Venmurasu VII

07-இந்திரநீலம்

ஜெயமோகன்



Indraneelam is the story of the love of Krishna's Eight wives and their marriage to him. The locus of the story is the Syamantaka gem, the proverbial carnival form of Krishna. It tempts and teases the psyche of everyone around Him, it originates and ends within Him. Most of the story is told as seen through the eyes of Dhrishtadyumnan, the prince of Panjala who visits Dwarakai and his friendship with Satyaki.!

நூல் ஒன்று : மலைமுடித்தனிமை - 1

தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது. விண்ணென விரிந்த பெருந்தனிமை துளித்துத் திரண்டு சொட்டியதென தோன்றிய சின்னஞ்சிறிய தீவுக்கு ஏகத்வீபம் என்று பெயர். பன்னிரண்டுசுற்று பெருமலைகளுக்கு அப்பால் கரைநாணல்களால் முழுமையாக மறைக்கப்பட்ட கர்கசாகரம் என்னும் ஏரிக்கு நடுவே அயலார் எத்திசையில் நின்று நோக்கினாலும் தெரியாதபடி தன்னை புதர்ச்செறிவுள் புதைத்து ஒலிக்குச் சிலிர்க்கும் முயல்குருளை என அமைந்திருந்தது அது.

நான்கு கரைகளிலும் ஏரியின் சிற்றலைகள் வந்து அறையும் அந்த மண்முழை அத்தியும் நாவலும் மாவும் பலாவும் அரசும் ஆலும் செறிந்த பசுங்குவை. நீர்நிழலுடன் இணைந்து ஒரு மரகதக்கோளமென வான்வெளித்த நீர்ப்பரப்பின்மேல் மிதந்து நின்றிருந்தது அது. விண்ணுக்கோ மண்ணுக்கோ தொடர்பற்ற அம்மிதவையை நோக்கி வானிலிருந்தும் நீருள்ளிருந்தும் பறவைகள் வந்தமைந்தன. பல்லாயிரம் கோடியாண்டுகளாக அது அங்கே இருந்தது. கந்தர்வர்களும் கின்னரர்களும் காணாது கடந்துசெல்லுமளவுக்கு சிறியது. சின்னஞ்சிறியவற்றின் தனிமையை தெய்வங்களும் அறிவதில்லை.

கர்க்க குலத்து முனிவரான குணிகர்க்கர் அந்த இடத்தை தன் தவத்தின் தனிமைக்கு தேர்ந்தெடுத்தபோது அருகே நாரதரும் இருந்தார். மலைவிளிம்பில் நின்று நீரில் விரிந்த வானில் மிதந்த தீவைக் கண்ட குணிகர்க்கர் சொல்லென நினைவு மீண்டபோது ‘ஏகத்வீபம்’ என்று அதை அழைத்தார். பேருவகையுடன் கைகளைத் தூக்கி "இவ்விடம்தான், நாரதரே, இவ்விடம்தான்... பிறிதொன்றில்லை" என்றார். நாரதர் சுற்றிலும் இதழ்விரித்த நீலத்தாமரை என சூழ்ந்திருந்த மலைமுடிகளை நோக்கி "பெருந்தனிமை சூழ்ந்தது" என்றார். "ஆம், என் எண்ணங்கள் ஒருதுளியும் சிதறாது குவியும் முனை. என் தவம் இங்கே வைரமாகும்” என்றார் குணிகர்க்கர்.

மீண்டும் அந்த பசுங்கோளத்தை நோக்கி “விழிதொடல் அறியாதது. தேவரும் தெய்வங்களும் அறியாதது” என்றார் நாரதர். “ஒருவராலும் காணப்படாதிருத்தல் என்பது...” என்று அவர் இழுக்க “ஆம், அது இறத்தல். இறக்காதவன் பிறப்பதில்லை தோழரே. இங்கு தவத்தில் எழுகிறேன்" என்றார் குணிகர்க்கர். நெஞ்சு நிறைந்த உவகையுடன் “இனியொரு கணமும் பொறுப்பதில்லை. முனிவரே, ஒவ்வொரு மானுடனுக்கும் உரிய நிலங்கள் அவனுக்காக காத்திருக்கின்றன. அவனை அவை அறிகின்றன” என்றார். நாரதர் புன்னகையுடன் திரும்பி அவரை நோக்கி “அவ்வாறே ஆகுக!" என்றார்.,குணிகர்க்கர் தேர்ந்தெடுத்த அத்தீவு மெல்லிய புற்கள் பரவிய தரையும் பூச்செறிந்த அடர்சோலைக்கூரையும் கொண்டிருந்தது. அங்கே அவருக்கெனவே அமைந்த சிறுகுகைக்குள் சென்று சருகுத்தரை அமைத்து அமர்ந்து முகம் மலர்ந்த குணிகர்க்கர் “இவ்விடம் இத்தருணம். அன்னைக்கருபீடம் அளவுக்கே இது என்னுடையது. நாரதரே, நான் இங்கு பிறிதொன்றிலாதாவேன்" என்றார். நாரதர் மீண்டும் புன்னகைத்து "அவ்வாறே ஆகுக!” என்றார். “இங்கு உணவும் நீரும் காற்றும் ஒளியும் நிறைந்திருக்கிறது. முழுமைக்கு ஒரு கணத்திற்கு முன் என காலம் திகழ்கிறது” என்றார் குணிகர்க்கர்.

“ஆம். ஆனால் காலமென்பது கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, சிசிர, வசந்த பருவங்களின் கையிலாடும் அணிப்பந்து” என்ற நாரதர் ”அறுவரில் வசந்தம் கொடியவள். தெய்வங்களையும் விளையாட்டுப்பொருட்களாக்கும் வல்லமை கொண்டவள்” என்றார். “இங்கே என் உள்ளம் உருவாக்கும் பருவங்களன்றி பிறிதில்லை. என் உளம்பூத்த மரங்கள். என் அகம் சிலைத்த மலைகள். என் எண்ணம் விரிந்த வானம். நானே இவை” என்றார் குணிகர்க்கர். நாரதர் மீண்டும் புன்னகை செய்து “நிறைவு நெருங்கட்டும்” என்று சொல்லி குணிகர்க்கரை வணங்கி மீண்டார்.

பின்னர் நெடுநாட்கள் கடந்து அவ்வழிச்செல்கையில் ஓங்காரமென குவிந்து விண் தொட்ட மலைமுடிகள் அளித்த வெறுமையை தனிமையென உணர்ந்தபோது நாரதர் குணிகர்க்கரின் தீவை நினைவுகூர்ந்தார். ஏரி ததும்பி மலையடுக்குகள் வழியாகப் பெருகி மறுபக்கம் புகைந்து சரிந்த அருவியொன்றே அங்கே செல்வதற்கான பாதை. வழுக்கும் பாறைகளில் மலைமாணைக் கொடிகளைப் பற்றிக்கொண்டு தொற்றி ஏறும் கலையறியாதவர் அவ்விடத்தை அணுகமுடியாது. மீண்டும் மலைச்சரிவில் உருளைப்பாறைகளில் தாவி இறங்கி நாணல்தெப்பம் அமைத்து நீர்ப்பெருக்கின் ஒழுக்கை முறித்துக்கடந்து கர்கசாகரத்தின் அலையறியா நீலப்பரப்பில் சறுக்கிச்சென்று பசுங்கோளத்தை அடையவேண்டும். பேராலின் வேர்க்குவை நடுவே தெப்பத்தைக் கொண்டுசென்று நிறுத்தி நீர்தொட்டு தொங்கி ஆடிய விழுதில் பற்றி ஆடி கரைநாணல் செறிவில் இறங்கி நின்ற நாரதர் அங்கே குணிகர்க்கர் ஓர் முதுமகளாக காட்டில் கனிகொய்து நின்றிருப்பதைக் கண்டு திகைத்தார்.

அவரது காலடியோசை கேட்டு திரும்பிய முதுமகள் திகைத்து இமைகளும் இதழ்களும் அசைவற்றிருக்க, மெய்விதிர்ப்புற்ற புள்ளிமான் என நின்றாள். கை விரித்து புன்னகைத்து “அஞ்சவேண்டாம் கன்னியே, நான் விண்மேவிய இசைமுனிவனாகிய நாரதன். குணிகர்க்கரின் தோற்றம் கொண்ட நீ யாரென்று அறிய விழைந்தேன்” என்றார் நாரதர். உடல் மெல்ல தளர்ந்து விழிதாழ்த்தி கொய்த கனியை கூடையிலிட்டு கைகூப்பி “அருள்க தவமுனிவரே, என் பெயர் கர்ணிகை. நான் குணிகர்க்க முனிவரின் மகள்” என்றாள். நாரதர் “ஆம், எண்ணினேன். அவர் எங்குளார்?” என்றார். “எந்தை முழுமை எய்தி முப்பதாண்டுகளாகின்றன” என்று கர்ணிகை சொன்னாள். “தங்கள் தூயபாதங்கள் பட்டு இத்தீவு அணிகொண்டது. என் சிறுகுகைக்கு வந்து கனியும் நீரும் அருந்தி என்னை வாழ்த்தவேண்டும்.”

தோளில் தோய்ந்த வெண்பனிக் கூந்தலும் மழைகரைத்த பளிங்குப்பாறை என சுருக்கங்கள் அடர்ந்த முகமும் கனியீன்றபின் மடல்சுருங்கி ஓய்ந்த கதலிவாழை என மேனியும் கொண்டிருந்த அம்முதியவள் அவரை குணிகர்க்கர் வாழ்ந்த குகைக்கு கொண்டுசென்றாள். சருகுகளை அடுக்கிச் செய்த மெத்தையில் அவரை அமரச்செய்து வணங்கினாள். மண்குவளையில் மலரிட்டு வைத்த நறுமணநீரை சுரைக்குடுவையில் அளித்தாள். அத்திப்பழமும் வாழைப்பழமும் தேன்விழுதும் இன்கிழங்கும் இலையில் படைத்தாள். உண்டு இளைப்பாறிய நாரதர் “இனியவளே, உன் ஊர் என்ன? இந்தத் தீவிலிருந்து உன் தந்தை எதன்பொருட்டு அங்கே வந்தார்? உன் தாயை எப்படி அவர் கண்டடைந்தார்?” என்றார்.

“ஊழ்கரே, எந்தை இந்தத் தீவிலிருந்து விலகியதேயில்லை” என்று கர்ணிகை சொன்னாள். "தாங்கள் அவரை இந்தத் தீவில் அமரச்செய்து விண்ணேகியபின் அவர் தன் முதற்சொல்லை முழுதாகப்பற்றி எண்ணமேதும் எஞ்சாமல் குவித்து இல்லையென்ற நிலையில் இங்கிருந்தார். அவரை இத்தீவு முலையுண்ணும் குழந்தையை அன்னை என பேணியது. தவம் கனிந்து உடலில் உலைநீறிய உலோகம் போல் எரி எழ அவர் விழித்தெழுந்தார். தன் கைகளைத் தூக்கி நோக்கியபோது அவை பொன்னிறம் கொண்டிருப்பதை கண்டார். தன் முகத்தை தானே நோக்கவேண்டுமென்ற விழைவு எழுந்தது அவருக்கு. அதுபிழை என்று அவரது ஊழ்கமுறைமை சொல்லியதென்றாலும் அவ்விழைவே வென்றது."

"நீரிலிறங்கி முழங்கால்பட நின்று குனிந்து தன்னை தான் நோக்கி வியந்து நெடுநேரம் நின்றார். அந்திச்சுடர் தழுவிய கயிலை முடி போலிருந்தது அவரது முகம். அதை விட்டு விழிவிலக்க அவரால் முடியவில்லை. பின் தன்னை உணர்ந்து திரும்பி வந்து இக்குகைக்குள் அமர்ந்து விழிமூடியபோதும் அவர் அம்முகத்தையே கண்டார். ‘அழகு அழகு அழகு‘ என்ற சொல்லாகவே அவரது முதற்சொல் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று குனிந்து தன் முகத்தை நீரில் நோக்கி நெஞ்சு எழுந்தார். அப்பேருவகையால் முகம் மேலும் அழகு கொண்டது. அவ்வழகால் உவகை மேலும் வளர்ந்தது. அழகன்றி ஏதும் அவரை சூழ்ந்திருக்கவில்லை. மலர்களில், தளிரிலைகளில், பறவைச்சிறகுகளில், கூழாங்கற்களில், நிலவில், விண்மீன்களில் எங்கும் அழகை மட்டுமே கண்டார்."

"ஒருநாள் ஏரியில் கால் மூழ்கி நின்று தன்னை தான்கண்டு காலமறியாது அவர் நின்றிருக்கையில் ஆடிப்பாவை அலையிளகி உயிர்கொண்டது. அதனுள் இருந்து என் அன்னை எழுந்து வந்தாள். காடுகளில் நாணல்கொய்து கூடைசெய்து விற்கும் மலைமகள். மலைமுடியிலிருந்து நீரில் தவறிவிழுந்து குளிர்நீரில் மூழ்கி நினைவழிந்திருந்தாள். உடலறிந்த நீச்சல் அவளை கரையணுகச்செய்தது. உடையணியாத அவளை எந்தை கர்கசாகரத்தின் கருவறையின் இதழ்களைத் திறந்து வந்த நீர்மகள் என்றே எண்ணினார். அவளை தன் குகைக்குள் கொண்டுசென்றார். வெப்பமும் பின் நீரும் பின் அமுதும் அளித்து உயிரூட்டினார். தன்னுடைய பெண் வடிவு போலிருந்த அவளுக்கு ஸ்வப்னை என்று அவர் பெயரிட்டார். அவளுடன் கூடி என்னை பெற்றெடுத்தார்."

"ஒரு சொல்கூட பேசாமல், உடையென ஏதுமணியாமல் மூன்றுவருடம் அவருடன் இருந்த என் அன்னை ஒரு நாள் நீரில் குனிந்து தன் முகத்தை பார்த்தாள். மலைமொழியில் 'இது யார்?' என்று கூவினாள். திரும்பி நோக்கி 'இங்கா இருக்கிறேன்?' என்று தன்னைச்சூழ்ந்த காட்டை நோக்கி சொன்னபின் நீரில் பாய்ந்து நீந்தி மறைந்தாள். பின்னர் அவள் மீளவில்லை. எந்தை என்னை தன் கைகளாலும் சொற்களாலும் வளைத்துக்கொண்டார். அவர் சொன்ன சொற்களுக்கெல்லாம் பொருள் அளிக்கும் வெளியாக இத்தீவும் சூழ்ந்த ஏரியும் வளைத்த மலைகளும் கவிந்த வானும் இருந்தன. அவரது அறிவனைத்தையும் பெற்று நான் வளர்ந்தேன். சிறுமியாகி கன்னியாகி முதுகன்னியானேன். தவத்தீரே, நான் காணும் இரண்டாவது மானுடர் நீரே."

"எந்தை என்னிடம் சொன்னார் 'தனிமையை மீட்டிக்கொண்டிரு மகளே. அது உன்னை நிறைக்கும். பிறிதொன்றிலாது சூழும். விண்ணிறைந்த முழுமுதல் தனிமைக்குப்பெயரே பிரம்மம்.' நான் 'அவ்வண்ணமே' என்று சொல்லி அவரிடமிருந்து என் முதற்சொல் அறிவுறுத்தப்பட்டேன். ஹம் என்பதே என் அகமாகியது. அச்சொல்லை ஒவ்வொரு மூச்சாலும் ஊதி ஊதி எழுப்பி என்னுள் மூட்டிக்கொண்டேன். இத்தீவை என் தவத்தால் நிறைத்தேன். இங்கு எந்தையை விட்டுச்சென்ற நீங்களே திரும்பி வந்ததென்பது என் விடுதலைக்காகவே என எண்ணுகிறேன். என் தருணம் உங்கள் முன் பூக்கவேண்டும். என் அகம் அமர்ந்த பறவை அது நாடும் விண்ணை தொடவேண்டும்” என்று அவள் அவரைப் பணிந்து கைகூப்பி சொன்னாள்.

அவளை புன்னகையுடன் நோக்கி நாரதர் கேட்டார் “முதுமகளே, உன் தந்தை உனக்களித்த நெறி என்ன?” அவள் சற்று அதிர்ந்து உடனே விழிதாழ்த்தி “ஒருபோதும் நீரில் என் முகத்தை நான் நோக்கலாகாது என்றார். ஒவ்வொருநாளும் இந்த ஏரியில் நீராடுகிறேன். இதில் நீரள்ளிப் பருகுகிறேன். இதன்கரையில் வாழ்கிறேன். இன்றுவரை நான் என் நீர்ப்பாவையை கண்டதில்லை” என்றாள். நாரதர் “அப்படியென்றால் நீ முதுமையுற்று அழகழிந்தவளென்று எப்படி அறிந்தாய்?” என்றார். அவள் திகைத்து தன் நெஞ்சில் கைவைத்து “நான் நோக்கியதே இல்லை” என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். “நீ பனித்துளியில் உன்னை நோக்கினாய். பெண்ணே, விண்ணின் கணக்கில் பெருங்கடல்களும் பனித்துளிகளே" என்றார் நாரதர்.

அவள் கால்தளர்ந்து உடல் குவித்து அமர்ந்து “துளியினும் துளியாக என்னை ஒருமுறை மட்டும் நோக்கினேன். அதற்கே என் மீட்பை நான் இழக்கவேண்டுமா?” என்றாள். “சிறியவையே பெரிதாகும் விழைவுகொண்டவை” என்றார் நாரதர். “என் காலடி கேட்டுத் திரும்பிய உன் முதலசைவிலிருந்தது எதிர்பார்ப்பு. என்னைக் கண்ட முதல் விழிநோக்கில் இருந்தது ஏமாற்றம்.” அவள் உதடுகளைக் கடித்தபடி கண்ணீர் உகுத்தாள். “வருந்தவேண்டாம் பெண்ணே, காமத்தின் பொருட்டு இம்மண்ணில் எவரும் பிழையுணர்வு கொள்ளவேண்டியதில்லை. களியாடும் தெய்வங்களின் அரங்கமே இவ்வினிய உடல். மீட்டப்படாத யாழும் இசையாலானதே.”

“அப்படியென்றால் இருமைகொண்டு இயல்பழிந்து தவித்துத்தவித்தழிவதா என் ஊழ்வழி? எஞ்சி நான் அடைவதென ஒன்றுமில்லை என்றாகுமா?” என்று கர்ணிகை கேட்டாள். அவ்வினாவை கேட்டதுமே அவள் தன் சொல்லை கண்டுகொண்டாள். "அங்கே விண்ணிறைந்து கிடக்கும் பெருந்தனிமையின் துளியை நான் விரும்பலாகாதா?" நாரதர் ”கன்னியே, முற்றான பெருந்தனிமை என்று பிரம்மத்தைச் சொன்னவர் சென்ற வழி வேறு. உனக்கான பிரம்மத்தை நான் கண்டு உரைக்கிறேன்” என்று அவள் தலையை தொட்டார். “அருகமர்க! இது அழியா ஞானமென்றே கொள்க!”

"பிரம்மம் என ஊழ்கரும் படிவரும் அறிந்து நூலோர் உரைப்பது ஒன்றுண்டு. அதை ஒரு பெண்ணென அறிந்தவர் பிரஹஸ்பதி. அவள் காரிருள் முடிவிலிப் பெருக்கென கூந்தல் நீண்டு கிடக்கும் கன்னங்கரிய பேரழகி. அவள் நெற்றிமேட்டில் ஒளிராத ஒளியாக பரவியிருந்தது மேதை என்னும் நீர்மை. ஆதித்யர்களை கருவுக்குள் செறித்த காசியபனும் அதிதியும் அவள் விழிகள். அவள் நாசிக்குள் தவமிருந்தது பிராணன். அவள் இதழ்ச்செம்மைக்குள் குளிர்வடிவாக வாழ்ந்தது அனல். அவள் முலைக்குவைகளுக்குள் அமுதக்கடலின் பனிப்படுகைகள். அவள் உந்தியில் ஆயிரம்கோடி இதழ்கொண்ட தாமரை. அவள் யோனியெனும் செங்கனல் விழிக்குள் வாழ்ந்தது காலம். அவள் கால்பொடியில் காத்திருந்தன அண்டங்கள்."

"தேவியின் விழைவு அவள் ஆவுடைக்குள் சிறு லிங்கமென எழுந்தது. அதில் அவள் மேனி சிலிர்த்து உயிர்கொண்டது. தன் காமக்கருமுனையை தானே தீண்டி எழுப்பினாள். தன் சிவத்தை தானே ஆக்கி தன்னுடலில் நடமிடச்செய்தாள். சுடர்கொண்டது மேதை. விழித்து பொறிபெருகினர் ஆதித்யர்கள். பருவெளியில் உயிர்நிறைத்தது பிராணன். சடத்திற்குள் சுடரென வெம்மையென செம்மையென எழுந்தது அனல். அமுதமென வழிந்தது ஆக்கி அழிக்கும் பெருங்கருணை. ஆயிரம்கோடித் தாமரை விரிந்த விசும்பு. பத்தி விரித்து நாபறக்க இமையா விழி மின்ன எழுந்தது காலம். சிதறிப்பெருகின அண்டங்கள். இங்குள்ளதெல்லாம் இன்மையின் ஆழத்து இருள்திரை விலக்கி இருப்பு கொண்டன. நீ நான் இவை அவை இங்கு இனி என அனைத்துமாகி சூழ்ந்திருப்பவளை வாழ்த்து. அவளே இச்சொல்லுக்கு காப்பாகட்டும்.”

அவள் நெற்றியைத் தொட்டு புதிய முதற்சொல்லை அவளுக்களித்தார் நாரதர். "ஸ்ரீம்!" அவள் அவர் கால்களைத் தொழுது அதை பெற்றுக்கொண்டாள். "இச்சொல்லை உன் உடலில் வைத்துக்கொள். உன்னில் அன்னை பூத்தெழட்டும்” என வாழ்த்தினார். ”பூத்து நிறைந்த இம்மலர்ச்சோலையில் உன் குகைக்குள் ஒரு மலர்கூட இல்லையே என எண்ணினேன். என்னைத் தொடர்ந்து வருகையில் மலர்களுக்கும் சருகுக்கும் வேறுபாடு அறியாமல் மிதித்து வருகிறாய். உன் உடல்பூக்கையில் மலர்பூப்பதென்பது இப்புவியாளும் அன்னை விழிபூப்பதே என்பதை அறிவாய். தன்உடலுறங்கும் தாய்மையை அறியாமல் பெண்மையில் நிறைவில்லை குழந்தை. ஓம் அவ்வாறே ஆகுக!”

முனிவர் அவளிடம் விடைகொண்டு சென்றபின் அவள் கர்கசாகரத்தின் நீலமணிப்பரப்பருகே ஒரு தனிப்பாறையில் அமர்ந்து தன் நீர்ப்பாவையை நோக்கி விழிவிரித்து தவம் செய்யலானாள். நோக்க நோக்க அவள் தன் முகத்து முதுமை மறையக்கண்டாள். நெஞ்சு உன்னி முலைகள் எழுந்தன. சிவந்தெரிந்தன இதழ்கள். ஒளிகொண்டது சிரிப்பு. புல்லரித்துப் புல்லரித்து மென்மைகொண்டது சிவமெழுந்துச் சிவந்த கனியுடல். நீர்நோக்கி அமர்ந்திருந்த கன்னியைக் கண்டு மலர்கள் வண்ணத்துப்பூச்சிகளாக வந்து சூழ்ந்து சிறகடித்தன. தும்பிகள் இசைத்தபடி வட்டமிட்டன. ஏரி தேனாகியது. சூழ்ந்த காடு கரும்பாகியது.

ஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் விழிதொட்டு தன் உருவை மீட்டி மீட்டி அவள் அதை ஆணென ஆக்கினாள். தன் வயதின் பாதியை அதற்களித்து தான் பாதியென எஞ்சினாள். அவள் எண்ணங்களால் சிலிர்த்துக்கொண்டிருந்த நீர்ப்பரப்பின்மேல் காமத்தால் அஞ்சி அதிர்ந்து நீளும் விரல் என ஒரு படகு அணுகிவரக்கண்டு எழுந்து முலைமுகைகளை கைகளால் அழுத்திக்கொண்டு அருவி பொங்கி வந்து விழும் மரக்கிளை என அதிர்ந்து நின்றாள். படகில் இருந்த மலைமகன் அவளைக்கண்டு துடுப்பிட மறந்தான். அவன் விழைவே என தோணி அவளை நோக்கி ஒழுகி வந்தது. கரையேறிய அவன் அவளிடம் தன் மலைமொழியில் “நீ அணங்கா?” என்றான். அவள் விட்ட வெம்மூச்சே உரிய மறுமொழியாக இருந்தது.

சிருங்கவான் என அவள் அவனை அழைத்தாள். இடைசுற்றி வளைத்த கைகளில் குழைந்து மலர்க்கைகளால் அவன் கழுத்தில் மாலையிட்டு அவனை தன் கொழுநனாக ஏற்றுக்கொண்டாள். உருகிவழியும் கந்தகப்பாறையை என அவளை அவன் அணைத்தான். அவியாகும் சமித்தின் பேருவகையை அடைந்தான். அங்கு அவனிருந்தது ஒருநாள் இரவே. அந்த ஓரிரவில் அவள் அவனுக்காக மீண்டும் மீண்டும் பிறந்து எழுந்து வந்தாள். பேதையென நாணி கண்புதைத்தாள். பெதும்பை என காமத்தால் எரிந்தாள். மங்கை என சூழ்ந்துகொண்டாள். மடந்தை என ஆட்சி செய்தாள். அரிவை என ஆழங்களுக்குள் கொண்டுசென்றாள். தெரிவை என அன்னையானாள். பேரிளம்பெண் என மூதன்னை வடிவானாள்.

மறுநாள் காலை இன்துயிலில் புன்னகையுடன் அவள் கிடக்கையில் அணங்கைப் புணர்ந்ததாக எண்ணி அச்சம் கொண்ட சிருங்கவான் ஓசையின்றி அவளை விட்டு எழுந்து நாணல்தோணியேறி மறைந்தான். அவன் சென்ற அலைகள் ஒவ்வொன்றாக வந்து அவள் கரையை முத்தமிட்டு விரிந்து தேய்ந்து மறைந்துகொண்டிருந்தன. அவள் தன் கனவில் அவற்றை மேனிமேல் உதிர்ந்த குளிர்வெண் மலர்களென உணர்ந்து உடல்மலர்ந்துகொண்டிருந்தாள். விழித்தெழுந்தபோது அவனைக் காணாத அவள் எண்ணி ஏங்கவில்லை. அவன் வந்த தடமோ சென்ற தடமோ எஞ்சாது கிடந்த ஏரிப்பரப்பை குனிந்து நோக்கினாள். அங்கே நிறைந்து கனிந்து புன்னகைத்த முதுமகளை கண்டாள்.

விருத்தகன்யகை தன் குகைக்கு மீண்டாள். அங்கே சிட்டுச்சிறகு பொறுக்கிச்சேர்த்து உருவாக்கி தாழைப்பொடியால் மணம் சேர்க்கப்பட்ட மென்சேக்கையில் அவள் நட்டு வளர்த்த மலர்ச்செடிகள் நடுவே மடிமேல் கைவைத்து கண்மூடி அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து கூந்தல் வெண்கொக்குகளாகச் சிறகடித்து எழுந்து பறந்தது. அவள் விழிகள் இரு சிறு கரிக்குருவிகளாக எழுந்து மறைந்தன. இதழ்கள் பட்டாம்பூச்சியாக காற்றில் மிதந்தன. முலைகள் இரு கனிகளாக மெல்ல உதிர்ந்தன. கருப்பை ஒரு முயலாக மாறி அக்காட்டில் துள்ளி ஓடியது. அவள் தசைகள் உருகி வழிந்தன. ஒளிஎழுந்த வானின் விளிம்பில் நின்று குனிந்து தன் வெள்ளெலும்புகளை நோக்கினாள். பின்னர் அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

நூல் ஒன்று : மலைமுடித்தனிமை - 2

அகன்றுவிரி எழினி உவகைச் சொல்முளைத்த இதழ் என பிரிந்தகல உள்ளே ஏழடுக்கு நிலைவிளக்கு ஐம்பது நெய்த்திரிகளுடன் மலர்ச்செண்டு போல நின்றிருந்தது. இருபக்கமும் கரவெழினிக்கு அப்பால் அமர்ந்திருந்த இசைச்சூதரின் தண்ணுமையும் முழவும் மணியும் வர்கோலும் தாளத்துடன் முழங்கின. இருபக்கங்களிலிருந்தும் ஆணும் பெண்ணுமென இருஆட்டர் சமன்நடையிட்டு வந்து நிலைவிளக்கின் வெளிச்சத்தில் நின்று கைகூப்பி இடை வளைத்து அரங்கை நடனமுறைப்படி வணங்கினர்.

ஆட்டன் மான்தோல் ஆடை அணிந்து சடைமுடிக்கற்றைகள் சூடி நீண்டதாடியுடன் முனிவர்கோலத்தில் இருந்தான். ஆட்டள் நீலமுகில்நிறப் பட்டாடை சுற்றி நீள்முடிக்கற்றையுடன் மலர்தார் சேர்த்தணிந்து ஒளிவிடும் மணியாரம் முலைமேல் துவள குண்டலமும் தோள்வளையும் கைவளையும் குலுங்க இடைமேகலை நலுங்க சதங்கைகள் சிணுங்க விண்மகள் கோலத்திலிருந்தாள். செவ்விதழும் சிரிப்பூறிய நீள்விழிகளும் செப்பெனத் திரண்ட பணைமுலைகளும் சிறுத்த இடையும் கொண்டிருந்தாள். ஆட்டன் இடைவளைத்து ஏகபங்க நிலையில் நிற்க அவள் திரிபங்க நிலையில் தழலென நெளிந்து நின்றாள்.

அவையை மும்முறை வணங்கி ஆட்டன் சொன்னான் "வெண்கலை மலர்மகளுக்கு வணக்கம். அவள் சொல்குறித்த சிறுகோட்டு பேரியானைக்கு வணக்கம். அவன் தந்தைக்கும் அருகமர்ந்த அன்னைக்கும் வணக்கம். அவர்களுக்கு இணைநின்ற விண்ணளந்தவனை அவன் நெஞ்சமர்ந்தவளை உந்தியெழுந்தவனை வணங்குக எமது சிரம்.” பேரியாழுடன் குழல் கலப்பதுபோல ஆட்டள் குரல் எழுந்தது. “இங்கு அவையமர்ந்த அஸ்தினபுரியின் பேரரசருக்கு வணக்கம். அவர்மேல் கவிந்த வெண்குடைக்கு அவர் கையமைந்த செங்கோலுக்கு அவர் நிறைக்கும் அரியணைக்கு அவ்வரியணை சூடிய குலப்பேராவலிக்கு வணக்கம். அவர்கள் இடம் அமர்ந்து அறம்புரிந்த மூதன்னையருக்கு அம்மூதன்னையர் விழிகளுடன் இங்கமர்ந்த அரசியருக்கு அவர் மணிவயிறு எழுந்து இக்கொடிவழியின் மலர்களான இளவரசர்களுக்கு அவர்களின் நெஞ்சமர்ந்த காதலியருக்கு வணக்கம். இனிதாகுக இப்பொழுது.”

”சிருங்க குலத்துச் சூதனாகிய என்பெயர் சியாமன். என்னுடன் நடமிடும் இவள் சுஃப்ரை. சொல்லும் பொருளுமென நாதமும் தாளமும் என எங்கள் உடல்கள் இங்கு இணைவதாக. அம்மையும் அப்பனும் ஆடிய நடனம் எங்கள் அசைவுகளிலும் எழுவதாக! யாழ்தேரும் இடமெல்லாம் நுண்ணுருவாக எழுந்தருளும் எங்கள் குலமூதாதையரும் மூதன்னையரும் இங்கும் வந்து சூழட்டும். அவர்கள் வாழ்த்துக்களால் எங்கள் சொற்களில் நன்று சூழட்டும்!” சுஃப்ரை “இனிதாகுக இச்சொற்கள்! இங்கே முளைத்தெழுக! பெருங்கலங்களை சுமந்துசெல்லும் கங்கைபோல மானுடத்தை அள்ளிச்செல்லும் கனவுகள் ஒளிபெறுக!” என்றாள். இருவரும் கைகூப்பி நிற்க “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர் அவையோர்.

அவர்கள் விலகி இருமருங்கும் மறைய நிலமுக எழினி விலகி அங்கே வெண்தலைப்பாகையும் குண்டலங்களும் கையில் தலைக்கோலுமாக சூத்ரதாரன் தோன்றினான். விரைந்த நடனக்காலடிகளுடன் வந்து விளக்கொளியில் நின்று “அதாவது அவர்கள் இருவரும் இங்கே ஒரு நடனத்தை ஆடவிருக்கிறார்கள். சிறந்த பரிசில்களை அஸ்தினபுரியின் அரசரிடமிருந்தும் அரசியரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள்” என்றான். மேலும் குரல்தாழ்த்தி கண்சிமிட்டி “மகதமன்னர் ஜராசந்தர் அளித்த வைரஆரத்தைப்பற்றி பெருமைகொண்டிருக்கிறார்கள். இன்றோடு அப்பெருமை அழியப்போகிறது என அறிந்திராதவர்கள். சரி நமக்கென்ன? சொல்லித்தெரிவதா மாமன்னர் பெருமை?” என்றான்.

பின்னர்தன் கோலைச்சுழற்றி “நான் வரும்போதே கேட்டேன், என்ன ஆட்டம் என்று. மூடச்சூதனே, உன்னிடம் சொல்லக்கூடியதல்ல அது. கல்வியும் கலையும் செறிந்த அஸ்தினபுரியின் அவைநிகழ்வை முன்னர் அறியும் தகுதிகொண்டவனா நீ? என்றனர். அறியும் தகுதி கொண்டிருப்பதனால்தானே அடியேன் இங்கு நின்றிருக்கிறேன். ஒட்டுக்கேட்பவனுக்கு மறைத்துவைக்கப்படும் எல்லாம் தெரிந்திருக்கும், முச்சந்தி மெய்யறிவு மட்டும் வசப்படாது என்பார்கள். சியாமனின் ஆடையணியை நோக்கினேன். நீ விஸ்வாமித்திரன் அல்லவா என்றேன். அவன் எப்படித்தெரியும் என்றான். உடலில் ஷத்ரியனுக்குரிய நிமிர்வு உள்ளது. விழிகள் வைரம்போல் மின்னுகின்றன. ஆனால் அணிந்திருப்பதோ கடுநெறித் தவசீலரின் தோலாடை. தாடி இறங்கி மார்பைத் தொடுகிறது. தோளில் விரிந்துள்ளன சடைக்கற்றைகள். வேறு எவர் இப்புவியில் இக்கோலத்தில் இருக்கமுடியும்?” என்றேன்.

கோலைச்சுழற்றிச் சிரித்து நின்று “அப்படியென்றால் இது மேனகை. அருநிலைபடிவரின் ஆழ்தவம் முடக்க விண்ணிறங்கி வந்தவள். சரிதான். அந்தக்கதையா? அதையா இத்தனை மந்தணமாக வைத்துள்ளீர்கள்? அட, இப்பாரதவர்ஷத்தில் வாய்திறந்து பாலருந்தி அன்னையை அறியும் குழந்தை அனைத்தும் அறிந்த கதை அல்லவா? ஏன் சோனகரும் யவனரும் காப்பிரியும் பீதரும் கூட அறிந்த வரலாறு அல்லவா என்றேன்” என்ற சூத்ரதாரன் குரலை மாற்றி ”அதற்கு இந்த இளஞ்சூதன் சொல்கிறான், அவர்கள் ஆடப்போவது வழக்கமான மேனகாவிஸ்வாமித்ரம் அல்ல என்று. என்ன என்ன என்ன என்றேன். நகைத்துக்கொண்டு விலகிச்சென்றுவிட்டனர். சரி, அப்படி என்னதான் ஆடப்போகிறார்கள் என்று பார்ப்போம்” என்றான்.

நடுவே வந்து நின்று கோலை ஊன்றி “சரி, நான் சொல்லக் கடமைப்பட்டவன். என் பணியை செய்துவிடுகிறேன். பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், விஜயன், ஹோத்ரகன், ஜஹ்னு, பூரு, பலாகன், அஜகன் என்னும் பெரும்புகழ்கொடிவழியில் வந்த மாமன்னர் குஜர். அவர் மைந்தர் குஜநாபர் கன்யாகுப்ஜ நாட்டை கோல்வளையாது நூல்திறம்பாது ஆண்டார். நூறு அஸ்வமேதமும் நூறு ராஜசூயமும் இயற்றிய குஜநாபர் தன் மனைவி ஹ்ருதாசியின் குருதியில் அவற்றின் பயனை பயிரிட்டுப் பெற்ற மைந்தர் மாமன்னர் காதி. அவர் புகழ் வாழ்க! அவையீரே, மாமானுடரை மைந்தராகப்பெற்றவர் இறப்பதில்லை” என்ற சூத்ரதாரன் “மேலும் சொல்கிறேன். இது சொல்வதற்குரிய தருணம்” என்று தொடர்ந்தான்.

”முனிவருக்கு அன்பராகிய காதி இம்மண்ணை முழுது வெல்லும் மைந்தனுக்காக விழைந்தார். அவைவைதிகரைக் கூட்டி வேள்விகளுக்கெல்லாம் வேள்வி எது என்றார். அஸ்வமேதமும் ராஜசூயமும் அல்ல. அவ்வேள்விகளை தன் இடமும் வலமும் எனக்கொண்ட முழுமுதல் வேள்வி. அவர்கள் விஸ்வமேதமே நிகரற்ற வேள்வி என நூல்கள் சொல்கின்றன, ஆனால் அது விண்ணவர் ஆற்றும் வேள்வி, மண்ணில் எவரும் அதை நிகழ்த்தியதில்லை என்றனர். என் குடியும் குலமும் கொடியும் முடியும் அவியாகட்டும், அவ்வேள்வியே நிகழட்டும் என்றார் காதி. ஆயிரம் வைதிகர் இரவும் பகலுமென பன்னிரண்டாண்டுகாலம் இடைமுறியாது அவியிட்டு தழலிறங்காது எரியெழுப்பிச் செய்த விஸ்வமேதம் முழுமைகொண்ட அன்று அவியுணவை தன் அறத்துணைவி மோதவதிக்கு அளித்தார்."

"அன்னை வயிற்றில் எழுந்த அனலென கருவுற்று வந்த மைந்தருக்கு விஸ்வாமித்ரன் என்று பெயரிட்டார். தொடர்ந்து வந்த மங்கை சத்யவதி. என்று அழைக்கப்பட்டாள். சத்யவதியை ருசீக முனிவர் மணந்தார். கௌசிக குலத்து விஸ்வாமித்திரர் கன்யாகுப்ஜத்தின் மணிமுடியை சூடியபோது விழியிழந்த அவைச்சூதர் ஒருவர் மலைமுடிகள் சூடவேண்டியது அணிமுகில்களை மட்டுமே என்றார். பன்னிரண்டாண்டுகாலம் கன்யாகுப்ஜத்தின் மீது அறநெறிவழுவா அரசன் ஆளும் நகர்மேல் அணிசெய்யும் ஹிரண்யத்வஜம் என்னும் பொன்னிற முகில்கீற்று அசையாமல் அமர்ந்திருந்தது என்றனர் கவிஞர். புவி இருக்கும் வரை புகழிருக்கும் படிவரை வணங்குக! மண்ணிலிழிந்த ஒவ்வொரு உயிருக்கும் விண்ணேறும் வாய்ப்பும் வல்லமையும் உள்ளது என்பது நூல்நிலை. ஆயினும் வெண்முகில்களை படிக்கட்டாக்கியவர் சிலரே. விண்ணவனாகி நின்ற மண்மைந்தனை வணங்குக! அவன் மானுடத்தின் மணிமுடி என்க!"

சூத்ரதாரன் மும்முறை வணங்கியபின் தன் உடலசைவுகளை முழுமையாக மாற்றி தலைப்பாகையை கழற்றி உதறி இடையில் கட்டிவிட்டு மெல்ல மேடையில் சுற்றி நடந்தான். நெற்றியில் கைவைத்து கூர்ந்து நோக்கினான். ஓசைக்காக செவிகளில் கைவைத்தான். மறுபக்கம் கானக எழினிக்கு அப்பாலிருந்து நிமிர்ந்த தலையுடன் கையில் கமண்டலமும் தண்டமும் ஏந்தி விஸ்வாமித்திரர் நடந்து வந்தார். சூத்ரதாரன் அவரை வணங்கி “வணங்குகிறேன் தவசீலரே, உத்கலத்தைச் சேர்ந்த வணிகனாகிய என்பெயர் சபரன். எவரால் நான் பேரருள் பெறப்போகிறேன் என நான் அறியலாமா?” என்றான். சியாமன் கைதூக்கி அவனை வாழ்த்தி “நான் விஸ்வாமித்ரன். அறம் வளர்த்த மன்னனாக இருந்தேன். இன்று தவம் வளர்க்கும் முனிவனாக திகழ்கிறேன். நீயும் உன்குடியும் வாழ்க!” என்றான்.

“ஆ, தாங்களா!" என்று சபரன் கைகூப்பினான். “வசிட்டருடன் காமதேனுவுக்காக போரிட்டவர். திரிசங்குவிற்காக பொன்னுலகை உருவாக்கி விண்நிறுத்தியவர். குளிர்நீர் சரஸ்வதியில் குருதிப்பெருக்கை எழுப்பியவர். ராகவராமனுக்கு வில்லும் சொல்லும் கற்பித்தவர். நான் காண்பதென்ன கனவா? இல்லை நான் இறந்து விண்ணுலகு எய்திவிட்டேனா?” விஸ்வாமித்ரர் கைநீட்டி புன்னகையுடன் அவனை வாழ்த்தி “நீ என்னைக் காணும் பேறுபெற்றாய். நீ அளித்த கொடைகளும் உன் தந்தை விட்டுச்சென்ற பயன்களும் உனக்கு கனிந்தன. நீ வாழ்வாய்" என்றார். சபரன் “ஐயனே, இந்த அடர்வனத்தில் அடிகள் என்ன நோக்குடன் அணைந்தீர் என அறியலாமா?” என்றான். விஸ்வாமித்ரர் “இனி இப்புவியில் நான் அடைய ஏதுமில்லை வணிகனே. விண்ணவனின் அரியணையில் அமர விழைகிறேன். மாகேந்திரம் என்னும் கடுநோன்பு தவமியற்ற இங்கு வந்தேன். அதோ அந்த மலையுச்சியில் இருக்கும் இந்திரமேகம் என்னும் இடத்திற்குச் செல்கிறேன்” என்றபின் அவனைக் கடந்து சென்றார்.

சபரன் குனிந்து அவரது பாதங்கள் பட்ட இடத்தைத் தொட்டு தன் தலையில் சூடிக்கொண்டிருந்தான். அவனுக்குப்பின்னால் எவரோ வரும் காலடியோசை கேட்டது. திகைத்துத் திரும்பி செவிகூர்ந்தபின் தத்தளித்து அங்குமிங்கும் ஓடி தன் இடையில் இருந்த கச்சையை அவிழ்த்து மரம்போல நீட்டி நிறுத்தி அதன் பின் பதுங்கிக்கொண்டு எட்டிப்பார்த்தான். நீலப்பட்டாடை அணிந்து அணிகள் ஒளிவிட கார்குழல் காற்றில் பறக்க மேனகை ஒசிந்து உலைந்து கையலைய இடைநெளிய நடந்துவந்தாள். அவளைக் கண்டு சபரன் திகைத்து மூச்சடக்கி வாய்திறந்தான். அவள்மேல் ஆடியால் ஒளியை எதிரொளித்து சுழற்றினான் கரவெழினிக்குள் நின்ற சூதன். பெருமுரசம் இடியோசையாகியது.

வஜ்ராயுதம் மின்ன இடியோசையென எழுந்த இந்திரனைக் கண்டு மேனகை நெஞ்சைப்பற்றி நிமிர்ந்து நோக்கினாள். அவளைச்சூழ்ந்து நெளிந்த மின்னல்கள் அவிந்தன. இடியோசையுடன் கலந்தெழுந்தது இந்திரனின் குரல். "இளையவளே, நீ என் பணிக்காக இன்று மண்ணிலிறங்கினாய். உன்னால் இந்திரவுலகு காக்கப்படட்டும்.” மேனகை “தேவர்க்கரசே, நான் தங்கள் பணிப்பெண்” என்றாள். பேரிடியொன்று மின்னுடன் எழுந்து அங்கே நின்றிருந்த திரையாலான மரம் தீப்பற்றி எரிய அதன்பின் நின்றிருந்த சபரன் பாய்ந்தோடி ஒரு பாறைக்குப்பின் பதுங்கிக்கொண்டான். எரியெழுந்து தழலாடியது. மின்னல்கள் மேடையெங்கும் துள்ளித்துடித்துச் சுழன்றன.

"இந்திரனை வணங்குக! விண்ணுக்குரியவனை, முகில்களின் அரசனை, மின்னுடைவாள் கொண்டவனை, தெய்வங்களுக்குரியவனை வாழ்த்துக!" என சூதர்கள் சேர்ந்து பாடினர். தண்ணுமையும் முழவும் குழலும் யாழும் சேர்ந்திசை எழுப்பி சூழ்ந்தன. வெண்ணிறத்துணிக்குள் இருவர் புகுந்துகொண்டு சமைத்த வெள்ளையானை துதியாட்டி செவியாட்டி அரங்குக்கு வந்தது. அதன் மேல் வைரக்கதிர் முடியும் விரியொளிக் குண்டலங்களும் செம்மலர் ஆரமும் வெண்பட்டாடையும் அணிந்த இந்திரன் வீற்றிருந்தான். அவன் வலக் கையிலிருந்து மின்னிச்சிதறியது வஜ்ராயுதம். இடக்கையில் இருந்தது வெண்சுடர் எழுந்த பாரிஜாதம். மேனகை அவனருகே சென்று தலைவணங்கி நின்றாள்.

அவளை வாழ்த்தி இந்திரன் “அழகியே கேள். அங்கே மலையுச்சியில் அமைந்த இந்திரமேகத்தில் மாகேந்திரம் என்னும் கடுந்தவம் இயற்றும் முனிவரை உன் அகவிழியால் பார். அவரை உன் அழகால் வெல்க! இனியவளே, ஐம்மலர் அம்புகளைத் தொடுக்க அனங்கன் உன்னை வில்லாக்கட்டும்” என்றான். “நான் அஞ்சுகிறேன் இறைவா. நான் எளியவள். பெருஞ்சினமுனிவரின் கடுஞ்சொல்லை எண்ணி என் மெய் விதிர்ப்பு கொள்கிறது” என்றாள் மேனகை. “ஆம், அவர் அனலுருவானவர். ஆனால் அனலை அணைக்க புனலை அமைத்த பெருவல்லமை உனக்கு அருள்செய்க!” என்றான் இந்திரன்.

“என் சொற்குவை ஒழிகிறது. என் சித்தம் எரிகிறது. என்னில் எஞ்சுவதென ஏதுமில்லை அரசே” என்றாள் மேனகை. இந்திரன் நகைத்து “உன் கருவறைக்குள் குடிகொள்ளும் அன்னைப்பெருந்தெய்வங்களை வணங்குக! அவர்கள் அறியா சொல் இல்லை. அவர்கள் காணாத வழியும் இல்லை. அவர்கள் பிறப்பித்த உயிர்க்குலங்களின் அனைத்து நலன்களாலும் வாழ்த்தப்பட்டிருக்கிறது அவர்கள் கொண்ட பெருங்காமம்” என்றான். "அறிக இளையோளே, இப்புடவியை ஆக்கிய முதற்பேரன்னை. காமத்தை மட்டுமே அவள் தன் நெஞ்சிலிருந்து எடுத்தாள். காமரூபிணியின் கோடிகோடி பாவனைகளால் அழகுற்றிருக்கிறது விசும்பு. கண் சுடர்ந்து இதழ் கனன்று முலைமுனைகொண்டு இடையொசிந்து மதம் சொட்டி காமம் கொள்ளும் பெண்ணில் எழுகிறாள் காலக்கனல் கொண்டு இப்புடவி சமைத்த குலமகள்.”

மேனகை கைகூப்பி “எந்தையே, முன்பு குபேரநிலை அடைய இம்மாமுனிவர் கௌபேரம் என்னும் பெருந்தவமியற்றியபோது வித்யுல்பிரபை என்னும் அப்சரநங்கை குபேரனால் அனுப்பப்பட்டாள். மின்னொளிப்பேரழகு கொண்ட அவள் அவரது தவச்சாலைக்குச் சென்று தன்னழகைக் காட்டி அவரை வெல்லமுனைந்தாள். அவர் அவளை தீச்சொல்லிட்டு அரக்கியென்றாக்கினார்” என்றாள். இந்திரன் “ஆம், அவள் அவரை வெல்லமுடியாதானபோது தன் சினத்தால் அவ்வுருவை அடைந்தாள். தோற்கத்தோற்க கனிபவளே காமக்கலையறிந்த பெண் என உணர்க!” என்றான்.

“ஒரு யுகம் அவள் அக்கோரவடிவில் அலைந்தாள். விஸ்வாமித்ரரின் தவச்சுடர் மாளவநாட்டில் யக்ஞசேனன் என்னும் வைதிகரின் துணைவியின் வயிற்றில் காலநேமி என்னும் தவச்செல்வனாகப்பிறந்தது. அவன் ஊழ்கம் பயில கானேகியபோது சினம் கொண்டு அவள் வழிமறித்தாள். அவள் கூந்தலைப்பற்றி அவன் சுழற்றி நிறுத்தியபோது அவளுக்குள் எரிந்ததெல்லாம் அணைந்தது. அவள் கால்நகம் இனித்தது. நெற்றிப்ப்பொட்டு இனித்தது. கார்குழல் வழியாக இளங்காற்று கடந்துசென்றது. அவள் அழகிய இளம்பெண்ணானாள். சிறியவளே, காதலை அறிந்த பெண்களுக்காக மட்டும் அமைந்த பிரேமாவதி என்னும் விண்ணுலகை அடைந்தாள். அவள் உடல் பொன்னொளி கொண்டது. உள்ளமெங்கும் அமுதம் நிறைந்தது” என்றான் இந்திரன்.

”தேவதேவா, தாங்கள் அனுப்பிய ரம்பைக்கும் அந்நிலையல்லவா அமைந்தது? விஸ்வாமித்ரரின் தவம் கலைக்க அவள் அணிகளைனைத்தும் பூண்டு தவச்சோலைக்கு சென்றாள். அவள்செல்லுமிடமெங்கும் வசந்தம் விரிவதற்காக நீங்கள் இளங்குயிலாக மாறி முன்னால் சென்றீர்கள். உங்கள் குரல்கேட்டு காடுபூத்தது. ஓடைகள் சிலிர்த்தன. வான் கனிந்து இளமழை எழுந்தது. விலங்குகள் காமம் கொண்டு குரலெழுப்பின. இன்னிசைப் பறவைகள் மரக்கிளைகளில் அமர்ந்து பாடின. பொன்னொளிர்ப் பூச்சிகள் யாழொலித்துச் சுழன்றன. அவள் அவர்முன் சென்று செழித்த மலர்ச்செடி என நின்றபோது மண்ணும் விண்ணும் காமவடிவாக இருந்தன. அவரோ விழி தூக்கி அவளை நோக்கியதுமே நீ கற்பாறையெனச் சமைக என்று தீச்சொல்லிட்டார்” என்றாள் மேனகை.

“காமினியே கேள். ரம்பை என் ஆணையேற்று அக்கடமைக்கென சென்றாள். எப்படியெனினும் வென்றாகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டிருந்தாள். வசந்தம் விரிந்த அக்கானகவெளியில் அவள் விழிகளில் மட்டுமே காமம் இருக்கவில்லை. முனிவர் அவற்றை நோக்கியதுமே சினந்தது இயல்பே” என்றான் இந்திரன். “அவள் அக்கானகத்தில் கல்லெனக்குளிர்ந்து கிடந்தாள். நெடுநாட்களுக்குப்பின் தவம்செய்வதற்கென காட்டுக்குவந்து தன்னுள் உறைந்த காதல்சுனையின் முதல் ஊற்றைத் தொட்டுத் திறந்த ஃபூரிதேஜஸ் என்னும் வைதிகன் எரிமூண்டு எழுந்த உடல்கொண்டு தவித்து வந்து அப்பாறைமேல் அமர்ந்தான். இளந்தொடைகளாக மாறி அவள் அவனை தன்மேல் அமர்த்திக்கொண்டாள். மென்முலையாக அவனைத் தழுவி இதழ்கவ்வி மூச்சுகலந்தாள்.”

இந்திரன் சொன்னான் “அறிக பெண்ணே, பெண்ணில் ஆணை கவர்வது அவள்கொள்ளும் காமமே. அவள் வயிற்றிலுறங்கும் வருங்காலம் விழிகளில் இதழ்களில் முலைகளில் உந்தியில் அல்குலில் திகழ்கையில் அவள் சுடராகிறாள். ஆண்கள் விட்டில்களாகிறார்கள்.” மேனகை அவனை வணங்கி “அவ்வண்ணமே” என்றாள். இடியெழுந்து மின்னல்கள் சூழ இந்திரனின் யானை இரு தேவர்களாக எழுந்து இருபக்கமும் நின்றது. அவன் ஒரு சிறு செம்மலரை அவளிடம் நீட்டி “இம்மலருடன் செல்க! இதன் இதழ்கள் தழலாக ஆகுமென்றால் நீ அவரை வென்றாய். பின் கனியாக ஆகுமென்றால் உன்னை வென்றாய்” என்றான். அவள் அதை பெற்றுக்கொண்டாள். இரு பக்கமிருந்தும் கரந்துவரல் எழினி வந்து அவையை மூடிக்கொண்டது.

அவையெங்கும் பரவிய அசைவை உணர்ந்தபின்னரே திருஷ்டத்யும்னன் தன் உடலை உணர்ந்தான். கால்களை மெல்ல நீட்டி கைகளை விரித்து இடையின் இறுக்கத்தை சீரமைத்துக்கொண்டான். ஏவலர்கள் மரத்தாலங்களில் மூங்கில்குவளைகளில் இன்னீரும் மதுவும் சிற்றுணவுகளுமாக நிழல்களென ஓசையின்றி குனிந்து இருக்கைநிரைகளுக்கிடையே பரவினர். திருதராஷ்டிரர் பெரிய சுரைக்குடுவை நிறைந்த மதுவை வாங்கி ஓசையுடன் அருந்திவிட்டு திருப்பிக்கொடுத்து ஏப்பத்துடன் கால்களை நீட்டிக்கொண்டார். அவர் அருகே அமர்ந்திருந்த விதுரர் அப்பால் இருந்த கனகரை நோக்கி ஏதோ கைகாட்ட கனகர் திரைவிலக்கி வெளியே ஓடினார். திருஷ்டத்யும்னன் ஒரு சிறுகுவளை மதுவை கையில் எடுத்துக்கொண்டான்.

அரங்கில்பரவியிருந்த மெல்லிய ஒளியில் பீடங்களில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் துரியோதனனும் கௌரவர்களும் கோட்டோவியங்கள் போல தெரிந்தனர். கண்கள் மட்டும் அகல்சுடரை ஏற்று மின்னிக்கொண்டிருந்தன. துரியோதனன் கைகளை மார்பில் கட்டியபடி நிமிர்ந்த தலையுடன் அமர்ந்திருக்க யுதிஷ்டிரன் சற்று அமைதியிழந்தவனாக தலைகுனிந்து கால்களை அசைத்துக்கொண்டிருந்தான். வலப்பக்கம் மெல்லிய வெண்ணிறத்திரைக்கு அப்பால் அரசியரின் பீடநிரைகள். அங்கே சேடியர் புழங்கும் ஓசை கேட்டது.

மீண்டும் தண்ணுமையும் முழவும் எழுந்தன. எழினி விலகிக்கொள்ள சுடர்கள் தூண்டப்பட்ட ஏழடுக்கு நிலைவிளக்கு மேடையில் அசைவற்ற சுடர்களுடன் நின்றது. யாழும் குழலும் இசைகொண்டு தாளத்தில் ஏறிக்கொண்டன. அவற்றை மூழ்கடித்தபடி ஓங்கார நாதம் எழுந்தது. “அரசரில் முனிவரை முனிவரில் அரசரை விண்ணவர் வெருளும் மண்ணவர்க்கு அருளும் அறத்தானை மூன்றுதெய்வங்களுக்கும் இனியானை வணங்குக!" என்று சூதர் பாடினர். உள்ளரங்கு எழினி விலக அங்கே ஒரு மண்புற்றின்மேல் விஸ்வாமித்ரர் கண்மூடி தவத்திலமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்மேல் சருகுகள் இசையுடன் ஒவ்வொன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன.

சலங்கை ஒலி எழுந்ததும் திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சம் படபடப்பதை உணர்ந்தான். இடதுகால் துடிக்கத் தொடங்கியது. மலர்மரச்செறிவு தீட்டப்பட்ட எழினிக்கு அப்பாலிருந்து மேனகை நடனநடையில் மெல்ல வந்தாள். ஒரு பெண்ணுடலில் புகைச்சுருளின் மெல்லசைவு நிகழமுடியும் என்று விழிமுன் கண்டான். அவள் தன் நீள்குழல்கற்றை ஒன்றை முலைமுகிழ்களின் நடுவே இட்டு கைகளால் முடைந்தபடி வந்து அங்கிருக்கும் அவரை முற்றிலும் பாராதவளாக அச்சோலை மலர்களை கொய்தாள். நீரள்ளி முகம் நோக்கினாள். தனக்குள் பாடியபடி விழியலைத்து மலர்க்கிளைகளை நோக்கினாள். சிரித்துத் துள்ளி அங்கே அமர்ந்த பறவைகளை  கைவீசி துரத்தினாள். இளங்குயில் குரலை தான் நடித்து அதை ஏமாற்றி சிரித்தாள். முனிவர் உடலில் மெல்லசைவு எழுந்தது. அவர் விழிகள் அதிர்ந்து பின் குருதிமலர்கள் என திறந்தன.

அவள் அவர் பார்ப்பதை அறியாமல் கீழே விழுந்த கனியொன்றை எடுத்து கடித்தாள். நீர்த்துளிசெறிந்த மரக்கிளையை அசைத்து குளிர்த்துளிகளுக்கு உடல்சிலிர்க்க முகம் திருப்பி சிரித்து விலகினாள். அவர் எழுந்ததையும் சினம்கொண்ட முகத்துடன் அருகே வந்ததையும் அவள் காணவில்லை. அவர் "யார் நீ?” என்று கேட்டதும் திகைப்புடன் திரும்பி தழல் விலகுவதுபோல ஒருகணம் அசைந்து தன் முலைகள்மேல் ஆடையை அள்ளி அழுத்தியபடி “நான் ஓர் தேவகன்னி. இச்சோலை எழில்கண்டு மலராட வந்தேன்” என்றாள். “இது என் தவச்சாலை. இக்கணமே இங்கிருந்து விலகு” என்றார் விஸ்வாமித்ரர். துடுக்குடன் தலைசரித்து ஏளனப்புன்னகையுடன் இதழ் கோட்டி மேனகை “ஏன், இதை இந்திரன் உங்களுக்கு அளித்திருக்கிறானோ?” என்றாள்.

அந்த அச்சமின்மையால் திகைத்த விஸ்வாமித்ரர் "நான் யாரென்று அறிவாயா?” என்றார். “யாராக இருந்தாலென்ன? நான் கேட்பது எளிய வினாவல்லவா?” என்றாள். ஆணவத்துடன் தலைதூக்கி அவரை நோக்கி “உடைமையற்று காடுபுகுந்த முனிவர் ஒரு சோலையை மட்டும் தனதாக்கிக்கொண்டாரா என்ன?” என்றாள். “பெண்ணே, நான் விஸ்வாமித்ரன். தீச்சொல்லிட்டு உன்னை தீராப்பெருந்துயருக்கு அனுப்ப என்னால் முடியும்” என்றார். “ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன். பெருஞ்சினத்தவர் என்று சொன்னார்கள்” என்றவள் சிரித்து “சினம்கொண்ட ஆண்களைப்போல் பெண்களை ஈர்ப்பவர் இல்லை” என்றாள். அவர் நோக்கு தொடும் இடத்தை அவள் கை சென்று தொட்டது. வலக்கை தன் கன்னத்தை வருடியது. இறங்கி கழுத்துமென்மையை தொட்டு முலைநடுவே அமைந்தது. "விலகு... இல்லையேல் அழிவாய்” என்றார் விஸ்வாமித்ரர். "அழிந்தால் என்ன? நான் உங்களுள் எஞ்சுவேன் அல்லவா?"

கையில் கமண்டல நீரை அள்ளி ஓங்கி ”இக்கணமே நீ" என்று அவர் சினக்க “உங்கள் நெஞ்சுக்குள் என்மேல் ஒருதுளியேனும் காமம் இல்லையேல் தீச்சொல்லிடுங்கள்” என்றாள் மேனகை. “சீ, என்ன நினைத்தாய் என்னை?” என்றார் விஸ்வாமித்ரர். “ஆண்மகன் என்று” என அவள் மெல்ல நகைத்தாள். “முனிவரென்றும் அறிவரென்றும் அறிபவர் ஆயிரம்பேர் இருக்கலாம். ஆணென்று அறிபவளும் ஒருத்தி இருக்கட்டுமே.” அவள் உடல் அனலென ஆடிக்கொண்டே இருந்தது. கழுத்தில் ஒரு மென் சொடுக்கல் நிகழ்ந்தது. இடை சற்று வளைந்து தொடை முன்னெழுந்தது. விஸ்வாமித்ரர் தன் கைநீரை அவள் மேல் வீசி “பதியிலாதவளே, இக்கணமே நீ ஒரு பறவையாக மாறு” என்றார். அவள் சிரித்து வாய்பொத்தியபோது மேலாடை சரிந்து வனமுலைகளின் கரியகூர்விழிகள் எழுந்து நோக்கின. “அப்போதும் அழகற்ற ஓர் உயிராக என்னை ஆக்க உங்கள் உளம் ஒப்பவில்லை” என்றாள்.

மீண்டும் நீரை அள்ளி அவர் கையில் எடுக்க “உங்கள் ஒரு சொல்லும் என் மேல் அமையாது முனிவரே. நான் உடையா கவசம் அணிந்திருக்கிறேன்” என்று அவள் கைகளை விரித்தாள். இடைவரை சரிந்த ஆடையில் செப்புமுலை எழுந்து அசைய மென்வயிற்றில் உந்தி சுழித்து அலையிளக வெண்பாளைத் தோள்களும் மூங்கில்புயங்களும் விரிய "உங்கள் காதலென்னும் கவசம்” என்றாள். “விருப்பிலா ஆண்மகன் முன் உடல்காட்டி நிற்கும் பரத்தை நீ” என்று அவர் சீறி மூச்சிரைக்க “பரத்தைமையும் பெண்மையின் ஒரு நிலையே. எங்கோ எவர்முன்னோ பரத்தையென உணரா பெண் எவள்?” என்றாள்.

“இன்று உன்னை நான் அடையலாம். என்றோ உன்னை வெறுப்பேன். என் முன் நீ இழிந்து நிற்பாய்” என்று அவர் விழிதிருப்பி சொன்னார். “உடல்கொண்டு ஆணை வெல்பவள் பெண்ணில் வாழும் காதலி. வென்ற ஆணை கருப்பைவெதுப்பில் வைத்திருப்பவள் அவளில் கனியும் அன்னை” என்று அவள் சொன்னாள். "காதலியும் அன்னையும் ஆனவள் நாணிலாதவள். தன்னிலை அழிந்தவள். எதனாலும் எரிக்கப்படாத குளிர்பாறை என்றானவள்.” அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். கைகளால் முகம்பொத்தித் திரும்பி நின்று அவர் உடலதிர்ந்துகொண்டிருக்க “இனி சொல்லென ஏதும் எஞ்சுவதில்லை ஆண்மகனே. இங்கிருப்பது பெண்ணென்று ஆனவை அனைத்தும்” என்றாள்.

சூதர்களின் இசைப்பாடல் தண்ணுமையும் யாழும் குழலும் முழவும் கலந்து துணைவர எழுந்து மேடையை சூழ்ந்தது. அதில் அவள் காற்று அலைக்கும் மெல்லிறகென அசைந்து நடனமிட்டாள்.

”இனிய மது. இனிய மது

இனிய மது நிறைந்த இக்கிண்ணம்

திறந்திருக்கிறது தேவர்களே!

தேவர்களே தெய்வங்களே!

திறந்திருக்கிறது மதுக்கிண்ணம்

மலைகள் நதிகள் சமவெளிகள் காடுகள்

ஆர்த்தலைக்கும் பெருங்கடல்

இனிய மதுக்கிண்ணம்

தேவர்களே தெய்வங்களே!

இப்புவி ஒரு இனிய மதுக்கிண்ணம்!

தேவர்களே தெய்வங்களே!

விடாய்கொண்டவர்களே,

இனிய மதுக்கிண்ணம்

இதோ ஓர் இனிய மதுக்கிண்ணம்!”

மேடையில் முழந்தாள் மடிந்து அமர்ந்து பின் மண் படிந்து விழுந்த விஸ்வாமித்ரரின் தலையில் அவள் கால் படிந்தது. அவர் அதை தன் இருகைகளாலும் பற்றி நெஞ்சில் வைத்தார். நெருப்புத்தழல்கள் வரையப்பட்ட செவ்வெழினி மெல்ல வந்து அவர்களை மூடிக்கொண்டு மறைந்தது.

சூத்ரதாரன் வலப்பக்கத்திலிருந்து ஓடிவந்து மேடைமுன் நின்று “பனிமலை உருகாது நதிகளில்லை!” என்று உரக்கச்சொல்லி பின் குரல் தணிந்து “சரி சரி, இதை நான் சொல்லவில்லை. கவிஞர் சொல்கிறார்கள். அப்போது நான் அருகே நின்றுகொண்டிருந்தேன்” என்றான். “மாமுனிவனின் தவம் மங்கையில் மகளெனப் பிறந்தது. மூதன்னை சகுந்தலை வாழ்க! அவள் மணிவயிற்றில் உதித்த பரதனை வாழ்த்துவோம். பரதனின் குருதிவழி எழுந்த மாமன்னர்நிரையை வாழ்த்துவோம். மகாசக்திவடிவான பாரதவர்ஷத்தை எண்ணுடல் மண்பட வணங்குவோம். அறிஞரே அரசரே அவையீரே, தவமும் காதலும் இரண்டறக்கலந்த மண் இது. இங்கு எழுக தவச்சாலைகள். அருகே ஒளிர்க மதுச்சாலைகள். விண்ணை மண்ணுக்கு இறக்கும் முனிவர் வாழ்க! மண்ணை விண்ணாக்கும் காதலர் வாழ்க!”

மும்முறை தொழுது சூத்ரதாரன் பின்னகர்ந்ததும் முகப்பெழினி இருபக்கத்திலும் இருந்து வந்து மூடிக்கொண்டது. திருஷ்டத்யும்னன் தன் உறைந்த கால்களை நீட்டி உடலை நெளித்தான். கால்கள் முழுக்க சிறிய ஊசிகள் குத்தும் வலி எழுந்தது.

நூல் ஒன்று : மலைமுடித்தனிமை - 3

கதவுக்கு அப்பால் மெல்லிய சிலம்பொலி கேட்டு திருஷ்டத்யும்னன் மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்றான். பின்னர் அப்படி எழுந்ததை நாணியவன் போல பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு இருண்ட சாளரத்துக்கு அப்பால் இருளென அசைந்த மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான். காற்று சிறிய சலசலப்புடன் கடந்துசென்றது. சாளரத்திரைச்சீலை ஓர் எண்ணம் வந்து மறைந்ததுபோல எழுந்து மீண்டும் படிந்தது. சுடர் சற்றே அசைந்து அமைந்தது. கதவு சிறிது திறந்து சயனன் எட்டிப்பார்த்து “வணங்குகிறேன் இளவரசே” என்றான். அவன் கண்களை நோக்கி தன் கருவிழிகளை மட்டும் அசைத்து அவன் ஆணையிட சயனன் பின்னகர்ந்து கதவை மேலும் திறந்தான். சுஃப்ரை உள்ளே வந்து கதவை ஓசையின்றி மூடிவிட்டு அவனை நோக்கி புன்னகைசெய்தாள்.

அவள் வெண்பட்டாடையை தோள்மேல் போர்த்தியிருந்தாள். போர்வை விலகிய இடைவெளியில் கழுத்தில் அணிந்திருந்த மணியாரத்தின் கற்கள் மின்னுவது தெரிந்தது. அவன் எழவிரும்பினாலும் அசைவிலாதவனாக அமர்ந்திருந்தான். அவள் மேலுதட்டை இழுத்து கீழுதட்டால் கவ்வியபடி கண்களில் ஆவலுடன் அவனை நோக்கியபடி நின்றாள். பின் அவள் கை சரிய பொன்வளைகள் குலுங்கின. மேகலைமணிகள் குலுங்கி அசைய அவனருகே வந்து இடுப்பில் கைவைத்து ஒசிந்து நின்றாள். அரண்மனைப்பெண்கள் எவரிடமும் அந்த நடன அசைவுகள் நடையில் கூடுவதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். சிற்றிளமையிலேயே கற்ற நடனம் இவர்களின் விழிகளை, சிரிப்பை, உடலசைவுகளை முழுமையாக வகுத்துவிடுகிறது போலும். அவள் எண்ணங்கள்கூட அவ்வாறு வகுக்கப்பட்டிருக்குமா என்ன? இப்புவியின் நிகழ்வுகளனைத்தும் அவளுக்கு ஒரு நடனமென்றே தெரியுமா?

”அமர்க!” என்றான். அவள் மஞ்சத்தில் அமர்ந்து ஆடையை தன் கால்கள் நடுவே ஒதுக்கிக்கொண்டு “பாஞ்சால இளவரசரைப்பற்றி அறிந்துள்ளேன். சற்றுமுன் சயனர் மேலும் கூறினார்” என்றாள். அவள் குரலும் தேய்த்து மெருகேற்றப்பட்டதாக இருந்தது. புருவங்களைச் சுளித்தபடி ”என்ன கேள்விப்பட்டாய்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “தாங்கள் அடைந்த விழுப்புண்களைப்பற்றி” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். “களத்தில் வில்லுடைந்து அம்புபட்டு விழுந்தவன், அதைத்தான் இப்படி சொல்கிறாய் இல்லையா? பரத்தைக்கலையை நன்கு கற்றிருக்கிறாய். ஆண்களை நன்றாகவே அறிவாய் போலும்" என்றான். அந்தக்கடுமை அவனை உள்ளூர புன்னகைக்கச் செய்தது. “பரத்தைக்கலை என்பது ஆண்களை அறிவதல்ல. பெண்களை அறிவது” என்றாள் அவள். பொருளில்லாமல் அவன் “ஓ” என்றான்.

“பெண் தன் உடலை, உள்ளத்தை, ஆற்றலை அறிகையில் பரத்தையாகிறாள்” என்று சொன்ன அவள் மெல்ல நகைத்து “மனைமகளும் மஞ்சத்தில் பரத்தை என்றுதானே சொல்கிறார்கள்?” என்றாள். “நீ எப்போதும் மஞ்சத்தில் இருக்கிறாயா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆண்களை பெண்கள் மஞ்சத்திலன்றி வேறெங்கும் சந்திக்கமுடியாதென்று என் மூதன்னை சொல்வாள்.” அவன் அவள் கண்களையே நோக்கினான். அவற்றிலிருந்த ஆழம் அவனை அச்சுறுத்தியது. “நீ நூல் கற்றவளா?” என்றான். ”காவியம் பரத்தைக்கலையின் ஒரு பகுதி” என்றாள் அவள். “நான் காவியம் கற்றதில்லை” என்று அவன் சொன்னான். “நன்று” என்று அவள் சிரித்தாள். “காணும் ஒவ்வொன்றையும் நெஞ்சுக்கு உகந்த பொய்யாக ஆக்கிக்கொள்வதற்குப் பெயரே காவியம். பொய்களின் மேல் உங்கள் வில்லின் அம்புகள் படுவதில்லை.”

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எழுந்து அவளை தழுவவேண்டும், அந்தச்சிரிப்பின் மீதே முத்தமிடவேண்டும் என்று தோன்றியும் அவ்வெண்ணம் உடலை சென்றடையவில்லை. அவள் “என்ன பார்வை?” என்று சிணுங்கி தன் கழுத்தை மெல்ல கைகளால் வருடினாள். கழுத்தைப்போல இளமையை வெளிக்காட்டுவது பிறிதில்லை. மென்மை என்பதே தோலென ஆனதுபோல. மலர்வரிகள். சிறுபூமுட்கள். அசைவெல்லாம் நடனமாக ஆவது பெண்ணின் கழுத்தில். “என்ன?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றான். அவள் அவன் முழங்காலில் கைகளை வைத்து “ஒன்றுமில்லையா?” என்று ஆழ்ந்த செவிக்குரலில் கேட்டாள். “ம்” என்று அவன் மூச்சாக சொன்னான். “விஸ்வாமித்ரரா நீங்கள்? தவம் கலைக்கவேண்டுமா என்ன?” உடலின் மணம். இளவெம்மை ஒரு மணமாக மாறுமா என்ன? ”நான் உடல்நலமின்றி இருந்தேன்” என்றான். அதை ஏன் சொன்னேன் என்று வியந்தபடி “நெடுநாட்கள்” என்றான்.

“அறிவேன்” என அவள் அவனருகே வந்து பீடத்தின் கைப்பிடிமேல் அமர்ந்தாள். அவளுடைய இடமுலை அவன் தோளில் மெல்லப்பதிந்து புதைந்தது. இதயத்துடிப்பு வந்து தோளில் அதிர்ந்தது. "நெடுநாட்கள்...” என்றான். பெருமூச்சுடன் "நெடுநாட்கள் உடல்நலமின்றி இருந்தவன் பிறிதொருவனாக ஆகிவிடுகிறான். அவனறிந்த உலகம் முழுமையாக மாறிவிடுகிறது” என்றான். அவள் அவன் தலையை தன் கைகளால் வளைத்து நெஞ்சோடு சேர்த்து “ம்” என்றாள். “வலி என்பது ஒரு தவம். பிறிதிலாது உளம் குவியச்செய்யும் முதற்சொல் என்பது வலியின் அதிர்வே. உடல் உடல் உடல் என உணர்ந்தபடி படுத்திருப்பது. இவ்வுடலன்றி பிறிதில்லை நான் என உணர்வது... நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டேன்.”

அவள் அவன் குழலை கைகளால் அளைந்துகொண்டிருந்தாள். “இங்கு வந்ததும் துரோணரின் குருகுலத்திற்குத்தான் சென்றேன்” என்று அவன் சொன்னான். “அங்கே நான் பயின்ற களங்களில் இளையோர் நின்றனர். நான் வாழ்ந்த குடிலில் கலிங்கநாட்டு இளவரசன் ஒருவன் இருந்தான். நான் கையாண்ட படைக்கலங்கள் எங்குமிருக்கவில்லை. நின்ற நிலத்தில் எடைகொண்டு மூழ்கிமறைந்துவிட்டேன் என்று எண்ணினேன். அந்த எண்ணமே என்னை கால்பதறச்செய்தது. துரோணர் விழிகளும் ஒரு கணம் கழித்தே என்னை அறிந்தன. கற்பித்தலில் மகிழும் அத்தனை ஆசிரியர்களுக்கும் கண்முன் உள்ள மாணவர்களே இனியவர்கள். என்னிடம் தன் மாணவர்களைக் காட்டி புகழ்ந்துகொண்டிருந்தார். அவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்லி என்னிடம் வில்லைக்கொடுத்து இலக்கொன்றை வெல்லச்சொன்னார். அந்த வில்லை கையிலெடுத்ததுமே திகைத்துவிட்டேன். புத்தம்புதியதாக இருந்தது அது. நடுங்கும் கைகளுடன் அதை நாணேற்றினேன். நான் கற்ற கலையெல்லாம் நான் இழந்த உடலுக்குரியது. நோய்மீண்டு நானடைந்த இவ்வுடல் அம்பை அறியவில்லை. இலக்கை நோக்கியபோது என் கண்கள் இருண்டன.”

திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “இலக்கு தவறியபோது துரோணர் என்னை நோக்கி கனிந்து புன்னகைத்து உன் உடலின் கணக்குகள் மாறிவிட்டன மைந்தா என்றார். அந்தக்கனிவுதான் அவரை ஆசிரியராக்குகிறது. ஆனால் நான் அச்சொற்களால் அகம் புண்பட்டேன். கண்கலங்கி வில்லைத்தாழ்த்தி அவர் கால்களைத் தொட்டுவிட்டு திரும்பினேன். என்னை அவர் பின்னின்று அழைத்ததை நான் கேட்கவில்லை. இரக்கத்திற்குரியவனாகும் ஆண்மகன் போல் இழிந்தவன் எவன்? வெறும் உடல். புழுவுடல். மட்கி அழியும் தசையுடல். அதுமட்டுமே நான். மீளமீள அதைத்தான் என்னுள் சொல்லிக்கொண்டே இருந்தேன். சிறுத்து நைந்து ஒரு புழுவாக இவ்வறைக்குள் வந்துசேர்ந்தேன். இவ்வறைக்குள் நுழைந்தபின் நான்குநாட்களாக நான் வெளியே செல்லவேயில்லை.”

“இன்று உன் ஆடலைப்பார்த்தேன்” என்று அவன் சொன்னபோது அவள் “ம்” என்று சொல்லி மேலும் இறுக அணைத்தாள். “என் உடலை உணர்ந்தேன். ஆகவேதான் உன்னை பார்க்கவேண்டுமென விழைந்தேன். என் உளமறிந்தவன் சயனன்.” அவள் குனிந்து அவன் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டாள். நாநுனியால் நா தீண்டினாள். அவன் கன்னத்தில் அவள் இனிய ஊன்மணமுள்ள மூச்சு பரவியது. அவள் இதழ்கள் அழுத்தமான மலர்மொட்டுகள் போலிருந்தன. இதழ்களின் துடிப்புகளினூடாக உரையாடிக்கொள்வதுபோல. ஒருவரை ஒருவர் உண்டு பின்பு மூச்சு ஒலிக்க விலகி அவன் “நான் நெடுந்தனிமை கொண்டிருந்தேன்” என்றான். "அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான். “இத்தனை அடுக்குகளாக கடுஞ்சொல் சுற்றி உங்களை ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு சிறுதொடுகையில் உடல்நடுங்குகிறீர்கள்.”

அவன் அவள் கைகளை விலக்கி சினத்துடன் “நடுங்கவில்லை” என்றான். “சரி, இல்லை” என்று சொல்லி அவள் வெண்பற்கள் ஒளிவிட நகைத்தாள். “உன்னை அஞ்சுகிறேன் என நினைத்தாயா?” அவள் “இல்லையே” என்று சொல்லி அவன் தோள்களை வளைத்துக்கொண்டாள். “கையை எடு” என்று அவன் மேலும் சினந்தான். “சரி எடுத்துவிடுகிறேன்” என்று விலக்கிக்கொண்டு அதேவிசையில் முலைகள் அவன் மார்பில் பொருந்த அவன்மேல் விழுந்தாள். அவன் அவளை பிடித்துத் தள்ளி “விளையாடுகிறாயா? உன்மேல் காதல்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாயா?” என்றான். அவள் அவன் செவியில் “பரத்தைமேல் காதல்கொள்ளாத ஆண்மகன் உண்டா என்ன? பத்தினியரை அணுகும்போது அந்தக்காதலைத்தானே உணர்வீர்கள்” என்றாள்.

அவன் சினத்துடன் எழுந்துகொள்ள அவள் ஆடை கலைந்து பின்னால் சரிந்து விழுந்தாள். “செல்... இப்போதே சென்றுவிடு” என்று மூச்சிரைத்தபடி அவன் சாளரம் நோக்கி சென்றான். ஏன் செல்கிறோம் என்று எண்ணியதுமே திரும்பி “இங்கு நிற்காதே” என்று கூவினான். “சரி, சென்றுவிடுகிறேன்” என அவள் குனிந்து தன் மேலாடையின் நுனியை பீடத்திலிருந்து இழுக்க மறுபக்கம் சரிந்து மேலாடை அவள் தோளிலிருந்து நழுவியது. 'உஸ்' என்ற ஒலியுடன் அவள் அதை அள்ளி முலைகள் மேல் இட்டுக்கொண்டு இடக்கையால் நெற்றிக்கூந்தலை ஒதுக்கி திரும்புகையில் அவன் எட்டு எடுத்து வைத்து அவள் இடையை வளைத்துப்பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். மேலாடையை பிடுங்கி வீசி அவள் முலைகளை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு இதழை இதழால் பற்றினான். நாகம் என அவள் உடல் அவனை சுற்றிக்கொண்டது.

பின்பு அவன் அவளைத் தூக்கி மஞ்சத்தில் வீசிவிட்டு மூச்சிரைக்க முகம் நெளிய “நஞ்சு நஞ்சு” என்று கூவியபடி சென்று சிறுபீடத்திலிருந்த தன் உடைவாளை எடுத்து உலோக ஒலியுடன் உருவி ஓங்கி அவளை வெட்டினான். அக்கணம் இடையில் ஒரு நரம்பு சற்றே இழுத்துக்கொண்டதனால் அவ்வெட்டு சரிந்து இறகுச்சேக்கையில் அவளுக்கு மிக அருகே விழுந்து புதைந்தது. அவளுடைய வெற்றுடலில் நீரலை என ஓர் அசைவு மட்டும் கடந்துசென்றது. அவள் அச்சமோ விதிர்ப்போ இல்லாமல் அசைவற்று அப்படியே கிடந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணல்அலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. வாளை மீள எடுத்துக்கொண்டு அவளை அவன் நோக்கியபோது அவள் செவ்விதழ்கள் மிகமெல்ல பிரிந்தன. உள்ளே இருவெண்பற்களின் நுனி மின்னியது.

அவன் வாளை அறைமூலையை நோக்கி வீசிவிட்டு சென்று பீடத்தில் அமர்ந்து தலையை கைகளில் தாங்கிக்கொண்டான். காதுகளை ரீங்காரம் ஒன்று நிரப்பியது. ஆனால் அப்பால் படுத்திருக்கும் அவள் உடலுக்குள் குருதி ஓடும் ஓசையைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. அவன் உடலுக்கும் உள்ளத்திற்குமான அனைத்துத்தொடர்புகளும் அற்றுவிட்டிருந்தன. அவள் ஒரு சொல் உரைத்தால்கூட மீண்டும் சினம் மூண்டு வாளை எடுத்து அவள் கழுத்தை வெட்டிவிடுவோம் என உணர்ந்தான். ஒரு சொல். ஒரு சொல். ஒரேஒரு சொல். சொல். இதோ அப்பால் அச்சொல் திரள்கிறது. துளிக்கிறது. ததும்புகிறது. ஒருசொல். சொல்லிவிட்டால் அவளை வெட்டி வீழ்த்திவிட்டு குருதி வழியும் வாளை மெல்ல உதறிச் சொட்டி திரும்பி சயனனை அழைத்து அச்சடலத்தை அகற்ற ஆணையிடலாம். குருதி மெத்தையெங்கும் ஊறி ததும்பி பீடத்திலிருந்து கொழுத்த துளிகளாக சொட்டும். அவன் உடல்பதறத் தொடங்கியது. நரம்புகள் இழுபட்டு இறுகி இறுகி உச்சகட்ட அதிர்வில் நின்றன. நகங்கள் கைவெள்ளையில் ஆழப்பதிந்தன. உதடுகளில் பற்கள் புதைந்தன. கழுத்துத்தசைகள் இறுகி தலை ஆடிக்கொண்டிருந்தது.

ஆனால் அவள் ஓசையின்றி எழுந்து தன் மேலாடையை எடுத்து தோளில் சுற்றிக்கொண்டு தரையைத் தொடாதவள்போல நடந்து கதவைத்திறந்து வெளியே சென்றாள். அவள் ஆடைகள் உலையும் ஒலியை, திரள்தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் ஒலியை கதவு கீல் ஒலிக்கத் திறந்து மூடிய ஒலியை கேட்டான். கதவின் விளிம்பு பொருந்தும் ஒலியை கேட்டான். அத்தனை நரம்புகளும் அறுபட அவன் தளர்ந்து பீடத்தில் பின்னுக்கு சரிந்தான். வெந்நீராவி பட்டதுபோல உடல் வியர்த்து நடுங்கி பின் குளிரத்தொடங்கியது. தன் பற்கள் கிட்டித்திருப்பதை உணர்ந்து வாயைத்திறந்தான். தாடைகள் வலித்தன. பெருமூச்சுடன் எழுந்தபோது தொடையிலிருந்து ஒரு நரம்பு நெஞ்சை வலியுடன் இழுத்தது. மீண்டும் பீடத்தில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். உடலுக்குள் ஓடும் குருதியை உணர்ந்தபடி அமர்ந்திருந்தான்.

பின்னர் தன்னுணர்வு கொண்டு எழுந்தபோது உடல் அடங்கிவிட்டிருந்தது. சற்று தலைசுழல்வது போலிருந்தாலும் நடக்க முடிந்தது. கதவை அணுகி அதை மெல்ல இருமுறை தட்டினான். சயனன் திறந்து தலைவணங்கி நின்றான். “மது... யவன மது” என்றான். அவன் தலைவணங்கி சென்றபின்னர் அவன் கண்களை நினைத்துக்கொண்டான். அவற்றில் இருந்தது பணிவா, நகைப்பா? அதை ஒருபோதும் அறியமுடியாது. அரசர் அறியமுடியாத ஆழமென்பது அணுக்கனின் அகம்தான் போலும். அறைக்குள் திரும்ப அஞ்சியவன் போல வெளியே சென்று இடைநாழியில் நின்றான். நீண்ட மரப்பாதையில் மீன்நெய்விளக்குகளின் வெளிச்சம் சிந்திக்கிடந்தது. எவருக்காகவோ காத்திருந்தது. எவரோ சென்றபின் எஞ்சியிருந்தது. எவரும் தீண்டாமலிருந்தது. அப்பால் சயனனின் காலடிகள். அக்காலடிகளை ஏற்று நாகம்போல நெளிந்தது இடைநாழியின் நீள்தரை. நெளிந்து சுருண்டு பத்தி எழுப்பி சீறும் என்பதுபோல.

சயனன் அளித்த பொற்கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தினான். “இன்னும்” என்றான். அவன் நீலப்பளிங்குக் குடுவையில் இருந்து மதுவை மீண்டும் ஊற்றினான். அதை வாங்கி உறிஞ்சிவிட்டு “அதைக்கொடு” என்றான். சயனன் அதை நீட்ட தயங்கியபோது கைநீட்டி பிடுங்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதவை தோளால் உந்தி மூடியபின் நின்றான். மீண்டும் மீண்டும் குடுவையிலிருந்தே மதுவை குடித்தான். கடுந்தேறல் இனிமையும் துவர்ப்புமாக திகட்டி வந்தது. ஆவி மூக்குத்துளைகள் வழியாக சீற உடல் உலுக்கிக்கொண்டது. குடுவையை பீடத்தில் வைத்தபின் அமர்ந்தான். கண்களை மூடி குடலுக்குள் செல்லும் கசப்புத்திரவத்தை நெஞ்சால் சிந்தையால் உணர்ந்தான். அங்கே அது அனலாகியது. தசைகளை எரித்து வழிந்தோடியது. உடலின் வேர்முனைகள் அந்தத் தழலோடையை தீண்டித்தீண்டி தவித்தன.

காதுமடல்கள் சூடாகியபடியே வர கண்களை திறந்தான். கண்களிலும் நீராவிபடிந்து பார்வை மறைத்தது. உதடுகள் தடித்துத் தொங்கின. எழப்போனவன் உடல் மிகுந்த எடைகொண்டிருப்பதை உணர்ந்தான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உள்ளே சுழன்ற செம்மஞ்சள் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் எண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் அதிர்ந்து அவை எழுந்து அமைந்தன. விழிதிறந்தபோது குறுபீடத்தின்மேல் ஒரு பெரும் இந்திரநீலக் கல்லைக் கண்டு திகைத்து கைகளை ஊன்றிக்கொண்டான். ஊன்றிய கைகளின் மூட்டுகள் அதிர்ந்தாடின. இந்திரநீலம். மண்ணில் சொட்டிய விண்மீனின் விந்து. வேட்கையின் மணிவடிவம். நச்சுக்குமிழி. அதை நோக்கி பொருளின்றி கைநீட்டியதும்தான் அது மதுக்குடுவை என்று தெரிந்தது. தலையை அசைத்தபடி திரும்பி படுக்கையை பார்த்தபோது திடுக்கிட்டான். வெண்சேக்கையில் ஒரு யோனி வாய் திறந்திருந்தது.

எரிவிண்மீன் என ஒருகணத்தில் ஒருகோடி யோசனைதூரம் பாய்ந்து அவன் சிந்தை தரையை அறைந்தது. பீடம் ஒலிக்க பாய்ந்து எழுந்து தன் உடைவாளை எடுத்து உருவி கழுத்தில் வைத்தபோது பின்பக்கம் ஓசையுடன் கதவைத்திறந்த சயனன் “இளவரசே” என்றான். அவன் மூச்சடக்கி நின்றான். “இளவரசே, காலையில் இளவரசி தங்களை முகமண்டபத்தில் சந்திக்க விழைவதாக சொன்னார்கள்” என்றான் சயனன். அவன் தோள்கள் தளர்ந்தன. உடைவாளை தாழ்த்தி சிலகணங்கள் நின்றபின் திரும்பி சயனனின் விழிகளை பார்த்தான். அவன் இமைசரித்து “இளவரசியின் ஆணையை முன்னரே சொல்லவேண்டுமென எண்ணினேன்...” என்றான். “எப்போது சொன்னாள்?” என அவன் தாழ்ந்த குரலில் கேட்டான். “ஆடல் முடிந்து நீங்கள் அவை நீங்கியபோது.”

அவனை நோக்காமல் “அப்படியென்றால் இவள் இங்கு வந்ததை அவள் அறிவாள்” என்றான். “இளவரசி அறியாமல் இங்கு ஏதும் நிகழவியலாது” என்றான் சயனன். திருஷ்டத்யும்னன் அசைவற்றவனாக நின்றபின் “இவ்வறைக்குள் என்னால் துயிலமுடியாது” என்றான். “வேறு அறையை சித்தமாக்குகிறேன். இந்த சேக்கையை இப்போதே அகற்றிவிடுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றபின் “இந்த மது வலுவற்றது. வெறும் குமட்டலை மட்டுமே அளிக்கிறது” என்றான். “இளவரசே, இப்போதே தங்கள் கால்கள் தள்ளாடுகின்றன.” திருஷ்டத்யும்னன் இருண்ட சாளரம் வழியாக பார்த்தபடி “ஏன் காலையிலேயே வரச்சொன்னாள்?” என்றான். “அவர்கள் எண்ணுவதை நாம் அறியமுடியுமா?” என்றான் சயனன்.

பெருமூச்சுடன் ”நான் நாளையே பாஞ்சாலத்திற்கு திரும்புவதாக இருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “புதுநகருக்கான கால்கோள் நெருங்குகிறது. சூத்ராகிகளின் அவை நாளைமறுநாள் கூடுகிறது. சிற்பிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்...” திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் இது என் நகரம் அல்ல” என்றான். சயனன் ஒன்றும் சொல்லவில்லை. “ஏன் இந்நகரை இந்திரனுக்குரியது என்கிறாள்?” என அவன் தனக்கே என சொல்லிக்கொண்டான். சயனன் பேசாமல் நின்றான். “சொல், உனக்கு என்ன தோன்றுகிறது?” சயனன் “அது நாகர்களுக்கு இந்திரனால் அளிக்கப்பட்டது. காண்டவப்பிரஸ்தம் என்று அதை முன்பு சொன்னார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாகங்கள்... ஆம்” என்றான். “அவள் நாகங்களை அறிவாள்...”

சயனன் “இளவரசி மும்முறை அங்கே சென்றுவந்துவிட்டார்கள்” என்றான். அவன் பேச்சை மாற்ற விழைகிறான் என்று புரிந்தாலும் திருஷ்டத்யும்னன் ”இந்திரனை அறிவதென்பது...” என்றபின் பெருமூச்சுவிட்டு “எங்கே என் அறை?” என்றான். சயனனும் எளிதாகி “வருக இளவரசே, காட்டுகிறேன்” என்றான். உடைவாளை கச்சையில் கட்டிக்கொண்டு தள்ளாடும் கால்களுடன் திருஷ்டத்யும்னன் முன்னால் நடந்தான். மதுக்குடுவையுடன் சயனன் தொடர்ந்தான். “அர்ஜுனர் எங்கிருக்கிறார்?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை. இறுதியாக துவாரகையிலிருந்து செய்தி வந்தது.” திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். சயனன் “இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிடுவது அவருக்காகவே என்று சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவருக்காகவா?” என்றபின் தலைதிருப்பி “அவள்முன் அனைவரும் எளியவரே” என்றான். சயனன் “ஆம்” என்றான். அவன் தூணில் கையூன்றி நின்று “அவள் அனைவரையும் காய்களாக்கி விளையாடும் பெருநாகம்” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அவள் விதியுடன் நானும் கட்டப்பட்டிருக்கிறேன்... அவள் செல்லுமிடமெல்லாம் செல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சிறிய படுக்கையறைக்குள் முன்னரே சேக்கையில் வெண்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்யும்னன் அதனுள் நுழைந்ததுமே ஓர் ஆறுதலை உணர்ந்தான். இருக்கையில் அமர்ந்தபடி “அந்தப்பெண்ணுக்கு உரிய பொருளை கொடுத்துவிடு” என்றான். “அவள்...” என அவன் சொல்லத் தொடங்க “அவள்மேல் பிழையில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் “ஆணை” என்றான். “மதுக்குடுவையை கொடு” என்று திருஷ்டத்யும்னன் கைநீட்டினான். “இப்போதே நீங்கள் நிறைய...” என்று சயனன் சொல்லத்தொடங்க “கொடு” என உரக்கச் சொல்லி கைநீட்டினான். அவன் அளித்த குடுவையில் எஞ்சியிருந்ததையும் குடித்ததும் உடல் உலுக்கிக்கொண்டது. அவன் குமட்டி உமிழ்வதற்குள் சயனன் அந்தக்குடுவையையே அருகே பிடித்துக்கொண்டான். மூக்குவழியாக வந்த மது மெல்லிய சவ்வை எரியச்செய்தது. முகமே தீப்பற்றிக்கொண்டதுபோலிருந்தது.

“படுத்துக்கொள்ளுங்கள் இளவரசே, நீங்கள் துயிலமுடியும்” என்றான் சயனன். “ஆம்” என்றபின் அவன் கை நீட்டினான். அவனைப் பற்றி எழுப்பி படுக்கையை நோக்கி கொண்டுசென்றான் சயனன். கால்களை நீட்டிக்கொண்டபோது சயனன் அவன் கச்சையை அவிழ்த்து உடைவாளை எடுத்து குறுபீடத்தில் வைத்தான். “பரத்தை. மயக்கும் கலையறிந்த பரத்தை..." என்றபின் வாயில் ஊறிய எச்சிலை காறி உமிழ்ந்து “கீழ்மகள்! அவளை கொன்றிருப்பேன். என் உடல் தன் நிகர்நிலையை இழந்துவிட்டதனால் வெட்டு தவறியது” என்றான். சயனன் “அவளுக்குத் தெரியும்...” என்றான். “ஆட்டர்கள் உடலெங்கும் கண்கொண்ட பூனையை போன்றவர்கள்.” திருஷ்டத்யும்னன் விழிதிறந்து “ஆனால் அவள் சற்றும் அசையவில்லை” என்றான். “நான் உறுதியாக அறிவேன். அவள் விலகவில்லை.”

சயனன் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் விழிகளில் தெரிந்தது. திருஷ்டத்யும்னன் மீண்டும் குமட்ட அவன் குடுவையை எடுத்து நீட்டினான். ஆனால் இம்முறை சற்று எச்சில்கோழையே வந்தது. கையூன்றி நிமிர்ந்து மல்லாந்து பெருமூச்சுவிட்டு “அப்படியென்றால் அவள் இறக்கவும் சித்தமாக இருந்திருக்கிறாள்!” என்றான். “ஆம்” என்றான் சயனன். “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை இளவரசே. பெண்களை புரிந்துகொள்வது எளிதல்ல.” திருஷ்டத்யும்னன் சரிந்துவரும் இமைகளை தூக்கியபடி அவனை நோக்கினான். “அவள் பரத்தை. காமம் சூழும் கலை கற்று ஒழுகுபவள். அவள் ஏன் என் கையால் இறக்கவேண்டும்?” சயனன் “அவள் விரும்பியிருக்கலாம்” என்றான். “ஏன்?” “எவற்றுக்கோ கழுவாயாக” என்றான் சயனன்.

சிலகணங்கள் நோக்கிக்கிடந்தபின் கையூன்றி எழுந்தமர்ந்து “எவற்றுக்கு?” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் ”அறியேன் இளவரசே” என்றான். பின்பு “மேனகையிடம் இந்திரன் சொன்னான், உண்மையான காதல்கொள்ளும்படி. அக்காதலே விஸ்வாமித்ரரை மயக்கியது” என்றான். இமை கனத்துச்சரிய திருஷ்டத்யும்னன் “அப்படியா சொன்னான்?” என்றான். “விழிகளில் காதலுடன் செல்லச்சொன்னான். விழிகளுக்கு நடிப்பு தெரியாது” என்றான் சயனன். “விழிகளா?” என்று தனக்குத்தானே என திருஷ்டத்யும்னன் சொன்னான். சயனன் “நான் செல்லவேண்டும். நீங்கள் சற்றேனும் துயிலவேண்டும் அல்லவா?” என்றான். “சொல்... மூடா சொல்லிவிட்டுப் போ. எதன்பொருட்டு அவள் என் கையால் உயிர்விடவிருந்தாள்?” சயனன் “நான் சொல்லமுடியாது அதை" என்றான். “அவளை கூட்டி வா... அவளிடமே கேட்கிறேன்.” சயனன் பேசாமல் நிற்க “கூட்டிவா” என்றான். “அவளை உடனே நகர்நீங்கச் சொல்லிவிட்டேன். முகமிலியாக அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் வாழ்வதுவரைதான் அவள் உயிர்வாழமுடியும். இப்போது கோட்டைவாயிலை கடந்திருப்பாள்.”

”ஏன்?" என்றதுமே திருஷ்டத்யும்னன் அதை புரிந்துகொண்டு பெருமூச்சு விட்டான். “ஆம், நீ செய்தது சரிதான். அவள் எங்கேனும் எளியசூதப்பெண்ணாக வாழட்டும்” என்றான். பின்னர் கண்களைமூடிக்கொண்டே “ஆனால் அவள் ஏன் விலகவில்லை? என் கையால் அங்கே வெட்டுண்டு கிடந்தாள் என்றால் அவள் அடைவதுதான் என்ன?” என்றான். “இளவரசே, அவள் விலகிச்செல்லும்போது அவள் விழிகளை நோக்கினீர்களா?” என்றான் சயனன். "இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “நோக்கியிருக்கவேண்டும்... அவ்விடையை அடைந்திருப்பீர்கள்” என்று சொன்னபின் சயனன் தலைவணங்கி வெளியே சென்றான். நீர்ப்பாவை போல சயனன் சென்று கதவைத்திறந்து மறைவதை விழுந்து கொண்டே இருப்பதுபோன்ற உணர்வுடன் திருஷ்டத்யும்னன் நோக்கிக்கொண்டிருந்தான். கதவு மீண்டும் திறந்து சுஃப்ரை வருவதை எதிர்பார்த்தன அவன் புலன்கள். அவ்வெதிர்பார்ப்பு அசையாமல் நெடுநேரம் அறைக்குள் நின்றுகொண்டே இருந்தது.

நூல் ஒன்று : மலைமுடித்தனிமை - 4

அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான். அவன் பணிந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்கள் வருகையால் அரண்மனை மகிழ்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்துவிட்டு தேரை முன்செல்லப்பணித்ததும் ஓர் எண்ணம் தோன்றி திரும்பிப்பார்த்தான். அங்கே காவல்கோட்டத்தில் நின்றிருந்த அத்தனை காவலர்களும் இளைஞர்கள்.

உடனே அதுவரை அவன் கடந்துவந்த ஏழு காவல்கோட்டங்களும் நினைவில் எழுந்தன. அனைவருமே இளைஞர்கள். வியப்புடன் முகங்களை நினைவில் ஓட்டிக்கொண்டான். அஸ்தினபுரியின் மையநிலைகள் அனைத்துமே இளைஞர்களால் ஆனவையாக மாறியிருந்தன. அவன் முதலில் வந்தபோது அவையனைத்திலும் நடுவயது கடந்தவர்கள் இருந்தனர். அரண்மனை முகப்பில் குதிரைக்காவலர் இருவர் எதிரே வந்து நின்றனர். இளைஞர்கள் மட்டுமல்ல, அழகர்களும் கூட. ஒவ்வொருவரையும் திரௌபதியே நேரில் தேர்வு செய்திருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டான்.

சயனன் தொடர்து வர அரண்மனைக்குள் நுழைந்து இடைநாழியில் நடக்கையில் அவன் அவளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். சிலமாதங்களுக்குள்ளாகவே அந்நகரம் முழுக்கமுழுக்க அவளுடையதாக ஆகிவிட்டிருந்தது. அவள்தான் எங்கும் பேசப்பட்டாள். அவள் விழி செல்லாத ஓர் இடம்கூட நகரில் இருக்கவில்லை. மிகமென்மையாக அப்படி நிறைத்துக்கொள்ள பெண்களால் மட்டுமே முடியும் என்று தோன்றியது. சிறியவை ஒவ்வொன்றிலும் அப்படி முழுமையாக ஈடுபட ஆண்களால் முடியும் என்று தோன்றவில்லை.

அரசியர்கோட்டத்தின் வாயிற்காவலன் பணிந்து வாழ்த்துரை சொல்லி உள்ளே செல்லும்படி அறிவித்தான். திருஷ்டத்யும்னன் தன் மேலாடையை சீர்செய்து கச்சையை இன்னொரு குறை இறுக்கிவிட்டு உள்ளே சென்றான். முற்றிலும் அயலவளான ஓர் அரசியை சந்திக்கும் உளநிலைதான் அவனிடமிருந்தது. பதற்றத்தை வெளிக்காட்டாமலிருக்க கைகளை இடையிலிருந்த வாளுறைமேல் வைத்துக்கொண்டு அப்படி வைப்பதே பதற்றத்தை காட்டுகிறது என எண்ணி விலக்கிவிட்டு கூடத்தில் நின்றான். அமரலாமா என்று தோன்றினாலும் உடல் தயங்கியது.

உள்ளிருந்து வந்த சிற்றமைச்சர் சௌபர்ணிகர் “அமருங்கள் இளவரசே” என்றார். அஸ்தினபுரியின் சுங்கநாயகமாக இருந்த சோமரின் மைந்தர் அவர். பளிச்சிடும் வெண்பற்களும் பெண்களுடையவை போன்ற நீண்ட கண்களும் சுண்ணப்பாறையில் செதுக்கப்பட்டதுபோன்ற உறுதியான உடலும் கொண்டவர். திருஷ்டத்யும்னன் அமர்ந்து தன் மேலாடையை இழுத்துப்போட்டுக்கொண்டு விழிதூக்காமல் அமர்ந்திருந்தான். சௌபர்ணிகர் “இளவரசி இன்னமும் அறைவிட்டு கிளம்பவில்லை. சிற்பிகள் வந்திருக்கிறார்கள் என்று சேவகன் செய்திகொண்டுவந்தான். அவர்களுடனான சந்திப்புக்கு ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் சௌபர்ணிகரின் குரலை வெறுத்தான். பாடகனுக்குரிய ஆழ்ந்த அடிக்குரல். அமைச்சனுக்கு எதற்கு அது? ஆனால் அதற்காகவே அவள் அவரை தெரிவுசெய்திருக்கக்கூடும். அவள் அவையில்தான் பாரதவர்ஷத்திலேயே சிறந்த ஆண்மகன்கள் வந்துசேர்கிறார்கள். சிற்பிகள், பாடகர்கள், கவிஞர்கள், தளபதிகள், அமைச்சர்கள்... அவளைப்பணிவதே தங்கள் ஆண்மையின் உச்சமென்பது போல வந்தபடியே இருக்கிறார்கள். அவள் முன் துர்க்கைமுன் பூதகணங்களாக பணிந்து நிற்கிறார்கள்.

அப்பால் மங்கல ஓசை கேட்டது. சௌபர்ணிகர் “இளவரசி" என்றார். திருஷ்டத்யும்னன் அறியாமல் நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கினான். அவை உள் வாயிலை நோக்கி பேருவகையுடன் விரிந்திருந்தன. அவர் இனிமேல் எதையும் பேசப்போவதில்லை, எதையும் எண்ணவும்போவதில்லை. மங்கல இசை அணுகிவந்தது. உள்ளறையின் கதவு திறக்கப்பட்டபோது சிறிய அலைபோல எழுந்து வந்து மோதியது. திருஷ்டத்யும்னன் எழுந்து நின்றான்.

‘அஸ்தினபுரியின் அரசி, பாஞ்சால ஐங்குலநாயகி, திரௌபதி வருகை’ என நிமித்திகன் அறிவித்தான். பல்லியம் எழுப்பிய மங்கல இசை திறந்த கதவினூடாக பீரிட்டு அறைக்குள் நிறைந்தது. கதவு விரியத்திறக்க திரௌபதி உள்ளே வந்தாள். தலையில் இருந்து வழிந்த நீள்கூந்தல்மேல் முத்துச்சரங்கள் அணிந்திருந்தாள். சிறிய கையசைவால் அகம்படியினரை வெளியே நிற்கச்செய்துவிட்டு அவள் உள்ளே வந்ததும் தடித்த கதவம் மூடப்பட்டு இசை தொலைவுநோக்கி விழுந்து மூழ்கி மறைந்தது.

திருஷ்டத்யும்னன் திரும்பி சௌபர்ணிகர் முகத்தை நோக்கினான். கனவுகண்டு மலர்ந்த முகம். ஒளிவிடும் கண்கள். திரௌபதி அருகே வந்ததும் “அஸ்தினபுரியின் அரசியை வணங்குகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லி தலைவணங்கினான். “பாஞ்சால இளவரசருக்கு வாழ்த்து” என்றபடி அவள் பீடத்தில் கால்மேல் கால்போட்டு கைகளை பீடத்தின் இரு கைமேடைகளிலும் வைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். “சௌபர்ணிகரே, சிற்பிகளை உச்சிக்குப்பின் சந்திக்கிறேன். சிற்பிகள் அனைவரும் அதற்கு முன் நம் சூத்ராகிகளிடம் ஒரு முறை பேசிவிடட்டும்” என்றாள். “ஆணை இளவரசி” என்றார் சௌபர்ணிகர்.

திரௌபதி “பேரரசியிடம் அனைத்து ஓலைகளையும் ஒருமுறை காட்டிவிடுங்கள். அவர்கள் அறியாமல் எதுவும் நிகழலாகாது” என்றபின் திரும்பி “நகரம் ஒன்றை அமைப்பது காவியத்தை இயற்றுவதற்கு நிகர். ஏனென்றால் நாம் இருப்போம், மறைவோம். நகரங்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் நாம் எதிர்காலம் பற்றியே எண்ணவேண்டியிருக்கிறது” என்றாள். “ஆம், ஆனால் சிறந்த அரசர்கள் எதிர்காலம் பற்றி எண்ணத்தெரிந்தவர்கள்.” திரௌபதி புன்னகைத்து “எதிர்காலம் பற்றிய அச்சம் வேறு, கனவு வேறு. கனவுகாண்பதற்கு நாம் நிகழ்காலத்தை வென்று எதிர்காலத்தை கையாளப்போகிறோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தேவை” என்றாள். “நான் என் எதிர்காலக்கனவில் இருந்து இந்நகரை உருவாக்கவில்லை. இந்நகரை கட்டுவது வழியாக உண்மையில் அக்கனவைத்தான் புனைந்துகொள்கிறேன்”

அவள் நகரம் பற்றி பேசவிழையவில்லை என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். பேசவிழைவதைச்சுற்றி அப்படி ஒரு சொற்புதரை உருவாக்குவது அவள் வழக்கம். அவற்றை மிகுந்த பற்றுடன் உறுதியுடன் சொல்லி அவற்றிலேயே எதிர்தரப்பை கட்டிவிட்டு அவள் மட்டும் பேசவிழைவதை நோக்கி செல்வாள். அவன் நன்கறிந்தவள், ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதாக எழுபவள். நகரமைப்பிலிருந்து எவ்வழியாக அவள் வாயில் திறந்து விரும்பியதற்குச் செல்லப்போகிறாள் என அவன் எண்ணிக்கொண்டிருந்தபோதே அவள் “ஆகவேதான் சூதர்களை வரச்சொல்கிறேன். அவர்கள் இங்கு விராடவடிவாக நிறைந்திருக்கும் பாரதவர்ஷத்து மானுடரின் நாக்குகள். அவர்களைக்கொண்டு கனவுகளை சேர்க்கிறேன். இந்திரப்பிரஸ்தம் அவர்களின் தலைமுறைக்கனவுகள் திரண்டு வந்ததாக இருக்கவேண்டும்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகை ஒன்றை அடைந்தான். “இந்திரப்பிரஸ்தம் அனைவருக்கும் பிடித்த பெயராக இருக்கிறது. இந்திரன் பாரதவர்ஷத்தின் முதல்பெருந்தெய்வம். வேதவடிவன். அத்துடன் நம் இளையபாண்டவரின் தந்தை...” அவள் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. “இந்நகரமே நீங்கள் உங்கள் இளையகொழுநருக்கு அளிக்கும் பரிசுதான் என்கிறார்கள் சூதர்கள்” என்றான். அவள் விழிகளை நோக்கியபடி “அர்ஜுனபுரி என்றுகூட ஒருவன் சொல்லக்கேட்டேன்” என்றான். அவள் கண்கள் உடைக்கமுடியாத நீலவைரங்கள் போலிருந்தன. ”ஆம், இந்திரனின் வஜ்ராயுதத்தை வில்லென ஏந்தியவர் அவர்” என்றபின் “எப்போதும் சிற்பிகள் நம்மிடமிருக்கும் பொருளை கரைப்பதில் வல்லவர்கள். அதை நான் எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் இம்முறை நம் கருவூலம் ஒரு எளிய மடிசீலை மட்டுமே என்று எண்ணச்செய்துவிட்டனர்” என்றாள்.

”முழுச்செலவையும் அரசக்கருவூலத்திலிருந்தே அளித்து கட்டப்படும் முதல்நகரம் இதுவாகவே இருக்கும்” என்றான் திருஷ்டத்யும்னன். “வழக்கமாக நகரங்களை அமைக்கையில் அரண்மனையையும் கோட்டைகளையும் மட்டுமே கட்டுவது வழக்கம். மற்ற நிலங்களை வணிகர்களுக்கும் பிறருக்கும் அளித்து மாளிகைகளையும் பண்டசாலைகளையும் கட்டிக்கொள்ளச்சொல்வார்கள்...” திரௌபதி உறுதியான குரலில் “இந்நகரம் ஒற்றைச் சிற்பம் போன்றது. ஒவ்வொரு பகுதியும் முழுமையாக ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். மானுட உடல் போல” என்றாள்.

திருஷ்டத்யும்னன் ”ஆனால் மானுட உடல் எவராலும் அமைக்கப்படுவதல்ல. அது பார்த்திவப்பரமாணுவிலிருந்து முளைத்தெழுகிறது” என்றான். திரௌபதி “நான் இதை பத்துவருடம் கருவறையில் சுமந்திருக்கிறேன்” என்றாள். திரும்பி சௌபர்ணிகரிடம் “சுலக்‌ஷணரிடம் நான் சொன்னதை சொல்லுங்கள் சௌபர்ணிகரே. இன்றுமாலைக்குள் முதல் வரைபடம் என் கைக்கு வந்துவிடவேண்டும் என்பதை மீண்டும் உறுதியாக கூறிவிடுங்கள்” என்றார். சுலக்‌ஷணர் ஓர் அழகிய இளைஞர் என்பதில் அவனுக்கு ஐயமே இருக்கவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே அவள் அதற்காகத்தான் அப்பெயரை சொல்கிறாளோ என்றும் தோன்றியது.

சௌபர்ணிகர் தலைவணங்கி வெளியே சென்றதும் “இளவரசே, நகரின் முதல் வாஸ்துபுனிதமண்டலம் வந்துவிட்டது... பார்க்கிறீர்களா?” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், பார்க்க விழைகிறேன்” என்றான். அவள் எழுந்து சென்று அங்கிருந்த பீடத்தின்மேலிருந்த பெரிய தோல்சுருளை எடுத்து விரித்தாள். அதன்மேல் செந்நிறக்கோடுகளாலும் நீலநிறப்புள்ளிகளாலும் வெண்ணிற வட்டங்களாலும் ஆன நகர வரைபடம் இருந்தது. “கலிங்கச்சிற்பி கூர்மர் வடிவமைத்த முதல் வரைவை தட்சிணசிற்பி முதுசாத்தனார் முழுமைசெய்திருக்கிறார். முன்னர் பன்னிரு படித்துறைகளை திட்டமிட்டிருந்தோம். இப்போது அவை முப்பத்தாறாக பெருகிவிட்டன. அறுகோணவடிவிலான ஆறு துறைமுகப்புகள் யமுனைக்குள் நீண்டிருக்கும்.. துறைமுகப்புகளுக்குப் பின்னால் வட்டவடிவமான பெருமுற்றத்திலிருந்து பன்னிரு சாலைகள் பிரிந்து செல்லும்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “இருநூறு வாரைக்குமேல் உயரமுள்ளது நகரத்தின் முதல்கோட்டை. அதுவரைக்கும் படிக்கட்டுகள் அமையுமா?” என்றான். “சரியாகச்சொன்னால் நூற்று எழுபத்தெட்டு வாரை” என்றாள் திரௌபதி. ”படிக்கட்டுகளும் சுழல்பாதையும் உண்டு. அங்காடிமுற்றம் ஆயிரத்தைநூறு வாரை விட்டம் கொண்டது. எட்டு பெருஞ்சாலைகளில் இரண்டு நகருக்குள் நுழையும், இரண்டு கோட்டையை வளைத்துச்செல்லும். நான்கு சாலைகள் நகரிலிருந்து கிளம்பிச்செல்லும். குன்றுக்குப்பின்னாலுள்ள செம்மண்நிலத்தில் அறுநூறு பண்டகசாலைகளை அமைக்கவிருக்கிறோம்.”

திருஷ்டத்யும்னன் அந்த வரைவை முன்னரும் பலமுறை பார்த்திருந்தமையால் விரலை திருத்தங்கள் மேலே மட்டும் வைத்தான். "ஏழடுக்கு நகரம். முதலடுக்கில் படைகள். அடுத்து அங்காடிகளும் வணிகர்குடிகளும். பின்னர் வேளாண்குடிகளும் ஆயர்களும். சூதரும் பரத்தையரும் வைதிகரும் நான்காவது அடுக்கில். பெருவணிகரும் அரசகுடியினரும் ஐந்தில். ஆறில் அரசகுலம். ஏழில் அரண்மனை.” திருஷ்டத்யும்னன் “செந்நிறமான நகர்...” என்றான். “ஆம், குன்றையே வெட்டி அங்கேயே கட்டிவிடலாமென எண்ணியிருந்தோம். ஆனால் இன்றுள்ள பெருந்திட்டத்திற்கு அங்குள்ள கற்கள் போதாதென்று அறிந்தோம்.”

திருஷ்டத்யும்னன் “மொத்தக் கற்களையும் மேலே கொண்டுசெல்லமுடியுமா என்ன?” என்றான். “முடியும். யமுனையின் ஒழுக்கில் படகுகளை பாய்விரித்து ஓடவைத்து அவற்றுடன் வடங்களால் பிணைக்கப்பட்ட வண்டிகளை குன்றின் மேல் ஏற்றமுடியும். கற்களை மிக எளிதாக மேலே கொண்டுசெல்லலாம். துவாரகையில் பத்துமடங்கு பெரிய கற்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.” திருஷ்டத்யும்னன் “எங்கிருந்து வருகின்றன அக்கற்கள்?” என்றான். “வடக்கே களிந்தமலையின் அடிவாரத்தில் ஒரு செந்நிற மலையை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் பாறைகளை முழுமையாகவே வெட்டி எடுத்து நீரொழுக்கில் கொண்டுவந்து சேர்க்க திட்டமிட்டிருக்கிறோம்.”

அவள் பேசப்பேச சிறுமியாகிக்கொண்டே வந்தாள். “குன்றின் மேல் ஊற்றுதேர்ந்து குளங்களை வெட்டும்பணி தொடங்கிவிட்டது. இந்திரப்பிரஸ்தத்தின் மேல் மழை எப்போதும் பெய்துகொண்டிருக்கும் என்கிறார்கள். ஆகவே அத்தனைகுளங்களும் நிறைந்துவழிந்துகொண்டுதான் இருக்கும்... பீதர்களின் நாட்டிலிருந்து செந்நிறமான ஓடுகளை கொண்டுவர ஆணையிட்டிருக்கிறேன். இன்னும் எட்டுமாதங்களில் தாம்ரலிப்தியில் அவை வந்திறங்கும். அப்போது நகரின் கட்டடங்களில் சுவர் எழுந்திருக்கும். நகரின் அத்தனை கூரைகளும் சுவர்களும் செந்நிறம்தான். கதவுகள் வெண்ணிறமானவை. ஆனால் அரண்மனையின் கதவுகளனைத்தும் பொன்னிறம். பித்தளைத்தகடுகளை மரத்தில் உருக்கிப்பொருத்தும் கலையறிந்த வேசரநாட்டு மூசாரிகள் நூற்றைம்பதுபேரை அங்கே ஒரு சிற்றூராகவே குடியமர்த்தியிருக்கிறேன். ஒரே ஒரு வாயிலேனும் கிளிச்சிறைப் பொன்னால் ஆனதாக இருக்கவேண்டும்.” கிளர்ச்சியுடன் நகைத்து “இந்திரப்பிரஸ்தத்தில் கதவுகள் பொன்னாலானவை என்று சூதர்கள் பாடவேண்டுமல்லவா?” என்றாள்.

கதவு பின்பக்கம் மெல்லத்திறந்து சேடி ஒருத்தி எட்டிப்பார்த்து தயங்கி நின்றாள். “வருக” என திரௌபதி திரும்பாமலேயே சொன்னாள். “காலவர் வந்துவிட்டாரா?” சேடி “ஆம் இளவரசி” என்றதும் திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு ஏறிட்டுப்பார்த்தான். சுஃப்ரையின் விழிகள் ஒருகணம் அவனைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டன. படபடப்பை வெல்வதற்காக அவன் அந்த வாஸ்துபுனிதமண்டலத்தை பார்த்தான். திரௌபதி “மரங்கள் அனைத்தும் கோடையில் தளிரிட்டு மலர்வனவாக இருக்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன். ஐம்பதாயிரம் மலர்மரங்கள் செடிகளாக நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. அவை பெரிதான பின்னர் கொண்டுசென்று வேண்டுமிடங்களில் நடுவதே சிறப்பு. இப்போதே நட்டால் கட்டுமானப்பணிகளுக்கு இடைஞ்சலாக ஆகக்கூடும்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். திரௌபதி திரும்பி சுஃப்ரையிடம் “காலவரிடம் நான் இளவரசரிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொல்...” என்று சொல்லி தலையசைக்க அவள் தலைவணங்கி திரும்பிச்சென்றாள். “நேற்று இவள் நடனத்தைப்பார்த்தேன். தென்னகச் சிற்பிகளின் விரலில் இருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். காலை இவளை அழைத்துவரச்சொன்னேன். என்னுடன் இருக்கிறாயா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டாள்” என்றாள். “ஆனால் அவள் நடனக்காரி...” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், இங்கும் அவள் நடனம் பயிலலாமே. எனக்குத்தேவை அழகை அறிந்த விழிகள். நான் உருவாக்கும் நகரில் சிற்பங்களும் இவளைப்போல் நடமிடவேண்டும்.”

திருஷ்டத்யும்னன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இத்தனை நகரக்கட்டுமானப்பேச்சுகளும் அந்தப்பெண்ணை கொண்டுவந்து காட்டிச்செல்லத்தானா? “ஆனால் நம் கருவூலம் முழுமையாகவே ஒழிந்துகொண்டிருக்கிறது. கட்டுமானம் இன்னமும் தொடங்கக்கூட இல்லை” என்றாள். “ஆகவேதான் உங்களை நாடினேன். நீங்கள் துவாரகைக்குச் சென்று இளைய யாதவரைப்பார்த்து அவர் வாக்களித்த செல்வத்தை பெற்றுவந்தாலொழிய நான் முன்னகர முடியாது.” திருஷ்டத்யும்னன் எளிதாகி “ஆம், செல்கிறேன்” என்றான். “அங்கேதான் இளையவரும் இருக்கிறார் என்று சொன்னார்கள்” என்றாள். “அவர்கள் இருவரும் இணைபிரியமுடியாதவர்கள்” என்று திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.

“இளைய யாதவரின் செல்வம் நாள்தோறும் வளர்கிறது என்றனர். ஆகவே நாம் கோருவதைக்கொடுப்பதொன்றும் அவருக்கு கடினமானதல்ல. மேலும் பாண்டவர்களின் கருவூலமும் படையும் அவருக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ளது.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவர் அதை அறிவார் என நினைக்கிறேன்” என்றான். திரௌபதி “இளைய யாதவரிடம் என் அன்பை தெரிவியுங்கள்” என்றாள். அவள் அர்ஜுனனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் வரைபடத்தை சுருட்டியபடி “தங்களுக்கான அரசமுறை திருமுகம் மூத்தவரின் பெயரால் அளிக்கப்படும். அஸ்தினபுரியின் தூதராகவே செல்லுங்கள்” என்றாள்.

“ஆணை” என்று சொல்லி அவன் எழுந்துகொண்டான். அவள் எழுந்தபடி “துவாரகை அழகிய நகர் என்கிறார்கள். நானே செல்லவேண்டுமென எண்ணினேன். நீங்கள் செல்வது என் விழிகளை அனுப்புவதுபோல” என்றாள். “திரும்பி வருகையில் அந்நகரம் உங்கள் விழிகளில் இருக்கட்டும். அந்த விழிகளால் இந்திரப்பிரஸ்தத்தை பாருங்கள்...” திருஷ்டத்யும்னன் மீண்டும் தலைவணங்கினான். அந்த ஒவ்வொரு சொற்களையும் அவள் உண்மையான உணர்ச்சியுடன்தான் சொன்னாள். அப்படியென்றால் அவள் சொல்ல விழைவது அதைத்தான். அந்தப்பெண் வந்தது தற்செயல். இல்லை, தற்செயலே அல்ல. அவள் கோட்டைக்கு வெளியே மடக்கப்பட்டு அழைத்துவரப்பட்டிருக்கிறாள். திரௌபதியின் நிழலில் அன்றி அவள் இனிமேல் வாழமுடியாது.

அவன் தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தான். அவனுக்காக இடைநாழியில் சயனன் நின்றிருந்தான். அவன் நடக்கையில் பின்னால் நடந்தபடி அவன் “அவளையும் அவள் கூட்டத்தையும் கங்கைசெல்லும் வழியில் பிடித்துவிட்டார்கள்” என்றான். “நீ வழிசொன்ன வகை அது” என்று எரிச்சலுடன் திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் அவர்கள் வணிகர்களாக பொதிவண்டியில் நகர்நீங்க ஒருங்குசெய்திருந்தேன். எளிதில் அது நிகழ்ந்துமிருக்கும். ஆனால் அவர்கள் குழுவிலேயே ஒருவன் இளவரசியின் ஒற்றர்களுடன் தொடர்பிலிருந்தான். அவன் அவர்கள் செல்லும் வழியை தெரிவித்துவிட்டான்.”

திருஷ்டத்யும்னன் “அவள் கொல்லப்படவில்லை என்பதே நிறைவளிக்கிறது” என்றான். “இளவரசி எளியவர்கள் மேல் கருணை கொண்டவர்” என்ற சயனன் “அவள் அங்கு உவகையுடன் இருப்பதாகவே தெரிகிறது.... நான் இடைநாழியில் நின்றிருக்கையில் அப்பால் என்னை கடந்துசென்றாள். திரும்பவில்லை. ஆனால் என்னைப்பார்த்துவிட்டாள் என அவள் நடையால் உணர்ந்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நின்று “நான் அவளை பார்க்க விழைகிறேன்” என்றான். “அவளையா?” என்றான் சயனன். “ஆம், இதில் சூழ்ச்சியென ஏதும் தேவையில்லை. நேரடியாகவே சென்று அவளுக்குமேலே உள்ள தலைமைச்சேடியிடம் நான் அவளைப்பார்க்க விழைவதாக சொல். ஏன் என்று கேட்டால் நேற்று நான் அவளுடன் இரவாடினேன் என்றே சொல்.”

சயனன் ஒன்றும் சொல்லாமல் வந்தான். “சூழ்ச்சிகளுக்கு இங்கே பொருளே இல்லை. பெருஞ்சிலந்தி கட்டிவைத்திருக்கும் வலையில்தான் நாமனைவருமே இருக்கிறோம். எந்தச்சரடைத் தொட்டாலும் அது அறியும்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் தயங்கி “அரண்மனையை விட்டு அவள் வெளிவரமுடியுமென நான் எண்ணவில்லை. இளவரசியின் ஆணை தெளிவாக இருக்குமென்று தோன்றுகிறது. இங்கேயே சிறுகூடத்தில் தாங்கள் காத்திருக்கமுடியுமென்றால் நான் அவளை அழைத்துவருகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். சயனன் “அவளிடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் இளவரசி கேட்கிறார்கள் என்றே கொள்ளவேண்டும்... அதன்மூலம் அவளுக்கு தீங்கு நிகழலாகாது” என்றான்.

அரண்மனைச் செயலகனின் அறையருகே அவனுடைய சிறுகூடமிருந்தது. சயனன் சென்று அவனிடம் சொன்னதும் அவன் எழுந்து வணங்கி வெளியேறினான். திருஷ்டத்யும்னன் அங்கே பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கோத்துக்கொண்டான். சயனன் திரும்பும்போது என்ன செய்கிறோம் என்ற துணுக்குறல் ஏற்பட்டது. பகலில் நடனமங்கையை இளவரசர்கள் சந்திப்பதில்லை. அரண்மனை என்பது பல்லாயிரம் கண்களும் காதுகளும் கொண்டது. கண்களைமூடிக்கொண்டு வெளியே எழுந்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஓர் அரண்மனை எத்தனை மனிதர்களால் ஆனது. எங்கெங்கோ ஏதேதோ குரல்கள். ஆணைகள், அழைப்புகள், உரையாடல்கள். காலடியோசை, படைக்கலங்களின் ஓசை, பொருட்களின் ஓசை. அரண்மனை என்பதே அங்கு வாழும் அலுவலர்களுக்குரியது. அரசகுடியினர் மிகச்சிலரே. ஆனால் அங்கே அரசகுடியினரன்றி எவருமில்லை என்றே உளமயக்கு ஏற்படுகிறது. அத்தனை அலுவலகர்களும் இணைந்து அவற்றின் சுவர்களாக கதவுகளாக தரையாக ஆகிவிட்டிருப்பதுபோல. இந்தப்பெண்ணை இப்போது ஏன் வரச்சொல்கிறேன்? அவளிடம் என்ன கேட்கப்போகிறேன்? அவன் நெஞ்சு படபடத்து கைகள் நடுங்கத்தொடங்கின. அவள் என்ன சொல்வாள்? ஒரு பெண்ணிடம் அத்தனை பெரிய படைக்கலத்தை அளிக்கலாமா என்ன?

கதவு திறந்து சயனன் மெல்ல வந்து நின்றான். விழிதூக்கிய அவனிடம் “அவள் வரமறுத்துவிட்டாள் இளவரசே” என்றான். முதற்சில கணங்களுக்கு அச்சொற்கள் பொருள்படவில்லை. “என்ன?” என்றான். “நான் சேடியர்தலைவி காரீஷியிடம் தாங்கள் அவளை உடனே பார்க்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சொன்னேன். அவள் சற்று வியப்புடன் அவளை அரண்மனைக்கு வெளியே அனுப்பவேண்டாம் என ஆணையிருப்பதாக சொன்னாள். இங்கேயே நீங்கள் பார்க்கவிருப்பதாக சொன்னதும் அழைத்துவரும்படி ஒரு சேடியை அனுப்பினாள். அவள் வந்து சுஃப்ரை வரமறுப்பதாக சொன்னாள். திகைப்புடன் காரீஷி என்னிடம் அவ்வாறு ஆணையை மறுப்பது சேடியரின் இயல்பல்ல என்று சொல்லி நான் விரும்பினால் அவளை இழுத்துவர ஆணையிடுவதாக சொன்னாள் அவளிடம் நானே பேசுகிறேன் என்று கோரினேன்.”

அவன் சொல்வதை கண்களால் கேட்டுக்கொண்டிருந்தான். “அவள் நான் சென்றபோது எழுந்து தலைகுனிந்து சுவருடன் சாய்ந்து நின்றிருந்தாள். உன்னை இளவரசர் காணவிரும்புகிறார், உன்னிடம் ஏதோ வினவ எண்ணம் கொண்டிருக்கிறார் என்றேன். என் விழிகளை ஏறிட்டு நோக்கி அவள் தங்களை பாக்க விரும்பவில்லை என்றாள்” என்றான் சயனன். ”நான் மீண்டும் கேட்கமுயன்றேன். அவள் அதையே இன்னொருமுறை சொன்னாள்.”

திருஷ்டத்யும்னன் அவனை பொருள்திரளா நோக்குடன் சற்று நேரம் பார்த்துவிட்டு “அவள் அஞ்சுகிறாளா?” என்றான். சயனன் “அவ்வண்ணம்தான் இருக்குமென நினைக்கிறேன். அவளுக்கு ஆணைகள் இருக்கலாம்” என்றான். அவன் விழிகளை விலக்கி சிலகணங்கள் இருந்தபின் திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றான். “அவள் அஞ்சவில்லை என உனக்குத்தெரியும். அவள் உண்மையில் என்ன சொன்னாள்?” என்றான். “இளவரசே...” என்றான் சயனன். "நீ என்னிடம் மறைப்பது என்ன? அவள் என்ன சொன்னாள்?” சயனன் “ஏன் வரமறுக்கிறாய் என்று கேட்டேன்” என்றான். “உம்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மெல்லிய குரலில் “அவள் விழிதாழ்த்தி ஏன் வரமறுக்கிறாள் என நீங்கள் அறிவீர்கள் என்றாள்.” கடும் சினத்துடன் பற்களைக் கடித்தபடி “ம்?” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மேலே பேசவில்லை.

அவளை இழுத்துவந்து தன் காலடியில் போடவேண்டும் என திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவன் ஆணையிடப்போவதை எதிர்பார்ப்பதுபோல சயனன் விழிநிலைத்து நோக்கி நின்றான். அதைத்தான் எந்த ஆண்மகனும் செய்யவேண்டும். தன் உள்ளத்தின் முழு விசையாலும் அச்சொற்களை அவன் திரட்டிக்கொண்டான். அவளை ஆடையில்லாமல் இழுத்துவரும்படி ஆணையிட்டான். அடுத்தகணமே அவ்வெண்ணம் சொல்லாக மாறவில்லை என்று உணர்ந்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டு “அவள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாள்?” என்றான்.

அந்த வினாவின் பொருளின்மையை உணர்ந்து “இங்கு அவளுக்குரிய இடமென்ன?” என்றான். “இளவரசிக்கு அணுக்கச்சேடி. நான் சென்றபோது அணியகத்தில் நறுஞ்சுண்ணக்கூட்டு செய்துகொண்டிருந்தாள். மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் திருஷ்டத்யும்னன் ”நான் அறிவேன் என்றாளா?” என்றான். “ஆம் இளவரசே!” திருஷ்டத்யும்னன் கிட்டித்த பற்களுடன் “பரத்தை” என்றான். சயனன் “அதன்பின் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அழத்தொடங்கினாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “அழுதாளா?” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அழுதாளா?” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான். “ஆம் இளவரசே, நான் இறுதியாகப்பார்க்கையில் அவள் தோள்கள் உலுக்கி அதிர்வதைத்தான் கண்டேன்.”

தசைநார்கள் ஒவ்வொன்றாக முறுக்கிழக்க திருஷ்டத்யும்னன் பீடத்தில் உடல் தளர்ந்து பட்டுச்சால்வைபோல படிந்தான். வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டான். இளங்காற்று சாளரம் வழியாக வந்து அவன் வியர்த்த உடலை குளிரச்செய்தது. இரும்பை நாவால் தொட்டதுபோல ஓர் இனிமையை அவன் உடலெங்கும் உணர்ந்தான். கண்கள் சொக்கி துயில்வந்து மூடுவதுபோலிருந்தது. விரல்களை கைகளை நாவை சித்தத்தை அசைக்கமுடியாதென்று தோன்றியது. எத்தனை காலம் கடந்துசென்றதென்று அவன் அறியவில்லை. பின் நிமிர்ந்து சயனனை நோக்கி “நீ மீண்டும் சென்று அவளை பார்” என்றான். “ஆணை” என்றான் சயனன். தன் கையிலிருந்த முத்திரைமோதிரத்தை கழற்றி “இதை நான் அவளுக்காக அளித்தேன் என்று சொல்.”

சயனன் சற்று திகைத்து “இளவரசே” என்றான். “இது அவளுக்கு என் கொடை." சயனன் “இளவரசே, ஒரு பரத்தைக்கு இதை அளிப்பது என்றால்...” என்றான். “அவளுக்குரியது அது” என்று அவன் எழுந்துகொண்டான். “அளித்துவிட்டு வருக!. நான் இன்றுமாலையே கிளம்புகிறேன். எனக்குரிய பயணப்பையை சித்தமாக்கு. அமைச்சரிடமிருந்து ஓலையையும் பெற்றுவா!” என்றான். படியிறங்கி அரண்மனையின் பெருமுற்றம் நோக்கி சென்றபோது தன் முகம் மலர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

நூல் ஒன்று : மலைமுடித்தனிமை - 5

துவாரகையின் பெருவாயில் தொலைவில் தெரிந்ததுமே அமரமுனையில் நின்றிருந்த மாலுமி உரக்க குரலெழுப்பினான். மரக்கலத்தில் இருந்தவர்கள் அனைவரும் அறைகளிலிருந்தும் பாய்மடிப்புகளுக்கு அப்பாலிருந்தும் அடித்தட்டின் களஞ்சியங்களிலிருந்தும் ஈசல்களென கிளம்பி கலத்தட்டுக்கு வந்தனர். மழைக்காலம் முடிந்து தெளிந்த காலைவானம் தேனிறமாக விரிந்திருந்தது. கிழக்கே கதிர் எழவில்லையென்றாலும் வான்திரவவெளிக்குள் கடலாழத்துச் சூரியனின் ஒளி கசிந்துபரவியிருந்தது. அலையற்ற கடலின் நீலப்பளிங்கு முகடுக்கு மேல் பொன்னிறமான சிறிய கணையாழி. நோக்கி நின்றிருக்கவே எழுந்து வந்த பொன்னொளியில் அது மேலும் மேலும் சுடர்விடத்தொடங்கியது.

“யானைமேல் அம்பாரி போல” என்று யாரோ சொன்னார். “அது ஒரு கைப்பிடி. அதைப்பற்றி அந்த நகரை தெய்வங்கள் விண்ணுக்கு எடுத்து காலையில் திரும்ப வைக்கின்றன” என்று வேறெவரோ சொன்னார். மெல்லிய சிரிப்பொலி. “அண்ணா, இவனுடைய கற்பனைத்திறனைப்பார்க்கையில் இவன் தாய்க்கு சூதர்களுடன் அணுக்கமிருப்பது தெரிகிறது” என்றது ஒரு குரல். “ஓசையிடாதே. அப்பால் இளவரசர் நின்றிருக்கிறார்.” மேலும் பதிந்த குரலில் ஏதோ கூற்று. அடக்கிப்பிடித்த சிரிப்புகள். கடற்காற்று கரையில் மோதி திரும்பிவந்து சுழல பாய்கள் உப்புநீர்த்துளி சிதற அடித்துக்கொண்டன.

கலக்காரன் அமரமுனையில் நின்று கைகளை காட்ட கலமுகட்டில் நின்றிருந்த கலத்தலைவன் தன் இடையிலிருந்த சிறிய கொம்பை எடுத்து மயிலகவல் போல் ஒலியெழுப்பினான். மூன்று இடங்களில் கலத்தவர் அதை மாற்றொலித்தனர். பாய்களை இழுத்த வடங்கள் கொக்கிகளிலிருந்து விடுவிக்கப்படும் முனகல் ஓசைகள் எழுந்தன. பாய்கள் புகைபடிவதுபோல மெல்ல இறங்கி கலமுற்றத்தில் வந்தணைந்தன. திருஷ்டத்யும்னன் விழியிளக்காமல் அந்தக் கணையாழி வளையலாக ஆவதை நோக்கிக்கொண்டிருந்தான். அதனடியில் அதை ஏந்திய பெரும்பாறைமுகடு எழுந்துவந்தது. அதன் வலப்பக்கமாக சிறிய சித்திரக் களித்தேர் போல நகரம் தெரிந்தது. நீர்விளிம்பு இறங்கி இறங்கிச்செல்ல நகரத்தின் கொடிகள் படபடக்கும் மாளிகைமுகடுகள் தெரிந்தன.

“மல்லாந்து படுத்த அழகிகளின் முலைக்கூட்டம் என்று அவற்றை ஒரு சூதன் ஒருமுறை பாடினான்” என்றது குரல். கலம் கரையணைவிக்கும் அலுவலர்கள் அன்றி பிறருக்கு அப்போது பணியென ஏதுமில்லை. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர். நகரின் தெருக்கள் தெரியத்தொடங்கின. புலரியிலேயே துறைமுகப்பிலிருந்து நகரை வளைத்துச்சென்ற சாலைகளில் கருமணிமாலைகளைப்போல பொதிவண்டிகள் சென்றன. துறைமேடைகள் நீருக்குள் இருந்து எழுந்து வந்தன. முகப்பில் எட்டு பெரும் பீதர்கலங்கள் நின்றிருந்தன. அவற்றின் மேலே உடல்வளைத்த சிங்கநாகம் நா பறக்க உறுவிழிகளுடன் துடித்த செந்நிறமான கொடிகள் பறந்தன.

சிறிய கலங்கள் நூற்றுக்குமேல் நின்றிருந்தன. திருவிடத்து நாவாய்கள் மூன்றும் தமிழ்நிலத்துநாவாய்கள் எட்டும் கலிங்கநாவாய் ஆறும் தெரிந்தன. யவனநாவாய்களும் சோனகநாவாய்களும் துறைமேடையின் மறுபக்கம் நின்றிருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டான். திசைப்பாய் தவிர பிற பாய்கள் கீழிறங்கின. அவற்றை கம்பங்களில் சுருட்டிக்கட்டிய மாலுமிகள் உரக்க ஓசையிட்டனர். அலைகளில் பாய்ந்தேறி விழுந்திறங்கியபடி அவர்களின் கலம் துறைமுகப்பை நோக்கி சென்றது. அங்கே நின்றிருந்த பெரிய பீதர்கலம் அவர்களை நோக்கி அசைந்தாடியபடி வந்தது. நோக்கி நிற்கவே அதன் உடலின் கரிய மரப்பரப்பு பெரிய கோட்டைபோல மாறி திசையாகியது. இருளாகி விழிகளை மூடியது. அவன் பெருமூச்சுடன் திரும்பி தன் அறைக்குள் சென்றான்.

அவன் ஆடைமாற்றி கலமுகப்புக்கு வந்தபோது அவன் கலம் துறைமேடையை அணுகி அங்கே நின்றிருந்த பன்னிரண்டு சிறிய கலங்களுக்குப்பின்னால் நின்றிருந்தது. அவன் திரும்பி கலக்காரனிடம் “சிறியபடகுகளில்தான் கரைசேரவேண்டும் என நினைக்கிறேன்...” என்றான். ”இங்கே கரைசேர வடக்கடிகைகள் உள்ளன இளவரசே” என்றான் அவன். அதற்குள் திருஷ்டத்யும்னன் அதை கண்டுவிட்டான். துறைமேடையில் நின்றிருந்த பெரிய துலாக்கால் ஒன்று மெல்ல குனிந்து ஒரு கலத்தை நோக்கி வடத்தில் கட்டப்பட்ட மூங்கில்கடிகை ஒன்றை இறக்கியது. அதில் பயணிகள் ஏறிக்கொள்ள அப்படியே தூக்கிச் சுழற்றி கரைக்கு கொண்டு சென்று இறக்கியது. திருஷ்டத்யும்னன் “யானை தூக்கி இறக்குவதுபோல” என்று புன்னகையுடன் சொன்னான்.

வடக்கடிகை அவன் கலத்தில் இறங்கியதும் சிறுவர்களுக்குரிய உவகையை அடைந்தான். சிரித்துக்கொண்டே இருப்பதை கலக்காரனிடம் பேசமுனைந்தபோது உணர்ந்து முகத்தை இறுக்கியபடி “பரிசில்களை உச்சிக்குள் அரண்மனைக்கு கொண்டுவந்து விடுங்கள்” என்றபின் ஏறிக்கொண்டான். கடிகை ஒருமுறை அதிர்ந்தபோது அடிவயிற்றில் அச்சம் எழுந்தது. பின்னர் அவன் மெல்ல வானிலெழுந்தான். சிறிய கலங்கள் கீழே சென்றன. பின்னர் பீதர்களின் கலத்தின் பாய்கள் மட்டும் இணையாக மேலே வந்துகொண்டிருந்தன. வானிலிருந்து கீழே நோக்கியபோது மீன்கூட்டங்களாக நாவாய்கள் மொய்த்த துவாரகையின் துறைமுகப்பு ஒட்டுமொத்தமாக தெரிந்தது.

விண்ணில் மிதந்து சுழன்று மறுபக்கம் சென்றபோது ஒன்றுடன் ஒன்று பின்னி வலைபோல விரிந்த துவாரகையின் தெருக்கள் தெரிந்தன. பூக்குலைகளும் தளிர்க்கிளைகளுமாக புதுமழைநீர் பெருகி வழிவதுபோல அவற்றினூடாக வண்ணப்பட்டாடைகளுடன் நிறைந்து சென்று கொண்டிருந்த பெண்களின் நிரையை கண்டான். அவர்கள் எழுப்பிய இசையை அத்தனை ஓசைகளுக்கு நடுவிலும் தனித்து கேட்கமுடிந்தது.

நிலத்தை நோக்கி இறங்கி மண்ணைத் தொடாமல் ஆடி நின்ற கடிகையை நோக்கி வந்த இரு வீரர்கள் அதைப்பற்றி “வணங்குகிறேன் இளவரசே” என்றனர். அவன் சிரித்துக்கொண்டே இறங்கி “பறந்து இறங்கியிருக்கிறேன், கந்தர்வர்களைப்போல” என்றான். வீரர்தலைவன் “கந்தர்வர்கள் இன்று துவாரகையில் வந்து குழுமுவார்கள் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “ஏதேனும் விழவா?” என்றான். “இன்று எங்கள் அரசரின் பிறந்தநாள். ஷ்ராவண மாதம் எட்டாம் கருநிலவு. ரோகிணிமீனுக்குரிய நாள்” என்றான். “அதுதான் நகரில் பெண்களின் நிரையா?” என்றான். “ஆம், இன்றுமுழுக்க பெண்கள் எவரும் இல்லத்தில் இருக்கப்போவதில்லை...” திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “உகந்த நாளில்தான் வந்திருக்கிறேன்” என்றான்.

உலோகமும் மரமும் மானுட உடல்களும் சேர்ந்து ஒலித்து சூழ்ந்திருந்த துறைமேடையில் வெண்கலக்கீல்களில் ஒலியின்றி நகரும் பெரிய மரத்தட்டு வண்டிகளில் துலாக்கள் பொதிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. அவற்றை வலுவான வெண்ணிறக் காளைகள் இழுத்துச்சென்றன. நான்கடுக்குத் துறைமேடையின் கீழே இருந்த மூன்று அடுக்குகளிலும் நகரிலிருந்து வந்த சாலைகள் நேரடியாகவே சென்று மரக்கலங்களுக்குள் நுழைந்தன அங்கே வண்டிகள் செல்லும் ஒலி எழுந்து தடித்த கற்தூண்களை வீணைக்கம்பிகள் என அதிரச்செய்துகொண்டிருந்தது.

அவனை எதிர்கொள்ள நூற்றுவர்தலைவன் தன் அலுவல்மேடையிலிருந்து இறங்கி வந்தான். தன்னை நாகபாகு என அறிமுகம் செய்துகொண்டு தலைவணங்கி “பாஞ்சால இளவரசரை வணங்குகிறேன். துவாரகையில் தங்கள் வரவு நலம்நிறைக்கட்டும்” என முகமன் சொல்லி வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் ”துவாரகைக்கு வரும் நல்வாய்ப்புக்காக நானும் மகிழ்கிறேன்” என்றபடி விழிகளால் தேடினான். நூற்றுக்குடையோனுக்குப்பின்னால் எட்டு புரவிவீரர்கள் நிற்க ஒருவன் வெண்புரவியுடன் அணுகிவந்தான். அழகிய பெண்குதிரை அவனை நோக்கி மூக்கை நீட்டி ஆவலுடன் வாசம் பிடித்து பர்ர் என்று தும்மியது. தலையைக்குனித்து பிடரியை சிலிர்த்துக்கொண்டு தரையை முன்கால் குளம்பால் தட்டியது.

அவனுடைய வருகையை முன்னரே முறைப்படி அறிவித்திருந்தும்கூட அரசகுடியினர் எவரும் வந்து வரவேற்கவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான். பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன் அல்ல அவன். அஸ்தினபுரியின் முதன்மைத்தூதனும் அல்ல. அவனை நூற்றுவன் வரவேற்பதே முறைமை. ஆயினும் அவன் எங்கும் திரௌபதியின் உடன்பிறந்தான் என்றே எண்ணப்பட்டான். அவ்வாறு எதிர்பார்ப்பதன் சிறுமையை எண்ணி சலித்து விலகியபோதும் மீண்டும் உள்ளம் அதிலேயே சென்றுகொண்டிருந்தது. தன் உள்ளத்தை முகத்தில் காட்டாமலிருக்கும் பொருட்டு வாயை நீட்டி புன்னகைபோல ஒன்றை தேக்கிக்கொண்டான்.

நூற்றுக்குடையவன் வீரனிடமிருந்து கடிவாளத்தை வாங்கி அவனிடம் அளித்து “பாஞ்சாலரே, தாங்கள் அரண்மனைக்குச் செல்ல அகம்படியாக எட்டு புரவிவீரர்களையும் கொம்பூதியையும் அனுப்பும்படி ஆணை” என்றான். திருஷ்டத்யும்னன் சினத்தால் சிவந்த முகத்துடன் “தேவையில்லை” என்றபின் தன்னை அடக்கி “வரட்டும்” என்றான். பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்று புரவியின் கடிவாளத்தை வாங்கினான். அது திரும்பி அவனை நக்க தன் கத்தரிப்பூ நிற நாவை நீட்டியது. அவன் அதன் வெண்கழுத்தில் வருடிவிட்டு சேணத்தில் கால்வைத்து ஏறிக்கொண்டான். அகம்படியர்கள் புரவிகளில் ஏறிக்கொள்ள கொம்பூதி தன் புரவியின் சேணத்தில் தொங்கிய கொம்பை எடுத்து மும்முறை ஊதினான்.

கொம்பூதி முதலில் செல்ல சீர்நடையில் திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். செதுக்குகல் பாவப்பட்ட சாலை வளைந்து மேலேறி குன்றின்மேலிருந்த நகரம் நோக்கி சென்றபோதுதான் அந்தக் கணையாழி மேலேறிமறைந்துவிட்டதை திருஷ்டத்யும்னன் எண்ணினான். அது எங்கோ வானில் இருக்கிறது. வானத்தின் காதில் தொங்கவிடப்பட்ட குண்டலம் என்று அப்போது தோன்றியது. இந்நகரத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. ஒரு நகரத்தின் தலைமேல் அப்படி ஒரு வாயிலை அமைக்க எவருக்குத் தோன்றியது? அந்த வாயிலினூடாக இங்கு வந்திறங்கப்போவது யார்? யாதவர்களின் தெய்வங்கள் அனைத்தும் மண்ணில் பெரும்புல்வெளிகளில் வாழ்பவை. மூதன்னையர், குலமூதாதையர், ஆகாக்கும் மலைத்தெய்வங்கள், நீர்காக்கும் சோலைத்தெய்வங்கள்...

எதிரே புரவியில் ஒருவன் வருவதை கண்டான். அந்தப்புரவியின் நடையே அவனை தனித்துக்காட்டியது. சிலகணங்களிலேயே அவனை அடையாளம் கண்டுகொண்டான். இளைய யாதவனின் தோழன். அவன் பெயர் என்ன என்று நினைவுக்குள் துழாவினான். அவன் முகம் தெளிவடைந்து வந்தது. மேலே வெண்முகில்கள் போல எழுந்து எழுந்து சென்ற குவைமாட மாளிகைகளின் நிழல் சாலையில் சரிந்துகிடந்தது. கீழே சென்ற வண்டிகளிலிருந்து உதிர்ந்த தானியங்களை பொறுக்கும் மணிப்புறாக்கள் மேலே வந்து அந்தச்சாலையின் கைப்பிடிகள் முழுக்க செறிந்து அமர்ந்திருந்தன. அவனுடைய புரவியின் குளம்போசையில் மெல்ல எழுந்து இடம்மாறி அமர்ந்தன.

அவன் தந்தையின் பெயர் சத்யகர். அவனை சாத்யகி என்றழைக்கிறார்கள். திருஷ்டத்யும்னன் அவன் அருகே வரவர அவனை வெறுக்கத்தொடங்கினான். அவன் அணுகியதும் உடலை அதிரச்செய்யும் அளவுக்கு அவ்வெறுப்பு உச்சம் கொண்டது. ஓரிருசொற்கள் முகமனாகச் சொல்லி அவன் கடந்துபோனால்போதும் என்று நெஞ்சு ஏங்கியது. அவனிடம் பேசினால் அவ்வெறுப்பு எவ்வழியிலோ வெளிப்பட்டுவிடும். அவனை ஏன் வெறுக்கிறேன்? அவன் அருகே வந்து கடிவாளத்தைப்பற்றி புரவியைத் திருப்பி நின்றபோது அது தெரிந்தது. அவன் உடல் இளமையின் வலிமையுடன் இருந்தது. வலிமையான எந்த உடலும் தன்னுள் கடும் சினத்தையே மூட்டுகின்றது.

சாத்யகி “வணங்குகிறேன் பாஞ்சாலரே. துவாரகைக்கு தாங்கள் வருவது யாதவர்களுக்கு பெருமை” என்றான். “துவாரகையை காணும் பேறு எனக்கும் அமைந்தது” என்று கண்களை திருப்பிக்கொண்டு திருஷ்டத்யும்னன் சொன்னான். “தங்களை நானே நேரில் அழைத்துவரவேண்டும் என்று அரசரின் ஆணை” என்றான் சாத்யகி. “யார்?” என்று திருஷ்டத்யும்னன் அறியாமல் கேட்டுவிட்டான். “இளைய யாதவர். நீங்கள் இங்கே அரசத்தூதராக உணரக்கூடாது என்றும் நீங்கள் இந்நகரில் எதன்பொருட்டு வந்திருந்தாலும் அத்தூது வெற்றியடைந்துவிட்டது என்றும் சொன்னார். உங்களை முறைமைப்படி நான் வரவேற்கலாகாது என்றும் நீங்கள் நகர்நுழைந்தபின்னர் வழியில் சந்தித்து மதுக்கடைகளுக்கோ நடனக்கூடத்திற்கோ அழைத்துச்செல்லும்படி ஆணை.”

ஒருகணம் திகைத்தபின் திருஷ்டத்யும்னன் சிரித்துவிட்டான். “என்ன இது? எனக்கு புரியவில்லை” என்றான். “நீங்கள் ஓர் இளைஞனாக உணரவேண்டும் என்கிறார்” என்று சாத்யகியும் சிரித்தான். திருஷ்டத்யும்னன் “இத்தனை பெரிய அகம்படியுடன் எவரும் நடனக்கூடத்திற்கு செல்வதில்லை” என்றான். “திருப்பி அனுப்பிவிடுவோம்” என்று சொன்ன சாத்யகி திரும்பி கொம்பூதியிடம் திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டான். அவர்கள் தயங்கி ஒருவரை ஒருவர் நோக்கியபின் நின்றனர். “பாஞ்சாலரே, உங்கள் புரவியை ஒரு முறைகூட கடிவாளம்பற்றி இழுக்காமல் முழுவிரைவில் மேலே நகர்வரைக்கும் செல்லமுடியுமா?” என்றான்.

திருஷ்டத்யும்னன் மேலே பார்த்துவிட்டு “பன்னிரு சுற்றுகள் உள்ளன. வழியில் மாளிகைகள்... ஒரு கடைவீதிகூட இருப்பதாக தோன்றுகிறது...” சாத்யகி “ஆம், மக்கள் நெரிசல் உள்ள பகுதி... ஆனால் கடிவாளத்தை இழுக்கலாகாது” என்றான். திருஷ்டத்யும்னன் தன் உடல்நிலையைப்பற்றித்தான் முதலில் நினைத்தான். ஆனால் தன் உடல் நோய்க்கோலத்தில் இருப்பதைக்கண்டும் சாத்யகி அதை அறைகூவியது அவனுக்கு நிறைவளித்தது. “செல்வோம்” என்றான். சாத்யகி சிரித்தபடி குதிரையை குதிமுள்ளால் தூண்ட அது முன்னங்கால் தூக்கி கனைத்தபடி குளம்புகள் தடதடக்க பாய்ந்தோடியது. திருஷ்டத்யும்னனின் உடலெங்கும் அச்சம் குளிராக நரம்பதிர்வாக ஓடிச்சென்றது. மறுகணமே அதை வென்று குதிமுள்ளால் புரவியை செலுத்தினான். இளமையான பெண்புரவி. ஒருமுறைகூட குதிமுள்பட்டிராதது என அது திடுக்கிட்டு நின்று உடல்சிலிர்த்ததிலிருந்து தெரிந்தது. பின்னர் கனைத்தபடி அது கொக்கு எழுவதுபோல பின்னங்கால்களில் எழுந்து முன்னால் பாய்ந்தது.

சிலகணங்களில் அவன் பறவையைப்போல காற்றில் சென்றுகொண்டிருந்தான். கட்டடங்களும் விளக்குத் தூண்களும் மரங்களும் பின்னால் பாய்ந்துசென்றன. குளம்படி அவன் எண்ணங்களின் தாளமாக இருந்தது. ஆனால் அந்த விரைவு தன் சித்தத்தை கூர்மையாக்கிவிட்டிருப்பதை உணர்ந்தான். ஒவ்வொரு புறாவையும் அவற்றின் சிறகுகளையும் தனித்தனியாக பார்க்கமுடிந்தது. எதிரே வந்த ஒவ்வொரு விழியையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களை உணரமுடிந்தது. முழுவிரைவில் கடிவாளத்தை ஒருமுறைகூட இழுத்து புரவியை நிறுத்தாமல் வளைந்தும் தாவியும் முன்னால்சென்றான். நாய்களை குறுக்கே சென்ற பூனையை எதிரே வந்த குதிரைகளை அத்திரிகளை பல்லக்குகளை சுமைதூக்கிகளை சிறுவணிகர்களை...

ஒரு கட்டத்தில் அது மிக எளிதான ஒன்றாக ஆகியது. ஒன்றையுமே அவன் செய்யவேண்டியிருக்கவில்லை. கண்கள் பார்த்து கைகால்கள் இயற்றி உடல் முன்னால்சென்றுகொண்டிருக்க சித்தம் ஒவ்வொரு காட்சியையும் பல்லாயிரம் மடங்கு நுட்பத்துடன் அள்ளி அள்ளி உள்ளே அடுக்கிக்கொண்டிருந்தது. கொடிகள் பறந்த அங்காடியின் காலைக்கூட்டத்தின் நடுவே கணம்தோறும் மாறிக்கொண்டிருந்த இடைவெளியினூடாக வால்சுழற்றி மூச்சிரைத்து தடதடத்துச் சென்றான். விழிகளை நோக்கி அவர்கள் எத்திசையில் விலகுவார்கள் என்று கணித்து அதற்கு எதிர்திசையில் ஒதுங்கி பாய்ந்தான். சாலையில் எங்கே வளைவு வரும் எங்கே ஓடைவரும் என்றுகூட முன்னரே அறிந்திருந்தது சித்தம். விழிகள் உடலில் இருந்து இருபறவைகளாக எழுந்து குதிரைக்கு முன் நெடுந்தொலைவில் பறந்துகொண்டிருந்தது. உடலே செவியாகி முரசுத்தோல்போல அத்தனை ஒலிகளையும் வாங்கிக்கொண்டிருந்தது.

பன்னிரண்டாவது சுற்றில் நகரத்தின் மையப்பெருஞ்சாலையை அடைந்ததும் சாத்யகி திரும்பி குதிரையை நிறுத்திவிட்டு வெண்பற்கள் ஒளிவிட சிரித்தான். “வந்துவிட்டோம் இளவரசே” என்றான். மூச்சிரைக்க புரவியை இழுத்து விரைவழியச்செய்து அருகணைந்து வளைத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் “நான் ஒருமுறைகூட இழுக்கவில்லை...” என்றான். திரும்பி ஆழத்தில் சுருண்டிறங்கிய பாதைச்சுருளை நோக்கியபோது நெஞ்சு நடுங்கியது. “நம்ப முடியவில்லை” என்றான். “இந்நகரில் சிலரே இப்படி வரமுடியும்...” என்றான் சாத்யகி. “புரவியின் உடலும் நம் உடலும் ஒன்றாகவேண்டும்... புரவியின் கண்களும் நமக்கு வாய்க்கும்.” திருஷ்டத்யும்னன் வியப்புடன் அவன் பார்த்த அத்தனை காட்சிகளும் புரவியின் கண்களின் உயரத்தில் இருந்ததை எண்ணிக்கொண்டான்.

மீண்டும் ஆழத்துப்பாதையை நோக்கி “ஆனால் இது ஒரு நச்சுவிளையாட்டு. ஒரு சிறு எதிரீடு நிகழ்ந்திருந்தால்கூட புரவியின் கால்கள் ஒடிந்திருக்கும். இறப்புதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, வீரனுக்கு இறப்பு அருகே இல்லாத உவகை ஒன்று உண்டா என்ன?” என்ற சாத்யகி “நாம் நடனக்கூடம் செல்வோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “அதற்கு முன் மது” என்றான். சாத்யகி “இன்று இந்நகரில் மதுவுக்கு எங்கும் செல்லவேண்டியதில்லை. நகரத்தெருக்களெங்கும் மது கிடைக்கும்” என்றான். “இங்கே அயல்வணிகர்கள் நகர்முழுக்க மது அளிப்பார்கள். ஆணும்பெண்ணும் மதுவுண்ட மயக்கில்தான் இருப்பபார்கள்.” திருஷ்டத்யும்னன் “இந்திரவிழாவின்போது மட்டும்தான் பாஞ்சாலத்தில் மது நுரைக்கும்” என்றான். “யாதவபுரிகளில் இந்திரவிழவு இல்லை. எங்கள் இந்திரன் இளையவரே” என்றான் சாத்யகி.

அவர்கள் நகரத்தெருக்கள் வழியாக புரவியில் மெல்ல சென்றனர். தெருவெங்கும் இரு புறங்களையும் நெருக்கியபடி சென்ற மக்களின் ஆடைகளால் வண்ணம் கலந்து கொந்தளித்தது. அத்தனை முகங்களும் சிரித்துக்கொண்டிருக்க ஒவ்வொருமுகத்தையும் தனியாகப்பார்க்கமுடியாமல் தவித்தலைந்த நோக்கில் மொத்த தெருவே நகைமுகம் கொண்டிருப்பதுபோல தோன்றியது. சிரித்தபடி நான்கு இளம்பெண்கள் ஓடிவர வண்ணப்பட்டு சுற்றிய களிக்கோலால் அவர்களை அடிக்கத் துரத்தியபடி நாலைந்துபெண்கள் வந்தனர். முதலில் வந்த பெண் திருஷ்டத்யும்னனின் குதிரையில் முட்டிக்கொண்டு அவன் இடக்காலைப்பற்றி நின்று சிரித்தபடியே குதிரைக்குப்பின்னால் சென்று ஒளிய அவளை துரத்திவந்த இருவரும் அவன் காலைப்பிடித்தபடி அவளை எட்டிப்பிடிக்க முயன்றனர். அவள் கூவிச்சிரித்தபடி மறுபக்கம் ஓடி சாத்யகியின் காலைப்பிடித்துக்கொண்டு நின்று கைகாட்டி சிரித்தாள். அவர்கள் "பிடி, அவளை விடாதே” என்று கூவியபடி இருபக்கமாக வளைத்து அவளைப்பிடிக்க முயல அவள் பாய்ந்து முன்னால் ஓடினாள். அவர்கள் துரத்திச்செல்ல பின்னால் வந்த சற்று தடித்த பெண் “விலாசினீ... நில்... எங்கு போகிறீர்கள்?” என்றாள். “கூட்டத்தில் தவறினால் கண்டுபிடிக்கமுடியாது... ஏடீ...”

திருஷ்டத்யும்னன் “நாணிலாது களிக்க விரும்புகிறார்கள்” என்றான். சாத்யகி “பாஞ்சாலரே, இங்கே யாதவபுரியில் பெண்களிடம் நாணம் எதிர்பார்க்கப்படுவதில்லை” என்றான். நாலைந்துபெண்கள் ஒரு சாலையோர மதுச்சாலையை சுற்றிக்கொண்டு மது அளித்துக்கொண்டிருந்த நீளமுகமும் நீலக்கண்களும் கொண்ட யவன இளைஞனை களியாடினர். அவன் அவர்கள் வருவதைக் கண்டதுமே உள்ளே போக முயல ஒருத்தி அவன் இடைக்கச்சையை பிடித்துக்கொண்டாள். இன்னொருத்தி தன் பெரிய முலை ஒன்றை அவன் புயம் மேல் அழுத்தி அவன் தோளை வளைத்துக்கொண்டு அவன் மூக்கைப்பிடித்து இழுத்தாள். அவன் நடுங்கிக்கொண்டிருக்க ஒருத்தி அவன் இடையாடையை களையமுயல்பவள் போல கைநீட்டினாள். அவன் திகைத்து உடலை வளைத்து அமரப்போனான். அருகே இருந்த செந்நிறத்தாடிகொண்ட யவனமுதுமகன் சிரித்துக்கொண்டே இருந்தான். ஒருத்தி அவர் தாடியை வருடி ஏதோ கேட்க அவர் சொன்ன மறுமொழி கேட்டு பெண்கள் சேர்ந்து வெடித்துச்சிரித்தனர்.

திருஷ்டத்யும்னன் “அவரால் இவர்களை கையாள முடியும்” என்றான். “ஆம், பெண்களைப்பார்த்தவர்” என்றான் சாத்யகி. அவர்கள் பார்ப்பதைக்கண்ட ஒருத்தி இடையில் கையை ஊன்றி நின்று “என்ன வீரரே? என்ன பார்வை?” என்றாள். சாத்யகி ”ஏன் பாதையை பார்க்கக் கூடாதா?” என்றான். திருஷ்டத்யும்னன் “நாம் போய்விடுவோம்... வேண்டாம்... போய்விடுவோம்” என்றான். “என்ன அச்சம்? என்ன செய்யப்போகிறார்கள்?” என்று சாத்யகி புரவியை நிறுத்திவிட்டான். “எதற்கு? போய்விடுவோம்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லி புரவியை முன்னால் செலுத்தினான். ஆனால் சாத்யகி இல்லாமல் தனித்துச்செல்வது இன்னமும் கேலிக்குரியதாக ஆகும் என்று தோன்றவே புரவியை இழுத்து சுழற்றி மீண்டும் அருகே வந்தான். அந்தப்பெண் அருகே வந்து “இங்குள்ள பாதைகளில் எது பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள் யாதவரே?” என்றாள். “எனக்கு பெரிய குன்றுகள் உள்ள பாதைதான் பிடித்திருக்கிறது” என்று சாத்யகி சொல்ல அவளுடைய தோழிகள் ”ஓ” என்று குரலெழுப்பி துள்ளிக்குதித்தனர். அவள் ஒருகணம் நாணிவிட்டாள்.

திருஷ்டத்யும்னன் “போதும் போய்விடுவோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சாத்யகி அவள் இடையைப்பிடித்து வளைத்துத் தூக்கி புரவிமேல் ஏற்றிக்கொண்டு அதை முன்னால்செலுத்தி அவனை கடந்துசென்றான். அவளுடைய தோழிகள் கூவியபடி பின்னால் ஓடி பின்னர் சிரித்தபடி ஒருவரோடொருவர் தோளை அணைத்து நின்றனர். சாத்யகியின் குதிரையின் வால் சுழன்று கூட்டத்தில் மறைந்தது. திருஷ்டத்யும்னன் நெஞ்சு படபடக்க குதிரைமேல் அமர்ந்திருந்தான். எந்த விழிகளையும் பார்க்கமுடியவில்லை. சேணத்திலிருந்து உடல் வழுக்கிச்செல்வதுபோலிருந்தது. கால்களால் குதிரையை இறுக அணைத்துக்கொண்டான். “வீரரே, இங்கு வாரும்” என்றாள் ஒரு பெண். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஏய், இதென்ன கேள்வி? மூத்தவள் அழைக்கிறார்கள் என்றால் போய் பணிந்து நிற்கவேண்டியதுதானே?” என்று ஒரு பெண் கையை ஓங்கியபடி வந்தாள். “முதலில் குதிரையைவிட்டு இறங்கு” என்று இன்னொருத்தி சொன்னாள்.

திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகி சென்ற திசையை நோக்கிவிட்டு “நான் பாஞ்சாலத்திலிருந்து வருகிறேன்” என்று தழுதழுத்த குரலில் சொன்னான். “ஆமாம், பாஞ்சாலம்... திரௌபதியின் நாடு. அப்படியென்றால் இவருக்கு ஐந்து தேவை... அடீ, ஐந்துபேர் மட்டும் வாருங்கள். மற்றவர்கள் ஒதுங்குங்கள்...” ஒருத்தி அவன் இடையாடையைப்பிடித்து “ஐந்து வைத்திருக்கிறீர்களா பாஞ்சாலரே?” என்றாள். இன்னொருத்தி “என்னடி கேட்கிறாய்? ஐந்து இருப்பது பெண்களுக்கு... ஆண்களுக்கெல்லாம் ஐந்தில் ஒன்றுதான்” என்று சொல்ல அத்தனைபேரும் வெடித்துச்சிரித்தனர். “நான் அயலவன்... தூதனாக வந்தேன்” என்று சொல்லி திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியின் தலை தெரிகிறதா என்று பார்த்தான். “சீ இறங்கு கீழே. அயல்நாட்டு ஒற்றனே, என்ன துணிச்சலிருந்தால் எங்கள் தமக்கை ஆணையிட்டும் புரவியில் இருந்து இறங்காமலிருப்பாய்? சாவித்ரி, அவன் புரவியின் கண்ணில் சுண்ணத்தைப்போடு” என்று ஒருபெண் சொல்ல அவன் “வேண்டாம் வேண்டாம்” என்று கூவியபடி பாய்ந்து இறங்கிவிட்டான்.

உயரமான பெண் ஒருத்தி அவன் உடைவாளை உருவிக்கொண்டு “இது என்ன புதுக்கருக்கு அழியாமலிருக்கிறது? போருக்கே செல்வதில்லையா?” என்றாள். “இல்லை... நான் போரில் காயம்பட்டு...” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் இன்னொருத்தி தன் தோளில் கை சுற்றுவதை உணர்ந்து உடல்விதிர்த்து நிறுத்திக்கொண்டான். “விழுப்புண்ணா... எங்கே காட்டு... அடியே, இதோ என் ஆணை, அவன் உடலில் உள்ள அத்தனை விழுப்புண்களையும் எண்ணி என்னிடம் உடனே அறிவியுங்கள்” என்றாள் பெரியவள். “அரசி, அதற்கு இவன் ஆடைகளை களையவேண்டுமே?” என்று ஒரு மெலிந்த பெண் கேட்க “இதென்ன கேள்வி? அரசி ஆணையிட்டால் களையவேண்டியதுதானே?” என்றாள் ஒருத்தி. “வேண்டாம்... நான் இளவரசன். பாஞ்சால இளவரசன்... அயல்நாட்டுத் தூதன்” என்று திருஷ்டத்யும்னன் கூவிக்கொண்டிருக்கையிலேயே அவன் கச்சையை ஒருத்தி அவிழ்த்துவிட்டாள். இடையாடையின் முதல்சுற்று அவிழ்ந்து சரிந்தது. இருகைகளாலும் அவன் அதை இறுகப்பற்றிக்கொண்டு “அவமதிக்காதீர். வேண்டாம்” என்றான்.

“சரி, பாஞ்சால இளவரசன் என்கிறாய். என்ன சான்று உள்ளது?” “முத்திரை மோதிரம் உள்ளது... இதோ” என்று திருஷ்டத்யும்னன் தன் முத்திரை மோதிரத்தை எடுத்தான். “காட்டு” என்று ஒருத்தி அதை வாங்கி “இதை எனக்குப்போட்டுவிடு” என்றாள். “உனக்கு அளவு சீராக இருக்காது... இங்கே கொடு” என்று ஒரு மூத்தவள் முன்னால் வந்தாள். “ஏய், உனக்கும் அளவு சரியாக இருக்காது. சரியைக்குத்தான் சரியாக இருக்கும். சரியை, வாடி முன்னால்.” பெரிய முலைகள் கொண்ட தடித்தபெண் சிரித்தபடி வந்து நின்று “போட்டுப்பார்ப்போமே” என்றாள். ”போட்டுவிடுங்கள் பாஞ்சாலரே” என்றாள் ஒருத்தி. நடுநடுங்கும் கைகளால் கணையாழியை பற்றிக்கொண்டு “சரி” என்றான் திருஷ்டத்யும்னன். “உம், என்ன தயக்கம்?” என்று அரசி அதட்டினாள். அவன் அப்பெண்ணின் விரலை நோக்கி கைநீட்ட ஒரு கரியபெண் அவன் தலையைத் தட்டி “என்ன செய்கிறாய்?” என்றாள். “கணையாழியை போட்டுவிட...” என திருஷ்டத்யும்னன் இழுத்தான். “நாங்கள் இங்கே கணையாழியை விரலில் போடுவதில்லை.”

திருஷ்டத்யும்னன் "பொறுத்தருளவேண்டும்” என்றான். வறண்ட தொண்டையை சரிசெய்தபடி ”எனக்குத்தெரியவில்லை” என்றபோது குரலே வெளிவரவில்லை. கண்களில் கண்ணீர் பரவிவிட்டது. “என்னடி குழந்தையை இந்தப்பாடு படுத்துகிறாய்? இளையவனே, நீ கிளம்பிப்போ” என்றாள் அரசி. “ஆனால் போவதற்கு முன் அவளுக்கு அந்தக் கணையாழியை போட்டுவிட்டுப்போ” என்றபின் “ஏய், விரலைக் காட்டு” என்றாள். தடித்தபெண் தன் மார்புக் கச்சை விலக்கி பெரிய இடமுலையில் சுட்டு விரல்முனை போல துருத்தி நின்றிருந்த கரிய முலைக்காம்பை காட்டினாள். பெண்கள் கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் பிடித்துத்தள்ளி சிரிக்க திருஷ்டத்யும்னன் அதிரும் உடலுடன் திரும்பிப்பார்த்தான் அவனைச்சுற்றி ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர். அவர்களின் கூட்டச்சிரிப்பைக்கேட்டு மேலும் பெண்கள் ஓடிவந்துகொண்டிருந்தனர்.

அங்கிருந்து முடிந்தவரை விரைவில் விலகிச்சென்றுவிடவேண்டும் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவன் இடது தொடை அறுத்துப்போடப்பட்டது போல துடித்துக்கொண்டிருக்க நெஞ்சுக்குவையின் ஒலி காதில் கேட்டது. விழுந்துவிட்டால் அதைவிடக் கீழ்மை என ஏதுமில்லை. "அரசி!" “என்ன விழிக்கிறாய்? ம்ம்... விரைவு” என அதட்டினாள். திருஷ்டத்யும்னனின் கையிலிருந்து கணையாழி வழுக்குவதுபோல் இருந்தது. அவன் அந்தப்பெண்ணின் கண்களைப்பார்த்தான். அவள் சிரித்து “அச்சமா? இங்கே கொடு, உனக்கு நான் போட்டுவிடுகிறேன்” என்றாள். பெருஞ்சிரிப்பு அவனைச்சூழ திருஷ்டத்யும்னன் ஒரே கணத்தில் முன்னால் சென்று அவளுடைய முலைக்கண்ணில் அந்தக் கணையாழியை வைத்தான். அவள் கூச்சத்துடன் பின்னால் செல்ல அது கீழே விழுந்தது. அவன் குனிந்து அதை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று தன் புரவியில் ஏறிக்கொண்டான்.

பெண்கள் சிரித்து ஆர்த்தபடி அதை அடித்தனர். அவன் குதிரையை குதிமுள்ளால் மிதித்துத் தூண்ட அது கனைத்தபடி கூட்டத்தை ஊடுருவிச்சென்றது. அதன் கடிவாளத்தை தளரப்பற்றி அதன் போக்கில் விட்டபடி மேலிருந்து நடுங்கிக்கொண்டிருந்தான். எதுவுமே கண்களில் படவில்லை. நீராவிப்படலம் ஒன்று கண்களை மூடியிருந்தது. உடலை வியர்த்து வழியச்செய்தது. மூச்சுத்திணறச்செய்தது. விடாய் கொண்டு நெஞ்சு தவிக்கவைத்தது. பின் தன்னை உணர்ந்தபோது பெய்து கொண்டிருந்த வெள்ளிவெயிலில் கண்கள் கூசின. உதடுகள் உலர்ந்த தோலால் ஆனவை போலிருந்தன.

உடல்களை ஒதுக்கி வகுந்து வளைந்து வளைந்து சென்ற குதிரை கூட்டத்தில் சென்ற ஒருத்தியின் தலையிலிருந்த மலரை நோக்கி நாநீட்டியபடி நின்றது. அவள் நிமிர்ந்து மதுவுண்டு சிவந்த நீள் விழிகளால் நோக்கி “என்ன வீரரே?” என்றாள். ”மலர் அழகாக இருக்கிறது” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் குனிந்து அவளுடைய கூந்தலில் இருந்த இன்னொரு மலரை எடுத்து முகர்ந்து “நறுமணம்” என்றான். அவள் முகம் சிவந்து சிரித்தபடி கடந்து ஓடினாள். இன்னொருத்தி அவனை நோக்கி “என் மலர் வேண்டுமா?” என்றாள் “இங்குள்ள அத்தனை மலர்களும் வேண்டும்” என்று அவன் அவள் கூந்தலைப்பற்றி அங்கிருந்த செம்மலரை எடுத்துக்கொண்டான். அவளுடன் வந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டே புரவியைத் தூண்டி பெருநடையில் முன்னால் சென்றான்.

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 6

விழைவு விழிகளை ஆயிரம்பல்லாயிரமென பெருக்குகிறது. சென்றவழியெங்கும் கருநீலப்பளிங்கு மணிகளென அவன் விழிகள் உருண்டு விழுந்து சிதறிக்கொண்டே இருந்தன. இமைப்பழிந்து நோக்கிக்கிடந்தன. குழல்களில், செவிக்குழைகளில், முலைக்குவை நடுவே ஆடிய பொன்னிழைகளில் ஒட்டியிருந்து மின்னின. ஒவ்வொரு பெண்ணையும் முழுமையாக பார்த்தான். அவளையன்றி பிறிதெதையும் அறியாமல் அவளுடன் இருந்தான். அந்தத்தெருவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். அழகிகள். பெண்களிலும் மலர்களிலும் அழகின்மை என்பதில்லை. மலர்மையை, பெண்மையை அழகென யாத்தவன் அதில் வகைமையை மட்டுமே சமைத்தான். முடிவிலிவரை சென்று திரும்பி புன்னகைத்தான். அவனை நோக்கி நாணிப் புன்னகைத்தது பேரழகு கொண்ட அவன் ஆடிப்பாவை.

பொற்பிறை நெற்றிகள். நேர்வகிட்டின் இருபக்கமும் மென்சுருள் பிசிறி நிற்பவை. அலை வளைவு என இறங்கி காதருகே விலகி சுருளாகி அசைபவை. மயிர்மெலிந்து முன்னெற்றி மேலெழுந்தவர்கள் முலையூட்டிய பெண்கள். செந்நிறச் சிறுபருக்கள் பரவிய கன்னியர். விரிந்த நெற்றி கருணையெனக் காட்டுகையில் குவிந்த நெற்றி குழந்தையென வெளிப்படும் மாயம் எங்குள்ளது? என் விழியிலா? வட்டமுகத்தின் நெற்றிக்கு சின்னஞ்சிறு துளிப்பொட்டு. நீள்முகத்து நெற்றிக்கு மழைத்துளி சரிந்துவிழுந்த வடிவம். குங்குமத்தின் மீது தீற்றப்பட்ட மஞ்சள்கோடு. வெண்நறுஞ்சுண்ணத்தின் சிறு வரி. பொன்னெழுந்த தளிரிலை மேல் அமர்ந்திருக்கும் இந்திரகோபம். ஒளிர்வாளில் எஞ்சிய செங்குருதித் துளி. நிலவென்று, தாழை மடலென்று, தாமரை இதழென்று மயங்கும் சொற்கள். அப்படியென்றால் இம்மாமை நிறத்துக்கு என்னபெயர்? இளமாந்தளிர். இக்கருமையின் ஒளிக்கு என்ன பெயர்? நீலம்? இந்திரநீலம்?

மனம்கனியாமல் பெண்ணின் மூக்குக்குழைவை வரைந்திருக்கமாட்டான் பிரஜாபதி. ஆயிரம் கோடி கோடிழுத்த ஓவியனின் கைவீச்சில் பிறந்த வளைவு. வாழைமடல்மெழுக்கில் வழிந்தோடும் நீர்த்துளி. சின்னஞ்சிறு குமிழ்மூக்கிற்கென பிறந்தவை துளித்து மின்னும் வைரங்கள். மலர் கனிந்த பனித்துளி என நுனியில் ஆடட்டும் புல்லாக்கு. கூர்மூக்கின் நிழல் விழுந்த மேலுதடு. பனித்து துளித்த மூக்குநுனிகள். பிஞ்சு மாங்கனி என சற்றே வளைந்தவை. சிரிக்கையில் நடுசுளிப்பவை. குழந்தைமையை விட்டுவிட தயங்கி அழுந்தியவை. வினவிச் சுருங்குபவை. சிரிப்பில் விரிந்து மூக்குத்தியை அசைப்பவை. விழிமலர்கள் விரிந்த பசுங்கணு. சிறகடித்து இரு பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்த செண்பகம். சங்குபுஷ்பத்தின் மொட்டு. முத்தமிடுகையில் முந்திவந்து தொடும் வேட்கை.

வெளிநிறைத்துப் பறந்தலைந்தன விழிகள். விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று சொன்ன சூதன் ஞானி. நீண்ட விழிகளில் நிலைத்த நாணம். சின்னவிழிகளில் மாறாதது சிரிப்பு. ஓரவிழிகளில் காமம். நேர்நின்று நோக்கும் விழிகளில் மேலும் காமம். இமைத்து இமைத்து இவை பறந்தகன்றுவிடுமா என்ன? காற்றில், வானில், இவ்வொளிப்பெருக்கில் எழுந்து சுழலுமா? விழியென்றால் வேட்கை மட்டும்தானா? விழி சொல்லாததை மொழி சொல்லக்கூடுமா? தொட்டுத்தொட்டுச்செல்கின்றன. அணைக்கின்றன. முத்தமிட்டு சிரித்து விலகுகின்றன. கணத்துக்கொருமுறை தொட்டணைத்தபின்னரும் விழிகளில் எஞ்சும் தனிமைக்கு என்ன பொருள்? எத்தனை வண்ணங்கள். சற்றே திரும்பும்போது நீலக்கல் என மின்னுபவை. மயில்கழுத்து என பச்சையும் நீலமும் கருமையும் ஒன்றேயானவை. கருவிழியில் ஒளியே ஈரமென தன்னைக் காட்டுகிறது. ஒளியீரமே வேட்கையென்றாகிறது. ஈரவேட்கை கனலாகிறது. அனலில் விழுந்து பழுத்த கற்சில்லுகள். தொட்ட இடம் அதிரும் கருங்கனல்கள்.

செந்நிறம் கனிந்த முகப்பருக்கள் கன்னங்களை கொதிப்பவை என காட்டுகின்றன. கனி என்று தேன்கிண்ணம் என்று பொற்பதக்கம் என்று சொற்கள் சென்று பொருளழியும் கதுப்பு. காதிறங்கிய கரிய மென்மயிர்கள் மழைகொணர்ந்த நீலமணல்வரிகள். சிரிப்பில் விரியும் உதடுகளுக்கு அருகே இருகோடாக, பட்டுமடிப்பாக, தளிர்ச்சுருக்கமாக மெல்ல அதுங்கி இளமையென உவகையென தன்னைக்காட்டுகின்றன குமிழ் எழும் கன்னங்கள். சிரிக்கையில் சுருங்கி மூடும் சிறுவிழிகளுக்கு உகந்தவை. மிரளும்விழிகளுடன் இணைபவை. இழுபட்டு நீள்குழி விழுபவை. சிறுசுழி எழுபவை. வட்டமுகங்களுக்கு உரியவை. நதிநீர் கரந்த சுழலின் வடிவம். கன்னத்திலெழும் உந்தி. கரந்துறையும் உவகையின் தடயம். இளம்பாளைப் பளபளப்பில் படிந்திருக்கும் பொற்துகளின் சின்னஞ்சிறு மின்னல் ஒரு சொல். வானுறை நெருப்பின் துளி. குழைநிழல் நீண்டு விழுந்து விழுந்தசையும் பொதுப்பு. சுருள்குழல் நிழலாடும் மென்பரப்பு.

ஒவ்வொரு சொல்லும் முத்தத்திலிருந்து பிறக்கிறது. செம்மென்மை குவிந்து குவிந்து உதிரும் சொல்முத்தங்கள். ஈரம் பளபளக்க விரிந்து பெற்றுக்கொள்ளும் கனிமுத்தங்கள். சிறுசெந்நாநுனி வருடிச்செல்லும் நாணமுத்தங்கள். உதடுகள் மட்டுமே உள்ளுடல் வெளித்தெரியும் இடம். முகத்தில் மலர்ந்த இதயம். அகமாகிய செவ்வூன். உள்ளுறைந்த குருதியின் ஈரம். துடித்து துடித்தோடும் அனல். கனியெனத் தடித்து மலர்ந்த கீழுதடுக்குமேல் விழைவுடன் வளைந்த மேலிதழ். ஈரவெண்மை மின்னும் இருபற்களின் கீழ்நுனி தெரிந்த செவ்விரிதல்கள். அவை மெல்லக்கவ்விய பதிவுகள். வளைந்த மலர்வரிகள். நடுவே பிளந்து இருபக்கமும் விரிந்த இணைமொட்டுகள். சிறுமுகைகள். விரிந்தவை. பருத்தவை. நாணத்தால் இழுத்துக் கவ்வப்பட்டவை. எக்களிப்பால் சுழித்தவை. உஸ்ஸ் என குவிந்தவை. ஓ என வளைந்தவை. அழைப்பில் விரிந்தவை. மேலுதடுக்குமேல் விரிந்த நீலப்புகை மயிர்பூச்சு. இரு பக்கநுனிகளிலும் இறங்குவதென செம்பூமயிர் எச்சங்கள். செஞ்சுனைச் சேறென சற்றே விளிம்பு உலர்ந்தவை. மையம் கனிந்தவை. செம்முகத்தில் அரளி. சந்தன முகத்தில் எழுந்தவையோ வாழைமடல் வண்ணம். உள்ளே சற்று சிவந்தவை காமம் கொண்டவை. கனிந்து முழுத்தவை. காமத்திலாடுபவை. பேசிப்பேசி சிரித்துச் சிரித்து அவை காற்றில் அனுப்பும் கோடி முத்தங்களைப் பெற ஒளியில் சிறகசைத்து குளிர் காற்றென வந்து ததும்பும் கண்ணறியா கந்தர்வர்களுக்கு வணக்கம்.

அஞ்சித் திரும்புகையில் மயில். அஞ்சாமல் திரும்பும்போது நாகம். தன்னை தான் நோக்கி குனிகையில் அன்னம். சரிகையில் கொக்கு. தளர்கையில் மணிப்புறா. இளமையென்றானது கழுத்து. மென்மையென்றானது. வெம்மை கொண்டு மிளிர்வதற்கென்றே உருக்கொண்டது. வியர்த்து ஈரம் பூக்கும்போது ஒளி. ஒளியென வளைந்த சிறுவரிகள். தளிர்ப்பாளை கொண்ட கோடுகள். பூங்கதுப்பு மடிப்புகள். நீண்டு அடுக்கென எலும்பின் வளையங்கள் தெரிபவை. மூடிய மென்தசையால் ஆனவை. குமிழ்முகவாயின் நிழல் சரிந்தவை. வெண்பளிங்கு. செந்தழல் பட்ட சுண்ணம். தேய்த்த செம்பு. நீர்வழியும் கருமையின் ஒளி. தோளெனச் சரிந்து பொன்னணிச் சங்கிலி பாலமிட்ட கழுத்தெலும்பாகும் மென்மை. இரு குமிழ்கள் நடுவே அச்சமும் ஆவலும் என மூச்சு நின்று துடிக்கும் சிறு பள்ளம். நத்தைக்கோடென மின்னும் மேல்மார்பின் தோல்வரிகள். ஈரம் வழிந்திறங்கி மின்னும் முலைக்குவை வழி. தளிர்வாழையிலையின் பள்ளம். வியர்வைத் துளி செல்லும் வழுக்குப்பாதை.

இருதுளி திரண்ட தளிர்கள். ததும்பி தயங்கி அசைபவை. இறுகி அழுந்தியவை. தழைந்தவை கருணை என்கின்றன. ஒன்றோடொன்று செறிந்தவை அஞ்சுகின்றன. இன்னும் முகிழாதவை நகைக்கின்றன. புயம்நோக்கி விரிந்தவை சற்றே சலிப்புற்றிருக்கின்றன. ஒசிந்து அமர்கையில் ஒன்றன் மேல் ஒன்றமர்கின்றன. எழுந்து கை தூக்கி குழல் திருத்துகையில் மேல்நோக்குகின்றன. தாவி மரக்கிளை மலரை கொய்யமுயல்பவளில் துள்ளிக்களிக்கின்றன. ஊடலறியாதவை. குழைபவை. நெகிழ்ந்து விழிதிறப்பவை. மலரில் எழுந்த மொட்டுகள். செம்பட்டில் காந்தள். செம்பில் கத்தரிப்பூ. வெண்பளிங்கில் கருங்குவளை. தீண்டுபவை. பின் அணைப்பவை. நடையில் துவள்பவை. ஒருகணத்தில் விழிதொடும் இத்தொலைவையெல்லாம் நிறைத்து முகிழ்த்து காய்த்து கனிந்து கனிந்து செறிந்திருந்தது பெண்மை. அதுமட்டுமே திசை திசையென அங்கிருப்பது போல. ஆயிரம் பல்லாயிரம் அமுதக்கிண்ணங்கள். மென்திரை ஒன்றுக்கு அப்பால் ஊறி நின்றது பாற்கடல். வெங்குருதி அனலென்றாகி ஓடும் ஊன் கனிந்து பாலாகும் சுனைமுகப்புகள். கனிதல்கள். கனிவுக்கு இரு விழிகள்.

அவன் உருகிப் பரவி அங்கெலாமிருந்தான். மன்மதனுக்கு உடலிருக்கலாகாதென்று கண்ட மூதாதை போல காமத்தை அறிந்தவன் எவருமில்லை. உடல்கொண்டது காமம் அல்ல. உடலெங்கும் விழிகொண்டதும் காமம் அல்ல. உடலற்று ஒளியாகி காற்றாகி நிறைவது காமம். தழுவுவது காமம். உடலிலி போல் தழுவிக்கொள்ளலாகுமோ உடல்? சுளையென இடைப்பிதுங்கல்கள். ஆடை தாழ்ந்து தெரிந்த வடுக்கள் பதிந்த வெண்சதை . பட்டில் பட்டு பதிந்த பட்டுத்தடம். கூழாங்கல் எழுந்துசென்ற செம்மண் சதுப்பு. தோள்வளைகள் கவ்வி பின் நெகிழ்ந்து விட்டுச்சென்ற சதைச்சித்திரம். திரண்ட புயங்கள் செஞ்சாந்து என வழிந்தவை. பித்தளைக் குத்துவிளக்கின் உருள்நிலை என இறுகியவை இளம்புயங்கள். தோள்முழை எழுந்தவை இவை. எலும்பின்றி குழைந்தவை அவை.

நீலநரம்போடும் மெலிந்த கரங்கள். மிகச்சிறிய மணிக்கட்டும் விரல்குவைகளும் கொண்டு உருண்டவை. இரையுண்டு துயில்கொண்ட வெண்ணிற மலைப்பாம்புகள். தயங்கி இறங்கும் தேனருவி வழிவுகள். வளையல் வழுக்கிச்சரிந்தது. கடையம் பின்னகர்ந்து ஒட்டி இறுக்கி தடம் விட்டு பின் மணிக்கை வந்தது. நீலநரம்புக் கிளைவிரிவுகள். செண்பகமொட்டு விரல்கள். ஓயாது அசைந்தன கரங்கள். அழைத்தன. துள்ளி எழுந்தன. ஆடை அள்ளி சீரமைத்தன. நுனிபற்றிச் சுருட்டி மருண்டன. ஈரம் கசங்கும் மெல்லிய உள்ளங்கைகளுக்கு என்னென்ன நிறங்கள். தாமரை மலரிதழ்ச்செம்மை. பழுத்த அத்தி இலைகளின் வெண்மை. சிறுசிப்பிகள் என நகங்கள். கிளிமூக்குகள். சிட்டுக்குருவி அலகுகள். விரல்கள் அறியாத்தெய்வங்களின் நாக்குகள். அவை சொல்லும் சொற்களால் நிறைந்திருந்தது அவ்வெளி. சொல்லிச் சொல்லித் தவித்தன. நாணி அஞ்சி ஏங்கி எழுந்து கூவி அமைந்தன.

சாத்யகி வந்து தன் தோளைத் தொட்டபோது திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு உடல்விதிர்த்தான். அவன்தோல் மிகமிக நுண்மைகொண்டு ஒரு தூசுத்துளி விழுந்தால்கூட உணருமளவுக்கு மாறிவிட்டிருந்தது. சாத்யகியை அவனால் பலகணங்களுக்கு அடையாளம் காணமுடியவில்லை. நடுங்கிக்கொண்டே இருந்த உடல் மெல்ல புரவியிலிருந்து சரிய சாத்யகி அவன் தோள்களைப் பற்றி நிறுத்தி “எங்கு செல்கிறீர்கள் பாஞ்சாலரே? என்ன, கனவா?" என்றான். திருஷ்டத்யும்னன் உடல் கூசி, கண்கள் கலங்க சிலகணங்கள் அமர்ந்திருந்த பின் “யார்?” என்றான். “யாரா?” என்று சிரித்த சாத்யகி “எங்கள் யாதவப்பெண்களைக் கண்டவர்கள் மீள்வதில்லை என்று சூதர்கள் பாடுவது உண்மைதான்போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் விழித்துக்கொண்டு சாத்யகியின் தோள்மேல் கையை வைத்து அடைத்த குரலில் “யாதவரே” என்றான்.

அந்தக் கைமேல் தன் கையைவைத்துப் பிடித்துக்கொண்ட சாத்யகியிடம் திருஷ்டத்யும்னன் “நான்...” என்றபின் சுற்றுமுற்றும் நோக்கி “வழிதவறிவிட்டேன்” என்றான். சாத்யகி புன்னகைசெய்து “இங்கே வழிதவறுவது இனியது. இந்நகரில் எப்படி வழிவிலகினாலும் இறுதியில் இளையயாதவரின் அரண்மனைக்கு சென்றுசேர்ந்துவிடலாம். ஆகவே நானும் விட்டுவிட்டேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “எங்கு நோக்கினாலும் பெண்கள். விழிகளை விலக்கவே முடியவில்லை” என்றான். “இது பெண்கள் மட்டுமே வாழும் நகரம் என்று ஒரு யவன சூதர் பாடியிருக்கிறார். இளைய யாதவருக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் என்றும் அவர்கள் மட்டுமே இந்நகரில் வாழ்வதாகவும் அவரது புராணம் சொல்கிறது.”

திருஷ்டத்யும்னன் சிரித்து “பதினாறாயிரத்து எட்டுபேரையும் ஒருவர் எப்படி அடைகிறார்?” என்றான். “ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஆடி உள்ளதாம். அதன்முன் நின்று அந்தப்பெண் அவரை எண்ணிக்கொண்டால் நீரலையிலிருந்து எழுவதுபோல அவர் தோன்றுவாராம்” என்று சொன்ன சாத்யகி “ஒவ்வொரு பெண்ணும் பதினாறாயிரத்தெட்டு முகங்களாக அவரை எண்ணுகிறாள் என்பது அடுத்த வரி. வைரத்தின் முடிவிலாப்பட்டைகளை போல முகம் கொண்டவர் என்று இளைய யாதவரைப் பற்றி பாடுகிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “சூதர்கள் பாடத்தொடங்கினால் இளைய யாதவரே எண்ணினாலும் நிறுத்தமுடியாது” என்றான். “இங்குள்ள அனைவருமே பெண்கள். அவர் ஒருவரே ஆண் என்று ஒரு சூதர் பாடினார்” என்று சாத்யகி சொல்ல தெருவெங்கும் சிரித்துக்கொண்டே சென்ற பெண்களை நோக்கி திருஷ்டத்யும்னன் “ஒருவகையில் அது உண்மைதான்” என்றான்.

திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டு ஓடிவந்த பெண்கள் குழு ஒன்றை நோக்கினான். அதில் ஒரு பெண் அவனிடம் “வீரரே, உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றாள். “சொல்” என்றான் திருஷ்டத்யும்னன். அவள் அருகே வந்து தன் கையில் மறைத்துவைத்திருந்த மஞ்சள்குங்குமக் கலவையை அவன் முகத்தில் வீசிவிட்டு ஓடிச்சென்றாள். முகத்தைமூடி கண்களை கொட்டித்திறந்து நாவில் பட்ட மஞ்சளைத் துப்பியபடி திருஷ்டத்யும்னன் சிரித்தான். “இனி நீங்கள் எந்தப்பெண்ணை அடைந்தாலும் அவள் யார் என கண்டுபிடித்துவிடுவோம்” என்று அவள் அப்பால் நின்று கூவினாள். ”நீதான் முதலில்... உன் உடலில்தான் மஞ்சளும் குங்குமமும் இருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். அவள் அறியாமல் குனிந்து நோக்க அவள் தோழிகள் உரக்கச் சிரித்தனர். சிரிப்பும் வளையல்களின் ஓசையும் சிலம்போசையும் கலக்க ஓடி மறைந்தனர்.

திருஷ்டத்யும்னன் திரும்பி “பெண்களை இத்தனை அழகாக எங்கும் கண்டதில்லை” என்றான். “அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை” என்று சாத்யகி சொன்னான். ”ஆழத்தில் பெண்கள் கட்டற்றவர்கள். அவர்கள் களியாடவிழைகிறார்கள்.” பெண்களை நோக்கிக்கொண்டே புரவியில் மெல்ல சென்றபடி “அந்த விடுதலையை அவர்களுக்கு அளிப்பவர் ஒருவர். ஆழங்களை அறிந்தவர். அனைத்தையும் ஏற்றுக்கொள்பவர். விடுதலையின் பேரழகை மட்டுமே விழைபவர். இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலைபெற்றவர்களாக மட்டுமே பார்க்க விழையும் ஆண் அவர் ஒருவரே” என்றான். திருஷ்டத்யும்னன் அவன் சொல்வதென்ன என்று புரியாமல் நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்தவனாக அலையடித்துச்செல்லும் மலர்க்கூந்தல்களுக்குமேல் மிதந்து சென்றான். அவனைச்சூழ்ந்து விழிகளும் புன்னகைகளும் மின்னி ஒழுகின.

“அவர் ஒருவரே பெண்களின் தனிமையை கலைக்கமுடியும் என்று ஒரு முதுமகள் சொன்னாள். தொண்ணூறுவயதானவள். விழி மங்கி மொழி குழறி உடல் வளைந்தவள். நான் அவளை இங்கு ஓர் ஆலயத்தில் கண்டேன். நரைத்த குழலில் மலர் சூடியிருந்தாள். வேடிக்கையாக அந்த மலரை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னேன். மலர் நெஞ்சில் பூக்குமென்றால் குழலிலும் பூக்கலாம் என்றாள். அழியாக்காதலை அகத்தே கொண்டவளுக்கு எப்போதும் வாடாத மலர் ஒன்று உண்டு என்றாள்.” திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி ஏதோ சொல்ல முயன்றபின் உரிய சொற்கள் அமையாது தலையை அசைத்தான். “அவர்களை அவர் எங்கோ ஓரிடத்தில் தீண்டுகிறார். கட்டுகளை அவிழ்த்துவிடுகிறார். அவரிடம் ஒருசொல்லேனும் பேசியவர்கள் இங்கே குறைவுதான். ஆனால் அவரை தனக்குமட்டுமே உரியவரென எண்ணுபவர்களே மிகுதி.”

“மது வேண்டுமென்று சொன்னீர்கள்” என்றான் சாத்யகி. “இல்லை, தேவையில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்து “இனியமதுவால் அந்தக் கனவை நனைத்துவைப்பது நல்லது. இல்லையேல் தீப்பற்றிக்கொள்ளும்” என்றான். திருஷ்டத்யும்னன் அவன் சொற்களை நீருக்குள் என கேட்டான். தலைக்குள் ஒரு தம்புரா வண்டுபோல முழங்கிச்சுழன்றுகொண்டிருந்தது. மது என்ற சொல் காதில் விழுந்ததும் உடலை உலுக்கியபடி எழுந்த விடாயை உணர்ந்தான். “ஆம், எனக்கு மது வேண்டும்” என்றான். சாலையோரத்தில் அணிப்பந்தலிட்டு அதில் பெரிய மரப்பீப்பாய்களை வைத்து மது அளித்துக்கொண்டிருந்தனர். அவர்களைக்கண்டதும் முகப்பில் நின்ற பீதன் “வருக வருக! உயர்தர மது! ஆயிரமாண்டுகாலம் மண்ணிலிருந்து அனலை உண்டு பருவம் அடைந்தது...” என்றான். இருவரும் இறங்கியதுமே பீதர்நாட்டு ஏவலன் மூங்கில்குவளைகளில் மதுவை அவர்களுக்கு வழங்கினான்.

மலர்மணமும் துவர்ப்புமணமும் கொண்ட மதுவை திருஷ்டத்யும்னன் விழுங்கினான். மது தொண்டையை தொட்டதும் உடலெங்கும் காத்திருந்த பல்லாயிரம் நாக்குகள் எழுந்தன. தழலென எழுந்தாடி மேலும் மேலும் என்று குரலெழுப்பின. “நான் இன்னமும் வந்துசேரவில்லை என்று தோன்றுகிறது. வந்த வழிகள் முழுக்க எனக்குத்தெரிகிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “பெண்கள்...” என்று சொல்லி சாத்யகி மதுவைப்பருகி “வருத்துகிறார்கள். பித்தெழச்செய்கிறார்கள். உவகையிலாழ்த்துகிறார்கள். நம்மை உண்டு தான் மிஞ்சுகிறார்கள். பெண்ணில் நின்று விளையாடுகின்றன தெய்வங்கள்” என்றான். பீதன் “மீண்டும் குவளையை நிறைக்கவா வீரர்களே?” என்றான். “ஆம், மீண்டும்” என்றான். “இவர்களின் மது தெய்வங்களை நம்முள் எழச்செய்கிறது” என்றான் சாத்யகி.

வெயில் வெம்மைகொண்டு உருகிப்பரவத் தொடங்கியிருந்தது. சுவர்களும் சாலையின் கற்பாறைகளும் அனல்கொண்டன. கீழிருந்து வந்த கடற்காற்று இடைமுறியாமல் வீசிக்கொண்டிருந்தமையால் வெம்மைதெரியவில்லை என்றாலும் ஒவ்வொன்றும் கொண்டிருந்த ஒளியிலிருந்து சித்தம் வெம்மையை உணர்ந்தது. வெளிச்சம் விழிகளை மயங்கச்செய்தது. சித்தம் உடன் மயங்கியது. எண்ணங்களனைத்தும் இழுபட்டு நீண்டன. பின் காட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய ஒளித்திரையில் என விரிந்து மெல்ல நெளிந்தபடி நின்றன. ஓசைகள் வேறெங்கோ கேட்டன. ஒன்றை கூர்ந்து நோக்கியபோதுமட்டும் அவை வந்து இணைந்துகொண்டன. விடாய் சற்றும் குளிராமல் உள்ளே இருந்துகொண்டே இருந்தது. விடாய் என எண்ணியதுமே அது வளர்ந்தது. “இன்னமும் மது” என்றான் திருஷ்டத்யும்னன். “அதற்கென்ன?” என்று சாத்யகி சொன்னான்.

பெண்கள் மட்டுமே நிறைந்திருந்த நகரின் தெருக்கள் வழியாக சென்றனர். அவர்களின் உடல்வழியாக போதையின் அசைவை அடைந்த புரவிகளும் கால்பின்னி நடந்தன. “இங்கே பெண்கள் மட்டுமே இருக்கிறார்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆண்களும் பெண்களாகிவிடும் நாள் இது” என்று சாத்யகி சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான். “என்ன சிரிப்பு?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை. ஆனால் நிறுத்தமுடியவில்லை” என்றான் சாத்யகி. திரண்ட துதிக்கைதொடைகள் பட்டாடைகளுக்குள் எழுந்து அடங்கின. நீருக்குள் படம் மோதி பருத்த உடலுரசிப் போரிடும் பெருநாகங்கள். அணிப்பட்டு முகபடாமுக்குள் அசையும் மத்தகம். அல்குல் தடம் மீது கொன்றைப்பூவென கவிழ்ந்த மேகலை. அதன் மணி. மணிகொண்ட மேகலை நெளிந்து நெளிந்து... படமெடுத்த அரவின் வாய்க்குள் அமைந்த ஒற்றைச்செம்மணி. சிறுமணி. உயிர்கொண்டு அதிரும் சிட்டுமூக்கு. தவிக்கும் மயில்நாக்கு. கருங்குழல்கள் பறந்தன. சுருளருவியென இறங்கி உலைந்தன. பெண்களன்றி எவர்? பெண்களன்றி எவர் தேவை? இப்பெண்கள். பின்னர் பெண்கள் என்ற சொல்லாகவே சித்தம் தேங்கி நின்றது.

உரக்கநகைத்தபடி “இதோ இங்குதான் நடனம்” என்றான் சாத்யகி. “இங்கா?" என்று சொல்திகழாச் சித்தத்துடன் திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம்” என்று சொல்லி சாத்யகி மீண்டும் நகைத்தான். “இங்கு என்ன செய்கிறார்கள்?” வெடித்துச்சிரித்தபடி சாத்யகி “நடனம்” என்றான். திருஷ்டத்யும்னன் உள்ளே நோக்கினான். பெரிய கூடத்தில் தலைப்பாகையணிந்த வேளாண்குடிமக்கள் கூடியமர்ந்திருந்தனர். திருஷ்டத்யும்னன் “அவர்களெல்லாம் அங்கிருக்கிறார்களே?” என்றான். சாத்யகி சிரித்தபடி கைசுட்டி “கதை கேட்கிறார்கள்... கதை!” என்றான். “நடனமிட்டு கதை சொல்வார்கள்... வருக!” அவன் திருஷ்டத்யும்னனின் கையைப்பற்றி உள்ளே அழைத்துச்சென்றான். ”என் கால்கள் தடுக்குகின்றன..” என்றான் திருஷ்டத்யும்னன். “கால்களா?” என்று சாத்யகி வெடித்துச்சிரித்தான். அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைப்புடன் கையை உதறி சற்று பின்னடைந்து “இவர்களெல்லாம் யார்?” என்றான் திருஷ்டத்யும்னன். “கதை கேட்கிறார்கள்... நடனத்துடன் கதை சொல்வார்கள்.” திருஷ்டத்யும்னன் “என்ன கதை?” என்று கேட்டபடி நின்றுவிட்டான். “கதை...” என்று சொல்லி சாத்யகி சிரித்துக்கொண்டே அமர்ந்தான். ஒருவர் பின்னால் நின்று “அமருங்கள்... அமருங்கள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் அமர்ந்தபின்னர்தான் எதிரே கல்லால் ஆன வட்டவடிவ மேடையை நோக்கினான். அங்கே ஒரு முதியவள் நின்று மெல்ல நடனமிட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் நட்டுவர் இருவரும் பாடகர் மூவரும் அமர்ந்து பாட யாழுடன் இணைந்து முழவு அதிர்ந்துகொண்டிருந்தது. கூட்டத்திற்குள் அசைந்து இடம் பெற்ற சாத்யகி தலைக்குக் கைவைத்து கால் நீட்டிப்படுத்தபடி “முதியவள்!” என்றான். “எங்கே?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்துக்கொண்டே “முதியவள் நடனமிடுகிறாள்... முதியவள் கூந்தலில் மலர்...” என்று கால்களை ஆட்டினான். அருகே இருந்த ஒருவர் பாதிமூடிய விழிகளுடன் “உஸ்ஸ்” என்று வாயில் விரல் வைத்துக்காட்டினார். ஆகட்டும் என்ற பாவனையில் சாத்யகியும் “உஸ்ஸ்” என்று வாயில் கைவைத்துக் காட்டினான்.

திருஷ்டத்யும்னன் முதியவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்த மாடத்தின் சுவர்கள் வழியாக நீர் சொட்டி வழியும்படி அமைக்கப்பட்டிருந்தமையால் காற்று நீர்த்துளிகளுடன் குளிராக வீசியது. திருஷ்டத்யும்னனின் இமைகள் தாழ்ந்து தாழ்ந்து வந்தன. படுத்துவிடக்கூடாது என்று அவனே சொல்லிக்கொண்டான். திரும்பிப்பார்த்தபோது சாத்யகி மலர்ந்த முகத்துடன் துயின்றுகொண்டிருப்பதை கண்டான். அவன் தோளை உலுக்கி “யாதவரே, யாதவரே” என்றான். சாத்யகி புன்னகையுடன் “பெண்கள்...” என்றான். அவனை மேலும் சிலமுறை உலுக்கியபின் நிமிர்ந்தபோது திருஷ்டத்யும்னன் அந்த முதியவளின் கண்கள் முதிராச்சிறுமியென இளமையுடன் இருப்பதைக் கண்டு திகைத்துப்போய் திரும்பி சாத்யகியை நோக்கி “யாதவரே” என்றான். அருகே இருந்தவர் ”உஸ்ஸ்” என்றார்.

அவன் மீண்டும் அந்த முதியவளை நோக்கினான். அவள் கண்கள் நகைத்தன. இதழ்கள் இணைந்துகொண்டன. அவளுடைய உடலில் இருந்து மெல்லிய பட்டாடை உரிந்து சரிவதுபோல முதுமை மறைந்துகொண்டிருந்தது. நெற்றி பொன்னொளி கொண்டது. சிறுமூக்கு மெருகு கொண்டது. கன்னங்களில் சுருக்கங்கள் மறைந்தன. கழுத்தின் தசைகள் இறுகின. முலைகள் இறுகி மேலெழுந்தன. அசைவுகள் கொடியென பட்டுத்திரையென தழலென விரைவழகு கொண்டன. திருஷ்டத்யும்னன் அச்சத்துடன் சாத்யகியின் கால்களை அசைத்து “யாதவரே... யாதவரே” என்றான். சாத்யகி துயிலிலேயே சிரித்துக்கொண்டு “பெண்கள்... எங்கே பார்த்தாலும்” என்றான். காற்று உலைக்கும் பொன்னூல் என அவள் ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் சுழன்றுவந்தபோது அவன் அவளை முன்னரே கண்டிருப்பதை உணர்ந்தான். மிக அண்மையில் மறக்கமுடியாத முகம். ஆனால் நினைவின்மேல் கண்ணாடிமேல் எண்ணையென ஏதோ படிந்திருந்தது. அதை அழிப்பதுபோல அவன் தலையை அசைத்து கண்களை மூடித்திறந்தான். அவளை அறிந்துகொண்ட கணம் நெஞ்சில் குளம்புபதிய மிதித்து மறுபக்கம் தாவிச்சென்றது இளமான்.

அவள்தான். அரசியென அமர்ந்து அவனை பிடித்துவர ஆணையிட்ட யாதவப்பெண். அவன் முழங்காலை ஊன்றி எழுந்து நின்று நோக்கினான். மீண்டும் அவள் சுழன்றுவந்தபோது அவன் அரையாடையைப்பற்றி இழுத்த பெண்ணை அவ்வுடலில் கண்டான். மறுகணமே அவள் ஓடிவந்து அவன் புரவியைப்பற்றி சுழன்று சென்ற சிறியபெண்ணென ஆனாள். பின் அவன் முலைக்கண்ணில் கணையாழி அணிவித்த பெண். அவனை நோக்கி உதட்டைக்குவித்து கூச்சலிட்டவள். அவனை பாஞ்சால அரசனா என்றவள். அவன் மேல் மஞ்சளையும் குங்குமத்தையும் வீசிச்சென்றவள். அவனை நோக்கி உதடு சுழித்து ஏதோ சொன்னவள். விழிமின்ன அவனை நோக்கியவள். கணம் கணமாக அங்கே அன்று கண்ட பெண்கள் அவள் உடலில் மின்னிமின்னிச் சென்றுகொண்டிருந்தனர். மெல்ல பின்னால் சரிந்து அமர்ந்து அவன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு பெண்ணும் அவனை அறிந்திருந்தாள். அவனை நோக்கவில்லை என்றாலும் அவன் நோக்கை உடலுணர்ந்திருந்தாள். நாணமும் ஆணவமும் விலக்கமும் ஆவலுமாக அவர்களின் விழிகள் திகழ்ந்து திகழ்ந்து மறைந்துகொண்டிருந்தன.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு சாத்யகியை பிடித்து உலுக்கினான். “என்ன? புரவிகள் வந்துவிட்டனவா?” என்றபடி எழுந்து அமர்ந்த சாத்யகி “என் தலைப்பாகை எங்கே?” என்றான். திருஷ்டத்யும்னன் “அதோ... அங்கே... அந்தப்பெண்கள்...” என அரங்கை சுட்டிக்காட்டினான். சாத்யகி சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “இது பழைய கதை. சியமந்தக மணி” என்றான். மீண்டும் படுக்கப்போன அவனைப் பற்றி “என்ன மணி?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “அந்தக குலத்து சத்ராஜித்தின் மகள் சத்யபாமையை இளைய யாதவர் மணம்கொண்ட நிகழ்ச்சி... இன்று அதை பல இடங்களில் நடிப்பார்கள்” என்றபின் மீண்டும் படுத்து வாயை சப்புக்கொட்டி “அழகிய கனவு. கலைத்துவிட்டீர்கள்” என்றான். “சியமந்தக மணி என்றால் என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகமலருக்கு சூரியன் அளித்தது. மலரை அனலுருவாக்கும் வல்லமைகொண்டது” என்றபின் “பாஞ்சாலரே, என்னை கனவுக்கு திரும்ப விடுங்கள்” என்றான்.

அவன் சப்புக்கொட்டியபடி திரும்பிப்படுத்ததை நோக்கியபின் திருஷ்டத்யும்னன் நிமிர்ந்து மேடையை நோக்கினான். திருஷ்டத்யும்னன் மேடையில் அந்தப்பெண்ணின் உடலில் கூடிய பெண்களை நோக்கினான். நகரமே ஒரு பெண்ணாக வந்து நின்றாடிக்கொண்டிருந்தது. குழைந்த முலைகள், எழுந்து மறைந்த இடைகள், ஊடே சுழன்ற குழல். அஞ்சி ஒல்கி நடந்து வந்து தயங்கி நின்றாள். திகைத்து பின்னகர்ந்து என்ன என்றாள். ஏங்கி விழிதூக்கி ஏன் என்றாள். துயர் கொண்டு துவண்டு எங்கு என்றாள். கண்ணீருடன் இன்னுமா என்றாள். மகிழ்ந்து துள்ளிவந்து நீ என்றாள். நாணித் தழைந்து நான் என்றாள். அவன் தன் தலை எடை மிகுந்து பக்கவாட்டில் அசைவதை உணர்ந்து விழிகளை உறுத்துக்கொண்டான். அவையில் அமர்ந்திருந்தவர்களின் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். ஈரப்புதர்களின் இலைநுனிகளிள் போல மின்னிக்கொண்டிருந்தன.

எங்கிருக்கிறேன்? அவன் நெஞ்சு கண்ணுக்குத்தெரியா கரங்களால் மாவென பிசையப்பட்டது. வேண்டாம், வேண்டாம் என சித்தம் அலறியது. அந்தப் பீதர்நாட்டு மது. பித்தெழச்செய்கிறது. இறப்பின் கணம். இறந்துவிட்டேன். என் சடலத்தைப்பார்க்கிறேன். விழிவிரித்து குளிர்ந்து அமர்ந்திருக்கிறது அது. இதோ மேடையில் ஆயிரம்பல்லாயிரம் பெண்களாலான பெண் உருகி உருகி ஒன்றாகி செந்தழலென்றாடி பின் அமைந்து நீலம்கொண்டு நீலமணிநிறமும் கார்குழலமர்ந்த பீலியும் நீள்விழிகளும் செவ்விதழ்களும் ஏந்திய நீங்காச் சிரிப்புமாக குழலிசைத்து நின்றிருக்கும் அழியா இளமையென்றாகிறாள். அறிந்த முகம். அகம் மறக்காத முகம்.

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 1

புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும். நீர்ப்பரப்புகள் புல்லரித்து அலைமறந்திருக்கும். புலரி மழை விண்ணின் கை என நீண்டு மண்ணின் தலைகோதும் பரிவு. இதழ்களிலிருந்து நேரடியாக செவிக்குச் செல்லும் ஒரு சொல்.

புலரிமழைக்கென ஏங்கியபடிதான் சத்யபாமை ஒவ்வொருநாளும் கண்விழிப்பாள். இளங்காற்று கடந்தோடும் ஒலியோ பனித்துளிகள் சொட்டும் தாளமோ அதுவென தன்னைக்காட்டி சிலகணங்கள் உவகையிலாழ்த்தி பின் தெளியும்போது ஏக்கம் கொண்டு விழியோரம் கசிய முலைக்குவைகள் எழுந்தமர பெருமூச்சு விடுவாள். இளமழை எங்கு பெய்தாலும் அது தன் முலைதழுவுவதாக உள்ளம் மயங்குவதென்ன? முலைமொட்டுகள் எழுந்து சிலிர்த்து நின்று அதை முதலில் அறிவதுதான் எப்படி?

பெய்வது காற்றல்ல காலையிளமழையே என்று தெளிந்தால் எழுந்தோடி புறவாயிலைத் திறந்து ஏணியில் ஏறி மேலே சென்று கன்று நோக்கும் சிறுமூங்கில் மேடையில் ஏறி மழையை நோக்குவாள். மழைப்பீலிகள் கால்களை வந்து அறைந்துகொண்டே இருக்கும். முலைமுனைகள் தெறித்து முன் எழுந்து அவளையும் கொண்டுசென்றுவிடும் என்று தோன்றும். நோக்க நோக்க நிறையாத நிறம். விழிநீலம். மண் நீலம். விண்நீலம். அப்பால் நீர் நீலம். காற்றும் ஒளியும் கொள்ளும் இந்திரநீலம்.

கீழே அன்னையின் குரல் கேட்காமல் சத்யபாமையால் இறங்கி வரமுடியாது. “அப்படி என்னதான் பார்க்கிறாயடி? மழைபார்த்து ஏங்க நீ என்ன பெரும்பாலை நிலத்திலா பிறந்திருக்கிறாய்?” செவிலியன்னை மஹதி கூவுவாள். உண்மையிலேயே பாலையில் பிறந்து நீருக்காக ஏங்கி மறைந்த ஓருயிரின் மறுபிறப்பே அவள் என்று ஆயர்முதுமகள் கலிகை சொல், நடை, விழி, கை, கால் என ஐந்துகுறி தேர்ந்து சொல்லியிருந்தாள். "பெருகிச்செல்லும் யமுனையை கண்டு கண்டு நிறைக என்று நல்லூழ் பெற்று நம்மிடம் வந்திருக்கிறாள். ஏழுமுறை பாலையில் பிறந்தவள். ஏழுபிறப்பின் தணியா விடாயை இப்பிறவியில் அருந்தி நிறைப்பாள்” என்றாள்.

“என்னடி இது? அத்தனை ஆயர்மகளிர் இல்லங்களுக்குப் பின்னாலும் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறதே? யமுனையை மறந்த ஒரு கணம் உண்டா நமக்கெல்லாம்?” என்றாள் செவிலியன்னை. ”யமுனைக்கரையில் வாழும் பெண்ணல்ல இவள் அன்னையே. யமுனையின் தங்கை” என்றாள் முதுமகள். “காளிந்தி கரையில் நிற்கச்சொல்லுங்கள் இவளை. கரியநீரலை வந்து இவள் கால்தொட்டுச் செல்லும். அவளறிவாள் இவள் எவளென”. அன்றுமுதல் உபகாளிந்தி என அவளை நகையாடத்தொடங்கினர் தோழியர். அவள் யமுனைக்கரைக்குச் செல்லும்போது பெண்கள் கூட்டமாக நகைத்து “அலைகளைப் பாருங்களடி” என்று கூவுவர். அதற்கேற்ப ஒவ்வொரு முறையும் ஓரு காற்று வந்து அலைவளைத்து அவள் காலடியை அணைக்கும். நாணிச்சிரித்தபடி கரையேறி நின்றுவிடுவாள்.

கருநீர் பெருகி கடல்சேரும் யமுனை விண்ணென எழுந்து விழுந்து மண்நிறையவேண்டும் என விழைந்தாள். மழையை ஊர்த்துவ யமுனா என்று சொன்னார்கள் ஆயர்குலப்பெண்கள். எழுந்து பொழியும் யமுனை. அணைக்கும் விழைவுகொண்டு ஆயிரம்கோடி கை விரித்தவள். பேருவகை எழுந்த கால்களால் துள்ளி நடமிடுபவள். கண்ணாடிக்கூந்தல் சுழற்றி கூத்தாடுபவள். முற்பகல்மழை ஒளிரும் முத்துக்களால் ஆனது. பிற்பகல் மழை ஒரு சுடுமூச்சு. நீராவியை இல்லத்து அறைகளுக்குள் நிரப்பி மூச்சுத்திணறச்செய்வது. அந்திமழை என்பது தனிமை. இருண்டு இருண்டு இருள்துளிகளாக மாறி மண்ணில் விழுவது. இருளுக்குள் ஒன்றையே மீள மீளச் சொல்லி அரற்றுவது. புலரிமழையே நீலம். கனவின் நிறம். குளிரின் நிறம். விண் நிறம். விண்மேவிய விழைவின் நிறம்.

நினைவறிந்த நாள் முதல் புலரிமழையை அவள் அறிந்திருந்தாள். அதன் நிறமொரு முகமாக மாறிய நாளில் அவள் உடல்பூத்திருக்கவில்லை. அன்று அவள் தந்தையும் தமையன்களும் களிந்தபுரியில் இருந்து வந்திருந்தனர். காடுகளுக்குள் இருந்து தாய்மாமன்களும் சிறியதந்தையரும் வந்து தனிக்குடில்களில் தங்கியிருந்தனர். குளிர்காலத்தின் முதல் பௌர்ணமியில் ஆயர்குடியின் மூத்தோர் கூடும் அவை நிகழும் என்று முழவறிவிப்பு இருந்தது. முந்தையநாள் இரவே காடுகளுக்குள் ஆநிலைகளில் இருந்து குலமூத்தார் ஒவ்வொருவராக முழவுகள் முழங்க அகம்படியினருடன் வந்து ஊர்மன்றில் தங்கினர். அவர்களுக்கான அமுது அவள் வீட்டிலிருந்துதான் சென்றது.

மதுவனத்திலிருந்து அக்ரூரர் யமுனை வழியாக வந்துகொண்டிருக்கிறார் என்று மட்டும்தான் மஹதியும் அறிந்திருந்தாள். அன்றுமாலையே அவர் வருவதாக இருந்தது. கம்சனின் படைகள் யமுனையில் சுற்றிவருவதனால் வழியில் ஓர் ஆயர்குடியில் தங்கி இரவிருண்டபின்னர் கிளம்புவதாக சொன்னார்கள். ”ஆயர்குலங்கள் கூடும் செய்தி அரசருக்கு சென்றிருக்கும். நம்மில் நால்வருக்கு ஒருவர் கம்சரின் ஒற்றன் என்று நாமறியோமா என்ன?" என்று போஜர்குலத்தில் சக்கரர் சொல்ல “அந்த ஒற்றராக நீரே இருப்பீரோ என நான் ஐயுறுகிறேன்” என்றார் விருஷ்ணிகுலத்து கர்க்கர். "வாயைமூடும்” என்று சக்கரர் சீற இரு முதியவர்கள் எழுந்து அவரை அமைதிப்படுத்தினர். "என்ன இது? நாம் பூசலிடவா வந்திருக்கிறோம்?” என்றார் மூதாயர். “இல்லையா? பூசலிடாது யாதவர் கூடிய அவையென ஏதுள்ளது?” என்றார் ஒருவர்.

ஆயர்கள் காடுகளில் தன்னந்தனியாக வாழ்ந்து பழகியவர்கள். சேர்ந்தமரவும் பேசவும் அவர்கள் பயின்றிருக்கவில்லை. ஆகவே இரவெல்லாம் சேக்கணையாத பறவைகள் போல கலைந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சொலியை அவளுடைய இல்லத்தில் இருந்தே கேட்கமுடிந்தது. சாளரம் வழியாக நோக்கிய அன்னை “பசுவுக்கு கால் நான்கா என்று கேட்டாலே பூசலிட்டு கோலெடுத்துவிடுவார்கள். இவர்கள் எங்கே படைதிரட்டி போர்செய்யப் போகிறார்கள்?” என்றாள். “போரா? யார் போருக்குச் செல்கிறார்கள்?” என்றாள் அவளருகே நின்ற முதுமகள். “இங்கே என்ன செய்கிறாய் நீ? அடுமனைக்குப்போ” என அன்னை சீறினாள்.

சென்ற பலமாதங்களாக ஆயர்மன்றுகள் முழங்கிக்கொண்டேதான் இருந்தன. மழைபிழைத்து ஆறுமாதம் கடந்துவிட்டது. விண்ணிலிருந்து அனல் பெய்துகொண்டிருந்தது. காய்ந்த புல்வெளிகளை கன்றுகள் கரம்பி மண்ணாக்கிவிட்டன. புதர்களெல்லாம் இலையுதிர்த்து முட்குவைகளாயின. மரங்களின் இலைகளைக் கொய்து ஆநிரைகளுக்கு ஊட்டினர். மலைச்சுனைகள் சேறாகி உலர்ந்து வெடித்து புழுதிக்குழிகளாயின. பசுமை விரிந்து கிடந்த புல்வெளிகளில் ஆழத்துக்கிணறுகளின் அடிக்குழியில் பாம்புவிழி என நீர் இருந்தது. அவற்றை அள்ளி குடுவைக்குள் ஊற்றி அளந்து அளந்து பசுக்களுக்கு ஊட்டினர்.

பின்னர் காடுகளிலிருந்து ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு காளிந்தியின் கரைகளுக்கு வந்தனர். காட்டுக்குள் சென்று கொய்துகட்டி தலைச்சுமைகளாகக் கொண்டுவரும் புல்லை மட்டுமே அவை பகிர்ந்து உண்டன. விலாவெலும்புகள் வரிவரியென அசைய தோல்கிழித்து வெளிவரவிருப்பவை போல புட்டஎலும்புகள் புடைக்க நீருலர்ந்து நோவுதேங்கிய விழிகளுடன் பசுக்கள் தலைதாழ்த்தி நின்றன. அஞ்சிய நாகங்கள் என அவற்றின் வாய்க்குள் இருந்து உலர்ந்த செந்நாக்கு வந்து நெளிந்து மறைந்தது. வெம்மூச்சு சீறி அவை கால்மாற்றும் ஒலி தொழுவங்களிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவிலும் மண்ணிலிருந்து எழுந்த அனல் காற்றிலேறி வந்து சூழ்ந்துகொண்டது.

ஆயிரமாண்டுகாலத்தில் அப்படி ஒரு கோடை வந்ததில்லை என்றனர் கணியர். 'கதிர் கனலாகும். காளிந்தி உலையாகும். தளிர் தழலாகும். தாய்முலைப்பால் குருதியென்றாகும்’ என நூல் நோக்கி சொன்னார்கள். ஆயர்மன்றுகளில் தொன்றுதொட்டு வரும் மழைநோன்புகள் அனைத்தையும் செய்தனர். ஆல், அத்தி, அரசு, வேங்கை, கடம்பு என ஐந்து ஆண்மரங்களுக்கு மா, பலா, வாழை, செண்பகம், மரமல்லி ஆகிய பெண்மரங்களை மணம்புரிந்து வைத்தனர். குதிரை சேற்றுக்குழி அமைத்து காட்டில் பிடித்துவந்த ஆயிரம் இணைத்தவளைகளை அதிலிட்டு ஓயாது மழைக்குரல் எழுப்பச்செய்தனர். அன்னைதெய்வங்களுக்கும் மலைத்தெய்வங்களுக்கும் குருதிச்சோறும் செம்மலரும் கொண்டு பலிகொடைகள் அளித்தனர். மழை விலக்கி நின்றிருக்கும் அனலுருவனுக்கு வைக்கோலால் உருவம் அமைத்து அடித்து இழுத்துச்சென்று எரியூட்டி நீர்க்கடன் செய்தனர்.

ஆனால் வானம் வெண்பளிங்குவெளியாக கண்கூச விரிந்துகிடந்தது. அதற்கு அப்பால் உலகங்களே இல்லை என்பதுபோல. இரவில் எழுந்த விண்மீன்கள் சினம் கொண்டவை போல சிவந்து உதிர்பவை போல முழுத்து எழுந்து நின்றன. விடியற்காலைகளில் வானைக்கிழித்தபடி விண்கொள்ளிகள் சரிந்து சென்றன. தொலைதூரத்து இருளில் இருந்து பசித்த ஓநாய் கைக்குழந்தைபோல குரலெழுப்பி அழுதது. எரியெழுந்த வான்கீழ் அமர்ந்து குலமூத்தார் கேட்டனர் “மூச்சுவெளியில் வாழும் எந்தையரே, நாங்கள் வாழவேண்டுமென நீங்கள் எண்ணவில்லையா? விண்ணடுக்குகளில் நிறைந்திருக்கும் தேவர்களே, தேவர்களை ஆளும் தெய்வங்களே, எங்களுக்கு அளிக்க ஒரு சொல்லேனும் உங்களிடம் எஞ்சவில்லையா?”

மேலும் மேலும் பலிச்சடங்குகள் நடந்தன. பிழைபொறுக்கக்கோரும் நோன்புகள் முடிந்தன. வானம் வெறுமைகொண்டபடியே சென்றது. ஒவ்வொருநாளும் என காத்திருந்த தென்மேற்கு மழைக்காற்று வெறும் பெருமூச்சாக வீசி கூரைகளைப்பிய்த்துவீசி மணல்சரங்களாக மரங்கள் மேல் கவிந்து அமைந்து இனி செய்வதற்கேதுமில்லை என்ற நிலை வந்தபோதுதான் ஆயர்குடிகளின் பொதுமன்று ஒன்றை கூட்டவேண்டும் என்று அக்ரூரர் அனுப்பிய செய்தி வந்தது. ”மழைபிழைத்திருப்பது ஒரு செய்தி. ஓர் எச்சரிக்கை. நம்மீது மூதன்னையர் தீச்சொல்லிட்டுவிட்டனர். இனியும் சோம்பியிருந்தால் நம் ஆநிரைகள் அழியும். நம் மைந்தர் வாழும் காடு வெறிக்கும். இதுவே தருணம்.”

ஆனால் என்ன செய்வதென்று எவரும் அறிந்திருக்கவில்லை. “எரிக்கவேண்டியது நம்மை. நம் குலக்குழவிகள் வாளுக்கு இரையானபோது உயிர்பொத்தி ஒடுங்கியிருந்த நம் கீழ்மையை... நம்மை பூண்டோடு அழிக்க தெய்வங்கள் எண்ணின என்றால் அது முறையே” என்றார் ஆயர் ஒருவர். “என்ன செய்யச்சொல்கிறீர்? வளைதடிகளுடன் மகதத்தின் சதக்னிகளின் முன்னால் சென்று நிற்கச் சொல்கிறீரா? இங்கே நம் பெண்கள் குங்குமமும் மங்கலமுமாக எஞ்சுவதையும் பொறுக்கமாட்டீரா?” என இன்னொருவர் கூவினார். “அறப்பிறழ்வுக்கு முன் உயிர்துறக்காத குலங்கள் அழிவதே இறைவிருப்பம்” என்றார் இன்னொருவர். “நாம் பறவைகள் அல்ல. விலங்குகள் அல்ல. வெறும் புழுக்கள். உயிருடனிருப்பது ஒன்றே புழுக்களின் அறம்” என்றார் மூதாயர்.

மன்றமர்ந்த முதியோருக்கு வெல்லச்சுக்குநீரும் சுட்ட இன்கிழங்கும் கொண்டுசென்று கொடுத்துவிட்டு இருளில் நெய்யகலை பொத்தி எடுத்தபடி திரும்பும்போது செவிலியன்னையின் ஆடைபற்றி உடன் வந்த பாமா "யார் வருகிறார்கள் அன்னையே?” என்று கேட்டாள். கால்களால் தரையில் உதிர்ந்துகிடந்த நெற்றுக்களை எற்றி எறிந்தபடி “இவர்களெல்லாம் யாருக்காக காத்திருக்கிறார்கள்?” என்றாள். “சும்மா இரடி.... என்ன விளையாட்டு இது? நீ என்ன கைக்குழந்தையா?” என்றபின் மஹதி “யார் வந்தால் என்ன? இந்த யாதவரெல்லாம் கூடி கம்சனை வெல்லவா போகிறார்கள்? சிற்றெறும்புகள் கூடி சிம்மத்தை என்ன செய்யமுடியும்?” என்றாள் மஹதி. ”ஏன்? அவர் என்ன வெல்லமுடியாதவரா?” என்றாள் பாமா.

“குழந்தை வேளிராயினும் ஆயராயினும் தொழிலென ஒன்றைச்செய்தால் தவிர்க்கமுடியாத பழி ஒன்றையும் சூடியாகவேண்டும். மண்புழுக்களை வெட்டிக்கிளறி பறவைகளை கடிது ஓட்டி பயிர் வளர்க்கிறார்கள் வேளிர்கள். நாமோ கன்றை விலக்கிக் கட்டி அது நா நீட்டி ஏங்கித்தவிக்க பால் கறந்து விற்கிறோம். அந்தப்பழியெல்லாம் ஆவியாக மேலே சென்று வானில் எங்கோ சேர்ந்துகொண்டே இருக்கிறது. அது முழுத்துத் துளித்துச் சொட்டி நம் மீது பெரும்பாறையாக விழுகிறது. யுகத்துக்கு ஒரு பேரழிவை நாம் கண்டேயாகவேண்டும். அது நெறியென நின்றிருக்கும் தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் பலி. அப்பலிகொள்ள வந்தவன் கம்சன். அவன் குடிக்கும் நம் குலத்துக்குருதியெல்லாம் உண்மையில் வஞ்சம் கொண்ட தெய்வங்களின் விடாய் தீர்க்கவே.”

விழியோரம் நீர் மல்கி மஹதி சொன்னாள் “எத்துணை குருதி! எண்ணவே நெஞ்சு நடுங்குகிறது. நாம் கறந்த பாலெல்லாம் குருதியென ஆனதுபோல. காளிந்தியே குருதியென பெருகிச்செல்வதுபோல கனவுகாண்கிறேன். விழிமணிகளில் திகைப்புடன் வெட்டுண்டு இறந்த குழந்தைகளைக் கண்டு எழுந்தமரும்போது என் முலைக்கச்சு நனைந்திருப்பதை உணர்வேன். அதன் மேல் என் விழிநீர் சொட்டும். அவை முந்தைக் கடன் தீர்த்து விண்ணேகும் மூதாதையர் என்று குறிசொல்லும் முதுமகள் சொன்னாள். அப்படியென்றால் அவை ஏன் அப்படி பதைத்து விழிக்கவேண்டும் என நான் கேட்டேன். அவள் விடையின்றி விழிதாழ்த்தி பெருமூச்சு விட்டாள்.”

பாமா “அரக்கர்களைக்கொல்ல தெய்வங்கள் வந்து பிறக்கும் என்கிறார்களே?” என்று கேட்டாள். “நம் கடன் தீர்வது வரை தெய்வங்களும் காத்து நின்றிருக்கும் மகளே” என்றாள் மஹதி. “நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்...” என்று பாமா சொன்னாள். அவள் தோளில் வெம்மையான கைகளை வைத்து மெல்ல அணைத்தபடி “வேண்டிக்கொள் மகளே. வில்திறன் கொண்ட மாவீரன் ஒருவன் நம் குடியில் தோன்றவேண்டும் என்று. அவன் கருணையை வலக்கையில் படைக்கலமாகக் கொண்டிருக்கவேண்டும். இடக்கையில் ஒருபோதும் பிழைபொறுக்காத பெருஞ்சினம் ஒளிவிடவேண்டும்..." என்றாள் மஹதி. ”என்றும் மாவீரர்கள் கன்னியரின் நோன்பின் பயனாகவே பிறக்கிறார்கள் என்கின்றன கதைகள்.”

புழுதிமணத்துடன் இருளில் சுழன்று வந்த காற்றில் இலைகள் ஓசையிட்டு அமைந்தன. தொலைவில் ஒரு வேழாம்பலின் விம்மல் எழுந்தது. மஹதி பெருமூச்சுடன் “மூச்சுத்திணறுகிறது. பால்கொதிக்கும் அறைக்குள் நிற்பதுபோல. மழை பெய்யும் இன்றிரவு” என்றாள். ”தவளைதேர்ந்து சொல்லும் முதுமகன் இந்த வளர்பிறையிலேயே மழை விழும் என்றான். ஆனால் அவர்கள் சொன்ன குறிகள் பன்னிருமுறை பிழைத்துவிட்டன. வானத்தை நோக்கினால் எண்ணுவதற்கும் நோக்குவதற்கும் ஏதுமில்லை என்றே தோன்றுகிறது” என்றாள்.

அமைதியில் இருளாழ்ந்துகிடந்த குறுங்காட்டை சூழ நோக்கி செவிலியன்னை சொன்னாள் “மழைக்குரலே இல்லை. தவளைகள் நாசோர்ந்துவிட்டன போலும். ஆனால் மழை வருமென்று என் உள்ளம் சொல்கிறது. என் விழைவாக இருக்கலாம்... இதோ இந்த செண்பகம்கூட வெள்ளாட்டின் காதுகளைப்போல எஞ்சிய இலைகளைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டபடி நிற்கிறது. அதன் இலைகளிலிருந்து நீர் வற்றிவிட்டது. எஞ்சிய ரசத்தை வேர்களில் வைத்துக்கொண்டு அது காத்திருக்கிறது. புல்வெளிகளும் காடும் காத்திருக்கின்றன... அத்தனை இலைகளும் விடாய் மூத்து வெளிவந்த நாக்குகள் என தோன்றுகின்றன. இரவில் காடு மழைமழைமழை என்று புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கிறேன்.”

பாமா அவள் கைகளைப்பிடித்து தலையை அவள் இடையுடன் சேர்த்துக்கொண்டு “ஆம், நானும் கேட்டேன்" என்றாள். ”நானும் அதனுடன் சேர்ந்துகொண்டு மழைமழை என்று சொல்லிக்கொண்டே விழித்திருந்தேன். பின்னர் உள்ளம் கரைந்து கலுழ்ந்தேன். நீங்களெல்லாம் துயின்றுகொண்டிருந்தீர்கள். இருளில் தனிமையில் விடியும்வரை விழிகரைந்து கொண்டிருந்தேன்” என்றாள்.

மஹதி அவளை தோள் சேர்த்து நிறுத்தி “அழுதாயா? எதற்கு?” என்றாள். “தெரியவில்லை அன்னையே. ஆனால் விடியலில் நான் எப்போதும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்” என்றாள். கனிந்த குரலில் ”ஏனம்மா? உனக்கு என்ன துயர்?” என்றாள் மஹதி. பாமா பெருமூச்சுவிட்டு “தெரியவில்லை. ஆனால் நெஞ்சு முழுக்க துயர் நிறைந்திருக்கிறது அன்னையே. எத்தனை அழுதாலும் துயர் குறைவதுமில்லை” என்றாள்.

சில கணங்களுக்குப்பின் “இந்தக்கோடை...” என்று சொல்லி பாமா பெருமூச்சுவிட்டாள். ”அன்னையே, நான் கோடையை எண்ணிக்கொள்வதே இல்லை. வெளியே மண்பொழியும் காற்றைக்கூட மழையென்றே எண்ணிக்கொள்கிறேன்” என்றாள் பாமா. “அந்த ஓசை என்னை கிளர்ச்சிகொள்ளச் செய்கிறது. சிலசமயம் குளிராக வந்து சூழ்ந்துகொண்டு புல்லரிக்கக்கூட வைக்கிறது. அதன்பின்னர்தான் நான் அழத்தொடங்குகிறேன்.”

மஹதி சற்று சிந்தித்தபின் “நீ கனவு காண்கிறாயா?” என்றாள். பாமா “ஆம்” என்றாள். “என்ன கனவு?” பாமா “நான் எங்கோ செல்வதுபோல... புதிய நிலங்கள். நான் இதுவரை பார்த்தேயிராத ஒரு நகரம்” என்றாள். மஹதி “நகரமா?” என்றாள். “ஆம், அன்னையே வியப்புக்குரிய நகரம் அது. மண்ணில் அப்படி ஒரு நகரம் இருப்பதாக எவரும் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை...” மஹதி இருளில் நின்றுவிட்டாள். அவர்களைச் சுற்றி யமுனையின் பாசிநீர் மணத்துடன் வந்த தென்காற்று சூழ்ந்து வளைத்துச்சென்றது.

“அந்த நகரம் கடலின் கரையில் பெரிய இரு குன்றுகளின் மேல் இருந்தது” என்று பாமா சொன்னாள். “தாமரைக்குளம் போல வெண்ணிறமான மாடங்கள் சூழ்ந்த வட்டச்சுருள் வடிவமான நகரம். அதன் உச்சியில் பொன்னிறத்தாமரைகள் போல அரண்மனைகள். அங்கிருந்து நோக்கினால் கீழே கடலுக்குள் துறைமுகம்.” மஹதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்தத் துறைமேடை நமது துறைமேடையைப்போல பல ஆயிரம் மடங்கு பெரியது. அங்கு வந்திருந்த கலங்களுக்கெல்லாம் சிறகுகள் இருந்தன. வெண்ணிறமும் செந்நிறமும் பொன்னிறமும் கொண்ட சிறகுகள். வண்டுகள் போல தும்பிகள் போல வண்ணத்துப்பூச்சிகள் போல பெரும் நாவாய்கள். ஒவ்வொன்றும் நமது படகுகளைப்போல ஆயிரம் மடங்கு பெரியவை. ஆனால் அவை கடலில் நீந்தவில்லை. கடலுக்குமேல் எழுந்து பறந்து சென்றன” என்றாள்.

“கந்தர்வர்களின் நகர்” என்றாள் மஹதி. “வெண்முகில்களின் அடுக்குகளுக்கு அப்பால் எங்கோ உள்ளது அது. கந்தர்வர்கள் கண், குழல், இதழ், கன்னம், முலை, கை, இடை என்னும் ஏழு அழகுகள் கொண்ட கன்னியரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மண்ணில் மலர்தேடும் தும்பிகளாக இறங்கி வருகிறார்கள். இசைமீட்டியபடி சுழன்று இல்லங்களுக்குள் நுழைந்து பெண்களை தேடுகிறார்கள். எப்போதாவது தும்பியோ தேன்வண்டோ உன் மேல் அமர்ந்ததா? நன்றாக நினைத்துப்பார்.” பாமா “ஆம் அன்னையே ஒருமுறை சிறிய நீலப்பொன்வண்டு ஒன்று என் மேல் அமர்ந்தது” என்றாள். மஹதி “எங்கே?” என்றாள். பாமா ஒருகணம் தயங்கி “என் நெஞ்சில்” என்றாள்.

“அது கந்தர்வனேதான். அவர்கள் மட்டுமே அங்கே அமர்வார்கள்...” என்று மஹதி சொன்னாள். “பெண்ணை கண்டுகொண்டதுமே கந்தர்வர்கள் அவள் கனவுக்குள் வரத்தொடங்கிவிடுவார்கள். வண்ணச்சிறகுகளுடன் கைகளில் யாழேந்தியவர்கள். அவர்களின் கண்கள் இந்திரநீலக் கற்கள் போல ஒளிவிடும். அவர்கள் பேசுவதில்லை. அவர்களுக்கு குரலே இல்லை. இசையே அவர்களின் மொழி.” பாமா “எனக்கு அச்சமாக இருக்கிறது அன்னையே.” மஹதி “என்ன அச்சம்? கந்தர்வர்கள் தொட்ட மலரும் பெண்ணும்தான் மண்ணில் தெய்வங்களுக்கு மிகப்பிடித்தமானவை” என்றாள். ”அந்த நகரம் அவ்வளவு பெரியது... ஆனால் நான் இறகுபோல எடையில்லாமல் பறந்தபடி அதன்மேல் ஒழுகியலைந்தேன்.” மஹதி மகிழ்ந்து “சொன்னேன் அல்லவா? கந்தர்வர்களின் நகரமேதான்” என்றாள்.

இல்லம் திரும்பும்வரை பாமா பேசாமல் வந்தாள். திண்ணைவிளக்கின் செவ்வெளிச்சம் விரிந்துகிடந்த முற்றத்தை அடைந்ததும் மெல்ல மஹதியின் கையைப்பற்றி “அன்னையே” என்றாள். “என்னம்மா?” என்றாள் மஹதி. “அந்த கந்தர்வன் ஏன் நெஞ்சின் மேல் அமர்ந்தான்?” என்றாள். மஹதி குனிந்து விழிகளில் விளக்கின் சுடர்மணிகள் தெரிய சிரித்து “அங்கே இரு அழகிய வெண்மலர்கள் விரியப்போகின்றன. இப்போது அவை அரும்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்” என்றாள்.

முளைக்காத நீலச்சிறு மணிகள் கூசிச் சிலிர்த்து எழ அவள் மார்பை கைகளால் கட்டி இறுக்கியபடி “சீ” என்றாள். மஹதி சிரித்தபடி அவள் தோளை அணைத்து “அவை அப்படித்தான் இப்போதிருக்கும். பின்னர் கூச்சம்தரும் சுமைகள் ஆகும். ஆனால் எவருக்காக அவை படைக்கப்பட்டிருக்கின்றனவோ அவரது விழிகள் பட்டபின்னர் அவையே நீ என உணர்வாய்.” காலால் தரையைத் தேய்த்து “இல்லை” என்றாள். மஹதி சிரித்து “என்ன இல்லை?” என்றாள். “ஒன்றுமில்லை... எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை” என்றாள். “சொல்... என்ன பிடிக்கவில்லை?” என்றாள் மஹதி. "இவற்றை!” அவள் தலைமுடியைப்பிடித்து “எவற்றை?” என்றாள். ”ப்போ” என்று அவள் சொல்லி உதட்டைக் கடித்து தலைகுனிந்தாள்.

“என்னடி கண்ணே?” என்றாள் மஹதி. “எனக்கு இவை வேண்டியதில்லை.” மஹதி சிரித்து “அவை அமுதசுரபிகள் அல்லவா? வேண்டாமென்றால் ஆயிற்றா?” என்றாள். பாமாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. தலைகுனிந்து “நான் அபப்டியெல்லாம் ஆவது எனக்குப்பிடிக்கவில்லை” என்றாள். மஹதி “ஆகாமல் இருக்கமுடியுமா கண்ணே?” என்றாள். “நான் ஏன் இப்படியே இருக்கக் கூடாது? நான் இப்படியே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்” என்றாள். “ஏன்?” என்று மஹதி சிரிப்புடன் கேட்டாள். “என்னை இன்னொருவர் பார்த்து...” என்றதும் அவளுக்கு விம்மல் வந்துவிட்டது. மஹதி அவள் தலையைப்பற்றி மெல்ல உலுக்கி “காதல்கொண்ட ஆணின் பார்வையும் தொடுகையும்தான் பெண்ணை மலர்விக்கின்றன...“ என்றாள்.

அன்னை முற்றத்தில் இறங்கிநின்று “அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நாளை மன்றுகூடலுக்கான உணவு முழுக்க இங்கிருந்துதான் செல்லவேண்டும். இப்போதே அடுப்பில் கலமேற்றினால்தான் காலையில் அமுது சித்தமாக இருக்கும்” என்றாள். "நூறு பேருக்கு அமுதளிப்பதென்பது யாதவ மன்னர் சத்ராஜித் இல்லத்திற்கு ஒரு சுமையா என்ன?” என்றபடி மஹதி முன்னால் சென்றாள். “நூறு பேருக்கு என்று சொல்லாதே. நூறு கிழவர்களுக்கு என்று சொல். அத்தனைபேரும் பாக்கு மென்று நாக்கு தடித்தவர்கள். வானமுதை அள்ளி வைத்தாலும் உப்பில்லை புளியில்லை என்றுதான் சொல்வார்கள். பாமை, நீ சென்று படுத்து துயில்கொள். நாளை பிரம்மமுகூர்த்தத்திலேயே எழுந்தாகவேண்டும்” என்றாள்.

பாமா அங்கிருந்து விரைந்து விலகத் துடித்துக்கொண்டிருந்தாள். திண்ணையில் ஏறி உள்ளே ஓடினாள். தன் அறைக்குள் சென்று ஈச்சைப்பாயை எடுத்து விரித்து படுத்துக்கொண்டு பின்னலைத் தூக்கி மார்பின்மேல் போட்டு பிரித்தும் பின்னியும் அளைந்தபடி அவள் கூரையை நோக்கிக்கொண்டிருந்தாள். வெளியே காற்றின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. மழையென. அதுவும் மழையே. நீரற்ற மழை. மண் அறியாத மழை. ஆனால் இளமயக்கு கொண்ட துயிலில் அவளை குளிர்நீராட்ட அதனாலும் முடியும்.

மழை இல்லை என்று அவள் எப்போதுமே எண்ணியதில்லை. அது நெடுந்தொலைவில் எங்கோ இருக்கிறது. பல்லாயிரம் காதத்துக்கு அப்பால். அங்கே பெரும்பாலை வெளிகள் காய்ந்து உலர்ந்து கனன்று தவம் செய்கின்றன. அவற்றின்மேல் மெல்லிய குளிர்காற்று பரவுகிறது. அதன்பின் முத்துக்கள் போல குளிர்ந்த சொட்டுக்களாக உதிர்ந்தபடி காற்று வருகிறது. மென்குளம்புகளுடன் மான்குட்டிகள் தாவிச்செல்வது போன்ற மழை. மழை வெந்துபழுத்த மலைகளை மூடி அவை சீறி ஆவியெழச்செய்கிறது. சரிவுகளில் கரவுகளில் குளிரக்குளிர வழிந்து நிறைகிறது. பின் இலையுதிர்த்து நிற்கும் காடுகள்மேல் பரவுகிறது. ஆறுகளை சமவெளிகளை ஊர்களை மூடியபடி வந்துகொண்டே இருக்கிறது.

கண்களைமூடியபடி அவள் அந்த நகரத்தை எண்ணிக்கொண்டாள். அந்தக் குவைமாடங்களுக்குமேல் மெல்ல ஒழுகத்தொடங்கினாள். அந்நகரம் அவள் மிக அறிந்ததாக இருந்தது. அதன் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு மாளிகை முகப்பும் அவள் வாழ்ந்து பயின்றவை என தெரிந்தது. கீழே ஓசையின்றி அலைகள் தழுவும் துறைமேடையில் சிம்மமுகம் கொண்ட நாகம் நெளியும் கொடியுடன் ஒரு பெருநாவாய் வண்ணச்சிறகு விரித்து ஓசையின்றி காற்றில் எழுந்து முகில்களில் பறந்து மறைந்தது. இது கந்தர்வர்களின் நகரா? ஆனால் சாலைகளில் பார்த்தவர்கள் அனைவருமே மானுடர்கள். சந்தைகளில் தலைப்பாகைகளின் வண்ணங்கள் சுழித்தன. அரண்மனை முகப்பில் முரசுகளுடன் நின்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள்.

மழைக்காக உடல்கூர்ந்தபடி அவள் விழிமயங்கினாள். “இந்த அறைக்குள் ஓர் அகல் எரியவேண்டுமென சொன்னேன் அல்லவா? கன்னியர் துயிலும் அறைக்குள் எப்போதும் ஒளியிருக்கவேண்டும்...” என்று செவிலியன்னை சொல்வதை கேட்டாள். துயிலிலேயே புன்னகை செய்தாள். சாளரத்துக்கு அப்பால் இருளுக்குள் மரங்கள் இலையசையாமல் காத்திருந்தன. அவள் தன் நெஞ்சில் இரு மொட்டுகள் மெல்ல இருப்புணர்த்துவதை உணர்ந்தாள். பெருமூச்சுடன் குப்புறப்படுத்து அவற்றை ஈச்சம்பாயுடன் சேர்த்து அழுத்திக்கொண்டாள். பாறைக்கு அடியில் நீர்பட்டு உயிர்கொண்டன இரு கருநீல விதைகள்.

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 2

சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட அவளே தொட்டுநோக்க தயங்கினாள். அவற்றுக்கென ஓர் நிலையும் உணர்வும் உண்டு என்பவை போல அவை அசைந்தன, குழைந்தன, தனித்து விழிபுதைந்தன, எழுந்து துடித்தன. என்றோ ஒருமுறை அவற்றைத் தீண்டுகையில் அவள் உடல் உவகையுடன் நடுங்கியது. எலும்புகளே இல்லாமல் ஓர் உறுப்பு. மென்மை என்ற ஒற்றைப்பொருள் அன்றி பிறிதிலாதது. எத்தனை எளியவை. உடல்கொழுவில் ஊறித் துளித்த இரு தேன் துளிகள். அவளை இழுத்து வானில் பறக்கும் இரு வெண்ணிற அன்னங்கள். அவை தேரும் வழியென்ன என நன்கறிந்திருந்தன. பதைப்புடன் உவகையுடன் பின்தொடர்வதொன்றே அவள் செய்யக்கூடுவது.

அவள் அவையாக ஆகிக்கொண்டிருந்தபோது ஒவ்வொருநாளும் அவள் உடல்கூசினாள். ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டு தோள்களை முன் வளைத்து விழிகளை விலக்கி தலைகுனிந்து நடந்தாள். செவிலியன்னை அவளை நோக்கி “மொட்டே, செந்தாமரையே” என்று அழைக்கும்போது ஆய்ச்சியர் திரும்பி நோக்கி சிரிப்பார்கள். நாணி அவ்விடத்திலிருந்து விலகி ஓடிவிடுவாள். யாழைமீட்டி கொற்றவைப் பதம்பாடும் அயல்நிலத்துப்பாணன் ‘உன்னித்து எழுந்த தடமுலைமேல் பன்னகச் சுருளணியும் பாவையே’ என்று பாடும்போது அறியாமல் கை சென்று ஆடைதிருத்த அவ்வசைவில் அருகிருந்த விழியசைய நாணி விழிவிலக்கி அமர்வாள். சூழ அமர்ந்திருக்கும் சுற்றம் பாட்டில் மூழ்கி மெய்யழிந்திருக்கும். இரு மலர்களுக்குப்பின் அஞ்சி மறைந்திருந்தாள். இரு கிண்ணங்களில் தன்னை நிறைத்துக்கொண்டிருந்தாள்.

புலரியில் அவள் முதலில் உணர்வது அவற்றைத்தான். சிற்றிளமை நாளில் அன்று தோன்றிய பழக்கம் குப்புறப்படுத்துத் துயில்வது. விழிப்புகொள்கையில் வெம்மையும் அழுத்தமுமாக அவற்றைத்தான் உணர்வாள். அப்போது அவை அன்னையின் இறகுவெம்மைக்குள் அடைக்கலமான இரு குஞ்சுகள். புரண்டு ஆடைதிருத்தி பெருமூச்சுவிடும்போது அவை அசைந்து இருப்புணர்த்தும். வெளியே எழும் ஒலிகளில் ஓர் இளமழையை எதிர்நோக்குவாள். ஒவ்வொருநாளும் மண் தொடாத ஒரு மழை அவளுக்காகப் பெய்தது. இளநீல மழை. குளிர்ந்த சொற்களுடன் அணைத்து மூடிக்கொள்ளும்.

புலரிமழையில் மட்டுமே அவளுக்கு விடுதலை இருந்தது. மெல்ல சிற்றடி எடுத்துவைத்து ஓசையின்றி கதவைத் திறந்து மேலே சென்று முலைகளை கைகளுடன் சேர்த்துக்கொண்டு நோக்கி நிற்பாள். குளிருக்கு கைகளும் விரல்களும் உண்டு. அவை மென்மலர்காம்புகளை தொட்டு விளையாடுவதுண்டு. கீழே செவிலியன்னை “பாமை, கீழே வா. அங்கே என்னதான் செய்கிறாய்?” என்று கூவுவது வரை அங்கு நின்றிருப்பாள். நீலம் வழிந்தொழுகி மறைய தரையில் ஓடைகள் ஒளிகொள்ளும். கூரைமுனைத்துளிகள் முத்துக்களாகும். ”பாமை, போதும் கீழே வா. நாளையும் மழை உண்டு என்கிறாள் முதுமகள்.” சிரிப்பொலிகள். காலைமழை மேல் அவளுக்கிருக்கும் பித்து ஆயர்குடியில் அனைவரும் அறிந்த நகையாட்டு.

அன்று காலையில் நினைவு வந்ததுமே அவள் கேட்டது மழையின் ஒலியைத்தான். மழையா என வியந்தபடி அசையாமல் கிடந்தாள். மணல்காற்றின் ஒலி என்றும் பனி சொட்டும் ஒலி என்றும் அதை மாற்றி எண்ணமுயன்றாள். மழையேதான் என அறிந்ததும் உடல் சிலிர்த்து உலுக்கிக்கொண்டது. கைகளைக் கூப்பியபடி ஊழ்கப்பெருஞ்சொல் என அதை கேட்டுக்கொண்டு படுத்திருந்தாள். கண்கள் பெருகி கன்னங்களில் வழிந்தன. உதடுகளைக் கவ்வி அழுத்தி விம்மும் நெஞ்சுடன் அவள் அழுதுகொண்டிருந்தாள். மூக்கு உறிஞ்சிய ஒலி இருளுக்குள் உரக்க ஒலித்ததும் திகைத்து சுற்றும் நோக்கினாள். அறைக்குள் எவருமில்லை. பிறையில் இருந்த சிற்றகல் அணைந்திருந்தமையால் இருள் நிறைந்திருந்தது. அப்பால் வேறு அறைகளில் விளக்கொளிகள் இருந்தன. வாசல் வெளிச்சம் செம்பட்டு போல விழுந்துகிடந்தது. புறக்கடையின் சமையல்கொட்டகையில் ஆயர்மகளிரின் பேச்சொலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

பாமா எழுந்து கூந்தலைச் சுழற்றிக்கட்டிக்கொண்டு சிற்றாடையை இடக்கையால் தூக்கியபடி நடந்து வெளியே சென்றாள். உள்ளறையில் மூதன்னையர் இருவரும் குழந்தைகளுடன் துயின்றுகொண்டிருந்தனர். சின்னஞ்சிறு கைகளை மலர்த்தி, கொழுங்கன்னங்கள் பிதுங்க உதடுகளைக் குவித்து இளையவளாகிய சத்யசேனை துயின்றுகொண்டிருந்தாள். அவள் அருகே மூதன்னையின் நரம்புகளோடிய கை சுனைதேடிவந்த மரத்தின் வேர் என நீண்டுகிடந்தது. அப்பால் ஒருக்களித்து விண்ணில் பறக்கும் தேவக்குழந்தை என சித்ரபானு துயின்றாள். வலக்கையில் தன் மரப்பாவையை பற்றியிருந்தாள். பாமா குனிந்து அவள் சிறுகால்களைத் தொட்டு தலையில் வைத்து “விழிவிலகட்டும்” என்று சொல்லிவிட்டு. மெல்ல காலடி எடுத்துவைத்து புறக்கடைக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் மஹதி திரும்பி நோக்கி “எழுந்துவிட்டாயா? எழுப்பவேண்டும் என நினைத்தேன்” என்றாள். கரிபற்றாமலிருக்க சாணிபூசப்பட்ட பெரிய செம்புக்கலங்கள் அடுப்புகளின் மேல் கனன்று வெண்பூச்சு கொண்டு அமர்ந்திருந்தன. அடுப்புகளுக்குள் செம்மலரிதழ்கள் போல கனல் பரவி நாகங்கள் போல சீறிக்கொண்டிருந்தது. மழை அறைந்த கதவுபோல ஒரு அண்டாவின் மூடி விசும்பி விரிசலிட்டு ஆவியை உமிழ்ந்தது. மஹதி வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தாள். “என்னடி பார்வை? சென்று நீராடிவிட்டு வா... முதியவர்கள் இரவெல்லாம் ஓசையிட்டுவிட்டு இப்போதுதான் துயின்றார்கள். ஆனாலும் ஓரிருவர் எழுந்துவிடுவார்கள். எழுந்ததுமே பாலமுது கிடைக்கவில்லை என்றால் அதைப்பற்றி பேசத்தொடங்கிவிடுவார்கள்.”

பாமா கன்னங்களில் கையை வைத்து வெளியே நோக்கி “மழையா அன்னையே?” என்றாள். “மழையா? நான் கேட்கவில்லையே” என்று அவள் எட்டிப்பார்த்து “ஆமாம், மழைதான்” என்றாள். முதுமகள் ஒருத்தி “இப்படியேனும் வானம் கனிந்ததே” என்றாள். “மண் வெந்திருக்கிறது. வானம் கிழிந்து கொட்டி ஊறினால்தான் வெம்மைதணியும். இந்த மென்மழை வெம்மையை கூட்டிவிடும். ஆழத்து வேர்களில் வெந்நீராக இறங்கிச்சென்று சிற்றுயிர்களை அழிக்கும். மரங்களையும் வாடச்செய்யும்” என்றாள் இன்னொருத்தி. “உன் வாயில் என்ன நல்லதே வராதா? காத்திருந்து காத்திருந்து இன்றுதான் துளியை பார்த்திருக்கிறோம். அதை பழிக்கிறாயா? இது நன்மழைதான்... இந்த மழைபெருகும். மூதன்னையர் நம்மை கைவிடமாட்டார்கள்” என்ற மஹதி.

"இன்னும் விடியவில்லையே?” என்று முதுமகள் சொன்னாள். “பிரம்மராட்சதர்கள் உலவும் நேரமல்லவா?” மஹதி வானைநோக்கிவிட்டு “மழையிருள்தான். கிழக்கே முகில் இல்லை. விரைவில் வெளிச்சம் வந்துவிடும். உங்களில் ஒருத்தி கிளம்பி இளையோளுக்குத் துணையாக செல்லுங்கள்...” என்றாள். நீள்காதுகள் தோளில் தொங்கியாடிய கரிய ஆயர்முதுமகள் கையூன்றி எழுந்து “நானே ஆற்றுக்குக் கிளம்புவதாகத்தான் இருந்தேன். இரவெல்லாம் நீராவி அருகே நின்று உடலே உப்பரித்திருக்கிறது. இருடீ, ஒரு கைப்பிடி எண்ணையை தலையில் வைத்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

பாமா புறந்திண்ணையில் சென்று நின்று மழையை நோக்கினாள். செங்கனல் ஒளியில் பொற்துருவல்கள் போல மெல்லிய நீர்த்திவலைகள் மிதந்திறங்குபவை என மண்ணை நோக்கி விழுந்துகொண்டிருந்தன. அப்பால் மகிழமரம் இலைகளின் ஈரத்தில் ஒளிர்ந்த செங்கனல் பூச்சுடன் சொட்டிக்கொண்டிருந்தது. காற்றே இல்லாமல் மழை பெய்துகொண்டிருப்பதை சற்று வியப்புடன் உணர்ந்தாள். நீர்த்துளிகள் சற்றும் சரியாமல் வானை இணைக்கும் நேர்கோடுகளென விழுந்துகொண்டிருந்தன. பல்லாயிரம் நத்தைகள் மென்மணல்பொருக்குமேல் செல்வதுபோன்ற ஒலி என எண்ணிக்கொண்டதுமே அவள் புன்னகைத்தாள். தோள்களும் கழுத்தும் சிலிர்த்து கைத்தொடுகைக்கு பூமுள் பரப்பு போல தெரிந்தன.

முதுமகள் வந்து “மழையை பார்த்ததே விழிகளுக்கு மறந்துவிட்டதே... “ என்று கைநீட்டி மழையைத் தொட்டுவிட்டு நீர்த்திரைக்குள் இறங்கி திரும்பி “வாடி” என்றாள். குளிர்நீரில் குதிக்கத் தயங்கியவள் போல பாமா ஒருகணம் நின்றபின் சிரித்துக்கொண்டே முற்றத்திற்குப் பாய்ந்தாள். “விழுந்துவிடாதே... சேறு வழுக்குகிறது” என முதுமகள் கூவினாள். மழையே இல்லை வெறும் குளிர்தான் என்றுதோன்றியதுமே உடல் நனைந்து விரல்களும் காதுநுனிகளும் மூக்குமுனையும் சொட்டத்தொடங்கின. புருவத்தில் வழிந்த நீரை வழித்தபடி அண்ணாந்து நோக்கி சிரித்து வாய்திறந்து நாக்கை நீட்டினாள். “விளையாடியது போதும்... நீராடிவிட்டு வந்ததுமே அலுவல்கள் உள்ளன” என்றபடி முதுமகள் விரைந்து சிற்றடி எடுத்துவைத்து யமுனைக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் நடந்தாள்.

