்தும்படி கோரினாள். உங்கள் முகமும் மலர்ந்ததை பார்த்தேன். உங்கள் தம்பியர் அனைவரும் விழிநீர் மல்கினர்.”
“தருமன் என்னிடம் அங்கரே தங்களால் எங்கள் குடி செழிக்க வேண்டுமென்று சொன்னபோது அக்கணம் எப்படி விழிநீரை கட்டுப்படுத்தினேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. பொற்தேர்களில் ஏறி இந்திரப்பிரஸ்தத்தின் சுழல்பாதைகளினூடாக மேலே சென்று கொண்டிருந்தபோது வான் நோக்கி பறந்தெழும் உணர்வையே அடைந்தேன். அரசே, அனைத்தும் எத்தனை எளிதாக முடிந்துவிட்டன என்று வியந்தேன். அனைத்தும் அத்தனை எளிதானவைதானா என்று எண்ணிக் கொண்டேன். உண்மையில் அவை அனைத்தும் எளிதானவைதான். இவற்றை தெய்வங்கள் தலையிடவில்லை என்றால் மனிதர்கள் மிக எளிதாக முடித்துக்கொள்ள முடியும்.”
“நம் அணிநிரை சென்று அரண்மனையின் வாயிலில் நிறைவுற்றபோது அங்கு உங்களை வரவேற்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி தன் பிறநான்கு மருகிகளுடன் காத்திருந்ததைக் கண்டபோது இதற்குமேல் ஒன்றுமில்லை என்று எண்ணினேன். அவர் உங்கள் அருகே வந்து கைகூப்பி அவரோ, அவரது ஐந்து மைந்தர்களோ, மைந்தரின் துணைவியரோ, இந்திரப்பிரஸ்தத்தின் பிறிதெவருமோ உங்கள் உள்ளம் வருந்தும்படி எதையேனும் செய்திருந்தால் அன்னையென உங்கள் கைகளை பற்றிக்கொண்டு பொறுத்தருளும்படி கோருவதாகக் கூறினார். உணர்வெழுச்சியுடன் நீங்கள் குனிந்து அவர் கால்களைத் தொட்டு இச்சொற்களுக்காகவே மும்முறை உங்கள் கால் தூசியை தலையணிகிறேன் அன்னையே. தாங்கள் இதை சொல்லலாகாது என்று சொன்னீர்கள்.”
“உங்கள் விழிநீரை அன்று நான் பார்த்தேன். உங்கள் உடன்பிறந்தார் அனைவரும் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருப்பதை கண்டேன். தருமன் மீண்டும் உங்கள் கைகளை பற்றிக்கொண்டு அறியாது நிகழ்ந்த பிழை. அப்பிழைக்கு இந்திரப்பிரஸ்தம் எவ்வகையிலும் ஈடு செய்யும் அரசே என்றபோது இருகைகளையும் விரித்து நீங்கள் அவரை ஆரத்தழுவிக்கொண்டீர்கள்” என்றான் கர்ணன். “அதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அரசே, அதன் பின் அதைப்பற்றி ஒரு சொல் பேசக்கூடாதென எண்ணினேன். நீங்களும் பாண்டவரும் இணைந்து உரையாட வேண்டுமென்பதற்காகவே நான் உங்கள் தம்பியரை அழைத்துக்கொண்டு விலகிச்சென்றேன். உங்களை முழுமையாக தனிமையில் விட்டேன். உங்கள் உளமுருகட்டும் என துச்சாதனனிடம் சொன்னேன்.”
வேண்டாம் என்பது போல் துரியோதனன் கையை அசைத்தான். “பிறகென்ன நடந்தது?” என்று கர்ணன் மீண்டும் தொடங்கினான். “நூறுமுறை எனக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டேன். பிறகென்ன நடந்தது? ஒவ்வொன்றும் உகந்த முறையிலேயே அமைந்தது. வேள்விக்கான பணிகள் தொடங்கியபோது யுயுத்ஸுவையும் துச்சாதனனையும் அடுமனைப்பணிக்கு தருமன் அனுப்பினார். கௌரவ நூற்றுவரையும் அரசர்களை அரியணை அமர்த்தும் பணிகளுக்கு அனுப்பினார். விசித்திரவீரியரின் பெயரர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிகழ்ந்த பெருவிழாவாக அமைந்தது இந்த ராஜசூயம்.”
“அரசே, தாங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். நாம் வந்த மறுநாள் பீஷ்மபிதாமகரும் பேரரசரும் அஸ்தினபுரியிலிருந்து அணிப்படகுகளில் இங்கு வந்தனர். அவர்களை வரவேற்க நானும் துர்மதனும் துச்சகனும் சுபாகுவும் சுஜாதனும் விகர்ணனும் சென்றிருந்தோம். படகிலிருந்து இறங்கிய பீஷ்மபிதாமகர் எங்களைக் கண்டு தொலைவிலிருந்தே இரு கைகளையும் விரித்தார். நாங்கள் அருகே சென்றதும் அவர் கண்களில் கண்ணீரை பார்த்தோம். நெடுநாட்களுக்கு முன்னரே இவை அனைத்திலிருந்தும் உதறி தன்னைப்பிரித்து உதிர்ந்துவிட்டவர் அவர் என்று எண்ணியிருந்தேன். இப்பிறவியில் அவருக்கு மைந்தர்ப் பெருந்திரளிலிருந்து விடுதலையே இல்லையென்று அப்போது அறிந்து கொண்டேன்.”
“கண்ணீருடன் தன் பெயர்மைந்தர்களை மாறிமாறி நெஞ்சோடணைத்துக் கொண்டார். பீமனையும் துச்சாதனனையும் இரு தோள்களையும் கைகளால் வளைத்து சுற்றித் தூக்கிச் சுழற்றி நிலத்திலிட்டார். உரக்க நகைத்தபோது அவர் முகத்தில் தெரிந்த அந்த உவகை நெளிவை வாழ்நாளில் எப்போதும் என்னால் மறக்க முடியாது” என்றான் கர்ணன். “அர்ஜுனனையும் நகுலனையும் தோள் தழுவினார். யுயுத்ஸுவையும் சகதேவனையும் இணைத்துப்பற்றி மாறி மாறி முத்தமிட்டார். அபிமன்யுவையும் விகர்ணனையும் சுபாகுவையும் தோளில் தூக்கிக்கொண்டு குதித்தார். ஒரு சொல் இல்லை. ஓர் அரிய நடனம் போலிருந்தது அக்காட்சி. அல்லது காட்டில் விலங்குகள் குட்டிகளுடன் களிகூர்வது போல.”
“நான் சுற்றிலும் பார்த்தபோது இந்திரப்பிரஸ்தத்தின் படகுத்துறைகளில் அனைத்துப் படைவீரர்களும் வணிகர்களும் குடிகளும் பெருந்திரளென வட்டமிட்டு அதை நோக்கக் கண்டேன். அனைவர் விழிகளிலிருந்தும் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. முதியோர் பலர் தலைக்கு மேல் கைகளைக் கூப்பி அழுதுகொண்டிருந்தனர். இவ்விரு நாடுகளின் ஒவ்வொரு குடியும் விழைவது அத்தருணம். நாம் சென்றடையும் உச்சம் அது. பீஷ்மர் துர்மதனையும் துச்சலனையும் அழைத்தபடி தேரில் நகர் நோக்கி சென்றார். நாங்கள் படகுக்குள்ளிருந்து சஞ்சயனால் அழைத்துக் கொண்டுவரப்பட்ட பேரரசரை அணுகினோம்.”
“பீமன் சென்று அவர் காலைத்தொட்டு வணங்கியபோது பெருங்குரலில் மந்தா என்றழைத்தபடி அவர் அவனை தழுவிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் அர்ஜுனனும் தருமனும் துச்சாதனனும் பிற கௌரவர்களும் அவரைச் சூழ்ந்தனர். ஒவ்வொருவரையாக தலையையும் தோளையும் காதுகளையும் தொட்டுத் தொட்டு வருடி அவர் நகைத்தார். விழிநீர் வழிய எழும் நகைப்புக்கிணையாக பேரருள் கொண்ட ஒரு முகத்தை தெய்வங்கள்கூட சூட முடியாது.”
“தன்னை தூக்கிக் கொண்டு செல்லும்படி பீமனிடம் சொன்னார். பீமனும் துச்சாதனனும் துச்சகனும் அர்ஜுனனுமாக அவரை தங்களது தோள்களில் தூக்கிக் கொண்டு தேர் நோக்கி சென்றனர். பிறர் கூவி நகைத்தபடி அவர்களை தொடர்ந்தனர். அப்பெருக்கிலிருந்து சற்றே பிரிந்து என் அருகே வந்த தருமன் என் இரு கைகளையும் பற்றிக்கொண்டு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அங்கரே, தங்கள் தாள் தோய என் தலையை தாழ்த்துகிறேன். இத்தருணத்தை நீங்களே எனக்களித்தீர்கள் என்றார். இல்லை நாமனைவரும் விழைவது இது. விண்ணிலிருந்து நமது மூதாதையர் இவற்றை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றேன். ஆம் என்றபின் இருகைகளாலும் தன் கண்களைத் துடைத்தபடி அவர் தன் தேர் நோக்கி சென்றார்.”
“அன்று நகர் வழியாக செல்லும்போது ஒவ்வொரு இலையும் மலராக மாறிவிட்டன என்று தோன்றியது. ஒவ்வொரு மாளிகையும் நிலவு பட்டது போல் ஒளி கொண்டிருந்தது. புன்னகை அற்ற ஒரு முகம் கூட என் கண்களில் படவில்லை. சில தருணங்களில்தான் மானுடனாக இருப்பதற்கு பேருவகையும் பெருமிதமும் கொள்கிறேன். அத்தகைய ஒரு தருணம்” என்றான் கர்ணன். “கொடியவை தெய்வங்கள். இருளுக்கு முன் பேரொளியை நம் விழிகளுக்குக் காட்டி விளையாடுகின்றன அவை.”
[ 7 ]
துரியோதனன் அச்சொற்களை செவிகொள்ளாதவன் போலவே அமர்ந்திருந்தான். முகத்தில் யமுனைநீரொளியும் அதிலாடும் மக்கள்நிரையின் நிழல்களும் ஆடிக்கொண்டிருந்தன. குதிரை செருக்கடித்தது. எங்கோ ஒரு சகடம் கல்லில் ஏறி அமைந்தது. பின்பு அவன் பெருமூச்சுடன் கலைந்தான். நிலத்தை நோக்கியபடி “ஆனால் அன்று அவ்வுணர்ச்சிக்கும் விழிநீருக்கும் அடியில் நான் மேலும் மேலும் உறைந்து குளிர்ந்து கொண்டிருந்தேன். இன்னும் பெரிதாக என்று அந்தக் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதையே அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் கேட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் கொண்ட உணர்ச்சிப்பெருக்கு அதன்பின் நிகழவிருக்கும் ஏதோ ஒன்று அவர்களை அச்சுறுத்துவதனால்தான் என்று எண்ணிக்கொண்டேன்” என்றான்.
“தேரிலேறி அரண்மனை வரை செல்லும் ஒவ்வொரு கணமும் அவ்வெண்ணத்தைக் கடந்து உவகைகொள்ள நான் முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு தருணமும் என்னை கண்கரையச் செய்தது. மறுகணமே மேலும் பெரிதாக என்னும் சொல்லில் சென்று தலையறைந்து நின்றேன். பேரரசியைக் கண்டு வணங்கியபோது ஏதோ ஒன்று நிகழ்ந்து அனைத்தும் பொய்யென ஆகிவிடவேண்டும் என்று விழைவெழுந்தது. அதுவே விழிநீராக என்னில் வழிந்தது. ஆனால் அன்று மாலை என் அரண்மனைக்குச் சென்றபோது உணர்ந்தேன், ஒருகணமும் என்னுள் வாழும் அத்தெய்வம் அடங்கவில்லை என்று.”
“அங்கரே, அன்று படகுத்துறையில் இருகைகளையும் விரித்தபடி பீமன் என்னை நோக்கி வந்தபோது அத்தெய்வம் என் உடலென்னும் கவசத்திற்குள் உருதிமிறி போருக்கெழுந்தது. போரில் தோள்கோக்கும்போது நட்பு விழையும் இரு தெய்வங்கள் உள்ளே தழுவிக் கொள்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன். நட்புடன் தழுவிக் கொள்கையில் உள்ளே இரு தெய்வங்கள் போருக்கு சினந்தெழுவதை அங்கே கண்டேன். அவனும் அதை உணர்ந்திருப்பான். அன்று இரவு ஆடி முன் சென்று என் தோள்களை பார்த்துக் கொண்டேன், அவன் தோள்களுக்குச் சற்றேனும் ஆற்றல் குறைந்தவையா என்று. என்றேனும் ஒரு நாள் போர்க்கலையில் அவன் நெஞ்சைப்பிளந்து உயிர்க்குலையை எடுக்கும் ஆற்றல் என் கைகளுக்கு உண்டா என்று. அவ்வெண்ணமே என்னை வெறி கொள்ளச்செய்தது. உயர்ந்த யவன மது அளிக்கும் மிதப்பு தசைகளில் ஓடியது.”
“என் தோள்கள் ஜராசந்தனின் தோள்களைவிடப் பெரியவை என்று எண்ணிக் கொண்டேன். அவற்றை அவன் எளிதில் வெல்ல முடியாது. என் பயிற்சி அவனிடமில்லை. கதையுடன் அவனை எதிர்கொண்டேன் என்றால் அவன் தலையை ஒருநாள் கோழிமுட்டை போல் உடைப்பேன். மூளை வெண்நுரை போல் வழிந்தெங்கும் சிதற அவன் நெஞ்சை மிதித்து உடைத்து திறப்பேன். அவனைக் கொன்று குருதி அருந்துவதைப்பற்றி எண்ணி உடல் கிளற உள்ளம் கொந்தளிக்க அன்றிரவெல்லாம் அரண்மனைக்குள் சுற்றி வந்தேன்.”
கர்ணன் பெருமூச்சுடன் “எப்போதும் அப்படித்தான். சற்றே முன் நகர்ந்தால் பல மடங்கு பின்னகர்ந்துவிடுவோம்” என்றான். துரியோதனன் “ஏனெனில் அந்நெகிழ்வு பொய். அது என் உறுதியை சீர்நோக்க என் தெய்வம் செய்த ஆடல். அதில் நான் தோற்றுவிட்டேன். அவ்விழிமகன்கள் முன் விழிநீரும் விட்டுவிட்டேன். அதை செய்திருக்கலாகாது. அதற்காக அதன்பின் நூறுமுறை நாணினேன். ஆகவேதான் என் சினத்தை எண்ணி எண்ணி பெருக்கிக் கொண்டேன். மறுநாள் அவன் அவையில் அஸ்தினபுரியின் முடியணிந்து வந்து அரச நிரைகளில் அமர்ந்திருந்தபோது சினமே என் உடலாக இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் என் உடலில் அச்சினம் எரிவதை உணர்ந்திருக்க முடியும். எவ்வண்ணமோ அதை உணர்ந்தவர்கள்போல் ஐந்து பாண்டவர்களும் விலகிச் சென்றுவிட்டனர்” என்றான்.
துரியோதனன் பற்களைக் கடித்து தன் நெற்றியை தட்டிக்கொண்டான். “அந்தப் பெரிய ஒன்று என்ன என்பதை அப்போதே என் அகம் உணர்ந்துகொண்டிருந்தது. சிசுபாலனைக் கண்டபோது என் உள்ளத்துக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டது. அவனை எதிர்கொண்டு சென்று முகமன் உரைத்திருக்கவேண்டும் நான். ஆனால் நான் திரும்பிக் கொண்டேன். அவன் என்னை அறியவே இல்லை என்பதைக்கண்டு ஆறுதல்கொண்டேன். பாண்டவ இளையோரும் தம்பியரும் நீங்களும் அவனை வரவேற்றபோது நான் அறியாதவன் போல் அமர்ந்திருந்தேன். அவன் என்னைக் கடந்து சென்றபோது என் காலும் கையும் மெல்லத்துடித்தன. அது ஏன் என்று அவன் கொல்லப்பட்ட பிறகுதான் அறிந்தேன்.”
“இப்போது அவனுடைய ஒவ்வொரு அசைவையும் நினைவில் என்னால் தீட்டிக் கொள்ள முடிகிறது. அப்படியென்றால் அவனை எனது விழிகளின் ஓரம் ஒவ்வொரு கணமும் நோக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவனைச் சூழ்ந்தே நான் உளம் ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன்” என்றான் துரியோதனன். “ஏன்? இதெல்லாம் எதன்பொருட்டு நிகழ்கின்றன? ஜராசந்தன் இறந்ததை நான் காணவில்லை. இவன் என் கண்முன் தலையறுந்து விழுந்தான்.”
“நாம் செல்வோம்” என்று கர்ணன் அவன் தோளை தட்டினான். “ஆமாம், செல்ல வேண்டியதுதான்” என்றபடி துரியோதனன் எழுந்தான். புரவியின் அருகே சென்று கடிவாளத்தை அழுத்தி கால் சுழற்றி ஏறி அமர்ந்தான் கர்ணன். “புரவியிலேயே அஸ்தினபுரிக்கு சென்றுவிடலாம்” என்றான். “தெரியவில்லை. நான் அஸ்தினபுரிக்குதான் செல்வேனா என்றுகூட என்னால் இப்போது சொல்ல முடியாது” என்றான் துரியோதனன். “நாம் அங்குதான் செல்கிறோம்” என்று கர்ணன் உறுதியாகச் சொன்னான். துரியோதனன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி தலைகுனிந்து எண்ணத்தில் ஆழ்ந்தபடி இருந்தான்.
“செல்வோம், அரசே” என்றான் கர்ணன். துரியோதனன் சேணத்தின் வளையத்தில் காலை வைத்து உடலைத்தூக்கி தாவி அமர்ந்தான். அவன் எடையில் புரவி சற்றே வளைந்து முன் நகர்ந்தது. “சிசுபாலன் எழுந்து குரலெடுத்தபோதே நான் அவன் தலை அறுபட்டுக் கிடப்பதை பார்த்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “முதலில் செயலற்று அமர்ந்திருந்தேன். பிறகு அப்படி அமர்வதே கோழைத்தனத்தால்தானோ என்று எண்ணியே அவனை துணை நிற்கவேண்டுமென்று பீஷ்மரிடம் மன்றாடினேன். அது ஒருபோதும் நிகழப்போவதில்லை என்று அறிந்திருந்தேன். என் கண்ணெதிரில் அவன் தலையற்று துடித்தான். அவன் தந்தை அவன் உடலுக்காக மன்றாடி கேட்டார். அப்போது உணர்ந்தேன், இருமுறை நான் இறந்து பிறந்துவிட்டேன் என்று. ஒருமுறை ஜராசந்தனாக, இன்னொருமுறை சிசுபாலனாக.”
“நாம் இவற்றை இனி அஸ்தினபுரிக்குச் சென்று பேசுவோமே” என்றான் கர்ணன். “ஆம். இப்போது இப்பேச்சை விடுவோம். இனி அஸ்தினபுரி வரை நாம் ஒரு சொல்லும் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். “ஆம், அதுவே நன்று” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் தன் புரவியை இழுத்து நிறுத்தி திரும்பி கர்ணனிடம் “அனைத்து இலைகளையும் உதிர்த்தபின் எஞ்சும் தளிரிலை போல் ஒன்றே ஒன்று எஞ்சி நிற்கிறது, அங்கரே” என்றான். கர்ணன் அவனை நோக்கினான். “நான் இந்திரப்பிரஸ்தத்தை வென்றாக வேண்டும். அவர்கள் மணிமுடியை என் காலில் வைத்தாக வேண்டும். அவள் வந்து என் அவையில் நின்றாக வேண்டும். அன்றி ஒருபோதும் இது முடியாது” என்றான்.
[ 8 ]
துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்.
கௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும் துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக மறைந்திருந்தன. சிசுபாலனின் இறப்புக்கு என்ன பொருள் என்று அவர்கள் அனைவருமே அறிந்திருந்தனர்.
துச்சாதனன் விதுரரின் அருகிலேயே இருந்தான். “தனித்து வருகிறார்கள், அமைச்சரே. நான் அரசரை விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது” என்று அவன் நிலையழிந்தவனாக சொன்னான். படகின் வடங்களைப் பற்றியபடி இருமுனைகளுக்கும் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். பெரிய கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு “அவர்கள் உடலை எவரும் மறைக்க முடியாது. அவரை அறியாத எவரும் அப்பாதையில் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.
விதுரர் “அவர்களை எவரும் ஒன்றும் செய்துவிட முடியாது” என்றார். “வேண்டுமென்றால் செய்யலாம்” என்று உரக்கச் சொன்னபடி அவர் அருகே வந்தான். “எதிரிப்படை ஒன்று அவர்களை சிறையெடுத்தால் என்ன செய்வோம்?” என்றான். விதுரர் “அவ்வாறு செய்வதற்கு பாரதவர்ஷத்தில் முறைமை ஒப்புதல் இல்லை” என்றார். “முறைமைப்படியா இங்கு அனைத்தும் நடைபெறுகின்றன?” என்று துச்சாதனன் சினத்துடன் சொன்னான். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே அதை செய்யக்கூடும் என்று நான் ஐயுறுகிறேன். அவர்களை நச்சு அம்பு எய்து கொன்றுவிட்டு அப்பழியை நிஷாதர்கள் மேல் போடலாம். நெருப்பு வைத்து எரித்துவிட்டு நான்கு வேடர்களைக் கழுவேற்றி முடித்துக் கொள்ளலாம்.”
விதுரர் சினத்துடன் “இதை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றார். “நான் அப்படி எண்ணுகிறேன். அதைப் பேசுவதிலிருந்து தடுக்க எவராலும் முடியாது” என்று துச்சாதனன் கூவினான். “அங்கு அவையில் ஒன்று தெரிந்தது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இனி பாரதவர்ஷத்தில் தடை என்பது அஸ்தினபுரி மட்டுமே. எங்களை அகற்ற அவர்கள் எதுவும் செய்வார்கள்…” விதுரர் ஒன்றும் சொல்லாமல் தன் வரைபடத்தை சுருட்டிக் கொண்டு உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் துச்சாதனன் சினம் கொண்டு உறுமுவது கேட்டது.
அஸ்தினபுரி படித்துறையில் படகுகள் நின்றபோது கௌரவர்கள் ஒவ்வொருவராக இறங்கி தலைகுனிந்து ஒருவருக்கொருவர் ஒரு சொல்லும் உரைக்காமல் தேர்களை நோக்கி சென்றனர். விதுரர் இறங்கி ஒருகணம் திரும்பி அம்பையின் ஆலயத்தை பார்த்தார். அன்று காலை அணிவிக்கப்பட்ட செந்நிற மலர் ஆரம் சூட்டப்பட்டு நெய்யகல் சுடரின் ஒளியில் பெரிய விழிகளுடன் அன்னை அமர்ந்திருந்தாள். அவர் திரும்பி ஆலயத்தை நோக்கி நடக்க கனகர் அவருக்குப் பின்னால் வந்து “சொல்லியிருந்தால் பூசகரை நிற்கச் சொல்லியிருப்பேன்” என்றார். விதுரர் வேண்டாம் என்பது போல் கையசைத்துவிட்டு ஆலயத்திற்கு முன் சென்று நின்றார்.
காவல்நிலையிலிருந்து காவல்நாயகம் ஓடி வந்து பணிந்து “பூசகர் காலையிலேயே சென்றுவிட்டார். இங்கே குகர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் பூசை செய்கிறார்கள். முதிய பூசகன் ஒருவன் படகில் இருக்கிறான். தாங்கள் விரும்பினால் அவனை வரவழைத்து மலரும் நீரும் சுடரும் காட்டச் சொல்கிறேன்” என்றார். விதுரர் சரி என்று தலையசைத்தார். காவல்நாயகம் இடைகழியினூடாக ஓடினார்.
சிறிது நேரத்திலேயே நீண்ட புரிகுழல்கள் தோள்களில் பரவியிருக்க சிவந்த பெரிய விழிகளும் நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்ட எலும்புக்குவை போல மெலிந்த உடலும் கொண்ட முதியகுகன் வந்து நின்றார். விதுரரை அவர் வணங்கவில்லை. “நிருதரின் குலத்தின் முதன்மைப்பூசகர் இவர். இன்று முதற்கலமொன்று நீரில் இறங்குவதனால் அதில் ஏறி வந்திருக்கிறார்” என்றார் காவல்நாயகம். விதுரர் “பூசகரே, அன்னைக்கு மலர் நீராட்டு காட்டுங்கள்” என்றார்.
பூசகர் கால் வைத்து ஆலயத்திற்குள் ஏறியபோது மெலிந்திருந்தாலும் அவர் உடல் மிகுந்த ஆற்றல் கொண்டது என்று தெரிந்தது. கைகள் தோல்வார் முறுக்கி முடையப்பட்டவை போலிருந்தன. தண்டு வலித்து காய்த்த பெரிய விரல்கள். காகங்களின் அலகு போல நீண்ட நகங்கள். குகன் கங்கைக்கரையோரமாகவே சென்று காட்டு மலர்களை ஒரு குடலையில் பறித்துக்கொண்டு வந்தார். மரக்கெண்டி எடுத்து சிறிது கங்கை நீரை அள்ளி வந்தார். நெய்யகலில் இருந்து சுற்றி விளக்கொன்றை பற்றவைத்துக் கொண்டு மலரிட்டு நீர் தெளித்து சுடர் சுழற்றி அவர் பூசனை செய்வதை கூப்பிய கைகளுடன் விதுரர் நோக்கி நின்றார். அன்னையே என்று எண்ணியபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. கனகர் அவர் முகத்தை நோக்கியபடி சற்று தள்ளி கைகூப்பி நின்றார்.
சுடரை குகன் தன் முன் நீட்டியபோது தன்னால் கைநீட்டி அதை தொட முடியாது என்று விதுரர் உணர்ந்தார். “சுடர், அமைச்சரே!” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விழித்தெழுந்து கைநீட்டி சுடரைத் தொட்டு கண்களிலும் நெற்றியிலும் சூடினார். பூசகர் அளித்த மலரை வாங்கி தன் சென்னியில் வைத்தபின் மீண்டும் அன்னையை தலைவணங்கிவிட்டு திரும்பி நடந்தார். சுடர் வணங்கி மலர் கொண்டு கனகர் அவருக்குப் பின்னால் வந்தார்.
நகர் நுழைந்து அரண்மனைக்கு வரும்வரை விதுரர் தேரில் உடல் ஒடுக்கி கலங்கிய கண்களுடன் சொல்லின்றி அமர்ந்திருந்தார். நகரமே அவர்களின் உணர்வுகளை அறிந்துகொண்டதுபோல் இருந்தது. எங்கும் வாழ்த்தொலிகள் எழவில்லை. கௌரவர்களின் நகர்நுழைவை அறிவிப்பதற்காக முரசொலி மட்டும் முழங்கி அமைய வீரர்களின் முறைமைசார்ந்த வாழ்த்துக்குரல்கள் மட்டும் ஒலித்து ஓய்ந்தன. அரண்மனைக்குச் சென்றதுமே அமைச்சுநிலைக்குச் சென்று அதுவரை வந்து சேர்ந்த அனைத்து ஓலைகளையும் அடுக்கிப் பார்த்தார்.
கனகர் “பாதிவழி வந்துவிட்டனர்” என்றார். விதுரர் ஆம் என தலையசைத்தார். கனகர் “ஏன் புரவியில் வரவேண்டும் அத்தனை தொலைவு?” என்றார். விதுரர் “புரவி அவர்களுக்கு தேவைப்படுகிறது போலும்” என்றார். அவர் சொல்வது புரியாமல் கனகர் “நெடுந்தூரம். புரவியில் வருவது பெரும் அலுப்பு” என்றார். “அவர்களின் உடல் களைத்து சலிக்கட்டும். அப்போதுதான் உளம் சற்றேனும் அடங்கும்” என்றார் விதுரர். “அவர்களின் வருகை பற்றிய செய்தியைப் பெற்று அடுக்கி வையுங்கள். நான் இல்லத்திற்கு சென்றுவிட்டு வருகிறேன்” என்றார்.
அவரது இல்லத்தில் நுழையும்போதே முதன்மைச்சேடி அருகணைந்து “அன்னை நோயுற்றிருக்கிறார்” என்றாள். அவள் அவருக்காக காத்திருந்தாள் என்று தெரிந்தது. “என்ன நோய்?” என்று விதுரர் கேட்டார். “நேற்றிலிருந்து தலைவலி உள்ளது” என்றாள். விதுரர் “மருத்துவச்சி வந்து பார்த்தாளா?” என்று கேட்டார். “ஆம். இருமுறை வந்து பார்த்தார்கள்” என்று சொன்னபடி அவருக்குப் பின்னால் சேடி வந்தாள். “அரசர் இன்னும் நகர்புகவில்லை. நான் இன்றிரவு அமைச்சுநிலையில்தான் இருப்பேன்” என்றபடி அவர் தன் அறைக்கு சென்றார்.
விரைந்து நீராடி உடை மாற்றி அமைச்சுநிலைக்கே மீண்டார். வீட்டிலிருந்து கிளம்புகையில் அவர் பின்னால் வந்த சேடியிடம் “மருத்துவச்சி என்ன சொன்னாள் என்பதை அமைச்சுநிலைக்கு வந்து என்னிடம் சொல்” என்று திரும்பிப் பாராமலே சொல்லிவிட்டு தேர் நோக்கி நடந்தார். துச்சாதனன் அவருக்காக அமைச்சுநிலையில் காத்திருந்தான். “அவர்களுக்கு ஏதாவது படைபாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறதா, அமைச்சரே?” என்றான். “படைபாதுகாப்பு செய்வதுதான் பிழை. அரசருக்கு அது தெரிந்தால் சினம் கொள்வார்” என்றார் விதுரர்.
துச்சாதனன் “அவர்கள் தனித்து வருகிறார்கள் என்பதை எண்ணாது ஒருகணம்கூட இருக்கமுடியவில்லை. எங்கும் அமரமுடியவில்லை” என்றான். கைகளை முறுக்கியபடி அறைக்குள் எட்டுவைத்து “நான் வேண்டுமென்றால் சென்று அவர்களுடன் வருகிறேனே” என்றான். “நீங்கள் செல்வதற்குள் அவர்கள் அஸ்தினபுரியை அணுகிவிடுவார்கள்” என்றார் விதுரர். “என்ன செய்வது? ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட்டால்…” என்று துச்சாதனன் முனகினான். “நான் பாரதவர்ஷத்தின் அரசர்களை நம்புகிறேன். அஸ்தினபுரியின் அரசரையும் அங்கரையும் அதைவிட நம்புகிறேன்” என்றபின் விதுரர் சுவடிகளை பார்க்கத் துவங்கினார்.
அன்றிரவு அமைச்சுநிலையிலேயே சாய்ந்த பீடத்தில் அமர்ந்து சற்று துயின்றார். காலையில் அஸ்தினபுரியின் எல்லைக்குள் இருவரும் நுழைந்துவிட்ட செய்தி வந்து அவரை சற்று எளிதாக்கியது. சுருதையின் நிலை பற்றி சேடி வந்து சொன்ன செய்தியை அவர் நினைவுறவேயில்லை. மீண்டும் தன் இல்லத்திற்கு ச்சென்றபோது அவரைக் காத்து சேடி வாயிலில் நின்றிருந்தாள். “உடல்நிலை எப்படி இருக்கிறது?” என்றார் விதுரர். “தலைவலி நீடிக்கிறது” என்றாள் அவள் சற்று சலிப்புடன்.
அதை உணராமல் “உடல் வெம்மை இருக்கிறதா?” என்றார். “சற்று இருக்கிறது” என்றாள். “நான் வந்து பார்க்கிறேன்” என்றபின் தன் அறைக்கு சென்றார். மஞ்சத்தில் அமர்ந்து இந்திரப்பிரஸ்தத்திற்குச் சென்ற நிகழ்வுகளை விழிகளுக்குள் ஓட்டினார். பின்பு எழுந்து சுவடி அறைக்குள் சென்று சுவடிகளை எடுத்துவந்து குந்திக்கும் சௌனகருக்கும் இரு நீண்ட ஓலைகளை எழுதினார். அவற்றை குழலிலிட்டு தன் ஏவலனிடம் கொடுத்தார். “இவை இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்ல வேண்டும். மந்தணச்செய்திகள். கனகரிடம் சொல்” என்றார்.
அச்செய்திகளை சீராக எழுதி முடித்ததுமே தன் உளக்கொந்தளிப்புகள் அனைத்தும் ஒழுங்கு கொண்டுவிட்டன என்று தோன்றியது. உடல் துயிலை நாடியது. மஞ்சத்தில் படுத்ததுமே துயின்றார். உச்சிவெயில் ஆனபிறகுதான் விழித்துக் கொண்டார். அப்போது கனகர் அவரைத் தேடி வந்திருந்தார். “அரசர் அணுகிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
துயிலில் இருந்து எழுந்து அமர்ந்தபோது அதுவரை நிகழ்ந்த எவற்றையும் அவரால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. துயிலுக்குள் அவர் சத்யவதியின் அவையில் அமர்ந்திருந்தார். சத்யவதி மகத அரசைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க தாடியை நீவியபடி புன்னகையுடன் அவள் உணர்ச்சிகளை நோக்கிக் கொண்டிருந்தார். கனகரை அவ்வுலகுக்குள் கொண்டு செல்ல முடியாமல் திகைத்தபின் எழுந்து சால்வையை தோளில் இட்டபடி “என்ன செய்தி?” என்றார்.
“தங்களை பேரரசர் சந்திக்க விழைகிறார். தாங்கள் வந்துவிட்டீர்களா என்று கேட்டு இருமுறை செய்தி வந்தது” என்றார் கனகர். விதுரர் “அரசர் இன்னும் நகர்புகவில்லை என்று அவருக்குத் தெரியுமா?” என்றார். “தெரியும். அதை சஞ்சயனிடமே கேட்டு அறிந்துவிட்டார்” என்றார். “பீஷ்மபிதாமகர் படைக்கலச் சாலையிலேயே இருக்கிறார். அவரும் இன்று காலை அரசர் நகர் புகுந்துவிட்டாரா என்று இருமுறை தன் மாணவனை அனுப்பி கேட்டார்” என்றார்.
விதுரர் நிலையழிந்தவராக “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை” என்றார். பின்பு “காந்தார அரசரும் கணிகரும் என்ன செய்கிறார்கள்?” என்றார். “அவர்கள் இருவரும் வழக்கம்போல நாற்களத்தின் இருபக்கங்களிலாக அமர்ந்துவிட்டார்கள்” என்றார் கனகர். “இங்கு என்ன நிகழ்கிறது என்று அறிய அந்நாற்களத்தைத்தான் சென்று நோக்கவேண்டும்” என்று விதுரர் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் கனகர் நோக்க “நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். பேரரசரிடம் சென்று சொல்லுங்கள்” என்றார்.
விதுரர் நீராடி ஆடையணிந்து அரண்மனையை சென்றடைந்தபோது அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “தாங்கள் வந்ததும் அழைத்து வரும்படி பேரரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். “எதற்காக என்று உணரமுடிகிறதா?” என்றார் விதுரர். “சினம் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. கடும் சினம் கொண்டால் இசை கேட்காமல் முற்றிலும் அசைவின்றி அமைந்துவிடுவார். அதை அறிந்தவர்கள்போல சூதர்களும் பிறரும் அவரை அணுகுவதில்லை. சஞ்சயன் கூட அவர் கைக்கு எட்டாத தொலைவில் நின்று கொண்டிருக்கிறான். விப்ரர் ஒருவரே அவரை அணுக முடிகிறது” என்றார் கனகர்.
[ 9 ]
திருதராஷ்டிரரின் இசையவைக்குள் நுழையும்போதே விதுரர் தன் நடையை எளிதாக்கி முகத்தை இயல்பாக்கிக் கொண்டார். உள்ளம் உடல் அசைவுகளில் வெளிப்படுகிறது என்றும், உடல் அசைவுகள் காலடி ஓசையில் ஒலிக்கின்றன என்றும், ஒலியினூடாக உணர்வுகளை திருதராஷ்டிரரால் அறிந்துவிட முடியும் என்றும் அவர் பலமுறை அறிந்திருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகையை செயற்கையாக உருவாக்கிக் கொண்டால் சற்று நேரத்திலேயே உள்ளம் அதை நம்பி நடிக்கத் தொடங்கிவிடும் என்பதையும், அது உடலை ஏமாற்றிவிடும் என்பதையும் கற்றிருந்தார்.
ஓசைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக ஒலிக்கும் வகையில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் இசைக்கூடம் அவரது காலடியோசையை சுட்டு விரலால் குறுமுழவின் தோல்வட்டத்தை தொட்டது போல் எழச் செய்தது. எதிரொலிகளே இல்லாமல் தன் காலடி ஓசையை அவர் அங்குதான் கேட்பது வழக்கம். தன் வலக்காலைவிட இடக்கால் சற்று அதிகமாக ஊன்றுவதையே அவர் அங்குதான் முன்பு அறிந்திருந்தார். திருதராஷ்டிரரின் அருகே சென்று வணங்கி பேசாமல் நின்றார்.
யானை போல தன் உடலுக்குள்ளேயே உறுமல் ஒன்றை எழுப்பிய திருதராஷ்டிரர் மெல்ல அசைந்தபோது அவர் உடல் முழுக்க பரவி இழுபட்டு இறுகியிருந்த பெருந்தசைகள் மெல்ல இளகி அமைந்தன. அவர் மேல் சுனைநீர்ப் பரப்பில் இளங்காற்று போல அவ்வசைவு கடந்து சென்றது. விதுரர் “அரசர் நகரை அணுகிக் கொண்டிருக்கிறார்” என்றார். மீண்டும் திருதராஷ்டிரர் உறுமினார்.
“தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே? நீண்ட பயணத்திற்குப் பிறகு…” என்று விதுரர் சொல்லத்தொடங்க “அவன் அவையிலிருந்து கிளம்பும்போதே பார்த்தேன். அவனை நான் அறிவேன்” என்று திருதராஷ்டிரர் பேசத்தொடங்கினார். விதுரர் அவர் எதை சொல்லப்போகிறார் என்று அறியாமல் நிமிர்ந்து அவர் உடலை பார்த்தார். கழுத்தின் இருபக்கமும் இருபாம்புகள் போல நரம்புகள் புடைத்து நெளிந்தன. “அவன் காலடியோசையிலேயே அவன் உடலைக் கண்டேன். அவன் என்ன எண்ணுகிறான் என்று எனக்குத் தெரியும்.”
“அவர் வரட்டும், நாம் பேசிக் கொள்வோம்” என்றார் விதுரர். “அவனைக் கட்டுப்படுத்தும் மறுவிசையாக இருந்தவன் மூத்தவன். இன்று அவனும் இவனும் ஒன்றென இணைந்து கொண்டுள்ளனர். அவர்களை இன்று எவரும் கட்டுப்படுத்த முடியாது. நீயோ நானோ கூட” என்றார் திருதராஷ்டிரர். “பீஷ்மர் ஒருவரே அதை செய்ய முடியும். பிதாமகரிடம் சென்று சொல்…! அதற்காகவே உன்னை வரச்சொன்னேன்.”
விதுரர் “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் அவர் வரட்டும் என்று எண்ணுகிறேன்.” திருதராஷ்டிரர் “அவன் வரவேண்டியதில்லை. அவன் என்ன எண்ணிக்கொண்டு வருகிறான் என்று எனக்குத் தெரியும்” என்றார். அதுவரை தாழ்ந்திருந்த அவர் குரல் வெடித்ததுபோல் மேலோங்கியது. “என் விழிமுன் மைந்தருக்கிடையில் ஒரு பூசலை ஒருபோதும் ஒப்ப மாட்டேன். இங்கொரு ராஜசூயமோ அஸ்வமேதமோ நிகழ்த்த அவன் எண்ணுவானென்றால் அதில் பேரரசனாக நான் வந்து அமரப்போவதில்லை. என்னைத் தவிர்த்துவிட்டு அதை அவன் செய்யமுடியலாம். ஆனால் பீஷ்மரும் ஒப்பவில்லை என்றால் இங்கு அது நிகழாது” என்றார்.
“இப்போது அதற்கான எண்ணம் அவருக்கு இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அவர் உள்ளம் எதையேனும் எண்ணி கொந்தளித்துக் கொண்டிருக்கக்கூடும். சிலநாட்கள் இங்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும்போது மெல்ல அடங்கும்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் திரும்பி “இன்று முழுக்க அதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் அன்னை அவனை கட்டுப்படுத்த முடியுமா அல்லது அவன் துணைவி அவனை கட்டுப்படுத்த முடியுமா என்று. முடியாதென்றே தோன்றுகிறது. அவனை உள்ளிருந்து எதுவும் இனி நிறுத்தாது” என்றார்.
“இன்று அவனுக்குத் தளையாக இருக்கக்கூடியது புறத்தடைகளே. இன்று அது ஒன்றே ஒன்றுதான். இந்நகரின் குடிகளின் மேல் முதல் ஆணையிடும் நிலையிலிருக்கும் பீஷ்மபிதாமகரின் சொல். அதுவுமில்லை எனில் அவன் பித்தன் கையில் வாள் போலத்தான்.” திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்தார். “விதுரா! மூடா! இன்று எனக்கு ஏனோ உள்ளம் நடுங்குகிறது. அவன் பிறந்தபோது நிமித்திகர் சொல்லெழுந்ததை நினைவுகூர்கிறாயா? அவன் இக்குலம் அழிக்கும் நஞ்சு என. பாதாள தெய்வங்களில் ஒன்று அவன் வடிவில் வந்து ஹஸ்தியின் நகரை எரித்தழிக்கப்போகிறது என. அவன் கலியின் வடிவம் என்றனர்.”
“நான் அதை அன்றே மறக்க விழைந்தேன். மறப்பதற்குரிய அனைத்தையும் செய்தேன். மறந்தும்விட்டேன். ஆனால் என் கனவுகளில் அவன் எப்போதும் அவ்வாறுதான் வந்து கொண்டிருந்தான்.” அவர் கைகாட்டி “இவ்வறைக்கு வெளியே உள்ள சோலைகளில் எங்கும் ஒரு காகம் கூட கரையலாகாது என்று ஆணையிட்டிருக்கிறேன். அறிந்திருப்பாய். காகத்தின் குரல் எனக்கு என்னில் எழும் இருண்ட கனவுகளை நினைவுறுத்துகிறது. நீ என்ன நினைக்கிறாய்? உண்மையிலேயே அவன் கலியின் வடிவம்தானா? சொல்…!” என்றார்.
விதுரர் “இனி அதைப்பற்றிப் பேசி என்ன?” என்றார். “அவன் கலியின் வடிவம் என்றால் கலியை உருவாக்கியவன் நான் அல்லவா? அப்படியென்றால் நான் யார்? ஹஸ்தியின் குலத்தை அழிக்கும் மைந்தனைப் பெற்றேனா? அவனைப் பெருக வைப்பதற்குத்தான் விழியிழந்தவனாக வந்தேனா?” விதுரர் “வீண் எண்ணங்களில் அலைய வேண்டாம், பேரரசே. நான் அரசரிடம் பேசுகிறேன். உண்மை நிலை என்னவென்று உணர்த்துகிறேன். அவர் அதைக் கடந்து வந்துவிட முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.
“நான் துயில் இழந்திருக்கிறேன், விதுரா! இசை கேட்க முடியவில்லை. இசை கேட்காத போது எனது ஒவ்வொரு நாளும் நீண்டு நீண்டு நூறு மடங்காகிவிடுகிறது. ஒவ்வொரு எண்ணமும் இரும்பென எடைகொண்டு என்மேல் அமர்ந்திருக்கிறது” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நான் சூதர்களை வரச்சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டாம். சற்று முன்னர்கூட ஒரு சூதன் இங்கு வந்து யாழ் மீட்டினான். அவ்வோசையை என்னால் செவி கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. உடல் கூசி உள்ளம் அதிர்கிறது” என்றார் திருதராஷ்டிரர்.
“தாங்கள் இவற்றை எண்ணி எண்ணி மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நான் அவரிடம் பேசுகிறேன்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “பானுமதியிடம் சொல். அவள் பெண் என்று கொண்ட அனைத்தையும் பயன்படுத்தும் தருணமென்று. காதலோ கனிவோ கடுமையோ எதுவாக இருப்பினும் அது எழட்டும் என்று. அவன் அன்னையிடம் சொல். இத்தருணத்தில் அவனை வெல்லாவிட்டால் பிறகொருபோதும் மைந்தனென அவன் எஞ்சமாட்டான் என்று” என்றார். “அவர்கள் அனைவரையும்விட தாங்களே சொல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றார் விதுரர்.
திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கித் தட்டியபடி பேரோசையுடன் பீடம் பின்னால் நகர்ந்து தரையில் அறைந்துவிழ எழுந்தார். “மூடா! மூடா! இதைக்கூட அறியாமலா நீ ஒரு தந்தையென்று இங்கிருக்கிறாய், மூடா!” என்றார். விதுரர் அறியாமலே சற்று பின்னகர்ந்து நின்றார். “தந்தைக்கும் மகனுக்கும் நடுவே ஒரு புள்ளி உள்ளது. அதை அடைந்ததும் தெரிந்துவிடுகிறது இனி அவ்வுறவு அவ்வாறு நீடிக்காதென்று. இன்று அவன் என் மைந்தனல்ல. எங்கு எப்போது முறிந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் முறிந்துவிட்டதை மிகத் தெளிவாக உணர்கிறேன். இனி அவன் நான் சொல்வதை கேட்க மாட்டான்” என்றார்.
“இவையனைத்தும் நாம் உருவாக்கிக் கொள்வதல்லவா? இன்பங்களை விழைவதைப் போலவே துன்பங்களை விழையும் தன்மை நமக்கிருக்கிறதல்லவா?” என்றார் விதுரர். “இருக்கலாம், இவையனைத்தும் என் வெற்று உளமயக்கென்றே இருக்கலாம். அவன் நாளை வரும்போது இவையனைத்தும் புகை என கலைந்து போகலாம். அறியேன். ஆனால்…” என்றபின் அவர் கைகளால் பீடத்திற்காக துழாவினார். அவருக்கு சற்றுப்பின்னால் நின்ற ஏவலன் வந்து அப்பீடத்தை தூக்கி வைக்க அதில் உடலை அமர்த்தி “அவ்வாறே இருக்கலாம். இருக்க வேண்டுமென்று விழைகிறேன். ஆனால் என்னால் ஒருகணமும் உறுதியுறச் சொல்ல முடியவில்லை. விப்ரா, மூடா!” என்று அழைத்தார்.
அறை வாசலில் சிறுபீடத்தில் கால்மடித்தமர்ந்திருந்த விப்ரர் விழியின்மை தெரிந்த நரைத்த கண்களுடன் எழுந்து வளைந்த உடலை மெல்லிய கால்களால் உந்தி முன் செலுத்தி வந்து “அரசே” என்றார். “நீ என்னடா எண்ணுகிறாய்? அவன் இப்போது என் மைந்தனா? இனி அவன் என் சொற்களை கேட்பானா? நீ என்ன எண்ணுகிறாய்? உண்மையைச் சொல்” என்றார். “அவர் உங்களிடமிருந்து முளைத்து எழுந்தவர். சுஷுப்தியில் நீங்கள் புதைத்திட்ட ஆலமரத்தின் விதையணு. அது வேரும் கிளையும் விழுதுமாக எழுந்துவிட்டது… நீங்கள் அமர்ந்திருப்பதே அதன் நிழலில்தான்” என்றார் விப்ரர்.
விதுரர் உளநடுக்கத்துடன் அவரைத் திரும்பிப் பார்த்தார். “இது பாறை வெடிப்பது போல, அரசே. இனி ஒருபோதும் இணையாது” என்றார் விப்ரர் மீண்டும். அனைத்து தசைகளும் தொய்ந்து திருதராஷ்டிரரின் பேருடல் மெல்ல தணியத் தொடங்கியது. அவரது கைகள் பீடத்தின் கைப்பிடியிலிருந்து நழுவி தரையைச் சென்று தொடும்படி விழுந்தன. தலையை பின்னுக்குச் சரித்து இருமுறை நீள்மூச்சுவிட்டு “ஆம், உண்மை. உண்மை” என்றார். விதுரர் தலைவணங்கி “நாம் காத்திருப்போம். பிறிதொன்றும் செய்வதற்கில்லை” என்றபின் வெளியே நடந்தார்.
[ 10 ]
துரியோதனன் நகர் புகுந்த செய்தியை விதுரர் அறியவில்லை. அவர் சுருதையின் மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தார். மாலையில் அவரது ஏவலன் வந்து அமைச்சுநிலையின் அறைவாயிலில் நின்றிருப்பதை சற்று நேரம் கழித்தே அவர் கண்டார். “என்ன?” என்று கடுகடுப்புடன் கேட்டபோது அவன் தலைவணங்கி “அன்னை” என்றான். “மருத்துவர் பார்க்கிறார்களல்லவா?” என்றபடி அவர் கனகரிடம் இறுதியாக வந்த ஓலைக்காக கைநீட்டினார். கனகர் தொகுத்தளித்த நான்கு ஓலைகளை சுருள்நீவி படித்தபடி ஏவலன் மறுமொழி சொல்லவில்லை என்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார்.
“மருத்துவர் தங்களை வரச்சொன்னார்” என்றான் ஏவலன். “ஏன்?” என்றார் விதுரர் ஓலைகளை புரட்டியபடி. அவன் பேசாமல் நிற்க “மருத்துவர்களிடம் என்ன நிகழ்கிறது என்பதை விரிவாகக் கேட்டு வா” என்றார். ஏவலன் அகலாமல் அங்கேயே நிற்பதை உணர்ந்து விழிதூக்கி சினத்துடன் “என்ன?” என்றார்.
“அமைச்சரே, அன்னையார் இன்றிரவு உயிர் துறக்கக்கூடும் என்று மருத்துவர் எண்ணுகிறார்” என்றான். கையில் ஓலையுடன் விதுரர் சற்றே வாய்திறந்து அவனை நோக்கி நின்றார். கனகர் உரத்த குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றார். “அவரது காய்ச்சல் உள்ளுறுப்புகளுக்குள் நிறைந்திருக்கிறது. சித்தம் கலங்கியிருக்கிறது. தாங்கள் இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கு வரவேண்டும் என்று மருத்துவர் ஆணையிட்டார்.”
விதுரர் கையில் இருந்து ஓலைகள் நழுவி விழ கனகர் அவற்றை பற்றிக் கொண்டார். சரடு ஒன்று அறுபட்டதுபோல சற்று நிலையழிந்து பீடத்தில் விதுரர் சாய்ந்தார். கனகர் இன்னொரு கையால் அவர் தோளை பற்றிக்கொண்டு “இரு ஏவலரை வரச்சொல். அமைச்சரை அழைத்துச் செல்” என்றார். ஏவலனுக்குப் பின்னால் இருந்த இரு காவலர் “நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” என்றனர்.
கனகர் விதுரரிடம் “செல்வோம், அமைச்சரே” என்றார். “ஆம்” என்றார் விதுரர். கைகளால் துழாவி தன் மேலாடையை எடுத்தார். “ஆனால்… அரசர் இங்கு வந்து கொண்டிருக்கிறாரல்லவா?” என்றார். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். தாங்கள் செல்லுங்கள்” என்ற கனகர் திரும்பி இன்னொரு துணை அமைச்சரைப் பார்க்க அவர் அருகே வந்து விதுரரின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம், அமைச்சரே” என்றார். விதுரர் தளர்ந்த காலடிகளுடன் அவருடன் சென்றார்.
அது தான் கண்டுகொண்டிருக்கும் கனவு என்றும் எப்போது வேண்டுமானாலும் சற்று புரண்டு விழித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் எண்ணினார். கனவில் மட்டும்தான் இடைநாழிகள் அத்தனை நீண்டதாக இருக்கும். கனவில் மட்டும்தான் ஓசைகள் அசைவுகளுடன் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். நீருக்குள் மூழ்கி இருந்து ஒலிகளைக் கேட்பது போல் அரண்மனைக்குள் எங்கும் எழுந்து கொண்டிருந்த கலவையான உரையாடலை கேட்டார். வலப்பக்கம் முற்றத்தில் நின்றிருந்த புரவி ஒன்று முன்னங்காலால் கற்தரையை தட்டிக்கொண்டிருந்தது. இரு தேர்களின் கடையாணிகள் அசைந்தன. எங்கோ ஒரு திரைச்சீலை சிறகோசை போல் படபடத்துக் கொண்டிருந்தது. நீரில் மூச்சடைக்க எடையில்லாது ஒழுகிச் செல்வதுபோல் அவர் சென்றார்.
பின்பு அவர் இளைஞனாக சத்யவதியை பார்ப்பதற்கு படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். சத்யவதி தன் மஞ்சத்தறையில் பட்டுவிரிப்பின்மேல் கால் மடித்தமர்ந்து ஓலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வறைக்குள் அம்பிகையும் அம்பாலிகையும் நின்றிருந்தனர். சத்யவதி அவரைப் பார்த்து “நெடுநேரமாயிற்று” என்றாள். “ஆம். நான் வந்து கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “இந்த ஓலைகள்…” என்று அவள் விரித்துக் காட்டினாள். “அரசர் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இடர் ஒன்றும் நிகழவில்லை” என்றார் விதுரர். “ஆம், எனக்கும் ஓலைகள் வந்தன” என்றாள் அம்பாலிகை.
அம்பிகை “அவன் நகர் நெருங்கிய பிறகு எனக்குத் தெரிவி” என்றாள். விதுரர் அவர்கள் மூவரின் விழிகளை நோக்கினார். நெஞ்சு திடுக்கிட்டு ஒன்றை உணர்ந்தார். அவர்கள் மூவரும் முன்னரே இறந்துவிட்டிருந்தனர் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. மெல்லிய காலடி ஓசை கேட்டது. மறுபக்க அறைக்கதவு திறந்து சுருதை உள்ளே வந்தாள். “நீ...? நீ எப்படி?” என்று விதுரர் கேட்டார். “நான் இன்றுதான் வந்தேன்” என்றாள் சுருதை. அவள் மிக இளையோளாக, மெலிந்த மாநிற உடலும், நீண்ட முகமும், இரு கருங்குருவி இறகுகள் போன்று பீலி செறிந்த இமைகளும் கொண்டிருந்தாள்.
“உன்னை அங்கு தேடுவார்கள்” என்றார் விதுரர். “சொல்லிவிட்டுத்தான் வந்தேன்” என்றபின் அவள் புன்னகையுடன் அந்த ஓலைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினாள். அவள் விழிகளிலும் அதுவே தெரிவதை விதுரர் உணர்ந்தார். அவளும் முன்னரே இறந்துவிட்டிருந்தாள். “சுருதை, நீ எப்படி இறந்தாய்?” அச்சொல்லுடன் அவர் தன்னை உணர்ந்தபோது தன் மாளிகை முற்றத்தில் நடந்து கொண்டிருந்தார். கனவா? விழிப்பில் நடந்து கொண்டிருக்கையில் கனவு நிகழுமா என்ன? ஆனால் அவர்கள் உண்மை. அவர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
மாளிகை முற்றத்தில் இருந்து செவிலியர் அவரை நோக்கி வந்தனர். முதுசெவிலி வணங்கி “இளவரசர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டோம்” என்றாள். அவர் “ஆம், அங்கரும் அரசரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். அவர் சொல்வதன் பொருளென்ன என்று தெரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். பின்பு அவர் நின்று “மைந்தருக்கு சொல்லிவிட்டீர்களா?” என்றார். அவர்கள் “ஆம், பறவைச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது” என்றார்கள். “வருக!” என்று மாளிகை ஸ்தானிகர் அவர் கையை பற்றினார். “ஆம்” என்று சொல்லி அவருடன் சென்றார்.
தன் கால்கள் மட்டும் தனியாக அசைந்துகொண்டிருப்பது போல, அந்த மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் முற்றிலும் அறியாததாக மாறிவிட்டது போல தோன்றியது. சுவர் மடிப்புகளில் எல்லாம் இருள் தேங்கியிருப்பதை இதற்கு முன் பார்த்ததேயில்லையே என்று எண்ணினார். படிகளில் ஏறி சுருதையின் மஞ்சத்தறை வாயிலை அடைந்ததும் வெளியே நின்றிருந்த மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்று கொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார்.
தலையசைத்து விதுரர் உள்ளே நுழைந்தார். சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால் அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு எலும்பு புடைப்புடன் எழுந்து தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு தவளைகள் போல என்று அவர் நினைத்தார். இப்படியா இருக்கிறாள் இவள்? இத்தனை மெலிந்தா? இத்தனை முதுமை கொண்டா? அனலணைந்த வெண்சாம்பல் நிறமான தலைமுடி அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். நரை முடியில் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.
இத்தோற்றத்தில் அவளை ஒருபோதும் பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டார். அவளை பார்க்கும்போதெல்லாம் மணநாள் முதல் ஒவ்வொரு முறையும் பார்த்துவந்த ஒரு உடலின் ஒட்டுமொத்தமே தெரிந்து கொண்டிருந்தது. தன் விழைவுகளால் அன்பால் அவர் அவ்வுடலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது வெறும் விழிகளால் பார்க்கையில் அவ்வுடல் முன்னரே உதிரத்தொடங்கிவிட்டதென்று தெரிந்தது. இப்படித்தான் இருந்திருக்கிறாள் சென்ற சில ஆண்டுகளாக. அவர்தான் அறியவில்லை.
அவர் வந்திருப்பதை எவ்வண்ணமோ உணர்ந்து கொண்டதைப்போல அவள் விழிகள் அதிர்ந்தன. உலர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல விரிந்து முனகின. அதுவும் அவள் குரல் அல்ல. நோயுற்ற விலங்குகள் இப்படித்தான் ஒலிக்கின்றன. இது நோயின் ஒலி. வலியின் ஒலி. அவர் அவள் கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு குனிந்து “சுருதை” என்றார். அவர் குரல் அவள் காதில் விழவில்லை என்று தோன்றியது. அவள் கைகளின் நகங்கள் சற்றே கருமை கொண்டு நீண்டிருந்தன. மேல் கையில் கிளைகளுடன் நரம்புகள் புடைத்து மணிக்கட்டில் ஏறி மேலே சென்றன. அவர் அவள் அழகிய மார்புகளை நினைத்தார். நெடுநாட்கள் அவளை எண்ணும்போதெல்லாம் அவையே நினைவில் வந்துகொண்டிருந்தன. அவளுடைய சொற்களைவிட விழிகளைவிட அணுக்கமானவை அவை. அவள் நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தது.
அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என்று மீண்டும் அழைத்தார். அவள் மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா?” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை. அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள் போல தோன்றினாள்.
இப்போது என்ன சொல்லவேண்டும்? நோயுற்று படுத்திருக்கையிலும் இங்கு வருவதை தவிர்த்ததற்காக மன்னிப்பு கோரவேண்டுமா? அப்படியென்றால் ஒவ்வொரு நாளுமென மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோரியபடியே சென்று முதல் நாள் அவள் மஞ்சத்தறைக்கு வந்த தருணத்தை சென்றடைய வேண்டும். அவருக்குத் தோன்றியது மன்னிப்பு கோரலாகாது என்று. அது அவளுடைய நாற்பதாண்டு கால அன்பை சிறுமை செய்வதாகும். பிறகென்ன சொல்வது? சென்று வா என்றா? அங்கு காத்திரு என்றா? ஒரு கணத்தில் பேரலைபோல அவர் நெஞ்சை துயர் வந்து தாக்கியது. கண்களில் இருந்து கண்ணீர் அவள் கைகளிலும் மரவுரிச் சேக்கையிலும் கொட்டியது.
அவள் கை அவர் விழிநீர்த்துளி பட்டு சற்று அதிர்ந்தது. விழி தூக்கி அவரைப் பார்த்து “என்ன இது?” என்றாள். கண்ணீரை துடைப்பதற்கென அவள் கை மெல்ல எழுந்து அதற்குரிய விசை இல்லாமல் மீண்டும் தணிந்தது. “வேண்டாம்” என்றார். “நான் இங்கு தனித்திருப்பேன்” என்று அவர் சொன்னார். “ஆம்” என்று அவள் மெல்ல சொன்னாள். “தனித்து விடுவீர்கள்” என்று தனக்குத்தானே என முனகினாள். பின்பு அவள் அவர் விரலைப்பற்றி அழுத்தி “எதுவும் நம்மிடமில்லை” என்றாள்.
வாழ்நாள் முழுக்க அவள் சொன்ன அனைத்திற்கும் அவ்வொரு சொல்லே சாரம் என்று அத்தருணத்தில் அவர் உணர்ந்தார். “ஆம் சுருதை, உண்மை.” “எதிலும் முட்டிக் கொள்ளாதீர்கள்” என்று மீண்டும் அவள் சொன்னாள். “முயல்கிறேன்” என்றபின் “என்னுடன் இரு. எங்கிருந்தாலும் என்னுடன் இரு” என்றார். “இன்னும் சில நாட்கள்தானே” என்று அவர் சொன்னார். “இல்லை…” என்று அவள் சொன்னாள். “இன்னும் நெடுநாட்கள் இருக்கிறது.” அவள் முகம் புன்னகையில் விரிந்தது. ஒட்டி நெற்று போலான முகத்தில் புன்னகை அத்தனை ஒளியேற்ற முடியும் என்பதை அவர் திகைப்புடன் பார்த்தார். அவள் அப்புன்னகையினூடாக ஆண்டுகளை ஒரே கணத்தில் கடந்து சென்று நாணமும் உவகையும் மிகுந்த சிறுமியென்று ஆனாள்.
“நான் இருப்பேன்” என்றாள். அவரது சுட்டுவிரலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள். அப்புன்னகையுடன் விழிகளை மூடி அது அவ்வாறே நீடிக்க அசைவற்று படுத்திருந்தாள். மூச்சு சீராக ஓடிக் கொண்டிருந்தது. அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்த விதுரர் பெருமூச்சுடன் இயல்பு நிலைக்கு மீண்டு வாயிலில் இருந்து உள்ளே செறிந்த நிழலைப்பார்த்து விழிதூக்கினார். அங்கு நின்றிருந்த ஸ்தானிகர் “அரண்மனையிலிருந்து செய்தி” என்றார். “என்ன?” என்றார் விதுரர். “அரசரும் அங்கரும் அரண்மனை புகுந்துவிட்டனர்.” “சரி” என்றபின் அவர் மீண்டும் அவளை பார்த்தார்.
தன் இடக்கையை நீட்டி அவள் நெற்றியில் கைவைத்து பிசிறி நின்றிருந்த நரைமுடிகளை நீவி பின்செலுத்தி காதுக்குப்பின் செருகினார். அவள் காது மடல்களை பற்றினார். குழை அணிந்த காதில் துளை இழுபட்டிருந்தது. மெல்ல கைசரிந்து அவள் தோளை தொட்டார். தோளின் முழைஎலும்பை சுட்டுவிரலால் அழுத்திப்பார்த்தார். ஏவலன் அருகே வந்து வாயில் முன் நின்றான். திரும்பி “என்ன?” என்றார். “வந்ததுமே அரசர் படைத்தலைவர்களையும் அமைச்சர்களையும் அவைக்கு வரச்சொல்லியிருக்கிறார்.”
“நன்று. நான் இங்கு இருந்தாகவேண்டுமென்று சென்று சொல்” என்றார் விதுரர். ஸ்தானிகரும் ஏவலனும் சென்றபின் பீடத்தில் சாய்ந்து கைகளை மார்பில் கட்டியபடி சுருதையின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தார். அப்புன்னகை அங்கேயே தங்கிவிட்டிருந்தது. அதில் ஒரு மெல்லிய மாறுதல் நிகழ்ந்திருக்கிறதா என்று அவர் எண்ணினார். இல்லையென்று தோன்றியது. ஒரு மெல்லிய அசைவு வந்து சென்றதா? அல்லது அது அசைவின்மையா?
ஓசையற்ற காலடிகளுடன் அருகே அணைந்த மருத்துவர் அவள் அருகே குனிந்து கைகளை எடுத்து நான்கு விரல்களால் நாடியை அழுத்தி விழிசரித்து உளம் கூர்ந்தபின் “விண்மீண்டுவிட்டார், அமைச்சரே” என்றார். “எங்கு?” என்றார் விதுரர். “கற்பரசிகளின் உலகுக்கு” என்றார் மருத்துவர்.
[ 11 ]
நகர் நுழைந்து தன்னை எதிர்கொண்ட முதல் வீரனிடமே துரியோதனன் உறுதியான ஆணையிட்டான். அரச முறைமைப்படி முரசுகள் முழங்கட்டும், ஆனால் வாழ்த்தொலிகளோ வரவேற்புகளோ பிறசடங்குகளோ எதுவும் தேவையில்லை என. அவன் புழுதி படிந்த உடலுடன் களைத்து மெல்லடி எடுத்து வைத்த புரவியின் மேல் அஸ்தினபுரியின் தெருக்களில் சென்றபோது அதற்கு முன்னதாகவே குரல் வழியாக அவன் ஆணையை அறிந்திருந்த அஸ்தினபுரியின் வீரர்கள் வாள் தாழ்த்தியும் வேல் தூக்கியும் ஓசையின்றி தலைவணங்கினர். முற்றங்களிலோ உப்பரிகைகளிலோ எவரும் ஓடி வந்து பார்க்கவில்லை. சாலையின் இருபுறமும் நின்றிருந்த அஸ்தினபுரியின் குடிகள் தலைதாழ்த்தி வணங்கி பின்நகர்ந்தனர்.
கர்ணன் களைத்திருந்தான். துரியோதனனை நோக்கிய அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொருவரையும் தனித்து நோக்கியபடி அவன் சென்றான். அவற்றில் அச்சமும் விலக்கமும் இருந்தாலும் அவர்கள் அவனை வழிபடுவதும் தெரிந்தது. தன் சினத்தாலேயே துரியோதனன் பல மடங்கு ஆற்றல் அடைந்துவிட்டான் என்று பட்டது. கைநீட்டி மலைகளை விலகச்சொல்லும் விசை அவனுக்குள் இருப்பது போல. ஒரு சொல்லால் நகரங்களை எரிக்கும் அனல் அவனுள் கொதிப்பது போல. மனிதர்கள் தங்கள் அச்சத்தால் விழைவால் சினத்தால் மாமனிதர்களாகக் கூடும். தவத்தால் கொடையால் அன்பால் எழுந்தவர்களுக்கு நிகராக தலைதூக்கி நிற்கக்கூடும். இதுவும் ஒரு தவமே. இதிலும் தன் உடலையும் உள்ளத்தையும் உருக்கி அவியென்று அளித்து அவற்றை மானுடர் அடைகிறார்கள்.
அரண்மனை முற்றத்தை அடைந்து பாய்ந்திறங்கி கடிவாளத்தை சூதன் கையில் வீசிவிட்டு படிகளில் ஏறும்போதே துரியோதனன் “நான் நீராடி வருவதற்குள் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவை அமர்ந்திருக்க வேண்டும்” என்று ஆணையிட்டான். அவனைத் தொடர்ந்து புரவியில் வந்திறங்கிய கர்ணன் எதிரே வந்த கனகரிடம் “விதுரர் எங்கே?” என்றான். “அவரது துணைவி உடல் நலமில்லை என்று சென்றார். துணைவியார் இன்றிரவை கடக்கமாட்டார் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். கர்ணன் “யார்? சுருதையன்னையா?” என்றான். “ஆம்” என்றார் கனகர்.
அக்கணத்தில் தன் முன் எழுந்த சுருதையின் உருவமே அவர் இறப்பை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதை கர்ணன் அறிந்தான். அதற்கு முன்பு ஒருபோதும் அது தோன்றவில்லை. இறப்பை தான் தெளிவாக பார்க்கமுடிகிறது. இறப்பை பார்ப்பதைத்தான் விழிகள் தவிர்க்கின்றன. “நான் நீராடி வருகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “அவை கூடட்டும். நான் சற்று பிந்தி வருவேன். அமைச்சரை பார்த்துவிட்டு… அரசர் கேட்டால் சொல்லிவிடுங்கள்” என்றான்.
தன் அறைக்குச் சென்று நீராடி உடை மாற்றி அவன் படியிறங்கி வரும்போது சுருதை உயிர் நீங்கிவிட்டாள் என்று ஏவலன் சொன்னான். அவன் கீழே வரும்போது துச்சாதனன் அவனுக்காக காத்திருந்தான். “சுருதை அன்னை உயிர் நீங்கிவிட்டார். அரசர் அவை கூட்டியிருக்கிறார். அவரிடம் சென்று இப்போது அவை கூட்ட வேண்டாமென்று நாம் உரைக்கவேண்டும்” என்றான். மறுமொழி சொல்லாமல் கர்ணன் “நான் விதுரரை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றபின் தேரை நோக்கி நடந்தான்.
விதுரரின் இல்லத்தின் முன் இறங்கி படிகளில் ஏறி உள்ளே செல்லும்போது ஸ்தானிகர் அவன் அருகே வந்து “அரசருக்கும் பீஷ்மபிதாமகருக்கும் செய்தி சென்றுவிட்டது. இறப்புக்கான மணியோசை ஒரு நாழிகைக்குப்பின் போதும் என்று அமைச்சர் சொன்னார்” என்றார். “ஏன்?” என்று கர்ணன் நின்று திரும்பி கேட்டான். “அரசர் நகரணைந்தபின்னர் அம்முரசுகள் ஓய்ந்து ஒரு நாழிகைக்குப்பின் இறப்புச் செய்தி அறிவித்தால் போதும், வருகைமுரசுடன் தொடர்ந்து இறப்பொலிப்பது அமங்கலம் என்றார்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் மரப்படிகளில் தன் எடை ஒலிக்க மேலேறி சென்றான்.
சுருதையின் உடலை பெண்கள் கீழே பெருங்கூடத்திற்கு எடுத்துச் சென்று தரையில் விரிக்கப்பட்ட மரவுரிசேக்கை மேல் படுக்க வைத்திருந்தனர். மாமங்கலையாக உயிர் நீத்த பெண்களுக்குரிய சடங்குகள் தொடங்கிவிட்டிருந்தன. “விதுரர் இங்கிருக்கிறார்” என்றார் உடன் வந்த ஸ்தானிகர். “தன் தனியறைக்குள் இருக்கிறார். உடலை நீராட்டி அணிசெய்த பின்னரே ஆண்கள் அருகே செல்ல ஒப்புவார்கள்” என்றார்.
கர்ணன் விதுரரின் சிற்றறை வாயில் முன் நின்றான். “அமைச்சரே” என்று அழைத்தான். உள்ளே ஓலைகளைப் பரப்பி எதையோ தேடிக் கொண்டிருந்த விதுரர் அவற்றை கலைத்துவிட்டு அவனை நோக்கினார். “வந்துவிட்டீர்களா?” என்றபடி எழுந்து வந்தார். “அரசர் வந்துவிட்டாரா?” என்றார் “ஆம்” என்றபடி கர்ணன் அவர் கைகளை பற்றிக்கொண்டான். விதுரர் “அமருங்கள்! அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதையும் உதடுகள் ஓசையற்ற சொற்களுடன் அசைந்து கொண்டிருப்பதையும் கர்ணன் கண்டான். ஒருபோதும் அவரை அப்படி நிலையழிந்தவராக பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டான். அவர் அமர்ந்தார்.
“உரிய முறையில் இறந்தாள், புன்னகையுடன். புன்னகையுடன் இறப்பது ஒரு அரிய பேறு என்றார்கள். மாமங்கலைகளுக்கே உரியது என்றார்கள். நன்று! என் வாழ்க்கைக்கு ஒரு பொருள் கிடைத்தது” என்று அவர் சிரித்தார். “அவளை மாமங்கலையாக விண் அனுப்புவது நான் உயிர் வாழ்வதனால்தான்” என்று மீண்டும் சிரித்து “விண்ணிலிருப்பாள். அங்கே சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் இருப்பார்கள்” என்றார். பின்பு எழுந்து அவனருகே வந்து “இந்நகருக்குள் நுழையும்போது ஏனோ அம்பா தேவி ஆலயத்துக்கு முன் சென்று நின்றேன். அன்னையைப் பார்த்தபோது எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. சுருதையை எண்ணிக் கொண்டேன். ஏன் எண்ணிக் கொண்டேன் என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் அவள் சென்று அமரப்போவது அம்பையின் அணியில்தான்” என்றார்.
“அமருங்கள்! நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான் கர்ணன். “ஆம், ஓய்வெடுக்க வேண்டியதுதான். நான் நன்கு ஓய்வெடுத்து இரண்டு நாட்களுக்கு மேலாகிறது. என்ன ஆயிற்று?” என்றார் விதுரர். “அரசர் என்ன செய்கிறார்? நிலையழிந்திருக்கிறாரா? கடும் சினத்துடன் அங்கிருந்து கிளம்பினார் என்றார்கள்.” கர்ணன் அதற்கு மறுமொழி சொல்ல வாயெடுப்பதற்குள் “மாமங்கலைகள் இறுதி வரை அவர்கள் சொல்லவேண்டியவற்றை சொல்லாமலே இங்கிருந்து சென்றுவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடைய உலகம் அவர்கள் சொல்ல விழைந்த சொற்களால் ஆனவையாக இருக்கும்” என்றார்.
மீண்டும் நகைத்து “மாமங்கலைகள் உலகில் ஆண்களுக்கு நுழைவு ஒப்புதலே இருக்காதென்று எண்ணுகிறேன். முற்றிலும் பெண்களால் ஆன உலகாக இருக்கும். என்ன சொல்கிறீர், அங்கரே?” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். “இதில் எந்தக் காவியத்திலாவது மாமங்கலைகள் விண்புகுதலைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். அவர்களை தேவர்கள் அழைத்துச் செல்ல முடியாது. மூன்று பெரும் தெய்வங்களும் அவர்களுக்கு அருளமுடியாது. அனல்முடியுடன் கொற்றவை அமர்ந்திருக்கும் ஒரு விண்ணுலகாக இருக்கும் அவர்களின் விண்ணகம். அங்கு இதுவரை இப்புவியில் நிகழ்ந்து மறைந்த அனைத்து மாமங்கலைகளும் கதிர்முடி சூடி அமர்ந்திருப்பார்கள். அங்கு ஆண்கள் எவர் நுழைந்தாலும் எரிந்து சாம்பலாகி விடுவார்கள், மும்மூர்த்திகளாக இருந்தாலும் சரி. என்ன சொல்கிறீர்?” “ஆம்” என்றான் கர்ணன்.
“சொல்லுங்கள்! அரசர் எவ்வாறு இருக்கிறார்? என்ன சொல்கிறார்?” என்றார் விதுரர். “நன்றாக இருக்கிறார்” என்று கர்ணன் சொன்னான். “அவைகூட்டியிருக்கிறார் என்றார்கள். அவைக்கு இப்போது என்னால் உடனடியாக வரமுடியாது. ஏனென்றால் இவளை உரிய முறையில் காடேற்றுவதற்குள் நாளை உச்சிப்பொழுதாகிவிடும். அதன் பின்னரே நான் அவை நுழைய முடியும்” என்று விதுரர் சொன்னார்.
கர்ணன் மறுமொழி சொல்வதற்குள் “கன்னியர் இறந்தால் அவர்கள் மங்கல உலகுக்குள் செல்வதில்லை என்று சொல்வார்கள். அவர்களுக்குரியது வேறு உலகம். ஏனென்றால் அவர்கள் ஆண்களை அறிந்ததில்லை. ஆண்களை அறியும்போதுதான் பெண்கள் தங்களை அறிகிறார்கள். தங்கள் எல்லையை அல்லது தங்கள் ஆற்றலை. ஆண்களை அறியாத பெண் மாமங்கலையாக முடியாதென்றால் இந்த மாமங்கலையர் அனைவரையும் ஆண்கள்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றார்.
கண்களில் சிரிப்பில்லாமல் உரக்க நகைத்து “முன்பொரு சூதன் பாடினான், படுகளத்தில் வீழ்ந்த வீரர்களுக்கென்றொரு விண்ணுலகம் உள்ளது என்று. அவ்விண்ணுலகில் அரசர்களுக்கு இடம் இல்லை, அமைச்சர்களுக்கும் நுழைவு இல்லை என்று. ஏனெனில் அவ்வுலகுக்கு மண்ணிலிருந்து மனிதர்களை அனுப்பிக் கொண்டிருப்பதே அவர்கள்தான்” என்றார். அவன் தோளைத் தட்டி “மாமங்கலையாக சென்றுவிட்டாள். அவள் மைந்தன் துவாரகையில் இருக்கிறான். அவன் வருவதற்குள் இவள் எரியேறிவிடுவாள்…” என்றார்.
ஸ்தானிகர் வந்து அறைவாயிலில் நின்று தலைவணங்கி “பேரரசியும் அரசியும் வந்திருக்கிறார்கள். பிற அரசியரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். “நான் அவர்களை வரவேற்க வேண்டுமா? அதற்கான முறைமை என்ன?” என்றார் விதுரர் எழுந்தபடி. “அல்ல, தாங்கள் அவர்களை பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் நேரடியாகவே மேலே சென்றுவிடுவார்கள்” என்றார். “பீஷ்மபிதாமகர் வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரை நான் எப்படி வரவேற்க வேண்டும்? இதே ஆடை போதுமா?” என்றபடி விதுரர் எழுந்தார்.
அவர் சித்தம் அழிந்துவிட்டதா என்று கர்ணன் எண்ணினான். “முறைமை என ஏதுமில்லை, அமைச்சரே. அவர்கள் வரும்போது தாங்கள் வெளியே கூடத்தில் இருந்தால் நன்று” என்றார் ஸ்தானிகர். கர்ணன் இருப்பதையே மறந்ததுபோல “ஆம். கூடத்தில் இருக்கிறேன். அவர்களும் கூடத்தில்தான் என்னை சந்திக்க விரும்புவார்கள்... மூத்தவர் வருகிறாரா?” என்றார். “அவரிடம் சொல்லப்பட்டுவிட்டது. சஞ்சயன் வருவதற்காக காத்திருக்கிறார்கள். வந்ததும் இங்கு வருவார்” என்றார் ஸ்தானிகர்.
விதுரர் மீண்டும் உள்ளே வந்து கர்ணனைப் பார்த்து “நீங்களா? எப்போது வந்தீர்கள், அங்கரே?” என்றார். கர்ணன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே!” என்றான். விதுரர் நகைத்து “ஆம். ஓய்வெடுக்கவேண்டும். இப்போது பீஷ்மபிதாமகர் வந்துகொண்டிருக்கிறார். அவர் சென்றபின் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்றார். ஸ்தானிகர் “வருக, அமைச்சரே!” என்று அவர் தோளைத் தொட “ஆம், நான் எனது சால்வையை இங்கே விட்டுவிட்டேன்” என்றபின் திரும்பி சால்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு திரும்பி நடந்தார். கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “நான் சென்று அரசருடன் வருகிறேன். பேரரசர் வரும்போது இங்கு இளையவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்றான்.
[ 12 ]
சுருதையின் பதினாறாவதுநாள் நீர்க்கடன்களை முடித்து அமைச்சுநிலைக்கு திரும்பியபோதுதான் அஸ்தினபுரியின் அனைத்துப்படைகளும் போர் ஒருக்கம் கொண்டிருக்கும் செய்தியை விதுரர் அறிந்தார். பதினாறுநாட்கள் அவர் மண்ணென்றும் கல்லென்றும் மரமென்றும் மானுடரென்றும் புலன்களால் அறியப்பட்ட அஸ்தினபுரியில் இல்லை. நினைவென்றும் கனவென்றுமான பிறிதொரு அஸ்தினபுரியில் இருந்தார். அங்கே காலம் கரைந்து சுழன்றது. இருத்தலும் இன்மையும் முயங்கின. இருநிலையழிந்த சித்தவெளியில் மிதந்துகிடந்தார்.
பதினாறாம் நாள் காலை நீர்க்கடனுக்காக கங்கையில் இடைவரை நின்றிருக்கையில் ஒருகணத்தில் அனைத்தும் முடிந்துவிட்டன என்னும் உணர்வை அடைந்தார். குளிர்போல அவர் உடலை அவ்வெண்ணம் நடுக்கியது. கால் நீரொழுக்கில் இழுபட்டுச்செல்வது போலிருந்தது.
விழுந்துவிடப்போனவரை அவரது மைந்தன் சுபோத்யன் பற்றிக்கொண்டான். “மூழ்குங்கள், தந்தையே” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னான். “ஆம்” என்றபடி அவர் நீரில் மூழ்கி எழுந்தார். நீரின் அழுத்தம் மூச்சுத்திணறச் செய்தது. எழுந்து ஈர ஆடை சிக்கி கால்தடுக்க கரைக்கு வந்தார். இளைய மைந்தன் சுசரிதன் மரவுரியாடையை அளித்து “துடைத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
அவர் தலைதுவட்டிக்கொண்டிருக்கையில் கீழே கேட்டுக்கொண்டிருந்த நீத்தாருக்கான சொற்கள் நீருக்குள் என ஒலித்தன. காதைக்குடைந்து தலையை உலுக்கினார். மூச்சுத்திணறல் என அவர் உணர்ந்தது உள்ளத்தின் வெறுமையைத்தான் என்று சற்று பிந்தியே அறிந்தார்.
தேரில் அஸ்தினபுரி நோக்கி செல்கையில் மெல்ல எண்ணங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. பதினாறுநாட்கள் அவர்மேல் ஈரமான மரவுரிமூட்டைகள் போல ஏறியமர்ந்திருந்தவை அவை. வெறுமை மிகுந்தபடியே சென்றது. அரண்மனையை அடைந்தபோது உடலே இறகுபோல ஆகிவிட்டிருந்தது. படிகளை ஏறி தன் அறைக்குள் செல்லும் ஆற்றலே உடலில் எஞ்சியிருக்கவில்லை.
அறைக்குச் செல்லும்வழியில் மூடப்பட்டிருந்த சாளரம் ஒன்றை நோக்கியபடி நின்றார். நெஞ்சு ஏக்கம் கொண்டபடியே வந்தது.
ஏவலன் வந்து அருகே நின்றான். அந்தச்சாளரக் கதவை திறக்கும்படி சொன்னார். அவன் விழிகளில் வினாவுடன் நோக்க அவர் “ம்” என்றார். அவன் இன்னொரு ஏவலனுடன் வந்து கதவை உடைத்துத் திறந்தான். பல்லாண்டுகாலமாக மூடப்பட்டிருந்த கதவின் பொருத்துக்களில் தூசி படிந்த தடம் தெரிந்தது. மறுபக்கம் ஒட்டடை படிந்திருந்தது. நெடுங்காலமான புண்வடு போல கதவுப்பொருத்து வெளுத்துத் தெரிந்தது.
அவர்கள் அதை தூய்மைசெய்வதை அவர் நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் அதை சித்தமாக்கியபின் விலகி நிற்க அவர் அதில் ஏறியமர்ந்து தெருவை நோக்கிக்கொண்டிருந்தார். வெளியே தெரிந்த தெரு அவர் முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அங்கே இரண்டு யானைகள் இரு நீர்க்குமிழிகள் போல மிகமெல்ல ஒழுகிச்சென்றன. மனிதர்கள் பஞ்சுப்பிசிறுகள் போல சென்றனர். ஓசைகள் இல்லாத ஒரு மாய உலகம்.
அன்று பகல் முழுக்க அவர் அங்கேயே அமர்ந்திருந்தார். எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக அடங்கி உள்ளம் அசைவற்றுக் கிடந்தது. ஒரு மெல்லிய ஏக்கமாக மட்டுமே உள்ளத்தை, இருப்பை உணரமுடிந்தது. அவ்வுணர்வு எழுந்ததும் மெல்ல அசைந்து மூச்செறிந்து மீண்டும் அமர்ந்தார். ஓர் எண்ணத்துடன் இன்னொரு எண்ணம் கொண்டிருக்கும் தொடர்பே சித்தம் என்பது. கல்வியும் அறிவும் அனைத்தும் அந்தத் தொடர்பை மட்டும்தான் உருவாக்குகின்றன. அத்தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும்போது உள்ளம் மட்டுமே எஞ்சுகிறது. அறிவால் அறியப்படாத ஒன்று. பெயரிடப்படாத, அடையாளங்களற்ற ஒன்று.
மாலையில் சுபோத்யன் அவரிடம் வந்து “தாங்கள் அமைச்சுநிலைக்கு செல்லலாம், தந்தையே” என்றான். அவனுக்கு அப்பால் சுசரிதன் நின்றான். “என்னை நாற்பத்தெட்டாம் நீரூற்றுக்குப்பின் சென்றால் போதும் என்று சொன்னார் மூத்தவர்” என்றார் விதுரர். சுசரிதன் “நீங்கள் சென்றாகவேண்டும்... உங்கள் இடம் அதுவே” என்றான். விதுரர் அச்சொற்களை விளங்கிக்கொள்ளாதவராக பார்த்தார்.
“தந்தையே, நினைவறிந்த நாளிலிருந்து இந்த பதினாறுநாட்கள் மட்டுமே நீங்கள் அரசுசூழ்தலில் இருந்து விலகி நின்றிருக்கிறீர்கள்... செல்லுங்கள்!” என்றான். “தங்களால் அவ்வுலகிலல்லாமல் வாழமுடியாது. அங்குதான் உங்கள் புலன்கள் விழிப்புகொள்கின்றன.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “இனி இம்மாளிகையில் நீங்கள் இருக்கவேண்டியதில்லை, தந்தையே” என்றான் சுசரிதன். அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
அவர் அவர்களால் செலுத்தப்பட்டு ஆடையணிந்து கிளம்பினார். அமைச்சுநிலை வரை சுசரிதன் வந்தான். அமைச்சுநிலை வாயிலில் அவரை எதிர்கொண்டழைத்த கனகர் வணங்கி வாழ்த்துரைத்தபின் “படைபுறப்பாடு முடிவடைந்துவிட்டது, அமைச்சரே. படைகள் முரசு காக்கின்றன” என்றார். “ஏன்?” என்றார் விதுரர். கனகர் திகைப்புடன் “அனைத்துச் செய்திகளையும் நான் தங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தேன்...” என்றார். அவர் தடுமாற்றத்துடன் “ஆம்...” என்றார்.
அவரது திகைப்பை பார்த்துவிட்டு கனகர் அனைத்தையும் சொன்னார். அஸ்தினபுரியின் அனைத்து படைப்பிரிவுகளும் போர் ஒருக்கம் கொண்டுவிட்டன. எல்லைகளில் படைநீக்கம் முடிவடைந்துவிட்டது. கர்ணனும் ஜயத்ரதனும் துச்சாதனனும் படைகளை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இரவுபகலாக துரியோதனர் அரசுசூழ் அறையிலிருந்தபடி அவர்களை பறவைச்செய்திகள் வழியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
விதுரர் எந்த உணர்ச்சியையும் அடையாதவராக நோக்கி நின்றார். “அனைத்து ஓலைகளையும் நானே கொண்டுவந்து அளித்தேன், அமைச்சரே” என்றார் கனகர். “நான் பார்க்கவில்லை” என்று விதுரர் மெல்லியகுரலில் சொன்னார். சுசரிதன் “தந்தை இன்றுதான் மீண்டு வந்தார். பதினாறுநாட்களும் ஈமச்சடங்குகளின் நிரை முடிவே இல்லாமல் இருந்தது...” என்றான். கனகர் “வருக!” என உள்ளே அழைத்துச்சென்றார்.
ஓலைகள் நடுவே அமர்ந்தபோதுதான் பதினாறுநாட்களில் நெடுந்தொலைவு விலகிச்சென்றுவிட்டிருப்பதை விதுரர் உணர்ந்தார். எந்த ஓலையும் பொருள்படவில்லை. அவற்றின் மந்தணமொழி அவர் சித்தத்துக்குமேல் தொடாமல் ஒழுகிச்சென்றது. அந்த இடமே புதியதாகத் தோன்றியது. முதன்முறையாக பதின்மூன்றுவயதுச் சிறுவனாக அங்கு வந்து அமைச்சக உதவியாளனாக பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்தார்.
உள்ளம் ஏன் அசைவற்றுக் கிடக்கிறது? ஏன் பொருளே இல்லாமல் சத்யவதியின் சிற்றூருக்குச் சென்ற நினைவு எழுகிறது? சத்யவதியை அவர் அத்தனை அணுக்கமாக உணர்ந்திருக்கிறாரா? காலம் அவளை மேலும் அருகே கொண்டுவருகிறது. அவள் அடைந்த முதுமையை அகற்றி நாணம் படிந்த கன்னங்களும் ஒளிரும் கண்களும் கொண்டவளாக காட்டுகிறது.
ஒரு திடுக்கிடலுடன் ஏன் சுருதையின் நினைவே எழவில்லை என நினைவுகூர்ந்தார். உடனே அவ்வெண்ணத்தை விலக்கினார். பதினாறுநாட்களும் அவளை விலக்கவே முயன்றுகொண்டிருந்தார். வாழ்ந்தபோதிருந்ததைவிட அவள் பலமடங்கு பேருருக்கொண்டிருந்தாள். எப்போதுமே அவள் அப்படித்தான் இருந்தாள். அவர் அவளை விட்டு விலகி உலாவ முடிந்தது முன்பு. இனி அவளிலேயே இருந்தாகவேண்டும். அவர் சலிப்புடன் ஓலைகளை அடுக்கி வைத்து கண்களை மூடிக்கொண்டார்.
“பிதாமகருக்கும் பேரரசருக்கும் பேரரசிக்கும் படைநீக்கச் செய்திகள் சென்றுகொண்டிருக்கின்றன. பிதாமகர் பலமுறை அரசரை கூப்பிட்டனுப்பினார். அரசர் செல்ல மறுத்துவிட்டார். அரசரை சந்திக்க வருவதாகச் சொல்லி செய்தியனுப்பினார். அதற்கும் அரசர் ஒப்பவில்லை. பேரரசர் இருமுறை நேரில் அரசரைப் பார்க்க வந்துவிட்டார். அரசர் பின்வாயில் வழியாக வெளியேறினார். அமைச்சரே, இன்று இவ்வரண்மனையே அவர்களின் சந்திப்பைத்தான் எதிர்நோக்கியிருக்கிறது...”
கனகர் அருகே நின்று சொல்லிக்கொண்டிருந்தார். அச்சொற்களும் அவருக்கு பொருள்படவில்லை. பீடத்தில் சாய்ந்து அமர்ந்து சற்று துயின்றார். விழித்தெழுந்தபோது அவர் எங்கிருக்கிறார் என்று உணரவே நெடுநேரமாகியது. கனகர் தன்னை அழைத்ததுபோல் உணர்ந்தார். கனகர் அவரை அழைத்திருந்தார்.
“பீஷ்மபிதாமகர் தங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்... உடனே கிளம்பும்படி ஆணை” என்றார் கனகர். “ஆம்” என்றபடி விதுரர் எழுந்தார். “நானும் வருகிறேன். தங்களால் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லமுடியாது...” என்றார் கனகர். “வேண்டியதில்லை” என்றபின் விதுரர் நடந்தார்.
திரும்பி இல்லத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே வலுவாக எழுந்தது. அங்கே அந்தச் சாளரப்படியில் அமர்ந்தால் எண்ணங்கள் தொடர்பழிந்து பெருகிவழியும் அந்த இனிய ஒழுக்கில் சென்றுகொண்டே இருக்கமுடியும். அவர் என ஏதும் எஞ்சுவதில்லை அங்கே. அந்தச் சாளரத்தை எண்ணிக்கொண்டதுமே உள்ளம் ஓர் இனிமையை உணர்ந்தது. தன்னைப் பிடுங்கி அகற்றி பீஷ்மரின் படைக்கலச்சாலைக்கு கொண்டுசெல்லவேண்டியிருந்தது.
[ 13 ]
பீஷ்மர் அவரிடம் முகமனோ வாழ்த்தோ சொல்லவில்லை. கையில் கூரம்புடன் பயிற்சிசாலையில் நின்றவர் திரும்பி “என்ன நிகழ்கிறது? உங்கள் அரசன் என்னை மீறி படைகொண்டுசெல்ல விழைகிறானா?” என்றார். விதுரர் “ஆம்” என்றார். சினத்துடன் பற்களைக்கடித்து ”மூடன்! ஒரே ஆணையால் படைகளனைத்தையும் மீண்டும் நிலைமீளச்செய்ய என்னால் முடியும். வேண்டுமென்றால் அவனை சிறையிடவும் ஆணையிடுவேன்” என்றார்.
“அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் போலும்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்றார் பீஷ்மர். “ஒரு மோதலை...” என்று விதுரர் சொன்னார். கைபட்டு சீறி எழும் நாகம் போல ஒரே கணத்தில் அவரது அனைத்து அகச்சொற்களும் மீண்டு வந்தன. “எழுவது அஸ்தினபுரியின் பிதாமகரின் குரல் மட்டும் அல்ல, மலைக்கங்கர்குலத்தவரின் குரலும்கூட. ஒருமோதலெழுந்தால் அது அனைவருக்கும் தெளிவாகிவிடும்.”
பீஷ்மர் மெல்ல தளர்ந்தார். “சொல்!” என்றார். தான் அத்தனை ஓலைகளையும் வாசித்திருப்பதை, அவற்றின் ஒவ்வொரு சொல்லும் நினைவிலிருப்பதை விதுரர் உணர்ந்தார். அத்தருணத்தில் சொல்திரளுடன் அவ்வாறு ஓங்கி நின்றிருப்பதன் உவகை அவரை ஏந்திக்கொண்டது. “இங்கு நிகழ்ந்தவற்றை அறிந்திருக்கமாட்டீர்கள், பிதாமகரே. பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் அனைத்திலிருந்தும் துரியோதனருக்கு ஓலைகள் வந்துகொண்டிருக்கின்றன. வேதத்திற்கும் வேதமறுப்பாளர்களுக்குமான போர் என இது இப்போதே உருப்பெற்றுவிட்டது...”
“நீங்கள் எத்தரப்பு என்பதே இன்று கேட்கப்படுகிறது. முறைமையோ மூப்போ அல்ல” என்று விதுரர் தொடர்ந்தார். “குலமிலியாகிய யாதவனால் வேதம் மறுக்கப்படுவதை ஏற்கிறீர்களா, வேதம் காக்க வாளேந்தி ஷத்ரியர்களின் பக்கம் நிற்கிறீர்களா?” பீஷ்மரின் பதைப்பு நிறைந்த விழிகளை நோக்கி புன்னகைத்து “இது குலமிலிகள் தங்களை ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. ஒருசொல்லும் வேதம் கேட்டிருக்காதவர்கள்கூட இன்று வேதத்திற்காக உயிர்விட எழுகிறார்கள்” என்றார்.
பீஷ்மர் அம்பின் கூர்முனையை வருடிக்கொண்டு கண்களைச் சுருக்கி தலைகுனிந்து நின்றார். “சொல், இன்று நான் ஆணையிட்டால் அஸ்தினபுரியின் படையினர் என்பொருட்டு எழமாட்டார்களா என்ன?” என்றார். “எழக்கூடும். எழாமலும் போகக்கூடும். நாம் அதைத் தொட்டு உசுப்பிநோக்கும் நிலையில் இல்லை” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளில் பாதிக்குமேல் காந்தாரர்கள். அவர்கள் சகுனிக்கே கட்டுப்பட்டவர்கள். வேதமே வினா என்பதனால் ஷத்ரியரில் ஒருசாரார் உங்களை மறுக்கக்கூடும்.”
“ஒரு பிளவுபோல பெருநோய் பிறிதில்லை இப்போது” என்றார் பீஷ்மர். “ஆகவேதான் அனைத்தையும் பார்த்தும் வாளாவிருக்கிறேன். நீ மீண்டு வரட்டும் என எண்ணினேன்.” விதுரர் “இருபத்தெட்டு ஷத்ரிய அரசர்கள் படையனுப்ப சித்தமாக இருக்கிறார்கள்...” என்றார். பீஷ்மர் “சிசுபாலனைக் கொன்றது மிகமிகப் பிழையான அரசுசூழ்ச்சி. அனைத்துமறிந்த அவன் எப்படி அதை செய்தான் என்றே விளங்கவில்லை” என்றார்.
“ஜராசந்தனிடமிருந்து ஷத்ரியரை மீட்டதை அவர் மிகையாக நம்பியிருக்கலாம்” என்றார் விதுரர். “அவர்கள் சிறுகுடி ஷத்ரியர். அரசர்கள் அவர்களை பொருட்டென எண்ணமாட்டார்கள். மேலும் ஷத்ரியர்கள் தாங்கள் யாதவப்படையால் காப்பாற்றப்பட்டதை ஓர் இழிவென்றே எண்ணுவர்... ஒரு போர் வழியாக அப்பழியை நீக்கவே முயல்வர்” என்றார்.
சினத்துடன் பீஷ்மர் “விதுரா, அந்தச் சூதன் மகன் இதில் என்ன செய்கிறான்? ஷத்ரியர்களின் படைகளை அவனா நடத்திச்செல்லவிருக்கிறான்?” என்றார். பற்களைக் கடித்து “இந்திரப்பிரஸ்தத்தில் அவன் நாகர்களை சந்தித்தான் என்றும் அவர்களின் வஞ்சத்தை ஏற்றான் என்றும் சொல்கிறார்கள். அவன் எதற்காகப் போரிடுகிறான், நாகவேதத்திற்காகவா?” என்றார்.
“நாகவேதமும் நால்வேதமும் முரண்படுவன அல்ல” என்றார் விதுரர். “காடாளத்தியான அன்னையின் தேவமைந்தர் நால்வர் என வேதங்களை வியாசர் சொல்கிறார். நாகவேதத்திற்கும் முதல் எதிரி அவன்தான்.” பீஷ்மர் “என்னால் இதெல்லாம் என்ன என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. யாதவர் அரசுகொள்வதை ஷத்ரியர் ஏற்கவில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால் அவன் பேசுவது என்ன? அதை ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்...? ஒன்றும் தெளிவாக இல்லை.”
“எவருக்கும் தெளிவாக இல்லை. ஆனால் அமைந்து நிலைத்த ஒன்றை அவர் எதிர்க்கிறார் என்று மட்டும் புரிந்துகொள்கிறார்கள் வைதிகரும் ஷத்ரியரும். சொல்லும் வில்லுமேந்தி அவர்கள் காத்து நின்றிருக்கும் ஒன்றை அழிக்கவிடக்கூடாதென வஞ்சினம் கொண்டிருக்கிறார்கள்.” பீஷ்மர் பெருமூச்சுடன் “நீ திருதராஷ்டிரனை பார்த்தாயா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “இங்கு என்னிடம் வந்து கொந்தளிக்கிறான். மைந்தனை போருக்கு அழைத்து கொல்லப்போவதாக நேற்று கூவினான்...”
“மைந்தனைப் போலவே தந்தையும் கொந்தளிப்பானவர். நான் சென்று பார்க்கிறேன்” என்றார் விதுரர். “அவனை நீ பார்ப்பதனால் பயனில்லை” என்று பீஷ்மர் சொன்னார். “நீ சகுனியை சென்று பார். அல்லது...” அவர் குரல் தழைந்தது. விழிகளை விலக்கி “கணிகரை பார்” என்றார்.
விதுரர் “ஆணை” என்றார். பீஷ்மர் மேலும் குரல் தழைய “நான் கோரினேன் என்று சொல். என் மைந்தர் போரிட்டழியக்கூடும் என்றெண்ணி கண்ணீர் வடிக்கிறேன் என்று சொல்...” என்றார். திரும்பி கண்களின் நீர்மை ஒளிர “நான் அவர் கால்களைப்பற்றி கோருகிறேன் என்று சொல்... என் மைந்தரை அவரால் மட்டுமே காக்க முடியும்” என்றார்.
“கணிகராலா?” என்றார் விதுரர். “மைந்தா, இங்கு இருவர் மட்டுமே எண்ணியவற்றை எய்துபவர்கள். இங்கு நிகழ்வனவற்றின் பொருளறிந்தவர்கள். அவனிடம் நான் கோரமுடியும். ஆனால் அவன் என்னை செவிகொள்வான் என தோன்றவில்லை. அவன் நெடுந்தொலைவுக்கு நோக்க உச்சிமுடியேறி நின்றிருக்கிறான். மானுடரும் குடிகளும் குலங்களும் அவன் காலடியில் எறும்புகள். நகரங்களும் நாடுகளும் கூழாங்கற்கள்...”
பீஷ்மர் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டு “இவர் ஏதேனும் செய்யக்கூடும்... சற்று கருணை காட்டக்கூடும்” என்றார். “ஆனால் இவரும் மானுட உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர். கொலைப்படைக்கருவியின் இரக்கமற்ற கூரொளிகொண்டவர். ஆனால் ஒருவேளை என் நல்லூழால் ஏதேனும் ஒரு வழி அவர் உள்ளத்தில் எழக்கூடும். அவரது ஆடலுக்கு உகந்ததாகவே அது எனக்கு உதவுவதாக ஆகக்கூடும்” என்றார்.
விதுரர் “போரை நாம் தவிர்ப்போம்” என்றார். “நாமா?” என பீஷ்மர் கசப்புடன் சிரித்தார். “நாம் என்ன செய்ய முடியும்? நாம் எண்ணுகிறோம், சூழ்ந்துநோக்குகிறோம். அவை நாமறிந்த சிறிய வாழ்க்கையைக் கொண்டு நாம் செய்யும் எளிய பயிற்சிகள் மட்டுமே. இது பல்லாயிரம் கைகள் பல லட்சம் காய்களை நகர்த்தி ஆடிக்கொண்டிருக்கும் நாற்களம்.”
“நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனாலும் புழு இறுதிக்கணம் வரை நெளியத்தான் செய்கிறது. அதை செய்வோம். நீ கணிகரிடம் பேசு.” விதுரர் “ஆணை” என்று தலைவணங்கி வெளியே சென்றார். கணிகரைக் கண்டு பேசவேண்டிய சொற்களை அவர் உள்ளம் கோக்கத் தொடங்கியது.
பீஷ்மர் மீண்டும் ஒரு அம்பை எடுத்து வில்லில் பொருத்துவதை அப்பால் நின்று கூர்ந்து நோக்கினார். அவர் உடல் பதறுகிறதா? கை நடுங்குகிறதா? எதுவும் தெரியவில்லை. அவர் எப்போதும்போல வில்லம்புடன் தானுமொரு படைக்கலமென இணைந்தார். விதுரர் திரும்பும்போது அவர் நிழலை நோக்கினார். அது மெல்ல அதிர்ந்ததுபோல தோன்றியது.
வெளியே செல்லும்போது விதுரர் தன் உள்ளத்தைப்பற்றி எண்ணிக்கொண்டார். பீஷ்மரின் விழிநீரிலிருந்து அது முற்றிலும் அகன்று நின்றிருந்தது. ஒருவேளை ஒரு போர் நிகழக்கூடும். அனைத்து முயற்சிகளும் பயனற்று குருதிப்பெருக்கே எஞ்சக்கூடும். முதல்முறையாக நெஞ்சு நடுங்காமல் அவர் அதைப்பற்றி எண்ணினார்.
உண்மையில் அது ஒரு பொருட்டே அல்லவா? உடன்பிறந்தோர் போரில் களமெதிர் நின்றால் அவர் துயருறப்போவதில்லையா? இல்லை என்றே அவர் அகம் சொன்னது. அது நிகழ்ந்தால் அகன்று வெறுமை நிறைந்த விழிகளுடன் அவர் நோக்கி நிற்பார்.
அவ்வாறெனில் ஏன் இப்போது கணிகரை பார்க்கச்செல்கிறார்? இல்லம் மீண்டாலென்ன? இல்லை, இது ஒரு பணி. அவர் தன் எல்லையையும் வாய்ப்புகளையும் அறியும் களம். தன்னை உருவாக்கி தன்னை நிகழ்த்தி தன்னைக் கடந்துசெல்லும் வழி. பிறிதொன்றுமில்லை.
விதுரர் நின்று அஸ்தினபுரியின் அரண்மனைத்தொகுதியை ஏறிட்டு நோக்கி பெருமூச்சுவிட்டார். ஓங்கிய அதன் முகடுக்குமேல் வானம் ஒளியுடன் நிறைந்திருந்தது. சால்வையை சீரமைத்தபடி நடந்தார்.
[ 14 ]
ஏவலன் தலைவணங்கி வாயில் திறக்க விதுரர் சகுனியின் அறைக்குள் நுழைந்தபோது அவர்களிருவரும் கைகளை கட்டிக்கொண்டு நாற்களத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த நகர்வுக்காக காய்கள் காத்திருந்தன. அவர் வருகையை அவர்கள் அறிந்ததாகவே தெரியவில்லை. காலடியோசை கேட்ட பின்னரும் அவர்களின் நோக்கு நிலைவிலகவில்லை.
விதுரர் வந்து வணங்கியதும் சகுனி விழிவிலக்காமலேயே முகமனுரைத்து அமரும்படி கைகாட்டினார். கணிகர் அங்கிருக்கும் எதையுமே காணாதவர் போன்ற விழிகளுடன் நிமிர்ந்து நோக்கி புன்னகைத்து முகமன் சொன்னபின் காயமைவில் நெஞ்சாழ்ந்தார். அவர்கள் அந்தத் தருணத்தின் முடிவின்மையில் முற்றிலும் மூழ்கி நிகர்விசைகள் என செயலற்று அமர்ந்திருப்பதை விதுரர் நோக்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு நாற்களம் புரிபடவேயில்லை. இளமையில் சத்யவதி அவரிடம் நாற்களமாட விழைந்து பலமுறை அதை கற்பித்தாள். எளிதில் தோற்கடிக்கக்கூடிய எதிர்த்தரப்பாக அமைய மட்டுமே அவரால் இயன்றது. அடிப்படை நெறிகளுக்கு அப்பால் சென்று அதன் உள்ளடுக்குகளை தொட்டறிய முடியவில்லை. ஆனால் அவள்முன் அமர்ந்து ஆடுவது அவருக்கு பிடித்திருந்தது. ஒளிவிடும் கண்களுடன் சிறு உதடுகளை அழுத்தி அவள் குனிந்து நாற்களத்தை நோக்கும்போது அவர் அவளையே நோக்கிக் கொண்டிருப்பார்.
“என்னைப் பார்க்காதே மூடா, நாற்களத்தை பார். உன்னை வெல்லப்போகிறேன்” என்று அவள் சிரித்துக்கொண்டே அவன் தொடையில் அறைவாள். “தாங்கள் என்னை எப்போதும் வென்றுகொண்டே இருக்கிறீர்கள், அன்னையே. பாரதவர்ஷத்தின் பேரரசியை எவர் வெல்லமுடியும்?” என்பார். அவளுக்கு அவன் கூறும் புகழுரைகள் பிடிக்கும். வழக்கமான சொற்களாக இருந்தாலும்கூட முகம் மலர்ந்து சிரித்துக்கொள்வாள்.
“பகடையாடலின் இந்த முறை அஸ்தினபுரியிலேயே உருவாகி வந்தது என்பார்கள். மாமன்னர் ஹஸ்தி பகடையாடுவதில் தேர்ந்தவர். முன்பிருந்தது நாலிரண்டு எட்டு என அமைந்த படைக்களம். பன்னிரு ராசிகளுக்குரிய முறையில் அதை அவர் மாற்றியமைத்தார்” என்றாள். “ஹஸ்தி அமைத்த அரண்மனையில் பகடைக்கென ஒரு தனி மாளிகையே இருந்தது. பன்னிருபடைக்களம் என அதை அழைத்தனர் சூதர். பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இங்கு வந்து அரசருடன் அமர்ந்து ஆடியிருக்கிறார்கள். நாட்கணக்கில் வாரக்கணக்கில் அன்றெல்லாம் ஆடல் நிகழும். மாமன்னர் குருவை ஒருமுறைகூட எவரும் வென்றதில்லை” சத்யவதி சொன்னாள்.
“பிரதீபரின் காலத்தில் பகடைமாளிகை இடிக்கப்பட்டது. பகடையாடலை அவர் வெறுத்தார். அது போர்க்களத்தை தவிர்க்கும் கோழைகளுக்குரிய ஆடலென்று சொன்னார். அதன்பின்னர் இங்கே எந்த அரசருக்கும் பகடை கையகப்படவில்லை.” பகடையை உருட்டி அதில் விழுந்த ஏழை நோக்கி மகிழ்ந்து அவனை ஏறிட்டாள். “ஆனால் மன்ணிலும் குருதியிலும் விதைகள் ஒருபோதும் முற்றிலும் மறைவதில்லை என்பார்கள். அஸ்தினபுரியின் அரசகுடியில் பகடையாடும் மன்னர்கள் வரக்கூடும்.”
“மூத்தவன் ஆடமுடியாது. இளையவன் ஆடுவான் என எண்ணினேன். அவன் தன் அன்னையுடன் பாவையாடுவதிலேயே இளமையைக் கடந்துவிட்டான்” என்று சொல்லி “நீக்கு” என்றாள். அவன் நீக்கியதும் “மூடா! இப்படியா ஆடுவாய்?” என்றாள். “அருகே இருந்த காயை நகர்த்தினேன்...” என அவன் சிரித்தான். அவளும் சிரித்து ஒரு காயை நீக்கி அவனை மீண்டும் வென்றாள்.
“ஏன், நாற்களத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்றான் விதுரன். அவள் திரும்பி சேடியை நோக்க அவள் வாய்மணத்தாலத்தை நீட்டினாள். அதிலிருந்து கிராம்பையும் பாக்கையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி பீடத்தில் சாய்ந்துகொண்டாள். “மைந்தா, நாற்களம் நம் அகம்போலவே நான்கு நிலைகளால் ஆனது. முதல் நிலை விழிப்பு. இவ்வாடற்களத்தின் கணக்குகளால் மட்டுமே ஆனது. எவரும் கற்று தேரக்கூடியது. இரண்டாம் நிலை கனவு. புறவுலகெனச் சமைந்து நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தையும் இக்களத்தில் மாற்றுருவாக கொண்டுவந்து பரப்புவது அது. உள்ளுணர்வுகளை வாள்வீரன் வலக்கையை என பயிற்றுவித்தால் அதை ஆளலாம். மூன்றாம் நிலை தற்செயல்களின் பெருக்கென நாமறியும் ஊழ்ப்பெருவலை. அங்கே வாழ்கின்றன நம்மை ஆட்டுவிக்கும் தெய்வங்கள். நான்காம் அடுக்கு முடிவிலி. அதை ஆள்கிறது பிரம்மம்” என்று அவள் சொன்னாள்.
“நாற்களம் ஒன்றினூடாகவே அரசன் அரசுசூழ்தலை முற்றறியமுடியும் என்று நூல்கள் சொல்கின்றன. அரசுசூழ்தலே அவன் அறம். ஒவ்வொரு மெய்யறத்திலும் முடிவிலி என எழும் பிரம்மம் இதிலும் முகம் கொள்ளும்.” அவள் அவன் விழிகளின் புன்னகையைக் கண்டு “நீ ஐயுறுகிறாய். இன்று உன் இளமையில் வெளியே இறங்கி நின்று வானாகவும் மண்ணாகவும் பொருளாகவும் மொழியாகவும் விரிந்துள்ள அனைத்தையும் எதிர்கொள்வதைப் பற்றியே கனவு காண்பாய். ஆனால் இவை எப்படி நாமே அமைத்துக்கொண்ட களமோ அப்படித்தான் அவையும். அக்களத்திலும் ஆடல் நிகழ்வது நமக்குள்தான்” என்றாள்.
அவன் புன்னகைத்து “பேரரசி, இதில் ஏன் யானைகளும் குதிரைகளும் போர்வீரர்களும் அமையவேண்டும்? ஏன் மேழியும் வளைகோலும் துலாவும் வாளும் வேள்விக்கரண்டியும் அமையக்கூடாது?” என்றான். அவள் அவ்வினாவை அதற்குமுன் எதிர்கொண்டதில்லை என்பதனால் சற்று குழம்பி பின் தெளிந்து “ஏனென்றால் இங்கு நிகழும் அனைத்துமே போரென்றாலும் குருதி சிந்தி களமாடலே போரின் முழுமை” என்றாள். “அனைத்துமே கருவிகள் என்றாலும் படைக்கலங்களே தெய்வங்களுக்கு உகந்தவை, மைந்தா.”
பிறர் நாற்களமாடுவதை நோக்கி அமர்ந்திருக்கையிலெல்லாம் அதை ஆடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே உணர்வார். வண்ணங்களும் வடிவங்களும் உறவுகளும் பிரிவுகளும் உணர்வுகளும் அறிதல்களுமாக விரிந்து கிடக்கும் வாழ்வெனும் பெருக்கை தங்கள்முன் எளிய நாற்களத்தில் எண்ணி அடுக்கிய காய்களெனப் பரப்பி அதன் நெறிகளை தாங்களே வகுத்துக்கொண்டு அதன் நுட்பங்களை மட்டுமே மேலும் மேலும் தேடிச்செல்கிறார்கள்.
நுட்பங்களில் மட்டுமே இவையனைத்துமென ஆகி நின்றிருக்கும் அதன் முடிவின்மை வெளிப்படுகிறதென்பது எத்துறையிலானாலும் அதில் தேர்ச்சிபெற்றோர் சென்றமையும் மாயை. அது இங்கே பேருருவாகவும், பெருங்கொந்தளிப்பாகவும், அப்பட்டமான எழுச்சியாகவும்கூடத்தான் வெளிப்படுகிறது. அதை அவர்கள் அறிவதேயில்லை.
நுட்பங்களை உணரும் திறன் தங்களுக்கு அமைந்துவிட்டமையாலேயே நுட்பங்களே உண்மை என நம்பத்தலைப்படுகிறார்கள். வியாசர் சொல்லில், பீஷ்மர் படைக்கலத்தில், திருதராஷ்டிரர் இசையில், கணிகரும் சகுனியும் நாற்களத்தில். தாங்களே பின்னிய அவ்வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை பின்னியவர்கள் தாங்களென்பதனால் அதை தங்கள் வெற்றியென்றே எண்ணிக்கொள்கிறார்கள்.
“நாற்களம் ஆடுபவனின் முதன்மைத்திறன் என்பது உணர்வுகளை வெல்வதே. இங்கு யானையும் குதிரையும் வீரனும் அரசனும் என இவை வண்ணமும் வடிவமும் கொண்டிருப்பது உண்மையில் நம் உணர்வுகளை சீண்டுவதற்கே. ஆடத்தொடங்குபவன் இவற்றில் ஈடுபடுகிறான். நிகர்வாழ்வென இதை கொள்கிறான். ஆடித்தேர்பவன் இவற்றை வெறும் அடையாளங்களென ஆக்கிக் கொள்கிறான். கணக்கின் புதிர்களும் சூழ்கைகளும் மட்டுமாக ஆடல் ஆகும்போதே களம் கைகூடுகிறது. கனவின் வழிகளென ஆகும்போது சூழ்ந்து நின்றிருக்கும் தெய்வங்களின் விழிகளை காணத்தொடங்குகிறான். இக்களத்திலன்றி வேறெங்கும் அவை வெளிப்படுவதில்லை.”
மிக இயல்பாக கணிகரின் கை நீண்டு ஒரு காயை நீக்கியது. சத்யவதியின் சொற்களிலிருந்து விதுரர் மீண்டு வந்தார். அது எளிய குதிரைவீரன் என்று கண்டதும் விதுரர் குனிந்து அவ்வாட்டத்தை புரிந்துகொள்ள முயன்றார். அதற்குள் சகுனி பெருமூச்சுடன் களத்தைக் கலைத்து அருகிலிருந்த பெட்டிக்குள் போட்டபின் தாடியை நீவியபடி புன்னகையுடன் அவரை நோக்கித் திரும்பி “பொறுத்தருள்க, அமைச்சரே. உச்சகட்டம்” என்றார். கணிகர் பகடைகளை எடுத்து வைத்து களப்பலகையை அப்பால் விலக்கினார். “தெய்வங்களே” என்னும் வலிமுனகலுடன் அசைந்தமர்ந்தார்.
“நான் பீஷ்மபிதாமகர் அனுப்பி இங்கே வந்திருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்படி சொல்லி என்னை அனுப்பினார்.” சகுனி சிரித்து “என்னிடமா, இல்லை கணிகரிடமா?” என்றார். விதுரர் திகைப்புடன் கணிகரை நோக்க சகுனி “அமைச்சரே, என்னிடம் என்றால் என்னை அவர் தன் படைக்கலநிலைக்கு வரச்சொல்வார். உங்களை அனுப்பிவைக்கமாட்டார்” என்றார்.
“கணிகரிடம்தான்” என்றார் விதுரர். “சொல்லுங்கள், நான் கேட்கலாமல்லவா?” என்று சகுனி சொன்னார். “நீங்களிருவரும் ஒன்றல்லவா?” என்றார் விதுரர். சகுனி சிரித்து “உண்மையில் உங்களை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம். இந்நகரம் நீங்கள் மீண்டெழுவதற்காக காத்திருக்கிறது” என்றார். “பேரரசரை சந்தித்தீர்களா?” விதுரர் “இல்லை” என்றார்.
கணிகர் “படைநகர்வுகளைப் பற்றி பிதாமகர் கவலைகொண்டிருப்பார் போலும்” என்றார். “ஆம், அஸ்தினபுரி தன் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என்னும் நம்பிக்கை எப்போதும் அவருக்கு உண்டு. அதை உள்ளூர அவர் இழந்துவிட்டிருந்தார். தான் நினைத்தால் அஸ்தினபுரியின் படைகளை முற்றாளமுடியும் என்று என்னிடம் அவர் பெருமைசொன்னபோதே அவர் ஆழம் அந்த ஐயத்தை அடைந்துவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். உண்மைநிலை எது என்பதை நான் அவரிடம் சொன்னேன்” என்றார் விதுரர்.
“ஆம், அவருக்கு அது உணர்த்தப்பட்டுவிட்டது” என்று சகுனி சிரித்தார். “அவர் ஜயத்ரதனையும் கர்ணனையும் தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட்டார். அவர்கள் அவரை சந்திப்பதை ஒத்திப்போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். துரியோதனனை சென்று சந்திக்க முயன்றுகொண்டே இருக்கிறார். அவன் சந்திக்க விரும்பவில்லை. அவர் இடமென்ன என்று அவருக்கு மெதுவாக தெளிவாகிறது.”
விதுரர் அச்சிரிப்பால் சற்று சீண்டப்பட்டு “அவர் இன்னும் இந்நாட்டின் பிதாமகர். இங்குள்ள படைகளும் மக்களும் அதை அறிவார்கள்” என்றார். “பிதாமகர்களை மீறிச் செல்லவும் சிறுமை செய்யவும் விழையாதவர் எவர்? வல்லமை கொண்ட விளக்கம் ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அது கிடைத்துவிட்டது!” என்று சகுனி சொன்னார். கைதூக்கி “நால்வேதத்தின் முழுமையை மறுத்த யாதவர்களை எதிர்கொள்வதென்பது வேள்விக்காவலேயாகும். ஷத்ரியர்களுக்கு மூதாதையர் வகுத்தளித்த கடமை அது. வேதம் மூத்தோரை விட, மூதாதையரை விட, தெய்வங்களை விட மேலானது. நெறிகளுக்கெல்லாம் விளைநிலம் அதுவே. பிறகென்ன வேண்டும்?” என்றார்.
“ஐயமே வேண்டியதில்லை, அமைச்சரே. இனி பீஷ்மரோ பேரரசரோ ஒன்றும் செய்யமுடியாது. என் மருகனைக் கட்டியிருந்த அனைத்து தளைகளும் நெக்குவிட்டிருக்கின்றன. அவன் அவற்றை அறுக்க இன்னும் இழுத்துப் பார்க்கவில்லை, அவ்வளவுதான்” சகுனி சொன்னார்.
“இனி என்ன, போரா?” என்றார் விதுரர். “ஆம், ஒரு போர் எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதை இப்போதல்ல, முன்பு சதசிருங்கத்தில் யுதிஷ்டிரன் பிறந்த அன்றே நான் உணர்ந்தேன். அது இப்போதென்றால் நிகழட்டுமே” என்றார் சகுனி. “இதுவே மிகச்சிறந்த தருணம், விதுரரே. தொன்மையான ஆரியவர்த்தத்தின் முற்றுரிமையாளர்களான ஷத்ரிய அரசர்கள் வலுவிழந்துகொண்டே இருக்க புதிய நிலங்களில் குலம்முதிர்ந்து அரசமைத்த யாதவர்களும் நிஷாதர்களும் சென்ற இரண்டு தலைமுறைகளாக தென்வணிகத்தாலும் கடல்வணிகத்தாலும் செழித்துக்கொண்டே வருகிறார்கள். அவர்கள் புதிய ஷத்ரியர்கள் என தங்களை உணர்கிறார்கள். இருதரப்பும் ஒரு போர்முனையில் சந்தித்தாகவேண்டும். எதிர்காலம் எவருடையதென்று முடிவு செய்யப்படவேண்டும்...”
“இதையெல்லாம் நானும் சலிக்கச்சலிக்க பேசியவனே” என்றார் விதுரர். “இதில் எப்பொருளும் இல்லை. இந்த நாற்களம் போல பாரதவர்ஷமெனும் பெருவெளியை எளிய கணக்குகளாக சுருக்கும் ஆணவம் மட்டுமே இதிலுள்ளது.” சகுனி “இருக்கலாம்” என்றார். “நான் அறிய விரும்புகிறேன். அறியக்கூடுவதைக் கொண்டு அறியவேண்டுவதை நோக்கி முயன்றபடியே இருப்பதே அறிவின் வழி...”
“போர் என்பது எப்போதும் மண்ணுரிமைக்காக மட்டுமே. ஆனால் அதை அதற்குரியதென்று ஏற்க நம் உள்ளம் தயங்குகிறது. ஷத்ரியர்களை ஒருங்கிணைக்க வல்லமைகொண்ட அடிப்படை ஒன்று தேவைப்பட்டது. வைதிகர்களின் ஆதரவைப் பெறுவதும் முனிவர்களை நிறைவடையச் செய்வதுமான ஒன்று. அது எந்த அளவுக்குப் பொய்யானதாக, எத்தனை தொலைவிலிருப்பதாக உள்ளதோ அந்த அளவுக்கு பயனுள்ளது. இன்றைய வேதப்பூசல் அத்தகையது.”
சிரித்துக்கொண்டே சகுனி தொடர்ந்தார் “இன்றுவரை எவர் தலைமையை ஏற்பது எவர் படைநடத்துவது என்ற குழப்பமே ஷத்ரியர்களை நிறுத்திவைத்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் பழைய பெயர்கள் மட்டுமே. ஆற்றல் கொண்ட அரசு இரண்டுதான். மகதம் தொன்மையான ஷத்ரிய அரசு. ஆனால் அதையாண்ட ஜராசந்தன் அரைஅசுரன். அஸ்தினபுரியின் அரசோ நிலையற்றிருந்தது. அதன் அரசனாக யாதவக்குருதி கொண்டவன் அமையக்கூடுமென்னும் நிலை இருந்தது. இன்று அனைத்தும் தெளிவாகிவிட்டன. பேராற்றல் கொண்ட நாடு ஒன்றின் தலைவனாக தூய ஷத்ரியக்குருதி கொண்ட மாவீரன் ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். அவனுக்குப் பின் ஷத்ரியர் அணிதிரள்வது மட்டுமே ஒரே வழி. அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.”
“அமைச்சரே, பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசுகள் அனைத்தும் அசுரர்களும் நிஷாதர்களும் அரக்கர்களும் வென்றடக்கப்பட்டு அவர்களின் வேர்ப்பின்னல்களுக்கு மேல் அமைந்தவை. தங்க அம்பாரிக்கு அடியில் காட்டின் இருளென நடந்து வந்துகொண்டிருக்கிறது யானை. அத்தனை ஷத்ரியர்களும் கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்வது அதன் விழிகளைத்தான்” என்று சகுனி தொடர்ந்தார். “அவர்கள் அஞ்சுவது யாதவர்களை அல்ல. யாதவர்கள் ஒரு தொடக்கமென அமையக்கூடுமோ என்றுதான்.”
“காந்தாரத்தில் ஒட்டகக் கன்றுகளை இளமையிலேயே வெண்சுண்ணத்தாலான கோடுகளை கடந்து செல்லாதபடி பழக்கி வளர்ப்போம். கடந்து செல்லும் கன்றுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும். அவற்றின் குருதியில் அச்செய்தி அச்சத்தால் பொறிக்கப்பட்டுவிடும். பின்னர் அவற்றை கட்டிப்போட வேண்டியதில்லை. சுற்றிலும் வெண்சுண்ணக் கோடு வரைந்து எந்த பாலைநிலத்திலும் விட்டுச்செல்லலாம். ஆனால் எப்போதேனும் அஞ்சியோ ஆவலுற்றோ ஒரு கன்று எல்லை கடக்குமென்றால் கோடு அக்கணமே பயனற்றதாகிவிடும். எல்லை கடக்கும் ஒட்டகம் பிற ஒட்டகங்களின் கண்முன் கொல்லப்பட்டாகவேண்டும்.”
சகுனியின் வெண்பளிங்கு விழிகளை நோக்கியபடி விதுரர் எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தார். “அமைச்சரே, நான் காந்தார நாட்டிலிருந்து ஒரு வஞ்சினத்துடன் கிளம்பி இந்நகருக்கு வந்து அறுபதாண்டுகளாகின்றன இப்போது. ஒவ்வொரு நாளும் நான் காத்திருந்த தருணம் வந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இன்று என் மருகனின் கொடிக்குக் கீழ் அணிவகுத்திருக்கிறார்கள். அணிவகுக்காதவர்கள் அனைவரையும் வென்று அழிக்கும் வல்லமை திரண்டுள்ளது. அவன் சக்ரவர்த்தியாக அரியணை அமர்வான். அருகே போடப்படும் பேரரசிக்குரிய அரியணையில் என் மூத்தவள் அமர்வாள். அதைப் பார்த்தபின் நான் என் நாட்டுக்கு கிளம்பிச் செல்வேன். என் பிறவி நிறைவுகொள்ளும்.”
விதுரர் என்ன சொல்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தார். “என் இலக்குக்கு எதிராக இன்று நின்றிருப்பது இந்திரப்பிரஸ்தம் ஒன்றே. அது ஒரு முகமூடி. அதை அணிந்திருப்பவன் இளைய யாதவன். அவனை வென்று இந்திரப்பிரஸ்தத்தை கப்பம் கட்ட வைக்காமல் இது முடியாது” என்றார் சகுனி. “என் மருகனின் கொடியை ஏற்று திரண்டுகொண்டிருக்கும் ஷத்ரியர்களுக்கும் முதல் எதிரி இளைய யாதவனும் அவனுடைய எழுவடிவமாகிய இந்திரப்பிரஸ்தமும்தான். அவர்களை வெல்வதே தொடக்கம், வேறுவழியே இல்லை.”
“சிசுபாலனின் கொலை அனைத்தையும் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு காட்டிவிட்டது” என்று கணிகர் சொன்னார். அவர் அங்கிருப்பதையே அப்போதுதான் உணர்ந்ததுபோலிருந்தது விதுரருக்கு. முற்றிலும் இல்லாமலாகும் கலை அறிந்தவர் அவர் என எத்தனையோ முறை உணர்ந்திருந்தும் அவர் உள்ளம் படபடத்தது. “ஐயத்திற்கிடமில்லாமல் ஷத்ரியர்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது, இனி இத்தனை நாட்கள் அவர்கள் சொல் அளைந்து மழுப்பிவந்த எதற்கும் பொருளில்லை.”
விதுரர் அவரது எலிக்கண்களை நோக்கி வினாவெழா உள்ளத்துடன் அமர்ந்திருந்தார். “அந்த அவை பாரதவர்ஷத்தின் அரசியல் களமாகவே இருந்தது அன்று. பெருங்குடி ஷத்ரியர், சிறுகுடி ஷத்ரியர், யாதவர், நிஷாதர், அசுரர் என அனைவரும் அவையமர்ந்திருந்தனர். தன் படையாழியை ஏந்தி எழுந்து நின்று அவர் இரண்டு அறைகூவல்களை விடுத்தார்” என்றார் கணிகர். “இனி ஷத்ரியர் என்னும் குலம் குருதியாலோ வைதிகச் சடங்குகளாலோ அல்ல வல்லமையால் மட்டுமே வகுக்கப்படும் என்றார். நாமறிந்த அனைத்து ஸ்மிருதிகளையும் வெட்டிக் கடந்துசென்றார்.”
“புதியதோர் வேதத்தை அங்கே அவர் முன்வைத்தார்” என்று கணிகர் தொடர்ந்தார். ”ஒவ்வொருவருக்குமான வேதங்களிலிருந்து எழுந்தது அனைவருக்குமான நால்வேதம். அவர் அதைக் கடந்துசென்று அளித்தது பிறிதொரு வேதம்.” விதுரர் “அது வேதமுடிவு. முந்நூறாண்டுகளுக்கும் மேலாக மெய்யறிவு தேடும் குருமுறைமைகளில் கற்று கற்பிக்கப்பட்டு கடந்து வந்துகொண்டிருப்பது” என்றார்.
“அமைச்சரே, புதிய வேதம் பழைய வேதத்திலிருந்தே எழமுடியும். நால்வேதம் முன்பிருந்த வேதங்களைக் கடந்த அமுது என்பார்கள் அறிவோர்” என்றார் கணிகர். “வேதமுடிவென்பதனால் அது வேதமென்றாவதில்லை. வேண்டுதலே வேதம். படைத்து கோரி பெற்று பெருகி நிறைதல் அதன் நோக்கம்.”
“இவர் கூறும் வேதம் அறிந்து ஆகி அமர்ந்து நிறைவது. விண்ணென நிறைந்த வெளி நோக்கி இங்கெலாம் அது என்றறிவது. அறிதலே அது என்று கடப்பது. அதுவே நான் என்று அமைவது. நானே அது என்று ஆவது. அது குருகுலங்களின் அறிவாக இருக்கும் வரை உறையிடப்பட்ட வாள். அவர் அதை உருவி அவை நின்றுவிட்டார். அவர் முன்வைத்தது புதிய சுருதி.”
மிகத்தாழ்ந்த குரலில் “எந்த மெய்யறிவும் அதற்குரிய குருதியுடனேயே எழும்” என்று கணிகர் சொன்னார். விதுரர் கடுங்குளிர் வந்து பிடரியைத் தொட்டதுபோல உடல்சிலிர்த்தார். “நாமறிந்த வரலாறனைத்தும் அவர் சிசுபாலனைக் கொன்று கையில் படையாழி ஏந்தி நின்றிருந்த அத்தருணத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதென்றறிக! இனி பிறிதொன்றும் பேசப்படுவதற்கில்லை. இனி கடக்கப்படுவதேது கடந்துசெல்வதேது எனும் வினாவொன்றே எஞ்சியிருக்கிறது.”
“கணிகரே, அத்தருணத்தை நீங்கள் சமைத்தீர்களா?” என்று விதுரர் தணிந்த குரலில் கேட்டார். சிறியபறவைபோல ஒலியெழுப்பி கணிகர் சிரித்தார். “நானா? ஆம், ஒருவகையில் நான்தான். ஆம், நான் சமைத்தேன்.” மீண்டும் உடல்குலுங்க நகைத்து “எத்தனை அரிய தருணம் அல்லவா? பேருருவன் ஒருவனை துகிலுரிந்து நிறுத்துதல்... ” அவரே மகிழ்ந்து தலையாட்டி நகைத்து குலுங்கினார். “ஜராசந்தன் அவரை அவைநடுவே அறைகூவுவான் என்று எண்ணினேன். அவர் தன் கைகளை விலக்கிக்கொண்டார். சிசுபாலனிடம் சிக்கிக்கொண்டார். நன்று! நன்று!”
பின்பு மெல்ல அடங்கி முகம் மாறினார். விழிகள் சற்றே இடுங்க “அமைச்சரே, அங்கே இரு படையாழிகள் இணைந்து ஒன்றானதை பார்த்தீர்களல்லவா?” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “நன்று” என்றபின் கணிகர் அமைதியானார். அவர் சொன்னதன் பொருளென்ன என்று சித்தத்தை அளைந்தபின் தன்னை விலக்கிக் கொண்டு விதுரர் “நான் பீஷ்மபிதாமகரின் பொருட்டு வந்துள்ளேன்” என்றார்.
“அதற்கு முன் ஒரு வினா” என்றார் கணிகர். “இதில் உங்களுக்கென உணர்வுகள் ஏதுமில்லையா?” விதுரர் தயங்கி “இல்லை” என்றார். “அதைத்தான் எண்ணி வியந்துகொண்டிருக்கிறேன். இவையனைத்திலுமிருந்தும் விலகிவிட்டிருக்கிறது என் அகம். பிறர் ஆடும் களம் என்றே இதை உணர்கிறேன்.”
கணிகர் புன்னகைத்து “சொல்க!” என்றார். விதுரர் “சொல்வதற்கேதுமில்லை, பீஷ்மர் எதை கோரியிருப்பார் என தாங்களே அறிவீர்கள்” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்களை கேட்க விழைகிறேன்” என்றார் கணிகர்.
சொல் சொல்லாக பீஷ்மரின் மன்றாட்டை விதுரர் சொன்னார். கணிகர் இமைதாழ்த்தி அதை கேட்டிருந்தார். பின்பு மெல்ல அசைந்து கலைந்து “அவரது கோரிக்கை இயல்பானது, அமைச்சரே. பெருந்தந்தைக்கு தன் மைந்தர் போர் புரிந்து மறைவதை பார்ப்பதுபோல் துன்பத்தின் உச்சம் பிறிதில்லை” என்றார். “ஆனால்...” என்றபின் சகுனியை நோக்கி “இத்தருணம் நன்கு முதிர்ந்துவிட்டது. இனிமேல் துரியோதனரிடம் எவர் சென்று சொல்லமுடியும், போர்வேண்டாம் என்று? அவர் எண்ணியிருப்பது ராஜசூயமும் அஸ்வமேதமும் இயற்றி அரியணையமர்ந்து மகாசத்ரபதியென்றாவதை. அவரிடம் சென்று அதை தவிர்க்கும்படி எப்படி கோருவது?” என்றார்.
“அந்த எண்ணமே வேண்டியதில்லை” என்று சகுனி உரக்கச் சொன்னார். “பீஷ்மருக்கு ஒரு வழியே உள்ளது. அவர் சென்று யுதிஷ்டிரனிடம் சொல்லி போரை தவிர்க்கச் செய்யட்டும். தன் மணிமுடியுடனும் செங்கோலுடனும் வந்து யுதிஷ்டிரன் இங்கே அவைபணியட்டும், அனைத்தும் அவர் விழைந்ததுபோலவே முடிந்துவிடும்.”
விதுரர் “ராஜசூயத்திற்கு வில்லளிப்பதைக்கூட சொல்லமுடியும். அதை ஒரு சடங்காக ஏற்க முறைமை உள்ளது. அஸ்வமேதத்தின் புரவி தன் எல்லைக்குள் வந்து செல்ல ஒப்புக்கொண்டால் அவர் அஸ்தினபுரிக்கு அடங்கிய மன்னரென்றாகும் அல்லவா? அதை சத்ராஜித்தான அவர் எப்படி ஏற்பார்?” என்றார்.
“ஏற்க மாட்டான். ஏற்க இளைய யாதவன் ஒப்பவும் போவதில்லை” என்றார் சகுனி. “பாரதவர்ஷத்தின் தலைமகனாக யுதிஷ்டிரனை நிறுத்துவதென்பது இளைய யாதவனின் செயல்திட்டத்தின் முதல் அடிவைப்பு. இங்கு ஒரு புதிய ஸ்மிருதியையும் புதிய சுருதியையும் நாட்டிச் செல்ல வந்தவன் அவன். அதற்குரிய ஏவலனே யுதிஷ்டிரன். ஆகவே அவன் ஒருபோதும் பணியமாட்டான்.”
இதழ்கோட நகைத்து சகுனி தொடர்ந்தார் “ஆனால் பீஷ்மர் சென்று அங்கே கையேந்தி நிற்கட்டும். அப்போது தெரியும் உண்மையில் அவரது இடமென்ன என்று. இத்தனை நாட்களாக இவர்களின் சொற்கட்டுகளுக்குள் நின்றாடியவன் என் மருகன் மட்டுமே. பாண்டவர்கள் அவரது ஒரு சொல்லையும் இன்றுவரை ஏற்றதில்லை. இனி ஏற்கப்போவதுமில்லை.”
வெறுப்பு எழுந்த விழிகளுடன் “அவர் உள்ளத்திற்குள் இன்றும் பாண்டவர்களே இனியவர்கள். அதை இங்கு அனைவரும் அறிவர்” என்று சகுனி சொன்னார். “அன்று வேள்வியவையின் முதல்வனாக இளைய யாதவனை அழைத்தவர் பீஷ்மர். சென்று இளைய யாதவனிடம் கோரட்டுமே, போரை தவிர்க்கும்படி. செய்யமாட்டார். தந்தையென தன்னை வணங்குபவர்களின் நெஞ்சுமேல் எழுந்து நின்றாடவே அவரால் முடியும்.”
விதுரர் சற்று எரிச்சலுடன் “நான் கோர வந்தது கணிகரிடம். அவரது மறுமொழியை சொன்னாரென்றால் பீஷ்மரிடம் சென்று உரைப்பேன். என் கடமை அவ்வளவே” என்றார். “அவர் சொல்வதையே நானும் சொல்கிறேன்” என்று சகுனி சொல்ல கணிகர் கையசைத்து “குருதியை தவிர்க்கும்படிதானே பீஷ்மர் கோரினார்? போரைத் தவிர்க்கும்படி அல்ல, அல்லவா?” என்றார். “ஆம்” என்றார் விதுரர் குழப்பத்துடன். “குருதியில்லாத போர்கள் பல உள்ளன. நிகரிப்போர்களைப் பற்றி நூல்கள் சொல்கின்றன” என்றார் கணிகர்.
“அவை நாடுகளுக்குள் நிகழ்வன அல்ல” என்று சகுனி எரிச்சலுடன் சொன்னார். “குலக்குழுக்களுக்குள்ளும் குடிகளுக்குள்ளும் பூசல்கள் எழும்போது அவை குருதிப்பெருக்காக ஆகாமலிருக்கும்பொருட்டு கண்டறியப்பட்ட வழிமுறை அது. தன் படைக்குலத்தோர் தங்களுக்குள் பூசலிட்டால் படைவல்லமை அழியுமென்பதனால் அரசர் அதை நெறியாக்கினர்.”
கணிகர் “இங்கும் நிகழவிருப்பது ஒரு குடிப்போர் அல்லவா?” என்றார். “நாடுகளுக்குள் நிகரிப்போர் நடந்ததை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்று சகுனி எரிச்சலுடன் கைகளை வீசினார். “நிகழ்ந்துள்ளது. முன்பு சத்ராஜித்தின் ஆட்சிக்காலத்தில் கோசலத்திற்கும் மகதத்திற்குமான எல்லைப்போர் வெண்களிற்றுச் சண்டை வழியாக முடித்துவைக்கப்பட்டது. பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தருக்கும் வங்கத்துக்குமான போர் எழுவர் போர் வழியாக முடித்துவைக்கப்பட்டது” என்றார் கணிகர்.
சகுனி கணிகர் என்ன சொல்லப்போகிறார் என்று நோக்கி அமர்ந்திருந்தார். “நிகரிப்போர் பல உண்டு. காளைச்சண்டை, யானைப்போர், இணைமல்லர்களின் அடராடல்...” சகுனி “மல்லர்கள் என்றால்...” என இழுக்க “அது உகந்ததல்ல. முதலில் மல்லரைத் தெரிவுசெய்யும் தரப்பு எதிர்த்தரப்பு எவரை தெரிவுசெய்யப்போகிறதென்று அறியாதிருப்பதனால் தன் தரப்பின் முதன்மைப் பெருவீரனையே முன்வைக்கும். நிகரிப்போர் கோருவது நாம். எனவே பாண்டவர் தரப்பிலிருந்து பீமனே வருவான். நம் தரப்பிலிருந்து அரசர். அது கூடாது” என்றார் கணிகர்.
“அப்படியென்றால் யானைச்சண்டையா?” என்று சொன்ன சகுனி “யானைகள் பூசலிட இருசாராரும் நின்று நோக்குவதா? இளிவரலுக்கு இடமாகும் அது” என்றார். “ஏன் அது பகடையாடலாக ஆகக்கூடாது?” என்றார் கணிகர். புருவம் சுருக்கி “பகடையா?” என்றார் சகுனி.
“லகிமாதேவியின் சுருதியில் அதற்கான நெறி உள்ளது. பகடையும் போரே. அரசர்களுக்குரியது, தெய்வங்கள் வந்தமர்வது. இருதரப்பும் ஒரு நாற்களத்தின் இருபக்கமும் அமரட்டும். வெற்றிதோல்வியை அக்களம் முடிவெடுக்கட்டும்.” கணிகர் புன்னகை செய்து “அவர்கள் தரப்பில் ஒருவர் ஆடட்டும். நம் தரப்பிலும் திறனுளோர் ஒருவர் அமரட்டும்” என்றார்.
ஒரே கணத்தில் அதன் அனைத்து கரவுவழிகளையும் கண்டறிந்து சகுனி புன்னகைத்து நிமிர்ந்தமர்ந்தார். “ஆம், இதுவே உகந்த வழி. போர் அல்லது நிகரிப்போராக பகடை. தெரிவுசெய்வதை பாண்டவருக்கே விட்டுவிடுவோம்.” கணிகர் விதுரரை நோக்கி புன்னகைத்து “பீஷ்மர் முதலில் முடிவுசெய்யட்டும்” என்றார். “சென்று சொல்லுங்கள், அமைச்சரே. இனி மாற்றுப் பேச்சில்லை.”
விதுரர் சற்றுநேரம் அதை சித்தத்தில் சுழற்றியபடி அமர்ந்திருந்தார். “சொல்லுங்கள், அமைச்சரே” என்றார் கணிகர். “ஆம், சொல்வதற்கொன்றுமில்லை. இதை பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றார்.
“பிதாமகர் ஏற்பார்” என்றார் கணிகர். “ஏற்காது முரண்படுபவர் பேரரசர். அவர் விலங்குகளைப்போல, உள்ளுணர்வால் முடிவுகளை எடுப்பவர்.” விதுரர் “ஆம்” என்றார். “ஆனால் வேறு வழியில்லை. இம்முடிவைக்கூட என்னிடம் பீஷ்மர் தலைதாழ்த்தினார் என்பதற்காகவே எடுத்தேன். பழைய வஞ்சம் ஒன்று நிறைவடையும் இனிமையை சுவைப்பதற்காக” என்றார் கணிகர்.
“துரியோதனரை ஆதரிக்கும் அரசர்கள் போரை இப்படி முடித்துக்கொள்ள ஒப்புவார்களா?” என்றார் விதுரர். “ஒப்பச்செய்ய முடியும். உண்மையில் இன்று உள்ளூர எவரும் போரை விரும்பவுமில்லை. இத்தருணத்தில் போரை தொடங்குவது எளிது, முடிப்பது கடினம் என்று அனைவரும் அறிவர். இது பலலட்சம்பேர் செத்துக்குவியும் பேரழிவாக அன்றி முடியாதென்று ஷத்ரியர்கள் உணர்ந்திருப்பார்கள்.” அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “போர் நிகழவும் வேண்டும், குருதியும் ஒழுகாதென்றால் அதைவிட நன்று எது?” என்றார்.
விதுரர் “ஆம், பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றபடி எழுந்துகொண்டார். சகுனி “இதுவே ஒரே வழி என்று சொல்லுங்கள். ஒருவேளை உடன்வயிற்றோரின் குருதிப்பெருக்கு தடைபடுமென்றால் அது அவர் என்னிடம் கைகூப்பிய இத்தருணத்தின் விளைவு மட்டுமே” என்றார். விதுரர் “ஆம்” என்றார்.
விதுரர் எவ்வுணர்வுமின்றி கைகூப்பி விடைபெறும் சொற்களை சொன்னார். கணிகர் விதுரரை அண்ணாந்து நோக்கி “பீஷ்மரிடம் அவரது அச்சத்தை நான் புரிந்துகொள்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றார்.
“அச்சத்தையா?” என்றார் விதுரர். கணிகர் புன்னகை மேலும் விரிய “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் படைக்கலம் காத்து நின்றிருக்கிறது அஸ்தினபுரியின் நுழைவாயிலில்...” என்றார். விதுரர் நெஞ்சு நடுங்க பார்வையை விலக்கிக்கொண்டார். “தெய்வங்களின் வணிகத்தில் செல்லாத நாணயமே இல்லை என்பது சூதர் சொல்” என்றார் கணிகர். மறுமொழி சொல்லாமல் தலைவணங்கி விதுரர் விடைகொண்டார்.
[ 15 ]
பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய்? மூடா! இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான்? என்னவென்று நினைத்தான்? அஸ்தினபுரியின் அரசகுலத்துடன் விளையாடுகிறானா அவன்?” என்று கூவினார். “இல்லை, இது ஒருபோதும் நிகழப்போவதில்லை. குருவின் குருதிவழிவந்தவர்கள் களிமகன்கள் போல் சூதாடி இழிவுசூடமாட்டார்கள்” என்றார்.
“அப்படியென்றால் போர்தான். நான் அனைத்து வழிகளையும் எண்ணிவிட்டேன்” என்றார் விதுரர். பீஷ்மர் தோள்தளர “ஆனால், சூதாடுவதென்பது...” என்றபின் பெருஞ்சினத்துடன் அப்பால் நின்றிருந்த ஏவலனிடம் “அம்புகளைப் பொறுக்கி அடுக்கு மூடா! என்ன செய்கிறாய்?” என கையை ஓங்கியபடி சென்றார். அவன் பதறி பின்னால் ஓடினான். அருகிலிருந்த பீடத்தில் வைக்கப்பட்டிருந்த மரக்குவளையைத் தட்டி ஓசையுடன் உருளவிட்டார். திரும்பி “விதுரா, சூதாடுவதென்றால் என்னவென்றறிவாயா?” என்றார். “ஆம் அறிவேன். ஆனால் சூதாட்டத்தில் அஸ்தினபுரிக்கு ஒரு தொல்மரபு உள்ளது. ஹஸ்தி அமைத்த பன்னிரு படைக்களம் இங்கே இருந்திருக்கிறது.”
“அதை பிரதீபர் இடித்தழித்தார்” என்று பீஷ்மர் கூவினார். “ஆம், நான் பகடையாடுவது சிறப்பு என்று சொல்லவரவில்லை. ஆனால் மீண்டும் ஆடும்போது அது நாம் தொடங்கிய புதியவழக்கம் என்று எவரும் சொல்லமுடியாது என்று சொல்கிறேன்” என்றார் விதுரர். “வேண்டுமென்றால் ஒரு பூசகன் வெறியாட்டெழுந்து சொல்லட்டும். தன் மைந்தர் பூசலிடுவதை ஹஸ்தி விரும்பவில்லை என்று. பன்னிருபடைக்களத்தை மீண்டும் அமைத்து பகடையாட்டம் நிகழும்படி அவர் ஆணையிடட்டும்.” பீஷ்மர் “வெறும் சூழ்ச்சிகள். நான் அதை சொல்லவில்லை” என்றார். ஆனால் அவரது குரல் தணிந்துவிட்டது.
“நம்முன் வேறுவழியில்லை. வேறு எந்தப் போட்டி என்றாலும் அது பீமனும் துரியோதனனும் நேரில் மோதிக்கொள்வதாகவே அமையும்” என்றார் விதுரர். “இருவரில் எவர் உயிரிழந்தாலும் அது தீரா வஞ்சமாகவே எஞ்சும்.” பீஷ்மர் “அதற்காக மாவீரர் வழிவந்த நம் குடியினர் வணிகர்களைப்போல அமர்ந்து பகடையாடுவதா? இழிவு...” என்றார். “அது சூதர் பாடலாக வாழும். நம் கொடிவழியினர் நம்மை அதன்பொருட்டு வெறுப்பார்கள்.” விதுரர் “போர் நிகழ்ந்து உடன்பிறந்தார் கொலையுண்டால் அதைவிடப்பெரிய இழிவு நம்மை சூழும். நம் கொடிவழியினர் மூதாதையரின் பழிசுமந்து வாழ்வார்கள்” என்றார்.
பீஷ்மர் கால்தளர்ந்து ஒரு பீடத்தில் அமர்ந்தார். “பிறிதொரு வழியை சகுனி சொன்னார்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். “நீங்கள் தருமனிடம் சென்று அவன் அஸ்தினபுரியின் வேள்விப்புரவியை வணங்கி திறையளிக்கவேண்டுமென ஆணையிடலாம். அனைத்தும் முடிந்துவிடும் என்றார்.” ஒரு கணம் பீஷ்மர் கண்களில் சினம் எழுந்தணைந்தது. கைவீசி அதை விலக்கிவிட்டு தன்னுள் ஆழ்ந்தார். “ஒருவேளை உங்கள் ஆணையை தருமன் ஏற்கலாம்” என்றார் விதுரர். சினத்துடன் தலைதூக்கி “அறிவிலியே, ஏற்கவேண்டியவன் அவனா என்ன? அவள் அல்லவா?” என்றார்.
“ஆம்... திரௌபதி ஏற்கமாட்டாள்” என்றார் விதுரர். “திரௌபதி ஏற்றாலும் பிருதை ஏற்கமாட்டாள்” என்றார் பீஷ்மர். விதுரர் அவர் அவள் பெயரை அப்படி சொன்னதைக்கேட்டு ஓர் ஒவ்வாமை தன்னுள் எழுவதை உணர்ந்தபடி பேசாமல் நின்றார். “மேலும் இவன் கொள்ளும் இந்தக்கொந்தளிப்பு எதற்காக? வெறும் முறைமைக்காக இந்திரப்பிரஸ்தத்தின் அரசனும் இளவரசர்களும் வந்து வணங்கி நிற்கவேண்டும் என்பதா இவன் விழைவு? அதை அவர்கள் ராஜசூயப்பந்தலில் பலமுறை செய்துவிட்டனர். இவன் விழைவது பாஞ்சாலி வந்து இவன் அவையில் குறுநிலத்து அரசியாக ஒடுங்கி நிற்கவேண்டும் என்பதல்லவா? அவளை சிறுமைசெய்து செருக்கி எழவேண்டும் என்றுதான் அங்கனும் விழைகிறான்...”
“ஆம்” என்றார் விதுரர். “அது நிகழாது...” என்றார் பீஷ்மர். “இளைய யாதவன் அதை ஒப்பமாட்டான். இவர்கள் சற்றே அடங்கவேண்டும், வேறு வழியே இல்லை.” விதுரர் “போர்முரசுகள் சித்தமாகிவிட்டிருக்கின்றன. இத்தருணத்தில் எவர் சென்று சொல்லமுடியும்? எந்த அடிப்படையில்?” என்றார். “ஒரே அடிப்படைதான். இந்திரப்பிரஸ்தம் அஸ்தினபுரியைவிட வல்லமை மிக்கது. எவ்வகையிலும் அவர்களுக்கு இவன் நிகரல்ல. யாதவர்களின் செல்வமும் பெரும்படையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணைந்துள்ளன. ஒருபோர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி வெல்லாது, ஐயமே இல்லை” என்றார் பீஷ்மர்.
“விதுரா, இந்த ஷத்ரியர் எவரும் புதியநாடுகளை புரிந்துகொண்டவர்கள் அல்ல. நான் அந்நிலங்களில் அலைந்திருக்கிறேன். அவர்களுக்கு மண்ணும் கடலும் வழங்கிய வாய்ப்புகள் எளியவை அல்ல. அந்நாடுகள் அப்பெயலை வேர்களால் உண்டு எழுந்து தழைத்து பேருருவாக நின்றிருக்கின்றன. போர் என்பது முதன்மையாக கருவூலங்களால் செய்யப்படுவது. அவர்களின் கருவூலங்கள் நீர்ஒழியா ஊற்றுபோன்றவை” என்றார் பீஷ்மர். “யவனநாட்டுப் படைக்கலங்களும் பீதர்நாட்டு எரிகலங்களும் அவர்களிடம் சேர்ந்துள்ளன. தொலைநிலங்களில் உதிரிகளாக சிதறிவாழ்ந்த பல்லாயிரம் தொல்குடிகள் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மெல்லமெல்ல படைகளாக திரண்டுள்ளனர். இந்தப்புதிய மன்னர்கள் எவரும் நம்மைவிட பெரிய படையை திரட்டிவிடமுடியும்.”
“மாறாக ஷத்ரியர் பலநூறாண்டுகளாக தங்கள் வாயில்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். சுற்றி நோக்கினால் தெரியும் உண்மைநிலை தங்களை சிறுமையும் துயரும் கொள்ளவைக்கும் என்பதனாலேயே அவற்றை அறியாமலிருக்கிறார்கள். அவ்வறியாமையை அவைப்பாடகர் போற்றி வளர்க்கிறார்கள். இந்தச் சிறுமக்களின் வீண்பேச்சுக்கு அளவே இல்லை. வேள்விப்பந்தலில் கோசலன் என்னிடம் சொன்னான், ஒரு ஷத்ரியன் ஆயிரம் நிஷாதர்களுக்கு நிகரானவன் என்பதனால் அவனிடம் இருக்கும் படை இங்குள்ள அனைத்து நிஷாதர்களின் படைகளை விடப்பெரியது என்று. என்ன சொல்வது? ஒருவனைக்கொல்ல ஓர் அம்புதான் கோசலனே என்றேன். அம்மூடனுக்கு புரியவில்லை.”
“போர் நிகழ்ந்தால் அஸ்தினபுரி அழியும். இவன் தன் தம்பியருடன் குருதிக் களத்தில் கிடப்பான்...” என்று பீஷ்மர் சொன்னார். “அத்துடன், அனைத்துக்கும் மேலான ஒன்றும் உள்ளது. இளைய யாதவனை மானுடர் எவரும் வெல்லமுடியாது.” விதுரர் “ஆம், அதையே நானும் உணர்கிறேன்” என்றார். “இந்த அப்பட்டமான உண்மையை அஸ்தினபுரியின் அரசன் உணர்ந்தாகவேண்டும். அது மட்டுமே இப்போது நிகழவேண்டியது” என்றார் பீஷ்மர். “உணர்ந்தால் அவர் தலைதாழ்த்தவேண்டும்” என்றார் விதுரர். “ஆம், வேறுவழியில்லை. ஆனால் அதை தனிப்பட்ட சிறுமை ஏதும் இல்லாமல் இனிய குலமுறைச்சடங்காகவே செய்து முடிக்க முடியும்” என்றார் பீஷ்மர்.
“அப்படியென்றால் இனி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி யுதிஷ்டிரன் மட்டுமே. துரியோதனனுக்கு வாய்ப்பே இல்லை” என்றார் விதுரர். பீஷ்மர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் உண்மைகளை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்?” விதுரர் புன்னகைத்து “பிதாமகரே, அவர் பிறந்ததே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென அமர்வதற்காக என எண்ணுபவர். அவரில் அவ்வெண்ணத்தை நாட்டியபடி இங்கே அறுபதாண்டுகாலமாக அமர்ந்திருக்கிறார் சகுனி. அந்தத் தவத்திற்கு இணையாக இங்கே பிறிது எதுவும் நிகழவில்லை” என்றார். “ஆம்” என்று பீஷ்மர் பெருமூச்சுவிட்டார்.
“இவ்வுண்மையை பிறிதிலாது உணர்ந்தால் அக்கணம் அவர்களிடம் போரிட்டு அக்களத்தில் இறக்கவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே வேண்டியதில்லை” என்றார் விதுரர். “தன்னியல்பிலேயே தலைவணங்காதவன் அவன்” என்றார் பீஷ்மர். “ஆற்றுவதற்கொன்றுமில்லை” என்று சொல்லி கைவிரித்து தலையை அசைத்தார். “ஆகவேதான் பன்னிருபடைக்களத்தை அமைக்கலாமென்கிறேன்” என்றார் விதுரர். பீஷ்மர் “மீண்டும் அதையே சொல்கிறாயா?” என்றார். விதுரர் “பகடைக்களம் நிகழுமென்றால் அதில் அஸ்தினபுரியே வெல்லும்” என்றார். “ஏனென்றால் அறுபதாண்டுகாலமாக சகுனி ஆற்றிய தவம் நிகழ்ந்தது பகடைக்களத்திலேயே. அவர் எண்ணுவதும் கனவுகாண்பதும் பகடைகளின் வழியாகத்தான். அவரை எவரும் வெல்லமுடியாது.”
“வென்றால்...” என்றார் பீஷ்மர். “ஒரு சடங்காக யுதிஷ்டிரன் முடிதாழ்த்தவேண்டியிருக்கும். அஸ்தினபுரி ஒரு ராஜசூயத்தையும் அஸ்வமேதத்தையும் ஆற்றும். பாரதவர்ஷத்தின் சத்ராபதி என்று துரியோதனன் முடிசூடமுடியும். சகுனி சூள் முடித்து காந்தாரத்திற்கு மீள்வார். கணிகரும் உடன் செல்வார்” என்றார் விதுரர். “ஆனால் அது வெறும் சடங்கே. போரில் வெல்லாத வரை இந்திரப்பிரஸ்தத்தை வென்றதாக பொருள் இல்லை. அதை அனைவருமறிந்திருப்பர். அகவே இளைய யாதவர் எண்ணியிருப்பவை எவற்றுக்கும் தடையில்லை. ஒருமுறை சடங்குக்காக முடிதாழ்த்தியதை தவிர்த்தால் பாரதவர்ஷத்தை உண்மையில் ஆளும் நாடாக இந்திரப்பிரஸ்தமே நீடிக்கும்.”
“ஆனால் இந்த முரண்பாடு எங்கோ மோதலாக மாறியாக வேண்டுமே?” என்றார் பீஷ்மர். “ஆம், ஆகவேண்டும். ஆனால் அதை இருபதாண்டுகாலம் ஒத்திப்போடலாம். அதற்குள் துரியோதனருக்கு வயது ஏறிவிடும். அவர் வனம்புகக் கூடும். லட்சுமணன் முடிகொள்வான் என்றால் அனைத்தும் சீராகிவிடும். அவன் ஆணவமற்றவன். யுதிஷ்டிரனைப் போலவே அறத்தில் நிற்பவன். திருதராஷ்டிரரைப்போல உள்ளம் கனிந்தவன்” என்றார் விதுரர். “அங்கே மறுபக்கம் யுதிஷ்டிரன் முடிதுறக்கலாம். திரௌபதி தன் விழைவை ஒடுக்கி உடன் செல்லலாம். தருமனின் மைந்தன் பிரதிவிந்தியன் எளிய உள்ளம் கொண்டவன். வேதம்கற்று வேள்விகளில் உள்ளம் தோய்பவன். பிதாமகரே, இந்த வஞ்சமும் விழைவும் எல்லாம் இந்தத் தலைமுறைக்குரியது. அடுத்து வருபவர்கள் கனிந்தவர்கள். அவர்கள் தோள்தழுவிக்கொள்வார்கள். ஐயமே இல்லை.”
“ஆம், அதில் உண்மை உள்ளது” என்றார் பீஷ்மர். மீண்டும் தனக்குத்தானே என தலையை அசைத்தபடி “ஆனால் பகடையாடல் என்பது ஊழுடன் ஆடுவது. எல்லையின்மைகளை சீண்ட மானுடனுக்கு உரிமையில்லை” என்றார். விதுரர் மெல்லிய எரிச்சல் ஒன்றை தன்னுள் உணர்ந்தார். “கணிகர் சொன்னார் உங்கள் அச்சம் அவருக்குத் தெரியும் என்று” என்றார், பீஷ்மர் வெறுமனே நோக்க “காசிநாட்டரசியை நினைவுறுத்தினார்” என்றார். அதைச் சொன்னதுமே அத்தனை எல்லைக்கு சென்றிருக்கலாகாதோ என்னும் பதைப்பை விதுரர் அடைந்தார். தந்தையரிடம் மைந்தர் பெறும் இடம் என்பது அவர்கள் அளிப்பதாகவே இருக்கவேண்டும் என்ற ஸ்மிருதிச்சொற்றொடர் நினைவில் எழுந்தது.
பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். விதுரர் “தங்கள் விருப்பத்தை மீறி...” என சொல்லத்தொடங்க “என் விருப்பம் என ஏதுமில்லை. அனைத்தையும் நான் அடைந்தாகவேண்டும்” என்றார் பீஷ்மர். பின்பு ஓர் அம்பை கையில் எடுத்துக்கொண்டு பயிற்சிமுற்றம் நோக்கி சென்றார். விதுரர் அவரை நோக்கி நின்றார்.
[ 16 ]
திருதராஷ்டிரர் சினந்து எழுவார் என்பதை விதுரர் எதிர்பார்த்திருந்தார். ஆகவே அவர் தாடைகள் இறுக விழிக்குழிகளில் குருதிக்குமிழிகள் ததும்ப “ம்” என உறுமியபோது மேற்கொண்டு சொல்லில்லாது அமர்ந்திருந்தார். “சொல்!” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் அப்பால் நின்றிருந்த சஞ்சயனை நோக்கினார். பின்னர் “எனக்கும் இதுவே உகந்த வழி எனத் தோன்றுகிறது...” என்றார். தன் மேல் விப்ரரின் விழியூன்றலை உணர்ந்தார்.
தலையை அசைத்து பற்கள் அரைபட திருதராஷ்டிரர் “பீஷ்மபிதாமகருக்கும் ஒப்புதல் என்றால் நான் என்ன சொல்வது?” என்றார். கதவருகே நின்றிருந்த விப்ரர் உரத்தகுரலில் “இதிலென்ன எண்ணிச் சொல்ல இருக்கிறது? பேரரசர் ஒருபோதும் தன் மைந்தர் அவையமர்ந்து சூதாட ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்றார். “சூதாடுதல் இழிகுலத்தார் செயல் என வகுத்தவர் அவரது பெருந்தந்தை பிரதீபர். அவர் அதை ஒருபோதும் மீறப்போவதில்லை.”
“ஆம்” என்றார் திருதராஷ்டிரர். “நான் விண்மீளும் நாளுக்கென காத்திருப்பவன். அங்கே என் தந்தையரை சந்திக்கையில் என்ன சொல்வேன் என்பதே என் வினா.” விதுரர் “சூது தீங்கென்பதில் ஐயமில்லை மூத்தவரே. ஆனால் போரைத்தவிர்க்க அதுவன்றி வேறுவழியே இல்லை என்னும்போது...” என்றதுமே விப்ரர் அங்கிருந்து கைநீட்டி “சூது உள்ளத்தால் நிகழ்த்தப்படும் போர். உள்ளத்தில் நிகழ்த்தப்பட்ட ஒன்று பருவெளியில் உருப்பெற்று வந்தே தீரும்...” என்றார்.
விதுரர் எரிச்சலுடன் “தத்துவத்தை எல்லாம் நானும் அறிவேன். பிறிதொரு வழி இன்றில்லை. இருந்தால் அதை சொல்லுங்கள்” என்றார். “வழி ஒன்றே. இரு உடன்பிறந்தாரும் தங்கள் தலைக்குமேல் குடைகொண்டுள்ள வானில் வாழும் மூதாதையரை எண்ணி தோள்தழுவிக்கொள்ளட்டும். இணைந்து நீரளிக்கட்டும். மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணி தன்னதென்று இவ்வாழ்வை காண்பவன் துயரை அன்றி பிறிதை அடைவதில்லை. அதை அவர்களிடம் சொல்வதே உங்களைப் போன்றவர்களின் கடன்” என்று விப்ரர் சொன்னார்.
மூச்சிரைக்க வளைந்த உடல் ஊசலாட திருதராஷ்டிரரை நோக்கி வந்தபடி விப்ரர் சொன்னார் “இது அவரது இறுதிக்காலம். பெருந்தாதையென அமர்ந்த அரியணையாலேயே இன்றுவரை பேரரசர் சிறப்புற்றார். இனியும் அவ்வண்ணமே நீடிப்பார்.” இடையில் கைவைத்து நின்று “ஒருவேளை அவருக்கு கைநிறைய மைந்தரை அளித்த தெய்வங்கள் அவர் அதற்குத் தகுதியானவரா என்று பார்க்கும் ஆடலாகக்கூட இருக்கலாம் இதெல்லாம்” என்றார்.
“என் சொற்களை சொல்லிவிட்டேன். அவை முற்றிலும் மதிசூழ்ந்து அமைக்கப்பட்டவை. அவற்றை ஏற்பதும் புறந்தள்ளுவதும் அரசரின் தேர்வு.” விப்ரர் “அமைச்சரே, நீங்கள் கற்றது நெறிநூல்களை. நான் அறிந்தவை மானுட உள்ளங்களை. சொல்லுங்கள், பகடைக்கென காய்களை கையிலெடுத்தபின் அதில் கள்ளம் இயற்றாமல் களமாடி முடித்த மானுடர் எவரேனும் உண்டா?”
விதுரர் சினத்துடன் “இங்கே பன்னிரு படைக்களம் அமைந்திருக்கிறது முன்பு... மாமன்னர்களான ஹஸ்தியும் குருவும் ஆடியிருக்கிறார்கள்” என்றார். “அவர்கள் மானுடர்களும்கூட என்றால் கள்ளம் கலந்தே ஆடியிருப்பார்கள். ஆகவேதான் தெய்வமானபின் வந்து பிரதீபரிடம் அக்களத்தை அழிக்கும்படி ஆணையிட்டனர்” என்றார் விப்ரர். “நான் சொல்லாட விரும்பவில்லை. இது என் மதிசூழ்கை. இப்போது அணுகிவருவது குருதிபெருகக்கூடும் பெரும்போர். அதை கடந்து செல்ல ஒரே வழி இதுவே” என்றார் விதுரர்.
திருதராஷ்டிரரிடம் “அரசே, நாம் தவிர்க்க எண்ணும் அப்போர் வெறுமனே உடன்பிறந்தாரின் அரியணைப்பூசல் அல்ல. பாரதவர்ஷம் தன்னை உருக்கி பிறிதொன்றாக ஆக்கிக்கொள்வதற்காக புகவிருக்கும் உலை. அது நம் மைந்தர் குருதியினூடாக நிகழவேண்டியதில்லை என்பது மட்டுமே நம் இறைவேண்டுதல். வரலாறென்றாகி எழுந்து சூழ்ந்துள்ள ஊழின் விசைகளை நம்மைச்சுற்றிலும் காண்கிறேன். நம் எளிய அச்சங்களும் கொள்கைகளும் அதன்முன் பயனற்றவை” என்றார்.
“எதற்காக இதை என்னிடம் வந்து சொல்கிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். “நீங்கள் உங்கள் ஒப்புதலை அளிக்கவேண்டும்” என்றார் விதுரர். “இன்று அதற்கான தேவை என்ன?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இது போரல்ல, குடும்பத்தார் கூடி மகிழும் நகைவிளையாட்டே என்ற தோற்றத்தை குடிகளிடம் அளிக்கவேண்டியிருக்கிறது. நீங்களும் பீஷ்மரும் அமர்ந்த அவையில் பகடையாட்டம் நிகழுமென்றால் மட்டுமே அவ்வண்ணம் எண்ணப்படும்.”
திருதராஷ்டிரர் கசப்புடன் சிரித்து “ஷத்ரியர்களுக்கு போர், குடிகளுக்கு விளையாட்டு… இல்லையா?” என்றார். “ஆம், அவ்வாறே” என்றார் விதுரர். “நான் மறுத்தால் என்ன ஆகும்?” என்றார் திருதராஷ்டிரர். “அஸ்தினபுரியின் மக்களையும் படைகளையும் நான் ஆள்கிறேனா இன்று?”
விதுரர் நேராக அவரை நோக்கி “உண்மையை சொல்லப்போனால் இல்லை. உங்கள் சொல்லுக்கு குலமுறைமை சார்ந்தும் குருதியுறவு சார்ந்தும் மட்டுமே இடமிருந்தது. அவற்றை அரசர் மீறினாரென்றால் நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. குலத்தலைவர்களைத் திரட்டி உங்களை ஆதரிக்கும் படைகளுடன் சென்று அரசரிடம் போரிடலாம். வென்று முடிநீக்கம் செய்து உங்கள் மைந்தரில் ஒருவனை அரசனாக்கலாம்.”
“நீ சொல்வது புரிகிறது. எல்லா பொருளிலும்...” என்று திருதராஷ்டிரர் ஆழ்ந்த குரலில் சொன்னார். “ஆனால் நான் ஒன்று செய்யமுடியும். அவன் அரியணை அமர்ந்துள்ள அவையில் சென்று நின்று அவனை போருக்கழைக்கலாம். மற்போருக்கோ கதைப்போருக்கோ. அவன் நெஞ்சைக்கிழித்து இட்டு மிதித்து அவன் மணிமுடியை நான் பெறுவேன். அதை யுயுத்ஸுவுக்கு அளிக்கிறேன். இந்த முரட்டு மூடனல்ல, அவனே இவ்வரியணையில் அமரத்தகுதியனாவன். அவன் அமரட்டும்.”
விதுரர் தன்னுள் ஒரு தசைப்புரளல் போல உணர்வசைவை உணர்ந்தார். திருதராஷ்டிரர் உரத்த குரலில் “ஆம் அவன்தான். அவன்தான் அரியணைக்குரியவன். இதோ நான் சொல்கிறேன். அஸ்தினபுரியை யுயுத்ஸு ஆளட்டும்” என்றார். விதுரர் “மூத்தவரே, சொற்களில் வாழும் தெய்வங்களை எண்ணாது பேசுதலாகாது என்பது அரசர்களுக்குரிய நெறி” என்றார். “அதிலும் பெற்றோர் தன் மைந்தரைப்பற்றி பேசும்போது கருமி வைரங்களைத் தொட்டு எடுப்பதுபோல சொல்சூழவேண்டும். என்றோ ஒருநாள் ஏனிது என்று நாம் திகைத்து வினவுகையில் உன் சொல்லில் எழுந்ததே இது என்று தெய்வமொன்று எழுந்து நம்மிடம் சொல்லும்படி ஆகலாம்.”
திருதராஷ்டிரர் திடுக்கிட்டவர் போல அவரை நோக்கி முகம் திருப்பினார். விழிகள் தத்தளிக்க உதடு இறுகியது. உடனே வெறியுடன் தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம்! அவனை களத்துக்கு அழைக்கிறேன். என்னைக்கொன்றால் அவன் விருப்பப்படி இந்நகரை ஆளட்டும்” என்று கூவினார். “நானறிந்த நெறிநூல்களனைத்தும் சொல்வது இதுவே. அரசனை அறைகூவ ஷத்ரியன் எவனுக்கும் உரிமையுண்டு. அவனோ அவன் சொல்பெற்ற பிறனோ என்னுடன் களம்நிற்கட்டும்.” மூச்சிரைக்க அவரை நோக்கி வந்து “சொல், அவ்வாறு நெறியுள்ளதா இல்லையா? சொல்!” என்றார்.
“உண்டு” என்றார் விதுரர். “ஆனால் அந்நெறிக்கு சில விலக்குகளும் உண்டு. நோய்கொண்டவர், உறுப்புகுறைந்தவர், சித்தம்பிறழ்ந்தவர், தீயதெய்வத்தை உபாசிப்பவர், மாயம் அறிந்தவர், குலமுறையும் குருவழியும் வெளிப்படுத்தாதவர் என்னும் அறுவரை அரசன் தவிர்த்துவிடலாம். அவர்களை படைகொண்டு கொல்லலாம். சிறையிடலாம்.” திருதராஷ்டிரரின் உதடுகள் ஏதோ சொல்ல விழைபவை போல அசைந்தன. தன் தலையை கையால் வருடியபடி கால்மாற்றினார். அவர் உடலில் தசைகள் நெளிந்தன. பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து “ஆம், அதையும் செய்வான். இன்று அவனுடனிருப்பவர்கள் அவர்கள்...” என்றார்.
“கணிகர் இதை சொல்லிவிட்டதனால் இனி சகுனி பிறிதொன்றை எண்ணப்போவதில்லை. அரசர் தன் மாமனின் மடிக்குழவியென்று இருக்கிறார்” என்றார் விதுரர். “அவன் எங்கே மூத்தவன்? அவனை வரச்சொல்! நான் அவனிடம் பேசுகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அங்கரும் அரசரும் இன்று முற்றிலும் இணைந்துவிட்டிருக்கின்றனர். அவர்களை இன்று தெய்வங்களால்கூட பிரிக்க முடியாது” என்றார் விதுரர். “மூத்தவரே, வஞ்சத்தால் இணைபவர்கள் மட்டுமே அவ்வாறு முழுமையாக ஒன்றாகிறார்கள்.”
திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்து சுற்றிலும் நோக்கினார். சஞ்சயன் அருகணைந்து பீடத்தை இழுத்துப் போட அதிலமர்ந்தார். அவரிடமிருந்து பெருமூச்சுகள் வந்துகொண்டிருந்தன. காற்றில் சீறும் அனல்குவை போலிருந்தார் திருதராஷ்டிரர். விதுரர் அவரே கனன்று அணையட்டும் என காத்திருந்தார்.
“ஒன்று செய்யலாம்” என்றார் விப்ரர். “தன்னை ஏற்காத மைந்தரின் அன்னத்தை முற்றிலும் துறக்க தந்தையருக்கு உரிமை உண்டு. இதோ இத்தருணம் முதல் நீங்கள் உணவை மறுக்கலாம். பசித்து உடல் வற்றி இறக்கலாம். விண்புகுந்தபின்னரும் இவர்கள் அளிக்கும் அன்னத்தையும் நீரையும் ஏற்காமலிருக்கலாம்.”