தொழுவத்து மாடுகள் எல்லாம் கழுத்தை இழுத்து மழையை நோக்கி நின்றிருப்பதை பாமா கண்டாள். முதியபசுக்கள் நாக்கை நீட்டி மழையைத் தொடமுயன்றன. அவர்களைக் கண்டதும் குளம்புகளால் கற்தரையை உதைத்தும் அழிகளில் கொம்புகளால் முட்டியும் ஓசையெழுப்பின. வால்கள் சுழலுவது அவற்றின் நிழலசைவுகளுடன் சேர்ந்து தெரிந்தது. “வாடி, என்ன பார்க்கிறாய் அங்கே?” என்று முதுமகள் அதட்டினாள். அவள் கையை விரித்துக்கொண்டு மழைத்திரையை கிழித்து முன்னால் ஓடினாள். சோலைக்குள் செல்லச்செல்ல தவளைக்குரல் மிகுந்தபடியே வந்தது. யமுனைச்சரிவில் செவிகளை மூடுமளவுக்கு தவளைகள் பேரோசையிட்டன. மழைமழைமழை. ஒற்றைச் சொல்லை அத்தனை உயிரூக்கத்துடன் சொல்ல அவற்றால் மட்டுமே முடியும்.

யமுனைக்கரையில் அவளுக்குப்பிடித்தமான நீலக்கடம்பின் அடியில் அவள் நின்றாள். அதன் பூமுள்பரவிய சிறிய காய்களை வெறுமனே பொறுக்கிச் சேர்ப்பது அவள் வழக்கம். “காய் பொறுக்க நின்றுவிடாதே... பிந்தினால் உன் அன்னை என்னைத்தான் கடிவாள்” என்றபடி முதுமகள் யமுனையை நோக்கி இறங்கும் கல்லடுக்கப்பட்ட படிகளில் கூர்ந்து காலெடுத்துவைத்து இறங்கிச்சென்றாள். “நன்றாகவே வழுக்குகிறது.... புதுமழை வழுக்கும் என்று பழமொழியே இருக்கிறது” என்றாள். பாமா நீலக்கடம்பின் சிறிய அடிமரத்தைப்பிடித்து உலுக்கினாள். நீர்த்துளிகள் அவள் மேல் நூற்றுக்கணக்கான முத்தங்களாக விழுந்தன. கன்னத்தில். உதட்டில். கூவிச்சிரித்தபடி துள்ளி குதித்தாள்.

முதுமகள் கீழே நின்று “வாடி, நீராடிச்செல்வோம்” என்றாள். பாமா படிகளில் தாவி இறங்கினாள். “என்ன செய்கிறாய்? அடி, விழுந்துவிடுவாய்... உன் தந்தை வந்திருக்கும் நாள்...” என்று முதுமகள் கூவினாள். கரையை அடைவதற்கு முன்னரே படிகளில் இருந்து தாவி நீரில் விழுந்து மூழ்கி மறைந்து எடைமிக்க இருளென ஒழுகிய ஆற்றில் துழாவிச் சென்று நீர்ப்பாளம் பிளந்தெழுந்து வாயில் அள்ளிய நீரை நீட்டி உமிழ்ந்து சிரித்தாள். முதுமகள் தன் ஆடையைக் களைந்தபடி “வெயிலில் வெப்பம் ஏறினால் யமுனையில் குளிர் ஏறும் என்பது நெறி. நெடுந்தொலைவு செல்லாதே. கைகால்கள் விறைத்துவிட்டால் நீந்த முடியாது” என்றாள். "யமுனையில் நான் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நீந்துவேன். தேவையென்றால் மறுகரைக்கும் செல்வேன்” என்றாள். “தேவையே இல்லை... நீ அருகிலேயே இரு கண்ணே” என்றாள் முதுமகள்.

நீருக்குள் மூழ்கிச் செல்லும்போது அவள் தன் நெஞ்சை தொட்டுக்கொண்டாள். முன் தினம் அவள் அந்தப் பெருநகர் மேல் பறக்கும்போது எடையற்ற இரு மென்மலர்க்குமிழ்களை தன் நெஞ்சில் உணர்ந்ததை நினைவுகூர்ந்தாள். அங்கே அவை முளைத்தெழப்போகின்றனவா? அப்படியென்றால் அவை அப்போது அவளுக்குள் எங்கே இருக்கின்றன? அதை அன்னையிடம் முன்னரே கேட்டிருந்தாள். “அவை உனக்குள் காய்ந்த விதைகளாக காத்திருக்கின்றன. உன் விழைவின் நீர்பட்டதும் முளைத்தெழும்.” நீந்தியபடியே ஒருகையால் வலது மார்பின் சிறிய மொட்டை தீண்டினாள். மறுகணமே அதை எவரேனும் பார்த்திருப்பார்களா என்ற எண்ணம் வந்து திடுக்கிட்டு மூச்சிழந்தாள்.

மேலே வந்து அவள் மூச்சிரைப்பதைக் கண்டு “பாமை, மூச்சு வாங்குகிறாய்... வா... கரைக்கு வந்துவிடு” என்றாள் முதுமகள். வானிலிருந்து மென்மழைத்தூவிகள் நீர்மேல் விழ காளிந்தி சிலிர்த்து சிற்றலைகளுடன் சென்றுகொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த புன்னைமலர்ப்பரப்பு அவளை அணுகி மூடிச் சுழித்து கிழிபட்டு இணைந்து கடந்துசென்றது. கூந்தலில் சிக்கிய மலர்களுடன் அவள் மீண்டும் மூழ்கினாள். நீரின் ஆழத்தில் சென்றதும் விடுதலையுணர்வுடன் மீண்டும் அம்மொட்டுகளை தொட்டாள். சுழன்று எழுந்தபோது ஒரு பார்வை உணர்வை அடைந்தாள். நெஞ்சு அதிர எழமுயன்றாள். உடல் எடைமிகுந்திருந்தது. எத்தனை உதைத்தாலும் நீர் அசைவழிந்திருந்தது.

நீராழத்தில் ஒரு சிறிய கரிய காய் மிதப்பதைக் கண்டாள். கால்களை உதைத்து எழுந்தபோது அது அவ்வலைகளில் சுழித்து அவளருகே வந்தது. எருமைவிழி போல மின்னியது. கருவிழி என அதைக் கண்டதுமே மறுவிழியையும் கண்டாள். “யார்?” என அவள் கூவியபோது குரல் ஒளிமிக்க குமிழியாக மேலே எழுந்துசென்றது. ”என்னை மதனன் என்பார்கள்” என்றபடி பெருமுகம் அலைகளுக்கடியில் இருந்து நிழலுருவெனத் திரண்டுவந்தது. “யார்?” என்று அவள் நெஞ்சுக்குள் செறிந்த அழுத்தத்துடன் கூவினாள். “என்ன வேண்டும் உனக்கு?”

“தன்னை உணரும் கன்னியர் அருகே வருபவன் நான்” என்று மதனன் புன்னகைசெய்தான். அவன் முகமும் தோள்களும் மட்டும் உருவம்கொண்டிருக்க கீழே அலைகள் திளைத்தாடின. “கேள், இளையவளே. முன்பொருமுறை விஸ்வகம் என்னும் பெருவேள்வி ஒன்று விண்ணில் நிகழ்ந்தது. திசைகளை எரிகுளமாக்கி துருவனை வேள்வித்தூணாக்கி அனலோனை எழுப்பி அந்தவேள்வியைச் செய்தவர் பிரஜாபதியான சியவனர். அவர் அளித்த அவி அனைத்தையும் இந்திரன் அள்ளி உண்டான். நூறுமுறை அவியளித்து முனிவர் எழுந்தபோது அனல்நிறமும் புனல்நிறமும் கொண்ட இரு புரவிகள் முகில்வடிவம் கொண்டு அவர்முன் வந்து நின்றன. தவத்தோரே, நாங்கள் அஸ்வினிதேவர்கள். இவ்வேள்வியில் எங்களுக்கு அவியூட்டப்படவில்லை என்று அழுதன.”

“கேள் அழகியே, சியவனர் சினந்து உங்களுக்கு ஏழுமுறை அவியளித்தேன் என்றார். தன் அறிவிழியால் நோக்கி அந்த அவியை இந்திரன் அள்ளியுண்டதைக் கண்டார். சினந்து இதோ நான் பிறிதொரு வேள்வியை தொடங்குகிறேன். இதில் ஒருதுளி அவியும் இந்திரனுக்கில்லை என அறிவித்தார். அவ்வண்ணம் ஒரு வேள்வி நிகழுமென்றால் இந்திரன் விண்ணாளமுடியாதென்பதனால் எவ்வினை செய்தேனும் அதைத்தடுக்கவேண்டுமென்று இந்திரன் எண்ணினான். இந்திரனிடமிருந்து சியவனம் என்னும் தன் வேள்வியைத் தருக்க சியவனர் தன் தவவல்லமையில் இருந்து என்னைப்படைத்தார். எரிகுளத்து செந்தழலில் இருந்து நான் எழுந்தேன். என்னை சதுரன் என்று அவர் அழைத்தார்.”

“கன்னியே, நான் என்னை நான்காக பகுத்துக்கொண்டேன். சூதின் தெய்வமாகிய கலியனாக தெற்குவாயிலில் நின்றேன். வேட்டையின் தெய்வமாகிய ருத்ரனாக வடக்குவாயிலில் நின்றேன். மதுவின் தெய்வமாகிய சோமகனாக மேற்குவாயிலில் நின்றேன். காமத்தின் தெய்வமாகிய மதனனாக கிழக்குவாயிலை காத்தேன்” என்றபோது அவன் புன்னகை பேரழகுடன் உருவாகி வந்தது. ”பருவம் வந்த பெண்ணில் குடிகொள்வதெல்லாம் என்னழகே. அவள் நறுநெற்றியில் மென்பருக்களாகிறேன். சிறுமூக்கில் வளைகிறேன். கன்னங்களில் குழிகிறேன். உதடுகளில் சிவக்கிறேன். விழிகளில் சிரிக்கிறேன். கழுத்திலும் தோள்களிலும் குருத்தொளியாகிறேன். பெண்ணுடலில் வாழும் என்னழகையே மாதகத்வம் என்கின்றனர்.”

“நாங்கள் நால்வரும் பெண்ணை சூழ்ந்து கொள்கிறோம். அவள் விழிகளில் துள்ளும் பகடைக்காய்களில் கலியன் வாழ்கிறான். அவள் சிரிப்பில் என் தம்பி ருத்ரன் குடிகொள்கிறான். அவள் குரலில் நிறைபவன் சோமகன். நான் வாழ்வது அவள் இளமுலைகளில்” என்று அவன் கை நீட்டினான். “அய்யோ” என்று அவள் பதறி விலக அவன் விரல்கள் இரு வெள்ளி மீன்களாக வந்து அவள் முலைமொட்டுகளை கவ்விக்கொண்டன. அவள் துடித்து கால் திளைத்து நீந்தி எழுந்தபோது அவை அம்முனைகளை இழுத்து நீட்டி இரு முலைக்குமிழ்களாக ஆக்குவதைக் கண்டாள். அலறியபடி மேலெழுந்து வந்து கைகால்களை அடித்தாள். முதுமகள் ”என்னடி என்னடி?” என்று கூவியபடி அவள் கூந்தலைப்பற்றி இழுத்து கரைசேர்த்தாள்.

கற்படியில் முழங்கால்களை மடித்து மார்புடன் சேர்த்து நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ”என்னடி? எதைக்கண்டு பயந்தாய்?” என்றாள் முதுமகள். அவள் தலையசைத்தாள். “நீருக்குள் வாழும் கந்தர்வர்களைப்பற்றி கதைகதையாக சொல்வார்களே, தலைதுவட்டு” என்று சொல்லி மரவுரியை எடுத்து அவள்மேல் போட்டாள் முதுமகள். “நீ நீராடியது போதும்...” அவள் அதை விலக்கிவிட்டு நீரில் பாய்ந்தாள். பின்னால் முதுமகள் “பாமை... சொல்வதைக்கேள்” என்று கூவுவதை கேட்டாள். நீருக்குள் அக்குரல் கசங்கி ஒலித்தது. அலையலையாக சென்றுகொண்டிருந்த இருளுக்குள் விழிவிரித்து மதனனை தேடினாள். மீன்கள் விழிகளெனக் காட்டி மறைந்தன. வளைந்தெழுந்து நீரை நிறைத்தன மீன்கூட்டங்கள். அவையனைத்தும் கந்தர்வர்களின் விழிகளென்றால் அந்த இருளே அவர்களின் உடல்களால் ஆனதுதான்.

மிக அருகே வந்த மீன் ஒன்று அவளிடம் “என்னையா தேடுகிறாய்?” என்றது. அது மதனனின் விழி என அடையாளம் கண்டாள். “ஆம்” என்றாள். “அஞ்சாது வந்திருக்கிறாய்... நன்று. நான் அஞ்சும் பெண்களையே கண்டிருக்கிறேன்.” அவள் அவனைநோக்கி “நான் உன்னை ஒன்று கேட்கவந்தேன். இவை எனக்கு எதற்கு?” என்றாள். “இளையவளே, உன் கைகால்கள் நாகங்கள். உன் முகம் மலர். மீன்களே உன் விழிகள். அனல் உன் இதழ்கள். மண்புரக்கும் ஊற்றுகளாய் உன் கருப்பை. உடலென நீ கொண்டவை அனைத்தும் இங்குள்ளவை என்றுணர்க. நீ வேர்விட்ட அன்னையெனும் மண் உனக்களித்தவை அவை. உன் உடலில் பூத்தெழும் முலைகள் மட்டுமே விண்ணுக்குரியவை. அவற்றை ஏந்தும்போது மட்டுமே விண் சமைத்து அங்கிருக்கும் முழுமுதல்வியின் வடிவம் கொள்கிறாய்.”

“அவை ஆணுக்குரியவையா?” என்றாள். “இல்லை. ஆண் அவற்றுக்குரியவன்” என்றான் மதனன். அவள் புன்னகைத்து “அவ்வண்ணமெனில் அவற்றை ஏந்தச் சித்தமே” என்றாள். “இதோ இந்த நீர்க்குமிழிகளை நோக்கு. இங்குள்ள முலைக்குவைகளனைத்தும் தெரிகின்றன. சிறுகுமிழ்முலைகள் காதலன் கண்குழிகளுக்குள் நிறைபவை. என்றும் சரியாதவை. வற்றா காமம் கொண்ட காமினிக்குரியவை. அவையோ குழைமென்முலைகள். கைக்குவையில் நிறைந்த நறும்பால். கொஞ்சவைக்கும் இளமை கொண்டவை. அதோ உன்னருகே செல்பவை அச்சமற்றவை. ஆலகாலன் அருந்திய நஞ்சுநிறைந்த கிண்ணங்கள். என்றும் வெல்லும் ஆணவம் கொண்டெழுந்தவை. திரிபுரமெரித்த கொற்றவைக்குரியவை.”

அவள் முலைக்குமிழிகளை நோக்கிக்கொண்டே விழிவிரித்து நீந்தினாள். இளமைமுதல் அவற்றை நோக்கிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று கண்டாள். இணைமுலைகள். ஒன்றை ஒன்று சார்ந்த பணைமுலைகள். கருங்காம்பு எழுந்த வெண்முலைகள். கல்லித்தவை. கனிந்து அசைபவை. சிறுசெங்காம்பு கொண்டவை. எழுந்த பருமுலைகளைக் கண்டு “அவை?” என்றாள். “காமம் கடந்த பேரன்னையருக்குரியவை அவை. வாழ்நாளெல்லாம் அமுதூட்டினாலும் ஒருகணமும் குறையாதவை.” அவள் அவற்றைச் சுட்டி “அவற்றை நான் கொள்கிறேன்” என்றாள். “அவை காமம்நாடும் பெண்களுக்குரியவை அல்ல” என்றான் மதனன். ”நான் வேண்டுவது அவற்றை மட்டுமே” என்றாள். “அன்னையே, அவ்வண்ணமே ஆகுக!” என்று அவன் சொல்லி அலைகளில் அமிழ்ந்தான்.

அவள் மேலே வந்தபோது நீர்மேல் ஒளி விரிந்திருப்பதை கண்டாள். மென்மழையின் பளிங்குச்சரடுகள் வழியாகவே ஊறி நிறைந்த ஒளிர்நீலம். விழிதெளிந்து மரங்களின் இலைகள் மின்னுவது தெரிந்தது. படிக்கல்லின் குழிகளில் தேங்கிய நீர் ஒளியாக இருந்தது. ஒளியை நோக்கியபடி அவள் மெல்ல நீந்தி கரை நோக்கிச் சென்று படிக்கட்டில் ஏறி அமர்ந்தாள். “எத்தனை நேரம் மூச்சடக்குவாய்? உன்னை தேடத்தொடங்கியிருப்பார்கள்” என்றாள் முதுமகள். “மூதாயர்களுக்கு உன் செவிலியே அமுதுகொண்டுசென்றிருப்பாள். பார்... வெளிச்சம் வந்துவிட்டது.” அவள் குரல் எங்கோ என கேட்டது. அவள் யமுனையின் அலைகள் ஒளிகொள்வதையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

மூதன்னை திரும்பி நோக்கி “வந்துவிட்டார்களடி... படித்துறையில் படகு தெரிகிறது” என்றாள். பாமா திரும்பி அப்பால் தெரிந்த யமுனையின் படகுத்துறையை பார்த்தாள். மூன்று சிறிய படகுகள் விளக்குகள் ஏதுமில்லாமல் பாய்சுருக்கி இளமழைத் திரைவிலக்கி முதலைகள் போல் நீர் நலுங்காமல் நெருங்கிவந்தன. அவற்றின் மூக்கு படித்துறையைத் தொட்டதும் குகன் இறங்கி நீரில் நீந்தி துறைமேடையை அடைந்து இழுத்துக்கட்டினான். படகுகளின் மேல் கொடிகளேதும் பறக்கவில்லை. கன்னங்கரிய ஈச்சம்பாய்க்கூரைகளின் நுனிகளிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன. காற்றே இல்லாமல் மழை பெய்துகொண்டிருப்பதை அவள் மீண்டும் உணர்ந்தாள்.

”விருஷ்ணிகள்தான்” என்றாள் முதுமகள். “இந்த மழை அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு... நூறுவாரைக்கு அப்பால் என்ன நிகழ்கிறதென்றே தெரியாது.” முதல்பெரும் படகில் இருந்து இறங்கிய வீரர்கள் சிறிய பெட்டிகளுடன் கற்படிகளில் மேலேறிச்சென்றனர். ஒருவன் ஒரு பெரிய பெட்டியை கயிற்றால் கட்டி முதுகில் தூக்கிக்கொண்டான். தலைமழித்திருந்த ஒரு முதியவர் மரத்தாலான படிகளில் மெல்ல இறங்கி துறைமேடைமேல் நின்று திரும்பி நோக்க படகுக்குள் இருந்து இளையோன் ஒருவன் இறங்கினான். அவனும் படகுக்குள் நோக்கி நிற்க படகுக்குள் இருந்து இன்னொரு இளையோன் படிகளைக் கடந்து துறைமேடைமேல் குதித்து நின்றான்.

முதியவர் ஏதோ சொல்ல அவன் சிரிப்பது தெரிந்தது. நிழலுருக்கள் போல இளையோர் இருவரும் நின்று ஏதோ சொல்ல முதியவர் மேலே கைசுட்டி அவர்களிடம் செல்வோம் என்பது போல சொல்லிவிட்டு படிகளில் ஏறினார். அவள் அவ்விருவரையும் கூர்ந்து நோக்கி நின்றாள். சற்று பெரிய இளைஞரின் பின்புறம் தெரிய சிறியவர் அவளை நோக்கி முகம் காட்டி நின்றிருந்தார். நீர்த்திரைக்கு அப்பால் நின்ற அவர்களை தெளிவாக நோக்க முடியவில்லை. அவள் எழுந்து கடம்பமரத்தடியில் சென்று நின்று நோக்கினாள். அவள் விழைவை அறிந்ததுபோல ஒரு காற்றுவந்து மழைச்சாரலை முழுமையாக அள்ளிக்கொண்டு சென்றது. மேலும் மேலுமென காற்றின் அலைகள் வர மேலே வானென நிறைந்திருந்த கருமுகில் பரப்பில் ஒரு விரிசல் எழுந்தது. இலைநுனிகள் கூர்வாள்முனைகள் என ஒளிகொள்வதைக் கண்டபின்னர் அவள் மேலே நோக்கினாள். பெருவாயில் ஒன்று திறப்பதுபோல வானம் விரிந்தபடியே சென்றது. நீலம் மேலும் மேலும் ஒளி பெற்றது.

பாமா படிகளில் ஏறி மூச்சிரைக்க ஓடி அவர்கள் நடந்து சென்ற வழியை அடைந்து அங்கே நின்ற பெரிய மருத மரத்துக்குப்பின் நின்றுகொண்டாள். அவர்கள் மெல்லப்பேசியபடி நடந்துவந்தனர். வெள்ளேறு என பெரிய கைகளை வீசியபடி முன்னால் வந்தவர் உரக்க நகைத்தார். அவர்பின்னால் கரிய உடலுடன் வந்தவன் புன்னகைத்தபோது வெண்பற்கள் ஒளிகொண்டதைத்தான் அவள் நோக்கினாள். அவன் அணுகி அணுகி வந்தான். அவன் ஒவ்வொரு அடிக்கும் குளிர்முகிலென விரிந்து வந்து அவளை சூழ்ந்துகொண்டான். இறுகிய தோள்களால், விரிந்த மார்பால், கொடியென நீண்ட கைகளால், சிற்றிடையால், முகமென்று ஆன புன்னகையால்.

நீலன். இந்திரநீலம் விழியென சுடர்ந்தவன். பீலிவிழி எழுந்த சுரிகுழல். இன்கள் என ஊறும் குறுநகை. உடல்கூசி மெய்சிலிர்த்து இரு கைகளாலும் தன்னை அணைத்து இறுக்கிக்கொண்டபோது தன் நெஞ்சில் இரு சொற்கள் பொருள்கொண்டு எழுவதை உணர்ந்தாள். இளமழையின் நிறத்தில் அவன் அதன்பின் அவளுக்குள் ஒருகணமும் மறையாமலிருந்தான். அவனையன்றி வேறெதையாவது அதன் பின் எண்ணியதுண்டா என்றே அவள் வியந்தாள். விடியல்மழை போல குளிர்ந்த அணைப்பு அவன். அவன் பெயர் கிருஷ்ணன் என்றும் விருஷ்ணிகுலத்து வசுதேவரின் மைந்தன் என்றும் அறிந்தாள். அவனை கண்ணன் என்றனர் ஆயர்மகளிர். கண்ணன் என்றே அவளும் சொல்லிக்கொண்டாள். கண்ணன் கண்ணன் கண்ணன் என்றே அவள் மூச்சு ஓடியது. கண்ணனே அவளை காற்றென ஒளியென சூழ்ந்திருந்தான். புலரிமழையென அவன் காமத்தை அவள் எப்போதும் உணர்ந்திருந்தாள்.

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 3

அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அதன் பன்னிரு ஊர்களிலும் வாழ்ந்த அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில் நூறுகுடியினராக ஐந்தாயிரம் பசுக்களுடன் புதிய புல்வெளிதேடி அங்கே வந்தனர். குதிரைக்குளம்பு போலிருந்த மலைக்குக் கீழே மானுடக்காலடிபடாத குறுங்காட்டில் சற்றுமேடான பகுதியொன்றில் நூறு மான்கள் கொண்ட ஒரு கூட்டம் படுத்திருந்தது. அவர்களின் ஓசையைக்கேட்டும் அவை கலையவில்லை. இளமான்கள் சற்றே செவி தழைத்தன. அன்னைமான்கள் மட்டும் கொம்புகளைத்தாழ்த்தியபடி ஈரக்கரியவிழிகளை உருட்டி நோக்கி மூச்சுவிட்டன.

வீரசேனர் “இயல்பாகவே மான்கள் இவ்விடத்தை தெரிவுசெய்துள்ளன. அச்சமின்றி அவை இங்கிருப்பதை நோக்கினால் இங்கு தலைமுறைகளாகவே தங்கியிருக்கின்றன. இதுவே நம் இடம். இங்கு நம் கன்றுகள் செழிக்கும்” என்றபடி தன் கோலை அங்கே நாட்டினார். சூழ்ந்து நின்றிருந்த யாதவர்கள் தங்கள் பொதிகளை இறக்கி வைத்து கை நீட்டி இளைப்பாறினர். காட்டில் கழிவெட்டிக்கொண்டுவந்து பிறைநிலவு வடிவில் நூற்றெட்டு குடில்களைக் கட்டி நடுவே இருந்த முற்றத்தில் கன்றுகளை நிறுத்தி சுற்றி கூர்தீட்டிய கழிகள் நடப்பட்ட அகழியை அமைத்து ஊர்அமைத்தனர். ஹரிணகணம் வாழ்ந்த இடம் அப்பெயரால் அழைக்கப்பட்டது.

யாதவக்குடிகளில் அந்தகர்கள் மட்டுமே சூரியனை வழிபட்டனர். தென்மதுராபுரி என அழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனர். சத்வதர்கள் மழைபுரந்து புல்வெளிகளைக் காக்கும் இந்திரனை முதல்தெய்வமாக வணங்கியவர்கள். வருணனும் சோமனும் அவர்களின் மலரும் நீரும் பெற்றனர். நூற்றெட்டு மூதன்னையர் இல்லங்களுக்குப்பின்னால் உருளைக்கற்களாக பதிட்டைசெய்யப்பட்டு ஆண்டுதோறும் வசந்தகால இருள்நிலவில் பலிபெற்றனர். ஈரவானில் ஊர்களுக்குமேல் வளைந்தெழும் இந்திரவில்லால் அவர்களின் குலமும் ஆநிரைகளும் வாழ்த்தப்பட்டன. ஒளிகொண்டு அதிரும் வஜ்ராயுதத்தாலும் இடியோசையாலும் காக்கப்பட்டன.

பிறந்தபோது வீரசேனர் விழியில் ஒளியற்றிருந்தார். ஒலிநோக்கியே குழந்தை திரும்புகிறது என்று இரண்டாவது மாதத்தில்தான் கிரிராஜர் அறிந்தார். எட்டாவது மைந்தன் என்பது யாதவர்களில் மூதன்னையரின் நல்லருள் என்று எண்ணப்பட்டதனால் குழந்தை பிறந்த நாள்முதல் மாலைதோறும் சூதருக்கும் பாணருக்கும் அயலவருக்கும் குடியினருக்கும் ஊன்விருந்தும் மதுவிருந்தும் நடந்துகொண்டிருந்தது. விழியின்மையை மருத்துவச்சி கண்டு சொன்ன அன்று நிறைந்த பேரவையில் மதுமயக்கில் இருந்த மன்னர் திடுக்கிட்டு அரியணைவிட்டு எழுந்தார். ஒருகணம் கழித்து மதுவைக்கடந்து செய்தி சென்று அகத்தை அடைந்ததும் கடும் சினத்துடன் உறுமியபடி உடைவாளை உருவியபடி மகளிர்மாளிகை நோக்கி எழுந்தார். அவையினர் அவர் கால்களைப்பற்றி தடுத்தனர். பழிகொள்ளவேண்டாமென கண்ணீருடன் மன்றாடினர்.

மூதன்னையரின் பழிச்சொல் என வந்துபிறந்தவனை விழியாலும் தொடமாட்டேன் என்று கிரிராஜர் மறுத்துவிட்டார். அவரது ஆணையின்படி ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட குழந்தை குறுங்காட்டின் மூதன்னையர் ஆலயத்து பலிபீடத்தில் அந்தியில் வைக்கப்பட்டது. குழந்தையை ஓநாய்களாக வந்த மூதன்னையர் உண்டுவிட்டதாக கிரிராஜருக்கு சொல்லப்பட்டுவிட்டது. அதை அவரும் நம்பினார். ஆனால் அது சேடியரால் எடுத்துவரப்பட்டு மகளிர்மாளிகையில் செவிலியர் அணைப்பில் எவருமறியாமல் வளர்வதை அவர் அறிந்திருந்தார். விழியிழந்தவன் பிறந்த பழிநீங்க ஒருவருடம் முழுக்க அன்னம், ஆதுரம், ஆடை, இல்லம், நீர்நிலை, கல்வி, வேள்வி, பலி என்னும் எட்டுவகை கொடைகளை  செய்தார்.

ஏழுவயதுவரை விழியிழந்த மைந்தன் செவிலியன்னை கராளமதியின் அணைப்பில் வாழ்ந்தான். ஏழுவயதாகியும் முலையுண்ணும் வழக்கம் கொண்டிருந்தான். ஏழாண்டுகாலமும் அவள் பெருமுலைகள் அவனுக்காக சுரந்தன. அவனுக்கு அரைநாண் அணிவிக்கப்படவில்லை. முதலுணவு அளிக்கப்படவில்லை. பெயர்கூட இடப்படவில்லை. அந்தகன் என்றே அவனை அழைத்தனர் அன்னையும் பிறரும். அவனுடைய அன்னைச்செவிலி மட்டும் வீரசேனன் என்றாள். அப்பெயரை அவள் எவரிடமும் சொல்லவில்லை. அது கிரிராஜரின் தந்தையின் பெயர். அந்தகனுக்கு அப்பெயரை இட்டதை அறிந்தால் அவளும் கழுவேற்றப்படுவாளென அறிந்திருந்தாள். எவருமில்லாதபோது முலைகளுடன் சேர்த்து அப்பெயரை நூறுமுறை அழைத்து முத்தமிடுகையில் அவள் ஓங்கி எழுந்த அரண்மனை மாடங்களை காவல்கோட்டங்களை கோட்டைவாயில்களை வென்றாள்.

அந்நாளில் ஒருமுறை கானாடலுக்காக மகளிர் அருகே ஃபால்குனி ஆற்றங்கரைக்குச் சென்றபோது மைந்தனையும் கராளமதியிடமிருந்து வாங்கிக்கொண்டு சென்றனர். நீர்கண்டு நிலைமறந்த சேடியர் மைந்தனை ஒரு பாறைமேல் அமரச்செய்து எழலாகாது என்று சொல்லிவிட்டு நீரில் இறங்கி நீராடினர். இனிய பலாப்பழத்தின் நறுமணம் பெற்று நாவூறிய மைந்தன் எழுந்து அத்திசை நோக்கி சென்றான். நீராடி வந்த செவிலியர் மைந்தனைக்காணாது பதறினர். நான்குதிசைகளிலும் பிரிந்து ஓடி அவனை தேடினர். அழுகை ஊறிய அவர்களின் குரல் காட்டுமரங்களிலும் பாறைகளிலும் எதிரொலித்து பச்சைத்தழைப்புக்குள் நிறைந்தது. பகலெல்லாம் தேடியபின் அவர்கள் திரும்ப வந்து அழுகையுடன் சென்று முதல்படைத்தலைவரிடம் மைந்தன் காணாமலானதை சொன்னார்கள். அவன் ஆயிரம் படைவீரரை அனுப்பி காடெங்கும் மீண்டுமொருமுறை தேடச்சொன்னான்.

மறுநாளும் மைந்தன் கிடைக்காமலானபோது அவனை ஓநாய்கள் உண்டிருக்கலாமென்று உறுதிசெய்தனர். அச்செய்தி அவன் அன்னையையும் அரண்மனை மாந்தர் அனைவரையும் நீள்மூச்சுடன் ஆறுதல்கொள்ளச் செய்தது. அவனை வளர்த்த செவிலியன்னை மட்டும் தன் அறையிருளுக்குள் நெஞ்சில் அறைந்து அழுதுகொண்டிருந்தாள். மூதன்னையர் பதிட்டைக்கு முன் ஊன்சோறும் செம்மலரும் படைத்து பலியூட்டி அவன் வாழ்ந்த கடன் முடிக்கப்பட்டது. சின்னாட்களிலேயே அவனை அரண்மனையும் ஆயர்குலமும் மறந்தது. உள்ளறை இருளில் சிக்குபிடித்த முடியும் பித்தெழுந்த விழிகளும் கொண்ட ஒரு முதுமகள் அவள் மட்டுமே அறிந்த அவன் பெயரை சொல்லிச்சொல்லி கலுழ்ந்துகொண்டிருந்தாள். அவள் சொல்வதென்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை.

எட்டுமாதங்களுக்குப்பின் தலைமுடி சடையாகி உடலெங்கும் புண்ணும் மண்ணும் பற்றி செதிலடைந்து அவன் திரும்பிவந்தான். ஆனால் அவனுக்கு விழிதிறந்திருந்தது. அவன் நகர்முகப்பை அடைந்தபோது இறந்த சடலம் மீண்டு வந்தது என்று அஞ்சிய காவலர் கோட்டைமேல் ஏறிக்கொண்டனர். அரண்மனை வாயிலில் காவலர் அஞ்சியோடியபின் பூசகர்கள் சேர்ந்து தெய்வச்சிலைகளுடன் சென்று அவனை எதிர்கொண்டனர். ஆனால் சிறுசாளரம் வழியாக அவனைக் கண்ட கராளமதி இருகைகளையும் விரித்தபடி பெருமுலைகள் ஊசலாட அன்னைப்பசுவென அமறியபடி ஓடிவந்து அவனை அள்ளி தன்னோடு அணைத்து கண்ணீரும் சொற்களும் சிதற முத்தமிடத்தொடங்கினாள். அவன் அவளிடம் “அன்னையே, நான் விழிகொண்டுவிட்டேன். காடு மிக இனிது. ஆயினும் உன்னைநோக்கவே வந்தேன்” என்றான்.

அன்றிரவு அவனுக்கு எப்படி விழிதிறந்தது என அவன் தன் அன்னையிடம் சொன்னான். காட்டுக்குள் சென்றபோது வழிதவறி அவன் ஓர் ஓடையில் விழுந்து நீர்விரைவால் அடித்துச்செல்லப்பட்டு ஆழ்ந்த பிலம் ஒன்றுக்குள் விழுந்தான். கூரிருள் பெருகிக்கிடந்த அந்த நிலவாய்க்குள் விரல்களில் எழுந்த விழிகளால் நோக்கி அவன் வழிகண்டு சென்றான். தான் அமர்ந்து துயில சிறுகுழி ஒன்றை அடைந்தான். அங்கே சிறுமீன்களையும் நண்டுகளையும் பிடித்துண்டு நீர் அருந்தி இருந்தான். அஞ்சி துயருற்று அலறிய அவன் குரல் அவனிடமே திரும்பி வந்தது. நாளும்பொழுதுமற்ற ஆழத்தில் அவன் அன்னை அன்னை என்று சொல்லிக்கொண்டு அச்சொல்லைப்பற்றி வாழ்ந்தான். பின் அங்கே கருவறையின் வெம்மையையும் ஈரத்தையும் கண்டுகொண்டான்.

எட்டுதிசைகளையும் கதிர்க்கைகளால் சூழும் சூரியன் மாமேருவின் உச்சியில் அமைந்துள்ள பிரம்மபதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஒளியற்ற வெண்ணிறமலராக அமைகிறது. அங்கே பொருட்களில் உறையும் பிரம்மதேஜஸே ஒளியென்றாகிறது. அத்தனை மலைகளுக்கும் அத்தனை கடல்களுக்கும் வடக்கே, மண்ணின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மேருவில் இரவென்றும் பகலென்றும் இல்லை. நாளென்றும் ஆண்டென்றும் இல்லை. அங்கு காலமென்றாகியுள்ளது பிரம்மனின் ஓர் இமைப்புக்கணம் மட்டுமே.

அந்தியில் சூரியன் தன் ஆயிரம்கோடி கதிர்களைச் சுருக்கி ஆமை என தன்னுள் இழுத்துக்கொள்கிறது. செந்நிறமான ஒற்றை நாக்கை மட்டும் அக்னிக்கு அளித்துச்செல்கிறது. ஒளிகொண்டெழும் அக்னி இரவை ஆள்கிறான். பகலில் கிழக்கில் எழும்போது அக்னியிலிருந்து தன் செங்கதிரை சூரியன் மீண்டும் எடுத்துக்கொள்கிறான். பிரம்மனின் அவையில் அக்னி ஒரு செம்மலராக மலர்ந்திருக்கிறது.

பிரம்மயுகத்தின் தொடக்கத்தில் ஒருநாள் அக்னி சூரியனிடம் அவன் செவ்வொளிக்கதிர் ஒன்றை ஒரு பகலுக்கு மட்டும் தானே வைத்துக்கொள்ள ஒப்புதல் கோரினான். நட்புக்காக சூரியன் அதை ஏற்றான். சூரியன் அளித்த அச்செங்கதிருடன் அன்று பகல் முழுக்க தட்சிணமேரு என்னும் மலைமேல் தானுமொரு சூரியனாக அமர்ந்திருந்தான். அன்று காலை விடிந்தபோது மேற்கிலும் ஒரு செந்நிறச் சூரியனைக் கண்டு அஞ்சிய மானுடர் அத்திசைநோக்கி முழந்தாளிட்டு கைகூப்பி வணங்கி வாழ்த்துரை எழுப்பினர். அச்சொற்களால் மகிழ்ந்த அக்னி மறுநாள் காலை அச்செஞ்சுடரை சூரியனுக்கு திருப்பி அளிக்காமல் மண்ணுக்குள் புகுந்து மறைந்துகொண்டான்.

சூரியக்கைகள் மண்ணையும் விண்ணையும் துழாவி அக்னியை தேடின. மண்ணுக்கு அடியில் உள்ள இருள்நிறைந்த வழிகளை சூரியன் அறிந்திருக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகாலம் அக்னி செஞ்சுடருடன் அக்குகைகளுக்குள் வாழ்ந்தான். இருண்ட குடல்வழிகள் செங்குருதி நிறம் கொண்டன. ஆயிரம்கோடி தலைமுறைகளாக ஒளியை அறியாமல் அங்கே வாழ்ந்த சிற்றுயிர்களில் கண்கள் எழுந்தன. அடித்தட்டில் வாழ்ந்தவற்றுக்கு முதுகிலும் பறந்தலைந்தவற்றுக்கு அடிவயிற்றிலும் விழிகள் திறந்தன. சிறுபுழுக்கள் செம்மணிகளாயின. ஒவ்வொன்றும் பிறிதொன்றை அறிந்தன.

நூறாண்டுகளுக்குப்பின் அவியேற்காது மெலிந்த அக்னி மண்ணுக்குமேல் எழ முடிவெடுத்தான். தன்னிடமிருந்த சூரியச்சுடரை ஒரு சிறிய ஒளிர்மணியென ஆக்கி அதை தான் வாழ்ந்த சியாமாந்தக பிலத்தின் சிறிய துளையொன்றுக்குள் போட்டுவிட்டு மேலே வந்தான். அங்கே நின்றிருந்த பேராலமரத்தை தன் செந்நாக்குகளால் பற்றி அவன் உண்ணத்தொடங்கியபோதே சூரியன் தன் ஆயிரம் கைகளால் அவனைச்சூழ்ந்து பிடித்துக்கொண்டான். விண்ணுக்குத்தூக்கப்பட்டு சூரியன் முன் நிறுத்தப்பட்ட அக்னி அக்கதிர் தன்னிடமிருந்து தவறி பாதாளத்தின் இருளுக்குள் விழுந்துவிட்டது என்று சொன்னான். நூறாண்டுகாலம் அக்னியை சிறையிலிட்டு மீளமீள கேட்டும்கூட அதையே அவன் சொன்னான்.

மண்ணில் அவியேற்க அக்னி எழாததைக் கண்ட முனிவர்கள் விண்ணளந்தோனிடம் முறையிட்டனர். அக்னியை விடுவிக்கும்படி மணிவண்ணன் ஆணையிடவே சூரியன் அக்னியை சிறையகற்றினான். தன் ஆழிவளைக்குள் வந்து சுடர்மணியைத் தேடிய அக்னி அது அத்துளைவழியாக மிக ஆழத்தில் விழுந்துவிட்டிருப்பதை கண்டான். அவனுடைய நீண்ட செங்கரங்களை அங்கே ஊறிப்பெருகிய கரிய நீர் உடனே அணைத்தது. நூறுமுறை முயன்றபின் அதை அப்படியே விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்றான். சூரியத்துளி அங்கே நீரின் ஆழத்தில் விழிமணி என விழுந்து கிடந்தது.

கைகளால் துழாவி இருளில் அலைந்த அந்தகச் சிறுவன் வழிதவறி சேற்றுப்பரப்பில் சறுக்கி விழுந்து எழுந்து மேலும் விழுந்து குகையிருளுக்குள் சென்றுகொண்டிருந்தான். அணைத்து வருடும் அன்னைவிரல்கள் என புழுக்கள் நெளிந்த காமாந்தகம் என்னும் இருள்பாதை வழியாக அவன் சென்றான். பின்னர் உருகும் செங்குழம்புகள் ஈரத்தசையென அசைந்த மோகாந்தகம் என்னும் குகையை அடைந்தான். இருண்ட நாகங்கள் விழியொளிர நாநீட்டி வருடிச்சென்ற குரோதாந்தகம் என்னும் மூன்றாம் குகையை கடந்தபின் பிரம்மம் மண்ணுலகை உருவாக்கியபின் எப்போதும் ஒளிதொட்டிராத சியாமாந்தகம் என்னும் ஆழ்குகைக்கு சென்று சேர்ந்தான். விழியின்மை அளித்த அறியாமையால் அவன் காக்கப்பட்டிருந்தான்.

மண்ணின் கருவறையின் சுருள்பாதைக்குள் சென்று அவன் அடைந்த சியாமாந்தகத்தில் இருளில் சுடர்ந்து கிடந்த மணி அவன் இருண்ட விழிகளுக்குத்தெரிந்தது. அதை நோக்கி தவழ்ந்துசென்று அதை அள்ளி கைகளில் எடுத்தான். சிறுநெல்லிக்காய் அளவிருந்த அச்சுடரை ஏதோ உணவென்று எண்ணியது அவனுடைய பசி. அதை வாயிலிட்டபோது பனிக்கட்டிபோல குளிர்ந்த கல் என உணர்ந்து துப்பினான். தலைதூக்கியபோது அவன் கையிலிருந்த அந்த மணியின் ஒளியில் அக்குகையின் கல்மடிப்புகளை, கல் அலைகளை, கல்லுருகி வழிந்த அகிடுகளை, கல்கூம்புகளை கண்டான்.

அந்த மணியின் ஒளியை கருவியாக்கி மூன்று குகைகளையும் கடந்து திரும்பிவந்தான். காலையொளி விரிந்துகிடந்த காட்டைக் கண்டு விழியே சித்தமென திகைத்து நின்றான். மூன்றுநாட்கள் இமைக்காமல் நின்றிருந்தவன் "தேவா” என அலறியபடி கைவிரித்து காட்டுக்குள் பாய்ந்தோடினான். அழுதும் சிரித்தும் அரற்றியும் பதினைந்து நாட்கள் அவன் காட்டில் இருந்தான். பின் பசுவின் குரல் அம்மா என்றழைக்கக்கேட்டு கராளமதியை நினைவுகூர்ந்தான்.

அவனிடமிருந்த அந்த மணியை அன்னை கையில் வாங்கிப்பார்த்தாள். “இது உன்னிடமும் உன் குலத்திடமும் என்றும் இருக்கட்டும். பிறர் அறியவேண்டியதில்லை. உனக்கு இதுவே தெய்வமென்றாகி வழிகாட்டுக!” என்று வாழ்த்தினாள். சியாமாந்தகப் பிலத்தில் கண்டடைந்தமையால் அம்மணியை சியமந்தகம் என்று அவன் அழைத்தான். அவன் ஆடைக்குள் அந்த மணி எப்போதுமிருந்தது. ஆகவே அவன் உடலில் பாளை இளங்குருத்தின் மெருகு தெரிந்தது. அவன் விழிகள் சூரியன் எழுந்த பனித்துளிகள் என மின்னின. அவன் சொற்களில் நூறுமுறை தீட்டப்பட்ட வாளின் கூர்மை இருந்தது. அவனை சத்வத குலத்து யாதவர் தங்களுக்கு மூதன்னையர் அளித்த கொடை என்று எண்ணினர்.

ஏழு மூத்தவர்களும் அவனை அஞ்சினர். அவன் நாடாளக்கூடாதென்று அவர்கள் நாளும் பல சூழ்ச்சி செய்தனர். அதற்கென ஒரு தருணம் அமைந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சத்வதகுலத்தின் நூற்றெட்டு பெருங்குடிகளும் அங்கிருந்த கஜமுகம் என்னும் மலையுச்சியில் கூடி இந்திரனுக்கு கொடைவிழா எடுப்பார்கள். மழைக்காலம் முதிர்ந்து வானில் இந்திரனின் யானைகள் எழுந்திருக்கும். அவன் படைக்கலங்கள் மின்னி மின்னிச்சூழும். விண்சரிவில் அவன் பெருநகைப்பு முழங்கும். பன்னிரண்டு இளங்கன்றுகளை இந்திரனுக்கு பலியிட்டு வணங்குவர். அந்த ஊனை சமைத்து முதுகள்ளுடன் உண்டு களியாடுவர். மலைச்சரிவில் அமைந்த தோல்கூடாரங்களில் இளையோரும் மகளிரும் கூடிவிளையாடுவர்.

இந்திரவிழவில் ஒளிரும் வெண்கல்பீடத்தில் அமர்ந்த இந்திரனின் முன்னால் வாள்வைத்து தலைவணங்கி ஒவ்வொரு யாதவனும் தன்னை முழுதளிக்கவேண்டும் என்பது முறைமை. வீரசேனன் இந்திரன் முன் தலைவணங்க உறுதியாக மறுத்துவிட்டான். ஏழு உடன்பிறந்தாரும் உருவியவாளுடன் அவனைநோக்கிப் பாய்ந்தனர். குடிமூத்தார் எழுந்து அவர்களை அடக்கி அவனிடம் அதைப்பற்றி வினவினர். விழியளித்த கதிரவன் ஒருவனையே வணங்குவதாக நெறிகொண்டிருப்பதாக வீரசேனன் சொன்னான். "இந்திரன் யாதவர்களின் பெருந்தெய்வம். அவனை வணங்காதவன் யாதவன் அல்ல” என்று கிரிராஜர் கூவினார். "மழையளிக்கும் மன்னனை வணங்காத ஒருவன் நம்முடன் இருந்தால் காடுவறளும். கன்றுகள் செத்தழியும்" என்று குலப்பூசகர் சொன்னார்.

"இந்திரனை வணங்குக! இல்லையேல் யாதவக்குடிவிட்டு நீங்குக!" என்று கிரிராஜர் இறுதி ஆணையிட்டார். "விழி ஒன்றே என் செல்வம்" என்று சொன்ன வீரசேனன் சத்வதர்களின் தென்மதுராபுரி விட்டு நீங்க சித்தமானான். அவனுடன் நூறு யாதவக்குடிகளும் தங்கள் ஆநிரைகளுடன் செல்ல முன்வந்தனர். ஆனிமாதம் ஏழாவது வளர்பிறைநாளில் வீரசேனன் தன் குடியினருடன் வடக்கு நோக்கி கிளம்பினான். யமுனையை அடைந்து குறுங்காடுகளையும் சதுப்புகளையும் கடந்து அஸ்வபாதமலையடிவாரத்தை கண்டடைந்தான். அங்கே ஹரிணபதம் அமைந்தது.

ஹரிணபதத்தின் நடுவே ஏழடுக்குக் கல்மேடை அமைத்து அதில் பன்னிரு ஆரங்கள் கொண்ட சக்கரவடிவில் கதிரவன் பதிட்டைசெய்யப்பட்டான். அதன்மேல் மரப்பட்டைகளால் ஆன ஆலயத்தை எழுப்பினர். சில ஆண்டுகளில் அது கல்லால் ஆன சிற்றாலயமாக மாறியது. நூற்றெட்டு கதிர் விரிந்த செம்முகத்தில் விழிகளுடன் சூரியனின் வடிவம் பொறிக்கப்பட்ட ஆலயத்தின் முகப்பில் அமைந்த பலிபீடத்தில் ஒவ்வொருநாளும் ஏழுநிறப் புதுமலர் வைத்து வணங்கினர். ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் விஷுவராசியில் அமையும் நன்னாளில் சியமந்தகத்தை சூரியனின் காலடியில் வைத்து அந்தகக் குலத்து யாதவர் அனைவரும் தலைவணங்கி தங்களை முழுதளித்தனர். நூற்றெட்டு யாதவக்குலங்களில் சூரியனை முழுமுதல்தெய்வமாகக் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே.

ஹரிணபதத்திற்கு அருகே ஆழத்தில் யமுனை பாறைகளை மோதி அலைத்து வெண்சிறகு கொண்ட கருநாகம்போல் சென்றது. படகில் செல்பவர்களுக்கு மரங்களுக்குமேல் எழுந்து நின்ற குதிரைக்குளம்புதான் அடையாளம். நூற்றெட்டு சிற்றோடைகள் எழுந்து வழிந்து அமைந்த பசும்புல்வெளியில் யாதவர்களின் ஆநிலைகள் அமைந்தன. அவ்வோடைகள் யமுனைக்குள் கொட்டிக்கொண்டிருக்கும் குளிரோசையை அஸ்வநாதம் என்றனர்.

வீரசேனரின் குடி அங்கே தழைத்தது. எழுபத்தெட்டு சிற்றூர்களாக அவர்கள் பிரிந்து பரவினர். அவரது அறுபத்திரண்டாவது கொடிவழியில் வந்த நிம்னர் வளைதடிச் செங்கோலும் குருத்தோலை மணிமுடியும் அணிந்து எருதுக்கொம்பு பதித்த இருக்கையில் அமர்ந்து அக்குடிக்கு தலைமை தாங்கினார். அவரது மைந்தன் சத்ராஜித் இளமையிலேயே கனவுகள் கொண்டிருந்தான். அஸ்வபதத்தாலும் யமுனையாலும் வேலியிடப்பட்ட சிறுநிலத்திற்குள் யாதவக்குடிகள் பாறைக்குள் சிக்கிய ஆலமரமென ஒடுங்கி வளர்வதாக எண்ணினான். யமுனைப்படித்துறையில் அமர்ந்து நெடுந்தொலைவில் பாய்விரித்துச்செல்லும் கலங்களை நோக்கி அமர்ந்திருந்தான். கால்கள் நீண்டு தோள்கள் பருத்ததும் தன் இளையோன் பிரசேனனுடன் மிருகபதத்தில் இருந்து கிளம்பி மதுராபுரிக்குச் சென்றான். செல்லும்போது அவன் தந்தை அந்த சியமந்தக மணியை அவனுக்களித்து அதை உடனுறைத்தெய்வமெனக் கொள்க என வாழ்த்தி அனுப்பினார்.

மதுராபுரியை ஆண்ட உக்ரசேனரின் படையில் ஒரு நூற்றுவனாகச் சேர்ந்த சத்ராஜித் எப்போரிலும் சிறுபுண்கூட பட்டதில்லை. தொட்ட செயலெல்லாம் துலங்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆயிரத்தவனாகவும் பின் மதுராபுரியின் எட்டுபெரும் படைப்பிரிவுகளில் ஒன்றின் தலைவனாகவும் ஆனான். யமுனைக்கரையில் களிந்தகம் என்னுமிடத்தில் அமைந்த சிறுமண்கோட்டையின் பொறுப்பை அடைந்தான். களிந்தகத்தைச் சுற்றிக் கற்கோட்டை அமைத்து காவலரண் சமைத்து உள்ளே வல்லமைவாய்ந்த வில்லவர்களை நிறுத்தி அதை மதுராபுரியின் இரண்டாம்தலைநகராக ஆக்கினான். களிந்தபதத்தின் துறையில் மதுராவுக்குச் செல்லாத சிறுபடகுகள் அணைந்தன. அங்குள்ள சந்தையில் சிறுகுடி யாதவர் நெய் கொடுத்து பொருள் கொள்ளவந்தனர். களிந்தகம் மதுராபுரிக்கு அளிக்கும் கப்பச் செல்வம் ஒவ்வொரு நாளும் வளர்ந்தது.

களிந்தகத்தின் குறுநிலமன்னராக சத்ராஜித்தை உக்ரசேனர் உடைவாளும் கணையாழியும் அளித்து அரியணை அமர்த்தினார். அந்தக யாதவர்களின் தலைநகராக களிந்தகம் மாறியது. அங்கே மூன்றடுக்கு அரண்மனையும் அந்தகக் குடியின் முதன்மைத்தெய்வமாகிய கதிரவன் ஆலயமும் அமைந்தன. அவ்வாலயத்தில் சித்திரை விஷுவராசியில் சியமந்தகமணி சூரியவிழியாக பதிட்டைசெய்யப்பட்டு ஆயிரத்தொருவகை மலர்களாலும், கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதை, மகாநதி, கிருஷ்ணை, காவேரி என்னும் ஒன்பது மாநதிகளின் நீராலும் வழிபடப்பட்டது. மதுராபுரிக்கு கப்பம்கட்டும் நான்கு யாதவச் சிற்றரசுகளில் முதன்மையானதாக களிந்தகம் கருதப்பட்டது. அனைத்து குலச்சபைகளிலும் சத்ராஜித் முதல்மதிப்பிற்குரியவராக ஆனார். .

சத்ராஜித்தின் நான்கு அரசியரில் விருஷ்ணிகுலத்து மாலினிதான் மூத்தவளும் முதன்மையானவளும். யாதவ வழக்கப்படி அவர் ஹரிணபதத்தைவிட்டு கிளம்புவதற்கு முன்னர் முதிரா இளமையிலேயே மாலினியை மணந்துவிட்டார். அவளை அவர் களிந்தகத்துக்கு கொண்டுசெல்லவில்லை. அங்கே போஜகுலத்து சித்ரையையும் பத்மையையும் மணந்துகொண்டு அரசியராக இருத்தினார். எப்போதாவது அவரும் அகம்படிப் படையும் யமுனை வழியாக களிந்தகத்தின் எழுகதிர் கொடிபறக்கும் படகுகளில் ஹரிணபதத்திற்கு வருவதுண்டு. அவர்களின் குலச்சடங்குகளில் மட்டும் மாலினிக்கு முதன்மையுரிமை இருந்தது. அவள் அதிலேயே நிறைவடைந்துவிட்டிருந்தாள்.

மாலினி விருஷ்ணிகுலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் இரண்டாவது மகள். மதுவனத்தின் காடுகளில் கன்றுமேய்த்து வளர்ந்தவள். அவளால் அரசியென்றாக முடியவில்லை. கணவனுடன் இரண்டுமுறை களிந்தகத்தின் அரண்மனைக்குச் சென்று சிறிதுநாள் வாழ்ந்ததுமே அவ்வாழ்க்கை தனக்கு உகந்ததல்ல என்று அறிந்துவிட்டாள். பசுக்களின் ஒலியும் மணமும் இல்லாத, காலையொளியை புல்வெளிமேல் காண வாய்ப்பற்ற, அந்தியில் கழுத்துமணிகளுடன் பொழுது சிவப்பதை பார்க்கமுடியாத வாழ்க்கை அவளுக்கு பொருளற்றதாகத் தோன்றியது. அங்குள்ள மானுடர் கூடணையப் பரிதவிக்கும் அந்திப்பறவைகள் போல எந்நேரமும் சுழன்றுகொண்டிருப்பதாக எண்ணினாள்.

“அங்கே காட்டையும் மலைகளையும் கதிரையும் நதியையும் சித்திரங்களாக தீட்டி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கும் பெண்களும் சித்திரங்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்று மாலினி தன் தோழி மஹதியிடம் சொன்னாள். “வெறும் சித்திரங்களடி. காற்றில் சித்திரச்சீலைகள்கூடத்தான் நெளிகின்றன.” தன் இளையாள்கள் இருவரையும் அவள் சித்ரை என்றுதான் சொன்னாள். அவள் வயிற்றில் முதல்கரு உருவானபோது செய்தியறிந்து மகிழ்ந்த சத்ராஜித் நூறு படகுகளில் அணிகளும் ஆடைகளுமாக ஹரிணபதத்திற்கு வந்தார். ஏழுநாட்கள் நீண்ட உண்டாட்டு நிகழ்ந்தது. எட்டாம் நாள் கிளம்பும்போது தன்னுடன் வந்து தங்கும்படி மாலினியை அழைத்தார். “என் மகள் இங்கே பசுக்களுக்கு நடுவே வளரட்டும்” என்று மாலினி சொன்னாள். “மூதன்னையர் அவளைச்சூழ்ந்து காக்கட்டும்.” அவள் வயிற்றை வருடி முத்தமிட்டுவிட்டு சத்ராஜித் கிளம்பிச்சென்றார்.

சத்யபாமை அன்னையுடனும் இரு மூதன்னையருடனும் விரிந்தகன்ற ஆயர்பாடி இல்லத்தில் வளர்ந்தாள். வட்டவடிவமான முகப்புக்கட்டிடத்தைச் சுற்றி பன்னிரு சிறுகட்டடங்கள் ஓங்கிய வேங்கைமரங்களின் வேலியால் சூழப்பட்டிருந்த வளாகம் அது. புற்கூரைக்குக் கீழே சாணிமெழுகி செந்நிறத்தில் சித்திரக்கோலமிடப்பட்ட சுவர்கள் கொண்ட முகப்புக்கட்டிடத்தில் அவளுடைய தாத்தா நிம்னர் ஆயர் குடியினரை சந்தித்தார். அதன்பின்னாலிருந்தது அவர் தங்கிய இல்லம். அதைத்தொடர்ந்து சத்ராஜித் வந்தால் தங்கும் அரச இல்லம். அருகே சுவடியறை. அதற்கப்பால் களஞ்சிய அறைகள். இல்லநிரையின் இடதுகோடியில் சமையல் கூடம். அருகே உணவுக்கூடமும் பெண்களின் புழங்கிடமும். அதைத்தொடர்ந்து பெண்கள் துயிலும் இல்லங்கள். வலதுகோடியில் நெய்க்கலங்கள் அடுக்கப்பட்ட ஆக்னேயசாலை.

பின்பக்கம் பிறைவடிவில் நூற்றெட்டு தொழுவங்களில் நின்றிருந்த ஒவ்வொரு பசுவும் மாலினியின் கண்முன் பிறந்து வளர்ந்து ஈன்று கனிந்தவை. ”ஐந்துபசுக்களின் வாழ்வுக்காலம் தானிருந்து நிறைந்தவள் மூதன்னையரின் உலகை அடைகிறாள். நான் இரண்டு பசுக்களின் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்” என்று மாலினி புறக்கடைத் திண்ணையில் கால் நீட்டி அமர்ந்து சொல்வாள். புன்னகையுடன் மஹதி “ஐந்துபசுக்களென்றால் எழுபத்தைந்து கன்றுகள் அல்லவா?” என்றாள். ”போடி, இந்த மூன்றைப்பெற்றே நான் முலைதளர்ந்துவிட்டேன்” என்று சொல்லி அவள் எழுந்து சென்றாள். “ஈன்று சலித்த பசு உண்டா அரசி?” என்று மஹதி கூவ “நீ சென்று ஈன்று வாடீ... என்னால் இனி முடியாது” என்று மாலினி சமையலறைக்குள் இருந்து சிறுசாளரம் வழியாக சொன்னாள்.

மஹதி சத்யபாமையிடம் “பெண்ணென்று ஆனபின் பசு என்றுமே முலைஒடுங்குவதில்லை மகளே” என்றாள். ”கருவுற்று நீலித்த காம்புகளுடன் கண்கனிந்து காத்திருக்கும். பின்னர் பால்பொழிந்து தொழுநிறைக்கும். முலைகளால் ஆனது பசு. ஊருணியை ஊற்றுக்களால் நிறைக்கும் மலைபோன்றது அதன் உடல்.” சத்யபாமை பெருமூச்சு விட்டாள். “நீருக்குள் என்னடி கண்டாய்? ஏன் எப்போதும் நெடுமூச்செறிகிறாய்?” என்று மஹதி கேட்டாள். ஒன்றுமில்லை என தலையசைத்து பாமா விழிவிலக்கிக்கொண்டாள். “சொல்லடி” என்றாள் மஹதி மீண்டும். “நான்காவது இருளில் என் முதுமூதாதை கண்டதுபோன்ற ஒரு விழியை” என்றாள் சத்யபாமை.

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 4

தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?” என்றாள் மஹதி. “இல்லை...” என்று பாமா தலையசைக்க மஹதி “என்னாயிற்று உனக்கு? ஏன் காலையிலிருந்தே முகம் தணிந்திருக்கிறாய்?” என்றாள். பாமா ஒன்றும் சொல்லாமல் விழி தாழ்த்தி நீள்மூச்செறிந்தபின் நடந்தாள்.

பாலமுதுப்பானையை சுமந்துவந்த ஆய்ச்சி சிரித்தபடி “நீள்மூச்சிடும் பெண்ணிடம் ஏன் என்று கேட்கலாகாது அன்னையே” என்றாள். அவளுடன் வந்த இன்னொருத்தி “ஆனால் அது அன்னைக்கு மட்டும் தெரிவதே இல்லை. காலங்காலமாக அது அப்படித்தான்” என்றாள். மஹதி “சும்மா இருங்களடி... அவள் இன்னும் சிறு குழந்தை. காலையில் ஆற்றுக்குச் சென்றாள். ஆழத்தில் எதையோ கண்டு அஞ்சிவிட்டாள்” என்றாள். “ஆற்றுநீரில் இருந்தவன் கந்தர்வனா காமதேவனா?” என்றாள் ஒருத்தி. ஆய்ச்சியர் சேர்ந்து சிரிக்க “எதற்காகத்தான் சிரித்துக்கொள்கிறீர்களடி?” என்றாள் மஹதி. “சிரிக்காமல் இச்சுமையை எப்படி தாங்குவது அன்னையே?” என்றாள் ஓர் இளையவள்.

ஊர்மன்று நிறைந்திருந்ததை நீண்ட இடைவழியில் சென்றபோதே காணமுடிந்தது. முந்நூறு மூங்கில்தூண்களுக்குமேல் வட்டவடிவில் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்ட கொட்டகை அது. நடுவே குடிமூத்தோர் தங்கள் வளைதடிகளை மடியில் வைத்து குலக்குறிகள் கொண்ட தலைப்பாகைகளுடன் அமர்ந்திருக்க இளையோர் சூழ நின்றிருந்தனர். சத்ராஜித் மரப்பீடத்தில் அமர்ந்திருந்தார். அருகே பிரசேனன் தூணில் சாய்ந்து நின்றான். மன்றுநடுவே காலையில் வந்த முதியவர் மழிக்கப்பட்ட பெரிய தலையுடன் நின்று கைவீசி பேசிக்கொண்டிருந்தார். அவர் பெயர் அக்ரூரர் என அவள் அதற்குள் அறிந்திருந்தாள். அவருக்குப்பின்னால் கைகட்டி நின்றிருந்த பலராமர் வெளியே எங்கோ நோக்கிக்கொண்டிருந்தார். இளையவன் கிருஷ்ணன் அச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் வேறேதோ எண்ணி புன்னகைப்பது போலிருந்தது.

அவள் மிகத்தொலைவில் ஒரு கணநேரவிழிவீச்சில் அவையை நோக்கி அவனை அடைந்து விழிவிலக்கிக்கொண்டபின் ஒருமுறைகூட அவனை நோக்கவில்லை. ஆய்ச்சியர் பாலமுதுக்குடங்களை கொண்டு சென்று கொட்டகையின் பின்பக்கம் கட்டப்பட்ட பந்தலில் வைத்தனர். ஒருத்தி அங்கே அமைக்கப்பட்டிருந்த கல்லடுப்புகளில் மரக்கரியை பரப்பி நெருப்பிட்டு அதன் மேல் கலங்களை வைத்து பாளைவிசிறியால் வீசி அனலெழுப்பத் தொடங்கினாள். வாழையிலைகளைப் பரப்பி அதன்மேல் கூடையில் கொண்டுவரப்பட்ட அக்கார அப்பங்களையும் பாலப்பங்களையும் பரப்பினர்.

அப்பங்களின் மணத்தை அறிந்த யாதவ இளையோர் சிலர் திரும்பி நோக்கினர். ”அப்பத்தை அறிந்ததும் அரசியலை விட்டுவிட்டனர். இவரகள்தான் கம்சனுடன் போருக்குப்போகப்போகிறார்கள்...” என்றாள் மஹதி. ஆய்ச்சியர் வாய்பொத்திச் சிரித்தனர். “சிரிக்கவேண்டாம்... இவர்களுக்கு இவர்கள் எவரென்று தெரியாது. இவர்களிடம் படுத்து பிள்ளைபெற்ற நமக்குத்தெரியும்” என்று மஹதி சொன்னபோது எழுந்த சிரிப்பொலி கேட்டு ஏழெட்டுபேர் திரும்பி நோக்கினர். ஒரு முதியவர் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி எச்சரித்தார்.

பாமா மன்றை நோக்கியபடி படி ஏறி மூங்கில்தூண்பற்றி நின்றாள். “மன்றுநோக்கவேண்டுமென்றால் உள்ளே செல்லடி... நாம் யாதவர். நம் குடியில் பெண் விழைந்தால் மன்றமர முறைமை உண்டு” என்றாள் மஹதி. “அப்படியென்றால் மன்றில் இருக்கிறான் இவள் நீருள் அறிந்த ஆண்மகன்” என்றாள் இளைய ஆய்ச்சி ஒருத்தி. “ஆம். அய்யோடி, நான் அதை எண்ணவே இல்லை” என்றாள் இன்னொருத்தி. இளையவள் ஒருத்தி அவள் தோளைப்பற்றி “எவரடி? சொல்!” என்றாள். இன்னொருத்தி “எவரை அவள் விழியிமைக்காது நோக்குகிறாளோ அவர்” என்றாள். இன்னொருத்தி சிரித்தபடி “இல்லை, எவரை ஒருமுறைகூட நோக்கவில்லையோ அவர்” என்றாள். பெண்கள் உடல் அதிர மெல்லிய ஒலியில் சிரித்தனர். மஹதி “சும்மா இருங்களடி மூடப்பெண்களே. அவளை யாரென நினைத்தீர்கள்? தேர்கொண்டு சென்று களம்நின்று போர்புரியும் பெண் அவள் என்று நிமித்திகர் கைக்குறி நோக்கி சொல்லியிருக்கின்றனர். நம் மூதன்னையரின் அருள் முழுதும் கொண்டவள் அவள்” என்றாள்.

அக்ரூரர் உரத்தகுரலில் “...பழி ஒருபோதும் தானாக மறைவதில்லை யாதவரே. தலைமுறை தலைமுறையாக நின்று கொல்லும் என்பதை நினைவுறுங்கள். உக்ரசேனனின் அரியணை வஞ்சகத்தால் அமைக்கப்பட்டது. அதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இன்று இவ்வரக்கன் அதை கொழுங்குருதியால் நீராட்டிக்கொண்டிருக்கிறான். அங்கே வெட்டுண்டு விழுந்த குழந்தைகளின் விழிகள் இன்னும் மறையவில்லை என்கின்றனர் பாணர். இப்போது நாம் பேசியாகவேண்டியது ஒன்றைப்பற்றி மட்டுமே. குருதி... குருதியை குருதியால் மட்டுமே கழுவமுடியும். நீரால் அல்ல. கண்ணீரால் அல்ல. முலைப்பாலாலும் அல்ல. குருதியால் மட்டும்தான். நான் கேட்கவந்திருப்பது குருதியை மட்டுமே... அதற்கு எனக்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றார்.

யாதவர் அவை ஓசையடங்கி காத்திருந்தது. “சொல்லுங்கள்... நாம் இனியும் காத்திருப்பதில் எந்தப்பொருளும் இல்லை” திரும்பி தன்னருகே நின்றிருந்த இளையோரை இரு கைகளாலும் தோள்தழுவி “இவர்கள் விருஷ்ணிகுலத் தோன்றல்கள். வசுதேவரின் மைந்தர்களைப்பற்றி நீங்கள் அனைத்தையும் அறிந்திருப்பீர்கள். தோள்வல்லமையால் ராமனும் சொல்வல்லமையால் கிருஷ்ணனும் பாரதவர்ஷத்தில் எவருக்கும் நிகரானவர்கள். வல்லரக்கனின் வெறியை இவர்கள் வெல்வது உறுதி.” பலராமர் ஆம் என்பதுபோலத் தலையசைத்து சிரித்தார். ”இவர்களுடன் நம்முடைய வாள்களும் தோள்களும் இணையவேண்டும். நான் இங்கு வந்தது அதற்காகவே... யாதவகுலமூத்தார் சொல்லளித்தால் இவர்கள் செய்து காட்டுவார்கள்.”

அதன்பின்னரும் அவையில் ஓசையென ஏதும் எழவில்லை. ஒருவரை ஒருவர் நோக்கினர். மெல்லிய உடலசைவைக் காட்டிய சிலரை நோக்கி அனைத்து விழிகளும் திரும்பின. ”இந்த அவையில் யாதவப்பெருங்குலங்கள் அந்தகர் போஜர் குக்குரர் விருஷ்ணிகள் ஷைனியர் என்னும் ஐந்திலிருந்தும் மூத்தோர் அமர்ந்துள்ளீர். என் சொற்களுக்கு மறுமொழி சொல்லுங்கள்” என்றார் அக்ரூரர். முதியவரான போஜகுலத்து தனகர் மெல்ல அசைந்து “யாதவர்கள் ஒரு நாடல்ல. கங்கை யமுனைக்கரைகளெங்கும் பரந்துள்ள பெருங்கூட்டம். இன்று ஒருசெய்தியை யாதவரிடையே பரப்பவே ஒருமாதகாலமாகும். நமக்கு போர்த்தொழில் பழக்கமில்லை. நாம் ஆநிரை புரந்து காட்டில் வாழும் கூட்டம்” என்றார்.

“இன்னும் எத்தனை நாள்தான் இதை சொல்லிக் கொண்டிருக்கப்போகிறோம்?” என்று அக்ரூரர் உரத்த குரலில் கூவினார். ”நம் குலம் வேருடன் அழியும்போதும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோமா?” தனகர் “அக்ரூரரே, வல்லமையற்றவர்களுக்கு தெய்வங்கள் துணையிருக்கும் என்றுதான் நூல்கள் சொல்கின்றன” என்றார். “ஆம், தெய்வங்கள் துணைக்கும். அறத்தில் நின்று அஞ்சாமலிருப்பவர்களுக்கு. ஆணவத்தின் முன் அடிபணிபவர்களை அறப்பிழைகள் முன் வாளாவிருப்பவர்களை தெய்வங்களும் வெறுக்கும். "குக்குர குலத்து சமீகர் “நாங்கள் இறக்க விரும்பவில்லை. எங்கள் குழந்தைகள் இம்மண்ணில் வாழவேண்டுமென விழைகிறோம். எங்கள் குலப்பெண்கள் இல்லம்நிற்கவேண்டுமென எண்ணுகிறோம். அவ்வளவுதான்” என்றார்.

அக்ரூரர் மேலும் சொல்லின்றி கைகளை விரித்தார். விருஷ்ணி குலத்தவனாகிய சாம்பன் உரக்க “இந்தப்போரில் நாம் உண்மையில் எவருடன் போரிடுவோம்? மகதத்துடனா?” என்றான். அதுவரை அத்தனைபேரும் கேட்க எண்ணிய வினா அது என அவர்கள் சேர்ந்து எழுப்பிய ஓசைகள் காட்டின. “ஆம்... அதைச் சொல்லுங்கள் முதலில்” என்றனர். சாம்பன் “நாம் சுற்றிச்சுற்றி ஏன் பேசவேண்டும்? மகதத்தின் பெரும்படையுடன் யாதவர்கள் போரிடுவதைப்பற்றி பேசத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோமா?” என்றான். அக்ரூரர் “நாம் மகதத்துடன் போரிட்டாகவேண்டுமென எவர் சொன்னது? நமது போர் கம்சனுடன். அதை மகதர்களுக்கு சொல்வோம். மகதத்திற்கு என்னவேண்டும்? கப்பம் தானே? அதை நாம் அளிப்போம்” என்றார்.

“அக்ரூரரே, மகதத்திற்குத்தேவை கப்பம். அதை கம்சனே சிறப்புறச் சேர்த்து அளிக்கிறார். அந்நிலையில் அவரை மாற்ற அவர்கள் ஏன் முயலவேண்டும்?” என்றார் அந்தக குலத்தின் குடிலர். அக்ரூரர் “நாம் யாதவர்கள். நம்மை கம்சன் தலைமைதாங்கி நடத்துவதை நாம் விரும்பவில்லை... நமக்கு நம் தலைவர்களை தேர்வுசெய்ய உரிமை உண்டல்லவா?” என்றார். “ஆம், உண்டு. ஆனால் அதை எதற்காக மகதம் பொருட்படுத்தவேண்டும்?” அக்ரூரர் சலிப்புடன் தலையசைத்து “இதைப்பற்றி நாம் பேசப்பேச பொருளின்மையே எழுந்து வரும்... அவையீரே, நாம் கன்றுமேய்ப்பவர்கள். கன்றுகள் புல்மேயும்போது ஓய்வாக அமர்ந்து புறம்பேசுவதை ஒரு கலையென பயின்றவர்கள். எதையும் வெறும்பேச்சாக மாற்றும் உள்ளம் கொண்டவர்கள்” என்றார்.

”அக்ரூரரே, நான் கேட்கவிழைவது ஒன்றே” என்று உரத்தகுரல் எழுப்பியபடி எழுந்து நின்ற இளைஞனின் பெயர் சததன்வா என்று பாமா அறிந்திருந்தாள். மும்முறை அவன் அவள் தந்தையுடன் இல்லத்திற்கு வந்திருந்தான். அந்தக குலத்தில் பார்ஸ்வ குடியைச்சேர்ந்த அவனுக்கு அவளை மணம்புரிந்துகொள்ளும் விழைவிருந்தது. அவன் தந்தை கிருதாக்னி மலைமடிப்பில் கூர்மபுரி என்னும் ஒரு சிறுநகரை அமைத்திருந்தார். மதுராபுரிக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக அது ஆகிக்கொண்டிருந்தது. தந்தை அவளிடம் அவனுக்கு பாலமுது கொண்டுசெல்லும்படி சொன்னதிலிருந்து அவருக்கும் அவ்வெண்ணம் உண்டு என்று அன்னையும் செவிலியும் அறிந்திருந்தனர். “ஆண்மையும் ஆணவமும் கொண்டவன். அவன் ஆணவம் மன்றுநிற்குமா என்று நோக்கியபின் முடிவெடுக்கலாம்” என்று அன்னை தந்தையிடம் சொல்லிவிட்டதாக மஹதி அவளிடம் சொன்னாள்.

சததன்வா எழுந்தபோது அரைக்கணம் விழிவந்து அவளை நோக்கிச்சென்றது. அங்கே அவன் சொல்வதெல்லாம் அவள் கேட்கவே என்று பாமா அறிந்தாள். "அக்ரூரரே, யாதவர்களின் அரசுகள் ஆறு. கம்சன் ஆளும் மதுராபுரி, தேவகரின் உத்தரமதுராபுரி, சூரசேனரின் மதுவனம், குந்திபோஜரின் மார்த்திகாவதி, சத்ராஜித்தின் களிந்தகம், ஹ்ருதீகரின் சதபதம். இவற்றில் எத்தனை அரசுகள் நம்முடன் உள்ளன? அதை முதலில் சொல்லுங்கள். இங்குள்ள யாதவக்குடிகளெல்லாம் வெறும் மக்கள்திரள்கள். படைகளோ காவலரண்களோ களம்கண்ட அறிதலோ அற்றவர்கள்...” என்றான்.

அக்ரூரர் ““எனக்குத்தேவை நம் குடிகளின் ஒப்புதல். நாம் திரண்டாகவேண்டும் குலத்தோரே... இதைவிடச் சிறந்த தருணமென ஒன்று வரப்போவதில்லை” என்றார். “ஐந்து அரசுகளில் மார்த்திகாவதியை ஆளும் குந்திபோஜர் சூரசேனரிடம் மகள்கொண்டவர். அவருக்கு அஸ்தினபுரியின் உதவியும் உள்ளது. அவர் நம்முடன் உள்ளார். தேவகர் தன் தமையனின் மைந்தர் கம்சனிடம் அச்சமும் பகைமையும் கொண்டிருக்கிறார். இங்கு நிற்கும் இளைய யாதவர் தேவகரின் மகள் வயிற்றில் பிறந்தவர். களிந்தகத்தின் உதவியை நாடி நான் இங்கு வந்திருக்கிறேன். சதபதத்தின் அரசர் போஜர்குலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதவர்மன் இங்குள்ளார்...” என்றார்.

“அப்படியென்றால் அவர் பேசட்டும்...” என்றான் சததன்வா. அத்தனைபேரும் அவையிலிருந்த இளையவனாகிய கிருதவர்மனை நோக்கி திரும்பினர். தன் மீதான நோக்கினால் தத்தளிப்பு கொண்ட் அவன் நாணி முகம் சிவந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “சொல்லும் இளையவரே. அவை உங்கள் குடியின் சொல்கேட்க காத்திருக்கிறது” என்று அக்ரூரர் அவனை அழைத்தார். மெலிந்த உடலும் பெரிய குரல்வளையும் பாறைமேல் பாசி படர்ந்ததுபோன்ற மீசையும் கொண்ட கிருதவர்மன் எழுந்து “விருஷ்ணிகள் ஒரே குலமாக முடிவெடுப்பதே சிறந்தது என நினைக்கிறேன். சூரசேனரின் மதுவனத்தின் சார்பில் இங்கே வசுதேவரின் மைந்தர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்திருப்பதிலிருந்து...” என்று சொல்லத் தொடங்க சததன்வா உரத்தகுரலில் “கிருதவர்மரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் கம்சரும் விருஷ்ணிகுலத்தவரே” என்றான். அவையிலிருந்தவர்கள் சிரித்தனர்.

கிருதவர்மன் தடுமாறி குரல் உடைய “ஆம், ஆனால்...” என்று சொல்லவந்து தடுமாறி “விருஷ்ணிகுலம் எடுக்கும் முடிவை நானும் எடுக்கிறேன்” என்றான். சததன்வா நகைத்தபடி “விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த எவர் முடிவை நீங்கள் எடுப்பீர்கள் என்றுதானே கேட்கிறோம்” என்றான். கிருதவர்மன் சிறிய சிவந்த உதடுகள் அதிர தன் குடிமூத்தவரை நோக்கியபடி “தெரியவில்லை” என்றான். மீண்டும் அவை நகைத்தது. சததன்வா திரும்பி அக்ரூரரை நோக்கி “நான் கேட்பது இவ்வளவுதான். மதுவனமும், மார்த்திகாவதியும், உத்தரமதுராபுரியும் ஒன்றாக இருக்கிறீர்கள் என்றால் அதை நாங்கள் நம்புவதற்குரிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா? இம்மன்னர்கள் ஏதேனும் ஓலையை அளித்துள்ளனரா?” என்றான்.

அக்ரூரர் “இளைஞனே, அப்படி ஓர் ஓலையை அவர்கள் இப்போது அளிக்கமுடியுமா என்ன? கம்சனின் ஒற்றர்கள் சூழ்ந்துள்ளனர். அவன் படைகள் இந்த ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் நின்றுள்ளன. அப்படியொரு உடன்படிக்கை உருவாகுமென்றால் உடனே போர் எழுவது உறுதி அல்லவா?” என்றார். “நன்று, நான் கோரியதை சொல்லிவிட்டீர் அக்ரூரரே” என்று சொல்லி சததன்வா சிரித்தான். “ஓர் ஒப்பந்த ஓலையை அமைக்கவே அஞ்சும் மூன்று அரசர்கள் இணைந்து மகதத்தின் படைவல்லமைகொண்டவரும் அச்சமற்றவருமான கம்சரை வெல்ல நினைக்கிறீர்கள் இல்லையா?”

அவையின் நகைப்பு உரக்க ஒலித்தது. அவர்கள் நகைக்க விரும்புகிறார்கள் என்பதை சததன்வா புரிந்துகொண்டான். அந்நகைப்பு வழியாக தங்கள் அச்சத்தையும் இயலாமையையும் கடந்துசெல்ல அவர்கள் விரும்பினர். அவர்களின் எதிர்வினைகள் வழியாக அச்சமயம் அவையில் திரண்டுவந்த உணர்ச்சிகளின் குரலாக சததன்வா தன்னை ஆக்கிக்கொண்டே சென்றான். அவள் தன்னை நோக்குகிறாள் என்பதுதான் அவனை சொல்லூற்றென ஆக்குகிறது என்று பாமா உணர்ந்துகொண்டாள். நன்றாகவே அவைக்குள் சென்று மூங்கிலில் சாய்ந்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.

“போர் என்பது வெல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்குரிய திட்டங்களுடன் நிகழ்வது. அவ்வாறு அல்லாததை போர் என்றல்ல, தற்கொலை என்றுதான் சொல்வார்கள்” சததன்வா தொடர்ந்தான். “நீங்கள் மூவரும் முன்னின்று போர் செய்யலாம். என்னதான் இருந்தாலும் தேவகர் கம்சரின் சிறியதந்தை. சூரசேனரின் மைந்தர் கம்சரின் அமைச்சராக இருந்தவர். ஆகவே போருக்குப்பின் இருவரிடமும் கம்சர் சொல்நிலை கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் உங்களை நம்பி களமிறங்கிய மலைமக்களாகிய எங்களை அவர் விட்டுவைக்கமாட்டார். எங்கள் ஆநிரைகள் அழியும். ஊர்கள் எரியுண்ணப்படும். எங்கள் இல்லமுற்றங்களில் குருதி நிறையும். அவ்வண்ணம் என்றால் இது தற்கொலை அல்ல, கொலை.”

"ஆம், ஆம்” என்று அவை குரலெழுப்பியது. அந்தக குலத்து முதியவரான சதானீகர் எழுந்து “எங்களை பலியிட்டு நீங்கள் கம்சரிடம் ஒரு வணிக விளையாட்டை ஆடவிருக்கிறீர்கள். நீங்கள் இழப்பதற்கொன்றுமில்லை. நாங்கள் வேருடன் அழிவோம். எங்கள் மூதாதையர் நீரில்லாமல் நிகருலகில் வாழ்வார்கள்...” என்றார். ஒரேசமயம் பலர் எழுந்து நின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். “ஆம், இதில் ஏதோ சூதிருக்கிறது! எங்கள் உயிருடன் விளையாடுகிறீர்கள்!” அவர்கள் நடிக்கிறார்கள் என்பது அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. ஆனால் முகங்களிலும் குரல்களிலும் இருந்தவை உண்மையான உணர்ச்சிகள். அவ்வுணர்ச்சிகளை அவர்கள் பெருக்கிக்கொண்டார்கள். கூட்டமாக ஆகும்போது எவ்வுணர்ச்சியையும் பெருக்கிக் கொள்ளமுடியும் போலும்.

“அமைதியாக இருங்கள்... அமைதி... இது என் ஊர். என் மன்று” என்று சத்ராஜித் குரலெழுப்பினார். “இங்கு ஒரு பூசல் நிகழ்வதை நான் விரும்பவில்லை. எதையும் நாம் பேசிமுடிக்கமுடியும்...” அவரது முழங்கும் குரல் யாதவர்களை அமைதியாக்கியது. “நாங்கள் உங்களை நம்புகிறோம் அந்தகரே. நீங்கள் முடிவெடுங்கள்...” என்றார் ஷைனிய குலத்தவரான சுருதசோமர். “ஆம், அனைவரும் தங்கள் குரலை முன்வைக்கட்டும். எல்லா கோணங்களிலும் சிந்தித்து முடிவெடுப்போம்” என்றார். சததன்வா “நாம் இங்கு கூடியிருப்பதே வசுதேவர் மைந்தர்களுக்காக. அவர்கள் பேசட்டும்” என்றான்.

விருஷ்ணி குலத்தவனாகிய சாம்பன் “ஆம், அக்ரூரர் சொல்லிக்கொடுத்த சொற்களை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்றால் அவர்கள் சொல்வதே சிறப்பு” என்றான். சிரிப்பொலியை கையால் அடக்கிய அக்ரூரர் “சாம்பா, உனக்கு இவ்விளையோர் மேல் காழ்ப்பிருக்கலாம். ஆனால் அதற்கான இடம் இதுவல்ல” என்றார். “எனக்கு இவர்கள்மேல் எப்படி காழ்ப்பில்லாமலிருக்கும்? இவர்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்திகள் அல்லவா?” என்றான் சாம்பன். சத்ராஜித் “போதும்...” என்று கை தூக்கி சொன்னார்.

போஜகுலத்தின் மூத்தவரான விகிர்தர் “மூத்தவர் பேசட்டும்” என்றார். பலராமர் சிரித்து “நான் பேச ஒன்றுமில்லை. கம்சனை கொல்லவேண்டும் என்று என் தந்தை எனக்கு ஆணையிட்டிருக்கிறார். ஆகவே நான் அவன் தோள்களைப் பிடித்து பிய்த்தெடுப்பேன். அவன் நெஞ்சு பிளந்து குருதியை அள்ளி என் நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொள்வேன். அதைச்செய்யாமல் உயிர்வாழேன்” என்றார். சாம்பன் “மிகச்சிறந்த எண்ணம்... நாளை நாம் குருதிச்சோறு கொடுத்து வணங்க சிறந்ததோர் நடுகல் அமையவிருக்கிறது” என்றான். அனைவரும் வெடித்துச்சிரிக்க சத்ராஜித் சிரித்தபடியே கையைத் தூக்கி “சொல்லுங்கள் இளையயாதவரே, நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றார். சாம்பன் “வெண்ணை உண்டு புல்லாங்குழல் இசைப்பார். கம்சன் நெஞ்சடைத்து உயிர்துறப்பான்” என்றான். சிரிப்பில் அவை முழங்கியது. பாமா தன்னைச் சுற்றிலும் சிரிக்கும் முகங்களைக் கண்டாள்.

இளையவன் முன்னால் வரும் ஒலியை அவள் கேட்டாள். மெல்ல கசங்கிய மஞ்சள்பட்டாடை. மண் தொட்டு மூன்றடி எடுத்துவைத்த கால்கள். "அவையோரே, நான் கம்சனை கொல்வேன். ஆயர்குடிகொண்ட பழி தீர்ப்பேன். இதில் ஐயமே இல்லை என்றுணர்க!” என்றான். பெண்மை கலந்த மென்குரல். குழலிசை கலந்த குரல். சாம்பன் “இனிய சொற்கள். இசைபோல ஒலிக்கின்றன. உடன் முழவும் குழலும் ஒலித்திருக்கலாகாதா என நான் ஏங்குகிறேன்” என்றான். ஆனால் அவையில் ஆங்காங்கே சிறிய சிரிப்பொலிகள்தான் எழுந்தன. மஹதி மெல்ல படியேறி பாமையின் அருகே வந்து நின்று அவள் தோள்மேல் கை வைத்துக்கொண்டாள்.

கிருஷ்ணன் சாம்பனை பொருட்படுத்தாமல் “நான் இங்கு வந்திருப்பது எந்த யாதவரையும் நயந்து உதவிகோருவதற்காக அல்ல. நான் யாதவர்களின் முழுமுதல் மன்னன் என இங்கு அறிவிக்கிறேன். என் சொல்லுக்கு எதிர்ச்சொல் எவர் சொல்வதையும் ஏற்கப்போவதில்லை. மதுராவை வென்று கம்சனை நான் கொல்வேன். என்னுடன் நிற்பவர்கள் என் நண்பர்கள். எதன்பொருட்டானாலும் என்னுடன் நிற்காத எவரும் என் எதிரிகளே. அவர்கள் எக்குலத்தார் என்றாலும் வேருடன் அழிப்பேன். அவர்களின் இல்லங்களை எரியூட்டுவேன். அவர்களின் குடியின் ஒரு நினைவுகூட எஞ்சவிடமாட்டேன்” என்றான்.

“அய்யோடி, இவனைப்பற்றித்தானா அப்படி சொன்னார்கள்!” என்று மஹதி அவள் தோளை இறுக்கிக் கொண்டாள். பாமா அவையை சூழ நோக்கினாள். திறந்த வாய்களும் விழித்துத் தெறித்த விழிகளுமாக அச்சத்தில் உறைந்தவை போலிருந்தன அத்தனை முகங்களும். பாமாவின் விழிகள் சென்று அவன் கால்களை தொட்டன. பத்துநகங்களும் ஒளிவிட புன்னகை திகழும் கால்கள். நீலத்தாமரை மொட்டுகள். உள்ளங்கால் சிவந்திருக்குமென்று அப்போதுதான் அறிந்தாள். “இங்குள்ள யாதவர் தங்கள் நிலையென்ன என்று இப்போது அறிவிக்கட்டும்....” என்று அவன் சொன்னான். “என் நண்பர்களைத் தழுவி எதிரிகளை எண்ணத்தில் குறித்திட்டு இங்கிருந்து மீள்கிறேன்.”

அவை உறைந்ததுபோல் இருந்தது. வெளியே ஆய்ச்சி ஒருத்தி ஏதோ சொல்லும் ஒலி கேட்டது. அந்தப் பாதங்களுக்கு அடியில் மென்மையான இரு கைகள் எழுந்து அவற்றை தாங்கியிருக்கின்றனவா என்ன? மெய்நிறம் இப்படி நீலமென ஆனதென்ன? புலரிமழையென குளிர்ந்திருக்குமா அவை? அவள் விழிதூக்க விழைந்தாள். இமைகளுக்குமேல் அத்தனை வானத்து எடையும் ஏறியமர்ந்திருந்தது. மூச்சிரைக்க மேலுதட்டை பற்களால் இழுத்துக் கடித்தபடி வேட்டைநாயின் முன் அஞ்சிச் செயலற்ற முயல் என அசையாமல் நின்றிருந்தாள். அவள் கன்னங்களும் கழுத்தும் தோள்களும் சிலிர்த்து மயிர்க்கால்கள் எழுந்தன. முதுகில் வியர்வைத்துளி ஊறி வழிந்து இடையை அடைந்தது.

போஜகுலத்து தனகர் அமர்ந்தவாறே கைகூப்பி “எந்தையே” என்றார். கம்மிய குரலில் “ஏழைகள்... வாழ்வதற்காக மட்டுமே விழைபவர்கள். ஏதுமறியாதவர்கள். உனக்கு நாங்கள் அடைக்கலம். பெற்றபிள்ளைகள் என எங்களை மடியமர்த்திக் காத்தருள்க தேவா!” என்றார். அவை ஓர் ஒற்றைத் தொண்டையென விம்முவதை அவள் கேட்டாள். நடுங்கும் கைகளை தலைமேல் தூக்கியபடி எழுந்த ஒரு முதியவர் விழிநீர் வழிய நின்று நடுங்கினார். அவள் திரும்பி நோக்கியபோது அனைவரும் அழுதுகொண்டிருந்தனர். துடிக்கும் உதடுகளை கூப்பிய கரங்களை ஒவ்வொன்றாக நோக்கி வந்தபோது அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் வழியத் தொடங்கியது. மஹதி அவள் தலையை தன் மார்பில் சேர்த்து விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.

அவ்வுணர்ச்சிகளுக்கு முற்றிலும் அப்பால் நின்று அவன் சொன்னான். “இந்த அவையில் சதபதத்தின் கிருதவர்மரும் கூர்மபுரியின் சததன்வாவும் களிந்தகத்தின் சத்ராஜித்தும் தங்கள் ஒப்புதலை வாளேந்தி அறிக்கையிடவேண்டுமென விழைகிறேன்.” அக்கணமே உலோகக்கிரீச்சிடலுடன் வாளை உருவியபடி எழுந்த கிருதவர்மன் “செயலும் எண்ணமும் வாழ்வும் சாவும் தங்களுக்குரியவை இளையவரே. இனி எனக்கென ஏதுமில்லை. என் ஆநிரைகள் மேல் மூதாதையர் மேல் குலதெய்வங்கள் மேல் ஆணை” என்றான். சததன்வா சற்றுநேரம் அசையாமல் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து வாளை உருவி தாழ்த்தி “யாதவ அவையின் ஆணைக்கு தலைவணங்குகிறேன். மதுராபுரியை வெல்லும் இப்போரில் விருஷ்ணிகுலத்து வசுதேவரின் மைந்தரை முழுதுள்ளத்துடன் துணைக்கிறேன்” என்றான்.

சத்ராஜித் “நான் சொல்வதற்கொன்றுமில்லை இளையவரே” என்றார். “யாதவர் அவை இதோ முடிவெடுத்துவிட்டது. இங்குள்ள அந்தகக் குலமூத்தார் எண்ணியதற்கு அப்பால் நான் செல்லமுடியாது.” அந்தகக்குலத்தவர் “ஆம் ஆம்” என்றனர். “ஆனால் நான் இன்று கம்சரின் படைத்தலைவன். என்னிடமிருக்கும் அனைத்தும் அவர் அளித்தவை. நான் சென்று முறையாக என் விலக்கத்தை அவருக்கு தெரிவித்தாகவேண்டும். அதுவே முறையாகும்” என்றார் சத்ராஜித். "உடனே மகதத்தின் படைகள் என்னை சூழ்ந்துகொள்ளும். நான் அப்படையெடுப்பை தாங்கிநிற்கவேண்டுமென்றால் எனக்கு யாதவகுலங்கள் துணைநின்றாகவேண்டும்.”

“அதை அஞ்சவேண்டியதில்லை அரசே. மார்த்திகாவதியும் மதுவனமும் உத்தரமதுராபுரியும் சதபதமும் கூர்மபுரியும் ஒரேநாளில் போரை அறிவிக்கலாம். அதை அவர்கள் அஞ்சுவர்” என்றான் இளைய யாதவன். பிரசேனர் “இப்போதே இன்னொன்றையும் தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன். இன்று மதுராபுரிக்கு கப்பம்கட்டும் சிற்றரசாக உள்ளது களிந்தகம். நாளை இளைய யாதவர் மதுராபுரியை கைப்பற்றுவார் என்றால் களிந்தகத்தின் நிலை என்ன?” என்றார். இளைய யாதவன் “இளையமன்னர் எதிர்நோக்குவது என்ன?” என்றான். ”போருக்குப்பின் மதுராபுரிக்கு நாங்கள் கப்பம் கட்டமாட்டோம். இணையான நிலைகொண்ட யாதவ அரசாக நீடிப்போம்” என்றார் பிரசேனர்.

அக்ரூரர் “அது எப்படி? இன்று யாதவர்களுக்கிருப்பது மதுராபுரி என்னும் வல்லமைகொண்ட அரசு. நமக்குள் எவ்வண்ணம் இருப்பினும் மதுராவின் ஆற்றலால்தான் பேரரசுகள் யாதவர்களை அஞ்சுகின்றன” என்றார். “யாதவ அரசுகளின் வலுவான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்வோம். அதன் கூட்டுமுடிவுகளுக்கு மட்டுமே களிந்தகம் கட்டுப்படும்” என்றார் சத்ராஜித். “அரசே, அப்படியொரு கூட்டமைப்பு உருவானாலும்கூட அதற்கு ஒரு தலைமை வேண்டும்... அத்தனை முடிவுகளையும் குலச்சபைகள் கூடி எடுக்கமுடியாது” என்றார் அக்ரூரர். “அதை பின்னர் முடிவுசெய்வோம். யாதவக்கூட்டரசுக்கு மட்டுமே களிந்தகம் கட்டுப்படும்” என்று சத்ராஜித் சொன்னார்.

“அவ்வாறே ஆகுக!” என்றான் இளைய யாதவன். அவை மெல்ல உடல்தளரும் ஒலிகள் எழுந்தன. குலமூத்தார் அனைவரும் மெல்லிய குரலில் பேசிக்கொண்ட ஒலி முழக்கமாக எழுந்தது. பிரசேனர் கைகளைத் தூக்கி "நன்று, இதுவரை சொல்லாடி களைத்துவிட்டோம். சற்று பாலமுதும் அப்பமும் உண்டு உயிர்மீள்வோம்” என்றார். அத்தனைபேரும் அந்த உணர்வலைகளிலிருந்து மீளவிழைந்தனர் என்பதனால் சிரிப்பும் கூச்சலுமாக கைகளைத் தூக்கி “ஆம் ஆம்” என்றும் “நல்லுணவு! நல்லுணவு!" என்றும் கூவினர். சாம்பன் “பாலமுது முதியோருக்கு. இளையோருக்கு கள்ளமுது!" என்றான். சிரித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் அனைவரும் வெளியே சென்றனர்.

வெளியே பிசிர்மழை அடங்கி வெயில் வழிந்து நின்றிருந்தது. நீராடிய புல்லிதழ்களும் கூழாங்கற்களும் இலைகளும் ஒளிவிட்டன. பாதிநனைந்த மரங்கள் காற்றில் மெல்ல அசைந்தாடின. கூரைவிளிம்புகளில் இருந்து ஒளிமணிகள் உதிர்ந்து மணலில் குழியிட்டன. மஹதி “வாடி...” என்று பாமையை தோள்பற்றி அழைத்துச்சென்றாள். ஆய்ச்சியர் மூங்கில்குவளைகளில் மென்பருப்பு போட்டு வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்த பாலமுதை அள்ளி வைத்து யாதவர்களுக்கு அளித்தனர். மஹதி மரத்தட்டில் இரண்டு அப்பங்களை எடுத்துவைத்து மஞ்சள்மூங்கில்குவளையில் ஆவியெழும் பாலமுதை ஊற்றி அவள் கையில் கொடுத்து “கொண்டு சென்று கொடு” என்றாள். “யாரிடம்?” என்றாள் பாமா. “அடி, அதற்குள் பெண்ணுக்குரிய மாயங்களை கற்றுக்கொண்டாயா? யாருக்கு என்று அறியமாட்டாயா நீ?” என்றாள் மஹதி. அவள் தலைகுனிந்தாள்.

“இன்று தெரிந்ததடி, எதற்காக இத்தனை முழுமையுடன் நீ பூத்து மலர்ந்திருக்கிறாய் என்று. மூதன்னையர் அனைத்தும் அறிந்தவர்கள். விண்ணுலகில் அவர்கள் கூழாங்கற்களை நகர்த்திவைத்து விளையாடுவதன் விரிவே மண்ணில் அழுதும் சிரித்தும் நாம் ஆடும் வாழ்க்கை.” அவளைத் தழுவி “அங்கே தங்கள் பொக்கைவாய் திறந்து சுருங்கிய விழிகள் ஒளிவிட அவர்கள் உன்னைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போது” என்றாள்.

அடிக்கால்கள் வியர்வை கொள்ளும் என்பதை பாமா அப்போது அறிந்தாள். மலைவிளிம்பின் பாறையில் நிற்பதுபோல தொடைகள் நடுங்கின. பற்றுக்கோல் என அந்த தாலத்தை பிடித்துக்கொண்டு நிலம் நோக்கி நடந்தாள். இறுகி குளிர்ந்து நெஞ்சை நிறைத்த மூச்சை விட்டு சற்றே விழி எடுத்து அப்பாதங்களை நோக்கினாள். அங்கே சென்று சேர ஏழு அடி தூரம் என்று அறிந்தாள். ஏழுபிறவிகளினூடாக அடைந்தது அது என உணர்ந்தாள்.

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 5

ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த வெளி அவளைச் சுற்றி இறுக்கியது. அவள் கால்களுக்கு முன்னால் அடியின்மை என ஆழம் வெளித்திருந்தது. தயங்கித் தயங்கி யுகயுகங்களாக நின்றிருந்தாள். முள்முனையில் தவம்செய்தாள். ஐந்நெருப்பு அவளை சூழ்ந்திருந்தது. கருதுசொல்லெல்லாம் உதிர்ந்து எஞ்சிய ஒற்றைச்சொல் திறந்து எழுந்த பாதையில் முதல்காலடி எடுத்துவைத்தாள்.

அவள்முன் நாணம் நிறைந்த புன்னகையுடன் கன்னி ஒருத்தி தோன்றினாள். மணிமகுடத்திற்குக் கீழ் இமைசரிந்த நீள்விழிகள். அங்குசமும் வேலும் ஏந்திய மேலிரு கைகள். அளித்தல் காத்தல் என மலர்ந்த கீழிரு கைகள். செம்பட்டாடை அணிந்து தோகைமயில் மேல் அமர்ந்திருந்தாள். "இளையவளே, என்னை கௌமாரி என்கின்றனர் கவிஞர். உன் கன்னிமைக்கு இதுநாள்வரை காவலிருந்தேன்” என்றாள். ”தேவி., அருள்க!” என்றாள் பாமா. “அங்கிருப்பவனுக்கு நீ அளிப்பதென்ன என்று சொல்” என்றாள் தேவி. பாமா நாணி சிறு உதடுகளைக் கடித்து தலைகுனிந்தாள். “சொல் என் கண்ணல்லவா?” என்றாள் அன்னை.

“என் இல்லத்தில் ஏழு சிறுமூலைகளை நீ அறிந்திருப்பாய்” என்றாள் பாமா. “ஒவ்வொன்றிலும் நான் சேர்த்துவைத்த சிறுபொருட்கள் உள்ளன. சிறுகூழாங்கற்கள், வளையல்துண்டுகள், வாடிய மலர்கள், ஆடைநூல்சுருள்கள், ஆடித்துண்டுகள், உடைந்த களிப்பாவைகள். இன்றுவரை எவரும் அவற்றை அறிந்ததில்லை. அன்னையும் செவியிலும் ஆய்ச்சியரும் அறியாது உருளும் விழிகளுடன் மெல்லடிவைத்துச் சென்று அங்கே என்னை ஒளித்துக்கொள்வேன். கரந்து வைத்தவற்றை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன். சிறுவிரல்களால் வருடியும் எண்ணியும் கூர்ந்தும் நெஞ்சோடணைத்தும் நோக்கி உள்ளே அடுக்கி வைப்பேன். ஒவ்வொன்றையும் நோக்கி எனக்கென மட்டுமே பேசிக்கொள்வேன். அவைகொண்ட பொருளென்ன என்று நானறியேன் தேவி, நீயே அறிவாய். அவனுக்கு நான் அளிக்கும் முதற் காணிக்கை அவையல்லவா?”

புன்னகையுடன் அன்னை ”அவனை உன் மடியில் ஆடும் மைந்தனாக்கினாய் சிறியவளே. அவன் வாழ்க!” என்று சொல்லி காற்றிலாடும் வண்ணத்திரையென்றாகி மறைந்தாள். புன்னகையுடன் விழிதூக்கி அவள் அவன் முழங்கால்களை நோக்கினாள். இறுகியகெண்டைக்கால்களில் அவன் நடந்த மலைச்சரிவுகளை, நீந்திய நதியலைகளை கண்டாள். அவனை நோக்கி தன் சிறுசெம்பாதத்தை வைத்தாள்.

செம்பருந்தின் சிறகடிப்புடன் அவள் முன் தோன்றினாள் வைஷ்ணவி. சங்குசக்கரம் ஏந்திய மேலிரு கைகள். அருளி அணைக்கும் கீழிரு கைகள். அந்தியெழுந்த மலைச்சுனை நிறம். வைரமணிக்கண்களும் வெண்பல் மலர்ந்த இதழ்களும் நகைத்தன. "இனியவளே உன்னை பெண்ணென அறியச்செய்தவளல்லவா நான்?” என்றாள் அன்னை. “சொல்க கன்னியே, அங்கிருக்கும் நீலனுக்கு நீ அளிக்கவிருப்பது என்ன?”

புன்னகையுடன் அவள் சொன்னாள் “தேவி, நான் பதிந்த நடைகொண்டவள். நாணும் விழிகொண்டவள். மெல்லிய சொல்கொண்டவள். ஆனால் செம்பட்டுக்குள் கூர்வாள் என என்னுள் இருக்கும் அச்சமின்மை ஒன்றுள்ளது என்று நீ அறிவாய்.” அன்னை புன்னகைத்தாள். “தெய்வங்களின் பெருஞ்சினத்திற்கு முன்னும் நிமிர்ந்து நின்று விழிநோக்கும் நெஞ்சை எனக்குள் அறிகிறேன். அன்னையே, அவன் அஞ்சி ஓடி வருகையில் அணைக்கும் வெம்முலைகள் கொண்டிருப்பேன். ஆற்றுப்படுத்தி அழைத்துச்செல்லும் கைகளும் அருள்கனிந்த சொற்களும் கொண்டிருப்பேன்.” இருளில் நிலவெழுந்ததுபோல நகைத்து வைஷ்ணவி சொன்னாள் “ஆம், விரல்பற்றி வழிகாட்டும் வளைக்கரம் நீ. உன் விரலாகுக அவன் ஊர்தி!”

அவன் இடைசுற்றிய பொன்னிறப்பட்டு. அதன் சித்திர நூல்பின்னல்கள் மின்னிக்கொண்டிருந்தன. மடிப்புகளும் கசங்கல்களும் சுருக்கங்களும் ஒளியாலானவை. ஒவ்வொன்றிலிருந்தும் அவை நிகழ்ந்த கணத்தை சென்றடைய முடியுமா? அவன் நிகழ்ந்த விதம் உருவாக்கிய அழகா அது? இளஞ்சிவப்புக் கச்சை அவன் இடைசுற்றியிருந்தது. அது இறுக்கிய வயிற்றில் நீலக்கடம்பின் காயின்மேலெழுந்த பூமுள் என மயிர்வரிசை நீர்வழிந்த தடத்தில் எழுந்த மென்பாசி போல் குவிந்து இறங்கிவந்து உந்தியில் சுழித்து உள்ளே சென்றது.

மண்கிளறி காலுதைத்து முகம்தாழ்த்தி கொம்புதூக்கிய எருதின் மேலேறியவளாக எழுந்தருளிய மகேஸ்வரியை அவள் கண்டாள். வெண்மலர் விரிமுகத்தில் நுதல்விழி திறந்திருந்தது. கீழே இரு அனல்விழிகள் எரிந்தன. எழுந்த சடைமகுடத்தில் கீற்றுப்பிறை நிலவு பொலிந்தது. விழுதென சரிந்தது நீலநிழல்சடைக்கற்றை அருவி. வலது மேற்கையில் விழிமணி மாலையும் இடதுமேல்கையில் மும்முனைவேலும் இருந்தன. அஞ்சலும் அருளலுமென அருகழைத்தன கீழிருதடக்கைகள். நாகப்பிஞ்சு சுருண்டு குழையாகி நாகினி வளைந்து கச்சையாகி மாநாகம் சரிந்து மேலாடையென்றாகி நஞ்சு கவ்விய அமுதமென அன்னை தெரிந்தாள்.

“மகேஸ்வரி என என்னை வணங்குக! இவ்வுலகு புரக்கும் பெண்மை நான்” என்றாள். அவளைப் பணிந்து நின்ற பாமையிடம் “சொல், விழிமலர்ந்தவளே. அங்கிருக்கும் உன் ஆண்மகனுக்கு நீ அளிக்கப்போவதென்ன?” என்றாள். ”உன்னில் சேர்ந்த அனைத்தையும்தான் அன்னையே” என்றாள் பாமா. ”என் விரல்களில் முலைக்கண்களில் விழிமுனைகளில் உள்ளத்தின் இருளில் ஊறிய நஞ்சை. நானமர்ந்திருக்கும் ஆணவத்தை. எங்கும் மடங்காத என் பெண்மையை” என்றாள். “என்னை வெல்லும் விழைவை. வென்றமையும் நிறைவை. நெஞ்சிலும் தலையிலும் நூறு விழுப்புண்களை.” ஒளிரும் பற்காட்டி நகைத்து அன்னை சொன்னாள் “ஆம், அவன் பேரின்பம் கொண்டவனாவான்.”

நிலவென மென்மயிர்கற்றைகொண்டு எழுந்த அவன் நெஞ்சை கண்டாள். மழைமுகில் பரந்த நீலவானம். அவள் முகமெனும் கதிர் மூழ்கி மறையும் நீலவிரிவு. அணுக அணுக திசையென்றாகும் பரப்பு. விலாவெலும்புகளின் வளைவுகள். பிளந்து இரு புயம்நோக்கி விரிந்த கருங்கற்பலகைகள் மேல் இரு செம்மணிகளை வைத்த ஆட்டக்களம். விண்நோக்கி எழும் தளிர் என அந்நீலம் நோக்கி சென்றாள். மண்ணில் உதிரும் எரிமீன் என அப்பரப்பு நோக்கி விழுந்தாள்.

இருளெழுந்தது போல் வராகி அவள் முன் எழுந்தாள். பன்றிமுகம். மதமெழுந்த சிறுவிழிகள் சேற்றில் நின்ற கெண்டை என ஒளிவிட்டசைந்தன. மணிமுடியில் நின்ற நீலக்கற்கள் இரவு சூடிய விண்மீன்களென்றாயின. எழுந்த தேற்றைகள் இரு பிறைநிலவுகள். வலக்கையில் மேழி, இடக்கையில் முசலம். அருளி அணைக்கும் அங்கைகள் இரண்டு அவற்றின் கீழே. கருமேனி சுற்றிய கரியபட்டாடை தென்றல் தொட்ட இருளென அசைந்தது. "ஆற்றல் வடிவான என்னை வணங்குக!” என்றாள். அவள் முன் பணிந்து நின்றவளிடம் கேட்டாள் “அவனுக்கு அளிக்கவிருப்பதென்ன அழகியே?”

”என் நிகரற்ற பொறாமை” என்றாள் பாமா. "அவனை இருளெனச் சூழ்ந்துகொள்வேன். நானன்றி எவரும் அவனை காணவிடமாட்டேன். மண் துளைத்து நான் செல்லும் ஆழங்களில் அவனை புதைப்பேன். என் கூரெயிற்றால் எடுத்து முத்தமிடுவேன். என்னில் அவனை விதைத்து முளைத்தெழுவேன். அவன் வானில் நானே கிழக்கும் மேற்கும் என ஒளிவிடுவேன்.” கண்கனிந்து அன்னை அவள் தலைதொட்டாள். “அவனை முழுதும் அடைவாய் நீ” என்றாள்.

தோள்களென எழுந்தவற்றை அருகணைந்து கண்டாள். வலத்தோளில் வானம் சுழித்து ஆழியென்றாகி அமைந்த முத்திரை. இடத்தோளில் கடலோசை குவிந்த சங்கு. கழுத்துக்குழியை நடுமுள்ளாக்கி இருநிலையும் நிகர்நின்ற துலாவென தோளெலும்புகள். தோள்முழைகள். மானுண்டு மயங்கும் மலைப்பாம்பென புயங்கள். அத்திமரத்தடியில் ஒட்டி இறங்கிய முல்லைக்கொடி என பெருநரம்பு. அங்கே சுற்றிக்கட்டப்பட்ட தாலிக் காப்பு. அலையென எழுந்து வந்து திசைவளைத்து அவளைச் சூழும் தோள்கள். தலைசாய்த்து அவள் இரவுறங்கும் அரவணைகள். அவள் கழுத்தை வளைத்து தலைமயிர் கோதும் நாகபடமென கைகள். ஐந்து ஒளிர்நாக்குகள் எழுந்தவை. ஐந்து மணி கவ்வியவை. மீட்டும் கைவிரல்கள். அவ்விசை கேட்டு அதிரும் கைவிரல்கள்.

தீ பற்றி எழும் ஒலியுடன் அவள் முன் வந்தவள் சாமுண்டி. இருவிழிக் கரியில் எரியென எழுந்த நுதல்விழிகள். திசையெங்கும் கிளைவிட்டு எழுந்த காட்டுமரமென எட்டு பெருங்கரங்கள். சூலம், வாள், அம்பு, சக்கரம் ஏந்திய வலக்கைகள். வடச்சுருள், கேடயம், வில், சங்கு கொண்ட இடக்கரங்கள். செங்கனல் விழுதென சடைகள். மின்னல்கொடியென சுற்றித் துடிக்கும் செம்மணியாரங்கள். கொள்ளிமீன் நின்ற குண்டலங்கள். “உன் கொடையென்ன அவனுக்கு?” என்றது கீழ்வானில் எழுந்த இடியோசை.

“என் பெருஞ்சினம்” என்றாள் பாமா. “சொல்பொறுக்க மாட்டேன். நிகர் வைக்க ஒப்பேன். முதல்சொல் சொல்லேன். மணியிடையும் தலைதாழ மாட்டேன்.” அன்னை புன்னகைசெய்தாள். “கொல்லும் படைக்கலங்கள் கொண்ட உடலுடன் அவன் முன் நிற்பேன். விழி எரிவேன். முகம் கனல்வேன். கை துவள தோள் நிமிர்வேன். சொல் பொங்குவேன். சுடுவேன். அணைந்து கரியாகி எஞ்சுவேன்... ஒருபோதும் குளிரமாட்டேன்.” அன்னை நகைத்து “வாழ்க அவன் குடி!” என்று அணைந்தாள்.

எழுந்த நீலத்திருமுகம். விழிவண்டுகள் அமர்ந்த தாமரை. கருவளைத் துண்டுகள் என சுரிகுழல் சரிந்த நெற்றி. நீ என சுட்டும் விரலென மூக்கு. மலர்குழை தழைந்த காது. சிரிப்பை அள்ளி முகந்தூற்றும் சிறுசிமிழ்க் கண்கள். நோக்கு நோக்கென்று கெஞ்சி நோக்கும்போது கவ்வி நோக்கு தழைந்ததும் நகைப்பவை. நீலச்சுனையில் விழுந்து கிடக்கும் இரு விண்மீன்கள். அன்றுண்ட வெண்ணை என்றும் மணக்கும் செவ்விதழ். முத்தமிட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்ற மென்மீசை. பால்நிறைந்த பைதல். தலையால் முட்டித்தள்ளி துள்ளியோடும் சிறுபயல். காதல்கொண்டு புல்கி குனிபவனின் மயல். கனிந்து தலைகோதிச் சொல்லும் இன்சொல். ஞானம் உரைத்து அமைந்த குளிர். எத்தனை நகை சூடியவை அவ்விதழ்கள்?

மின்னல் அதிர்ந்தமைய அவள் முன் எழுந்தவள் இந்திராணி என்றறிந்தாள். வெண்முகில்யானை மேல் அமர்ந்திருந்தாள். இளவெயில்பட்ட மேருவென மணிமுடி சூடியிருந்தாள். செம்பொன் பட்டாடை மின்னி அலுங்க வலக் கால்மடித்து இடக்கால் நீட்டி நிமிர்ந்தமர்ந்து புன்னகைத்தாள். நீல எழில்விழிகள் நடுவே நெற்றியில் அமைந்த செந்தூரம். காத்தும் கனிந்தும் விரிந்த கைகளில் சங்கும் சக்கரமும் ஒளிர்ந்தன. “அரசி, சொல்க! ஏதளிப்பாய் அவனுக்கு?” என்றாள்.

“நிகரென அமர்வேன்” என்றாள் பாமா. “அவன் அடைந்தவற்றுக்கெல்லாம் பாதியாவேன். அவன் அறம் வளர்க்கையில் துணையாவேன். அரியணை வீற்றிருப்பேன். அவன் இல்லமெங்கும் நிறைவேன். முற்றத்தில் கோலம். முகப்பறையில் மலர்ச்செண்டு. மஞ்சத்தில் மது. அடுமனையில் அனல். புறக்கடையில் பசு.” அன்னை கைதூக்கி அவள் நெற்றியைத் தொட்டு “அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தி மறைந்தாள்.

குழலில் எழுந்த விழியை அவள் கண்டாள். நோக்கா விழி. ஒரு சொல்லும் எஞ்சாதது. அழகொன்றே ஆகி அமைந்தது. காற்றில் மெல்ல நலுங்கியது. கருமுகில் மேல் எழுந்த இந்திரநீலம். அவள் அருகணைய இளந்தென்றல் என அவள் முன் தோன்றியவள் பிராமி. விழிமணி மாலையென ஒழுகிய ஓங்காரம். வான்கங்கை நிறைத்த பொற்கமண்டலம். குளிர்முகில் தேங்கிய விரிவிழிகள். வாழ்த்தும் வளமும் என ஆன செங்கைகள். அலைபிறந்த நுரையென தூவி கொண்ட அன்னம் மேல் மலரமர்வில் அமர்ந்து புன்னகைத்து அவள் வினவினாள் “அளிப்பதற்கு எஞ்சுவதென்ன மகளே?"

“அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர்” என்றாள் பாமா. "இறுகி ஒரு வைரமென்றாகி அது என்னில் நிறையும். அதை விண்ணுக்கு எடுத்துச்சென்று அவனுக்குப் படைப்பேன். ஏழ்பிறவியில் எவரும் தீண்டாத ஒன்று. அவன் சொல் நின்ற கலம். அவன் குடி எழுந்த நிலம். அவன் குலநினைவுகளில் அன்னையென்றாவேன். அவன் கொடிவழியினர் பாடும் பெருந்தெய்வம் நான்.” அன்னை விழிமலர்ந்து “அருள் பெறுக!” என வாழ்த்தி மறைந்தாள்.

ஏழு எட்டு வைத்து அவனருகே சென்றணைந்தபோது அவள் மேலுதடு பனித்திருந்தது. நடுங்கும் கைகளில் நின்று குவளை அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் அருகே நின்றிருந்த அவள் தந்தையிடம் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவள் அசைவைக்கண்டு திரும்பி நோக்கினான். “என் மகள், சத்யபாமை” என்றார் சத்ராஜித். “தங்கள் குலம் வாழ்த்தப்பட்டது” என்றான். “தங்களுக்கான அமுதம்” என்று அவள் சொன்னதை உதடுகள் உச்சரிக்கவில்லை. அவன் கைநீட்டி அவள் தாலத்தை பெற்றுக்கொண்டான். தாளா எடை ஒன்று அகன்றது போல் அவள் நிமிர்ந்தாள்.

அப்பத்தை வலக்கையில் எடுத்து அவன் மெல்ல கடிப்பதை, இடக்கையில் ஏந்திய குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்துவதை, மென்மயிர்படிந்த அவன் கன்னம் அசைவதை அவள் நோக்கி நின்றாள். பின்னாலிருந்து அவளை செவிலியன்னை நோக்குவதை உணர்ந்து திரும்பி நோக்கினாள். “வந்துவிடு” என்று உதடை அசைத்துச் சொல்லி விழியால் ஆணையிட்டாள். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்து ஒரு கணம் விதிர்த்தாள். ஓசைகேட்ட இளமான் என துள்ளி திரும்பி ஓடிச்சென்று அன்னையை அணுகி தோள்தழுவிக்கொண்டாள். “மாமங்கலையாகுக கண்ணே!” என்றாள் மஹதி.

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 1

யமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்?” என்று நீண்ட கழுத்தை நீட்டி நோக்கியபோது அவை வணிகப்படகுகள் அல்ல என்று அறிந்தாள். வியப்புடன் “அவை அணிப்படகுகள் அல்லவா?” என்றாள்.

மஹதி எட்டிப்பார்த்து “மரங்கொத்திக் கொடிகள். அவை பார்ஸ்வ குலத்தவருக்குரியவை அல்லவா? எங்கு வருகிறார்கள்?” என்று சொன்னதுமே அவளுக்கு புலப்பட்டுவிட்டது. “ஏடி, உள்ளே சென்று அரசியிடம் சொல். விருந்து வந்துகொண்டிருக்கிறது” என்றாள். “என்ன விருந்து?” என்றாள் ராகினி. அதற்குள் ஆய்ச்சி ஒருத்தி புரிந்துகொண்டாள். “மணத்தூது வருகிறது. அரசரும் நீண்டநாளாக இதைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் என்றார்கள்” என்றாள்.

ராகினி ஒருகணம் கடந்து அதைப்புரிந்துகொண்டு திரும்பி சிற்றாடையை அள்ளிக்கொண்டு துள்ளி ஓடி இல்லத்திற்குள் சென்று சிறுதிண்ணையில் மலர்தொடுத்துக்கொண்டிருந்த சத்யபாமையை அணுகி “எழுந்திரடீ. உன்னை மணம்பேச வருகிறார்கள்” என்றாள். சத்யபாமா கனவு நிறைந்த விழிகளுடன் நிமிர்ந்து “என்ன?” என்றாள். ராகினி படபடப்புடன் அமர்ந்துகொண்டு “உன்னை மணம்பேச பார்ஸ்வகுடியினர் வருகிறார்கள். யமுனையில் ஏழு அணிப்படகுகள் அணைந்துள்ளன. குலமூத்தாரும் தந்தையுமாக சததன்வா வருகிறார் என்றாள் செவிலியன்னை” என்றாள்.

அப்போதும் சொற்கள் சத்யபாமைக்கு பொருளாகவில்லை. "எவரை?” என்றாள். “என்னை, போதுமா? இங்கே மணம்பேச எவரிருக்கிறார்கள்?” என்றாள் ராகினி. “உன்னைத்தான்... எழுந்திரு. பட்டும் பொன்னும் அணிந்துகொள். பொட்டிட்டு பூச்சூடு... அன்னை இதோ வருவார்கள்.” அவள் பேசிக்கொண்டிருக்கையிலேயே மாலினி ஆடை ஒலிக்க அணுகி வந்து “ஏடீ, என்ன செய்கிறாய்? எழுந்து அணிசெய்துகொள். உன் தந்தையின் ஆணை” என்றாள். ராகினி “நான் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் அரசி...” என்றாள். மாலினி “இப்படி சொல்லிக்கொள்ளாமல் வருகிறார்கள்... எப்போது அமுது சித்தமாகவேண்டுமென தெரியவில்லையே” என்று புலம்பியபடியே உள்ளே ஓடினாள்.

ராகினி “எழுந்துவந்து நோக்கு.... உன்னை மணமாலை தேடிவரும் சித்திரம் உன் நினைவில் நிற்கவேண்டுமல்லவா?” என்று கைபற்றி எழுப்பினாள். சத்யபாமா எழுந்தபோது மடியிலிருந்து மலர்கள் உதிர்ந்தன. “என்னடி இது? மலர்தொடுக்கும் அழகா இது? ஒரு கண்ணியும் இறுகவில்லையே... கனவுகண்டு அமைந்தாயா?” என்றாள் ராகினி. உலர்ந்த இதழ்களும் கன்றியதுபோன்ற முகமுமாக சத்யபாமா “நான் மலரை நோக்கவில்லையடி” என்றாள். “எதைத்தான் நோக்கினாய் இத்தனை நேரம்?” என்ற ராகினி “சரி, மணச்செய்தி வந்ததும் நல்லதே. உன் கனவு கனியட்டும்... வா” என்று கைபற்றி இழுத்தாள்.

சத்யபாமா அவளுடன் சென்று ஏணி மேல் ஏறி மாடம் மீது நின்று நோக்கினாள். செந்நிறச் சித்திரப்பாய்கள் ஒவ்வொன்றாக சுருங்க கண்ணெதிரே வாடும் மலர்போல படகுகள் கரையை அடைந்தன. முதல்படகிலிருந்த காவலர் இறங்கி பலகைகளை நீட்டி படகின் மேல் வைத்தனர். உள்ளிருந்து பார்ஸ்வ குலத்தின் மரங்கொத்திக் கொடியுடன் ஒருவன் இறங்க தொடர்ந்து எழுவர் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் முழக்கியபடி வந்தனர். “மங்கல இசையுடன் வருகிறார்கள்... செவிலியன்னை படகில் இசைச்சூதர் இருப்பதைப் பார்த்துத்தான் சொல்லியிருக்கிறாள்” என்றாள் ராகினி.

சத்யபாமா பொருள் திரளாத விழிகளுடன் நோக்கி நின்றாள். “விழிகளால் அள்ளிக்கொள்ளடி... நீ எண்ணி எண்ணி துலக்கிவைக்கும் காட்சியென இது திகழவிருக்கிறது” என்றாள் ராகினி. யார் அவள் என்பதுபோல சத்யபாமா திரும்பி நோக்கினாள். படகிலிருந்து பார்ஸ்வகுடி ஆளும் கூர்மபுரியின் அரசர் கிருதாக்னி இறங்க அவருக்குப்பின்னால் சததன்வா இறங்கினான். அப்போதுதான் சத்யபாமா அக்காட்சிக்கு என்ன பொருள் என்று உணர்ந்து ராகினியின் கையைப்பற்றி “எனக்காகவா வருகிறார்கள்?” என்றாள். “ஆம், உனக்காகத்தான். பலநாட்களாகவே இந்தப்பேச்சுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள் ராகினி. “உன் தந்தை கூர்மபுரியினரின் துணையுடன் தன் நகரை வலுப்படுத்த எண்ணுகிறார். களிந்தகமும் கூர்மபுரியும் இணைந்தால் யமுனைக்கரையில் மதுராபுரிக்கு நிகராக நின்றிருக்கமுடியும் என்று அவர் எண்ணுவதாக சொன்னார்கள்.”

சத்யபாமா எதையுமே உளம்கொண்டிருக்கவில்லை. “இங்குதான் இருக்கிறாய். மத்துச் சரடிழுக்கும் ஆய்ச்சியர் அறிந்ததைக்கூட நீ அறிந்திருக்கவில்லையா?” என்று அவளது திகைத்த விழி நோக்கி ராகினி கேட்டாள். “நானறியேனடி...” என்றாள் சத்யபாமா. “மதுராவை யாதவர்கள் வென்றதுமே இது தொடங்கிவிட்டது. தன்னந்தனியாகச் சென்று கம்சரைக் கொன்றதனாலேயே மதுராவுக்கு முழுமுதல் தலைவராக இளைய யாதவர் ஆகிவிட்டார். அஸ்தினபுரியின் படைகொண்டுவந்து மதுராவை கைப்பற்றியதனால் அவர்கள் யாதவர்களுக்குச் செலுத்தவேண்டிய கடன் என ஏதுமில்லை. யாதவர்கள்தான் இன்று அவரை நம்பியிருக்கிறார்கள்” என்றாள் ராகினி. யாதவன் என்ற சொல்லையன்றி எதையும் சத்யபாமையின் உள்ளம் கொள்ளவில்லை.

”இளைய யாதவர் தெற்கே கூர்ஜரத்தின் கடற்கரையில் நகர் ஒன்றை அமைக்கவிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு அஸ்தினபுரியை ஆளும் அவரது அத்தையின் செல்வத்துணை உள்ளது. மதுராவை வெல்வதுவரை யாதவர்கள் ஒற்றுமையாக இருந்ததே அரிது என்று செவிலியன்னை சொல்கிறாள். இன்று அனைவரும் இளைய யாதவரைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். யாதவர்களின் பன்னிரு குலங்களுக்கும் அவரே தலைவர் என்பதுபோல ஒரு பேச்சு எங்கும் உள்ளது. யாதவ இளையோரெல்லாம் அவரைத்தான் தங்கள் அரசராக எண்ணுகிறார்கள்...” என்றாள் ராகினி. அறிந்ததை எல்லாம் பேசிவிட விழைவு எழுந்தாலும் சத்யபாமா எதையும் சிந்தைகொள்ளவில்லை என்று உணர்ந்தாள்.

கீழிருந்து செவிலியன்னை கூவியழைத்து “என்னடி செய்கிறீர்கள்? நீராடி ஆடைமாற்றுகிறீர்களா இல்லையா?” என்றாள். “இதோ” என்ற ராகினி “விரைந்து வாடி... இல்லையேல் நான் பழிகேட்கவேண்டியிருக்கும்” என்றாள். சத்யபாமா வருபவர்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். சததன்வா பொன்னூல்பின்னலிட்ட வெள்ளை அரையாடையும் இளமஞ்சள் மேலாடையும் பொன்னாலான குடிச்சின்னம் பதிக்கப்பட்ட செவ்வண்ணத் தலைப்பாகையும் அணிந்து மார்பில் மணியாரம் துவள நடந்தான். அவன் தந்தை கிருதாக்னி பொன்னூல் பின்னிய ஆடைகளும் குடிச்சின்னத்திற்குமேல் செங்கழுகின் இறகும் சூடியிருந்தார். தலைதூக்கிய மரம்கொத்தியை முனையில் கொண்டிருந்த வெள்ளிக்கோலை கையில் வைத்திருந்தார்.

சத்யபாமா “கீழே செல்வோம்... அவர்கள் தந்தையை நோக்கி முகமன் சொல்லி முடிப்பதற்குள் சித்தமாகிவிடுவேன்” என்றாள். “அய்யோடி... நீ இவரைத்தான் நெஞ்சில் வைத்திருந்தாயா? உன் பொருளெழா விழிகளை நோக்கி நானும் என்னவோ எண்ணிவிட்டேனே?” என்றாள் ராகினி. சத்யபாமா கீழிறங்கிச் சென்று செவிலியன்னை மஹதியிடம் “என் நீராட்டுக்கு எடுத்துவையுங்கள் அன்னையே” என்றாள். மஹதி புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு ராகினியிடம் “செம்மஞ்சளும் பயற்றுமாவும் எடுத்துக்கொடு. அவள் அணியவேண்டிய ஆடையை நான் சித்தமாக்குகிறேன்” என்றாள். “வாடி” என்று ராகினி அவள் கைபற்றி அழைத்துச்சென்றாள்.

மரப்பட்டைகள் சூழ்ந்த குளியலறையில் பீடத்திலமர்ந்த சத்யபாமையை ராகினி நீராட்டினாள். செம்மஞ்சள் அவள் உடலை பொன்னாக்கியதைக் கண்டு “யாதவக்குடியில் உன்னைப்போல் பொற்பாவையென எவருமில்லையடி” என்றாள். சத்யபாமா புன்னகைசெய்தாள். மஹதி பொற்பின்னல் கரையிட்ட சிற்றாடையும் செந்நிறமலர்கள் பின்னிய பீதர்நாட்டு பட்டு மேலாடையும் எடுத்து வைத்திருந்தாள். நீலக்கடம்பின் காய்போன்ற குழைகளை அணிந்தாள். மார்பில் வேப்பிலையடுக்கியதுபோன்ற சரப்பொளியாரம். நீர்த்துளியென மணியாரம். நீலம் பதித்த பொன்வளையல்கள். அன்னை அணிசூட்டிக்கொண்டிருந்தபோது ராகினி அவள் கால்களுக்கு செம்பஞ்சுக்குழம்பிட்டாள். கைகளுக்கு செம்பஞ்சிட்டு அந்நிறம் ஆடையில் படாதிருக்க மெல்லிய துணியால் சுற்றிக்கட்டினாள்.

அன்னை உள்ளே வந்து மூச்சிரைக்க “மஹதி, அவர்கள் அரசரில்லத்தை அடைந்துவிட்டனர். இளையவரும் உடனிருக்கிறார். மணம் கோரவே வந்துள்ளனர். அவர்களை அரசரும் இளையவரும் வரவேற்றதைப் பார்த்தால் முன்னரே செய்தியறிவிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது” என்றாள். “ஆம், செய்தியின்றி இத்தனை பேர் வரமாட்டார்கள்” என்றாள் மஹதி. “அப்படியென்றால் ஏன் நமக்கு சொல்லவில்லை?” என்று மாலினி கேட்டாள். “எதையோ அஞ்சுகிறார்கள். இவள் மணத்தை எவருமறியாமல் முடித்துவிட எண்ணுகிறார்கள்.” மாலினி விழி சுருக்கி ”எவரை?” என்றாள். “இன்று யாதவப்பெண்கள் அனைவருமே அவன் விரிந்த மார்பைத்தானே கனவுகாண்கிறார்கள்?” என்றபடி சத்யபாமையின் குழல்கற்றைகளுக்கு குங்கிலியப்புகை காட்டினாள் மஹதி.

அன்னை திரும்பி அவளை நோக்கி சினந்து “என்ன சொல்கிறாய்? அவர் இன்று பாரதமே நோக்கும் பெருமன்னர். அங்கே கடலோர நகரம் கால்கோளிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். பாஞ்சாலன் மகளையே அவர் மணம்கொள்ளக்கூடுமென்று கேள்விப்பட்டேன். கூர்ஜரனும் மாளவனும் வங்கனும் கலிங்கனும் தங்கள் இளவரசிகளுடன் அவருக்காக காத்திருக்கிறார்கள். காடுசுற்றி கன்றுமேய்க்கும் யாதவப்பெண்ணையா மணக்கப்போகிறார்? அரியணையமர்ந்து கோலேந்துபவளுக்கு செம்மொழியும் தொல்மொழியும் தெரிந்திருக்கவேண்டாமா? அவைமுன் தோன்றி அவள் அரசு சூழவேண்டாமா?” என்றாள். “பெண்களுக்கென்ன, கனவுகாண்பதுதானே வேலை?" என்றாள் ராகினி. “சித்தமாகி வாடீ” என்றபடி மாலினி திரும்பிச்சென்றாள்

நறுமணம் ஏறிய குழலை சுற்றிக்கட்டி கொண்டையாக்கி அதில் மணிமாலைகளை சுற்றிக்கட்டினாள் மஹதி. முல்லைச்சரம் சுற்றி முனை தொங்கவிட்டாள். நெற்றிச்சுட்டியும் பில்லைகளும் பொருத்தினாள். “ஆடிநோக்குகிறாயா கண்ணே?” என்றாள். ஆம் என்று சொல்லி சத்யபாமா எழுந்து தன் ஆடையை மெல்ல கையால் அழுத்தி மடிப்பு குலையாது நடந்து சென்று ஆடிமுன் நின்றாள். உடலை மெல்லத்திருப்பி தன்னை நோக்கி கையால் கூந்தலை அழுத்தி பில்லையை பொருத்திக்கொண்டாள். மேலாடை மடிப்பை சீரமைத்து திரும்பி ராகினியிடம் “ஒரு ஊசி” என்றாள்.

ஊசியை எடுத்து ஆடையை பொருத்தியபடி ராகினி “மணக்கோலம் அமைந்துவிட்டதடி பாமா” என்றாள். "உன்னைக் கண்டதுமே முடிவுசொல்லிவிடுவார்கள். களிந்தகமும் கூர்மபுரியும் ஒன்றாகலாகாதென்று மதுராபுரியினர் எண்ணக்கூடுமென்றுதான் இதை இத்தனை மந்தணமாக்கியிருக்கிறார்கள்.” அவள் கண்ணாடியில் தன்னை நோக்கிக் கொண்டாள். கண்களில் செவ்வரி ஓடியிருந்தது. முகத்துக்குள் குருதி வெம்மைகொண்டு ஓடத்தொடங்கிவிட்டிருந்தது.

அன்னை உள்ளே வந்து “அரசர் செய்தியனுப்பியிருக்கிறார். உன்னை மன்றுக்கு அனுப்பும்படி சொல்கிறார்... அடி ராகினி நீயும் உடன் செல்லடி... ஆடைமாற்றிக்கொள்” என்றாள். ராகினி “எனக்கென்ன, சற்று நேரம்” என்றாள். “கையில் அமுதுடன் செல். முதலில் கூர்மபுரியின் அரசரிடம் அதை கொடு. அவர் உன்னை வாழ்த்தியதும் தலைவணங்கி முகமன் சொல். அதன்பின் திரும்பி இளவரசரிடம் கொடு. அவர் சொல்லும் இன்சொல்லுக்கு மறுமொழி சொல். அவையை வணங்கி மீண்டுவா” என்றாள் மாலினி. திரும்பி ராகினியிடம் “அவள் தோள்பற்றி பின்னால் நின்றுகொள். அவள் பணிந்து முடித்ததும் நீயும் இன்சொல் சொல்லி அழைத்துக்கொண்டு வந்துவிடு” என்றாள். ராகினி “நான் பார்த்துக்கொள்கிறேன் அரசி” என்றாள்.

அரசரில்லம் மறுமுனையில் தனித்திருந்தது. அதன் முன்னால் கூர்மபுரியில் இருந்து வந்த காவலர்களும் இசைச்சூதர்களும் மகிழமரத்தடியிலும் மரமல்லி மரத்தடியிலும் நிழல்நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் வருவதைக்கண்டு ஒருவன் சொல்ல அத்தனை முகங்களும் திரும்பி நோக்கி மலர்ந்தன. முதிய சூதர் ஒருவர் தலைமேல் கைகூப்பி ஏதோ சொன்னார். சத்யபாமா அத்தனை நோக்குகளையும் தன்மேல் ஏற்று ஏதுமறியாதவள் போல சீரான அடிவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்து சென்றாள். இல்லம் விட்டு வெளியே வந்ததுமே அவள் நடை மாறிவிட்டதை ராகினி கண்டாள். அவளுக்குள் அறியாதெய்வமொன்று குடியேறியதைப்போல.

அரசரில்லத்தின் முற்றத்தை அவள் அடைந்தபோது சத்ராஜித்தின் அணுக்கச்சேவகனாகிய அஜன் ஓடிவந்து வணங்கி “வருக இளவரசி... தங்களுக்காகவே காத்திருக்கிறோம்” என்றான். ராகினி “இளவரசி, தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றாள். சத்யபாமா அதை தன் கையில் வாங்கிக்கொண்டு பட்டாடையை மெல்ல ஒதுக்கி படிகளில் காலடி எடுத்துவைத்து உள்ளே சென்றாள். வட்டவடிவமான இல்லத்தின் நடுவே இருந்த பெருங்கூடத்தில் இடப்பட்ட பீடங்களில் சத்ராஜித்தும் கிருதாக்னியும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். சத்ராஜித்தின் அருகே பிரசேனர் நின்றிருக்க கிருதாக்னியின் பின்னால் சததன்வா நின்றிருந்தான். பார்ஸ்வகுலத்து மூத்தவர் மூவர் அருகே அமர்ந்திருந்தனர்.

அனைவர் விழிகளும் அவளை நோக்கி திரும்ப சத்யபாமா நிமிர்ந்த நோக்கும் புன்னகையுமாக அவர்களை நோக்கியபடி அருகே சென்றாள். அவளுடைய நடையிலிருந்த மாறுதலை அக்கணமே சத்ராஜித் அடையாளம் கண்டுகொண்டார். வெயில்மங்கி மீள்வதுபோல புன்னகை அணைந்து எழ “என் மகள் பார்ஸ்வரே. இவளை அந்தகக் குலத்தின் விளக்கு என்கிறார்கள் பாணர்கள்” என்றார். கிருதாக்னி அவளை மலர்ந்த முகத்துடன் நோக்கி “யாதவகுலத்திற்கே மணிவிளக்கு என்றிருக்கவேண்டும்.... அந்தகரே, கைகூப்பி வணங்கவேண்டுமென்றே என் உள்ளம் எழுகிறது” என்றார். சததன்வாவின் உடல் காற்றில் எழத்தவிப்பதுபோலிருந்தது.

சத்யபாமா தாலத்தை மூடிய வெண்பட்டை விலக்கி பொற்குவளையை கிருதாக்னியிடம் நீட்டியபடி “அமுது ஏற்றுக்கொள்க மூத்தவரே!” என்றாள். அவர் குவளையை எடுத்துக்கொண்டு “திருமகள் அளிக்கும் அமுதென்றே கொள்கிறேன் குழந்தை” என்றார். “இத்தருணத்தில் எங்கள் மூதன்னையர் அனைவரையும் வாழ்த்தட்டும்” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் தாலத்தை நீட்டி “அமுது கொள்க இளவரசே!” என்றாள். அவன் குவளையை எடுத்துக்கொண்டு “இந்நாள் என்றும் நினைவில் வாழவேண்டும்” என்றான். "பார்ஸ்வகுலத்தின் வருகை அத்தகையது” என்றாள் சத்யபாமா. திரும்பி பார்ஸ்வகுலமூத்தாருக்கு அமுதளித்துவிட்டு தாலத்தை ராகினியிடம் நீட்டினாள்.

ராகினி தலைவணங்கி “மங்கலங்கள் பூக்கும் வேளை என்று பாணர் சொன்னார்கள். நற்செய்தியுடன் வந்திருக்கிறீர்கள். அனைவரையும் வணங்குகிறேன்” என்றாள். சத்ராஜித் அவர்கள் செல்லலாம் என்பதுபோல மெல்ல விழியசைத்தார். சத்யபாமா “மூத்தவரே, தாங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் அறியலாமா?” என்றாள். சத்ராஜித் ஏதோ சொல்லப்போக கிருதாக்னி அதை கையால் தடுத்து “அறியலாம் குழந்தை. முன்பு நம் அன்னையர் அவையமர்ந்து அரசாண்டனர் என்று கேட்டிருக்கிறேன். அவர்களின் முகம் உன்னைப்போலத்தான் ஒளியுடன் இருந்திருக்கவேண்டும்” என்றார். “நாங்கள் என் மைந்தனுக்கு உன்னை மணக்கொடை கோரி வந்திருக்கிறோம்.”

“அதன் நோக்கத்தை நீங்கள் விளக்கவேண்டுமென விழைகிறேன்” என்றாள் சத்யபாமா. “முதன்மை நோக்கம் என் மைந்தன் உன்மேல் மாளா பெருமையல் கொண்டிருக்கிறான் என்பதே. அவன் விழிகளை நோக்கியதுமே இதை முடிப்பதென்று நான் முடிவெடுத்தேன். உன்னைக் கண்டபின் என் குடிவாழ நான் செய்யக்கூடுவது இது ஒன்றே என்று உறுதிபூண்டேன்” என்றார் கிருதாக்னி. “ஆனால் இன்றைய அரசுநிலையையும் நீ அறிந்திருப்பாய். விருஷ்ணிகுலம் இன்று யாதவர்களுக்கு தலைமைதாங்குகிறது. மதுவனத்தை சூரசேனர் ஆள்கிறார். அவர் மகளைப் பெற்ற குந்திபோஜரால் ஆளப்படுகிறது மார்திகாவதி. மதுராவை மூத்தயாதவர் பலராமர் ஆள்கிறார். வசுதேவரின் துணைவி தேவகி உத்தரமதுராபுரியின் மூதரசியும்கூட. சதபதத்தை ஆளும் போஜகுலத்து கிருதவர்மன் தன் வாளை உருவி இளைய யாதவனின் காலடியில் வைத்துவிட்டான். ஆகவே யாதவ அரசுகளில் நமது இரு அரசுகள் அன்றி அனைத்துமே ஓரணியில் நின்றிருக்கின்றன. நாம் இருவரும் ஒன்றாகவில்லை என்றால் அழிவோம். ஆகவே உன் தந்தை இந்த மணத்தை விழைகிறார்.”

“அழிவோம் என்பது உங்கள் அச்சமா?” என்றாள் சத்யபாமா. “இல்லை குழந்தை. அரசு சூழ்தலில் எப்போதும் நிகழ்வது இது. யாதவப்பெருங்குலங்களில் அரசெனத் திரண்டவை இவையே. நாங்கள் அமைத்துள்ள இவ்விரு அரசுகளையும் அழித்துவிட்டால் மட்டுமே யாதவர்களின் ஓரரசாக துவாரகை எஞ்சமுடியும். எந்த அரசுவிற்பன்னனும் அதையே எண்ணுவான்” என்று கிருதாக்னி சொன்னார். பார்ஸ்வமூத்தார் ஒருவர் “குழந்தை, ஓர் அரசென்பது எளிதாக உருவாவதல்ல. காட்டில் ஆயிரம்செடிகள் முளைக்கும். தலைமுறைக்கொரு ஆலமரமே வேரோடி எழும். இவ்விரு அரசுகளும் நாமடைந்த வெற்றிகள். நாம் இவற்றை இழக்கலாகாது” என்றார்.

“அவ்வண்ணமென்றால், நீங்கள் இருவரும் கூட்டமைப்பது துவாரகைக்கு அறைகூவல் அல்லவா? அவரது படைவந்து உங்களைச் சூழ்ந்தால் என்ன செய்வீர்? போரிட்டு நிற்கும் வல்லமை உள்ளதா நம்மிடம்?” என்றாள் சத்யபாமா. “இல்லை. இன்று நாம் சிறியநாடுகளே. ஆனால் நாம் மகதத்தை துணைகொள்ளமுடியும். இளைய யாதவனை மகதம் அஞ்சிக்கொண்டிருக்கிறது. அவன் அஸ்தினபுரியின் துணைவன் என்று கணித்து தருணம் நோக்கியிருக்கிறது” என்றார் கிருதாக்னி “இளையவன் துவாரகையை அமைப்பதற்குள் ஒரு போர் எழவேண்டுமென விழைகிறார் மகதத்தை ஆளும் ஜராசந்தர். இளையவனோ துவாரகையை அமைப்பதுவரை போரை விழையவில்லை... இன்று நாம் மகதத்தை துணைகொண்டால் நம்மை துவாரகை தீண்டமுடியாது.”

“மூத்தோரே, யாதவர்களின் பேரரசு ஒன்று அமையாதிருக்கும்பொருட்டு நாம் மகதத்தை நாடுகிறோம் என்றல்லவா இதற்குப்பொருள்?” என்று சத்யபாமா கேட்டாள். “ஓர் ஆலமரம் உருவாவதே அரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிது? அகந்தையாலோ அச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காக என்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.” சததன்வா சினத்துடன் “என்ன பேசுகிறாய்? அச்சமா? எவருக்கு?” என்றான். “அரசு சூழ்தலில் துணைதேடுவதென்பது அச்சமல்ல... அதை அறிய அடுமனையில் உழல்பவர்களால் முடியாது.”

சத்யபாமா புன்னகையுடன் “ஆம், ஆனால் ஆண்களை அறிய பெண்களால் முடியும்” என்றாள் “அச்சமில்லை என்றால் ஒன்று செய்யுங்கள். இளைய யாதவரை ஒரு தனிப்போருக்கு அழையுங்கள்.” சததன்வா சினமெழுந்து துடித்த கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கிட்டித்தபற்களுடன் “நீ இங்கு அவைநின்று பேசுவதை உன் தந்தை ஏற்கிறாரா?” என்றான். “எந்த ஆணின் சொல்லுக்கு முன்னும் தாழ்வதல்ல என் தலை யாதவரே. நான் இக்குடியின் மூதன்னையரை மட்டுமே ஏற்றவள். தந்தையும் நாளை கொழுநனும் தனயர்களும் எவரும் எனக்கு சொல்லிடுபவரல்ல” என்றாள். “சொல்லுங்கள் யாதவரிடம் தனிப்போருக்கு எழுகிறீர்களா?”

சததன்வா “தருணம் வரும். அவனைநான் களத்தில் சந்திப்பேன். அவன் தலையறுத்து மண்ணில் இடுவேன்” என்றான். “ஆனால் இத்தருணத்தில் கூர்மபுரி அதற்கு சித்தமாக இல்லை. அதை நீயும் அறிவாய். நீ சொல்லும் இச்சொற்கள் என் கால்கள் தருணச்சகதியில் ஆழ்ந்திருப்பதை அறிந்து சொல்வதன்றி வேறல்ல.” சத்யபாமா வளையல்கள் ஓசையிட தன் கையை இடையில் வைத்து புன்னகையுடன் ”யாதவரே, நானும் வில்லும் வாளும் சக்கரமும் பாசாயுதமும் பயின்றவள் என்று அறிந்திருப்பீர். என்னுடன் போரிட வாருங்கள். வென்றால் என்னை அடையலாம்” என்றாள். சததன்வா திகைத்து சத்ராஜித்தை பார்த்தபின் “என்ன சொல்கிறாள்?” என்றான்.

சத்யபாமா மாறா நகையுடன் “போருக்கு எழுங்கள் யாதவரே. ஆனால் ஆணென்று கனிவுகொள்வேன் என்று எண்ணவேண்டாம். உங்கள் மார்பில் கால்வைத்து தலையறுத்து என் குடியன்னையர் முன் பீடத்தில் வைப்பேன்...” என்றாள். அவளைத் தொட கையெடுத்த ராகினி தயங்கி பின்னிழுத்துக்கொண்டு அமர்ந்திருந்த பார்ஸ்வகுலமூத்தாரை நோக்கினாள். அவர்களின் முகங்கள் தெய்வமெழக் கண்டவர்கள் போல மலர்ந்திருந்தன. சத்ராஜித் மெல்ல அசைந்து பின் நிமிர்ந்து தன் இளையவரை நோக்க பிரசேனர் “யாதவனே, அவள் சொல்வது உண்மை. எங்கள் குடியில் அவளுக்கு நிகரான வில்லவரும் வாளுடையோரும் பிறரில்லை” என்றார்.

சததன்வா ஏதோ சொல்ல வாயெடுக்க சத்யபாமா சிரித்தபடி “வேண்டியதில்லை யாதவரே, நீங்கள் அஞ்சிவிட்டீர்கள். இனி வெல்லமுடியாது” என்றாள். ”வெல்லமுடியாதென்றால் உயிர்துறந்து பெருமைகொள்ளலாம் என்ற எண்ணமே வீரரை தனிப்போருக்கு எழச்செய்கிறது. இறப்பதும் இழிவே என்றால் கையில் படைக்கலம் நிற்காது.” சததன்வா பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.

“தந்தையே, கார்த்தவீரியருக்குப்பின் யாதவர்களுக்கு அரசரில்லை என்று அறிந்திருப்பீர்கள். அதன்பின் நம் குலங்கள் ஒன்றுபடவேயில்லை. மேய்ச்சல்நிலம்தேடி பிரிந்துசெல்லும் இயல்புடையவர் நாம். அவ்வியல்பையே அரசியலிலும் கைக்கொண்டோம். விழுந்து சிதறும் மணிகள் போல நம் குலங்கள் அகன்று சென்றுகொண்டே இருந்தன. இன்று நம்மை அள்ளித்தொகுக்கும் ஒரு கை அமைந்திருக்கிறது. நாம் அவரிடம் சேர்வோம். அவரது படைக்கலமாவோம். சிறப்புகள் சூழும். நம் அன்னையர் வாழ்த்துவர்.”

சததன்வா “எப்படி அவனை நம்புவது? நாங்கள் அடைந்தவற்றை எல்லாம் அவன் காலடியில் வைப்பதா?” என்றான். “உங்கள் எவரைவிடவும் பெரிய அரசு சதபதம். அதன் இளவரசர் வாள் தாழ்த்த முடியுமென்றால் உங்களுக்கென்ன?” என்றாள் சத்யபாமா. “உண்மைதான், ஆனால்...” என்றார் கிருதாக்னி. சத்யபாமா அவரை மறித்து “அச்சமல்ல, உள்ளுறைந்த பேராசையே உங்களை சிறுமையை நோக்கி செலுத்துகிறது” என்றாள். “இங்கு வருவதற்கு முன் நீங்கள் எண்ணியதென்ன என்று நான் சொல்லமுடியும். துவாரகை எழுவதை ஷத்ரியப் பேரரசர்கள் விரும்ப மாட்டார்கள். அஸ்தினபுரிகூட அதை அஞ்சும். ஆகவே அனைவரும் சேர்ந்து அதை அழிப்பார்கள். அழிப்பவர்களுடன் நின்றால் உங்கள் அரசுகள் எஞ்சும். அழிவில் எஞ்சும் துணுக்குகளைச் சேர்த்து உங்கள் அரசை பெருக்க முடியும் என்று எண்ணினீர்கள்.”

சத்ராஜித் “என்ன சொல்கிறாய்?” என்று சீறியபடி எழுந்தார். “தந்தையே, அடுமனை நின்று ஆண்களை பார்ப்பவர்கள் எளிதில் அறியும் உண்மை இது. நானோ அரசுமன்றுக்கும் வந்து நிற்பவள்” என்றாள் சத்யபாமா. “ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி காத்திருக்கலாமென எண்ணினீர்கள். நாளை அஸ்தினபுரியும் மகதமும் போரிட்டழியும்போது மேலும் தலையெடுக்கலாமென்று சூழ்ந்தீர்கள்.” பிரசேனர் சினத்துடன் “ஆம், அவ்வண்ணம் எண்ணினாலும் என்ன பிழை? அரசு சூழ்தலின் நெறி அதுவே” என்றார்.

“பிழையென ஏதுமில்லை தந்தையரே. ஆனால் அறிந்துகொள்ளுங்கள். இனி ஆரியவர்த்தத்தின் அரசியலின் பகடை இளைய யாதவராலேயே உருட்டப்படும். உண்மையில் மதுராவை வெல்ல அஸ்தினபுரியின் படைகள் இளைய யாதவருக்கு தேவையிருக்கவில்லை. அவருடன் கிருதவர்மனுக்கு நிகரான இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள். யாதவப்பெருங்குலம் அவர் சொல்கேட்டு எழுந்து சூழ்ந்திருந்தது. ஆயினும் அவர் அஸ்தினபுரியின் படைகொண்டு மகதத்தை வென்றார். அதன் வழியாக அவர்களிருவரையும் பகைகொண்டு முகம் நோக்கி நிற்கச்செய்திருக்கிறார். மத்தகம் கோத்து செயலற்று நிற்கும் மதகளிறுகள் அவை. நீங்கள் எண்ணுவதுபோல இன்று மகதம் உங்களைக் காக்க வராது. அது அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கிறது. மூத்தோரே, இன்று எந்த ஷத்ரிய அரசும் தன்னை தீண்டாமல் காத்துகொண்டிருக்கிறார் இளைய யாதவர். அஸ்தினபுரியிலோ இன்று முடிநிலைக்காத ஆட்சி நிகழ்கிறது. அவர்கள் இருசாராருமே அவர் வில்லையும் சொல்லையும் நாடுகிறார்கள்.”

“துவாரகை ஓங்கி எழுவதற்கு இதற்கு முன் எப்போதும் இதுபோன்றதொரு தக்க நிலை வந்ததில்லை” என்று சத்யபாமா சொன்னாள் “பேராசை விழிகளை மறைக்காமலிருந்திருந்தால் அதை எப்போதோ உணர்ந்திருப்பீர்கள். அத்துடன் ஒன்றும் தெரிந்திருக்கும். உங்களை அழிக்க இளைய யாதவர் எண்ணியிருந்தால் இதுதான் மிகச்சிறந்த தருணம். கிருதவர்மரின் தலைமையில் ஆயிரம் புரவிவீரர்கள் வந்தால்போதும்.” சத்ராஜித் திரும்பி பிரசேனரை நோக்கினார். பிரசேனர் “அவர்களுக்கு என்ன தடை என்று தெரியவில்லை...” என்றார். “எந்தத் தடையுமில்லை. நீங்கள் யாதவர் என்பதைத்தவிர” என்றாள் சத்யபாமா. “நீங்கள் உங்களை அந்தகர் என்றும் சத்வதர் என்றும் எண்ணலாம். அவர் உங்களை யாதவர் என்றே எண்ணுகிறார் என்பதற்கு சான்று பிறிதில்லை.”

மூத்தயாதவர் ஒருவர் “ஆம்... நான் அதை முன்னரே எண்ணினேன்” என்றார். “விருஷ்ணிகள் யாதவர்கள் என்பதை ஏன் மறந்தீர் மூத்தவர்களே? மகதத்தை நம்புகிற நீங்கள் யாதவக்குருதியை ஏன் நம்பக்கூடாது? அந்த யாதவர்களின் இல்லங்களில் உறையும் அன்னையர்மீது கூடவா உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை?” ஒருவர் “நம்புகிறோம் குழந்தை. எங்கள் குலம் இளைய யாதவருடன்தான் நிற்கும். இது மணம்சூழல் என்பதனால்தான் வந்தோம்” என்றார்.

“இந்தமணம் நிகழாது மூத்தாரே” என்ற சத்யபாமா திரும்பி சததன்வாவிடம் “திரும்பிச்செல்லுங்கள் யாதவரே. நான் உங்கள் எவருக்கும் உரியவளல்ல. என் முன் நின்று பொருதும் ஆற்றல்கொண்டவர் ஒருவரே” என்றாள். சததன்வா பற்களைக் கடித்து சினத்துடன் “தெரிந்துகொள், அவன் அங்கே பொற்தேர் சமைக்கிறான். பாஞ்சாலத்து இளவரசியை அடைந்து பாரதவர்ஷத்தை வெல்ல திட்டமிடுகிறான். வளைதடியேந்தி காடுசுற்றும் உன்னை வேட்க வருவானென்று எண்ணாதே” என்றான்.

”வருவார்” என்று சத்யபாமா சொன்னாள். “அதை அவரை நான் கண்ட முதல்நாள் என் முன் எழுந்த தெய்வங்கள் சொல்லின. இம்மண்ணில் நான் அவருக்களிப்பவற்றை எவரும் அளிக்கவியலாது. இத்தனைநாள் நான் நோற்றிருந்தது அவருக்காக. என் மூதன்னையர் இருபக்கமும் நின்று என்னை வாழ்த்துகிறார்கள்.” அமர்ந்திருந்த முதுயாதவர் எழுந்து கைகளைக் கூப்பியபடி “நாங்கள் சென்று அவன் காலடியில் விழுந்து மன்றாடுகிறோம் அன்னையே. யாதவகுலம்பூத்த மாமலர் நீ. உனக்கன்றி எவருக்குள்ளவன் அவன்?” என்றார். அமர்ந்திருந்த பிற முதியவர்களும் உணர்வெழுச்சியுடன் நடுங்கியபடி எழுந்தனர்.

கிருதாக்னி “உன்னிடம் நான் சொல்வதற்கென்ன இருக்கிறது மகளே! நீ அறியாத எதையும் நானறியேன். நான் செய்யவேண்டுவதென்ன என்று மட்டும் சொல்” என்றார். “உங்கள் வாள் இளைய யாதவரிடம் இருக்கட்டும் பார்ஸ்வரே” என்றாள் சத்யபாமா. “ஆம், இது என் மூதன்னையரிட்ட ஆணையென கொள்கிறேன். என் குலத்து விளக்காக நீயிருக்கவேண்டுமென எண்ணினேன். நாளை யாதவகுலத்துக்கே அன்னையென அமர்பவள் நீ. என் வழித்தோன்றல்கள் வழிபடும் தெய்வம்” என்றார்.

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 2

அந்தப்பாதையையே அவள் அறிந்திருந்தாள். யமுனைவழியாக மதுராவுக்கு வந்து அங்கே ஏழுநாட்கள் தங்கி அங்கிருந்து மீண்டும் படகுகளில் ஏகசக்ரபுரிக்கு வந்து திரும்பி சர்மாவதிக்குள் நுழைந்து பன்னிரண்டுநாட்கள் சிறுபடகுகளில் பயணம் செய்து உஜ்ஜயினியை அடைந்தனர். அங்கிருந்து முப்பதுநாட்கள் நிலப்பயணத்தொலைவில் இருந்தது துவாரகை. அவள் அந்நகரை அதைப்போல எத்தனையோ முறை சென்றடைந்திருந்தாள்.

துவாரகைக்குக் கிளம்பும் செய்தியை ராகினி வந்து சொன்னபோது அவள் உவகையை உணரவில்லை. அச்செய்தியை முன்னரே அறிந்திருப்பதாகவே எண்ணினாள். கிளம்பி நெடுநாட்களாகியிருந்ததுபோல, காத்திருந்து சலித்ததுபோல. “என்னடி இது? உன் தவத்துக்குரியவனை காணப்போகிறாய்! முகத்தில் உவகையையே காணமுடியவில்லை?” என்றாள் ராகினி. நான் இனிமேல்தான் காணவேண்டுமா என்று அவள் எண்ணிக்கொண்டாள். ஒருமுகத்தை மட்டும் எண்ணி ஒரு பெயரை மட்டும் மூச்சென ஆக்கி இருப்பதன் பேரின்பத்தின்முன் அவன்கூட ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது. அவனைக் கண்டு என்னசெய்யப்போகிறேன்? நான் உனக்கென இருந்தேன் என சொல்வேனா? பெண்ணென நான் உணர்வதை அவனுக்கு எப்படி உரைப்பேன்? மூதன்னையரே, தெய்வங்களே, முன்னர் ஏதேனும் பெண் அதைச் சொல்லி ஆணுக்கு புரியவைத்திருக்கிறாளா என்ன?

துவாரகையின் பெருவாயிலுக்கான கால்கோள் நிகழ்கிறது என்று இளைய யாதவனின் திருமுகம் களிந்தபுரிக்கு வந்தது என்று அமைச்சர் சதபாதர் சொன்னார். யாதவப்பெருங்குடிகள் அனைத்துக்கும் செய்திசென்றிருக்கிறது என்று தெரிந்தது. அனைவரும் தங்கள் குலதெய்வமும் மூதன்னையரும் குடிகொண்ட நிலத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து பட்டில் பொதித்து கொண்டுசெல்லவேண்டும் என்றும் கால்கோள்நாட்ட அகழும் குழிக்குள் அந்த மண்ணை இட்டு அதன்மேல் பெருவாயிலை எழுப்பவிருப்பதாகவும் துவாரகையின் செய்தியாளன் சொன்னான். யாதவகுலங்கள் அனைத்தும் தங்களால் முடிந்த சிறுசெல்வத்தையேனும் துவாரகைக்கு அளிக்கவேண்டும் என்பதும், யாதவர்களின் கொடையால் உருவானது என்றே அந்நகரம் அறியப்படவேண்டும் என்பதும் இளைய யாதவரின் விருப்பம் என்றான்.

யாதவர் அனைவருக்கும் பேருவகை அளித்த அழைப்பு அது. காடுகளிலும் இருநதிக்கரைகளிலும் யாதவ மன்றுகளெங்கும் அதுவே பேச்சாக இருந்தது. புதைக்கப்பட்டிருந்த பொற்குவைகள் வெளிவந்தன. ஒவ்வொருவரும் பிறகுடியினர் கொடுப்பதென்ன என்று அறிந்துகொள்ள முனைப்பெடுத்தனர். மறுதரப்பைவிட ஒருநாணயமேனும் கூடுதலாக இருந்தாகவேண்டும் என்று எழுந்தனர். ஒவ்வொருநாளும் துவாரகைக்கு யாதவர்களின் பொன் சென்றுசேர்ந்துகொண்டிருந்தது. அங்கே பொன்னை இடையளவுபெரிய குவைகளாக கூட்டி வைத்திருக்கிறார்கள் என்றனர் பயணம் முடித்து வந்த வணிகர். ஆனால் மலையளவு பொன்னிருந்தாலும் போதாதபடி பெரிய நகரம் அது. அது கட்டிமுடிந்தால் அங்கே யாதவர் வாழமுடியுமா என்பதே ஐயம்தான். விண்ணவர் மகேந்திரபுரியை உதறி அங்கே வந்துவிடுவார்கள் என்று இசைச்சூதர் பாடினர். வெண்மாடக்குவைகளின் நகரம். சுழன்று சுழன்று விண்தொடும் புரிவடிவம் கொண்டது. மண்ணில் அதற்கு நிகரென ஏதுமில்லை. விண்ணிலுள்ளதா என தெய்வங்களே சொல்லவேண்டும்.

யாதவகுலங்களின் தலைவர்கள் அனைவருமே கால்கோள்விழவுக்கு செல்லவிருப்பதாக செய்திவந்தது. மாலினி “உன் தந்தையும் செல்லாமலிருக்க மாட்டார். செல்லாதவர்கள் யாதவ குலங்களில் இல்லாதவராக ஆகிவிடுவார்கள்” என்றாள். சத்ராஜித் தன் உடைவாளை பட்டில் பொதிந்து இளையவனிடம் கொடுத்து துவாரகைக்கு அனுப்பி இரண்டாண்டுகாலம் ஆகியிருந்தது. கூர்மபுரியில் அரசர் கிருதாக்னி தன் மூன்று மைந்தர்களான சித்ரபானு, சித்ரரதன், பானுகோபன் ஆகியோரை வாளுடன் அனுப்பியிருந்தார். துவாரகையிலிருந்து இளைய யாதவன் அவர்களுக்கு வெண்பட்டும் முத்திரைமோதிரமும் அனுப்பி அணுக்கர்களாக ஏற்றிருந்தான். களிந்தகத்திலும் கூர்மபுரியிலும் பறக்கும் மீன்கொடியுடனும் மரங்கொத்திக்கொடியுடனும் துவாரகையின் கருடக்கொடியும் பறந்தது. ஆனால் சததன்வா மட்டும் துவாரகைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக செய்தி வந்தது. அவன் வடபுலக்காடுகளில் வேட்டைப்பயணம் சென்று விட்டதாகவும் பின்னர் காசிநாட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள்.

கால்கோள்விழாவுக்கான திருமுகம் வந்த ஏழாம்நாள் சத்ராஜித் ஹரிணபதத்திற்கு வந்தார். மாலினியிடம் “பதிநான்குநாட்களில் நாம் துவாரகைக்கு கிளம்பவேண்டும். சித்தமாகுக!” என்றார். மாலினி திகைப்புடன் “நாம் என்றால்?” என்றாள். “நானும் நீயும் நம் குழந்தைகளும்” என்றார் சத்ராஜித். “பாமாவை அழைத்துச்சென்றாகவேண்டும்.” மாலினி “அவளையுமா? துவாரகை நெடுந்தொலைவு என்றார்களே?” என்றாள். “ஆம். அங்குசென்று சேர இரண்டுமாதமாகும்... நதிவழி சென்று பாலையை கடக்கவேண்டும்” என்றார். “ஆனால் யாதவர் அனைவருமே தங்கள் பெண்களுடன்தான் செல்கிறார்கள். தேவகர் தன் மைந்தன் தேவாபனுடன் தன் நான்கு மகள்களை அனுப்புகிறார். சதபதத்தில் இருந்து கிருதவர்மன் தன் ஏழு தங்கைகளுடன் செல்கிறான். குந்திபோஜரின் மகன் பத்ரசேனன் தன் நான்கு இளவரசிகளுடன் செல்கிறான்...”

மாலினி சிரித்து “துவாரகை பெண்களால் நிறைந்துவிடும்போலிருக்கிறதே” என்றாள். “இதோபார், துவாரகையின் அரசன் ஷத்ரியகுடியில் மணமுடிக்க விரும்புவான் என்பது உண்மை. ஆனால் யாதவர்களை பொறுத்தவரை அவன் மணக்கும் யாதவப்பெண்ணே அரசி. அதற்காகவே அத்தனை யாதவகுடிகளும் போட்டியிடுகிறார்கள். என் மகளுக்கு நிகராக யாதவகுடிகளில் வேறெந்த பெண் இருக்கிறாள்? அவள் அரசியானால் அதைவிட நான் அடையும் வெற்றி என்ன?” மாலினி புன்னகைசெய்து “யாதவர்களின் ஒற்றுமையைப்பற்றி மன்றுநின்று என் மகள் பேசியபோது நீங்கள் உளமுருகி அதை ஏற்றுக்கொண்டதாக இங்கே பேசிக்கொள்கிறார்கள். உங்களுக்குள் ஓடியது இந்தக் கணக்குகள்தான் என நான் அப்போதே அறிந்தேன்” என்றாள்.

“ஆம், கணக்குகள்தான். அதை உடனே இளையவனிடம் சொல்லவும் செய்தேன். நாம் நேற்றுவரை மதுராபுரியின் சிற்றரசர்கள். நாளை துவாரகைக்கு சிற்றரசர்கள். ஆனால் நம் மகளை இளைய யாதவன் மணந்தால் நம் நிலை அரசமாதுலனுக்குரியது. துவாரகை பாரதவர்ஷத்தின் தலைநகராக ஆகும் என்று நிமித்திகர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் என் ஆணைக்குக் கீழே பாரதவர்ஷம் வரக்கூடும். அதை நான் ஏன் தவிர்க்கவேண்டும்?”

மாலினி சிரித்தபடி எழுந்து “அவ்வாறே நடக்கட்டும். துவாரகைக்குச் செல்வதை சிறியோள் விரும்புவாள். இத்தனைநாள் அவள் செய்த தவம் இவ்வண்ணம் நிறைவுகொண்டதே” என்றாள். பாமையிடம் “அணிகளையும் ஆடைகளையும் எடுத்து வைத்துக்கொள்ளடி. அங்கே நீ களிந்தகத்தின் இளவரசியென செல்லப்போகிறாய்” என்றாள். மஹதி “அங்கு வருபவர்கள் அனைவரும் இளவரசியரே அரசி” என்றாள். மாலினி “நாம் அவர்களைவிட ஒருபடி மேல். கேள், யாதவச்சிற்றரசர்களில் துவாரகைக்கு முதன்மைப்பங்களித்தது களிந்தகம்தான். அதை அங்கே அவையில் இளைய யாதவரே அறிவித்ததுமன்றி, நன்றி சொல்லி திருமுகமும் அனுப்பியிருக்கிறார்” என்றாள் மாலினி. “அங்கே துவாரகையின் அரசப்பெருவீதியில் யாதவர்களின் குலத்தலைவர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் மாளிகைகள் அமைக்கப்படுகின்றன. நகர்நடுவே அமைந்திருக்கும் மூன்றடுக்கு குவைமுகடுகள் கொண்ட மாளிகை களிந்தகத்திற்கு என்றார்கள்.”

மஹதி சிரித்துக்கொண்டே “அரசி, இன்னமும் நகரே அமையவில்லை. கால்கோளுக்குத்தான் நம்மை அழைத்திருக்கிறார்கள்” என்றாள். “நகர் அமைகிறது என்றார்களே?” என்று மாலினி கேட்டாள். “ஒருநகரை அமைப்பதென்பது எளிதா என்ன? அதற்கு பல்லாண்டுகளாகும்... ஒருவேளை நம் வாழ்நாளுக்குள் நாம் துவாரகையை காணமுடியாமலுமாகும்” என்று மஹதி சொன்னாள். “நாம் கண்டால்தானா? நம் மைந்தர் விழிகளும் நமதுதானே?” என்றாள் மாலினி. ”யாதவர்களுக்கு இதற்கு நிகரான சிறப்பு முன்பு வந்ததுண்டா தோழி? கார்த்தவீரியரின் நகர்கூட இதை பார்க்கையில் சிறியதல்லவா?”

ஒவ்வொருநாளும் காலைமுதல் இரவுவரை பயணத்திற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்தன. நீர்புகாத பெட்டிகளில் ஆடைகளும் அணிகளும் அடுக்கப்பட்டன. தோல்பைகளில் உலருணவுகள். துவாரகைக்கான பரிசுப்பொருட்களை பன்னிரண்டு பெட்டிகளில் அடுக்கினர். செல்லும் வழியிலிருக்கும் மச்சநாடுகள், நிஷாதநாடுகளின் வழியாக கடந்துசெல்வதற்கான ஒப்புகையை தூதர்கள் பெற்றுவந்தனர். ஏகசக்ரபுரியிலும் உஜ்ஜயினியிலும் தங்கிச்செல்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. ஒவ்வொன்றிலும் நேரம் பிந்தியது. ஒரு சிறு சிக்கலேனும் இல்லாமல் ஒன்றும் நடந்தேறவில்லை. காலை எழுந்ததும் பதற்றமேற்படுத்தும் ஒரு செய்தியேனும் வந்திருந்தது. உச்சிவேளைக்குள் அது அவிழ்ந்து உவகை ஏறியது. மாலை மேலுமொரு சிக்கல் வந்து சேர்ந்தது.

மாலினி ஓயாமல் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அந்தப்பதற்றத்தை அவள் விரும்புவது தெரிந்தது. “என்ன செய்வேனடி? செல்வதற்குள் அஞ்சி அஞ்சி நான் உயிரிழந்துவிடுவேன் என்றல்லவா படுகிறது” என்றாள். களிந்தகத்திலிருந்து தன் இளையாள்களான சித்ரையும் பத்மையும் அரசருடன் வருவதை அவள் அறிந்திருந்தாள். “அவர்களுக்கு அரசமுறைமை தெரியலாம். அணிசெய்யத் தெரியலாம். ஆனால் அவர்கள் என்னதான் இருந்தாலும் போஜர்கள். நான் விருஷ்ணிகுலத்தவள். விருஷ்ணிகுலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் மகள் என்று நான் சொல்லும்போது துவாரகையில் எனக்குத்தான் முதன்மை இடம் இருக்கும். என்ன சொல்கிறாய்?” என்றாள். “ஆம் அரசி” என்று சொன்ன மஹதி திரும்பி ராகினியை நோக்கி புன்னகைசெய்தாள்.

அந்தப் பதற்றங்களுக்கெல்லாம் அப்பாலிருந்தாள் பாமா. அவளுக்கு அவர்கள் பயணம்செய்வதே புரிந்திருக்கவில்லை என்று மாலினி ஐயப்பட்டாள். “என்னடி இது? உன் ஆடைகளை எடுத்து வைக்கவில்லையா? உனக்கான அணிப்பொருட்களை எடுத்துவைத்துவிட்டோம். அதை ஒருமுறை சீர்நோக்கிவிடு... ஏன் இப்படி இருக்கிறாய்?” என்றாள். பாமா கனல்காய்ந்த விழிகளுடன் நோக்கி “ஆம்” என்றாள். “என்ன ஆம்? என்ன சொல்கிறாய் என்றாவது தெரிகிறதா?” என்றாள். மஹதி சிரித்தபடி “மன்றேறினால் அரசி. இல்லம் திரும்பினாள் மையல் கொண்ட பிச்சி. நமக்கு இளவரசியரே பலர் இருக்கிறார்கள் அரசி” என்றாள்.

இளையோர் சத்யசேனையும் சித்ரபானுவும் எங்கு செல்கிறோம் என்றறியாமலேயே பயணத்தின் உவகையில் ஆடிக்கொண்டிருந்தனர். “சொல்லு கண்ணே எங்கே செல்கிறோம்?” என்றாள் மூதன்னை சாந்தமதி. “மதுராவுக்கு!" என்று சத்யசேனை சொன்னாள். “அங்கே யானைகள் மேய்ந்துகொண்டிருக்கும்!" என்று கையைத்தூக்கி விழிகளை விரித்தாள். அவள் கையைத் தட்டி முன்னகர்ந்து சித்ரபானு திக்கித்திக்கி சொன்னாள் “அது அது அது பெரிய காடு... சிம்மமும் புலியும் யானையும்...” மூதன்னை “இதெல்லாம் ஒருவரே. அவரை இளைய யாதவர் என்கிறார்கள்” என்று சிரித்தாள்.

ஆனால் மூதன்னையர் இருவருக்கும்கூட அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது உள்ளத்தில் பதிந்திருக்கவில்லை. மஹதியிடம் சாந்தமதி தாழ்ந்த குரலில் தனியாக ”நான்கு நாட்களில் வந்துவிடுவார்களல்லவா?” என்று கேட்டாள். மஹதி சிரித்தபடி “நான்கு வருடமாகும் அன்னையே. வரும்போது இளவரசியின் கைகளில் குழந்தை இருக்கும்” என்றாள். “குழந்தையா? யாருடைய குழந்தை?” என்று மூதன்னை அம்சுமதி கேட்டாள். மஹதி சிரித்தபடி “இளைய யாதவரின் குழந்தை” என்றாள். “அவருடைய குழந்தையை ஏன் நம்மிடம் விட்டு வளர்க்கிறார்கள்? கம்சன்தான் செத்துவிட்டானே?”

படகில் ஏறும்போது அவளுக்கு ஓர் உள எழுச்சி ஏற்பட்டது. அதே யமுனையில் அதே படகில் அவள் பலமுறை முன்னரும் ஏறியிருந்தாள். உடல் மெய்ப்பு கொள்ள திரும்பி மறுபக்கம் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த படகுக்காரர்களை, கொடிகளின் படபடப்பை, பாய்கள் காற்றில் உப்பி கொடிமரத்தை அறைந்து துடித்ததை நோக்கினாள். “சென்றுகொண்டிருக்கிறோமடி. துவாரகைக்கு... அய்யோ நான் இறந்துவிடுவேன் போலிருக்கிறதே” என்று ராகினி சொல்லி அவளை இறுக கட்டிக்கொண்டாள். அவள் கைகள் மேல் கைவைத்து “ஆம்” என்று பாமா சொன்னாள். “உனக்கென்ன சற்றும் உவகை இல்லையா? ஏனடி நடிக்கிறாய்?” என்றாள் ராகினி. "இல்லை” என்றாள் பாமா. “என்ன இல்லை? ஆணவம் கொண்டவளடி நீ. உவகையை காட்டினால் உன் தலைதாழுமென நினைக்கிறாய்.” பாமா புன்னகைசெய்தாள்.

இருமருங்கும் ஓடிய காடுகளை, மேலே எழுந்து பின்னால் ஒழுகிய முகில்குவைகளை, கசிந்தூறி அலைகள் மேல் ஆடிய ஒளியை, பாசிமணத்துடன் படகுவிளிம்பை அறைந்த காளிந்தியின் அலைகளை அவள் நன்கறிந்திருந்தாள். படகுவிளிம்பில் அமர்ந்து விழியே அவளாக நோக்கிக்கொண்டிருந்தாள். தாழ்வாகப் பறந்து தன் நீர்ப்பாவை மேல் அமர்ந்தது வெண்நாரை. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாரையாக வந்தமைந்தன. கழுத்தை நீருக்குள் முக்கி எழுந்து சிறகு சிலிர்த்து உதறிக்கொண்டன. நீருள் தெரிந்த வானில் அவை தலைகீழாக தொங்கிக்கிடந்தன. ஆழத்தில் முகில்கள் மெல்ல அசைந்தோடின. நீரைக்கிழித்த படகுக்குப்பின்னால் நீர்வடு தோன்றி விரிந்து சென்று இரு அலைகளாகி பரவியது.

இருண்டது பொழுது. விண்மீன்கள் கனிந்து சொட்டத் துளித்தன. நிலவு வந்து முகில்களை மெல்ல வகுந்து சென்றது. காற்றில் புடைத்த பாய்கள் கயிறுகளை முனகச்செய்தன. விடிவெள்ளி விழிதிறந்தது. கிழக்கில் செங்காந்தள்கள் சிதறிப்பரந்தன. சரக்கொன்றைக்கூட்டமென முகில்கள் பொன்னொளி கொண்டன. கதிர் விரிந்து நீரலைகள் நூறாயிரம் வாள்முனைகளென ஒளிகொண்டன. கரையோரக் காடுகள் பறவைகளை வானில் தொடுத்து நீர்ப்பரப்பின் மேல் எய்தன. நிழல்களாடிய நீர்ப்பரப்பில் அவள் நோக்கி நோக்கி திரட்டிய நீலப்பெருமுகம் புன்னகைத்தது. ஊடி அழிந்து ஒளிந்து நோக்கி நகைகூடி மீண்டுவந்தது.

ஏகசக்ரபுரியில் மேலும் யாதவகுலங்கள் வந்திருந்தன. போஜர்குலத்து சக்ரவாகக் குடியினரும் சார்ங்க குடியினரும் அவர்கள் தங்கிய கூடாரத்திற்கு அருகிலேயே கூடாரமிட்டிருந்தனர். முந்தையநாள்தான் மார்த்திகாவதியின் படகுகள் சென்றன என்றார்கள். அவர்களுடன் குக்குரர்களின் எட்டு படகணிகளும் வந்தன. ”படகுக்குள் இருந்துகொள் பாமா. உன்னைப் பார்க்கவே அத்தனை விழிகளும் துடிக்கின்றன” என்றாள் மாலினி. குக்குரகுலத்தைச் சேர்ந்த நான்கு இளவரசிகள் முழுதணிக்கோலத்தில் சிறுபடகு ஒன்றில் ஏறுவதை பாமா கண்டாள். அவர்களும் திரும்பி அவளை நோக்கினர். நால்வர் விழிகளிலும் எரிந்தணைந்த கனலைக் கண்டு அவள் படகறையின் பலகணியிலிருந்து விலகிக்கொண்டாள்.

“உன்னைக் கண்டால் அவர்களது கனவுகளின் உவகை அணைந்துவிடும் பாமா. அதை அவர்கள் துவாரகை வரையாவது நுகரட்டுமே” என்றாள் மஹதி. ராகினி அவள் தோளைத்தொட்டு “ஒருமுறை கூடாரங்களை சுற்றிவந்தேன் பாமா. பதினெட்டு யாதவப்பெண்களை பார்த்தேன். அத்தனைபேரும் பட்டும் மணியும் அணிந்திருக்கிறார்கள். அனைவருமே அழகிகள். ஆனால் உன் முன் வைரத்துடன் வைத்த வெறும்கற்கள்” என்றாள். பாமா அவளை வெறும் விழிகளுடன் நோக்கி பொருளின்றி தலையசைத்தாள்.

உஜ்ஜயினியில் ஹேஹயகுலத்தில் எஞ்சிய ஏழுகுடியினரை அவர்கள் கண்டார்கள். கார்த்தவீரியனை பரசுராமர் வென்று அழித்தபோது சிதறிப்போனவர்கள். விந்தியனைக் கடந்து தண்டகாரண்யத்தின் ஓரங்களில் ஊரமைத்துக்கொண்டிருந்தனர். பிற யாதவர்களுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. வராகர், பிலக்‌ஷர், சத்வர், போகர், விரஜர், சூரர், மித்ரர் என்னும் ஏழு குடியினரும் ஒருவரை ஒருவர் காண்பதே அரிது என்றனர். தண்டகாரண்யம் மிகப்பெரியது. கோடையில் வறண்டுபோவதென்பதனால் அவர்கள் வருடம்தோறும் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். அவர்களின் ஊர்கள் தோல்கூடாரங்களாக அத்திரிகளின் முதுகிலேயே இருந்தன. அவர்கள் கம்சனைப்பற்றி கூட அறிந்திருக்கவில்லை என்று மஹதி சொன்னாள்.

“ஆனால் கார்த்தவீரியரின் பெயர் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இவர்களை இளைய யாதவர் எப்படி கண்டடைந்தார்? எப்படி திரட்டினார்?” மாலினி “இவ்விழாவுக்குப்பின் பாரதவர்ஷத்தின் அத்தனை யாதவர்களும் ஒன்றாக இருப்பார்களென்றல்லவா தோன்றுகிறது?” என்றாள். அவள் அதை நுணுக்கமான அரசியல் கருத்தாக சொல்லி மஹதியின் முகத்தைப்பார்க்க அவள் இயல்பாக இருந்ததைக் கண்டு ராகினியை பார்த்தாள். அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள். மாலினி சினத்துடன் “எத்தனை குலங்கள் வந்தாலும் அனைவரும் விருஷ்ணிகளுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்...” என்றாள். “கட்டுப்பட வைக்கவேண்டும்” என்றாள் மஹதி. ராகினி சிரித்துவிட்டாள்.

அவள் ஏன் சிரிக்கிறாள் என்று புரியாத மாலினி திரும்பி பாமையை நோக்கி “இவள் ஏன் மண்சிலை போல இருக்கிறாள்?” என்றாள். “இளவரசி இவ்வழிகளில் முன்னரே வந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்” என்றாள் ராகினி. பாமா அச்சமடைந்து “இவ்வழியிலா? இவளா?” என்றபின் ”அணங்கு கூடியிருக்குமோடி?” என்றாள். “அணங்குதான் அரசி, துவாரகைக்குச் சென்றதும் கலைந்துவிடும்” என்றாள் மஹதி. மாலினி மீண்டும் நோக்கியபின் “இவளை உள்ளேயே இருக்கச்சொல். அந்த இரட்டைப்பேய்கள் இவளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் குரங்குகள் அல்லவா வந்து பிறந்திருக்கின்றன” என்றாள்.

உஜ்ஜயினியிலிருந்து மூடுவண்டிகளில் பாலைநிலம் வழியாக சென்றார்கள். பன்னிரண்டு யாதவகுடிகள் ஒன்றாக காவலர்களுடன் சென்றபோது படைப்பிரிவு ஒன்று செல்வது போலவே இருந்தது. நடுவே சென்ற வண்டியிலிருந்து சிறுசாளரம் வழியாக நோக்கிய ராகினியால் இருமுனைகளையும் பார்க்கமுடியவில்லை. பாமா இருபக்கமும் முட்புதர்கள் விரிந்து அலையலையாக எழுந்துசென்று வெறுமை படர்ந்த குன்றுகளைச் சென்றடைந்த பாலைநிலத்தை நோக்கி விழிவிரித்து அமர்ந்திருந்தாள்.

இரவில் விண்மீன்கள் கனல்துண்டுகள் போல எழுந்து வந்தன. சிறிய குட்டைகளில் நீருக்காக நின்றபோது அவை ஆழத்தில் விழுந்துகிடப்பதை காணமுடிந்தது. புரவிகளின் மணம் பெற்ற செந்நாய்கள் தொலைவில் ஊளையிட்டன. முட்புதர்களில் கிழிபட்ட காற்று சீறிக்கொண்டிருந்தது. ”இத்தனை தொலைவில் ஏனடி நகரை அமைத்தார் இளைய யாதவர்?” என்றாள் மாலினி. மஹதி “சிம்மம் துரத்தினால் கணக்குபார்த்தா மரத்தில் ஏறுவார்கள்?” என்றாள். புரிந்துகொள்ளாதவளாக “ஆமாம்” என்றாள் மாலினி. ராகினி சிரித்துக்கொண்டே வேறுபக்கம் திரும்பினாள்.

கூடாரம்கட்டி தங்கியிருந்த சிறுசோலையிலிருந்து வெள்ளி முளைத்ததும் கிளம்பி இளவெயில் பொழிந்துகொண்டிருந்த முதுகாலை நேரத்தில் அவர்களின் சகடநிரை துவாரகையை அணுகியது. பெரிய மணற்குவைகள் இருபக்கமும் சூழ்ந்திருக்க அவற்றின் சரிவில் மெல்லிய தோலில் தழைந்த மணிமாலைகள் என தெரிந்த குதிரைக்காலடிகளை நோக்கியபடி அமர்ந்திருந்த பாமா தொலைவில் எழுந்த குரல் முழக்கம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். மணல்சரிவுக்கு அப்பாலிருந்து எழுந்து வந்த துவாரகையின் தோரணவாயிலைக் கண்டதும் பாமா மீண்டும் உடல் விதிர்த்தாள். அதை அவள் அத்தனை அணுக்கமாக பலமுறை கண்டிருந்தாள். வண்டி நெருங்கிச்செல்லச்செல்ல அவள் கழுத்தில் விழும் மாலை என மலர்ச்செதுக்குகளுடன் சிற்பங்களுடன் அது அணுகிவந்தது. அதன் மேலிருந்த பெரிய கந்தர்வனின் விழிகளை, உச்சரித்து உறைந்த உதடுகளை நோக்கியதுமே அவளுக்குத்தெரிந்துவிட்டது. அது அவள் இளமைமுதலே கனவில் கண்ட அதே நகரம்.

அது இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை எந்த வியப்புமில்லாமல் அவள் எண்ணிக்கொண்டு சென்றாள். தோரணவாயிலை ஒட்டிய பெருங்கோட்டைக்கு அடித்தளம்தான் இட்டிருந்தனர். சுங்கமாளிகைகள் எளிய மரக்கட்டடங்களாக இருந்தன. கற்பாளங்களிட்ட சாலைக்கு இருபக்கமும் விழுதூன்றி கிளைபரப்பி நிழல்விரித்து ஓங்கித்தழைத்து நிற்பதாக அவள் கண்ட வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் ஆளுயரமான மெலிந்த சிறுமரங்களாக தளிர்த்திருந்தன. சாலையின் இருபக்கமும் விழிதொடும் தொலைவு வரை மாளிகைகளுக்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. அவள் ஆயிரம் முறை கண்டிருந்த அந்நகரம் மண்ணின் கருவறைக்குள் இருந்து முழுமையாக வெளிவந்திருக்கவில்லை.

நகருக்குள் இரண்டு வரிசைகளாக பயணிகள் நுழைந்துகொண்டிருந்தனர். அத்திரிகளும் பயண வண்டிகளும் ஒரு நிரையாகவும் எடைமிக்க பொதிவண்டிகள் இன்னொரு நிரையாகவும் ஒன்றோடொன்று முட்டி தேங்கி பின்பு நெகிழ்ந்து முன்னகர்ந்து மீண்டும் தேங்கி சென்றன. வெயில் கண்கூசும்படி எரியத்தொடங்கியிருந்தது. நீள்நிழல்கள் நோக்க நோக்க சுருங்கி தங்கள் பொருட்களை நோக்கி சென்றன. அத்திரிகளும் மாடுகளும் இட்ட சாணி வெயிலில் காய்ந்த மணம் புழுதிமணத்துடன் கலந்து எழுந்தது. பணியாட்களின் குரல்களை வெயில் அழுத்தி மூடியிருந்தது. நீருக்குள் என அவை ஒலித்தன.

அப்பால் நகர்விளிம்பு சரிந்திறங்கிய இடத்தில் அலைத்த கடல் வழியாக படகுகளில் வந்த பளிங்குத்தூண்களுக்கான உருளைக்கற்களும், பளிங்குப்பாளங்களும் சகட உருளைகள் மேல் ஏற்றி உருட்டப்பட்டு அத்திரிகளால் இழுத்துவரப்பட்டன. வியர்வை வழியும் கரிய உடல்களுடன் பல்லாயிரம் பணியாட்கள் அங்கெலாம் தசைநடனமென பணியாற்றிக்கொண்டிருந்தனர். காரிரும்பாலான நெம்புகோல்களை அழுத்தி கற்களைப்புரட்டிய யானைகள் மேலிருந்து ஆணையிட்டனர். அசைந்து நகர்ந்து தங்கள் இடங்களில் சென்றமைந்த பெரும்பாளங்களுக்கு அருகே நின்று கழி செலுத்தினர். எடை எடை என சொல்லியபடி அசைவிழந்து கிடந்த கற்பாளங்களுக்கு அடியிலிட்டு கட்டி இரும்பு உருளைகளுடன் பிணைக்கப்பட்ட கயிற்றை இழுத்த காளைகளை கூவி ஓட்டினர்.

ஈச்சஓலையால் செய்த பெருங்குடைகளை நட்டு அவற்றின் நிழலில் நின்ற சிற்பிகள் வண்ணக்கொடிகளை கைகளில் ஏந்தி ஆட்டி ஆணைகளை இட்டனர். ஆணைகளை ஏற்று முரசுகள் முழங்க நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தாளத்திற்கு ஏற்ப எடை இழுத்தனர். மூச்சுடன் கலந்த கூச்சல்கள் தாளத்தின்மேல் படிந்தன. ஒன்றெனத் திரண்டு தசையலைகளாக ஆயின மானுட உடல்கள். அவர்களின் விசையில் அசைந்த கற்பாளங்களும் தூண்களும் அந்தத் தாளத்தை அடைந்தன. அத்திரிகள் யானைகள் கழுதைகள் அனைத்திலும் ஏறிக்கொண்டது தாளம். உயிர்நடனம், கல்நடனம்.

எங்கும் மானுடர். எத்தனை பணியாளர்கள்! சுமை கொண்டுவந்த கழுதைகளுடன் நடந்தனர். சுண்ணம் அரைத்தனர். மணல் அரித்து அள்ளிக்குவித்தனர். கற்களைப் புரட்டி வைத்தனர். செங்கற்களை சுமந்து அடுக்கினர். கல்தொட்டிகளில் நீர் தேக்கினர். சரிந்துகிடந்த பெருங்கற்கள் மேல் அமர்ந்து ஓரங்களை கூடத்தால் அறைந்தனர். பணிநடந்த கட்டடங்களுக்கு மேலே அளவைக் கழிகளுடனும் கோல்மட்டங்களுடனும் நின்று பணியாற்றினர். அவர்களை நோக்கி பெரிய உருளைகளில் கட்டப்பட்ட தோல்பட்டைகளுடன் இணைக்கப்பட்ட கலங்கள் குழைத்த சுண்ணமணல்சாந்துடன் மணிமாலை என ஓடிச்சென்றன. சுண்ணத்தின் மணம். இரும்புக் கரண்டியால் அரிந்து அள்ளப்படும் சாந்தின் குழைவுடன் குழைந்தது உள்ளம். அந்த ஒலியை அவள் கன்னத்தின் கழுத்தின் தோலே அறிந்தது. அரிபட்ட சாந்தின் பரப்பின் மென்மையில் மிகமிக அண்மையான ஏதோ ஒன்று இருந்தது.

விழிகள் தொட்டுத்தொட்டுச்செல்லும் ஓட்டத்தில் ஒட்டுமொத்தமாக நோக்கி ஒரு கணம் அசைவிழக்க ஓவியத்திலென ஒவ்வொருவரும் உறைந்து மறுகணம் மீண்டனர். அந்நகரத்தின் உடலென யானைகளும் அத்திரிகளும் கழுதைகளும் மானுடரும் மாற அது தன்னைத்தானே கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. “எத்தனை பெரிய நகரமடி” என்று ராகினி வியந்தபோது அவள் திரும்பி பொருளற்ற விழிகளால் நோக்கினாள். ”கால்கோளிடுவதாகத்தான் சொன்னார்கள். நகரம் கட்டிமுடிக்கப்படும் நிலையில் அல்லவா உள்ளது?” என்றாள் மாலினி. அருகமர்ந்திருந்த மஹதி “கால்கோள் அந்தப் பெருவாயிலுக்குத்தான் என்றார்கள்” என்றாள். “வடக்குப் பெருவாயிலே அத்தனை பெரிதாக இருக்கிறது. அதன் காவல்பூதத்தின் காலடி நம் தலைக்குமேல் சென்றுவிட்டது” என்று மாலினி சொன்னாள். “அதன் முகப்பிலிருக்கும் சிற்பம் விருஷ்ணிகளின் மூதன்னை”.

சுங்கக்காவலர் அவர்களின் வண்டிகளை பிரித்து அனுப்பினர். சுழன்று மேலேறத்தொடங்கிய சாலையில் பல இடங்களில் கற்பாளங்களைப் பதிக்கும் பணி நிகழ்ந்துகொண்டிருந்தது அவர்களை நோக்கி புரவியில் வந்த ஒருவன் நின்று “களிந்தகத்திலிருந்து வரும் அணிநிரையா? துவாரகைக்கு வருக!” என்றான். பிரசேனர் “யாதவபுரிக்கு வந்ததில் மகிழ்வடைகிறோம் வீரரே. எங்களுக்குரிய தங்குமிடம் ஏதென்று சொல்லமுடியுமா?” என்றார். “இங்கு மாளிகைகள் அனைத்தும் கட்டப்படும் நிலையிலேயே உள்ளன அரசே. மதுரா, உத்தரமதுரா, மார்த்திகாவதி. சதபதம், கூர்மபுரி, களிந்தகம், மதுவனம் என்னும் ஏழு குறுநில மன்னர்களுக்கும் ஏழு மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நான்காவது சாலைவளைவில் கொற்றவை ஆலயத்தருகே...” என்றபின் “வழிகள் இன்னும் அமையவில்லை. நான் ஒரு ஏவலனை உடன் அனுப்புகிறேன்” என்றான்.

பாமா தலை நீட்டி “நான் வழியை அறிவேன் கிருதவீரியரே” என்றாள். கிருதவீரியன் அருகே வந்து “தங்களை நான் பார்த்ததேயில்லை இளவரசி” என்றான். “நீங்கள் ஸினியின் மைந்தர். துவாரகைக்கு ஓராண்டுமுன் வந்து இளைய யாதவரின் அணுக்கராக இருக்கிறீர்கள். நான் நன்கறிவேன்” என்றாள். “மேலே செல்லும் வழி...” என கிருதவீரியன் சொல்லத் தொடங்கியதும் ”இவ்வழியாக வலப்பக்கம் திரும்பினால் கஜமுகனின் சிற்றாலயம். சாலை மூன்றுமுறை சுற்றி இடப்பக்கம் வளையும்போது அமைச்சர்களுக்கான இல்லங்கள். மறு எல்லையில் அரண்மனைகள். அவற்றுக்கு அப்பாலுள்ளது கொற்றவை ஆலயம். சரிதானே?” என்றாள். “ஆம் இளவரசி. தாங்கள் எப்போது இந்நகருக்கு வந்தீர்கள்” என்றான் கிருதவீரியன். பாமா புன்னகை புரிந்தாள்.

கிருதவீரியன் திகைப்புடன் பிற முகங்களை நோக்கிவிட்டு தலைவணங்கினான். வண்டிகள் நகர்ந்ததும் வியப்புடன் “இதையெல்லாம் எப்படி அறிந்தாயடி?” என்றாள் மாலினி. பாமா அதற்கும் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 3

காலையிளமழையை கேட்டுதான் பாமா கண்விழித்தாள். மார்பின்மேல் கைகளை வைத்தபடி கண்மயங்கி சொல்லழிந்து கேட்டபடி படுத்திருந்தாள். அவளுக்கென்றே பேசிக்கொண்டிருந்தது. பின் நினைவெழுந்தபோது அது மழையா என்ற ஐயம் வந்தது. மெல்லிய மரப்பட்டைகளால் ஆன அந்தப்பாடிவீட்டின்மேல் இரவெல்லாம் கடல்காற்று மையென்றே பெய்துகொண்டிருந்தது. திரும்பி சிறுசாளரத்தை நோக்கியபோது அது இளநீலத் திரை அணிந்திருந்ததைக் கண்டு வியந்து எழுந்தாள். அதனருகே தரையில் மென்நீலத் துவாலையென ஒளிவிழுந்துகிடந்ததும்தான் அதுவெளியே எழுந்த விடியலின் நிறமென்று உணர்ந்தாள்.

நெஞ்சு அதிர ஓடி சாளரத்தை அணுகி வெளியே நோக்கினாள். நினைவறிந்த நாள் முதல் அகம் கண்டு புறத்தில் உருவாக்கி மகிழ்ந்த அந்த விடியல்நீலம் அக்கடற்கரைநகரின் காலைக்கு மட்டுமே உரியதென்று அறிந்தாள். விழிதொடு தொலைவில் அரைவரை ஏற்றப்பட்ட திரையென நின்றிருந்த கடலில் இருந்து அவ்வெளிச்சம் எழுந்து நகர்மேல் பரவிக்கொண்டிருந்தது. நிழல்களற்ற ஒளியை வாங்கி மெல்லிய பட்டுநூல்காடு என காலைமழை நின்றிருந்தது. இன்னும் எழாத கட்டடங்களின் பளிங்குகளில் வழிந்து அவற்றை உருகி நெளியச்செய்தது. கருங்கல்பாளங்களில் பாதியை நனைத்து கருகவைத்தது. மரக்கிளைகள் வழிய இலைநுனிகள் சொட்ட கூரைகள் விதும்பி உதிர்க்க அத்தனை அமைதியான மழையை அவள் கண்டதே இல்லை.

அங்கு நின்றபடி அவள் துவாரகையை நோக்கினாள். ஒவ்வொரு மாளிகையாக விழிதொட்டு எழச்செய்தாள். அப்பால் சூதர்வீடுகள். அருகே வணிகர் மாளிகைகள். வைதிகர் வீடுகளுக்கு அருகே சிற்பியர் இல்லங்கள். குவைமாடங்கள் எழுந்த அங்காடிப்பெருந்தெரு. கொற்றவை ஆலயமுகப்பின் செண்டுவெளி. அதைச்சுற்றி படைக்கலப்பயிற்சி சாலைகள். அங்கே வீரர் இளைப்பாறும் படைமண்டபங்கள். யானைகள் நின்றிருக்கும் பெருங்கொட்டிலுக்கு முன்னால் அனுமனின் செந்நிறமான சிற்றாலயம். நுரை எழுவது போல அவள் முன் பெருகி முழுவடிவம் கொண்டது துவாரகை.

“ஏடி, என்ன செய்கிறாய்? இன்று செண்டுவெளிகூடும் நாள்” என்று அன்னையின் குரல் கேட்டது. வந்ததுமே படுத்துத் துயின்றிருந்தமையால் காலையில் விழித்துக்கொண்டு கன்றும் தொழுவமும் இல்லாத அரண்மனையில் சுற்றிவந்துகொண்டிருந்தாள். “இங்கே நீராடுவதற்கு ஆறுகள் ஏதுமில்லை. கடல் இருக்கிறதே என்று கேட்டேன். அதில் உப்புநீர் என்பதனால் நீராடமுடியாது என்றார்கள். இப்பெரிய கடலின் எல்லா துறையிலுமா உப்புநீர் என்று கேட்டேன்” என்றாள் மாலினி. “என்னை மூடப்பெண் என்றே அனைவரும் எண்ணுகிறார்கள். நான் மூடப்பெண்ணாகவே இருந்துவிட்டுப்போகிறேன். ஆனால் விருஷ்ணிகுலத்தில் பிறந்தவர்களுக்கு இங்கே இருக்கும் மதிப்பு எவருக்கும் இல்லை. அதை மறக்கவேண்டாம்.”

”நேற்று கூர்மன் என்ற யாதவன் என்னைத்தேடி வந்திருந்தான். எந்தைக்கு அணுக்கமான சக்கரன் என்ற யாதவனின் மைந்தன் அவன். தங்கள் காலடி இம்மண்ணில் விழுந்தமையால் நாளை மழைபெய்யும் அன்னையே என்றான். காலை எழுந்ததுமே பார்த்தேன், உண்மையிலேயே மழை பொழிந்துகொண்டிருந்தது” மாலினி சொன்னாள். பாமா புன்னகையுடன் ”அவனுக்கு பரிசில் அளித்தீர்களல்லவா?” என்றாள். “அளித்தாகவேண்டுமே? நற்சொல் சொன்னவனுக்கு பரிசளிப்பது குடிப்பிறந்தோர் கடனல்லவா?” என்ற மாலினி “விரைந்து சித்தமாகு பெண்ணே... நான் குளித்துவிட்டேன்” என்றாள். “இங்கே குளியலறை இருக்கிறது. இளவெந்நீரை கொண்டுவந்து தருகிறார்கள். ஆயினும் என்ன, யமுனையில் நீராடாமல் நீராடியதாகவே எண்ணத்தோன்றவில்லை.”

மஹதி வந்து அவளுக்கான நீராட்டு ஒருங்கியிருப்பதை சொன்னாள். “ராகினி எங்கே?” என்றாள் பாமா. “அவள் காலையிலேயே எழுந்து கொற்றவை ஆலயத்துக்கு சென்றாள். அங்கே கேளிமுரசு எழுந்ததுமே சென்றுவிட்டாள். பிரம்மமுகூர்த்தத்தில் அன்னைக்கு பலிக்கொடை என்றார்கள்” என்றாள் மஹதி. “இங்கே கொற்றவைக்கு சுற்றும் ஏழன்னையரை குடியமர்த்தியிருக்கிறார்கள். பிராமி, கௌமாரி, நாராயணி, மகேஸ்வரி, வராகி, சாமுண்டி, இந்திராணி என்று நிரையாக அமர்ந்திருக்கிறார்கள். யாதவர்கள் ஏழன்னையரை வழிபடும் வழக்கில்லை. நமது மூதன்னையர் வேறு. இங்கே வேளாண்குடிமக்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”

நீராடி அணிசெய்துகொண்டிருக்கையில் வெளியே தேர்கள் வந்து நின்றன. ஏவலன் உள்ளே வந்து “அரசி, தங்களுக்கான தேர்கள் வந்துவிட்டன” என்றான். மாலினி வெளியே சென்று நோக்கிவிட்டு நெஞ்சில் கைவைத்து “அய்யோடி... என்ன இது? தேர் என்றால் இதுவா? இது வெள்ளித்தேர் அல்லவா?” என்றாள். “ஆம் அரசி. இங்கே அரசர் பொற்தேரில் வருவார்” என்றான் ஏவலன். “வெள்ளிமேல் எப்படி கால்வைப்பது? திருமகள் அல்லவா?” என்றாள் மாலினி. “அரசியர் கால்வைக்கலாமென நூல்மரபுள்ளது தேவி” என்றான் ஏவலன். மாலினி உள்ளே ஓடி “ஏடி, என்ன செய்கிறாய்? உன்னை கொண்டுசெல்ல வெள்ளித்தேர் வந்திருக்கிறது. பனிப்புகை போல முகில் போல... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையடி” என்றாள். பாமா புன்னகையுடன் “செல்வோம்” என்று எழுந்தாள்.

அவர்கள் செண்டுவெளியை அடைந்தபோது முன்னரே அங்கே யாதவரும் அயல்வணிகரும் கூடி நிறைந்திருந்தனர். “என்னடி இது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் யார்? அனலோன் மைந்தர்களா என்ன?” என்றாள் மாலினி. மஹதி “அவர்கள் யவனர்கள். செந்நிறக் குழலும் தோலும் நீலமணி விழிகளும் கொண்டவர்கள். முப்புரி வேல் ஏந்திய தெய்வம் இருக்கும் கலங்கள் அவர்களுக்குரியவை” என்றாள். ”பீதர்களை அங்கே களிந்தகத்திலும் கண்டிருப்பீர்கள். அவர்கள் பொன்மஞ்சள்நிறமுள்ளவர்கள். சிறிய வேங்கைவிழிகள் கொண்டவர்கள்.” மாலினி "இங்கே நம்மவரைவிட அயலவர்தான் மிகை என்று தோன்றுகிறதே” என்றாள். “ஆம், யாதவர் இன்னமும் வந்து குடியேறத்தொடங்கவில்லை” என்றாள் மஹதி.

பாமா தேரிலிருந்து இறங்கியபோது அத்தனை விழிகளும் அவளை நோக்கி திரும்பின. அவர்களின் உள்ளங்கள் கொண்ட வியப்பு உடலசைவாகி அலையென்று படர்ந்து சென்றது. “எவர் விழிகளையும் நோக்காதே. நேராக அரசமேடைக்கு செல்” என்றாள் மஹதி. பாமா நிமிர்ந்த தலையுடன் நடந்து அரசகுடியினர் அமர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி சென்றாள். அங்கே முன்னரே யாதவ குலத்தலைவர்களின் பெண்கள் அமர்ந்திருந்தனர். “எல்லா பார்வைகளும் உன்மீது தானடி. இந்த அவையிலிருந்து நீ துவாரகையின் அரசியாகத்தான் மீளவிருக்கிறாய்” என்றாள் ராகினி. அச்சொற்களை பாமா கேட்கவில்லை. அவள் விழிகள் எங்கோ இருந்தன. சித்தம் அங்கெல்லாம் பரவி அனைவருக்கும் மேலே விண்ணில் எழுந்து அங்கிருந்து நோக்கிக்கொண்டிருந்தது.

தன்பீடத்தில் கால்களை மடித்து தோள் நிமிர அமர்ந்து குழல்கற்றையை சீரமைத்துக்கொண்டாள். ராகினி அவள் ஆடைமடிப்புகளை அமைத்தாள். தலையிலிருந்து சரிந்த மணியாரம் கழுத்தை தொட்டுத்தொட்டு அசைந்தது. அவர்களுக்கு முன்னால் நீள்வட்ட வடிவமான செண்டுமுற்றம் செம்மண் மீது காலையிளமழை பரவி சதைக்கதுப்பு போல விரிந்திருந்தது. சுற்றி நின்றவர்களின் தலைப்பாகைகளும் ஆடைகளும் கொண்ட வண்ணங்கள் மலர்ப்புதர் கரையிட்ட மழைச்சுனை என அம்முற்றத்தை காட்டின. வலது மூலையில் முரசுகளும் கொம்புகளும் மணிகளுமாக இசைச்சூதர் காத்திருந்தனர். நிறைகுடங்களுடன் வைதிகர் அவர்களின் அருகே நின்றிருந்தனர்.

எங்கோ பெருமுரசமொன்று ஆர்த்ததும் அங்கிருந்த அனைவரும் வெடித்தெழுந்ததுபோல வாழ்த்தொலி எழுப்பத்தொடங்கினர். ஒலி பெருகி அவர்களை சூழ்ந்தபோதும் பாமா விழிகளை அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு கணமும் பெருகிய வாழ்த்தொலிகளும் முழவொலிகளும் எட்டுதிசையிலிருந்தும் வந்து முற்றத்தை அணைத்தன. சூதர் எழுந்து நின்று தங்கள் இசைக்கருவிகளை சித்தமாக்கினர். இடப்பக்க மக்கள் திரள் விலக ஏழு வெண்புரவிகள் குஞ்சியில் அமைந்த செங்கழுகின் இறகாலான மலர் குலைய சீரடி எடுத்துவைத்து வந்தன. அவற்றில் பொன்னிறத் தலைப்பாகையும் வெள்ளையுடையும் கவசமும் அணிந்து அமர்ந்திருந்த வீரர் அங்கிருந்தவர்களை விலக்கி வழியமைத்தனர்.

தொடர்ந்து வந்த வெள்ளித்தேரில் இசைச்சூதர் அமர்ந்து மங்கல இசையெழுப்பினர். தொடர்ந்து துவாரகைத்தலைவனின் பொன்னாலான தேர் விண்ணில் வாழும் பெருந்தெய்வமொன்றின் காதணி உதிர்ந்து உருண்டோடி வருவதைப்போல வந்தது. சங்கும் சக்கரமும் இருபக்கமும் பொறிக்கப்பட்டு நடுவே செம்மணி விழிகள் சுடர அலகுபிளந்த கருடன் அமைந்த முகப்பு ஏழு வெண்குதிரைகளுக்குப்பின்னால் எழுந்திருக்க அதில் காலைச் சூரியனின் பொன்வட்டத்தின் நடுவே மின்னும் நீலம் என அவன் தெரிந்தான். தேரின் பொன்னொளி வெண்புரவிகள் மேல் மஞ்சள் மென்துகில் என விழுந்து அலையடித்தது. புரவிகளின் குளம்புகள் தரை அறைந்து தாளமிட்டன. அவனே தேரை ஓட்டிவந்தான். தன்னை நோக்கி ஆர்ப்பரித்த திரளை புன்னகைமுகத்துடன் நோக்கியபடி ஏழு கடிவாளங்களையும் ஒரே கையால் இழுத்து சற்றே திருப்பி தேரை நிறுத்தினான்.

அவனை நோக்கி ததும்பிய கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் கைவிரித்து கூவியபடி முன்னால் ஓடினார். ஒருகணத்தில் கூட்டத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் சிதற அவனைச்சூழ்ந்து தலைகள் திரண்டு வேலியாயின. அவன் இறங்கியதும் புரவிகளில் வந்த கிருதவர்மனும் கிருதவீரியனும் இறங்கி இருபக்கமும் நின்று கூட்டத்தை விலக்கினர். “அத்தனை பேரும் அழுகிறார்கள்!” என்று மாலினி கூவினாள். “அவனை தொட்டுப்பார்க்கத்தான் முட்டி மோதுகிறார்கள். மூழ்கிக்கொண்டிருப்பவர்கள் தெப்பத்தை நோக்கிச்செல்வதைப்போல அவனை நோக்கி பாய்கிறார்கள்.” அந்த மக்களின் உணர்வுகளை அசைவுகளாக கண்ணெதிரே காணமுடிந்தது. அவன் முழுமையாகவே கூட்டத்தில் மறைந்தான்.

அவைமேடையில் அமர்ந்திருந்த அனைவரும் அவனைக்காண எழுந்து நின்றுவிட்டனர். பாமா அசையாமல் அமர்ந்திருந்தாள் “எழுந்து பாரடி” என்றாள் ராகினி. “தெரிகிறது எனக்கு” என்று பாமா சொன்னாள். “எதைப்பார்க்கிறாய்?” என்றாள் ராகினி “காலடிகள் மேலே பீலிவிழி...” என்றாள் பாமா. “எங்கே?” என்று ராகினி கேட்டாள். கிருஷ்ணன் திரளிலிருந்து அலைபிளந்து எழுபவன் போல வெளிவந்து அரசமேடையை நோக்கி சென்றான். இசைச்சூதர் மங்கலம் எழுப்ப வைதிகர் நிறைகுடத்து நீரைத் தெளித்து வேதம் ஓதி அவனை வரவேற்றனர். அவன் பணிந்து கைகூப்பி அவர்கள் நெற்றியிலிட்ட வேள்விக்கரியை ஏற்றுக்கொண்டு கூப்பிய கைகளுடன் மேடையேறி அங்கு போடப்பட்டிருந்த அரியணை அருகே நின்றுகொண்டான்.

இருபக்கமும் செவ்வைர விழிகளும் வாயும் திறந்து நின்றிருந்த சிம்மங்களால் தாங்கப்பட்ட பொற்பீடத்தின் பின்னால் பீலிவிரித்த மயில் என தோகை விரிந்து நின்றது. ”அதைத்தான் மயூராசனம் என்கிறார்களா?” என்றாள் மாலினி. எவரும் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவளே “அழகாக இருக்கிறது. முகில்கண்ட மயில்போல” என்றாள். பின்பு “ஏன் நின்றுகொண்டிருக்கிறார்?” என்றாள். “மூத்தவரும் அக்ரூரரும் வரவில்லை அல்லவா?” என்றாள் மஹதி. “அவர்கள் வரட்டுமே. இவர்தானே இங்கே அரசர்?” என்றாள் மாலினி. அரசபீடத்திற்கு வலப்பக்கமாக போடப்பட்ட நிரையில் யாதவக் குறுநிலமன்னர்களும் குலத்தலைவர்களும் இளவரசர்களும் அரச உடையுடன் அமர்ந்திருந்தனர். சத்ராஜித்தின் அருகே பிரசேனர் அமர்ந்திருக்க கிருதாக்னி சற்று அப்பால் அமர்ந்திருந்தார்.

மீண்டும் வாழ்த்தொலிகள் எழுந்தன. அனைவரும் நோக்கியதிசையில் நெற்றிப்பட்டமும் காதுமணிகளும் அணிந்த பெரிய யானைமேல் அமர்ந்து தோளில் கதாயுதத்துடன் பலராமர் வந்துகொண்டிருந்தார். முகிலில் நடந்து வருவது போலிருந்தது அவரது அசைவு. “அத்தனை பெரிய யானையா?” என்றாள் மாலினி. “நானும் காட்டில் நிறைய யானைகளை பார்த்திருக்கிறேன்... இதென்ன இவ்வளவு பெரியதாக இருக்கிறது?” மஹதி “அரசி, உங்கள் குரலை அனைவரும் கேட்கிறார்கள்” என்றாள். “கேட்கட்டும். நான் என்ன அவர்களைப்போல சீலைச்சித்திரமா?” மாலினி சொன்னாள். "யானைமேல் அமர்ந்து வருபவர்தான் அரசர் என்று எண்ணிவிடமாட்டார்களாடி?” என்றாள். எவரும் மறுமொழி சொல்லக்காணாமல் “எல்லாருக்கும்தான் தெரிந்திருக்கிறதே” என்றாள்.

பலராமர் இறங்கி வாழ்த்தொலிகள் நடுவே நடந்து வைதிகரால் வாழ்த்தப்பட்டு அரசமேடையை அடைந்ததும் கிருஷ்ணன் படிகளில் இறங்கி வந்து அவரை வணங்கி வரவேற்று மேலே கொண்டுசென்று அரியணையில் அமரச்செய்தான். அருகே இருந்த சிறிய பீடத்தில் அவன் அமர்ந்துகொண்டான். அக்ரூரரின் தேர் வந்து நின்றது. அவர் வணங்கியபடியே நடந்து வந்து மேடையேறி கிருஷ்ணனிடமும் பலராமரிடமும் ஓரிரு சொற்கள் பேசியபின் தன் இருக்கையில் அமர்ந்தார். அருகே நின்றிருந்த அமைச்சர்கள் அவரிடம் குனிந்து பேசினார்கள். மாலினி “நம் அரசரை பார்... அவர் கழுத்தில் என்ன இருக்கிறதென்று பார்” என்றாள். அவள் குரலை எவரும் பொருட்டாக நினைக்கவில்லை. அத்தனைபேரும் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தனர். "சியமந்தக மணியை நானே குறைவாகத்தான் பார்த்திருக்கிறேன். அதை கழுத்தில் அணிந்திருக்கிறார்” என்று மாலினி கைநீட்டி கூவினாள்.

பாமா திரும்பி புருவம் சுருக்கி நோக்கினாள். சத்ராஜித் தன் மார்பில் பொன்னாரத்தின் நடுவே பதக்கத்தில் பதிக்கப்பட்ட சியமந்தக மணியை அணிந்திருந்தார். அது இளநீலநிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. பாமா அதை முன்னரே கண்டிருந்தாள். அவர் மேல் கூரையின் வழியாக வந்த வெளிச்சவட்டம் விழுந்திருக்கிறதென்றுதான் நினைத்தாள். “சியமந்தக மணியா?” என்று மஹதி மூச்சடக்கி சொன்னாள். “சியமந்தகத்தைப் பார்த்தால் எனக்குத்தெரியாதா என்ன? நான் மணமுடித்துவந்த நாட்களில் ஆண்டுதோறும் அதை எடுத்து வழிபடுவார்கள். பின்னர் அதை களிந்தகத்தின் கருவூலத்திற்கு கொண்டுசென்றுவிட்டார் அரசர். நீலமலர் போலிருக்கும். ஒளிபட்டால் கரி எரியும்போது வரும் அடிச்சுடர் போலிருக்கும். அதை சூரியனின் விழி என்று சூதர்கள் பாடுவார்கள்.”

மஹதி “இப்போது ஏன் அதை அணிந்து வந்திருக்கிறார்?” என்றாள். “இந்த அவையில்தானே அணியவேண்டும்? நாங்கள் என்ன பிற யாதவர்களைப்போல கன்றுமேய்த்து காட்டுக்குள் இருப்பவர்களா? களிந்தகத்தின் கருவூலம் மதுராவுக்கு நிகரானது என்றல்லவா அரசர் என்னிடம் சொன்னார்? சியமந்தகம் சூரியனால் அளிக்கப்பட்டது. அதற்கிணையான மணி இந்த துவாரகையிலும் இருக்காது...” மஹதி “என்ன நினைத்திருக்கிறார் என்றே புரியவில்லையே...” என்றாள். சத்ராஜித் அந்த மணி அனைவருக்கும் தெரியவேண்டுமென்றே நெஞ்சு விரித்து அமர்ந்திருந்தார். அவர் அருகே இருந்த யாதவ அரசகுடியினர் அனைவரும் அதை உணர்ந்திருந்தனர் என்பது காட்டிலிருக்கும் பாறையருகே மரங்கள் வளைந்து விலகியிருப்பது போல அவர்கள் அமர்ந்திருந்ததிலேயே தெரிந்தது.

அக்ரூரர் எழுந்து கைகளை விரித்ததும் பெருமுரசம் அதிரத் தொடங்கியது. மெல்ல கூட்டம் ஆரவாரம் அடங்கி அமைதியாகியது. அக்ரூரர் கைகூப்பி வணங்கி உரத்தகுரலில் ”துவாரகையீரே, யாதவப்பெருங்குடிகளே, குலத்தலைவர்களே, சிற்றரசர்களே உங்களை துவாரகையின் அரசரின் சார்பில் வரவேற்கிறேன். இன்று ஐப்பசி மாதம் கருநிலவுநாள். கருமுகில் சூழ்ந்த பெருமழைக்காலத்து இருளிரவு இது. நம் முன்னோர் கன்றுகளை பற்றும் காட்டுநோய்கள் அகல இந்நாளை சுடரகல் ஏற்றி கொண்டாடினர். பின்னர் ஆவளர்குன்று மேலிருந்து அருளிய இந்திரனுக்குரிய நாளாகியது இது. நம் இளையவர் இந்திரனுக்குரிய பலிக்கொடையை நிறுத்தினார் என்பதை அறிந்திருப்பீர்கள். இந்திரன் சினந்து ஏவிய பெருமழையை ஆவளர்குன்றையே குடையென்றாக்கி நம் இளையோன் தடுத்தருளினார். அதன்பின் இந்நாளை விருஷ்ணிகள் ஆவுக்கும் அகலுக்குமுரிய நாளென கொண்டாடிவருகிறோம்.”

“யாதவர் அடைந்த நீள்துயர் நீங்கும் நாளாக இதை இன்றுமுதல் கொண்டாடவேண்டுமென்று இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார். பாரதவர்ஷமெங்கும் இங்கு எழும் சுடரின் ஒளி சென்றடையவேண்டுமென விழைகிறார். இந்நாளில் நம் இல்லங்களெங்கும் நெய்யகல்கள் பூக்கட்டும். நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் நிறைந்துள்ள இருள் முற்றகலட்டும்” என்று அக்ரூரர் சொன்னதும் அங்கிருந்தவர்கள் கைகளை தூக்கி “ஓம் ஓம் ஓம்” என்று குரலெழுப்பினர். “அவையீரே, இந்தச் சுடர்நிரை நாளில் நம் நகரின் உச்சிக்குன்றின்மேல் பெருவாயில் ஒன்று அமைய கால்கோளிடுகிறோம். உலகெலாம் வருக என்ற அழைப்பு இது. கொள்க என்று நாம் விரித்திருக்கும் வாயில் இது. பெருவாயில்புரம் என்று இந்நகர் இப்பாரதவர்ஷத்தில் சொல்நிற்கும் காலம் வரை அறியப்படலாகுக!”

கூடிநின்றவர்கள் ஓங்கார ஒலியெழுப்பி அதை ஏற்றனர். முதுநிமித்திகன் அமர்ந்த பட்டத்துயானை நடந்து வந்து அவைநடுவே நின்றது. அதன்மேலிருந்த வெண்முரசை கோல்காரர்கள் முழக்கி நிறுத்தியதும் ரீங்காரம் நிறைந்த அமைதியில் நிமித்திகன் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை தூக்கி அமைந்து மணிக்குரலில் உரக்க சொன்னான் “அவையீரே, இந்தச் செண்டுவெளியில் இப்போது கால்கோள் விழவு நிகழவிருக்கிறது. இங்கு இறங்கி நிறைக தெய்வங்கள்! அருள்பொழிந்து அமைக நம் மூதன்னையர்! இத்தருணம் என்றும் வாழ்க!” அவை ஆமென்று ஒலியெழுப்பியது. ஏழு ஏவலர் பெரிய வெண்கல உருளி ஒன்றை கொண்டுவந்து முற்றத்தின் நடுவே வைத்தனர். அதனருகே வெள்ளி நிலவாய் நிறைய நீரை வைத்தனர். மலர்க்கூடையையும் செம்மஞ்சள் அரிசிக்கூடையையும் அருகே வைத்தனர்.

மலைக்குமேல் பெருவாயிலுக்கு கால்கோள் நிகழுமிடத்தில் ஏழுநாட்களாக நிகழ்ந்துவந்த பூதவேள்வி முடிந்து அதன் எரிகுளத்துச் சாம்பலையும் அவியையும் மலரையும் எடுத்துக்கொண்டு பதினெட்டு வைதிகர் நிரை வகுத்து வந்தனர். அவர்கள் பொற்குடத்து நீரை மாவிலையால் தெளித்து அந்த முற்றத்தையும் பொருட்களையும் தூய்மையாக்கினர். வேள்வியன்னத்தையும் வேள்விச்சாம்பலையும் மலரையும் பேருருளிக்குள் போட்டு வேதம் ஓதி வாழ்த்தினர். மங்கல இசை எழுந்து அடங்கியதும் யானைமேல் எழுந்த நிமித்திகன் குலமும் குடிவரிசையும் சொல்லி ஒவ்வொருவரையாக அழைக்கத் தொடங்கினான்.

விருஷ்ணி குலத்து யாதவரும் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாக யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிறந்தவரான அக்ரூரரை முதலில் அழைத்தான். அவர் தன் மைந்தர்களான தேவகனும் உபதேவகனும் மருகன் சித்ரகனும் பின் தொடர அவையை வணங்கியபடி மையத்தை அணுகி கலத்திலிருந்த நீரை அள்ளி கைகளை கழுவியபின் மலரையும் மஞ்சளரிசியையும் மும்முறை அள்ளி உருளிக்குள் போட்டார். பின்னர் சித்ரகனிடமிருந்த சிறிய செப்புப்பேழையை வாங்கி அதிலிருந்த தன் நிலமாகிய பிலக்‌ஷவனத்தின் மண்ணை உருளிக்குள் இட்டார். சூழநின்றிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். பெண்கள் குரவையிட மங்கல இசை ஒலித்தது.

ஹேகயர்களும் சசபிந்துக்களும் சத்வதர்களும் போஜர்களும் குக்குரர்களும் விருஷ்ணிகளும் ஷைனியர்களும் அவரவர் குடிமூப்பு முறைப்படி அழைக்கப்பட அவர்கள் தங்கள் மைந்தர்களுடன் வந்து தங்கள் நிலத்தில் இருந்து எடுத்து பட்டில்பொதிந்த செப்பில் கொண்டுவந்த பிடிமண்ணை உருளியில் அரிமலருடன் சேர்த்து இட்டார்கள். நிமித்திகன் போஜர்குலத்து குந்திபோஜரை அழைத்தான். தளர்ந்த நடையுடன் அவர் எழுந்து வந்து மார்த்திகாவதியின் மண்ணை இட்டார், தேவகர் உத்தரமதுராபுரியின் மண்ணை உருளியிலிட்டார். பின்னர் ஹ்ருதீகர் தன் மைந்தன் கிருதவர்மன் தொடர வந்து சதபதத்தின் மண்ணை இட்டார். கூர்மபுரியின் மண்ணை கிருதாக்னி இட்டபோது அவரது இளையமைந்தர்கள் கிரௌதௌஜஸும் மதுவும் இருபக்கமும் நின்றனர்.

சத்ராஜித் எழுந்து தன் இளையோன் பிரசேனருடன் நிமிர்ந்து நெஞ்சுதூக்கி நடந்துவந்தபோது சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து வியப்பொலி ஒரு மெல்லிய முழக்கம்போல் எழுந்தது. அவரது மார்பிலிருந்த சியமந்தக மணி சூரியன் எழுந்ததுபோல் ஒளிவிட்டது. அவர் ஹரிணபதத்தின் மண்ணை உருளியிலிட்டு மும்முறை வணங்கி பின்னால் சென்றபோது மாலினி பரபரப்புடன் திரும்பி தாழ்ந்த குரலில் “ஹரிணபதத்தின் மண். அதுதான் அந்தகர்களின் தாய்நிலம்” என்றாள். அருகே நின்றிருந்த மஹதியின் கைகளைப் பற்றிக்கொண்டு “நானே என் கையால் அதை அள்ளி அந்த பொற்செப்பில் வைத்தேன்... நீயும்தானே உடனிருந்தாய்” என்றாள். “மெல்லப்பேசுங்கள் அரசி” என்றாள் மஹதி. “ஏன்?” என்று மாலினி கேட்டபோது அவள் மறுமொழி சொல்லவில்லை.

சத்ராஜித் திரும்பியபோது சியமந்தகத்தின் ஒளி அரசமேடையை வருடிச்செல்ல பலராமர் கண்கள் கூச கையால் தடுத்தார். அவையினரிலிருந்து மெல்லிய சிரிப்பு எழுந்தடங்கியது. “அது மின்னலடிக்கிறது” என்றாள் மாலினி. அதில் வெயில்பட்டு ஒளிஎழும்படி தந்தை மார்பைத் திருப்பியதை பாமா உணர்ந்தாள். ராகினி “வெயிலிருக்கும் பக்கமாகவே வந்திருக்கிறார் அரசர்” என அவள் உணர்ந்ததையே சொன்னாள். சத்ராஜித்தின் முகத்தில் ஒரு பெருமிதப்புன்னகை விரிந்திருந்தது. பிரசேனர் திரும்பி யாதவர்களை நோக்கி மீசையை மெல்ல நீவியபடி தமையனை தொடர்ந்தார். அவர்கள் மேடையில் ஏறி மீண்டும் பீடத்தில் அமர்வது வரை அத்தனை சிற்றரசர்களும் குடித்தலைவர்களும் உடலை அசைக்காமல் இறுகி அமர்ந்திருந்தனர். அவர் அமர்ந்ததும் மெல்ல இளகி அமைந்தனர்.

நிமித்திகன் எழுந்து யாதவ அரசியர் பெயரையும் இளவரசியர் பெயரையும் முறைமைப்படி அறிவிக்கத் தொடங்கினான். இளைய யாதவரின் அன்னை தேவகியின் பெயரை முதலில் அறிவித்தான். தளர்ந்திருந்த அன்னை வெயிலுக்குக் கூசிய கண்களை கைகளால் மறைத்தபடி சேடி ஒருத்தி தோள்பற்றி துணைவர மெல்ல நடந்து அருகணைந்து சிற்றகலில் நீண்டிருந்த நெய்த்திரியை கைவிளக்கை வாங்கி ஏற்றினாள். அதன்பின் மூத்த பேரரசி ரோகிணிதேவி சுடரேற்றினாள். யாதவகுடியினரின் அரசியர் தங்கள் இளவரசியருடன் சென்று அகல்திரியை ஏற்றினர். கூர்மபுரியின் இளவரசியர் பெயர் அறிவிக்கப்பட்டபோது மாலினி “கருவூலத்திலிருந்த அத்தனை அணிகளையும் சூடிவந்துவிட்டார்கள்போல” என்றாள்.

அந்தககுலத்து நிம்னரின் மைந்தரும் ஹரிணபதத்தின் அரசருமான சத்ராஜித்தின் அரசி விருஷ்ணி குலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் மகள் மாலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் மாலினி பதற்றத்துடன் எழுந்தாள். அவள் இளையவர்களாகிய பத்மையையும் சித்ரையையும் நிமித்திகன் அறிவித்தான். மாலினி பாமையிடம் “பாமா, நீ என்னருகே நின்றுகொள்... என் கைகள் நடுங்குகின்றன” என்றாள். மஹதி “ஒன்றுமில்லை அரசி. மும்முறை அரிமலரிட்டு விளக்கேற்றி மீளுங்கள்” என்றாள். ”அருகே நில்லடி” என்றாள் மாலினி.

அவர்கள் வணங்கியபடி மேடையிலிருந்து இறங்கினர். பாமா படிகளில் கால் வைத்து இறங்கியபோது சூழ்ந்திருந்தவர்கள் அமைதியடைவதை உணர்ந்து மாலினி திரும்பி “என்னடி?” என்று மஹதியிடம் கேட்டாள். “ஒன்றுமில்லை அரசி” என்றாள் அவள். மாலினி உருளியை அணுகி கைகளைக் கழுவாமல் அரிமலரை எடுக்கப்போக மஹதி அவள் ஆடையை அசைத்து “கைகழுவுங்கள்... கை” என்றாள். “என்ன?” என்று கேட்டதுமே புரிந்துகொண்டு மாலினி கைகளைக் கழுவி அரிமலரிட்டபின் அகலை கொளுத்திவைத்தாள். பத்மையும் சித்ரையும் அகல் ஏற்றி பின்னகர்ந்தனர். உருளியைச்சூழ்ந்து பெண்கள் ஏற்றிய அகல்சுடர்கள் பகலொளியில் பூவரசப்பூக்கள் போல நின்றிருந்தன.

மஹதி பின்னால் திரும்பி பாமையிடம் “சுடரேற்றுங்கள் இளவரசி” என்றாள். பாமா சிவந்த விழிகளுடன் மஹதியை எவரோ என நோக்கிவிட்டு கைகளை கழுவிக்கொண்டு சுடரை வாங்கினாள். மாலினி “அத்தனைபேரும் இவளைத்தான் பார்க்கிறார்களடி” என்றாள். காற்றிலாடும் பட்டுத்திரைச்சீலை என அவள் அசைவுகள் விரைவற்றிருந்தன. பாமா குனிந்து அகல்திரியை ஒருவிரலால் நீவி முன்னிழுத்து மறுகையால் சுடரை அவள் ஏற்றிய அதேகணம் வானில் சுழன்ற கிருஷ்ணப்பருந்து ஒன்றின் நிழல் அவளைக் கடந்து சென்றது. கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியபடி மேலே நோக்க பருந்து வட்டச்சுருள்பாதையில் சரிந்து வந்து அவளருகே இறங்கி அந்த உருளியின் விளிம்பில் உகிர்பற்றி நின்று சிறகுகளை குலைத்தடுக்கி நிலைகொண்டது. அதன் செம்மணிச்சிறுவிழிகளை அருகே கண்டாள். கூரம்பின் முனைபோன்ற அலகுகள் சற்றே திறந்திருக்க அது விசிறிவாலை விரித்து காற்றுக்கு சமன் செய்தது.

எங்கோ எவர் குரலிலோ ஒரு வாழ்த்து வெடித்தெழுந்தது “துவாரகையின் அரசி!” மறுகணம் பல்லாயிரம் குரல்கள் “வாழ்க வாழ்க” என்று முழக்கமிட்டன. மாலினி “மூதன்னையரே” என்று கூவி நெஞ்சை பற்றிக்கொள்ள மஹதி அவள் தோளை பிடித்தாள். பத்மையும் சித்ரையும் கூட கைகூப்பினர். பாமா எவரையும் நோக்காத விழிகளுடன், என்ன நிகழ்கிறதென்றே அறியாதவள் போல திரும்பி தன் மேடை நோக்கிசென்றாள்.

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 4

சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத் தொடங்குவதுவரைக்கும் அவர்கள் கடலை அறியவில்லை. பலமுறை தென்மேற்குதிசையில் எழுந்திருந்த நீலச்சுவரை அவர்கள் நோக்கியிருந்தும்கூட அது வானத்தின் ஒரு தோற்றம் என்றே சித்தம் காட்டியது.

சுருள்பாதையில் மேலேறி மூன்றாவது வட்டத்தை அடைந்தபோது கீழே கட்டி முடியாத துறைமுகப்பு தெரியத்தொடங்கியது. கடலுக்குள் இரண்டு நீண்ட பாறைச்சுவர்கள் நீட்டி நின்றிருந்தன. அவற்றின் உயரமான முகடுகளை உடைத்து நடுவே இருந்த பள்ளத்திற்குள் போட்டு நிரப்பி தட்டையான நீட்சியாக ஆக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. பாறைகளை நெருப்பிட்டு பழுக்கச்செய்து பின் குளிர்நீர் ஊற்றி வெடிக்கவைத்து நெம்புகோல்களால் சரித்துவீழ்த்தினர்.

இரும்பாலான நெம்புகோல்கள் பெரிய தூண்கள் என நிரையாக நின்றிருந்தன. அவற்றுடன் கட்டப்பட்டிருந்த வடங்களை கடலில் நின்ற சிறுகலங்கள் பற்றியிருந்தன. கரையில் இருந்த காவல்மாடத்தின் பெருமுரசு ஒலித்ததும் அத்தனை படகுகளும் ஒரே சமயம் பாய்களை விரித்தன. காற்று அவற்றை அள்ளி தெற்குநோக்கி கொண்டுசென்றபோது வடங்கள் இறுகி நெம்புகோல்களை அசைத்துத்தாழ்த்த பிளவுபட்டிருந்த பெரும்பாறை முனகத்தொடங்கியது.

முரசொலி கேட்டு திரும்பிய பாமா அந்தப் பாறையின் ஒலியை அருகே என கேட்டாள். சிட்டுக்குருவிகள் போல கலங்கள் சிறகுவிரித்து இழுத்துக்கொண்டிருந்தன. அக்காட்சியில் தன்னை மறந்து அவள் நோக்கிக்கொண்டிருந்தபோது மாலினி “என்னடி அது?” என்று அவள் தோளைத் தொட்டு திரும்பி அப்போதுதான் கடலை நோக்கினாள். “அய்யோடி! என்னடி இது? இவ்வளவு பெரிய ஏரி?” என்று கூவி அவளை தழுவிக்கொண்டாள். ராகினி “நான் அப்போதே பார்த்தேன். பெரிய கோட்டை என்றல்லவா நினைத்தேன்?” என்றாள். மஹதியும் திகைப்புடன் எழுந்து கடலை பார்த்தாள்.

“மறுகரையே இல்லாதது கடல் என்று சூதர்கள் சொன்னபோது நான் நம்பவே இல்லை” என்றாள் மாலினி. ராகினி முற்றிலும் சொல்லிழந்து நோக்கிக்கொண்டிருந்தாள். “அலைகள் மிகச்சிறியவைதான்” என்றாள் மாலினி. “அரசி, நாம் இங்கே உயரத்தில் இருக்கிறோம். அங்கிருக்கும் மனிதர்களை பாருங்கள்” என்று ராகினி சொன்னாள். உலோக ஒலியுடன் பாறை வெடித்து கற்கள் பெயர்ந்து பள்ளத்தில் சரிந்து அங்கிருந்த நீருக்குள் விழுந்தன. அவை விழுந்த இடத்தில் நீர் துள்ளிச் சிரிப்பதுபோல தோன்றியது. அலைகள் எழுந்து நாற்புறமும் பரவி முன்னரே விழுந்துகிடந்த பெரும்பாறைகளைச் சூழ்ந்து வெண்ணுரையால் அலைத்தன.

“என்னடி செய்கிறார்கள்? என்ன இடிகிறது?” மஹதி “பாறையை உடைத்து அந்தப்பள்ளத்தில் இட்டு நிரப்புகிறார்கள் அரசி” என்றாள். மாலினி பதற்றத்துடன் “எதற்கு?” என்றாள். “துறைமேடை அமைக்கிறார்கள்.” மாலினி “கல்லாலா?” என்று கேட்டாள். ராகினி “அந்தக் கலங்களா இப்பணியை செய்கின்றன?” என்றாள். “அவற்றை பூதங்கள் இயக்குகின்றன என்று நினைக்கிறேன். எங்கள் விருஷ்ணிகுலத்திற்கு பணிசெய்யும் பல பூதங்கள் உண்டு. முன்பு எங்கள் குலமூதாதை ஒருவர் தன் ஆநிரைகளுடன் காட்டுக்குச் சென்றபோது இதேபோல மலையிடிந்து விழுந்து பாதைமூடிவிட்டது. அவரது வேண்டுகோளை ஏற்று சண்டன் பிரசண்டன் என்னும் இரண்டு பூதங்கள் கிளம்பி வந்து அந்தப்பாறைகளைத் தூக்கி அகற்றி அவரை மீட்டுக்கொண்டுவந்தன.” மாலினி பெருமிதத்துடன் புன்னகை செய்து “இந்தக் கலங்களிலும் சண்டனும் பிரசண்டனும் இருக்கக்கூடும்” என்றாள். “ஆம் அரசி. சண்டன் பிரசண்டன் என்று தெற்கு மேற்குக் காற்றுகளை சொல்வதுண்டு” என்றாள் மஹதி. மாலினி “அப்படியா?” என்றாள்.

பாமா கடலில் கலங்கள் பாய் திருப்பி மீள்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். கடலை அப்போதுதான் அவளும் பார்க்கிறாள் என எண்ணிக்கொண்டிருந்தாள். ஆனால் பல்லாயிரம் முறை நோக்கி முற்றிலும் அறிந்ததுபோல் உணர்ந்தாள். தொலைதூர வான்கோட்டில் ஒளி ததும்பிக்கொண்டிருந்தது. நெடுந்தூரம் நீலப்பட்டின் கசங்கல். அதன் பின் அலைவளைவுகளின் தளிர்மெருகு. அதன்பின் வளைந்து நீளும் நாக்கு. கரைப்பாறைகளில் ஓசையின்றி நெளிந்து மோதி திரும்பிய வெள்ளிநூல்பின்னல்.

துவாரகையை கடல் மூன்றுதிசைகளிலும் சூழ்ந்திருந்தது. கடல் ஒரு நீல விரிமார்பு. துவாரகை அதில் ஆடும் ஒரு பொற்பதக்கம். கடல் ஒரு நீலத்தாமரை. துவாரகை அதிலமர்ந்த பொன்வண்டு. கடல் ஒரு நீலப்பட்டு. துவாரகை அதில் ஒரு பொன்னிறச் சுட்டி. கடல் ஒரு நீலவானம். துவாரகை அதில் பறக்கும் ஒரு சாரங்கம். கடல் ஒரு நீலப்பருந்து. துவாரகை அதன் உகிர்கள் கவ்விய சிறு மணி. எண்ணிச்செல்லும் தன் சிந்தையை உணர்ந்தபோது அவளுக்கு புன்னகை வந்தது.

காலந்தோறும் கேட்டுவந்த சூதர்பாடல்களின் அத்தனை அணிகளும் பொருள்கொண்டுவிட்டன. அணிகளற்று நிற்கும் உண்மைகளனைத்தும் வெறுமையடைந்துவிட்டன. பூக்காத செடிகளை பார்க்கப்பிடிக்கவில்லை. அணிகொள்ளாத ஒன்றில் விழிநிலைக்கவில்லை. இந்தக்கடலை என்றாவது பார்த்துமுடிப்போமா? இங்கே இப்படி ஒரு சாளரத்தடியில் அமர்ந்து நீலம் நீலம் என்று நோக்கி நோக்கி வாழ்ந்து முடிப்பேனா? நீலம் மீது நான்கொண்ட பித்து என்னை மறுபிறவியில் நீலமென்றாக்கும். நீலமணிச்சிறகுள்ள மீன்கொத்தியாவேன். நீலமென விரிந்த பெருங்கடலில் ஓயாது முத்தமிட்டு முத்தமிட்டு பறந்துகொண்டிருப்பேன்.

காலை செண்டுவெளியிலிருந்து மீண்டதுமே அவள் ஆடைகளைக்கூட மாற்றாமல் ஓடிச்சென்று சாளரத்தடியில் அமர்ந்து நீலம் நோக்கி விழிவிரித்தாள். அவளருகே வந்தமர்ந்த ராகினி “கன்னியின் ஆணவத்தை கவிஞர் பாடி கேட்டிருக்கிறேன். இத்தகையது என்று இன்றுதான் அறிந்தேன்” என்றாள். “என்னடி?” என்றாள். “நீ ஒருமுறைகூட அவனை பார்க்கவில்லை. அங்கிருந்த அத்தனை பெண்களின் விழிகளும் கணம்கூட விலகாமல் அவனை தொட்டிருந்தபோது நீ எங்கோ என இருந்தாய். உன்னைச்சூழ்ந்து வாழ்த்தொலி எழுந்ததை நீ காணவில்லை. அனைவர் நோக்கையும் வாங்கிய அவன் உன்னையே நோக்கியிருந்ததைக்கூட நீ அறியவில்லை...” என்றாள் ராகினி.

”நான் இக்கடல்நீலத்தை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேனடி” என்றாள் பாமா. “இன்று கிருஷ்ணப்பருந்து வந்து உன்னருகே அமர்ந்தபோது என்ன சொல்லிக்கூவியது இந்த நகரம் என்று அறிவாயா?” என்றாள் ராகினி. “நான் எதையும் கேட்கவில்லையடி” என்றாள் பாமா. “ஆம், நீ அணங்கெழுந்த விழிகொண்டிருந்தாய்” என்றாள் ராகினி. “உன்னை துவாரகையின் அரசி என்றுகூவிக்கொண்டிருந்தனர்” என்றாள் ராகினி. “அப்படியா?” என்ற பாமா “கடல்நீலம் வான்நீலம்... நீலம் அன்றி பிற நிறம் இப்புவியிலுள்ளதா என்றே தோன்றுகிறது, ராகினி. நீலச்செப்பு திறந்து உள்ளிருக்கும் சிறுமுத்து போன்ற இப்புவியை எவரோ காட்டுகிறார்கள்” என்றாள்.

“நீ என்ன விளையாடுகிறாயா? நான் என்ன சொன்னேன் என்று அறிவாயா? பிச்சி, உன்னை இந்நகரின் பேரரசி என்கிறார்கள். உன்னை யாதவர் மனம் வென்ற இளையவரின் அறத்துணைவி என அவர் மக்களே கூவி அறிவித்துவிட்டனர். அவ்விண்ணே இறங்கி வந்து உன்னை அடையாளம் காட்டிவிட்டிருக்கிறது” என்று ராகினி சினத்துடன் சொல்லி “நீ நடிக்கவில்லை. உன் விழிகளில் பொய் இல்லை. ஆனால் ஏனிப்படி இருக்கிறாய்? உனக்குள் உவகையே திரளவில்லையா?” என்றாள். “உவகையா?” என்று பாமா கேட்டாள். “நான் எதையும் உணரவில்லை, ராகினி. இந்த நீலமன்றி எதுவும் என் நெஞ்சில் இல்லை.”

ராகினி அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். “உன் உள்ளம் அலையடிக்கவில்லையா? துயரெல்லாம் நீங்கி இன்பம் அடையவில்லையா?” பாமா அவளை விழிதூக்கி நோக்கி ஒருகணம் சிந்தனைசெய்தபின் “துயரென எதையேனும் நான் உணர்ந்ததே நினைவில்லையே? ஒவ்வொரு கணமும் ஒன்றையன்றி பிறிதை நினைக்காமல் இருக்கிறேன் என்று தோன்றுகிறது...” என்றாள். ராகினி பெருமூச்சுடன் அமர்ந்துகொண்டு “என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை தோழி. நீலமாயனின் கைபற்றுவதை எண்ணிக்கூட ஒரு பெண் உவகைகொள்ளாமலிருக்க முடியுமா? நீயன்றி எந்தப்பெண்ணிடமும் இச்செய்தி சொல்லப்பட்டிருந்தால் ஆடைகளை கிழித்துவீசி மாடமுகடேறி நெஞ்சு வெடிக்க கூவியிருப்பாள். இக்கணமே சித்தம் அழிந்து பிச்சியென்றாகியிருப்பாள்” என்றாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்தபடி பாமா நீலவிரிவை நோக்கி விழி திருப்பி சிலகணங்களிலேயே அருகே ராகினி இருப்பதை மறந்தாள். அவள் நீள்மூச்சுடன் எழுந்தபோது மஹதி பின்னால் நிற்பதை கண்டாள். கண் கனிந்த சிரிப்புடன் மஹதி “அவள் கனவில் கண்டறிந்த பெருநகரடி இது. நினைவறிந்த நாள் முதல் அவள் இதன் அரசியாகவே இருந்தாள். ஒருகணமும் மாயனை அவள் நெஞ்சு விலக்கியதும் இல்லை. தன் உடலை தன் நெஞ்சை எவரேனும் மீண்டும் அடையவேண்டுமா என்ன?” என்றாள். ராகினி திரும்பி பாமாவை நோக்கிவிட்டு “அந்த மெய்மறந்த நிலைதான் இவளை பேரழகு கொண்டவளாக்குகிறதோ? சக்ரவர்த்தினியின் நடையை அளிக்கிறதோ?” என்றாள். மஹதி "அறியேன். ஆனால் விண்ணவர் விரும்பும் நிலை அது என்று மட்டும் சொல்வேன். இன்று கருடன் அதை விரும்பியே வந்தமர்ந்தது” என்றாள்.

உச்சி கடந்ததும் அரண்மனையிலிருந்து மணத்தூது வந்தது. வெள்ளித்தேர் வந்து அவர்களது பாடிவீட்டின் முன் நின்றது. அதன் முன் வந்த வெண்குதிரையில் இருந்த காவலர்கள் இறங்கியதுமே முகப்பறையில் இளையவனுடன் அமர்ந்திருந்த சத்ராஜித் எழுந்து கைகளைக் கூப்பியபடி நின்றார். பிரசேனருக்குத்தான் முதலில் புரிந்தது. “மூத்தவரே, அரண்மனைத் தூது. நான் சொல்லிகொண்டிருந்தேனே” என்றார். சத்ராஜித் என்ன செய்வதென்று அறியாமல் “இது சிறிய இல்லம்... இங்கே...” என ஏதோ சொல்ல “இது முறைமைசார்ந்த அறிவிப்பு மட்டும்தான் மூத்தவரே. நாம் சொல்கேட்டு சொல்லளிப்போம்... பிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்” என்றார்.

சத்ராஜித் “வருக வருக” என்று முகப்பு வீரர்களிடம் சொல்லியபடி கைகூப்பி முற்றத்திற்கு செல்ல பிரசேனர் திரும்பி அருகே நின்ற சேவகனிடம் “மூன்று அரசிகளையும் முறைமை ஆடைகளுடன் முகப்பறைக்கு வரச்சொல். அரண்மனை மணத்தூது என்று அறிவி” என்று ஆணையிட்டார். தேர்வந்து வளைந்த ஒளி அறைக்குள் சுழன்றது. அவரும் திரும்பி ஓடிச்சென்று தமையனருகே நின்றுகொண்டார். தேரிலிருந்து ஐந்து மங்கலப்பொருட்கள் ஏந்திய தாலங்களுடன் மூன்று அணிப்பரத்தையர் இறங்கினர். தொடர்ந்து அக்ரூரர் இறங்கி அவர்களை வணங்கினார்.

கைகூப்பி முன்னால் சென்ற சத்ராஜித் “வருக வருக மூத்தவரே. நாங்கள் வாழ்த்தப்பட்டோம்” என்றார். அணிப்பரத்தையர் எதிரே வந்து மங்கலம் காட்டி வணங்கினர். அக்ரூரர் கூப்பிய கரங்களுடன் வந்து படியேறினார். சத்ராஜித் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கி “மூத்தவர் என் இல்லம் வந்த மகிழ்வை சொற்களாக்க அறியேன்” என்றார். பிரசேனரும் அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் தலைதொட்டு வாழ்த்தியபடி “உன் இல்லம் மூதன்னையரின் அருள் நிறைந்தது அந்தகனே. திருமகள் வாழும் இடம் இது” என்றார் அக்ரூரர். “அமரவேண்டும் மூத்தவரே” என்று சொல்லி சத்ராஜித் பீடம் காட்டி அவரை அமரச்செய்தார். அணிப்பரத்தையர் மங்கலப்பொருட்களை குறுபீடத்தில் வைத்தனர்.

உள்ளிருந்து பத்மையும் சித்ரையும் பட்டாடை சரசரக்க வந்து வணங்கினர். "குலமூதாதையர் உடல்கொண்டு வந்ததுபோல் வந்துள்ளீர்கள் மூத்தவரே. இத்தருணத்தில் எங்கள் மூதன்னையரின் விழிகள் எங்களை கனிந்து சூழ்ந்துள்ளன” என்றாள் பத்மை. அக்ரூரர் நகைத்து “சத்ராஜித்தின் துணைவி சொல்லறிந்தவள் என முன்னரே அறிவேன்” என்றார். காலடி ஓசை அதிர விரைந்து வந்த மாலினி “உள்ளே இருந்தேன். மாலைநேரச் சமையலுக்கு அடுமனையாளனுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். தாங்கள் வந்ததை சொன்னார்கள். நான் சரியாக ஆடைகூட அணியவில்லை...” என்றாள். சத்ராஜித் ஒருகணம் விழிசுருங்கி பின் புன்னகையை மீட்டுக்கொண்டார்.

பத்மை “நம் இல்லம்தேடி மூத்தவர் வந்தது உங்களுக்கும் பெருமை என சொல்லிக்கொண்டிருந்தேன் மூத்தவரே” என்றாள். மாலினி அவளை நோக்காமல் தலைதிருப்பி “அது எனக்கும் தெரியும்... அவர் எங்கள் விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்தவர்” என்றாள். அக்ரூரர் சிரித்துக்கொண்டு “கன்றுமேய்க்கும் ஆய்ச்சியாகவே இருக்கிறாய் மகளே. உன் கன்றுகள் உனக்காகக் காத்திருக்குமென நினைக்கிறேன்...” என்றார். “நான் வந்தது ஏன் என்று அறிந்திருப்பாய்.” மாலினி சிரித்தபடி இடைமறித்து “ஆம், அதை என் தோழி சொல்லிக்கொண்டிருந்தாள். அரண்மனைத்தூது எக்கணமும் வரும் என்று. அதைத்தான் கருடனே விண்ணிறங்கி வந்து சொல்லிவிட்டதே...” என்றாள்.

அக்ரூரர் வாய்விட்டு சிரித்துவிட்டார். “ஆம், அதற்காகவே வந்துள்ளேன். என்னை அரசர் வசுதேவரும் தேவகியும் அரண்மனைக்கு வரவழைத்து செய்தியை சொன்னார்கள். முறைப்படி பெண்கேட்டு உறுதிச்சொல் பெற்றுவரும்படி ஆணையிட்டார்கள். அப்போது மூத்தவர் பலராமரும் உடனிருந்தார்.” மாலினி “இளையவர் இல்லையா? அவருக்கும் பிடித்திருக்கிறதுதானே?” என்றாள். பிரசேனர் “அரசி, தாங்கள் மகளிரில்லம் செல்லுங்கள். அரசமுறைமையை நாங்களே பேசிக்கொள்கிறோம்” என்றார். “ஏன், இது என் மகளின் மணம். நானே பேசுவேன். மேலும் இது விருஷ்ணிகுலத்தவரின் மணமுறை வேறு” என்று சொன்ன மாலினி “எதற்குச் சொல்கிறேன் என்றால் இளையவர் என் மகளை இன்னமும் அணுகிப் பார்க்கவில்லை...” என்றாள்.

பிரசேனர் பெருமூச்சுடன் தமையனை நோக்க அவர் தலையை தாழ்த்தினார். பத்மையும் சித்ரையும் விழிகளால் சந்தித்து இதழசையாமல் புன்னகைசெய்தனர். மாலினிக்குப்பின்னால் மஹதி வந்து நின்றாள். ஆனால் அக்ரூரர் மகிழ்வுடன் சிரித்துக்கொண்டு “நன்றாகவே பார்த்திருக்கிறார் அரசி. அவர்கள் இளமையிலேயே சந்தித்தவர்கள்தான்...” என்றார். “ஆம், மதுராவுக்காக படைகோரி வந்தபோது. அன்று அவள் முதிரா சிறுமி அல்லவா? என் மகள் கன்னியான பின்னர் அவர் பார்க்கவில்லையே” என்றாள் மாலினி.

“அவர்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் உங்கள் மகள் இந்நகர் நுழைந்ததே அரசியாகத்தான்...” என்று சொன்ன அக்ரூரர் திரும்பி சத்ராஜித்திடம் “இளவரசி நகர்நுழைந்த நேரம் என்ன என்று அறிவீர்களா?” என்றார். சத்ராஜித் இல்லை என தலையசைத்தார். “அதை மைத்ரேய முகூர்த்தம் என்பார்கள். செவ்வாய்கிழமையும் அஸ்வினி மீனும் சேரும் நாள். அஸ்வினி இருக்கும் வேளையில் மேஷம் அணையும் தருணம். மிகச்சரியாக மைத்ரேய நிலைக்காலத்தில் இளவரசி தோரணவாயிலை கடந்தாள்.”

சத்ராஜித் “நான் அறியவேயில்லை” என்றார். “ஆனால் இளைய யாதவர் அறிந்திருந்தார். நீங்கள் ஹரிணபதத்திலிருந்து கிளம்பும் நாள் முதல் வந்துசேர்வது வரை ஒவ்வொரு கணமும் திட்டமிடப்பட்டது. அந்த நேரத்தில் நகர்நுழைவை நிகழ்த்துவதற்காகவே நூறு யாதவர் அயலவராக வேடமிட்டு உங்களை சூழ்ந்திருந்தனர். அதற்காகவே மணல்மேட்டில் உங்களை அமர்த்தியிருந்தனர்...” அக்ரூரர் சிரித்து “அரசி நகருள் நுழைந்ததை நகரம் முன்னரே அறிந்துவிட்டிருந்தது. அவர்களின் உள்ளமென்றுதான் கருடன் வந்தமர்ந்தது” என்றார்,

சத்ராஜித் பெருமூச்ச்சுடன் கைகூப்பி “நான் சொல்வதற்கேதுள்ளது மூத்தவரே? நீங்கள் சொல்வதற்கெல்லாம் உடன்படுகிறேன். என் மகள் இப்பெருநகரை ஆளவேண்டுமென்பது மூதன்னையரின் ஆணை என இப்போது தெரிகிறது. வளைதடி ஏந்தி காட்டுக்குள் அலையும் வயதிலேயே அவளுக்கு வில்லும் வாளும் கற்கவேண்டுமென்னும் விழைவை உருவாக்கியவர்கள் அவர்கள். எந்த யாதவச்சிறுமிக்கு செம்மொழியும் மந்தணமொழியும் தெரியும்? நான்கு வாள்வீரர்களை ஒற்றை வாளால் செறுத்து நிறுத்தும் வல்லமை யாருக்கு உண்டு? என் மடியில் வளர்ந்தமையாலேயே அரசியை என்னால் காணமுடியாமலாயிற்றோ என்று இப்போது தோன்றுகிறது. அவள் அங்கு பிறந்து அந்நிலத்தை உண்டு அக்காற்றை உயிர்த்தாள். ஆனால் என்றும் இந்நகரை ஆளும் சக்ரவர்த்தினியாகவே இருந்தாள்.”

மாலினி விசும்பி அழத்தொடங்க பத்மை அவளை மெல்ல அணைத்து தோள்சேர்த்துக்கொண்டாள். “மலர்பெற்றுக்கொள்ளுங்கள் அந்தகரே” என்றார் அக்ரூரர். “ஆம், நான் அவளுக்கு நிகராக பெற்றுக்கொள்ளவேண்டியது மலரை மட்டும்தான்” என்று சொன்னதுமே சத்ராஜித் தொண்டை அடைத்து அழத்தொடங்கினார். “நான் விழைந்தது இது. என் மூதாதையருக்கு உவப்பானது இது. ஆனால் இப்போது என் குலநிதியுடன் இங்கிருந்து தப்பி ஓடிவிடவேண்டுமென்றே என் உள்ளம் விழைகிறது மூத்தாரே. இவளை இன்றுடன் நான் இழந்துவிடுவேன் என்று எண்ணும்போது...” அவர் கண்ணீரை மேலாடையால் மூடிக்கொண்டு தலைகுனிந்தார்.

பிரசேனர் “மூத்தவரே” என்று தோளைத்தொட “நீங்கள் திருமகளைப் பெற்றீர். இப்போது அவள் வாழும் திருநகரையும் அடைந்திருக்கிறீர் அந்தகரே. எதையும் இழக்கவில்லை” என்றார் அக்ரூரர். “ஆம், அவ்வாறெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நான் அவளை இழந்துவிட்டேன். மூத்தவரே, உண்மையில் நான் அவளை அணுகவே இல்லை. ஒரு சொல் கனிந்து சொன்னதில்லை. மடியிலும் முடியிலும் தூக்கிவைத்து கொஞ்சியதில்லை” என்ற சத்ராஜித் தன்னுள் இருந்து சொற்கள் எழுவதை உணர்ந்தார். என்ன இது என அகம் பதைக்க அவர் சொல்லிக்கொண்டே சென்றார்.

“உண்மையில் நான் அவளை அஞ்சினேன். ஏனென்றால் என் உள்ளத்தில் அவள் என்றும் அரசியாக இருந்தாள். நான் வழிபடும் ஒரே காலடிகளை கொண்டிருந்தாள். என் மூதன்னையர் வடிவமாக கனவுகளில் வந்தாள். அவளை குழந்தையென்றோ பெண்ணென்றோ எண்ண முடியாதவனாக இருந்தேன்...” சத்ராஜித் மேலும் சொல்ல முனைந்து சொல்லின்மையை உணர்ந்து கைகளை வீசி தவித்தார். மறுகணம் எழுந்து ஒரு சொல்லும் பேசாமல் விரைந்த காலடிகளுடன் உள்ளறைக்குள் சென்றுவிட்டார். பிரசேனர் “தமையன் மகள்மேல் பேரன்புகொண்டவர்” என்று விளக்கம் சொல்ல முயல அக்ரூரர் “சக்ரவர்த்தினிகளை பெற்றவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள் இளையோனே. அவர் தந்தை. தன் மகளை கையில் வாங்கிய கணமே அறிந்திருப்பார் அவள் யாரென” என்றார்.

சாளரத்துக்கு அப்பால் நீலம் அடர்ந்து வந்தது. “இந்நகரமே நீலமானது என்று தோன்றுகிறது இளவரசி” என்றாள் ராகினி. “எத்தனை வண்ணங்கள் இருந்தாலென்ன? இங்குள்ள காற்றில் நீலம் கலந்திருக்கிறது.” மஹதி வந்து “கிளம்பு... இதோ இருட்டிவிடும். இன்று நகரெங்கும் சுடரேற்றுகிறார்கள். லட்சம் சுடர் என்று சொன்னார்கள். நகரமே வேங்கைபூத்த காடு போலிருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள். பாமா எழுந்து ஆடையை சீரமைத்துக்கொண்டு கலைந்த குழலை அள்ளித் தொகுத்து “இன்னும் சற்றுநேரம்தான்” என்றாள். “மீண்டும் நீராடவேண்டியதுதான். இங்கே காற்றிலேயே உப்பு நிறைந்திருக்கிறது” என்றாள் ராகினி.

விரைவிலேயே இருட்டிவிட்டது. தொடுவானில் மட்டும் கூர்வாள்முனை என ஒளி இருந்தது. ராகினி “இது ஐப்பசி மாதம். வழக்கமாக மழைமுகில்கள் வானை மூடியிருக்குமாம். இம்முறை குறைவு என்றார்கள்” என்றாள். பாமா இளநீலப்பட்டாடையும் பொன்னிறமேலாடையும் அணிந்தாள். குழலில் வெண்முத்துமாலைகளை சூடினாள். அணிகொண்டு ஆடிமுன் நின்ற அவளை பின்னால் நின்று நோக்கிய மாலினி கண்களிலிருந்து வழிந்த நீரை மேலாடையால் துடைத்தாள். “என்ன இது அரசி?” என்று மெல்லியகுரலில் மஹதி சொன்னாள்.

“என்னால் தாளமுடியவில்லையடி... இன்று அரசர் சொன்னபோது என் உள்ளம் துணுக்குற்றது. அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே அவளை அணுகவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவளை ஒருநாளும் மூடக்குழந்தையென்றல்லாமல் நான் நடத்தியதில்லை” என்றாள். “நீங்கள் நல்லூழ் கொண்டவர்கள் அரசி. அவ்வாறு எண்ணியமையால்தானே சக்ரவர்த்தினியை குழந்தையென மடியிலிட்டு ஆட்டும் பேறுபெற்றீர்கள்?” என்றாள் மஹதி. “அரசர் இழந்த அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள் அல்லவா?”

மாலினி விழியில் நீர்த்துளிகளுடன் புன்னகைத்து “ஆம், இதுவரை அந்த அறியாமைதானே என்னை மகிழச்செய்தது?” என்றாள். மஹதி திரும்பி ஆடியிலேயே பாமையை நோக்கி “சித்திரமெழுதினால்கூட இப்படியொரு முழுமையை அடையமுடியாது” என்றாள். “கண்ணேறு விழுந்துவிடும் என்று என் அடிவயிறு பதைக்கிறது” என்றாள் மாலினி. “அரசி, திருமகளுக்கு மானுடக்கண்ணேறு உண்டா என்ன?” என்று மஹதி சொன்னாள். “ஆம், உண்மை” என்று மாலினி புன்னகைத்தாள்.

அவர்கள் இல்லத்தைவிட்டு வெளியே வந்தபோது நகரம் முழுக்க அகல்சுடர்கள் எழுந்திருந்தன. “பெரியதோர் சிறுத்தைபோலிருக்கிறது நகரம்!” என்றாள் ராகினி. அந்தக் கற்பனையைக் கேட்டு வியந்து மஹதி திரும்பி நோக்கி புன்னகைத்தாள். அத்தனை மாளிகைகளிலும் சுடர்நிரை இருந்தது. கட்டப்படாத மாளிகைச்சுவர்களிலும் மேடுகளிலுமெல்லாம் சுடரேற்றியிருந்தனர். அவர்களின் வெள்ளித்தேர் செஞ்சுடர் பட்டு பொற்தேரெனப் பொலிந்தது. அதன் உடலெங்கும் சுடர்விளக்குகள் அசைந்தன. குதிரைகளின் வெள்ளை உடல்பரப்பில் செவ்வொளி ஈரமென வழிந்தது. விழிகளுக்குள் கனல்துளியெனச் சுழன்றது. அவர்களின் அணிகளிலெல்லாம் சுடர் எழுந்திருந்தது.