திருதராஷ்டிரர் இரு கைகளையும் விரித்துக்கொண்டு எழுந்து “ஆம், அதுவே ஒரே வழி... அதுவே நான் செய்யக்கூடுவது” என்றார். “மூதாதையரே, இதோ நீங்கள் கேட்பதாக! நான் தந்தையென்றே வாழ்ந்தேன். தந்தையென்றே இறக்கிறேன். நான் மண் மறையும்போது என்னைச்சூழ்ந்து என் சிறுமைந்தரும் பெயர்மைந்தரும் சூழ்ந்திருக்கட்டும்...”
“மூத்தவரே, அதனால் ஆகப்போவதொன்றுமில்லை... அத்தகைய கட்டாயங்களை மைந்தருக்கு அளிப்பது எவ்வகையிலும் அறமல்ல” என்றார் விதுரர். “கட்டாயமல்ல. எனக்கு வேறுவழி இல்லை. என் மைந்தர் பகடையாடுவதை ஒப்புக்கொண்டவனாக விண்ணேறுவதைவிட உண்ணாநோன்பிருந்து உடலையும் ஆன்மாவையும் தூய்மைசெய்து மேலேறுவது எனக்கு மாண்பு... ஆம், அதுவே உகந்த வழி.”
“மூத்தவரே, இது என்ன எதையும் காணாத வெறி? அரசருக்கு அழகா இது?” என்றார் விதுரர். “ஆம், நான் விழியிழந்தவன். வெருண்டெழும் கண்ணற்ற பன்றி. எனக்கு என் மணங்களும் ஒலிகளுமே உலகம். அங்கே சொற்களில்லை. நூல்களுமில்லை. நான் பெற்ற உள்மணம் சொல்வது இதையே” என்றார் திருதராஷ்டிரர். “இதோ… இது என் ஆணை. துரியோதனன் உடனே படைப்புறப்பாட்டை நிறுத்தவேண்டும். கர்ணனும் ஜயத்ரதனும் தங்கள் நாடு மீளவேண்டும். உடன்பிறந்தார் தோள்தழுவ வேண்டும். பகடையாடலோ போரோ நிகழுமென்றால் நான் வடக்கிருந்து இறப்பேன். என் பழிச்சொல் இக்குலத்தின்மேல் என்றும் அழியாமல் நின்றிருக்கும். சென்று சொல் உன் அரசனிடம்!”
“மூத்தவரே…” என மேலும் சொல்லவந்த விதுரர் விப்ரரை நோக்கினார். அவரது ஒளியற்ற பழுத்த விழிகள் ஏற்கனவே விண்புகுந்து தெய்வமாகிவிட்டவை போல தெரிந்தன. பெருமூச்சுடன் “ஆணை!” என தலைவணங்கி திரும்பி நடந்தார். “சஞ்சயா, யுயுத்ஸுவை அழைத்து வா! நான் வடக்கிருக்கவிருப்பதை அவனிடம் சொல்! ஆவன செய்ய நான் ஆணையிட்டேன் என்று கூறு” என்றார் திருதராஷ்டிரர்.
[ 17 ]
அஸ்தினபுரியில் பன்னிருபடைக்களம் அமைப்பதைப் பற்றிய செய்தியை சகுனி துரியோதனனிடம் சொன்னபோது சற்று அப்பால் தரையில் போடப்பட்டிருந்த சேக்கைப் பீடத்தில் அங்கிலாதவர் என கணிகர் படுத்திருந்தார். கர்ணனும் ஜயத்ரதனும் துரியோதனனின் இருபக்கமும் பீடங்களில் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனன் நின்றான். சாளரத்தின் ஓரமாக துர்மதனும் துச்சலனும் சுபாகுவும் நின்றிருந்தனர். படைநகர்வு குறித்த செய்திகளை சகுனிக்கு துரியோதனன் உளஎழுச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் படைநகர்வுப்பணிகளுக்குப்பின் களைப்புடன் அரண்மனைக்கு மீண்டிருந்தனர்.
“பதினெட்டு படைப்பிரிவுகளும் கங்கைக்கரை ஓரமாக நிரை கொண்டுவிட்டன மாதுலரே. அவற்றை ஏற்றிச் செல்லும் படகுகளும் பிழைநோக்கப்பட்டு நீர்வெளியில் சித்தமாக உள்ளன. அவை முன்னோடிப் பறவைகளென இந்திரப்பிரஸ்தத்தை சென்றடையும்போதே மறுபக்கம் கரைவழியாக நமது பன்னிரண்டு படைப்பிரிவுகள் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி செல்லும். செல்லும் வழியிலேயே பிற ஆதரவு நாட்டுப்படைகளும் நம்முடன் இணைந்துகொள்கின்றன. கடற்படையை கர்ணனும் தரைப்படையை நானும் நடத்துகிறோம். ருக்மியின் படைகளுடன் ஜயத்ரதன் தன் படைகளை இணைத்துக்கொண்டு இருவரும் இந்திரப்பிரஸ்தத்தை மறுபக்கம் வந்து சூழ்வர்” என்றான்.
சகுனி “மிகப்பெரிய படைசூழ்கையின் இடர் என்னவென்றால் அதை மறைக்க முடியாதென்பதே. இப்பொழுதே நம் படைசூழ்கையின் அனைத்து உட்கூறுகளும் இளைய யாதவனுக்கும் அர்ஜுனனுக்கும் தெரிந்திருக்கும்” என்றார். கர்ணன் “ஆம் தெரிந்திருக்கும். இந்திரப்பிரஸ்தத்தை எதிர்பாராத வகையில் தாக்க முடியாது என்பதை உணர்ந்த பின்னரே இதை இத்தனை விரிவாக தொடங்கினோம்” என்றான். “பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய அரசுகளும் கங்கைக்கரையில் உள்ளன. கங்கையில் இருந்து எதிர் நீரோட்டத்தில் ஏறிச்சென்றே யமுனைக்கரையில் அமைந்துள்ள இந்திரப்பிரஸ்தத்தை அணுக முடியும். ஆகவே எந்தப்படகுப்படையும் விரைந்து செல்ல முடியாது. எதிர்பாராத்தாக்குதல் நிகழமுடியாதென்றால் பெருஞ்சூழ்கைத்தாக்குதலே உகந்தது என்பதனால் இம்முடிவை எடுத்தேன்” என்றான்.
ஜயத்ரதன் “அத்தனை பெரிய நகரம் யமுனைக் கரையில் அமையும்போது அது எண்ணாது எடுக்கப்பட்ட முடிவோ என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. கங்கைக் கரையில் நகர் அமைப்பது விரைந்து கிளம்புவதற்கு உகந்தது போலவே எதிர்பாராது தாக்கப்படுவதற்கும் எளிது” என்றான். சகுனி “இந்திரப்பிரஸ்தம் பாஞ்சாலத்தின் ஐங்குடிப்படைகளை இடக்கையாகவும் யாதவ குலத்திரளை வலக்கையாகவும் கொண்டது. பாஞ்சாலம் தொன்மையான ஷத்ரிய நாடென்பதால் பல சிறுகுடி அரசர்களை அவர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ள முடியும். மணஉறவு நாடுகளும் ஒப்புறவு நாடுகளும் உடன் நிற்கும். இது எளிய போரென அமையாது” என்றார்.
“ஆம் அமையாது. நான் எளிதில் வெல்ல விரும்பவில்லை” என்றபடி துரியோதனன் எழுந்தான். “ஆயிரமாண்டுகள் இம்மண்ணில் பேசப்படும் ஒரு போரையே நான் நாடுகிறேன். மத்தகம் தூக்கி எழும் களிறு போல அவர்களின் நகர்க்கோட்டை முன் சென்று நிற்கப்போகிறேன். எக்கரவும் இல்லை. எச்சூழ்ச்சியும் இல்லை. வெற்றி ஐயத்திற்கிடமற்றது. பாரதப்பேரரசின் முதன்மை அரசன் நான் என்பதை அப்போருக்குப்பின் மறுசொல்லின்றி ஒவ்வொருவரும் ஏற்றாக வேண்டும்.”
அவர்கள் பேசத்தொடங்கியபோது ஒவ்வொருவரும் தங்கள் ஓர விழிகளால் கணிகரின் இருப்பையே உணர்ந்து கொண்டிருந்தனர். போர்குறித்த சொல்லாடலும் உணர்வு அலைகளும் கணிகரை அவர்களின் சித்தங்களிலிருந்து முற்றாக உதிர்க்க வைத்தன. விழி உலாவும் உயரத்திற்குக் கீழாக எப்போதும் அமர்ந்திருப்பதனாலேயே உள்ளங்களிலிருந்து விலகிவிடும் வாய்ப்பை பெற்றிருந்த கணிகர் செவிகளை மட்டும் அவ்வுரையாடலுக்கு அளித்து விழிகளை சுவர் நோக்கி திருப்பியிருந்தார். விழிகள் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை என்பதை அவர் அறிந்திருந்தார்.
கர்ணன் சகுனியிடம் “படைகள் திரளத் திரளத்தான் நமது வல்லமை நமக்கு தெரிகிறது. பாரதவர்ஷத்தின் ஆற்றல் கொண்ட ஷத்ரியப்படையின் பெரும்பகுதி நம்முடன் உள்ளது” என்றான். சகுனி படைத்திரள் குறித்த எழுச்சியை பகிர்ந்துகொள்ளவில்லை என்னும் உணர்வே அவனை அப்பேச்சை எடுக்கவைத்தது. கணிகர் விழிசுருக்கி கர்ணனை நோக்க அப்பார்வையுணர்வைப்பெற்று கர்ணன் திடுக்கிட்டது போல அவரை நோக்கினான். கணிகர் புன்னகை புரிய அதுவரை தொகுத்துக் கொண்ட அனைத்தும் சிதறப்பெற்று கர்ணன் விழிதிருப்பிக் கொண்டான்.
சகுனி “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள் கணிகரே?” என்றார். அங்கிருந்த அனைவரும் கணிகரின் இருப்பை சிறு அதிர்வுடன் உணர்ந்து அவரை திரும்பி நோக்கினர். கணிகர் மெல்லிய குரலில் முனகி உடலைத் திருப்பி “ஷத்ரியப்படைகள் அங்கரின் தலைமையில் திரள ஒப்புவார்களா?” என்றார். துரியோதனன் திடுக்கிட்டு உடனே கடும் சினம்கொண்டு தன் இரு கைகளையும் ஓங்கி கைப்பிடியில் அடித்தபடி “ஏன் ஒப்பமாட்டார்கள்? அவர் இன்று அஸ்தினபுரியின் பெரும் படைத்தலைவர். அதை அறிந்த பின்னரே அவர்கள் இங்கு படைக்கூட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான்.
“அவர்கள் அறிந்திருப்பார்கள், ஒப்பியும் இருப்பார்கள். ஆனால் அஸ்தினபுரியின் வெற்றி என்பது தூய ஷத்ரியர்களின் வெற்றியல்ல என்றொரு சொற்பரவலை இளைய யாதவரின் ஒற்றர்கள் உருவாக்கினார்கள் என்றால் பலர் பின்னடையக்கூடும்” என்றார் கணிகர். “அர்ஜுனனுக்கு படை எதிர் நிற்கும் வல்லமை கொண்டவர் அங்கர் மட்டுமே என்றறியாத ஷத்ரியர் எவர்?” என்றான் ஜயத்ரதன். கணிகர் பறவைக்குரல் போல மெல்ல நகைத்து “ஆம் அறிவார்கள். ஆனால் அவ்வறிவு உள்ளத்தில் நிலைப்பது. ஆழத்திலோ ஒவ்வொருவரும் தாங்களும் அர்ஜுனர்கள்தான்” என்றார்.
சகுனி “நேரடியாகவே சொல்கிறேன் மருகனே, நமது தரப்பில் ஷத்ரியப் பெருவீரர்களென நாம் மூவர் மட்டுமே உள்ளோம். உன்னால் படைநடத்த இயலாது. நானோ சூழ்கைகளை அமைப்பேனே ஒழிய களம் நின்று போரிட வல்லவன் அல்ல. ஜயத்ரதன் இன்னும் இளையோன். இந்திரப்பிரஸ்தத்திற்கு நிகரான வில்லவன் என்றால் அங்கர் மட்டுமே. எவ்வகையிலேனும் அவரை பிற ஷத்ரியர் ஏற்க முடியாதென்று ஆக்கினால் நமது படைகள் ஆற்றல் இழக்கும்” என்றார்.
கர்ணன் “அவ்வகையில் எத்தனையோ வஞ்சங்களை அவர்கள் செய்யலாம். அவற்றையெல்லாம் எண்ணி முன்னரே உளம் சோர்வதில் என்ன பொருள்? அவை எழுகையில் நிகர் வஞ்சத்தை நாம் செய்வோம். அதுவே வீரர்களின் வழி” என்றான். கணிகர் “அது அத்தனை எளிதல்ல அங்கரே” என்றார். கர்ணன் சினம் எழ, உடனே அதை வென்று மீசையை முறுக்கியபடி கணிகரை கூர்ந்து நோக்கினான். “யாதவர்கள் ஒரே வினாவை கேட்கக்கூடும். இப்போர் எதன் பொருட்டு? செம்மை செய்தமைந்த நால்வேதத்தின் பொருட்டு நாம் நிற்கிறோம் என்றால் செதுக்கிக் கூராக்கிய புதுவேதத்தின் பொருட்டு அவர்கள் நிற்கிறார்கள். இதில் அங்கர் எங்கே நிற்கிறார்?” என்றார் கணிகர்.
கர்ணன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகவேதத்தை காக்க உறுதி ஏற்றவர் நீங்கள் என்று இங்கொரு சொல் உலவுகிறது” என்றார் கணிகர். கர்ணன் “ஆம். நான் அவர்களுக்கொரு வாக்கு கொடுத்தேன். அவர்களின் குலம் அழியாது காப்பேன் என்று. அவர்களின் வஞ்சத்திற்கு நிகர் செய்வேன் என்று” என்றான்.
கணிகர் “அங்கரே, அது ஓர் எளிய வாக்கு அல்ல. இந்நிலம் நாகர்களுக்குரியது. இங்கு முளைத்தெழுந்த சொற்களும் அவர்களுக்குரியதே. அதில் விளைந்த முதல் கனியான வேதமும் அவர்களுக்குரியதே. அவர்களை வென்று நின்றது நமது குலம். மண்ணுக்கடியில் நாகங்கள் வாழ்கின்றன என்று சூதர் பாடும் தொல்கதை நேர்ப்பொருள் மட்டும் கொண்டதல்ல. நாடுகள் நகரங்கள் ஊர்கள் குடிகள் என்று பெருகியிருக்கும் நம் வாழ்வுக்கு அடியில் என்றும் இமையாத விழிகளுடன் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் வஞ்சமொன்றை ஏற்ற நீங்கள் இவ்வேதத்தின் காவலராக எப்படி களம் நிற்க முடியும்?” என்றார்.
துரியோதனன் தன் தொடையை அறைந்தபடி உரக்க “களம் நிற்பார். இது எனது ஆணை! எனக்கு ஷத்ரியர்களின் துணை தேவையில்லை. என் துணைவர் படை மட்டுமே போதும் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல” என்றான். அமைதியாக “போதாது” என்றார் சகுனி. துரியோதனன் “என்ன சொல்கிறீர்கள் மாதுலரே?” என்றான். “நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல போதுமானவை அல்ல. ஷத்ரியர்களின் முழுமுற்றான ஆதரவின்றி நம்மால் களம் வெல்ல இயலாது. ஒருகால் வெல்லக்கூடும். ஆனால் பேரழிவின்மீது மட்டுமே நமது குருதிக்கொடி எழும். நம்மில் வீரர்கள் எஞ்சுவதும் அரிது. அவ்வாறு வென்று ஒரு வேள்வியை நாம் இங்கு செய்வோமென்றால் மிகச்சில ஆண்டுகளிலேயே நம்மைச்சூழ்ந்துள்ள நிஷாதர்களும் அசுரர்களும் நம்மை வெல்வார்கள். நாம் நம்முள் போரிட்டு வலுகுன்றி இருக்கும் தருணத்தைக் காத்து இங்குள்ள அத்தனை மலைக்காடுகளிலும் சினம்கொண்ட விழிகள் நிறைந்திருக்கின்றன என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார் சகுனி.
கணிகர் “அவற்றில் முதன்மையானவை நாகர்களின் விழிகள். நாகர்களுக்காக குருதி தொட்டு உறுதி கொடுத்த ஒரு வீரனை நாம் நம் தரப்பிலேயே கொண்டிருக்கிறோம்” என்றார். கர்ணன் எழுந்து சினத்துடன் “உங்கள் நோக்கமென்ன? படைப்புறப்பாடு முழுமை பெற்ற பின்னர் இதை சொல்வதற்கு ஏன் துணிகிறீர்கள்? என் முதல் கடப்பாடு அஸ்தினபுரி அரசரிடம் மட்டுமே” என்றான். “அவ்வண்ணமெனில் இங்கு இவ்வவையில் நாகர்களை துறப்பேன் என்று உறுதி கொடுங்கள்” என்றார். கர்ணன் தளர்ந்து “அது ஒரு சிறுமைந்தனின் தலை தொட்டு நான் அளித்த சொல்” என்றான்.
மெல்ல நகைத்து “இரு தெய்வங்களை உபாசனை செய்ய இயலாது அங்கரே” என்றார் கணிகர். “இவ்வவையில் அங்கர் சொல்லட்டும் நாகர்களை ஆதரிக்கப்போவதில்லை என்று. ஷத்ரியர் கோருவார்களென்றால் அச்சொல்லையே நாம் பதிலாக அளிக்க முடியும்” என்றார் சகுனி.
உதடுகள் துடிக்க விழிகள் நீர்மை கொள்ள “இப்புவியில் பிறிதெவரும் எனக்கு முதன்மையானவரல்ல. இதுவே உங்கள் கோரிக்கை என்றால்…” என்று கர்ணன் கைநீட்ட அக்கையை துரியோதனன் பற்றிக் கொண்டான். “இல்லை. மாதுலரே, எனது தோழர் அவர் கொடுத்த சொல்லில் இருந்து ஒரு அணுவும் பின்னடையப்போவதில்லை. வேண்டுமெனில் அச்சொல்லுக்காக அஸ்தினபுரியை இழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன்” என்றான். “அரசே…” என்று கர்ணன் உணர்வெழுச்சியுடன் சொல்ல “போதும் அமருங்கள்” என்று அவர் தோள்தொட்டு பீடத்தில் அமரவைத்தான் துரியோதனன்.
முகம் உணர்வெழுச்சியால் ததும்ப சகுனியிடம் “என் பொருட்டு இப்புவியையும் மூன்றுதெய்வங்கள ஆளும் அவ்விண்ணையும் அங்கர் துறப்பார் என்று எனக்கு தெரியும். அவர் பொருட்டு அவையனைத்தையும் நானும் துறப்பேன். அவர் சொல் நிற்கட்டும்” என்றான். “நன்று, ஆனால் அச்சொல் நின்றால் அஸ்தினபுரி எப்படி வேதங்களுக்கென வாளெடுத்து முன் நிற்க முடியும்?” என்றார் கணிகர். “வேதங்களுக்கென வாளெடுக்கவில்லை. என் விழைவுக்கென வாளெடுக்கிறேன், என் மண்ணுக்காக மட்டுமே குருதி சிந்தப்போகிறேன்” என்றான் துரியோதனன். “ஆம், வெல்ல முடியாது போகும். வீழ்கிறேன். அழிகிறேன். அதுவும் விண்ணுலகேகும் வழியே.”
ஜயத்ரதன் “இப்போது நாமே ஏன் மிகையான உணர்வுகளை அடைய வேண்டும்” ஷத்ரியர்கள் இவ்வினாக்களை இன்னும் எழுப்பவில்லை” என்றான். சகுனி “இப்போது அவர்கள் எழுப்புவார்கள் எனில் நன்று. படையெழுந்து இந்திரப்பிரஸ்தம் நெருங்கும்போது அவ்வினா எழுமென்றால் சிறுமையையே ஈட்டித்தரும்” என்றார். துரியோதனன் கைதூக்கி “போதும் சொல்லாடல். நான் முடிவெடுத்துவிட்டேன். படைப்புறப்பாடு நாளை மறுநாள் நிகழும்” என்றான்.
சகுனி “இத்தருணத்தில் படைப்புறப்பாடைவிட உகந்த வழியொன்றுண்டா என்று ஏன் நாம் எண்ணக்கூடாது?” என்றார். துரியோதனன் ஐயத்துடன் கணிகரை நோக்க சகுனி “மருகனே, இன்று பிதாமகரின் கோரிக்கையுடன் விதுரர் கணிகரை பார்க்க வந்தார்” என்றார். “கணிகரையா?” என்றான் துரியோதனன். “ஆம். உடன் பிறந்தார் பொருதிக்கொண்டு குருதி சிந்தலாகாது என்று கணிகரின் கால்களை சென்னி சூடி பிதாமகர் வேண்டியிருந்தார்.”
துரியோதனன் ஏளனத்துடன் நகைத்து “ஆம், நானறிவேன். அவர் அதைத்தான் செய்வார். அதன் பொருட்டே அவரை முற்றிலும் தவிர்த்தேன். அவரோ எந்தையோ இனி எனக்கு ஆணையிடலாகாது. நான் என் இறுதித் தளையையும் அறுத்துவிட்டேன்” என்றான். கணிகர் “பிதாமகரின் கோரிக்கை என் முன் வந்தபோது நான் எண்ணியது ஒன்றே. அவர் நம் பொருட்டு படைநிற்கமாட்டார்” என்றார். “ஆம். நிற்கமாட்டார். இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அவர் எப்படி வில்லெடுக்கமுடியும்? தன் சிறுமைந்தரை கொன்றொழிப்பாரா என்ன?” என்றான் கர்ணன்.
“அவர் வரவில்லையென்றால் கிருபரும் துரோணரும் நமது பக்கம் நிற்கமாட்டார்கள்” என்றார் கணிகர். “அவ்வெண்ணத்தை அடைந்ததுமே நான் முடிவெடுத்துவிட்டேன். குருதிசிந்தும் போர் நிகழ முடியாது. நிகழ்ந்தால் வெல்வதரிது.” கர்ணன் சினத்துடன் “போரென்றால் உங்களுக்கென்ன தெரியும்? பகடையாடுதல் என்று எண்ணினீரா? வந்து பாருங்கள், களத்தில் பாண்டவர் ஐவருக்கும் யாதவர் இருவருக்கும் நானொருவனே நிகரென்று காட்டுகிறேன்” என்றான்.
கணிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சகுனி அவரைத் தடுத்து “மருகனே, மிகைச்சொற்களை இங்கு சொல்ல விழையவில்லை. அத்தருணத்தில் கணிகர் ஒரு முடிவெடுத்தார். அதுவே நன்றென்று நானும் உணருகிறேன். நமக்குத் தேவை வெற்றி. அது களத்தில் குருதியில்தான் நிகழவேண்டும் என்று என்ன இருக்கிறது? குருதி சிந்தி நாம் வென்றால் அப்பழியைச் சொல்லியே உனது முடியையும் கோலையும் ஏழு தலைமுறைக்காலம் இழிவுபடுத்துவார்கள்” என்றார்.
“பிறகென்ன செய்வது?” என்றான் ஜயத்ரதன். “பிதாமகர் சென்று இந்திரப்பிரஸ்தத்தை நமக்கு கப்பம் கட்டும்படி கோரப்போகிறாரா?” சகுனி “அது நிகழாது என்று நாமனைவரும் அறிவோம். ஏனெனில் இது இளைய யாதவனின் போர்? என்றார். “கணிகர் சொன்னது பிறிதொருவழி. நிகரிப்போர்.”
“களிறாடலா?” என்றான் கர்ணன் புருவத்தை சுருக்கியபடி. “அல்ல. போர் ஒரு பகடைக்களத்தில் நிகழட்டும்” என்றார் சகுனி. துரியோதனன் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள் மாதுலரே?” என்றான். “ஆம், பகடைக்களம்தான். இங்கு ஹஸ்தியின் காலம் முதலே பன்னிரு படைக்களம் அமைந்திருந்தது. மாமன்னர் பிரதீபரால் அழிக்கப்படும் வரை அங்கு பாரதவர்ஷத்தின் மன்னர் அனைவரும் வந்து ஆடியிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் பகடைக்களத்தில் நிற்கட்டும். நம் தரப்பில் நான் ஆடுகிறேன். அவர்கள் தரப்பில் உகந்த ஒருவர் வரட்டும்.”
“களியாட்டு உரைக்கிறீர்களா மாதுலரே? பகடையாட்டத்தில் வென்று ராஜசூயம் செய்வதா?” என்றான் துரியோதனன். “அதை நம் கோரிக்கையாக நாம் சொல்ல வேண்டியதில்லை. நம் தாள் பணிந்து பிதாமகர் கோரியதனால் நாம் எடுத்த முடிவென்று சொல்வோம். அதுவும் நமது பெருந்தன்மைக்கொரு சான்றாகவே ஆகும்” என்றார் சகுனி. தலையை அசைத்து “இல்லை. அது எனக்கு சிறுமையென்றே தோன்றுகிறது” என்றான் துரியோதனன்.
“மருகனே, நாம் உறுதியாக வெல்ல வாய்ப்புள்ள போர் இங்கு பன்னிரு படைக்களத்தில் நிகழ்வதே. ஐயமின்றி சொல்வேன். இப்பாரதவர்ஷத்தில் என்னிடம் பகடை கோக்கும் திறனுடைய இருவரே உள்ளனர். ஒருவர் இங்கு அமர்ந்திருக்கும் கணிகர்.” இடைமறித்து “பிறிதொருவன் இளைய யாதவன்” என்றான் கர்ணன். “பகடையுடன் அவன் வந்து அமர்ந்தால் நாம் என்ன செய்வோம்?”
“அவன் வரமுடியாது” என்று சகுனி நகைத்தார். “முடிசூடி அரசனென்று துவாரகையில் அமர்ந்திருக்கும் வரை இந்திரப்பிரஸ்தத்துக்காக அவன் வந்து ஆட முடியாது. வருபவன் யுதிஷ்டிரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கமுடியும்.” “இதெல்லாம் வீண்பேச்சு. பகடையில் வென்று ராஜசூயம் வேட்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இழிவு!” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம். மாதுலரே, அது உரிய வழி அல்ல” என்றான்.
சகுனி சினத்துடன் “இழிவென்று யார் சொன்னது? உமது பெருந்தந்தையர் ஆடிய ஆடல் எப்படி இழிவாகும்? இழிவெனில்கூட உடன் பிறந்தோரைக் கொன்று முடிசூடுவதன் பழி அதில் இல்லை. இன்று இது இழிவெனத் தெரிந்தாலும்கூட வென்று வேள்வி இயற்றிய பின்னர் அது ஒரு இனிய விளையாட்டே என்று பாரதவர்ஷத்தின் மக்கள் முன் நாம் கதையமைத்துவிட முடியும். ஒரு குடும்பத்தார் அவர்களுக்குள் மூத்தவர் எவர் என்று முடிவு செய்ய பெரியவர் கூடிய அவையில் விளையாட்டொன்றை நிகழ்த்துவதில் இழிவென்ன உள்ளது?” என்றார்.
ஜயத்ரதன் “இன்று படைதிரண்டு நம்மை அடுத்துள்ள பெருங்குடி ஷத்ரியர்கள் அதை ஏற்பார்களா?” என்றான். “ஏற்பார்கள். இவ்வண்ணம் ஒரு திட்டமுள்ளது என்று சொல்லுங்கள், பொய்யாக சினந்து பின் மெல்ல ஒப்புவார்கள்” என்றார் சகுனி. “ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக் கொண்டிருப்பது போரையே. உறுதியாக வெல்லும் போர் மட்டுமே உவகைக்குரியது. நிகர் ஆற்றல்கள் இடையே நிகழும் போர் முற்றழிவையே எஞ்சச் செய்யும். அதை அறியாத ஷத்ரியர் எவர்?”
கணிகர் மெல்ல கையை ஊன்றி “அத்துடன் ஷத்ரியர்களுக்கு ஒன்று தெரியும், சென்ற பலநூறாண்டுகளாக ஷத்ரியர் எவரும் சூத்திரர்களையும் நிஷாதர்களையும் அசுரர்களையும் ஒற்றைப் பெருங்களத்தில் சந்தித்ததில்லை. அவர்களின் உள்ளுறைந்த வல்லமை என்ன என்பது இதுவரைக்கும் முட்டிப்பார்க்கப்படவில்லை” என்றார்.
கர்ணன் “ஆம். அந்த மெல்லிய ஐயமும் குழப்பமும் ஷத்ரியர்களிடம் இருப்பதை நான் உணர்கிறேன்” என்றான் .”யார் சொன்னது? என்ன சொல்கிறீர் அங்கரே?” என்று உரக்க கூவினான் துரியோதனன். கர்ணன் “ஷத்ரியர் ஒவ்வொருவரும் மிகையாக வஞ்சினம் உரைக்கிறார்கள். அதிலேயே அவர்களின் தன்னம்பிக்கையின்மையும் உட்கரந்த ஐயமும் வெளிப்படுகிறது” என்றான்.
“இப்போர் எளிதில் முடியப்போவதில்லை” என்றார் சகுனி. ”நாம் அவர்களை வென்றால்கூட இந்திரப்பிரஸ்தத்தை கைவிட்டு விட்டு தருமன் தன் மணிமுடியுடனும் கோலுடனும் துவாரகைக்கு செல்லக்கூடும். துவாரகை வரை படை கொண்டு சென்று அவனை வெல்லாமல் அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழ இயலாது.” உரத்தகுரலில் “ஏன் அங்கு செல்ல முடியாது? செல்வோம்” என்றான் துரியோதனன். ”வஞ்சினம் எளிது. இன்று கங்கை நிலத்தின் எந்த அரசும் பெரும்பாலை நிலத்தைக் கடந்து துவாரகையை சென்றடைய முடியாது. துவாரகையின் கடல் வல்லமையை எதிர் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை” என்றார் சகுனி.
துரியோதனன் சலிப்புடன் “போருக்கு முன்னரே தோல்வி குறித்த ஐயங்களை உருவாக்குகிறீர்கள் மாதுலரே” என்றான். “தோல்வி அணுகுகிறது என்று நான் இப்போதும் எண்ணவில்லை. வெற்றி எளிதல்ல என்றே சொல்ல விழைகிறேன். எளிய வெற்றிக்கு ஒரு வழியிருக்கையில் அதை ஏன் நாம் ஏற்கக்கூடாது?” என்றார் சகுனி.
துரியோதனன் மறுத்துரைக்க கையை தூக்குவதற்குள் கர்ணன் “ஆம், கணிகர் சொன்னதை என் உள்ளம் இப்போது ஏற்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று துரியோதனன் கூவ “சற்று பொறுங்கள் அரசே, எனக்கும் பகடையாட்டத்தைப் பற்றி சொல்லப்பட்டதும் பெருஞ்சினமே எழுந்தது. ஆனால் ஒவ்வொன்றாக எண்ணி நோக்குகையில் ஒரு போர் உருவாக்கும் அழிவை எளிதில் கடந்து செல்லவும் உறுதியான வெற்றி ஒன்றை அடைந்து நாம் எண்ணியதை இயற்றவும் பன்னிரு படைக்களமே உகந்ததென்று தோன்றுகிறது” என்றான் கர்ணன்.
துரியோதனன் “இழிவு! அங்கரே, இத்தனை படைபயின்று தோள்பெருக்கி இறுதியில் இவ்வண்ணமொரு சூதுக்களத்திலா நான் நின்று வெல்ல வேண்டும்?” என்றான். கர்ணன் “நாம் வெல்லும் களங்கள் பிறகு வரும். இத்தருணத்தை கடந்து செல்ல இதுவே சிறந்த வழி” என்றபின் திரும்பி “காந்தாரரே, பன்னிரு படைக்களம் ஒருங்கட்டும்” என்றான். துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நான் சொல்லியாகிவிட்டது. பகடைக்களத்தில் நாம் அவர்களை சந்திப்போம்” என்றான்.
துரியோதனன் சலிப்புடன் தலையை அசைத்தபின் எழுந்து மறுபக்கச் சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றான். “பகடைக்களம் அமைக!” என்றான் கர்ணன். புன்னகையுடன் “நன்று” என்றார் கணிகர். துரியோதனன் சினத்துடன் விரைந்து வந்து குனிந்து தன் சால்வையை எடுத்தபின் காலடிகள் ஓசையிட மந்தண அறையைவிட்டு வெளியே சென்றான். துச்சாதனனும் அவன் பின்னால் சென்றான்.
சுபாகு அருகே வந்து “நம் தந்தை ஏற்றுக் கொள்வாரா?” என்றான். சகுனி “எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால் ஏற்கச்செய்ய முடியும்” என்றார். கர்ணன் எழுந்து “இத்தருணத்தில் அரசரை தனித்துவிடலாகாது. நான் செல்கிறேன்” என்றான். கணிகர் புன்னகையுடன் “நன்றி அங்கரே, நான் எண்ணியிருந்தது பிழையாக இல்லை” என்றார்.
கர்ணன் சீறித்திரும்பி “எதை எண்ணியிருந்தீர்?” என்றான். “உம்மை நம்பியே உடன் பிறந்தோர் போரை தவிர்க்க முடிவெடுத்தேன்” என்றார். “ஏன்?” என்றான் கர்ணன் மேலும் சினத்துடன். கணிகர் உரக்க நகைத்து “நீரும் பீஷ்மரல்லவா?” என்றார். மேலும் ஒரு சொல் இதழ் வரை வந்து உடல் ஒரு கணம் தடுக்க கர்ணன் தலையை அசைத்து அதை தவிர்த்து வெளியே சென்றான்.
[ 18 ]
இரவெல்லாம் கர்ணன் துரியோதனனுடன் அவனது மஞ்சத்தறையில் துணையிருந்தான். ஒருகணமும் படுக்க முடியாது எழுந்து உலாவியும், சாளரத்தினூடாக இருள் நிறைந்த வானை நோக்கி பற்களை நெரித்து உறுமியும், கைகளால் தலையை தட்டிக் கொண்டும், பொருளெனத்திரளா சொற்களை கூவியபடி தூண்களையும் சுவர்களையும் கைகளால் குத்தியும் துரியோதனன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இரும்புருக்கை குளிரச்செய்வதுபோல படிப்படியாக அவனை மெல்ல கீழிறக்கிக் கொண்டு வந்தான் கர்ணன்.
ஒருபோர் அத்தருணத்தில் எப்படி பேரழிவை கொண்டுவரக்கூடுமென்று சொன்னான். “அரசே, இப்போரில் நாம் வெல்லலாம். ஆனால் வெற்றிக்குப்பின் நம் படைகளை இழந்து வலுக்குறைந்தபின் ஒரு நிஷாதனிடம் தோற்க நேர்ந்தால் அது பேரிழிவை கொண்டு வராதா?” என்றான். “இன்று நமது நோக்கம் ராஜசூயம் என்றால் அது எவ்வகையில் நிகழ்ந்தாலென்ன? வென்று முடிசூட்டி சக்ரவர்த்தியான பின்னர் மேலும் நம் வலிமையை பெருக்கிக் கொள்வோம். பிறிதொரு சரியான தருணத்தில் நாம் படை சார்ந்த வெற்றியை அடையலாம்” என்றான்.
சொல்லடுக்கிப் பேசுவதைவிட உணர்த்தவிரும்பிய கருத்துக்களை ஓரிரு சொற்றொடர்களில் அமைத்து மீள மீளச்சொல்வதே துரியோதனனிடம் ஆழ்ந்த பதிவை உருவாக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான். உள்ளம் கொந்தளிக்கையில் சலிக்காத உடலாற்றல் கொள்பவன் அவன். உள்ளம் சலிக்கையில் அவன் உடல் குழைந்து துவண்டு விடுவதையும் கர்ணன் கண்டிருந்தான். அவன் ஆற்றலடங்கி அமைவதற்காக காத்திருந்தான். முற்புலரியில் மெல்ல குளிர்ந்து எடைமிக்க காலடிகளுடன் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்த துரியோதனனின் விழிகள் துயில் நாடி சரியத்தொடங்க அவன் கால்கள் மரத்தரையில் உரசி தள்ளாடின.
கர்ணன் எழுந்து அவன் கைகளைப் பற்றியபோது காய்ச்சல் கண்டவை போல வெம்மையும் அதிர்வும் கொண்டிருப்பதை உணர்ந்தான். “படுத்துக் கொள்ளுங்கள் அரசே” என்றபோது சிறுகுழந்தையென வந்து மஞ்சத்தில் படுத்தான். அவன் உடலில் மூட்டுக்கள் சொடுக்கொலி எழுப்பின. அவன் இமைகள் அந்தியில் வாகையிலையடுக்குகள் என சரிந்து மூடின. இமைப்படலத்திற்குள் கருவிழிக்குமிழி ஓடிக்கொண்டே இருந்தது. உதடுகள் ஒலியென மாறாத சொற்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. விரல்கள் எதையோ பற்றி நெரித்துக் கொண்டிருந்தன.
மஞ்சத்தில் அருகமர்ந்த கர்ணன் அவன் வலக்கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு “ஆம் அரசே, இதுவே இப்போதைக்கு உகந்த வழி. இதை கடந்து செல்வோம். மாதுலர் சகுனியும் கணிகரும் நமக்கு முன்னரே விரைந்தோடும் சித்தம் கொண்டவர்கள். இத்தருணத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுப்போம். அவர்கள் இதை வென்று நமக்கு அளிக்கட்டும். நமது வெற்றியை பிறிதொரு முறை அடைவோம்” என்றான். மிகத்தொலைவிலென எங்கோ இருந்து துரியோதனன் “ஆம்” என்று முனகினான்.
“இது சிறுமை அல்ல. பீஷ்மருக்கும் தங்கள் தந்தைக்கும் கனிந்து தாங்கள் தங்கள் வீரத்தையும் நிமிர்வையும் விட்டு சற்று இறங்கி வந்திருக்கிறீர்கள் என்றே பொருள். நாம் இறுதியில் வெல்வோம். உடனே வெல்வதற்கான சிறுவழி இதுவென்றால் இப்போதைக்கு இதுவே ஆகுக!” என்றான் கர்ணன். “ஆம்” என்றான் துரியோதனன். அவன் மூச்சு சீரடையத்தொடங்கியது. “இன்று இது ஒன்றே வழி” என்றான் கர்ணன். உலர்ந்த உதடுகளைத் திறந்து “ஆம்” என்று அவன் முனகினான்.
அவன் கொந்தளிப்புகள் அடங்க இருண்ட ஆழத்திலிருந்து விழிமின்னும் தெய்வங்கள் எழுந்து வருவதை கர்ணன் உணர்ந்தான். அவற்றிடமென தாழ்ந்த குரலில் அவன் சொன்னான். “நமது வஞ்சம் அழியாது. பாரதவர்ஷத்தின் அனைத்து தலைகளையும் அறுத்திட்டாலும் அது பலிநிறைவு கொள்ளாது. ஆனால் நமக்குத் தேவை ஒரு முகம் மட்டுமே. அதில் எழும் ஒரு துளி விழிநீர் மட்டுமே. அதை வெல்வோம். முற்றிலும் வென்று கடந்து செல்வது வரை அமையமாட்டோம்” என்றான். “ஆம்” என்று துரியோதனனுக்குள்ளிருந்து அத்தெய்வம் மறுமொழி சொன்னது.
துரியோதனனின் விரல்கள் நாண் தளர்ந்த சிறிய விற்கள் போல ஒவ்வொன்றாக விடுபட்டன. சீரான மூச்சில் அவன் நெஞ்சுப்பலகைகள் ஏறி இறங்கத்தொடங்கின. கர்ணன் ஓசையின்றி எழுந்து அகன்று நின்று இடையில் கைவைத்து நண்பனை நோக்கினான். துரியோதனன் நன்கு துயின்றுவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல குனிந்து குறுபீடத்தில் இருந்து தன் மேலாடையை எடுத்து அணிந்து வாயிலை நோக்கி சென்றான். கதவில் கைவைத்து மெல்ல திறக்க முயன்றதும் பின்னால் துரியோதனன் முனகியது போல் ஒலியெழுந்தது. அவன் விழித்துக் கொண்டானா என்று கர்ணன் திரும்பிப் பார்த்தான்.
அதுவரை அவன் கண்ட துரியோதனனுக்கு மாறாக தெய்வச் சிலைகளுக்குரிய அழகும் அமைதியும் கொண்ட முகத்துடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தான். அம்முகத்திலிருந்தும் விரிந்த பெருந்தோள்களிலிருந்தும் நோக்கை விலக்க முடியவில்லை. பகலெல்லாம் தான் நோக்கிக் கொண்டிருந்தது அலைகளை மட்டுமே என்றும் அப்போது அங்கிருப்பதே சுனை என்றும் அவன் எண்ணினான். பெருமூச்சுடன் கதவைத் திறந்து வெளியே வந்து தாழ் ஒலிக்காது மெல்ல சார்த்தினான். பலகைப்பொருத்து இறுகும் தருணத்தில் உள்ளே “குருதி” என்றொரு சொல் ஒலிக்கக் கேட்டான்.
மயிர்க்கால்கள் ஒவ்வொன்றும் சிலிர்த்து நிற்க, அச்சிறு இடைவெளி வழியாக உள்ளே பார்த்தான். அதே தெய்வமுகத்துடன் துரியோதனன் துயின்று கொண்டிருந்தான். அவ்வறைக்குள் பிறிதெவரோ இருந்து சொன்ன சொல்லா அது? அல்லது தன்னுள் இருந்த ஏதோ ஒன்று உரைத்தது செவிமயக்கா? அச்சத்தில் என சிலிர்த்து முனையில் நின்ற உடலுடன் அசையா விழிகளுடன் கர்ணன் நோக்கி நின்றான். பின்பு உடல் தளர்ந்து திரும்ப எண்ணிய கணம் மீண்டும் அச்சொல் ஒலித்தது. “குருதி.” இம்முறை தெளிவாகவே அதை கேட்க முடிந்தது. அது எவருடைய குரல் என்பதில் எந்த ஐயமும் இருக்கவில்லை.
[ 19 ]
கர்ணன் மீண்டும் மந்தண அறைக்கு வந்தபோது அங்கு விதுரர் அவனுக்காக காத்திருந்தார். அவனைக் கண்டதும் எழுந்து அவர் முகமன் சொன்னபோதே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கர்ணன் உய்த்துணர்ந்து கொண்டான். துச்சாதனன் உரத்த குரலில் “தந்தையார் வடக்கிருந்து உயிர் துறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அங்கரே” என்றபடி அவனை நோக்கி வந்தான். “அவர் வீண் சொல் சொல்வது இல்லை. அவரது உள உறுதி பெரும் களிறுகளுக்குரியது.”
கர்ணன் திகைப்புடன் விதுரரை நோக்கி திரும்ப அவர் “ஆம்” என்று தலையசைத்தார். அதுவரை உடலை இயக்கிய உளவிசை முற்றிலும் வழிந்தோட கர்ணன் தளர்ந்தான். நான்கு அடிகள் எடுத்து வைத்து பீடத்தை அணுகி அமர்வதற்குள் உடலின் பொருத்துக்கள் அவிழ்ந்து உதிர்ந்துவிடுமோ என்று தோன்றியது. தலையை கையில் தாங்கி எண்ணங்களற்று அமர்ந்திருந்தான். விதுரர் அவன் முன் அமர்ந்து “என்னால் முடிந்தவரை விளக்க முயன்றேன். அவரது உறுதி கற்கோட்டையைப்போல் குறுக்கே நிற்கிறது. கடப்பது எளிதல்ல” என்றார்.
துர்மதன் ஆங்காரத்துடன் “அவரிடம் சொல்லுங்கள், அவருடைய மைந்தர் நூற்றுவரும் அவருடன் இல்லை என்று” என்றான். விதுரர் விழிநோக்கி புன்னகைத்து “உங்கள் நூற்றுவரின் கால்களால் நிற்பவர் அல்ல அவர். இதுநாள் வரை உங்கள் நூற்றுவரையும் தாங்கி நின்ற அடிமரம் அது” என்றார். துச்சலன் மேலும் சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கர்ணன் கைதூக்கி அவனை அமரச்செய்தான்.
“நான் என்ன செய்வது அமைச்சரே? நேற்றிரவு முழுக்க தெய்வங்களுக்கு நுண்சொல்லால் ஆற்றலேற்றுவது போல் அரசரின் உள்ளத்திற்குள் சொல்புகுத்தி பகடையாடுவதற்கு ஒப்புதலை பெற்றிருக்கிறேன். அங்கிருந்து இங்கு வருவது வரை மட்டுமே அந்நிறைவு நீடித்திருக்கிறது” என்றான். “அவர் அதை இழிவென்று எண்ணுகிறார். அவரது மூதந்தையின் ஆணை அது” என்றார் விதுரர்.
“பகடையாடுவதை தவிர்த்தால் போர்தான் என்று சொல்லுங்கள் தந்தையிடம்” என்றான் சுபாகு. விதுரர் “போர் அல்லது பகடை எதுவானாலும் உடன் பிறந்தோர் முட்டிக் கொள்ளுதல் ஆகாது என்று அவர் எண்ணுகிறார் அதைப் பார்ப்பதைவிட உயிர் துறப்பதே மேல் என்று என்னிடம் சொன்னார்” என்றார்.
சுபாகு பற்களைக்கடித்து, “இது அவரது எண்ணமல்ல. அவரது நிழலென அங்கிருக்கும் விப்ரரின் எண்ணம். முதலில் அந்த முதியவரை வெட்டி வீசவேண்டும்” என்றான். விதுரர் கசப்புடன் சிரித்து “உங்கள் நூற்றுவரும் பலமுறை உள ஆழத்தில் அவரை கொன்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். விப்ரரை அழிக்காமல் உங்களால் பேரரசரை வெல்ல முடியாது” என்றார். “என்ன வீண் பேச்சு?” என்று கர்ணன் கையசைத்தான். “ஆவதென்ன என்று பார்ப்போம்.”
விதுரர் “மிகக் குறைவான சொற்களில் சொல்லப்படும் முடிவுகளுக்கு எதிராக சொல்லாடுவது எவராலும் இயலாது அங்கரே. இனி பேரரசர் ஒரு சொல்லேனும் எடுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார். “ஏன்?” என்று சுபாகு உரக்க கேட்டான். “அவருக்கு என்னதான் வேண்டும்? ஏன் இந்த முரட்டு உறுதி?” விதுரர் அமைதியாக “ஏனெனில் அவர் தந்தை” என்றார்.
“தந்தையா? அப்படியென்றால் அவருக்கு மைந்தராகிய நாம் என்ன பொருள் அளிக்கிறோம்? மைந்தரை தளையிட்டு வீணர்களும் கோழைகளும் ஆக்கிவிட்டு அவர் தந்தையென அமர்ந்திருப்பது எதற்காக? அமைச்சரே, பெருந்தந்தையென அவரை ஆக்குபவர்கள் நாங்களே. நாங்கள் ஈன்ற எங்கள் மைந்தர்களே. தன் குலமே தன்னை வெறுத்து ஒதுக்குகையில் தந்தையென்று அமர்ந்திருக்கும் அப்பீடத்திற்கு என்ன பொருள் என்று அவர் எண்ணியிருக்கமாட்டாரா?”
துச்சாதனன் “இது என் ஆணை! நம் நூற்றுவரில் எவரும் அவரைச் சென்று பார்க்கலாகாது. நூற்றுவர் மைந்தரில் ஒரு குழவியேனும் அவரருகே அணுகலாகாது” என்றான். கர்ணன் எழுந்து தன் சால்வையை தோளிலிட்டுக் கொண்டு “நான் சென்று பார்க்கிறேன்” என்றான். “மூத்தவரே…” என்றான் துச்சாதனன். கர்ணன் “நான் நூற்றுவரில் ஒருவன் அல்ல” என்றபின் வெளியே நடந்தான்.
விதுரர் அவனுக்குப்பின்னால் வந்தபடி “அதனால் ஏதும் பயனில்லை அங்கரே. அவர் கரும்பாறையைப்போல் இறுகிவிட்டார்” என்றார். கர்ணன் தலை குனிந்து ஒரு கையால் மீசையை நீவியபடி நடக்க விதுரர் விரைந்து அடிவைத்து அவனுக்குப்பின்னால் வந்து “இன்றுகாலை காந்தாரத்து அரசியரும் சிந்து நாட்டரசியும் சென்று அவர் முன் அமர்ந்து மன்றாடினார்கள். எச்சொல்லேனும் அவருக்குள் கடக்கும் என்றால் அது அவர்களின் சொல்லே. அவையும் வழிகாணாது பயனற்றன” என்றார்.
கர்ணன் முற்றத்துப் படிகளில் இறங்க விதுரர் மூச்சிரைத்து நின்றுவிட்டார். அவருக்குப்பின்னால் வந்த துச்சாதனன் “நம்மை புறக்கணிப்பவர்களிடம் ஏன் தலை தாழ்த்தவேண்டும்? மைந்தருக்கு தந்தையுடன் கடமையுண்டு. தந்தைக்கு மைந்தருடனும் கடமைகள் உண்டு” என்றான். துச்சலன் “அங்கரே, உறுதிபட ஒன்றை அவர் செவியிலிட்டு வாருங்கள். நாங்கள் எங்கள் மூத்தவரின் நிழல்கள் மட்டுமே. இப்பிறப்பில் தந்தையரோ மூதாதையரோ தெய்வங்களோ எங்களுக்கில்லை” என்றான்.
கர்ணன் தேரில் ஏறி அமர்ந்ததும் “புஷ்பகோஷ்டத்துக்கு” என்றபின் கண்களை மூடிக் கொண்டான். தேர்ச்சகடங்களின் ஒலி தனது குருதிக் குமிழிகளில் அதிரவைப்பதை விழிகளுக்குள் உணர்ந்தான். தடைக்கட்டை சகடங்களின் மேல் அழுந்தி கூச்சலிட தேர் நின்றபோது அதை ஒரு அடியென தன் பின் தலையில் உணர்ந்தான். “அரசே, புஷ்பகோஷ்டம்” என்று பாகன் சொன்னதும் எழுந்து படிகளில் கால்வைத்திறங்கி நின்றபோது பழமையான தூண்களும் முரசுப் பரப்பென கால்பட்டுத் தேய்ந்த படிகளும் கொண்ட அந்த மாளிகை முற்றிலும் அயலாகத் தெரிந்தது.
அவனுக்கு எப்போதும் மிக அணுக்கமாக இருந்தது அது. இக்கட்டுகளில், சோர்வுகளில் இயல்பாகவே நெஞ்சில் கோயிலென எழுவது. அதனுள் வாழ்ந்த தெய்வம் கல்லென மாறியதும் அதுவும் கற்குவியலென மாறிவிட்டது. திரும்பிச் சென்றுவிடவேண்டுமென்ற உணர்வை அடைந்தான். அங்கு வந்ததனால் எந்தப்பொருளும் இல்லை என்று தோன்றியது. அவ்வெண்ணத்தை உள்ளத்தால் உந்திக் கடந்து படிகளில் ஏறி இடைநாழியில் நடந்தான்.
அவன் அங்கே குண்டாசியை எதிர்பார்த்தான். இடைநாழியில் ஒரு தூணருகே குண்டாசி நின்றிருப்பதைக் கண்டதும் கால்கள் விரைவுகுறைந்தன. குண்டாசி அவனைக்கண்டதும் கள்மயக்கு கொண்டவர்களுக்குரியவகையில் அவனை நோக்கி கைசுட்டினான். “அங்கரே, நீர் வருவீர் என நான் நினைக்கவில்லை” என்றான். அவன் முன்வாயின் பற்களனைத்தும் உதிர்ந்திருந்தமையால் முகமே சிறுத்திருந்தது. மூக்கு வாயின் மேல் வளைந்திருந்தது. கழுத்தில் இரு நரம்புகள் புடைத்து நிற்க மெல்ல நடுங்கியபடி சிரித்து “வேதம்காக்க எழுந்த சூதன்மகன்! நன்று!” என்றான்.
“வருகிறாயா?” என்றான் கர்ணன். “எங்கே? கிழவரைப்பார்க்கவா?” என்றான் குண்டாசி. கர்ணன் “ஆம், வா...” என்றான். “நூற்றுவரில் எவரும் கிழவரைப்பார்க்கக் கூடாதென்ற ஆணை சற்றுமுன்னரே வந்தது. உடனே சென்று பார்க்கவேண்டுமென நினைத்தேன். ஆனால் உடனே வேண்டியதில்லை என்று தோன்றியது. என்னை ஆணையிட்டு நிறுத்த அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவனைச்சூழ்ந்து பறக்கும் நூறுவௌவால்களுக்கும் உரிமை இல்லை. ஆனால் அதற்காக இந்தக் குருட்டுக்கிழவருக்கு அவர் தன்மைந்தர்கள் நூற்றுவராலும் புறக்கணிக்கப்பட்டார் என்னும் தண்டனை கிடைப்பதை ஏன் நான் மறுக்கவேண்டும்?”
தொண்டைமுழை ஏறியிறங்க அவன் சிரித்தான். “மைந்தரில் ஒருவன் வந்தாலும் அவர் உள்ளம் நிறைவடையும் என்று தோன்றியது. ஆகவே நின்றுவிட்டேன்.” குழிந்த கன்னங்கள் அதிர கருகிய குழிகளுக்குள் குருதிபடிந்த சளி போன்ற விழிகள் உருள அவன் நகைத்தான். “அதுவே அவர் ஊழ் என்றால் அந்த ஊழாகி நிற்பதல்லவா என் பொறுப்பு? என் கடமையைச் செய்ய முடிவெடுத்தேன்.” கர்ணன் “யுயுத்ஸு அங்கிருப்பான்” என்றான். “இருக்கட்டும். இந்தப் பெருநகரின் கொடிவழி ஆற்றிய குருதிப்பழி முழுக்க அவன் தோள்களில் அல்லவா ஏறியமரப்போகிறது? ஷத்ரியனின் அழுக்கை சூத்திரன் சுமக்கட்டும்” என்றான் குண்டாசி.
கர்ணன் அவனை கடந்து சென்றான். “சினம் கொள்ளவேண்டாம் அங்கரே. நீங்கள்தான் ஷத்ரியராக ஆகிவிட்டீர்களே” என்றபடி குண்டாசி நடந்துவந்தான். “விழியற்றவரை நான் வெறுக்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவரது விழியின்மையையே வெறுக்கிறேன். எத்தனை தேர்ச்சியுடன் அவர் தான் விழையாதவற்றை நோக்கி விழியிலாதாகிறார்…!” கர்ணன் நின்று திரும்பி நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆ! விழியின்மை எனும் தற்காப்பு இல்லாத மானுடர் எவர்? அங்கரும் விழிமூடக்கற்றவர் அல்லவா?” என்றான் குண்டாசி.
“விலகு களிமகனே” என்றான் கர்ணன். “இதுநாள்வரை குருகுலத்தின் பெருங்களிமகன் என்னும் புகழுடனிருந்தேன். இன்று அரசன் என்னை கடந்துசென்றுவிட்டான்” என்றான் குண்டாசி. “என்னைப்போல அவன் குடித்துவிட்டு உண்மைகளை சொல்வதில்லை. உண்மையை எதிர்கொள்பவர்களை குடி கோமாளிகளாக ஆக்குகிறது. அவர்களை கரைத்தழிக்கிறது. உண்மையை விழுங்குபவர்களை அது எரித்தழிக்கிறது…” அவன் கைநீட்டி “இவ்விரைவில் சென்றால் அஸ்தினபுரியின் அரசருக்கு விண் துணையாக இன்னொரு களிமகனாகிய நானே செல்லவேண்டியிருக்கும்” என்றான்.
கர்ணன் அவன் சொற்களைக் கேட்டபடி நடந்துசென்றான். “கிழவர் இந்நாள் வரை அனைத்தையும் பிறர்மேல் ஏவி தன்னை காத்துக்கொண்டவர் அங்கரே. இன்று ஏவியவை அனைத்தும் எதிர்மீண்டு அவர்மேல் பாய்கின்றன. அவர் உண்ணாநோன்பிருந்து உயிர்துறப்பதில் அழகிய ஒருமை உள்ளது. விழியிழந்தவருடன் போரிட எவர் விழைவார்? ஆகவே அவருக்கு கதையாலோ கைச்சுருளாலோ இறப்பில்லை. பசி விழிநோக்கா பெரும்பகை. அது அவரைக் கொல்லும் என்றால் அஸ்தினபுரிக்கு இன்னொரு மூதாதைதெய்வம் கிடைப்பார்.”
கர்ணன் பின்னால் குண்டாசியின் குரலை கேட்டுக்கொண்டே சென்றான். “இந்த மூதாதை தெய்வத்திற்கு நாம் எப்படி சிலைவைக்கவேண்டும் தெரியுமா? ஓர் ஆமைவடிவில். ஐந்தும் உள்ளிழுத்து அமைந்த பெரும் கடலாமை. முட்டைகளைப்போட்டுவிட்டு திரும்பாமல் சென்றுவிடும் பெருந்தந்தை.” குண்டாசியின் குரல் அவனுள் இருந்து என கேட்டுக்கொண்டே இருந்தது. “வணங்குபவரை பொருட்படுத்தா தகுதியாலேயே அவர் தெய்வமென ஆகிவிட்டார்…”
[ 20 ]
கர்ணன் தனது காலடியோசையை கேட்டபடி சென்று இசைக்கூடத்தின் வாயிலை அடைந்தான். அங்கு நின்றிருந்த காவலர் தலைவணங்கி ”எவரையும் உள்ளே விடவேண்டாம் என்று ஆணை உள்ளது அரசே” என்றான். “நான் உள்ளே செல்லவேண்டும், விலகு” என்று சொல்லி அவன் தோளில் கைவைத்து விலக்கி கதவைத் திறந்து உள்ளே சென்றான். இயல்பாகவே விப்ரர் அமர்ந்திருக்கும் குறுபீடத்தை நோக்கி திரும்பி அங்கு அவரது இல்லாமையைக் கண்டு சிறு அதிர்வை அடைந்தான்.
பாதக்குறடுகளை விலக்கி மரவுரி இட்ட மெத்தைமேல் இரை நோக்கிச் செல்லும் புலிபோல் காலெடுத்துவைத்து நடந்தான். இசைக்கூடத்தின் மையத்திலிருந்த சுனை காலையொளி பட்டு நீலச்சுடர் எரியும் பேரகல் போல் ஒளிகொண்டிருந்தது. அவ்வொளியின் அலையில் சூழ்ந்திருந்த தூண்கள் நெளிந்தன. ஓசைமுழுமைக்காக அங்கே தேக்கப்பட்டிருந்த அமைதி நெடுநேரமாக கலைக்கப்படாமையால் குளிர்ந்து நீர்மை கொண்டு பெருகியிருந்தது.
நடுவே தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் அடுக்கின்மீது கால் மடித்து அமர்ந்து மடியில் கைகோத்து சற்றே தலைதூக்கி தன்னுள் மூழ்கி இருந்த திருதராஷ்டிரரை அவன் முதலில் கண்டான். அவரது இமைகள் மூடியிருக்க உள்ளே கருவிழிகள் ஓடின. அருகே வலப்பக்கம் விப்ரர் நாய்போல உடலைச் சுருட்டி படுத்திருந்தார்.
சற்று அப்பால் தரையில் பதினொரு காந்தாரியரும் துச்சளையும் அமர்ந்திருந்தனர். அசைவின்மை திரைச்சீலை ஒவியமென அவர்களை ஆக்கியது. கர்ணனைக் கண்டதும் அப்பால் தூண்சாய்ந்து நின்றிருந்த சஞ்சயன் அருகே வந்து கைகூப்பி முறைமை வணக்கம் செய்தான். தலையசைத்து அதை ஏற்றபின் தாழ்ந்த குரலில் “உண்ணாநோன்பென்று அறிந்தேன்” என்றான். அவன் “ஆம்” என்றான். “நீரும் அருந்த மறுக்கிறார். ஏனென்பதை விதுரரிடம் சொல்லிவிட்டேன் என்றார்.”
கர்ணன் சென்று திருதராஷ்டிரரின் முன் குனிந்து அவரது மடித்தமைத்த வலக்கால் கட்டை விரலைத் தொட்டு சென்னி சூடிவிட்டு அவர் முன் அமர்ந்தான். அவன் வந்ததை அவர் அறிந்தது உடலில் பரவிய மெய்ப்பில் தெரிந்தது. ”தங்கள் கால்களை சென்னி சுடுகிறேன் தந்தையே” என்றான் கர்ணன். அவரது விழிக்குழிகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன.
“தங்கள் ஆணையை விதுரர் சொன்னார். நான் தங்கள் மைந்தன். ஆனால் தங்கள் மைந்தனுக்கு முற்றிலும் கடன் பட்டவன். இப்பிறவியில் அவரது விழைவன்றி பிறிது எதுவும் எனக்கு முதன்மையானதல்ல. தாங்களேகூட” என்றான். உறுதியானகுரலில் “அவர் பொருட்டு இங்கு பேசவந்துள்ளேன்” என்று தொடர்ந்தான்.
திருதராஷ்டிரரின் முதிர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல பிரியும் ஒலியைக்கூட கேட்க முடிந்தது. “நேற்று மாலை காந்தார இளவரசரும் கணிகரும் அரசரைக்காண வந்தனர். போரை தவிர்க்கும்படி பீஷ்மபிதாமகரின் ஆணையை ஏற்று கணிகர் வகுத்த மாற்றுத் திட்டமே இப்பகடைக்களம் என்றனர். இதற்கு அஸ்தினபுரியில் முன் மரபு உள்ளது. பகடை ஆடுதல் என்பது தீங்கென்று நூல்கள் கூறுகின்றன என்பது உண்மை. ஆனால் போரெனும் பெருந்தீங்கை தவிர்ப்பதற்கு பிறிதொரு வழியில்லை என்றனர்.”
“தங்கள் மைந்தர் ஏற்கவில்லை. பகடைபோல் இழிவில்லை என்று கொதித்தார். நேற்றிரவு முழுக்க தங்கள் மைந்தரின் அருகமர்ந்து போரிலிருந்து அவரை விலக்கி பகடைக்களத்தை ஏற்க வைத்துள்ளேன். உடன்பிறந்தார்குருதியை தவிர்க்க உகந்த வழியென்றே நானும் அதை எண்ணுகிறேன்” என கர்ணன் தொடர்ந்தான். “ஆனால் இன்று பகடைக்களத்துக்கு தங்கள் எதிர்ப்பை அறியவந்தபோது என்ன செய்வதென்று அறியாது நின்றிருக்கிறேன்.”
“மீண்டும் அரசரின் உள்ளம் போர் நோக்கி சென்றால் அதைத் தடுக்க எவராலும் இயலாது. இம்மண்ணில் உடன்பிறந்தார் குருதியொழுகாமல் இருக்க ஒரே வழி பன்னிரு பகடைக்களம் மட்டுமே. ஏற்றருளுங்கள்” என்றான்.
திருதராஷ்டிரரின் முகத்தில் எவ்வுணர்வும் தென்படாமை கண்டு “அரசே, தாங்கள் தந்தை மட்டுமல்ல, பேரரசரும் கூட. தங்கள் மைந்தருக்கு மட்டுமல்ல இந்நகரின் அத்தனை மக்களுக்கும் தந்தையானவர். ஒரு பெரும் போர்க்களம் எழுமென்றால் அதில் இறந்து வீழும் ஒவ்வொருவருக்கும் நீர்ப்பலி அளிக்கப்படுகையில் மூதாதையர் நிரைக்கு நிகராக உங்கள் பெயரும் சொல்லப்படும் என்று அறிவீர்கள். தங்கள் மைந்தரை மட்டுமல்ல இந்நகரின் படைவீரர் அனைவரையும் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள். போர் தவிர்க்கப்படுவதற்கு ஒரே வழி பகடைக்களம் மட்டுமே” என்றான்.
மதம் கொண்டு நின்றிருக்கும் களிறு ஆணைகளை புரிந்து கொள்ளாது என்று கண்டிருந்தான் கர்ணன். தன் மொழியே அவர் சித்தத்தை அடையவில்லை என்று தோன்றியது. “தந்தையே, பெருந்தந்தையென்று தாங்கள் இங்கமர்ந்திருப்பதும் உங்கள் குருதியிலிருந்து பெற்றுப் பெருகிய மைந்தராலேயே. அவர்களில் ஒருவர்கூட இன்று தங்களுடன் இல்லை. முற்றிலும் தனித்து தாங்கள் அடைவதுதான் என்ன?” என்றான்.
அவர் அசைவற்றிருப்பதை நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் “என் சொற்களை சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்றே வந்தேன். தங்கள் முடிவால் உடன்பிறந்தார் கொலைக்கு கூடுதலாக தந்தைக்கொலை செய்தாரென்ற பெரும்பழியையும் தங்கள் மைந்தர் மேல் சூட்டிவிட்டு செல்கிறீர்கள். இத்தவத்தின் விளைவென்பது அது மட்டுமே” என்றபின் எழுந்து மீண்டும் அவர் கால் தொட்டு சென்னி சூடி வெளியே நடந்தான்.
வெளியே வந்து இடைநாழியில் வீசிய காற்றில் உடலை உணர்ந்தபோது கர்ணன் விழி இலாதாக்கும் இருளிலிருந்து ஒளிக்கு வந்ததுபோல் உணர்ந்தான். எழுமூச்சுவிட்டு மேலாடையை சீரமைத்து திரும்பியபோது கனகரும் மருத்துவர் கூர்மரும் அவனுக்காக காத்து நின்றிருந்தனர். கனகர் தலைவணங்கி அவனை அணுகி “நேற்று மாலை மூவந்தி வேளையில் அமர்ந்தார். இத்தருணம் வரை உணவோ நீரோ அருந்தவில்லை. ஐந்து நாழிகை வேளைக்கு மேலாக அவர் எதுவும் அருந்தாமல் இருந்ததே இல்லை” என்றார்.
“அரசியர்?” என்று அவன் கேட்டான். “அவர்களும் உணவருந்தவில்லை. இன்று காலைதான் அவர்களுக்கு அரசர் வடக்கிருக்கும் செய்தி தெரிந்தது. அனைவரும் வந்து அருகமர்ந்துகொண்டனர்” என்றார் கனகர். “பேரரசி என்ன சொன்னார்?” என்றான். “அவர் பேரரசரின் கால்களைத் தொட்டு சென்னிசூடி வாழ்வெனினும் நீப்பெனினும் இறப்பெனினும் உடனுறைதல் எங்கள் கடன் என்று மட்டும் சொல்லி இடப்பக்கமாக சென்று அமர்ந்தார். அவர் தங்கையரும் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். பின்பு ஒரு சொல்லும் அவர்கள் சொல்லவில்லை” என்றார்.
“ஆனால் சிந்து நாட்டரசி தந்தையிடம் பேசினார்” என்று மருத்துவர் சொன்னார். “அப்போது நான் உடனிருந்தேன். தன் தமையர்களை பழிசூழ்ந்தவர்களாக்க வேண்டாம் என்றும், அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்தே உளஉறுதியை பெற்றுக்கொண்டவர்கள் என்பதால் ஒருபோதும் இறங்கிவரப்போவதில்லை என்றும் சொன்னார். எச்சொல்லும் அரசரை சென்றடையவில்லை.”
கர்ணன் “அவர் உடல்நிலை என்ன?” என்றான். “பேரரசரின் உடல்நிலை நன்றாகவே உள்ளது. நிகரற்ற ஆற்றல் கொண்டவர் என்பதால் இருபது நாட்கள் வரைக்கும் கூட உணவோ நீரோ இன்றி அவர் நலமாக இருப்பார். ஆனால் விப்ரர் இன்னும் இருநாட்கள்கூட உணவின்றி இருக்க முடியாது” என்றார். ”ஆம், இப்போதே மிகவும் சோர்ந்திருக்கிறார்” என்றான் கர்ணன். “அவர் உடலில் நெடுநாட்களுக்கு முன்னரே நீர்வற்றத் தொடங்கிவிட்டது. மிகக்குறைவாகவே உணவு அருந்திக் கொண்டிருந்தார். இன்று காலை அவர் நாடியை பற்றினேன். வீணைநரம்பென அதிர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.
“என்ன செய்வதென்று அறியேன். இருதரப்பும் இப்படி உச்ச விசை கொண்டுவிட்டால் எவர் என்ன செய்யமுடியும்?” என்றான் கர்ணன். கனகர் “செய்வதொன்று உள்ளது” என்றார். கர்ணன் அவரை நோக்க “சென்று அரசரை இங்கு வரச்சொல்லுங்கள் அங்கரே” என்றார் கனகர். கர்ணன் “அவர் வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. இதற்கு நிகரான உறுதி கொண்டவர் அவர்” என்றான்.
“அவர் தன் முடிவிலிருந்து இறங்க வேண்டியதில்லை. ஆனால் அவர் மைந்தனென வந்து நின்று தந்தையிடம் இறைஞ்சினால் பேரரசரின் உறுதி கரையும். அவர் சினந்தெழுந்தது அஸ்தினபுரியின் அரசருக்கு எதிராகவே. பேரரசரால் தோளிலும் தலையிலும் சூடப்பட்ட அச்சிறுமைந்தனாக மாறி அரசர் இங்கு வந்தால் பேரரசரால் ஒருபோதும் மறுக்க முடியாது” என்றார் கனகர். “அங்கரே, மைந்தர் தந்தையின் நெஞ்சின் ஆழத்தில் அறியாக் குழவி என்றே எப்போதும் வாழ்கின்றனர்.”
கர்ணன் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மை. நான் அரசரிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றபின் நடந்தான்.
[ 21 ]
நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன... எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார்? இருபது நாட்களா? களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை அல்ல. மைந்தன் என அவர் மடியிலமர்த்திய யுயுத்ஸு அதை செய்யட்டும்.”
தன் உடன்பிறந்தவர்களிடம் “எவருக்கும் என் ஆணை என ஏதுமில்லை. விழைபவர் சென்று அவரது கால்தாங்கலாம். முடிசூட்டி அரசனாக்குவார் என்றால் அமரலாம்...” என்றான். துச்சாதனன் “மூத்தவரே, நீங்கள் வீண்சொற்கள் எடுக்கவேண்டியதில்லை. உங்களை அன்றி பிறிதெதையும் அறியாதோர் நாங்கள்” என்றான். சுபாகு “உங்கள் முகமென்றே பேரரசரையும் அறிந்திருக்கிறோம். உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு இறையாணைகள்” என்றான்.
“எதையும் மாற்றவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் அமைக்க ஓர் ஒப்புதல் தேவை... அதை அவர் அளிக்கவேண்டியதுமில்லை. மறுக்காமலிருந்தால் போதும்” என்றான் கர்ணன். “பன்னிரு களத்திற்கு முறைப்படி யுதிஷ்டிரனை அழைக்கவேண்டியவர் அவர். அவரது ஆணையிருந்தால் மட்டுமே விதுரர் செல்வார். விதுரரன்றி எவர் சென்றாலும் யுதிஷ்டிரனை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியாது.” சகுனி “ஆம், நான் அவரிடம் பலமுறை பேசிவிட்டேன். சொற்களை அவர் அறியவேயில்லை” என்றார்.
கணிகர் புன்னகைத்து “எதிர்வினையாற்றப்படாத சொற்கள் நன்று. அவை விதைகள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி “உங்கள் சிரிப்பு என்னை எரியச் செய்கிறது, அமைச்சரே. நாம் எத்தகைய இடரில் வந்து நின்றிருக்கிறோம் என உண்மையிலேயே அறிவீரா?” என்றார் சகுனி. “ஆம், அறிவேன்” என்றபின் “ஆறு நாட்களுக்குமேல் தாங்கமாட்டார்” என்றார். “அவரா? அவர் உடல்...” என சகுனி தொடங்க “அவர் உடல் தாங்கும். ஆன்மா தாங்காது. அது ஏற்கெனவே மெலிந்து நீர்வற்றி இருக்கிறது...” என்று சொல்லி கணிகர் உடல்குலுங்க சிரித்தார்.
கர்ணன் நாள்தோறும் வடக்கிருக்குமிடத்திற்கு சென்று வந்தான். அங்குள்ள குளிர்ந்த அமைதி பெருகியபடியே வந்தது. ஒட்டடைகளைக் கிழித்து அகற்றி செல்வது போல செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் மேலும் மேலுமென வஞ்சம்கொள்ளும் தெய்வத்தின் சிலை அமைந்த கருவறைமுன் சென்றமர்ந்து மீள்வதைப்போல் திரும்பிவரவேண்டியிருந்தது. நான்காவது நாள் காந்தாரியும் திருதராஷ்டிரரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். பிறர் சோர்ந்து விழுந்துவிட்டனர்.
அவன் திரும்பும்போது எதிரே பானுமதி வருவதைக்கண்டு நின்றான். தலைவணங்கி முகமனுரைத்தான். அவள் பெருமூச்சுடன் விழி தாழ்த்தினாள். “பேரரசியிடம் பேசினீர்களா?” என்றான் கர்ணன். “இல்லை...” என்றாள் அவள். அவன் மேலும் கேட்க எண்ணியதை தவிர்த்து முன்னால் சென்றபோது அசலையும் கிருஷ்ணையும் வருவதை கண்டான். அணிகளும் சிலம்பும் ஒலிக்க ஓடிவந்து அசலையின் தோளை பற்றிக்கொண்ட கிருஷ்ணை “நான் சொன்னேன் அல்லவா? அந்த யாழின் பெயர் மகரம். அதை தெற்கின் பாணர்கள் வாசிக்கிறார்கள். அங்கே பாருங்கள், சிற்றன்னையே” என்றாள்.
“இருடி” என்றாள் அசலை. அதற்குள் கர்ணனை பார்த்துவிட்டு தலைவணங்கி “பணிகிறேன், மூத்தவரே” என்றாள். “என்ன பார்த்தாய்?” என்று கர்ணன் புன்னகையுடன் கிருஷ்ணையிடம் கேட்டான். அவள் கரிய முகம் நாணத்தால் அனல்கொண்டது. “இல்லை” என விழி தாழ்த்தி சிரிப்புடன் சொன்னாள். அசலை “ஒரு விறலியாக ஆகிவிடவேண்டும் என்பதே அவள் விருப்பமாம். விறலியாக எப்படியெல்லாம் ஏழு மலைகளுக்கும் ஏழு ஆறுகளுக்கும் அப்பாலுள்ள நாடுகளுக்கு செல்லப்போகிறாள் என்பதைப் பற்றியே எப்போதும் பேச்சு” என்றாள்.
கர்ணன் சிரித்து “பாரதவர்ஷத்தின் பேரரசியாக வேண்டியவர் விறலியாவதா?” என்றான். கிருஷ்ணை நாகம்போல தலைதூக்கி “பாரதவர்ஷத்தின் அரசியென்றானால் இதே அரண்மனையில் இதே முகங்கள் நடுவே அரியணை அமர்ந்திருக்கவேண்டும். பாரதவர்ஷம் ஏடுகளாகவும் காணிக்கைகளாகவும் வந்து முன்னால் நிற்கும். விறலியென்றானால் உண்மையிலேயே இந்த மண்ணையும் மக்களையும் பார்க்க முடியும்” என்றாள்.
“நன்று” என்றான் கர்ணன் நகைத்தபடி. “நான் பொய்யாகச் சொல்லவில்லை. விறலியாக ஒருநாள் இந்த அரண்மனையிலிருந்து கிளம்பிச் செல்லத்தான் போகிறேன்” என்று கிருஷ்ணை சொன்னாள். “உனக்கு எவர் பெயர் இடப்பட்டிருக்கிறதென்று அறிவாயா?” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியின் சிறுவடிவம் நீ.” கிருஷ்ணை முகம் சுளித்து “இல்லை. நான் சூததேவரின் துணைவியின் மறுவடிவம். அவள் பெயரும் கிருஷ்ணைதான்... அங்கே தென்னகத்தில் ஓடும் ஒரு பேராற்றின் பெயரும் கிருஷ்ணை” என்றாள்.
கர்ணன் “சரி... நான் சொல்சூழவில்லை... செல்க!” என்றான். அவள் தலையில் கைவைத்து வாழ்த்தியபின் சென்று படிகளை அணுகியபோது ஓர் எண்ணம் எழுந்தது. அங்கே நின்றபடி “கிருஷ்ணை” என்றான். “சொல்லுங்கள், பெரியதந்தையே” என்றபடி அவள் கால்சிலம்பு ஒலிக்க அவனை நோக்கி ஓடிவந்தாள். “எதற்காக ஓடுகிறாய்? மெல்ல செல்” என்றாள் அசலை. கிருஷ்ணை அவனருகே வந்து “இப்படி ஓடினால்தான் உண்டு. இளவரசியர் ஓடக்கூடாதென்கிறார்கள்...” என்றாள்.
“அரசரை இறுதியாக எப்போது பார்த்தாய்?” என்றான் கர்ணன். “ஒருமாதம், இல்லை இரண்டு மாதம் இருக்கும். இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வதற்கு முன்பு.” கர்ணன் “அவர் உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான். “ஒன்றும் சொல்லவில்லை. என்னைப் பார்த்தால் முகம் மலர்ந்து சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருப்பார். பிறகு திடுக்கிட்டதுபோல நோக்கை விலக்கிக்கொள்வார். என்னிலிருந்து ஏதோ புதிய பூதம் பேருருக்கொண்டு எழக் கண்டதுபோல கண்களில் திகைப்பு தெரியும்” என்றாள் கிருஷ்ணை.
“அன்று என் தலையைத் தொட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு வருகிறாயா என்றார். நான் ஏன் என்றேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பார்க்கலாமே என்றார். அவரை நான் ஏன் பார்க்கவேண்டும்? அவர் என்ன இசையரசியா, எளிய நாட்டரசிதானே என்றேன். புன்னகையுடன் ஆம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்றாள் கிருஷ்ணை. “எப்போதும் அவர் என்னிடம் நெடுநேரம் நகையாடுவதில்லை. நான் பேசுவது அவருக்குப் புரிவதில்லை. என்னை இன்னமும் சிறுமி என்றே எண்ணுகிறார்.”
கர்ணன் சிரித்து “நீ மிகப்பெரிய பெண் அல்லவா?” என்றான். “பேரரசரை பார்த்தபின் சேடியை அழைத்தபடி அரசரின் மந்தண மாளிகைக்கு வா!” கிருஷ்ணை “நானா?” என்றாள். “ஆம், நீ அரசரை பார்த்தாகவேண்டும்.” அவள் விழி சுருக்கம் கொள்ள “ஏன்?” என்றாள். “உன் தாதை இங்கே உண்ணாநோன்பிருக்கிறார் தெரியுமா?” என்றான். “ஆம், அதனால்தான் அவரை பார்க்க வந்தேன். இங்கே எனக்கு மிகமிகப் பிடித்தமானவர் அவரே. அவர் உண்ணாநோன்பிருக்கிறார் என்றதுமே பார்க்கவேண்டுமென விழைந்தேன். எவரும் செல்லக்கூடாதென்று அரசரின் ஆணை என்றாள் செவிலி. நான் செல்வேன், என்னை நாடுகடத்தட்டும், விறலியாக யாழுடன் கிளம்பிவிடுகிறேன் என்று சொல்லி நான் சிற்றன்னையுடன் கிளம்பிவந்தேன்.”
“உன் தாதை உணவருந்தாமலிருப்பது உன் தந்தை வந்து அவர் பாதம் பணிந்து உண்ணும்படி கோராததனால்தான்” என்றான் கர்ணன். “நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. உன் அன்னை சொல்லையும் ஏற்கவில்லை. நீ வந்து சொன்னால் கேட்பார்.” அவள் “நான் சொன்னாலா?” என்றாள். “ஆம், அதை உன்னால் உணரமுடியவில்லையா?” என்றான். அவள் எண்ணிநோக்கி “ஆம், நான் சொன்ன எதையுமே அவர் தட்டியதில்லை” என்றாள். “ஆம், வருக!”
“நான் இப்போதே வருகிறேன்” என்றாள். “இல்லை, நீ பேரரசரை பார்ப்பதற்காக வந்தாயல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவர் உண்ணாநோன்பிருக்கையில் வெறுமனே நோக்குவதிலென்ன பொருள் உள்ளது? நான் முதலில் தந்தையை வரச்செய்கிறேன். அவர் சொல்லி தாதை உணவருந்தியபின் அவரிடம் இசைபற்றி பேசிக்கொள்கிறேன்” என்றாள் கிருஷ்ணை. “ஆம், அது நன்று. அன்னையிடம் சொல்லிவிட்டு வா” என்றான்.
அவள் பானுமதியிடம் விடைபெற்று அவனுடன் வந்தபடி “பெரியதந்தையே, நான் உண்மையிலேயே விறலியாகத்தான் விரும்புகிறேன். யாழ் எனக்கு இசைகிறது. நானே பாடல் கட்டி பாடவும் செய்கிறேன். நேற்றுமுன்நாள் இங்கே வந்த கோசலநாட்டு விறலியும் என்னை மிகச்சிறந்த பாடகி என்றாள். அது நானே இயற்றிய பாட்டு” என்றாள். “என்ன பாடல்?” என்றான் கர்ணன். “அம்பையன்னையின் கதை. அவரை நிருதர் படகில் வைத்து ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது அவர் சீதையின் வாழ்க்கையை பாடுகிறார். அதைக் கேட்டு அம்பையன்னை புன்னகைசெய்கிறார்...”
“அது முன்னரே எழுதப்பட்டுவிட்டதல்லவா?” என்றான். அவள் சினந்து “ஆம், ஆனால் அதில் வேறுவகையில் எழுதப்பட்டிருந்தது. அன்னை அழுவதாக எழுதியிருந்தார்கள். அன்னை ஏன் அழவேண்டும்? அவர் இவர்களைப்போல அரண்மனைக்குள் அடைபட்ட வெறும் அரசகுலப் பெண்ணா? சீற்றம் கொண்ட சிம்மம் என்றல்லவா அவரைப்பற்றி பாடுகிறார்கள்? ஆகவேதான் சிரிப்பதாக மாற்றிக்கொண்டேன்” என்றாள். கர்ணன் “ஏன் சிரிக்கவேண்டும்?” என்றான். அவள் குழம்பி “அந்தக் கதையைக் கேட்டு...” என்றபின் “அவர் சிரிப்பதை நான் பார்த்தேன்” என்றாள்.
கர்ணன் அவள் தலையை செல்லமாக தட்டினான். “நான் சொல்வதை எவருமே நம்புவதில்லை” என்றபடி அவள் அவனுடன் வந்தாள். “சிறியதந்தை விகர்ணரிடம் மட்டுமே நான் பேசுவேன். அவர்தான் நான் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிறார். நான் விறலியாக இங்கிருந்து செல்லும்போது அவரும் உடன்வருவதாக சொன்னார்.” கர்ணன் “அவன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தான் அல்லவா? என்ன சொன்னான்?” என்றான்.
“அவர்தான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி நாடகவிறலி போலிருக்கிறார் என்றார். செந்நிற மணிமுடி சூடியபோது அவர் தலை தீப்பற்றி எரியும் கரும்பனை போலிருந்தது என்றார். நான் சிரித்தேன்.” கர்ணன் அவளை ஓரப்பார்வையால் நோக்கிக்கொண்டு நடந்தான். கைகளைத் தூக்கி எம்பிக்குதித்து ஒரு தோரணத்தைப் பிடித்து இழுத்தாள். அதை வாயில் வைத்து கடித்து உரித்து அப்பால் வீசினாள். “மாவிலை. கட்டி ஒருவாரமாகிறது” என்றாள்.
தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு “பெரியதந்தையே, நானே தேரை ஓட்டினால் என்ன?” என்றாள். “பிறகு... இப்போது நாம் அரசப்பணியாக சென்றுகொண்டிருக்கிறோம்” என்றான் கர்ணன். “ஆம், நான் அரசரிடம் என்ன சொல்லவேண்டும்?” என்றாள். “நீ அவரை நோக்கிச் சென்று அவர் கைகளைத் தொட்டு கொஞ்சலாக தந்தையே தாதையிடம் சென்று பேசுங்கள் என்று மட்டும் சொல். அவர் சினந்தால் கெஞ்சு!” என்றான் கர்ணன். “அவ்வளவு போதுமா?” என்றாள். “வேறென்ன சொல்வாய்?” என்றான். “அரசுசூழ்தல் என்றால் சிக்கலான பெரிய சொற்றொடர்கள் தேவை அல்லவா?” என்றாள்.
“ஆம், ஆனால் அதை நாம் பேசவேண்டியதில்லை. நாம் பேசி முடித்தபின் சூதர்கள் அதை உருவாக்கிக்கொள்வார்கள்” என்றான் கர்ணன். “அப்படியா? நான் அதையெல்லாம் அரசர்களும் அரசியரும் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.” கர்ணன் “உன் தந்தையும் தாயும் அப்படியா பேசிக்கொள்கிறார்கள்?” என்றான். “அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை இப்போதெல்லாம். அன்னை தனித்திருந்து அழுகிறார்கள்.” கர்ணன் “உன் தந்தை தாதையிடம் பேசிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்” என்றான்.
துரியோதனனின் அவை முன் நின்றிருந்த துச்சலன் கிருஷ்ணையைக் கண்டதும் திகைத்து “மூத்தவரே” என்றான். “நான் அழைத்துவந்தேன்” என்றான் கர்ணன். சுபாகு உடனே புரிந்துகொண்டு “ஆம், இது உகந்த வழிமுறையே” என்றான். துர்மதன் “என்ன வழிமுறை?” என்றான். துச்சகன் “அரசர் படைநகர்வு தொடர ஆணையிட்டிருக்கிறார், மூத்தவரே. படைத்தலைவர்கள் அனைவரையும் இன்றுமாலை கங்கைக்கரையில் சந்திக்கிறார்” என்றான்.
“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். “ஓலைகளை நோக்குகிறார்” என்றான் சுஜாதன். கர்ணன் கதவைத் திறந்து உள்ளே செல்ல கிருஷ்ணை அஞ்சிய காலடிகளுடன் தொடர்ந்து உள்ளே வந்தாள். ஓசை கேட்டு திரும்பிய துரியோதனன் அவளைக் கண்டு புருவம் சுருங்க கர்ணனை நோக்கினான். “பேரரசரை நோக்க சென்றிருந்தேன். உடன் வந்தாள். உங்களைப் பார்க்கவேண்டும் என்றாள்” என்றான்.
“ஏன்?” என்றான் துரியோதனன். அவளை நோக்காமல் விழிவிலக்கி “இது போர்க்காலம்...” என்றான். “தந்தையே, தாதையிடம் சென்று பேசுங்கள்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருந்த தெளிவைக்கண்டு கர்ணன் திரும்பி அவளை நோக்கினான். பிறிதொருவள் எனத் தோன்றினாள். “என்ன?” என்றான் துரியோதனன். “தாதை உணவருந்தாமலிருந்தால் இந்நகர் அழியும். நீங்கள் எதையும் வெல்லப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை.