“நோக்க நோக்க சித்தம் பற்றி எரிவதுபோலிருக்கிறது” என்றாள் ராகினி. “வானிலிருந்து உருகிச்சொட்டிய பொற்குழம்புத் துளி போல தெரிகிறது நகரம்.” மஹதி சிரித்தபடி “சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன உனக்கு" என்றாள். “ஏதாவது சொல்லாவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் அன்னையே” என்றாள் ராகினி. மாலினி முற்றாக சொற்களை இழந்திருந்தாள். பாமா பெரியதோர் சுடர் என மெல்ல அசைந்து உடன் வந்தாள். அவர்களின் தேர் சுழற்பாதைகளில் சூழ்ந்த செவ்வொளி நடுவே நீந்திச்சென்றது. உருகும் நெய்மணம் நிறைந்த இரவு. பித்து நிறைந்த விழிகளுடன் நகர்மக்கள் தெருக்களில் முட்டிமோதினர். பெரும்பெருக்காக மேலே சென்றுகொண்டிருந்தனர்.

குன்றின் உச்சியில் போடப்பட்ட வேள்விப்பந்தலில் எரிந்த தழல் தெரிந்தது. வேள்வியின் முழுமைச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. வேதநாதத்தை வெறும் மீட்டலாகவே கேட்கமுடிந்தது. தேர் மேலே செல்லச்செல்ல கூட்டத்தால் தடுக்கப்பட்டு அலைக்கழிந்தது. அவளை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் வாழ்த்தொலியும் உவகையொலியுமாக குறுக்கே பாய்ந்தனர். கையிலிருந்த துவாலைகளையும் மலர்களையும் தூக்கி ஆட்டினர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கி அவளை காட்டினர். பெண்கள் கொழுநரின் தோள்பற்றி எழுந்து அவளை நோக்கி சிரித்தனர்.

மலையுச்சியில் இரண்டு பெரிய செங்குத்தான பாறைகள் எழுந்து நின்றன. ஒன்று கால்மடித்து அமர்ந்திருக்கும் எருதைப்போலவும் இன்னொன்று உடல்குறுக்கி சேற்றில் புதைந்த யானைபோலவும் தோன்றியது. “இந்தபாறைகளைத்தான் பெருவாயிலாக செதுக்கவிருக்கிறார்கள்” என்றாள் மஹதி. ”இவற்றின்மேல் பெரிய பாறைகளை அடுக்கி வாயில் அமைப்பார்களாம். கடலுக்குள் இருந்து பாறைகளை வெட்டி மேலே எடுத்துக்கொண்டுவருவார்கள் என்று வணிகன் ஒருவன் சொன்னான்.” ராகினி “இத்தனை உயரத்துக்கு எப்படி பாறைகளை கொண்டுவருவார்கள்?” என்றாள். “கீழே கலங்களைக் கொண்டு நெம்புகோல்களை இழுப்பதை பார்த்தாயல்லவா? அதைப்போலத்தான்” என்றாள் மஹதி.

இரண்டு பாறைகளுக்கு அருகிலும் பெரிய குழிகள் அகழப்பட்டு அவற்றைச் சுற்றி மலர்த்தாலங்களும் மங்கலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய ஏழு கல்விளக்குகள் உடலெங்கும் செறிந்த சுடர்கள் கடற்காற்றில் துடிக்க அக்குழியைச் சூழ்ந்து நின்றிருந்தன. அருகே நிரையென நின்றிருந்த துவாரகையின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அணிந்திருந்த பட்டாடைகளில் அவற்றின் ஒளி தழலாடிக்கொண்டிருந்தது. அவர்களின் வாள்களிலும் கவசங்களிலும் குருதியென வழிந்தது. அரசமேடையில் முன்னரே யாதவச்சிற்றரசர்களும் குலத்தலைவர்களும் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் தேர்வந்து நின்றதும் இசைச்சூதர் மங்கல இசையெழுப்ப வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்தன.

பாமா ராகினியும் மஹதியும் இருபக்கமும் வர எவரையும் நோக்காத விழிகளுடன் மேடை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் வந்த மாலினி தலைகுனிந்து உதடுகளை அழுத்தியபடி நடந்து வந்தாள். அவளிடமிருந்து விசும்பல் ஒலி கேட்ட மஹதி திரும்பி “அரசி” என்று மெல்ல சொன்னாள். ராகினி “அத்தனை விழிகளும் உங்கள் மீதிருக்கிறது இளவரசி... ஒரு பெண்கூட விழி திருப்பவில்லை” என்றாள். பாமா எச்சொல்லையும் கேட்கவில்லை. அவள் தொலைவில் அலையடித்துக்கொண்டிருந்த நீலத்தின் ஓசையைத்தான் செவிநிறைத்திருந்தாள்.

பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 5

துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன் மீது கனன்று உருகுவதுபோல பந்த வெளிச்சத்தில் சிவந்திருந்தன. சூழ்ந்திருந்த முகங்களனைத்தும் எரியொளி ஏற்று தழலென தெரிந்தன. வெண்ணிற ஆடைகள் எரிந்தன. பொலனணிகள் கனன்றன. வெண்மணிகள் பற்றி எரிந்தன. செம்மணிகளோ நிறமிழந்து நீர்த்துளிகளாயின.

கால்கோள் நிகழ்வுக்கான வைதிகச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன. பதினெட்டு வைதிகர் கால்கோள் அகழ்விடத்தை கங்கை நீர் தூவி தூய்மைப்படுத்தினர். வேள்விச்சாம்பலையும் அவிமிச்சத்தையும் அதனுள் இட்டு அரிமலர் தூவி வணங்கினர். கங்கை நீர் நிறைக்கப்பட்ட மூன்று பொற்குடங்கள் குழிக்குள் இடப்பட்டன. வேதநாதம் பாறைமேல் அறைந்து பின்வாங்கும் அலைகளைப்போல திருஷ்டுப்பு சந்தத்தில் எழுந்துகொண்டிருக்க சூழ்ந்தவர்கள் கூப்பிய கரங்களுடன் நின்றனர்.

வைதிகர் வினைமுடித்து முரசு ஒலிக்க வணங்கி பின்னகர்ந்தபோது குலச்சடங்குகள் தொடங்கின. யாதவர்களின் அனைத்துக்குலங்களில் இருந்தும் முதுபூசகர் தங்கள் குலச்சின்னம் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடனும் வளைதடிகளுடனும் வண்ண ஆடைகள் அணிந்து வந்து கால்கோள் அகழ்வை சூழ்ந்து நின்றனர். அவர்களின் குலமுறைமையும் மூப்பிளமை முறைமையும் பேணப்பட்டது. அக்ரூரர் முதற் குலமூத்தாராக முன்னால் நின்று அப்பூசையை வழிநடத்தினார்.

மூங்கில் தூண்களில் கட்டப்பட்டிருந்த பன்னிரு வெண்பசுக்கள் ஓட்டிவரப்பட்டு அவர்கள் அருகே நிறுத்தப்பட்டன. செம்மணிக்கொம்புகளில் பொற்குமிழ்களும் கழுத்தில் கல்மணி ஆரங்களும் அணிவிக்கப்பட்டிருந்த பசுக்களுக்கு மலர்மாலை சூட்டி மடி வழிபாடு செய்து ஒவ்வொருவராக தொட்டு தலைசூடினர். சாணி, ஆநீர், பால், நெய், மோர் எனும் ஐந்து ஆமங்கலங்களை நீரில் கரைத்து அகழ்வைச்சுற்றியும் உள்ளேயும் தெளித்தனர். தும்பை, வெட்சி, முல்லை, மருதம், செண்பகம், தாமரை, நீலம் என்னும் ஏழு மலர்களிட்டு வழிபட்டனர்.

குலச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு குலத்துக்கும் சிறியவேறுபாடுகளுடன் கூடிய சடங்குகள் இருந்தன. விருஷ்ணிகள் தங்கள் தலைப்பாகையை அவிழ்த்து அதில் மலர்களை இட்டு தலையில் சுற்றிக்கட்டிக்கொண்டு மும்முறை வணங்கினர். சத்வதர்களுக்கு பசுவின் கொம்புகளையும் குளம்புகளையும் வணங்கும் வழக்கம் இருந்தது. குக்குரர் குலத்தில் அக்குலத்து மூதாதை ஒரு கொம்பை மும்முறை ஊதியபடி வடக்கு நோக்கி வேப்பிலைக்கொத்துக்களை விட்டெறிந்து வாழ்த்தும் சடங்கு இருந்தது.

சித்திரமென விழி வெறிக்க அரசர்களும் குலமூத்தாரும் இளவரசர்களும் அரசிகளும் இளமகள்களும் நோக்கி அமர்ந்திருந்தனர். சடங்குகள் நீடிக்க மெல்ல அவர்களின் உடல்கள் தொய்ந்து இயல்பாக இருக்கைகளில் படிந்தன. ஒருவருக்கொருவர் மிகமெல்லியகுரல்களிலும் கையசைவுகளிலும் பேசிக்கொண்டார்கள். அரசமேடையின் முகப்பிலேயே பாமாவுக்காக பெரிய வெள்ளி பீடம் ஒன்று போடப்பட்டிருந்தது. அவள் மேடைக்கு வந்ததும் வீரர்கள் பணிந்து அழைத்துச்சென்றதும் அரண்மனைச்சேடி அவளுக்கு அகம்படி செய்ததும் அவளுடைய இடமென்ன என்று தெளிவாகவே காட்டியது. அங்கிருந்த அத்தனை விழிகளிலும் அவர்கள் துவாரகையின் மணத்தூதை அறிந்திருந்தது தெரிந்தது. பெண்களும்கூட அதை ஏற்றுக்கொண்டுவிட்டிருப்பதும் தெரிந்தது.

பாமா மலர்க்கிளையில் அமரும் சிட்டுபோல மிக இயல்பாக வந்து பீடத்தின் மேல் ஆடை நீவி மடித்து மேலாடை சீரமைத்துக்கொண்டு அமர்ந்தாள். கூந்தலை மஹதி சீரமைக்க கீழாடையின் மடிப்பை ராகினி ஒழுங்கமைக்க அவள் எப்போதும் அங்கே ஆட்சிசெய்பவளென தோன்றினாள். எவரையும் நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் கைகளை இரு கைபீடங்கள் மேல் வைத்து முதுகை சாய்க்காமல் அமர்ந்தாள். நிகழ்ச்சி முழுக்க அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் மேல் அத்தனை விழிகளும் பதிந்திருந்ததையும் பின் அவ்வப்போது ஒவ்வொரு நோக்கும் வந்து தொட்டுச்சென்றதையும் அவள் எண்ணியதாக உடல் காட்டவில்லை.

அங்கு எழப்போகும் பெருவாயிலை அவள் முழுமையாக அணிச்செதுக்குகளுடனும் சிற்பங்களுடனும் கண்டிருந்தாள். அவளன்றி அதைக் கண்ட ஒருவனே அங்கிருக்கிறான் என உணர்ந்திருந்தாள். ஆனால் அவள் விழிதூக்கி ஒரு கணம்கூட அவனை நோக்கவில்லை. அவன் விழி தன்னை பலமுறை வந்து தொட்டுச்சென்றதை உடலாலே அறிந்தாள். அதிலிருந்த காதலைக்கூட உணர்ந்தாள். அவள் உள்ளத்தில் எக்களிப்போ மயக்கோ உருவாகவில்லை. அது எப்போதும் அப்படியே இருந்தது என்றே உணர்ந்தாள். அவள் அவனுடனேயே பிறந்து அவன் காதலிலேயே வளர்ந்து வந்திருந்தாள்.

குலச்சடங்குகள் முடிந்ததை முரசொலி காட்டியதும் அரசமேடை எங்கும் ஓர் அசைவு கடந்துசென்றது. அனைவரும் ஆடைதிருத்தி அணி செம்மையாக்கிக்கொண்டனர். பெண்களை சேடியர் குனிந்து குழல் நெறிப்படுத்தி வியர்வை ஒற்றினர். ராகினி பாமையிடம் "இன்னீர் அருந்துகிறீர்களா இளவரசி?" என்றாள். பாமா தலையசைத்து மறுத்தாள். மஹதி அவளிடம் குனிந்து "இந்த அவைக்கூடலிலேயே துவாரகைத்தலைவர் வசுதேவர் மணமுடிவை அறிவிப்பார் என்று சொன்னார்கள் இளவரசி. அவ்வண்ணமென்றால் தாங்கள் முற்றத்திற்கு செல்லவேண்டியிருக்கும். மங்கலச்சடங்குகளும் சில இருக்கும்… நீர் அருந்துங்கள்" என்றாள். பாமா மறுத்து தலையசைத்தாள்.

மாலினி மெல்ல "அரசர் சியமந்தக மணியை அணிந்திருக்கிறாரா பார். எனக்கு மறைக்கிறது" என்றாள். மஹதி எட்டிப்பார்த்து "ஆம்" என்றாள். "அது செந்நிறக்கனல் போல ஒளிவிடுகிறது…" ராகினி "அவர் அருகே ஒரு விளக்கு எரிகிறது என்றுதான் நான் நினைத்தேன்" என்றாள். "கிளம்பும்போதுதான் இளையவர் அதை நினைவுபடுத்தினார். இன்றைய விழா அல்லவா யாதவர்களின் முதற்பெருநாள். இன்றைக்கு சியமந்தகத்தை அணியாவிட்டால் பிறகெப்போது? நானும் அதுதான் முறை என்று சொன்னேன்."

"சியமந்தகத்தை இளவரசிக்கு மணச்சீர் என அளிக்கலாம் அரசி" என்றாள் மஹதி. "என்னடி சொல்கிறாய்? அது அந்தகர்களின் குலச்சொத்து. அவர்களின் குடித்தெய்வம் அது. அதை எப்படி விருஷ்ணிகளுக்கு கொடுப்பார்கள்?" என்றாள் மாலினி. "அப்படியென்றால் இங்கே அணிந்து வந்திருக்கக் கூடாது. அத்தனை யாதவரும் அந்த மணியால் அமைதியிழந்திருக்கிறார்கள். இங்கே இளைய யாதவரை முழுமுதல் தலைவராக ஏற்றிருக்கிறார்கள். அரியதெல்லாம் அரசனுக்குரியது என்பதே நெறி. அந்த மணியை இளைய யாதவர் வைத்திருந்தால் அனைவரும் ஏற்பர். இல்லையேல் அதற்காகவே பூசல் நிகழலாம்" என்றாள் மஹதி.

"எதற்குப்பூசல்? மணி அந்தக குலத்திற்குத்தானே சூரியனால் அளிக்கப்பட்டது?" என்று மாலினி கேட்க மஹதி பெருமூச்சுடன் "ஆம், அதைத்தான் சொன்னேன்" என்றாள். "அதை எப்படி பிறருக்கு அளிக்க முடியும்?" என்றாள் மாலினி. "அரசி, வைரம் என்பது ஆறு பட்டைகள் கொண்டது என்பார்கள். இறையருள், அழகு, நல்லூழ், பேராசை, ஆணவம், அழிவு. எந்த மணியும் எப்பக்கமும் திரும்புவதே" என்று மஹதி சொல்லி அதற்குமேல் பேசவிழைவில்லை என்பதுபோல திரும்பி ராகினியிடம் "வேறு துவாலையை எடுத்து வைத்துக்கொள். இளவரசி அவைமுற்றத்துக்கு அழைக்கப்படும்போது முகம் திருத்தி அனுப்பவேண்டும்" என்றாள்.

"இங்கே எவரேனும் பூசலிடுவார்கள் என நினைக்கிறாயா?" என்று மாலினி மேலும் கேட்டாள். அவளை திரும்பி நோக்கி விழிகளை சந்தித்து "ஆம் அரசி, ஒரு பூசல் நிகழுமென என் உள்ளுணர்வு சொல்கிறது. காலையிலேயே இளையவரின் நோக்கம் அதுவாக இருந்தது. இப்போது இந்த மணச்செய்தி வந்த பின்னர் அது சற்றே கூடியிருக்கிறது" என்றாள். மாலினி சிரித்து "பூசல் நிகழட்டும். யாதவர்கள் பொறாமை கொண்டதை சூதர்கள் பாடுவார்களல்லவா?" என்றாள். மஹதி மாலினியை சற்று சலிப்புடனும் இரக்கத்துடனும் நோக்கி "அரசி, நான் சொல்வது அதை அல்ல" என்றாள்.

"இளையவர் காலையிலேயே சியமந்தகத்தை எடுத்துக் கொடுத்தாராம். அவர்தான் அதை களிந்தகத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். அந்தகர்கள் தங்கள் அடையாளத்தை விடக்கூடாதென்று அவர்தான் சொன்னாராம்… மணச்செய்தி வந்தபோதுகூட அவர் உடனே ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை, அந்தகக் குலத்து மூத்தாரவை ஒன்றைக் கூட்டி அவர்களிடம் கேட்டபின் சொல்லலாம் என்று சொல்லி ஓரிருநாட்கள் கடந்தபின் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றுதான் சொன்னார். எனக்கும் அதுவே உகந்தது என்று பின்னர் தோன்றியது" என்றாள் மாலினி.

தொடர்ந்து அவள் "ஏனென்றால் எனக்கு விருஷ்ணிகளை தெரியும். அக்ரூரரோ இளைய யாதவரோ வசுதேவரோ மட்டும் விருஷ்ணிகள் அல்ல. விருஷ்ணிகுலத்தில் வெறும் ஆணவம் மட்டும் கொண்ட எத்தனையோபேர் இருக்கிறார்கள். இப்போது துவாரகை அமையும்போது விருஷ்ணிகுலம்தான் யாதவர்களில் முதன்மையானது என்ற மிதப்பு அவர்களிடம் இருக்கிறது. அந்தகக்குலம் விருஷ்ணிகளின் மண உறவுக்காக ஏங்கி தவம் செய்தது என்று அவர்கள் பின்னாளில் சொல்லக்கூடாதல்லவா?" என்றாள்.

சற்று பொறுமையிழந்து "அரசி, தாங்களும் விருஷ்ணிகுலம்தானே?" என்றாள் ராகினி. அதை அப்போதுதான் உணர்ந்தவள் போல திகைத்த மாலினி "ஆம், இல்லை என்றா சொன்னேன்? ஆனால் நான் அந்தகக் குலத்திற்கு அல்லவா அரசி?" என்றாள். விட்டுவிடு என்று மஹதி விழியசைக்க ராகினி உதட்டைச்சுழித்தபடி வேறுதிசையை நோக்கினாள். "அந்தகர்களிடம் சியமந்தகம் இருப்பது அவர்களை ஒருபடிமேலாக காட்டும் என்றுதான் எனக்குப்படுகிறது" என்றாள் மாலினி. எவரும் ஒன்றும் சொல்லாததை உணர்ந்து "சியமந்தகம் எளிய வைரம் அல்ல. அது முதுமூதாதை வீரசேனருக்கு சூரியனே அளித்தது அல்லவா?" என்றாள்.

அக்ரூரர் எழுந்து கைகளை தூக்கியதும் அவையில் இருந்த ஓசைகள் அவிந்தன. முரசு மும்முறை அதிர்ந்து அமைய சங்கு எழுந்து ஓய்ந்தது. அக்ரூரர் "அவையீரே, கால்கோள் சடங்கின் முடிவாக இப்போது வஞ்சினம் என்னும் சடங்கு. நமது நிலங்களின் மண்கலந்த அரிமலர்குவையை கால்கோள் அகழ்வில் இட்டு மூடியதும் இங்கு வந்துள்ள யாதவ அரசரும் குடிமூத்தாரும் இந்தப்பெருவாயிலுக்கு முன்வந்து தங்கள் வாளை உருவி இதன்முன் தாழ்த்தி தங்கள் முழுதளிப்பை அறிவிக்கவேண்டும். விழா முடிந்ததும் விடியல் வரை உண்டாட்டு நிகழும்" என்றார்.

ஏழு குலப்பூசகர் இணைந்து உருளியில் இருந்த மண்மலரரிக்கலவையை கைகளால் அள்ளி இரு குழிகளிலும் போட்டனர். மங்கல இசை எழுந்து சூழ குரவையொலிகள் இணைந்துகொண்டன. உருளியில் சிறிது எஞ்சிய மண்ணை குலப்பூசகர் தங்கள் சென்னியில் சூடிக்கொண்டனர். அவர்கள் வணங்கி பின்னகர்ந்ததும் கூடிநின்றவர்களில் ஒரு முதியவர் தெய்வம் எழுந்ததுபோல கைகளை விரித்தபடி முன்னால் வந்து "வாழ்க பெருவாயில்! வாழ்க யாதவப்பெருங்குலம்! வாழ்க பாரதவர்ஷம்!" என்று கூவினார். கூட்டம் அதை ஏற்று வாழ்த்தொலி எழுப்பியது. "அறம் வளர்க! வெற்றி சூழ்க! ஆழியும் சங்கும் அகிலமாள்க!" என்று அவர் கூவியதை ஏற்று வீரர்கள் கூவினர்.

அக்ரூரர் கைகாட்ட யாதவப்பெருங்குடிகளின் மூத்தவர் ஒவ்வொருவராக வந்து பெருவாயிலின் அகழ்வை வணங்கி வாளை உருவித்தாழ்த்தி வஞ்சினம் உரைத்து மீண்டனர். "என் உயிரும் என் சொல்லும் என் குடியும் என் குலமும் முழுதளிக்கப்படுகிறது. இப்பெருவாயில் என் தெய்வமாகிறது. ஓம் ஓம் ஓம்" என்று அவர்கள் கூறியதும் முரசும் கொம்பும் சங்கும் இணைந்து அதை ஏற்றொலித்தன. கூடிநின்றவர்கள் "ஆம், அவ்வாறே ஆகுக!" என்ற ஒலி முழக்கம் போல எழுந்தது.

முரசுகளும் வாழ்த்துகளும் சூழ ஒவ்வொருவராக வந்து வாள்தாழ்த்தி வஞ்சினம் உரைத்துச்சென்றனர். குந்திபோஜரும் தேவகரும் வந்து வஞ்சினம் உரைத்துச்சென்றபோது "அரசர் அசையாமல் அமர்ந்திருக்கிறார்" என்றாள் மாலினி. "குலமுறைப்படி அந்தகர்கள் இறுதியாக பிரிந்து வந்தவர்கள். ஆகவே முறைமை இறுதியாகவே வரும்" என்றாள் மஹதி. "சிறியவர் இறுக்கமாக நின்றிருக்கிறார்" என்று ராகினி மெல்ல சொல்ல மாலினி "அவரும் சேர்ந்து வஞ்சினம் உரைக்கவேண்டும் அல்லவா?" என்று பொருளில்லாமல் சொன்னாள்.

சதபதத்தின் அரசர் ஹ்ருதீகரும் மைந்தர் கிருதவர்மனும் வந்து வாழ்த்துரைத்தனர். கூர்மபுரியின் கிருதாக்னி எழுந்து நின்றபின் திரும்பி சத்ராஜித்தை பார்த்தார். அப்போதே அங்கிருந்த அரசர்கள் ஏதோ பிழையை உணர்ந்துவிட்டனர். அக்ரூரர் திரும்பி வசுதேவரிடம் ஏதோ சொல்ல வசுதேவரின் அமைச்சர் பிரகதர் உடல் குலுங்க மைய மேடையிலிருந்து இறங்கி அரசர்மேடையை நோக்கி ஓடினார். கிருதாக்னி தன் மைந்தருடன் வந்து வாள்தாழ்த்தி வஞ்சினம் உரைத்துவிட்டு முதுகு காட்டாமல் பின்னகர்ந்து மேடையில் ஏறியபின்னரும் சத்ராஜித் அசையாமல் அமர்ந்திருந்தார்.

பிரகதர் அவரிடம் குனிந்து ஏதோ சொல்ல அவர் தலையை திருப்பாமல் ஓரிரு சொற்களில் மறுமொழி உரைப்பது தெரிந்தது. மீண்டும் இருமுறை பேசிவிட்டு பிரகதர் ஓடிவந்து அக்ரூரரிடம் பேச வசுதேவர் தலைசாய்த்து அதை கேட்டுக்கொண்டார். பலராமர் எழுந்து வந்து இடையில் கையை வைத்து நின்று "என்ன என்ன?" என்று வினவுவது அனைவருக்கும் கேட்டது. அங்கு நிகழ்வது எதையுமே அறியாதவன் போலிருந்தான் கிருஷ்ணன். பாமா அங்கே இல்லாதவள் போலிருந்தாள்.

கூட்டம் முழுக்க அமைதிபரவியது. அனைவர் விழிகளும் சத்ராஜித் மேல் பதிந்திருக்க பந்தத்தழல்கள் ஆடும் ஒலியையே கேட்கமுடியுமென்று தோன்றியது. அக்ரூரர் கூட்டத்தை பதற்றத்துடன் நோக்கிவிட்டு அவரே இறங்கிச்சென்று அரசமேடையேறி குனிந்து சத்ராஜித்திடம் பேசினார். அவர்கள் பேசுவதை பல்லாயிரம் விழிகள் நோக்கி நின்றன. அந்தப்பேச்சுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதுபோல பிரசேனர் விரைப்புடன் வேறெங்கோ நோக்கி நின்றார். சத்ராஜித்தின் உடலசைவுகளில் அக்கூட்டத்தை எரிச்சல்படுத்திய ஒன்று இருந்தது. எவரோ எங்கோ ஏதோ சொல்ல கூட்டம் சினம் கொண்ட பெருமிருகம்போல மெல்ல உறுமலோசை எழுப்பியது.

அக்ரூரர் திரும்பி பிரசேனரிடம் பேச அவர் மிகுந்த பணிவுடன் உடல்குழைத்து தன் தமையனை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். பலராமர் சினத்துடன் திரும்பி உரத்த குரலில் "என்ன அங்கே? என்ன சொல்கிறார்கள் அக்ரூரரே? அவர்களுக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் எழுந்து சொல்லட்டும்" என்றார். அக்ரூரர் "இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றார். "என்ன பேச்சு? அத்தனை யாதவர்களும் செய்வதை இவர்கள் ஏன் செய்யக்கூடாது? " என்றார்.

பிரசேனர் "அத்தனை யாதவர்களும் நாங்களும் நிகரல்ல. எங்களுக்கு தனி முறைமைகள் உள்ளன" என்றார். "என்ன முறைமைகள்? அதை சொல்லுங்கள்" என்று பலராமர் கூவ பிரசேனர் "மூத்தவரே, நீங்களே அதை அவை முன் சொல்லுங்கள்" என்றார். சத்ராஜித் ஒரு கணம் தயங்கியபின் தொடையில் கையூன்றி எழுந்து கைகூப்பி நின்றார். கூட்டம் முற்றமைதி கொண்டது. சத்ராஜித் "யாதவப்பெருங்குடிகளே, நாங்கள் சூரியதேவனால் வாழ்த்தப்பட்டவர்கள். நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் குலமூதாதை வீரசேனர் காமகுரோத மோகங்களை வென்று சூரியனை கண்முன் வரவழைத்துப்பெற்றுக்கொண்ட சியமந்தக மணிக்கு உரிமையாளர்கள் நாங்கள்" என்றார்.

தன் மார்பில் கிடந்த மணியை தூக்கிக்காட்டி "இந்த மணி சூரியனின் சிறுவடிவம். இதை அணிந்திருப்பவன் சூரியனேதான் என்கின்றனர். நான் எளியவன், ஆனால் என் மார்பில் இது அணிசெய்வது வரை சூரியனுக்கு நிகரானவன். மண்ணில் எவர் முன்பும் நான் தலைவணங்கலாகாது. எந்த தெய்வத்தையும் சூரியனுக்கு நிகர்வைக்கலாகாது. எந்த அடிகளிலும் என் வாள் தழையலாகாது" என்றார்.

அக்ரூரர் "களிந்தரே, முன்பு நீர் யாதவரின் முன் வாள்தாழ்த்தினீர்" என்றார். "ஆம், அது ஒரு போருக்காக. அதை நான் செய்யலாம். ஆனால் இங்கே இந்தத் தோரணவாயில் முன் வாள்தாழ்த்தினால் இதை நான் தெய்வமென்று ஏற்றதாக பொருள். வாழ்நாளில் என்றென்றைக்குமாக இதற்கு கட்டுப்பட்டதாக பொருள். அது என் தெய்வத்துக்கு எதிரான வஞ்சினம். அதை நான் எந்நிலையிலும் செய்யமுடியாது" என்றார்.

பலராமர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தபடி மேடையிலிருந்து இறங்கிவந்து "அடேய், அந்தகா! மூடா! நீ எவருக்கும் நிகரல்ல என்றால் இங்கே அதை மன்றுமுன் காட்டு. வா, வந்து என்னுடன் தோள்பொருது!" என்றார். அக்ரூரர் இறங்கிச்சென்று பலராமரை தடுத்து தோள்களைப்பற்றி "வேண்டாம்... இது அதற்கான இடமல்ல" என்றார். "இந்த நகரை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இவன் நம்மை எதிரியென எண்ணுகிறான்… நாம் இவனை இங்கேயே அழித்தாகவேண்டும்" என்று பலராமர் கூவினார்.

"என்னை அழிக்க உங்களால் முடியும் யாதவரே. ஆனால் என்னை பணியவைக்க முடியாது" என்று சத்ராஜித் கூவினார். பிரசேனர் "விருந்துக்கு அழைத்து வஞ்சக்கொலை செய்வது விருஷ்ணிகளின் மரபு என்றால் அதை செய்யுங்கள்" என்றார். "சீ, பதரே. நீதான் இதையெல்லாம் செய்கிறாய்" என்று கூவியபடி பலராமர் மீண்டும் பாய அக்ரூரர் அவரை இறுகப்பற்றி "விலகுங்கள் இளவரசே. நான் ஆணையிடுகிறேன்... விலகுங்கள்!" என்றார்.

விருஷ்ணி குலத்தவரான கர்க்கர் "அந்தகரே, உங்கள் குலமுறைமைகளை நாங்கள் அறியவேண்டியதில்லை. நீங்கள் இங்குள்ள யாதவக்கூட்டமைப்புடன் இணைகிறீர்களா இல்லையா என்பதே எங்கள் வினா" என்றார். "யாதவக்கூட்டமைப்பு எங்களை ஏற்றுக்கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கு மாற்று எண்ணம் இல்லை. ஆனால் ஒருபோதும் ஒருவர் முன்னும் அந்தகர் தலைவணங்கமாட்டார்கள்" என்றார் சத்ராஜித். கூட்டம் சினம் கொண்டு எழுந்த ஒற்றைப்பெருமிருகமாக ஒலியெழுப்பியது. கூட்டத்தின் விளிம்பு ததும்பித்ததும்பி அருகே வந்தது.

கைகால்கள் சினத்தால் ஆட எழுந்த போஜகுலத்து தனகர் "அந்தகரே, அப்படியென்றால் இங்கு விருஷ்ணிகள் முன் தலைவணங்கிய அத்தனைபேரையும் உங்களைவிட எளியவர்களாக எண்ணுகிறீர்களா?" என்றார். "ஆம், அதில் என்ன ஐயம்? தலைவணங்கியவர்கள் தங்கள் தாழ்வை ஏற்கிறார்கள். சியமந்தக மணி இருப்பது வரை நாங்கள் அனைவரையும் விட மேலானவர்களே" என்றார் சத்ராஜித். ஒருகணம் மேடையிலும் கீழேயும் யாதவர்கள் திகைத்து சொல்லிழந்து நின்றனர். பின்னர் பேரோசையுடன் கூச்சலிட்டபடி மேடைநோக்கி வந்தனர்.

அக்ரூரர் கைகளைக் காட்டி தடுத்ததை அவர்கள் அறியவில்லை. சிலர் வாள்களை உருவியபடி முன்னால் வந்தனர். மாலினி "என்னடி, ஏன் பூசலிடுகிறார்கள்? என்ன நடக்கிறது?" என்று கூவி எழுந்துவிட்டாள். மையமேடையில் கிருஷ்ணனும் அரசியர்மேடையில் பாமாவும் மட்டுமே எதையும் அறியாதவர் போலிருந்தனர். அக்ரூரர் கைகாட்ட யாதவ வீரர்கள் பாய்ந்து வேல்களாலும் வாள்களாலும் வேலியமைத்து கூட்டத்தை தடுத்தனர். கரைகளுக்கு அப்பால் அலையடிக்கும் ஏரி போல முட்டிமோதியது கூட்டம்.

விருஷ்ணிகுலத்தலைவர் தசகர் கைகளைத் தூக்கி "நாங்கள் கோருவது ஒன்றே. எங்கள் குலமுறைகளை ஏற்று இவ்வுறுதியை மேற்கொள்ளாவிட்டால் அந்தகரை நாங்கள் ஏற்கமுடியாது" என்றார். யாதவகுலத்து மூத்தார் அனைவரும் தங்கள் வளைதடிகளை தூக்கி "ஆம் ஆம்" என்று கூவினர். "நாங்கள் எங்கள் சொற்களை சொல்லிவிட்டோம். எங்களுக்கு சூரியனன்றி அரசனும் இறைவனும் இல்லை. சியமந்தக மணி அன்றி நாங்கள் சூடும் அடையாளமும் பிறிதில்லை" என்றார் பிரசேனர்.

"அவ்வண்ணமென்றால் யாதவக்கூட்டமைப்பில் இருந்து உங்களை வெளியேற்றுவோம்" என்று போஜகுலத்து தனகர் கூவினார். "அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கதிரவன் அருளிருக்க எங்களுக்கு தோல்வி என்பதே இல்லை" என்றார் சத்ராஜித். "இனி என்ன தயக்கம்? இப்போதே அந்தகர்களை யாதவக்கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றுவோம்" என்றார் ஷைனிய குலத்தலைவர் சுருதசோமர். கைகளைக் கூப்பி உரத்தகுரலில் "இருங்கள், பொறுங்கள். நாம் பேசுவோம்" என்று அக்ரூரர் சொன்னார். "என்ன பேசுவது? அவர்கள் முடிவெடுத்துவிட்டனர். துவாரகை என்பது யாதவர்களின் கொடி. அதை ஏற்காதவர்களுக்கு இங்கென்ன வேலை?" என்று பலராமர் கூவினார்.

பிரசேனர் "எழுந்திருங்கள் மூத்தவரே, நம்மை வெளியேற்ற இவர்கள் யார்? இவர்களை நம்பியா நாம் இருக்கிறோம்?" என்றார். சத்ராஜித் எழுந்ததும் அக்ரூரர் "வேண்டாம் அந்தகரே, நாம் பேசுவோம்" என்றார். வசுதேவர் "அக்ரூரரே, பேசமுடியாது. அந்தகர்களில் இளையோன் இம்முடிவை பலநாட்களுக்கு முன்னரே எடுத்திருக்கவேண்டும்" என்றார். அக்ரூரர் திகைப்புடன் "அவனா?" என்றார். "ஆம், அவன் இதை நடத்திக்கொண்டு செல்கிறான்" என்றார் வசுதேவர். பலராமர் "இறுதியாக நான் அறிவிக்கிறேன், பெருவாயில் முன் வாள்தாழ்த்தாத எவருக்கும் துவாரகையில் இடமில்லை" என்றார். யாதவர்கள் கைகளைத் தூக்கி கூச்சலிட்டனர்.

விருஷ்ணிகுலத்தலைவர் தசகர் ”நாங்கள் இதோ அறிவிக்கிறோம், விருஷ்ணிகுலத்துக்கும் அந்தகர்களுக்கும் இனி எத்தொடர்பும் இல்லை" என்றார். ஷைனியகுலத்தலைவர்  சுருதசோமர் "நாங்களும் அறிவிக்கிறோம்" என்றார். குக்குர குலத்து சமீகர் "இதோ எங்கள் குலத்தின் முடிவை அறிவிக்கிறோம். எங்கள் நோக்கில் இனிமேல் அந்தகர்கள் யாதவர்களே அல்ல" என்றார் . அங்கிருந்த அனைத்து குலத்தலைவர்களும் பூசகர்களும் தங்கள் வளைதடிகளைத் தூக்கி அதை ஏற்று ஒலியெழுப்பினர்.

புன்னகை மாறாத முகத்துடன் அமர்ந்திருந்த கிருஷ்ணனை அந்தக் கொந்தளிப்பில் அனைவரும் மறந்துவிட்டதாகவே தோன்றியது. அக்ரூரர் "இளைய யாதவர் என்ன சொல்கிறார்?" என்றபோதுதான் அவர்கள் திரும்பி அவனை பார்த்தனர். அவன் புன்னகையைக் கண்டதும் மெல்ல அனைவரும் அமைதியானார்கள். கிருஷ்ணன் "நான் யாதவன். யாதவக்குலச்சபைகளுக்கு கட்டுப்பட்டவன்" என்றான். பலராமர் "இனி என்ன வினா? இதோ அந்தகர்களுக்கு நான் ஆணையிடுகிறேன். வாள்தாழ்த்தி வணங்குங்கள். அரியதெல்லாம் அரசனுக்குரியது என்பதனால் சியமந்தக மணியை உடனே துவாரகையின் கருவூலத்திற்கு அளியுங்கள். இல்லையேல் இக்கணமே நகர் நீங்குங்கள்" என்றார்.

சத்ராஜித் எழுந்ததும் பலராமர் "ஆனால் ஒன்றை நினைவில்கொள்ளுங்கள்… எங்கள் நண்பர்கள் அல்லாதவர்கள் எதிரிகளே. எதிரியை வேருடன் அழிப்பதே துவாரகையின் கொள்கை" என்றார். பிரசேனர் "அஞ்சி அமைவது அந்தகர் வழக்கம் அல்ல, விருஷ்ணிகுலத்தவரே" என்றார். திரும்பி "செல்வோம் மூத்தவரே" என்றபடி படிகளில் இறங்கினார். மாலினி "என்ன செய்கிறார்கள்? ஏன் செல்கிறார்கள்?" என்றாள். "நாம் பேரவையில் இருந்து வெளியேறுகிறோம் அரசி. கிளம்புங்கள்" என்று சொல்லி அவள் ஆடையை அள்ளி தோளிலிட்டாள் மஹதி.

"ஏன்? எதற்காக நாம் வெளியேற வேண்டும்? என் மகள் அல்லவா யாதவர்களின் அரசி?" என்றாள் மாலினி. சத்ராஜித் மேடையைவிட்டு இறங்கியதும் அக்ரூரர் திரும்பி உரக்க "ஹரிணபதத்தின் இளவரசி, தங்களை தன் மணமகளாக இளைய யாதவர் ஏற்றிருக்கிறார். மலர்கொண்டு வந்து முறைபேசிவிட்டிருக்கிறோம். தாங்கள் அவரை உளமார ஏற்றிருந்தால் தாங்கள் தந்தையுடன் செல்லவேண்டியதில்லை. துவாரகையின் பேரரசியாக இங்கே இருக்கலாம். அரசகுலமுறைப்படி அது சுயம்வரமென்றே கொள்ளப்படும். வைதிகர் வாழ்த்துவர்" என்றார்.

விருஷ்ணிகுலத்து தசகர் “யாதவப்பெண்ணுக்கு விரும்பியவனை ஏற்க முற்றுரிமை உள்ளது இளவரசி" என்றார். பாமா தலையை நிமிர்த்தி விழிகள் தொலைவை நோக்க அசைவற்று அமர்ந்திருந்தாள். மஹதி "நீ வரவேண்டியதில்லை இளவரசி" என்றாள். "ஆம், இது உங்கள் நகரம் இளவரசி" என்றாள் ராகினி. மாலினி "ஆம் பாமா, நீ வந்தால் மீண்டும் இந்நகருக்கு வரவே முடியாது. அந்தகக் குலம் உன்னை இளைய யாதவர் கொள்வதையும் ஏற்காது. இங்கேயே இருந்துவிடடீ" என்றாள்.

அப்பால் மொத்தக் கூட்டமும் பாமாவை நோக்கி நின்றிருந்தது. கீழிறங்கிய சத்ராஜித் இடையில் இருந்த வாளில் கையை வைத்தபடி நோக்கி நின்றார். அருகே பிரசேனர் மீசையை நீவியபடி நின்றார். பாமா மெல்லிய குரலில் "ராகினி" என அழைத்தாள். "என் சொற்களை உரக்க அவைமுன் சொல். என் தந்தைக்குரியவள் நான். கன்யாசுல்கம் அளித்து கன்யாதானமாக என்னை பெற்றால் மட்டுமே நான் இளைய யாதவருக்குரியவள் ஆவேன். இதுநாள் வரை என்னை வளர்த்த என் தந்தையையும் குலத்தையும் உதறி வர என்னால் முடியாது."

ராகினி "இளவரசி" என்றாள். "ஆனால், இப்பிறவியில் இனி ஒரு காலடியை நான் விழிகளால் நோக்கமாட்டேன். அதையும் இந்த அவையிலேயே சொல்லிவிடு" என்றபின் பாமா எழுந்துகொண்டாள். ராகினி உரக்க அதை கூவிச் சொன்னதும் பாமா கைகூப்பினாள். அசைவற்று ஒலியற்று நின்ற கூட்டம் வெடித்தெழுந்தது போல "யாதவப்பேரரசி வாழ்க!" என்று குரலெழுப்பியது. பாமா கைகூப்பி அனைவரையும் வணங்கியபின் தன் குழலை சீராக எடுத்து பின்னால் இட்டு ஆடைமடிப்புகளை ஒழுங்கமைத்து மெல்ல காலடி எடுத்துவைத்து திரும்பிச்சென்றாள்.

பகுதி நான்கு : எழுமுகம் - 1

அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி சிறிய கயிறு ஒன்றில் கட்டப்பட்ட தக்கையை நீரில் வீசி அதன் அசைவை கணித்து வழியை வகுத்தான். பிற படகுகள் அனைத்தும் பின்னால் வந்துகொண்டிருந்தன. இறுதியாகத்தான் சத்ராஜித்தும் பிரசேனரும் இருந்த படகு வந்தது. செல்லும்போதிருந்த முறைநிரை திரும்பும்போது இருக்கவில்லை. துவாரகையில் இருந்து கிளம்பும்போது கல்லெறிபட்ட மரத்துப்பறவைகள் போலத்தான் கிளம்பினர். அந்தியில் கூடணைவதுபோல தளர்ந்து கரையணைந்தனர்.

துவாரகையில் விழவு கலைந்து இல்லத்திற்கு வந்ததும் சத்ராஜித் சோர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டார். பிரசேனர் "என்ன சோர்ந்திருக்கிறீர்கள் மூத்தவரே? எது நம் மூதன்னையருக்கு உகந்ததோ அதையே செய்திருக்கிறோம். இன்று ஒரு சிறுவெற்றிக்காக நாம் நம் குலத்தை இழந்தோமென்றால் நாம் மறுமொழி சொல்லவேண்டியது நம் வழித்தோன்றல்களிடம். அதை மறக்கவேண்டாம்" என்றார். சத்ராஜித் "ஆம் அதை உணர்கிறேன் இளையோனே, ஆனால் பிழைசெய்துவிட்டேனா என்ற ஐயம் என்னை அலைக்கழிக்கிறது. என் மகள் இந்நகரில் முடிசூட்டி அமர்ந்திருப்பாள் அல்லவா?" என்றார் . "ஆம், உண்மை. ஆனால் விருஷ்ணிகுலத்துக்கு அடிமையாக குடியையும் குலத்தையும் இழந்து நாம் வாழவேண்டியிருக்கும். மூத்தவரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். கயிற்றை பிடித்திருக்கும் கையை முதல் இழுப்பிலேயே பசு அறிந்துகொள்கிறது. முதல் பிடியை விட்டுவிட்டவர்கள் ஒருபோதும் பசுவை கட்டுக்குள் வைக்கமுடியாது."

சத்ராஜித் பெருமூச்சு விட்டுக்கொண்டு பேசாமலிருந்தார். பிரசேனர் "ஆம், எனக்கும் துயரம் உள்ளது. நீங்கள் அவளை தோளிலும் மார்பிலும் சூடியதில்லை. நான் சூடியிருக்கிறேன். ஆனால் அவளே ஒருநாள் நம்மிடம் குலத்தை இழந்து அரசியாகியிருக்கவேண்டாம் தந்தையரே என்று சொல்வாள். என்னால் உறுதியாக அதை சொல்லமுடியும். இன்று அந்த அவையிலேயே விருஷ்ணிகளின் சொற்கள் எப்படி ஒலித்தன என்று பார்த்தீர்கள் அல்லவா?" என்றார். சத்ராஜித் தலையசைத்தார். "நாம் நம் மகளை துவாரகைக்குக் கொடுத்திருந்தால் மதிப்பு கொண்டிருப்போம். ஆனால் துவாரகைக்கே மகள்கொடை மறுத்தமையால் இப்போது மேலும் மதிப்பு கொண்டிருக்கிறோம். குலத்தால் யாதவர்களில் முதன்மையானவர்கள் நாமே என்று இதோ இன்று உறுதியாகிவிட்டிருக்கிறது. எண்ணிக்கொள்ளுங்கள், நாளையே நம் இல்லத்து முற்றத்தில் பாரதவர்ஷத்தின் அரசர்கள் வந்து மகள்கேட்டு நின்றிருப்பார்கள்…"

சத்ராஜித் பெருமூச்சுடன் "நல்லது நடக்கவேண்டும். இன்று என் மகள் அவையில் சுடரென நின்றபோது நான் உள்ளூர சிறுத்துவிட்டேன். அவளை வாழ்த்தி துவாரகையின் குடிகள் எழுப்பிய குரல் என் மேல் தீச்சொல் மழை என பொழிந்தது… " என்றார். "எண்ணி எண்ணி பெரிதாக்கவேண்டாம். நாம் நம் குடியை இழக்க ஒப்பவில்லை… அதில் நமக்கு பெருமையே. அதை மட்டும் நெஞ்சில் வையுங்கள்" என்ற பிரசேனர் திரும்பி ஏவலர்களிடம் "இன்னும் ஒருநாழிகையில் நாம் இந்நகர் நீங்கவேண்டும். அத்திரிகளும் புரவிகளும் சித்தமாகட்டும். பொருட்களை வண்டிகளில் ஏற்றத்தொடங்குங்கள். அரசியர் நீராடி அணிசெய்யவேண்டியதில்லை. முழுதணிக்கோலத்தை மட்டும் களைந்து பயண உடை அணிந்தால் போதும்…" என்று ஆணையிட்டார்.

மாலினிக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் நாம் கிளம்புகிறோம்? எப்போது மீண்டும் துவாரகைக்கு வருவோம்?" என்றாள். "தெரியவில்லை" என்றாள் மஹதி "அவர்கள் மணச்சடங்குக்காக ஹரிணபதம் வருவார்களா என்ன? அதற்கான செய்தியை அளித்துவிட்டார்களா?" என்றாள். மஹதி ஒன்றும் சொல்லவில்லை. ஆடைகளை மரப்பெட்டிகளில் அடுக்கத் தொடங்கினாள். "அணிகளை கழற்றிக் கொடுங்கள் அரசி…" என்றாள். அணிகளைக் கழற்றியபடி மாலினி "அவையில் மற்ற யாதவ அரசிகள் அணிந்திருந்த அணிகளைக் கண்டு நான் கூசிப்போனேன். அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்கள். தேர் போல" என்றபடி சிரித்து "ஆனால் சியமந்தக மணி இருக்கும்வரை நமக்கும் அவர்களுக்கும் நிகரே இல்லை" என்றாள்.

ராகினி அவளை நோக்கிவிட்டு திரும்பி மஹதியிடம் "என்னால் தாளவே முடியவில்லை அன்னையே. நான் எண்ணியதெல்லாம் நிகழ்கிறதென்று நினைத்தேன்" என்றாள். "எண்ணியது முறை என்றால் நிகழும்" என்றாள் மஹதி. "இது நம் இளவரசியின் நகர்… இந்த மூட யாதவர்களா அதை இல்லை என்பது?" என்று ராகினி கண்ணீருடன் கேட்டாள். "இவர்களால் என்ன செய்ய முடியும்? ஆறு கடல்நோக்கித்தான் சென்றாகவேண்டும். நம் இளவரசியும் இளைய யாதவரை அடைவாள். சியமந்தக மணிக்கு ஒரு பாதை உள்ளது. அதன் நீரோட்டங்களில் அது பொறிக்கப்பட்டுள்ளது" என்றாள் மஹதி. ராகினி பெருமூச்சுடன் "எல்லாம் இளையவரின் பொறாமையின் விளையாட்டு. இந்த இரு மூடர்களுக்கும் அது புரியவில்லை" என்றாள். "உன் சொற்களை கட்டுக்குள் வை. அரசர்களை அவமதிக்க நீ இன்னும் அரசியாகவில்லை" என்றாள் மஹதி. "ஆம், ஆனால் இச்சொற்களை சொல்வதன்பொருட்டு கழுவேறவும் நான் சித்தமாக இருக்கிறேன்" என்றாள் ராகினி.

துவாரகையை விட்டு அவர்கள் நள்ளிரவின் இருளுக்குள் கிளம்பினார்கள். பந்தங்களோ வாழ்த்தொலிகளோ இருக்கலாகாது என்று பிரசேனர் சொல்லியிருந்தாலும் பாமா செல்லும் செய்தி எப்படியோ பரவி சாலையின் இருமருங்கும் துவாரகை மக்கள் கூடியிருந்தனர். அவள் வண்டிக்குள் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த ராகினி "சாலையின் இருகரையிலும் மக்கள் இளவரசி" என்றாள். திரும்பி மெல்லிய புன்னகையுடன் "ஆம்" என்றாள் பாமா. ராகினியின் கண்கள் நிறைந்துவிட்டன. "என்னடி இது? நான் ஹரிணபதத்தில் கன்றுமேய்த்தாலும் துவாரகையின் அரசிதான். துவாரகை என்று ஒன்றை இளைய யாதவர் எண்ணும்போதே நான் அதன் அரசியாகிவிட்டேன். நான் அதன் அரசியென்பதை அவர் அறிந்ததே அதற்குப்பின்னர்தான்" என்றாள் பாமா. ராகினி உதட்டை அழுத்தியபடி பார்வையை திருப்பிக்கொண்டாள்.

குதிரைக்குளம்பெழுந்த மலைமுடி அணுகி வந்தபோது மஹதி வெளியே வந்து "மீண்டும் நம் இடம்" என்று பாமாவிடம் சொன்னாள். பாமா புன்னகைத்து "நம் கன்றுகள் நம்மை தேடும்" என்றாள். மஹதி அவளை நோக்கி "ஆம், மீண்டும் துவாரகைக்குச் செல்லும்போது அவற்றையும் கொண்டுசெல்லவேண்டும்" என்றாள். பாமா புன்னகையுடன் "ஆம்" என்று சொன்னபின் கரையோரக்காட்டை பார்க்கத்தொடங்கினாள். எதிர்த்திசைக்கு ஒழுகும் பச்சைநிற நதிபோல கரையோரக்காடு சென்றுகொண்டிருந்தது. பச்சைநிற வில் எய்த வெண்கொக்கு அம்புகள் வானில் எழுந்து வளைந்து நீரில் சரிந்தன. அவற்றின் நிழல்கள் எழுந்து வந்து அவற்றுடன் இணைந்தன.

ஹரிணபதத்தின் படித்துறையில் அவர்களுக்காக யாதவர்கள் காத்து நின்றிருந்தனர். அக்ரூரரின் மணஓலை வந்த செய்தி பறவை வழியாக அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. உடனே ஹரிணபதத்திலும் அதைச்சூழ்ந்த அனைத்து யாதவ ஊர்களிலும் விழவுக்களியாட்டு தொடங்கிவிட்டிருந்தது. உயர்ந்த மரத்தின் மேல் எழுப்பிக் கட்டப்பட்ட மூங்கிலில் விழவாடலுக்குரிய செந்நிறமான கொடி நாற்பத்தெட்டு கதிர் கொண்ட சூரியச் சின்னத்துடன் பறந்துகொண்டிருந்தது. அவர்களின் படகுகள் வருவதை மரங்களின் மேல் காவல்பரணில் இருந்த யாதவன் கண்டதுமே முழவுச்செய்தி அறிவிக்க யமுனைக்கரை முழுக்க யாதவர்கள் வண்ணக்கொடிகளுடனும் மலர்களுடனும் வந்து செறிந்து நின்று படகுகளை நோக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

ராகினி அதைக்கண்டு அழுதபடி எழுந்து படகறைக்குள் ஓடினாள். அங்கிருந்த மஹதி "உனக்கென்னடி துயரம்? மலர் அரும்பாவதற்கு முன்னரே அதைச் சூடும் மார்பு பிறந்துவிட்டது" என்றாள். ராகினியை அச்சொற்கள் மேலும் அழச்செய்தன. விசும்பியபடி அவள் புலித்தோல் மஞ்சத்தில் படுத்துவிட்டாள். "நீ அழுகிறாய், ஆனால் சென்றபோதிருந்த அதே முகத்துடன் இப்போதுமிருக்கிறாள். அவள் யாரென்றும் அவளைக் கொள்பவன் எவரென்றும் நன்கறிந்திருக்கிறாள்" என்றாள் மஹதி. "நாளையே பாரதவர்ஷத்தின் மன்னர்கள் வருவார்கள் என்று இளையவர் சொல்வதை நானே கேட்டேன்" என்றாள் ராகினி. "வரட்டும்… யாதவப்பெண் களஞ்சியப்பொன் அல்ல. அவள் காமதேனு. கனியாமல் அமுது கொள்ள எவராலும் இயலாது" என்றாள் மஹதி.

படகுகள் ஹரிணபதத்தை அடைந்த முறையை மட்டும் கொண்டே யாதவர்கள் என்ன நிகழ்ந்திருக்குமென உய்த்தறிந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்குள்ளும் மெல்லிய அச்சம் இருந்தது. அந்த அச்சம் அதற்குரிய சான்றுகளை தேடிக்கொண்டே இருந்தது. மிக நுண்மையான கைகளால் அது தொட்டறிந்துவிட்டது. படகுகள் படித்துறையை தொட்டபோது மலர்களுடனும் மங்கலப்பொருட்களுடனும் நின்றிருந்த யாதவர்கள் எவரும் அணுகி வரவிலை. படகுத்துறை ஏவலர் மட்டும் அருகே வந்து வடம் பற்றித் தளைத்து படகை நிறுத்தினர். நடைபாலம் நீண்டு படகின்மேல் அமைய உள்ளிருந்து மஹதி வெளியே வந்ததை எவரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பாமா ராகினி துணையுடன் படகுமேடைக்கு வந்து பாலம் வழியாக கரைக்கு வந்தாள்.

நிமிர்ந்த நோக்கும் இதழ்களில் மலர்ந்த புன்னகையும் அருள்நிறைந்த விழிகளுமாக அவள் இறங்கி நடந்தபோது யாதவர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர்..பின்னால் வந்த படகு நின்று அதிலிருந்து மாலினியும் சேடியரும் தளர்ந்த தோள்களும் தாழ்ந்த முகமுமாக இறங்கத் தொடங்கியபோது அவர்கள் எண்ணியது உறுதியாயிற்று. அவர்கள் மேலும் குழப்பத்துடன் அவளையே நோக்கினர். நூபுரம் தாளத்துடன் ஒலிக்க சிவந்த காலடிகளை மண்ணில் ஒற்றி ஒற்றி அவள் நடந்து அருகணைந்தபோது அங்கே நின்றிருந்த முதியபாணன் ஒரு கணநேரத்து மெய்சிலிர்ப்பாக அனைத்தையும் அறிந்துகொண்டான். உரத்த குரலில் "யாதவர்குலத்தின் அரசி வாழ்க! துவாரகைக்கு அரசி வாழ்க!" என்று கூவி அருகே நின்ற பெண்ணின் அணித்தாலத்தில் இருந்த மலர்களை அள்ளி அள்ளி அவள் மேல் வீசினான்.

எண்ணை பற்றிக்கொள்வதுபோல அந்த உணர்ச்சி யாதவர்களில் படர்ந்தது. கண்ணீருடன் கைகளை விரித்து துள்ளி எழுந்து வாழ்த்தொலிகளைக் கூவியபடி அவர்கள் அவளை எதிர்கொண்டார்கள். முதியவர்கள் இன்னதென்றில்லாத உணர்வெழுச்சியால் கண்ணீர்விட்டு அழுதார்கள். வயதான பெண்கள் அவளை நோக்கி கைநீட்டி கண்ணேறு கழிக்கும் அசைவுகளைக் காட்டி கூச்சலிட்டனர்.

அந்த உணர்ச்சிமிக்க அசைவுகளுக்கு நடுவே அவள் தென்றலில் ஆடும் மலர்ப்புதர்களை கடந்து செல்பவள் போன்ற புன்னகையுடன் மெல்ல நடந்து சென்றாள். அவளுக்குப்பின்னால் யாதவர்கள் திரண்டு வாழ்த்தி முழக்கமிட்டபடி வந்தனர். கண்ணீருடன் 'துவாரகையின் அரசி! யாதவரகளின் தலைவி' என்று கைவீசி கூவினர். அவள் நடந்த மண்ணை அள்ளி சென்னியில் சூடினர். உணர்வெழுச்சியால் கைதூக்கி நடனமிட்டனர். முழவும் துடியுமாக உடனே பாணர்கள் பாடத்தொடங்கினர். 'நீலவண்ண மார்பின் ஆரம்! மயிற்பீலி சூடிய சென்னியின் வைரம்.'

இறுதியாக வந்து நின்ற படகிலிருந்து இறங்கிய சத்ராஜித் அந்தக் களியாட்டை நோக்கி புரியாமல் திகைத்தார். என்ன நடந்துகொண்டிருக்கிறது என அவர் உணர சற்று நேரமாகியது. திகைத்து பெருமூச்சு விட்டபடி படித்துறையிலேயே நின்றுவிட்டார். "இறங்குங்கள் மூத்தவரே" என்றார் பிரசேனர். "இளையோனே, அவளை அவர்கள் துவராகை அரசி என்றல்லவா கூவுகிறார்கள்?" என்றார் சத்ராஜித். பிரசேனர் "அவர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்கள் மூத்தவரே. பாருங்கள் நாளையே இன்னொரு அரசர் நம் வாயில்முன் வந்து நிற்கையில் என்ன சொல்லப்போகிறார்கள் என்று" என்றார். "எனக்கு ஐயமாக இருக்கிறது இளையோனே, அவர்கள் அவளை யாதவர்களின் தலைவி என ஏற்றுக்கொண்டு விட்டார்கள்."

பிரசேனர் சலிப்புடன் "மக்கள் உணர்வெழுச்சி கொள்ள விழைகிறார்கள் மூத்தவரே. அதற்கான தருணங்களை அவர்கள் எப்படியும் கண்டடைவார்கள். அது அவர்களுக்கு விருப்பமான கேளிக்கை மட்டுமே" என்றார். திரும்பி கொந்தளிக்கும் யாதவர்கூட்டத்தை நோக்கிவிட்டு சத்ராஜித் "இது அங்கே துவாரகையில் அந்த மக்கள் கொண்ட அதே உளஎழுச்சி" என்றார். "ஆம், ஆனால் இப்போது அங்குள்ளவர்கள் நம் இளவரசியை வெறுக்கத் தொடங்கியிருப்பார்கள். அவர்களின் அரசனை அவமதித்து கிளம்பிச்சென்ற அந்தககுலத்து பெண் என அவளை இதற்குள் வகுத்துவிட்டிருப்பார்கள். வெறுப்பும் மக்களுக்கு விருப்பமான கேளிக்கைதான்" என்றார் பிரசேனர். சத்ராஜித் சினத்துடன் "இளையோனே, அங்கே பல்லாயிரம் பேர் நடுவே அவள் சொன்ன சொல்லை மறந்துவிட்டாய், இப்பிறவியில் இனி ஒரு தோள் தனக்கில்லை என்றாள்..." என்றார்.

பிரசேனர் "அந்த அவையில் அச்சொற்களை அவள் சொல்லாமலிருந்தால்தான் வியப்பு. மூத்தவரே, கன்னியின் உள்ளம் அத்தகையது, அது காதலில் தன்னை முழுமையாகவே ஒப்புக்கொடுக்கிறது. அச்சொற்களை சொல்லும்போது அவள் இளைய யாதவனின் காதலி மட்டுமே. பிறிதென ஏதுமற்ற நிலையில்தான் இருந்தாள். ஆனால் இப்போது இதோ ஹரிணபதம் வந்துவிட்டாள். இங்கே இருந்த எளிய யாதவப்பெண்ணாக இன்னும் சிலநாட்களில் மாறிவிடுவாள். துவாரகைக்குச் சென்றதும் இளைய யாதவனின் மணமாலை வந்ததும் அவளுக்கு கனவென ஆகிவிடும். அடுத்த காதலுக்காக அவள் அகம் ஏங்கும்" என்றார். சத்ராஜித் "இளையோனே..." என்று சொல்லத்தொடங்க பிரசேனர் "பார்த்துக்கொண்டே இருங்கள். மூத்தவரே, பெண்கள் ஆறுகளைப்போல. ஒழுகும் மண்ணின் சுவையும் மணமும் நிறமும் அவர்களுடையதென ஆகும்" என்றார்.

சத்ராஜித் தலையை மட்டும் அசைத்தார். "எண்ணிப்பாருங்கள் மூத்தவரே, இவன் உன் கொழுநன் என ஒருவனைக் காட்டியதுமே உள்ளம் இழக்கிறார்கள். முழுதளிக்கிறார்கள். அது முடியும் என்றால் அதைப்போலவே அதைக் கடந்து இன்னொருவரை ஏற்கவும் அவர்களால் முடியும்" என்றார் பிரசேனர். "குலமகளை திருமகள் என்கிறார்கள் மூத்தோர். பொன்னையும் பசுவையும் மண்ணையும் போல வெல்பவன் கைகளை சென்றடைந்து வாழ்பவர்கள் அவர்கள்."

அரைநாழிகைக்குள் துவாரகையில் நிகழ்ந்தது என்ன என்ற செய்தி அனைவருக்கும் சென்றுவிட்டது. ஆனால் அவர்கள் அந்நிகழ்ச்சிகளை உள்ளூர உணர்ச்சிகரமாக நடித்துவிட்டிருந்தமையால் அதை என்றோ நடந்த புராணமாக அதற்குள் ஆக்கிக்கொண்டிருந்தனர். அவளுடைய பெருமையை நிலைநிறுத்த நடந்த ஒரு நாடகம் என்றே அவர்களுக்கு அது பொருள்பட்டது. அவ்வுணர்ச்சி யாதவர்களிடையே பரவிப்பரவி சிலநாட்களிலேயே அவர்களின் பொது உளநிலையென நிலைகொண்டது. அதன் பின் அவளை மூதன்னையர் கூட பாமா என்று அழைக்கவில்லை, யாதவப்பேரரசி என்ற சொல்லையன்றி எதையும் அவர்களால் எண்ண முடியவில்லை. மாலினி மட்டும் "அவளை யாதவப்பேரரசி என்கிறார்கள்… அப்படியென்றால் துவாரகையில் இருந்து செய்தி வரும் என அறிந்திருக்கிறார்கள்… " என்றாள். மஹதி இதழ் விரியாமல் புன்னகைசெய்தாள்.

அச்சொல் சத்ராஜித்தை உள்ளூர மகிழ்வித்தது. சிறுவர்களோ முதியவரோ அவரிடமே 'துவாரகையரசி' என்று சொல்லிவிடும்போது அவர் விழிகளைத் தவிர்த்து நடந்து விலகினார் .ஆனால் பிரசேனர் அச்சொல்லைக்கேட்டதும் கொதிப்படைந்தார். "அவள் ஹரிணபதத்தின் இளவரசி. நாளை பாரதவர்ஷத்தின் அரசி…" என்று கூவி அப்படி சொன்னவர்களை நோக்கி வாளை உருவிக்கொண்டு பாய்ந்தார். "அவளைத்தேடி மகத மன்னர் வரவிருக்கிறார், அவள் மகதத்தின் பேரரசி. உங்கள் இளைய யாதவனின் தலையை அவள் காலடியில் வைப்பார் ஜராசந்தர்" என்று கூவினார். அவர்கள் திகைப்புடன் விலகிச்சென்று அவரை நோக்கினாலும் சிலநாட்களில் அச்சொல்லும் பரவியது. 'அவளை அடைய மகதரும் எண்ணுகிறார். யாதவருக்கும் மகதருக்கும் அவள் பொருட்டு பூசல் என்றார்கள்' என்று சொன்னார்கள்.

நாளடைவில் அவளுக்கு ஜராசந்தனா கிருஷ்ணனா யார் பொருத்தமானவன் என்று பேசிக்கொண்டனர். சிலநாட்களுக்குள் ஜராசந்தனே பொருத்தமானவன் என்று வாதிடும் ஒரு தரப்பு உருவானது. அவர்கள் சிறுபான்மையினர் என்பதனாலேயே மிகுந்த ஊக்கத்துடன் இருந்தனர். அனைத்து இடங்களிலும் பலகோணங்களில் சொல்நிலைகளை உருவாக்கி சலிக்காது நின்று பேசினர். மெல்ல ஜராசந்தர் அவளை மணக்க வரப்போகிறார் என்ற எண்ணம் வலுப்பெற்றது. ஜராசந்தர் வருவதை துவாரகையின் படைகள் தடுக்கின்றன என்று சொல்லப்பட்டது. "இளைய யாதவரால் ஜராசந்தரை தடுக்க முடியுமா என்ன? துவாரகை நேற்று முளைத்தது. மகதம் தொன்மையான ஆலமரம்" என்றனர்.

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நீர்ப்பாசிப்படலம் போல ஒவ்வொரு நாளுமென வளர்ந்து மூடின. பாமாவை மகதப்பேரரசியாக ஆக்க தடையாக இருப்பவன் என்ற சித்திரம் மிகவிரைவிலேயே இளைய யாதவனைப்பற்றி உருவாகி வந்தது. 'கோழை... அவனால் ஒருபோதும் வெல்லமுடியாது' என்று மகதத்தை ஆதரித்த யாதவர் கைதூக்கி கூச்சலிட்டனர். 'அவன் என்ன செய்தான்?' என்று எவரோ கேட்க "சியமந்தக மணியை பெண்செல்வமாகக் கேட்டான். அந்தகர்களின் குலமணியைக் கேட்க அவனுக்கென்ன உரிமை? முடியாது என்று நம் அரசர் வந்துவிட்டார்" என்றார் மகதத்தின் ஆதரவாளர். எவர் எங்கு பேச்சின் பெருக்கில் எதை சொன்னாலும் சிலநாட்களுக்குள் அது யாதவச்சிற்றூர்களெங்கும் பேசப்பட்டது. ஓரிரு மாதங்களுக்குள் பாமா வந்திறங்கியபோதிருந்த உணர்வெழுச்சிகள் எல்லாம் எங்கோ நினைவாக மாறி மறைந்தன.

ஊரில் நிகழும் பேச்சுகள் நாளும் சத்ராஜித்திற்கும் பிரசேனருக்கும் வந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் என்னதான் பேசப்படுகிறதென்பதே விளங்காத அளவுக்கு பல தரப்புகள் உருவாகி ஒவ்வொன்றும் நாள் தோறும் உருமாறின. மாலினி நாள் தோறும் மாறிக்கொண்டிருந்தாள். "அவளுக்கு ஜராசந்தர்தான் சிறந்த கணவர் என்று நிமித்திகரும் சொல்லிவிட்டார்களடி…" என்றாள். "நாம் என்ன செய்ய முடியும்? இறையாணை அப்படி இருக்கிறது." மறுநாளே "மகதரை யாதவர் வெல்லமுடியாதென்றே நினைக்கிறேன். நீ என்னடி நினைக்கிறாய்?" என்று கேட்டாள்.

ராகினி எரிச்சலுடன் "மகதம் இங்கிருந்து நெடுந்தொலைவில் இருக்கிறது அரசி" என்றாள். சினத்துடன் கையை அசைத்து "அதெல்லாம் எனக்குத்தெரியும். ஆனால் மகத மன்னர் ஜராசந்தர் முன்னரே யாதவர்களுடன் மண உறவுள்ளவர். கம்சரின் அரசிகள் அவரது முறைமகள்கள். அவர்களை இளைய யாதவர் திருப்பியனுப்பிய சினம் அவருக்கிருக்கிறது. விருஷ்ணிகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை இதற்குள் அவர் அறிந்திருப்பார். இன்னும் சில நாட்களில் என் மகளைத்தேடி கன்யாசுல்கத்துடன் மகதத்தின் பொற்தேர் வரும்" என்றாள் மாலினி. அது அவளுடைய சொற்கள் அல்ல என்று தெரிந்த மஹதி வியப்புடன் நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் விலகிச்சென்றாள்.

யமுனையின் நீராட்டுத்துறைகளில் மகதத்தின் பொற்தேர் வருவதைப்பற்றிய கதைகள் பரவின. முதலில் அது சினமும் நகைப்பும் கொள்ளச்செய்தது. "துவாரகையின் அரசருக்கு பேசப்பட்ட மகளை மகதர் கொள்வதா? விட்டுவிடுவாரா என்ன?" என்று இளையவர் கொதித்தனர். "யாதவர் அரசி அவள்… தெய்வங்கள் எழுந்து வந்து அதை சொல்லிவிட்டன" என்றனர் மூத்தோர். ஆனால் அதையே எண்ணிக்கொண்டிருந்தமையால் அதை ஏற்கும் உளநிலை உருவானது. சிலநாட்களுக்குப்பின் மகதத்தின் தூதை எதிர்நோக்கத் தொடங்கிவிட்டனர். துவாரகையின் அரசி என்பது சலித்து புதியதாக ஏதேனும் நிகழவேண்டுமென்ற விருப்பு மேலெழத்தொடங்கியது. மகத மன்னர் துவராகையின் அரசியை மணந்தால் என்ன ஆகும் என்ற ஆவல் உருவாகி அதன் பல தளங்கள் பன்னிப்பன்னிப்பேசுவதற்கு உரியவை என்பது கண்டடையப்பட்டது. ஒவ்வொருநாளும் ஹரிணபதத்தின் படித்துறையில் மகதத்தின் அணிப்படகு அணுகுவதை எதிர்நோக்கினர் யாதவர். உள்ளூர அதைத்தடுக்க துவாரகையின் வாளேந்திய படை வந்து இறங்குவதையும் எதிர்நோக்கினர்.

ஆனால் மேலும் சிலநாட்கள் சென்றபோது அந்த எதிர்பார்ப்பும் அணைந்தது. எதிர்பார்ப்பின் எழுச்சியே ஒவ்வொருநாளையும் நீண்டு நீண்டு விரியச்செய்து ஏமாற்றத்தையும் பெரியதாக்கியது. ஏமாற்றம் வெறுமையை உருவாக்கி முற்றான நம்பிக்கையிழப்பை நோக்கி கொண்டு செல்ல "மகதத்தின் பொற்தேரில் சக்கரங்கள் இல்லை" என்ற கேலிச்சொல் பரவியது. அந்த வெறுமையை கேலியினூடாக கடக்கமுடியும் என்று கண்டதும் அதை பிடித்துக்கொண்டனர். அதுவரை இருந்த அனைத்து உணர்வெழுச்சிகளையும் வேடிக்கையாக மாற்றிக்கொண்டனர். "நூறு பசுக்களை இளைய யாதவர் பெண்செல்வமாக கேட்டிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு அகிடுகள் இருக்கவேண்டுமாம்" என்றான் பாணன் ஒருவன். "இரண்டு அகிடுள்ள பசுக்கள் இங்கே நிறையவே உள்ளனவே" என்றான் அவன் நண்பன். பாணன் சொன்ன மறுமொழி கேட்டு மன்றிலிருந்தவர்கள் சிரித்தபடி அவனை அடிக்கப்பாய்ந்தனர்.

பாமா அனைத்துச் சொற்களுக்கும் அப்பாலிருந்தாள். ஹரிணபதம் மீண்டதுமே அவள் மீண்டும் பழைய யாதவ வாழ்க்கைக்கு திரும்பினாள். தொழுவத்தில் பசுக்களுக்கு புகையிட்டும் புல்லும் மாவும் ஊட்டியும் பணி செய்தாள். பால்கறந்து கலம் சேர்த்து பிற ஆய்ச்சியருடன் அமர்ந்து வெண்ணை கடைந்தாள். முதலில் ராகினியோ பிற ஆய்ச்சியரோ பதறி வந்து "வேண்டாம் அரசி" என்று தடுத்தனர். மாலினியே "நீ எதற்கு இதையெல்லாம் செய்கிறாய்? உன் கைகள் முரடாகிவிடும்" என்றாள். ஆனால் மஹதி "இது அவள் இல்லம். பசுப்பணி செய்யாத ஆயர்ப்பெண் எங்குள்ளாள்?" என்றாள்.

சிலநாட்களிலேயே அவள் பணியாற்றுவது பிழையெனத் தோன்றாமலாயிற்று. அவள் பால்குடம் சுமந்து செல்வதும் புல் வெட்டிக்குவிப்பதும் கண்ணில் படும்தோறும் யாதவப்பேரரசி என்ற சொல் பொருளிழந்து கேலிச்சொல்லாயிற்று. அவளை இளையவர்கள் "யாதவப் பேரரசி, பால் கறந்துவிட்டாயா?" என்று கேட்கும்போது அவள் புன்னகையுடன் "ஆம், இளையோனே" என்று சொல்லி கடந்துசென்றாள். "துவாரகையின் அரசியைப்போல புல்வெட்ட எவரால் முடியும்? அவளைப்போல் பால்கறக்க எவரால் முடியும்?" என்று யாதவக்குலப்பாடகனாகிய பார்க்கவன் பாடிய கேலிப்பாடல் சிறுவர் நாவுகளில் ஒலிக்கலாயிற்று. தொடக்கத்தில் மாலினி அதைக்கேட்டு சினந்து அச்சிறுவர்களை வசைபாடினாள். பின்னர் அவளும் சிரிக்கத் தொடங்கினாள்

சத்ராஜித் களிந்தகத்திற்கு சென்றபின்னர் ஓரிருமுறை மட்டுமே மீண்டுவந்தார். ஒருமுறை படகிறங்கியபோது பாமா இரண்டு பசுக்களை யமுனையில் நீராட்டிவிட்டு கொண்டுசெல்லும் காட்சியைக் கண்டு படகுக்குள்ளேயே இருந்துவிட்டார். பிரசேனர் வந்து "மூத்தவரே ஹரிணபதம்…" என்று சொன்னதும் வெறுப்புடன் முகம்தூக்கி "மூடா, அதோ இளைய யாதவன் மணம் கோரிய பெண் பசுபுரந்து செல்கிறாள். அவள் சூடவிருந்த மணிமுடியை உன் சொல்கேட்டு தடுத்தவன் நான். அவள் முன் எப்படி சென்று நிற்பேன்?" என்றார். "அவள் விழிகளை சந்தித்தால் என் உடல் சிறுத்துவிடுகிறது. இறப்புக்கு நிகரான தருணம் அது" என்றார். தலையை அறைந்து "மூடன்…முழுமூடன்…" என்று சொல்லி கண்ணீர் மல்கினார்.

பிரசேனர் "மூத்தவரே, நாம் பொறுத்திருப்போம்… மகதத்தில் இருந்து…" என்று தொடங்க சத்ராஜித் "இளையவனே, நான் அறிவேன். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாமே நாணிழந்து மகதத்திற்கு அனுப்பிய மணத்தூதை ஜராசந்தரின் நான்காம்நிலை அமைச்சர் கேட்டுவிட்டு திருப்பியனுப்பிவிட்டார்…" என்றார். "யாதவர்களில் முதன்மையானவர்கள் நாம் என நீ சொன்னபோது அது உண்மையென எனக்குப்பட்டது. ஆனால் அத்தனை யாதவகுலங்களும் அவ்வெண்ணத்தையே கொண்டிருக்கின்றன. நம்மை எவ்வகையில் நாம் யாதவரில் முதல்வர் என எண்ணவேண்டும்? நம் மூதாதை ஒரு மணியை அடைந்தார் என்பதற்காக நாம் விருஷ்ணிகளைவிட எப்படி மேலானவர்களாவோம்? என்றார்.

பிரசேனர் "நாம் சூரியவழிபாடு செய்பவர்கள்… நம்முடைய தெய்வம்...." என்று தொடங்க சத்ராஜித் இடைமறித்து "சூரியனை வழிபட்டு நாம் எதை அடைந்தோம்? வெயில்பட்டால் ஒளிவிடும் இந்தக்கல்லை மட்டும்தானே? இதை வைத்துக்கொண்டு என்ன சிறப்பு வந்தது நமக்கு? நாய்பெற்ற தெங்கம்பழம், வேறென்ன? விருஷ்ணிகளின் குலம் இன்று பல்லாயிரம் ஊர்களாகப்பிரிந்து பரவியிருக்கிறது. அவர்களின் குலத்தில் இரு மாவீரர்கள் பிறந்திருக்கிறார்கள். அதற்குமுன் ஒரு பேரரசி பிறந்து அஸ்தினபுரியின் அரியணையை அடைந்திருக்கிறாள். இன்று அவர்களே யாதவர்களின் தலைவர்கள். நாம் யார்? சிப்பி மூடியில் அள்ளிய மண்ணளவுக்கு ஒரு நகர். சில மேய்ச்சல் சிற்றூர்கள். பன்னிரண்டு ஆண்டுகளாக ஒரு துறைமேடை அமைக்க எண்ணி நிதியில்லாது திணறும் சிற்றரசு நாம்… நமக்கு எதற்காக இந்த ஆணவம்?" என்றார்.

"மூத்தவரே, சியமந்தகமணியைப்பற்றி தாங்கள் சொன்ன இச்சொற்களுக்காக நம் மூதாதையர் நம்மை பொறுத்தருளவேண்டும்" என்றார் பிரசேனர். "எளிமையாக ஒன்று மட்டும் கேட்கிறேன். நாளையே மகதமோ இல்லை இன்னொரு பேரரசோ நம்மிடம் மணத்தூதுடன் வந்தால் என்ன சொல்வீர்கள்? நம் இளவரசி ஓர் அரியணையில் அமர்ந்து செங்கோல் ஏந்தினாளென்றால் என்ன சொல்வீர்கள்? அப்போது நான் சொன்னதெல்லாம் உண்மை என்றும் இந்த உணர்ச்சிகளனைத்தும் பொய்யென்றும் ஆகிவிடுமல்லவா?" சத்ராஜித் "ஆனால்…" என்றார். "அவ்வண்ணமே எண்ணுங்கள் மூத்தவரே, இவ்வுணர்ச்சிகள் அனைத்துமே பொய்யானவை. பொருளற்றவை. இன்றைய நிலையில் இருள்தெய்வங்கள் நம் நெஞ்சில் நிறைக்கும் வீண் உணர்ச்சிகள் இவை. நம்மை அவை மதிப்பிட்டு நோக்குகின்றன. அவற்றின் ஆடலை கடந்து செல்வோம்…" சத்ராஜித் பெருமூச்சுடன் தலையசைத்தார்.

அதன்பின் சத்ராஜித் ஹரிணபதத்திற்கு வருவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். பாமா சிறுமியாக இருந்தபோதிருந்த நிலையே திரும்பிவந்தது. அவள் பசுமேய்த்து காடுகளில் அலைந்தும் வெண்ணை கடைந்தும் யமுனையில் நீராடியும் வாழ்ந்தாள். அவளிடம் துயரமென ஏதுமிருந்ததாக தெரியவில்லை. சிறுமியென இருந்தபோதிருந்த அதே முகமலர்வும் உடல்துடிப்பும் இன்குரலும் கொண்டிருந்தாள். ஒவ்வொருநாளும் இல்லத்தின் மேல் எழுந்த கன்று நோக்கும் மேடையில் ஏறி நின்று புலரியின் இளநீலத்தை வெயில் எழுவது வரை நோக்கினாள். காலைமழை பெய்யும்போது மட்டும் முழுமையாகவே இவ்வுலகிலிருந்து அகன்று விழிவிரித்து உடல் மெய்ப்புகொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது மலர் உதிர்ந்தாலும் அவள் உடல் அதிர்ந்தது. நூறுமுறை பெயர்சொல்லி அழைத்தாலும் அவள் அறியவில்லை.

பகுதி நான்கு : எழுமுகம் - 2

பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. யாதவப்பெண்ணை ஜராசந்தர் மணப்பதில் அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை என்று ஒற்றர்செய்தி வந்தது. கலிங்கமும் மாளவமும் வங்கமும் பாமா அந்தப்புரத்துப் பெண்ணாக வரலாம் என்றும் யாதவப்பெண்ணுக்கு அரசிநிலை அளிக்க இயலாதென்றும் செய்தி அனுப்பின. கோசலம் அவளை ஆயிரம் பொன் கன்யாசுல்கம் அளித்து மகள்கொள்ள சித்தமாக இருந்தது. ஆனால் மணம் கொள்ள விழையும் மூத்த இளவரசனுக்கு விழியில்லை என்றும் ஆகவே இளவரசுப்பட்டமே இல்லை என்றும் தெரியவந்தது.

நாள்செல்லச்செல்ல பிரசேனர் சோர்ந்து தமையனை சந்திப்பதையே தவிர்க்கத் தொடங்கினார். அரசுநடத்துவதை மட்டும் தன் அரண்மனையில் அமர்ந்து முடித்துவிட்டு மாலையில் யமுனைக்குள் ஓடும் ஏதேனும் படகில் தாசியருடன் சென்று செலவிட்டார். சத்ராஜித் பகலிலும் குடிக்கத்தொடங்கினார். எவரையும் சந்திக்கமுடியாமலானபோது தனிமையில் இருந்தார். தனிமையில் எண்ணங்கள் சுழன்று சுழன்று வதைத்தபோது மது இனிய புகலிடமாகியது. பிற்பகலில் குடிக்கத்தொடங்கிய ஒரு மாதத்திற்குள் காலையில் எழுந்ததுமே அவருக்கு மது தேவைப்பட்டது. பின்னர் மதுவை எண்ணியதுமே உடல் பதறத்தொடங்கியது. எளிமையானவை கூட சித்தத்தை சென்றடையவில்லை. கைகால்கள் நடுங்கத் தொடங்கவே அதற்குரிய உடல்மொழி அமைந்தது. இருகைகளையும் விரல்கோத்து மோவாயை அதன் மேல் வைத்து பற்களை இறுகக் கடித்து பழுத்த இலைபோல் ஆன விழிகளால் நோக்கியபடி பேச்சுகளை கேட்டிருப்பார். விழிகள் அலைமோதிக்கொண்டிருக்கும். ஓரிருமுறை உடல் துயிலில் தளர்வது போல அசைந்ததும் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டுவார்.

எட்டாவது மாதம் சேதிநாட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சேதிநாட்டு சிசுபாலருக்கு பாமாவை மணம் முடித்து வைக்கும் பொறுப்பை அவரது அமைச்சர் சத்யசீலர் ஏற்றுக்கொண்டார். அதற்கு நிகரியாக அவருக்கு பன்னிரண்டாயிரம் பொன்னை களிந்தகம் மறைமுக ஊதியமாக அளிக்கவேண்டும். அதை சத்ராஜித்திடம் கலக்காமலேயே பிரசேனர் ஏற்றுக்கொண்டதும் சத்யசீலர் சிசுபாலரிடம் பேசிவிட்டு விரிவான முற்கோரிக்கைகளை அனுப்பினார். பாமாவுக்கு மகள்செல்வமாக சியமந்தக மணியை சிசுபாலருக்கு அளிக்க வேண்டும். அவ்வுறுதி அளிக்கப்பட்டால் மகள்கொடை கேட்டு சிசுபாலரே ஹரிணபதத்திற்கு வருவார். சிசுபாலரின் ஏழாவது துணைவியாக பாமாவை ஏற்று அரச அகம்படியுடன் அணிப்படகுகளில் சேதிநாட்டுக்கு கொண்டுசெல்வார். அவளுக்கு சேதிநாட்டின் யாதவகுலத்து அவைகளில் மட்டும் அரசியாக அமரும் இடம் அளிக்கப்படும். அரண்மனையும் கொடியும் முரசும் கிடைக்கும். அவளை சேதிநாட்டு யாதவ அரசி என்று சொல்லிக்கொள்ளலாம்.

சத்ராஜித் பிரசேனரின் சொற்களை சித்தத்தில் வாங்காமல் விழித்து நோக்கி அமர்ந்திருந்தார். "இதுவே இன்று நம் முன் உள்ள சிறந்த வழி மூத்தவரே…" என்று பிரசேனர் முடித்ததும் சிறிய ஏப்பத்துடன் அவர் மதுகொண்டுவரும்படி ஏவலனை நோக்கினார். "சியமந்தக மணியை அளிப்பதென்றால்..." என்று அமைச்சர் லட்சுமணர் மெல்ல சொல்லத்தொடங்கியதுமே பிரசேனர் "நாம் அந்த மணியை இனிமேலும் பேணமுடியாது அமைச்சரே. அதை அடைய துவாரகையின் அரசன் முயல்கிறான். நான் ஒவ்வொருநாளும் அதற்கான முயற்சிகளை ஒற்றர்கள் வழியாக வென்றுகொண்டிருக்கிறேன். அது நம் கைமீறி துவாரகைக்கு சென்றுவிட்டதென்றால் இன்றைய நிலையில் நாம் போர் புரிந்து அதை மீட்கமுடியாது. அந்தகர்களின் பொருளை விருஷ்ணிகுலத்தான் சூடுவதுபோல அவமதிப்பென ஏதுமில்லை" என்றார்.

"அதை சேதிநாட்டான் சூடலாமா?" என்றார் லட்சுமணர். சினத்துடன் "சேதிநாட்டரசன் யார்? யாதவக்குருதியில் வந்த ஷத்ரியன். அவன் அதைச் சூடுவது நமது இளவரசி சூடுவதற்கு நிகர்" என்றார். "நாம் இன்று கோருவது களிந்தகத்துக்கு வல்லமை கொண்ட அரசன் ஒருவனின் காவலை மட்டுமே…" சத்ராஜித் "சிசுபாலர் நம் அரசியை மணமகளாக ஏற்பது உறுதியா?" என்றார். "ஆம், சொல்கொடுத்துவிட்டார்" என்றார் பிரசேனர். "அரசியாக அல்ல, அரசியரில் கடைநிலையளாக" என்றார் லட்சுமணர். "அரசனின் துணைவியே அரசி எனப்படுகிறாள்" என்று பிரசேனர் சொல்ல சத்ராஜித் அதை நோக்காமல் மதுகொண்டுவரும் ஏவலனையே நோக்கிக்கொண்டிருந்தார்.

லட்சுமணர் "சியமந்தகமணிக்காகத்தானே நாம்…" என்று தொடங்க மதுவை அருந்திவிட்டு மேலாடையால் வாயைத்துடைத்து நிமிர்ந்த சத்ராஜித் உரக்க "சியமந்தக மணியை மட்டும் அல்ல, களிந்தகத்தையே சேதிநாட்டான் காலடியில் வைக்கிறேன். அவன் அரண்மனைத் தொழுவத்தில் சாணியள்ளுகிறேன். அவன் காலடியில் அமர்ந்து மிதியடிகளை துடைக்கிறேன். ஏதும் தடையில்லை. என் மகள் முடிசூடி அரசப்படகில் ஹரிணபதம் விட்டு செல்வதை நான் காணவேண்டும். இனி அவள் தன் கைகளில் புல்லரிவாளும் மத்தும் ஏந்தக்கூடாது…" என்றார். அவரது உடலை உலுக்கியபடி ஓர் ஏப்பம் வந்தது. உதடுகள் வளைய கழுத்தின் தொய்ந்த தசைகள் இழுபட்டு நெளிய சத்ராஜித் கண்ணிர் விட்டு அழுதார். "இனிமேலும் என்னால் தாள முடியாது இளையோனே. நான் இப்படியே இறந்துவிட்டேன் என்றால் என் குலமூத்தாருக்கு என்ன மறுமொழி சொல்வேன்? எப்படி அவர் முன் சென்று நிற்பேன்?"

பிரசேனர் பார்வையை திருப்பிக்கொண்டு "இன்றே ஒப்புதல்செய்தியை அனுப்பிவிடுகிறேன் மூத்தவரே" என்றார். சத்ராஜித் "ஹரிணபதத்திற்கும் செய்திபோகட்டும்" என்று சொல்லி எஞ்சிய மதுவை விழுங்கினார். பிரசேனர் தலைவணங்கி அவை நீங்கும்போது அவருக்குபின்னால் வந்த லட்சுமணர் வெறுப்பால் மின்னிய சிறிய விழிகளுடன் "நானறிந்த அரசியலாடல்களில் இதைப்போல இழிந்த ஒன்று இல்லை. என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எதன்பொருட்டு நாம் இளைய யாதவரின் உறவை மறுத்தோம்? இப்போது சியமந்தக மணியையும் இழந்து இவனுடைய அரண்மனைச்சேடியாக நம் இளவரசியை அளித்து…" என்றதுமே பிரசேனர் திரும்பி உடைவாளில் கையை வைத்தபடி "வாயை மூடும். இல்லையேல் இக்கணமே..." என்று கிட்டித்த தாடையுடன் சொன்னார்.

"என்ன செய்வீர்? பிராமணனை கொல்வீரா? கொல்லும்… உம் தலைமுறைகளை பிரம்மஹத்தி என தொடர்ந்து வருகிறேன்" என்றார் லட்சுமணர். மூச்சிரைக்க பிரசேனர் உடல் தளர்ந்தார். பற்கள் இறுக, கண்களை சுருக்கியபடி "நீர் இதற்காக வருந்துவீர்" என்றார் . "உண்மையை சொல்லும்பொருட்டே பிராமணன் மண்ணில் பிறக்கிறான். நெறிநூல்கள் நால்வருணத்தின் தலைமேல் எங்களை அமரச்செய்வது அதற்காகவே" என்றார் லட்சுமணர். "என்ன உண்மை? சொல்லும் என்ன உண்மை?" என்று பிரசேனர் மீண்டும் குரலெழுப்பினார். "உம் நெஞ்சறிவது…" என்று லட்சுமணர் சொன்னதும் "சொல்லும் என்ன உண்மை?" என்று பிரசேனர் தொண்டை உடையும்படி கூவினார்.

"உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன் பிரசேனரே..." என்றார் லட்சுமணர். "ஆனால் ஒன்றை உணருங்கள். ஒருபோதும் களிந்தகத்தின் அரியணையில் நீங்கள் அமரமுடியாது." ஒரு கணம் உறைந்த பிரசேனர் துடித்து முன்னால் பாய்ந்து அவர் தோளைப்பிடித்து இழுத்து சுவருடன் சாய்த்து "இழிமகனே, என்ன சொல் சொல்கிறாய்? என்ன சொல்லிவிட்டாய்?" என்று கூவினார். மறுகணம் மூச்செல்லாம் வெளியேற "பாவி, பெரும்பாவி… எப்படி சொன்னாய் அதை?" என்று ஈரத்துணி காற்றில் படபடக்கும் ஒலியில் கேட்டார். "இழிமகனே… இழிமகனே, என்னை என்னவென்று நினைத்தாய்? என் தமையனையா? நானா? அடேய், இழிமகனே!" அவரது கழுத்திலும் சென்னியிலும் நீலநரம்புகள் புடைத்தன.

லட்சுமணர் "புற்றரவு மிகமிக ஓசையற்றது இளையவரே. அது அங்கிருப்பதை அது மட்டுமே அறியும்" என்றபின் பிரசேனரின் கையை தட்டிவிட்டுவிட்டு திரும்பி நடந்து சென்றார். விழுந்து விடுபவர் போல அசைந்த பிரசேனர் அவருக்குப் பின்னால் ஓடிச்சென்று தோளை மீண்டும் பிடித்து முரட்டுத்தனமாகத் திருப்பி "நில்லும்… என்ன சொன்னீர்? நான் என் தமையனின் அரியணைக்கு விழைவுகொண்டிருக்கிறேன் என்றா? பார்த்துக்கொண்டிரும்… சேதிநாட்டுக்கு இளவரசி சென்று மணிமுடிசூடி அமர்வாள். களிந்தகம் துவாரகைக்கு நிகராக யாதவர்கள் நடுவே நிமிர்ந்து நின்றிருக்கும். அதை நீர் பார்ப்பீர்" என்றார்.

லட்சுமணர் சற்றே வளைந்த இதழ்களுடன் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றார். பிரசேனர் தளர்ந்து பிடியை விட்டு உடைந்த குரலில் "என்னால் தமையனை விட மேலாக ஒருவனை எண்ணமுடியவில்லை லட்சுமணரே. அந்த அவையில் அவர் எளிய ஒருவராக அமர்ந்திருப்பதை என்னால் தாளமுடியவில்லை. அந்த எண்ணத்தால் நான் ஆற்றிய பிழை இது… அது மட்டுமே நான் கொண்ட ஆணவம். ஆம் நான் அத்துமீறிவிட்டேன். அது என் பிழை… பெரும்பிழை " என்றார். அவர் கண்களில் இருந்து நீர் வழிந்தது. துடிக்கும் உதடுகளுடன் "வேண்டுமென்றால் என் ஆணவம் அனைத்தையும் உதறிவிட்டு சென்று யாதவன் காலிலும் விழுகிறேன். சேதிநாட்டுச் செய்தி வருவதுவரை அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் பலமுறை கிளம்பிவிட்டேன். பல்லாயிரம் முறை உள்ளூர அவனிடம் மன்றாடிவிட்டேன். என் தமையனின் மதிப்பை எண்ணி மட்டுமே தயங்கினேன்…"

லட்சுமணர் வெற்றுவிழிகளுடன் அசையாமல் நின்றார். பிரசேனர் இறைஞ்சும் குரலில் "என்னை நீர் நம்பவில்லையா? சொல்லும். என் முகம் நோக்கி ஆலகாலம் தடவிய சொற்களைச் சொன்னீர். ஒருபோதும் அச்சொற்களுடன் என் உடல் சிதையேற முடியாது… அப்பழியுடன் என்னால் என் மூதாதையர் முன்னால் சென்று நிற்கமுடியாது. சொல்லும்..." என்றார். லட்சுமணர் "நான் அந்த நச்சரவை எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்குநிகரான ஆற்றல் கொண்ட ஒன்றை பிரம்மம் படைக்கவில்லை" என்றபின் திரும்பி நடந்தார். பிரசேனர் அறியாமல் நெஞ்சைத்தொட்ட கையுடன் வெறுமே நோக்கி நின்றார்.

சிசுபாலனின் வருகையறிவிப்பு பன்னிருநாட்களுக்குப்பின் வந்துசேர்ந்தது. களிந்தகத்தின் அரண்மனை முழுக்க அது நிறைவின்மை கலந்த ஆறுதலைத்தான் உருவாக்கியது. செய்தி வந்ததும் மாலினி பாய்ந்து புறக்கடைக்கு ஓடி அங்கே தயிர் கடைந்துகொண்டிருந்த ஆய்ச்சியர் நடுவே நின்ற மஹதியை அணுகி "சேதிநாட்டு சிசுபாலர் வருகிறாரடீ… அடுத்த வளர்பிறை நான்காம்நாளில் அவரே மகள்கொடை கோரி இங்கே வருகிறார். இப்போதுதான் அறிந்தேன். ஹரிணபதத்தையும் அத்தனை ஆயர்பாடிகளையும் அணிசெய்யும்படி அரசரின் ஆணை…" என்று மூச்சிரைத்தபடி கூவினாள். "பார்த்தாயா, நான் முன்னரே ஒருமுறை சொன்னேன். சிசுபாலர்தான் அவளுக்குரிய அரசர் என்று. அவர் இளைஞர், இளைய யாதவருக்கு நிகரான வீரர். அவர் போர்க்களத்தில் இளைய யாதவரின் தலையை அறுப்பார் என்று குறி சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா?"

மஹதி வெற்றுப் புன்னகையுடன் "அவர் வரட்டும் அரசி" என்றாள். "நினைத்துப்பார். சேதிநாடு என்பது எவ்வளவு தொன்மையானது? என் குலத்தின் மூத்தவர் ஒருவர் சேதிநாட்டு தமகோஷரின் அவையில் எளிய கணக்கராக பணியாற்றினார். இன்று அந்த அரியணையில் என் மகள் அமரப்போகிறாள். சேதிநாட்டுக்கு அவள் உரிமையானவள் என்று பிறவிநூலில் எழுதப்பட்டிருந்தால் அவளை எப்படி துவாரகைக்கு மணம்பேச முடியும்? இது தெரியாமல் இங்கே சில பெண்கள் வீண்பேச்சு பேசினார்கள். கேட்கிறேன், ஒவ்வொருவரிடமாக கேட்கத்தான் போகிறேன், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள் என்று."

ராகினி திரும்பி வெண்ணை திரட்டி உருட்டிக்கொண்டிருந்த பாமாவை பார்த்தாள். அவளுக்கு எல்லாம் கேட்டிருந்தது என்பதை முகமே காட்டியது. ஆனால் புன்னகை சற்றும் மாறவில்லை. கைக்குழந்தையை என வெண்ணையை உருட்டி மென்மையாகத் தூக்கி கலத்தில் வைத்து வாழையிலையால் மூடியபின் கைகளை சிகைக்காய் நீரில் விட்டு கழுவிக்கொண்டாள். அவளுக்கும் சிசுபாலன் மேல் விருப்பு எழுந்துவிட்டதா என்ற ஐயம் ராகினிக்கு ஏற்பட்டது. புன்னகையுடன் அவளை நோக்கிய பாமா "வருகிறாயாடி? நீராடச்செல்கிறேன்" என்றாள்.

பாமாவுடன் செல்லும்போது ராகினி அவள் முகத்தையே ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தாள். மெல்ல தனக்குள் ஏதோ பாடிக்கொண்டும் அவ்வப்போது புன்னகைசெய்துகொண்டும் அவள் வந்தாள். காலால் தரையில் கிடந்த சருகை எற்றினாள். உதிர்ந்துகிடந்த மலர் ஒன்றை பொறுக்கி முகர்ந்துவிட்டு தலையில் வைத்துக்கொண்டாள். "சிசுபாலர் வரவிருக்கிறார் இளவரசி" என்றாள் ராகினி. "வரட்டுமே" என்றாள் பாமா. "அவர் இளைய யாதவரின் எதிரி" என்றபின் மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள். "அப்படியா?" என்றாள் பாமா. "ஆணவம் கொண்டவர் என்கிறார்கள். துவாரகைமேல் பொறாமை கொண்டிருக்கிறார். சேதிநாடு துவாரகையைவிட தொன்மையானது. படைபலம் மிக்கது. ஆகவே அவர் துவாரகையை அழிக்கக்கூடும் என்கிறார்கள்."

பாமா விழிகளைத் தூக்கி "நீலக்கடம்பில் இன்றைக்கு நிறைய புதியமலர்கள்!" என்று கைநீட்டினாள். "இளவரசி, சிசுபாலருக்கு உங்களை பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்?" என்றாள். பாமா "நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. சிந்திப்பது என் வேலையும் இல்லை" என்றாள். ராகினி தன்னுள் சற்றே நஞ்சை உணர்ந்து அதை சொல்லில் தீட்டி "இளவரசி, உங்களுக்கும் அரசியாகும் விழைவு வந்துவிட்டது அல்லவா?" என்றாள். கேட்டதுமே அவளுக்குள் பதற்றம் எழுந்தது. நா நீட்டிய நாகம் விழி சுடர உடல் சுருட்டிப்பின்னடைந்தது. ஆனால் யமுனையை சுட்டிக்காட்டி பாமா "நான் சொன்னேனே, இன்றைக்கு நீர்விளிம்பு மூன்றாம் படியை தீண்டும் என்று… பார்" என்றாள். "நேற்றே நீருக்குள் நல்ல குளிர்" என்றபடி யமுனையை நோக்கி சென்றாள். ராகினி முலைகள் விம்மி அமைய பெருமூச்சுவிட்டபின் அவளை பின்தொடர்ந்தாள்.

களிந்தகமும் அஸ்வபதத்தின் அந்தகச்சிற்றூர்களும் சேதிநாட்டு அரசரின் வரவுக்காக காத்திருந்தன. சேதி நாட்டின் கொடியுடன் முதல் அணிப்படகு யமுனையில் தென்பட்டதுமே ஹரிணபதத்தின் எல்லையில் இருந்த யாதவச்சிற்றூரான தட்சிணவனத்தின் உயரமான மரத்தின்மீது கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில் அமர்ந்திருந்த இரு காவலர்களும் களிவெறி கொண்டு குறுமுழவை ஒலிக்கத் தொடங்கினர். கல் பட்டு பறவைக்கூட்டம் கலைவது போல யாதவர் ஊர்கள் ஓசையுடன் எழுந்தன. 'சேதிநாட்டு மன்னர் மணம்கோரி வந்துகொண்டிருக்கிறார்' என்று கூவியபடி இளம் பாணன் ஒருவன் ஊர்த்தெருக்களில் ஓடினான்.

யாதவர்கள் கூட்டமாக ஓடிவந்து யமுனைக்கரையின் மேடுகளில் ஏறி நின்று நீர்ப்பரப்பில் சென்றுகொண்டிருந்த ஏழு படகுகளை நோக்கினர். அவற்றில் ஆறு காவலுக்குச் செல்லும் சிறுபடகுகள். ஒன்று மட்டுமே பெரிய அணிப்படகு. "அதுதான் சிசுபாலரின் படகு…" என்று ஒருவன் சொன்னான். "மூடா, அகம்படி இல்லாமலா சேதிநாட்டரசர் வருவார்?" என்று களிந்தகத்தில் காவல்பணியில் இருந்து முதிர்ந்து விலகிவந்த ஒருவர் சொன்னார். "அது தூதுப்படகு. அரசரும் அகம்படியும் வருவதை முறைப்படி அறிவிப்பார்கள். இங்கே அனைத்தும் சித்தமாக இருக்கிறதா என்று தெரிவிப்பார்கள்…" யாதவர்கள் திகைப்புடன் "இதற்கே இவ்வளவு பெரிய படகா?" என்றனர். "சேதிநாடு என்றால் என்னவென்று எண்ணினாய்? அடேய், பாரதவர்ஷத்தின் தொன்மையான நாடுகளில் ஒன்று அது. சேதிநாட்டு அரசகுலம் மாமுனிவர் தீர்க்கதமஸின் குருதியில் இருந்து எழுந்தது. தெரிந்துகொள்" என்றார் முதியவர்.

அணிப்படகுக்கு நிகரான விரைவில் கரையில் யாதவர்கள் ஓடியே வந்தனர். ஹரிணபதத்தை படகுகள் அடைந்தபோது கரைமுழுக்க விழவுக்கூட்டம் போல மக்கள் நிறைந்திருந்தனர். படகிலிருந்து சேதிநாட்டு அரசமுத்திரை பொறித்த தலைப்பாகைகளுடனும் உருவிய வாள்களுடனும் இறங்கிய வீரர்கள் படகுத்துறையில் அணிநிரக்க தொடர்ந்து சேதிநாட்டின் கொடியுடன் ஒரு வீரன் வந்தான். அவனைத்தொடர்ந்து செம்மணியாரமும் செவ்வைரக்குண்டலங்களும் அணிந்து இறங்கிவந்தவன் சிசுபாலனா என்று ஹரிணபதத்தினர் மீண்டும் ஐயம் கொண்டனர். அவனை வரவேற்க சத்ராஜித் வராமல் பிரசேனர் வந்ததிலிருந்து அவன் சிசுபாலனல்ல என்று தெரிகிறது என்றான் முதுபாணன் ஒருவன். சற்றுநேரத்திலேயே அவன் பெயர் சித்ரகர்ணன் என்றும் சேதிநாட்டின் முதன்மை படைத்தலைவன் என்றும் செய்தி கிசுகிசுப்பாக பரவியது.

சித்ரகர்ணனை பிரசேனர் முறைப்படி வரவேற்று அழைத்துச்சென்றார். அவர்கள் சத்ராஜித்தின் இல்லத்திற்கு சென்று நெடுநேரமாகியும் ஒன்றும் நிகழாதது கண்ட யாதவ குலப்பாடகன் ஒருவன் "சத்ராஜித் மீண்டும் மகற்கொடை மறுத்துவிட்டார்" என்றான். வியப்புடன் யாதவர் தங்களுக்குள் பேசிக்கொண்ட முழக்கம் எழுந்தது. 'அவருக்கென்ன, பித்து பிடித்துள்ளதா?' என்றும் 'சியமந்தக மணியை இழக்க விரும்பவில்லை அவர். மூட மன்னர்!' என்றும் பேசிக்கொண்டவர்கள் சற்று நேரத்திலேயே பேசிப்பேசிச்சென்று 'அந்தகர்களிடம் பெண்கொள்ளும் தகுதி அரசர்களுக்கில்லை' என்று பேசத்தொடங்கினர். இந்த மணப்பேச்சும் முறியும் என்றால் அதை எப்படி தங்கள் தன்முனைப்பைக்கொண்டு எதிர்கொள்வது என அவர்களின் உள்ளம் திட்டமிட்டது. "அந்தகர்கள் சியமந்தகமணியை ஒருபோதும் பிரிவதில்லை. அது உடலை உயிர்பிரிவதற்கு நிகர்" என்றார் ஒரு முதியயாதவர். "அந்தகர்கள் ஒருநாள் பாரதவர்ஷத்தை ஆள்வார்கள். அன்று அந்த சக்ரவர்த்தியின் மார்பில் சியமந்தகம் அணிசெய்யும்" என்றார் இன்னொருவர். "சியமந்தகம் முடிவெடுக்கிறது. சத்ராஜித் என்னசெய்வார்?" என்று ஒரு முதுபாணன் சொன்னான்.

அப்போது சத்ராஜித்தின் இல்லத்தின் மேல் நின்ற மூங்கில் கொடிமரத்தில் சேதிநாட்டின் கொடி ஏறியது. முரசொலி கேட்டு திரும்பிப்பார்த்த சிலர் "சேதிநாட்டுக் கொடி!" என்று கூவுவதைக்கேட்டு அனைவரும் விழிதூக்கி நோக்கினர். "சேதிநாட்டுக்கொடி! அவ்வண்ணமென்றால் மணத்தூது ஏற்கப்பட்டுவிட்டது" என்று ஒருவன் கூவினான். "சேதிநாட்டுப் பட்டத்தரசி நம் யாதவகுலப்பெண்!" என்று ஒரு பாணன் கைவிரித்துக்கூவ யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி யமுனைக்கரையை நிறைத்தனர். யமுனைக்கரையிலிருந்த அனைத்து காவல்மாடங்களிலும் சேதிநாட்டின் கொடி ஏறியது.

சத்ராஜித்தின் படைவீரர்கள் வந்து யமுனைப்படித்துறையை வளைத்து கூட்டத்தை விலக்கினர். மங்கல இசைக்குழுவினர் வந்து இடப்பக்கத்தில் அணிநிரக்க வலப்பக்கத்தில் அந்தகக்குலத்தின் பூசகர்கள் மான் தோல் ஆடையும் சடைமுடியும் மலர்மாலைச்சுருளும் வளைதடியும் கங்கணமுமாக வந்து நின்றனர். சற்றுநேரத்தில் அரச அணித்தோற்றத்தில் சத்ராஜித் இருபக்கமும் ஒரு காவல் வீரர் உருவிய வாளுடன் அகம்படிசெய்ய நடந்துவந்தார். அவரைத்தொடர்ந்து அந்தகக் குலத்து மூத்தார் எழுவர் வளைதடிகளும் பெரியதலைப்பாகைகளும் குண்டலங்களும் வெண்ணிற ஆடையும் அணிந்து நடந்து வந்தனர். யாதவர்கள் அரசரையும் மூத்தாரையும் வாழ்த்தி குரலெழுப்பினர்.

சத்ராஜித் படித்துறையில் நின்றுகொள்ள சித்ரகர்ணன் பிரசேனர் இருவரும் களிந்தகத்தின் கொடிபறந்த அணிப்படகில் ஏறி யமுனையில் சென்றனர். "எதிரேற்கச் செல்கிறார்கள். அது அரசமுறை" என்று முதிய வீரர் சொன்னார். அனைவரும் நீர்வெளியின் வான்விளிம்பை நோக்கிக்கொண்டிருந்தனர். சிறிய பறவை ஒன்றின் குஞ்சித்தூவி தெரிவதுபோல சேதிநாட்டின் கொடி தெரிந்ததும் முரசுகளும் முழவுகளும் வாழ்த்தொலிகளும் முழங்கத்தொடங்கின. மெல்ல தொடுவான்கோட்டில் படகுகள் எழுந்து வந்தன. ஏழு அணிப்படகுகள் அறுபது காவல்படகுகள் சூழ வந்தன. "படையெடுப்பு போலல்லவா இருக்கிறது!" என்று முதிய யாதவர் ஒருவர் வியந்தார்.

"சியமந்தக மணியை பெண்செல்வமாக கேட்டிருக்கிறார்" என்றார் ஒருவர். "பெண்ணையே கொடுக்கிறோம்… மணியை கொடுத்தாலென்ன? அவர் முடியில் இருக்கவேண்டியதுதான் அது" என்றார் முதிய யாதவர். "சேதிநாட்டரசர் பாரதவர்ஷத்தை ஆளும் ஆற்றல் கொண்டவர்… இளைய யாதவர் அவரை அஞ்சித்தான் கடல் எல்லைக்குச் சென்று நகர் அமைத்திருக்கிறார்." இளம்பாணன் உரக்க "சேதிநாட்டில் எழவிருக்கிறது அந்தகர்களின் கொடி. இளவரசியின் கருவில் பிறக்கும் மைந்தர் சியமந்தக மணியை அணியும் சக்ரவர்த்தி" என்று கூவ யாதவர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி ஓசையிட்டனர்.

அணுகிவந்த படகுகளில் இருந்து எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து அணைந்தன. அவை வர வர அவற்றில் இருந்து எழுந்த முரசுமுழக்கமும் கொம்பொலியும் கரையை அடைந்தன. அவற்றிலிருந்த வீரர்கள் கொடிகளை வீசிக்கொண்டிருந்தனர். அணிப்படகுகளின் பாய்கள் நீரில் இறங்கும் நாரைக்கூட்டத்தின் சிறகுகள் போல ஒரேசமயம் அணைந்தன. முதல்படகு பெரிதாகி வந்தது "பெரிய படகு!" என்று யாரோ சொன்னார்கள். "யமுனைக்காக இந்தப்படகில் வந்திருக்கிறார். கங்கை என்றால் நாவாயில் அல்லவா வருவார்" என்றது இன்னொரு குரல். முதல்படகு துறையணைந்ததும் அதிலிருந்து வீரர்கள் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர். காவல்படகுகள் யமுனையின் கரையில் ஒதுங்க அதிலிருந்து கயிறுகள் வழியாக இறங்கிய வீரர்கள் யமுனைக்கரையை முழுமையாகவே சூழ்ந்து கொண்டனர்.

ஆறாவது படகில் மிகப்பெரிய கொடிமரமும் அதில் முகில்துண்டு என மெல்ல நெளிந்த பெரிய கொடியும் இருந்தன. அதன் நடைபாலம் கரையை தொட்டதும் சத்ராஜித் கைகூப்பியபடி துறைவிளிம்பை நோக்கி சென்றார். அந்தகக் குலத்து மூத்தார் மலர்த்தாலம் ஏந்திய சேடியர் தொடர அவருடன் சென்றனர். உள்ளிருந்து பிரசேனரால் வழிநடத்தப்பட்டு சிசுபாலன் மெல்ல இறங்கி வந்தான். செவ்வைரங்கள் மின்னும் சிறிய மணிமுடியும் செங்கனல்குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்து பொற்பின்னல் செய்த வெண்பட்டாடை அணிந்திருந்தான். பொன்னாலான காலணியை தூக்கி அவன் ஹரிணபதத்தின் கரையில் வைத்ததும் பெருமுரசம் முழங்கியது. அந்தகக் குலத்து மூத்தார் "வருக! ஹரிணபதம் வாழ்த்தப்பட்டது. குலமூத்தார் மகிழ்ந்தனர். மூதன்னையர் அருள் புரியட்டும்" என்று கூவி மலர்தூவி வாழ்த்தினர். யாதவர் "சேதிநாட்டரசர் சிசுபாலருக்கு நல்வரவு…" என்று கூவி வாழ்த்தி அரிமலர் வீசினர்.

சிசுபாலன் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு தன்னை வணங்கி "ஹரிணபதம் பெருமை கொள்கிறது. இன்று அதன் வரலாறு முதிர்ச்சி அடைந்தது. இனி அதற்கு பெருமைகள் மட்டுமே" என்று முகமன் சொன்ன சத்ராஜித்தை நோக்கி மெல்ல தலையசைத்தான். அவர் வணங்கியதற்கு மறுவணக்கம் செய்யவில்லை, முகமனும் சொல்லவில்லை என்பதை அனைத்து யாதவரும் உணர்ந்தனர். பிரசேனர் பணிவுடன் தலைசாய்த்து தன் தமையனை சுட்டிக்காட்டி "தமையனார் தங்கள் வருகைக்காக காத்திருந்தார். தங்கள் கருணையால் களிந்தகம் வெல்லவேண்டுமென கனவு காண்பதாக சொன்னார்" என்று சொல்ல சிசுபாலன் மீண்டும் சற்று தலையசைத்துவிட்டு திரும்பி சித்ரகர்ணனிடம் "படகுகளை நிரைவகுக்கச் சொல். நாம் இங்கே நெடுநேரம் தங்க முடியாது என நினைக்கிறேன்" என்றான்.

"தாங்கள் தங்கி இளைப்பாற அனைத்து ஒருக்கங்களும் செய்யப்பட்டுள்ளன" என்றார் சத்ராஜித். "ஆனால் இங்கே அரண்மனை ஏதுமில்லை, புல்வீடுகள்தான் என்று செய்தி வந்ததே?" என்றான் சிசுபாலன். சத்ராஜித் தலைவணங்கி "களிந்தகத்தில் அரண்மனை உள்ளது திரும்பும்போது அங்கு தங்கலாம். குலமூத்தார் இங்கிருப்பதனால்…" என்று சொல்லத்தொடங்க இடைமறித்து "நான் செல்லும் வழியில் மகதத்தின் மாளிகையில் தங்கலாமென எண்ணுகிறேன்… களிந்தகத்தின் கோட்டையை வரும்போது பார்த்தேன். மண்சுவர் என்று தோன்றியது" என்றபின் "செல்வோம்" என்றான். சத்ராஜித் தலைவணங்கி "ஆம்" என்று சொல்லி அவன் பின்னால் நடந்தார்.

அந்தகக் குலப்பூசகர் தங்கள் கோல்களை தூக்கியபடி அருகே வந்தனர். "இது எங்கள் குலவழக்கப்படி வரவேற்பு. தங்கள் வருகையால் எங்கள் கன்றுகள் செழிக்கவேண்டும் என்பதற்காக" என்றார் சத்ராஜித். எரிச்சலுடன் திரும்பிய சிசுபாலன் கையசைத்து "எனக்கு நேரமில்லை… செல்வோம்" என்று சித்ரகர்ணனிடம் சொல்லிவிட்டு நடந்தான். சத்ராஜித் பிரசேனரை பார்க்க அவர் செல்லவேண்டியதுதான் என்று விழியசைத்தார்.

மாலினி சுவர்மேல் சாய்க்கப்பட்ட ஏணிமேல் ஏறி நின்று நோக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிவந்த சேடிப்பெண் "அரசருக்கு சேதிநாட்டரசர் முகமன் சொல்லவில்லை. குலப்பூசகர் அணுகவும் அனுமதிக்கவில்லை" என்று சொல்லி மூச்சிரைத்தாள். "ஏனடி?" என்றாள் மாலினி. முதுமகள் ஒருத்தி "ஷத்ரியர் எந்தக்காலத்தில் யாதவர்களை ஒரு பொருட்டாக எண்ணியிருக்கிறார்கள்? அவர்கள் அஞ்சிய ஒரே யாதவர் கார்த்தவீரியர்தான். அவரையும் பரசுராமர் கொன்று ஆயிரம் துண்டுகளாக வெட்டிக் குவித்தார்" என்றாள். "வாயை மூடு கிழமே. நல்லவேளையில் அமங்கலமாக சொல்லெடுக்கிறயா?" என்றாள் மாலினி சினத்துடன்.

பகுதி நான்கு : எழுமுகம் - 3

மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் "இவ்வழி" என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி "இதுவா அரசரில்லம்?" என்றான். "இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது" என்றார். "இங்கா இளவரசி இருக்கிறாள்? இங்கு அவள் என்ன செய்கிறாள்?" என்றான் சிசுபாலன். சத்ராஜித் தயங்கி "இங்கு அவளுக்குரிய அனைத்தும் உள்ளது" என்றார். சிசுபாலனின் இதழ்கள் இளநகையில் வளைந்தன. "இங்கு அவள் என்ன செய்கிறாள்? பசுபுரக்கிறாளா?" என்றபடி சித்ரகர்ணனை நோக்கினான். அவன் புன்னகைசெய்தான்.

கண்களில் சினம் மின்னி மறைய பிரசேனர் "ஆம் அரசே, பசுபுரத்தல் யாதவர்களின் தொழில்" என்றார். சிசுபாலன் திரும்பி அவரை நோக்கிவிட்டு "அவள் என் மாளிகையில் பசு புரக்க முடியாது. சேதிநாட்டு அரசியர் செய்ய வேறுபல பணிகள் உள்ளன" என்றான். சித்ரகர்ணன் உரக்க சிரித்தான். பிரசேனர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் வேண்டாம் என்பதுபோல கண்களை விழித்தார். படித்துறையில் இருந்து இல்லம் வரை மரவுரி விரிக்கப்பட்ட மலர்ப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. தோரணங்களும் கொடிகளும் அணிசெய்த வெண்பாதையின் இருபக்கமும் யாதவ வீரர்கள் வேல்களுடன் அணிநிற்க அப்பால் கூடி நின்ற யாதவகுடிகள் சிசுபாலனை வாழ்த்தினர்.

சிசுபாலனின் நடையிலும் நோக்கிலும் இருந்த ஒன்று அனைவரையும் அவனிடமிருந்து உளவிலகல் கொள்ளச்செய்தது. அவன் கால்களை நீட்டி வைத்து தோள்களை அசைத்து காற்றில் நீந்துபவன் போல நடந்தான். ஏளனம் நிறைந்த புன்னகையுடன் அனைத்தையும் நோக்கினான். அவனை வணங்கியவர்கள் வாழ்த்தியவர்கள் எவரையும் நோக்கவில்லை. அவனருகே நடந்தவர்கள்கூட இல்லையென்றானார்கள். ஓரிருவராக இயல்பாக நடைவிரைவை இழந்து பின்னடைய சிசுபாலனும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தும் பிரசேனரும் மட்டும் நடந்தனர். அவர்களுக்கு முன்னால் சேதிநாட்டின் கொடியையும் அந்தகர்களின் கொடியையும் ஏந்திய வீரர்கள் மட்டும் சென்றனர். பின்னால் மங்கல இசையுடன் சூதர்கள் தொடர்ந்தனர். யாதவர்கள் கொண்ட உள்ளத்தளர்ச்சியை வாழ்த்தொலிகளில் மட்டுமல்லாமல் மங்கல இசையிலும் வந்த தளர்வு வெளிப்படுத்தியது.

இல்லத்தின் வாயிலில் சித்ரையும் பத்மையும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் வந்து நின்று சிசுபாலனை வரவேற்றனர். "தங்கள் வருகையால் ஆயர்பாடி பெருமைகொண்டது அரசே" என்றாள் பத்மை. "இக்குடியின் மூதன்னையர் தங்களை வரவேற்கிறார்கள்" என்று சித்ரை சொன்னாள். சிசுபாலன் அவர்களை நோக்கியபின் தயங்க சத்ராஜித் "இவர்கள் என் அரசியர்" என்றார். "இவர்களும் இங்கே கன்றுமேய்க்கிறார்களா?" என்று அவன் கேட்டான். சித்ரகர்ணன் அதற்கு சிரிப்பதா என்று தெரியாமல் சத்ராஜித்தை நோக்க அவர் "இல்லை, அவர்கள் என்னுடன் களிந்தகத்தில் இருக்கிறார்கள்" என்றார்.

இருசேடியர் ஐந்து ஆமங்கலங்கள் கரைக்கப்பட்ட நீரை எதிர்காட்டி அவனை வரவேற்க அதன் மணத்திற்கு மூக்கைச்சுளித்து பொறுமையிழந்து நின்றான். அவர்கள் அவன் கால்களை நறுமணநீரூற்றி கழுவினர். அரிமலரிட்டு வணங்கி 'அகம் சேர்க அரசே!' என்று இன்மொழி சொல்லி உள்ளே அழைத்துச்சென்றனர். அமைச்சர்களும் பிறரும் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டபோது அவ்வறைக்குள் இடமில்லாமல் ஆக முதிய யாதவர் சிலர் வெளியே நின்றுகொண்டனர்.

சிசுபாலனை வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அமரச்செய்து சத்ராஜித் தன் பீடத்தில் அமர்ந்தார். பிரசேனர் அருகே அமர அவருக்குப்பின்னால் அந்தக குடிமூத்தார் எழுவர் அமர்ந்தனர். சிசுபாலனுக்கு அருகே சித்ரகர்ணன் அமர பின்னால் அமைச்சர்கள் அமர்ந்தனர். கருவூல அமைச்சர் கிருபாகரர் வெளியே நின்று கைகளை வீசி செய்கையால் ஆணையிட்டுக்கொண்டிருந்தார். சிசுபாலன் அவரை திரும்பிப்பார்த்தபின் "நீங்கள் யாதவ அரசர் என்று என்னிடம் சொன்னார்கள். நீங்கள் கன்றுமேய்க்கும் சிறுகுடியின் தலைவர்தான் என்று எவரும் சொல்லவில்லை" என்றான். சத்ராஜித் "எங்கள் குலமூதாதை வீரசேனர் அமைத்த ஆயர்பதம் இது. இங்குள்ள அந்தகர்களுக்கு நானே அரசன். எனக்கு மதுராபுரி சிற்றரசர்களுக்குரிய உடைவாளும் கங்கணமும் முடியும் அளித்திருந்தது" என்றார்.

பிரசேனர் "எங்களிடம் சியமந்தகமணி இருப்பதனால் ஆயர்குடிகளில் நாங்களே முதன்மையானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. விருஷ்ணிகளைவிடவும் அந்தகர்களே மேலானவர்கள். ஆயர்குலப்பாடகர்கள் அதைப்பாடுவதை நீங்கள் கேட்கலாம்" என்றார். சிசுபாலன் "பாடகர்களுக்கென்ன?" என்றபடி திரும்பி கிருபாகரரை நோக்கினான். கிருபாகரர் உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கு வீரர்கள் பெரிய மரப்பெட்டிகளை கொண்டுவந்து வைத்தனர். சிசுபாலன் கைகாட்ட அவர்கள் அதை திறந்தனர். முதல்பெட்டியில் பீதர்நாட்டிலிருந்தும் கலிங்கநாட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பட்டுகளும் பொன்னூல் பின்னலிட்ட பருத்தியாடைகளும் குதிரைமுடி என மின்னிய மரநூல் ஆடைகளும் இருந்தன. இரண்டாவது பெட்டியில் மணிகள் பதிக்கப்பட்ட பொன்னணிகள் செந்நிறமான மென்மயிர்மெத்தைக்குமேல் அடுக்கப்பட்டிருந்தன. மூன்றாவது பெட்டியில் யவனர்நாட்டு நீலநிற மதுப்புட்டிகளும், நறுமணதைலங்கள் கொண்ட சிமிழ்களும் இருந்தன. நான்காவது பெட்டியில் வெள்ளியாலும் பொன்னாலுமான பலவகை கலங்கள்.

"கன்யாசுல்கமாக கொண்டுவரப்படும் பொருட்கள் பெறுபவரின் தகுதியை அல்ல கொடுப்பவரின் தகுதியை காட்டுகின்றன என்பார்கள்" என்றான் சிசுபாலன். "ஆகவே எதிலும் குறைவைக்கவேண்டியதில்லை என்று சொன்னேன். மாளவனின் மகளை மணம்கொள்ளச்சென்றபோது என்னென்ன கொண்டுசென்றேனோ அதில் பாதியை இங்கும் கொண்டுவந்திருக்கிறேன்." அமைச்சரை நோக்கி சிரித்தபின் "எளிய யாதவப்பெண்ணுக்கு இவ்வளவு தேவையில்லை என்பதுதான் கிருபாகரரின் தரப்பு. ஆனால் அவளுக்குத்தான் இதெல்லாம் தேவை என்றேன். அணிகளும் ஆடைகளும் இல்லையேல் எப்படி அவள் அரசியாவது?" என்று சொன்னான். கிருபாகரர் சிரிக்க பிற அமைச்சர்கள் புன்னகைசெய்தனர்.

பிரசேனர் ஏதோ சொல்ல நாவெடுக்க சத்ராஜித் விழிகளால் தடுத்தார். அதற்குள் யாதவ முதியவர் ஒருவர் "இதற்கிணையான ஆடையணிகளை இளவரசியும் கொண்டிருக்கிறாள். எங்கள் விழவுகளில் வைரங்கள் அணிந்து இளவரசி எழுந்தருளுகையில் திருமகள் தோன்றியதுபோல உளமயக்கு எழும்" என்றார். இன்னொருவர் "இளவரசி அணிகையில் வைரங்கள் ஒளிகுன்றுவதை கண்டிருக்கிறோம். தன்னெழில் அற்றவர்களுக்குத்தான் அணியெழில்" என்றார். சத்ராஜித் பிரசேனரிடம் "இளவரசியை வரச்சொல். சியமந்தக மணி அணிந்த அவள் கோலத்தை சேதிநாட்டார் நோக்கட்டும்" என்றார். இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டன. பிரசேனர் எழுந்து தலைவணங்கி உள்ளே சென்றார்.

சேடிப்பெண்கள் சித்திரக் கலங்களில் கைகளைக் கழுவ நறுமணநீர் கொண்டுவந்தனர். இருவர் அவன் கால்களிலும் கைகளிலும் செங்குழம்பை பூசினர். அவன் கைகழுவிக்கொண்டதும் பொற்குவளையில் பாலமுது கொண்டுவரப்பட்டது. சத்ராஜித் "சுக்கும் மஞ்சளுமிட்ட பாலமுது. யாதவர்களின் வழக்கம்" என்றார். சிசுபாலன் "இனிமேல் விருந்தினருக்கு யவன மதுவையே அளிக்கலாம். ஓரிரு வருடங்களுக்கான மது அந்தப்பெட்டியில் உள்ளது" என்றபடி பாலை வாங்கி ஒரே ஒரு மிடறு மட்டும் அருந்திவிட்டு திரும்ப அளித்தான்.

உள்ளறை வாயிலில் அசைவு தெரிந்ததும் அத்தனைபேரும் தம்மை அறியாமலேயே திரும்பினர். சிசுபாலன் அதை உணர்ந்தாலும் விழிகளை அசைக்காமல் அதே முகத்துடன் "…இங்குள்ள பசுக்கள் காடுகளில் மேய்கின்றன போலும். வேட்டைக்குச் செல்லும் இடங்களில் உண்ணும் பாலில் உள்ள புல்வாடை உள்ளது" என்றான். திரையசைவுபோல நிழல் ஒன்று சிசுபாலனின் முன்னால் ஆடியது. அமைச்சர்கள் விழிமலர்ந்து நோக்குவதை அவன் கண்டான். ஆனால் திரும்பி நோக்காமல் "தென்னிலத்துப் பசுக்கள் மேலும் இனிய பால்கொடுப்பவை. சேதிநாட்டுக்கு அங்கிருந்து கன்றுகளை கொண்டுவரும்படி ஆணையிட்டிருக்கிறேன்" என்றான். அவன் சொற்களில் சித்தம் அலைவதன் தயக்கம் வெளிப்பட்டது. "அவை அளிக்கும் நெய்யின் நறுமணமே வேறு."

அமைச்சர்களின் முகங்கள் மலர்ந்ததை அவன் அறிந்தான். சித்ரகர்ணன் சற்றே சாய்ந்து "அரசே, இளவரசி…" என்றான். சிசுபாலன் திரும்புவதா என ஒரு கணம் எண்ணி மேலும் ஒத்திப்போட விழைந்து விழிகளை விலக்கியபோது புறக்கடை ஒளியில் வாயிலின் நிழல் நீண்டு அறைக்குள் விழுந்து எதிர்ச்சுவரில் எழுவதை கண்டான். மூன்று பெண்கள் வாயிலை மூடியதுபோல நின்றனர். ஒருத்தி முதுமகள் என தெரிந்தது. அவள் இளையவள் ஒருத்தியை பின்னால் இழுத்துவிலக வாயிலில் நின்றவள் சற்றே திரும்பி தன் குழலை சீரமைத்தாள். ஒரு கணம் அவளை பக்கவாட்டில் நோக்கிய சிசுபாலன் நெஞ்சில் குளிர்ந்த ஈட்டி துளைத்ததுபோல் உணர்ந்தான்.

நடுங்கும் விரல்களுடன் அவன் திரும்புவதற்குள் அந்த நிழல் எதிர்ச்சுவரில் பேருருவத்துடன் எழுந்து மெல்ல உறுமியது. கன்னங்கரிய உடல். பன்றிமுகத்தில் மின்னும் மதங்கொண்ட சிறியகண்கள். அறைக்குள் கடுங்குளிரும் அழுகல் நாற்றமும் நிறைந்தது. வலக்கையில் மேழியும் இடக்கையில் முசலமும் அசைந்தன. "தேவி!" என்று அவன் கைகூப்பினான். "சேதி நாட்டு தமகோஷனின் மகனாக சுருதமதியின் கருவில் நீ பிறந்த அவ்வறையில் எழுந்த தெய்வம் நான். காற்றில் வீசிய கடும்நாற்றமாகவும் திரையசைவில் தெரிந்த நிழலுருவாகவும் என்னை உன் அன்னைமட்டுமே அறிந்தாள். பிறர் அறியாத மந்தணமாக அதை தன்னுள் மறைத்துக்கொண்டாள்."

"கேள் இளையோனே, மண்ணில் புதைந்தவை அனைத்தும் சென்றுசேரும் அதலம் என்னும் அடியுலகில் வாழ்ந்த திரயம்பகன் என்னும் முக்கண் தெய்வம் உன் வடிவில் மண்ணில் எழுந்தது. நீ மாளாத பொறாமையால் ஆனவன். எனவே ஒவ்வொரு அங்கமும் உள்ளூர அழுகிக்கொண்டிருப்பவன்" என்றாள் வராஹி. "சத்திய யுகத்தில் ஹிரண்யாக்‌ஷன் என்னும் அரக்கன் புவியை தன் கைப்பந்தென எடுத்துக்கொண்டு இருண்ட அடியிலியில் சென்று மறைந்தான். தேவர்குரல் கேட்டு விழிமலர்ந்த விண்ணவன் புவியன்னையை காக்க பேருருவம் கொண்டு எழுந்தார். இருள்நிற மேனியும் ஒளிரும் செவ்விழிகளும் நீர்நிழலில் இணைந்த நிலவு என எழுந்த வெண்தேற்றைகளுமாக உருக்கொண்டு இருளாழத்திற்கு இறங்கினார்."

"இருளில் உடல்கரைந்த ஹிரண்யாக்‌ஷனை அவன் நெற்றிமையத்து ஆயிரத்தாமரையின் பொன்னிற ஒளியால் மட்டுமே காணமுடிந்தது. இருளலைக்கு அடியில் ஒற்றைமீன் என நின்றிருந்த அவனை அணுகி தன் முகக்கொம்பால் குத்திக்கிழித்தார் இறைவன். புவிமகளை தன் நீள்முகத்தில் ஏந்தி மேலே வந்தார். புவிமகளின் உடலொளியில் அவரது நிழல் இருளின் திரையில் விழுந்து உருவானவள் நான்" என்றாள் வராஹி. "ஆழிசங்கு கைகொண்டு விண்ணெழுந்த அவன் அணிந்திருந்த கழல்மணியை மட்டுமே ஹிரண்யாக்‌ஷன் கண்டான். அதை இறுதியாகக் கண்டு தவித்து காட்சி முடியாமலேயே உயிர்துறந்தான. அவ்விழைவின் எச்சம் விதையென இருளில் முளைத்து திரயம்பகனாக உருக்கொண்டது. இறைவனே உன்னை முழுதறிய எனக்கு ஒரு பிறவி தேவை என்றான். முக்கண்ணனே, என் பேருரு கண்டு நீ பொறாமைகொண்டாய். உன்னை ஆக்கி நிறுத்தி அழித்து நிறைவுசெய்யும் முதல்விசை அதுவாகவே அமையட்டும் என்று ஆழியன் அருள்செய்தார். நிகரற்ற பொறாமை ஒன்று நிகழும் அக்கணம் நீ மண்நிகழ்வதாக என்று வாழ்த்தி மறைந்தார். அப்போது அவனைக் கண்டு புன்னகைத்து அவ்விருளில் நான் மலர்ந்திருந்தேன்."

"சேதிநாட்டரசன் தமகோஷன் தன் துணைவி சுருதமதியுடன் வந்து மாலினியாற்றில் காமநீராடிக்கொண்டிருந்தபோது விண்ணில் ஒரு கந்தர்வப்பெண் பறந்துசெல்ல அவள் நிழல் நீரில் விழுந்தது. மூழ்கி நீந்திய தமகோஷன் அது தன் துணைவி என எண்ணி கைகளால் பற்ற முயன்று ஏமாந்து நகைத்தான். அவள் அழகில் அவன் மகிழ்ந்ததை அறிந்து பொறாமையால் உடல் எரிந்த சுருதமதி நீரை கனல்கொள்ளச்செய்தாள். அக்கனல் சென்று இருளாழத்தை அடைந்தபோது மண்ணில் எழுந்த திரயம்பகன் மன்னன் உடலில் புகுந்து அவள் கருவறைக்குள் எழுந்து மானுடனானான். பதின்மூன்றுமாத காலம் கருவில் வளர்ந்து நான்கு கைகளுடன் நெற்றியில் விழியுடன் பிறந்தான். அவனை சிசுபாலன் என்று பெயரிட்டு வளர்த்தனர் சேதிநாட்டு அரசனும் அரசியும்" என்றாள் வராஹி. "இங்கு பிறந்ததை நீ எய்துவாய் என்றறிக! ஆகவே வேள்விமுடிவில் எரியேறும் தூண் என நின்றெரிக! ஓம் அவ்வாறே ஆகுக!" என்று அருள்புரிந்து மறைந்தாள்.

அந்நிழல் செவ்வொளி கொண்டு தழலென ஆட எழுந்தவள் சாமுண்டி. விழியகல்கள் இரண்டு ஏந்திய ஒரு தழல் என நுதல்விழி. புயல்பட்டெழுந்த கிளைகள் என தடக்கைகள் எட்டிலும் படைக்கலங்கள். இருளருவியென இழிந்த சடைப்பெருக்கு. "கேள் மைந்தா, ஏழுமண்ணையும் ஏழு விண்ணையும் வென்றெழுந்த ஹிரண்யகசிபுவை வெல்ல சிம்மமுகமும் திசையெரி என பெருகிச்சிலிர்த்த செஞ்சடையும் கூருகிர் குவை பத்தும் கொண்டு வந்த அரிமுகத்தான் அவனை அள்ளி தன் மடியிலிட்டு உடல்கிழித்து குடல் எடுத்தபோது அவன் கால்களில் அணிந்திருந்த கழல்மணி ஒன்று உருண்டு அந்தத் தூண்பிளவுக்குள் சென்றது. இருண்ட ஆழத்தில் விழுந்து இரண்டாவது இருளடுக்கான விதலத்தில் மறைந்தது" என்றாள் அன்னை.

"அங்கே ஒரு தூங்காவிழியாகக் கிடந்த கழல்மணி ஆற்றிய தவத்தால் அதன் முன் எழுந்தான் ஆழிவண்ணன். எந்தையே கணநேரம் நான் உன் மடியில் கிடக்கும் பேறடைந்தேன். என் உள்ளம் நிறையவில்லை. உன் மடிதிகழ என்னை வாழ்த்துக என்றது அந்த மணி. இனியவனே, நீ மண்ணில் பிறப்பாய், ஆழிவண்ணன் என நான் வந்தமர்ந்து உன்னை மடியிலமர்த்துவேன். அன்று உன் அகம்நின்ற அனல் அழியும். உன் நுதலெழுந்த விழியும் மறையும் என்று இறையோன் சொல்லளித்தான்" என்றாள் அனலுருவத்தாள். "உன் அரண்மனைக்கு தன் தமையனுடன் வந்த அவன் இளையோனாகிய உன்னை அள்ளி தன் மடியிலமர்த்தி உச்சி முகர்ந்து குழல் அளைந்து விளையாடினான். உன் மென்வயிற்றை தன் செவ்விதழால் கவ்வி உன்னை சிரிக்கவைத்தான். அன்று நீ முழுமையானாய். வாழ்க!"

செந்நிழலாட்டமாக கருடன் மேலேறி சங்குசக்கரமேந்திய கைகளுடன் வைஷ்ணவி அவன் முன் தோன்றினாள். "இனியவனே, முன்பொருமுறை நீ இப்புவியில் மாபலி என்னும் மன்னனென பிறந்தாய். விண்ணவர் அஞ்ச மண்புரந்தாய். உன்னை வெல்ல மூன்றடி மண்கோரிவந்த வாமனன் அவன். விண்ணளந்த கால்தூக்கி உன் தலைமேல் வைத்தான். நீ மூன்றாவது அடியுலகாகிய சுதலத்தை அடைந்தாய். அங்கே மாபெரும் வேர்ப்பின்னலாக விரிந்து நிறைந்தாய். உன் வேர்களில் ஒன்று கவ்வியது மண்ணிலெழுந்து நின்ற கடம்பமரம் ஒன்றை. அதன்மேல் சாய்ந்து நின்று குழலூதினான் ஒரு சிறுவன். சுதி விலகியதால் சினந்தெழுந்து குழல்தாழ்த்தி என்னை எவரென்றறிவாயா என்றான் நீலன். ஆம் அறிவேன், ஆனால் நீ விண்ணளந்து எழுந்தபோதும் நான் அஞ்சவில்லை, இன்று மீண்டும் சிற்றுருவம் விரித்து விண் நிறைத்தாலும் அஞ்சேன் என்றாய்."

"அந்த அச்சமின்மையை எண்ணி மகிழ்ந்த அவன் மண்நிறைந்தவனே நீ மேலெழுந்து வருக! நூறுமுறை என் முன் அச்சமின்றி விழிதூக்கி நிற்கும் வல்லமையை உனக்களித்தேன், வாழ்க என்றான். அவ்வாறு அவன் முன் நீயும் ஒரு மைந்தனாக இப்புவியை வந்தடைந்தாய். நூறு முறை நீ அவன் முன் நிகரென எழுந்து நிற்பாய். நூறுமுறை அவனை இழித்துரைத்து உன் சொல் தருக்கி எழும். அவனை எவ்வண்ணம் எவர் சொன்னாலும் பொருத்தமே என்பதனால் நீயும் அவனை பாடியவனாவாய். என்றும் அவன் பெயருடன் இணைந்து நீயும் வாழ்வாய். ஓம் அவ்வாறே ஆகுக!" என்று சொல்லி வைஷ்ணவி மறைந்தாள்.

எருதின் இளஞ்சீறல் ஒலியுடன் எழுந்து வந்தாள் மகேஸ்வரி. "மைந்தா, நீ முன்பொருமுறை இங்கே பத்துதலைகொண்ட இலங்கைவேந்தனாக பிறந்தாய். அவன் நெஞ்சமைந்த திருவை கவர்ந்துசென்று சிறைவைத்தாய். அவன் குரங்குப்படைசூழ வந்து உன் கோட்டையை வென்றான். அருள்கொண்டு அவனிட்ட வாளி உன் நெஞ்சை துளைத்தது. உன் விழிநிறைத்து அகம்புரந்த அத்திருமகளை மறுமுறைகாணலாகுமா என்று எண்ணி ஏங்கி உயிர்துறந்தாய்" என்றாள் தேவி. "தணியாத பெருங்காமம் தலாதலம் என்னும் அடியுலகில் விதைகளாகின்றது என்றறிக! அங்கே யுகங்களாக நீ செய்த தவத்தால் இன்று இவ்வடிவம் கொண்டாய். இவ்வில்லத்தில் அத்திருமகளை நாடி வந்து அமர்ந்திருக்கிறாய். உன் விழிநிறைத்து அவள் எழுவாள். நீ நிறைவாய்!"

கைகூப்பி நின்றிருந்த அவன் முன் மின்னலென அதிர்ந்த நிழலொளியுருவாக வந்து நின்ற இந்திராணி சொன்னாள் "நீ ஆயிரம் கைகொண்டு அவன் முன் செருநின்ற கார்த்தவீரியன் என்றறிக! உன் புரம் அழிக்க அவன் மழுவேந்தி வந்து நின்றான். கோட்டைகளை இடித்தான். உன் கோபுரங்கள்மேல் அனலென எழுந்தான். உன் கைகளை துணித்துக் குவித்தான். உன் தலைகொய்ய மழுவேந்தியபோது நீ விழைந்த ஒன்றுண்டு. யாதவனாகப்பிறந்தேன், நிகரான ஓர் யாதவன் கையால் இறந்திருக்கலாகாதா என்று. இளையோனே, அழியாத ஆணவம் சென்றடையும் ஆழமே ரசாதலம். ஒவ்வொன்றிலும் உறையும் சாரங்கள் ஊறித்தேங்கிய நீர்வெளி அது. அதிலொரு குமிழியென எழுந்தவன் நீ. இப்பிறவியில் யாதவனின் வளைசக்கரத்தால் வெல்லப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக!"

அவன் முன் இளநகை விரிந்த எழில்முகத்துடன் கன்னியுருக்கொண்டு வந்து நின்றாள் கௌமாரி. "உன் முற்பிறவியில் நீ ஒரு இளமைந்தனை நெஞ்சிலேற்ற எண்ணி ஏங்கி ஏங்கி அழிந்தாய். அவன் சிறுகால்களையும் கைகளையும் முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்துறந்தாய். சிறியவனே அன்று உன்பெயர் கம்சன். மகாதலத்தில் ஒரு கண்காணா நதிப்பெருக்கென நீ ஓடிக்கொண்டிருந்தாய். அதன் ஒருதுளி எனத்தெறித்து இங்கு வந்துள்ளாய். இப்பிறவியில் நீ எண்ணியதை எல்லாம் அவனுடன் ஆடுவாய். வாழ்க!" என்றாள்.

வெள்ளை நிழலென ஆடிய பிராமியை அவன் கண்டான். அருள்நிறைந்த புன்னகையுடன் அன்னை சொன்னாள் "எஞ்சியவை எல்லாம் சென்றுசேரும் பாதாளத்தில் இருளின் மையச்சுழியை அளைந்துகொண்டிருக்கிறது மேலே விண்ணுலகின் பாற்கடலில் சுருண்டிருக்கும் ஆயிரம் நா கொண்ட அரவின் வால்நுனி. அந்நுனி தொட்டு எழுப்பப்பட்டவன் நீ. எஞ்சிய அத்தனை விழைவுகளும் வஞ்சங்களும் சினங்களும் கனவுகளும் திரண்டு இங்கு வந்திருக்கிறாய். உன்னை சிசுபாலா என்று அவன் தன் மணிநாவால் அழைப்பதை இறுதியாகக் கேட்பாய். இங்கு மறைந்து அங்கு ஒளியுடன் எழுவாய். அவ்வாறே ஆகுக!"

சிசுபாலன் மெல்லிய ஒலி ஒன்றை எழுப்பினான். விக்கல் போலவோ விம்மல் போலவோ. அவன் கால்தளர்ந்து விழப்போகிறவன் போல ஆட சித்ரகர்ணன் எழுந்து அவனை பற்றப்போனான். சிசுபாலன் திரும்பி வாயிலில் நின்ற சத்யபாமாவை ஒருகணம்தான் நோக்கினான். அரசே என நெடுந்தொலைவில் சித்ரகர்ணனின் குரலை கேட்டான். 'அரசே' என்று அக்குரல் மீண்டும் விலகிச்சென்றது. மிகத்தொலைவில் எங்கோ அது விழுந்து மறைந்தது.

முலையுண்டு மகிழ்ந்த மகவின் இளநகை என செவ்விதழ் விரிந்த தாமரை மேல் பூத்திருந்தாள். செம்பொன்னிறப் பாதங்களில் பத்து விழிமணிகள் சுடர்ந்தன. பொற்பட்டாடையின் அலைகளுக்குமேல் எழுந்தன பொற்றாமரைக் குவைகள். வலதுமேல்கையில் வெண்தாமரை விரிந்திருந்தது. இடதுமேற்கையில் அமுதக்கலம். அருளி அணைக்கும் இரு மலர்ச்செங்கைகள். முலையூட்டி முடித்து குனிந்து மகவை முத்தமிடும் அன்னையின் கனிந்த விழிகள். அது சிரிப்பதைக் கண்டு மலரும் சிரிப்பு. செம்பொன் உருகியது போல் ஒளிவிடும் மேருமுடிகள் நடுவே சூரியன் என அவள் முலைகளுக்கு மேல் சியமந்தகம் நின்றது. அவன் 'அன்னை' என்றான். அச்சொல் எஞ்சியிருக்க நினைவழிந்து நிலத்தில் விழுந்தான்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 1

குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க காட்டிலிருந்து எழுந்த ஓசை அறுபடாதொலிக்கும் ஒற்றைச் சொல் என அவர்களை சூழ்ந்திருந்தது.

அவர்கள் சத்ராஜித்தும் பிரசேனரும் வருவதற்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரும் சற்று நிலையழிந்தது போலிருந்தமையால் உரையாடல் ஏதும் நிகழவில்லை. மைத்ரிவனத்தின் குடிப்பூசகர் தருமர் உறைந்த பசுநெய் நிறைந்த சிமிழை அனலருகே கொண்டுசென்று உருகச்செய்து அதை தன் கையில் இருந்த அப்பத்தில் பூசினார். "உணவருந்தாமலா வந்தீர்?" என்று பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் கேட்டார். "ஆம், மலைமேல் அன்னையர் ஆலயத்தில் பூசனைசெய்ய சென்றிருந்தேன். கலமனின் பசுக்கள் சென்ற நாலைந்து நாளாக இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒரு பிழைநீக்குபலி செய்யவேண்டுமென்றான். அங்கிருக்கையில்தான் முழவொலி கேட்டேன். ஊருக்குச் சென்று மீண்டுவர நேரமில்லை…" என்றார். அவரது தாழ்ந்தகுரலிலான பேச்சு அங்கே அனைவருக்கும் கேட்டது. ஆனால் எவரும் திரும்பி நோக்கவில்லை.

காட்டுக்குள் குறுமுழவின் ஒலி எழுந்ததும் அனைவரும் அசைந்து அமர்ந்தனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். ஒருவர் "இத்தனை பிந்திவருகிறார்கள்" என்று முணுமுணுத்தபோது அனைவரும் திரும்பி அவரை வெற்றுவிழிகளுடன் நோக்கினர். முழவோசை சற்று கழித்து அருகே கேட்டது. பின்னர் பந்த ஒளியில் எழுந்த நிழல்கள் அவர்கள் மேல் படர்ந்து சுழன்றுசென்றன. மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் "அவர்கள் மட்டும்தான் வருகிறார்களா?" என்றார். ரிஷபபதத்தின் தலைவரான பிங்கலர் "ஆம், அப்படித்தான் சொன்னார்கள்" என்றார். யாரோ பெருமூச்சு விட்டு "விடாய்நீர்" என்று கேட்டார். ஏவலர்களில் ஒருவன் குடுவையில் நீருடன் அவர் அருகே சென்றான்.

பந்தங்களின் ஒளி காட்டுக்குள் இருந்து பெரிய சட்டங்களாக எழுந்து சுழன்றது. பின்னர் இலைகளுக்கு அப்பாலிருந்து செந்நிறப்பெருக்காக எழுந்தது. இலைநிழல்கள் அதில் அசைந்தன. ஒளிபட்டு அஞ்சிய பறவைகள் ஓசையிட்டபடி கலைந்து எழுந்து இலைத்தழைப்புக்குள் சிறகுரச பறந்தன. புதர்களைக் கலைத்தபடி ஏதோ விலங்கு ஓடிச்செல்லும் ஒலி கேட்டது. நீருக்குள் என குரல்கள் கசங்கி கேட்டன. காலடி பட்டு உருளும் ஒரு கல்லின் ஓசையுடன் ஒருவன் மேலேறிவந்து தன் கையிலிருந்த பந்தத்தை தூக்கிக் காட்டினான். நீலநிற மரவுரியாடை அணிந்து பெரிய தலைப்பாகை சூடிய சத்ராஜித் ஆடையை ஒருகையால் பற்றியபடி மேலேறிவந்தார். பின்னால் பிரசேனர் திரும்பி நோக்கி ஏதோ ஆணையிட்டபடி வந்தார்.

அவர்கள் அருகே வந்ததும் அனைவரும் எழுந்து தலைவணங்கினர். சத்ராஜித் கைகூப்பியபடி வந்தபோது அவர்களில் முன்னால் நின்றிருந்த முதுபூசகர் "அந்தகக்குலம் வெல்க!" என்று சொல்லி தலைவணங்கினார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் கைகாட்டி சத்ராஜித்தை அங்கிருந்த மூங்கில்பீடத்தில் அமரச்செய்தார். பிரசேனர் அருகே இருந்த இன்னொரு பீடத்தில் அமர்ந்தார். ஏவலன் அவர்களுக்கு இன்கடும்நீர் கொண்டுவந்து கொடுத்தான். பிரசேனர் குவளையை வாங்கியபடி "இன்று காலை யமுனையில் ஒருவனை பிடித்தோம். அவனை உசாவியபோதுதான் சேதிநாட்டின் ஒற்றன் என்று தெரிந்தது" என்றார். "இத்தனை பெரிய ஒற்றர்வலை நம்மைச்சூழ்ந்திருக்குமென நான் எண்ணவில்லை. ஆகவே நன்றாக இருள் படிந்தபின்னர் கிளம்பலாமென முடிவெடுத்தோம்" என்றார்.

"இந்த மன்றுகூடலை நாம் மறைக்கமுடியாது. இங்கே அத்தனை குடித்தலைவர்களும் பூசகர்களும் வந்திருக்கிறோம்" என்றார் கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர். "ஆம், ஆனால் நாம் பேசுவதை அவர்கள் ஏதேனும் செய்து தடுக்காமலிருக்கலாம்" என்று பிரசேனர் சொன்னார். "இப்போதுகூட நம் சொற்கள் ஒவ்வொன்றும் அவர்கள் செவிகளுக்கும் செல்கின்றன என்பதை நாம் உணர்ந்திருப்பது நன்று" என்றார் பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சற்று சினத்துடன் "அந்தகர்கள் எவரும் இரண்டகம் செய்பவர்கள் அல்ல. ஏனென்றால் அழிவது அனைவரும்தான்" என்றார். "நாம் ஏன் அழியவேண்டும்?" என்று கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் கேட்டார். "அழிவோம் என்றால் அது எவரது பிழை? நம் இளவரசி இந்நேரம் துவாரகையில் அரசாண்டுகொண்டிருந்திருப்பாள்... நம் குலம் அப்பெருநகரில் வணிக உரிமைகளை பெற்றிருக்கும். கருடக்கொடியுடன் நம் நாவாய்கள் கடல்மீது ஏறியிருக்கும். இன்று இதோ இருண்டகாட்டில் கள்வர்கள் போல அமர்ந்திருக்கிறோம்."

"இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை" என்றார் பிரசேனர். "ஏன் பேசக்கூடாது? இதுவரை நிகழ்ந்ததெல்லாம் எவருடைய பிழை?" என்று பிரகதர் கூவியபடி எழுந்தார். பிரசேனர் எழுந்து கைகூப்பி "என் பிழை… என் பிழை மட்டுமே. நான் அனைத்தையும் பிழையாக கணித்தேன். என் பிழைகளில் முதன்மையானது என் தமையனைவிடப் பெரியவராக எவரையும் எண்ணாததுதான். அவையில் அவர் ஒருபடி மேலென நிற்கவேண்டுமென விழைந்தேன். அந்த மடமைக்கு விலையாக என் தமையன் சேதிநாட்டின் சிறுமதியாளன் முன் தலைகுனிந்து நிற்கச்செய்தேன்… இந்த அவையில் என் தலையை மண்மேல் வைக்கிறேன். குலமூத்தாரின் கால்கள் அதை மிதிக்கட்டும்" என்றார். பிரகதர் உரக்க "இச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை பிரசேனரே. உமது ஆணவத்தின் விளைவை அந்தகக்குலம் சுமக்கிறது" என்றார்.

ஹரிணர் ஏதோ சொல்வதற்குள் சத்ராஜித் கைதூக்கி "இந்த அவையில் என் இளையோனைப்பற்றி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னைக்குறித்தே. நான் அவனன்றி பிறனல்ல" என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் "ஆம், நாம் இனிமேல் பேசிப்பயனில்லை. நிகழ்வதை பேசுவோம்" என்றார். சத்ராஜித் "என் தனயனை அன்னையிடமிருந்து நான் கைபற்றி ஆட்கொண்டது ஐம்பதாண்டுகளுக்கு முன். என் வாழ்க்கை என்பது அவனே. அவனுக்கு நானளிக்கக் கூடாதது என ஏதுமில்லை இப்புவியில். என் உயிர், அரசு, குடி, குலம் அனைத்தும் அவனுடையதே" என்றார். "அவனை விலக்கவேண்டுமென எண்ணுபவர்கள் எழலாம். என்னையும் விலக்கி அந்தகர்களுக்கு பிறிதொரு அரசனை தேரலாம்… நான் தடைநிற்கப்போவதில்லை."

அச்சொற்கள் பிரகதரை தளர்த்தின. "நான் சொன்னது நம் இளவரசியைப்பற்றிதான் அரசே" என்றார். "என் இளையோன் சொன்னால் இக்கணமே அவளை குலமொழிவு செய்யவும் தயங்கமாட்டேன்…" என்று சத்ராஜித் உரத்தகுரலில் சொல்ல பிரகதர் 'நான் என்ன சொல்ல?' என்பதுபோல கைகளை விரித்தபின் அமர்ந்தார். யாதவர்கள் அவரது குரலைத்தான் விரும்பினர் என்பது முகங்களில் தெரிந்தது.

சுவனத்தின் தலைவரான அஸ்வகர் "என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று பிரசேனர் சொல்லட்டும். நாம் எதற்காகக் கூடினோமோ அதைப்பற்றி பேசுவோம்" என்றார். "ஆம், அதை பேசுவோம்" என்று கூட்டத்தில் குரல்கள் எழுந்தன. சத்ராஜித் இளையவரை நோக்க அவர் சற்றுநேரம் தயங்கியபின் "….எங்கே தொடங்குவதென்று தெரியவில்லை மூத்தாரே. நேற்று வந்த செய்தியை சொல்கிறேன். சிசுபாலருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை சீர்குலைந்துள்ளது. தட்சிணநாட்டு மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்" என்றார். யாதவர்கள் எழுப்பிய வியப்பும் சலிப்பும் கலந்த ஒலியைக் கேட்டு என்ன செய்வது என்பதுபோல கையை விரித்தார். "என்ன ஆயிற்று அவனுக்கு? இளைஞன். இங்கு வந்தபோது இளம்புரவிபோலத்தான் இருந்தான்" என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர்.

பிரசேனர் "ஆம், இங்கு வரும்வரை அவருக்கு எந்த நோயும் இல்லை என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். இங்கு அவர் நம்மை சற்று இளக்காரமாக நடத்த நானும் யாதவரும் சினம்கொண்டோம் என்று அவரது அமைச்சர்கள் சான்றுரைக்கிறார்கள். அவருக்கு ஒரு குவளை பாலமுது வழங்கப்பட்டது. அது சற்று மாறுபட்ட சுவைகொண்டிருந்தது என்று அவர் சொன்னதையும் அனைவரும் கேட்டிருக்கிறார்கள். இளவரசி வந்ததும் முறைப்படி எழுந்து அவளைப்பார்த்தபோது தலைசுழன்று கீழே விழுந்திருக்கிறார். வலிப்பு வந்துள்ளது. நினைவு மீண்டபோதும் சித்தம் தெளியவில்லை. கலங்கியநிலையிலேயே அவரை மகதத்தின் காவலரணுக்கும் அங்கிருந்து சேதிநாட்டுக்கும் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவரது உளநிலை தெளிவடையவேயில்லை…" என்றார். "நாம் பாலமுதில் ஏதோ பச்சிலையை கலந்துவிட்டோம் என்பது அவர்களின் மருத்துவர்களின் குற்றச்சாட்டு. அவர்களின் குலப்பூசகர்கள் ஏதோ அணங்கை ஏவிவிட்டிருக்கிறோம் என்கிறார்கள்."

யாதவர்கள் சலிப்பின் ஒலிகளுடன் உடல்தளர்ந்தனர். சுவனத்தின் தலைவரான அஸ்வகர் "அப்படி குற்றம்சாட்டலாயிற்றா? முதலில் ஏதேனும் திடச்சான்றை அவர்கள் காட்டியாகவேண்டும் அல்லவா?" என்றார். "காட்டியாகவேண்டும், நாம் அவர்களுக்கு நிகரான வல்லமை கொண்ட அரசாக இருந்தால். இன்றையநிலையில் நம்மை வேருடன் பிடுங்கி உண்ண அவர்களுக்கு இது ஒரு நல்ல முன்விளக்கம்" என்று சொன்ன பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் சலிப்புடன் கையை வீசி "நாம் தனித்துவிடப்பட்டிருக்கிறோம். இன்று யாதவகுலங்கள் நம்முடன் இல்லை. அதுதான் வெளிப்படையான உண்மை. பிறிதெல்லாம் அரசு சூழ்தலின் நாடகங்கள் மட்டுமே" என்றார். யாதவர் அதை ஏற்பது போல ஓசை எழுப்பினர். ஒருவர் "நாம் சேதிநாட்டுக்கு கப்பம் கட்டுவோம். எப்படியானாலும் கப்பம் கட்டுபவர்கள் அல்லவா?" என்றார். "கப்பம் கட்டும்படி கோரினால் அத்துடன் நம் இடர் நீங்கியது. ஆனால் அதற்கு அவர்கள் நம்மை சிற்றரசர்களாக ஏற்கவேண்டும். அப்படி ஏற்பதற்கு எண்ணமிருந்தால் ஏன் இந்தப்பகைமை?"

"அவனுக்கு உண்மையிலேயே சித்தம் பிசகிவிட்டதா, இல்லை அதுவும் வெறும்கூற்றுதானா?" என்று பிரகதர் கேட்டார். பிரசேனர் "நான் அதை ஒற்றர்கள் வழியாக முற்றாக உசாவியறிந்தேன். இங்கிருந்து செல்லும்போது இருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறார்" என்றார். பிரகதர் குரல்தாழ்த்தி "முழுமையாகவே பித்தாகிவிட்டானா என்ன?" என்றார். "அதை பித்து என்றும் சொல்லமுடியாது. அணங்கு கூடிய நிலைபோலத்தான் தெரிகிறது. மானுடர் எவரையும் விழிநோக்குவதில்லை. கண்கள் விரிந்து மலைத்தவை போலிருக்கின்றன. விழித்திருக்கும்போதும் துயிலும்போதும் பேருவகையில் மலர்ந்ததுபோலிருக்கிறது முகம். அது ஏதோ மலையணங்கு என்று முதலில் எண்ணி பூசெய்கைகள் நிகழ்ந்தன. இசையிலும் மலர்களிலும் இடைவெளியில்லாமல் உள்ளம் தோய்வதைக் கண்டு அது கந்தர்வன் என்று பின்பு கணித்தனர். பேசும் சொற்களைத் தேர்ந்து ஆராய்ந்த நிமித்திகர் அவர் பெருமங்கலம் திகழும் தெய்வமொன்றை கண்டிருக்கிறார் என்றனர். எனவே பதினெட்டுநாட்களாக திருவாழும் ஆலயமொன்றில் வைத்து வழிபாடுகள் செய்தனர். மீண்டு வந்த இரண்டுநாள் தொடர்ந்து துயின்றபின் விழித்து மீண்டும் முன்பு என ஆகிவிட்டிருக்கிறார்."

"அணங்கேதான்" என்றார் குலப்பூசகரான வராகர். "அணங்குகள் பல உண்டு யாதவரே. அணங்குகள் முப்பெரும் தேவியரில் ஒருவருக்கு அகம்படி செய்பவை. வெண்கலையன்னைக்குரிய அணங்குகள் காவியங்களிலும் இசையிலும் வாழ்கின்றன. அவை பற்றிய மானுடர் ஒருநூலை ஒருபாடலை ஓர் இசையை மீளமீளக் கேட்டு அவற்றில் ஆழ்ந்து பித்தென்றாகி அமர்ந்திருப்பர். பாய்கலைப்பாவைக்குரிய அணங்குகள் படைக்கலங்களில், பசுங்குருதியில் வாழ்பவை. அவை தொட்ட மானுடர் பெருஞ்சினம் கொண்டிருப்பர். படைக்கலத்தை துயிலிலும் கைவிடாதிருப்பர். வெண்ணிறம் மீது பற்றுகொண்டிருந்தால் கலைமகளின் அணங்கு அது. செங்குருதிநிறம் மீது பித்தெழுந்தால் அது கொற்றவையின் அணங்கு எனலாம்."

"திருமகளின் அணங்குகள் அழகுள்ள அனைத்திலும் வாழ்பவை. மலர்களில், பட்டில், அணிகளில், ஓவியங்களில், அழகிய பெண்ணுடல்களில், மலர்க்காடுகளில், வெண்முகில்களில். எங்கிருந்தும் அவை மானுடரை பற்றக்கூடும். நாம் நடந்துசெல்லும் இந்த மண்ணில் விரிந்துள்ள கோடிகோடி கூழாங்கற்களில் சில கற்கள் பேரழகுகொண்ட சிற்பங்கள். ஊழ் வகுத்த ஒரு கணத்தில் அவற்றில் ஒன்றை எடுத்து நோக்குபவன் அவ்வணங்கால் பற்றப்படுகிறான். நம்மைச்சூழ்ந்துள்ள இந்த மலர்ப்பெருக்கில் சில மலர்கள் மட்டும் கொல்லும் பேரழகுடன் அணங்கு கொண்டு அலர்ந்திருக்கின்றன. நாமறிந்த பெண்களிலேயேகூட அவள் உடலசைவுகளின் பெருக்கின் ஏதோ ஒரு கணத்தில் அணங்கு எழுந்து வரக்கூடும். அக்கணத்தில் அகம் விழியாக அவளை காண்பவன் பித்தெழுந்து அழிகிறான். முன்பு பிரதீபன் என்னும் அரசன் தன் அரசி சத்யை என்பவள் கூந்தல்கோதி திரும்பும் ஓர் அசைவைக் கண்டு அணங்குகொண்டான். அதன்பின் அவன் சத்யையையும் நோக்கவில்லை. மானுடவெளிக்கு அப்பால் எழுந்த பேரழகைக் கண்டு பித்தேறி ஊணுறக்கம் மறந்து மெலிந்து அழிந்தான்."

"அவன் நம் இளவரசியில் அணங்கை கண்டிருக்கிறான்" என்று சத்ரகுடியின் பூசகரான பாவகர் சொன்னார். "அப்போது நான் வாயிலில் நின்றிருந்தேன். அவன் அவளை முதலில் எதிர்ச்சுவரில் எழுந்த நிழலில் நோக்கினான். அவன் விழிகள் அஞ்சியவை போலவும் பேருவகைகொண்டவை போலவும் விரிந்தன. உதடுகள் துடித்து உடல் அதிர்வதை கண்டேன். தோள்தொடப்பட்டவனைப்போல திடுக்கிட்டுத் திரும்பி அவளை நோக்கினான். அக்கணமே உடல் உதறிக்கொள்ள மண்ணில் சரிந்தான். இளவரசி அப்போது முழுதணிக்கோலத்தில் கருணைநிறை விழிகளுடன் கைகளில் பாலமுதும் மலர்த்தாலமும் ஏந்தி மார்பிலணிந்த சியமந்தக மணியுடன் நிலைவாயிலில் நின்றிருந்தாள். கருவறை நின்ற திருமகள் போலத்தான் தெரிந்தாள்."

"சியமந்தகம்தான்… அதைத்தான் அவன் கண்டிருக்கிறான்" என்று சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொன்னார். "அவனைப் பித்தாக்கிய திருமகள் எழுந்தது அதிலிருந்துதான்" என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். அதை முன்னரே அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்பதைப்போல யாதவர் சொல்லின்றி அமர்ந்திருந்தனர். ஒருகுரல் "அதிலுள்ளது நம் நல்லூழா தீயூழா  என்று தெரியவில்லை" என்றது. அனைவரும் திரும்பி நோக்க அதைச்சொன்னது எவரென காணமுடியவில்லை. சத்ராஜித் பெருமூச்சுடன் "நாம் வீண்சொற்கள் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சேதிநாட்டின் பகைமையை எப்படி வெல்லப்போகிறோம்? அதைமட்டும் நாம் முடிவுசெய்தால்போதும்" என்றார். யாதவர்கள் பெருமூச்சுகளுடன் மீண்டுவந்தனர். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் "மீள்வதற்கு என்ன பல வழிகளா உள்ளன? வல்லமையுள்ளவன் கால்களில் சென்று விழுவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது" என்றார்.

"நாம் சென்று பணியவேண்டிய கால்கள் இளைய யாதவனுக்குரியவை மட்டுமே" என்றார் சுஃப்ரகுலப்பூசகரான சபரர். "துவாரகையின் கால்கோள்நாட்டுவிழாவில் நாம் சொன்ன சொற்களுக்கான கழுவாயை செய்வோம். அங்கிருந்து அனைத்தும் சீரமைவதை காண்போம்." யாதவர்கள் அதை ஏற்று ஒலியெழுப்பினர். சத்ராஜித் பிரசேனரை நோக்கினார். பிரகதர் "மூத்தாரே, இன்று நாம் மீண்டும் துவாரகைக்கு செல்வோம் என்றால் நமக்கு அங்குள்ள இடமென்ன? நாமிருந்த அரசமேடை நமக்கு மீண்டும் அளிக்கப்படுமா?" என்றார். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் "அதை இழந்தது எவரது பிழை?" என்றார். சத்ராஜித் "நாம் பழையவற்றை எண்ணவேண்டியதில்லை… இன்று என்ன செய்யப்போகிறோம்?" என்றார். சிருங்கசிலையின் சத்ரர் "பழையவற்றை நாம் மீண்டும் செய்யத்தொடங்கியிருக்கிறோம். நான் சொன்னது அதை மட்டுமே" என்றார். "செய்யவேண்டியதை பேசுவோம்" என்று சத்ராஜித் உரக்க கைதூக்கி சொன்னார்.

பிரசேனர் "என் எண்ணங்களை சொல்லிவிடுகிறேன்… இன்றையநிலையில் நாம் செய்யக்கூடுவது அதை மட்டுமே" என்றார். "நாம் சேதிநாட்டின் பகையிலிருந்து தப்ப இரு வழிகள் மட்டுமே உள்ளன. துவாரகைக்குச் சென்று நாமிருந்த இடத்தை இழந்தவர்களாக கடைக்குடி யாதவர்களாக அமையலாம். மகதத்துக்கு கப்பம் கட்டி படைத்துணை கோரலாம்." மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் எரிச்சலுடன் "இதைத்தான் பலநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை… நாம் கப்பம் கட்ட சித்தமாக இருக்கிறோம் என அவர்களுக்குத் தெரியாதா என்ன? அவர்கள் நம்மை சிற்றரசாக ஏற்கவேண்டும். கோல்கொண்டு முடிசூட ஒப்பவேண்டும்… இன்றுவரை நம்மை சிற்றரசாக ஏற்றது மதுராபுரியின் உக்ரசேனரும் கம்சரும் மட்டுமே" என்றார்.

பிரசேனர் "எந்தப் பெரிய அரசும் சிற்றரசுகளின் எண்ணிக்கையை பெருக்க எண்ணாது. அது குடித்தலைவர்கள் தம்மை அரசர்களென எண்ணச்செய்யும். நாட்டில் ஒழுங்கு சிதையும். ஆகவே மகதத்தின் நிலை சரியானதே" என்றார். "மகதம் நம்மை சிற்றரசாக எண்ணவேண்டுமென்றால் நம் வலிமை இன்னும் சற்று மிகவேண்டும். நம் படைவல்லமையும் துணைவல்லமையும் பெருகினால் நம்மை அருகணைத்தாகவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது நாம் அவர்களிடம் நின்று பேசமுடியும்." சில கணங்கள் நிறுத்தி அவர்களை நோக்கிவிட்டு "சிற்றரசாக நம்மை மகதம் ஏற்கும் நிலை வருமென்றால் நாம் துவாரகையிடமும் பேசமுடியும்."

சத்ராஜித் பெருமூச்சுடன் சற்று உடலை அசைக்க அனைவரும் அவரை நோக்கினர். பிரகதர் "நம் இளவரசியை மீண்டும் இளைய யாதவர் கொள்வாரா?" என்றார். பிரசேனர் திகைத்து விழிகளை விலக்கி "அவ்வாறு நிகழுமென்றால் நன்று…" என்றார். பிரகதர் "மீண்டும் பட்டத்தரசியாக ஆகாவிட்டாலும் யாதவருடன் அவள் சேர்ந்தாள் என்றால் அதைவிட நம் குடிக்கு நன்மை என பிறிதில்லை" என்றார். சத்ராஜித் "நாம் அதைப்பற்றி பிறகு பேசுவோம்… நம் இக்கட்டு அதுவல்ல" என்றார். பிரகதர் உரக்க "நம் இக்கட்டைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. நம் குலவிளக்கு இங்கே தன் உளம்கொண்டவனுக்காக காத்திருக்கிறாள்… அவள் நெஞ்சுலைந்து நெடுமூச்செறிந்தால் நம் குலம் பற்றி எரியும். நான் எண்ணுவது அதைப்பற்றியே" என்றார்.

பிரசேனர் "நாம் அதையும் அவரிடம் பேசமுடியும் மூத்தாரே" என்றார். சிருங்கசிலையின் சத்ரர் "அதற்கு என்னசெய்யப்போகிறோம்? நாம் படைதிரட்டவிருக்கிறோமா? யாதவகுலங்கள் அனைத்தாலும் விலக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பெருங்காட்டின் விளிம்பில் மலைக்குடிகளென வாழ்கிறோம்…" என்றார். "நான் சொல்லவந்ததும் அதுவே. நமக்கு வடக்கே பெருகி பரவியிருக்கும் இப்பெருங்காடு நமக்கு அரண். யமுனைக்கரை வணிகத்துக்காக மட்டுமே நாம் இங்கிருக்கிறோம். களிந்தகத்துக்கு நிகராக ஒரு கோட்டையை நாம் உள்காட்டில் அமைப்போம். மகதமோ பிறரோ நம்மை தாக்குவார்களென்றால் அங்குசென்று அமைவோம். வெல்லமுடியாதவர்கள் என்பதே நம்மை விரும்பத்தக்கவர்களாக ஆக்கும்… இன்று நமக்குத்தேவை அந்த வடிவம்தான். நாம் துவாரகையை பகைத்துக்கொண்டிருக்கிறோம். சேதிநாட்டை விலக்கியிருக்கிறோம். ஆரியவர்த்தமே இன்று நம்மை நோக்குகிறது. ஏதோ ஒரு அறியாவல்லமையால்தான் நாம் இத்தனை நிமிர்வுடனிருக்கிறோம் என அரசர்கள் எண்ணுகிறார்கள். காட்டுக்குள் ஒரு கோட்டை அவ்வென்ணத்தை வலுப்படுத்தும்."

"ஆனால்..." என்று அச்சுதர் சொல்லத்தொடங்க "அஸ்வபதத்தின் மலைக்குடிகளுக்கும் நமக்கும் நெடுங்காலப் பூசல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் மிக எளிதில் அவர்களை நாம் நம் நண்பர்களாக்கிக் கொள்ளமுடியும்" என்றார் பிரசேனர். "ஏனென்றால் மலைக்குடிகள் இன்று மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வணிகப்பொருட்கள் தேவைப்படுகின்றன. உப்பும் மரவுரியும் படைக்கலங்களும் அவர்களால் விரும்பப்படுகின்றன. அவர்கள் நமக்கு மலையில் இடமளித்தால் அவர்களுக்கு யமுனையில் துறையமைத்துக் கொடுப்போம். உரிய வணிக ஒப்பந்தங்களை போட்டுக்கொள்வோம்." யாதவர் நடுவே எந்த எதிர்வினையும் எழவில்லை.

பிரசேனர் ஒருகணம் பொறுத்துவிட்டு "அஸ்வபாதமலைக்கு அப்பால் களிந்தசிருங்கம் வரை ஊஷரர், பிங்கலர், சியாமர், கராளர், கன்னர், தசமுகர், ஜாம்பவர் என ஏழு மலைக்குடிகள் உள்ளன. அவர்களில் ஒருவரையாவது நம்மால் வென்றெடுக்க முடியும். ஒற்றர்கள் வழியாக விரிவாகவே செய்தி சேர்த்திருக்கிறேன். கன்னரும் கராளரும் பகைமை நிறைந்தவர்கள். அனைவருக்கும் முதல்குடிகளான ஜாம்பவர் எவ்வகையிலும் அணுகமுடியாதவர்கள். உள்காட்டின் இருளுக்குள் வாழ்பவர்கள். சியாமரும் பிங்கலரும் தயக்கம் கொண்டவர்கள். ஊஷரரும் தசமுகரும் இப்போதே யமுனைக்கரைத் துறைகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஊஷரகுடித்தலைவர் சிருங்ககாலர் பிறகுடிகளை வென்று பெருங்குடித்தலைவராகும் இலக்கு கொண்டிருக்கிறார். அவருக்கு நம் நட்பு உகந்ததாகவே இருக்கும்… அவரை அணுகலாமென நினைக்கிறேன்" என்றார்.

யாதவர்கள் செந்தழல் அலையடித்த முகங்களுடன் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தனர். "இந்த அவை ஒப்புதல் அளித்தால் முறையான தூதை அனுப்புவேன். நானே நேரில் சென்று அவர்களிடம் பேசி நட்புறுதி செய்வேன்" என்று பிரசேனர் தொடர்ந்தார். "சிருங்ககாலரை இங்கே நம் இல்லத்திற்கு அழைத்து நம் குலமுறைப்படி வரவேற்பும் வாழ்த்தும் அளித்து ஓர் இருகுல உண்டாட்டை நிகழ்த்தினால் நட்புறவு உறுதியாகும். மூத்தாரே, ஊஷரர் நம்முடன் இருந்தால் சியாமரையும் பிங்கலரையும் தசமுகரையும் எளிதில் நம்முடன் சேர்த்துக்கொள்ளமுடியும். நான்கு மலைக்குடிகளின் துணையிருந்தால் அஸ்வபாத மலைச்சரிவில் மரத்தாலான ஒரு கோட்டையை அமைப்பதற்கு ஏழுமாதகாலம் போதும். மலைக்குடிகளைக் கடந்து காட்டுக்குள் வந்து நம்மை வெல்ல மகதத்தாலும் துவாரகையாலும் முடியாது."

"இப்போது இவை எல்லாம் வெறும் கனவுகள்" என்றார் பிரகதர். "ஊஷரர் நம்மை ஏற்பார்கள் என நம்பி இச்சொற்களை சொல்கிறீர்கள். அவர்கள் நம்மை ஏற்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இன்றில்லை. மலைக்குடிகள் அரசு சூழ்தல் அறியாதவர்கள். அவர்களின் எண்ணங்களை அவர்கள் வழிபடும் மலைத்தெய்வங்கள் முடிவுசெய்கின்றன. அவை இன்றுவரை அயலவரை ஏற்றதில்லை." பிரசேனர் "அதையும் எண்ணியபின்னரே இங்கு வந்தேன் மூத்தாரே. ஏழு மலைக்குடிகளில் ஊஷரர் சூரியனை வழிபடுகிறார்கள். அவர்கள் வாழும் கஜமுகம் என்னும் மலைச்சரிவில் உள்ள மூன்று குகைகளில் நடுவே உள்ள குகையில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் மீனநாளின் உச்சிப்பொழுதில் நான்கு கணிகை நேரம் மட்டும் அங்குள்ள இருண்ட சிறிய சுனைக்குள் சுடர்மணியாக எழுந்தருளும் சூரியனே அவர்களின் தெய்வம்."

அவர் சொல்லவருவதை யாதவர்கள் ஒரேகணத்தில் புரிந்துகொண்டனர். பலர் எழுந்து விட்டனர். பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் "உண்மையாகவா?" என்றார். "ஆம், நாம் இங்கு வந்து நூறாண்டுகளாகின்றன. இன்றுவரை நாம் இந்த மலைக்குடிகளை அறிய முயன்றதே இல்லை. அவர்களை எதிரிகளென மட்டுமே எண்ணியிருக்கிறோம்… இப்புவியில் நமக்கு மிக அண்மையான எவரேனும் இருக்கமுடியும் என்றால் அது ஊஷரர்களே" என்றார். கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் "அவர்கள் சூரியனை எப்படி வழிபடுகிறார்கள்?" என்றார். "சூரியன் குடியிருக்கும் ஏழு மணிகள் அவர்களிடமுள்ளன. அவற்றை தங்கள் ஊர்நடுவே உள்ள ஆலயத்தில் வைத்து முதல்கதிர் எழும் வேளையில் புதுமலர் அளித்து வழிபடுகிறார்கள்." யாதவர்கள் உள எழுச்சியால் பெருமூச்சு விட்ட ஒலிகள் எழுந்தன. சுவனத்தின் தலைவரான அஸ்வகர் "அந்த மணிகள் எப்படி உள்ளன?" என்றார். பிரசேனர் புன்னகையுடன் "வானவில்லின் ஏழுநிறங்கள் கொண்டவை" என்றார். "ஆனால் சியமந்தகம் அவற்றை விட ஏழுமடங்கு பெரியது."

பேசவேண்டிய அனைத்தையும் பேசிவிட்ட உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது போல மெல்ல உடல் தளர்ந்து அமைந்தனர். ஒருவர் எழுந்துசென்று இன்கடுநீர் கோப்பையை எடுத்துக்கொண்டார். இன்னொருவர் அதற்காக கைநீட்டினார். "மூத்தாரே, சியமந்தக மணியை கழுத்தில் அணிந்துகொண்டு அவர்களின் மன்றில் சென்று அமர்ந்தேன் என்றால் நான் ஒரு சொல்லைக்கூட உச்சரிக்கவேண்டியதில்லை" என்றார் பிரசேனர். "நான் கோருவது இந்த அவையின் ஒப்புதலை மட்டுமே." யாதவர்கள் அனைவரும் தங்கள் வளைதடிகளைத் தூக்கி "ஆம், அவ்வாறே ஆகுக!" என்று குரலெழுப்பி வாழ்த்தினர்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 2

அணுகமுடியாது எப்போதும் அருகே நிற்பதைச் சுட்ட அஸ்வபாதத்தை சொல்வது அந்தகர்குலத்தின் வழக்கமாக இருந்தது. ஹரிணபதத்தைச்சூழ்ந்த எழுபத்திரண்டு ஊர்களில் எங்கே நின்றாலும் வானை உதைக்க எழுந்த குதிரைக்குளம்பை காணமுடியும். ஆனால் அதில் ஏறிச்சென்ற யாதவர் எவருமில்லை. அதைச்சூழ்ந்திருந்த காளநீலம் என்னும் பெருங்காடு நீலக்கூந்தல் என்று யாதவ குலப்பாடகர்கள் பாடினர். காளநீலி மலைக்குடிகளின் தெய்வம். பன்னிரு முலைகளும் ஏழுவிழிகளும் கொண்டவள். இரவுகளில் கூந்தல்சுழற்றி ஓலமிடுபவள். விண்மீன்களை அள்ளி வானில் வீசிப்பிடித்து கழற்சியாடுபவள். கொன்றையும் வேங்கையும் சூடிய அக்கூந்தலின் பேன்களே யானைகள். அதில் பதித்த பொன்பில்லைகள் புலிகள். செவ்வைரங்கள் சிம்மங்கள்.

காளநீலி தன் உள்ளங்கையில் தூக்கிக் காட்டும் அஸ்வபாதம் அருகே செல்லமுயன்றால் விலகிவிலகிச்செல்லும். அதை விலக்கிக் கொண்டு அவள் புன்னகைப்பாள். ஆழத்திலிருந்து ஆழத்திற்கு இட்டுச்செல்வாள். ஒரு கட்டத்தில் அஸ்வபாதம் மண்ணுக்குள் புதைந்து முற்றிலும் மறைய நான்குபக்கமும் அலையென காடு மேலெழுந்து வானைத்தொட்டு சூழ்ந்திருக்கும். புயலோசை என காளநீலியின் நகைப்பு ஒலிக்கும். அஸ்வபாதத்தின் மேல் எப்போதும் நின்றிருக்கும் குளிர்ந்த நீலமுகில் காளநீலியின் மூடிய விழி என்பார்கள். அவ்விழியிமைகள் திறந்து அவள் ஒளிரும் செவ்விழிகள் தெரியும். அச்சத்தில் செயலிழந்து நின்று அதைப்பார்த்தவர்கள் மீள்வதில்லை.

காளநீலத்தில் வாழும் மலைக்குடிகள் கூட அஸ்வபாதத்தை அணுகியதில்லை. சேறுநிறைந்த தரையில் செழித்து எழுந்து கிளைபின்னி இலை கரைந்து ஒற்றைப்பசும்குவையென நிற்கும் காடு வழியாக ஊடுருவிச்சென்றால் அதன் அடிவாரத்தை மட்டுமே அடையமுடியும். அடிவாரத்தில் இருந்து எப்போதும் ஆயிரம் காதம் அப்பால் இருக்கிறது அஸ்வபாதம் என்று ஒரு பாணனின் பாடல் சொன்னது. 'தேவியின் கையில் இருக்கும் களிப்பாவை. இந்திரநீலக் குவை. விண்ணுக்கெழுந்த மண்ணின் பாதம்…' என்று அது விவரித்தது. அஸ்வபாதம் எப்போதுமே முகில்படலத்தால் மூடப்பட்டு இளநீலநிறமாகவே தெரிந்தது. முகில் திரை வெயிலில் ஒளிகொள்ளும்போது அது நீர்பட்டு அழிந்த ஓவியம்போலிருக்கும். காலையிலும் மாலையிலும் முகிலின் சவ்வு தடித்து நீலம் கொள்கையில் மடம்புகளும் முழைகளும் மடிப்புகளும் எழுந்துவர அண்மையில் வந்து முகத்தோடு முகம் நோக்கி நின்றது. அதன் குகைகள் அறியாச்சொல்லொன்றை உச்சரித்து நிற்கும் இதழ்கள் போல உறைந்திருந்தன.

அஸ்வபாத மலையை யாதவர் விழிதூக்கி நோக்குவதில்லை. அதை நேர்நின்று நோக்குபவர்களின் கனவில் அது புன்னகைக்கும் பெருமுகமாக எழுந்து வந்து குனிந்து மூடிய விழிகளின் மேல் மூச்சுவிட்டு நின்றிருக்கும். அப்போது விழிதிறக்கலாகாது. விழிதிறந்தவர்கள் நீலப்பெருக்கில் கனிந்து காம்பிறும் பழம் என உதிர்ந்து மறைவார்கள். அஸ்வபாதத்தைச்சுற்றி நின்றிருக்கும் நீலமுகில்படலம் அப்படி மறைந்தவர்களின் இறுதிமூச்சுக்களால் ஆனது என்றது யாதவ குலப்பாடல். அவர்களின் இறுதிச்சொற்களால் ஆனது அதில் எழும் இடி. அவர்களின் இறுதிப்புன்னகைகளால் ஆனது மின்னல். அவர்களின் இறுதி ஞானத்தால் ஆனது வானவில்.

காளநீலம் ஒரு மாபெரும் கரிய தாமரை. வெளிப்பக்கமாக விரிந்திருக்கும் இதழ்களை மட்டுமே யாதவர் அறிந்திருந்தனர். அங்குதான் அவர்களின் ஊர்கள் இருந்தன. தலைமுறைகளாக அவர்கள் அங்கேயே பிறந்து அங்கே ஆபுரந்து அங்கே மடிந்து அம்மண்ணில் உப்பாயினர். அவர்களின் அன்னையர்தெய்வங்களும் அங்கே கடம்ப மரத்தடிகளிலும் வேங்கைமரத்தடிகளிலும் மழைப்பாசி படிந்த உருளைக்கற்களாக விழியெழுதப்பட்டு பட்டு சுற்றப்பட்டு காய்ந்த மலர்மாலைசூடி அமர்ந்திருந்தனர். காளநீலத்திலிருந்து கனிந்து வந்த நீரோடைகளை அவர்கள் அருந்தினர். அன்னை தன் முலைப்பாலில் நஞ்சு கலந்தளிப்பதும் உண்டு. ஆக்களும் மைந்தரும் நோயுற்று இறக்கும் முன்மழைக்காலத்தில் இல்லங்களின் முன் நெய்விளக்கு ஏற்றிவைத்து இருளெனச் சூழ்ந்த காடு நோக்கி யாதவர் கைதொழுதனர். 'அறியமுடியாதவளே, சூழ்ந்திருப்பவளே, உன் கருணையால் வாழ்கிறோம்.'

ஆழமற்ற சிறு சுனைகளும் புல்செறிந்த சரிவுகளும் ஊறிக்கனிந்து ஓடைகளாகும் சதுப்புகளும் குறுமரப்பரவலும் கொண்டு சரிந்து வரும் நிலத்தில் அவர்களின் கன்றுகள் மேய்ந்தன. பெருமரங்களுக்கு மேல் கட்டப்பட்ட பரண்வீடுகளில் அவர்கள் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகைசூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடினர். கன்றுகளைச் சூழ்ந்த சிறுபூச்சிகளை பொற்துகள்களாக ஆக்கும் இளவெயில் நோக்கி அமர்ந்து கண்கனிய குழலிசைத்தனர். அந்திகளிலும் மழைமூடிய பகல்களிலும் காட்டுக்குள் இருந்து ஒளிரும் விழிகளுடன் சிறுத்தைகள் அவர்களின் கன்றுகளை தேடிவந்தன. இரவுகளில் ஓநாய்கள் மெல்லிய காலடிகளுடன் வந்து மந்தையை சூழ்ந்துகொண்டு சுவையை எண்ணி முனகியபடி எம்பி எம்பிக்குதித்தன. இருளாழத்தில் நரிகளின் ஊளை எப்போதும் இருந்தது. காலை விடியும் ஈரமண்ணில் புலிப்பாதத் தடத்தால் காடு ஓர் எச்சரிக்கையை எழுதிப்போட்டிருந்தது. யாதவர்களுக்கு ஆழ்கானகம் அச்சுறுத்தும் அயலவர் தெய்வம்.

பிரசேனர் அந்தகக் குலமூத்தார் இருவரும் பூசகர் இருவரும் இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக காளநீலத்திற்குள் நுழைந்தபோது ஒரே பகலுக்குள் அஸ்வபாதம் தலைக்குமேல் எழுந்து மறைந்தது. அவர்களைச்சூழ்ந்து அலையடித்த பசுந்தழைப்புக்குள் காட்டின் மூச்சுபோல காற்று ஓடிக்கொண்டே இருந்தது. பறவைக்குரல்களும், சிற்றுயிர்களின் ஓசையும், அருவிகளும் நீரோடைகளும் எழுப்பிய நீர்முழக்கமும் இணைந்து எழுந்த அறுபடா ஒலிப்பெருக்கு காற்றின் ஒலியை தன்மேல் ஏந்தியிருந்தது. கொடிகள் அடிமரத்தை அறைந்த விம்மலில் கிளைகள் உரசிக்கொள்ளும் உறுமலில் காடு எதையோ மீளமீள சொல்லிக்கொண்டிருப்பதாக பிரசேனர் எண்ணினார். அவர் உடல் அச்சத்தில் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்ற ஒற்றன் அம்மலைப்பகுதியை நன்கறிந்தவன். ஆயினும் அவர்கள் நடுங்கிக்கொண்டிருந்தனர். "இந்தக்காட்டில் பாதைகளே இல்லையா?" என்றார் பிரசேனர். "நாம் பாதையில்தான் செல்கிறோம் அரசே. ஆனால் இங்கு பாதை விழியாலறியப்படுவதல்ல, மூக்கால் உணரப்படுவது" என்றான் ஒற்றன்.

ஊஷர குலத்தலைவர் சிருங்ககாலரை ஒற்றர்கள் வழியாக அணுகுவதற்கே பலவார கால முயற்சி தேவைப்பட்டது. ஊஷரகுலத்தின் மூத்தோரவையில் அனைவருமே நிலமக்களின் உறவை முழுமையாகவே விலக்க விழைபவர்கள் என்றான் ஒற்றன். சிருங்ககாலரும் அவரது இருமைந்தர்களான கலிகனும் மோதனும் மட்டுமே யாதவர்நட்பை விழைந்தனர். தங்கள் குலத்தின் மூத்தோரவையில் பேச்சுவாக்கில் யமுனைக்கரையில் ஒரு வணிகமுனையை அமைப்பதைப்பற்றி சிருங்ககாலர் சொன்னதுமே விற்களுடனும் வேல்களுடனும் குடிமூத்தார் எழுந்து நின்று கைநீட்டிக் கூச்சலிட்டு வசைமொழியத் தொடங்கினர். "நாம் உண்டு கழித்த நீராலானது யமுனை. நமது கழிவில் நாமே கால்நனைக்க விழைகிறோம். நம் குலதெய்வங்களை இழிவுசெய்கிறோம். அவர்களின் நச்சு இக்காடெங்கும் நிறைந்திருக்கிறது என்பதை மறவாதீர். நம் குழவிகள் விழியடங்கி மண்மறையும். நம் இல்லங்கள் மேல் நெருப்பு ஏறும். நாம் நடக்கும் பாதையில் நாகம் படுத்திருக்கும்" என்று முதற்பூசகர் சொன்னார். ஹரிணபதத்தின் ஒற்றர்கள் மீண்டும் மீண்டும் சென்று வந்தனர். ஊஷரர் எவருக்குமே எழுத்துமொழி தெரியாதென்பதனால் நேரடியாக சொல்லனுப்பமுடியாது. சொல்லியனுப்பப்பட்ட வார்த்தைகளைவிட பரிசுப்பொருட்கள் மேலும் பயனளிக்கின்றன என்று பிரசேனர் நான்காவது தூதுக்குப்பின்புதான் கண்டுகொண்டார். பரிசுப்பொருட்களில் யவனமது மிக விரும்பப்படுகிறது என்றும்.

பன்னிரண்டு தூதுக்குப்பின் அவர்களே யவனமதுவை கோரி தங்கள் தூதனை அனுப்பத் தொடங்கினர். சிருங்ககாலர் யவனமதுவை தங்கள் குடிச்சபையில் மூத்தாருக்கு ஊனுணவுடனும் தேனுணவுடனும் இணைத்து அளித்தார். யவனமதுவில் உறைந்த மும்முனை வேல் ஏந்திய நீலவிழிகள் கொண்ட யவனநாட்டுத் தேவன் அவர்களை வென்றான். அதை அருந்தும்போது நீலம் விரிந்த நீர்வெளி கண்ணுக்குத்தெரிவதாக முதுபூசகர் சொன்னார். அதன்மேல் செந்நிறச் சிறகுகளை விரித்துச்செல்லும் கலங்களை அவர் கண்டார். செந்தழலையே தாடியாகக் கொண்ட முதியவர்களை. அவர்கள் பச்சைநிற விழிகளை. "அவர்களின் கனவு இந்த மதுவில் வாழ்கிறது" என்றார். கனவுநீர் என அதை அழைத்தனர். அதற்காக ஒவ்வொருநாளும் சிருங்ககாலரின் இல்லத்திற்கு முன் வந்து நின்றனர். ஆவணிமாதம் முழுநிலவுநாளில் காட்டுக்குள் கூடிய ஊஷரர்களின் குடிமூத்தார் அவைக்கூடலுக்கு வந்து அவர்களின் கதிர்தெய்வத்தைத் தொழுவதற்கான அழைப்பு பிரசேனருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவ்வழைப்பை பிற மலைக்குடியினர் அறியவேண்டியதில்லை என்று சிருங்ககாலர் சொன்னார். கதிர்தெய்வத்தின் அருள் பிரசேனருக்கு இருக்கும் என்றால் அவரை குடிச்சபை ஏற்கக்கூடும். அதன்பின் அவரை ஊஷரர் தமராக ஏற்று படையிணைவுக்கும் வணிகஉறவுக்கும் ஒப்பக்கூடும். அவ்வொப்புதல் நிகழ்ந்தபின்னரே அதை பிற கானகத்தார் அறியவேண்டும்.

அப்படையுடன் சென்று நான்கு கானகக் குலங்களை வெல்ல முடியும் என்றார் சிருங்ககாலர். தசமுகர்களிடம் கலிகனும் மோதனும் முன்னரே பேசத் தொடங்கியிருந்தனர். கனவுநீர் அவர்களை வென்றிருந்தது. சியாமரையும் பிங்கலரையும் படைகாட்டி அச்சுறுத்தி எளிதில் இணைக்கமுடியும். யாதவரின் படையும் கலங்கள்கொண்டுவரும் அம்புகளும் இருந்தால் கன்னரையும் கராளரையும் வெல்லமுடியும். அறுவரும் இணைந்தபின் ஜாம்பவர்கள் எதிர்நிற்கமுடியாதொழிவர். "அவர்களின் காடு பாலுக்குள் உறைந்த நெய் போல காட்டுக்குள் உள்ள அடர்வு. அங்கே மழைத்தெய்வம் நின்றிருக்கிறது. அவள் நீல ஆடையின் சுருளுக்குள் வாழ்பவர்கள் அவர்கள். கரடிமுகம் கொண்ட கொடியவர்கள். காட்டின் ஆழத்தில் அவர்கள் என்றும் கனவுக்குள் வாழும் வஞ்சத்தெய்வம்போல் இருந்துகொண்டுதான் இருப்பார்க்ள். ஆனால் நாம் காட்டுக்குள் கோட்டைகளைக் கட்டி யமுனைவழியாக வரும் படைக்கலங்களை அங்கே நிறுத்தினால் காலம் செல்லச்செல்ல அவர்களை வென்று புறம்காணமுடியும்" என்றார்.

கிளம்பும்போது அரசரில்லத்தின் பெருங்கூடத்தில் பீடத்திலமர்ந்திருந்த சத்ராஜித்தை குனிந்து தாள்தொட்டு வணங்கினார் பிரசேனர். மதுமயக்கால் அடைத்த குரலுடன் "வென்றுவருக இளையோனே" என்றார் சத்ராஜித். "செல்லும் வழி கடினமானது. ஆழ்கானகத்தில் நுழையும் முதல் யாதவன் நீ. காட்டுமக்கள் கரந்துதாக்கும் வஞ்சம் நிறைந்தவர்கள் என்பது நம் மூதாதையர் சொல். மலைமக்களின் சொற்களை ஒருபோதும் முதல்மதிப்புக்கு கொள்ளாதே. நான்கும் எண்ணி நன்று தேர்ந்து துணிக!" பிரசேனர் "என் நெஞ்சு சொல்கிறது, இம்முறை வெல்வோம் என" என்றார். "ஊஷரரின் பொருள் விழைவு நமக்கு உதவும் விசை. அவர்களை அணுக்கராக்கினோம் என்றால் நாம் காட்டை வென்றவர்களாவோம். மூத்தவரே, இந்த மலைக்குடிகள் அறுவரும் நம்முடனிருக்க காட்டுக்குள் ஏழு கோட்டைகளையும் அமைத்துவிட்டோம் என்றால் நாம் துவாரகைக்கோ மதுரைக்கோ அடிகொள்ள வேண்டியதில்லை. ஒருதலைமுறைக்காலம் தலைதாழாது நின்றுவிட்டோம் என்றால் நாமே ஒரு முடியரசாக ஆகமுடியும்."

சத்ராஜித் புன்னகைத்து "மீண்டும் கனவு காண்கிறாய் இளையோனே" என்றார். பிரசேனர் சற்றே நாணிய முகத்துடன் "ஆம், என் உள்ளம் கனவுகளால் நிறைந்துள்ளது மூத்தவரே. பாரதவர்ஷத்தின் தலைமகனாக நீங்கள் அமரவிருக்கும் அரியணையை எண்ணியே நான் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறேன். சொல்தேரா வயதில் என் நெஞ்சில் ஊறிய எண்ணம் அது. அதிலிருந்து நான் விடுபட்டதேயில்லை" என்றார். சத்ராஜித் சிரித்தபடி அவர் தோளில் தட்டி "நன்று, அக்கனவுகள் உன்னை இட்டுச்செல்லட்டும்" என்றார். அவர் திரும்பிநோக்க ஏவலன் பொற்பேழைக்குள் செம்பட்டில் வைக்கப்பட்ட சியமந்தகமணியை கொண்டுவந்து நீட்டினான். அவர் அதை வாங்கி பொற்சங்கிலியில் கோர்த்த நீள்வட்டப் பதக்கத்தின் நடுவே பொறிக்கப்பட்ட இளநீல மணியை தன் முன் தூக்கி நோக்கி "சூரியனின் விழி" என்றார். "இதன் வழியாக நம்மை அவன் எப்போதும் நோக்கிக்கொண்டிருக்கிறான் என்று தந்தை சொல்வார். இதனூடாக நாம் அவனையும் நோக்கமுடியும், ஆனால் அக்கணத்தை அவனே முடிவுசெய்யவேண்டும் என்பார். இன்றுவரை நான் அவனை நோக்கியதில்லை" என்றபின் அதை பிரசேனரின் கழுத்தில் அணிவித்து "நம் குலம் புரக்கும் இளங்கதிர் உன்னுடன் இருக்கட்டும்" என்றார்.

பிரசேனர் "மூத்தவரே, இது…" என்று தயங்கினார். "இது என்னுடையதென்றால் உன்னுடையதும் அல்லவா?" என்றார் சத்ராஜித். "அணிந்துகொள். சூரியவிழியுடன் உன்னை அவர்கள் பார்க்கட்டும்." பிரசேனர் நடுங்கும் விரல்களுடன் உடனே அதை கழற்றப்போக சத்ராஜித் அவர் கையைப்பிடித்தார். "காட்டுக்குள் செல்வதுவரை இதை அணிந்துகொள். இது உன் மார்புக்கு இத்தனை அழகூட்டுமென நான் இதுவரை அறிந்ததில்லை." பிரசேனர் தத்தளிப்புடன் "மூத்தவரே, நம் குடிநெறிப்படி சியமந்தகத்தை மூத்தவர் மட்டுமே அணியவேண்டும்..." என்றார். சத்ராஜித் "அதற்கென்ன, நான் உன்னை மூத்தவனாக கொள்கிறேன்" என்றார். "வேண்டாம் மூத்தவரே, குடிமூத்தார் எவரேனும் இதைக் கண்டால் அறப்பிழையென ஆகும்..." என்று பிரசேனர் தவித்தார். "இளையவனே, அனைவரும் அறிந்த ஒன்றுண்டு" என்றார் சத்ராஜித். கைகள் நடுங்க "மூத்தவரே..." என்றார் பிரசேனர். "மிக இளமையில் ஒருமுறை தந்தை அறியாமல் நீ இந்த மணியை எடுத்து உன் மார்பில் அணிந்துகொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டாய். உன்னை பகல்முழுக்கத் தேடி மலைக்குகை ஒன்றுக்குள் கண்டுகொண்டோம். அங்கே இந்த மணியை நெஞ்சோடணைத்துக்கொண்டு பதுங்கி இருந்தாய்."

பிரசேனர் "ஆம், நினைவுகூர்கிறேன். அதன்பொருட்டு எந்தை எனக்கு நூறு பிரம்படிகளை அளித்தார். ஒருமாதம் ஊன்விலக்கு நோன்பிருக்க ஆணையிட்டார்" என்றார். "இளையோனே, அன்று நான் என் தந்தையிடம் சொன்னேன், நான் இளையோனாக ஆகிறேன். சியமந்தகத்தை அவனுக்கே அளித்துவிடுங்கள் என்று. தந்தை பிரம்பை ஓங்கியபடி நீ இளையோனாகவேண்டும் என்றால் தெய்வங்களே அதை முடிவுசெய்திருக்கும் மூடா என்றார்." சத்ராஜித் புன்னகைத்து "இன்று தெய்வங்களின் ஆணை இது என்று கொள்கிறேன். நீ இந்த மணியை அணியாமல் உன்னை மலைக்குடிகள் ஏற்கமாட்டார்கள் என்று நம் குடிகளிடமும் மூத்தாரிடமும் சொல்கிறேன். அவர்களுக்கு மறு சொல் இருக்காது" என்றார். பிரசேனர் "மூத்தவரே, ஆனால்..." என்றார். "அது பொய்யும் அல்ல இளையோனே, நீ இதை அணிந்துகொண்டு அவர்களின் அவையில் அமர்ந்தால் மட்டுமே உன்னை கதிர்குலத்து அரசன் என்று மலைக்குடிகள் ஏற்பார்கள். வேறு வழியே இல்லை."

பிரசேனர் சியமந்தகத்தை மெல்ல தொட்டார். குளிர்ந்திருந்தது. அதைப் பிடித்து தன் நெஞ்சில் அமைத்தார். இதயத்தில் ஒரு விழி திறந்ததுபோல. "உன் நெஞ்சுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது இளையோனே. அந்த மணி சென்றமையும் பொற்பதக்கக் குழி ஒன்று உன் உள்ளத்தில் உள்ளது என்று எண்ணுகிறேன்" என்றார் சத்ராஜித். பிரசேனர் பெருமூச்சுவிட "நலம் சூழ்க! நம் மூதன்னையரும் நீத்தோரும் உன் மேல் அருள்பொழியட்டும்" என்று சத்ராஜித் மீண்டும் வாழ்த்தினார். சியமந்தக மணியை அணிந்த பிரசேனரின் தோளை அணைத்தபடி சத்ராஜித் அரசரில்லத்தின் வெளிமுற்றத்துக்கு வந்தபோது அங்கே கூடியிருந்த யாதவகுலமூத்தார் திகைத்தனர். மூத்தபூசகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சத்ராஜித் "மூத்தோரே, நம் குடிமுதல்வனாக இந்த மணிசூடிச்சென்றாலொழிய மலைக்குடிகள் இளையவனை ஏற்க மாட்டார்கள். நாம் அனுப்பும் தூதையும் ஒப்பமாட்டார்கள் என்றறிக!" என்றார். குடிமூத்தார் ஒருவரை ஒருவர் நோக்க இளைஞர் ஒருவர் "ஆம், அதுவே உண்மை" என்றார். தயக்கத்துடன் அந்தகக்குடியினர் தங்கள் வளைதடிகளைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். குலப்பூசகர் முன்னால் வந்து பிரசேனரின் நெற்றிமேல் தங்கள் கைகளை வைத்து தெய்வங்களின் சொல்லை வழங்கினர். "கதிரவன் வெற்றிபெற்றாகவேண்டும் குலத்தவரே. இளையோன் நற்செய்தியுடன் மட்டுமே வருவான் என்றறிக!" என்றார் சத்ராஜித். "ஆம் ஆம் ஆம்" என்றனர் அந்தகர்.

காடு அவர்களை சுழற்றிச் சுழற்றி உள்ளிழுத்தது. பகலொளி முழுமையாகவே மறைந்து பசுமையே இருளாக சூழ்ந்துகொண்டது. காடு என்பது இலைத்தழைப்பு என பிரசேனர் எண்ணியிருந்தார். கிளைச்செறிவு என முதல்நாளில் அறிந்தார். இலைப்பெருக்கு என அன்றுமாலைக்குள் உணர்ந்தார். உள்ளே செல்லும்தோறும் அது வேர்க்குவை என்று தெளிந்தார். பல்லாயிரம் கோடி நரம்புகளால் பற்றி இறுக்கப்பட்டிருந்தது மண். வேர்களிலிருந்து எழுந்த முளைகளே செடிகளும் மரங்களும் கிளைகளும் இலைகளுமாக இருந்தன. விடிவது முதல் இருள்வது வரை நாள் முழுக்க நடந்தும் இரண்டுகாதம்கூட கடக்கமுடியவில்லை. அந்தியில் வேங்கைமரம் ஒன்றின் கவர்மேல் கட்டப்பட்ட பரண்வீட்டில் கீழே மூட்டப்பட்ட அனலின் வெம்மையை அறிந்தபடி உடலொடுக்கி மரவுரிக்குள் அமர்ந்து உறங்கினர். மறுநாள் இளவெயில் பச்சைக்குழாய்களாக காட்டுக்குள் இறங்கி தூண்களென ஊன்றி எழுந்த பச்சைப்பளிங்கு மாளிகைக்குள் சருகில் பொன்னென பாறையில் வெள்ளியென இலைகளில் மரகதம் என விழுந்துகிடந்த காசுகளின் மேல் கால்வைத்து நடந்தனர்.

கிளம்பும்போதிருந்த நம்பிக்கையை காட்டுக்குள் நுழைந்ததுமே பிரசேனர் இழந்தார். அறியாத ஆழம். அறிந்திராத மக்கள். ஒவ்வொரு முறையும் வெற்றுக் கற்பனையை வளர்த்துக்கொண்டு எண்ணாமல் துணிகிறோம் என்று நினைத்துக்கொண்டார். செலுத்தும் விசையென்றிருப்பது ஆணவமே என அவர் உள்ளறிந்திருந்தார். ஒவ்வொரு பிழையும் மேலும் பிழைகளை நோக்கி செலுத்துகிறது. பிழைகளை ஒப்புக்கொள்ளமுடியாத உளநிலையால் மேலும் பிழைகள். துயில்கலையும் இரவுகளில் இருளின் தனிமையில் அதை எண்ணி பெரூமூச்சுடன் புரண்டுபுரண்டு படுப்பார். எண்ணிச் சலித்து ஒரு கணத்தில் 'ஆம், அவ்வாறுதான் செய்தேன், அதற்கென்ன?' என்ற வீம்பை அடைவார். 'அரசுசூழ்தல் என்பது பிழைகளும் கலந்ததே. அனைத்துப் பிழைகளையும் இறுதிவெற்றி நிகர் செய்துவிடும்' என்று சொல்லிக்கொள்வார். 'இறுதிவெற்றி!' அச்சொல் மாயம் கொண்டது. இனிய மதுவைப்போல் உளமயக்களிப்பது. அதை சொல்லிச் சொல்லி உயிர்கொடுக்கமுடியும். விழிசுடரும் தெய்வம் போல அது எழுந்து வந்து கைநீட்டும். அழைத்துச்சென்று அத்தனை சிக்கல்களுக்கும் வெளியே ஒளிமிக்க மேடை ஒன்றின் மேல் கொண்டு நிறுத்தும். அங்கே நின்றிருக்கையில் அனைத்தும் எளிதாகிவிட்டிருக்கும். இறுதிவெற்றி என்பது மிக அருகே மிகத்தெளிவாகத் தெரியும். அவருக்குரியது என முன்னரே முடிவானது.

நெஞ்சைச் சுற்றிக்கட்டிய தோலுறைக்குள் சியமந்தகம் இருந்தது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அதன் இருப்பும் சேர்ந்துகொண்டது. அவரில் ஏறி சியமந்தகமே காட்டுக்குள் செல்வதுபோல தோன்றியது. இரவில் காட்டுக்குள் பரண்மேல் அமர்ந்திருக்கையில் சியமந்தக மணியை எடுத்து நோக்கி தன் நம்பிக்கையை மீட்டுக்கொள்ள முயன்றார். மின்னும் ஒற்றைக்கருவிழியை நோக்கி வினவினார் 'என் குலதெய்வமே, என்னை அறிவாயா? ஏன் நான் அலைக்கழிகிறேன்? ஏன் அமைதியற்றிருக்கிறேன்? என் தேவனே, ஏன் ஒவ்வொருமுறையும் நிறைவின்மைக்குமேல் சென்று விழுந்துகொண்டிருக்கிறேன்?' விளங்காத சொல் ஒன்று திகழ அவ்விழி அவரை உறுத்து நோக்கியது. 'என்னை அறிகிறாய் என் இறைவனே, நான் உன்னை அறிவது எப்போது?' பெருமூச்சுடன் அதைவிட்டு விழிவிலக்கி காட்டை நோக்கினார். அப்போது உடலில் அதன் நோக்கின் கூர்மையை உணரமுடிந்தது. நோய்கொண்ட பசு என மெய்சிலிர்த்தபடியே இருந்தது. அதன் கூர்மை கூடிக்கூடி வந்து ஒரு சொல்லென கனிந்துவிட்டதென்று தோன்றும் கணம் திரும்பிப்பார்க்கையில் அது அணைந்து வெற்றொளி கொண்டிருந்தது. விழிமட்டுமேயான தந்தை. விழியாகி வந்த பேரன்பு. விழியொளி மட்டுமேயான நகைப்பு. விழியென்றான நஞ்சு. 'எந்தையே, என்னை அறிந்தவன் நீ. சொல், நான் யார்?'

சலிப்புடன் மீண்டும் அதை பேழையிலிட்டு படுத்துக்கொண்டார். இந்திரநீலம் விளங்கும் ஒரு மலைச்சரிவில் நடந்துகொண்டிருந்தார். வானில் குளிர்ந்த மெல்லொளியுடன் சுடரென திகழ்ந்துகொண்டிருந்தது சூரியனல்ல சியமந்தகம். நிழல்களற்ற ஒளி. ஓசைகளற்ற காடு. பின்னிப்பின்னி புழுக்குவைகளாக நாகச்செறிவாக மலைப்பாம்புத்தொகைகளாக நிலமென்றான வேர்களில் கால்தடுமாறி நடந்து நடந்து விழுந்து எழுந்து சென்றுகொண்டிருந்தார். குதிரைக்குளம்பு விலகிவிலகிச் சென்றது. பசித்த ஓநாய்க்கூட்டம் போல ஓசையற்ற காலடிகளுடன் காடு அவரை சூழ்ந்துகொண்டிருப்பதை அவர் அறிந்திருந்தாலும் குதிரைக்குளம்பிலிருந்து விழிநீக்க முடியவில்லை. சென்று சென்று ஒரு கணத்தில் குதிரைக்குளம்பு முழுமையாகவே புதைந்து மறைந்ததை அறிந்து திகைத்து நின்ற கணத்தில்தான் சிலந்தி வலை என காடு தன்னை வளைத்துக்கொண்டுவிட்டதை கண்டார்.

சொல்லிழந்து விழிமட்டுமே என்றாகி நின்றார். நச்சுவெளியென கொந்தளித்த காட்டின் கிழக்கில் இலைநுனிநீர்த்துளி என கனிந்து உருக்கொள்வது என்ன என்று பார்த்தார். நீலம் திரண்டு மெல்ல ஒளிகொண்டது. வலைமுனையிலிருந்து இரையை அணுகும் சிலந்தி. பொன்னிறமாகியது. பூமயிர் சிலிர்த்தது. அரியதோர் அணிநகை என நுணுக்க அழகுகொண்டது. அணுக அணுக தெளிந்து வந்தது, அது பிடரிசிலிர்த்த ஒரு சிம்மம். அச்சம் கால்களை குளிர்ந்து எடைகொள்ளச்செய்தாலும் அகம் எழுந்த விசை ஒன்றால் முன்செலுத்தப்பட்டார். மேலும் அருகே சென்றபோது அது பொற்தழலென தாடியும் குழலும் பெருகி காற்றில் பிசிறி நிற்க இடையில் கைவைத்து மின்னும் கனல்விழிகளுடன் நின்றிருக்கும் இளமுனிவர் என தெளிந்தார்.

அருகே சென்றதும் சிம்மர் திரும்பி பிரசேனரை நோக்கினார். "நெடுநாள் பயணம்" என்றார். "ஆம், செந்தழல்வடிவரே. நெடுநாள்" என்றார் பிரசேனர். "நத்தை தன் ஓடை என விழைவு மானுடனை கொண்டுசெல்கிறது" என்றார் அவர். பிரசேனர் அவரை நோக்கி நின்றார். "நெடுந்தொலைவு வந்துவிட்டாய்…" என்றார் அவர் மீண்டும். "தொலைவு எப்போதுமே இடர் மிக்கது. பிழைகளை அது கணம்தோறும் பெரிதாக்கிக்கொண்டே செல்கிறது." பிரசேனர் "நான் திரும்ப முடியாதா?" என்றார். "விழைவிலிருந்து திரும்பியவர்களை முன்பு அறிந்திருக்கிறாயா?" என்றார் அவர். "இல்லை." அவரது புன்னகை பெரிதாகியபோது வாயின் இருபக்கமும் இரு கோரைப்பற்களை கண்டார். நாக்கு குருதியாலானதுபோல அசைந்தது. "மலையுச்சியில் நான் யோகத்தில் அமர்ந்த குகை" என்றார் அவர். "அந்த மணியை நீ நெஞ்சில் அணிந்த கணத்தில் மலையிலிருந்து இறங்கத் தொடங்கினேன்." பிரசேனர் தலைவணங்கி "தங்கள் அடியவன்" என்றார்.

"அமர்ந்துகொள், இது நீ என்னைக் காணும் கணம்" என்றார் முனிவர். பிரசேனர் நடுங்கும் உடலுடன் அவர்முன் சென்று சியமந்தகத்தை நெஞ்சோடணைத்தபடி விழிகளை மூடி அமர்ந்தார். சிம்மர் தன் இருகைகளையும் விரித்தபோது மின்னும் குறுவாட்களென உகிர்கள் பிதுங்கி வந்தன. "விழைவு ஓடும் குருதி என வெம்மைகொண்டது ஏதுமில்லை" என்று அவர் சொன்னார். அவரது மூச்சை தன் உடலில் பிரசேனர் அறிந்தார். "ஆணவம் அதில் கொழுநெய்ச் சுவையாகிறது. இனியது, சீறி எழுவது, குமிழியிடுவது." அவரது தாடியின் மயிர்ச்செறிவு பிரசேனரை மூடிக்கொண்டது. "முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்..." என்று அவர் சொன்னதை பிரசேனர் தன் உள்ளத்தால் கேட்டார். கண்களை மூடிக்கொண்டிருந்தபோதும் அவரது விழிகளை மிக அண்மையில் காணமுடிந்தது. சியமந்தகமே விழியாக அவரை நோக்கிக்கொண்டிருக்கிறோம் என அறிந்தார்.

மிகமிக அப்பால் இருந்தன விழிகள். ஆயிரம்கோடி காதம். அகலே இரு விண்மீன்களென சுடர்ந்தன. மாலையொளி விரிந்த முகில்கள் சூழ வானில் நின்றன. இடியோசை போல சிம்மக்குரல் எழுந்தது. கீழ்வான் சரிவில் அது முழங்கி முழங்கிச்சென்றது. செல்லம் கொஞ்சும் குழந்தையை அன்னை என அவரை அள்ளி மடியில் விரித்தார் சிம்மர். உகிர்கள் குளிர்ந்த மெல்லிய இறகுகள் போல தன் உடல்மேல் பதிவதை பிரசேனர் உணர்ந்தார். மெல்லக் கவ்வி குருளையை கொண்டுசெல்லும் அன்னைப்புலி என அவர் மேல் பற்கள் பதிந்தன. முல்லைமலர் நிரை போன்ற மென் பற்கள். அவருக்கு மட்டுமேயான குரல் ஒன்று சொன்னது 'அனைத்தறங்களையும் கைவிடுக! என்னையே அடைக்கலம் கொள்க!'

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 3

மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி கரைசமைப்பதை, காற்றிலாடும் அவற்றின் வெண்ணுரைக்கொத்துப் பூக்களை, அவற்றிலிருந்து எழுந்து நீரில் பாய்ந்து சிறகு நனைத்து உதறிக்கொண்டு எழுந்து சுழன்று வந்தமரும் சாம்பல்நிறமான சிறுசிட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தாள். அருகே நின்ற அவளுடைய செல்லப்பசுவாகிய சியாமையின் கரிய தோல் நீர்ச்சறுக்கிப்பூச்சிகள் பரவிய சுனைநீர்ப்படலம் போல அசைந்துகொண்டிருந்தது. வால் குழைந்து குழைந்து சுருள காதுகள் முன்குவிந்து பின்மலர குளம்புகளை புல்மெத்தைமேல் வைத்து வைத்து முன்னகர்ந்து மூக்குமடிய கீழ்த்தாடை கூழாங்கற்பற்களுடன் நீண்டு அசைய அது புல் கடித்துச் சென்றது. பசு புல் கொய்யும்போது எழும் நறுக்கொலியில் உள்ள பசியும் சுவையும் ஆயர்கள் அனைவருக்கும் விருப்பமானது. குழவி முலைகுடிக்கும் ஓசைக்கு நிகரானது அது என்று ஆயர்குடிப்பாணர் சொல்வதுண்டு. பசு கடிக்கும் புல் வளர்கிறது. புல்வெளியாக தன்னை விரித்திருக்கும் அன்னை மகிழ்ந்து சுருள் விரிந்து அகன்று தன்னை காட்டிக்கொண்டிருக்கிறாள் அப்போது.

ராகினி சிற்றாடை பறக்க குழல் கூத்தாட ஓடிவருவதை அவள் சிந்தையின்றி நோக்கி நின்றாள். மூச்சிரைக்க அருகே வந்த அவள் குனிந்து முழங்காலில் கைவைத்து நின்று "இளவரசி, அங்கே மன்றுகூடியிருக்கிறது. அவர்கள் இளைய யாதவரை பழிக்கிறார்கள்" என்றாள். பாமை நிமிர்ந்து "என்னடி?" என்றாள். "இளையஅரசரின் இறப்பை குடிமூத்தார் ஆராய்கிறார்கள்…" என்று அவள் சொல்லத்தொடங்கியதுமே புரிந்துகொண்டு பாமை எழுந்து தன் இடையாடையை சீரமைத்து குழல்நீவி செருகிக்கொண்டாள். திரும்பி கன்றுகளை நோக்கி "இவற்றை நீ பார்த்துக்கொள்ளடி" என்று ஆணையிட்டபின் ஆயர்பாடி நோக்கி விரைவின்றி நடந்தாள். அவள் செல்வதை ராகினி திகைப்புடன் நோக்கி நின்றாள். நீள்குழல் பின்குவைமேல் மெல்லத்தொட்டு ஆடியது. இடை வளைந்து குழைய சிற்றாடை சூடிய மத்தகம் மெல்ல ததும்ப பொன்னாடை விரித்த அரசபாதையில் நடப்பவள் போல, சூழ ஒலிக்கும் பல்லாயிரம் தொண்டைகளின் வாழ்த்தொலிகளை ஏற்றுக்கொண்டவள் போல, அவள் சென்றாள். ராகினி கோலுடன் மரத்தடியில் அமர்ந்து பெருமூச்சுவிட்டாள்.

பாமை ஊர்மன்றுக்கு வந்தபோது அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அப்பால் மரவுரி மூடிய பீடத்தில் அமர்ந்த சத்ராஜித் தன் கைகளில் தலையை தாங்கியிருந்தார். அவரது விழிகள் சேறுவற்றி ஓரம் காய்ந்த சேற்றுக்குழிகள் போலிருந்தன. உதடுகள் கரிய அட்டைகள் போல உலர்ந்திருக்க தொண்டையில் குரல்முழை ஏறியிறங்கியது. அந்தகர்கள் அனைவரும் புலிக்குரல் கேட்ட ஆநிரைகள் போல நடுங்கியும் கிளர்ந்தும் நிலையழிந்திருந்தனர். கிரீஷ்மர் உரக்க "எந்த ஐயமும் இல்லை. சொல்லப்பட்ட சான்றுகள் அனைத்தும் ஒன்றையே சுட்டுகின்றன. சியமந்தகத்திற்காக நடந்த கொலை இது. அதை எண்ணி காத்திருந்தவர்கள் அடைந்துவிட்டனர். நாம் நம் இளையவரை இழந்துவிட்டோம்" என்றார். அந்தகர்கள் அனைவரும் கைகளில் இருந்த வளைதடிகளைத் தூக்கி கூச்சலிட்டனர். "நாம் வெல்லப்படவில்லை, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். நம் குலதெய்வம் இழிமுறையில் கவரப்பட்டிருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?" என்றார்.

பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் "கிரீஷ்மரே, நாம் என்ன செய்யமுடியும்? இன்று விருஷ்ணிகள் தனியர்கள் அல்ல. யாதவர்குடி முழுமையும் அவர்களுடன் நின்றிருக்கிறது. துவாரகையோ பேரரசரும் அஞ்சும் பெருநகர். நாம் எளிய மலையாதவர்" என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் "ஆம், நாம் போருக்கு எழமுடியாது. நாம் அவர்களிடமிருந்து நமது குலமாணிக்கத்தை வென்றெடுக்க வழி ஏதுமில்லை. ஆனால் ஒன்றுசெய்யலாம்..." அவர் உள்ள எழுச்சியால் மேலும் சில அடிகள் முன்னால் வந்து "அந்தகரே, யாதவ குடிகளனைத்தும் விருஷ்ணிகளுடன் நின்றிருப்பது எதனால்? இளைய யாதவன் மீதுள்ள பெருமதிப்பால் மட்டுமே. அவனை யாதவர்களின் பேரரசன் என்றும் உலகுய்ய வந்த உத்தமன் என்றும் சொல்லிச் சொல்லி நிறுவியிருக்கிறார்கள் அவர்களின் பாணர். நாம் அதை வெல்வோம். அவன் செய்ததென்ன என்று யாதவர் அனைவரும் அறியட்டும்… நமது பாணர் நடந்தது என்ன என்பதை பாடட்டும்" என்றார்.

கிரீஷ்மர் உரக்க "ஆம், பாடினால் போதாது. அதை நாம் நிறுவவேண்டும். யாதவரே, ஒன்று அறியுங்கள். குருதியோ கண்ணீரோ கலக்காத சொற்கள் வாழ்வதில்லை. நமது பாணன் ஒருவன் அவன் மேல் அறம் பாடட்டும். அவன் தன் சொற்களுடன் எரிபுகட்டும். அச்சொற்களும் அவனுடன் நின்றெரியவேண்டும். அவை அழியாது. காய்ந்தபுல்வெளியில் கனலென விழுந்து பரவும்" என்றார். அவரது குரலை ஏற்று "ஆம்! ஆம்!" என்றனர் யாதவர். ஒரு பாணன் எழுந்து "நான் சொல்லெடுக்கிறேன் . இளையவர் எனக்களித்த ஊனுணவால் என்னுள் ஊறிய நெய் சிதையில் எரியட்டும்" என்று கூவினான். இன்னொரு பாணன் எழுந்து "நான்! என் சொற்கள் இங்கே எரியட்டும்… அவன் மேல் நான் அறச்சொல் விடுக்கிறேன்!" என்றான். மேலுமிரு பாணர் எழுந்து கைதூக்கி "நான்! என் சொற்கள்!" என்று கூவினர். கிரீஷ்மர் "எவர் சொற்கள் நிறையுள்ளவை என நாம் முடிவெடுப்போம். யாதவரே, எளியவரின் படைக்கலம் என்பது சொல்லே. நம் பழியின் நஞ்சு தடவிய சொல்லை அவன் மேல் ஏவுவோம்" என்றார். அவை அதை ஏற்று குரலெழுப்பியது.

பாமை அவைபுகுந்தபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவள் இயல்பாக அவை ஓரத்திற்கு வந்து அங்கிருந்த மூங்கில்தூணில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றாள். மூக்கில் தொங்கிய புல்லாக்கின் ஒளித்துளி அவள் இதழ்களில் விழுந்தாடியது. கன்னக்குழல் புரி ஒன்று காற்றில் நெளிந்தது. ஹரிணர் "தேவி, எங்கள் சொல்லை பொறுத்தருளவேண்டும். சியமந்தக மணி மறைந்ததைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். விருஷ்ணிகள் உங்களைத் தேடிவரவில்லை என இப்போது அறிந்தோம். அவர்கள் நாடியது எங்கள் குலமணியை மட்டுமே. அதை வஞ்சத்தால் அடைந்துவிட்டார்கள்…" என்றார். சத்ரர் "இளையவரைக் கொன்று மணியைக் கவர்ந்தவன் இளைய யாதவனேதான் இளவரசி. உறுதியான சான்றுகள் வந்துள்ளன" என்றார்.

பாமை "குலமூத்தாரே, இந்த அவையில் நான் அனைத்தையும் கேட்டறிய விழைகிறேன்" என்றாள். "எங்கள் சொற்கள்…" என சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொல்லத்தொடங்க "நான் அவற்றை ஏற்கவில்லை" என்றாள். அவர் சினத்துடன் "நான் குடிமூத்தவன். அவையில் என்னை இழிவுசெய்யும் இச்சொற்களை நான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது…" என்று கூவ பாமை தாழ்ந்த குரலில் கூரிய விழிகளுடன் "அவையீரே, இங்கு என் கொழுநர் குறித்துச் சொல்லப்பட்ட சொற்களுக்காக இதை இக்கணமே எரித்தழிப்பேன்" என்று சொன்னாள். அவையமர்ந்திருந்தவர்கள் உடல் சிலிர்க்க, ஒரு முதியவர் "அன்னையே" என்று கைகூப்பினார். ஓரிருவர் "போதும்! அன்னை சொல்லே போதும்!" என்று கூவ ஒரு தனிக்குரல் "போதாது, அவை என்பது சான்றுகளுக்கானது. இது ஒன்றும் குலதெய்வம் சன்னதம் கொண்டெழும் ஆலயம் அல்ல" என்றது. "ஆம், அவையில் சான்றுகள் முன்வைக்கப்படட்டும்" என்றார் ஹரிணர்.

"என் பொருட்டல்ல, என் கொழுநர் பொருட்டும் அல்ல, உங்கள் பொருட்டு இங்குள்ள சான்றுகள் அனைத்தையும் கேட்க விழைகிறேன்…" என்று அவள் சொன்னாள். அச்சொற்கள் அவளிடமிருந்துதான் வருகின்றனவா என்று எண்ணத்தக்கவகையில் உணர்வுகள் அற்று சித்திரம்போலிருந்தது அவள் முகம். பிரமதவனத்தின் ஹரிணர் அவையை திரும்பி நோக்கிவிட்டு "இளவரசி அறிய என்ன நிகழ்ந்தது என மீண்டும் சொல்கிறேன்" என்றார். "ஊஷரகுலத்தவரின் கதிர்வணக்க விழாவில் அந்தகர்சார்பில் கலந்துகொள்ள பிரசேனர் அரசரின் ஆணையால் அனுப்பப்பட்டார். அவருக்கு சியமந்தக மணியை அரசரே மார்பில் அணிவித்து வழியனுப்பிவைத்தார். ஊஷரர் நம்மையும் கதிர்குலத்தார் என ஏற்கவும் அணுகவும் அது வழிவகுக்கும் என நம்பினோம்." அவர் பாமைவை பார்த்தபோது அவள் நோக்குகிறாளா என்ற ஐயத்தை அடைந்தார். "இளையவர் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் நானும் துணைசெல்ல குலப்பூசகர் பத்ரரும் பாவகரும் தொடர இரு பாணரும் நூற்றெட்டு துணைவீரருமாக கான்புகுந்தார்."

"நான்குநாட்கள் காட்டுக்குள் சென்றோம். அஸ்வபாதமலையின் அடியில் காளநீலத்தின் விளிம்பில் அமைந்த கஜத்ரயம் என்னும் மலைப்பாறைக்கு அருகே எங்களை ஊஷரர் சந்தித்து மேலே கொண்டுசெல்வதாக சொல்லப்பட்டிருந்தது. நான்காம் நாள் கஜத்ரயம் அரைநாள் நடையில் இருப்பதாக சொன்னார்கள். மாலையில் வரிக்கோங்கு மரத்தின் மேல் கட்டப்பட்ட பரண்குடிலில் அந்தியமைந்தோம். பிரசேனர் தங்கிய குடிலில் அவருடன் பாணர் இருவரும் நானும் சிருங்கசிலையின் தலைவர் சத்ரரும் துணையிருந்தோம். இரவு நெடுநேரம் அவர் சியமந்தக மணியை எடுத்து நோக்கி நெடுமூச்செறிந்துகொண்டிருப்பதை கண்டோம். இருளில் அந்த மணியின் நீல ஒளியில் அவர் முகம் விண்ணில் திகழும் முகில் என தெரிவதை மரவுரிக்குள் சுருண்டு குளிரில் நடுங்கியபடி நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அழுகிறார் என்று எண்ணினேன். கண்ணுக்குத்தெரியாத எவரிடமோ பேசுகிறார் என்று பட்டது."

"காலையில் அவரை காணவில்லை" என்றார் சிருங்கசிலையின் சத்ரர். "ஹரிணர் எழுப்பிய குரலைக்கேட்டுத்தான் நான் விழிதிறந்தேன். குடிலுக்குள் பிரசேனர் இல்லை என்றதும் காலைக்கடனுக்காக சென்றிருப்பார் என எண்ணினேன். ஆனால் தனியாக காட்டுக்குள் செல்லக்கூடாதென்பது எங்கள் நெறி என்பதனால் ஏதோ பிழை இருக்கிறது என்று ஹரிணர் சொன்னார். வீரர்கள் புல்லை முகர்ந்து பிரசேனர் சென்ற பாதையை அறிந்தனர். அதைத் தொடர்ந்து சென்றபோது மலைச்சரிவின் இறுதியில் மரக்கூட்டம் சூழ்ந்த மென்சதுப்பில் பிரசேனரின் உடலை கண்டோம்." சத்ராஜித் தேம்பியழுதபடி தன் கைகளில் முகம் புதைக்க அருகே நின்ற கிரீஷ்மர் அவர் தோளை தொட்டார். சத்ராஜித்தின் தோள்கள் குலுங்கிக்கொண்டிருந்தன. கிரீஷ்மர் திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி ஆணையிட்டார். மது வந்ததும் சத்ராஜித் இருகைகளாலும் அதை வாங்கி ஓசையெழக்குடிப்பதை அவை பதைப்புடன் நோக்கியிருந்தது. கிரீஷ்மர் சத்ராஜித்திடம் அவர் சென்று ஓய்வெடுக்கலாம் என்றார். சத்ராஜித் இல்லை என்று தலையசைத்து மேலாடையால் வாயை துடைத்தார்.

ஹரிணர் "நாங்கள் கண்ட பிரசேனரின் உடல் கூருகிர்களால் நார் நாராக கிழிக்கப்பட்டிருந்தது. குடல் எழுந்து நீண்டு கொடிச்சுருள்போல குழம்பிக்கிடக்க குருதி ஏழு வளையங்களாகப் பரவி கருமைகொண்டு களிச்சேறென்றாகி சிற்றுயிர் மொய்த்துக் கிடந்தது . நெஞ்சக்குவை மட்டும் உண்ணப்பட்டிருக்கக் கண்டோம். அப்பகுதியெங்கும் அவர் உடைகள் கிழிபட்டுப் பறந்து புல்லில் சிக்கி காற்றில் தவித்தன. இளையவர் தன் இருகைகளையும் விரித்து ஏதுமில்லை எஞ்ச என்பதுபோல கிடந்தார். தேவி, அம்முகத்தில் தெரிந்த தெளிவின் ஒளியைக் கண்டு நாங்கள் திகைத்து நின்றோம். பின் ஒரேகுரலில் அலறி அழுதோம். ஊழ்கம் கனிந்த யோகியின் முகம் கொண்டிருந்தார் எம்மவர்." சத்ராஜித் உரக்க அழுதபடி எழுந்தார். "இளையோனே, பிரசேனா, உன்னை நான் கொன்றுவிட்டேனே, என் செல்லமே, என் தெய்வமே" என்று கூவி தன் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தார். கிரீஷ்மர் அவரை பற்றிக்கொள்ள அப்படியே கால் தளர்ந்து மீண்டும் பீடத்தில் அமர்ந்து தோள் அதிர விசும்பி அழுதார்.

மெல்லிய குரலில் ஹரிணர் தொடர்ந்தார் "இளவரசி, எமது வீரர் அப்பகுதியெங்கும் கூர்ந்தனர். அங்கே சிம்மக்காலடியை கண்டனர். குருதிபடிந்த அக்காலடித்தடம் எழுந்து அஸ்வபாதமலை மேல் ஏறி மறைந்தது. தொடர்ந்துசென்றவர்கள் மலைச்சரிவின் எல்லைவரை நோக்கி மீண்டனர். ஆகவேதான் இளையவரை சிம்மம் கொன்றது என்று எண்ணினோம். அரசரிடம் முறையாக அதை அறிவித்தோம். சிம்மத்தால் கொல்லப்படும் யாதவர்களுக்குரிய கேஸரம் என்னும் பொன்னிறமான விண்ணுலகுக்கு அவர் சென்று சேர்வதற்கான சடங்குகளை முறைப்படி செய்தோம். அவரது முகம் சிதையிலும் புன்னகையுடன் இருந்தமையால் அவர் அங்கே சென்றிருக்கிறார் என்றே எண்ணினோம். அங்கு அவர் நிறைவுடனிருக்கிறார் என்றே குலப்பூசகர் நீத்தார்நீர்முறை செய்தபோதும் சொன்னார்கள். அவருக்காக வைத்த கள்குடம் நுரையெழுந்து பொலிந்தது. அவருக்குச் சூட்டிய செம்மலர்களில் ஓரிதழ்கூட உதிரவில்லை."

பாமை தலையசைத்தாள். ஹரிணர் சொன்னார் "ஆனால் அனைத்தும் முடிந்தபின்னர் ஒரு வினா எஞ்சியது, சியமந்தகம் எங்கே சென்றது? சிம்மம் அவரை உண்டிருந்தால் அது சியமந்தகத்துடன் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே ஒற்றர்களை அனுப்பி அந்நிலம் முழுக்க தேடச்செய்தோம். புல்லைக் கோதி சேற்றைக் கிளறி நோக்கினோம். அந்த ஓடையை அரித்தோம். சியமந்தகம் அங்கு எங்குமில்லை என்பது உறுதியானதும் ஐயம் வலுத்தது. ஆனால் வேறேதும் செய்வதற்கில்லை என்பதனால் பொறுத்தோம். ஒவ்வொருநாளும் நம் தெய்வங்கள் அளிக்கப்போகும் செய்திக்காக காத்திருந்தோம். தெய்வங்கள் நம்மை கைவிடுவதில்லை தேவி."

அவையில் அமைதி நிறைந்திருந்தது. சத்ராஜித் மூக்கை உறிஞ்சிய ஒலி மட்டும் கேட்டது. சத்ரர் "இளவரசி, நேற்றுமுன்தினம் இங்கே துறைமுகத்து மதுச்சாலையில் ஊஷரகுலத்தவன் ஒருவன் களிமயக்கில் உளறியதை நம்மவர் கேட்டனர். அவன் இளையவர் கொல்லப்படுவதை நேரில் கண்டதாகச் சொன்னான். அவனுக்கு பணமில்லாமல் மது அளிக்கப்படவில்லை என்றால் அக்கொலைகாரனை அழைத்து மூத்தவரையும் கொல்லும்படி சொல்லப்போவதாக சொல்லிழிந்தான். அக்கணமே அவனை கொண்டுவரும்படி ஆணையிட்டோம். அவனை இங்கே தெளியவைத்து சொல்லேவினோம். அவனும் ஏழு ஊஷரகுலத்து வீரர்களும் நாங்கள் கான் புகுந்த கணம் முதலே புதருக்குள் ஒளிந்து உடன் வந்திருக்கிறார்கள். நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்."

"அன்றுகாலை இளையவர் எழுந்து செல்வதை அவர்கள் புதர்மறைவில் அமர்ந்து கண்டனர். தலைவனின் ஆணைப்படி மூவர் அவருடன் சென்றனர். இளையவர் துயிலில் நடப்பதுபோல சென்றார் என்றார்கள். நடந்துசெல்லும்போது கால்களே அவரை கொண்டுசெல்வதை உணரமுடிந்ததாம். தன் வலக்கையில் சியமந்தக மணியை வைத்து அதை நோக்கிக்கொண்டு சென்றார். அவரது முகம் மட்டும் நீலமென்வெளிச்சத்தில் ஒரு பெரிய மின்மினி போல மிதந்துசெல்வதை கண்டிருக்கிறார்கள். சிம்ஹசாயா என்னும் மலைப்பாறை அருகே அவர் சென்றபோது சிம்மத்தைப்போல் விழுந்துகிடந்த அதன் நிழல் உருக்கொண்டு சிம்மமென்றே ஆகி எதிரில் வந்திருக்கிறது. இளையவர் சிம்மத்தை நோக்கி புன்னகைசெய்தபடி கைகளை விரித்து நின்றார். அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது போல தெரிந்தது என்று ஒருவன் சொன்னான். மிகப்பெரிய சிம்மம் என்றும் அத்தகைய சிம்மத்தை அவர்கள் எவரும் கண்டதில்லை என்றும் மூவருமே சொன்னார்கள்."

"சிம்மம் அவரை அணுகுவதைக் கண்டு எச்சரிக்கை ஒலியெழுப்பலாம் என எண்ணியிருக்கிறார்கள். ஆனால் எந்நிலையிலும் அவர்களை எவரும் அறியலாகாது என்பது தலைவனின் ஆணை என்பதனால் வாளாவிருந்துவிட்டனர். சிம்மம் இரு கால்களில் எழுந்து முன்கால்களை விரித்து அவரை வரவேற்பது போல நின்றது. அவர் அருகணைந்தபோது அது அவரை அணைப்பதுபோல தன் கைகளில் எடுத்துக்கொண்டதையும் அவர் செவியில் பேசுவதுபோல குனிந்ததையும் கண்டதாக ஒருவன் சொன்னான். அவர் அதன் கைகளில் சரிந்ததை மூவருமே கண்டனர். அவர் அலறவோ துடிக்கவோ இல்லை. இருளில் எழுந்த குருதியின் வெம்மணத்தை அவர்கள் அறிந்தனர். அவர் கொல்லப்பட்டார் என்று தெரிந்ததும் அவர்களின் தலைவன் திரும்பிவிடலாம் என்று கைகாட்டியிருக்கிறான். அவர்கள் திரும்பும்போது ஒருவன் இறுதியாக திரும்பி நோக்கினான். அங்கே நீலமணியுடலும் ஒளிரும் விழிகளும் செந்நிற இதழ்களும் கொண்ட ஒருவனின் கைகளில் இளையவர் அமைந்திருப்பதை கண்டான். அவன் கையால் தொட்டு பிறரை அழைக்க மூவருமே அவனை கண்டனர். கணநேரத்தில் அக்காட்சி மறைந்தது. சிம்மம் சென்று மறைந்த இடத்தில் இளையவரின் உடல் கிடந்தது."

ஹரிணர் கைகளைத்தூக்கி வீசியபடி முன்னால் வந்து உரத்த குரலில் "இளவரசி அவன் தன் கார்குழலில் ஒரு மயிற்பீலியை அணிந்திருக்கிறான் என்று அடையாளம் சொல்கிறார்கள். அதைவிடப்பெரிய சான்றை எவர் சொல்லிவிடமுடியும்? இன்று பாரதவர்ஷத்தில் அவன் ஒருவனே குழலில் பீலியணியும் இளைஞன்" என்றார். பாமையின் முகம் மாறவில்லை. "குடிமூத்தாரே, அந்நாளில் துவாரகையின் தலைவர் எங்கிருந்தார் என உசாவினீரா?" என்றாள். "ஆம் இளவரசி, கேட்டறிந்தோம். அன்று துவாரகையில் யவனர்களின் ஒரு கேளிக்கை நிகழ்வு. அதில் அவர் மேடையில் அமர்ந்திருந்திருக்கிறார்" என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர். "அவரேதான், ஐயமே இல்லை என்கிறார்கள்." யாதவர் சிலர் வியப்பொலி எழுப்ப ஹரிணர் திரும்பி "ஆயரே, அவன் மாயன். வித்தைகள் அறிந்தவன். அங்கே மன்றமர்ந்திருந்தவன் அவனல்ல. அன்றி இங்கு வந்து நம் இளையவரைக் கொன்றவன் அவன்! மன்று மிகத்தொலைவில் உள்ளது. மக்கள் அவனை சேய்மையில் கண்டனர். ஆனால் இங்கு இவர்கள் அண்மையில் கண்டிருக்கின்றனர்" என்றார்.

"அத்துடன் நம் இளையவரைக் கொல்ல ஏனைய வீரரால் எளிதில் இயலாது. மலர்கொய்வது போல அவரை கொன்றிருக்கிறான் என்பதே அது இளைய யாதவன் என்பதற்கான சான்று" என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். யாதவர் கிளர்ந்த குரலில் "வஞ்சம்… வஞ்சத்தால் கொல்லப்பட்டார் நம் அரசர்" என்று கூவ பாமை மெல்ல நடந்து அவை முன் வந்து நின்று தலைதூக்கி "அவையீரே, அனைவருக்குமென ஒரு சொல். இளைய யாதவர் நம் இளையவரை கொல்லவில்லை. சியமந்தகமும் அவரிடம் இல்லை. இது உங்கள் குலம் காக்கும் மூதன்னையர் சொல் என்றே கொள்க!" என்றாள். ஹரிணர் ஏதோ சொல்ல வாயெடுக்க "இச்சொல்லுக்குப்பின் உள்ளது என் உயிர். இளைய யாதவர் பழிகொண்டார் என்றால் அக்கணமே உயிர்துறப்பேன்" என்று அவள் சொன்னாள். ஹரிணர் "அன்னையே, உன் சொல் மூதன்னையரின் சொல்லே என்றறிவோம். ஆனால் நீ இத்தனை நாட்களாக எங்கிருக்கிறாய் என்றே உணராத பித்துகொண்டிருந்தாய். உன்னால் அரசு சூழ்தலை அறியமுடியாது. எங்கள் சொல் இதை நம்பு. இது துவாரகையின் வஞ்சவிளையாட்டுதான்" என்றார்.

சத்ரர் "சியமந்தகம் நம்மிடம் இருக்கும் வரை யாதவரின் முழுமுதல் தலைவராக எவரும் ஆகமுடியாது இளவரசி. அதை நாள்செல்லச்செல்ல அவர் உணர்ந்துகொண்டே இருந்தார் என நாம் அறிவோம். சியமந்தகத்தை கொள்ளும்பொருட்டே அவர் இதை செய்திருக்கிறார். ஐயமே இல்லை" என்றார். பாமை திரும்பி யாதவர்களை நோக்கி "மூத்தாரே, என் சொல்லை நீங்கள் ஏற்கவில்லையா?" என்றாள். அவள் அதை மிக இயல்பாகக் கேட்டது போலிருந்தமையால் யாதவ இளைஞன் ஒருவன் "காதல்கொண்டவளின் சொற்சான்றுக்கு அப்பால் நிலைச்சான்று என ஏதும் அவனுக்குள்ளதா?" என்றான். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் "இளவரசி, இது உங்கள் மகளிர்மன்று அல்ல. இது யாதவரின் அரசுமன்று. இங்கு நின்று பேசவேண்டியவை நீட்டோலைகள் மட்டுமே" என்றார். பாமை தன் தந்தையிடம் "தந்தையே, இளையவர் அவர் விழைந்த நிறைவையே அடைந்தார் என்று கொள்க!" என்றாள். சத்ராஜித் எவரும் எண்ணியிராத விரைவுடன் எழுந்து அஞ்சியவர்போல கைகளை வீசி "போ… போய்விடு… இங்கு நில்லாதே. அவனைக்கொன்றது நானல்ல. நீ… நீதான்" என்று கூச்சலிட்டார். கால்கள் தளர பின்னால் சரிந்து கிரீஷ்மர் தோளை பற்றிக்கொண்டார். நெஞ்சில் கைவைத்து "பிரசேனா, இளையவனே" என்று அழுதபடி பீடத்தில் சரிந்தார்.

பாமை அவையை ஒருமுறை ஏறிட்டு நோக்கிவிட்டு சற்றும் மாறாத சித்திரமுகத்துடன் "மூத்தவர் அனைவரும் அறிக! இனி நான் இந்த அவை நிற்கவில்லை. அந்த நீலக்கடம்பின் அடியில் சென்று அமர்ந்திருக்கப்போகிறேன். என் சொல் இப்போதே இங்கிருந்து இளைய யாதவரை அடைவதாக! இன்றிலிருந்து பதிநான்காம்நாள் முழுநிலவு. அன்று நிறையிரவுக்குள் சியமந்தக மணியுடனும் அதைக் கவர்ந்தவனுடனும் இளைய யாதவர் என் தந்தையை அணுகவேண்டும். அந்த மணியையே கன்யாசுல்கமாகக் கொடுத்து என் கைப்பிடிக்கவேண்டும். அதுவரை ஊணுறக்கம் ஒழிவேன். அதற்குள் அவர் வரவில்லை என்றால் உயிர் துறப்பேன். இது கன்றுகள் மேல் குலம் காக்கும் அன்னையர் மேல் ஆணை" என்றாள். அவள் சொற்களை புரிந்துகொள்ளாதவர்கள் போல அனைவரும் விழிவெறித்து அமர்ந்திருக்க ஆடையை சுற்றிப்பிடித்துக்கொண்டு அவள் மன்றிலிருந்து முற்றத்திற்கு இறங்கினாள்.

மறுகணம் கொதிக்கும் நெய்க்கலம் நீர்பட்டதுபோல மன்று வெடிப்பொலியுடன் எழுந்தது. "இளவரசி, என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டபடி இரு முதியவர்கள் கைவிரித்து ஓடிவந்தனர். "நில்லுங்கள். எதற்கு இந்த வஞ்சினம்… நில்லுங்கள் இளவரசி!" அவள் சீரான நடையில் சென்று நீலக்கடம்பின் அடியில் யமுனையை நோக்கி அமர்ந்தாள். பின்னால் ஓடிவந்தவர்கள் "இளவரசி, வேண்டாம். நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்… உங்கள் சொற்கள் எங்கள் அன்னையரின் சொற்கள்… வீணர்களின் சொல்லுக்காக தாங்கள் உயிர்துறக்கவேண்டாம்…" என்று கூச்சலிட்டு அழுதனர். அவளுடைய முகத்திலிருந்த சித்திரத்தன்மை விரைவிலேயே அவர்களை சொல்லிழக்கச் செய்தது. அவர்கள் எவரையும் அவள் காணவே இல்லை என்பது போல, அச்சொற்கள் எதையும் கேட்கவே இல்லை என்பது போல, அவ்விடத்திலேயே அவள் இல்லை என்பதுபோல. அவள் அமர்ந்த இடத்தைச் சூழ்ந்து நின்ற யாதவர் என்ன செய்வதென்றறியாமல் ஒருவரை ஒருவர் தோள்பற்றிக்கொண்டனர்.

ஆயர்மன்றுகளில் இருந்து அழுகுரலுடன் ஆய்ச்சியர் ஓடிவந்து அவளை சூழ்ந்தனர். மாலினி நெஞ்சிலும் தலையிலும் அடித்து அழுதபடி வந்து அவள் முன் நின்று "வேண்டாமடி… என் செல்லம் அல்லவா? நான் சென்று அவன் கால்களில் விழுகிறேன். சியமந்தகத்துடன் வரச்சொல்கிறேன். நீ நினைத்ததெல்லாம் நிகழ வைக்கிறேன். என் செல்லமே. வேண்டாம்… எழுந்து வா" என்று அழுதாள். அவள் கைகளைப்பற்றி இழுத்தபின் தளர்ந்து அருகே அமர்ந்து கண்ணீர் பெருக்கினாள். தொழுவில் கன்றுகளை சேர்த்துவிட்டு ராகினி ஓடிவந்து அவள் அருகே அமர்ந்தாள். எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் மஹதி வந்து அவளருகே ஈச்சையோலைகளை சாய்த்து வைத்து வெயில் படாது மறையமைத்தாள். கிரீஷ்மர் அச்செய்தியை ஒலையில் பொறிக்கச்செய்து துவாரகைக்கு பறவைத்தூதனுப்ப விரைந்தார். பாணர் அவளைச்சூழ்ந்து நின்று குலப்பாடல்களை பாடினர். அவள் எதையும் அறியாதவளாக நீலம்பெருகிச் சென்ற யமுனையை நோக்கி அமர்ந்திருந்தாள்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 4

ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள் அசைவிழக்கும். தோல்மேல் பசையென வியர்வை பரவி சிறு பூச்சிகள் கடிக்கும். மூச்சு ஊதிப் படிந்தது என இலைகளின் அடியில் நீராவிப்படலம் எழும். புதர்களின் சுருண்ட சிலந்தி வலைகளில் மெல்லிய நீர்த்துளிகள் திரண்டு அதிரும். பறவைகள் இலைப்புதர்களுக்குள் சென்றமர்ந்து சிறகு கோதி ஒடுங்கும். ஓசைகள் அமைதியின் திரையொன்றால் மேலும் மேலும் மூடப்படும். ஒவ்வொன்றும் தங்கள் எடையை தாங்களே அறிந்து தங்கள் நிழல்கள் மேல் அழுந்திக்கொள்ளும். பசுக்கள் வெம்மூச்சு விட்டு கண்கள் கசிய தலை தாழ்த்தி காத்திருக்கும். ஆயர் கன்றுகளைத் திரட்டி பாடி சேர்ப்பதற்குள் மழைத்துளிகள் சரிந்து வந்து நிலத்தை தாக்கும். விரைந்த உடுக்கின் தாளத்துடன் மலை இறங்கி மழை வந்து ஆயர்பாடிகளை மூடி யமுனை மேல் படர்ந்து நீர்ப்பரப்பை புல்லரிக்கவைக்கும். எஞ்சியிருக்கும் வெயிலில் தொலைதூரம்வரை பீலி வருடியதுபோல மழை சிலிர்த்துச்செல்வதை காணமுடியும். ஒளி மிக்க நாணல் போல யமுனை மழையில் நின்றிருக்கும். மரங்கள் மழை அறையும் ஒலியுடன் மாலை ஆயர்பாடியைச் சூழ்ந்திருக்கும்.

மழையை ஆயர் விரும்பினர். ஒவ்வொரு நாளும் கன்றுகள் கடித்துண்ட புல்லின் எச்சம் கைகூப்பி வேண்டிக்கொள்வதனால் வானம் சுரந்து பெய்கிறது என்று அவர்கள் நம்பினர். ஆனால் அன்று மழை பெய்தபோது ஒவ்வொருவரும் அச்சமூட்டும் வருகையொன்று போல அதை உணர்ந்தனர். அறியாது எழுந்து நனையாத இடம் நோக்கி செல்ல முற்பட்டு பின் உணர்ந்து மீண்டும் வந்து அமர்ந்திருந்த பாமையை சுற்றி நின்றனர். அவர்களை அறைந்து தழுவி உடைகளை கொப்புளங்களுடன் ஒட்டவைத்து, முகம் கரைந்து வழிய, மூக்கு நுனிகளிலும் செவி மடல்களிலும் சொட்டி மழை கவிந்தது. நடுவே அவள் கருவறை நின்று நீராட்டு ஏற்கும் அன்னையின் சிறு சிலை போல் அமர்ந்திருந்தாள். குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது. கூர்மூக்கு நுனியில் ஒளிமணிகளாக சொட்டி உதிர்ந்தது. கன்னத்து நீலரேகைகள் வழியாக துளிகள் இறங்கி கழுத்து வளைவில் விரைந்து தோள்குழிகளில் தேங்கியது. அவள் ஆடை காற்றின் ஈரத்துடன் புடைத்து விசும்பும் உதடுகள் போல் துடித்து அமைந்தது.

விழிகள் ஒவ்வொன்றும் அவளை நோக்கி சிலைத்திருந்தன. ஒவ்வொருவரும் அங்கிருப்பவள் அங்கிலாது எங்கிருக்கும் ஏதோ ஒரு சிற்றுரு என அவளை உணர்ந்தனர். மழை மேலும் மேலும் வலுத்தபடியே சென்றது. மரங்கள் நீர் சவுக்குகளால் வீசப்பட்டு துடிதுடிக்கத் தொடங்கின. விண்ணின் சடைச்சரங்கள் மண்ணை அறைந்து அறைந்து சுழன்றன. மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து ஓடையாகி, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு. அவளை கரைத்தழிக்க விழைந்ததுபோல. கைக்குழவியை முந்தானையால் மூடிக்கொள்ளும் அன்னை போல மழை.

மழைக்குள் கைகளால் மார்பை அணைத்து உடல் குறுக்கி நின்றிருந்த ஆயர் மகளிர் உடல்நடுங்கி அதிர உதடுகள் துடிக்க ஒவ்வொருவராக விலகி மரநீழலும் கூரைத்தாழ்வும் நாடி சென்றனர். மெல்ல அங்கிருந்த ஒவ்வொருவரும் விலகிச் செல்ல அவளருகே மாலினியும் ராகினியும் மஹதியும் மட்டுமே எஞ்சினர். மாலினி பாமையின் காலைப் பற்றி "என் தெய்வமே, நான் சொல்வதை கேள்... துவாரகைக்கு உன் கொழுநனுக்கு சேதி போய் விட்டது. ஆமென்று அவன் சொன்ன செய்தி நாளையே வந்து விடும். நீ நினைத்தது நடக்கும். வஞ்சினம் உரைத்ததை நீ வென்று விட்டாய் என்றே உணர்க! இவ்வெல்லைக்கு மேல் யாதவரை தண்டிக்காதே! எழுந்திரு என் கண்னே" என்றாள். அவள் சொற்கள் உடலெனும் கற்சிலைக்கு அப்பால் குடியிருந்த அவளை சென்றடையவில்லை என்று தோன்றியது. "என் அன்னையே, என் மகளே, நான் சொல்வதை கேள். இங்கு இம்மழையை ஏற்று நீ இரவெல்லாம் அமர்ந்திருந்தாய் என்றால் அன்னை என்னாவேன்? அதையாவது எண்ணு" என்றாள். மழைகரைத்த கண்ணீருடன் கைகூப்பி "என் செல்லமே, என் முன் நீ இறக்க மாட்டாய், உன் முன் நான் இறப்பேன். பலிகொள்ளாதே, மூதன்னை வடிவமே" என்றாள்.

சொற்களுக்கு அப்பால் இருந்து அத்தொல்தெய்வம் அவளை நோக்கியது, பெண்ணே நீ யார் என்பது போல. அவளறிந்த சிறுகைகள். அவள் முத்தமிட்ட மென்பாதங்கள். அவள் நெஞ்சோடு அணைத்து முலையூட்டிய சிறு குமிழ் உதடுகள். அவள் கோதி கோதிச் சலித்த செழுநறுங் கூந்தல். அவள் பார்த்துப் பார்த்து கனவில் எழுப்பிய நீலக்கனல் விழிகள். அவையல்ல இவள். அந்த சமித்தில் பற்றியெறிந்த வேள்விச்சுடர். வேறேதோ அறியா அவி உண்டு அனலாகி எழுந்தாடுவது. சூழ்ந்திருக்கும் வேள்விச் சாலைக்கு அப்பால், நெய் அள்ளி நாதம் ஓதி அதைப் புரக்கும் வைதிகருக்கு அப்பால், ஒளிரும் காற்றுக்கு அப்பால், இப்புவி படைத்த முழுமையை நடித்து நின்றாடும் வேள்வித்தீ. விண்ணுடன் மட்டுமே தொடர்புடையது என அது தனித்திருக்கும் விந்தைதான் என்ன? அவள் அறியவில்லை தன் மகளை. மகளென வந்ததை. அங்கே திருமகளென அமர்ந்திருந்த அதை.

இருண்டு சூழ்ந்து பெய்து கொண்டிருந்த மழையில் சேற்றில் கால்களை மடித்து தன் மகளை வெறித்து நோக்கி பகலெல்லாம் அமர்ந்திருந்தாள் மாலினி. இரவென, நிசியென, கருக்கலென மழை வழிய அவள் உடல் நடுங்கி துள்ளி விழத்தொடங்கியது. மெல்லிய அதிர்வோடிய உடல் இழுபட முகம் கோண வலக்கை ஊன்றி நினைவழிந்து சரிந்த அவளை ஆய்ச்சியர் வந்து அள்ளி கொண்டுசென்று அறை சேர்த்தனர். ஆடை நீக்கி, உலர் ஆடை அணிவித்து ,அகில் புகை காட்டி வெம்மை கொள்ளச் செய்தனர். அவர்கள் அளித்த இன்கடுநீரை இருகைகளாலும் பற்றி அமுதென அருந்தி விழித்து எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருள் நோக்கி எழுந்து அவள் ஏங்கி அழுதாள். அவள் விழித்தெழாமல் இருக்க சிவமூலிப் புகையை அளித்து மீண்டும் படுக்கவைத்தனர். அரசில்ல முன்னறையில் சத்திராஜித் மீண்டும் மீண்டும் மதுவருந்தி தன்னிலை அழிந்து வெண்சேக்கையில் எச்சில் வழிய ஆடை குலைய விண்ணிலிருந்து விழுந்தது போல் கிடந்தார். நினைவு சிதறி எப்போதோ மெல்ல மீண்டு புரள்கையில் "இளையோனே உன்னை நான் கொன்று விட்டேன். உன்னை கொன்று விட்டேன் என் செல்லமே" என்று சொல்லி நாக்குழறி உலர்ந்த உதடுகளால் ஓசையிட்டு அழுதார்.

அரசில்லத்திலும் ஊர்மன்றிலும் சூழ்ந்த சிற்றில்களை எல்லாம் அந்தகக் குலத்து ஆயர்கள் நிறைந்து சாளரங்களின் ஊடாகவும் வாயிலின் ஊடாகவும் நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருந்தவளை நோக்கி நின்று குளிர்நடுங்கினர். மறுநாள் காலையிலும் இருள்செழித்து மழை அறுபடாது நின்றபோது ராகினியும் எழுந்து கூரையின் அடியை நாடியபின் அவளருகே மஹதி மட்டும் எஞ்சியிருந்தாள். ஆயர்குடிகளில் அவளை நோக்கி ஒரு சொல்லும் சொல்லாதவள் அவளே என்று ஆச்சியர் உணர்ந்தனர். கண்ணீர் விட்டவர், கை தொழுதவர், கால் பற்றி இறைஞ்சியவர் அனைவரும் விலக சொல்லற்று அருகே நின்றவள் மட்டுமே அங்கிருந்தாள். மொழியிலாது உணரக்கூடிய ஒன்றினால் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என. சொல்லின்மையால் மட்டுமே சொல்லிவிடக்கூடிய ஒன்று அங்கே நிகழ்ந்தது என. பின்னிரவில் எழுந்து நோக்கியவர் நீலக்கடம்பின் அடியில் நான்கு விழிமின்னுவதை மட்டுமே கண்டனர். நிழல்களென சூழ்ந்திருந்தன தெய்வங்கள்.

விடியலில் இளநீலப் புலரிமழை யமுனையிலிருந்து எழுந்துவந்து அன்னைக்கோழி ஆயர்பாடி மேல் சிறகுசரித்து அமர்ந்திருக்கையில் இல்லங்களிலும் ஊர்மன்றிலும் அனைவரும் துயின்றிருந்தனர். நீலக்கடம்பின் அடிமரம் சாய்ந்து செவிலியன்னையும் மயங்கி இருந்தாள். அவளொருத்தி மட்டும் நீலம் நோக்கி விழி மலர்ந்து அமர்ந்திருந்தாள். மெல்லிய முடிவிலாச் சொல் என பெய்த மழையை அங்கு பிறர் எவரும் கேட்கவில்லை, காணவும் இல்லை. ஒவ்வொரு கதிர்வழியாகவும் விண்ணொளி இறங்கி மண்ணை வந்து தொட்டது. இளநீலம் புன்னகைத்து காலையொளியாகியது. காற்று ஒன்று கடந்துவந்து இலைகளனைத்தையும் தொட்டு உதறி ஈரம் சொட்டி வடியச் செய்தது. நரம்போடிய மென்மை மிளிர இலைகளெல்லாம் தளிர்களென்றாயின. கன்னத்தில் ஒட்டிய அவள் மயிர்ப் பிசிறுகள் எழுந்து சுருண்டன. புதுப்பால் படலம் என நெற்றி ஒளிகொண்டது. அன்னையைக் கவ்விப்பற்றி அடம்பிடிக்கும் குழவி போன்று படபடத்த அவள் ஆடை உலர்ந்து எழுந்து பறக்கத் தொடங்கியது. கன்று தேடும் அன்னைப் பசுவொன்று தொழுவத்தில் ஓங்கி குரலெழுப்பியது. அதைக் கேட்டு எழுந்த ராகினி நெஞ்சில் கைவைத்து எங்கிருக்கிறோம் என ஏங்கி நேற்று நடந்தவற்றை நினைவு கூர்ந்து பதறி எழுந்தோடி வெளிவந்து ஆயரில்லத்துப் புறக்கடையில் நின்று நோக்கியபோது இளவெயிலில் நீலக்கடம்பின் அடியில் பூத்திருந்த அவளைக் கண்டாள். ஒருபோதும் அதற்கு முன் அவளைக் கண்டதேயில்லை என்று உணர்ந்தாள்.

காலையில் செய்தி ஆயர்பாடி அனைத்திற்கும் சென்று சேர்ந்திருந்தது. யமுனைக்கரை வழியாக அஸ்வபாத மலைச்சரிவிலிருந்த எழுபத்திரெண்டு ஆயர்பாடிகளிலிருந்தும் ஆயர்குலங்கள் இசைக்கலம் ஏந்தி நடமிட்ட பாணர் தலைவர, சூழ்ந்த அவர்களின் பாடல் துணை வர, கண்ணீருடன் கைகூப்பி ஹரிணபதம் நோக்கி வரத்தொடங்கினர். வண்ண ஆடைகளும் தலைப்பாகையுமாக அவர்கள் மன்றடைந்து அங்கு எழுந்த நீலக்கடம்பை சூழ்ந்தனர். அவளிடம் ஒரு சொல்லேனும் சொல்லமுடியுமென்று எவரும் எண்ணவில்லை. தொலைவில் அவளைக் கண்டதுமே தலைக்கு மேல் கைகூப்பி "மூதன்னையே, யாதவர் குலத்து அரசியே, உன் பொற்பாதங்கள் அடைக்கலம் தாயே" என்று கூவி வழுத்தினர். கொண்டு வந்த அரிமலர்ப் பொரியையும் அருங்காணிக்கைகளையும் அவள் முன் படைத்து நிலம் தொட்டு தலை தாழ வணங்கினர். பெண்டிர் அவளைச் சூழ்ந்து அமர்ந்து கைகூப்பி கண்ணீர் வடித்தனர். 'திருமகள் எழுந்த முற்றம் இது. இங்கு விண்ணாளும் பெருமகன் கால் எழும்' என்று பாணர் கிணை மீட்டி பாடினர். சூழ்ந்தமர்ந்து ஆயர் குலத்து மூதன்னையரின் கதைகளை மூத்தபாணர் பாட பிறர் மெய் விதிர்க்க கேட்டிருந்தனர். பெண் குழந்தைகளை மடியமர்த்தி அவளைச் சுட்டி பெண்ணென்று ஆயர் குடியில் பூப்பது எது என்றுரைத்தனர்.

அவர்கள் அறிந்த ஒன்று, எப்போதும் அண்மையில் இருந்த ஒன்று, அறிவால் தொட முயல்கையில் சேய்மை காட்டும் ஒன்று கண் முன் அமர்ந்திருந்தது. அவள் பெயர் பாமை என்று மட்டுமே அப்போது அறியக்கூடியதாக இருந்தது. பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் அமைச்சரிடம் செய்தி துவாரகைக்கு சென்றுவிட்டதா என்று கேட்டார். பறவைத்தூது துவாரகையைச் சென்றடைவதற்கே இரண்டு நாட்கள் ஆகும் என்றார் அமைச்சர். அங்கிருந்து மறுமொழி வருவதற்கு மேலும் இருநாட்கள் ஆகும். அவன் துவாரகையில் இருந்து கிளம்பி சியமந்தக மணி தேடி அடைந்து கை கொண்டு அங்கு வருவான் என்றால் கூட பதினைந்து நாட்கள் போதாது என்றார். "முழுநிலவு நாளுக்குள் கன்னியாசுல்கமாக சியமந்தகத்துடன் அவன் வராவிட்டால் இவள் உயிர் துறப்பாள் என்றிருக்கிறாளே" என்றார் பிரகதர். "திருமகள் தன்னை அறிவாள். தன் சொல் அறிவாள்" என்றார் அந்தகக்குலத்தின் முதற்பூசகர் கிரீஷ்மர். "அச்சொல் இங்கு பூத்தது நம் மூதன்னையர் அருளால் என்றுணர்க! அது நிகழும். ஆயரே, கேளுங்கள்! மலரிதழ்கள் மாலையில் வாடும், வைரங்கள் காலத்தை வென்றவை" என்றார்.

அன்று மாலையும் மழை எழுந்தது. அதற்குள் அவளைச் சுற்றி தேன்மெழுகு பூசப்பட்ட ஈச்சைத் தட்டிகளால் கூரை அமைத்திருந்தனர். சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களும் நனையாமல் இருக்கும்பொருட்டு சிறு தோல்கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இரவில் கூரையிடப்பட்ட அனல் குழியில் நெருப்பு கனன்றது. அதன் செவ்வொளியில் உருகும் உலோகத்தால் ஆனவள் போல் அவள் அங்கிருந்தாள். அவள் விழியில் வெண்பரப்பில் தெரிந்த கனலை நோக்கி ஆயர் மகளிர் கைகூப்பி அமர்ந்திருந்தனர். இரவு மழை அவர்களின் மேல் விண்சரிந்தது போல கவிழ்ந்து பின் வழிந்து நெடுநேரம் சொட்டி மறைந்தபின் கீற்று நிலவு வானில் எழுந்தது. இருளில் ஈர இலைகளின் பளபளப்பை காற்று கொந்தளிக்கச்செய்தது. கோடிக் கூர்முனைப் படைக்கலங்கள் சுடரும் படை ஒன்று இருளுக்குள் நின்றிருப்பது போல காடு அவர்களை சூழ்ந்திருந்தது. துளி சொட்டும் ஒலியால் தனக்குள் பேசிக்கொண்ட இருள்வெளி. அதற்குள் எங்கோ ஓநாய்கள் எழுப்பிய ஓலம் ஒலித்தது. அதைக் கேட்டு அன்னைப்பசு தன் குட்டியை நோக்கி குரலெழுப்பியது.

ஒருநாளும் இரவை அதுபோல் உணர்ந்ததில்லை ஆய்ச்சியர். அத்தனை நீளமானதா அது? அத்தனை எடை மிக்கதா? அத்தனை தனிமை நிறைந்ததா? இரவெனப்படுவது அத்தனை எண்ணங்களால் ஆனதா? இப்பெரும் ஆழத்தின் விளிம்பில் நின்றா இதுநாள் வரை களித்தோம்? இனி இரவு என்ற சொல்லை அத்தனை எளிதாக கடந்து விட முடியாது என்பதை அவர்கள் அறிந்தனர். அருகே நின்றிருக்கும் கொலைமதவேழம். அப்பால் அனைத்தையும் விட்டு மூடியிருக்கும் கரியபெருவாயில். ஒவ்வொரு துளியாகச் சொட்டி உதிர்ந்து வெளுத்து தன்னை விரித்து காலையாகியது. கண்கூசும் ஒளியிலும் கூழாங்கற்களின் அருகே சிறுநிழல் தீற்றல்களாக சிதறிக்கிடந்தது.

மழை முடிந்த காலை மண்ணில் விரிந்த வரிகளால் ஆனது. மயில்கழுத்துச் சேலையிலிருந்து பிரிந்து விழுந்த பட்டு நூல் என ஒளிரும் நத்தைக்கோடுகளால் ஆனது. அதில் எழும் வானவில்லால் ஆனது. கூரை அடியில் மணிச்சரம் போல் விழுந்த குழித்தொடர்களால் ஆனது. குளித்த கருமையின் குருத்து ஒளியுடன் வந்தமர்ந்து கருமூக்கு தாழ்த்தி செவ்வாய் காட்டிக் கூவும் காகங்களால் ஆனது. பாதிகழுவப்பட்ட மலையுச்சிப்பாறைகளால், முழுக்க நீராடிய கூழாங்கற்களால் ஆனது. நான்காம் நாள் காலையிலும் அன்று அக்கணம் அங்கே பதிக்கப்பட்டது போல் அவள் அமர்ந்திருந்தாள். தலைமுறைகளுக்கு முன் எங்கோ எவராலோ பதிட்டை செய்யப்பட்ட கன்னி அம்மன் சிலை போல. கொடிவழிகள் குலமுறைகள் என அவள் விழிமுன் பிறந்து வந்தவர்களைப் போல் தங்களை அவர்கள் உணர்ந்தார்கள். அவள் முன் படைக்கப்பட்ட உணவில் மலர்கள் விழுந்திருந்தன. கைநீட்டி ஒரு குவளை நீரையும் அவள் கொள்ளவில்லை. காலடியில் வைக்கப்பட்ட காணிக்கைகளை நோக்கவும் இல்லை. மறுகணம் எழப்போகும் ஒன்றை நோக்க விழைபவள் போல் யமுனை அலைநீர்ப் பெருக்கை நோக்கி அமர்ந்திருந்தாள்.

அடுத்த நாள் பறவைத்தூது வந்தது என்று அமைச்சர் தன் அலுவல் அறையிலிருந்து இரு கைகளையும் விரித்து வெளியே ஓடி வந்து கூவிச் சொன்னார். அங்கிருந்த ஆயர் அச்சொல்லை என்னவென்று அறியாமலே எதிர்கொண்டு உவகைக் குரலெழுப்பி அவரை சூழ்ந்து கொண்டனர். "அவன் முன் சென்றது நம் தூது தோழரே!" என்று அமைச்சர் கூவினார். "அவன் அவை முன் சென்று நின்றது நம் சொல். நம் ஓலையை அவன் அவையில் படித்தான். அக்கணமே துவாரகையிலிருந்து கிளம்பி சியமந்தகத்தை தேடிச் செல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான்." இடக்கையால் உடுக்கை மீட்டி சொல்துடிக்க எழுந்து "அவன் மாயன். காலமும் தூரமும் அவன் முன் ஒடுங்கிச் சுருங்கும். இங்கு வந்து நம் தேவியை அவன் கொள்வான். ஐயமில்லை!" என்றார் ஒரு பாணர். "ஆம் அது நிகழ வேண்டும். அவ்விருமுனைகளும் ஒவ்வொருமுறையும் தவறாமல் சந்திக்கும் என்ற உறுதியின் பேரில் இயங்குகிறது இப்புடவி. அவ்வுறுதியின் மேல் நின்றிருக்கின்றன இந்த மலைகள். அவ்வுறுதியின் மேல் கவிழ்ந்திருக்கிறது இந்நீல வானம்" என்றான் இன்னொரு பாணன்.

"அத்தனை தொலைவில் உள்ளது துவாரகை!" என ஏங்கினாள் ஆய்ச்சி ஒருத்தி. "அதனை விட தொலைவில் உள்ளது வானம். ஒரு மழையினூடாக மண்ணை ஒவ்வொருநாளும் முத்தமிடுகிறது வானம் "என்றான் முதுபாணன் ஒருவன். அந்த நாளின் தேன் என மெல்லிய உவகை அங்கெலாம் சூழ்ந்தது. அவள்முன் சென்று மண் தொடப்பணிந்து "அன்னையே, உன் சொல் காக்க உன் தலைவன் எழுந்தான். அவன் வஞ்சினம் வந்துள்ளது அறிக!" என்றார் அமைச்சர். அச்சொற்களுக்கும் அப்பால் மாறா விழிமலர்வுடன் அவள் அமர்ந்திருந்தாள்.

எங்கிருக்கிறான்? என்ன செய்யப் போகிறான்? என்று அறிய ஒற்றர்களை ஏவுவதாக அமைச்சர் சொன்னார். குடித்தலைவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று "ஒவ்வொரு கணமும் ஒற்றுச்செய்தி வரவேண்டும். நம் குலம் வாழும் என்ற உறுதி ஒவ்வொரு முறையும் நம்மை வந்தடைய வேண்டும்" என்றனர். "யாதவரே, அவன் தன் நிழலும் அறியா தனி வழிகள் கொண்டவன். எங்ஙனம் அறிவோம் அவன் பயணத்தை?" என்றார் கிரீஷ்மர். "இங்கு முழுநிலவு எழுவதற்கு முன் அவன் நிகழ்வான் என்று நம் மூதன்னையரை வேண்டுவோம். நாம் செய்யக்கூடுவது அது ஒன்றே என்றார்" பிரகதர். ஒவ்வொரு நாளுமென அவர்கள் காத்திருந்தார்கள். அத்தனை மெதுவாகச் செல்வதா யமுனை என்று அவர்களின் அகம் வியந்தது. ஒவ்வொரு அலையாக அந்நதிப்பெருக்கை அதற்கு முன் அவர்கள் எவரும் உணர்ந்திருக்கவில்லை. காலை வெயில் ஒளியாகி உருகும் வெள்ளிக் குழம்பாகி பளிங்குத் தூணாகி நின்றிருக்கையில் மெல்லிய வலைபோல் ஆன நீலக்கடம்பின் நிழலுக்குக் கீழ் ஒளிச்சுடர்கள் பரவிய உடலுடன் அமர்ந்திருந்தவள் தன் அசைவை முன்பெங்கோ முற்றிலும் விடுத்திருந்தாள். காற்றில் ஆடிய குழலோ உடையோ மூச்சில் ஆடிய முலையோ அல்ல அவள். அவளுக்குள் இருந்து எழுந்து சூழ்ந்து அமைந்திருந்தது காலம் தொடா அசைவின்மை ஒன்று.

மாலையில் அந்தியில் மழை விழுந்த குளிர்ந்த இரவுகள். முகில் கிழித்த தனித்த பிறைநிலவு. கருக்கிருட்டைத் துளைத்த கரிச்சானின் தனிக்குரல். காலை எழுந்த சேவலின் அறைகூவல். வாசல் வந்து நிற்கும் முதல் காகத்தின் குரல். நீண்டு நிழலாகி முற்றத்தைக் கடக்கும் மரங்களின் பயணம். ஒவ்வொரு நாளென கடக்க மெல்லிய துயரொன்று ஆயர்பாடிகளை சூழ்ந்தது. கிளர்ந்து கண்ணீருடன் வந்தவர்கள் சோர்ந்து மீண்டனர். கண்ணெதிரில் அவள் உடல் உருகுவதை காண முடியாது கண்ணீர் விட்டு இல்லங்களுக்குள் சென்று அமைந்தனர். அவள் அமர்ந்த நீலக்கடம்பின் நிழலில் மீண்டும் அவளுடன் மஹதி மட்டுமே எஞ்சினாள். காலையில் அங்கு வந்து அடிவணங்கி மீளும் சிலரன்றி பிறர் அங்கு வரவில்லை. காற்று உதிர்த்த மலர்களும் பழுத்திலைகளும் அவளைச் சூழ்ந்து கிடந்தன. அவளுக்கிட்ட பந்தல் மாலைக்காற்றில் பிசிறி பின்பு கிழிந்து விலகியது. நிலவு ஒவ்வொருநாளும் மலர்ந்து பெருகியது, நாள்தோறும் கூர்மை கொள்ளும் இரக்கமற்ற படைக்கலம் போல.

செய்தி வந்ததா என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும் நோக்கினர். வரவில்லை என்ற சோர்வுடன் ஒவ்வொரு மாலையும் அமைந்தனர். வாராது ஒழியுமோ என்ற ஏக்கத்துடன் முன்னிரவுகளை கடந்தனர். வராது என்ற துயருடன் இருண்ட கருக்கலை அறிந்தனர். ஆயர்பாடியில் எப்போதும் இல்லாத அமைதி நிறைந்தது. எடை மிக்க அமைதி நீர் ஆழத்துப் பாறைகள் போல் ஆயர் இல்லங்களில் குளிர்ந்தமையசெய்தது. நீரடியில் அழுத்தத்துடன் அசைந்தன மரங்கள். ஆயிரம் கோல் ஆழமுள்ள நீரின் எடை ஒவ்வொரு இலையிலும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு கல்லையும் அதனிடத்தில் ஆழப்படுத்தியது. ஒவ்வொருவர் உடலிலும் மதயானைகளின் எடை கூடியது. ஒவ்வொரு எண்ணங்கள் மேலும் இரும்புக் குவையென பதிந்திருந்தது. அங்கே காலம் நத்தையென தன் ஓட்டைச் சுமந்து சென்று கொண்டிருந்தது.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 5

ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி "நான் காளநீலத்தின் கருமையில் இருந்து வருகிறேன். ஆயர்பாடியின் அமைச்சரை பார்க்க வேண்டும்" என்று அவன் கூவினான். ஒற்றருக்கு இல்லாத ஓசை கொண்டிருந்தான். பித்து எழுந்த விழிகளுடன் கைவிரித்து அமைச்சரின் அலுவல் கூடம் நோக்கி ஓடினான். அவனை அறிந்து அவனுக்குப் பின்னால் ஆயர் இளைஞர்கள் சென்றனர். அமைச்சர் அவை புகுந்து அங்கே சூழ்ந்திருந்த குடித்தலைவர் நடுவே சென்று கைவிரித்து "அமைச்சரே, மூத்தாரே, கேளுங்கள். நான் இளைய யாதவனை கண்டேன். சியமந்தகமணியை அவன் அடைவான் என்று உறுதி கொண்டேன். அச்செய்தியை விரைந்து சொல்ல இங்கு வந்தேன்" என்றான்.

அக்கணமே, மின்னல் தழுவியது போல் ஆயர் குடியின் அனைவரின் நெஞ்சிலும் ஒலி எழுந்தது. தொலைவில் மழை எழுவது போல் அவ்வுள்ள எழுச்சியை கேட்கமுடிந்தது. விதிர்ப்புகளாக, மூச்சுகளாக, மென்சொற்களாக, உடலசையும் உடைசலிக்கும் ஒலியாக. சற்று நேரத்தில் அலுவல் இல்லத்தின் சாளரங்கள் அனைத்தும் முகங்களால் நிறைந்தன. தன் குலக்கோலுடன் ஓடிவந்து மன்று அமர்ந்து "சொல்க ஒற்றரே!" என்று ஹரிணகுடித்தலைவர் பிரகதர் ஆணையிட்டார். "மூத்தாரே, நான் ஷியாமன். மறைந்த இளைய அரசர் பிரசேனரின் முதன்மை ஒற்றர்களில் ஒருவன். என்னை அவர் காளநீலத்தின் உள்ளடுக்கைக் காக்கும்படி பணித்திருந்தார். ஏழு மலைக்குலங்கள் வாழும் அக்கரியகாட்டின் ஏழாம் அடுக்கு கொலைதேர் கொள்கை ஜாம்பவர்களுக்குரியது. மலைக்குடிகளில் நிகரற்றவர் அவரே என்று நம் பாணர் சொல்லி அறிந்திருப்பீர். இங்கு நாம் வந்த இத்தனை நூற்றாண்டுகளில் நம் எவர் விழியும் ஜாம்பவரை நோக்கியதில்லை. கரடித்தோல் போர்த்த உடம்பும் கருநிற முகமும் சிறுமணி விழிகளும் கொண்ட அவர்களை மலைக்குடிகள் பிறர் அறுவருமகூட அரிதாகவே பார்க்கிறார்கள்" என்றான்.

"காளநீலத்தின் கருவறையில் நூற்றியெழுபது கருங்குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் அவர்கள் வாழ்கிறார்கள்" என்று சியாமன் சொன்னான். 'அவர்களின் முதுமூதாதை கரடி உருக்கொண்ட மானுடன் என்கிறார்கள். மலைத்தேன் உண்டு மரங்களில் வாழ்ந்தவர்கள். கரையான் புற்றுகள் சூழ்ந்த உள்காடுகளை விழைபவர்கள். அவர்கள் குலத்து மூதாதையர் முன்பு அயோத்தி ஆண்ட இக்‌ஷுவாகு குலத்து அரசன் ராகவ ராமனுடன் இலங்கை சென்று போர் புரிந்து பத்துதலை கொண்ட ராவணனை வென்று மீண்டதாக கதையுள்ளது. நூற்றி எழுபத்திரண்டாவது ஜாம்பவர் அப்படைக்கு தலைமை கொண்டார். தங்கள் குடிக்கு பெருமை கொணர்ந்த அந்த ஜாம்பவரின் மரச்சிலை ஒன்றை குகை ஒன்றில் நாட்டி ஆண்டிற்கு இருமுறை ஊன் பலியும் மலரீடும் அளித்து வழிபடுகிறார்கள். அவரது கொடிவழிவந்த இருநூற்று பதினேழாவது ஜாம்பவான் இன்று அக்குடி வணங்க கோல்கொண்டு ஆள்கிறார்.'

'இரவும் பகலும் விழிவணங்காது காளநீலத்தின் உள்ளடுக்கைக் காக்கும் பன்னிரண்டு ஜாம்பவர்களைக் கடந்து அவர்களின் மலைக்குகை வரை செல்ல இதுவரை மானுடரால் முடிந்ததில்லை. ராகவராமன்கூட அவன் தோழன் வானரகுலத்து அனுமனின் உதவியுடனேயே ஜாம்பவர்களை அணுகினான். நானும் சிலாத்ரயம் எனப்படும் மூன்றுபிளவாக எழுந்த பெரும்பாறை ஒன்றின் அடி வரை மட்டுமே செல்ல முடிந்தது. அங்கிருந்து ஜாம்பவர்களின் எல்லையில் தொலைவிலெழுந்த படைக்கலத்தின் அசைவை மட்டுமே கண்டேன். தேனும் ஊனும் உண்டு என் தூதுப்பறவைகளுடன் அம்மலைக்குகைகளில் இதுநாள்வரை தங்கியிருந்தேன். பிரசேனர் அளித்த பணி முடிவுறாமல் ஊர் திரும்புவதில்லையென்று உறுதி கொண்டவன் என்பதனால் காவலை தவமென்றாக்கினேன்.'

"எந்தையரே, அன்று காலை காட்டுக்குள் அசைவொன்று கேட்டு மரத்தின் மேல் எழுந்து நச்சு பூசிய கூர் அம்புடன் நான் கூர்ந்து நோக்கியபோது நீலம் ஒளிர்ந்த மேனியுடன் குழல் சூடிய பீலியுடன் ஒருவன் இலைத்தழைப்பை ஊடுருவி வரக்கண்டேன். இளங்கன்று போல் நடைகொண்டவன். இறுகி நெகிழும் நாகமென தோள்கள் கொண்டவன். அவனுக்குப்பின்னால் படையேதும் வருகின்றதா என்று நோக்கினேன். தன்னந்தனியன் என தெளிந்தேன். அத்தனை தொலைவு அவன் எப்படி வந்தான் என வியந்து கந்தர்வனோ என மயங்கி நோக்கி நின்றேன். அவன் கால்கள் மண் தொடுகின்றனவா என்று மீள மீள பார்த்தேன். பின் உய்த்தறிந்தேன், அவன் துவாரகை ஆளும் இளைய யாதவன் என்று…"

ஒற்றனின் சொல் கேட்டு சாளரங்கள் அனைத்திலிருந்தும் வியப்பொலி எழுந்தது. பிரகதர் "ஜாம்பவர்களைத் தேடியா அவன் சென்றான்?" என்று உரத்துக்கேட்டபடி எழுந்தார். ஒற்றன் வணங்கி "ஆம் மூத்தாரே..அவ்வியப்புடன் நான் மரமிறங்கி மெல்ல காலடி வைத்து அவனை அணுகினேன். யாதவர் குழூஉக்குறியைச் சொல்லி அவன் முன் சென்று வணங்கி என்னைப்பற்றி சொன்னேன். யாதவரே, இவ்வெல்லைக்கு அப்பால் ஜாம்பவர்களின் ஏழாம்காடு, அங்கு செல்வது உவப்பல்ல என்றேன். அவன் புன்னகைத்து ஜாம்பவர்களைத் தேடியே வந்ததாக சொன்னான். படைகொண்டுசென்று அவர்களை வெல்லலாகாதென்றும் ஆகவே தனியொருவனாக வந்ததாகவும் சொன்னான்." என்றான். யாதவ முதியவர் ஒருவர் "இளையோனே, எந்தையே" என்று கூவினார் . பாணன் ஒருவன் "வெற்றிகொள் கார்த்தவீரியன். ஆழியும் சங்கும் கொண்ட விண்ணளந்த பெருமான்!" என்று சொல்லி உடுக்கை விரல் தொட்டு உறுமச்செய்தான். ஒற்றன் "ஆம், அதையே நானும் உணர்ந்து மெய்சிலிர்த்தேன்" என்றான்.

அவனை என் குகைக்குள் அழைத்து தேனும் ஊனும் இன்கூழும் அளித்தேன். தன் எழுநூறு ஒற்றர்களை காடுகள் எங்கும் ஏவி சியமந்தகமணி எங்குள்ளது என்று தேடியதாகவும் அவர்களில் ஒருவன் ஜாம்பவர் குலத்துக் குழந்தையொன்று இருளில் விளையாட விளக்கெனக் கொளுத்திய இந்திரநீலக் கல்லொன்றை வைத்திருப்பதைக் கண்டதாகவும் அவன் சொன்னான். அக்கல் சியமந்தகமே என்று உறுதி கொண்டதுமே அதைக் கொள்வதற்காக கிளம்பி வந்தான். நான் அவனைப் பணிந்து 'இளையோரே இவ்வெல்லைக்கப்பால் மானுடர் சென்றதில்லை. ஜாம்பவர் மானுடர் அல்ல என்றறிக! கரடி உடல் கொண்ட காட்டு மனிதர், நிகரற்ற புயவல்லமைகொண்டவர்' என்றேன். புன்னகைத்து என் தோளில் தொட்டு 'என்னுடன் வருக!' என்று சொல்லி நீலமீன்குத்தி நீர்புகுவதுபோல காளநீலத்தின் உள்ளே புகுந்தார். கால்கள் நடுங்க, உள்ளம் ஒரு குளிர்ந்த உலோக உருளையாக மாறி அழுத்த, அவன் புன்னகை பட்டுநூல் என கட்டி இழுத்துச்செல்ல தொடர்ந்து சென்றேன்.

காடுகளில் அவன் கால்கள் வழியறிவது பெருவிந்தை என்று அப்போது அறிந்தேன். 'இளையோனே, இவ்வழியில் முன்பு நீர் வந்துள்ளீரா?' என்றேன். 'நான் செல்லாத பாதை என்று பாரத வர்ஷத்தில் ஏதுமில்லை' என்று சொன்னான். 'எப்பொருளில் அதை சொல்கிறீர்?' என்றேன். 'ஊனுடம்பு செல்லா வழிகளில் எல்லாம் உள்ளம் செல்லமுடியுமல்லவா?' என்று புன்னகைத்தான். 'என் விழிகள் ஆயிரம். சிந்தையெழுந்த விழி பல்லாயிரம். நீலவான் என உடலெங்கும் விழியாக இந்த மண்மேல் கவிந்துள்ளேன்' என்றான். ஜாம்பவர் எல்லை என புதர்ச்செறிவுக்குள் ஓசையிட்டு ஓடும் இருண்ட காட்டாறான கலிகையின் கரையை அடைந்தபோது கரடிகளின் குமுறல் ஒலியை தொலைவில் கேட்டேன். அவை ஜாம்பவர் தங்களுக்குள் உணர்த்தும் குறிச்சொற்களே என்றுணர்ந்தேன். என்னை திரும்பி நோக்கி புன்னகைத்து 'கடக்கலாமா?' என்றான். 'இளையவனே உம்மை நம்பி ஏழாம் இருளுக்குள்ளும் காலெடுப்பேன்' என்றேன். 'வருக!' என்று என் தோளைத் தொட்டு அங்கிருந்த ஆலமரமொன்றின் விழுதைப் பற்றி ஆடி ஆற்றைக் கடந்து சென்றான். அவனைப் போலே நானும் தொடர்ந்தேன்.

ஜாம்பவர்களின் நிலத்தில் அவன் கால் பட்டதுமே மலைப்பாறை பிளக்கும் ஒலி எழுப்பியபடி மரத்திலிருந்து இறங்கிய பெருங்கரடியொன்று கைவிரித்து அவனை எதிர்கொண்டது. மறந்தும் படைக்கலம் தொடாது தன் இரு கை விரித்து புன்னகையுடன் அவன் நின்றான். அவன் பின்னால் மற்றுமொரு கரடி இறங்குவதை கண்டேன். ஏழு கரடிகள் கூரிய நச்சுதோய்த்த அம்பு தொடுத்த வில்லுடன் அவனை சூழ்ந்தன. எந்தையீர், அக்கணத்தை நான் பிறந்திறந்து கடந்தேன். பின் முதல் கரடி தன் முகமூடியை விலக்கி அவனை நோக்கியது. கரிய விழிகளில் சினத்துடன் 'யார் நீர்? ஜாம்பவரின் மண்ணுக்குள் மானுடர் கால் வைத்ததில்லை என்றறிய மாட்டீரா?' என்றது. அவன் புன்னகையுடன் 'ஆம், இதுவரை அவ்வண்ணம் நிகழ்ந்தது. ஏனெனில் ஜாம்பவானை வெல்லும் ஒருவன் மண்ணில் இதுவரை இருந்ததில்லை. இன்று நான் அவனை வெல்ல முடியும் என்று உணர்ந்தேன். எனவே தேடி வந்தேன்' என்றான். அக்கரடி மனிதன் முகத்தில் எழுந்த பெருவியப்பை கண்டேன். ஒருவரையொருவர் அவர்கள் நோக்கிக்கொண்டனர்.

'ஜாம்பவரே, ஐயமிருப்பின் உங்களில் எவரேனும் ஒருவர் இக்கணம் என்னிடம் பொருதலாம். ஐந்து சொல் எடுப்பதற்குள் அவரை நான் வெல்வேன். அவ்வண்ணமெனில் உங்கள் தலைவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்' என்றான். அடக்கமாட்டா பெருநகைப்புடன் பேருடல் கொண்ட முதல் கரடி மனிதன் தன் அம்புகளை தரையில் போட்டு இரு கைகளையும் விரித்து அவனை எதிர்கொண்டான். திரும்பி பிறரிடம் 'எண்ணிக்கொள்ளுங்கள்' என்றுரைத்து நெய்யில் தாவிப்பற்றிச்சூழும் நெருப்பென சென்றான். என் கண் முன் மூன்று சொல் ஒலிக்கும் நேரத்தில் அவன் இரு கைகளையும் முறித்து கீழே போட்டு நெஞ்சில் கால் வைத்து வான் நோக்கி தலையெடுத்து வஞ்சினப் பேரொலி எழுப்பினான். பிற கரடிகள் வில் தாழ்த்தி அவனை சூழ்ந்தனர். 'மறுவழியென ஒன்றில்லை ஜாம்பவரே. உங்கள் தலைவருடன் நான் பொருதியாக வேண்டும். இல்லையேல் அவர் தோற்றார் என சொல்லளிக்கட்டும் மீள்கிறேன்' என்றான். இரண்டாவது கரடி 'வருக யாதவரே' என்று முகமூடிக்குள்ளிருந்து குரலெழுப்பியது. அவன் சென்றபோது நானும் தொடர்ந்தேன். எந்தையரே மூன்று சொல் பிறக்கும் கணத்தில் முழு உருவக்கரடியொன்றின் கழுத்தை முறிக்கும் கலையென ஒன்றுண்டு இப்புவியில் என நானே எனக்கு சொல்லிக்கொண்டேன்.

எங்களை அழைத்துச் சென்ற ஜாம்பவர்கள் வாயில் கைவைத்து எழுப்பிய ஒலிக்கு அங்கிருந்து மறுமொழி வந்தது. அணுகுவதற்குள்ளே ஐம்பது கரடிகள் மரக்கிளைகளில் இருந்து இறங்கி எங்களை சூழ்ந்து கொண்டன. முகமூடி விலக்கி முதல்தலைவன் தன் வீரனிடம் 'இவனா?' என யாதவனை நோக்கினான். புன்னகைத்து 'ஆம் நானே' என்று அவன் சொன்னான். 'உங்கள் குல முறைப்படி முதன்மை ஜாம்பவானை போருக்கு அழைப்பவன் குலமுறை வரவேற்புக்குரியவன் என அறிவேன். அதன் பொருட்டு வந்தேன். ஆவன செய்க!' என்றான். விழியிமைக்காது ஒரு கணம் நோக்கி பின் தலைவணங்கி 'வருக!' என்று அழைத்துச் சென்றான். எட்டு குகைகள் சூழ்ந்த வளைந்த பாறை நடுவே இருந்தது அவர்களின் ஊர்ச்சதுக்கம். அங்கே ராகவ ராமனைத் துணைத்து இலங்கை வென்று மீண்ட ஜாம்பவானின் பெருஞ்சிலை ஒன்று நெஞ்சில் அறைந்து விண்ணோக்கி முகம் தூக்கிய வடிவில் நின்றது. அருகே அவர்களின் ஆறு தெய்வங்கள் கோவில் கொண்டிருந்தன. அங்கிருந்த பீடத்தில் அவனை அமர வைத்தனர். அருகே என்னை நிற்கவிட்டனர். இன்கடுநீரும் அனல் சுட்ட ஊனுணவும் கொண்டு வந்து அளித்தனர். 'இளையோரே, நீங்கள் இளைப்பாறுங்கள். உடல் திரட்டி இப்போருக்கு ஒருக்கமாகலாம்" என்றான் காவல்தலைவன். 'எக்கணமும் போருக்கென எழுந்து வந்தவன் நான்' என்று இளையவன் மறுமொழி சொன்னான்.

மரங்களைக் குடைந்து மாட்டுத்தோலிட்டு அமைத்த நீளப்பெருமுழவுகள் கரடிக்குமுறல்கள் போல முழங்கத் தொடங்கின. மலைக் குகைக்குள் இருந்து ஜாம்பவகுலத்தார் ஒவ்வொருவராக வெளிவந்தனர். தோளும் முலையும் திரண்ட கரடித் தோலாடை அணிந்த கரிய பெண்கள். பின்னியிட்ட நீள்சடையில் செங்கழுகின் இறகு சூடிய இளம்கன்னியர். ஒளிரும் விழிகளுடன் இளையோனை கூர்ந்து நோக்கிய சிறுவர். அன்னை இடை அமர்ந்து எச்சில் வழிய கை நுணைத்து கால் நெளித்த குழவியர். அவையீரே, அப்போதுதான் ஜாம்பவரும் மானுடரே என்றறிந்தேன். அவர்கள் விழிகள் எம்மானுடர்க்கும் இல்லாத பேரழகு கொண்டவை என்று உணர்ந்தேன். அவ்வழகிய மகளிரை மீளமீள நோக்கினேன். அவர்களின் குழவியரை வாங்கி நெஞ்சு சேர்க்க எண்னினேன். அவர்கள் எவரும் என்னை நோக்கவில்லை. விழிகள் அலர்ந்த அத்தனை முகங்களும் இளையோனிலே இருந்தன. அவன் அசைவை அவர்களின் விழியசைவிலேயே அறியமுடிந்தது. எந்தையரே, அவன் இங்குள்ள பெண்டிர் விழிகளால் ஒன்றுநூறுபல்லாயிரம் என பெருக்கப்படுகிறான். அவர்களால் நோக்கி நோக்கி தீட்டப்படுகிறான்.

கொம்போசை பிளிறியதும் முதல் குகையிலிருந்து ஜாம்பவான் வெளிவந்தார். இளையவனைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டு அவன் தலைக்குமேல் தன் தோள் நிற்க எழுந்தார். கரிய பெரும்தோள்கள். கோரைப்பல் எழுந்த வாய். திமில் எனச் செழித்த பெருங்கரங்கள் தேள்கொடுக்கென அசைந்தன. மண்ணறைந்து வந்த துதிக்கை கால்கள் அணுகியபோது நான் பின்னடைந்தேன். அவையீரே, மானுடரில் அவருக்கிணையான பேருடலொன்றை நான் கண்டதில்லை. அருகணைந்து அவர் நிற்க அண்ணாந்து முகம் நோக்கிய போதுதான் முதியவரென்று கண்டேன். கண்கள் கீழ் தசை தளர்ந்து மடிந்து தொங்கியது. மூக்கு தளர்ந்து வளைந்து உதடை மறைத்தது. கழுத்துத் தசைகள் கன்றுஅள்ளை என அசைந்தன. கரடிகளுக்குரிய துலாதூக்கியதுபோல் ஆடும் நடையுடன் அணுகி இளையோர் முன் வந்து நின்று இடையில் கைவைத்து குனிந்து நோக்கினார். இளையோன் எழுந்து அவர் கால் தொட்டு வணங்கி 'விருஷ்ணிகுலத்து யாதவன் நான். ஜாம்பவர் குல முதல்வரை மற்போருக்கு அழைக்க வந்துள்ளேன்' என்றான்.

இதழ் சற்றே வளைய சுருக்கங்கள் இழுபட புன்னகைத்து 'இளையோனே, நூறாண்டுகளுக்கு முன் ராகவ ராமன் என்றொருவன் என் மூதாதை ஜாம்பவானை மற்போரில் வென்றான் என்று அறிந்துள்ளேன். அதற்கு முன்னும் பின்னும் மானுடர் எவரும் ஜாம்பவான்களின் முன் நின்றதில்லை. கதை கேட்டு அறியாது வந்த இளையோன் நீ. உன் குழல் அணிந்த மயிற்பீலி என்னை கவர்கிறது. உன் அன்னையின் புன்னகை அதில் உள்ளது. உனக்கென கனிந்தேன். என் வாழ்த்துக்களை கொள்க! நீ செல்லலாம்' என்றார். இளையோன் 'என் சொல் கொள்ளும் எடையறிந்தே உரைத்தேன் ஜாம்பவரே. மற்போரிடவே நான் வந்தேன்' என்றான். ஜாம்பவான் என்னை நோக்கி 'இவன் சான்றாகட்டும் உனக்கு மும்முறை வாய்ப்பளித்தேன். இது இரண்டாவது சொல். நீ செல்லலாம். உன்னை என் மைந்தனென நெஞ்சோடு அணைத்து சொல்லளித்தேன்' என்றார். இளையோன் "மூத்தாரே, போரன்றி எதற்கும் ஒப்பேன்' என்றான். ஜாம்பவான் என்னை நோக்கி 'சான்று நிற்போனே, கேள்! இது மூன்றாவது முறை. இளையோனாகிய இவனைக் கொல்ல என் கரங்கள் ஒப்பா..." என்றபின் திரும்பி 'குழந்தை, செல்க நீ!' என்றார்.

இளையோன் 'தங்கள் கருணைக்கு முன் தலை வணங்கினேன் மூத்தவரே. இந்நெறி எனக்கும் என்றும் வழிகாட்டுவதாக! நான் போரிடவே எழுந்தேன்' என்றான். ஜாம்பவான் சில கணங்கள் தன் முதிர்விழிகளால் நோக்கியபின் தலைவணங்கி திரும்பி கைகாட்ட நாற்புறத்திலும் இருந்தும் பெருமுழவுகள் உறுமத் தொடங்கின. அனைத்து குகைகளில் இருந்தும் கரடித்தோல் அணிந்த ஜாம்பவர்கள் வந்து அம்மன்றை சூழ்ந்து கொண்டனர். குலமூத்தாரே, தேனீக்கள் கூடிய தேன் தட்டு போல இருந்தது அக்களம்."

யாதவர் சொல் தவறாது கொள்ளும் விழைவுடன் ஒற்றனை சூழ்ந்து நின்றனர். ஒருவர் கொண்டு வந்து அளித்த சூடான இன்கடுநீரை ஏழு மிடறுகளால் அருந்தி வாய் துடைத்து அவன் அப்போரை விளக்கினான். "மூத்தோரே, நூறு ஊன்பந்தங்கள் எரிய செவ்வொளி சூழ்ந்த வட்டத்தில் பிறை நிலவு விண்ணில் முகில்நீக்கி எழுந்த முதல் தருணத்தில் அப்போர் தொடங்கியது. கரடித்தோல் ஆடை அணிந்து கரிய பேருடலில் காளிந்தி அலைகளென தசைகள் நெளிந்தசைய ஜாம்பவான் எதிர் நின்றார். செவ்வாடை அணிந்து இடையில் மஞ்சள் கச்சை சுற்றி தலையில் அணிந்த பீலியுடன் இளையோன் எதிரே கைவிரித்து நின்றான். நூறு சிம்மங்கள் சூழ்ந்தொலித்தன என அதிர்ந்த முழவின் நடுவே ஒருவரையொருவர் நோக்கியபடி அவர்கள் சுற்றி வந்தனர். நீண்ட நான்கு கைகள் ஒன்றையொன்று புல்கத் துடித்த கணம் நீண்டு நீண்டு காலம் என்றாகி திகழ்ந்து. என் நெஞ்சை கையால் அழுத்தி கால் பதைக்க அதை நோக்கி நின்றேன்."

முழவோசை அதிர்ந்தெழுந்து சூழ்ந்திருந்த பாறைகளை திரைச்சீலையென அதிர வைத்தது. கரடி முகமூடியிட்ட நூறு ஜாம்பவர்கள் அக்களத்திற்கு எல்லை வகுத்தனர். அப்பால் தோலாடை அணிந்த ஜாம்பவர் குலத்துப் பெண்களும் ஆண்களும் முதியோரும் குழவியரும் நின்று வெள்விழிகளில் செங்குருதி ஈரமென பந்தங்கள் ஒளிர அச்சமரை நோக்கி நின்றனர். முழவோசை உச்சத்தை முட்டி ஒலியின்மையாக வெடித்தபோது நான்கு கைகளும் நீர் வந்து நீரை அறையும் ஒலியுடன் இணைந்தன. இரு உடல்களும் ஒன்றையொன்று தழுவி இறுக்கி சுழலத் தொடங்கின. தோள்கள் உரசும் ஒலி மலைப்பாம்புச் சுருள் நெளிவதுபோல் கேட்டது. காற்றிலாடும் மூங்கில்கள் என வலுத்தது. ஒருவரை ஒருவர் இறுக்கி அழுத்தியபடி ஏழு முறை சுழன்று மண்ணில் அறைந்து விழுந்து புரண்டு எழுந்து விலகாமலேயே அதிர்ந்தனர். தன் பெருங்கரத்தால் ஜாம்பவான் இளையோனை ஓங்கி அறைந்த கண நேரத்தில் அவன் புரண்டு விலக அந்த அடி பட்டு தரை அதிர்ந்தது. மும்முறை அவ்வாறு அறைந்த பின் அவர் உணர்ந்து கொண்டார். விரைவே இளையோனின் ஆற்றல் என. பின் ஒவ்வொரு அசைவையும் தான் அளந்து பின் அளித்தார். ஒவ்வொரு அடியிலிருந்தும் அவன் பறவை என புழு என நீர் என நெருப்பு என விலகினான். அவையீரே, ஒரு அடி அவன்மேல் விழுந்திருந்ததென்றால் இன்று இச்சொல்லுடன் நான் வந்திருக்கமாட்டேன் என்றறிக!

அப்போரை என் எளிய சொற்களால் இங்குரைக்க ஆற்றேன். உடல்கள் மற்போரில் மட்டுமே பிறிதொன்றை முழுதறிகின்றன என்போர் மூத்தோர். கைகளை கைகளும், தோள்களை தோள்களும், கால்களை கால்களும், இடையை இடையும், நெஞ்சை நெஞ்சும், வஞ்சத்தை வஞ்சமும், ,அச்சத்தை அச்சமும் அறியும் தருணங்களால் ஆனது மற்போர் என அப்போது அறிந்தேன். ஒவ்வொரு கணமும் இறப்பு நிகழ்ந்து, பின் நிகழவில்லை என்றாகி, மறுகணமே இறப்பு என அணைந்து, அக்கணமே அகன்று செல்லும் போரென்று பிறிதொன்றை கண்டதில்லை. நீண்டு நீண்டு சென்ற ஒரு கணத்தின் நுனியில் ஜாம்பவானின் நீண்ட சடைக்குழலை இளையோன் பற்றிக்கொண்டான். அவர் இடையில் கால் வைத்து தோளில் முழங்கால் சேர்த்து எம்பி மறுபக்கம் குதித்து தன் உடலைச் சுழற்றி அவர் பின் சென்று முழங்காலால் அவர் முதுகை அழுத்தி முன் சரித்தான். முறியும் மரமென அவர் எலும்புகள் முனகுவதை கேட்டேன். வலியின் ஒலியொன்று அத்தனை மலைப்பாறையும் அசைகின்ற பெரும் எடையுடன் எழுந்தது. தளர்ந்த அவர் வலக்காலைப் பற்றி தலைமேல் தூக்கி நிலத்தில் ஓங்கி அறைந்தான். ஜாம்பவர்கள் அனைவரும் எழுப்பிய வியப்பொலி அங்கு சூழ்ந்தது. வெற்றியின் கணம் என்றபோதும் நான் அஞ்சி ஓரடி பின்னகர்ந்தேன்.

ஜாம்பவான் சுழன்று மண்ணில் புரண்டு எழுந்தார். அவர் வலக்கை நீண்டு அவனைப்பற்றி வீசியது. மண்ணில் தெறித்து விழுந்தவன் விட்டிலென எழுந்து அவர் எழுவதற்குள் கைவிரித்து அவர் மேல் மீண்டும் பாய்ந்து எழுவதற்காகக் கையூன்றிய அவரை மீண்டும் அறைந்து மண்ணில் வீழ்த்தினான். தன் முழு எடையுடன் ஜாம்பவானின் நெஞ்சில் விழுந்து முழங்காலால் அவர் மார்பை அழுத்தி வலக்கையால் அவர் தலையைப் பற்றி இடக்கையால் கழுத்தைச் சுற்றி நெரித்துச் சுழற்றி அழுத்தினான். இருகால்களும் நிலத்தில் அறைய அப்பேருடல் மண்ணில் துடிப்பதை கண்டேன். பின் அவர் வலது கால் இழுபட்டு இழுபட்டு அதிர்ந்தது. மேலும் இரு கணங்கள் அவ்வழுத்தம் தொடர்ந்திருந்தால் அவர் உயிர் துறந்திருப்பார். ஆனால் இளையோன் உடனே விலகி எழுந்து இடை சேர்த்து கை வைத்து நின்று கருணை நிறைந்த புன்னகையுடன் நோக்கி 'எழுக மூத்தாரே!' என்றான். வெண்பல்காட்டிச் சீறி எழுந்து கைகளை ஓங்கியறைந்து அவன்மேல் மீண்டும் பாய்ந்தார் ஜாம்பவான்.

யாதவர் மெய் சிலிர்க்க உடல் விதிர்ப்புற்று உள்ளெழுந்த விழிகளால் அச்சமரை நோக்கி அவனைச் சூழ்ந்து நின்றனர். விழி நோக்கியதை சொல்லறிந்தது என ஒற்றன் சொன்னான். "நிகர் நிலையில் நிகழும் போர்கள் தெய்வங்களுக்கு உகந்தவை என்பார்கள். அங்கு தெய்வங்கள் தங்கள் ஆற்றலை அளந்து கொள்கின்றன. இருளின் ஆற்றல் ஜாம்பவானின் தோள்கள் என்றால் ஒளியின் ஆற்றல் நீலனின் தோள்கள். அவை பின்னி முயங்கும் அக்கணத்தில் காட்சிகளாய் அசைவுகளாய் இங்கு நிறைந்திருக்கும் ஒவ்வொன்றும் தாங்கள் நிகழும் விந்தையை கண்டுகொண்டன. ஒவ்வொரு அடிக்கும் மறு அடி உண்டு என்றும், ஒவ்வொரு பிடிக்கும் விலகல் உண்டு என்றும் கண்டேன். ஒரு கணம் என்பது நூறு நூறு துடிக்கும் தசைகளால், அதிர்ந்து புடைத்த பல்லாயிரம் நரம்புகளால், உரசி இறுகும் நான்கு தோள்களால், பிதுங்கிய விழிகளால், இறுகிய பற்களால் ஆனது என்றறிந்தேன். ஒரு கணத்தில் நிகழும் போர் முடிவற்றது. கணங்களால் ஆன அப்போர் முடிவிலிகளால் ஆன ஆரம். அவையீரே, காலம் கடுகி விரைந்து செல்வதை மற்போர் போல காட்டக்கூடிய பிறிதொன்றில்லை.

காலமின்மையில் உடல்கள் இறுகி அசைவிழப்பதைக் கண்டபோது காலமென்பது அகமே என்று அறிந்தேன். என்றோ எங்கோ ஒரு கணத்தில் எவர் வெல்வார் என்பது முடிவாகும் விந்தையை அங்கு கண்டேன். இங்கு எத்தனை எண்ணி எண்ணி சொல்லெடுத்துச் சென்றாலும் அதை நான் தொட்டுவிட முடியாது. அவன் தன் கருநீலக்கொடியென வளைந்த கைகளால் கரிய பெருந்தோள்களை வளைத்து பின்இழுத்த போதா? மெல்லிய குதிரைக் கால்கள் ஜாம்பவானின் கரிய யானைக்கால்களுக்குள் நுழைந்து பின்னிச் சுழற்றிய போதா? தசை புடைக்க இடத்தோள் எழுந்து அவர் வலத்தோளை மண்ணோடு உரசி அழுத்திய போதா? ஒவ்வொரு அசைவுக்கும் நிகரசைவு கொண்டு ஒவ்வொரு துடிப்பிற்கும் எதிர்த் துடிப்பு கொண்டு ஒவ்வொரு எடைக்கும் மறு எடை கொண்டு நின்றிருந்த துலாக்கோல் அக்கணத்தில் முடிவெடுத்தது. அதை விழி அறியும் முன்னே என் உளம் அறிந்தது. துள்ளியெழுந்து கைபிடித்து கூச்சலிட்டேன் என்று நான் உணர்ந்தபோது செயலற்று குனிந்து உடல் விதிர்க்க நின்றிருந்தேன். நின்று நடுங்கிய நீர்த்துளி உதிர்ந்தது என போர் முடிந்தது என்றான் ஒற்றன்.

சூழ்ந்து நின்ற கரடிக்குலம் சோர்ந்த கைகளுடன் தளர்ந்த தோள்களுடன் தரையில் விழுந்து கையூன்றி எழுந்த தங்கள் தலைவனை நோக்கி நின்றது. உடைந்த தொடையில் வலி முகத்தில் சுளித்திருக்க பற்களைக் கடித்து மூச்சிரைக்க ஜாம்பவான் கேட்டார் 'இளையோனே, எங்கள் குலத்திற்கு மூதாதையர் அளித்த சொல்லென ஒன்றுள்ளது. ராகவ ராமனன்றி எவர் முன்னும் நாங்கள் தோள் தாழ்த்த நேராது. எங்ஙனம் நிகழ்ந்தது இது. நீ யார்?' நீலமுகம் விரிய விழிசுடர புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் 'அவனே நான்!' எந்தையரே, என் குலத்தீரே, அக்கணம் அதை நானும் உணர்ந்தேன். அவன் இவனே என.

இரு கைகளையும் தலைமேல் கூப்பி எழுந்து இளையவன் கால்களைத் தொட்டு ஜாம்பவான் சொன்னார் 'எந்தையே இத்தனை நாள் கழித்து தங்கள் இணையடி எங்கள் மண் சேர ஊழ் கனிந்துள்ளது. எங்கள் குல மூதாதையர் மகிழும் கணம். எங்கள் குலக்கொழுந்துகள் உங்கள் சொல் கொண்டு வாழ்த்தப்படட்டும்!' புன்னகைத்து அவனும் 'ஆம் அவ்வாறே ஆகுக!' என்றான். அவனைச் சூழ்ந்து அணைத்துச் சென்று தங்கள் மன்று அமைந்த மேடையில் அமர்த்தினர். மலர்தார் கொண்டுவந்து அவன் மார்புக்குச் சூட்டினர். அவர்கள் குல மூதாதையர் கொண்டிருந்த முப்பிரி வேல் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தனர். இன்கடுந்தேறல் அளித்தனர். ஆடவரும் பெண்டிரும் தங்கள் மைந்தருடனும் கையமர்ந்த மகவுகளுடனும் அவன் முன் அணிவகுத்து வணங்கி நற்சொல் பெற்றனர். அவர்களில் இளங்கன்னி ஒருத்தி மின்மினி என ஒளிர்ந்தபடி அவனருகே வந்தாள். மூத்தோரே, உடல்மென்மையில் பந்தச் செவ்வொளி சுடர்வதை அன்று கண்டேன். காராமணிப்பயறு என கருங்கல் உடைவென மேனி மிளிர்ந்தவள். ஜாம்பவ முதல்வரின் மகள் அவள். அவள் செப்புமுலைகள் நடுவே நீலக்கதிர் விரித்திருந்தது சியமந்தக மணி.

அஸ்வபாதத்தின் சரிவில் இருந்த சிம்மக்குகையொன்றிற்குள் இருந்து அவர்கள் கண்டெடுத்தது அது என்றனர். பெருங்கரடி நன்கறிந்த குகை அது. குகைக்கூரையில் பன்றி அகிடுகள் என பருத்துத் தொங்கும் தேனடைகள் கொள்ளச் சென்றவர்கள் அதனுள் புதிய ஒளி ஒன்று தெரிவதைக் கண்டு உள் நுழைந்து நோக்கும்போது கதிரவனின் விழியென மணியொன்று சுடர்வதை கண்டனர். அச்சிம்மத்தை வென்று அதைக் கொண்டனர். தங்கள் இளமைந்தர் களியாட அதை அளித்தனர். 'மூத்தவரே, அந்த மணி எங்கள் குலம் கொண்ட செல்வம். அதைக்கொள்ளவே வந்தேன்' என்று அவன் சொன்னான். ஜாம்பவான் 'அதை உனக்கு வெற்றிப்பரிசிலென அளிக்கிறேன் இளையோனே' என்று சொல்லி அதை பொற்பட்டு நூலில் கட்டி அவன் கழுத்தில் அணிவித்தார்.

"யாதவரே, குல மூத்தாரே, அந்த நீலமணியை அவன் நெஞ்சு சூடக்கண்டு அங்கிருந்து ஓடி வந்தேன். அவர்கள் அளிக்கும் குல விருந்துண்டு மகிழ்ந்து நாளை அவன் இங்கு வருவான்" என்றான் ஒற்றன். வளைதடிகள் தூக்கி மூதாதையர், யாதவ மூத்தோர் உவகைக்குரல் எழுப்பினர். கைதூக்கி ஆர்ப்பரித்து கொந்தளித்தனர் இளைய யாதவர். கொப்பளித்துப் பெருகிச்சென்று அவள் இருந்த நீலக்கடம்பு வனத்தைச் சூழ்ந்து களியாடினர். ஆயர் இல்லத்தில் புகுந்து கள் மயக்கத்தில் கிடந்த சத்திராஜித்தை உலுக்கியெழுப்பி "அரசே உமது மகள் வென்றாள். யாதவ குலம் நின்றது" என்றனர். நோய் முற்றி மெலிந்து மஞ்சம் சேர்ந்த மாலினியை எழுப்பி அதைச் சொன்னபோது அச்சொற்கள் உள்நுழையாமல் விழித்து பதைத்த மொழியில் "என் மகள்... என் மகள்" என்று சொல்லி விழிநீர் உகுத்தாள் அவள்.

ராகினி ஓடிச்சென்று கடம்பமரத்தடியில் விழுவதுபோல் அமர்ந்து "எழுக தோழி! அவன் வருகிறான்! செய்தி வந்துள்ளது" என்றாள். தான் ஊணின்றி உறக்கின்றி மெலிந்து உடலொட்டிப் போயிருந்தபோதும் அவளோ அன்று அமர்ந்த அக்கோலத்தில் பொலிவதை ஒவ்வொரு நாளும் அவள் கண்டிருந்தாள். அவன் வரும் அச்செய்தியும் அவளை சென்றடையவில்லை என்பதை உணர்ந்தாள். அவளிருந்த செம்மலர் மேல் அவள் மட்டுமே அமர இடம் இருந்தது போலும் என எண்ணிக்கொண்டாள். கை நீட்டி அவள் மலர்ப்பாதங்களைத் தொட்டு ஆற்றாது விழிநீர் உகுத்தாள். அருகே மரத்தடியோடு ஒட்டி மெலிந்த நீர்க்கோலமென அமர்ந்திருந்த மஹதியும் அச்சொற்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பால் இருந்தாள்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 6

அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப் பெருங்குரல் எழுப்பி உவகை ஆர்த்தனர். இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் முற்றங்களுக்கு ஓடி வந்தனர். சற்று நேரத்தில் அங்கிருந்த அத்தனை மரங்களும் மனிதர்கள் செறிந்து அடர்ந்தன. இளையோர் அத்திசை நோக்கி கை தூக்கி ஆர்த்தபடி ஓடினர். அலகு நீட்டி அணுகும் பறவை என, பின் நெளியும் தழல்கொடி என, பின் காலைமுகில்கீற்று என அது தன்னை விரித்து விரித்து அணுக்கம் கொண்டது. செந்நிறமான முதற்புரவிக்கு பின்னெழுந்த வெண்புரவியை அதன்பின்னரே அவர்கள் கண்டனர். முதல்புரவிமேல் அமர்ந்திருந்தவன் நீலன். தொடர்ந்ததன் மேல் அமர்ந்திருந்தது கரிய பேருருக்கொண்ட கரடி.

புரவிகளின் குளம்போசை ஆயர்பாடியின் சுவர்களிலிருந்தும் எழத்தொடங்கியது. பெண்கள் முலைக்குவை மேல் கைவைத்து விழிவிரித்து இதழ்திறந்து நோக்கி நின்றனர். அணுகி வரும் புரவியின் உலையும் குஞ்சிக்கு அப்பால் நீலமுகம் தெரிந்து மறைந்து பின் தெரிந்து அவர்களின் ஆவலுடன் விளையாடியது. முந்தானை பிடித்திழுத்து பின்னால் சென்று ஒளிந்து விளையாடும் மகவு என எண்ணினர் மூதாய்ச்சியர். துயில்கையில் வந்து முத்தமிட்டு, விழிக்கையில் தூணுக்குப்பின் ஒளிந்து பொன்னிற ஆடை நுனி மட்டும் காட்டும் காதலன் என மயங்கினர் கன்னியர். என்றும் பின்னால் துணை நின்று பகையெழும்போது மட்டும் படைக்கலம் கொண்டு முன்வந்து பின் மறையும் துணையென எண்ணினர் ஆயர். அக்கணம் வரை ஏற்றும் பழித்தும் ஆயிரம் ஆயிரம் சொல் கொண்டு அவனை மட்டுமே உளம் சூழ்ந்திருந்தனர் அனைவரும் என அக்கணம் தெரிந்தது. அவனையன்றி எவரையும் அவர்கள் ஆழம் ஏற்றிருக்கவில்லை என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் அறிந்து நின்ற தருணம்.

புரவிக்குளம்புகள் துடி தாளம் எழுப்பி அணுகி வர ஆயர் குடியெங்கும் ஆழ்ந்த அமைதி பரவியது. தேன்களிம்பு போல அனைத்து ஓசைகளையும் மூடிய அமைதியில் அக்குளம்படி மட்டும் தொட்டுத் தொட்டு நெருங்கிவந்தது. நீள் முகம் திருப்பி மூச்சிழுத்து குஞ்சி மயிர்குலைத்து முன்வலக்காலை சற்று தூக்கி செம்புரவி நின்றது. மேலும் இரு குளம்படிகள் வைத்து இழுபட்ட கடிவாளத்திற்கு தலை வளைத்து செருக்கடித்து நின்ற புரவியை மெல்லத்தட்டி அமைதிகொள்ளச்செய்தபடி அவன் குதித்திறங்கினான். தொடர்ந்து வந்த வெண்புரவி விரைவழிந்து பின்னால் வந்து நின்றது. அதிலிருந்த கருங்கரடி இறங்காமல் மின்னும் சிறு விழிகளால் நோக்கி அசையாதிருந்தது. வெறும் விழிகளென அசைவற்ற இதழ்களென மெய்ப்புற்ற உடல்களென சூழ்ந்திருந்த ஆயரை நோக்கி அவன் கேட்டான் ”மூத்தோரே! எங்குளார் உங்கள் அரசர்?”

ஒரு கணமேனும் அவன் திரும்பி அவளை நோக்கவில்லை. அதை உணர்ந்து நெஞ்சதிர்ந்து திரும்பி நோக்கிய ஆய்ச்சியர் ஒரு கணம் கூட அவளும் அவனை நோக்கி திரும்பவில்லை என்று கண்டனர். அவன் விழி ஆயரில்லம் நோக்க அவளோ அலையெழு யமுனை பெருவிரிவு நோக்கி அக்கணம் அமர்ந்தது போல் இருந்தாள். மூதாயர் ஒருவர் முன்வந்து, ”இளையோனே! நீ வரும் செய்தியறிந்தோம். உனக்கென மன்று கூடி அங்கிருக்கிறார் எம் குடி மூத்தோர். அவையமர்ந்திருக்கிறார் அரசர்” என்றார். "அரசரை வழுத்துகிறேன் யாதவரே" என்றபின் திரும்பி கரடியிடம் "அய்யனே, இது ஆயர்மன்று. தங்கள் சொல் இங்கு திகழட்டும். வருக!” என்று சொல்லி அவன் நடந்தான்.

இருமருங்கும் கூடி நின்ற ஆயர் அவன் கால் பட்ட மண்ணை விழிகளால் ஒற்றி ஒற்றி தொடர்ந்தனர். அவன் உடல் தொட்ட காற்றை தங்கள் ஆகம் தழுவப் பெற்று சிலிர்த்தனர். ஏன் விழைந்தோம் இவனை என மயங்கினர். ஏனித்தனை வெறுத்தோம் இவனை என நெஞ்சழிந்தனர். விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் ஒன்றென அவனை எப்போதும் அறிந்ததை அக்கணம் தெளிந்தனர். நாண் இறுகிய வில் என செல்லும் அவன் காலடிகளைத் தொடர்ந்து சென்ற இளையோர் அவன் அருகே செல்லவோ சொல்லெடுக்கவோ துணியவில்லை. மன்று கூடிய ஆயர்குடி மண்டபத்தின் வாயிலில் சென்று நின்றான். உள்ளிருந்து இறங்கி வந்த கிருஷ்ணசிலையின் தலைவர் பிரகதர் அவனை வணங்கி, “இளைய யாதவருக்கு அந்தகக்குடி தலை வணங்குகிறது. எம் இளவஞ்சி விடுத்த வஞ்சினம் இங்குளது. தங்கள் செயல் நாடி ஆயர் மன்று அமைந்துளது” என்றார்.

”ஆம்! அதற்கெனெவே வந்தேன்” என்று சொல்லி அவன் அதன் ஏழு படிகளை ஏறி அவை நுழைந்தான். மன்றமர்ந்திருந்த முதியோர் அவன் காலடி கண்டதும் ஒருங்கு என எழுந்து தங்கள் வளைதடிகளைத் தூக்கி ”வெல்க, யாதவர் குடி! வெல்க, ஆழி வெண்சங்கு அலைகடல் நிறத்தோன்! அவன் அமர்ந்த பெருவாயில்புரம்!” என்று குரலெழுப்பினர். இரு கை கூப்பி அவன் நடக்க பின்னால் கரடி தடித்த பெருங்கால்களை வைத்து கைகளை ஆட்டி நடந்தது. மன்று நடுவே அரசபீடத்தில் அமர்ந்திருந்த சத்ராஜித் அவனை விழி தூக்கி நோக்கவில்லை. அசைவற்றவர் போல, ஒரு கணம் உயிர் துறந்தவர் போல அங்கிருந்தார். அவர் முன் சென்று நின்று வணங்கி “அரசே! தங்கள் இளங்குமரி விடுத்த செய்தியை அமைச்சர் ஓலை வழியாக அறிந்தேன் அவ்வஞ்சினம் நிறைவேற்ற காடு புகுந்து உங்கள் குலமணியை கொண்டுவந்துள்ளேன். பெறுக!” என்றுரைத்து தன் இடைக் கச்சையை அவிழ்த்தான். மலைச்சருகில் பொதிந்து அங்கு வைத்திருந்த சியமந்தகத்தை எடுத்து அவர் முன் நீட்டினான்.

அவன் கையிலிருந்தது விண்ணின் விழி. உலகு புரக்கும் நகைப்பின் ஒரு துளி. அதை நோக்கி விழி இமை சலிக்காது அமர்ந்திருந்தார் சத்ராஜித். கையை நீட்டி "அரசே, உமது இது, கொள்க!” என்று அவன் சொன்னான். உலர்ந்த நாவை இதழ் வருடிச் செல்ல தொண்டை முழை அசைந்திறங்க மூச்சிழுத்து அமைந்தபின் “இளையோனே!” என முனகினார் சத்ராஜித். மேலும் சொல் எழாமல் கையை மட்டும் மெல்ல அசைத்தார். "மூத்தோரே! உங்கள் குடி திகழ்ந்த இவ்விழியை ஒருபோதும் விழைந்தவனல்ல. ஆயின் ஒவ்வொரு குடியும் தனிப்பெருமை பேசுவதை துவாரகையின் யாதவர் பெருமன்றம் ஒரு போதும் ஒப்பலாகாது. பன்னிரு குலமும் எண்ணிலா குடியும் கொண்ட யாதவப் பெருந்திரள் ஆழி, வெண்சங்கு இரண்டையும் ஏற்று ஆவளர்குன்று ஒன்றே இறையெனத் தொழுது ஒன்றானால் அன்றி இங்கு வென்று நகர் கொண்டு வாழ முடியாதென்றறிக! அதன் பொருட்டே துவாரகையின் நெறிகள் அமைந்தன. இம்மணியை நான் கவரவில்லை. கவர்ந்தது இவர்” என்று திரும்பி கரடியை சுட்டிக் காட்டினான்.

தலையணிந்த கரடி முக கவசத்தைக் கழற்றி கையில் எடுத்து புண்பட்ட காலை மெல்ல அசைத்து அருகணைந்து ஜாம்பவான் சொன்னார் “யாதவரே! இம்மணி என்னிடமிருந்தது. இதை கவர்ந்து சென்ற சிம்மத்தின் குகையிலிருந்து நான் பெற்றேன். எவருடையதென்று அறிந்திலேன். எம்மைந்தர் விளையாடும் விழிமணியாக இதை அளித்தேன். என் மகளின் தோளை இது அணிசெய்தது. என்னை வென்று பரிசிலென இம்மணி கைக்கொண்டவர் இவர். இது உங்கள் குலமணி என்றறிந்தேன், கொள்க!” என்றார். அவர் முகத்தை நோக்கும்பொருட்டு சாளரங்களில் யாதவர் நெருங்கி அழுந்தினர். மூச்சொலிகள் எழுந்து சூழ்ந்தன. பாணன் ஒருவன் "ராகவராமன் தழுவிய தோள்கள்" என்றான். "ஆம், இலங்கை எறிந்த கால்" என்றார் இன்னொருவர்.

சத்ராஜித் அப்போதும் கை நீட்டாது தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவர் விழி நோக்கி அவன் சொன்னான் "அந்தகர்க்கு அரசே! நெடுங்காலம் முன்பு உங்கள் குலமூதாதை கொண்ட விழி இது. தான் கண்டதை தன் குலமும் காணும் பொருட்டு இவ்விழியை அளித்து அவர் சென்றார். மூதாதை விழி நெஞ்சில் துலங்குவதென்பது பெரும் பேறு. அவ்விழி கொண்டீர். அந்நோக்கை இழந்தீர். உங்கள் இளையோன் கொண்ட விழைவு இம்மணியை கதிர் மறைக்கும் முகிலென இருளச்செய்தது. இனி இதன் ஒளி திறக்கட்டும். அந்தகர் இனி ஆவதென்ன என்று அறிவதாக!” என்று அளித்தான். சினம் திகழ்ந்த விழி தூக்கி சத்ராஜித் சொன்னார் "இம்மணியுடன் இம்மன்றுக்கு நீர் வருவதென்பது என் மகள் உரைத்த வஞ்சினம் நிறைவேறுவதற்காக. அவள் உயிர் விழைவதால் இதை நான் ஒப்புகிறேன். ஆனால் பிறிதொருவன் வென்று கொண்டு வந்த பொருளை எனக்குரியதென பெறுமளவுக்கு இழிந்ததல்ல அந்தகக்குலம். உம்மிடம் தோள் கோர்த்து மற்போரிட்டு இதைப்பெறுவேனென்றால் எனக்குப் பெருமை. உம் கொடையென கொள்ள நான் கை தாழும் குலத்தவனல்ல. கன்று மேய்த்து காட்டருகே வாழினும் அரசன்.”

புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் ”அரசே! இது கொடை அல்ல. உங்கள் குல கன்னியை பெரும்பொருட்டு நான் அளிக்கும் மகட்செல்வம். கன்யாசுல்கமாக இதைப்பெறுக!” ஒரு கணமும் அதை நோக்கி விழி திருப்பாமல் சத்ராஜித் சொன்னார் “இளையோனே! கன்யாசுல்கம் கன்னியை கொள்ள வந்த மணமகனால் அளிக்கப்படுவதல்ல. அவன் சுற்றம் சூழ வந்திருந்து தன் தந்தையின் வழியாக அளிக்கப்படுவது. உமது தந்தை இங்கு வரட்டும். அவர் கையில் இருந்து இதை பெறுகிறேன்” என்றார். "இல்லையேல் என் மகளை காந்தருவமாக கவர்ந்து செல்க! உம்மிடம் போர்கொண்டு நேர்நிற்க எம்மவரில் எவரும் இல்லை." அவன் சிரித்து "என்னுடன் நிகர்நிற்க உங்கள் மகளால் முடியும் அரசே. கன்யாசுல்கம் அளித்து கைகொள்ள அவள் சொல்லி மீண்டாள். அதுவன்றி எதற்கும் அவள் ஒப்பமாட்டாள்" என்றான். "அவ்வண்ணமென்றால் உங்கள் தந்தை இங்கு வரட்டும்" என்று சொல்லி சத்ராஜித் எழுந்தார்.

யாதவர் சத்ராஜித்தை நோக்கி சினந்து சீறியபடி வளைதடிகளுடன் சூழ்ந்தனர். பிரமத குலத்தலைவர் ”அரசே! தாங்கள் பேசும் சொற்களை எண்ணியிருக்கிறீர்களா? எவரிடம் சொல்கிறீர்? துவாரகையில் நாம் இழந்த அத்தருணம் நல்லூழால் இதோ மீண்டு வந்துள்ளது. இதை மீண்டும் இழப்போமா?” என்றார். சத்ராஜித் விழி தாழ்த்தியவண்ணம் "ஆம். அறிவேன். ஆயினும் என் செயலால் அந்தகக் குலம் கொடி தாழ்த்தியது என்றிருக்கக்கூடாது” என்றபின் சினம் நிறைந்த விழிகளைத்தூக்கி "இளைய யாதவரே! இனி மறு சொல் இல்லை. இம்மணியை உங்கள் தந்தை கன்யாசுல்கமாக அளிக்கட்டும். அதுவரை இது நீர் அளிக்கும் கொடையே. வீரசேனர் கொடிவழி வந்தவன் நான். என் கை தொடாது இதை” என்றார்.

நீல நீள்வட்ட முகத்தில் பால் நுரையென புன்னகை விரிய ”ஆம். அது முறையே” என்றான் இளைய யாதவன். பின்னர் திரும்பி அருகில் நின்ற ஜாம்பவானிடம் "மூத்தாரே! முன்பு வில்லேந்தி உங்கள் புறம் புகுந்த ராகவ ராமன் சொன்ன ஒரு சொல் உள்ளது. உங்கள் குல மூதாதை அவன் தந்தை தசரதனின் இணையன். எனவே உங்கள் பாதம் தொட்டு தந்தை என நிகர் வைப்பதாக அவன் உரைத்தான். அவனே நான் என்று கொள்க! இந்த யுகத்தில் இன்று என் தந்தை வடிவாக நின்றருள்க!” விழி நெகிழ்ந்து கை கூப்பி ஜாம்பவான் சொன்னார் "ஆம் இளையோனே, உள்ளத்தான் நீ என் மைந்தன். உன் கால் என் நெஞ்சில் அழுந்தியபோது என் அகம் அறிந்த பேருவகையால் அதை உணர்ந்தேன். என் குலம் அவன் நீலச்சேவடியால் வாழ்த்தப்பட்டது. இன்று மறுமுறையும் அவ்வாழ்த்து கொண்டது. இளையோனே! என் மைந்தன் என்று அமர்க! இம்மணியை உன் பொருட்டு இவருக்கு கன்யாசுல்கமென அளிக்கிறேன்" என்று தன் பெருங்கரங்களை நீட்டி அந்த மணியைப் பெற்று திரும்பி சத்ராஜித்திடம் வழங்கினார்.

முழங்கும் குரலில் ”யாதவர்க்கரசே! என் இள மைந்தனும் துவாரகைக்கு அரசனும் இப்புவிக்கெல்லாம் இறைவனுமாகிய இந்நீலன் உம்மகளைக் கொள்ள இதோ தொல்விழியெனச்சுடரும் இம்மணியை கன்யாசுல்கமாக அளிக்கிறேன். கொள்க!” என்றார். மெய் விதிர்ப்புற்று யாதவர் மூச்சொலி எழுப்பினர். பின்பு ஒருவர் "வாழ்க! யாதவர் குலம் வாழ்க!" என்று கூவினார். எழுந்து இருகை நீட்டி அந்த மணியை பெற்றுக் கொண்டார் சத்ராஜித். தன் சென்னியில் அதைச்சூடி இருவிழிகளில் ஒற்றி நெஞ்சோடு அழுத்திக் கொண்டார். கண்ணீர் வழியும் கன்னங்களுடன் "ஆம். இழந்தது என் குடிக்கு திரும்ப வந்தது. ஆனால் இதை என் நெஞ்சணியும் துணிவு எனக்கில்லை. இளையோனே! நீர் அறியாத ஒன்றில்லை. இம்மணியை என் இளையவன் தோளிலிட்டு அனுப்புகையில் அவன் திரும்பமாட்டான் என நான் உள்ளூர அறிந்திருந்தேன்” என்றார். மாறாப் புன்னகையுடன் "ஆழம் எப்போதும் அறிந்திருக்கிறது” என்று அவன் சொன்னான்.

கண்ணீர் வழிய இடறும் குரலில் சத்ராஜித் கேட்டார் "இம்மன்று நின்று கேட்கிறேன் இளையோனே, இங்கு குருதியாக கண்ணீராகத் திகழ்வது எது? உறவாக வஞ்சமாக நடிப்பது எது? எங்கிருக்கிறேன்? ஏன் இங்கிருக்கிறேன்?” அவர் முன் ஒளிதிகழ் விழியுடன் நின்று இளைய யாதவன் சொன்னான் “தந்தையிலும் மைந்தர்மேல் வஞ்சம் என ஒன்று உறைகிறது எனில் தமையனிடம் இருக்காதா? இருளை அறிய யோகியரே துணிவுள்ளவர். இருளில் மின்னும் ஒளியை மட்டுமே காண்க!" அவர் கைகளைப்பற்றி "அந்தகரே, இன்று பாதியென ஆனீர். உங்கள் இளையோன் நிறைத்த இடமெல்லாம் எஞ்சியுள்ளது. கண்ணீரால் பின் தவத்தால் அதை நிரப்புக! அன்றறிவீர். அப்போது நிறைவீர்” என்றான்.

சியமந்தகத்தை அவனிடம் திரும்ப நீட்டி சத்ராஜித் சொன்னார் "இளையவனே, இந்த மணி என்னை அச்சுறுத்துகிறது. அனைத்தையும் அறியும் விழியொன்றுடன் எவரும் வாழமுடியாது. இம்மணியை இனி நான் என் குலத்தில் வைத்திருக்கலாகாது. அந்தகக் குலம் ஒன்று இனி தனித்திருக்கத் தேவையில்லை. என் குடியும் என் குலமும் இதன் குடிகளனைத்தும் கடல் சேரும் நதியென விருஷ்ணி குலத்தில் இணையட்டும். என் மகளை கொள்க! இதை நான் அளிக்கும் பெண் செல்வமாக ஏற்றருள்க!” இளையவன் இரு கைகூப்பி சொன்னான் ”அரசே! பதினான்கு நாட்கள் அதோ கடம்ப மரத்தடியில் ஊண் துறந்து உறக்கிழந்து அமர்ந்திருப்பவள் என் நெஞ்சு வாழ் நிலைமகள். இம்மணியை கொள்வேனென்றால் அவளுக்கு நிகரென ஒன்றை வைத்தவனாவேன். அறிக! இப்புவியும் இதன் மேல் கவிந்த அவ்விண்ணும் விண்ணாளும் தேவர்களும் தெய்வங்களும் எதுவொன்றும் எந்நெஞ்சில் அவளுக்கிணையென வாழ்வதில்லை. அவளுடன் கொள்ளத்தக்க ஒன்றை அப்பரம்பொருளும் படைத்ததில்லை."

அறியாது "ஆம் ஆம் ஆம்" என்றனர் பாணர். யாழ் ஒன்றை மீட்டி "திருவாழ் மார்பன் திருவாழ்க!" என்றார் முதுபாணர் ஒருவர். "அந்தகர்க்கரசே, இந்த மணி உங்கள் குடியிலேயே அமையட்டும். இவ்விழி உங்கள் இல்லத்தில் உறங்காதிருக்கும். இதன் திசை தேரும் வழிகள் இனியும் நீளுமென்றறிக!” சத்ராஜித் இரு கரத்தாலும் நடுங்கும் சியமந்தகத்தை தன் மடிமீது வைத்து அரச பீடத்தில் கால் தளர்ந்து அமர்ந்தார். அவனைச் சூழ்ந்து நின்று யாதவர் ஒவ்வொருவரும் ஒன்று சொல்ல விழைந்தனர். எவரும் சொல்லெடுக்கவொண்ணாது வெறுமனே நின்றனர். அவன் திரும்பி ஜாம்பவானிடம் "எந்தையே, இது நல்தருணம். எனக்கென இத்திருமகளை கை கொண்டு அளியுங்கள்” என்றான்.

அந்தகர்களின் ஏழு குடித்தலைவர்கள் தங்கள் முதியகால்கள் நடுங்க "அன்னையே!" என்று கூவியபடி மன்றைவிட்டு வெளியே ஓடினர். கடம்ப மரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவளிடம் சென்று வணங்கி ”அன்னையே, உன் வஞ்சினம் நிறைந்தது. நீ கோரிய இந்திரநீல விழிமணியுடன் உன் தலைவன் வந்துளான். உன் தந்தையின் குல மூத்தார் என உன் கை பற்றி அளிக்க இங்கு வந்துள்ளோம். எழுக!” என்றனர். கடம்ப மரத்தின் வேர்க்குவைக்குள் உடலொடுங்கி விழி தழைந்து அமர்ந்திருந்த மஹதி எழுந்து அவள் கைகளைப்பற்றி ”எழுந்திரு குழந்தை! இன்று உன் மண நாள்” என்றாள். பாமை தன்னை உணர்ந்து விழி மலர்ந்தபோது யமுனை சரிவேறி வந்த காற்றில் இலை சிலிர்த்து கிளை அசைந்தது. மலர் பொழிந்தது நீலக் கடம்பு. குனிந்து அதிலொரு மலரை எடுத்து வலக்கையில் வைத்தபடி எழுந்தாள்.

குழல் இளம்காற்றில் உலைய, சுற்றி சற்றே வழிந்த ஆடை நெளிய கனவில் மலர்ந்த விழிதூக்கி அங்கே தன்னைச் சூழ்ந்திருந்த தன் குடியை நோக்கி புன்னகைத்தாள். நெகிழ்ந்து உளம் பொங்கி ஆர்ப்பரித்தனர் யாதவர். மங்கல இசை பொழிந்து நடனமிட்டனர் பாணர். மூதாய்ச்சியர் இரு கை தூக்கி "திருமகள் பொலிக! உலகு பசுமை கொள்க! நீர் பெருகுக! காடு பூக்கட்டும், கன்று மடிகள் நிறையட்டும்" என்று வாழ்த்தினர். வண்ணச் சீரடி மண்மகள் மேல் வைத்து மெல்ல ஏகி அவள் அவையமர்ந்திருந்த ஆயர்மன்று நோக்கி சென்றாள். ஏழு குடித்தலைவர்களும் அவளுக்கு இருபக்கமும் அகம்படி வந்தனர். ஆடியும் பாடியும் கண்ணீர் உகுத்து ஆயரும் பாணரும் அவளை தொடர்ந்தனர். மன்று மேடையில் ஏறும் ஏழு படிகளில் முதல் படியில் அவள் கால் வைத்தபோது குரவை எழுந்து சூழ்ந்தது. ஏழு விண்ணுலகங்கள் ஒவ்வொரு படியாக மாறி உள்ளங்கை நீட்டி அவள் பாதங்களைப் பெற்று மேலெடுத்தன. ஏழாம் விண்ணில் முகில் மேல் காலோச்சி நடந்து அவள் அவனை சென்றடைந்தாள்.

சத்ராஜித் நெடுநாட்களுக்குப்பின் விழி தூக்கி அவளை நோக்கினார். முதற்கணம் ’இவளா! இத்தனை நாள் இவளா என் மகள்!’ என்று துணுக்குற்றது அவர் உள்ளம். ஒரு போதும் அவர் அறிந்திராத ஒருத்தி அங்கு நின்றிருந்தாள். வளர்பிறைக்காலமெல்லாம் உணவருந்தாதவள், விழிமயங்காதவள், ஒரு கணமும் சோர்வுறாத விழிகளுடன் மலர்ந்து அங்கே நின்றிருந்தாள். "வருக!” என்றார் குல மூதாதை. ”வருக கன்னி” என்றார் குலப் பூசகர். ”இத்தருணம் மங்கலம் கொண்டது. மலர் இதழ் மொக்கவிழ தன் கணத்தை தான் கண்டடைகிறது என்பர் மூத்தோர். இது விண்ணவர் விழையும் ஒரு அருமலர்க்கணம்” என்றார். நிமிர்ந்த தலையுடன் புன்னகை திகழும் விழிகளுடன் நடந்து தன் தந்தை அருகே வந்து அவருக்கு வலப்பக்கம் நின்றாள்.

"அந்தகக் குல இளவரசி, உங்களை வேட்கும் பொருட்டு விருஷ்ணி குலத்து இவ்விளையோன் சியமந்தகமென்னும் ஒளி மணியை கன்யாசுல்கமாக அளித்துள்ளான். அவன் தந்தை தங்கள் கரம் கோரி இங்கு நிற்கிறார். இவனை நீங்கள் கொள்வீர்களென்றால் ஒரு மலரெடுத்து உங்கள் தந்தையின் வலக்கையில் அளியுங்கள்” என்றார் குலப்பூசகர். முதல் முறை என விழி தூக்கி அவள் அவனை நோக்கினாள். அவன் விழிகளை நேர்கொண்டு சந்தித்து இதழ் மலர்ந்து புன்னகை செய்தாள். ஒரு கணம் அவன் உளம் நாணி விழி சரித்தான். சிவந்த நீள் விரல்களில் இருந்த கடம்ப மலரை அவள் அவர் கையிலளித்து ”ஆம், அந்தகக்குலத்து யாதவப் பெண்ணாகிய நான் இவரை என் கொழுநனாகக் கொள்கிறேன். எந்நிலையிலும் இவருக்கு நிகர் நின்று அறத்துணைவியாவேன்” என்றாள். சூழ்ந்திருந்த யாதவர் ”ஓம்! அவ்வாறே ஆகுக” என்று பெருங்குரலெடுத்து வாழ்த்தினர்.

பாணர் இசைத்த மங்கலப் பேரிசை மன்றைச் சூழ்ந்து சுவர்களை அதிரச் செய்தது. குரவையொலியும் வாழ்த்தொலியும் எழுந்து அதிர்ந்தன. சத்ராஜித் தன் வலக்கையால் அவள் வலக்கையை பற்றினார். திரும்பி ஜாம்பவானிடம் "பெருங்கரடி குலத்து மூத்தாரே! இதோ என் மகளை உம் மைந்தர் யாதவ கிருஷ்ணனுக்கு மனைத்துணையாக அளிக்கிறேன். நலம் சூழ்க! திரு வளர்க! மூதாதையர் மகிழ்க! தெய்வங்கள் நிறைக! விண் பொலிக! மண் விளைக!” என்று சொல்லி அவர் கையில் அளித்தார். தன் வலக்கையை நீட்டி பாமாவின் கரம் பற்றிய ஜாம்பவான், தலை வணங்கி ”பெரும் திருவை மருமகள் என அடைந்தேன். இத்தருணம் என் மூதாதையரால் வாழ்த்தப்பட்டது” என்றார். பின் அவள் கரத்தை அவன் கரத்தைப் பற்றி அதில் வைத்து அளித்து "விருஷ்ணிகுலத்து இளையோனே, இவளை உன் அறத் துணையாகக் கொள்க! இவள் வாழும் நாளெலாம் இறைவனாக இவள் நெஞ்சில் வாழ்க!” என்றார். யாதவர் களிக்குரல் எழுப்பி கொந்தளிக்க மங்கல இசையொலியும் வாழ்த்தொலியும் குரவையொலியும் சூழ இளையவன் அவள் கரம் பற்றி தன் இடப்பக்கம் நிறுத்திக் கொண்டான்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 7

அவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள் உணராமல் இருந்ததில்லை என்று. அவ்விரல்கள் தொட்டு வரைந்த சித்திரம் தன்னுடல் என்று. அவ்விரல்கள் வருடி குழைந்து வனைந்த கலம் தன் உடல் என்று. மன்று நின்ற அவன் இடப்பக்கம் அவனுக்கிணையான உயரத்துடன் அவனுடல் நிகர்த்த உடலுடன் தலை தூக்கி விழிநிலைத்து புன்னகைத்து அவள் நின்றாள். சூழ்ந்த பின்நிரையில் எவரோ “பெண்ணெனில் நாணம் வேண்டாமோ?” என்றார். பிறிது எவரோ ”யாதவ குல மூதன்னையர் எங்கும் நாணியதில்லை” என்று மறுமொழி சொன்னார். அவள் இதழ்களில் நின்ற புன்னகையை நோக்கி "வென்றவள் அவள். வெல்லப்பட்டவன் அவன்" என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. இளைய ஆய்ச்சியர் வாய்பொத்தி நகையடக்கிக்கொண்டனர்.

சத்ராஜித் அவர்கள் இருவரையும் தலைதொட்டு வாழ்த்தி “மணியில் ஒளியென இவள் உம்மில் திகழட்டும் இளையோனே! நீங்கள் இருவரும் கொண்ட இந்நிறைவு முன் நிற்கையில் ஒன்றை அறிகிறேன். நான் எளியவன். இங்கு நிகழும் ஒவ்வொன்றும் எனக்கப்பால் ஏதோ எனத் தன்னை நிகழ்த்துகிறது. ஆயினும் இரு கைதூக்கி உங்கள் இருவரையும் தலை தொட்டு வாழ்த்தும் தகுதியை இவளை மகளெனப் பெற்றேன் என்பதனால் மட்டுமே அடைகிறேன். அப்பேறுக்கென மூதாதையரை மீண்டும் இத்தருணம் வணங்குகிறேன். நீடூழி வாழ்க!” என்றார். அச்சொல் முடிக்கும் முன்னரே இடக்காலிலிருந்து உடல் எங்கும் ஏறிய விதிர்ப்பால் நிலையழிந்து விழப்போனவரை அமைச்சர் பற்றிக் கொண்டார்.

குலப்பூசகர் முன் வந்து ”இளையோனே! உன் கன்னியுடன் வந்து எம் குடி மூதன்னையரை வணங்குக! எங்கள் மணமுறைகளை நிறைவு செய்க!” என்றார். அவள் கரம் பற்றி மூத்தோர் சூழ்ந்த அம்மன்றில் ஏழு அடி வைத்து மணநிறைவு செய்து அவன் நின்றான். இளம்பாணர் ஒருவர் இரு மலர் மாலைகளை கொண்டுவந்து அவர்களிடம் அளித்தார். அவற்றை தோள் மாறி மும்முறை சூட்டிக் கொண்டனர். மங்கலமுதுபெண்டிர் மூவர் தாலத்தில் எட்டு மங்கலங்களுடன் கொண்டுவந்த மஞ்சள் சரடில் கருமணி கோத்த மங்கல நாணை அவன் அவள் கழுத்தில் கட்டினான். அவள் இடையை தன் இடக்கையால் வளைத்து சுட்டு விரலால் மெல்லிய உந்திச் சுழி தொட்டு யாதவர் தம் குலம் வகுத்த மணமுறைச் சொல்லை சொன்னான். "இந்த இனிய நிலம் மழை கொள்வதாக! இங்கு அழகிய பசும்புற்கள் எழுவதாக! முகில் கூட்டம் போல் பரவிப்பெருகிச்செல்லும் கன்றுகள் இதை உண்ணட்டும். அமுத மழையென பசும்பால் பெருகட்டும். பாலொளியில் இப்புவி தழைக்கட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!”

பின் இருவரும் கைகள் பற்றி யாதவர் குடிசூழச் சென்று குறுங்காட்டின் விளிம்பில் கற்பீடத்தில் உருளைக் கற்களென விழி சூடி மலரணிந்து அமர்ந்திருந்த மூதன்னையரை வலம் வந்து வணங்கினர். சிருங்கசிலையின் சத்ரர் தன் வளைகோல் தூக்கி "இன்று அந்தகர் குலத்து மாபெரும் உண்டாட்டு நிகழும். அறிக ஆயரே, இன்று தொடங்கி நிறைவு என இனி ஏதும் இல்லையென அனைவரும் உணரும் வரை உண்டாட்டு மட்டுமே இங்கு நீளும்” என்று கூவ யாதவர் கை தூக்கி ஆர்ப்பரித்து சிரித்தனர். உண்டாட்டுக்கென ஊனும் குருதியும் ஒருக்க மூதாயர் கத்திகளுடன் விரைந்தனர். நெய்ப்புரைகள் நோக்கி மூதாய்ச்சியர் சென்றனர். அடுமனையாளர்கள் நூற்றுவர் செங்கல் அடுக்கி அடுப்பு கூட்டத் தொடங்கினர். ”கடி மணம் கொண்ட காதலர் இருவரும் நீடூழி வாழவென்று உண்ணுவோம்” என்று பாணன் யாழ் மீட்டி தன் சொல்லெடுத்தான்.

அவர்கள் விழிகலைந்த பொழுதில் அவன் திரும்பி அவள் விழிகளை நோக்கி மெல்ல "உன் வஞ்சினத்தின் பொருட்டே வந்தேன்” என்றான். சினந்து சிறுமூக்கு அசைய "இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்களா?” என்றாள். “வருக என நீ அழைத்தாக வேண்டும், அதற்கென்று காத்திருந்தேன்” என்றான். முகம் கனல்கொள்ள உடல் பதற எழுந்த பெரும் சினத்தால் அவள் அவன் கையை உதறி ”நான் அழைத்திருக்காவிடில் வந்திருக்க மாட்டீர்களா?” என்றாள். சிரித்து “ஆம். அதிலென்ன ஐயம்?” என்றான். நாகமென மூச்சொலிக்க "நான் அழைத்ததை மீளப் பெற்றுக் கொள்கிறேன். விட்டுச் செல்க!” என்றாள். நெஞ்சிலணிந்த மலர் ஆரம் சினங்கொண்டு திரும்பிய தோளுக்குக் கீழே ஒசிந்த இடமுலை மேல் இழைய "எவராலும் நிறைக்கப்படுபவளல்ல நான். என் நிறைநிலைக்கு இறைவனும் தேவையில்லை!” என்றாள்.

அவன் அவள் தோளைத் தொட்டு ”என்ன சினம் இது பாமா! ஒரு ஆணென உன் அழைப்பை நான் எதிர்நோக்கலாகாதா?” என்றான். அவன் கையை தன் இடக்கையால் தட்டிவிட்டு "என் பெண்மையை கொள்வதென்றால் என் அழைப்பை ஏற்றல்ல, உங்கள் விழைவை உணர்ந்து நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்றாள். ”என் விழைவுதான் உன் அழைப்பாயிற்று” என்றான். அவள் தன் கன்னம் தொட வந்த அவன் கையை முகம் திருப்பி விலக்கி ”வீண் சொல் வேண்டியதில்லை. என் அழகை விரும்பி வருக! என் காதலை நாடி வருக! என் குலம் நாடி வந்திருந்தால் என்னுள் வாழும் தெய்வங்கள் இழிவடைகிறார்கள்" என்றாள். ”ஆம் தேவி, உன் அழகின்பொருட்டே வந்தேன். உன் காதலுக்காகவே வந்தேன்" என்றான். "காமம் இருந்தால் காதல்கொண்டிருந்தால் ஏன் அழைப்புக்கென காத்திருந்தீர்?" என்று அவள் குரல் எழுப்பிக் கேட்டாள். "உன் கேள்விகளுக்கு மறுமொழிசொல்லும் கலை அறியேன். என்மேல் கருணைகொள்க!" என்று அவன் கைகூப்பினான்.

அருகே கூடியிருந்த மூதாய்ச்சியர் வாய் பொத்திச் சிரித்து ”முதல் பூசல் இன்றே தொடங்கியிருக்கிறதா?” என்றனர். சீறும் விழிகளை அவர்களை நோக்கித்திருப்பி ”ஆம், அடிபணியாத ஆண்மகனை நான் அணுக விடேன்” என்றாள் பாமா. அவன் சிரித்து ”அடிபணியக் கற்றவன் சிறந்த காதலன் என்று அறிவேன்” என்றான். மூதன்னை ஒருத்தி ”அவ்வண்ணமெனில், அடி பணிக யாதவனே!” என்றாள். ”அவ்வாறே ஆகுக!” என்றுரைத்து அங்கேயே மண்டியிட்டு அவள் கால்களைத் தொட்டு தன் முடி வைத்து வணங்கி, ”உன் காதலன்றி பிறிதெதையும் நாடேன்” என்றான். சூழ்ந்திருந்த யாதவர் திகைத்துத் திரும்பி நோக்க பாமா புன்னகைத்தாள். யாதவர் பெருங்குரலெடுத்து நகைக்க அங்கெங்கும் வெண் குருவிக்கூட்டம் ஒன்று வானில் சுழல்வது போல் பல்லாயிரம் புன்னகைகள் எழுந்தன.

முகம் சுளித்து மஹதி அவர்கள் அருகே வந்தாள். "என்ன இது? பெண்ணே, நீ நகையாடலுக்காக என்றாலும் இதைச்செய்யலாமா? மண்ணாளும் மன்னனின் முடி அது. பெண்முன் பணியலாமா?" என்றாள். "இது பெண்ணல்ல அன்னையே, பெருந்திரு. இம்மண்ணில் நான் நகராக செல்வமாக வெற்றியாக புகழாக நாடுவது அதைமட்டுமே" என்றான் இளைய யாதவன். "இம்மலர்ப்பாதங்கள் என் சென்னியில் என்றுமிருப்பின் அருள்கொண்டவன் நான்."

"என்ன பேச்சு இது இளையோனே? முதல் கயிறை விட்டவன் கன்றை எப்போதைக்கும் என விட்டவனே என்பார் ஆயர்" என்றாள் மஹதி. அவனோ முழுதும் விட்டு அவள் காலடியில் உதிர்ந்தவன் என்றிருந்தான். அவன் தோள் தொட்டு தூக்கி தன் குழலில் மலரென சூடிக் கொண்டவள் போலிருந்தாள் அவள். குலமுறை பூசனைக்கு கூட வந்த ஆயர் மகளிர் அவரிருவரையும் நோக்கி நோக்கி நகையாடினர். ”விருஷ்ணி குலத்தோனே! நீ விழுந்துவிட்டாய். இனி எஞ்சிய வாழ்நாளெல்லாம் அக்கால்களே உனக்கு கதியென்றாகும்” என்றாள் முதுமகள். ”அவனை அள்ளி உன் கழுத்திலொரு மணியாரமாக வைத்துக்கொள். இனி அங்கு நெளிவதே அவன் காதலென்றாகும்” என்றாள் இன்னொருத்தி.

சிரித்து கைப்பாணி கொட்டி அவளைச் சூழ்ந்து களியாடினர் ஆய்ச்சியர். அவளோ சிறு சினம் சிவந்த முகத்துடன் அவனை நோக்கி, “மாயனே, உன் ஆடலை இவர் அறிந்திருக்கிறார்கள் போலும். இல்லையேல் ஏன் இச்சொற்களை சொல்கிறார்கள்?” என்றாள். ”எவ்வாடல்?” என்று அவன் குனிந்து கேட்டான். ”எத்தனை பெண்களை அறிவாய் நீ? இப்போதே சொல்!” என்றாள் அவள். புன்னகையுடன் ”பெண்கள் என்னை அறிந்துள்ளார்கள். நானென்ன செய்வேன்?” என்றான். ”கீழோனே, இப்பசப்புகள் என்னிடம் தேவையில்லை. விலகு!” என்று தன் கரம் பற்றிய அவன் கையை உதறி முகம் திருப்பி தோள் விலகினாள்.

மீண்டும் அவள் கரம் பற்றி அவள் காதில் அவன் சொன்னான் “என்னை அறியும் பெண்களை எல்லாம் நானுமறிவேன். துவாரகையின் சூதர் ஒவ்வொரு வீட்டிலும் அந்திச் சுடரென என் விழி எழுவதாக சொல்கிறார்கள். நீருள் மீன்களென நீந்தி நான் அவர்கள் உடல்கொள்ளும் அழகை நோக்குவதாக பாடுகிறார்கள். நானொன்றறியேன்.” ”நன்று. இன்று இச்சுடர் சான்றாக இதைச் சொல்லுங்கள்! உங்கள் விழி தொடும் முதல் பெண் நான் அல்லவா?” என்று அவள் கேட்டாள். ஒரு கணமும் மாறாப் புன்னகையுடன் “தேவி! ஆண் உடலெங்கும் பூத்திருப்பது அவன் விழியல்லவா? அவன் மொழியிலெல்லாம் திறந்திருப்பது கண் ஒளியல்லவா?” என்றான்.

“சீ, நீ என்ன அரங்கேறிய ஆட்டனா? நேர்வரும் சொல்லுக்கு ஒருபோதும் மறுமொழி சொல்லாதே! சொல்வதெல்லாம் கவிதை. பொருள் பிரித்தால் நஞ்சு!” என்று சொல்லி அவள் திமிறி விலகிச் சென்றாள். அவன் சிரித்துக்கொண்டு நீட்டிய கையில் அவள் மேலாடை சிக்கியது. “நில்! நில் பாமா! இன்று நம் மணநாள். இன்று ஒருநாள் நாம் பூசலிடாதிருப்போம்" என்றான். "விடு என்னை, வீணனே. நீ காதலன் அல்ல. கரந்து வரும் கள்வன்" என இடக்கையால் அதை சுண்டி இழுத்து திரும்பி நடந்து சென்று தன் தோழியர் பின்னே அமர்ந்தாள். பூத்து சிரிக்கும் தோழியர் முகங்கள் நடுவே கடுத்து திரும்பி அமர்ந்திருந்தாள். அவன் முகம் நோக்கி விழிசுருக்கி சிரித்தபின் அவளை நோக்கி நகையாடி "சூரியனைக் கண்டு திரும்பிய தாமரை உண்டோ தோழி!" என்று ஒருத்தி பாட "இது நீலச்சூரியன், களவால் கருமைகொண்டவன். அவனை நான் வெறுக்கிறேன்" என்றாள் பாமா.

“அவ்வாறே ஆகுக!” என சினம் காட்டி திரும்பிச் சென்றான். விட்டுச் செல்லும் அவன் கால்களைக் கண்டதுமே ஒவ்வொரு அடிக்கும் ஒருமுறை என இறந்து பிறந்தாள். எழுந்தோடிச் சென்று அவன் கால்களில் விழவேண்டுமென அகம் எழுந்தாள். ஆயிரம் முறை பறந்தும் அக்கிளையிலேயே அமர்ந்திருந்தாள். அவன் தலை திரும்புவான் என்று விழிகூர்ந்திருந்தாள். சென்று அவன் மறைந்த பின் ஒரு கணம் விசும்பி விழிநீர் சொரிந்து மேலாடை முனை எடுத்து முகம் மறைத்து தலை குனிந்தாள். சூழ்ந்திருந்த ஆய்ச்சியர் மகளிர் “கைபிடித்த மறுகணமே ஊடல் கொண்டு வந்தமர்ந்திருக்கிறாள். இனி நாளும் ஒரு ஊடலென இவள் உறவு வளரும்” என்று களியாடினர். அவள் அச்சொற்களை ஒவ்வொன்றும் காய்ச்சிய அம்புகளென உணர்ந்தாள்.

”நான் ஒரு கணமும் ஊடியதில்லை தோழியரே! என் சிறு கைகளில் இருந்து இந்நீலமணி ஒவ்வொரு கணமும் வழுவுவதை நீர் அறிவீரோ?” என்றாள். நீலக் கடம்பு அவள் மேல் மழைத்துளி என மலருதிர்க்க, நிமிர்ந்த போது அக்கிளை பற்றி உலுக்கி அவள் மேல் கவிந்திருந்த நீல முகத்தைக் கண்டாள். அதிலிருந்த புன்னகை உதிராத சுடர்மலரென நிற்க திரும்பி எழுந்து அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். ஆனால் அதை தன் உடல் நிகழ்த்தாமை அறிந்து சிலையின் விழிகளுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.

அவள் நெற்றியில் விழுந்து, இதழ் சரிந்து, கழுத்தை வருடி முலைக்குவையின் மடிப்புக்குள் விழுந்த மலரை அவன் நோக்க மேலாடையை இழுத்து அதை மூடி தலை குனிந்து உடல் குறுகினாள். அவள் பின் மண்டியிட்டு அமர்ந்து “என்னடி கோபம்?” என்று அவன் கேட்டான். ”கோபமொன்றில்லை. கோபிக்க நான் யார்?” என்று அவள் சொல்ல, “ஏன்? நீ எவரென ஆக வேண்டும்?” என்றான். சினத்துடன் விழி தூக்கி ”நான் விழைவதொன்றே. உன்னைத் தின்று என் உடலாக்க வேண்டும். எனக்கு அப்பால் நீயென ஏதும் எஞ்சியிருக்கலாகாது. நீ விளையாட ஒரு மலர்வனம். நீ விழி துயில ஒரு மாளிகை என் வயிற்றுக்குள் அமைய வேண்டும்” என்றாள். ”ஆம்! நான் விழைவதுவும் அதுவே! உன்னில் கருவென்றாகி ஒரு மைந்தனென மண் திகழ” என்று அவன் காதில் சொன்னான்.

“சீ!” என்று சினந்து உடல் மெய்ப்புற்று அவன் கை விலக்கி எழப்போனவளை இடை வளைத்து அணைத்து திருப்பியபோது கச்சை நெகிழ்ந்து முலைகளின் இடைக்கரவு வழி சரிந்து உந்திமேல் படிந்த அவன் கைமேல் அம்மலர் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்து ”புது மணம் பெற்ற மலர்!” என்றான். சிவந்த முகத்துடன் "அய்யோ" என்று மீண்டும் சினந்து அவன் கையை தட்ட முயன்றாள். "கள்வா, இந்தக் காதல் கலை எல்லாம் கை பழகாது வருமா என்ன? எத்தனை மகளிர் தங்கள் உடலளித்தார்கள் உனக்கு?” என்றாள். ”உள்ளம் அளித்த மகளிர் பல்லாயிரம் பேர் தேவி! உடலளித்தவர் என எவரையும் அறியேன்” என்றான். “பொய்” என்று சொல்லி அவன் தோள்களில் அவள் தன் இரு கைகளாலும் அறைந்தாள். ”பொய் சொல்லி என்னை மயக்குகின்றாய்! என்னை உன் அடிமையாக்குகிறாய்! அறிக! நான் அந்தகக் குலத்து யாதவப் பெண். ஒரு போதும் ஆண் மகனுக்கு அடிமையாக மாட்டேன். ஒரு போதும் ஆண் மகன் முன் நிகரிழக்க மாட்டேன்” என்றாள்.

“ஆம்! அதை அறிவேன். என் அருகே சரியென அமர்ந்து அரியணை நிறைக்கவென்றே உன்னை கொண்டேன்” என்றான். "என் குடியின் மூதன்னையர் கொண்ட முகமல்லவா உன்னுடையது? நீ என் மடிதவழும் அவர்களின் அருள் அல்லவா?" அம்மலரை அவள் குழலில் சூட்டி ”உன்னை முத்தமிட்ட மலர். ஒரு முத்தம் உன் குழலில் இதோ என்னால் சூட்டப்பட்டது” என்றான். உடல் எங்கும் பரவிய மழை வருடலை உணர்ந்தாள். கை தூக்கி அம்மலரைத் தொட்டபோது தன் நெஞ்சு கனிந்து கண் கசிந்து உடல் உருகி வழிவதை அறிந்தாள்.

"உண்டாட்டுக்கு எழுக யாதவரே" என்று கூவியபடி வந்தான் பாணன். "உண்டு உடல் நிறைக! பண் கொண்டு உளம் நிறைக!" என்று சுற்றிவந்தான். கூச்சலிட்டபடி யாதவர்கள் எழுந்து உண்டாட்டுக்கென ஒருக்கப்பட்ட திறந்தமுற்றத்திற்கு சென்றனர். முற்றத்தின் முதல்வாயிலில் நின்ற சத்ராஜித் கைகூப்பி குலமூத்தாரையும் பிறரையும் அமுதேற்க அழைத்தார். குடித்தலைவர்களும் பூசகர்களும் ஒவ்வொருவராக சென்று அமர்ந்தனர். நீளமான ஈச்சைமரத்தடுக்குகள் விரிக்கப்பட்டு அதன்பின் மண்தாலங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூத்தாரும் பெண்டிரும் அமர்ந்தபின் பிறர் என யாதவர்முறைப்படி அனைவரும் அங்கே நிறைந்தனர். மஹதியும் ஏழு மூதன்னையரும் சேர்ந்து பாமையையும் கிருஷ்ணனையும் அழைத்து வந்து பந்தி நடுவே இட்ட மைய இருக்கையில் அமர்த்தினர்.

இளம்விறலி ஒருத்தி நீலமுகிலென பட்டாடை அணிந்து இரு தோளிலும் ஒன்றுபோல் இருந்த இரு பொற்குடங்களுடன் நடந்து வந்தாள். அவளுக்கு வலப்பக்கம் வெண்ணிற ஆடை அணிந்து புதுப்பாளையால் ஆன பொன்முடி சூடி தேவர்கள் என ஏழுபாணர் நடனமிட்டு வர இடப்பக்கம் கரிய ஆடை அணிந்து நீலமுடிசூடி அசுரர்களாக எழுவர் வந்தனர். குறுமுழவை மீட்டி மெல்ல ஆடி பண்டு பாற்கடல் கடைந்து அமுது கொண்ட கதையை பாடியபடி அவர்கள் வந்தபோது யாதவர் கை கொட்டியும் சிரித்தும் ஊக்கினர். அமுதக்கலங்களை கொண்டுவந்து பாமாவின் முன்வைத்தனர்.

மூதன்னை ஒருத்தி "இது நம் குலமுறை மகளே. இதில் ஒருகலத்தில் வேம்பின் கசப்புநீர் உள்ளது. இன்னொன்றில் இருப்பது இன்நறும்பால். உன் கைகளால் ஒன்றிலிருந்து அமுதள்ளி அவனுக்கு அளி" என்றாள். "உன் கைகளால் நீ எடுப்பது இனிப்பா கசப்பா என்று அறிய விழைகிறது ஆயர்குலம்." யாதவர் கைகொட்டி சிரித்து "கசப்பைக்கொடு... கள்வனுக்கு உன் கசப்பைக்கொடு" என்று கூவினர். "ஓசையிடாதீர்" என்றாள் மஹதி. "இளையோளே, மணத்தை தேர். உன் நெஞ்சிலுள்ள பெருங்காதலை எண்ணு. நீ அமுதையே அள்ளுவாய்."

பாமா இரு கலங்களையும் ஒருகணம் நோக்கியபின் தன் வலக்கையை நீட்டி ஒரு கலத்தை எடுத்தாள். அக்கணமே விறலியரும் பாணரும் சோர்ந்து கை தளர்ந்தனர். அவர்களின் உடல்கண்டு அனைவரும் அது கசப்பென்று உணர்ந்து ஓசையழிந்தனர். அவள் அதை சிறு குவளையில் ஊற்றி அவனுக்குக் கொடுத்தாள். புன்னகையுடன் அவன் அதை வாங்கி மும்முறை சுவைத்தான். "இனிய அமுது. உன் இதழ்களில் எழும் சொல் போல" என்று பாமாவிடம் சொன்னான். அவள் நாணி தலைகவிழ "உன் அன்னைக்கும் செவிலிக்கும் தந்தைக்கும் உன் குடிப்பிறந்த அனைவருக்கும் இவ்வமுதைக் கொடு" என்றான்.

பாமா அதை மேலும் சிறுகுவளைகளில் ஊற்றி மஹதிக்கும் மாலினிக்கும் அளித்தாள். மஹதி அதை ஒருதுளி அருந்தியதுமே முகம் மலர்ந்து மாலினியை நோக்க "நான் அப்போதே நினைத்தேன். இவர்களுக்குத்தான் கலம் மாறிவிட்டது. அவள் கைபடுவது கசக்குமா என்ன?" என்றாள் மாலினி. பாமா குவளையை தந்தையிடம் கொண்டு சென்று நீட்ட அவர் வாங்கி முதல்மிடறை அருந்தி அது இனிய பாலமுதென அறிந்தார். ஒவ்வொருவரும் அதை ஐயத்துடன் பெற்று அருந்தி உவகை கொண்டு "பாலமுது! இனியது" என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். சற்றுநேரத்தில் உண்டாட்டுப்பந்தல் உவகையால் கொந்தளிக்கத் தொடங்கியது.

அவர்களனைவரும் அமர இனிப்பும் துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் என உணவு வரத்தொடங்கியது. உணவுமணம் கொண்ட காற்று அங்கே எழுந்து காட்டுக்குள் செல்ல காட்டுச்செந்நாய்கள் மூக்கை நீட்டியபடி புல்வெளிவிளிம்புக்கு வந்தன. உண்டாட்டின் உவகையாடலைச் செவிமடுத்தபடி இனிப்பும் கசப்புமென கலங்களை நிறைத்த பாணர் மற்ற கலத்தை எடுத்துச்சென்று திறந்து சற்றே ஊற்றி குடித்தனர். அதுவும் பாலமுதே என்று கண்டு ஒருவரை ஒருவர் நோக்கினர்.

"இளையோனே, உன் முதல் கை உணவை அவளுக்கு அளி. அவள் கொள்ளும் அமுது அது" என்றார் பூசகர் கிரீஷ்மர். ஊனுணவை ஒரு கைப்பிடி அள்ளி அவள் இதழ்களில் அவன் வைக்க அவள் நாணிக்குனிந்து வாயால் அள்ளி விழுங்க முடியாது மூச்சடைத்தாள். "அவன் அளிக்கும் அமுதால் உன் ஆகம் நிறைவதாக!" என்று கிரீஷ்மர் வாழ்த்த முதல் கை உணவை எடுத்து நீட்டி "அவ்வாறே ஆகுக!" என வாழ்த்தினர் ஆயர்.

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 8

புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண் விரும்புதல் இயல்பு. உடலே புன்னகை என்றானவனை என்ன செய்வது? அவனை தன் விழி இரண்டால் பார்த்து முடிக்கவில்லை பாமா. அவன் செம்மைசேர் சிறு பாதங்களை, வில் என இறுகிய கால்களை, ஒடுங்கிய இடையை, நீலக்கல்லில் நீரோட்டம் என விரிந்த மார்பில் பரவிய கௌஸ்துபத்தை, மீன்விழிச் சுடர்களை நக முனைகளெனக் கொண்ட கைவிரல்களை, மென்நரம்பு தெரியும் கழுத்தை, முலையுண்ட குழந்தை என குவிந்த உதடுகளை, நெய்ப்புகைப் படலமெனப் படிந்த மென்மயிர் தாடியை, தேன் மாந்தி குவளை தாழ்த்தியபின் எஞ்சியதுபோன்ற இளமீசையை, நீள் மூக்கை, நடு நெற்றி விழிபூத்த குழலை மீண்டும் மீண்டும் என நோக்குவதே அவள் நாளென ஆயிற்று.

ஒவ்வொரு கணமும் துள்ளித்திமிறும் கைக்குழந்தையை ஒக்கலில் வைத்திருப்பது போல, கன்றுக்குட்டிக் கயிற்றைப்பிடித்து தலையில் பால் நிறை குடத்துடன் நடப்பது போல, கை சுடும் கனலை அடுப்பிலிருந்து அடுப்புக்கு கொண்டு செல்வது போல, அரிய மணி ஒன்றை துணி சுற்றி நெஞ்சோடணைத்து கான்வழி செல்வது போல ஒவ்வொரு கணமும் அவள் அவனுடன் இருந்தாள். பதற்றமும் அச்சமும் பெருமிதமும் அவற்றுக்கு அப்பால் இருந்த உரிமை உணர்வுமாக அவனை அறிந்தாள். ஒவ்வொரு அடியிலும் தன்னை நோக்கி வருபவனென்றும் தன்னைக் கடந்து செல்பவனென்றும் அவன் காட்டும் மாயம்தான் என்ன என்று வியந்தாள்.

காற்றில் பறக்கும் மென்பட்டாடை என அவன் அவளை சுற்றிக்கொண்டான். அள்ளும் கைகளில் மைந்தன் என குழைந்தான். கை தவழ்கையில் நெளிந்தான். ஒரு கணமேனும் பிடி விலகுகையில் எழுந்து பறந்தான். அப்பதற்றம் எப்போதுமென அவள் முகத்தில் குடியேறியது. அவனைப் பார்க்கும்போதெல்லாம் புருவம் சுழித்து விழி கூர்ந்து பிழை செய்த மைந்தனை கண்டிக்கும் அன்னையின் பாவனை கொள்ளலானாள். ”இங்கிரு!” என்றோ, ”எங்குளாய்?” என்றோ, ”அங்கு ஏன்?” என்றோ அவள் வினவுகையில் அவனும் அன்னை முன் சிறுமைந்தனென விழி சரித்து புன்னகை அடக்கி மென் குரலில் மறுமொழி சொன்னான். அவர்களின் நாளெலாம் ஊடலென்றே ஆயிற்று. ஊடலுக்குள் ஒளிந்திருக்கும் மெல்லிய புன்னகை என்பது அவர்கள் அறிந்த கூடலென்று இருந்தது.

”என்னடி இது? அவன் உன் கொழுநன். நீ இன்னும் அன்னையாகவில்லை” என்று மஹதி அவளை அணைத்து சொன்னாள். முகம் சிடுத்து ”சொன்ன சொல் கேட்பதில்லை. எங்கிருக்கிறான் என்றறியாமல் ’எப்படி இருக்கிறேன்?’ என்று அவன் அறிவதில்லை. நானென்ன செய்வேன்” என்றாள் பாமை. ”ஆண் என்பவன் காற்று. அவனைக் கட்டி வைக்க எண்ணும் பெண் காற்றின்மையையே உணர்வாள். வீசுகையிலேயே அது காற்றெனப்படுகிறது” என்றாள் மஹதி. “நீ அறிந்த காற்றுகளேதும் அல்ல அவன். சிமிழுக்குள் அடங்கத்தெரிந்த புயல் என அவனை உணர்கிறேன்” என்றாள் பாமா. “நீ அவனை அடிமையாக்குகிறாயடி. ஆணை அடிமையாக்கும் பெண் அடிமையானதுமே அவனை வெறுக்கிறாள்.” “நான் அவனை அணைகிறேன்” என்றாள். “இல்லை, நீ அவனை ஆள்கிறாய்!” சினம் கொண்டு ”சொன்ன சொல் கேட்காமல் விளையாடுபவனை என்னதான் செய்வது?” என்று பாமா கேட்டாள். மஹதி சலிப்புடன் ”யானொன்றறியேனடி. இதுவோ உங்கள் ஆடலென்றிருக்கக்கூடும் விண்ணாளும் தெய்வங்கள் மண்ணில் ஒவ்வொரு காதலிணைக்கும் ஒருவகை ஆடலென்றமைத்து மகிழ்கிறார்கள் என்றறிந்துளேன். நீ கொண்ட பாவனை அன்னை என்று இருக்கலாகும்” என்றாள்.

ஆயர்பாடியில் அவர்கள் புது இரவு நிகழ்ந்தது. மஹதி அவளுக்கென ஈச்சமர ஓலைகளை தனித்தமர்ந்து தன் கைகளால் முடைந்து அமைத்த சிறு குடில் மலை அடிவாரத்தில் புல்வெளி நடுவே அமைந்திருந்தது. ”என்னடி இது புதுப்பழக்கம்? அன்னையர் இல்லத்தில் கரவறையில் மணஇரவு கூடுவதன்றோ ஆயர் முறை?” என்று மாலினி கேட்டாள். "அவர்கள் ஆயர்கள் அல்ல. மண்ணிலிருந்து விண் விளையாடச்செல்லும் கந்தர்வர்கள்” என்றாள் மஹதி. சிரித்து ராகினி சொன்னாள் “பறந்து விண்ணுக்கு ஏறிவிடுவார்கள் என்றுதான் நானும் எண்ணினேன். அவர்கள் இங்கிருக்கவே இல்லை அன்னையே!” மாலினி "தன்னந்தனிய இடம். இரவில் புலி வரும் வழி அது” என்றாள். ராகினி ”அவனறியாத புலிக் கூட்டமா என்ன?” என்றாள்.

"எனக்கொன்றும் புரியவில்லையடி! நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லும் அவன் அல்ல இவன் என்று எண்ணுகின்றேன். அறியாச் சிறுவனாக, களியாடும் குழந்தையாக இங்கு நம் மன்று நின்றிருக்கிறான். இவனையா பாரதவர்ஷத்தை ஆளும் பெருமுடி கொண்டவன் என்கிறார்கள்?” என்றாள் மாலினி. ”அன்னையே! விளையாடாதவன், பாரதவர்ஷமென்னும் இப்பெருங்களத்தை ஆள்வதெப்படி?” என்று மஹதி சொன்னாள். ”நீங்கள் ஒவ்வொருவரும் அவனைப் போல் பேசத் தொடங்கிவிட்டீர்கள். ஒரு சொல்லும் விளங்காமல் எங்கோ தனித்து நின்றிருக்கிறேன்” என்றாள் மாலினி.

பதினைந்து நாள் உணவின்றி சிவமூலிப்புகை மயக்கில் இருந்த உடல் மெலிந்து நடுங்க மெல்ல சுவர் பற்றிச் சென்று சாளரம் வழியாக வெளியே ஆய்ச்சியர் மகளிர் நடுவே ஆடி நின்ற தன் மகளையும் அருகு நின்ற ஆயனையும் நோக்கினாள். அவன் அவள் குழலை ஒரு மலர்ச்செடியில் கட்டி வைத்து விலக அவள் திரும்பி குழலை இழுத்து சினந்து சீறி குனிந்து தரை கிடந்த மலரள்ளி அவன் மேல் வீசி கடுஞ்சொல் உதிர்ப்பதை கண்டாள். என்னவென்றறியாத உள எழுச்சியால் கண்ணீர் சோர சாளரக் கதவில் தலை சாய்த்து விம்மும் நெஞ்சை கைகளால் அழுத்தி கண் மூடினாள்.

மலையோரத்து பசுங்குடிலை பகல் முழுக்க நின்று தன் கைகளால் அமைத்தாள் மஹதி. துணை நின்ற ராகினியும் மூதாய்ச்சியர் பன்னிருவரும் ஒவ்வொரு கணமும் தங்கள் நினைவில் எழுந்த காலங்களால் மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் அறிந்த மணமேடை, மணியறை, அணிப் பந்தல் மஞ்சம். ஒரு போதும் மீளாத ஆழ்கனவு. மாவிலைத் தோரணம் கட்டிய விளிம்பு. மென்பலகை சாளரக் கதவுகள் .வெண்பட்டுத் திரைகள் நடுவே மரவுரி மஞ்சம். அதன்மேல் மலர்த் தலையணைகள். தூபம் கனிந்து புகையும் களம். ”இனி இங்கு எழ வேண்டியது நிலவொன்றுதான்” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. "இரவு கொணரும் ஓசைகளும் மலர் மணமும் குளிரும் பின்னிரவில் சரிந்த மென் மழையும் அவர்களுக்கு துணையாகுக!” என்றாள் இன்னொருத்தி.

மாலை சிவந்து வருகையில் அவளை ஏழு ஆய்ச்சியர் கரம் பற்றி அழைத்துச் சென்று யமுனையில் நீராட்டினர். புன்னை மலர்கள் படலமென வளைந்து வந்து அவளைச் சூழ்ந்தன. அவள் குழலிலும் மெல்லுடலிலும் நறுமணப்பசை கொண்ட புன்னை மலர்கள் பற்றிக் கொண்டன. ”தேனீக்கள் போல” என்று சொல்லி அவள் அவற்றை உதறினாள். "இத்தனை பேரில் மலர்கள் உன்னை மட்டுமே நாடி வந்திருக்கின்றன. எங்கோ நின்று பூத்த மலர் மரம் உன்னை அறிகிறது” என்றாள் ஆய்ச்சியரில் ஒருத்தி. யமுனை நீராடி எழுந்து ஈரம் களையாமல் நடந்து இல்லம் மீண்டாள். ஆடை அகற்றி அவளை அறை இருத்தி ஆய்ச்சியர் சூழ்ந்தனர். மருத்துவச்சி அவள் உடலை முழுமை செய்தாள்.

சூழ்ந்தமர்ந்து அவளை சித்திரமென வரைந்தெடுத்தனர். செம்பஞ்சுக் குழம்பு கால்களை மலரிதழ்களாக்கியது. தொடைகளிலும் மேல் வயிற்றிலும் எழுந்த முலைக்குவைகளிலும் சரிந்த விலாவிலும் குழைந்த தோள்களிலும் தொய்யில் எழுதினர். நகங்கள் செம்பவளம் போல் வண்ணம் கொண்டன. இதழ்களில் செங்கனிச்சாறு பிழிந்து வற்றியெடுத்த சிவப்பு. மென் கழுத்திலும் கன்னத்திலும் நறுமணச்சுண்ணமும், நெற்றியில் பொற்பொடியும், நீள் கருங்குழலில் மலர் நிரையுமென அவளை அணி செய்தனர். இளஞ்சிவப்புப் பட்டாடை, பொன்னூல் பின்னலிட்ட மேலாடை, தொங்கும் காதணி, நெற்றி சரிந்த பதக்கம். இதழ் மேல் நிழலாடும் புல்லாக்கு, முலை மேல் சரிந்தசையும் வேப்பிலைப் பதக்கமாலை. விழிகள் சொரிந்ததென மின்னும் மணியாரம். கவ்விய தோள் வளை. குலுங்கும் கைவளை அடுக்குகள். மெல் விரல் சுற்றிய ஆழிகள் என முழுதணிக்கோலம் கொண்டாள். இருள் எழுகிறதா என்று இரு ஆய்ச்சியர் முற்றத்தில் நின்று நோக்கினர். ஒருத்தி திரும்பி வந்து அவள் காதில் "எங்கோ அவனும் அணி கொள்கிறானடி! இக்கணம் உனக்கென ஒருங்குகிறது அவனுடல்” என்றாள்.

சொல் கேளா ஆழத்தில் கிணற்று நீர் போல் சிலிர்ப்புற்றுக் கொண்டிருந்தது அவள் உள்ளம். சரிந்த விழிகளுக்குள் கருவிழிகள் ஓடிக் கொண்டிருந்தன. ”நிலவெழுவதா? முல்லை மணம் வருவதா? எது தொடங்கி வைக்கிறது இரவை?” என்று ஆய்ச்சி ஒருத்தி கேட்டாள் ”இவ்விரவைத் தொடங்கி வைப்பது சூழ்ந்திருக்கும் இக்காடென்றே ஆகுக! இரவெழுவதை காடு சொல்லட்டும்” என்றாள் மஹதி. காட்டுக்குள் பறவைகள் எழுந்து வானில் சுழன்றன. இலையடர்வுக்குள் இருந்து இருந்து பதிந்த காலடியுடன் வந்த சிறுத்தை ஒன்று அவர்கள் அமைத்த மலர்க்குடிலை அணுகி பாதம் ஒற்றி ஒற்றி புல்வெளி மேல் நடந்து சுற்றி வருவதை தொலைவில் நின்று கண்டனர் ஆய்ச்சியர். ”மலைச்சிறுத்தை!” என்று ஒருத்தி குரலெழுப்ப கூடி நின்று அதை நோக்கினர்.

கொன்றையின் பொன்னிற சிறுமலரிதழொன்று காற்றில் தாவி புதர் மேல் ஒட்டி பின் பறந்து செல்வது போல சிறுத்தை பசுந்தழைப்பில் மறைந்தும் எழுந்தும் அக்குடிலை சுற்றி வந்தது. முகர்ந்து நோக்கி தன் முன்னங்கால்களால் தட்டியது. பின்பு நீள் வாலைத்தூக்கி ஆட்டி உறுமியது. புதர்மேல் பாறைகளை தழுவித்தாவும் நீரலையின் ஒளிமிக்க வளைவுகளுடன் துள்ளி மறைந்து கானுக்குள் புதைந்து சென்றது. அதன்வால் சுழன்று மறைந்தபின்னர் உள்ளே ஒரு சிறுகுருவி 'சென்றது! சென்றது!' என்றொலித்து எழுந்து சிறகடித்தது. ”கானகம், அக்குடிலை ஏற்றுக் கொண்டுவிட்டது. இரவென்று அறிவித்துவிட்டது” என்றாள் மஹதி. ஆய்ச்சியர் கூடி குரவையிட்டனர். சிரிப்பொலி கூட அவளை கை பற்றி மெல்லிய காலடி தூக்கி வைத்து மூன்று படிகளிறங்கி முற்றத்துக்கு கொண்டு சென்றனர்.

குரவையொலி சூழ, பெண்கள் சிரிப்பொலியும் கைப்பாணி ஒலியும் கூட அவளை அழைத்துச் சென்று அப்பந்தலிலிட்ட வெண் மரவுரி மஞ்சத்தில் அமர்த்தினர். "காலடிகேட்டு விழி திருப்பாதே! முதற்சொல் சொல்லாதே! முதற்புன்னகை அளிக்காதே! பெண்ணென்று பொறை காத்துக்கொள்! அந்தகக் குலமென்று அங்கே நில்!” என்று அவள் காதில் சொன்னாள் மூதாய்ச்சியொருத்தி. ”தருக்கி தலை நிமிர அவளுக்கு தனியாகவேறு கற்றுத்தர வேண்டுமா?” என்றாள் இன்னொருத்தி. ஒவ்வொருவராக நகை மொழி கூறி அவள் கன்னம் தொட்டு தலை வைத்து வாழ்த்தி விலக மஹதி மட்டும் எஞ்சினாள். குனிந்து அவள் விழிகளை நோக்கி ”காதலனுடனாட பெண்ணுக்கு அன்னையோ, தோழியோ, தெய்வங்களோ கற்றுத்தர வேண்டியதில்லையடி. சென்ற பிறவியில் அவனை தன் மைந்தனென அவள் மடி நிறைத்து ஆடிய அனைத்தும் அகத்தில் எங்கோ உறைகின்றது என்பார்கள். வாழ்க!” என்று சொல்லி நெற்றி வகிடைத் தொட்டு வாழ்த்தி விலகிச் சென்றாள்.

அங்கிருந்தாள். அம்மஞ்சத்தில் என்றும் அவ்வண்ணம் அவனுக்கென காத்திருந்ததை அப்போது உணர்ந்தாள். களிப்பாவையை மடியிலிட்டு ஆடும் குழவிக்காலம் முதல் ஒவ்வொரு நாளும் அவ்வண்ணம் அவன் கால் ஒலி கேட்டு செவி கூர்ந்திருந்தாள் என்றறிந்தாள். அப்போது அவள் விழைந்ததெல்லாம் அத்தனிமையை முழுமையாக்கும் ஒன்றைத்தான். பருவுடல் கொண்டு பீலி சூடி பொற்பாதம் தூக்கி வரும் அவன் என்னும் அவ்வுடலேகூட அத்தனிமையை கலைத்துவிடுமோ என அஞ்சினாள். காற்றென ஒளியென காணும் அனைத்துமென தன்னைச் சூழ்ந்திருந்தவன் வெறுமொரு மானுடனாக வந்து தோள் பற்றுவது ஒரு வீழ்ச்சியென்றே உள்ளம் ஏங்கியது. இக்கணத்தில் உடலென அவனை அடைந்துவிட்டால் புவியென விண்ணென அவனை இழந்துவிடுவோம் என்று நெஞ்சம் தவித்தது. 'இவனல்ல! இவனல்ல!' என்று சொல்லிக் கொண்டது.

'இன்று இக்கணம் நானிழப்பதை மீண்டும் ஒருபோதும் அடையப்போவதில்லை!' என்றறிந்தாள். எழுந்து விலகி இல்லம் திரும்பி தன்னறைக்குள் புகுந்து மீண்டுமொரு இளம் குழவியாக ஆகி கண் மூடி ஒடுங்கிக்கொள்ள வேண்டுமென்று விழைந்தாள். இருளில் கான்புகுந்து உடல் களைந்து வெறுமொரு காற்றலைப்பாகி புதர் தழுவிப்பறந்து அப்பால் குவிந்திருக்கும் குகையொன்றுக்குள் புகுந்து மறைந்துவிட வேண்டுமென்று விழைந்தாள். 'என்னை உடலென்று நீயறிந்தால், உளமென்று இங்கிருக்கும் அனைத்தையும் அழித்தவனாவாய். கள்வனே! இத்தருணம் நீ வாராதிருப்பதையே விழைந்தேன். உன் கை வந்து என் தோள் தொடுவதை வெறுக்கிறேன். உன் குவியும் இதழ் என் கன்னம் தொடுவதை, உன் மூச்சு என் இமை மேல் படுவதை, உன் சொல் வந்து என் செவி நிறைப்பதை வெறுக்கிறேன். கன்னியென்றானபின் நானறிந்த கனவுகள் அனைத்தும் முடியும் கணம் இது என்றுணர்கிறேன். விலகு! விலகிச்செல்! கண்ணனே! மாயனே! ஆயர்குலத்து நீலனே! கருணை செய்! இத்தருணம் இங்கு வாராதொழிக’ என்று அவள் வேண்டிக் கொண்டாள்.

அவன் கால் வைத்து வரும் வழியை விழி நோக்கினாள். புல்வெளியின் வகிடு என அங்கு நீண்டு கிடந்தது அது. வான் இருள, விழி இருள, புல்வெளி நிழல் வடிவமாக மாற அது மட்டும் ஒரு வெண் தழும்பென தெரிந்தது. காட்டுக்குள் இருந்து முல்லை மணம் காற்றில் வந்து குடிலெங்கும் நிறைந்தது. கூடணைந்த பறவை ஒன்று தன் மகவுடன் கூவி எழுந்து காற்றில் சுழன்று மீண்டும் அமைந்தது. இரவின் ஒலி மூச்சுவிடாது இசைக்கும் பாணனின் சீங்குழலென வளைந்து வளைந்து சென்றது. பின் எங்கோ ஒரு கணத்தில் திகைத்து நின்று 'ஆம்' என வியந்து அமைதி கொண்டது. 'எனினும் இனி?' என மீண்டும் தொடங்கியது. இருண்ட வானில் ஒவ்வொரு விண்மீனையாக அள்ளிவிரித்தபடி சென்றது கண் காணா கரம் ஒன்று. செவ்வாய் செஞ்சுடர் என எரிந்து அருகே இருந்தது. சனி மிக அப்பால் இளநீலத் தழலென எரிந்தது. விண்மீன்கள் ஒவ்வொன்றாய் பற்றிக்கொள்ள வான் எங்கும் எழுந்த பெருவிழவை அவள் கண்டாள். தென்றலில் இலை மணம் கலந்திருந்தது. இலை உமிழ்ந்து நீராகி மூச்சை நிறைத்தது.

ஒவ்வொன்றும் இனிதென அமைந்த இவ்விரவு தனிமையாலன்றி எங்ஙனம் முழுதணையும்? ஒவ்வொரு சொல்லும் உதிர்ந்து எஞ்சும் பெருவிழைவால் விழைவில் கனிந்த ஏக்கத்தால் அன்றி எங்ஙனம் இதை மீட்ட முடியும்? மாயனே! நீயறியாததல்ல. உன் குழலறியாத தனிமையில்லை. இங்கு உன் இசையன்றி என்னை ஏதும் வந்து சூழ வேண்டியதில்லை. வாராதொழிக! என்னை வந்து தீண்டாதமைக! நீள்வழியில் அவன் கால் விழவில்லை என்பதை நோக்கி அங்கமர்ந்திருந்தாள். மெல்ல ஒரு மலரிதழ் உதிர்வது போல தன் தோள் தொட்ட கையை உணர்ந்தாள். பின் நின்று தன் கன்னம் வருடி இறங்கி கழுத்தில் அமைந்த மறு கையை அறிந்தாள். நிமிராது குனிந்து சிலிர்த்தமர்ந்திருந்தாள். இரு கைகள் தழுவி இறங்கி அவளை பின்நின்று புல்கி உடல் சேர்த்தன. அவன் "காதலின் தனிமையைக் கலைக்காதது காற்றின் தீண்டல் மட்டுமே” என்றான்.

”எங்ஙனம் வந்தாய்? நான் காணவில்லையே?” என்றாள். ”நீ காண வருவது உன் கன்னிமைத் தவத்தை கலைக்கும் என்றறியாதவனா நான்? காற்றென வந்தேன். மலைச்சுனைகள் காற்றால் மட்டுமே தழுவப்படக் கூடியவை தோழி!” என்றான். தன் உடலை கல் என ஆக்கிக் குறுக்கி ஒவ்வொரு வாயிலாக இழுத்து மூடி ஒடுங்கிக் கொண்டாள். அவள் குழையணிந்த காது மடல் மேல் அவன் இதழ்கள் அசைந்து உடல் கூச மெல்ல பேசின. ”ஏன் உன்னை இவ்வுடலுக்குள் ஒளித்துக் கொள்கிறாய்?” ”தெரியவில்லை.” கண்டெடுக்கப்படும் இன்பத்தை விழைகிறேனா என்று எண்ணிக் கொண்டாள். ”ஆம்! கண்டெடுக்கப்படும் இன்பத்தை நீ விழைகிறாய்” என்றான். ”இல்லை”, என்று சொல்லி சினத்துடன் தலை தூக்கினாள். வெல்லப்படுவதற்கு ஒருபோதும் ஒப்பேன் என்று எண்ணிக் கொண்டாள். "சரி, வென்று செல்! என்னை” என்று அவன் சொன்னான். ”வீண் சொல் இது. பெண்ணென்று நான் உன்னை வெல்வது எங்ங்னம்?” என்று அவள் சொன்னாள். ”வெல்வதற்கு வந்த பெண்ணல்லவா நீ?” என்றான் அவன்.

"விலகு! செல் அப்பால்! உன் சொற்களால் என் கன்னிமையை கலைக்கிறாய். என் நீள்தவத்தில் வெறும்விழைவை நிறைக்கிறாய்” என்றாள். அவன் கைகளை தட்டிவிட்டு ஆடை ஒலிக்க எழுந்தோடி சென்று குடிலுக்கு வெளியே காற்று சுழன்ற சிறு திண்ணையில் நின்றாள். சிறகெனப் பறந்தெழுந்த ஆடையை இருகைகளாலும் பற்றி உடல் சுற்றிக் கொண்டாள். அறைக்குள் மஞ்சத்தில் கால் மடித்தமர்ந்து அவன் இடைக் கச்சையிலிருந்து தன் குழலெடுக்கும் ஓசையை கேட்டாள். அக்குழலின் மாயங்கள் நானறிந்தவை. அவற்றுக்கப்பால் உன் விழி நிறைந்திருக்கும் புன்னகையை நான் கண்டிருக்கிறேன். விழி திருப்பமாட்டேன், உடல் நெகிழ மாட்டேன் என்று அவள் நின்றாள். நீலாம்பரியின் முதல் சுருள் எழுந்தபோது மலர்விழுந்த சுனை நீர்ப்படலமென தன்னுடலை உணர்ந்தாள்.

'அருகே வா! என் அழகியல்லவா!' என்றது நீலாம்பரி. 'உன் அடிகள் என் நெஞ்சில் படலாகாதா?' என்று ஏங்கியது. 'என் முடி தொட்டு மிதித்தேறி என் விண்ணமர்க தேவி!' என்று இறைஞ்சியது. 'என் விழி புகுந்து நெஞ்சமர்க!' என்று கொஞ்சியது. கைவிட்டு திரும்புபவளை பின்னின்று இடை வளைத்துப் புல்கி புறங்கழுத்தின் மென்மயிர்ச்சுருள்களில் முகமமர்த்தி 'அடி, நீ என் உயிரல்லவா?' என்று குலவியது, மெல்ல மென்பலகைக் கதவைத் திறந்து உள்ளே நோக்கினாள். அவன் புன்னகை எரிந்த முகம் அவள் நெஞ்சு அமைந்ததென அருகிலிருந்தது. நீலாம்பரி நிலவிலிருந்து ஏரியின் அலைநீரில் விழுந்து கால்நோக்கி நீண்டுவரும் பொற்பாதையென அவள் முன் கிடந்தது. அதில் கால் வைத்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள் சேக்கையருகே நின்றாள். பின் இடை குழைந்து அதில் அமர்ந்தாள். கை நீட்டி அவன் கால்களைத் தொட்டாள். குழல் தாழ்த்தி அவள் இடை வளைத்து தன் மடியமர்த்தி முகம் தூக்கி விழி நோக்கி கேட்டான் ”இக்கணத்தை நான் வெல்லலாமா?” என்று.

இடை வளைத்து தோள் தழுவி குழல் வருடி விரல் பின்னி தன்னை அறியுமிக்கணம் அவன் அறிவது உடலையல்ல. உடலென்றாகி நின்ற விழைவையுமல்ல. விழைவூறும் அக விழியொன்றை என்று அவள் அறிந்தாள். இசையென்ற வடிவென்றானதே யாழ். யாழ் தொடும் விரல் இசை தொடும். உளி தொடாத சிலை ஒன்றல்ல. கல் திரை விரித்து சிற்பம் வெளிவரும் கணம். உளி தொட்டு ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தாள். குழலை, கன்னங்களை, இதழ்களை, தோள்களை, குழைந்த முலைகளை, நெகிழ்ந்த இடையை, எழுந்த தொடைகளை, கனிந்த அல்குலை. ஏதுமின்றி அவன் நுழைந்து அவனாகி அங்கிருந்தான். முழுதளிப்பதனூடாகவே முழுதடையும் கலையொன்றுண்டு என்றறிந்தாள்.

மஞ்சத்தில் அவன் துயில மெல்லிய காலடி வைத்து எழுந்து குனிந்து அவனை நோக்கினாள். எங்கோ செல்பவன் போல ஒருக்களித்திருந்தான். முன்னெடுத்த கால்களில் ஒளிவிட்ட நகங்களை ஒவ்வொன்றாக தொட்டாள். மேல் பாதம் மீது புடைத்த நரம்பை, கால் மூட்டை. மென்மயிர் படர்ந்த தொடையை, மயிர்ப்பரவலை உந்தியை மார்பை என கை தொட்டு சென்று அவன் குழலணிந்து விழிவிரித்த பீலியை அறிந்தாள். அதன் ஒவ்வொரு தூவியாய் தொட்டு நீவினாள், "துயில்கையில் விழித்திருக்கும் நோக்கே! நீ நேற்றறிந்தாய் என்னை” என்றாள். நீலம் இளம் காற்றில் மெல்ல சிலிர்த்தது. இமையாதவை! அனைத்தறிந்த விழி!

ஆடை அள்ளி உடல் சுற்றி எழுந்து மெல்ல நடந்து சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றாள். அவள் அகம் எழுந்த விழைவை அறிந்தது போல மெல்லிய ஓசையுடன் எழுந்து இலைகளைத் தழுவி மண்ணில் பரவி சூழ நிறைந்தது புலரி மழை. இளநீல மென்பெருக்கு.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 1

விழித்தெழுந்தபோது இசைக்கூடம் எங்கும் நிறைந்துகிடந்த உடல்கள் கொண்ட கை கால்கள், கவிழ்ந்த முகங்கள், கலைந்த குழல்கள், அவிழ்ந்து நீண்ட ஆடைகள் நடுவே தானும் கிடப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கையூன்றி எழுந்து தன் தோள் நனைத்திருந்த உமிழ்நீரை துடைத்தபடி மயங்கும் கண்களால் காற்றிலாடும் திரைச்சீலை ஓவியமென அசைந்த அச்சூழலை நோக்கினான். நெடுநேரம் என்ன நிகழ்ந்ததென்று அறியாது அரக்கில் ஈயென அமர்ந்து சிறகடித்தது அவன் சித்தம். பின்பு அந்தமேடையில் அவன் கண்ட காட்சியின் இறுதி அசைவை கண் மீட்டுக்கொண்டது.

கான்குடிலில் தன் துணைவனுடன் கூடி நடனமிட்ட சத்யபாமா. அவ்விறலி அணிந்திருந்த செம்பட்டாடை காற்றில் இரு சிறகுகளென எழுந்து பறந்தது. அவள் கை பற்றி முகில் மேல் ஒரு கால் வைத்து ஏறி மேலும் மேலும் என அவளைத் தூக்கி விண்மீன் நிறைந்த நீலவானுக்குக் கொண்டு சென்ற நீலன். கருநீல பட்டுத் திரையாக அவர்களைச் சூழ்ந்திருந்த வானில் சிறு துளைகள் வழியாக மறுபக்கம் எரிந்த அகல்விளக்கின் ஒளி விண்மீன்களென அமைக்கப்பட்டிருந்தது. வெண்முகில் குவைகள் வரையப்பட்ட திரையில் கீழ்ப்பகுதியில் குங்கிலியம் புகைந்து முகில் நிறைந்த அரங்கை அமைத்தது.

ஆடலின் அசைவில் அவர்களின் கால்கள் மண் தொடவில்லை என்ற விழிமயக்கை உருவாக்கின. ஒவ்வொரு அடிக்கும் அவன் குனிந்து அவளை கண் நிறைந்த காதலுடன் நோக்கி வருக என்றான். அவளோ அவன் கால் முதல் குழல் வரை நோக்கி இவன் என்னவன் என்ற பெருமிதத்துடன் இதோ இதோ என்று புன்னகைத்தாள். அவர்கள் அணிந்திருந்த உடைக்குள் மறைந்திருந்த தோள்கொக்கிகளில் தொடுத்த பட்டு நூல்கள் வழியாக மேலிருந்து மெல்ல தூக்கப்பட்டனர். கால்கள் மண்விட்டு எழ, சிறகுகள் காற்றில் விரிய, எழுந்து பறந்து முகில்கள் மேவி விண்ணில் சிறகடித்து அரங்கின் மேற்பகுதி வழியாக மறைந்தனர். கூடியிருந்த அனைவரும் குரலெழுப்பி வாழ்த்துக் கூச்சலிட்டு ஆர்த்தனர்.

உள்ளிருந்து சூத்திரதாரன் நடந்து வந்து அரங்கம் நடுவே நின்றான். “அவையீரே, பெரும்காதல் அத்தகையது. அது தன் காதலனை சிறகுகளாக்கிக் கொள்கிறது. அவன் அணைப்பை ஆடையென்றாக்குகிறது. அவன் விழிச்சுடர்களை அணிகளாகப் பூண்கிறது. அவன் சொற்களை சிந்தையாக்குகிறது. அவன் முத்தங்களை மூச்சாக்குகிறது. அது வாழ்க!” என்றான்.  'ஆம் ஆம்' என்று ஆர்த்தனர் அவையோர். வாழ்க வாழ்க என்று கைதூக்கி கூவினர். மேலிருந்து வெண் திரை சரிந்து வந்து அரங்கை மூடி மறைக்க உள்ளிருந்து ஆடிய கூத்தர் ஆட்டர் பாணர் அனைவரும் சேர்ந்து எழுப்பிய மங்கல இசை நிறைவுப் பாடல் ஒலித்தது. அதனுடன் சேர்ந்து பாடியபடி ஒவ்வொருவராக எழுந்தனர். ஏழாதவரே மிகுதியென அவன் கண்டான். இரும்புக் கலமென எடைகொண்டு நிலம் விழைந்த தன் தலையை கைகளில் சாய்த்து படுத்துக்கொண்டான். கண்களை மூடி உள்ளே எழுந்த பசும்காட்டில் புல் விரிவில் பெய்த இள மழையில் சூழ்ந்த மென்நீல ஒளியில் இரு காதலர்களை கண்டான். புன்னகைத்தபடி துயின்றான்.

திருஷ்டத்யும்னன் கை நீட்டி சாத்யகியின் கால்களைப் பற்றினான். அசைத்து "யாதவரே யாதவரே' என்று அழைத்தான். திடுக்கிட்டு எழுந்த சாத்யகி “இங்குளேன் இளையவரே” என்றான். பின் அருகே கிடந்த தலைப்பாகையை எடுத்து தன் உமிழ்நீரைத் துடைத்தபடி “நீங்களா? நான் என் அரசர் என்றெண்ணினேன்” என்றான். ”இசையவை கலைந்து நெடுநேரம் ஆகிறது யாதவரே... நாம் இங்கு தனித்திருக்கிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று எழுந்து சாத்யகி கை நீட்டினான். அக்கை பற்றி எழுந்தபோது தன் உடலின் உள் புண் கால் முதல் வலக்கை வரை இழுபட்ட யாழ் நரம்பென வலியுடன் துடிப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். “தங்கள் உள் உடலில் புண் இன்னும் முழுதும் ஆறவில்லையா?" என்றான் சாத்யகி. “அது ஆற இவ்வுடல் புற உலகிற்கு தன்னை கொடுக்க வேண்டும் என்றனர் மருத்துவர்” என்றான் திருஷ்டத்யும்னன். “புண்பட்டு குறைபட்ட உடல் அக்குறை கொண்ட ஓருலகை உருவாக்கிக் கொள்வது வரை இவ்வலி தொடரும் என்றனர்” என்றான்.

புன்னகைத்து சாத்யகி சொன்னான் “உடல் புண்ணும் உளப்புண்ணும் உலகை அறிவது அங்ஙனமே.” திருஷ்டத்யும்னன் இதழ் வளைய மெலிதாக நகைத்து “இச்சிறு தத்துவங்கள் பேசும் வேளை இதுவல்ல என எண்ணுகின்றேன். வெளியே வண்ணங்கள் ஒளி கொள்ளும் நேரம்” என்றான். சாத்யகி இடையில் கைவைத்து உரக்க நகைத்து "ஆம், நானும் முயன்று நோக்குகிறேன். மதுவற்ற வேளையில் ஞானம் பிறப்பதேயில்லை” என்றான். "வெளியே பெண்களின் ஒளி" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி புன்னகைத்து "ஆம், காமம் களி கொள்ளும் வேளை" என்றான்.

இசையரங்கின் வெளியே படியிறங்கி ஒளி பெய்து நிறைந்த முற்றத்தை அடைந்தபோது நகர் நிறைத்து ததும்பிய வண்ணங்கள் சுவரெங்கும் அலையடிப்பதை காண முடிந்தது. மாளிகை நிழல் சரிந்த இடத்தில் நின்றிருந்த அவர்களின் புரவிகள் ஒற்றைக் கால் தூக்கி, தலை தாழ்த்தி கடிவாளம் தொங்க, எச்சில் குழல் மண்ணில் சொட்ட துயின்று கொண்டிருந்தன. துயிலிலேயே சாத்யகியின் மணத்தை அறிந்த அவன் குதிரை விழித்து தலையசைத்து காதுகளை உடுக்கோசையென ஒலித்து 'பர்ர்...' என்று அவனை வரவேற்றது. அருகே சென்று அதன் கழுத்தை நீவி விலாவைத் தட்டி சேணத்தில் கால் வைத்து ஏறிக்கொண்டான். “ஏறுங்கள் பாஞ்சாலரே” என்றான். அவன் ஏறிக்கொண்டதும் இருவரும் குளம்போசை தடதடக்க கல் பாவப்பட்ட தரைகளின் ஊடாக துவாரகையின் பெருவீதியை அடைந்தார்கள்.

உச்சி வெயில் நின்றெரிந்த அவ்வேளையிலும் நகரெங்கிலும் களிசோரா யாதவப் பெருங்கூட்டம் நின்றிருந்தது. அவர்களுடன் நதியில் கலக்கும் மழைநீர்ஓடைப் பெருக்கென யவனரும் காப்பிரிகளும் சோனகரும் பீதரும் ஊடறுத்து முயங்கி நின்றனர். பெரிய உதடுகளும் கருபுரிக் குழலும் பேருடலும் குறுமுழவின் குரலும் கொண்ட காப்பிரிகள் வண்ண உடைகள் அணிந்து சற்றே ஆடிச்செல்லும் நடையில் அலைமேல் செல்லும் படகுகளென தெரு நிறைத்துச் சென்றனர். நகர்ப்பெண்டிர் அவர்களை தொலைவில் நின்று மலர் அள்ளி வீசி களிச்சொல் கூவி பகடி ஆடினர். அவர்கள் சொல்லும் சொல்லென்ன என்று காப்பிரிகள் உணர்வதை அவர்கள் கொண்ட நாணம் காட்டியது. “என்ன சொல்கிறார்கள்?” என்றான் திருஷ்டத்யும்னன். "காப்பிரிகளை இப்பெண்கள் களியாடுவது ஒன்றிற்காகவே" என்றான் சாத்யகி. "எது?" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நகைத்து "பெண்கள் கரிய தூண்களை விழைபவர்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து குதிரையை கால்களால் சுண்ட அவன் புரவி சிறு கனைப்புடன் சாலையைக் கடந்து ஓடியது.

பீதர்கள் குவை வைக்கோல் என தலைக்குடை அணிந்து சிறு குழுக்களாக அமர்ந்து பீங்கான் குவளைகளில் மது அருந்தி மயில் அகவலென ஓசையெடுத்து விரைந்து பேசிக்கொண்டிருந்த சிறுமன்றைக் கடந்து சென்றார்கள். தழல் என குழலும் முகமும் வெயிலில் நின்றெரிய யவனர் சிரித்தபடி சென்றனர். அவர்கள் அணிந்த வெண்ணிற ஆடையை காற்று பறக்க வைத்தது. அவர்கள் மேல் குங்குமக் களபக்குழம்பலை அள்ளி வீசி சிரித்தபடி கடந்து ஓடினர் யாதவப் பெண்கள். “இக்களியாட்டு முடிவதே இல்லை” என்றான் சாத்யகி. “இரவும் பின்பகலும் பின் இரவுமென ஒழியாது நகையாட இப்பெண்களால் மட்டுமே முடியும். எங்கிருந்தோ வந்த மோகினிகள், இயக்கியர், மலைத்தெய்வங்கள் இவர்கள் உடல்கூடி இங்கு தங்கள் விளையாட்டை நிகழ்த்துகின்றார்கள். மானுடர் வெறியாட்டு கண்டிருப்பீர். ஒரு நகரம் வெறியாட்டு கொள்வது இங்கு மட்டுமே.”

சாலையின் இருமருங்கும் பீதர்களின் மென்களிமண் கலங்களில் மது நுரைத்தது. ஊன் உணவு மணத்தது. உண்டும் குடித்தும் துயின்றும் பின் எழுந்தும் களியாடி சலித்தும் நகரில் நிறைந்த மானுடரின் வியர்வை இன்மணமாக காற்றுடன் கலந்திருந்தது. களியாட்டில் குதிரைகளும் கலந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். மானுட உடலசைவுகளின் வழியாக அவர்களின் உவகையை அறிந்து அதனுடன் இணைந்தது போல அவை உறுமி உடல் சிலிர்த்து கனைத்து கூட்டத்தில் அலைந்தன. யானைமேல் ஏறிய எட்டு பெண்கள் மேலாடை கழற்றி வீசி நகைத்தபடி வெயில்பட்டு பொன்னொளிர்ந்த இளம் கொங்கைகள் அசைய சென்றனர். “கருமுகில் மேல் செல்பவர்கள் போல இருக்கிறார்கள்" என்றான் திருஷ்டத்யும்னன். “அந்த மதகளிறு அறியும் தன் மேல் மதம் ஒழுகும் மங்கையர் அமர்ந்திருப்பதை” என சாத்யகி சிரித்துக்கொண்டு சொன்னான். “ஒருபோதும் உள்ளங்கையில் நீர்க்குமிழியை ஏந்திய மெல்லசைவுடன் யானை இப்படி நடந்து நீர் பார்த்திருக்க மாட்டீர்." சிரித்தபடி “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

வளைவுச் சுருளென வானோக்கிச் சென்ற சாலையில் இருமருங்கும் எழுந்த மாளிகைகள் அனைத்தும் வண்ணம் பொலிய தோரணங்கள் விரலசைக்க கொடிகள் சிறகென எழுந்து படபடக்க பட்டுப் பாவட்டாக்களும் சித்திரத் தூண்களும் பூத்து நிறைந்திருக்க வசந்தம் எழுந்த காடு என பெருகி நிறைந்திருப்பதை கண்டான். வட்டமிட்டு அமர்ந்து மூலிகைப்புகை இழுத்து விழிசிவந்து குறுமுழவு மீட்டி தங்களுக்குள் பாடி தன்னைமறந்து அமர்ந்திருந்தனர் பாணர் குழுவினர். நடுவே பற்றியெரிந்த தழலென எழுந்து ஒரு விறலி உடல் நெளித்து ஆடினாள். "ராதையே, நீ அறிவாய். கண்ணனை நீ அறிவாய். நீயன்றி யாரறிவார்? யாரறிந்தும் என்ன அவனறிந்தது உன்னையல்லவா? ராதையே நீ அறிவாய்..." என மீள மீள சுழன்று சென்ற பாடல் மகுடி இசையென தோன்றியது. அவள் படமெடுத்த நாகமென நெளிந்தாள். "தாபம் ஒரு தீ. எரிக! தாபம் ஒரு நதி. நெளிக! தாபம் ஒரு முகில். திகழ்க! தாபம் ஒரு கனல். சுடர்க! தாபம் மீள்பெருக்கு. நிறைக! தாபம் தனித்த விண்மீன். தெளிக!” என சுழன்று வந்த சொல்லாட்சி நா பறக்கும் நாகத்தின் நாதம் கொண்டிருந்தது. அவள் எழுந்தாடிய எரி என்றிருந்தாள்.

மாளிகை உப்பரிகைகளில் மதுவுண்டு அமர்ந்திருந்த பெருங்குடியினர் உரக்க சொல்லாடி மதுவை அங்கிருந்து சாலையில் செல்பவர் தலையில் வீழ்த்தி கூவி நகைத்தனர். “இந்நகரில் மது நீராடாத ஒருவரேனும் இப்போது இருக்க வாய்ப்பில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். “இக்காற்றின் மணத்தாலேயே மது மயக்கு கொள்ள முடியும்.” எழுந்த பேரொலி கேட்டு திருஷ்டத்யும்னன் தன் புரவியின் சரடை இழுத்தான்.  குதிரை திரும்பி வளைந்து நிற்க உடல் தூக்கி அப்பால் நோக்கி ஒரு மன்று மக்களால் சூழ்ந்து கரைகொண்டிருப்பதை கண்டான். நடுவே சகடை ஒன்றில் சரடு ஆட கலம் ஒன்று சுழன்று வந்தது. "பாஞ்சாலரே, மழலைக்கால நிகழ்வொன்றை ஒட்டி அமைக்கப்பட்ட ஆடல் இது. சிறுவராடும் விளையாட்டு. வாரும்" என்று சாத்யகி புரவியுடன் அம்மன்றிற்குள் நுழைந்தான்.

திறந்த சிறு செண்டு வெளியில் சூழ்ந்திருந்த மக்களின் நடுவே வட்டமாக வெளித்த தரையில் நாட்டப்பட்ட தூணின் மேல் எழுந்த பெருந்துலாவில் இருந்தது சகடை. அதில் ஓடிச்சென்ற நீள் கயிற்றின் முனையில் கட்டப்பட்ட மூன்றடுக்கு உறிக்கலங்கள் இருந்தன. அவை மலர்சூழ செம்பட்டு முடிச்சுகளால் அணி செய்யப்பட்டிருந்தன. மறுமுனையைப்பற்றிய முதியவர் ஒரு கையால் மீசையை நீவி சிரித்தபடி கயிறை இழுத்து உறியை சுழன்று பறக்க வைத்தார். கீழே நீல மணி உடலும் குழல் கொண்ட பீலியும் கழல் கொண்ட செங்கால்களும் ஒருகையில் வேய்குழலும் மறுகையில் செம்பஞ்சுக் குழம்பிட்ட அணிச்சக்கர குறியுமாக நின்ற இருபது இளஞ்சிறார் பாய்ந்து ஓடி நகைத்து அக்கலத்தை அடிக்க முயன்றனர். சூழ்ந்திருந்தவர்கள் பாணி கொட்டி பற்கள் ஒளிர நகைத்து கூவி அவர்களை ஊக்குவித்தனர். விண்ணில் இருந்து செம்பருந்தென இறங்கி வளைந்து அருகே வந்து அவர்கள் குழல் எட்டி அடிக்க போக்கு காட்டி சுழன்று மேலேறி மீண்டும் அணுகி விளையாடியது உறி. அதிலுள்ளது நறுவெண்ணை என்றான் சாத்யகி.

சிறுவர்கள் துள்ளி அடித்தனர். இலக்கு நழுவ புழுதி படிந்த மண்ணில் விழுந்து எழுந்து அவிழ்ந்த ஆடை அள்ளிச் சுற்றி மீண்டும் ஓடினர். ஒருவர் மேல் ஒருவர் தாவி எழுந்து பற்ற முயன்றனர் இளஞ்சிறுவர்கள்.  எல்லா முகமும் ஒன்றென தெரிந்தன. சில சினம் கொண்டு குவிந்திருந்தன. ஆவல் கொண்டு கூர்ந்திருந்தன. சலிப்புற்று சோர்ந்திருந்ததன. ஆனால் அக்களியை நின்று நோக்குகையில் அத்தனை முகங்களும் ஒரு முகமென விழிமயக்கு காட்டி உவகையில் ஆழ்த்தின. சுழன்று வந்த உறியின் நிழல் அவர்களைத் தொட்டு வருடி எழுந்து விலகியது. “அடியுங்கள் அடியுங்கள்!” என்றான் அருகிலிருந்த ஒருவன். “சின்னக் கண்ணா, அதோ உன் முன்னால்” என்று கைகாட்டிக் கூவினான் ஒருவன். அன்னையருள் சிலர் தங்கள் மைந்தனின் பெயர் சொல்லி அழைத்து உறியை சுட்டிக்காட்டினர்.

அங்கு நின்ற இளம் கண்ணன்களில் எவன் அவ்வுறியை அடிப்பான் என்பதை அக்கணமே திருஷ்டத்யும்னன் அறிந்துகொண்டான். சூழ்ந்திருந்த அன்னையரையும் பிறரையும் ஒரு கண்ணால் நோக்கி மறு கண்ணால் உறியை நோக்கி குறி வைத்து எம்பி ஏமாற்றமுற்று சலித்து பின் உறுதியை மீட்டு மீண்டும் தாவிக்கொண்டிருந்த அவர்கள் நடுவே அவன் மட்டும் தன்னைச் சூழ்ந்து சென்ற உடல்களை முட்டாமல் காலடிகளை ஊன்றி விழிகளைத் தூக்கி அவ்வுறி செல்லும் சுழற்பாதையை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தான். பின் விழிதூக்கி நோக்கலாகாது என்று உணர்ந்து கீழே சுழன்ற நிழல் நோக்கலானான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி "நிழலை நோக்குகின்றான். அவனே உறியை வெல்வான்" என்றான். "ஆம் நானும் அவ்வண்ணமே நினைத்தேன். உறியை நோக்குபவன் தானிருக்கும் நிலத்தை மறப்பான். ஒருபோதும் அவனால் உறியடிக்க முடியாது. நிழல் கொள்ளும் உருமாற்றம் வழியாக அதன் அண்மையையும் சேய்மையையும் எப்போது அறிகிறானோ அப்போது அவன் வென்றான்" என்றான். நான்கு வயது கண்ணன் சிறு கால்களை வைத்து புழுதியில் ஓடி உறி நிழலைத் தொடர்வதை ஆர்வத்துடன் திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான். மூன்று முறை உறி நிழலை சரியாக கால் வைத்து அவன் தொட்டதும் "உறி அணுகி அகலும் நெறியை அறிந்து விட்டான்" என்றான் சாத்யகி. "ஆம், இக்கணம் இதோ அவன் வெல்லப் போகிறான்" என்றான் திருஷ்டத்யும்னன். தன் உள்ளம் பொங்கியெழுந்து நுனி ஊன்றி நின்று துடிப்பதை அவன் உணர்ந்தான். எளிய இளையோர் விளையாட்டு. அங்கும் வந்து நின்று தன்னைக் காட்டும் புடவி சமைத்த பேராற்றலின் பகடை நுட்பத்தை வியந்தான்.

இளையோன் நிழல் நோக்கி சுற்றி வந்தான். அவன் உறியை நோக்கவில்லை என்றெண்ணிய முதியவர் உறியைச் சுழற்றி அவன் தலைக்கு மேல் கொண்டு வந்த ஒரு கணத்தில் எம்பி தன் கையிலிருந்த வேய்குழலால் கலத்தை ஓங்கி அறைந்தான். கலம் உடைந்து அவன் மேல் பொழிந்தது வெண்நுரை வெண்ணை. துடித்து எழுந்து கை வீசி தலைப்பாகை கழற்றி வீசி மேலாடை சுழற்றி எறிந்து கூச்சலிட்டு ஆர்த்தது சூழ்ந்திருந்த கூட்டம். உடலெங்கும் பெய்த வெண்ணையுடன் கை நீட்டி உறியை பற்றிக்கொண்டான் சிறு குழந்தை. முதியவர் சிரித்தபடி உறியை மேலே தூக்க இறுகப் பற்றி உறிக்கலத்துடன் சற்று மேலெழுந்து நிலம் தொடாது அவர்களின் தலைகளின் மேல் பறந்து சென்றான். "கண்ணன்! கண்ணன்! கண்ணன்!" என்று பெண்கள் குரலெழுப்பினர்.

பாணர் ஒருவர் தன் துடியை மீட்டி "இனிய வெண்ணையில் ஆடுக மைந்தா! புல்வெளியின் பனித்துளிகளால், பசு விழிகளில் திரண்ட கருணையால், அன்னை மடி சுரந்த வெம்மையால், ஆய்ச்சியர் கை தொட்ட நுரைச் சிரிப்பால், இரவெலாம் உருகிய இனிமையால் ஆனது இவ்வெண்ணை. கொள்க! உன் இதழும் இளவயிறும் நிறைய உனக்கென இங்கு எழுந்தது இவ்வெண்ணை" என்று பாடினார். உறியை கைவிட்டு முதியவர் ஓடிச்சென்று இளையவனை எடுத்து தோளில் ஏற்றிக்கொண்டார். அன்னையர் ஓடிச்சென்று அவரவர் குழந்தைகளைத் தூக்கி தோளேற்றிக்கொண்டனர். அத்தனை குழந்தைகளும் அவர்களின் தந்தையர் தோளிலேறி அலை மேல் நீந்துபவர்கள் போல அக்கூட்டம் மேல் சுற்றி வந்தனர். எவர் வென்றனர் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று தெரிந்தது. அத்தனை குழந்தைகளும் வென்றவர் போல கை நீட்டி ஆர்ப்பரித்தனர்.

“செல்வோம்” என்றான் சாத்யகி. "அனைவரும் வெல்லும் ஓர் ஆடல் இம்முதிரா இளமைக்குப் பின் வருவதே இல்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "சிறு தத்துவம் பேசும் வேளை வந்து விட்டது என்று எண்ணுகிறீரா பாஞ்சாலரே?" என்றான் சாத்யகி. உரக்கச் சிரித்தபடி திருஷ்டத்யும்னன் தன் புரவியை முடுக்கினான். "மது அருந்திவிட்டு நாம் சிறுதத்துவத்தைக் கொண்டு ஒரு பகடையாடினால் என்ன?" என்றான்.

துவாரகையின் உள்கோட்டை வாயிலில் காவலன் கள் மயக்கில் விழுந்து கிடந்தான். அவனைக் கடந்து சென்ற அவர்களின் புரவிகளை நிறுத்தி மேலிருந்து ஒருவன் இறங்கினான். "இளையோரே, அரசர் அவை நின்றிருக்கிறார். தங்களைக் கண்டதும் அங்கு வரச் சொன்னார்" என்றான். "ஆம்" என்று சொல்லி திரும்பி சாத்யகி "அரசர் அவையிருக்கிறார். நாம் அவரை காண்போம்" என்றான். திருஷ்டத்யுமனன் "இந்நகரம் முழுக்க களிகொண்டிருக்கையில் அவர் மட்டும் மன்றிருப்பது வியப்பளிக்கிறது" என்றான். "இந்நகரைவிட கள்மயக்கு நிறைந்த சித்தம் கொண்டவர் அவர். ஆனால் அம்மயக்கின் நடுவே எப்போதும் அனல் விழித்திருக்கிறது என்பர் சூதர்" என்றான் சாத்யகி. "வருக " என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அரண்மனைப் பெருமுற்றம் எங்கும் எதிர்மாளிகை நிழல் விழ அங்கே அருகே உடைவாள் ஒளிர்ந்துகிடக்க மது மயக்கில் வீரர்கள் துயில்வதை கண்டனர். "இக்கணம் ஒரு சிறு யவனர் குழு வந்திறங்கி இந்நகரை கனிந்த பழமென கொய்ய முடியும்" என எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணத்தை அறிந்ததுபோல் திரும்பிய சாத்யகி "இந்நகரமெங்கும் இன்று வீரர்கள் கள்மயக்கு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கணமும் துயிலாத வீரர்களால் துறைமுகம் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இம்மயக்கு நகர்கொள்ளும் புறநடிப்பு மட்டுமே. அதன் மந்தண அறைகளில் கூர்வேல்கள் ஒளிரும் கண்களுடன் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்" என்றான். "இளைய யாதவருக்கு பல்லாயிரம் கைகள் பலகோடி கண்கள் என்றொரு சொல் உண்டு. இந்நகரில் அவர் பார்க்காத இடமென்று ஒன்றில்லை என்றறிக!" என்றான்.

அரண்மனைப் பெருமுகப்பில் புரவியைப் பற்ற வந்த காவலனின் கண்களைக் கண்டதும் திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்தான், அவன் கணமும் சோர்பவன் அல்ல என்று. கிருஷ்ணனின் நிழல்வடிவென அங்கு அவன் இருப்பதாக எண்ணிக்கொண்டான். இறங்கி கடிவாளத்தை அவன் கையில் அளித்து தரையில் நின்றபோது அவன் உடல் நீர் மேல் எழுந்த படகென சற்றே ஆடியது. திரும்பி "என் உடையெல்லாம் மது நாறுகிறது யாதவரே... இப்படியே துவாரகைக்கரசைப் பார்ப்பது முறையாகுமா? என்றான். "மது மயக்குடன் பார்க்கத்தக்க மன்னரென இப்புவியில் இன்றிருப்பவர் இவர் ஒருவரே" என்று சிரித்த சாத்யகி "வருக!" என்று அவன் தோளை தட்டினான்.

ஏழு வெண்பளிங்குப் படிகளில் ஏறி உருண்ட இரட்டைத் தூண்களால் ஆன நீண்ட இடைநாழியில் பளிங்குத் தரையில் குறடு ஒலிக்க நிழல் தொடர நடந்தனர். திறந்த விழிகளெனத் தெரிந்த கதவுகளுக்கு அப்பால் சாளர ஒளி நீர் நிழலென விழுந்துகிடந்த வெண்பளிங்குத் தரை கொண்ட அறைகளையும், அலுவலர்கள் அமர்ந்து பணியாற்றிய கூடங்களையும், காவலர் தங்கள் நிழல் துணையுடன் நின்றிருந்த முனைகளையும் தாண்டி நடந்து சென்றனர். வெண்பளிங்கால் ஆன அரண்மனை என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். மரம் அரிதாகவே இங்கு மாளிகைக்கு பயன்பட்டிருக்கிறது. அச்சொல்லையும் அப்போதே கேட்டவன் போல "இது கடல் துமி வழியும் நகரம் பாஞ்சாலரே. இந்நகரில் எரிவெயிலில் இத்தனை தொலைவு வந்தும் வியர்த்திருக்க மாட்டீர்கள். இத்துமி பட்டு நகரின் மாளிகைகள் அனைத்தும் வியர்வை வழிய நின்றிருப்பதை காண்பீர். வெண்பளிங்கு உப்பு நீரில் உட்காது. மரம் சில நாட்களிலேயே கறுத்து உயிரிழக்கும்" என்றான்.

வணங்கிய வீரர்களின் நடுவே வழிவிட்ட வேல்களைக் கடந்து ஏழு பெருவாயில்களுக்கு அப்பால் சென்று அமர்ந்திருந்த சிற்றமைச்சரிடம் தங்கள் வருகையை சொன்னார்கள். "வணங்குகிறேன் இளையோரே! அரசர் அவை அமர்ந்துள்ளார். உள்ளே செல்க!" என்று அவர் வழியமைக்க வீரன் ஒருவன் வழிகாட்ட மாளிகையின் அறைகளைக் கடந்து சென்று மூடிய பெருவாயிலின் முன் நின்றனர். வாசலில் நின்ற நான்கு காவலர்களும் அவர்களை பணிந்தனர். "உள்ளே மன்று கூடியிருக்கிறது" என்றான் சாத்யகி. "அமைச்சரும் அயலவர் சிலரும் இருக்கிறார்கள்." வியப்புடன் "எப்படி தெரியும்?" என்றான் திருஷ்டத்யும்னன். "இவ்வாயிலில் உள்ள சிறு கொடிகள் குறிமொழியின் சொற்கள் போன்றவை" என்றான்.

பெருவாயில் விழி இமையென மெல்லத் திறந்து வெளிவந்த பொன்நூல் பின்னலிட்ட தலைப்பாகை அணிந்து குண்டலம் ஒளி விடும் ஏவலன் "இளைய யாதவர் தங்களைப் பார்க்க விழைகிறார். தாங்கள் அவைபுகலாமென ஆணை" என்றான். திருஷ்டத்யும்னன் "நான் கொணர்ந்த பரிசுப்பொருட்கள் என் கலத்தில் உள்ளன. அவை கரை சேர்ந்துவிட்டனவா?" என்றான். "அவற்றை இளைய யாதவர் முன்னரே கண்டிருப்பார். இங்கு எதுவும் செயல்பிழைப்பதில்லை" என்றான் சாத்யகி. கதவைத்திறந்து உள்ளே நுழைந்தபோது திருஷ்டத்யும்னன் சியமந்தக மணியை நினைவுகூர்ந்தான்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 2

பெரிய நீள்வட்ட அவைக்கூடத்தின் மறுமுனையில் மேடைமேல் எழுந்த பொற்பீடத்தில் பொன்னூல்பின்னலிட்ட வெண்ணிறப் பட்டாடை அணிந்து முத்துமாலைகள் சுற்றிக்கட்டப்பட்ட இளஞ்சிவப்புத்தலைப்பாகையில் மயிற்பீலியுடன் அமர்ந்திருந்தவரைத்தான் திருஷ்டத்யும்னன் முதலில் கண்டான். அவர் முன் ஏழு நிரையாக பீடங்களிடப்பட்ட பிறைவடிவ அவையில் காவல் வீரர் சுவர் சாய்ந்து படைக்கலம் ஏந்தி விழியிமையாதவர் போல் நிற்க அமைச்சரும் யவனர் எழுவரும் அமர்ந்திருந்தனர். முறைமைசாரா அவைக்கூடல் என தெரிந்தது. அக்ரூரர் பேசிக்கொண்டிருந்த சொல்லை நிறுத்தி அவர்களை திரும்பி நோக்கினார். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் அவை முன் சென்று தலை வணங்கினர். "துவாரகைத்தலைவருக்கு வணக்கம். யாதவ மன்னருக்கு என் உடைவாள் பணிகிறது" என திருஷ்டத்யும்னன் சொன்னான்.

இளைய யாதவர் புன்னகைத்து "வருக பாஞ்சாலரே! தங்களை முன்னரும் கண்டிருக்கிறேன். தாங்கள் என்னைக் காணும் உடல்நிலையில் அப்போது இல்லை" என்றார். அக்குரலைக்கேட்டு உளம் எழுச்சிகொள்ள சற்று முன்னகர்ந்து "இல்லை அரசே, நான் தங்களை கண்டேன்" என்றான் திருஷ்டத்யும்னன். "விழி திறக்க முடியா வெம்மை உடல் நிறைய நினைவழிந்து நான் படுத்திருந்தபோது என் மருத்துவநிலையின் அறைக்குள் உடன்பிறந்தாளுடன் நீங்கள் வந்திருந்தீர்கள். நெற்றியில் கைவைத்து என்னை உணர்ந்தீர்கள். இன்மொழி ஏதோ சொல்லி மீண்டீர்கள். விழி திறக்காமல் குரலினூடாக உங்களை நான் கண்டேன். ஒளி விரிந்த பெரும்புல்வெளி ஒன்றில் ஆநிரை சூழ குழல் கையிலேந்தி நீங்கள் நின்றிருக்க அருகே நின்று நான் நீங்கள் சொல்லும் ஒரு மொழியை கேட்டதாக உணர்ந்தேன்" என்றான்.

இளைய யாதவர் புன்னகைசெய்தார். திருஷ்டத்யும்னன் "அச்சொல்லை நான் இதுநாள்வரை மீள மீள எனக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். பொருளறியா ஒரு பாடல் வரியென" என்றான். கையை சற்று தூக்கி உரக்க "தீயோரை அழித்து நல்லோரைக்காத்து அறத்தை நிலை நாட்ட யுகங்கள் தோறும் மீள மீள நிகழ்கிறேன் என்ற வரி. அது யார் பாடிய பாடலென்று அறியேன். அதை நீங்கள் சொன்னதாக என் உள்ளம் எண்ணிக்கொண்டிருக்கிறது" என்றான். முகம் விரிந்த புன்னகையுடன் "ஆம், எங்கோ எவரோ பாடிய பாடல். மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல்" என்ற இளைய யாதவன் "அமர்க!" என்றான். திருஷ்டத்யும்னன் கைகூப்பி "இன்று இப்படி மணிக்கற்கள் சுடரும் அரியணையில் உங்களைப் பார்ப்பதற்கே நான் அப்போது பார்க்காதிருக்கலானேன் என உணர்கிறேன்" என்றான்.

நிலவொளியால் ஆனது போல் ஒளிர்ந்த வெள்ளிப்பீடம் ஒன்றில் இரு சேவகர் வழிகாட்டி அவனை அமரச் செய்தனர். சாத்யகி பின்னால் சென்று சிறுபீடம் ஒன்றில் அமர்ந்தான். திருஷ்டத்யும்னன் அக்ரூரரை நோக்கி தலை வணங்கி "மூத்த யாதவரை வணங்குகிறேன். தங்கள் அருள் என் மேலும் என்னை இங்கு அனுப்பிய ஐந்து குலம் மேலும் திகழ்க!" என்றான். அக்ரூரர் "உங்கள் தந்தையை நன்கறிந்திருக்கிறேன் இளவரசே. சௌத்ராமணி வேள்வியின் அனலில் தோன்றிய மைந்தன் என உங்களை பாணர் பாட கேட்டிருக்கிறேன். இன்று தலைக்குமேல் முகம் தெரியும் இளவலாகக் காண்பது உவகை அளிக்கிறது" என்றார். திருஷ்டத்யும்னன் "தாங்கள் என் தந்தையின் வடிவாய் இங்கிருக்கிறீர்கள் யாதவரே" என்றான்.

இளைய யாதவர் "பாஞ்சாலரே, தாங்கள் வந்த நோக்கம் எதுவோ அதை முன்னரே அளித்து விட்டேன் என்பதை அறிவீர்" என்றார். "ஆம், அப்படி சொல்லப்பட்டேன் ஆயினும் என் இளவரசி அளித்த சொல் கொண்ட ஓலையை தங்களுக்கு அளிக்க கடன்பட்டிருக்கிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன். அக்ரூரர் எழுந்து கை நீட்ட திரௌபதி அளித்த திருமுகத்தை பொற்குழலில் இருந்து வெளியே எடுத்து நீட்டி நீள நீவி சுருள்விரித்து முதற்சொல்லை படித்தபின் தலைவணங்கி அவரிடம் அளித்தான். அதை அவர் வாங்கி ஒரு சொல் வாசித்தபின் புன்னகையுடன் சுருட்டியபடி "இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் முன்னரே அறிவேன் பாஞ்சாலரே" என்றார்.

பெருநகைப்புடன் "எழுதப்படும்போது அருகிருந்தீரோ மாதுலரே?" என்று இளைய யாதவர் கேட்க "ஆம், எம் விழிகளுள் ஒன்று அவ்வறைக்குள் பறந்து கொண்டிருந்தது" என்றார் அக்ரூரர். அவையிலிருந்த அனைவரும் நகைக்க இளைய யாதவர் "இந்திரநீலம் திகழவிருக்கும் வெண்முகில் நகரம் என் நகரம் அல்லவா? அதை அமைக்கும் செல்வம் இக்களஞ்சியத்தில் உள்ளது. உங்கள் அரசியிடம் இன்றே அச்சொல்லை அனுப்புகிறேன். நீங்கள் திரும்புவதற்கு முன் செல்வம் அங்கே சென்றிருக்கும்" என்றார். திருஷ்டத்யும்னன் "நன்றி துவாரகைக்கு அரசே! பாஞ்சால குலம் என்றும் இக்கடன் தங்கள் குல வழிகள் தோறும் திகழ வேண்டுமென்று விரும்புகிறது. கோடி செல்வம் திரும்பக் கொடுத்தபின்னும் இது எஞ்சட்டும்" என்றான். "அவ்வண்ணம் விழைவீர் என்றால் மும்மடங்கு வட்டி கணக்கிடச்சொல்கிறேன்" என்று இளைய யாதவர் சொல்ல அவை உரக்க நகைத்தது.

பொற்கால் அரியணையில் வைரமுடி சூடி அமர்ந்திருக்கும் ஒருவர் அத்தனை இயல்பாக இருக்க முடியுமென்று அப்போதுதான் அவன் கண்டான். வீட்டு முற்றத்தில் அமர்ந்து மண் அள்ளி விளையாடும் சிறு குழந்தை போல, கன்று ஓட்டி புல்வெளி சேர்த்தபின் குழல் ஊதி கரைமரம் ஒன்றில் நிழலமர்ந்திருக்கும் யாதவச் சிறுவன் போல விளையாட்டென அவர் அங்கிருந்தார். "பாஞ்சாலரே, என்ன கண்டீர் இந்நகரில்?" என்றார் இளைய யாதவர். சாத்யகி சிரித்து "ஜாம்பவானை வென்று சியமந்தகமணி கொண்ட ஆடலை" என்றான். இளைய யாதவர் நகைத்து "சியமந்தக மணியின் ஆடலை நீங்கள் மேலும் காணநேரும் இளைஞரே" என்றார்.

அக்ரூரர் திரும்பி "சியமந்தகமணியை பற்றித்தான் தாங்கள் வரும்போது பேசிக்கொண்டிருந்தோம்" என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னார். "அந்த மணிக்கான விழைவு என்றும் இருந்தது. ஆனால் இப்போதுதான் அதை நோக்கி எழும் ஒருவன் உருவாகியிருக்கிறான்." திருஷ்டத்யும்னன் வினாவுடன் நோக்க "கூர்மபதத்தின் சததன்வா அந்த மணிக்காக படை தொடுக்கலாகும் என்றும் மன்று கூடி சூழ்ச்சி செய்வதாகவும் ஒற்றுச் செய்தி வந்துள்ளது. அந்த மணி தனக்கு யாதவர் குலத்தின் தலைமையை பெற்றுத்தரும் என்று அவன் நினைக்கிறான்."

சாத்யகி சிரித்து "ஒரு மணியா தலைமையை அளிப்பது?" என்றான். அக்ரூரர் "இளையவனே, என்றும் அரச நிலை என்பது அடையாளங்களால் ஆக்கப்படுவது என்று அறிக! மணிமுடியும் செங்கோலும் அரியணையும் வெண்குடையும் அடையாளங்கள் மட்டுமே. சியமந்தகம் யாதவர் குடிகளில் பிறர் எவரிடமும் இல்லாத செல்வம். அதை வென்றவன் அக்கணமே தலைமைக்கான அடையாளம் கொண்டவன் ஆகிறான். அவ்வடையாளத்தை தன் படைபலம் வழியாக நிறுவிக்கொள்வான் என்றால் அவன் முதன்மை பெறுகிறான். அவ்வகையில் சததன்வா எண்ணுவது சரியே. அவன் படைகொண்டு வருவான் என்ற செய்தியே யாதவரிடம் அவனுக்கென ஓர் ஆதரவுப்புலத்தை உருவாக்கும்" என்றார்.

சாத்யகி திரும்பி இளைய யாதவர் என்ன சொல்லப்போகிறார் என்பது போல பார்க்க அவர் இயல்பாக அசைந்து "ஆம், யாதவரிடம் பிளவுபட விழையும் ஒரு துடிப்பு என்றுமுள்ளது" என்றார். திருஷ்டத்யும்னன் "அக்ரூரரே, அந்த மணியை விழையும் தகுதி அவனுக்கு உண்டு என எண்ணுகிறீரா?' என்றான். அக்ரூரர் "இளவரசே, தாங்கள் அறிந்திருக்கலாம், சததன்வா இன்று கூர்மபதத்தின் எளிய இளவரசன் அல்ல. ஹரிணபதத்தின் யாதவ அரசியை நம் அரசர் மணப்பதற்கு முன்னரே அவன் வடக்கு நோக்கி சென்றான். காசியரசனின் உதவியுடன் இமயமலைச்சாரலில் அவனுக்கென ஒரு தனியரசை உருவாக்கிக்கொண்டான். கிருஷ்ணவபுஸ் இன்று வலுவான ஒரு யாதவச்சிற்றரசு. அவனைச் சூழ்ந்து பன்னிரெண்டு யாதவச் சிற்றூர்கள் உள்ளன. நாம் அறிவோம், காசி மகதத்திற்கு அணுக்கமானது. மகதமும் நமக்கு எதிராக இன்னொரு யாதவனை முன் வைக்க விழைகிறது" என்றார்.

அக்ரூரர் தொடர்ந்தார் "சததன்வா சியமந்தகத்தை கொள்வான் எனில் அவனே யாதவர் தலைவன் என்று மகதம் சொல் பரப்பும். செல்வம் அளிக்கப்பட்டால் அதை பாடி நிறுவ பாணரும் அமைவர். மகதத்தின் படைகளுடன் வந்து யாதவ நிலத்தில் ஒரு பகுதியை வென்று பிறிதொரு யாதவர்தலைவனாக தன்னை அமைத்துக்கொள்ள சததன்வா விழைகிறான். அந்த யாதவனை துவாரகைக்கு மாற்றாக நிறுத்தவும், துவாரகையை வென்ற பின் தங்கள் கைச்சரடுக்கு அசையும் பாவை மன்னனாக அமைக்கவும் மகதம் எண்ணுகிறது என்பதில் ஐயமில்லை." இளைய யாதவர் புன்னகையுடன் "எப்போதும் மகதத்தின் ஒரு காய் நம்மை நோக்கி நகர்த்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. இம்முறை தெரிவது ஒரு காய். தன் கண்காணா சரடுகளால் அது அசைப்பது பல காய்களை" என்றார்.

திருஷ்டத்யும்னன் "அந்த மணி இங்கு எவரிடம் உள்ளது?" என்றான். அக்ரூரர் "இன்னமும் அது யாதவ அரசியின் தந்தை சத்ராஜித்திடம்தான் உள்ளது. களிந்தகமோ சிறு கோட்டை. அங்கு அதை வைத்திருப்பது பாதுகாப்பல்ல என்று நான் பலமுறை சொன்னேன். ஆனால் அது அவர்களின் குலமுறைச் செல்வம், அது அங்கிருப்பதே முறை என்று அரசர் சொல்லிவிட்டார். அதை வருடம் மும்முறை ஹரிணபதத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு மூதன்னையர் முன் அதை வைத்து வழிபடுகிறார்கள். குலம்கொண்ட செல்வத்தை கள்வர் முன் படைத்து கைகட்டி நிற்பது போன்ற செயலது என்றே எனக்கு எப்போதும் தோன்றியுள்ளது" என்றார்.

இளைய யாதவர் சிரித்தபடியே "அக்ரூரரே, தெய்வங்கள் முன் குல அடையாளத்தை குல மணியைப் படைப்பது அவர்களின் முறையென்றால் கள்வரை அஞ்சி அதை நிறுத்தி விட முடியுமா? பிறகென்ன அரசு? மணிமுடி?" என்றார். அக்ரூரர் "அவ்வண்ணமல்ல. நான் சொல்வது ஓர் எளிய காப்புமுறை குறித்தே. அச்சடங்குகள் நிகழ்கையில் அரசி தன் அகம்படிப் பெரும்படையுடன் துவாரகையில் இருந்து அங்கு செல்லலாம். ஹரிணபதத்தில் மூதன்னையரின் வழிபாட்டில் அவரும் இணையலாம். அப்போது அவ்வூர் நம் படைகளால் சூழப்பட்டிருக்கும். சியமந்தகத்தைக் கவர எண்ணும் கைகளிலிருந்து காக்கவும் பட்டிருக்கும்" என்றார். "ஆனால் மணம் முடித்து இங்கு வந்தபின் ஒருமுறை கூட தன் ஊர் திரும்ப நம் அரசி ஒப்பவில்லை. அவர் உள்ளம் இங்கிருந்து ஒருபோதும் பிரியப் போவதில்லை."

சாத்யகி "அன்னை சத்யபாமை துவாரகையைவிட்டு ஓரிரவேனும் பிரிந்திருப்பது நிகழாது. இது அவர் திருமகளென ஒளிகொண்டு வாழும் செந்தாமரை மலர் என்று பாணர்கள் பாடுகிறார்கள். அது உண்மை" என்றான். "கிருதவர்மனை மேலும் ஒற்றுச் செய்திகளை தொகுத்துக் கொணரச் சொல்லி அனுப்பியுள்ளேன்" என்றார் அக்ரூரர். "சததன்வா எண்ணுவதென்ன என்று நமக்கு இங்கு ஐயமில்லை. செய்ய உள்ளது என்ன என்று அறியவே விழைகிறேன்." அவரது கவலையை எவ்வண்ணமும் பகிர்ந்துகொள்ளாதவர் போல இளைய யாதவர் எழுந்து சிறுவர் சோம்பல் முறிப்பதுபோல கைவிரித்து "அக்ரூரரே, இச்சிறு அலுவலை நீரும் கிருதவர்மரும் இணைந்து நிகழ்த்துக! நான் அஸ்தினபுரிக்குச் சென்று சிலநாட்கள் கடந்து மீள எண்ணியுள்ளேன்" என்றார்.

அக்ரூரர் திகைத்து "இப்போதா...? இன்றுதானே அஸ்திரபுரியின் தூதர் இங்கு வந்துள்ளார். தூது முடிந்துள்ளதே?" என்றார். "இது அதன் பொருட்டு அல்ல. இளைய பாண்டவர் அஸ்தினபுரிக்குச் செல்ல விழைகிறார். நான் உடன் செல்வதாக சொல்லி இருக்கிறேன்" என்றார் இளைய யாதவர். அக்ரூரர் குழப்பத்துடன் சாத்யகியை நோக்கிவிட்டு "அரசர் இந்நிலையை சற்று குறைத்து புரிந்துள்ளார் என நினைக்கிறேன். சததன்வாவின் அறைகூவல் சிறிதல்ல. மகதத்தின் படைகளைப் பெற்றுவிட்டால் நம் மீது ஒரு போர்த் தாக்குதல் இருக்கக் கூடும்" என்றார்.

இளைய யாதவர் ஏவலரிடம் கிளம்பலாம் என கையசைத்துவிட்டு "அதற்குத்தான் மன்று சூழ்ந்து அரசியல் தேற தாங்கள் இருக்கிறீர்கள். படை கொண்டு சென்று வெல்ல கிருதவர்மர் இருக்கிறார். இந்நகர் காக்க என் மருகன் சாத்யகியும் உள்ளான். அக்ரூரரே, நீங்கள் இருக்கையில் நான் எதை ஆற்ற வேண்டும்? எதை அறிய வேண்டும்?" என்றார். அக்ரூரர் "அவ்வண்ணமெனில் தங்கள் ஆணை!" என்று சொல்லி தலை வணங்கினார்.

ஏவலர் அவரது ஆடைகளை கொண்டுவந்தனர். செங்கோலை ஏவலனிடம் அளித்து, மணிமுடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்துவிட்டு, பட்டாலான பெரிய யவன ஆடையை தோள்வழியாக அணிந்தார். யவன வணிகர்களில் ஒருவர் "சியமந்தகம் யாதவரை ஆட்டி வைக்கும் ஒரு மாய தெய்வம்" என்றார். இளைய யாதவர் "மானுடரை ஆட்டி வைப்பவை தெய்வங்கள் அல்ல. தெய்வங்கள்தான் இங்கு வந்ததுமே மானுடவிசைகளில் சிக்கிக்கொள்கின்றன" என்று சொல்லி நகைத்தார். அவரது இதழ்களில் வெண்பற்கள் மின்னிய அழகைக் கண்டு திருஷ்டத்யும்னன் ஒருகணம் தாளா அகஎழுச்சி கொண்டான். ஒரு மானுடன் இந்தப்பேரழகை கொள்வதெப்படி என எண்ணம் எழுந்தது.

இன்னொரு யவனர் நகைத்தபடி "யாதவ குலங்களை அமுது கவர்ந்த மோகினிபோல் ஆட்டி வைக்கிறது போலும் இச்சியமந்தகமணி" என்றார். "ஆம், ஆனால் அனைத்து பெரும்செல்வங்களும் இதைப்போன்று விழைவின் களத்தில் இடைவிடாத ஆடலில்தான் உள்ளன" என்றார் இளைய யாதவர். "ஏனெனில் செல்வத்தைக் கொள்பவன் பிறர் மேல் சொல்லாளுகையை அடைகிறான். ஒரு செல்வம் பிறிதொரு செல்வத்தை வெல்கிறது. செல்வம் மேலும் செல்வமாக ஆகிறது. அது தனக்குரிய அனைத்தையும் தானே உருவாக்கிக் கொள்கிறது" என்றபடி தன் மேலாடையை சுற்றி அமைத்துக்கொண்டார். "செல்வமெனும் தெய்வம் தனக்குரியவர்களை தொட்டு எடுத்துக்கொள்ளும் விந்தையை எண்ச்ணி எண்ணி வியக்கலாம். அதிலுள்ளது இப்புடவியை நடத்தும் முதன்மைப்பெருநெறி."

"அக்ரூரரே, நான் பயணத்திற்கான ஒருக்கங்களை செய்ய வேண்டியுள்ளது. சற்று ஓய்வெடுத்துவிட்டு திரியக்வனம் செல்கிறேன். அங்கே இளைய பாண்டவர் தன் தோழியருடன் தீராநீர்விளையாட்டில் இருக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு நாளைமறுநாள் கிளம்புகிறேன்" என்றபின் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் "இங்கிருங்கள் பாஞ்சாலரே. என் மருகனை துணையுங்கள். தங்கள் சொல்லுக்கும் வாளுக்கும் உரிய வேலை இங்கு வரக்கூடும்" என்றார். திருஷ்டத்யும்னன் தலை வணங்கி "அதையே விழைந்தேன் அரசே" என்றான். எதையோ அறிந்து தன்னுள் ஒளித்துகொண்டிருப்பதுபோல காட்டும் மாறா இளஞ்சிரிப்புடன் "அவ்வாறே ஆகுக!" என்று உரைத்து இளைய யாதவர் அரியணை பீடம் விட்டு படியிறங்கினார்.

அப்பால் சித்தமாக நின்ற இசைச் சூதர்கள் கொம்பும் முழவும் மீட்ட வீரர் வாழ்த்தொலி உரைக்க கைவணங்கியபடி மெல்ல நடந்து மன்று நீங்கினார். அவை எழுந்து வாழ்த்தொலித்து இளைய யாதவரை வழியனுப்பியது. வெண்குடை கவிழ்த்து அவர் பின் ஒருவர் செல்ல, முழவும் கொம்பும் ஒலிக்க இசைச்சூதர் முன்னால் செல்ல அகம்படியினர் தாளங்களும் சாமரங்களுமாக தொடர அவர் சென்று மறைவதை திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான். வாழ்த்தொலிகள் அவிய பெரும் கதவு மூடப்பட்டது. இயல்பாகி பெருமூச்சுடன் மீண்டும் அவர்கள் பீடங்களில் அமர்ந்து கொண்டனர். அக்ரூரர் திரும்பி சாத்யகியிடம் "நீங்கள் இருவரும் கிருதவர்மரிடம் இருங்கள். அவர் ஆணைகளை இயற்றுங்கள்" என்றார்.

சாத்யகி "இன்று கிருதவர்மர் என்ன அலுவலை இயற்றிவிடப்போகிறார்? நகர் முழுக்க மது நுரைக்கிறது" என்றான். அக்ரூரர் "இளையோனே, இந்நகரம் மது உண்டு மயங்குவது ஒரு தோற்றமே என்று நீ அறிந்திருப்பாய். இங்கு படைக்கலங்கள் கூர் தீட்டப்படுகையில் அந்தப் பட்டுத்திரையை இழுத்து மூடிக்கொள்கிறோம்" என்றார். சாத்யகியின் கண்கள் மாறுபட்டன. "சியமந்தகத்தைக் கவர சததன்வா எண்ணுவதை புரிந்துகொள்கிறேன். அவன் துணிவானென நம்பவில்லை" என்றான். அக்ரூரர் "அவன் துணிந்துவிட்டான் என்றே எண்ணுகிறேன் இளையோனே. மன்று கூடி தன் சார்புற்றவர்களிடம் பேசுகிறான் என்றாலே துணிந்துவிட்டான் என்றுதான் பொருள்? அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒற்றுச் செய்தி வழியாக இங்கு வந்து சேரும் என அறியாதவனா அவன்?" என்றார்.

திருஷ்டத்யும்னன் "யாதவ அரசி இவற்றையெல்லாம் அறிந்துள்ளாரா?" என்றான். "இளையவனே, இந்நகரம் நம் அரசியின் இல்லத்து வாசலில் இட்ட மாக்கோலம் போன்றது. அவர் அறியாதது இந்நகரில் ஒன்றும் நிகழ்வதில்லை. யாரறிவார்? நாம் இங்கு பேசிக்கொண்டிருப்பதையே அவர் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருக்கலாம்" என்றார். குலமூத்தார் ஒருவர் "சியமந்தகம் இந்நகரத்தில் யாதவ அரசியிடம் இருந்திருக்க வேண்டும், கொற்றவைக் காலடியில் சிம்மம் இருப்பது போல. அதற்கு உகந்த இடம் அதுவே. வேறு எங்கிருந்தாலும் அது இங்கு வந்தாக வேண்டும். அதுவரை அது குருதி கொள்ளும். குலங்களை அழிக்கும். புரங்களை எரிக்கும்" என்றார். அக்ரூரரின் விழி மெல்ல அசைவதைக் கண்டு திருஷ்டத்யும்னன் ஒரு சிறிய உளநகர்வை அடைந்தான். அக்ரூரர் எதையோ எண்ணி தவிர்த்தவர்போல தோன்றினார். நீள்மூச்சு விட்டு "பார்ப்போம் என்ன நிகழ்கிறதென்று" என்றார்.

"சததன்வாவிடம் எத்தனை படைப்பிரிவுகள் உள்ளன?" என்றான் சாத்யகி. "இப்போது மகதத்தின் எட்டு படைப்பிரிவுகள் அவனைத் துணைக்கும் நிலையில் கங்கையின் கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கங்கைக்கரை யாதவ குடிகளில் பன்னிரு குடிகள் அவனை ஆதரிக்கின்றன. படைகொண்டு வந்து சியமந்தகத்தை அவன் வெல்வான் என்றால் யாதவர்களில் மேலும் பலர் அவர்களுடன் சேரக்கூடும்" என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் "யாதவ மூத்தவரே, அரசு சூழ்தலில் பொதுவாக அது மூடத்தனம் என்றே கொள்ளப்படும். துவாரகையோ பெரு நகரம். யாதவர்களை இணைக்கும் பெருவிசை இளைய யாதவர். இம்மையத்தை உதறி யாதவர் ஏன் விலகிச்சென்று அவரிடம் சேர வேண்டும்?" என்றான்.

அக்ரூரர் "இளையோனே, நிலம் வளைத்து வேளாண்மை செய்யும் குடிகளுக்கும் நிலம் விட்டு நிலம் சென்று ஆபுரக்கும் யாதவருக்கும் உள நிலையில் பெருத்த வேறுபாடு உள்ளது. அனைத்தையும் கைவிட்டு புதிய திசை தேர்ந்து செல்வதென்பதும், அப்பால் அறியப்படாத ஒன்று காத்திருக்கிறதென கனவு காண்பதும் யாதவர் குருதியில் உள்ள குணங்கள். புதிய நிலம் என்ற சொல்லைப்போல அவரை எழுச்சிகொள்ளச்செய்யும் ஏதும் இல்லை. ஆகவே யாதவர் ஒருபோதும் ஒருங்கிணைந்ததில்லை. ஆயிரம் பெரும்கரங்களுடன் ஆண்ட கார்த்தவீரியர் கூட யாதவரில் மூவரில் ஒருவரையே ஒருங்கிணைக்க முடிந்தது. அன்று அத்தனை யாதவரும் ஒருங்கிணைந்திருந்தால் கார்த்தவீரியர் வென்றிருப்பார். இன்று பாரதவர்ஷத்தில் பாதி யாதவரால் ஆளப்பட்டிருக்கும்" என்றார்.

"துவாரகையின் வல்லமையும் வெற்றியுமே யாதவர்களில் பலரை நம்மை விட்டு விலகச் செய்யும் இளையவனே" என்றார் அக்ரூரர். "ஒவ்வொரு யாதவனும் எங்கோ தனக்குரிய நிலம் ஒன்று காத்திருப்பதாக எண்ணுகிறான். இங்கிருந்து அங்கு செல்லும் பயணத்தில் எப்போதும் இருக்கிறான். ஆகவே இம்மரத்தில் ஒருபோதும் அத்தனை பறவையும் சிறகு ஒடுக்கி அமர்வதில்லை என்றுணர்" என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் அதை முழுதும் புரிந்துகொள்ளாமல் தலை அசைத்தான்.

சாத்யகி "பாஞ்சால இளவரசர் பேரரசியைப் பார்க்க விழையக்கூடும்" என்றான். அக்ரூரர் "ஆம், உங்களைப்பார்க்க அரசியும் விழைவார்" என்றார். "இன்று மாலையே முறைமைச்சொற்களையும் செயல்களையும் ஒன்று பிழைக்காமல் நிகழ்த்துங்கள். அவரை அரசியர்மாளிகையில் சந்திக்கலாம். அவரை பார்க்கச்செல்கையில் முறையான அரச உடை அணிந்துகொள்ளுங்கள். நீங்கள் இளைய யாதவரிடம் பேசுகையில் ஒரு பேரரசரை எண்ணவேண்டியதில்லை. யாதவ அரசி அவ்வாறல்ல. ஒவ்வொரு சொல்லிலும் எண்ணத்திலும் அவர் பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசி."

அக்ரூரரிடம் விடைபெற்று திரும்பவும் இடைநாழிக்கு வந்தபோது திருஷ்டத்யும்னன் தலைகுனிந்து நடந்தான். "என்ன, அரசு சூழ்தலில் ஆழ்ந்துவிட்டீர் போலும்?" என்றான் சாத்யகி. "இல்லை, நான் எண்ணிக்கொண்டிருப்பது பேரரசரின் சொற்களைத்தான்" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி "அவர் விளையாட்டாகப்பேசுவார். அவர் என்ன எண்ணுகிறார் என்பது எப்போதும் அந்தச் சொற்களுக்கு நெடுந்தொலைவில் இருக்கும்" என்றான். "இல்லை, அவ்வாறல்ல. அவர் இன்று சொன்ன அத்தனை சொற்களும் பொருள்மிக்கவை. குறிப்பாக பொருள்விழைவைக் குறித்து சொன்னவை" என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி சற்று வியப்புடன் நோக்க "சியமந்தகத்தின் ஆடல் தொடரும் என்றார்" என்றான் திருஷ்டத்யுமனன். "அது தனக்குரியவர்களை தெரிவுசெய்யும் என்றார். நம்மைத்தான் சொல்கிறார். நம்மனைவரின் உள்ளத்து ஆழங்களிலும் அந்த மணிக்கான விழைவு இருக்கலாம் என்கிறார். நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். நான் அதை விழைகிறேனா என்று" என்றான். சாத்யகி "விழைகிறீரா?" என்றான். "ஆம், நான் அரசகுடியினன். பொருள்விழைவே ஷாத்ர குணம். அவர் அந்த மணியைப்பற்றி சொன்னதுமே எனக்குள் விழைவு எழுந்தது. அந்தமணியை சததன்வா கவர்ந்துசெல்ல நான் சென்று மீட்டு வர அதை இளையவர் எனக்கே பரிசாக அளிப்பதுபோல ஒரு பகற்கனவு அப்பேச்சு நடந்துகொண்டிருப்பதனூடாகவே என் நெஞ்சில் ஓடியது."

சாத்யகி முகம் சற்றே மாற விழிகளை விலக்கியதைக் கண்டு திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டு "அதே கனவு உமக்குள்ளும் ஓடியதை இதோ உம் விழிகளில் காண்கிறேன்" என்றான். சாத்யகி சிரித்து "ஆம், நான் அதற்காக நாணினேன்" என்றான். "அது மணிக்கான விழைவே. நாம் இளையவர் மேல்கொண்ட அன்பு இவ்வண்ணம் எண்ணச்செய்கிறது" என்றான் திருஷ்டத்யும்னன். "எத்தனை நுணுக்கமாக மானுடனை அறிந்திருக்கிறார்?" என்றான் சாத்யகி. "அந்த மணியை நம் நால்வரிடம் அளித்துவிட்டுச்செல்கிறார். அக்ரூரரும் கிருதவர்மரும் நீரும் நானும் விழைவை வைத்து விளையாடவிருக்கிறோம். எவர் வெல்வார் என அவர் பார்க்க விழைகிறார்" என்றான் திருஷ்டத்யும்னன்.

"அக்ரூரர் இளையவரின் அகச்சான்று. இந்த ஆடலில் நாம் மூவர் மட்டுமே உள்ளோம். அவர் நம்மை ஒற்றறியும் யாதவரின் விழி என்றே தோன்றுகிறது" என்று சாத்யகி சொன்னான். "பாஞ்சாலரே, உண்மையில் இப்போது என்னை அச்சம் வந்து கவ்விக்கொள்கிறது. நம்மால் இந்த ஆடலை கடக்கமுடியுமா? சியமந்தகம் நம் கைக்குக் கிடைக்குமென்ற தருணம் வருமென்றால் நாம் விழைவு கொண்டு அறம்பிழைக்காமலிருப்போமா?" திருஷ்டத்யும்னன் தன் ஆழத்தில் ஒரு திடுக்கிடலை உணர்ந்தான். ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. ஆனால் எதுவென்று தெரியவில்லை.

இடைநாழியினூடாக அதை தன் உள்ளத்தால் துழாவியபடியே நடந்தான். தலைகுனிந்து அருகே வந்த சாத்யகி பெருமூச்சுடன் "மாலையில் சந்திப்போம் பாஞ்சாலரே. தங்களுக்கான அரண்மனை அமைந்திருக்கும் இந்நேரம்" என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தான்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 3

திருஷ்டத்யும்னன் தன் அறைக்குச் சென்றதுமே அனைத்துடலும் தளர மஞ்சத்தில் படுத்து அக்கணமே நீள்துயிலில் ஆழ்ந்தான். விழிகளுக்குள் வண்ணங்கள் கொப்பளித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து விழித்துக் கொண்டபோது அவன் அறைக்குள் சிற்றகல் சுடர் மணியொளி விட்டுக் கொண்டிருந்தது. அந்த வண்ணங்களை பெண்களாக எண்ணியதை உணர்ந்து புன்னகையுடன் எழுந்து கதவைத்திறந்து இடைநாழியை நோக்கினான். அவனுக்காகக் காத்திருந்த தூதன் வந்து வணங்கி "பாஞ்சாலரை வணங்குகிறேன். யாதவ அரசி தங்களை இரவில் அரசியர் மாடத்தில் சந்திக்க விழைவதாக செய்தி வந்துள்ளது" என்றான்.

உடலில் கூடிய விரைவுடன் திருஷ்டத்யும்னன் திரும்பி அறைக்குள் ஓடி ஏவலரை அழைத்து நீராட்டுக்கு ஒருங்கு செய்யுமாறு ஆணையிட்டான். விரைந்து நீராடி ஆடைகளை அணிந்து அரசதோற்றத்தில் வெளிவந்து முற்றத்தில் நின்றபோது அவனுக்கான தேர் அங்கு சித்தமாக இருந்தது. அதிலிருந்த தேரோட்டி, “அமருங்கள் பாஞ்சாலரே! தங்களுக்காக அரசியார் காத்திருக்கிறார்” என்றான். அவன் ஏறிக்கொண்டதும் இருபக்கமும் ஓங்கி நின்ற ஏழடுக்கு மாளிகைகளை ஊடுருவிச்சென்ற கல்பதிக்கப்பட்ட தரையில் சகடங்கள் ஒலிக்க தேர் சென்றது. சாளரங்கள் ஒவ்வொன்றாக ஒளிகொண்டு விழிகளாகத் தொடங்கின. விளக்கொளிகள் நீண்டு செவ்விரிப்புகளாக பாதையில் கிடந்தன. அந்திக்குரிய ஓசைகள் எழுந்து சூழ்ந்தன. மரங்களில் சேக்கேறிய பறவைகளின் குரல்களுடன் ஆலயமணிகளின் ஒலிகளும் இசைக்கூடங்களின் யாழிசையும் முழவிசையும் கலந்த செவிமுழக்கம்.

தேர் வளைந்து அரசியர் மாடத்தின் முன்னால் நின்றது. பச்சைத்தலைப்பாகையில் அந்தகக் குலத்தின் முத்திரைப்பொன் சூடிய இளம் அமைச்சன் அருகே வந்து வணங்கி “வருக பாஞ்சாலரே! என் பெயர் கலிகன். அரசியார் தங்களை எதிர்நோக்கி அமர்ந்திருக்கிறார்” என்றான். அவன் இறங்கியதும் அங்கு நின்றிருந்த வீரர்கள் அவனையும் பாஞ்சால குலத்தையும் வாழ்த்தி குரலெழுப்பினர். கலிகன் ”தங்கள் தூதோலை அரசியிடம் வந்தது. பரிசில் பொருட்களை அரசி பார்வையிட்டார். தங்களிடம் இந்திரபிரஸ்தத்தைப் பற்றியும் தங்கள் தமக்கையார் குறித்தும் பேச விழைகிறார்” என்றான். அக்குறிப்புகூட சத்யபாமாவின் ஆணைப்படியே அளிக்கப்படுகிறதென உணர்ந்த திருஷ்டத்யும்னன் "அது என் நல்லூழ்” என்றான்.

"அரசி மன்று வந்து அமர்ந்ததும் அழைப்புவரும் இளவரசே, வருக " என்றான் கலிகன். உள்ளூர ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மிகச் சரியாக பொருத்தப்பட்டிருப்பதை அவன் உணர்ந்தான். ஒவ்வொரு கணமும் அரசுசூழ்தலையே எண்ணுபவரால் மட்டுமே அவ்வாறு செயல்களை ஒன்றுடன் ஒன்று பின்னி பெருவலையென விரிக்கமுடியும். ஓர் அரண்மனையின் எளிய செயல்களில் உள்ள ஒழுங்கு மையத்தில் இருப்பவரின் திறனை காட்டுகிறது. வலையின் ஒரு முடிச்சு சிலந்தி எப்படிப்பட்டதென்பதற்குச் சான்று.

இளைய யாதவரின் அரண்மனை அளவுக்கே உயர்ந்து வளைந்திருந்த கூரைக்குக் கீழே யவனர்களால் அமைக்கப்பட்ட உருண்ட சுதைத்தூண்களால் தாங்கப்பட்ட நீண்ட இடைநாழியின் ஒருபக்கம் திறந்த சதுரமுற்றமும் மறுபக்கம் வளைந்த மேல் முகடு கொண்ட பெரிய வாயில்களும் பட்டுத் திரைச்சீலைகள் தொங்கி அசையும் பெருஞ்சாளரங்களும் இருந்தன. அறைகளுக்குள் மானுடர் ஓசையில்லாது வண்ணநிழல்களென செயலாற்றினர். திரையசையும் ஒலி என மந்தணக்குரலில் உரையாடினர்.

அங்கு காவல் நின்ற அனைவருமே தோலாலான காலணிகள் அணிந்து ஓசையின்றி நடப்பதை அவன் கண்டான். அவனுடைய இரும்புக் குறடின் ஒலி மட்டுமே அங்கே ஒலித்தது. அடி வைக்க அடி வைக்க அந்த ஒலி பெருகி அரண்மனையின் பல்வேறு அறைகளுக்குள் எதிரொலித்தது. திறந்திருந்த பெருவாயில்கள் ஒவ்வொன்றும் அவ்வொலியை நோக்கி வாய் திறந்து கவ்விக் கொள்ள வருவதாகத் தோன்றியது. ஒரு கணம் தயங்கியபின் அவன் தன் குறடைக் கழற்றி அங்கிருந்த தூண் ஒன்றின் அருகே வைத்து திரும்பி ஏவலனிடம் "எனக்கு ஒரு மென்தோல் காலணி கொணர்க!” என்றான்.

அவனைப் புரிந்து கொண்ட கலிகன் ”இக்கணமே இளவரசே!” என்று சொல்லி விரைந்து சென்றான். அவன் ஓசையற்ற பலநூறுபேர் ஒவ்வொரு கணமும் உள்ளும் புறமும் வந்துசென்று செயலாற்றிக்கொண்டிருந்த அந்த அறைகள் கரையான் புற்றுக்கள் போன்றிருப்பதாக எண்ணிக்கொண்டு நின்றிருந்தான். கலிகன் கொண்டுவந்த காலணிகளை அணிந்தபின் அவ்வரண்மனைக்குள் தானும் ஒரு கரையானாக கலந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உள்ளடுக்குகளில் கரவறைகள். மந்தணப்பாதைகள். எங்கோ ஒரு அரசி. அத்தனை பேரையும் பெற்று நிறைத்திட்டவள்.

பெரிய வெண்கலக் கதவுக்கு முன் அவர்கள் சென்று சேர்ந்தபோது கலிகன் வணங்கி ”இதற்குமேல் தாங்களே செல்லுங்கள் இளவரசே! என் அலுவல் இங்கு நிற்பது” என்றான். வாயில் காவலனிடம் அவனுடைய முத்திரை கொண்ட விரலாழியைக் காட்டி "பாஞ்சால இளவரசர்” என்றான். "சற்று நேரம் பொறுங்கள் இளவரசே" என அவன் உள்ளே சென்றான்.

அவன் உள்ளே சென்று மீள்வது வரை அந்தக் கதவில் பொறிக்கப்பட்டிருந்த சிற்பங்களை நோக்கி திருஷ்டத்யும்னன் நின்றான். யவனச் சிற்பியரால் செதுக்கி வார்க்கப்பட்ட அந்தக் கதவு ஒன்றுடன் ஒன்று சரியாக உடல் பொருந்தி படலமென பரவிய பலநூறு புடைப்புச் சிற்பங்களால் ஆனதாக இருந்தது. அவன் நோக்குவதைக் கண்ட கலிகன் ”இது யவனர்களின் பிரமோதியன் என்னும் தெய்வம் விண்ணிலிருந்து முதல் நெருப்பைக் கொண்டு வந்த கதையைச் சொல்கிறது. இறைவிருப்புக்கு மாறாக மானுடரின் நன்மைக்கென அவன் நெருப்பை விண்ணிலிருந்து மண்ணுக்கு இறக்கிவந்தான். அவர்களுக்கு நெருப்பென்பது மானுடவிழைவின் அடையாளம்." என்றான். அதைக் கேட்டதுமே ஒவ்வொரு சிற்பமும் பொருள்கொண்டு உயிர் பெற்றதைப் போல ஆவதை அவன் கண்டான். பதிக்கப்பட்ட செந்நிற வைரமென நெருப்பை எடுத்துக் கொண்டு முகில்களில் பாய்ந்து இறங்கும் பிரமோதியனை சற்று குனிந்து அவன் நோக்கினான். அந்த முகத்தில் பேருவகையுடன் சற்று அச்சத்தையும் கலக்க முடிந்த அச்சிற்பியின் கற்பனைத் திறனை வியந்தான்.

ஓசையின்றி வெண்கல அச்சில் சுழன்ற கதவு திறந்து வெளிவந்த காவலன் “இவ்வழி பாஞ்சாலரே!” என்றான். திரும்பி சிற்றமைச்சரிடம் தலையசைத்துவிட்டு திறந்த சிறு வாயிலினூடாக திருஷ்டத்யும்னன் உள்ளே சென்றான். ஓர் அறைக்குள் நுழையப்போவதாக அவன் எண்ணியிருந்தான். உள்ளிருந்தது ஒரு பெரும் பூந்தோட்டம் என்பதை அறிந்ததும் கால்தயங்கி நின்றுவிட்டான். ஒன்றுடன் ஒன்று கலந்த பலவகையான மலர்மணங்கள் குளிர்காற்றென வந்து அவனைச் சூழ்ந்தன.

அவனை நோக்கி வந்த சேடி ஒருத்தி வணங்கி “வருக பாஞ்சாலரே!” என்றாள். அவன் மலர்களைத் தொட்டு அலையும் நோக்கை நேர்செலுத்த முடியாமல் செடிகளின் நடுவே போடப்பட்ட கற்பாதைவழியாக மெல்ல நடந்தான். சோலை நடுவே மலர் சூழ்ந்த கொடியிருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த சத்யபாமையை கண்டதும் சீரான அரசமுறை நடையுடன் அருகே சென்று வணங்கி "துவாரகையின் அரசியை வணங்குகிறேன். தங்கள் பாதங்கள் என் பார்வையில் பட்ட இத்தருணம் என் குடிக்கு பெருமையளிப்பதாக!" என்றான்.

புன்னகையுடன் "இளைய பாஞ்சாலரை சந்திப்பது எனக்கும் இந்நகருக்கும் மகிழ்வளிப்பது. துவாரகை தங்களை வணங்குகிறது. அமர்க!" என்று சத்யபாமா சொன்னாள். அவள் நீலநிற நூல்பூக்கள் பின்னப்பட்ட பீதர்நாட்டு வெண்பட்டாடை அணிந்து, இளங்குருத்துக்கொடி போன்ற மெல்லிய மணிமுடியை தலையில் சூடியிருந்தாள். அதில் தளிரிலைகள் போல பொற்தகடுகள் விரிந்திருக்க நடுவே மலர்ந்த செம்மலர்கள் போல பவளங்களும் வைரங்களும் பதிக்கப்பட்டிருந்தன. காதுகளில் சுடர்ந்த செங்கனல் கற்களும், தோள்சரிந்து முலைமேல் குழைந்த மணியாரமும் கைகளில் அணிந்திருந்த வெண்முத்து வளையல்களும் அருகிருந்த அகல்சுடர்கொத்தின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன.

அணிகள் அரசியரை உருவாக்குவதில்லை அரசியரால் அவை பொருள் கொள்கின்றன என்று எண்ணிக் கொண்டான். உடலெங்கும் சுடர் விழிகள் திறந்தவள் போலிருந்தாள் பாமா. அத்தனை விழிகள் அவனை நோக்கி கூர்ந்திருக்க அகல்சுடரின் கனல் படர்ந்த அவள் விழிகளை நோக்கி பேசுவது எளிதல்ல என்று தோன்றியது. அவள் புன்னகையுடன் "இந்திரப்பிரஸ்தத்துக்காக செல்வத்தை நாடி தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்றும், அச்செல்வம் அரசரால் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிந்தேன். அதற்கு மேலாக எனது தனிக் கொடையாகவும் செல்வத்தை அளிக்க நினைக்கிறேன். தங்கள் உடன் பிறந்தவளிடம் என் வாழ்த்துக்களைச் சொல்லி அதை கொடுங்கள். பாஞ்சால இளவரசி அமைக்கவிருக்கும் இந்திரப்பெருநகரில் என்னுடையதென ஓரிரு மாளிகைகள் அமையட்டும்” என்றாள். ”அது என் நல்லூழ் அரசி!” என்றான் திருஷ்டத்யும்னன்.

"அந்நகரின் வரைபடத்தை வரவழைத்து பார்த்தேன். துவாரகை போலவே சுருளாக குன்று மேல் ஏறும் பெருநகரம். அழகியது. அருகிருக்கும் யமுனை அதை மேலும் அழகாக்குகிறது” என்றாள் சத்யபாமா. திருஷ்டத்யும்னன் "யமுனையே ஆயினும் இங்குள்ள பெருங்கடலுக்கு அது நிகராகாது" என்றான். "கடலெனும் நீலக்குழலில் சூடப்பட்ட மலர் போலிருக்கிறது இந்நகர். இதன் பேரழகை நான் எங்கும் கண்டதில்லை."

சத்யபாமா புன்னகையுடன் ”இங்கு நான் உணர்ந்தது ஒன்றுண்டு பாஞ்சாலரே. பெருவணிகம் நிகழாத நகரம் வாழ்வதில்லை. ஆனால் நகரின் அனைத்து ஒழுங்குகளையும் அழகையும் பெருவணிகம் ஒவ்வொரு கணமும் அழித்துக் கொண்டிருக்கும். பெருவணிகர் அளிக்கும் செல்வத்தைக் கொண்டு அப்பெருவணிகத்தை கட்டுப்படுத்துவதே நகர் ஆளுதலின் கலை. இங்கே உலக வணிகர் நாளும் ஒருங்குகூடுவதனாலேயே ஒவ்வொரு நாளும் நகரை சீர்படுத்த வேண்டியுள்ளது" என்றாள். திருஷ்டத்யும்னன் "நான் சென்ற நகரங்களில் இந்நகரளவுக்கு முழுமை கூடிய பிறிதொன்றில்லை" என்றான். "ஒவ்வொரு நாளும் மீட்டப்படும் யாழ் போலிருக்கிறது இது. மீட்டும் மெல்விரல்களை இதோ இங்கு கண்டேன்."

அவனுடைய புகழ் மொழிகளை அவள் மேலும் கேட்க விரும்பியதை விழிகள் காட்டின. அந்நகரைக்குறித்த பெருமிதம் அவளுடைய இயல்பென்று அவன் அறிந்தான். குழந்தையை அன்னையிடம் புகழ்வதுபோல என்று தோன்றியது. "இந்நகர் பாரத வர்ஷத்தில் இணையற்றது அரசி. ஒவ்வொரு அணுவிலும் உயிர்த்துடிப்புள்ளது. எந்நகரிலும் வாழும் பகுதிகளும் அழிந்த பகுதிகளும் இருக்கும். உயிருள்ள இடங்களும் வெறும்சடலத்துண்டுகளும் கொண்டுதான் நகரங்கள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கும் இடங்கள் என்றே இங்குள்ள அத்தனை மூலைகளையும் வளைவுகளையும் நான் கண்டேன்" என்றான்.

"பாரதவர்ஷத்தில் இதற்கு இணையாக முழுமையாக ஆளப்படும் சில நகரங்கள் உள்ளன என்றறிந்துள்ளேன். இளமையில் ஒரு முறை ஜராசந்தரின் ராஜகிருகத்திற்கு சென்றுளேன். அது அவரது விழியாலும் சொல்லாலும் முழுதாளப்படும் பெரு நகரம். ஆனால் அந்தக்கட்டுப்பாட்டினாலேயே தன் உயிர்த்துடிப்பை இழந்து விசையால் இயக்கப்படும் பெரும்பொறி போல இருந்தது. அஸ்தினபுரி எனக்கு தொன்மையான ஒரு முரசு எனத் தோன்றியது. இந்நகரோ நதிப்பெருக்கருகே செழித்த காடு போல் உள்ளது. கட்டற்றதென்று முதற் கணமும் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதென்று மறுகணமும் தோன்றச் செய்யும் பெரும் முழுமை இதற்கு கை கூடியுள்ளது" என்றான்.

அவன் சொல்லச் சொல்ல அவள் முகம் விரிந்துகொண்டே சென்றது. "இந்நகர் தங்களால் ஆளப்படுவதென்பதை ஒவ்வொரு தெருவிலும் காண முடிந்தது யாதவ அரசி" என்றான். "நகராளும் காவலர் வாளேந்தும் மிடுக்கு கொண்டிருக்கவில்லை. இசைக்கோல் ஏந்தும் பணிவு கொண்டிருக்கின்றனர். முகப்புகள் அளவுக்கே புழக்கடைகளும் தூய்மையும் அழகும் கொண்டிருக்கின்றன. இங்குள்ள கொடிகளை வந்ததுமே பார்த்தேன். ஒரு கொடியும் ஓரம் கிழிந்ததோ பழையதோ கடற்காற்றில் பறந்தும் அழுக்கானதோ ஆக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் கொடிகளைக்கூட நோக்கி சீர்படுத்தும் ஒரு சித்தம் இங்குள்ளது என்றுணர்ந்தேன். இது கொற்றவையால் ஆளப்படும் திரிபுரம் அல்ல. திருமகளால் ஆளப்படும் ஸ்ரீபுரம்" என்றான்.

புகழ் மொழி அவளை மேலும் மேலும் மலரச் செய்து இதழ்களும் விழிகளும் பூக்க வைத்தது. நாணமென உடல் மெல்ல ஒல்க, மெல்ல சிரித்து "ஆம். இங்கு வந்த ஒவ்வொரு யவனரும் சோனகரும் பீதரும் அவ்வாறே சொல்லியுள்ளனர். உலகில் இந்நகருக்கிணையான பிறிதொன்றில்லை என்று நானும் அறிவேன்" என்றாள். "இது திருமகள் கொலுவீற்றிருக்கும் செம்மலர் என்றொரு சூதன் சொல்லக் கேட்டேன். நானும் அவ்வண்ணமே உணர்ந்தேன்" என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்யபாமா தன் குழலில் சரிந்த முத்தாரத்தை சீர்ப்படுத்தி காதுக்கு முன் செருகியபடி “இளைய யாதவர் இன்று இங்கிருந்து கிளம்புகிறார் என்றனர். அவர் இளைய பாண்டவருடன் அஸ்தினபுரி செல்வதாக சொன்னார்” என்றாள். அவள் விழிகள் மாறிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவனுடைய புகழ் மொழிகளை உவகையுடன் அள்ளிக்கொண்ட அவள் உள்ளம் உடனே அதைக் கடந்து எச்சரிக்கை கொண்டுவிட்டது என்றறிந்தான். எளிய பொதுச் சொற்கள் வழியாக மீண்டு வருகிறாள். மெல்ல அவள் கூற விழைவதை நோக்கி செல்வாள். அவள் அரசுசூழ்கலை அறிந்தவள் அல்ல. ஆகவேதான் அந்த மாற்றம் அத்தனை தெளிவாக வெளித்தெரிகிறது.

மேலும் அவளே பேசட்டும் என அவன் காத்திருந்தான். "இந்திரப்பிரஸ்தத்தின் அமைப்பையும் ஒழுங்கையும் கண்டு திரும்புவதாக இளைய யாதவர் சொன்னார். ஆனால் முன்னரே அவர் அதை அறிவார்" என்றாள். திருஷ்டத்யும்னன்."ஆம் அவரறியாதது இல்லை" என்றான். "அதன் வரைபடத்தை அவர் இங்கு வைத்திருந்தார்" என்றாள். வீண்சொற்கள் வழியாக உரையாடல் செல்வதை உணர்ந்தான். தொலை தூரத்தில் அருவி ஒலி கேட்கும் உணர்ச்சியுடன் படகில் செல்வது போன்று எச்சரிக்கையுடன் அமர்ந்திருந்தான்.

"சததன்வா படைமேற்கொள்ளக் கூடும் என ஒற்றுச் செய்தி வந்துள்ள இந்நேரத்தில் அரசர் அஸ்தினபுரி செல்வது உகந்ததல்ல என்று நான் உணர்ந்தேன்" என்றாள். திருஷ்டத்யும்னன் அச்சொற்கள் எந்த நோக்கத்துடன் சொல்லப்படுகின்றன என்ற எச்சரிக்கையை அடைந்து "உரிய கைகளில் அதை ஒப்புக்கொடுத்துவிட்டுத்தான் செல்வதாக யாதவர் சொன்னார்" என்றான். சத்யமபாமா "இங்கு அவருக்கு நம்பிக்கைக்குரிய பலர் உள்ளனர்" என்றாள். எங்கே உரையாடலை கொண்டு செல்கிறாள் என்றறியாமல் திருஷ்டத்யும்னன் காத்திருந்தான்.

“பாஞ்சாலரே, சியமந்தக மணியைப்பற்றி நீர் அறிந்திருக்கிறீரா?” என்று அவள் கேட்டாள். மிக மெலிதாக அவள் உள்ளத்தின் விளிம்பு தெரிவதைப்போல அவன் உணர்ந்தான். “ஆம். அது வான் சுழலும் கதிரின் விழி என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்று அவன் சொன்னான். “இன்று பாரத வர்ஷத்தின் அத்தனை சக்ரவர்த்திகளும் விழையும் மணி அது” என்றாள் சத்யபாமை. “எங்கள் அந்தகக் குலத்திற்கு வெங்கதிரோனால் வழங்கப்பட்டது அது. எங்கள் குல தெய்வம் என அதை கொண்டிருக்கிறோம். அதை தான் கொள்ள வேண்டுமென்று சததன்வா விழைகிறான்.”

அவள் விழிகளில் வந்து சென்ற மெல்லிய அசைவை அவன் கண்டான். ஓர் ஆழ்ந்த உணர்வை அவள் கடந்து செல்கிறாள் என்று தோன்றியது. ”இளையோனே, இளமை முதல் அந்த மணியை நான் என் அகத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே நான் என்று உணர்வேன். என் தந்தையிடம் அந்த மணி இருப்பதே குறை என நான் உணர்ந்ததுண்டு ஏனெனில் நான் இங்கிருக்க என் கொழுநர் நெஞ்சில்தான் அந்த மணி இருந்தாக வேண்டும். அதை பிறர் கொள்வதென்பது என்னை வெல்வதென்றே ஆகும். ஒரு போதும் நான் அதை ஒப்ப முடியாது” என்றாள்.

"சததன்வா யாதவர்களின் தலைமையை வெல்ல அந்த மணியை விழைகிறான் என்று அறிந்தேன்" என்றான் திருஷ்டத்யும்னன். சத்யபாமை விழி சரித்து சற்று தலை திருப்பினாள். அக்கணம் அவளில் அரசி மறைந்து ஒரு அழகிய இளம்பெண் தோன்றினாள். “இல்லை இளையோனே! அவன் கொள்ள விழைவது அரசை அல்ல" என்றாள். அக்கணமே நெடுந்தூரம் தாவிச் சென்று அனைத்தையும் புரிந்துகொண்ட திருஷ்டத்யும்னன் "ஒரு போதும் அந்த மணியை அவன் வெல்ல ஒப்பேன். என் உயிர் கொடுக்க சித்தமானேன்" என்று தலை வணங்கி சொன்னான்.

அவன் தன்னை உணர்ந்துகொண்டதை அறிந்து சற்றே திகைப்புற்றவள் போல அவள் விழி தூக்கி "அவனை சுட்டு விரலால் சுண்டி எறிய துவாரகை அரசரால் இன்று இயலும். ஆனால் அவர் விலகிச்செல்ல விழைகிறார். அவரது திட்டங்களை நானறியேன்..." என்றாள். திருஷ்டத்யும்னன் "அவர் இங்குளோர் விழைவுகளுடன் விளையாட எண்ணுகிறார் அரசி" என்றான். சத்யபாமா "ஆம், என் விழைவுகளுடனும்தான்" என்றாள்.

யாழ்க்கம்பிகள் மேல் விரல்தொட்டது போல திருஷ்டத்யும்னன் அவள் விழிகளை நோக்க பாமா "அதனால்தான் இங்கிருக்காமல் களம்விட்டு வெளியே செல்கிறார்" என்றாள். "இளைய பாண்டவருடன் செல்லத்தான்…" என்று திருஷ்டத்யும்னன் தொடங்க "இளைய பாண்டவர் இங்குதான் இருக்கிறார். நாளில் பெரும்பகுதியை அவருடன்தான் செலவிடுகிறார் அரசர். துணைவியர் அனைவருக்கும் அப்பால் அவர் உள்ளத்தில் மிக அண்மையில் இருப்பவர் தோழரே. அவருக்கோ இவர் இருக்குமிடமே விண்ணுலகம். எனவே இருவருமே இந்திரப்பிரஸ்தம் செல்ல எந்தத் தேவையும் இல்லை" என்றாள்.

திருஷ்டத்யும்னன் அதற்கு என்ன மறுமொழி சொல்வது என்றறியாமல் அமர்ந்திருந்தான். "நான் ஐயுறுவது என்னவென்றால் இந்த ஆடலில் இருப்பது சததன்வா மட்டுமல்ல" என்று சத்யபாமை சொன்னாள். "அறுவரை இக்களத்தில் கருக்களென அவர் நிறுத்தியுள்ளார். நானும் சததன்வாவும் இருபக்கம் நிற்கிறோம். அக்ரூரரும் கிருதவர்மனும் சாத்யகியும் நீங்களும். நடுவே இருப்பது சியமந்தகம். மானுடர் எவரும் விழையும் செல்வம். மானுட விழைவுகளுடன் அது விளையாடிக்கொண்டிருக்கிறது."

"இளைய பாஞ்சாலரே, என் பொருட்டு நீங்கள் அக்ரூரரின் எண்ணமென்ன என்றறிக!" என்றாள் பாமா. உள்ளம் சற்று திடுக்கிட "அவர் இளைய யாதவரின் அகச்சான்று என்றார் சாத்யகி" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம், அதுவும் உண்மையே. ஆனால் சியமந்தகம் அனைத்தையும் வென்று செல்லும் வல்லமை கொண்டது. அதன் முன் எவை நின்றிருக்குமென அறியேன் இளையோனே!. செங்கதிரோனின் தழல் இரும்பை நீராக உருக்கும் வெம்மை கொண்டது அல்லவா?"

அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. "அக்ரூரரை ஐயப்படுகிறீர்களா?" என்று மீண்டும் கேட்டான். "நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் அனைவரையும் ஐயப்படுகிறேன்" என்றாள். "அக்ரூரர் இந்நகரில் அரசருக்கிணையாக அமர்ந்திருக்கிறார் அரசி, அவர் விழைய இனி ஏதுமில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "அரசருக்கு இணையாக அரசராக அல்ல" என்றாள் சத்யபாமை.

"அத்துடன் கிருதவர்மன்…" என்று திருஷ்டத்யும்னன் சொல்லப்போக "இளையோனே, கிருதவர்மன் எதன் பொருட்டு இளைய யாதவரின் தொண்டனாக ஆனான்?" என்றாள் பாமா. திருஷ்டத்யும்னன் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை உளம்கூர்ந்து அமர்ந்திருந்தான். "இளைய யாதவரின் ஆற்றலைக் கண்டு அவன் அடிமையானான். அது நிகழ்ந்த கணத்தை நான் நன்கு நினைவுறுகிறேன். இளையோராக யாதவர் ஹரிணபதத்திற்கு வந்து எமது மன்றில் நின்று பேசியபோது அவரில் எழுந்த ஊழிப்பேராற்றலின் அழகைக் கண்டு உளம் மயங்கி உடன் வந்தவன் கிருதவர்மன். எளிய யாதவனாக இந்நகர் புகுந்து இன்று இந்நகரை முழுதாள்கிறான்" என்றாள்.

"இளையோனே, வழிபடு தெய்வத்தின் குணங்களை வழிபடுவோன் தானும் அடைகிறான். தெய்வம் என்பது மானுடன் தான் என உணர்வதின் உச்சமல்லவா? தெய்வமென்றே ஆகி மீள்வதையல்லவா அவன் முழுமை என்று அறிகிறான்" என்றாள் பாமா. திருஷ்டத்யும்னன் அவளுடைய சொற்களை தன் சித்தத்தின் பலநூறு விழிகளால் சூழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். "கிருதவர்மன் அவன் உள் ஆழத்தில் ஏதோ ஓர் அறையின் இருண்ட பீடமொன்றில் இளைய யாதவராக மாறுவேடமிட்டு அமர்ந்திருக்கிறான் என்றுணர்க!" என்றாள் சத்யபாமா.

திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அரசு சூழ்தலின் உத்திகளை கடந்துசெல்லும் அகநோக்கு கொண்டவள் இவள் என எண்ணினான். அவள் மெல்ல பீடத்தில் சாய்ந்து வலக்கையால் சரிந்த மேலாடையை எடுத்து மடியிலிட்டு புன்னகைத்து "உங்கள் உடல் நலம் எவ்வாறுள்ளது இளையோனே?" என்றாள். அவள் அப்பேச்சை முடித்து விலகி விட்டதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். "மெதுவாகவே சீரடையும் என்றனர் அரசி" என்றான். அவள் "போரில் அடைந்த இழப்பு அல்லவா? பெரிதொரு போர் உங்களை மீட்கக்கூடும் பாஞ்சாலரே" என்றாள்.

கூர்முள்ளால் தொடப்பட்டது போல திடுக்கிட்டு விழிதூக்கி அவள் கண்களைப் பார்த்ததுமே அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். தலை திருப்பி "ஆம், அதையே நானும் எண்ணுகிறேன்" என்றான். "வென்று வருக! நலம் சூழ்க!" என்று அவள் சொன்னாள். "ஆணை அரசி" என்று அவன் தலை வணங்கினான். அவள் கைதூக்கி அவனை வாழ்த்தினாள்.

சத்யபாமை திரும்பி நோக்க தொலைவில் பூக்களின் நடுவே நின்றிருந்த சேடி மெல்ல அருகே வந்தாள். இடக்கையை அவள் மெல்ல அசைத்ததும் அவள் பின்னால் வந்து சத்யபாமையின் நீண்ட ஆடையை எடுத்து மண் படாமல் பிடித்துக் கொண்டாள். சத்யபாமை எழுந்துகொள்ள திருஷ்டத்யும்னனும் எழுந்து நின்றான். சத்யபாமை அவனிடம் "தங்களை நான் என் இளையோனாக எண்ணுகிறேன். மேலும் தாங்கள் யாதவர் அல்ல. யாதவரின் எளிய விழைவுகளுக்கு அப்பால் செல்லவும் மண்ணில் காலூன்றிநின்று நோக்கவும் தங்களால் இயலுமென நினைக்கிறேன். அக்ரூரருடனும் கிருதவர்மனுடனும் அணுகியிருங்கள். என் விழிகளாக தங்களிரு விழிகள் அமையட்டும்" என்றாள். "ஆணை அரசி" என்று திருஷ்டத்யும்னன் தலை வணங்கினான்.

அவள் திரும்பிச் செல்ல இரு காலடி எடுத்து வைத்தாள். பின் இயல்பாக ஆடையை சீர்படுத்தும் பாவனையில் நின்று மறுபக்கம் திரும்பி அவனை விழி நோக்காமல் "மற்ற அரசியரை தாங்கள் சந்திக்க வேண்டும் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகைத்தான். அதுவரை இருந்த பொற்பீடத்திலிருந்து இறங்கி யாதவப் பெண்ணாக அவள் மாறிவிட்டதை எண்ணிக் கொண்டான். "விதர்ப்ப அரசி வலப்பக்க மாளிகையிலும் ஜாம்பவதி இடப்பக்க மாளிகையிலும் இருக்கிறார்கள். பிற ஐவருக்கும் ஐந்து மாளிகைகள் இவ்வரண்மனை வளைப்புக்கு வெளியே குன்றின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளன" என்றாள்.

"ஆம், இளவரசி, அவர்களையும் சந்தித்தாக வேண்டும். அதுவே அரசமுறை" என்றான் திருஷ்டத்யும்னன். "விதர்ப்ப அரசி இளையவருடன் அஸ்தினபுரிக்கு போகிறாள் என்று இன்று செய்தி வந்தது. அவளை முன்னே சந்தித்துவிடுங்கள்" என்றாள். அவள் அறியாமல் விழி திருப்பி தன் விழியை நோக்குவாள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். ஆனால் அவள் இயல்பான குரலில் "அரசரின் எட்டு துணைவியர் எட்டு குலங்களை சார்ந்தவர்கள், அறிந்திருப்பீர்" என்றாள். "ஆம்" என்றான். "அவர்களில் விதர்ப்ப அரசியே க்ஷத்ரிய குலத்தில் பிறந்தவள் என்பதால் அஸ்தினபுரியில் அவளுக்கு தனி இடம் இருக்கக்கூடும்" என்றாள் சத்யபாமா.

அவள் உள்ளம் செல்லும் திசையை மிக அண்மையிலெனக் கண்டு உள்ளூர எழுந்த புன்னகையுடன் திருஷ்டத்யும்னன் சொன்னான் "ஷத்ரியர் என்பதால் இளைய அரசிக்கான இடம் அமைவது இயல்பு. ஆனால் இந்நகர் யாதவ நிலம். இதை ஆளும் யாதவ அரசி தாங்களே" என்றான். "நிலமும் குலமும் ஏற்றவரே பட்டத்தரசி. பிறர் துணைவியரே."  அவள் முகம் புன்னகை கொள்வதை பக்கவாட்டில் கன்னத்தின் அசைவெனவே அறிய முடிந்தது. ஆனால் விழிகளைத் திருப்பி அவள் அவனை நோக்கவில்லை. "நன்று" என்று சொல்லி நடந்து விலகிச் சென்றாள்.

தலை வணங்கியபின் அவன் அங்கு நின்று அவள் செல்வதை நோக்கினான். அவள் மீண்டும் திரும்பவில்லை. அவள் உரு மறைந்ததும் அவன் கைகள் தளர்ந்து தொடைகளை தொட்டன. செல்லும்போது ஒருகணமேனும் அவன் விழிகளை திரும்பி நோக்கியிருந்தால் அப்போது அவள் அரசியென்றல்லாமல் யாதவப் பெண்ணென்று இருப்பதை அவன் உணர்ந்திருப்பதைக் காணமுடியும் என அவள் அறிந்திருந்தாள். அப்படி விழி கொடுக்கலாகாது என்ற நுட்பமே அவளை அரசியாக்குகிறது என்று எண்ணிக் கொண்டான்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 4

திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் "எனக்காகக் காத்திருந்தீரோ?" என்றான். சாத்யகி "ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை" என்றான். "நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன். "யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்" என்றான் சாத்யகி. "ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை."

திருஷ்டத்யும்னன் "என்னிடமும் ஆணைகளைத்தான் பிறப்பித்தார். அதற்கு முன் என்னைப் புரிந்துகொள்ளவும் தன்னைப் பற்றி நான் புரிந்துகொள்ளச் செய்யவும் சற்றே முயன்றார்" என்றான். சாத்யகி சற்று முகம் மாறுபட்டு "வியப்பாக உள்ளது. அவர் எவரிடமும் தன்னை முன்வைப்பதில்லை" என்றான். திருஷ்டத்யும்னன் "ஆம், அப்படிப்பட்ட பெண்மணி அவர் என்று எனக்கும் தோன்றியது. ஆகவே சற்று வியப்படைந்தேன்" என்றான். "ஆனால் அவர் ஒரு உருக்குப்பாவை அல்ல. மூதன்னையர் பலர் குடிகொண்டிருக்கும் கோயில்சிலை என்று தோன்றியது. இன்று இத்தனை சிறிய நேரத்தில் நான் ஓருடலில் எழுந்த பலரைப் பார்த்து மீண்டிருக்கிறேன்." சாத்யகி "அறைக்குத் திரும்பவேண்டுமா என்ன? நாம் இரவில் துவாரகையை மீண்டும் ஒருமுறை சுற்றி வருவோமே?" என்றான். "நானும் அவ்வாறே எண்ணினேன். பகலில் நன்கு துயின்றுவிட்டேன்" என்று சொன்ன திருஷ்டத்யும்னன் "கிளம்புவோம்" என்றான்.

தன் அணிகளை மட்டும் கழற்றி ஏவலனிடம் கொடுத்துவிட்டு "இரவில் நேரம் கடந்தே திரும்புவேன். இரவுணவை வெளியே உண்பேன்" என்றான். இருவரும் இளம் சிறுவர்கள் போல சிரித்தபடி படிகளில் துள்ளி இறங்கி பெருங்கூடத்தை அடைந்து முகப்பு மண்டபத்தைக் கடந்து பெருமுற்றத்திற்குச் சென்றனர். அங்கே சாத்யகியின் புரவியின் அருகே திருஷ்டத்யும்னனின் புரவியும் கடிவாளமும் சேணமுமாக நின்றது. "சித்தமாக வந்துள்ளீர்" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம், நான் இரவில் அறையில் துயில்வதில்லை. துவாரகை இரவில் விரியும் மலர் என்று யவனர்கள் பாடுவதுண்டு" என்று சொன்ன சாத்யகி தன் புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப் பற்றி கால் சுழற்றி ஏறிக்கொண்டான். அது அவன் ஆணைக்காக காத்திருக்காமலேயே கற்பாளங்களில் குளம்புகள் தடதடக்க விரைந்தோடியது. திருஷ்டத்யும்னன் தன் புரவி மேல் ஏறும்போது இடையில் உடலுக்குள் புண்பட்டிருந்த தசை இழுபடும் வலியை மீண்டும் உணர்ந்தான். இது எப்போது விலகும் என்ற சலிப்பும் வலி ஒப்பு நோக்க மிகக்குறைந்திருக்கிறது என்ற ஆறுதலும் தொடர்ந்து வந்தன.

வால் சுழற்றி பாய்ந்து சென்ற சாத்யகியின் புரவிக்குப் பின்னால் திருஷ்டத்யும்னன் புரவியும் விரைந்தது. அரண்மனை உட்கோட்டை வாயிலையும் தொடர்ந்த மூன்று காவல் கோட்டங்களையும் கடந்து துவாரகையின் அரசப் பெரு வீதியை அடைந்தனர். காலையில் இருந்த திரள் முற்றிலும் வடிந்து அங்கு பிறிதொரு மக்கள் கூட்டம் திரண்டிருப்பதை அவன் கண்டான். பெரும்பாலும் மாலுமிகளும் அவர்களின் கலங்களின் சிற்றூழியர்களும் அடங்கிய அத்திரள் ஒருகணம் சத்யபாமையின் அரண்மனை முகப்பின் வெண்கலக்கதவின் பரப்பு என திருஷ்டத்யும்னனுக்கு தோன்றியது. உடல்களும் முகங்களும் ஒன்றின் உடல் வளைவை இன்னொன்று நிரப்பும்படியாக அடுக்கப்பட்ட படலமென அவன் முன் நெளிந்தன. தலைப்பாகைகளில், குண்டலங்களில், மேலாடைகளில், கீழாடைகளில், கச்சைகளில் ஒவ்வொன்றிலும் இருக்கும் முடிவற்ற வகைமைகளை நோக்கி விழிவியந்தபடி அவன் சென்று கொண்டிருந்தான். பீதர்கள் மொழி குயிலின் அகவல் போல் இருந்தது. யவனர் மொழி நாகணவாய்ப்புள்ளின் குழறல் போலிருந்தது. சோனகர்களின் மொழி குறுமுழவை விரலால் நீவியது போல. காப்பிரிகளின் மொழி துடிதாளம்.

அனைத்து மொழிகளையும் இணைத்து எழுந்த துவாரகையின் மொழி என ஒன்று அவனைச் சூழ்ந்து அலையோசை என இடைவிடாது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. மிக நன்கறிந்த ஒன்று, சிந்தையால் தொட முடியாதது. ஒருவேளை அப்பெருவீதி கனவில் எழுமென்றால் அச்சொல்லை புரிந்துகொள்ள முடியும். அவன் புரவி எதிரே ஆடி வந்த மஞ்சல்களையும், அலையிலென உலைந்த பல்லக்குகளையும், பொற்பூச்சு மின்னிய தேர்களையும், கடிவாளம் இழுபட பிடரி சிலிர்த்த புரவிகளையும், நிழல்மேல் கருநிழல் என அசைந்து வந்த வேழங்களையும் பாம்புபோல நெளிந்து வளைந்து கடந்து சென்று கொண்டிருந்தது. வண்ணங்கள் கலந்த நதிமலர்ப்படலமென மக்கள் திரள் அலை அடித்தது. அதில் தத்தும் நெற்று என புரவி செல்வதாக உணர்ந்தான். இருமருங்கிலும் பந்தத்தழல்களும் கொடிகளும் படபடத்தன.

செண்டுவெளிக்கு அப்பால் கொற்றவையின் ஆலய முகப்பில் கூடி நின்றவர்கள் கைதூக்கி "அன்னையே, மூவரில் முதல்வியே, மூவிழி கொண்டவளே, முப்புரம் எரித்தவளே, குலம்காத்து எங்கள் பலிகொண்டு அமைக!" என்று கூவி வணங்கினர். சாத்யகி தன் புரவியை இழுத்து சற்று ஒசித்து நிறுத்தி கருவறை நோக்கி தலை குனித்து வணங்கினான். அருகே வந்து நின்ற திருஷ்டத்யும்னனும் தலை வணங்கினான். உள்ளே ஏழு வாயில்களுக்கப்பால் எழுந்த கருவறையில் கொற்றவை கடைவாயில் எழுந்த வளைஎயிறுகளும் உறுத்த பெருவிழிகளும் எட்டு தடக்கைகளில் கொலைப்படைக் கருவிகளுமென அமர்ந்திருந்தாள். காலடியில் சிம்மம் தழல் பிடரி சிலிர்க்க, செங்குருதி வாய் திறந்து விழிக்கனல் சுடர்ந்து நின்றிருந்தது. சுடராட்டு முடிவது வரை இருவரும் அங்கே நின்றனர். இறுதியில் நறும்புகையாட்டு நிகழ்ந்தது. கூடி நின்றவர்கள் வணங்கியபடி முன்னால் சென்றனர். சாத்யகி புரவியை இழுத்து சாலையில் செல்ல அவனுக்கு இணையாக திருஷ்டத்யும்னன் தன் புரவியை நடத்தினான்.

சாத்யகி "நான் வணங்கும் இறைத் தோற்றம் என்றும் அன்னையே" என்றான். "கொலைப்படைக் கருவி ஏந்தி விழி விரித்து நிற்கும் கரிய அன்னை. அருள் எழுந்த கண்களுடன் முலை சுரந்து நிற்கும் அன்னைக்கு நிகரான உள எழுச்சியை அவள் அளிக்கிறாள்" என்றான். திருஷ்டத்யும்னன் "பாஞ்சாலத்திலும் ஐந்து அன்னையரின் மைந்தராகவே குலங்கள் தங்களை உணர்கின்றனர். எங்கள் அன்னையரும் குருதி விடாய் கொண்ட கொலைத்தெய்வங்களே" என்றான். "அன்னை வீற்றிருக்கும் இல்லம் என்றும் மங்கலம் பொலிவது" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பாக "பேரரசி இங்குள்ள யாதவர் எவரையும் முழுக்க நம்பவில்லை என்று உணர்கிறேன்" என்றான். சாத்யகியின் நட்பார்ந்த சிரிப்பு அதை சொல்லவைத்தது என்றும் சொல்லியிருக்கலாகாது என்றும் உணர்ந்து "என் உளப்பதிவுதான் அது" என தொடர்ந்தான்.

அவ்விரு கூற்றுக்களுக்கும் நடுவே தன் உள்ளத்தில் உருவான இணைப்பை சாத்யகி உணராமலிருக்கும்பொருட்டு திருஷ்டத்யும்னன் "அவர் அத்தனை யாதவரையும் கண்காணிக்கிறார்" என்றான். "அக்ரூரரைக் கூட அவர் ஐயுறுகிறார். உம்மையும் ஐயுறுகிறார்." சாத்யகி சிரித்தபடி "உம்மைப் பற்றி அன்புள்ள ஒரு சொல்லேனும் இளைய யாதவர் நாவில் இருந்து எழும் என்றால் நீரும் கண்காணிக்கப்படுவீர்" என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி "ஆம், நானும் அவ்வாறே உணர்ந்தேன்" என்றான். சாத்யகி "எட்டு தடக்கைகளால் இளைய யாதவரை தன் மடியில் அமர்த்தியிருக்கிறார் அரசி. அவரும் தன் பல்லாயிரம் உருத்தோற்றங்களில் ஒன்றை மகவென அடிமையென அரசிக்கு அளித்து அப்பால் நின்று சிரிக்கிறார்" என்றான்.

திருஷ்டத்யும்னன் சிரித்தபடி "நானும் அதையே உணர்ந்தேன். அரசியின் ஆடியில் இளைய யாதவர் அவ்வண்ணம் தோன்றுகிறார் போலும்" என்றான். சாத்யகி "சியமந்தகமணியை கன்யாசுல்கமாகக் கொடுத்து இளைய யாதவர் அரசியை மணந்த கதையை அரங்க நாடகமாக கண்டிருப்பீர். அவர்கள் இருவரும் கொண்ட பெரும்காதலை விறலியும் பாணனும் அழகுற நடிப்பார்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் "ஆம் முகில் மேல் கால் வைத்து அவர்கள் விண்ணேகுவதைக் கண்டு விழிநிறைந்தேன்" என்றான். சாத்யகி "அது சலபர் என்னும் கவிஞர் இயற்றிய இசைநாடகம்" என்றான். "ஆனால் சூதர் பாடும் பாடலில் வரும் கதை பிறிதொன்று." திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து நிறுத்தி "சொல்லும்" என்றான்.

சாத்யகி அவனருகே புரவியை நிறுத்தி "நான் கதைசொல்பவன் அல்ல வீரரே. அதைச்சொல்லும் ஒரு நாடோடிச் சூதரை தேர்வோம்" என்றான். புரவியைத்திருப்பி மெல்ல சாலையில் சென்றபடி இருபக்கமும் விழிதுழாவினான். கையில் குறியாழுடன் கள்மயக்கில் எதிர்காற்றுக்கென மார்பை உந்தியபடி சென்ற சூதனைக் கண்டதும் கைதூக்கி "சூதரே, நில்லும்" என்றான். அவன் திரும்பி "எனக்கு ஏழு பொன் அளிப்பவர் மட்டுமே என்னிடம் பாடச்சொல்லவேண்டும். பிறர் முனிவரென்றால் அவருக்கு என் வணக்கம். குடிகளென்றால் என் வசை... இரண்டாக இருந்தாலும் பெற்றுக்கொண்டு விலகும்" என்றான்.

"பதினான்கு பொன் பெற்றுக்கொள்ளும்" என்றான் சாத்யகி. அவன் முகம் மலர்ந்து "அது குடிப்பிறந்த யாதவர் கூறும் சொல். நற்குடிப்பிறந்தவர்களுக்கு ஒன்றெல்லாம் இரண்டு" என்றான். "இருபத்தெட்டு பொன் அளித்தீரென்றால் உம் குலம் கார்த்தவீரியனுக்கு ஒரு படி மேல் என்று சொல்லி ஒரு காவியம் பாடுவேன்." சாத்யகி "தேவையில்லை. பாமாபரிணயம் தெரியுமா உமக்கு?" என்றான். "பாமாபரிணயத்தில் முதல்நிலவு கண்ட படலத்தைப் பாடுவதில் நான் சிறந்தவன்" என்றான் சூதன். "முதல்கதிர்கண்ட படலத்தைப் பாடுவீரா?" அவன் கவலையுடன் "அடடா, அதற்கு இருபத்துநான்கு பொன் ஆகுமே, என்ன செய்வது?" என்றான். சாத்யகி சிரித்து "பெற்றுக்கொள்ளும்" என்றான். "நீர் யாதவரல்ல, அரசர்" என அவன் யாழை எடுத்தான்.

அங்கிருந்த மூடிய கடைமுகப்பை அடைந்து "அமருங்கள் வீரரே. மூடியகடை புனிதமானது. மலர்மகள் நீங்கிய இடத்தில் கலைமகள் விரும்பி உறைகிறாள்" என அவன் அங்கிருந்த உமிமூட்டைமேல் அமர்ந்தான். புரவிகளை நிறுத்தி இறங்கி இருவரும் அங்கிருந்த மூட்டைகளில் அமர்ந்தனர். "பாடுவதற்கான உயிர்நீர் வரவில்லையே" என்றான் சூதன். சாலையில் சென்ற கள்வணிகனை திரும்பிப்பார்த்த சாத்யகி "உமது விழி கூரியது" என்றபின் மதுகொண்டுவரச்சொல்லி கையசைத்தான். "இவன் சிறந்த மதுவணிகன். அங்கிருந்தே என் பின்னால் வருகிறான். என் முன்னால் பாடல்கேட்க விழைபவர் வருவார் என அறிந்தவன்" என்றான் சூதன்.

குடுக்கையில் மதுவைப்பெற்று முழுமிடறுகளாக அருந்தி மேலாடையில் வாய்துடைத்தபின் சூதன் யாழை மீட்டி விழிகளை பாதிமூடி சற்றுநேரம் இருந்தான். பின்பு அதுவரை இருந்த குழறல் முழுதாக மறைந்து அறியாத்தேவன் ஒருவன் வந்து பாடுவதுபோன்ற ஆழ்ந்த குரலில் பாடலானான். "அவன் உடல் கொண்ட நீலமென இளமழை. மண்மயில் விரித்த தோகை. காலை எழுந்து கூந்தல் சுழற்றி முடிந்து வெளிவந்து அம்மழையை நோக்கி நின்றாள். அவள் உடல் சிலிர்த்து தாழைப் பூமுட்கள் உடலெழுந்தன. கைகளால் தன் முலைகளைச் சேர்த்தணைத்து கன்னத்தில் விரல் பரப்பி நோக்கி நின்றாள்."

மூதாய்ச்சி ஒருத்தி அவளை தொலைவிலிருந்து கண்டு பொற்கலத்தில் காய்ச்சிய பாலமுதுடன் அருகணைந்து அதை அவளிடம் கொடுத்து "இளையவரை எழுப்பி இதை அளியுங்கள் இளவரசி" என்றாள். பாமா அதை வாங்கிக்கொண்டதும் இயல்பாக "இன்று பகலும் அவருடன் இருங்கள். மாலையே அவர் ஜாம்பவான்களின் காளநீலக் காட்டுக்கு திரும்ப வேண்டுமல்லவா?" என்றாள். பாமா திகைத்து "இன்றா, ஏன்?" என்றாள் . "நாளை மறுநாள் வளர்பிறை மூன்றாம் நாள் அல்லவா?" என்றாள் மூதாய்ச்சி. "அதற்கென்ன?" என்று அவள் கேட்டாள். "அன்றுதானே ஜாம்பவர் குல இளவரசி கலிகையை யாதவ இளவரசர் கடிமணம் கொள்ளப்போகிறார்?" என்றாள் மூதாய்ச்சி.

பாமா ஒருகணம் பொருள்கொள்ளாமல் நோக்கி உடனே சினம் பற்றிக்கொண்டு கைகளை ஓங்கியபடி இருபடிகள் இறங்கி வந்து உரக்கக் கூவினாள் "என்ன சொல்கிறாய்? எங்கு கேட்ட சொற்களை இங்கு உமிழ்கிறாய்? முதியவளே, எவர் முன் நின்று பேசுகிறாய்?" அஞ்சி பின்னடைந்த ஆய்ச்சி "யான் ஒன்றும் அறியேன் இளவரசி... நேற்று மாலை யமுனையில் நீராடுகையில் இளம் ஆய்ச்சியர் பேசுவதைக் கேட்டேன்" என்றாள். "என்ன கேட்டாய்? சொல்! என்ன கேட்டாய்?" என்றாள். "காளநீலக் காட்டின் இளவரசி ஜாம்பவதியை இளைய யாதவர் கடிமணம் கொள்ளவிருப்பதாக சொன்னார்கள் இளவரசி."

பாமை இறங்கி இளமழையில் நனைந்தபடி ஓடி ஊர்மன்றில் முந்தையநாள் மதுமயக்கில் மரவுரி போர்த்திச் சுருண்டு உறங்கிய சியாமனை உலுக்கி எழுப்பி "சொல், என்ன நடந்தது அங்கே?" என்றாள். "நானறியேன் இளவரசி. நான் முன்னரே வந்துவிட்டேன்" என்றான் சியாமன். "இல்லை, நீ அறிவாய். நீ அவர் தூதன். சொல், இல்லையேல் இப்போதே உன் தலையை கொய்தெறிவேன்" என்றாள். அவன் நடுங்கியபடி எழுந்து மரவுரி போர்த்தி நின்று சொன்னான் "இளவரசி, அன்று காட்டுக்குள் இளைய யாதவர் ஜாம்பவானை நிலம் சேர்த்து வென்று நின்றபோது ஜாம்பவான் தங்கள் குல வழக்கப்படி இளைய யாதவரின் முன் தன் தலையணியை வைத்து பணிந்தார். இளையவனே, நீ என்னைக் கொல்ல உரிமைகொண்டவன் என்றார் ஜாம்பவான். அவர் குலமும் அமைதியாக அதை ஏற்றது."

"அவர் முன் தலைவணங்கி உங்களை வெல்ல இங்கு வரவில்லை கரடிகுலத்தரசே. நீர் கொண்டிருக்கும் சியமந்தகமணியை பெறவே வந்தேன் என்று இளைய யாதவர் சொன்னார். இளையோனே, ஜாம்பவர்கள் கொண்ட பொருளை திருப்பி அளிப்பதில்லை. என்னைக் கொன்று அதை கொண்டு செல்க என்றார் ஜாம்பவான். மூத்தவரே, தொல்புகழ் ராமன் தந்தையென நின்ற குடியைச் சார்ந்தவர் நீர். நான் எப்படி உங்களை கொல்வேன்? அப்பெரும்பழியை யாதவர்குலம் மீது எப்படி சுமத்துவேன் என்றார் இளைய யாதவர். நான் கொணர்ந்து குலம் சேர்ந்த பொருளை என் உயிர் இருக்கையில் எவரும் கொள்ளலாகாது. அதற்கு என் மூதாதையர் எந்நிலையிலும் ஒப்பார். குலமுறை பிழைத்து நான் உயிர் வாழேன் என்று ஜாம்பவான் உறுதிச்சொல் வைத்தார்."

"சொல்சோர்ந்து என்ன செய்வதென்று அறியாமல் நின்ற இளைய யாதவரை நோக்கி முதிய ஜாம்பவான் ஒருவர் ஒருவழி உள்ளது அரசே, எங்கள் அரசர் ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியை மணம் கொள்ளுங்கள். பெண் செல்வமாக அந்த மணியை பெற்றுக்கொள்ளுங்கள். அது எங்கள் மூதாதையருக்கு உகந்ததே என்றார்" என்று சியாமன் சொன்னான். "இளவரசி, அவள் பெயர் கலிகை. கருங்கல்லில் தேவசிற்பி நூறாண்டுகள் செதுக்கிய சிற்பம் போன்று பேரழகு கொண்டவள். அருகே விழிமலர்ந்து நின்றிருந்த அவளை திரும்பி நோக்கிய பின் இளைய யாதவர் அவ்வண்ணமே ஆகுக என்றார். வளர்பிறை மூன்றாம் நாளில் மணம் நிகழுமென முடிவு செய்யப்பட்டது. மகட்செல்வமாக அந்த மணியை ஜாம்பவான் இளைய யாதவருக்கு அளித்தார்."

சினம்கொண்டு உடல் நடுங்க நின்ற பாமா திரும்பி மழையிலிறங்கி ஓடி தன் மணிக்குடிலை அடைந்து அதன் மரப்பட்டைக் கதவை இருகைகளாலும் விரியத் திறந்து உள்ளே சென்று மஞ்சத்து அருகிருந்த குறுங்கால் பீடத்தில் இருந்த குறுவாளை எடுத்து அங்கே மலர்ச்சேக்கையில் துயின்று கொண்டிருந்த இளையவனின் நெஞ்சில் பாய்ச்ச ஓங்கினாள். அவள் பின்னால் ஓடிச்சென்ற மூதாய்ச்சி அலறி "அன்னையே, ஏது செய்கிறாய்?" என்று கூவினாள். ஓங்கிய கை காற்றில் நின்று நடுங்க அரசி தளர்ந்து விம்மலுடன் விழிநீர் உகுத்தாள்.

ஓசை கேட்டு விழித்து இளஞ்சிறுவனின் புன்னகையுடன் அக்குறுவாளையும் அவள் விழிநீரையும் நோக்கி இளைய யாதவன் அசையாது படுத்திருந்தான். "வஞ்சகன்! நெறியற்ற வீணன்! உன்னைக் கொன்று என் கலி தீர்ப்பேன்" என்று அரசி கூவ "உன்னால் முடியுமென்றால் அவ்விறப்பே என் வீடுபேறெனக் கொள்வேன்" என்றான் இளையவன். மீண்டும் குறுவாளை ஓங்கி நடுங்கும் குரலில் "என்னால் முடியும். இக்குருதியால் என் அழல் அவிப்பேன்" என்று இளைய அரசி சொன்னாள். "அவ்வண்ணமே ஆகுக!" என்று இமையும் அசைக்காமல் அவன் கிடந்தான். மீண்டும் குறுவாள் சரியும் விழியென தாழ்ந்தது. எஞ்சிய சினத்துடன் ஓங்கி மெத்தையில் அக்குறுவாளால் குத்தினாள். வெறி கொண்டவள் போல அதை குத்தி பிசிறுகளாக பறக்க விட்டாள். நோக்கி நின்ற மூதாய்ச்சி நெஞ்சை பற்றிக்கொண்டு "என்ன செய்கிறாய் அன்னையே, என்ன செய்கிறாய்?" என்று கூவினாள்.

தொய்ந்து கால்மடித்து தரையில் அமர்ந்து படுக்கையில் முகம்புதைத்து விழுந்து குலுங்கி அவள் அழ இளைய யாதவன் எழுந்து "பாமா, நீ இந்த மலர்ச்சேக்கையில் நூறு முறை குத்தியிருக்கிறாய். உன் முன் நூறு முறை இறந்து இப்பிறவி கொண்டு இங்கு நின்றிருக்கிறேன்" என்றான். "விலகிச் செல்! என்னிடம் சொல்லெடுக்காதே. இக்கணமே உன்னை விட்டு நீங்குகிறேன். நீ என்னவன் அல்ல. பிற பெண்ணிற்கு சொல்லளித்தவன் என் கணவன் அல்ல" என்று பாமா கூவினாள். "நான் உனக்கு முன் எவருக்கும் சொல்லளிக்கவில்லையே" என்றான். "எனக்கு நிகர் வைத்த ஒருவனை நான் ஏற்கமாட்டேன்" என்றாள் பாமா. "என் சொல் இங்கு நிற்கட்டும். இப்புவியில் உனக்கு நிகரென எவரையும் நான் வைக்கவில்லை" என்று அவன் சொன்னான்.

ஒருகணம் திகைத்தபின் சினம் திரட்டி "உன் சொற்கள் அமுதில் முக்கிய நஞ்சு போன்றவை. என்னை இழிநரகில் ஆழ்த்தும் கருநாகங்கள் அவை. விலகிச் செல்! இனி ஒருபோதும் உன்னை நோக்கி விழி எடுக்கேன்" என்றாள். "அதை நீ சொல்லும்போதும் உன்விழிகள் என் கால் நகங்களை பார்க்கவில்லையா?" என்றான் அவன். "இல்லை, பார்க்கவில்லை. பார்த்தன என்றால் என் விழிகளை இக்கணமே கிழித்துப் போடுகிறேன்" என்று மெத்தையில் கிடந்த குறுவாளை அவள் எடுத்தாள். "சரி, என் கோலத்தை இனிமேல் ஒருபோதும் பார்க்க விழையவில்லை என்றால் சுழற்றி எறி உன் விழிகளை" என்று அவன் சொன்னான். கை தளர குறுவாள் வீழ ஏங்கி அழுதபடி "என்ன உரைப்பேன்! எவ்வண்ணம் வந்து இவனிடம் சிக்கிக்கொண்டேன்!" என்று சொல்லி பாமை அழுதாள்.