திகைத்தவன்போல துரியோதனன் அவளை நோக்கினான். “தாதை உணவருந்தாவிட்டால் நானும் உணவருந்தப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை. சீற்றத்துடன் துரியோதனன் “போ... மகளிர்மாளிகைக்குச் செல். இது உன் இடமல்ல” என்றான். “நான் பிறிதேதும் சொல்வதற்கில்லை” என்றபின் அவள் திரும்பி கதவைத் தொட “நில்... என்னை அச்சுறுத்துகிறாயா?” என்றான். “இல்லை, நான் சொன்னவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றாள் கிருஷ்ணை.
“சரி, நான் சென்று அவரிடம் பேசுகிறேன்” என்றான் துரியோதனன். “இன்றே பேசுங்கள்... இப்போதே செல்லுங்கள்” என்றாள். துரியோதனன் “சரி... நீ உன் விளையாட்டறைக்குச் செல்” என்றான். அவள் பெருமூச்சுவிட்டாள். “சரி என்றேனே?” என துரியோதனன் கூச்சலிட்டான். “நன்று, தந்தையே” என்றபின் அவள் வெளியே சென்றாள்.
துரியோதனன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “பேரரசரிடம் நீங்கள் ஒரு இளமைந்தனாகப் பேசினால் போதும், அரசே” என்றான் கர்ணன். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்...” என்று துரியோதனன் கூவினான். புன்னகையுடன் கர்ணன் “சரி” என்று சொல்லி கதவைத் திறந்து வெளியே சென்றான்.
அவள் சாளரத்தருகே நின்றிருந்தாள். முகத்தில் ஒளி அனல்செம்மையெனத் தெரிந்தது. அவன் அருகே வந்து “செல்வோம்” என்றான். “ஆம்” என அவள் அவனுடன் வந்தாள். இடைநாழியைக் கடந்து படியிறங்குவது வரை அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தேரில் அவளை ஏற்றி கர்ணன் “நன்று செய்தாய், கிருஷ்ணை. உன்னால் மட்டுமே முடியும்” என்றான். அவள் அவனை கனவு காண்பது போன்ற விழிகளுடன் நோக்கி “ஆம்” என்றாள். புரவிகள் வால்சுழற்றி குளம்பெடுக்க தேர் மணியோசையுடன் கிளம்பிச்சென்றது.
[ 22 ]
திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து துரியோதனன் தணிந்த குரலில் “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. “நான் நான்கு நாட்களாக வெறிபிடித்தவன் போல உண்டேன். நீங்கள் அருந்தாத உணவையும் சேர்த்து உண்டேன்” என்றான். அவர் மறுவினை காட்டவில்லை. “தந்தையே, என்னை நீங்கள் ஏன் வாழவைத்தீர்கள்? நிமித்திகர் சொன்னபோதே என்னைத் தூக்கி காட்டில் வீசியிருக்கலாமே? அன்றே நாயும் நரியும் கிழித்துண்ண மண்வாழ்வை முடித்திருப்பேனே?” என்றான்.
அவன் குரல் இடறியது. “நினைவறிந்த நாள் முதல் சிறுமைகளை அன்றி எதை அறிந்தேன்? கலிப்பிறப்பென்றனர். கரியவிசை என்றனர். இன்றும் நான் குலம் அழிக்கும் நச்சு என்றே கருதப்படுகிறேன். உங்களைப்போல விழியிலாதவனாக இருந்திருக்கலாம். பிறவிழிகளையாவது நோக்காமலிருந்திருப்பேன்.”
பெருமூச்சுடன் அவன் தொடர்ந்தான். “நான் வெல்ல எண்ணுவது மண்ணை அல்ல, தந்தையே. புகழையும் அல்ல. இவ்விழிகளைத்தான். உளம் அமைந்த நாள்முதலாக நான் கண்டுவரும் இந்த நச்சு விழிகளின் முன் தலைதருக்கி எழுந்து நிற்கவிரும்புகிறேன். பாரதவர்ஷத்தை முழுதாள விழைகிறேன் என்றால் அது பாரதவர்ஷமே என்னை வெறுக்கிறதென்பதனால்தான்...”
இசைக்கூடத்தில் செறிந்திருந்த அமைதியில் விப்ரரின் சளிச்சரடு அதிரும் மூச்சு மட்டும் ஒலித்தது. அவரது கால்கள் நீர்வற்றிய வாழைமட்டை போலிருந்தன. “இந்திரப்பிரஸ்தத்தின் அவையில் யுதிஷ்டிரன் சூடி அமர்ந்த அந்த மணிமுடியை என்னால் ஒரு கணமும் மறக்கமுடியவில்லை, தந்தையே. ஆம், அதுவேதான். அந்தப் பெருநகரம். அதன் எண்ணக்குறையாத கருவூலச்செல்வம். அங்கே வந்து பணிந்த மன்னர்நிரை. அதைத்தான் நான் விழைகிறேன். இனி அதை மறந்து ஒருகணம் கூட என்னால் வாழமுடியாது.”
“நான் எதையும் மழுப்பவில்லை. நான் பொறாமையால் எரிகிறேன். பொறாமை. அல்லது அதை ஆற்றாமை என்று சொல்லவேண்டுமா? நான் அந்த அரியணையில் அமர முடியும். அந்த மணிமுடியை சூடவும் முடியும். அதற்கான தகுதியும் ஆற்றலும் எனக்குண்டு. ஆனால் அறத்தால் கட்டுண்டிருக்கிறேன். தங்கள் ஆணையில் சிக்கியிருக்கிறேன்.” கசப்புடன் சிரித்து “ஆனால் அறச்செல்வன் என்ற பெயரும் அவனுக்குரியதே” என்றான்.
“தந்தையே, இத்தனை நாள் பெருந்தந்தையாக குல அறம் பேணி இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இக்குடியின் அச்சு நீங்களே. ஆனால் உங்களைப்பற்றி இன்று பாரதவர்ஷம் என்ன சொல்கிறதென்றறிவீர்களா? ஏன், இந்நகர் மாந்தர் என்ன சொல்கிறார்கள்? விழியிழந்தான் வஞ்சம் பாண்டவர்களை விரட்டியது என்கிறார்கள். உங்கள் இருள்விழி எல்லையைவிட்டு விலகியதனால் அவர்கள் பெருகி வளர்ந்தனர் என்கிறார்கள். அங்கே நீங்கள் சென்று அவையமர்ந்து அவர்களின் ராஜசூயத்தை வாழ்த்தினீர்கள். நீங்கள் பொறாமையால் விழிநீர் விட்டு உளம் பொருமினீர்கள் என்கிறார்கள்.”
“தந்தையே, இது களம். இங்கே வெற்றி மட்டுமே போற்றப்படும். தோல்வியும் விட்டுக்கொடுத்தலும் இதில் நிகர். அச்சமும் பெருந்தன்மையும் ஒன்றே” என்று துரியோதனன் தொடர்ந்தான். “ஆம், நான் போருக்கெழுந்தேன். என் தோள்தோழர் கொலையுண்டபின் வாளாவிருந்தால் நான் வீணனென்றே பொருள். அதையும் உங்கள்பொருட்டே அடக்கிக்கொண்டேன். நிகரிப்போர் நிகழட்டும். அதில் வென்று ராஜசூயம் வேட்டேன் என்றால் இன்று என்னைச் சூழ்ந்துள்ள இழிவிலிருந்து சற்றேனும் மீள்வேன்.”
“தந்தையே, அன்று பழிச்சொல் கேட்டு உங்கள் மடியில் கிடந்த பைதல் நான். ராஜசூயம் வேட்டு வைதிகர் அருள்பெற்று சத்ராஜித் என அரியணை அமர்ந்தால் பிறந்த அன்று என் மேல் படிந்த பழி விலகும். நாளை என் கொடிவழியினர் என்னையும் உங்களையும் எண்ணி நாணமாட்டார்கள். நான் வாழ்வதும் அழிவதும் இனி உங்கள் சொல்லில்” என்றபின் அவன் தன் தலையை திருதராஷ்டிரரின் கால்களில் வைத்தான். அவர் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் கை எழுந்து அவனை வாழ்த்தவில்லை. அவன் சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தபின் எழுந்து வெளியே சென்றான்.
[ 23 ]
மறுநாள் விடியலில் கர்ணன் கனகரால் எழுப்பப்பட்டான். கனகர் சிறு பதற்றத்துடன் “அங்கரே, விப்ரர் மறைந்தார்” என்றார். அவன் தன் உள்ளத்திலிருந்து ஓர் எடை அகன்ற உணர்வையே அடைந்தான். அதை அவன் அகம் எதிர்நோக்கியிருந்தது. “எப்போது?” என்றான். “காலை சஞ்சயன் சென்று நோக்கியபோது அவர் உடல் அசைவிழந்து குளிர்ந்திருந்தது.” கர்ணன் “பேரரசர் அறிந்திருக்கவில்லையா?” என்றான். “அவர் சிலைபோல அசைவற்று அமர்ந்திருந்தார் என்கிறான். அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எவரையும் அழைக்கவில்லை. அழவும் இல்லை.”
கர்ணன் புஷ்பகோஷ்டம் நோக்கி செல்லும்போது கனகர் உடன் வந்தார். “அமைச்சர் அங்கே சென்றுவிட்டார். அரசரையும் இளையோரையும் அழைத்துவர யுயுத்ஸுவை அனுப்பினேன். சஞ்சயனை அரசரின் அருகே நிற்கும்படி ஆணையிட்டேன்” என்றார். அவன் தேரில் ஏறிக்கொண்டதும் அருகே நின்றபடி “பதினெட்டு வயதில் விப்ரர் பேரரசருடன் இணைந்தவர். பிறிதொரு வாழ்க்கை இல்லாதிருந்தார். அரசரின் அதே வயதுதான் அவருக்கும்” என்றார்.
“நூல்கற்றவர். நெறிநூல்களை நெஞ்சிலிருந்து சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கக்கூடும். ஆனால் நிழலென ஆவதையே விரும்பினார். அவரையும் அரசரையும் பிரித்து எண்ணவே முடியவில்லை.” கர்ணன் விப்ரரை முதன்முதலாக எப்போது நோக்கினோம் என்று எண்ணிக்கொண்டான். திருதராஷ்டிரரின் முதல் அணைப்புதான் நினைவிலெழுந்தது. அப்போது அருகே நீர் மின்னும் விழிகளுடன் விப்ரர் நின்றிருந்தார். அவரது கழுத்தில் நரம்பு ஒன்று புடைத்து அசைந்துகொண்டிருந்தது.
அவன் செல்லும்போது விப்ரரின் உடல் வெளியே கொண்டுசெல்லப்பட்டு மையக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. விதுரர் அருகே நின்று ஆணைகளை இட்டுக்கொண்டிருக்க சிற்றமைச்சர்களும் ஏவலரும் ஓடிக்கொண்டிருந்தனர். விதுரர் அவனைக் கண்டதும் அருகே வந்து “பேரரசர் திகைத்துப்போயிருக்கிறார். இரவிலேயே இறப்பு அவருக்கு தெரிந்துவிட்டது. அவர் உடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றார். “நான் உள்ளே சென்று பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.
“அரசகுலத்தோருக்குரிய சடங்குகள் நிகழவேண்டும். அரசகுடியினரின் மயானத்தில் அவர் எரியவேண்டுமென பேரரசர் முன்பு ஆணையிட்டிருந்தார். விப்ரரும் தன்னுடன் விண்ணுக்கு வந்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டிருப்பார்” என்றார் விதுரர். இறப்பு அவரை விடுதலை செய்துவிட்டதெனத் தோன்றியது. கர்ணன் குனிந்து வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த விப்ரரின் உடலை நோக்கினான். அவன் நோக்குவதைக் கண்ட ஏவலன் முகத்தை திறந்து காட்டினான். விப்ரரின் முகம் துயிலும் குழந்தை போலிருந்தது.
கர்ணன் உள்ளே சென்றான். தர்ப்பைப்பாயில் திருதராஷ்டிரர் முன்பு அவன் பார்த்த அதே தோற்றத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் மாறிவிட்டிருப்பதை முதல்நோக்கிலேயே உணரமுடிந்தது. அருகே காந்தாரியர் அமர்ந்திருக்க விழிமூடிக்கட்டிய முகத்துடன் பேரரசி தலைசரித்து செவிகூர்ந்தாள். அவன் அருகே அமர்ந்தான். அவன் காலடியோசைகள் அவர் உடலில் எதிரசைவை உருவாக்கின. அவர் வாயை அழுத்தி மூடி கழுத்துத்தசைகள் இறுகி நெளிய மறுபக்கம் முகம் திருப்பியிருந்தார்.
“பீஷ்மபிதாமகருக்கு செய்தி சென்றிருக்கிறது. துரோணரும் கிருபரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அப்பால் நின்ற சஞ்சயன் சொன்னான். கர்ணன் தலையசைத்தான். திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் “மூத்தவனே, அரசன் எங்கே?” என்றார். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் கர்ணன். “அவனிடம் சொல், அவன் விழைவதுபோல பகடைக்களம் நடக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர்.
நினைத்ததுபோல நிறைவோ உவகையோ அவன் உள்ளத்தில் எழவில்லை. மெல்லிய குரலில் “தாங்கள் உணவருந்தலாமே” என்றான். “அவன் போகட்டும். அவன் எரியணைவது வரை அங்கே நான் உடனிருக்கவேண்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “எரிகளத்தில் என்னுடன் எவரும் இருக்கலாகாது. சஞ்சயன் கூட.” கர்ணன் “ஆணை!” என்றான்.
[ 24 ]
நிமித்திகர் சுதாமர் பன்னிரு களத்தில் ஒவ்வொன்றாக கைதொட்டுச் சென்று கண்மூடி ஒருகணம் உள்நோக்கி விழிதிறந்து “மீன் எழுந்து அமைந்துவிட்டது. களம் நிறையக்காத்துள்ளது. அமுதமாகி எழுக!” என்றார். சௌனகர் மெல்லிய குரலில் “நன்று சூழும் என்கிறீர்களா?” என்றார். “ஒற்றைச்சொல்லில் அதை உரைத்து முடிக்க முடியுமெனில் அப்போதே சொல்லியிருப்பேன். ஒரு களம் தொட்டு நோக்கினால் குருதிப்பெருக்கு என் கண்களுக்குள் விரிகிறது. மறுகளம் நோக்கித் திரும்புகையில் அமுதமென பெருகுகிறது. ஒன்றில் குளிர் நீரை காண்கிறேன். பிறிதொன்றில் எரியனலை. ஒன்று தொட்டு பிறிதொன்று உய்த்து மற்றொன்றை கணித்து நன்று தேர்ந்து இதை சொல்கிறேன்” என்றார்.
தருமன் “முன்னரே பன்னிரு பகடைக்களத்திற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டோம். கிளம்பும் நேரத்தை குறிப்பதொன்றே இப்போது நம்மிடம் எஞ்சியுள்ளது. நன்றோ தீதோ இனி மறுக்க இயலாது” என்றாr. நிமித்திகர் “இம்முடிவுகள் எவையும் நம்மால் எடுக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொன்றும் விண்வெளியில் தங்கள் மாறாத்தடத்தில் ஓடும் கோள்களை சார்ந்துள்ளன என்பதனால் அவையும் மாறாதவையே” என்றார். சௌனகர் “இறுதி உரை என்ன நிமித்திகரே?” என்றார்.
“மகரம் அலைவடிவானது. கும்பம் மங்கலம் கொண்டது. இம்மாத இறுதியில் அது நிறையும். பின்னர் மீனம் எரிவிண்மீனென தென்மேற்குத் திசையில் எழும்” என்றார். அவர் சொல்வது என்னவென்றுணராமல் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அவை அமர்ந்திருந்தது. “மார்கழி முதல் நாள் நன்று என்கிறீர்களா?” என்றார் தருமன். “ஏனெனில் நானும் அதை கணித்திருந்தேன்.” நிமித்திகர் “ஆம். அதைத் தேர்வோம். நன்று சூழ்க!” என்றார்.
தருமன் பெருமூச்சு விட்டு உடல் எளிதாகி “அச்சொல் போதும் நிமித்திகரே, அதுவென்றே முடிவெடுப்போம்” என்றபின் சௌனகரை நோக்கி “முதல் நாள் முதற்பொழுதில் இங்கிருந்து அஸ்தினபுரிக்கு கிளம்புவோம்” என்றார். சௌனகர் தயங்கி “நிமித்திகர் அத்தருணத்தை இன்னும் குறித்தளிக்கவில்லை அரசே” என்றார். “எத்தருணமும் நன்றே” என்றார் நிமித்திகர். “நன்றென நாம் எண்ணுவது நம்மைக்குறித்தே. நன்று சூழ்க! ஆடும் குழந்தைகளை நோக்கியபடி அன்னை விழியிமையாதிருக்கிறாள். அதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக் கொள்வோம்” என்றார். தருமன் “ஆம். அது ஒன்றே இவ்வச்சத்திற்கும் ஐயங்களுக்கும் அப்பால் மாறா உறுதியென என்னுள் உள்ளது” என்றார்.
நிமித்திகர் கைகூப்பி தலைவணங்கி தன் மாணவனை நோக்க அவன் பன்னிருகளம் வரையப்பட்ட பூர்ஜமரப்பட்டைத்தாளை மடிக்கத்தொடங்கினான். சௌனகர் குழப்பத்துடன் “இதில் இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி உண்டா?” என்றார். “வருவது உரைக்க நிமித்திக நூல் அறியாது. அது ஊழையும் காலத்தையும் ஒரு களமென நிறுத்தி அதன் நெறிகளை மட்டுமே உய்த்துணர்கிறது” என்றார் நிமித்திகர். “சொல்லுங்கள், அந்த நெறி உரைப்பதென்ன? ஒற்றைச்சொல்லில்…” என்றார் சௌனகர். “நிறைகும்பம். அமுதகலம். பிறிதொன்றையும் இப்போது சொல்வதற்கில்லை” என்றபடி நிமித்திகர் தலைவணங்கினார்.
“போதும். முற்றிலும் எதிர்காலத்தை அறிந்தபின் நாம் செய்வதற்கென்ன உள்ளது? நன்று சூழும் என்று நம்புவோம்” என்றபின் தருமன் எழுந்து தன் அருகே நீட்டப்பட்ட வெண்கலத்தாலத்தில் இருந்து பொன்னும் பட்டும் மலரும் கொண்ட வெள்ளித்தட்டை எடுத்து நிமித்திகருக்கு அளித்தார். அவர் அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டு “நன்று சூழ்க! நாடு குடியும் நலம் பெறுக!” என்று வாழ்த்தினார்.
நிமித்திகர் சென்றபின் தருமன் தன் அரியணையில் அமர்ந்து திரும்பி அவைநின்ற சகதேவனிடம் “உனது நிமித்திக நூல் என்ன சொல்கிறது?” என்றார். “நல்ல முடிவு” என்றான் சகதேவன். “அதை நான் கேட்கவில்லை. உனது நூலின்படி கும்பம் முதல் நாள் நன்றோ?” என்றார் தருமன். “அவர் சொன்னதையே நான் சொல்வேன். எந்நாளும் நன்றே” என்றான் சகதேவன். “நன்றுசெய்வதென்றால் நாள் தேரவேண்டியதில்லை, அன்றெனில் நன்னாளால் பயனில்லை என்பார்கள்.”
“நீங்கள் அனைவரும் எப்படி ஒரே மொழியில் பேசத்தொடங்கினீர்கள் என்று தெரியவில்லை” என்று சலிப்புடன் தருமன் சொன்னார். “இவ்வாடலை முன்னெடுக்கலாமா என்று நான் கேட்டபோதும் இதையே நீ சொன்னாய்.” சகதேவன் “அப்படி தாங்கள் கேட்கவில்லை மூத்தவரே. முடிவெடுத்துவிட்டேன், நன்று விளையுமா என்றீர்கள்” என்றான். தருமன் பதற்றத்துடன் “அப்படியானால் நன்று நிகழாது என்று எண்ணுகிறாயா? என்றார். “நன்று நிகழும், முடிவில்” என்றான் சகதேவன். “முடிவில் என்றால்…?” என்று தருமன் மீண்டும் கேட்டார். “எப்போது முடியவேண்டுமென்று இயற்றி ஆடும் அன்னை எண்ணுகிறாளோ அப்போது” என்றபின் சகதேவன் தலைவணங்கி வெளியே சென்றான்.
“என்ன செய்வது சௌனகரே?” என்றார் தருமன். “இளையோர் இருவரும் என்ன சொல்கிறார்கள்?” என்று சௌனகர் கேட்டார். ”முடிவெடுத்த அன்றே பேசியதுதான். பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. எனது விருப்பப்படி நிகழட்டும், தனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று பீமன் சொன்னான். அர்ஜுனனோ அவன் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்றான்.” சௌனகர் “சூது தங்களுக்குரியதல்ல அரசே. அதுதான் என்னை அச்சுறுத்துகிறது” என்றார். தருமன் “பகடைக்களத்தில் நானறியாத எதுவுமில்லை. நானாடிய எந்தப் பகடைக்களத்திலும் இதுவரை தோற்றதில்லை” என்றார்.
“பகடையின் நெறிகள் அனைத்தையும் தாங்கள் அறிவீர்கள் என்று நானும் அறிவேன். ஆடலின் ஒரு முனையில் ஒவ்வொரு முறையும் கலைந்தும் இணைந்தும் முன்னகரும் பிழை ஒன்றுள்ளது. அதை தாங்கள் அறிய முடியாது. அரச நெடும்பாதையில் செல்லும் பட்டத்து யானையென முன்னெழுவது தங்கள் உள்ளம். கரவு வழிகளை அது அறியாது” என்றார். தருமன் “கரவுப்பாதைகள் வழியாக வரும் எந்த குக்கலும் பட்டத்து யானையை எதுவும் செய்யாது அமைச்சரே. அங்கு என்னுடன் பகடை பொருதப்போவது சகுனி என்றார்கள். முதலிரு ஆட்டத்திலேயே அவரை வெல்வேன். அதை தாங்கள் காணலாம்” என்றார்.
அவரது தன்னம்பிக்கை நிறைந்த முகத்தை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்த பின் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் சௌனகர். எரிச்சலுடன் தலையசைத்து “இங்கு ஒவ்வொருவரும் ஏன் இத்தனை அவநம்பிக்கை கொள்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை” என்று தருமன் சொன்னார். “போரைத்தவிர்த்து நிகரிப்போர் என பன்னிரு படைக்களத்தில் ஆடலாம் என்று என்னை அழைக்க வந்தவர் விதுரர். என் வாழும் இரு தந்தையரில் ஒருவர். அவர் சொல்லுக்கு அப்பால் பிறிதொன்றை நான் எப்போதும் எண்ணியதில்லை.”
“அமைச்சரே, அஸ்தினபுரியின் துணையரசுகளும் உறவரசுகளும் இணைந்து இந்திரப்பிரஸ்தத்துக்கு எதிராக பெரும்போர் ஒன்றுக்கு படைசூழ்கை நிகழ்த்தவிருப்பதை அறிந்தபோது நான் கொண்ட பதற்றம் சிறிதல்ல. இளையவர் இருவருக்கும் அது வெறும் போர். எனக்கு அது பெருங்குருதி. எண்ணியதுமே அதன் பச்சைமணத்தை என் மூக்கு அறியும். என் உடல் நடுங்கத்தொடங்கும். போருக்கான முன்செயல்கள் தொடங்கியபின் நான் ஒருநாள்கூட உளம் ஓய்ந்து துயின்றதில்லை” என்று அவர் தொடர்ந்தார்.
“போர்சூழ்தலின் செய்திகளை இங்கே ஒவ்வொருநாளும் கொண்டாட்டமாகவே அறிந்துகொண்டிருந்தனர். நம் படைகளை ஒருங்கமைப்பதற்காக இளையோர் பகலிரவாக ஆணைகளை இட்டும் நேர்சென்று நோக்கியும் செயலில் மூழ்கி அவ்விரைவில் உளம்திளைத்துக்கொண்டிருந்தனர். முடிவறியாது காத்திருப்பதன் சலிப்பை உதறி படைவீரர்கள் பரபரப்படைந்தனர். நகர்மக்கள் வெற்றி எவருக்கென்று பந்தயம் கட்டி சொல்லாடினர். இந்நகரில் போரை அஞ்சி ஒடுங்கி அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தவன் நான் மட்டிலுமே.”
சௌனகர் “போருக்கென நாம் எழுவது தேவையில்லை. ஆனால் குடிகாக்கப் போரிடுவது மன்னரின் கடமை” என்றார். தருமன் “ஆம், குடிகளைக் காக்கவே கோலேந்தி இங்கு அமர்ந்திருக்கிறேன். போரெனில் இருதரப்பிலும் உயிர்கள் அழியும். அமைச்சரே, பிணங்களில் நடந்துசென்று நான் அடையும் சிறப்பென ஏதுமில்லை. வரலாறு என் பேர் சொல்லாதொழியட்டும். குலக்கொடிவழிகள் என்னை கோழையென்றோ வீணன் என்றோ சொல்லட்டும். என் ஆட்சியில் குடிகள் ஒருபோதும் குருதி சிந்தலாகாது என்றே உறுதிகொண்டிருக்கிறேன்” என்றார்.
சௌனகர் “மண்ணில் ஒருபோதும் போர் ஓயாது அரசே” என்றார். “ஏனென்றால் இப்புவியில் வாழ்வென நிகழ்வதெல்லாம் போரே.” தருமன் “ஆம், போட்டியில்லாது வாழ்க்கை இல்லை. போட்டிகளினூடாகவே தங்களுக்குரிய ஊர்திகளை தெய்வங்கள் கண்டடைகின்றன” என்றார். “ஆனால் அப்போர் அழித்தும் கொன்றும்தான் நிகழவேண்டுமென்பதில்லை. வெறுப்பில்லாத பூசல்கள், கொலையில்லாத போர்கள், குருதியில்லாத பலிகள் நிகழலாம். அவற்றை தெய்வங்கள் வாழ்த்தும் என்பதில் ஐயமே இல்லை.”
“அமைச்சரே, மானுட வாழ்க்கை இங்கே தொடங்கும்போது ஒவ்வொன்றும் தனியுருவிலேயே இருந்தன. நாம் அவை ஒவ்வொன்றுக்கும் நிகரிகளை உருவாக்கிக்கொண்டுதான் இங்கு வந்திருக்கிறோம். அந்தணரின் வேள்விகளில் பலியளிக்கப்படும் அன்னத்தாலான பசுவும் மஞ்சள்சுண்ணக் கலவையாலான குருதியும் கும்பளைக்காய் நிணமும் உயிர்ப்பலியின் நிகரிகள் அல்லவா? இவ்வரண்மனை, இந்த அரியணை, இம்மணிமுடி, செங்கோல், நான் அணிந்துள்ள அணிகள் அனைத்துமே முன்பிருந்தவற்றின் நிகரி வடிவங்கள்தானே? இவ்வீடும் ஆடையும் கூட நிகரிகளே என்று சொல்வேன்.”
“போர் தவிர்த்து பன்னிருபகடைக்களத்தில் ஆடிப்பார்க்கலாம் என்ற செய்தியுடன் விதுரர் இங்கு வந்தபோது நான் வழிபடும் தெய்வமே எழுந்தருளியதுபோல் உணர்ந்தேன். சொல்லி முடிப்பதற்குள்ளே அவர் கைகளை பற்றிக்கொண்டு “தங்கள் ஆணையை சென்னிசூடுகிறேன் அமைச்சரே என வாக்களித்தேன். அவர் ஆணை எதுவோ அதை கடைபிடிப்பதே எனது கடமை என்றுதான் இன்றுவரை வாழ்ந்திருக்கிறேன். இவ்வுயிர் அவர் அளித்த கொடை என்பதை மறவேன்” என்றார் தருமன். “அன்னையிடம் சென்று விதுரரின் ஆணை இது என்று சொன்னபோது அவர் அதுவே உன் தந்தையின் ஆணை என்று கொள்க என்று சொன்னதும் நான் செய்ததே உகந்தது என முழுநிறைவை அடைந்தேன்.”
சௌனகர் “சில தருணங்களில் போர்கள் சூதை விட உயர்ந்தவை அரசே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினத்துடன் தருமன் கேட்டார். “போர்கள் பருப்பொருட்களின் வல்லமையை நம்பி இயங்குபவை பருப்பொருட்கள் ஐயத்திற்கிடமற்றவை. எனவே கள்ளமற்றவை. பகடை பல்லாயிரம் வழிகளை தன்னுள் கரந்த முடிவிலா ஆழம். அதில் உறைகின்றன நாமறியாத தெய்வங்கள்.”
தருமன் நகைத்து “பகடை ஆடாத ஒவ்வொருவரும் அதை அஞ்சுகிறார்கள் என்றொரு சொல்லுண்டு. அறியப்படாதவை பேருருவம் கொள்கின்றன” என்றார் “நான் பன்னிரு படைக்களத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் என் உள்ளம் போல் அறிவேன். எனக்கு ஐயமோ அச்சமோ இல்லை.” சௌனகர் பெருமூச்சுடன் “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!” என்றார்.
“நன்று நடக்கும் அமைச்சரே. இது உடன் பிறந்தார் தங்களுக்குள் ஆடும் ஒரு விளையாட்டென்றே கொள்க! இளவயதில் குருகுலமைந்தர் கூடி நிலவில் வட்டாடியதைப்போல. அன்னையர் சூழ்ந்திருக்க மகளிர்மாளிகையிலமர்ந்து சொல்லடுக்கு ஆடியது போல. இது எங்களில் எவர் மூப்பு என்றறிவதற்கான ஓர் எளிய பகடை விளையாட்டு மட்டுமே. அவன் வென்றால் அவன் இயற்றும் ராஜசூயத்தில் சென்றமர்ந்து தலை தாழ்த்தப் போகிறேன். நான் வென்றால் என்னை மூத்தவனாக ஏற்று அவன் அவ்வரியணைக்கு அருகே அமர்த்தப் போகிறான். இரண்டும் நன்றே. போர் நீங்கிவிட்டதென்பது மட்டுமே இதில் நாம் கொள்ள வேண்டியது” என்றார் தருமன்.
“அங்கு பன்னிரு படைக்களம் ஒருங்கிக் கொண்டிருக்கிறது என்று செய்திகள் வந்தன” என்றார் சுரேசர். “நம் செய்தி சென்றதுமே கட்டத்தொடங்கிவிட்டனர். நேற்று விஸ்வகர்மபூசனை நிகழ்ந்தது என்றார்கள். களத்தை அணிசெய்யும் பணிகள் இன்றுமுதல் தொடங்கிவிட்டன.” தருமன் “ஆம், இது ஒரு பெருநிகழ்வல்லவா? நம் கொடிவழியினர் எண்ணி மகிழப்போவது” என்றார். சுரேசர் “ஐநூறு கலிங்கச் சிற்பிகள் அதை அமைக்கிறார்கள்” என்றார்.
“பிற மன்னர்களுக்கு அழைப்புள்ளதா?” என்றார் சௌனகர். சுரேசர் “இல்லை என்றார் விதுரர். இது குருகுலத்தின் தோன்றல்களுக்கு இடையே நடப்பது என்றே அமையட்டும் என்பது பீஷ்மரின் ஆணை என்றார். ஆகவே குருதி உறவு இருந்தால் மட்டுமே களத்தில் இருப்பார்கள்” என்றார். “நன்று. பிற அரசர்கள் இல்லாதிருப்பது மிக நன்று” என்றார் தருமன். சௌனகர் “ஆம், அது சற்று ஆறுதல் அளிக்கிறது. பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவ்வவையில் அமர்ந்திருப்பார்கள் என்றால் நன்றே” என்றார்.
“அவர்கள் அமர்ந்திருப்பார்கள். இதில் என்ன ஐயம்? இது அவர்களின் மைந்தர்கள் ஆடும் களிவிளையாட்டு. கேட்டீர்களா சௌனகரே? முன்பு நாங்கள் களம் வரைந்து வட்டாடுகையில் அப்பால் பிறிதொரு பணியிலென பிதாமகர் நின்றிருப்பார். ஓரவிழியால் எங்களது ஆடலை அவர் பார்க்கிறார் என்பது அவரது முகமலர்வில் தெரிந்துவிடும். முதிர்ந்து நரை கொண்டபின் மீண்டும் அவர் விழிமுன் நின்று விளையாடப்போகிறோம் என்னும் உவகை என்னுள் எழுகிறது” என்றார். சௌனகர் தணிந்த குரலில் தனக்கென்றே என “ஆம், அது நன்றே” என்று சொன்னார்.
[ 25 ]
இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காட்டுக்குள் அமைந்திருந்த கொற்றவை ஆலயத்தின் சிறு முற்றத்தில் தருமன் திரௌபதிக்காக காத்திருந்தார். இருபக்கமும் இருளெனச் செறிந்திருந்த குறுங்காட்டுக்குள் பறவைகளின் ஒலி எழுந்துகொண்டிருந்தது. காற்றில் இலைகள் சலசலக்கையில் மழைவிழுவதுபோல உளமயக்கு எழுந்தது.
இந்திரப்பிரஸ்த நகரை உருவாக்கிய மூத்த சிற்பியாகிய சயனர் கல்லில் கண்டடைந்த தேவி அவள். அந்நகரின் காவலன்னை நுதல்விழியும், பன்னித்தேற்றையெனப் பிறை எழுந்த சடைமகுடமும், நெளிநாகப் படமெழுந்த கச்சையும் கொண்டு பதினாறுகைகள் ஏந்திய படைக்கலங்களுடன் விரித்த கால்களின் நடுவே அனலென அல்குல் விழியுமாக அமர்ந்திருந்தாள். அவள் கழல்முத்துகளில் மும்மூர்த்திகளின் முகங்கள் விழிதெறிக்க நோக்கினர். கணையாழிகளில் சூரிய சந்திரர்களும் ஆதித்யர்களும் ஒளிர்ந்தனர். எட்டு வசுக்களும் திசைத்தேவர்களும் நிரைகொண்ட ஒளிவளையத்தில் அனல் இதழ்கள் மலர்ந்திருந்தன.
சிற்றமைச்சர் சுஷமர் அரசருக்கு அருகே பணிந்து நின்றிருந்தார். காவல் வீரர்கள் அப்பால் படைக்கலங்கள் ஒளிர நின்றனர். அவர் வந்த தேர் புரவிகள் அகன்ற நுகத்துடன் காட்டின் இருளை தன் ஒளிர்பொன்செதுக்குகளில் காட்டியபடி நின்றது. தருமன் பொறுமையிழந்து பெருமூச்சுடன் சுஷமரை நோக்கினார். அவர் “கிளம்பிவிட்டார்கள் அரசே” என்றார். “ஆம்” என்று சொல்லி அவர் விழிகளை விலக்கி இலைப்பரப்பினூடாகத் தெரிந்த வானச்சிதறலை நோக்கினார்.
நெடுந்தொலைவில் சங்கொலி எழுந்தது. “வருகிறார்கள்” என்றார் சுஷமர். “நன்று” என்றார் தருமன். பல்லக்கு வருவதை உள்ளத்தால் கண்டபின்னர் அவரால் பொறுமை கொள்ளமுடியவில்லை. கணங்களை கணக்கிட்டார். ஒருகணத்தில் இலையொன்று சுழன்றிறங்கியது. பிறிதொன்றில் ஒரு பறவை சிறகடித்தது. இன்னொன்றில் எங்கோ மந்தி ஒன்று முழவுமீட்டியது. “எங்கு வந்திருக்கிறார்கள்?” என்றார். சுஷமர் “மந்தியொலி முழங்குவதைக்கேட்டால் அணுகிவிட்டார்கள் எனத்தெரிகிறது” என்றார். பறவைகள் எழுந்து சிறகடித்து காட்டுக்குள் பல்லக்கு அணுகும் பாதையை காட்டின.
அருகே எழுந்த சங்கொலி சிம்மக்குரல் போல் ஒலித்து திடுக்கிடச்செய்தது. கருங்கழல்கொற்றவைக்கு சிம்மம் காவலென்று இந்திரப்பிரஸ்தத்தில் அனைவரும் அறிந்திருந்தனர். இருமுறை அங்கு வந்த பூசகர்களை சிம்மம் கொன்றிருக்கிறது. அவர் எருதை வந்து பலிகொண்டுசென்ற சிம்மத்தின் செம்பழுப்புநிறக் கண்களை நினைவுகூர்ந்தார். பத்துமடங்கு பெரிய பாண்டிநாட்டு முத்துக்கள். அனலென்று அலைத்த பிடரி. அது சென்றபின் மண்ணில் பதிந்திருந்த காலடித்தடங்களில் குருதிமுத்துக்கள் உருண்டுகிடந்தன.
காட்டுக்குள்ளிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. சங்கு ஊதி வர அவருக்குப்பின்னால் வேலேந்திய வீரர் எழுவர் தொடர்ந்தனர். செம்பட்டுத்திரை உலைந்த பல்லக்குக்குப்பின்னால் வில்லேந்திய எழுவர் வந்தனர். பல்லக்கு வந்து மெல்ல அமைந்தது. ஒருவன் மரப்படி ஒன்றை எடுத்து அருகே இட்டான். திரையை விலக்கி உள்ளிருந்து திரௌபதியின் வலக்கால் வெளியே வந்தது.
அவள் வெண்பட்டுத்திரையால் முகத்தையும் உடலையும் மூடியிருந்தாள். ஊடாக முகிலுக்கு அப்பாலென அவள் உடல் சற்றே தெரிந்தது. சிலம்புகளும் வளைகளும் மேகலையும் ஒலிக்க மெல்ல நடந்து அவரருகே வந்து தலைதாழ்த்தி “அரசருக்கு மங்கலம்” என்றாள். “நலம் திகழ்க” என முறைமை சொன்னபின் தருமன் விழிகளை விலக்கிக்கொண்டார். நகுலனின் மாதம் அது என்பதனால் அவனுடைய யமுனைக்கரை மாளிகையிலிருந்து அவள் வந்திருந்தாள். ஆலயங்களில் மட்டுமே அவர்கள் சந்திக்கலாமென நெறியிருந்தது. அந்நெறிகளை அர்ஜுனன் மீறுகிறான் என்று உடனே தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணத்தை மறுகணமே கலைத்தார்.
“அரசி அறிந்திருப்பாய், நாளை அஸ்தினபுரிக்கு கிளம்பவேண்டும்” என்றார். “ஆம், சொன்னார்கள்” என்றாள். “இன்று உச்சிப்பொழுதில் அன்னையை சந்தித்து வாழ்த்துபெற்றேன்.” அவள் “அறிவேன்” என்றாள். “போர் நீங்கியதை எண்ணி எண்ணி நிறைவடைகிறேன். வரலாற்றில் எப்படி அறியப்பட்டாலும் உடன்பிறந்தாரைக் கொன்றவன் என்ற பழியின்றி கடந்துசென்றால் போதும் என்றே உணர்கிறேன்” என்றார். அதை பல்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிவிட்டிருந்ததை எண்ணிக்கொண்டார். அச்சொற்களை வெவ்வேறு வகையில் சொல்லிக்கொண்டே இருப்பதை அவரே உணர்ந்தாலும் சொல்லாமலிருக்க இயலவில்லை.
“பன்னிருபடைக்களம் அங்கே ஒருங்கியிருக்கிறது. முன்பு மாமன்னர் ஹஸ்தி அமைத்த அதே படைக்களத்தை ஏழுமடங்கு பெரிய வடிவில் கலிங்கச்சிற்பிகள் கட்டியிருக்கிறார்கள். எனக்கு மறுபக்கமாக மாதுலர் சகுனி அமர்ந்தாடுவார் என்றார்கள்.” அவள் “ஆம், சொன்னார்கள்” என்றாள். “நான் வெல்வேன். என் உள்ளம் சொல்கிறது” என்றார் தருமன். “இன்றுவரை என்னை எவரும் வென்றதில்லை. அதை நீயும் அறிவாய்.” திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை.
“இன்று காலைதான் பேரரசரின் அழைப்பு வந்தது. பேரரசியின் சொல்லும் உடனிருந்தது” என்றார் தருமன். “அரசியையும் அந்நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.” அவள் அசைவிலாது நின்றாள். “எனவே நீயும் எங்களுடன் கிளம்பலாம்” என்றார் தருமன். “பகடையாடலுக்கு அரசியர் செல்வது வழக்கமா?” என்றாள் திரௌபதி. தருமன் சிரித்து “பகடையாடுவதே வழக்கமில்லை. இது ஒரு குலவிளையாட்டுதானே? நீயும் வருவதில் பிழையில்லை” என்றார்
“நான் வரவேண்டுமென்று பேரரசரிடம் விழைவறிவித்தவர் யார்?” என்றாள். தருமன் “மூத்ததந்தையே விழைகிறார் என்றுதான் நினைக்கிறேன். இது தாதையர் கூடி அமர்ந்து தனயர்களின் ஆடலைக் கண்டு மகிழும் விழா. அனைவரும் உடனிருக்கவேண்டும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.” அவள் “அனைவரையும் அழைக்கிறார்களா?” என்றாள். “அனைவரும் எதற்கு? அன்னையும் பிற அரசியரும் இங்கிருக்கட்டும். நீதான் மூத்தவள். உனக்கு மட்டும்தான் அழைப்பு” என்றார்.
அவள் பேசாமல் நிற்கக்கண்டு “ஏன், நீ வர விழையவில்லையா?” என்றார். “பெண்கள் எதற்கு?” என்று அவள் சொன்னாள். “ஏனென்றால் பேரரசி அழைத்திருக்கிறார்கள். நீ அவர்களின் ஆணையை தட்டமுடியாது” என்று தருமன் சினத்துடன் சொன்னார். “தழல்முடிசூடி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக நீ அமர்ந்தாலும் முதன்மையாக எங்கள் குடியின் மருமகள். அதை மறக்கவேண்டியதில்லை.”
பெருமூச்சுடன் அவள் “நன்று” என்றாள். “காலையில் பிரம்மதருணத்தில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். “நன்று” என்று அவள் மீண்டும் சொன்னாள். சுஷமர் அப்பால் வந்து பணிந்து நின்றார். தருமன் அவரை நோக்க “மெய்ப்பூச்சு முடிந்துவிட்டது. பூசனைகளை தொடங்கலாமா என்கிறார் பூசகர்” என்றார். “நிகழட்டும்!” என்றார் தருமன்.
திரௌபதி சென்று அன்னைமுன் நின்றாள். உடலெங்கும் குங்குமச்சாத்து சூடிய கொற்றவை பதினாறு கிளைகளாக வழிந்த குருதித்தடம் போல விரித்த கைகளுடன் நின்றிருந்தாள். அவள் காலடியில் எண்மங்கலங்கள் பரப்பப்பட்டிருந்தன. பன்னிரு நெய்ப்பந்தங்கள் எரிந்தன. முதுபூசகர் வெளிவந்து “கண்மலர்கள் பொருத்தலாம் அல்லவா?” என்றார். “ஆம்” என்றார் தருமன்.
அவர் நீல வைரங்கள் பதிக்கப்பட்ட விழிமலர்களை எடுத்து அன்னையின் முகத்தில் பதித்தார். தருமன் திரும்பி சுஷமரை நோக்க அவர் எண்ணத்தை உணர்ந்த அவர் “இன்று சனிக்கிழமை. நீலக்கண்கள் என்று நெறி” என்றார். குளிர்ந்த இரு நீர்ச்சொட்டுகள் போலிருந்தன அவ்விழிகள். கண்ணீர் நிறைந்தவை போல. கனிந்தவை. கனவுகாண்பவை.
இளம்பூசகர் துடிமீட்டி பாடத் தொடங்கினார். “அன்னை எழுக! இமையாப்பெருவிழியே. வற்றா சுனைமுலையே. அருளும் வலக்கையே. ஆற்றும் இடக்கையே. அலகிலியே. அருகமர்பவளே. அன்னையென்றாகி வருக! அனைத்துமாகி சூழ்க! அளிப்பவளே, உன் மைந்தருக்குமேல் நிழல்தருவென்று கைவிரித்தெழுக!”
பகுதி பதினொன்று : மாசி
[ 1 ]
மாசி முதல் நாள் படைப்போன்பொழுதில் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அரச அகம்படியினரும் அணிப்படையினரும் அஸ்தினபுரி நோக்கி எழவேண்டுமென்பது ஒருக்கப்பட்டிருந்தது. சௌனகரும் சிற்றமைச்சர்கள் சுரேசரும் சுஷமரும் அமைச்சு மாளிகையில் அதற்கான ஆணைகளை விடுத்துக்கொண்டிருக்க அரண்மனை முற்றங்களில் தேர்கள் அணிகொண்டன. படைவீரர்கள் கவசங்களும் படைக்கலங்களுமாக நிரைவகுத்து கோட்டை முகப்பில் கூடினர். பரிசும் வரிசையும் கொண்ட பெட்டகங்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டு படகுகளில் அடுக்கப்பட்டன. யமுனையில் பதினெட்டு அணிப்பெரும்படகுகள் அரசக்கொடிகளுடன் துறையணைந்திருந்தன.
இரவெல்லாம் தருமன் தன் மஞ்சத்தறையில் துயிலாதிருந்தார். முன்னிரவில் இந்திரப்பிரஸ்தத்தின் நகர் மையத்தில் அமைந்த மின்கதிரோன் ஆலயத்தில் வணங்கி மலர்பெற்று வெளிவந்தபோது சௌனகர் “புலரியில் குடித்தெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கி விடைகொள்ள பொழுதிருக்காது, அரசே. இப்போதே அச்சடங்குகளை முடித்துவிடுவது நன்று” என்றார். “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். இளையோர் எங்கே?” என்றார். “நகுல சகதேவர் ஆலயத்திற்கு கிளம்பிவிட்டனர்” என்றார் சௌனகர். “பிறர்?” என்றார். அவர் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் தலையசைத்துவிட்டு நடந்தார்.
வைதிகர் குழுவுடனும் அமைச்சர்களுடனும் சென்று ஏழு எல்லைக் கொற்றவை ஆலயங்களிலும் எட்டு திசைக்காவலர் ஆலயங்களிலும் பதினாறு உருத்திரர்களின் ஆலயங்களிலும் பூசை முறைகளை முடித்து நள்ளிரவில்தான் அரண்மனைக்கு மீண்டார். களைத்துப் போய் உணவருந்த அமர்ந்தார். சௌனகரிடம் “பீமனையும் அர்ஜுனனையும் சென்று பார்த்து காலையில் அவர்கள் சித்தமாக இருக்கவேண்டுமென்று மீண்டுமொருமுறை சொல்லிவையுங்கள். ஓலைகள் எதுவென்றாலும் என்னிடம் கொண்டுவரத் தயங்கவேண்டியதில்லை” என்றார்.
“மூன்று நாழிகைப் பொழுது தாங்கள் துயில முடியும், அரசே” என்றார் சௌனகர். “ஆம், நான் உடனே மஞ்சத்திற்கு செல்லவேண்டும். படகில் என்னால் சீராக துயிலமுடிவதில்லை” என்றார் தருமன். மஞ்சத்தறையில் நுழைந்தபோது மறுகணமே துயின்றுவிடுவோம் என்றே எண்ணினார். வெண்பட்டு விரிப்புடன் இறகுச்சேக்கை மஞ்சம் புதுமணல்பரப்பென காத்திருந்தது. திறந்த சாளரத்தினூடாக காற்று திரையசைத்து உள்ளே வந்தது. தனிச்சுடர் அமைதி என நின்றசைந்தது. மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு எப்போதுமென பாண்டுவின் பாதங்களை விழிக்குள் நிறுத்தி “தந்தையே! தெய்வங்களே!” என்று நீள்மூச்செறிந்தபின் படுத்தார்.
வெகுநாட்களாக தன் மஞ்சத்தறையில் தனித்து உறங்குவதே அவர் வழக்கம். திரௌபதி அவருடனிருக்கும் மாதங்களிலும்கூட தன் இரவின் தனிமையை பேணிக்கொண்டார். தனிமை அமைதியென்றாகி சூழ்ந்துகொள்கையிலேயே துயில் அவர் மேல் படரும். பெரும்பாலான நாட்களில் பின்னிரவின் குளிர் உடலை தொடும்வரை நூல்தேரவோ தனக்குத்தானே என நாற்களமாடவோ செய்வது அவர் வழக்கம். பகடையற்ற யவனநாற்களமே அவருக்கு உகந்தது.
பனி அறையில் மரத்தூண்களை குளிர்ந்து விறைக்கச் செய்திருந்தது. அனைத்து மரப்பரப்புகளும் ஈரமாக இருப்பதைப்போன்ற மயக்கு எழுந்தது. வெளியே மரங்களில் இலைகளிலிருந்து பனித்துளிகள் சொட்டிக் கொண்டிருக்கும் ஒலி கேட்டது. பிரம்மாண்ட பேருருக் கொண்ட அன்னை விலங்கின் அடிவயிற்றில் ஒட்டி அதன் நரம்புத்துடிப்புகளை கேட்டுக் கொண்டிருப்பது போல. கரிய விலங்கு. ஒளிரும் பல்லாயிரம் விழிகள் கொண்டது. அவ்வப்போது உடல் சிலிர்த்து அசைந்து வெம்மூச்சு விடுவது.
இருளில் நெடுந்தொலைவுவரை கேட்ட ஒலிகளை செவி கூர்ந்தார். நகரம் எப்போதும் முழுமையாக துயில்வதில்லை. இரவடங்குகையில் அதன் ஒலிகள் மாறுபட்டபடியே செல்லும். பின்னிரவில்தான் அங்காடிகளுக்குரிய பொதி வண்டிகள் நகர் நுழைவது வழக்கம். அத்திரிகளின் குளம்போசை நகரத்தின் கல்பாவிய தெருக்களில் எழுந்தபடியே இருக்கும். இரவில் நகரில் அமைந்த பல்லாயிரம் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலி தெளிவாக கேட்கும். இரவு மட்டுமே எழும் பெரும் சிறைப்பறவை கூட்டம் போல.
எண்ணிக் கொண்டது என யமுனையிலிருந்து எழுந்து நகர்மேல் சூழப்பறக்கும் காற்று புழுதிகலந்த பாசிமணத்தை காற்றில் நிறைக்கும். அங்காடிகளிலிருந்தென்றால் மட்கிய மலர்களும் தழைகளும் மடித்த எண்ணையும் சுண்ணமும் கலந்த மணம். சுழன்று ஆலயங்களிலிருந்து வந்ததென்றால் அகிலும் அரக்கும் கலந்த தூப மணம்.
அங்காடி வெளி முழுக்க கட்டப்பட்டிருக்கும் தோற்கூரைகளை காற்று உந்தி எழுப்ப அவை உருண்டு புடைத்து பின் அமையும் ஒலி. அரண்மனையின் பல நூறு தாழ்கள் குலுங்கும் ஒலி. கதவுகள் முனகி திகிரியில் சுழன்றமையும் வலியோசை. மிகத் தொலைவில் யமுனையின் அலைகள் கரையை அறையும் ஒலிகூட கேட்பது போல் தோன்றியது. களிறின் பிளிறல் போல கொம்போசை எழுப்பியபடி கலம் ஒன்று படித்துறையில் இருந்து கிளம்பியது.
அதன் பெரும்பாய்கள் ஒவ்வொன்றும் எழுந்து புடைத்து கயிறுகளை இழுத்து விம்மி அதிர்வதை கேட்டார். அதன் கொடிகள் காற்றில் எழுந்து துடித்தன. அவற்றின் மேல் சேக்கை அடைந்திருந்த பறவைகள் கலைந்து இருளில் எழுந்து சிறகடித்து குழம்பி கரை நோக்கி சென்றன. அது விலகிய இடத்தில் அடுத்த கலம் இறங்குமுகத்தில் பிளிறியபடி அணைந்தது. அதிலிருந்த மாலுமிகளின் குரல்களை கேட்க முடிந்தது. சிறிய கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. களிறுகள் இழுத்துச் சுழற்றும் எடைத்துலாக்களின் புரிமுள் உறுமியது.
ஒலிவடிவில் மொத்த நகரத்தையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். செவியறியாத ஒலிகள். கேட்கும் ஒலித்துளிகளை நெஞ்சுக்குள் எஞ்சிய ஒலியால் நிரப்பி முழுமை செய்து அவர் வரைந்தெடுத்து பரப்பிய அப்பெருநகரம் உண்மையில் எங்குள்ளது? எத்தனை நகரங்களாக அது ஆடிப்பரப்பிலென தன்னை பெருக்கிக்கொண்டிருக்கிறது இப்போது?
எழுந்து சென்று சாளரம் வழியாக வெளியே தெரிந்த அரண்மனையின் செண்டுவெளி முற்றத்தை நோக்கி நின்றார். அதன் மறுஎல்லையில் கொற்றவை ஆலயத்தின் மேல் முப்புரிவேல் பதித்த செம்மஞ்சள் கொடி பறந்து கொண்டிருந்தது. அதன் முகப்பின் பெருவாயில் மூடப்பட்டு அதன் இருபக்கமும் வெண்கலத்தால் உருக்கிச் செய்து பொறிக்கப்பட்ட உக்ர சண்டிகை, ஊர்ஜ சண்டிகை இருவரின் முகங்களும் இருபக்கமும் எரிந்த பந்தத்தீயின் வெளிச்சத்தில் உருகித் ததும்பும் உலோகத்துளிகள் போல தெரிந்தன. மேலும் மேலும் விழி கூர்ந்து அவற்றின் விழிகளைக்கூட சந்தித்துவிடலாமெனத் தோன்றியது.
செண்டுவெளி முழுக்க அந்தியில் கூடியிருந்த மக்களின் கைகளிலிருந்து உதிர்ந்த சிறு பொருட்கள் விழுந்து கிடந்தன. மகளிர் குழலுதிர்ந்த மலர்மாலைகள், குழந்தைகள் ஆடிய பாவைகள், சிற்றுணவு பொதிந்த இலைகள். பந்தங்களின் செவ்வொளியில் செம்மண் பரப்பில் பதிந்து சென்ற அத்திரிகளின் கால் குளம்புகளின் சுவடுகளை விழிதொட்டு மீட்டு விடலாமென்று தோன்றியது.
ஏன் நிலையழிந்திருக்கிறோம் என்று தருமன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அகம் சிதறிப்பறக்கையில் வெளி நோக்கி விழி திருப்பும்போது புற உலகம் பருப்பொருளால் ஆனது என்பது அளிக்கும் ஆறுதலைப்போல அழுத்தமான பிடி பிறிதொன்றில்லை. எண்ணங்களைப்போலன்றி தங்கள் வடிவை எந்நிலையிலும் காத்துக்கொள்ளும் தகைமையுடன் புறப்பொருட்களை அமைத்திருப்பதன் பெருங்கருணையை அவர் எண்ணிக் கொண்டார். இவையும் அணுகினால் அகல்பவையாக, தொட்டால் உருமாறுபவையாக, கணம் ஒன்றென பிறந்து கணம்தோறும் பிரிந்து பெருகுபவையாக, காணாதிருக்கையில் அகல்பவையாக இருந்தன என்றால் மானுடனுக்கு சித்தமென்றே ஒன்றிருக்குமா?
சித்தமென்பது புழுதி. புற உலகெனும் பருவெளிமேல் அது படிந்து தன் உருவை அடைந்து தானென்று ஓர் உலகு சமைக்கிறது. அடியிலுள்ளது மாறா வடிவப்பருப்பெருக்கு. இந்த மாளிகை இவ்வடிவிலேயே ஊழியின் இறுதிவரை இருக்க உறுதி பூண்டது. பிறிதொரு பருப்பொருள் ஒன்று மோதி மாற்றாமல் அது உருவழிவதில்லை. இந்தத் தூண் என்றுமென நின்றிருக்கிறது. அந்தப் புரவி புரவியென்றே தன்னை முற்றாக வரையறுத்துக் கொள்கிறது.
தெய்வங்களே என்ன எண்ணிக் கொண்டிருக்கிறேன்! என் எண்ணங்களை வெறும் கொந்தளிப்பென்று உணர்கிறேன். அவை ஒவ்வொன்றையும் இப்பருப்பொருட்களுடன் முற்றாகப் பிணைக்க விரும்புகிறேன். துள்ளும் புரவியை தறியில் கட்டுவதுபோல. பருப்பொருளால் ஆனது அகம். என் நூல்கள், என் அறங்கள், என் உணர்வுகள். அனலென புனலென அலைபாய்பவையும் பருப்பொருட்கள் அல்லவா? ஆடிப்பாவையில் நெளிபவையும் பருப்பொருட்கள்தானே? ஒருவேளை புறவெளியென விரிந்திருக்கும் இப்பருப்பொருள் வெளியும் வெறும் அலையோ அதிர்வோதானா? எளியவனென இங்கிருக்கும் என் விழிமூக்குசெவிதோல்நாக்கில் அளிக்கும் மயக்குதானா?
இருள் சூழ்ந்துள்ள இப்புடவி என்பது ஒரு பெருக்கு. அண்ட வெளியின் ஆழத்தில் எவர் விழியும் தொடாமல் சுடர்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி ஆதித்யர்களுடன் அதை பிணைக்கிறது இவ்விருள். எந்த ஆதித்யனின் ஒளியாலும் தொடப்படாத பல்லாயிரம் கோடி கோள்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது இங்குள்ள ஒவ்வொரு மணல்பருவும். பகலில் உருதிரட்டி வரும் ஒவ்வொன்றும் இருளில் ஒளி அழிந்து ஒற்றைப் பெரும்பரப்பென ஒன்றாகி விடுகின்றன. இரவு பகலை கரைத்தழிக்கிறது. புள்ளியிட்டு கோடிணைத்து விரிந்த பெருங்கோலத்தை மிதித்துக் கலைக்கின்றன கரிய யானையின் கால்கள். யானை தோல்நலுங்க நடக்கிறது. மின்னுகின்றன ஒளிகொண்ட இருள்துளியென விழிகள்.
நீள்மூச்சுடன் அவர் திரும்பி வந்து மஞ்சத்தில் படுத்தார். உடல் ஓய்வை நாடுகையில் உள்ளம் எப்படி திமிறி எழமுடியுமென்று வியந்தார். ஒவ்வொரு தசையும் களைப்பை இனிய உளைச்சலென உணர்ந்து எலும்பின் இழுவிசைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தளர்ந்தது. இருபாதங்களும் இருபக்கமும் தொய்ந்தன. கைகள் உயிரிழந்தவை போல் சேக்கை மேல் படிந்தன. நுரை இறகை என சேக்கை அவரை உள்வாங்கிக் கொண்டது. விழுவது போல் உணர்ந்தார். உதிர்ந்த பட்டுச்சரடென நெளிந்து அவரை அணுகி அகன்ற பாதையில் ஒரு கால் நடந்து செல்வதுபோல் கண்டார். அறிந்த கால்கள். சிலம்பணிந்தவை. அவள்தான்! அவர் விழிதூக்கி அவளை நோக்கியதும் செவி அருகே சிரிப்பை கேட்டார்.
உடலதிர எழுந்து அமர்ந்தார். எழுந்தமர்ந்தது சித்தமே என்றும் உடல் இன்னமும் சேக்கையிலேயே கிடப்பதையும் உணர்ந்தார். கையூன்றி உடலை உந்தி எழுந்தார். மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தபடி எதை பார்த்தோம் என்று எண்ணினார். எதையோ ஒன்றை. இந்நாட்கள் புரியாத கனவுகளால் அலைக்கழிக்கப்படுகின்றன. உள்ளிருந்து எதுவோ ஒன்று மொழியோ ஓசையோ உணர்வோ இன்றி கூவி அழைத்துக்கொண்டே இருக்கிறது. தீங்கு ஒன்று நிகழும் என்ற எச்சரிக்கையா? அவ்வண்ணம் தோன்றவில்லை. அச்சமா? அதுவுமில்லை. பிறிதென்ன?
விதுரர் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து அவைமுகமன் பெற்றபின் அவரை மந்தண அறையில் சந்தித்து பீஷ்மரும் துரோணரும் கிருபரும் திருதராஷ்டிரரும் ஒப்புக்கொண்ட வழி என்று பன்னிரு பகடைக்களம் ஆடுவதைக் குறித்து சொன்னதும் மறு எண்ணம் இல்லாமல் உவகைப்பெருக்குடன் அவர் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், மூத்தோரின் சொல். அதுவே எனக்கு இறையாணை” என்றார். அது ஊழின் கணம். ஒரு துளியேனும் எண்ணம்பிறழாமல் எடுத்த முடிவு. வாழ்வில் ஒரு முறை கூட அத்தகைய ஒரு உடன்முடிவை எடுத்ததில்லை.
அதன் பின் நூறு கோணங்களில் எண்ணி சூழ்ந்த பின்னரும் அம்முடிவன்றி பிறிதெதும் உகந்ததென்று தோன்றவுமில்லை. அன்னையும் அவரிடம் சொன்னாள் அதுவே அவர் வழி என்று. திரௌபதி அவர் விருப்பம் அதுவென்றால் அவளுக்கும் அதுவே என்றாள். உடன்பிறந்தோர் நால்வரும் பிறிதொன்று சொல்லவில்லை. ஐயத்துடன் குழம்பிக் கொண்டிருந்த சௌனகராலும் மாற்று என ஒன்றை சொல்ல இயலவில்லை. அவ்வண்ணமெனில் எஞ்சுவது என்ன?
முடிவை இளையோரிடம் பேசியபோது நகுலன் “இளைய யாதவரிடம் சொல்சூழ்ந்த பின்னர் முடிவெடுத்திருக்கலாம், மூத்தவரே. எனினும் எடுத்த முடிவு இந்திரப்பிரஸ்தத்தின் அரசாணை. அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “பிறிதென்ன வழியை இளைய யாதவர் சொல்லியிருக்கக்கூடும், இளையோனே?” என்றார் தருமன். நகுலன் “அறியேன்” என்று மட்டும் சொன்னான். அன்றே துவாரகைக்கு ஒரு பறவைச் செய்தியை அனுப்பினார்.
ராஜசூயம் முடிந்ததுமே இளைய யாதவரை தேரிலேற்றி அர்ஜுனனே நகர்த் தெருக்களினூடாக ஓட்டிச் சென்று துவாரகைக்கு வழியனுப்பியதைப்பற்றி துவாரகா கமனம் என்னும் குறுங்காவியத்தை சாரதர் என்னும் புலவர் இயற்ற சூதர் அதை பாடிப்பரப்பினர். நீலவிழி திறந்த பீலி முடியும், அந்திப்பொன் பட்டாடையும் அணிந்து எப்போதுமுள்ள இன்சிரிப்புடன் இளைய யாதவர் தன் அரண்மனை விட்டு வெளிவந்தபோது அவரும் தம்பியரும் அரண்மனை வாயிலில் காத்து நின்றிருந்தனர். அவர் தலைவணங்கி “வருக, துவாரகைக்கரசே. இன்று நீங்கள் நகர் நீங்குகிறீர்கள். பல்லாயிரம் மடங்கு பெரிதாக உங்கள் நினைவு இங்கே நின்றிருக்கும்” என்றார்.
இளைய யாதவர் புன்னகைத்து “மூத்தவரே, தாங்கள் பாரத வர்ஷத்தின் சக்ரவர்த்தி. தங்கள் அவைக்கு வந்து விடை கொண்டு செல்ல வேண்டியதுதான் முறைமை” என்றார். “இங்கு வந்தது எங்கள் குலம் காக்கும் தெய்வத்தை வழிபடுவதற்கு உரிய உள நிலையில், யாதவரே” என்றார் யுதிஷ்டிரர். “சொல் சூழ தங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை” என்று புன்னகைத்தார் இளைய யாதவர்.
ஐவரும் அவரை அரண்மனைக் கூடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், பலந்தரையும், தேவிகையும், விஜயையும், கரேணுமதியும் சேடியர் சூழ காத்து நின்றிருந்தனர். அவர்களை நோக்கி சென்று குந்தியை வணங்கி “அத்தை, அரண்மனை விட்டு தாங்கள் வருவது முறையே அல்ல. நான் அங்கே வந்திருப்பேன்” என்றார். “இத்தனை காலம் இங்கிருந்தாய். உன்னை பார்க்கவேயில்லை என்று படுகிறது” என்றாள் அவள். திரௌபதியையும் பிறரையும் நோக்கி புன்னகைத்து “அரசியரும் வருவீர்கள் என்று எண்ணவே இல்லை” என்றார்.
“அனைத்து முறைமைகளையும் கைவிட்டு இங்கு வரவேண்டுமென்பது எனது ஆணை” என்றார் தருமன். “இந்நாள் ஒவ்வொருவரின் கண்களிலும் எஞ்சவேண்டும், யாதவரே. இனியவை அனைவருக்கும் உரியவையல்லவா?” இளைய யாதவர் “சென்றதுமே மீள்வதைப்பற்றித்தான் எண்ணுவேன்” என்றார். பீமன் “இளையோன் துவாரகைக்கு வரப்போவதாகச் சொல்கிறான்” என்றான். இளைய யாதவர் அர்ஜுனனை நோக்கிவிட்டு புன்னகைத்தார்.
குந்தி தேனும் பாலும் பழச்சாறும் கலந்த மதுபர்க்கத்தை பொற்கிண்ணத்தில் அவருக்கு அளித்தாள். அவர் இரு கைகளாலும் வாங்கி ஒருமுறை உறிஞ்சி உண்டார். “வருகையில் அளித்த மதுபர்க்கம் அளவுக்கு இதுவும் இனியதே” என்றார். “இன்னும் நூறு மதுபர்க்கங்கள் தங்களுக்கு அளிக்க எங்களை வாழ்த்தவேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் பொற்கிண்ணத்தில் அளித்த தேனமுதை வாங்கி ஒருவாய் குடித்து “இது அனலென சுவைகொண்டுள்ளது” என நகைத்தார்.
அரசியர் ஒவ்வொருவரும் முகமன் உரைத்து தேனமுதளித்தனர். நகுலனும் சகதேவனும் அவர் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினர். உபபாண்டவர்கள் அபிமன்யுவும் பிரதிவிந்தியனும் சுருதசோமனும் சுருதகர்மனும் சதானீகனும் சுருதசேனனும் யௌதேயனும் சார்வாகனும் நிரமித்ரனும் சுகோத்ரனும் வந்து அவர் கால்கள் தொட்டு வணங்கினர். வாழ்த்துகளும் முகமன்களும் முடிந்து அவர் அரண்மனை முற்றத்திற்கு வந்தபோது அங்கிருந்த வைதிகர் அவரை வாழ்த்தி கங்கைநீரும் அரிமஞ்சளும் சொரிந்தனர். மங்கல இசை முழங்கியது.
அமைச்சர் சௌனகர் கைகாட்ட அரசத்தேர் வந்து நின்றது. அதன் பொன்வளைவுகளில் அரண்மனையின் வெண்ணிறத் தூண்களும் செம்பட்டுக் கொடிகளும் பட்டுப்பாவட்டாக்களும் எதிரொளித்தன. “இது பட்டத்துத் தேரல்லவா?” என்றார். “ஆம். தங்களுக்கு இங்கு அனைத்தும் முதன்மையானதே அளிக்கப்படும்” என்றார் சௌனகர். இளைய யாதவர் வாயெடுப்பதற்குள் யுதிஷ்டிரர் “அனைத்து முறைமைகளையும் கடந்து விட்டோம்” என்றார். இளைய யாதவர் நகைத்தபடி “நன்று” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை அனைவரையும் நோக்கி புன்னகைத்து கைகூப்பி தேரிலேறி அமர்ந்தார்.
அரண்மனைப் பெண்கள் அருகணைந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு விழிகனிந்து அவரை நோக்கி நின்றனர். பார்த்தன் பொற்பட்டுத்தலைப்பாகையுடன் பீடத்திலமர்ந்திருந்த பாகனுக்கு கைகாட்ட அவன் கடிவாளத்தை வைத்துவிட்டு இறங்கினான். பார்த்தன் ஏறி பாகனுக்குரிய பீடத்தில் அமர்ந்து கடிவாளங்களை தன் இடது கையில் பற்றி வலது கையில் சம்மட்டியை எடுத்துக் கொண்டான். இளைய யாதவர் உரக்க நகைத்து “நன்று! நன்று!” என்றார்.
அவர் “செல்க!” என்று கைகாட்டியதும் அர்ஜுனன் கடிவாளத்தைச் சுண்டி இழுக்க ஏழு வெண்புரவிகளும் நுரையெழுந்த அலையென ஒன்றாக காலெடுத்து வைத்தன. தேர் இளங்காற்றில் மிதந்தெழும் இறகுபோல ஓசையின்றி முன் சென்றது. இளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி “நல்லூழ் தொடர்க, அரசே! பாரதவர்ஷத்தின் மணிமுடி என்றும் தங்கள் தலைமேல் ஒளிவிடுக!” என்றார். “தங்கள் அருளிருக்கையில் என்றும் அவ்வண்ணமே” என்றார் தருமன்.
“ஆம், என்றும் அது அவ்வாறே இருக்கும்” என்றபின் அவர் விழிகள் சற்று மாறுபட்டன. “அரசே, நாடாள்பவன் துறவிக்கு இணையானவன். துறந்து துறந்து அடைவதே அவன் பீடம் என்றறிக! விழைவுகளை, உறவுகளை, உணர்வுகளை துறக்கவேண்டும் அவன். மாமுனிவர்களோ அறங்களையும் தெய்வங்களையும் துறந்தவர்கள்” என்றபின் திரும்பி அர்ஜுனனிடம் செல்லும்படி கைகாட்டினார்.
தேர் சென்று மறைவது வரை கூப்பிய கைகளுடன் நோக்கி நின்ற யுதிஷ்டிரர் அதன் பின்னரே அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று எண்ணினார். அதைப்பற்றி எவரிடமாவது பேச வேண்டுமென்று உளம் எழுந்தபோது நெஞ்சடக்கி அதை கடந்தார். பேசப்படாததால் அச்சொல் அவருள் புதைந்து மறைந்தது. தனிமையில் பலமடங்காக அது திரும்பி வந்தது. உறவுகளை, விழைவுகளை, உணர்வுகளை கடப்பது முறை. அறங்களையும் தெய்வங்களையும் கடந்து அடையும் பீடமென்பதன் பொருள் என்ன?
இத்தருணத்தில் அறங்களைக் கடக்காது நின்றுவிட்டேனா? தெய்வங்களை அஞ்சிவிட்டேனா? உறவுகளையே கடக்க இயலவில்லை. விழைவுகளை, உணர்வுகளை கடப்பதும் கடினமாகத்தான் இருக்கிறது. விதுரர் வந்து கைபற்றி கோரியபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதென எடுத்த முடிவு சத்ரபதி என்று நின்று அடைந்தது அல்ல. அரசன் என்றுகூட அல்ல. நூற்றைவருக்கு மூத்தவன் என்ற வகையில் மட்டுமே.
“ஆம்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அதை பிழை என்று இளைய யாதவர் சொல்லக்கூடும். பன்னிரு பகடைக்கு முடிவெடுத்ததை அவருக்கு எழுதி அனுப்புகையில்தான் அவர் இறுதியாக சொல்லிச் சென்ற அவ்வரி நினைவில் எழுந்தது. “எதையும் துறக்க என்னால் இயலவில்லை, யாதவரே. அனைத்தையும் அள்ளிச் சேர்த்து ஆவி தழுவி நின்றிருக்கும் பெருந்தந்தையாகவே இம்முடிவை எடுத்தேன். பிழையென்று தோன்றவில்லை. எனவே உகந்ததென்று உணர்கிறேன். உங்கள் வாழ்த்தொன்றை கோருகிறேன்” என்று எழுதியிருந்தார்.
துவாரகையிலிருந்து மறுமொழி நோக்கி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தார். பறவைத் தூது சென்றுமீள நாளாகவில்லை என்று சிலநாட்கள். வந்துவிடும் வந்துவிடும் என்று சில நாட்கள். பிறிதொன்று வர வாய்ப்பில்லை என்று மேலும் சில நாட்கள். கைவிடமாட்டார் என்று எஞ்சிய நாட்கள். அஸ்தினபுரிக்குச் செல்லும் நாள் அணைந்தபோது அர்ஜுனன் “இளைய யாதவரிடமிருந்து ஒரு சொல் எழாது செல்வதெப்படி, மூத்தவரே?” என்றான். “வந்துவிடும். பிறிதொரு சொல் வரவாய்ப்பில்லை” என்றார் தருமன்.
கிளம்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன் துவாரகையிலிருந்து பறவைச்செய்தி வந்தது. இளைய யாதவரின் முத்திரையுடன் அக்ரூரர் அமைத்த சொற்களில் அரச முறைப்படி ஒரு வாழ்த்து. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் எடுத்த முடிவு நலம் பயக்குமென்று துவாரகை விரும்புகிறது. பன்னிரு பகடைக்களமும் போரே. போர் அனைத்திலும் வெற்றி கொள்பவரே சத்ராஜித் என அழைக்கப்படுவார். இப்போரிலும் அரசரின் ஆண்மையும் அறமும் வெல்வதாக!” ஓலையை வாசித்தபின் சௌனகரிடம் அளித்துவிட்டு தருமன் எண்ணச்சுமைகொண்டு தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
“அரசமுறைமைச் சொற்கள்” என்றான் அர்ஜுனன். “ஆம், இது போர் என்பதால் போருக்குரிய முறையில் முறைமைச் சொற்கள் எழுதப்பட்டுள்ளன” என்றார் சௌனகர். “இளைய யாதவர் ஒருபோதும் முறைமைச் சொற்கள் அனுப்புவதில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தருணத்தில் பிறிதொன்றை அனுப்ப இயலாதே” என்றார் சௌனகர். தருமன் எழுந்து “அவரது சொல் வந்துவிட்டது, அதுவே போதும்” என்றார்.
ஆனால் தன் அறைக்குத் திரும்புவது வரை வெந்தசைக்குள் புகுந்த முள்மேல் நெருடுவது போல அதையே உழற்றிக் கொண்டிருந்தார். அதில் ஒவ்வொரு சொல்லையும் எடுத்து பிறிதொரு பொருளுண்டா என நோக்கினார். ஆண்மை, அறம் - என்ன பொருள் அதற்கு? சட்டென்று சினம் தொற்றிக் கொள்ள திருமுக எழுத்தனை அழைத்து ஓலை எழுதச்சொன்னார். உணர்வெழுச்சியில் நடுங்கும் குரலுடன் சொல்லிக்கொண்டே சென்றார்.
“ஆம், ஆண்மை பிறழ்ந்தவன்தான், யாதவரே. கோழை. நூற்றைந்து தம்பியரையும் எண்ணுகையில் என் கைகள் தளர்கின்றன. எதற்காகவும் கொலைவாளின் கூர்கொள்ள என்னால் இயலவில்லை. என் அறமென்பது குடியறமே. மானுடம் கடந்த பேரறம் இன்றுவரை என் உள்ளத்தில் எழவில்லை. மைந்தரை தோளெங்கும் சுமந்து கனிமரமென சதசிருங்கத்தில் நின்ற பாண்டுவே என் உள்ளத்தில் தெய்வமாக நின்றிருக்கிறார். அவர் மைந்தனென நின்றே இம்முடிவை எடுத்தேன். அவ்வண்ணமே அமைந்து களமாடவிருக்கிறேன். அவர் அருளால் வெல்வேன் என்று எண்ணுகிறேன்.”
எழுத்தர் ஓலையைச் சுருட்டி குழலிலிட்டு முத்திரை இடும்போது குறுபீடத்தில் அமர்ந்து முகவாயைத் தடவியபடி அதை பார்த்துக்கொண்டிருந்தார். “இன்றே செய்தி சென்றுவிடும், அரசே” என்று திருமுகத்தன் தலைவணங்கியதும் “வேண்டாம்” என்றார். அவன் விழிதூக்கி நோக்க “அதை அனுப்ப வேண்டியதில்லை. கொடு” என்று சொல்லி வாங்கினார். தன் சிற்றறையைத் திறந்து அதற்குள் இட்டு, அவன் செல்லலாம் என்று தலையசைத்தார்.
தருமன் தன் சிற்றறையைத் திறந்து அந்தத் திருமுகத்தை பார்த்தார். உருளை வடிவ பகடை போல சிற்றறை இழுப்பை திறந்தபோது உருண்டு அவரை நோக்கி வந்தது. சிலகணங்கள் நோக்கிவிட்டு அதை மூடினார். மீண்டும் மஞ்சத்தில் சென்று படுத்து கண்களை மூடிக் கொண்டார். ஆயிரம் கைகள் நீட்டி கவ்வ வரும் நண்டு போல ஒலிவடிவமாக நகரம் எழுந்து அவரை சூழ்ந்தது. குறைகும்பத்தின் கார்வை நிறைந்த நகரம்.
எழுந்து நீரருந்தினார். பெட்டியைத் திறந்து பன்னிருகளத்தை எடுத்து மஞ்சத்தில் பரப்பி தந்தங்களால் ஆன பகடைக் காய்களை வெளியே எடுத்தார். கையிலிட்டுச் சுழற்றி விரித்து எண் சூழ்ந்து காய் நகர்த்தினார். பதினெட்டு முறை தன்னை தான் வென்று முடித்தபோது அறை வாயிலை மெல்ல ஏவலன் தட்டும் ஒலி கேட்டது. “வருக!” என்றார் தருமன். கதவு திறந்த மெய்க்காவலன் “அமைச்சர் சௌனகர்” என்றான்.
சௌனகர் உள்ளே வந்து வாழ்த்துரைத்து “இளைய யாதவரின் சொல்” என்றார். பதற்றத்துடன் “புதிய ஓலையா?” என்றபடி அவர் எழுந்து அருகே வந்தார். “ஆம்” என்று அவர் சொன்னார். அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி விரித்து எழுதப்பட்டிருந்த சொற்களை படித்தார். முதலில் ஒரு சொல்லும் பொருளாகவில்லை. விழிமயங்க எழுத்துக்கள் கலைந்து அலையடித்தன. பின் நெஞ்சறைதலை மெல்ல அடக்கி மீண்டும் வாசித்தார்.
“அனைத்தும் நன்றே என்றுணர்க! இறுதி வெற்றி உடனுறையும் என்பதில் ஐயம் கொள்ளற்க! என்றும் உங்களுடன் என் படையாழி நின்றிருக்கும். நன்று சூழ்க!” என்று இளைய யாதவர் தன் கைப்பட எழுதியிருந்தார். மந்தணக் குறி எழுத்துக்களில் அமைந்த அச்செய்தியை வாசிக்க வாசிக்க மீண்டும் விருப்பு எழுந்தது. விழிகளால் வாசித்து தீராது கைகளால் தொட்டு வாசித்தார். அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. உளம் பொங்கி விழிகளில் நீரெழுந்தது. சௌனகரிடம் “செல்வோம், அமைச்சரே. இனி ஒன்றும் கவலை கொள்ள வேண்டியதில்லை” என்றார்.
[ 2 ]
இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த அணிப்படகு அலைகளில் எழுந்து தெரிந்ததுமே அஸ்தினபுரியின் துறைமேடையில் முரசுபீடத்தில் நின்றிருந்த நிமித்திகன் தன் வெள்ளிக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை சுழற்றினான். துறைமுற்றத்தின் இடதுநிரையில் அணிவகுத்திருந்த இசைச்சூதர்கள் முழங்கத் தொடங்கினர். நடுவே பொற்தாலங்கள் ஏந்திநின்ற அணிச்சேடியர் தங்கள் ஆடை சீரமைத்து தாலம் ஏந்தி நிரை நேர்நோக்கினர். வலது நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் நிறைந்த பொற்குடங்களையும் மஞ்சளரிசியும் மலரும் நிறைந்த தாலங்களையும் எடுத்துக் கொண்டனர்.
அலைகளில் எழுந்தும் விழுந்தும் ஊசலாடி அணுகிய கொடிப்படகு துறைமேடையை நோக்கி பாய்களை மடித்தபடி கிளைதேரும் கொக்கு என வந்தது. அதன் அலகுபோல் நீண்டிருந்த அமரமுனையில் நின்ற படகுத்தலைவன் அணைகயிறுக்காக கையசைத்துக் காட்டினான். துறையிலிருந்து இறுக வளைக்கப்பட்ட பெருமூங்கிலில் தொடுத்து நிறுத்தப்பட்ட பேரம்புடன் பிணைக்கப்பட்டிருந்த வடம் நீர்ப்பாம்பு போல எழுந்து வளைவு நீட்டி அப்படகை நோக்கி பாய்ந்துசென்று அதன் அமரமுனையில் விழுந்தது. மூன்று படகுக்காரர்கள் அதை எடுத்து படகின் கொடிமரத்தில் சுற்றினர். யானைகள் இழுத்த திகிரிகள் உரசி ஓலமிட்டபடி சுழல வடம் இழுபட்டு கழிபோலாகி அணிப்படகை துறைநோக்கி இழுத்தது. துறை அதை தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது.
படகிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் கவசவீரன் ஒருவன் இறங்கி நடைபலகை வழியாக வந்து படகுத்துறைமேல் ஏறி முழந்தாளிட்டு வணங்கி அக்கொடியை தரையில் ஊன்றினான். துறைமுற்றமெங்கும் நிறைந்திருந்த அஸ்தினபுரியின் முதற்படைவீரர்களும் அகம்படியினரும் ஏவலரும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிப்படகிலிருந்து மங்கலத்தாலங்கள் ஏந்திய பன்னிரு சேடியரும் உடன் மங்கல இசை எழுப்பியபடி சூதரும் இறங்கி வந்தனர். தொடர்ந்து வந்த காவல் படகுகள் ஒவ்வொன்றும் அணிப்படகிலிருந்தே வடம் பெற்று தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு நீண்ட மாலையென்றாயின. அவற்றிலிருந்து வேலும் வில்லும் ஏந்திய படைவீரர்கள் நீர் மின்னும் கவசஉடைகளுடன் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர்.
துறைமுற்றத்திலிருந்து விதுரர் கனகருடனும் சிற்றமைச்சர்களுடனும் நடந்து துறைமேடைக்கு வந்தார். தருமனின் நந்த உபநந்த கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடியும் சூடிய அரசப்படகு கங்கையின் அலைகளில் பன்னிரு பாய்கள் புடைத்து நின்றிருக்க எழுந்தது. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க! அறம் அமைந்த அண்ணல் வாழ்க! பாண்டவ முதல்வர் வாழ்க! குருகுல மூத்தோன் வாழ்க! ஹஸ்தியின் குருவின் கொடிவழியோன் வாழ்க!” என்று துறைமுகப்பு முழங்கியது. படகுத்துறையின் நான்கு பெருமுரசங்களும் இடியென ஒலிக்கத் தொடங்கின.
ஒவ்வொரு பாயாக சுருங்கி கொடிமரத்தை ஒட்டி சுற்றிக்கொண்டு இழுபட்டு கீழிறங்க தருமனின் படகு கூம்பிய மலரென்றாகி அருகணைந்தபோது அதன் அமரமுகப்பு முலைதேரும் கன்றின் மூக்குபோல நீண்டு படகுத்துறையை நாடியது. மாலையென கோத்துக்கொண்ட காவல்படகுகள் நீண்டு அதை வளைத்து கயிறுகளை வீசி குழிபட்ட களிறை பயின்ற யானைகளென அதன் பேருடலை பற்றிக்கொண்டன. அலைகளில் அதை நிறுத்தி மெல்ல இழுத்து படகுத்துறை நோக்கி கொண்டுவந்தன. அருகணைந்ததும் நாணியதுபோல் சற்று முகம் விலக்கி ஆடி நின்றது. அன்பு கொண்ட நாய்க்குட்டியென விலாப்பக்கமாக நகர்ந்து படகுத்துறையை வந்து தொட்டு உரசியது. அதிலிருந்து நடைப்பாலம் எழுந்து படகுத்துறைமேல் படிந்தது. வீரர்கள் அதை சேர்த்துக்கட்டினர்.
இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோலுடன் படைவீரன் ஒருவன் தோன்றி நடைபாலத்தின் மேல் அணிப்படையினர் மின்னுருக்களென பதிந்த கவச உடைகளுடன் நடந்து வந்தான். அவனைத் தொடர்ந்து எண்மங்கலங்கள் நிறைந்த தாலங்களுடன் சேடியர் எழுவர் நடந்து வந்தனர். அரசனின் உடைவாளுடன் கவச வீரனொருவன் வர தொடர்ந்து தருமன் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் சௌனகரும் உடன்வர நடைபாலத்தில் சிறிய சீரடி எடுத்து வைத்து ஏறி படகுத்துறையை அணுகினார். அவருக்குப் பின்னால் அரச உடையணிந்த பீமனும் அர்ஜுனனும் வந்தனர். நகுலனும் சகதேவனும் தொடர்ந்தனர்.
விதுரர் கைகூப்பியபடி அவர்களை அணுகி தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரை வரவேற்கிறேன். இவ்வரவு அனைத்தையும் இனிதாக்குக! என்றும் குருதியுறவும் இனிய நினைவுகளும் வளர்க!” என்றார். “வாழ்க! என்றும் அவ்வண்ணமே பொலிக!” என்று யுதிஷ்டிரர் மறுமொழி சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை வணங்கி வரவேற்கிறேன். தங்கள் கால்கள் பட்ட இம்மண்ணின் வயலிலும் கருவூலத்திலும் பொன் நிறையட்டும்” என்றார் விதுரர். அவள் புன்னகைத்து “நன்று நிறைக!” என்றாள்.
பாண்டவர் நால்வருக்கும் தனித்தனியாக முகமன் சொல்லி விதுரர் வரவேற்றார். வைதிகர்கள் அணுகி கங்கைநீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வாழ்த்தினர். வாழ்த்தொலிகளின் நடுவே முகம் மலர்ந்து கைகூப்பியபடி மெல்ல நடந்தார் தருமன்.
துறைமுற்றத்தில் அவர்களுக்காக ஆறு பொற்தேர்கள் காத்து நின்றிருந்தன. அகம்படி ஓடுவதற்கான பன்னிரு வெண்புரவிகள் அவற்றில் ஏறிய கவச வீரர்களுடன் கால்தூக்கி தலையுலைத்து பிடரி சிலிர்த்து நின்றிருந்தன. “அஸ்தினபுரியின் அரசமணித்தேர் தங்களுக்காக காத்திருக்கிறது” என்றார் விதுரர். “நன்று!” என்று முகம் மலர்ந்து சொன்ன தருமன் சௌனகரிடம் “தாங்கள் எனது தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அமைச்சரே” என்றார். அவர் தலைவணங்கினார்.
விதுரர் வழிகாட்டி அழைத்துச்செல்ல அஸ்தினபுரியின் பட்டத்துத் தேரில் யுதிஷ்டிரர் ஏறி அமர்ந்தார். வலப்பக்கம் சௌனகர் தூண்பற்றி நின்றார். ஏழு வெண்புரவிகள் இழுத்த அத்தேர் காற்றிலேறுவதுபோல அஸ்தினபுரியின் அரசப்பாதையில் எழுந்தது. பாண்டவர் நால்வரும் திரௌபதியும் தொடர்ந்து சென்ற தேர்களில் ஏறிக்கொண்டனர். முன்னால் சென்ற தேர்களில் முரசுகள் அவர்கள் நகர் நுழைவதை அறிவித்து ஓசையிட்டன. அகம்படியும் காவல்படையும் அவர்களை தொடர்ந்தன.