ஆய்ச்சியை நோக்கி "முதியவளே, நீ சொல்! இவ்விளையவள் அன்றி என் நெஞ்சில் எவருக்கேனும் இடம் உண்டா?" என்றான். "எங்ஙனம் இருக்க முடியும்?" என்றாள் முதியவள். "பிறகென்ன?" என்றான் அவன். பாமா "அப்படியென்றால் எப்படி கரடிகுலத்திற்கு வாக்களித்தீர்? "என்றாள். "இளையவளே, இங்கு நீ உயிர் துளிர்த்து சொட்டும் கடன் கொண்டு நின்றிருக்கையில் நான் எதை சிந்திக்கமுடியும்? அந்த அருமணியைக் கொள்ள பிறிதொரு வழியை நான் அறிந்திலேன்" என்றான். "இது பொய். மாயனே, நீ அறியாத வழியென்று இப்புவியில் எதுவுமில்லை. அப்பெண்ணை நோக்கியபோது உன் உள்ளம் விழையவில்லையா? உண்மையை சொல்!" என்றாள். "ஆம், விழைந்தது. உண்மையை கேட்கிறாய், ஆகவே சொல்கிறேன். உலகிலுள்ள அத்தனை பெண்களையும் என் உள்ளம் விழைகிறது" என்றான் யாதவன்.

"சீ! என் முகம் நோக்கி இதைச் சொல்ல உனக்கு நாணமில்லையா?" என்றாள். "திருமகளே, உன் கூந்தல் கரும்பெருக்கு மட்டும் தனித்தொரு பேரழகாய் என் முன் அணையும் என்றால் எத்தனை நன்று அது என நினைத்தேன். அவ்வழகே அவளாக அங்கு நிற்கக் கண்டேன் அதை எங்ஙனம் துறப்பேன்?" என்றான். ஒரு கணம் முகம் மலர்ந்து பின்பு மேலும் சினம் கொண்டு எழுந்து அருகிருந்த நீர்க்குடுவை ஒன்றை எடுத்து அவரை நோக்கி எறிந்து "இழிமகனே, என்னை என்ன கல்லா கலிமகள் என்று நினைத்தாயா? இச்சொல்லில் உள்ள இழிபொருளை அறியாத பேதையா நான்? என் குழல் அழகை அவளிடம் கண்டாய் என்றால் என் பிற அழகுகளை எங்கு காண்பாய்?" என்றாள். "ஏழழகு கொண்டவள் நீ. அவ்வேழையும் தனியாக அடைய விழைகிறேன்" என்றான்.

அணங்கு எழுந்தவளாக "போ வெளியே! இக்கணமே வெளியே போ!" என்று கூச்சலிட்டு அருகிருந்த ஒவ்வொரு பொருளாக எடுத்து அவன் மேல் எறியத் தொடங்கினாள். ஆய்ச்சி அஞ்சி வெளியே ஓட அவர் அங்கேயே சிரித்தபடி நின்றார். நாகம் போலவும் எரிதழல் போலவும் அவள் வீசிய ஒவ்வொன்றையும் வளைந்து உடல் தவிர்த்தார். எதைக் கொண்டும் அவரை எறிய முடியாது என்றறிந்து தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து இரு கைகளையும் கிழிந்த சேக்கை மேல் மாறி மாறி அறைந்து "நான் சாக விரும்புகிறேன். இனி ஒருகணமும் உயிர் தரிக்கேன். என் கற்பும் பொறையும் இக்கள்வனால் அழிக்கப்பட்டன. கன்னியெனக் காத்திருந்தபோது எத்தனை தூயவளாக இருந்தேன்! இவன் முன் காமத்தால் களங்கமுற்றேன். துயர் மட்டுமே இவனிடமிருந்து இனி பெறுவேன் போலும்" என்றாள்.

"இச்சொற்களை நீ நம்பினாய் என்றால் ஒன்று செய். நேற்று நான் அணிவித்த அப்பாரிஜாதத்தை எடுத்துப் பார். குழலணிந்த பாரிஜாதம் ஓர் இரவெல்லாம் எப்படி புதுமலர் போல் வாடாதிருக்கிறது என்று அறிவாய்" என்றான். திரும்பி தன் கருங்குழலைச் சுற்றிய மலரை எடுத்து நோக்கி வியந்து முகர்ந்து பின் விழி தூக்கி அவனை நோக்கி "எங்ஙனம் இது இவ்வாறுள்ளது?" என்றாள். "நான் கொண்ட பெரும்காதலை பாரிஜாதம் அறியும்" என்றான். "இது உன் உளமயக்குத்திறன்" என்றாள். "தேவி, உன் அகத்தே மலர்ந்த பாரிஜாதங்களை கேள். பெரும் காதலுக்கப்பால் நீ அடைந்தது பிறிதென்ன? உன் அகம் விழைவது அக்காதலையன்றி பிறிதில்லை" என்றான்.

"இல்லை, உன் காதல் எனக்குத் தேவையில்லை. இனியொரு சொல்லும் சொல்லாதே. நீ விழையும் இடத்திற்கு செல்!" என்று சொல்லி அவள் தன் மேலாடையை அள்ளி இட்டு படியிறங்கி முற்றத்திற்கு வந்தாள். குடில் வாயிலில் நின்று "இன்று மாலை நான் கிளம்புவேன்" என்றான். "கிளம்பு. ஆனால் திரும்பி வராதே. அவளை அழைத்துக்கொண்டு துவாரகைக்கு செல். இங்கு இப்பாரிஜாத மலரும் நானும் இருப்போம். ஒருபோதும் வாடாத இதன் நறுமணமே எனக்குப் போதும்" என்றாள். அவன் பின்னால் வந்து "நான் வேண்டாமா உனக்கு?" என்றான். திரும்பி கண்கள் நிறைந்து வழிய "கரியவனே, என் இளமையில் நீ என எண்ணி நானெடுத்து வைத்த மயிற்பீலி விழியொன்று என் அறை பட்டு மடிப்பிற்குள் உள்ளது. எக்கணமும் அதைத் திறந்து உன் விழி நோக்கி அகம் மலர என்னால் முடியும். பிற பெண்டிர் உடல் தொட்ட உடலெனக்கு தேவையில்லை. என் உளம் தொட்ட அப்பீலியே போதும். செல்க!" என்று சொல்லி விரைந்து நடந்தாள்.

அவள் செல்லும் அழகை அவன் நோக்கி நின்றான். இளமழை நனைந்து அவள் ஆடை கொப்புளங்களாக எழுந்து மடிந்து உடலில் ஒட்டி விசும்பல் ஒலியெழுப்பியது. அவள் ஆயரில்ல முற்றத்தை அடைந்து செம்மண் சேற்றில் பதிந்து சென்ற பாதச்சுவடுகளை எஞ்சவிட்டு திண்ணையில் ஏறி சொட்டும் கூரைவிளிம்பு அமைத்த மணித்தோரணத்தைக் கடந்து உள்ளே சென்று மறைந்தாள். காலடிச்சுவடு செம்மலர்மாலை போல கிடந்தது. அதில் நீர் நிறைந்து ஒளி தேங்கியது. அவன் திரும்பி பொக்கை வாய் பொத்தி விழிநிறைந்த சிரிப்புடன் நின்ற முதிய ஆய்ச்சியை நோக்கி "ஆய்ச்சியே, காதலுக்கு அப்பால் பெண்கள் நாடுவது எதை?" என்றான். "மேலும் காதலைத்தான்" என்று சொல்லி நகைத்தாள் அவள்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 5

திருஷ்டத்யும்னன் சொல்சூழ்ந்த சித்தத்துடன் சூதனின் கலைந்த குழலையும் அசையும் குரல்வளையையும் நோக்கி நின்றான். அவனில் குடியேறிய அந்த அறியாத தேவன் அச்சுறுத்தினான். அனைத்தையும் அருகிருந்து காண்பவன். மானுடர் சிந்தும் அனைத்து உணர்ச்சிகளையும் அந்தந்த கணங்களிலேயே அள்ளி வைத்துக்கொள்பவன். அந்த நேரத்தில் அவனைச்சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களிலும் மின்னும் விழிகள் அவர்களுடையவை. வாழும் அனைத்தும் மண்ணிலும் சூதர் சொல்லிலும் இறுதியில் சென்று படிகின்றன. மண்ணில் விழுபவை முளைக்கின்றன. உப்பாகி முளைப்பவற்றுக்கு உணவாகின்றன. தண்டுகளில் இலைகளில் தளிர்களில் மலர்களில் கனிகளில் நிறைந்து மீண்டும் எழுகின்றன.

"அவர் சொற்கள் எப்பொருள் கொண்டவை என்பதை எவரறிவது? நாம் விரும்பும் பொருளை அவற்றில் அள்ளிக் கொண்டிருக்கிறோம். அள்ள அள்ளக்குறையாத சொல் உண்டு. சொல்லில் அள்ள அள்ளப்பெருகும் செயல்கள் கொண்டவர் அல்லவா அவர்?" என்றான் சூதன். "புடவி சமைக்கும் பெருங்கனல் அன்றி எவர் சொல்லமுடியும் ஏனென்றும் எதற்கென்றும் இவ்வண்ணம் இனியென்ன என்றும்?" சூதன் பாடினான். "அன்றுகாலை அவள் முன் நின்றது ஆடிப்பாவை ஒன்று. ஆடியின் ஆழம் அவளறிந்திருக்கவில்லை. அகல்பவர்களைச் சுருக்கி அணுவாக்கி உண்ணும் ஆடி அனைவருடனும் தீரா ஆடலொன்றுக்குள் இருக்கிறது. ஆடுவதனால் அது ஆடி என்றறிக!"

பாமா அவன் குழலோசையை கேட்டாள். எழுந்தோடி சாளரக்கதவை ஓங்கி அறைந்தாள். மாறிமாறி கதவுகளை ஓசையுடன் இறுகமூடி உள்ளே இருளில் முழங்காலில் முகம்சேர்த்து அமர்ந்தாள். அவளுக்குள் இருந்து எழுவதுபோல ஊறி அறைக்குள் நிறைந்தது குழலின் இசை. பெரும்பாலைப்பண். 'கன்னி, கன்னல் சொல்லழகி, கருவிழி கொண்டவளே, காலையென புலர்க! இங்கு உன் விழியொளி நிறைக! உன் இதழ்ச்செம்மை எழுக! உன் மூச்சென தென்றல் வருக!' எழுந்து சென்று கதவை திறக்கப்போனவள் 'சீ' என தன்னை இகழ்ந்து திரும்பி வந்தமர்ந்தாள். உடலை இறுக்கி இறுக்கி அட்டைச்சுருளென ஆனாள். மண்ணில் புதைந்து ஆழத்தில் அடங்கிவிடவேண்டுமென விழைந்தாள். சிறுமியாகி குழவியாகி கருவாகி அன்னை வயிறுபுகுந்துவிடவேண்டுமென்பதுபோல தன்னை உட்கிக்கொண்டாள்.

பின்பு அறிந்தாள், பலநூறுமுறை அவள் எழுந்தோடி வாயிலைத் திறந்து ஈரம் படர்ந்த முற்றத்தில் ஓடி அக்குடிலை அணுகி அவன் கால்களில் விழுந்துவிட்டிருப்பதை. அவன் ஒளிரும் கால்நகங்களை முத்தமிடுவதை. அவன் மடியில் முகம் புதைத்து மெய்சிலிர்ப்பதை. 'தோற்பதில்லை. எவர்முன்னும் பணிவதில்லை. அன்னையரே, என்னை காத்தருள்க!' என்று அமர்ந்திருந்தாள். மூதன்னையர் அவளைச்சூழ்ந்து நின்று புன்னகைத்தனர். ஒரு கணத்தில் எழுந்தோடி கதவைத்திறந்து முற்றத்தில் பாய்ந்து குடிலை அணுகி குழல்சூடிய செவ்விதழும் இசைநிறைந்த கருவிழிகளுமாக அமர்ந்திருந்த அவன் முன் சென்று நின்று முலைவிம்ம மூச்சிரைக்க குழல் அலைய விழி சோர நின்றாள். அவன் குழல் தாழ்த்தி அவளை நோக்கி புன்னகைத்தான். அப்புன்னகையும் இசையென ஒலிக்கக் கேட்டாள்.

அவன் "வருக என் அழகி" என்றான். அக்கணம் அச்சொல்லை அன்றி பிறிது எதையும் சொல்லலாகாதென்றறிந்தவன். "என்னை விட்டு போய்விட்டீர்கள் என எண்ணினேன்" என குழறினாள். "உன் சொல் என்னை கட்டுகிறதே" என்றான். "என் சொல்லை மீறாதவரா நீங்கள்?" என்றாள். "ஆம்" என்று சொல்லி புன்னகைத்து "அது எப்போதும் ஆணை அல்லவா?" என்றான். "ஆணையேதான். மீறலாகாது" என்றாள். அவன் நகைத்து "இல்லை, உன் சொல்லை மீறவில்லை" என்றான். "இங்கிருந்து செல்லலாகாது" என்றாள். "ஆம், செல்லப்போவதில்லை" என்றான். "என் தலைதொட்டு சொல்லளியுங்கள்" என்றாள். தலையில் கைவைத்து "நீ ஆணையிடாது எதையும் செய்யப்போவதில்லை" என்றான். "எனக்கென மட்டுமே இரு" என்றாள். "உனக்கென மட்டுமே இங்கிருப்பேன்" என்றான்.

அவள் மலர்ந்து களிச்சிறுமியென்றாகி சிரித்து "இன்று என் கரங்களால் உண்ணுங்கள்" என்றாள். "நான் சமைத்த அமுது உங்களுக்கு இன்று." அவன் "உன் கை தொடுவதெல்லாம் அமுதே" என்று அவளுக்கென்றே ஒலிக்கும் குரலில் சொன்னான். சிறு துள்ளலுடன் இல்லத்திற்குள் ஓடி செவிலியன்னையிடம் "அன்னைய, நான் அவருக்கென அமுது சமைக்கிறேன்" என்றாள். செவிலியும் ஆய்ச்சியரும் விழிகளை நோக்கி புன்னகைத்தனர். "நீ கலம் தொட்டு சமைத்து காலம் எவ்வளவு ஆகிறது என்று அறிவாயா?" என்று ஒருத்தி கேட்டாள். "சமைக்கட்டும். இன்று அவள் சமைப்பது எதுவும் அவனுக்கு அமுதே" என்றாள் இன்னொருத்தி. "அமுதில் இனிப்புக்கு பதில் துவர்ப்பு அமைய முடியுமா?" என்று இன்னொருத்தி கேட்டாள். "அமுதென்பது உண்ணப்படுவதல்ல உணரப்படுவது" என்றாள் இன்னொருத்தி.

அவளைச் சூழ்ந்து நகைப்புகள் ஒலித்தன. வீம்புடன் தலை திருப்பி "அடுமனை புகுவதும் அமுது சமைப்பதும் எனக்கொன்றும் புதியதல்ல. இங்கு நான் வந்தது குறைவென்றாலும் பல்லாயிரம் முறை அவனுக்கென இவ்வமுதை சமைத்திருக்கிறேன். அவன் உண்டு எஞ்சிய எச்சத்தை என் உடலெங்கும் சுவை துலங்க உண்டிருக்கிறேன். விலகுங்கள்" என்றாள். அவள் கைதுடிக்க யாழ் மீட்டும் சூதனைப் போல, அவ்விசைக்கு நடமிடும் விறலியைப் போல இயங்குவதை அவர்கள் கண்டனர். "அவள் உள்ளம் கொண்ட இசை அக்கைகளில் உள்ளது" என்றாள் ஒருத்தி. "என்னடி இது, நடனமிட்டபடியும் ஒருத்தி சமைக்க முடியுமா?" என்றாள் இன்னொருத்தி. "கைகளால் இங்கு சமைக்கிறாள் உள்ளத்தால் எங்கோ எதையோ ஆள்கிறாள்" என்றார்கள்.

ஏழு வகை இன்னமுதை எளிதில் சமைத்துவிட்டாள். அதன் மணமெழுந்தபோது ஆய்ச்சி ஒருத்தி "இத்தனை இனிய அமுது இங்கு எவராலும் சமைக்கப்பட்டதில்லை, ஐயமேயில்லையடி" என்றாள். "ஆயிரம் முறை அவள் சமைத்த மணம் இங்கெழுந்திருக்கிறது. நாமறிந்ததில்லை போலும்" என்றாள் இன்னொருத்தி. மாலினி ஓடிவந்து "யாரடி சமைத்தது? இல்லமெங்கும் நறுமணமெழுகிறதே” என்றாள். ”உன் மகள் சமைத்தாள் அரசி, இது அவள் கை கனிந்த அமுது” என்றாள் மஹதி. ”அவளா? பொய் சொல்லாதே. பாலை பொங்கவிட்டு விழி மயங்கி அமர்ந்திருக்கும் பேதையல்லவா அவள்” என்றாள் மாலினி. "மகளை அறிந்த தாய் என எவருமில்லை. அவர்கள் தங்கள் மகளை தாங்களே இயற்றிக்கொள்கிறார்கள்" என்றொருத்தி சொல்ல "போடி, எனக்குத் தெரியாதா இவளை? இவள் கைகள் மலர்கொய்யவே நோகும்" என்றாள் மாலினி. மஹதி "அரசி தன் இனியவனுக்கென சமைக்கும் பெண் கைகளில் உள்ளம் மலர்ந்தவள். வசந்தத்தில் மலரெழுந்த மரக்கிளைகள் போன்றவை அவை" என்றாள்.

மாலினி எழுவகை அமுதையும் ஒவ்வொன்றாக நோக்கி அவள்தான் சமைத்தாளென்றுணர்ந்து திரும்பி "என் கண்ணே, இத்தனை நாள் இவ்வினிய அமுதையா உனக்குள் வைத்திருந்தாய்?" என்றாள். நாணி முகம் சிவந்து விழி திருப்பி பாமை அவ்விடம் விட்டு நீங்கினாள். ஆயர் மன்றின் திண்ணையில் தோழருடன் களியாடி அமர்ந்திருந்த அவனை அணுகி ”இனியவரே! அமுது கொள்க!” என்றாள். திரும்பி நோக்கிய அவன் அங்கு கண்டது அரசியை அல்ல, யாதவ குல கொடியையும் அல்ல, மண்ணில் எழுந்த முதல் ஆணுக்கு துணையென நின்ற முதல் பெண்ணை. கேளுங்கள், பெண் சூடிய அணிகலன்கள் கோடி. பொன்னால் பூவால் சொல்லால் சித்தத்தால். அணிகளால் அழகு கொள்கிறாள். அணிகளைந்து பேரழகியாகிறாள்.

புன்னகையுடன் அவன் சொன்னான் "அவ்வினிய அமுது என் உள்ளத்தை இனிதாக்கட்டும். என் மூதாதையர் அனைவருமே இவ்வினிமையை உண்ணட்டும்.” நாணிச் சிரித்து அவள் உள்ளே சென்றாள். அவன் நீராடி வர தான் நீராடி புத்தாடை அணிந்து புது மலர்சூடி வந்து ஏழு பொற்கலங்களில் அவ்வமுதை அளித்தாள். பாலமுது, தேனமுது, அக்கார அமுது, பழஅமுது, இன்கிழங்கமுது, தளிரமுது, மலரமுது என ஏழு. சிற்றிலை கோட்டிய சிறுகரண்டியால் ஒவ்வொன்றாய் அள்ளி வாயிலிட்டு கைக்குழந்தை என உடலெங்கும் சுவை தெரிய, தலை அசைத்து முகம் மலர்ந்து உண்டான். விழிதூக்கி அவளை நோக்கி சிரித்து நன்று என்று உணர்த்தினான். அவன் உண்ண உண்ண மடி முட்டிக் குடிக்கும் கன்றை நாவால் நக்கும் அன்னைப் பசுவென நோக்கி நின்றாள். அவன் உண்ணுவது தன்னை அள்ளித்தான் என்றுணர்ந்தாள். தன் உடலை அவன் முன் கிடத்தி உண்ண அளித்தது போல் உண்ணுக உண்ணுக என் இறைவா என்று அவள் உள்ளம் பூத்தது.

உண்டு எழுந்து அவன் கை கழுவச் செல்ல பின்னால் சென்றாள். அவனுக்கு மரக் குடுவையில் இருந்து இளவெந்நீரை ஊற்றினாள். அவன் கை கழுவ அதை பற்றி தன் கையால் மேலும் கழுவி விட்டாள். அவன் விழி தூக்கி அவளை நோக்க புன்னகைத்து "எண்ணைப் பிசுக்கு" என்றாள். "ஆம், முற்றிலும் கழுவ வேண்டாம். இன்றிரவு என் கையிலிருக்கட்டும் இந்நறுமணம்" என்றான். அவன் இதழோரம் இருந்த உணவுத்துளியை தன் கையால் துடைத்து "சீராக உண்ண இன்னும் கற்கவில்லையா?" என்றாள். அவன் அவள் மேலாடையில் கைதுடைத்தபோது எழுந்த உவகையை அவளே வியப்புடன் கண்டாள்.

திரும்பி உள்ளே செல்லும்போது ஆய்ச்சியர் விழித்து நோக்கா ஒரு தருணத்தில் அவள் இடை வளைத்து சுவர்மேல் சாய்த்து இதழ் முத்தம் ஒன்றை அளித்தான். பின்னாலிருந்த கூடை சரிய அள்ளிப்பற்றி "அய்யோ " என நாணி அவள் உடல் திருப்ப அவள் இட முலை அவன் மார்பில் உரசிச் சென்றது. உளம் விழைந்ததை அறியாதெனச் செய்யும் கலை உடலறிந்திருப்பதை அவள் அக்கணம் உணர்ந்தாள்.

அவன் அவள் காதில் குனிந்து "உன் உடல் சொன்னதை அறிந்தேன்" என்றான். விழிதூக்கி சினந்து "எதை?" என்றாள். "இதை" என்று இடையில் கைவைத்து இறுக்கி அவள் இதழ்களிலும் கன்னங்களிலும் கழுத்திலும் வெம்மை கனிந்த இதழ்களால் கோடைவெம்மழைத் துளிகள் விழுவதுபோல் முத்தமிட்டான். இளவெம்மை தொட்ட முத்தம் மறுகணமே குளிர்ந்து ஈரமாவதை அறிந்து உடல் மெய்ப்புகொள்ள கண்மயங்கினாள். தளர்ந்து அவன் மார்பில் தலை சாய்ந்த அவள் குழலை கையால் பற்றி முகத்தை மேலே தூக்கி இதழ்சுவைத்து விலகி பெருமூச்சுவிட்டு விழி நோக்கி சொன்னான் "இனியது இவ்வமுது."

அவள் "இதை முன்பு உண்டதில்லையா?" என்றாள். "நெடுநாளுக்கு முன் உன் பெயரை அறிந்தபோது பல கோடி முறை அப்பெயரை என் வாயால் சொல்லிச் சொல்லி இவ்வமுதை ஒவ்வொரு துளியாக உண்டிருக்கிறேன்" என்றான். "என் பெயரா? எளிய பெயரல்லவா அது?" என்றாள். "காதல் கொண்டவனுக்கு கன்னியின் பெயரன்றி அமுது எது?" என்றான். "ஆம்" என்றாள். "ஆனால் உங்கள் பெயர் எனக்கு வெங்கனல். எந்நெஞ்சில் என்றும் அது எரிந்து எரிந்து இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு போதும் எந்நாவால் அதை சொன்னதில்லை" என்றாள் அவள். "ஏன்?" என்றான். "ஒரு முறை சொன்னால்கூட அது என் இல்லம் மீது பற்றும். என் புரங்களை எரிக்கும். சாம்பலென என்னை இங்கு எஞ்சியிருக்கச் செய்யும். இளையோனே, அது அங்கிருக்கட்டும்" என்றாள்.

"ஒரு முறை அதை சொல்" என கொஞ்சினான். "மாட்டேன்" என்றாள். "சொல், என் கண் அல்லவா? என் நெஞ்சமர்ந்த தேவி அல்லவா?" அவள் விழி திருப்பி "இப்போதல்ல. பின்னர் ஒருநாள். அன்று என் கொடிவழியில் பிறக்கவிருக்கும் என் பெயர்மைந்தரின் கருவில் நீ நிறைந்திருப்பாய். அன்று அச்சொல் ஒரு புகழ்க்கொடியென என் நகர்களின் மேல் பறக்கும்" என்றாள். அப்போது அவள் விழிகள் சுடர்விட்டன. பெண்ணென வந்த மாயம் களைந்து பெருந்திருவென அங்கு நின்றிருந்தாள்.

அவள் விழிகளையே நோக்கி "ஆயிரம் மூதன்னையர் குடி கொண்ட ஆலய முகப்பு அல்லவா உன் விழி?" என்றான் அவன். மூதாய்ச்சி ஒருத்தி அப்பால் வந்து நின்று தொண்டை கமறும் ஓசையிட்டாள். "அய்யோ" என திடுக்கிட்டு அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி ஓசையிட்டாள். "ஒவ்வொரு முறையும் நீ அஞ்சும் இப்பாவனையைப் போல இனிதாவது ஒன்றுமில்லை" என்றான். "அஞ்சுவது உன் இயல்பல்லவே?" என்றான். "இது அச்சமில்லை, நாணம்" என்றாள். "நாணுவதும் உன் இயல்பல்ல" என்றான். சிரித்து "ஆம். நாண நான் இனிமேல்தான் கற்க வேண்டும்" என்றாள். "கற்க வேண்டியதில்லை. என் துணைகளில் நாணிலாத ஒருத்தி இருக்கட்டும்" என்றான்.

விழிகூர்ந்து "துணைகளிலா?" என்று சீறினாள். "எத்தனை துணை அமைந்தாலும் அவர் அனைவரும் உன் ஆடிப்பாவைகளே" என்றான். "இன்று செல்கிறீரா?" என்று அவள் கேட்டாள். "நீ ஆணையிடு செல்கிறேன்" என்றான். அவள் அவனை கூர்ந்து நோக்கி "நான் மறுத்து ஆணையிட்டால் செல்ல மாட்டீரா?" என்று கேட்டாள். "ஆணை! உன் சொல்லின்றி செல்லமாட்டேன்" என்றான். அரசி அவன் நீல விழிகளில் சில கணங்கள் நோக்கிய பின் சொன்னாள் "இளையோனே! உங்கள் வெற்றியும் புகழும் அன்றி நான் விழைவதொன்றில்லை. இம்மண்ணில் விண் மாரியும் மண் பொறையும் கடல் எல்லையும் கதிர் ஒழுங்கும் காற்றின் கணக்குகளும் பிழைக்கலாம். உம் சொல் பிழைக்கலாகாது. சென்று ஜாம்பவதியை கொண்டு வருக! அவளுக்கென இங்கிருக்கும் நான் வைக்கும் மலர் வரிசை."

சூதன் யாழை மீட்டியபடி விழிசரித்து அமர்ந்திருக்க சாத்யகி தன் இடையிலிருந்த பொன்முடிச்சை எடுத்து எண்ணாமல் அவன் காலடியில் வைத்து வணங்கினான். அவன் இடக்கையால் சாத்யகியின் தலையைத் தொட்டு வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் வணங்க அவன் தன் குருதிபடிந்த விழிகளைத் தூக்கி "மூடா, மண்ணில் எவரும் பேறெனக்கொள்ளும் பெருங்காதலைப் பெற்றவன் நீ. அந்தப் பூமரத்தடியில் அமர்வதன்றி வேறென்ன வேலை உனக்கு?" என்றான். திருஷ்டத்யும்னன் திகைத்து "ஆம், அவ்வண்ணமே ஆசிரியனே" என்றான். யாழை எடுத்துக்கொண்டு சூதன் பொற்கிழியை திரும்பிப்பாராமல் நடந்து சென்றான்.

திருஷ்டத்யும்னன் "பொன்" என்றான். "அவர் எவரென கேட்டு கொடுத்தனுப்பிவிடலாம்" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டான். சாத்யகி புரவியில் ஏறிக்கொண்டு மெல்ல நடைசெலுத்த திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். சாத்யகி இருமுறை திருஷ்டத்யும்னனை திரும்பிப்பார்த்தான். அவனை எவரோ என அவன் மீள நோக்கினான்.

துவாரகையின் தெருக்களில் மலர்ந்த உள்ளத்துடன் நகை விரிந்த முகத்துடன் முகிலென தவழ்ந்த புரவி மேல் அமர்ந்து சென்றனர். புரவிகளின் குளம்படியே அவர்கள் உள்ளத்தின் தாளமாக இருந்தது. நகரம் மிதக்கும் இறகுகளால் ஆனது போல விரைவழிந்து ஓசையற்று அழகு கொண்டிருப்பதாக திருஷ்டத்யும்னன் எண்ணினான். சிறகு முளைக்காத ஒருவரும் அங்கில்லையென, அத்தனை மாளிகைகளும் அடியிழந்து மிதக்கின்றன என்பதாக, காலுக்கடியிலும் வானமே உள்ளது என்பது போல நகரெங்கும் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மாளிகைக் குவை மாடங்கள் செவ்வொளியில் மென்பட்டு சரிந்த அழகிய இளமுலைகளென ஒளிவிட்டன.

சாளரங்களுக்குள் பட்டுத்திரை தொங்கியது போல் செவ்வொளி தெரிந்தது. திறந்த கதவுகள் வழியாக திரைச்சீலை சரிந்ததென விழுந்து கிடந்தது. மான்கண் சாளரங்களின் துளைகள் வழியாக நீள்சட்டங்களாக நீண்டு இருண்ட வானில் நீட்டி நின்றது. வெண்புரவிகள் ஒளியில் அனல் பற்றி எரிந்து இருளில் அணைந்து மறைந்தன. பெண்டிர் குழலின் மயிர்ப்பிசிர்கள் பொன்னாலானவை என அசைந்தன. நுதல் வளைவிலும் மூக்கின் குழைவிலும் கன்னக்குவையிலும் பொன்னொளி வழிந்தது. குவிந்த சிற்றிதழ்களில் இருந்த ஈரத்தில் நெருப்பே ஈரமெனத்தெரியும் விந்தை!

"இவர்கள் விறலியர் அல்ல, வணிகர் பொருள் கொள்ளும் பெண்கள்" என்றான் சாத்யகி. "ஆனால் இங்குள்ள பெண்கள் அப்பொருள் கொள்வதற்கென காதல் கொள்வதில்லை, அவர்கள் கொண்ட காதலுக்காக பொருள் கொள்கிறார்கள்." ஒவ்வொரு விழியிலுமிருந்த பித்தை நோக்கி நோக்கி சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி "புவியில் அழகாலும் காதலாலும் அடையும் பித்தன்றி பொருள் உள்ள ஏதேனும் உள்ளதா?" என்றான். சாத்யகி "இல்லாதிருக்கலாம். இருக்கலாம். ஆனால் இக்கணம் இது ஒன்றே உண்மையெனக் காட்டுகிறது இப்புடவி" என்றான்.

கீழ்நகர்ச் செண்டுவெளியில் பெருங்களியாட்டம் நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கந்தர்வர் விரிந்த மணிமுடிகளும் பலவண்ண முகமூடிகளும் அணிந்து பொய்க்கரங்கள் எழுந்த உடல்களுடன் சுழன்று சுழன்றாட அருகே மின்னும் பட்டாடைகளும் பொன்னணிகளும் அணிந்த சேடியர் நடமிட்டனர். பொன் பூத்த காடு. அனல் கொண்ட காடு. தென்றல் சூழ்ந்து களிவெறிகொண்ட காடு. விழி விரித்து அள்ளிய காட்சிகளால் உள்ளம் நிறைய அங்கு சொல் மறந்து நின்றிருந்தான் திருஷ்டத்யும்னன்.

கந்தர்வர்கள் ஒவ்வொருவராக இருளுக்குள் இருந்து ஒளிபடர்ந்த அரங்குக்கு வந்து கொண்டிருந்தனர். ஏழடுக்கு மணிமுடியணிந்த, செந்நிற முகம் கொண்ட, சினத்தின் இறைவனான ரௌத்திரன். மூன்றடுக்கு மணிமுடியணிந்த பொன்னிற முகம் கொண்ட காதல் கனகன். பச்சை முகம் கொண்ட வளமுறையும் ஹரிதன். வெண்முகம் கொண்ட அறச்செல்வனாகிய தவளன். நீலமுகம்கொண்ட தாமஸன். கரியமுகம் கொண்ட மகாபயன். கந்தர்வர் வான் கனிந்து துளித்துச் சொட்டி வந்திறங்கினர். அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது மானுட உணர்வுகளின் விழித்தோற்றப்பெருக்கு.

கீழிருந்து வந்த குளிர் காற்று நகரை மாற்றத் தொடங்கியிருப்பதை செல்லச் செல்ல சாத்யகி உணர்ந்தான். மாலையில் நீராவியும் வெக்கையும் கொண்டிருந்தது கடற்காற்று. உப்பு மணம் நிறைந்து நனைந்திருந்தது. அது தொட்ட இடங்களில் பளிங்குப் பரப்புகள் உப்புப் படலத்துடன் வியர்த்து பளபளத்தன. இரவில் அது தன் நீராவியை துளிகளாக்கி இலைப் பரப்புகளிலும் சுவர் விரிவுகளிலும் பூசிவிட்டு எடையழிந்து எளிதானது போல் தோன்றியது. கடலோசை எழுந்து மிக அண்மையென நகரைச் சூழ இருளுக்குள் நாற்திசையும் கடலே சூழ்ந்து அதன்மேல் பெரும் கலம் போல துவாரகை மிதந்து கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஏற்பட்டது.

காற்றிலிருந்த வெம்மைக்கு இறகைப்போல் வருடிக்கொடுக்கும் தண்மை கொண்டிருந்த கடற்காற்று சுழன்று சுழன்று குளிர்ந்து உடலை நடுக்கத் தொடங்கியது. வெற்றுடல்கள் புல்லரித்து மெய்ப்புப் புள்ளிகள் கொண்டன. சால்வைகளை போர்த்திக்கொண்டும் தலையில் காதைச்சுற்றி கட்டிக்கொண்டும் சென்றனர் துவாரகை மக்கள். ஆனால் ஃபாங்கமும் சிவமூலிகையும் மதுவும் அருந்தியவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இருக்கும் உலகில் அவர்களின் எண்ணங்களே துவாரகையாக காற்றாக வானமாக நிரம்பியிருந்தன.

"குளிரத் தொடங்கி விட்டது" என்றான் சாத்யகி. "இந்நகரம் நிசிக்குப் பிறகு குளிரத் தொடங்கும். விடியலில் நடுக்கும். முன்னிரவில் வெறும் வெளியில் படுப்பதே இனிது. இந்நேரத்தில் எழுந்து அறைக்குள் சென்றாக வேண்டும். தவறாது விடியலில் இளமழை பொழியும்" என்றான். "எல்லா பருவத்திலுமா?" என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். "ஆம். அனைத்துப் பருவங்களிலும். இந்நகர் கடலிலிருந்து ஒரு கைப்பிடி மழையை ஒவ்வொரு நாளும் அள்ளி எடுத்துக் கொள்கிறது" என்றான் சாத்யகி. நகரின் தென்மேற்கு முனையில் அமைந்திருந்த கோட்டை முனம்பை அடைந்து புரவியை நிறுத்திவிட்டு சாத்யகி இறங்கினான். "இங்கிருந்து கடலை நெடுந்தொலைவு நோக்க முடியும். இவ்வேளையில் கலங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கும்" என்றான்.

அவன் மடிந்து மடிந்து சென்ற கோட்டைப் படிகளில் ஏறத்தொடங்க திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். குறுகலான படிக்கட்டு வானிலிருந்து விடப்பட்ட நூலேணி போல் இருளில் அப்படிகளில் மட்டுமே விழுந்த ஒளியில் விழிமயக்களித்தது. பன்னிரண்டாவது அடுக்கு வரை காவலர் எவருமில்லை. பன்னிரண்டாவது அடுக்கில் ஒரே ஒரு சதக்னி அருகே மூன்று காவலர் இருந்தனர். ஒருவனே விழித்திருந்தான். மற்ற இருவரும் கள் மயக்கில் துயின்று கொண்டிருந்தனர். விழித்திருந்தவன் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் திரும்பிநோக்கி எழுந்து ஓசையின்றி தலை வணங்கினான். அவர்கள் அவனை நிழல்கள் என கடந்துசென்றனர்.

சதக்னிக்கு மேலே இருந்த சிறிய கல் அறையில் நான்கு பக்கமும் திறந்த சாளரங்கள் வழியாக குளிர் காற்று தூக்கி கீழே வீசிவிடுவது போல பீரிட்டுக் கொண்டிருந்தது. அங்கு சென்று நின்றபோது நான்கு பக்கமும் விண்மீன்கள் மின்னும் வானுக்கு நடுவே நிற்பது போல திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். மிக அருகே என வியாழன் இளநீல நிறத்துடன் கரும்பட்டில் பதிக்கப்பட்ட வைரம் போல தெரிந்தது. ஒவ்வொரு விண்மீனையாக சுட்டுவிரல் தொட்டு தெறித்து விளையாட வேண்டும் என்று அவா எழுந்தது. கால் கீழே மிக ஆழத்தில் துவாரகையின் பெரும் துறைமுகம் பல்லாயிரம் எரிவிழிகள் திறந்த கலங்கள் சேர்ந்து நீண்டிருந்தது. மின்மினிகள் அடர்ந்த மரக்கிளை என, ஆயிரம் பல்லாயிரம் விழிகள் திறந்த அபூர்வ மீன் என, பற்றி எரிந்து பின் கனலாகிக் கிடந்த கரிவிறகென.

அத்தனை தொலைவில் இருக்கையில் துறைமுகத்தின் பல்லாயிரம் ஒலிகள் இணைந்த முழக்கம் பொன்வண்டு ரீங்காரம் போல கேட்டது. மறுபக்கம் துவாரகையின் சுழல் தெருக்களின் விளக்கொளிச்சரம் வளைந்து வளைந்து செல்ல, அதில் வண்டிகளின் விளக்குகள் எரிநீர் என ஒழுகிக் கொண்டிருந்தன. மாட முகடுகளில் இருந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. தொலைவில் எழுந்த பெருவாயிலுக்கு மேல் சுடர்ந்த மீன்நெய் விளக்குகள் ஏழு விண்மீன்கள் நடுவே முழக்கோல் மீன் தொகை தெரிவது போல் தெரிந்தன. அக்காட்சிகளால் தன்னை இழந்து எங்கோ என நின்றிருந்தான் திருஷ்டத்யும்னன். இது மானுடர் பிறிதொரு முறை நோக்கமுடியாது மண்ணில் மலர்ந்து விடிவதற்குள் அழியும் விண்ணவர் நகர். ஒரு முறையே பூத்து வாடும் பெருமலர். முகிலரசி முலை சூடிய வைர மணியாரம். அலைகடல் நாநீட்டி புறம் காட்டி பின் உள்ளிழுத்துக் கொள்ளும் முத்தணி.

தாள முடியாத உள எழுச்சியால் நடுங்கியபடி நின்றிருந்தான். பிறிதொருமுறை இத்தகைய பெருநகர் இம்மண்ணில் நிகழாது போய்விடலாம். பல்லாயிரம் ஆண்டுகள் தலைமுறைகள் இந்நகரை தங்கள் சிந்தையில் மீள மீள எழுப்பிக் கொண்டிருக்கலாம். சொற்களில் மட்டுமே இது வாழலாம். கற்பனைகளால் பலகோடி முறை தீட்டி எடுக்கப்படலாம். இக்கணம் இது நின்றிருப்பதே இறையருளால் என்றிருக்கலாம். இங்கிருக்கும் ஒவ்வொரு விளக்கும் விண்ணவரால் வாழ்த்தப்பட்டதாக இருக்கலாம். அதிலொரு துளியென ஆவதே அருளென்றிருக்கலாம். ஒரு கணம் அலையென வந்து அரித்து குளிர மூடி நடுங்க வைத்து நுரை பரப்பாகிய எண்ணமொன்றால் அவன் விழி நிறையப்பெற்றான்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 6

துவாரகையின் அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கல்பரப்பப்பட்ட பெரிய சதுக்கத்திலிருந்து இரு பிரிவாக பிரிந்து சென்ற பெருஞ்சாலையின் இறுதியில் இடது பக்கத்தில் கடலை நோக்கி ஒரு முகமும் நகர் பெரு முற்றத்தை நோக்கி மறுமுகமும் கொண்டு வெண்சுண்ணம் பூசப்பட்ட மரச்சுவர்கள் கடல் துமி நனைத்து காலை ஒளியில் மின்னிக் கொண்டிருக்க ஏழுமாடங்கள் கொண்டு ஓங்கி நின்றிருந்தது ஜாம்பவதியின் அரண்மனை. அதன் முகப்பில் கரிய பெருங்கைகளை மல்லிட அழைப்பதுபோல் விரித்து எரியும் செவ்விழிகளுடன் நின்றிருக்கும் கரடியின் மரச்சிலை அமைந்திருந்தது. மாளிகையின் மும்மாடங்களின் மீது நடுவே துவாரகையின் கருடக் கொடியும் வலப்பக்கம் கரடித்தலை பொறிக்கப்பட்ட ஜாம்பவர் குலக் கொடியும் இடப்பக்கம் யாதவர்களின் பன்னிரு குலங்களுக்குப் பொதுவான கன்று உண்ணும் பசு பொறிக்கப்பட்ட கொடியும் பறந்து கொண்டிருந்தன.

சாத்யகி தன் குதிரையை இழுத்து நிறுத்தி சற்று திரும்பி திருஷ்டத்யும்னனிடம் ”தங்களை மட்டும் சந்திக்கவே ஜாம்பவ அரசியின் அழைப்பு. இவ்வெல்லைக்கப்பால் தாங்களே செல்லவேண்டியதுதான்" என்றான். ”அரசமுறையின்றி சந்திக்கலாகாதா என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். "சந்திக்கலாம், இங்கு யாதவ அரசி மட்டுமே முறைமைகளை முழுமையாக பேணுபவர். ஆனால் ஜாம்பவ குலத்தரசியை சந்தித்தபின் ஏன் சந்தித்தோம் என்பதை யாதவ அரசியின் அமைச்சர்களிடம் தனித்தனியாக விளக்குவதற்குள் நம் சொற்களெல்லாம் ஒழிந்துவிடும். அதைவிட எங்கும் முறைமையை பேணுவதே உகந்தது” என்றான்.

அவன் இயல்பாகச் சொல்வது போலிருந்தாலும் குரலிலிருந்த இளநகையை உணர்ந்து திருஷ்டத்யும்னன் புன்னகைத்து, "சரி. மீண்டு வரும்போது பார்ப்போம்” என்று சொல்லி புரவியை தட்டினான். அவர்களை முன்னரே கண்டு எழுந்து காத்து நின்ற முதற் காவல்கோட்டத்திலிருந்த யாதவ வீரர்கள் அவனை நோக்கி வந்து தலை வணங்கினர். கரிய பேருடலுடன் இருந்த காவலர் தலைவன் அருகே வந்து வெடிக்குரலில் "வருக பாஞ்சால இளவரசே, அரசி தங்களை காத்திருக்கிறார்” என்றபோது திருஷ்டத்யும்னன் சற்று திடுக்கிட்டான்.

"எங்கள் அரசி தங்கள் வருகையை உடனே அறிவிக்கும்படி சொன்னார். ஆகவேதான் தாங்கள் வந்ததுமே முரசறைந்தோம். இப்போது அரசி அறிந்திருப்பார்" என அவன் கைகாட்டி அழைத்துச் சென்றான். "இந்த வழியே செல்லவேண்டும்… அங்கே இன்னொரு காவல்கோட்டம் உள்ளது… இங்கே நல்ல காவல் உண்டு பாஞ்சாலரே." திருஷ்டத்யும்னன் "நன்று" என்று சொல்லி புன்னகைசெய்தான். "நீர் ஜாம்பவரா?" என்றான். "ஆம், இளவரசே. ஜாம்பவர்குலத்தின் பிங்கல குடியை சேர்ந்தவன். என் குடியினர்தான் அங்கே காட்டை காவல் காப்பவர்கள். அப்படியே இங்கே வந்துவிட்டேன். அவர்கள் யாதவர்கள். நான் அவர்களுக்குத்தலைவன். இங்கே ஜாம்பவர்களே காவலர்தலைவர்களும் அமைச்சர்களும் ஒற்றர்களும்… ஏனென்றால் எங்கள் அரசி ஜாம்பவ குலத்தை சேர்ந்தவர்."

சினத்துடன் போலவே முகம் சுருங்க கைவீசி உரத்த ஒலியுடன் அவன் பேசினான். "இங்குள்ள வெயில் கடினமானது. அதைவிட இங்குள்ளவர்கள் பேசும் மொழி அச்சுறுத்துவது. நாங்கள் எதைச்செய்தாலும் அது முறைமையல்ல என்கிறார்கள் யாதவர்கள். இந்நகரம் யாதவ அரசியின் ஆட்சியில் உள்ளது என்பதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் அரசரின் அமைச்சர்கள் ஏற்கிறார்கள். ஆகவேதான் நான் எவரிடமும் எதுவுமே பேசுவதில்லை. ஏனென்றால் பேசப்பேச நாம் முறைமைகளை மீறுகிறோம் என்பதை கண்டடைந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" திருஷ்டத்யும்னன் புன்னகையை அடக்க உதடுகளை இறுக்கியபடி வேறுபக்கம் நோக்கினான்.

இரண்டாவது காவல்கோட்டத்தில் இருந்த காவலர்களும் ஜாம்பவ குலத்தவர்கள் மட்டுமே என திருஷ்டத்யும்னன் உணர்ந்துகொண்டான். யாதவர்களைவிட அரை மடங்கு பெரிய உடலும், நீண்ட வெண்பற்கள் கொண்ட பெரிய வாயும் அமைந்தவர்கள். இருள் நிறம் கொண்டவர்கள். அங்கிருந்த ஜாம்பவ காவல் தலைவனிடம் முதல்காவலர்தலைவன் மிக உரத்த குரலில் "கச்சரே, நீர் சொன்னபடி அதை அனுப்பி வைக்கவில்லை. ஆகவே நாம் பேசியது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நானும் அனுப்பி வைக்க மாட்டேன்... ஏனென்றால்…" என பேசத்தொடங்க அவன் மேலும் உரக்க "சத்தம் போடாதே… ஓசையிட்டு பேசலாகாதென்பது அரசமுறைமை என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? சொன்னால் என்ன புரிகிறது உனக்கு? மூடன்" என்றபடி திரும்பி திருஷ்டத்யும்னனிடம் "இந்த ஜாம்பவர்களை இங்கே வைத்து வேலைக்குப்பழக்குவதைப்போல கடினமான பணி ஒன்றும் இல்லை. காட்டுக்கரடிகள் இவர்கள்" என்றபின் அப்பால் சென்ற ஒரு காவலனிடம் "அர்க்கரை வரச்சொல் மூடா" என்று கூச்சலிட்டான். அவன் திரும்பி "அர்க்கர் துயில்கிறாரே" என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து "எழுப்புடா, அறிவிலியே" என்றான் காவலர்தலைவன். "இங்கே இளவரசர் காத்திருக்கிறார் அல்லவா?"

அர்க்கர் உள்ளிருந்து துயிலில் வீங்கிய இமைகளுடன் மெல்ல நடந்து வந்து அவனிடம் மீண்டும் முத்திரை விரலாழியை கேட்டார். அதை பலமுறை திருப்பித்திருப்பி கூர்ந்து பார்த்தபின் உள்ளே சென்று அங்கிருந்த மேலும் முதிய காவலரிடம் இன்னொரு முறை காட்டி உறுதி செய்து கொண்டு திரும்பி வந்து, "வருக இளவரசே!” என்றார். "பாஞ்சால இளவரசை ஜாம்பவர்குலத்து அரசியின் பொருட்டு வரவேற்கிறோம்" என்று சொல்லும்போதே கொட்டாவி எழ வாயைத் திறந்து பெரிய பற்களும் தொங்கி ஆடிய உள் நாக்கும் தெரிய ஓசையிட்டார். காவலர்தலைவன் "வருக இளவரசே" என அழைத்துச் சென்றான்.

காவலர் தலைவன் "யாதவர்கள் அனைவருமே பார்க்க ஒன்று போல் இருக்கிறீர்கள் இளவரசே" என்றான். "ஆகவே அடையாளங்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப கூர் நோக்குகிறோம்" என்றான். திருஷ்டத்யும்னன் "நான் யாதவன் அல்ல" என்றான். "நீங்கள் ஜாம்பவரா? இல்லையே!" என்றான் அவன். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தான். "யாதவர்களை நாங்கள் கண்டதுமே அடையாளம் கொள்வோம். அவர்கள் சிறியவர்கள். ஆகவே தங்களுக்கு அறிவு கூடுதல் என எண்ணிக்கொண்டிருப்பார்கள்." திருஷ்டத்யும்னன் சிரித்துவிட்டான். "ஆம், ஆனால் அவ்வண்ணம் எண்ணாத வேறு வகை யாதவன் நான்" என்றான்.

அரண்மனையின் பிறை வடிவ பெருமுற்றத்தில் நான்கு பொலனணித் தேர்களும் மூன்று பல்லக்குகளும் நின்றிருந்தன. தேர்களுக்கான வெண்புரவிகள் அப்பால் அரண்மனையின் நிழல் விழுந்த பகுதியில் கடிவாளங்கள் முதுகின்மேல் போடப்பட்டிருக்க சேணம் அணிந்து நின்று தலையாட்டி மணியோசை எழுப்பியபடி முகத்தில் கட்டப்பட்ட தோல் பைகளிலிருந்து  கொள் தின்று கொண்டிருந்தன. பல்லக்குத்தூக்கிகளும் ஜாம்பவர்களே. அவர்கள் கால்மடித்து அமர்ந்து பாக்கு மென்ற தாடைகளுடன் திரும்பி நோக்கினர். அரண்மனையின் நிழல் சாய்வாக நீண்டு கடல் துமியின் ஈரம் சாய்வாகப் படிந்து சென்ற கல்தரைப் பரப்பைக் கடந்து மறுபக்கம் எழுந்து துணை மாளிகையின் சுவர் மேல் மடிந்து மேலேறி நிற்க அதன் மூன்று கொடி நிழல்களும் படபடத்தன. மாளிகை முகப்பின் ஏழு பெரிய யவனத்தூண்களின் உத்தரம்தாங்கிய மேல்முனையின் மலர் மடிப்பின் விளிம்பில் கன்னங்கள் உப்பிய சிறு குழந்தை தேவர்கள் கைகளில் மலர்கள் பூத்த தளிர்க்கொடிச் சுருள்களுடன் புன்னகைத்தபடி பறந்தமைந்திருந்தனர்.

பன்னிரு நீள்படிகளில் ஏறி முட்டை ஓடு என வெண்சுண்ணத்தால் ஆன முற்றத்தில் தரை மீது நடந்து சென்று அங்கே திறந்திருந்த வாயிலை அடைந்தான். அவனை நோக்கி இரும்புக்குறடுகள் ஒலிக்க குதிரைப்படை மலையிறங்குவது போல வந்த ஏழு காவலர்கள் "பிங்கலரே, உள்ளே அரசி வந்து அமர்ந்துவிட்டார்கள்… இவர்தான் இளவரசரா?" என்று கூச்சலிட்டனர். பிங்கலர் "இவர்தான். நான் காவல்கோட்டம் முதல் துணையாக வருகிறேன். உடன் வந்த இன்னொரு யாதவர் அங்கேயே நின்றுவிட்டார்" என்றபின் திருஷ்டத்யும்னனிடம் "இவர்கள் அரண்மனைக் காவலர்கள். உரக குடியினர்" என்றான். அவர்கள் திருஷ்டத்யும்னனை நோக்கி புன்னகைக்க, தலைவன் "நாங்கள் ஜாம்பவர்குலத்தின் செய்தியாளர்கள்…" என்றான். மறுபக்கம் இருந்த அறைகளில் பெருங்குரலில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். பெருந்தூண்களும் உயர்ந்த வளைமுகட்டுச்சாளரங்களும் உயர்ந்த குவைமாடக்கூரையும் கொண்ட அத்தகைய மாளிகைகள் அமைதி நிறைந்திருப்பதற்கானவை என திருஷ்டத்யும்னன் எண்ணினான்.

"அரசியின் அறை இதுதான்… சற்று பொறுங்கள் இளவரசே" என்றபின் தலைமைக்காவலன் வெண்கலக் கதவை மும்முறை தட்டியதும் அதை ஓசையுடன் திறந்து வெளிவந்த இளம்அமைச்சன் திருஷ்டத்யும்னனைக் கண்டு தலைவணங்கினான். "வருக இளவரசே!" என்று அழைத்து "பாஞ்சால இளவரசர் ஜாம்பவர்களின் அரண்மனைக்குள் வந்தது பெருமையளிக்கிறது. இத்தருணம் வாழ்த்தப்படுவதாக!” என்று முகமன் சொன்னான். ”என் பெயர் சம்புகன். ஜாம்பவ குலத்து கோலக குடியைச் சேர்ந்தவன். மூத்த ஜாம்பவருடைய அமைச்சர் குழுவிலிருந்தேன். இங்கு அரசியின் மூன்றாம் அமைச்சனாக பணியாற்றுகிறேன்.”

"தங்களை முறைமைக்காகவே அரசி சந்திக்க விழைகிறார். தாங்கள் கொண்டுவந்த தூதையும் அதன் விளைவுகளையும் அவர் அறிந்திருக்கிறார். தாங்கள் முறைமைக்குரிய இன் சொற்களை சொல்லலாம். அரசுமுறைச் சொற்களை அமைச்சரிடம் சொல்லவேண்டுமென்பது இங்குள்ள நெறி. தங்கள் அருள்கோருகிறேன்." திருஷ்டத்யும்னன் அவனுடைய திரண்ட கரடித்தோள்களையும் செவ்வண்ணம் பூசப்பட்ட தோல்பட்டையை சுற்றிச்சுற்றி அமைக்கப்பட்ட தலைப்பாகையையும் அதிலிருந்த சிறிய பொன்னாலான கரடி முத்திரையையும் நோக்கினான். கரடி குலத்துப் பழங்குடிகள் தன் உள்ளத்தில் எழுப்பிய சித்திரத்திற்கு முற்றிலும் மாறாக பிறிதொருவகை அரசும் அமைச்சும் குடியும் கொண்டவர்கள் என எண்ணினான்.

ஜாம்பவ அரசியைப் பற்றி தான் கொண்டிருக்கும் உளச் சித்திரம் அவளைக் கண்டதுமே முழுமையாக மாறப்போகிறது என திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான். சம்புகன் "தங்களுக்கு அரை நாழிகை நேரம் இளவரசியால் அளிக்கப்பட்டுள்ளது இளவரசே. முறைப்படி முகமன்கள் சொல்ல வேண்டும் என்பது இங்குள்ள முறைமையாயினும் அரசி அதை நெடுநேரம் கேட்க விரும்புவதில்லை” என்றான். திருஷ்டத்யும்னன், ”இது முறைமை சார் சந்திப்பு மட்டும்தான் சம்புகரே, நான் செய்தியென சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். சம்புகன் "வணக்கங்களை தெரிவிப்பதும் செய்தியல்லவா?” என்றான். அவன் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு திரும்பி திருஷ்டத்யும்னன் ”ஆம்” என்றான். இடைநாழியின் இருபக்கமும் திறந்திருந்த அறைகளுக்குள் அமைச்சு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை கண்டான். ஜாம்பவதிக்கும் ஒற்றர்களும் அவர்களைத் தொகுக்கும் அமைச்சர்களும் கருவூலமும் கருவூலக் காவலர்களும் நிதியாளுநர்களும் இருப்பதை அறிந்தான்.

சிறியதோர் கூடத்திற்குள் அவனை அழைத்துச் சென்று அங்கிருந்த வெண்பட்டு விரித்த பீடத்தில் அமரச் செய்தான் சம்புகன். "இங்கிருங்கள் இளவரசே. நான் அரசியின் ஆணை பெற்று வருகிறேன்” என்று சொல்லி தலைவணங்கி மறுபக்கமிருந்த சிறிய வாசலைத் திறந்து மறைந்தான். சற்று மிகையாகவே அந்த முறைமைகள் உள்ளனவா என்ற எண்ணத்துடன் அச்சிறு கூடத்தின் அமைப்பை நோக்கியபடி திருஷ்டத்யும்னன் காத்திருந்தான். ஏழு நீள்வட்ட வடிவ சாளரங்களால் வானம் உள்ளே வரும்படி கட்டப்பட்டிருந்த நீள்வட்ட வடிவஅறை. திரைச்சீலைகள் முற்றிலும் விலக்கப்பட்டதால் ஏழு சாளரங்கள் வழியாகவும் வெளியே இருந்த கடல் தெரிந்தது. நீல நெளிவு காலை ஒளியில் கண் கூசும்படி மின்னிக் கொண்டிருந்தது. கடல் காற்று உள்ளே சுழன்று அவன் குழலை அள்ளி பறக்கவைத்து ஆடைகளை துடிக்கச்செய்தது. இடக்கையால் மேலாடையை அள்ளி உடலில் சுற்றிக்கொண்டான்.

காலையில் இளமழை இருந்ததனால் காற்றில் நீர்த்துமிகள் கலந்திருந்தன. சில கணங்களுக்குள்ளேயே குளிரத் தொடங்கியது. மெல்லிய ஓசையுடன் வெண்கலக் கதவு திறந்து வந்த சம்புகன், "இளவரசே! தாங்கள் அரசியை சந்திக்கலாம்" என்றான். திருஷ்டத்யும்னன் எழுந்து அவனைத் தொடர சிறு வாயிலைத் திறந்து மறுபக்கம் அழைத்துச் செல்லப்பட்டான். மூன்று பெரிய சாளரங்கள் கடல் வெளியை நோக்கி திறந்திருக்க அவ்வறை ஒளி நிரம்பியதாக இருந்தது. ஆனால் வெளியே இருந்த மரத்தாலான அமைப்பொன்றால் உள்ளே வரும் காற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சாளரத்தில் போடப்பட்டிருந்த நீலத்திரைச்சீலைகள் மெல்ல நெளிந்து கொண்டிருந்தன. சித்திரச்செதுக்குகள் செறிந்த வெள்ளிச் சட்டம் கொண்ட மையச்சாளரத்தருகே பொன்மலரிருக்கையில் ஜாம்பவதி அமர்ந்திருந்தாள்.

உள்ளே நுழைந்ததுமே திருஷ்டத்யும்னன் தலைவணங்கி "ஜாம்பவ குலத்து அரசிக்கு வணக்கம். துவாரகையின் அரசிக்கு பாஞ்சாலம் தலை வணங்குகிறது. இத்தருணத்தில் என் தந்தையின் பொருட்டும் என் தமையரின் பொருட்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான். ஜாம்பவதியின் கண்களில் கற்ற செய்யுளை நினைவுகூரும் இளஞ்சிறுமியின் பதற்றம் தெரிவதைக்கண்டு திருஷ்டத்யும்னன் தனக்குள் புன்னகைசெய்தான். "பாஞ்சால குலத்திற்கும் தங்களுக்கும் துவாரகையின் வணக்கம். ஜாம்பவ குலமூதாதையர் தங்களை வாழ்த்துக! இங்கு தாங்கள் வந்ததை அவர்கள் எங்களுக்கான பெருமை என கருதுவர்" என்று சொல்லி அமரும்படி கை காட்டினாள். அவன் அப்பீடத்தில் அமர்ந்துகொண்டு ”தங்கள் வாழ்த்துக்களால் என் ஐந்து குலங்களும் பெருமை கொண்டன அரசி” என்றான்.

ஜாம்பவதியின் தோற்றம் அவனை விழிகளென மாறவைத்தது. அவன் கண்ட பெண்களில் அவளுக்கிணையென பெருந்தோற்றம் கொண்டவர் பிறரில்லை என்று எண்ணிக்கொண்டான். அமர்ந்திருக்கையிலேயே அவனது தோள் அளவுக்கு இருந்தது அவளுடல். மல்லர்களுக்குரிய தோள்கள். தசை திரண்ட புயங்கள். யானை மத்தகமென எழுந்த முலைகள் மீது வேப்பிலைச்சரப்பொளி முகபடாமென பரவி ஒசிந்து இறங்கியது. படர்ந்த வட்ட முகத்தில் செதுக்கப்பட்டது போன்ற சிறிய மூக்குக்கு இரு பக்கமும் மலைச்சுனைகளின் ஒளியுடன் நீண்டு விரிந்த எருமை விழிகள். தடித்து மலர்ந்த உதடுகளுக்கு உள்ளே வெண்பற்களின் நுனி நிரை தெரிந்தது. நீண்டு தழைந்த காதுகளில் மலர்க்குழை அணிந்திருந்தாள். கைகளில் சந்தன மரத்தில் கடைந்து பொன் நூல் பின்னப்பட்டு நீலவைரங்கள் பதிக்கப்பட்ட கடையங்களும் தோளில் மணிமின்னிய சந்தனத் தோள்வளைகளும் அணிந்திருந்தாள்.

அவள் முகம் உருண்ட கன்னங்களுடன் அரக்கர்குலத்துக் குழந்தை என எண்ணச்செய்தது. "தாங்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியையும் அதை யாதவ அரசர் ஏற்றதையும் அறிந்தேன் பாஞ்சாலரே!” என்றாள். அவள் குரலும் சிறுமிகளுக்குரியது போலிருந்தது. "மூத்த அரசியை தாங்கள் சந்தித்ததையும் அறிந்தேன்” என்று சொன்னபோது அவள் குரலில் மிகச்சிறிய மாற்றம் ஒன்று வந்ததோ என அவன் எண்ணினான். ”ஆம். நேற்று பேரரசியை சந்தித்தேன்” என்றான். அவன் எண்ணியதற்கு மாறாக அவள் கண்களில் சிரிப்பு ஒன்று அசையும் குறுவாளின் நுனியின் ஒளியென தெரிந்தது. இதழ்கள் விரிந்தபோது கன்னத்தின் இருபக்கமும் சற்று மடிந்து முகம் மேலும் குழந்தைத்தனம் கொண்டது. "நாளிருப்பதனால் முறையாக எட்டு அரசியரையும் நீங்கள் சந்திக்கலாம்” என்றாள்.

"ஆம்” என்றான் அவன். "சந்திக்க எண்ணியிருக்கிறேன். அதுவும் என் தூதுமுறையில் அடங்குவதே." ஜாம்பவதி "அம்முறைமையில் சிறுபிழையுமின்றி நோக்குங்கள். எப்பிழைக்கும் எப்படியும் பன்னிரண்டு இடங்களில் நீங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்” என்றாள். திருஷ்டத்யும்னன் விழி தூக்கி அவளை நோக்க இதழ்களை மடித்துக்கொண்டு சிறுமியைப் போல உடல் குலுங்க சிரிக்கத் தொடங்கினாள். சிரிப்பை அடக்க முடியாது கையைவைத்து வாயை பொத்திக்கொண்டாள். திருஷ்டத்யும்னன் சிரித்து "ஆம். இந்நகரே யானை அங்குசத்தை என முறைமையை அஞ்சிக் கொண்டிருக்கிறது" என்றான். அச்சொல் அவளை மீண்டும் சிரிக்க வைக்க, போதும் என்பது போல வலது கையை ஆட்டி இடக்கையால் வாய்பொத்தி சிரித்து குலுங்கினாள். சிரிப்பில் முகம் அனல்பட்ட கரிய இரும்புக் கலமென உள்சிவப்போடி விரிந்தது.

அவன் அவள் சிரிப்பை அகம் மலர நோக்கியிருந்தான். கீழ்உதட்டை உள்ளே இழுத்துக் கடித்து சிரிப்பை அடக்கியபின் விம்மி வந்த பெருமூச்சுகளுடன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாள். கட்டு மீறி மீண்டும் சிரிப்பு எழுந்தது. கொதிக்கும் கலனில் ஆவியென இதழ் விளிம்பு தெறிக்க சிரிப்பு பீரிட ஓசையிட்டு நகைத்தபின் ”மன்னியுங்கள். நான் அப்படித்தான். என்னால் முறைமைகளை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை. சிரித்துவிடுகிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி ”ஆம் அரசி, முறைமைகளைக் கண்டு சிரிக்கத் தொடங்கினால் அதன் பின் அரசியர் விடிவது முதல் இருள்வது வரை விடாது சிரிக்க முடியும்” என்றான்.

அவனை நோக்கி ஆம் என்று சொல்வதற்குள் மீண்டும் அவளுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தது. சிரிப்பு உடல் முழுக்க நிகழ்ந்து கொண்டிருந்தது அவளுக்கு. கருங்குழல் கற்றைகள் விழுந்த கன்னத்தில், இறுகிய தடித்த கழுத்தில், நகைகள் அழுந்திய தடம் பதிந்த மார்புப்பரப்பில் இடை வளைவில் எங்கும் சிரிப்பு தேங்கி நின்றது. மெல்ல சிரிப்பு துளித்துச் சொட்டி ஓய மீண்டு வந்து "இந்த துவாரகையை ஒரு நாடகமென கண்டிருப்பீர்” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். "நாடகத்துக்குள் நாடகம் என இங்கே நடந்து கொண்டிருக்கிறது. வெளியே பெருங்களியாட்டமெனும் நாடகம், அதற்குள் அரசு சூழ்தலைப் பற்றிய நாடகங்கள், உள்ளே அரசியரின் உளநாடகங்கள்” என்றான்.

"என்ன நாடகம் கண்டீர்?” என ஜாம்பவதி கேட்டாள். "பாமா பரிணயம்” என்றான். "அதுவா?” என்று சிரித்தபடி, ”ஆம், அது அழகிய நாடகம்தான்” என்றாள். "முதல் முறை அதை நான் இளைய யாதவருடன் அமர்ந்து கண்டேன். அவருக்கு அப்பால் யாதவ அரசி அமர்ந்திருந்தாள். இரண்டாவது அங்கத்தில் என்னை அரசர் முன்னரே கைப்பிடித்துவிட்டாரென்ற செய்தியை அறிந்து கத்தியை உருவி இளைய யாதவரை அவள் குத்தப் போகும் இடத்தை விறலி நடித்தபோது நான் சிரித்துவிட்டேன். மறுபக்கமிருந்து அவள் திரும்பி என்னை சினந்து நோக்கினாள்” என்றாள். திருஷ்டத்யும்னன் "அப்போதுகூட வாளை உருவியிருக்கலாம்" என்றான். ஜாம்பவதி "எப்போதும் உருவிய வாள் ஒன்று அவள் ஆடைக்குள் இருக்கிறது" என்றாள். "இளவரசே, ஆனால் இங்கே இளைய யாதவரைவிடவும் எனக்கு அண்மையானவள் அவளே. என் அன்னையென்றே நான் அவளை உணர்கிறேன்."

திருஷ்டத்யும்னன் "அதையும் இந்நகரெங்கும் கண்டேன்" என்றான். "அனைவரும் பேரரசியை அன்னையென உணர்வதனாலேயே அவரை ஏமாற்றுவதை களியாடலாக கொண்டிருக்கிறார்கள்" என்றான். அவள் "சரியாகச் சொன்னீர்கள்" என்று சிரித்தாள். "துவாரகை அரசி அந்நாடகங்களை விரும்புகிறார். அந்நாடகங்களில் இருந்து தன் நடிப்பை பெற்றுக் கொள்கிறார்.” ஏதோ எண்ணம் எழ சிரித்தபடி "அவள் அரண்மனையின் வாயில்கள் திறப்பதை விட மூடுவதற்கே உகந்தவை என்று ஒரு கவிஞன் எழுதிய அங்கதம் இந்நகரில் அனைவரையும் புன்னகைக்க வைப்பது” என்றாள்.

திருஷ்டத்யும்னன் சிரிக்க "மூடிய கதவுகளுக்கு மறுபக்கம் நின்று இளைய யாதவர் ஒவ்வொரு நாளும் முறையிடுகிறார் என்பார்கள் சூதர்கள். அக்கதவு திறக்கும்போது விடிந்துவிடும். ஆகவே மறுநாளும் தொடரும்” என்றாள். திருஷ்டத்யும்னன் "யாதவ அரசி தாளாமை மிக்கவர்” என்றான். ”இல்லை. அப்படி தன்னை காட்டுகிறாளா?” என்று கேட்டாள் ஜாம்பவதி. திருஷ்டத்யும்னன் அவளை நோக்கியபின் ”தாங்கள் எண்ணுவதை நான் புரிந்து கொள்கிறேன் அரசி!” என்றான்.

"இளையோனே! ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுக்கு அவன் விரும்பும் ஒன்றை நடித்து பரிசளிக்கிறாள். என் வாயில் கடந்து வரும் இளைய யாதவர் கூழாங்கற்களும் சிறு வில்லும் கொண்டு விளையாட வரும் சிறுவன். அவள் வாயிலைக் கடந்து செல்பவர் காதலுக்காக இறைஞ்சி வாயில் நின்றிருக்கும் தனியர். வைரத்தின் ஒவ்வொரு பட்டையையும் ஒவ்வொருவருக்கென பகிர்ந்தளித்திருக்கிறார் என்று அவரைப் பற்றி சூதர்கள் பாடுவார்கள்” என்றாள்.

அவள் பேசவிழைவதை அவன் உணர்ந்தான். முதலில் அவள் தன்னுடன் பேசுவதில் மகிழ்வதாக எண்ணினான். அவள் விழிகளில் எழுந்தெழுந்து அணைந்த உணர்ச்சிகள் அவள் தன்னுடனேயே பேசிக்கொண்டிருப்பதை காட்டின. இளஞ்சிறுமியர் களிப்பொருட்களை எடுத்து எடுத்து நோக்கி உள்ளே அடுக்குவதைப்போல அவள் தன் ஆழத்துள் இருந்த இளைய யாதவரைப்பற்றி பேச விழைந்தாள். அரைநாழிகை நேரத்தை அமைச்சன் அளந்து அளித்ததைப்பற்றி எண்ணிக்கொண்டதும் அவனுக்கு புன்னகைதான் வந்தது. "நான் இங்கே அமர எப்போதும் விரும்புவேன். இல்லையேல் அந்த அறைக்குள் இதேபோல் ஒரு சாளரம் இருக்கிறது. அங்கே இரு சாளரங்கள் வழியாகவும் இங்குள்ள பெரிய வாயில் தெரியும்."

"வியப்புக்குரியது அது" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். "வானத்தை அள்ளி மண்ணில் இறக்கும் வாயில்." அவள் உதட்டை அழுத்தி "எனக்கு அது வாயில் என்றே தோன்றவில்லை. எங்கள் குலமூத்தார் ஆலயம் காளநீலத்தின் உள்ளே உள்ளது. அங்கே முன்பு ராகவராமன் வந்து அமர்ந்திருந்த பெரிய கடம்பமரம் இருந்தது என்கிறார்கள். அது பொன்னால் ஆன அடிமரம் கொண்டது. நான் இளம்பெண்ணாக இருக்கையில் ஒரு கனவு கண்டேன். மண்ணுக்குள் இருந்து ஒரு பொன்வேர் எழுந்து வளைந்து நின்றிருப்பதாக. புதைந்து கிடக்கும் பொன்மரம் வேர் நீட்டி தளிர்விடுவதைக் கண்டேன். அதை நான் எவரிடமும் சொன்னதில்லை. இங்கு வந்து இந்தப் பெருவாயிலை நோக்கியதும் என் அகம் திடுக்கிட்டது. நான் பார்த்த வேர்வளைவு இதுதான்" என்றாள்.

அவள் விழிகள் வேறெங்கோ இருந்து மீண்டுவந்து அவனை நோக்கின. "என் கனவில் நான் யானையாக இருந்து அந்த வேரை நோக்கினேன்" என்றாள். "இந்தச் சாளரத்தருகே அமர்ந்து நோக்கும்போதும் என்னை பிடியாக உணர்வேன்." உடனே அனைத்தையும் கலைத்து மணிக்கொத்துகள் குலுங்குவது போல சிரித்துக்கொண்டு "என் உடலைக்கண்டவர்கள் பிடியானை என்றே சொல்கிறார்கள். இளையயாதவர் மணந்த எட்டு திருமகள்களில் ஒருத்தியாக என்னைப்பற்றி பாடும் பாணர்கள் என்னை கஜலட்சுமி என்று பாடுவதுண்டு" என்றாள்.

திருஷ்டத்யும்னன் "தங்களை இளைய யாதவர் மணந்த கதை இங்கே நடிக்கப்படுகிறதா அரசி?" என்றான். "ஆம், நடிக்கப்படுகின்றது. அருகிருந்து பார்த்தவர்கள் போல பாடுகிறார்கள். நான் பார்த்திருக்கவே அவை வளர்ந்து மாறுகின்றன. யாரிவள் என என்னையே நான் வியந்து பார்க்கிறேன்" என்றாள். திருஷ்டத்யும்னன் "அரசகுடியினர் சூதர்பாடலில்தான் முழுமைகொள்ளவேண்டும்" என்றான். "ஆம், நான் இங்கே ராணித்தேனீ போல கூட்டுக்குள் இருக்கிறேன். நகரெங்கும் என்னிலிருந்து பிறந்த தேனீக்கள் போல பலநூறு ஜாம்பவதிகள் சுழன்றுகொண்டிருக்கிறார்கள்."

"ஜாம்பவர் குலத்தில் இளைய யாதவர் பெண்கொண்டதை பாஞ்சாலத்தில் பெருவியப்புடன் நோக்கினர்" என்றான் திருஷ்டத்யும்னன். "ஜாம்பவர் பிறமானுடருடன் உறவற்றவர்கள். வெல்லவோ அணுகவோ முடியாதவர்கள். அது இளைய யாதவர் கொண்ட அரசுசூழ்தல் என்றே எங்கள் அவையில் பேசப்பட்டது." ஜாம்பவதி "அப்படித்தான் எங்கும் பேசப்படுகிறது. ஆனால் அது அவர் எனக்களித்த பரிசு என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் அவரது காதல்விழிகளைத்தான் நான் கண்டேன்" என்றாள்.

பகுதி ஆறு : மணிமருள் மலர் - 7

ஜாம்பவர்குலத்தில் மூத்தஜாம்பவரின் மகளாக நான் பிறந்தபோது எட்டு நற்குறிகள் தோன்றின என்று என் குலப்பாணர் பாடுவர். என் அன்னை பின்மதிய வேளைக்கனவில் வெண்முகில்குவை ஒன்று யானையெனத்திரண்டு அஸ்வபாதத்தின் மேல் வலது முன்கால் வைத்து இறங்கி வெண்ணுரைபெருகும் அருவியென மலைச்சரிவில் வழிந்து தழைப்பெருக்குக்குள் மான்கூட்டங்கள் போல இலையலைத்து ஓடி வருவதை கண்டாள். குளிர்ந்த நீர் அவள் கால்களை நனைக்க விழித்துக்கொண்டபோது அறைக்கு வெளியே கிரௌஞ்சம் ஒன்று மும்முறை குரலெழுப்பியது. இளமழை பெய்து இலைகள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. விண்ணில் இந்திரவில் எழுந்து நின்றிருந்தது. அவள் எழுந்து வெளியே வந்தபோது கூரை ஒழுகுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்கலம் நிறைந்திருப்பதை கண்டாள். தோழியை அழைத்தபோது மலர்தொடுத்துக்கொண்டிருந்த அவள் கையில் மாலையுடன் ஓடிவந்தாள். அப்போதே என் அன்னை தான் கருவுற்றிருப்பதை உணர்ந்துகொண்டாள்.

என் குடியில் குழந்தைகள் எக்கல்வியும் பெறுவதில்லை. பிறந்த நாள் முதல் அவர்கள் விளையாடத் தொடங்குகிறார்கள். அகவை நிறையும் சடங்குக்குப்பின் ஆண்கள் வேட்டைக்கும் பெண்கள் குடியமைக்கவும் காப்புகட்டி உரிமைகொள்கிறார்கள். எங்கள் இளமையென்பது தீராவிளையாட்டு மட்டுமே. முதல் ஜாம்பவரின் மகளாகப் பிறந்தமையால் நான் செம்மொழியை கற்றுக் கொண்டேன். தேனெடுக்கவும், கனி சேர்க்கவும், நீராடி மகிழவும், மலர் கோக்கவும் என் குடிப்பெண்டிரிடமிருந்து அறிந்தேன். விற்கலையும் வேல்திறனும் நச்சுத்தொழிலும் அன்னையர் கற்பித்தனர். கற்பதறியாமல் கற்கவேண்டுமென்பதே எங்கள் குலமுறை. இளமையில் மலைமுடி ஏறிச்சென்று அங்கே நின்று எங்கள் காட்டை பார்ப்போம். நான் ஜாம்பவதி என நெஞ்சைத்தொட்டு உணரும் விம்மிதத்தை விரும்பினேன்.

மலைஉச்சிப் பாறை ஒன்றில் அமர்ந்து ஒருமுறை நோக்குகையில் எங்கள் குகைகளுக்குமேல் எழுந்து நின்ற நீலமுகில் ஒன்றை கண்டேன். என் விழிநிறைத்து நெஞ்சுள் குளிரென்றாகியது அந்த நீலம். மலைச்சுனைகள் ஒளிகொண்டதுபோல. எருமைவிழிகளில் இளவெயில் தெரிவதுபோல. செந்நெருப்பு அமர்ந்திருக்கும் பீடம் போல. அந்த முகில் இரு கைகளை விரித்து என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அது புன்னகைப்பதுபோல தோன்றியதும் எழுந்து நின்று தோழியரை நோக்கினேன். அவர்கள் தொலைவில் மலர்தேர்ந்துகொண்டிருந்தனர். நான் நின்றிருந்த பாறைமுடிமேலிருந்து இறங்குவது எளிதல்ல. கைநீட்டி கூவியழைக்க எண்ணினேன். குரல் எழவில்லை. கால்கள் அசைவிழந்திருந்தன.

நீண்டு வந்த நீலக்கைகள் என்னை  சூழ்ந்துகொண்டன. நீர்போல குளிர்ந்த முகிலால் முழுமையாக சூழப்பட்டேன். மண்ணிலிருந்து என்னை அள்ளி எடுத்து மேல்கீழற்ற வானில் நிறுத்தியது அது. ஒரு சொல்லை எவரோ என் காதில் சொன்னார்கள். பின்னர் அச்சொல்லை கனவுகளில் மட்டுமே கேட்டிருக்கிறேன். நினைவில் ஒருபோதும் தொட்டு எடுத்துவிடமுடியாத சொல். முகில் நீங்கியபோது நான் அந்த மலைமுடிமேல் மயங்கிக்கிடந்தேன். தோழியர் வந்து என்னைத் தூக்கி நீரள்ளி முகம் தெளித்து எழுப்பி ஏனென்று வினவினர். ஏதும் சொல்லவியலாமல் நான் விம்மியழுதேன்.

பின் எப்போதும் அந்த மலைமுடிப்பாறைமேல் சென்றமர்ந்துகொண்டேன். முகில் நோக்குகையில் சொல்லிழப்பேன். பின் சித்தம் அழிவேன். என்னை முகிலின் காதலி என்றே என் தோழியர் சொல்வர். முகில் நிறம் என ஒன்று உண்டா என்ன? கருமை என்று விழி சொல்கையில் நீலம் என்று அகம் கொள்கிறது. தண்மையென்று உடல் அறிகையில் வானில் நின்றெரிகிறது. அருகென உணர்கையில் கருமை. அயலென்று அறிகையில் அது நீலம். புலரியில் அது செம்மை. கதிர் பரவிய உச்சியில் அது இந்திர நீலம். கனவில் அது மணிநீலம். முகிலைப் போல் கணமொரு ஆடை மாற்றிக் கொள்ளுவது வேறொன்று இல்லை. முகிலைப் போல் முடிவிலா உருக்கொண்டதும் பிறிதில்லை. ஒரு கணம் விழி திருப்பி நோக்கினால் பிறிதொன்று நிற்கும். ஒரு கணம் கடந்து சென்றால் தன்னை அவ்வெண்ணமாக மாற்றி நம் முன் எழுந்து நிற்கும்.

அலகிலியின் விழிமாயத்தை ஒளி உண்டு உமிழும் பெரும் புன்னகையை ஒன்று பலதென பரந்து வான் நிறைக்கும் பெருங்களியாட்டத்தை, நின்று சுடர்ந்து இருண்டு மறைந்து ஒளி உண்டெழுந்து ஒவ்வொரு நாளென்று திகழும் அதன் முடிவின்மையை நான் ஒவ்வொரு நாளும் அறிந்தேன். ஒரு துண்டு முகில் என் கையில் இருக்க வேண்டுமென விழைந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் விந்தையென நிகழும் ஒரு முகில் துளி. மலைமுடியில் நின்று கை நீட்டி முகிலில் ஒரு பிடியை அள்ளி எடுத்து நெஞ்சோடணைப்பதை கனவு கண்டேன். உச்சிவெயிலில் ஒளிகொண்ட இந்திரநீலத்தின் ஓர் இதழ்.

ஒரு நாள் எந்தை அதை கொணர்ந்தார். அப்போது குகை வாயிலில் என் தோழியருடன் கழற்சி ஆடிக் கொண்டிருந்தேன். மலைச் சுனையில் பொறுக்கிக் கொண்டு வந்த உருளைக் கற்களை மென் மணலில் உருட்டி கூவிச் சிரித்து துள்ளி நகைத்தபடி ஆடிக்கொண்டிருந்த என் முன் வந்து நின்று "இளையோளே, இனி இது உன் ஆடலுக்கு" என்று சொல்லி தன் கையை விரித்தார். யானைமத்தகத்தில் விழி என பெரிய கைகளில் அந்த மணி சுடர்ந்தது. "முகில்!" என்று கூவினேன். "ஆம் ஒளி கண்ட சிறு முகில் இது" என்றார். "எனக்கா?" என்று இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றி நின்றேன். "உனக்கென மட்டுமே" என்றார். ஓடிச் சென்று அதன் அருகில் அணுகி குனிந்து நோக்கினேன். "எங்கு கிடைத்தது தந்தையே?" என்றேன். "மலைச்சிம்மம் ஒன்றின் குகைக்குள் இதன் விழியொளிரக் கண்டேன். அக்கணமே உன்னுடையது இது என்று முடிவு செய்தேன்" என்றார்.

அதை தொட என் கை துணியவில்லை. "என்னை நோக்கி அது புன்னகைக்கிறது" என்றேன். சிரித்தபடி "மணிகளெல்லாம் மானுடரை நோக்கும் தெய்வங்களின் புன்னகைகளே" என்றார். "இது எந்த தெய்வம்?" என்றேன். "புன்னகைக்கும் விழித்துளி இது. இது அமைந்த முகம் எதுவென இப்போது நாமறிய முடியாது. நல்லூழ் அமைந்தால் அது நம் முன் தோன்றலாம்" என்றார் எந்தை. பின்னால் வந்து நின்ற முதிய ஜாம்பவர் "அது நலம்பயக்கும் தெய்வமென்று எப்படி அறிவது அரசே?" என்றார். எந்தை "மணிகளில் அமைந்த தெய்வங்கள் நம்முடன் ஆடவிழைகின்றன. அவற்றைக்கொண்டு நாம் மகிழ்கையில் அருள்கின்றன. அவற்றுக்கு பிறிதொன்றை நிகர்வைக்கையில் சினம் கொள்கின்றன" என்றார்.

நடுங்கும் சிறு விரல் நீட்டி அதை மெல்ல தொட்டேன். அனலென எரியும் என்று என் உள்ளம் அச்சம் கொண்டது. தொட்டதும் பனியென அது குளிர்ந்திருப்பதை உணர்ந்து விரலை எடுத்துக் கொண்டேன். சுட்டதா குளிர்ந்ததா என்றறியாமல் என் விரல் விதிர்த்தது. தந்தை புன்னகைத்து "என்ன?" என்றார். "சுடுகிறது" என்றேன். அவர் அதை ஒரு மரவுரி நூலில் கோர்த்து என் கழுத்தில் அணிவித்து "இந்த விழி உன் நெஞ்சில் எப்போதும் திறந்திருக்கட்டும். யாமறியாத ஒன்று எப்போதும் உன் நோக்காகட்டும்" என்றார். "அவ்வாறே ஆகுக!" என வாழ்த்தினர் என் குடியினர்.

அதை அணிந்ததுமே மலைச்சுனை மதியக்கதிர் பட்டதுபோல என் உடல் குளிரொளி கொள்வதை உணர்ந்தேன். திரும்பி தோழியரை நோக்கி "எப்படி இருக்கிறேன்?" என்றேன். "கதிரெழுந்த முகில் போல" என்றாள் ஒருத்தி. "உன் இதயம் ஒரு நீல விழியானது போல" என்றாள் இன்னொருத்தி. "நீல மலர் மேல் பனித்துளி போல" என்றாள் பிறிதொருத்தி. என் குடிப் பெண்டிரெல்லாம் என்னைச் சூழ்ந்து அதை நோக்கினர். "என்ன நிறமடி இது? நீலமா பச்சையா நிறமின்மையா?" என்றாள் என் மூதன்னை. "இருள் ஒளியாகும் முதல்கணத்தின் ஒரு நிறம்" என்று இளையவளொருத்தி மறுமொழி சொன்னாள்.

அதன் பின் எப்போதும் என்னிடமிருந்தது அந்த மணி. பகலெல்லாம் அதை நெஞ்சில் சூடி மலைச்சாரலில் அமர்ந்திருந்தேன். மண்ணிலிருக்கையில் என் நெஞ்சிலிருந்தது மணிநிற வானம். அதைச் சூடி சுனை நீரில் குனிந்து என்னை நோக்கியபோது உள்ளிருந்து என் குலதெய்வமொன்று என்னை நோக்கியதை கண்டேன். இரவில் என் அருகே அதை வைத்து படுத்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் விழி அல்கி துயில் கொள்கையில் அது விழித்து குகையை ஒளிரச் செய்வதை கண்டேன். பெரும் சிலந்தியென அது தன் ஒளியால் பின்னி பின்னி முடிவிலா வலையொன்றை அமைக்க நான் சிறு பூச்சியென அதில் சிறகுசிக்கி துடித்தேன். என்னை அணுகி தன் நச்சுக் கொடுக்கால் என்னைத் தொட்டு உடல் துடிக்க உயிர் பதைக்க தன்னுள் என்னை சேர்த்துக் கொண்டது.

புலரியில் கதிர் வானில் எழுவதற்கு முன் என் கையில் அது எழுந்தது. என் காலை நீலக் கதிரவன் தொட்டு எழுப்பியது. இருள் விலகா பொழுதில் காடுகளை அவ்வொளி தொட்டெழுப்புவதை கண்டேன். மலைச் சுனைகள் அதைக் கண்டு நீலப் புன்னகை எழுப்புவதை கண்டேன். இளையவனே! ஒவ்வொரு நாளும் அதன் ஒளியில் வாழ்ந்தேன். என் ஒவ்வொரு சொல்லும் அவ்வொளியை சூடியிருந்தது. என் விழிகளில் அதன் ஒளி இருந்தது என்றனர் என் தோழியர். துள்ளும் இளமங்கையென இருந்தவள் அந்த மணி பெற்றபின் சொல்லவிந்து ஆழம் கொண்டேன் என்றனர் தோழியர். என் கால்கள் இறகுபோல் எடையற்று மென்மை கொண்டன. என் உடலில் குழைவுகள் கூடின. என் குரலில் வெண்கல மணி நாதம் இழைந்தது என்றனர் பாடகர். என் புன்னகையில் என் மூதன்னையர் கண்டு மறந்த கனவுகள் படிந்தன என்றனர் குலப்பூசகர்.

மணி பெற்றவள் கன்னி என்றானாள் என்றே என் மூதன்னை சொன்னாள். நான் மின்மினி போல அம்மணியின் ஒளியைச் சூடி எங்கள் காடெங்கும் அலைந்தேன். அந்த மணி வழிகாட்ட இருண்ட காட்டுக்குள் சென்று பாறை ஒன்றில் வழிந்த சிற்றருவிக்கரையில் அமர்ந்திருந்தபோது கீழே காட்டுக்குள் ஜாம்பவர்களின் குரல் ஒலிப்பதை கேட்டேன். அயலவன் ஒருவன் புகுந்திருக்கிறான் என அவ்வொலி சொல்லவும் எழுந்து நின்றேன்.

என்னை நோக்கி ஓடி வந்த என் தோழி ஒருத்தி உரக்கச்சிரித்தபடி இன்று அயலவன் ஒருவனை கொல்லவிருக்கிறார்கள் என்றாள். ஒரு கணம் அவனுக்காக இரக்கம் கொண்டேன். ஜாம்பவர்களின் எல்லைக்குள் மானுடர் நுழைவதில்லை என்றாலும் எப்போதோ ஒரு முறை எவரோ ஒருவர் அருந்துணிவு கொள்வது நிகழ்ந்து கொண்டிருந்தது. "எவன் அவன்?" என்றேன். "யாரோ யாதவ இளையோன் என்று அச்செய்தி சொல்கிறது. கன்றுபோல் அச்சமறியாதவன் என்று எண்ணுகிறேன். இல்லையேல் அவன் கால்தளராதா என்ன?" என்றாள். "அளியன்" என்றேன். "அறிவிலி. அவன் குலத்திற்கு முன் ஒரு வெற்றியைக் காட்டும் பொருட்டு வந்திருப்பான். ஜாம்பவர்களின் ஆற்றலை அறிந்திருக்க மாட்டான்" என்றாள் தோழி.

மலை இறங்கி கீழே வருகையிலேயே முழவுகளும் கரடிக்குரல்களும் அளிக்கும் செய்திகள் மாறுபடுவதை அறிந்தேன். அவன் என் குலத்து வீரன் இருவரை வெறும் கைகளால் வென்றுவிட்டான் என்றும், என் தந்தையை தனிச் சமருக்கு அழைக்கிறான் என்றும் செய்திகள் சொல்லின. மலை அடிவாரத்திற்கு வருவதற்குள் என்னை நோக்கி ஓடிவந்த இளம் தோழியர் இருவர் கை தூக்கி "இளையோன். கரிய சிற்றுடல் கொண்டோன். சிறுத்தை போல் இருக்கிறான். மன்று நின்று மூத்த ஜாம்பவரை போருக்கு அறைகூவுகிறான்" என்றார்கள். ”தந்தையையா?” என்று நான் திகைத்து கேட்டேன். "ஒரு மானுடனா?"

"ஆம், அவன் உடலைக் கண்டால் ஒரு கணம்கூட அவர் முன்னால் நிற்க மாட்டான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவன் விழிகளில் சற்றும் அச்சமில்லை, இளையோளே! அவை விழிகளே அல்ல, நீலமணிகள்" என்றாள் என் தோழி ஒருத்தி. அச்சொல்லிலேயே அகம் அதிர்ந்தேன். இன்னொருத்தி "மண்ணில் விழுந்த முகில் துண்டு போலிருக்கிறான்" என்றதும் நிற்கவியலாதவளானேன். "செலுத்தப்பட்ட அம்பு போல் வருகிறான் தோழி. அவன் இலக்கு இங்கிருப்பதைப்போல..." என்று பின்னால் ஓடிவந்த பிறிதொரு தோழி சொன்னாள்.

அக்கணம் என்நெஞ்சில் பதிந்த மான் குளம்படியை என்ன சொல்வேன்! நெஞ்சில் கை வைத்தபடி கைகள் குளிர்ந்து நடுங்க மலைப்பாறைகளில் இறங்கி ஊர் மன்றுக்கு வந்தபோது அங்கே அவன் இளையோர் சூழ என் குடி மூத்தோர் அணுகி நின்றிருக்க அமர்ந்திருப்பதை கண்டேன். வலக்கையில் எங்கள் குடி அளித்த இன்கடுநீரை வைத்து பருகியபடி அவர்கள் சொல் கேட்டு அமர்ந்திருந்தவன் அக்கணம் அங்கே பூத்தவன் என தோன்றினான். ஐம்படைத்தாலி இன்னமும் அவன் இடையில் இருக்குமென்றும் அவன் இதழ்களில் முலைப்பாலின் மணம் எஞ்சியிருக்குமென்றும் தோன்றியது. இவனா என்று ஒரு கணமும் இவனே என்று மறுகணமும் என் சித்தமறிந்தது.

முதல் முறையாக நாணி என் தோழிக்குப்பின் என்னை மறைத்துக்கொண்டு அவள் தோள்வளைவில் முகம் வைத்து அவனை நோக்கி நின்றேன். அவன் குழல் சூடிய அந்தப் பீலி விழியை பல்லாயிரம் முறை கண்டிருக்கிறேன் என்றுணர்ந்தேன். அவன் கால்கள் மிதித்து நடந்த தடத்தை தொட்டுத் தொட்டு அடிவான் வரை நான் சென்றிருக்கிறேன் என்றும் உணர்ந்தேன். அவனையன்றி பிறிது எதையும் நோக்காது விழிகள்மட்டுமென ஆகி அங்கு நின்றேன். அவன் வெல்ல வேண்டுமென்று எண்ணிய மறு கணமே அவன் வெல்வான் என்பதையும் அறிந்தேன். இளையோனே, அவன் என் தந்தையை வெல்லும் அக்கணத்தை அப்போதே என் அக விழியால் கண்டுவிட்டேன். மண்ணில் எவராலும் வெல்லப்பட முடியாதவன் அவன் என்பதை அவனைக் கண்ட கணத்தே நான் அறிந்தேன்.

குகையிலிருந்து என் தந்தை இரு கைகளையும் ஓங்கி அறைந்து மலைப்பாறை நிலையழிந்து உருளுவதென ஓசையிட்டு வெளியே வந்தார். "என்னை வெல்ல வந்த மானுடன் எவன்?" என்று உரக்க கேட்டார். அவன் எழுந்து தலைவணங்கி "ஜாம்பவரே, தங்களுடன் தோள் கோக்க வந்த இளைய யாதவன் நான். என் பெயர் நந்த கிருஷ்ணன். விருஷ்ணி குலத்தவன். வசுதேவரின் மைந்தன், நந்தகோபரின் வளர்ப்பு மகன்" என்றான். "யாதவர் எம் எல்லைக்குள் நுழையலாகாதென்று அறியமாட்டாயா?" என்றார் எந்தை. "ஆம், ஆனால் அறைகூவுபவன் நுழையமுடியாத இடம் என ஏதுமில்லை" என்றான்.

அவர்கள் பேசிக்கொண்ட சொற்கள் எதையும் என் உள்ளம் பெறவில்லை. மண் மிதித்து நின்ற அவன் இளங்கால்களை, இடையை, தளிர்நரம்போடிய நீண்ட கைகளை, நிலாநிழல் பரவிய குளிரொளிமார்பை, வான்நிறைந்த மலர் போன்ற முகத்தை, குழலணிந்த பீலியிலெழுந்த கனவை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். இளையோனே, அங்கு நிகழ்ந்தது மற்போரல்ல ஒரு நடனம். விழி இழந்த அன்னை தன் மைந்தரை கை தடவி அறிவது போல எந்தை அவனை அறிந்து கொண்டிருந்தார் என்று தோன்றியது. நெய்எழும் விறகை தழுவியுண்ணும் நீலத் தழல்போலிருந்தான் அவன்.

எங்கோ விண்ணவர் அமைத்த தருணமொன்றில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். ஆரத்தழுவி அமைந்தனர். அவன் கைபற்றி எழுந்த எந்தை விழிநிறைந்த பேருவகையுடன் சொல்லாடி முடித்து என்னை நோக்கியதும் நான் எங்கிருந்தோ மீண்டு உடல் அதிர்ந்தேன். என்னை அருகணையும்படி அவர் சொன்னபோது ஏனென்பதை நான் அறிந்திருக்கவில்லை. எந்தையின் மூன்றாவது அழைப்பைக் கேட்டு என் தோழியர் என்னை உலுக்கி "செல்லடி! உன்னைத்தான்" என்றனர். "நீ அவனுக்கு மணக்கொடையாகிறாயடி கன்னி" என்றாள் என் செவிலி.

அக்கணம் என்னைச் சூழ்ந்திருந்த பாறைகளெல்லாம் நீர்க்குமிழிகள் என்றாவதை, நான் நின்ற தரை நீர்ப்படலம் என்றாவதை, மேலிருந்த வானம் எடை கொண்டு மிக அணுகி தலை மேல் நிற்பதை அறிந்தேன். பொருளில்லாமல் தலை அசைத்தேன். "செல்லடி! நீ முழுமைகொண்டாய்" என்றாள் செவிலியன்னை. இல்லையென்று மீண்டும் தலையசைத்தேன். "அடி சிறுக்கி, இனி நீ யாதவ அரசி. மண்மயக்கும் இந்த மாயோன் மார்பிலணியும் மணி. அவன் நாடி வந்த அந்த நீல மணி உன்னிடம் இருக்கிறதல்லவா?" என்றாள்.

என் நெஞ்சிலணிந்திருந்த அந்த மணியை அழுத்திக் கொண்டேன். அதன் தண்மை எந்நெஞ்சை சுடுவதைப் போலுணர்ந்தேன். இரு கைகளாலும் அதை பொத்திப் பற்றிக்கொண்டு தலைகவிழ்ந்து கண்ணீர் உகுத்தேன். உயிருள்ளதைப் போல அது என் கையில் விதிர்ப்பதை அறிந்தேன். நீலத்தசையாலான ஓர் இதயம் போல, கை விரித்தால் சிறகடித்துப் பறந்தெழும் நீலமணிக் குருவி என. "செல்லடி" என மீண்டும் இருவர் என்னை உந்தினர். இரு கைகளிலும் அந்த மணியை ஏந்தியபடி எடை எழுந்த கால்களுடன் அடிமேல் அடியென அசைந்து முன்னகர்ந்து அவன் முன் சென்று நின்றேன்.

எந்தை என்னிடம் "இளையவளே, அந்த மணியை உன் மகட்செல்வமாகக் கொண்டு மூன்றடி முன்னெடுத்து இவன் கை பற்று" என்றார். நான் எந்தையின் அருகில் சென்று தலை குனிந்து நின்றேன். அவன் கால்களைத்தான் நோக்கினேன். பத்து நீலக்குருவிக்குஞ்சுகளின் பொன்னிற அலகுகளைக் கண்டேன். "இறைவனே, என் குல விளக்கு இவள். நீ தேடும் சியமந்தகமணியுடன் இவளை கொள்க!" என்று சொல்லி என் வலக்கை பற்றி அவன் வலக்கையில் வைத்தார் எந்தை. அவன் என் கை பற்றிய அத்தருணம் நான் நன்கறிந்ததாக இருந்தது. பலநூறு முறை நான் பற்றிய அந்தக்கை பலநூறு முறை நான் உணர்ந்த அந்த இளவெம்மை. இளையோனே, அதன் பின் அறிந்தேன், அவன் பற்றிய அனைத்துக் கரங்களும் என்னுடையதே என.

"சியமந்தகம் என அந்த மணி அழைக்கப்படுகிறது என்கிறார். அதை அவருக்கு நீயே அளி" என்றார் எந்தை. நான் என் நெஞ்சில் கைவைத்து அதை எடுத்தபோது அந்த மணி ஒளியவிந்து வெறும் கூழாங்கல்லெனத் தெரிவதை கண்டேன். திகைத்து அதுதானா என நோக்கினேன். பிற அனைவரும் அதையும் அவனையும் நோக்கி விழிதிகைத்திருந்தனர். அது எனக்கு மட்டுமே ஒளியற்றிருக்கிறதென உணர்ந்தேன். இளையோனே, அது பிறகெப்போதும் என் விழிக்கு ஒளி கொள்ளவில்லை.

அன்றிரவு எங்கள் குல உண்டாட்டுக்குப்பின் சியமந்தக மணியுடன் அவன் கிளம்பினான். வரும் வளர்பிறை மூன்றாம் நாள் எங்கள் கடிமணம் என்று என் தந்தை சொல்ல குல மூத்தார் உடன்பட்டனர். அன்று காலை எனக்குரிய மணமாலையுடன் மீள்வதாக அவன் சொன்னான். ஒரு சொல்லும் நான் அவனுடன் உரையாடவில்லை. குல மூத்தார் கூடிய பொதுச்சபையில் அவர்களின் சொல்லும் வாழ்த்தும் மலரும் கொண்டு அவன் எழுந்தான். அந்த மணியை ஆடையில் சுற்றி தன் இடையில் அவன் வைப்பதை கண்டேன். காட்டினூடாக அவன் சென்று மறைந்த போது ஒரு கணம் நெஞ்சைப் பற்றி நின்று விலகிச் செல்லும் அவன் காலடிகளை கண்டேன். பல்லாயிரம் கணம் அது என்னை விட்டு விலகிச் சென்றிருப்பதையும் அறிந்தேன். தோழியர் நடுவிலிருந்து அறியாது விலகி பாறைகளைக் கடந்து புதர்களினூடாக ஓடி அவன் சென்ற பாதை மறித்து அவன் முன் சென்று நின்றேன்.

மூச்சிரைக்க நான் கொண்டு வந்த சொல் எங்கோ உதிர்ந்து கிடக்க அவனை நோக்கி வெற்று முகத்துடன் நின்றேன். என்னை அணுகி புன்னகைத்து "சொல்க!" என்று சொன்னான். யாதொன்றும் சொல்வதற்கின்றி நான் நிற்க என் தோளில் கை வைத்து என்னை நோக்கி "இந்த மணி உன் விழியென என்னுடன் எப்போதும் இருக்கும்" என்றான். "இளையோனே, அது என் தனிமை" என்றேன். புன்னகைத்து "ஆம். அறிவேன்" என்றான். "இதை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன். "மகட் கொடையாகப் பெற்றதை கன்யாசுல்கமாக அளித்து இன்னொரு பெண்ணை மணக்கப் போகிறேன்" என்றான். ஒரு கணம் அவன் சொன்னது எனக்கு புரியவில்லை. "இம்மணிக்காகக் காத்து யாதவ இளவரசி அங்கு அமர்ந்திருக்கிறாள். இதை கொண்டுசென்று அவள் தவம் முடித்து அவளை வேட்பேன்" என்றான்.

அவன் சொன்னது புரிந்ததும் திகைத்து "என்ன சொல்கிறாய்?" என்றேன். "இனியவளே, நீ அளித்த மணி அவளைப் பெறுவதற்கு எனும்போது துலாதட்டில் இருவரும் நிகராகிறீர்கள் அல்லவா?" என்றான். "எப்படி?" என வியந்து வினவிய மறுகணமே அவன் ஆடும் விளையாட்டை உணர்ந்து பீரிட்டு சிரிக்கத் தொடங்கினேன். அவனும் சிரித்து என் கைகளை பற்றிக்கொண்டான். விழிநீர் கனியும் வரை சிரித்து "இப்படியொரு தருக்கத்தை இதுவரை கேட்டதில்லை" என்றேன். "ஏன்? இதை விட சிறந்த தருக்கம் பிறிதொன்றுண்டா?" என்றான். "இல்லை. இனி நீயே உருவாக்கினால்தான் உண்டு" என்றேன்.

"அன்று சிரிக்கத் தொடங்கினேன். இன்றுவரை ஒவ்வொன்றும் சிரிப்புக்குரியதாகவே உள்ளது" என்றாள் ஜாம்பவதி. "என்னுடன் அவர் இருக்கையில் அனைத்தும் வேடிக்கைதான். இந்நகர், இதையாளும் யாதவ அரசி, அவளுடைய அகம்படியினர், படைகள், கொடிகள், குலங்கள், குடிகள் அனைத்துமே எங்களுக்கு நகைக்களியாட்டாக அப்போது மாறும்."

திருஷ்டத்யும்னன் சிரித்தபடி "ஆம், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்றான். "இப்போது சியமந்தக மணிக்காக நிகழும் பூசலை அறிந்து எண்ணி எண்ணி நகைத்தேன். அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். எளிய மணி அது. மிகச்சிறிய ஒரு கல் மட்டுமே. அதன் பொருட்டு ஒருவன் படை கொண்டு வருகிறான் என்றால் அதைவிட பெரிய நகையாட்டு என ஏதுளது?" என்றாள் ஜாம்பவதி. "ஆம்" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அவள் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி "அந்த மணியை நேரில் பார்க்கநேர்ந்தால் என்ன செய்வீர்கள்?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஏன்?" என்று விளங்காமல் கேட்க "அதை கையில் எடுத்துப்பார்க்க விழைவீர்களா?" என்றாள்.

திருஷ்டத்யும்னன் சிலகணங்கள் அவளை வெற்று விழிகளுடன் நோக்கியபின் "ஆம், விழைவேன்" என்றான். அவள் புன்னகைத்து "அந்த வினா முதன்மையானது என்று இளைய யாதவர் சொன்னார். அதனால் கேட்டேன்" என்றாள். "எதனால்?" என்றான் திருஷ்டத்யும்னன். "தெரியவில்லை. அவர் சொன்னார், அதனால் நான் கேட்டேன்" என்றாள் அவள்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி- 1

சாத்யகிதான் விடியற்காலையில் வந்து அச்செய்தியை சொன்னான். திருஷ்டத்யும்னன் இரவில் அருந்திய மதுவின் மயக்கில் மஞ்சத்தில் கைகள் பரப்பி, ஒரு கால் சரிந்து கீழே தொங்க குப்புறப்படுத்து துயின்று கொண்டிருந்தான். விடிகாலையில் ஒருமுறை நீர் அருந்த எழுந்தபோது தலை எடை மிக்கதாக தோன்றவே தலையணையை எடுத்து தலைக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டிருந்தமையால் காவலன் அவன் கேட்கும்பொருட்டு சிலமுறை அவ்வழியாக காலடியோசை கேட்க நடந்ததை அவன் அறியவில்லை. அதன் பின் காவலனைக் கடந்து உள்ளே வந்த சாத்யகியின் குரல் கேட்க அதை கனவில் என அறிந்து துயிலிலேயே மெல்லப்புரண்டு "உள்ளே வருக!" என்றான். "இளவரசே, பொறுத்தருள்க!" என்றபடி வந்த சாத்யகி அறைக்குள் தாழ்ந்து எழுந்த அகல் சுடரை கையால் தூண்டிவிட்டு அவன் தோளைத் தொட்டு உலுக்கி "பாஞ்சாலரே, எழுந்திருங்கள்" என்றான்.

மூன்றாவது உலுக்கில் திருஷ்டத்யும்னன் புரண்டு தலை தூக்கி சிவந்த விழிகளால் சாத்யகியை நோக்கி "என்ன?" என்றான். "எழுந்திருங்கள்" என்று மீண்டும் சாத்யகி சொன்னான். தலைக்குள் எங்கோ அக்குரல் சென்று உலுக்க திருஷ்டத்யும்னன் பாய்ந்து எழுந்து அமர்ந்து "என்ன நடந்தது?" என்றான். "இங்கு முற்புலரியில் செய்தி வந்துள்ளது. சியமந்தக மணி திருடப்பட்டுவிட்டது" என்றான். "திருடப்பட்டு விட்டதா அல்லது...?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம். திருடப்பட்டுவிட்டது. படை கொண்டு வென்று கவரப்படவில்லை" என்றான் சாத்யகி.

சில கணங்கள் அவனை நோக்கி இருந்தபின்னர் தணிந்த குரலில் "அவன்தானா?" என்றான் திருஷ்டத்யும்னன். "அவனேதான். நடுப்பகலில் அனைவரும் காண வந்து கவர்ந்துசென்றிருக்கிறான்." திருஷ்டத்யும்னன் பாய்ந்து எழுந்து தன் குறடுகளை அணிந்து ஆடையை சுழற்றி இறுக்கிவிட்டு "ஆகவே அவன் போருக்கு அழைக்கிறான்" என்றான். சாத்யகி "நாம் உடனே அரசியைப் பார்க்கச் செல்ல வேண்டும். அரண்மனையிலிருந்து சற்று முன் செய்தியுடன் அமைச்சன் வந்தான். உம்மை அழைத்துச் செல்ல வேண்டுமென வந்தேன்" என்றான். திருஷ்டத்யும்னன் அந்த உச்சநிலையில் தன்னுள் எண்ணங்கள் தனித்தனி ஒழுக்குகளாக சிதறிச் செல்வதை உணர்ந்தான். ஒரு பக்கம் சியமந்தக மணி கவரப்பட்டதை ஒட்டிய எண்ணத்தொடர். சிந்தனைகள். மறுபக்கம் சத்யபாமாவை சந்திக்கப் போகும் அரண்மனைப்பாதையைப் பற்றிய நுண்ணிய விழிச்சித்திரங்கள். அவற்றுக்கு அடியில் எங்கோ அவன் விழிக்கும் கணத்திற்கு முன் கண்டுகொண்டிருந்த கனவின் எச்சங்களும் ஓடிக்கொண்டிருந்தன.

சாத்யகி சொன்னான் "நேற்று முன்மதியம் எட்டு படகுகள் ஹரிணபதத்தின் படித்துறையை அடைந்துள்ளன. வணிகர்கள் என வேடமிட்டு வந்திருக்கிறார்கள். படியில் ஏறும்போதே அவர்களில் சததன்வா இருப்பதை சத்ராஜித்தின் வீரர்கள் கண்டு விட்டனர். இடரை உணர்ந்து அவர்கள் எச்சரிக்கை முரசை அறைவதற்குள் அவன் வீரர்கள் எதிர்பட்ட யாதவ வீரர்களை வெட்டி வீழ்த்தியபடி ஹரிணபதத்தின் அரசரில்லம் நோக்கி சென்றனர். இல்லத்தின் உள்ளிருந்து தன் காவல்வீரர் எழுவருடன் வாளேந்தி சத்ராஜித் முன்னால் வந்தார். வரும்போதே இளையவனே, நாம் அந்தகக் குலம். இது முறையல்ல. நாம் அனைத்தையும் மன்றமர்ந்து பேசுவோம் என்று கூவியிருக்கிறார். ஆனால் ஒரு சொல்லும் எடுக்காமல் அவரை வாளால் எதிர்கொண்டான் சததன்வா."

சத்ராஜித் நன்கு மதுவுண்டிருந்தமையால் கால் நாழிகை கூட அப்போர் நிகழவில்லை. சததன்வாவின் வாளால் அவரது வாளேந்திய கை அறுபட்டு நிலம்படிய அவர் "இளையோனே" என்று கூவியபடி பின்னால் சென்றார். அவரை நெஞ்சில் மிதித்துச் சரித்தான். தலைப்பாகை அவிழ்ந்து நீண்டு விழுந்த கூந்தலைப் பற்றி தலையை இழுத்துத் தூக்கி கழுத்தை வெட்டினான். குருதி கொட்டும் தலையை கையில் எடுத்து மேலே தூக்கி தன் வீரர்களுக்குக் காட்டி ஆர்ப்பரித்தான். அவர்கள் குருதிவாட்களைத் தூக்கி ஆட்டி அமலை கொள்ள தலையை சுழற்றி வீசினான். அரசரின் தலையைக் கண்டதுமே யாதவர் அஞ்சி ஓடத்தொடங்கினர். சற்றே துணிந்து அணுகிய சிலரை அவன் படை வீரர்கள் எதிர்கொள்ள அவன் மட்டும் குருதி படிந்த வாளுடன் அவர் இல்லத்திற்குள் நுழைந்தான்.

கதவுகளை உதைத்துத் திறந்து உள்ளே சென்று உள்ளிருந்த பெண்களை வெட்டி வீழ்த்தியபடி கருவூல அறையை அடைந்து அதன் கதவின் மேல் நெய்யூற்றி நெருப்பிட்டான். எரிந்து கனலான கதவை உதைத்து உள்ளே சென்று அங்கே எரிந்துகொண்டிருந்த பெருநிதிப் பெட்டிகளைத் திறந்து சியமந்தக மணி வைக்கப்பட்ட பொற்பேழையை எடுத்தான். எரிந்து அமைந்த அரசரில்லம் விட்டு அவன் வெளிவந்தபோது ஆயர்பாடியே எரிந்துகொண்டிருந்தது. வெட்டுண்ட ஆயர்கள் குருதியுடன் விழுந்து துடித்துக் கிடந்த பாதை வழியாக விரைந்தோடி படகுகளில் ஏறி அக்கணமே விரைந்து சென்றார்கள். அவர்களின் காலடிகளால் குருதி படித்துறை வரை இழுபட்டது. படித்துறையிலிருந்து யமுனையில் வழிந்து கலந்தது.

"உயிர் பிழைத்தவர்கள் ஏழு மூதாயர்கள் மட்டுமே. பிற அனைவரும் கன்று மேய்க்கவும் நெய் கொண்டு செல்லவும் மன்று சூழவும் சென்றிருந்த மதிய நேரம். ஆயர்பாடியில் எப்போது ஆண்மகன்கள் குறைவாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறான். முதியவர்கள் அவர்களின் வாளுக்கு பயந்து அஞ்சி ஒளிந்திருந்ததனால் உயிர் தப்பினர். ஆயர்பாடியில் தீப்புண்பட்ட பசுக்கள் அலறியபடி சுற்றிவருகின்றன" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குள் அச்சொற்கள் வழியாக அங்கு நிகழ்ந்த அனைத்தையும் கண்முன் காணத் தொடங்கினான். சொற்களின் இறுதியில் குருதி நிணம் வழிந்த கால்களுடன் படகுகளில் பாய்ந்தேறி பாய் விரித்து யமுனையில் வளைந்து கடந்து செல்லும் சததன்வாவின் படகுகளைக் கண்டபடி அவன் நின்றிருந்தான்.

பின்னர் திரும்பி "செய்தியை அனுப்பியது யார்?" என்றான். "அவர்கள் கொன்று மணிகொண்டு சென்ற செய்தியை முழவொலி வழியாக மூதாயர் அறிவிக்க அருகிலிருந்த அனைத்து ஊர்களிலிருந்துமே அந்தகர்கள் அங்கு குழுமி விட்டனர். சத்ராஜித்தின் உடல் அரண்மனை முற்றத்தில் தலையற்றுக் கிடந்தது. அவரது தலை அப்பால் நீலக்கடம்பு மரத்தினடியில் புழுதியில் நிணம் வழிய உருண்டிருந்தது. அவர்கள் அணுகும்போது ஆயர் இல்லம் முற்றிலும் எரிந்து சாம்பல்குவையாகி விட்டிருந்தது. உடன் வந்த அந்தகக்குலத்து அமைச்சன் செய்தியை விரிவாகப் பொறித்து பறவை காலில் கட்டி நமக்கு அனுப்பினான். இரவெலாம் பறந்து செங்கழுகு இன்று வந்து சேர்ந்தது" என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் அவன் மேல் நாட்டிய விழி விலக்காமல் கைநீட்டி தன் உடைவாளை எடுத்து இடையில் பொருத்திக்கொண்டான். "செய்தி அறிந்த அரசி அனலுருவாக இருக்கிறார்" என்றான் சாத்யகி. "முகம் கழுவிக்கொண்டு வாரும். செல்லும்போதே நம் சொற்களை வகுத்துக்கொள்வோம்" என்றான். திருஷ்டத்யும்னன் திரும்ப அறைவாயிலில் நின்றிருந்த அணுக்கன் "நறுநீரும் நல்லாடையும் சித்தமாக இருக்கிறது இளவரசே" என்றான். திருஷ்டத்யும்னன் அவனுடன் சென்று தாழியில் நிறைந்த தாழை மணம் கொண்டநீரில் முகத்தைக் கழுவி துடைத்து ஆடைமாற்றி வந்து "கிளம்புவோம்" என்றான்.

அவர்கள் படிகளில் குறடுகள் ஒலிக்க நடந்து அரண்மனை முற்றத்தை அடைந்து புரவிகளில் ஏறிக்கொண்டனர். அவர்களின் நிழல் பேருருவாக எழுந்து சுவர்களை மடிந்துக் கடந்தது. சாத்யகி தனக்குள் என "எங்ஙனம் இதற்குத் துணிந்தான் என்று எத்தனை எண்ணியும் என்னால் உணர முடியவில்லை" என்றான். திருஷ்டத்யும்னன் "அது கோழையின் செயல். அவர்கள் எப்போதும் ஒரு அடி கூடுதலாகவே அடிப்பார்கள்" என்றான். சாத்யகி புரியாதவன் போல் திரும்பி நோக்கி ஏதோ சொல்லவந்து சொல்லாமல் மீண்டும் புரவியைத் தட்டினான். "தன் தாக்குதல் அந்தகர்களை அச்சுறுத்த வேண்டும் என்றும் விருஷ்ணிகள் தொடர்ந்து தன்னைத் தாக்காது தயங்கவேண்டும் என்றும் சததன்வா எண்ணுகிறான். செயலின் விளைவை அஞ்சும் எளியோன் செயல் அது" என்றான் திருஷ்டத்யும்னன். "ஷத்ரியனின் எண்ணம் அதுவாக இருக்காது."

"சியமந்தக மணி அந்தக குலத்தின் குலதெய்வம். நம் அரசியின் குலக்குறி அது. எப்படி அதை யாதவர்குலம் விட்டுவிடும் என்று அவன் எண்ணுகிறான்? துவாரகையின் பெரும்படை தன்னைச் சூழ்ந்தால் எப்படி காத்துக்கொள்வான்? மூடன், முழுமூடன்!" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "மூடனல்ல. அவனுக்குப்பின்னால் காசியும் மகதமும் உள்ளன. இந்த மணிகவர்தல் ஒரு தூண்டில் எனவும் இருக்கலாம். நம்மை அவன் எல்லைக்குள் இழுக்கிறானா?" என்றான். சாத்யகி திரும்பி நோக்கி அறியாது கடிவாளத்தை இறுக்கி குதிரையை நிறுத்தினான். பின்னர் "ஆம், அவ்வண்ணமும் ஆகலாம்" என்றான்.

"சென்ற பல்லாண்டுகளாக மகதம் துவாரகையை போருக்கு சீண்டிக்கொண்டிருக்கிறது. ஒரு போர் நிகழ்ந்தால் வென்றாலும் தோற்றாலும் மகதத்திற்கு இழப்பதற்கு ஏதுமில்லை. தன் எல்லைகள் முழுக்க ஜராசந்தர் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு செங்கல்லையும் எண்ணி எண்ணி எடுத்து வைக்கும் துவாரகை இன்று போர் புரிய முடியாது. களஞ்சியத்திலிருந்து செல்லும் ஒவ்வொரு பொன்னும் இன்னொரு பொன்னுடன் திரும்பி வரவேண்டும் என்று எண்ணுபவர் யாதவர். போர் என்பது பொன்னை அள்ளி புழுதியில் வீசுவதற்கு நிகர் என்று அவர் சொல்வதுண்டு. ஆகவே இத்தனை நாளாக ஒவ்வொரு அவமதிப்பையும் துவாரகை பொறுமை காத்துள்ளது. ஒவ்வொரு போர் முனையிலும் பாராமுகத்தை காட்டியுள்ளது" என்றான் சாத்யகி.

"இம்முறை அதை செய்ய முடியாது" என்று திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். "சியமந்தகமணியை கொண்டு சென்றவனை விட்டுவிட்டால் யாதவகுலங்கள் துவாரகை மேல் நம்பிக்கை இழப்பார்கள். ஒரு படை கொண்டு சென்று சததன்வாவை வெல்லாமல் இருந்தால் இளைய யாதவர் ஒருபோதும் யாதவ பெருங்குடிகளை தன்னுடன் நிறுத்த முடியாது. சததன்வா தான் அந்த மணி கவர்ந்ததைக் காட்டியே தன்னை ஒரு யாதவர்தலைவனென நிறுத்தி சில யாதவ குடிகளை சேர்த்துக்கொள்ளவும் முடியும். ஆகவே இது நன்கு எண்ணித் துணிந்த செயலே" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி "ஆம்" என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

புரவிகள் இருண்டு குளிர்ந்துகிடந்த துவாரகையின் தெருக்களில் குளம்போசை எழுந்து சுவர்களில் எதிரொலிக்க விரைந்து சென்றன. விடியற்காலையில் கடற்காற்றில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. கீழே ஒளிவெள்ளமென நிறைந்திருந்த துறைமுகப்பில் பீதர்களின் பெரும்கலம் ஒன்று கொம்பு ஊதியபடி பாய் விரிப்பதை காண முடிந்தது. பாய் நுனியில் கட்டப்பட்ட மீன் எண்ணெய் விளக்கு மண்ணிலிருந்து ஒரு செந்நிறக்குருவி போல மேலெழுந்தது. மீண்டும் ஒரு கொம்போசையுடன் இன்னொரு விளக்கு மேலெழுவதை காண முடிந்தது. கால்பட்டு கலைந்த மின்மினிகள் மட்கிய தடியிலிருந்து எழுவதுபோல பாய்மர விளக்குகள் எழுந்தன. சுருள் வழிகளில் அவர்களின் புரவிகள் செல்லச் செல்ல கீழே நின்ற பீதர் கலத்தின் மேல் விண்மீன் கூட்டம் ஒன்று மொய்த்து நின்றதை திருஷ்டத்யும்னன் கண்டான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் "இத்தனை பெருவணிகம் நிகழும் ஒரு நாடு இன்றுவரை போரை எதிர்கொள்ளவில்லை என்பது வியப்புக்குரியதே" என்றான். சாத்யகி "இங்கு போர் நிகழாதிருப்பதற்கு சில பின்புலங்கள் இருக்கின்றன இளவரசே" என்றான். "ஷத்ரிய நாடுகளில் முதன்மையான அஸ்தினபுரியிடம் இளைய யாதவர் கொண்ட உறவு முதன்மையானது. அவர்களின் மண உறவு கொண்ட குடியான பாஞ்சாலத்துடன் கூடிய உறவும் எங்கள் வல்லமைகளுள் ஒன்று. அத்துடன் இளைய யாதவர் கொண்ட எட்டு மண உறவுகளும் எம்மை வலுப்படுத்துகின்றன. ஜாம்பவர்களும் களிந்தர்களும் உபமத்ரர்களும் இளையவரின் ஒரு சொல்லுக்கு எழுந்து படை கொண்டு வந்து எங்கள் களம் நிரப்பும் வல்லமை கொண்டவர்கள். அதை மகதமும் அறியும்."

"எங்களை அஞ்சி ஜராசந்தர் நிஷாதர்களிடமும் மச்சர்களிடமும் மணம் புரிந்து தன் படைபெருக்கும் செயலில் இருக்கிறார். துவாரகைக்கு நிகரான பொருளும் படையும் இன்று மகதத்திடம் இல்லை என்பதே உண்மை" என்றான் சாத்யகி. "ஆனால் மகதம் தொன்மையான ஐம்பத்தி ஆறு ஷத்ரிய குலங்களில் ஒன்று. ஷத்ரியர்கள் புவியில் ஒரு பேரரசு எழுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். துவாரகைக்கு எதிராக நிற்பது பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் ஐம்பது என்பதை மறக்கவேண்டாம்" என்றான் திருஷ்டத்யும்னன். "அதை அறிவோம். ஆகவே ஒவ்வொரு அடியிலும் சித்தம் கூர்ந்து இருக்கிறோம். எங்கள் களக்கொடியென எழுந்து நின்றிருப்பது எங்கள் இளைய யாதவரின் அருள்" என்றான் சாத்யகி.

அரண்மனை முற்றத்தில் அவர்களைக் காத்து அரண்மனையின் துணையமைச்சர் பத்ரர் நின்றிருந்தார். சாத்யகி இறங்கியபடியே "அக்ரூரரும் கிருதவர்மனும் வந்து விட்டனரா பத்ரரே?" என்றான். "அவர்கள் அரசியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார் அவர். திருஷ்டத்யும்னன் தன்னை அணுகி வந்த சேவகனிடம் குதிரையின் சேணத்தை அளித்துவிட்டு "செல்வோம்" என்றான். இருவரும் பந்த வெளிச்சம் விழுந்துகிடந்த பெரிய முற்றத்தில் குறடுகள் இணைச்சரடு என ஒலித்துத் தொடர சீராக நடந்து படிகளில் ஏறி பெரும் தூண்களைக் கடந்து இடைநாழி வழியாக சென்றனர். ஒவ்வொரு அறையிலும் அமைச்சுப்பணியாளர் விளக்கொளியில் பணியாற்றிக்கொண்டிருந்ததை திருஷ்டத்யும்னன் கண்டான். எங்கும் மெல்லிய பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. அவ்வரண்மனை முழுக்க ஹரிணபதத்தில் நடந்த செய்தி பரவிவிட்டதென்றும் ஒரு படை திரட்டலுக்கான பணி முன்னெடுப்புகள் நிகழ்கின்றன என்றும் அவன் உய்த்தறிந்து கொண்டான்.

ஒவ்வொரு அறைக்குள்ளிலிருந்தும் ஒருவர் கைகளில் ஓலையுடனோ பட்டுச்சுருளுடனோ வெளிவந்து இடைநாழிகளில் விரைந்து பிறிதொரு அறைக்குள் சென்று கொண்டிருந்தனர். எவரும் அவர்களை நோக்கவில்லை. சாத்யகி திரும்பி "படைப் புறப்பாட்டிற்கு அரசி முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது" என்றான். "ஆம். ஆனால் இத்தருணத்தில் ஒரு படை புறப்பாடு தேவையா என்று நான் ஐயம் கொள்கிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நின்று திரும்பி சினத்துடன் "இதுவரை நீங்கள் பேசி வந்ததே படை புறப்பாட்டிற்குத்தானே. நாம் சததன்வாவை வென்று சியமந்தக மணியை கொள்ளாவிட்டால் யாதவத்தலைமையே அழிந்து விடும் என்றல்லவா சொன்னீர்கள்?" என்றான்.

"ஆம், சியமந்தகமணியை கொள்வது இன்றியமையாதது. ஆனால் அதற்கென்று ஒரு படை புறப்பாடு உடனே நிகழமுடியுமா என்று எனக்கு விளங்கவில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவனை நோக்கி சொல்விளங்கா விழிகளுடன் நிற்க திருஷ்டத்யும்னன் "உடனே நான் ஏதும் சொல்ல விழையவில்லை. இங்கு இறுதிச் சொல்லென்பது யாதவ அரசிக்குரியது என அறிவேன்" என்றான். "ஆம், அவர் சொல்வதையே கேட்போம்" என்று சொல்லி சாத்யகி திரும்பி நடந்தான். திருஷ்டத்யும்னன் "என் உள்ளம் குழம்பியிருக்கிறது யாதவரே" என்றபடி தொடர்ந்தான்.

அரண்மனையின் பெருங்கூடத்தில் துவாரகையின் ஏழு படைத்தலைவர்களும் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். அனைவரது முகங்களும் ஒன்றுபோல் இருந்தன. படைத்தலைவர்கள் தங்கள் உள்ளங்களில் எப்போதும் போர்களை நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. நடிப்பு சலிக்கையில் அவர்கள் போருக்கு எதிரான எண்ணங்களை கொள்கிறார்கள். குடித்து, காமத்திலும் வேட்டையிலும் திளைத்து சோர்ந்து, கழிவிரக்கம் கொண்டு மீண்டும் போர் குறித்த எண்ணங்களை வந்தடைகின்றனர். போர் ஒன்றே அவர்களை உயிர் கொண்டவர்களாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்யும் பொருளற்ற படைப்பயிற்சியை பின்னிரவுகளில் சோம்பல் மிக்க பொழுதுகளை பொருள் கொண்டதாக்குவது போரே. அத்தருணம் வந்து விட்டதென்பதை அவர்கள் உணர்ந்துகொண்டது போல் இருந்தது.

கதவு மெல்லோசையுடன் குடுமியில் சுழன்று திரும்ப குறடுகள் ஒலிக்க அவர்கள் உள்ளே நுழைந்ததும் படைத்தலைவர்கள் எழுந்து தலை வணங்கினர். அக்கணமே அங்கிருந்து ஒரு போருக்குக் கிளம்புவது போலிருந்தனர். அமைச்சர் உள்ளே சென்று உடனே மீண்டுவந்து தலைவணங்கி "அரசி அழைக்கின்றார்" என்றார். அவரும் ஒரு நாடகத்தில் அழுத்தமாக நடிப்பது போலிருந்தது. அவருள்ளும் போர் தொடங்கிவிட்டது என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.

தயங்கும் காலடிகளுடன் அமைச்சரைத் தொடர்கையில் அவையில் தான் சொல்ல வேண்டியது என்ன என்பதை எண்ணி நோக்கினான். ஒரு சொல்லும் உள்ளத்தில் எழவில்லை. மாறாக கடைத்தெருவில் கண்ட சூதன் சொன்ன ஒரு வரி நினைவில் எழுந்தது. மாறா பெரும்காதல் ஒன்றை அறிந்தவன் அவன். மறுகணம் அன்று விழிக்கையில் கண்ட கனவில் அவன் அவ்விறலியின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்ட நினைவு எழுந்தது. தெளிவற்று ஒரு எண்ணமாக எழுந்தபோதே அவன் நெஞ்சம் கைபட்ட யாழ் நரம்பென அதிர்ந்தது. பின் எங்கிருக்கிறோம் என்று தெளிவடைந்தான். தளிர்பூத்த இளம்காட்டில் ஒளிரும் சிறு நீர்நிலை அருகே கவிழ்ந்த படகொன்றின் மேல் அமர்ந்து அவளை அருகமைத்து இடை வளைத்து தோள் சேர்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லென ஆகாத இனிய உணர்வு ஒன்றை.

சாத்யகி திரும்பி "வருக இளவரசே!" என்றபோது ஒரு கணத்தில் தான் சென்ற தொலைவை உணர்ந்து வியந்தபடி திருஷ்டத்யும்னன் உள்ளே நுழைந்தான். அரசுசூழ் அறையில் சாளரத்தருகே வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அவள் அமர்ந்திருக்க பின்னால் அவளது அணுக்கத்தோழி நின்றிருந்தாள். முன்னால் அக்ரூரரும் கிருதவர்மனும் அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்த சாத்யகியை நோக்கி சத்யபாமா கையசைத்து அமரும்படி சொன்னாள். முகமன் எதுவும் சொல்லாமல் அவன் பீடத்தில் அமர்ந்துகொள்ள திருஷ்டத்யும்னன் "யாதவ அரசியை வணங்கும் பேறு பெற்றேன்" என்று சொல்லி தன்பீடத்தில் அமர்ந்தான். சத்யபாமா "நிகழ்ந்ததை அறிந்திருப்பீர் பாஞ்சாலரே. எந்தை கொல்லப்பட்டிருக்கிறார்" என்றாள்.

"ஆம்" என்றான் திருஷ்டத்யும்னன். "நம்முன் வழியொன்றும் இல்லை. யாதவப் படைப்பிரிவுகள் ஏழு உடனே மதுராவிலிருந்து கிளம்பி காசிக்குச் சென்று சததன்வாவைக் கொன்று சியமந்தக மணியைக் கவர்ந்து வர ஆணையிட்டிருக்கிறேன். படைகளை அக்ரூரரும் கிருதவர்மனும் நடத்துவர். உடன் செல்ல சாத்யகியையும் உங்களையும் பணிக்கிறேன்" என்றாள். அச்சொல்லில் இருந்த உறுதியே அவன் சொல்லவேண்டியதென்ன என்ற தெளிவை அளிக்க திருஷ்டத்யும்னன் தன் சொற்களை கோத்துக்கொண்டு "அரசி, பொறுத்தருள்க! இப்போது இப்படை நகர்வு உகந்ததல்ல" என்றான்.

விழிகளில் சினம் மின்னி அணைய சத்யபாமா "ஏன்?" என்றாள். "மதுராவில் நாம் நிறுத்தியிருக்கும் படைப்பிரிவுகள் அனைத்தும் அதைச் சூழ்ந்துள்ள மகதத்தின் பதினெட்டு காவல் அரண்களில் இருந்தும் நகரைக் காக்கும் பொருட்டே. மதுராவிற்கு மிக அருகேயுள்ளது தேவகரின் உத்தர மதுரா. அதற்கு சற்றே சேய்மையில் உள்ளது குந்திபோஜரின் மார்த்திகாவதி. இந்நகரங்கள் அனைத்தும் மகதம் கை எட்டினால் தொடமுடியும் தொலைவில் உள்ளவை. நம் படைப்பிரிவுகளைத் திரட்டி கங்கை வழியாக கொண்டு சென்று காசியைக் கடந்து சததன்வாவின் நகரைத் தாக்குவதென்பது மதுராவையும் பிற இரு தலைநகர்களையும் நாம் பாதுகாப்பற்று விட்டுவிட்டுச் செல்கிறோமென உலகிற்கு அறிவிப்பதற்கு நிகரே" என்றான்.

அக்ரூரர் "ஆம். அதை நான் ஏற்கெனவே எண்ணினேன். அரசிக்கு குறிப்புணர்த்தவும் செய்தேன்" என்றார். விழிகள் குழப்பம் கொண்டு அலைய "ஆனால் நம்முன் வேறு வழியில்லையே! இப்போது தயங்கினோம் என்றால்..." என்றாள் சத்யபாமா. கிருதவர்மன் "ஒன்று செய்யலாம். துவாரகையிலிருந்து ஒரு படையை கொண்டு சென்று..." என்று சொல்வதற்குள் சத்யபாமா கைவீசி "அது ஆகாத எண்ணம். இங்கிருந்து ஒரு படை மதுரா வரைக்கும் செல்வதற்கு பன்னிரெண்டு நாட்களாகும். பன்னிரெண்டு நாட்கள் சியமந்தகத்துடன் அவன் வாழ நான் ஒருபோதும் ஒப்பேன்" என்றாள். மூச்சிரைக்க "அந்த மணி அவன் கையில் இருக்கையில் நான் திருமகள் அல்ல. நான்..." என திணறி மேலே சொல்லெடுக்க முடியாமல் மூச்சிரைக்க அவள் எழுந்துகொண்டாள்.

"படை கொண்டு செல்லாமல் சததன்வாவை வெல்வது எப்படி?" என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் "பாஞ்சாலத்தின் படைகள் என் ஆணையின் கீழ் உள்ளன. என்னிடம் பொறுப்பை அளியுங்கள். அவன் குருதி படிந்த சியமந்தக மணியுடன் நான் வந்து தங்கள் தாள் பணிகிறேன்" என்றான். வெடித்தெழுந்த குரலில் "இல்லை!" என்றாள் சத்யபாமா. "இது என் குலமணி. இளைய யாதவரின் படைக்கலங்களால் மட்டுமே இது வெல்லப்பட வேண்டும். சியமந்தகத்தை வெல்லாவிட்டால் இளையவர் என் இறைவனல்ல" என்றாள். "அரசி" என்று திருஷ்டத்யும்னன் மேலும் சொல்ல குரலெடுக்க கையமர்த்தி "உங்கள் அன்பிற்கு நன்றியுடையேன் இளவரசே. இன்று நான் கோருவது படை அமைக்கவும் களம் சூழவும் உங்கள் கல்வியை மட்டுமே" என்றாள். திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.

சாத்யகி "அஸ்தினபுரியிடமிருந்தும் நாம் ஒரு படைப்பிரிவை பெற்றுக்கொண்டால் என்ன?" என்றான். "அதுவும் யாதவர்க்கு பீடு அன்று" என்றாள் சத்யபாமா. "முறைப்படி அந்தகக் குலத்து யாதவர்களால் வென்று கொள்ளப்பட வேண்டியது அம்மணி. விருஷ்ணி குலத்து யாதவர்களின் அரசி என்ற வகையில் அனைத்து யாதவர்களையும் திரட்டி களம் அனுப்புவதும் எனக்கு உகந்ததே. ஆனால் யாதவர்கள் வாளால் வென்று கொள்ளப்பட வேண்டும் சியமந்தகம். வேறு எவ்வகையிலும் அது நிகழலாகாது" என்றாள்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 2

சத்யபாமா கையசைக்க ஏவலன் தலைவணங்கி வெளியே சென்று படைத்தலைவர்களை உள்ளே வரச்சொன்னான். அவர்கள் வந்து தலைவணங்கி பீடங்களில் அமர்ந்தனர். அனைவர் முகங்களும் தளும்ப நிறைந்த கலங்கள் போல இருந்தன. சத்யபாமா "நாம் சததன்வாவை வென்றுவர முடிவெடுத்திருக்கிறோம். நம் படைகள் அவன் நகரை அழிக்கவேண்டும்..." என்றாள். "கிருஷ்ணவபுஸ் என்றொரு நகரே இனி உலகில் இருக்கக்கூடாது. அங்குள்ள ஒவ்வொரு கல்லும் பெயர்க்கப்பட்டாகவேண்டும்..."

"நமது படைகளுக்கு முன் கிருஷ்ணவபுஸ் யானைகாலடியில் பறவைமுட்டை போன்றது" என்றார் படைத்தலைவர். "அதன் படைசூழ்கை குறித்தே பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கிருந்து படைகள் செல்வது இயல்வதல்ல. ஓரிருநாட்களில் நாம் அவனை வென்றாகவேண்டும். காசிக்கு அருகே உள்ள நமது படைகள் எவை? அவற்றை எப்படி நம்மால் ஒன்றுசேர்க்கமுடியும்?" இளம்படைத்தலைவன் "காசிக்கு மிக அருகே உள்ளது மதுராவின் இரண்டு படைப்பிரிவுகள் நின்றிருக்கும் நமது சுஜனகிரகம். சற்று அப்பால் மார்த்திகாவதி உள்ளது. நமது நட்புநாடு அது."

திருஷ்டத்யும்னன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். ஆளுமை மிகுந்தவளென்றாலும் அரசுசூழ்தல் கற்காதவள். அரசியர் ஒருபோதும் அடிப்படைச்செய்திகளை படைத்தலைவர்களிடம் கேட்கமாட்டார்கள். ஒற்றர்வாயால் முழுதறிந்தபின்னரே அரசுசூழ்தல் அவையில் அமர்வார்கள். இறுதிமுடிவு எடுத்ததை அவள் அவனிடமும் அக்ரூரரிடமும் சொல்லவில்லை. அவள் எடுத்த முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவே எண்ணி ஆணையிட்டுக்கொண்டிருந்தாள். தன்னையறியாமலேயே அவளை திரௌபதியிடம் அவன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தான் என உணர்ந்தான். அந்த எண்ணம் வந்ததுமே அவன் சொல்லவேண்டியதை முடிவுசெய்துவிட்டான்.

"யாதவ அரசி பொறுத்தருள வேண்டும்" என்று திருஷ்டத்யும்னன் உறுதியான குரலில் சொன்னான். "பார்ஸ்வகுடியின் கூர்மபுரியின் அரசர் கிருதாக்னி இன்னமும் யாதவக்கூட்டமைப்பில்தான் உள்ளார். அவரது மைந்தனாகிய சததன்வா இன்னும்கூட யாதவ இளவரசன். நாம் போர்புரிய இன்னும் யாதவக்கூட்டமைப்பின் ஒப்புதல் பெறவில்லை." சத்யபாமா "அவன் என் தந்தையைக் கொன்றவன்..." என்று சொல்ல "அதை அவன் தந்தையிடம் முறையிடவேண்டும் என்பதல்லவா யாதவ நெறி?" என்றான். அக்ரூரர் "ஆம்" என்றார்.

"நான் முறையிடப்போவதில்லை. அவனை கொல்வேன். யாதவர்மன்றுக்கு பின்னர் விளக்கம் அளிக்கிறேன்" என்று சத்யபாமா சினத்துடன் சொல்ல திருஷ்டத்யும்னன் "அவ்வண்ணமெனினும் ஒரு படை கொண்டெழுவது இப்போது நல்ல வழியல்ல" என்றான். "நம் படைகள் காசி மண்ணை கடக்காமல் சததன்வாவின் ஊரை அடைய முடியாது. காசி மகதத்திற்கு மணவினை புரிந்த நாடு. அஸ்தினபுரியிடம் மண உறவு கொண்ட நாடு. தன் நிலம் வழியாக நம் படைகள் செல்ல காசி ஒப்பவில்லை என்றால் நாம் அதை செய்ய முடியாது. காசியின் படைகள் நம்மை எதிர்க்குமென்றால் அதைக் கடந்து செல்ல மதுராவில் நின்றிருக்கும் படைகளால் எளிதில் முடியாது." படைத்தலைவர் ஏதோ சொல்ல வாயெடுக்க திருஷ்டத்யும்னன் கையசைத்து அவரை நிறுத்தி தொடர்ந்து பேசினான்.

"அவையோரே, இன்று ஒரு முறைசார்போர் அங்கு நிகழும் என்றால் அதுவே பாரத வர்ஷத்தில் எதிரெதிர் நின்றிருக்கும் பேராற்றல்கள் நடுவே ஒவ்வொரு கணமும் நிகழக்காத்திருக்கும் பெரும் போரின் தொடக்கமாக அமையக்கூடும். நெய் நிறைந்த களஞ்சியத்தில் விழுந்த முதல் தீப்பொறியாக அது அமையக்கூடும்." "ஆனால் நாம் செய்வதற்கொன்றுமில்லை" என்றாள் சத்யபாமா. "இருக்கலாம். நாம் முடிவை முதலில் எடுத்துவிட்டு அரசுசூழ்கிறோம். என்ன செய்யமுடியுமென எட்டுத்திசையிலும் நோக்குவோம். பின்னர் இறுதிப்புள்ளிக்கு செல்வோம்" என்றான்.

சத்யபாமா உடனடியாக விழிகளின் அனல் அவிந்து "வேறு என்ன செய்யக்கூடும் என்கிறீர்?" என்றதும் திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகைசெய்தான். அவளுடைய நிமிர்வுக்குப்பின் தனக்கு அரசுசூழ்தல் தெரியாதென்ற தயக்கமே உள்ளதென அவன் சரியாகவே உய்த்தறிந்துவிட்டிருந்தான். "படைநகர்வு இப்போது தேவை இல்லை. அது நம் கட்டுப்பாட்டில் நிற்காத விளைவுகளை உருவாக்கும்."

"வேறு வழி என்ன?" என்று சத்யபாமா பொறுமையிழந்து உரக்க கேட்டாள். "இன்று இவ்வரியணை அமர்ந்திருக்கையில் என்னுடல் எரிகிறது. சியமந்தகம் என் கைக்கு வந்து சேரும் கணம் வரை என்னால் விழிதுயில முடியாது. பாஞ்சாலரே, என் தந்தையின் தலை வெட்டுண்டு கிடப்பதை இக்கணம் விழி மூடினால் கூட என்னால் காண முடிகிறது" நிலையற்றவளாக எழுந்து "நான் வாளாவிருக்கவேண்டும் என்று மட்டும் எவரும் சொல்லவேண்டாம்... இதன்பொருட்டு யாதவகுலமே அழியுமென்றால் அழியட்டும்" என்றாள்.

திருஷ்டத்யும்னன் "நம்முன் உள்ள வழி ஒன்றே" என்றான். அவள் திரும்பி நோக்க "அக்ரூரரும் கிருதவர்மரும் தேவையான மிகச்சிறிய படையுடன் சததன்வாவை நாடிச் செல்லட்டும்" என்றான். "சிறிய படையால் அவனை வெல்ல முடியாது" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "ஆம். அவனை வெல்ல நாம் அனுப்பும் சிறுபடை போதாது. ஆனால் நான் எண்ணுவது முறைசார் போரை அல்ல. நாம் அவனை அணுகவேண்டும். அதற்கு அவனே அவர்கள் இருவரையும் தன் எல்லைக்குள் அழைத்துக்கொள்ள வேண்டும். தன் அரண்மனைக்குள் அவர்களை தங்க வைக்க வேண்டும்" என்றான்.

அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்ப திருஷ்டத்யும்னன் சொன்னான் "அரசி, என்ன நிகழ வேண்டும் என்பதை சொல்கிறேன். நாம் போரை விழையவில்லை என்று காட்டுவோம். துவாரகை எப்போதும் போரைத்தவிர்க்க முயல்வது என்பதனால் சததன்வா அதை நம்புவான். சததன்வாவுடன் சமரசம் பேசி அவன் விழைவதை அளித்து அவனிடமிருந்து அந்த மணியை பெற்றுவர துவாரகையின் முறைமைத்தூதராக அக்ரூரரை அனுப்புவோம். அவருடன் அகம்படித் துணைக்கு என ஒரு படையுடன் கிருதவர்மரும் செல்லட்டும். அவ்வாறு சததன்வாவிடம் பேசி அந்த மணியை கொண்டு வர தன்னால் முடியும் என்று அக்ரூரர் நமக்கு இங்கு அவை நடுவே நின்று உறுதியளிக்கட்டும். அவர்கள் இங்கிருந்து கிளம்பிச்செல்லும்போதே சததன்வா அதை ஒற்றர்வழியாக அறிந்திருப்பான்."

"செல்லும் வழியில் அக்ரூரரின் பிறிதொரு செய்தியும் அவனை அடைய வேண்டும்" என்றான் திருஷ்டத்யும்னன். "அக்ரூரரும் கிருதவர்மரும் தங்களுக்கென அரசியல் விழைவுகள் கொண்டிருக்கிறார்கள் என." அக்ரூரர் "என்ன சொல்கிறீர்?" என்றபடி எழுந்துவிட்டார். "ஒரு நடிப்புதான் அது அக்ரூரரே" என்றான் திருஷ்டத்யும்னன். "யாதவகுலமே உங்களுக்கு இளைய யாதவருடன் உள்ள உறவை அறியும். இந்நகரமே உங்களுடையதென சொல்கிறார்கள்." அக்ரூரர் "ஆம், ஆனால் இப்படி ஒரு செய்தி எப்படி பரவினாலும் அது வரலாற்றில் இருக்கும். நான் என் தலைவனிடம் முரண்பட்டேன் என விளையாட்டாகக்கூட ஒருவரும் சொல்லக்கூடாது. இதற்கு நான் ஒப்ப மாட்டேன்" என்றார்.

"வெற்றியுடன் திரும்பிவந்து சியமந்தகத்தை நீங்கள் அரசரின் காலடியில் வைக்கையில் அதுவே வரலாறாக இருக்கும் அக்ரூரரே" என்றான் திருஷ்டத்யும்னன். "இல்லை, நடிப்புக்காகக்கூட அச்சொல்லை என்னுடன் இணைக்க ஒப்பமாட்டேன்" என்றார் அக்ரூரர். "நான் இளைய யாதவரின் ஊர்தி. இது வஞ்சகம் எண்ணியதென பொய்யின் தெய்வம் கூட சொல்லலாகாது." சத்யபாமா "அக்ரூரரே, இது என் ஆணை. நீங்கள் பாஞ்சாலர் சொல்வதை செய்தாகவேண்டும்" என்று உரக்க கைநீட்டி சொன்னாள். "ஆணை அரசி" என அக்ரூரர் தலைவணங்கினார்.

"நான் சொல்வதை மட்டும் கூர்நோக்குக. பின்னர் முடிவெடுப்போம்" என்றான் திருஷ்டத்யும்னன். "அக்ரூரருக்கும் சியமந்தகம் மீது விருப்பு இருக்கிறது. அந்த மணியை மையமாக்கி துவாரகைக்கு எதிராக ஒரு படைத் திரட்சியை செய்யவும் அதனூடாக யாதவநிலத்தில் ஒரு பகுதியை வென்றெடுக்கவும் அவர் எண்ணுகிறார். கிருதவர்மர் அந்தகக்குலத்தவர். சியமந்தகம் தனக்குரியதென அவர் கருதுகிறார். இவர்கள் இங்கிருந்து அங்கே செல்வதற்குள் இச்செய்தி அவனை அடையட்டும். சியமந்தக மணியைக்காட்டி இருவரையும் வென்றெடுக்கமுடியும் என சததன்வா நம்புவான்."

சாத்யகி "அதை அவன் நம்ப மாட்டான்" என்றான் "இளைய யாதவரின் அவையில் அக்ரூரர் யார் என அவன் அறிவான். யாதவகுலத்துக்கே தலைமை கொண்டிருக்கும் அக்ரூரர் ஒரு சிறிய யாதவக்கிளையைத் திரட்டி தனித்துச்செல்ல விழையமாட்டார் என்றே என்ணுவான்." திருஷ்டத்யும்னன் உறுதியாக "நம்புவான்" என்றான். "ஏனெனில், வஞ்சகர் பிறரையும் வஞ்சகராகவே எண்ணுவர். விழைவுகொண்டவர் பிறரது விழைவுடனே உரையாடுவர். எந்த உளநிலையால் இளைய யாதவரை எதிர்க்க சததன்வா எண்ணினானோ அதே உளநிலையில் இவர்கள் இருப்பதாக அவன் எண்ணுவான். இவர்கள் மேல் சற்று ஐயம் இருந்தால்கூட ஒருமுறை பேசிப்பார்ப்போமே என்றுதான் அகம் ஓடும்."

"இவர்களை வென்றெடுக்கமுடியவில்லை என்றாலும்கூட இவர்கள் இளைய யாதவரை உதறி அவனுடன் பேசச் சென்றதை அறிந்தாலே தனக்கு யாதவர்களின் ஆதரவு பெருகும் என சததன்வா எண்ணக்கூடும். ஆகவே உறுதியாக இருவரையும் அவன் தன் எல்லைக்குள் அழைத்துக்கொள்வான். இப்படைகளுடன் அவர்கள் சென்று சததன்வாவை அவன் அரண்மனையில் கண்டு உரையாட முடியும" என்றான். அவை அவன் சொல்லுக்காக அமைதியாக காத்திருந்தது. "நாம் அனுப்புவது எளிய யாதவப் படையாக இருக்க வேண்டியதில்லை. இங்கிருந்து பெரும்திறல் வீரர் நூற்றுவரைத் தேர்ந்து அனுப்புவோம். அவர்கள் அங்கு சென்றதுமே சததன்வாவைக் கொன்று அந்த மணியை வெல்லட்டும். சததன்வாவின் படைகள் எதிர்திரள்வதற்குள் கங்கையினூடாக வந்து நம் எல்லைக்குள் நுழையட்டும். காசியோ மதகமோ சததன்வாவை துணைக்க வருவதற்குள் இத்தாக்குதல் முடிவடைந்து விடும்" என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்தியபாமா கண்கள் அலைபாய "ஆனால்..." என்றாள். பின்னர் கையை வீசி "இது முறையல்ல என்று எனக்குத் தோன்றுகிறது பாஞ்சாலரே" என்றாள். "அரசி, எங்ஙனம் சியமந்தகம் கொள்ளப்பட்டதோ அங்ஙனமே அதைக் கவர இது ஒன்றே வழி" என்றான் திருஷ்டத்யும்னன். "எந்தையிடமிருந்து சியமந்தகத்தைக் கொண்டவன் அவையில் நின்று சொல்ல ஒரு குலப்பெயர் மட்டுமே உள்ள எளிய யாதவன். நாமோ பாரத வர்ஷத்தை ஆள எண்ணும் துவாரகைக்கு உரிமை கொண்டவர்கள். நாம் முறையற்றது செய்யலாகாது" என்றாள் சத்யபாமா.

"அரசி, நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நாம் போர் என்று அறிவித்தே இங்கிருந்து படை அனுப்புகிறோம். அவனிடம் உரையாடி இந்த மணியைப் பெறுவதென்பது நாம் மட்டுமே அறிந்த திட்டம். வெறும் நூறு பேர் கொண்டு சததன்வாவை போரில் வென்றோம் என்றே நாம் அறிவிக்க இருக்கிறோம். ஆம், இது போரே. மிக விரைவாக மிக எளிதாக நிகழ்த்தப்பட்ட ஒரு போர். அவ்வளவுதான்" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். கிருதவர்மன் "ஆம் அரசி, இது ஒன்றே எளிய வழி என்று நினைக்கிறேன். இப்போரை என்னிடம் விடுங்கள். இங்கிருந்து செல்லும் நமது படை ஆறு நாட்களுக்குள் அங்கு சென்று அடைய முடியும். அவனைக்கொன்று மணியை கவர்ந்து மீள்கிறோம்" என்றான்.

சத்யபாமா குழப்பத்துடன் தனக்கென்றே சொல்பவள் போல் "இல்லை. நான் ஐயுறுகிறேன். இது முறையா என்றெனக்கு தெரியவில்லை" என்றாள். "அரசி, இத்தருணத்தில் நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று அறிந்து கொள்ளவே இளைய யாதவர் நகர்நீங்கினார் போலும்" என்றான் திருஷ்டத்யும்னன். திடுக்கிட்டவள் போல் விழி தூக்கி அவனை நோக்கிய பின் சத்யபாமா "ஆம். நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்" என்றாள். "அரசி எண்ணி குழம்புவதற்கு இது நேரமல்ல. அக்ரூரரும் கிருதவர்மரும் உடனடியாக கிளம்பட்டும். அவர்கள் மதுராவை அடைவதற்குள் அங்கு படைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இதுவே நம் முன் உள்ள வழி "என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்யபாமா கைகளைக் கட்டியபடி சென்று சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றாள். அவள் கருங்குழல் கற்றைகளை கடற்காற்று நெளிய வைத்தது. ஆடை நுனி படபடத்து சுற்றி உடலில் படிந்தது. நால்வரும் அவளை நோக்கி விழிநட்டு அமர்ந்திருந்தனர். அவள் உள்ளம் நிகழ்வதை காணமுடிந்தது. அக்ரூரர் "அரசி, அனைத்து வழிகளிலும் எண்ணி நோக்கும்போதும் இது சிறந்தது என்றே எண்ணுகிறேன். அவன் நம்மேல் முறையான போர் தொடுத்தவன் அல்ல. அவனுக்கென ஒரு பெரும் படை கொண்டு சென்று அவனை வென்றாலும் அது துவாரகைக்கு புகழ் தருவதல்ல. நூறு பேர் கொண்ட சிறு படையுடன் சென்று வென்று மணி கொண்டு வந்தால் அது நமக்கு புகழைச் சேர்க்கும்" என்றார்.

அவள் கன்னங்களும் கழுத்தும் அசைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். தயக்கத்தையும் குழப்பத்தையும் இத்தனை தெளிவாக உடலில் காட்டுகிறாள். அரசு சூழ்தலின் நெறிகளில் முதன்மையானவற்றைக்கூட கற்றவளல்ல. அவள் அங்கே நின்று தன்னை மேலும் வற்புறுத்தும்படி கோரிக்கொண்டிருந்தாள். "அரசி, சததன்வா இத்தனை தயக்கத்திற்கு தகுதியானவனா என்று எண்ணுங்கள். பொருள்விழைவது போர்வீரனின் இயல்பு. எனவே சியமந்தக மணியை அவன் கொண்டது முறையெனக் கொள்ளலாம். ஆனால் போரில் களம்பட்ட ஒருவரின் முடியைப் பிடித்து இழுத்துச் சுழற்றி தலை கொய்து வீசுபவன் வீரனே அல்ல. அதுவும் தன் தந்தையின் இடத்தில் இருந்து அள்ளி அமுதூட்டிய ஒருவரின் தலையை" என்றான். அவள் உடலதிர்வதை கண்டான். அவனுக்கு முன்பு அறிந்திராத ஓர் எழுச்சி ஏற்பட்டது.

"யாதவர் தலைவி, போரில் நிகழ்வது கொலை அல்ல. கொல்லப்பட்டவனை வெல்ல எண்ணுகிறோம், அழிக்க உன்னுவதில்லை. அவன் விண்ணுலகெய்த விழைகிறோம், அவமதிப்பதில்லை. கொலை ஐந்துபெரும் தீமைகளில் முதன்மையானது. சினமும் காழ்ப்பும் தீவிழைவும் கொண்டு ஒருவரை அவமதிப்பவன் செய்வதே கொலை. களத்தில் எதிரியின் தலையை இழுத்து வெட்டும் கீழ்மகன் செய்வது தெய்வங்களும் மூதாதையரும் பழிக்கும் படுகொலை. இழிநரகின் இருளில் அவனை ஆழ்த்தும் செயல் அது" என்றான் திருஷ்டத்யும்னன். அவன் குரல் ஓங்கியது. "அந்த இழிதகையோன் வீரனில்லை. அவனை எங்ஙனம் கொன்றாலும் அது தகுமே."

பேரலை வந்து அறைந்த படகு என அவள் உடலில் எழுந்த அசைவை காண முடிந்தது. ஒரு கணத்தில் அனைத்துக் கட்டுகளையும் இழந்து எளிய யாதவப் பெண்ணாக மாறி பெண்சிம்மம் போல திரும்பி அவள் கூவினாள் "ஆம், அவனை அழித்தாகவேண்டும். அச்செயலுக்கு அவன் குருதியை நான் கண்டே ஆகவேண்டும். அக்ரூரரே, நான் ஆணையிடுகிறேன். அவனைக் கொன்று அக்குருதி நிறைந்த கலத்தில் சியமந்தகமணியை இட்டு இங்கு கொண்டு வாருங்கள். அவன் குருதியில் கை நனைத்து சியமந்தகத்தை என் கையில் எடுப்பேன். அக்குருதி ஈரத்துடன் இங்கு என் மூதன்னையர் குடி கொண்டிருக்கும் ஆலயத்து பலிபீடத்தில் அம்மணியை வைப்பேன். சென்று வருக! பாஞ்சாலரின் ஆணையை கைக்கொள்க!"

அக்ரூரர் தலைவணங்கி "அவ்வண்ணமே ஆகுக!" என்றார். கிருதவர்மன் "ஆணை! சியமந்தகத்துடன் இங்கு மீள்கிறேன்" என்றான். சாத்யகி திருஷ்டத்யும்னனிடம் "பாஞ்சாலரே, நான் செய்ய வேண்டியதென்ன?" என்றான். "இருவருடனும் நாமும் செல்வோம" என்றான் திருஷ்டத்யும்னன். "இப்போதே கிளம்புங்கள். இதுவே அதற்கான தருணம்" என்றாள் சத்யபாமை. அவள் விழிகள் சிவந்து கலங்கியிருக்க மூச்சில் உடல் காற்று உலைக்கும் படகுப்பாய் என அசைந்தது. "இங்கிருந்து அகன்று நீங்கள் ஆடைகளை எடுத்து தேர்களை அணுகும்போது அரச ஆணை உங்களுக்காக காத்திருக்கும்." அக்ரூரர் "குருதிமணியுடன் மீள்கிறோம் அரசி" என்று சொல்லி மீண்டும் தலைவணங்கினார்

அவர்கள் வெளியே வந்தபோது அக்ரூரர் தலைகவிழ்ந்து எண்ணங்களில் மூழ்கி வர கிருதவர்மன் திருஷ்டத்யும்னனிடம் "தங்களுக்கு நன்றி உரைத்தாகவேண்டும் பாஞ்சாலரே. நான் அந்தகக் குலத்தவன். என் குலமணியை வென்றுவரும் வாய்ப்பை எனக்கு அளித்தீர்கள். நான் காலமெல்லாம் இதற்காக என் குடியினரால் நினைவுகூரப்படுவேன்" என்றான். "அந்த மணியை நீர் பார்த்திருக்கிறீரா?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம், காலையொளியில் இந்திரநீலம் மதியம் வான்நீலம் இரவில் நீர்த்தெளிவு என உருமாறும் விண்கதிர்க்கல் அது" என்றான்.

திருஷ்டத்யும்னன் ஒரு கணம் அவன் விழிகளில் தெரிந்து மறைந்த ஒன்றைக் கண்டு உளம் அதிரப்பெற்றான். வைரத்தைத் திருப்பும்போது உள்ளாழத்தில் தெரிந்து மறையும் நீரோட்டம் என ஒன்று. அது என்ன என எண்ணியதுமே எங்கோ உளம் சென்று தொட்டது. எங்கே? எதை? சாத்யகி அக்ரூரரிடம் "நாம் உரிய படைவீரர்களை திரட்டவேண்டியிருக்கிறது அல்லவா மூத்தவரே?" என்றான். "ஆம், என்னால் எவர் எவர் என நினைவில் இருந்தே சொல்லமுடியும். மதுராவுக்கு இப்போதே ஓலை அனுப்புகிறேன்" என்றார் அக்ரூரர்.

சாத்யகி "அவர்களில் வில்லவர் பாதியளவாவது வேண்டுமல்லவா?" என்றான். "படகில் ஆடியபடி வில்லாளும் திறன் கொண்டவராகவே நூற்றுவரும் இருக்கவேண்டும். போர் நாம் திரும்பி வரும்போதுதான் நிகழும்" என்றார் அக்ரூரர். அவரது காலடிகளை கேட்டுக்கொண்டே நடந்த திருஷ்டத்யும்னன் தன் வேட்டைப்புலன்கள் உச்சத்திலிருப்பதை உணர்ந்தான். உடல் புல்லரித்துக்கொண்டே இருந்தது. சாத்யகி "நான் கலந்துகொள்ளும் முதல்போர் இது அக்ரூரரே" என்றான். "இதில் நீங்களும் புகழ்பெறுவீர்" என்றார் அக்ரூரர் சிரித்தபடி.

அரண்மனை முற்றத்தை அடைந்ததும் அக்ரூரர் "நான் ஒருநாழிகைக்குள் சித்தமாகிவிடுவேன். நாம் இன்றிரவுக்குள் நகரெல்லை நீங்க முடியும்" என்றார். "ஆம், இரவே பாலையை கடக்கமுடிந்தால் நன்று" என்றான் திருஷ்டத்யும்னன். "பாலையில் ஓடும் திறன் மிக்க சோனகநாட்டுப்புரவிகள் உள்ளன" என்றபின் அக்ரூரர் தலைவணங்கி விடைபெற்றார். கிருதவர்மன் சாத்யகியிடம் "என் படைக்கலங்களை வந்து பாரும் யாதவரே" என்றபின் திருஷ்டத்யும்னனிடம் விடைபெற்றான்

சாத்யகி புரவியை அழைத்துவந்தான். அவன் ஏறுவதை நோக்கி நின்ற திருஷ்டத்யும்னனை நோக்கி "வருக பாஞ்சாலரே" என்றான் சாத்யகி. தன் புரவியின் கடிவாளத்தைப்பற்றியதும் உடல் சிலிர்க்க திருஷ்டத்யும்னன் உள ஆழம் பதிவுசெய்திருந்த ஒரு கணத்தை மீட்டெடுத்தான். அக்ரூரரின் விழிகளில் மின்னி மறைந்த ஒன்று. அது என்ன? அவன் சாத்யகியை நோக்கினான். அவன் புரவி வால்சுழற்றி முன்னால்சென்றது. தொலைவில் துவாரகையின் பெருந்துறைமேடை நோக்கி திறந்த வாய்கொண்ட சிம்மநாகம் வளைந்து பரவிய உடலுடன் பீதர்நாட்டுப் பெருங்கலம் ஒன்று இதழ்குவித்து உதிரும் மலரென அணுகியது.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 3

துவாரகையிலிருந்து கிளம்பி தேர்களிலும் பின் படகுகளிலும் பயணம் செய்து ஐந்தே நாட்களில் மதுராவை வந்தடைந்தனர். பயணம் முழுக்க அக்ரூரர் தன் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்து பறவைச் செய்திகளாக மதுராவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். மதுராவில் பலராமர் இல்லை, அஸ்தினபுரியில் துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி கொடுக்கும் பொருட்டு சென்றவர் அங்கிருந்து அவனுடன் காட்டுக்குச் சென்றுவிட்டதாக செய்தி வந்திருந்தது. எங்கிருக்கிறார் என்பதை முறையாகத்தெரிவிக்கும் இயல்பு அவருக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்தது.

மதுரா வசுதேவரின் ஆட்சியில் இருந்தது. அவரோ அரண்மனை சூதுப் பலகையை விட்டு எழுவதே குறைவு என்றனர். திறமையான படைத்தலைவர்களால் ஆளப்பட்டமையால் அரண்மனையில் எவர் இருக்கிறார்கள் என்பதே மக்களுக்கு பொருட்டாக இல்லாமல் இருந்தது. "இளவரசே, துவாரகை மேலைக்கடலில் எழுந்ததுமே மதுரையும் வலுவாக வணிகத்தில் ஊன்றி படைகள் விரித்து புகழ் கொண்டுவிட்டது. மதுராவின் துறைமுகத்தில் இருந்து ஒரு படை கிளம்புவதென்பது எளிதல்ல. பல நூறு வணிகக்கலங்கள் யமுனையில் நின்றிருக்கையில் சிறு படைப்பிரிவு எழுந்தால் கூட அனைவராலும் நோக்கப்படும். மறுநாளே பாரதவர்ஷம் முழுக்க செய்தியுமாகும்" என்றார் அக்ரூரர்.

"படைப்பிரிவுகள் கருக்கிருட்டில் வணிகப் படகுகள் போல மாறுதோற்றம் கொண்டு கிளம்ப முடியும் அல்லவா?" என்றான் கிருதவர்மன். "ஆம், அதுவே நம் திட்டம். நமக்குத் தேவை நூறு பேர். அங்கு ஆயிரம் படை வீரர்களை சமரிட்டு வென்று மீளூம் திறன் கொண்டவர்கள்" என்றார் அக்ரூரர். "ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு தேர்ந்து அணி நிரக்கச் சொல்லி படைக்கலம் சூடி நிற்க ஆணையிட்டிருக்கிறேன். சென்றதுமே படையெழவேண்டியதுதான்." "எத்தனை படகுகளில்?" என்று கிருதவர்மன் கேட்டான். "ஒரே படகில் கிளம்பமுடிந்தால் நன்று..." என்றார் அக்ரூரர். "ஒரே படகிலா? நூறு புரவிகளுடனா?" என்று கிருதவர்மன் கேட்க "புரவிகளைக் கொண்டுசெல்வதென்பது படைகொண்டுசெல்வதாகவே தெரியும்" என்றார் அக்ரூரர். "புரவிகள் இன்றியே சென்று வென்று மீளும் திட்டம் வகுத்திருக்கிறேன்."

கிருதவர்மனும் அக்ரூரரும் படகின் வளைவில் அமர்ந்து நடுவே குறும்பீடத்தில் கன்றுத்தோலில் வரைந்த வரைபடத்தை வைத்து கைகளால் சுட்டியும் வண்ண மையால் இடங்களைக் குறித்தும் எழுச்சியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சாத்யகி புன்னகையுடன் திரும்பி "ஒரு போருக்கென நெடுநாள் காத்திருந்தார்கள் போலும்" என்றான். திருஷ்டத்யும்னனும் "ஆம், அக்ரூரராவது அரசுசூழ்தலில் தன்னை ஒவ்வொரு நாளும் இளையயாதவருக்கு முன்னால் நிறுத்திக் கொண்டிருக்கிறார். கிருதவர்மன் எளியதோர் காவல் வீரனாக மாறிக் கொண்டிருந்தான். இப்போர் இருவரையும் வீரர்களென அவர் முன் நிறுத்தும்" என்றான். "அக்ரூரருக்கு இணையாக தானும் ஆனதைப் போல் கிருதவர்மன் எண்ணுவதை அவர்கள் அமர்ந்திருப்பதிலேயே காண முடிகிறது."

சாத்யகி சிரித்துக் கொண்டு "போர் என்பது மிகப் பெரியதோர் நாடகம் என்று நான் எண்ணுவதுண்டு பாஞ்சாலரே. அதில் இறப்பதும் ஒரு வகையில் நடிப்பே" என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து "போரில்லாதபோது போர்களைப்பற்றி அழகிய சொற்றொடர்களை உருவாக்கிக் கொள்வதும் வீரர்கள் எங்கும் செய்வதுதான். போர் குறித்து சில சொல்வதற்கில்லாத படைவீரரை நான் பார்த்ததே இல்லை" என்றான். "போரைக் கண்டபின் நான் சொல்லாமலாகிவிடுவேனா?" என்றான் சாத்யகி. "சொல்வீர். சில தன்னறிவுகளையும் கற்பனைகளையும் சேர்த்துக்கொள்வீர்" என்று திருஷ்டத்யும்னன் சொல்ல இருவரும் சிரித்தனர்.

மதுராவை அவர்கள் விடியற்காலையில் நெருங்கினார்கள். துறைமுகம் முழுக்க அடர்ந்திருந்த நெய்கோள் கலங்கள் மீன்நெய் விளக்குகள் கமறி சுடர்தாழ எரியும் பாய்மர முகப்புகளுடன் மாலையில் காட்டில் இருந்து அன்னையரைத்தேடி அணையும் கன்றுக்கூட்டம் போல் பெருங்குழலோசைகள் ஒன்று கலந்து ஒலிக்க பாய்மரங்கள் புடைத்தும் தளர்ந்தும் ஒன்றை ஒன்று உரசி ஓசையிட நின்றிருந்தன. அவர்களின் படகு கரையணைந்ததும் முன்னரே ஆணையிட்டிருந்தபடி வரவேற்புகளோ கொம்போசைகளோ முழவோசைகளோ இல்லாமல் துறைக்காவலர் நடைபாலத்தை இணைத்தனர். மதுராவின் படைத்தலைவன் கௌசிகன் வந்து வணங்கி "அனைத்தும் சித்தமாக உள்ளன அமைச்சரே" என்று அக்ரூரரிடம் சொன்னான்.

அக்ரூரர் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் "இன்று பகல் விடிவதற்குள்ளேயே கிளம்பிவிடலாமென்று எண்ணியிருக்கிறேன் பாஞ்சாலரே" என்றார். "நமக்கு நேரமில்லை. ஓய்வெடுப்பதை கலத்திலேயே செய்து கொள்ளலாம். நான் நேராக படைப் பிரிவை நோக்கச் செல்கிறேன். தாங்கள் அரண்மனை சென்று உடை மாற்றி மீண்டும் துறை முகப்புக்கு வருவதற்குள் அனைத்தும் சித்தமாக இருக்கும்" என்றார். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் "அரைநாழிகை நேரம் எனக்கு அளியுங்கள்" என்றான். அக்ரூரர் அவன் விழிகளைச் சந்தித்ததும் அவன் மீண்டும் அந்த அதிர்வை உள்ளே அறிந்தான். அவர் தலை வணங்கி கௌசிகனுடன் குதிரையில் ஏறி கோட்டைக்குள் புகுந்தார். கிருதவர்மன் அவரைத் தொடர்ந்தான்.

மதுராவின் நகரில் அயல்வணிகர்களும் மலைப்பொருள் கொணர்ந்தவர்களும், நெய்விற்று பணம் பெற்று நகர்ப்பொருள் கொள்ள வந்த ஆயர்களும் அங்காடித் தெரு முழுவதும் நிறைந்திருந்தனர். அவர்களின் புரவிகள் நெரித்த உடல்களை மூச்சொலியாலேயே விலக்கி முன்னால் சென்றன. "மதுரா புலரியில்தான் உச்சகட்ட செயல்விரைவு கொள்ள இயலும்" என சாத்யகி சொன்னான். "காலைவெயிலில் நெய் உருகுவதற்குள் வணிகம் முடிந்திருக்கும். பகலெல்லாம் இந்நகரம் பிறிதொரு தோற்றம் கொள்ளும். இப்போது விற்கும் நேரம். பகல் முழுக்க வாங்கும் நேரம்." திருஷ்டத்யும்னன் புதிதாகக் கட்டப்பட்ட மதுராவின் குவைமாட அரண்மனைகளை நோக்கினான். "இங்கும் யவனர்களின் தூண்களா?" என்றான். "ஆம். பீடிகையும் வேதிகையும் அமைந்த பெரும் தூண்கள் மீது இளைய யாதவருக்கு தனிவிருப்பு இருக்கிறது" என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் "அரசு அமைக்கும் எவருக்கும் தூண்கள் பெருவிருப்பை அளிக்கும். அவை மண்ணில் ஊன்றி விண்தாங்கி நிற்பது போல. மானுடன் அமைக்கும் வாடா மரங்கள்" என்றபின் திரும்பி "காட்டு மரங்கள் தழைப்பதைப் போலவே இக்கல்மரங்களும் ஒன்று பலவென தழைக்கத்தான் செய்கின்றன" என்றான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி மதுரா முழுக்க கட்டப்பட்டிருந்த யவனத் தூண்களை நோக்கி "ஆம், பெருங்காடென கற்தூண்கள் எழுகின்றன" என்றான். திருஷ்டத்யும்னன் "நமக்கு அரை நாழிகை நேரமே உள்ளது யாதவரே" என்றான். "நாம் போரிடச் செல்கிறோமா?" என்றான் சாத்யகி. "இல்லை. அவர்கள் காசிக்குள் நுழையும்போது எல்லையில் நாம் நின்றிருப்போம். கிருஷ்ணவபுஸுக்குள் செல்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். சியமந்தகத்தைக் கவர்ந்து மீள்வதுதான் கடினம். நம் வாளின் துணை தேவையாகலாம்" என்றான் திருஷ்டத்யும்னன்.

தயக்கத்துடன் கடிவாளத்தை இழுத்து "இப்போர் எங்கு எப்படி தொடங்கும் எவ்வண்ணம் முடியும் என்று எனக்குப் புரியவில்லை. இது போரென்றே தோன்றவில்லை. ஆயர்களின் ஆநிரை கவர்தலுக்கு நிகரானதென்றே எண்ணம் ஓடுகிறது" என்றான் சாத்யகி. "இதுவும் அதுவே. வெட்சி சூடி சென்று வாகை சூடி மீண்டார்கள் என்றால் போர் முடிந்தது" என்று சொல்லி திருஷ்டத்யும்னன் நகைத்தான். "ஆநிரைகவர்தலில் உயிர் விழுவதில்லை" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "அஞ்சுகிறீரா?" என்றான். "இல்லை, ஆனால் என்னுள் ஓர் பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது" என்று சாத்யகி சொன்னான்.

மதுராவின் அரண்மனை வாயிலில் அவர்களை எதிர்கொண்ட காலவர் தலைவன் "தாங்கள் நீராடி உடை மாற்றி படைக்கலம் கொண்டு கிளம்ப அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசே" என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி தலை அசைத்தபின் சாத்யகியிடம் "ஒவ்வொன்றும் நமக்கென ஒருக்கமாக உள்ளன. அக்ரூரர் நாம் இதை தனித்துணர வேண்டுமென எண்ணுவதையும் அறிய முடிகிறது" என்றான். "அது அவரது இயல்பு" என வேறெங்கோ ஆட்பட்டிருந்த உள்ளத்துடன் சாத்யகி சொன்னான்.

மிக விரைவிலேயே குளித்து உடைமாற்றி உணவுண்டு ஆடைக்கு மேல் கவசமும் இடையில் வாளும் தோளில் வில்லும் அணிந்து திருஷ்டத்யும்னன் அரண்மனை முகப்புக்கு வந்தான். சாத்யகி அங்கு முன்னரே சித்தமாக நின்றிருந்தான். அவர்களுக்கான தேர் இரு கரிய புரவிகள் பொறுமையிழந்து அவ்வப்போது காலெடுத்து வைக்க சங்கிலிகள் குலுங்க சகடங்கள் ஒலிக்க நின்றிருந்தது. அவர்கள் ஏறிக் கொண்டதும் அதன் பாகன் சாட்டையால் தொடுவதற்குள் அந்த இடத்தின் மென்மயிர்ப்பரப்பு சிலிர்த்தசைய புரவிகள் முன்னால் பாய்ந்தன. குளம்படி மழை பொழிய நகர்த்தெருக்களெங்கும் அந்த ஓசை எதிரொலிக்க கல் பரப்பப்பட்ட தரையில் பாய்ந்தோடின.

"நாம் அரசரைக் காணவில்லை. அவரிடம் ஆணை பெறவும் இல்லை" என்றான் சாத்யகி. "இவ்வேளையில் எழுவது வசுதேவருக்கு வழக்கமா?" என்றான் திருஷ்டத்யும்னன். "இல்லை. ஆனால் அரசி புலரிக்கு முன் எழுவதுண்டு. இவ்வேளையில் மணிவண்ணன் கோட்டத்திலும் அனல்வண்ணன் கோட்டத்திலும் இந்திரன் கோட்டத்திலும் அவர் பூசை செய்து மீள்வார். விரும்பியிருந்தால் நாம் ஒரு சொல் பெற்றிருக்கலாம்" என்றான். "சியமந்தகத்துடன் திரும்ப வருகையில் நாம் அச்சொல்லை பெற்றுக் கொள்வோம்" என்றான் திருஷ்டத்யும்னன்.

அவர்கள் மதுராவின் துறைமுகப்பை அடைந்தபோது கௌசிகன் அங்கிருந்தான். அவர்களை நோக்கி வந்து இயல்பாக தலை வணங்கி "அந்தகக் குலத்தின் கொடி பறக்கும் அச்சிறிய கலம் தங்களுக்குரியது இளவரசே" என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். "அக்ரூரர் எங்கே?" என்றான் திருஷ்டத்யும்னன். கௌசிகன் "அவர்கள் முன்னரே வந்து தங்கள் படகில் ஏறிக்கொண்டுவிட்டனர்" என்றான். திரும்பி அந்தக் கலத்தை நோக்கிய திருஷ்டத்யும்னன் அதன் அகல் வளைவிலும் அமரமுனையிலும் அடுக்குகள் அனைத்திலும் பலவகையான பெரிய நெய்கொள் கலங்கள் மட்டுமே தெரிவதை நோக்கி புன்னகை செய்தான். "அவை வெறும் கலங்கள். நெய் கொண்டு செல்லும் மரக்கலமென மாறுதோற்றம் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. உள்ளறைகளில் வீரர்கள் ஒளிந்து அமர்ந்திருக்கிறார்கள் "என்றான்.

திருஷ்டத்யும்னன் அவனிடம் தலை அசைத்துவிட்டு நடந்து தன் படகை அணைந்து நடைபாலம் வழியாக சென்று அகல் விளிம்பில் நின்று உள்ளே நோக்கினான். உள்ளறைகளுக்குள் வீரர்கள் தோள்ஒட்டி முதுகு உரசி கவசங்கள் மின்ன படைக்கலங்களை மடியில் வைத்து அமர்ந்திருந்தனர். சாத்யகி "ஒவ்வொருவரும் போரை உள்ளத்தால் தொடங்கிவிட்டனர்" என்றான். "ஆம். போருக்குச் செல்வதென்பது போரை விட எழுச்சியூட்டும் நிகழ்வு. அவர்கள் தங்கள் உள்ளத்தில் இதற்குள் பலநூறு முறை போரை நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள்" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆனால் அவர்கள் அறியப்போகும் போர் நிகழ்ந்த போரைவிட எப்போதும் மாறானது. எல்லா கற்பனையையும் கடந்தது. எளியது, எதிர்பாராதது, ஒவ்வொரு முறையும் துயரளிப்பது" என்றான்.

"போரில் அல்லவா வீரன் முழுமை கொள்கிறான்? அவனுக்கு வெற்றியும் புகழும் மற்றுலகும் அளிப்பது அதுவல்லவா? போரை பெருங்களியாட்டெனக் கொள்வார்கள் என்றல்லவா அறிந்திருக்கிறேன்" என்றான் சாத்யகி. "முதல் போர் ஒரு களியாட்டே முதல் படைக்கலம் கொலைக்கென எழுவது வரை" என்றான் திருஷ்டத்யும்னன். "போரென்றும் சமரென்றும் வெற்றியென்றும் தோல்வியென்றும் சூதர் பாடலென்றும் வரலாற்றில் இடமென்றும் நாம் எண்ணிக் கொள்வது ஒன்றையே. இறத்தல் என்று ஒற்றைச் சொல்லில் அதை சுட்டலாம். முழு இறப்பு அல்லது என்னைப் போல் சற்றே இறப்பு" என்றான். சாத்யகி தலை திருப்பி யமுனையின் அலைகளை நோக்கியபின் அவன் சொன்னதை கூர்ந்துணர்ந்து திகைப்புடன் திரும்பி நோக்கினான்.

திருஷ்டத்யும்னன் கையசைக்க அமரத்தில் நின்றிருந்த வீரன் அதைக் கண்டு தன் கையிலிருந்த மஞ்சள் நிறக் கொடியை அசைத்தான். படகில் முதல் பெரும் பாய் அதன் உச்சியில் கட்டப்பட்ட பீதர் நாட்டு நெய் விளக்குடன் மேலெழுந்து சென்றது. தொடர்ந்து அதன் ஏழு பாய்களும் மேலெழ துயிலெழுந்து சோம்பல் முறிப்பது போல் அசைந்தது அவர்களின் படகு. அப்போதும் விடிந்திருக்கவில்லை. தொலைவில் கீழ்வானில் செவ்வண்ணத் தீற்றல்களாகவும் கடலாழத்தில் நீலநிறத்தீற்றல்களாவும் எழுந்த கதிரவனின் பாதை துலங்கத் தொடங்கியது. அங்கிருந்து புலரியின் செய்தியுடன் பறவைகள் சிறகு நீந்தி வந்து கொண்டிருந்தன.

அக்ரூரரின் படகு அதன் பன்னிரண்டு பாய்களுடன் எழுந்து அலைகளில் எழுந்தமைந்து மைய நீர்ப்பெருக்கு நோக்கி சென்றது. அதைத் தொடர்ந்து மேலும் இரு வணிகப் படகுகள் சென்றன. மூன்றாவது படகிலிருந்த ஒரு ஆயன் இரு கைகளையும் விரித்து கரை நோக்கி எதையோ சொல்லி சிரித்தான். கரையிலிருந்தவன் அவனை நோக்கி ஒரு பலகைத் துண்டை வீச அது வளைந்து நீரில் விழுந்தது. பாய்மரங்கள் இழுத்துக் கட்டிய கயிறுகள் மேல் கலமோடிகள் தொற்றி நகர்ந்தனர். பாய்களை திசை மாற்றி கட்டினர். கலங்கள் யமுனைக்கு நடுவே சென்று சிற்றுருவம் கொண்டு குளிர்ந்த கரிய நீர்ப்பரப்பில் ஒளிப்புள்ளிகளாக மாறுவதை திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான்.

கதிர் எழுந்து காலை வானம் முகில்வெளியாக ஒளி கொள்கையில் அவர்கள் யமுனையில் நெடுந்தொலைவு சென்றிருந்தனர். முந்தையநாள் சரியாக துயில் கொள்ளாததால் திருஷ்டத்யும்னன் படகுக்குள்ளேயே கவசங்களைக் கழற்றி அருகே வைத்து விரிப்பலகையில் கால் நீட்டி படுத்துக்கொண்டு அக்கணமே அகமழிந்து துயின்றான். "துயில்கிறீர்களா இளவரசே?" என்று கேட்ட சாத்யகி அவன் குறட்டையோசையைக் கேட்டு கைகளைக் கட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனருகில் அமர்ந்து அலைகளை நோக்கிக் கொண்டிருந்த சற்று நேரத்திலேயே அவனும் துயின்று விட்டான்.

அவர்களின் படகு யமுனையைக் கடந்து கங்கையை அடைந்து திரும்பி மேலும் விரைவு கொண்டு ஒரு கட்டத்தில் காற்றில் தன் சிறகுகளை ஒப்படைத்து ஒழுகிச் செல்லும் சிறு பூச்சியென ஆயிற்று. திருஷ்டத்யும்னன் விழித்துக் கொண்டபோது படகின் அமரக்காரன் பார்க்கவன் அவனைக் காத்து அறை வாயிலில் நின்றிருந்தான். பின் மதிய ஆறு நீராவியாக அவர்களை சூழ்ந்திருந்தது. திருஷ்டத்யும்னன் விழித்தபோது படுத்திருந்த பலகைக்கும் அவனுக்கும் நடுவே உடல் வியர்த்து வெம்மை கொண்டிருந்தது. மேலே திறந்திருந்த உடலில் யமுனைக் காற்று குளிர்ந்து புல்லரிப்பை படரவிட்டிருந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளைத்தூக்கி உடல் முறித்தபின் கவசங்களையும் வாளையும் எடுக்கையில் வாசலில் நின்றிருந்த பார்க்கவனை நோக்கினான். பார்க்கவன் தலை வணங்கி "படகு காசியை அணுகிக் கொண்டிருக்கிறது இளவரசே" என்றான். "நாம் எப்போது செல்வோம்" என்றான் திருஷ்டத்யும்னன். "ஒரு பொழுது" என்றான் பார்க்கவன். "இன்று கருநிலவு பன்னிரண்டாவது நாள். இரவு விரைவிலேயெ வந்துவிடும்." திருஷ்டத்யும்னன் யமுனைக்குள் நோக்கியபோது தொலைவில் ஒரு நெற்றுபோல அக்ரூரரின் படகு அலைகளிலாடுவதை கண்டான். "நாம் அவர்களிடமிருந்து அரைநாழிகை தொலைவிலிருக்கிறோம்" என்றான் பார்க்கவன்.

சாத்யகி அவர்கள் பேசுவதைக் கேட்டு விழித்தபடி சிவந்த கண்களுடன் நோக்கி இருந்தான். திருஷ்டத்யும்னன் தலை அசைத்ததும் தலை வணங்கி பார்க்கவன் விலகிச் செல்ல சாத்யகி "அவர்களுக்கு சததன்வாவின் அழைப்பு வந்திருக்கிறதா இளவரசே?" என்றான். "அச்செய்தியை இன்னமும் நமக்கு அக்ரூரர் அளிக்கவில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "இப்போரை அவர் தனக்கென நடத்த விழைகிறார் போலும்" என்று சாத்யகி சிரித்துக்கொண்டே சொன்னான். திருஷ்டத்யும்னன் "வெற்றியை அவர்களிருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டுமே என நான் அஞ்சுகிறேன்" என்றான். எழுந்து கைதூக்கி சோம்பல் முறித்தபடி அக்ரூரரின் கலத்தை நோக்கிய சாத்யகி "அங்கிருந்து கிளம்புகையிலேயே நாடகமொன்றினூடாக கிருதவர்மன் படைத்தலைவனாகவும் அக்ரூரர் அரசு சூழும் பேரமைச்சராகவும் ஆகிவிட்டனர். இப்போரில் அவர்கள் அதை முழுதும் நடிப்பார்கள்" என்றான்.

திருஷ்டத்யும்னன் கூர்ந்து நோக்கி புன்னகையுடன் "அவர்கள் மேல் உமக்கிருக்கும் சிறு ஏளனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றான். சாத்யகி "ஒவ்வொரு நாளும் தன்னை நிறுவிக்கொள்ள ஏன் ஒருவன் முயல வேண்டுமென்பதை எத்தனை சிந்தித்தும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை பாஞ்சாலரே. அக்ரூரர் நானறிந்த நாள் முதல் ஒவ்வொரு கணமும் இளைய யாதவரின் கண்முன் தன்னை நிறுவிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறார். முழு உடலாலும் மண்ணுக்குள் தன்னைச் செலுத்த முயலும் மண்புழு அவர் என்று ஒரு முறை எனக்கு தோன்றியிருக்கிறது" என்றான். வாய்விட்டுச் சிரித்து "நல்ல உவமை, போதிய வெறுப்பு இல்லாமல் இது உருவாகாது" என்றான் திருஷ்டத்யும்னன்.

அவர்கள் முகம்கழுவி அமர்ந்தபோது உணவு வந்தது. படகின் அகல்முகப்பில் வடங்களில் கால்தளரவிட்டு அமர்ந்து உணவுண்டனர். விரைவிலேயே இருட்டத்தொடங்கியது. யமுனைப் பெருக்கு முழுக்க விளக்கொளிக் குவைகள் என கலங்கள் ஒழுகிச் சென்றன. கடந்து சென்ற சிறுபடகுகளில் இருந்து சூதர் பாடல்கள் சிந்திச் சென்ற திவலைகள் அவர்களை அடைந்தன. கங்கை மீன் கலந்த உணவு மீண்டும் துயிலை நோக்கி தள்ளியது. ஈரக்காற்று குளிர்ந்த அலைகளாக அறைந்து அறைந்து சென்ற அகல் முகப்பு துயில்க துயில்க என்றது. திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளை முறித்தபின் "படகுப் பயணம் என்னை சோர்வுறச்செய்கிறது" என்றான். "இத்தனை தொலைவு குதிரையில் கடப்பதைக் கூட விழைவேன். படகில் என் தசைகள் அலுப்புறுகின்றன. துயில்வதையன்றி படகில் பிறிதொன்றையும் என்னால் செய்ய முடியவில்லை."

"போருக்கு முன் படை வீரர்கள் துயில்வதுண்டல்லவா?" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சிரித்து "இதை ஒரு போர் என்று எண்ணியிருக்கிறீர்களா?" என்றான். சாத்யகி "போரென்று நீங்கள்தானே சொன்னீர்கள்?" என்றான். "ஆம், போர்தான். ஆனால் உளப்பூசலுக்கு அப்பால் எதுவும் நிகழுமென நான் எண்ணவில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்து காத்திருந்தான். "சததன்வா அவர்களிருவரையும் முழுக்க நம்புவானென்று எண்ணுகிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன். "ஏனெனில் அவன் பெருவிழைவு கொண்டிருக்கிறான். யாதவர் சியமந்தக மணியின் பொருட்டு தன்னை தலைவனாக ஏற்று சூழ்வதை கற்பனை செய்கிறான். தானுமொரு இளைய யாதவனாக பிறிதொரு துவாரகை அமைத்து கொடி பறக்க அரியணை அமர்வதை ஒவ்வொரு நாளும் நினைக்கிறான்."

"ஒரு முறை நடித்த நடிப்பு உண்மையாகிறது. இன்று உள் ஆழத்தில் அவன் முன்னரே இளைய யாதவராகி விட்டிருக்கிறான். இவர்கள் தன்னை நாடி வருவது தன்னுடைய தலைமை ஆற்றலால் என்று எண்ணிக் கொள்வான். யாதவரே, பெருவிழைவு கொள்பவன் விழைவுக்கேற்ப புறவாழ்க்கையை தன்னையறியாமலேயே மாற்றி எண்ணுகிறான். எனவே மிக எளிதாக சததன்வாவின் நகருக்குள் இவர்கள் நுழைவார்கள். அங்கு போதிய காவலிருக்காது. நானறிந்தவரை இன்னும் ஒரு படை நகராக அந்நகர் திரளவில்லை. அவ்வெளிய ஆயர்குடியை முழுப் படைக்கலன் கொண்ட இந்நூற்றுவர் மிக எளிதில் வென்று மணியை கைக்கொண்டு மீள முடியும். பத்து பேருக்கு மேல் படுகளம் விழ வாய்ப்பில்லை" என திருஷ்டத்யும்னன் சொன்னான்.

மறு நாள் காலை புலரும்போது அக்ரூரரின் பறவைச் செய்தி அவர்களை அடைந்தது. சததன்வாவின் அழைப்பு வந்திருப்பதாகவும் கிருஷ்ணவபுஸுக்குள் அன்று முன் மதியம் அவர்கள் நுழையவிருப்பதாகவும் அக்ரூரர் செய்தி அனுப்பி இருந்தார். அவர்களின் படகுகள் காசியை கங்கை வழியாக  கடந்து சென்று கொண்டிருந்தன. காசியின் படைவீரர்கள் எல்லையை படகுகள் அடைந்ததும் சிறு காவல்படகுகளில் வந்து கீழே நின்றபடி அவர்களின் இலச்சினையை கோரினர். படகுகளை நடத்திய வணிகன் முன்னால் சென்று தன் கொடியைக் காட்டி "மதுராவின் நெய்ப்படகுகள் காவலரே. காசி துறைமுகத்திற்கு செல்லுகிறோம்" என்றபோது "சுங்கமுத்திரை காட்டுங்கள்" என்றான் காவலர்தலைவன். சுங்கமுத்திரையைக் காட்டி "இன்று நெய் விலை என்ன?" என்றான் வணிகன். "கலம் மூன்றுபொன் என்றார்கள்..." என்ற காவலன் "நன்று சூழ்க!" என விலகிச்செல்ல கையசைத்தான்.

சாத்யகி "ஒருவனாவது படகுக்கு மேல் வந்து நோக்குவான் என்று எண்ணினேன்" என்றான். திருஷ்டத்யும்னன் "கங்கையில் செல்லும் அனைத்துப் படகுகளையும் நோக்குவது இயல்வதல்ல யாதவரே" என்றான். "ஆயினும் இத்தருணத்தில் நோக்கியாக வேண்டுமல்லவா? போர் கனிந்திருக்கிறது. துவாரகையோ அஸ்தினபுரியோ சியமந்தகத்தைத் தேடி காசிக்குள் நுழையலாமல்லவா?" திருஷ்டத்யும்னன் சிரித்து "இப்போர் உமக்கு ஒரு முதன்மை நிகழ்வாக இருக்கலாம் .சியமந்தகமோ அதைத் தேடி வரும் துவாரையின் சினமோ காசிமன்னனின் அவையில் கால் நாழிகை நேரம் பேசுவதற்குக்கூட தகுதியற்றதாகவே எண்ணப்படும். சததன்வா அவர்களின் நூறு சிற்றரசர்களில் ஒருவன் என்றே எண்ணப்படுவான்" என்றான். சாத்யகி சில கணங்கள் கங்கையின் நீரலைகளை நோக்கியபடி நின்றான். பின்பு "இருக்கலாம். எனக்கு இது முதல் போர். இதை எளிதில் என்னால் கடக்க முடியாதென்றே தோன்றுகிறது" என்றான்.

காசியின் துறைமுகத்தை அவர்களின் படகுகள் கடந்து சென்றன. புடவிக்கிறைவனின் ஆலய கோபுரம் பன்னிரு அடுக்குகளாக பெரிய படிக்கட்டுகளுக்கு மேல் எழுந்து தெரிந்தது. அதிலிருந்த ஒற்றை அணையா விளக்கு மலரிதழ் போல விழிமயக்கு காட்டியது. படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் மக்களால் வண்ண நீரலைகள் அங்கே நெளிவது போல தோன்றின. பகலில் மணிகர்ணிகை தேவியின் கொடி கொண்ட படிக்கட்டில் சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. சிற்றகல்களென தொலை தூரத்தில் சிதைநெருப்பு தெரிந்தது. செம்மலர் பூத்த புதர் போல அரிச்சந்திர ஆலயம் அமைந்த படிக்கட்டில் மேலும் சிதைகள் எரிந்தன. "சிதைகளைப் பார்ப்பது நல்ல குறி" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பி நோக்க "காசியின் புடவிக்கிறைவனின் வேள்விக்குளமென இவை எண்ணப்படுகின்றன. இப்பெரு நகரின் மிகச்சிறந்த மங்கலக் காட்சியென்பது சிதைகளே" என்றான்.

கடந்து சென்ற வணிகப்படகின் வணிகர்கள் அகல் விளிம்பில் எழுந்து நின்று சிதைகளை நோக்கி கை கூப்புவதை சாத்யகி கண்டான் . முன்னால் சென்ற அக்ரூரரின் படகை நோக்கியபடி "இது நம் எல்லை" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அக்ரூரரும் கிருதவர்மனும் தங்கள் படைகளுடன் சததன்வாவின் எல்லைக்குள் நுழைவதை அவர்கள் தொலைவிலிருந்து நோக்கினர். தொலைவில் தெரிந்த சிறிய துறைமேடையிலிருந்து ஒற்றைப்பாய் விரித்து சிட்டுகள் போல் வந்த சததன்வாவின் இரண்டு சிறு படகுகளில் இருந்த வீரர்கள் அக்ரூரரின் படகை அணுகி கணை வடத்தை வீசி தங்களை இணைத்துக் கொண்டு கீழேஇறக்கப்பட்ட நூலேணிகள் வழியாக ஏறி பெரும் படகை அடைந்தனர். முதலில் வந்த படைத்தலைவனை அக்ரூரரும் கிருதவர்மனும் தழுவிக் கொள்வதை அவர்கள் நோக்கினர். அக்ரூரர் அவர்களிடம் முகமன் பேசுவதை தொலைவிலிருந்தே காண முடிந்தது.

பின்னர் அக்ரூரின் படகின் முகப்பில் சததன்வாவின் கொடி மேலேறியதை கண்டனர். முகப்பில் தோன்றிய ஒரு வீரன் கொம்பும் முழவும் துணை சேர்க்க கருடக் கொடியை ஆட்டினான். தொலைவில் படகுத்துறையில் கிருஷ்ணவபுஸின் கொடி அசைந்தது. அக்ரூரரின் படகு திரும்பி அப்படகுத்துறையை நோக்கி சென்றது. திருஷ்டத்யும்னன் "இன்னும் மூன்று நாழிகைக்குள் அவர்கள் சியமந்தகத்துடன் இவ்வெல்லை கடந்து நம்மருகே வரவேண்டும். அவர்கள் கங்கை பெரும் பெருக்கை அடைவது வரை நாம் இங்கு நிற்போம். சததன்வாவின் குருதிக்கு நிகர் கொள்ள அவன் படைகள் தொடரும் என்றால் அதை தடுப்போம்" என்றான்.

சாத்யகி "என் கால்கள் நிலைகொள்ளவில்லை பாஞ்சாலரே" என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். "இக்கணம் போல என் உடலும் உள்ளமும் எழுச்சி கொண்ட பிறிதொரு தருணம் அமைந்ததில்லை. இப்போரில் இளைய யாதவருக்கென நான் உயிர் துறப்பேனென்றால் நான் விழையும் வீடு பேறு அதுவே" என்றான். திருஷ்டத்யும்னன் "போருக்கு முன் தான் எப்படி இறக்கவேண்டுமென்று எண்ணாத வீரன் எவனுமில்லை. இறக்கலாகாது என்று விழையும் உயிரின் நடிப்புகளில் ஒன்று அது" என்றான். சாத்யகி சினத்துடன் திரும்பி "இது நடிப்பு அல்ல. இளைய யாதவருக்காக உயிரை எண்ணி வைத்தவன் நான். இங்குள்ள அத்தனை வீரர்களும் தங்கள் உயிரெண்ணி வைத்தவர்களே" என்றான்.

"அவர்கள் உயிரை இழக்கவும் செய்வார்கள் ஆனால் உயிர் கொள்ளும் விழைவென்பது இக்குலக்குறிகளால் கடமைகளால் குடிச்சின்னங்களால் ஆனதல்ல" என்றான் திருஷ்டத்யும்னன். "உயிரை ஆள்வது இப்புடவியை ஆளும் பெருந்தெய்வங்களில் ஒன்று. அதற்கு இவை ஒரு பொருட்டல்ல." சாத்யகி அவனை சினத்துடன் நோக்கியபின் திரும்பி படகின் அமரமுனையை அடைந்து சததன்வாவின் தொலைதூரத்து படகுத்துறையை அக்ரூரரின் படகு சென்றடைவதை நோக்கி நின்றான்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 4

கிருஷ்ணவபுஸின் அருகே கங்கைக்குள் முன்னும்பின்னும் சென்றுகொண்டிருந்த படகில் நாள் முழுக்க காத்திருந்த போது நேரத்தின் பெரும்பகுதியை திருஷ்டத்யும்னன் துயிலிலேயே கழித்தான். படகின் மெல்லிய அசைவு துயிலுக்கு உகந்ததாக இருந்தது. படுத்ததுமே உடல் எடைகொள்வதுபோல துயில் வந்து படர்ந்து விரிப்பலகைமேல் அவனை வைத்து அழுத்தியது. அவன் குறட்டைவிட்டு துயில அருகே சாத்யகி ஒரு கணமும் நிலை கொள்ளாது உள்ளறைக்கும் அகல்முற்றத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தான். பலமுறை திருஷ்டத்யும்னன் படுத்திருந்த பலகை மஞ்சத்தின் விளிம்பில் வந்தமர்ந்து தொண்டை செருமி ஒலியெழுப்பினான். மெல்ல புரண்டுபடுத்து விழி திறந்து "செய்தி வந்துள்ளதா?" என்றான் திருஷ்டத்யும்னன். இல்லை என்று தலையசைத்துவிட்டு மீண்டும் அகல் முற்றத்திற்கே சென்று தொலைவில் தெரிந்த சததன்வாவின் நகரை நோக்கி நின்றான் சாத்யகி.

அந்தி சாயும்வரை திருஷ்டத்யும்னன் படகுக்குள்ளேயே படுத்துத் துயின்றான். பின்பு எழுந்து படகிற்குள்ளேயே நீராடி உடைமாற்றி கவசங்களையும் வாளையும் அணிந்து கொண்டு அகல் முற்றத்திற்கு வந்தபோது முழு கவசங்களுடன் இரும்புச்சிலை போல மறுமுனையில் நின்றிருந்த சாத்யகியைக் கண்டு புன்னகைத்தான். பாய் மர வடத்தில் உடல் சாய்த்து "பதற்றத்துடன் காத்திருப்பதனால் செய்தி விரைந்து வரப்போவதில்லை யாதவரே" என்றான். சாத்யகி திரும்பி நோக்கி விட்டு "ஏதோ பிழையுள்ளது பாஞ்சாலரே. ஒரு பகல் கடந்துவிட்டது. அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை" என்றான். அமர்ந்தபடி "சததன்வா அவர்களுக்கு விருந்தளிக்கிறான் என்று எண்ணுகிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன்.

சினத்துடன் "அவர்கள் சென்றது விருந்துண்ண அல்ல" என்று உரக்கச் சொன்ன சாத்யகி உடனே குரலை தாழ்த்தி நோக்கை விலக்கி "சென்ற செயலை முடித்துத் திரும்ப இரண்டு நாழிகைகள் கூட தேவையில்லை" என்றான். புன்னகையுடன் "ஒருவேளை சியமந்தகமணி எங்கிருக்கிறது என்று அவர்களால் அறிய முடியாமல் இருக்கலாம். அதை அறியும் பொருட்டு விருந்து நீடிக்கலாம்" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி "அவ்வண்ணமெனில் அச்செய்தியை உடனே நமக்கு அறிவிக்கலாம் அல்லவா?" என்றான். திருஷ்டத்யும்னன் மேலும் சிரித்தபடி "அறிவிக்க முடியா நிலையில் அவர்கள் இருக்கலாம். விருந்துகள் எப்போதும் பல நூறு விழிகளால் சூழப்பட்டவை" என்றான். சாத்யகி "இல்லை, அதுவல்ல. என் உள்ளுணர்வு சொல்கிறது, பிழையென ஏதோ நிகழ்ந்துள்ளது. அவர்கள் சததன்வாவிடம் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நகருள் சென்று அவர்களை காக்க வேண்டியிருக்கும்" என்றான்.

"அத்துமீற வேண்டியதில்லை. பொறுத்திருக்கும் பொருட்டு நாம் இங்கு வந்திருக்கிறோம்" என்றான் திருஷ்டத்யும்னன். "எந்தப் போரிலும் காத்திருத்தல் என்பதே முதன்மையான தேவை. வேட்டை விலங்குகளிடமிருந்து போர் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதுவே என்பார் என் ஆசிரியர்." சாத்யகி தத்தளிக்கும் உடலசைவுடன் அவன் அருகே வந்தான். "நான் சொல்லாட விழையவில்லை பாஞ்சாலரே. ஏதோ பிழை நிகழ்ந்திருக்கிறது. இங்கிருந்து சததன்வாவால் அவர்கள் உள்ளழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒரு பகல் முழுக்க அங்கு செய்ய அவர்களுக்கு என்ன இருக்கிறது? விருந்துண்டிருக்கலாம். ஆனால் பகல் முழுக்க உண்ணும் விருந்தென ஒன்றுண்டா என்ன?"

திருஷ்டத்யும்னன் "காத்திருக்கையில் நம் உள்ளம் பல்லாயிரம் வினாக்களால் ஆனதாக மாறுகிறது. ஒவ்வொரு விடையையும் மேலும் வினாக்களாக மாற்றிக்கொள்கிறோம். இந்த ஆடலை நானும் நன்கு ஆடி சலித்திருக்கிறேன். காத்திருப்பதற்கான காலத்தை அது நிறைக்கிறது என்றால் ஒரு ஆடலாக அதை கொள்வதில் பிழையில்லை. ஆனாலும் காத்திருக்கத்தான் வேண்டும்" என்றவன் "நான் உணவருந்தச் செல்கிறேன். வருகிறீரா?" என எழுந்தான். சாத்யகி "என்னால் இப்போது உணவருந்த முடியாது" என்றான். "பகலெல்லாம் என்ன உணவு உண்டீர்?" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பிக்கொண்டான். "உண்ணவில்லையா?" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி இல்லையென தலையசைத்தான். திருஷ்டத்யும்னன் அருகே சென்று அவன் தோளைத் தட்டி "வருக! உணவு உண்பதற்கான நேரம் இது" என்றான்.

சாத்யகி "என் உள்ளம் நிலையழிந்திருக்கிறது பாஞ்சாலரே" என்றான். "நீர் எண்ணுவது போல ஒரு போர் தொடங்கும் என்றால் அதற்கு முன் நாம் முழுதுணவு உண்டிருக்க வேண்டும், வருக!" என்று அவன் தோளைச் சுற்றி கையிட்டு இழுத்துச் சென்றான். அறைக்குள் அமர்ந்து சுட்ட மீனும், கோதுமை அப்பங்களும், பருப்புக்கூழும், புளித்த அரிசிக்கள்ளும் கொண்ட உணவை உண்டனர். "என்னால் விழுங்க முடியவில்லை" என்றான் சாத்யகி. "கள்ளுடன் கலந்து உண்ணும். இளம்கள்ளின் மயக்கு உணவை எரிய வைக்கும்" என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி கையில் அப்பத்துடன் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கி "தூதன் எவனோ நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது" என்றான். "துறையிலிருந்து பாய்விரித்து ஒரு படகு வருகிறது. வணிகப்படகுகள் அத்தனை விரைவாக வருவதில்லை." "வருவானென்றால் நன்று. நாம் உண்பதற்கான அடிப்படை அமைகிறது" என்றான் திருஷ்டத்யும்னன். "அவனை துரத்திவரக்கூடும் அவர்கள்..." என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "சிறந்த தூதன் என்றால் அவன் எப்படியும் இங்கு வந்து சேர்வான். வந்தபின் அவனிடம் செய்தி தேர்வோம். வரவில்லை என்றால் அதன்பின் சிந்திப்போம். இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீர் அமர்ந்து உண்ணும்" என்றான்.

சாத்யகி அப்பத்தைக் கடித்து மென்று கள்குடுவையை எடுத்து அண்ணாந்து மிடறு ஒலிகளுடன் குடித்தான். ஏப்பக் குமிழியுடன் அதை கீழே வைத்து "என்ன நிகழ்கிறது எனக்குள் என்று தெரியவில்லை பாஞ்சாலரே. இத்தனை நிலையழிதல் இயல்பல்ல என்றும் உணர்கிறேன்" என்றான். "முதல் போர் எப்போதும் எண்ணங்களுக்குள் நிகழ்வதே" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். "புண்பட்டு படுத்திருக்கையில் நிகழ்ந்த போரை நூறாயிரம் முறை எனக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்தேன் யாதவரே. ஒவ்வொரு செயலாக, பின் ஒவ்வொரு அசைவாக, பின் ஒவ்வொரு விழியொளியாக அப்போரை நான் கண்டேன். போரின் உள்ளடுக்குகள் ஒவ்வொன்றும் தெளிந்து வந்தன. நான் கண்டது அச்சமும் உயிர் விழைவும் கலந்த துடிப்பை மட்டுமே. பின்னர் அவற்றுக்கு அடியில் இருந்து குருதிவெறி கொண்ட கொடுந்தெய்வம் ஒன்று விழிகள் மின்ன எழுந்து வந்தது. அனைத்தையும் அது கையில் எடுத்துக்கொண்டது. இலக்குகளும் இலட்சியங்களும் அறங்களும் எதுவும் அதன் முன் நிற்கவில்லை."

சிறிய விரைவுப் படகு புடைத்து எழுந்த ஒற்றைப் பாயுடன் வர அதிலிருந்தவன் கைகளை ஆட்டிக்கொண்டிருந்தான். சாத்யகி "தூதன்! நான் எண்ணியது போலவே தூதன்தான் வந்துகொண்டிருக்கின்றான்" என்றான். திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளை நீர்க்கலத்தில் கழுவி மரவுரியால் துடைத்தபடி சீர் நடையுடன் வெளியே வந்து கங்கை நீர்ப்பரப்பை கிழித்தபடி அணுகிக்கொண்டிருந்த சிறு படகை நோக்கினான். கை வீசும் படகோட்டியைக் கண்டு "யாதவரே, அவனை அடையாளம் காண முடிகிறதா?" என்றான். சாத்யகி "இல்லை. ஆனால் மதுராவின் வீரன் என்றால் இப்படகின் கலக்காரர் அறிவர்" என்றான். கயிற்றைப் பற்றிப் பாய்ந்து சென்று அமரமுனையில் நின்ற முதற் கலக்காரனிடம் "அத்தூதனைத் தெரிகிறதா?" என்றான். அவன் விழி கூர்ந்து உடனே துடிப்படைந்து "அவன் சக்கரன். மதுராவின் முதன்மை ஒற்றன்" என்றான்.

மேலும் அருகே சென்று உரக்க "நூற்றுவருடன் அவன் சென்றானா?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம் இளவரசே" என்றான் அமரக்காரன். சாத்யகி கலத்தின் விளிம்புப் பலகையைப் பற்றியபடி குனிந்து நோக்கினான். அவன் தசைகள் இறுகி விதிர்ப்பதை உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். அருகே சென்று அவன் தோளில் கை வைத்து "பதற்றம் கொள்ள வேண்டாம் யாதவரே. அவன் தீய செய்தியுடன் வருகிறான் என்பதில் ஐயமில்லை" என்றான். சாத்யகி திரும்பி "எப்படி சொல்கிறீர்?" என்றான். "இத்தனை பிந்தி வருவதும் சரி, ஒற்றை வீரனாக வந்து செய்தி சொல்லவிருப்பதும் சரி, அச்செய்தி தீயதென்பதையே காட்டுகின்றன. அதை நாம் உளம் அலைப்புற நின்று கேட்பதில் பயனில்லை. நம் எண்ணங்களை முன்னரே அமையச் செய்வோம். அலையழிந்த சித்தத்துடன் அவன் சொல்வதை கேட்போம். கேட்டு அனைத்துச் சொற்களையும் மும்முறை நம்முள் ஓட்டி அதன் பின் ஆவதென்ன என்று முடிவெடுப்போம்" என்றான்.

சிறு படகு அருகணைய சாத்யகி உடல் தளர்ந்து "என்னால் நிற்க முடியவில்லை பாஞ்சாலரே" என்றான். "நடந்ததென்ன என்று இக்கணம் முழுதறிகிறேன். அவர்கள் சிறைப்பட்டுவிட்டனர். கொல்லப்பட்டிருக்கவும் கூடும்." திருஷ்டத்யும்னன் கைகளை விளிம்பில் ஊன்றி படகை நோக்கியபடி பேசாமல் நின்றான். "இல்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "ஏனெனில் நாம் அனைவரும் ஒரே விழைவால் இணைக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் அந்த மணியை பார்த்துவிட்டார்கள். அது அவர்களை வென்றுவிட்டது." சாத்யகி திகைத்து நோக்க திருஷ்டத்யும்னன் கசப்புடன் புன்னகைத்து "ஆம், நிகழ்வது அது ஒன்றுதான்" என்றான்.

அலைகளில் ஏறி இறங்கி அம்பு நிழல் நீரில் செல்வது போல் அருகணைந்தது சிறு படகு. அதிலிருந்த ஒற்றன் படகிலிருந்த அமரக்காரனை நோக்கி தன் மந்தணக் கை அசைவுகளைக் காட்டியதும் அவர்களின் படகிலிருந்து விசையுடன் ஏவப்பட்ட தொடுகயிறு நீரில் நிழல் நெளிந்து நீள பறந்து சென்று சிறுபடகைத் தொட்டு வளைந்து விழுந்தது. அதைப் பிடித்து தன் அமரத்தில் கட்டிக்கொண்டான் ஒற்றன். மூன்று கலக்காரர்களால் சுழற்றப்பட்ட சக்கரத்துடன் இணைக்கப்பட்ட கயிறு சிறுபடகை விரைந்து தன்னருகே இழுத்தது. அன்னைமடி முட்டும் பன்றிக்குட்டியென வந்த ஒற்றனின் படகு கலத்தின் விலாவைத் தொட்டதும் அவன் கயிற்றின் முடிச்சுகள் வழியாக கால் வைத்து விரைந்து தொற்றி ஏறி உள்ளே வந்து கலத்திற்குள் குதித்தான்.

சாத்யகி அவன் ஏறிக்கொண்டிருக்கையிலேயே படகின் விளிம்பைப் பற்றியபடி குனிந்து "என்ன நடந்தது?" என்றான். திருஷ்டத்யும்னன் "பதற்றம் கொள்ளாதீர் யாதவரே. நாம் அவனிடம் தனியாகவே பேச வேண்டும்" என்றபின் படகின் அறைக்குள் சென்றான். சாத்யகி திரும்பி நோக்கியபடியே வந்து அவனருகே பீடத்தில் பதற்றத்துடன் பாதி அமர்ந்து கொண்டான். ஒற்றன் உள்ளே வந்து தலைவணங்கி முகமன் கூட சொல்லாமல் "விரும்பத்தகாத செய்திகள் இளவரசே" என்றான். "கூறுக!" என்றான் திருஷ்டத்யும்னன். "நான் யாதவ அரசியால் ஆற்றுப்படுத்தப்பட்டவன். கிருதவர்மரையும் அக்ரூரரையும் கூர்நோக்கும் பொருட்டு என்னைப் பணித்திருந்தார்கள் அரசி" என்றான் ஒற்றன். சாத்யகி பதற்றத்துடன் இருகைகளையும் மார்பில் கட்டிக்கொண்டான்.

"துவாரகையிலிருந்து கிளம்பும் போதே அவர்கள் இருவரையும் என் அகவிழி ஒன்றால் உற்றுநோக்கிக்கொண்டிருந்தேன். இருவரும் உளம்கிளர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு கணமும் சததன்வாவை வென்று அம்மணியை கொண்டு அரசியின் காலடியில் வைப்பது குறித்தே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அடைந்த உணர்வுகளும் எழுச்சிகளும் உண்மையானவை என்றே எண்ணினேன். மதுராவிற்கு வந்து படையணி நிறைவிக்கச் செய்கையிலும் படைக்கலமும் கவசமும் கொண்டு எழுகையிலும் அவர்கள் உண்மையாக இருப்பதாகவே தோன்றியது. இளவரசே, அப்படகுகளில் ஏறி அலைமேல் செல்லும்போதும் ஒருகணமும் அவர்கள் உள்ளம் ஐயமோ அசைவோ கொள்ளவில்லை என்பதை நான் உறுதியாக சொல்வேன். ஏனென்றால் ஒவ்வொரு கணமும் நான் அவர்களுடன் இருந்தேன்."

"இங்கு காசியைக் கடந்து சததன்வாவின் அழைப்பை அடைந்து கிருஷ்ணவபுஸின் எல்லைக்குள் நுழையும்போது கூட அவர்கள் உள்ளே சென்றதுமே அவரது தலையை வெட்டி குருதி கொள்வதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். கிருதவர்மரின் கைகள் பொறுமையழிந்து துடிப்பதை நான் கண்டேன். அக்ரூரர் அடிக்கடி 'இளையவனே, மிகைவிரைவு கொள்ளாதே. தருணம் நோக்கியே அவன் தலை கொள்ள வேண்டும்' என்று அவரை ஆற்றுப்படுத்துவதை கண்டேன். சததன்வாவின் தலையை தானே கொய்ய வேண்டுமென்று அக்ரூரர் உறுதி கொண்டிருந்தார். அவ்வாய்ப்பை தனக்களிக்கும்படி பற்பல இன்சொற்களால் மீளமீள கிருதவர்மர் கேட்டுக்கொண்டிருந்தார். அக்ரூரர் அவர் யாதவ அரசிக்கு வாக்களித்துவிட்டதாக சொன்னார்."

"கிருதவர்மர் தன் ஆடைக்குள் யாதவர்களின் கவர்கத்தி ஒன்றை மறைத்திருந்தார் என்பதை நான் அறிந்தேன். சியமந்தகமணியுடன் சததன்வாவைக் காணும் தருணத்திலேயே அவரை தானே கொன்றுவிடவேண்டும் என அவர் திட்டமிட்டிருந்தார். அவர்களின் படகு கிருஷ்ணவபுஸின் துறையை அடைந்தபோது சததன்வாவின் கொடியசைவைக் கண்டதுமே அக்ரூரர் எழுந்து கலமுகப்பிற்குச் சென்று இடையில் கை வைத்து நோக்கி நின்றார். அவர் நெற்றி சுருங்குவதை, விழிகளில் கடுமை எழுவதைக் கண்டதுமே அவர்தான் சததன்வாவை கொல்லப்போகிறார் என்று உணர்ந்தேன். கிருதவர்மர் அவரை நுட்பமாக திரும்பி நோக்கியபின் என்னிடம் 'சததன்வாவை அக்ரூரர் கொல்வார் என்றால் மணியை அரசியிடம் கொடுக்கும் வாய்ப்பை எனக்கு அளிக்கும்படி அவரிடம் சொல்' என்றார். நான் புன்னகையுடன் 'இது நீங்கள் இருவரும் சேர்ந்து பெற்ற வெற்றியென்றே இருக்கட்டும் யாதவரே' என்றேன்."

"கிருதவர்மர் தலையசைத்து 'இல்லை. அக்ரூரர் எனக்கென எதையும் விடப்போவதில்லை' என்றார். சததன்வாவின் கொடியுடன் அவர்களின் படகுகள் அணுகி வந்தன. அக்ரூரர் திரும்பி கிருதவர்மரை அணுகி 'இளையோனே, நமது முகங்களில் தெரியும் கடுமை அவனை எச்சரிக்கக்கூடும். நம் முகங்கள் சற்று அமைதியின்மை கொண்டிருக்கட்டும். விழிகளில் நட்பு தெரியட்டும்' என்றார். கிருதவர்மர் 'நாம் ஷத்ரியர் போல நடிக்கத் தெரிந்தவர்கள் அல்ல. என் தலைவனுக்கு வஞ்சம் செய்தவன் அவன். என் தலைவியின் தந்தையைக்கொன்றவன். நடிப்புக்காகக்கூட அவனிடம் நட்புகொள்ள என்னால் இயலாது' என்றார்."

"அக்ரூரர் 'இது நடிப்பல்ல. இதுவும் ஒருவகை போர் என்று கொள்வோம். ஒன்று செய்க! சததன்வாவும் யாதவனே. முன்பு நாம் யாதவர் மன்றுகளில் சென்று அவனுடன் போர்விளையாடி இருக்கிறோம். அவனை என் மடியில் அமர்த்தி நான் புரவி ஓர்ந்து மலைச்சரிவில் சென்றிருக்கிறேன். அந்த நாட்களை நினைவு கூர்வோம். சியமந்தகத்தை இக்கணம் மறப்போம். அவனிடம் நட்பு கூடவே வந்துள்ளோம் என்று எண்ணம் கொள்வோம். அவ்வெண்ணம் நம் உள்ளத்தில் நிறைகையில் நம் முகம் மலரும். நம் கண்களில் உண்மையான நட்பை அவன் காண்பான். அதுவே அவனை நம்ப வைக்கும்' என்றார்."

"எரிச்சலுடன் 'ஏன் நம்ப வேண்டும்?' என்றார் கிருதவர்மர். 'மூடா, சியமந்தகம் எங்கிருக்கிறது என்று சொல்ல வேண்டாமா? அவன் நெஞ்சில் அது இருந்ததென்றால் அக்கணமே அவனை கொல்வோம். இல்லையெனில் அவன் அதை சொல்வதுவரை காத்திருக்க வேண்டியிருக்கும். அவன் நம்மை நம்பாமல் அதை சொல்லப்போவதில்லை' என்றார் அக்ரூரர். நூலேணிகளில் இறங்கி சததன்வாவின் படகுகளில் ஏறி கரை அணையும் போது இருவரும் தங்களுக்குள் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் கரை நோக்கி அமர்ந்திருந்தனர். நான் என் படைக்கலங்களுடன் காவலன் போல் அருகில் நின்றேன். அக்ரூரர் என்னிடம் 'இளமையில் பலமுறை கன்று பொருது விழாவிற்காக நான் கூர்மபுரிக்கு சென்றிருக்கிறேன். அன்று சததன்வா மிக இளையவன். விழைவும் விரைவும் கூடிய உள்ளம் கொண்டவன். யாதவர்களில் பெரும் வீரர்களில் ஒருவனாக வளர்வான் என்று அன்றே குலமூத்தார் சொன்னார்கள். மன்று எழுந்தால் கன்று கொளாது திரும்பாதவன் என்று அவனை இளையோர் கொண்டாடினர்' என்றார்."

"கிருதவர்மர் அப்போது என்ன பேசவேண்டுமென ஒரு தொடக்கத்தை அடைந்து என்னிடம் திரும்பி 'எங்கள் மன்றுக்கு வந்து மூன்றுமுறை கன்று கொண்டு சென்றிருக்கிறான். இருமுறை நானும் அவனும் தோள் பொருதி களம் நின்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவனே வென்றிருக்கிறான்' என்றார். 'அந்தகக்குலத்தில் பெண் கொள்ள அவன் விழைந்தது இயல்பே' என்றார் அக்ரூரர். 'யமுனைக்கரையில் இருந்து விலகி குடியமர்ந்த யாதவரில் அந்தகக் குலம் முதன்மையானது. அந்தகர்களில் அவனே மாவீரன். அந்தகக்குலத்து திருமகள் அவனுக்குரியவள் என்றே அனைவரும் இளமைமுதல் சொல்லி வந்தனர்' என்றார். பின்னர் தலையைத்திருப்பி 'அவள் திருமகள் என்பதனாலேயே அனைவராலும் விரும்பப்பட்டவள்' என்று தனக்கென சொல்லிக்கொண்டார்."

"கிருதவர்மர் 'சததன்வா இளைய யாதவரை உளமுவந்து ஏற்றிருக்கலாம். யாதவகுலம் அவனால் பெருமை கொண்டிருக்கும்' என்றார். 'பெண் பொருட்டும் நிலம் பொருட்டும் பூசல் கொண்டவர்கள் ஒருபோதும் இணைந்ததில்லை' என்று நான் சொன்னேன். 'பொன்னுக்கும் மண்ணுக்கும் அப்பால் உள்ளது புகழ். குலப் பாணர் நாவில் நின்றிருக்கும் வெற்றி. அதை அவனால் உணர முடியவில்லை' என்றார் அக்ரூரர். கிருதவர்மர் 'இனியாவது அவனிடம் அதை சொல்ல முடிந்தால் நன்றே' என்றார். 'இனி அவன் திரும்புவது எங்ஙனம் முடியும்? அவன் செய்த அருங்கொலைகள் யாதவர் குலங்களை உளம்கொதிக்க வைத்திருக்கிறது. சத்ராஜித்தின் குருதி அவன் கையில் இருக்கிறது' என்றார் அக்ரூரர்."

"கிருதவர்மர் 'ஒருவகையில் நோக்கினால் இரக்கத்திற்கு உரியவன், எளியவன். ஒரு போர்க்களத்தில் படைக்கலம் கொண்டு எதிர்நின்று தலைஅறுந்து விழுந்தான் என்றால் புகழ் கொள்வான். அன்றி ஓடி ஒளிந்து பிடிபட்டு இறப்பான் என்றால் இழிவுலகில் எஞ்சுவான்' என்றார். தலையசைத்து 'அவன் நம் கையால் இறப்பான்' என்று அக்ரூரர் கூறினார். அவர்கள் அச்சொற்களின் ஊடாக மெல்ல மெல்ல சததன்வாவை தங்கள் அருகே இழுத்துக்கொள்வதை கண்டேன். முதலில் இரக்கத்திற்குரியவனாக, பின்னர் இனியவனாக, இறுதியில் ஏற்றவனாக என அப்படகிலேயே அவன் உருமாறிக்கொண்டிருந்தான். துறையணைந்து படியிறங்கி மேடையேறி அங்கே விரித்த கைகளுடன் நின்ற சததன்வாவைக் கண்டதும் இருவர் முகங்களும் மலர்வதை கண்டேன்."

"சததன்வா வெயிலுக்கென சுருங்கிய விழிகளுடன், சற்று இறுகிய உடலுடன் அக்ரூரரையும் கிருதவர்மரையும் நோக்கி நின்றார். அவர்கள் படகுப்பாலத்தில் நடந்து அணுகிய போது ஏதோ ஒரு கணத்தில் அவர்களை புதியதாகக் கண்டறிந்தது போல முகம் மலர்ந்தார். சிறிய உடல்துடிப்புடன் விரைந்து படியிறங்கி அருகே வந்து அக்ரூரரையும் கிருதவர்மரையும் மாறி மாறி தழுவிக்கொண்டு இன்சொல் சொன்னார். 'நெடுநாட்களுக்குப் பின் என் தோள்தோழர்களைக் காணும் நல்வாய்ப்பு கொண்டேன். வருக வருக!' என்று மீண்டும் அணைத்துக்கொண்டார். 'எளியவனின் இச்சிறு நகரம் உங்கள் கால்களால் தொடப்படுவது ஒரு நல்லூழ். இதன்பொருட்டு என் குலமும் மூதாதையரும் உங்களை வணங்கட்டும்' என்றார்."

"அக்ரூரர் 'இளைய யாதவர்களில் ஒருவனாக நீயும் தனியரசும் கொடியும் கொண்டு நிற்கக் காண்பது உவகையளிக்கிறது இளையோனே' என்றார். 'நீ பெருந்தோள்கொண்டவனாக இருக்கிறாய் யாதவனே' என்றார் கிருதவர்மர். மூவரும் மாறிமாறி தோள் தழுவி நகைத்து இன்சொல்லாடி நடந்து சென்று தேரில் ஏறிக்கொள்வதை கண்டேன். இளவரசே, அக்கணம் அங்கு நிகழ்ந்தது நடிப்பல்ல என்று உணர்ந்ததும் என் உடலில் புகுந்த பதற்றத்தை நினைவு கூர்கிறேன். உண்மையான அன்புள்ளவர்கள் உடல்தொட்டிருக்க விழைவார்கள். உள்ளே வஞ்சமோ வருத்தமோ இருந்தால் உடல்தொட முடியாது கைவிலகுவதை காணலாம். கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களின் பகடை ஒன்று மெல்லப் புரண்டதை அறிந்தேன்."

"அதை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. பொய்யென இருந்தாலும் தன்னுள் அதை சொல்லிச் சொல்லி உள்ளத்தைப் புரட்டிக்கொள்ள மானுடரால் முடியுமென்று தோன்றியது. நாளெல்லாம் எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டிருந்தேன். என் அறைக்குச் சென்று இளைப்பாறி உடைமாற்றி அரண்மனைக்குச் சென்றபோது அங்கு சாளரங்கள் திறந்த இளம் கூடத்தின் நடுவே அவர்கள் மூவரும் அமர்ந்து பகடை ஆடுவதைக் கண்டேன். சாளரங்களின் ஒளியில் அவர்கள் முகங்கள் மின்னிக்கொண்டிருந்தன. சததன்வா சொன்ன ஏதோ ஒரு நகையாடலுக்காக இருவரும் நகைத்து முடித்து விழிகளில் அவ்வொளி எஞ்ச என்னை நோக்கி திரும்பினர். நான் தலைவணங்கி கிருதவர்மரிடம் 'இளவரசே, செய்தி ஏதேனும் உண்டா?' என்றேன். அவர் விழிகளில் படைக்கல நுனி தெரிந்து மறைந்தது. கைகளை வீசி 'செய்தி இருந்தால் அழைப்பேன். செல்க!' என்றார்."

சாத்யகி முன்னால் நகர்ந்து "அப்போது சியமந்தகம் எங்கிருந்தது?" என்றான். "சியமந்தகம் அக்ரூரரின் மார்பில் கிடந்தது" என்றான் ஒற்றன். சாத்யகி உரக்க "அக்ரூரரின் மார்பிலா?" என்றான். "ஆம் இளவரசே, அக்ரூரரின் மார்பில்தான்" என்றான் ஒற்றன். சாத்யகி பெருமூச்சுடன் உடல் தளர்ந்தான். திருஷ்டத்யும்னன் அலைகள் ஒளிவிட்ட கங்கைப்பெருக்கை நோக்கி முகம் திருப்பி புன்னகைபுரிந்தான். சாத்யகியின் மூச்சொலிகள் கேட்டன. ஒற்றன் இருமுறை தொண்டையை செருமிக்கொண்டான்.

சாத்யகி மெல்ல "என்னதான் நிகழ்ந்திருக்கும்?" என்றான். "அவர்கள் ஒன்றிணைந்துவிட்டார்கள். இளைய யாதவருக்கு வஞ்சமிழைக்க முடிவுகொண்டுவிட்டார்கள். பிறிதொன்றுமில்லை" என்றான் ஒற்றன். சாத்யகி உரக்க "அது எப்படி? அது நிகழ்வதே அல்ல. அது நிகழ்வதே அல்ல" என்று கூவியபடி எழுந்தான். "அக்ரூரரும் கிருதவர்மருமா? என்ன சொல்கிறீர்?"

"அவ்வண்ணமன்றி பிறிது எவ்வகையிலும் நிகழ்ந்திருக்க வழியில்லை யாதவரே" என்றான் ஒற்றன். "அக்ரூரர் மார்பில் இருந்தது சியமந்தகமா? நீ உறுதியாக அறிவாயா?" என்றான் சாத்யகி. "நான் நூறுமுறை கண்ட மணி அது. ஒருமுறை கண்டாலே நம்மை வெல்லும் அருமணி அது" என்று ஒற்றன் சொன்னான். "அவர்களின் விழிகளை இதற்குள் ஆயிரம் முறை நினைவில் ஓட்டியிருப்பேன். அவர்கள் அவற்றில் இல்லை, அறியாத தெய்வம் ஒன்று குடியேறியிருந்தது."

சாத்யகி நீள்மூச்சுடன் தளர்ந்து "என்ன இது பாஞ்சாலரே?" என்றான். "சததன்வாவின் நெஞ்சில் இருந்து அக்ரூரரின் மார்பிற்கு அது எப்படி சென்றது என்பது எளிதில் ஊய்த்துணரக்கூடியதே. கைக்குழந்தை கைநீட்டித் தாவுவதுபோல அவர்களை நோக்கி அது வந்திருக்கும்" என்று சிரித்தபடி திருஷ்டத்யும்னன் சொன்னான். "ஒற்றர் சொன்னது சரிதான். அதிலுறையும் தெய்வம் ஆற்றல் மிக்கது. எளியமானுடரால் எதிர்கொள்ளப்படமுடியாதது."

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 5

கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம் அமைத்து மூக்கு தாழ்த்தி செவி விரித்து கூர்மயிர் சிலிர்த்து தங்களுக்குள் என உறுமியபடி வருவதாகத் தோன்றியது. சாத்யகி "அனைத்துப் படகுகளிலும் வில்லவர் நிறைந்திருக்கிறார்கள் பாஞ்சாலரே. நம்மால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. திரும்பிவிடுவோம்" என்றான். திருஷ்டத்யும்னன் "பார்ப்போம்" என்று சொல்லி படகின் விளிம்பை அடைந்து இடையில் கைவைத்து கண்களைச் சுருக்கி நோக்கி நின்றான்.

சாத்யகி பதற்றத்துடன் திரும்பி உள்ளே நோக்கி கையசைத்து வீரர்களை எழ ஆணையிட்டுவிட்டு "இளவரசே, நம்மிடம் வெறும் பதினெட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். நம்மால் அவர்களை எதிர்க்கமுடியாது. நாமும் அகப்பட்டுக் கொண்டால் இங்கு நடந்தது என்னவென்று இளைய யாதவரிடம் சொல்லவும் எவரும் இருக்கமாட்டார்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தபடி கண்களை விலக்காமல் நின்றான். நீரலைகள் அவன் முகத்தில் ஒளியாக அசைவதைப் பார்த்தபடி சாத்யகி சில கணங்கள் திகைத்து "நம்மை அவர்கள் பிடித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள் பாஞ்சாலரே. அவர்களுடன் சேர்ந்து நாமும் இளைய யாதவரை வஞ்சித்துவிட்டோமென்றே சொல்வார்கள். அந்தச் சித்திரத்தை உருவாக்கவே சததன்வா முயல்வான். இப்போதே நாம் திரும்பிவிடுவதன்றி உகந்தது பிறிதொன்றுமில்லை" என்றான்.

உள்ளே படைவீரர்கள் விற்களுடன் எழும் கூச்சல்கள் ஒலித்தன. திருஷ்டத்யும்னன் மீசையை இடக்கையால் நீவியபடி திரும்பி சற்றே இதழ் வளைய புன்னகைத்து "ஆம், ஆனால் சற்றேனும் போரிடாமல் நாம் திரும்பினால் எப்படி இளைய யாதவர் முன் சென்று நிற்போம்?" என்றான். சாத்யகி தோள்களை தளரவிட்டு பெருமூச்சுவிட்டு "அதுவும் உண்மை. ஆனால்..." என்றான். "இவர்களிடம் நாம் அகப்பட்டுக்கொள்ளப் போவதில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "நாம் போரிட்டு இவர்களை அழித்துவிட்டுத் திரும்புவோம். அல்லது கங்கையில் இறந்து மிதந்து மதுரா செல்ல நமக்கு முழு உரிமை உள்ளது அல்லவா?" என்றான். சாத்யகி பெருமூச்சுடன் தலையசைத்தபின் "ஆணையிடுங்கள்" என்றான்.

"வீரர்களை எரியம்புடன் எழச்சொல்லும்" என்றான் திருஷ்டத்யும்னன். அணுகிவரும் படகுகளை கூர்ந்து நோக்கியபடி "நம்மிடம் எரியம்பு எய்யும் திறன்கொண்ட ஏழு பேர் மட்டுமே உள்ளனர்" என்றான் சாத்யகி. "ஏழு என்பது மிகப்பெரிய எண்" என்று சிரித்த திருஷ்டத்யும்னன் கிருஷ்ணவபுஸின் படகுகளை நோக்கி "அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால் நாம் வெறும் தனிப்படகு என்று எண்ணுவதுதான். பாரும், அவர்கள் எதிர்த்து நின்றிருக்கும் ஒரு படகை அணுகுகிறார்கள். ஆனால் பாய்களை முழுதாக விரித்து வைத்திருக்கிறார்கள். அதாவது நம்முன் பன்னிரண்டு காய்ந்த வைக்கோல் குவைகள் உள்ளன" என்றான். சாத்யகி புன்னகைத்து "ஆம்" என்றபின் "களத்தில் தங்களிடமுள்ள இந்த உறுதிநிலையை நான் என்று அடைவேன் என ஏங்குகிறேன் பாஞ்சாலரே" என்றான்.

"ஒரு முறை களத்தில் இறந்து மீள்பிறப்பு எடுங்கள். அதன்பின் கால்கள் ஒருபோதும் பதறாது" என்றான் திருஷ்டத்யும்னன். சததன்வாவின் படகுகள் அணுக அணுக அவற்றின் அரை வட்டச் சூழ்கை வீசப்பட்ட வலை போல விரிந்து அகன்றது. முதலில் வந்த படகில் அமரத்தில் ஏறி நின்ற கலத்தலைவன் இளமஞ்சள் கொடியை ஆட்டி அவர்களிடம் விரித்த பாய்களை சுருட்டிக்கொண்டு படகின் அகல் விளிம்பை முன்னால் காட்டி பக்கவாட்டில் வரும்படி ஆணையிட்டான். திருஷ்டத்யும்னன் "பாய்களை இறக்குங்கள். அவன் ஆணைப்படி நமது கலம் விலா காட்டட்டும்" என்றான்.

சாத்யகி உயரத்தில் ஏறி அவர்களின் ஆணையை உரக்கக்கூவ கலக்காரர்கள் கயிற்று முடிச்சுகளை இழுத்து அவிழ்க்க விரிந்த பாய் தளர்ந்து இறங்கி படகு விரைவு அழிந்தது. சுக்கான் இரும்பு உரசும் ஒலியுடன் படகைத் திருப்ப அலைகள் படகை அறையும் ஒலி மாறுபட்டது. அடிவயிறு காட்டி பணிவு கொள்ளும் நாய் போல அவர்களின் படகு விலாவைக் காட்டியபடி அலைகளில் குழைந்தாடி முன்னகர்ந்தது. கிருஷ்ணவபுஸின் முதற்படகிலிருந்த அமரக்காரன் அதைக்கண்டதும் இயல்படைந்து போர் முரசுகள் நிற்கும்படி கைகாட்டினான். போர் முரசு அவிந்ததும் ஓசையற்ற விரைவுடன் அனைத்து படகுகளும் அவர்களைச் சூழ வந்தன. திருஷ்டத்யும்னனின் விழிகள் அந்தப் படகுகளுக்கும் தங்களுக்குமான தொலைவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவன் கைகள் எழுந்து இரையைக் கவ்வ உன்னி தலைதாழ்த்தி சற்றே சிறகு விரித்து விழிசுடர கிளையில் அமர்ந்திருக்கும் பருந்துகள் போல காற்றில் அசைவற்று நின்றன. அக்கைகளை நோக்கியபடி எரியம்பு தொடுக்கப்பட்ட விற்களுடன் படகின் அகல்முனையின் விளிம்புக்கு அடியில் ஏழு வில்லவர்களும் காத்து நின்றனர். பருந்துகள் மேலும் கூர்ந்து முன்னகர்ந்தன. சிறகு விரித்து தலை குனித்து அக்கணத்தை நோக்கி அமர்ந்திருந்தன.

சாத்யகி தன் நெஞ்சின் ஓசையை காதில் கேட்டான். 'இது போர் இது போர்' என்று அவன் அகம் பொங்கியது. இக்கணம்! இன்னும் ஒரு கணம்! அதற்கடுத்த கணம்! பருந்துகள் மெல்ல சிறகசைத்து காற்றில் எழுந்தன. ஏழு எரியம்புகளும் வானில் சிவந்த சிறிய சிட்டுகள்போல சீறி மேலேறி சீராக வளைந்து முதலில் வந்த ஏழு பெருங்கலங்களின் முகப்புப் பெரும்பாயின் பரப்பில் விழுந்தன. அவை குத்தி நின்றதும் அவற்றிலிருந்த மீன்நெய்யும் தேன்மெழுகும் அரக்கும் கலந்த எரிகுழம்பு தீயாகவே வழிந்து பற்றிக் கொண்டது.

பாய்கள் எரியத் தொடங்கிய பின்னரே கலத்தில் வந்தவர்கள் அதை உணர்ந்தனர். படகுகளின் பாய்களை தணிக்கவோ படகுகளின் வேகத்தை எதிர்த்துடுப்பால் குறைக்கவோ அவர்களால் முடியவில்லை. அமரத்தில் நின்ற கலத்தலைவன் வெறிபிடித்தவன் போல கைகளை விரித்துக்கூவி இழுத்துக்கட்டப்பட்டிருந்த வடம் மீது ஓடி உள்ளே குதித்தான். எரிந்த படகுகளிலிருந்து வீரர்கள் பெரிய விற்களுடன் கலமுகப்புக்கு வந்து நாணேற்றி வளைத்து அம்புகளை தொடுத்தனர். நீரிலிருந்து துள்ளி எழும் வெள்ளிப் பரல் மீன்கள் போல இளவெயிலில் உலோக முனைகள் மின்னியபடி அம்புகள் அவர்களை நோக்கி வந்தன. பாய்மரத்தில், அகல் விளிம்பில், மரத்தரையில், அமரத்தில் எழுந்த சுக்கானில், அறைச்சுவர்களில், தூண்களில் அம்புகள் சிட் சிட் சிட் என்று ஒலியுடன் வந்து தைத்து நின்று சிறகு நடுங்கின.

திருஷ்டத்யும்னன் உடலை நன்றாகப் பரப்பி படகின் அகல் முனைக்கு அடியில் ஒளிந்துகொண்டு தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். சாத்யகி தன் வில்லை காலால் வளைத்து அம்பு தொடுத்தபோது திருஷ்டத்யும்னன் "தலைவர்களை மட்டும்" என்று உரக்கக்கூவும் ஒலியைக் கேட்டான். "தலைவர்களை மட்டும்" என்று அவன் திரும்பக் கூவினான். திருஷ்டத்யும்னன் எய்த அம்பில் அமரத்தில் மீண்டும் எழுந்த கிருஷ்ணவபுஸின் படைத்தலைவன் நெஞ்சில் துளைத்த அம்புடன் தடுமாறி நீரில் தலைகீழாக விழுந்தான். அவன் முகத்தில் இறுதியாக எழுந்த திகைப்பைக்கூட காணமுடிந்தது. மறுகணம் சாத்யகியின் அம்பு பட்டு இரண்டாவது படகின் தலைவன் விழுந்தான். மூன்று படகுகளிலிருந்து தலைவர்கள் கைகளை விரித்து அலறும் முகத்துடன் நீருக்குள் விழுந்தனர். நீர் சிதறி பளிங்கு உதடுகள் அவர்களைக் கவ்வி விழுங்கின.

பற்றிக் கொண்ட பாய்களுடன் ஏழு படகுகளும் குழம்பி ஒன்றுடனொன்று முட்டிக்கொள்ள எட்டாவது படகின் பாயும் பற்றி எரியத் தொடங்கியது. "தலைவர்களை மட்டும்" என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் கூவினான். அவர்கள் தலைவர்களை குறி வைத்திருக்கும் செய்தியை புரிந்துகொண்டு படகுகளிலிருந்து அமரத்தலைவர்கள் உள்ளே ஓடி ஒளிந்து கொண்டு வில் ஏவினர். திருஷ்டத்யும்னனின் அருகே நின்ற வில்லவன் அம்பு குறியடைந்ததா என நோக்க சற்றே தலைதூக்க தன் கழுத்தில் பாய்ந்த அம்புடன் சரிந்து அவன் மேலேயே விழுந்தான். அவனை இடது தோளால் தள்ளி மறுபக்கம் வீழ்த்தி விட்டு "முடிந்த வரை கொல்லுங்கள்" என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

சாத்யகியின் பின்னால் நின்ற படைவீரன் நெஞ்சில் பட்ட அம்புடன் பின்னால் சரிந்து விழுந்தான். அவனுடைய இறுதிமுனகலும் படகின் பலகையை அவன் கால்கள் தட்டித்தட்டி ஓய்வதும் சாத்யகிக்கு கேட்டன. அவன் உடல் தன்னிச்சையாக துடித்துக்கொண்டிருந்த போதும் உள்ளம் மிக அமைதியுடன் இருந்தது. விழிகள் பெருகி நான்குதிசைகளையும் நோக்கின. கைகள் எண்ணங்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு அம்புகளை எய்தன. அவன் அங்கிருந்தான். அம்புகள் சென்றடையும் எதிரிப்படைகளுடனும் கலந்திருந்தான்.

தன் ஒரு அம்புகூட பிழைக்கவில்லை என்பது அவனை மேலும் மேலும் பேருருக் கொள்ளச் செய்தது. அம்புகள் சென்று தைப்பதை கனவுருவென காணமுடிந்தது. அம்புபட்ட வீரர்கள் திகைத்து பின் நிலையழிந்து படகுகளிலிருந்து அலறி விழுந்து கொண்டிருந்தனர். அவனுக்கு முன்னால் தூண்மறைவில் நின்ற யாதவவீரன் பின்னால் சரிந்து சுவரில் முட்டி முன்னால் வந்து தள்ளாடி நீரில் விழுந்தான். அவனுடைய அலறல் நீரை அடைவதை சாத்யகியின் ஒரு பகுதி கேட்டது. இன்னொரு பகுதி எதிர்வந்த படகில் கயிற்றின் மேல் எழுந்த ஒரு வீரனின் தலையைக் கண்டது. அக்கணமே அவன் கை ஓர் அம்பால் அவன் கழுத்தை குத்தியது. அவன் விழுவதைக் கண்ட ஒருபகுதி இன்னொருவனை வீழ்த்திய அம்பைச் செலுத்திய பகுதிக்கு நெடுந்தொலைவில் இருந்தது.

"திரும்புக!" என்று திருஷ்டத்யும்னன் கைதூக்கினான். சாத்யகி "திரும்புக! திரும்புக!" என்று கூவியபடி பாய்மர மறைவிலிருந்து அறைக்குள் பாய்ந்து சென்றான். அவனுக்கு மேல் வந்த அம்பு ஒன்று மரச்சுவரில் குத்தி நின்றது. அவன் எழுவதற்கும் அவன் உடல் தன்னை அறியாமல் ஒரு கணம் எழுந்து சற்றே திரும்ப இன்னொரு அம்பு அவன் தோளை தாக்கியது. தோளில் காகம் ஒன்று பறந்துவந்து கால்வைத்தது போல அந்த அம்பை அவன் உணர்ந்தான். தன் இடக்கையால் அந்த அம்பு எய்த வீரனை வீழ்த்திய பிறகுதான் தன் இடத்தோளில் அம்பு ஆழப்பாய்ந்திருப்பதை உணர்ந்தான்.

"உள்ளே செல்லுங்கள்... உள்ளே" என்று திருஷ்டத்யும்னன் ஆணை விடுத்தான். சாத்யகி தன் இடது கை செயலற்றிருப்பதை உணர்ந்தான். அவன் நடந்தபோது நனைந்து குளிர்ந்த ஈரத்துணிச்சுருள் போல அது தொடை தொட்டு அசைந்தது. புயத்தில் வழிந்து கை மடிப்பில் தயங்கி விரல்களை அடைந்து சொட்டிய குருதி சூடாக கால்களில் விழுந்தது. அவன் அறைக்குள் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டான். திருஷ்டத்யும்னன் உரக்க "அம்பை பிடுங்கி விடுங்கள்" என்றபடி ஆணைகளை கைகளை வீசி தெரிவித்தபடி அமரமுகப்பு நோக்கி ஓடினான்.

சாத்யகி அம்பின் பறவை இறகு பதித்த பின்பகுதியை பிடித்து எடுக்க இறகுகள் அவன் கையில் உருவிக் கொண்டு வந்தன. அவனால் அம்பை பிடுங்க முடியவில்லை. வலியை எண்ணியதுமே அம்புபட்ட தசை விதிர்த்தது. உள்ளிருந்து வந்த முதிய வீரர் ஒருவர் "அம்பின் உலோகமுனையைப் பிடித்து பிடுங்கவேண்டும் யாதவரே" என்றபடி அம்பு தைத்திருந்த முனைக்கு சற்று மேல் பிடித்து தசைக்குள் சென்றிருந்த உலோகக்கூரை சற்றே சுழற்றி வெளியே எடுத்தார். தசைக்குள் அம்பு முனை அசைந்தபோது எழுந்த வலியில் சாத்யகியின் உடல் முறுக்குண்டு அதிர்ந்தது. அம்பு உருவப்பட்டவுடன் கோழியின் வாய் எனத்திறந்த புண்ணை அவன் திரும்பி நோக்கினான். அலை பின்வாங்கிய சேற்றில் நண்டுவளைகள் போல சிறிய குமிழிகளாக குருதி வெடித்து வெளிவந்தது.

முதிய வீரர் தன் தலைப்பாகையை அதன் மேல் வைத்து சுற்றி இறுக்கி கட்டி மீண்டுமொரு முடிச்சைப் போட்டு கையில் இருந்த குருதியை உரசித்துடைத்தபடி எழுந்தார். அந்தக் கட்டை உள்ளிருந்து நனைத்து ஊறிப்பெருகியது குருதி. கட்டுக்கு வெளியே குருதி குளிர்வது போலவும் உள்ளே அது ஊறும் தசை வெம்மை கொள்வது போலவும் அவனுக்குத் தோன்றியது. விரல்களை அசைக்க முயன்றபோது அவ்வெண்னம் சென்றடையவில்லை என்பதை கண்டான். திருஷ்டத்யும்னன் குறடுகள் ஒலிக்க அறைக்குள் ஓடி வந்து "அனைத்துப் பாய்களையும் விரியுங்கள். திசை தேருங்கள். நாம் விலகிச் செல்கிறோம்" என்று ஆணை கூவினான்.

அவர்களின் படகின் மேல் பாய்மரங்கள் புடைத்து மேலெழுந்தன. வீரர்கள் கூவியபடி படகின் தளத்தில் ஓடும் ஓசை கேட்டது. சாத்யகி வலக்கையை ஊன்றி எழுந்தான். முதல் பாய் விரிந்ததும் படகு திடுக்கிட்டு முன் நகர்ந்தது. சுக்கான் திருப்பும் ஓசை புண்பட்ட யானையின் உறுமலென எழுந்தது. வளைந்து திரும்பிய படகு கங்கையின் அலைகளின் மேல் தன் கூர்முகப்பை ஏற்றி இறக்கி விழுந்தும் எழுந்தும் முன்னகர்ந்தது. ஒவ்வொரு பாயாக விரிய விரிய படகின் விசை கூடிக்கூடி சென்றது. அமர முனையில் நின்ற கலக்காரன் அலறி விழும் ஓசையை சாத்யகி கேட்டான். "எத்தனை பேர் எஞ்சியிருக்கிறார்கள் பாஞ்சாலரே?" என்றான். "மூவர்" என்றான் திருஷ்டத்யும்னன். "நானுமிருக்கிறேன்."

சாத்யகி "நாம் காசியைக் கடந்து செல்ல வேண்டும். இச்செய்தி அவர்களை அடைந்தால் நம்மை அங்கு தடுத்து விடுவார்கள்" என்றான். "காசியின் எல்லையை நாம் அரை நாழிகைக்குள் இதே விரைவில் கடந்து செல்ல முடியும்" என்றான் திருஷ்டத்யும்னன். "காசியின் படகுகள் விரைவு மிகுந்தவை. நம்மை அவை பிடித்து விடக்கூடும்" என்று சொன்னபடி சாத்யகி வெளியே சென்றான்.

திருஷ்டத்யும்னன் "பார்ப்போம்" என்றபடி மறுமுனைக்குச் சென்று கங்கையை நோக்கி நின்றான். கங்கையில் மிதந்து சென்று கொண்டிருந்த வணிகப்படகுகளில் இருந்தவர்கள் அச்சம் கொண்டு அவர்களின் படகை திரும்பி நோக்கினர். அவற்றின் அமர முனையில் இருந்த கலக்காரர்கள் அவர்களின் படகை கைசுட்டி உரக்கக் கூவினர். அனைத்துப் பாய்களையும் விரித்து முழு விரைவில் அலைகளின் மேல் ஏறிச்சென்றது அவர்கள் படகு. தொலைவில் பற்றி எரிந்துகொண்டிருந்த கிருஷ்ணவபுஸின் படகு மூழ்குவதை காண முடிந்தது. பிற படகுகள் பாய்களை தாழ்த்திவிட்டிருந்தன. நான்கு படகுகள் எரியாத பாய்களைக் கொண்டிருந்தபோதும் அவர்களைத் தொடர்ந்து வரும் துணிவை கொள்ளவில்லை.

வில்லுடன் அகல்விளிம்புக்குக் கீழே பதுங்கியிருந்த யாதவவீரன் ஒருவன் திருஷ்டத்யும்னனை நோக்கி "அவர்கள் நினைத்திருந்தால் நம்மை அணுகிப் பிடித்திருக்க முடியும் இளவரசே" என்றான். திருஷ்டத்யும்னன் "ஆம்" என்று தலையசைத்தான். "அஞ்சிவிட்டார்கள்" என்றான் இன்னொருவன். திருஷ்டத்யும்னன் அதற்கு மறுமொழி கூறாமல் மீசையை நீவிக்கொண்டு அலைகளை நோக்கி நின்றான்.

அவர்களின் படகு காசியை நெருங்கும்போது முன்னரே அங்கு நிகழ்ந்த போரைப்பற்றி காசி அறிந்திருப்பதை திருஷ்டத்யும்னன் தொலைவிலிருந்து அறிந்து கொண்டான். காசியின் காவல்படகுத்துறையிலிருந்து இரண்டு விரைவுப் படகுகள் அவர்களை நோக்கி கிளம்பின. அவற்றில் ஒன்றின் முகப்புக்கொடிமரத்தில் அவர்களை நிற்கச் சொல்லும் ஆணையை படபடத்தபடி மஞ்சள்கொடி ஒன்று மேலேறியது. சாத்யகியின் தோளிலிருந்த புண்ணுக்கு தேன்மெழுகை பூசி கட்டுபோட்டு இறுக்கிக் கொண்டிருந்த முதிய வீரர் "அவர்கள் கால் நாழிகையில் நம்மை அடைந்துவிடுவார்கள்" என்றார். திருஷ்டத்யும்னன் "பார்ப்போம்" என்றான்.

சாத்யகி "அவர்கள் நம்மை பிடித்துக்கொண்டால் மகதத்திடம் கையளிப்பார்கள். அதில் ஐயமேயில்லை" என்றான். திருஷ்டத்யும்னன் "அவர்கள் நம்மை பிடிக்கப்போவதில்லை யாதவரே" என்றான். "நாம் இங்கிருந்து செல்வோம். அல்லது நீருக்கு அடியில் மறைவோம்." சாத்யகி முதிய வீரர் கட்டை இறுக்கியபோது சற்றே வலியுடன் முனகியபடி பற்களை கடித்தான். பின்பு "இறப்பு என்பது இத்தனை ஆறுதல் தரும் சொல் என்று இப்போதுதான் உணர்ந்தேன்" என்றான். "ஒரு கையால் உம்மால் வில்லெடுக்க முடியுமா?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம்" என்று சொல்லி சாத்யகி எழுந்தான்.

திருஷ்டத்யும்னன் "நம் கலத்தின் அமரமுனைக்கு அருகே அகல்வளைவின் விளிம்புக்கு அடியில் அமர்ந்து கொள்ளும். காசியின் முதற்படகின் முகப்புப் பெரும்பாயை நீர் இறக்க வேண்டும்" என்றான். "எரியம்பா?" என்றான் சாத்யகி. "அல்ல. அப்படகின் பாய் எளிதில் எரியாது. அதில் பீதர் நாட்டு வெண்களிமண் பூசப்பட்டுள்ளது. அதை மேலே சேர்த்து கட்டியிருக்கும் வடத்தின் முடிச்சை அறுக்கவேண்டும்." சாத்யகி சில கணங்கள் நோக்கிவிட்டு "இரு கைகளுமெழுந்தால் என்னால் மிக எளிதில் அதை செய்ய முடியும். இன்று நான் முயல்கிறேன் என்று மட்டுமே சொல்வேன்" என்றான்.

முதிய யாதவவீரர் "அசையும் படகின் பறக்கும் பாயின் மேல் முடிச்சை அறுக்க பார்த்தரால் மட்டுமே முடியும் பாஞ்சாலரே" என்றார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி சற்றே பார்வை கூர்மை கொள்ள "நானும் துரோணரின் மாணவனே" என்றான். "பொறுத்தருள வேண்டும்" என்றார் முதிய வீரர். "நீர் அதை செய்தே ஆகவேண்டும் யாதவரே" என்றபின் திருஷ்டத்யும்னன் பிற வீரரை நோக்கி "சுக்கானை நீர் நோக்கிக் கொள்ளும். பிற இருவரும் நமது பாய்களை பேணட்டும்" என்றான். சாத்யகி "ஆணை" என்றான். திருஷ்டத்யும்னன் முன்னால் சென்று எதிரே வந்த காசிநாட்டு காவல்கலத்தை நோக்கியபடி "யாதவரே, என் சொல்லுக்காக காத்திருங்கள்" என்றான்.

காசியின் படகு தனது மூன்று பெரும் பாய்களுடன் அவர்களை நோக்கி எழுந்து வந்தது. அதன் அமர முகப்பிலிருந்த யாளியின் உருண்ட விழிகள் தெளியத்தொடங்கின. சாத்யகி தன் உடலைக் குறுக்கி அகல்விளிம்புக்குக் கீழே அமர்ந்து கால்களால் நாண் பற்றி அசைவிழந்த இடக்கையை அதன் தண்டின் மேல் வைத்து வலக்கையால் நாணிழுத்து அம்பை இறுக்கினான். முழு உயிரையும் விழிகளில் அமைத்து அப்படகின் முதற்பெரும்பாயின் மேல் உச்சியில் எரியாத பீதர் விளக்கு தொங்கி காற்றில் ஆடிக்கொண்டிருந்த பாய் முடிச்சை நோக்கினான். ஒவ்வொரு கணமும் அது அது அது என தன்னை குவித்தான். வானை, கங்கையை, கலத்தை, பாயை, கொடிமரத்தை நோக்கிலிருந்து விலக்கினான்.

பாயை கட்டியிருந்த வடத்தின் முடிச்சு மட்டும் அண்மையில் மேலும் அண்மையில் மேலும் அண்மையில் என தன் முன் விரியச் செய்தான். திருஷ்டத்யும்னனின் குரல் ஒலித்ததும் அவனை அறியாமலேயே அவன் வலக்கரம் அம்பை எய்தது. எழுந்து மின்னி சற்றே சுழன்றபடி சென்ற பின்தூவல் பிசிரலைவைக்கூட அவனால் காண முடிந்தது. வெள்ளி அலகு கொண்ட பருந்து போல சென்ற அவனது அம்பு அந்த முடிச்சின் மையக்குழிக்குள் சென்று அக்கணமே இறுக்கத்தை அறுப்பதை அவன் கண்டான். காற்றில் புடைத்த பாயின் இழுவிசையாலேயே முடிச்சு மேலும் மேலும் அறுந்து வடநார்கள் தெறிக்க அம்பு மறுபக்கம் தழைந்து கீழே விழுந்தது. பாய் காற்றில் பறந்து எழுந்து விரித்த கைபோல வானை அளைந்து பின்வாங்கும் அலைபோல வளைந்து இறங்கி இருமுறை படபடத்து ஓசையுடன் கீழே விழுந்து அங்கே நின்ற வீரர்களை அறைந்து மூடியது.

மறுகணம் திருஷ்டத்யும்னனால் அறுக்கப்பட்ட இரண்டாவது பாய் அதன்மேலேயே வந்து விழுந்தது. இரு பாய்களும் சரியவே மூன்றாவது பாய் திடுக்கிட்டது போல திசைவிலகி மறுபக்கமாகத் திரும்பி முறுக்கிக் கொண்டு எழுந்து அதிர்ந்து படகை நேரெதிர் பக்கமாக திருப்பியது. விழுந்த பாய்களை கிழித்துக் கொண்டு கருவறைதிறந்து பிறந்தெழுபவர்கள் போல மேலே வந்த வீரர்கள் அம்புகளை அவர்களை நோக்கி எய்தார்கள். அமரமுனையில் நின்றிருந்த வீரன் திருஷ்டத்யும்னனின் அம்பு பட்டு நீரில் விழுந்தான். அவனை நோக்கி ஓடிவந்த இன்னொருவனை சாத்யகி வீழ்த்தினான். திரும்பி ஓடிய மூன்றாவது வீரனை திருஷ்டத்யும்னனின் அம்பு வீழ்த்தியது.

திரும்பிக் கொண்ட பாய் காற்றில் முழுவிசையுடன் புடைத்து முற்றிலும் வேறு திசையில் படகை இழுத்தது. கலக்காரர்கள் கைகாட்டி கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓட அந்தப் படகு தத்தளித்து திசை மாறி வளைந்தது. அவர்களின் படகு அதிலிருந்து விலகிச் செல்லும் விரைவை நீரை குனிந்து நோக்கி மதிப்பிட்ட சாத்யகி "இனி அவர்களால் நம்மை பிடிக்கமுடியாது" என்று கூவினான். "அவர்கள் மூன்றாவது பாயையும் அறுத்து விலக்காவிட்டால் அது நம்மைவிட்டு விலக்கியே கொண்டு செல்லும். அறுத்துவிட்டால் அவர்களால் அசைய முடியாது" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி "எப்படி கணித்தீர்கள் அதை?" என்றான். "அது மூன்று பாய் கொண்ட படகு. அதற்கு பீதர் பாய்முடிச்சு என்று பெயர். முதலிரு பாய்களால் அள்ளித்திருப்பப்படும் காற்றை வாங்கும் மூன்றாவது பாய்தான் அப்படகை செலுத்துகிறது. நாம் இரண்டை அறுத்துவிட்டோம்."

காசியின் முதற்படகிலிருந்த வீரர்கள் மூன்றாவது பாயை அவிழ்த்து கீழே இறக்கினர். தத்தளித்தபடி திசை மாறிச் சென்ற படகு விரைவழிந்து நின்றது. "போர் முடிந்துவிட்டது பாஞ்சாலரே" என்றான் சாத்யகி. "ஆம். ஆனால் ஓரிருவரை நாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றான் திருஷ்டத்யும்னன். எதிர்த்திசையிலிருந்து அவர்களை நோக்கி சங்கொலிக்க கொடிகள் அசைத்தபடி வந்த காசியின் காவல்படகுகளில் இருந்தவர்களை திருஷ்டத்யும்னன் மிக எளிதாக அம்பு தொடுத்து கொன்று வீழ்த்தினான். மூன்று படகுகளில் இருந்தவர்கள் அலறிச் சரிய நான்காவது படகு திரும்பி அவர்களை விட்டு விலகி ஓடியது.

திருஷ்டத்யும்னன் வில்லைத் தாழ்த்தியபடி முதுகை நிமிர்த்தி நின்று பெருமூச்சுவிட்டான். காசியின் நீரெல்லை கடப்பதை சாத்யகி அமர முனைக்கருகே நின்று நோக்கினான். அவன் கட்டுகளை மீறி குருதி மீண்டும் வழிந்து கச்சையையும் இடையில் அணிந்த ஆடையையும் நனைத்தது. முதியவீரர் "அழுத்தமான புண்" என்றார். திருஷ்டத்யும்னன் அதை திரும்பி நோக்கவில்லை. காசியின் எல்லை கடந்ததும் வீரன் ஒருவன் "கடந்துவிட்டோம்!" என்று உரக்கக் கூவினான். சாத்யகி தன்னுடலில் தசைகளனைத்தும் தளர்வதை உணர்ந்தான். "ஆம். வென்றுவிட்டோம் பாஞ்சாலரே" என்றான். திருஷ்டத்யும்னன் "ஆம்" என்றபின் அவன் முன்னால் அமர்ந்து "உமது காயம் பெரிது. நமது எல்லைக்குள் சென்றதும் மருத்துவரை வரச்சொல்லவேண்டும்" என்றான்.

சாத்யகி கங்கையை நோக்கி "நம்ப முடியாத போர்!" என்றபடி திரும்பிப் பார்த்தான். "கிருஷ்ணவபுஸின் பன்னிரு போர்ப்படகுகளுடன் காசியின் திசைதேர் பெரும்படகையும் வென்றிருக்கிறோம்" என்றான். களிப்புடன் கைகளை நீட்டி "பாஞ்சாலரே, உம்மால் யாதவர் முன் தலை தூக்கி நிற்கும் வாய்ப்பைப் பெற்றேன்" என்றான். திருஷ்டத்யும்னன் முகத்தில் உவகை ஏதும் தெரியவில்லை. வலக்கையால் மீசையை நீவியபடி "இங்கு நிகழ்ந்ததென்ன என்று இளைய யாதவரிடம் சொல்ல வேண்டியுள்ளது" என்றான். சாத்யகி "அவர் அஸ்தினபுரியில் அல்லவா இருக்கிறார்?" என்றான். "அவருக்கு எவ்வகையிலோ அனைத்தும் தெரியும்" என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

சாத்யகி திடுக்கிட்ட நோக்குடன் "அனைத்தும் என்றால்?" என்றான். "இங்கு நிகழ்ந்தவை அனைத்தும்தான். தனது காய்கள் தானாக நகரும் திறன் கொண்டவை என்றறிந்த நாற்கள ஆட்டக்காரர் அவர். இங்கு எங்கோ மிக அருகே அவர் நமக்காக காத்திருக்கிறார். தான் செய்ய வேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருக்கிறார்" என்றான் திருஷ்டத்யும்னன். பெருமூச்சுடன் உடலை அசைத்து அமர்ந்து "ஆம், இப்போது அனைத்தையும் என்னால் காண முடிகிறது" என்றான்.

"அக்ரூரரின் விழிகளில் ஒரு ஒளியின் அசைவை முதலில் நான் கண்டேன் யாதவரே. அது என்ன என்று அப்போது நான் வியந்தேன். அதே அசைவை கிருதவர்மன் விழிகளிலும் கண்டேன். நாகம் இருக்கும் புற்றுக்கு நம் அகம் மட்டுமே உணரும் அசைவொன்று உண்டு. அதைப் போன்றது அது" என்றான் திருஷ்டத்யும்னன். "அதை எப்போதோ இளைய யாதவர் கண்டிருப்பார். இந்த ஆடலுக்காக அவர்களை அதற்குத்தான் அவர் அனுப்பி இருக்கிறார்."

சாத்யகி "நாம் யாதவர் படைகளுக்குள் நுழைவோம். மதுராவிலிருந்து முழுப்படையையும் கொண்டு கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்து சததன்வாவையும் அவர்கள் இருவரையும் கொன்று அந்த மணியைக் கவர்ந்து இளைய யாதவரிடம் கொண்டு வைப்போம்" என்றான். திருஷ்டத்யும்னன் "என்னால் அதை செய்ய முடியும் யாதவரே. ஆனால் சியமந்தகத்தை நான் கொள்ளலாகாது. அது யாதவர்களுக்குரிய மணி. அதை வெல்ல வேண்டியவர் இளைய யாதவரே" என்றபின் "அந்த மணியும் அதைத்தான் விழைகிறது போலும்" என்றான்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6

காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர் அவர்களின் புண்களை திறம்பட கட்டிக்கொண்டிருந்தார். அவர் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும்போதே கண்விழித்த ஒரு வீரன் "கன்று மேய்கிறது" என்று சொல்லி பற்களை இறுகக் கடித்து கழுத்தின் தசைகள் சற்று அதிர உடலை இழுத்து பின்பு தளர்ந்து தலைசாய்த்தான். அவர் மேலே நோக்கி "இறந்து விட்டான்" என்றார்.

திருஷ்டத்யும்னன் தலை அசைத்த பிறகு "எஞ்சுபவர் எத்தனை பேர்?" என்றான். முதிய வீரர் "நானும் இன்னொருவனும் மட்டுமே" என்றார். திருஷ்டத்யும்னன் கட்டு போடப்பட்டு ஒருக்களித்துக் கிடந்த வீரனைச் சுட்டி "இவன்?" என்றான். அவர் அந்த வீரனை நோக்கியபின் உதட்டை துருத்தி "அவன் பிழைக்க வாய்ப்பில்லை. குருதி வடிந்து காது மடல்கள் அல்லி இதழ்கள் போலாகிவிட்டிருக்கின்றன. இன்னும் நெடுநேரம் அவன் இருக்கப் போவதில்லை" என்றார். திருஷ்டத்யும்னன் "அருகே உள்ள யாதவக் கோட்டைக்குச் செல்ல எவ்வளவு பொழுதாகும்?" என்றான். "பதினெட்டு நாழிகையேனும் கங்கையில் செல்லாமல் மதுராவின் எல்லைக்குள் நுழைய முடியாது" என்றார் முதிய வீரர்.

திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தான். இறந்துபோன படைவீரன் ஒருவன் படகுத் தட்டில் மரத்தரையை அணைப்பவன் போல கைவிரித்து குப்புறக் கிடந்தான். அவனிலிருந்து பெருகிய குருதி கருநீலப் பட்டுத்துணி போல அடியில் பரந்திருந்தது. முதிய வீரர் வெளியே வந்து "சடலங்களை கங்கையில் இறக்கி விடலாமா பாஞ்சாலரே?" என்றார். திருஷ்டத்யும்னன் தலையசைத்ததும் அவர் தளத்தில் கிடந்த வீரனை தோள் பற்றித் தூக்கி இழுத்துச் சென்று படகின் அகல்விளிம்பின்மேல் இடை பொருந்த சாய்த்து வைத்தார். கைகளை படகுக்கு வெளியே தொங்கவிட்டு தலை துவண்டு ஆட அவன் கிடந்தான். படகின் உலுக்கலில் அவன் உயிருள்ளவன் போல அசைந்தான்.

முதிய வீரர் "கங்கையன்னையே, இவ்வீரனை கொள்க! உன் மடியில் எங்கள் குடியின் இச்சிறுவன் நன்கு துயில்க" என்று கூவியபடி அவன் கால்களைப் பற்றி தூக்கினார். நீட்டிய கைகளுடன் அவன் நீரில் மீன்குத்திப்பறவை போல பாய்ந்து தன் நீர்நிழலை தழுவிக்கொள்வது போல இணைந்து அலைபிளந்து இறங்கி ஆழத்திற்குச் சென்று மறைந்தான். "இன்னுமொரு உடல் பாய் மரத்திற்கு அப்பால் கிடக்கிறது" என்றபடி அவர் கயிற்றின்மேல் ஏறினார். திருஷ்டத்யும்னன் "புண்பட்டவன் எப்படி இருக்கிறான்?" என்றான். "இன்னும் ஒரு நாழிகைகுள் அவனுக்கு உரிய மருத்துவம் செய்யப்பட்டாகவேண்டும். இல்லையேல்..." என்ற முதிய வீரர் திருஷ்டத்யும்னனை நோக்கிவிட்டு திரும்பிச் சென்றார்.

அந்த நோக்கில் உள்ள ஒன்றை தன் அகம் தொட்டுக் கொள்வதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். ஒவ்வொரு போருக்குப் பின்னரும் கடைநிலை போர்வீரர்களின் கண்களில் தெரிவது அது. ஒவ்வொரு அரசனும் அதைக் கண்டு விழி விலக்கி தனக்குள் சற்றே குறுகிக் கொள்கிறான். முதிய வீரர் பல போர்களை கண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. அவர் தோளிலிருந்த தழும்பு ஆழமாகப் புண்பட்டு நெடுங்காலம் படுத்திருந்தார் என்பதை காட்டியது. முதன்முதலாக போருக்குச் செல்கையில் அவர் விழிகள் எப்படி இருந்திருக்கும்? இன்று அதில் நின்றிருக்கும் அந்த தெய்வம் இருந்திருக்காது. வெறும் பீடம். அல்லது தேவர் இறங்கும்பொருட்டு அலை ஒளிரும் சுனை.

அவர் பாய்க்கயிற்றைப் பற்றி தொற்றி இறங்கி உள்ளே செல்வதை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். இவ்வெண்ணங்களை இப்போதே புறந்தள்ளாவிடில் அடுத்த செயலுக்கு செல்லமுடியாது என்று சொல்லிக் கொண்டான். இங்கு அரசனும் போர்வீரனும் முனிவனும் உழவனும் தங்களுக்குரியவற்றை நடிக்கிறார்கள். ஐயமின்றி அவ்வேடத்தை ஆற்றுபவன் வெல்கிறான். துரோணரின் அச்சொற்களை நினைவுகூர்ந்தபோதே ஐயமின்றி அதை ஆற்றியவன் உண்டா என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். போர்க்களத்தின் முன்னால் படைக்கலத்துடன் எழுந்து நின்று போர் என்பது எதற்கு என்று ஐயுறாத வீரன் உண்டா? போர் போர் என்று அறைகூவும் பரணிகள், நடுகற்கள், தொல்கதைகள் அனைத்தும் அந்த ஐயத்தை நோக்கி அல்லவா பேசுகின்றன? மேலும் மேலும் சொல்லள்ளிப்போட்டு மூடி வைத்திருக்கும் அந்த ஐயம் என்றேனும் ஒரு பெரும் போர்முனையில் வெடித்தெழுந்து கிளை விரித்து வான் தொட்டு நிற்குமா?

வானில் வேர் விரித்து மண்ணில் கிளைவிரித்த ஒரு பெருமரம். எங்கு கேட்டேன் அந்த உவமையை? துரோணர் கற்பித்த ஏதோ ஒரு தொன்மையான அளவைவாத நூலில். மண்ணில் கிளைவிரித்தல் இயல்பு. ஆனால் வானில் வேர் விரித்தல். அது ஒரு விழைவு மட்டும்தானா? என்ன வீண்சொற்கள் இவை! சித்தமென்பது வீண்சொற்களின் எறும்புவரிசை. இப்போது அதன்மேல் நடந்துபோன கால் ஒன்றால் கலைந்துவிட்டிருக்கிறது. நான் வெற்றிகொண்டு இங்கே நின்றிருக்கிறேன். இது வெற்றி என்பதில் ஐயமில்லை. எந்த அவையில் இதைச்சொல்லி தருக்கி தலைநிமிர முடியும்? ஆனால் ஏன் என் நெஞ்சு அலைவுறுகிறது? ஒரு கணமேனும் ஒரு துளியேனும் உவகையை ஏன் அடையவில்லை? முதல்போருக்கு தருக்குடன் சென்ற அந்த இளைஞன் இவ்வுடலுக்குள் முன்பு வாழ்ந்திருக்கிறான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி வந்து அறைக்குள் எட்டிப்பார்த்தான். காயம் பட்ட வீரனின் உடல் அதிர்ந்து புல்லரித்துக் கொண்டிருந்தது. அவன் உதடுகள் நன்கு வெளுத்து விட்டிருந்தன. இமைகளுக்குள் கருவிழி பதைப்புடன் ஓடுவது தெரிந்தது. ஆனால் வருகிறதா என ஐயம் அளிக்கும்படி மென்மையாக ஓடிக் கொண்டிருந்தது மூச்சு. அவன் பிழைத்தெழ வேண்டும் என்று திருஷ்டத்யும்னன் விரும்பினான். ஒரு வீரன் இறப்பதும் வாழ்வதும் எவ்வேறுபாட்டையும் உருவாக்குவதில்லை. இந்தப்போரில் இறந்த ஒவ்வொருவரும் தேர்ந்த வீரர்கள், யாதவர் குடிக்கு தங்களை படைத்தவர்கள். இவனொருவன் பிழைப்பதனால் ஆவதொன்றுமில்லை. ஆயினும் அச்சொற்களைக் கடந்து அவன் வாழவேண்டும் என்று அவன் விரும்பினான். அது ஒரு உறுதிப்பாடு. ஒருவனையேனும் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். எவரிடத்தில் அதை சொல்லப்போகிறேன்? எவரிடமும் அல்ல, என்னிடமே. என்னிடம் அல்ல, என் விழிகளை நோக்கும் இம்முதியவரின் கண்களுக்குள் வாழும் அந்த தெய்வத்திடம்.

ஏன்? எவ்வித இணைப்புமற்ற தருக்கங்கள் வழியாக எதை நான் ஓட்டிக் கொள்கிறேன்? திருஷ்டத்யும்னன் திரும்பி கட்டுப்போட்ட புண்மீது குருதி ஊறி கருமை கொண்டு உறைந்திருக்க ஒருக்களித்து கண்மூடித் துயிலும் சாத்யகியை நோக்கினான். அல்லது இவனும் இறந்திருந்தால் அது நிகரென்றாகியிருக்குமோ? அப்போது அம்முதியவீரரின் விழிகளை நேர்கொண்டு நோக்க என்னால் முடிந்திருக்குமோ? ஒன்று சொல்லலாம், 'முதியவரே, நானும்தான் புண்பட்டிருக்கிறேன். நெடுநாள் நடை பிணமென கிடந்திருக்கிறேன். இன்று நடமாடும் பிணமென இங்கு நின்றிருக்கிறேன்.' ஆனால் அவ்விழிகளின் முள் மாறாது என்று தோன்றியது. அது கேட்கும் வினா பெரிது. முற்றிலும் அப்பால் நின்று கேட்கும் மூதாதையரின் குரல் போல ஒன்று. மண்ணில் வாழ்ந்திறந்து நிகழும் மானுடக் கோடிகள் இணைந்து உரைக்கும் ஒரு விடையால் மட்டுமே நிறைவுறக்கூடிய வினா அது.

முதியவீரர் அவனுக்குப்பின்னால் வந்து நின்று "இளவரசே" என்றபோது கட்டற்றுப்பெருகிய அவ்வெண்ணங்களிலிருந்து கலைந்து திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். "யாதவக் கொடிகள் கொண்ட படகுகள் தெரிகின்றன" என்றார் அவர். "எங்கே?" என்றான் திருஷ்டத்யும்னன். "கங்கையில் நமக்கு எதிரில் அவை வந்து கொண்டிருக்கின்றன" என்றார். ஒரு கணம் மகதத்தின் படைகள் யாதவக் கொடிகளுடன் வருகின்றனவா என்ற ஐயத்தை அடைந்து இயல்பாக வில்லின்மேல் கை வைத்தான் திருஷ்டத்யும்னன். மறுகணமே திரையொன்று காற்றால் தூக்கப்பட்டு விலக வான் வெளித்தது போல அனைத்தையும் கண்டான். மிக அருகே தன் படையுடன் இளைய யாதவர் காத்திருந்திருக்கிறார்.

எண்ணியிருந்ததை கண்முன் கண்டபோது பெரும் ஏமாற்றமொன்று அவன்மேல் எடை கொண்டது. கால்கள் தளர கைகளால் வடத்தைப்பற்றியபடி சென்று அமர்ந்துகொண்டு "நன்றாகப் பாருங்கள், அவற்றை நீர் அறிவீரா?" என்றான். முதிய வீரர் திரும்பிச்சென்று கண்களின் மேல் கைவைத்து கூர்ந்து நோக்கி திரும்பி வந்து "இளவரசே, அவை இளைய யாதவர் தலைமையில் வரும் மதுரைப் படைகள். அப்படகுகளும் நான் நன்கறிந்தவையே" என்றார்.

திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். எண்ணங்கள் சிக்கி நின்ற சித்தத்துடன் தலைகுனிந்து குருதித் துளிகள் உலர்ந்து கொண்டிருந்த மரமுற்றத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தான். பின்னர் கயிறு எடை மீண்டு தெறித்து ஓசையிட எழுந்து தன் இரும்புக் குறடிட்ட கால்களை ஒன்றுடனொன்று தட்டியபடி கைதூக்கி சோம்பல் முறித்தான். முதியவீரர் வந்து "நம் கொடி அசைவு என்ன இளவரசே?" என்றார். திருஷ்டத்யும்னன் அவர் விழிகளை நோக்காது "பணிதல்" என்றான். "ஆம், அது நம் கடமை. ஆனால் நாம் வெற்றி கொண்டிருக்கிறோம் இளவரசே" என்றார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்காது "வெற்றி கொண்டோமா என்ன?" என்றான். "நாம் அடைந்தவை அல்லவா வெற்றி? நாம் வெற்றிக்கான செந்நிறக் கொடியை ஏற்றுவதே முறை." முதியவீரரின் கண்களில் எதுவும் தெரியவில்லை. "ஆம் வெற்றிக்கான கொடியும் ஏறட்டும்" என்றான். என் உளமயக்குதானா அனைத்தும்?

திருஷ்டத்யும்னன் அறைக்குள் சென்று விரிப்பலகையில் துயின்றுகொண்டிருந்த சாத்யகியின் தோளைத் தொட்டு "யாதவரே எழுந்திருங்கள்" என்றான். சாத்யகி விழித்து சிவந்த விழிகளால் அவனை நோக்கி, பின் வலக்கையை ஊன்றி இடக்கை அளித்த வலியை உடலெங்கும் இறுகி அசைந்த தசைகள் வெளிக்காட்ட "என்ன?" என்றான். "இளைய யாதவரின் படை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்றான். "நாம் அனுப்பிய பறவைத்தூது சென்று சேர்வதற்கும் நேரமில்லையே" என்றான் சாத்யகி வியப்புடன். "நமக்குப் பின்னால் பெரும் படையுடன் அவர் வந்து கொண்டிருந்திருக்கிறார்" என்றான் திருஷ்டத்யும்னன்.

"நம்மை அவர் ஐயப்பட்டாரா?" என்று சாத்யகி கேட்டான். திருஷ்டத்யும்னன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. "நம்மை முன் அனுப்பிவிட்டு மிக அண்மையில் தொடர்ந்து வந்திருக்கிறார் என்றால் என்ன பொருள்?" என்று சாத்யகி மீண்டும் கேட்டான். "நாம் ஆற்ற முடியாத ஒன்றை தான் ஆற்றவேண்டும் என்று எண்ணியிருக்கலாம் அல்லவா?" சாத்யகி "இல்லை. அவர் நம்மை நம்பவில்லை" என்றான். திருஷ்டத்யும்னன் "அவர் எவரையும் நம்பவில்லை. நம் நால்வருக்கும் அவர் ஒரு தேர்வு வைத்தார். அக்ரூரரும் கிருதவர்மரும் தோற்றனர். நானும் நீரும் வென்றிருக்கிறோம்" என்றான்.

சாத்யகி பெருமூச்சுடன் தலை அசைத்தான். திருஷ்டத்யும்னன் "யாதவரே, நமது வெற்றிகூட நாம் சியமந்தகத்தை விழிகளால் பார்க்க நேரவில்லை என்பதனால் இருக்குமோ?" என்றான். சாத்யகி திடுக்கிட்டு "என்ன சொல்கிறீர்?" என்றான். "நான் அவ்வண்ணம் எண்ணினேன்" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவன் விழிகளை சில கணங்கள் நோக்கியபின் "ஆம். அதே எண்ணத்தை நானும் அடைந்தேன்" என்றான். "எழுந்து கைகளை கழுவிக் கொள்ளும். நாம் அரசரை சந்திக்கும் வேளை" என்றான் திருஷ்டத்யும்னன்.

அவர்களின் படகு அலைகளின் மேலேறி இறங்கி எதிரே வந்த யாதவர்களின் படகுநிரையை நோக்கி சென்றது. அனைத்துப்படகுகளிலும் கருடக்கொடியுடன் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் நிகராக பறப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். மீன்வடிவில் அணி வகுத்து வந்து கொண்டிருந்தது மதுராவின் படை. கருடக்கொடி பறந்த முதற்பெரும் கலம் மீனின் கூர்முகமென முதல் வர, சிறு காவல்படகுகள் இருபக்கமும் விரிந்து செல்ல மீனின் விரிந்த சிறகுகளென இரு பெருங்கலங்கள் தெரிந்தன. மீனின் வாலென கலமொன்று நூறு பாய்களுடன் பின்பக்கம் எழுந்து தெரிந்தது. "இளையபாண்டவரும் உடனிருக்கிறார். அஸ்தினபுரியின் கலங்களும் உள்ளன" என்று சாத்யகி சொன்னான்.

முதலில் வந்த படகில் இருந்து மஞ்சள் கொடி அசைந்து அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்தது. அவர்களின் படகு அணுகியதும் முதற்கலத்திலிருந்து கொம்பும் முழவுகளும் ஒலித்தன. உறுமியபடி அருகே வந்த மீன் மெல்ல விரைவழிந்தது. அவர்களின் படகு பக்கவாட்டில் திரும்பி விலா காட்டியபடி முதற்பெரும்படகை அணுகியது. மதுராவின் படகிலிருந்து கணக்காளர் அவர்களின் அடையாளத்தை கோர முதியவீரர் கையசைத்து தன் படைக்குறியை காட்டினார். மேலிருந்த கலக்காரன் அதைக் கண்டதும் வாழ்த்துரைக்கும் செய்கையை காட்டிவிட்டு கைவீசி ஆணையிட கலத்தில் இருந்து வீசப்பட்ட கொளுத்து வடம் வந்து படகின் அமர அச்சின்மேல் விழுந்தது. முதிய வீரர் அதை எடுத்து படகின் கொக்கிகளில் மாட்டினார்.

தங்கள் படகு அலைகளில் தத்தளித்தபடி பெரும்படகை நோக்கிச் சென்று அதன் அடிவயிற்றில் விலா முட்டி நின்றதை நோக்கியபடி திருஷ்டத்யும்னன் இடையில் கை வைத்து நின்றான். சாத்யகி தன் புண்பட்ட தோளை தூணில் சாய்த்து நின்று மேலே பார்த்து "இளைய யாதவர் இந்தப்படகில்தான் இருக்கிறார்" என்றான். திருஷ்டத்யும்னன் அப்படகின் மேல் பொறிக்கப்பட்ட அஸ்தினபுரியின் அமுதகலசக் குறியை நோக்கிக்கொண்டிருந்தான். படகு இணைந்து மேலிருந்து நூலேணி சரிந்து சுருளவிழ்ந்து அவர்களின் பலகைமுற்றத்தில் வந்து விழுந்தது. அதன் கொக்கிகளை மாட்டியதும் முதியவீரர் "தாங்கள் மேலேறலாம் இளவரசே" என்றார்.

திருஷ்டத்யும்னன் "முதலில் புண்பட்ட வீரனை மேலே கொண்டு சென்று அவனுக்கான மருத்துவங்களை உடனடியாக செய்ய வேண்டும்" என்றான். முதிய வீரரின் விழிகள் திருஷ்டத்யும்னன் விழிகளை தொட்டபோது அவற்றில் ஒன்றும் தெரியவில்லை. தலைவணங்கி "ஆணை" என்றார். அவர் செய்தியை கொடி அசைத்துத் தெரிவித்ததும் மேலே படகில் சிறு பரபரப்பு ஏற்பட்டது. அரசகுடியினர் எவரோ புண்பட்டிருக்கிறார்கள் என்று பெருங்கலத்தில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். அதற்கேற்ப எட்டு வீரர்களும் இரண்டு முதிய மருத்துவர்களும் நூலேணி வழியாக விரைந்திறங்கி படகின் தளத்தில் குதித்தனர்.

மருத்துவர் "புண்பட்ட இளவரசர் எங்கே?" என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டார். "புண்பட்டவன் யாதவ வீரன். அவன் இறக்கலாகாது" என்றான் திருஷ்டத்யும்னன். "இறப்பு விண்ணளந்தோனின் ஆடல். நாங்கள் முயல்கிறோம் இளவரசே" என்றார் மருத்துவர். வீரர்கள் ஒரு கணம் திரும்பி அவனை நோக்கிவிட்டு விரைந்து உள்ளே சென்றனர். அவர்களின் விழிகளிலும் எளிய வியப்பு மட்டுமே இருந்தது. மருத்துவர் அறைக்குள் நிலத்தில் கிடந்த வீரனை மெல்ல தூக்கி அமரச் செய்தார். முதியமருத்துவர் அவன் கைகளைப் பற்றி நாடிபார்த்தார்.

எழுந்தபடி "மேலே பெரும்படகுக்கு கொண்டு செல்ல வேண்டும். தையலிடவேண்டியிருக்கிறது. தூளிப் படுக்கையை இறக்கச் சொல்லுங்கள்" என்றார். திருஷ்டத்யும்னன் "வருக!" என்று சாத்யகியிடம் சொல்லிவிட்டு நூலேணியைத் தொற்றி மேலே சென்றான். சாத்யகி தூளியாகக் கட்டப்பட்ட சால்வைக்குள் கைக் குழந்தைபோல தன் உடலோடு ஒட்டிக் கிடந்த இடக்கையை அசைக்காமல் வலக்கையால் பற்றி நூலேணியில் ஏறி மேலே சென்றான். மேலே நின்றிருந்த இளம் படைத்தலைவன் அவனை வணங்கி "இளைய யாதவர் அறைக்குள் இருக்கிறார். தங்களை உடனே அங்கு வரச் சொன்னார்" என்றான்.

திருஷ்டத்யும்னன் குறடுகள் ஒலிக்க படகின் மரத்தரையில் நடந்து மூங்கில்கள் போல இழுபட்டு நின்ற பாய்க்கயிறுகளையும் ஆங்காங்கே கோபுரம்போல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய வடங்களையும் கடந்து மரத்தால் ஆன மைய அறைக்குள் நுழைந்தான். குறுகிய படிகள் கீழிறங்கிச் சென்றன. அவற்றில் இரும்புக் குறடுகளை வைத்து அவன் இறங்கியபோது உள்ளே பல இடங்களில் அவ்வோசை எதிரொலித்தது. சாத்யகி படிகளில் இறங்கியபோது களைப்புடன் இரு முறை நின்று மீண்டும் வந்தான்.

படகின் உள்ளே சிறிய அறைக்குள் உயரமற்ற பீடத்தில் இளைய யாதவர் அமர்ந்திருக்க அருகே விரிக்கப்பட்ட கம்பளி மீது மூத்த யாதவர் தன் வெண்ணிறப் பேருடலுடன் படுத்திருந்தார். திருஷ்டத்யும்னன் தலை வணங்கி "இளைய யாதவரை வணங்குகிறேன்" என்றான். சாத்யகி ஒன்றும் சொல்லாமல் யாதவ முறைப்படி தலைவணங்கினான். இளைய யாதவர் திருஷ்டத்யும்னனை கையசைவால் வாழ்த்தி இருக்கையை சுட்டிக்காட்டி "நிகழ்ந்ததை சொல்க!" என்றார். திருஷ்டத்யும்னன் அமர்ந்தபடி "தாங்கள் அறியாதது எது என்று நான் அறியேன் அரசே. வினவுங்கள் விடை சொல்கிறேன்" என்றான்.

இளைய யாதவர் புன்னகைத்து "ஆம், அதுவே சிறந்தது" என்றபின் ஏவலனை நோக்கி "பாஞ்சாலருக்கு இன்கடுநீர் கொண்டுவருக!" என்றார். திருஷ்டத்யும்னன் குறும்பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு தன் இரும்புக்குறடுகளைக் கழற்றி அப்பால் வைத்தான். அது சேறு போல குருதி உலர்ந்து கருமை கொண்டிருந்தது. "ஒருவன் உயிர் பிழைத்திருக்கிறான் அல்லவா?" என்றார் இளைய யாதவர். "ஆம் அரசே. போரிலீடுபட்டவர்களில் ஒருவன் எஞ்சியிருக்கிறான். சுக்கான் பொறுப்பாளராகிய முதிய வீரரும் உள்ளார்" என்றான். இளைய யாதவர் "அரிய போர் பாஞ்சாலரே. ஒற்றைப்படகாக வெறும் பதினெட்டு வீரர்களுடன் கிருஷ்ணவபுஸின் படைநிரையையும் காசியின் காவல்படகையும் வென்று மீள்வதென்பது காவியங்களுக்குரியது" என்றார். "தங்கள் அருள்" என்று சொல்லி திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.

"நான் போரை ஒவ்வொரு கணமும் என அறிந்துகொண்டிருந்தேன்" என்றார் இளைய யாதவர். "தாங்கள் வெல்வீர் என அறிந்தமையால் இங்கு காத்து நின்றிருந்தேன்." திருஷ்டத்யும்னன் அவரது விழிகளை நோக்காமல் "தாங்கள் தொடர்ந்து வந்திருக்கிறீர்கள் என நான் அறியேன்" என்றான். "தொடர்ந்து வரவில்லை பாஞ்சாலரே. அஸ்தினபுரியிலிருந்து கிளம்பும்போது வென்றுமீளும் அக்ரூரரையும் உங்களையும் கங்கையிலேயே சந்திக்கத்தான் எண்ணினேன். காசி துரியோதனனுக்கும் பீமனுக்கும் மகள்கொடை அளித்த நாடு என்பதனால் படைகடந்து செல்ல முன்னரே ஒப்புதல் பெற்றிருந்தேன். இவ்வண்ணம் நிகழுமென நான் அறிந்திருக்கவில்லை" என்றார் இளைய யாதவர்.

திருஷ்டத்யும்னன் "அக்ரூரர்..." என்று தொடங்க "அவர்கள் இருவரும் செய்தவற்றை நான் முழுமையாகவே அறிவேன்" என்று இளைய யாதவர் இடைமறித்தார். "சியமந்தகத்தின் பலிகள் அவர்கள்." சாத்யகி சினத்துடன் ஏதோ சொல்லத்தொடங்க "இங்கு நாம் அதைப்பற்றி விவாதிக்க வரவில்லை. நாம் போர்புரிய வந்திருக்கிறோம்" என்றார் இளைய யாதவர். "இன்னும் மூன்று நாழிகை நேரத்தில் நாம் கிருஷ்ணவபுஸை தாக்குவோம்."

திருஷ்டயும்னன் "அரசே, கிருஷ்ணவபுஸ் ஐம்பது படகுகளும் ஆயிரத்துக்கும் குறைவான படைவீரர்களும் கொண்ட சிற்றூர். அங்கு நூற்றி ஐந்து இல்லங்களும் இரண்டு அரண்மனைகளும் மட்டுமே உள்ளன. நகரைச் சுற்றி உயிர்மரத்தாலான சிறிய வேலிதான். கோட்டை கூட இல்லை. அவ்வூரை வெல்ல துவாரகையின் பெருந்தலைவன் தன் படையுடன் வருவதென்பது சற்று மிகை. அவரது தமையனும் துணை வருவதென்பது அதனினும் இழிவு. இப்போர் தங்களுக்கு பெருமை சேர்க்காது. இப்படகுகளில் பாதியை என்னிடம் அளியுங்கள். அவர்களை வென்று சியமந்தகத்துடன் வந்து தங்கள் தாள் பணிகிறேன்" என்றான். இளைய யாதவர் "இல்லை பாஞ்சாலரே. சியமந்தகம் களவு கொள்ளப்பட்டதும் முதல் செய்தியை யாதவஅரசி எனக்குத்தான் அனுப்பியிருந்தாள். அது கோரிக்கை அல்ல, ஆணை" என்றார். புன்னகைத்து "என்னிடம் எப்போதும் அவள் ஆணைகளையே பிறப்பித்திருக்கிறாள். யாதவ குலத்தில் அவளுடைய ஆணைகள் இன்று வரை மீறப்படாதவையாகவே உள்ளன" என்றார்.

மூத்த யாதவர் உரக்க நகைத்து "பாஞ்சாலனே, அந்த ஆணைக்கு நானும் கட்டுப்பட்டவனே. எனவேதான் இனிய காட்டுலாவை நிறுத்திவிட்டு நானும் கலமேறினேன்" என்றார். திருஷ்டத்யும்னன் "இந்தப் போரில் நான் கலந்து கொள்ளலாமா?" என்றான். இளைய யாதவர் "நீர் என் உடனிருக்கலாம்" என்றார். திருஷ்டத்யும்னன் "போரென இதை சொல்லமுடியாது. நாம் மணியை மீட்கவேண்டுமென்பதே முதன்மையானது" என்றான். இளைய யாதவர் சாத்யகியிடம் திரும்பி "இளையோனே, உடனே சிறுகலத்தில் மதுராவுக்குச் செல்க! உமது கை நலம் பெற்றபின் பிறிதொரு போருக்கு எழுவோம்" என்றார். சாத்யகி தலை வணங்கி "இப்போரில் கலந்து கொள்ளாமல் இந்தப் புண் என்னைத் தடுப்பதை அறிகிறேன். இதை ஊழ்நெறி என்று கொள்கிறேன்" என்றான். இளைய யாதவர் புன்னகை செய்தார்.

திருஷ்டத்யும்னன் "இன்னும் சற்று நேரத்தில் நாம் கிருஷ்ணவபுஸுக்குள் இறங்குவோம்" என்றான். பின்பு விழிகளைத்தாழ்த்தி "அங்கே அக்ரூரருடன் இருப்பவர்களும் நமது படைகளே" என்றான். "ஆம், யாதவர் யாதவரை களத்தில் சந்திக்கும் முதல் போர் இது. என் விழிமுன் அது நிகழலாகாது என்று இதுநாள்வரை காத்திருந்தேன். அது நிகழுமென்றால் பிறிதொருமுறை அது நிகழாத வண்ணமே நிகழ வேண்டும். இப்போரில் சததன்வாவின் படை வீரர்களில் ஒருவர்கூட உயிருடன் எஞ்சலாகாது. அந்நகரில் ஒரு இல்லம்கூட தன் அடித்தளம் மீது நிற்கலாகாது. பிறிதொரு முறை இந்நகரின் பெயர் எந்தச் சூதனின் சொல்லிலும் திகழலாகாது. எந்த யாதவனும் அச்சத்துடனன்றி இந்த நாளை நினைக்கலாகாது" என்றார். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி "ஆணை" என்றான்.

"சற்று ஓய்வெடுத்து தங்கள் ஆவநாழியை நிரப்பி வாரும். நானும் களம்புகும் தருணம் வந்துவிட்டது" என்றார் இளைய யாதவர். வெளியே முதற்பெருங்கலத்தின் மேலிருந்த தொலைதேர் வீரன் தன் கொம்பை முழக்கினான். தொடர்ந்து அனைத்துக் கலங்களிலுமிருந்த கொம்புகள் முழங்கத்தொடங்கின. "அவர்கள் நம்மை பார்த்துவிட்டார்கள்" என்றார் இளைய யாதவர். சாத்யகியிடம் திரும்பி "ஓய்வெடும் இளையவனே" என்றபின் எழுந்து தன் ஏவலனை நோக்க அவன் மேலாடையை எடுத்து இளைய யாதவர் கையில் அளித்தான். "தங்கள் கவசங்கள்?" என்றான் திருஷ்டத்யும்னன். "நான் களத்தில் கவசங்கள் அணிவதில்லை" என்றார் இளைய யாதவர். "கவசங்கள் என்னை காக்கின்றன என்னும் உணர்வு என் படைக்கலங்களை வலுவிழக்கச்செய்கிறது. நான் என் கல்வியை மட்டுமே கவசமெனக் கொள்ள விழைகிறேன்."

மூத்த யாதவர் எழுந்து தன் கால்களை இருமுறை நீட்டி தரையில் உதைத்துக் கொண்டு திரும்பிப்பார்க்க இரு ஏவலர்கள் பெரிய இரும்புக்கலங்களைப் போன்ற குறடுகளைக் கொண்டு வைத்து அவர் கால்களை உள்ளே விட்டு அதன் கொக்கிகளைப் பொருத்தி இறுக்கினர். முழங்கால்களுக்கும் முழங்கைகளுக்கும் இரும்புக் காப்புகளை அணிவித்தனர். இடையில் தோலாலான கச்சையை முறுக்கிக் கட்டி அதன் இருபக்கமும் நீண்ட குத்துவாள்களை பொருத்தினர். தோள்களில் இரும்புக் கவசங்களை அணிவித்து அதன் கீழ்ப்பொருத்துகளை புயத்துக்கு அடியில் இறுக்கினர். நான்கு வீரர்கள் தங்கள் கைத்தசைகள் தெறிக்க சுமந்து கொண்டு வந்த பெரிய இரும்பு கதாயுதத்தை இடக்கையால் பிடியைப் பற்றி எளிதாகத் தூக்கி ஒரு முறை சுழற்றி தோளில் வைத்துக் கொண்டு திரும்பி "கிளம்புவோம் இளையோனே" என்றார். "தாங்களும் தலைக் கவசம் அணிவதில்லையா?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம், இந்தத் தலையை என்னை வெல்ல விழைபவனுக்காக திறந்து வைத்திருக்கிறேன்" என்றார் பலராமர் நகைத்தபடி.

இளைய யாதவர் பொற்பூச்சிட்ட தோல்குறடுகளை அணிந்து கொண்டார். வீரர்கள் மஞ்சள் நிறக் கச்சையை இடையைச் சுற்றி கட்டினார். இரு வீரர்கள் தந்தப் பேழை ஒன்றை கொண்டுவர அதைத்திறந்து உள்ளிருந்து அரைவட்ட வடிவம் கொண்ட பன்னிரு வெள்ளித் தகடுகளை எடுத்தார். அவற்றை மிக இயல்பான கையசைவுகளுடன் ஒன்றுடனொன்று பொருத்தி ஒற்றைச் சக்கரமாக்கினார். அதை இருவிரல்களால் எடுத்து சற்றே சுழற்ற அவர் கையில் அது உதிரும் முல்லைமலர் போல சுழலத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் நோக்குவதைக் கண்டதும் புன்னகையுடன் அதை சற்றே திருப்ப அவர் கையிலிருந்து தானாகவே என சுழன்றெழுந்து வெள்ளி மின்னல்களை அறையின் சுவர்களிலும் கூரையிலும் சிதறவிட்டபடி சென்று படகின் சாளரத்தில் தொங்கிய திரைச்சீலையொன்றை மெல்லிய கீறலோசையுடன் கிழித்து சற்றே வளைந்து திரும்பி அவர் விரல்களிலேயே வந்தமர்ந்தது.

திருஷ்டத்யும்னன் வியப்புடன் "அதில் ஒரு கொலைத்தெய்வம் குடியிருப்பது போல தோன்றுகிறது. நிகரற்ற படைக்கலம்" என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் "இனிய தோற்றம் கொண்டது, சூரியக்கதிரே ஒரு மலரானதுபோல" என்றான். இளைய யாதவர் "இதன் பெயரே அதுதான். நற்காட்சி" என்றார்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 7

கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல தோன்றியது. பலராமர் "இளையோனே, நாம் போருக்கெழுகிறோம் என்றால் நல்ல உணவுக்குப்பின் செல்வதல்லவா நன்று?" என்றார். "இது போரே அல்ல. அரைநாழிகைகூட இந்த ஊர் நம் முன் நிற்க முடியாது" என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் "அரைநாழிகை நேரம் போரிடுவதற்கும் மூத்தவருக்கு உணவு வேண்டுமே" என்றார். பலராமர் உரக்க சிரித்து "நான் கதாயுதம் ஏந்துபவன். இதற்கும் சேர்த்து நான் உண்ணவேண்டும்" என்றார்.

வெளியே கொம்புகளும் முரசுகளும் இணைந்து ஒலித்தன. வாசலில் வந்து நின்ற படைத்தலைவன் "அரசே, கிருஷ்ணவபுஸின் படகுகள் துறையிலிருந்து எழுகின்றன" என்றான். நற்செய்தி ஒன்றை கேட்டதுபோல புன்னகை மலர்ந்த முகத்துடன் "முழுதாக அழியுங்கள்" என்றார் இளைய யாதவர். "அவ்வண்ணமே" என்று சொல்லி தலைவணங்கி படைத்தலைவன் வெளியேறினான். பலராமர் "ஆக, நெடுநாட்களுக்குப்பின் ஒரு போர். இளையோனே, நான் உண்மையில் போரை விரும்பவில்லை. எதன்பொருட்டென்றாலும் மானுடர் இறப்பது எனக்கு உகப்பதல்ல" என்றார்.

"போரின்றி படைக்கலங்களுக்கு என்ன பொருள் மூத்தவரே? படைக்கலங்கள் இல்லாமல் நம் தோள்களுக்கு என்ன பொருள்?" என்ற திருஷ்டத்யும்னன் "எனக்கு போரில்லாமலிருக்கும் பொழுதுகள் உகந்தவை அல்ல. அப்போது காயோ மலரோ எழாத வெற்றுமரமென என்னை உணர்வேன்" என்றபடி தன் வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அவனை நோக்கி வந்த ஏவலனிடம் "என் அம்பறாத்தூணியை நிறைத்துக் கொடுங்கள்... விரைவு" என்றபடி கலத்தின் அணைச்சுவர் விளிம்பை நோக்கி சென்றான்.

தொலைவில் கிருஷ்ணவபுஸின் இருபத்தைந்து காவல்படகுகள் பாய்களை விரித்து காற்றிலாடும் தோரணத்தின் வெண்மலர்கள் போல அலைகளில் எழுந்தமைந்து வந்துகொண்டிருந்தன. அவற்றின் அசைவிலேயே அப்படைவீரர்கள் அஞ்சியிருப்பது தெரிவதாக திருஷ்டத்யும்னன் எண்ணினான். தன் வில்லை நாணேற்றாமலேயே குறுக்காக வைத்துக் கொண்டு கண்களைச் சுருக்கி ஒளிபரவிய நீர்வெளியை நோக்கி நின்றான். யாதவர்களின் படகுப்படை மீன் வடிவிலிருந்து வில் வடிவாக மாறியது. பின் அதன் இரு ஓரங்கள் முன்னால் செல்ல பிறை வடிவம் கொண்டது. வீசப்பட்ட மீன்வலை என மெல்ல இறங்கி கிருஷ்ணவபுஸின் படைகளை சூழ்ந்தது.

கிருஷ்ணவபுஸின் படகுகள் யானையை அணுகும் நாய்களுக்குரிய உடலசைவு கொண்டிருந்தன. முதலில் வந்த படகு விரைவழிந்து பின்னால் வந்தவற்றுடன் சென்று இணைந்துகொண்டது. அவன் நோக்கி நிற்கையிலேயே யாதவப்படைகளிலிருந்து கிளம்பிய எரியம்புகள் உலை உமிழ் அனல் பொறிகளாக எழுந்து வானில் வளைந்து சததன்வாவின் படகுகளை நோக்கி இறங்கின. நூற்றுக்கணக்கான அரக்குருளைகளால் அத்தனை படகுகளும் ஒரே கணத்தில் பற்றிக்கொண்டு செந்தழல் எழுந்து புகைந்து எரிய நிலையழிந்தன.

அதிலிருந்த வீரர்கள் சிலர் நீரில் குதித்தனர். நீர்ப்பறவைகள் மொய்த்துக்கொள்வதுபோல வெண்ணிற இறகுகள் கொண்ட அம்புகள் அவர்களைச் சூழ்ந்து வீழ்த்தின. பாய்மரத்தின் மேலே இருந்த பரண்களிலிருந்து ஏவப்பட்ட நீண்ட அம்புகள் நீருக்குள்ளும் இறங்கி மூழ்கியவர்களையும் கொன்றன. நீரில் குமிழியிட்டு எழுந்த குருதி அனல் போல பரவி சுழித்து நீண்டு ஓடியது. அங்கே மீன்கூட்டங்கள் வந்து துள்ளிமறிந்தன.

சிறிய தடைகூட இல்லாமல் களிமண் அணையை நொறுக்கும் காட்டுவெள்ளம் என யாதவர்களின் படை கிருஷ்ணவபுஸை நெருங்கியது. அவர்களின் படகுகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தபடி தூண்முறிந்த மாளிகைகள் போல மெல்ல சாய்ந்து சென்று விலாவில் நீர்விளிம்பு அலைத்து அலைத்து மேலேற படிப்படியாக மூழ்கின. அனைத்து வீரர்களும் அரை நாழிகை நேரத்தில் கொன்று வீழ்த்தப்பட்டனர். படகுகளின் அடிவளைவை பெரிய இரும்புத்தண்டுகளால் மோதி உடைத்து முழுமையாக நீரில் மூழ்கடித்தது யாதவப்படை. யாதவப் பெருங்கலங்கள் பாய் சுருக்கி யானைக்கூட்டங்கள் போல கிருஷ்ணவபுஸின் சிறிய துறைமுகத்தை நோக்கி சென்றன.

முதலில் சென்ற பெருங்கலத்தின் அளவுக்கே அந்தப் படகுத்துறை இருப்பதுபோல் தோன்றியது. அதிலிருந்து எழுந்த பெரிய எரியம்புகள் படகுத்துறையின் தூண்கள்மீதும் பலகைகளின் மேலும் விழுந்து பற்றி எரியவைத்தன. படகுத்துறையை சுற்றியிருந்த சிறுபடகுகளும் சுங்கக்கட்டடங்களும் பற்றி எரிய கொழுந்துகள் மேலெழுந்து பெரிய சிதை போல ஆகியது கிருஷ்ணவபுஸின் துறைமுகம். அங்கிருந்த படைவீரர்கள் அலறியபடி அப்பாலிருந்த உயிர்மரக்கோட்டையை நோக்கி ஓடும்போதே அம்புபட்டு விழுந்து துடிக்க அவர்கள் மேல் எரியும் தூண்கள் தழல் அலைக்க விழுந்தன.

கரையணுகிய யாதவப் படகு ஒன்று நாநீட்டி நடைபாதையை கிருஷ்ணவபுஸின் மரங்களடர்ந்த காட்டை இணைத்து அமைத்துக் கொண்டது. அப்படகுடன் இன்னொரு படகு நடைபாதையால் இணைய படகுகளாலான பெரிய பாலம் ஒன்று கங்கை மேல் நீண்டு அதன் அனைத்துக் கலங்களையும் இணைத்தது. அதனூடாக யாதவப் படைவீரர்கள் "விண்ணவன் வாழ்க! வெற்றிகொள் யாதவர் குலம் வாழ்க! மூத்தோர் வாழ்க! இளையோன் வெல்க!" என்ற போர்க்கூச்சலுடன் தோளிலேந்திய அம்புகளும் கையில் துடித்த நீண்ட விற்களுமாக குறடுகள் தடதடக்க இறங்கி நகருள் நுழைந்தனர். மலை இடிந்து சரிவதுபோல அவர்களின் குறடோசை நகர் மேல் பொழிந்தது.

நகருக்குள் பல இடங்களில் முரசுகள் முழங்க அது அஞ்சிப் பதுங்கி பின்கால்களில் அமர்ந்து தலைதாழ்த்தி உறுமும் கரடிபோல தெரிந்தது. தெருக்களில் மக்கள் சிதறி பல பக்கமும் ஓடும் ஒலிகள் கேட்டன. படகிலிருந்து பெரிய எரியம்புகளுடன் கூடிய விற்களுடன் இறங்கிய வில்லவர்கள் தரையில் வில்லை ஊன்றி நாணேற்றி எரியம்புகளை நகரம் நோக்கி தொடுத்தனர். சில கணங்களில் கிருஷ்ணவபுஸின் மரவீடுகள் அனைத்தும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கின. புகை முகிலெனச் சுருண்டு எழுந்து கரிய மரம்போல குடைவிரித்து நின்றது.

மக்களின் கூச்சல்களும் புண்பட்டோரின் அலறல்களும் கொம்புகளும் முரசுகளும் ஒலிக்கும் ஓசைகளும் கலந்து எழுந்தன. யானைகளும் குதிரைகளும் அத்திரிகளும் முழுமையாக கைவிடப்பட்டன என அவை எழுப்பிய குரல்கள் காட்டின. அஞ்சி அலறிக்கொண்டிருந்த நகரின் முழக்கத்தின் நடுவே தானும் அஞ்சியதுபோல தளர்ந்து போர் முரசு ஒலித்துக் கொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் தன் வாளை உருவியபடி படைகளின் முன்னால் விரைந்தோடி துறைமுகப்பிலிருந்து ஊருக்குள் செல்லும் சாலையை அடைந்தான்.

கிருஷ்ணவபுஸ் கங்கையை நோக்கி அமைந்த நான்கு அடுக்குகளாலான அரைவட்டச் சாலைகளால் ஆனது. முதல் அரைவட்டத்தின் நடுவே இருந்த மூன்றடுக்கு மாளிகை சததன்வாவின் அரண்மனை. இருபக்கமும் அவனுடைய மூன்று துணைவிகளின் சிறிய இல்லங்கள். பின்பகுதியில் யாதவர்களும் வணிகர்களும் குடியிருந்தனர். அரண்மனை முகப்பிலிருந்த பெரிய முற்றம் அங்காடியாகவும் படைப்பயிற்சிக் களமாகவும் இருந்தது. அங்கே எட்டு சிறிய தேர்களும் மூன்று பல்லக்குகளும் நின்றிருந்தன. ஊரைச் சுற்றி மரங்களை நெருக்கமாக நட்டு ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் பிணைத்து முட்களைப் படர விட்டு இணைத்துக் கட்டி உருவாக்கிய வேலியே கோட்டை போல இருந்தது.

கோட்டை முகப்பில் இருந்த தடித்த மரக்கதவை இழுத்து மூடிவிடலாமென்று சிலர் முயல அவர்கள் அக்கணமே மதுராவின் வீரர்களின் அம்புகளால் கொல்லப்பட்டனர். ஆனால் மேலும் சிலர் ஓடிச்சென்று வடம் ஒன்றை வெட்ட மரங்களின் மேல் கட்டப்பட்டிருந்த முள்மூங்கில் கதவு ஓசையுடன் சரிந்து விழுந்து வாயிலை மூடிக்கொண்டது. எரியும் அரக்கில் முக்கிய அம்புகளுடன் உயர்ந்து தலைக்கு மேல் வளைந்த நிலைவிற்களுடன் உருவிய வாள்களுடன் யாதவ வீரர்கள் போர்க்குரல் எழுப்பியபடி நகருக்குள் நுழைந்தனர். அவர்களை எதிர்கொள்ள அங்கு வீரர் எவரும் இருக்கவில்லை. தப்பி ஓடிய மக்கள் உயரமற்ற மரச்சுவர்களுக்கு அப்பால் ஒளிந்து கொண்டு அச்சத்துடன் கூக்குரலிட்டனர்.

கோட்டையின் மூங்கில் கதவை படகில் இருந்து இறக்கிய தண்டு வண்டியால் மோதி சிதறடித்து உள்ளே நுழைந்த மதுராவின் படைகள் முன்னரே அங்கு சென்று விழுந்த எரிஅம்புகளால் பற்றிக்கொண்டு எரிந்து அனல் சூடி உடைந்து அடித்தளங்கள் மேல் அமர்ந்துகொண்டிருந்த இல்லங்களை நோக்கி முன்னேறின. குட்டிச் சுவர்களுக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலும் நின்று அம்பு தொடுக்க முயன்ற கிருஷ்ணவபுஸின் யாதவர்கள் கொன்று வீழ்த்தப்பட்டனர். அங்கு எதிர்ப்பென ஏதும் இருக்காது என்று உணர்ந்ததுமே மதுராவின் படைகள் கள்வெறி கொள்ளத் துவங்கின. ஆடுமாடுகளும் குதிரைகளும்கூட அவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டன. வாளைத்தூக்கி அமலையாடிய வீரர்கள் உரக்க நகைத்தனர். கூச்சலிட்டபடி பெண்களை நோக்கி சென்றனர்.

பின்னால் இருந்து பலராமர் "குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் பசுக்களும் அன்றி ஒரு உயிரும் இங்கு எஞ்ச வேண்டியதில்லை" என்று ஆணையிட்டார். தன் வலக்கரத்தில் இரும்பு கதாயுதத்தை ஏந்தியபடி நிலமதிர பெருங்குறடுகளை எடுத்து வைத்து உள்ளே வந்த அவர் எரிந்து சரிந்த இல்லங்களின் துண்களை அறைந்து சிதறடித்தார். சததன்வாவின் அரண்மனை நோக்கி சென்ற யாதவர்கள் அது முன்னரே எரிந்து நீர் புகுந்த மரக்கலம் என ஒருபக்கம் சரிந்து விட்டிருப்பதை கண்டனர். உள்ளே நுழைந்த பலராமர் அவரை நோக்கி ஓடிவந்த ஒருவனின் தலையை நீர்க்குமிழியென சிதறடித்தார்.

அவனைத் தொடர்ந்து ஓடிவந்த இன்னொருவன் "யாதவரே, நாங்கள் தங்கள் காலடியில் தஞ்சம் கொள்ள வந்தவர்கள்" என்று கூவி தலைக்கு மேல் கைகூப்பியபடி நிலத்தில் அமர்ந்தான். அவன் கையையும் தலையையும் சேர்த்து சீவி எறிந்தது பின்னாலிருந்து வந்த இளைய யாதவரின் படையாழி. "ஒருவரும் தஞ்சம் புக தகுதியானவர்கள் அல்ல. இந்நகரில் சிறைபிடிக்கப்படாத பெண்களோ கொல்லப்படாத ஆண்களோ எஞ்ச வேண்டியதில்லை" என்றார் இளைய யாதவர்.

"குடிமூத்தவர்?" என்று ஒரு படைத்தலைவன் திரும்பி கேட்டான். "முதியவரும் கொல்லத் தக்கவர்களே. உற்ற நேரத்தில் உரிய சொல் சொல்லாத பிழைக்காக அவர்கள் குருதி சிந்தட்டும்" என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் ஊருக்குள் புகுந்து தரையெங்கும் சிந்திக் கிடந்த குருதியின் மேல் நடந்தான். சாம்பல் புகை எழுந்து கரித்திவலைகள் மழையென பொழியத் தொடங்கின. யாதவ வீரர்களின் வியர்வை மேல் கரிபடிந்து கறையென வழிந்தது. எரிந்து கொண்டிருந்த மாளிகையின் முகப்பில் சென்று நின்ற இளைய யாதவர் "இங்கு எவருள்ளனர்?" என்றார்.

வலைபோல இருபக்கமும் விரிந்து முழு ஊரையும் வளைத்துக் கொண்ட யாதவப் படையின் மறு எல்லையிலிருந்து உருவிய வாளுடன் ஓடி வந்த படைத்தலைவன் "அரசே, ஊருக்குள் அவர்கள் மூவரும் இல்லை" என்றான். இளைய யாதவர் புன்னகைத்து "எண்ணினேன்" என்றார். "நாற்புறமும் புரவிக்குளம்படிகள் தெரிகின்றன. இந்தக் கோட்டை எளிதாகத் திறக்கும் மரவாயில்களை கொண்டது. நான்கு வாயில்கள் பின்பக்கம் உள்ளன" என்றான் படைத்தலைவன். "அவர்கள் நம்மைக் கண்டதுமே கிளம்பிவிட்டிருக்கவேண்டும்."

இளைய யாதவர் "இங்குள்ள பெண்டிரை சிறைப்பிடித்துக் கொண்டு வாருங்கள்" என்று சொல்லி மாளிகை முகப்பின் முற்றத்தில் சென்று நின்றார். பலராமர் "இளையோனே" என்று ஏதோ சொல்லவர "இவர்கள் நம் எதிரிகள் மூத்தவரே" என்ற இளைய யாதவர் படைத்தலைவனிடம் "விரைவில்" என்று கூவினார். யாதவப் படையினர் எரிந்து கொண்டிருந்த இல்லங்களுக்குப்பின்னால் தோட்டங்களிலும் குழிகளிலும் ஒளிந்துகொண்டிருந்த பெண்களை குழல் பற்றி இழுத்துக்கொண்டு வந்து முற்றத்தில் தள்ளினர்.

ஒருவரையொருவர் அணைத்தபடி குழந்தைகளை இடையோடு சேர்த்து நிலம்நோக்கி வளைந்தமர்ந்து அவர்கள் கதறி அழுதனர். முதியபெண்கள் நெஞ்சிலும் தலையிலும் அறைந்து ஓலமிட்டனர். அவர்களின் கண்ணீரின் நடுவே அவற்றுக்கெல்லாம் அப்பால் எங்கிருந்தோ நோக்கும் கற்சிலையென இளையயாதவர் நின்றார். திருஷ்டத்யும்னன் அவர் விழிகளை நோக்கினான். ஒரு துளி கருணையேனும் இல்லாத விழிகள் என எண்ணிக்கொண்டான். ஒரே இமைப்பில் தன் படையாழியை எழுப்பி இவர்கள் அனைவரின் தலையையும் கொய்ய இவரால் முடியும் என்று தோன்றியது. இரக்கமற்றவர் இரக்கமற்றவர் என்று அவன் உள்ளம் அரற்றியது. புன்னகை ஒளியென உறைந்த அம்முகத்தை நோக்கி விழியெடுக்க முடியாமல் தன்னை விலக்கி தலை திருப்பி அகன்றான்.

நாற்புறமும் இல்லங்களுக்குள் இருந்து பெண்களை இழுத்துக் கொண்டுவந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் உடல் விதிர்க்க அலறியபடி அன்னையரின் மார்புகளை அள்ளிப் பற்றிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் கால்தளர்ந்து நிலத்தில் விழ அவர்களை கைப்பற்றி இழுத்துக்கொண்டு வந்து குவியல்களாக அள்ளிக் குவித்தனர். திருஷ்டத்யும்னன் தரையெங்கும் பரவிய கரிப்புழுதியின் மேல் கால்குறடின் தடம் பதிந்து பதிந்து தொடர மெல்ல நடந்தான். கிருஷ்ணவபுஸ் முற்றாகவே எரிந்தழிந்து சரிந்துவிட்டது என்று தெரிந்தது. படைத்தலைவர்கள் "ஒருவர் எஞ்சலாகாது! ஒருவர் கூட!" என்று கூவியபடி அனைத்து திசைகளிலும் படை வீரர்களை அனுப்பிக்கொண்டிருந்தனர்.

கிணறு ஒன்றுக்குள் நோக்கிய யாதவவீரன் "இங்கே! இங்கே!" என்று கூவ நாற்புறத்தில் இருந்தும் படைவீரர்கள் அக்கிணற்றை நோக்கி சென்றனர். கிணற்றுக்குள் ஒளிந்திருந்த கிருஷ்ணவபுஸின் படைவீரர்கள் கூச்சலிட்டு கதறினர். ஒருவன் விளிம்பில் தொற்றி மேலேறி "யாதவர்களே, நாங்களும் அந்தகக் குலத்தவரே. அறியாது செய்த பிழைக்காக பொறுத்தருளுங்கள். எங்கள் உயிர் ஒன்றே நாங்கள் கோருவது" என்றான். அவர்களை வளைத்துக்கொண்ட யாதவப் படைவீரர்கள் திரும்பி நோக்க படைத்தலைவன் "கொல்லுங்கள்! அதுவே அரச ஆணை" என்றான்.

கண்ணிர் வழிய கைகூப்பி மன்றாடி நின்ற முதிய யாதவவீரனின் தலையை ஒரு வீரன் வெட்டி வீழ்த்த அது நீர்நிறைந்த சிறுகலம் போல ஓசையிட்டபடி கிணற்றுக்கு வெளியே உருண்டு தெறித்தது. குருதி பீரிடும் கழுத்துடன் கைவிரித்துத் தள்ளாடிய உடல் சரிந்து உள்ளே விழுந்தது. உள்ளிருந்து ஏறமுயன்ற யாதவர்கள் கதறி அழுதபடி ஒருவர் மேல் ஒருவர் என விழுந்தனர். கிணற்றைச் சுற்றி நின்று உள்ளே அம்புகளைத் தொடுத்தனர் மதுராவின் வீரர்கள். திருஷ்டத்யும்னன் இடையில் கை வைத்து நின்று அதை நோக்கினான். அம்புகள் விழ விழ உள்ளிருந்து எழுந்த அலறலோசை அடங்கியது.

இறுதியாக அம்பை செலுத்திவிட்டு ஒரு வீரன் வில்லைத்தாழ்த்த கிணற்றைச் சுற்றி நின்ற யாதவர்கள் ஒவ்வொருவரும் சோர்ந்தவர்கள் போல திரும்பி அந்த ஆழத்தை நோக்கவிழையாதவர்கள் போல விலகினர். படைத்தலைவன் "பிணங்களுக்கு அடியில் ஒளிந்து எவரேனும் எஞ்சக்கூடும். எரியும் தடிகளை உள்ளே போட்டு சேர்த்து பொசுக்கி விடுங்கள்" என்று ஆணையிட்டான். யாதவ வீரர்கள் எரிந்து கொண்டிருந்த இல்லங்களிலிருந்து மரக்கூரைகளையும் தூண்களையும் உள்ளே அள்ளிப் போட்டனர். பற்றியெரிந்து கனல் வடிவாக இருந்த தூண்களை உடைத்து உள்ளே போட உள்ளிருந்து அனலெழத் துவங்கியது. அப்போதும் இறக்காமல் இருந்த கிருஷ்ணவபுஸின் யாதவர்கள் சிலர் அலறியபடி மேலெழ அவர்களை வெட்டி திரும்பவும் அனலுக்குள்ளேயே போட்டனர்.

திருஷ்டத்யும்னன் அந்தத் தலையை நோக்கினான். அது வியந்தபடி பற்களைக்காட்டி கிடந்தது. மூக்குக்குள் அடர்ந்த முடி தெரிந்தது. உடலற்ற தலையின் விழிகளிலும் உதடுகளிலும் தெரிந்த உணர்ச்சி அச்சமூட்டும் பொருளின்மை கொண்டிருந்தது. எரிபுகைசூழ்ந்த தெருக்கள் வழியாக நடந்தான். எங்கிருக்கிறது சியமந்தகம் என எண்ணிக்கொண்டான். சததன்வா அதை தன் நெஞ்சோடு அணைத்தபடி விலகி ஓடி இருக்கக்கூடும். கங்கை வழியாக செல்லும் அளவிற்கு அவன் மூடன் அல்ல என்று தோன்றியது. கரை வழியாக சென்றால் யாதவர்கள் அவனைப் பிடிப்பது எளிதல்ல. காசிக்குள் புகுந்து மகதத்தின் எல்லைக்குள் நுழைந்தால் பிறகு ஒருபோதும் அவன் இளைய யாதவரின் கைக்கு சிக்கப் போவதில்லை. சியமந்தகத்தை மகதனுக்கு காணிக்கை வைத்தான் என்றால் அங்கொரு படைத்தலைவனாக அவன் பொறுப்பு கொள்ளவும் கூடும்.

இருண்ட புதர்க்காடுகளுக்குள் புரவியில் சியமந்தகத்தை கச்சையில் இறுக முடிந்தபடி செல்லும் சததன்வாவை அவன் நினைவுள் எழுப்பினான். ஒரு கணம் கோழை என்று கசந்தது அவன் அகம். மறுகணம் அவ்வாறு செல்பவனுடன் தன்னையும் இணைத்துக்கொண்ட தன் நெஞ்சின் ஆழத்தை எண்ணி துணுக்குற்று அதை எவரேனும் அறிகிறார்களா என்பதுபோல சூழ நோக்கினான். பின்னர் நீள்மூச்சுடன் எளிதாகி தன் உள்ளத்தை முழுதறிந்தவர் எவரேனும் இருக்கமுடியுமா என எண்ணிக்கொண்டான். இருந்தால் அவர் இப்புவியில் அறிய பிறிது ஏதுமில்லை.

கிருஷ்ணவபுஸின் ஒவ்வொரு மூலையிலும் இடுக்குகளிலும் துழாவி ஒருவர்கூட எஞ்சாது கொன்றுவிட்டு குருதி சொட்டும் வாள்களுடனும் குலுங்கும் ஆவநாழிகளுடனும் மதுராவின் வீரர்கள் முற்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களை அதுவரை இயக்கிய உளஎழுச்சி வடிந்து மெல்ல தளரத்தொடங்கியிருந்தனர். எவரும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குப்பின்னால் மண்ணை அணைத்தபடியோ விண்நோக்கி கைவிரித்தபடியோ சடலங்கள் கிடந்தன. ஒவ்வொருமுகமும் ஒரு சொல்லில் சிலையாகியிருந்தது. அச்சொல்லுடன் அவர்கள் விண்ணேகுவர் போலும். அது மண்ணில் அவர்கள் சொல்லிச்சென்றதா? விண்ணுக்குக் கொண்டுசென்றதா?

பொருளின்றி எண்ணங்களை ஓட்டும் பழக்கம் நோய்ப்படுக்கையில் தனக்கு வந்ததா என்று திருஷ்டத்யும்னன் வினவிக்கொண்டான். தன்னை கலைத்துக்கொண்டு பெருமூச்சுடன் கிருஷ்ணவபுஸின் சிதையை நோக்கி நின்றான். குருதியை அழிப்பதற்கு எளிய வழி நெருப்பிடுவதே என்று எண்ணம் வந்தது. கசப்புடன் புன்னகை புரிந்தபடி வானை நோக்கினான். இளம் வெயில் விரிந்து கிடந்த நீல வானம் அந்தப் புகைக்கும் அனலுக்கும் அப்பால் ஏதுமறியாத தூய பளிங்குக் கூரையென கவிழ்ந்திருந்தது. இல்லங்கள் கனல் குவைகளாக மாறி விட்டிருந்தன. நடுவே சததன்வாவின் மாளிகை செந்நெருப்பு தேங்கிய குளம் போல தெரிந்தது.

மாளிகையை சுற்றிக்கொண்டு அவன் மீண்டும் கிருஷ்ணவபுஸின் அரைவட்ட அரண்மனை முற்றத்திற்கு வந்த போது பெண்களும் குழந்தைகளும் அமர வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் நிலத்தில் முகம் பொத்தி விழுந்து கிடக்க அவர்களைச் சூழ்ந்து உருவிய வாள்களுடன் மதுராவின் யாதவர் நின்றிருந்தனர். பலராமர் தன் கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி அதன் மேல் இடையை சற்றே சாய்த்தவர் போல நின்றிருக்க அருகே இளைய யாதவர் மார்பின் மேல் கைகளைக் கட்டியபடி அலறியழும் பெண்களையும் குழந்தைகளையும் உயிரற்றவற்றை என நோக்கிக் கொண்டிருந்தார்.

திருஷ்டத்யும்னன் குறடு ஓசையிட அவரருகே சென்று நின்றான். இளைய யாதவரின் விழிகள் ஒவ்வொரு முகமாக தொட்டுத் தொட்டு சென்றன. பின் ஒரு பெண்ணை அடையாளம் கண்டார். அவளைச் சுட்டி "எழுக" என்றார். அவள் உடல் நடுங்கியபடி எழுந்து கைகூப்பியபடி தலை குனிந்து நின்றாள். நீண்ட கருங்குழல் அவிழ்ந்து பின்பக்கத்தை தழுவியது. பொன்னிற முகத்திலும் கழுத்திலும் கண்ணீரும் வியர்வையும் கரைத்த கரி வழிந்திருந்தது. "உனது பெயர் என்ன?" என்று இளைய யாதவர் கேட்டார். "நான் அந்தகக் குலத்து மாலினி. படைத்தலைவர் அக்கிரசேனரின் மகள்" என்றாள். "நீ அறிவாய் சததன்வா எங்கு சென்றான் என்று" என்றார் இளைய யாதவர்.

அவள் திடுக்கிட்டு விழிதூக்கி ஏதோ சொல்ல சிறிய இதழ்களை அசைக்க இளைய யாதவர் "உன் நெஞ்சை நானறிவேன். இவ்வூரை விட்டுச் செல்லும்போது அவன் உன்னிடம் மட்டுமே விடைபெற்றிருக்கிறான்" என்றார். "நான் ஒன்றும் அறியேன் இளைய யாதவரே" என்று அவள் சொல்ல "உன்னை கணவனை இழந்தவள் எனும் இடத்தில் துவாரகையில் அமர்த்த நான் உளம் கொண்டுள்ளேன். இக்கணம் அவன் சென்ற திசையை சொல்லாவிட்டால் தொழும்பி என அதே நகரில் நீ வாழ நேரும்" என்றார். அவள் கழுத்தும் தோள்குழிகளும் அதிர விம்மி அழுதபடி "என்னிடம் மட்டும் சொல்லிச் சென்ற ஒரு சொல்லை நான் எங்ஙனம் சொல்வேன்?" என்றாள்.

அவர் அவள் அருகே சென்று "சொல்லியே ஆக வேண்டும். பெண்ணுக்கு உயர்வென்பது அவள் தன்மதிப்பே. அதன் பொருட்டு உன்னிடம் சததன்வா சொன்னதை நீ சொல்வாய்" என்றார். அவள் ஈற்று நோவுகொண்ட பசு என உடல் அதிர சிலகணங்கள் நின்றாள். பின்னர் அவளுக்குள் எதுவோ எழுவதை காண முடிந்தது. நிமிர்ந்து விழி தூக்கி இளைய யாதவரை நோக்கினாள். ஒரு கையால் தன் பரந்த கூந்தலை சுழற்றிக் கட்டிக்கொண்டு இன்னொருகையை இடையில் ஊன்றி "இளைய யாதவரே, பெண்ணுள்ளத்தை நீர் அறிவீர். எந்தப்பத்தினியையும்போல என் கொழுநன் பொருட்டு எந்த இழிநரகமும் செல்ல சித்தமானவள் நான். ஒருநிலையிலும் அவர் சொன்ன சொற்களை சொல்லப் போவதில்லை" என்றாள்.

இளைய யாதவர் அருகே வந்து அவள் விழிகளை நோக்கி புன்னகைத்து "எனக்காகக் கூடவா?" என்றார். அவள் அவர் விழிகளை ஏறிட்டு "யாதவரே, என் உள்ளத்தில் என்றும் உம் பீலிவிழி நோக்கியிருந்தது. ஆனால் அதை சூடியிருந்தது என் கொழுநரின் என்றும் வாடாத இளமைதான்" என்றாள். அவர் கண்கள் மாறின. "அவனும் நானே" என்றபின் புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.

அவள் "அத்துடன் இன்னொன்றும் அறிவேன், ஒருநிலையிலும் எந்தப் பெண்ணின் தன்மதிப்பையும் நீர் அழிக்கமாட்டீர் இளையோனே. நீர் வந்தது அதற்கல்ல என்று அறியாத ஒரு பெண்ணேனும் இன்று பாரத வர்ஷத்தில் உள்ளனரா?" என்றாள். அவள் விழிகளை பிறிதொருமுறை நோக்கி புன்னகைத்து ஒரு சொல்லும் சொல்லாமல் அவர் விலகி நடந்தார். திருஷ்டத்யும்னன் அவனறியாமல் அவளை நோக்கி நின்றான். நீண்டநாட்களுக்குப்பின் சுஃப்ரையை மீண்டும் நினைத்துக்கொண்டான்.

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 8

கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில் அந்தப்பீலி கைக்குழந்தை விழிபோல திறந்திருந்தது. அங்கு நிகழ்ந்த எதையும் அறிந்திராததுபோல. வானிலிருந்து குனிந்து நோக்கும் அன்னையை நோக்கி அக்குழந்தை கைகளை உதைத்துக்கொண்டு நகைசிந்தி எழமுயல்வதுபோல.

இளைய யாதவர் திரும்பி தன் பின்னால் நின்ற முதல் படைத்தலைவனிடம் "இப்பெண்களை கலங்களுக்கு கொண்டு செல்லுங்கள். இங்கிருந்து நம் கலங்களுக்குள் புகுந்த அக்கணமே இவர்கள் துவாரகையின் குடிகள் ஆகின்றனர். அரசகுடியினர் முறைமையனைத்தையும் தக்கவைத்துக்கொள்கின்றனர்" என்றார். "ஆணை" என்று அவன் தலை வணங்கினான். "அவர்களில் துவாரகைக்கு வரவிழையாதவர்களை அவர்களின் குடிமூதாதையரின் ஊர்களுக்கு அனுப்புங்கள். படகில் ஏறியதுமே அதற்கேற்ப தனித்தனியாக பிரித்துவிடுங்கள்."

பலராமர் உரக்க "நாம் வந்த வேலை அவ்வண்ணமே உள்ளது இளையோனே. சியமந்தகம் இன்னும் நம்மிடம் வரவில்லை. சததன்வா சென்ற வழி அறியக்கூடுவதாகவும் இல்லை" என்றார். இளைய யாதவர் புன்னகைத்து "மீன்போல நீரில் வாழ்பவனல்ல மானுடன். மண்ணில் காலூன்றி நடக்கையில் முற்றிலும் தடயமின்றி செல்ல மானுடனால் இயலாது" என்றபின் காவலர்தலைவனிடம் "சததன்வாவின் குதிரைநிலையை நான் காணவிழைகிறேன்" என்றார். "குதிரைநிலை என பெரிதாக ஏதுமில்லை அரசே. ஒருசில குதிரைகள் நிற்கும் மரக்கொட்டகைதான் இருந்தது" என்றான் காவலர்தலைவன்.

திருஷ்டத்யும்னன் "நமது எரிபரந்தெடுத்தலில் மாளிகையுடன் சேர்த்து குதிரைக்கொட்டிலும் சாம்பலாகி விட்டிருக்கிறது" என்றான். இளைய யாதவர் "இங்கு புரவிகளை அவிழ்த்து வெளியே கட்டுமிடமும் அவற்றிற்கு காலை தசைப்பயிற்சி கொடுக்குமிடமும் இருக்கும்" என்றார். திருஷ்டத்யும்னன் "அதை நான் காட்டுகிறேன்" என்றான். "வருக!" என்று இளைய யாதவர் அவனுடன் வந்தார்.

சததன்வாவின் சிறிய அரண்மனை இருபக்கங்களிலும் ஓங்கிய மூங்கில்முகப்புகளுடன் கூம்புவடிவக் கூரையுடன் மலைக்குடிகளின் இல்லங்களின் அமைப்பில் கட்டப்பட்டிருந்தது. அதன் பின்பக்கம் மையக்கட்டடத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்தது எரிந்தணைந்த குதிரைநிலை. அங்கிருந்து பிரிந்து சென்ற ஒற்றையடிப்பாதையின் மறுபக்கம் சாலமரங்கள் ஒன்றுடன் ஒன்று கிளை பின்னி நின்ற சிறிய மேட்டிற்கு அப்பால் சற்றே சரிந்த புற்பரப்பாக புரவிப் பயிற்றிடம் தெரிந்தது. பசும்நிலம் மறுமுனையில் சற்று வளைந்து மேலேறி முள்மரங்களால் ஆன உயிர்க்கோட்டை விளிம்பை அடைந்தது. புரவிகள் தொடர்ந்து ஓடிய கால் தடங்கள் பட்ட இடம் புற்பரப்பில் கரிய சேற்றுத்தடம் போல தெரிந்தது.

முதன்மை சாலமரத்தடியில் சென்று நின்று நோக்கியபின் இளைய யாதவர் அந்த நிலத்தை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். மூன்று மரங்களால் சூழப்பட்ட சிறிய மண்மேட்டின் அருகே வந்ததும் நின்று தரையை நோக்கி "இங்குதான் சததன்வாவின் புரவி நின்றிருக்கிறது" என்றார். திருஷ்டத்யும்னன் "ஆம். இவ்விடத்தின் அமைப்பு அதையே காட்டுகிறது" என்றான். இளைய யாதவர் "அவன் புரவியின் பெயர் சுக்ரீதம். சோனக நாட்டைச் சேர்ந்த நான்கு வயதான இளைய பெண்புரவி அது. இந்தப் பெரிய குளம்படிகள் அதற்குரியவை" என்றார்.

திருஷ்டத்யும்னன் குனிந்து நிலத்தில் படிந்திருந்த குளம்புச் சுவடுகளை நோக்கினான். மற்றபுரவிகளின் குளம்புகளைவிட அவற்றின் முகப்புவளைவு பெரியது. மென்தோலில் நகவடுக்கள் போல அவை தெரிந்தன. இளைய யாதவர் "பாஞ்சாலரே, அது ஐந்து நற்சுழிகள் கொண்ட புரவி. இருபக்கமும் முற்றிலும் நிகர்நிலை உடல் கொண்டது. இக்குளம்புகள் அதன் உடலின் துலாநிலையை காட்டுகின்றன" என்று கைசுட்டி "நான்கு சுவடுகளும் மிகச்சரியாக ஒரே திசை நோக்கி அமைந்துள்ளன. நின்றிருக்கையில் கால்கள் ஒரேயளவில் மண்ணில் அழுந்தியிருக்கிறது" என்றார்.

மூன்று காலை ஊன்றி வலது முன் காலை சற்றே தூக்கி அப்புரவி நின்றிருப்பதை திருஷ்டத்யும்னன் முழுமையாக கண்டு விட்டான். "ஒற்றர் செய்திகளின்படி அது தூய வெண்ணிறம் கொண்டது. நீள்முகமும் செவ்விழிகளும் சிறியசெவிகளும் உடையது. அஞ்சுவது, ஆனால் விரைவுமிக்கது" என்ற இளைய யாதவர் "அத்தகைய புரவியின் குறை என்னவென்றால் அதன் குளம்புச்சுவடுகளை மிக எளிதே இந்தக் காட்டில் எவரும் கண்டுவிட முடியும்" என்ற பின் திரும்பி ஏவலனிடம் "எனக்கொரு புரவி கொண்டு வாருங்கள்" என்று ஆணையிட்டார்.

ஏவலர் விரைந்தோடி புரவிகளுடன் வந்தனர். கரிய யவனப் புரவியொன்றில் ஏறிக்கொண்டு இன்னொன்றை சுட்டிக்காட்டி "ஏறுங்கள் பாஞ்சாலரே" என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் தனக்கு அளிக்கப்பட்ட யவனப் புரவியின் மேல் ஏறிக்கொண்டான். பலராமரும் இன்னொரு கொழுத்த புரவியில் ஏறிக்கொண்டார். "பன்னிருவர் என்னை தொடர்க!" என்றார் இளைய யாதவர். "சததன்வா பெரிய படையுடன் சென்றிருக்க வாய்ப்பில்லை. அது அவன் செல்லும் வழியை அறியச்செய்யும் என அவன் நினைத்திருப்பான். காசிக்குள் படையுடன் நுழைய அவன் ஒப்புதலும் பெற்றிருக்கமுடியாது. நாமும் காசியின் எல்லைக்குள் படையுடன் செல்ல முடியாது" என்ற இளைய யாதவர் "வருக!" என்றபடி புரவியை செலுத்தினார்.

இளைய யாதவர் தரையை கூர்ந்து நோக்கியபடி தன் புரவியில் சீரான விரைவில் முன்னே சென்றார். அவர் நோக்குவதை திருஷ்டத்யும்னன் கண்டு கொண்டான். சற்று நேரத்திற்குப் பிறகு அந்த வெண்புரவியின் கால் தடமன்றி வேறெதுவும் நிலத்தில் இல்லை எனத் தோன்றுமளவு பாதை துலங்கியது. தெளிவாக எழுத்துக்களால் ஆன குறிப்பு போல அப்புரவி சென்ற வழி கிருஷ்ணவபுஸின் வட எல்லையில் இருந்த சிறு மூங்கில் வாயில் வழியாக எழுந்து மறுபக்கம் கங்கைக்கு இணையாக விரவிக் கிடந்த குறும்புதர்க்காடுகளின் நடுவே ஊடாடிச் சென்றது.

"நெடுந்தொலைவு அவன் சென்றிருக்க வாய்ப்பில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம், நாம் வருவதற்கு சற்று முன்னர்தான் அவன் கிளம்பி இருக்கிறான். இத்தனை விரைவில் நமது படைகள் இங்கு வந்து சேருமென அவன் எண்ணவில்லை. செய்தி கிடைத்து மதுராவிலிருந்து என் படைகள் இங்கு வந்து சேர ஒரு நாளாவது ஆகும் என அவன் எண்ணியிருக்கலாம்" என்ற இளைய யாதவர் "இப்போது மூன்று நாழிகை தொலைவுக்கு அப்பால் அவன் தன் புரவியில் இருபது படைத்துணைவருடனும் சென்று கொண்டிருக்கிறான். காசியின் எல்லைக்குள் செல்வதற்குள்ளாகவே நாம் அவனை பிடித்து விட முடியும்" என்றார்.

புரவியின் தடங்கள் தெளிவாக திசைகாட்டத் தொடங்கியபின் அவர்களின் விரைவு மேலும் மேலும் கூடியது. எடைமிக்க யவனப்புரவிகளை ஏன் இளைய யாதவர் தெரிவுசெய்தார் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அவை சோனகப்புரவிகள் அளவுக்கு விரைவுகொள்ளமுடியாது. ஆனால் அவை எத்தனை ஓடியும் மூச்சிரைக்கவில்லை. அவற்றின் உடலில் இருந்து வியர்வை ஆவியென எழுந்தபோதிலும் நுரைதள்ளவில்லை. சததன்வா சோனகப்புரவியில் நெடுந்தொலைவு செல்லமுடியாது. அவனை அவர்கள் இரவுக்குள் பிடித்துவிடமுடியும்.

முட்செடிகளும் படர்கொடிகளும் கலந்த புதர்குவைகளுக்கு நடுவே வளைந்து சென்ற பாதையில் அவர்களின் புரவிகள் துடிமேல் ஆடும் கைவிரல்களைப்போல குளம்புகளை நிலத்தில் அறைந்து அறைந்து விரைவு கொண்டன. அவ்வோசை உள்ளே இலைத்தழைப்புக்குள் மறைந்திருந்த பாறைகளிலும் மரத்தொகைகளிலும் முட்டி எதிரொலித்தது. காட்டுக்குள் பல நூறு குறுமுழவுகள் உயிர்கொண்டதென தோன்றியது. அஞ்சிய சிறுவிலங்குகள் இலையலைத்து சருகளாவி ஓடும் ஒலியில் காடு வெருண்டது.

திருஷ்டத்யும்னன் ஒவ்வொரு கணமும் மேலும் அகவிரைவு கொண்டான். இதோ இதோ என எண்ணி இன்னும் எத்தனை கணமென கணிக்கத் தலைப்பட்டான். அசைவின்றி காலத்தில் உறைந்த மரங்கள் நடுவே சற்றே அசைவு கொண்டதுபோல் அவன் ஊர்ந்த புரவி நின்றிருப்பதாக சித்தம் மயக்கு கொண்டது. அவன் எப்போதோ சததன்வாவை எட்டிவிட்டு திரும்பி தன் உடல் வந்து சேர்வதற்காக அங்கே நின்று தவிப்பதாக எண்ணினான். எதிரே வீசப்பட்டவை போல பாய்ந்து வந்து இலைகளும் தழைகளும் என மாறி உடலை அறைந்து வளைந்து பின்னகர்ந்து கொண்டிருந்த புதர்களின் நடுவே செம்மண் பாதை தழல் போல அலையடித்தது. உளம் கொண்ட விரைவை அடையாது உடல் நின்று தவித்தது.

பின்பு களைப்புடன் தன்னை உணர்ந்து மூச்சிழுத்து புரவி மேல் உடல் இளக்கி அமைந்தான். முன்னால் பறந்து சென்ற தவித்த உள்ளம் வளைந்து திரும்பி வந்து உடலின் கிளையில் அமர்ந்து சிறகமைத்தது. திரும்பி இளைய யாதவரை நோக்கினான். சிட்டுச்சிறகெனச் சுழலும் கால்களால் ஆன புரவியின் மேல் முகில் மேல் அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்த தேவன் போல அவர் தெரிந்தார். நீள்விழிகள் பாதி மூட இதழ்களில் இளம்புன்னகை ஒன்று ஒளி கொண்டிருக்க ஏதோ இனிய காதல் நினைவை தான் உள்மீட்டிக்கொண்டிருப்பவன் போல. உருகி வழியும் இசையொன்றைக் கேட்டு கனவிலென படுத்திருப்பவன் போல .

அந்தி இறங்கிக்கொண்டிருக்கையில் அவர்கள் காசியின் எல்லையை அடைந்தனர். பலராமர் "தொலைவில் தெரிவது காசியின் காவல்மாடம் இளையோனே" என்றார். "அங்கு உள்ள காவலர் நம்மை பார்க்கக் கூடும்." திருஷ்டத்யும்னன் "அவர்கள் சற்றுமுன் சததன்வா சென்றதையும் பார்த்திருப்பார்கள்" என்றான். "சததன்வா காசி மன்னரையே காணச் செல்கிறான். சியமந்தகத்தை அவரிடம் அளித்து தன்னை காக்கும்படி கோர இருக்கிறான்" என்றார் பலராமர். திருஷ்டத்யும்னன் "நம்மையும் அவனுடைய படைகளைச் சார்ந்தவர் என்றே அவர்கள் எண்ணுவர். கொடி அடையாளங்களோ குலக்குறிகளோ இப்போது நம்மிடமில்லை" என்றான்.

பலராமர் "சததன்வாவின் குறியொலியையே நாமும் எழுப்பியபடி கடந்து செல்வோம்" என்றார். திருஷ்டத்யும்னன் "ஆம். அதையே நானும் எண்ணினேன்" என்றான். அச்சொற்கள் கேட்காத தொலைவில் என இளைய யாதவர் புரவி மேல் அமர்ந்திருந்தார். காட்டுப்பாதை புதர்களில் இருந்து சிறிய மேடு ஒன்றில் ஏறி மறுபக்கம் சரிந்து சென்ற புல்வெளியை அடைந்தபோது பக்கவாட்டில் இருந்த இன்னொரு சிறிய மேட்டில் அமைந்திருந்த மரக்கோபுரத்தின் உச்சியிலிருந்து காசியின் காவல் வீரன் "எவர் அது?" என்று உரக்கக்கூவினான்.

திருஷ்டத்யும்னன் வாயெடுப்பதற்குள் இளைய யாதவர் "சிட்டுக்குருவி ஏந்திய சிறுபுல்" என்று உரக்கக் கூவி தன் இருகைகளையும் பறவையின் சிறகுகளைப் போல தூக்கிக் காட்டினார். கிருஷ்ணவபுஸின் குறிச்சொற்கள் அவை என்றறிந்த காவலன் தன் கைகளை அம்பு போல காட்டி "செல்க" என்று ஆணையிட்டான். விரைவு சற்றே குறைந்து அவன் சொற்களை எதிர்நோக்கி நின்ற மதுராவின் படை மீண்டும் விரைவு கொண்டது. பன்னிரு புரவிகளும் வால்களைச் சுழற்றியபடி சரிந்து சென்ற பசும்புல்வெளியில் பசும்கறையென விழுந்து தொடர்ந்த தங்கள் நிழல்களுடன் பாய்ந்து சென்றன.

அங்கு மேய்ந்துகொண்டிருந்த மான் கூட்டம் ஒன்று மண் வளைவு வில்லாகி தொடுத்த அம்புக்கூட்டம் போல காற்றில் துடித்தெழுந்து வளைந்து மழைத்துளிகள் போல குளம்புகள் ஒலிக்க மண்ணைத்தொட்டு மீண்டும் துள்ளி புதர்களுக்குள் மறைந்தது. புல்வெளியின் மறுபக்கம் எழுந்த சிறுகுன்றின் சரிவில் அவர்கள் ஏறிக்கொண்டிருக்கும்போது வானில் அந்திச் செம்மை அணைந்துகொண்டிருந்தது. காடு முற்றிலும் இருண்டு சீவிடுகளின் ரீங்காரத்தால் கட்டப்பட்ட ஓசைகளின் மாலையாக மாறியது. மேலைவானில் எழுந்த பல்லாயிரம் வௌவால்கள் கங்கையின் பெருஞ்சுழி ஒன்றில் வட்டமிடும் சருகுகளைப் போல சுற்றிப் பறந்தன. மிக அருகே காதுகள் மீது சிறகின் காற்று படும்படியாக ஒரு வௌவால் கடந்து சென்றது.

கூச்சலிடும் பறவை ஒலிகளால் பெருமுழக்கமாக மாறி விட்டிருந்த அந்திக்காட்டிலிருந்து கருமந்திக்குழுவின் தலைவன் குறுமுழவொலி எழுப்ப யானை ஒன்று உறுமி தன் குலத்திற்கு அவர்களை சொன்னது. மேட்டின் உச்சியில் ஏறும்போது இளைய யாதவர் நிற்கும்படி கைகாட்டினார். அவர்கள் அசைவற்று நிற்க அவர் திரும்பி "மறுபக்கம் கீழே அவனது படைகள் செல்கின்றன" என்றார். திருஷ்டத்யும்னன் "அரசே" என்றான். "குளம்பொலிகளை கேட்க முடிகிறது என்னால்" என்றார் இளைய யாதவர். "குளம்பொலிகளா?" என்றபின் கண்களை மூடி செவிப் புலனை மட்டும் உளம் கூர்ந்து அவற்றில் பிற ஓலிகள் அனைத்தையும் விலக்கி விலக்கி கடந்து சென்றபோது குதிரைகளின் காலடியை அவனும் கேட்டான். விழி திறந்தபோது தரையிலிருந்த தளிர்ப்புல்கள் ஒவ்வொன்றும் அவ்வொலிக்கு மெல்ல நடுங்குவதென உளமயக்கு ஏற்பட்டது. "ஆம், நானும் கேட்கிறேன்" என்றான்.

"நம்மைப் பார்த்ததும் அவன் விரையக்கூடும்" என்றார் இளைய யாதவர். "நமது குளம்பொலிகளை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை. காற்று அங்கிருந்து வீசுகிறது. அவன் உள்ளம் அச்சம்கொண்டும் இருக்கிறது..." அவர் கைசுட்டி "இம்மேட்டை நாம் ஏறியதும் முழுவிரைவில் பிறையென விரிந்து உருக்கொண்டு அவனை சூழ்வோம். செல்லும்போதே நமது அம்புகளால் அவன் துணைவர் வீழட்டும். உடனிருப்பவர் எவராயினும் அக்கணமே அவர்கள் இறக்கலாம்" என்றார். திருஷ்டத்யும்னன் "ஆணை" என்றபடி தன் தோளில் இருந்த வில்லை எடுத்து நாணேற்றி அம்பு தொடுத்துக்கொண்டான்.

படைவீரர்களும் தங்கள் விற்களை நாணேற்றி தொடுத்துக் கொள்ள பலராமர் கைகளை உரசி பின்பு நீட்டி உடலைத் திருப்பி ஒடியும் சுள்ளிகள் போல எலும்புகள் ஓசையிட சோம்பல் முறித்தார். இளைய யாதவர் வில்லையோ தன் படையாழியையோ எடுக்கவில்லை. இரு கைகளாலும் தன் புரவியின் கழுத்தைத் தொட்டு மெல்ல வருடி மேலிழுத்து குஞ்சி ரோமத்தை அளைந்தார். அது தலை குழைத்து செவிகளை மெல்லத் திருப்பி உலைத்து காற்று வெளியேறுவதைப் போல மூச்சிழுத்து மூக்கை விடைத்தது. கண்களை உருட்டி பற்களை நகைப்பெனத் திறந்து மெல்ல கனைத்தது.

ஒருகணத்தில் "செல்க!" என்றபடி இளைய யாதவர் தன் புரவி மேலேறி சென்றார். அவரைத் தொடர்ந்து பன்னிரு புரவிகளும் எழுந்தன. குன்றின் வளைவை அடைந்த கணம் வீசப்பட்ட வேல்கள் போல அவை பிரிந்து புல்மண்டிய சரிவில் பாய்ந்திறங்க அவற்றுடன் மலைச்சரிவில் காலத்துயிலில் அமைந்திருந்த உருளைக் கற்களும் விழித்துத் தொடர்ந்தன. அவ்வோசை கேட்டு தொலைவில் சென்று கொண்டிருந்த சததன்வாவின் புரவிகளில் ஒன்று செவிதிருப்பி விழிமிரண்டு கால்தூக்கித்திரும்பி அச்சக்குரல் எழுப்பியது. ஒரு வீரன் திரும்பி நோக்க தங்களை நோக்கி வரும் பன்னிரெண்டு புரவி முகங்களைக் கண்டான். வானில் பறந்து செல்லும் வடபுலத்து வலசைப் பறவைகள் போல அவை அணுகின. "அரசே" என்று அவன் கூவுவதற்குள் கழுத்தைத் தைத்த அம்பு அவனை புரவியிலிருந்து கீழே வீழ்த்தியது.

திரும்பி நோக்கிய சததன்வா "விரைந்தோடுங்கள்! காடுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள்!" என்றபடி தன் புரவியை காலால் அணைத்தான். அது கல்விழுந்த குளமெனச் சிலிர்த்து விரைவு கொண்டு முன்னங்கால் தூக்கித் தாவி பாய்ந்து செல்ல அவனுக்குப் பின்னால் வந்த புரவி அம்பு பட்டு நிலத்தில் விழ அதிலிருந்த வீரன் தெறித்து அவன் புரவியின் நான்கு கால்களுக்கு இடையிலேயே விழுந்தான். அவனை மிதித்துச் சென்ற புரவியைத் தொடர்ந்து சததன்வாவின் பிற வீரர்கள் முழுவிரைவில் வந்து அதனுடன் மோதினர். அவர்கள் ஒவ்வொருவராக மேலிருந்து அள்ளிக்கொட்டிச் சிதறி விழுபவர்கள் போல நிலத்தை அறைந்து கைகால் துடிக்க அலறி அமைவதையும் தொடரும் புரவிகள் பெரிய குளம்புகளால் அவர்களை மிதித்து முன்னகர்வதையும் அவையும் அவர்கள் அம்பு பட்டு புல்லில் தெறித்து சரிந்து உருண்டு எழுந்து விசை தீராமல் மீண்டும் விழுந்து உருண்டு செல்வதையும் சததன்வா காதுகளாலேயே கண்டான்.

அவன் விழி தொலைவிலிருந்த காட்டை, அங்கே இரு மரங்கள் போல நடுவே குகைஇருள் போல தெரிந்த பாதையை மட்டுமே நோக்கியது. அதனருகே செல்வதும் வெல்வதும் மட்டுமே தன் வாழ்வின் எஞ்சிய இலக்கு என்று அவன் அக்கணத்தில் வாழ்ந்தான். அக்குகைப்பாதை மிக அண்மையில் என ஒரு கணமும் மிக அகலே என மறுகணமும் தெரிந்தது . ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவன் புரவி அதை நோக்கி சென்று கொண்டிருந்தது. நீரில் துழாவுவது போல அதன் கால்கள் எடையுடன் எழுந்து விழுவதாக அவன் எண்ணினான். தொடக்கூடும் என்பதைப் போல அத்தனை பருவுருவாக காலத்தை அவன் உணர்ந்ததில்லை.

அலறியபடி இறுதி வீரனும் விழுந்து சரிவில் உருள, அவன் புரவி மல்லாந்து நான்கு கால்களையும் வானில் உதைத்து பின் எழுந்து மீண்டும் விழுந்து வால் குலைய உருண்டு அவன் மேலேயே புரண்டு மறுபக்கம் சென்றது. வீரன் உடைந்த கழுத்துடன் புல்லில் துடித்து கால்களை நீரில் மூழ்குபவனின் இறுதி நீச்சலென அடித்து அமைந்தான். அணுகி வரும் புரவிக் கூட்டத்தின் காலடிகள் மட்டும் அவனை சூழ்ந்திருந்தன. சததன்வா திரும்பி நோக்கவில்லை. அவ்வொலிகள் ஒவ்வொரு கணமும் வலுப்பதை அவன் செவிகள் உணர்ந்தன. அப்புரவிகளின் விழிமின்னல்களை, குஞ்சிநிரையின் தழல் நெளிவை, கால்கள் வீசும் அலைநுரைச் சுழல்களை அவன் முதுகு நோக்கிக்கொண்டிருந்தது.

அவன் சென்றாக வேண்டிய குகைப்பாதை மேலும் அண்மையில் எழுந்தது. அங்கு இருளுக்குள் எவரோ வந்து கொண்டிருப்பதுபோல. அவனுக்காக நெடுங்காலம் காத்திருந்த ஒருவர். விரித்த கரங்களுடனும் ஒளிரும் விழிகளுடனும் புன்னகையுடனும் அவனை எதிர்கொள்ள எழுபவர். அந்தக் கணம் இது என அவன் அறியாமல் அவன் ஆழத்தில் வாழும் பிறிதொன்று அழைத்தது போல அவன் திரும்பி நோக்கினான். நீலப் பீலி சூடிய குழல் காற்றில் அலைகொண்டு பறக்க வைரம் மின்னும் இரு விழிகள் மிதந்து அண்மிக்கக் கண்டான்.

"யாதவரே, சியமந்தகம் என்னிடம் இல்லை. அதை அக்ரூரரிடம் அளித்து விட்டுத்தான் நான் காசிக்குச் செல்கிறேன். இது உண்மை!" என்று அவன் உரக்கக் கூவினான். அந்த நீலவிழிகள் மேலும் மேலும் அண்மித்தன. அவை விழிகள் அல்ல. இரு வைரங்கள். வைரம் கருணையற்றது என்று அவன் அறிந்தான். அது மனிதர்களை நோக்குவதில்லை. மனித விழிகளும் மனித உள்ளங்களும் கொண்ட விழைவை, துயரத்தை, வஞ்சத்தை அது அறிவதே இல்லை. வைரம் தன் அழுத்தத்தாலேயே நிகரற்ற நஞ்சாக மாறிய ஒன்று. தன் ஒளியாலே படைக்கலமானது.

சியமந்தகத்தை முதலில் கண்ட கணம் முதல் அதன் ஒவ்வொரு காட்சியும் அவனுள் பெருகிச்சென்றது. அது என்ன? வெறும் கல். இல்லை, வைரம். மண்ணின் மேல் அமைந்திருக்கும் பல கோடி கற்களின் ஆழத்தின் அழுத்தத்தை அறிந்த கல். அந்த அறிதலே அதன் ஒளி. இதோ அருகே இரு வைரங்கள். அவற்றை மிக அருகே கண்டு அறியாது கைகளை மேலே கூப்பி நின்றான். வெள்ளி மலரென ஒன்று சுழன்று தன்னை அணுகுவதை இடவிழி ஓரத்தால் கண்டான். அந்த மின்னல் துண்டு அவன் கழுத்தைத் தொட்ட கணமே அவன் விழிகள் உடலில் இருந்து எழுந்து பறந்தன. தலையற்ற தன் உடல் புரவி மேல் கூப்பிய கைகளுடன் தள்ளாடி சரிந்து மறுபக்கம் விழ புரவி தலைகுனிந்து திகைத்து வால் சுழற்றி கனைத்தபடி கால்களைத் தூக்கி வைத்து பக்கவாட்டில் நகர்ந்து திரும்புதை கண்டான்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 1

திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது. அதன் நீள்அரைவட்டம் வெட்டி எடுத்த வான்துண்டு நிலைஆடி போல தெரிந்தது. எதையும் காட்டாத ஆடி. ஒவ்வொருமுறையும் போல அவன் அக்காட்சியில் தன்னை இழந்து அங்கு நின்றிருந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை தலையைத் திருப்பி மூக்கை விடைத்து நீள் மூச்செறிந்து காலால் மணலை தட்டியது. அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அவன் படையின் தேர்கள் அச்சில் முட்டும் சகட ஒலியுடன் மணலில் இரும்புப்பட்டைகள் புதையும் கரகரப்புடன் விலகிச் சென்றன. பின்னால் அவனைத் தொடர்ந்து வந்த புரவிகள் இழுபட்டு நின்று மூச்சொலிகளும் சிறு கனைப்பொலிகளுமாக தயங்கின. தொடர்ந்து வந்த வண்டிகளை ஓட்டிய சூதர்கள் கடிவாளங்களை இழுக்க புரவிகள் நின்று காலுதைத்து மூச்சுவிட்டன. சகடங்களை உரசும் தடைக் கட்டைகளின் ஒலிகள் ஒன்றிலிருந்து ஒன்றென பரவி நெடுந்தொலைவுக்கு சென்றன.

அவனை அணுகி பேசாமல் நின்ற துணைப் படைத்தலைவனிடம் "என்ன?" என்றான். அதன்பின் தான் நிற்பதைக் கண்டு அவர்கள் நிற்பதை உணர்ந்து "செல்வோம்" என்றபடி கடிவாளத்தை சுண்டினான். திரும்பி படையினருடன் இணைந்து கொண்டபோது அவன் அந்த நெடும்பயணம் முடிவுக்கு வருவதை எண்ணிக் கொண்டான். மிகத் தொலைவில் என எங்கோ இருந்தது மதுரா. அங்கிருந்து யமுனையில் கிளம்பி கங்கையின் வழியாக வந்து சர்மாவதிக்குள் வழி பிரிந்து உஜ்ஜயினியை அடைந்து பாலைக்குள் வண்டிகளும் புரவிகளுமாக நிரை வகுத்து மீண்டும் தொடர்ந்தனர். பகல்வெம்மையில் ஓய்வெடுத்து இரவின் தண்மையில் விண்மீன்கள் விரிந்த வான்கீழ் துவாரகையைப்பற்றிய பாடல்களை சூதர்கள் பாட வண்டிகளின் ஓசை இணைந்துகொள்ள பயணம் செய்தனர். கிளம்பும்போதிருந்த வெற்றிக்களிப்பை பயணக்களைப்பு முழுமையாகவே அழிக்க மெல்ல ஓசைகள் அடங்கி நிழல்கள் போல இருளுக்குள் ஒழுகத்தொடங்கினர்.

படைத்தலைவன் "வெயிலுக்குள் நகர் நுழைந்துவிடலாம் இளவரசே" என்றான். திருஷ்டத்யும்னன் "நேராக இளைய யாதவரின் அவைக்கு செல்வோம்" என்றான். படைத்தலைவன் "ஆணை" என்று தலையசைத்தான். இளவெயில் முகில்முனைகளைத் தீண்டி சுடரச்செய்தபோது தொலைவில் துவாரகையின் பெரும் தோரணவாயில் தென்பட்டது. துள்ளி ஓடிய இளம்கால் ஒன்றிலிருந்து உதிர்ந்து மண்ணில் பாதி புதைந்த பொற்சிலம்பு போல. இலைவில்லைகளை வெட்டிக்கொண்டுசெல்லும் கோடைகாலத்து எறும்பு வரிசை என நான்கு வண்டிநிரைகள் அதற்குள் சென்று கொண்டிருந்தன. தோரணவாயில் ஒரு தலையென்றும் தோரணங்கள் அணிமலர் சூடிய நீள்சடைகள் என்றும் சூதர் பாடுவதை எண்ணிக்கொண்டான்.

அவ்வரிசைக்குள் சென்று இணைந்து கொண்ட அவன் படைகளை வணிகர்கள் திகைப்புடன் திரும்பி நோக்கினர். பாலைப்புழுதி அசைவில் ஆவியென எழுந்து பறக்க தேர்கள் சென்றன. வியர்த்த புரவிகளின் அடியில் புழுதியுடன் கலந்த துளிகள் குருதிபோல கொழுத்து சிவந்து சொட்டி அசைவில் சிதறி பொழிபரவிய மண்ணில் விழுந்து செம்முத்துகள் போல சுருண்டு உருண்டன. விழிகளை மூடிக்கொண்டதும் ஓசைகளாலான ஒரு மணிச்சரடு என்று அப்பாதை தோன்றியது. ஒவ்வொரு ஓசையும் ஒரு மணி. ஒவ்வொன்றுக்கும் ஒரு நிறம். ஊடாகச் செல்லும் விழைவு என்பது துவாரகை. அவர்களை நோக்கும் வணிகர்களின் மெல்லிய வினாக்களை கேட்டான். வரவேற்புக்குரல்களும் வாழ்த்துக்கூச்சல்களும் இல்லாவிட்டால் வெற்றிகொண்டு வரும் படைக்கும் தோல்வியடைந்து ஓடிவரும் படைக்கும் வேறுபாடே இல்லை.

சததன்வாவின் குருதி படிந்த தலைப்பாகையை எடுத்துச் சுருட்டி தன்னுடன் எடுத்துக்கொண்ட இளைய யாதவர் திரும்பி அவனிடம் "மதுராவுக்கென்றால் இவன் தலையையே கொண்டுசெல்வேன். துவாரகை வரை அது அழுகாதிருக்காது. தலைப்பாகை அங்கே நகர்வலம் வரட்டும்" என்றார். "ஆம், வஞ்சம் வேருடன் ஒறுக்கப்படவேண்டியதே" என்றான் திருஷ்டத்யும்னன். காசியின் எல்லையிலிருந்து கிருஷ்ணவபுஸுக்குத் திரும்புகையில் இளைய யாதவர் அவனை நோக்கி "பாஞ்சாலரே, கிருதவர்மன் எங்கு சென்றிருக்கிறான் என்று அறிந்துகொள்ளும். அவனையும் துவாரகை கைக்கொண்டாக வேண்டும்" என்றார்.

"அக்ரூரரும் அவனும் இணைந்து சென்றிருக்க வாய்ப்பில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். "வஞ்சம் கொண்ட இருவர் இணைவதேயில்லை." இளைய யாதவர் "அக்ரூரரிடம் சியமந்தகம் அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் அவர் காசிக்குத்தான் செல்வார். அவருடைய அன்னை காசியின் இளவரசி என்பதை அறிந்திருப்பீர். நெடுங்காலத்திற்குமுன் அவருடைய அன்னை நந்தினியை அவரது தந்தை சவால்கர் காசியின் புடவிக்கிறைவனின் திருவிழாவின் ஊடு நுழைந்து கவர்ந்து கொண்டுவந்தது விருஷ்ணி குலத்தின் வெற்றி என கொண்டாடுவதுண்டு. காசி மன்னரின் மகளென்பதால் யாதவ குலத்தின் முதன்மையையும் நந்தினி அன்னை பெற்றார். அவரது மைந்தனாகிய அக்ரூரர் விருஷ்ணிகுலத் தலைமையடைந்ததும் அதனூடாகவே. காசியுடன் விருஷ்ணி குலத்திற்கு தீரா பகை எழுந்ததும் அதன் வழியாகவே" என்றார்.

"ஆனால் இன்று விருஷ்ணி குலத்திற்கு எதிரானவராக அக்ரூரர் மாறுவாரென்றால் சியமந்தக மணியுடன் அவர் சென்று சேருமிடம் காசியாகவே இருக்கும். அந்த மணியை காசி மன்னனுக்கு அளித்து பிழைபொறுக்கும்படி கூறினாரென்றால் தன் அத்தையின் குருதி வழி வந்த அவரை ஒரு போதும் காசி மன்னன் விட்டுவிட மாட்டான். காசிக்குள் புகுந்து அக்ரூரரை அடைவதென்பது எளிதல்ல. ஆனால் இன்று நாம் செய்ய வேண்டியது அதுதான். அதற்கான வழிகளை நான் தேர்கிறேன்" என்றார் இளைய யாதவர். "கிருதவர்மன் தன் எஞ்சிய படைகளுடன் மறுதிசை நோக்கி சென்றிருக்கலாம். கங்கை வழியாக வணிகப் படகுகளில் தப்பி வாரணவதம் வரை அவன் அகன்றிருக்கக்கூடும். அவனை கண்டடையுங்கள். சிறைப்படுத்தி துவாரகைக்கு கொண்டு வாருங்கள். எனது யாதவப் படைகளின் பாதி உங்களை தொடரும்" என்றார்.

"ஆணை" என்றான் திருஷ்டத்யும்னன். பலராமர் "இளையவனே, கிருதவர்மன் என்னிடம் போர்க்கலை கற்றவன். பாஞ்சாலருடன் நானும் செல்கிறேன்" என்றார். இளைய யாதவர் "மூத்தவரே, நமது குல மணியாகிய சியமந்தகத்தை நாமிருவரும் சென்று வெல்வதே முறையாகும். மேலும் காசியிடம் நாம் போர் புரிய வேண்டியிருக்காது. அரசுசூழ்கை வழியாகவே சியமந்தகத்தை நாம் பெற முடியும். அதற்கு என்னுடன் தாங்களும் இருந்தாக வேண்டும்" என்றார்.

"அரசு சூழ்கையில் நான் என்ன செய்யப் போகிறேன்? நான் எது சொன்னாலும் அது அறிவின்மையாகவே அறிவுள்ளோரால் கொள்ளப்படுகிறது" என்றார் பலராமர். "மூத்தவரே, அரசு சூழ்கையென்பது பொய்களாலானது. அங்கு உண்மை வல்லமை மிக்க படைக்கலமாக ஆகக்கூடும். எங்கும் எப்போதும் மெய்யை மட்டுமே உரைக்கும் தங்கள் மொழி என்றும் இந்தப்படையாழிக்கு நிகராக என்னுடன் உள்ளது" என்றார் இளைய யாதவர். தொடையிலறைந்து உரக்க நகைத்து "ஆம் நான் உளறுவதை எல்லாம் நீ மிகத்திறனுடன் பயன்படுத்திக் கொள்கிறாய் என்கிறார்கள் இளையோனே" என்றார் பலராமர்.

முற்றிலும் எரிந்து அணைந்த சததன்வாவின் கிருஷ்ணவபுஸுக்குள் இருந்து யாதவப் படைகள் நகர்ந்து கங்கைக்குள் நின்றிருந்த படகுகளில் ஏறிக் கொண்டிருந்தன. இளைய யாதவர் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் மூன்று கலங்களை நேராக மதுராவுக்குச் செல்லும்படி ஆணையிட்டார். பன்னிரு கலங்கள் தன்னுடன் வரும்படியும் எஞ்சிய பதினாறு கலங்கள் திருஷ்டத்யும்னனை துணைக்கும்படியும் வகுத்துரைத்தார். அங்கிருந்தபடியே காசிக்கும் மதுராவுக்கும் பறவைகள் வழியாக செய்திகளை அனுப்பினார்.

திருஷ்டத்யும்னன் "அரசே, கிருதவர்மன் தன் மிகச்சிறிய படையுடன் ஓரிரு படகுகளுடன் தப்பிச் சென்றிருக்கிறான். அவனை இப்பெரும் படையுடன் துரத்துவது எனக்கு பீடு அன்று" என்றான். "ஆம், ஆனால் அவன் எவருமறியாது சென்றான். நீரோ கிளம்பும்போதே ஒரு போர் முடித்து விட்டிருக்கிறீர். இரண்டு நாடுகளின் எல்லையைக் கடந்து செல்லவிருக்கிறீர். அந்நாடுகள் உம்மை எளிதில் வழிமறிக்காதிருக்க பெரும் படையொன்று பின் தொடர வேண்டியுள்ளது" என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் ஏதோ சொல்ல வாயெடுக்க "உமக்கு பெரிய ஒற்றர்குழாமும் தேவையாகும்" என்றார்.

கிருஷ்ணவபுஸிலிருந்து கிளம்பிய திருஷ்டத்யும்னன் வலசைப்பறவைக்கூட்டம் போன்று தன் படகுகளை அணி வகுக்கச்செய்து கங்கையில் பாய் விரித்துச் சென்றான். அறுபது ஒற்றர்களைத் தேர்ந்து கங்கையின் கரையோரத்து துறை முகப்புகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஒற்றுச் செய்திகளை பறவைகள் வழியாக தனக்கு அனுப்பச் செய்தான். கிருதவர்மன் எந்தப் படித்துறையிலும் கரையணையவில்லை என்ற செய்தியே ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தது. அயல்வணிகர் குழுமிய சந்தைகளிலும் யாதவர் மன்றுகளிலும் சென்று உளவறிந்த ஒற்றர் எதையும் அறியவில்லை. வாரணவதத்தின் படித்துறையை அவர்கள் அணுகும்போது அவன் சற்றே நம்பிக்கை இழந்துவிட்டிருந்தான்.

கிருதவர்மன் அஞ்சி முற்றாக ஒளிந்துகொள்வானென்றால் யாதவர்குலம் பெருகிப் பரந்த கங்கையமுனைக் கரைவெளியில் அவனை கண்டுபிடிப்பது எளிதல்ல என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். இளைய யாதவர் அக்ரூரரைப் பிடித்து சியமந்தகத்தை கவர்வதற்குள் கிருதவர்மனை பிடித்தாகவேண்டும் என்று அவன் விடைபெற்றுக் கிளம்புகையில் எண்ணியிருந்தான். அதை நிகழ்த்த முடியாது என்று வாரணவதத்தை அடைந்ததும் தெளிந்தான். துறைகளுக்குச் சென்ற ஒற்றர்கள் வாரணவதத்தின் துறைமேடைக்கு அருகே கங்கைக்குள் நங்கூரமிறக்கி அமைந்திருந்த அவன் படகுகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக திரும்ப வந்து சேர்ந்தனர். ஏழு நாட்களில் தேடல் எந்த விளைவும் இன்றி முழுமையாக முடிந்தது.

இளைய யாதவரின் படைகள் காசியை அணுகிய செய்தி முதலில் வந்தது. போர்ச்செய்திக்காக காத்திருந்தபோது அவர்கள் காசி மன்னரின் விருந்தினராக நகர் நுழைவு செய்ததை அவன் அறிந்து வியந்தான். அதற்கு முன்னரே மதுராவின் பதினெட்டு படைப்பிரிவுகள் மகதத்தின் காவல்அரண்களை நோக்கி செலுத்தப்பட்டு நிலை கொள்ளச்செய்யப்பட்டன என்று தெரிந்ததும் அவ்வியப்பு அகன்றது. அந்த அச்சுறுத்தலின் விளைவாக மகதம் காசியிடமிருந்து சற்று விலகிக் கொண்டது. மகதத்தின் காவல் படைகள் மதுராவின் காவல்படைகளை எதிர்கொள்ளும்பொருட்டு ஆங்காங்கே குவை கொண்டன. வசுதேவரின் அவைக்கு மகதத்தின் மூன்று அரசுத்தூதர்கள் வந்தனர். காசிமன்னர் மகதத்தின் அந்த விலக்கத்தால் அஞ்சி இளைய யாதவரின் செய்தியை ஏற்று அவரை தன் நகருக்குள் வரவழைத்து அரசு விருந்தினராக முறைமை செய்ய உளம் கொண்டார்.

கங்கையில் படை நிலைகொள்ள புடவிக்கிறைவனின் ஆலயமுகப்பின் பெரும் படிக்கட்டில் இளைய யாதவரின் படகுகள் சென்றணைந்தபோது பல்லாயிரம் மக்கள் திரண்டுவந்து அடுக்கடுக்காக நின்று கைகளையும் ஆடைகளையும் காற்றில் வீசி வாழ்த்துரைகளைக் கூவி ஆர்ப்பரித்து வரவேற்றனர் என்றனர் ஒற்றர். சாலைகளின் இருமருங்கும் மாளிகை முகப்புகளில் முழுதணிக்கோலத்தில் எழுந்த மகளிர் அவரைக் கண்டு மகிழ்ந்து கூவி அரிமலர் சொரிந்தனர். காசிமன்னர் விருஷதர்பர் தன் துணைவியரும் அமைச்சரும் சூழ வந்து கோட்டை முகப்பில் இளைய யாதவரையும் மூத்தவரையும் எதிர்கொண்டு எட்டுமங்கலம் காட்டி வாள் தாழ்த்தி முறைமை செய்து வரவேற்று நகருக்குள் அழைத்துச் சென்றார். அங்கே அவருக்கு வசந்தகால அரண்மனை சித்தமாக்கப்பட்டது. அங்கே மூன்று நாள் தங்கி கலை நிகழ்வும் இசை நிகழ்வும் காவிய நிகழ்வும் கூடி விருந்துண்டு களித்தார்.

காசி துவாரகையுடன் கலம் கொள்ளவும் பொன் மாற்றவும் கடல் அணையவும் என மூன்று ஓலைச்சாத்துகளை ஏற்றுக் கொண்டது. காசிமன்னரும் இளைய யாதவரும் புடவிக்கிறைவனின் ஆலயத்தில் இணைந்து சென்று கங்கை நீரள்ளி சிவக்குறி மேல் சொரிந்து மலரிட்டு வணங்கி முறை செய்தனர். இருவரும் குன்று எழுந்தது போலவும் முகிலிறங்கியது போலவும் நடந்த இரு யானைகள் மேல் அம்பாரியில் அமர்ந்து நகருலா சென்றனர். காசிமக்கள் இரு பக்கங்களிலும் கூடி வாழ்த்தொலி எழுப்பி உவகை கொண்டாடினர். மூன்றுநாட்கள் நகரம் விழவுகொண்டாடட்டும் என்று காசி மன்னர் ஆணையிட்டிருந்தார். நகரமெங்கும் காசியின் முதலைக் கொடியுடன் கருடக்கொடியும் இணைந்து பறந்தது என்றான் ஒற்றன்.

"அக்ரூரர் அங்கில்லையா?" என்றான் திருஷ்டத்யும்னன். "இளவரசே, அக்ரூரரைப் பற்றி அங்கு எவரும் எதையும் பேசி நான் கேட்கவில்லை" என்று ஒற்றன் சொன்னான். அருகே நின்ற அவன் படைத்தலைவன் "அரசியலாடலின் நடுவே அதைப்பேசும் சூழல் அங்கிருந்திருக்காதோ?" என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி "இந்த நகர்நுழைவும் ஆலய வழிபாடும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அக்ரூரருக்காகவே. அக்ரூரரின் பெயர் உச்சரிக்கப்பட வேண்டுமென்பதே இல்லை" என்றான். "எனில் அவர் எங்கிருக்கிறார்?" என்றான் படைத்தலைவன். "காசிக்குள் எங்கோ இருக்கிறார் என்பது உறுதி. காசியுடன் இளைய யாதவர் கொண்ட இந்த நட்பு அக்ரூரரை அச்சுறுத்துவதற்காகவே. வளைக்குள் புகுந்த பாம்பை புகையிட்டு வெளியேற்றுகிறார் இளைய யாதவர்" என்றான் திருஷ்டத்யும்னன்.

காசியிலிருந்து இளைய யாதவரும் மூத்தவரும் படைகளுடன் கிளம்பி மதுரா நோக்கிச்செல்வதாக செய்தி வந்தது. மேலும் முன்னகர்ந்து கங்கையின் மலைமுகம் வரை சென்று தேடலாம் என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். "நமது கலங்கள் இன்னும் ஆறு நாழிகை தொலைவுக்கு அப்பால் செல்ல முடியாது இளவரசே" என்றான் படைத்தலைவன். "அதற்கப்பால் சிறு படகுகளே செல்ல முடியும். அவற்றில் சென்று நாம் எங்கு என தேட முடியும்? இரு புறமும் விரிந்திருப்பது கயிலைஆளும் வேந்தனின் சடைகள் என்று தொல்நூல்கள் கூறும் பெருங்காடு. பெரும்பகுதி மானுடர் அணுகவொண்ணாதது. கந்தர்வரும் யக்ஷரும் கின்னர கிம்புருடரும் வாழும் உயர்நிலங்கள். அரக்கரும் அசுரரும் நாகரும் வாழும் இருள்நிலங்கள். கிருதவர்மர் நம்மை அஞ்சி அக்காட்டுக்குள் நுழைந்தாரென்றால் மீண்டு அவர் ஊர்நுழைவதும் அரிதே."

திருஷ்டத்யும்னன் "கிருதவர்மரைக் கொண்டு வருக என்று இளைய யாதவர் ஆணையிட்டபின் அவரின்றி நான் மீள முடியாது" என்றான். படைத்தலைவன் மறுமொழி சொல்லாமல் நின்றான். "கிருதவர்மர் வணிகனாகவோ சூதனாகவோ வேடமாறு செய்து எங்கேனும் இருக்கலாம்" என்று ஒற்றர் தலைவன் கலிகன் சொன்னான். "பாடியலையும் சூதர்களிடமும் மலைப்பொருள் கொண்டு துறைமீளும் வணிகரிடமும் செய்திதேர்ந்தளிக்க மீண்டும் ஒற்றர்களை விரிக்கலாம்." திருஷ்டத்யும்னன் "மாறுவேடமிடும் இழிவை அவர் அடையமாட்டார் என எண்ணினேன். அது பிழையென படுகிறது. அவ்வாறே ஆகுக!" என்றான்.

ஆனால் அம்முயற்சியும் செய்தி ஏதும் கொண்டு மீளாது என அவன் ஆழுள்ளம் அறிந்திருந்தது. கூடவே வியத்தகு முறையில் செய்தி ஒன்று வரப்போகிறதென்றும் அவன் அறியமுடியா அடியாழம் உணர்ந்திருந்தது, ஒவ்வொருமுறை புரவி ஒன்று கரையணையும்போதும் படகொன்று தன் கலத்தை நெருங்கும்போதும் அச்செய்திக்காக அவன் சித்தம் படபடத்து எழுந்தது. வானில் சிறகடித்து அலையும் ஒவ்வொரு பறவையும் அச்செய்தியை கொண்டுவருவது என்று எண்ணி உடல் சிலிர்ப்பு கொண்டது. ஏழாவது நாள் அவர்கள் படகுக்கு மீன்நெய் விற்றுக் கொண்டிருந்த மகதநாட்டு வணிகன் பொன்கொள்ளும்போது "இளவரசே, நவமணி பொறிக்கப்பட்ட கங்கணம் ஒன்றுள்ளது. தாங்கள் விழைந்தால் பொன்னுக்கு அதை விற்க சித்தமாக உள்ளேன்" என்றான். அக்கணமே திருஷ்டத்யும்னன் அறிந்துவிட்டான் அதுதான் அச்செய்தி என்று. "கொள்கிறேன்" என்றான். மகத வணிகன் தன் தோல்கிழியைத் திறந்து ஒன்பது மணிகள் பொறிக்கப்பட்ட கங்கணத்தை எடுத்து முன்னால் வைத்தான்.

"என் படகொன்றை விற்று இதை கொண்டேன் இளவரசே. இதன் மதிப்பு மட்டுமே அன்று என் கண்ணுக்குத் தெரிந்தது. மிகக்குறைந்த விலையில் இதைப்பெறமுடியுமென்று மட்டுமே என் எண்ணம் ஓடியது. பின்னர்தான் அறிந்தேன், இதை மன்னர்களிடமன்றி என்னால் விற்க முடியாது என்று. நான் இதை திருடவில்லை என மன்னர்களிடம் எப்படி தெளிவுறுத்துவதென்று எண்ணி அஞ்சிவிட்டேன். இன்று தங்களைக் கண்டதும் துணிவுகொண்டேன்."

அதை கையில் எடுத்து அந்தகக்குலத்து யாதவர்களுக்குரிய இளங்கதிர் முத்திரையை கையால் தொட்டுநோக்கியபடி திருஷ்டத்யும்னன் "வணிகரே, இதன் மதிப்பை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர். தாங்கள் எண்ணுவதைவிட மும்மடங்கு பொன் இதற்கென அளிக்கப்படும்" என்றான். விரிந்த முகத்துடன் எழுந்த வணிகன் "ஆம், நான் எண்ணினேன், இந்த மணிகள் பழுதற்றவை. இவற்றின் செவ்வி அறிவோர் சிலரே" என்றான். "இதை விற்றவரும் ஓர் இளவரசரே. அதை இம்மணியே கூறுகிறது" என்றான் திருஷ்டத்யும்னன்.

"நானும் அவ்வாறே எண்ணினேன் இளவரசே. அவர் யாதவகுலத்து இளமன்னராக இருக்கவேண்டும். கங்கையில் இரண்டு சிறு படகுகளில் என்னெதிரே வந்தார். இங்கிருந்து அப்பால் உள்ள சிறு படகுத்துறையான கண்வகத்துக்கு அருகே அவரை பார்த்தேன். என்னிடம் விளக்கெரிக்கும் மீன்நெய் உள்ளதா என வினவினார் அதை ஓட்டிய வீரர். நான் மீன்நெய் விற்கக்கண்டு உணவு உள்ளதா என்று மறுபடியும் கேட்டார். உணவுக்கு விலையாக தர அவரிடம் பொன்நாணயங்கள் இருக்கவில்லை. சிறு கணையாழி ஒன்றை எடுத்துக்காட்டி இதைக் கொண்டு உணவளிப்பீரா என்றார். அதிலிருந்த சிறு வெண்முத்தை நோக்கியதுமே அது பழுதற்ற பாண்டியர்செல்வம் என தெளிந்தேன். ஆம், இவ்வரிய நகை மதிப்புடையது என்று சொல்லி உப்பும் ஊனும் தேனும் தினையும் கொடுத்து அதை பெற்றுக் கொண்டேன்."

"அப்போது படகின் உள்ளறைக்குள் தோற்பீடத்தில் அமர்ந்திருந்த இளவரசர் எழுந்து வெளியே வந்து என்னிடம் நீர் ஊரும் இந்த மூன்று படகுகளில் ஒன்றை எனக்கு விற்கிறீரா, மும்மடங்கு பெருமதியுள்ள கங்கணமொன்றை விலையாக அளிக்கிறேன் என்றார். என் விழிகளிலேயே ஆவலை அறிந்துகொண்டு தன் ஆடைக்குள்ளிருந்து இந்தக் கங்கணத்தை எடுத்துக் காட்டினார். இவை பழுதற்ற மணிகள் என்று அவை கூரையில் வீழ்த்திய ஒளியலைகளைக்கொண்டு அறிந்து கொண்டேன். என் படகுகள் மேலும் மதிப்புள்ளவை என்றேன். என்னிடம் மேலும் இரண்டு கணையாழிகள் உள்ளன, பெற்றுக் கொள்ளும் என்றார். அவரிடமிருக்கும் முழுச்செல்வமும் அவ்வளவுதான் என்று உய்த்தறிந்துகொண்டபின் நான் மேலே பேசவில்லை. என் ஒழிந்த பெரும்படகொன்றை அவருக்களித்து இந்நகையை கொண்டேன்."

"தன் படகிலிருந்த வீரர்களுடன் படகிலேறிக் கொண்டு படகுகளையும் அதில் ஏற்றிக் கொண்டு அவர் வடதிசை நோக்கி விரைந்து சென்றார்" என்றான் மகத வணிகன். "அப்படகின் தோற்றம் எவ்வாறு இருந்தது?" என்றான் திருஷ்டத்யும்னன். "இளவரசே, அது கலிங்க நாட்டிலிருந்து நான் கொண்டது. இப்பகுதிகளில் கலிங்கப்படகுகள் பொதுவாக தென்படுவதில்லை. கலிங்கர்கள் படகை நம்மைப் போல் அகல் விளக்கு வடிவில் அமைப்பதில்லை. மூங்கில்இலை வடிவில் அமைக்கிறார்கள். அவற்றின் முகப்பின் கூர்மையே விரைவை அளிக்கிறது" என்றான்.

யாதவப் படைத்தலைவன் "அப்படியென்றால் அது அகலமற்ற நீண்ட படகு அல்லவா?" என்றான். "ஆம்" என்றான் மகத வணிகன். "அதில் ஓரிரு பாய்களுக்கு மேல் கட்ட இடமிருக்காதே?" என்றான் படைத்தலைவன். "இல்லை. அதன் பாய்மரம் மிக உயரமானது. பாய்களை படகுக்குக் குறுக்காக காற்றுக்கு எதிர்த்திசையில் சற்று வளைத்துக் கட்டுவது வடகலிங்கமுறை. தென்கலிங்கர்களின் படகுகளில் பாய்களை படகுக்கு இணையாகவே காற்றுத்திசைக்கு ஒப்பாக கட்டுகிறார்கள். நேர்நின்று நோக்கினால் படகில் பாய்கள் இல்லையென்றே தோன்றும்" என்றான் மகத வணிகன். "அவை காற்றை எப்படி வாங்கும்?" என்று படைத்தலைவன் கேட்க, திருஷ்டத்யும்னன் "காற்றுக்கு எதிராகப் புடைத்தால் மட்டுமே விசை என்றில்லை சுபலரே. பீதர்நாட்டுப் பாய்கள் பெரும்பாலும் காற்றுக்கு நேராக அமைபவை. சற்றே திரும்பி காற்றை திறம்பட திசை திருப்புவதினூடாக அவை விசை பெறுகின்றன. தடுப்பதினூடாக அல்ல" என்றான்.

"நன்று மகதரே! தங்கள் பொன் சிறக்கட்டும்! தாங்கள் அளித்த இம்மணி என் நிதியறையை ஒளிபெறச்செய்யட்டும்!" என்றான். மகதன் "தங்கள் நற்சொற்களால் என் இல்லம் தழைக்கட்டும். என் மூதாதையர் மகிழட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!" என்று சொல்லி விடைபெற்றான். மூன்று ஒற்றர்கள் அக்கணமே விரைவுப்படகில் கரையோரக் காடுகளில் இறங்கி புரவிகளில் கிளம்பிச் சென்றார்கள். இரண்டாவது நாளே அந்தப் படகு வாரணவதத்திலிருந்து வடக்கே சுதமவனம் என்னும் ஊருக்கு அருகே அங்குள்ள சிறிய படித்துறையில் இருப்பதை ஒற்றன் அனுப்பிய புறாச்செய்தி சொன்னது. "எழுக படை!" என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

அவனது படகுகள் பாய்விரித்து வல்லூறுகள் போல கூர்முகம் தாழ்த்தி, சிறகு விரித்து நதியலைகள் மேலெழுந்து சென்றன. சுதமவனத்தின் தொலைவிலேயே கலிங்கப் படகை அவர்கள் கண்டுவிட்டனர். அவர்கள் வருவதைக்கண்டதும் சுதமவனத்திலிருந்து கிருதவர்மன் புரவிகளில் தப்பி காட்டுக்குள் சென்றுவிடக்கூடாது என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். தன் படகுகளில் ஐந்தை கரையணையச்செய்து அவற்றிலிருந்து புரவிகளை இறக்கி படை வீரர்களை காடு வழியாக அனுப்பி சுதமவனத்திலிருந்து காட்டுக்குள் சென்ற மூன்று ஊடுபாதைகளையும் முன்னரே மறித்தான். அதன் பிறகுதான் அவன் படைகள் சுதமவனத்தின் படித்துறையை அடைந்தன, யாதவர்கள் படகின் நடைபாலத்தின் வழியாக போர்க்கூச்சலுடன் இறங்கி சுதமவனத்தின் சிறிய படகுப்பாதையின் மரத்தரை அதிர ஓடி எதிர்வந்த ஊர்க்காவலர் சிலரை வெட்டிவீழ்த்தியபடி அவ்வூரின் தெருக்களில் நிறைந்தனர்.

ஊர்த்தலைவனின் மாளிகைக்குப் பின்னால் இருந்த சிறிய இல்லத்தில் தங்கியிருந்த கிருதவர்மன் தன்னுடைய அணுக்க வீரர் பன்னிருவருடன் கிளம்பி புரவிகளிலேறி மறுபக்கம் காட்டுக்குள் நுழைந்தான். அங்கு முன்னரே அணிவகுத்திருந்த யாதவப் புரவிப்படை அவர்களை எதிர்கொண்டது. அவர்களுடன் அவன் போர் புரிந்துகொண்டிருக்கையிலேயே திருஷ்டத்யும்னன் தன்னுடைய புரவியில் அவனுக்கு பின்பக்கம் வந்தான். தன்னை எதிர்கொண்ட மதுராவின் யாதவர்களில் அறுவரை வெட்டி வீழ்த்தி வழியமைத்து காட்டுக்குள் புகுந்த கிருதவர்மன் குளம்படி கேட்டுத் திரும்பி புரவியில் தொடர்ந்து வரும் திருஷ்டத்யும்னனையும் அவனது வீரர்களையும் கண்டான். அவனுடைய வீரர்களில் இருவரே எஞ்சியிருந்தனர். "பின் தொடர்க!" என்று அவர்களுக்கு ஆணையிட்டபடி அவன் காட்டுப் பாதையில் முழு விரைவில் தன் புரவியில் சென்றான்.

திருஷ்டத்யும்னன் குதிமுள்ளால் புரவியைத்தூண்டி தரையில் சிதறிக்கிடந்து துடித்த குதிரைகளையும் வீரர்களையும் தாவிக்கடந்து அவனைத் தொடர்ந்து சென்றான். வெட்டுண்ட வீரர்களின் உடல்களை அலறித்துடிக்க மிதித்துக் கூழாக்கித் துவைத்தபடி அவனது சிறிய புரவிப்படை கிருதவர்மனை தொடர்ந்தது. காட்டுக்குள் ஏழு நாழிகை தொலைவு அவன் கிருதவர்மனை துரத்திச் சென்றான். அந்தப் பாதை கிருதவர்மனுக்கும் புதிதாக இருந்தது என்றாலும் வாயால் மூச்சு விட்டபடி தலைப்பாகை அவிழ்ந்து நீண்டு முள்ளில் சிக்கி அலைபாய குழல்பறக்க முழுவிரைவில் தன் புரவியை செலுத்தி பாய்ந்து சென்றான். குறுக்கே மறித்த மூங்கில்கள் அவன் உடல் பட்டு வளைந்து நிமிர்ந்து வீசியறைந்து திருஷ்டத்யும்னனின் வீரர்கள் இருவர் அலறித் தெறித்து விழ அவர்கள் மேல் பின்னால் வந்த வீரர்களின் குதிரைகள் மிதித்துச் சென்றன. யாதவப் புரவிகளில் ஒன்று கொடிவேரில் கால் தடுக்கி கனைத்தபடி துள்ளி விழுந்து புரண்டு குளம்புகள் வானை உதைக்க அலறி எழ முயல தொடர்ந்து வந்த புரவிகள் அதில் கால் தடுக்கி அதன் மேலேயே மேலும் மேலுமென விழுந்தன.

திரும்பி நோக்கிய திருஷ்டத்யும்னன் தனது படைகளில் பெரும்பாலானவர்கள் புரவிகளின் விரைவை நிறுத்த முடியாமல் வந்து விழுந்த புரவிகளில் முட்டித் தெறிப்பதை கண்டான் அவனுக்கு முன்னால் சென்ற கிருதவர்மனின் படைவீரனொருவன் கிருதவர்மன் குனிந்து சென்ற மூங்கில்கழையின் அறைபட்டு தெறித்துவிழ புரவி வளைந்து விரைவழிந்து நின்றது. திருஷ்டத்யும்னனின் புரவி அதை அணுகியபோது அவன் காலைத்தூக்கி அப்புரவியை உதைத்து விலக்கிவிட்டு அதே விரைவில் குனிந்து எதிரே வந்த மூங்கில் கழையைத் தவிர்த்து முன்னால் சென்ற கிருதவர்மனை தொடர்ந்தான். அவனும் மூச்சிரைத்தபடி உடலெங்கும் அனல் எழ வியர்த்து உருகிக்கொண்டிருந்தான். உடலெங்கும் முட்கள் வீறி குருதிகசிய புலிக்கோடிட்டிருந்தன.

ஒளி பொழிந்துகிடந்த புல்வெளிச்சரிவொன்றை அடைந்த கிருதவர்மன் மூச்சிரைக்க திரும்பி நோக்கினான். ஆடையும் குழலும் பறக்க முகிலில் விரையும் கந்தர்வன் போல சென்றபடியே அவன் "என்னை உயிருடன் பிடிக்க இயலாது பாஞ்சாலரே" என்றபடி சரிவில் விரைந்தான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை மேலும் மேலுமென குதிமுள்ளால் குத்தி விரைவு கொள்ளச் செய்தான். அது வெறி கொண்டு கனைத்து எழுந்த புற்களையும் சிற்றோடையின் சதுப்புக் கலங்கலையும் மிதித்துத் துவைத்தபடி கிருதவர்மனை தொடர்ந்தது. புல்வெளிச்சரிவில் இருபுரவிகளும் சென்ற தடம் செந்நிறக் கோடு போல நீண்டது.

திருஷ்டத்யும்னன் விரைந்தபடியே தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்து கிருதவர்மனின் புரவிமேல் எய்தான். விலாவில் பட்ட அம்புடன் அது நிலையழிந்து துள்ளி சரிவில் சரிந்து விழுந்தது. அங்கு சேறாக இருந்ததனால் விழுந்த புரவி கால்சிக்கி அதிலேயே தத்தளிக்க அதன் எடைமிக்க விலாவுக்கு அடியில் கிருதவர்மனின் வலது கால் சிக்கிக் கொண்டது. அவன் கையை ஊன்றி எழ முயல்வதற்குள் திருஷ்டத்யும்னன் அவனை அணுகி தன் புரவியின் மேலேயே காலுதைத்து எழுந்து பாய்ந்து அவன் மேல் விழுந்து முழங்கால்களால் அவன் நெஞ்சை அறைந்து அவன் இரு கைகளையும் பிடித்து அவன்தலைக்கு மேல் தூக்கி மண்ணுடன் அழுத்தி இறுக்கிக் கொண்டான்.

"பாஞ்சாலரே, என்னை உயிர் துறக்கவிடுங்கள்... என் மேல் கருணை காட்டுங்கள்" என்று கிருதவர்மன் கண்களில் நீர் எழ அடைத்த குரலில் சொன்னான். தன் முழு எடையும் கிருதவர்மன் உடம்பு மேல் அழுந்த திருஷ்டத்யும்னன் அவனை கட்டுவதற்காக தன் கச்சையை அவிழ்த்தான். கிருதவர்மன் பற்களைக் கடித்தபடி கண்களைச் சுருக்கி பாம்பெனச்சீறும் குரலில் "பாஞ்சாலரே, நானும் ஒரு வீரன் என கருத்தில் கொள்ளுங்கள். இக்கணமே உங்கள் வாளை உருவி என் கழுத்தை அறுத்து குருதியுடன் திரும்பிச் செல்லுங்கள். யாதவ அவையில் நீங்கள் விரும்பும் அனைத்து சிறப்புகளையும் பெறுவீர்கள். என்னை இழிவுபடுத்தாதீர்கள்" என்றான்.

"நீ வஞ்சகன். உன் இறைவனுக்கு இரண்டகம் செய்தவன்" என்றான் திருஷ்டத்யும்னன். "இல்லை பாஞ்சாலரே, நான் இரண்டகம் செய்யவில்லை" என்றான் கிருதவர்மன். "ஏனென்றால், நான் கொண்ட பற்று துவாரகைமேல் அல்ல. இளைய யாதவர் மீதும் அல்ல. எனக்கு என் யாதவக்குடியே ஒரு பொருட்டல்ல... பாஞ்சாலரே, நான் அத்திருமகளுக்கு மட்டுமே முடிதாழ்த்தியவன். அவளை என் அகத்தே விழைந்தேன். அவளன்றி இப்புவியிலும் அவ்விண்ணிலும் ஏதுமில்லை என இருந்தேன். அவள் காலடி அங்குள்ளது என்பதனாலேயே துவாரகையில் வாழ்ந்தேன். இங்கு நான் வந்தது அவளுக்காகவே. அந்த மணியை நான் கண்டேன். அது அவளே என அக்கணம் சித்தம் மயங்கினேன். அதுவன்றி பிறிதெதையும் எண்ணவியலாதவன் ஆனேன்" என்றான் கிருதவர்மன்.

திருஷ்டத்யும்னன் அவனை திகைப்புடன் நோக்கினான். கிருதவர்மனின் இடது கால் எலும்பு முறிந்திருந்தது. அதை இழுத்து வைத்தபடி வலியால் முகம் சுளித்து பல்லைக் கடித்து "என்ன நிகழ்ந்ததென்று நானறியேன் பாஞ்சாலரே. என்னை ஆக்கிய தெய்வங்களையும் என் குடிமூதாதையரையும் என் உளம் அமர்ந்த திருமகளையும் சான்றாக்கி சொல்வேன். இங்கு வருகையிலும் கிருஷ்ணவபுஸின் துறையில் இறங்குகையிலும் சததன்வாவை நேரில் காணும் கணம் வரைக்கும் நான் அவன் தலைகொய்து மீள்வதைக் குறித்து மட்டுமே எண்ணினேன். என் எதிர்வந்த அவன் நெஞ்சில் திறந்திருந்த அவ்விழியைக் கண்டேன். இந்திரநீலம். நஞ்சின் நிறம். ஒளி என்றான இருளின் நிறம். பாஞ்சாலரே, அதன் பின் அந்த மணியை எனக்கெனக் கொள்வதன்றி வேறெதைப் பற்றியும் நான் எண்ணவில்லை" என்றான்.

விம்மலென உடைந்த குரலில் கிருதவர்மன் "இன்று அறிகிறேன் நான் விழுந்த ஆழமென்ன என்று. இளைய யாதவர் முன் சென்று நிற்பதில் எனக்கு நாணமில்லை. பொன் விழைவதும் பெண் விழைவதும் மண் விழைவதும் மணி விழைவதும் வீரர்க்கு உரியதுதான். ஆனால் வஞ்சகனாகவும் இழிமகனாகவும் என் நெஞ்சுறைந்த திருமகள் முன் சென்று நிற்பதென்பது இறப்பினும் கொடிதெனக்கு. அந்நிலைக்கு என்னை இட்டுச் செல்ல வேண்டாம். தங்கள் கால்களில் என் தலையை வைக்கிறேன். கொய்து செல்லுங்கள். அப்பெருங்கருணையை எனக்கு அளியுங்கள்" என்றான்.

திருஷ்டத்யும்னன் அவனைப் பற்றித் தூக்கி நிறுத்தினான். புரவி ஒடிந்த ஒரு காலை ஊன்றி கனைத்தபடி எழுந்து விலகியது. வலியால் காலை நிலத்தில் தட்டியபடி உடலை சிலிர்த்துக்கொண்டது. திருஷ்டத்யும்னன் கிருதவர்மனின் கையைப்பிடித்து முறுக்கி பின்னால் இழுத்து வலக்காலால் காலைத் தட்டி குப்புற விழவைத்து இன்னொரு கையைப் பற்றி முறுக்கிச் சேர்த்து தன் இடைக் கச்சினால் இறுக்கிக் கட்டினான். "பாஞ்சாலரே, உம்மை வீரனென்று எண்ணினேன். உமது குடிப்பிறப்பை நம்பினேன்" என்றான் கிருதவர்மன். "வீரம் ஒரு போதும் வஞ்சகத்தை பொறுத்துக் கொள்ளாது மூடா" என்றான் திருஷ்டத்யும்னன்.

தோரணவாயில் அணுகி வந்தது. படைத்தலைவன் அருகே வந்து நின்றான். தன் ஆணையை அவன் எதிர் நோக்குகிறான் என்று புரிந்து கொண்ட திருஷ்டத்யும்னன் "கிருதவர்மனை மூடுவண்டியில் இருந்து இறக்குங்கள். தேர் மேல் கட்டுண்டு அமர்ந்து அவன் நகர்வலம் செல்லட்டும்" என்றான்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 2

துவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில் போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந்த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.

திருஷ்டத்யும்னன் அருகே சென்றதும் புரவியைத் திருப்பி பருந்தை மிதிக்காமல் சுற்றி உள்ளே சென்றான். தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத்தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டபட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமென தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள் போல தொங்கின.

குதிரைக்குளம்படி ஒலிக்க அவனருகே வந்துநின்ற படைத்தலைவன் தலைவணங்கினான். அவனை ஒருகணம் நோக்கியபின் "இறக்குங்கள்" என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் ஒரு கணம் தயங்கி அவன் திரும்பிப் பார்க்கையில் படைத்தலைவன் வெறித்த விழிகளுடன் அசையாமல் நிற்பதை கண்டான். "என்ன?" என்றான். "இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே" என்றான் படைத்தலைவன். "என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி "பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக!" என்றான்.

"ஆம், நாட்டைவிட குடியை முதன்மையெனக் கருதும் வழக்கமே மீண்டும் மீண்டும் நிலையழியச் செய்கிறது யாதவர்களை. குலங்களுக்கு அப்பால் நிகரற்ற வல்லமை கொண்ட மன்னனொருவன் அமையவேண்டிய காலப்புள்ளி இது. முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஐங்குலங்களும் அவ்வாறு உருகி இணைந்துதான் பாஞ்சால நாடு உருவாகியது. படைத்தலைவரே, வஞ்சத்தை எந்நிலையிலும் அரசன் பொறுத்துக் கொள்ளலாகாது. முழுமையான அடிபணிதல் வழியாகவே அவன் வெற்றிகொள்ளும் படைவல்லமையை உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு வஞ்சகர்கள் ஒருவர்கூட எஞ்சியிராது தண்டிக்கப்படவேண்டும். அத்தண்டம் ஒவ்வொருவர் கனவிலும் வந்து அச்சுறுத்தும்படி அமையவேண்டும்" என்றான்.

படைத்தலைவன் "அவரைக் கொன்று சடலத்தை கொண்டுசெல்லலாம் பாஞ்சாலரே" என்றான். "வீரனுக்கு இறப்பென்பது மிக எளியது. அது ஒரு தொடக்கம் மட்டுமே. சொல்லில் என்றுமென எஞ்சியிருப்பது புகழ் மட்டுமே. படைத்தலைவரே, வீரனின் வாழ்க்கை என்பது அவன் இறப்பில் தொடங்கி புகழ் விரிய விரிய வளர்கிறது. இன்று கிருதவர்மன் இறந்தாக வேண்டும். அதற்கு முன் அவன் புகழ் இறக்க வேண்டும். இந்நகரத்தெருக்களில் அவனை நோக்கிச் சூழும் ஏளனச் சொற்கள் மட்டுமே இனி சூதர் பாடல்களில் எஞ்சவேண்டும். அதுவே நாடாளும் க்ஷத்ரியர் கண்டடைந்த வழி. இனி யாதவரின் வழியும் அதுவாகவே இருக்கட்டும்" என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு கையசைத்து "கொண்டு வாருங்கள்" என்றபின் புரவியை இழுத்து தோரணவாயிலுக்குள் நுழைந்தான்.

படையின் பின்பக்கம் மூடுவண்டியின் கதவைத் திறந்து உள்ளிருந்து கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்ட கிருதவர்மனை வீரர்கள் இறக்குவதை ஒலிகள் வழியாகவே அறிந்தான். திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் துவாரகைக்குச் செல்லும் பெருவழியினூடாக சீர்நடையிட்டு சென்றான். அவனை நோக்கி துவாரகையின் முதல் காவல் மாடத்திலிருந்த காவல்தலைவனும் நான்கு படைவீரர்களும் வந்தனர். படைமுகப்பில் சென்ற கொடிக்காரனிடம் முறைமைசொல்லி வணங்கி ஓரிரு சொல்கொண்டு மலர்ந்த முகத்துடன் விழிதூக்கிய அவர்கள் திகைப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். ஒவ்வொரு கண்களிலும் எண்ணையில் நெருப்பு பற்றிக்கொள்வது போல ஒளி எழுந்தது. அவற்றை நோக்கியபடியே அவன் அணுகினான்.

காவலர்தலைவன் தலைவணங்கி "இளவரசே..." என்றான். திருஷ்டத்யும்னன் "எனக்குரிய முறைமை வாழ்த்து தங்களால் சொல்லப்படவில்லை காவலர்தலைவரே" என்றான். காவலர்தலைவன் திடுக்கிட்டுத் திரும்பி "ஆம். பொறுத்தருள்க! பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது" என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். "துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க!" என்று மறுமுறைமை சொன்ன திருஷ்டத்யும்னன் "பின்னால் வருபவனை அவ்வண்ணமே இந்நகரத் தெருக்களில் கொண்டு செல்ல நான் ஆணையிடுகிறேன்" என்றான். காவலர்தலைவன் "இளவரசே..." என்றபின் மேலும் சொல்ல இயலாது தத்தளித்து "ஆம்" என்றான்.

திருஷ்டத்யும்னன் கோட்டை நோக்கிச்சென்ற மையப் பாதையில் இருபக்கமும் படைவீரரும் நகர் நுழையும் வணிகரும் பாலைநிலமக்களும் சுற்றிலும் வர சென்று கொண்டிருக்கும்போது முற்றிலும் தனித்தவனாக தன்னை உணர்ந்தான். அவனை விலக்கி நோக்கும் பல்லாயிரம் பார்வைகளால் சூழப்பட்டிருந்தான். ஒவ்வொரு மயிர்க்காலும் விழிகளை உணர்ந்தது. அவ்வழுத்தத்திற்கு எதிராக தசைகளை இறுக்கி, தலையை நிமிர்த்தி, காற்றை எதிர்கொள்பவன் போல அவன் சென்றான். அவனுக்குப் பின்னால் ஓசைகள் வலுத்து வலுத்து வந்தன. பெருங்கூட்டத்தில் மதம்கலைந்த யானை புகுந்ததுபோல என்று எண்ணிக்கொண்டான்.

வண்டிகள் நிரையழிந்து விலகி வழிவிட, அவற்றில் எழுந்து நின்ற வணிகர்களும் வினைவலரும் ஏவலரும் வியந்து குரலெழுப்ப, அவனது சிறுபடை சாலையில் ஊர்ந்தது. துவாரகையின் கற்கோட்டைமுகப்பு தெரிந்ததும் திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். இதற்குள் செய்தி துவாரகையை அடைந்திருக்கும். முகப்பில் கொடிகளுடன் மெல்ல நடந்த அவனுடைய குதிரை வரிசை கோட்டைமுகப்பை அடைந்தது. கோட்டையின் உச்சிக் கொத்தளங்கள் நிழல் வடிவாக விழுந்து கிடந்த சாலை நீர் போல நெளிவதாகத் தோன்றியது.

இத்தனை தொலைவு இப்பாதைக்கென்று ஏன் நான் முன்பு அறிந்திருக்கவில்லை? ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன்? இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறுப்பு எனக்கெதற்கு? என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை? திரும்பி நோக்கும் அவாவை திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை இறுகப் பற்றுவதனூடாக வென்றான். திறந்த தேரின் தட்டில் அதன் இடத்தூணில் கைகள் சேர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன் கலைந்த குழலுடன் உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருப்பான். நிமிர்ந்து எவரையும் பார்க்கும் துணிவை அவன் கொண்டிருக்கமாட்டான்.

அத்தருணத்தில் நிமிர்ந்து பார்க்க முடிந்தால் அனைத்தையும் வென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கு தன் செயல்மேல் முழு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அழுக்கற்றது என தன் அகத்தை எண்ணியிருக்க வேண்டும். கிருதவர்மனோ அவன்விழிகளை சந்திப்பதையே தவிர்த்தவன். திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அத்தனை நேரம் கிருதவர்மனைப் போலவே தேர்த்தட்டில் கைகள் கட்டப்பட்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தது தானே என்றுணர்ந்தான். சியமந்தகத்துடன் சென்ற ஒவ்வொருவருமாகவும் தன் உள்ளம் ஏன் நடிக்கிறது? அஞ்சி ஓடி கோழை என்று ஆகி பிடிபட்டு இழிவுண்டு நின்றிருக்கும் இவனாக நானும் ஏன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்?

இந்த எண்ணங்களைத்தான் என் புரவி அடிமேல் அடிவைத்து கடந்து கொண்டிருக்கிறது. கணம் கணமென பெருகும் இந்த எண்ணவெளியை எண்ணி எண்ணி வைக்கும் அடிகளால் கடப்பது எப்படி? கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் "கிருதவர்மர் அல்லவா?" என்றான். இன்னொருவன் "அந்தகக் குலம் இதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது" என்றான். அது அவன் கேட்க சொல்லப்பட்டது.

புரவியில் அருகே அணுகிய திருஷ்டத்யும்னனை திரும்பிநோக்கிய கோட்டைக்காவலன் "இளவரசே..." என்று தவித்து கை நீட்டி சுட்டினான். "என் ஆணை அது" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆனால்..." என்று அவன் ஏதோ சொல்லவர கைநீட்டித் தடுத்து "என் ஆணை" என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் சொன்னான். அவன் தலைவணங்கி கைகாட்ட கோட்டைமேல் பெருமுரசும் கொம்புகளும் ஓசையுடன் எழுந்தன.

வென்று திரும்பும் படைகளை எதிர் கொள்வதற்காக எழும் முரசின் முத்துடித் தாளம். ஆனால் வாழ்த்தொலிகள் எழவில்லை. மேலிருந்து அரிமலர் பொழியவும் இல்லை. கோட்டைக்காவலரும் சூழ்ந்திருந்த வணிகரும் பிறரும் சிலையென செதுக்கப்பட்ட விழிகளுடன் கிருதவர்மனை நோக்கி நின்றனர். கோட்டைக்குள் நுழைந்து சுங்க மாளிகையை அடைந்து திருஷ்டத்யும்னன் பெருமூச்சுடன் நின்றான். தோள்தாளாத எடையுடன் வந்தது போல உடல் களைத்திருந்தது. அவனை நோக்கி வந்த காவலனிடம் "இளைய யாதவரிடம் நான் வந்துவிட்ட செய்தியை சொல்க! எப்போது அவை புக வேண்டும் என்றறிய விழைகிறேன்" என்றான். காவலன் தலை வணங்கி "இப்போதே சென்று அறிவிக்கிறேன் பாஞ்சாலரே" என்றான்.

அவன் சென்ற பிறகு திருஷ்டத்யும்னன் பெரியதலைப்பாகையும் மீசையற்ற கொழுத்த முகமும் கொண்ட சுங்கநாயகத்தை நோக்கி திரும்பி "என்னுடன் தொடரும் படைகளுக்கான கணக்கை என் படைத்தலைவன் அளிப்பான்" என்றான். சுங்கநாயகத்தின் கண்கள் தன் கண்களை தொடவில்லை என்பதை அவன் கண்டான். அவரது கைகள் ஆடையைப் பற்றி சுழற்றி கொண்டிருந்தன. முகம் வியர்த்து மெல்லிய மேலுதட்டில் பனித்திருந்தது. திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க தேர்த்தட்டில் முற்றிய வாழைக்குலைபோல கிருதவர்மனின் தலை தழைந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டான். சகடங்கள் கல்லிலும் பள்ளத்திலும் விழுந்தெழுவதற்கேற்ப அவன் தலை அசைய தொங்கிய கருங்குழல் சுரிகள் காற்றில் பறந்தன. அவன் தோள்கள் வியர்வையில் பளபளத்தன.

அவன் நோக்குவதைக்கண்ட சுங்கநாயகம் "அவரை கொன்றிருக்கலாம் பாஞ்சாலரே" என்றான். திருஷ்டத்யும்னன் "கொன்று கொண்டிருக்கின்றேன்" என்றான். இதழ் வளைந்த புன்னகையுடன் "அவனுள் வாழும் இருண்ட தெய்வங்களை முதலில் கொல்ல வேண்டும். அதன் பின்னரே அவனை கொல்ல வேண்டும். இல்லையேல் அவனுடலில் இருந்து எழுந்து சிறகடித்து பிறர் உள்ளங்களில் சென்று சேக்கேற அத்தெய்வங்களால் முடியும். இன்று இப்பகலில் அவை முறைப்படி விண்ணேற்றம் செய்யப்படவேண்டும்" என்றான். சுங்கநாயகம் தன் மெல்லிய உதடுகளைக் கடித்து பார்வையை விலக்கிக்கொண்டார்.

அவர்களின் படை கோட்டையைக் கடந்ததும் திருஷ்டத்யும்னன் அதை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று படைத்தலைவர்களின் தலைமையில் பாசறைகளை நோக்கி அனுப்ப ஆணையிட்டான். கிளைபிரிந்து அத்திரிகளும் புரவிகளும் தேர்களுமாக அவை தங்கள் திசை தேர்ந்தன. ஒவ்வொருவரும் திரும்பி கிருதவர்மனை நோக்கியபடி ஓசையழிந்து அகன்றுசென்றனர். வெற்றிகொண்டு வந்த படைகளை எதிரேற்கும் குரல் எதுவும் எழவில்லை. வெற்றிக்கூக்குரலை படைகளும் எழுப்பவில்லை.

கிருதவர்மனை ஏற்றிய தேர் தொடர பன்னிரு புரவிவீரர்களுடன் அவன் துவாரகையின் மையச்சாலைக்குள் நுழைந்தான். கோட்டைமுகப்பில் செய்தியறிந்த யாதவர்கள் கூடத் தொடங்கினர். செவியெட்டும் தொலைவில் அச்செய்தி பரவிச்செல்லும் குரலலைகள் எழுந்தன. அணுக அணுக அவர்கள் குரலழிந்து விழிகள் மட்டுமே என ஆயினர். கோட்டைக் காவலன் திருஷ்டத்யும்னனின் அருகே வந்து "இக்கூட்டம் செல்லும்தோறும் பெருகுமென்றே எண்ணுகிறேன் இளவரசே" என்றான். "பெருகட்டும்" என்றான் திருஷ்டத்யும்னன்.

"இவர் அந்தகக்குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் இந்நகரில் ஏராளமாக உள்ளனர். இந்நகராளும் அரசியின் குலத்தவர். அவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். படை வீரர்கள் கிளர்ந்து வழிமறிக்கலாம். அவ்வண்ணமெனில் நகரத்தெருக்களில் ஒரு பூசலும் எழக்கூடும். அது அரசருக்கு உகந்ததல்ல" என்றான். திருஷ்டத்யும்னன் "அது என் பொறுப்பு" என்றதும் தலை வணங்கி "அவ்வண்ணமே" என்றான் கோட்டைக் காவலன்.

திருஷ்டத்யும்னன் கைகளை அசைத்து ஆணைகளை இட்டு தன் அகம்படியினரை மூன்று புரவி வரிசைகளாக ஆக்கினான். நடுவே தனித்தேரில் கிருதவர்மன் தேர்த்தூணில் கைகள் பின்னால் கட்டப்பட்டு நின்றான். திருஷ்டத்யும்னன் "கிளம்புக!" என ஆணையிட்டதும் கிருதவர்மன் அறியாமல் தலைதூக்கி அக்கூட்டத்தை நோக்கினான். அவனுடலில் ஒரு துடிப்பென கடந்து சென்ற உளவலியை அங்கிருந்தோர் அனைவரும் கண்டனர். கூட்டம் ஒற்றைக்குரலில் இரக்க ஒலியெழுப்பியது.

"செல்க!" என்று திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு ஆணையிட்டான். அவனது காவல்வீரர்கள் இருவர் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் துவாரகையின் கருடக்கொடியையும் ஏந்தியபடி முன்னால் சென்றனர். தொடர்ந்து அவனது படையினரின் புரவிகள் சீரான குளம்படி எடுத்து வைத்து பெருநடையில் சென்றன. கிருதவர்மனின் தேர் அசையாது நின்றிருக்க முன்னால் சென்றவர்கள் விலகிக்கொண்டிருந்தனர். தேர் அருகே சென்ற திருஷ்டத்யும்னன் "தேர் கிளம்பட்டும்" என்றான். தேரோட்டி தலைகுனிந்து கைகட்டி அமர்ந்திருப்பதை அதன்பிறகே அவன் உணர்ந்தான். அவன் தன் சம்மட்டியை மடியில் குறுக்காக வைத்திருந்தான்.

அவனை நோக்கி "கிளம்புக!" என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் தேரோட்டியின் உடலில் மெல்லிய அசைவொன்றை உருவாக்கியது. அஞ்சிய எலி குறுகுவதுபோல அவன் இருந்தபடியே தன்னை ஒடுக்கிக்கொண்டான். முன்னால் சென்ற புரவிகளில் சிலர் திரும்பி நோக்கினர். தேருக்கும் புரவிக்குமான இடைவெளியில் இருபக்கமும் நின்ற நகர்மக்கள் பிதுங்கி வளைந்து நிரம்பத் தொடங்கினர். திருஷ்டத்யும்னன் "இக்கணமே உன் தலையை அறுத்து வீழ்த்துவேன். எழுக மூடா!" என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் "தேரெழுக மூடா!" என்றான் திருஷ்டத்யும்னன்.

தேரோட்டி தலைதூக்கி நீர் நிறைந்த விழிகளால் அவனை பார்த்தான். "இளவரசே, என் தலை இங்கு உருள்வதில் துயரில்லை. இத்தலையுடன் என் யாதவர் குலமன்றுக்குச் சென்று நான் நிற்க முடியாது. நாளை என் மைந்தர் அதே அவையில் தலைதூக்க முடியாது. இக்கணம் இறப்பதே நான் செய்யக் கூடுவது" என்றான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை உதைத்து தேரருகே சென்று அதில் காலூன்றி எழுந்து தேர்த்தட்டை நோக்கி பாய்ந்தான். பாகனின் தலையை பற்றிச் சுழற்றி மண்ணில் வீசினான். முகபீடத்தில் அமர்ந்து குதிரைச் சவுக்கை காற்றில் தூக்கி உதறியபோது அதன் இரட்டை நாக்கு ஒற்றைச் சொல்லொன்றை விடுத்தது. அந்த ஆணையைக் கேட்டதுமே இரு புரவிகளும் உடல் சிலிர்க்க காதுகளை விடைத்து மெல்லக் கனைத்தபடி முன்னகர்ந்தன. சகட ஒலியுடன் தேர் திடுக்கிட்டு பாயத் தொடங்கியது.

அவனுக்குப் பின்னால் எழுந்த தணிந்த குரலில் கிருதவர்மன் சொன்னான் "பாஞ்சாலரே, இக்கணம்கூட பிந்தவில்லை. இளைய யாதவருக்கும் இந்நகருக்கும் நான் செய்தது வஞ்சமென உணருகிறேன். அதற்குரிய தண்டனை என இத்தேர்த்தட்டில் கீழ்மைகொண்டு நான் அமர்ந்திருப்பதும் முறையே. என் குலத்தின் முன், இந்நகரின் முன் போதிய சிறுமை கொண்டுவிட்டேன். இது போதும். இங்கே என்னை இறக்கி விடுங்கள். என் உளக்கோயில் அமர்ந்த திருமகள் விழிமுன் இக்கோலத்தில் என்னை நிற்கச்செய்யாதீர்" என்றான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி ஏளனச்சிரிப்புடன் "எவரேனும் உன்னை இத்தோற்றத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது அவர் மட்டுமே" என்றான். "ஏனென்றால், அவர்பொருட்டே நீ இதைச் செய்தாய்!" புரவி விரைவுகொள்ள தேர் துவாரகையின் அரசப்பெருவீதியில் கல்பாவப்பட்ட தரையில் கடகடத்து ஓடியது. செல்லச் செல்ல இரு மருங்கும் கூடிய விழிகள் பெருகின. ஓசைகள் அழிந்து மூச்சொலிகளும் முனகல்களும் விம்மல்களும் நிறைந்த அக்கூட்டம் சாலைக்கு கரையமைத்திருந்தது. எந்த விழிகளையும் நோக்காமல் புரவிகளின் நான்கு காதுகளுக்கு அப்பால் சுருளவிழ்ந்து வந்துகொண்டிருந்த பாதையை மட்டுமே நோக்கி சவுக்கை மீண்டும் மீண்டும் சுண்டியபடி திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.

முதன்மைவீதியின் மறுமுனையில் இரண்டாவது உட்கோட்டை வந்தது. அவனது படை அங்கு செல்வதற்குள்ளேயே செய்தியறிந்து கோட்டைவாயிலைத் திறந்து காவலன் இறங்கி கைகூப்பி நின்றிருந்தான். கிருதவர்மன் தலைகுனிந்து கண்களை இறுக மூடி பறக்கும் பருந்தின் கால்களில் தொங்கும் சிறு எலியென அத்தூணில் தொங்கிக் கிடந்தான். எதிரே பெருகிய மக்கள் திரளின் தடையால் தேர் விரைவழிந்தது. "விலகுங்கள் விலகுங்கள்" என்று முன்னால் சென்ற யாதவர் படை குரலெழுப்பியது. வேல்களாலும் வாள்களாலும் கூட்டத்தை அச்சுறுத்தி விலக்கினர். அதனூடாக புரவிகள் செல்ல அத்தடம் வழியாக தேர் சென்றது.

அங்காடி வளைவைக் கடந்து, படைத்தலைவர் இல்லங்களையும் வைதிகர் வீதிகளையும் கடந்து, சுழன்று மேலேறிய சாலையில் எங்கும் கிருதவர்மனின் தோற்றம் கூடிநின்றோரில் கண்ணீரை மட்டுமே உருவாக்கியது. அரண்மனையின் முதல்வளைப்பை அடைந்து தேர் நின்றதும் அமைச்சன் இறங்கி ஓடிவந்து "என்ன செய்கிறீர் இளவரசே?" என்றான். திருஷ்டத்யும்னன் "இளைய யாதவருக்கு வஞ்சமிழைத்த ஒருவனை பாரதவர்ஷமெங்கும் எம்முறையில் வஞ்சகர்களை நடத்துவோமோ அம்முறையில் கொண்டுவந்திருக்கிறேன்" என்றான். விழிதூக்கி கிருதவர்மனை நோக்கியபின் "இளவரசே..." என்று தளர்ந்த குரலில் சொன்னான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் "அரசவைக்கு நானே இவனை அழைத்துச் செல்வேன்" என்றபடி தேரை முன் செலுத்தினான்.

அரண்மனைகள் சூழ்ந்த முதற்பெருமுற்றத்தை நோக்கி தேர் கல்தரையில் எளிதாக உருண்டு சென்றது. வலப்பக்கம் எழுந்த மகளிர்மாளிகைகளில் ஏதோ ஒரு சாளரத்தில் எக்கணமும் யாதவ அரசி தோன்றப் போகிறாள் என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். விழிதூக்கி அம்மாளிகையின் நூறு பெருஞ்சாளரங்களை நோக்க வேண்டுமென்ற உந்துதலை தன் முழுச்சித்தத்தாலும் அடக்கி முற்றத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்பலகைகளை மட்டுமே நோக்கியவனாக முன்சென்றான். மாளிகைச் சாளரங்கள் தோறும் மகளிர் முகங்கள் பெருகுவதை, அங்கிருந்து அவர்கள் கிருதவர்மனை சுட்டிக்காட்டிக் கூவுவதை கேட்டான். எதிரே இருந்த அமைச்சு மாளிகையிலும் இடப்பக்கம் எழுந்த படைத்தலைவர் மாளிகைகளிலும் நின்றிருந்த உருண்ட பெருந்தூண்கள் தாங்கிய உப்பரிகைகளிலும் நீண்டு வளைந்து சென்ற இடைநாழிகளிலும் படிகள் இறங்கிய கீழ்வளைவுகளிலும் அலுவலர்களும் ஏவலர்களும் சேடியரும் நெருக்கியடித்து நின்று அவர்களை நோக்கினர்.

தேர் மேலும் சில கணங்களில் அதன் இறுதி நிலையை அடைந்துவிடுமென்று எண்ணியபோது அவனுள் ஓர் ஏமாற்றம் எழுந்தது. அதை மேலும் பிந்தவைக்க என அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. இன்னும் சில அடிகள். சில கற்பாளங்கள். அந்த இரட்டைத்தூண் அருகே இருக்கும் தேர்நிலை. ஏதோ உள்ளுணர்வால் அவன் அறிந்தான், அவள் கிருதவர்மனை பார்த்துவிட்டாள் என்று. கிருதவர்மனிடமிருந்து எழுந்த மெல்லிய ஒலியாலா, அல்லது அங்கிருந்த அத்தனை விழிகளிலும் ஒரே கணம் தெரிந்த சிறு அசைவாலா? தலை தூக்கி சாளரத்தை நோக்கப் போகும் கணத்தில் அவன் தன்னை இறுக்கிக் கொண்டான். அலுவலர்களும் ஏவலரும் மேலே திறந்த சாளரத்தையும் கிருதவர்மனையும் மாறி மாறி நோக்கும் விழியசைவுகளை கண்டான். பல்லாயிரம் தேனீக்களைப் போல பறக்கும் விழிகளால் அவன் சூழப்பட்டிருந்தான்.

தேரை நிறுத்தி அணுகி வந்த சூதனிடம் கடிவாளத்தை வீசி தேர்ப்படிகளில் கால் வைத்து குறடுகள் ஒலிக்க கற்தரையில் இறங்கி திரும்பி தன் வீரர்களை நோக்கி "அவனை கட்டவிழ்த்து நிலமிறக்குங்கள்" என்று ஆணையிட்டான். இரு வீரர்கள் பாய்ந்து மேலேறி வாளால் கிருதவர்மனைக் கட்டிய கயிறுகளை வெட்டி சுருளவிழ்த்தனர். கைகள் அவிழ்ந்ததும் எடையிழுக்க முன் சரிந்திருந்த உடலின் விசையால் மேலிருந்து தூக்கி வீசப்பட்டவன் போல் தேர்த்தட்டில் விழுந்தான் கிருதவர்மன். நெடுநேரம் கட்டப்பட்டிருந்த கைகள் செயலற்றிருந்தமையால் அவன் முகம் தேர்த்தட்டில் ஓசையுடன் அறைபட்டது. பக்கவாட்டில் புரண்டு முனகியபடி உறைந்திருந்த கால்களை நீட்டினான். வீரர்கள் அவன் இரு கைகளையும் பற்றித் தூக்கி படிகளில் இறக்குகையில் தலை தொங்கி ஆட, கால்களும் கைகளும் உயிரற்றவையென துவண்டு அசைய ,சடலமென்றே தோன்றினான்.

கற்தரையில் நிறுத்தியபோது அவன் தள்ளாடி வீரன் ஒருவன் மேல் சாய்ந்து கொண்டான். "கொண்டுவாருங்கள்" என்றபடி திருஷ்டத்யும்னன் திரும்பினான். "பாஞ்சாலரே" என்று தாழ்ந்த குரலில் கிருதவர்மன் அழைத்தான். திரும்பலாகாது என்று எண்ணியும் திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கினான். அக்கணம் வரை இல்லாதிருந்த ஒன்று குடியேறிய விழிகளால் அவனை நோக்கி, பற்களை இறுகக் கடித்தமையால் தாடை இறுகியசைய, கற்களை உரசும் ஒலியில் கிருதவர்மன் சொன்னான் "அவள் முன் என்னை நிறுத்திவிட்டீர். இதுவரை மானுடன் என்றிருந்த என்னை மலப்புழுவென்றாக்கிவிட்டீர்."

"ஒரு கணமும் இதை மறவேன்" என்றான் கிருதவர்மன். "என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் ஒவ்வொரு கணமும் இதையே எண்ணியிருப்பேன். இங்கு நுண்ணுருவாக சூழ்ந்திருக்கும் என் மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! எக்கணமும் என் நெஞ்சில் நின்று வாழும் திருமகள் அறிக! ஒரு நாள் உமது நெஞ்சு பிளந்து குருதி கொள்வேன். அதுவன்றி அமையேன்." அவன் குரல் எழுந்தது "எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன். எந்த தெய்வத்தின் ஆணையையும் அதற்காக மீறுவேன். ஏழல்ல ஏழாயிரம் யுகங்கள் இருள்நரகில் வாழவும் சித்தமாவேன்."

சொல்லப்படுகையிலேயே மானுட உடலிலிருந்து விலகி தெய்வங்களின் குரலாக ஒலிக்கும் சொற்கள் சில உண்டு என்பர் சூதர். அச்சொற்கள் அத்தகையவையே என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். அவன் முதுகெலும்பில் ஒரு கூச்சம் போல குளிர்போல ஒன்று கடந்து சென்றது .நெஞ்சு எடைகொண்டு இறுக, அக்கணத்தை சித்தத்தின் வல்லமையால் தள்ளி அகற்றிவிட்டு மூச்சை இழுத்து விட்டு "பார்ப்போம்" என்றான்.

"பாஞ்சாலரே, இன்று இந்தத் தேரில் ஊர் விழிகள் முன் நிறுத்தி சிறுமை செய்தது என் அகம் கொண்ட இருளை மட்டுமல்ல, உம் அகம் நிறைந்த விழைவையும்தான்" என்றான் கிருதவர்மன். திருஷ்டத்யும்னன் ஏளனச் சிரிப்புடன் "இத்தருணத்தை சொற்களால் வெல்ல முயல்கிறாய். இதைத்தான் இத்தனை தூரமும் எண்ணி வந்தாயா?" என்றான்.

கிருதவர்மன் அவனை நோக்கிய விழிகள் நிலைத்திருக்க "பாஞ்சாலரே, நானிருக்கும் இந்நிலையும் இக்கணமும் ஓர் மானுட உச்சமே. வென்று அறிந்து உய்ந்து மானுடன் அடையும் உச்சம் ஒன்று உள்ளது என்றால் வீழ்ந்து இழிந்து இருண்டு மானுடனறியும் உச்சம் இது. இன்று என்னுடன் மின்னும் விழிகளுடன் பல்லாயிரம் பாதாள நாகங்கள் நச்சுநா பறக்க சூழ நின்றுள்ளன. என் ஒவ்வொரு சொல் மேலும் அவை பல்லாயிரம் முறை கொத்தி ஆணையிடுகின்றன. இது உண்மை" என்றான்.

திருஷ்டத்யும்னன் அவ்விழிகளை தவிர்த்தான். சொல்லெடுக்க முடியாது அசைந்த இதழ்களை நாவால் நனைத்தபின் திரும்பி தன் படைவீர்னிடம் "அவனை இட்டு வாருங்கள்" என்று ஆணையிட்டான். பின் அங்கிருந்து தப்புபவன் போல அரண்மனையின் படிகளை நோக்கி சென்றான்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 3

துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்க மின்னும் நீர்ப்பரப்பு போன்ற வெண்சுண்ணத் தரையுடன் அமைந்திருந்தது. கடற்காற்று அலையடிக்கச் செய்த திரைச் சீலைகளின் வண்ணநிழல் தரைக்குள் அசைய அது அலை பாய்ந்தது. யாதவர்களின் பன்னிரு பெருங்குலத்து மூத்தோர், அயல்வணிகர், நகரத்து ஐம்பெரும் குழுவின் தலைவர்கள், எண்பேராயத்து முதல்வர்கள், பெருங்குடி மக்கள் என அவை நிறைத்து அமர்ந்திருந்தனர். சாளரங்களுக்கு வெளியே சுவர் ஓரமாக கூர் வேல் ஏந்தி காவலர் சிலையென ஒட்டி நிற்க உள்ளே சுவர் மூலைகளில் அவை ஏவலர் விழி துழாவி ஏவல் கோரி நின்றிருந்தனர். அவை அமர்ந்திருந்தவர்களில் எவரேனும் சற்று விழி திருப்புகையில் அவர்கள் குனிந்து தலை பிறர் மேல் எழாமல் நிழலென ஓசையின்றிச் சென்று ஏவல் கேட்டு மீண்டனர்.

அவை முகப்பில் எழுந்த அரசமேடையில் ஆயிரத்து எட்டு செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பிரபாவலையம் கொண்ட அரியணையில் இளைய யாதவர் முழுதணிக் கோலத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கம் அதே போன்ற பிறிதொரு அரியணையில் மூத்த யாதவர் வீற்றிருந்தார். சிம்மங்களின் விழி என சுடர்ந்த செம்மணிகள் அவையில் எழுந்த அசைவுகளுக்கேற்ப கனன்று கொண்டிருந்தன. பலராமர் தன் இரு கைகளை மார்பின் மேல் கட்டி இறுகிய உடலுடன் உள்நுழையும் பெரு வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார். இளைய யாதவர் அங்கில்லை என்பது போன்ற இயல்பான உடற்குழைவுடன் அரியணையில் இருந்தார். எடையற்ற நீல இறகொன்று காற்றில் மிதந்து அவ்வரியணை மேல் அமைந்தது போல. பாதி மூடிய விழிகள் எதையும் பார்க்கவில்லை. இதழ்களில் எப்போதும் என இருக்கும் அப்புன்னகை அங்கு நிகழ்வது எதற்காகவும் அல்ல என்று தோன்றியது. குழல் சூடிய பீலி விழி வானை நோக்கி விழித்திருந்தது.

திருஷ்டத்யும்னன் கிருதவர்மனுடன் வந்து கொண்டிருக்கும் செய்தி முன்னரே அவையை அடைந்துவிட்டிருந்தது. அந்தகர்கள் கூட்டமாக எழுந்து கைநீட்டி கூச்சலிட பலராமர் எழுந்து தன் பெரும் கைகளை விரித்து இடிக்குரலில் "அமருங்கள். அவையில் ஓசையிடுபவர் எவராயினும் இக்கணமே கழுவிலேற்றப்படுவார்கள்" என்று கூறியதும் திகைத்து அவரை நோக்கியபின் ஒவ்வொருவராக அமர்ந்தனர். ஆனால் அமர்ந்தபின் அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட ஓசை எழுந்து குவைமாடத்தில் முட்டி முழக்கமாக கீழிறங்கியது.

துவாரகையின் அந்தகக் குலத்தலைவர் சாரசர் எழுந்து "என் சொற்களை நான் முன்வைத்தாகவேண்டும் மூத்தவரே. இந்தக் கடுஞ்செயலை அந்தகக் குலம் ஒரு போதும் மறக்காது. இதை எங்கள் மூதன்னையர் பொறுக்கமாட்டார்கள்" என்று இரு கைகளையும் விரித்து கூறினார். போஜர்குலத் தலைவர் பிரபாகரர் "இளைய யாதவரின் கருத்து என்ன என்று அறிய விழைகிறேன். இந்நகரில் இதுவரை நிகழாதது இது" என்றார். இளைய யாதவர் அக்குரலைக் கேட்டது போல தெரியவில்லை. அனைத்து விழிகளும் அவரை நோக்க "பலராமரே! இத்தருணத்தில் இளைய யாதவரின் சொல்லையே நாங்கள் இறுதியெனக் கொள்வோம்" என்றார் வணிகர் குலத்தலைவர் ஊருகர்.

"இளையோனே, உன் சொல்லென்ன இதில்?" என்று பலராமர் இளையவரை தோள்தொட்டு கேட்டார். இனிய கனவிலிருந்து சிறுவனைப் போல் விழித்துக் கொண்டு அதன் இறுதி இனிமை தங்கிய புன்னகை திகழும் விழிகளுடன் அவையை நோக்கி "இப்போது இங்கு நாம் கொதிப்பதில் பயனில்லை யாதவர்களே. கிருதவர்மன் இப்போது நகரத் தெருக்களில் பாதியை அடைந்துவிட்டான். இனி அவனை யானை மேலேற்றிக் கொணர்ந்தாலும் அவன் பெற்ற அவமதிப்பு மாறுவதில்லை. நான் அவனை மீட்டுக்கொண்டுவர ஆணையிடலாம். ஆனால் எனக்கும் பாஞ்சாலருக்கும் இடையே எண்ண முரண் இருப்பதை எதிரிகள் அறிவதன்றி அதனால் பிற பயனேதும் இதிலில்லை" என்றார். அந்தகக் குலத்தலைவர் எழுந்து ஏதோ சொல்ல வந்தபின் தயங்கி மீண்டும் அமர்ந்து கொண்டார். பலராமர் "எதுவானாலும் நாம் சற்று காத்திருப்போம். இந்த அவையில் இந்நிகழ்வை நாம் முழுது உசாவப் போகிறோம். எது நெறியோ அது நிகழ்க!" என்றார்.

துவாரகையின் நாற்படையின் பெருந்தலைவரான பிரதீபர் எழுந்து "அந்தகர்களின் கொந்தளிப்பை நான் உணர்கிறேன். ஆனால் இன்று பாஞ்சாலர் செய்து கொண்டிருப்பது முற்றிலும் உகந்ததே. யாதவர்களே, பெருநகர் ஒன்றை சமைத்தோம். பேரரசு ஒன்றுக்காக படை கொண்டு எழுகிறோம். இன்னும் நாம் க்ஷத்ரியராகவில்லை. பூசலிடும் ஆயர்த் திரளாகவே எஞ்சுகிறோம். துவாரகை யாதவர்களின் தலைமை நகரென்றால், அதை ஆளும் இளைய யாதவர் நம் தலைவர் என்றால், எண்ணத்திலும் கனவிலும் அவர் சொல் பணிவதே நம் கடனாகும். பிறழ்ந்தவர், நம் குலம் விட்டு உதிர்ந்தவர். அவருக்காக எழுவதென்பது யாதவ அரசுக்கெதிரான வஞ்சகமே. இந்நகர் உருவான பிறகு நிகழ்ந்த முதல் இரண்டகம் இது. இதை இங்கேயே வேருடன் ஒறுக்காவிடில் இந்நகர் என்றோ ஒரு நாள் வஞ்சத்தால் அழியும்" என்றார்.

அந்தகக் குலத்தலைவர் சாரசர் "அவ்வண்ணம் நூறாயிரம் சொல்லிருக்கலாம் படைத்தலைவரே. ஆனால் அவன் அந்தகன். இன்று துவாரகையின் பெருவீதியில் எங்கள் குடி மூத்தார் அவனைச் சூழ்ந்து பரிதவிக்கிறார்கள்" என்றார். "ஏன்? அந்தகக் குலத்தவன் ஒருவன் தன் குலமூதாதையை நெஞ்சில் உதைத்து தலைவெட்டி வீசியபோது அந்த மூதாதையர் சினம் கொள்ளவில்லையா? இன்று கிருதவர்மன் தேரில் கைகட்டி நிற்கிறானென்றால் அது அக்குல மூதாதையர் கொண்ட பழியே என்று கொள்ளுக" என்றார் படைத்தலைவர் பிரதீபர்.

பலராமர் "வீண் சொல்லாடல் வேண்டியதில்லை. அந்தகக் குலத்து அரசி இந்நகராள்கிறாள். இறுதி முடிவை அவள் எடுக்கட்டும். அது வரை இந்த அவை சொல்லடங்குக!" என்றார். பேரமைச்சர் மனோகரர் "ஆம். இப்போது நாம் செய்ய வேண்டியது அதுவே" என்றார். அதை உணர்ந்து ஒவ்வொருவராக தங்கள் பீடத்தில் அமர அவை அலையடங்கி ஓய்ந்தது. காற்றில் சாளரத் திரைச்சீலைகள் படபடக்கும் ஒலி அவர்களை தழல் அலைகள் சூழ்ந்திருப்பது போல கேட்டது. நெடுந்தொலைவில் கரைப் பாறைகளை ஓங்கியடித்துச் சிதறி மீளும் அலைகளின் ஓசை வலுத்து அவர்களை சூழ்ந்தது.

வாயிற்காவலன் உள்ளே வந்து "பாஞ்சாலர் கிருதவர்மருடன் அவை புகவிருக்கிறார்" என்றான். பலராமர் "வரட்டும்" என்று ஆணையிட்டார். அவைமண்டபத்தின் பின்பக்கத்தில் மங்கலப் பேரிகை எழுந்தது. வாழ்த்தொலிகளும் இரும்புக் குறடுகள் தரை உரசி அணுகும் ஓசைகளும் எழுந்தன. கோல்காரன் உள்ளே வந்து "யாதவ பேரரசி அவை புகுகிறார்" என்று அறிவித்தான். அவையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து "யாதவப் பேரரசி வாழ்க! அந்தகக்குல மணிமுத்து வாழ்க! யாதவத் திருமகள் இங்கு எழுக!" என்று வாழ்த்தினர். காவலர் சென்று அணிநிரைத்து படைக்கலம் ஒளிர நின்றனர்.

ஐந்து மங்கலங்களுடன் அணிச்சேடியர் முன்னால் வர, மலர்க்கோல் ஏந்தி மணிமுடி சூடி சத்யபாமா அவையின் வலப்பக்க வாயிலினூடாக உள்ளே வந்தாள். அவையினர் அனைவரும் தலை வணங்கி அவளை வாழ்த்தி குரலெழுப்பினர். தலையில் சுற்றிய மணியாரங்கள் நடையில் ஊசலாட, ஆடைமடிப்பு ஒல்கி அசைய, அவள் செம்பஞ்சுக்குழம்பிட்ட கைகளை மலர்மொட்டு போல கூப்பியபடி நடந்து வந்து அவையின் வலப்பக்கம் இடப்பட்ட அரசியருக்கான பொற்பீடங்களில் முதல் பீடத்தில் அமர்ந்தாள்.

சேடியரில் ஒருத்தி அவளணிந்த பொன்னூல் சித்திரங்கள் பின்னிய செம்பட்டு மேலாடையை பீடத்தின் வலப்பக்கம் ஒருக்க இன்னொருத்தி அவள் மணியும் மலரும் சூடிய நீண்ட கருங்கூந்தலை இடப்பக்கம் ஒருக்கி வைத்தாள். அவள் கால் நீட்ட பட்டாடையின் மடிப்புகளைச் சீரமைத்து அவள் காலின் மேல் பொருத்தினாள் இன்னொரு சேடி. அரியணையின் இரு கைப்பிடிகளிலும் கை வைத்து தலை நிமிர்ந்து அவையை ஒரு கணம் சுற்றி நோக்கியபின் சத்யபாமா சாய்ந்து அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து வந்த தாலமேந்திய மூன்று சேடியர் இடப்பக்கமும் தாம்பூலத் தாலத்தையும் இன்னீர் குடுவைகளையும் நறுமணப்பெட்டியையும் ஏந்திய சேடியர் வலப்பக்கமும் நின்றனர். அவளுக்குப் பின்னால் அணுக்கச் சேடியர் இருவர் முழுதணிக் கோலத்துடன் நின்றனர்.

பொற்கோலுடன் அவைமுகப்பில் வந்து நின்று வணங்கிய நிமித்திகன் "அவை எழுந்த யாதவ அரசியை வரவேற்கிறது துவாரகையின் இப்பேரவை. அவர் அணிவிழிகள் முன் இங்கு அரசநெறி நிலை நிற்கட்டும். அவர் மலர்ப்பாதங்கள் பட்ட இதன் கருவூலம் தழைக்கட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!" என்று வாழ்த்தி விலக "அவை தொடங்குக!" என்று பலராமர் ஆணையிட்டார். இசைச்சூதன் எழுந்து "திருமகள் கோயில் கொண்டது போல யாதவ அரசி இங்கு எழுந்தருளியபோது செல்வத்தின் தெய்வங்களும் அறத்தின் தெய்வங்களும் வந்து இருபக்கமும் நின்றிருப்பதை காண்கிறேன். இந்த அவையில் அழகும் நெறியுமன்றி பிறிது துலங்காதென்பது உறுதி. ஆம் அவ்வாறே ஆகுக!" என நிறைச்சொல் எடுத்தான். 'ஆம் ஆம்' என்று கைதூக்கி அதை ஏற்றது பேரவை. அமைச்சர் மனோகரர் "யாதவ அரசி, இந்த அவையில் இன்று தங்கள் ஆணையை மீறி இரண்டகம் செய்த கிருதவர்மரை உசாவி நெறியறிவிக்க உளம்கொண்டிருக்கிறோம். ஆணையிடுக!" என்றார். "அவ்வண்ணமே ஆகுக!" என்றாள் சத்யபாமா.

இடை நாழியினூடாக குறடுகள் அணுகும் ஓசை எழுந்தது. ஏவலன் முன்னால் வந்து பாஞ்சாலர் வருகை என அறிவித்தான். அனைத்து விழிகளும் வாயிலை நோக்க பித்தளைக்குமிழ்களும் சித்திரப்பதிவுகளும் பரவிய பெருங்கதவைத்திறந்து கவசமணிந்த மார்பும் கையில் வில்லும் புழுதியும் குருதியும் கலந்து உலர்ந்த காலணிகளும் கலைந்து திரிகளாக தோளில் விழுந்த குழலுமாக திருஷ்டத்யும்னன் உள்ளே வந்தான். அவை எழுப்பிய மூச்சொலி தெளிவாகக் கேட்டது. அவை முன் வந்து தலைவணங்கி "யாதவப் பேரரசரை பாஞ்சாலம் வணங்குகிறது. தங்கள் ஆணைக்கேற்ப இவ்வரசுக்கும் தங்களுக்கும் வஞ்சமிழைத்தவனை வென்று ஷத்ரிய முறைப்படி சிறைகொண்டு இவ்வவைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இங்கு அவனை நிறுத்த ஆணை விழைகிறேன்" என்றான்.

இளைய யாதவர் எழுந்து மேடையிலிருந்து மூன்றடி இறங்கி வந்து பாஞ்சாலனின் தோள்களில் கைவைத்து "நன்று செய்தீர் பாஞ்சாலரே, இனி வரும் சமர்களிலும் எனது வலது பக்கம் தங்கள் பெரும்படைக்கலன் நின்றிருக்க வேண்டுமென்று விழைகிறேன். இவ்வருஞ்செயலுக்கு இந்நகரும் என் அவையும் குடிகளும் தங்களுக்கு கடன் பட்டிருக்கின்றன" என்றார். பலராமர் மார்பின் மீது கட்டிய கைகளுடன் அசையாது அவனை நோக்கி அமர்ந்திருந்தார். இளைய யாதவர் திரும்பி "மூத்தவரே, நமது அயல் நட்பு நாடாக இருப்பினும் பயன்கருதாது பாஞ்சாலம் செய்த இப்பேருதவிக்கு தாங்களும் வாழ்த்துரைக்க கடமைப்பட்டிருக்கிறீர். இவ்விளைஞர் தங்கள் நற்சொற்களால் சிறப்பிக்கப்படவேண்டியவர்" என்றார்.

பலராமர் எழுந்தபோது அரியணை சற்று பின்னகர்ந்து ஓசையிட்டது. அவரும் மூன்று படிகளை இறங்கி வந்து முதுகளிற்றின் வெண்தந்தங்கள் போன்ற தன் பெருங்கரங்களை அவன் தோள் மேல் வைத்து மார்புடன் அணைத்துக் கொண்டு "தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் யாதவகுலமும் நானும் கடமைப்பட்டிருக்கிறோம் பாஞ்சாலரே" என்றார். அது வரை சற்று தயங்கி கலைந்த ஒலியுடன் அமர்ந்திருந்த அவையினர் அனைவரும் எழுந்து "பாஞ்சாலம் வாழ்க! வெற்றிகொள் இளவல் திருஷ்டத்யும்னர் வாழ்க!" என்று குரலெழுப்பினர். பேரவையின் இடது மூலையில் நின்றிருந்த இசைச் சூதர் முழவுகளையும் கொம்புகளையும் ஊதி மங்கல இசையெழுப்பினர். பெண்டிர் குரவையொலியிட்டனர்.

திருஷ்டத்யும்னன் இளைய யாதவரையும் மூத்தவரையும் வணங்கி திரும்பி அவை நோக்கி கைகூப்பி மும்முறை தலை வணங்கினான். "அமர்க பாஞ்சாலரே!" என்று இளைய யாதவர் கைகாட்ட பாஞ்சாலத்தின் விற்குறி பொறிக்கப்பட்டிருந்த பொற்பீடத்தில் சென்று அமர்ந்து இரு கைகளையும் தன் மடிமேல் வைத்துக்கொண்டு நிமிர்ந்த தலையுடன் அவையை நோக்கினான். அந்தகக் குலத்தலைவரின் விழிகளை அவன் சந்தித்தபோது அவற்றில் இருந்த பகைமையைக் கண்டு இதழ் சற்றே வளைய புன்னகைத்தான். அவர் விழிகளை தாழ்த்திக் கொண்டார்.

அவையினர் அனைவரின் விழிகளும் வாயிலையே நோக்கின. இருவீரர்களால் கைபற்றி நடத்தப்பட்டவனாக தளர்ந்து துவண்ட கால்களை இழுத்து வைத்து உயிரற்றவை போல் ஆடிய கைகளுடன் கிருதவர்மன் அவைக்கு வந்தான். வீரர்கள் அவனை அவை முன் நிறுத்தி பின் வாங்கியபோது அவன் கால்கள் வலுவிழந்து மடிந்தன. தரையில் மண்டியிட்டவன் போல் அமர்ந்து இரு கைகளையும் ஊன்றி தலை குனிந்தான். புழுதி படிந்து செந்நிறமாகிவிட்டிருந்த குழல் கற்றைகள் தொங்கி அவன் முகத்தை முற்றிலும் மறைத்தது.

மூச்சன்றி பிற ஒலிகள் எழாது அவை அமர்ந்திருந்தது. கிருதவர்மனின் முனகலும் மூச்சிரைப்பும் பின்னிருக்கையில் அமர்ந்திருவர்களையும் சென்றடைந்தது. இளைய யாதவர் கிருதவர்மன் அங்கு கொண்டுவரப்பட்டதையே அறியாதவர் போல அரைக்கணமும் அவனை நோக்கி விழிதிருப்பாமல் அமர்ந்திருந்தார். பலராமர் "ஏன் இப்படி இருக்கிறான்?" என்று எவரிடமென்றில்லாமல் கேட்டார். எவரும் மறுமொழி சொல்லாததனால் "அவனுக்கு பீடமளியுங்கள்" என்றார். மனோகரர் "மூத்தவரே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு பீடம் அளிக்கப்படுவதில்லை" என்றார். "அப்படியென்றால் அருந்த இன்னீர் அளியுங்கள்" என்றார் பலராமர். கிருதவர்மன் தலையை அசைத்து "வேண்டாம்" என முனகி முகத்தில் சரிந்த குழலை விலக்கினான்.

"இளையவனே, இவனுக்குரிய தண்டத்தை நீயே அளிப்பாயாக!" என்றார் பலராமர். இளைய யாதவர் எழுந்து மிக இயல்பாக கிருதவர்மனை நோக்கிவிட்டு அவை நோக்கி திரும்பி "இந்நகரில் இதுவரை இதற்கிணையான ஒன்று நிகழ்ந்ததில்லை. இவ்வரசில் எனக்கிணையாக அமர்ந்திருந்தவர்கள் அக்ரூரரும் கிருதவர்மரும். என்னையும் இந்நகரையும் நமது குலக் கொடியையும் உதறி இம்முடிவை இவர்கள் எடுக்க நேருமென்று நாம் எவரும் எண்ணவில்லை. அது ஏனென்று அவர்களே இங்கு விளக்கக்கடவர். எச்செயலுக்கும் அதற்குரிய விளக்கமென்று ஒன்றுண்டு. அவ்விளக்கம் நம்முள் உறையும் அறத்தின் தெய்வத்துக்கு உகந்தது என்றால் அதை நாம் ஏற்க கடமைப்பட்டுள்ளோம். நம் விழைவுகளும் ஆணவமும் நமது நம்பிக்கைகளும் அதை தடுக்க வேண்டியதில்லை. எந்தக் குற்றவாளியும் அவைமுன் தன் சொற்களை சொல்லும் உரிமை கொண்டவனே" என்றார்.

அந்தகக் குலத்தின் பின் வரிசையிலிருந்து ஒரு குரல் "அவ்வுரிமை சததன்வாவுக்கு அளிக்கப்பட்டதா?" என்று கேட்டது. திடுக்கிட்டவர்கள் போல அனைவரும் அத்திசை நோக்கி திரும்ப வைரத்தின் ஒளியசைவு போல விழி சற்றே மாற புன்னகை அவ்வண்ணமே இருக்க இளைய யாதவர் சொன்னார் "குற்றங்கள் இருவகை அந்தகரே. விளக்கங்களின் மூலம் மாறுபடக்கூடியவை பல. இம்மண்ணிலுள்ள எவ்விளக்கத்தாலும் மாறுபடாதவை சில. தந்தையையும் இளமைந்தரையும் பெண்டிரையும் கொலை செய்தவன், குலமாதரையும் ஞானியரையும் இழிவு செய்தவன் எவ்விளக்கத்தாலும் துலக்கப்படாதவன் என்றுணர்க!" பின்னர் திரும்பி சத்யபாமாவிடம் "அரசி, இந்த அவையில் தாங்கள் கூறுவதற்கேதும் உளதோ?" என்றார்.

அவர் விழிகளை சந்தித்த சத்யபாமா ஒன்றுடனொன்று அழுந்திய இதழ்களும் உணர்வின்றி நிலைத்த விழிகளுமாக ஒரு கணம் அமைந்திருந்தபின் இரு கைகளையும் இருக்கையின் பிடிகளில் ஊன்றி எழுந்தாள். "அரசே, தங்கள் உளவுத்திறன் நானறிந்ததே. நேற்று பின்னிரவில் அக்ரூரர் என் அரண்மனைக்கு செய்தியொன்றை அனுப்பியிருந்தார். விடிகாலையில் இந்நகருக்கு வெளியே பாலைவனச் சோலையில் தங்கியிருந்த அவரை என் ஒற்றர் கொணர்ந்து அரண்மனையில் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த அவையில் அவரை கொண்டுவந்து நிறுத்த விழைகிறேன். தாங்கள் இங்கு கூறியதுபோல தன் குற்றத்தை விளக்கும் வாய்ப்பை அவருக்கு அளிப்போம்" என்றாள்.

குனிந்து அமர்ந்திருந்த கிருதவர்மன் தலை நிமிர்ந்து சத்யபாமாவை பார்த்தான். தன் தளர்ந்த கரங்களைத் தூக்கி குழலை பின்னுக்குத் தள்ளி முடிந்தான். அவை முழுக்க பரவிய உள எழுச்சியை உடலசைவுகளாகவும் மெல்லிய ஒலிகளாகவும் கேட்க முடிந்தது. இளைய யாதவர் "அக்ரூரர் அவை புக நான் ஒப்புதல் அளிக்கிறேன்" என்றார். பலராமர் "அரசி, தங்கள் தந்தையைக் கொன்றவனிடம் உடன்பாடு கொண்டு படைத்துணை நின்றவருக்கு தாங்கள் அடைக்கலம் அளித்திருக்கிறீர்கள்" என்றார். சத்யபாமா "அடைக்கலம் கொடுப்பதென்றால் அதில் வணிகம் பேசுவதற்கு இடமில்லை. அடைக்கலம் மறுப்பதும் அரசியருக்கு அழகல்ல" என்றாள். "அக்ரூரரை அவைக்குக் கொண்டு வருக!" என தன் காவலருக்கு ஆணையிட்டாள்.

இளைய யாதவர் தன் இருக்கையில் அமர்ந்து கைகளை எளிதாக அதன் சிம்மக்கைப்பிடிமேல் வைத்துக்கொண்டு மீண்டும் தான் எப்போதுமிருக்கும் அவ்வினிய கனவுக்குள் புகுந்தவர் போலிருந்தார். பலராமர் தன் விரல்களை ஒன்றுடனொன்று பொருத்தி நெட்டி முறித்துக் கொண்டும் கால்களை தரையில் சுழற்றி மிதித்துக் கொண்டும் நிலையழிந்து அமர்ந்திருந்தார். அவையில் எவரோ இருமினர். வேறெவரோ ஏதோ முனகினர். திரைச்சீலைகளைத் தூக்கியபடி காற்று உள்ளே வந்து சுழன்று கடந்து சென்றது. அறைக்குள்ளிருந்த வியர்வை மணம் மாறி கடல்காற்றின் பாசியும் உப்பும் கலந்த மணம் நிறைந்தது.

மிகத்தொலைவிலேயே குறடுகள் ஒலிக்கும் ஒலியை அனைவரும் அறிந்தனர். தரையில் முழந்தாளிட்டு அமர்ந்திருந்த கிருதவர்மன் தன் வலக்காலை முன்னால் நீட்டி மூட்டின்மேல் இருகைகளையும் வைத்து ஊன்றி மெல்ல எழுந்து தள்ளாடி நின்றான். பின்னால் சரிந்து விழுபவன் போல ஆடி அருகே இருந்த பெருந்தூணை வலக்கையால் பற்றிக் கொண்டான். கண்களை மூடி தன் உடலின் துலா முட்களை நிலைக்கச் செய்தான். மறுபக்கப் பெருவாயில் மெல்லத்திறந்து காவலன் உள்ளே வந்து "அக்ரூரர் வருகிறார்" என்றான். அச்சொல் குளிர்மழையெனப் பொழிந்ததுபோல அவையினர் உடல் சிலிர்த்தனர்.

வேலேந்திய காவலர் இருபக்கமும் நடந்துவர தலை குனிந்து அக்ரூரர் வந்தார். வெள்ளை நிற கீழாடையும் வேப்பிலை விளிம்பு கட்டிய பொன்னூல் பின்னல் கொண்ட மேலாடையும் அணிந்திருந்தார். அவை முன் வந்ததும் குளிர் நீரலையால் தாக்கப்பட்டவர் போல உடல் விதிர்த்து ஒரு அடி பின்னால் சென்று அங்கு நின்ற வீரனின் மேல் முதுகு முட்டிக்கொண்டார். பின்பு மூச்சிரைக்க பதைக்கும் கைகளால் தன் ஆடையை சீர்படுத்தியபடி துயிலின்மையால் அடுக்குகளாக தளர்ந்து வளைந்து தொங்கிய கீழிமைகளுடன் அவையை நோக்கினார்.

பலராமர் எழுந்து "வருக மூத்தவரே" என்றபின் திரும்பி "இன்னும் விருஷ்ணி குலம் அக்ரூரரை தன் தலைமையிலிருந்து விலக்கவில்லை. ஆகவே இவ்வவையில் விருஷ்ணிகுலத்தின் வாழ்த்தொலியைக் கேட்கும் உரிமை அவருக்குள்ளது" என்றார். விருஷ்ணிகுலத்தவர் தயங்கியபடி எழுந்து "விருஷ்ணி குலத்தலைவர் அக்ரூரர் வாழ்க!" என்று வாழ்த்தொலி எழுப்பினர். அவர்களின் தயக்கம் ஒவ்வொரு குரலிலும் கலந்திருந்ததால் அக்குரல்கள் தனித்தனியாக சீர்கலைந்து ஒலித்தன.

அக்ரூரர் அதற்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு இரு கைகளையும் கூப்பி அவையை வணங்கியபின் முன்னால் வந்து இளைய யாதவரையும் மூத்தவரையும் தலைவணங்கி அவை முன் நின்றார். பலராமர் சத்யபாமையிடம் "அரசி, இனி உங்கள் சொற்கள் எழுக!" என்றார். சத்யபாமா "நேற்று பின்னிரவில் எனக்கு அக்ரூரரின் ஓலையுடன் தூதன் ஒருவன் வந்தான். பிழை பொறுத்து அடிபணிய தனக்கு ஒப்புதல் அளிக்கும்படி அதில் அக்ரூரர் கோரியிருந்தார். இந்நகரை ஆள்பவள் என்பதனால் இதனுள் புகவும் இந்த அவைவந்து நிற்கவும் அவருக்கு நான் ஒப்புதல் அளித்தேன். தன் சொற்கள் எவையோ அவற்றை இங்கு அவர் முன் வைக்கலாம்" என்றாள்.

பலராமர் "இவ்விருவர் மீதான குற்றச்சாட்டை அவை அறிக!" என்றார். மனோகரர் "அவையீரே, அந்தகக்குலத்தில் பிறந்தவரும் கூர்மபுரியின் இளவரசருமாகிய சததன்வா அந்தகக் குலத்து ஹரிணபதத்தின் அரசர் சத்ராஜித்தின் மகளும் நம் அரசியுமாகிய சத்யபாமாவை மணக்க விழைந்தார். அவரை நம் இளைய அரசர் மணந்தமையால் சினம்கொண்டு நாடுநீங்கி காசிநாட்டரசனின் உதவியுடன் கிருஷ்ணவபுஸ் என்னும் ஊரை கங்கைக்கரையில் அமைத்தார். அந்த நகரை பிற யாதவர் ஆதரிக்கும்பொருட்டு அந்தகக் குலத்திற்குரிய குலமணியாகிய சியமந்தகத்தைக் கொள்ள விழைந்தார். ஹரிணபதத்திற்குள் நுழைந்து சத்ராஜித்தைக் கொன்று அதை கவர்ந்துசென்றார்" என்றார்.

"தந்தை கொல்லப்பட்டதை அறிந்த அரசி சினம்கொண்டு விருஷ்ணிகுலத்து மூத்தவரும் துவாரகையின் அமைச்சர்தலைவருமான அக்ரூரரையும் பெரும்படைத்தலைவரான கிருதவர்மரையும் கிருஷ்ணவபுஸை வென்று சததன்வாவை கொன்று சியமந்தகத்தை கொண்டுவரும்படி ஆணையிட்டு அனுப்பினார். அவர்களுடன் துணையாக சாத்யகியையும் நட்புநாட்டு இளையபாஞ்சாலர் திருஷ்டத்யும்னரையும் அனுப்பினார். படைகொண்டு கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்த கிருதவர்மரும் அக்ரூரரும் சததன்வாவுடன் இணைந்துகொண்டனர். அவர் விருந்தினராக அவையமர்ந்து அந்த சியமந்தக மணியை தன் மார்பில் சூடி மகிழ்ந்திருந்த அக்ரூரரை நம் ஒற்றர் கண்டிருக்கிறார். செய்தியறிந்து திருஷ்டத்யும்னர் திரும்பிவந்து நம் அரசரிடம் சொல்ல நம் படைகள் கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்தன. சததன்வா காசிக்கு தப்பியோடும்போது அரசரின் படையாழியால் கொல்லப்பட்டார்."

"காசியிலிருந்து கிளம்பிய கிருதவர்மரை பாஞ்சாலர் கங்கைக்கரையின் சிற்றூராகிய சுதமவனத்தில் ஒளிந்திருக்கையில் பிடித்துக்கொண்டு வந்துள்ளார். சததன்வா அளித்த சியமந்தகத்துடன் கிருஷ்ணவபுஸில் இருந்து தப்பிய அக்ரூரர் காசியில் ஒளிந்திருந்து இங்கே அடைக்கலமென வந்திருக்கிறார்" என்ற மனோகரர் "அரச ஆணையை புறக்கணித்து எதிரியுடன் இணைந்துகொண்டதை இரண்டகம் என்று இந்த அரசவை வகுக்கிறது. வதைக்கொலை அதற்கான தண்டனை. இறப்புக்குப்பின் மண்ணில் சூதர்களின் வசை நீளவேண்டும். விண்ணேகச்செய்யும் நீர்ச்சடங்குகள் செய்யப்படலாகாது. தீரா இருள்நரகு அமையவேண்டும். சௌமுத்ரா நீதி அதை வகுத்துரைக்கிறது" என்றார்.

இளைய யாதவர் "அக்ரூரரே, உமது சொற்களுக்காக காத்திருக்கிறேன்" என்றார். அவை அக்ரூரரை நோக்கி அமர்ந்திருந்தது. அவர் அச்சொற்களுக்கு அப்பாலிருந்து வந்தமைந்தவர் போல திகைத்து அனைவரையும் நோக்கியபின் எழுந்தார்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4

அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி "இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு நிதிக்குவையில் பாதியை எனக்களிப்பதாக கம்சன் எழுதி அனுப்பிய ஓலையை காட்டினான். நிகராக விருஷ்ணிகுலத்தின் ஆதரவை நான் அளிக்கவேண்டும் என்றான். அந்நிதிக்குவை கார்த்தவீரியரால் திரட்டப்பட்டது என்று நானறிவேன். இந்த பாரதவர்ஷத்தின் பெருங்கருவூலங்களிலொன்று அது. நவமணிகளும் பொன்னும் குவிந்தது. அந்த ஓலையை அக்கணமே என் முன் எரிந்த கணப்பிலிட்டேன். திரும்பி அவனிடம் 'என்னுள் வாழும் அறத்தின் தெய்வங்கள் என் மூதாதையரால் அங்கு பதிட்டை செய்யப்பட்டவர்கள். அதை வாங்கும் செல்வம் கம்சனிடமுமில்லை. விண்ணகர் ஆளும் இந்திரனிடமும் இல்லை' என்று அவனிடம் சொன்னேன்" என்றார்.

"என் வாழ்நாளில் ஒரு போதும் செல்வத்தை விரும்பியதில்லை. ஒரு கணம்கூட அரியணை அமர எண்ணியதில்லை. நெறி நின்ற குலமூத்தான் என்ற சொல்லையன்றி புகழுரை எதையும் உன்னியதில்லை. இங்கு நுண்வடிவில் எழுந்தருளியிருக்கும் என் மூதாதையர் அறிக! இச்சொல் ஒவ்வொன்றும் உண்மை" என்றார். மெல்லிய ஓங்காரமென அவ்வவையிலிருந்த அனைவரும் அதை ஏற்றனர். "அந்தகக்குலத்தின் கருவூலத்தில் இருந்த சியமந்தக மணி மண்ணில் விழுந்த சூரியனின் விந்து என்று நான் அறிந்திருந்தேன். இப்புவியில் மானுடர் கொள்ளும் விழைவனைத்தையும் அறிந்த ஒற்றைவிழி என்று ஒரு சூதன் பாடக் கேட்டிருக்கிறேன்" என அக்ரூரர் தொடர்ந்தார்.

"இந்த அவையில் ஒரு முறை சியமந்தகத்தைப் பற்றி பேச்சுவந்தபோது இளைய யாதவர் அது வெறும் ஒரு கல் அல்ல, மணி. மண்ணின் சாரமே மணி எனப்படுகிறது என்றார். புவியாழத்தில் பல்லாயிரம் கோடி மணிகள் புதைந்துள்ளன. எரிமலை எழுந்தோ நிலம் பிளந்தோ நதி அகழ்ந்தோ அவற்றில் சில வெளிவருகின்றன. மண்ணுக்குரியவர் அரசரென்பதால் அவை அரசரை அடைகின்றன. மீண்டும் அவர்களின் கருவூலத்தின் இருளில் புதைகின்றன. புறஒளி காணும் மணிகள் சிலவே. அவை நெஞ்சாழத்தில் வாழும் ஒளிராத எண்ணங்கள் என்பர் சூதர். அறியா விழைவுகள் ஒளி கொள்ளாமலிருக்க வேண்டுமென்பதே முன்னோர் வகுத்த முறை என்று நான் அன்று சொன்னேன். இளைய யாதவர் புன்னகைத்து 'அக்ரூரரே, காலங்களுக்கு ஒருமுறை ஒரு மணி தன் இருளிலிருந்து வெளிவருகிறது. மானுடரிடம் ஆடி மீண்டும் மண் புதைகிறது. அதை வெல்பவன் தன் ஆழத்தை வென்றவன். மணிக்கென ஒளியேதுமில்லை, நம் விழியிலமைந்த விழைவுகளால் மட்டுமே அதை ஒளி பெறச்செய்கிறோம்' என்றார்."

அன்று பிறிது பலவும் பேசி அவை கலைந்து வீடு திரும்பினேன். அக்கணமே அதை மறந்திருந்தேன். ஆனால் அன்று அவ்விரவின் துயிலில் கரிய ஓடை ஒன்று ஒழுகி வருவதுபோல பாதாள நாகமொன்று என்னை அணுகுவதைக் கண்டேன். என் முன் தன் கரிய படத்தை அது விரித்தபோது அதன் வால் நுனி இருளின் ஆழத்தில் எங்கோ அப்போதும் உருகி வழிந்து வந்து கொண்டிருந்தது.

சீறும் ஒலியில் 'இதை உனக்கென கொணர்ந்தேன்' என்றது நாகம். நான் திகைத்து அதை நோக்கி நிற்க அதன் வாய் திறந்தது. இரு நச்சுப் பற்கள் மணிக்குருவியின் அலகுகள் போல ஒளியுடன் தெரிந்தன. நடுவில் செந்நிற நாக்கு பற்றிக்கொள்ளும் அனல் என பதைத்தது. தாடை விரிந்து வாய் அகன்று விரிய உள்ளிருந்து செம்முகில் கிழித்து வரும் இளஞ்சூரியன் போல மணியொன்று எழுந்து வந்தது. அதன் செம்மை மெல்ல மறைய இந்திரநீல நிறம் கொண்டது. இருகைகள் நீட்டி அதை இரந்து நின்றேன். நாகம் படம் வளைத்து பின்னால் சென்றது. 'அதை விழைகிறேன்! அதை கொள்ள விழைகிறேன்!' என்றபடி என் கைகளை மீண்டும் நீட்டினேன். நாகம் சவுக்குச் சொடுக்கென என் கைகளைத் தீண்டியது.

திடுக்கிட்டு விலகி அக்கைகளால் நெஞ்சை பற்றிக்கொண்டபோது கைக்குள் குளிர்ந்த கல்லொன்றிருப்பதைக் கண்டு வெறித்து நோக்கினேன். என் கைகளில் இருந்தது ஒரு நீலவிழி. அது என்னை நோக்கி புன்னகைத்தது. நாதவிக்க விழித்துக் கொண்டபோது என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தொலைதூரத்தில் இருந்து இருண்ட காடுகளின் உப்புக் காற்று ஓலமிட்டபடி வந்து என் அறைக்குள் சுழன்று கொண்டிருந்தது. இருளில் கண்மூடியபோது நான் அந்த மணியை மீண்டும் அருகே என கண்டேன்.

அவையீரே, அதன்பின் சியமந்தக மணி என்னும் சொல்லே என் அகத்தை நடுங்க வைத்தது. திருட்டுப் பொருளை புதைத்து மறைத்தவன் போல எப்போதும் ஓர் எச்சரிக்கை கொண்டிருந்தேன். அவ்வெச்சரிக்கையை வெல்ல மிகையான புறக்கணிப்பை நடித்தேன். அதை விலக்க விலக்க என்னுள் முளைத்து கிளை விரித்து எழுந்தது. ஒரு கணமேனும் நினைவில் நான் அதை விட்டு விலகவில்லை. பல்லாயிரம் முறை வினவிக்கொண்டேன், அதை நான் விழைவது எதற்காக என்று. அதை கொள்ள விழைகிறேனா? கொண்டபின் அதை வைத்து என்ன செய்ய எண்ணுகிறேன்? எதற்கும் மறுமொழியில்லை. அதை விழைந்தது என் உள்ளமல்ல என் கைகள் என்று தோன்றியது. கைகளில் ஏந்தி நெஞ்சோடு அதை அணைக்க வேண்டும் என்பதற்கு மேல் நான் எதையும் விழையவில்லை என்று இன்று அறிகிறேன். அவையீரே, அவ்விழைவு நான் அடைவதல்ல, அந்த மணியால் என்னுள் நிறைக்கப்பட்டது.

சததன்வா சியமந்தக மணியுடன் சென்றான் என்ற செய்தி வந்தபோது நான் அடைந்த உணர்வு என்பது ஓர் ஆறுதல்தான். அது என்னிலிருந்து விலகிச் செல்கிறதே என்ற நிறைவு அது. இனி ஒருபோதும் அது என்னை வெல்லும் என்று அஞ்சத்தேவையில்லை என எண்ணினேன். ஆனால் யாதவ அரசி அந்த மணியை வென்று வரும்படி என்னிடம் ஆணையிட்டார். அப்போது அறிந்தேன், அதை என் அகம் கொண்டாடுவதை. என்னுள் அந்த மணி எழுப்பிய விழைவு என்பது அதுவே என்று சொல்லி என் அகத்தை நம்பவைத்தேன். சததன்வாவை வென்று அவ்வெற்றியின் அடையாளமாக சியமந்தகத்தை நான் கொள்வேன், என் இரு கைகளிலும் அதை ஏந்தி நிற்பேன், நெஞ்சில் அதை அணிந்து கொள்வேன், இந்த அவைக்கு திரும்பி வந்து யாதவ அரசியிடம் அதை அளிக்கையில் என் வீரத்திற்குப் பரிசாக விருஷ்ணி குலத்துத் தலைவனாகிய எனக்கே அதை அவர் அளிப்பார் என்று என் உள்ளம் கற்பனை செய்தது.

இன்று எண்ணுகையில் கூசவைக்கும் எண்ணமென்றிருந்தாலும் அப்போது என் ஆழத்துப் பகற்கனவில் ஒவ்வொரு கணமும் தித்தித்தது அது. இங்கிருந்து படை கொண்டு செல்கையில் சததன்வாவைக் கொன்று அவன் குருதியில் அந்த மணியை முக்கிக் கொண்டுவருவதைப் பற்றி மட்டுமே நான் நினைத்தேன். பிறிதெதையும் ஒரு கணமும் எண்ணவில்லை என்பதை என் மூதாதையர் மேல் சொல்நட்டு இந்த அவை முன்பு வைக்கிறேன். நான் வகுத்த திட்டங்கள் ஒவ்வொன்றும் அவனைக் கொன்று அந்த மணியைப் பறிக்கவே. அவனிடமிருந்து அழைப்பு வந்தபோது கண்ட முதற்கணமே அவன் கழுத்தை அறுப்பதைக் குறித்து மட்டுமே எண்ணினேன். அதன் முழுப்பெருமையையும் நானே கொள்வதுகுறித்து, கிருதவர்மனைத் தவிர்ப்பது குறித்து மட்டுமே திட்டம் வகுத்தேன்.

கலத்திலிருந்து இறங்கி அவன் முன் நின்றபோது தன் கழுத்தில் சியமந்தக மணியை அணிந்தபடி அவன் என் எதிரே வந்தான். நெஞ்சில் விழித்திருந்தது இளங்கதிர். அதன் நோக்கு என் இரு விழிகளை நிறைத்தது. பின் நான் எதையும் எண்ணவில்லை. அந்த மணியை கொள்வதன்றி பிற அனைத்தும் பொருளற்றதென்றும் மண்ணில் வாழ்வொன்று எனக்கு அமைந்தது அதன் பொருட்டே என்றும் உள்ளம் ஓடியது. அந்த மணியும் நானும் மட்டுமே இருக்கும் ஓர் உலகில் வாழ்ந்தேன்.

சததன்வா எங்களை அழைத்து தன் மாளிகைக்கு கொண்டு சென்றான். நாங்கள் தங்குவதற்கு தனியிடமும் பணியாளரும் அமைய ஆணையிட்டான். நீராடி உணவுண்டு மீள்வது வரை அந்த மணியை அன்றி பிறிது எதையுமே எண்ணவில்லை என்பதை இன்று வியந்து கொள்கிறேன். தன் அவையைக் கூட்டி முறைப்படி வாழ்த்தளித்து எங்களை மதிப்புகூர்ந்தான் சததன்வா. பின்பு தன் அணுக்கர் கூடிய உள்ளவையில் எங்களை அமரச் செய்து தன் இலக்குகளை சொன்னான். யாதவ அரசுடன் போர் புரிய விழையவில்லை என்றும் ஆனால் துவாரகையின் படையொன்று வருமென்றால் காசியும் மகதமும் இருபக்கமும் நிற்க அதை எதிர்கொள்ள சித்தமாக இருப்பதாகவும் உரைத்தான். அவன் சொற்களை அவன் கூறவில்லை, அந்த மணி உரைத்தது.

அந்தகக் குலமும் விருஷ்ணி குலமும் ஒருங்கிணைந்தால் மகதத்துடன் இணைந்து பிறிதொரு மாநகரை காசிக்கு அருகே அமைக்க முடியுமென்றும் கங்கையின் பெருக்கு இருக்கையில் வணிகம் குறைபடாது என்றும் சததன்வா சொன்னான். கிருதவர்மன் அவற்றை ஏற்றுக்கொண்டான். நான் தலையசைத்தேன். அன்று இரவு விருந்துண்ணவும் சூது கூடவும் சததன்வா எங்களை அழைத்தான். அவன் மாளிகையின் அணிக்கூடத்தில் அவன் அமைச்சர் இருவரும் சேர்ந்துகொள்ள அவனுடன் கிருதவர்மனும் நானும் பகடையாடினோம்.

பகடைக்களம் விரிக்கையில் அவன் என்னிடம் 'விருஷ்ணி குலத்தவரே, பகடைக்கு என்ன பணயம் வைக்கிறீர்?' என்றான். நான் சொல்லெழா விழிகளுடன் நோக்க 'பகடையில் வென்றால் விருஷ்ணி குலம் என்னுடன் நிற்க வேண்டும்' என்றான். அக்கணமே நான் 'நான் வென்றால் அந்த சியமந்தக மணி என்னுடையதாக வேண்டும்' என்றேன். அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க அவன் அமைச்சர் அவனை கையால் தொட்டபடி 'ஆம். அது பணயமென்றிருக்கட்டும். அரசர் ஏற்கிறார்' என்றார். நானும் 'இச்சொற்களை ஏற்கிறேன். நான் வென்றால் சியமந்தக மணி என் மார்பில் அணி செய்ய வேண்டும். தோற்றால் என் அரசும் குடிகளும் படையும் சததன்வாவின் இவ்வரசை துணை செய்யும்' என்றேன்.

பகடை தொடங்கியது. அவையீரே, அப்பகடை ஆடியது நாங்களல்ல. ஒவ்வொரு முறையும் புரண்டு புரண்டு ஊழென ஆடல் காட்டிய பகடையின் எண்களில் குடியிருந்தது வானகத்தையும் மண்ணையும் ஆளும் தொல் தெய்வங்களே. பன்னிரண்டென மீண்டும் பன்னிரண்டென புரண்டு அவை என்னை வெல்லச் செய்தன. என் நெஞ்சில் கை வைத்து கண்ணீர் மல்க உடல் நடுங்க அமர்ந்திருந்தேன். சததன்வா எழுந்து தன் கழுத்திலிருந்த சியமந்தக மணியை ஆரத்துடன் கழற்றி என் கழுத்தில் அணிவித்தான். என் நெஞ்சில் அதன் விழி திறந்தது. கால்பட்ட மண் காற்றாகி ஏழு பாதாளங்களும் திறக்க விழுந்து கொண்டிருக்கும் உணர்வை அடைந்தேன்.

அப்போது சததன்வாவின் பின்னாலிருந்த அமைச்சர் எழுந்து பின்னால் இருந்த வாயிலைத் திறந்து ஏவலர் எழுவரை உள்ளே வரச்செய்து நாங்கள் அருந்திய கலங்களை எடுத்துப்போகச் சொல்லி ஆணையிட்டார். அக்கலங்களை எடுத்துப்போக வந்தவர்களின் கைகளை தொட்டுச் சென்ற என் விழிகள் ஒரு கையில் மெல்லிய நடுக்கத்தைக் கண்டதும் திகைத்து விழிதூக்கி அவன் முகத்தை நோக்கினேன். அக்கணமே என் உட்புலன் அறிந்தது, என்னுடன் வந்த யாதவ வீரனாகிய அவன் துவாரகையின் ஒற்றன் என.

அவர்கள் வெளியே சென்றதும் நான் எழுந்து சியமந்தகத்தை கழற்றப்போனேன். 'இல்லை, அது தங்களுக்குரியது. அணிந்து கொள்ளுங்கள்' என்றார் அமைச்சர். 'இதை என்னால் அணிய முடியாது. என் உடலை இதன் எடை அழுத்துகிறது' என்று சொல்லி அதை கழற்றி குறுமேடை மேல் வைத்தேன். திரும்பி நோக்குகையில் குருதிவிடாய் கொண்ட தெய்வமொன்று குடியிருக்கும் கிருதவர்மனின் விழிகளை கண்டேன். அதை கிருதவர்மனின் நெஞ்சில் அணிவித்து அத்தெய்வத்தை மகிழ்விக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் அதற்குள் மீண்டும் அதை எடுத்து என் கழுத்தில் அணிவித்து சததன்வா சொன்னான் 'இது தங்களிடம் இருக்கட்டும். இது தங்களிடம் இருக்கும்போது நீங்கள் இளைய யாதவரின் படைத்தலைவரல்ல. இதை அணிந்தபோதே என்னவர் ஆகிவிட்டீர்.'

அச்சொற்களைக் கேட்டதுமே என்ன நிகழ்ந்ததென்று அறிந்து கொண்டேன். ஒற்றன் அப்போதே கிளம்பியிருப்பான். இனி ஒரு போதும் இளைய யாதவரின் அணுக்கனாக நான் இருக்க முடியாது. உடல் தளர்ந்து விழிநீர் சோர என் இருக்கையில் மீண்டும் விழுந்தேன். 'வென்றவர் இப்படி கலங்குவதை இப்போதுதான் பார்க்கிறேன்' என்றான் சததன்வா. 'இல்லை, இந்த மணி மானுடக்குருதி கொண்டது. நூறு விழவுக் களங்களில் என் தோள்கோத்த இளையோன் சத்ராஜித்தின் தலை கொய்த மணி இது. இதை எங்ஙனம் என் தோளில் அணிந்தேன்? எக்கணம் அவ்வெண்ணம் எனக்குத் தோன்றியது?' என்றபின் குனிந்து அருகிலிருந்த என் வாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சிக் கொள்ளச்சென்றேன். அதை கருதியிருந்தவர் போல் அமைச்சர் என் கைகளை பற்றிக் கொண்டார்.

சததன்வா பாய்ந்து அந்த வாளை எடுத்து வீசினான். 'என்ன இது மூத்தவரே? என் அவையில் தாங்கள் இப்படி நடந்து கொண்டால் அப்பழியை நான் எப்படி சுமப்பேன்? நன்று... இந்த மணியை நீங்கள் துறக்கிறீர்கள் என்றால் அவ்வண்ணமே ஆகுக! என்னிடம் இருக்கட்டும். தங்களுக்காக கிருதவர்மரிடம் இதை அளிக்கிறேன். தாங்கள் திரும்பிச் செல்லலாம்' என்றான்.

நான் எழுந்து ஒரு சொல் சொல்லாமல் திரும்பி அந்த அவையிலிருந்து ஓடி படியிறங்கி என் அறைக்கு வந்தேன். சாளரங்களையும் கதவுகளையும் மூடிவிட்டு என் இருக்கையில் இருளில் அமர்ந்து தலையை கைகளில் புதைத்துக் கொண்டேன். என் அகம் நிறைந்திருந்த அனைத்தும் உடைந்து நொறுங்கி சரிவது போல அழத்தொடங்கினேன். நள்ளிரவுவரை அங்கிருந்து அழுது கொண்டிருந்தேன். உடனே கிளம்பிச் சென்று இளைய யாதவரின் காலடியில் விழுந்து என் சிறுமை பொறுக்க வேண்டும் என்று சொல்லி மன்றாட்டு வைக்கவேண்டுமென்று விழைந்தேன். எழுந்து வெளிவந்து இடைநாழியில் நடந்து படிகளில் இறங்கும்போது அங்கு சததன்வாவின் காவலரை கண்டேன். அவ்விரவில் என்னால் என் படைகளை திரட்டிக்கொண்டு மீளச்செல்ல முடியாதென்றுணர்ந்தேன்.

எனது படைகளின் தலைவன் கிருதவர்மன். அவன் ஆணையின்றி கலங்கள் எழுவதும் நிகழ்வதல்ல. என்ன செய்வதென்றறியாமல் இரவில் குறடுகள் ஒலிக்கும் ஒலி அச்சுறுத்தும் பேயென பின்னால் தொடர இடைநாழியில் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தேன். புலரும்போது கிருதவர்மனை சந்தித்து உடனடியாக நமது படைகளுடன் திரும்பி மதுராவுக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். கிருதவர்மனின் அறைக்குச் செல்லும் வழியிலும் சததன்வாவின் படைகள் காவலிருக்கக் கண்டேன். சிறை வைக்கப்பட்டிருக்கிறேனா என்று எண்ணினேன். கிருதவர்மனின் படைகளின் உதவியின்றி இருக்கையில் சிறை வைக்கப்பட்டவனேதான் நான் என்றுணர்ந்தேன். மீண்டும் என் அறைக்குச் சென்று இருளில் அமர்ந்து சாளரம் வழியாகத் தெரிந்த கங்கைப் பெருக்கின் இருண்ட பளபளப்பை நோக்கிக் கொண்டிருந்தேன். அதன் மேல் ஒளிவிரிவது வரை அங்கிருந்தேன்.

கரைப்பறவைகள் நீர்ப்பரப்பில் எழுந்து சுழல்வதை பார்த்தபடி விடியலை எதிர்கொண்டேன். விடிந்ததும் என்னை எழுப்ப வந்த ஏவலனிடம் 'நான் நீராட வேண்டும்' என்றேன். நீராட்டறைக்கு அவன் என்னை இட்டுச் சென்றான். நீராடிக்கொண்டிருக்கையில் 'கிருதவர்மரை இங்கு வரச்சொல்க!' என்று ஆணையிட்டேன். 'ஆணை' என்று சொல்லி அவன் சென்று சற்றுக் கழித்து மீண்டு வந்து 'கிருதவர்மர் அரசருடன் சொல்லாடிக் கொண்டிருக்கிறார்' என்றான். கிருதவர்மன் சியமந்தகத்தை அணிந்திருக்கிறானா என்று கேட்க நாவசைந்தது என்றாலும் கேட்கவில்லை. நான் செய்வதற்கொன்றுமில்லை என்று உணர்ந்துகொண்டவனாக ஆடைகளை அணிந்துகொண்டேன். கச்சையில் படை வாளையும் துவாரகையின் இலச்சினையையும் சூடிக் கொண்டேன்.

கிருதவர்மனை சந்திக்காமல் அங்கிருந்து செல்வதெப்படி என்று என் சிந்தையை ஓட்டினேன். படைகள் என் உதவிக்கு வருவது இயல்வதல்ல. சததன்வாவின் காவலர்களைக் கடந்து நான் செல்வதும் அரிது. சாளரம் வழியாக மரக்கிளையில் தொற்றி இறங்கி கங்கைக்குச் சென்று குதித்து நீந்தி உள்பெருக்கில் நின்றிருக்கும் திருஷ்டத்யும்னரின் படகுகளை நோக்கி நான் செல்ல முடியும். ஆனால் அப்போதுதான் என் தோள்களிலும் கால்களிலும் முதுமையை உணர்ந்தேன். பலநூறு முறை பல நூறு வழிகளில் அந்த மாளிகையிலிருந்து தப்பி கங்கையில் நீந்தி திருஷ்டத்யும்னரை அடைந்து நடந்ததென்ன என்று சொன்னேன். பலநூறுமுறை எனையாளும் இளைய யாதவரின் கால்களில் தலை வைத்து கண்ணீர் உகுத்து என் பிழை பொறுக்கக்கோரி மன்றாடினேன். ஆனால் ஒன்றும் நிகழாமல் அவ்வறைக்குள்ளேயே அமர்ந்திருந்தேன்.

வெளியே வெயில் ஒளி கொண்டது. காலைப் பறவைகளின் குரல்கள் அணைந்தன. மாளிகை முகப்பில் தேர்களும் வண்டிகளும் எழுப்பிய சகட ஒலிகளும் குதிரைகளின் கனைப்பு ஒலிகளும் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தன. நாழிகை மாறுவதற்கேற்ப மாளிகையின் கண்டாமணி ஒலித்தது. முற்பகல் தொடங்கும்போது என்னைத் தேடி மூன்று வீரர்கள் வந்தனர். அவர்கள் கையில் சிறிய தந்தப் பேழை ஒன்றிருந்தது. முதியவீரன் என்னிடம் 'விருஷ்ணி குலத்தலைவரே, இந்தப் பேழையை அரசர் தங்களிடம் அளிக்கச் சொன்னார்' என்றான். 'ஏன்?' என்று கேட்டபடி எழுந்தேன். 'அரசர் இவ்வூரைவிட்டு நீங்கிவிட்டார்' என்றான். நான் அந்தப் பேழையை வாங்கி திறந்தேன். உள்ளிருந்து புன்னகைக்கும் நீல நச்சு விழியை கண்டேன். அவையோரே, அப்போது என்னுள் எழுந்தது உவகைதான். ஏனென்றால் அந்த இரவெல்லாம் நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அதை முற்றிழந்துவிட்டேன் என்று எண்ணி ஏங்கினேன். அது இல்லாமல் என் வாழ்க்கை குறைவுபட்டுவிட்டது என உளம்தவித்தேன்.

ஆழத்திலிருந்து எழுந்த ஐயத்துடன் 'அரசர் எங்கே சென்றார்?' என்றேன். 'அவர் இப்போது காடுகளுக்குள் புகுந்திருப்பார். இதை தாங்கள் வைத்திருக்கவேண்டுமென்றும் இது தங்களுக்குரியது என்றும் ஆணையிட்டார்' என்று முதியவீரன் சொன்னான். 'ஏன் அவர் ஊர் நீங்குகிறார்?' என்று கேட்டேன். 'இளைய யாதவரின் படகுப் படை கங்கையில் எழுந்து நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு நாழிகைக்குள் அவர்கள் கரையிறங்குவார்கள். நமது படகுகள் அவர்களை எதிர்கொள்ள முடியாது என்கிறார்கள்' என்றான் முதிய வீரன். பதறி எழுந்து உரக்க 'கிருதவர்மர் எங்கே?' என்று கேட்டேன். 'அவரும் இங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார், தாங்களும் தப்பிச் செல்வதே முறையானது' என்று அந்த முதியவீரன் சொன்னான்.

நான் என்ன செய்வதென்றறியாமல் அவ்வறைக்குள் சுற்றி வந்தேன். எதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. எங்கு செல்வதென்று எண்ணியதுமே காசிதான் என் நினைவுக்கு வந்தது. என் அன்னையின் நகர் அது. காசி மன்னனின் அத்தை மகன் என்பதால் என்னை அந்நகர் ஒரு போதும் புறந்தள்ளாது. அங்கு செல்வது வரை செலவிடுவதற்கான பொன் என்னிடமிருக்கிறதா என்று என் கச்சைக் கிழியை எடுத்துப் பார்த்தேன். நிறைவுற்றவனாக அதை எடுத்து என் இடையில் கட்டிக் கொண்டேன். விரைந்து அறையைவிட்டு வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து அப்பேழையை பார்த்தேன். அதை என்னுடன் எடுத்துச் சென்று காசி மன்னருக்கு அளித்தால் என்னை அவர் ஏற்றுக் கொள்வார் என்று தோன்றியது.

அடைக்கலம் கோரிச்செல்வதை எண்ணியதுமே ஒருகணம் உயிரை மாய்த்துக் கொள்வதைப் பற்றி எண்ணினேன். அங்கே அந்த மணியுடன் நின்று படைகொண்டுவரும் இளைய யாதவரை எதிர்கொள்வதைப் பற்றியும் எண்ணினேன். ஒவ்வொன்றும் என் மீது பழியையே சுமத்தும் என்று தோன்றியது. நான் அந்த மணியைச்சூடி அமர்ந்திருப்பதை ஒற்றன் வாயிலிருந்து அறிந்துதான் இளைய யாதவர் படைகொண்டு வருகிறார். அந்த மணியுடன் அங்கு நிற்பதென்பது அதற்கு மீண்டும் சான்றுரைப்பது. அந்த அறையில் சியமந்தக மணி இருக்க உயிரை மாய்த்துக் கொள்வதென்பது மேலும் வலுவான சான்று. இயல்வது ஒன்றே, உயிரோடிருப்பது. விருஷ்ணி குலத்து மன்றில் என்றேனும் ஒருநாள் எழுந்து என்ன நிகழ்ந்ததென்று உரைப்போம். அதன்பின் உயிரை மாய்த்துக் கொண்டு அச்சொற்களுக்கு வலுவூட்டுவோம் என எண்ணினேன். ஆகவே காசிக்கு நான் சென்றேன்.

ஆனால் சியமந்தகத்தை பிறிதொருவன் கையில் அளிக்க என் மனம் துணியவில்லை. காசி மன்னரிடம் என் குருதியை எண்ணி அடைக்கலம் தரும்படி மட்டுமே கோரினேன். அவர் ஒப்புக்கொண்டதும் அந்நகரில் சிறிய துறைமுகங்களிலொன்றில் வணிகருடன் சென்று தங்கிக் கொண்டேன். இளைய யாதவரின் படைகள் காசிக்குள் புகுந்ததும் காசி அவரை வரவேற்று நிகர் அரியணை அமர்த்தி முறைமை செய்ததும் என்னை அச்சுறுத்தியது. சியமந்தகத்துடன் வணிகப்படகிலேறி உஜ்ஜயினி வந்தேன். அங்கிருந்து மாறுவேடத்தில் துவாரகையை அடைந்தேன். விருஷ்ணி குலத்துப் பேரவை வேறெங்கும் இல்லை என்று தோன்றியது. இங்கு இளைய யாதவர்முன் நுண்வடிவில் அமர்ந்திருக்கும் விருஷ்ணிகுலத்து மூதாதையரிடம் என் சொற்களை முன் வைக்க வேண்டும் என இங்கு வந்தேன். இதோ முன் வைத்துவிட்டேன்.

"என்னுடன் சியமந்தகத்தை கொண்டுவந்தேன். அதை இங்கு இளைய யாதவரின் அவை முன் வைக்கிறேன். மானுடரின் விழைவுகள் மேலேறி குருதியும் கண்ணீரும் கொண்டு அனல் வழியாகவும் புனல்வழியாகவும் பயணம் செய்து எங்கு வரவேண்டுமோ அங்கு அது வந்துள்ளது என இப்போது அறிகிறேன்" என்று சொன்ன அக்ரூரர் தன் இடையிலிருந்த சிறிய தந்தப்பேழையை எடுத்துத் திறந்து அரசமேடையில் இளைய யாதவரின் முன் கொண்டு சென்று வைத்தார். அவையோர் அனைவரும் அறியாமலேயே பீடத்திலிருந்து எழுந்து தலைநீட்டி அதை நோக்கினர். மலர்மேல் நீர்த்துளிபோல அது செந்நிறப்பட்டின்மீது அமர்ந்திருந்தது. முதலில் ஒளியற்றதாகத் தெரிந்தது, மெல்ல அதன் ஒளி பெருகி சிறிய நீலச்சுடர் போல எரியத்தொடங்கியது.

"அவை முன் நான் சொன்ன இச்சொற்கள் ஒவ்வொன்றும் உண்மையென்று இதோ என் குருதியால் நிறுவுகிறேன்" என்றபடி அக்ரூரர் தன் வெண்ணிற ஆடைக்குள்ளிருந்து குறுங்கத்தியொன்றை எடுத்து தன் கழுத்தை வெட்டப் போனார். அக்கணத்திற்கு ஒரு கணம் முன்னரே கிளம்பிய இளைய யாதவரின் படையாழி அதைத் தட்டி தெறிக்க வைத்து சுழன்று மேலேறி சிட்டுக் குருவி சிறகடிக்கும் ஓசையுடன் சென்று அவர் கையில் அமர்ந்தது. பலராமர் பாய்ந்தெழுந்து அக்ரூரரைத் தூக்கி பின்னால் கொண்டு வந்து சுவரோடு சாய்த்து பற்றிக் கொண்டார். பதைத்தெழுந்த யாதவர் அவை கை நீட்டி கூச்சலிட்டது.

"அக்ரூரரே, எந்நிலையிலும் தாங்களே விருஷ்ணிகுலத்தலைவர்" என்றார் விருஷ்ணி குலத்து சசிதரர். "ஆம், ஆம்" என்று குரலெழுப்பியது அவை. சத்யபாமை எழுந்து "இவ்வவையில் யாதவப் பேரரசியென நின்று நான் ஆணையிடுகிறேன். அக்ரூரரை இவ்வரசு முழு உள்ளத்துடன் ஏற்கிறது. அவர் பிழையற்றவரென்று நான் சான்றுரைக்கிறேன்" என்றாள். பலராமர் தன் பிடியைவிட்டு பின்னால் நகர்ந்து "மூத்தவரே, திருமகளின் சான்றுக்கு அப்பால் தாங்கள் விழைவதென்ன?" என்றார். இரு கைகளாலும் முகம் பொத்தி உடல் குலுங்க அழுதபடி சுவரில் வழுக்கி இறங்கி முழங்கால் மேல் அமர்ந்து அக்ரூரர் குலுங்கி அழுதார். அவை அவரை நோக்கி நின்றது.

பலராமர் திரும்பி "இளையோனே, இதற்கு மேலும் உனது ஆணையென்ன?" என்றார். இளைய யாதவர் எழுந்து "மூத்தவரே. அக்ரூரரை எப்படி அரசி புரிந்து கொண்டாரோ அப்படி கிருதவர்மரை நானும் புரிந்து கொள்கிறேன். அவரை நான் பொறுத்து ஏற்கிறேன். அவர் விழைந்தால் இந்த அவையில் முன்பிருந்தது போலவே நீடிக்கலாம்" என்றார். பலராமர் உரக்க "என்ன சொல்கிறாய்?" என்றார். "அந்தகக் குலம் அவரை ஏற்குமென்றால் எனக்கு மறுப்பில்லை" என்றார் இளைய யாதவர். அந்தகர்கள் "ஏற்கிறோம்... கிருதவர்மரை நாங்கள் முழுதுள்ளத்துடன் ஏற்கிறோம்" என்று கூவினர்.

கிருதவர்மன் எழுந்து தன் தலைக்குமேல் இரு கைகளை கூப்பி கண்கள் வழிய "நான் நிறைவுற்றேன் அரசே! இச்சொற்களுக்காக என்றும் கடன்பட்டிருக்கிறேன். ஆனால் ஐயமற்ற குரலில் இனி துவாரகையின் படைகளுக்கு ஆணையிட என்னால் இயலாது. என் சிறுநகருக்குத் திரும்ப ஒப்புதல் அளியுங்கள்" என்றான். படியிறங்கி அவனை அணுகி தோளில் கை வைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு "தங்கள் விருப்பப்படி ஆகட்டும் கிருதவர்மரே. தாங்கள் விடைகொண்டு செல்கையில் துவாரகையின் அரச முறைப்படி வழியனுப்பி வைப்போம்" என்றார் இளைய யாதவர்.

தன் இருக்கையில் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு இறுகிய உடலும் உணர்வுகள் தெரியாத முகமுமாக திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். அவையின் அமைதியை உணர்ந்து திரும்பி நோக்கியபோது அத்தனை விழிகளிலும் சியமந்தகம் தெரிவதுபோல உளமயக்கு ஏற்பட்டது.

பகுதி எட்டு : காந்தளும் குருதியும் - 5

திருஷ்டத்யும்னன் ஆடையணிந்து கிளம்பும்போது அறைக்கு வெளியே சாத்யகியின் குரலை கேட்டான். அக்குரலே தன் உள்ளத்தை மலரவைப்பதை எண்ணி புன்னகைத்தபடி கதவை நோக்கினான். வாயிற்காவலன் உள்ளே வருவதற்குள் சாத்யகி உள்ளே நுழைந்தபடி "பாஞ்சாலரே, தங்களை விதர்ப்பப் பேரரசி காண விழைகிறார். தூதனுடன் தேர் வந்துள்ளது" என்றான். "யார்?" என்று திருஷ்டத்யும்னன் கேட்ட பின்னரே அச்சொற்களை உணர்ந்துகொண்டு "ருக்மிணி தேவியா? என்னையா?" என்றான். "ஆம், அவர்கள் அஸ்தினபுரியிலிருந்து திரும்பியதுமே தங்களை சந்திக்க விழைந்திருக்கிறார்கள். தாங்கள் படைநிகழ்வில் இருந்தமையால் சந்திக்க முடியவில்லை. இன்று மீண்டும் அமைச்சரிடம் ஆணையிட்டிருக்கிறார்கள்" என்றான் சாத்யகி.

அவன் தோளில் தேன்மெழுகு பூசிய துணியால் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. வலக்கையால் இடக்கையை பற்றித்தூக்கி சிறு குழந்தையை வைப்பது போல குறுபீடத்தில் வைத்தபின் மஞ்சத்தில் அமர்ந்து "ஆகவே இன்று நாம் செல்லவிருந்த நடன நிகழ்வுக்கு வாய்ப்பில்லை" என்றான். "என் பிழைதான். இளைய அரசியை நான் உடனே சென்று பார்த்திருக்க வேண்டும். அதுவே முறைமை. நான் இங்கு பாஞ்சாலத்தின் அரசமுறைத் தூதனாகவே வந்துள்ளேன். ஆனால் துவாரகையின் குடிமகனாக என் உள்ளம் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது" என்றான்.

சாத்யகி கண்களில் சிரிப்புடன் "முறைமை செய்வது தேவையே. ஆனால் தாங்கள் சொன்ன ஒரு சொல் பிழையானது" என்றான். திருஷ்டத்யும்னன் "என்ன?" என்றான். "இங்கு மூத்த அரசி யாரென்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. சென்ற நான்காண்டுகளாக ஒவ்வொரு நாளும் அதற்குரிய பூசலே அரண்மனையில் நிகழ்ந்து வருகிறது" என்றான் சாத்யகி. "உம் சொற்கள் புரியவில்லை" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நகைத்தபடி "இளைய யாதவர் முதலில் மணம் கொண்டது விதர்ப்ப மன்னனின் மகள் ருக்மிணி தேவியைத்தான். ஆனால் வயதிலும் குல உரிமையிலும் மூத்தவர் ஹரிணபதத்தின் சத்யபாமா. யாதவர்கள் சத்யபாமாவை தங்கள் பேரரசியாக எண்ணுகிறார்கள். துவாரகைக்கு வெளியே அத்தனை ஷத்ரியர்களும் ஷத்ரிய குல மகளாகிய ருக்மிணியையே துவாரகையின் பட்டத்தரசி என கொள்கிறார்கள்" என்றான்.

திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து "இது என்ன விளையாட்டு?" என்றான். "இளைய யாதவர் மிக விரும்பி இந்த விளையாட்டை நிகழ்த்துகிறார் என்று தோன்றுகிறது. இங்கே அனைத்து குலமன்றுகளிலும் சத்யபாமா துவாரகையின் மணிமுடி சூடி அமர்ந்திருக்கிறார். இங்கிருந்து கிளம்பி எந்த நாட்டுக்குச் சென்றாலும் ருக்மிணி தேவி மணிமுடியை அணிந்திருக்கிறார். என்ன நுண்நகை என்றால் யாதவ அரசிக்கு ருக்மிணிதேவி அவ்வாறு பட்டத்தரசியாக அமர்வது தெரியாது. யாதவ குலமன்றில் அமர்வதே பட்டத்தரசியின் அடையாளம் என்று ருக்மிணிதேவிக்கும் தெரியாது" என்றான் சாத்யகி.

"இதுநாள்வரை எந்த அரசனுக்கும் இரண்டு பட்டத்தரசிகள் இருந்ததில்லை" என்றான் திருஷ்டத்யுமன். சாத்யகி "எஞ்சிய அறுவரும் என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியாது" என்றான். திருஷ்டத்யும்னன் "குலமன்றில் அமராமல் எப்படி பட்டத்தரசியாக முடியும்?" என்றான். சாத்யகி "இதை மறந்தும் விதர்ப்ப அரசியிடம் சொல்லிவிட வேண்டாம். அரண்மனைத்தூண்கள் அனலில் உருகத்தொடங்கும்" என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து "என் நாவை என்னால் நம்ப முடியாது. அது என்ன உரைக்கிறது என்பதை என் குலத்து மூதன்னையரே முடிவெடுக்கிறார்கள்" என்றான். "இன்று விதர்ப்ப அரசி உம்மை அழைப்பதே துவாரகையின் பட்டத்தரசி யாரென்று நிகழும் சமரில் தன் தரப்பில் ஒரு வலுவான வாளேந்திய குரல் எழுவதற்காகவே" என்றான் சாத்யகி.

"அதில் நான் என்ன செய்ய இயலும்?" என்று திருஷ்டத்யுமன் கேட்க "சென்று பாரும்! பல அவைகளில் நீர் அரசு சூழ்ந்திருப்பீர். இந்த அவையில் உமது சொற்கள் பத்துமுகம் கொண்ட பகடையில் சென்று அமைகின்றன என்பதை அறிவீர்" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "பார்க்கிறேன், அதன் பின் என்னால் என் தமக்கையை வெல்லமுடியுமென படுகிறது" என்று சொல்லி சிரித்தபின் "உமது புண் ஆற இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?" என்றான். சாத்யகி கையை நோக்கியபின் "இன்றும் மருத்துவர் கட்டவிழ்த்து மறு கட்டு போட்டார். தசைநார்கள் கூடிக்கொண்டிருக்கின்றன. மூன்று வாரத்தில் இந்தக் கைகளில் வாளேந்த முடியும் என்றார்" என்றான்.

கையை மெல்ல தூக்கி வலியுடன் முகம் சுளித்து "இந்நாட்களில் இதுவரை நான் அறியாதவற்றை அறிந்து கொண்டிருக்கிறேன் பாஞ்சாலரே. என் உடலில் தொங்கிக்கிடக்கும் இந்த இடக்கரம் என்னுடன் பிறந்து என் குருதியைக் கொண்டு வளர்ந்தது. நான் விழைந்ததை ஆற்றியது. இன்று என் எண்ணச் சொற்கள் அதை எட்டவில்லை. பிறிது ஒன்று என இதை நான் பேணுகிறேன். உடலில் இருந்து அறுபட்டு விலகும் கை என்பது என்ன என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு மானுடக்கை கொள்ளும் பொருளென்ன? அது ஆற்றுவதற்கு இவ்வுலகில் ஏதுமில்லை. கையறுந்தவன் இவ்வுலகிலிருந்து விடுபட்டு உதிர்ந்து வேறெங்கோ சென்று விழுந்து விட்டவன் அல்லவா?" என்று சாத்யகி சொன்னான்.

திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து "நன்று! போர்க்களம் கண்டுவிட்டீர், விழுப்புண் பட்டுவிட்டீர். நோய்ப்படுக்கையில் தத்துவங்களையும் எண்ணத்தலைப்பட்டீர். எனவே முழு வீரராகி விட்டீர்" என்றான். சாத்யகியும் சிரித்தபடி "ஆம். இவை வெறும் வீண் எண்ண ஓட்டங்கள் என்று அறிகிறேன். ஆனால் ஒரு வீரனின் தலையை வெட்டுவதைவிட கொடிது கையை வெட்டுவது என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இன்றில்லை. சித்தத்தால் அல்ல, விழிகளாலும் சொற்களாலும் அல்ல, கைகளாலேயே மானுடன் ஆக்கப்பட்டிருக்கிறான். ஆற்றுவதும் பற்றுவதும் அணைப்பதும் அகற்றுவதுமாக அவனுக்கென அனைத்தையும் நிகழ்த்துவது கைகளே" என்றான்.

"அரிய சொற்கள்! இதை ஒரு சூதன் சிறந்த பாடலாக அமைக்கலாம்" என்ற திருஷ்டத்யும்னன் "நான் கிளம்புகிறேன், இளைய அரசியை சந்திப்பதென்றால் நான் முறையான அரச உடையணிந்து முழுதணிக்கோலம் கொள்ள வேண்டும்" என்றான். "மீண்டும் பிழை செய்கிறீர். இளைய அரசி அல்ல, பட்டத்தரசி" என்றான் சாத்யகி. "அது விதர்ப்ப அரசியின் அரண்மனைப் பெருவாயிலை கடந்தபின்பு அல்லவா?" என்றபடி திருஷ்டத்யும்னன் தன் ஏவலனை கைகாட்டி அழைத்தான். திறந்த வாயிலுக்கு அப்பால் நின்றிருந்த அவன் அருகே வந்து தலை வணங்க "நான் முழுதணிக்கோலத்தில் கிளம்பவிருக்கிறேன்" என்றான்.

சாத்யகி எழுந்து "தாங்கள் அணிகொள்ளுங்கள் இளவரசே, நான் நோக்கியிருக்கிறேன்" என்றான். திருஷ்டத்யும்னன் "அணிகளினூடாக நான் அரசனாகிறேன். இளவயதில் அணிக்கோலம் கொண்ட என்னை ஆடியில் பார்க்கையில் அங்கு பிறிதொருவனை பார்ப்பேன். நானே அஞ்சும் ஒருவன். பின்னர் அவனிலிருந்து என்னை நோக்கவும் கற்றுக் கொண்டேன்" என்றபடி அணியறைக்குச் சென்றான். அங்கிருந்த இரு சமையர்களும் அவனை வணங்கி குறுபீடத்தை பேராடியின் முன் போட்டனர்.  தன் ஆடிப்பாவையை நோக்கியபடி அவன் அமர்ந்ததும் அவனுடைய தூக்கிக் கட்டியிருந்த கொண்டையை அவிழ்த்து கொம்பாலான கொண்டை ஊசிகளை உருவி எடுத்தனர். குழலை காகபட்சமாக ஆக்கி அவன் தோளில் புரளவிட்டனர்.

அவன் நெற்றியிலும் கழுத்திலும் இருந்த வியர்வையை கடற்பஞ்சால் துடைத்தபின் நறுஞ்சுண்ணத்தால் துடைக்கத் தொடங்கினான் ஒருவன். இன்னொருவன் அணிப்பேழையைத் திறந்து நவமணிகள் பதிக்கப்பட்ட தோள்வளைகளையும் பதக்க மாலைகளையும் குண்டலங்களையும் கைவளைகளையும் வெளியே எடுத்து அணிமேடைமேல் பரப்பி வைத்தான். சாத்யகி எடை ஒலிக்கும் காலடிகளுடன் நடந்து அருகே வந்து சாளர பீடத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். "நீர் வருகையில் உமது காலடி ஓசை மாறி ஒலிக்கிறது. தோள்பட்ட புண் உமது உடலின் நிகர் நிலையை மாற்றிவிட்டது" என்றான் திருஷ்டத்யும்னன். "உள்ளத்தையும்தான்" என்றான் சாத்யகி. "இன்னொரு போருக்கு எழுவேனென்றால் அப்போதிருப்பது பிறிதொரு வீரன். இனி போர் எனக்கு கிளர்ச்சியளிக்காது. அச்சமும் எழாது. வெற்றியில் நான் களிப்பேனென்றுகூட தோன்றவில்லை. உண்பது போல் உறங்குவது போல் ஓர் எளிய செயலாக அது மாறிவிட்டிருக்கிறது" என்றான்.

திருஷ்டத்யும்னன் "முதல் போருக்குப் பின் எஞ்சியிருப்பது வஞ்சமும் சினமும் மட்டுமே" என்றான். சாத்யகி சில கணங்கள் கழித்து "கிருதவர்மர் தன் ஊருக்குச் செல்லவில்லை என்று ஒற்றர்கள் சொல்கிறார்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் ஆடியை நோக்கியபடி "ஆம், அதை நான் முன்பே உணர்ந்திருந்தேன்" என்றான். "அவனால் இனி தன் குலத்து மன்று முன் நிற்கமுடியாது" என்றான். சாத்யகி "அவர் எங்கு மறைந்தாரென்று ஒற்றர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் "அவன் என்னுடைய முதற்பெரும் எதிரி எவனோ அவனிடம் சென்றிருப்பான்" என்றான். குழப்பத்துடன் "மகதத்திற்கா?" என்றான் சாத்யகி.

"மகதமோ காசியோ கலிங்கமோ வங்கமோ எதுவென்று இப்போது சொல்ல முடியாது. ஆனால் இப்பிறவி முழுக்க தன்னுள் நின்றெரியும் பெரு வஞ்சமொன்றுடன் இங்கிருந்து சென்றிருக்கிறான்" என்ற திருஷ்டத்யும்னன் "அவன் எங்குசென்றிருப்பான் என்று பலநாள் எண்ணிநோக்கினேன். இளைய யாதவருக்கு எதிராக அவன் செல்ல மாட்டான். ஆகவே அது மகதம் அல்ல. மகதத்தின் துணையரசான காசியும் அல்ல. எனக்கு மட்டுமே எதிரியான நாடு. அப்படியென்றால்..." என்றபின் ஆடியிலேயே சாத்யகியின் விழிகளை நோக்கி "அவன் அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலம் நோக்கி சென்றிருப்பான்" என்றான்.

சாத்யகி "ஏன்?" என்றான். "என்னுடைய இயல்பான எதிரி என்றால் அது அஸ்வத்தாமனே. என் நாட்டில் பாதியை கொண்டிருப்பவன். கிருதவர்மன் அஸ்வத்தாமனின் இயல்பான அணுக்கன் ஆகவே வாய்ப்பு." சிலகணங்கள் நோக்கியபின் "ஆம், அவ்வண்ணமே தெரிகிறது" என்ற சாத்யகி "அவர் மேல் இரக்கமே எழுகிறது. இனி மண்ணில் அவருக்கு இன்பமென ஏதுமில்லை" என்றான். திருஷ்டத்யும்னன். "யாதவரே, நீர் கள்ளமற்ற உள்ளம் கொண்ட மலை ஆயர். வஞ்சத்தாலும் பழியாலும்தான் ஷத்ரிய மாவீர்ர்கள் உருவாகிறார்கள்" என்றான்.

சாத்யகி "அவ்வண்ணம் ஒரு வஞ்சம் தங்களுக்குள் உள்ளதா?" என்றான். திருஷ்டத்யும்னன் "ஆம்" என்றான். சாத்யகி எழுந்து "எவர் மேல்?" என்றான். திருஷ்டத்யும்னன் ஆடியை நோக்கி புன்னகை புரிந்து "இப்புவியில் எவர்முன் முழுஆணவத்தையும் வைத்து தாள் பணிவேனோ அவர் மேல். எனக்கு படைக்கலம் எடுத்துத் தந்து பயிற்றுவித்த ஆசிரியர் மேல்" என்றான். அக்கணமே அனைத்தையும் புரிந்துகொண்ட சாத்யகி சற்றே தடுமாறி மீண்டும் சாளரபீடத்தில் சென்றமர்ந்து "பாஞ்சாலரே, உண்மையாகவா?" என்றான்.

திருஷ்டத்யும்னன் "நெடுநாள் வஞ்சம் அது. கங்கைப்பெருக்கில் கூழாங்கல் போல உருண்டுருண்டு மென்மையாகி விட்டிருக்கிறது" என்றான். "இன்று இனியதோர் தலையணையை அருகே வைத்தபடி துயில்வது போல அதனுடன் என்னால் துயில முடிகிறது. கூர்வாள் ஒன்று சித்திரச்செதுக்கு உறைக்குள் என உள்ளத்தில் அது காத்திருக்கிறது." விழிசுருங்க கசப்புடன் சிரித்தபடி "ஆகவே என்னால் கிருதவர்மனை புரிந்துகொள்ள முடிகிறது. என் தந்தைக்கு அர்ஜுனன் செய்ததையே நான் கிருதவர்மனுக்குச் செய்தேன். அதை அன்று அவை முடிந்து தனியனாக என் அறை நோக்கிச் செல்லும்போது உணர்ந்தேன். எடைமிக்க கதாயுதம் ஒன்று என் பிடரியில் அறைந்தது போல அந்த உண்மை எனக்குப்புலப்பட்டது. அதன் பின் என்னால் மதுவின்றி துயில்கொள்ளமுடியவில்லை" என்றான்.

"பாஞ்சாலரே" என்று சாத்யகி அழைத்து மேலே சொல்லில்லாமல் கையை அசைத்தான். "பின்னர் எண்ணினேன், மாபெரும் எதிரியைப்பெற்றவனே மாவீரனாக முடியும் என்று. எனக்கு கிருதவர்மனே எதிரி. ஒருநாள் அவன் என்னை பழிதீர்ப்பான், ஐயமே இல்லை. அதற்கென்றே அவன் வாழ்வான். அப்படி ஒரு எதிரி எனக்காக கூர்கொண்டு நின்றிருக்கையில் எனக்கு கணம்கூட ஓய்வில்லை. இனி என் வாழ்க்கையை பொருள்கொள்ளச் செய்வதே அவன் கொண்ட அப்பகைதான்."

சமையர் அவனுக்கு அணிகளை ஒவ்வொன்றாக பூட்டினர். ஆடியில் வைரங்கள் ஒளிரும் உடலுடன் பிறிதொருவன் எழுவதை திருஷ்டத்யும்னன் நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அப்பீடத்தில் அசையாமல் அமர்ந்திருக்க ஆடிக்குள்ளிருந்து எழுந்த ஆணவம் மிக்க இளவரசன் சாத்யகியிடம் "யாதவரே, இளைய அரசியைக் கண்டு உறவை அறிவித்து மீள்கிறேன்" என்றான்.

உடைவாளை கச்சையில் அணிந்து குறடுகளையும் இறுக்கியபின் திருஷ்டத்யும்னன் மரப்படிகளில் எடைமிக்க காலடிகள் ஒலிக்க இறங்கி இடைநாழிக்கு வந்தான். அவனுக்காக காத்திருந்த அணித்தேர் அரசகுலத்தவருக்குரிய செந்நிற பட்டுத்திரைச்சீலைகள் கொண்டிருந்தது. முகப்பில் விதர்ப்ப நாட்டின் இரட்டைப்பசுங்கிளிகள் கொண்ட அரசக்குறி பொன்னில் செய்து பொருத்தப்பட்டிருந்தது. தேர்ப்பாகன் அவனை அணுகி வந்து வணங்கி "அரசி அனுப்பிய தேர் இது இளவரசே. தங்களுக்காக அவர் அணிக்காட்டில் காத்திருக்கிறார்" என்றான்.

திருஷ்டத்யும்னன் ஏறி அமர்ந்துகொண்டு கைகாட்ட பாகன் முன்னால் அமர்ந்து நுகத்தில் திமிறி கால்தூக்கி நின்ற மூன்று வெண்புரவிகளை சவுக்கு நுனியால் மெல்ல தொட்டான். கற்பாளங்கள் மேல் இரும்பு வளையங்கள் ஒலி எழுப்ப தேர் முன்னகர்ந்து சென்றது. திருஷ்டத்யும்னன் சாய்ந்தமர்ந்து ருக்மிணியை சந்திப்பதைப்பற்றி எண்ணினான். சொல்லவேண்டிய முறைமைச்சொற்களை தன்னுள் வகுத்துக்கொண்டான். அவளுக்காக எந்தப் பரிசிலும் தன்னிடம் எஞ்சியிருக்கவில்லை என்று நினைவுக்கு வந்ததும் தன்னையே கடிந்தான்.

விதர்ப்ப அரசியின் மாளிகையும் துவாரகை அரசியின் மாளிகையும் அரசமாளிகைக்கு இருபக்கங்களிலாக அமைந்திருந்தன. கடலை நோக்கி திறக்கும் நூறு சாளரங்கள் கொண்டதாக கட்டப்பட்டிருந்த ஏழடுக்கு மாளிகையில் அடித்தளம் முதல் மேல்தளம் வரை சென்ற சுதையாலான பன்னிரு பெருந்தூண்கள் இடைநாழியில் தங்கள் நிழலை வரிவரியாக சரித்து நின்றிருந்தன. தூண்களின் அடித்தட்டில் கவிழ்ந்த தாமரை வேதிகையும் மேலே நிமிர்ந்த தாமரை போதிகையும் இருந்தன. அவற்றுக்கு அப்பால் எழுந்த அரைவட்ட வடிவிலான மாளிகையின் ஏழடுக்குகளிலும் பெரிய சாளரங்கள் சிறுஉப்பரிகைகளுடன் திறந்திருந்தன.

தேர் முற்றத்தை கடந்து செல்லுகையில் அந்த மாளிகை ஒரு யாழ் போன்றிருப்பதாக திருஷ்டத்யும்னன் நினைத்தான். பெருங்கரங்கள் கொண்டு விண்தெய்வம் ஒன்று மீட்டும் தந்திகள் அந்தச் சுதைத் தூண்கள். மாளிகையின் மொத்த நீளத்திலும் அமைந்த பதினெட்டு படிகள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்ட ஏட்டுச் சுவடிகள் போல தெரிந்தன. முற்றத்தில் அமைச்சர்களின் மஞ்சல்களும் அரசகுடியினரின் அணிப்பல்லக்குகளும் தேர்களும் புரவிகளும் இருபக்கமும் நிரை வைத்து நின்றிருந்தன. வலப்புற ஓரமாக ஆறு யானைகள் முகபடாமும் முனைதந்தமும் அம்பாரியும் அணிபடாமும் அணிந்து பொன்பூத்த கொன்றையின் அசைவுகள் என நின்றிருந்தன.

அவன் தேர் முற்றத்தின் முகப்பில் சென்று நின்றது. மகரயாழ் போல தெரிந்த மாளிகை அணுகுந்தோறும் பெருகி தலைமேலெழுந்து எட்டு கால்களை ஊன்றி நிற்கும் பெரிய வெண்ணிறக் கடல் நீராளி போலாயிற்று. படிகளில் ஏறி இடைநாழியை அடைந்தபோதுதான்  தூண்கள் ஒவ்வொன்றும் இருபது பேர் கைகோர்த்து பற்றினாலும் வளைக்க முடியாதபடி பேருருவம் கொண்டவை என்பதை அவன் உணர்ந்தான். தூணொன்றின் நிழலைக் கடக்கவே ஐந்து எட்டுகள் எடுத்துவைக்க வேண்டியிருந்தது. உள்ளே நுழைந்ததுமே தூண்கள் வெண்ணிறயானையின் கால்களென்றாயின. பின்னர் வெண்பளிங்கு மரங்கள் நிரைவகுத்த காட்டில் நடப்பது போல் தோன்றியது.

அங்கே அவனை எதிர்கொண்ட அரண்மனை ஸ்தானிகன் தலை வணங்கி "பாஞ்சாலரை விதர்ப்ப அரண்மனைக்கு வரவேற்கிறேன். துவாரகையின் பேரரசி தங்களைப் பார்க்க உள்ளே அணிக்காட்டில் காத்திருக்கிறார்" என்றான். திருஷ்டத்யும்னன் "இவ்வரண்மனைக்கு அழைக்கப்பட்டதை பேறெனக் கருதுகிறேன். பாஞ்சாலம் பெருமை கொள்கிறது" என்று மறுமுகமன் சொன்னான். ஸ்தானிகன் மீண்டும் தலை வணங்கி அவனை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.

இடைநாழியின் மறுஎல்லையில் வெண்ணிற சுதையால் கட்டப்பட்ட விரிந்த படிகள் சற்றே வளைந்து மேலேறிச்சென்றன. ஸ்தானிகனுடன் படிகளில் ஏறும்போது "உபவனத்திற்கு என்றீர்கள்?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஆம். நந்தவனம் மாளிகை மீதுதான் உள்ளது" என்றான் ஸ்தானிகன். திருஷ்டத்யும்னன் திகைப்புடன் "மாடம் மீதா?" என்றான். "ஆம் இளவரசே, இது சோனகர்களின் முறை."

மூன்றாவது மாடியை அடைந்து இன்னொரு சிறிய இடைநாழி வழியாக நடந்து அரைவட்ட முகடு கொண்ட கதவற்ற சுதைவாயிலை கடந்தபோது அங்கே தொட்டிகளில் வளர்க்கப்படும் பூச்செடிகள் வைக்கப்பட்ட தோட்டம் ஒன்றை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் உயர்ந்த பூ மரங்கள் மண்டிய குறுங்காடு ஒன்றை அங்கே கண்டு 'படி ஏறினேனா இல்லை இறங்கினேனா' என்று ஒரு கணம் சித்தம் மயங்கப் பெற்றான். மரமல்லிகளும் மந்தாரங்களும் செண்பகங்களும் வேம்பும் கமுகும் பசுமை கொண்டு செறிந்திருந்த அக்குறுங்காட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வெண்சுதைப் பாதையில் ஸ்தானிகன் அவனை இட்டுச் சென்றான்.