ஒவ்வொரு இலையும் நாவென மாறியதுபோல் வாழ்த்தொலிகள் அவர்களைச் சூழ்ந்து அலையடித்தன. தேர் நெடும்பாதையை அடைந்து சீர்விரைவு கொண்டபோது சேக்கைபீடத்தில் சாய்ந்தமர்ந்து கால்களை நீட்டிக்கொண்ட தருமன் சௌனகரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போதே எனது உள்ளம் இனிய உவகையால் நிறைந்தது, அமைச்சரே. நான் எண்ணி வந்தது பிழையாகவில்லை. பார்த்தீர்களல்லவா! அரசமணித்தேர்! அமைச்சரே வந்து வரவேற்கிறார். ஒவ்வொன்றும் இனிதென்றே நிறைவேறும்” என்றார். சௌனகர் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
விழிசுருக்கி “ஐயம் கொள்கிறீரா?” என்றார் தருமன். “ஐயமல்ல” என்றார் அவர். “பின்...?” என்றார் தருமன். “படித்துறைக்கு கௌரவர்களில் ஒருவரேனும் வந்திருக்கலாம்” என்றார். “அவ்வாறு வரும் வழக்கமுண்டா?” என்றார் தருமன். “அரசர்கள் வரவேற்க வரவேண்டுமென்று நெறியில்லை. அமைச்சரோ படைத்தலைவர்களோ வந்தால் போதும். ஆனால் தாங்கள் அரசர் மட்டும் அல்ல. அவர்களின் குருதியுறவு. அவர்கள் அனைவருக்கும் மூத்தவர். தங்களை வரவேற்க அவர்கள் வந்திருக்க வேண்டும்” என்றார்.
தருமன் “அதையெல்லாம் எண்ணி நோக்கினால் வீண் ஐயங்களையே வளர்க்க நேரும். வரவேற்க எண்ணியிருக்கலாம். அவையில் எவரேனும் முறைமையை சுட்டிக்காட்டி மறுத்திருக்கலாம். ஏன், விதுரரே எந்நிலையிலும் முறைமைகளை மீறவிழையாதவர்” என்றார். “ஆம், அவ்வண்ணமே இருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்றார் சௌனகர். தருமன் “அவ்வண்ணமே. நம்பிக்கை கொள்ளப் பழகுக, அமைச்சரே!” என்றார். “அமைச்சரும் வேட்டைநாயும் ஐயப்படுவதையே அறமெனக் கொண்டவை” என்றார் சௌனகர். தருமன் நகைத்தார்.
அஸ்தினபுரியை நோக்கி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் நின்ற ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு தருமன் உளம் மலர்ந்தார். “கனிந்து முதிர்ந்த மூதன்னையரைக் கண்டதுபோல் இருக்கிறது, அமைச்சரே” என்றார். “ஒவ்வொரு கிளையின் வடிவும் நன்கு தெரிந்தவையாக உள்ளன. இந்தப் பாதையளவுக்கு என் உள்ளத்தில் நன்கு பதிந்த இடம் பிறிதுண்டா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றார். “அந்த மகிழமரம் முதல் முறையாக நான் பார்க்கும்போது ஒரு செங்கழுகை ஏந்தியிருந்தது” என்றார். மரங்கள் காலைவெயிலில் தளிரொளி கொண்டன. தழைப்பு கொந்தளிக்க கிளையசைத்தன. “நம் வரவை அவையும் அறிந்திருப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். சௌனகர் புன்னகையுடன் அவரை நோக்கி நின்றார்.
“நான் விண்ணுலகு செல்வேனென்றால் என் மூதாதையரை நோக்கி என்னை கொண்டு செல்லும் வழி இப்பாதையின் மறுவடிவாக இருக்கும், சௌனகரே” என்று உணர்வால் நெகிழ்ந்த குரலில் தருமன் சொன்னார். தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டை தெரிந்ததும் நிலைகொள்ளாமல் எழுந்து நின்று தூணைப்பற்றியபடி நின்று விழிதூக்கி அதை நோக்கினார். “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டையை பார்த்தபின் இது மிகச்சிறிதென தெரிகிறது. ஆனால் அது இன்னும் எனது நகராகவில்லை. அக்கோட்டையை நான் கவசமென அணிந்திருக்கிறேன். இதுவே என் ஆடை” என்றார். அது நெருங்கி வரும்தோறும் சிறுவனைப்போல தோள் துள்ள “கரிய சிறுகோட்டை. ஆமை போல என்னை வரவேற்க தன் ஓட்டுக்குள்ளிருந்து அது தலைநீட்டப்போகிறது” என்றார்.
அதன் மேல் எழுந்த கொடிகள் தெரியத்தொடங்கியதும் “சிறகு கொள்கிறாள் நாக அன்னை!” என்றார். அவரது உவகைத் துள்ளலை சௌனகர் சற்று வியப்புடன் நோக்கியபின் தன்னை அடக்கும்பொருட்டு விழிதிருப்பிக் கொண்டார். கோட்டை அவர்களுக்கு மேல் கவிவது போல் எழுந்ததும் யுதிஷ்டிரர் “அதற்கு மேல் எனது கொடி பறக்கிறது, அமைச்சரே. நான் இன்னமும் அதற்குள்ளேயே இருப்பதுபோல் உணர்கிறேன். வெளியே செல்லவேயில்லை. அங்கு பிதாமகருடனும் தந்தையுடனும் அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அதை நீங்கியதே இல்லை… ஆம்!” என்றார்.
கோட்டையின் சரிந்த நிழல் தன் தேர்மேல் வந்து தொட்டபோது தருமன் கைகூப்பியபடி கண்ணீர் மல்குவதை சௌனகர் கண்டார். “தேரை நிறுத்து! நிறுத்து தேரை!” என்று பதறிய குரலில் அவர் கூறினார். பாகன் திரும்பி சௌனகரை நோக்க தேரை நிறுத்தும்படி அவர் கண்காட்டினார். தேர் சகடங்களின் மீது தடைக்கட்டை உரச விரைவழிந்து நின்றது. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தை வளைத்து புட்டம் சிலிர்க்க கால் தூக்கி நின்ற இடங்களிலேயே விரைவு ததும்பின.
“அரசே…” என்று சௌனகர் மெல்லிய குரலில் சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தபோது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தேர்கள் அனைத்தும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு விரைவழிந்திருப்பதை கண்டார். அகம்படிப்படையினரும் காவல்படையினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஆணை பெற்று அமைந்தனர். தருமன் கூப்பிய கைகளுடன் தேரின் படிகளில் கால்வைத்து இறங்கி மண்ணில் நின்றார். நடுங்கும் உதடுகளும் ததும்பும் முகமுமாக அண்ணாந்து கோட்டையை பார்த்தார். தொடர்ந்து வந்த தேரிலிருந்து விதுரரும் கனகரும் இறங்கி அவர்களை நோக்கி வருவதை சௌனகர் கண்டார்.
அவரும் தொடர்ந்து இறங்கி தருமனுக்குப் பின்னால் நின்று “அரசே…” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தார். “முறைமைகள் பல உள்ளன, அரசே” என்றார். தருமன் அவர் குரலை கேட்கவில்லை. குனிந்து சகடங்கள் ஓடி அரைத்த மென்பூழியில் ஒரு கிள்ளு எடுத்து தன் நெற்றியில் அணிந்து கொண்டார். பாதக்குறடுகளை கழற்றி தேரின் அருகிலேயே விட்டுவிட்டு வெறும் கால்களுடன் மண்ணை மிதித்து கோட்டைக்குள் நடந்து சென்றார். சௌனகர் பின்னால் திரும்பி நோக்கியபடி பதைப்புடன் அவரைத் தொடந்து சென்றார்.
கைகூப்பியபடி நடந்து வரும் தருமனைக் கண்டு கோட்டையில் தேர்நிரையை வரவேற்கக் காத்திருந்த காவலர்தலைவனும் மெய்க்காவல் வீரர்களும் திகைத்தனர். அப்போது என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காவலர்தலைவன் கைகளை வீசி முரசுகள் முழங்கும்படி ஆணையிட்டான். கோட்டை மேல் இருந்த அனைத்து முரசுகளும் இணைந்து பேரொலி எழுப்பின.
எவரையும் பார்க்காதவராக சீர் நடையுடன் வந்த தருமன் கோட்டை வாயிலுக்குள் நுழைந்து கடந்து மறுபக்கம் சென்றார். அவரை வணங்கிய வீரர்களை, தாழ்த்தப்பட்ட கொடிகளை அவர் காணவில்லை. கொம்புகளும் முரசுகளும் எழுப்பிய பேரொலியை கேட்கவில்லை. கோட்டைக்குள் பெருமுற்றத்தில் அவரை வரவேற்பதற்காக வந்த அஸ்தினபுரியின் குடித்தலைவர்களும் வணிகர் குழுத்தலைவர்களும் வைதிகர்களும் காத்திருந்தனர். அரசப் பொற்தேரை எதிர்பார்த்து நின்றிருந்தமையால் கூப்பிய கைகளுடன் தனித்து நடந்து வந்த தருமனை அவர்கள் முதலில் அறியவில்லை. எவரோ ஒருவர் உரத்த குரலில் “அரசர்…!” என்று கூவினார். ஒரே கணத்தில் பலர் அவரைக் கண்டு “அரசர்! அரசர்!” என்று ஒலியெழுப்பினர்.
முதிய குலத்தலைவர் ஒருவர் இரு கைகளையும் தலைக்குமேல் விரித்தபடி “பேரறச்செல்வர்! குருகுல முதல்வர்! புவியாளும் மாமன்னர்!” என்று வெறியாட்டெழுந்தவர் போல கூவியபடி அவரை நோக்கி வந்தார். “பாரதர்! பரதவர்ஷர்! பரதசார்த்தூலர்! பரதபிரவரர்! தர்மர்! தர்மஜர்! தர்மநந்தனர்!” என்று வாழ்த்தியபடி முழங்காலில் மடிந்தமர்ந்தார். “அஜமீடர்! அஜாதசத்ரு! குருசார்த்தூலர்! குருத்வஹர்! குருசிரேஷ்டர்! குந்தீ நந்தனர்!” நெஞ்சை அறைந்தபடி அவர் விம்மி அழுதார். “குரூத்தமர்! குருபுங்கவர்! குருவர்த்தனர்!”
அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் கண்ணீரும் கொந்தளிப்புமாக வாழ்த்தொலி எழுப்பினர். பலர் முழந்தாள் மடித்து நிலத்தில் அமர்ந்தனர். நெஞ்சை பற்றிக்கொண்டு விம்மி அதிர்ந்தனர். அரசரைத் தொடர்ந்து வந்த சௌனகர் தன்னைச் சூழ்ந்து நிறைந்த அவ்வுணர்ச்சிப்பெருக்கைக் கண்டு திகைத்து நின்றார்.
அவருக்குப் பின்னால் அணுகி வந்த விதுரர் “முறைமைகள் ஏதும் தேவையில்லை, அமைச்சரே. அவர்கள் இயல்புபடி இருக்கட்டும்” என்றார். “பாதுகாப்புகள்…?” என்றார் சௌனகர். “அவரிடம் அமைந்த அறத்தைவிட பெரிய பாதுகாப்பை தெய்வங்கள் அளிக்க முடியுமா என்ன?” என்றார் விதுரர்.
“அரசே, இந்நகருக்கு அறம் மீண்டுவிட்டது. இனி எங்கள் குடிகள் வாழும்” என்று கூவியபடி முதியவர் ஒருவர் ஓடிவந்து கால் தடுக்கியது போல் நிலைதடுமாறி தருமனின் கால்களில் விழுந்தார். புழுதி படிந்த அவர் கால்களை பற்றிக்கொண்டு அதில் தன் தலையை முட்டியபடி “இந்நகரை கைவிடாதிருங்கள், எந்தையே! எளியவர்கள் மேல் அளி கொள்ளுங்கள்! எங்கள் தொல்நகரை இருள விடாதீர்கள்!” என்று கதறினார்.
தலைக்குமேல் கையெடுத்துக் கூப்பி நெஞ்சில் அறைந்து அங்கிருந்தோர் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஈசல்புற்று வாய்திறந்ததுபோல் நகரத்தின் அனைத்துத் தெருமுனைகளில் இருந்தும் மக்கள் பெருகி அங்கு வந்தனர். நோக்கியிருக்கவே அஸ்தினபுரியின் கோட்டை முகப்புப் பெருமுற்றம் முழுக்க தலைகளால் நிறைந்தது. கையிலிருந்த மலர்களை ஆடைகளை அவரை நோக்கி வீசினர். “எங்களின் அரசே! எங்கள் தந்தையே! எங்கள் இறையே!” என்று கூவியது கூட்டம்.
தருமனை நெருங்க முயன்ற அரசியும் இளையவரும்கூட அக்கூட்டத்தால் உந்தி அகற்றப்பட்டனர். எந்த விசை அவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இல்லங்களிலிருந்து அங்கு அழைத்து வந்ததோ அதற்கிணையான விசையொன்றால் அவர்கள் அவரை முற்றிலும் அணுகாமல் வளைத்து நின்றனர். அரற்றியும் அழுதும் கொந்தளிக்கும் பெருந்திரளின் நடுவே உருவான சிறு வட்டத்தின் மையத்தில் கூப்பிய கரங்களுடன் புன்னகையும் கண்ணீருமாக தருமன் நின்று கொண்டிருந்தார்.
[ 3 ]
அஸ்தினபுரியின் அரச விருந்தினருக்கான மாளிகையின் தெற்குநோக்கிய சிற்றவைக்கூடத்தில் பாண்டவர்கள் நால்வரும் தருமனுக்காக காத்திருந்தனர். சாளரத்தின் அருகே நகுலனும் சகதேவனும் கைகட்டி நின்றிருக்க பீடத்தில் தடித்த கால்களைப்பரப்பி தசைதிரண்ட கைகளை மடிமேல் வைத்து பீமன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் போடப்பட்ட சிறிய பீடத்தில் சௌனகர் உடலை ஒடுக்கியபடி இடக்கையால் தாடியை நீவிக்கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். பீமன் தன்னருகே நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “இன்னுமா சடங்குகள் முடியவில்லை?” என்றான்.
“அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் முறைமை செலுத்துகிறார்கள்” என்று அர்ஜுனன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆம். இங்குதான் குலங்களுக்கு முடிவே இல்லையே! குழந்தைகளைப்போல அவை பிறந்துகொண்டே இருக்கின்றன” என்றான் பீமன். தோளில் சரிந்த தன் குழலை தள்ளி பின்னால் செலுத்தி தோல் நாடாவால் முடிந்த பின்பு “இன்றென்ன சடங்கு முறைகள் உள்ளன நமக்கு?” என்றான்.
சௌனகர் “சடங்குகள் என ஏதுமில்லை, இளவரசே. மூத்தவரை சென்று சந்திப்பதென்பது ஒரு முறைமை. பிதாமகர் பீஷ்மரையும் ஆசிரியர் கிருபரையும் துரோணரையும் பின்பு பேரரசர் திருதராஷ்டிரரையும் பேரரசி காந்தாரியையும் தாங்கள் சந்திக்கவேண்டும்” என்றார். பீமன் “அவர்கள் நமக்குச் செய்யும் முறைமைகள் ஏதுமில்லையா?” என்றான். சௌனகர் அவ்வினாவிற்கு மறுமொழி உரைக்கவில்லை.
“அவர்களில் எவரும் இத்தருணம் வரை நம்மை வந்து பார்க்கவில்லை. அஸ்தினபுரியின் அரசர் வந்து பார்க்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவ்வாறு சந்திக்காமல் இருப்பதுதான் அவர்களின் முறைமையோ என்னவோ?” என்றான். “இங்கு கிளம்பி வரும்பொழுது இது ஒரு குடிசூழ் களியாட்டு என்று மூத்தவர் சொன்னார். அவர் இருக்கும் உளநிலையே வேறு. இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது அதுவல்ல. நாம் போருக்கு முன்னரோ பின்னரோ இங்கு வந்திருக்கும் அயல் நாட்டவர் போலவே எண்ணப்படுகிறோம்.”
சௌனகர் “அது அஸ்தினபுரியின் குடிகளுக்கு பொருந்துவதல்ல. இன்று காலையிலே அதை பார்த்திருப்பீர்கள்” என்றார். பீமன் “ஆம், அதைத்தான் சொல்லவருகிறேன். கௌரவர்களுக்கு நம்மீது எத்தனை காழ்ப்பு இருக்கும் என்பதை இதனாலேயே உய்த்துணர முடிகிறது. இன்றைய காலைநிகழ்வுக்குப்பின் காழ்ப்பு மேலும் உச்சத்திற்கு சென்றிருக்கும். இந்நகரத்து மக்களின் உள்ளத்தை ஆள்பவர் மூத்தவரே என்பதில் இனி எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.
அர்ஜுனன் “நாம் ஏன் வீண் சொல்லாடவேண்டும்? எதற்காக வந்தோமோ அதை ஆற்றி திரும்பிச் செல்வோம்” என்றான். “என்ன நிகழும் என்று எண்ணுகிறாய், இளையோனே?” என்றான் பீமன். “நிகழ்வதில் ஐயத்திற்கு இடமில்லை, மூத்தவர் தோற்பார்” என்றான். பீமன் “அவரும் நெடுநாட்களாகவே பகடையாடுகிறார் அல்லவா?” என்றான். அர்ஜுனன் நகைத்து “பகடை என்ன அம்பா நேர் வழியில் செல்வதற்கு? இவரது பகடையாடலை இவரது ஆடிப்பாவையுடன் மட்டுமே இப்புவியில் ஆட முடியும், மூத்தவரே. உறவின் தகவுகளில் ஊடுவழிகள் எத்தனை உள்ளன என்று அறிவதற்காகவே பகடையாடுகிறார்கள் மானுடர்” என்றான்.
பீமன் சிறிய கண்களில் ஐயத்தின் ஒளிவிட “சகுனி ஆடுவாரென்றால் அதில் கணிகரின் ஆடலும் கலந்திருக்கும் என்கிறாய் அல்லவா?” என்றான். “இத்தருணத்திற்காகவே அவர்கள் பல்லாயிரம் முறை பகடை உருட்டியிருக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். நகுலன் “மூத்தவரே, அவர் வென்றால் என்ன நிகழும்?” என்றான். “நாம் படைக்களத்தில் தோற்றதாக ஆகும். மூத்தவர் தன் மணிமுடியை துரியோதனன் முன் வைக்க நேரும். அவர் இங்கு இயற்றவிருக்கும் ராஜசூயத்தில் சிற்றசராக சென்று அமர்வார். அவர்களின் வேள்விப்புரவி இந்திரப்பிரஸ்தத்தின் மண்ணை கடந்துசெல்லும்” என்றான்.
பீமன் யானைபோல் உறுமி “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. விரும்பியணைந்து இத்தோல்வியை வாங்கி சென்னி மேல் சூடிக்கொள்கிறார் மூத்தவர். இன்று காலை அவரைச்சூழ்ந்து பெருகிய கண்ணீர் வெள்ளம் இவ்வாறு அறத்தின் பொருட்டு அவர் தோல்வியை சூடுவதனால் அளிக்கப்படுவது. அதுவே அவருக்கு நிறைவளிக்கிறது” என்றான். கசப்புடன் நகைத்தபடி “பெரியவற்றின் பொருட்டு தோல்வியுறுபவர்களை மானுடர்கள் வழிபடுகிறார்கள்” என்றான்.
கைகளால் பீடத்தை தட்டி நகைத்து “வழிபடப்படுவதன் பொருட்டு தோல்வி அடையத் துடிக்கிறார்கள் தெய்வமாக விழைபவர்கள். அதற்கு உதவும் என்றால் மூத்தவர் தன் தலையை தானே அறுத்து அஸ்தினபுரியின் அரசனின் காலடியில் வைக்கவும் துணிவார். அதற்குப்பின் அவருக்கு அஸ்தினபுரியின் தெற்கு மூலையில் ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும் என்பது மட்டுமே அவரது முன்கூற்றாக இருக்கும்” என்றான். சௌனகர் புன்னகைத்துவிட்டார்.
அர்ஜுனன் “நாமே இத்தகைய சொற்களை சொல்லாமலிருக்கலாமே, மூத்தவரே?” என்றான். “எப்படி சொல்லாமல் இருப்பது, இளையோனே? நமது வீரத்தையும் வெற்றியையும் பணயப்பொருளென ஏந்தி இந்நகருக்குள் நுழைந்திருக்கிறார். அவர்கள் வெல்லப்போவது நமது மூத்தவரை அல்ல, நாம் ஈட்டிய வெற்றியையும் அதன் விளைகனியாக அவர் சூடியிருக்கும் மணிமுடியையும் செங்கோலையும்தான். தோற்பது அவர் மட்டுமல்ல, நாமும் கூடத்தான்” என்றான் பீமன்.
அர்ஜுனன் “நாம் எதையும் ஈட்டவில்லை, மூத்தவரே. நான் ஆற்றும் எச்செயலிலும் எனக்கென நான் கொள்வதென்று எதுவுமில்லை. அதுவே தங்களுக்கும். இறுதிநாள் வரை எங்கும் நில்லா தனியனாக நானும் காட்டிருளுக்குள் கலந்து மறையும் அரைநிஷாதனாக நீங்களும் வாழப்போகிறோம். வெற்றியென்றும் புகழென்றும் இவர்கள் சொல்வதனைத்தும் நம் மூத்தவருக்கு நாம் அளித்த காணிக்கை. அது அவரது செல்வம். அதை எவ்வண்ணம் செலவழிக்கவும் அவருக்கு உரிமையுண்டு. அதைக் கொண்டு அவர் பாரதவர்ஷத்தை ஆளலாம். அல்லது அதைத் துறந்து புகழ் மட்டுமே போதுமென்று முடிவெடுக்கலாம். நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்றான்.
பீமன் ஒன்றும் சொல்லாமல் தன் மீசையற்ற மேலுதடை கைகளால் வருடியபடி சிறிய விழிகளைத் திருப்பி மாலையொளியில் சுடர் கொண்டிருந்த சாளரத்திரைச்சீலையை நோக்கினான். சகதேவன் “வந்த அன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் தாயையும் அரசர் பார்த்தாகவேண்டுமென்பது நெறி. இப்போதே மாலை சாய்ந்துவிட்டது. அந்திக்குள் சந்திப்புகளை முடித்துக்கொண்டால் நன்று” என்றான்.
பீமன் சிரித்தபடி அவனை நோக்கி “வந்த அன்றே அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் அரசர் என்று சூதன் ஒருவன் சொல்லவேண்டும், அவ்வளவுதானே?” என்றான். நகுலன் “ஆம், அரசர்கள் வாழ்வது சூதர்கள் பாடலில்தான்” என்றான். “அவர்கள் ஒவ்வொருநாளும் காவியத்திற்குள் சென்றபடியே இருப்பவர்கள்.” பீமன் நகைத்து “இப்படியே சென்றால் பிறக்காத அரசனொருவன் சூதர் சொல்லிலேயே உருவாகி வாழ்ந்து புகழ் கொண்டுவிடக்கூடும்” என்றான்.
வெளியில் வாழ்த்தொலிகள் கேட்டன. வரவறிவிப்போன் கதவைத் திறந்து உள்ளே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர் யுதிஷ்டிரர்!” என்று அறிவித்தான். பீமனும் அர்ஜுனனும் சௌனகரும் எழுந்து நின்றனர். கைகூப்பியபடி அறைக்குள் வந்த தருமன் சௌனகரை நோக்கி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றபின் கைகூப்பி நின்ற பீமனையும் அர்ஜுனனையும் நோக்கி தலையசைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “மிகவும் களைத்திருக்கிறேன், அமைச்சரே. இன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் அன்னையையும் பார்த்தாகவேண்டுமல்லவா?” என்றார்.
“ஆம், முறைமைச் சந்திப்பு என்பதால் மிகையான பொழுதை செலவிடவேண்டியதில்லை. அரண்மனைக்கு வந்து மீளவேண்டுமென்பதில்லை. பிதாமகரையும் ஆசிரியர்களையும் சந்தித்தபின் அப்படியே அரசமாளிகைக்குச் சென்று அங்கேயே பேரரசரையும் பேரரசியையும் சந்தித்துவிடலாம்” என்றார் சௌனகர். “துரோணரும் கிருபரும் நகருக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.”
“அஸ்வத்தாமன் வந்துவிட்டானா?” என்றார் தருமன். “ஆம், அவரும் ஜயத்ரதரும் நகருக்குள்ளே தங்கியிருக்கிறார்கள்.” தருமனின் இதழ் அசைந்து நிலைத்ததிலிருந்து அவர் அங்கரைப்பற்றி கேட்கப்போகிறார் என்று உணர்ந்த சௌனகர் “அங்கநாட்டரசர் அரசருடன் அவரது மாளிகையிலேயே தங்கியிருக்கிறார்” என்றார். அதை கேட்டதுபோல் காட்டாமல் விழிகளைத் திருப்பி நகுலனை நோக்கிய தருமன் “அஸ்தினபுரியின் மக்களின் உணர்வெழுச்சியை பார்த்தாயல்லவா, இளையோனே?” என்றார்.
“ஆம், அவர்கள் உள்ளத்தில் தாங்கள் வாழ்கிறீர்கள், அரசே” என்றான் நகுலன். சகதேவன் “தாங்கள் விரைந்து நீராடி உடைமாற்றி வருவீர்கள் என்றால் பிதாமகரை சந்திக்கச் செல்லலாம்” என்றான். தருமன் சால்வையை இழுத்து அணியத் திரும்புகையில் பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, இத்தருணம் வரை உங்கள் குருதி வழியில் வந்த ஒருவர்கூட உங்களை வந்து சந்திக்கவில்லை என்பதை நோக்கினீர்களா?” என்றான்.
கையில் சால்வையுடன் திகைத்து நோக்கிய தருமன் “அவ்வாறு சந்திக்க முறைமை இல்லாமல் இருக்கலாம்” என்றார். “முறைமைகளை மீறி சந்திக்கவேண்டிய கடமை உள்ளது” என்றான் நகுலன். “நாம் உறவினராக இங்கு வரவில்லை என்பதை உணருங்கள், மூத்தவரே! பகையரசராக மட்டுமே இத்தருணம் வரை நாம் நடத்தப்பட்டிருக்கிறோம்” என்றான். தருமன் விழிகள் மாற “இருக்கட்டும். நான் பகையரசாக வரவில்லை. நூற்றைவருக்கும் மூத்தவனாக மட்டுமே வந்திருக்கிறேன். அவ்வண்ணமே என்றும் இருப்பேன்” என்றார்.
பீமன் சினத்துடன் “பகடையில் தோற்று, முடியும் கோலும் தாழ்த்தும்போதும் தாங்கள் அவ்வாறு கருதப்படுவீர்கள் என்றால் நன்று” என்றான். “இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்” என்றார். பீமன் தனக்குத்தானே சலிப்புற்றவன் போல தலையசைத்தான்.
தருமன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் அமைத்துவிட்டு “நான் நீராடி வருகிறேன். நீங்கள் சித்தமாகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது” என்றார். சௌனகர் “ஆம் அரசே, பொழுதில்லை” என்றார். அறை வாயிலை நோக்கி சென்ற தருமன் நின்று திரும்பி பீமனிடம் “ஆனால் நான் தோற்றுவிடுவேன் என்று ஐயமின்றி கூறினாய். எண்ணிக்கொள், எந்தப் பகடையிலும் நான் இதுவரை தோற்றதில்லை. பகடையின் பன்னிரு பக்கங்களிலும் அதன் பன்னிரண்டாயிரம் கோடி தகவுகளிலும் நான் அறியாத எதுவுமில்லை. அதை பகடைக்களத்தில் காண்பாய்!” என்றபின் வெளியேறிச் சென்றார்.
[ 4 ]
தருமனைக் கண்டதும் பீஷ்மர் ஒருகணம் விழிதூக்கி நோக்கிவிட்டு தலைகுனிந்து கையால் மார்பில் மூன்று புரிகளாக நீண்டுபரவிய தாடியை நீவியபடி அமர்ந்திருந்தார். நீண்டுமெலிந்த வெண்ணிற உடல் நுண்ணிய சுருக்கங்கள் பரவி மெழுகுத்தன்மை கொண்டிருந்தது. மடியில் கோக்கப்பட்டிருந்த கைகள் நரம்புகள் எழுந்து தசை வற்றி காய்ந்த கொடியென மாறிவிட்டிருந்தன. கால்களும் மிக மெலிந்து நரம்புகள் பின்னி வேர்த்தொகையென தோன்றின. சாளரத்தின் வழியாக வந்த காற்றில் வெண்ணிறத் தலைமயிர் பறந்தது. அவரது குழல்தொகை மிகவும் குறைந்திருந்தது. மூக்கு வளைந்து உதட்டின்மேல் நிழல் வீழ்த்தி தொங்கியது. கண்கள் பழுத்த அத்திப்பழங்கள் போலிருந்தன.
தொலைவில் ஏதோ கதவு திரும்பிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. சிலகணங்கள் அவர்கள் அவரை நோக்கி நின்றனர். சின்னாட்களுக்குள் அவர் மிகவும் முதுமை எய்திவிட்டிருந்தார். அவரது கைவிரல் நகங்கள் பழுப்பு நிறம்கொண்டு பறவையலகுகள் போலிருந்தன. தருமன் சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், பிதாமகரே” என்றார். ஒருசொல்லும் இல்லாமல் இடது கையை தூக்கி அவர் தலைமேல் வைத்துவிட்டு எடுத்துக் கொண்டார் பீஷ்மர்.
பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சென்று அவர் பாதங்களில் உடலமைத்து வணங்கினர். அவரறியாதவர் போல் அவரது கை வந்து அவர்களின் தலையை தொட்டுச் சென்றது. பீஷ்மரின் முதல் மாணவர் விஸ்வசேனர் அவர்கள் அமர்வதற்காக பீடங்களை சுட்டிக் காட்டியபின் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். தருமன் மட்டுமே அமர்ந்தார். அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நின்றிருக்க பீமனும் அர்ஜுனனும் சற்று அப்பால் சென்று தூணில் சாய்ந்து நின்றார்கள். பீஷ்மர் சொல்லெடுக்கட்டும் என்று தருமன் காத்திருந்தார்.
அவர் தன் உடலிலிருந்து அகன்று தொலைந்துவிட்டவர் போலிருந்தார். பொறுமையின்றி பீமன் உடலசைத்தபோதுதான் சற்று நேரம் ஆகியிருப்பதை தருமன் உணர்ந்தார். மெல்ல கனைத்து “தங்கள் ஆணையை தலைக்கொண்டு இங்கு வந்திருக்கிறோம், பிதாமகரே” என்றார். “ஆம்” என்றார் அவர். “போரைத் தவிர்க்க பிறிதொரு வழியில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன். தங்களின் ஆணை ஒரு நற்கொடையெனத் தோன்றியது” என்றார் தருமன். பீஷ்மர் தலையசைத்தார். அத்துடன் சொல்லாடல் மீண்டும் அறுபட்டது.
பேசாமலிருப்பதன் பொருத்தமின்மையை உணர்ந்து பீஷ்மர் அசைந்து அமர்ந்து பீமனை நோக்கி “காடுகளில் அலைகிறாயா?” என்றார். “ஆம், பிதாமகரே” என்றான் பீமன். “தாங்களும் காடுகளில்தான் பெரும்பாலும் இருக்கிறீர்கள் என்றார்கள்” என்றான். பீஷ்மரின் முகத்தில் மெல்லிய புன்னகை எழுந்தது. “ஆம். அங்கு அடிக்கடி மாறும் நெறிகளும் அறமும் இல்லை” என்றார். “அதையே நானும் உணர்கிறேன்” என்றான் பீமன். பின்பு “அது காட்டுவிலங்குகளுக்கு பேசும் மொழி இல்லை என்பதனால் இருக்கலாம்” என்றான்.
பீஷ்மர் சிரித்துவிட்டார். திரும்பி அதே சிரிப்பொலியுடன் தருமனிடம் “இங்கு நிகழ்விருப்பது ஒரு எளிய குலவிளையாட்டென்று எடுத்துக்கொள் மைந்தா! இதில் வென்றாலும் தோற்றாலும் இறுதியில் நீ வெல்வாய்” என்றார். ஒருகணம் அவர் விழிகளில் அறியாத ஒரு தத்தளிப்பு நிகழ்ந்து சென்றது. “எப்படியும் அறம் வெல்ல வேண்டும். இதுவரை வென்றிருக்கிறதா என்றால், அறியேன். வென்ற தருணங்களை மட்டுமே மானுடம் நினைவில் கொண்டிருக்கிறது. அவற்றை மட்டுமே இறுதி வெற்றி என்று எண்ணிக்கொள்கிறது. அந்நினைவுகளால் ஆன வரலாற்றை நம் காலடி மண்ணாக அமைத்திருக்கிறது. எனவே அறம் வெல்ல வேண்டும் என்றே விழைவோம். வெல்லாவிடில் நாம் நின்றிருக்க நிலமிருக்காது” என்றார்.
தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவன் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.
பீஷ்மரின் வலது கண்ணிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. முதியவர்களுக்குரிய வகையில் தலைநடுங்க தொண்டைநெகிழ்ந்தசைய அவர் விசும்பியழுதார். பின்பு மெல்ல எளிதாகி முகத்தை துடைத்தார். முகத்தில் இறுகியிருந்த தசைகள் ஒவ்வொன்றாக விடுபட்டன. “முதுமை!” என்றார். “எண்ணும்போதே அழுகை வந்துவிடுகிறது. அழுதுமுடித்ததும்தான் வாழ்க்கை இனிதெனத் தோன்றுகிறது.” தருமன் “அதை கனிவு என்பார்கள்” என்றார். “இறப்பு குறித்த அச்சம் என்பார்கள்” என்று பீஷ்மர் சிரித்தார். வாயின் பற்கள் பல உதிர்ந்திருந்தாலும் அவரது சிரிப்பு அழகாக இருந்தது. “வாழ்க்கையை புரிந்துகொள்ளாமையின் தவிப்பு என்று நான் சொல்வேன்” என்றார்.
தருமன் “இளமையில் நாம் புரிந்துகொள்ள ஒருவாழ்க்கை மட்டுமே முன்னுள்ளது. முதுமையில் அது பல்கிப்பெருகிவிடுகிறது” என்றார். பீஷ்மர் “இருக்கலாம். ஒன்றையும் அறியாமல் விட்டுச்செல்வதுதான் அனைவருக்கும் இயன்றது. நான் என்றாவது அவனை பார்க்கவேண்டும். என் இளையோன். அவன் எழுதும் காவியத்தில் விடைகளென ஏதேனும் உள்ளதா என்று கேட்பேன்” என்றார். பீமன் ”அவர் உரிய வினாக்களை முன்வைத்திருந்தாலே நன்று, பிதாமகரே” என்றான். பீஷ்மர் “ஆம்” என்றபின் உரக்க நகைத்தார்.
தருமனிடம் திரும்பி “இதுவரை நாற்களம் ஆடியதே இல்லை. அதன் நெறிகள் என்னவென்றும் வழிகள் என்னவென்றும் நான் அறிந்ததில்லை. திரும்பத் திரும்ப நான்கு பகடைகளை உருட்டி பன்னிரண்டு மடங்குகளையும் வகுபடல்களையும் கொண்டு ஆடுவது ஏன் இவர்களுக்கு சலிப்பூட்டவில்லை என்று எண்ணி வியந்திருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.
“ஆழ்ந்துவிட்டால் எதுவும் சலிப்பூட்டுவதில்லை, பிதாமகரே” என்றான் அர்ஜுனன். “அம்பு முனை கொண்டு நாம் அறிந்ததல்லவா அது?” அவனை விழிதூக்கி நோக்கியபின் “ஆம், உண்மை. இப்புவியில் பல்லாயிரம் ஆடல்களில் நம்மைக்குவித்து நம்மை கண்டடைகிறோம்” என்றார் பீஷ்மர். “ஆனால் அம்பென்பது பறவையின் தூயவடிவம். ஆகவே அது அழகியது” என்றார். “பகடை என்பது சொல்லின் தூய வடிவம்” என்றார் தருமன். அவரை புரியாமல் திரும்பி நோக்கியபின் சிரித்து “ஆம், அதனால்தான் அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை போலும்” என்றார் பீஷ்மர்.
மிக விரைவிலேயே பீஷ்மர் மீண்டு நெடுநாட்களுக்குமுன் அவர்கள் அறிந்த பிதாமகராக ஆனார். தன் மேலிருந்து அழுத்திய அனைத்தும் உதிர்ந்து விழ உடலில் குடியேறிய சிறு துள்ளலுடன் எழுந்து சென்று அறைமூலையில் இருந்த வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு அர்ஜுனனிடம் “வா, புதிதாக என்ன கற்றுக் கொண்டாய்?” என்றார். அர்ஜுனன் புன்னகைத்து “தாங்கள் கற்றுக் கொள்வதற்குரிய எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை, பிதாமகரே” என்றான்.
உரக்க நகைத்து “அதையும் பார்த்துவிடுவோம்” என்றார் பீஷ்மர். “நான் கற்றதென்ன என்று சொல்லவா? தோளில் அல்ல. அம்பின் கூரிலும் இறகிலும் அல்ல. காற்றிலும் அல்ல. வளைவதில்தான் விற்கலையின் நுட்பம் உள்ளதென்று இப்போது கண்டுகொண்டேன். மூங்கில் வில்லோ இரும்பு வில்லோ அதில் கட்டப்படும் நாணில் உள்ளது விசையின் பொருள். அதை இழுக்கும் வகையில் அம்பின் மீது நம் தோள்விசையை செலுத்த முடியும். வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் தந்தியின் நீளம் இசையை வகுப்பது போல. காட்டுகிறேன் வா!” என்றார்.
பாண்டவர்களின் முகங்கள் மலர்ந்தன. அர்ஜுனன் “அதை தங்களிடமிருந்து கற்க விழைகிறேன், பிதாமகரே” என்றான். “கற்பிப்பது நன்று மைந்தா. நாம் ஐயமறக் கற்பதற்கு அதுவே வழி” என்றார் பீஷ்மர். தருமன் “பிதாமகரே, நாங்கள் கிருபரையும் துரோணரையும் சந்தித்து வாழ்த்து பெற்றாகவேண்டும். அதன் பின் தந்தையையும் மூத்த அன்னையையும் பார்த்து வழிபட வேண்டும். பொழுது சாய்வதற்குள் இவற்றை முடித்தபின்னர் குடித்தெய்வங்களின் ஆலயங்களுக்குச் செல்வது முறை என்றார் சௌனகர்” என்றார்.
“நீ ஒரு மூடன்!” என்றார் பீஷ்மர் நகைத்தபடி. “நாளெல்லாம் அரசக் கடமைகளை செய்தபடி எப்படித்தான் உயிர் வாழ்கிறாய் என்று தெரியவில்லை. அரசர்களைப் பார்த்தால் தறியில் ஓடும் நாடாக்கழி போல் தோன்றுகிறார்கள். இரவும் பகலும் முன்னும் பின்னும் ஓடி ஒன்றையே நெய்துகொண்டு சலிப்பு என்பதை அவர்கள் அறிவதில்லை” என்றார். தருமன் “தான் நெய்யும் பட்டின் அழகை ரசிக்கத்தெரிந்த நாடாப்பட்டியல் சலிப்புறுவதில்லை, பிதாமகரே” என்றார்.
கையை ஓங்கி “எழுந்து போ அறிவிலியே!” என்று சொல்லி உரக்க நகைத்தார் பீஷ்மர். “எதைச் சொன்னாலும் அணியும் ஒப்புமையுமாக மறுமொழி சொல்லக் கற்றுவிட்டால் நீ அரசு சூழ்தல் அறிந்தவன் என்று ஆகிவிடுவாயா?” தருமன் “போர்க்கலையின் உச்சம் தடுப்பதல்லவா?” என்றார். “வாழ்நாளெல்லாம் தடுத்துக்கொண்டிருப்பவன் நீ” என்றபின் அர்ஜுனனிடம் திரும்பி “அவர்கள் இருவரையும் இங்கு வரச்சொல்கிறேன். என் பயிற்சி சாலையில் நீ அவர்களிடம் வாழ்த்துப்பெறலாம். பிறகென்ன?” என்றார் பீஷ்மர்.
அர்ஜுனன் அவர் அருகே செல்ல அவர் அவன் கையை பற்றியபடி பீமனிடம் திரும்பி “உன்னிடம் இன்றொரு கதைப்போர் நிகழ்த்தலாமென எண்ணுகிறேன்” என்றார். பீமன் “இப்போது தங்கள் தோள்கள் கதைப்போருக்குரியவையல்ல என்று தோன்றுகிறது, பிதாமகரே” என்றான். “ஆம். முதுமையால் தோள் வல்லமை குன்றும் தோறும் குறைந்த விசையில் கதை சுழற்ற கற்றுக் கொண்டிருக்கிறேன். நீ ஏந்தும் கதையில் பத்தில் ஒருபங்கு எடைகூட என் கதைக்கில்லை. ஆனால் ஒருமுறை உன் கதை என் உடலில் படுமென்றால் நான் பிறகு கதையேந்துவதில்லை என்று வாக்களிக்கிறேன்” என்றார்.
பீமன் நகைத்து “நான் அத்தகைய அறைகூவல்களை ஏற்றுக் கொள்வதில்லை. அது அயலூர் குளத்தில் நம்பி இறங்குவது போல. இந்நாள்வரை காடுகளில் தாங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று நானறியேனே!” என்றான். பீஷ்மர் நகைத்துக் கொண்டு அவனை அணுகி அவன் தோள்களில் தன் நீண்ட கைகளை இட்டு வளைத்து “பெருத்திருக்கிறாய். மல்லனுக்கு அது நன்று ஆனால் கால் விரைவை குறைக்கும் அளவிற்கு இடை பெருக்காமல் இருக்க வேண்டும்” என்றார். “என் விரைவை யானைகளுடன் பொருதி தேர்ந்துகொண்டே இருக்கிறேன் பிதாமகரே” என்றான் பீமன்.
பீஷ்மர் “யாரது?” என்று தன் மாணவரை அழைத்தார். விஸ்வசேனர் வந்து வணங்க “துரோணரையும் கிருபரையும் இங்கு வரச்சொல். இளையோர் இங்கிருக்கிறார்கள் என்று அறிவி” என்றபின் இன்னொரு கையால் அர்ஜுனன் தோளை வளைத்து அணைத்தபடி பயிற்சி சாலையை நோக்கி நடந்தார்.
நகுலன் தருமனிடம் “தாங்களும் வந்து படைக்கலப் பயிற்சியை பார்க்க விழைகிறீர்களா மூத்தவரே?” என்றான். தருமன் “அதுதான் அங்கேயே இரவு பகலாக எந்நேரமும் நடந்து கொண்டிருக்கிறதே. மீண்டும் நோக்க என்ன இருக்கிறது? நீங்கள் செல்லுங்கள். நான் இங்கிருக்கிறேன். ஆசிரியர்கள் வரும்போது எதிர்கொண்டழைத்து பாதம் பணிய ஒருவராவது இங்கிருக்கவேண்டுமல்லவா?” என்றார். நகுலன் “நான் செல்கிறேன்” என்று அவர்களைத் தொடர்ந்து சென்றான்.
[ 5 ]
உளநிறைவுடன் கால்களை விரித்து கைகளை கைபீடத்தில் வைத்து தருமன் சாய்ந்துகொண்டார். கண்களை மூடி இனிய காற்றின் வருடலை தன் உடலில் உணர்ந்தார். கைகள் உள்ளமைந்த நாற்களமொன்றில் காயமைத்து ஆடின. இதழ்களில் அதன் சொற்கள் ஓசையின்றி அசைவுகொண்டன.
சகதேவன் வந்து தருமன் அருகே நின்றபடி “நான் தங்களுடன் இருக்கிறேன், மூத்தவரே” என்றான். தருமன் “பிதாமகர் உவகை கொண்டுவிட்டார். அனைத்தும் நன்றே முன் செல்கிறது அல்லவா, இளையோனே?” என்றார். “ஆனால் அவர் கவலை கொண்டிருந்தார். கவலை கொள்பவர்கள் அச்சுமையை உதறுவதற்கு ஒரு தருணத்தை எதிர்நோக்கியிருப்பார்கள். எங்கேனும் சிறு பழுது கிடைத்தால் அதிலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்றான் சகதேவன். “வெளியேறிவிட்டமையினாலேயே அக்கவலைகள் அனைத்தும் சிறிதென ஆகிவிடும். கவலைகள் இறங்கிவிட்டதனாலேயே அத்தருணம் களியாட்டு நிறைந்ததாக ஆகிவிடும்” என்றான்.
தருமன் எரிச்சலுடன் “உங்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எந்நிலையிலும் உவகையோ நிறைவோ கொள்ளமாட்டீர்கள் என்று உறுதி கொண்டுவிட்டுதான் இங்கு கிளம்பி வந்தீர்களா?” என்றார். “இல்லை மூத்தவரே, இயல்பாகவே ஐயமும் கவலையும் கொண்டிருக்கிறோம்” என்றான். “ஏன்?” என்றார் தருமன். சகதேவன் “எண்ணத்தால் அல்ல. உள்ளிருக்கும் விலங்கின் ஐயம்” என்றான். “அவ்வண்ணம் எதை உணர்கிறாய்? சொல்!” என்றார் தருமன்.
சகதேவன் தயங்கியகுரலில் “இது அயலவர் நாடென்று தோன்றுகிறது. கங்கையிலிருந்து அஸ்தினபுரிக்கு வரும்வரை இருபுறமும் செறிந்த குறுங்காட்டுக்குள் பல்லாயிரம் நச்சம்புகள் என்னை நோக்கி குறி வைத்திருப்பதாக என் தோல் உணர்ந்தது. கரிய பெருந்திரையென அஸ்தினபுரியின் கோட்டையை பார்த்தபோது அச்சத்தில் உடல் நடுங்கினேன். இருளின் அலைபோல அது புரண்டு சுருண்டு என்னை நோக்கி வருவது போல் தோன்றியது .அறியாது ஒரு கணம் பின்னடைந்துவிட்டேன்” என்றான்.
“தாங்கள் இறங்கி புழுதியை எடுத்து நெற்றியில் சூடியபோது ஒரு கணம் என்ன நிகழ்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பின்புதான் இந்நகரத்தில் மைந்தனாகப் பிறந்து இங்கு வளர்ந்தேன் என்று நினைவுகூர்ந்தேன். என் மூதாதையரின் நகர் இது. ஆனால் அந்த அஸ்தினபுரி மண்ணுக்குள் புதைந்து ஆழத்தில் எங்கோ மறைந்துவிட்டது. இன்றிருப்பது பிறிதொன்று” என்றான் சகதேவன்.
சினத்துடன் “நீ பித்தன். உன் உளமயக்கை என் மேல் சுமத்துகிறாய்” என்றார் தருமன். “அல்ல மூத்தவரே, இந்நகரின் கோட்டைவளைவு, இல்லங்கள், தெருக்கள் அனைத்தும் மாறிவிட்டிருக்கின்றன. இவற்றின்மேல் கரிய நஞ்சொன்று படிந்து இன்றும் எஞ்சுவது போல. உண்மையிலேயே தூண் மடிப்புகளிலும் சிற்பப்பொருத்துகளின் இடுக்குகளிலும் கரிய தூள் போன்ற பாசிப்படிப்பு ஒன்றை காண்கிறேன். விரல் கொண்டு அதை தொட்டு எடுத்து பார்த்தபோது அருகே நின்ற கனகர் என்னிடம் அதை நாவில் வைக்கவேண்டாம் என்றார். முன்பு இங்கொரு நஞ்சு பரவி மறைந்துள்ளது. அதன் எச்சங்கள் அவை.”
“அவையனைத்தும் சூதர்கதைகள்” என்றார் தருமன். “சூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இயல்பை உருவாக்கி அளித்துவிடுகிறார்கள். பின்பு சொல்லிச் சொல்லி அவற்றை பெருக்குகிறார்கள். அந்தச் சித்திரத்திலிருந்து அதற்குரியவர்கள் எந்நிலையிலும் தப்ப முடியாது.” உரக்க நகைத்து “ஐம்பெரும் பழிகள் இயற்றினாலும்கூட என்னை அறத்தான் என்றே அவர்கள் சொல்வார்கள்” என்றார். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை. தருமன் “சரி சொல். நீ என்ன உணருகிறாய்?” என்றார்.
“நஞ்சு இந்நகர்முழுக்க நிறைந்துள்ளது” என்றான் சகதேவன். தருமன் “இன்று காலை என் காலில் கண்ணீருடன் வந்து விழுந்த குடிமக்களின் உள்ளங்களிலுமா?” என்றார். “ஆம். அவ்வுள எழுச்சி உங்களுக்கு மிகையாகத் தோன்றவில்லையா?” என்றான் சகதேவன். தருமன் “உளறாதே! அவை எந்தை இங்கு வாழ்ந்த நாள்முதல் ஈட்டிய பேரன்பின் வெளிப்பாடுகள்” என்றார். சகதேவன் “அல்ல. இது அவர்கள் கொண்ட வஞ்சமும் காழ்ப்பும் மறுபுறமெனத் திரும்பி குற்றவுணர்வும் பேரன்புமாக திரும்பியிருக்கிறது. குற்றவுணர்வின்றி இப்பெரும் உளநெகிழ்வு நிகழாது என்று உணர்கிறேன்” என்றான்.
“உன்னிடம் பேசப்புகுந்தால் என் நெஞ்சில் இழிநம்பிக்கைகளை புகுத்திவிடுவாய். செல்!” என்றார் தருமன். “நான் எதையும் வகுத்துரைக்கவில்லை, மூத்தவரே. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு விழியும் நீர்மை படிந்து கனிந்துள்ளது. ஒவ்வொரு இதழும் அன்பின் சொற்களால் துடித்துக் கொண்டிருக்கின்றது. மெல்ல விரல் தொட்டாலே தாவி அணைக்கும் தவிப்புடன் உள்ளன உடல்கள் அனைத்தும். அவற்றுக்கு அடியில் எங்கோ இங்கு பெய்த நஞ்சின் மிச்சங்கள் உள்ளன.”
“போதும்! நாம் இதைப்பற்றி மீண்டும் பேசவேண்டியதில்லை” என்றார் தருமன். “அவ்வாறே” என்று சகதேவன் தலைதாழ்த்தினான். இருவரும் ஒரு சொல் பேசாமல் ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி அசைவிழந்து அமர்ந்திருந்தனர். நெடுநேரத்திற்குப்பின் தருமன் பெருமூச்சுவிட்டு “நீ என்ன நினைக்கிறாய்? இப்பகடைக்களத்தில் நான் வெல்வேனா?” என்றார். “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” “ஐயமே இல்லை, நான் வெல்வேன்” என்றார் தருமன். “அந்நம்பிக்கை துணையிருக்கட்டும்” என்றான் சகதேவன். தருமன் “அவ்வாறெனில், நான் வெல்ல மாட்டேன் என்கிறாயா?” என்றார்.
“மூத்தவரே, தாங்கள் ஆடப்போவது இங்கு ஊறி நிறைந்துள்ள நஞ்சுடன். அது விண்ணிலிருந்து பொழிந்தது. இம்மண்ணின் ஆழத்தில் ஊறி நிறைந்திருப்பது. மானுடரால் இது வெல்லப்பட முடியாது.” “பிறகு எப்படி அதை வெல்லலாம்?” என்றார் தருமன். “மண்ணிலுள்ள அனைத்து நஞ்சையும் கழுவிக்களையும் ஆற்றல் கொண்டவை அனலும் புனலும் மட்டுமே. குருதி என்பது அனல் கொண்ட புனலே.”
தருமன் அச்சொல்லில் இருந்த காலம் கடந்த தன்மையைக் கண்டு உடல் நடுங்கினார். “இளையோனே, ஒரு பேச்சுக்கெனவும் அதை சொல்லாதே. ஒவ்வொரு நாளும் நான் அஞ்சிக்கொண்டிருப்பது அக்குருதிப்புனலையே. அதை தவிர்க்கும் பொருட்டே களிமகனாக பகடையாட இங்கு வந்திருக்கிறேன். என் விழிமுன் ஒருபோதும் குருதி வீழலாகாது என்று ஒவ்வொரு நாளும் எந்தையையும் தெய்வங்களையும் வேண்டிக்கொள்கிறேன்.” சகதேவன் “நன்று சூழ்க!” என்று மட்டும் சொன்னான். மீண்டும் கல் சேற்றில் புதைவது போல அவர்கள் அமைதிக்குள் ஆழ்ந்தனர். தருமன் “எந்தையரே…” என்று பெருமூச்சுவிட்டார்.
[ 6 ]
கனகர் அறைவாயிலில் வந்து வணங்கி “ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும்” என்று அறிவித்ததும் தருமன் எழுந்து தலைக்குமேல் கைகூப்பியபடி வாசலை நோக்கி சென்றார். மரவுரியாடை அணிந்து நரைகுழலை தலைக்குமேல் கட்டி இடைக்கச்சையில் உடைவாளுடன் துரோணர் உள்ளே நுழைந்ததும் கையும் தலையும் மார்பும் இடையும் காலும் மண்ணில் பட விழுந்து அவரை வணங்கினார். அவர் குனிந்து தருமன் தலையைத் தொட்டு “நிகரற்ற புகழுடன் திகழ்க! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக நிறைவுறுக! விண்ணில் பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.
சகதேவனும் எழுந்து வந்து துரோணரை வணங்கினான். தருமன் தன்னை வணங்கியபோது கிருபர் “நன்று சூழ்க! தொட்டவை அனைத்தும் பொலிக! அறம் என்றும் வழித்துணையாகுக!” என்று வாழ்த்தினார். தருமன் அவர்களை பீடங்களில் அமர்த்தி ”பிதாமகர் தங்களை வரச்சொன்னார், ஆசிரியர்களே. நாங்கள் அங்கு வருவதாக இருந்தபோது என்னிரு இளையவரையும் படைக்கலப் பயிற்சிக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்” என்றார்.
துரோணர் எழுந்து கிளர்ந்த குரலில் “இளையவன் வந்திருக்கிறான் அல்லவா? அறை நுழைந்ததுமே அவனைத்தான் என் விழிகள் தேடின. எப்படி இருக்கிறான்?” என்றார். அவர் மறுவாயிலை நோக்கி செல்வதற்குள் அதன் வழியாக அர்ஜுனன் உள்ளே வந்தான். விரைந்த காலடிகளுடன் ஓடிவந்து அவ்விசையிலேயே முட்டி மடித்து குப்புற அவர் கால்களில் விழுந்தான். அவர் குனிந்து அவன் தோள்களைத் தொட்டு இழுத்து தன் நெஞ்சுடன் இறுக அணைத்துக்கொண்டு அவன் நெற்றியிலும் கன்னங்களிலும் முத்தமிட்டார். முகர்ந்து தீராதவர் போல மீண்டும் மீண்டும் முத்தமிட்டுத் தவித்தார்.
அவன் இரு செவிகளையும் பற்றி முகத்தை தூக்கி கண்களை பார்த்தபின் “என்ன இது? ஏன் இத்தனை நரை?” என்றார். “ராஜசூயப்பந்தலில் அரசணிக்கோலத்தில் எதுவும் தெரியவில்லை. இன்று என் மாணவனாக மீண்டு வந்திருக்கிறாய்” என்றார். “வயதணைகிறது, ஆசிரியரே” என்றான். அவர் கண்களில் நீர் ததும்ப சிரித்தபடி அவனை மேலும்கீழுமென பார்த்தார். “வயதா? என்ன வயது உனக்கு? இது நீ இடமறியாது அலைந்து அயல்நாட்டுச் சுனைகளில் நீராடியதால் வந்தது” என்றார். அவன் தோள்களைச் சுற்றி தன் தோள்களில் சேர்த்து அணைத்தபடி “கிருபரே, பார்த்தீர்களல்லவா? இன்னமும் இறுக்கி பூட்டப்பட்ட வில்நாண் போல் உடல் கொண்டிருக்கிறான். பாரதவர்ஷத்தில் இவனுக்கு நிகர் நிற்க ஒரு வில்வீரரில்லை” என்றார்.
கிருபர் சிரித்து “ஆசிரியரிலிருந்து அவரது சிறந்த வடிவம் ஒன்று வெளிவந்து மாணவனாகிறது என்பார்கள்” என்றார். “ஆம், இவன் வடிவில் நான் பாரதவர்ஷத்தை வெல்வேன். இவன் நாணொலியில் நான் என்றுமிருப்பேன்” என்றார் துரோணர். மீண்டும் உள்ளத்து வெறியெழ அவனை நெஞ்சோடணைத்து அவன் குழலிலும் தோள்களிலும் முத்தமிட்டார். “எப்படி இருக்கிறான்! அவன் இடை சற்றும் பெருக்கவில்லை” என்று தருமனிடம் சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தில் எவனோ போலிருந்தான். மூத்தவனே, அவன் இடம் இது. அவன் பாண்டுவின் மைந்தன். என் மாணவன்.” அவன் தாடியை கைகளால் பற்றி “எதற்கு இந்தத் தாடி? இதை எடுத்துவிட்டால் என் குருகுலத்திற்கு வந்த அந்த இளையவனையே நான் காணமுடியும்” என்றார்.
பின்பு நினைத்திருக்காத ஒரு கணத்தில் உடைந்து “பார்த்தா! என் இறையே!” என்று கூவியபடி அவனை நெஞ்சோடணைத்து அழத்தொடங்கினார். “ஆசிரியரே! என்ன இது, ஆசிரியரே!” என்று அவர் தோள்களையும் முதுகில் சரிந்த குழல்களையும் வருடியபடி அர்ஜுனன் அழைத்தான். கிருபர் கண்ணீருடன் சிரித்து “தந்தையரின் தனிமையை நூறு காவியங்கள் பாடியுள்ளன. ஆசிரியரின் தனிமையை எவரும் உணர்வதே இல்லை” என்றார்.
தன்னைத் திரட்டிக்கொண்டு விலகிய துரோணர் மேலாடையால் கண்களை அழுத்தித் துடைத்து மீண்டும் உளம் பொங்க விம்மினார். “ஆசிரியரே, பொறுத்தருள்க!” என்றான் அர்ஜுனன். “நீ என்ன செய்தாய்? அடைகாத்த மரம் பறவைக்கு உரிமைகொண்டாட முடியுமா என்ன?” என்றார் துரோணர். “நீ சென்ற பின்பு ஒருநாளும் நான் நிறைவுடன் இரவுறங்கியதில்லை. உனக்குப்பின் என் நெஞ்சில் ஊறிய அனைத்துச் சொற்களையும் சொல்லிவிட்டேன் என்று ஒருபோதும் உணர்ந்ததில்லை.”
கிருபர் அர்ஜுனனின் கைகளைப்பற்றி தன் நெஞ்சுடன் வைத்துக்கொண்டு “ஆசிரியர் தன்னை மாணவனில் நிறைக்கிறார் என்பார்கள். தன்னைப் பெய்து ஒழிந்தவனின் வெறுமை என்றும் ஆசிரியனில் எஞ்சியிருக்கும்” என்றார். அவர் தோளில் தட்டி “அது வெறுமையல்ல மூடா, நிறைவு” என்றார் துரோணர். முதியவர்களுக்குரிய வகையில் அவ்வழைப்பின் வழியாக எதையோ கடந்துசென்று முகம் மலர்ந்து நகைத்தார். “ஆனால் நிறைவே ஆயினும் அதன் எடையைத் தாங்க முதுமையால் முடிவதில்லை.”
அர்ஜுனன் “ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களை எண்ணியே விழிக்கிறேன். உங்கள் கைகளை எண்ணியபடி இரவுறங்குகிறேன். உங்கள் சொல்லைத்தொடங்காமல் எதைப்பற்றியும் எண்ணியதில்லை” என்றான். “ஆம், உன்னை எண்ணாமல் ஒரு நாளும் நான் விழித்ததும் உறங்கியதும் இல்லை” என்று துரோணர் சொன்னார். அவன் கைகளைப்பற்றி இறுக்கி குலுக்கியபடி “எப்படி இதை நாம் நிறைவுறச்செய்வோம்? எப்படி இன்னும் நெருங்குவோம்?” என்றார்.
கிருபர் உரக்கச்சிரித்து “ஒன்று செய்யலாம், ஒருவரோடொருவர் படைக்களத்தில் பொருதலாம். ஒருவருக்குள் ஒருவர் புகுந்து கொள்ள அதுவே சிறந்தவழி” என்றார். துரோணர் உடன் நகைக்க அர்ஜுனன் திரும்பி கிருபரின் கால்களைத் தொட்டு தன் சென்னி சூடினான். அவர் அவன் தலையில் கைவைத்து “எங்கும் வெற்றியே திகழ்க!” என்றார்.
துரோணர் “எங்கே மந்தன்?” என்றார். “பிதாமகருடன் தோள் கோக்கிறார்” என்றான் அர்ஜுனன். “இந்நாள் இத்தனை இனிதாகும் என்று எண்ணவே இல்லை” என்றார் துரோணர். “நீங்கள் நகர் புகுகிறீர்கள் என்று கேட்டபோது பதற்றத்துடன் தவிர்க்கவே விழைந்தேன். விழையாத ஒன்று நிகழப்போகிறதென்று எங்கோ தோன்றிக்கொண்டிருந்தது. விழைந்தது அனைத்தும் இங்கு நிகழ்ந்துள்ளன” மீண்டும் கைகளை விரித்து “வா! உன்னைத்தழுவி எனக்கு சலிக்கவில்லை” என்றார்.
அர்ஜுனன் புன்னகைத்து அருகணைந்தான். தருமன் “சிறுவன் போல் நாணுகிறான்” என்று நகைத்தார். துரோணர் அவனை மீண்டும் இழுத்து தன் நெஞ்சோடணைத்து அவன் தோள்களைத் தடவியபடி “நீ சென்ற ஊரெல்லாம் உன் கதைகள் முளைத்தன. அங்கிருந்து சொற்கள் ஒவ்வொரு நாளும் என இங்கு வந்து கொண்டிருந்தன. என் இத்தனை நாள் வாழ்க்கையில் இனிது நிற்பது நாளும் வந்தடைந்த உன் வெற்றிச் செய்திகளே” என்றார்.
தருமன் பணிந்து “ஒவ்வொன்றும் மேலும் மேலும் இனிதாகின்றன. இனி நாங்கள் தந்தையையும் அன்னையையும் சந்திக்கவேண்டும். இன்றிரவுக்குள் குலதெய்வங்கள் ஆலயங்கள் அனைத்திலும் பூசனை கொள்ளவும் வேண்டும்” என்றார். “ஆம், நாங்கள் வந்திறங்கியப்போது வாசலிலேயே அதை சௌனகர் சொல்லிவிட்டார்” என்றார் துரோணர். “நான் நெடுநேரம் இவனை நெஞ்சில் எடுத்துக் கொள்வேன் என்பதை முன்னரே அறிந்துவிட்டார் போலும்.”
“அனைத்தையும் அறிந்து அனைத்தின்மேலும் ஐயம் கொள்வது அவரது இயல்பு” என்றார் தருமன். துரோணர் அர்ஜுனனின் இருகைகளையும் கையில் எடுத்துக்கொண்டு “உன்னை எண்ணும்போதெல்லாம் இளைய யாதவன் நினைவுக்கு வருகிறான். நான் உனக்கு வில்லை அளித்தது போல அவன் யோகத்தை அளித்தான் என்றான் ஒரு சூதன். ஏனோ அதை முதல்கணம் கேட்டபோது என் உள்ளம் இளைய யாதவன் மேல் பெரும் கசப்பை அடைந்தது. அவன் உனக்கு அதை அளித்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அதன் பொருட்டு அவனை நூறுமுறை வாழ்த்தவே உள்ளம் எழுகிறது. நூற்று ஒன்றாவது முறை பொறாமையால் என் ஆழம் வலிகொள்கிறது” என்றார்.
கிருபர் நகைத்து “அன்னையர் கொள்ளும் பொறாமைக்கு நிகர் அது” என்றார். “யாதவப் பேரரசியிடம் கேட்டால் அவரும் இதே உணர்வை சொல்லக்கூடும்.” அர்ஜுனனிடம் “இளையோனே, தோழனாக ஆசிரியனை அடைந்தவன் வாழ்த்தப்பட்டவன். அவனுக்கு மெய்மை அழகிய களித்தோழியென வந்தமையும். நீ வில்வெற்றியால் மட்டுமல்ல மெய்யுணர்ந்த யோகி என்றும் ஒரு நாள் புகழ் பெறுவாய்” என்றார்.
துரோணர் தன் கைகளை அவன் தலையில் வைத்து “நீ அடையக்கூடாததென்று எதுவும் இப்புவியில் இருக்கப்போவதில்லை. உன் பொருட்டு என் பெயரும் பாரதவர்ஷத்தில் என்றும் நிலை கொள்ளும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
[ 7 ]
திருதராஷ்டிரரின் இசைக்கூடத்தில் நுழைவதற்கு சற்றுமுன்னர்தான் அங்கு பேரரசியும் இருக்கிறார் என்பதை தருமன் அறிந்தார். அவர் சற்றே திகைக்க “அரசே, இது முறைமைசார் சந்திப்பென்பதால் பேரரசியும் இருக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது” என்றார் கனகர். அவர்களுக்குப்பின் வந்த பீமன் “எவர் எடுத்த முடிவு?” என்றான். கனகர் அவனை நோக்கி மீண்டும் பணிந்து “அமைச்சர் எடுத்தார்” என்றார்.
உரத்தகுரலில் “ஆகவே இந்திரப்பிரஸ்தத்தின் அரசராக அஸ்தினபுரியின் பேரரசரை சந்திக்கும்படியும் உறவுமுறைச் சந்திப்பு அல்ல என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது அல்லவா?” என்றான் பீமன். “அவ்வாறல்ல. ஆனால் முறைமை பேணப்படவேண்டும் என்பதனால்…” என்று அவர் சொல்ல “நன்று” என்று அவன் அவரை கடந்தான்.
தருமன் “எவ்வாறெனிலும் நாம் நம் அன்னையையும் தந்தையையும் சந்திக்கிறோம். நம்மை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது அதை மாற்றுமா என்ன?” என்றார். அவரருகே நின்ற திரௌபதி தன் தலைமறைத்த வெண்பட்டை முகத்தின் மேல் இழுத்துக்கொண்டு நிமிர்ந்து மூடிய வாயிலை நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் அஸ்தினபுரிக்கு கிளம்பிய பின் ஒரு சொல்லும் உரைக்கவில்லை என்பதை தருமன் எண்ணிக்கொண்டார். சொல்லற்றவர்கள் சூழலில் இருந்து மறைவதே வழக்கம். அவளோ அனல்போல தன்னிருப்பை உணர்த்திக்கொண்டே இருந்தாள்.
அறைவாயிலைத் திறந்து வெளியே வந்த அறிவிப்பாளன் “நுழைவொப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றான். “நன்று” என்றபின் தருமன் திரௌபதியை நோக்கி “வருக!” என்றழைத்து உள்ளே சென்றார். இளைய பாண்டவர்கள் தொடர்ந்தனர். கனகர் வெளியே நின்றார்.
இயல்பாகவே தருமன் விப்ரர் அமர்ந்திருந்த பீடத்தை நோக்க அங்கு அது இல்லாததை உணர்ந்த பின்னரே அவரது மறைவை நினைவுகூர்ந்தார். மரவுரி மெத்தையிட்ட இசைக்கூடத்தில் காலடி ஓசைகள் இன்றி மிதந்ததுபோல் அவர்கள் சென்றனர். இசைக்கூடத்தின் நடுவே தனது பீடத்தில் திருதராஷ்டிரர் இரு கைப்பிடிகளிலும் கைவைத்து முகம் சரித்து சற்றே செவி அவர்களை நோக்க அமர்ந்திருந்தார். அவரருகே சற்று சிறிய பீடத்தில் காந்தாரி நீலநாடாவால் கண்களை கட்டிக்கொண்டு பெருத்த வெண்ணிற உடல் மெழுகென பீடத்தில் உருகி வழிந்திருப்பதுபோல தெரிந்தாள். அவளுக்குப்பின்னால் காந்தார அரசியர் நின்றனர். உடனே சம்படையின் இன்மையை தருமன் உணர்ந்தார்.
திருதராஷ்டிரருக்கு வலப்பக்கம் நின்றிருந்த சஞ்சயன் குனிந்து பாண்டவர்கள் வருகையை அவர் செவிகளில் அறிவித்தான். அருகணைந்த தருமன் அவர்கள் முன் எண்சாண் உடல் நிலம் தொட விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள் தந்தையே, தங்கள் சொற்கள் என் குலம் பெருக வைக்கட்டும்” என்றார். உடலை மெல்ல அசைத்தமைந்து “நன்று நிகழ்க!” என்று தாழ்ந்த குரலில் திருதராஷ்டிரரர் சொன்னார். திரௌபதி வணங்கியபோது திருதராஷ்டிரரின் குரல் எழவேயில்லை.
காந்தாரி தன்னை வணங்கிய திரௌபதியை கைபற்றி அருகணைத்து இடைசுற்றி “பெருத்துவிட்டாய்!” என்றாள். அவள் புன்னகையுடன் “ஐந்து மைந்தர்கள் பிறந்துவிட்டார்கள், அன்னையே” என்றாள். “ஆம், ஒவ்வொருவரையும் தொட்டுத் தழுவியதை நினைவு கூர்கிறேன்” என்றாள் காந்தாரி. மீண்டும் அவளை அணைத்தபடி “அரசமுறைமைகள் இன்றி இப்படி சந்திப்பதற்காகவே நீ முன்னரே இங்கு வந்திருக்கலாமடி” என்றாள். சத்யசேனை “ஆம், நான் உன்னை இந்திரப்பிரஸ்தத்தில் பார்த்தபோது அஞ்சி பின்னால் நின்றுவிட்டேன்” என்றாள்.
சத்யவிரதை திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு “அஸ்தினபுரிக்கு நெடுநாட்களுக்குப்பின் நீ வந்தது மகிழ்வளிக்கிறது கிருஷ்ணை” என்றாள். சத்யசேனை ”பிற மருகிகளையும் அழைத்து வந்திருக்கலாம். அவர்களும் இங்கு வந்து பல்லாண்டுகளாகின்றன” என்றாள். சுதேஷ்ணை “ஆம், நான் பலந்தரையை மிக விரும்பினேன். எளிமையான பெண். அங்கிருந்த நாளில் அவளிடம் நன்றாகப் பேசக்கூட முடியவில்லை” என்றாள். தேஸ்ரவை “இங்கேயே ராஜசூயம் நிகழவிருக்கிறது என்கிறார்கள். பிறகென்ன?” என்றாள். மிக இயல்பாக பெண்கள் ஒன்று கலந்ததை தருமன் வியப்புடன் நோக்கினார்.
பாண்டவர் ஒவ்வொருவரும் வந்து தன்னைப்பணிய ஒற்றைச் சொற்களில் அவர்களுக்கு வாழ்த்துரைத்தார் திருதராஷ்டிரர். அந்த அமைதியை கலைக்கும்பொருட்டு “தங்கள் ஆணையை ஏற்று பன்னிரு பகடைக்களம் சூழ இங்கு வந்துள்ளோம்” என்றார் தருமன். அவர் அச்சொற்களைக் கேட்டதாகத் தெரியவில்லை. எனவே தொடர்ந்து “எவ்வகையிலும் தங்கள் மைந்தர் களம் நின்று குருதி சிந்தக்கூடாதென்பதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன், தந்தையே. அவ்வண்ணமே இன்று நிகழவிருப்பது தங்கள் வாழ்த்தும் மூதாதையரின் அருளுமேயாகும்” என்றான்.
திருதராஷ்டிரர் உடலை மெல்ல அசைத்து இதழ்களைப்பிரித்து ஏதோ சொல்ல வந்தார். பின்பு சினத்துடன் சஞ்சயனை நோக்கி “மூடா, என்ன செய்கிறாய்?” என்றார். அச்சினத்திற்கு சற்றும் அஞ்சாமல் “சொல்லுங்கள் அரசே…” என்றான் சஞ்சயன். “இவர்களுக்கு நான் பரிசளிக்கவேண்டுமே, எங்கே அவை?” என்றார். “இங்குள்ளன” என்று சொல்லி சஞ்சயன் திரும்பி நோக்கி கைகாட்ட ஏவலர் அறுவர் சிறிய தாலங்களுடன் நிரையாக வந்தனர்.
திருதராஷ்டிரர் முதல் தாலத்திலிருந்து கணையாழி ஒன்றை எடுத்து தருமனுக்கு அணிவித்தார். “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். அவன் மீண்டும் அவர் காலைத் தொட்டு சென்னி சூடி “தங்கள் இனிய தொடுகையாக என் விரலில் என்றுமிருக்கட்டும் இது” என்றார். அவர் உறுமினார். பீமனுக்கு அணிவித்த கணையாழி சிறிதாக இருந்தது. அவன் ஆழிவிரலிலிருந்து சிறுவிரல் வரை மாறிமாறிப் போட்டு நோக்கியும் அது உள் நுழையவில்லை.
“பேருடல் கொண்டவனாக இருக்கிறாய்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். கசப்புடன் நகைப்பதுபோல அவரது முகத்தில் தசைகள் இழுபட்டு வாய் கோணலாகியது. “ஆம், தந்தையே. கதைப்பயிற்சியால் உடல் பெருத்துக்கொண்டே செல்கிறேன்” என்றான் பீமன். “இடைவிடாத பயிற்சியில்தான் எனது மூத்தவனும் இருக்கிறான். அவனும் உனக்கு நிகராகவே உடல் பெருத்திருக்கிறான்” என்றார் திருதராஷ்டிரர். பின்பு “நல்லூழாக போர் நிகழாது போய்விட்டது” என்றார்.
“நல்லூழாக அது மீண்டும் நிகழவும் கூடும்” என்றான் பீமன். முகம் சுருங்க “என்ன சொல்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “போர் தெய்வங்களுக்கு உகந்ததல்லவா?” என்றான் பீமன். “ஆம். போர் உகந்தது. ஆனால் உடன் பிறந்தார் போர் அல்ல” என்று கூவியபடி திருதராஷ்டிரர் சினத்துடன் கையை ஓங்கினார். மெல்லிய குரலில் தங்களுக்குள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள் திகைத்து திரும்பிப் பார்த்தனர். “நான் நகையாட்டுக்கென சொன்னேன் தந்தையே” என்றான் பீமன். “இங்கு நிற்கட்டும் நகையாட்டு. இதற்கு மேல் சொல்லாடுவது எனக்கு உவப்பல்ல” என்றார் திருதராஷ்டிரர்.
அவருள் ஆழத்தில் ஏதோ சினம் கனன்றுகொண்டே இருப்பதை ஐவரும் உணர்ந்தனர். முறைமைச் சொற்களால் அதை மூடிவைக்க முயல்கையில் இடைவெளிகளில் எல்லாம் அது கொதித்துக் கசிந்துகொண்டே இருந்தது. தன் அகத்தை கடந்து வந்து தருமனிடம் இறுக்கமான புன்னகையைக்காட்டி “இளைப்பாறிவிட்டாயா?” என்றார் திருதராஷ்டிரர். பீமன் “அரச விருந்தினர் மாளிகையில் இளைப்பாறுகிறோம்” என்றான்.
காந்தாரி திகைப்புடன் “விருந்தினர் மாளிகையிலா? இவ்வரண்மனையின் மறுபக்கம் பாண்டவர்களுக்குரியதல்லவா? அங்கு தங்குமிடம் அமைத்தாலென்ன?” என்றாள். திரௌபதியிடம் “நீயும் அங்கேயா இருக்கிறாய்?” என்றாள். தருமன் சொல்லெழாது நிற்க சஞ்சயன் பணிந்து “அப்பகுதி மாற்றிக் கட்டப்பட்டுள்ளது பேரரசி. அங்குதான் இப்போது கௌரவர்களில் இளையவர்கள் தங்கள் மனைவியருடன் வாழ்கிறார்கள்” என்றான். “அவர்களை வெளியேற்றுவதற்கு எவ்வளவு காலமாகப் போகிறது? இது என்ன விருந்தினர் மாளிகையில் இக்குடி பிறந்தோரை தங்க வைப்பது?” என்று காந்தாரி சொன்னாள்.
அதை கடந்துசெல்ல விரும்பிய தருமன் “பிதாமகரையும் துரோணரையும் கிருபரையும் சந்தித்தோம், தந்தையே. அவர்கள் கொண்ட உவகையையும் கண்ணீரையும் கண்டு இன்று எங்கள் நாள் நிறைந்தது” என்றார். “ஆம். துரோணர் ஒவ்வொரு நாளும் இளைய பாண்டவனுக்காக எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தார்” என்றார் திருதராஷ்டிரர். “அவர் மைந்தனும் அவரிடமிருந்து அகன்றுவிட்டான். அஸ்வத்தாமனை எண்ணும்போதெல்லாம் அர்ஜுனன் நினைவு வருகிறது என்று ஒருமுறை சொன்னார்.”
பீமன் “உத்தர பாஞ்சாலத்தில் அரசு சூழ்தலில் அஸ்வத்தாமன் அம்பு எய்வதை மறந்திருக்கமாட்டான் என்று எண்ணுகிறேன்” என்றான். அவன் சொன்னதில் பொருளேதும் உண்டா என்று புருவங்கள் சுருங்க தலையை சரித்த திருதராஷ்டிரர் “கற்ற கலை மறக்குமா என்ன? துரோணரின் குருதியென்றால் அது அஸ்வத்தாமனல்லவா?” என்றார். அர்ஜுனன் “ஆம், தந்தையே. அவருக்கு என்றும் முதன்மையானவர் அஸ்வத்தாமனே” என்றான்.
அச்சந்திப்பை முடித்துக்கொள்ள விரும்பியவனாக சஞ்சயன் உட்புகுந்து “பாண்டவ அரசரும் இளையோரும் அந்தியில் குலதெய்வப் பூசனைக்கு செல்ல வேண்டுமென்றும் அது முடிந்த பிறகே இன்றையபொழுது அமைந்ததென்று முரசறைய வேண்டுமென்றும் விதுரர் ஆணையிட்டுள்ளார், பேரரசே” என்றான். பெருமூச்செறிந்து “முறைமைகள் எதையும் மாற்றவேண்டியதில்லை. அவ்வண்ணமே ஆகுக!” என்றார் திருதராஷ்டிரர்.
காந்தாரி “பூசனைகள் முடிந்த பின்னர் நீ எதற்காக விருந்தினர் மாளிகையில் தங்குகிறாய்? நீ என் மாளிகைக்கு வந்துவிடு” என்று திரௌபதியிடம் சொன்னாள். திருதராஷ்டிரர் உரக்க “அவள் இன்று பாரதவர்ஷத்தின் அரசி. அதற்குரிய இடத்தில் அவள் இருப்பதே முறை” என்றார். “அதற்காக அவள் என் மருகி அல்ல என்றாகுமா என்ன?” என்றாள் காந்தாரி. “எதற்கு வந்தார்களோ அது முடியட்டும். அதன் பிறகு நாம் குருதி உறவு முறைகளுக்கு திரும்புவோம்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம் தந்தையே, முறைமைகளை அதற்குப்பின் களைவோம். முதலில் இந்த பன்னிரு பகடைக்கள ஆடல் நிறைவுறுக!” என்றார் தருமன்.
பீமன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் அவன் கையை பற்றினான். தருமன் அதை அரைக்கண்ணால் நோக்கியபின் “நாங்கள் கிளம்புகிறோம், தந்தையே. மீண்டும் படைக்களம் சூழ்கையில் அவையில் தங்களை பார்க்கிறோம்” என்றார்.
“நன்று சூழ்க!” என்று மீண்டும் வாழ்த்தினார் திருதராஷ்டிரர். உரத்த குரலில் பீமன் “இத்தருணம் வரை கௌரவர்கள் எவரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. ஒருவேளை பன்னிரு பகடைக்களத்தில் மட்டும் சந்தித்தால் போதும் என்று எண்ணுகிறார்களோ என்று ஐயுறுகிறேன்” என்றான்.
திருதராஷ்டிரர் திகைத்து சஞ்சயனை நோக்கி முகம் திருப்பி “உண்மையா?” என்றார். “ஆம். முறைமைகளை மீற வேண்டியதில்லை என்று அரசர் எண்ணுகிறார்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “ஆம், முறைமைகள் என்றால் அதைப்பேணுவதே உகந்தது” என்றார். “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றார் தருமன். “அஸ்தினபுரியின் அரசர் பன்னிரு பகடைக்களத்துக்குப் பிறகு எனது இளையவனாக அருகணையட்டும். காத்திருக்கிறோம். நன்றி” என்றபின் “செல்வோம்” என்று இளையோருக்கு கைகாட்டிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கி பின்பக்கம் காட்டாது நடந்தார்.
“நாளை பகலில் என் மாளிகைக்கு வா இளையோளே” என்று சொல்லி காந்தாரி திரௌபதியின் கன்னத்தைத் தடவி தலையை இழுத்து வகிட்டில் முத்தமிட்டாள். “வருகிறேன், அன்னையே. துச்சளையைப் பார்த்து நெடுநாட்களாகிறது” என்றாள் திரௌபதி. காந்தாரியர் ஒவ்வொருவரின் கைகளையாகத் தொட்டு தலையசைத்து விடைபெற்று தருமனுடன் நடந்தாள்.
மீண்டும் தருமன் விப்ரரை நினைவு கூர்ந்தார். அவரது இருப்பு எத்தனை இயல்பாக முழுமையாக மறைந்துவிட்டது என்று எண்ணினார். புடவியின் உயிர்வெளியென்பது நீர்ப்பரப்பு போல எத்தனை அள்ளினாலும் தடம் எஞ்சாது என்றொரு சூதர் பாடலை நினைவுகூர்ந்தார். திருதராஷ்டிரராவது விப்ரரை எண்ணிக்கொள்கிறாரா என்றொரு எண்ணம் வந்தது. அவர் மறக்கவே முயல்வார் என்று தோன்றியது. மறக்க முயல்பவை கனவுக்குள் சென்று பதுங்கிக்கொள்கின்றன. புற்றுக்குள் நாகமென விழிமணியொளிரும் நஞ்சென அமுதத்தின் அருமணியென.
[ 7 ]
அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன.
பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு தூண்கள் அதன் கூரையைத் தாங்கியபடி நிரை கொண்டிருந்தன. சரிந்து சென்று வளைந்து தாமரை இதழென விளிம்பு சுருண்ட மரப்பட்டைக் கூரைக்கு அடியில் தூண்களுக்குப் பின்னால் இருபத்துநான்கு படிகளாக எழுந்து சென்ற வளைவில் அஸ்தினபுரியின் குடிகள் மூவாயிரம்பேர் அமர்ந்து பகடைக்களத்தைப் பார்ப்பதற்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தூண்களை ஒட்டி இன்னுணவும் மெல்பொருளும் கொண்டுசெல்லும் ஏவலரும் அடைப்பக்காரர்களும் செல்வதற்கான இடையளவு ஆழம் கொண்ட ஓடை போன்ற பாதை ஒன்று பன்னிரு படைக்களத்தை சுற்றி வந்தது. அதிலிருந்து பிரிந்த சிறிய ஓடைவழிகள் ஒவ்வொரு பீடநிரைக்கும் அருகே சென்று முடிந்தன. கூடத்தின் அடித்தளத்திற்குள்ளிருந்து எழுந்து வந்த ஏழு சுரங்கப்பாதைகள் அதில் வந்து இணைந்தன. அப்பாதைகள் அனைத்தும் அப்பாலிருந்த அடுமனைக்கும் ஏவலர்கூடத்திற்கும் சென்று வாய்திறந்தன.
தூண்நிரைகளுக்குள் முதலில் பன்னிரண்டு பீட வரிசைகளாக அமைச்சர்களும் பெருவணிகர்களும் படைத்தலைவர்களும் அமரும் பகுதி இருந்தது. மீண்டும் ஒரு ஓடைப்பாதை சுற்றி வர அவ்வட்டத்திற்குள் ஏழு நிரைகளாக அரசகுடியினர் அமரும் பீடங்கள் போடப்பட்டிருந்தன. நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட தரைமேல் செந்நிற மரவுரி விரித்த வட்ட வடிவ ஆடுகளம் அமைந்திருந்தது. அதற்கு வலப்பக்கமாக அரசர் அமர்வதற்கான அரியணை மேடை இருந்தது. இடப்பக்கம் நிமித்திகன் எழுந்து அறிவிப்புகளை அளிப்பதற்கான முறை மேடை. அதன் அருகே இருபுறமும் சிறுமுரசுகளுக்கான கட்டில்கள் இருந்தன.
மாளிகையில் பேரரசரும் அரசரும் வருவதற்கான செந்நிற மரவுரி மெத்தையால் மூடப்பட்டிருந்த பாதை கிழக்குப் பெருவாயிலில் இருந்து வலப்பக்கமாக வந்தது. இடப்புறம் பிற அரசகுடியினர் வந்து அமர்வதற்கான பாதை அதே வடிவில் வழிந்து வந்தது. மேற்குப் பெருவாயில் வணிகர்களும் குடித்தலைவர்களும் வருவதற்குரியதாக அமைக்கப்பட்டிருந்தது. தெற்குப் பெருவாயில் நகர்குடிகள் வந்து அமர்வதற்குரியதாகவும் வடக்குப் பெருவாயில் காவல் வீரர்களுக்குரியதாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அவைக்கு நடுவே பன்னிரு பகடைக்களம் விரிப்பதற்காக வட்டமாக அமைந்திருந்த தாழ்வான மரமேடைக்கு நேர் உச்சியில் படைக்களத்தின் குவைக்கூரையின் மையம் அமைந்திருந்தது. குடை போல கவிந்து வளைந்திறங்கிய கூரைக்கு அடியில் என நூற்றெட்டு சாளரங்கள் ஒவ்வொரு தூண் இடைவெளியிலும் வெளி நோக்கித் திறந்து ஒளியை உள்ளே பெருக்கின. ஒவ்வொரு சாளரத்திற்கும் நடுவே மான்கண் பலகணிகள் காற்றை உள்ளே ஊதி தூண்களில் முட்ட வைத்து பிரித்து அவைக்களம் முழுக்க சுழன்று வீச வைத்தன.
பகடைக்களம் அமைந்த மையத்தை நோக்கியபடி இருபக்கமும் தூண்களுக்குமேல் அரசமகளிர் அமர்வதற்குரிய அரைவட்ட உப்பரிகைகள் திறந்திருந்தன. அவர்கள் கிழக்கு முற்றத்திலிருந்தே இரண்டு மரப்படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த உப்பரிகைகளை அடைய முடியும். உப்பரிகை முகப்புகளில் அரசமகளிரை பிற விழிகளில் இருந்து மறைப்பதற்காக பீதர்நாட்டு மென்பட்டுத் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களின் செய்தியை அவைக்கு அறிவிக்கும் நிமித்திகன் நிற்பதற்காக இரு சிறு அகல்வடிவ நீட்சிகள் உப்பரிகைகளின் வலது ஓரத்தில் கட்டப்பட்டிருந்தன.