அன்று பூத்து நிலமெல்லாம் உதிர்ந்த செண்பகத்தின் மூச்சடைக்க வைக்கும் மணம் நிறைந்திருந்தது. "இந்த மரங்கள் எங்கு வேர்விட்டுள்ளன?" என்றான் திருஷ்டத்யும்னன். "இந்த மாடத்தளம் மீது கீழிருந்து உயர்தர கருமண் கொட்டப்பட்டு அதன்மேல் இவை வளர்க்கப்பட்டுள்ளன" என்றான் ஸ்தானிகன். "எத்தனை அடி உயரத்திற்கு மண் போடப்பட்டுள்ளது?" என்றான் திருஷ்டத்யும்னன். "ஏழடிக்குமேல் ஆழமிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மாளிகை அமைக்கப்படும்போது நான் இங்கில்லை" என்றான் ஸ்தானிகன்.

"இதற்குரிய நீர் எப்படி மேலே வருகிறது?" என்று மேலும் திருஷ்டத்யும்னன் கேட்டான். "கடற்காற்றில் சுழலும் காற்றாடிகள் வழியாக நீரை மேலேற்றும் யவனப் பொறிகள் ஐந்து மறுபக்கம் உள்ளன. கீழே வந்து சேரும் கோமதியின் நீர் மேலேறி இங்கு வருகிறது" என்றான் ஸ்தானிகன். செடிகளின் நடுவே சுதையாலான சிறிய ஓடைகளில் நெளிந்தோடிய நீரை திருஷ்டத்யும்னன் பார்த்தான். ஈரமண் அப்பகுதியெங்கும் நீராவியையும் குளுமையையும் நிறைத்திருந்தது.

சோலைக்கு நடுவே இருந்த வெண்ணிற மரத்தாலான கொடிமண்டபத்தில் ருக்மிணி அமர்ந்திருப்பதை திருஷ்டத்யும்னன் தொலைவிலேயே கண்டான். அவளருகே அணுக்கச் சேடியர் நின்றிருந்தனர். சற்று தள்ளி முதிய சேடி ஒருத்தி கையில் மங்கலத்தாலத்துடன் நின்றாள். ஸ்தானிகன் தலைவணங்கி "தங்களை அறிவிக்கிறேன் இளவரசே" என்று சொல்லி முன்னால் சென்றான்.

ஸ்தானிகன் சென்று அவனை அறிவிக்க திரும்பி அவனை நோக்காமலேயே வரச்சொல்லும்படி கையசைத்தாள். ஸ்தானிகன் அவனிடம் வந்து "தாங்கள் செல்லலாம்" என்றான். திருஷ்டத்யும்னன் அருகே சென்றபோது முதிய சேடி மங்கலத்தாலத்துடன் முன்னால் வந்து "விதர்ப்ப அரசியின் அரண்மனைக்கு பாஞ்சாலரை வரவேற்கிறேன்" என்றாள். "என் நல்லூழால் இவ்வாய்ப்பை பெற்றேன். என் உடைவாள் தாழ்த்தி விதர்ப்ப அரசியை வணங்குகிறேன்" என்றான். அருகே சென்று மும்முறை அரசியை வணங்கி "தங்கள் ஆணை ஏற்கும் பேறு வாய்த்துள்ளது" என்று கூறினான்.

ருக்மிணி அவனிடம் "அமர்க!" என்று கையசைத்தாள். வெண்ணிற மரத்தாலான பீடத்தின் பின்பக்கம் பொன்னாலான மலர்அணி வளையம் பொருத்தப்பட்டிருந்தது. அமரும் இடமும் சாயும் இடமும் செந்நிறமான பீதர் நாட்டுப் பட்டால் அமைக்கப்பட்டிருந்தன. திருஷ்டத்யும்னன் அமர்ந்ததும் ருக்மிணி "தங்கள் தமக்கையை நான் நன்கறிவேன். இப்போது அஸ்தினபுரிக்குச் சென்றபோதும் நான் அவைசென்று அவளைக் கண்டேன். அவள் சாயல் தங்கள் முகத்திலிருப்பது உவகையை அளிக்கிறது" என்றாள். "ஆம். நான் அவளுடைய பிறிதொரு வடிவமே" என்றான் திருஷ்டத்யும்னன்.

"இருவரும் அனலில் பிறந்தவர்கள் என்று சூதர்கள் பாடுவதை அறிந்துளேன். அவள் தழலென்றால் நீங்கள் கனல்" என்று சொல்லி புன்னகை புரிந்தாள். ருக்மிணியைக் கண்டதுமே திரௌபதி தன் உள்ளத்தில் எழுந்தது ஏன் என்று திருஷ்டத்யும்னன் அப்புன்னகையில் அறிந்தான். ருக்மிணி மெலிந்து உயர்ந்த கரிய உடல் கொண்டிருந்தாள். சுருள் குழல் தோளில் விழுந்து இடைவரை சரிந்து வளைத்து அவள் மடியில் போடப்பட்டிருந்தது. நீண்ட மருள்விழியும் குறுகிய நெற்றியும் கூர் மூக்கும் கருஞ்சிவப்பு சிமிழ் போன்ற உதடுகளும் கொண்ட நீள்வட்ட முகம். கழுத்தும் கைகளும் தளிர் நரம்புகள் தெரிய மெலிந்து நீண்டிருந்தன. அந்த விரல்கள் அளவுக்கு நீண்ட விரல்களை எங்குமே பார்த்ததில்லை என்று எண்ணிக் கொண்டான். விரல் நகங்கள் சிட்டுக்குருவியின் அலகுகள் போல நீண்டிருந்தன.

கருமை நிறமன்றி அவளுக்கும் திரௌபதிக்கும் பொதுத்தன்மை ஏதுமிருக்கவில்லை. ஆனால் புன்னகைக்கும் ஒவ்வொரு முறையும் திரௌபதியை நினைவுபடுத்தினாள். அமர்வில் உடலைசைவில் குரலில் விழிசலிப்பில் திரௌபதியிடமிருக்கும் நிமிர்வு அவளிடமிருக்கவில்லை. ஒவ்வொரு சொல்லிலும் அவள் உடல் சற்றே ஒசிந்தது. பேசும்போதே ஆடையையும் அணிகளையும் கழுத்தையும் கைவிரல்கள் தொட்டுச் சென்றன. நீண்ட விரல்கள் அச்சம்கொண்டவைபோல ஒன்றோடொன்று தொட்டுப் பின்னி விரைந்தன. அவளுடைய மெல்லிய மேலுதடுகளுக்கு மேல் வியர்வை துளிகள் பூத்திருந்தன. காதிலணிந்த குழையின் நிழல் கழுத்திலும் கன்னங்களிலும் அசைந்தது.

"தாங்கள் வந்து என்னை சந்தித்து முறைமை செய்வீர் என்று எதிர்பார்த்தேன் பாஞ்சாலரே" என்று ருக்மிணி சொன்னதுமே அவள் அரசு சூழ்தலில் ஏதுமறியாதவள் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். உள்ளூர ஊறிய புன்னகையுடன் "நான் களம் சென்று நேற்று முன்தினம்தான் மீண்டேன் பேரரசி. சற்று ஓய்வெடுத்தேன். யாதவர்களின் பட்டத்தரசியின் முன் முழுதணிக் கோலத்தில் மட்டுமே வரவேண்டுமென்பதால் சற்று பிந்தினேன்" என்றான். அவள் முகம் மலர்வதைக் கண்டதும் அவன் உள்ளே எழுந்த புன்னகை மேலும் விரிந்தது. "இங்கு வந்த பின் அறிந்தேன் தங்கள் முன் நான் முறைமை ஏதும் கொள்ளவேண்டியதில்லை என்று. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என சூதர் கொண்டாடும் என் தமக்கையின் பிறிதொரு வடிவாக தாங்கள் தோன்றுகிறீர்கள்."

ருக்மிணியின் கண்களில் சிரிப்பு நன்றாகவே மலர்ந்தது. முகம் சிவக்க மெல்லிய ஒலியுடன் சிரித்து கைகளால் கழுத்தைத் தொட்டு உடலொசிந்து "ஆம். என்னைப் பற்றி இளைய யாதவரும் அவ்வண்ணம் சொல்வதுண்டு" என்றாள். திருஷ்டத்யும்னன் "விழியுடையோர் அனைவரும் சொல்லும் சொல்லல்லவா அது?" என்றான். இளைய யாதவர் வேறென்ன சொல்லியிருப்பார் என்று அவன் உள்ளம் தேடியது. உடனே கண்டடைந்து "துவாரகை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் நடுவே இன்று ஒரு பேரரசாக எழுந்து நிற்கிறதென்றால் விதர்ப்ப நாட்டு அரசரின் திருமகளாகிய தங்களின் கால்கள் இந்நகரத்தை தொட்டதனால் அல்லவா?" என்றான்.

அவள் மேலும் சிவந்து சிரிக்க "யாதவ அரசியை சந்திக்க நான் முறைமை பேண வேண்டியதில்லை. தாங்களோ தொல்கதை கொண்ட ஷத்ரிய குலத்தவர். ஆகவே முறைமை அனைத்தையும் பேணியாகவேண்டிய நிலையில் உள்ளேன்" என்றான். அவள் அதுவரை அடக்கிக்கொண்டிருந்த சிரிப்பு எழுந்தது. கைகளால் முகத்தை ஏந்திக்கொண்டபோது சிரிப்பொலியுடன் கைவளை ஒலி கலந்தது. "ஆம். என்னை ஷத்ரிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லும்போது இளைய யாதவர் இதைச் சொல்வதுண்டு" என்றாள். திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 6

முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம் கொள்வதற்கென்றே வடிவம் பெற்றது போலிருந்தது. ஒவ்வொரு சிறு எண்ணமும் உடலில் ஓர் இனிய அசைவாக வெளிப்பட்டன. எப்போதும் நிகர்நிலையில் நிற்கும் திரௌபதியின் தோள்களை எண்ணிக்கொண்டதுமே ருக்மிணியின் உடலால் எங்கும் நிகர்நிலையில் நின்றிருக்க முடியாது என்று பட்டது.

ருக்மிணி தன் நெற்றிக்குழலை கையால் வருடி ஒதுக்கி "நான் தங்களை வரச்சொன்னது ஒரு கோரிக்கைக்காகவே" என்றாள். "சொல்லுங்கள் அரசி. அது என் குலதெய்வத்தின் ஆணை என்று கொள்வேன்" என்றான் திருஷ்டத்யும்னன். "இளையோனே, நான் இளைய யாதவரை கைபிடித்தது அவரது பட்டத்தரசியாகும் பொருட்டே. என்னை மணக்கையில் அவருக்குப் பிறிதொரு துணைவி இல்லை. இந்நகரை அடைந்து இதன் முடியை நான் சூடிய பின்னரே அவர் சென்று சத்யபாமையை மணந்தார். ஆனால் அதற்கு முன்னரே ஜாம்பவதியை மணந்திருக்கிறார். எனவே அவள் முதன்மை கொண்டவளும் அல்ல. சொல்லப்போனால் அவள் மூன்றாமவள்" என்றாள். "ஆம். அதை அறியாத எவருள்ளனர் இந்நகரில்" என்றான் திருஷ்டத்யும்னன்.

"நன்று சொன்னீர். அவளன்றி பிறர் அனைவரும் அறிந்த உண்மை அது. அவளிடம் அதைச் சொல்ல எவருக்கும் துணிவில்லை. இளைய யாதவர் கூட அவளை அஞ்சுகிறார். ஏனென்றால் இந்நகரம் யாதவரால் நிறைந்துள்ளது. அவர்கள் அவளை தங்கள் குலத்திருமகள் என்று கொண்டாடுகிறார்கள். அதுவே அவளை ஆணவம் கொண்டவளாக்குகிறது" என்றாள் ருக்மிணி. "பாரதவர்ஷமே அஞ்சும் இளைய யாதவர் ஒவ்வொரு நாளும் அவள் முன் சென்று ஏவலன் என பணிந்து நிற்கிறார் என்கிறார்கள் சேடியர். சினந்து அவள் வாயிலை மூட அதன் வெளியே நின்று தட்டித் தட்டி கெஞ்சுகிறார் என்கிறார்கள். அச்செய்தி கேட்கையில் என் உள்ளம் குமுறுகிறது, ஆனால் அவளை மணந்த நாள் முதல் இதுவே நேர்கிறது."

"அது ஓர் அலங்காரமாக சொல்வது என்று..." என திருஷ்டத்யும்னன் சொல்லத்தொடங்க உரக்க இடைமறித்து "இல்லை, அது உண்மை" என்றாள் ருக்மிணி. "இந்நகருக்கு வருகையில் என்னை அவர் முன்னரே மணந்துள்ள செய்தி அவளுக்குத் தெரியாது. தானே முதன்மைத் துணைவி என்று எண்ணி அவருடன் சத்ராஜித் அளித்த மகள்செல்வத்துடன் இங்கே வந்தாள். மகட்செல்வம் என அவள்தான் அதை சொல்லவேண்டும். விதர்ப்பநாட்டில் இருந்து நான் கொண்டுவந்த நகைகளை வைத்திருக்கும் பெட்டியே அதைவிட மதிப்புள்ளது." திருஷ்டத்யும்னன் "அவர் எளிய யாதவப்பெண் அல்லவா?" என்றான். "ஆம், கன்றுமேய்த்து காட்டில் வாழ்ந்தவள்... இன்று தன்னை அரசி என எண்ணிக்கொள்கிறாள்" என்றாள் ருக்மிணி.

"அவர் அவளை மணம்கொண்ட செய்தியை அறிந்தேன். அவருக்கு யாதவகுலத்தில் மணமகள் தேவை என்பதை நானும் அறிந்திருந்தேன். ஜாம்பவர் குலத்தில் அவர் மணம் கொண்டதும் எனக்கு ஒப்புதலே. அவர்களிருவரும்தான் முதலில் வந்தனர். ஜாம்பவானும் அவரது குலத்தவரும் ஜாம்பவதியை வசந்தம் எழுந்தபின்னர்தான் அழைத்துவந்தனர்" என ருக்மிணி தொடர்ந்தாள். "அவரும் அவளும் நுழைந்தபோது நான் அவளை எதிர்கொள்ள என் அணித்தேரில் என் அகம்படியினருடனும் அணிச்சேடியருடனும் சென்றேன். இளைய யாதவருக்கு நிகரமர்ந்து அணித்தேரில் தோரணவாயிலுக்குள் நுழைந்த அவள் அரசணிக்கோலத்தில் தேரூர்ந்துசென்ற என்னைக் கண்டு திகைத்தாள். இளைய யாதவரிடம் ஏதோ கேட்க அவர் இயல்பாக பதில் சொன்னார். என்ன என்று சீறியபின் கையிலிருந்த மலர்களை வீசிவிட்டு தேர்பீடத்திலிருந்து எழுந்து வெளியே குதிக்கப்போன அவளை கைப்பிடித்து இறுக்கிக் கொண்டார். அதை நான் தொலைவிலேயே கண்டேன்."

"என்ன சொன்னார் என்று தெரியாது. அவள் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் முகம் சிவந்து கண்கலங்க அப்பீடத்தில் எரியும் மெழுகுப்பாவை போல் அவள் அமர்ந்திருந்ததை கண்டேன். நகர் நுழையும் முறைமைகள் நிகழும்போதும் அவள் விழிகளை சந்திக்க முயன்றேன். மூத்தவளென்ற நிலையில் நின்று மங்கலம் காட்டி மலர் கொடுத்து மஞ்சளரிசி தூவி வாழ்த்தி அவளை நகருக்குள் அழைத்துக் கொண்டேன். நகர்வலம் செல்லும் தேரில் இளைய யாதவரின் மறுபக்கம் அவளுக்கு நிகராக நானும் அமர்ந்தபோது அவள் உடல் கொண்ட வெம்மையையே என்னால் உணர முடிந்தது. நடுவே மலர்ந்த முகத்துடன் அவ்வாடலில் களிப்பவராக இளைய யாதவர் அமர்ந்திருந்தார்" என ருக்மிணி தொடர்ந்தாள்.

எங்கள் இருவரையும் கண்டு இருபக்கமும் நகர் தெருக்களில் கூடியிருந்த யாதவர் வாழ்த்தி குரல் எழுப்பினர். மலர் மழை சொரிந்தனர். மூவரும் அமர்ந்திருந்த பொற்தேர் அந்திமுகில் ஒழுகுவதுபோல நகர்த்தெருவில் சென்றது.  அவ்வணிவலம் முழுக்க ஓரக்கண்ணால் நான் அவள் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தேன் அவை சிவந்து இமைகளில் நீர்ப்பிசிர்களுடன் தெரிந்தன. பற்களைக் கடித்து உதட்டைப் பொருத்தி தருக்கித் தலைதூக்கி பொற்பீடத்தில் அமர்ந்திருந்தாள்.

குனிந்து அவள் கைகளைப் பார்க்கையில் நகங்கள் உள்ளங்கைகளுக்குள் புதைவதுபோல முறுகப்பற்றி இருப்பதைக் கண்டேன். முழங்கையிலும் கழுத்திலும் பச்சை நரம்புகள் புடைத்து கிளை விட்டிருந்தன. எக்கணமும் போர்க்கூச்சலிட்டபடி கொற்றவை என எழுந்து தன் இடையமர்ந்த உடைவாளை உருவி அவள் என் மேல் பாய்ச்சுவாள் என்று அஞ்சினேன். படைக்கலம் பயின்றவளென்றும் போர்முகப்பில் எழும் திறம் கொண்டவளென்றும் அவளைப் பற்றி சூதர்கள் சொல்லியிருந்தனர். நானும் படை பயின்றவளே என்றாலும் ஒரு போதும் போர்க்கலை எனக்கு உகக்கவில்லை. அவளுடன் அத்தேர்த்தட்டில் அமர்ந்திருக்க அஞ்சினேன். எப்போது அப்பயணம் முடியும் என்று எண்ணி அமர்ந்திருந்தேன்.

அரண்மனை முகப்பில் வந்த அக்ரூரர் தலைவணங்கி 'இரு அரசியருடன் தாங்கள் அமர்ந்திருப்பது தேவர் படைகொண்டு அவுண நிரைவென்று கயிலை நகர்மீளும் வேலவன் போல் தோன்றுகிறது அரசே' என்றார். கிருதவர்மரும் சாத்யகியும் எங்கள் இருவரையும் வணங்கி முகமன் கூறினர். பெருமுற்றத்தில் வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி வாழ்த்த, அரண்மனை மகளிர் மங்கலம் காட்டி வரவேற்க, இசைச்சூதர் வாழ்த்திசைக்க, அவள் அரண்மனை புகுந்தாள். அவள் கையில் அணித்தாலத்தில் ஆநிரை மங்கலம் ஐந்தையும் அளித்து வலக்காலெடுத்து வைத்து மாளிகை புகச்சொன்னார் அக்ரூரர். 'இவ்வரண்மனையில் திருமகள் எழுக!' என்றார். அவள் திரும்பி 'இன்னொரு திருமகள் இங்கு முன்னரே அமர்ந்திருக்கிறாளென்று என்னிடம் எவரும் சொல்லவில்லை அக்ரூரரே' என்றாள். அக்ரூரர் 'திருமகள்கள் எட்டு வடிவினர் என்றுதானே நூல்கள் சொல்கின்றன?' என்றார். 'அவ்வண்ணமெனில் இன்னும் ஐவர் உளரோ?' என்று அவள் கேட்க அக்ரூரர் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு 'ஆம் ஐவர் வரினும் மகிழ்வே' என்றார். அவள் தாலத்தைத் தூக்கி வீசப்போகின்றவள் போல சற்றே அசைந்தாள். பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு வலக்காலெடுத்து வைத்து மாளிகைக்குள் புகுந்தாள்.

அவளை வலப்பக்கமும் என்னை இடப்பக்கமும் நிறுத்தி இருவருக்கும் வாழ்த்து மங்கலம் செய்து அரண்மனைக்குள் கொண்டு சென்றனர் மங்கல மூதன்னையர். மகளிரவைக் கூடத்தில் அமர்ந்து மூவினிப்பை அருந்தி முறைமை முடித்த உடனேயே அவள் எழுந்து 'போதும், இனி ஒரு கணமும் இவளருகே அமர மாட்டேன். இன்று சொல்கிறேன் யாதவரே, எனக்கிழைக்கப்பட்ட இவ்வஞ்சத்தை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன். யாரிவள்?' என்றாள். இளைய யாதவர் பதற்றத்துடன் எழுந்து 'யாதவ இளவரசி, இவள் என் துணைவி, விதர்ப்ப நாட்டு இளவரசி' என்றார். அவள் 'இவளை நீர் முறைப்படி மணந்துள்ளீரா?' என்றாள். இளைய யாதவர் சிறுவர்கள் தவறுசெய்துவிட்டு நிற்பதுபோல தலை கவிழ்ந்து நின்றார்.

'இவளை நீர் மணந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை? வஞ்சகனே, கைப்பற்றி குடிவந்து அமர்ந்த அரசியையும் மறைக்கும் கீழ்மை கொண்டவனா நீ?' என்று அவள் கைநீட்டி கூச்சலிட்டாள். அவர் பதற்றத்துடன் 'ஓசையிடாதே அரசி. இது பொதுக்கூடம்....' என்றார். 'சொல்! என்னிடம் ஏன் மறைத்தாய்?' என்று அவள் மேலும் கூச்சலிட்டாள். 'நீ என்னிடம் இதை கேட்கவில்லையே!' என்றார் இளைய யாதவர். மூச்சிரைக்க 'கேட்டேன். நூறு முறை கேட்டேன்' என்று அவள் கூவினாள். 'என்ன கேட்டாய்?' என்று அவர் கேட்டார் .

'உங்கள் நெஞ்சில் நிறைந்திருப்பவள் நான் மட்டுமே அல்லவா என்றேனே?' என்றாள் சத்யபாமா. 'ஆம். நீயும் உன்னுருவங்களும் மட்டுமே அங்குள்ளன என்று சொன்னேனே' என்று அவர் சொன்னார். 'அப்படியென்றால் இவள் யார்? இவள் எங்குள்ளாள்?' என்று அவள் கேட்க 'இவளும் நீயே. திருமகளே, உனக்கு எட்டு வடிவங்கள் என்று நூல்கள் சொல்கின்றன' என்றார். 'இந்தப் பசப்புச் சொல் எனக்கு உவப்பல்ல. இதைக்கேட்டு உளம் மயங்கும் எளிய பெண்ணும் நானல்ல. இக்கணமே திரும்ப என் ஆயர்குடி மீள்கிறேன். அங்கு சென்று கன்று மேய்த்து வாழ்கிறேன். இவளுக்கு இளையவளாக இங்கு வாழ மாட்டேன்' என்றாள். 'இது என்ன வீண் பேச்சு அரசி?' என்று அக்ரூரர் இடைமறிக்க 'நீர் விலகும். குலமூத்தாராக இருந்தும் இவ்வஞ்சகனுக்கு சொற்றுணை நின்ற நீவிர் இழிதகையோரே. உம்மிடம் பேச எனக்குச் சொல்லில்லை. இன்றே நான் திரும்ப எனக்கு தேர் பூட்டுங்கள்' என்றாள்.

இளைய யாதவர் "யாதவ அரசி, நீ இங்கு இளையவள் என்று எவர் சொன்னது?' என்றார். அவள் நின்று திரும்பி 'இவளை முன்னரே மணம் கொண்டுவிட்டால் நான் இளையவளல்லவா?' என்றாள். 'அரசி, நீ வயதில் மூத்தவள். யாதவக் குடிகளின் முதல்வி. இந்நகரின் அரசி' என்றார். அச்சொற்களைக் கேட்டு பதைத்து என் நெஞ்சை பற்றிக்கொண்டேன். என் சொற்கள் உதடுகளில் தவித்தன. 'இவள் என் இளையவளா? சொல்லுங்கள், ஒவ்வொரு தருணத்திலும் என் காலடி பணிபவளா?' என்று அவள் கேட்க 'அதிலென்ன ஐயம்?' என்றார் இளைய யாதவர். 'நானே இந்நகரின் பட்டத்தரசி....?' என்று அவள் சொல்ல 'ஆம் ஆம் ஆம்' என்றார்.

தான் சற்று தணிந்ததை தானே உணர்ந்து அவள் மீண்டும் சினம் கொண்டு 'வேண்டாம், இச்சொற்கள் ஒவ்வொன்றும் என்னை மயக்குகின்றன. நான் விழையாத கீழ்மையை நோக்கி இழுக்கின்றன. நிகர் வைக்க ஒப்பேன். ஒரு தருணத்திலும் தலை வணங்க மாட்டேன். இன்றே இந்நகர்விட்டு கிளம்பிச்செல்கிறேன். அக்ரூரரே, இப்போதே என் ரதம் எழுக!' என்றாள். அக்ரூரர் இளைய யாதவரை திரும்பி நோக்க அவர் 'அவள் இந்நகரின் அரசி அக்ரூரரே. அவள் ஆணை ஒவ்வொன்றும் இந்நகரில் எவரையும் கட்டுப்படுத்துவதே' என்றார். அக்ருரர் 'அவ்வண்ணமே அரசி' என்றார்.

'என் ஆடைகள் மட்டுமே என்னுடன் இருக்கட்டும். என் அணுக்கச் சேடியரும் காவல் துணைவரும் தொடரட்டும். இன்று மாலையே நான் கிளம்புகிறேன். இந்நகரில் ஒரு வாய் உணவையும் உண்ணமாட்டேன்' என்ற பின் அவள் திரும்பி விரைந்து உள்ளறைக்குள் செல்ல, சேடி ஒருத்தி 'அரசி' என்று பின்னின்று அழைத்தாள். 'என்னைத் தடுக்க எவரேனும் முற்பட்டால் தலை கொய்வேன்' என்று பாமா சினந்தாள். இளைய யாதவர் அவளுக்குப் பின்னால் கைநீட்டியபடி 'பாமா, வேண்டாம். சொல்வதைக்கேள். இதோ பார்' என்று பின்னால் சென்றார். அவள் கதவை அறைந்து மூடியதும் நின்றார். பின்னர் திரும்பி ஒன்றும் நிகழாததுபோல புன்னகை செய்து 'சரி, நீ உன் அரண்மனைக்குச் செல் ருக்மிணி" என்றார்.

கடும் சினத்துடன் இளைய யாதவரிடம் 'என்ன சொன்னீர்? விதர்ப்ப நாட்டரசன் மகள் இளையவளா? இங்கு மணி முடி சூடி கோலேந்தி நான் அமர்ந்திருக்கலாகாதா? இந்த யாதவக்கீழ்மகளுக்கு நான் அடிமைசெய்ய வேண்டுமா?' என்றேன். அவர் 'யார் சொன்னது அதை?' என்று அக்ரூரரை நோக்கி 'அப்படி சொன்னது யார்? இப்போதே தெரிந்தாகவேண்டும்' என்றார். 'பசப்பாதீர். இப்போது அதைச் சொன்னதே நீர்தான்' என்றேன். 'நானா? நான் எப்போது சொன்னேன்?' என்றார். நான் என் பொறுமையை தக்கவைத்தபடி 'அவளே மூத்தவள் என்று சொன்னீர் அல்லவா?' என்றேன். 'ஆம்' என்றார் புரியாதவர் போல. 'கள்வனே, அப்படியென்றால் நான் யார்?' என்றேன்.

'என்ன பேச்சு இது? அவள் மூத்தவள் என்றால் நீ இளையவள் என்று ஆகவேண்டுமா என்ன? இருவரும் நிகராக அமரலாகாதா?' என்றார். 'இதோ சொல்கிறேன், இருவரும் என் நெஞ்சில் முற்றிலும் நிகரானவர்கள். போதுமா?' என்றார். அதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. 'அவளே இந்நகரின் அரசி என்றீர்கள்?' என்றபோது என் குரல் தாழ்ந்திருந்தது. 'ஆம்' என்றார். 'அப்படியென்றால்?' என நான் பேசத்தொடங்க 'அரசி, அவள் கோரியது இந்நகரின் அரசப்பொறுப்பை. அதை நான் வாக்களித்தேன். அவள் இந்நகரின் அரசி. ஆனால் நீ இந்நாட்டின் அரசி. அவள் துவாரகையின் முடிசூடுவாள். நீ யாதவப்பேரரசின் முடி அணிவாய்' என்றார். எனக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை.

அக்ரூரர் சிரித்தபடி 'இப்பூசலை இப்படி முகமண்டபத்தில் நிகழ்த்தவேண்டுமா அரசே? இன்னும் பல்லாண்டுகள் நிகழப்போகும் ஒரு நாடகமல்லவா இது?' என்றார். இளைய யாதவர் 'ஆம். உணவுண்டு ஓய்வெடுத்து மேலும் ஊக்கத்துடன் இதை நடத்துவதே முறையாகும்' என்றார். அவர் சொல்வதென்ன என்றறியாமலே நான் 'ஆம்' என்றேன். என்னைச் சூழ்ந்திருந்த பெண்களெல்லாம் சிரிக்கத் தொடங்கியபின்னர்தான் அறிவின்மை எதையோ சொல்லிவிட்டேன் என்று உணர்ந்தேன். 'நான் எவரிடமும் பூசலிட விரும்பவில்லை. எனக்கு நிகரில்லாதவர்களிடம் நான் பேசுவதில்லை' என்றேன். 'ஆம், பேசவே வேண்டியதில்லை அரசி. தூதர்கள் வழியாகக்கூட சமரிடலாமே' என்றார் இளைய யாதவர். அது ஏதேனும் சூது அடங்கிய சொல்லா என நான் எண்ணி குழம்பினேன்.

அக்ரூரர் சிரித்தபடி 'இந்தப்பூசல் இனி யாதவப்பேரரசின் முறைமைசார் கலைநிகழ்வென அறிவிக்கப்படுகிறது. இனி சூதர் இதைப்பற்றி கவிதை புனையலாம். பாணர் பாட விறலியர் ஆடலாம்' என்றார். இளைய யாதவர் பேராவலுடன் 'நாடகம் கூட எழுதப்படலாமே அக்ரூரரே' என்று சொல்ல அக்ரூரர் 'உறுதியாக செய்யப்படலாம். நானே புலவர்களிடம் சொல்கிறேன்' என்றார். முகம் மலர்ந்து 'எந்தப்புலவர்?' என்று இளைய யாதவர் கேட்டார். 'சுபகர் நல்ல புலவர், மகத அவையிலிருந்து வந்திருக்கிறார்' என்று அக்ரூரர் சொல்ல முகம் சுளித்து 'அவரா? அவருக்கு குலவரலாறுகள் மட்டுமே தெரியும். அசங்கர் எழுதலாமே' என்றார் இளைய யாதவர். 'அவர் இன்னமும் காவியம் என எதையும் எழுதவில்லையே?' என்றார் அக்ரூரர்.

'என்ன சொல்கிறீர் அக்ரூரரே? காவியமென்பது எளிதா என்ன? அதிலும் இது சிருங்கார காவியம்' என்றார் இளைய யாதவர். 'போர்க்காவியம் அல்லவா?' என்றார் அக்ரூரர். 'அப்படியா? நான் இன்பச்சுவை மிகுந்திருக்குமென நினைத்தேன்' என்றார் இளைய யாதவர். 'இன்பச்சுவை மட்டுமே காவியமாகாதே...' என்றார் அக்ரூரர். 'அக்ரூரரே, இது பெருங்காவியம் அல்ல. நாடகக் காவியம். இதற்கு ஒன்பது மெய்ப்பாடுகளில் மூன்றே போதும்.' அக்ரூரர் 'இதில் பீபத்ஸம் வருமா?' என்றார். 'ரௌத்ரம் உண்டு. பீபத்ஸம் தொடரத்தானே வேண்டும்?' என்றார் இளைய யாதவர். பெருமூச்சுடன் 'நாம் இருவரிடமும் பணிப்போம். இரண்டு நாடகக் காவியங்களில் எது மேல் என்று நோக்குவோம்' என்றார். அக்ரூரர் கவலையுடன் 'நாம் எதிர்பார்க்கலாம் இளையவரே... ஆனால் நல்ல காவியமென்பது இயல்பாக நிகழ்வது' என்றார்.

அவர்கள் மிகக் கூர்ந்த நோக்குகளுடன், முகமெங்கும் பொறுப்புணர்வு தெரிய பேசிக்கொண்டிருக்க நான் அவர்களை மாறிமாறிப்பார்த்தேன். இளையவனே, உண்மையில் என்ன நிகழ்கிறது என்றே எனக்குப்புரியவில்லை. இளைய யாதவர் திரும்பி என்னிடம் 'ருக்மிணி, உன் விழைவுப்படி மிகச்சிறந்த அரசகவிஞரையே தேர்ந்தெடுப்போம்' என்றார். நான் ஆமென்று தலையசைத்தேன். அக்ரூரர் 'விதர்ப்ப அரசிக்கு எந்த மனக்குறையும் வரலாகாது' என்றார். இளைய யாதவர் அருகே நின்ற சாத்யகியிடம் 'அவைக்கவிஞர்களை உடனே கூட்டச்சொல்லும்' என்று சொல்ல அவர் தலைவணங்கி வெளியேறினார். ஏதோ போருக்கான மன்றெழல் போல இருந்தன அவர்களின் முகங்களும் சொற்களும் செயல்களும்.

அக்ரூரர் என்னிடம் 'நான் உடனே கிளம்புகிறேன் அரசி. பணிகள் நிறையவே உள்ளன. எல்லா நிகழ்வுகளையும் தங்களுக்கு முறையாக அறிவிக்கிறேன்' என்றபின் தலைவணங்கி அறையை விட்டு வெளியே சென்றார். நான் என்ன செய்வதென்றே அறியாமல் நின்றிருந்தேன். அவர் விடைபெற்றபோது அரசியைப்போல வாழ்த்தினேன். உடனே இளைய யாதவரும் 'அனைத்தும் தங்கள் விழைவுப்படியே நிகழும் அரசி' என்று என்னிடம் முறைப்படி சொல்லி அறைக்குச் சென்றார்.

"நான் திரும்பி நோக்கியபோதுதான் அத்தனைசேடியரும் சிரிப்பை அடக்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன்" என்றாள் ருக்மிணி. திருஷ்டத்யும்னன் சிரித்துக் கொண்டு "அன்று தொடங்கிய ஆடல் இது என்று நினைக்கிறேன்" என்றான். "என்ன ஆடல்?" என்று ருக்மிணி சீறினாள். "எல்லாம் வெறும் பசப்பு. பெண்களின் உள்ளங்களை வைத்து ஆடும் பகடை. உணர்வுகளை எரிய வைத்தும் அணைய வைத்தும் தன் விழைவுக்கேற்ப கையாள்கிறார் கயவர். இளையோனே, நான் சலித்துவிட்டேன்" என்றாள்.

திருஷ்டத்யும்னன் "யாதவ அரசி அன்றே கிளம்பினாரா?" என்றான். "அவளாவது கிளம்புவதாவது! அவள் சரியான நாடகநடிகை இளையவனே" என்றாள் ருக்மிணி. "இணைந்து நடிக்கும் பெருநடிகர் இவர். அன்றே அவர் அவள் மாளிகைக்குச் சென்று அவள் வாயிலைத்தட்டி மன்றாடி நின்றார். அவளோ வாயிலை உள்ளிருந்து மூடிக் கொண்டாள். வெளியே நின்று தட்டி சலித்து இன்சொல் சொல்லி நயந்தும் அஞ்சியும் சொல்லாடி அவளை மயக்கினார். அவளுக்கு அவர் நின்றிருக்கும் இடம் அமைச்சும் அலுவலரும் காணும் மாளிகைவாயிலாக இருக்கவேண்டும் என்ற தெளிவு இருந்தது. அவர் தழையத் தழைய அவள் பேருருக் கொண்டாள். தன் காலைத்தூக்கி அவர் தலை மேல் வைத்தாள். உலகளந்த பெருமான் போல மூவுலகும் நிறைத்து ஓங்கி நின்றாள். அவள் கேட்டதை எல்லாம் அவர் ஒப்புக் கொண்டார். கேட்காததையும் வாக்களித்தார்."

இந்நகரை முறைமைகளை சூதர் பாடல்களை அனைத்தையும் அவளுக்கென கொடுத்தார். இறுதியாக 'பாமா, நீ இந்நகர் விட்டுச் சென்றால் ருக்மிணி அரசியாகிவிடுவாளல்லவா?' என்ற ஒற்றைவினாதான் அவளை வீழ்த்தியது. 'ஆம். ஒருபோதும் எனக்குரிய அரியணையை அவளுக்களித்து செல்லமாட்டேன்' என்று சொல்லி அவள் இந்நகரில் நீடிக்க ஒப்புக் கொண்டாள். 'ஆனால் நாளை நான் அரியணை அமர்கையில் என்னருகே அவள் அமரக்கூடாது' என்றாள். 'நாளை யாதவ குலச்சபை கூடுகிறது. ஷத்ரிய அரசி அதில் எப்படி அமர முடியும்?" என்று அவர் சொன்னார். அவள் அதை ஒப்புக் கொண்டு கதவை திறந்தாள்.

"அச்சொற்களுக்கு அதற்கு மறுநாள் ஷத்ரிய அரசுகளின் தூதர்கள் கூடிய அரசவையில் அதே அரசியின் அரியணையில் மணிமகுடம் சூடி நான் அமர்ந்திருப்பேன் என்பதே பொருளென்று அப்போது அவள் அறியவில்லை" என்று சொல்கையில் ருக்மிணி அறியாது புன்னகைத்துவிட்டாள். திருஷ்டத்யும்னன் உரக்கச் சிரித்ததைக் கண்டதும் ருக்மிணி சினந்து "என்ன சிரிப்பு? ஆண்களுக்கு இது வெறும் விளையாட்டு" என்றாள்.

திருஷ்டத்யும்னன் "அரசி பெண்களுக்கும் இது விளையாட்டல்லவா?" என்றான். "இளைய யாதவர் அன்றி பிறிதொருவர் இவ்வாடலை ஆட நீங்களும் ஒப்புக் கொள்வீர்களா?" என்றான். ருக்மிணி முகம் சிவந்து "ஆம். ஆடலின்போதே அவரது முழுத்தோற்றம் தெரிகிறது. அதையே நான் விழைகிறேன், என் நெஞ்சமர்த்தி வழிபடுகிறேன்" என்றாள். திருஷ்டத்யும்னன் "பிறகென்ன? இவ்வாடல் இறுதி வரை செல்லட்டும்" என்றான்.

ருக்மிணி எதையோ நினைவு கூர்ந்தவளாக புது சினத்துடன் "உம்மை வரவழைத்து நான் சொல்ல வந்தது அதுவல்ல" என்றாள். "சொல்லுங்கள் அரசி" என்றான் திருஷ்டத்யும்னன். "அந்த சியமந்தக மணியை அவளிடமே கொடுத்துவிட்டார் இளைய யாதவர். அது முறையல்ல." திருஷ்டத்யும்னன் "அது அவர்களின் குலமணி அல்லவா?" என்றான். "அதைப்போல பல மணிகளை நானும் கொண்டுவந்தேன். அவை துவாரகையின் கருவூலத்தில்தான் உள்ளன. சியமந்தக மணி அந்தகக் குலத்திற்குரிய சின்னமாக இருக்கலாம். அதை அவளுக்கென்றே அக்ரூரர் அளித்தும் இருக்கலாம். ஆனால் எப்போது அது அரசுக் கருவூலத்தை அடைந்ததோ அப்போதே துவாரகைக்கு உரிமைப்பட்டது" என்று ருக்மிணி சொன்னாள்.

"நேற்று முன் தினம் நிகழ்ந்த யாதவ மன்று கூடலில் அந்த மணியை அவள் தன் கழுத்தில் அணிந்து அமர்ந்திருந்தாள். ஆகவே நாளை மறுநாள் கூடும் ஷத்ரிய தூதர்களின் பேரவையில் அதை நான் அணிந்து அமர்ந்திருப்பதே முறையாகும்" என்று ருக்மிணி சொல்ல திருஷ்டத்யும்னன் அதுவரை இருந்த புன்னகை அழிந்து "அதை யாதவ அரசி ஏற்கமாட்டார்" என்றான். "ஆம். அவள் ஏற்கவில்லை. என் சேடியை வசைபாடி திருப்பியனுப்பிவிட்டாள். அந்த மணியை தானே தன் அரண்மனைக்கருவூலத்தில் வைத்திருக்கிறாள். ஆனால் இந்நகரில் ஒவ்வொரு விழியும் நோக்கியிருக்கும், அரசப்பேரவையில் நான் அந்த மணி சூடி அமர்ந்திருக்கிறேனா இல்லையா என்று. அதைக் கொண்டே இங்கு என் இடமும் அவள் இடமும் முடிவு செய்யப்படுகிறது. அந்த மணியை அணியாது ஒரு போதும் நான் அவை அமரமாட்டேன். அதை அவளிடம் சொல்லுங்கள்" என்றாள்.

"இதில் நானென்ன சொல்வது?" என்றான் திருஷ்டத்யும்னன். "இளையோனே, இங்கு ஷத்ரிய குலத்தவராக நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். சாத்யகியும் அக்ரூரரும் பிற அனைவருமே யாதவர்கள்" என்றாள் ருக்மிணி. திருஷ்டத்யும்னன் "ஆம். அதனால் என்னை சத்யபாமா அயலாக அல்லவா பார்ப்பார்கள்?" என்றான். "இல்லை. அவள் தங்களை அழைத்துப் பேசியதை நான் அறிவேன். அவளுக்காக அந்த மணியை மீட்டுவந்தவர்களில் நீங்களும் ஒருவர். அவள் முகத்தை நோக்கி இவ்வுண்மையை நீங்கள் சொல்ல முடியும்" என்றாள் ருக்மிணி.

"இல்லை அரசி..." என திருஷ்டத்யும்னன் தயங்க "அவள் யாதவ குலங்களுக்கு மட்டுமே அரசி. ஷத்ரியர் அனைவருக்கும் பேரரசி நானே. சியமந்தகம் இவ்வவையில் என் நெஞ்சில் ஒளிவிட்டாக வேண்டும்" என்று ருக்மிணி சொன்னாள். திருஷ்டத்யும்னன் ஏதோ சொல்லவர அவள் கையசத்து "நான் தங்களிடம் விண்ணப்பிக்கவில்லை. என் ஆணையை மேற்கொள்வதாக சற்றுமுன் சொன்னீர். இது என் ஆணை!" என்றாள். "ஆணை" என தலைவணங்கி "நான் சொல்கிறேன் அரசி" என்றான் திருஷ்டத்யும்னன்.

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 7

துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன் புன்னகையுடன் இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி மாலையின் மக்கள் பெருக்கு சென்று கொண்டிருந்த தெருவின் ஓரத்திற்கு வந்து கைகளும் புயங்களும் முட்டிச்செல்ல அசைந்தபடி நின்றான். திருஷ்டத்யும்னன் அருகே வந்ததும் "தாங்கள் இத்தனை விரைவில் திரும்புவீர்கள் என்று எண்ணவில்லை இளவரசே" என்றான்.

திருஷ்டத்யும்னன் "அப்படியானால் ஏன் இங்கு காத்திருக்கிறீர்?" என்றான். சாத்யகி "தனியாக உள்ளே அமர்ந்து இசை கேட்க பிடிக்கவில்லை. நீங்கள் வரக்கூடும் என்ற உணர்வு முன்னரே இருந்ததால் நிலையழிந்த உள்ளத்துடன் இருந்தேன். சற்று நேரம் அமர்ந்துவிட்டு வெளியே வந்து நின்றேன்" என்றான். திருஷ்டத்யும்னன் இறங்கி புரவியை ஏவலனிடம் கொடுத்துவிட்டு "உள்ளே என்ன நிகழ்கிறது?" என்றான். "ராதாமாதவம்" என்றான் சாத்யகி சிரித்தபடி.

திருஷ்டத்யும்னன் "இந்த நகர் முழுக்க இசைச்சூதர் நடிப்பது யாதவ இளையோனின் காதலை மட்டும்தானா?" என்றான். சாத்யகி "இம்மக்கள் கேட்க விரும்பும் கதையும் அது மட்டுமே. அவற்றில் ராதாமாதவத்திற்கு உள்ள இடம் பிறிதெதற்கும் இல்லை. இதில் இளைய யாதவர் என்றும்மாறா இளமையுடன் இருக்கிறார்" என்றான். "இவர்களின் விழைவே அவரை முதுமை கொள்ளவிடாது" என்றான் திருஷ்டத்யும்னன். "இது தாழ்வில்லை. பலர் கற்பனையில் அவர் இன்னமும் கைக்குழந்தையாகவே இருக்கிறார்" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சிரித்தான்.

"என்ன சொன்னார் விதர்ப்ப அரசி?" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இயல்பான புன்னகையுடன் "சியமந்தகத்தை வரும் அரசுத்தூதர் அமர்ந்திருக்கும் பேரவையில் தான் சூடவேண்டுமென்று விழைகிறார். அதை நான் யாதவ அரசியிடம் சென்று பேசி பெற்று வரவேண்டுமென்று பணித்திருக்கிறார்" என்றான். சாத்யகி நின்று திகைத்து அவனை நோக்கி பின் இடையில் கைவைத்து தலையை பின்னுக்குச் சரித்து வெடித்துச் சிரித்தான். இசைக்கூடத்தின் அப்பகுதியில் நின்றிருந்த அனைவரும் திரும்பி அவனை நோக்க திருஷ்டத்யும்னன் தோளில் கை வைத்து "மெதுவாக" என்றான்.

சாத்யகி தன்னை அடக்கிக்கொண்டு கண்களில் படர்ந்த நீருடன் "நீரா? யாதவ அரசியிடம் சென்று இளையவருக்காக சியமந்தகத்தை கேட்கப்போகிறீரா?" என்றான். "எனக்குப் பணித்திருக்கும் செயல் அது. நான் ஆணைகளை தலைக்கொள்ளும் எளிய வீரன் மட்டுமே" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி "ஆகவே மீண்டும் யாதவ அரசியை சந்திக்கப் போகிறீர்கள், சியமந்தகத்தை கோரி பெறப்போகிறீர்கள், அல்லவா?" என்றான். திருஷ்டத்யும்னன் "சந்திப்பது உறுதி. கோருவதும் உறுதி. ஆனால் எச்சொற்கள் எவ்வகையில் எங்கு என்று இன்னும் முடிவு செய்யவில்லை" என்றான்.

சாத்யகி "பாஞ்சாலரே, இந்த ஆடலை நிகழ்த்த இளைய யாதவரால் மட்டுமே முடியும். இரண்டு கூரிய வாட்கள் போரிடும்போது ஊடே கடந்து செல்வது காற்றால் மட்டுமே இயலும் கலை என்பார்கள். நீர் முயன்றால் வெட்டுப்படுவீர்" என்றான். திருஷ்டத்யும்னன் சற்று நேரம் எண்ணங்களில் ஆழ்ந்துவிட்டு "ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். காற்றை ஒரு படைக்கலமாக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்" என்றான். சாத்யகி அதை கருத்தில்கொள்ளாமல் "அவர்களிடையே ஒருநாளும் சமர் ஓய்வதில்லை... இந்நகரின் பெருங்கொண்டாட்டங்களில் அதுவும் ஒன்று" என்றான்.

திருஷ்டத்யும்னன் "அந்தப்போரின் விசையையே நாம் கையாளமுடியும்" என்றான். சாத்யகி "வாருங்கள், உள்ளே சென்று இசை கேட்போம்" என்றான். இருவரும் இசைக் கூடத்தின் உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த மரவுரிப்பாய் மேல் அமர்ந்து கொண்டனர். தொலைவில் மேடையில் சூதனும் விறலியும் ஒருவரை ஒருவர் நோக்கும்படி அமர்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப்பின்னால் யாழும் முழகளுவும் குழலுமாக இசைக்குழுவினர் அமர்ந்திருந்தனர். இளைய யாதவனின் உள்ளம் நோக்கி ராதை பாட, அவள் உள்ளமாக மாறி அவளைச் சூழ்ந்திருந்த விண்ணாகவும் மண்ணாகவும் நின்று சூதன் மறுமொழி சொல்லிக் கொண்டிருந்தான்.

திருஷ்டத்யும்னன் தன் தலையை கைகளால் தாங்கி கால்மடித்து அமர்ந்து பாட்டை கேட்டான். முழவும் குழலும் ஒன்றென ஆகும் ஒருமை. “இவ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எனக்காக நீ பூண்ட அணியல்லவா? நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழி மணிகொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா?” செம்பட்டு போல் நெளியும் மொழி. தேனென நாவிலிருந்து செவிக்கு வழியும் இசை. விறலியின் குரல் ஒருசெவிக்கென மட்டுமே போல் ஒலித்தது. “என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன். எனக்கில்லாது எஞ்சாத எங்கும் நிறை கரியோன்.” பாணனின் குரல் அவளுக்கென்றே என மறுமொழியுரைத்தது “உனக்கென்றே உலையாகி நான் சமைத்த அமுதமிது. உண்டு நிறையட்டும் உன் நெருப்பு.”

பாடல் முடிந்ததும் விறலி திரும்பி சிறு மரக்குவளையில் ஏதோ அருந்த பாணன் முழவுக்காரனிடம் தாளமிட்டு ஏதோ சொன்னான். அவை அசைந்து அமரும் ஒலியும் மெல்லிய பேச்சொலிகள் இணைந்த ரீங்காரமும் எழுந்தன. சாத்யகி பெருமூச்சுடன் உடலை எளிதாக்கி "ராதாமாதவ பாடல்களில் இதுதான் சிறந்தது. நீலாம்பரம். தட்சிணநாட்டிலிருந்து வந்த காஞ்சனர் இயற்றியது, இது விப்ரலப்தா பாவத்தில் அமைந்த முப்பத்துமூன்றாவது பாடல்" என்றான். "உருகிவழிவது போலிருக்கிறது" என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து "இந்தக் காதல் எனக்கு புரிவதே இல்லை. இப்படியொன்று நிகழவே இல்லை என்றும் ராதை என்று எவளும் யாதவக் குடிகளில் இல்லை என்றும் அறிவுணர்ந்தோர் சொல்வதுண்டு" என்றான்.

திருஷ்டத்யும்னன் மேடையை நோக்கியபடி "அழகிய சித்திரம்" என்றான். சாத்யகி " ஆம், இது கவிஞர்களால் இளையவர் மேலேற்றப்பட்ட ஒரு கற்பனை. பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் இது தொடர்ந்து மாற்றி எழுதப்பட்டு வளர்ந்து வந்துள்ளது. இனியவை அனைத்தும் திரட்டி இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இசை, நிலவு, வசந்தம், உளமுருகும் காதல் அனைத்தும். பெண்கள் தங்கள் முதிரா இளமையில் அடைந்த, அடைந்த கணமே இழக்கத்தொடங்கிய இனிமை ஒன்றை என்றென்றும் என தேக்கி வைத்திருக்கும் கலம் இக்கதை என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்" என்றான்.

திருஷ்டத்யும்னன் "இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் அந்தக் கதைக்குள் சென்றுவிட்டிருக்கிறார்கள் நாம் மட்டும் வெளியே நின்று ஏன் இதை விவாதிக்கிறோம்?" என்றான். சாத்யகி திரும்பி அரங்கை நோக்கிவிட்டு "ஆம், உண்மை" என்றான். "இளவரசே, போரிலும் அரசு சூழ்தலிலும் நாம் இந்த இனிமையை இழந்துவிட்டோமா?" திருஷ்டத்யும்னன் "யாதவரே, இக்கனவு நமக்குள்ளும் வாழ்வதுதான். அதற்குள் ஒரு போதும் நுழைய முடியாதவர்கள் என்று நம்மை நாம் எண்ணிக் கொள்கிறோம்" என்றான். "உண்மையில் இத்தருணம் போல் என்னால் எப்போதும் இவ்வுணர்ச்சிகளுக்குள் நுழைய முடியுமென்று தோன்றவில்லை."

சாத்யகி "அப்படியானால் இங்கு வருவதற்கு முன் அவ்வாறு எண்ணவில்லையா?" என்றான். திருஷ்டத்யும்னன் தலையை அசைத்தபடி தனக்குள் என "இல்லை" என்றான். சாத்யகி அவனையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான். திருஷ்டத்யும்னன் எதையோ சொல்ல வருபவன்போல் இருந்தான். ஆனால் ஒரு சொல்லும் அவனிலிருந்து எழவில்லை. மேடையில் விறலி கண்ணனுடன் ஊடும் கலகாந்தரிதை ஆனாள். அவளைச் சூழ்ந்து கண்ணீருடன் கனத்து நின்றிருந்தது வானம். இலைத் துளிகள் ஒளிர்ந்து மழை சொட்டின .குளிர்ந்த காற்று சாளரங்களைக் கடந்து வந்து ஆயர்குடியின் அனைத்து சுவர்களையும் தழுவிச் சுழன்று குளிர்ந்தது. எழுந்து பறக்கும் ஆடையை விரல்களால் பற்றிக்கொண்டு அவள் கண்ணனை எண்ணி கண்ணீர் விட்டாள்.

வாயிலுக்கு அப்பால் வந்து கண்ணன் அவள் பெயர் சொல்லி அழைத்தான். 'ராதை' என்ற குரல் கேட்டு அவள் ஓடிச்சென்று தாழ்திறந்தாள். கதவைத் தட்டி உலுக்கியது மழைக்காற்று என்று அறிந்தாள். அவள் பெயர் சொல்லி அழைத்தது முற்றத்தில் நின்ற பாரிஜாதம். சோர்ந்து கதவைப் பற்றிக்கொண்டு உடல் தளர்ந்து சரிந்து ஏங்கி அழுதாள். எங்கோ எழுந்தது வேய்ங்குழல் நாதம். தூண்டில்கவ்விய மீன் எனத் துடித்தாள். அவளைச் சுண்டி தூக்கி மேலெழுப்பியது தூண்டில் சரடு.

"நிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு..." விறலியின் எரிந்துருகி வழியும் குரல் அரங்கைச்சூழ்ந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து "செல்வோம்" என்றான். சாத்யகி எழுந்தபடி "இசை கேட்கவில்லையா?" என்றான். திருஷ்டத்யும்னன் "இல்லை" என்றபடி வெளியே சென்றான். சாத்யகி அவனுடன் சென்றபடி "இவ்விசையின் உளமயக்குக்குள் நாமும் தன்னிலையழிந்து செல்லாவிடில் இப்பித்தெழுந்த உணர்வுகள் அனைத்தும் பொருளற்றவையென தோன்றும். உணர்வுகள் இல்லையேல் இசை நீர் போல தெரியும் பளிங்கு, அதன் மேல் நடக்க முடியும் மூழ்கி நீராட முடியாது என்று என் தந்தை சொல்வதுண்டு" என்றபின் "பெரும்பாலும் இசை மீது நான் புரவியில்தான் சென்று கொண்டிருக்கிறேன்" என்றான்.

திருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு புன்னகை புரியவில்லை. ஏதோ நினைவில் தொலைந்தவன் போல இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி வெளியே வந்து நின்றான். நெரிந்துசென்ற கூட்டத்தைப்பார்த்தபின் "நாம் வேறெங்காவது செல்வோம் யாதவரே" என்றான். சாத்யகி "துறைமுகப்புக்குச் செல்வோம்" என்றான். "இல்லை. அங்கு ஓசைகள் நிறைந்திருக்கும், நான் அமைதியை நாடுகிறேன்" என்றான் திருஷ்டத்யும்னன். "நகருக்கு மறுபக்கம் கோமதி ஆற்றின் நீர் கொணர்ந்து தேக்கப்பட்டுள்ள செயற்கை ஏரி உள்ளது. அங்கு நகர் மக்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது" என்றான் சாத்யகி. "செல்வோம்" என்று திருஷ்டத்யும்னன் மறுமொழி சொன்னான்.

துவாரகையின் சுருள் வளைவுச் சாலையில் புரவிகளில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் இணையாகவே மெல்லிய நடையில் சென்றனர். மாலைக் களியாட்டுக்கு எழுந்த நகர் மக்களும் அயல்வணிகரும் ஒருவருடன் ஒருவர் கலந்து தெருக்களில் முகங்களாக ததும்பிக் கொண்டிருந்தனர். மொழிகள் கலந்த ஓசை எழுந்து காற்றில் அலையென நிறைந்திருந்தது. மாலை வெயில் வெள்ளி அணைந்து பொன் எழுந்து விரிய முகில்களின் விளிம்புகள் மட்டும் ஒளிபெற்றிருந்தன. கோபுரமாடங்களின் குவைமுகடுகளின் வளைவுகளின் பளிங்குப்பரப்புகள் நெய்விளக்கருகே நிற்கும் இளமகளிர் கன்னங்கள் போல பொன்பூச்சு கொண்டு மின்னிக் கொண்டிருந்தன.

"இந்நகரில் காலையும் மாலையுமே அழகானவை. உச்சி வெயில் வெண்மாளிகைகளை கண்கூசும்படி ஒளிர வைக்கிறது" என்றான் சாத்யகி. "இரவெல்லாம் மதுவுண்ட கண்களுக்கு உச்சிவெயில் போல துயரளிப்பது எதுவுமில்லை. நடுப்பகல் உணவுக்குப்பிறகு இங்கு தெருக்கள் ஓய்ந்துவிடும். அயலூர் யாதவர்கள் மட்டுமே தெருக்களில் அலைவார்கள். துவாரகையின் வணிகருக்கும் செல்வம் உடைய குடிகளுக்கும் மாலை என்பது இரண்டாவது துயிலெழும் காலை." திருஷ்டத்யும்னன் அச்சொற்களுக்கு செவி கொடுக்காமல் புரவியில் அமர்ந்திருந்தான். புரவி தன் விழைவுப்படி செல்வது போலவும் அதன் மேல் அவன் உடல் கண்ணுக்குத் தெரியாத கயிறால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது போலவும் தெரிந்தது.

சுழல் பாதையின் மூன்றாவது வளைவிலிருந்து பிரிந்து மறுபக்கம் வளைந்து சென்ற புரவிப்பாதை புதிதாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கத்தில் இருந்த காவல்மாடத்தின் தலைவன் இறங்கி வந்து கடுமையான நோக்குடன் தலைவணங்கி அவர்களிடம் "எங்கு செல்கிறீர்கள்?" என்றான். சாத்யகி "கோமதத்தின் கரையில் ஓர் அரசு அலுவல்" என்றபின் முத்திரைக் கணையாழியை காட்ட ஐயம் விலகாமலேயே அவன் தலைவணங்கி உள்ளே செல்ல ஒப்புதல் அளித்தான். கருங்கல் பாவப்பட்ட தரையில் புரவிக்குளம்புகளின் உடுக்கோசை ஒலிக்க சென்றபோது சாத்யகி அந்தத் தாளம் தன் அகத்தை விரைவுகொள்ளச்செய்வதை உணர்ந்தான். "புரவியின் குளம்புகளின் துடிப்பு எப்போதும் விரைவு கொண்ட எண்ணங்களை உருவாக்குகிறது. புரவி விரையத்தொடங்கியதுமே அதுவரை இருந்த எண்ணங்கள் அச்சமோ சினமோ உவகையோ கொண்டு தாவத்தொடங்குகின்றன" என்றான்.

திருஷ்டத்யும்னன் அச்சொற்களும் சென்று சேராத விழிகளுடன் திரும்பி அவனை நோக்கியபின் திரும்பிக் கொண்டான். சாத்யகி சற்றே சினம் கொண்டு "பாஞ்சாலரே, தங்களிடம்தான் நான் பேசிக்கொண்டு வருகிறேன். தங்கள் சொல்லின்மை என்னை பொறுமையிழக்கச் செய்கிறது" என்றான். திருஷ்டத்யும்னன் "என்ன?" என்றான். "தாங்கள் எண்ணிச் செல்வது என்ன? நான் தங்களுடன் உரையாட முயன்றுகொண்டிருக்கிறேன்" என்றான் சாத்யகி. "ஆம். நான் கேட்டேன்" என்றான் திருஷ்டத்யும்னன். தணிந்த குரலில் "எதை எண்ணிக்கொண்டு செல்கிறீர்?" என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் "ராதாமாதவத்தைத்தான்" என்றான். எண்ணியிராது எழுந்த எரிச்சலுடன் "அது ஒரு விடியற்காலை வீண்கனவு. அதில் ஒரு துளி மாந்திய ஆண்மகன் தன்மேல் மதிப்பிழப்பான். கேலிப்பொருளாகி பெண்கள் முன் நின்றிருப்பான். தங்கள் வாழ்க்கையில் இளமை இனி இல்லையென்று கடந்து சென்றுவிட்டது என்றானபின் பெண்கள் அமர்ந்து எண்ணி கண்ணீர் சிந்தும் ஓர் இழிகனவு அது" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டு "நான் சுஃப்ரை என்ற பெண்ணைப் பற்றி உம்மிடம் சொல்லியிருக்கிறேனா?" என்றான். முகம் மலர்ந்து "எந்த நாட்டு இளவரசி?" என்றான் சாத்யகி. "எந்நாட்டுக்கும் இளவரசி அல்ல" என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் மலர்ந்து "பரத்தையா?" என்றபடி சாத்யகி அருகே வந்தான். "திறன்மிக்கவள் என்று எண்ணுகிறேன். தங்களை இத்தனை நாள் கழித்தும் எண்ணச்செய்கிறாளே?"

திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி "ஆம், திறன்மிக்கவள். வெல்லமுடியாதவள்" என்றான். விழி தெய்வச்சிலைகளைப்போல வெறித்திருக்க "அவளைக் கொல்வதற்காக வாளால் ஓங்கி வெட்டினேன். என் உடல் புண்பட்டு நிகர்நிலை அழிந்திருந்ததனால் ஒரு கணம் பிழைத்தது வாள். இமைகூட அசைக்காமல் அவள் என்னை நோக்கியபடி தன்னை முழுதளித்து மஞ்சத்தில் மல்லாந்து படுத்திருந்தாள்." சாத்யகி திகைப்புடன் "அறியாதுகூட அசையவில்லையா? அது உயிரின் தன்மையல்லவா?" என்றான். திருஷ்டத்யும்னன் "அசையவில்லை" என்றான். "அவள் விழிகள் போல இருந்திருக்கும் பர்சானபுரி ராதையின் விழிகள்."

சாத்யகி புன்னகைத்து "இப்போது புரிகிறது அனைத்தும். தாங்கள் அவளை எண்ணத் தொடங்கிவிட்டீர்கள். எப்போது கிளம்பிச் செல்கிறீர்கள்?" என்றான். "நான் இங்கு வந்ததே அவள் விழிகளிடமிருந்து தப்பிதான்" என்றான் திருஷ்டத்யும்னன். "இங்கிருந்து மேலும் தொலைவுக்கு தப்பிச்செல்லவே விழைகிறேன். மீள அவளிடம் சென்றால் நானென செதுக்கி வைத்திருக்கும் அனைத்தையும் இழந்து உருகி அழிவேன்." சாத்யகி "ராதை என பெண்கள் நின்றிருக்கும் தருணங்கள் வாழ்க்கையில் உண்டு. ராதை என்றே அவர்கள் வாழ முடியாது. ராதை என்பது பெண்ணில் தெய்வமெழும் ஒரு கணம் மட்டுமே என்று சூதர் சொல்வதுண்டு" என்றான். "அதை நான் அறியேன். இன்று அவள் என்னை எவ்வண்ணம் உணர்கிறாள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவ்விழிகளின் அக்கணத்தை என்னால் எந்நிலையிலும் மறக்கமுடியாதென்று இப்போது உணர்கிறேன். அவற்றை நான் நோக்கிய அக்கணம்போல் ஒன்று என் வாழ்வில் இனி மீளாது."

சாத்யகி "இளைய பாஞ்சாலரே..." என்று ஏதோ சொல்லவர அதை கேளாதவன் போல திருஷ்டத்யும்னன் "யாதவரே, எங்கெங்கோ ஏதேதோ விழிகளிலிருந்து சுஃப்ரையின் அந்தக் கணம் எழுந்துவருவதை காண்கிறேன். கிருஷ்ணவபுஸின் முற்றத்தில் யாதவர்களின் குருதி படிந்த வாள்கள் சூழ நிற்க ஒரு பெண் இளைய யாதவரின் கண்ணை நோக்கி நீ எனக்கு வெறும் ஒரு நீலப்பீலிவிழி மட்டுமே என்று சொன்னாள். அவ்விழிகளிலிருந்தவளும் சுஃப்ரைதான். இன்று இளைய அரசியை கண்டேன். அவளைப் புகழும் சொற்களை முதற்கணத்திலேயே கண்டு கொண்டேன். எதைச் சொன்னால் தான் மகிழ்வேன் என்று அவளே என்னிடம் உரையாடலின் தொடக்கத்திலேயே உணர்த்திவிட்டாள். அச்சொற்களை திறம்படச்சொல்லி அவளை மகிழ்வித்து அவள் விழைவதென்ன அன்று அறிந்தேன்" என்றான்.

பின்னர் திரும்பி சாத்யகியை நோக்கி "அங்கிருக்கையில் அவளை தன் கொழுநனின் அன்பை மட்டுமே விழையும் எளிய பெண்ணென்று எண்ணினேன். ஆணை முழுதாக உரிமை கொள்ளத் தவிக்கும் ஒரு பெண் என்று வகுத்துக் கொண்டேன். தன் சொற்களால் அச்சித்திரத்தை அவள் மீள மீள செதுக்கி முழுமை செய்தாள். பின்பு கிளம்பி என் அரண்மனை நோக்கிச் செல்கையில் ஏதோ ஒரு கணத்தில் உணர்ந்தேன். அது அவள் கொள்ளும் நடிப்பு என. அவனுக்கு மிக உகந்தது என அறிந்து அவள் சமைத்து பரிமாறும் இனிமை அது. யாதவரே, அவள் சியமந்தக மணியைக் கோருவதும் அதன் பொருட்டே. தன் நெஞ்சமர்ந்தோன் சூடும் மணி ஒன்று தனக்குரியதும் ஆக வேண்டும் என விழைகிறாள். அவனை பகடை என யாதவ அரசியின் முன் உருட்டி விடுகிறாள்.  அவள் அவனை திரும்ப தன்னை நோக்கி உருட்டுவாள் என்று அறிந்திருக்கிறாள்."

புன்னகைத்து திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான் "இன்று அவையில் அவள் சொன்னவை செய்தவை அனைத்தும் இனிய நடனம் போலிருக்கின்றன. அவள் விழிகளை நான் எண்ணுகையில் அங்கு நான் கண்டதும் சுஃப்ரையையே. காதல் கொண்ட விழிகளனைத்திலும் ஒரு பெண்ணையே நான் நோக்குவது ஏன் என்று விளங்கவில்லை." சாத்யகி சிரித்தபடி "இதன் பெயர்தான் காதல் போலும் "என்றான். திருஷ்டத்யும்னன் "இங்கு எப்படி என் உள நிலையை வகுத்துரைப்பதென்று அறியேன். சத்யபாமாவின் விழிகளில் நான் கண்டதும் சுஃப்ரையின் அக்கணத்தைத்தான். யாதவரே, இவர்களனைவரும் ஒரு கணம்கூட உளம் விலகாது அவனுக்காக உயிர் கொடுப்பார்கள். இவ்விழிகள் அனைத்தில் இருந்தும் தொட்டுத் தொட்டு பர்சானபுரியின் ராதையை என்னால் சென்றடைய முடிகிறது" என்றான்.

சாத்யகி "இளவரசராகிய உங்களுக்கு அப்பெண்ணை கொள்வதில் என்ன தடை? திரும்பிச்சென்றதும் அவளை அடையுங்கள்" என்றான். திருஷ்டத்யும்னன் "யாதவரே, அவள் விறலி. அவள் உடலை மலர்கொய்வது போல் என்னால் எடுத்துக்கொள்ள முடியும். அந்த மலரை எங்கு வைப்பதென்பது மட்டுமே என் முன்னிருக்கும் இடர்" என்றான். "பட்டத்தரசியாக்கப் போகிறீர்களா?" என்றான் சாத்யகி சிரித்தபடி. திருஷ்டத்யும்னன் "பிறிதொரு இடத்தில் அவளை வைக்க என்னால் முடியாது" என்றான். சாத்யகி புரவியின் கடிவாளத்தை இறுக்கி நிறுத்தி நின்றுவிட்டான். ஓரிரு அடிகள் முன்னால் சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க "என்ன சொல்கிறீர்கள் இளவரசே?" என்றான்.

திருஷ்டத்யும்னன் "என் ஐங்குலத்தைச் சாராத பெண்ணொருத்தியை அரசியாக்க என் குலம் ஒப்பாது. ஆனால் பிறிதொருத்தியை அவளுக்கு நிகர் வைக்கவும் என் உளம் ஒப்பவில்லை" என்றான். "ஆம். நீங்கள் பாஞ்சாலத்தின் மணிமுடி சூடப்போகும் இளவரசர். உமது பிறவிநூல் கணித்த அத்தனை நிமித்திகர்களும் அதை சொல்லியிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "ஆம் யாதவரே, மூன்று தமையர்களைக் கடந்து எனக்கு பாஞ்சால மணிமுடி வரப்போவதில்லை. ஆனால் எங்கோ நான் நாடாளப்போகிறேன் என்று எனக்கும் தெரிகிறது" என்றான்.

"ஐங்குலம் அவர்களின் நிலத்தில் நீங்கள் மணிமுடி சூடினால் அல்லவா உம்மை கட்டுப்படுத்த முடியும்?" என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் "ஆம், ஆனால் எங்கள் ஐந்து குலத்தின் படைவல்லமையின்றி நான் எங்கு சென்று எந்நிலத்தை வெல்லமுடியும்?" என்றபின் திருஷ்டத்யும்னன் தலையசைத்து "எண்ணப்புகுந்தால் வெட்டவெளியை சென்றடைகிறேன். என் நெஞ்சில் அவளிருப்பது அரியணையில். அதற்குக் குறைவான ஒன்றை அவளுக்களிக்க என்னால் இயலாது. மிக அருகே என அவ்விழிகளைக் காணும்போதெல்லாம் வாள் உருவி முடி தாழ்த்தி அவள் முன் மண்டியிடவே தோன்றுகிறது. பாஞ்சால இளவரசனாக அதைச் செய்ய இயலாது கட்டுண்டிருக்கிறேன்" என்றான்.

கோமதம் பெரியதோர் ஆடி போல நீள்வட்ட வடிவில் வான் பரப்பிக் கிடந்தது. அதை நோக்கி வளைந்திறங்கிய பாதை அருகே இருந்த சிறிய மரமேடையை சென்றடைந்தது. அவ்வேளையில் அங்கு எவரும் இருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் புரவியை பெருநடையாக்கி அருகே இறங்கி படிகளிலேறி மேலே சென்று இடை அளவு எழுந்த சுவரைப் பற்றிக் கொண்டு அப்பால் விரிந்து கிடந்த நீலநீர் வெளியை நோக்கி நின்றான். அவனுடைய நிழல் நீண்டு நீரில் விழுந்து சிற்றலைகள் மேல் நெளிந்து கொண்டிருந்தது. இரு புரவிகளையும் பற்றி அங்கிருந்த தறியில் கட்டியபின் சாத்யகி மெல்ல நடந்து அவனருகே வந்து சற்றுத்தள்ளி அவனருகே நின்றான். அவன் நிழல் நீரில் நீண்டு திருஷ்டத்யும்னனுக்கு இணையாக விழுந்து நெளிந்தது.

பின்னாலிருந்து விழுந்த ஒளியில் திருஷ்டத்யும்னனின் காக்கைச்சிறகு குழல்சுருள்களின் பிசிறுகள் பொன்னிறம் கொண்டிருந்ததை சாத்யகி கண்டான். நோக்கி நின்றிருக்கவே மேலும் மேலும் ஒளி கொண்டு பொற்சிலை என திருஷ்டத்யும்னன் மாறினான். மேற்கே கதிர் சிவந்தபடியே செல்ல வானில் விரிந்திருந்த முகில்களனைத்தும் செந்தழலாயின. திருஷ்டத்யும்னனின் மென்மயிர்கள் ஒவ்வொன்றும் செந்தழல் துளிகளாகத் தெரிந்தன. மனிதன் உருகி பொன்னாகும் கணம் என்று எண்ணியதுமே சாத்யகி அவ்வெண்ணத்தின் மீவிசையால் என மெல்ல அசைந்து பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் நீரில் பரவிய காந்தள்மாலை போன்ற ஒளிப்பாதையை நோக்கிக் கொண்டிருந்தான்.

அந்தக் கணத்தின் உணர்வெழுச்சியின் பொருளின்மையை உணர்ந்த உள்ளம் அதை கலைக்க விரும்பியது போல அவன் உடலை சற்று அசைத்தான். பின்பு "முற்றிலும் செயற்கையான ஏரியிது. வடக்கே கோமதியின் நீரை அணைகட்டி இரண்டு கால்வாய்களின் வழியாகக் கொண்டுவந்து இங்கே சேர்க்கிறார்கள். இதனடியில் இருப்பது வெறும் மணல். இங்கு வரும் நீர் அக்கணமே சல்லடைபோல மணலில் இறங்கி ஊறி கடலில் சென்றுவிடும். எனவே கால்வாய்களின் அடித்தளமும் இந்த ஏரியின் அடித்தளமும் முற்றிலும் கற்களால் பாவப்பட்டு சுதை பூசி இறுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர்கூட வீணாவதில்லை" என்றான்.

திருஷ்டத்யும்னன் குனிந்து அவன் நிழல் மேல் மொய்த்த மீன்களை நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் நிறமே கொண்ட சிறு விரல்கள். ஏரி தன் விரல்களால் அவன் நிழலுருவை அள்ளி அளைந்து விளையாடுவதைப் போல உணர்ந்தான். ஒரு கணத்தில் அந்த மீன்களின் தொடுகையை தன் உடலெங்கும் அறிந்து சிலிர்த்தான். அந்த இனிய தவிப்பிலிருந்து விலக முடியாதவனாக விலகத்தவித்து நின்றிருந்தான். சாத்யகி "இந்த ஏரியிலிருந்துதான் நகர் முழுக்க குடிநீர் செல்கிறது. மறுபக்கம் காற்றில் சுழலும் காற்றாடிகள் வழியாக குழாய்கள் நீரை அள்ளி மேலே கொண்டு செல்கின்றன" என்றான்.

அச்சொற்கள் பொருளற்று எங்கோ ஒலித்தாலும் அந்த உணர்வு நிலைக்கு அவை எப்படியோ துணையாக ஆவதையும் திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். பெரிய மீனொன்று ஏரியிலிருந்து எழுந்த கைபோல மேலே வந்து வளைந்து அவன் நிழலின் நெஞ்சில் பாய்ந்தது. ஆழ்ந்திறங்கி வால்சுழல மறைந்தது. திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சிலிறங்கிய குளிந்த வாளென அதை உணர்ந்தான். திரும்பி சூரியனை நோக்கி நின்றான். அவன் முகமும் தோள்களும் பற்றி எரிவதுபோல் செந்தழல் வடிவம் கொண்டன. சாத்யகி "தாங்கள் எண்ணுவதென்ன பாஞ்சாலரே?" என்றான். திருஷ்டத்யும்னன் "தெரியவில்லை. என் உள்ளம் எச்சொல்லிலும் நிலைக்கவில்லை" என்றபின் "இளைய யாதவர் விதர்ப்ப அரசியை ஏன் மணந்தார்? துவாரகையை ஓர் அரசாக ஆக்க ஷத்ரியர்களின் துணை தேவை என்று எண்ணினாரா ?" என்றான்.

சாத்யகி புன்னகைத்தபடி "அவர் எதையும் திட்டமிடவில்லை. பறவை ஒன்று மரக்கிளையில் வந்தமர்வது போல விதர்ப்ப அரசி அவரிடம் வந்தாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு" என்றான். "அவர் விதர்ப்பநாட்டுக்கு இளவரசியை கவர்ந்துவரச்சென்றபோது நானும் உடனிருந்தேன்."

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 1

வரதா என்ற பெயர் ருக்மிணிக்கு என்றுமே உளம் நிறையச் செய்யக்கூடியதாக இருந்தது. சிற்றிளமையில் அன்னையின் ஆடை நுனியைப் பற்றாமல் அவளால் படகில் அமர்ந்திருக்க முடிந்ததில்லை. அணிப்படகு அலைகள் மேல் எழுந்தமர்ந்து செல்கையில் அவள் ஆடையின் பொன்னூல்பின்னலை அள்ளி தன்மேல் சுற்றிக் கொண்டு, அதன் நூல்சுருளை விரலில் சுருட்டி வாயில் கவ்வி நின்று விழிவிரித்து வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்குவாள். படகின் அசைவு மிகுகையில் திரும்பி அச்சத்துடன் அன்னையை அணைத்துக் கொள்வாள். "இவள் ஏன் இத்தனை அச்சுறுகிறாள்? நீச்சல் அறிந்தவள் அல்லவா?" என்று தந்தை கேட்க அவள் அன்னை புன்னகைத்து "அவள் அச்சம் கொள்ளவில்லை. வேறேதோ உணர்வால் நெஞ்சு நிறைந்திருக்கிறாள்" என்றாள்.

பீஷ்மகர் அவளை அள்ளி தன்னருகே இழுத்து குனிந்து விழிகளை நோக்கி "என்ன உணர்வு கண்ணே?" என்று கேட்டார். "நானும் இவள் அச்சம் கொள்கிறாள் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் படகில் ஆற்றின் மேல் பயணம் செய்து மீள்கையில் அவள் கேட்கும் வினாக்கள் அவள் உள்ளம் எங்கெங்கோ ஓடுவதையே காட்டுகின்றன" என்றாள் அன்னை. அவள் தந்தையின் கைகளை உதறி அன்னையை நோக்கி செல்ல தந்தை அவளை மீண்டும் கை பற்றி தன்னருகே இழுத்து இடை வளைத்து உடல் சேர்த்து வலக்கையால் அவள் சிறு கன்னத்தைப் பற்றி மேலே தூக்கி விழிகளை நோக்கி கேட்டார் "எதைப் பார்க்கிறாய்? இந்த ஆற்றைப் பார்க்கையில் உனக்கு என்ன தோன்றுகிறது?அச்சமுறுகிறாயா?"

"இல்லை" என்று அவள் தலையசைத்தாள். "அப்படியென்றால்?" என்றார் தந்தை. அவள் கை நீட்டி "வரதா என்றால் என்ன பொருள்?" என்றாள். "வரம் தருபவள்" என்றார் தந்தை. "வரதா ஒரு மூதன்னை. நரைத்த வெண்தலைமுடிகொண்டவள். இனிய புன்னகை நிறைந்தவள். நமது கௌண்டின்யபுரியின் அத்தனை இல்லங்களுக்கும் கிணறுகளில் முலைப்பாலென ஊறி வருவது இவளுடைய நீர் அல்லவா? இந்த நதியின் கரையில் நமது முன்னோர் பிறந்தனர், மறைந்தனர். எரிந்து உப்பாக மாறி இதில் கலந்தனர். நாமும் இதன் கரையில் முளைத்தெழுந்தோம், இதன் நீரில் என்றுமிருப்போம்" என்றார். அன்னை "குழந்தையிடம் என்ன பேச்சு இது?" என்றாள். "குழந்தையல்ல, அவள் இந்த மண்ணின் இளவரசி. வரதாவும் அவளும் நிகர்" என்றார் பீஷ்மகர்.

"தந்தையே, நான் வரதாவை கனவில் பார்த்தேன்" என்றாள் அவள். "கனவிலா? படகில் சென்றாயா என்ன?" என்று தந்தை சிரித்தார். "இல்லை, ஒரு மூதன்னையாக என் கனவில் வந்தவள் இவளே" என்றாள் அவள். அன்னை சிரித்தபடி "இதெல்லாம் அவள் செவிலியன்னை அமிதையின் சொற்கள். குழந்தையின் நெஞ்சில் கதைகளை நிறைப்பதே அவள் வேலை" என்றாள். "சொல்! கனவில் எப்படி வந்தாள் வரதை? என்ன சொன்னாள்? என்ன செய்தாள்?" என்றார் தந்தை. இரு கைகளையும் விரித்து "மூதன்னை!" என்றாள் ருக்மிணி. "நீண்ட கூந்தல். முகமெல்லாம் சுருங்கி கையெல்லாம் வற்றி நன்றாக முதுமைகொண்டிருந்தாள். வெண்ணிற ஆடையும் வெண்ணிற தலைமயிரும் நுரைபோல காற்றில் பறந்தன" என்று சொன்னபின் திரும்பி தன் அன்னையைப் பார்த்து "அவள் விழிகளும் அன்னையின் விழிகள் போலிருந்தன" என்றாள்.

"ஆம, அப்படித்தானே இருக்கும்" என்று சொல்லி பீஷ்மகர் சிரித்தார். "என்னடி சொன்னாள் உன் நதியன்னை?" என்றாள் அரசி. "ஒன்றுமே சொல்லவில்லை. நான் என் அரண்மனைப் படிகளில் இறங்கும்போது முற்றத்தில் நின்றிருந்தாள். நீ யார் என்று கேட்டேன். வரதா என்று சொன்னாள். படியிறங்கி அருகே வரும்படி என்னை அழைத்தாள். நான் அவளை நோக்கி இறங்கும்போதுதான் பார்த்தேன் அவளுடைய ஆடை அந்த முற்றம் முழுக்க விரிந்து பரவியிருந்தது. வெண்ணிறமான அலைகளாக அது நெளிந்தது. முற்றத்தில் இறங்கியபோது அந்த ஆடையென்பது பால் நிறமான குளிர்நீரே என்று தெரிந்தது. என் முழங்கால் வரைக்கும் அந்த நீர் மேலேறி வந்தது" என்றாள் ருக்மிணி.

"நான் அருகே சென்றதும் அவள் என் தோளை வளைத்து மெல்ல அணைத்து என்னை நோக்கி குனிந்து கையை நீட்டு குழந்தை என்றாள். நான் கையை நீட்டியதும் ஒரு சிறிய நீலமணிக்கல்லை என் உள்ளங்கையில் வைத்தாள். நான் அதை நோக்கி வியந்து இது என்ன என்று சொல்லி தலை நிமிர்ந்தபோது அவள் இல்லை. முற்றத்தில் நான் மட்டும் நின்றிருந்தேன். என் அருகே மேலிருந்து பொழிந்தவை போல கொன்றை மலர்களும் நீலச் செண்பகமலர்களும் உதிர்ந்து கிடந்தன" என்றாள் ருக்மிணி. பின்னால் நின்றிருந்த முதிய சேடி "பொன்னும் மணியும் மலர்வடிவில்... கதைகளில் வருவதைப்போலவே" என்றாள்.

பீஷ்மகரும் அவர் அரசி சுஷமையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். "அந்த மணி எப்படி இருந்தது?" என்றாள் அரசி. "என் கையில் அதை அவள் தந்தபோது ஆலங்கட்டி போலிருந்தது. அதன் தண்மை தாளாமல் கைவிட்டு கை மாற்றிக் கொண்டேன். ஒரு சில கணங்களுக்குப் பிறகு அது அனலென சுடுவது போலத் தோன்றியது. ஓடிச்சென்று என் அறைக்குள் ஒரு சிறிய குங்குமச்சிமிழைத் திறந்து அதற்குள் அதை போட்டு வைத்தேன்" என்று சொன்னாள் ருக்மிணி. "குங்குமச்சிமிழை காலையில் திறந்து பார்த்தாயா?" என்று கேட்டு பீஷ்மகர் சிரிக்க, அவர் தொடைகளைப் பற்றிக் கொண்டு முகவாய் தூக்கி விழி விரிய "ஆம் தந்தையே, திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமே இல்லை" என்றாள். "ஆனால் சிமிழை மூடி கையில் எடுத்தால் உள்ளே ஒரு மணி இருப்பதை என்னால் உணர முடிகிறது."

"அசைத்துப் பார்த்தால் ஒலி கேட்கிறதா?" என்றார் பீஷ்மகர். "இல்லை. ஆனால் உள்ளே அந்த மணி இருப்பது தெரிகிறது. நான் அரண்மனைக்குச் சென்றதும் எடுத்துவருகிறேன், உங்களுக்கும் தெரியும்" என்றாள். பீஷ்மகர் "இவள் இங்கு வாழ்வதைவிட முகிலில் வாழும் நேரமே அதிகம் போலும்" என்று சொல்லி சிரித்தார். "முகிலில் வாழும் வயது அல்லவா? வளர்ந்தபின்னர்தான் மண்ணில் நூறுமடங்கு எடையுடன் ஒட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே" என்றாள் சுஷமை.

இளமைமுதலே வரதாவில் ஒவ்வொரு நாளும் படகில் செல்லவேண்டுமென்று ருக்மிணி உறுதி கொண்டிருந்தாள். கௌண்டின்யபுரியின் அரண்மனையின் பின்பகுதி நேராக வரதாவின் படித்துறை நோக்கி சென்று நீரில் இறங்கி அலைகளை அளைந்தபடி நிற்கும். அதன் இறுதிப்படியில் நிற்கும்போது நீருக்குள் சென்று ஆழத்து வானத்தில் அறுபட்டு நின்றிருக்கும் படிகளை காணமுடியும். அந்த விளிம்பிலிருந்து தாவி ஆழத்தில் விரிந்த நீலவானுக்குள் சென்றுவிட முடியும் என்று தோன்றும். அவள் அந்தப்படிகளில் நின்றிருப்பதை விரும்புவாள். அவளுக்கென்றே செய்யப்பட்ட அணிப்படகும் அதன் குகன் கர்க்கனும் அவளுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.

கோடையில் மாலை மங்கலாகத் தொடங்கியதுமே நகர்மக்கள் படகுகளில் ஏறி வரதாவின் மேல் செல்வார்கள். பட்டுப் பாய்களும் அணிபடாம்களும் ஒளிவிடும் வண்ணங்களில் ஆற்றின்மேல் சிறகு விரிக்க அவை காற்றில் மிதந்துசெல்லும் பட்டாம்பூச்சிகள் போல சென்று கொண்டிருக்கும். அவள் அரண்மனையின் உப்பரிகை ஆற்றை நோக்கி திறந்திருந்தது. அதன் மேலிருந்து பார்க்கையில் அவை மலர்க்கூட்டங்கள் அலைகளில் நெளிவது போல எழுந்தமைந்து செல்வது தெரியும். படகுகளில் இருந்து சூதர்பாடல்களும் அவற்றுடன் இழையும் இசையும் சிரிப்பொலிகளும் எழுந்து வரும்.

விதர்ப்ப நாட்டில் கோடை மிக நீண்டது. பகல் முழுக்க தெருக்கள் உலைக்களத்து வாள்கள் போல சிவந்து பழுத்து எரியும். கருங்கல் மதில்கள் அடுப்பின் மேல் வைக்கப்பட்ட கலங்கள் போல கொதிக்கும். சந்தனமும் வேம்பும் கலந்த குழம்பும் பன்னீரும் உடம்பில் தடவிக் கொண்டு கல் மஞ்சங்களில் இளைப்பாறி பகல் கழிப்பர் மக்கள். மாலையில் முதல் காற்று எழுந்ததுமே நகரம் களிப்போசையுடன் எழுவதை கேட்க முடியும். சற்று நேரத்தில் குளித்து புத்தாடை அணிந்து முகம் மலர களியாடியபடி நகர் மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்குவர்.

கௌண்டின்யபுரியின் மாளிகைகள் அனைத்திற்குமே வரதாவை நோக்கிச் செல்லும் பின்பக்கப்பாதை ஒன்றிருந்தது. செல்வந்தர் ஒவ்வொருவரும் தங்களுக்கென சிறுபடித்துறை ஒன்றை கொண்டிருந்தார்கள். அணிப்படகுகள் எத்தனை வைத்திருக்கிறார்கள் என்பதே அங்குள்ள உயர்குடியினரின் மதிப்பை அளப்பதாக இருந்தது. பீதர் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பெரிய வண்ணப்பட்டுப் பாய்களை ஒவ்வொருவரும் வாங்கி இல்லங்களில் சுருட்டி வைத்திருப்பர். பறக்கும் சிம்மநாகம் கொண்ட பாய்கள், முப்புரி வேல் ஏந்தி உருண்ட விழிதிறந்த யவனநாட்டு நீர்த்தேவன் வரையப்பட்ட கொடிகள். கலிங்கத்துப் பட்டால் அமைந்த பாய்களில் பல்தெரிய சீறும் சிம்மங்களும் அவற்றின் காலடியில் குறுகி ஒடுங்கிய யானைகளும் வரையப்பட்டிருக்கும்.

வசந்தமெழுகையில் கொன்றை பூப்பதற்கு முன்பே வரதா பூத்துவிடுவாள் என்று சூதர்கள் பாடுவதுண்டு. கௌண்டின்யபுரியின் மாளிகைநிரைகளை வரதாவில் அமர்ந்தபடி நோக்குவது ருக்மிணிக்கு ஒவ்வொருமுறையும் உளக்கிளர்ச்சியளித்தது. மாளிகைகளை பெரியபீடங்கள் போல கற்பாளங்களை அடுக்கி கூரையிட்டு அவற்றின்மேல் வரதாவின் வண்டலைப் பரப்பி மலர்ச்செடிகளை வளர்ப்பது விதர்ப்ப நாட்டு வழக்கம். தண்டகாரண்யத்தின் மேலைச் சரிவிலெழுந்த மலைப்பாறைகளை ஆப்புகளை அறைந்து பிளந்து தகடுகளாக வெட்டி எடுத்து வரதாவின் பெருக்கில் கொண்டு வந்து நகரில் இறக்குவார்கள். யானைகள் இழுக்கும் துலாக்கள் அவற்றைத் தூக்கி கற்சுவராலான மாளிகைகளின்மேல் சீராக அடுக்கும். சிலநாட்களிலேயே அந்தக்கூரைமேல் மலர்ச்செடிகள் பசுந்தளிர் தழைத்து எழுந்து வரும்.

மலைச்சரிவில் அமைந்திருந்த கௌண்டின்யபுரி படிகளாக இறங்கிச்செல்லும் மாளிகை முகடுகளால் ஆனது. அரண்மனை உப்பரிகை மீதிருந்து பார்க்கையில் மலர்த்தோட்டங்களின் அடுக்குகளாகவே நகரம் தெரியும். ருக்மிணி வடபுலத்துப் பெருநகர்களை பற்றி கேட்டிருந்தாள். அவை தாமரைமொக்குகள் போன்ற குவைமாடங்களும் வெண்ணிறமான பெரும்சுவர்களும் வளைமுகடுச் சாளரங்களும் கொண்டிருக்கும் என்று சூதர்கள் பாடினார்கள். "இங்கு ஏன் நாம் குவைமாடங்களை அமைப்பதில்லை?" என்றாள். "இளவரசி, விதர்ப்பம் அனலோனின் கைகளால் எப்போதும் தழுவப்பட்டது. அனலிறங்காவண்ணம் நாம் நமது கூரைகளுக்கு மேல் மலர்த்தோட்டங்களை அமைத்திருக்கிறோம். உள்ளே மலர்களின் மணமும் வரதாவின் தண்மையும் நிறைந்துள்ளன" என்றாள் செவிலியன்னை.

கௌண்டின்யபுரியின் மாளிகையின் அனைத்துச் சுவர்களும் கருங்கற்களாலானவை. கோடையிலும் அவை சற்று குளிர்ந்திருக்கும். கீழ்க்கதிர் எழும்போது அனல் மூண்டு சாளரங்களைக் கடந்து உள்ளே வரும் காற்று அவற்றை சற்றே வெம்மையுறச் செய்தாலும் இரவுகளில் மீண்டும் அவை குளிர்ந்து தென்றலை தைலம் தொட்ட இறகென ஆக்கும். இளவேனிலில் கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்களுக்கு மேலும் மலர்கள் பூத்து வண்ணங்கள் நிறைந்திருக்கும். நகர்மையத்தில் அமைந்த மூவிழியன் ஆலயத்தின் கோபுரத்தின் மேலிருந்து நோக்கினால் அது ஒரு பூத்த மலைச்சரிவென்று மட்டுமே தோன்றும், அடியில் ஒரு நகரமிருக்கும் எண்ணமே எவருக்கும் எழாது.

மழைக்காலத்தில் கௌண்டின்யபுரியின் மாளிகையின் சுவர்களனைத்தும் நீர் வழிந்து குளிர்ந்து நீராடிய குதிரைவிலா என நடுங்கிக்கொண்டிருக்கும். நீர்ப்படலம் பட்டெனப் பூத்திருக்கும் கற்பரப்புகளில் கைகளால் எழுத்துகளை வரைந்திட முடியும். ருக்மிணி தன் சுட்டுவிரலால் நீலம் என்று எழுதுவாள். செவிலியன்னை அவள் பின்னால் வந்து "அக்கனவை இன்னுமா எண்ணியிருக்கிறாய் பேதை?" என்றாள். "அது மீள மீள வருகிறதே அன்னையே" என்றாள் ருக்மிணி. "நமது கலவறையில் நீலமணிகள் குவிந்துள்ளனவே. ஏதாவது ஒன்றை எடுத்து நீ அணிந்து கொள்ளலாமே. நீலமணிகளை நீ தேர்வதே இல்லை" என்றாள் செவிலி. "அத்தனை நீலத்தையும் நான் பார்த்துவிட்டேன். அவையெல்லாம் வெறும் கற்கள். நான் வரதாவிடமிருந்து பெற்றது ஒரு நீல விழி. அது என்னை நோக்கும். நான் அதனுடன் விழி தொடுக்க முடியும்" என்றாள். "பித்தடி உனக்கு" என்று சொல்லி செவிலி அன்னை நகைத்தாள்.

மழைவிழுகையில் கௌண்டின்யபுரியின் அனைத்து தெருக்கள் வழியாகவும் நீரோடைகள் வழிகண்டு இணைந்தும் பிரிந்தும் பொழிந்தும் சென்று வரதாவில் சிற்றருவிகளென விழுந்து கொண்டிருக்கும். "கௌண்டியன் தன் அன்னைக்கு பளிங்குமணி மாலைகளை அணிவிக்கும் பருவம்" என்று பாடினர் சூதர். வரதா செந்நிறப்பட்டாடை அணிந்து பெருகி கரைகளை வருடிச் செல்லும் பருவம். ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் மழை நீலத்திரையென எழுந்து நின்றிருக்கும். தெற்குக் காற்றில் நெளிந்தாடி மறுகரை நோக்கி சென்று அங்குள்ள மரங்களை அறைந்து கொந்தளிக்கச்செய்தபின் சுழன்று திரும்பி வரும். வரதாவின்மேல் எப்போதுமிருக்கும் பறவைக்கூட்டம் அப்போது மறைந்திருக்கும். மழையுடன் மிக தனித்த உரையாடல் ஒன்றில் வரதா இருப்பதுபோல் தோன்றும்.

அந்த அமைதியை அறிவதற்கென்றே பெருமழையில் படகில் செல்ல வேண்டுமென்று ருக்மிணி விழைவாள். "மழைக்காலத்தில் வரதா கணிக்க முடியாதவள் இளவரசி. ஆற்றில் மூங்கில் கூட்டங்கள் சுழன்று மிதந்து வரக்கூடும். மலையிலிருந்து முதலைகள் இறங்கக்கூடும். இந்நகரில் எவரும் மழைபெருகிய வரதாவில் செல்வதில்லை" என்று செவிலி அவளை இளவயதிலேயே அச்சுறுத்தினாள். "ஒரு நாளேனும் வரதாவில் செல்லாமலிருக்க என்னால் முடியாது" என்று அவள் உறுதி சொன்னாள். அதன்பின்னரே அவளுக்கென்றே பீஷ்மகர் கூரையிட்ட மழைக்காலப் படகொன்றை செய்தார். மெழுகுப்பாய்க் கூரையிட்ட நீள்படகு முன்னும் பின்னும் இரு காவல் படகுகள் துணைவர பன்னிரு குகர்களால் நீள் கழியும் துடுப்புகளும் கொண்டு செலுத்தப்பட்டு வரதாவில் எழும்.

ருக்மிணி அமர்வதற்காக அதில் முகப்பருகே சிறு பீடமொன்றை அமைத்திருந்தனர். மழை கொதிக்கவைத்த வரதாவின் நீர்ப்பரப்பை நோக்கியபடி அவள் கைகளால் முகம் தாங்கி கன்னப்பிசிறுகளில் நெற்றிச்சுரிகளில் நீர்த்துளிகள் சுடர அமர்ந்திருப்பாள். விதர்ப்பத்தின் மழையும் கடுமையானதே. இடைவெளியின்றி பல நாட்கள் பெய்து கொண்டிருக்கும். விண்விழுதுகள் என்று அவற்றை சூதர் பாடுவர். முகில்கள் முற்றிலும் வானை மூடி கதிரென ஒன்று அங்கே எழுந்த நினைவையே நெஞ்சிலிருந்து அகற்றியிருக்கும். இனி இந்த மழை ஊழிக்காலம் வரை இவ்வண்ணமே தொடருமென்று உளமயக்கு ஏற்படும். எங்கும் தொழில்களேதும் நிகழாது. நகர் மாந்தர் அனைவரும் வீடுகளுக்குள் இரும்புக் கலங்களில் அனலிட்டு கூடி அமர்ந்து கதைகளை சொல்லிக் கொண்டிருக்க அவள் மட்டும் தனியே சிலிர்த்தும் சிரித்தும் நெளிந்தும் உவகை கொண்டிருக்கும் வரதாவின் மேல் தனித்து அமர்ந்திருப்பாள்.

"இந்த மழையில் என்னடி பார்க்கிறாய்? ஆறும் காற்றும் வானும் ஒன்றென தெரிகிறது" என்பாள் செவிலி. "இல்லையே. நான் பார்க்கிறேனே" என்பாள் ருக்மிணி. "எதை?" என்று அருகே நின்று செவிலி நோக்குவாள். "நீர் ஆழத்தில் பெரிய மீன்கள் மழைக்கென விழி திறந்து அசையாது நின்றிருப்பதை பார்க்கிறேன்" என்பாள் ருக்மிணி. "ஒவ்வொரு மீன் விழியிலும் ஒரு துளி நீலம் இருக்கிறது. அன்னையே, நான் கனவில் கண்ட அந்த நீலமணி இந்த ஆற்றின் ஆழத்தில் எங்கோ கரந்துள்ளது. மீன் விழிகள் ஒவ்வொன்றிலும் அதன் ஒளியை காண முடிகிறது" என்பாள். "பேதை என்று இப்பருவத்தை வீணே சொல்லவில்லை பெரியோர்" என்று செவிலி நகைப்பாள்.

மழை ஓயும்போது கீழ்வானில் பெருவாயில் ஒன்று திறப்பதுபோல முகில்கள் விலகி ஒளி பரவிய நீல வானம் தெரியும். கீழிருந்து ஒளி கொண்டு வரதா அதை அணுகிவரும். அந்த ஒளிபட்டதும் மழைசொட்டி கிளை குறுகி நின்றிருக்கும் கௌண்டின்யபுரியின் காடுகள் அனைத்திலும் இருந்து பறவைகளின் ஒலிகள் எழும். ஈரச்சிறகுதறி வானில் எழுந்து சுழன்று அவை மகிழ்வொலி எழுப்பும். காகங்களும் வெண்கொக்குகளும் கொற்றிகளும் நாரைகளும் நீர்ப்பரப்பின் மேல் எழுந்து சுழன்று அமிழ்ந்து எழுந்து பறக்கும். நிழல்சிறகுகள் நீருக்குள் நீந்திவர அணுகும் கொக்குக் கூட்டங்களை நோக்கி அவள் முகம் மலர்ந்திருப்பாள். சிறகு ஒடுக்கி மெல்ல வந்து தங்கள் நீர்ப்பாவைகள் மேல் அமர்ந்து மெல்லிய அலைகளை எழுப்பியபடி குவிந்து முன் செல்லும் நாரைக் கூட்டங்கள் அவள் உடலை சிலிர்த்து நெளிய வைக்கும்.

"என்னடி செய்கிறது?" என்பாள் அமிதை. "அவை தங்கள் சிவந்த கால்களால் என் உடலை துழாவுகின்றன" என்பாள். அவை தங்களுக்குள் முனகிக் கொள்ளும் ஒற்றைச் சொற்களைக் கூட அவளால் கேட்க முடியும். அவற்றின் உடலில் எழும் மெல்லிய சாம்பல் மணத்தை அவளால் முகர முடியும். ஐம்புலன்களும் கூர்தீட்டப்பட்டு உச்சநிலையில் நின்றிருந்த பருவம் அது. "பருவங்கள் நீர்நிலைமேலும் பேதைப்பெண்மேலும் படர்வதுபோல் எங்குமில்லை என்பார்கள் மூதன்னையர்" என்று செவிலி சொல்வாள்.

மழைக்காலம் முடிந்து மிகக்குறுகிய வசந்தம். கௌண்டின்யபுரியின் அனைத்து இல்லங்கள் மீதும் பசும்புல்லும் தளிர்செழித்த செடிகளும் முளைத்து பரவும். கற்சுவர்கள் முழுக்க பாசி படிந்து பச்சைப் பட்டாடை சுற்றியது போலாகும். கற்சுவர்களில் நெல்லிபோல சிற்றிலைவரிசை பரப்பில் வேர்பற்றி படர்செடிகள் எழுந்து இல்லங்களையும் அப்போது எழுந்த தளிர்கள் என காட்டும். கற்பாளங்கள் பரப்பப்பட்ட தெருக்களின் இடுக்குகளில் எப்போதும் கசியும் நீருக்குள் இளஞ்செம்மையும் பசுமையும் கலந்த நீர்ப்பாசி படிந்து பளபளக்கும். நீர் வழிந்த தடத்தில் படிந்த பாசியின் பசுமை சிலிர்த்த சுவர்களில் சிறிய பறவைகள் வந்து தொற்றி அமர்ந்து சிற்றலகுகளால் கொத்தி உணவு தேடும். சாளரங்களின் வழியாக அப்பறவைகளின் சிற்றொலியைக் கேட்டு குழந்தைகள் உவகைக் குரல் எழுப்புவார்கள். "சிற்பியின் கை தெரியாத சிற்றுளிகள்" என்று அவற்றை ருக்மிணி நினைப்பாள். உளி கொத்தும் ஒலிகளால் அவை அனைத்து மாளிகைகளையும் தொட்டுத் தொட்டு மீட்டிக் கொண்டிருக்கும்.

விதர்ப்பத்தின் குளிர்காலம் விரைந்து முடிந்துவிடும். பகல் முழுக்க வெயிலும் இரவில் குளிரும் என்பது அங்குள்ள பருவக் கணக்கு. காலை சற்று பிந்தியே விடியும். ஆடைகளை தலையையும் உடலையும் சுற்றிப் போர்த்தியபடி ஆயரும் பிறரும் ஒளி எழுந்த உடனே தெருக்களில் உடல் குறுகி விரைந்து சென்றுகொண்டிருப்பர். வணிகரும் உழவரும் வெம்மை எழுந்து தெரு காய்ந்த பிறகே இல்லம்விட்டு கிளம்புவார்கள். இரவெல்லாம் சொட்டிய பனித்துளியின் தடங்கள் படிந்த புழுதிப்பாதையில் குளம்புகள் பதிய மணியொலிக்க கன்றுகள் வரதா நோக்கி சென்று கொண்டிருக்கும். மாளிகை உப்பரிகை விளிம்பில் அமர்ந்த அவள் அவற்றின் ஒவ்வொரு குளம்படியையும் தன் விழிகளால் தொட்டெடுக்க முடியும் என்பது போல் பார்த்திருப்பாள்.

வெயில் தெருக்களை காயவைத்து பனிப்பொருக்குகளை மீண்டும் புழுதியாக்கி இலைகளை ஒளிரச்செய்யும்போது அணிபடாம்களை சுருட்டி மேலே தூக்கி கடைகளைத் திறப்பார்கள் வணிகர்கள். நகரம் ஓசை எழுப்பத் தொடங்கும். உச்சி ஏற ஏற வெம்மை கொண்டு நகரத்தெருக்கள் மீண்டும் கொதிக்கும். வெயிலுக்கு அஞ்சிய நகர்மக்கள் தங்கள் இல்லத்திண்ணைகளுக்கு திரும்புவார்கள். அங்கிருந்து வெண்வெயில் திரையென நின்றிருக்கும் தெருக்களை நோக்கியபடி அமர்ந்து கதை தொடுப்பார்கள். கௌண்டின்யபுரியின் சொல்வணிகம் முழுக்க அப்போதுதான் நிகழும் என்பார்கள் சூதர்.

மாலை எழுந்ததும் வரதாவிலிருந்து நீராவியும் நீர்ப்பாசியும் கலந்த மணத்துடன் வெம்மை கொண்ட காற்று எழுந்து நகர் மீது பரவி சாளரங்களைக் கடந்து இல்லங்களுக்குள் நுழைந்து வியர்வை வழிந்த உடல்களை ஆற்றி உப்புவீச்சம் கொண்டு செல்லும். மாலை மேலும் இருள்கையில் மறுபக்கம் தண்டகத்தின் காடுகளிலிருந்து வரும் குளிர்காற்று வீசத்தொடங்கும். அக்காற்றில் வரதாவின் நீரலைகள் குளிர்ந்து உலோகப் பரப்பு போலாகும். சால்வைகளை சுற்றிக்கொண்டு தெருக்களிலும் அங்காடிகளிலும் மக்கள் கூடி பேச்சொலிப்பார்கள். ஆலயங்களின் முன் கூடி வாழ்த்தெழுப்புவார்கள். இசைக்கூடங்களில் முழவுகளும் யாழ்களும் குழல்களும் இசை எடுக்கத்தொடங்கும்.

குளிர்காலத்திலும் வரதாவின் மேல் படகில் சென்றாகவேண்டும் என்பாள் ருக்மிணி. அணிப்படகில் ஏறி பட்டுச் சால்வையை கழுத்தைச் சுற்றி அமைத்து உடல் ஒடுக்கி அமர்ந்து கருமை கொண்டு ஆழம் மிகுந்து செல்லும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். குளிர் காலத்தில் விண்மீன்கள் முன்னரே எழுந்துவிடும். இரவு அடருந்தோறும் ஓசை மிகுந்ததாக ஆகும். நகரத்தில் விளக்குகள் எழும்போது சுடர் வரிசை வரதாவின் நீருக்குள் ஆழங்களில் அனல்கோடுகளை நெளிந்தாடச்செய்யும்.

நகரோசைகள் அனைத்தும் மெல்லிய பனிப்படலத்தால் மூடப்பட்டு நீருக்குள் என ஒலிக்கும். பொழுது மாறுதலை தெரிவிக்கும் பெருமுரசு தோல் நனைந்து ஒலிப்பது போல் எழும். கொம்போசை காட்டுக்குள் நெடுந்தொலைவில் கேட்கும் யானையின் சிறு பிளிறலென அதிரும். குளிர்காலத்து வரதா தனக்குள் ஏதோ இனிய நினைவொன்றைப் புதைத்து ஊழ்கத்தில் ஆழ்ந்தது போல் இருப்பாள். அதன்மேல் இன்னதென்றறியாத ஏக்கமொன்றைச் சுமந்து ருக்மிணி அமர்ந்திருப்பாள்.

வரதாவின் மேலே அவள் வளர்ந்தாள் என்று அமிதை சொல்வதுண்டு. "அன்னை பெற்றாள், நான் பேணினேன். வரதா அவளை பெண்ணாக்கினாள்" என்பாள். "மணம் கொண்டு இந்நகர் விட்டு செல்வாயல்லவா? வரதாவை எங்ஙனம் பிரிந்து செல்வாய்?" என்று தோழியர் கேட்பதுண்டு. "செல்கையில் வரதாவையும் ஒரு குவளையில் அள்ளிச் செல்வேன். செல்லும் நகர் பாலையாயினும் அந்நீரை ஊற்றி ஒரு பெரு நதி எழச்செய்வேன்" என்பாள் ருக்மிணி. பின்னர் நகைத்து "எனக்கு ஒரு துளியே போதுமடி" என்பாள்.

நள்ளிரவில் துயில் கலைந்து எழும்போதும் தன் உப்பரிகை மேல் வந்து நின்று தொலைவில் இருளுக்குள் எழுந்த இருள் நீலப் பெருக்காக தெரியும் வரதாவை நோக்கிக் கொண்டிருப்பாள். சில பொழுதுகளில் அவ்வண்ணமே விடியும் வரை அமர்ந்திருப்பாள். வரதாவில் விடியலெழும் அழகை ஒவ்வொரு நாளும் அன்று புதிதென காண்பாள். கிழக்கே எழும் முதல் ஒளிக்கசிவை வரதாவின் ஆழத்திற்குள் பார்க்கமுடியும். விடியலையே தன்னுள்ளிருந்து அவள் எடுத்து விண்ணுக்கு வழங்குவது போல. முத்துச் சிப்பியின் அகம் போல ஒளி பல நிறங்களில் வானிலிருந்து கசிந்துபரவும். வானே திவலைகளாக மாறி உதிர்வது போல் எழுந்து வரும் வெண்பறவைகள். கடந்து சென்ற பிறகும் அவற்றின் நிழல் ஆற்றின் அலைகளின் அடியில் எப்போதைக்குமென எஞ்சியிருப்பது போல் தோன்றும்.

விண்செந்நிறம் தேர்ச்சாலை போல சூரியனிலிருந்து அவளுடைய உப்பரிகை வரை நீண்டு வரும். அதனூடாக சூரியன் உருண்டிறங்கி அவள் மாளிகை முற்றத்திற்கு வந்து நிற்கும் என்பது போல. பாய்ந்திறங்கி அதன் வழியாக ஓடி இளநீலம் தகதகக்கும் அந்த வட்டக் கதவைத் திறந்து உள்நுழைந்து நீலப் பேரொளி நிறைந்த பிறிதொரு உலகுக்கு சென்றுவிட முடியும் என்பது போல.

இக்கனவுகளுடன் இங்கிருக்கிறேன் என்பதை எங்கோ எவரோ உணர்கிறார்களா என்ன? ஒரு போதும் ஒருவரும் உணராமல் போகும் கனவுகள் பார்க்கப்படாத மலர்கள்போலும். இவற்றை என்றேனும் சொல்லாய் சமைக்க என்னால் இயலுமா? என் உடல் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டிருப்பதை உணர்கிறேன். ஒவ்வொரு காலையிலும் எழுந்து என் முகத்தைப் பார்க்கையில் அங்கு முந்தையநாள் இரவு கனிந்து வந்த பிறிதொருத்தி நின்றிருப்பதை பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமையிலும் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.

என் நெஞ்சே, என்றோ எங்கோ நின்று திரும்பிப் பார்க்கையில் இவ்வினிய கனவுகளை எவருடையதோ என்று நினைவு கூர்வேனா? சுட்டு விரல் நீட்டி நான் கொண்டு செல்லும் இந்த நீர்த்துளி எத்தனை கணம் நீடித்திருக்கும்? என்றும் அழியாத வைரம் போல் இதை எங்கேனும் சேர்த்து வைக்க இயலுமா? அரியவை இலக்கின்றி நிகழ்வதில்லை என்பார்கள். இப்பெருங்கனவுகள் என்னுள் நிகழ்வதற்கு இவற்றை ஆக்கிய தெய்வங்கள் என்ன இலக்கு வைத்துள்ளன? தெய்வங்கள் சூடாத மலரேதும் இப்புவியில் மலருவதில்லை என்று விறலியர் பாடுவதுண்டு. எவர் சூடும் நறுமண மலர் இது?

ஏதோ நினைப்பிழந்து சில சமயம் அவள் நெஞ்சு நிறைந்து விழி கசிந்து விம்முவாள். தனிமையில் கைகளில் முகம் சேர்த்தமர்ந்து கண்ணீர் விடுவாள். அவள் விசும்பல் ஒலி கேட்டு ஓடி வந்து தோள் தொட்டு "என்னடி இது? ஏன் அழுகிறாய்?" என்பாள் அமிதை. "அறியேன் அன்னையே. அழுகையில் நானடைந்ததனைத்தும் நிறைவுறுகிறது என்று தோன்றுகிறது" என்று கண்களைத் துடைத்து புன்னகை செய்வாள். செவிலியன்னை தன் மேலாடையால் கண்களைத் துடைத்தபின் "நீ அழுவது துயரால் அல்ல என்று அறிவேன் மகளே. ஆயினும் உன் கண்ணீர் கண்டு என் நெஞ்சு நெகிழ்கிறது" என்பாள்.

ருக்மிணி "நானுணர்ந்த எதையும் என்னால் சொல்ல முடியவில்லை அன்னையே. ஆனால் எங்கோ ஒரு பாடலைக் கேட்கையில் அதன் ஒரு வரியில் அனைத்தையும் கண்டு கொள்கிறேன். நேற்று ஒரு சூதன் பாடிச் சென்ற வரி என்னை அதிரச் செய்தது. விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என்று அவன் பாடினான். பொருளற்ற சொற்கள் போலிருந்தன அவை. பொருளற்றவையாக இருக்கும்போது மட்டுமே சொற்கள் அடையும் பேரழகையும் ஆற்றலையும் அடைந்தவையாகத் தோன்றின. இன்னதென்றறியாமல் ஓர் அக எழுச்சி கூடி என் உடல் சிலிர்த்தது" என்றாள். "எவர் பாடிய வரி அது இளவரசி?" என்றாள் செவிலி.

பெருமூச்சுடன் ருக்மிணி "அப்போது நான் படகில் அமர்ந்திருந்தேன். அச்சூதன் பாடிக்கொண்டிருந்த சிறிய அணிப்படகு என்னை கடந்து சென்றது. அதை தொடர்ந்து செல்ல ஆணையிடலாமென்று எழுந்தேன். அச்சூதனை உடனே வரச்சொல்லி அப்பாடலை முழுதும் பாட வைக்கலாமென்று எண்ணினேன். எதையும் இயற்றாமல் அங்கிருந்தது என் உடல். வானில் கடந்துசெல்லும் பறவை எதிர்பாரா கணத்தில் தலைக்குமேல் சொல்லிச் சென்ற ஒற்றைக் கூவல் ஒலி போல அந்த வரியை மட்டும் என்னில் எஞ்சவிட்டு அப்படகு கடந்து சிறிதென ஆகிச்சென்று மறைந்தது. மீண்டும் ஒரு முறை அவ்வரியை நான் கேட்கவே போவதில்லை என்றுணர்ந்து பதற்றம் கொண்டு எழுந்தேன். அமரமுனை நோக்கி ஓடிச்சென்று அகன்று சென்ற அப்படகை பார்த்து நின்றேன். பின்னர் மீண்டு வந்து அமர்ந்தபோது நெஞ்சு தாளாத ஏக்கத்தால் நிலையழிந்து கண்ணீர் விட்டேன்" என்றாள்.

ருக்மிணி தொடர்ந்தாள் "அன்னையே, பிறகு அறிந்தேன். அந்த வரி எளிய ஒரு தற்செயலாக இருக்கலாம் என என் உள்ளம் சொன்னது அப்போது. அக்கணம் என் உள்ளம் எழுந்த உணர்ச்சியை அது ஆடி போல் எனக்குக் காட்டியிருக்கலாம் என்றும் அடுத்த வரியைக் கேட்டால் நான் எழுந்தமர்ந்த அந்த உச்சத்திலிருந்து விழுந்துவிடக்கூடும் என்றும் அஞ்சினேன். அவ்வரிக்கு நிகர் வைக்கலாகாது என்றே என்னை அறியாது அதை நழுவ விட்டேன். பிறிதொரு முறை அடையப்படாதவை விண்ணின் பெருவெளியில் எப்போதைக்குமென மறைந்து செல்கின்றன. முடிவிலியை ஒவ்வொரு கணமும் அவை உணர்த்துகின்றன. அவை தெய்வங்களுக்குரிய வரிகளாக ஆகிவிடுகின்றன."

"விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம் என அவ்வரியை ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு முறை என அப்பொழுது முதல் இக்கணம் வரை ஓயாது உரைத்துக் கொண்டிருக்கிறேன். என் உள்ளப் பெருக்கில் உருண்டுருண்டு அது மணியாக மாறிவிட்டிருக்கிறது. இங்கு அமர்ந்து ஒழுகும் பெருநதியை நோக்கி நிற்கையில் இதெல்லாம் என்ன என்ற பெருவியப்பை அடைகிறேன். இவை அனைத்தும் இனி மீளாது என்ற ஏக்கத்தையும் அடைகிறேன். ஏதோ சொல் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். இச்சொற்களின் பொருள் எனக்கும் தெரியவில்லை" என்றபின் அவள் கண்களை மூடி தன் தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தாள்.

அவளை நோக்கி புன்னகைத்து நின்ற அமிதை மெல்லிய குரலில் "தேவதைகள் சூழ பறக்கும் இனிய பருவமொன்றை கடந்து சென்று கொண்டிருக்கிறாய் இளவரசி. பின்னிரவுகளில் கனிகள் கனியும் மணத்தை காற்றில் உணரமுடியும். அந்தக் கனிமரம் தன்னுள் வேர் முதல் தளிர் வரை ஊறிய இனிமையை அக்கனியில் தேக்கும் கணம் அது. அது தெய்வங்களுக்குரியது" என்றாள்.

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 2

கோடைமுதிர்ந்து முதல்மழை எழுந்ததும் வரதாவில் புதுவெள்ளம் வரும். விந்தியனின் மேல் விழும் முதல் மழையின் தண்மை சில நாட்களுக்கு முன்னரே வரதாவின் நீர்ப்பெருக்கில் கைதொட்டால் தெரியும் என்பார்கள். முதுகுகர் கர்க்கர் ருக்மிணியை மடியிலமர்த்தி படகோட்டியவர். சிற்றிளமைநாளில் ஒருமுறை அவள் கையைப் பிடித்து ஒழுகும் நீரில் வைத்து "கண்களை மூடி நோக்குங்கள் இளவரசி" என்று சொன்னார். "வெப்பு நோய் உளதா என ஐயம்கொண்டு குழந்தையை தொட்டு நோக்கும் அன்னை போல் தொடுங்கள்" என்றார். அவள் "ஒன்றும் தெரியவில்லையே கர்க்கரே" என்றாள்.

"நீர்ப்பெருக்கின் தோல்போல ஒரு மேல்நீரோட்டம் ஒருவிரல் கணுவளவுக்கு இருக்கும். அதற்கும் அடுத்து விரலை நுழைத்தால் இரண்டாவது அடுக்கில் மெல்லிய வெய்யநீர் ஓட்டமொன்றை உணர்வீர்கள். மேலும் உள்ளே நுழைத்தால் மூன்றாவது விரல்கணு ஆழத்து ஒழுக்கில் நீங்கள் உணர்வது மேலும் மெல்லிய வெம்மையை அல்லவா?" என்றார் கர்க்கர். "ஆம்" என்றாள் ருக்மிணி. "மேலும் ஆழத்திற்கு கையை வைத்தால் வெம்மை மாறுவது தெரிகிறதா?" அவள் "ஆம்" என்று வியந்தாள். "மேலும் ஆழத்திற்கு செல்லுங்கள். என்ன உணர்கிறீர்கள்?" என்றார் கர்க்கர். "குளிரோட்டம்" என்றாள் ருக்மிணி.

"அதுதான்... மேற்கே மலையில் மென் தூறல் விழத்தொடங்கியுள்ளது" என்றார் கர்க்கர். "அது மழைநீரா என்ன?" என்றாள். "இல்லை. மழை மலைக்கு அப்பால் தென்னகத்து விரிநிலத்தைக் கடந்து விரிந்திருக்கும் கடலில் இருந்து வருகிறது இளவரசி. அது தெற்குச்சரிவில் பெய்து மலைகுளிர்ந்து போதும் என்றபின்னர்தான் வடக்குச்சரிவிற்கு ஏறிவரும். அவ்வாறு வருவதற்குள்ளாகவே தெற்குமழையால் மலைப்பாறைகள் குளிர்ந்து விடும். அக்குளிர் நீரோடைகள் வழியாக வரதாவில் கலக்கிறது" என்றார் கர்க்கர். "இன்னும் ஐந்து நாட்களில் வரதா புத்தாடை புனைவாள், பொன்னிறம் கொள்வாள்."

"நாட்கணக்கை எப்படி அறிந்தீர்கள்?" என்று ருக்மிணி வியக்க முதிய குகர் தன் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்து "அன்னையே, இந்நீர்ப்பெருக்கில் பிறந்தேன். இதிலேயே வளர்ந்தேன். நாளை என் சாம்பலும் இதில் கலக்கும்" என்றார். இல்லம் திரும்பி தன் மாளிகை உப்பரிகையில் அமர்ந்து தொலைதூரத்தில் தெரியும் விந்திய மலையின் முடிகளை அவள் நோக்கியிருந்தாள். அங்கு முகிலேதும் கண்ணுக்குப் படவில்லை. விழிகூசும் வெள்ளிநிற ஒளியுடன் தெரிந்த வானுக்குக் கீழே குழந்தை வரைந்த கோடு போன்று மலை விளிம்புகள் நெளிந்து அமைந்திருந்தன. அங்கிருந்து வருபவை போல சிறிய வெண்பறவைகள் சிறகுகளை உந்தி உந்தி அணுகி தங்கள் நீர் நிழல்கள் வரதாவின் பெருக்கில் விழுந்தமைய கடந்து சென்றன.

அவை சிறகு அடித்து வரும் காற்று மேலும் எடை கொண்டிருப்பதாக அவளுக்குத்தோன்றியது. அன்று மாலை கர்க்கரிடம் அதை சொன்னபோது "உண்மையிலேயே அப்படித்தான் இளவரசி. காற்றின் செறிவு மிகுந்திருக்கிறது. காற்றிலுள்ள நீரால் அப்பறவைகளுடைய சிறகுகளின் எடையும் மிகுந்திருக்கிறது. அவை நாம் மணலில் நடப்பது போல அழுந்தி சிறகுகளை அசைத்து பறந்து செல்கின்றன" என்றார். "அப்பறவைகளை நோக்கியே மழை வரப்போவதை சொல்ல முடியும்." ருக்மிணி "மழை எங்கு பெய்கிறது?" என்று கேட்டாள். "விந்திய மலையின் அடுக்குகளுக்கு அப்பால் தெற்கே இப்போது சாரல் அடித்துக் கொண்டிருக்கிறது. முகில்கள் ஆட்டு மந்தைகள் போல தவழ்ந்து மலை வளைவுகளில் மேலேறி வந்து கொண்டிருக்கின்றன" என்றார் கர்க்கர்.

முதிர்கோடையின் மாலை ஒன்றில் அவள் இருள்வதுவரை மலைமடிப்புகளை நோக்கிக் கொண்டிருந்தாள். மலையின் நீலநிறம் சற்று அடர்ந்து வருவதாகத்தோன்றியது. மலை மடம்புகளும், மரங்கள் எழுந்த மடிப்புகளும், அதிலுள்ள சிறு குகைகளும், உச்சியில் மாட்டின் பற்கள்போல் எழுந்து நின்ற பழுப்புநிறத் தனிப்பாறைகளும் மேலும் தெளிவு கொண்டன. மலைப்பாறைகளின் முகங்களில் இருந்த வடுக்களை நோக்கிக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை அந்த உப்பரிகையில் அமர்ந்து அந்த மலை மடம்புகளை அவள் நோக்கியிருப்பதாகத் தோன்றியது. மீள மீள அந்த மண்ணில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறேனா? மீளமீள இந்த இனம்புரியாத ஏக்கத்துடன் இருந்து கொண்டிருக்கிறேனா? இங்கிருப்பவள் எவள்? அந்த மலையுச்சிப்பெரும்பாறைகள் போல காலமறியாத கடுந்தவம் ஒன்றில் அமர்ந்துள்ளேனா?

வியர்வையில் நனைந்த ஆடையுடன் இறகுச்சேக்கையில் புரண்டாள். அவள் உடல்தொட்ட மரவுரிப்போர்வை நனைந்தது. மீண்டும் மீண்டும் எழுந்து மண்குடுவையில் இருந்த ராமச்சவேர் போட்ட குளிர்நீரை குடித்துக்கொண்டிருந்தாள். அன்று அவள் துயில நெடுநேரமாகியது. உடல் புழுங்கும்போது எண்ணங்களும் நனைந்த துணிபோல எங்காவது ஒட்டிநின்று படபடக்கின்றன.

நள்ளிரவில் எப்போதோ சாளர ஒலி கேட்டு எழுந்து நோக்கியபோது அறைக்குள் இளங்காற்று சுழன்று கொண்டிருந்தது. அதன் மணம் வேறுபட்டிருந்தது. வேம்பின் தளிரிலை மணமும் புங்கமரக்கிளைகளின் மெல்லிய அரக்குமணமும் கலந்த காற்றுதான் அவள் அறைக்குள் கோடையில் வீசுவது. விடியற்காலையில் என்றால் காலை மலர்களின் மணமும் துயிலெழுந்த பறவைகளின் புதிய எச்சத்தின் காரவீச்சமும் கலந்திருக்கும். ஓரிருமுறை அப்பால் கிளையிலெழுந்த தேன்கூட்டின் மணமிருந்தது. அன்று இருளுக்குள் காற்றில் மெல்லிய வெந்த மண் மணம் கலந்திருப்பது போல் தோன்றியது. எழுந்து மூச்சை இழுத்தபோது அந்தக் காற்று நனைந்திருப்பது போல, உள்ளே சென்றபோது நுரையீரலை எடை கொள்ளவைப்பது போல தோன்றியது.

சாளரத்தை பற்றியபடி வெளியே நோக்கினாள். அரண்மனை குறுங்காட்டில் இலைக்குவையென நின்ற மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. இலைகளின் ஓசை மழை ஒன்று நெருங்கி வந்துகொண்டிருப்பதைப் போல எண்ணவைத்தது. மழைதான் என்று எண்ணிக் கொண்டாள். எக்கணமும் மழை பெய்யக்கூடும். ஆனால் மெல்ல காற்று அடங்கியது. சாளரக்கதவு இறுதியாக வந்து மோதி பின்னகர்ந்து அமைந்தது. திரைச்சீலைகள் ஒவ்வொன்றும் சாளரங்கள் மேல் படிந்தன. காற்று நீர்வடிவமானது போல மூச்சுத்திணறலை உணர்ந்தாள். காது மடல்களில் நீராவியின் வெம்மை எழுந்தது.

சாளரக் கம்பிகளுக்கு அப்பால் தெரிந்த மரக்கிளைகள் ஒவ்வொன்றும் அசைவென்பதே அறியாதது போல நிழல்கோலமாக வானில் படிந்து நின்றன. விழிதெளிந்தபோது இருண்டவானின் கீழ் இருளென தொலைதூரத்து மலைகளை காணமுடிந்தது. அவள் அப்போது வரதாவை நோக்க விழைந்தாள். மஞ்சத்தறைக் கதவைத் திறந்து உப்பரிகைக்குச் சென்று கைப்பிடியைப்பற்றி வெளியே தொலைதூரத்தில் கரிய உலோகத்தின் ஒளியுடன் ஒழுகிக் கொண்டிருந்த வரதாவை நோக்கி நின்றாள். அங்கிருந்து தவளைக் குரல்கள் கேட்பதை அப்போதுதான் அறிந்தாள். பல்லாயிரம் தவளைகளின் விழிகள் இருளில் நீர்மணிகள் என மின்ன தொங்கும் தாடைகளின் துருத்திகள் விம்மி விம்மி அடங்கி எழுந்த முழக்கம் அந்நகர் மேல் படர்ந்தது. ஒற்றைச்சொல் ஒன்று உடையாத நீண்ட மெட்டாக மாறியது போல.

ஒவ்வொரு தவளையையும் விழியணுகி பார்க்க முடியும் போல் இருந்தது. ஒவ்வொன்றும் சொல்லிக் கொண்டிருக்கும் அந்தச் சொல்லை மிக ஆழத்தில் அவளும் அறிந்திருப்பது போல. அவள் விழி மின்னியது போல வரதா ஒளி கொண்டு கரைமரங்களையும் நீரலைகளையும் அதிரும் பெருந்திரைச் சித்திரமென காட்டி மறைந்தது. அவள் தலைக்கு பின்பக்கம் மிக அருகே பெருமுரசொன்று முழங்கியது போல இடி உறுமியது. உடல் விதிர்க்க சற்று பின்னடைந்து சுவர் சாய்ந்து நோக்கினாள். அடுத்த மின்னலுக்காக விழி கூர்ந்தாள்.

வான் நோக்கி விழி தூக்கலாகாது, மின்னல் விழிகளை அழித்துவிடும் என்று செவிலியன்னை சொல்லியிருந்தாள். ஆயினும் மின்னல் எழுகையில் வானை நோக்காமல் இருக்க அவளால் முடிந்ததே இல்லை. "விழியிழந்தாலும் மின்னலை இழக்க மாட்டேன்" என்று முன்னொருமுறை சொன்னபோது செவிலி அவள் தலையை தட்டி "தங்கள் விழிகளுக்காக இப்பாரதவர்ஷத்தை ஆளும் மாமன்னன் ஒருவன் எங்கோ பிறந்திருக்கிறான் இளவரசி" என்றாள். அறுபடாத எண்ணங்களின் பெருக்கை பொன்னிற வாளால் வெட்டியபடி அடுத்த மின்னலடித்தது. முகில்களில் இருந்து கொடிச்சரங்கள் கிளம்பி பலநூறு கிளைகளாக கணநேரத்தில் விரிந்து மண்ணைத் தொட்டு அளைந்ததை அவள் கண்டாள். இடியோசை நூற்றுக்கணக்கான முகில் சுவர்களில் முட்டி முட்டி உருண்டு மண்ணில் வந்து விழுந்து வெடித்தது. வரதா நீலப்பளிங்குப் பரப்பென தெரிந்து மறைந்தது.

மின்னல் மறைந்த மறுகணம் ஆழ்ந்த இருளொன்று சூழ அவள் மட்டும் தனித்திருக்க இடியோசையை தொலைவிலும் அண்மையிலும் ஒரேசமயம் கேட்டாள். மீண்டும் மின்னலுக்காக விழி கூர்ந்தபடி தூணை அணைத்தபடி சிறு பீடத்தில் அமர்ந்து மின்னல் நிகழும் நிகழும் என ஒவ்வொரு கணமாக எதிர்நோக்கி இருக்க உள்ளம் பொறுமை இழந்து மின்னலை அதுவே நிகழ்த்திவிடும் என எண்ணியபோது வானிலிருந்து ஒரு தளிர்மரத்தின் வேர் மண்ணுக்கிறங்கியது. அதை நோக்கி நகைத்தன திசைகள். பின் கரிய பெரு நாகம் ஒன்று வானிலிருந்து மண்ணை நோக்கி தன் நீண்ட செந்நிற நாத்துடிப்பை ஏவியது. அதன் உறுமல் ஓசையுடன் கரிய வால் நுனி எங்கோ தொலை தூரத்தில் நெளிந்தது.

நகரின் தெற்குவாயிலுக்கு அப்பால் விரிந்திருந்த காட்டில் இருந்து காற்று கிளம்பி வருவதை கேட்டாள். அசுரர் படையொன்று போர்க்கூச்சலுடன் பறந்து வருவது போல மரங்களை உதைத்து உலைத்து மாடங்கள் மேல் படர்ந்திருந்த மலர்த்தோட்டங்களை அலைத்து சுவர்களை அறைந்து ஒழுகிப்பரந்து சாளரங்களையும் கதவுகளையும் அசைத்து வந்தது. அவளது ஆடையை அள்ளி பறக்க வைத்தது. குழலை சிறகென எழுந்து நெளியச்செய்தது. விழி மூடி அந்தக் குளிர்த்தழுவலை உடலில் ஏந்தி நின்றாள். ஓரிரு மழைத்துளிகள் அம்புகள் போல அவள் கழுத்திலும் முலைகளிலும் இடுப்பிலும் பாய்ந்தன. சுவர்களில் விழுந்த மழைத்துளிகள் வழிந்து இணைந்து இழிந்து சுவர்மடிப்பில் சிற்றோடையாக மாறின.

காற்று ஓலமிட்டபடி மாளிகையின் அனைத்து அறைகளுக்குள்ளும் நுழைந்து நகைத்தபடிகூவி வெண்கலப் பாத்திரங்களை உருளச்செய்தது. திரைகளை திகைப்புகொண்டு படபடக்கச் செய்தது. மெல்லிய ஊளையுடன் மான்கண் சாளரங்கள் வழியாக கிழிபட்டு கடந்துசென்றது. அனைத்துப்புலன்களாலும் மழை மழை எனக்கூவியபடி அவள் அங்கே அமர்ந்திருந்தாள்.

புலரி எழுந்தபோது நகரம் இளமழைச்சாரலில் நனைந்து நின்றிருப்பதை அவள் கண்டாள். மாளிகையின் ஏழாவது அடுக்கில் ஏறி அங்குள்ள உச்சி நுனி உப்பரிகையில் நின்று சூழ நோக்கி கௌண்டின்யபுரியின் அனைத்து தெருக்களையும் சுற்றிச்சுற்றி நோக்கினாள். இல்லங்களின் மேல் படர்ந்த மலர்த்தோட்டங்களின் நடுவே பள்ளங்களில் ஈரம் பளபளத்தது. புதிய மலர்கள் நீரின் அறைபட்டுச் சோர்ந்து காற்றில் உலைந்த பறவைச்சிறகுகள் போல இதழ்கள் கலைந்து நின்றிருந்தன. இலைகள் அப்போதும் துளிகளை ஒளியென சொட்டிக் கொண்டிருந்தன. கூரைகளிலிருந்து ஊறி சுவர்கள் வழியாக வழிந்த மழைநீர் ஒளியே கறையாக மாறியது போல் தெரிந்தது.

அங்கு நின்று நோக்குகையில் ஒவ்வொரு இல்லத்திற்குள்ளும் ஒருகணம் ஒருகணமென வாழ்ந்து அவள் மீண்டாள். அத்தனை அறைகளுக்குள்ளும் குளிர் நிறைந்திருந்தது. அன்னையர் எழுந்து சென்ற மரவுரியின் வெம்மையில் உடல் குறுக்கி திறந்திருந்த தோள்களும் மார்பும் சிலிர்த்திருக்க குழந்தைகள் துயின்றன. குளிருக்கு உடல் சிலிர்த்து அசைத்த பசுக்களை ஓட்டியபடி ஆய்ச்சியர் வரதாவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரிய வெற்றுடலின்மேல் நீர்த்துளிகள் விழுந்து வழிய வேளிர் வேளாண் பொருட்களுடன் சென்றனர். வணிகர்கள் தோல் கூடாரங்கள் முகப்பிட்ட கடைகளை அப்போதும் திறந்திருக்கவில்லை. மெல்லிய காற்றில் புடைத்தெழுந்து மீண்டும் அமிழ்ந்து நீர்த்துளிகள் தெறிக்க ஒட்டகத்தோல் வளைவுகள் படபடத்துக் கொண்டிருந்தன.

அங்கு நின்றபோது ஒரு சிறுமியென அத்தெருக்கள் அனைத்திலும் ஓடி விளையாட வேண்டுமென்று உளமெழுந்தது. சிறிய பட்டாம்பூச்சியாக மாறி தெருக்களின் காற்றில் ஒழுகி அலையவேண்டும் என்றும் ஒரு பறவையென பறந்து வானில் தன் நிழலால் அந்நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டபடி பருந்தென சுழன்று வரவேண்டுமென்றும் விழைந்தாள். அவள் பின்னால் வந்து நின்ற அமிதை "இளவரசி, மழைத்தூறல் விழுகிறது. தாங்கள் இப்போது வரதாவில் செல்ல விழைவீர்களா?" என்றாள். "ஆம். உடனே " என்றபின் அவள் துடிப்புடன் எழுந்து உள்ளறைக்குள் சென்றாள்.

"முதல்மழைப்பருவம் எழுந்துவிட்டது" என்றாள் செவிலி. "தளிர்ப்பருவம் இது. இளம்பச்சை ஆடைகள் எடுத்து வைத்திருக்கிறேன்." ருக்மிணி ஆடைகளை குனிந்து நோக்கினாள். தளிர்மெருகு கொண்ட பச்சைப் பட்டாடையை நோக்கி "இதை அணிந்து கொள்கிறேன்" என்றாள். அவளை எதிர்நோக்கி வந்த இரு சேடியர் "இளவரசி, நீராட்டறை ஒருங்கிவிட்டது" என்றனர். அவர்களுடன் சென்று இளவெம்மை கொண்ட நறுநீரில் ஆடி, குழல் புகையிட்டு ஆற்றி, நறுஞ்சுண்ணம் பூசி திரும்பி வந்தாள்.

ஆடை அணிந்து அணி புனைந்து அவள் கீழே வந்தபோது மாளிகையின் படகுத்துறையில் அணிப்படகு இளம்பச்சை நிறப் பாய்களுடன் சித்தமாக இருந்தது. அமர முனையில் நின்றிருந்த முதிய குகர் கர்க்கர் கண்கள் சுருங்க கன்ன மடிப்புகள் இழுபட்டு நெளிய "தலை வணங்குகிறேன் இளவரசி. தளிர் கொண்டுவிட்டீர்கள்" என்றார். "ஆம்" என்று அவள் சிரித்தாள். "மலர்கொள்ள வேண்டும் விரைவில்" என்றார் கர்க்கர். அவள் சிரித்தபடி நடைபாலத்தினூடாக ஏறி படகின் உள்ளே சென்று தனது பீடத்தில் அமர்ந்தாள். கர்க்கர் வந்து நீண்ட கழியை நீருக்குள் ஊன்றி உன்னி படகை தள்ளினார். அலையில் வந்து கரை முட்டி மீளும் நெற்று போல படகு ஒழுக்கில் எழுந்தது.

"ஜனகனின் மகளே எழுக!

திருவின் உருவே புவியின் வடிவே

நீலமணியின் நெருப்பொளியே எழுக!

நீர்மேல் எழுந்த நிலவே எழுக!"

என்று பாடியபடி கர்க்கர் தன் கழியை ஊன்றி படகை மேலும் மேலும் ஒழுக்கை நோக்கி கொண்டு சென்றபின் அதை நீள்வாக்கில் படகின் விளிம்பில் பொருத்திவிட்டு இரு துடுப்புகளை எடுத்துக்கொண்டார். அவரது இறுகிய தசைநார்கள் சிற்றலைகள் என நெளிய கைகள் சுழன்றன. மீன் சிறகுகள் போல எழுந்து நீரில் ஊன்றி வளைந்தெழுந்த துடுப்புகள் படகை முன்கொண்டு சென்றன.

"இன்னும் புது வெள்ளம் வரவில்லையே?" என்றாள் ருக்மிணி. "இப்போது தொட்டுப்பாருங்கள் இளவரசி" என்றார் கர்க்கர். அவள் குனிந்து கையை நீர்ப்பரப்பில் வைத்தாள். முன்பு ஒரு விரல்கணுவின் ஆழத்திற்கு இருந்த அந்த வெம்மை கொண்ட நீர்ப்படலம் மறைந்திருந்தது. நீரின் மேற்பரப்பே பனியில் கிடந்த பட்டாடை போலிருந்தது. கர்க்கர் சிரித்தபடி "வெம்மை முழுக்க கடலுக்கு சென்றுவிட்டது. குளிர் நீர் வந்து கொண்டிருக்கிறது" என்றார்.

ருக்மிணி விழிதூக்கி மேற்கு மலைகளை நோக்கினாள். அவை மிக அருகே கட்டப்பட்ட நீலத் திரைச்சீலைகள் போல தெரிந்தன. அவற்றில் இருந்த மலைமடிப்புகளனைத்தும் மறைந்து நீலப் புகையால் ஆனவை போல் எழுந்திருந்தன. எடையற்றவை போல. மழைக்காற்று அவற்றை ஊதிச் சிதறடித்துவிடும் என்பது போல. "முகில் மூடிவிட்டது. அங்கு பெருமழை நின்று பெய்து கொண்டிருக்கிறது" என்றார் கர்க்கர்.

"அங்கு நின்று மழை பெய்வது எப்படி தெரியும்?" என்றாள். "அதோ தெரியும் நீலப்புகை மழைதான்" என்றார் கர்க்கர். அவள் மலைசூடிய மழையை நோக்கிக் கொண்டே இருந்தாள். "மழையின் நிறம் நீலமா?" என்று கேட்டாள். "இந்திரநீலம்" என்று அவர் மறுமொழி சொன்னார். "நீலம் அருளின் நிறம்" என்றார் குகர். "இப்புவியை அணைத்திருக்கும் இருள் நமக்கென புன்னகை கொள்வதன் நிறம் அது. புடவியை அணைத்திருக்கும் முடிவிலா பேரருள் நமக்கென கனிந்து செய்யும் புன்னகை."

ருக்மிணி மலையின் நீலத்தை நோக்கி விழி மலர்ந்து அமர்ந்திருந்தாள். அதை நீலமென எண்ணும்போதே சாம்பல் நிறமென்றும் சற்று விழிதிருப்பி மீண்டு நோக்கும்போது மெல்லிய பட்டுநீலம் என்றும் அதன் மேல் சூரிய ஒளி விழுகையில் நீர்நீலம் என்றும் விழிமயக்கு எழுந்தது. நீலத்திலிருந்து விழி விலக்க முடியவில்லை. அவள் வரதா தனக்களித்த கனவை எண்ணிக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அந்நினைவு கனவு மீள்வதுபோலவே எழுகிறதென்பதை வியந்தாள்.

வரம்தருபவள் கனவில் வந்தளித்த அந்த மணியை அவள் பலமுறை மீள மீள நோக்கியிருக்கிறாள். உள்ளங்கையில் வைத்து அதை நோக்குகையில் மண் மீது அமைந்த ஒரு நீலமலை அது என தோன்றியது. திகைப்புடன் விழி விலக்கி அங்கிருந்து தெரிந்த மலை அடுக்குகளை நோக்கியபோது அவள் கையில் வரதா கொண்டு வந்து வைத்து அளித்த அந்த மணியின் வடிவும் அதுவே என்று அறிந்தாள். இது உளம் கொள்ளும் விளையாடலா என்று வியந்தாள். இல்லை என்று மீண்டும் மீண்டும் திகைப்புடன் அறிந்து கொண்டாள். கௌண்டின்யபுரியின் மேல் ஓங்கி நின்றிருந்த ஹஸ்தகலசம் என்ற மலையின் அதே வடிவைத்தான் அந்த மணியும் கொண்டிருந்தது.

கர்க்கர் வரதாவின் நடுச்சுழலில் படகை மெல்ல திருப்பியபடி "நாளை மறுநாள் வரதாவில் புதுவெள்ளம் பொங்கிச் செல்லும். புது வெள்ளவிழவுக்கு அதற்குள் நாள் குறித்திருப்பார்கள்" என்றார். ருக்மிணி திரும்பி "ஆம்" என்றாள். கர்க்கர் "எங்கள் குலமூத்தார் எழுவரிடம் அமைச்சர் இன்று காலை தூதர்களை அனுப்பியிருக்கிறார். புது வெள்ளம் வரும் பொழுதை அவர்கள் இப்போது குறித்து அனுப்பியிருப்பார்கள். நாளை உச்சிப்பொழுது கழியும்பொழுது வரதா நிறம் மாறத்தொடங்கும். மாலையில் இளஞ்செம்மை அடையும். நாளை மறுநாள் காலையில் சேற்றுமண்ணும் மலைமலர்களும் காட்டின் மணமும் கொண்டு புதுவெள்ளம் சுழித்துச் செல்லும். இன்னொரு இனிய வருடம் தொடங்கும்" என்றார்.

புதுவெள்ளம் வரும்போது ஆயரும் உழவரும் அதை வணங்கியாக வேண்டுமென்பது கௌண்டின்யபுரியின் தொல்குடிநெறிகளில் ஒன்று. அதை விருஷ்டிப் பெருநாள் என்று அழைத்தனர். வரதாவில் வரும் புதுவெள்ளம் அதன் அலைநுரை விளிம்பில் செந்நிற நுரைக் குமிழிகளாக மென்மையான சேற்றை கொண்டிருக்கும். அலை பின்வாங்கி படிகையில் அந்தச் சேற்று வளையங்கள் கரைமணலில் பால் அருந்திய மகவின் மேலுதட்டில் நுரை என எஞ்சும். சுட்டு விரலால் அவற்றை வழித்து சந்தனம் என கைகளிலும் நெற்றியிலும் அணிந்து கொள்வர் வேளிரும் ஆயரும். குலமூத்தார் கலங்கிய மழைநீரை அள்ளி முகம் கழுவுகையில் "இன்னொரு ஆண்டு இளமை கொண்டீர்" என்று கேலிபேசி சிரிப்பார்கள். கன்றுகளை கொண்டுவந்து அந்தச் சேற்று மணம் காட்டி களிவெறி கொள்ளச் செய்வார்கள்.

நீரில் சுழன்றுவரும் மலைமலர்களும் சேறும் கலந்து கரையோரப் பாறைகளில் மணல் கரைகளில் விரித்த அடுக்குவிசிறி என படிந்து உருவாக்கும் சித்திரத்தைக் காண நகர் முழுக்க இருந்து குடிகள் எழுந்து வருவார்கள். எத்தனை அடுக்கு என்று நோக்குவது தொல்வழக்கம். வெள்ளம் வடிந்தபின் அவற்றை எண்ணுவார்கள். பன்னிரண்டு அடுக்குகள் இருக்கும் என்றால் அந்த வருடம் மண் நிறைந்து பொலியும் என்பது வேளிர்களின் கணிப்பு. அவ்வருடம் கன்று பெருகும் கலம் நிறையும் என்பது ஆயர் துணிபு.

இளமை முதலே பார்த்திருந்த ஒவ்வொரு புதுவெள்ளத்தையும் அவள் நினைவு கூர்ந்தாள். ஒவ்வொரு முறையும் வரதா வடிந்தபின்னும் நெஞ்சுக்குள் அப்பெருக்கு எஞ்சியிருப்பது போல தெரியும். வெள்ளம் வந்த சுவடே இன்றி முன்னால் வரதா ஓடிக்கொண்டிருக்கும். அவள் குனிந்து மீண்டும் மீண்டும் வரதாவின் நீரையே அள்ளி அளைந்து கொண்டிருந்தாள். கர்க்கர் அவளை நோக்கி சிரித்து "தங்கள் உள்ளத்தில் புதுவெள்ளம் பெருகிவிட்டது இளவரசி" என்றார். "என்ன பேசுகிறீர்?நான் நீரை நோக்குகிறேன்" என்றாள் அவள் பொய்ச்சீற்றத்துடன். "நூற்றுக்கணக்கானமுறை என் மடியில் நீர்கழித்திருக்கிறீர்கள் நீங்கள். உங்கள் அகம் அறிய எனக்கு வேறுவிழி ஒன்று தேவையா என்ன?" என்றார் கர்க்கர்.

அவள் "என்ன அறிந்தீர்?" என்றாள். "வந்துவிட்டான்" என்றார். "யார்?" என்றாள். "விழைபவன்" என்றார். "யாரென நானறியேன் கர்க்கரே" என்று அவள் சொன்னாள்.

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 3

கார்காலத்து முதல் மழை வருவதை ருக்மிணி வரதாவில்தான் நோக்கினாள். தெற்கே ஒளிகொண்ட வரதாவின்மேல் ஒளியுடன் எழுந்த வான்விளிம்பில் இளங்கன்னத்தில் ஒட்டிய மயிரிழை எனத்தெரிந்த கோடு அலைவுறுவதை காண முடிந்தது. அந்தக்கோடு அணுகிவருவதுபோல் தோன்றியது. விழிகூர்ந்து நோக்க நோக்க நெளிந்து துடிக்கும் தொடுவான்சரடு வரதாவை ஒரு பட்டுப்பாய் சுருண்டு வருவதுபோல அணுகியது. பின் அவள் நீரின் ஓசையை கேட்டாள். வரதாவையும் கரையோரக் காடுகளையும் அறைந்தபடி மழை நெருங்கி வந்தது. அது வந்துவிட்டது என அவள் உணரும்போதே அவள் மாளிகையின் கூரை ஓலமிடத் தொடங்கியது. திரும்பி மறுபக்கம் பார்க்க கௌண்டின்யபுரியின் கூரையென அமைந்த அனைத்து மலர்த்தோட்டங்களையும் அறைந்து சாய வைத்தபடி மழை கடந்துசென்றது.

மழை ஒளி ஊடுருவும் மாட்டுக்கொம்புச் சீப்பு போல காட்டையும் தோட்டங்களையும் சீவிச் செல்வதாக எண்ணினாள். இல்லங்கள் மேல் நீர் ஓட கணநேரத்தில் நகர் நிறம் மாறியது. அடர்ந்து பின் நீர்த்திரையால் மூடப்பட்டு மங்கலாகியது. அவள் நோக்கியிருக்கையிலேயே நகரின் அனைத்து சாலைகளிலும் நீர் ஓடத்தொடங்கியது. படிப்படியாக இறங்கி வரதாவை நோக்கி சென்ற நகரின் தெருக்களிலிருந்து தெருக்களுக்கு பல நூறு நீரோடைகள் சிற்றருவிகளாக கொட்டின. பொன்னிறக் கணையாழிகள். கைவளைகள். நெளியும் பட்டுச்சால்வைகள்.

அணி செய்யப்பட்ட மங்கையின் உடல் போல் ஆகியது கௌண்டின்யபுரி. அணிமங்கை கொள்ளும் உடல் நெளிவுகள். ஆடைக்குழைவுகள். நாணம்கொண்ட நங்கை ஆடையை இழுத்து முழுமையாக மூடிக்கொண்டாள். அனைத்தும் மறைய ருக்மிணியைச் சூழ்ந்து மழை மட்டுமே நின்றிருந்தது. மழை சொல்லும் ஒற்றைச் சொல் அன்றி எதையும் செவி அறியவில்லை. தன் உப்பரிகையில் அமர்ந்திருக்கையில் மழைதழுவிக்கரைக்கும் உப்புச்சிலையென ஆனாள். பிறிதிலாமலாகி நீரில் கரைந்து வரதாவில் சென்று மறைந்தாள்.

செவிலி வந்து வாயிலில் நின்று "உள்ளே வந்தமருங்கள் இளவரசி. இனி இன்று மாலை முழுக்க மழைதான்" என்றாள். அவள் உள்ளே சென்றபோது ஆவி எழும் இன்கடுநீரை மரக்குவளையில் அளித்தபடி "தங்களை ஈரம் ஒன்றும் செய்வதில்லை என்றாலும் கார்காலத்து முதல்மழை உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல" என்றாள். "இந்த மழையில் நகரில் அனைவரும் ஈரமாகத்தான் இருப்பார்கள்" என்றாள் ருக்மிணி. செவிலி நகைத்தபடி "இன்று சிறுவர் சிறுமியரை மழையில் இறங்க விடமாட்டார்கள் இளவரசி. நாளை புலரியில் புது வெள்ளம் கொண்டாடும் நாள். அதற்கு எழமுடியாது ஆகிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும்" என்றாள்.

"புதுவெள்ள நீராட்டு விழா அறிவித்தாகிவிட்டதா?" என்றாள் ருக்மிணி. "நாள் குறித்துவிட்டார்கள். இந்த மழை சற்று ஓய்ந்ததும் மணியோசை வழியாக நகருக்கு அறிவிப்பார்கள். அது முறையான அறிவிப்பு மட்டுமே" என்ற அமிதை "அது தெய்வங்களுக்கான அறிவிப்பு. இங்குள்ள மானுடரனைவருமே முன்னரே அறிந்து விட்டனர். நாளை புதுநீராட்டு என்று கன்றுகளும் அறிந்திருக்கும்" என்றாள். "வரதா செந்நிறம் கொண்டுவிட்டதா?" என்றாள் ருக்மிணி. "இப்போது வரதா இருப்பதே தெரியவில்லையே" என்று அமிதை நகைத்தாள். "மாலையில் மழை சற்று விலகுமென்றால் பார்க்கலாம் வரதாவின் செந்நிறத்தை."

ருக்மிணியின் குழலை மரவுரியால் நீவித் துடைத்துக் கொண்டிருந்த இளம் சேடி "நீர்நிறம் மாறிவிட்டது என்றான் தெற்குவாயில் காவலன்" என்று சொன்னாள். அமிதை "எந்தக் காவலன்?" என்று கேட்டாள். "குகர்களின் குலத்துதித்த காவலன், கிருபன் என்று பெயர். கீழே தெற்கு அரண்மனைவாயிலில் காவல் நிற்கிறான்" என்றாள் சேடி. "என்ன சொன்னான்?" என்று அமிதை கேட்டாள். "என் கைபற்றி சாளரத்தருகே கொண்டு சென்று வரதாவில் புது வெள்ளம் வந்துவிட்டது காண் என்றான்" என்றாள் சேடி. "எப்படி அவனுக்குத்தெரியும்?" என்றாள் ருக்மிணி.

"சேற்று மண் மணம் எழுகிறது என்றான். என்னை சாளரத்தருகே நிற்கச்செய்து கண்களை மூடி இந்தக் காற்றை முகர்ந்துபார் என்று சொன்னான். முதலில் நீர் மணம். அதன் பின் ஈரம் கொண்ட தழைகளின் மணம். அதன் பின் கலங்கிய கரை சேற்றின் மணம். ஒவ்வொன்றையாக சித்தத்தில் எடுத்து தனித்து விலக்கிய பிறகு நான் பெருகும் வரதாவின் புதுச் சேற்று மணத்தை அறிந்தேன்" என்றாள் சேடி. "அது சற்று பழகிய சந்தனமும் சுண்ணமும் சேர்ந்த மணம் கொண்டிருந்தது."

அமிதை ஐயத்துடன் அவளை நோக்கி "குகனிடம் உனக்கென்ன குலாவல்?" என்று கேட்டாள் அவள் தலை குனிய ருக்மிணி அவள் மெல்லிய கரத்தைப்பற்றி "நறுமணத்தை உணரச்செய்பவன் நல்ல காதலனே" என்றாள். செவிலி அவளிடம் "உங்களுக்கு எவரிந்த நறுமணங்களை சொல்லித்தந்தனர்?" என்றாள். "இன்னமும் நான் அறிந்திராத காதலன் ஒருவன்" என்றாள் ருக்மிணி. "ஒவ்வொரு மணமாக விலக்கி தன் மணத்தை அறிவிப்பவன்."

ஆடைமாற்றும் தன் அறைக்குள் சென்று பீடத்தில் அவள் அமர்ந்தபோது அரண்மனைப்பகுதியிலிருந்து மூச்சிரைக்க ஓடிவந்த சேடி அவளிடம் "புதுவெள்ள விழவின் அறிவிப்பு விடுத்தாகிவிட்டது இளவரசி. அரண்மனை அலுவலர் அனைவருக்கும் ஓலை அளித்துவிட்டாரகள். நகரின் பன்னிரு மையங்களில் மழை விட்டதும் பெருமணி ஒலிக்கும். நாளை முதல் ஒளி எழுந்ததும் மன்னர் நதி தொட்டு புதுநீர் வணங்கும் நிகழ்வை தொடங்கி வைப்பார்" என்றாள். அமிதை "ஓலை பொறித்துவிட்டார்களா?" என்றாள். "நான் ஓலை எழுதப்படுவதை கேட்டேன்" என்றாள் அவள்.

ருக்மிணி முகம் மலர "தந்தை என்ன செய்கிறார்?" என்றாள். "அரசாணைகள் ஏட்டில் பொறிக்கப்படுகின்றன. அரசர் தனது அறைக்குள் மதுக்கோப்பையுடன் மழை பெய்வதை நோக்கி அமர்ந்து இசை கேட்கிறார். பட்டத்து இளவரசர்தான் ஆணைகளை பிறப்பித்தார்" என்றாள் சேடி. "அரசரின் முத்திரைக் கணையாழி அவரிடம்தான் இன்றுள்ளது" என்றாள் அமிதை. "நான் தமையனை இப்போதே பார்க்க விழைகிறேன்..." என்றாள் ருக்மிணி.

"இளவரசி, நேற்றே சேதி நாட்டு அரசர் சிசுபாலர் நகர் புகுந்துவிட்டார். பட்டத்து இளவரசர் இன்னும் சற்று நேரத்தில் சேதி நாட்டு அரசர் தங்கியிருக்கும் பிருங்கமலைச்சரிவின் வசந்தமாளிகைக்கு செல்லவிருக்கிறார். அவர்கள் இரவு அங்குதான் தங்குகிறார்கள். இரவு நெடுநேரம் மதுவருந்திக் களிப்பதாகவும் விறலியரையும் பரத்தையரையும் பாணர்களையும் அமைச்சர்கள் அங்கு அனுப்புவதாகவும் சொல்கிறார்கள்" என்றாள் சேடி. ருக்மிணி "சேதி நாட்டு அரசரா? அவர் வந்தது எனக்குத் தெரியாதே" என்றாள் .

"மழை கருத்த நாள் முதல் தாங்கள் இங்கில்லையே. இங்குசூழும் எச்சொல்லும் தங்கள் செவி கொள்ளவில்லை" என்றாள் அமிதை. "சேதிமன்னர் சிசுபாலர் வந்தது முறைப்படி முரசறைவிக்கப்பட்டது. நகர்க்கோட்டை வாயிலுக்கே பட்டத்து இளவரசர் சென்று எதிரேற்று அவரை அழைத்து வந்தார். இந்நகரமே அவர் வந்திருப்பதை அறியும். நம் குடியினர் நாளை வெளியாகப்போகும் அறிவிப்பு ஒன்றுக்காக காத்திருக்கின்றனர்" என்றாள் சேடி.

"என்ன அறிவிப்பு?" என்றாள் ருக்மிணி. "தாங்கள் அறியாததா?" என்றாள் சேடி. "உண்மையிலேயே அறியேனடி. என்ன அறிவிப்பு?" என்றாள் ருக்மிணி. "தாங்கள் இவ்வுலகிலேயே இல்லை என்று எண்ணுகிறேன் இளவரசி" என்று செவிலி நகைத்தபடி சொன்னாள். "தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றும், தங்களிடமிருந்த இந்தக் களிமயக்கு அதன் பொருட்டே என்றும் இங்கு அரண்மனைப்பெண்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்."

சேடியை நோக்கி சினந்து திரும்பி "என்னடி சொல்கிறாய்?" என்று சற்றே எரிச்சல் காட்டினாள் ருக்மிணி. "சிசுபாலருக்கு தங்களை கைப்பிடித்து அளிக்க அரசரும் பட்டத்து இளவரசரும் உளம் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இந்நகரத்தினர் அறிந்து உவகை கொண்டிருக்கிறார்கள்." ருக்மிணி எளிய செய்தியொன்றை கேட்டவள் போல "சிசுபாலருக்கா? என்னிடம் எவருமே கூறவில்லையே?" என்றாள்.

"இளவரசி, விதர்ப்பம் இன்று மகதப்பேரரசின் துணை நாடு. தங்களுக்கான மணமகன் மகதத்தின் துணை அரசுகள் ஒன்றில் இருந்தே வரமுடியும். மகதத்தின் துணை அரசுகளில் வல்லமை மிக்கது சேதி நாடு. அதன் அரசர் சிசுபாலரும் தங்கள் தமையன் ருக்மியும் இளவயது முதலே தோளணைத்து வளர்ந்த தோழர்கள். அப்போதே தங்கள் கையை அவருக்கு இளவரசர் வாக்களித்துவிட்டதாக அமைச்சர் சொன்னார். தங்கள் தந்தைக்கும் அது உவப்பானதே" என்றாள் அமிதை. "நாளை புது வெள்ள நிகழ்ச்சி முடிந்ததும் அரசர் அவையெழுந்து மக்களுக்கு மண உறுதியை அறிவிப்பார் என்றும் அதன் பின் மூன்று நாட்கள் இந்நகரம் மலர் கொண்டாடும் என்றும் அரண்மனை அமைச்சர்கள் பேசிக் கொள்கிறார்கள்."

ருக்மிணி எந்த அலையையும் எழுப்பாது நீரில் மூழ்கும் நங்கூரக்கல் என அச்செய்தி தன்னுள் செல்வதை உணர்ந்தாள். "தங்களுக்கு உவகை எழவில்லையா இளவரசி?" என்றாள் செவிலி. "இல்லை. அச்செய்தி எனக்குரியதல்ல என்று தோன்றுகிறது" என்றாள் ருக்மிணி. "முதலில் அப்படித்தான் தோன்றும். இனியவை எவையும் கேட்டதுமே உவகையை அளிப்பதில்லை. அவை நம் நெஞ்சச் சதுப்பில் விதையென புதைந்து முளைத்து எழுந்து மலர்விட்டு கனிவிட்டு இனிமை கொள்ள வேண்டும். இன்றிரவு முழுக்க இனித்து இனித்து நாளை மணமகளாவீர்கள்" என்றாள் சேடி.

"நான் என் உளம் கொண்ட ஒருவரை இதுவரை உருவம் கொண்டு நோக்கியதில்லை. எங்கோ எவரோ தன் இனிய காதல் விழிகளால் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறார் என்றறிவேன். அவரது ஒலியோ விழியோ நானறிந்ததில்லை. ஆனால் இப்போது சேதி நாட்டரசர் என்கிறீர்கள். நமது அரசு விழாக்களில் மும்முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரே என்று என் உளம் சொல்லவில்லை" என்றாள் ருக்மிணி.

அமிதை நகைத்து "அவரே என்று எண்ணி மறுமுறை நோக்குங்கள் இளவரசி, அவரே என அறிவீர்கள். இவனே கணவன் என்று எண்ணி பெண்டிர் ஆண்மகனை நோக்கும் கணம் ஒன்றுண்டு, அதுவே அவர்கள் காதல் கொள்ளும் தருணம்" என்றாள். பெருமூச்சுடன் எழுந்த ருக்மிணி "பார்க்கிறேன், என்னுள் வாழும் தெய்வங்கள் ஏது சொல்கின்றன என்றறியேன்" என்றாள்.

அமிதை அவள் குழலை கைகளால் மெல்ல நீவியபடி "அந்தத் தெய்வம் நம் குடியின் மூதன்னையரில் ஒருத்தியாக இருக்கட்டும் இளவரசி" என்றாள். ருக்மிணி திரும்பி நோக்க "விதர்ப்பம் இன்று பாரதவர்ஷத்தின் எந்த அவையிலும் மதிப்புடன் அமர்த்தப்படுவதில்லை இளவரசி" என்றாள். "இந்த நாடு தன்னிலையழிந்து நெடுநாட்களாகின்றது." ருக்மிணி தலைகவிழ்ந்து எண்ணங்களைத் தொடர்ந்தவளாக அமர்ந்திருந்தாள்.

"நெடுங்காலம் முன்பு இந்நாடு பன்னிரண்டு மலைக்குடிகள் செறிந்து வாழ்ந்த காட்டுச்சரிவாக இருந்தது. காட்டில் வேட்டையாடியும் வரதாவில் மீன்பிடித்தும் வாழ்ந்த எளிய மக்களின் அரசர் எவருக்கும் கப்பம் கட்டவில்லை. ஏனென்றால் அவரை ஓர் அரசரெனக்கூட பிறர் அறிந்திருக்கவில்லை. வரதா வழியாக தண்டகாரண்யத்தில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் வைதிகரால் வேள்விக்குரியதல்ல என்னும் பொருளில் விதர்ப்பம் என்று அழைக்கப்பட்ட பெயரே இதற்கென இருந்தது."

அமிதை சொல்லலானாள். நூற்றெட்டாவது அரசர் பீமகரின் காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்து அவ்வழியாக மரக்குடைவுப்படகில் தனியாகச் சென்ற குறுமுனிவரான அகத்தியர் பசிகொண்டு அதன் கரையில் ஒதுங்கினார். மலையிறங்கத்தொடங்கியபின் அவர் உணவு உண்டிருக்கவில்லை. கரையில் நீரில் தூண்டிலிட்டு மீன்பிடித்துக்கொண்டு ஒரு சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டார். காலைவெளிச்சத்தில் அவள் பொன்வண்டுபோல தோன்றினாள். அருகணைந்த அவரைக் கண்டதும் அவள் எழுந்து தன் இரு கைகளையும் கூப்பி அவர் அடிகளை வணங்கி "எங்கள் மண் தங்கள் அடிகளால் தூய்மையடைந்தது முனிவரே" என்றாள்.

"எனக்கு இப்போதே உணவளி" என்று அகத்தியர் ஆணையிட்டார். அவள் அருகே சூழ்ந்திருந்த காட்டுக்குள் ஓடிச்சென்று மலைக்கனிகளையும் கிழங்குகளையும் சேர்த்துக்கொண்டுவந்தாள். அவற்றை சற்றே உண்டு சுவைநோக்கி தேர்ந்து அவருக்குப் படைத்தாள். பசியில் விழிமயங்கும் நிலையிலிருந்த அகத்தியர் அக்கனிகளை உண்டார். தலைதொட்டு "மாமங்கலை ஆகுக!" என அவளை வாழ்த்தி மீண்டும் படகிலேறிக்கொண்டார்.

காசியைக் கடந்து கங்காத்வாரத்தை அடைந்த அகத்தியர் அங்கே ஒரு பேராலமரத்தின் அடியில் அமர்ந்து தான் எண்ணிவந்திருந்த பரிபூரணம் என்னும் பெருந்தவத்தை ஆற்றினார். பன்னிரண்டு ஆண்டுகால அருந்தவத்தின் முடிவில் ஆறு சக்கரங்கள் சுழன்றெழுந்து மையம் திறக்க நெற்றிப்பொட்டில் மலர்ந்த ஆயிரமிதழ்த்தாமரை விரிந்தபோது அதில் இளஞ்சூரியன் போல கண்கூச ஒளிவிடும் இரு மணிச்சிலம்புகளை கண்டார். 'அன்னையே நீ யார்?' என்றார். 'உன் நெஞ்சமர்ந்த திரு நான். ககனம் நிறைக்கும் பொலி. மூவரையும் தேவரையும் பெற்ற அன்னை' என்று அவருள் எழுந்த ஒளிப்பெருவெளியில் ஒலித்த குரல் சொன்னது.

'நான் என்ன செய்யவேண்டும் அன்னையே?' என்றார் அகத்தியர். 'என் அழகை ஆயிரம் பெயர்களென பாடு. உன்னுள் உறையும் பெண்ணெனும் நான் எழுந்து புடவி பெருகுவேன். என் ஒளியால் நீ நிறைவாய்' என்றாள் அன்னை. 'அன்னையே, உன்னழகை காட்டுக! நான் அதை சொல்லென ஆக்குவேன்' என்றார் அகத்தியர். 'மைந்தா, மண்ணிலுள்ள பெண்களிலேயே மானுடவிழி என்னை காணமுடியும்' என்று அன்னை சொன்னாள். 'நான் பெண்ணென எவரையும் கண்டதில்லை அன்னையே' என்று அகத்தியர் சொன்னார்.

'கண்டிருக்கிறாய். அன்றுதான் உன் அகத்தை நிறைத்திருந்த கடுந்தவமெனும் முதுமரத்தில் இளந்தளிர் எழுந்தது' என்று அன்னையின் வாக்கு ஒலித்தது. அது எவர் என்று அங்கே அமர்ந்து அகத்தியர் தன்னை நோக்கி உசாவினார். கங்கையில் நீரள்ளக் குனிந்தபோது அலைகள் முகங்களாக இருந்தன. விழிவிரித்து நோக்கியபோது இலைகள் முகங்களாக இருந்தன. விண்மீன்கள் முகங்களாக தெரிந்தன. பன்னிரண்டாவது நாள் அவர் எரிவிண்மீன் ஒன்று வான்கிழித்துச் சரிவதை கண்டார். அக்கணம் அகம் மின்ன அந்தப்பெண் எவளென்று தெளிந்தார்.

விதர்ப்ப மண்ணுக்கு அவர் மீண்டுவந்தபோது அவர் வரதாவின் கரையில் கண்ட அந்தச்சிறுமி பதினெட்டு வயதான மங்கையென்றாகியிருந்தாள். மன்னர் பீமகரின் ஒரே மகள். பெண்ணுக்குரியவை என நிமித்திகர் வகுத்த ஏழு அழகுகளும் கொண்டவள் என்பதனால் அவளை சுமுத்ரை என்று பெயரிட்டழைத்தனர். அவளை தங்கள் குடியில் எழுந்த மூதன்னை வடிவென வணங்கினர். அவள் மண்ணில் வைக்கும் காலடியெல்லாம் தங்கள் முடிசூடும் மலரென உணர்ந்தனர்.

அரசரின் மாளிகை வாயிலில் வந்து நின்ற அகத்தியர் "பீமகரே, உமது மகளை என் அறத்துணைவியென அடையவந்துள்ளேன்" என்றார். பீமகர் திகைத்து பின் அஞ்சி ஓடி வந்து வணங்கி "முனிவரே, அவள் இவ்வூரின் இளவரசி. ஏழழகு கொண்ட இளங்கன்னி. என் குடியின் அத்தனை இளையோராலும் அமுதுக்கு நிகரென விரும்பப்படுபவள். தாங்களோ முதிர்ந்து உடல் வற்றிய முனிவர். பெண்கள் விரும்பாத குற்றுடல் கொண்டவர். என் மகளை நான் தங்களுக்கு அளிப்பேன். என் சொல்லை அவள் தட்டவும் மாட்டாள். ஆனால் அவளுக்குள் வாழும் கன்னி என்றும் உங்களை வெறுத்தபடியே உடனுறைவாள்" என்றார்.

"அரசே, அவள் ஊழென்ன என்று அறிந்தே வந்தேன். அவளை அழையுங்கள். என்னுடன் வர அவள் விழைந்தால் மட்டுமே கைபற்றுவேன்" என்றார் அகத்தியர். பீமகர் தன் ஏவலரிடம் செய்தியைச் சொல்லி அனுப்பினார். அகத்தியர் தன் குற்றுடலுடன் வந்து அரண்மனை முற்றத்தில் நின்றிருப்பதை சுமுத்ரை தன் இல்லத்தின் பின்னாலிருந்த மகிழமரத்தடியில் நின்று நோக்கினாள். கைகூப்பியபடி வந்து முனிவர் முன் நின்று "தங்களுக்காகவே இச்சிற்றூரில் இத்தனை ஆண்டுகள் தவமியற்றினேன் இறைவா" என்றாள்.

"நீ உன் கன்னியுள்ளத்தின் ஆழத்திலும் பிறிது எண்ணமாட்டாய் என இவர்கள் அறியச்செய்" என்றார் அகத்தியர். சுமுத்ரை இரு கைகளையும் கூப்பி மூதன்னையரையும் வணங்கி தன் ஏழு அழகையும் அக்கணமே துறக்கவேண்டுமென வேண்டிக்கொண்டாள். அனைத்தழகையும் இழந்து வற்றி ஒடுங்கிய உடல்கொண்டு அங்கே நின்றாள். பீமகரும் குடிமூத்தாரும் கைகூப்பியபடி அவள் காலடியில் விழுந்து வணங்கினர். அவளே தங்கள் மூதன்னையரெனும் காடு பூத்துக்கனிந்து அளித்த விதை என தெளிந்தனர்.

குடிமூத்தார் அவள் கைபற்றி முனிவருக்கு அளித்தனர். மங்கலத்தாலியை ஏற்று ஏழு அடிவைத்து சுமுத்ரை அவருக்கு தவத்துணைவி ஆனாள். ஏழுமுத்திரைகளையும் துறந்த அவளை அவர் லோபாமுத்ரை என்று அழைத்தார். அவளுடன் மீண்டும் கங்காத்வாரத்தை அடைந்தார். அந்த ஆலமரத்தின் அடியிலேயே ஒரு சிறுகுடில் கட்டி அவளுடன் அமைந்தார். "கன்னியே, உன்னை என் தவத்துணையாகவே கொண்டேன். காமம் கடந்து கருவென உறையும் மெய்மையை காண்பதை மட்டுமே இலக்கெனக் கொள்பவன் நான்" என்றார். "ஆம், நான் அதற்கென்றே துணைவந்தேன்" என்று லோபாமுத்ரை சொன்னாள்.

கங்கைக்கரை ஆலமரத்தடியில் தன்னை முற்றொடுக்கி அமர்ந்து உள்ளுசாவினார் அகத்தியர். மூன்றாண்டுகாலம் முயன்றும் மூலாதாரமே திறக்கவில்லை என்று உணர்ந்தார். கண்ணீருடன் எழுந்தோடி கங்கையின் கரையில் சென்று நின்று நெஞ்சுருகிக் கேட்டார் 'அன்னையே, என் உள்ளம் ஒரு சொல்லேனும் இல்லாமல் பாழ்வெளியாகக் கிடப்பதேன்? எங்கு நான் என் விதைக்கருவூலத்தை இழந்தேன்?'

கங்கை அலைகளென சென்றுகொண்டிருந்தது. விம்மியபடி அவர் மரத்தடியில் நின்றிருக்கையில் நெஞ்சுருகும் உணர்வுகொண்ட ஒரு பாடலை கேட்டார். இனிய கன்னிக் குரல் அதுவென்று உணர்ந்து அத்திசை நோக்கி சென்றார். அங்கே நீரலைகளில் ஏழழகு கொண்ட இளையவள் ஒருத்தி பாடியபடி நீராடுவதை கண்டார். அவளை எங்கோ கண்டதுபோல் உணர்ந்தார். மூன்று செய்யுட்கள் கொண்ட அப்பாடலையும் அவர் நன்கறிந்திருந்தார்.

நீராடி எழுந்த இளங்கன்னி ஆடையற்ற உடலில் நீர் வழிய வந்து கரையேறி அங்கிருந்த மரவுரியை எடுத்து அணிந்துகொண்டதும் முதுமை கொண்டு அழகுகளை இழந்து தன் துணைவி லோபாமுத்ரை ஆவதை கண்டார். திகைத்து அருகே ஓடிச்சென்று "நீ இப்போது பாடிய அப்பாடல் எது?" என்றார். "இறைவா, தாங்கள் தன்னைமறந்து கடுந்தவமியற்றியிருக்கையில் தங்கள் உதடுகள் உச்சரித்த செய்யுட்கள் அவை" என்றாள் லோபாமுத்ரை. "மீண்டும் சொல் அவற்றை" என்று அவர் கேட்டார். அவள் அஞ்சியபடி அவற்றை சொன்னாள்.

அவை காதலுக்காக ஏங்கும் கன்னியொருத்தியின் வரிகள் என்று அவர் உணர்ந்தார். அவ்வரிகள் தன்னுள் வாழும் கன்னி ஒருத்தியின் குரல் எனக்கண்டு வியந்து சென்று கங்கை நீரை நோக்கினார். அங்கு தன் முகம் கொண்ட அழகிய இளநங்கை ஒருத்தியின் பாவை புன்னகைக்கக் கண்டு சொல்லிழந்து நின்றார். லோபாமுத்ரையை அருகே அழைத்து "நோக்கு, இவளை நீ கண்டிருக்கிறாயா?" என்றார். அவள் "ஆம் இறைவா, நான் நீரில் பார்க்கையில் அழகிய இளைஞன் ஒருவனை என் தோற்றத்தில் காண்கிறேன். அவன் கனவிலெழுந்த கன்னி இவள்" என்றாள் லோபாமுத்ரை.

"இப்பெண்ணின் அழகை அவ்விளைஞன் உரைக்கட்டும்" என்றார் அகத்தியர். லோபாமுத்ரை "செந்தூரச் செந்நிறத்தவள். மூவிழியள். மணிகள் செறிந்த முடிகொண்டவள். விண்மீன் நிரையென புன்னகைப்பவள்" என தொடங்கி நூறு பெயர்களாக அவ்வழகை பாடினாள். ஒவ்வொரு பெயருக்கும் ஒருமலர் என உடலில் பூக்க பேரழகு கொண்டு தன் முன் நின்ற அவளை நோக்கி எஞ்சிய தொள்ளாயிரம் பெயர்களை அகத்தியர் பாடினார். அம்பிகையின் அழகு ஆயிரம் பெயர்மாலையாக விரிந்தது அவ்வாறுதான். விண்ணில் ஒரு பொன்முகிலாக அன்னையின் புன்னகை எழுந்து அவர்களை வாழ்த்தியது.

"கங்காத்வாரத்தில் அகத்தியர் அவளுடன் பெருங்காதல் கொண்டு வாழ்ந்தார். அவர்களுக்கு அழகிய இளமைந்தன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு திரிதஸ்யு என்று பெயரிட்டழைத்தனர். தன் அருந்தவத்துணைவியுடன் அங்கே அமர்ந்து தவநிறைவடைந்தார் அகத்தியர்" என்று அமிதை சொன்னாள். "லோபாமுத்ரையால் நம் குடி பெருமைகொண்டது. நம்மை ஷத்ரியர்களென பிறர் ஏற்றுக்கொண்டனர். பெருங்குடிகளில் இருந்து நம் அரசர் பெண்கொண்டனர். நம்குடியில் பிறந்த இளவரசிகள் கங்காவர்த்தமெங்கும் சென்று முடிகொண்டனர்."

"பெரும்புகழ்கொண்ட தமயந்தி பிறந்த குலம் இது இளவரசி" என்று அமிதை சொன்னாள். "இன்று சீரிழந்து சிறுமைகொண்டு நின்றிருக்கும் நிலம் இது. இழந்த பெருமையை இது மீட்பதென்பது தங்கள் சொல்லிலேயே உள்ளது. பன்னிரு தலைமுறைகளுக்குப்பின் பாரதவர்ஷத்தின் பெருவீரர்களில் ஒருவர் தங்கள் தமையரென இக்குடியில் பிறந்திருக்கிறார். இழிவகற்றி இந்நிலத்தை முதன்மையென அமர்த்த உறுதி கொண்டிருக்கிறார். அவருக்குத்தேவை நண்பரும் படையினரும். அதை அளிக்கும் சொல் உள்ளது தங்கள் உதடுகளில்தான்."

ருக்மிணி "தமையன் இச்சொற்களை என்னிடம் சொல்லும்படி ஆணையிட்டாரா?" என்றாள். "ஆம் இளவரசி. சிசுபாலரின் படையும் துணையும் இருந்தால் மகதத்திற்கு நிகர்நிற்க தன்னால் முடியுமென எண்ணுகிறார். அதை தங்களிடம் நேரில் சொல்ல அவர் விழையவில்லை. அது முறையல்ல என்று அவர் அறிவார். தங்கள் சொல்லெனும் வாள் தன் கையில் அமைந்தால் படைக்களத்தில் நிமிர்ந்து நிற்கமுடியுமென்று உணர்த்தும்படி என்னிடம் ஆணையிட்டார்" என்று அமிதை சொன்னாள்.

வெளியே மழை துளிவிட்டு ஒலிசொட்டத்தொடங்கியிருந்தது. மரக்கிளைகள் அமைதி கொள்ள யாழ்க்கம்பிகள் என கூரையிலிருந்து நின்றிருந்த மழைச்சரடுகள் அறுபட்டு நீள் துளிகளாகவிழுந்தன. அவள் இடைதளர நடந்து சென்று சாளரத்தைப் பற்றியபடி மழையை நோக்கி நின்றாள். தொலைவிலெங்கோ மரக்கிளைகள் அசைந்தன. "மழை மறைகிறது" என்றாள் செவிலி. "இன்னும் சற்று நேரத்தில் பெருமணிகள் அறிவிப்பை வெளியிட்டுவிடும்."

ருக்மிணி திரும்பி அறையைக் கடந்து மறுபக்கம் சென்று வரதாவை நோக்கினாள். நீர்ப்பெருக்கின்மேல் நின்றிருந்த மழைப்பெருக்கு மறைந்திருந்தது. முகில்களின் உள்ளே எங்கிருந்தோ கசிந்த ஒளி விளிம்புகளில் பரவியது. வரதாவின் ஆழத்திலிருந்து மணி வெளிச்சமொன்று மேலே வந்து நீரலைகளின் மெல்லிய தோல்பரப்பை மிளிரச்செய்தது. கூரை விளிம்புகள் அடங்கின. ஒவ்வொரு துளியும் ஒளி கொண்டது. தொலைவில் கோட்டை முகப்பின் பெரிய மணி மும்முறை மும்முறை என சீராக ஒலிக்கத் தொடங்கியது. அதன் பின் நகரத்தின் மணிகளும் ஒவ்வொன்றாய் அந்தத் தாளத்தில் ஒலியெழுப்பின. புதுப்பெருக்கு அறிவிப்பைக் கேட்டு நகரமெங்கும் உவகையொலி பொங்கி எழுந்தது.

அந்த மணியோசை கேட்ட அக்கணத்தில் ருக்மிணி அறிந்தாள், தன் கொழுநன் சிசுபாலன் அல்ல என்று. அதை எவரோ அவளருகே நின்று சொல்லின்றிச் சொன்னதுபோல திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினாள். அவனல்ல அவனல்ல என்று சித்தம் சொல்கொண்டது. அவன் எளியவன். அவள் காலடியைப் பணியும் வெறும் மானுடன். பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 4

பிரம்ம முகூர்த்தத்திற்கு நெடுநேரம் முன்பாகவே அமிதை வந்து ருக்மிணியை அவளிரு கால்களையும் தொட்டு எழுப்பினாள். "திருமகளே, இந்நாள் உன்னுடையது" என்றாள். சிறு தொடுகைக்கே விழித்துக் கொள்பவள் அவள். முதல் சொல் கேட்கையில் புன்னகைப்பாள். புன்னகையுடனன்றி அவள் விழி மலர ஒருபோதும் கண்டதில்லை அமிதை. "நலம் திகழ்க!" என்றபடி விழித்து இருகைகூப்பி வணங்கி வலது காலை மஞ்சத்திலிருந்து எடுத்து வைத்து எழுந்தாள்.

"இன்று புதுநீர்ப் பெருவிழவு இளவரசி. அரசர் வரதாவை வணங்கி மணம் கொள்ளும் நாள். அன்னையுருவாக அருகே தாங்கள் இருக்க வேண்டும். எழுந்தருள்க!" என்றாள் செவிலி. புன்னகைத்து "என் கனவுக்குள் நான் வரதாவில்தான் நீராடிக் கொண்டிருந்தேன். இடைக்குக்கீழ் வெள்ளி உடல் கொண்ட மீனாக இருந்தேன்" என்றாள் ருக்மிணி. செவிலி நகைத்து "முற்பிறவியில் மீன்மகளாக இருந்திருப்பீர்கள் இளவரசி" என்றாள்.

இளம்சேடி சுபாங்கி வாயிலில் வந்து வணங்கி "நீராட்டுக்கென அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசி" என்றாள். "இதோ" என்றபடி தன்னிரு கரங்களையும் விரித்தாள். ஆழியும் வெண்சங்கும் செந்நிறக் கோடுகளாக விழுந்த செம்மையில் இளநீலம் பரவிய நீண்ட உள்ளங்கைகளை நோக்கினாள். நினைவறிந்த நாள் முதல் அவள் நோக்கும் இறையுருக்கள் அவை. சிறு மகவாக அவள் பிறந்து மண்ணுக்கு வந்தபோது வயற்றாட்டி தளிர்க்கைகளைப் பிரித்து அங்கு ஓடிய கைவரிகளைக் கண்டு விதிர்த்து பின் பேருவகைக் குரல் எழுப்பியபடி வெளியே ஓடி அங்கு நின்றிருந்த நிமித்திகரையும் அவர்கள் நடுவே திகைத்து நோக்கிய பீஷ்மகரையும் பார்த்து "சங்கு சக்கரக் குறி! என் விழிமயக்கு அல்ல. அரசே, நிமித்திகரே, இதோ எழுத்தாணியில் எண்ணி வரையப்பட்டது போல. ஆழி இதோ. அவன் கைக்கொள்ளும் வெண்சங்கு இதோ!" என்று கூறினாள்.

முது நிமித்திகர் சுருக்கங்களடர்ந்த விழிகள் மேலும் இடுங்க தலை குளிர் கொண்டதுபோல் நடுங்க இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்து செந்நிற தளிர் போல நீட்டி நின்றிருந்த இரு சிறு கால்களைத் தொட்டு தன் தலைசூடிய பின் உள்ளங்கால்களை குனிந்து நோக்கினார். "சகரரே என்ன?" என்று கைகூப்பி நடுங்கி நின்றிருந்த பீஷ்மகர் தழுதழுத்த குரலில் கேட்டார். "கால்களிலும் உள்ளன ஆழியும் வெண்சங்கும் அரசே" என்றார் சகரர். "என் சித்தம் சுழல்கிறது நிமித்திகரே, நான் கேட்பது என்ன?" என்றார் பீஷ்மகர்.

உணர்வெழுச்சியால் உடைந்த குரலில் "இவள் திருமகள். வான் விரிந்த வைகுண்டம் விட்டு இறங்கிய பொன்மழைத்துளி. இப்புவியளக்க வந்த பெருமானின் மார்பணி. இங்கு எங்கோ அவன் தன்னை நிகழ்த்தியிருக்கிறான். உடன் நின்று வளம்புரிய வந்தவள் இவள். விதர்ப்பத்தின் காடுகள் செஞ்சடையோன் விரித்த முடித்தார்களாயின. விண்விட்டிறங்கிய கங்கையென இவள் வந்திருக்கிறாள்" என்றார். பீஷ்மகர் மேலும் பின்னடைந்து இருகைகளாலும் நெஞ்சைப்பற்றியபடி உதடுகள் துடிக்க விழிநீர்வார நின்றார். "இவள் பாதங்களை சென்னியில் சூடுங்கள் அரசே! தாங்களும் தங்கள் முதுமூதாதையர் அனைவரும் முடிசூடிய தவம் இவள் கால் சூடும்போது கனியும்" என்றார் சகரர்.

ஆடை களைந்து அவள் முழுதுடலுடன் மரத்தொட்டியில் நீராட்டுப் பீடத்தில் அமர்ந்தபோது செவிலி அவள் முன் அமர்ந்து குனிந்து செவ்விதழ்க் கால்களில் எழுந்த சங்கு சக்கரச் சுழிகளை அன்றென மீண்டும் நோக்கினாள். நீராட்டுச் சேடியர் இருவரும் இயல்பாக செம்பஞ்சுக் குழம்பையும் மஞ்சள் களபத்தையும் எடுக்கச் செல்பவர்கள் போல சென்று ஓரக்கண்ணால் அவ்வடையாளங்களை நோக்கினர். அரண்மனைப்பெண்டிரும் குடிகளனைவரும் அறிந்திருந்தனர் அதை. அவள் கால்களில் அவ்வடையாளங்கள் இருப்பது ஒரு கதையென்றே பலர் உள்ளூர ஐயம் கொண்டிருந்தனர். காணும் போது அந்த ஐயத்திற்காக குற்ற உணர்வு கொண்டு விழியுருகினர்.

சேடியர் அகல் விளக்கைத் தூண்டி நீராட்டறையை ஒளிபெறச்செய்தபின் அவள் உடலில் மஞ்சள் சந்தன பொற்குழம்பை பூசிப் பரப்பினர். நீண்ட கருங்குழலை விரல்களால் அளைந்து திரிகளாக வகுந்து நறுமண எண்ணெயை பூசி நீவினர். நீள்கரங்களின் நகங்களை ஒருத்தி செம்மை செய்தாள். தேக்கு மரத்தின் வரிகள் போல அடி வயிற்றில் இழிந்து சென்ற மயிர்ச்சுழிகளில் மென்பஞ்சுக் குழம்பிட்டாள் இன்னொருத்தி.

அமிதை அவள் கால்கள் தொடங்கி நெற்றி வகிடு முனை வரை விழி நீட்டி ஏங்கினாள். எங்குளது மானுட உடல் கொள்ளும் இன்றியமையாத அச்சிறு குறை? முழுமையென்பது ஊன் கொண்டு வந்த உயிருக்கு உரியதல்ல என்பார்களே, இது விண்ணிழிந்த திருமகளேதானா என்று எண்ணியபடி விழிஅளந்தாள். நூறாயிரம் முறை தொட்டுத் தொட்டு அறிந்து உணர்ந்து நிறைந்து பின் அவள் சித்தம் ஒரு கணத்தில் ஒன்றை அறிந்தது. இவள் காலடி சூடி மண் மறையும் தகுதிகூட அற்றவன் சேதி நாட்டு அரசன் சிசுபாலன்.

நீள்மூச்சுடன் "இளவரசி, சேதிநாட்டரசர் இன்று விழவுக்கு எழுந்தருள்வதையே நகரெங்கும் பேசிக்கொள்கிறார்கள்" என்றாள். "ஆம் அறிந்தேன்" என்று அவள் புன்னகை புரிந்தாள். "தங்கள் தமையனின் கணிப்புகளை முன்பு சொன்னேன்" என்று செவிலி அவள் கைகளில் மென்குழம்பைப் பூசி நீவி வழித்தபடி சொன்னாள். "தங்களை சேதி நாட்டரசர் கைப்பிடித்தால் விதர்ப்பமும் சேதியும் இணைந்து ஒற்றைப் பெருநிலமாகின்றன. கங்கைக்குக்கீழ் மகதத்தைச் சூழ்ந்தமர்ந்திருக்கும் இவ்விரு நிலங்களுக்கு மேல் மகதம் நட்பெனும் உரிமையை மட்டுமே கொண்டிருக்கும். பகை கொள்ளும் துணிவை அடையமுடியாது."

"இது வெறும் அரசியல் கணக்குகளல்லவா?" என்று முடிகோதியபடி சேடி கேட்டாள். "இளவரசியரின் மணங்கள் எப்போதும் அரசியல் சூழ்ச்சிகள் மட்டுமே" என்றாள் அமிதை. "அரசர் என்ன சொல்கிறார்?" என்றாள் நகம் சீர் செய்த சேடி. "இந்நாட்டின் முடி மன்னர் தலையிலமர்ந்திருக்கிறது. ஆணையிடும் நா இளவரசரின் வாயில் அமைந்துள்ளது. அதை அனைவரும் அறிவோம்" என்றாள் அமிதை.

அவ்வுரையாடலுக்கு மிக அப்பால் அதில் ஒரு சொல்லையேனும் பொருள் கொள்ளாதவளாக நீள்விழிகள் சரிந்து முகம் கனவிலென மயங்க ருக்மிணி இருந்தாள். செவிலி "சேதி நாட்டு அரசரை நீங்கள் எவ்வண்ணம் ஏற்கிறீர் இளவரசி?" என்றாள். ருக்மிணி விழித்துக் கொண்டு "என்ன?" என்றாள். "உங்கள் உள்ளத்தில் சிசுபாலர் கொண்டிருக்கும் இடமென்ன?" என்றாள். "அளியர், என் அருளுக்குரிய எளியர்" என்றாள் ருக்மிணி.

அமிதை எழுந்து "அவ்வண்ணமென்றால்?" என்று வியந்து கேட்டாள். சேடி "இளவரசி சொல்லிவிட்டார்களல்லவா, பிறகென்ன?" என்றாள். அவள் நீர்வழியும் உடலுடன் எழுந்து மேடைமேல் அமர மென்பஞ்சுத் துணியால் அவள் உடலைத் துடைத்து நறுஞ்சுண்ணமிட்டு அகிற்புகையிட்டு குழலாற்றி அணியறைக்கு கொண்டு சென்றனர். சமையப்பெண்டிர் நால்வர் வந்து அவளை கைப்பிடித்து யவனநாட்டுப் பேராடி முன் அமர்த்தினர். இரு புறமும் நெய்விளக்குகள் எரியும் ஆடி கருவறை வாயிலென தெரிய பீடத்திலெழுந்த பொற்செல்வியின் சிலையென அவள் தெரிந்தாள்.

நீராட்டறைப் பொருட்களை எடுத்துவைத்த சேடி திகைப்புடன் "சேதி நாட்டரசருக்கா? நம் இளவரசியா?" என்றாள். இன்னொருத்தி "நீ வியந்தென்ன? அவரை விரும்பி ஏற்பதாக இளவரசி சொன்னதை இப்போது கேட்டாயல்லவா?" என்றாள். செவிலி சினத்துடன் திரும்பி "விரும்பி ஏற்பதாக எவர் சொன்னார்?" என்றாள். "இப்போது அவர் சொற்களையே கேட்டோமே?" என்றாள் சேடி. "அறிவிலிகளே, அளியர் என்றும் எளியர் என்றும் சொன்னார். அவர் கருணைக்கு என்றும் உரியவராம் சிசுபாலர். இப்புவில் உள்ள அனைவருமே அவர் மைந்தரே. அவர் தன் ஆழ்நெஞ்சில் சூடும் ஆண்மகன் அவரல்ல."

"பின் எவர்?" என்று சேடி கேட்டாள். திரும்பி கனவிலமர்ந்திருந்த ருக்மிணியை நோக்கியபின் "எவரென்று அவர் சித்தம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்தத்தை ஆளும் ஆன்மா அறிந்துள்ளது" என்றாள் அமிதை. சமையர் அவளுக்கு நறுஞ்சுண்ணமிடுவதை கைகளுக்கு செம்பஞ்சுக்குழம்பிடுவதை நோக்கி நின்றாள். அங்கிருந்த அறியா ஒன்றின் மேல் அறிந்த ஒரு அழகிய மகளை அவர்கள் சமைத்துக்கொண்டிருந்தனர்.

புதுப்பெருக்கு விழவின் பேரொலி அரண்மனையை சூழ்ந்திருந்தது. சேடி ஒருத்தி ஓடிவந்து "அணியமைந்துவிட்டதா என்று நோக்கிவரச்சொன்னார் அமைச்சர்" என்றாள். அமிதை "இன்னும் ஒருநாழிகை நேரமாகும்" என்றாள். "ஒருநாழிகையா?" என்றாள் சேடி. "சென்று சொல். இது மூதன்னையரின் நாள். இங்கு அணிகொண்டு எழுவது மூதன்னையரென்னும் முகில்குவை கனிந்து சொட்டும் துளி என" என்று அமிதை சொன்னாள். சேடி சொல்புரியாமல் நோக்கிவிட்டு "அவ்வண்ணமே" என்று திரும்பிச்சென்றாள்.

அமிதை வெளியே சென்று அரண்மனை இடைநாழிகள் வழியாக விரைந்தாள். அரண்மனைமகளிர் புத்தாடை அணிந்து பொலன்அணி மின்ன சிரிப்பும் களியாட்டுமாக சென்று கொண்டிருந்தனர். அரண்மனைப் பெருமுற்றத்தின் அணிவகுப்பின் ஒலி எழுந்து சாளரங்கள் வழியாக அறைகளை நிறைத்தது. அமிதை மங்கலச்சேடியரை அணித்தாலங்களுடன் ஒருங்கி நிற்கும்படி ஆணையிட்டாள். இசைச்சூதர் சுதி நிறைத்து நின்றிருக்கிறார்களா என்று நோக்கினாள். ஒவ்வொன்றும் சித்தமாக இருந்தன. ஒவ்வொன்றும் சிறுபிழைகொண்டும் இருந்தன.

கோல்விழும் முரசின் உட்பக்கம் என அதிர்ந்துகொண்டிருந்த மாளிகை வழியாக அவள் நிலையழிந்து ஓடினாள். அவள் அறிந்த அத்தனை புதுப்பெருக்கு விழவுகளும் அவள் உள்ளத்தை தேன்கூட்டில் தேனீக்களென மொய்த்தன. சிறகிசைக்க ரீங்கரித்து தொலைதூரத்து தேன்சுமந்து. அவள் ஓடியபோது அந்நினைவுகளும் கூட ஓடின. அவள் காலோய்ந்து அமர்ந்தபோது அவள்மேல் எடைகொண்டு அமர்ந்தன. மூச்சே அந்நினைவுகளாக இருந்தது. ஒருகணத்தில் அவள் அறிந்த அனைத்து புதுநீர் விழவுகளும் இணைந்து ஒற்றைநிகழ்வாயின.

புதுப்பெருக்கு என்பது விந்தியன் தன் மைந்தர் தலைதொட்டு வாழ்த்தும் நன்னாள் என்பது ஆயர்குடி நம்பிக்கை. கயிலை முடிசூடி அமர்ந்திருக்கும் இமவானின் இளையோன் என விந்தியனை சூதர் பாடுவர். அன்னையின் முப்புரம் அவன் முடியென அமர்ந்திருக்கிறது. தென்னகம் நோக்கி தமையன் புன்னகைக்க வடதிசை நோக்கி இளையோன் வணங்கி அமர்ந்திருக்கிறான். இமவானாலும் விந்தியனாலும் காக்கப்பட்டிருக்கிறது கங்கைப் பெருநிலம். அங்கு தழைக்கின்றன மூன்று அறங்கள்.

முதல்வெள்ளம் என்பது வரதா சூதகம் கொள்ளும் நாள் என்பது வேளிர்குடிகளின் பழஞ்சொல். ஒளி சிதற சிரித்துச் செல்லும் சிறுமி மங்கையென்றாகும் நாள். அதன்பின் எப்போதும் அவளது நீர்ப்பெருக்கில் குருதியின் நிறம் கலந்திருக்கும். கையில் அள்ளிய நீர் சற்று நேரம் கழித்து திரும்ப விடும்போது விரல் ரேகையெங்கும் வண்டல் படிந்திருக்கும். புதுப்பெருக்குக்குப்பின் வரதாவின் நீரை வயல்களில் தேக்குவார்கள். நீர்வற்றும்போது மண்ணில் செம்பட்டை படியப்போட்டதுபோல மென்சேறு பரவயிருக்கக் காண்பார்கள். அந்த மென்பரப்பை மூன்றுவிரல்களால் அழுத்தி அழுத்திச் சென்று பறவைகள் எழுதியிருக்கும் மொழி என்பது விந்தியன் தன் அமுதை உண்ணும் மானுடருக்கு அளிக்கும் வாழ்த்து.

விதர்ப்பத்தின் அனைத்துக் கிணறுகளிலும் வரதா ஊறி நிறைந்திருப்பாள். அனைத்துச் செடிகளிலும் இலைகளிலும் மலர்களிலும் அந்தச் செழுமை ஏறியிருக்கும். கனிகளில்கூட அந்த மணமிருக்கும் என்பார்கள். ஒவ்வொரு கன்றும் வரதாவில் எழும் புதுச்சேற்றின் மணமறியும். புது வெள்ளம் வந்த அன்றிரவு தொழுக்கள் முழுக்க பசுக்கள் கால்மாற்றி நின்று தலைதாழ்த்தி உறுமிக்கொண்டிருக்கும். கட்டுக்கயிற்றை இழுத்து வெளிநோக்கித் திரும்பி நின்று கண்கள் மின்ன நோக்கி நிலையழியும். புதுச்சேறு வரும் மணம் முதியோருக்குத் தெரியும். பழைய நினைவொன்று மீள்வது போல உள்நிகழ்ந்ததா வெளியே எழுந்ததா என்று மயங்கும்படியாக அந்த மணம் வந்தடையும். மூக்கு கூர்ந்து அதுவேதான் என்று உறுதி செய்வார்கள். அருகிருப்போரை கூவியழைத்து "புதுச்சேறு மணம்! வரதாவில் புதுவெள்ளம் எழுந்துள்ளது தோழரே" என்பார்கள்.

எருமைக்கூட்டங்கள் போல தேன்மெழுகிட்டு கருமைகொண்ட ஓலைக்குடைகள் வரதாவின் கரையணைந்து நீர் விளிம்பருகே நிரைவகுக்கும். அங்கு கரிய உடலில் நீர்வழிய சிரித்துப்பேசி நின்றிருக்கும் குகர்களிடம் "புதுமழையின் மணம்தானே?" என்று உறுதி செய்துகொள்வார்கள். "ஆம் வேளிரே, வரதா பருவம் கொண்டுவிட்டாள்" என்பார்கள் முதிய குகர்கள். ஆயரும் வேளிரும் நீரை அள்ளி முகர்ந்து அந்த மணம் அதிலிருப்பதை உணர்வார்கள். ஆயினும் நீர் தெளிந்தே இருக்கும். "எப்போது வந்தடையும்?" என்பார்கள். "இன்னும் எட்டு நாழிகை நேரம்" என்பார் முதிய குகர். "எப்படி சொல்கிறீர்கள்?" என்று வேளிர் கேட்க "உங்கள் வயலில் கதிர் விளைவதை எந்தக் கணக்குப்படி சொல்கிறீர்களோ அப்படி" என்று சொல்லி குகர்கள் நகைப்பார்கள். மழைச்சாரலுக்கு அப்பால் பற்கள் ஒளிவிட அச்சிரிப்புகள் நின்றிருக்கும்.

இல்லங்களை சேற்றின் மணம் நிறைக்கத்தொடங்கும். மெல்ல மெல்ல அத்தனை விதர்ப்பநாட்டுக் குடியினரும் அந்த மணத்துக்குள் திளைக்கத் தொடங்கியிருப்பார்கள். உண்ணும் உணவும் உடைகளும் அந்த மணம் கொண்டிருக்கும். "நெருப்பும் சேற்று மணம் கொள்ளும் நாள்" என்று அதை சொல்வார்கள். நாள்முழுக்க குலம்சூழச் சென்று வரதாவின் கரைகளில் கூடி நின்று நதியை நோக்கிக் கொண்டிருப்பார்கள். வரதா விழிகள் பட்டு சிலிர்த்து அடங்கும் புரவித்தோல் போன்று நீருடல் விதிர்ப்புற புரண்டும் விரிந்தும் சென்று கொண்டிருக்கும்.

வானம் பிளவுபட்டு கதிரொளி மழைத்தாரைகள் வழியாகக் கசிந்து வரதாவின் மேல் இறங்கும்போது உள்ளாழத்திலிருந்து எழும் புன்னகை வரதாவை ஒளி கொள்ளச்செய்யும். குளிருக்கு உடல் கூப்பி குடைகளுக்கு அருகில் நின்றிருப்பவர்களும் அந்த ஒளியைக் கண்டதும் "அன்னையே, வரம் தருபவளே, அடி பணிந்தோம், காத்தருள்க!" என்று வாழ்த்தொலி எழுப்புவார்கள். ஒளி விரிய விரிய வரதா செந்நிறப் பேருருக்காட்டி விரிவாள். நீலச்சிற்றாடை அணிந்திருந்தவள் செம்பட்டுப் புடவை சுற்றி நாணம் கொண்டிருப்பாள். "அன்னையே, குலம் காக்கும் இறையே, ஈசனின் மகளே, எங்கள் முடி சூடும் அடியே" என்று முதுவேளிர் தலை மேல் கைகூப்பி விழிமல்கி கூவுவார்கள்.

புதுப்பெருக்கு அன்றுவரை இல்லங்களில் தேங்கிய அனைத்து இருளையும் கரைத்துக் கொண்டு செல்லும் ஒளி. தொழுவங்களிலிருந்து கன்றுகளை கட்டவிழ்த்து விடுவார்கள். புதுச்சேறு மணம் பெற்ற கன்றுகள் துள்ளிக் குதித்து தெருக்களில் பித்தெடுத்து ஓடும். அகிடு கனத்த அன்னைப்பெரும் பசுக்கள்கூட தன்னிலை மறந்து துள்ளி ஆடுவதைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி நகைப்பார்கள். திமில் திமிர்த்த காளைகள் கொம்புதாழ்த்தி சேற்றுமண்ணை குத்திக்கிளறி மண்வழியும் முகங்களுடன் சிற்றடி வைத்து செல்லும்.

புதுப்பெருக்கு நாளன்று பொங்குவதற்கென்று புது நெல்லை அறுவடைக்காலத்திலேயே கட்டி வைத்திருப்பார்கள். மஞ்சள் பட்டுத்துணியில் கட்டி தென்மேற்கு கன்னிமூலையில் கூரையில் தொங்கவிடப்பட்டிருக்கும் அந்த நெல்லை எடுத்து புதுக்கலத்தில் வறுத்து உலக்கையால் உருட்டி உமிகளைந்து வெல்லமும் தேங்காயும் கலந்து அக்கார அடிசில் செய்வார்கள். ஆவி பறக்கும் அக்கார அடிசிலை கொண்டுசென்று வரதாவின் கரையில் நின்றிருக்கும் அனைவருக்கும் அளிப்பார்கள். முதல் கைப்பிடி அடிசிலை வணங்கி வாழ்த்தி வரதாவிற்கு அளித்து உண்டு மகிழ்வார்கள்.

புலரி மணியோசை விதர்ப்பத்தின் கௌண்டின்யபுரியின் நகர் மையத்தில் அமைந்திருந்த ஆழிவண்ணன் ஆலய முகப்பு கோபுரத்தின் மேல் எழுந்தது. கௌண்டின்யபுரியின் நீண்ட தெருக்கள் யாழின் தந்திகளாக வானத்தின் நீள்விரலொன்று அதைத் தொட்டு மீட்டுவது போல அவ்வோசை எழுந்து பெருகியது. நகர் மக்கள் முந்தைய இரவே துயில் நீத்து விழவுக்கான ஒருக்கங்களிலிருந்தனர். தாழை மடல் தொன்னை கோட்டி அதில் அக்காரமும் அரிசிமாவும் ஏலமும் சுக்கும் கலந்து பெய்து செம்புக் கொப்பரைகளில் வைத்து நீராவியில் வேகவைத்த அப்பங்களை எடுத்து வாழை இலை மேல் ஆவி எழ குவித்துக் கொண்டிருந்தனர். நகர் முழுக்க தாழை அப்பத்தின் நறுமணம் எழுந்து நிறைந்திருந்தது.

நெடுநேரம் விழித்திருந்து தாழை தொன்னைகள் கோட்டியும் கோட்டிய தொன்னைகளை விளையாடக் கொண்டுசென்று கலைத்தும் களியாடிக் கொண்டிருந்த மைந்தர் ஆங்காங்கே சோர்ந்து விழுந்து துயின்றபோதும் அவர்களின் கனவுகளுக்குள் புகுந்து இன்சுவையாக மாறி நாவூறி வழியச்செய்தது அந்த மணம். மணியோசை அவர்கள் துயிலுக்குள் நீண்டு தொட்டு எழுப்பியது. சிலரை மணியொலித்து வந்த குழந்தையாக சென்று விளையாட எழுப்பியது. சிலரை அன்னையென அதட்டித் தொட்டது. சிலரை தந்தையென அள்ளித் தூக்கியது. சிலரை மூதாதை என தலை முடி அளைந்து உசுப்பியது.

எழுந்த மைந்தர் "அன்னையே விடிந்துவிட்டது. புது நீராட்டு விழா வந்துவிட்டது..." என்று கூவியபடி அடுமனைக்குள் ஓடி அங்கிருந்த அன்னையரையும் அத்தையரையும் அள்ளிப் பற்றிக் கொண்டனர். "நீராடாமல் அப்பங்களை உண்ணலாகாது. புது ஆடை அணிந்து குலக்குறி கொண்ட பின்னரே அப்பங்களில் கைவைக்க வேண்டும். செல்க!" என்று கடிந்தனர் அன்னையர். செம்புப் பெருங்கலங்களில் விறகடுப்பில் நீர் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இருளுக்குள் ஆடும் தழல்களைச் சூடி சூழ்ந்து அமைந்திருந்த சிறுகலங்களில் கொதிக்கும் நீரை அள்ளிவிட்டு பொருந்த குளிர்நீர் சேர்த்து பதமான வெந்நீர் ஆக்கினர் அக்கையர். சிறு மைந்தரை கைபற்றி இழுத்துச் சென்று நிறுத்தி தலை வார வெந்நீர் ஊற்றி கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்த பயற்றுமாவைப் பூசி நீராட்டினர்.

நீர் சொட்ட, அரைமணி கிண்கிணி அசைய, இல்லங்களுக்குள் ஓடி "புத்தாடை! எனக்குப் புத்தாடை" என்று குரலெழுப்பினர் குழவியர். மஞ்சள் மலராடை அணிவித்து, குல முறைப்படி நெற்றியில் குறி சார்த்தி, ஏற்றிய நெய்விளக்கின் முன் கைகூப்பி நின்று மூதாதையரை வணங்க வைத்து, அதன்பின் வாழை இலையில் வெம்மை பறக்கும் அக்கார அப்பத்தைப் படைத்தனர். உண்டு வயிறு நிறைந்த மைந்தர் அதன் பின்னரே அன்று நீராடுவதற்கும் களியாடுவதற்குமான நாளென்பது நினைவுக்கு வந்து தெருக்களில் பாய்ந்திறங்கினர். தெருவெங்கும் படர்ந்திருந்த மழைச்சேற்றில் மென்கால்கள் மிதித்தோடினர். புத்தாடைகள் சில கணங்களிலேயே சேற்று வரிகளாயின.

சேறு மூடி சந்தனம் சார்த்தப்பட்ட ஆலய சிலைகளென மாறிய இளையோர் எவரையும் அன்னையரும் அடையாளம் காண முடியவில்லை. கூவிச் சிரித்து ஒருவரை ஒருவர் சேற்றாலடித்து துரத்திப் பிடித்து கட்டிப் புரண்டு எழுந்து நகையாடி நகர் நிறைத்தனர் மைந்தர். அரண்மனையிலிருந்து அரசப்பெருமுரசு ஒலிகள் எழத்தொடங்கின. முதல் முரசொலியை வாங்கி காவல்மாடங்களின் நூற்றெட்டு முரசுகளும் ஒன்றிலிருந்து இன்னொன்று என சுடரேற்றிக்கொள்ளும் அகல் விளக்குகள் போல ஒலி பொருத்திக் கொண்டு முழங்கத் தொடங்கின. களியாட்டு களியாட்டு களியாட்டு என நகரைச் சூழ்ந்து அறைகூவின முரசொலிகள். எழுக எழுக எழுக என எக்களித்தன கொம்புகள். இங்கே இங்கே இங்கே என்று அழைத்தன பெருஞ்சங்கங்கள்.

மூங்கில் கூடையில் அப்பங்களைச் சுமந்தபடி நகர்ப்பெண்டிர் குரவையொலியுடன் தெருவிலிறங்கினர். ஒவ்வொரு குடியினரும் மூதன்னையர் வழிகாட்ட இளங்கன்னியர் தொடர அப்பங்களுடன் வரதாவின் சேற்றுக்கரை நோக்கி சென்றனர். இலையிட்டு மூடி கொடிகளால் ஆன கொக்கிகள் கொண்டு தூக்கப்பட்ட அகல்விளக்குகள் மென் சாரலிலும் அணையாது சென்றன. ஒளிக்குவைகளெனச்சென்ற அந்தச் சிறு குழுக்களை அரண்மனை மேலிருந்து நோக்கிய அமிதை நகர் இல்லங்களிலிருந்து விளக்குகள் கிளம்பி நதியை நோக்கிச் செல்லும் பெருக்கென அதை கண்டாள்.

"அன்னையே! அருள் புரிபவளே! நிலம் நிறைக்கும் நெடியவளே! எங்கள் இல்லத்தில் பொன்னிறைக்கும் பெரியவளே!" என்று கூவிய குரல்கள் கலந்து முரசொலிக்கு மேல் எழுந்தன. வரதாவின் பெருக்கின் மேல் விளக்குகள் ஏற்றப்பட்ட படகுகளுடன் குகர்கள் நிரைவகுக்க காற்றிலாடும் நகரொன்று அங்கே எழுந்தது. அமிதை மீண்டும் ருக்மிணியின் அருகே வந்தாள். அவளுக்கு தலைமுடிக்கற்றைகளில் தென்பாண்டி முத்துக்களைக் கோத்து அணிசெய்துகொண்டிருந்தனர்.

சேடி ஓடிவந்து "அரசர் எழுந்துவிட்டார் இளவரசி" என்றாள். அணிச்சமையம் செய்து கொண்டிருந்த முதியவள் "இன்னும் சற்று நேரம்..." என்றாள். "இன்னும் கால் நாழிகை நேரத்தில் பிரம்ம முகூர்த்தம் முடிந்துவிடும். அரசர் அணிமுற்றம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்" என்றாள் அமிதை. "வரதா அணி கொள்ள வேனிற்காலம் முழுதும் நாம் காத்திருந்தோம். இளவரசி அணி கொள்ள இரு நாழிகை காத்திருந்தாலென்ன?" என்று ஒரு சேடி சொல்ல இன்னொருத்தி "ஆம்" என்றாள்.

அமிதை சினத்துடன் "நேரம் தவறினால் என்னைத்தான் சொல்வார்கள்... விரைவில் முடியுங்கள்" என்றாள். வைரங்கள் கோத்த நெற்றியணியை குழல்மேல் பொருத்தி பொன்னூசியால் கொண்டையில் நிறுத்தியபின் ஆடியை நோக்கி "நிறைந்தது" என்றாள் முதுசமையப் பெண். இளையவளொருத்தி பொன்னூல் பின்னிய பட்டாடையின் மடிப்புகளைப் பொருத்தி ஒரு பொன்னூசியைக் குத்தி "சமையம் எப்போதும் நிறைவதில்லை. ஒன்று குறைகிறது. அது இவ்வணி முடிந்தபிறகுதான் தெரியும்" என்றாள்.

அமிதை "இந்த அணிகள் என் திருமகளை அழகுறச்செய்வதில்லை. இவ்வணிகள் அனைத்திற்கும் முழுமை அளிப்பவள் அவளே. விலகுங்கள்" என்று சொல்லி அவள் தோள்களைத் தொட்டு "எழுக இளவரசி" என்றாள். முழுதணிக்கோலத்தில் விழிகளில் குடிகொள்ளும் தெய்வ நோக்குடன் அவள் திரும்பி "செல்வோம்" என்றாள். சாளரத்திற்கு வெளியே செவ்வைரங்கள் சுடரும் மணிமாலை போல் வரதா மாறிவிட்டிருந்தது. கரை விளக்குகள் நிலைக்க நீர்மேல் விளக்குகள் அலைய நடக்கும் பெண்ணின் முலைமேல் தவழும் செந்நிற இதழ்கள் கொண்ட காந்தள் மாலை என.

இடைநாழியின் மரத்தூண்கள் மெழுகு பூசப்பட்டு பந்த ஒளியில் மின்னிக் கொண்டிருக்க தரைமேல் செவ்வொளி படர்ந்திருந்தது. அவர்கள் நடந்த ஓசை தூண்களுக்கு மேலிருந்து உளமெழுந்த மாளிகையின் இதய ஒலியென எழுந்தது. வாயிற்காவலர் பந்தச்சுடரேந்திய வேல்களைத் தாழ்த்தி தலைவணங்கி விலகினர். படிகளிலிறங்கி பெருங்கூடத்தைக் கடந்து அவள் சென்றபோது அங்கு காத்திருந்த அணிச்சேடியர் மங்கலத்தாலங்களுடன் எழுந்து வாழ்த்தொலி எழுப்பினர்.

மங்கலச்சேடியர் அவளுக்கு முன்னால் சென்றனர். அணுக்கச் சேடியர் பணித்தாலங்களுடன் அவளுக்கு இருபுறமும் அணி வகுத்தனர். அவள் வருகையை அறிந்து முன்னால் சென்ற நிமித்தச்சேடி தன் கையிலிருந்த வலம்புரிச்சங்கை வாய்பொருத்தி ஊத "இளவரசி எழுந்தருளுகிறார்" என்று அப்பால் முதுநிமித்திகன் கூவினான். அக்குரலை ஏற்று மேலும் இரு நிமித்திகர் குரலெழுப்பினர்.

அரண்மனைப்பெருமுற்றத்தில் பீஷ்மகர் அரச அணிக்கோலத்தில் வலப்பக்கம் அமைச்சரும் இடப்பக்கம் படைத்தலைவரும் நின்றிருக்க காத்திருந்தார். அவருக்கு இருபக்கமும் பட்டத்தரசியும் சிற்றரசியர் நால்வரும் நின்றிருந்தனர். முற்றத்தின் வடக்கு எல்லையில் வேதியரும் தெற்கு எல்லையில் மங்கலச்சூதரும் காத்திருக்க முகப்பில் நூற்றெட்டு குதிரைவீரர் ஒளிரும் வேல்களுடன் சேணம்தொட்டு நின்றிருந்தனர்.

மங்கல இசையையும் வாழ்த்தொலிகளையும் கேட்டு திரும்பி நோக்கிய பீஷ்மகர் இருபுறமும் எழுந்த செம்பந்தத்தழலில் தெரிந்த ருக்மிணியை நோக்கி அன்று முதலில் காண்பவர் என நெஞ்சு நடுங்கினார். அவள் கால்களை நோக்கி அவர் விழிகள் தாழ்ந்தன. கருக்குழி மணத்துடன் தான் கையில் எடுத்து முகத்தருகே தூக்கி நோக்கிய சிறு செம்பாதங்களின் சங்குசக்கரக் குறிகளை அவர் அண்மையிலென கண்டார்.

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 5

வரதாவின் கரையோரமாக புது நீராட்டுவிழவுக்கென மரத்தால் மேடையமைக்கப்பட்டிருந்தது. கமுகு மரத்தடிகளை நீருக்குள் ஆழ இறக்கி ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைத்து கரையிலும் நீரிலுமாக கட்டப்பட்டிருந்த மேடையின்மேல் வளைக்கப்பட்ட மூங்கில்களைக்கொண்டு சட்டமிடப்பட்டு ஈச்ச ஓலை வேய்ந்த கூரையின் கீழ் அரசகுடியினர் அமர்வதற்கான பீடங்கள் காத்திருந்தன. பிசிர்மழை வெண்பீலியென நின்றிருந்தபோதும் மீனெண்ணெய் ஊற்றப்பட்ட பந்தங்கள் பொறி தெறிக்க வெடித்துச் சுழன்றபடி ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. அவ்வொளியில் மேடையில் அமைந்த வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடங்கள் திரைச் சித்திரங்கள் போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தன.

தனக்கான மரமேடையில் நின்றுகொண்டிருந்த நிமித்திகன் அரசணி நிமித்திகர்கள் முன்வர அகம்படியர் தொடர அணுகுவதைக் கண்டதும் தன் கையில் இருந்த வெள்ளிக் கோலை தலை மேல் தூக்கி "வெற்றி திகழ்வதாக!" என கூவினான். "தொல்பெருமை கொண்ட விதர்ப்ப குலம் வாழ்வதாக! அக்குலம் தன் சென்னி சூடும் வரதா இங்கு பொலிவு கொள்வதாக! அதன்மேல் ஒளிகொள்வதாக முன்னோர் வாழும் வானம்! ஆம் அவ்வாறே ஆகுக!" என்று கூவி மும்முறை தூக்கிச் சுழற்றி கோலை தாழ்த்தினான். வாழ்த்தொலிகள் அடங்கி கரைமுழுக்க நிறைந்திருந்த கௌண்டின்யபுரியின் குடிகள் விழிதூக்கி அரசரையும் அணிவகுப்பையும் நோக்கினர். முதியோர் கைகூப்பினர். அன்னையர் மைந்தரை தூக்கி கைசுட்டி காட்டி குனிந்து மென் சொல்லுரைத்தனர். வாய்க்குள் கை செலுத்தி சிறுவிழிகள் மலர குழந்தைகள் நோக்கின. தங்கள் உள்ளத்திற்கே என சிறு கைகளை நீட்டி ருக்மிணியைச் சுட்டிக் காட்டின.

முதலில் வந்த அணிபுரவிப் படையினர் இரு சரடுகளாகப் பிரிந்து அரசு மேடையை சூழ்ந்தனர். தொடர்ந்து வந்த மங்கலச்சேடியர் படிகளில் ஏறி அரசமேடையின் இருபக்கங்களிலும் மங்கலத்தாலங்களுடன் அணிவகுத்தனர். அவர்களைத் தொடர்ந்த வைதிகர் மேடையேறி வேதக்குரலெழுப்பியபடி அரச பீடங்களை கங்கை நீர் தெளித்து தூய்மை செய்தனர். இசைச்சூதர் மங்கல இசையுடன் இரு பிரிவாக பிரிந்து மேடைக்கு முன் அமைந்தனர். கை கூப்பியபடி வந்த அரசகுடியினர் படிகளில் ஏறி தங்கள் பீடங்களில் அமர அவர்களுக்குப்பின்னால் சேடியரும் ஏவலரும் நிற்க இருபக்கமும் அமைச்சரும் படைத்தலைவரும் நின்றனர்.

பீஷ்மகர் அமைச்சரிடம் தலைசரித்து "இன்னும் எங்கு சென்றிருக்கிறான்?" என்றார். அமைச்சர் "அவர்கள் கிளம்பிவிட்டனர் அரசே" என்றார். பீஷ்மகரின் விழிகள் சற்றே மாறுபட்டன. "அவர்களும் அணிநிரை வகுத்து வருகிறார்களா?" என்றார். அமைச்சர் விழிதாழ்த்தி "ஆம்" என்றார். பீஷ்மகர் மேலும் விழிகூர்ந்து "பெரிய அணிவகுப்பா?" என்றார். அமைச்சர் "ஆம் அரசே. சேதி நாட்டரசர் தன் முழு அகம்படியினருடன் அணிச்சேடியருடனும் அமைச்சர்களுடனும் வந்துள்ளார். நமது அணிவகுப்புக்கு நிகரான அணிவகுப்பு அது என ஒற்றர் இப்போது சொன்னார்கள்" என்றார்.

பீஷ்மகர் சினம் தெரிந்த முகத்துடன் "அது மரபல்லவே?" என்றார். அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை. "அது மரபல்ல, எவ்வகையிலும் மாண்பும் அல்ல" என்று மீண்டும் பீஷ்மகர் சொன்னார். "ஆம் அரசே. நான் அதை சொன்னேன். இளவரசர் இன்று முதல் இப்புது மரபு இருக்கட்டும் என்றார்." பீஷ்மகர் ஏதோ சொல்வதற்கென நாவெடுத்து பின் தளர்ந்து "ஆகட்டும்" என்று கையசைத்து தன் பீடத்தில் சாய்ந்துகொண்டார்.

அரசரும் அவையினரும் இளவரசருக்காக காத்திருப்பதை அதற்குள் கௌண்டின்யபுரியின் மக்கள் உணர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் அவர்கள் பேசிக் கொண்ட ஓசை இலைகள் மேல் சொரியும் காற்றின் ஒலிபோல எழுந்தது. சிற்றமைச்சர் சரணர் அருகே வந்து "முதுவேதியர் நூல் நோக்கி வகுத்த நெறிநேரம் அணுகி வருகிறது என்கிறார்கள்" என்றார். பேரமைச்சர் முகுந்தர் "பார்ப்போம்" என்று பொதுவாக சொன்னார். சரணர் ஐயத்துடன் பீஷ்மகரை நோக்கிவிட்டு அகன்று சென்றார். பீஷ்மகர் "நேரமாகிறதென்றால் தொடங்கலாமே" என்றார். "பார்ப்போம் அரசே" என்றார் முகுந்தர்.

இன்னொரு சிற்றமைச்சரான சுமந்திரர் ஓடிவந்து "வைதிகர் குறித்த நேரம் கடக்கிறது என்கிறார்கள் அரசே. சினம் கொண்டு சுடுசொல் உரைக்கிறார்கள்" என்றார். அரசி சுஷமை சீற்றத்துடன் "ஒரு முறை சொல்லியாகிவிட்டது அல்லவா? இளவரசர் எழுந்தருளாமல் அரசு விழா எங்ஙனம் நடக்கமுடியும்? நேரம் தவறினால் பிறிதொரு நேரம் குறிப்போம். காத்திருக்கச்சொல்லுங்கள்" என்று சொன்னாள். "அவ்வண்ணமே" என்ற சிற்றமைச்சர் பேரமைச்சரையும் பீஷ்மகரையும் ஒருமுறை நோக்கிவிட்டு மீண்டும் தலைவணங்கி பின்பக்கம் காட்டாமல் இறங்கி விலகினார்.

பீஷ்மகர் குரல்தாழ்த்தி சுஷமையிடம் "நாம் பல்லாயிரம் விழிகள் முன் அமர்ந்திருக்கிறோம் என்பதை மறவாதே" என்றார். அரசி "குடிகளின் விழிகளின் முன் பிறந்து வளர்ந்த இளவரசிதான் நான். கோசலத்தில் எங்களுக்கும் அரசமுறைமைகள் உள்ளன. அனைத்தும் நானும் அறிவேன்" என்றாள். பீஷ்மகர் "எப்படியோ இந்தச்சிறு ஒவ்வாமையுடன்தான் இத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அமைகின்றன அமைச்சரே" என்றார். அரசி "ஒவ்வாமை உங்களுக்கு மட்டுமே. குடிகளுக்குத் தெரியும் வல்லமை கொண்ட வாளால் விதர்ப்பத்தின் வெண்குடை காக்கப்படுகிறது என்று" என்றாள்.

பீஷ்மகர் அவளை நோக்கி திரும்பி "ஆனால்..." என்று ஏதோ சொல்ல வந்தபின் தலையசைத்து "ஆவது அமைக அமைச்சரே. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார். சுஷமை "இங்குள்ள அனைவருக்கும் தெரியும் மணிமுடியின் உரிமையாளர் எவரென..." என்றாள். சிற்றரசி கீர்த்தி "மணிமுடி இன்னமும் அரசரின் தலையிலேயே உள்ளது அரசி" என்றாள். சுஷமை "நீ என்னிடம் பேசத்துணிந்துவிட்டாயா?" என்றாள். பீஷ்மகர் "பூசலிடவேண்டாம்... அமைதி" என்றார். "நான் பூசலிடவில்லை... பூசலிட நான் சேடிப்பெண்ணும் அல்ல" என்றாள் சுஷமை.

அமைச்சர் திரும்பி ருக்மிணியை நோக்க அவள் கருவறை பீடமமைந்த திருமகள் சிலையென அணிதுலங்க விழிமயங்க அமர்ந்திருந்தாள். அச்சொற்கள் அனைத்தும் அவளறியாமல் எங்கோ முகில்களுக்குக் கீழே நதியென ஓடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. பீஷ்மகர் அவளை நோக்குவதைக்கண்டு சுஷமையும் நோக்கினாள். "அணிகளைச் சீரமைத்துக்கொள்ளடி" என்று மெல்லச் சொல்லிவிட்டு திரும்பி கூட்டத்தை நோக்கினாள்.

மேற்கு நகர் முனையில் ஏழு எரியம்புகள் எழுந்தன. வானில் ஒளி மலர்களாக வெடித்தன. சுமந்திரர் மூச்சிரைக்க படிகளிலேறி வந்து தலை வணங்கி "வந்து விட்டார்கள் அமைச்சரே" என்றார். "ஆம் தெரிகிறது. ஆவன செய்க" என்றார் முகுந்தர். திரும்பி பீஷ்மகரிடம் "வந்துவிட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் விழவைத் தொடங்க ஆணையிடலாம் அரசே" என்றார். பீஷ்மகர் "நான் சொல்ல ஏதுமில்லை. இந்த மேடையில் வெறும் ஒரு ஊன்சிலை நான்" என்றார்.

மேலும் ஏழு எரியம்புகள் எழ சூழ்ந்திருந்த கௌண்டின்யபுரியின் குடிகளனைவரும் அத்திசை நோக்கி திரும்பினர். "அரசருக்கன்றி எரியம்புகள் எழுவதும் மரபல்ல" என்றார் பீஷ்மகர். "அங்கு வருபவன் எளியவனல்ல, இந்நகராளும் இளவரசன். எரியம்புகள் அவனுக்குரியவைதான்" என்றாள் அரசி. கௌண்டின்யபுரியின் மக்கள் எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லையென்பதை அமைச்சர் நோக்கினார். அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசும் ஒலி மட்டும் வலுத்து அங்கு ஒரு பெரும் சந்தை கூடியிருப்பது போன்ற உணர்வை எழுப்பியது.

நகரில் நிறைந்திருந்த பந்தங்களாலான ஒளித்தேக்கத்திலிருந்து மதகு திறந்து ஒளி வழிவது போல மேற்குச்சரிவில் அணி வலம் ஒன்று வருவது தெரிந்தது. பந்த நிரைகளின் வெளிச்சம் பாதை வளைவைக் கடந்து மெல்ல நீண்டு வந்து வரதாவின் கரையை அணுகியது. முகப்பில் நூற்றிஎட்டு வெண்புரவிப்படை வீரர்கள் மின்னும் வேல்களுடன் வந்தனர். அவர்களின் நடுவே சேதி நாட்டின் வல்லூறுக் கொடி ஏந்திய வீரனொருவன் வெண்தலைப்பாகையுடன் ஒளிமின்னும் கவசங்கள் அணிந்து வந்தான். வீரர்களைத் தொடர்ந்து அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் வேதமோதியபடி வைதிகர்நிரையும் மங்கல இசையெழுப்பிய சூதர்நிரையும் வந்தன.

சற்றே அசைந்து அமர்ந்தபடி "முற்றிலும் நமது அணி நிரைக்கு நிகராக" என்றார் பீஷ்மகர். அமைச்சர் "நம் இளவரசர் அதையும் அமைத்திருக்கிறார்" என்றார். "சேதி நாடு விதர்ப்பத்திற்கு நிகரானதே. அதில் என்ன பிழை?" என்றாள் சுஷமை. "இது சேதி நாடல்ல" என்றாள் பீஷ்மகரின் மறுபக்கம் அமர்ந்திருந்த இளையஅரசி விருஷ்டி. பீஷ்மகர் திரும்பி "நீங்களிருவரும் பூசலை நிறுத்துங்கள். நாம் பேசிக்கொள்வதை இங்குள்ள அத்தனைபேரும் உணர்கிறார்கள் என்பதை உணருங்கள்" என்றார். "முதலில் உங்கள் முகத்தில் தெரியும் அச்சினத்தை அணையுங்கள். அதைத்தான் குடிகள் அனைவரும் நோக்குகிறார்கள்" என்றாள் அரசி.

பீஷ்மகர் பொறுமையிழந்து அசைந்து அமர்ந்தபடி "யானை மீதா வருகிறார்கள்?" என்றார். அமைச்சர் அப்போதுதான் திரும்பி நோக்கி "ஆம் அரசே" என்றார். "யானைமேல் புதுநீராட வரும் மரபு உண்டா?" என்றார் பீஷ்மகர். "வரக்கூடாதென்று முறைமை உண்டா? என்ன பேசுகிறீர்கள்?" என்றாள் சுஷமை. "யானைமேல் போருக்குத்தான் செல்வார்கள்" என்று சிற்றரசி விருஷ்டி சொல்ல "வாயைமூடு" என்றாள் சுஷமை. "யானைமேல் வந்தால் எப்படி வரவேற்க முடியும்? அதைச்சொன்னால் என்ன பிழை?" என்றாள் கீர்த்தி. "உங்களை வணங்குகிறேன், அருள்கூர்ந்து சொல்பேணுக!" என்றார் பீஷ்மகர்.

இணையாக வந்த இரு பெருங்களிறுகளின் மேல் ஒன்றில் சிசுபாலனும் இன்னொன்றில் ருக்மியும் அமர்ந்திருந்தனர். இருவரும் பொற்கவசங்களும் மணிமாலைசுற்றிய தலையணிகளும் கொண்டு அரசணிக் கோலத்திலிருந்தனர். யானைகளுக்கு இருபுறமும் நெய்ப்பந்தங்கள் ஏந்தி வந்த வீரர்களுக்கு முன்னால் தீட்டிய உலோகத்தாலான குவியாடிகளை நான்கு வீரர்கள் தூக்கி வந்தனர். அவற்றைச்சாய்த்து அவ்வொளியை எழுப்பி யானைகள்மீதும் அவர்கள் மேலும் பொழிய வைத்தனர். விண்மீன்களை சூடிய கருமுகில் போல வந்த யானையின் மேல் இளங்கதிர் விரியும் காலைச் சூரியன்கள் போல் இருவரும் அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் சேதி நாட்டின் வல்லூறு முத்திரை கொண்ட மணிமுடி அணிந்திருந்தான். அதில் சூடிய செங்கழுகின் நிறம் தழல் என நெளிந்தது. மணிக்குண்டலங்களும் செம்மணிஆரங்களும் தோள்வளைகளும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பொற்கச்சையும் அணிந்திருந்தான். அவனுக்குப்பின்னால் அமர்ந்திருந்த வீரன் பிடித்த வெண்குடை அவன் தலை மேல் முத்துச்சரம் உலைந்தாட முகிலெனக் கவிந்திருந்தது. அருகே ருக்மி விதர்ப்ப நாட்டின் அன்னப்பறவை முத்திரை பதித்த மணிமுடியும் வைரக்குண்டலங்களும் மணியாரங்களும் தோள்வளையும் அணிந்து அமர்ந்திருந்தான். முகில்கள் மேல் கால்வைத்து நடந்து வருபவர்கள் போல யானை மேல் அவர்கள் அசைந்து வந்தனர்.

அமிதை குனிந்து கனவில் அமர்ந்திருந்த ருக்மிணியிடம் "இளவரசி, தங்கள் தமையனும் சேதி நாட்டரசரும் எழுந்தருளுகிறார்கள்" என்றாள். ருக்மிணி திரும்பி நோக்கி புன்னகைத்து "இருவரும் அழகுடன் பொலிகிறார்கள் அன்னையே" என்றாள். அரசி "சேதி நாட்டரசர் பேரழகர். அவரைக் காமுறாத இளவரசியர் பாரத வர்ஷத்தில் மிகச் சிலரே" என்றாள். ருக்மிணி "ஆம். இனியவர்" என்றாள்.

முகம் மலர்ந்த அரசி "நீ அவ்வண்ணம் எண்ணுவாயென்றே நானும் எண்ணினேன் இளையவளே" என்றாள். சேதிநாட்டின் அணிநிரை வரதாவை நெருங்கியபோது ருக்மியின் அணுக்கப் படைத்தலைவர் கீர்த்திசேனர் குதிரை மேல் எழுந்து நின்று இரு கைகளையும் விரித்து அசைத்து "வாழ்த்தொலி எழுப்புங்கள்... அரசரை வாழ்த்துங்கள்" என்றுகூவ அவருடன் வந்த படைவீரர்ளும் சேதிநாட்டினரும் "சேதிநாட்டு இளஞ்சூரியன் எழுக! விதர்ப்ப நாட்டு இந்திரன் எழுக! வெற்றி திகழ்க! பாரத வர்ஷம் தலை வணங்குக!" என்று வாழ்த்தினர். மெல்ல கலைந்து பொருளற்ற முழக்கமாக அதை ஏற்று ஒலித்தது கௌண்டின்யபுரியின் குடித்திரள்.

"குடிகள் குரலெழுப்பத் தயங்குகிறார்கள்" என்றார் பீஷ்மகர். "ஆம் அரசே" என்றார் அமைச்சர். "குடிகளைப்போல ஈவிரக்கமற்றவை பிறிதில்லை. இவர்கள் ஒவ்வொருவரும் முறைமையும் இங்கிதமும் அறிந்தவர்கள். ஆனால் பெருந்திரளாக அவர்கள் அனைத்து உணர்ச்சிகளையும் அப்படியே வெளிப்படுத்துகிறார்கள். சற்று நுண்ணுணர்வு இருந்திருந்தால் அவனுக்கு இப்போது இக்குடிகளின் உள்ளம் விளங்கியிருக்கும்" என்றார். அமைச்சர் "ஆம் அரசே. மக்கள் அவரை விரும்பவில்லை என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

பீஷ்மகர் "நாடு என்பது மணிமுடியும் செங்கோலுமாக கைக்கு சிக்குவது. மண்ணும் நதிகளுமாக விழி தொடுவது. முறைமைகளும் நெறிகளுமாக சித்தம் அறிவது. ஆனால் நம்முன் நிறைந்திருக்கும் குடிகளின் உளமென பெருகித் திகழ்வது. அந்தத் தெய்வம் எளிதிலேற்பதில்லை. அதை உணராத அரசன் எப்போதும் பிழை புரிகிறான்" என்றார். சுஷமை அதைக் கேட்டு பற்களைக் கடித்து மெல்லியகுரலில் "மதுவருந்தி அரண்மனை அவையில் படுத்திருக்கையில் தோன்றிய சிந்தனை இது போலும்" என்றாள்.

பீஷ்மகர் நீள்மூச்சுடன் "என் சொற்களுக்கு இங்கு பொருளில்லை. அவை பின்னர் தன்னை விளைவுகளென வெளிக்காட்டட்டும்" என்றார். "இந்நன்னாளில் கூட என் மைந்தனைப் பற்றிய ஒரு நற்சொல் உங்கள் நாவில் எழவில்லை என்பதை காண்கிறேன். உங்கள் உள்ளம் எங்கு செல்கிறதென தெரிகிறது. அரசை ஆளத்தெரியாதவர் நீங்கள். அதற்கு என் மைந்தனின் வாளறிவும் நூலறிவும் தேவை. ஆனால் அவன் யானைமேல் வந்திறங்கி, மக்கள் அவனை வாழ்த்திக் குரலெழுப்பினால் உங்கள் உள்ளம் எரிகிறது" என்றாள் சுஷமை. பீஷ்மகர் அவளை நோக்கி திரும்பவே இல்லை.

களிற்றுயானைகள் இரண்டும் ஆற்றுக் கரை நோக்கி வந்தன. சற்றே வழுக்கும் சேற்று மண்ணில் தங்கள் பொதிக்கால்களை நுனி வளைத்து மெல்லத்தூக்கி வைத்து துதிக்கைகளை நீட்டி முன்னால் பறந்த ஈரமண்ணைத் தொட்டு உறுதி செய்து மெல்ல உருளும் பாறைகள் போல சரிந்திறங்கின. அவை களமுற்றத்து நடுவே வந்து நின்றதும் அவற்றருகே வந்து நின்ற வீரர்கள் இருவர் மரத்தாலான ஏணிகளை அவற்றின் விலாவில் சாய்க்க வணங்கிய கைகளுடன் அவற்றினூடாக இறங்கி இருவரும் மண்ணுக்கு வந்தனர். அமைச்சர்கள் எழுவர் முன்னால் சென்று ருக்மியை வணங்கி நீராட்டு நிகழ்வு தொடங்கப்போவதை தெரிவித்தனர். ருக்மி சிசுபாலனிடம் கையசைத்து மேடைக்கு வரும்படி அழைத்தான்.

யானைகளுக்கு நாணல்பரப்பு என பிளந்து வழிவிட்ட வேல்வீரர் நடுவே கவசங்களில் பந்தஒளி பொன்னுருகியதென அசைய கனல்விழிகள் சூடிய உடலுடன் இருவரும் நடந்து வந்தனர். ருக்மி பீஷ்மகர் முன் தலைவணங்கி "அரசரை வணங்குகிறேன். சேதி நாட்டு அரசர் நம் விருந்தினராக வந்துள்ளார். இந்த புது நன்னீராட்டு விழவில் நம் அழைப்புக்கிணங்க அவரும் நீர்வழிபடுவார்" என்றான். சிசுபாலன் நன்கு பயின்ற அரசநடையுடன் அவைமேடைமேல் வந்து நின்று திரும்பி நடன அசைவுகளுடன் கௌண்டின்யபுரியின் குடிகளை வணங்கியபின் பீஷ்மகரை தலைதாழ்த்தாமல் வணங்கி "விதர்ப்பத்தின் மண்ணில் நின்றிருப்பதில் நிறைவடைகிறேன். சேதி நாடு வாழ்த்தபெறுகிறது" என்று சொன்னான்.

பீஷ்மகர் எழுந்து அவன் தலைமேல் கை தூக்கி வாழ்த்தளித்து "சேதி நாட்டுப் பெருமை விதர்ப்பத்தை பெருமைகொள்ளச்செய்யட்டும். இந்த மண் தங்களது குடியையும் குலத்தையும் வாழ்த்துகிறது" என்றார். அமைச்சர் கைவீச இருபக்கமும் நின்றிருந்த இசைச்சூதரும் வைதிகரும் வேதமும் இசையும் முழங்க சூழ்ந்திருந்த மக்கள் இருமன்னரையும் வாழ்த்தி பேரொலி எழுப்பினர். அரிமலர் வந்து அவர்கள் மேல் விழுந்தது.

சிசுபாலன் அரசியை வணங்கி "விதர்ப்ப அரசியை வணங்குகிறேன். மங்கலம் சூழும் இந்நாள் என் மூதாதையர் மகிழ்வதற்குரியது" என்றான். அவள் முகம் மலர்ந்து கைதூக்கி வாழ்த்தளித்து "உங்கள் வருகையால் நானும் என் மகளும் மகிழ்கிறோம். இந்நாடு நிறைவுகொள்கிறது. இனி என்றும் இந்நாளின் உணர்வு இவ்வண்ணமே வளரட்டும்" என்றாள். ருக்மிணி புன்னகையுடன் நோக்க சிசுபாலன் அவளை நோக்கி மெல்ல தலைதாழ்த்தி வணங்கினான்.

முதுவைதிகர் மேடைக்கு வந்து தலைவணங்கி "அரசே, இனியும் நேரமில்லை. நீர் வழிபாடு தொடங்கலாம் அல்லவா?" என்றார். "ஆம், மங்கலம் ஆகுக!" என்று பீஷ்மகர் ஆணையிட்டார். மேடையிலேயே பீஷ்மகருக்கு நிகராக அமைக்கப்பட்ட இரு பொற்பீடங்களில் சிசுபாலனும் ருக்மியும் அமர்ந்தனர். சேதிநாட்டு அமைச்சர்களும் படைத்தலைவர்களும் சிசுபாலனுக்கு இரு பக்கமும் நிரைவகுக்க அவன் அரசன் என்றே அமர்ந்திருந்தான். ருக்மி அமர்ந்துகொண்டு இயல்பாக அமைச்சரை நோக்கி ஏதோ சொல்ல அவர் அவனருகே சென்றார். இன்னொரு அமைச்சரையும் அவன் விழிகளால் அழைக்க அவரும் அணுகினார். சற்று நேரத்தில் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவனுக்குப் பின்னாலும் அருகிலுமாக நிரைகொண்டனர்.

சிசுபாலன் பின்னர் ஒருமுறை கூட ருக்மிணியை நோக்கி திரும்பவில்லை. அவள் அங்கிருப்பவள் அல்ல என்பதைப்போல பெருகிச் செல்லும் வரதாவையே நோக்கிக் கொண்டிருந்தாள். அரசி பீஷ்மகரிடம் "நான் அறிகிறேன், அவர்களின் நோக்கு காதல் கொண்டது. ஐயமில்லை" என்றாள். பீஷ்மகர் "நாம் இப்போது அதை முடிவு செய்யவேண்டியதில்லை" என்றார். "இந்த மேடையிலேயே அறிவிப்போம். இதற்குப் பின் ஒரு தருணம் நமக்கில்லை" என்றாள் அரசி. பீஷ்மகர் "புதுநீராட்டு மேடையில் மண அறிவிப்பு செய்வது முறையல்ல" என்றார். "எதைச் சொன்னாலும் அதற்கொரு முறைமைமரபு சொல்கிறீர்கள். ஷத்ரியர்கள் பெருவிழவுகளில் மணமறிவிப்பது எங்குமுளதே" என்றாள் சுஷமை. பீஷ்மகர் "பார்ப்போம்" என்று மட்டும் சொல்லி திரும்பிக் கொண்டார்.

வேள்விச்சாலையில் இருந்து வந்த வைதிகர் பன்னிரு சிறியநிரைகளாக பொற்குடங்களை கையிலேந்தி வருணமந்திரத்தை சொன்னபடி களிமண் குழைந்த நதிச்சரிவில் இறங்கி வரதாவை அடைந்தனர். நீரில் முதுவைதிகர் முதலில் இறங்கி மும்முறை தொட்டு தன் தலைமேல் தெளித்துக் கொண்டு பொற்குடங்களிலிருந்த மலரை நீரில் கவிழ்த்து பரவவிட்டு வருணனையும் இந்திரனையும் வணங்கினார்.

விண்ணகத்தின் தலைவர்களே

இந்திர வருணர்களே உங்களை வணங்குகிறேன்

எங்கள்மேல் அருளை பொழியுங்கள்

கவிஞர்கள் அழைக்கையில் எழுந்துவருக!

மானுடரின் காவலர்களே

உங்களை மகிழ்விக்கிறோம் இந்திர வருணர்களே

செல்வங்களாலும் சிறந்த உணவுகளாலும்

இங்கு எழுந்தருள்க!

அவர்கள் அப்பொற்குடங்களில் வரதாவின் நீரை அள்ளிக்கொண்டு வேதநாதத்துடன் மேலேறி வந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மரமேடைமேல் குடங்களை பரப்பி வைத்தனர். அதைச்சூழ்ந்து அமர்ந்து இந்திரனையும் வருணனையும் வாழ்த்தி வேதமோதி மலரிட்டு வழிபட்டனர். நிழலுருவாகச் சூழ்ந்திருந்த மக்களின் விழிகள் பந்தங்களின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. ஆங்காங்கே குதிரைகள் கனைத்தன. படைக்கருவிகள் குலுங்கின. சில இருமல் ஒலிகள் எழுந்தன. வரதாவின் சிற்றலைகளின் ஒலி வேதச்சொல்லுடன் இணைந்து கேட்டது.

விழியொளி தெளிவதைப்போல காலை விடிந்துகொண்டிருந்தது. மக்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடைகள் முதலில் இருளில் இருந்து துலங்கி வந்தன. பின்னர் மஞ்சள், இளநீலம், இளம்பச்சை நிறங்கள் ஒளிபெற்றன. அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக தெரியத்தொடங்கின. அன்னையரின் இடைகளில் கைக்குழந்தைகள் வாய்களுக்குள் கைவைத்து உள்ளங்கால்களைச் சுழற்றியபடி பொறுமையிழந்து அமர்ந்திருந்தன. தந்தையரின் தோள்மேல் அமர்ந்திருந்த சிறுவர்கள் உடல் வளைத்து விழிகள் விரிய நோக்கினர்.

கலநீர் வழிபாடு முடிந்ததும் வைதிகர் எழுந்து நின்று வரதாவை நோக்கி கைவிரித்து அதை வாழ்த்தினர். விண்ணகப்பெருநீர்களை மண்ணில் எழுந்த நதிகளை வாழ்த்தியபின் அவர்கள் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றனர். அமைச்சர் கைகாட்ட பெருமுரசுகள் முழங்கின. அதுவரை தளர்ந்திருந்த கூட்டமெங்கும் முரசின் அதிரும் தோல்பரப்பென ஓர் அசைவு எழுந்தது. கொம்புகளும் சங்குகளும் மணிகளும் எழுந்தன. பீஷ்மகர் எழுந்து தன் பட்டத்தரசி சுஷமையின் கைபற்றி மேடையிலிருந்து இறங்கி மெல்ல நடந்துவந்து நீர்க்குடங்கள் இருந்த மேடையை அடைந்தார். அவர் தலைக்குமேல் வெண்குடை அசைந்து வந்தது. பின்னால் படைத்தலைவரும் அமைச்சரும் வந்தனர்.

முரசுகளும் கொம்புகளும் மணிகளும் ஓய்ந்தன. சூதர்களின் மங்கல இசை பெருகிச்சூழ்ந்தது. முதுவைதிகர் சொற்படி பீஷ்மகர் தன் செங்கோலை மேடைமேல் வைத்தார். அரசனும் அரசியும் தங்கள் மணிமுடிகளைக் கழற்றி மேடைமேல் இருந்த சந்தனப்பீடத்தில் விரிக்கப்பட்டிருந்த மஞ்சள்பட்டின் மேல் வைத்தனர். அதன் அருகே பீஷ்மகர் தன் உடைவாளை உருவி வைக்க அவருடன் வந்த இருவீரர்கள் அவரது வெண்கொற்றக்குடையை அதன்மேல் பிடித்துக்கொண்டனர். மணிமுடிகளுக்கும் வாளுக்கும் முதுவைதிகர் மலர்மாலை ஒன்றை சூட்டினார்.

சுஷமையின் கைகளைப்பற்றியபடி பீஷ்மகர் நடந்துசென்று சேறு பரவிய வரதாவின் கரையில் மெல்ல இறங்கி நீரை நோக்கி சென்றார். பெண்கள் குரவையிட ஆண்கள் வாழ்த்தொலி எழுப்பினர். இடைவரை நீரிலிறங்கிய பீஷ்மகருக்குப்பின்னால் அமைச்சரும் படைத்தலைவரும் நின்றனர். பீஷ்மகர் அரசியின் கையைப்பிடித்தபடி நீரில் மும்முறை மூழ்கினார். நீர் சொட்டும் குழலுடன் எழுந்து வரதாவை கைகூப்பி வணங்கியபின் திரும்பாமல் பின்கால் வைத்து நடந்து கரைமேட்டில் ஏறினார். மும்முறை வரதாவை வணங்கியபின் நடந்து மீண்டும் கலநீர் மேடை அருகே வந்து நின்றார். பிறரும் நீராடி அவரைத் தொடர்ந்து மேலேறினர்.

வைதிகர் வேதமோதியபடி மூன்று குடங்களில் இருந்த நீரால் அவர்களின் மணிமுடியை நீராட்டினர். மூன்று குடநீரால் உடைவாளையும் செங்கோலையும் கழுவி தூய்மையாக்கினர். வெண்குடைமேல் நீர் தெளித்து வாழ்த்தினர். முதுவைதிகர் வணங்கி மலர்கொடுத்து அரசரையும் அரசியையும் வாழ்த்தி அமைய பீஷ்மகரும் அரசியும் இரு நீர்க்குடங்களை தலையில் ஏற்றியபடி முன்னால் நடந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த குடிப்பெருக்கு வாழ்த்தொலியாக அலையடித்தது.

முற்றத்தின் மறுஎல்லையில் பெரிய மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருந்த ஏழு முதிய குலத்தலைவர்கள் தழைகொண்ட ஆல், அத்தி, வேங்கை, கோங்கு, பலா, மா, மருத மரக்கிளைகளை செங்கோலென ஏந்தியபடி அவரை நோக்கி மெல்ல நடந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் ஏழு குடிமூத்த அன்னையர் இடத்தோள்களில் சிறிய மண்கலங்களையும் வலக்கையில் நெல், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு எனும் மணிகளின் கதிர்களையும் ஏந்தியபடி வந்தனர். குலப்பாடகர்கள் தோல்பானைகளையும் வட்டமணிகளையும் குறுங்குழல்களையும் முழக்கியபடி தொடர்ந்தனர்.

அரசரையும் அரசியையும் எதிர்கொண்டதும் முதிய குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை அவர் தலைமேல் தூக்கி அசைத்து வாழ்த்தினர். அன்னையர் குரவையிட்டு அவர்களை வரவேற்றனர். அன்னையர் அளித்த கதிரை அரசி பெற்றுக்கொள்ள தாதையர் அளித்த தழைமரக்கிளையை அரசர் பெற்றுக்கொண்டார். அவர்களை அழைத்துக்கொண்டு அரசரும் அரசியும் நடக்க படைத்தலைவரும் அமைச்சரும் தொடர்ந்தனர். குலப்பாடகர் இசையுடன் பின்னால் செல்ல இசைச்சூதரின் மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் இடையறாது ஒலித்தன. கௌண்டின்யத்தின் கோட்டைச்சுவர்களிலிருந்து அந்த ஒலி எதிரொலியாக திரும்பவந்தது.

வரதாவின் கரையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய வயல்பாத்தி உழுது நீர்பெருக்கப்பட்டு வானத்து ஒளியை வாங்கி தீட்டப்பட்ட உலோகம்போல மின்னியபடி காத்திருந்தது. அதனருகே வேளிர்களின் ஏழுகுடித்தெய்வங்கள் கல்பீடங்கள் மேல் கற்களாக நிறுவப்பட்டு குங்குமமும் களபமும் பூசி கரிய விழிவரையப்பட்டு மலர்மாலைசூடி அமர்ந்திருந்தன. பீஷ்மகரும் சுஷமையும் அந்தத் தெய்வங்களை வணங்கி மரக்கிளையையும் கதிரையும் அவற்றின் முன் வைத்தனர். அங்கே நின்றிருந்த குலப்பூசகர் அவர்களின் நெற்றியில் அந்தத் தெய்வங்களின் குங்குமகளபக் கலவையை இட்டு வாழ்த்தினார். அவர் கைபிடித்து அழைத்துச்சென்று வயல்விளிம்பில் அவர்களை நிறுத்தினார்.

பெருமுரசும் கொம்புகளும் பொங்கி எழுந்து வானை அதிரச்செய்தன. அரசி தன் கலத்திலிருந்த ஏழுமணிகள் கலந்த விதைகளை நீரொளி பரவிய வயலில் வீசி விதைத்தாள். பீஷ்மகர் தன் தோளிலிருந்த பொற்கலத்திலிருந்து நீரை அந்த வயலில் விட்டார். இருவரும் மும்முறை அந்த வயலை வணங்கி மீண்டனர். கூடிநின்றிருந்த மக்கள் புயல்சூழ்ந்த காடு போல கைகளையும் ஆடைகளையும் வீசி துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தனர்.

ஏழு வெண்பசுக்களுடன் ஆயர்குடியின் குடிமூத்தவர் அவர்களை எதிர்கொண்டனர். நுரைபொங்கும் பாற்குடங்களுடன் முதுஆய்ச்சியர் எழுவர் அவர்களுக்கு துணைவந்தனர். மூதாயர் தங்கள் வளைகோலைத்தூக்கி பீஷ்மகரின் தலைமேல் வைத்து வாழ்த்தினர். ஆய்ச்சியர் பால்துளி எடுத்து அரசிமேல் தெளித்து வாழ்த்துரைத்தனர். தலைதாழ்த்தி பசுக்களை வணங்கிய பீஷ்மகர் ஒரு அன்னைப்பசுவின் கயிற்றை வாங்கிக்கொள்ள அரசி பாற்குடம் ஒன்றை பெற்றுக்கொண்டாள்.

வேளிரும் ஆயரும் இருபக்கமும் தொடர அரசரும் அரசியும் மீண்டும் வந்து வைதிகர் முன் நின்றனர். வைதிகர் மணிமுடியை எடுத்து பீஷ்மகரின் தலைமேல் சூட இருகுடிமூத்தாரும் தங்கள் கோல்களைத் தூக்கி அவர்களை வாழ்த்தினர். மக்கள் திரள் "முடிகொண்ட விதர்ப்பன் வாழ்க! முடியாகி வந்த வரதா வாழ்க! குடி வாழ்க! குலம் வாழ்க!" என்று கூவியது. மணிமுடி சூடி செங்கோலும் உடைவாளும் ஏந்திய பீஷ்மகரும் முடிசூடிய அரசியும் அங்கு கூடியிருந்த மக்களைநோக்கி தலைதாழ்த்தி வணங்கினர். அரிமலர் மழை எழுந்து அவர்கள் மேல் பொழிந்தது.

வேளிரும் ஆயரும் இருபக்கமும் நிரை வகுத்து அவர்களை அழைத்துச்சென்று மேடை ஏற்றி அரியணைகளில் அமரச்செய்தனர். அவர்கள்மேல் குஞ்சலம் நலுங்க வெண்குடை எழுந்தது. மூத்தோர் அரிமலரிட்டு வாழ்த்தி மேடையிலிருந்து இறங்கியபின் வணிகர்கள் நிரைவகுத்து மேடைக்கு வந்து அரசரைப் பணிந்து வாழ்த்தத் தொடங்கினர். இருபக்கமும் உடைவாள் உருவிய படைத்தலைவரும் ஏட்டுச்சுவடி ஏந்திய அமைச்சரும் நின்றிருக்க பீஷ்மகர் முடிபொலிந்தார்.

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 6

செந்நிறத் தலைப்பாகையில் கொக்குச் சிறகு சூடிய முதிய நிமித்திகர் மேடைமேல் ஏறி நின்று வெள்ளிக்கோலை இடமும் வலமும் என மும்முறை சுழற்றியபோது முரசு மேடையில் அமர்ந்திருந்த பெருமுரசின் ஒளிரும் செவ்வட்டத் தோல்பரப்பின்மேல் கோல்கள் விழ அது சினம்கொண்ட மதகளிறென வயிறதிர்ந்து உறுமியது. கௌண்டின்யபுரியின் மக்கள்திரள் மெல்ல அமைதியடைந்தது. வரதாவின் அலைகளின் ஓசையும் கொடிகள் காற்றில் படபடக்கும் ஒலியும் ஆங்காங்கே எழுந்த அடக்கப்பட்ட தும்மல்களும் மூச்சொலிகளும் படைக்கலன்களின் உலோகக் குலுங்கல்களும் கால்மாற்றிக்கொள்ளும் புரவிகளின் லாடங்கள் மண்ணில் அழுந்தும் ஓசைகளும் மட்டுமே எஞ்சின.

புலரி எழுந்து வரதாவின் மேல் அடுக்கடுக்காகக் குவிந்திருந்த முகில்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்க நீரலைகளின்மேல் செவ்வொளி அலையடித்தது. தொலை தூரத்தில் விந்தியனில் இருந்து பறவைகள் அம்புக்கூட்டங்கள் போல வந்து தழைந்து நீர்ப்பரப்பில் இறங்கி அலைகளை எழுப்பி படிந்தன. சூழ்ந்திருந்த காட்டின் இலைப்பரப்புகள் ஒளி கொண்டன. அங்கிருந்து சிறு குருவிகள் எழுந்து சுழன்று சிறகடித்து நீர் விளிம்பின் சதுப்பில் அமர்ந்து எழுந்து மீண்டும் அமர்ந்து கைக்குழந்தையின் நகமுனை போன்ற சிற்றலகுகளைத் திறந்து தீட்டப்படும் அம்புகளைப் போல ஒலி எழுப்பி நிரை குலைந்து பறந்து மீண்டும் தங்களை அடுக்கிக் கொண்டு காற்றில் வளைந்து விளையாடின.

நிமித்திகர் உரத்த குரலில் "குடியீரே, சான்றோரே, கேளீர்! நீர் விழவு தொடங்கவிருக்கிறது. தன் மைந்தர் பாய்ந்து வந்து மடியில் அமர இதோ அன்னை வரதா கைவிரித்து புன்னகைத்து காத்திருக்கிறாள்" என்றார். அவர் சொற்கள் முடிவதற்குள்ளேயே கூடியிருந்த பெருந்திரள் வெடிப்பொலியுடன் கலைந்து வரதாவின் இருபக்கத்திலும் சென்று முட்டிமோதிச் செறிந்தது. வரதாவுக்குள் இறங்கும்முகமாக கமுக மரத்தடிகளை நாட்டி அமைக்கப்பட்டிருந்த நீள்மேடையில் இருபது இளைஞர்கள் இறுகிய அரையாடை அணிந்து உடம்பெங்கும் எண்ணெய் பூசி இறுகி நெளியும் தசை நார்கள் வெயில்பட்ட நீரலைகள்போல் மின்ன வந்து நின்றனர். அவர்களை கூட்டத்தினர் பெயர்கூவி வாழ்த்த திரும்பி கைகளை வீசி பற்கள் மின்ன சிரித்தனர்.

குலப்பாடகர்கள் தங்கள் குறுமுழவுகளை விரல்களால் மீட்டியபடி நடனமிட்டனர். கன்னியர் உள்ளக்கிளர்ச்சியால் சிவந்து கன்றிய முகங்களுடன் சிறுகுழுக்களாகி ஒருவரை ஒருவர் கைகளால் தழுவிக்கொண்டு தங்களுக்குள் பேசிச்சிரித்து நின்றனர். பீஷ்மகரை வணங்கிய அமைச்சர் முகுந்தர் "தங்கள் செங்கோல் இவ்விழவை தொடங்கி வைக்கட்டும் அரசே" என்று முறைப்படி விண்ணப்பித்தார். பீஷ்மகர் மலர்ந்த முகத்துடன் எழுந்து தன் செங்கோலை தூக்கி ஆட்ட பெருமுரசும் சங்கங்களும் கொம்புகளும் ஒலித்தன. புதுநீராட்டு விழவை தொடங்கி வைக்கும் மூத்த ஆட்டமுதலி தன் மரமேடையில் எழுந்து நின்று கையிலிருந்த வண்ணக்கோலை ஆட்டியதும் நீர்மேடையில் நின்ற இளையோர் மீன்கொத்திகளைப்போல, தவளைகளைப்போல, அம்புகளைப்போல, மழைத்துளிகளைப்போல நீர்மேல் பாய்ந்தனர். சிலர் மூழ்கி நெடுந்தொலைவில் எழுந்து பளிங்கைப்பிளந்து மேலெழுந்து வாயில் அள்ளிய நீரை உளியாக உமிழ்ந்தபடி கை சுழற்றி வீசி நீந்தினர். சிலர் நீர்ப்பரப்பில் புரண்டு வளைந்தெழுந்து சென்றனர். சிலர் துள்ளித்துள்ளி சென்றனர். அவர்கள் சென்ற நீர்த்தடங்கள் ஒன்றை ஒன்று வெட்டி அலைகளாயின.

மையப்பெருக்கை அவர்கள் அடைந்தபோது அதன் விசை அவர்களை மேற்காக இழுத்துச் சென்றது. கரையில் நின்ற கௌண்டின்யபுரியினர் மேலாடைகளை சுழற்றித் தூக்கி வீசியும் துள்ளிக் குதித்தும் ஆரவாரமிட்டனர். சிறு புள்ளிகளாக அவர்களின் தலைகள் சிவந்த நீர்ப்பரப்பில் ஆடியாடிச் செல்வது தெரிந்தது. பெருக்கில் மிதந்து வந்த நெற்றுகளுடனும் தழைகளுடனும் மட்கிய மரத்தடிகளுடனும் அவை பிரித்தரிய முடியாது கலந்தன. பறவைகள் தொடுவான் வளைவில் சென்றமைவது போல நெடுந்தொலைவில் ஒவ்வொருவராக மறுகரை அணைவதை காண முடிந்தது. அங்கு கட்டப்பட்ட மேடையில் நின்றிருந்த ஆட்டமுதலி வானில் எரியம்பை எழுப்பி செய்தி அறிவித்தார். மறுகரையில் நின்ற ஆட்டநெறியினரிடம் இருந்து பெற்ற ஈச்சை ஓலையாலான மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு மீண்டும் நீரில் குதித்து நீந்தி வரத்தலைப்பட்டனர்.

அவர்கள் மேலும் மேற்காக விலகிச் செல்ல வரதாவின் கரையோரமாகவே ஓடி மக்கள் அவர்களை நோக்கி சென்றனர். கரையோரச் சேற்றுப்பரப்பில் கால் வைத்து ஏறி களைத்து நிலம்தொட்டு தளர்ந்து விழுந்தனர் பலர். ஆற்றல்கொண்டு எஞ்சியவர்கள் அங்கு நின்றிருந்த குலமூத்தவரிடம் அடுத்த ஓலைவளையத்தை வாங்கி கழுத்திலணிந்துகொண்டு கரையோரமாகவே ஓடிவந்து மீண்டும் மேடை ஏறி நீரில் தாவினர். இரண்டாவது முறை அவர்கள் மீண்டு வந்தபோது எழுவர் தவிர பிறர் கை சோர்ந்து சேற்றில் விழுந்துவிட்டனர். மூன்றாவது முறை வரதாவை ஊடறுத்து நீந்தி மீண்டவர்களில் மூவர் மட்டுமே மீண்டும் நீந்துவதற்காக வந்து நின்றனர். அவர்களின் குடியினர் அவர்களைச்சுற்றி கைவீசி நடனமிட்டு வெறிக்கூத்தாடினர். முழவுகளையும் துடிகளையும் மீட்டியபடி அவர்களின் குலப்பாடகர்கள் அம்மூவரின் பெயர்களையும் கொடிவழியையும் மூத்தார் பெயர்நிரையையும் சொல்லி பாடி ஆடினர்.