அரசகுடியினருக்குரிய சிம்மக்கால் பீடங்கள் செந்நிறப்பட்டு உறைகள் போடப்பட்டிருந்தன. படைத்தலைவர்களுக்கும் குடித்தலைவர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் உரிய மான்கால் பீடங்கள் வெண்பட்டு உறையால் மூடப்பட்டிருக்க குடிமக்களுக்குரிய கூர்கால் பீடங்கள் இளநீல மரவுரியால் மூடப்பட்டிருந்தன.
களத்தின் சுவரோரமாக படைக்கலமேந்திய காவலர் விழியறியாமல் நிற்பதற்கான ஆயிரத்தெட்டு கரவு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூணும் கூரையைச் சென்றடையும் இடத்தில் மூன்று வில்வீரர்கள் நிற்பதற்குரிய இடத்துடன் ஏந்திய கிண்ணம் போன்ற உப்பரிகைகள் இருந்தன. அவர்களை கட்டுப்படுத்தும் படைத்தலைவன் கொடிகளுடன் நிற்பதற்கு கிழக்குக் கூரைச்சரிவில் சிறிய உப்பரிகை ஒன்று அகல்விளக்குபோல நீண்டிருந்தது.
தரையில் ஏழு வட்டங்களாக பீடிகைகள் அமைந்து அவற்றின்மேல் பழுத்த செந்தேக்கினாலான தூண்கள் ஊன்றிப்பதிந்து எழுந்து மெழுகுப்பூச்சுடன் கன்னித்தோல் வளைவென ஒளிகொண்டிருந்தன. ஏழு வளையங்களாக விரிந்து கூரையைத் தாங்கிய வேதிகைகளைச் சென்றடைந்து பொருந்தியிருந்தன. குவைக்கூரையின் வளைவுகளில் வெண்சுண்ணம் பூசப்பட்டு உடல்கொண்டு உடல்நிரப்பி பரப்பென நிறைந்த தேவர் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. வலப்பக்கம் தேவர்களும் இடப்பக்கம் அசுரர்களும் அணிவகுத்து நடுவே வெண்நுரைவட்டத்துடன் அலைகொண்டிருந்த பாற்கடலில் அமுது கடைந்து கொண்டிருந்தனர்.
வாசுகியின் செவ்விழிகள் எரிந்த பெருந்தலை முக்கண்ணன் அருகே வாய்திறந்திருந்தது. அவனருகே சற்று அஞ்சியவனாக அவன் துணை நின்றிருந்தான். வாசுகியின் உடலின் முதல்வளைவை இந்திரன் பற்றியிருந்தான். முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான். உச்சகட்ட விசையுடன் உடல் திமிறிய தேவர்கள் பெரும்பரப்பென அவ்வரைவட்டத்தை நிறைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே கருவண்ணக் கோல நெளிவுபோல வாசுகியின் உடல் புகுந்து வளைந்து வந்தது. மறுபக்கம் கருநீலநிற உடல் கொண்ட அசுரர்கள் வளைந்து தங்களுக்குள் புகுந்து கரந்து எழுந்து நிறைந்த வாசுகியின் வாலை பற்றியிருந்தனர். குவைக்கூரை முகடின் மையக்குமிழி மேரு மலையெனத் தெரிந்தது.
ஒவ்வொரு தூணுக்கு மேலும் ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி அவ்வோவியத்தின் மேல் விழும்படியாக அவற்றுக்குக் கீழ் மலர்ந்த அரைவட்டமாக உள்ளே வெள்ளி பூசப்பட்ட ஆடிக்கிண்ணங்கள் அமைந்திருந்தன. முற்றிலும் ஒலி கட்டுப்படுத்தப்பட்ட பகடைக்களத்தில் நடமாடும் வீரர்களின் காலடி ஓசைகளும் செருமல்களும்கூட தெளிவாக ஒலித்தன. எனவே அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்கள் மரவுரி காலணியணிந்து மட்டுமே நுழையவேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது.
நூற்றெட்டு தூண்களில் தேவர்களின் உருவங்கள் கைகோத்து உடல் நெளிந்து நிறைந்திருந்தன. எட்டு திசைக்காவலர் தூண்களின்மேல் புடைத்து எழுந்து ஆடுகளத்தை நோக்கி விழிவிரித்திருந்தனர். மையக்களத்தின் வலப்பக்கம் மோகினி அமுதுடன் புன்னகைத்து நின்றிருக்க இடப்பக்கம் தட்சன் நஞ்சுக் கலத்துடன் சீறி எழுந்திருந்தான். நடுவே துலாக்கோல் ஒன்று ஊசிமுனையில் நின்று காற்றின் அசைவுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தது.
பன்னிரு படைக்களத்தின் இறுதிப்பணி முடிந்த அன்று முதற்காலைப் பொழுதில் தலைமைச்சிற்பி காளிகர் தன் இல்லத்திலிருந்து அதை பார்வையிடுவதற்காக வந்தார். வலக்காலெடுத்து முற்றத்தில் வைத்ததுமே உடல் நடுங்கி கைகூப்பி நின்றார். பெருந்தச்சர்களும் மாணவர்களும் அவரை நோக்கி திகைத்து விழிவிரித்தனர். அவர் விழிதிறந்து மேல்மூச்சுவிட்டு “செல்வோம்” என்றார்.
தன்னந்தனிமையிலென கடுகி நடந்து கிழக்கு வாயிலினூடாக பன்னிரு பகடைக்களத்துக்குள் நுழைந்தார். பிறர் தயங்கி வெளியே நின்றுவிட அவர் மட்டும் முகில்மேல் தேவனென கால்வைத்து கள மையத்துக்கு வந்து நின்றார். முற்றிலும் ஒழிந்து அவரைச் சூழ்ந்திருந்தது பன்னிரு படைக்களம். இதழ்களை விரித்து அவரை உள்வாங்கிய பெருந்தாமரை மூடிக்கொண்டது போல் இருந்தது. பின்பு முதல் நோக்குணர்வை அடைந்தார். திகைத்து விழிதூக்கிப் பார்த்து மெல்ல சுழன்றபோது தன்னை நோக்கி அங்கே நிறைந்திருந்த அனைவரையும் கண்டார். இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி “யான் எளியேன்!” என்றார்.
உடல்நடுங்க மேற்கு வாயிலினூடாக நடந்து வெளியேறினார். பன்னிரு படைக்களத்தைச் சுற்றி ஓடிவந்த அவரது மாணவர்களும் தச்சர்களும் அவரைச் சூழ்ந்தனர். “பிழையற்றிருக்கிறது” என்றார். “பிழையற்றவை தெய்வங்களின் களம். இனி எவரும் அதை பார்க்கவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் சூழும் நாளில் இதை திறந்தால் போதும். வாயில்களை மூடுங்கள்” என்றார். “அவ்வாறே” என்றார் தலைமைத்தச்சர்.
எவரையும் நோக்காமல் திரும்பி நடந்து சென்ற காளிகர் தன் மாளிகைக்குச் செல்லாமல் அஸ்தினபுரியின் பெருவீதியை அடைந்தார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாமல் தச்சர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். தலைமைச்சிற்பி நடந்து செல்வதைக்கண்டு சாலையின் இருபுறமும் மக்கள் கூடினர். தனக்கென முன்பே வகுக்கப்பட்ட வழியில் நடந்து கோட்டை முகப்பை அடைந்து வெளியே சென்றார். அங்கு அவரருகே வந்து நின்ற தேரை விலகச்சொல்லிவிட்டு நடந்து சென்று மறைந்தார். கங்கைப் படகொன்றில் ஏறி “செல்க!” என்று அவர் ஆணையிட்டதும் அப்படகு ஒழுக்கிலேறி மறைந்ததாக ஒற்றர்கள் சொன்னார்கள். அவர் கலிங்கத்தையும் சென்றடையவில்லை.
[ 8 ]
முதற்பொழுதிற்கான பறவைக்குரல் எழுந்தபோது பன்னிரு பகடைக்களம் கூடுவதற்காக தருமன் முற்றிலும் சித்தமாக தன் அறையில் அமர்ந்திருந்தார். நறுமண நீராடி இளஞ்செம்பட்டாடை அணிந்து, மணிச்சரம் சுற்றிய தலைப்பாகை சூடி, அரசமணியாரம் மார்பில் தவழ, செந்நிற இடைக்கச்சையில் வைரங்கள் பதிக்கப்பட்ட பிடிகொண்ட குத்துவாள் செருகி அரசணிக்கோலத்தில் இருந்தார். நெய்ப்பூச்சில் தாடி மின்னியது. குழற்சுருள்கள் தோளில் விழுந்துகிடந்தன.
முந்தையநாள் இரவு ஆலயப்பூசனைகள் முடித்து திரும்புகையில் அர்ஜுனன் அவரிடம் “மூத்தவரே, நாளைய ஆடலில் தங்கள் உள்ளம் தெளிவுற அமைந்தாக வேண்டியுள்ளது. எனவே இன்றிரவு தாங்கள் முற்றிலும் அமைந்து துயிலல் வேண்டும்” என்றான். “ஆம்” என்றார் தருமன். “தாங்கள் நிலைமறக்கச் செய்யும் கடுங்கள் அருந்தா நெறி கொண்டவர் என்று அறிவேன். இன்றிரவு தாங்கள் சற்றே அதை அருந்துவதில் பிழையில்லை. நல்ல துயில் நாளை உங்களை புத்துணர்ச்சியுடன் களமாடச்செய்யும்” என்றான். “நன்று சூழ்வதற்காக சிறு நெறிபிழை ஒன்றை ஆற்றலாம் என்று நெறிநூல்களும் சொல்கின்றன.”
தருமன் புன்னகையுடன் நோக்கி “இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”
“நான் சொல்லாட விழையவில்லை. தாங்கள் துயின்றாக வேண்டும்” என்றான் அர்ஜுனன். “நான் துயிலமாட்டேன் என்று எண்ணுகிறாயா?” என்றார் தருமன். அர்ஜுனன் “ஆம், அவ்வாறே எண்ணுகிறேன்” என்றான். “ஏனெனில் ஒவ்வொருநாளும் தங்கள் விழிகள் சிவந்திருக்கின்றன. பல நாட்களாக தொடர்ந்து துயில் நீப்பதன் தடங்கள் உங்கள் முகம் முழுக்க இருக்கின்றன. மூத்தவரே, இச்சில நாட்களுக்குள் எத்தனை முதிர்ந்துவிட்டீர்கள் என்று அறிவீர்களா?”
“ஆம்” என்று தருமன் தன் தாடியை தடவியபடி சொன்னார். “ஆனால் நான் வெல்ல வேண்டுமென்று எந்தையர் விரும்பினால் என்னை துயில வைக்கட்டும். அதன் பொருட்டு நெறிமீறலைச் செய்ய விரும்பவில்லை” என்றார். “இளையோனே, என் வாழ்வின் முதற்பெருங்களம் இது. இதை ஒரு நெறிப்பிழையுடன் தொடங்குவது எனக்கு உகந்ததல்ல.” அர்ஜுனன் “தங்கள் விருப்பம்” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான்.
தருமன் தன் மாளிகைக்குத் திரும்பியபோது அங்கே விதுரர் அவருக்காக காத்திருந்தார். முகமன் சொல்லி அவர் வணங்கியபோது மறுமொழி சொல்லி தலைவணங்கினார். “நாளைக்கென சித்தமாகுங்கள், அரசே. அதை சொல்லிச் செல்லவே வந்தேன்” என்றார். தருமன் அவரை நோக்க “தாங்கள் சின்னாட்களாகவே மிகவும் நிலையழிந்திருக்கிறீர்கள். துயில் நீப்பினால் விளைந்த நடுக்கம் விரல்களிலும் இதழ்களிலும் இருந்துகொண்டே உள்ளது. சொற்களும் குழறுகின்றன. இந்நிலையில் தாங்கள் களம் நிற்பது எளிதல்ல” என்றார் விதுரர்.
“ஆம், பகல் முழுக்க ஒவ்வொன்றும் தெளிவாக தங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றன. இரவு அனைத்தையும் ஒன்றாக குழப்பிவிடுகிறது. இருளுக்குள் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்” என்றார் தருமன். “தாங்கள் துயின்றாக வேண்டும். தேவையென்றால்…” என்று அவர் சொல்ல வாயெடுக்க தருமன் “சற்று முன்னர்தான் இளையவனும் நான் கடும்மது அருந்தலாம் என்று சொன்னான்” என்றார்.
விதுரர் “ஆம்” என்றார். “இல்லை. உள்ளம்பிழைக்க மதுவருந்துவதில்லை என்பது என் நெறி. நெறிப்பிழையுடன் களம் புக விரும்பவில்லை. அதை என் தெய்வங்களும் விரும்பாது” என்றார் தருமன். “அரசே, நாளை நிகழவிருப்பதன் விரிவை உண்மையிலேயே தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?” என்றார் விதுரர். “ஏன், நான் தோற்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றார் தருமன்.
“அவ்வாறல்ல. களம் அமைவதற்குமுன் வெற்றிதோல்விகளை தெய்வங்களும் சொல்லமுடியாது. ஆனால் இதன் இறுதி என்ன என்று தாங்கள் சற்றேனும் உணர்ந்திருக்க வேண்டும்” என்றார் விதுரர். “என்ன? என் இளையவனுக்கு முன் சிறியவனாவேன், அவ்வளவுதானே? அது நிகழுமென்றால் தெய்வங்கள் எனக்கு வகுத்தளித்த இடமென்றே கொள்கிறேன். பிறகென்ன?” என்றார் தருமன்.
விதுரர் நீள்மூச்சுவிட்டு “நன்று!” என்றார். தருமன் புன்னகைத்து “ஏன் அமைச்சரே, இத்தருணத்தில் தாங்கள் சென்று சகுனியிடமும் இதை சொல்ல வேண்டுமல்லவா?” என்றார். “அவர் துயில் நீப்பதற்கு வழியில்லை” என்றார் விதுரர். “இப்படைக்களத்தை அமைப்பவர்கள் அவர்கள். சிலநாட்களாக எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது, பல்லாண்டுகளுக்கு முன்னரே இதை நோக்கி அவர்கள் அனைத்தையும் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று. மலை பிறக்கும் நதியொன்றை விரும்பிய வயலுக்கு கொண்டு செல்வது போல. உரிய இடங்களில் பாறைகளை அமைத்து, சிற்றணைகள் கட்டி, வாய்ப்புள்ள இடங்களில் கரையுடைத்து, வழியளித்து கொண்டுசென்றிருக்கிறார்கள். இன்று திரும்பிப்பார்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.”
“அவர்களால் என்றால்…?” என்றார் தருமன். “உண்மையில் ஒருமையில் சொல்ல வேண்டும். கணிகரால்” என்றார் விதுரர். எரிச்சலுடன் கைவீசி “அவரை நீங்கள் மிகைப்படுத்தி எண்ணுகிறீர்கள்” என்றார் தருமன். “அரசே, பல்லாயிரம் கைகளுடன் பகடையாடிக் கொண்டிருப்பவர்களாக என் கற்பனையில் விரியும் உச்ச எல்லை வரை மிகைப்படுத்திக்கொள்ளும் இருவரில் ஒருவர் அவர்” என்றார் விதுரர்.
“அது உளமயக்கு” என்றார் தருமன். “ஒரு பெருநிகழ்வுக்குப் பிறகு திரும்பிப்பார்த்தால் ஒவ்வொன்றும் அதை நோக்கியே அனைத்தையும் உந்திச் செலுத்திக் கொண்டிருப்பதை அறிவோம். அது நமது பார்வையின் கோணம் மட்டுமே. இங்கு நிகழும் ஊழின் ஆடல் அனைத்தையும் ஒருவரே ஆற்ற முடியும் என்றால் அவர் மானுடர் அல்ல, தெய்வம்.” விதுரர் “தெய்வம் அருள் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. பெரும் மருள் வடிவமாகவும் இருக்கமுடியும்” என்றார்.
“எவ்வாறாயினும் நன்று. நாளை மாதுலர் சகுனி நன்கு துயின்று விழித்து புன்னகையுடன் களமாட வரட்டும். நானும் அவ்வாறே செல்கிறேன். அவரை வெல்கிறேன். பல லட்சம் படைகளைக் கொண்ட போர் ஒன்றை நடத்தி முடித்த மாமன்னனுக்கு நிகரான புகழை நானும் அடைவேன்” என்றார் தருமன். பெருமூச்சின் ஒலியில் “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் விதுரர்.
தருமன் திரும்பி பீமனிடம் “மந்தா, மடைப்பள்ளிக்குச் சென்றுவிட்டு விரைவிலேயே நீயும் மாளிகைக்கு திரும்பு. முன்னரே துயின்று எழு” என்றபின் படியில் ஏறி இடைநாழியில் நடந்து தன் மஞ்சத்தறை நோக்கி சென்றார். நீராடி உடைமாற்றி உணவருந்தி தன் அறைக்குள் புகுந்தார்.
தனிமையை அடைந்த மறுகணமே அன்றிரவும் தான் துயிலப்போவதில்லை என்று தோன்றியது. அச்சத்துடன் திரும்பி வெளியே சென்று ஏவலனை அழைத்து திரிகர்த்த மதுவுக்காக ஆணையிட ஒருகணம் உன்னி உடனே உளம் குவித்து அதை வென்று திரும்பினார். “ஆம், இன்றும் துயில் நீத்து மதிமழுங்கி நாளை களம் அமைவதே தெய்வங்களின் ஆணை என்றால் அவ்வண்ணமே ஆகுக! நான் பொருதுவது தெய்வங்களுடன்!” என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டார்.
சாளரத்தை அடைந்து திறந்து வெளியே மெல்லிருள் பரவிய வானத்தின் பகைப்புலத்தில் அடரிருள் வடிவங்களாகத் தெரிந்த மரக்கிளைகளின் இலைவிளிம்புகளை நோக்கிக் கொண்டிருந்தார். மிகத்தொலைவில் ஒரு விண்மீன் சிமிட்டிக் கொண்டிருந்தது. சொல் சொல் சொல் என்று. அவர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். அணுகி வந்து மிக அருகே நின்றது. தனித்த விண்மீன். அப்படியென்றால் அது என்ன? துருவ விண்மீனா? அது வடதிசையா?
பகடைக்களத்தை எடுத்துப் பரப்பி ஒருமுறை ஆடலாமா என்று எண்ணினார். சகுனி பரப்பப்போகும் களத்தின் அனைத்து வழிகளையும் முன்னரே பலமுறை அமைத்து அமைத்து பயின்றிருந்தார். அவற்றில் எழாத பிறிதொரு முறை எழக்கூடுமோ? ஆமையோட்டுப் பேழையைத் திறந்து நாற்களத்தை எடுத்து விரித்தார். காய்களைப்பரப்பி தந்தப்பேழையிலிருந்த பகடையை கையில் எடுத்தபோது ஒருநாளும் உணராத பெரும் சலிப்பொன்றை அறிந்தார். அவற்றை திரும்பவும் தந்தப்பேழைக்குள்ளிட்டு தூக்கி வீசினார். நாற்களப் பலகையை மடித்து அப்பால் இட்டபின் மஞ்சத்தில் கால் நீட்டி மல்லாந்து படுத்தார்.
ஒரு கணத்தில் பல்லாண்டுகளாக அவர் பயின்று வந்த நாற்களமாடல் அத்தனை பொருளற்றதாக மாறிய விந்தையை திரும்பி நோக்கினார். மீள மீள எண்களில் சிக்கி மதியிழந்து களிக்கும் மாயைதானா அது? பொருளின்மையை இரண்டு நூறு கோடியென பகுத்து பகுத்தாடும் தவமா அது?
இத்தருணத்தில் இப்பெரும் விலக்கு ஏன் உருவாகவேண்டும்? நாளை களம் அமைவதற்கு முன்னரே சலிப்புற்று விலகி நின்று பார்த்திருக்கப் போகிறேனா? கண்களை மூடிக்கொண்டு அவ்வெண்ணங்களை விலக்க முயன்றார். ராஜசூயம் தொடங்குவதற்கு முன்பும் இதே சலிப்பை அடைந்ததை நினைவுகூர்ந்தார்.
நாளை நாளை என்று காத்து, இதோ இதோ என்று எண்ணி, அந்நிகழ்வு அணுகிய நாளின் முந்தைய இரவில் பெரும் சலிப்பையே அடைந்தார். கிளம்பி எங்காவது சென்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அறியாத காடொன்றில் அழகிய சுனைக்கரையில் ஒரு சிறு குடிலில் விழையவும் எய்தவும் கடக்கவும் ஏதுமின்றி காலத்தை அவ்வக்கணங்களாக உணர்ந்தபடி வாழ்வதை கற்பனை செய்தார். அவ்வெண்ணம் அளித்த குளிர் தென்றல் கண்ணை வருடிச்செல்ல கண்ணயர்ந்தார்.
மறுநாள் காலையில் ராஜசூயத்தின் பெருமுரசு ஒலிக்கக் கேட்டபடி விழிதிறந்து எழுந்தபோது உள்ளம் தெளிந்திருந்தது. ராஜசூயம் குறித்த எழுச்சிகளோ மயக்குகளோ ஏதுமின்றி வெறும் சடங்குத் தொடராக அது நிகழ்ந்தது. ஆடிக் கடந்தாகவேண்டிய அங்கத நாடகம். முடிசூடி அமர்ந்திருந்தார். வேள்விக்கு தலைமை வகித்தார். வைதிகருக்கு பொருளளித்தார். மன்னர் நிரை வந்து பணிய கோல் ஏந்தினார். அனைத்திற்கும் அப்பால் தூரத்தில் அந்த தனிக்குடிலில் அமர்ந்திருந்தார். அங்கு இனிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. ஒரு சொல்லும் செவியில் விழாத அமைதி அவரை சூழ்ந்திருந்தது. அந்த அமைதியின் கவசத்தை சூடியே சத்ராஜித்தென அமர்ந்திருந்தார்.
அந்தச் சிறுகுடிலை தன் உள்ளத்தில் எழுப்பிக்கொள்ள அவர் முயன்றார். மரப்பட்டைக்கூரை வேய்ந்தது. எழுந்து நின்றால் தலை முட்டுவது. நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரிப் பாய் ஒன்று. ஒரு மாற்றாடை. உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை. இப்புவிக்கு அளிக்க உடலின் உப்புக்களன்றி பிறிதில்லை. கொடுப்பதும் பெறுவதும் குறைகையில் எளிதாகிறது இவ்வணிகம். அதையே தவமென்கிறார்கள்.
தவம் என்பது மகிழ்ந்து வாழ்தல். மகிழ்வை மறிக்கும் பிறிதொன்றையும் ஏற்காதிருத்தல். தவம் என்பது துயர் என்று எண்ணுபவன் உலகியலின் வெல்லப்பசைப் பிசுக்கில் சிக்கிச் சிறகோய்ந்தவன். உண்டு தீராத இனிமையை தன்னுள்ளிருந்து எடுத்துப் பரப்பி அதில் திளைப்பவன் அங்கிருந்து திரும்பி நோக்கி நகைத்துக் கொள்வான். அவ்வாறு நோக்குகையில் இந்தப் பன்னிரு பகடைக்களம் எப்படித் தோன்றும்?
அவர் விழிமூடியபடி புன்னகைத்தார். துயிலில் புதைந்து இறங்கிக் கொண்டிருக்கையில் மிக அருகே அவர் பாண்டுவை உணர்ந்தார். “தந்தையே!” என்றார். பாண்டு ஒன்றும் சொல்லாமல் அவர் அருகே நின்றிருந்தார். அவரும் ஒரு சொல்லின்றி அவர் அருகமைவை உணர்ந்தபடி படுத்திருந்தார். அவர் மடியிலென துயின்றழிந்தார். அவர் அருகே நின்றபடி துயிலும் அம்முதியவரை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தார்.
[ 9 ]
துரியோதனன் மிகவும் சோர்ந்திருந்தான். சாய்வு பீடத்தில் தன் உடலைச் சாய்த்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்தபடி தலையை பின்னுக்குச் சரித்து அமர்ந்தான். “படைப்புறப்பாட்டுக்கு முன்னர் கூட இத்தனை களைத்ததில்லை அங்கரே” என்றான். கர்ணன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கலைந்த தன் தலையை இருகைகளாலும் கோதி பின்னுக்கு கொண்டுசென்று நாடாவால் முடிந்தபடி “உள்ளம் மிக விரைந்து முன்னால் செல்கிறதல்லவா?” என்றான். “உள்ளவிரைவு இத்தனை களைப்படையச்செய்யும் என்று இன்றுதான் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன்.
துச்சாதனன் வாயிலருகே தூண்சாய்ந்து நின்றான். துரியோதனனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. கர்ணன் திரும்பி துச்சாதனனிடம் “நீ சென்று படுத்துக்கொள் இளையோனே!” என்றான். “நான்…” என்று அவன் தொடங்க “நான் அரசருடன் இருக்கிறேன். நீ சென்று படுத்துக்கொள்” என்று மீண்டும் சொன்னான். தலை தாழ்த்தி கதவைத் திறந்து துச்சாதனன் நடந்து மறைந்தான். துயிலும் துரியோதனனை பார்த்தபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவனை எழுந்து மஞ்சத்தில் படுத்துக்கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணினான். பின்பு அவனே விழிக்கட்டும் என்று முடிவு செய்து ஓசையற்ற காலடிகளுடன் எழுந்து சென்று சாளரத்துக் கதவைத் திறந்து வெளியே இருளை நோக்கியபடி நின்றான்.
மேற்குவாயிலில் மாளிகை நிரைகளுக்கும் மரக்கிளைகளுக்கும் அப்பால் ஏரியின் மீது மெல்லிய இரவொளியின் நெளிவு தெரிந்தது. வடக்குக் கோட்டத்தில் களிறொன்று பிளிறியது. குளிர் அடங்கத் தொடங்கியிருப்பது காற்றில் மெல்லிய தூசு மணமும் வெம்மை நிறைந்த ஆவியும் கலந்திருப்பதிலிருந்து தெரிந்தது. இரவணைந்த பறவைகள் சில எழுந்து சிறகடித்து மீண்டும் அமைந்தன. வானத்தில் மெல்லிய சாம்பல் ஒளிப்பரப்பின் பகைப்புலத்தில் பறவைக்கூட்டங்கள் நீரில் மிதந்துசெல்லும் சருகுப்படலமென வலசை சென்று கொண்டிருப்பதை காணமுடிந்தது.
துரியோதனன் ஏதோ சொன்னது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது வாயை சப்புக்கொட்டியபின் அவன் அசைந்து அமர்ந்து மீண்டும் குறட்டைவிடத் தொடங்கியதை கண்டான். பானுமதியின் பெயரா என்று எண்ணிக்கொண்டான். பலமாதங்களாக பானுமதியை துரியோதனன் சந்திக்கவேயில்லை. மூன்று முறை லட்சுமணை மட்டும் வந்து அவனை பார்த்துச் சென்றாள். அவளைக் கண்டதுமே அறியாது சற்று கனிந்து அக்கனிவை தானே உணர்ந்து உடனே இறுகி முறைமைச் சொல் உரைத்து திருப்பி அனுப்பினான் துரியோதனன்.
“தந்தைக்கு என்ன ஆயிற்று மூத்த தந்தையே? அவர் பிறிதொருவராக மாறிவிட்டாரென்று மகளிர் மாளிகையில் சொல்கிறார்களே?” என்றாள் லட்சுமணை. கர்ணன் புன்னகைத்தபடி “ஆம், ஆனால் சில நாட்களில் அவர் திரும்பிவிடுவார். பொறு” என்றான். அவள் அவன் கையை பற்றியபடி “மூத்த தந்தையே, அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி வருகிறார்கள் என்றார்கள். என்றைக்கு வருகிறார்கள்?” என்றாள். “வருவாள்” என்றான் கர்ணன். “நான் அவர்களை பார்க்க விழைகிறேன்.” “ஏன்?” என்றான் கர்ணன். அவள் கரிய கன்னங்களில் நாணம் சிவக்க ”என்னைப்போலவே அவர்களும் கிருஷ்ணை அல்லவா?” என்றாள். பின்பு விழிகள் மாற “அவர்கள் பெயரை ஏன் எனக்கு இட்டார் தந்தை?” என்றாள்.
கர்ணன் நகைத்து “நீயும் கரியவள் என்பதனால்” என்றான். “ஆம். அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றபின் அவள் வெண்பற்கள் ஒளிவிடச் சிரித்து “அவர்களை எனக்குப் பிடிக்காதென்றுதான் அன்னையிடமும் பிறரிடமும் சொல்லிவந்தேன். அவர்கள் நகர் நுழைவதை அறிந்ததிலிருந்து அவர்களை எனக்குப் பிடிக்கும் என்பதை மறைக்கவே முடியவில்லை” என்றாள். “ஏன் மறைக்கவேண்டும்?” என்றான் கர்ணன். “என்னைப்போல் ஒருவர் எனக்கு முன்னரே இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய குறை?” என்றாள். “அது பெருமையல்லவா?” என்றான். “என்ன பெருமை? நான் வளர்ந்து அமரவேண்டிய அனைத்து இருக்கைகளிலும் அவர்கள் முன்னரே அமர்ந்துவிட்டார்கள்” என்றாள்.
கர்ணன் உரக்க சிரித்துவிட்டான். அவள் குழலை வருடி “அதனாலென்ன? அதைவிட பெரிய அரியணை உனக்காகக் காத்திருக்கும்” என்றான். “என்ன அரியணை? அவர்கள்தான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி. அதற்குமேல் உலகத்தின் சக்ரவர்த்தினியாக நான் ஆவதா?” என்றாள். “ஆக முடியும். பாரதவர்ஷத்திற்கு அப்பால் கிழக்கிலும் மேற்கிலும் எத்தனை நாடுகள் உள்ளன? உனது தந்தை அஸ்வமேதமும் ராஜசூயமும் இயற்றியபின் நீ அரியணை அமர்ந்தால் இந்திரப்பிரஸ்தத்தின் கிருஷ்ணையை விட பெரியவளாய்” என்றான் கர்ணன்.
அவள் சிரித்தபடி “சரிதான், பார்ப்போம்” என்றாள். பின்பு அவனைவிட்டு சிறுதுள்ளலுடன் ஓடினாள். அவள் செல்வதை அவன் புன்னகையுடன் நோக்கி நின்றான். எப்போது சிறுமியரில் இருந்து பெண் எழுகிறாள்? எப்போது பெண்ணிலிருந்து சிறுமி எழுகிறாள் என்பதை அறியமுடியாதது போலத்தான். வாசல் கதவை எவரோ தட்டுவதுபோல் உணர்ந்து கர்ணன் திரும்பி நோக்குவதற்குள் கதவு விரியத்திறந்து விதுரர் உள்ளே வந்தார். எவராலோ துரத்திவரப்பட்டவர் போல மூச்சிரைத்தார்.
கர்ணன் திகைப்புடன் “வணங்குகிறேன், அமைச்சரே” என்று தலைவணங்க அவர் அடைத்தகுரலில் “பேரரசர்” என்றார். ஒன்றும் புரியாமல் “யார்?” என்றான் கர்ணன். “பேரரசர், திருதராஷ்டிரர்” என்று விதுரர் அழுந்திய குரலில் சொன்னார். கர்ணன் திடுக்கிடலுடன் துரியோதனனை அணுகி அவன் தோளைத் தட்டி “அரசே! எழுங்கள் அரசே!” என்றான். அதற்குள் சஞ்சயனின் தோள்பற்றி திருதராஷ்டிரர் தலைகுனிந்து உள்ளே வந்தார். அவரது பேருடல் வாசலை முழுக்க மூடியது.
தலையை சற்றே திருப்பியபடி “அறையில் வேறெவரும் இருந்தால் வெளியே போகலாம்” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் பாய்ந்து எழுந்து “யார்?” என்றான். “பேரரசர்” என்றான் கர்ணன். துரியோதனன் கண்களைக் கசக்கியபடி திருதராஷ்டிரரைப் பார்த்து ஒருகணம் சொல்லிழந்து, உடனே மீண்டு “வணங்குகிறேன், தந்தையே” என்றான். “விதுரா, நீ வெளியே செல்லலாம்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் தலைவணங்கி சஞ்சயனுடன் வெளியே சென்று கதவை இழுத்து மூடினார்.
கர்ணன் தானும் கடந்து செல்ல முயல அவர் கைநீட்டி “நீ இங்கிருக்கலாம் மூத்தவனே. நீ என் குருதி” என்றார். சிறிய திடுக்கிடலுடன் கர்ணன் “தந்தையே!” என்றான். “நீ இவன் உடலின் மறுபாதி. நான் இவனிடம் பேசவந்ததை நீயும் கேட்கவேண்டும்” என்றார். “நான் அங்கு வந்திருப்பேனே, தந்தையே” என்றான் துரியோதனன். “பலமுறை உன்னை அழைத்தேன். நீ வரவில்லை” என்றார் திருதராஷ்டிரர். தயங்கி கர்ணனை நோக்கிவிட்டு “ஆம். பணிகள்” என்றான் துரியோதனன்.
திருதராஷ்டிரர் “இன்றிரவு இதை வந்து சொல்லவேண்டுமென்று தோன்றியது இதைக்கடந்தால் ஒருவேளை சொல்ல முடியாது போகலாம்” என்றார். அவன் “சொல்லுங்கள், தந்தையே” என்றான். “மைந்தா, இது வேண்டாம். இச்சூதால் எந்த நலனும் நிகழப்போவதில்லை. இன்று என் விழியிழந்த உள்ளத்தால் காலத்தின் நெடுந்தொலைவை பார்க்கிறேன். வழிவழியாக இங்கு பிறந்து வரும் ஒவ்வொரு தலைமுறையும் உன் பெயர் சொல்லி பழியுரைக்கும். நீ இழிபுகழுடன் என்றும் நூல்களில் வாழ்வாய். இது வஞ்சத்தின் வெளிப்பாடு. அரசன் நிலம் விழைவது அறம். ஆனால் குலம் கோத்து கிளைவிரிப்பது அவனது பேரறம். பேரரசனாக அல்ல. உன் தந்தையாக இதை கோருகிறேன். அழுக்காறை விட்டுவிடு!” என்றார்.
துரியோதனன் எரிச்சலுடன் “தந்தையே, தாங்கள் இப்போது வந்து இதை சொல்கிறீர்கள்…” என்றான். “இப்போது மட்டுமே இதை சொல்லமுடியும். நாம் அறியாத பெருவல்லமை கொண்ட எவரோ நம்மை இக்களத்தில் இயக்குகிறார்கள். கனவிலென அவர்களுக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். அரைக்கணம் எழும் விழிப்பில் திமிறி விலகிக்கொண்டால் நாம் தப்ப முடியும். இது அந்தக் கணம். அருள் கூர்ந்து நான் சொல்வதை புரிந்து கொள், மைந்தா! தருமன் மீது நீ கொண்ட காழ்ப்பு பொருளற்றது. அவன் தன்னியல்பாலேயே பேரறத்தான். நாமனைவரும் அவனுக்கு முன் மிகச்சிறியோர். எளிய விழைவுகளாலும் வஞ்சத்தாலும் அலைக்கழிக்கப்படும் மானுடர். அவனோ நிலைபெயராமை கொண்ட நெஞ்சத்தால் என்றும் முனிவர்களால் வாழ்த்தப்படப் போகிறவன்.”
“அவன் புகழைச் சொல்லவா இங்கு வந்தீர்கள்?” என்று துரியோதனன் உரக்க கேட்டான். “ஆம், அவன் புகழைச் சொல்லவே வந்தேன். அத்துடன் உன் இழிவைக் குறிப்பிடவும்தான். இத்தருணம் வரை உன் விழிநோக்கி அதை நான் சொல்ல முடியவில்லை. என் இளையோனின் மைந்தரைக்கொல்ல நீ அரக்கு மாளிகை அமைத்ததை மூன்றாம் உள்ளத்தால் நான் அறிவேன். பல்லாயிரம் சொற்களையும் பலகோடிக் கனவுகளையும் அள்ளி அள்ளிக் குவித்து மூடியும் அது என் உள்ளத்தின் ஆழத்தில் எங்கோ துளிவிதையென நீர்காத்து உறைந்தது.”
துரியோதனன் உடல் நடுங்க “தந்தையே!” என்றான். “இழிமகனே, இத்தனைநாள் என் விழிப்புக்கும் கனவுக்கும் அது சிக்காது ஆக்கினேன். அதை விப்ரரிடமிருந்து மட்டுமே என்னால் ஒளிக்கமுடியவில்லை. சற்று முன் அவர் என் கனவில் வந்தார். உன்னிடம் வந்து பேசும்படி சொன்னார்” என்றார் திருதராஷ்டிரர் “விழியால் அறிவதைவிட நுட்பமாக விழியின்மையால் அறியமுடியும் அறிவிலியே. நீ யாரென்று எனக்குத் தெரியும். ஏனெனில் நான் நீ. உன் வடிவில் எழுந்து நின்றாடும் இத்தீமை விழியிழந்த என் இருள் உள்ளத்தில் எங்கோ ஒளிந்து கிடந்தது. மூதாதையர் அருளால் ஒவ்வொரு கணமும் அதை வென்று இதுநாள் வரை அறம் பிழையாது வாழ்ந்தேன். உன் பொருட்டு நெறியழிந்தேன் என்னும் இழிசொல்லுடன் நான் நூல்களிலும் நினைவுகளிலும் வாழலாகாது.”
கைநீட்டி பெருங்குரலில் அவர் சொன்னார் “அப்பேரறத்தான் நீ இழைத்த பழியைப் பொறுத்து தந்தையென உன்னை நான் வெறுக்கலாகாதென்று அறிவுறுத்தி எனக்கு எழுதிய ஓலையை சற்றுமுன் கனவில் விப்ரர் எனக்கு வாசித்துக் காட்டினார். நெஞ்சில் அறைந்து கண்ணீர்விட்டு அழுதபடி விழித்துக்கொண்டேன். அவன் கால்களில் என் தலையை வைத்து பன்னிருமுறை பொறுத்தருளும்படி கோரினேன்.” அவர் முகம் உணர்வெழுச்சியால் நெளிந்தது. “மைந்தா, நீ இழைக்கப்போவது அதற்கு நிகரான பிறிதொரு இழிசெயல். சூது எவருக்கும் மேன்மை தந்ததில்லை. நச்சுக்கடல் கடைந்து எவரும் அமுதம் எடுக்கப்போவதில்லை.”
“நெறி நூல்களை நானும் அறிவேன். சொற்களில் சலிப்புற்று என்றோ விலகிவிட்டேன்” என்று துரியோதனன் பற்களை நெரித்தபடி சொன்னான். “எவ்வகையிலும் ஒரு அணுவிடைகூட நான் பின்காலெடுத்து வைக்க மாட்டேன். தந்தையே, நான் முடிவு செய்துவிட்டேன். நாளை புலரியில் பன்னிருகளம் கூடும். மாதுலர் என் பொருட்டு பகடை உருட்டுவார். நான் வெல்வேன். அக்கீழ்மகனின் முடித்தலைமேல் என் கால் வைப்பேன். அவ்விழிமகளை இழுத்து வந்து என் அவை முன் நிறுத்துவேன்.”
“நிறுத்து! அதே அவையில் உன் தலைகொய்து தெற்கு நோக்கி கொண்டுசெல்ல என்னால் ஆணையிட முடியும்” என்றார் திருதராஷ்டிரர். “முடியுமென்றால் அதை செய்யுங்கள். இரண்டு வழிகளே என் முன் உள்ளன, தந்தையே. ஒன்று, நான் எண்ணியபடி செல்லல். பிறிதொன்று உங்கள் கையால் இறத்தல். மூன்றாவதொன்றை என்னிடம் பேசவேண்டியதில்லை” என்றான் துரியோதனன்.
“மைந்தா…” என்று தழுதழுத்த குரலில் திருதராஷ்டிரர் கைநீட்டினார். பின்னடைந்து கையை நீட்டி அவரை விலக்கியபடி துரியோதனன் சொன்னான். “தெய்வங்களே வந்து சொன்னாலும் இனி என் உள்ளம் விலகாது. நான் அடைந்த இழிவுகளைக் கடந்து இனி ஒரு சொல்லும் என் சித்தம் ஏற்காது. அறவுரைகள் போதும். தாங்கள் செல்லலாம்!” திருதராஷ்டிரர் “மூடா, இவனொருவனை நம்பியா நீ போருக்கு அறைகூவுகிறாய்? இச்சூதுக்களத்தில் அனைத்தும் முடியுமென்றா எண்ணுகிறாய்? தொடங்குவதனைத்தும் அழிவதிலேயே முடியும் என்பதே இயற்கையின் நெறி. போர் வரும். வந்தே தீரும்” என்றார் திருதராஷ்டிரர்.
“போர் சூழும் என்றால் எதிர்நிற்பவன் எதிரற்ற படையாழி ஏந்திய இளைய யாதவன் என்றுணர்க! அவனுடன் இணைந்தவனோ பாரதவர்ஷத்தை வென்று வந்த விஜயன். பீமனுக்கு ஒருபோதும் நீ இணையானவன் அல்ல” என்றார் திருதராஷ்டிரர். கர்ணனைச் சுட்டி “ஆம், இவன் வெல்லக்கூடும். ஆனால் இவன் பிறப்பு இவனுக்குக் கீழே ஷத்ரியர்களை அணிதிரட்ட விடாது. இவன் உன் களத்தில் இருந்தாலும் பயனற்றவனே. நீ செல்வது உன் இறப்பின் களத்திற்கென்று உணர். மைந்தா, அதை நன்கு என் விழிகளுக்குள் காண்கிறேன். ஒரு காட்டுக்குளத்தருகே நீ உடல் சிதைந்து கிடப்பதை பலமுறை கனவில் கண்டிருக்கிறேன். இத்தனை நாள் அஞ்சி அஞ்சி உன்னை நான் அணைகட்டி நிறுத்தியது அதன் பொருட்டே” என்றார்.
அவர் அறைக்குள் அறியாது நின்றிருந்த வேறெவரிடமோ பேசுவதுபோல தலைதிருப்பியிருந்தார். “என் உள்ளத்தில் இருந்து விப்ரர் மறைந்த ஒரு கணத்தில் இப்பன்னிரு படைக்களத்திற்கு நான் ஒப்புதல் அளித்தேன். மீண்டெழுந்து வந்து அவர் இறுதியில் அறிவுறுத்தியதும் இங்கு வந்தேன். வேண்டாம்! பிறிதெவருக்குமாக இதை சொல்லவில்லை… உனக்காக சொல்கிறேன்” என்றார்.
துரியோதனன் முற்றிலும் அடங்கி குரல் தழைந்தான். “தந்தையே, தாங்கள் செய்வதற்கொன்றே உள்ளது” என்றபின் திரும்பி நோக்கி அறைமூலையில் இருந்த கதாயுதத்தை எடுத்து அவரை நோக்கி வீசினான். அவர் இயல்பாக அதை பற்றிக்கொள்ள முழந்தாளிட்டு அவர் எதிரில் அமர்ந்து தன் தலையை காட்டினான். “இத்தனை சொற்களுக்கு மாற்றாக ஒரே அடியில் என் தலை பிளந்து தள்ளிவிட்டு நீங்கள் திரும்பிச் செல்லலாம். பிறிதொரு வழியும் உங்களுக்கில்லை.”
திருதராஷ்டிரர் கதாயுதத்தை தரையில் வீசினார். அவரது கைகள் தளர்ந்தவையென இருபக்கமும் விழுந்தன. நீண்ட மூச்சில் கரிய பெருநெஞ்சு எழுந்தமைந்தது. “ஆம். வெல்லற்கரியது. நிற்றற்கரியது. கடத்தற்கரியது. காலம் தோறும் மானுடர் அதன் முன் நின்று கதறுகிறார்கள். ஓங்கித் தலையுடைத்து மடிகிறார்கள். அது மானுடரை அறிவதே இல்லை.” என்றார்.
அவர் நெஞ்சு விம்மிக்கொண்டே இருந்தது. தனக்கென எழுந்த குரலில் “எளியவனென்று முற்றிலும் கைவிடப்பட்டவனென்று முன்னரே வகுத்த பாதையில் செல்லும் துளியென்று உணரும் தருணம் ஒன்று ஒவ்வொருவருக்கும் உண்டு. இது அது. இன்று இறந்தேன்” என்றபின் திரும்பி நடந்தார்.
கதவை அவரே திறந்து வெளியே செல்ல விதுரர் அவர் கைகளை பற்றிக்கொண்டார். துரியோதனன் திரும்பி விழிதூக்கி அருகே நின்றிருந்த கர்ணனிடம் “என்ன எண்ணுகிறீர் அங்கரே? தந்தையின் சொற்களில் ஒன்றை நீங்களும் நினைத்துக்கொண்டால்… அதோ கிடக்கிறது கதாயுதம். எடுத்து என் தலையை சிதறடியுங்கள். அதனுள் கொப்பளிக்கும் அமிலத்தின் அனலிலிருந்து அவ்வண்ணமேனும் நான் விடுதலை கொள்கிறேன்” என்றான்.
கர்ணன் தணிந்த உறுதியான குரலில் “என்றும் நான் உங்களுடன் இருப்பேன், அரசே. ஒரு சொல்லும் ஓர் எண்ணமும் மாற்றில்லை” என்றான்.
[ 10 ]
பின்னிரவின் வெம்மையைச் சுமந்து காற்று வீசத்தொடங்கியபோது பீடத்தில் கால்நீட்டி அமர்ந்து அரைத்துயிலில் இருந்த நகுலன் விழித்துக்கொண்டான். கருந்திரி எழுந்து அகல்விளக்குச் சுடர் எண்ணைக்குள் இறங்கியிருந்தது. பட்டாம்பூச்சியின் இறுதித்துடிப்பு அதில் தெரிந்தது. அறையின் இரு தூண்களும் அதற்கேற்ப நடமிட்டன. மூடிய விழிகளுக்குள்ளேயே அவ்வசைவைக் கண்டுதான் அவன் விழித்துக்கொண்டான் என்று எண்ணினான். எழுந்து ஆடையை சீர்செய்தபடி கதவைத் திறந்து இடைநாழியில் வந்து ஒளியேந்திய மாளிகைகளின் ரீங்கரிக்கும் பரப்பாகத் தெரிந்த அஸ்தினபுரியை நோக்கிக் கொண்டிருந்தான்.
மாளிகைமுற்றத்தில் பல்லக்கு வந்து நிற்பதை கண்டான். மூன்று எண்ணைப் பந்தங்களை ஏந்திய காவலர்கள் முதலில் அணைந்து அவற்றை தூண்களில் பொருத்தினர். கொம்பூதியும் வரவறிவிப்போனும் தொடர்ந்துவர பாஞ்சாலத்தின் விற்கொடி பறந்த பல்லக்கு எட்டு போகிகளால் சுமக்கப்பட்டு நீரிலென தத்தித் தத்தி மேலேறி வந்தது. செந்நிற ஒளியில் அதன் செம்பட்டுத் திரைச்சீலை நிறமற்றதுபோல் தோன்றியது. அதைத் திறந்து வெளியே வந்த திரௌபதி தன் ஆடையை இழுத்து முகத்தை மறைத்து மெல்ல நடந்தாள். பல்லக்கில் அவளுடன் வந்த அணுக்கத்தோழி மூங்கில் கூடையையும் தாலத்தையும் எடுத்துக்கொண்டு அவளைத் தொடர்ந்தாள்.
கீழே வீரர்கள் அவளை வாழ்த்துவதும் ஸ்தானிகருடன் அவள் உரையாடுவதும் கேட்டது. மரப்படிகளில் அவள் காலடி ஓசை எழுந்தபோது அவன் திரும்பி அவள் வரவை நோக்கி நின்றான். இறுதிப்படிகளில் ஏறி திரும்பி நோக்கி ஸ்தானிகரிடம் “அணைந்ததுமே என்னிடம் செய்தியை அறிவியுங்கள்” என்றபின் அவள் அவனை நோக்கி புன்னகைத்தாள். அவளுக்குப் பின்னால் ஏறிவந்த சேடியிடம் “தாலங்களை மஞ்சத்தறையில் வை” என்று சொல்லிவிட்டு அவனிடம் “துயிலாதிருந்தீர்களா?” என்றாள்.
“ஆம். நீ முன்னரே வருவாய் என்று நினைத்தேன்” என்றான். “அங்கு மகளிர் மாளிகையில் அன்னையரும் நூற்றுவரின் துணைவியரும் துச்சளையுமாக பெருங்கொண்டாட்டமாக இருந்தது” என்று அவள் சொன்னாள். “என்ன செய்தீர்கள்?” என்று அவன் புன்னகையுடன் கேட்டான். “அதை மட்டும் எந்தச் சொல்லாலும் சொல்ல முடியாது” என்று வெண்பற்களைக்காட்டி அவள் சிரித்தாள். “உண்மையில் ஒன்றுமே செய்யவில்லை.”
“பேசிக் கொண்டிருந்தீர்களா?” என்றான் நகுலன். “சொல்லப்போனால் பேசிக்கொண்டும் இருக்கவில்லை. ஒன்றுமே நிகழவில்லை. வீணாகச் சிரித்தோம், ஒருவரை ஒருவர் துரத்தினோம், மலரள்ளி வீசிக்கொண்டோம். குழந்தைகளை கொஞ்சினோம். மாலைமுதல் இதுவரை மகிழ்ந்திருந்தோம் என்பது மட்டுமே சொல்லமுடியும்” என்றாள் திரௌபதி. “பொருளின்றி மகிழ்ந்திருக்க குழந்தைகளால்தான் முடியும்” என்றான் நகுலன். “குழந்தைகள் ஆகும் கலை பெண்களுக்குத் தெரியும்” என்றாள் அவள். “அங்கு ஆண்கள் இருக்கக்கூடாது, அவ்வளவுதானே?” என்றான். “இருக்கலாம். சிறுவர்களாக…” என்றபடி அவள் “இருங்கள். நீராடி ஆடைமாற்றி வருகிறேன்” என்றாள்.
அவன் மஞ்சத்தறையின் உள்ளே சென்று அமர்ந்தான். ஏவலன் உள்ளே வந்து அகலுக்கு எண்ணை ஊற்றி புதுத்திரியிட்டு சுடரேற்றிவிட்டுச் சென்றான். அவளுடைய பட்டாடையின் சரசரப்பு கேட்பது வரை அவன் காத்திருந்தான். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போது அவளிடமிருந்த அமைதியும் இறுக்கமும் முற்றாக விலகிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவள் முகத்திலிருந்த புன்னகை தன் முகத்தில் பற்றிக்கொண்டு ஒளிகொண்டு எரிவதை அறிந்தான்.
அவள் உள்ளே வந்து “என்ன சிரிப்பு?” என்றாள். “புன்னகைப்பதற்குத்தான் எவ்வளவு தசைகள் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றான். “அதைவிட உள்ளம் பணியாற்ற வேண்டியிருக்கிறது” என்றபடி அவள் அறைக்குள்ளிருந்த ஆடியில் தன் முகத்தை நோக்கி முன் நெற்றி மயிரை கைகளால் நீவி காதுகளுக்குப்பின் ஒதுக்கினாள். மேலாடையை சீரமைத்தபடி அவன் முன் வந்து “நாளை பகடைக்களம் அல்லவா?” என்றாள். “ஆமாம்” என்றான்.
“நல்லவேளை, மங்கல நிகழ்வொன்றும் அதைத்தொடர்ந்து இருக்காது. வெற்றி எனினும் தோல்வி எனினும் அது அங்கு ஆண்களுடன் முடியும்” என்றாள். “ஏன்?” என்றான் நகுலன். “நான் விலக்காகியிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “ஒருவேளை ஆடல் முடிந்தபின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால்…?” என்று நகுலன் கேட்டான். “நான் கலந்துகொள்ள முடியாது. அதை சேடியிடம் சொல்லி அறிவிக்க வேண்டியதுதான்” என்றாள். “உண்மையில் நான் அங்கு வரவிரும்பவில்லை. சொல்வதற்கு இனி இது உள்ளது. நன்று.”
நகுலன் “தனியறைக்கு செல்லவிருக்கிறாயா?” என்றான். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்விரவில் அவளுடன் இருக்க விழைந்தான். அதை அவள் உணராமல் “ஆம். அதைச் சொல்லிவிட்டு செல்லலாம் என்றுதான் வந்தேன். நீங்கள் துயிலலாம்” என்றாள். “நீ அஞ்சவில்லையா?” என்றான் நகுலன். “எதை?” என்று அவள் கேட்டாள். “நாளை நிகழவிருக்கும் பகடையாட்டத்தை?” என்றான். அவள் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆவது அணைக!” என்றாள்.
“நான் அஞ்சுகிறேன். மீளமுடியாத சேற்றுக்குழி ஒன்றை நோக்கி மூத்தவர் சென்று கொண்டிருப்பதைப்போல் தோன்றுகிறது” என்றான். அவள் விழிகள் மாறுபட்டன. தலையை மறுபக்கம் திருப்பியபடி “அது அவர் ஊழென்றால் எவர் என்ன செய்ய முடியும்?” என்றாள். “அவரது ஊழ் மட்டுமல்ல. உடன்பிறந்தாரின் ஊழ். உனது ஊழ். நமது மைந்தரின் நகரத்தின் குடிகளின் ஊழ்” என்றான் நகுலன். “ஆம். அனைத்தும் மூன்று பகடைக்காய்களின் உருளலில் தீர்மானிக்கப்படுகிறது.” உடனே தொண்டை அசைய தலைசரித்து சிரித்து “எவ்வண்ணமாயினும் அது ஒரு பகடையாட்டத்தினால் முடிவாவதே” என்றாள்.
“என்ன சொல்கிறாய்?” என்று அவன் கேட்டான். “ஒரு மூங்கில் பாலம் சரிந்ததனால் முன்பு பிரக்ஜ்யோதிஷம் நூறாண்டுகாலம் அடிமைப்பட நேர்ந்தது என்பார்கள்.” அவன் “இத்தனை எளிதாக இதை எடுத்துக்கொள்வாய் என்று நான் எண்ணவில்லை” என்றான். “எளியது அவ்வண்ணமே எடுத்துக் கொள்ளத்தக்கது” என்றாள்.
பின்பு எழுந்து “நன்று. துயில்நீப்பு எவ்வகையிலும் தேவையானதல்ல. ஓய்வெடுங்கள்” என்றாள். நகுலன் “நீ துயில் நீப்பாய் என்று எண்ணினேன்” என்றான். “நானா? இங்கு வரும்போதே களைப்பில் என்னுடல் இடப்பக்கமாக சரிந்துகொண்டிருந்தது. குருதிவிலக்கு ஆனபின்பு கண்களை திறக்கவே முடியாதென்று தோன்றுகிறது. நல்லவேளையாக நாளை காலை நான் ஆற்றவேண்டிய அரசபணிகள் ஏதுமில்லை. நன்கு விடியும்வரை ஒதுக்கறையில் துயிலலாம்” என்றாள் திரௌபதி.
அவள் அறையைவிட்டு வெளியே செல்ல அவன் உடன் வந்தான். அவள் இடைநாழியில் நின்றபடி “இன்று மகளிரறையில் அரசரின் மகள் லட்சுமணையை பார்த்தேன். பார்க்க என்னைப்போலவே கரியவள். தந்தையும் தாயும் கிருஷ்ணை என்றே அழைக்கிறார்கள் அவளை” என்றாள். “உன்னைப்போலவே பேரரசியாகட்டும்” என்றான். “அவள் குழப்பத்தில் இருக்கிறாள். பேரரசியாக அரியணை அமர்வதா, விறலியாக யாழுடன் அலைந்து திரிவதா என்று. என்னைப்பார்ப்பது வரை விறலி என்றே முடிவு செய்திருந்தாள்.”
முகம் மலர, கண்கள் சுருங்க சிரித்தபடி “கன்னித்தன்மையின் தூய்மை! அவள் கன்னங்களை தொட்டுத் தொட்டு எனக்கு சலிக்கவில்லை” என்றாள். நகுலன் அவள் சிரிப்பையே நோக்கிக்கொண்டிருந்தான். “வருகிறேன்” என்று தலையசைத்தபடி கால்சிலம்புகள் ஒலிக்க நடந்து மறைந்தாள். நகுலன் அவளை நோக்கிக் கொண்டிருக்கையில் தன் முகம் புன்னகையில் விரிந்திருக்கையிலும் புகைசூழ்வது போல் உள்ளத்தில் வந்து நிறைந்த அறியாத்துயர் ஒன்றை உணர்ந்தான்.
[ 11 ]
பன்னிரு பகடைக்களத்தில் அவையமர்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அஸ்தினபுரியின் முதற்குடிகள் காலையிலேயே வந்து முற்றத்தில் குழுமினர். ஏவலர் அவர்கள் அழைப்போலைகளை சீர்நோக்கி முகமன் உரைத்து அவைக்குள் அனுப்பினர். சூழ்ந்த நூற்றெட்டு தூண்களுக்குப் பின்னால் அமைந்த இருபத்துநான்கு படிகளில் நிரைவகுத்திருந்த பீடங்களில் அவர்கள் ஓசையின்றி வந்தமர்ந்து நிரம்பிக் கொண்டிருந்தனர். அவைக்களத்தில் எப்போதும் செறிந்திருந்த அமைதி அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதிகொள்ளச் செய்ததனால் ஆடிப்பரப்பில் பாவைப்பெருக்கு நிறைவதுபோல ஓசையின்றி அவர்கள் செறிந்தனர்.
இரண்டாம் சுற்றில் வணிகர்களும் ஷத்ரியர்களும் குடித்தலைவர்களும் அமரத்தொடங்கினர். ஒருவருக்கொருவர் விழிகளாலும் கைகளாலும் முகமன் உரைத்தனர். தங்கள் பீடங்களில் அமர்ந்ததும் அதுவரை கொண்டிருந்த உடலிறுக்கத்தை மெல்ல தளர்த்தி பெருமூச்சுவிட்டு இயல்படைந்தனர். உடல்கள் தசை தளரும்போது அத்தனை ஒலியெழும் என்பதை அவ்வமைதியின் நடுவில் நின்றிருந்த நிமித்திகர் நோக்கி வியந்தார்.
அரசகுடியினர் வந்து அமரத்தொடங்கினர். கௌரவர்களின் துணைவியரின் தந்தையரும் உடன்பிறந்தாரும் வரிசை முறைப்படி முகமன் உரைக்கப்பட்டு பீடம் காட்டி வரவறிவிப்புடன் அமரச்செய்யப்பட்டனர். முதன்மைநிரையில் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் சுபாகுவாலும் சகதேவனாலும் அழைத்துவரப்பட்டு அமர்ந்தனர். துர்மதனும் துச்சகனும் காந்தாரநாட்டு சுபலரையும் மைந்தரையும் அவையமர்த்தினர். சைப்யரும் காசிநாட்டரசரும் அருகே அமர்ந்தனர். துரோணரையும் கிருபரையும் விதுரர் தலைவணங்கி அழைத்துவந்து அமரச்செய்தார். நகுலனும் சுஜாதனும் இருபுறமும் நின்று பீஷ்மபிதாமகரை அழைத்து வந்து மையப்பீடத்தில் அமர்த்தினர். அஸ்தினபுரியில் இருந்த அரசகுடியினர் அனைவரும் வந்துகொண்டிருப்பதை அவையமர்ந்த நகர்மக்கள் நோக்கிக் கொண்டிருந்தனர்.
அவையமர்ந்த ஒவ்வொருவரும் விளங்காத அச்சத்தால் நிலையழிந்து அலையும் விழிகளுடன் தளர்ந்த தோள்களுடன் இருந்தனர். தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் தோற்றங்களும் ஒன்றுபோல் இருந்தன. அவை நடுவே நின்று நோக்கிய நிமித்திகர் அவர்களின் மார்பணிகள் இணைந்து ஒரு வளைவுக் கோடாக சுற்றிவருவதை கண்டார். அதற்கு மேல் பற்களால் ஆன வெண்கோடு முல்லைச்சரம் போல தெரிந்தது. அதற்கு மேல் நீலமலர்ச்சரம் போல விழிகளின் கோடு தெரிவதை கண்டார். அதற்குமேல் தலைப்பாகைகளினாலான வண்ணச்சரம்.
அவர்களின் விழிகளும் உடையின் சரசரப்பொலிகளும் இணைந்த மெல்லிய முழக்கம் குவையில் பட்டு உச்சிக்குச் சென்று குவிந்து சங்குக்குள் காது வைத்தது போல் தலைக்குள் ரீங்கரித்தது. பகடைக்களத்தின் இருபக்கமும் தூண்களின் மேல் எழுந்திருந்த மகளிருக்கான உப்பரிகைகளில் அரசகுடியினர் தங்கள் அகம்படிச் சேடியருடன் வந்து அமரத்தொடங்கினர். திருதராஷ்டிரர் விழியின்மையால் அவ்வவைக்கு வரவில்லை. பேரரசர் வராமையால் காந்தாரியரும் வரவில்லை. கௌரவர்களின் துணைவிகள் ஒவ்வொருவராக வரவறிவிக்கப்பட்டு கொம்பொலியும் மங்கல இசையுமாக வந்து அமர்ந்தனர். இறுதியாக அசலையுடனும் கிருஷ்ணையுடனும் பானுமதி வந்து அவையமர்ந்தாள். திரௌபதியின் வரவறிவிக்கப்படவில்லை என்பதை அவையமர்ந்திருந்த ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவள் குருதிநீக்கில் இருப்பதாக செய்தி உதடுகளில் இருந்து செவிகளுக்கென பரவி அவையில் சுழன்று வந்தது.
பாண்டவர்கள் ஐவரும் விதுரரால் வரவேற்கப்பட்டு அவைக்குள் நுழைந்தனர். சௌனகர் தொடர வந்த தருமன் அவையை நோக்கி தலைக்குமேல் கைகூப்பி வணங்கிவிட்டு இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி நின்ற பீடத்தில் சென்று அமர்ந்தார். பின்னர் துச்சாதனன் துர்மதன் இருவரும் துணைவர கர்ணன் வந்து அவையமர்ந்தான். விகர்ணனும் துர்விமோசனும் அழைத்துவர சகுனி பெரிய பட்டுச்சால்வை தோளில் சரிய மெழுகுபோன்ற உணர்வற்ற முகத்துடன் அவைபுகுந்து தன் இருக்கையில் அமர்ந்தார். இரு ஏவலரால் தூக்கிவரப்பட்ட கணிகர் அவர் அருகே மரவுரிமெத்தையாலான தாழ்ந்த பீடத்தில் அமர்த்தப்பட்டார். அவர் உடலை மெல்லச் சுருட்டி அட்டை போல உருண்டு அசைவிழந்தார்.
வெளியே பெருமுரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஆர்த்தன. மங்கல இசை கேட்டதும் அலையலையாக அப்பெரும் பகடைக்களம் எழுந்து நின்று கைகுவித்தது. துரோணரும் கிருபரும் பீஷ்மரும் அன்றி பிற அனைவரும் எழுந்து வணங்கினர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் கொடிக்காரன் முன்னால் வந்தான். செங்கோலை ஏந்தி கவசவீரன் தொடர்ந்தான். மங்கலச்சூதரும் அணிச்சேடியரும் வந்தனர். தொடர்ந்து துரியோதனன் இருபுறமும் அமைச்சர்கள் சூழ, வெண்குடை மேலே நலுங்க கைகூப்பியபடி அரசப்பாதையினூடாக நடந்துவந்து அரியணையில் அமர்ந்தான்.
அஸ்தினபுரியின் மணிமுடி பொற்தாலத்தில் வந்தது. அதை அமைச்சர் கனகர் எடுத்தளிக்க அவன் சூடிக்கொண்டு கோலேந்தி அமர்ந்தான். அவையினர் ஒற்றைப் பெருங்குரலில் “குருகுலவேந்தர் வாழ்க! அஸ்தினபுரியின் அரசர் வாழ்க! தார்த்தராஷ்டிரர் வாழ்க! வெற்றி கொள் பெருவீரர் வாழ்க! குருகுலமுதல்வர் வெல்க!” என்று வாழ்த்தினர்.
நிமித்திகர் அறிவிப்பு மேடையில் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் அவை அலையலையென ஆடையொலியுடனும் அணியொலியுடனும் அமைந்து படிந்தது. தன் மேடையிலிருந்து நோக்கிய நிமித்திகர் பல்லாயிரம் விழிகளாலான சுழிஒன்றின் நடுவில் தான் நின்றிருப்பதை உணர்ந்தார். உரத்த குரலில் “வெற்றி சிறக்க! மூதாதையர் மகிழ்க! மூன்று தெய்வங்களும் அருள்க! அஸ்தினபுரி வெல்க! குருகுலம் தொடர்க! அரியணை அமர்ந்து காக்கும் அரசர் புகழ் செல்வம் வெற்றி புதல்வர் சொல் என ஐந்துபேறும் பெற்று நிறைக! மனைமாட்சி பொலிக! வயல் நிறைக! களஞ்சியங்கள் ததும்புக! கன்றுமடிகள் ஒழுகுக! அவி பெற்று அனல் எழுக! இங்கு வாழ்கிறது அறம் என்று தெய்வங்கள் அறிக! தேவர்கள் அறிக! ஓம்! அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினார்.
நிமித்திகர் தன் வெள்ளிக்கோலை கிடைமட்டமாக மேலே தூக்கியபோது அனைத்து ஒலிகளும் அடங்கி அவை முற்றமைதி கொண்டது. அவர் இதழ்கள் ஒட்டிப்பிரியும் ஒலிகூட கேட்கும் அளவுக்கு அப்பெருங்கூடம் ஒலிக்கூர்மை கொண்டிருந்தது. மணிக்குரலில் “சான்றோரே, குடிமூத்தோரே, அவைமுதல்வரே, அஸ்தினபுரி அரியணை அமர்ந்த அரசரின் குரல் என இங்கு நின்று ஓர் அறிவிப்பை முன் வைக்க ஆணையிடப்பட்டுள்ளேன். இன்று இந்த அவையில் நிகழவிருப்பது ஒரு குடிக்களியாடல். தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் இளவரசர்கள், குருகுலத்தோன்றல்கள், விசித்திரவீரியரின் பெயர்மைந்தர் தங்களுக்குள் இனிய ஆடல் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறார்கள்” என்றார். “அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்த மாமன்னர் துரியோதனரின் விழிமுன் இவ்வாடல் நிகழும்.”
“சான்றோரே, விசித்திரவீரியரின் மைந்தர்களாகிய பேரரசர் திருதராஷ்டிரருக்கும் விண்புகழ் கொண்ட அவரது இளையோன் பாண்டுவுக்கும் பிறந்த மைந்தர்களால் இந்நகர் பொலிவுற்றதென தெய்வங்கள் அறியும். அவர்களுக்குள் எழுந்த தெய்வங்களின் ஆணை பெருகுக, வளர்க, பரவுக என்று இருந்தது. அவ்வாறு பரவும் பொருட்டு அவர்கள் தங்கள் குடிநிலத்தை இருநாடுகளாக பகிர்ந்துகொண்டனர். பாரதவர்ஷமெங்கும் கிளைவிரித்துப் பரவும் இரு பெருமரங்களின் விதைகளென்றாயின இந்நகரங்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் குருகுலத்தின் இருவிழிகள். இருகைகளில் ஏந்திய படைக்கலங்கள். இருகால்கள் சொல்லும் பொருளும் என அமைந்த சித்தம். அவை வெல்க!”
“முன்னர் இந்திரப்பிரஸ்த நகரில் நிகழ்ந்த ராஜசூயத்தில் சத்ராஜித்தென அரியணை அமர்ந்து மணிமுடி சூடி பாரதவர்ஷத்தின் தலைமேல் தன் செங்கோலை நாட்டியவர் இக்குடி பிறந்த மூத்தோர் யுதிஷ்டிரர். அன்று அவர் காலடியில் தலைவணங்கினர் பாரதவர்ஷத்தை ஆளும் ஐம்பத்து ஐந்து ஷத்ரியர்கள். சிறுகுடி ஷத்ரியர்கள் நூற்றெண்மரும் நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் நாகர்களும் என விரிந்த பாரதவர்ஷத்தின் ஆள்வோர் பெருநிரை அன்று முடிபணிந்து குடியென்றானது. அன்று அவ்வவையில் சென்றமர்ந்து முடிதாழ்த்தி வாழ்த்தி மீண்டவர் நம் அரசர்.”
“துலாவின் மறுபக்கமென அஸ்தினபுரி இருப்பதால் இங்கும் ஒரு ராஜசூயமும் அஸ்வமேதமும் நிகழவேண்டுமென அரசர் விழைந்தார். அதன் பொருட்டு பாரதவர்ஷத்தின் அரசர் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அப்போது எழுந்த முதல் இடர் என்பது ராஜசூயம் வேட்ட இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் இந்த ராஜசூயப்பந்தலில் எவரென அமர்ந்திருப்பார் என்பதே. சத்ராஜித்தென அமர்ந்தவர் பிறிதொரு வேள்விப்பந்தலில் இரண்டாம் இடத்தில் அமரலாகாது என்பது நெறி என்பதால் என்ன செய்வது என்று வினா எழுந்தது. இக்குடியின் மூத்தோரும் நிமித்திகரும் அமைச்சரும் கூடி எடுத்த முடிவென்பது மூப்பிளமை முடிவெடுக்க இவ்வண்ணம் ஒரு பன்னிரு பகடைக்களம் அமைப்பதே.”
“இது அஸ்தினபுரிக்கு புதிதல்ல. இங்கு மாமன்னர் ஹஸ்தி அமைத்த பன்னிரு பகடைக்களம் பல தலைமுறைக்காலம் பொன்றாப் புகழுடன் இருந்துள்ளது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசகுடியினர் அனைவரும் வந்தமர்ந்து பகடையாடி மகிழ்ந்த ஒலிகள் இங்குள்ள காற்றில் இன்னமும் உள்ளன என்கின்றன நூல்கள். அப்பன்னிரு பகடைக்களத்தைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களான த்யூத விலாசம், த்யூத கமலம், த்யூதிமதி பரிணயம் போன்ற காவியங்கள் இன்னும் இங்கு சூதர்களால் பாடப்படுகின்றன” என்றார் நிமித்திகர். “அந்நூல்கள் விரித்துரைத்த அவ்வண்ணமே கலிங்கச் சிற்பியான காளிகரின் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்களால் நூல்முறைப்படி அமைக்கப்பட்டது இப்பெரும் பகடைக்களம்.”
“இங்கு அவை நடுவே அமைந்துள்ள களமேடை என்பது என்றும் இங்கே இருந்ததென்று விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் மாமன்னர் ஹஸ்தியும் மூத்தோரும் எண்ணக்கடவார்களாக! அவையோரே! உடன் பிறந்தாரிடையே உரிமைப் பூசல் எழுகையில் குருதி சிந்தும் போரென்பது அறமல்ல என்றுணர்ந்த அஸ்தினபுரியின் மூதாதையரால் ஆணையிடப்பட்ட நிகரிப்போர் இது” என்று நிமித்திகர் தொடர்ந்தார். “இதுவும் படைக்களமே. இங்கு நிகழ்வதும் போரே. போருக்குரிய அறங்களனைத்தும் இங்கு செயல்படும். போர் வெற்றியென்றே இக்களத்தில் இறுதிநிற்றல் கருதப்படும். வென்றவர் தோற்றவர் மேல் முழுதுரிமை கொள்கிறார். இக்களத்தில் முன்வைக்கப்படும் வினவிற்கான விடை சொல்லும் தகுதியை அவருக்கு இக்களம் வெல்லல் அளிக்கும்.”
“பன்னிரு பகடைக்களம் தூயது. முன்பு முக்கண் இறைவன் தன் தலைவி உமையுடன் அமர்ந்து ஆடியது இது என்பது பராசர முனிவரின் புராண மாலிகையின் கதை. அன்னையும் அப்பனும் ஆடிய பகடைக்களமாடலைப் பற்றி புனையப்பட்ட கைலாச மகாத்மியம், பார்வதி பரிணயம், திரயம்பக விலாசம், மஹாருத்ர பிரகடனம் போன்ற காவியங்களை இவ்வகையில் நூல் கற்றோர் நினைவு கூர்வார்களாக!”
“அவையோரே, பகடைக்களத்தின் நெறிகளைப்பேசும் த்யூதரங்க சூக்தம், த்யூதஸ்மிருதி ஆகிய நூல்களின் அடிப்படையில் இங்குள்ள நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை நடுவராக அமர்ந்திருப்போர் அந்நெறிகளின் அடிப்படையில் இங்கு நிகழ்பவற்றை வகுத்துரைக்க வேண்டுமென்று அரசரின் ஆணைப்படி அடியேன் கோருகிறேன்” என்றார் நிமித்திகர். “அவர்களின் கூற்று இறுதி முடிவென்றாகவேண்டும். ஆடல்கள் அனைத்திலும் நெறியென்றாகும் மூவிழியன் இங்கு அனலென நின்றெழுக! ஆம், அவ்வாறே ஆகுக!”
நிமித்திகரின் சொற்களை அங்கிருந்த ஒவ்வொருவரும் குவை மாடத்தின் தெய்வப்பரப்பிலிருந்து ஏதோ ஒரு முகம் செவியருகே அணுகி சொல்வதுபோல் உணர்ந்தார்கள். சிலர் தேவர்களால் சிலர் அசுரர்களால் சொல்லப்பட்டார்கள். அவையில் கணிகர் கண்மூடி துயில்பவர்போல் தன் தாழ்ந்த பீடத்தில் உடல் தளர்ந்து சுருண்டிருந்தார். பன்னிரு பகடைக்களத்தின் மையத்தில் அமைந்த ஆடுகளைத்தை நோக்கி விழியசையாது மடியில் கைகோத்து சற்றே தொய்ந்த தோள்களும் மயிருதிர்ந்த வெண்தாடியும் சுடர்வெண்மை கொண்ட முதிய உடலுமாக சகுனி அமர்ந்திருந்தார். இரு கைகளை கூப்பியபடி எவரென்று நோக்காது நிமிர்ந்த உடலுடன் யுதிஷ்டிரர் பீடம்கொண்டிருந்தார்.
நிமித்திகர் “அவையீர் அறிக! இக்களமாடலுக்கு அறைகூவல் விடுத்தது அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத்தோன்றலுமாகிய மாமன்னர் துரியோதனர். அவருக்கு பிதாமகர் பீஷ்மரும் பேரரசர் திருதராஷ்டிரரும் ஒப்புதல் அளித்தனர். ஆசிரியர்கள் துரோணரும் கிருபரும் வாழ்த்துரைத்தனர். அவ்வொப்புதலை பேரமைச்சர் விதுரர் நேரில்சென்று இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரருக்கு அறிவித்தார். அது ஒரு மணிமுடியின் போர்க்கூவலும் கூட” என்றார்.
“அவ்வழைப்பை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் ஏற்று களமாட ஏற்பளித்தார். பேரரசி குந்தியும் குலப்புரோகிதரான தௌம்யரும் உறுதுணையாகிய துவாரகையின் தலைவர் கிருஷ்ணனும் அவருக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி தம்பியருடனும் அமைச்சருடனும் தேவியுடனும் அவர் இந்நகர் புகுந்து இந்த அவையமர்ந்துள்ளார்” என்றார் நிமித்திகர். “அஸ்தினபுரியின் அரசர் தரப்பிலிருந்து இக்களம்நின்று ஆடுவதற்கு அரசரின் மாதுலரும் அஸ்தினபுரியின் காவலருமான காந்தார இளவரசர் சகுனி அழைக்கப்பட்டுள்ளார். அவ்வழைப்பை ஏற்று அவர் பன்னிரு பகடைக்களத்தின் இடப்பக்கத்தில் இருந்து ஆடுவார். இந்திரப்பிரஸ்தத்தின் தரப்பில் அறைகூவல் விடப்பட்ட யுதிஷ்டிரரே களம் அமைத்து வலப்பக்கம் அமர்ந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தெய்வங்களுக்கு உகந்த போர் நிகழ்க! எத்துலாவிலும் நடுமுள்ளென நின்றிருக்கும் பேரறம் இங்கும் திகழ்க! ஓம்! அவ்வாறே ஆகுக!”
நிமித்திகர் வெள்ளிக்கோல் தாழ்த்தி அமைய அம்மேடைக்குக் கீழே இருபுறமும் அமைந்திருந்த இரு சிறுமுரசுகளையும் அறைவோர் கோல்சுழற்றி முழக்கினர். ஏழு கொம்பூதிகள் எழுந்து ஒற்றை பிளிறலென ஓசை எழுப்பி தலை தாழ்த்தி அமைந்தனர். சகுனி தன் பீடத்தின் கைப்பிடியை வலக்கையால் பற்றி ஊன்றி மெல்ல எழுந்து புண்பட்ட காலை நீட்டி இழுத்தபடி இரண்டடி எடுத்துவைத்து குனிந்து தாழ்வான பீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் மெலிந்த கால்களைத் தொட்டு சென்னி சூடினார். கணிகர் அரைப்பங்கு மூடிய விழிகளுடன் கனவிலென அமர்ந்திருந்தார். வாழ்த்து உரைக்கவோ கைகளை தூக்கவோ செய்யவில்லை.
சகுனி திரும்பி அவையை வணங்கிவிட்டு உடல் கோணலாக அசைய நடந்து படியிறங்கி களமுற்றத்தின் இடப்பக்கத்தில் போடப்பட்டிருந்த மேடையை அடைந்து நின்றார். குனிந்து பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட நடுவட்ட குறுமேடையைத் தொட்டு தலையில் வைத்து வணங்கி பீடத்தில் அமர்ந்தார். அவரது ஏவலன் சேக்கைமெத்தை போடப்பட்ட குறுபீடமொன்றை கொண்டு வந்து அவரது காலருகே வைத்தான். புண்பட்ட காலை பல்லைக்கடித்தபடி முகம் சுளித்து மெல்ல தூக்கி அதன்மேல் வைத்து பெருமூச்சுடன் கையால் நீவிக்கொண்டார்.
தருமன் எழுந்து கைகூப்பி அவையை வணங்கினார். நெஞ்சில் கூப்பிய கை அமைந்திருக்க சென்று பீஷ்மரின் காலைத் தொட்டு வணங்க அவர் தருமன் தலையில் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தார். கிருபரையும் துரோணரையும் வணங்கிவிட்டு துரியோதனனை நோக்கி தலைதாழ்த்தி முகமன் உரைத்தார். கூப்பிய கரங்களுடன் நிமிர்ந்த நடையில் படியிறங்கி பன்னிரு பகடைக்களம் விரிக்கப்பட்ட மேடையில் வலப்பக்கமாக அமைந்திருந்த பீடத்தில் சென்று அமர்ந்தார்.
அமைச்சர் கனகர் “அவையீர் அறிக! மூதாதையர் கேட்கக்கடவது! தேவர்கள் நோக்கு திகழ்க! தெய்வங்கள் உணர்க! இதோ பன்னிருபகடைக்களம் எழுகிறது” என்றார். முரசுகளும் கொம்புகளும் எழுந்தமைய அனைவரது விழிகளும் ஆடற்களத்தை நோக்கி குவிந்தன.
[ 12 ]
பன்னிரு பகடைக்களம் தொடங்குவதற்காக கொம்பு ஒலித்தமைந்தது. சகுனி மெல்லிய குரலில் தருமனுக்கு வாழ்த்துரைத்தார். தருமன் மறுமுகமன் சொல்லி வாழ்த்து சொன்னார். பொற்பேழையில் பகடைகள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. களநடுவராக வலப்பக்கம் கிருபரும் இடப்பக்கம் துரோணரும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். ஒவ்வொருவராக தங்கள் எண்ணப்பெருக்கிலிருந்து உதிர்ந்து சித்தம் குவிந்து நோக்கத்தொடங்கினர்.
சகுனி உரத்த குரலில் “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை அஸ்தினபுரியின் அரசரின் சார்பில் இந்நிகரிப்போருக்கு அறைகூவுகிறேன். இப்போரில் எவர் வென்றாலும் அது போர்வெற்றியென்றே கொள்ளப்படும் என்று அறிக!” என்றார். தருமன் தலைவணங்கி “அவ்வறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். இதை நிகரிப்போர் எனவே கொள்கிறேன்” என்றார். “இது பந்தயம் வைத்து ஆடும் ஆடல்!” என்றார் சகுனி. “அதை அறிந்திருப்பீர், அரசே.” யுதிஷ்டிரர் குழப்பத்துடன் “தனித்தனியாக பந்தயம் வைத்து ஆடுவது என்று என்னிடம் சொல்லப்படவில்லை. எனது வெற்றியையோ தோல்வியையோ பந்தயமாக வைப்பது என்றே நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்றார்.
“அவ்வண்ணமில்லை” என்று சகுனி புன்னகையுடன் சொன்னார். “இவ்வாடற்களத்தின் நெறிகளை முன்னரே தங்களுக்கு அனுப்பியிருந்தோம். இது ஒவ்வொரு ஆடலுக்கும் ஒரு பந்தயமென வைத்து ஆடுவது.” “இல்லை, அது எனக்கு சொல்லப்படவில்லை” என்றார் தருமன். “அஞ்சுகிறீர்களா?” என்றார் சகுனி. “அச்சமில்லை… நான் அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றார் தருமன்.
“இதோ, முதல் ஆடலுக்கு அஸ்தினபுரியின் கருவூலத்தின் அனல் என சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஹஸ்தியின் பொன்றாப் புகழ்கொண்ட மணிமுடியை பந்தயமாக வைக்கிறேன். நிகரென ஒன்றை பந்தயமாக வைத்து ஆடுக!” என்றார் சகுனி. தருமன் திகைத்து “அது எங்கள் குலமூதாதை அணிந்த மணிமுடியல்லவா? அதை எவர் பந்தயமென்று இங்கு வைக்கமுடியும்?” என்றார்.
“அஸ்தினபுரியின் அரசர் அதன் கருவூலத்திற்கு உரிமையானவர். தன்னிடமுள்ள முதன்மை செல்வத்தை வைத்து ஆட அவருக்கு நூலொப்புதல் உண்டு” என்றார் சகுனி. பெருமூச்சுடன் தருமன் “அதற்கிணையாக நான் வைக்கக்கூடுவது இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பொற்தேரையும் மட்டுமே” என்றார். “நன்று!” என்றபடி பகடையை நோக்கி கைகாட்டினார் சகுனி.
தருமன் பகடைக்காய்களை எடுத்து தன் கைகளில் மும்முறை உருட்டி பரப்பினார். அவை சூழ்ந்திருந்த அத்தனை தலைகளும் எண்களை பார்ப்பதற்காக சற்றே முன்னகர்ந்தன. எண்களைப் பார்த்து அறிவிக்கும் இடத்தில் நின்றிருந்த நிமித்திகன் உரத்த குரலில் “ஆறு!” என்றான். தருமன் தன் படைவீரர்களை பருந்துச்சூழ்கை என அமைத்து புரவித்தலைவனை முன் அமைத்தார்.
சகுனி பகடைகளை உருட்டியபோது இரண்டு விழுந்தது. நிமித்திகன் “இரண்டு” என அறிவித்தபோது அவையெங்கும் மெல்லிய புன்னகையொன்று பரவுவதை விழிதிருப்பாமலேயே யுதிஷ்டிரர் கண்டார். தன் யானைகளை முன் நகர்த்தி நடுவே கதாயுதமேந்திய மல்லனை அமைத்தார் சகுனி. தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவன் பருந்துப்படை சிறகு முன்னோக்கி குவிந்து அணுகியது. சகுனி தன் காலாள் படைகளை ஒருங்கமைத்து நடுவே தனது கதைமல்லனை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்.
இரு படையோனும் முகம் நோக்கி நின்றனர். “தங்கள் முறை, மாதுலரே” என்று புன்னகையுடன் சொன்னபடி தருமன் சகுனியை நோக்கி பகடைகளை நீட்டினார். அவர் அதை வாங்கி கண்களைச் சுருக்கி ஒருகணம் தன்னிலாழ்ந்து பின்பு மெல்ல உருட்டினார். அவர் உடலில் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருப்பதை தருமன் கண்டார்.
பகடைகள் உருண்டு மூன்று என மீண்டும் விழுந்தன. மூன்று என்று உரக்க அறிவித்தான் நிமித்திகன். அதிர்ந்து கொண்டிருந்த இருவிரல்களால் மூன்று காய்களை முன்னிறுத்தி தனது தலைமல்லனை பாதுகாத்தார் சகுனி. தருமனின் முகமெங்கும் புன்னகை பரவியிருந்தது. வலக்கையால் தன் குழலை மெல்ல தள்ளி தோளுக்குபின் இட்டபடி பகடைக்காக கை நீட்டினார். பகடையை வாங்கி சகுனியை கூர்ந்து நோக்கியபடி மெல்ல உருட்டி பரப்பினார். பன்னிரண்டு என்று நிமித்திகன் அறிவித்தபோது அவை ஒற்றைப்பெருமூச்சொன்றை எழுப்பியது.
மீண்டும் பகடை உருண்டபோது பன்னிரு வீரர்களால் சூழப்பட்ட தருமனின் மல்லனால் சகுனியின் மல்லன் வீழ்த்தப்பட்டான். அவன் படைசூழ்கை சிதறடிக்கப்பட்டது. தன் மல்லனை முதலில் நிறுத்தி ஒழிந்த பகடைக்களத்தை நோக்கி புன்னகைத்தபின் விழிதூக்கி கிருபரை பார்த்தார் தருமன். கிருபர் “முதல் ஆட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் வென்றார் என்று அறிவிக்கப்படுகிறது” என்றார். துரோணர் “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது” என்றார்.
சகுனி மயிர் உதிர்ந்த வெண்தாடியை கழுத்திலிருந்து மேலே நீவி பற்றி இறுக்கி மெல்ல கசக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருக்க துரியோதனன் எழுந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே, கருவூலத்தில் காவலில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடி தங்களுக்குரியதாகுக!” என்றான். ஏவலர் வந்து சிறு பொற்கெண்டியில் நீர் ஊற்ற அதை கையில் விட்டு மும்முறை தரையில் சொட்டி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றான். புன்னகையுடன் திரும்பி தன் இளையோரை நோக்கியபின் “அடுத்த சுற்றுக்கு நான் சித்தம்” என்றார் தருமன்.
[ 13 ]
அஸ்தினபுரியின் விரித்த கைகளில் வைத்த தாமரைபோல் வடிவுகொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்தின்மீது வானமென கவிந்திருந்த குவைக்கூரைப் பரப்பை பின்னிநிறைந்த உடல்களாக மாற்றிப் பரவியிருந்த தேவர்களும் அசுரர்களும் நாகங்களும் இருட்தெய்வங்களும் பூதங்களும் கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் எண்திசைக்காவலரும் ஏழுமீன் முனிவரும் அருந்தவத்தோரும் விழிதிறந்து கீழே நோக்கிக்கொண்டிருந்தனர். பெருமூச்சுடன் வசிஷ்டர் “முதற்பிழை” என்றார். விஸ்வாமித்திரர் “எப்போதும் முதலில் எழுவது அமுதே” என்றார்.
கரியநாகம் ஒன்று நெய்யருவிபோல வழிந்திறங்கி தருமனுக்குப் பின்னால் சென்று வளைந்து அவன் இடத்தோளுக்கு மேலாக எழுந்து ஏழுதலைப்படம் விரித்து ஆடியது. இந்திரன் சலிப்புடன் “எவர் வெல்லவேண்டுமென்பதை பகடைக்களம் தன் கோடுகளில் முன்னரே எழுதி வைத்திருக்கிறது. அவனுக்கு முதல் வெற்றியை அளித்து உள்ளத்தில் மாயையின் களிப்பை நிரப்புகிறது. ஊழென தன்முன் விரிந்துள்ள பகடைக்களத்தை ஆளும் தெய்வமென அவன் தன்னை எண்ணத்தொடங்குகிறான்… மூடன்” என்றான்.
சோமன் “அவனுள் இன்னும் வாழும் பேரறத்தானைச் சூழ்ந்துள்ளன அவன் மூதாதையர் அளித்த நெய்யும் சோமமும் உண்ட தெய்வங்கள். எளிதில் அவன் தோற்கமாட்டான்” என்றான். “பார்ப்போம்” என்றபடி கரிய உடல் வளைவுகளைச் சுழித்துச் சீறியது வாசுகி. அருகணைந்த அனலோன் “அவன் அகச்செவிகள் மூடியபடியே வருகின்றன. இத்தனை அருகே சூழ்ந்தும் அவன் தெய்வங்களை உணரவில்லை” என்றான். “ஆனால் அவன் உணர்ந்துகொண்டிருக்கிறான் என்னை!” என்றபடி கார்க்கோடகன் சகுனியின் மேல் எழுந்து மலைவாழையிலை போல படம் திருப்பினான். “அவன் காதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல என்று.”
சகுனி தன் கையை தூக்கி “இந்திரப்பிரஸ்தத்திற்கரசே, இவ்விரண்டாவது ஆடலில் அஸ்தினபுரியின் சார்பாக அமர்ந்துள்ள நான் இந்நகரத்தில் ஓடும் மூன்று பேராறுகளை தங்களுக்கு பந்தயமென வைக்கிறேன்” என்றார். தருமன் புன்னகையுடன் “அதற்கு நிகரென இந்திரப்பிரஸ்தத்தின் பன்னிரு துறைமேடைகளையும் நான் பந்தயம் வைக்கிறேன்” என்றார். சகுனி “ஏற்றேன்” என்றார். “அஸ்தினபுரியின் ஆறுகள் வழியாக இந்திரப்பிரஸ்தத்தின் வணிகர்கள் ஒழுகுவார்கள்” என்று தருமன் சிரித்தபடி பகடைகளை சகுனியிடம் அளித்தார். எவ்வுணர்ச்சியுமில்லாமல் “நன்று” என்றபடி சகுனி பகடைகளை உருட்டினார்.
“ஆறு” என்று அறிவித்தான் நிமித்திகன். அவரது படைமுகப்பில் ஆறு வில்லவர்கள் எழுந்து முன்நின்றனர். தருமன் பகடைகளை வாங்கி நடனமென கைநெகிழ உருட்டி குனிந்து பார்த்தார். “பன்னிரண்டு” என்று அறிவித்தான் நிமித்திகன். தருமன் தாடியை நீவியபடி திரும்பி அர்ஜுனனை பார்த்தார். பின்பு இருவிரல்களால் காய்களை நகர்த்தி கவசப்படை ஒன்றை தன் களத்தில் அமைத்தார். “மூடன்! மூடன்!” என்றார் வசிஷ்டர். “வெல்லும்போதே அச்சம் கொள்ளாதவன் சூதில் கடந்து செல்வதில்லை” என்றார். விஸ்வாமித்திரர் “அவன் ஊழ் அவனைச் சூழ்ந்துள்ளது” என்று நகைத்தார்.
கூரையிலிருந்து வழிந்திறங்கிய பிறிதொரு நாகம் தருமனின் அருகே தலைதூக்கி வலத்தோள் வழியாக நோக்கி நின்றது. சகுனி தன் வில்லோர் படையை அம்பென குவித்து முன் கொண்டுவர அகல்விளக்கின் சுடரைப் பொத்தும் கைகளைப்போல் தன் படையை மாற்றி அதை சூழ்ந்தார் தருமன். இருமுறை ஒன்பதும் ஒருமுறை எட்டும் பிறிதொருமுறை பன்னிரண்டும் அவருக்கு விழுந்தன. தன் முழுப்படையுடனும் அலைபோல் அறைந்து சகுனியின் படையை சிதறடித்தார். இறுதிக்காயும் களம் விட்டுச் சென்றபோது வில்லேந்திய அவர் படைத்தலைவன் சகுனியின் அரியணையில் ஏறி அமர்ந்தான்.
கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து “இவ்வாடலும் முடிந்தது, மாதுலரே” என்றார் தருமன். சகுனி நீள்மூச்சுடன் “ஆம்” என்று தலையசைத்தார். துரியோதனன் எழுந்து இறுகிய முகத்துடன் கையில் நீர்விட்டு தன் நதிகளை தருமனுக்கு அளித்தான். சூழ்ந்திருந்த அவை உடலசைவில்கூட உளம் எஞ்சாமல் சிலைத்திருந்தது. தருமன் “மூன்றாவது ஆடலை தாங்கள் தொடங்கலாம், மாதுலரே” என்றார். “அல்லது ஆடலை முடிப்பதென்றாலும் ஆகும்.” சகுனி “எளிதில் முடியாது இப்போர்” என்றார். “ஆம்” என தருமன் புன்னகைத்தார்.
வசிஷ்டர் கைகளை நீட்டி “மூடா! நிறுத்து! போதும்!” என்றார். இரு நாகங்களும் பத்தி புடைக்க அவர் இருபக்கங்களிலும் விரிந்து மெல்ல அசைய அவர் செவியசையும் வேழமுகம் கொண்டவராகத் தோன்றினார். சகுனி “இந்திரபுரிக்கரசே! இதோ அஸ்தினபுரியின் தலைவர் தனது மணிமுடியையும் செங்கோலையும் பந்தயமென வைக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் துரியோதனனை பார்த்தபின் “ஒப்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரியணையை நான் பந்தயமென வைக்கிறேன்” என்றார்.
“என்ன செய்கிறான்…!” என்று கூவியபடி தெற்குமூலையிலிருந்து முப்புரிவேலை சுழற்றியபடி யமன் எழுந்தான். “விதுரா, நீ என்ன செய்கிறாய் அங்கு? சொல் அவனிடம்!” அக்குரலைக் கேட்டவர் போல விதுரர் உடல் அதிர சற்று எழுந்து பின் அமர்ந்தார். “நிறுத்து அவனை…!” என்று யமன் கூவ விதுரர் நிலையழிந்தார். ஆனால் அக்குரல் தருமனை சென்றடையவில்லை.
சகுனிக்கு மூன்று விழுந்தது. அவரது குதிரைப்படைத்தலைவன் இருகுதிரை வீரர்களுடன் களத்தில் எழுந்தான். பகடையை கையில் தருமன் வாங்கியதும் யமன் அவனை அணுகி அவன் நெற்றியை ஓங்கி அறைந்து “நிறுத்து, மூடா! நீ எல்லை கடக்கத் தொடங்கிவிட்டாய்” என்றான். கைகளும் தலையும் அதிர தருமன் ஒருகணம் பின்னகர்ந்தார். தலையை கையால் மெல்ல தட்டிக்கொண்டார். நீள் மூச்சு விட்டு அதை கடந்து சென்றார்.
அவர் பகடைநோக்கி கைகளை நீட்ட அக்கையைத் தொட்டு அதில் வால் சுழற்றி பின்னி மேலேறி அவன் கைவிரல்களுக்கு நிகராக தன் பெரும் பத்தியை விரித்தது நாகம். பிறிதொன்று அவன் காதில் மெல்லிய சீறலாக “ஆடு, வெற்றி அணுகுகிறது. இவ்வாடலுடன் இக்களம் விட்டெழுந்து வெல்லற்கரிய பாரதவர்ஷத்தின் சத்ரபதி நான் என்று கூவு! இதுவே அத்தருணம்” என்றது.
வருணன் “பகடைப்புரளல் என்பது தெய்வங்களும் அஞ்சும் முடிவிலி. அவனோ தன் விரல்களில் அது ஆற்றப்படுவதாக எண்ணுகிறான். வீணன்!” என்றான். “சூது கண்டு மகிழ்பவர்களும் வீணர்கள்தான். மூடர்கள்தான்” என்று திரும்பி அவனை நோக்கி சீறினான் யமன். “அறத்தான் நான் என்பதே ஆணவங்களில் தலையாயது. அவன் வீங்கியவன். அழுகுபவன்” என்று சலிப்புடன் விஸ்வாமித்திரர் சொன்னார்.
ஒன்பது விழுந்ததும் புன்னகையுடன் மீசையை மேல் நோக்கி நீவியபடி தருமன் தன் படையை முன்னெடுத்தார். எட்டும் ஆறும் பன்னிரண்டும் ஒன்பதுமென பகடை அவருக்கு அள்ளித்தர அவர் தரப்பிலிருந்து களங்களுக்குள் வில்லம்புவேல்யானைபுரவி கொண்டு எழுந்த படைவீரர்கள் இரு கைகளையும் விரித்த நண்டு போலாகி சகுனியின் படை நோக்கி சென்றார்கள்.
சகுனி தன் பகடையை உருட்டியபோது பன்னிரண்டு விழுந்தது. அவரது முகம் மெழுகுப்பொம்மையென ஆயிற்று. வலசைப்பறவைகளென கூர்முனை கொண்ட அவரது படை இருபுறமும் வீரர்களை திரட்டிக்கொண்டு தருமனை நோக்கி வந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு. தருமன் இருமுறை மூன்று விழுவதைக் கண்டு முதல்முறையாக உள்ளம் நடுங்கினார். ஆனால் அவர் செவியருகே என ஒரு குரல் “பன்னிரண்டு வருகிறது… இதோ” என்றது. சகுனியின் ஒன்பதுக்குப் பின் அவருக்கு இரண்டு விழுந்தது. கைகள் நடுங்க காய் நகர்த்தினார்.
மீண்டும் சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தனக்கு நான்கு என்பதை காண்கையில் விழிமுன் நீராவியென காட்சி அலையடிப்பதை தருமன் உணர்ந்தார். “அஞ்சாதே… எண் எத்தனை விழுந்தாலும் ஆடுபவனே களம் அறிந்தோன்” என்றது நாகம். “நீ ஊழையும் வென்றுகடப்பதைக் காணட்டும் இந்த அவைக்களம்.” அவர் நெஞ்சை நிறைத்த பெருமூச்சை ஊதி வெளிவிட்டார். “உன் முன் விரிந்திருப்பது நீ எண்ணி ஆடி வென்று கடக்கும் களம்… எண்ணல்ல, உன் எண்ணத்திறன் வெல்லட்டும்.”
மீண்டும் ஒரு முறை பன்னிரண்டு விழ தருமனின் படையைச் சூழ்ந்து சிதறடித்து அவர் அரியணையைச் சூழ்ந்து நின்றது சகுனியின் படை. அவர் மணிமுடியைச் சூடினான் சகுனியின் படைத்தலைவன். சகுனி பெருமூச்சுடன் மெல்ல உடல் தளர்ந்து தன் காலை கையால் தூக்கி அசைத்து அமர்த்தினார். ஏவலன் ஒருவன் பொற்கிண்ணத்தில் அவருக்கு இன்நீர் கொண்டு வந்தான். அதை அருந்தி மரவுரியால் தாடியில் நீர்த்துளிகளை துடைத்தபின் புன்னகைத்தார்.
சிதறிய தன் களத்தை நோக்கி தாடையை கையில் தாங்கி தருமன் அமர்ந்திருந்தார். “அரசே…” என்றான் ஏவலன். விழித்தெழுந்து “ஆம்” என்றார். அவன் சொன்னதை புரிந்துகொண்டு தருமன் எழுந்து பொற்கிண்டியின் நீரை கையிலிட்டு மும்முறை சொட்டி “இந்திரப்பிரஸ்தத்தின் மணிமுடியை அஸ்தினபுரியின் அரசருக்கு கொடையென இதோ அளித்தேன். ஆம். அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்றார். பீமனின் உடலில் நிகழ்ந்த அசைவை ஓரவிழி காண உடல் துணுக்குற்று திரும்பி நோக்கினார். பின்னர் தோள்கள் தளர விழியோரம் ஈரம்கொள்ள தலையை இல்லை என்பதுபோல் அசைத்தார்.
“விதுரா, இத்தருணம் உன்னுடையது. எழுக!” என்றான் யமன். விதுரர் எழுந்து உரத்த குரலில் “மணிமுடியும் கோலும் வைத்து சூதாடுவதற்கு மரபுள்ளதா, மூத்தவரே?” என்றார். துரியோதனன் “அதை ஆடுவோர் முடிவு செய்யட்டும். மரபென்று ஒன்றும் இதிலில்லை” என்றான். கணிகர் “அமைச்சரே, தெய்வங்களைக்கூட வைத்து ஆடியிருக்கிறார்கள் முன்னோர். நூல்களை நோக்குக!” என்றார். விதுரர் தருமனிடம் “அரசே, இது குடிவிளையாட்டென்றே சொல்லப்பட்டது. முடிவைத்து ஆடுதல் முறையல்ல” என்றார்.
தருமன் தவிப்புடன் வாயசைக்க “போதும்… முடிவைத்ததும் நீங்கள் முழுக்க தோற்றுவிட்டீர்கள். இனி அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழலாம். அஸ்வமேதப்புரவி உங்கள் மண்ணை மிதித்துக் கடக்கலாம்…. இதற்காகத்தானே இந்த ஆடல்!” என்றார் விதுரர். “போதும், அரசே. கைகூப்பி களம் விட்டு எழுங்கள்!” என்று குரல் உடைய விதுரர் கூவினார். “இப்போதெழுந்தால் உங்கள் குடி எஞ்சும். சொல் மிஞ்சும்…”
தருமன் நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் முன் நின்று யமன் கூவினான் “நீ முற்றிலும் தோற்பாய். மூடா, இன்னுமா அதை உணரவில்லை நீ? விலகு!” அவர் செவியருகே அசைந்த நாகம் காற்றென சொன்னது “அடுத்த களத்தில் நின்றிருப்பதென்ன? அதை அறியாமல் விலகுவாயா? அது நீ இதுவரை காணாத பெருங்கொடை என்றால் நீ இழப்பதென்ன என்று அறிவாயா?” இன்னொரு நாகம் “அஞ்சி எழுகிறாயா? எக்களமாயினும் அஞ்சாமையே வீரமெனப்படுகிறது” என்றது.
“இல்லை. நான் ஆடவே விழைகிறேன்” என்றார் தருமன். அதை அவர் வாய் சொல்ல செவிகள் கேட்டன. உள்ளம் திடுக்கிட்டு நானா நானா சொன்னேன் என வெருண்டது. “போதும், அரசே… போதும்… நான் சொல்வதை கேளுங்கள்” என்றார் விதுரர். “இனி ஒரு களம். அங்கே நிறுத்திக் கொள்கிறேன்” என்று தருமன் சொன்னார். “அமைச்சரே, இனி ஒரு சொல் எடுக்க உங்களுக்கு ஒப்புதலில்லை… அமர்க!” என்றான் துரியோதனன். கைகள் பதைக்க கண்ணீர் ததும்ப விதுரர் அமர்ந்தார்.
சகுனி “தாங்கள் எப்போது விழைந்தாலும் நிறுத்திக் கொள்ளலாம், இந்திரபுரிக்கரசே” என்றார். தருமன் “நான் ஆடுகிறேன்” என்றார். “அச்சமிருந்தால் எளிய பந்தயங்களை வைக்கலாம். உங்கள் மேலாடையை, கச்சையை, கணையாழியை… எதை வேண்டுமென்றாலும்” என்றபின் நகைத்து “ஆனால் நான் வைப்பது அஸ்தினபுரியின் அரசையும் தலைநகரையும்… ஆம்” என்றார் சகுனி. தருமன் வெறிகொண்டவராக பகடைகளை கையிலெடுத்து உருட்டியபடி உரத்த குரலில் “இதோ இந்திரப்பிரஸ்தப் பெருநகரை, அதன் மேல் மின்கதிர் சூடி அமர்ந்த இந்திரன் பேராலயத்துடன் வெண்கொற்றக்குடையுடன் கோட்டைகளுடன் காவலருடன் நால்வகைப் பெரும்படையுடன் இப்பகடைக்களத்தில் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.
“நன்று” என்று புன்னகைத்த சகுனி துரியோதனனை நோக்கி திரும்ப துரியோதனன் எழுந்து கைகளைத் தூக்கி “இங்கு நிகழ்க இறுதிப்போர்!” என்றான். தருமன் பகடையை உருட்ட வசிஷ்டர் “அவன் முகம் ஏன் பெருவலி கொண்டவன் போலிருக்கிறது?” என்றார். “அது ஓர் உச்சம். உச்சங்களில் மானுடர் தங்கள் எல்லைகளை கண்டடைகிறார்கள். அதைக் கடந்து தங்களுள் உறையும் தெய்வங்களை முகம்கொள்கிறார்கள்” என்றார் விஸ்வாமித்திரர். “அதன்பொருட்டே வலியை துயரை சிறுமையை இறப்பை விரும்பி தேடிச்செல்கிறார்கள்.”
தருமனுக்கு பன்னிரண்டு விழுந்தது. அவர் கொண்டிருந்த மெல்லிய பதற்றம் அடங்க புன்னகையுடன் தன் படைகளை ஒருக்கினார். தனக்கு மூன்று விழுந்ததும் படைக்களத்தின் மூலையில் சகுனி ஒரு சிறு படையை அமைத்தார். மீண்டும் ஒரு பன்னிரண்டு விழுந்ததும் துணைப்படையை அமைத்தார் தருமன். அவர் கொண்டிருந்த கலக்கம் மறைய தாடியை நீவியபடி புன்னகையுடன் சகுனியை நோக்கினார். மறுமுறை சகுனிக்கு பன்னிரண்டு விழுந்தது. தருமனின் இடதுவிழி அனலில் விழுந்த வண்ணத்துப்பூச்சி என சுருங்கி அதிர்ந்தது. மீண்டுமொரு பன்னிரண்டு விழுந்ததும் சகுனியின் படை பெருகி பிறிதொரு பன்னிரண்டில் மும்மடங்காகியது. பிறிதொரு பன்னிரண்டில் பேருருவம் கொண்டது.
செயலற்றுப் போய் நடுங்கும் கைகளுடன் தருமன் உருட்டிய பகடையில் ஒன்று விழ அவர் தன் நெற்றி மையத்தை இருவிரலால் அழுத்திக்கொண்டு தலைகுனிந்தார். பிறிதொருமுறை பன்னிரண்டு விழுந்தபோது சகுனியின் படை அவரை முழுமையாக சூழ்ந்துகொண்டது. மீண்டும் இருமுறை பன்னிரண்டு விழுந்தபோது தருமனின் படைகள் களத்திலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டன. அவர் அரியணை மீது ஏறி நின்ற சகுனியின் வேல்வீரன் “வெற்றி” என்றான். “சகுனிதேவரின் படை வெற்றிகொண்டது” என கிருபர் அறிவித்தார்.
கைகால்கள் உயிரை இழந்தவைபோல் தளர தன் பீடத்தில் மடிந்து விழுந்திருந்தார் தருமன். அவைக்கூடத்தில் சுழன்ற காற்றில் அவர் குழல் தவிப்புடன் பறந்துகொண்டிருந்தது. ஒன்றும் நிகழாதது போல் தன் காய்களை ஒருங்கமைத்து மீசையை நீவி முன் செலுத்தியபடி திரும்பி ஏவலனை பார்த்தார் சகுனி. அவன் கொண்டு வந்த இன்நீரை சில மிடறுகள் அருந்தியபின் குவளையை திருப்பி அளித்தார்.
“அவன் தன் தவக்குடிலுக்கு மீள்கிறான்” என்றான் சோமன். “அங்குள்ள அமைதியை, குளிர் தென்றலை, தளிர்ப்பச்சை ஒளியை அறியத் தொடங்கிவிட்டான். இங்கிருந்து இனி அவன் ஆடமுடியாது.” தருமன் அருகே சென்று அவர் தலை மீது கைவைத்து யமன் சொன்னான் “மைந்தா, எழுக! இங்கு நிறுத்திக்கொண்டாலும் நீ மீளலாகும். போதும்! உன் எல்லையை கண்டுவிட்டாய்.” “ஆம், தந்தையே! இதற்கப்பால் இல்லை” என்றார்.
“இதுவா உன் எல்லை? மூடா, இவ்வளவா நீ?” என சீறியது நாகம். “நான்கு முறை பன்னிரண்டென பகடை புரண்டால் உன் கல்வியும் திறமும் தவமும் அழியுமா? நான்கு பகடைக்கு நிகரல்லவா நீ?” மெல்ல உடலசைத்து அவர் மடியில் உடல் வளைத்தெழுந்து முகத்துக்கு முன் படம் தூக்கி நின்ற இன்னொரு நாகம் கேட்டது. “அஞ்சுகிறாயா? எதை அஞ்சுகிறாய்? ஊழையா? உனது ஆற்றலின்மையையா?”
“அறியேன்” என்றார் தருமன். “அறிவிலியே, ஓர் ஆடலில் தோற்றதற்காக களம் விட்டு விலகுகையில் நீ இயற்றுவதென்ன என்று அறிவாயா? ஒற்றைக் காலடிக்கு அப்பால் உனக்கென காத்து நிற்பது எதுவென்று நீ எப்படி அறிந்தாய்? இத்தோல்விக்கு ஒரு கணம் முன்பு இதை அறிந்திருக்கவில்லை. வரும் வெற்றிக்கு ஒருகணம் முன்பும் நீ அறியாதிருக்கக்கூடும் என்று ஏன் எண்ணவில்லை? இனி ஒரு களம். ஆம், ஒற்றைக்களம். வென்றால் நீ இழந்தவை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்றால் இக்கணத்தின் எண்ணங்களுக்கு என்ன பொருள்?”
தருமன் “அறியேன்” என்றார். “நீ அஞ்சியவை அகன்றவை எத்தனை பொருளிழந்தன காலத்தில் என்று கண்டிருப்பாய். இத்தருணமும் அதுவே. எடு பகடையை!” என்றது நாகம். தருமன் “ஆனால் நான் தோற்றால்…” என்றார். “ஏற்கெனவே தோற்றுவிட்டாய். முடியும் நாடும் இழந்த பின்னர் வெறும் தரையில் நின்றிருக்கிறாய். இழப்பதற்கு உன்னிடம் ஏதுமில்லை. எஞ்சுவதை வைத்து ஆடி வென்றால் அனைத்தையும் நீ அடையமுடியும் என்றால் அதைவிட்டு விலகுவாயா?” நாகம் விழியொளிரச் சீறியது. “அவ்வண்ணம் விலகியபின் அதை எண்ணி எண்ணி வாழ்நாளெல்லாம் வருந்துவாய்…”
சகுனி பகடையை தன் கைகளால் தொட்டபடி உரக்க “இந்திரப்பிரஸ்தத்தின் அரசே! இதோ, நான் மீண்டும் ஆட சித்தமாக இருக்கிறேன். இந்த பன்னிரு களமேடையில் தாங்கள் இழந்த அனைத்தையும் அஸ்தினபுரியின் அரசர் பந்தயம் வைக்கிறார். தன்னையும் உடன் பந்தயமென வைக்கிறார். தன் தம்பியரை சேர்க்கிறார். இதுவே அறைகூவல்களில் தலையாயது. ஆடுகிறீர்களா?” என்றார்.
தருமன் துலாமுள்ளென நின்று தடுமாற அவர் தோளைத்தொட்டு “மைந்தா, எழு! இது உன் களமல்ல. இங்கு நிகழ்வது என்னவென்று நீ அறியவில்லை” என்றான் யமன். மறுபுறம் தோன்றிய அனலோன் “உன் முன்னோர் எனக்கு அளித்த அவியின் பொருட்டு ஆணையிடுகிறேன்! இதற்கப்பால் செல்லாதே! இங்கு நிகழ்வது ஆடல் அல்ல. தன் விழைவே என கையை பயிற்றுவித்த ஒருவனின் பகடைகளுடன் நீ பொருதுகிறாய். நிறுத்து! எழுந்து விலகு!” என்றான்.
“அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை” என்றபடி எட்டு கைகளும் எரியும் விழிகளுமாக கரிய தெய்வமொன்று தோன்றியது. “ஏழு பாதாளங்களுக்கும் அடியில் இருக்கும் இன்மையெனும் கருவெளியின் தெய்வம் நான். பதினான்கு உலகங்களாலும் அழுத்தி உட்செலுத்தப்பட்டவை புதைந்துள்ள நிலம் அது. யுதிஷ்டிரா, இளமையிலிருந்து நீ வென்றுகடந்தவை அனைத்தும் இன்று என் கையில் உள்ளன. ஒவ்வொன்றாக பேருருக்கொண்டு அவை இப்போது உன்னிடம் வருகின்றன.” அதன் குழல் ஐந்து புரிகளாக தொங்கியது. கூந்தல் கரிமுனை அனலென பறந்து சீறியது.
தருமன் குளிர்கொண்டவராக நடுங்கினார். “காமமும் குரோதமும் மோகமும்” என்றது கரியதெய்வம். “ஆடுக! அறத்தோனாக அமர்ந்து நீ இழந்தவற்றை வெறும் களிமகனாக நின்று வெல்க!” தருமன் கைகள் நடுங்க “எங்கிருக்கிறீர், அன்னையே? இக்குரல் என்னுள் எழுவதா?” என்றார். “உன்முன் நின்று பேசுகிறேன். எத்தனை நாள்தான் அறத்தோனாக மேடை நடித்து சலிப்பாய்? கவசங்களையும் ஆடைகளையும் தசையையும் தோலையும் கழற்றி வீசு! நீயென இங்கு நில்! இருளென விழைவென வஞ்சமென தனிமையென ஓங்கு!”
“உண்மைக்கு பேராற்றல் உண்டென்று அறிக!” என்றது தெய்வம். “அறத்தோர் அனைவரும் ஒருகணமேனும் அமர்ந்து எழுந்த பீடம் ஒன்றுள்ளது, மைந்தா. அதுவே கீழ்மையின் உச்சம். நிகரற்ற வல்லமை கொண்டது அது. முற்றிருளுக்கு நிகரான படைக்கலம் பிறிதொன்றில்லை. ஒருபோதும் ஒளி அதை வெல்வதில்லை என்றுணர்க! எழுக!”
தருமன் பகடைக்காய்களைத் தொட்டு “என் நான்கு தம்பியரையும் அவர்களின் இளமைந்தர்களையும் இப்பன்னிரு பகடைக்களத்தில் பந்தயமென வைக்கிறேன்” என்றார். அவையில் அமர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் ஒரு சாட்டை அறைந்து சென்றதுபோல் அதை உணர்ந்தனர். சௌனகர் “அரசே..” என்றார். துரியோதனன் கைகளை தட்டிக்கொண்டு எழுந்து “சொல் எழுந்துவிட்டது. அவை கேட்டுவிட்டது. இனி அரசர் பின்சுவடு வைக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றான். “இல்லை” என்றார் தருமன். துரியோதனன் உரக்க சிரித்து “அஸ்தினபுரிக்கு தொழும்பர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள். ஆட்டம் நிகழட்டும்” என்றான்.
சகுனி பகடையை நோக்கி எடுத்துக்கொள்ளும்படி விழிகாட்ட தருமன் அவற்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து தலைகுனிந்து வேண்டினார். “எந்தையரே! தெய்வங்களே! எனக்காக அல்ல, இங்கு பிழைத்தது என்ன என்று அறிவேன். நான் இழைப்பவை எவையென்றும் தெளிந்துள்ளேன். இத்தனை தொலைவு வந்துவிட்டேன். இழந்து மீண்டு இழிவுறுவதைவிட அறியாத இவ்விருட்பாதையில் ஒற்றை அடி முன்னெடுத்து வைத்தால் ஒருவேளை கைவிட்டுச் சென்ற அனைத்தையும் வெல்ல முடியுமென்று எண்ணியே இதை ஆற்றுகிறேன். என் பிழை பொறுத்தருளுக! எந்தையர் செய்த தவத்தின் பொருட்டும் என் தம்பியரின் பேரன்பின் பொருட்டும் எனக்கு அருள்க! நான் வென்றாக வேண்டும்” என்றபின் பகடையை உருட்டினார்.
அதில் ஒன்று விழுந்தது. அவரால் நம்பவே முடியவில்லை. “ஒன்று” என குரல் ஒலித்தபோது குளிர் காற்றொன்று அறைக்குள் வந்து சுழன்று சென்றதுபோல கூடத்தில் அமர்ந்தவர்கள் சிலிர்த்தனர். ஒற்றை வீரனாக தருமனின் வில்லவன் களம் நின்றான். பன்னிரண்டு பெற்ற சகுனியின் படை பரல்மீன் கூட்டமென கிளம்பியது. இரண்டும் மூன்றும் மீண்டும் ஒன்றும் விழுந்தது தருமனுக்கு. ஓரிரு துணைவருடன் தனித்து அவர் படைவீரன் சகுனியை நோக்கி சென்றான். நான்கு முறையும் பன்னிரண்டு விழ சகுனி அவரை வென்று களம் நிறைத்தார்.
தருமன் விழிகள் நோக்கிழக்க எங்கிருக்கிறோமென்றே அறியாமல் அமர்ந்திருந்தார். பின்னர் விழித்துக்கொண்டு தன்னுள் திரும்பி ஓடினார். தன் தவக்குடிலை அடைந்து அங்கே தனித்த பாறைமேல் விழிமூடி அமர்ந்தார். அவர் முகம் தெளிவடைந்தது. இயல்பாக உடல் நீட்டினார். அவரில் எழுந்த அமைதியை அவை திகைப்புடன் நோக்கியது. பெருமூச்சுடன் இருகைகளையும் தூக்கி சோம்பல்முறித்து கையால் புண்பட்ட காலை தூக்கி அசைத்தமர்த்தி முனகிக் கொண்டார் சகுனி. முகத்திலோ விழிகளிலோ எவ்வுணர்வும் எஞ்சியிருக்கவில்லை. அவை ஓர் உயிர்கூட அங்கிலாததுபோல் முற்றிலும் அமைதியில் அமைந்திருந்தது. கண்களை மூடி குவித்த கைகளின் மேல் தாடியுடன் முகவாயை ஊன்றி ஆழ்துயிலிலென பீஷ்மர் அமர்ந்திருந்தார்.
தருமன் அருகே குனிந்து ஏவலன் “அரசே…” என்றான். அவர் திடுக்கிட்டு விழித்து “ஆம், ஆம்” என்றபடி கை நீட்ட பொற்குவளையிலிருந்து ஊற்றிய நீரை வாங்கி “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்று சொட்டினார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் பீடங்களிலிருந்து எழுந்தனர். மேலாடைகளை சீரமைத்தபடி நிரைவகுத்து அவைமுன் வந்து நின்றனர். அர்ஜுனன் ஒருகணம் விழிதூக்கி அவையை நோக்கியபின் தலைகவிழ்ந்தான். பீமன் செருகளத்தில் எதிர்மல்லனை நோக்கி நிற்கும் தோரணையில் இருபெரும் கைகளை விரித்து நெஞ்சை நிமிர்த்தி தலை தூக்கி தருக்கி நின்றான். ஏதும் நிகழாதவர்கள் போலிருந்தனர் நகுலசகதேவர்கள்.
துரியோதனன் நகைத்தபடி “தேர்ந்த தொழும்பர்கள்! எந்த அரசனுக்கும் நல்ல தொழும்பர் அருஞ்செல்வங்களே” என்றான். பீமனிடம் “அடேய் மல்லா, தொழும்பர்கள் மேலாடை அணியலாகாது என்று அறியமாட்டாயா?” என்றான். துச்சாதனன் “ஆம், அவர்கள் அணிபூணுவதும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை” என்றான்.
“ஆம் அரசே, அறிவோம்” என்றபடி பீமன் தன் மேலாடையை எடுத்து இடையில் இறுக கட்டிக்கொண்டான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் தங்கள் மேலாடையை இடையில் சுற்றினர். காதணிகளையும் ஆரங்களையும் தோள்வளைகளையும் கங்கணங்களையும் கணையாழிகளையும் கழற்றி ஒரு வீரன் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் வைத்தனர். துரியோதனன் “போர்க்களத்திலன்றி தொழும்பர்கள் காலணி அணிவதும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல” என்றான். பீமன் “ஆம், பொறுத்தருள்க!” என்றபடி தன் பாதக்குறடுகளை கழற்றினான். அவற்றை இரு ஏவலர்கள் இழுத்து அகற்றினர். திறந்த மார்புடன் நால்வரும் சென்று அவைமேடையின் இடப்பக்கமாக கைகட்டி நின்றனர்.
[ 14 ]
தென்மேற்கு மூலையிலிருந்து ஒளிரும் விழிகளுடன் கரிய கன்னியொருத்தி எழுவதை வடமேற்கு மூலையில் அமர்ந்த அனலோன் முதலில் பார்த்தான். வெருண்டு அவன் சீறியபோது தேவர்கள் அனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். நாகங்கள் சினந்து உடல் சுருட்டி பத்தி விரித்து விழி கனன்றன. ஐம்புரிக்குழலும் வலக்கையில் தாமரையும் இடக்கையில் மின்கதிர்படையும் கொண்டிருந்தாள். அவள் குழல் நீரலையென பறந்தது. கால்களில் செந்தழல் வளையங்களென கழல்கள் ஒளிவிட்டன.
அவள் இடப்பக்கத்திலிருந்து கோரைப்பற்களும் உகிரெழுந்த பதினெட்டு கைகளும் கொண்ட பெருந்தெய்வமொன்று தோன்றியது. வலப்பக்கம் செந்தழல் உடலுடன் புகைச்சுருள்குவை என குழல்பறக்கும் தெய்வம் எழுந்தது. ஒன்று பலவாக அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். தேவர்கள் ஒருவரை ஒருவர் கைபற்றிக் கொண்டனர். அரக்கர்கள் மெல்ல ஒருவரை ஒருவர் அணுகி ஒற்றை கரிய படலமென மாறினர். நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் சுருங்கி ஒரு வடமென்றாகி வளைந்து இறுகி வட்டாயின. நீர்ப்பரப்பில் ஊறிக்கலக்கும் வண்ணப்பெருக்கு போல அத்தேவியர் முழுவானின் வளைவையும் நிரப்பினர். முகிலென மாறி கீழிறங்கி சூழ்ந்தமைந்தனர். அவர்களின் விழிகள் விண்மீன்களென மின்னிக்கொண்டிருந்தன.
சகுனி “ஆடலை இங்கு முடிக்கலாம் என்று எண்ணுகிறேன், அரசே. இனி ஆட தங்களிடம் எதுவுமில்லை” என்றார். தருமன் தன் இருகைகளிலும் நகங்கள் உள்ளே பதிந்து இறுக, இதழ்களை கிழிக்கும்படி பற்களைக் கடித்து அசைவிழந்து அமர்ந்திருந்தார். பன்னிரு பகடைக்களம் கடுங்குளிரால் இறுகியதுபோல் இருந்தது. “இனியொன்றும் இயற்றுவதற்கில்லை. இங்கு முடியட்டும் இந்த ஆடல்” என்று விதுரர் உரக்க கூறினார். சீற்றத்துடன் திரும்பி அவரைப் பார்த்த தருமன் “நிறுத்துங்கள்! ஆட வந்தவன் நான். எதுவரை ஆடுவேன் என்று முடிவு செய்யவும் நானறிவேன்” என்றார். விதுரர் “மைந்தா…” என்று உரக்க அழைத்தார்.
குருதி படிந்த விழிகளுடன் “விலகிச் செல்லுங்கள்! எவர் சொற்களும் எனக்குத் தேவையில்லை. இனியும் ஆட விழைகிறேன்” என்றார் தருமன். சகுனி இதழ்கோட நகைத்து “எதை வைத்து ஆடுவீர்? எஞ்சுவதென்ன? நீங்கள் உட்பட பாண்டவர் ஐவரும் தங்கள் மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு தொழும்பர்களென்று ஆகிவீட்டீர். தொழும்பர்களிடம் செல்வமென ஏதும் எஞ்சமுடியாது” என்றார். உரத்த குரலில் “தொழும்பர்களுக்கும் துணைவியர் உண்டு, மூடா” என்று தருமன் கூவினார். “என் துணைவியை இங்கு பந்தயம் வைக்கிறேன்.”
“துருபதன் மகளை, அனலில் எழுந்த அணங்கை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பந்தயம் வைக்கிறேன்” என்றார் தருமன். உளவிசை உந்த எழுந்தார். கைகளை விரித்து “ஆம், இதோ என் தேவியை வைத்து ஆடுகிறேன்” என்றார். பித்தனைப்போல சிரித்து கைகளை ஆட்டியபடி அரங்கை சுற்றிநோக்கினார். “இனி ஒன்றும் இல்லை. இறுதியை பந்தயம் வைக்கிறேன். அவ்வுலகை பந்தயம் வைக்கிறேன். மூதாதையர் ஈட்டிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்.” சிரித்துக்கொண்டே திரும்பி “சொல்லும்! எதிர் பந்தயம் என எதை வைக்கிறீர்?” என்றார்.
சகுனி ஆழ்ந்த மென்குரலில் “அரசே, நீங்கள் இழந்த அனைத்தையும் பந்தயமென வைக்கிறோம். உடன் அஸ்தினபுரி நகரை, அரசை, அதிலமைந்த அரியணையை, அதிலமர்ந்த அரசரை, அவ்வரசரின் உடன்பிறந்தோர் அனைவரை, அவர்களின் மைந்தர்கள் ஆயிரவரை, அக்குலத்து மகளிர் அனைவரை, மூதாதையர் ஈட்டிய புகழை, நல்லூழை, தெய்வங்கள் அருளிய அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன்” என்றார்.
தருமன் பால்நுரை குளிர்நீர் பட்டதென அடங்கினார். கண்களில் நீர்மை மின்ன பெருமூச்செறிந்தார். “ஆம், அனைத்தும் தேவை. இவ்வுலகே தேவை, என் தேவிக்கு நிகராக. இங்கு எழுக மானுடரை எண்ணி நகைக்கும் தெய்வங்கள் அனைத்தும். இவ்வாடல் எங்கு சென்று முடிகிறதென்று பார்ப்போம். வென்றால் இப்பீடத்திலிருந்து தேவனென எழுவேன். வீழ்ந்தால் நெளியும் இழிபுழுவென ஏழுபிறவிக்காலம் கீழ்மைகொள்வேன். அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.
சகுனி தன் பகடைகளை எடுத்து நெஞ்சோடு சேர்த்து ஒருகணம் ஒருங்கமைந்து பின் உருட்டினார். “ஒன்று!” என அறிவித்தான் நிமித்திகன். அங்கிருந்தோர் விழிகளால் செவிகளால் அவ்வாடலை காணவில்லை. அப்பகடைக்களத்திற்குள் தாங்களும் வீரர்களென அமர்ந்து அதில் ஆடிக்கொண்டிருந்தனர். “பன்னிரண்டு!” என்று தருமனுக்கு அறிவித்தான் நிமித்திகன். “ஏழு!” என்றது சகுனியின் பகடை.
இருபடைகளும் பெருவஞ்சத்தின் மாளா ஆற்றலுடன் களம்நின்றன. மழைமுகில் சூல் கொண்டு ததும்புவதுபோல் விண்ணில் உருபெருத்து பழுத்தனர் பெருந்தேவியர். பகடை உருளும் ஓசையன்றி பிறிதொன்றும் எழவில்லை.
பன்னிரண்டு என விழுந்தது சகுனியின் தெய்வம். தன் படைகளை விரித்து நாகமொன்றை அமைத்தார். நடுவே பதுங்கி பின்னகர்ந்தது தருமனின் படை. பன்னிரண்டுகள் என உருண்டு விழ விழ நாகங்கள் சீறிப்பெருத்தன. நச்சுப்பற்கள் முனைகொள்ள சினத்துடன் வால்வளைத்து உடல் சொடுக்கி எழுந்தன. சிம்மம் அஞ்சி காலெடுத்து வைத்து தன் அளைக்குள் சென்று உடல் வளைத்தொடுங்கியது. அணுகி வந்த நாகங்கள் அதைச்சூழ்ந்து வலையென்றாயின. வெருண்டு உறுமிய சிம்மத்தின் உடலில் மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன. எங்கோ எண்ணித் தொட்டளிக்கப்பட்ட கணம் ஒன்றில் முதல் நாகம் சிம்மத்தின் காலை கவ்வியது. மறுகணம் நாகங்களால் முற்றிலும் பொதியப்பட்டு சிம்மம் மறைந்தது.
அவையோர் ஒவ்வொருவராக விண்ணில் இருந்து உதிர்வதுபோல பகடைக்களத்தில் பீடங்களில் வந்தமைந்தனர். பல்லாயிரம் நாகச் சீறல்களென மூச்சுகள் எழுந்தன. பின்பு தொலைதூரத்துத் திரையசைவொன்று பெருநெருப்பின் ஒலியென கேட்கும் அளவுக்கு பன்னிரு பகடைக்களத்தில் முற்றமைதி சூழ்ந்திருந்தது.
தருமன் ஒவ்வொரு மயிர்க்காலும் குத்திட்டு நிற்க இரு சுட்டுவிரல்களால் நெற்றிப்பொட்டை அழுத்தி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவையமர்ந்த முதற்கணத்திலிருந்த அதே போன்று சகுனி அமர்ந்திருந்தார். கணிகர் அங்கிலாதவர் போல் கண்மூடி கனவு நிறைந்த முகத்துடன் கிடந்தார். பீஷ்மர் துயிலிலென அப்பால் இருக்க துரோணரும் கிருபரும் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கி அவை நிரையை விழிசுழற்றி சொல் எழாது நின்றனர்.
பெண்டிரவையில் வளைகள் உதிர கைகள் தாழும் ஒலி கேட்டது. மெல்லிய விம்மலொன்று வாள்வீச்சென கூடத்தை கடந்துசென்றது. இடியோசையென அங்கிருந்த அனைத்து உடல்களையும் விதிர்க்கச் செய்தபடி தன் தொடையை ஓங்கி அறைந்து துரியோதனன் எழுந்தான். “ஆம், இனியொன்றும் எஞ்சுவதற்கில்லை. இதோ, இந்திரப்பிரஸ்தத்தின் இறுதித்துளியும் அஸ்தினபுரிக்கு அடிமையென்று ஆயிற்று. ஆ!” என்று கூவினான். “எங்கே ஏவலர்கள்? எங்கே படைவீரர்கள்?” என்றான்.
படைவீரர்கள் நால்வர் அவனை நோக்கி ஓடிவந்து வணங்கினர். “சென்று இழுத்து வாருங்கள் அந்தத் தொழும்பியை. இவ்வவை முன் நிறுத்துங்கள் அவளை! இனி அவள் ஆற்றவேண்டிய பணி என்ன என்று அறிவிக்கிறேன்” என்றான் துரியோதனன்.
மாபெரும் நீர்ச்சுழியென பன்னிரு பகடைக்களத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் துரியோதனனின் ஆணையை கேட்டனர். தங்கள் ஆழத்தில் எப்போதும் திறந்திருக்கும் பிறிதொரு செவியால் அதை சொல்எழாது உள்வாங்கினர். தீயவை எதையும் தவறவிடாத செவி, மலரிதழ் மேல் ஊசி விழுவதை தவறவிடாத பேராற்றல் கொண்டது அது. விழியும் செவியும் நாசியும் ஒன்றேயான நாகத்தின் புலன்.
அசைவிழந்து அமர்ந்திருந்த அவை நோக்கி இருகைகளையும் ஓங்கித் தட்டி வெடிப்பொலி எழுப்பி எழுந்து நின்று ஆர்ப்பரித்தான் துரியோதனன். “சென்று அழைத்துவாருங்கள். இன்று அவள் அரசியல்ல. அஸ்தினபுரியின் தொழும்பியென்று அவள் அறியட்டும்.”
தருமன் தன் கால்கள் உடலுடன் தொடர்பின்றி துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். அவர் உடலிலிருந்து சீற்றத்துடன் எழுந்த ஓர் ஆண்மகன் உடைவாளை உருவி துரியோதனனை நோக்கி பாய்ந்தான். திகைத்து நின்று அவ்வுடைவாளைத் திருப்பி தன் கழுத்தை வெட்டிக்கொண்டு குருதி கொப்பளிக்க அக்களமேடையில் விழுந்து துடித்தான். பிறிதொருவன் குளிர்ந்த குருதியுடன் எடைமிக்க பாதங்களை எடுத்து வைத்து பின்னோக்கி நடந்து அவனுக்குள்ளேயே புகுந்து இருண்ட அறைகளுக்குள் நுழைந்து ஒவ்வொரு வாயிலாக மூடிக்கொண்டே போனான்.
குளிர்ந்துறைந்த பனித்துளிகள் போன்ற கண்களுடன் சகுனி கைகளை கட்டிக்கொண்டு தன் பீடத்தில் சாய்ந்து அசைவற்றிருந்தார். பாண்டவர் நால்வரும் ஒருவர் கைகளை ஒருவர் பற்றியபடி கடுங்குளிரில் நின்றிருக்கும் கன்றுகளைப்போல உடல் விதிர்த்துச் சிலிர்க்க நின்றிருந்தனர். துரியோதனன் தருமனை நோக்கி கைசுட்டி “அடேய்! இந்தத் தொழும்பனை அவனுக்குரிய இடத்தில் நிற்க வை!” என்றான். தலைவணங்கி இருவீரர் யுதிஷ்டிரரை அணுகி குனிந்து நோக்கினர். அதன் பொருள் உணர்ந்தவர் போல தன் தலையணியைக் கழற்றி கீழே வைத்தார். அணிகலன்களை உருவி அதனருகே போட்டார். காலணிகளையும் மேலாடையையும் கழற்றிவிட்டு இடையாடையுடனும் வெற்றுமார்புடனும் நடந்து சென்று பீமனின் அருகே நின்றார்.
அவையிலிருந்து துரோணர் எழுந்து தயங்கிய குரலில் “அரசே, இது ஒரு குலக்களியாட்டு. இவ்வுணர்வுகள் அவ்வெல்லையை கடக்கின்றன என்று சொல்ல விழைகிறேன்” என்றார். “தாங்கள் உத்தரபாஞ்சாலத்தின் அரசனின் தந்தை. அஸ்தினபுரியின் அரசியலுக்குள் தங்கள் சொல் நுழையவேண்டியதில்லை” என்று துரியோதனன் கூரியகுரலில் சொன்னான். “ஆம், ஆனால்…” என்று அவர் சொல்லத்தொடங்க “இதற்குமேல் ஒருசொல்லும் இங்கு தாங்கள் சொல்ல வேண்டியதில்லை, ஆசிரியரே. எல்லை கடந்தால் வெளியேற்றப்படுவீர்கள்!” என்றான்.
கிருபர் “பெண்களை அவைமுகப்புக்குக் கொண்டுவரும் வழக்கமே இங்கில்லை, சுயோதனா” என்றார். “அந்தணர் வில்லேந்தும் வழக்கம் மட்டும் இங்கு உண்டா? உங்கள் சொல் இங்கு விழையப்படவில்லை” என்றான் துரியோதனன். “அடே சூதா, காளிகா!” என்றான். மூத்த பணியாள் “அரசே” என்றான். “சென்று அழைத்துவா அவளை” என்றான் துரியோதனன். “இங்கு நிகழ்ந்தவற்றை அவளிடம் சொல். எனது சொற்களை சொல். தொழும்பியை பணி செய்ய அரசன் அழைக்கிறான் என்று கூறி கூட்டிவா!”
[ 15 ]
பீடம் உரசி ஒலிக்க விகர்ணன் எழுந்தான். “நில்லுங்கள்!” என்றான். அவை திகைத்து யாரென நோக்கியது. அனைவரும் அது கர்ணனின் குரலென எண்ணினர். பின்னர்தான் விகர்ணனை அடையாளம் கண்டனர். “யாரவன்?” என்றது ஒரு குரல். “கௌரவர்களில் ஒருவன்” என்றது பிறிதொரு குரல். திகைப்புடன் அவனை நோக்கிய துரியோதனன் “அடேய்! அமர்! ஒருசொல் சொன்னால் இக்கணமே உன் தலையை வெட்டி இந்த அவையில் வைப்பேன்” என்றான்.
பணிவுமாறாத குரலில் “தலைக்கென அஞ்சவில்லை. நான் தங்கள் இளையோன்” என்றான் விகர்ணன். “மூத்தவரே, இதுநாள்வரை நானறிந்த அஸ்தினபுரியின் அரசரின் இயல்பல்ல இது. தாங்கள் பெருவிழைவு கொண்டவர். அணையா சினம் கொண்டவர். ஆனால் ஒருபோதும் சிறுமை வந்து ஒட்டியதில்லை என்றே உணர்ந்திருக்கிறேன். குருவின் கொடிவழி வந்தவருக்கு, தார்த்தராஷ்டிரருக்கு ஏற்புடையதல்ல இது. குலப்பெண்ணை அவைக்குக் கொண்டுவருவதென்பது நம் குடிக்கும் மூத்தாருக்கும் அழியாப்பழி என அமைவது” என்றான்.
“அவள் குலப்பெண்ணல்ல, மூடா! சற்றுமுன் இப்பகடைக்களத்தில் பணயமென வைக்கப்பட்ட தொழும்பி” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் அது வெறும் ஒரு குலக்களியாட்டென்றே இங்கு சொல்லப்பட்டது. எக்களியாட்டின் பொருட்டும் குலநெறிகள் இல்லாமல் ஆவதில்லை” என்றான் விகர்ணன். வெறுப்புடன் முகம் சுளித்து “அக்குலநெறியை அறியாமலா அவள் கணவன் இங்கே அவளை வைத்து ஆடினான்?” என்றான் துரியோதனன். “கேட்பதென்றால் அவனை கேள், மூடா!”
“அது அவரது பிழை. அஸ்தினபுரியின் அரசன் என அப்பிழைக்கு அவரை தண்டியுங்கள். அதை வைத்து மேலும் சிறுமையை நீங்கள் சூடிக்கொள்ள வேண்டியதில்லை. உயர்ந்த பெண்ணின் கருவில் உதித்தோர் ஒவ்வொரு பெண்ணையும் மதிக்கக் கற்றிருப்பார்கள் என்பது நூல்கூற்று. இங்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இழிவு செய்யப்படுவார்கள் என்றால் இழிவடைபவர் நூற்றுவரைப் பெற்று பேரன்னையென அரியணை அமர்ந்திருக்கும் நமது அன்னை, பாரதவர்ஷத்தின் பேரரசி காந்தாரி. இங்கு நான் குரல் எழுப்புவது என் அன்னையின் பொருட்டே” என்றான்.
கர்ணன் சினத்தை அடக்கி எழுந்து அவனிடம் கைநீட்டி “இளையவனே, அரசு சூழ்தலில் குரலெழுப்புமளவுக்கு இன்றுவரை நீ முதிர்ந்ததில்லை. உன் குரலை இன்று எவரும் கேட்கப்போவதுமில்லை” என்றான். பணிவுடன் “நூற்றுவரில் ஒரு குரலேனும் எழுந்தாக வேண்டும், அங்கரே. இல்லையேல் எந்தையும் தாயும் பழிசூடுவார்கள். இறப்பென்றாலும் சரி, நான் இதை ஒப்பமாட்டேன்” என்றான் விகர்ணன். அப்பாலிருந்து குண்டாசி எழுந்து “ஆம், இது அறமல்ல. அன்னை வயிற்றில் பிறந்தோர் ஏற்கும் செயலுமல்ல” என்றான்.
துச்சாதனன் தன் இரு கைகளை ஒங்கித்தட்டி ஓசையெழுப்பியபடி எழுந்து அவர்களை நோக்கி உரத்தகுரலில் “அவையோர் அறிக! இதோ என் சொல்!” என்று கூவினான். “அஸ்தினபுரியின் அரசர்! குருகுலமூத்தவர்! கௌரவர்களின் முதல்வர்! அவரது சொல்லுக்கும் எண்ணத்திற்கும் மாற்றென நூற்றுவரில் ஒரு மூச்சேனும் இதுவரை எழுந்ததில்லை. அவ்வண்ணம் ஒன்று எழுமாயின் அதற்கு கொலைப்படைக்கருவி என எழுவது என் கைகள். விகர்ணா, உனது சொற்கள் என் தமையனுக்கெதிரானவை. பிறிதொரு சொல் நீ எடுப்பாயென்றால் இந்த அவையிலேயே உன் தலை உடைந்து இறந்து விழுவாய். குண்டாசி, உன்னை ஒரு நீர்த்துளியை சுண்டி எறிவதுபோல உடைத்து இங்கு வீசத்தயங்க மாட்டேன்.”
விகர்ணன் தலைகுனிந்து “பொறுத்தருள்க, மூத்தவரே! இச்சொல்லை இங்கு சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை” என்றான். “நூற்றுவருக்கெதிராக உன் குரல் எழுகிறதா? அதை மட்டும் சொல்! மூத்தவரை அவையில் அறைகூவுகிறாயா?” என்றான் துச்சாதனன். “நான் அறைகூவவில்லை. அவரது கால்களில் என் தலையை வைத்து மன்றாடுகிறேன். இன்று நிலைமறந்து செய்யும் இச்செயல் வழியாக என்றும் சான்றோர் நாவில் இழிமகனென அவர் குடியேற வேண்டாம் என்று கோருகிறேன்” என்றான் விகர்ணன். குண்டாசி கசப்புடன் உரக்க நகைத்து “ஆம், அவர் ஏற்கெனவே பெற்றுள்ள இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றே நானும் கூறுகிறேன்” என்றான்.
கர்ணன் சினம் எல்லைகடக்க கைகளைத் தட்டி ஓசையிட்டு “இரு கௌரவரும் தங்கள் பீடத்தில் இக்கணமே அமரவேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன். இனி ஒரு சொல்லும் அவர்கள் உரைக்கலாகாது” என்றான். விகர்ணன் தலைதாழ்த்தி “ஆம், என் சொற்கள் முற்றிலும் பொருளிழந்து போவதை நான் உணர்கிறேன்” என்றான். இருகைகளையும் விரித்து தன் உடன்பிறந்தோரை நோக்கி திரும்பி “தமையர்களே, இளையோரே, நீங்கள் கேளுங்கள். உங்கள் உள்ளங்களுக்குள் என் சொற்களில் ஒன்றேனும் ஒளியேற்றட்டும். இப்பெரும்பழி நம் குலத்தின்மேல் படிய நாம் ஒப்பலாமா? நம் அன்னையின் பொருட்டு உங்கள் அகம் எழுக! தொல்புகழ் யயாதியின் அவையில் தேவயானி சூடியிருந்த மணிமுடியின் பேரால் கேட்கிறேன். இப்பழியை நாம் ஏற்கலாமா?” என்றான்.
பெரும் சினத்துடன் சுபாகு எழுந்து “வாயை மூடு, அறிவிலியே! என்னவென்று எண்ணினாய்? மூத்தவருக்கும் அங்கருக்கும் மேலாக நெறியறிந்தவனா நீ? இனி இந்நாட்டை அறமுரைத்து வழிநடத்தப்போகிறாயா? அல்லது செங்கோலேந்தி அஸ்தினபுரியின் அரியணை அமர்ந்து ஆளலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான். துர்மதன் “நீயுரைத்த ஒவ்வொரு சொல்லுக்காகவும் மும்முறை உன்னை கொல்லவேண்டும். குக்கல் சொல் கேட்டு களிறு வழிநடக்க வேண்டுமென்று விழைகிறாயா? அமர்ந்துகொள்! இல்லையேல் உன்னை இக்கணமே கிழித்துப்போடுவேன்” என்றான். துச்சலன் குண்டாசியிடம் “உடன்பிறந்தார் என்பதற்காக மட்டுமே இச்சொல் வரை உன்னை பொறுத்தேன். இனி இல்லை” என்றபடி வெறியுடன் அருகே வந்தான்.
ஒவ்வொருவராக கௌரவ நூற்றுவர் எழுந்து விகர்ணனையும் குண்டாசியையும் நோக்கி கைநீட்டி கூச்சலிடத்தொடங்கினர். “கொல்! அவனை இக்கணமே கொல்!” என்றான் சுபாகு. “வெறும் கைகளால் அவனை கிழித்துப்போடுவேன்” என்றான் துர்மதன். துரியோதனனின் உடலிலிருந்து உதிர்ந்து நூறு துரியோதனர்களாக எழுந்து அவனைச் சூழ்ந்தவர்கள் போலிருந்தனர். மேலும் மேலும் பெருகிக்கொண்டிருந்தனர்.
விகர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் துரியோதனனென உருமாறுவதை கண்டான். ஒவ்வொரு படைவீரனும் ஒவ்வொரு குடித்தலைவரும் ஒவ்வொரு பெருவணிகரும் துரியோதனனின் விழியும் முகமும் கொண்டனர். அஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் துரியோதனன் என்றே ஆயினர். ஊற்றுக்கண் உடைந்து வழிந்து பெருகி சுழித்து சுழன்று சுழலென்றாகி பெரும் வட்டமென தன்னைச் சூழ்ந்த துரியோதனனின் பல்லாயிரம் முகங்களைக் கண்டு விகர்ணன் திகைத்தான்.
“மூத்தவரே, என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்தருளுங்கள்” என்றான். யார் கர்ணன், யார் துச்சாதனன், யார் துர்மதன், யார் துச்சலன், யார் சுபாகு, யார் சுஜாதன் என்றே அவனால் கண்டறிய முடியவில்லை. கால்தளர விழிமயங்க வறண்ட இதழ்களை நாவால் தீட்டியபடி துரோணரையும் விதுரரையும் பார்த்தான். அவர்கள் விழிகளும் துரியோதனன் விழிகளென ஆகிவிட்டனவா என்று தோன்றியது. பீஷ்மரை நோக்கினான். விழிமூடி உடல் குறுக்கி அவர் அமர்ந்திருந்தார்.
அச்சுழியிலிருந்து இரு கைகள் நீண்டெழுந்து வந்து அவனை பற்றின. “இல்லை! நானில்லை!” என்று அவன் கூவினான். ஒலி எழாது உதடுகள் அசைய “விட்டுவிடுங்கள்! என்னை விட்டுவிடுங்கள்!” என்று அலறினான். சுழியின் விசை அவனை இழுத்தது. பேருருக்கொண்ட கருநாகத்தின் ஆற்றல் எழுந்த சுழற்சி. அவன் அதில் விழுந்தான். கணத்திற்குள் மூழ்கி உள்கரைந்தான். பெருவிசையுடன் சுழற்றிச் செல்லப்பட்டான். அவனைச் சூழ்ந்து அவன் உடலே நின்றிருந்தது. கரிய பேருடல். அதன் பரப்பெங்கும் ஒளிவிடும் நாகமணிக்கண்கள் நிறைந்திருந்தன. அவை வஞ்சத்துடன் விழைவுடன் புன்னகைத்து சிமிட்டிக் கொண்டிருந்தன.
தோள் தட்டி ஆர்ப்பரித்தனர் துரியோதனர்கள். கைநீட்டிக் கூச்சலிட்டனர். வெடித்து நகைத்து கொப்பளித்தனர். வெறிகொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி நகையாடினர். சிலர் பெருந்தோள் புடைக்க கைதூக்கி போர்க்குரல் எழுப்பினர். சிலர் நெஞ்சில் ஓங்கி அறைந்து மல்லுக்கு அழைத்தனர். பன்னிரு பகடைக்கள மாளிகைக்குள் நுரைவிளிம்பை மீறும் மதுக்கிண்ணம் போல் துரியோதனனே நுரைத்து குமிழியிட்டுக் கொண்டிருந்தான்.
[ 16 ]
கோல் விழுந்துகொண்டிருந்த முரசின் உட்பக்கமென முழங்கிக்கொண்டிருந்த பன்னிரு பகடைக்களத்திற்குள் கூப்பிய கைகளுடன் காளிகன் நுழைந்தான். துரியோதனன் இரு கைகளையும் விரித்து “அமைதி! இதோ வருகிறான் சூதன்! கேட்போம் அவனை!” என்றான். “அமைதி! அமைதி!” என்றனர் அவை முழுக்க நிறைந்திருந்த அவனுடைய மாற்றுருக்கள். மெல்ல அவை அடங்கியது. காளிகன் கூப்பிய கைகளை விலக்காமலேயே படிகளில் ஏறி துரியோதனன் அருகே வந்து நின்றான்.
“எங்கே அவள்? அஸ்தினபுரியின் முதற்தொழும்பி…” என்றான் துரியோதனன். காளிகன் முகம் சிறுகுழந்தையென உவகையில் மலர்ந்திருந்தது. சொல்லெடுக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் துரியோதனனை நோக்கி கைகாட்டிவிட்டு “சொல்! நீ அங்கு என்ன பார்த்தாய்?” என்றான். அவன் மேலும் சொல்லுரைக்க இயலாமல் உதடுகளை அசைத்தான். கர்ணன் சினத்துடன் “சொல், மூடா! என்ன கண்டாய் அங்கு?” என்றான்.
காளிகன் “நான் மகளிர் மாளிகைக்கு சென்றேன்” என்றான். “ஆம், அதை அறிவோம். அங்கு என்ன கண்டாய்? அவள் என்ன உரைத்தாள்? சொல் இந்த அவைக்கு!” என்றான் கர்ணன். “அரசே, அவையீரே, இங்கிருந்து கிளம்புகையில் அரசரின் ஆணையை சென்னி சூடிச் செல்லும் எளிய ஏவலன் என்றே என்னை உணர்ந்தேன். நன்றோ தீதோ அறமோ மறமோ ஒன்று தேரும் உரிமை என்போல் ஏவலருக்கில்லை. ஏழு தலைமுறையாக எங்கள் தலையை அஸ்தினபுரி அரசரின் காலடியில் வைத்தவர்கள் நாங்கள். ஆணையிடப்பட்டதை அவ்வண்ணமே செய்யும் எண்ணம் ஒன்றே என்னுள் இருந்தது. என்னுடன் ஏழு படைவீரர்களை அழைத்துக்கொண்டு உருவிய வாளுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இருந்த மகளிர் மாளிகைக்கு சென்றேன். என் எதிர்வந்த செவிலியிடம் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி எங்கே என்று கேட்டேன்.”
அரசி குருதிவிலக்காகி இருப்பதாகவும் வடக்குத் துணைமாளிகையில் ஒதுக்கத்தில் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள். அங்கு ஆண்களுக்கு நுழைவொப்புதல் இல்லை என்றார் காவலர்தலைவர். “நான் அரசரின் ஏவலன், ஆணை பெற்று வந்தவன், அஸ்தினபுரியின் எப்பகுதியிலும் நுழைவேன், எனக்கு ஒப்புதல் தேவையில்லை. விலகுக!” என்றபடி வீரர்களை விலக்கி முன்னால் சென்றேன். “என்ன இது? இது எவ்வண்ணம்?” எதிரே கைவிரித்து வந்த முதுசெவிலியை “விலகு…! அரசாணை” என ஆணையிட்டு பிடித்து ஒதுக்கிவிட்டு முன்னால் நடந்தேன்.
எனக்குப்பின்னால் பதறியபடி அவள் வந்தாள். “நில்லுங்கள்! நான் சொல்வதை கேளுங்கள்! இது முறையல்ல. பெண்களின் ஒதுக்கமென்பது ஏழு தெய்வங்களால் காக்கப்படும் இடம். அங்கு மங்கையர் அன்னையராக மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் நுழையலாகாது என்பது ஆன்றோர் வகுத்த விதி” என்று அவள் கூவினாள்.
“வாயை மூடு, இழிபிறவியே! பிறிதொரு சொல் உரைத்தால் உன் நாவை வெட்டி இங்கு வீசுவேன்” என்று கூவியபடி நான் மேலே நடந்தேன். அங்கிருந்த காவலர்கள் வாளுடன் என்னை எதிர்கொள்ள அஸ்தினபுரியின் ஆணைக் கணையாழியை தூக்கிக்காட்டி “இது அரசரின் ஆணை” என்றேன். படைக்கலம் தாழ்த்தி அவர்கள் வழிவிட்டனர். ஒதுக்கமாளிகையை நோக்கிச் சென்று அதன் வாயிலில் இருந்த செவிலியிடம் “வரச்சொல் உன் அரசியை!” என்றேன். இருகைகளையும் விரித்து அவள் என்னை தடுத்தாள். “இதற்கப்பால் ஆண்களுக்கு ஒப்புதல் இல்லை. இங்கு உங்களை தடுத்து நிறுத்த வேண்டியது என் பொறுப்பு” என்றாள்.
“விலகு! இல்லையேல் உன் தலை இங்கு உருளும்” என்றேன். “அவ்வண்ணமே ஆகுக! என்றேனும் ஒருநாள் அரசியின்பொருட்டு உயிர் துறக்க உறுதிகொண்டவள் நான். இழிமகனே! இங்கு நாங்கள் எழுவர் இருக்கிறோம். ஏழு பெண்டிரின் தலைகொய்த குருதியில் நடந்தே நீ இதற்கப்பால் அரசியை அணுக முடியும்” என்றாள்.
முதல் நின்றவள் நெஞ்சில் பாய்ச்சுவதற்காக எனது உடைவாளை உருவினேன். அப்போது உள்ளிருந்து அரசியின் பெருந்தோழி மாயை வந்தாள். “அவனை உள்ளே அனுப்பும்படி அரசியின் ஆணை” என்றாள். என்னைத் தடுத்த செவிலி திகைப்புடன் திரும்பி “உள்ளே அனுப்புவதா? அவ்வண்ணம் ஒரு முறைமையில்லையே…!” என்றாள். மாயை “அவன் வருக என்றார் அரசி” என்றாள். செவிலி “குருதிவிலக்கான பெண்ணை அவள் இளமைந்தரன்றி பிற ஆண்கள் நோக்கலாகாது” என்றாள்.
பெருந்தோழி புன்னகைத்து “வந்திருப்பது தன் மைந்தனே என்றார் அரசி” என்றாள். விழிகளில் குழப்பத்துடன் அவர்கள் வழிவிட்டனர். பெருந்தோழி மெல்லடி வைத்து என்னை அணுகி “வருக, மைந்தா!” என்றாள். நான் என் கையில் இருந்த கத்தியை பார்த்தேன். அது ஒரு தாழைமலர் இதழாக மாறிவிட்டதுபோல் விழிமயக்கேற்பட்டது.
அவளை நோக்கி “நீ ஏதோ மாயம் செய்கிறாய்” என்றேன். என் குரல் சிறுமைந்தனின் குரல் போன்றிருப்பதாக தோன்றியது. அவள் இனிதாக புன்னகைத்து “என்னை மாயை என்பார்கள். வருக!” என்று என் கைகளை பற்றினாள். பிறிதொரு கையால் என் தோளை அணைத்து “வா!” என்றாள். மறைந்த என் அன்னையின் குரலென்றே அதை கேட்டேன்.
அரசே, சிற்றடி எடுத்து வைத்து சிறுவன் போலவே அவளுடன் சென்றேன். நான் சென்றது எவ்விடம் என்று இந்த அவையில் என்னால் சொல்ல முடியாது. அப்பெண் மாயம் கற்றவளா? மகேந்திர வித்தையால் என் உள்ளத்தைக் குழைத்து காட்சிகளையும் ஒலிகளையும் தானே அமைத்து எனக்களித்தாளா? நான் நுழைந்தது ஒதுக்கறையின் முதல் வாயிலை என்று உறுதிபடச் சொல்வேன். சென்ற வழியோ நான் இதுவரை அறிந்திலாதது.
அரசே, அங்கே மெல்லிய இசையொன்று சூழ்ந்திருக்க கேட்டேன். பீதர் நாட்டு வெண்பட்டாலானவை போன்று சுவர்கள் ஒளிவிட்டன. மலைவாழை அடிபோல வெண்பளிங்குத் தூண்கள். பால்நுரை போன்ற திரைச்சீலைகள். என் ஆடிப்பாவை என்னை நோக்கிய வெண்தரை. என் விழிகள் பாலென பட்டென பளிங்கென விரிந்த வெண்மையால் முற்றிலும் நிறைந்திருந்தன. அவ்வினிய இசை என்னை வழிகாட்டி அழைத்துச் சென்றது.
என் கைபற்றி உடன்வந்தவள் அந்த இசையின் பருவடிவமென்று அதிர்ந்து கொண்டிருந்தாள். “வருக!” அருகே என் செவிக்குள் ஒரு குரல் ஒலித்தது. நான் சென்று நின்ற அவையில் ஓர் அரியணையில் வெண்ணிறப் பட்டாடையும் ஒளிவிடும் நீர்த்துளி வைரங்களும் இளநீலமோ வெண்மையோ என்று விழிதிகைக்கும் மணிமுடியும் அணிந்தவளாக அன்னை அமர்ந்திருக்கக் கண்டேன். நானறிந்த அத்தனை பெண்முகங்களும் ஒரு முகமானது போல். திருமகளா? தெற்கு ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள ராதையா? மகாகௌரியா? புலரி ஒளிகொண்ட சாவித்ரியா? அல்லது என் மறைந்த அன்னையா? மூதன்னையரா? என் மடிக்கு கன்னிமுகம் சூடி வந்த மனைவியா? கருக்குழந்தையென என் கையில் தவழ்ந்த என் மகளா? அல்லது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியேதானா? அறியேன்.
அவ்விழிகள் மிக கனிந்திருந்தன. முலையூட்டிக் கொண்டிருக்கும் அன்னையின் விழிகள் மட்டுமே அத்தனை கனிந்திருக்கும். இவ்வுலகில் நிகழ்பவை அனைத்தையும் பொறுத்தருளும் பேரருள் கொண்டவை அவை. “எதற்கென வந்தாய், மைந்தா?” என்று அவள் கேட்டாள். அவளைச் சூழ்ந்து நின்றிருந்தனர் நூற்றெட்டு வெண்ணிறக் கன்னியர். என் உள்ளத்தை உணர்ந்தபின் என்னால் அவள் கால்களைத்தான் நோக்க முடிந்தது. குளிர்ந்தவை. மீன்விழிகள் என மின்னும் வைரங்கள் பதித்த கணையாழிகளை அணிந்திருந்தாள். மண்டியிட்டு அக்கால்களை நோக்கினேன். அவ்வைரங்கள் ஒவ்வொன்றும் விழிகளென மாறி என்னைப்பார்த்து கனிந்து புன்னகைத்தன. “சொல்!” என்றாள்.
“அன்னையே, அங்கு அவையில் மாமன்னர் துரியோதனர் தன்னிலிருந்து தான் ஊறிப்பெருகி பேருருக் கொண்டு எழுந்து நின்றிருக்கிறார். உங்களை அவைக்கு இழுத்துவரும்படி ஆணையிட்டார்” என்றேன். உரக்க நகைத்து “அவ்வாடலில் நான் மகிழ்ந்தேன் என்று அவனிடம் சொல். மைந்தரின் மடமையும் ஆணவமும் அன்னைக்கு உவப்பளிப்பதே. அவனிடம் மூன்று வினாக்களை மட்டுமே நான் எழுப்பினேன் என்று சொல்” என்றாள். “அருள்க, அன்னையே!” என்றேன்.
“தொழும்பியராக ஒரு குலப்பெண்ணை அவன் அவைக்கு கொண்டு செல்லும்போது என்றேனும் ஒருநாள் தன் அன்னையும் உடன்பிறந்தாளும் துணைவியரும் அவ்வண்ணம் கொண்டு செல்லப்படுவதும் அரசமுறையே என்று உணர்கிறானா? இத்தருணத்தில் அவன் வென்று தருக்க எண்ணுவது இந்திரப்பிரஸ்தத்தின் அரசியையா அல்லது தான் தன்னுள் விழையும் முதற்பெண்ணையா? பெண்ணை எவ்வழியிலேனும் ஆண் முற்றிலும் வெல்லமுடியுமென்று அவன் எண்ணுகிறானா? கேட்டுவா!” என்றாள்.
“ஆம், இறைவியே! அவரிடம் அவ்வினவைக் கேட்டு மீள்கிறேன்” என்றேன். “என் துணைவனென அங்கிருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசனிடம் கேள். அவன் தன் நாட்டை வைத்திழந்தான். பின்னர் தம்பியரை வைத்திழந்தான். தன்னையே வைத்திழந்தானா? தன்னையிழந்தவன் எவ்வண்ணம் என்னை வைத்திழக்க முடியும்? தன் உடல்மேலும் உயிர்மேலும் உரிமை இல்லாதவன் பிறிதொருவள் மேல் எவ்வுரிமையை கொண்டான்? எங்ஙனம் என்னை களப்பணயமென வைத்தான்?” என்றாள். “ஆணை அன்னையே, அவ்வண்ணமே கேட்கிறேன்” என்றேன். தலைவணங்கி திரும்பி வந்தேன்.
“அரசே, பல்லாயிரம் வெண்தாமரை மலர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி பூத்துச் சொரிந்த தடாகம் ஒன்றின்மேல் கால்படாது நடந்து வரும் உணர்வை அடைந்தேன். அரண்மனை முற்றத்திற்கு வந்து விழுந்தேன். விண்ணிலிருந்து உதிர்ந்த கந்தர்வன் போல் இருந்தேன். எங்கிருக்கிறேன் என்றறியவே நெடுநேரமாகியது. அங்கு நின்றிருந்த காவலர் என்னை இருகைகளையும் பற்றித்தூக்கி “என்ன நிகழ்ந்தது?” என்றனர். “அறியேன். என்னை அரசரிடம் கொண்டு செல்லுங்கள்” என்றேன்.
இரு கண்களிலும் கண்ணீர் வார தலைக்கு மேல் கைகூப்பி காளிகன் சொன்னான் “அன்னையை கண்டுவிட்டேன். இப்பிறவியில் இனி விழிகள் காண ஏதுமில்லை.” துரியோதனன் இதழ்கள் வளைய சிரித்து “நான் எண்ணினேன். அவளிடம் இருப்பது ஆட்சித்திறனும் சூழ்ச்சித்திறனும் மட்டுமல்ல, நாமறியா மாயத்திறன் ஒன்றும் கூட” என்றான். கர்ணன் “ஆம் அரசே, தொன்று தொட்டே பாஞ்சாலம் இந்திரமாயத்திற்கும் மகேந்திர மாயத்திற்கும் புகழ் பெற்றது” என்றான்.
சினம் எழ “மாயத்தால் வெல்லப்படுவதல்ல அஸ்தினபுரியின் அரசவை” என்றான் துரியோதனன். “அனைத்து மாயங்களையும் அறுக்கும் விசை மறுத்துத் தருக்கி நிற்கும் ஆண்மைதான். அவளுக்கு ஆண்மை என்றால் என்னவென்று காட்டுகிறேன்.” திரும்பி பாண்டவரை நோக்கி இளிவரலாக நகைத்து நிலத்தில் துப்பி “இப்பேடிகளை மட்டுமே அறிந்திருக்கிறாள். ஆகவேதான் என் அவைக்களத்துடன் சொல்லாடுகிறாள்” என்றான்.
“காமிகா!” என்று துரியோதனன் அழைத்தான். “அவன் படைத்தலைவன். ஷத்ரியன்!” என்றான். காளிகனை நோக்கி “வெற்று உளமயக்குக்கு விழியளிக்கும் சூதன் நீ. இச்செயலுக்கு நீ உகந்தவனே அல்ல. வீரர்களே, இவனை அகற்றுக! இனி அவளிடம் செல்ல உளம் வைரம்பாய்ந்த ஷத்ரியன் எழுக!” என்றான்.
விகர்ணன் அவன் உடல் அறியாக் காற்றால் கொந்தளிக்கும் காட்டுப்புதர்மரம் போல அவை நின்று ஆடுவதை நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை மானுடருக்குள்ளும் அவைநடிகன் ஒருவன் வாழ்கிறான். தன் அகத்தை அசைவென குரலென உணர்வென மிச்சமின்றி கொட்டி நிரப்ப விரும்புபவன். அகமே புறமென மாறி நின்று கனல்பவன். அவனை கட்டுப்படுத்தும் சித்தச்சரடொன்று அறுந்துவிட்டால் எழுகிறான். ஆடத்தொடங்கிவிட்டால் சூழ்ந்திருக்கும் அனைத்தையும் இணைத்து அவையொன்றை அமைக்கிறான். அதில் தன் வெளிப்பாட்டை தானே உணர்ந்து சுவைகண்டபின் அவன் அடங்குவதில்லை.
காமிகன் வந்து தலைவணங்கி “ஆணை அளியுங்கள், அரசே!” என்றான். துரியோதனன் “என்ன கேட்டாள்? தன்னை வைத்திழந்தபின் அவளை வைத்திழக்க அரசனுக்கேது உரிமை என்றா? அதோ நின்றிருக்கிறான் அவளை வைத்தாடிய கீழ்மகன். அவனிடமே கேள்!” என்றான். தருமனை நோக்கி “சொல், அடிமையே! உன் மறுமொழி என்ன?” என்றான். தருமன் தலைகுனிந்து உடல் மட்டும் சிலிர்த்துக்கொண்டிருக்க அசையாது நின்றார். “நன்று! அடிமை அரசுசூழ்தலில் பங்கு கொள்ளக்கூடாது. அடிமையின் நாவில் அமையவேண்டும் முதற் தளை” என்று துரியோதனன் சிரித்தான்.
காமிகனை நோக்கி “அவள் அவை நின்று சொல்சூழ விழைகிறாளா? நெறிநூல் கேட்க விரும்புகிறாளா? சொல் அவளிடம், தன்னை வைத்து அவன் இழந்தான் என்றால் பராசர ஸ்மிருதியின்படி அப்போதே அவளும் அடிமையாகிவிட்டாள். லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி எப்போதும் பெண்ணென்று எஞ்சும் அவள் தன் கைபிடித்து உரிமைகொண்ட கணவன் சூதில் வைத்திழந்தபோது அடிமையானாள்” என்றான். “அதை மீறவேண்டுமென்றால் இங்கு வந்து சொல்லட்டும், இவர்கள் ஐவரும் அவள் கொழுநர்கள் அல்ல என்று… ஆம், ஐந்துமுகத்தாலியை கழற்றி அவைமுன் வீசி சொல்லட்டும்!”
கர்ணன் “நாங்கள் ஏற்று ஒழுகுவது நாரதஸ்மிருதியை என்று சொல். எந்த நெறியின்படி ஐவருக்கும் துணைவியாகி அவள் மைந்தரைப் பெற்றாள் என்று சென்று கேள். ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவளே கற்புள்ள பெண் என்கின்றன எங்கள் நெறிகள். எங்கு எதன்பொருட்டு ஒரு காலடி எடுத்து வெளியே வைத்தவளாயினும் அவள் பரத்தையே. இங்கு அவள் பரத்தையென்றே அழைத்துவரப்படுகிறாள். பலர்பார்க்கும் அவைமுன் பரத்தை வந்து நிற்பதில் முறைமீறலென ஏதுமில்லை” என்றான்.
துரியோதனன் “ஆம்! அதுவே எங்கள் மறுமொழி” என்றான். அரியணையில் சென்றமர்ந்து “சென்று சொல் அச்சிறுக்கியிடம்! அவள் என்னிடம் கேட்டவற்றுக்கு என் மறுமொழி இது. என் அன்னையர், உடன்பிறந்தோர், துணைவியர், மகளிர் ஆண்மை கொண்ட பெருங்குடிப்பிறந்த பெண்கள். பெண் சிம்மம் நாய்முன் தலைவணங்கி நிற்காது. நின்றதென்றால் அது சிம்மமே அல்ல. அது வாலாட்டி கால்நக்கி குழைவதே நெறி. இதோ, குடிப்பெண்ணை பகடைப்பணயம் வைத்து ஆடி நின்றிருக்கும் இழிமகனின் துணைவியென ஆனதினாலேயே குலத்தையும் குடிப்பெருமையையும் பெண்ணெனும் தகைமையையும் அவள் இழந்துவிட்டாள்” என்றான்.
“ஆம், என் குடிப்பெண்டிர் எவரேனும் இத்தகைய ஓர் இழிமகனை கைபிடித்து இல்லறம் கொள்வார்களென்றால் இதைவிட பன்னிருமடங்கு இழிவை அவர்கள் சூடுவார்களாக!” என்று அவன் கூவினான். மூச்சிரைக்க கைகளை தட்டிக்கொண்டு துரியோதனன் சொன்னான் “என்ன சொன்னாள்? இவ்வவையில் நான் இழுத்து வரப்போவது எவளை என்றா? ஆம். இங்கு சூழ்ந்துள்ள அத்தனை பேரும் அறியட்டும். அவளை என் நெஞ்சுக்குள்ளிருந்துதான் இழுத்து இங்கு கொண்டுவந்து அவைமுன் விடவிருக்கிறேன். குருதி சிதற ஈரல்குலையை பிழிந்தெடுத்து வைப்பதுபோல அதை செய்கிறேன்.”
குரல் உடைய நெஞ்சை அறைந்து அவன் கூவினான் “எங்கோ அன்று அவளிருந்த அரியணை ஏதென்று அறிந்திருந்தால் இவ்வண்ணம் இழிந்திருக்கமாட்டாள். சென்று சொல், அந்தப் பொதுமகளிடம். அவள் கால்களில் பணிந்த முதல் தலை என்னுடையதென்று. கன்னியென அவள் காலடிகள் பதிந்த மண்ணனைத்தும் என் நெஞ்சம் மலர்ந்து விரிந்ததே என்று!” அவன் உதடுகள் இறுக கழுத்துத் தசைகள் அதிர சொல் அடைத்து திணறினான்.
பின்னர் மூச்சை மீட்டு “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை அல்ல. பாஞ்சாலத்துக் குலமகளை அல்ல. பாண்டவர்களின் தேவியையும் அல்ல. பெண்ணென்று வந்து என் முன் பெருகி எழுந்து முழுமை காட்டிய ஒன்று. கட்டைவிரல் முனையாலேயே முழுதும் தன்னைக் காட்டும் பெரிது. எதன் பொருட்டு ஆண் முழுதமைந்து வாழமுடியுமோ, எதற்காக சிரமறுத்து வீழமுடியுமோ, எதன் பொருட்டு விண்ணையும் மண்ணையும் புல்லெனக் கருதமுடியுமோ அதுவாக அமைந்த ஒன்று. பெரும்பெண்மை. பேரன்னை. அறுத்து குருதி பெருக நான் என்றோ வீசிய ஒன்றை கடக்கிறேன். ஆம், அதையே இழுத்து வந்து இங்கு நிறுத்த விரும்புகிறேன். அவள் முகத்தை நோக்கி நீ என் அடிமை என்று சொல்ல விரும்புகிறேன். அவள் தலைமேல் கால் வைத்து மிதித்தேறியே நான் நான் என்று கூவ விரும்புகிறேன்” என்றான்.
“சென்று சொல், அழைப்பது அஸ்தினபுரியின் அரசன் என்று. காலவடிவன். கலி எழுந்தவன். கொதிக்கும் குருதிக்கலமென தன் தலையை சுமந்தலையும் வெறியன்” என்றான் துரியோதனன். ஒருகணம் தளர்ந்து மேலும் வெறிகொண்டு இருகைகளையும் விரித்து தூதனை நெறித்துக் கொல்ல விழைபவன் போல அருகே சென்று தொண்டை நரம்புகள் புடைக்க இரு கண்களும் நீர் கொண்டு கசிந்து வழிய கூவினான் “என்ன கேட்டாள்? பெண்ணை வெல்ல ஆணால் முடியுமா என்றா? முடியாதென்றே ஆகட்டும். ஆம், ஒருபோதும் இயலாதென்றே ஆகட்டும். ஆனால் இப்புவியில் பெண்ணென்றும் ஆணென்றும் பிரிந்து வந்த நாள் முதல் அவ்வெல்லமுடியாமைக்கு முன் நெஞ்சறுத்து குருதி பெருக்கி விழுந்த பல்லாயிரம் ஆண்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். சென்று சொல்! ஆம், நான் மகிஷன், நான் நரகன், நான் ராவணப்பிரபு!” அவன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்து நகைத்தான். “ஆம்! ஆம்! சென்று சொல், மூடா!”
காமிகன் “ஆம் அரசே, ஆணை!” என்று தலைவணங்கி வெளியேறினான். தளர்ந்தவன் போல அரியணையில் விழுந்து தன் தலையை கையால் பற்றிக்கொண்டான் துரியோதனன்.
[ 17 ]
சகுனி கைநீட்ட ஓர் ஏவலன் அருகே வந்து அவர் தோளை பற்றினான். வலிகொண்ட காலை மெல்லத்தூக்கி எழுந்து அவன் தோள்பிடித்து நடந்து கணிகரின் அருகே தன் பீடத்தில் அமர்ந்தார். அவர் அணுகியதையே கணிகர் அறிந்ததுபோல் தெரியவில்லை. ஏவலர்கள் இருவர் வந்து பன்னிரு பகடைக்களத்தில் பொருளிழந்து வெற்றுப்பொருட்களென்றாகி பரவியிருந்த காய்களைப் பொறுக்கி தந்தப்பேழைகளில் சேர்த்தனர். பகடைக்களம் வரையப்பட்ட பலகையை ஒருவன் அகற்ற முயல துரியோதனன் உரக்க “அது அங்கிருக்கட்டும்! அங்குதான் அவ்விழிமகளை கொண்டு வந்து நிறுத்தப்போகிறேன். பாரதவர்ஷத்துடன் அவள் பகடையாட விழைந்தாள். எனது பகடைக்களத்தில் அவளும் ஒரு காயென்று வந்து நிற்கட்டும் இங்கே” என்றான்.
கர்ணன் புன்னகைத்தான். துரியோதனன் சிற்றமைச்சரைப் பார்த்து “அந்தப் பகடைகளை எடுத்து இங்கே அளியுங்கள்” என்றான். பகடைகளை பொற்பேழையிலிட்டு அவனிடம் அளித்தான் ஏவலன். அதை தலைமேல் தூக்கி “நூறாயிரம் நூல்களை, சூதர்பாடல்களை, வேதம் மறுத்தெழுந்த படைப்பெருக்கை வென்றவை இவை” என்றான் துரியோதனன். சூழ்ந்திருந்த அவையினர் நகைத்தனர். துர்மதன் “கௌரவரின் வழிபடுதெய்வம் வாழ்கிறது அதில்” என்றான். துச்சலன் “எழுத்துக்களை வென்றன எண்கள்” என்றான். சிரிப்பொலிகள் அலையலையாக எழுந்தன.
விகர்ணன் அவர்களை திரும்பித்திரும்பி பார்த்தான். ஒவ்வொருவரிலிருந்தும் அவர்கள் அக்கணம் வரை வென்றுவென்று கடந்து வந்த பிறிதொருவர் எழுந்து நின்றது போல் வெறி கொண்டிருந்தன விழிகள். கள்மயக்கைவிட, காமமயக்கைவிட, வெற்றிமயக்கைவிட வல்லமை கொண்டது கீழ்மையின் பெருமயக்கு என்று விகர்ணன் எண்ணிக்கொண்டான். கைகளைக் கூப்பியபடி கண்ணீர் வழிய தன் இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.
ஏவலனை அழைத்து மேலும் மேலும் மது கொணரச்சொல்லி உண்டு மூக்கிலும் இதழோரத்திலும் கோழை வழிய வலப்பக்கமாகச் சரிந்து இறந்த உடலென கிடந்தான் குண்டாசி. பெருந்தசைகள் புடைத்தெழ கௌரவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி கூச்சலிட்டனர். சிலர் கைவீசி மெல்ல நடனமிட்டனர். சிலர் ஆடைகளைத் தூக்கி மேலே வீசிப்பற்றினர். அவன் திரும்பி பீஷ்மரை பார்த்தான். இருகைகளையும் கோத்தபடி கண்கள்மூடி அங்கில்லையென அவர் அமர்ந்திருந்தார். துரோணரும் கிருபரும் உதடுகளை இறுக்கி விழிகள் பொருளற்ற ஏதோ ஒன்றை வெறிக்க சரிந்திருந்தனர். பற்றற்றவர் போல் தாடியை நீவியபடி விதுரர் இருந்தார்.
அவர்கள் எதை நோக்கி ஆழ்ந்திருக்கிறார்கள்? எப்போதும் அறிந்த ஒன்றையா? என்றும் உடனிருக்கும் ஒன்றையா? அவர்கள் எதிர்கொண்டிராத தருணம். கற்றவையும் கனிந்தவையும் கேள்விக்குள்ளாகும் தருணம். அரசும் குடியும் வெறிகொண்டு எழுந்த அவையில் அவர்கள் செய்வதற்கொன்றுமில்லை போலும். ஆனால் எழுந்து உடைவாளெடுத்து தங்கள் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளலாம். அவைமுன் செத்துவிழலாம். ஆனால் கற்பாறை எனக் குளிர்ந்து காத்திருக்கிறார்கள். ஒருகணத்தில் உள்நடுக்கமென அவன் ஒன்றை உணர்ந்தான். அத்தனை பேரிலும் தோன்றி பேருருக்கொண்டு நின்றிருப்பது ஒன்றே. அது பெண்முன் தன்னைத் தருக்கி எழும் ஆண்மையின் சிறுமை.
“ஆம்!” என்றது ஒரு குரல். திடுக்கிட்டவன் போல் அவன் திரும்பிப்பார்க்க தன்னருகே எருமைத்தலையும் கல்லுடைந்த துண்டுபோன்ற விழிகளும் குளம்புகள் கொண்ட கால்களுமாக ஒருவன் நின்றிருப்பதை கண்டான். “யார்?” என்று அவன் கேட்டான் “எருமையன்” என்றான் அவன். அவன் சொல்லுடன் ஊனின் ஆவியெழுந்த மூச்சு கலந்திருந்தது. “எனது குலமூத்தார் முன்பு ஒரு படைக்களத்தில் இவளால் கொல்லப்பட்டார். நெஞ்சுபிளந்து இவள் காலடியில் விழுகையில் இப்புவி வாழும் அனைத்து ஆண்களும் என் குருதியில் ஒரு துளியேனும் கொள்க என்று அவர் சொன்னார். புடவியைப் பகடையாக்கி ஆடும் பிரம்மம் ஆம் என்றது அப்போது.”
நிரைவகுத்த வெண்பற்கள் தெரிய அவன் நகைத்தான். “இங்குள அனைவருக்கும் இடது செவியருகே நான் நின்றிருக்கிறேன். வலதுசெவியருகே அவர்களின் வழிபடுதெய்வங்களும் முன்னோரும் அவர்கள் கற்ற நூல்களின் உரையும் நால் வேதங்களும் ஆறு அறங்களும் நின்றுள்ளன. அத்தனை குரலுக்கும் என் குரல் நிகர். அணுகுகையில் அவற்றைவிட ஓர் அணுவிடை மிகுதி. எதிர்த்துப் போரிடுகையில் ஆயிரம் முறை பெரிது.”
“இல்லை! இல்லை!” என்று விகர்ணன் சொன்னான். “விலகு! இது ஏதோ உளமயக்கு. என் சித்தம் கொள்ளும் வெற்றுக்காட்சி.” அவன் நகைத்து “மாயமில்லை இளையோனே, இவ்வவையில் இறுதியாக நான் எழுந்தது உன்னருகேதான். அங்கு பார், பீஷ்மரின் அருகே செவியாட்டி நான் நின்றிருக்கிறேன். துரோணரின், கிருபரின், ஏன் விதுரரின் அருகிலே கூட” என்றான்.
விகர்ணன் அச்சத்துடன் நெஞ்சை அழுத்தியபடி நோக்கினான். அங்கிருந்த ஒவ்வொருவர் அருகேயும் கரிய நிழலென அரைக்கணம் தோன்றி, விழிமயக்கோ என விளையாடி, மீண்டும் விழிமின்ன எழுந்து பல்துலங்க உறுமி மறைந்த எருமையனை கண்டான். “காலம்தோறும் பெண்மை வென்று கொண்டிருக்கிறது. மண் என விரிந்து இங்கெழுந்தவை அனைத்தையும் அவள் உண்கிறாள். மழையெனப் பொழிந்து இங்குள்ள அனைத்தையும் புரக்கிறாள். முலையெனக்கனிந்து இங்குள அனைத்தையும் ஊட்டுகிறாள். வெல்பவள், கடக்க முடியாதவள், ஆக்கி அளித்து ஆடி அழிப்பவள். அவளுக்கு எதிராக நின்றிருக்க கல்வியோ வீரமோ தவமோ உதவுவதில்லை. மதவிழியும் இருளுடலும் கொம்பும் கொண்ட நானே அதற்கு உதவுபவன். என்னைத் தவிர்க்க இயலாது எவரும்.”
உரக்க நகைத்து “தவிர்த்தவன் ஆணெனப்படுவதில்லை. அவனை பேடி என்கின்றனர். கோழை என்கின்றனர். பெண்ணன் என்று பழிக்கின்றனர்” என்றான். “உண்மையில் அருகில் நானில்லாத ஆணை பெண்ணும் விரும்புவதில்லை. ஏனெனில் அவள் அவனிடம் நிகர் நின்று போரிலாடி வெல்ல வேண்டும். அவன் நெஞ்சில் கால்வைத்து தருக்கி எழவேண்டும். அவளுக்கு எதிர்நிலை நானே. நோக்குக!”
அவன் கைசுட்ட விகர்ணன் துரியோதனனின் அருகே பேருருக்கொண்டு நின்ற மகிஷனை கண்டான். அவ்வளவே உயரத்துடன் கர்ணனருகே நின்றிருந்தான் பிறிதொருவன். துச்சாதனனிடம் துர்மதனிடம் துச்சலனிடம் சுபாகுவிடம் சுஜாதனிடம். கௌரவர் ஒவ்வொருவர் அருகிலும். அவன் உரக்க நகைத்து அவன் தோளைத்தொட்டு “பார்! மூடா, இந்த அவையிலேயே நான் நிழல்பேருரு என அருகணைய அமர்ந்திருப்பவன் பீஷ்மன்!” என்றான். வளைந்த பெருங்கூரை முட்ட கரியமுகில்குவை போல் எழுந்து நின்றிருந்தான் பீஷ்மரின் துணைவனாகிய மாமகிடன்.
அவரது இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருப்பதை, உதடுகள் அழுந்தி அழுந்தி மீள்வதை, தாடை அசைவதை விகர்ணன் கண்டான். “ஆயிரம் நூல்கள், பல்லாயிரம் நெறிகள், வாழ்ந்த கணமெலாம் வழுத்திய மூதாதையரின் கனிந்த சொற்கள்… அங்கே துலாவில் அவர் அள்ளி அள்ளி வைப்பவை இப்புடவிக்கு நிகரானவை. அனைத்தையும் வென்று வென்று மேற்சென்று எழுந்து நின்றிருக்கிறேன்” என்றான் மகிஷன். வெறிகொண்டு அக்கனவை உதறி திமிறி “விலகு! விலகு!” என்றான் விகர்ணன்.
“எளிதில் அவ்வண்ணம் விலக இயலாது. ஏனெனில் நீயும் ஒரு ஆண்மகனே” என்றான் மாமயிடன். “எவ்வண்ணம் நான் வெல்வேன்? எந்தையே, உன்னைக்கடந்து எப்படி செல்வேன்?” என்றான் விகர்ணன். “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!”
“பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். “ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.”
“நான் அடிபணிகிறேன். உன் மைந்தனென்றாகிறேன்” என்றான் விகர்ணன். “மைந்தன் என்பதனால்தான் இக்கணம் வரை நீ சொல்லெடுக்கிறாய், மூடா” என்றான் மகிடன். விகர்ணனை சூழ்ந்து நிழல் அலைக்கொந்தளிப்பென சுழித்தது பன்னிரு பகடைக்களம். ஒவ்வொரு நிழலும் தன் கையில் ஒருவனை வைத்திருந்தது, களிப்பாவையென. அவனை கைமாற்றி வீசி விளையாடியது. அவன் தலையைச் சுண்டி தெறிக்கவைத்தது. கால்களைச் சுழற்றி வீசிப்பிடித்தது. “இரண்டென்றாகுக! ஆம், இரண்டென்றாகாது வெல்வதில்லை எவரும்” என்றான் மாமயிடன்.
[ 18 ]
அவை வாயிலில் வீரர்களின் குரல்கள் எழுந்தன. இரு காவலரை விலக்கி காமிகன் அங்கே தோன்றினான். துரியோதனன் உரத்த குரலில் “வருக! எங்கே அவள்?” என்றான். “அரசே, அரசி என்னுடன் வரவில்லை” என்றான் காமிகன். சினந்து “என்ன நிகழ்ந்ததென்று சொல், மூடா” என்றான் துரியோதனன். அஞ்சி துரத்தப்பட்டவன் போல் மூச்சிரைக்க அருகணைந்த காமிகன் “அரசே!” என்றான். சினத்துடன் பீடம் விட்டெழுந்து அவனை அணுகி “என்ன நிகழ்ந்தது? சொல்!” என்றான் துரியோதனன்.
“அரசே, அரசி இல்விலக்கி அமர்ந்திருக்கும் புறமாளிகையை என் படைவீரருடன் அணுகினேன்” என்றான் காமிகன். “அங்கே எதிர்ப்பிருக்கக்கூடும் என்றெண்ணி நூற்றுவரை என்னுடன் அழைத்துக்கொண்டேன். போரென்றால் அவ்வண்ணமே என்று உறுதிகொண்டே அங்கே சென்றேன்.”
வாயிலில் நின்றிருந்த செவிலியரிடம் “விலகுங்கள்! தடுத்து ஒரு சொல் சொல்பவர்கள் அக்கணமே வெட்டி வீழ்த்தப்படுவார்கள்” என்றேன். அவர்கள் அஞ்சி வழிவிட முதற்சுற்று வாயிலைக் கடந்து உள்ளே சென்றேன். என்னை நோக்கி கன்னங்கரிய பெண்ணொருத்தி வந்தாள். “யார் நீ?” என்று அவளை கேட்டேன். பற்கள் ஒளிர புன்னகைத்து அவள் “நான் ஐங்குழல்கொண்ட அரசி திரௌபதியின் அணுக்கத்தோழி மாயை” என்றாள். “எங்கே உன் தலைவி? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசாணை” என்றேன்.
மெல்ல இதழ்கோடச் சிரித்து “முடிந்தால் இழுத்துச் செல், மூடா!” என்றபோது அவளது விழிகள் சிம்மத்தின் விழிகள்போல் முத்துவெண்மை கொண்டன. நான் என் வாளை உருவி அவளை அணுகியபோது தரையிலிருந்து அவள் நிழல் எழுந்து பிறிதொரு மாயையாகியது. சுவரிலிருந்த நிழல் எழுந்து மற்றொரு மாயையாகியது. பறக்கும் கருங்குழலும் அனலென எரியும் விழிகளுமாக அவள் பெருகினாள். அவ்வறையின் அனைத்து வாயில்களிலிருந்தும் ஐம்புரிக்குழலும் திறந்த வாய்க்குள் எழுந்த கோரைப்பற்களும் சிம்மவிழிகளுமாக பெண்கள் வந்தனர். அறியாத பிடாரிகள். குருதி வேட்கை கொண்டு நெளியும் செவ்விதழ் பேய்கள். காளிகள். கூளிகள். சுவர்கள் கருமைகொண்டன. கன்னங்கரிய தூண்கள். கருமை நெளியும் தரை. இருள் இறுகி எழுந்த மாளிகை அது.
அரசே, அப்பெண்களைக் கடந்து செல்ல அஞ்சி நின்றேன். என்னை குளிர் சூழ்ந்தது. என் கையிலிருந்த படைக்கலங்கள் நழுவின. ஒருத்தி என் அருகே வந்து கைபற்றி “வருக!” என்றாள். என் படைவீரர்கள் அஞ்சி நின்றுவிட்டனர். நான் மட்டும் இருளுக்குள் கருமைக்குள் இன்மைக்குள்ளென புதைந்து புதைந்து உள்ளே சென்றேன். இருள் அள்ளி உருவாக்கிய மாளிகை இருளிலாடி நின்றது. இருளினாலான தூண்களுக்கு மேல் இருள் குவிந்த குவை மாடம். அங்கு இருண்ட அவைக்கூடம். அதன் நடுவே இருளுருகி எழுந்த பீடமொன்றில் அமர்ந்திருந்தாள் ஒருத்தி.
பதினாறு தடக்கைகளில் படைக்கலங்கள். ஐம்புரிக் குழற்பெருக்கு. அனல்விழிகள். இடியெனச் சூழ்ந்த குரலில் “எங்கு வந்தாய்?” என்றாள். “உன்னை இழுத்துச்சென்று என் அரசன் அவை முன் நிறுத்த வந்துள்ளேன். நான் அரசகாவலன்!” என்றேன். “சென்று சொல்க! தன் நெஞ்சு பிளந்து என் காலடியில் குருதி கொடுக்க உறுதிகொண்டவன் எவனோ அவன் எழுக என்று. ஒருதுளியேனும் எஞ்சாமல் மாமயிடனுக்கு தன்னை அளித்தவன் எவனோ அவன் வருக என்று” என்றாள். “ஆம், அன்னையே” என்றேன். தலைவணங்கி இங்கு மீண்டேன்.
துரியோதனன் “அவளது மாயங்கள் அளவிறந்தவை. அத்தனை உளமயக்குகளுக்கு முன்பும் நின்றிருப்பது விழிமூடாமை ஒன்றே. அஞ்சாதவனை ஆட்கொள்ளும் மாயமென்பது தேவரும் கந்தர்வரும் அறியாதது. தம்பியரே, உங்களில் எவர் சென்று அவளை இழுத்துவர முடியும்?” என்றான். அக்கணமே துச்சாதனன் கைகளைத் தூக்கி “நான் சென்று இழுத்துவருகிறேன், மூத்தவரே. அதற்குரியவன் நானே” என்றான்.
“ஆம், மாமயிடன் பேருருக்கொண்ட வடிவன் அவன்” என்றான் விகர்ணனை நெருங்கி நின்ற மகிடன். “அவன் என்னைக் கண்டதுமே ஆடியில் நோக்குபவன்போல் உணர்ந்து முகம் மலர்ந்தான். அரசனும் அவனுக்கு ஒரு படி கீழேதான்.” விகர்ணன் “ஏன்?” என்றான். “நூறுமுறை அணுகியே அரசனை வென்றேன். அவன் மடியிலிருந்து அக்கரிய மகளை எளிதில் அகற்ற என்னால் முடியவில்லை” என்றான் மகிடன். “வலத்தொடையில் அமர்ந்திருந்தது அது. தாமரைநூல் அது. ஆனால் விண்ணவரும் அசுரரும் இழுத்த வாசுகி போன்றது.”
அவைநிறைத்த பல்லாயிரவர் “ஆம், செல்க! செல்க! இழுத்துவருக அவளை” என்று கூவி ஆர்த்தனர். இருகைகளையும் விரித்து அலையலையென நடனமிட்டபடி “சென்று வருக! அவளை கொண்டு வருக!” என்றனர். புடைத்த தோள்களுடன் திமிறெழுந்த நடையுடன் துச்சாதனன் அவை விட்டு வெளியே சென்றான்.
[ 19 ]
துச்சாதனன் புறமாளிகையின் வாயிலுக்கு வந்தபோது அங்கு மாயை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். உடலெங்கும் தசைகள் எழுந்து இறுகி அமைந்து அலைபாய, மதம் நிறைந்த விழிகள் சேற்றில் குமிழிகளென உருள, அறியாத ஒழுக்கொன்றால் அடித்துவரப்பட்டவன் போல அணுகிய அவன் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்து “எங்கே அவள்? எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் இழிமகள்? அவளை அவைக்கு இழுத்துவரும்படி அரசரின் ஆணை” என்றான்.
மாயை தலைவணங்கி புன்னகைத்து “தங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்கள், இளவரசே” என்றாள். “ஆம், அந்தத் தன்னுணர்வு அவளுக்கிருந்தால் நன்று. தொழும்பி இருக்கவேண்டிய இடம் அரண்மனையல்ல, புறக்கூடம். அவள் ஆற்றவேண்டியது அடிமைப்பணி. அவையில் அதை அரசர் அவளுக்கு அறிவுறுத்துவார். எங்கே அவள்?” என்றான்.
“வருக!” என்று மாயை தலைவணங்கி அவனை அழைத்துச் சென்றாள். அவள் வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். வெண்மலர்களை தலையில் சூடி, சங்குவளையும் பாண்டிய நாட்டு வெண்முத்து கோத்த ஆரமும் அணிந்திருந்தாள். இனிய புன்னகையுடன் “இது நீங்கள் அரைமணிக்கிண்கிணி ஒலிப்ப ஆடிவளர்ந்த அரண்மனை என்றே கொள்க என்று அன்னை சொன்னாள். அங்கிருப்பவளும் தங்கள் அன்னையென்றே எண்ணுக!” என்றாள்.
துச்சாதனன் “விலகு! உனது மாயத்திற்கு அடிமைப்படுபவனல்ல நான். எந்த வலையையும் கிழித்துச் செல்லும் வண்டு. நூறு கைகளை தட்டி விலக்கியே என்னை இவ்வண்ணம் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே அவள்?” என்றான்.
வெண்சுவர்களும் பால்விழுதென எழுந்த தரையும் வெண்ணெய்த்திரள் போன்ற தூண்களும் நுரையென அலையடித்த திரைகளும் கொண்ட அந்த மாளிகை அஸ்தினபுரியில் அதற்குமுன் இருந்ததா என்று அவன் ஐயம் கொண்டான். பெண்கள் குருதிவிலக்குக்கு சென்றமைவது தாழ்ந்த கூரையும் கரிய தூண்களும் கொண்ட புறச்சாய்ப்புகளில்தான் என்று அறிந்திருந்தான். இது இவள் அளிக்கும் விழிமயக்கு. இதை வெல்லும் ஒரே வழி என் ஊன்விழிகளுக்கு அப்பால் உளவிழி இல்லாமல் ஆக்கிக் கொள்வதே. ஆம், என் ஊன் விழியால் மட்டுமே இதை பார்ப்பேன். எனது வெறுங்கால்களால் மட்டுமே இதன் மேல் நடப்பேன். வெறும் உயிரென்றும் உடலென்றும் மட்டுமே இங்கே நிறுத்துவேன். நான் விழியிழந்த தந்தையின் மைந்தன்.
தன்னை தான்வகுத்து தன்மேல் சுமத்தியபடி அவன் நடந்தான். இனிய இசை சூழ்ந்த அறை. அதன் முதல்வாயிலை திறந்தபோது அங்கு வெள்ளியலையென கீழாடையும் வெண்பட்டு மேலாடையும் அணிந்து தரையில் விரிக்கப்பட்ட ஈச்சை மரப்பாயில் அமர்ந்து தன்முன் சுண்ணத்தால் வரையப்பட்ட நாற்களத்தில் மலர்மொட்டுகளை வைத்து தன்னுடன் தான் ஆடிக்கொண்டிருந்தாள் திரௌபதி. காலடிகேட்டு அவள் விழிதிருப்பி அவனை நோக்கி இனிய புன்னகையுடன் “வருக மைந்தா, உனக்கென்றே காத்திருந்தேன்” என்றாள்.
உரத்த குரலில் “எழுக! இழிமகளே, உன்னை என் தமையன் அரசவைக்கு இழுத்து வர ஆணையிட்டிருக்கிறார்” என்றான். “இழுத்துச்செல்ல வேண்டியதில்லை. உன் விழைவுப்படி உடன் வரவே இருந்தேன்” என்றாள். எழுந்து தன் ஆடை திருத்தி “இந்த நாற்களத்தில் நீல நிற மொட்டாக உன்னை வைத்திருந்தேன். இதனுள் நீ நுழையும் வாயில் எப்போதும் திறந்திருந்தது” என்றாள்.
“நீ மாயம் காட்டுகிறாய். இவ்வுளமயக்குக்கு ஒருகணமும் ஆட்படேன். எழுக! இல்லையேல் உன் கூந்தல் பற்றிச் சுழற்றி இழுத்துச்சென்று அவை நிறுத்துவேன்” என்றான் துச்சாதனன். அவள் தன் குழலை அள்ளிச் சுழற்றி முடிந்து “அதற்குத் தேவையில்லை. உன்னுடன் வருவதற்கு விழைவு கொண்டிருக்கிறேன்” என்றாள் கனிந்த புன்னகையுடன். “ஏனெனில் இது உனது களம். இங்கு நின்றாடுவதற்காகவே என் உடலில் இருந்து பிரிந்தவன் நீ” என்றாள்.
நடுக்கு ஓடிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நெடுநாட்களுக்கு முன் கன்னியென காந்தாரத்தில் நான் இருந்தேன். அன்று என்னை கீழ்குலத்தாள் என்று துறந்து சென்றான் மகதத்து மன்னன். அச்செய்தி என்னை வந்தடைந்த கணம் என்னுள் ஊறிய ஒரு துளி நச்சின் கசப்பை அடிநாவில் உணர்ந்தேன். கற்றவற்றால் தேர்ந்தவற்றால் மூதன்னையர் கொடுத்தவற்றால் அதை இனிதென ஆக்கி உண்டு செரித்தேன். கடந்து கடந்து வந்து மறந்தபின் கண்ணிழந்தவனை கணவன் என்று அடைந்தபின் கருநிலவெழுந்த இரவொன்றில் என் கனவில் நீ முதல் முறையாக எழுந்தாய். கரிய உடல். கையில் கதாயுதம். கண்களில் மதமும் மூச்சில் ஊன்வாடையும். உன் கால்களில் குளம்புகளும் தலையில் நீண்டு வளைந்த கரிய கொம்புகளும் இருந்தன. அதன் பின் என்றும் என் உடலுக்குள் நீ வாழ்ந்தாய். உடல் விட்டு பிரிந்து இளமைந்தனாக எழுந்தாய். நீ காத்திருக்கிறாய் என்றறிந்தேன். உனக்கென மறுமுனையில் நானும் காத்திருந்தேன்.”
“போதும்! இனி ஒரு சொல் எடுக்காதே! என்னை பித்தனாக்க எண்ணுகிறாய்” என்றான் துச்சாதனன். “கும்பக்களத்தில் நின்று நீ ஆடிச் சோர்ந்து வீழும் அப்பன்னிரு பகடைக்களத்தில் சிம்மக்களத்தில் நின்றிருக்க நான் வந்தாக வேண்டும்” என்றபடி அவள் அவன் அருகே வந்தாள். சினந்து உரக்க “பித்தெழுந்துவிட்டதா உனக்கு? நீ பேசுவது என்னவென்றறிவாயா?” என்றான் துச்சாதனன். உரக்க நகைத்து “அச்சத்தில் அறிவிழந்துவிட்டாய். அல்லது இங்கு மதுவருந்தி களிகொண்டிருக்கிறாய். கீழ்மகளே, இவ்வண்ணமே நீ வந்து என் தமையனின் பகடைக்களத்தில் நிற்கவேண்டும்” என்று கூவியபடி பாய்ந்து குழலைப்பற்றினான்.
அவள் அன்னத்தின் இறகென முகில்கீற்றென நிலவொளியென எடையற்றிருந்தாள். தன் ஒற்றைக்கையால் நிலம் தொடாது தூக்கி இழுத்தபடி அவன் நடந்தான். ஏழு அடிவைத்து அம்மாளிகை விட்டு வெளிவந்ததுமே சித்தம் குழம்பி கொந்தளித்து கனவிலிருந்து விழித்துக்கொண்டான். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்ததுமே நிலையுறுதிகொண்டான். எளிய சாய்ப்புமாளிகையின் வாயிலுக்கு வெளியே சேடியரும் செவிலியரும் அஞ்சி உடல் நடுங்கி விதிர்த்து நோக்கி நின்றிருந்தனர். சிலர் நெஞ்சறைந்து கூவி அழுதனர். சிலர் கால்தளர்ந்து விழுந்தனர். காவலர் விறைத்த உடலோடும் இறுகப்பற்றிய படைக்கலங்களோடும் சிலைத்து நின்றிருந்தனர்.
அவள் மெல்லிய உதடசைவுகளுடன், பாதி சரிந்த விழிகளுடன், மெய்ப்பு கொண்டு மெல்ல அதிர்ந்த கரிய உடலுடன் அவன் கையில் இருந்தாள். அவள் குழல் பற்றி இழுத்து இடைநாழியினூடாக அவை நோக்கி நடந்தான். கால் தளர்ந்து அவன் கைவிசையால் விரல் இழுபட வந்தாள். உறுமியபடியும் உரக்க நகைத்தும் தரையில் காறித்துப்பியும் எடைஒலிக்கும் காலடிகளை எதிரொலி தொடர அவன் நடந்தான்.
[ 20 ]
அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த மேடை.
வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ!” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு! அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்? பிழையல்ல...” என்றது அக்குரல்.
கடும்சீற்றத்துடன் “விலகு!” என அவன் சொன்னான். உதடுகள் நெளிய கைவிரல்களை சுருட்டிப்பற்றி “விலகிச்செல்!” என்றான். “நான் எவரிடமிருந்தும் விலகமுடியாது, மைந்தா. கருப்பைக்குள் நுழைந்து வந்து உன்னைத் தொட்டவன் நான்.” விகர்ணன் மூச்சிரைத்தான். தலையை இல்லை இல்லை என்பதுபோல அசைத்தான். கடும் வலி உள்ளே எழுந்தது போல அவன் உடல் இறுகி நெளிந்தது. அருகிருந்த ஒருவனின் கன்னம் ஒளிகொண்டிருப்பதை கண்டான். அவன் விழிகளுக்குள் ஒளிப்புள்ளிகள். அவ்வொளி அவன் புன்னகைப்பதுபோல காட்டியது.
அப்பால் இன்னொருவனும் ஒளியை முகம் என கொண்டிருந்தான். அதற்கப்பால் இன்னொருவனும். அங்கிருந்தவர் அனைவரும் ஒளிஏற்றிருந்தனர். தூண்வளைவுகளில் திரைநெளிவுகளில் பீடங்களின் செதுக்கல்களில் எல்லாம் ஒளி எழுந்திருந்தது. “ஒளி!” என்றது குரல். “இப்போது நீ நோக்கலாம்... இது ஒளிதான்!” அவன் விழிதிருப்பி பார்த்தான். துச்சாதனன் திரௌபதியின் குழலைப்பற்றி இழுத்து அவைநடுவே வருவதை கண்டான். கனவிலிருப்பவள்போல் அவள் முகம் அமைதிகொண்டிருந்தது. விழிகள் நீள்மலரிதழென அரைப்பங்கு மூடியிருக்க கைகள் குழைந்து கிடந்தன. கால்கள் தளர்ந்து அவன் தூக்கியதனால் மட்டுமே முன்னகர்ந்தாள். அவள் அணிகளேதும் பூண்டிருக்கவில்லை. இடைக்குக் கீழே வெண்ணிற ஒற்றையாடையை முழங்கால்வரை அணிந்திருந்தாள். அதன் நீள்நுனியைச் சுற்றி முலைகளை மறைத்து தோள்சுற்றி செருகியிருந்தாள். அவள் வலத்தோளும் புயங்களும் கால்களும் வெளியே தெரிந்தன.
கரிய உடல். ஆனால் அது நிலவென ஒளிவிடுவதாக தோன்றியது. அவளில் இருந்தே அவ்வொளி எழுந்து பன்னிரு பகடைக்களக்கூடத்தை நிறைப்பது போல. அவள் மட்டுமே அங்கே இருப்பதுபோல. சூழ்ந்திருந்தவை நிழல்கள். இருளின் அலைகள். துச்சாதனன் கையை தளர்த்தியதும் அவள் துணிச்சுருள்போல உடல் தழைய விழப்போனாள். ஆனால் கால்களை ஊன்றி எழுந்து நின்று தன் மேலாடையை கைகளால் பற்றிக்கொண்டாள். நீள்குழல் அலைகளாகச் சரிந்து தோள்களைத் தழுவி நிலம்தொடுவதுபோல விழுந்தது.
அவள் வரவைக் கண்டதும் அதுவரை அரியணைமேடையில் கைகளை முட்டிக்கொண்டும் பற்களைநெரித்தும் ஓசையற்ற சொற்களை உமிழ்ந்தும் பித்தன்போல் நகைத்தும் நிலையழிந்து சுற்றிவந்துகொண்டிருந்த துரியோதனன் அசைவற்று நின்றான். இணைந்த இருகைகளும் இயல்பாக எழுந்து கூப்புபவைபோல் நெஞ்சில் படிந்தன. விகர்ணன் திகைப்புடன் நோக்கினான். கர்ணனும் கைகூப்பியிருப்பதாகத் தோன்றியது. விதுரர் கண்களை மூடி இமைப்பொருத்தில் நீர் ஊறிவழிய நெளியும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீஷ்மர் விழிமூடி ஊழ்கத்தில் மறைந்தவர் போலிருந்தார்.
துரியோதனன் முகம் கனிந்து உருகிக்கொண்டிருந்தது. அன்னையிடம் மன்றாட்டொன்றுடன் அணுகும் மைந்தனைப்போல. தணிந்தகுரலில் அவன் எதையோ கேட்கப்போவதுபோல விகர்ணன் எண்ணினான். அவன் இடத்தோள் சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. இடப்பக்கம் நின்றிருந்த ஏவலன் ஏதோ சொல்ல அவன் அதற்கு செவிகொடுப்பதுபோல் தோன்றியது. ஆனால் ஏவலன் திரௌபதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன.
துரியோதனன் தன்னிடம் பேசிய எவரையோ புறந்தள்ளுவதுபோல வலக்கையை வீசினான். அச்சொற்களை மறுப்பவன்போல முகம் சுளித்து தலையசைத்தான். இடப்பக்கம் பேசியவரின் சொற்களை ஏற்று சுட்டுவிரல்தூக்கி ஆம் என்று தலையசைத்தான். இருபக்கமும் காற்றடிக்கையில் புல்நுனியில் நின்று ததும்பும் நீர்த்துளி போல தத்தளித்தான்.
விகர்ணன் உடல் குளிரிலென சிலிர்த்தது. உண்மையிலேயே அக்களத்தில் அறியாத்தெய்வங்கள் நிறைந்துள்ளனவா? அவைதாம் அனைத்தையும் ஆட்டிவைக்கின்றனவா? அவன் தன் காதருகே ஏதேனும் குரலெழுகின்றதா என்று உளம்கூர்ந்தான். மூச்சொலிகள், ஆடை சரசரப்புகள். விழிதூக்கி மேலே நிறைந்திருந்த தேவர்களையும் தெய்வங்களையும் அசுரர்களையும் நாகங்களையும் நோக்கினான். தூரிகை தொட்டிழுத்த வெற்று வண்ணங்களாகவே அவை தெரிந்தன.
உரத்த குரலில் துச்சாதனன் “அஸ்தினபுரியின் அரசே, தங்கள் ஆணைப்படி இதோ இத்தொழும்பியை அவைக்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். அவள் இருபக்கமும் நிகர்கொண்டமைந்த கற்சிலை போல் நின்றாள். துரியோதனன் “நன்று!” என்றான். அவன் குரல் இடறியது. கயிறுமேல் நின்றிருக்கும் கழைக்கூத்தாடிபோல் அவன் உடல் தத்தளித்தது. “நன்று, இளையோனே” என அவன் மீண்டும் சொன்னான். என்ன சொல்வதென்றறியாமல் கர்ணனை பார்த்தான். கர்ணன் அவன் நிழலென அதே தத்தளிப்பை தானும் கொண்டிருந்தான்.
“நம் அரசவைத் தொழும்பி இவள். அதை இவளுக்கு உணர்த்தவேண்டும் என்றீர்கள், அரசே” என்றான் துச்சாதனன். “ஆம், அதை சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன். அவள் விழிகளை நோக்கி “பெண்ணே, உன் கொழுநன் உன்னை பணயம் வைத்து தோற்றிருக்கிறான். அவன் தொழும்பன் என உடன்பிறந்தாருடன் இதோ நின்றிருக்கிறான். நீ என் அவைத் தொழும்பி என்றானாய். அறிந்துகொள்!” என்றான்.
அவள் தலையைச் சொடுக்கி நிமிர்ந்தாள். தணிந்த குரலில் அவள் சொன்னது அவையினர் அனைவருக்கும் கேட்டது. “எப்பெண்ணும் தொழும்பி அல்ல.” புரியாதவனாக கர்ணனை நோக்கியபின் “ஏன்?” என்றான். உடனே சினமெழுந்து “என்ன உளறுகிறாய்? சித்தம் அழிந்துவிட்டாயா?” என்று கூவினான். “அலைகள் கடலை ஆள்கின்றன என்றுரைப்பவன் அறிவிலி” என்றாள் திரௌபதி. “நுண்சொல் பேசி விளையாட நீ அரசி அல்ல. நீ இழிகுலத்தாள். என் அவைத்தொழும்பி” என்று துரியோதனன் கைகளை நீட்டியபடி எவருடையதோ என்னும் குரலில் கூச்சலிட்டான். “நீ என் உடைமை. என் அடிமை நீ!”
“எவருக்கும் எவரும் முற்றுரிமைகொண்டவர்கள் அல்ல. இங்குள்ள அனைத்தும் தன் தனிவழிப்பயணத்தில் இருக்கின்றன. அஸ்தினபுரியின் அரசே, ஊர்ந்துசெல்லும் எறும்பைக்கூட நாம் உரிமைகொண்டாட முடியாதென்றறிக! வைத்தாடுவதற்கும் இழப்பதற்கும் தன் வாழ்வன்றி ஏதும் மானுடருக்கில்லை.” அவள் புன்னகையுடன் “நீ இன்று வைத்தாடி இழந்துகொண்டிருப்பதும் அதுவே” என்றாள்.
அச்சிரிப்பால் அவன் அனைத்து தளைகளையும் கடந்து எழுந்து பற்றிக்கொண்டான். “வாயை மூடு, இழிமகளே! என்னவென்று எண்ணினாய்? இது அஸ்தினபுரியின் சூதுமாளிகை. நீ என் அரியணைக்கருகே கால்மடித்து நெற்றியால் நிலம்தொட்டு வணங்கவேண்டிய அடிமை... வணங்கு!” அவள் மெல்ல சிரித்தது அவையெங்கும் கேட்டது. “வணங்கு! இல்லையேல் இப்போதே உன் தலையைச் சீவி எறிய ஆணையிடுவேன். வணங்கு கீழ்மகளே!” என துரியோதனன் பெருங்குரல் எழுப்பி தன் கைகளை ஓங்கி அறைந்தான்.
அவள் “பெண் என நான் எந்த ஆண் முன்னும் இன்றுவரை தலைவணங்கியதில்லை” என்றாள். “முலையூட்டுகையில் உளம்கனிந்து குனிந்து நோக்கியிருக்கிறேன். மைந்தருடன் ஆடும்போது அவர்களின் கால்களை சென்னிசூடியிருக்கிறேன். அவர்களை நெஞ்சில் ஏற்றி அணைத்திருக்கிறேன். ஒருபோதும் பணிந்ததில்லை.” அவள் அதை சொல்கிறாளா அல்லது பிறிதொரு தெய்வம் தன் செவிகளை அச்சொல்லால் நிறைக்கிறதா? அவள் உதடுகள் அசையவில்லை என்றே தோன்றியது. அம்முகம் தன் கனவிலிருந்து எழவுமில்லை.
“பணிந்தாகவேண்டும்! என்முன் நீ பணிந்தாகவேண்டும்...” என்றான் துரியோதனன். “இல்லையேல் உன் தலையை வெட்டி என் கால்களில் வைக்க ஆணையிடுவேன்.” அவள் ஏளனத்துடன் சிரிப்பது தோளசைவிலேயே தெரிந்தது. துரியோதனன் மேலும் வெறிகொண்டு “உன் ஐந்து கணவர்கள் தலைகளையும் வெட்டி என் காலடியில் வைப்பேன். அவர்களின் குருதியால் உன்னை நீராட்டுவேன்... பார்க்கிறாயா? தயங்குவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.
“அவர்கள் எனக்கு யார்?” என்று அவள் மேலும் விரிந்த சிரிப்புடன் சொன்னாள். “நீயும் எனக்கு என்ன பொருட்டு?” துரியோதனன் இரு கைகளும் செயலற்று விரிய, அஞ்சிய எருதுபோல உடல் சிலிர்க்க அசைவற்று நின்றான். விழிகள் உருள தலைதாழ்த்தினான். அவன் உடலில் தசைகள் இறுகி அலைநெளிந்தன. அவன் திருதராஷ்டிரர் போல விழியின்மை கொண்டுவிட்டதாக விகர்ணன் எண்ணினான். அவன் தலையை சற்று சரித்து மெல்ல உருட்டினான். இரு கைகளையும் பொருளின்றி தூக்கியசைத்தான். உதடுகளை மெல்வதுபோல அசைத்தான். தாடை இறுகி நெகிழ்ந்தது.
எவராலோ உந்தித்தள்ளப்பட்டதுபோல துரியோதனன் இரு அடி முன்னெடுத்து வைத்தான். தொண்டை நரம்புகள் புடைக்க விரல்சுட்டி துச்சாதனனை நோக்கி கூவினான். “அடேய், மூடா! அறிவில்லையா உனக்கு? அடேய், தொழும்பிக்கு ஏது மேலாடை? அகற்று அதை...!” விகர்ணன் “மூத்தவரே…” என்று கூவியபடி பாய்ந்து எழுந்தான். ஆனால் தன் உடலுக்குள் மட்டுமே தான் எழுந்ததை, உடல் உயிரிலாதது என குளிர்ந்து பீடத்தில் கிடப்பதை அவன் உணர்ந்தான். அவன் காதருகே ஒரு குரல் “நீ செய்வதற்கென்ன இதில்? நீ இங்கு இல்லை” என்றது.
அவன் மயிர்ப்பு கொண்ட உடலுடன் நெஞ்சைப்பற்றி “யார்?” என்றான். “உன் ஆழ்மனைத்தையும் அறிந்த தேவன்... நீ இங்கில்லை. நீ மறைந்துவிட்டாய்.” விகர்ணன் “இல்லை! இல்லை!” என திமிறி எழமுயன்றான். அரக்கில் முழுமையாகவே உடல்சிக்கியிருப்பது போலிருந்தது. அல்லது துயிலிலா? இது கனவா? அவ்வெண்ணமே இனிதாக இருந்தது. ஆம் கனவுதான். “ஆம், கனவே. கனவுமட்டுமே... துயில்க!” என்றது அக்குரல். அவன் நாகம் போல குளிர்ந்த வழவழப்புடன் காற்று தன்னை தழுவி மூடுவதை உணர்ந்தான். “துயில்க! இது கனவே. கனவைக் கண்டு விழித்துக்கொள்ள இன்னும் பொழுதுள்ளது. துயில்கொள்க!”
திரௌபதி தன் ஆடையைப் பற்றியபடி “சீ! விலகு, இழிமகனே. என்ன செய்யப்போகிறாய்? உன் அன்னையின் ஆடையையா களைகிறாய்?” என்றாள். துரியோதனன் தன் அரியணையில் சென்றமர்ந்து “அன்னையா? நீயா? நீ விலைமகள். ஆணொருவனின் குருதியை மட்டும் அறிந்தவளே குலப்பெண். நீ ஐவரை அணைந்தவள். ஐநூறுபேரை உளமறிந்திருப்பாய்...” என்று சிரித்தான். ஓங்கி தன் தொடையை அறைந்து “வா, வந்து அமர்ந்துகொள்... நீ தழுவிய ஆண்களில் ஒருவன் கூடுவதனால் இழுக்கென ஒன்றுமில்லை உனக்கு” என்றான்.
கர்ணன் “ஆம், ஐவருக்கும் துணைவி என்றால் ஒருவனுடன் உடலிருக்கையில் பிற நால்வருடனும் உளமிருக்குமா?” என்றான். துரியோதனன் வெறியுடன் சிரித்து “ஆம், எங்களுடனிருக்கையில் நீ அவர்களை நினைக்கலாம்...” என்றான். மேலும் சிரித்துக்கொந்தளித்து “இப்போது நான் சிரிக்கிறேன்... இழிமகளே. இதோ நான் சிரிக்கிறேன். பார்...! நான் சிரிக்கிறேன்” என்றான். சித்தமழிந்தவனைப்போல கண்ணீர்வார சிரித்து மேலாடையால் விழி துடைத்தான். “செல்...! அறிவிலியே, அவள் ஆடையை இழுத்துக்களை...!”
துச்சாதனன் நடுங்கும் உடலுடன் காலெடுத்துவைத்து அவளை நோக்கி கைநீட்ட ஆடைபற்றி அவள் விலகி அதே விரைவில் சுழன்று அவையை நோக்கி “இங்குள்ளோர் எவரும் இதற்கு மறுகுரல் எழுப்பவில்லையா? உங்கள் நெறிகளும் முறைகளும் பொய்யா? உங்கள் நூல்களெல்லாம் மொழியழிந்தனவா? உங்கள் அன்னையரும் தேவியரும் மகளிரும் நெறிமறந்தனரா?” என்றாள். “எங்கே உங்கள் மூதாதையர்? எங்கே உங்கள் அறவுருக்கொண்ட தெய்வங்கள்?”
கர்ணன் சினத்துடன் “இது அஸ்தினபுரியின் அரசனின் அவை, கீழ்மகளே. இங்கு அவன் ஆணைக்கு அப்பால் தெய்வமும் இல்லை” என்றான். “அரசாணையை அவையோர் அவைமுறைப்படி சொல்சூழலாம். அடிமை அதை ஆராயலாகாது. அவ்வுரிமையை நீ இழந்துவிட்டாய். செல், அவன் காலடியில் தலைவைத்து வணங்கு! அவன் ஆணையைச்சூடி அவையில் நில்! அதுவே உன் கடமை.”
“அரசியல் பிழைத்தால் கூற்றென அறம் எழுந்து வந்தாகவேண்டும் என்கின்றன உங்கள் நூல்கள். எங்கே அவை?” என்றாள் திரௌபதி. “நன்றென்றும் தீதென்றும் வகுத்து அமைந்த உங்கள் ஸ்மிருதிகள் எங்கே? ஒருவனுக்கு இழைக்கப்படும் மறம் உலகுக்கே என்று கூவிய உங்கள் சுருதிகள் எங்கே? மண்ணையும் மழையையும் ஆற்றையும் காட்டையும் புலரியையும் அந்தியையும் அன்னையென வழுத்திய உங்கள் வேதங்கள் எங்கே?” துரோணரை நோக்கி திரும்பி “அறநூல் கற்று அமைந்த ஆசிரியர்களே, சொல்க!” என்றாள்.
துரோணர் “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே” என்றார். “அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்கவேண்டும். கோலில்லா குடி மேய்ப்பனில்லா மந்தை. தனியொரு பிழைக்கென அரசன் ஏந்திய கோலை பழித்தால் இறுதியில் அவன் குடிகளுக்கே அது பேரிழப்பாகும்” என்றார். “அப்படியென்றால் இப்பிழை செய்ய அரசனுக்கு உரிமை உண்டு என்கிறீர்களா?” என்றாள். “உயிர்க்கொலை இன்றி வேளாண்மை நிகழவியலாது. மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது” என்றார் துரோணர்.
கிருபர் “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!” என்றார். “அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”
“சொல்லுங்கள், பீஷ்மரே! இந்த அவையில் உங்கள் சொல்லும் எழுந்தாகவேண்டும்...” என்று திரௌபதி கூவினாள். “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர். பல்லாயிரமாண்டுகாலம் அரசின்மை நின்றாடிய மண் இது. உன்னைப்போல் பல்லாயிரம் பெண்டிர் இழிவடைந்தனர். பற்பல பல்லாயிரம் மைந்தர் அன்னையர்முன் தலையறுந்து விழுந்தனர். குருதிகாயாமல் மண் கீழ்மைகொண்டது. அறமென்று எங்கும் ஏதுமிருக்கவில்லை. அவ்விருளில் இருந்து எழுந்து வந்த ஒளியை வேதமென்றனர். அதைத்திரட்டி நான்கென்று வகுத்தனர் தொல்வியாசர் முதலான முனிவர். இங்கு அனல்சூடி நின்றெரியும் அதை வாளேந்தி தலைகொடுத்து காத்து நிற்பதற்கென எழுந்ததே ஷத்ரியர் என்னும் குடி” என்றார் பீஷ்மர்.
“அரசெனும் அமைப்பு மானுடருக்கு இறைவல்லமைகள் அளித்த பெருங்கொடை” என்று பீஷ்மர் தொடர்ந்தார். “மணிமுடியும் செங்கோலும் அரியணையும் உருவாகி வந்தபின்னரே இங்கே அறமும் நெறியும் முறையும் உருவாயின. கன்னியர் கற்புடனும், வேதியர் சொல்லுடனும், கவிஞர் கனவுடனும், கைத்தொழிலோர் திறனுடனும் வாழத் தொடங்கினர். எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது. அதை விண்ணில் நிறுத்தும் அரசு என்னும் அமைப்பு அழிய நான் எந்நிலையிலும் ஒப்பமாட்டேன். இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே.”
“இங்கு நீங்கள் பிதாமகர் அல்லவா? குலமூத்தார் அல்லவா?” என்றாள் திரௌபதி. “இல்லை, அவையில் நான் அஸ்தினபுரியின் குடி மட்டுமே. அதற்கென வில்லெடுத்த போர்வீரன். தலைகொடுக்க சொல்லளித்தவன். அவன் என்னை வாளால் வெட்டி வேதநெருப்புக்கு அவியென்றாக்குவான் என்றால் அதுவே என் முழுமை என்று எண்ணவேண்டியவன்” என்றார் பீஷ்மர். “அரசனின் மந்தணஅறைக்குச் சென்று அவனுக்கு மூதாதையாகிறேன். அவன் கன்னத்தில் அறைந்து குழல்பற்றிச் சுழற்றி என் கால்களை மண்டியிட்டு வணங்கச்செய்கிறேன். அவன் ஆற்றியவற்றில் எவை பிழை, எவை பழி என அறிவுறுத்துகிறேன். ஆனால் ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்” என்றார் பீஷ்மர்.
“இதோ எழுந்து ஒரு சொல்லுரைத்து இவ்வரியணையை நான் மறுக்கலாகும். அதன்பின் அஸ்தினபுரிக்காக நான் வில்லேந்த முடியாது. இன்று அஸ்தினபுரி சிம்மங்களின் காட்டில் கன்றை ஈன்ற பசு என சூழப்பட்டுள்ளது. அசுரர்களும், நிஷாதர்களும், புத்தரசுகளும் அதன் குருதியை விழையும் தருணம் இது” என்று பீஷ்மர் சொன்னார். “இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு இது. பெண்ணே, வாழ்நாள் முழுக்க இந்நகரையும் இதன் அரசகுடியையும் காப்பேன் என்று என் தந்தைக்கு சொல்லளித்தவன் நான். இக்கணம் வரை அதன்பொருட்டே உயிர்தரித்தவன். எந்நிலையிலும் அதை கைவிடவும் மாட்டேன்.”
துச்சாதனனை நோக்கி கைசுட்டி “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?” என்றாள் திரௌபதி. “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள்” என்று பீஷ்மர் சொன்னார். “அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்.”
உணர்வெழுச்சியுடன் பீஷ்மர் தொடர்ந்தார் “ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம். ஆனால் குட்டிகளுடன் மான்கணத்தைக் கொன்றுதின்றே சிம்மம் காட்டில் முடிசூடி ஆள்கிறது. பலநூறு குலநெறிகளின் மேல்தான் அரியணையின் கால்கள் அமைந்துள்ளன.” அவர் குரல் சற்றே நடுக்கத்துடன் ஒலித்தது. “பெருந்தந்தையென என் உள்ளம் சொல்கிறது, இது அறப்பிழை. ஆனால் ஷத்ரியன் என நின்றிருக்கையில் என் நாட்டின் எந்த ஒரு பெண்ணும் எனக்கு நிகரே. என் கடன் இங்குள்ள குடிகள் அனைவருக்கும்தான். அரசகுடிப்பிறந்தாள் என்பதற்காக உனக்கென எழுந்து அவர்களை நான் கைவிடலாகாது.”
“ஆம், இது பெரும்பழியே. ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்” என்றார் பீஷ்மர். தன் நெஞ்சைத்தொட்டு உரத்தகுரலில் “இதன்பொருட்டு எனக்குப் பழிசூழ்வதென்றால் ஆகுக! இந்நகருக்கும் குடிகளுக்குமென களத்தில் தலை அளிப்பதற்கு சொல்கொடுத்தவன் நான். என் புகழையும் மறுமையையும் உடனளிக்கிறேன். ஆம், இதோ அளிக்கிறேன்” என்று கைதூக்கினார்.
பெருமூச்சுடன் “அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே” என்றார் துரோணர். “ஆற்றலுள்ளோர் அதை மீறலாம். அவ்வழியே அனைவரும் மீறுவர். அதன் பின் அரசென்பதே இருக்காது. நெறியிலமைகிறது அரசு என்று உணர்க!” கிருபர் “ஆம், அதனால்தான் அங்கே உன் கொழுநர் ஐவரும் வெறுமனே நின்றிருக்கிறார்கள்” என்றார்.
“அவர்களும் உங்களவரே” என்று பாஞ்சாலி சொன்னாள். “நான் அவர்களில் ஒருத்தி அல்ல. உங்கள் அரசும் கொடியும் முடியும் எனக்குரியவையும் அல்ல. நான் எவருக்கும் குடியல்ல.” உரத்த குரலெழுப்பியபோது அவள் பேருருக்கொண்டதுபோல் தோன்றியது. அவள் நின்றிருந்த மையம் அவள் குரலைப்பெருக்கி அவைமேல் பொழிந்தது. “நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”
அச்சொல்கேட்டு சீறி எழுந்து கூவினான் துரியோதனன் “என்ன செய்கிறாய் அங்கே? அறிவிலியே, அவள் மேலாடையைக் களைந்து இழுத்துவந்து என் அவைமுன் அமர்த்து!” துச்சாதனன் விலங்கென உறுமி தன் சினத்தைப் பெருக்கி கைகளை ஓங்கி அறைந்துகொண்டு அவளை நெருங்க “அப்பால் செல்...! அணுகாதே!” என அவள் தன் ஆடையைப்பற்றியபடி கூவினாள். “உன் அன்னையின் பெயரால் சொல்கிறேன், அணுகாதே!” துரியோதனன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், அன்னைதான். முதல்விடியலில் அன்னை துர்க்கையின் அணியிலாக்கோலம் காண்பதும் வழக்கமல்லவா?” என்றான்.
“இனி ஒருபோதும் உனக்கு அன்னை மடி என ஒன்று எஞ்சாது, மூடா!” என்றாள் திரௌபதி விலகிச்சென்றபடி. துச்சாதனன் “வாயை மூடு. தொழும்பியர் பேச அவை கூடிக் கேட்கும் இழிநிலை இன்னும் அஸ்தினபுரிக்கு வரவில்லை” என்று கூவியபடி அவள் மேலாடையைப்பற்றி இழுத்தான். அவள் விலகிச்சுழல அவள் ஆடை தோளிலிருந்து சரிந்தது. முலைகள் மேல் அதை அள்ளிப்பற்றி உடல்குறுக்கினாள்.
துரியோதனன் தன் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். விழிகள் நீரணிந்து முகம் கடும் வலியிலென சுளிக்க அச்சிரிப்பு கெடுதெய்வம் வெறிகொண்டு வந்தேறியதுபோல் தோன்றியது. கர்ணனும் அச்சிரிப்பில் இணைந்தான். கௌரவர்கள் உடன்எழுந்து நகைத்தனர். அந்த பகடைக்கூடமே பெருங்குரல் எடுத்து சிரித்து முழங்கியது. எதிரொலியின் அலைகளாக தெய்வங்களின் சிரிப்பொலி எழுந்து இணைந்துகொண்டது.
அனைத்துச் சாளரங்களும் மூடிக்கொண்டதுபோல அவை இருளத் தொடங்கியது. கரிய காகங்கள் நிழலசைவென உள்ளே நுழைந்து அவைமூடிப்பறப்பதுபோல ஓசை கேட்டது. அவற்றின் சிறகசைவின் காற்று காதுகளை தொட்டது. குளிர் ஏறிவந்தது. தூண்கள் சிலிர்த்தன. விண்நிறைத்திருந்த அத்தனை தேவர்களும் விழிகொண்டனர். அசுரர்களின் இளிப்புகள் பெரிதாயின. அவர்களின் கைகளில் உகிர்கள் எழுந்தன. கோரைப்பற்கள் கூர்கொண்டு வளர்ந்தன. இருளில் அவையமர்ந்த எவர் முகமும் தெரியாமலாயிற்று. உப்பென மின்னும் விழிகள் மட்டுமே சூழ்ந்த வட்டமென்றாயிற்று பன்னிரு பகடைக்களம்.
சினந்து திரும்பும் பிடியானையின் உறுமல் போல ஒலியெழுப்பியபடி திரௌபதியின் தலை எழுந்ததை விகர்ணன் கண்டான். அவள் குரல் எழுந்து எரிகுளத்து அவி என தழலாடியது. “எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” என்று கூவியபடி இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி கண்மூடி நின்றாள்.
அவள் மேலாடை அவிழ்ந்து துச்சாதனனின் கைக்குவர அவிழ்ந்த முடிப்பெருக்கால் பாதிமறைந்த தோளும் முலைகளும் தெரியத் தொடங்கிய கணத்தில் உப்பரிகைமேடையில் வெண்பட்டுத் திரையை விலக்கியபடி லட்சுமணை தோன்றினாள். “அன்னையே!” என்று கூவியபடி படிகளில் இறங்கி ஓடிவந்தாள். துச்சாதனன் மேலே நோக்கி திகைத்தான்.
லட்சுமணையின் அருகே எழுந்த அசலை “யாதவா! இறையோனே!” என்று கூவியபடி தன் மேலாடையை எடுத்துச் சுருட்டி திரௌபதியின் மேல் வீசினாள். அவள்தோள்மேல் வெண்பறவைபோல வந்தமைந்து நழுவி அலையலையாகவிரிந்து உடல்மூடியது அவ்வாடை. இரு உப்பரிகைவட்டங்களும் முகிலுக்குள் இடியென முழங்கின. “யாதவனே! இளையோனே! கரியோனே! கார்வண்ணனே!” என்று அலறியபடியும் அரற்றியபடியும் பெண்கள் தங்கள் மேலாடைகளை எடுத்து திரௌபதியின் மேல் வீசினர். ஒன்றன் மேல் ஒன்றென மரத்தில் வந்து கூடும் வண்ணப்பறவைக்கூட்டம்போல ஆடைகள் அவள் மேல் பொழிந்து மூடின. அனைத்து ஆடைகளையும் சூடியவளாக அவள் கைகளை விரித்து நின்றாள்.
துரியோதனன் அரியணை விட்டெழுந்து ஓடிச்சென்று இரு கைகளையும் விரித்து தன் புதல்வியை மறித்து “கிருஷ்ணை, நில்! எங்கே செல்கிறாய்?” என்றான். அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் அவள் உறுமினாள் “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்.
அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள். விகர்ணன் விழிநீர் சோர கைகூப்பினான்.
[ 21 ]
மரத்தரையில் காலடிகள் உரசி ஒலிக்க மாயை பன்னிரு பகடைக்களத்திற்குள் புகுந்தாள். அரசியை நோக்கி கைவிரித்தபடி ஓடிவந்து அவளருகே நின்ற அசலையை பிடித்துத்தள்ளிவிட்டு அள்ளி அணைத்துக்கொண்டாள். அவள் ஆடையை திருத்தியபின் நெய்பட்ட நெருப்பெனச் சீறி எழுந்து கூந்தலைச் சுழற்றிமுடிந்து துரியோதனனை நோக்கி “இங்கே அரசன் என அமர்ந்த சிறியோன் எவன்? நானில்லாதபோது அரசியை இழுத்துவந்து அவைநிறுத்திய பேதை எவன்? அறிக, உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்துவிட்டீர்கள்! உங்கள் குலங்களின் வேரில் நச்சுபெய்துவிட்டீர்கள்” என்றாள்.
துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது வஞ்சம் நீர் என நிறைந்த கிருஷ்ணையின் விழிகளை சந்தித்தான். அஞ்சி அதிர்ந்து தலைதிருப்பினான். அவன் கண்களை நோக்கிய கர்ணனும் பதற்றமாக கைகளை கோத்தான். அவையமர்ந்த கௌரவர் துரியோதனனின் நிலையழிவைக் கண்டு ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவை நிறைத்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் மெல்ல மண்ணில் வந்து விழுந்தனர். அதுவரை இருந்த கனவுநிலையின் அத்தனை கீழ்மைகளையும் உளநடுக்குடன் உணர்ந்தனர். தங்கள் உள்ளத்தை எண்ணி நாணி பிறிதெவரையும் நோக்காது விழிசரித்தனர்.
சினந்த நாகங்கள் விழியொளிரச் சுருண்டு அமைந்தன. தெய்வங்கள் படைக்கலங்களுடன் வண்ணங்களில் படிந்து மறைந்தன. விழிகளில் இளிப்புடன் அசுரர் கைகள் பெருக நிறைந்தனர். படைக்களத்தைச் சூழ்ந்த அவை மெல்ல இயல்படைந்தது. எங்கும் நீள்மூச்சுக்கள் எழுந்தன. பலர் மாயையை நோக்காது விழிதிருப்பிக்கொண்டனர். சிலர் கண்களை ஆடைகளால் மூடிக்கொண்டனர். சிலர் விழிநீர் வார நெஞ்சைப் பற்றிக்கொண்டு அமர்ந்தனர்.
பெருங்குரலில் மாயை சொன்னாள் “என்னவென்று எண்ணினீர்கள், இழிதிரளே? அன்னையின் கனிவே அவள் பணிவு. அன்பினால் ஆற்றலிழப்பவள் அவள். நீங்கள் வென்றுதருக்கியது உங்களுக்கு ஊட்டப்பட்ட முலைப்பாலை. கொன்று உண்டது கொல்லையில் நின்றிருந்த காமதேனுவை... நன்று, இனி நிகழ்பவை யாவும் நீங்கள் இயற்றியதே. அவ்வாறே ஆகுக!”
துரியோதனன் மீண்டும் கையெடுத்து ஏதோ சொல்ல முயல அவன் இதழ்கள் மட்டும் அசைந்தன. கிருஷ்ணை திரௌபதியை தோள்பற்றிச் சரிந்து கண்ணீருடன் அவள் மடியில் தலைசாய்த்தாள். அசலை அரசியின் கைகளைப்பிடித்து தூக்கி உள்ளே கொண்டுசெல்ல முயன்றாள். திரௌபதி இரும்புச்சிலை என எடைகொண்டிருந்தாள். கௌரவர்களின் பிற அரசியர் அவளைத் தூக்கி எடுத்து அழைத்துச்சென்றனர். அவர்கள் நடுவே பலவண்ண ஆடைகளால் உடல் மூடி திரௌபதி தலைநிமிர்ந்து நடந்துசென்றாள். அவள் நீள்குழல் அவிழ்ந்து அலையலையென இறங்கி நெளிந்தது.
அவை நின்ற சூதன் ஒருவன் வெறியாட்டெழுந்தவன்போல “நகருலா செல்லும் கொற்றவை! அனல்கொண்ட கரியதிருமுகம். அனல்நாவென செம்பஞ்சுப் பாதங்கள். அனலுண்ட கரியென நீள்குழல் அலை. அன்னையே, இதோ அடிபணிந்து நின்றிருக்கின்றன ஆயிரம் தலைகள்” என்று கூவினான். தன் நெஞ்சையே முழவாக்கி அறைந்து “தலைமேல் நடந்து செல்கின்றாய்! தாயே, ஆணவங்கள் மேல் நடக்கின்றாய்! ஆறாவஞ்சங்கள் மேல் நடக்கின்றாய்! காளீ, கருங்காளீ, கூளீ, கூத்திடும் தேவீ, எங்கள் விழைவுகள் மேல் நடக்கின்றாய்! வினைப்பெருக்குமேல் நடக்கின்றாய்!” என்றான். உடல் சிலிர்க்க அங்கிருந்தோர் கைகூப்பினர். விகர்ணன் கண்ணீர் உதிர “அன்னையே!” என்றான்.
பன்னிரு பகடைக்களம் திடுக்கிட்டு அதிர பீமன் தன் பெருங்கைகளை ஓங்கியறைந்தபடி முன்வந்தான். “என் மூதாதையர் அமர்ந்த அரியணை இது என்று இக்கணம் வரை பணிந்தேன். அரசென்றும் நெறியென்றும் குலமென்றும் எண்ணி வீண்தசைக்குவை என இங்கு நின்றிருந்தேன். இனியும் என்னால் இயலாது” என்று கூவியபடி அவைநடுவே வந்தான். “நான் எவருக்கும் குடியல்ல. எந்தக் குலத்திற்கும் மைந்தனல்ல. எவருக்கும் குருதிமுறையும் அல்ல. நான் காட்டாளன். முதல்வேழம் ஆளும் காட்டிலிருந்து என் நெறிகளை கற்றவன்... ஆம், இங்குள்ள ஒவ்வொருவரைவிடவும் அறமும் அளியும் கொண்டவன் நான்...”
“இது தொல்புகழ் அஸ்தினபுரி. யயாதியின் ஹஸ்தியின் குருவின் நகரம்...” என அவன் குரலெழுப்பினான். “எங்கே உங்கள் குலம்? தேவர்களுக்கு அவியளிக்கிறீர்கள். மூடர்களே, மூதாதையருக்கு அன்னமும் நீரும் அளிக்கிறீர்கள். உங்களில் எளியோருக்கு அளிக்க உங்களிடம் ஒன்றுமில்லையா? உங்கள் முன் விழிநீருடன் நின்றிருப்பவர்களுக்குச் சொல்ல அறம் ஒன்றும் இல்லையா? உங்கள் தெய்வங்களை கல்லில் இருந்து எழுப்பும் கனல் எங்கே?” கைசுருட்டி தூக்கி ஓங்கி துப்பினான். “இதோ, காறி உமிழ்கிறேன். இங்கு அமர்ந்த அரசனை, இந்த அவையை, இங்கு சூழ்ந்த மூத்தோரை, இயலாது அமர்ந்திருந்த சான்றோரை, இக்காற்றில் நிறைந்த மூதாதையரை, இவ்வானில் எழுந்த தெய்வங்களை என் இடக்காலால் உதைத்துத் தள்ளுகிறேன். இவர்கள் பேணும் வேதத்தின் முதல் எதிரி நான்!”
“இதோ, பீஷ்மபிதாமகர் முகத்தில் துரோணரின் கிருபரின் விதுரரின் முகத்தில் வழியட்டும் என் மிச்சில்!” தூ தூ என நாற்புறமும் உமிழ்ந்தான். காலால் நிலத்தை ஓங்கி மிதித்தான். அவையிலிருந்து ஊமை முழக்கமென ஓர் ஒலி எழுந்தது. “ஆம், இதோ நின்றிருக்கிறேன். ஆண்மையிருந்தால் ஆணையிட்டு என் தலைகொய்யுங்கள். உங்கள் கீழ்மைமண்டிய அரசவையில் சொல்லறியா காட்டாளனாக குருதிபெருக்கி மடிந்துவிழுகிறேன். அதுவே என் மீட்பு” என்றான் பீமன்.
துரியோதனனை நோக்கி திரும்பி “அரியணை அமர்ந்த சிறுமதியனே, உன் அவைக்கு வந்த ஒற்றை ஒருபெண்ணின் மதிப்பைக் காக்க உன்னால் முடியாதென்றால் உன் கோலுக்கு என்ன பொருள்? அதற்கும் இடுகாடு காப்பவனின் தடிக்கும் என்ன வேறுபாடு?” என்றான். “இவ்வவையில் இழிவுகொண்டு நின்றவள் உன் குடியின் ஒவ்வொரு பெண்ணும்தான். அவள் சிறுமைசூடி நின்றது உன் குடியின் ஒவ்வொரு ஆணும்தான். இழிந்தாய். மண்கிழித்து இருள் கடந்து சென்று அழிந்தாய். இதற்குமேல் என மானுடன் அடைவதற்கொன்றுமில்லை கீழ்மகனே!”
இருகைகளும் தசைதிமிறி அசைய விரித்து ஆட்டி வெறிகொண்ட முகத்தில் நரம்புகள் புடைத்து நெளிய அவன் முழங்கினான் “இதோ அறைகூவுகிறேன்! இனி நீங்கள் சொல்லும் எச்சொல்லின்பொருட்டும் நான் கட்டுப்படப்போவதில்லை. உங்கள் எந்த நூலும் எவ்வறமும் எனக்கொரு பொருட்டல்ல. எங்கும் காட்டாளனாக குருதிசூடி நின்றிருக்கவே முனைவேன். ஊன்கிழித்துண்ணும் விலங்கென ஆனாலும் உங்கள் ஒவ்வொருவரை விடவும் மேலானவன் நான்.”
அவை நோக்கி திரும்பி பீமன் சொன்னான் “அவை கூடியமர்ந்து நீங்கள் கொண்ட கீழ்மைக்காக எரிக இந்நகரம்! உங்கள் உட்கரந்த இருளுக்காக இதன் குலக்கொழுந்துகள் குருதி பெருகி மண்தழுவுக! உங்களைப் பெற்றமைக்காக இதன் குலமகள்களும் அன்னையரும் மங்கலமிழந்து சுருள்க! இழிசினரே, இப்பெரும்பழியை நூறாண்டுகாலம் சுடுகண்ணீர்கொண்டு அழிப்பீர்கள் நீங்கள்!” தெய்வக்குரல் என அவன் ஓசை அவைசூழ்ந்தது. “அறிக, மானுடனின் பிழைகளை பொறுக்கின்றன காட்டுதெய்வங்கள். அவன் சிறுமையை அவை ஏற்பதேயில்லை.”
நெஞ்சு விம்ம அவன் குரல்தளர்ந்தான். “ஆம், நெட்டைமரங்களென நின்றோம் நானும் என் உடன்குருதியினரும். அதன்பொருட்டு நாங்களும் சிறுமைகொள்வோம். பெண்ணுக்குப் பிழைஇழைத்தோர் பிள்ளைத்துயர் கொண்டழியவேண்டும் என்பதே முறை. விண்ணமர்ந்த தெய்வங்களே, இதோ எளிய காட்டாளனின் ஆணை! எங்கள் தலைமேல் பொழியட்டும் இத்தருணத்தின் பழி! கண்ணீர் அனலென எரிய எஞ்சும் நாளெல்லாம் நீறிப்புகைந்து நாங்கள் இதை ஈடுகட்டுகிறோம். எங்கள் குலம் இதன்பொருட்டு விழிநீர்பெய்து வீணென்றாகி அழிக!” நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான் பீமன். அவ்வோசையில் அவைச்சுவர்கள் அதிர்ந்தன. “ஆணை! இது ஆணை! அழிக! அழிக! அழிக!”
நடுங்கிய குரலில் “மூத்தவரே…” என்று நகுலன் அழைத்தான். அக்குரல் கேட்டு வெறியுடன் தருமனை நோக்கி திரும்பினான் பீமன். “எங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் என்றாகி நின்ற அப்பேதை? சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றசொல்லுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”
அர்ஜுனன் “மூத்தவரே, நாம் அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்ட இளையோர். நம் வாழ்க்கைப்பொருள் அது” என்றான். “மூடா! மண்ணிலெழுந்த எந்தச் சொல் விண்ணை தளையிடும்? இங்கு நிகழும் வாழ்க்கையின் நெறிகளனைத்தும் விண்ணில் உறைகின்றன என்றறியாதவனா நீ? குலம், வஞ்சம், விழைவு, தெய்வம் என எதன்பொருட்டும் மாறுவதில்லை இவ்வனைத்தின் மையமென நின்றிருக்கும் பெருநெறி என்று உணராததா உன் மெய்மை? சொல்லிச்சொல்லி வேதம் சென்றடைந்த உச்சம் அது என்றறியாமலா நூல்கற்றாய்?”
நரம்புகள் புடைத்து அதிர கொடிபின்னிய அடிமரம் போன்ற உடல் நின்று துடிக்க பீமன் கூவினான் “எப்படி என் குலமகளை சூதில் வைத்தாடினான்? இழிமகன். கல்லாக் களிமகனும் இழைக்கத் துணியாத கீழ்மைசெய்த வீணன்!” அவன் பற்கள் அரவையாழியில் சிக்கிய கூழாங்கற்கள் என உரசி ஓசையிட்டன. “சூதர்மனைகளில் தொண்டு மகளிருண்டு. சூதில் பணயமென்று அவர்களையும் வைப்பதில்லை எவரும். எப்படி குலமகளை வைத்தாடினான் முழுமூடன்?”
அவனில் இருந்து தெய்வங்கள் என சொற்களெழுந்தன. “இங்குள அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதை அறிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதை சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும் மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் கற்றதுதான் என்ன?” தருணங்களைத் தொட்டு தான் கனிந்து மொழியென்றாகிச் சொட்டும் முடிவிலியை அவன் சொற்களில் கேட்டனர் அவையோர். “மானுடர் எவருக்கும் மானுடர் முற்றுரிமை அல்ல என்றறியாதவன் தன்னுள் நிறைந்துள்ள ஒன்றின் கட்டின்மையை எப்போதேனும் உணர்ந்திருப்பானா? விடுதலை விடுதலை என ஏங்கும் அதன் குரலை ஒருகணமேனும் கேட்டிருப்பானா?”
பீமன் தன் உடலில் இருந்து எழுந்து வளர்ந்தபடியே செல்வதுபோல் தெரிந்தது. அவன் உடலில் இருந்து நூறுநூறு கைகள் எழுந்து விரிந்தன. அவன் மேல் தழலென ஒளி சிவந்து எழுந்தது. “பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!” கைகளை ஓங்கி அறைந்தான். “அட, காட்டுப்புலி அறியும் இதை. கன்னிவிலங்கையும் அன்னைவிலங்கையும் அது அணுகாது அகலும். எந்த அறிவின்மை மேலெழுந்து தருக்கி நின்றிருக்கிறான் இவன்?”
கொந்தளிப்புடன் கைசுருட்டி அவன் கூவினான் “அவன் ஆடியது எதை என்று நான் நன்கறிவேன். தன் ஆணவத்தை வைத்தாடினான். தன் ஆழத்து நஞ்சைத் திரட்டி அவைமுன் வைத்து ஆடினான்.” மூச்சிரைக்க பீமன் தருமனை நோக்கி சென்றான். “உள்ளம் கரந்த நஞ்சை வெல்லவில்லை சித்தம் சுரந்த அமுது என்றால் இவன் எவ்வகையில் அறமறிந்தவன்? எந்தக் கையால் என் குலமகளை அவைமுன் வைத்தான்? அந்தக் கையை வந்து பற்றவில்லையா இவன் அறிந்த நூலோரும் நெறியோரும் முனிவரும் தவத்தோரும்?”
அனைத்துக் கட்டுகளையும் அறுத்து மதவேழமென உடல் ஆட தருமனை நோக்கி கைநீட்டியபடி பீமன் சென்றான். “அவியிட்டு அனல்புரக்கும் கை தூயதென்றால் அந்நெறிப்படி இந்தக்கை இழிந்ததிலும் இழிந்தது. இதை இன்றே எரித்தழிப்பதே முறை. இளையோனே, அனல்கொண்டு வா! இது என் ஆணை!”
தருமன் அச்சொற்கள் எதையும் அறியாதவர்போல நின்றார். அறியாது நகுலனும் சகதேவனும் வந்து அவன் இருபக்கமும் நிற்க அர்ஜுனனின் கை நீண்டு பீமனை தடுத்தது. “மூத்தவரே…” என அவன் கண்ணீருடன் அழைத்தான். “வேண்டாம்! சிறுமைக்குமுன் என்றும் எழுந்து பேருருக்கொள்பவராகவே உங்களை அறிந்துள்ளேன். என் நெஞ்சில் நிகரிலா மாவீரனாக அமர்ந்த தெய்வம் நீங்கள். நீங்களும் பீடம் விட்டிறங்கிவிடாதீர்கள்! தந்தையே, உங்கள் காலடியில் சிறுவனாக நின்று கோருகிறேன். அருளுங்கள்!”
பீமனின் உடற்தசைகள் தளர்ந்தன. உறுமியபடி அவன் திரும்பிக்கொண்டான். “உங்கள் பெருமையால் அனைத்தையும் அளவிடுகிறீர்கள், மூத்தவரே. நானோ என் சிறுமையால் இவற்றை புரிந்துகொள்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு அவைநின்று இழிவுகொண்டவள் நம் குலக்கொடி மட்டுமல்ல. முலைசூடி கருவறைசுமந்து வந்து நின்றிருக்கும் பெண்ணெனும் தெய்வமும்தான்... சிறுமைசெய்து சிறுமைசூடியவர்கள் அவனோ இந்த அவையோ மட்டுமல்ல. நானும்தான். மூத்தவரே, எத்தனை மஞ்சங்களில் இழிமகன் என நின்றிருப்பேன்! எத்தனை பெண்டிரின் விழிநீரைக் கடந்து வந்திருப்பேன்! எத்தனை சொற்கள்! எத்தனை இழிபாவனைகள்! ஆணென்று உணர்வதே ஓர் இழிவு, மூத்தவரே. முலைசூடும் பெற்றி இல்லாத கீழ்பிறப்பின் வஞ்சம் அது.”
அர்ஜுனன் ஒருகண் கலங்கி வழிய தலையை அசைத்தான். “இச்சிறுமை அனைத்தையும் சூடி நின்றிருக்கும் பழி படைத்தவன் நான். இன்று சிறுத்தது காண்டீபம். இழிந்தன என் தோள்கள். இனி நூறு களங்களில் நான் வெல்லலாம். ஆயிரம் நாடுகளில் என் வேள்விப்புரவி கடந்துசெல்லலாம். ஆயினும் நான் கோழையே. அறம் காத்து நின்றிருக்கும் ஆண்மை அற்ற பேடியே. ஆம், இச்சொல் நிற்கட்டும் என் தலைமுறைகளில். வென்று வென்று இனி நான் செல்வதெல்லாம் வெல்லமுடியாத இத்தோல்வியையே என சூதர் பாடட்டும்!”
“ஆம்” என்றான் பீமன். தலையசைத்து “இன்று ஆணென நின்ற அனைவரும் பழிசூடியுள்ளோம்” என்றான். அர்ஜுனன் “இன்றறிந்தேன், புதுவேதம் வகுக்கவந்த யாதவன் யார் என்று. அவன் சொல்லில் எழும் வேதமுடிவின் பொருள் என்ன என்று. இனி நான் ஷத்ரியன் அல்ல. அவன் சொல்காக்க வில்லெடுக்கும் எளிய வீரன் மட்டுமே. பிறிதொன்றும் அல்ல. ஆம், எய்தவும் ஆகவும் அமையவும் இனி ஏதுமில்லை எனக்கு” என்றான்.
தன் கையைத் தூக்கி அர்ஜுனன் உரத்த குரலில் சொன்னான் “அன்னையின் மைந்தர் என நாம் ஆற்றுவதொன்றுள்ளது, உடன்பிறந்தோரே. இனியொரு முறை இப்புவியில் இது நிகழலாகாது. நூறாயிரம் முறை குருதியால் ஆணையிடப்படட்டும் இச்சொல்! நூறுநூறாயிரம் தலைகள் உருள நிலைநிறுத்தப்படட்டும் இத்தருணம்!” என்றான். “ஒருதுளி கண்ணீர் ஒருநூறுமுறை உலகழிக்க வல்லமை கொள்ளட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”
தன் கையைத் தூக்கியபடி அவன் அவைமுன் வந்து நின்றான். “அறிக! அவையும் ஆன்றோரும் மூதாதையரும் மூன்றுதெய்வங்களும் சான்றாகுக! எவனில் இருந்து இச்சிறுமையின் முதல்விதை முளைத்ததோ அவனை, இச்சூதன்மகன் கர்ணனை, நெஞ்சுபிளந்து செருகளத்தில் கொல்வேன். அறம் மறந்து இந்த அவையிலமர்ந்த மூத்தோர் ஒவ்வொருவரையும் குருதிக்களத்தில் சாய்ப்பேன். பீஷ்மரை, துரோணரை கொன்று நின்று விழிநீருடன் என் வில்தூக்கி கடன்முடிப்பேன்... ஆணை! ஆணை! ஆணை!”
“ஆம்!” என்று தன் தோளைத் தட்டியபடி பீமன் கூவினான். “இதோ என் வஞ்சினம்! பெண்பழிகொண்ட இச்சிறுமகனை, அஸ்தினபுரியின் அரசனென அமர்ந்த துரியோதனனை கதையால் அடித்து சிதைப்பேன். அவன் திமிர்கொண்ட நெஞ்சைப் பிளந்து குருதியள்ளி என் தோளிலும் முகத்திலும் அணிவேன். என் குலமகள் ஆடைதொட்ட அவன் தம்பியை, துச்சாதனன் என்னும் இழிபிறவியை, நெஞ்சுபிளந்து அங்கே நின்று துடிக்கும் குலையை காலால் மிதிப்பேன். அவன் குருதி அள்ளிக்குடித்து என் நெஞ்சக்கனல் அவிப்பேன்.”
கடுங்குளிரில் நின்றிருக்கும் காளை போல அவ்வப்போது உடல் சிலிர்த்து விழியுருட்டி அசைவற்றிருந்தது பன்னிரு பகடைக்களம். அதன் மூச்சு சீறியது. “கௌரவர் அனைவரையும் களத்தில் கொல்வேன். அவர் மைந்தர் அனைவரையும் கொன்றழிப்பேன். என்னை ஆளும் காட்டுத்தெய்வங்கள் என் தோளில் எழுக! அறமென்றும் அளியென்றும் ஒருகணமும் அவை தயக்கம் கொள்ளாதிருக்கட்டும்! பேரறத்தின் பொருட்டு அவை புடைத்தெழட்டும்! ஆம், அவ்வாறே ஆகுக!”
உடல்நடுங்கி குறுகி நின்றிருந்த தருமன் கால்தளர்ந்து விழப்போக நகுலனும் சகதேவனும் அவரை பற்றிக்கொண்டனர். துரியோதனன் உயிரற்றவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். கிருபர் எழுந்து ஏதோ சொல்லப்போனபோது அணியறைவாயிலில் புலிக்குரல் என ஓசை எழுந்தது. அவிழ்த்த கூந்தல் உடலெங்கும் விழுந்திருக்க விழிநீர் நிறைந்த கண்களுடன் மாயை தோன்றினாள். “அவையோர் அறிக! இது பாஞ்சாலமண்ணை ஆளும் ஐங்குழல்கொற்றவையின் வஞ்சினம்! ஐந்து தேவியரின் அழியாச்சொல் இது.”
“இன்று அவிழ்ந்தது அன்னையின் ஐங்குழல். இனி அது அவையமர்ந்த அரசன் துரியோதனனின் ஆக்கைக்குருதியும் அவன் இளையோன் துச்சாதனனின் நெஞ்சத்து நிணமும் கலந்து பூசப்பட்டபின்னரே சுருள்முடியப்படும். பாஞ்சாலத்து ஐந்தன்னையர் ஆலயத்து மூதன்னையர் வந்து குருதிதொட்டு எடுத்துக்கொடுக்க பின்னி அமைக்கப்படும். கௌரவ நூற்றுவரும் மண்மறைந்தபின்னரே அதில் மலர்சூட்டப்படும். ஆம், அவ்வாறே ஆகுக!”
அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். அச்சொற்களை அவளே அறியவில்லை என்று தோன்றியது. சொல்லி முடித்ததும் விழப்போனவள்போல கதவை பற்றிக்கொண்டாள். உள்ளிருந்து அசலையும் லட்சுமணையும் வந்து அவளை பிடித்துக்கொண்டனர். மெல்ல அவை புயல்காற்று நின்றபின் குறுங்காடு போல நிலைமீண்டது.
பகுதி பன்னிரண்டு : பங்குனி
இருளோரும் ஒளியரும் இழுத்த நச்சுவடத்தின் நடுவே சுழன்ற திகிரி நுரைத்து நுரைத்துத் தயங்க எழுந்தது முதல் அமுதத்துளி. அதன் நேர்கீழே விரிந்திருந்தது பன்னிரு படைக்களம். நிறைந்து கவிந்தது கலம். இமையாவிழிகள் கனிந்து திறந்திருந்தது அன்னைப்பெருமீன். அதிலெழுந்தனர் ஐந்து அன்னையர். துர்க்கையும் லட்சுமியும் சரஸ்வதியும் சாவித்ரியும் ராதையும் இதழ்களில் மென்நகை ஒளிவிட அஞ்சலும் அருளலும் காட்டி நின்றனர்.
ஒழியா ஊற்றின் விழிதிறந்து வந்து நிறைத்தபடியே இருந்தனர். கங்கை, துளசி, மானசை, தேவசேனை, மங்களசண்டிகை, பூமி, ஸ்வாகை, தட்சிணை, தீக்ஷை, ஸ்வாதை, ஸ்வஸ்தி, புஷ்டி, துஷ்டி, ஸம்பத்தி, திருதி, ஸதி, யோதேவி, பிரதிஷ்டை, ஸித்தை, கீர்த்தி, கிரியை, மித்யை, சாந்தி, லஜ்ஜை, புத்தி, மேதா, திருதி, மூர்த்தி, ஸ்ரீ, நித்ரை, ராத்ரி, சந்த்யை, திவா, ஜடரை, ஆகுலை, பிரபை, தாஹிகை, ஜரை, ருத்ரி, ப்ரீதி, சிரத்தா, பக்தி என ஒன்றிலிருந்து நூறென ஆயிரமென பல்லாயிரமென கோடியென முடிவிலியென பெருகினர்.
பன்னிரு படைக்களத்தில் களம்தோறும் நின்றிருந்தனர் தெய்வங்கள். மூதேவர். முப்பத்துமுக்கோடியர். முனிவர். மூதாதையர். ஒன்றென நின்றனர். இரண்டாகிப் பிரிந்து இணைந்தாடினர். இருள்கள் ஒளிகள். சொற்கள் பொருள்கள். இன்மைகள் இருப்புகள். மையங்கள் முடிவிலிகள். இரண்டிலியென்றானாள். இருளொளி. இங்கங்கு. இவளவள். இன்மையிருப்பு.
பன்னிரு ஆதித்யர்கள் எழுந்த பெருங்களம். ஆடும் காளையும் இணையும் நண்டும் சிம்மமும் கன்னியும் துலாவும் தேளும் வில்லும் மீனும் கலமும் விழிமீனும் நிரந்த வெளி. அத்தனை அசுரர்களும் அரக்கர்களும் படைக்கலமேந்தி களம்நின்றனர். தெய்வங்கள் களம் வந்தன.நடுவே நின்றிருந்தாள். தன்னைத்தான் சூழ்ந்திருந்தாள். தன்னை வென்றாள். தன்னைக் கடந்தாள். தான் மட்டுமே இருந்தாள்.
“ஐந்தென எழுந்தவள் வாழ்க! அன்னை எழுந்த களம் வாழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவைக் கோயில் முன் வெறியாட்டெழுந்து கூவினான் பூசகன். “குன்றா ஒளியே. குறையா கதிரே. இருண்டவளே. கதிராயிரம் மூழ்கும் கசடே. அன்னையே. அணைக! அணைக! இங்கணைக தேவி!”
“ஆக்கும் அல்குல். ஊட்டும் இணைமுலைகள். எரித்தழிக்கும் விழிகள். இணைக்கும் ஈரடிகள். இருத்தும் இன்மையின் பீடம். பிறப்பு, செல்வம், தந்தை, நட்பு, மைந்தன், எதிரி, துணைவி, இறப்பு, நல்லூழ், தீயூழ், வருவினை, செல்வினை என பன்னிரு கொடைகளென உடன் சூழ்ந்துள்ளவள். நீ இங்கமைக! இப்பன்னிரு படைக்களத்தில் அமைக!”
முப்புரி வேலேந்தி வெறிநடனமிட்டான் பூசகன். அவன் தொண்டையிலிருந்து எழுந்தது ஆயிரம் தலைமுறைகண்ட மூதாதையரின் குரல் “குருதி எழுக! குருதியின்றமையாது அறமென்றறிக மானுடரே! வெங்குருதி எழுக! நீரென்றும் நெருப்பென்றுமான அமுதமே குருதி! அன்னையே குருதிசூடுக! செங்குருதி சூடுக! இதோ எழுகிறது பலிபீடம். இதோ தன்னை தான் வைத்து காத்திருக்கிறது பலிவிலங்கு. அவிகொள்க! ஐந்து குழல்களில் நிணம் நீவி முடித்து அமர்க! அன்னையே, அடியவர் தலைமேல் கால்வைத்து அமைக! மண் வென்றமைக! அன்னையே, விண்சூடி அமர்க!”
பலிபீடத்தின் மேல் கால்கள் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது எருமை. அங்கிருந்த புகையின், எழுந்துசூழ்ந்த முரசொலியின், பந்தச்செவ்வொளியின் அலையில் அது விழி அயர்ந்து சித்தமென்றே ஆகி அமைந்திருந்தது. முகில்மடிப்புகளுக்கு அப்பால் கோடையின் முதல் இடியோசை என சிம்மக்குரல் இருளில் எழுந்தது.
[பன்னிரு படைக்களம் நிறைவு]
Venmurasu X
Panniru Padaikkalam tells the story of the Rajasuya ritual held by Pandavas in Indraprastha and the incidents leading to Draupadi's arrival at Asthinapuri, Slayings of Jarasandhan and Sisupalan and Draupadi vastraharan.!
- Get link
- X
- Other Apps