மூவரும் நீரில் குதித்து புரண்டு செல்லும் வரதாவின் செம்பெருக்கை கிழித்து மறுகரை நோக்கி சென்றனர். அங்கு இருவர் நின்றுவிட ஒருவன் மட்டும் நீந்தி வந்தான். வழியில் அவன் நீரில் மூழ்க அவன் தலைக்காக விழி துழாவியபடி கரையில் கூட்டம் திகைத்து நின்றது. நெடுநேரம் அவன் தலை தெரியாமலானபோது பதைப்புடன் சதுப்பை மிதித்துத் துவைத்தபடி வரதாவின் கரையோரமாகவே ஓடினர். நீரில் அவன் தலை எழுந்த போது துள்ளி எழுந்து பெருங்குரலெழுப்பினர். எங்கும் களிவெறி கொண்ட முகங்கள் காற்றில் கொந்தளித்தன. களைத்த கைகளை உந்தி முன் செலுத்தி அவன் சேற்றுவிளிம்பை அணுகி வலது முழங்காலை ஊன்றி கைகளால் மண்தழுவி எழுந்து விழுந்தான். குடிமூத்த இருவர் சென்று அவன் தோள்களைப் பற்றி தூக்க குழைந்த கால்களுடன் துணிப்பாவை போல் அவர்களின் பிடியில் தன்னினைவிழந்து தொய்ந்து கிடந்தான்.

அவனைத்தூக்கி இழுத்து மேலே கொண்டுவந்து உலர்ந்த மண்ணில் படுக்க வைத்தனர். இளநீரையும் கள்ளையும் கலந்து மூங்கில் குவளையில் கொண்டுவந்து நீட்டி அவன் தலையை உலுக்கி கூவி எழுப்பினர். மெல்ல விழிப்புற்று கையூன்றி எழுந்தமர்ந்து அதைப் பெற்று மூச்சுத்திணறியபடி குடித்தான். மேலும் குடிக்க முடியாமல் உள்ளிருந்து மூச்சுவந்து தடுக்க கொப்பளித்துவிட்டு முனகியபடி மல்லாந்து படுத்தான். அவன் குடியினர் அவனை அள்ளித் தூக்கி தோளிலேற்றிக் கொண்டனர். மல்லன் ஒருவன் தோளில் அமர்ந்து நீர் சொட்டும் நீள்குழலைத் தலைக்குமேல் அள்ளி தோளுக்கு சரித்தபடி அவன் தன் இரு கைகளையும் வான் நோக்கி விரித்தான். காலையொளியில் நீர் மின்னும் இறுகிய தசைகளுடன் அமர்ந்து சுற்றி நின்ற தன் குடியை நோக்கி கை வீசினான்.

அலையடிக்கும் தலைகளுக்கு மேலாக காற்றிலென வந்து அரச மேடையை அணுகினான். அவனை மேடை மேல் இறக்கி விட்ட அவன் குடியினர் "கச்சன்! அவன் பெயர் கச்சன்" என்று கூச்சலிட்டனர். முதியவர் ஒருவர் "எங்கள் குலவீரன் இவன். வெல்லற்கரியவன். பெரும்புகழ் கொண்ட கலம குடியைச்சார்ந்த பரமனின் மைந்தன்" என்று கூவினார். பீஷ்மகர் எழுந்து சென்று அவனிரு தோள்களையும் பற்றி நெஞ்சோடணைத்துக் கொண்டார். நான்கு ஈச்சை ஓலை வளையங்களணிந்த அவன் கழுத்தில் தன் கழுத்திலணிந்த மணியாரம் ஒன்றைக் கழற்றி சூட்டினார். அவன் குனிந்து அவர் கால்தொட்டு வணங்கியபின் எழுந்து தன் குடிகளை நோக்கி கை கூப்பினான். அவன் முன் கௌண்டின்யபுரியின் பெரும் திரள் ஆர்ப்பரித்தது.

பீஷ்மகர் "நீ விழையும் பரிசில் என்ன இளையவனே?" என்றார். அவன் கைகூப்பி "அரசே, என் குடித்தலைவனின் மகள் பைமியை விழைகிறேன்" என்றான். "ஆம்! ஆம்! பைமி அவனுக்கே" என்று அவனைச்சூழ்ந்திருந்த அவன் தோழர்கள் ஆர்ப்பரித்தனர். உரக்கச்சிரித்தபடி "இளையோனே, நீர் வென்று மீண்டபின் கோரி அடைய முடியாத ஒன்றில்லை. இப்போதே கொள்க அவளை" என்றார் பீஷ்மகர். குடித்தலைவர் காலகரை மூவர் தூக்கிக்கொண்டு வந்து அவைமுன் நிறுத்தினர். படிகளில் கையூன்றி ஏறி அரசர் முன் நின்ற காலகர் தன்னைச் சூழ்ந்து கை வீசிக்கொண்டிருந்த கௌண்டின்யபுரியின் மக்களை நோக்கி கையெடுத்து வணங்கி "வரதாவின் ஆணையை ஏற்கிறேன். இவ்விளையோன் கையில் செல்வ மகளை அளிக்கிறேன். என் தலை தாழ்ந்தபின் குடி சூடிய கோலையும் அவன் கொள்க!" என்றார்.

கச்சன் குனிந்து காலகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவர் அவன் தோளை வளைத்து தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டார். "கொண்டுவாருங்கள்! மணமகளை கொண்டுவாருங்கள்!" என்று இளையோர் கூச்சலிட்டனர். "எங்கே திருமகள்? எங்கே பைமி? எங்கே?" என்று குதித்தனர். கூட்டத்தின் நடுவில் இருந்து ஏழு இளம் பெண்டிரால் இருபக்கம் சூழப்பட்டு பைமி தலை குனிந்து சிற்றடி எடுத்து வைத்து வந்தாள்.

அவளைப்பார்க்கும்பொருட்டு அங்கிருந்த இளையோரும் பெண்டிரும் தலை தூக்கி குதிகாலில் எழுந்தனர். ஒருவர் மேல் ஒருவர் எம்பி அவளை நோக்கி வாழ்த்துக்கூச்சலிட்டனர். மேடை அடைந்த பைமி தன் தந்தைக்கு வலப்பக்கம் தலை குனிந்து நின்றாள். இளம் பச்சைச் சேலை சுற்றி தொய்யில் எழுதிய திறந்த முலைகள்மேல் கல்மாலையும் காதுகளில் செந்நிற கல்குண்டலங்களும் அணிந்திருந்தாள். கரிய நீள்குழலில் செண்பக மலர் மாலை சூடி, சிவந்த குங்குமப் பொட்டிட்டு நீள் விழிகளுடன் நின்ற கரிய அழகியை நோக்கி கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியது.

பீஷ்மகர் "உங்கள் மகள் கையை இளையவன் கொள்க!" என்று ஆணையிட "அவ்வண்ணமே" என்று சொன்ன காலகர் தன் மகள் வலக்கையைப் பிடித்து இளையவன் கைகளில் அளித்தார். அவன் அவள் கைகளை பற்றிக் கொண்டதும் பீஷ்மகர் இருவரையும் கைதூக்கி வாழ்த்தினார். இருவரும் அரசரையும் அரசியையும் வணங்கி அவையையும் மூத்தாரையும் வணங்கியபின் கை கோத்தபடி படிகளில் இறங்கிச் சென்றனர்.

மீண்டும் பெருமுரசு மும்முறை முழங்கி கொம்பொலிகளுடன் நிறைவுற்றபோது மேலும் இளையோர் வந்து நீர்மேடையில் நிரை வகுத்தனர். ஆட்டமுதலி கோலசைத்து ஆணையிட்டதும் அவர்கள் நீரில் பாய்ந்து நீந்தி மறுகரை நோக்கி சென்றனர். அந்நிரையில் எவரும் மும்முறைக்குமேல் வரதாவை கடக்கவில்லை. வரதாவைக் கடந்தவர்களை பீஷ்மகர் மேடைக்கு வரவழைத்து மாலை சூடி கணையாழியும் கங்கணமும் பரிசளித்து வாழ்த்தினார். அவர்களின் குலத்தவர் கூடி வரதாவை வென்று மீண்ட இளையோரை தூக்கிக் கொண்டு சென்று பீடம் அளித்து அமர்த்தி சூழ்ந்து நின்று வாழ்த்தி அவர்கள் விரும்பும் பரிசில்களை அளித்தனர்.

நான்காம் நிரையில் இருவர் மட்டுமே மும்முறை வரதாவை கடந்தனர். ஐந்தாவது நிரையில் ஒருவன் நான்காவது முறையும் வரதாவை கடந்துவந்து தரை வந்த மீன் போல கைகால் உதறி மூச்சு ஏங்கி துடித்தான். அவனுக்கு நீரளித்து தூக்கி தலைகளில் ஏற்றி நடனமிட்டபடி மேடைக்கு கொண்டுவந்தனர் அவனது குடியினர். பீஷ்மகர் அவனுக்கு மணிமாலையளித்து வாழ்த்துரைத்தார். அவன் கோரியபடி விதர்ப்பத்தின் ஆயிரத்தவர்களில் ஒருவனாக அவனை அமர்த்தி அதற்குரிய பட்டயமும் உடைவாளும் மேடையிலேயே அளித்தார். ஆயிரத்தவனை அவன் குடியினர் அள்ளித்தூக்கி காற்றில் வீசிப்பிடித்து களியாட்டமிட்டனர்.

ருக்மி அங்கு நிகழ்பவற்றை அவற்றின் முறைமைகளையும் வரலாற்றையும் மெல்லிய குரலில் தலை சாய்த்து சொல்லிக் கொண்டிருக்க விழிகள் மட்டும் மெல்லிய ஒளி கொண்டிருக்க உணர்வற்ற முகத்துடன் சிசுபாலன் கேட்டு தலையசைத்தான். எந்த வீரனையும் எழுந்து அவன் வாழ்த்தவில்லை என்பதை விதர்ப்பத்தின் குடிகளனைவருமே உளம் கூர்ந்தனர். ஓரிருவர் அதை தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். இறுதி நீர்விளையாட்டு நிரை கரையணைந்ததும் பெருமுரசம் விழவுநிறைவை முழங்கியது. உண்டாட்டுக்கான அறிவிப்பை எழுப்பும் பொருட்டு நிமித்திகன் மேடை மேல் தன் வெள்ளிக் கோலுடன் எழுந்தபோது சிசுபாலன் குனிந்து ருக்மியிடம் ஏதோ சொன்னதை அனைவரும் கண்டனர்.

ருக்மி ஒரு கணம் திகைத்து தன் தந்தையை நோக்கியபின் திரும்பி சிசுபாலனிடம் எதோ கேட்டான். சிசுபாலன் சொன்னதை உறுதி செய்துகொண்டபின் எழுந்து இரு கைகளையும் விரித்தபோது முரசொலி அமைந்தது. கூட்டத்தின் முன்வரிசையினர் கையசைத்து பின்னிரையினரை அமைதியடையச்செய்தனர். அமைச்சர் மேடையிலிருந்து இறங்கிச் சென்ற நிமித்திகரை அணுகி அவரிடம் பேசுவதை விழிகளால் கேட்க முனைந்தனர். நிமித்திகர் முகத்திலும் வியப்பு எழுந்தது. பின்பு தலைவணங்கி தன் வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றித் தூக்கி உரத்தகுரலில் "தொல்புகழ் விதர்ப்பத்தின் குடிகளே, கௌண்டின்யபுரியின் மங்கல மகளிரே, அனைவரும் அறிக! இப்போது நமது பட்டத்து இளவரசரும் சேதி நாட்டு அரசரும் வரதாவின் பெரு நீர்ப்பெருக்கில் நீர்விளையாட்டுக்கு எழுகிறார்கள். அவர்கள் வெற்றி கொள்க! வரதா அவர்களை வாழ்த்துக! ஓம் அவ்வாறே ஆகுக!" என்றார்.

அவ்வறிவிப்பை பன்னிரு துணைநிமித்திகர் ஏற்று மறுமுறை கூவ ஒன்றிலிருந்து ஒன்றென கடந்து செல்லும் செய்தி கூடிநின்ற கௌண்டின்யபுரியின் பெருந்திரளை குழப்பமடையச் செய்வதை காணமுடிந்தது. காற்று கடந்து செல்லும் குறுங்காடுபோல கூட்டம் சலசலத்து மெல்ல அலையடித்து ததும்பியது. சிசுபாலன் தன் மணிமுடியைக் கழற்றி அம்ர்ந்திருந்த பொற்பீடத்தில் வைத்தான். அணிகளையும் ஆடைகளையும் கழற்றினான் .இறுகிய மான்தோல் அரையாடையுடன் நடந்து படிகளில் இறங்கி நீர்மேடை நோக்கி சென்றான். அணிகளையும் ஆடைகளையும் கழற்றிவிட்டு அவனுடன் ருக்மியும் தொடர்ந்து சென்றான்.

வரதாவின் செந்நீரின் நிறத்தையும் ஒளியையும் கொண்டிருந்தான் சிசுபாலன். கௌண்டின்யபுரியின் மக்கள் சிசுபாலனின் உடலை தங்கள் விழிகளால் ஒவ்வொரு மயிர்க்காலிலுமென தொட்டுத் தொட்டு அறிந்தனர். வெண்தேக்கில் பெருந்தச்சன் செதுக்கிய சிற்பம் போலிருந்தான் சிசுபாலன். பிழையற்ற ஆணழகு அமைந்த தசைகள். நீண்ட கைகளை விரித்து இறுகியசைந்த தோள்கள் மேல் சரிந்த காக்கைச்சிறகுக் குழல்கற்றைகளுடன் சருகுமேல் நடக்கும் வேங்கை என சென்று மேடை மேல் ஏறினான். கருவேங்கை மரத்தில் செதுக்கிய சிற்பம் போன்ற உடலுடன் அவனருகே ருக்மியும் நடந்தான்.

குழல்புரிகளை இடையிலிருந்து உருவி எடுத்த தோல் சருகால் இறுகி முடிந்து கொண்டையாக்கினான். ஏவலனொருவன் அருகே வந்து சிறு வெண்கலச்சிமிழிலிருந்து நறுமண எண்ணையை அள்ளி அவனுடலில் பூச மெழுகு பூசப்பட்ட மூங்கில் போல் அவன் உடல் ஒளி கொண்டது. இரு பாளங்களாக விரிந்த மார்பின் தசைகள் நீரலைகள் போல் மிளிர தொடைத் தசைகள் நாணேற்றிய வில்லென இறுகி நின்றன. அவனருகே புலித்தோல் இடையாடையுடன் நின்ற ருக்மியும் உடலெங்கும் எண்ணை பூசிக்கொண்டான். ருக்மியின் உடலசைவுகளில் நெடுங்காலம் சிசுபாலனை அணுகிப் பழகி விழிகளாலும் உள்ளத்தாலும் அவனைத் தொடர்ந்து தன்னை அவன் மறுவடிவாக ஆக்கிக் கொண்டிருந்தமை தெரிந்தது. உயர்ந்த கரிய உடலும் அகன்ற தோள்களும் நீண்ட பெருங்கரங்களும் சற்றே பருத்த வயிறும் தடித்துருண்ட தொடைகளும் கொண்டிருந்தாலும் அவன் அசைவுகளும் நின்றிருக்கும் முறையும் சிசுபாலனையே நினைவுறுத்தின. தன்னைவிட பெரிய நிழலுடன் சிசுபாலன் நடப்பது போல் அவர்கள் இருவரும் செல்லும் போது தோன்றியது.

இரு கைகளையும் விரித்து கௌண்டின்யபுரியின் மக்களை நோக்கி அசைத்தான் சிசுபாலன். மக்கள் நிரையில் முன்பக்கம் நின்றிருந்த சேதிநாட்டவர் தங்கள் வேல்களையும் வால்களையும் தூக்கி "சேதி நாட்டு இள்ஞ்சூரியன் எழுக! தமகோஷர் ஈன்ற தவப்புதல்வன் வாழ்க! பாரத வர்ஷத்தின் மணிமுடி சூடப்போகும் எங்கள் குலத்தலைவர் வாழ்க!" என்று கூவினார்கள். அவர்களுக்குப்பின்னால் பெருகிக் கிடந்த கௌண்டின்யபுரியின் மக்களிடமிருந்து முறைமையான மெல்லிய கலைந்த வாழ்த்தொலி மட்டுமே எழுந்தது. அதை உணர்ந்த ருக்மி முகம் சுளித்து திரும்பி நோக்கி கைகளை அசைத்து மக்களிடம் வாழ்த்து கூவுமாறு ஆணையிட்டான். ஆயினும் ஒலி பெருகவில்லை.

ஆட்டமுதலி கொடி அசைத்ததும் இருவரும் இரு அம்புகளென வளைந்து நீரில் விழுந்தனர். சிசுபாலன் நெடுந்தொலைவில் நதியின் மைய ஒழுக்கில் தலைதூக்கி சுழற்றி நீரை உதறியபின் கையெட்டு வைத்து செல்லத்தொடங்கினான். சற்று பின்னால் அவனை ருக்மி தொடர்ந்து சென்றான். கைகளால் நீர்மேல் நடப்பவன் போல தெரிந்தான் சிசுபாலன் .நீர் அவனைத் தள்ளிச்செல்லவில்லை என்று தோன்றியது. மிக எளிதாக மறுகரை அணைந்து நீர்மேடைமேல் எழுந்து ஆட்டமுதலி சூட்டிய ஈச்ச ஓலை மாலையை கழுத்திலணிந்து அக்கணமே மீண்டும் நீரில் குதித்து நீந்தி வந்தான். கரை சேர்ந்து எழுந்து தொடையளவு நீரில் நின்று அவிழ்ந்து நீர் சொட்டிய நீள்கூந்தலை உதறி மீண்டும் முடிந்தபின் கழைக்கூத்தாடி கம்பிமேல் நடப்பது போல நிகர்நிலை கொண்ட உடலுடன் நடந்து வந்தான். மீண்டும் நீர்மேடையேறி ஆணைக்குக் காத்திருக்காமல் நீரில் பாய்ந்தான்.

அவன் நீந்தும் முறையிலேயே இயல்பாக பலமுறை வரதாவைக்கடக்க அவனால் முடியுமென்று கௌண்டின்யபுரியின் மக்கள் அறிந்தனர். அது அவர்க்ளை சற்றே சோர்வுறச்செய்தது போல வெறுமனே நோக்கி நின்றனர். மூன்றாவது முறையாக நீந்துவதற்கென்றே உருவான மீனுடல்கொண்டவன் போல அவன் வரதாவை கடந்தபோதுகூட மக்களிடமிருந்து உவகையொலிகள் எதுவும் எழவில்லை. நான்காவது முறையாக நீர்மேடையிலிருந்து அவன் பாய்ந்த போது மட்டும் முன்னிரையில் நின்ற இளையோர் சிலர் கைகளை வீசி "சேதி மன்னருக்கு வெற்றி! நிகரிலா வீரருக்கு வெற்றி!" என்று கூவினர்.

மூன்றாம்முறை நீந்தியபோதே ருக்மி தளர்ந்து மூச்சுவாங்கி தள்ளாடினான். நான்காவது முறை திரும்பி வந்தபோது சேற்றில் முழங்காலூன்றி கைகளைப்பரப்பி குப்புற விழுந்துவிட்டான். ஏவலர் சென்று அவனைத் தூக்க முயன்றபோது கைகளால் தடுத்து விலகிச்செல்லும்படி ஆணையிட்டபின் வலக்கையை ஊன்றி இடக்காலால் உந்தி எழுந்து நிலையழிந்து ஆடியபடி நின்று பின்பு இருகைகளையும் இடையில் வைத்து அண்ணாந்து கொக்குபோல வாய்திறந்து மூச்சை அள்ளி உடலை நெளித்தான். அவனை திரும்பிக்கூட பார்க்காத சிசுபாலன் சற்றே துவண்ட நடையுடன் கால்களை உந்தி நடந்து மீண்டும் நீர்மேடையை அணுகி கட்டவிழ்ந்த கூந்தலை இறுகமுடிந்து கட்டியபின் கைகளை நீட்டி தசைகளை ஒருமுறை இழுத்து தளர்த்தி சீரமைத்துக்கொண்டு நீரில் பாய்ந்தான்.

இம்முறை கௌண்டின்யபுரியின் குடிகள் அனைவரிலும் ஆர்வமும் பதற்றமும் பரவின. அச்சமும் ஆவலும் எழுந்த விழிகளுடன் இளையோர் கூட்டம் வரதாவின் இரு கரையோர மரங்களில் தொற்றி ஏறி கிளைகள் தோறும் பிதுங்கியபடி நீர்ப்பரப்பை நோக்கி காத்திருந்தது. விரிந்த அந்திவானில் களைத்த சிறகுகளைத் துழாவியபடி செல்லும் பறவைபோல் செந்நிற நீருக்குமேல் சிசுபாலன் செல்வதை காணமுடிந்தது .அவனை நோக்கி வந்த நீர்ப்பெருக்கின் தடி ஒன்றை தவிர்க்க மூழ்கி நெடுந்தொலைவில் அவன் எழுந்தபோது கூட்டத்திலிருந்து அறியாமல் ஓர் ஆரவாரம் கிளம்பியது. மறுபக்கம் சென்று நீர்மேடையில் எழுந்து ஈச்சமாலையை வாங்கியதும் கைகளை ஊன்றி கால்களைத்தொங்கவிட்டபடி சற்றுநேரம் அமர்ந்து மூச்சிளைத்தான்.

"அமர்ந்திருக்கிறார் "என்று யாரோ கூவ "திரும்பி வருவது கடினம்" என்று பிறிதெவரோ சொன்னார். பல குரல்கள் எழுந்து அக்குரலை அடக்கின. சேதிநாட்டு வீரர்கள் அச்சமும் பதற்றமும் கொண்டவர்களாக ஒருவரோடொருவர் நெருங்கி நின்றபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். சிசுபாலன் நீர்மேடையில் எழுந்து கைவிரிப்பதை காணமுடிந்தது. நீரில் அவன் பாயும்போது எழுந்த அலை சிறு கொப்புளமென தெரிவதைக்கண்டு பீஷ்மகர் அமைச்சரை நோக்க அமைச்சர் "ஐந்து முறை விதர்ப்பத்தின் வரலாற்றில் எவரும் வரதாவை கடந்ததில்லை அரசே" என்றார். பீஷ்மகர் முகத்தை கைகளால் வருடியபடி விழிவிலக்கிக்கொண்டார்.

சிசுபாலன் நீர்ப்பரப்பைத் தொட்டு வருடிவரும் சுட்டுவிரல் ஒன்றின் தடமென வந்து கொண்டிருந்தான். மூழ்கி நெடுந்தூரம் கடந்து மேலெழுந்து மீண்டும் கை சுழற்றினான். வரதாவின் கரையை அவன் அணுகியபோது உயிர்த்தவிப்புடன் ஒவ்வொரு முறையும் மேலெழுந்து வாய்திறந்து காற்றை அள்ளுவதை காணமுடிந்தது. ஒவ்வொரு கையையும் தன் முழு விசையாலும் உந்தி முன் வைப்பதை உணர முடிந்தது. வரதாவின் எடையனைத்தும் அவன் தோள்கள் மேல் அழுந்தி இருப்பது போல. பல்லாயிரம் நாகங்கள் அவன் கால்களைச்சுற்றி ஆழத்திற்கு இழுப்பது போல.

அவன் நீந்துவதன் அழுத்தத்தை அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உணர்ந்தவர்கள் போல சற்றே குனிந்து வாய் திறந்து விழி அசையாது நோக்கி நின்றனர். சேற்று விளிம்புக்கு அருகே வந்தபோது சிசுபாலன் இருமுறை நீரில் மூழ்கினான். மிக அருகே வந்தபின்புகூட அவன் கைதளர்ந்து மூழ்கி ஒழுகிச்சென்று விடுவானென்ற எண்ணமெழுந்தது. அவன் கால்கள் அடித்தட்டை மிதித்து தலை உறுதியுடன் மேலெழுந்தபோது கௌண்டின்யபுரியின் மக்கள்திரள் ஒரே குரலில் "சேதி நாட்டு சிம்மம் வாழ்க!" என்று ஆர்ப்பரித்த்தது. கொதிக்கும் எண்ணெய் மேல் மழை விழுந்தது போல செறிந்திருந்த திரள்மானுடம் கொப்பளித்து சிதறித் தெறித்தது. கைகளாலும் கால்களாலும் சேற்றை நீருடன் கலக்கி அணுகிய சிசுபாலன் அவர்களுக்கு முன்பாக வந்து நீரில் கால்சிக்கி தடுமாறி முன்னால் சரிந்து கைகளை ஊன்றாமல் உயிறற்றவன் போல விழுந்தான்.

அசைவற்றுக்கிடந்த சிசுபாலனை நோக்கி பதறியபடி ஓடிச்செல்ல முயன்ற குடிமூத்தாரை அவனது இரு படைத்தலைவர்கள் கை நீட்டி தடுத்தனர். சற்று நேரம் படுத்திருந்த பின் கைகளை ஊன்றி மல்லாந்த சிசுபாலன் கைகளை விரித்து வானை நோக்கி வாய்திறந்து மூச்சுவிட்டபடி சற்றுநேரம் கிடந்தான். பின்பு கால்களை இழுத்து மடித்து கைகளை ஊன்றி உடல் தூக்கி எழுந்தான். தள்ளாடி நிற்கமுயன்று கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து நின்றான். இரு கைகளையும் முழங்காலில் ஊன்றி குனிந்து நின்று விசையுடன் மூச்சிளைத்து தன்னை நெறிப்படுத்திக் கொண்டபின் நிமிர்ந்த தலையுடன் எவரையும் நோக்காது நடந்து முன்னால் வந்தான்.

அவனைச்சுற்றி களிவெறியின் உச்சத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கௌண்டின்யபுரியின் மக்களை அவன் அறியவே இல்லை என்று தோன்றியது அவனுடலில் வாழைத்தண்டில் என நீர் வழிந்து உலர்ந்து வட்டங்களாகி மறைந்து கொண்டிருந்தது. அவன் அரசமேடை நோக்கியே செல்வானென அனைவரும் எதிர்பார்த்த கணத்தில் மீண்டும் நீர்மேடை நோக்கி சென்றான். என்ன நிகழ்கிறதென்பதை முன்னிரையில் நின்றவர்கள் உணரவில்லை. பின்னிரையோ எதையும் அறியாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. முன்னிரையின் அமைதியை உணர்ந்தபின் அவர்களும் மெல்ல அடங்கி விழிகளாக மாறினர்.

இலைகள் காற்றில் நடுங்கும் ஒலி கேட்கும் அமைதியை தன் காலடியோசையால் அளந்தபடி சிசுபாலன் நீர்மேடைக்குச்சென்று நின்று தன் கைகளை நீட்டி உதறிக்கொண்டான். கால்களைத் தூக்கி மடித்து நீட்டினான். அவன் படைத்தலைவனொருவன் அருகே சென்று பணிவுடன் ஏதோ சொல்ல முயல சிசுபாலன் திரும்பி நோக்கினான். அவ்விழியின் ஆணையை ஏற்று படைத்தலைவன் தலைவணங்கி பின்னடைந்தான். மேடைக்கு அருகே நின்றிருந்த ருக்மி கை வீசி ஏதோ சொன்னபடி சிசுபாலனை நோக்கி செல்ல அவன் திரும்பாமல் கைகளை மேலே தூக்கி உடலை அம்பென ஆக்கி பாய்ந்து நீரில் மீண்டும் விழுந்தான்.

இம்முறை அங்கிருந்த ஒவ்வொருவரும் மறைந்து பெருகிச்செல்லும் செந்நிறநதியும் அதில் நீர்ப்பாம்பின் தலை என கோடிட்டுச் செல்லும் ஒரு மனிதனும் மட்டுமே அங்கிருப்பது போல் தோன்றியது. நோக்கினால் ஒவ்வொருவரும் சிசுபாலனை மிக அண்மையிலென சூழ்ந்திருந்தனர். நீருக்குமேல் வீசப்பட்ட அவன் கைகளிலிருந்து தெறித்த துளிகளின் ஒளியை, அவன் முகத்தில் ஒட்டியிருந்த ஒற்றை முடியை, மூழ்கி மேலெழுகையில் அவன் மூக்குமுனையில் சொட்டிய துளியை ஒவ்வொருவரும் கண்டனர். அவன் வைத்த ஒவ்வொரு கை வீச்சும் ஒரு கணமென ஓர் எண்ணமென ஒரு முறை வாழ்தலென கடந்து சென்றது.

அம்முறை மேலும் எளிதாக அவன் நீந்துவது போல தெரிந்தது. அலைகளின் நெறியை அவன் உடல் கற்றுக்கொண்டுவிட்டது போல. மானுட உடலின் வடிவ மீறல்களை மழுப்பி உருண்டு நீண்டு மீனின் நீள்கூருடல் கொண்டது போல. மறுபக்க நீர்மேடை மேல் தாவி ஏறி கால் ஊன்றி எழுந்து கை விரித்து நின்றான். ஈச்சமாலையை வாங்கக்கூட அவன் திரும்பவில்லை. அங்கிருந்த ஆட்டமுதலி ஓடிவந்து அவன் கழுத்தில் அணிவித்ததை அவன் அறிந்ததாகவும் தெரியவில்லை. நிமிர்ந்து ஒளிகொண்ட முகில்களால் ஆன வெண்ணிற வானத்தை நோக்கினான். கிழக்குச்சரிவில் நடுவே இந்திரநீலவட்டம் ஒளியுடன் அதிர கதிர்முடி சூடிய சூரியன் எழுநதது. சூரியவட்டத்தை சில கணங்கள் நோக்கி நின்ற பின்பு மீண்டும் நீரில் பாய்ந்து வரத்தொடங்கினான்.

ஒருமுறைகூட அவன் தலை நீருக்குள் செல்லவில்லை என்பதை கௌண்டின்யபுரியின் குடிமக்கள் கண்டனர். அங்கு நீரே இல்லை என்பது போல. காற்றில் மிதந்து வரும் இறகு போல அவனறியாத பெருங்கரமொன்று சுமந்து அணுகுவது போல. விலாவின் இருபக்கமும் கார்த்தவீரியனைப்போல் ஆயிரம் பெருங்கரங்கள் அவனுக்கு எழுந்துவிட்டது போல. சேற்று விளிம்பை அணுகியபோது தரை வந்தமரும் காகம் போல் எளிதாக இருகால்களையும் ஊன்றி கைகளை வீசி நடந்து கரையணைந்தான். ஒரு முறை உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தபின் சேற்றில் நடந்து சூழ்ந்திருந்த மக்களின் அமைதியின் மேல், விழிகளின் மேல், மூச்சுகளின் மேல் கடந்து சென்று மீண்டும் நீர்மேடையை அணுகினான்.

பீஷ்மகர் அரச மேடையிலிருந்து படிகளிறங்கி மண்ணுக்கு வந்தார். அவனை நோக்கி ஏதோ சொல்லச் செல்பவர் போல கைநீட்டி பின் தயங்கினார். வைதிகர்கள் அமைச்சர்கள் படைத்தலைவர்கள் அனைவரும் தாங்கள் சூடிய வேடங்களை இழந்து வெறும் மானுடராக மாறினர். உடல்களையும் உதிர்த்து விழிகளாக எஞ்சினர். சிசுபாலன் நீரில் மீண்டும் குதித்து வரதாவை கோடிழுத்தது போல் கடந்து மறுபக்கம் சென்றான். ஈச்ச மாலையுடன் கை நடுங்க அணுகிய ஆட்டமுதலி அதை அவன் கழுத்தில் போடுவதற்குள் மீண்டும் குதித்து வானில் பறக்கும் பருந்தின் நிழல் போல் நீரலைகள் மேல் வந்தான். நீரும் கரையும் வேறுபாடில்லாமலானதுபோல் கரையேறி நடந்தான்.

அவன் மீண்டும் நீர் மேடை நோக்கி செல்ல பீஷ்மகர் உரத்த குரலில் "சேதி நாட்டரசே, போதும். நாங்கள் எளிய மானுடர். தாங்கள் எவரென்று இன்று கண்டோம். இந்நகரும் என் மணிமுடியும் உங்கள் கால்களுக்குக் கீழே இதோ பணிகிறது. நில்லுங்கள்!" என்று உரக்க கூவினார். ருக்மி பாய்ந்து சென்று சிசுபாலனின் கைகளைப்பற்றிக் கொண்டு "சிசுபாலரே, போதும். நான் சொல்வதை கேளுங்கள். போதும்" என்றான். கனவிலிருந்து விழித்துக்கொண்டவன் போல சற்று உடல் விதிர்க்க அசைந்தபின் ருக்மியின் கரிய தோள்கள் மேல் தன் கைகளை வைத்து உடலை நிலைப்படுத்திக் கொண்டு சிசுபாலன் தன்னைச் சூழ நின்றவர்களை நோக்கினான்.

ருக்மி உளக்கொதிப்பால் தழுதழுத்த குரலில் "தாங்கள் மானுடரல்ல. இப்பாரதவர்ஷத்தை ஆளவந்த பெருந்தெய்வம். ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியன். திசை யானைகளை நெஞ்சு பொருதி வென்ற இலங்கை மன்னன். மண்ணளந்த மாபலி. விண்வென்ற இரணியன்..." என்றான். மூச்சில் எழுந்தமர்ந்த நெஞ்சுடன் தன்னைச்சுற்றி ஒளிவிட்ட கௌண்டின்யபுரியின் மக்களின் விழிகளை நோக்கிய சிசுபாலன் இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கினான். மறுகணம் பல்லாயிரம் குரல்கள் ஒரே ஒலியென வெடித்தெழுந்தன "சேதி நாட்டுச் சூரியன் வாழ்க! புவியாளவந்த பெருமன்னன் வாழ்க! எங்கள் குடி வெல்ல வந்த முடி மன்னன் வாழ்க!"

வெறிகொண்டு முழவுகளும் கிணைகளும் மீட்டி பாணர் நடனமிட்டனர். இளையோர் கைவிரித்து தொண்டைநரம்புகள் தெறிக்க கூவியார்த்தனர். கன்னியர் நாணிழந்து ஆடை நெகிழ்ந்து கூந்தல் உலைந்து கூவி குதித்தாடினர். முதியவர் கண்ணீர் வார கைவிரித்து வானை நோக்கி அரற்றினர். படைவீரர் வாள்களையும் வேல்களையும் வானோக்கி வீசிப் பிடித்து குதித்தனர். அங்கு மானுட உடல்கள் கரைந்தழிய உணர்வுகளால் மட்டுமேயான விண்ணவர் கூட்டம் ஒன்று நின்றிருந்தது.

ருக்மி "சிசுபாலரே, இதோ என் குடியும் நாடும் என் மக்களும் உங்கள் கால் பொடியாக மாறி நின்றிருக்கிறோம். இங்கு தாங்கள் விழைவதென்னவோ அதை கொள்க! தாங்கள் எண்ணியவாறு எங்களை ஆள்க! தங்களுக்கு இல்லாத ஒன்று இனி எங்களுக்கில்லை. இது எங்கள் ஏழு தலைமுறைகள் மேல் ஆணை! என் தந்தை மேல், மூதாதையர் மேல், குலதெய்வங்கள் மேல் ஆணை!" என்று கூவ சிசுபாலன் அவன் தோள்களைத்தொட்டு அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டான்.

பகுதி பத்து : கதிர்முகம் - 1

கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழுடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட கழிகளால் முழக்கி இடியோசை எழுப்பினர். நகர்மேல் பனிப்பரவல் போல இறங்கிய ஓசை உண்டாட்டுக்கு அறைகூவியது. நீராட்டு விழவு முடிந்து ஈர உடையுடன் இல்லம் திரும்பி இன்னுணவு உண்டு சாவடிகளிலும் மண்டபங்களிலும் திண்ணைகளிலும் விழுந்துகிடந்து விழிமயங்கிக் கொண்டிருந்த மக்கள் அவ்வோசை கேட்டு எழுந்தனர். முரசு முழக்கம் அடங்கி அதன் ரீங்காரம் தேய்வதற்குள் நகரம் பேரோசையுடன் விழித்துக் கொண்டது. சில கணங்களுக்குள் தெருக்கள் எங்கும் மக்கள் நிறைந்து கூச்சலிட்டு அங்கும் இங்கும் முட்டிமோதி ததும்பத் தொடங்கினர். மரக்கிளையில் தேனடை என வரதாவின் கரையில் அமைந்த நகரத்தின் நூற்றுக்கணக்கான சிறிய தெருக்களில் இருந்து எழுந்த மக்கள் அரண்மனை முகப்பின் அரைவட்டப் பெருஞ்சதுக்கம் நோக்கி சென்றனர்.

வரதாவின் சேறு அழுந்தி உருவான பட்டைக்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக தூக்கி வைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையின் ஏழு காவல்மாடங்களும் மரத்தாலனவை. அவற்றின் உச்சியில் அமைந்திருந்த காவல்முரசுகளும் உண்டாட்டுக்கான அழைப்பொலியை எழுப்பின. அவ்வொலி கேட்டு கோட்டைக்கு அப்பால் காட்டுவிளிம்பின் உயர்ந்த மரங்களின் மேல் அமைந்திருந்த மலைக்குடிகளின் காவல்முழவுகள் ஒலிக்கத்தொடங்கின. ஒலி காடெங்கும் பரவிச்சென்றது. மலைக்குடிகள் தங்கள் கோல்களுடனும் தோல்மூட்டைகளுடனும் மகவும் மகளிருமாக கிளம்பி மலையிறங்கினர்.

நகரின் மூன்று பெருவாயில்களில் நின்றிருந்த காவலர்கள் உண்டாட்டு கொண்டாட வந்த மலைக்குடியினரை ஒவ்வொருவராக நோக்கி உள்ளே அனுப்பினர். மலைக் குடியினர் படைக்கலம் ஏந்தி நகர் நுழையக்கூடாது என ஆணை இருந்தது. கௌண்டின்யபுரியின் உண்டாட்டு மலைக்குடியினருக்கு நினைவில் வளரும் நிகழ்வு. பெருஞ்சோற்றூண் என்பதோ தலைமுறைக்கு ஓரிரு முறை நிகழ்வது. நெடுநாட்களுக்கு முன் இளவரசி பிறந்தபோது அரசர் பீஷ்மகர் அமைத்த உண்டாட்டை முதியவர்கள் எப்போதும் நினைவுகூர்வதுண்டு. அன்று உண்ட சுவைகள் அவர்களின் நாவிலிருந்து சொல்லுக்கு சென்றுவிட்டிருந்தன.

மாலை தொடங்கி மறுநாள் விடிந்து கதிர்எழுந்து உச்சி ஒளிர்ந்து அந்தி மயங்கி மறுநாள் தோன்றும்போதும் அவ்வுண்டாட்டு தொடரும். உண்டு உறங்கி எழுந்து உண்டு உடலற்றுக் கிடந்து உடலுணர்ந்து எழுந்து உண்டு உணவென்றே காலம் விரைய ஒருதுளியும் உணவு எஞ்சாமலாகி மீள்வதையே உண்டாட்டு என்றனர். புழுக்களைப் போல் உண்க என்பது மலைக்குடியினரின் முதுசொல். உணவில் திளைப்பவை புழுக்கள். உணவன்றி பிறிதின்றி ஆகி உண்ணுதலே உயிர்வாழ்தலென்று வாழ்பவை. உண்ணுதல் உயிர்வாழும் பொருட்டு. உண்டாட்டு என்பது உணவுக்கு தன்னை முழுதளித்தல். உடலை, உயிரை, உள்ளத்தை, ஊழை, ஊழ் கடந்து விளைவென வாழும் தெய்வத்தை உணவால் நிறைத்தல்.

வருடந்தோறும் புதுநீராட்டுக்குப்பின் நிகழும் உண்டாட்டு அல்ல அவ்வருடத்தையது என்பதை முன்னரே மலைக்குடிகள் அறிந்திருந்தனர். சேதி நாட்டு அரசன் தன் படைகளுடனும் அகம்படியினருடனும் கௌண்டின்யபுரிக்கு வந்ததும் அதை உறுதி செய்தனர். இம்முறை பெருஞ்சோறு என்ற செய்தி மலைகள்தோறும் குறுமுழவு ஒலியாக பரவியது. தேனடைகளும் அரக்கும் கொம்பும் சந்தனமும் அகிலும் கோரோசனையும் கொண்டு புதர்ச் செறிவுகளூடாகச் சென்ற சிறுபாதைகளில் நடந்து அவர்கள் கௌண்டின்யபுரியை நோக்கி வந்தனர். வெல்லக் கட்டியில் ஈக்கள் என மொய்த்து நகரை நிறம்மாற்றினர். காலை வெயில் பழுக்கத் தொடங்கியபோது அரண்மனை முகப்பின் பெருஞ்சதுக்கம் தலைகளின் கரிய வெள்ளத்தால் நிரம்பியது, அதில் வண்ணத்தலைப்பாகைகள் மலர்க்கூட்டங்கள் போன்று மிதந்து சுழித்தன.

அரண்மனையின் சாளரங்கள் அனைத்தில் இருந்தும் காற்றுடன் கலந்து வந்த ஓசை பொழிந்து அறைகள் யாழ்குடங்கள் என விம்மிக் கொண்டிருந்தன. சேடியரும் ஏவலரும் பேசிய சொற்களை அவை வண்டுகள் எனச் சூழ்ந்து அதிர வைத்தன. இளைப்பாறி எழுந்து நன்னீராடி ஆடை புனைந்துகொண்டிருந்த ருக்மிணியை நோக்கி வந்த சேடி "இளவரசி, உண்டாட்டுக்கு சற்று நேரத்தில் அரசரும் அரசியரும் எழுந்தருளிவிடுவார்கள்" என்றாள். "சதுக்கம் நிறைந்துவிட்டது. அரசர் அணிகொண்டு கூடமேகிவிட்டார். அரசியருக்காக காத்திருக்கிறார்."

ருக்மிணிக்கு கூந்தல் சமைத்துக் கொண்டிருந்த முதிய சமையப்பெண் "இரவுக்கான அணி புனைதல் இன்னும் காலம் எடுப்பது. பந்த வெளிச்சத்திற்குரிய மணிகளை தேர்ந்தெடுப்பது எளிய பணி அல்ல என்று சென்று சொல்" என்றாள். "அணிசூடுவது தொடங்கி இரு நாழிகையாகிறது. அங்கே அனைவரும் விழிநோக்கியிருக்கிறார்கள்" என்றாள் சேடி. "அணி செய்வது என்பது பெண்ணில் பெருந்தெயவத்தை எழுப்புதல். அதை கண்ணில் ஒளியுள்ளோர் அறிவர்" என்றாள் சமையப்பெண். சேடி "இவை அணிச்சொற்கள். நான் சென்று சொன்னால் என்னை சினப்பர்" என்றாள். "கேட்பவரிடம் இளவரசி சமைந்து முடியவில்லை என்று சமையச்சேடியினர் சொன்னார்கள் என்று சொல்" என்ராள் சமையப்பெண். "ஆம், கையில் ஒரு கலையிருந்தால் சொல்லில் ஆணவம் ஏறும்" என்று சொன்ன சேடி "ஏவலருக்கு சொல் சுமையே" என்றபடி சென்றாள்.

சிறிய ஆடி ஒன்றை ருக்மிணியிடம் காட்டிய இளைய சமையச்சேடி "தோடு, மூக்குத்தி இரண்டையும் இளநீலக் கற்களால் அமைத்திருக்கிறேன் இளவரசி. பார்த்து சொல்லுங்கள்" என்றாள். செவ்வரி ஓடிய விழிகளால் ஆடியை நோக்கிய ருக்மிணி அணி புனைந்த எப்பெண்ணும் அடையும் கிளர்ச்சியை அடைந்து கைகளால் காதணியை திருப்பி விழிசரித்து தன் முகத்தை நோக்கி நெஞ்சு விம்ம "விண்மீன்கள்" என்றாள். அவள் பின்னால் நின்ற சமையப் பெண் "அணி புனைந்த பெண் ஆடி நோக்கினால் நன்று என்றும் குறை என்றும் மாறிமாறிக் காட்டி தெயவங்கள் அவள் ஆன்மாவை பந்தாடும். ஒருபோதும் துலாமுள் நிலைகொள்ளாது" என்றாள்.

அமிதை விரைந்த காலடியோசையுடன் அறைக்குள் வந்து "இளவரசி, விரைவு கொள்ளுங்கள். அரசரும், அரசியரும் உண்டாட்டு முற்றத்துக்கு சென்றுவிட்டனர்" என்றாள். எவள் நீ என தோன்றிய விழிதூக்கி நோக்கிய ருக்மிணியைக் கண்டு அருகே வந்து "சேதி நாட்டு அரசர் தன் மாளிகையை விட்டு கிளம்பி விட்டார். முழுதணிக்கோலத்தில் வருகிறார். நம் இளவரசரும் தொடர்ந்து வருகிறார்" என்றாள். முதுசமையப் பெண் "நிழல் தன் உருவத்தைப் பிரிவது இல்லை அல்லவா?" என்றாள். அமிதை சினத்துடன் அவளை நோக்கி "அரச குலத்தைப் பற்றி சொல்லெடுப்பது இங்கு அனுமதிக்கப்படுவதில்லை" என்றாள். "நான் இந்நிழலைச் சொன்னேன்" என அவள் ருக்மிணியின் பின்னால் தரையில் விழுந்து கிடந்த நிழலைச் சுட்டி சொல்ல இளம் சமையப்பெண்கள் இருவரும் கையால் பொத்தி சிரிப்பை அடக்கினர்.

அமிதை அவர்களை உளம்விலக்கி "இந்நகர் முழுக்க அனைவரும் சேதிநாட்டு அரசரை அன்றி பிறிதெவரையும் எண்ணவில்லை. தெருக்களில் பாணரும் புலவரும் அவர் புகழ் பாடி ஆடுகின்றனர். இன்று ஒரு நாள் இங்கு பாடிய பாடல்களைத் தொகுத்தாலே அது ஒரு பெருங்காவியம் என்கின்றனர்" என்றாள். ருக்மிணி "ஆம். அவர் பெருவீரர். வரதை அவரை தன் மடியில் இட்டு சீராட்டியதை நாம் கண்டோமே" என்றாள். அருகே வந்த அமிதை "இளவரசி, சிசுபாலர் நிகரற்ற வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால்..." என்று தயங்க ருக்மிணி ஏறிட்டு நோக்கி "என்ன?" என்றாள்.

சொல்லுக்காக தயங்கியபின் அமிதை விழிகளால் சமையப்பெண்டிரை விலகச்சொல்லிவிட்டு மெல்லியகுரலில் "நான் செவிலி. என் சொற்களுக்கு எல்லை உள்ளது. ஆனால் சங்கு சக்கரம் அணிந்த உங்கள் செம்பொற்பாதங்களை சென்னியில் சூடியவள். உங்கள் அன்னையென்றானவள். நான் இதை சொல்லாமல் இயலாது" என்றாள். ருக்மிணி நோக்க "இன்று உண்டாட்டில் தங்கள் மண அறிவிப்பை மக்களுக்கு முன் வைக்க இளவரசர் எண்ணியுள்ளார்" என்றாள். "நீராட்டின் போதே சொல்ல விழைந்ததாகவும் அப்போது சொல்வது முறையல்ல என்று அமைச்சர் விலக்கியதாகவும் சொல்கிறார்கள். தங்கள் அன்னையோ சேதிநாட்டு அரசர் தங்கள் கைகொள்வது உறுதியாகிவிட்டது என்று சேடியருக்குச் சொல்லி விழவு கூட ஆணையிட்டிருக்கிறார்கள். அலுவல்மாளிகையில் தங்கள் மணநிகழ்வுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டன" என்றாள்.

அவற்றை ருக்மிணி பொருளற்ற சொற்கள் என கேட்டிருந்தாள். "இளவரசி, தங்கள் உள்ளத்தில் சேதிநாட்டு அரசர் இடம் பெற்றுள்ளாரா?" என்றாள் அமிதை. ருக்மிணி "அவர் இனியர் என்றே எண்ணுகின்றேன்" என்றாள். "இளவரசி, தங்கள் கை பற்றும் தகுதி உடையவர் என்று எண்ணுகிறீர்களா?" என்றாள் செவிலி. "இல்லை" என்றாள் ருக்மிணி. "இம்மண்ணில் நான் எழுந்தது அவருக்காக அல்ல. என் அருள் பெறும் அரசர் அவர். என் கைகொள்ளும் கொழுநர் பிறிதெங்கோ எவ்வடிவிலோ எழுந்தருளியுள்ளார். எவர் என்று அறியேன். அவருக்காக இங்கு மலர்ந்துள்ளேன்" என்றாள்.

முலைகள் விம்மித் தணிய ஆறுதல் மூச்சுவிட்டு அமிதை சொன்னாள். "ஆம். அவ்வண்ணமே நானும் உணர்கிறேன். ஆழி வெண்சங்கு ஏந்திய மணிவண்ணனே மானுடனாக எங்கோ பிறந்திருக்கிறான் .திருமகளைக் கொள்ள அலை அமைந்தோன் எழ வேண்டும்" என்றாள் அமிதை. ருக்மிணி தன் கையில் அணிந்த வளையை மெல்ல உருட்டியபடி விழிப்பீலிகள் சரிய "மிக அருகிலென அவரை உணர்கிறேன் அன்னையே" என்றாள்.

காலடி ஒலிக்க இடைநாழியில் வந்து நின்று அறைக் கதவை ஒலியெழுப்பித் திறந்து நோக்கிய முதியசேடி ஒருத்தி "இளவரசி, தங்களை அழைத்து வரும்படி இளவரசர் ஆணை இட்டிருக்கிறார்" என்றாள். "இளவரசர் வந்துவிட்டாரா?" என்றாள் அமிதை. தழையாத ஆணைக்குரலில் "அவரும் சேதிநாட்டு அரசரும் சதுக்கத்திற்கு வந்துவிட்டனர்" என்ற முதியசேடி சமையப் பெண்ணிடம் "அணி முடிந்து விட்டதா" என்றாள். அவள் "இன்னும் ஏழு குழல்மணிகள் எஞ்சியுள்ளன" என்றாள். "கூந்தல் நீலமணிகளால் நிறைந்துள்ளது. இதற்கு மேல் என்ன்?" என்றாள் முதியசேடி. "எத்தனை விண்மீன் சூடினாலும் இரவின் பரப்பு எஞ்சியிருக்கும்" என்ற சமையப் பெண் பொன்னூசிகளில் கோக்கப்பட்ட நீலமணிகளை நீள் கூந்தலில் செருகி இறுக்கினாள்.

"எனக்கான ஆணை இளவரசியை உடனே கொண்டுசெல்வது. இளவரசரின் சொல்லுக்கு இங்கே மறு சொல் இல்லை" என்ற முதிய சேடி ஆணையிடும் ஒலியில் "எழுக இளவரசி!" என்றாள். அமிதை ருக்மிணியிடம் "ஆம் இளவரசி. இனியும் பிந்துவது முறையல்ல" என்றாள். ருக்மிணி எழுந்ததும் சமையப் பெண்கள் அமர்ந்து பொன்னூல் பின்னிய ஆடை கீழ்மடிப்புகளை சீரமைத்தனர். இரு பெண்கள் அவள் மேலாடையின் பின்மடிப்புகளை இணைத்து பொன்னூசியால் பொருத்தினர். ஒருத்தி அவள் குழலை அலையென பின்னோக்கி நீட்டிவிட்டாள். "செல்வோம்" என்றாள் அமிதை.

முதியசேடி வழிநடத்த ருக்மிணி அரண்மனை முகப்பின் சதுக்கத்தை அடைந்தாள். அங்கே அரசமேடையில் பீஷ்மகரும் அரசியரும் அமர்ந்திருக்க அருகே ருக்மியும் சிசுபாலனும் இருந்தனர். அவள் மேடைமேல் ஏறியதும் அரசி திரும்பி "எத்தனைமுறை உனக்கு தூதனுப்புவது? அங்கு என்னதான் செய்துகொண்டிருந்தாய்?" என்றாள். ருக்மிணி புன்னகையுடன் "அணிகொள்ளுதல் எளிதல்ல அன்னையே" என்றபடி அமர்ந்தாள். பீஷ்மகர் திரும்பி புன்னகையுடன் "பல்லாயிரம் வாய்களும் நாவுகளும் உணவுக்கென ஊறி எழுந்துவிட்டன. நீ வராது உண்டாட்டு தொடங்கலாகாது என்றனர் நிமித்திகர். நூல்முறைப்படி நீ அன்னலட்சுமி அல்லவா?" என்றார். ருக்மிணி புன்னகைத்தாள்.

அமைச்சர் அருகே வந்து தலைதாழ்த்தி "ஆணையிடுக அரசே!" என்றார். பீஷ்மகர் எழுந்து தன் செங்கோலை தூக்கினார். கூட்டம் ஓசையழிந்து விழிகூர்ந்தது. "விதர்ப்பத்தின் குடிகளனைவரையும் என் மூதாதையர் வாழ்த்துக! வரதாவின் கொடை நம் மண்ணில் விளைந்து உணவாகி வந்து நிறைந்துள்ளது. அவள் கருணையை உண்போம். அவள் அருளை குடிப்போம். அவள் மைந்தர் இங்கு மகிழ்ந்திருப்போம்" என்றார். முரசம் முழங்கியது. உடன் பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த களிப்போசை கலந்தது.

சதுக்கத்தின் பன்னிரண்டு வாயில்கள் வழியாகவும் நூற்றுக்கணக்கான உணவு வண்டிகள் கூட்டத்தைப் பிளந்தபடி வந்தன. கூட்டம் பிளந்து வழி விட்டு கூவி ஆர்ப்பரித்து மீண்டும் கூடியது. செம்பாலும் வெண்கலத்தாலுமான யானைகள் போன்ற பெருங்கலங்கள் அவ்வண்டிகளில் அசைந்து வந்து நிலைகொண்டன. வரதாவில் இருந்து கரையேற்றப்பட்ட படகுகள் வண்டிகளில் ஏற்றப்பட்டு புரவிகளால் இழுத்துவரப்பட்டன. அவற்றில் இருந்த தொன்னைகளையும், மூங்கில் குவளைகளையும் படை வீரர்கள் அள்ளி கூட்டத்தின்மேல் வீசனர். சிரித்துக் கூவி ஆர்ப்பரித்தபடி மக்கள் அவற்றை தாவிப் பற்றிக் கொண்டனர். ஒருவர் கையில் இருந்து பிறிதொருவர் கைக்கு என குவளைகள் விரிந்து பரந்தன. தொன்னைகளும், குவளைகளுமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறித்தாவி கூவி கைவீசி கொண்டாடினர்.

மேலிருந்து நோக்கிய சிசுபாலன் "இவ்வண்ணம் ஓர் உண்டாட்டு களத்தில் மட்டுமே உண்டென்று நூலில் அறிந்திருக்கிறேன்" என்றான். ருக்மி "ஆம். இங்கு பந்தி அமர்ந்து உண்ணும் பெருவிருந்துகள் பல உண்டு. ஆனால் உண்டாட்டு என்பது கட்டற்றதாக அமைய வேண்டும் என்பதே நெறி. உணவு தெய்வமென பெருகி எழுந்தருளவேண்டும். பெருமலையென உணவு குவிந்திருப்பதை நம் விழிகளால் பார்க்க வேண்டும். அவ்வின்பம் அளிக்கும் கொண்டாட்டம் வேறெதிலும் வருவதில்லை" என்றான். தரையில் விரிக்கப்பட்ட பெரிய ஈச்சம்பாய்கள்மேல் கலத்தில் இருந்த சூடான உணவு பெருங்குவியல்களாக கொட்டப்பட்டது . கிழங்குகளாலும் ஒன்பதுவகை கூலமணிகளாலும் அக்காரமும் உப்பும் இட்டுச் செய்யப்பட்ட அப்பங்கள். பன்னிருவகை அன்னங்கள். பந்தங்களின் ஒளியில் அவற்றில் எழுந்த ஆவி தழலென நடனமிட்டது.

அன்னமலைகளைச் சூழ்ந்து மக்கள் கூச்சலிட்டனர். தோண்டியில் அள்ளி அள்ளி நீட்டப்படும் அன்னத்தை தொன்னைகளில் பெற்று குவித்துக்கொண்டனர். நீண்ட கை கொண்ட அகப்பபைகளால் மதுவை அள்ளி அள்ளி குவளைகளில் ஊற்றினர். கைசுட்டி "உண்டாட்டில் சுடப்பட்ட ஊன் மட்டுமே அளிக்கப்படவேண்டும் என்பது நெறி" என்று ருக்மி சொன்னான். "முழுக் கன்றுகளையும் அப்படியே அனலில் சுட்டு எடுக்கும் அடுதிறனாளர்கள் இங்குள்ளனர்." மூங்கில்கள் நடுவே நான்கு கால்களையும் சேர்த்துக் கட்டிக் கொண்டுவரப்பட்ட சுட்ட களிற்றுக் காளைகள் வெண்கலத்தாலானவை போலிருந்தன. மிளகும் உப்பும் கலந்து பூசப்பட்ட அவை தங்கள் கொழுப்பாலேயே வெந்து உருகிச் சொட்டின. கரி பரப்பி தழலிட்ட அடுப்பின்மேல் அவை வெம்மைமாறாதபடி தொங்கவிடப்பட்டன. ஆடுகளும் காட்டுப்பன்றிகளும் மான்களும் என எங்கும் சுட்ட ஊன் கனிந்த பழங்கள் போலச் சிவந்து தொங்கியது.

முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க முது நிமித்தச்ர் மேடைமேல் எழுந்து "உண்ணுக! நம் உடல்கள் ஆற்றலுறட்டும். உண்ணுக! நம் மூதாதையர் நிறைவுறட்டும். உண்ணுக! நம் கொடிவழியினர் செழிப்புறட்டும். உண்ணுக! இங்கு நம் தெய்வங்கள் வந்து அவிபெறட்டும். மண்ணை ஆக்கும் வைஸ்வாநரன் மகிழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!" என்று கூவினார். தங்கள் குலக்குறி பொறிக்கப்பட்ட தடிகளைத் தூக்கி ஆட்டி வெறிக்கூச்சலிட்டபடி குலமூத்தவர்கள் உணவுக்குவையை அணுகி அன்னங்களையும் அப்பங்களையும் அள்ளி மூன்றாகப் பகுத்து ஒரு பகுதியை பின்பக்கம் வீசி இன்னொருபகுதியை முன்பக்கம் வீசி மூன்றாம்பகுதியை தாங்கள் உண்டனர். அவர்கள் கோல்களைத் தூக்கியதும் கரை உடைந்து பெருகிச்செல்லும் வெள்ளம் போல மக்கள் உணவின்மேல் பரவினர்.

படைவீரர்கள் தங்கள் உடைவாளால் கன்றுகளின் ஊனை வெட்டி எடுத்து சிம்மங்கள் போல் உறுமியபடி கவ்வி உண்டனர். ஆட்டுக்கால்களை கையில் பிடித்து கிழித்துண்டனர். குழிகளுக்குள் இறக்கி கல்லிட்டு மூடி மேலே அனல்பரப்பிச் சுடப்பட்ட பன்றிகள் ஊன்நெய் ஊறிச்சொட்ட ஈச்ச இலைப் பொதிகளில் கொண்டுவரப்பட்டன. முழுப்பன்றியையே ஐவராகவும் அறுவராகவும் சேர்ந்து தூக்கிச் சென்று உடைவாளால் துண்டுகளாக்கி உண்டனர். அவற்றின் தொடைகளைத் தூக்கி வீசி வாயால் பிடித்து கூவிச் சிரித்தனர். அப்பங்களை அள்ளி ஒருவர் மேல் ஒருவர் வீசினர். மதுவை மாறி மாறி தலையில் ஊற்றிக்கொண்டனர்.

சிசுபாலன் "உண்பதில் விலங்குகள் அடையும் பேருவகை மானுடரிடம் இல்லை என்று எண்ணியிருக்கிறேன். அதை இப்போது கண்டேன்" என்றான். "ஆம். உண்பது என்பது உயிருடனிருப்பதை நாம் கொண்டாடும் தருணம்" என்றான் ருக்மி. விழிதொடும் தொலைவெங்கும் உணவை உடலெங்கும் பூசிய மக்கள் முட்டிமோதித் திளைத்தனர். உணவில் சறுக்கி விழுந்து புரண்டு எழுந்தனர். உணவே உயிர்கொண்டு எழுந்து கொந்தளித்தது.

வண்டிகள் மேலும் மேலும் அப்பங்களையும் அன்னங்களையும் கொண்டுவந்து அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தன. "விதவிதமான சுவைகள் இனியவை என்பதில் ஐயமில்லை. ஆனால் உணவின் மிகை என்பதுதான் இங்குள்ள பெரும் கேளிக்கை. உண்மையில் அதுவே உணவின்பத்தின் உச்சம்" என்றான் ருக்மி. சிசுபாலன் "கூடி உண்பது என்பதும் அல்லவா?" என்றான்.

மேடை ஏறி வந்த அமைச்சர் "அரசே, தாங்களும் அரசியரும் உண்டாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று குலமூத்தார் அழைக்கின்றனர்" என்றார். "ஆம். அதுவே தொல்குடி நெறி" என்றபடி பீஷ்மகர் எழ சிசுபாலன் "மக்களுடன் இணைந்து உண்பதா?" என்றான். பீஷ்மகர் "அன்னம் என்னும் தெய்வத்தின்முன் மானுடர் அனைவரும் வயிறு மட்டுமே" என்றார்.

மேடையில் இருந்த அரசகுடியினர் அனைவரும் படி இறங்கி அந்த உணவுக்கொந்தளிப்பில் உட்புகுந்தனர். அக்கணமே அவர்கள்மேல் அன்னமும் ஊனும் நெய்யும் ஒன்றாகிப் பொழிந்தன. உணவுக்குவியல்களை அணுகுவதற்குள் அவர்கள் உடலெங்கும் உணவே வழிந்தது. "எங்கள் மூதாதையரை உண்க அரசே!" என்றபடி பீஷ்மகர் அன்னத்தை தோண்டியால் அள்ளி தொன்னையில் இட்டு சிசுபாலனுக்கு அளித்தார். சிசுபாலன் உரக்கச் சிரித்தபடி "அரசே, இவ்வேளையில் அன்னம் உண்பவன் மூடன்" என்றான். "நான் விழைவது மூதாதையரின் செங்குருதியை." ருக்மி "ஆம், இதோ. கொள்ளுங்கள் இந்த வெண்ணிறக் கள்ளை. தெளிந்த விழிநர்" என்றான்.

உடலே நாவென மாறி உண்டனர். மணிமுடியும் செங்கோலும் விலக்கி வெற்றுடலுடன் நின்று விலங்கென உண்டார் அரசர். நாணிழந்து உடல்மறந்து உண்டனர் அரசியர். உணவு தன்னை அலையென எழுந்து சூழ்வதை ருக்மிணி அறிந்தாள். உணவுக்குள் மூழ்கி மூச்சுத்திணறினாள். சிரித்தபடி ஓடி வந்த வீரர்கள் மதுக்கிண்ணத்தை ருக்மிணி மீது வீசினர். அவள் நகைத்துபடி விலகுவதற்க்குள் தொன்னை நிறைந்த அன்னத்தை அவள் மேல் கொட்டினர். அன்னமும் மதுவும் வழிய விலகிய அவள் கால்வழுக்கி அவற்றின்மேல் விழுந்தாள்.

உண்டு களியாடிக் களைத்தவர்கள் தள்ளாடி அமர்ந்துகொள்ள அவர்கள் மேல் பிறர் தள்ளாடி விழ இறுதி விழைவைத் திரட்டி வயிற்றை உந்தி மேலெழுந்து மீண்டும் உணவின் மீது பாய்ந்தனர். "இங்கு உண்ணும் உணவைவிட வீணடிக்கும் உணவு மிகை" என்றான் சிசுபாலன். "உணவு என்பது ஒரு போதும் வீணடிக்கப்படுவது அல்ல. மானுடர் உண்ணாத உணவை பிற உயிரினங்கள் உண்ணும்" என்றார் சோற்றுக்குவையென நின்ற முகுந்தர்.

அத்தனை உண்ணமுடியும் என சிசுபாலன் அறிந்திருக்கவில்லை. கைகளும் கால்களும் ஒழிந்த பையென்றாக அங்கெல்லாம் உணவு சென்று நிறைவதுபோல. உடலின் மையமே வயிறென்றானதுபோல. "இளவரசே, எங்காவது சரிந்து விழாமல் இனி என்னால் மீண்டும் உண்ண முடியாது" என்றான் ருக்மியிடம். "எங்காவது என்ன? வருக! இங்கேயே படுத்துக் கொள்வோம்" என்றார் பீஷ்மகர். "உணவில் உறங்குவதுபோல் களிமயக்கு பிறிதில்லை."

அமைச்சர் முகுந்தர் அருகே வந்து "அரசே, தாங்கள் அறை மீண்டு உடல்கழுவி சென்று ஓய்வெடுக்கலாம்" என்றார். பீஷ்மகர் "விலகிச் செல் மூடா... உணவுக்கு நடுவே என்ன வீண் சொல்" என்றார். உடைவாளால் கன்றின் தொடை ஒன்றை வெட்டி பெரிய ஊன் துண்டு ஒன்றை கடித்தபடி "இது களம். இங்கு வெற்றி என்பது ஊன் நிறைவன்றி பிறிதல்ல. விலகு!" என்றார். அரசி சுஷமை ருக்மிணியின் கைபற்றி "வாடி செல்வோம்" என்றாள். ருக்மிணி அவளை அறியாதவள் போல நோக்கி "என்ன? யார்?" என்றாள்.

அமிதை அவள் தோள்பற்றி "போதும், அரண்மனைக்குச் செல்லலாம் இளவரசி" என்றாள். ருக்மிணி சிரித்தபடி வழுக்கி கீழே அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மீது விழ அவர் "உணவு! வானில் இருந்து விழுகிறது உணவு!" என்று அவளை பிடித்தார். அருகிருந்த இளைஞன் சிரித்தபடி கைசுட்டி களிமயக்கில் ஏதோ சொல்லவந்து மீண்டும் சிரித்து விழிசரிய உறங்கலானான். அமிதை அவள் தோள்களைப் பற்றி தள்ளிக்கொண்டு சென்று மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய வாயிலின் ஊடாக அரண்மனை இடைநாழியை அடைந்தாள். ருக்மிணி "நான் இன்னும் உண்ணவில்லை..." என்றாள். "போதும்" என்றாள் அமிதை.

இடைநாழி முழுக்க உணவும் உணவுண்ட பெண்டிரும் மக்களும் குவிந்து கிடந்தனர்,. வீரர், மக்கள், சிறுவர், முதியவர், பெண்கள், ஆண்களென வேறுபாடற்று எங்கும் மனித உடலே திளைத்துக் கொண்டிருந்தது. இடைநாழிக்கப்பால் கிடந்த வாயிலை நோக்கி அவள் செல்ல அமிதை "உண்டாட்டு முடிகையில் அனைத்தும் உறுதியாகிவிட்டிருக்கும் இளவரசி" என்றாள். "அரசர் இன்று சொல்லளித்து விடுவார்."

ருக்மிணி படிகளில் கால் வைக்கையில் உடலிலிருந்து வழிந்த ஊன்நெய்யில் வழுக்கி விழப்போனாள். அவளுடைய இடையை வளைத்துப் பற்றி விழாமல் காத்து நிறுத்திய அமிதை "மெல்ல காலெடுத்து வையுங்கள் இளவரசி. எங்கும் ஊன்நெய்" என்றாள். படிகளின் அடியில் அமர்ந்திருந்த தலைப்பாகை அவிழ்ந்துகிடந்த முதியசூதர் ஒருவர் விசும்புவதுபோல ஏதோ சொன்னார். கடந்து சென்ற ருக்மிணி பிடரியில் தொடப்பட்டவள் போல உடல் அதிர நின்றாள். அவர் "விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்" என்று கள்மயக்கில் குழைந்த குரலில் பாடினார்.

ருக்மிணி முன்னால் குனிந்து "யார்? யார் நீர்?" என்றாள். சூதர் அவளை நோக்காமல் கைகளை ஆட்டியபடி முற்றிலும் தன்னை இழந்து ஓங்கி பாடினார் "விண்நீலம், விரிகடல்நீலம், விழிநீலம், விசும்பு எழுந்த மலர்நீலம்! தண்நீலம் தழல்நீலம் தானாகித் தனித்த முழுநீலம்!" மண்டியிட்டு அவன் முன் அமர்ந்து "சூதரே, என்ன பாட்டு இது?" என்றாள். அவர் திரும்பி "என்ன?" என்றார். "எதைப்பற்றிய பாடல் இது?"

"மதுநிறைந்த மலர்வண்ணன் பற்றிய பாடல். துவாரகை ஆளும் இளையோன். கடலென விரிந்த கரியோன்." "யார்?" என்று நெஞ்சு ஒலிக்க அவள் கேட்டாள். "நான் இப்பாடலை மட்டும் அறிவேன்" என்றார் சூதர். "என் ஊர் முக்கடல் முயங்கும் முனைநிலம். அங்கே ஒற்றைக்கால் ஊன்றி மலையுச்சியில் நீள்தவமியற்றும் நீலக்கன்னி என் தெய்வம். அவள் விழிமுன் திசைகளென விரிந்த விரிநீலத்தை என் குலமூதாதையர் பாடினர். அவர் கண்ட நீலம் இங்கு கடல்நகரில் மலர்ந்துள்ளது என்று வடநாட்டு சூதன் ஒருவன் சொன்னான். அவன் சொற்களை சரடு என பற்றி இப்பெருவலையின் பல்லாயிரம் கண்ணிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறேன்."

ருக்மிணி "அவன் எத்தகையவன்? அவன் வடிவம் என்ன? இயல்புதான் என்ன?" என்றாள். "இளையவளே, இப்போது இங்கு அவனைக் கண்டேன்" என்றார் சூதர். "எங்கு?" என்றாள் ருக்மிணி. அவர் சாளரத்தைச் சுட்டி "வெளியே நோக்குக! அறுசுவையும் ஐம்புலன்களும் நான்குள்ளமும் அமைந்த ஒன்றும் அதுவென்றாகிக் கொந்தளிக்கும். இந்த அன்னப் பேரலையில் எழுவது அவன் தோற்றம். தெளிந்த பெருநீலம்" என்றார். இரு கைகளையும் சாளர விளிம்பில் ஊன்றி வெளியே நோக்கிய ருக்மிணி வரதாவில் அலைச் சுழிப்பு போல மானுடத்தை கண்முன் கண்டாள்.

பகுதி பத்து : கதிர்முகம் - 2

பீஷ்மகரின் சொல்தேர் சிற்றறை நோக்கி சென்ற ருக்மிணி இளம்தென்றலில் மலர்ச்சோலையில் நடப்பவள் போலிருந்தாள். அவளைத் தொடர்ந்த அமிதை அனல் மேல் தாவுபவள் போல உடல் பதறினாள். இருபக்கமும் நோக்கி தவித்து நெஞ்சிலிருந்து இதழ்களுக்கு வந்த சொற்களை மீண்டும் விழுங்கி மூச்சிரைத்தாள். அறை வாயிலில் நின்ற காவலன் அவளுக்கு முறைவணக்கம் செய்து வருகையை அறிவிக்க உள்ளே சென்றதும் கதவு மெல்ல மூடிக்கொண்டது. ருக்மிணியின் தோளைப்பற்றிய அமிதை "மகளே" என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைத்து அமிதையின் கைகள்மேல் தன் கைகளை வைத்து "அஞ்ச வேண்டாம் அன்னையே" என்றாள். "சொல்தேர்ந்து உரைக்க உனக்கு கற்றுத்தரவேண்டியதில்லை மகளே. ஆயினும் இத்தருணம் என்னை அச்சுறுத்துகிறது" என்றாள் அமிதை. ருக்மிணி புன்னகையுடன் "என் தெய்வங்களும் மூதன்னையரும் உடனிருக்கிறார்கள், அஞ்ச வேண்டாம்" என்று மீண்டும் சொன்னாள்.

காவலன் வாயில் திறந்து அவளை உள்ளே செல்லும்படி தலைவணங்கினான். ருக்மிணி வாயிலைக் கடந்து உள்ளே சென்றபோது அவளுக்குப்பின் கதவு ஓசையின்றி மூடியது. அவள் காலடியோசையைக்கேட்டு ருக்மி பீடம் ஒலியுடன் பின்னகர விசையுடன் எழுந்து கைநீட்டி உரக்கக்கூவியபடி அருகில் வந்தான். "உன் சொல் சற்று முன் என்னை வந்தடைந்தது. அது உன் சொல்லா என்று மட்டுமே இப்போது அறிய விழைகிறேன்." ருக்மிணி "அணுக்கச்சேடி வந்து சொன்ன சொல் என்றால் அது நான் உரைக்கப் பணித்ததே" என்றாள். ஒரு கணம் தளர்ந்த ருக்மி நெய்யில் தீயென பற்றிக் கொண்ட சினத்தின் விசையால் மீண்டும் சொல்லெடுத்து "எண்ணித்தான் இதை உரைக்கிறாயா?" என்றான்.

"இதில் மறு சொல் என உரைக்க நான் விழையவில்லை மூத்தவரே" என்றாள் ருக்மிணி. "இது என் இறுதிச்சொல் என்று கொள்க!" சினத்தால் உடைந்த குரலில் "ஒரு போதும் உன் விழைவு நிறைவேறாது" என்றான் ருக்மி. பீஷ்மகர் அவனிடம் "மைந்தா, நீ அமர்க! சொல்தேர் அவையென்பது அமர்ந்து பேசுவதற்குரியது. உணர்வுகளை பரிமாறுவதற்குரிய இடமல்ல இது. சொல்லாடி நல்முடிவை அடைய நாம் இங்கு கூடியிருக்கிறோம்" என்றார். "நான் சொல்லாடுவதற்கேதுமில்லை. என் சொல் இங்கு உள்ளது, நான் இதை ஏற்கப்போவதில்லை" என்றான் ருக்மி.

அரசரின் அருகே அமர்ந்திருந்த கீர்த்தி மெல்லிய குரலில் "அமர்ந்து கொள்ளுங்கள் இளவரசே. இளவரசியும் அமரட்டும்" என்றாள். சுஷமை "அவனுடைய சினம் இயல்பானதே. அரசன் சொன்ன சொல்லை திரும்பிப்பெறவேண்டுமென்பது வில் கிளம்பிய அம்பு மீள வேண்டுமென்பதைப்போல" என்றாள். ருக்மி தன் இருக்கையில் அமர்ந்து பெரிய கரிய கைகளை ஒன்றுடனொன்று விரல்பிணைத்து மடிமேல் வைத்துக்கொண்டு "ஆம். அவள் சொல்லட்டும்" என்றான். ருக்மிணி தன் இருக்கையில் அமர்ந்து மேலாடையை மடிமேல் வைத்து குழலை திருத்தியபின்பு கைகளை மார்மீது கட்டிக்கொண்டு விழிநிமிர்ந்தாள்.

அமர்ந்தது அனைவரையும் சினம் அடக்கி இயல்பாக்கியது. சில கணங்கள் அனைவரும் சொல்லின்றி அமர்ந்திருக்க கீர்த்தி "இளவரசி, தாங்கள் சேதிநாட்டரசரை மறுத்தமை இளவரசரை சினம் கொள்ளச்செய்திருக்கிறது. தங்கள் ஒப்புதல் கிடைத்தது என்றெண்ணி அவர் சேதிநாட்டரசருக்கு தங்கள் கையை வாக்களித்துவிட்டார். இன்று தங்கள் ஒப்புதல் இன்மை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சொல் வழுவுவதென்பது விதர்ப்பத்தின் இளவரசருக்கு சிறப்பல்ல என்றறிவீர்" என்றாள். சுஷமை "என்ன முறைப்பேச்சு இது? இங்கென்ன அவையா கூடியிருக்கிறது?" என்று சொன்னபடி முகம் சிவக்க கைகளை நீட்டி "ருக்மிணி, உன் சொல் பேதைப்பெண்ணொருத்தியின் சொல்லல்ல, விதர்ப்பத்தின் இளவரசியின் சொல். அதைப்பேண வேண்டியது உன் கடமை" என்றாள்.

"அன்னையே, நான் எவருக்கும் சொல்லளிக்கவில்லை. என் சொல்லென்ன என்று எவரும் கேட்கவுமில்லை" என்றாள் ருக்மிணி. "நீ மறுக்கவில்லை. நான் உன்னிடம் சேதிநாட்டரசன் உன் அன்புக்குரியவனா என்று கேட்டேன். ஆம் என்று நீ சொன்னாய்.அதையே உன் ஒப்புதல் என்று இளவரசனிடம் நான் அறிவித்தேன்" என்றாள் சுஷமை. ருக்மி "உன் ஒப்புதலை தந்தையிடமும் அன்னையிடமும் உசாவி அறிந்தபின்னரே நான் சொல்லளித்தேன்" என்றான். "மூத்தவரே, என்னிடம் நீங்கள் கேட்கவில்லை" என்றாள் ருக்மிணி. ருக்மி "உன்னிடம் நேரில் கேட்கும் மரபு இங்கு இல்லை. உன் விழைவை உகந்த முறையில் உசாவி அறிதல் மட்டுமே அரண்மனை வழக்கம்" என்றான்.

"மூத்தவரே, சிசுபாலரை என் அன்புக்குரியவர் என்றே எண்ணுகிறேன். என் அருள்கொண்டு நிறைபவர் என்று என் உள்ளம் சொல்கிறது. ஆனால் என் கை பற்றுபவர் அவரல்ல. வெறுப்பினால் அல்ல, என் கொழுநர் அவரல்ல என்பதனால் இதை சொல்கிறேன். அவர் என் கைபிடிக்க இயலாது. ஏனென்றால் அது நிகழாது" என்றாள். "நிகழும்..." என்றபடி தன் இருக்கையின் கைகளில் ஓங்கி அறைந்து ருக்மி எழுந்தான். "நிகழ்ந்தே ஆகும். நான் விதர்ப்பத்தின் இளவரசன். என் சொல் இங்கு திகழும். இல்லையேல் இந்நகரில் என் சடலம் விழும்."

ருக்மிணி அவனை கனிவு நிறைந்த கண்களால் நோக்கி "என் சொற்களை புரிந்து கொள்ளுங்கள் மூத்தவரே. ஒரு பெண்ணின் கொழுநனே அவளை மணக்க முடியும். அவன் அவள் கை பற்றுவது என்பது அவ்வுறவை உலகறியும் தருணம் மட்டுமே. அவன் எவரென்று முன்னரே ஊழ் வகுத்துவிட்டது. காலம் அவனை அவளை நோக்கி கொண்டுவருகிறது. அவள் அறியாமலிருக்கலாம். அவனும் அறியாமலிருக்கலாம். மண்ணில் எவருமறியாமல் இருந்தாலும் அவர்கள் அறத்துணைவர்களாகிவிட்டார்கள்" என்றாள்.

இகழ்ச்சியுடன் இதழ்களை வளைத்து "நீ அறிந்துவிட்டாய் போலும்" என்று ருக்மி சொன்னான். "சொல், உன் கைபற்றப்போகும் கொழுநன் எவன்?" ருக்மிணி அவனை நோக்கி புன்னகையுடன் "நான் அறிந்ததே இன்றுதான். அவர் துவாரகை ஆளும் இளைய யாதவர்" என்றாள். தன்மேல் குளிர்ந்த எடை ஒன்று வீசப்பட்டது போல ருக்மி சற்று பின்னடைந்தான். உடனே கைகளை ஓங்கி அறைந்தபடி முன்னால் வந்து "என்ன சொல்கிறாய்? பேதை! எண்ணிச்சொல்கிறாயா?" என்றான். மறுகணம் அத்தனை சொற்களும் அலை பின்வாங்குவது போல் மறைய இரு கைகளையும் விரித்து உதடுகளை அசைத்து அருகிலிருந்த அனைவரையும் மாறி மாறி நோக்கினான். உயிரற்றவை போல் அவன் கைகள் தொடையை ஒட்டியபடி விழுந்தன.

சுஷமை "என்னடி சொல்கிறாய்?" என்று மூச்சடைக்கும் குரலில் கூவினாள். "நாம் மகதத்தின் சிற்றரசு. மகதத்தின் முதன்மைப் பகைவனுக்கு நீ மாலையிடுவதா?" கீர்த்தி "இளவரசி, யாதவ அரசரை எப்போது பார்த்தீர்கள்?" என்றாள். "நான் அவர் உடலை பார்த்ததில்லை" என்றாள் ருக்மிணி. "அவரை சொல்லால் அறிந்தேன். என் முன் எழுந்து வரக்கண்டேன்."

"இப்போது தெரிகிறது என்ன நிகழ்ந்ததென்று" என சுஷமை கூச்சலிட்டாள். "அவன் உனக்கு தூதனுப்பியிருக்கிறான். சூதன் வழியாக உன் நெஞ்சில் விழைவை எழுப்பியிருக்கிறான். நீ பேசுவது அவ்விழைவால்தான்." ருக்மிணி "இல்லை அன்னையே" என்றாள். சுஷமை "உன் உள்ளத்தை நான் அறிகிறேன். சிசுபாலரின் சிற்றரசைவிட பெரியது துவாரகை என்று நீ எண்ணுகிறாய். மகளே, நீ அவனை மணம் கொள்வதை ஒருபோதும் உன் தமையர் ஏற்கப்போவதில்லை. மகதம் அதை ஒப்பப்போவதும் இல்லை. நிகழாதவற்றை எண்ணாதே. துவாரகையின் அரசியென நீ ஆவது அரிது" என்றாள்.

"அரசியாவதைப்பற்றி நான் எண்ணவில்லை. அவருடன் காடு சூழ்ந்து கன்று மேய்க்கவும் சித்தமாக இருக்கிறேன். அன்னையே, நான் சொல்வது அரசுகொள்வதைப்பற்றி அல்ல" என்றாள் ருக்மிணி. சுஷமை பற்களைக் கடித்தபடி "உயர்காதலைப்பற்றி அல்லவா? காவியங்கள் சொல்லும் காதலைப்பற்றி இப்போது எனக்கு கவிச்சொல் உரைக்கப்போகிறாயா?" என்றாள். ருக்மிணி "இது காதலும் அல்ல அன்னையே. இதை எங்ஙனம் உங்களுக்குரைப்பேன் என்றறிகிலேன். நான் அவர் துணைவி. அதை வரதாவை, தெற்கே எழுந்த விந்தியனை விழிகளால் நோக்கி அறிவது போல ஐம்புலன்களாலும் அறிகிறேன். என் உளத்தால் விழியால் சொல்லால் மாற்றிவிடக்கூடியதல்ல அது. நான் இங்கு வருவதற்கு முன்பே இங்கிருந்ததும் நான் சென்றபின்பும் எப்போதும் என எஞ்சுவதுமான ஓர் உண்மை அது" என்றாள்.

ருக்மி தலையை சினம் கொண்ட யானை போல அசைத்துக் கொண்டிருந்தான். கீர்த்தி "மகளே, நீ அமர்ந்திருப்பது விதர்ப்பத்தின் மந்தண மன்றில். விதர்ப்பத்தின் இளவரசியென பேசு. இங்கு நம் அனைவரையும் இணைப்பது ஒன்றே. நாம் நாடுவது விதர்ப்பத்தின் நலம் மட்டுமே" என்றாள். "பொறுத்தருள்க சிற்றன்னையே. எக்கணம் நான் அவருடையள் என்று உணர்ந்தேனோ அப்போதே விதர்ப்பத்தின் இளவரசி அல்லாமல் ஆகிவிட்டிருக்கிறேன். நான் அவர் அறத்துணைவி மட்டுமே. பிறிதெவரும் அல்ல. என் உடல் இம்மண்ணில் வாழ்வதும் என் உள்ளம் இக்காலத்தில் திகழ்வதும் அவருக்கென மட்டுமே."

பீடத்தை ஊன்றி பின்னால் தள்ளியபடி எழுந்த ருக்மி அவளருகே வந்து கை நீட்டி "நாணில்லையா உனக்கு, தொல்புகழ் விதர்ப்பத்தின் மன்றமர்ந்து இச்சொல்லை எடுக்க? நீ ஷத்ரியப்பெண். கன்று மேய்த்து கான்சூழும் யாதவனுக்கு தொழும்பப் பணி செய்ய விழைகிறாயா? முடி சூடி இந்நகராண்ட மூதன்னையர் அனைவரையும் இழிவுபடுத்துகிறாயா? இந்நகர் வாழும் ஒவ்வொருவர் நினைவிலும் பழியென எஞ்சப்போகிறாயா?" என்றான். ருக்மிணி "இவ்வெண்ணங்கள் எவையும் என்னுள் இல்லை. நான் அவருடையவள் என்ற சொல்லுக்கு அப்பால் என் சிந்தை சூழ இங்கு ஏதுமில்லை. மூத்தவரே, நீங்கள் ஆண்மகன், என் பெண்ணுள்ளம் எண்ணுவதை தாங்கள் உணரமுடியாது. ஆனால் காதல் கொண்டு கைபற்றி மகவு ஈன்று முலையூட்டி கனிந்தமைந்த என் மூதன்னையர் என் அகம் அறிவர். இங்கிருந்து விண் சென்று அவர் முன் நிற்கையில் என் காதல் ஒன்றினாலேயே அவருக்கு நிகரமரும் தகுதி கொண்டவளாவேன்" என்றாள்.

"ஒவ்வொரு சொல்லையும் எண்ணி வந்திருக்கிறாள். இது இவள் சொல் அல்ல. எவ்வண்ணமோ அத்தனை சொற்களையும் இவள் உள்ளத்தில் அவன் ஏற்றிவிட்டான். தந்தையே, துவாரகையின் அரசன் மாயச்சொல் கொண்டவன் என்கிறார்கள். பல்லாயிரம் காதம் நீண்டு அவன் கை வந்து ஒவ்வொருவரையும் தொட்டெழுப்பும் என்கிறார்கள். குலமகள் உள்ளத்திலும் நஞ்சென ஊறும் பெருங்காமத்தைத் தொடுப்பவன் என்கிறார்கள். இன்று அறிந்தேன் அவை உண்மை. நம் அரண்மனையில் இற்செறித்த இளவரசியை வென்றுவிட்டது அவன் காமக்கணை" என்றான் ருக்மி.

விருஷ்டி "இளவரசே, நாம் ஏன் வீண் சொல்லெடுக்க வேண்டும்? விதர்ப்பத்தின் இளவரசி தன் சொல்லை இங்கு வைத்துவிட்டாள். இனி ஆவதென்ன என்று சிந்திப்போம். மன்று நின்று கை பற்றி மாலையிட வேண்டியவள் அவள். அவள் விரும்பாத ஒன்றைச் செய்ய தாங்கள் ஆணையிட முடியாது. அவ்வண்ணம் விரும்பாத பெண்ணின் கைபற்ற சேதி நாட்டரசரும் எண்ணமாட்டார்" என்றாள். ருக்மி "அப்படியென்றால் என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தாங்கள் சொல்லுங்கள்" என்றான். "இளவரசி சொன்னதுமே தாங்கள் சினம் கொண்டு எழுந்துவிட்டீர்கள். அவள் விழைவு போல யாதவனை கைபிடித்தால் அதிலென்ன பிழை?" என்றாள் விருஷ்டி.

"அது நிகழலாகாது. அதன்பின் விதர்ப்பம் இருக்காது" என்று உரக்கக்கூவியபடி அவளை நோக்கி திரும்பினான் ருக்மி. "நாம் ஷத்ரிய தகுதி கொண்டவர்கள். ஆனால் மலைக்குடிகளை படைகளாகக் கொண்டமையால் வல்லமை அற்றவர்கள். அன்னையே, விந்தியனின் காலடியில் கிடக்கும் தொன்மையான கல்லுருளை போன்றவர்கள் நாம். வேத வேள்விக்கு மண் தகுதி இல்லை என்று விலக்கியிருந்த காலம் ஒன்றிருந்தது. இன்னும் அவ்விழிவு முற்றிலும் விலகவில்லை. மகதத்தின் அருளால் இன்று ஷத்ரிய மன்றில் நமக்கொரு பீடம் அமைந்துள்ளது. அந்நன்றியைக் கொன்று குலமிலி ஒருவன் அவையில் சென்றமரும் இழிவை ஒரு போதும் ஏற்கமாட்டேன்."

விருஷ்டி ருக்மிணியிடம் "மகளே, நன்கு சிந்தித்து சொல்லெடு. துவாரகையின் அரசரைப்பற்றி நீயறிந்ததெல்லாம் எவரோ உரைத்த சொல்லினூடாகவே. அச்சொற்கள் தேர்ந்த அரசுசூழ்மதியினரால் சமைக்கப்பட்டவையாக இருக்கலாம். மகதத்தின் வாளேந்திய கைகளில் ஒன்றாகிய விதர்ப்பத்தின் இளவரசி நீ. உன்னைக் கவரும் பொருட்டு வீசப்பட்ட தூண்டில் இரையாக அச்சொற்கள் இருக்கலாம்" என்றாள். சுஷமை "அதிலென்ன ஐயம்? இது ஓர் அரசியல் சூழ்ச்சி. பிறிதொன்றுமல்ல" என்றாள். "அன்னையே, அச்சூழ்ச்சியை வெல்லும் கலை எனக்குத் தெரியும். அரசு சூழ்தலை நானும் கற்கத்தொடங்கி நெடுநாட்களாகிறது" என்றான் ருக்மி.

ருக்மிணி "அன்னையரே, மூத்தவரே, இச்சொற்களுடன் நீங்கள் நின்றிருக்கும் எந்நிலத்திலும் என் கால்கள் இல்லை. நான் உணர்ந்திருப்பது காலமற்ற வெளியில் வாழும் தெய்வங்கள் கூறுவது. நான் இளைய யாதவரின் அறத்துணைவி. அவர் கைபற்றுவதற்கென்று இங்கு பிறவி கொண்டவள். என்னை கருவறையிலிருந்து கை தொட்டு எடுத்த அன்னை அதை அறிவாள். என் உடலை முதலில் நோக்கிய நிமித்திகர் அறிவார். இங்கு ஒரு சொல்லுமன்றி அமர்ந்திருக்கும் எந்தையும் அறிவார்" என்றாள். அனைவர் விழிகளும் திரும்ப பீஷ்மகர் மெல்ல உடலை அசைத்து "ஆம் மைந்தா. அவள் உளம் கொண்ட வகையிலேயே இது நிகழ்ந்தாலென்ன?" என்றார்.

ருக்மி கைகளைத்தூக்கி ஏதோ சொல்வதற்குள் பீஷ்மகர் "ஆம். நீ உணர்வதை நான் அறிகிறேன். மகதத்தின் சிற்றரசனாகிய நான் துவாரகைக்கு மகள்கொடை அளிக்க முடியாது. ஆனால் நாம் ஷத்ரியர். இங்கொரு சுயம்வரப் பந்தல் நாட்டுவோம். சிசுபாலனும் ஜராசந்தனும் பாரத வர்ஷத்தின் ஷத்ரியர் அனைவரும் அவையமரட்டும். முடிந்தால் இளைய யாதவர் வந்து இவளை வென்று செல்லட்டும். அதை மறுக்க எவராலும் முடியாது அல்லவா?" என்றார். கீர்த்தி "ஆம். இப்போது நான் இதையே எண்ணினேன். ஷத்ரியப்பெண்ணுக்கு நம் குல மூதாதையர் வகுத்த உரிமை அது. தன்னை வென்று செல்லும் ஆண்மகனைக்கோர அவளுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதுவன்றி பிற வழியேதும் இல்லை" என்றாள்.

சுஷமை "அப்படியென்றால் என் மைந்தன் சொன்ன சொல்லென்ன ஆகும்?" என்றாள். ருக்மி "ஆம், சேதி நாட்டரசரின் கை பற்றி என் தங்கை அவருக்குரியவள் என்று நான் சொன்னேன். என் சொல் இங்கு வாழும். என் வாள் அச்சொற்களைத் துணைக்கும்" என்றான். விருஷ்டி "இளவரசே, தாங்கள் விழைந்தால் எளிதில் இத்தருணத்தை கடந்து செல்லலாம். நம் அவையில் குடிச்சான்றோர் எழுந்து இளவரசிக்கு முறையான சுயம்வரம் தேவையென்று கோரட்டும். குடியவை ஆணையிட்டதற்கப்பால் அரசனுக்கு சொல்லில்லை அல்லவா? அவர்களைக் காட்டி சிசுபாலரிடம் இங்கு ஒரு சுயம்வரத்தை நாம் அமைத்திருக்கும் செய்தியை சொல்லிவிடலாம்" என்றாள்.

ருக்மி "அன்னையே, சிசுபாலர் என் உடலின் மறுபாதி போன்றவர். என் உள்ளம் எண்ணுவதை அக்கணமே அறிபவர். இந்த எளிய அரசுசூழ்தலை நான் சொல்ல எண்ணும்போதே அச்சொற்களின் ஆழத்தை அவர் வாசித்தெடுப்பார். அவர் முன் சென்று நடிக்க என்னால் இயலாது" என்றான். விருஷ்டி "தன்னை தன் கொழுநன் வென்று செல்ல வேண்டுமென்று உரைக்க ஷத்ரியப்பெண்ணுக்கு உரிமை உண்டல்லவா? இளவரசி அவரிடம் சொல்லட்டும், அவர் தன்னை வென்று செல்லட்டும் என்று. சேதிநாட்டரசர் வீரரென்றால் அவ்வறைகூவலைத் தவிர்த்து முன் செல்ல எண்ணமாட்டார்" என்றாள்.

ருக்மி பொறுமையிழந்து இரு கைகளையும் விரித்தபடி சாளரத்துக்கு வெளியே தெரிந்த வரதாவை நோக்கியபடி இல்லை என்பது போல தலையை பல முறை அசைத்தான். பீஷ்மகர் "மைந்தா..." என்று ஏதோ சொல்லத்தொடங்க திரும்பி "இல்லை, இனி நான் எதுவும் உரையாடுவதற்கில்லை. இந்த மணம் முடிவாகிவிட்டது. இது மட்டுமே நிகழும்" என்றான். விருஷ்டி "இளவரசே, ஷத்ரியப்பெண்ணை எவரும் தடுக்கவியலாது" என்றாள்.

"தடுக்க முடியும்" என்றபடி ருக்மி அருகே வந்தான். "நானோ என் தந்தையோ கைபற்றி அளிக்காமல் இவளை அவன் மணம் கொண்டு செல்ல முடியாது. நான் இவளை கையளிக்கமாட்டேன். என் தந்தை கையளிப்பார் என்றால் அக்கணமே அவர் காலடியில் என் கழுத்தை வெட்டி வீழ்வேன். என் வாள் மேல் ஆணை!" பீஷ்மகர் "என்ன சொல்கிறாய்? இது..." என்று சொல்வதற்குள் சுஷமை ஓங்கிய குரலில் "என் மைந்தனின் ஆணை அது. அது மட்டுமே இங்கு வாழும். அவன் வாளாலும் சொல்லாலுமே இந்நகர் வெல்லும்" என்றாள்.

விருஷ்டி ருக்மிணியை நோக்கி "மகளே, இங்கு அனைத்தும் இனி உன் சொல்லில் உள்ளது" என்றாள். ருக்மிணி "நான் இச்சொற்களுடன் வாதிட இங்கு வரவில்லை. இங்கு கன்னியென சிறைப்பட்டிருப்பேனென்றால் அதுவும் எனக்கு உகந்ததே. அரண்மனையின் இருளறைக்குள் வாழும்போதும் நான் அவர் துணைவியென்றே இருப்பேன்" என்றாள். சுஷமை "என்ன பித்தெழுந்த பேச்சு! எங்கு பார்த்தாய் அவனை? அவன் யாரென்று நீயறிவாயா?" என்றாள்.

ருக்மிணி அவளை நோக்கி திரும்பி "நான் என்னை உயிர்கள் உண்ணும் அன்னமென உணர்ந்தேன் அன்னையே. அவர் அன்னத்தை முட்டி முட்டி முலையுறுஞ்சும் வைஸ்வாநரன். இங்கு நிகழ்ந்த உண்டாட்டின் உச்ச முயக்கத்தில் அவரை கண்டேன்" என்றாள். "என்ன உளறுகிறாய்?" என்றாள் சுஷமை. கீர்த்தி "இளவரசி, உளமயக்கால் எடுக்கும் முடிவல்ல இது" என்றாள். சுஷமை மூச்சிரைக்க "இது யார் உருவாக்கும் உளமயக்கு என்றறிவேன். இவள் செவிலியன்னை அமிதை... அவளை கட்டி வைத்து சவுக்கால் அடித்தால் என்ன நடக்கிறது என்று சொல்வாள்" என்றாள்.

ருக்மிணி "எவர் சொல்லும் எனக்கு ஒரு பொருட்டல்ல அன்னையே. இதற்கு மேலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எந்தை முடிவெடுக்கட்டும்" என்றாள். ருக்மி "முடிவெடுத்துவிட்டோம். நீ சிசுபாலரை மணந்து மணமகளாக இவ்வரண்மனை விட்டு வெளியேறுவாய். இல்லையேல் இங்கே கன்னியென இருந்து மறைவாய். இளைய யாதவன் உன் கை தொடுவது இப்பிறவியில் நடக்காதென்று உணர்க!" என்றான். ருக்மிணி "அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக!" என்று சொல்லி மெல்ல எழுந்தாள்.

ருக்மி அவள் அருகே வந்து கனிந்து ஈரம் படர்ந்த குரலில் "தங்கையே, இதுநாள்வரை உன்னை நான் பிறிதென எண்ணியதில்லை. சேதி நாட்டரசருக்கு உன் கையை வாக்களிக்கையில்கூட உன் சொல் என் சொல்லென்றே எண்ணினேன். நீ இதுவரை கண்டிராத எவர் பொருட்டோ என்னையும் உன் தந்தையையும் இவ்வரசையும் துறக்கிறாய். பித்து கொண்டாயா? எங்ஙனம் பேதை என்றானாய்?" என்றான். ருக்மிணி அவனை நோக்கி "அறியேன் மூத்தவரே. ஆனால் நினைவெழுந்த நாள் முதல் இப்பபித்து என்னுள் உள்ளதென்று அறிகிறேன். இதன் வழியாகவே முழுமை கொள்கிறேன். நான் எய்துவது அனைத்தையும் இதுவே என்னிடம் கொண்டு சேர்க்கும்" என்றாள்.

தோள்கள் தளர எடைமிக்க உடல் கொண்டவன் போலாகி தன் பீடத்தில் சென்று ருக்மி அமர்ந்துகொண்டான். சுஷமை பற்களைக் கடித்து "இது வெறும் உளமயக்கு. ஓரிரு நாளில் தெளியும் பித்து. இதை தெளியவைக்க என்ன மருந்தென்று பார்க்கிறேன்" என்றாள். ருக்மிணி. "பித்துகளில் சில ஒரு போதும் தெளிவதில்லை அன்னையே" என்றாள். பீஷ்மகரை நோக்கி தலை வணங்கி "தந்தையே, என் உளம் அறிந்தவர் தாங்கள். ஆகவே தங்களிடம் மட்டும் நான் பொறுத்தருளும்படி கோரப்போவதில்லை. பிற அனைவரிடமும் கால் தொட்டு வணங்கி இவ்வெளியவள் மேல் சினம் கொள்ள வேண்டாமென்று கோருகிறேன்" என்று கை கூப்பி தலை வணங்கிவிட்டு கதவை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் விழிநட்டு அமர்ந்திருந்த ஐவரும் மூச்சுவிட்டு உடல் தளர்வதை அவள் கேட்டாள்.

வாயிலுக்கு வெளியே நின்றிருந்த அமிதை அவளை நோக்கி வந்து "என்ன சொன்னார்கள்?" என்றாள். "என் சொற்களை சொல்லிவிட்டேன் அன்னையே" என்றாள் ருக்மிணி. "என்ன சொன்னார் இளவரசர்?" என்று கேட்டாள் அமிதை. "என் இறுதிநாள் வரை இற்செறிப்பொன்றே எஞ்சும் என்றார்" என்று புன்னகையுடன் ருக்மிணி சொன்னாள். செயலிழந்து நின்ற அமிதை எட்டு வைத்தோடி அவளருகே வந்து கைகளைப்பற்றிக் கொண்டு "என்ன இது இளவரசி? இளவரசர் அவ்வாறு சொன்னாரா என்ன?" என்றாள். "ஆம், என் கையை சேதி நாட்டரசருக்கு அவர் அளித்துவிட்டார். அச்சொல்லை அவர் திரும்பப் பெற இயலாது" என்றாள் ருக்மிணி.

"அவரது சினம் இயல்பே. அன்னையே, நான் இளைய யாதவரை இனி அடைவதற்கேதுமில்லை. இங்கு பிறந்தபோதே அவர் துணைவி என்றே வந்தேன். எங்கு எவ்வண்ணமிருப்பினும் அவர் குலமகளென்றே அமைவேன். விதர்ப்பத்தின் மகளிர் அறை இருளும் துவாரகையின் அரியணையும் எனக்கு நிகர்தான்" என்றாள். அவள் பின்னால் ஓடிவந்தபடி "ஆயினும் மகளே..." என்ற அமிதை "நான் சென்று இளவரசர் காலில் விழலாமா? அரசியர் முன் கண்ணீர்விட்டு என்னவென்று நான் உரைக்கிறேன். அவர்கள் என்னை அறிவார்கள். என் மடியில் நீங்கள் தவழ்ந்து வளர்ந்ததை அவர்களுக்கு சொல்லவேண்டியதில்லை" என்றாள்.

ருக்மிணி "அன்னையே, ஒவ்வொருவரும் தங்கள் வலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். எவரும் இங்கு விழைவதை செய்வதில்லை. இயல்வதையே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்" என்றாள். அமிதை ருக்மிணியை நோக்கி தன் நெஞ்சிலெழுந்த சொற்களெதையும் இதழ்களால் கூறமுடியாத தவிப்புடன் நின்றாள். பின் அவளுக்குப்பின்னால் தவித்துக்கொண்டு நடந்து அவள் அறை வரை தொடர்ந்தாள். ருக்மிணி மஞ்சத்திற்கு சென்று மேலாடையைக் களைந்து மெல்லாடை அணிந்து உப்பரிகைக்குச் சென்று பீடத்தில் அமர்ந்து நகரின் மேல் நின்ற முகில்திரளின் நிழல் மெல்ல மிதந்து சென்ற வரதாவின் நீர்ப்பெருக்கை நோக்கினாள்.

அமிதை அங்கு நின்று சற்று நேரம் அவளை நோக்கினாள். பின்னர் வாயிலை மெல்ல மூடி பின்னகர்ந்து இடைநாழியில் விரைந்து அரசரின் அவையை அடைந்தாள். வாயிலில் நின்று "எளியோள், அரசரிடம் முகம் காட்ட வேண்டும்" என்று வாயிற்காவலனிடம் சொன்னாள். அவன் உள்ளே சென்று சொல் பெற்று மீண்டு அவளை உள்ளே செல்லும்படி பணித்தபோது இருகைகளையும் கூப்பியபடி அறைக்குள் நுழைந்தாள். அங்கு மூன்று அரசியரும் பீஷ்மகரும் மட்டுமே இருந்தனர். சினத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த சுஷமை எழுந்து அவளை நோக்கி "அனைத்தும் உன் ஆடல்தானா? என் பேதையின் நெஞ்சில் அவ்விளைய யாதவன் அனுப்பிய நஞ்சை நிறைத்தவள் யார்? நீயா இல்லை உன்னைச்சூழ்ந்துள்ள சேடியரில் துவாரகையின் உளவாளி என அமர்ந்துள்ள எவளோ ஒருத்தியா? இப்போதே அறிந்தாகவேண்டும்" என்றாள்.

கண்ணீருடன் கைகளைக் கூப்பியபடி "எப்பழியையும் ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன் அரசி. என் கன்னியின் நெஞ்சை உரைக்கவே இங்கு வந்தேன். என் சொற்களை இங்கு வைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்றாள். "உன் விழிநீரையும் பசப்புகளையும் கேட்க இங்கு நாங்கள் சித்தமாக இல்லை. நிகழ்ந்ததென்ன என்று அறியவே விழைகிறேன். என் கன்னியின், என் மகளின் உள்ளத்தை வென்று அவனிடம் சேர்க்க நீ என்ன பெற்றாய்? இப்போதே அதை அறிந்தாக வேண்டும்" என்றாள்.

பீஷ்மகர் எழுந்து கூரிய குரலில் "சுஷமை, இனி உன் சொல் எழலாகாது" என்றார். "ஏன்? நான்..." என்று சுஷமை தொடங்க உரத்த குரலில் பீஷ்மகர் "இனி ஒரு சொல் எழுமென்றால் உன் தலையை வெட்டி இங்கு வீழ்த்திவிட்டு மறுசொல் எடுப்பேன்" என்றார். அவள் திகைத்து அவரை நோக்க அஞ்சிய நா வந்து இதழ்களை வருடிச் சென்றது. குரல்வளை அசைந்தது. அமிதையிடம் " சொல்க!" என்றார் பீஷ்மகர்.

"அரசே, என்னிடம் இளவரசர் கூறியதனைத்தையும் இளவரசியிடம் நானே சொன்னேன்" என்றாள் அமிதை. "மகதம் விழைவதை, நம் இளவரசர் இலக்காக்குவதை, இந்நகர் நாடுவதை அவளுக்கு விளக்கினேன். இளவரசியின் உளம் கொள்ளும்விதம் அவற்றை நிறுத்தவும் என்னால் இயன்றது. நானறிவேன், இளவரசி பிறிதொன்றை எண்ணவும் இல்லை. சேதி நாட்டரசர் இங்கு வந்தபோது அவள் உள்ளம் அவரை கொள்ளவும் இல்லை, விலக்கவும் இல்லை. ஆனால் எங்கோ அவள் அறிந்தாள், அவள் கொழுநன் அவரல்ல என்று. எங்ஙனம் அறிந்தாள் என்பதை எவரும் சொல்ல முடியாது. பெண்களுக்குப்பின்னால் விழியறியாமல் அவள் மூதன்னையர் வந்து நிற்பதாக சொல்வார்கள். அத்தெய்வங்களே அதை அறியும்."

"ஆனால் ஒன்றறிந்தேன். விழவுக்கு நீராட அவள் எழுந்தபோது மீண்டும் அவள் கைகளும் கால்களும் சூடிய ஆழியையும் சங்கையும் நான் கண்டேன். அப்போது நானுமறிந்தேன் அவள் பாதம் சூடுவதன்றி கைபற்றும் தகுதியற்றவர் சேதி மன்னர் என்று" என்றாள் அமிதை. "அவன் இளைய யாதவனே என்று அவளிடம் சொன்னது யார்?" என்றார் பீஷ்மகர். "அரசே, சிற்றிளமையில் அவள் கண்ட ஒரு கனவை பலநூறு முறை நம்மிடம் உரைத்திருக்கிறாள். வரதா அவளுக்கு அளித்த அந்த நீலமணிக்கல்லைப்பற்றி. அதன் பொருள் ஒன்றே, துவாரகை ஆளும் நீலனே அவன்" என்றாள் அமிதை.

பீஷ்மகரின் விழிகளை நோக்கியபடி "நேற்றுமாலை உண்டாட்டில் ஒரு தென்னகத்துச் சூதன் நீலமணிவண்ணனைப்பற்றி பாடினான். அப்போது அவள் அறிந்தாள் அவனை" என்றாள் அமிதை. அவளை நோக்கி பொருளற்றவையென்றான விழிகளுடன் நின்ற பீஷ்மகர் சென்று தன் பீடத்திலமர்ந்து தன் கைகளைக் கோத்து மடிமேல் வைத்து தலைகுனிந்தார். பின்பு நிமிர்ந்து "ஆம். இப்போது உணர்கிறேன். இதுவரையிலான அனைத்தும் ஒன்றுடனொன்று பிசிறின்றி முயங்குகின்றன. இவள் பிறந்தது அவனுக்காகவே" என்றபின் திரும்பி சுஷமையிடம் "அரசி, அவள் அவனுக்குரியவள். இது என் ஆணை" என்றார்.

"ஆம் அரசே, தங்கள் ஆணை" என்றாள் சுஷமை. அமிதையிடம் "ஷத்ரியர்களுக்கு மண முறைகள் பல உண்டு. சுயம்வரம் கோருவது ருக்மிணியின் உரிமை. அவள் அதை செய்யலாம்" என்றார் பீஷ்மகர். அமிதை "இல்லை அரசே. இளவரசி தன் தமையனை மீறி, தங்களைக் கடந்து, அவ்வண்ணம் கோரப்போவதில்லை. அதன் வழியாக தங்கள் இருவரையும் இந்நகர் மக்கள் முன்னும் சேதி நாட்டரசர் முன்னும் சிறுமையாக்க துணியமாட்டாள். அவள் உள்ளத்தை நான் அறிவேன்" என்றாள்.

பெருமூச்சுடன் தலையசைத்த பீஷ்மகர் "ஆம், அவளை நானும் அறிவேன்" என்றார். விருஷ்டி எழுந்து "அரசே, ஷத்ரியப் பெண்ணுக்கு காந்தர்வ மணமும் உரியதே" என்றாள். பீஷ்மகர் திகைத்தவர் போல் அவளை நோக்கினார். "இளைய யாதவர் வரட்டும், அவளை இங்கிருந்து கவர்ந்து செல்லட்டும். அது எவருக்கும் பழி அளிக்காது. இளைய யாதவருக்கு புகழ் சேர்க்கும். அவர் அவள் காதலுக்காக வருவாரென்றால் குடிகளுக்கு பிறிதொரு விளக்கமும் தேவையில்லை" என்றாள் கீர்த்தி. பீஷ்மகர் முகம் மலர்ந்து "ஆம், அதுவே உகந்த வழி" என்றார்.

பகுதி பத்து : கதிர்முகம் - 3

கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு கரைகளிலும் மக்கள் செறிந்து வாழ்ந்த போதிலும் நாளும் பல்லாயிரம் உயிர்கள் அதை அள்ளி அருந்திய போதிலும், பறவைக் குலங்களால் முத்தமிடப்பட்ட போதிலும் அனைத்துக்கும் அப்பால் அது முழுமையான தனிமையில்தான் வழிந்து கொண்டிருந்தது. முகிலில் இருந்து மலை வழியாக கடல் நோக்கிய ஒரு கோடு மட்டுமே அது என. துயிலும் அன்னையிடம் பால் குடிக்கும் பன்றிக்குட்டிகள் போல படித்துறையில் படகுகள் முட்டிக் கொண்டிருந்தன.

வரதா காலையில் ஒளிகொண்டு எழுந்து, சுடர் பெருக்கென மாறி, குருதிபடிந்த வாள் முனையென மெல்ல அணைந்து, மான் விழி என இருளுக்குள் ஒளிர்ந்து கரிய தோலில் வாள்வடு என எஞ்சி மறைவது வரை அவள் நோக்கிக் கொண்டிருந்தாள். அதன் முதல் ஒலி என்பது மரக்கிளைகளில் இருந்து எழுந்து நிழல்களில் ஏறிக்கொண்டு அதன் மேல் பரவும் பறவைகளின் குரல். இறுதி ஒலி என்பது கூடணையப் பிந்தி தனித்த நிழலை நீரின் மேல் மிதக்கவிட்டு சிறகுகளால் உந்தி வந்து சென்று கொண்டிருக்கும் இறுதிப் பறவை. விழியறியா இருளிலும் அங்கு அமர்ந்து அவள் வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். உண்பதும் உறங்குவதும் உப்பரிகையிலே என்றாயிற்று.

பீடத்திலேயே உறங்கிச் சரிபவளை அமிதைதான் வந்து தொட்டு "இளவரசி, மஞ்சத்தில் இளைப்பாறுங்கள்" என்று சொல்லி மெல்ல தூக்கிக் கொண்டு வந்து படுக்கவைப்பாள். துயிலின்றி ஊணின்றி அவள் துயர் கொள்வாள் என்று எண்ணியவள் போல அமிதை எப்போதும் உடனிருந்தாள். ஆனால் ருக்மிணி மையல் கொண்ட கன்னியின் கனவு விழிகளை மட்டுமே கொண்டிருந்தாள். விழித்தெழுகையில் எங்கிருக்கிறோம் என்றறியாதவள் போல விழியலைந்தாள். பின் எதையோ எண்ணி இதழ் மலர்ந்தாள். படுக்கையில் கையூன்றி எழுந்து நின்று கனவிலிருந்து உதிர்ந்து நனவுக்கு வந்து கிடந்த சொற்களை நோக்கி திகைத்தாள். இரவு தன் அறைக்குள் சுழன்று சென்ற பறவை ஒன்று விட்டுச் சென்ற பொன் முட்டைகளைப் போல வியப்பும் திகைப்பும் அளித்தன அவை.

ஒடிச் சென்று கதவைத் திறந்து அன்று புதியதாய் பார்ப்பவளைப் போல, அங்குள்ளதா என்று உறுதி செய்பவளைப் போல வரதாவை பார்ப்பாள். அமிதை பின்னால் வந்து "இளவரசி, முகத்தூய்மை செய்து கொள்ளுங்கள் " என்று அழைப்பதுவரை விழி எல்லை முதல் விழி எல்லை வரை மாறி மாறி வரதாவை நோக்கியபடி நின்றிருப்பாள். நடுவே ஒரு நகரம் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை என்று தோன்றும்.

நீரின் மென்மையான ஒளி மட்டுமே அவள் முகத்தில் சிற்றலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும். உலுக்கி அழைத்த அமிதையை திரும்பி நோக்கி நீள் மூச்சுடன் "செல்வோம்" என்பாள். ஒவ்வொரு நாளும் உவகையுடன் நீராடி அணி செய்து கொண்டாள். தன் ஆடைகளை அவளே தொட்டுத் துழாவி தேர்வு செய்தாள். அணிகலன்கள் ஒவ்வொன்றையும் விழிமலர எடுத்து நோக்கி காதிலும் கழுத்திலும் வைத்து பொருத்தம் தேர்ந்து சூடினாள். முழுதணிக்கோலத்தில் எழுந்து ஆடியில் தன் உடலை சுழற்றிச் சுழற்றி நோக்கினாள். பொன்னூல் பின்னிய பட்டாடையின் மடிப்புவரிகளை மீண்டும் மீண்டும் சீரமைத்தாள். தளும்பும் தேன்குடம் ஒன்றை கொண்டு செல்பவள் போல மெல்லடி வைத்து நடந்து மீண்டும் உப்பரிகையை அடைந்து கைப்பிடிகளைப் பற்றி நோக்கி நின்றாள். பல்லாயிரம் குடிகள் முன் அரியணையில் அமர்பவள் போல் அந்தப் பீடத்தில் அமர்ந்து வரதாவை நோக்கினாள்.

கீழே மகள்மாட வாயிலில் ருக்மிணியின் வேளக்காரப் படையினர் வந்து காவல் சூழ்ந்திருப்பதை அமிதை அறிந்தாள். முன்பு நின்றிருந்த முகங்கள் ஒன்று கூட இல்லை. அரண்மனையில் அணுக்கச் சேடியரும் காவல் பெண்டுகளும் ஏவல் மகளிரும் முழுமையாகவே மாற்றப்பட்டனர். புதியவர்களோ எந்நிலையிலும் விழியளிக்காதவர்களாக, சொல் எண்ணி வைப்பவர்களாக, ஓசையற்று நடப்பவர்களாக, இரவிலும் விழித்திருப்பவர்களாக இருந்தனர். ஒரே நாளில் அந்த இனிய கன்னி மாடம் கொடும் சிறையென மாறியது.

அதை ருக்மிணி உணர்ந்திருக்கிறாளா என்று அமிதை ஐயம் கொண்டாள். அருகே சென்று "இளவரசி, இம்மாளிகையின் காவல் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. வேளக்காரப் படைத் தலைவன் இதன் காவல்மாடத்து அறையில் இரவும் பகலும் அமர்ந்திருக்கிறான்" என்று சொன்னபோது அச்சொற்களை உணராதவள் போல விழி தூக்கி "அது அரசரின் ஆணையா?" என்றாள் ருக்மிணி. "ஆம், அது அரசாணைதான். ஆனால் இளையவர் சொல் என எண்ணுகிறேன்" என்றாள் அமிதை. புரிந்துகொள்ளாதவள் போல விழிதிருப்பி வரதாவை நோக்கிபடி தனக்குள் ஏதோ சொல்லி புன்னகைத்த அவளை நோக்கி "முறைமை சார்ந்த ஆலயச் சடங்குகளுக்கு அன்றி பிறிது எதற்கும் நாம் இனி அரண்மனையை விட்டு வெளியே செல்ல முடியாது என எண்ணுகிறேன்" என்றாள் அமிதை.

இயல்பாக “ஆம்“ என்று தலையசைத்து மீண்டும் தன்னுள்ளேயே எழுந்த அச்சொல்லையே புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன சொல்கிறாள் என்று அசையும் அச்சிறு உதடுகளை அமிதை விழி கூர்ந்தாள். "இந்திர நீலம்" என்று அவள் சொல்வதை சித்தத்தால் கேட்டாள். மீண்டும் பலமுறை கேட்டு அதுவே என உறுதிசெய்துகொண்டாள். ஒரு சொல்லில் சித்தம் தளைக்கப்பட்டு வாழ்நாளெலாம் அதில் சிறையுண்டிருப்பதைப்பற்றி அவள் அறிந்திருக்கிறாள். ஒரு சொல் காலடிமண் பிளந்து என மானுடரை இருண்ட ஏழுலகங்களுக்கு கொண்டு செல்லமுடியும் என்று சொல்லுண்டு. இவளை உண்ணும் இருளின் கரிய வாயா இச்சொல் என மருண்டாள். இந்திர நீலம் என்று தன்னுள்ளமே அச்சொல்லை மீள மீளச் சொல்வதை அறிந்து பலமுறை திடுக்கிட்டாள்.

ஆனால் அணிநகை பதித்த இந்திரநீலத்தை ருக்மிணி அணியவில்லை. பிற கற்களைப் போலவே அதையும் கையில் எடுத்து நோக்கி உடலில் பொருத்தி நோக்கினாள். நிறைவின்றி பேழையில் வைத்து பிறிதொன்றை எடுத்தாள். அவள் உள்ளம் உவக்கும் இந்திரநீலம் வெறும் ஒரு கல்லல்ல என்பது போல. அவள் விழிநோக்கவில்லை என்பதை அவள் சொல்லியனுப்பியதும் அரண்மனை மருத்துவச்சி இருமுறை வந்து ருக்மிணியை நோக்கிச் சென்றாள். "இளவரசி நலமாக இருக்கிறாள் செவிலியன்னையே. அவள் நெஞ்சு மகிழ்ந்திருக்கிறது. அதை அவள் பிறருடன் பகிர விழையவில்லை" என்றாள் மருத்துவச்சி.

தன்னை மட்டும் அரண்மனையிலிருந்து ஏன் ருக்மி விலக்கவில்லை என அமிதை அறிந்திருந்தாள். ருக்மிணியிடம் பேச அவளால் மட்டுமே முடிந்தது. அவளை தன் அரண்மனைக்கு அழைத்த ருக்மி சினத்துடன் "என்ன செய்கிறாள் உன் இளவரசி?" என்றான். தலைகுனிந்து அமிதை நிற்க "அவளிடம் சொல், இந்நகர் இன்று அவள் சொல்லை காத்திருக்கிறது. இது வாழ்வதா அழிவதா என்பதை முடிவு செய்ய வேண்டியவள் அவளே. சிசுபாலரிடம் நான் சொல்லளிக்க வேண்டிய நாட்கள் ஒவ்வொன்றாக சென்று கொண்டிருக்கின்றன" என்றான்.

"அனைத்து சொற்களையும் சொல்லிவிட்டேன் இளவரசே" என்றாள் அமிதை விழி தூக்காமல். ருக்மி உரக்க "மீண்டும் சொல். அவள் உள்ளம் எழுந்த பித்துக்கு அப்பால் தன்னிலை ஒன்று இருக்கும் என்றால் அதுவரை செல்லட்டும் அச்சொற்கள். இவள் சொல் யாதவன்வரை சென்று சேரப்போவதில்லை. அவன் இவளை கைபற்றுவது என்பது இப்பிறவியில் நிகழப்போவதும் இல்லை. அவள் கொழுநன் என அமையவிருப்பவர் சிசுபாலர் மட்டுமே. இன்று அவள் கொண்ட உளமயக்கென்பது சேதிநாட்டு மன்னரை விலகி அறியும் பொருட்டு என்றே எண்ணுகிறேன். அவரை அறிந்த பெண் எவளும் விழைவுகொள்ளாதிருக்கமாட்டாள்" என்றான்.

அமிதை "ஆணை இளவரசே" என்று மெல்லிய குரலில் சொன்னாள். ருக்மி அவள் செல்லலாம் என்று கையசைத்து தலைவணங்கித் திரும்பிய அவளை நோக்கி பின்னால் வந்து "அமிதை" என்று இளஞ்சிறுவனாக அவள் அந்நாளில் அறிந்த குரலில் அழைத்தான். அவள் நின்று விழி தூக்க "என்ன நிகழ்கிறதென்று நீ அறிந்துளாயா? நான் சேதி நாட்டு அரசரின் கை தொட்டு வாக்களித்திருக்கிறேன். இவள் அவரை விரும்புகிறாள் என்றெண்ணி என் சொல்லை அளித்தேன். இனி அது பிழைத்து நான் வாழமுடியாது. அவரோ அச்சொல்லை இறுகப்பற்றி என்னை தன் காலடியில் அமர வைக்கிறார்" என்றான்.

"இங்கிருந்து செல்லும்போதே இளவரசி ஒப்பவில்லை என்று ஒற்றர்களினூடாக அறிந்திருந்தார்" என்று ருக்மி தொடர்ந்தான். "கிளம்பும்போது என் தோள்களில் கை வைத்து விழிநோக்கி உங்கள் அரசமுறை மணஓலை வருவதற்காக நாளும் என் நாடு காத்திருக்கும் விதர்ப்பரே என்று சொன்னபின் மேலும் தாழ்ந்த குரலில் அவ்வோலை விரைவில் எழுதப்படுமென எண்ணுகிறேன் என்றார். நான் விலக முடியாது. அனைத்தும் முடிவாகிவிட்டன. அதை அவளிடம் சொல்."

"ஆம் இளவரசே. சொல்கிறேன்" என்றாள் அமிதை. ருக்மி அவள் பணிவில் இருந்த விலகலை மீண்டும் மீண்டும் உணர்ந்தவனாக "என் ஒற்றர்கள் நீயே அவள் நெஞ்சை திசைமாற்றியவள் என்கிறார்கள். சேதிநாட்டு அரசர் அவள் கொழுநன் அல்ல என்று எண்ணச் செய்தது உன் சொல் என சமையப்பெண்ணாக அங்கிருந்த சேடியும் உளவு சொன்னாள். ஆயினும் இந்நகரின் தொல்குடிகளின் கொடி வழி வந்தவள் என்று உன்னை அறிவேன். உன் சித்தம் இவ்வரியணைக்கும் இதில் அமர்ந்த எனக்கும் கட்டுப்பட்டது. என் ஆணை இது“ என்றான்.

"ஆம் இளவரசே. முற்றிலும் இதற்குரியவள் நான். இச்சொற்களையே இளவரசியின் காதுகளில் விழச்செய்வேன்" என்று சொல்லி தலைவணங்கி அமிதை மீண்டாள். 'என்ன செய்வேன் மூதன்னையரே? இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது. இவள் அவனுக்குரியவள். எங்கோ கடல் விளிம்பில் பெருநகர் ஒன்றில் கதையோ என சொல்லில் ஊறி குழல்விழித்த பீலியுடன் அமர்ந்திருக்கும் அவனே இவளுக்குரியவன். இவையனைத்தும் மானுடர் அறியும் நெறிகள். அது விண் வகுத்த வழி.'

சிற்றரசி கீர்த்திதான் பீஷ்மகரின் திட்டத்தை அவளிடம் சொன்னாள். அரசியை சந்திக்கும்படி ஆணையுடன் வந்த சேடி "தங்களை உடன் அழைத்துவர ஆணையிட்டார் அரசி" என்றாள். "இளவரசி இப்போது உணவருந்தும் நேரம். நான் மாலை வருகிறேன்" என்ற அமிதையை நோக்கி "என்னுடன் அன்றி இவ்வரண்மனை விட்டு நீங்கள் வெளிவரவோ அரசியர் அரண்மனைக்குள் புகவோ இன்று இயலாது முதியவளே. அரசியின் முத்திரைக் கணையாழி என் கையில் உள்ளது. இதுவே நாம் செல்லும் வழியை அமைக்கும்" என்றாள். நீள்மூச்சுடன் "ஆம் வருகிறேன்" என்றாள் அமிதை.

இடைநாழியில் நான்கு இடங்களில் காவலர்கள் அவர்களை நிறுத்தி எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு முத்திரைக் கணையாழியை நோக்கி சற்று ஐயத்துடன் ஒப்புதல் அளித்தார்கள். அரண்மனை முகப்பிற்கு வந்து பெருமுற்றத்தைக் கடந்து மறுபக்கம் துணைப் பாதை வழியாக சிற்றரசிகளுக்கான மாளிகைகளை அடைந்தனர். அங்கு காவல் நின்ற வீரர்களிடம் கணையாழியைக் காட்டி ஒப்புதல் பெற்று அரண்மனைக்குள் சென்றனர். சிற்றரசியின் அரண்மனைக் கூடத்தை அடைந்ததும் சேடி "இங்கு நில்லுங்கள். நான் சென்று எவரை எப்போது சந்திக்கிறீர்கள் என்று வினவி வருகிறேன்" என்றாள்.  "எவரை?" என்று அமிதை கேட்டாள். "சிற்றரசியர் இருவரும் இங்குதான் உள்ளனர்" என்றாள் சேடி. சற்று நேரத்தில் திரும்பி வந்து "இருவரும் மந்தணச்சிற்றறையில் காத்திருக்கிறார்கள். அங்கு சென்று அவர்களுடன் அமர தங்களை அழைக்கிறார்கள்" என்றாள்.

அமிதை மந்தணச் சிற்றறைக்குள் நுழைந்தபோது இரு அணுக்கச் சேடியர் நின்றிருக்க பீடங்களில் அமர்ந்திருந்த கீர்த்தியையும், விருஷ்டியையும் கண்டாள். அமிதை தலைவணங்கி "விதர்ப்ப நாட்டின் சிற்றரசியரை வணங்குகிறேன். தங்கள் சொல்லேற்று பணிய வந்துள்ளேன்" என்றாள். அமரும்படி கீர்த்தி கைகாட்டினாள். "இல்லை சிற்றரசி. இணையமரும் வழக்கம்..." என சொல்லத் தொடங்கிய அமிதையை கையசைத்து "அமர்க!" என்றாள் கீர்த்தி. அவள் மீண்டும் வணங்கியபின் அமர்ந்துகொண்டாள். "உன்னை வரவழைத்தது அரசாணையை அறிவிப்பதற்காக" என்றாள் விருஷ்டி. "அரசர் கவலை கொண்டிருக்கிறார். இளவரசி மகளிர்மாடத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதை அவர் அறிவார். இளவரசரின் திட்டங்களையும் நாள் தோறும் அறிந்து கொண்டிருக்கிறார்."

அமிதையின் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தை உய்த்தறிந்து "பட்டத்தரசி இன்று தன் மைந்தனை ஆதரிக்கவில்லை. இன்று அரசரின் எண்ணத்துக்கு அப்பால் ஒரு சொல்லும் அவளால் எண்ணமுடியாது" என்றாள் கீர்த்தி. விருஷ்டி "முன்னரே ஆணையிட்டபடி யாதவர் வந்து நம் இளவரசியை வென்று கொண்டு செல்வதே எஞ்சியுள்ள ஒரே வழியாகும். அவர்களுக்கு அச்செய்தி அளிக்கப்படட்டும்" என்றாள் . அமிதை தன்னிடம் என்ன கூறப்படுகிறது என்று புரியாமல் ஏறிட்டு நோக்கினாள். கீர்த்தி "இவள் இங்கு காதல் கொண்டு காத்திருப்பதை அவன் அறிய வேண்டாமா? இங்கிருந்து அங்கு செல்லும் அனைத்து சூதரும் தூதரும் தடை செய்யப்பட்டுவிட்டனர். இளவரசி எண்ணியிருப்பதை இவ்வரண்மனையின் வீரரும் அறியார். அவள் உள்ளம் அங்கு செல்ல வேண்டும், அவன் அறிய வேண்டும். தனக்கென நோற்றிருப்பவளை கொள்ள அவன் எழ வேண்டும்" என்றாள்.

அமிதை "அரசர் முறைப்படி ஒரு செய்தியை எழுதி அனுப்பலாமே?" என்றாள். வினாவுடன் இணைந்தே அதிலுள்ள பொருளின்மையை அறிந்து மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க விருஷ்டி "இளவரசி காதல் கொண்டுள்ளதும் யாதவர் தன்னை கவர்ந்து செல்ல அவள் விழைவதும் அரசர் அறிந்தே நிகழ வேண்டியவையல்ல. நானும் மூத்த அரசியரும் அதை எங்கள் உள்ளத்தாலும் எண்ணாலாகாது. அது உன்னால் நிகழ வேண்டும். நாங்களும் அறியாமல்" என்றாள் கீர்த்தி. "என்னாலா?" என்று அமிதை திகைப்புடன் கேட்டாள். கீர்த்தி "ஆம். இளவரசியின் வேண்டுதல் உரிய சொற்களால் அவனை சென்று சேரவேண்டும். இச்சேடி உன்னை பார்க்க வருவாள். ருக்மிணியின் சொல்கேட்டு ஓர் ஓலை எழுதி அவள் முத்திரையிட்டு இவளிடம் கொடு. அது பறவைத் தூதாக அவனை சென்றடையட்டும்" என்றாள்.

அமிதை தன் உடலில் கூடிய மெல்லிய நடுக்கத்துடன் நோக்கியிருந்தாள். "அஞ்ச வேண்டியதில்லை. இளவரசி இப்படி தூது அனுப்புவது என்பது முற்றிலும் ஒரு நூல்முறையே ஆகும்" என்றாள் விருஷ்டி. அமிதை "அரசி, இளவரசி இன்றிருக்கும் நிலையில் இவ்வண்ணம் முறைசார் திருமுகத்தை அவளால் எழுதமுடியும் என்று நான் எண்ணவில்லை. நான் ஒருத்தி மட்டுமே அவளுடன் இன்று உரையாடுகிறேன். ஆனால் என் சொற்கள் அவளை சென்றடையவில்லை. அவளிடமிருந்து ஒரு சொல்லும் என்னை வந்து சேருவதுமில்லை. அவளை உண்ணவைத்து உறங்க வைத்து பேணுவதன்றி அவள் உள்ளம் கொள்ளும் எவ்வுணர்வையும் அறியாதவளாகவே இருக்கிறேன்" என்றாள்.

"செவிலியர் கன்னியரின் கனிவடிவென்பார்கள். நீ அறியாத அவள் உள்ளம் உண்டா? அவள் சொல்லென சில எழுத இயலாதா உன்னால்?" என்றாள் கீர்த்தி. "நானா?" என்றாள் அமிதை. "ஆம், அவளுடைய முத்திரைக் கணையாழி அவ்வோலையில் பதிந்திருக்க வேண்டும். அவ்வோலை அவள் பெயரால் அனுப்பப்படுவதை அவள் அறிந்திருக்கவும் வேண்டும். சொற்களை நீயே அமைக்கலாம்" என்றாள் கீர்த்தி. ஏதோ சொல்வதற்காக அமிதை உதடை அசைக்க "இது அரசரின் ஆணை" என்றாள். "ஆணை" என்று அமிதை தலைவணங்கினாள்.

அவள் திரும்பும்போது பின்னால் மெல்லிய குரலில் "அமிதை" என அழைத்த கீர்த்தி "இளவரசி உடல்நிலை எவ்வண்ணம் உள்ளது?" என்றாள். "உடல்நிலையில் பிழையேதும் இல்லை. நாளுக்கு மூன்று முறை மருத்துவச்சியர் வந்து பார்க்கிறார்கள்." விழிகளை கூர்ந்து நோக்கியபடி "நன்று" என்று சொன்ன கீர்த்தி "மருத்துவர் பத்மரை வந்து பார்க்கும்படி ஆணையிட்டிருக்கிறேன். அவர் அந்தணர். அவருக்குத்தெரியும்" என்று மேலும் சொன்னபோது அவள் விழி சற்றே அசைவதை அமிதை கண்டாள். திடுக்கிட்டு விழிதூக்கியதுமே அதன் பொருளென்ன என்று உணர்ந்து கொண்டாள். "ஆணை" என மீண்டும் தலைவணங்கினாள்.

அரண்மனைக்கு வந்ததுமே அமிதை துவாரகைக்கான திருமுகத்தை எழுதலாமென கன்றுத்தோல் சுருளை எடுத்து பலகையில் நீட்டி வெண்கல முள் அறைந்து நிறுத்தி கடுக்காய் கலந்த கடுஞ்செந்நிற மையில் இறகுமுனையை முக்கி "நலம் சூழ்க!" என முதல் வரியை எழுதியபின் எழுதுவது என்ன என்று ஏங்கி சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். "பாரதவர்ஷம் அணிந்த நுதல்குறி என ஒளிரும் துவாரகை நகரை ஆளும் யாதவருக்கு" என்று எழுதியபின் அத்தோல்சுருளை கிழித்து எறிந்தாள். எழுந்து சாளரத்தினூடாக வரதாவை பார்த்தாள். மீண்டும் அமர்ந்து "என் உள்ளம் கொண்ட இளைய யாதவருக்கு" என்று எழுதி அதையும் கிழித்தாள். நிலை கொள்ளாது எழுந்து சென்று உப்பரிகையில் அமர்ந்து வரதாவை நோக்கிக் கொண்டிருந்த ருக்மிணியை அறியாமல் பார்த்தபடி நெடுநேரம் நின்றிருந்தாள். ஆற்றின் உச்சிநேரத்து ஒளி அவளின் கரிய கன்னங்களை பளபளக்கச் செய்தது. குழல் கற்றைகள் பொன்னூல் என சுழன்று நிற்க அவற்றின் நிழல் கன்னத்தின் மென்மை மீது அசைந்தது. மூச்சு அன்றி அவள்மேல் அசைவென்பதே இருக்கவில்லை.

நீள்மூச்சுடன் திரும்பி அமர்ந்து கன்றுத்தோல் மீது கைகளால் நெருடிக் கொண்டிருந்தாள். அங்கிருந்து விழிதூக்கி அவளை நோக்குகையில் ஒருகணம் உளஎழுச்சியால் தான் அங்கிருந்து அவ்வண்ணம் நோக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். உடல் விதிர்க்க நெஞ்சறியாது கையில் எழுந்து வந்த முதற்சொல்லை எழுதினாள். "நீலம்!" அதில் உடல் உயிர்த்துக் கொள்ள தான் என பெயர் என உடலென கொண்ட அனைத்தையும் களைந்து ருக்மிணியாக அமர்ந்து தன் நெஞ்சை எழுதினாள்.

'இங்கிருக்கிறேன்! இவ்வண்ணம் இப்புவியில் ஏன் எழுந்தேன் என்று அறிந்திருக்கிறேன். இனி நான்கொள்ள பிறிதொன்றுமில்லை. நான் விழைய விண்ணும் மண்ணும் இல்லை. சொல்லி அறிவிக்கும் உணர்வல்ல இது. எச்சொல்லிலும் அமராது சிறகடித்து விண்ணில் தவிப்பது. எங்குள்ளேன் என்று அறியேன். விதர்ப்பத்தில் என் அரண்மனையில் தனிமையில். எவ்வண்ணம் உள்ளேன் என்று அறியேன். உள்ளும் புறமும் இனித்திருக்கிறேன். இதற்கப்பால் நான் உரைக்கும் சொல் என்று ஏதுமில்லை.'

எழுதி முடித்ததும் சன்னதம் விலகிச் சென்ற பேய்மகளென உடல் தளர்ந்து பீடம் மீதே தலை வைத்தாள். தன்னிலை உணர்ந்தபோது தன் சுருங்கிய கன்னங்களின் மீது விழிநீர் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். ஏவரேனும் அறிந்தனரா என திகைத்து அறையை விழிசூழ்ந்து நோக்கிவிட்டு மேலாடையால் முகத்தை துடைத்தாள். அச்சொல்நிரையை பிறிதொருமுறை நோக்க அவள் உளம் கொள்ளவில்லை. அதை கையில் எடுத்தபடி சென்று ருக்மிணியின் பின்னால் நின்றாள். அவளிடம் இதை அளிப்பது எப்படி என்று திகைத்தாள். இச்சொல்லில் எழுந்த சூழ்ச்சி அனைத்தையும், அவளிடம் எப்படிச் சொல்லி புரிய வைக்க முடியும் என்று அறியாது நின்றாள்.

"இளையவளே, அமுதுண்ணும் நேரம்" என்றாள். "ஆம். இன்று இன்சுவையை நாடுகிறேன்" என்றபடி ருக்மிணி துள்ளி உணவறைக்குள் சென்றாள். தன் மூச்சுக்குள் மெல்ல முனகியபடி, ஆடை நுனியை விரல் சுற்றி அசைத்துக்கொண்டு, காற்றில் பறக்கும் திரைச் சீலையென வளைந்து சென்றாள். கையில் சுருட்டிய திருமுகத்துடன் அமிதை அவளை தொடர்ந்தாள். "இளவரசி" என்றாள். ருக்மிணி திரும்பியதும் மறுசொல் எடுக்க ஒண்ணாது நின்றாள்.

ருக்மிணி உணவுமேடைமுன் நிலத்தில் கால் மடித்து அமர்ந்தாள். உணவு பரிமாறுவதற்காக காத்திருந்த சேடியர் இன்னமுதையும் பழஅமுதையும் பாலமுதையும் அன்னத்தையும் அப்பங்களையும் அவள் முன் பரப்பினர். அவள் விழிகள் சிறுமகவுக்குரிய ஆவலுடன் ஒவ்வொரு உணவாக தொட்டுச் சென்றன. இரு கைகளையும் நீட்டி இன்னமுதை எடுத்தாள். "இளவரசி, என்ன செய்கிறீர்கள்? அன்னத்தை முதலில் உண்ணுங்கள்" என்றாள் அமிதை. "எனக்கு இன்னுணவு மட்டும் போதும்" என்றாள் ருக்மிணி. "இன்னுணவை பிறகு அருந்தலாம். முதலில் அன்னம் உண்ணுங்கள்" என்றாள் அமிதை. "இன்னுணவு அன்றி எதுவும் என் நாவுக்கு உவக்கவில்லை அன்னையே" என்றாள் ருக்மிணி.

அமிதை ஏதோ சொல்வதற்குள் சேடி "இன்னுணவையே முழுதுணவாக உண்ணுகிறார்கள். அதுவே போதுமென உரிய பாலையும் அன்னத்தையும் கலந்துள்ளோம்" என்றாள். "ஆம். அது எனக்கு போதும். இனிமேல் இனிப்பு அல்லாத உணவன்றி எதையும் நாக்கு உவக்காது." இன்னுணவுக் கலத்தை அருகிழுத்து பொற்கரண்டியால் அள்ளி உண்ணத் தொடங்கினாள். அமிதை அவள் உண்ணுவதை அருகிருந்து விழிபரிந்து நோக்கினாள். ஒளிவண்ணங்களை மட்டுமே விழைகிறாள். இசை மட்டுமே செவி நாடுகிறாள். இன்னுணவுச் சுவை மட்டுமே கொள்கிறாள். எங்கிருக்கிறாள்? இவளைச் சூழ்ந்துள்ள தெய்வங்கள்தான் எவை? ஒரு போதும் மண் வந்து மரம் அமராத விண் பறவை. முகில் மேல் கூடு கட்டுவது. ஒளியே சிறகென கொள்வது.

நீள்மூச்சு விட்டு அமிதை நெகிழ்ந்து அமர்ந்தாள். ஒவ்வொரு துளி இன்னுணவையும் உடலெங்கும் எழுந்த உவகையுடன் ருக்மிணி உண்டாள். சேடியர் நறுமண நீரால் அவள் கைகளை கழுவினர். எழுந்ததும் நறுமண தாலத்தை அவள் முன் நீட்டினர். ஒவ்வொன்றாக எடுத்து முகர்ந்தாள். கிராம்பையும் சுக்கையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி "அன்னையே, நம் அரண்மனை அறைகளெங்கும் மலர்மணமே நிறைந்துள்ளது. நேற்றிரவு எழுந்தது பாரிஜாதம். பின்னிரவில் இனிய தாழம்பூ. புலரியில் முல்லை. இரவெல்லாம் அந்த மணங்கள் இவ்வறைகளெங்கும் உலவின" என்றாள்.

ஒரு கணம் சேடியரை நோக்கி செல்லும்படி கைகாட்டிவிட்டு "ஆம். நம்மைச் சூழ மலர்த்தோட்டம் இருக்கிறதல்லவா?" என்றாள் அமிதை. ருக்மிணியை அந்தத் திருமுகத்தை நோக்கி எப்படி கொண்டு செல்வது என்று தெரியவில்லை. ருக்மிணி மீண்டும் உப்பரிகையை நோக்கி செல்ல "முகம் கழுவி வருக இளவரசி" என்றாள் அமிதை. "ஆம். என் கண்கள் களைத்துள்ளன" என்றபடி அவள் முகம்கழுவச் சென்றபோது அச்சுருளை உப்பரிகையில் அவள் அமர்ந்திருக்கும் பீடத்தருகே குறுமேடையில் வைத்து பறக்காமலிருக்க அதன் மேல் நீலமணி பதித்த கணையாழியை வைத்தபின் நெஞ்சு படபடக்க விலகி சாளரத்தருகே நின்றாள்.

நதியில் இருந்து வந்த காற்றில் சாளரத்தின் வெண்பட்டுத்திரை உலைந்தாடிக் கொண்டிருந்தது. முகம் கழுவி துடைத்து நெற்றிப்பொட்டு திருத்தி ருக்மிணி விரைந்தோடி வந்தாள். உப்பரிகையில் மறந்துவிட்ட எதையோ எடுக்க விழைபவள் போல, காத்திருக்கும் எவருக்கோ செய்தி சொல்ல வருபவள் போல. சிரித்த முகத்துடன் அவளை நோக்கி புன்னகைத்து ஏதோ சொல்ல வந்தபின் அச்சொல்லை கணமே இழந்து விழிதிருப்பி ஓடிச்சென்று பீடத்தில் அமர்ந்து ஆடையை செம்மை செய்த பின் வரதாவை நோக்கினாள். அவள் இயல்பாக நீட்டிய கையில் குறு மேடையில் இருந்த கணையாழி பட்டதும் திரும்பி அச்சுருளை நோக்கினாள். அது எதுவோ என ஆர்வமில்லாமல் விழி விலக்கி நதியை சற்று நோக்கிய பின்புதான் அவள் சித்தத்தில் அவ்வோலை பதிந்தது. திரும்பி அதை நோக்கிய பின்பு கையில் எடுத்து விழியோட்டினாள்.

அங்கிருந்து விலகி ஓடிவிட வேண்டும் என்று அமிதை எண்ணினாள். வியர்த்த இரு கரங்களை ஒன்றுடன் ஒன்று பற்றிக் கொண்டு கழுத்துத் தசைகள் இறுக பற்களை கிட்டித்து காத்திருந்தாள். சொற்களில் ஓடிச்சென்ற ருக்மிணியின் கண்களில் தெரிந்த வியப்பை, பின் எழுந்த பதற்றத்தை கண்டவள் ஏதேனும் சொல் உரைக்க எண்ணி உன்னி உளம் ஒழிந்து கிடக்க வெறுமனே "மகளே" என்றாள். முகம் மலரே "அன்னையே" என்று கூவியபடி அவளை நோக்கி ஓடிவந்த ருக்மிணி "இதை நான் எழுதியதையே மறந்து விட்டேன்" என்றாள். "நூறு நூறு முறை என் நெஞ்சில் எழுதிய சொற்கள் இவை. எப்போது திருமுகத்தில் பதித்தேன் என்று அறியேன். இச்சொற்களுக்கு அப்பால் என் உளம் என ஏதுமில்லை. ஒரு மணி குன்றாது கூடாது நான் என அமைந்த இவ்வோலையை என் உளம் கொண்ட துவாரகை அரசருக்கு அனுப்புங்கள், இக்கணமே அனுப்புங்கள்" என்றாள். விம்மியழுதபடி அவளை அணைத்துக் கொண்டாள் அமிதை.

பகுதி பத்து : கதிர்முகம் - 4

துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை நடித்து, விழித்தெழுகையில் குனிந்து முகம் நோக்கி எப்போதும் உடனிருந்தது அந்த எதிர்பார்ப்பு. அமிதை படியிறங்குகையில், இடைநாழியில் நடக்கையில், அடுமனைகளில் ஆணையிடுகையில் ஒவ்வொரு கணமும் அதை தன்னுடன் உணர்ந்தாள்.

எப்படி இளைய யாதவரின் செய்தி தன்னை வந்தடையப்போகிறது என்று அவள் எத்தனை எண்ணியும் உய்த்துணர முடியவில்லை. அரண்மனை முழுக்க ருக்மியின் படைவீரர்களும் சேடியரும் ஏவலரும் நிறைந்திருந்தனர். வாயிலில் மூன்றடுக்கு காவலிருந்தது. அரசியர் மாளிகைகளும் அவர்களின் சேடியரும் உளவறியப்பட்டனர். பறவைத்தூது அணைவதென்பது எண்ணியும் பார்க்கமுடியாது எனினும் செய்தி வருமென்றே அமிதை எண்ணினாள்.

சூதர் சொல்லில் வாழும் மாயனை அவள் நெஞ்சம் நூறாயிரம் சித்திரங்களென விரித்தெடுத்திருந்தது. நறுமணம் சென்று சேரும் இடமெல்லாம் தானும் சென்று சேரும் தடையற்றவன் என்று அவனை பாடினர் சூதர். விழைவு கொண்டு நீண்ட கைகளில் சிறகடித்து அமரும் வண்ணத்துப்பூச்சி என்றனர். காற்றுக்கு தடையுண்டு வானுக்கு தடையுள்ள இடமொன்றில்லை என்றனர். எனவே அவன் அணுகுவான் என்று உறுதிகொண்டிருந்தாள். ஒவ்வொரு காலடியோசைக்கும் ஒவ்வொரு இறகுஅசைவுக் காற்றுக்கும் ஒவ்வொரு உலோக ஒலிக்கும் இதோ என துணுக்குற்றது உள்ளம்.

விருஷ்டியும் கீர்த்தியும் வகுத்தளித்த நெறிப்படி அவள் செய்தி அனுப்பியிருந்தாள். அவள் எழுதிய மந்தணத் தோல் சுருளை பறவைக்காலில் கட்டி பறக்கவிட்டாள். அதற்கு முன்பு ருக்மிணியைப் பார்க்க வந்த முதிய பிராமண மருத்துவர் அச்சுருளை சொல் ஊன்றி ஏழுமுறை படித்தார். பின் விழிமூடி தனக்குள் சொல்லிக் கொண்டார். சொல்லற்ற விழிகளுடன் அவளை நோக்கி தலைவணங்கி கிளம்பிச்சென்றார். ஓலைச்சுருளுடன் சென்ற கழுகு வாயிலிலேயே ருக்மியின் வீரர்களால் பிடிக்கப்படுமென அமிதை அறிந்திருந்தாள். அச்செய்தி பிடிக்கப்பட்டதனாலேயே பின் ஒரு செய்தி தொடருமென்று ருக்மி உய்த்திருக்கவில்லை.

ஒவ்வொரு நுண்ணிய அரசுசூழ்தலுக்கும் நிகரான பிறிதொரு அரசு சூழ்தலை எளிதில் மானுட உள்ளங்கள் உண்டாக்கிவிடுவதை எண்ணி அவள் வியந்தாள். நன்கறிந்த ஒருவரை ஒருபோதும் அரசு சூழ்தலில் வெல்ல முடியாது. அவன் செய்யக்கூடுவதென்ன என்பதை அணுக்கமானவர் எளிதில் உய்த்துவிடலாம். ருக்மியை சிற்றரசியர் தங்கள் தோள்களில் தூக்கி வளர்த்திருந்தனர். அவன் விழி ஓடும் திசையை உய்த்து முன்னரே பந்து வீசி விளையாடி வந்திருந்த அவர்களுக்கு அவன் உள்ளம் செல்லும் திசை தெரிந்திருந்தது.

ருக்மிணியின் முத்திரைச் சாத்துடன் சென்றிருந்தது அவ்வோலை. அவள் நெஞ்சம் துளித்த கண்ணீர். ஆனால் அமிதை அடைந்த எவ்வுணர்வையும் அவள் அடைந்திருக்கவில்லை. அச்செய்தி அனுப்பப்பட்டதையே அவள் மறந்துவிட்டிருந்தாள். அமிதை ஒருமுறை “இளைய யாதவரிடமிருந்து எச்செய்தியும் இல்லையே இளவரசி” என்றாள். வியந்து விழிவிரித்து “என்ன செய்தி?” என்றாள் ருக்மிணி. சற்றே சினம் எழ “தங்கள் உளம் அவர்மேல் எழுந்துள்ளதை எழுதி அனுப்பியிருந்தோம், மறந்துவிட்டீர்கள் போலும்...” என்றாள். “ஆம், எழுதி அனுப்பினேன், நினைவுள்ளது” என்றாள் ருக்மிணி.

அந்தக் குரலிலிருந்த இயல்புத் தன்மை மேலும் சினமுறச்செய்ய “அவர் தங்களை ஏற்கிறாரா என்பதை இன்னும் அறிய முடியவில்லையே?” என்றாள் அமிதை. ”என்ன?” என்றாள் ருக்மிணி. “தங்களை அவர் மறுக்கவும் வாய்ப்புள்ளது. தங்கள் கைகொள்வது என்பது மகதத்துடன் போர் அறிவித்தலேதான்” என்றாள் அமிதை. அச்சொற்களை சொல்லும்போதே அச்செய்தியின் கசப்பால் அவள் முகம் சுருங்கியது. ஆனால் ருக்மிணி “ஏற்கவில்லை என்றால்தான் என்ன?” என்றாள். “அவர் ஏற்பும் மறுப்புமா என் நெஞ்சை பகுப்பது? நான் இங்கிருக்கிறேன், அவர் நெஞ்சு அமர்ந்த திருமகளென. ஏற்பிலும் மறுப்பிலுமா வகுக்கப்படுகிறது என் இடம்?” அவள் சொல்வதென்ன என்று அமிதையின் உள்ளம் அறிந்தது. இங்கிருப்பதும் முடிசூடி துவாரகை மன்றில் அமர்ந்திருப்பதும் அவளுக்கு நிகரே எனில் அவன் சொல்லால் அவளுக்கு ஆவது ஒன்றில்லை என்பதே உண்மை.

அப்படியென்றால் இவை அனைத்தும் தான் கொண்ட துடிப்பின் விளைவே. இத்துயர் தன்னுடையது மட்டுமே. ஆம் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். விழைவது நான். என் மகள் அரசியாக வேண்டுமென்று. அவள் காதல் கனியென்றாவது என் நிறைவுக்கே. என் கையில் பூத்த மலரை ஒழுகும் பேரியாற்றில் மெல்ல இறக்கிவிடவே உள்ளம் எழுகிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து மெல்ல சிற்றடி வைத்து நடந்து மஞ்சத்தறை கதவை விலக்கி மலர்ச்சேக்கையில் நீள்விழி மூடி, வளைந்த கொடியென கிடக்கும் ருக்மிணியின் கரிய ஒளியுடன் திகழ்ந்த முகத்தை நோக்கி நெடுமூச்சு விடுவாள். முதல் திருமகள், அன்னம் என்றாகி வந்த மூலத்திருமகள் அவளென்றனர் நிமித்திகர். அவள் கையை அன்றி பிறிதை அவன் கொள்ள இயலாது. அவன் சொல் வரும், வாராதிருக்காது என்று தன் நெஞ்சடக்கி திரும்புவாள். நான்கடி எடுத்து வைத்து இடைநாழியை அடையும்போது அந்நம்பிக்கை தேய்ந்து மீண்டும் நெஞ்சு ஏங்கி தவிக்கத் தொடங்கும்.

எட்டாம் நாள் துவாரகையின் செய்தி வந்தது, ஒருபோதும் அவள் எண்ணியிருக்காத வகையில். ருக்மியின் அவையில் தென்னாட்டுப் பாணனொருவன் இசை மன்றில் அமர்ந்தான். அரசரும் அரசியும் சிற்றரசியரும் அமர்ந்த அந்த அவைக்கு ருக்மிணியுடன் அமிதையும் சென்று இளவரசியின் பீடத்தருகே அமர்ந்தாள். கரிய பெரிய விழிகளும் செறிந்த நீண்ட தாடியும் வெண்ணிற தலைப்பாகைமேல் வெண்பனிபோல் அன்னமயில் இறகும் சூடிய இளம்பாணன் தன் இரு விறலியரையும் அருகமர்த்தி மடியில் மகர யாழை வைத்து நீண்ட விரல்களின் நுனியில் அமைந்த சிப்பி நகங்களால் மீட்டி ஆழ்ந்த முழவுக்குரலில் தென்னாட்டுக் கதையொன்றை பாடினான்.

மூதூர் மதுரை அருகே ஆயர் குடியொன்றில் பிறந்த அழகி, அவளுக்கென அங்கொரு மாயன் பிறந்ததை அறிந்து மையல் கொள்ளும் கதை. அவள் பெயர் நப்பின்னை. அவள் உள்ளம் கவர்ந்தவன் ஆழி நீலவண்ணன். வேய்ங்குழல் கொண்டு காட்டை மயக்கும் கள்வன். அக்கதையை தன் தொல் மொழியில் அணிச்சொற்கள்கூட்டி பண்முயங்க அவன் பாடினான். அவையில் அரசகுடியினரும் அமிதையும் அமைச்சருமே அம்மொழியை அறிந்திருந்தனர். எட்டு நாள் காத்திருந்து பிறிதொன்றிலும் நெஞ்சமையாது விழி அலைய செவிகூராது அமர்ந்திருந்த அமிதை பாடலின் ஓரிரு வரிகள் கடந்த பின்னரே அது எவருக்கென பாடப்படுவது என அறிந்தாள். பாடுபவனும் அதன் பொருளை அறிந்திருக்கவில்லை.

முதல் பன்னிரு வரிகளுக்குபின் வந்த ஆறு வரிப்பாடல் அவன் பாடுவதை பொருள் கொள்ளும் முறையென்ன என்று உரைத்தது. ஒன்று தொட்டு நான்கெடுத்து ஆறு வைத்து கூட்டுக எனச்செல்லும் அது மயில் நடன சொல்லடுக்கு முறை என அவள் கற்றிருந்தாள். கேட்டிருந்தவர் எவருமறியாத பொருளை அவளுக்கு மட்டும் அளித்தது அது. ருக்மி அப்பாடலை தன் கூரிய விழிகளை நாட்டி இடக்கையால் மீசை நுனியை முறுக்கியபடி கேட்டிருந்தான். அவன் அமைச்சர்களும் அதன் ஒவ்வொரு சொல்லையும் செவி கூர்ந்து மீண்டனர். நிகழ்வதென்ன என்று அறியாது பீஷ்மகர் இளமது மயக்கில் அரைக்கண் மூடி அமர்ந்திருக்க அரசி இறுகிய முகத்துடன் எவரையும் நோக்காமலிருந்தாள்.

ஐயமும் ஆவலும் தயக்கமுமாக அமிதையை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றன சிற்றரசியரின் விழிகள். தன்னுள்ளம் அடைந்த கிளர்ச்சியை மறைப்பதற்கு அதுவரை அடைந்த அரசுசூழ்தல் கல்வி அனைத்தையும் பயன்படுத்தினாள் அமிதை. யாழ் தேரும் பாணனின் விரல்களை மட்டும் நோக்கி விழிநாட்டி உதடுகளை ஒன்றோடொன்று இறுக்கி அசைவற்று அமர்ந்திருந்தாள். கூடுகட்டும் குருவியின் உளஒருமையுடன் அவன் பாடும் சொல்லில் இருந்து உரிய சொற்களைத் தேர்ந்து செய்தியை பின்னிக் கொண்டிருந்தாள்.

பாடி முடித்து பாணன் இருகைகளையும் தூக்கி வணங்கியபோது அவை ஆரவரித்தது. தென்னாட்டிலிருந்து துவாரகைக்குச் சென்று மீண்ட தன் ஆசிரியனை அவன் வாழ்த்தினான். சரடறுந்து நிலையழிந்தவள் போல உடலசைய சித்தம் விடுபட்டு அதுவரை கேட்ட செய்திகளை மீண்டுமொருமுறை தன் உள்ளூர ஓட்டினாள். திருமகளின் கைகொள்ள இளையவன் உளம்கொண்டிருந்தான். அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் முன்னரே கோடிமுறை தன் செவிகள் கேட்டதுதான் என்றான். ஆடி மாதத்து இறுதிப் பெருக்கு நாளில் கொற்றவை ஆலயத்தின் ஆயிரம்குட நன்னீராட்டு விழவில் ருக்மிணி வழிபட வரும்போது அவளைக் கவர்ந்து கொள்வதாக திட்டம் வகுத்திருந்தான்.

பெரு விழவிலா என்று அமிதை திகைத்தாள். மறுகணம் பெருவிழவிலன்றி வேறெங்ஙனம் அது நிகழும் என எண்ணி புன்னகை புரிந்தாள். எங்கும் தான் மட்டுமே என்று தெரிபவன் எத்திரளிலும் பிறிதின்றி கலக்கவும் கற்றிருப்பான். அவன் தோணி கரையணைய உகந்த இடம் கொற்றவை ஆலயத்திற்கருகே வரதா வளைந்து செல்லும் சுழியே. அங்கு அணைவதும் விலகுவதும் ஒற்றை நீர்வளைவிலென நிகழமுடியும். சுழி தாண்டத்தெரிந்த படகை எளிய காவல்படகினர் எளிதில் பின்தொடர முடியாது. மேலும் அவன் அதை அவ்விழவுக்கென வந்து நகர்நிறைந்திருக்கும் மகதத்தின் சிற்றரரசர் பார்வையில் நிகழ்த்த விரும்புகிறான். அவர்களை வென்று அவளைக் கொண்டால் அவன் புகழ் ஓங்கும். அதில் சூதென ஏதுமில்லை என்பது உறுதியாகி பீஷ்மகருக்கு பழியும் நிகழாதொழியும்.

அதை ருக்மிணியிடம் சொல்லவேண்டியதில்லை என அவள் முடிவு செய்தாள். திருமகள் ஆழிவண்ணன் மார்பில் எப்போதுமென இருப்பவள். அவள் அங்கிருந்து விலகுவதுமில்லை மீள்வதுமில்லை. அவளை அவையமர்ந்து நோக்கியிருக்கையில் அழகென்பதன்றி இறையெழுந்தருளும் வழியொன்று உண்டா இப்புடவியில் என அவள் எண்ணிக்கொண்டாள். விழியறியும் அழகெல்லாம் அவளே என்று நூல்கள் சொல்கின்றன. அவ்வண்ணமெனில் அவளை நெஞ்சிலோ முடியிலோ விழியிலோ சூடாத தெய்வமென ஒன்று இருக்கமுடியுமா?

மன்று முடிந்து விறலியருக்கு அரசியும் பாணனுக்கு அரசரும் பரிசில் அளித்தனர். ருக்மிணி அரசமேடை ஏறிச்சென்று அரசியை வணங்க அவள் தலைவகிடில் கைவைத்து வாழ்த்தினாள். அவள் விழிகளை சந்தித்து இவள் எவள் என வியந்தவள் போல அரசியின் நோக்கு வந்து அமிதையை உசாவியது. அமிதை புன்னகைத்தாள். மங்கலப்பேரிசையும் வாழ்த்துகளும் செவியழித்து சூழ பீஷ்மகரின் விழி வந்து அமிதையை தொட்டது. அமிதை இதழ்களை மட்டும் அசைத்து ‘செய்தி வந்துவிட்டது’ என்றாள். ஒரே கணத்தில் அரசியர் மூவர் விழிகளும் வருடப்பட்ட யாழின் தந்திகள் என அதிர்ந்து அதை பெற்றுக் கொண்டன.

அரசர் “என்று?” என்றார். அமிதை “ஆடி நிறைவில்” என்றாள். அதற்குள் அருகணைந்த அமைச்சர் “இளவரசியின் உடல் நலம் எங்ஙனமுள்ளது?” என்று உதடுகள் சொல்ல விழிகூர்ந்து அவள் உதடுகளை நோக்கினார். அதில் துவாரகைக்குத் தூதுபோன மருத்துவர் பற்றிய குறிப்பை தொட்டறிந்த அமிதை “ஆவணி இறுதிவரை அவள் உள்ளம் நிலைக்காது என்றனர் மருத்துவர்” என்றாள். நகைத்தபடி “கன்னியர் உள்ளம் கனவைக் கடக்கும் முறையென்ன எனறு நாமும் அறிவோம்” என்றார் அமைச்சர். அமிதை தலை வணங்கினாள்.

ருக்மி அருகே வந்து பீஷ்மகரிடம் “சேதி நாட்டரசரின் மூன்றாவது தூது வந்துள்ளது தந்தையே. மணநிகழ்வுக்கு எப்போது நாள் குறிக்கப்படும் என்று கேட்டிருக்கிறார்” என்றான். பீஷ்மகர் “இதில் நான் என்ன சொல்வது? என் சொற்கள் அரியணை அமர்வதில்லை” என்றார். ருக்மி “ஆவணி நான்காம் நாளில் நாள்குறிக்கிறேன் என்று செய்தியனுப்பியுள்ளேன். அரச மணநிகழ்வுக்கு உகந்த மாதம் ஆவணி. திருவோண நாள் பன்னிரு பொருத்தங்களும் அமைந்தது என்றனர் நிமித்திகர்” என்றான். “நாளை நானும் அமைச்சர்களும் முறைப்படி தங்கள் அரண்மனைக்கு வந்து மொழி கேட்கிறோம். தங்கள் ஆணையுடன் செய்தியை சேதி நாட்டரசருக்கு அனுப்புகிறேன்.”

பீஷ்மகர் சினத்துடன் அவனை நோக்கி பின் தோள்களை தளர்த்தி “என் மகள் விழையாத எதையும் செய்ய என் சொல் ஒப்பாது” என்றார். ருக்மியின் உள்ளத்தில் இருந்த மெல்லிய ஐயத்தை அவரது அச்சினம் இல்லாமலாக்கியது. அவன் புன்னகைத்து “தந்தையே, இறுதியில் தங்கள் ஒப்புதல் வருமென்று நானறிவேன். தங்கள் அரண்மனைக்கு வந்து அதற்கான அரசுசூழ் முறைகளை நானே விளக்குகிறேன்” என்றான். அந்த உரையாடல் முழுக்க தான் கேட்பதற்காக நிகழ்வதென உணர்ந்த அமிதை முகத்தில் எவ்வுணர்வும் இன்றி தலைவணங்கி புறம் காட்டாது விலகி அரச மேடையிலிருந்து வெளிவந்தாள்.

விறலியருக்கு பரிசளித்து முகமன்சொல்லி நின்றிருந்த ருக்மிணியின் மேலாடை நுனியைப்பற்றி அமிதை “இரவேறிவிட்டது, மகளிர்மாடத்துக்கு மீள்வோம் இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி “ஆம்” என்றாள். ”எத்தனை இனிய பாடல்!” என்றாள். “எங்கோ ஒருத்தி மையல் கொள்கிறாள். அம்மையல் சிறகு விரித்து தன் மலர்க்கிளையை தேடிச்சென்று அமைகிறது. அன்னையே, விழைவு நீர்போன்றது, தனக்குரிய பாதையை கண்டடையும் விழிகள் கொண்டது என்று ஒரு வரி வந்தது, கேட்டீர்களா?” அமிதை “ஆம்” என்று சொல்லி “வருக” என்றாள்.

இளங்காற்றில் கொடியென கைகள் துவள நடந்தபடி ருக்மிணி தன் கனவில் ஆழ்ந்து பின் நீள்மூச்சுவிட்டு திரும்பி “அன்னையே, அவள் பெயர் நப்பின்னை” என்றாள். “இனிய பெயர்” என்றாள் அமிதை. “அது என் பெயர் என்றே ஒலிக்கிறது” என்றாள் ருக்மிணி. “எங்கோ இருக்கும் அவள் எனக்கு மிக அண்மையானவள் என்று தோன்றுகிறது.” அமிதை “அவ்வாறு ஒருத்தி இருக்க வாய்ப்பில்லை இளவரசி. அது சூதர்களின் கனவில் எழுந்த பெயர் என்றே எண்ணுகிறேன். இக்கதைகள் ஒருகதையின் பலநூறு வடிவங்கள் மட்டுமே. பஞ்சு சூடிய விதைகள் என பாரதவர்ஷமெங்கும் இவை பறந்தலைகின்றன. ஈரமண்ணில் பதிந்து முளைக்கின்றன” என்றாள். “கற்பனை என்றாலும் இனியது” என்றாள் ருக்மிணி.

ஆடிமுழுமைக்கு மேலும் பன்னிரு நாட்கள் இருந்தன. நூறுமுறை மாறி மாறி எண்ணிக் கணக்கிட்டாலும் நாட்கள் குறையாமலேயே இருக்கும் இரக்கமற்ற காலநெறியை எண்ணி சினந்தது அவள் உள்ளம். ஆயிரம் மாயம் செய்பவன் இந்நாட்களை ஒவ்வொன்றாகத் தொட்டு நீர்க்குமிழியென உடையச் செய்தாலென்ன? இருட்டி விடிகையில் ஆடிமுடிந்த அந்நாள் அணைந்து தன் விரைவுப் படகுடன் குழல்சூடிய நீலம் சிரிக்க வந்து நின்றாலென்ன? இதோ என் மகளை கொண்டு செல்கிறான். என் மடியமர்த்தி நான் கொஞ்சிய கருஞ்சாந்துச் சிற்றுடலை, விழிசிரிக்க பல்முத்துக்கள் ஒளிர என்னோடு கைவீசி ஆடிய சிறுமியை, கிளிக்கொஞ்சல் என்ற மொழிகொண்டு என்னைச் சூழ்ந்த பேதையை, சிற்றாடை கட்டி என்முன் நாணிய பெதும்பையை, உடல் பூத்த முலைகள் ஒசிய வளைந்த இடையுடன் நான் கண்டு கண் நெகிழ்ந்த கன்னியை. என் இல்லத்து பொற்குவை களவு போகிறது. என் கருவூலம் காற்று நிறைந்ததாகப்போகிறது.

ஆனாலும் நிறைந்துள்ளது நெஞ்சு. இங்கு நானிருக்கமாட்டேன். செல்லும் அவள் சிற்றடிகளைத்தொடர்ந்து செல்லும் அவள் நிழல் நான். உயிர் சென்றபின் இங்கு எஞ்சுவது நான் மறைந்த வெற்றுடல். அங்கு சென்று அவள் மலரும்போது சூழ்ந்து மலர்வது என் அகம் நிறைந்த கனவு. மீண்டும் மீண்டும் ஓசையில்லா காலடிகளுடன் சென்று உப்பரிகையில் அமர்ந்து வரதாவை நோக்கும் ருக்மிணியை மறைந்து நின்று பார்த்தாள். ஒவ்வொரு கணமுமென ஒளி கொள்கிறதா இவள் உடல்? கருமுத்து. காலை ஒளிபட்ட நீலம். நீர்த்துளி தங்கிய குவளை. உடலே ஒரு ஒளிர் கருவிழியென்றாகி அந்த உப்பரிகையில் இமையா நோக்கென்று இருந்தாள்.

இத்தனை பூத்திருக்க இவள் கொண்ட காதல் எத்தனை பெரியது! அதை தன் நெஞ்சமலரெனக் கொள்ளும் அவன் எத்தனை இனியவன்! இப்புவியில் அவ்விண்ணில் அவன் கொண்ட பேறுக்கு நிகரென பிறிதொன்றுண்டா? இவளை தொட்டுத் தழுவி என் நெஞ்சில் பூக்கவைக்கும் பெரும்பேறுகொண்ட நான் அவனுக்கு நிகர். அவன் வந்து என் அருகே நின்று இவள் கைகொள்ள கோருவான். அப்போது ஒரு கணம் அவனுக்குமேல் ஒரு நிழல்மரமென கிளைவிரிப்பேன். வாழ்த்தி மலருதிர்ப்பேன்.

கருவூல அறை திறந்து அவள் அணிகளை தந்தப் பேழையிலிருந்து எடுத்துப் பரப்பி ஒவ்வொன்றாக நோக்கி நெடுமூச்செறிந்து ஏற்றும் விலக்கியும் தன்னுடனாடிக்கொண்டிருந்தாள் அமிதை. இதில் அவள் சூடிச்செல்லவேண்டிய அணி எது? இத்தனை அணிகளையும் அணிந்து சென்றாலும் அவள் செல்லுமிடத்தின் செல்வச் சிறப்புக்கு நிகராகுமா? பெண் கவர்ந்து செல்பவன் பொன் கொண்டு செல்லலாகாது என்று நெறியுள்ளது. மகள்செல்வம் பெற அவன் முறையுடையவனல்ல. ஆயினும் வெற்றுடலுடன் செல்லக் கூடுமோ என் மகள்? கையறிந்த நாள் முதல் அவள் உடலில் அள்ளி நானிட்ட அணிகள் அனைத்தும் தொடரவேண்டாமா அவளை?

ஆனால் கொற்றவை ஆலயத்திற்கு வழிபடச் செல்கையில் மண நாளின் முழுதணிக்கோலம் உகந்ததல்ல. செம்மணியாரங்கள் செஞ்சுடர்த் தோடுகள் பவளநிரை நெற்றிமணிகள் என சிலவே வகுக்கப்பட்டுள்ளன. எவரும் ஐயம்கொள்ளலாகாது என்று எண்ணியதுமே அச்சம்கொண்டு வயிறு அதிர்ந்தது. என்ன நிகழுமென்று அவள் அறியக்கூடவில்லை. போர் நிகழ்ந்தால் படையின்றி வரும் யாதவன் என்ன செய்வான்? எது நிகழ்கினும் என் மகள் இங்கிருந்து செல்கையில் அவள் உடலெங்கும் நிறைந்திருக்க வேண்டும் அன்னை தொட்டளிக்கும் வாழ்த்து. இளவரசியென அவள் எழுந்தருள வேண்டும். அங்கே மணிமுடி சூடும் பேரரசியென அமர்ந்திருக்க வேண்டும்.

வாசலை நிறைத்து இரவென கருமை காட்டி மறையும் யானையென இருண்டு வெளுத்து இருண்டு ஒவ்வொரு நாளாக சென்று மறைந்தன. வரதா செம்பெருக்காக எழுந்து இறுதிப்படி கடந்து நகர்ச் சதுக்க முனை வரை வந்து அலையடித்துத் தளும்பி அலைவடிவு காட்டி பின் வடிந்து அன்னை அடிவயிறென சேற்றுவரிகளை மிச்சம் வைத்து சுருங்கியது. அவ்வருடம் பதினான்கு சேற்றுவரிகள் அமைந்தன என்றனர் வேளிர்குடி மூத்தோர். கழனி பொன்னாகிவிட்டது, இனி கதிரெழுந்து பொன்பொலியும் என்று கணித்தனர் கணியர். அவ்வுவகையை கொண்டாட வேளிர்குடியின் பதினெட்டு மூத்தார் ஆலயங்களில் அக்கார அடிசிலும் கரும்பும் மஞ்சளும் கொண்டு அன்னக்கொடை கொடுத்து மலராட்டு செய்தனர்.

வரதாவின் நீரின் சேற்றுமணம் குறைந்து செம்பளிங்கு என நீர் தெளிந்தது. அதன் கரைச்சேறு உலர்ந்து செம்பட்டு போல நெளிநெளியாகி பின் மூதாய்ச்சியின் முகச்சுருக்கமென வெடித்தது. அதில் சிறு பறவைகளின் கால்களெழுதிய சித்திரங்கள் கல்வெட்டுகளென எஞ்சின. வரதாவின் ஆழங்களில் பல கோடி மீன்முட்டைகள் விரிந்தன. வெள்ளித் துருவல்களென இளமீன்கள் எழுந்து வெயில் நாடி வந்து நீரலையின் பரப்பின்மேல் நெளிந்தன. படகில் சென்று குனிந்து விண்மீன் செறிந்து பெருகிய வானமெனத் தெரிந்த நீர்ப்பரப்பைப் பார்த்து “இவ்வாண்டு நம் வலைகிழிய மீன்செழிக்கும். நம் இல்லங்களில் வெள்ளி நிறையும்” என்று கூவினர் முதிய குகர்.

வரதாவின் இரு கரைகளிலும் அமைந்த மச்சர்களின் சிறு குடில்கள் அனைத்திலும் இரவில் பந்தங்கள் ஏற்றி மீனூன் கலந்த பெருஞ்சோறு பயந்து மூதாதையரை வழிபட்டனர். சிறுதுடி மீட்டி குலப்பாடல் பாடி இரவெல்லாம் நடனமிட்டனர். காட்டுக் கருங்குரங்கின் ஒலிகள் போல இரவெல்லாம் அவர்களின் குறுமுழவுகளின் ஒலி நகரைச்சூழ்ந்த்து. இருளில் வரதாவிலிருந்து வந்த மெல்லிய ஆவிக்காற்றில் மீன்முட்டைகள் விழிதிறக்கும் வறுத்த உளுந்து மணம் கலந்திருந்தது.

மழையினால் ஈரமூறி பொலிவிழந்த மரச்சுவர்களின் இணைப்புகளை பூசி செப்பனிட்டனர். பாசிபடிந்த சுவர்களை செதுக்கி வெண்பிசின் பூசி முட்டையோடென பளிங்கென ஆக்கினர். மரச்சட்டங்களில் தேன்மெழுகும் அரக்கும் கலந்த சாந்து பூசப்பட்டது. தரைப்பலகைகளில் மெழுகும் சுண்ணத்தரைகளில் அரக்கும் சுண்ணமும் கலந்த மெழுகுச்சாந்தும் பூசப்பட்டன. அரண்மனையின் ஊதல் காற்றில் நனைந்து கிழிந்த திரைச்சீலைகள் அனைத்தும் புதுப்பட்டாக மாற்றப்பட்டன. மழைப்பிசிர் படிந்து ஊறித் தளர்ந்த முரசுத் தோல்களை நீக்கி புதுத்தோல் கட்டி இறுக்கி இழுத்து சுதி சேர்த்தனர்.

நகரத்து இல்லங்களனைத்தும் நீராடி புத்தாடை மாற்றி அணி புனைந்து வருவது போல பொலிவு கொண்டன. தெருக்களில் வரதாவின் வளைந்த கரையிலிருந்து அள்ளிவரப்பட்ட வெண்மணல் விரிக்கப்பட்டது. தூண்களும் மாடங்களும் செஞ்சாந்து கலந்த அரக்கு பூசப்பட்டு வண்ணம் கொண்டன. கதவுகளின் வெண்கலக்குமிழ்கள் நெல்லிக்காய்ச்சாறும் மென்மணலுமிட்டு துலக்கப்பட்டு பொன்னாயின.

அரண்மனையை அணி செய்ய மலைகளிலிருந்து ஈச்ச ஓலைகளையும் குருத்தோலைகளையும் சிறுதோணிகள் வழியாக கொண்டு வந்து அடுக்கினர். தாமரையும் அல்லியும் குவளையும் என குளிர்மலர்களை தண்டோடு கொண்டுவந்து மரத்தோணிகளில் பெருக்கிவைத்த நீரில் இட்டு வைத்தனர். பாரிஜாதமும் முல்லையும் தெச்சியும் அரளியும் செண்பகமும் என மலர்கள் வந்துகொண்டே இருந்தன. கூடியமர்ந்து எழுந்தமரும் சிறுகுருவிகள் போல் கைகள் நடனமிட மலர் தொடுக்கத் தொடங்கினர் சேடியர்.

ஆடி நிறைவு விதர்ப்பத்தின் ஏழு பெருங்குலங்களை ஆளும் ஒன்பது அன்னையரின் பெருநாள். சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என ஒன்பது துர்க்கையரும் முழுதணிக்கோலம் கொண்டு குருதியும் அன்னமும் என பலி பெற்று அருளும் நன்னாள்.

அரண்மனையின் நீள் கூடம் வழியாக ஒவ்வொரு மூலையும் மறு நாள் விழவுக்கென விழித்தெழுந்து விரைவு கொள்வதைப்பார்த்தபடி அமிதை நடந்தாள். உடலெங்கும் ஒரு நூறு துடி முழங்கியது போல தோன்றியது. கால்கள் பறந்தன. நிலை தவறி விழுந்துவிடுவோமென உடல் பதைத்தது. அவையில் இரு முறை அவள் விழிகளை தொட்ட சிற்றரசியர் சிறிய அசைவால் என்ன என வினவினர். அவள் ஆம் என்று மட்டும் விழியசைத்தாள். அனைத்திற்கும் அப்பால் யாதொன்றும் அறிந்திலாதவள் போல் வரதாவை நோக்கி ருக்மிணி அமர்ந்திருந்தாள்.

பகுதி பத்து : கதிர்முகம் - 5

அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது அந்த நாளின் காலை என்றுணர்ந்தாள். குருதியின் வாசம் எழும் இருண்ட முன் புலரி.

இந்நாள் இந்நாள் என்று அவள் நெஞ்சம் ஒலித்தது. 'வான்வாழும் அன்னையர, எனையாளும் தெய்வங்களே' என்றுரைத்தபடி மார்பின்மீது கைகளை வைத்து விரல்கூப்பி வணங்கினாள். கண்களிலிருந்து வழிந்து காதுகளில் நிறைந்த வெய்ய நீரை உணர்ந்தாள். ‘ஏன் இவ்விழிநீர்? இன்று என் இளையோள் மங்கலம் கொள்ளும் நன்னாள் அல்லவா?’ என்று தனக்குள் என சொல்லிக் கொண்டாள். மேலாடை நுனியெடுத்து துடைத்தபடி இடக்கை ஊன்றி எழுந்தபோது தன் உடல் எடை கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

எழுந்து நின்றபோது படகு என சேக்கையறை சுவர்களுடன் தரையுடன் மெல்ல ஆடியது. கை நீட்டி தூணை பற்றிக் கொண்டு விழிகளை மூடி உள்ளே சென்ற குருதியின் அலைகளை நோக்கி சற்று நேரம் நின்றாள். உடலின் துலா முள்ளை நிலைப்படுத்தி விழி திறந்தாள். அறைக்குள் திரியிழுக்கப்பட்டு செம்முத்தாக எரிந்த சிற்றகல் விளக்கொளியில் சுவர்கள் பேற்று வலி எழுந்த பசுவின் விலாவின் தோல்பரப்பென அதிர்ந்து கொண்டிருந்தன.

குளிர்ந்திருந்த பாதங்களை எண்ணி என மெல்ல வைத்து ஒவ்வொரு அடிக்கும் தன் மூச்சுப்பையை குளிர்நீர் நிறைந்த கலமென உணர்ந்தவளாக அமிதை நடந்தாள். ஏன் இன்று இத்தனை சோர்வு? இன்றுவரை என் உடல் அதில் குருதியும் தசைகளும் உள்ளதென சித்தத்திற்கு காட்டியதேயில்லை. இன்று காற்றில் பறக்கத்துடிக்கும் இலை மேல் கருங்கல் என தன்னை சுமத்தியிருக்கிறது. இன்றென்ன ஆயிற்று? இன்று என் மங்கையின் மங்கலநாள் அல்லவா?

பந்தங்கள் எரிந்த இடைநாழியில் தன் கால்களுக்கு நடுவே வேலை சாய்த்து வைத்து தலை தொங்கி துயின்று கொண்டிருந்த காவலன் அவள் காலடி ஓசை கேட்டு எழுந்து கண்களை துடைத்தபடி புன்னகைத்தான். இளையவன். காவல்பணிக்கு ருக்மி ஒவ்வொரு வீரனாக தன் நோக்கால் தேர்ந்தெடுத்து அமர்த்தியிருந்தான். அனைவரும் ஆணையிட்டதை அன்றி பிறிதொன்றை எண்ணத்தெரியாத இளையோர்.

அவள் ஏழு காவலரைக் கடந்து ருக்மிணியின் அறை வாயிலை அடைந்தாள். கதவை சுட்டுவிரலால் மெல்ல தட்டி ”இளவரசி” என்று அழைத்தாள். எட்டு முறை குரலெழுப்பிய பின்னரே உள்ளே ருக்மிணி மஞ்சத்தில் புரண்டு முனகியபடி விழிப்பு கொள்வதை கேட்க முடிந்தது. “இளவரசி, இது நான், அன்னை” என்றாள் அமிதை.

ருக்மிணி மஞ்சம் நலுங்கும் ஒலியுடன் எழுந்து காலடிகள் தரையில் உரச ஆடை கசங்கும் ஓசையுடன் வந்து கதவின் தாழைத் திறந்து விரித்தாள். இரவெல்லாம் மணத்து காலையில் குளிர்ந்து உதிர்ந்த மலர் போல் இருந்தாள். கன்னத்தில் சேக்கையின் சுருக்கங்கள் படிந்திருந்தன. அதன்மேல் வழிந்து உலர்ந்திருந்த இனிய ஊன் மணம் கொண்ட இதழ்நீரின் பிசுக்கில் கூந்தலிழைகள் சில ஒட்டியிருந்தன. இறகுச்சேக்கையின் வெம்மையைப்பெற்ற உடலில் இருந்து தாழம்பூவை கையில் உரசியது போல மெல்லிய மணமெழுந்தது.

அமிதை உள்ளே சென்று ”இன்று ஆடி நிறைவு நாள் இளவரசி. தாங்கள் அணி செய்து அன்னையரை வணங்கச்செல்ல வேண்டும்” என்றாள். ”ஆம். நேற்றிரவு சம்பங்கி சொன்னாள்” என்றாள் ருக்மிணி. கைகளை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தபடி ”நான் நேற்று துயில நெடுநேரமாகியது” என்றாள். அமிதை சற்றே நெஞ்சு படபடக்க ”ஏன்?” என்றாள். ”அறியேன் அன்னையே. நேற்றிரவில் நெடுநேரம் வரதாவை நோக்கி அமர்ந்திருந்தேன். எண்ணியிராத ஒரு கணத்தில் விந்தையானதோர் உணர்வு எழுந்தது. வரதை என்னிடமிருந்து நெடுந்தொலைவில் எங்கோ ஒழுகிச்செல்வது போல.”

பரபரப்புடன் “ஆம் அன்னையே, முற்றிலும் புதிய ஆறொன்றை பார்ப்பதுபோல எண்ணினேன். எழுந்து அதன் சேற்றுக்கரைகளையும் நீர்ப்பளபளப்பையும் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அவ்வுணர்வை வெல்ல முடியவில்லை. இது என் ஆறல்ல, இது என் நகருமல்ல. நான் அமர்ந்திருக்கும் இவ்வரண்மனை எனக்கு எவ்வகையிலும் உரியதல்ல. அவ்வுணர்வின் விசையை தாளமுடியாது வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன். பிறிதொருவர் உடனிருக்க முடியாது நெஞ்சை கூசவைத்தது அது. காவல்பெண்டை அனுப்பிவிட்டு கதவை தாளிட்டேன். என் கல்விஅறிந்த அனைத்து சொற்களாலும் அவ்வுணர்வை வெல்ல முயன்றேன். திரை என விலக்க முயன்றது கோட்டைச் சுவர் என தெரிவது போல அது என் முன் நின்றது” என்றாள்.

“எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. உங்கள் குரல் கேட்டு எழுந்தபோது அப்போது மயங்கிய அவ்வெண்ணம் அவ்வண்ணமே உடன் எழுந்து தொடர்ந்தது” என்றாள் ருக்மிணி. பின்பு அவள் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, உங்கள் குரலும்கூட முற்றிலும் அயல் என ஒலித்தது. எங்கோ நான் விட்டுப் பிரிந்து சென்று மீண்டும் வந்து கேட்கும் குரல் போல. இவ்வனைத்தையும் நான் அறிவது போலல்ல, நினைவுகூர்வது போல உணர்கிறேன்” என்றாள்.

அமிதை புன்னகைத்து அவள் தோளைத் தொட்டு ”அனைத்தும் வெறும் எண்ணங்கள் இளவரசி. ஆனால் அதில் பொருள் உள்ளது. கன்னியர் தாங்கள் மலர்ந்து கனிந்த கிளையிலிருந்து உதிர்ந்து புதிய நிலமொன்றில் முளைவிட்டெழ வேண்டியவர்கள் அல்லவா?” என்றாள். அச்சொற்களை புரியாத விழிகளுடன் நோக்கிய ருக்மிணி ”இன்று என் அணிகளையும் ஆடைகளையும் தேர்வு செய்து விட்டேனா?” என்றாள். ”நேற்றே நான் எடுத்து வைத்துவிட்டேன், வாருங்கள்” என்றாள் அமிதை.

அவள் கைபற்றி அழைத்துச் சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே காவல்பெண்டுகள் இருவர் காத்து நின்றிருந்தனர். ”இளவரசியை நீராட்டி அணி கொள்ளச்செய்க! முதல்ஒளி எழுவதற்குள் முதலன்னை ஆலயத்திற்கு செல்லவேண்டும்” என்றாள் அமிதை. காவல்பெண்டுகள் தலைவணங்கி அவளை அழைத்துச்செல்லக் கண்டு நெஞ்சில் கைவைத்து நின்றாள். அவள் குழல்கற்றைகள் நேற்றைய வாடிய மலர்ச்சரத்துடன் அசைந்து அசைந்து விலகிச்சென்றன.

எங்கு செல்வதென்றறியாமல் அமிதை இடைநாழியைக் கடந்து மறுபக்கம் இறங்கி முற்றத்தை நோக்கினாள். அங்கு ருக்மிணி ஒன்பது அன்னையரின் ஆலயங்களுக்குச் செல்லவேண்டிய பொன் பூசப்பட்ட வெள்ளித்தேர் முன்னரே வந்து நின்றிருந்தது. காலைப்பனியில் நீர் துளித்திருந்த அதன் உலோகமலர்ச்செதுக்குகளை மரவுரியால் துடைத்துக் கொண்டிருந்தனர் இரு பாகர்கள். தேரின் மூன்று வெண்புரவிகளும் அப்பால் நின்று முகத்தில் கட்டப்பட்ட பையிலிருந்து தாடை இறுகியசைய கொள் தின்று கொண்டிருந்தன. சுவைக்குத் தலையாட்டிய அவற்றின் கழுத்து மணிகளின் ஒலி ஆலயத்திலிருந்து என ஒலித்துக் கொண்டிருந்தது.

தலைதூக்கி அவளை நோக்கிய ஒரு புரவி சற்றே அசைந்து முன்னங்காலால் கல்பரப்பைத் தட்டி மெல்ல கனைத்தது. பிறகு இரு புரவிகளும் அவளை நோக்கின. ஒன்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து தலை சிலுப்பியது. அந்தத் தேரை முழுமையாக நோக்க அவளால் இயலவில்லை. கால்கள் தளர்வதுபோல் உணர்ந்தவளாக திரும்பி படியேறி இடைநாழிக்கு வந்தாள். ருக்மிணியின் படுக்கையறைக்குள் சென்றபின்னர்தான் அவளை முன்னரே எழுப்பி நீராட்டறைக்கு அனுப்பிவிட்டதை நினைவு கூர்ந்தாள். 'என்ன செய்கிறேன்?' என வியந்தாள்.

வெண்பட்டு விரிக்கப்பட்ட கொக்குச்சிறகுச் சேக்கை முகிலென கிடந்தது. அதை நெருங்கி அவள் உடல் படிந்த பள்ளத்தை தன் முதிய கைகளால் மெல்ல வருடிப்பார்த்தாள். அங்கிலாத அவள் உடலை தொட்டாள். இடை பதிந்த பெரிய பள்ளம், இது அவள் முலை அழுந்திய மென்தடம். அவள் குழல் பூசிய நறுநெய் படிந்த தலையணை இது... அவள் காதணிகள் படிந்த தடம் கூட அப்பட்டில் மென் சேற்றில் மலர் உதிர்ந்த வடு என தெரிந்தது.

மீண்டும் மீண்டும் அச்சேக்கையை தடவியபடி அவள் நெடுமூச்சு விட்டாள். பின்பு மெல்ல நடந்து அறைவிட்டு வெளியே வந்து கதவை சாற்றினாள். மூடிய கதவுக்கு உள்ளே அவ்வறைக்குள் ருக்மிணி துயில்வது போல தோன்றியது. திறந்தால் அங்கு அவள் இருப்பாள் என்பது போல். அவ்வறையின் காற்றில் அவள் மறைந்திருக்கிறாள் என்பது போல. மீண்டும் திறந்தால் அவளை காணமுடியும் என அவள் உள்ளம் வலுவாக எண்ணியது. கைகளால் கதவுப்பொருத்தைத் தொட்டு தயங்கியபின் திரும்பினாள்.

திரும்பிச்சென்று தன் படுக்கையில் படுத்து கண்களை மூடி, உடலைச் சுருட்டி அட்டை போல் இறுகிக்கொள்ளவேண்டுமென்று அமிதை விழைந்தாள். போர்வையை அள்ளி உடல் மேல் போர்த்திக் கொண்டு இருளுக்குள் புதைந்துவிட வேண்டும். அவ்விருளுக்குள் மந்தணச் சுரங்கப்பாதை ஒன்றின் கதவை ஓசையின்றித் திறந்து படியற்ற அதன் இருண்ட அறைக்குள் இறங்கமுடியும். குளிர்ந்த சுவர்களை கைகளால் வருடி வருடிச் சென்று பிறிதோர் உலகத்தை அடைய முடியும்.

காலமற்ற ஆழம். அங்கு அவள் இன்னும் இளவயது அன்னை மட்டுமே. அவள் மடியில் சிறு வாழைப்பூவென செந்நீல உடல் கொண்ட சிறு மகவு அவள் முலை நோக்கி பாய்ந்து கருமொட்டைக் கவ்வி கால் நெளித்து கையசைத்து சுவைத்துண்ணும். அதன் மென்சுருள் குழலை ஒரு கையால் வருடி மெல்ல அசைப்பாள். குனிந்து அதன் உச்சியை முகர்ந்து கருவறை மணத்தை அறிவாள். மடியிலமர்த்தி வரதாவின் அலைப்பெருக்கை காட்டுவாள். பிடிவிட்டோடி சிரித்துச் செல்லும் அவளைத் துரத்தி பற்றித் தூக்கி சுழற்றி நெஞ்சோடணைத்து கன்னத்தில் இதழ் பதிப்பாள். ஓடாத காலம். உருகி வழியாத பனி.

ஆனால் அறைபுகுந்து தன் மஞ்சத்தில் அமர்ந்ததுமே திடுக்கிட்டு எழுந்தாள். என்ன செய்கிறோம் என்றுணர்ந்ததும் பதற்றத்துடன் வெளியே வந்து இடைநாழி வழியாக ஓடி சாளரம் வழியாக எட்டி முற்றத்தை பார்த்தாள். இளவரசி அணியூர்வலம் செல்வதற்காக படைத்திரள் வந்து நின்றிருந்தது. அவற்றை நடத்தி வந்த படைத்தலைவன் செந்நிறத் தலைப்பாகையில் வல்லூறின் வரியிறகு சூடி நின்று கையசைத்து ஆணைகளை பிறப்பித்ததைக் கேட்டு உருவிய வாள்களுடனும் வேல்களுடனும் வீரர்கள் இரு நிரைகளாக அணி வகுத்தனர். இருள் பரவிய முற்றத்தில் பந்தங்களின் ஒளியில் படைக்கலன்கள் ஒளிரும் குருதித் துளிகளை சூடி இருந்தன.

அமிதை அரியது எதையோ மறந்தவள்போல நெஞ்சு திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். காலடி ஓசை தொடர விரைந்து நீராட்டறைக்குள் சென்றாள். பன்னிரு நெய் விளக்குகள் குழியாடியின் முன் சுடர்பெருக்கி நின்றிருக்க மரத்தாலான பெரிய நீராட்டுத் தொட்டியில் ருக்மிணி கிடந்தாள். கருந்தளிர் கன்னியுடல். மின்னும் நீர்குமிழி போல் முலைகள். கருநாகங்கள் காமம் கொண்டு நீருள் பிணைவது போல் திளைத்த நீள்தொடைகள். பாதி கவிழ்ந்த மதுக்கோப்பையில் என உந்திச் சுழியில் வளைந்த சிற்றலை. அவள் குழலை நீட்டி நறுமண எண்ணெய் பூசி கைகளால் அளைந்து கொண்டிருந்தனர் இரு சமையச்சேடியர்.

நீராட்டறை மூலையில் நெஞ்சுடன் இரு கைகளைச்சேர்த்து தன் நெஞ்சிலிருந்து உதிர்ந்து எழுந்த மகளின் உடல் மெருகை நோக்கி அமிதை நின்றாள். கரியோன் விரும்பும் கனி. கருமைக்கு நிகரான அழகென்ன உண்டு? நீள்வட்ட முகம், நீண்ட பீலி விழிகள், குவிந்த சிற்றுதடுகள், மூன்று வரி படிந்த மலர்க்கழுத்து. இடைக்குழைவில் குழைந்தன நீரலைகள். மெல்ல புரண்டபோது சிவந்த அடிப்பாதம் நீரிலிருந்து எழுந்து தெரிந்தது. அருள் கொண்டு எடுத்து அவள் சென்னி மேல் வைக்கப்பட்டது போல.

பல்லாயிரம் முறை அவள் பார்த்த சங்கு சக்கரம். கடலும் வானும் என்றான அருட்குறிகள். கடல் நீலம் வான் நீலம். எங்குகேட்ட சொல்? அங்கு நின்றிருக்க இயலாதென்று உணர்ந்து மெல்ல பின்னடைந்தாள். நீராட்டறைப்பெண் அவளிடம் “இன்னும் சற்று நேரம் செவிலியன்னையே” என்றாள். ”ஆம்” என்றபடி அவள் வெளிவந்து இடைநாழியினூடாகச்சென்று மீண்டும் முற்றத்தை நோக்கினாள். அங்கு இசைச்சூதர்கள் தங்கள் கருவிகளுடன் வந்து நின்றிருந்தனர். இருவர் கொம்புகளின் குவிமுனைகளில் பொறிக்கூரை இறுக்க மூவர் முழவுகளின் தோல்பரப்பை வருடியும் தொட்டும் நாடாக்களை இழுத்து கட்டைகளை இறுக்கி சுருதியமைத்துக் கொண்டிருந்தனர். பந்த ஒளியில் எழுந்த அவர்களின் நிழல்கள் எதிர்ச்சுவரில் புரியாத பிறிதெதையோ பதற்றமும் பரிதவிப்புமாக செய்து கொண்டிருந்தன.

அமிதை தனக்குள் பேசிக் கொண்டவளாக திரும்பி நடந்தாள். உடல் தசைகளெல்லாம் நீரில் ஊறிய தோல் நாடாக்களென நெகிழ்ந்துவிட்டவை போல தளர்ந்திருந்தாள். ருக்மிணியின் அறைக்கதவை திறந்தபோது அவள் துணுக்குற்றாள். 'எதற்கு வந்தேன் இங்கு?' என்று எண்ணிக் கொண்டாள். ருக்மிணி அவ்வறைக்குள் துயின்று கொண்டிருப்பதாகவே கதவை திறக்கும் கணம் வரை எண்ணியிருந்ததை அறிந்தாள். அஞ்சியவள் போல காலெடுத்து உள்ளே நுழைந்தாள்.

தன் மகளின் உடல் படிந்த சேக்கைப் பரப்பை பார்த்தாள். அறைக்குள் குனிந்து பளிங்கு வெண்சுண்ணத் தரையை விழிகளால் துழாவி கொன்றைமலர் மணியென தரையில் கிடந்த பொற்குண்டு ஒன்றை கண்டாள். ருக்மிணியின் அணிச் சிலம்பிலிருந்து உதிர்ந்தது. முழந்தாளிட்டு அதை தன் முதிய விரல்களின் பழுத்த நகமுனையால் தொட்டெடுத்தாள். அன்னைக் கோழி அலகில் கவ்விய சிறு பழம் போல. மேலும் தேடி இன்னொரு மணியையும் கண்டெடுத்தாள். இரண்டையும் ஆழ்ந்த வரிகளோடிய தன் முதிய கைக்குவையில் வைத்து நோக்கினாள். உருகி எழுந்த முனகலுடன் அதை நெஞ்சோடு அணைத்தாள். ஆடைக்குள் சுருட்டிச் செருகியபடி மீண்டும் இடைநாழிக்குச் சென்றாள்.

நீராட்டறைக்குள் நுழைந்த ருக்மிணி எழுந்து பீடத்தில் அமர்ந்திருக்க நீராட்டுப் பணிப்பெண்கள் அவள் உடலை மென்துகிலால் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவர் அவள் கூந்தலை ஈரம் நீவி கொம்புச்சீப்பால் வார்ந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பால் அனல்சட்டியில் இட்ட அகில் புகையை சிறுவிசிறியால் தூண்டிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. நீலமுகில் பிசிறென புகை எழுந்து அறைக்குள் நின்றது.

அமிதை ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். இனிய கனவொன்றிலிருப்பது போல மென்புன்னகையுடன் விழி இமைகள் பாதி சரிய இங்கெங்குமில்லை என்பது போல அவளிருந்தாள். கைகள் தளர்ந்து மடிமேல் கிடந்தன. குனிந்து அவள் விரல்களை நோக்கியபோது அவை காலைமலரிதழ்கள் போல ஓசையின்றி அசைகிறதா என்றே உளம் மயங்க, விரிந்துகொண்டிருப்பதை கண்டாள். அவள் உள்ளமே விரல்களென்றாயினவா என்ன?

அமிதை மீண்டும் இடைநாழிக்கு வந்து எங்கு செல்வதென்று அறியாதவளாக திகைத்து நின்றாள். இடைநாழியிலிருந்து பன்னிரு மான்கண் சாளரங்களும் விடுத்த காற்று குளிர்ந்த கைகளாக மாறி பந்தங்களை தொட்டுத் தொட்டு விளையாடியது. அவள் ஆடையை பற்றி இழுத்தது. நரைத்த கூந்தலை சுழற்றி கலைத்தது. நூறு விளையாட்டு சிறுமியரென கைகளால் சூழ்ந்து தள்ளி கூச்சலிட்டு சிரித்து நகையாடியது.

அமிதை தன் ஆடையில் முடிச்சை அவிழ்த்து அவ்விரு சிறு பொற்குண்டுகளை கையிலெடுத்து நோக்கினாள். ஒரு கணம் என்ன என்று அவள் உள்ளம் வியந்தது. மறுகணம் என்ன எனும் ஏக்கத்தால் விம்மியது. அவற்றை மீண்டும் சுருட்டி இடையில் செருகியபடி படியிறங்கி மகளிர்மாளிகையின் மையக்கூடத்திற்கு வந்தபோது இரு காவலர் துணை வர விருஷ்டியின் அணுக்கச்சேடி சுதமை வந்து கொண்டிருந்ததை கண்டாள்.

சுதமை அவளை நோக்கி தலைவணங்கி “கொற்றவை ஆலயவிழவுக்கு இளவரசி எழுவதைக் குறித்த செய்தியை கேட்டறிய வந்தேன் செவிலியே” என்றாள். அவள் சுதமையின் விழிகளை நோக்கியபடி “இளவரசி அணி செய்கிறாள். இன்னும் அரை நாழிகை நேரத்தில் கிளம்பிவிடுவாள்” என்றாள். சுதமை அவள் விழிகளை சந்தித்தபோது கருவிழியை இருமுறை மெல்ல அசைத்தாள். அவற்றுடன் இணைந்து அசைந்தது அமிதையின் உள்ளம்.

“இன்று மாலையே இளவரசியின் மணநிகழ்வை அரசர் அறிவிக்கலாம் என்று அமைச்சர் சொன்னார்” என்றாள் சுதமை. .அமிதை தலை வணங்கி “பன்னிரு துணை நாட்டரசரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஆகவே இது அதற்குரிய நன்னாளே” என்றாள். “நம் ஒன்பதன்னை ஆலய விழவென்பது அவர்களுக்கும் உரியதே. ஒன்பதாவது அன்னையின் ஆலயப் பெருமுகப்பில் வரதாவின் நீர்ச்சுழி ஒன்றுள்ளது” என்றாள்.

சுதமையின் விழிகள் அவள் விழிகளை தொட்டுச் சென்றன. ”அங்கு மலரிட்டு வழிபட்டால் இன்றைய விழவு முடிந்தது. இளவரசர் அரசவை கூட்டியுள்ளார் என்றால் அதன்பின் இளவரசி அவையணைய முடியும்” என்று அமிதை சொன்னாள். சொல்லாத அனைத்தையும் நன்குணர்ந்து கொண்டவள் போல் சுதமை தலையசைத்தாள்.

”இளவரசி எழுந்தருளுகையில் உடன் மூதரசியர் வருவது மரபல்ல. அரசியர் இளவரசி சென்ற பின்னரே ஆலயங்களுக்கு எழுந்தருள்வார்கள். சிற்றரசியருக்குப்பின் பட்டத்தரசி செல்வார்கள்” என்றாள் சுதமை. அமிதை ”ஆம். அரை நாழிகை இடைவெளி விட்டு செல்வது மரபு” என்றாள். சுதமை ”இளவரசி அரண்மனை முகப்பிலிருந்து கிளம்பும்போது எரியம்பு ஒன்று எழுந்து செய்தியறிவிக்கும்படி சிற்றரசியார் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமே” என்றாள் அமிதை.

அமிதை மீண்டும் படிகளிலேறி இடைநாழிகளின் வழியாக விரைந்து ஏனென்றறியாமல் தன் மஞ்சத்தறைக்கு வந்தாள். அங்கு வந்ததற்கென எதையாவது செய்யவேண்டுமே என்பது போல அறைக்குள் இருமுறை சுற்றிவந்தாள். பின்பு மூலையிலிருந்த தன்னுடைய சிறு மரப்பேழையைத்திறந்து அதற்குள்ளிருந்த ஆமாடப் பெட்டியை எடுத்தாள். அதன் செம்பட்டுச் சிற்றறைக்குள் அவ்விரு பொன் குண்டுகளையும் போட்டு மூடி உள்ளே வைத்தாள்.

பேழையை மூடிவிட்டு எழுந்தபோது நெஞ்சு எடையற்றிருப்பது போலிருந்தது. உடலிலிருந்து அனைத்து எண்ணங்களும் விலக இறகுபோலாகி சூழ்ந்திருந்த காற்றில் பறந்து செல்லக்கூடுமென உணர்ந்தாள். எங்கு செல்வதென்றறியாமல் இடைநாழி வழியாக நடந்து சாளரத்தினூடாக எட்டிப்பார்த்தாள். மங்கலத்தாலங்களுடன் அணிப்பரத்தையர் வந்து வலது மூலையில் இசைச்சூதர்களுக்கு அருகே நின்றுகொண்டிருந்தனர். இடையில் கைவைத்து, பருத்த முலைகள் ஒசிய நின்றும் ஒருவர் தோள்மேல் இன்னொருவர் சாய்ந்தும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த பொன்னகைகள் பந்தங்களின் மெல்லிய ஒளியில் மின்னின.

எண்ணங்களேதும் ஓடாமல் முற்றத்தில் விரித்த திரையில் வரையப்பட்ட செந்நிற ஓவியம்போல் தெரிந்த காட்சியை பார்த்தபடி அமிதை நெடுநேரம் ஏதோ எண்ணங்களில் அலைந்து நின்றிருந்தாள். அவள் எண்ணிக்கொண்டது ஒரு சிறு பெண்மகவை. செந்நிறச்சிறுகால்களும் சுட்ட இன்கொடிக்கிழங்கு போல் மாவுபடிந்து தோல்சுருங்கிய சிற்றுடலும் கத்தியால் கீறப்பட்டதுபோன்ற சிறுவாயும் கொண்டது. சிப்பி பெயர்ந்த மென்சதை என மூடிய விழிகள் அதிர அது வீரிட்டலறியது. அவ்வெழுச்சியில் முகம் குருதிஊறிச் சிவக்க சுருட்டிப்பற்றிய சிறுகைகள் அதிர்ந்து ஆட கன்னங்களில் நீலநரம்புக்கோடுகள் பரவ அது அசைவிழந்தது. வயிறு அதிர்ந்து அதிர்ந்து துடிக்க கால்கள் இருபக்கமும் விரிந்து அசைந்தன. மீண்டும் கிழிபடும் உலோகம்போல அழுகை.

தீ சுட்டதுபோல் உடலதிர திரும்பி இடைநாழி வழியாக ஓடி அணியறைக்குச் சென்று சற்றே மூடியிருந்த கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தாள். எட்டு பேராடிகள் தெளிந்த நீர்ச்சுனைகள் போல ஒளி கொண்டிருக்க ஒன்பது திருமகள்கள் என ருக்மிணி அமர்ந்திருந்தாள். இளம்சிவப்பு மலர்ப்பட்டாடை அணிந்திருந்தாள். அதன் பொன்னூல் பின்னல்களை இரு சேடியர் அமர்ந்து ஒன்றுடனொன்று பொருத்தி மடித்துக் கொண்டிருந்தனர். சமையப்பெண்டிர் அவள் குழலை ஒன்பது புரிகளாக பின்னிக் கொண்டிருந்தனர்.

நெய்யிட்ட சுரிகுழல் விரல்கோடுகள் படிந்த ஈரமையென தெரிந்தது. அதில் முத்தாரங்களை சேர்த்துச் சுற்றி வைரங்கள் கோக்கப்பட்ட ஊசிகளைக் குத்தி இறக்கினர். அவள் மார்பில் செம்மணி ஆரங்கள் ஒன்றன்மேல் ஒன்றென படிந்து பொன்னுருக்கும் உலைக்கலத்தின் விளிம்பில் பொங்கி வழிந்த பொன்வளையங்களென தெரிந்தன.

கைவளைகள், மேகலைகள், தொடைச்செறிகள், தோள்வளைகள், கணையாழிகள் எங்கும் செவ்வைரங்களே மின்ன தணலுருவென அவள் அமர்ந்திருந்தாள். அமிதை ”இன்னும் எவ்வளவு நேரம்?” என்றாள். ”அரை நாழிகை நேரம்” என்றாள் சமையப்பெண். ”இத்தனை வைரங்களும் ஒன்றுடனொன்று பொருளுடன் பொருந்த வேண்டும் செவிலியே. அள்ளி இறைக்கப்பட்டது போலிருந்தாலும் அழகுடன் இருக்க விண்மீன்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது.”

”விரைவில் முடியுங்கள். கிளம்பும் நேரம் என்னவென்று கேட்டு சிற்றரசியின் பணிப்பெண் தூது வந்துவிட்டாள்” என்றபின் அமிதை திரும்பி இடைநாழி வழியாக சென்று படிகளில் கீழிறங்கி மகளிர்மாளிகையின் பெருங்கூடத்துக்குள் வந்து நின்றாள். அதன் பதினெட்டு சாளரங்களின் அத்தனை திரைச்சீலைகளும் வரதாவின் இளம்காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகால்கள் வெப்புநோய் கொண்டு மீண்டது போல தளர்ந்து தொய்ந்தன. எங்காவது அமர்ந்துவிடவேண்டும் என்றும் நெஞ்சு குளிர எதையாவது அருந்த வேண்டுமென்றும் அவள் விழைந்தாள்.

முற்றத்திலிருந்து வந்த முதற்காவலன் ”செவிலியன்னையே, இங்கு அனைத்தும் சித்தமாகியுள்ளன. இளவரசி வருவதற்காக காத்திருக்கிறோம்” என்றான். அமிதை கையூன்றி எழுந்து வெளியே சென்று நோக்கினாள். மூன்று புரவிகளும் தேர்நுகத்தில் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் விழிகள் பந்தங்களின் ஒளியில் கனல் கொண்டிருந்தன. வெண்ணிற விலாப்பரப்பின் மெல்லிய மயிர்வளைவுகளில் பந்தங்களின் செம்மை வழிந்தது. பொற்செதுக்குகள் கொண்ட தேரின் அத்தனை வளைவுகளும் செஞ்சுடர் ஏற்றிக் கொண்டிருந்தன.

அவளைக் கண்டதும் இசைச்சூதரும் அணிச்சேடியரும் எழுந்து நின்றனர். இசைச்சூதர் தங்கள் கருவிகளை முறைப்படி ஏந்திக்கொள்ள அணிச்சேடியர் தாலங்களில் அகல்விளக்குகளை ஏற்றினர். விழிகளால் ஒவ்வொன்றாக தொட்டு மதிப்பிட்டபின் அவள் மீண்டும் மகளிர்கூடத்திற்கு வந்தாள். நீள்மூச்சு விட்டு தன்னை எளிதாக்கியபின் படிகளில் ஏறி இடைநாழி வழியாகச் சென்று சமைய அறையின் வாயிலில் நின்று “இளவரசி சித்தமாகிவிட்டார்களா?” என்றாள். சமையப்பெண்டு “ஆம், உள்ளே வருக!” என்றாள். கதவை நடுங்கும் கைகளால் பற்றி மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் அமிதை. முற்றிலும் அவளறியாத ஒன்பது தேவியர் அங்கு அமர்ந்திருந்தனர்.

பகுதி பத்து : கதிர்முகம் - 6

கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின் பாகன் தன் பீடத்தில் ஏறிக்கொண்டான். புரவிகள் குளம்போசை எழுப்பி முன்பின் கால் வைத்து நின்ற இடத்திலேயே அசைந்து நிற்க பொறுமையற்றது போல தேர் தோரண மணிகள் குலுங்க உடல்கொண்ட ஒளிகள் நலுங்க சற்று அசைந்தன. இளவரசி அறைநீங்கிவிட்டார் என கட்டியங்காரனின் சங்கொலி அறிவித்ததும் எழப்போகும் பறவை தலைதாழ்த்துவது போல முற்றத்தின் மறுமுகப்பில் நின்றிருந்த புரவி வீரர்கள் சற்றே முன்னகர்ந்து அணிகூர்ந்தனர்.

ஏழு புரவிகள் இழுத்த அகன்ற தட்டுகொண்ட திறந்த தேர் ஒன்றை வீரர்கள் கொண்டு முன்னால் நிறுத்த இசைச் சூதர்கள் அதில் ஏறி தங்கள் முதுகுகள் ஒட்டி முகம் வெளிப்பக்கமாக திரும்பியிருக்க மடியில் முழவுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளுமாக அமர்ந்துகொண்டனர். சற்றே சிறிய விரிதட்டுத் தேரில் மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் ஏறி இரு நிரைகளாக வெளிப்புறம் திரும்பி நின்றனர். இளவரசியின் வருகை அறிவிக்கும் நிமித்திகர் பெருங்கூடவாயிலில் கையில் சங்குடன் உள்ளே நோக்கி நின்றார்.

உள்ளிருந்து அமிதை முதிய உடல் வளைத்து குறுகிய காலடிகளை வைத்து ஓடி வந்து மூச்சிரைக்க “அனைத்தும் சித்தமாகி விட்டதா காவலர்தலைவரே?” என்றாள். ”ஆம் செவிலியன்னையே” என்றார் காவலர்தலைவர். அமிதை திரும்பிச்சென்று படிகளில் ஏறி இடைநாழியில் ஓடியபடி “இளவரசி வருக!” என்றாள். அறையிலிருந்து கிளம்பிவிட்டிருந்த ருக்மிணி இரு சேடியர் தொடர செஞ்சுடர் விரித்த மணிசெறிந்த அணிகளுடன் இளஞ்செந்நிறப் பட்டாடை படியில் அலைக்கும் நீரலைகள் போல் ஒலிக்க எதிரே வந்தாள். அமிதை சொல்லிழந்து மார்பில் கைவைத்து நோக்கி நின்றாள்.

படியிறங்கி பெருங்கூடத்துக்கு வந்த அவளை விழிதூக்கி நோக்கிய வீரன் தன்னை மறந்து கையில் சங்குடன் வீணே நின்றான். அமிதை அவனை நோக்கி கையசைத்து சங்கொலி எழுப்பும்படி ஆணையிட்டாள். அவன் திடுக்கிட்டு விழிப்பு கொண்டு வலம்புரியை வாய்பொருத்தி இளங்களிறு போல் ஒலியெழுப்ப முற்றமெங்கும் அனைத்து உடல்களிலும் விதிர்ப்பு எழுந்தது. புரவிகள் அசைய தேர்களும் திடுக்கிட்டு சித்தமாயின.

முற்றத்தை வளைத்த பந்தங்களின் ஒளியில் செம்மலர்கள் செறிந்த மலர்க்கிளை போல ருக்மிணி பெருங்கூட வாயிலில் தோன்றியதும் இசைச்சூதர் தங்கள் வாத்தியங்களை மீட்டி மங்கலப்பேரிசை முழக்கினர். அணிப்பரத்தையர் குரவையொலி எழுப்ப வீரர்கள் ”அன்னமென எழுந்த திருமகள் வாழ்க! அழியா மங்கலம் கொண்ட விதர்ப்பினி வாழ்க! கௌண்டின்யபுரியின் மணிமுத்து வாழ்க! விந்தியம் விளைந்த வைரமணி வாழ்க!” என்று குரலெழுப்பினர்.

செம்பஞ்சுக் குழம்பிட்ட நீலச் சிறு பாதங்களை மெல்ல வைத்து படிகளிறங்கி அணிகள் இமை இமைக்க ஆடை காற்றென ஒலிக்க தேரை அணுகி படிகளில் கால்வைத்து ஏறி செம்பட்டு இட்ட சேக்கையில் ருக்மிணி அமர்ந்து கொண்டாள். அவளுக்குப்பின் சிறு பீடத்தில் அமிதை அமர்ந்தாள். நிமித்திகன் விரைந்து கைகாட்ட புரவிகள் எழுந்தன. வெண்புரவிகள் இழுக்கும் பொன்ரதத்தில் செம்மணிகள் சுடர ருக்மிணி சென்றது இளஞ்சூரியன் முகில் மேலெழுந்தது போல என்றுரைத்தனர் இடைநாழியில் நின்ற ஏவலர்.

நகரின் தெருக்கள் கருக்கலுக்கு முன்னரே துயிலெழுந்திருந்தன. கடைகள் அனைத்தும் திரைதூக்கி நடைதிறந்து கொத்துச்சுடர்கள் எரிந்த நெய்விளக்கின் ஒளியில் விற்பனைப் பொருட்களாலும் வண்ண ஆடைகள் அணிந்த வணிகர்களாலும் பொலிந்தன. நகரெங்கும் பரவியிருந்த பலநூறு குலமூதாதையர் ஆலயங்கள் அனைத்திலும் அன்று கொடையும் பலியும் பூசையும் நிகழ்வதால் படையல் மலர்களுடனும் நறுஞ்சாந்துடனும் சுண்ணத்துடனும் படையல் பொருட்களுடனும் நகர்மகளிர் புத்தாடை அணிந்து சிரித்துப்பேசியும் கூவியழைத்து அணிகுலுங்க ஓடியும் ஒழுகிக்கொண்டிருந்தனர்.

புரவிக்குளம்புகளின் ஒலிகேட்டு அஞ்சிநின்று திரும்பி நோக்கி அணியூர்வலத்தைக் கண்டு விழிவிரிந்து பிறரை அழைத்து சுட்டிக்காட்டினர். கைவளை குலுங்க வீசி வாழ்த்தொலித்தனர். வீடுகளுக்குள் இருந்து சிறுவர் அரைத்துயில் திரண்ட கண்களுடன் ஓடிவந்து அணியை நோக்கினர். காலைப்புழுதி பனிகொண்டு கிடந்த நகர்த்தெருக்களில் குளம்புத்தடங்கள் நடுவே சகடக்கோடுகள் சென்றன.

ஆடி நிறைவு நாளென்பது நீண்ட களியாட்டமொன்றின் தொடக்கம். ஆடி நிறைவுக்குப் பின் முப்பது நாட்கள் வரதாவில் மீன் பிடிக்கலாகாது என நெறியிருந்தது. உழுது மரமடித்து சேறு நொதிக்கவிட்ட நிலம் பூத்து செங்குருதி இதழ் காட்டுவது வரை கால் படக்கூடாது என்று வேளிர் முறைமை கூறியது. மேழிகளைக் கழுவி அறைசேர்த்து காளைகளை நீராட்டி கொட்டில் அணைத்து வேளிர் விழவுக்கு ஒருங்குவர். வரதாவில் மீன்பிடித் தோணிகளனைத்தும் கரைசேர்க்கப்பட்டு மணலில் கவிழ்க்கப்பட்டு அரக்கு கலந்த தேன்மெழுகு பூசி மெருகேற்றப்படும்.

மரப்பேழைகளிலிருந்து புத்தாடைகள் வெளியே எழும். ஊனுணவுக்கென மலைகளிலிருந்து கொண்டுவரப்படும் கன்றுகளையும் ஆடுகளையும் மலைப்பன்றிகளையும் குலங்களுக்கு ஒரு குழுவென அமர்ந்து விலைகொடுத்து கொண்டு அனைவருக்குமென பங்கிட்டளிப்பார்கள். தினைவறுத்து தேனுடன் உருட்டிய இன்னுருளைகளும் அக்காரப்பாகில் கம்புசேர்த்து நீளமாக உருட்டி எடுத்த தேன்குழல்களும் இல்லங்களெங்கும் கலம் சேர்க்கப்படும். உலர்ந்த கிழங்குகளை அக்காரத்துடன் இடித்து நெருப்பிலிட்டு உருக்கி எடுத்த பாகை மர அச்சில் வார்த்து எடுக்கும் தேனடைகளை மழைச்சாரல் மண்டிய காற்றை உண்டு நீர்கொள்ளாமல் இருக்க வாழையிலையில் பொதிந்து மாவிருக்கும் கலங்களில் வைப்பார்கள்.

ஒவ்வொன்றும் சித்தமாகி வருகையில் நாள்களை எண்ணி பின்பு மணிகளையும் நொடிகளையும் எண்ணி காத்திருப்பர் நகர்மக்கள். ஆடி முழுமைக்கு சில நாட்களுக்கு முன்னரே மழை நின்று சாரலாகும். அன்னையின் ஆடையின் முந்தானை நூல் பிசிறு போன்றது அச்சாரல் என்பர் சூதர். இளையோர் அதிலாடிக் களிப்பார்கள். சேற்றுக்களி படிந்த நகருக்குள் நுழைந்து வரதாவில் காலளைந்து வழுக்கி விழுந்தெழுந்து புரண்டு கூவி நகைப்பார்கள். பின் இளவெயிலாகும். வெயில் மூத்து வெள்ளியாகும். வரதா வெளுத்து ஒதுங்குவாள். சேறு சிப்பிகளாகும். “ஆடி முடிகிறது. ஆவணிப் பொன்முகில்கள் எழுகின்றன” என்று நிமித்திகர் அறிவிப்பார்.

ஆடிமுடிவைக் கொண்டாட அணிகொண்டிருந்த சிற்றாலயங்களின் கருவறைக்குள் நெய்விளக்கு ஒளியில் மூதாதை தெய்வங்கள் வெள்ளிவிழிகள் பொறித்த முகங்களுடன் புன்னகைக்கும் வாய்களுடன் வீதியை நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன் விரித்த வாழையிலைகளின்மேல் ஆவி பறக்கும் அன்னமும் அப்பங்களும் அக்கார அடிசிலும் படைக்கப்பட்டிருந்தன. சூழ்ந்திருந்த பந்த ஒளியில் அன்னம் குருதிநிறம் கொண்டிருந்தது. மலர்சூடி அமர்ந்திருந்த மூதன்னையருக்கு முன்பு குருதியுடன் சேர்த்துப் பிசைந்த அன்னம் கவளக் குவைகளாக படைக்கப்பட்டிருந்தது.

படையல் மேடைகளில் இருவிரலால் உடுக்குகளை மீட்டி பூசகர் நிற்க முதுவேலர் உடம்பெங்கும் நீறு பூசி விரிசடை தோளிலாக்கி காலில் கட்டிய கழல்மணிகள் ஒலிக்க தோள்கள் நடுங்க கைகள் விதிர்த்து துடிக்க சன்னதம் கொண்டு துள்ளி ஆடினர். மலையிறங்கி வந்த அறியாத் தொல்மொழியில் ஆவதையும் அணைவதையும் உரைத்தனர். முழவுகளை மீட்டிய சூதர்கள் அவர்கள் மண் நிகழ்ந்தபோது ஆற்றிய பெருவினைகளை பாடலெடுத்துப் பரவினர். அவர்களின் கொடிவழி வந்த குடியினர் காலை நீராடி ஈர ஆடை அணிந்து குழலில் மலர்முடித்து உடலில் நறுஞ்சுண்ணமும் சாம்பலும் பூசி கை வணங்கி நின்றிருந்தனர்.

கல்பாவிய மையச்சாலை வழியாக சகடங்கள் கடகடத்து ஒலிக்க தேர்களும் புரவிகளும் சென்றன. காவல் புரவிகளின் எடை மிகுந்த லாடக் குளம்புகள் நூறு துடிகள் இணைந்தொலித்த ஓசை என அவ்வணி ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றன. சாலைகளின் இருபக்கமும் உப்பரிகைகளில் நின்ற நகர் மக்கள் குரவையொலி எழுப்பி புது மலரள்ளி வீசி விதர்ப்பினியை வணங்கினர். “ஆடி நிறையும் நன்னாளில் முதல் முகமென எங்கள் முன் எழுந்தருள வேண்டியது திருமகளே” என்றார் ஒரு முதியவர். “இன்று கண்ட இந்த முகம் இவ்வாண்டு முழுக்க எங்கள் இல்லங்களில் வளம் நிறைக்கும்” என்றார் பிறிதொருவர்.

கௌண்டின்யபுரியின் மக்கள் ஆடி நிறைவிற்கு ருக்மிணி எழுந்தருள்வதை பதினெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் விழி நிறைய கண்டவர்கள். அன்னை மடியமர்ந்து சிறு நீலமலர் போல அவள் சென்றதை முன்பு கண்டிருந்த அன்னையர் மேனி பொலிந்து அவள் சென்றதைக்கண்டு விழி நிறைந்து கை கூப்பினர். வாழ்த்தொலிகளால் கொண்டு செல்லப்பட்டவள் போல அவள் நகரத்தெருக்களில் சென்றாள்.

நகராளும் ஒன்பது கொற்றவையரின் ஆலயங்கள் பிறை வடிவமாக வளைந்து நகரை கையணைத்துச் சென்ற வரதாவின் கரை ஓரமாகவே அமைந்திருந்தன. நகர் நடுவே இருந்த அரண்மனையிலிருந்து கிளம்பி கிழக்கு கோட்டையின் வாயில் வரை சென்று வெளியே இறங்கி வரதாவில் அமைந்த பெரிய படித்துறையை அணுகியது அரச நெடுஞ்சாலை. அங்கே நீருக்குள் காலிறக்கி நின்ற படகுத்துறையில் பாய் சுருக்கிய காவல்படகுகள் மொய்த்து அலைகளிலாடிக் கிடந்தன. அவற்றை நோக்கிச்சென்ற கல்பாவிய சாலையில் இருந்து பிரிந்து சென்ற செம்மண் சாலை வரதாவின் கரைமேடு வழியாகவே சென்றது.

ஆடியில் வணிகமில்லாததனால் பொதிப்படகுகள் ஒன்றிரண்டே தெரிந்தன. நான்கு துலாக்கள் கரையிலிருந்து பொதிகளைத் தூக்கி அப்படகுகளின் திறந்த நீளப்பரப்பில் வைத்துக் கொண்டிருந்தன. அலைகளில் துள்ளிய படகுகள் அன்னை ஊட்டும் உணவுக்கு வாய்திறந்த சிறுபறவைக் குஞ்சுகள் போல் தோன்றின. பயணியர் படகுகளில் சிற்றூரில் இருந்து மக்கள் வந்திறங்கி பலவண்ணங்கள் குழம்பிய பெருக்கென வழிந்து நகருக்குள் நுழைந்துகொண்டிருந்தனர்.

வரதாவின் ஓரமாக அமைந்த மலர்ச்சோலையின் நடுவே இருந்தது சைலபுத்ரியின் ஆலயம். ஆற்றுப்படுகை என்பதனால் பெரு மரங்களை அடுக்கி அடித்தளமெழுப்பி அதன் மேல் மரத்தால் கட்டப்பட்டு சுண்ணமும் அரக்கும் கலந்த வெண்சாந்து பூசி வண்ணச்சித்திரங்கள் வரைந்து சிறு களிச்செப்பு போல அணி செய்யப்பட்டிருந்த சைலபுத்ரியின் ஆலயத்தின் முன் பட்டு விதானத்துடன் சிறு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சரணரும் ஆலய காரியக்காரரும் ஏவலர் எழுவரும் முரசும் கொம்புமேந்திய சூதர் சூழ இளவரசிக்காக காத்து நின்றிருந்தனர்.

வரதாவின் இளங்காற்றில் சோலைவனத்து இலைகள் குலைந்து கிளைகள் கொப்பளித்துக் கொண்டிருந்தன. வானில் விடியலின் கன்னிவெளிச்சம் பரவியிருந்தமையால் இலைகள் நிழல் வடிவங்களாகவே தெரிந்தன. சோலைக்கு அப்பால் ஓடிய வரதாவின் நீர்ப்பரப்பின் பகைப்புலத்தில் ஒவ்வொரு இலையையும் தனித்தனியாக பார்க்க முடிந்தது. காலையிலே நீர் தெளித்து இறுக்கப்பட்டிருந்த செம்மண் பாதையில் சகடத் தடங்கள் பதிந்து புரிமுறுகும் ஒலியுடன் சைலபுத்ரியின் ஆலயத்தை அணுகின.

காவலுக்கு முன்சென்ற புரவிவீரர்கள் படைக்கலங்களை தாழ்த்தியபடி இரு பிரிவாக பிரிந்து ஆலயத்தை வளைத்து மறுபக்கம் சென்று இணைந்து நின்றனர். இசைச்சூதர் எழுப்பிய நல்லிசையை அணிச்சேடியரின் வாழ்த்தை அங்கே கூடி நின்றவர்கள் எதிரொலியென எழுப்பி வரவேற்றனர். இசைச்சூதரின் தேர் இடப்பக்கம் விலகி வளைந்து சென்று நின்றது. அணி குலையாமல் இசை முறியாமல் அதிலிருந்து இறங்கிய சூதர் மூன்று நிரைகளாக தங்களை தொகுத்துக் கொண்டனர்.

அணிச்சேடியரின் தேர் வலப்பக்கமாக விலகிச்சென்று நிற்க அதிலிருந்து தாலங்களுடன் நிரை குலையாது இறங்கிய சேடியர் ஆலயமுகப்பு நோக்கி தாலங்களுடன் சென்று தலை வணங்கி மங்கலம் காட்டினர். மங்கலச் சேடியர் விலக பொன்துலங்கும் மெல்லொளி எழுப்பி ஆடி வந்து நின்றது வெண்புரவிகள் இழுத்த தேர். கணக்குகூர்ந்து அமைத்த தேர் நின்றபோது யாழின் ஆணியை முறுக்கும் மெல்லிய ஒலியை மட்டுமே எழுப்பியது. தலைக்கோலி “விதர்ப்பினி! விண்ணளக்கும் மாயனின் துணையென பொலியும் அன்னபூரணி, இவ்வாலயத்திற்கு எழுந்தருளியுள்ளார்” என்று சொல்ல காரியக்காரர் தலைவணங்கி “அடியோங்கள் வாழ்த்தப்பெற்றோம். இளவரசி, தங்கள் வரவு சிறப்புறுக!” என்றார். அமைச்சரும் தலை வணங்கி “இளவரசி நல்வரவு கொள்க!” என்றார். அமிதை குனிந்து ருக்மிணியின் குழலைத் திருத்தி விரித்தாள். முந்தானையின் மடிப்பை மெல்ல சீர் செய்து ஒரு கையால் அதன் நுனியை பற்றிக் கொண்டாள். ருக்மிணி இடுப்பின் ஆடை மடிப்புகளை கையால் அழுத்தியபடி வலக்கையால் நெஞ்சைத் தொட்டு ”வணங்குகிறேன் அமைச்சரே” என்றபடி இறங்கி செம்மண் பரப்பின் மேல் காலை வைத்து நடந்தாள். அவள் கால்கள் சிவப்பதை அமிதை குனிந்து நோக்கினாள்.

இருபுறமும் இசைச்சூதர்களின் பேரிசை எழுந்து அலையடிக்க அவள் ஆலயத்துள் நுழைந்ததும் ஆலயச்சூதர் இரு பிரிவினராகப் பிரிந்து இசையுடன் அவளை தொடர்ந்தனர். அவளுக்கு இடப்புறம் நடந்த காரியக்காரர் ”நிமித்திகர் வகுத்த நன்னேரத்தில் எழுந்தருளியுள்ளீர்கள் இளவரசி. சைலபுத்ரியின் பேரருள் தங்கள் மேல் பொழிவதாக!” என்றார். முகமண்டபத்தில் வெண்மலர் விரித்து அமைக்கப்பட்ட மலர்வட்டத்தின் நடுவே ஏழு திரியிட்ட குத்துவிளக்கு சுடரிதழ்கள் நெளிய நின்றிருந்தது. சாளக்கிராமம், பொற்குவளைநீர், மலர், காய், கனி, தேன், அரக்கு, கோரோசனை என எட்டு மலைமங்கலங்கள் அன்னைக்கு படைக்கப்பட்டிருந்தன.

கருவறையில் வெண்காளை மேல் வலக்கால் மடித்து அமர்ந்து வலது மேல்கையில் விழிமணி மாலையும் இடது மேல்கையில் முப்பிரி வேலும் கொண்டு, கீழிருகைகளில் அஞ்சலும் அருளலும் காட்டி, நீலம் பதித்த பொன் விழிகள் மலர்ந்து, மணிமுடி சூடி அன்னை அமர்ந்திருந்தாள். செங்குழம்பு பூசப்பட்ட அவள் இடக்கால் நகங்கள் பொற்சிப்பிகளாக தெரிந்தன. காலடியில் வெண்மலர்கள் கணி வைக்கப்பட்டிருக்க அருகே புதுமரத்தாலங்களில் அன்னங்களும் மலைத்தேனும் படைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் நின்ற பூசகர் விழிதிருப்பி காரியக்காரரை நோக்க அவர் கண்ணசைத்ததும் பூசனைகள் தொடங்கின.

மூன்று சுடராட்டு நறும் புகையாட்டு மலர்ப்பொழிவு மந்திரம் ஓதுதல் கொடையளித்தல் பாதம் சூடுதல் என வழிபாடுகள் முறைமையாக நடந்தன. கைகூப்பி ருக்மிணி நிற்க அமிதை அவள் மேலாடையைப் பற்றியபடி கைகளை நெஞ்சோடு சேர்த்து அழுத்தி நின்றாள். சைலபுத்ரி முலைமுகிழாத சிறுமி. உலகறியாத இளம்புன்னகை கொண்டவள். அந்தக் காளை மேல் இருந்து குதித்தோடி வந்து இடை வளைத்து கட்டிக் கொள்வாளென்று தோன்றியது. அவளுக்கு வெண்சிற்றாடை அணிவித்து அதன் மேல் நீலமணி பதித்த பொன்னாரமும் பொன்மேகலையும் சுற்றியிருந்தார்கள். சிறுமுலை எழுந்த மார்பில் செந்நிறக் கல்பதிந்த ஆரம் சரிந்தது. அணிகளுக்குள் அவள் சிறைப்பட்டவள் போலிருந்தாள்.

அன்னையை வணங்கி திரும்பிய ருக்மிணி நின்று அங்குள்ள மரங்களை நோக்கி ”அன்னையே, இங்கு முன்பொருமுறை வந்தபோது மகிழ மரத்திலேறி விழுந்தேனே நினைவிருக்கிறதா?” என்றாள். ”ஆம், இளவரசி” என்றாள் அமிதை. ”இங்குள்ள அத்தனை மரங்களிலும் நான் ஏறியிருக்கிறேன். இப்போதுகூட இவ்வணிகளின்றி வந்திருந்தால் இம்மரங்களிலேறி மலர் உதிர்த்திருப்பேன்” என்று உடல் சுற்றி சூழநோக்கி முகம் மலர சிரித்து “எப்போதும் கனி பழுத்திருக்கும் ஏழு நெல்லி மரங்கள் இங்குள்ளன. ஒவ்வொன்றின் சுவையும் நானறிவேன். இங்குள்ள செண்பகங்கள் ஏழுவகையானவை. மூன்று கிளைகளை ஒரே சமயம் பற்றிக்கொண்டு அதில் ஏற வேண்டும். முல்லைக் கொடி படர்ந்த பந்தல்மேல் கூட இளவயதில் நான் ஏறியிருக்கிறேன்” என்றாள்.

“ஆம், இளவரசி” என்றாள் அமிதை. முதிய காரியக்காரர் “இளவரசி, அனைத்தும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்” என்றார். “ருத்ரரே, ஓவ்வொரு நாளும் சிறுமியென இச்சோலையில் ஆடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் ருக்மிணி. பூசகர் கொண்டு வந்த தாலத்தில் இருந்து சந்தனச் சாறெடுத்து நெற்றியிலும் கழுத்திலும் பூசினாள். வலம் வந்து நான்கு வாயில்களையும் வணங்கிவிட்டு முகப்புக்கு வந்தாள்.

“இளவரசி, இன்னும் எட்டு அன்னையர் எஞ்சியுள்ளனர்” என்றாள் அமிதை. ”ஆம்” என்றபடி ருக்மிணி மெல்ல நடந்து வந்தாள். அவளைக்காத்து தேர் திரும்பி நின்றிருந்தது. “ஏறிக்கொள்ளுங்கள் இளவரசி” என்று அமிதை சொல்ல படிகளில் காலெடுத்து வைத்து ஏறி அவள் அமர்ந்து கொண்டதும் சரணர் தலைவணங்கி விரைந்தோடி தன் புரவியிலேறிக் கொண்டார். அவரும் இரு காவலர்களும் முழுப்பாய்ச்சலில் அடுத்த துர்க்கையின் ஆலயம் நோக்கி சென்றனர்.

ருக்மிணி திரும்பி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த அன்னையை நோக்கி “சைலபுத்ரி வெண்பனி சூடிய இமவானின் மகள். செம்புலித்தோல் அணிந்த அனல்வண்ணனுக்காக பிறந்தவள்” என்றாள். அமிதை ”ஆம் இளவரசி. ஆனால் தான் எதற்காகப் பிறந்தோம் யாருக்காக மலைமகள் வடிவெடுத்தோம் என்று இன்னமும் அறிந்திலாத இளம் கன்னி அவள்” என்றாள்.

தேர் நகர்ந்து வாயிலை கடக்கும்போது ருக்மிணி மீண்டும் ஒரு முறை நோக்கி ”அனைத்தும் அறிந்தும் தன் அறியா இளமையில் திளைப்பவளென்று தோன்றுகிறது அவள் முகம்” என்றாள். விடியத்தொடங்கிவிட்டிருந்தது. வரதாவின் மறுகரையில் செறிந்திருந்த குறுங்காட்டில் இருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து நீர்ப்பரப்பின் மேல் சிறகடித்தன.

இரண்டாவது துர்க்கையின் ஆலயம் ஈச்சமரங்கள் சூழ்ந்த சிறுகாட்டுக்குள் இருந்தது. பெரிய மரத்தடிகளை நட்டு அவற்றின் மேல் மூங்கில்கள் பாவி தரையிட்டு ஈச்சஓலைக்கூரை அமைத்து தவக்குடில் போல் கட்டப்பட்ட ஆலயம் கூப்பிய கை போல் எழுந்து ஒளி ஊறிக்கொண்டிருந்த முகிலற்ற வானின் பகைப்புலத்தில் நின்றிருந்தது. முந்தைய நாள் புதிதாக வேயப்ப்பட்டிருந்த பழுத்த ஈச்சையோலைப்பரப்பு பொன்னிறக் கூந்தலின் அலைகள் போல் தெரிந்தது. முகப்பந்தலின் அருகே சென்று நின்ற தேரை நோக்கி முன்பே அங்கு சென்று நின்றிருந்த சரணரும் பிரம்மசாரிணி ஆலயத்தின் காரியக்காரரும் ருக்மிணியை முகமன் சொல்லி வரவேற்றனர்.

சாலையிலிருந்தே தெரிந்த திறந்த கருவறையில் வலது மேல்கையில் உருத்திரவிழி மாலையும் இடதுமேற்கையில் கமண்டலமும் வலது கீழ்க்கையில் சுவடியும் இடது கீழ்க்கையில் அருட்குறியுமாக வெண்கலை ஆடை அணிந்து சடைமகுடம் சூடி அன்னை அமர்ந்திருந்தாள். கழுத்திலும் இடையிலும் உருத்திரவிழிக் கருமணி மாலைகள் சுற்றியிருந்தாள். பாதி விழி மூடி புன்னகை இதழ் ஊறி தன்னுள் எழுந்த நினைவொன்றில் முற்றிலும் நனைந்து அவள் இருந்தாள்.

ஆலயத்தை மும்முறை வலம்வந்து கருவறையின் படிநிரைக்கு இடம் நின்று அன்னையை வணங்கினாள் ருக்மிணி. மலரும் நீரும் பெற்று மீள்கையில் பின்னால் கைகட்டி வந்த காரியக்காரர் “தன்னுள் ஈசன் உறைவதை அறிந்து பிற அனைத்தையும் ஒதுக்கி தவம் பூண்டு நின்றிருக்கும் அன்னை இவள் என்பர் நூலோர்” என்றார். ருக்மிணி அதை கேட்டது போல் தெரியவில்லை. திரும்பி வந்து தேரில் ஏறி அமர்ந்தபின் ஆலய வாயில் தாண்டும்போதுகூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

அனலடுப்பில் நீர்க்கலம் வெம்மையை வாங்கத் தொடங்குவதுபோல் தெரிந்தாள். வெம்மைகொள்வதன் ரீங்காரம் எழுகிறது. கலப்புறம் சிவக்கிறது. அறியாது கை நீட்டுபவள் போல ருக்மிணியின் தோளை தொட்டுப் பார்த்தாள் அமிதை. அவள் உடல் வெம்மை கொண்டிருப்பதை அறிந்து மெய்யோ என மயங்கி பிறிதொரு முறை தொட்டு உறுதி செய்து கொண்டபின் மூச்செறிந்தாள். அவள் முகத்தில் இலைத்தழைப்பினூடாக வந்த வரதாவின் ஒளி திவலைகளாகத் தெறித்து சிதறிச்சென்றது.

மூன்றாவது அன்னை செம்மலர்கள் பற்றி எரிந்த அரளிக்காட்டின் நடுவிலிருந்தாள். கொம்பரக்கு கலந்த சுண்ணத்தால் இளஞ்செந்நிறம் பூசப்பட்ட மரப்பலகைகளால் கட்டப்பட்ட ஆலயத்தின் மேற்கூரை வாழைப்பூ போல் அமைந்திருந்தது. முகமண்டபம் அதிலொரு இதழ் எழுந்து வளைந்தது போல். செம்பட்டாலான பந்தலில் நின்றிருந்த காரியக்காரர் அவளை அணுகி வணங்கி முகமன் சொல்லி உடன் வந்தார். “அன்னைக்கு முதல்ருத்ரை என்று பெயர். கன்னி கொள்ளும் முதல் அனல் அவள். உள்ளம் கொண்ட பிறைசூடிக்காக இங்கு ஐந்தழல் நடுவே தவம் செய்கிறாள்” என்றார்.

ருக்மிணி படிகடந்த போதே விழிதூக்கி அன்னையை நோக்கினாள். தழல் கொழுந்துகளென உடல்வரிகள் நெளியும் வேங்கை மேல் வலது மேற்கையில் முப்பிரி வேலும் இடது மேற்கையில் வாளும் கீழ் கைகளில் அஞ்சல் அருளல் முத்திரைகளுமாக அன்னை அமர்ந்திருந்தாள். அவள் தலையில் இளம்பிறை ஒளிவிட்டது. திறந்த விழிகள் எங்கென இன்றி திசைவெறித்தன. முக மண்டபத்தில் செம்மலர்க் களம் நடுவே ஒற்றைக் கொழுந்து நின்றாடிய தீப்பந்தம். அதன் நெய்யுருகி சொட்டி மலர்கள் பொசுங்கிய மணம் எழுந்தது.

“ஊழ்கமலைமுடி போல் அன்னை தன் தவத்தை பிறையென நெற்றியில் சூடுகிறாள்” என்றார் பூசகர். மூன்று பூசகர்கள் கொழுந்தாடும் பந்தங்களைச் சுழற்றி அன்னைக்கு சுடராட்டு காட்ட தானும் ஒரு தழலாக அவள் அங்கிருந்தாள். அவள் நெற்றியில் அமைக்கப்பட்டிருந்த வெண்பளிங்கு கீற்றுநிலா குருதி சூடிய வாளென மின்னி அணைந்தது.

நான்காவது அன்னையின் ஆலயத்திற்குச் செல்லும்போது ருக்மிணி மிகவும் மாறிவிட்டிருப்பதை அமிதை உணர்ந்தாள். அறியா ஒருவர் குடி வந்த இல்லம் போல் ஆகியது அவள் உடல். இனி தன்னால் அதை தொடமுடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை. கூஷ்மாண்டையின் ஆலயத்தின்முன் போடப்பட்ட மரப்பட்டைப் பந்தலில் தேர் நின்றது. வந்து பணிந்த காரியக்காரர் ”நான்காவது துர்க்கையின் ஆலயம் இளவரசி” என்றபோது சிம்மம் என மெல்ல எழுந்து தேர்ச்சகடங்கள் முனக கால் வைத்து இறங்கினாள். அவள் உடலின் எடையும் பல மடங்காகிவிட்டது போல.

கருவறையில் நுங்கென முலைகள் திமிர்த்த கன்னங்கரிய உடலில் அறுந்த தலைகளாலான குருதி சொட்டும் மாலை அணிந்து பல்சிரிக்கும் கபாலங்களை குண்டலங்களாக்கி விழுதுகளென விரிந்த நெடுஞ்சடைகளுடன் கனல்விழிகள் விரித்து குருதியுண்ட ஓநாய் என நாநீட்டி அன்னை நின்றிருந்தாள். இரு மேற்கைகளிலும் வெங்குருதி நிறைத்த கலங்கள். வலது கீழ் கையில் முப்பிரி வேல். இடது கீழ் கையில் ஒளிரும் வாள். அவள் காலடியில் சந்திரனும் சூரியனும் வளைந்து தாழ அவர்களின் தலைமேல் குருதி சொட்டியது. கீழே கற்பீடத்தின் வளைவுகளில் கைகூப்பி வியந்திருந்தனர் முனிவர்.

ஏழு தூண்கள் சூழ்ந்த முகமண்டபத்தில் பன்னிரு குவளைகளில் புதிய குருதி படைக்கப்பட்டிருந்தது. அவ்வளையத்தின் நடுவே காலையில் அவள் பலிகொண்ட மோட்டெருமையின் வெட்டுண்ட தலை நிணவிழுதுகள் வழிய, கொம்புகள் விரிய தலை சரித்து, முள்மயிர் கொண்ட இமைகளுக்குள் சிப்பிகள் என வெண்விழி மட்டும் தெரிய, வாயோரத்தில் மடிந்து தொங்கிய தடித்த நீலச்செந்நா குருதி துளித்து மணியாகி நிற்க வைக்கப்பட்டிருந்தது. காரியக்காரர் ”அன்னை இப்புவி வெல்ல எழுந்த பெருஞ்சினம் கொண்டவள். தவ நிறைவில் இறைவன் அணுகாமை கண்டு அனலானவள்” என்றார். எச்சொற்களுக்கும் அப்பால் இருந்தாள் ருக்மிணி.

பகுதி பத்து : கதிர்முகம் - 7

கூஷ்மாண்டையின் ஆலயம் விட்டு வெளிவருகையில் வாயிலில் ருக்மி போர்க்கோலத்தில் தன் சிறிய படைப்பிரிவுடன் நின்றிருப்பதை அமிதை கண்டாள். அதை ருக்மிணி பார்த்தாளா என்று விழிசரித்து நோக்கினாள். அவள் விழிகள் இவ்வுலகில் எதையுமே அறியும் நோக்கற்றவை என்று தோன்றியது. ருக்மியையோ அவனுடன் நின்ற அமைச்சர் சுமந்திரரையோ அறியாது கடந்துசென்று தன் தேரிலேறிக் கொண்டாள்.

ருக்மி அமிதையை தன் விழிகளால் அருகே அழைத்து மெல்லியகுரலில் “உளவுச் செய்தி ஒன்று வந்துள்ளது செவிலியே. நம் இளவரசியின் தூது சென்றுள்ளது துவாரகைக்கு” என்றான். அனைத்தையும் அவன் அறிந்துவிட்டான் என அச்சொற்களில் இருந்து அறிந்த அமிதை ”ஆம். இளவரசி முத்திரைச்சாத்திட்ட அழைப்பு துவாரகைக்கு கொண்டு செல்லப்பட்டது” என்றாள். ருக்மி “இங்கிருந்த பிராமண மருத்துவனொருவன் அங்கு சென்றதை நான் முன்னரே அறிவேன். பறவைக்காலில் நான் கண்டடைந்த அவ்வோலை அவன் நெஞ்சில் பதிந்து சொல்லில் சென்றிருக்க வேண்டும்” என்றான்.

அமிதை “ஆம், பிராமணனின் சொல் மண்ணில் முதன்மையான சான்று” என்றாள். சினத்துடன் பற்களைக் கடித்தபடி ருக்மி “இளைய யாதவன் விதர்ப்ப இளவரசியைக் கொள்ள படை கொண்டுவரக்கூடும் என்றனர் என் ஒற்றர். விதர்ப்பம் அதற்கும் சித்தமாகவே உள்ளது. மண்ணுக்கென குருதி பெருகலாம், பெண்ணுக்கெனவும் பெருகலாம் என்பது நெறி. இம்மண்ணில் என் தலை விழுந்தபின் அவன் இவளை கொள்வான். அல்லது அவன் தலைகொய்து கொண்டு கூஷ்மாண்டை அன்னையின் காலடியில் வைப்பேன்” என்றான்.

அமிதை ”இளவரசே, இவை அரசு சூழ்தல்கள். நானறிந்தது என் இனியவளின் விழைவை மட்டுமே. எனக்கு தெய்வங்கள் ஆணையிட்ட செயல் எதுவோ அதையே நான் செய்வேன்” என்றபின் தேரை நோக்கி சென்றாள். அவள் பின்னால் நடந்தபடி வந்த ருக்மி மேலும் தாழ்ந்து காற்றொலியாகவே மாறிவிட்டிருந்த குரலில் ”இன்று நகரில் துணைநாட்டரசர்கள் குவிந்திருக்கிறார்கள். இந்நகர் சூழ்ந்துள்ள பெரும் படையுடன் நேர்வந்து சமரிட அவன் விழையமாட்டான்” என்றான்.

“காற்றெனப் புகுந்து கவர்ந்து செல்லும் மாயமறிந்தவன் என்கிறார்கள் அவனை. கரவுருக்கொண்டு இங்கு அவன் வரக்கூடும். இளவரசி தனித்து ஒன்பதன்னையர் ஆலயத்தையும் வழிபடும் நாளென்பதால் இன்று அவனுக்கு வாய்ப்புகள் மிகுதி. வென்று சென்றால் இவ்வரசர்கள் அனைவரையும் கடந்தவனாவான். எனவே கரையிலும் நீரிலும் மும்மடங்கு காவலுக்கு ஆணையிட்டேன். இங்கு இவளுடன் இறுதி வரை நானுமிருக்க எண்ணினேன்” என்றான் ருக்மி.

“அது நன்று. தங்கள் விழைவு வெல்க!” என்றாள் அமிதை. “செவிலியே, உன் நெஞ்சில் எழுந்த புன்னகையை நான் அறிவேன். நான் மாயனல்ல. புவியடங்க வெற்றிகொள் வீரனும் அல்ல. ஆனால் இந்நகரையும் எந்தை எனக்களித்த உடைமைகளையும் எங்கள் குலம் கருக்கொள்ளும் அன்னையர் மகளிரின் வயிறுகளையும் காக்கும் திறன்கொண்ட வாள் என் கையில் இருக்கிறது” என்றான். ”இவ்வனைத்தும் உன் உளமறிந்த சூது என்று நான் அறிவேன். உன் முலை அருந்தியிருக்காவிட்டால் இவ்வேளையில் நீ இருக்குமிடம் தெற்குக்காட்டின் கழு என்றுணர்க!” என்றான்.

தலை வணங்கி “என் இளையவளுக்கென கழு அமரும் நல்லூழ் அமையுமென்றால் என் வாழ்க்கை முழுமை கொள்ளும் இளவரசே” என்றபின் அமிதை சென்று தேரில் ஏறிக்கொண்டாள். ருக்மிணியின் தேருக்குப் பின்னால் தன் நூறு புரவிகள் தொடர கரிய புரவிகள் மூன்றால் இழுக்கப்பட்ட உறுதியான விரைவுத்தேரில் ருக்மி வந்தான். அதற்குள் போருக்கு என பெருவில்லையும் அம்புக்குவைகள் செறிந்த ஆவநாழிகளையும் வைத்திருந்தான். அவனும் வீரர்களும் இரும்பு ஒளிரும் முழுக்கவச உடை அணிந்திருந்தனர்.

ஸ்கந்தமாதாவின் ஆலயம் கரிய தேன்மெழுகு பூசப்பட்ட மூன்றடுக்குக் கோபுரம் எழுந்த மரக்கட்டடம். கோபுர விளிம்பில் பன்னிரு இயக்கியர் விழி விரித்து, வெண்பல் காட்டி, வஜ்ரமும் கதையும் வேலும் வாளும் வல்லயமும் வடமும் ஏந்தி, கீழ்நோக்கிப் பறந்தவண்ணம் நின்றனர். கருவறையில் ஆறு பொன்னிறத் தாமரைகள் சூழ நடுவே பொன்னரியணையில் செந்நிற ஆடை அணிந்து இரு கைகளிலும் தாமரைகள் மலர்ந்திருக்க அருளும் அஞ்சலும் காட்டி அன்னை வீற்றிருந்தாள்.

மலரிதழ்கள் கொண்டு அமைக்கப்பட்ட அணிமுடி சூடியிருந்தாள். புதுமலரடுக்கு கொண்டு கோத்த சரப்பொளி அணிந்திருந்தாள். பொன் ஒளிரும் அவள் கால்கள் முத்துக்களாலான சிலம்புகளை அணிந்திருந்தன. ”அன்னை இன்னும் பிறக்காத கந்தனை தன் ஆழத்தில் ஒளிரும் கருவாகக் கொண்டவள்" என்றாள் அமிதை. “கன்னியென்று இருக்கையிலேயே அவள் கனவில் எழுந்துவிட்டான் அழகுத்திருமகன். இளையவளே, நினைவறிந்த நாள் முதலே பெண்ணென்பவள் பேரழகு மைந்தன் ஒருவனை தன் கனவில் சூடிக்கொண்டவள் அல்லவா?”

விழிசரித்து தன் கருவறைக்கு அப்பால் கனவுக்கும் அப்பால் சுஷுப்திக்கும் அப்பால் கனிவின் முடிவின்மை முத்திட்டது என நின்ற கந்தனைக் கண்டு சிற்றிதழில் புன்னகையுடன் அமர்ந்திருந்த அன்னையை ருக்மிணி நோக்கி நின்றாள். அவள் முகம் உருகி நெகிழ்ந்து பிறிதொன்றாகி புன்னகை சூடியது.

திரும்புகையில் ஆலய வாயிலில் நின்றிருந்த ருக்மியை அப்போதென கண்டு அமிதையை நோக்கி திரும்பினாள். அமிதை “தங்களுக்கு காவலென மூத்தவர் வந்திருக்கிறார்” என்றாள். ”ஆம், எப்போதும் என் காவலனாக தன்னை உணர்பவர் என் தமையன். இனியவர்” என்றாள் ருக்மிணி. அமிதை ”இளையவளே, இனியவராக இல்லாத எவரையேனும் தாங்கள் அறிவீர்களா?” என்றாள். ருக்மிணி திரும்பி புன்னகைசெய்து “இல்லை. இவ்வுலகில் நான் காணும் முகங்கள் அனைத்திலும் அழகொன்றே பொலிகிறது. அவற்றின் அகக்குவளைகள் அனைத்திலும் இனிய நறுந்தேன் நிறைந்துள்ளது. சுனை மலரென உடலில் எழுந்தவை அல்லவா முகங்கள்? அவற்றில் இனியவை அன்றி எவை இருக்கமுடியும்?” என்றாள்.

அமிதை ”திருமகள் நோக்கு தொட்ட எதுவும் திருவுருவாகும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். ருக்மி அவளருகே வந்து “இளையவளே, இன்னும் நான்கு ஆலயங்கள் உள்ளன. விரைந்து முடித்தாயென்றால் அரசவைக்கு நீ வரலாம். இன்று அங்கே உனைப்பார்க்க மகதத்தின் சிற்றரசர் பன்னிருவர் வந்துள்ளனர்” என்றான். “அவ்வண்ணமே ஆகுக!” என்ற ருக்மிணி புன்னகையுடன் சென்று தேரிலேறிக்கொண்டாள்.

ஓரக்கண்ணால் அவள் முகத்தை நோக்கியபடி அமிதை அமர்ந்திருந்தாள். உண்மையிலேயே அனைத்தையும் மறந்துவிட்டாளா? இன்று அவள் விழைவு பூவணியும் என்று அறிந்திருக்கவில்லையா? அரசு சூழ்தலின் உச்சம் தேர்ந்த ஒருவர்கூட அத்தனை நடிக்க இயலாது. “இளவரசி” என்று மெல்ல அழைத்தாள். அவள் விழி திருப்ப ”இன்று கவர்ந்து செல்ல இளைய யாதவர் இந்நகர் நுழைகிறார்” என்றாள்.

அச்சொற்களை அவள் உள்ளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதுபோல வெறுமையை நோக்கி ”எவர்?” என்றாள். ”இளவரசி, தாங்கள் வரைந்த ஓலைச்செய்தி இளைய யாதவரை அடைந்தது. தங்கள் கைபற்ற இன்று அவர் இந்நகர் புகுகிறார்” என்றாள் அமிதை. மலர்தேடி தவிக்கும் வண்ணத்துப்பூச்சியின் இறகுகள்போல விழியலைய அவள் திரும்பிக் கொண்டாள். பின்னர் திரும்பி “இன்றா?” என்றாள். “ஆம், இளவரசி” என்றாள் அமிதை.

தேர் சென்று கார்த்தியாயினியின் ஆலயமுகப்பில் நின்றபோது சகடங்கள் உரசிய ஒலியில் விழித்துக் கொண்டவள் போல உடலதிர திரும்பி நோக்கி "இன்றா?" என்றாள். "ஆம், இளவரசி" என்றாள் அமிதை. "இங்கிருந்தா?" என்றாள். "ஆம். ஒன்பதாவது அன்னையின் ஆலயத்துக்கு அப்பாலுள்ள பெருஞ்சுழியில் நீரேறி அவரது படகுகள் வரக்கூடும்.” ருக்மிணி உளம் தளர்ந்தபோது கைவளைகள் ஒலிக்க இரு கைகளும் அவள் மடியில் விழுந்தன. ”ஆம், இன்றுதான். நான் நினைவுறுகிறேன், இன்றுதான்!” என்றாள்.

”எதை நினைவுறுகிறீர்கள் இளவரசி?” என்றாள் அமிதை. “நான் நன்கறிந்திருந்தேன்.” பதறும் கைநீட்டி அமிதையின் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, தாங்கள் என்னிடம் சொன்னீர்கள், இன்று ஒன்பதாவது துர்க்கையம்மன் ஆலயத்தில் இருந்து என்னை அவர் கவர்ந்து செல்வதாக” என்றாள். அமிதை திகைத்து ”நானா?” என்றதும் “ஆம், நீங்களேதான்” என்றாள் ருக்மிணி. ”நான் உவகைகொண்டு எழுந்தேன். உங்களை ஆரத்தழுவி நற்செய்தி சொன்னமைக்காக வாழ்த்தினேன்.”

அமிதை இன்னொரு கையை அவள் தோள்மேல் வைத்து ”இளவரசி, தங்களிடம் நான் சொல்லவேயில்லை. நான் சொல்லலாகாது என்று எண்ணினேன்“ என்றாள். ”இல்லை அன்னையே, நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். நாம் இருவரும் வரதாவில் ஒரு படகில் தனித்தமர்ந்திருந்தோம். என் இரு கைகளையும் பற்றி மடியில் வைத்துக்கொண்டு கண்களை நோக்கி சொன்னீர்கள்.” அமிதை “நாம் வரதாவில் சென்று பல நாட்களாகிறது இளவரசி" என்றாள். ”அவ்வண்ணமெனில் இது கனவு. ஆனால் உங்கள் ஒவ்வொரு சொல்லையும் நன்கு நினைவுறுகிறேன்” என்றாள் ருக்மிணி.

ஆலயவாயிலில் நின்ற ருக்மி "செவிலியன்னையே, நேரமாகிறது” என்றான். தேர் நகர்ந்ததும் ருக்மிணி அவனை நோக்கியபின் ”தமையன் ஏன் என்னுடன் வந்திருக்கிறான்?” என்றாள். “இளைய யாதவர் தங்களை கைக்கொள்ள எழுவதாக அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்று வரக்கூடுமென்று அவர் அறியவில்லை. ஆனால் சிறிய அச்சம் ஒன்று அவருக்கு உள்ளது. ஆகவே காவல் வந்துள்ளார்” என்றாள் அமிதை.

ருக்மிணி இகழ்ச்சியுடன் ”எனக்கு இவன் காவலா?” என்றாள். அமிதை ஒன்றும் சொல்லவில்லை. “இக்கணமே வில்லெடுத்து இவன் தலைகொய்தபின் அவருடன் செல்ல என்னால் ஆகாதா என்ன? வேலியிட்டு என்னை தடுக்க முடியுமென்று எண்ணும் மூடனா இவன்?” என்றாள். உலை ஏற்றி பழுக்க வைத்த உலோகச் சிலையென கனன்ற அவளை நோக்கி ”இளவரசி” என்ற சொல்லை உச்சரித்து நிறுத்திக்கொண்டாள் அமிதை.

“மூடன், என்னை அரண்மனையில் சிறையிட்டான் என்று எண்ணியிருக்கிறான். சிறையிட்டது என் பொறை. சொல்லெடுத்து இந்நகரையும் இவன் கோட்டையையும் அழிப்பதொன்றும் அரியதல்ல எனக்கு” என்று அவள் சொன்னாள். ”எதை அணையிட எண்ணுகிறான்? என்னுள்ளம் கொண்ட எழுச்சியையா? அவர் மார்பில் நானிருந்தாகவேண்டும் என்ற பேரூழ்நெறியையா?” அமிதை “இளவரசி, சற்றுமுன் அவரை அளியர் என்றீர்கள். நாம் இங்கு ஆலயம் தொழ வந்துள்ளோம்” என்றாள். “ஆம்” என்றாள் ருக்மிணி. “பெருங்கடலை திரையென ஈர்க்கும் வல்லமை கொண்டது குளிர்நிலவு என்பார்கள் இளவரசி. எளிய மானுடர் அதை அறிவதில்லை” என்றாள் அமிதை.

எரிதழல் என பறக்கும் செம்பிடரி நடுவே குருதி ஊறிச்சொட்டும் நாவும் வெண்கோரைப்பற்கள் பிறைநிலவென வளைந்தெழுந்த வாயும் எரி விண்மீன் என சிவந்த விழிகளுமாக நின்ற சிம்மத்தின் மேல் வலக்கால் தூக்கிவைத்து எட்டு பெருங்கைகள் விரித்து கருவறையில் கார்த்தியாயினி நின்றிருந்தாள். இடது பக்கக் கைகளில் சந்திரஹாசமும் பாசமும் அங்குசமும் அம்பும் வலது கைகளில் சூலமும் மின்னலும் கேடயமும் வில்லும் கொண்டு தழல்முடி சூடி அன்னை நின்றிருந்தாள். மின்னல் செம்முகில் மேல் எழுந்தது போல் தோன்றினாள்.

அன்னையின் எரிபீடத்துச் சாம்பலை மலருடன் பெற்று நெற்றியில் அணிந்து திரும்புகையில் தேர் அகலாக அதில் அவள் சுடராக எழுந்தாடுவதாக அமிதை எண்ணினாள். மண்ணிலிருந்து அனைத்தையும் உண்டு விண்நோக்கி கரிய குழல்பறக்க எழுந்து துடித்துக்கொண்டிருந்தாள். அணையும் தழல்களெல்லாம் விண்ணின் முடிவிலியால் உறிஞ்சி எடுக்கப்பட்டு அதன் மையத்தில் வாழும் பெருந்தழல் ஒன்றில் இணைவதாக சூதர் பாடல் சொல்வதை எண்ணிக்கொண்டாள்.

காளராத்ரி அன்னையின் ஆலயம் சடைத்திரிகளை விரித்து இருண்ட நிழல்பரப்பி நின்றிருந்த பேராலமரத்தின் விழுதுத்தொகைகளுக்கு உள்ளே அமைந்திருந்தது. சாலையில் தேர் சென்றபோது காலையின் முதல் வெளிச்சம் எழுந்து வரதாவின் நீரலைகளை மின்னச் செய்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த அனைத்து இலைப்பரப்புகளும் பளபளத்தன. ஒளியை சிறகுகளாக சூடியபடி சிறுபூச்சிகள் பறந்தலைந்தன. விண்வகுத்த கணமொன்றில் திரும்பி சுடரென எரிந்து மீண்டன. மரத்தொகைகளுக்கு மேல் எழுந்த பல்லாயிரம் பறவைகள் வானில் சுழன்றும் அமைந்தும் எழுந்தும் எழுப்பிய குரலால் அப்பாதை முற்றிலும் சூழப்பட்டிருந்தது.

மங்கல இசை நடுவே ஆலயமுகப்பில் வந்திறங்கியபோது ருக்மிணி மெல்ல குளிர்ந்து மேலும் கருமை கொண்டு இரும்புப் பாவையென எடை மிகுந்திருந்தாள். படிகளில் அவள் கால்வைத்தபோது தேர் முனகியபடி ஓசையிட்டது. புரவிகள் முன்கால்வைத்து எடை பரிமாறிகொண்டன. அவள் நடக்கையில் நிலம் சற்று அதிர்வதைப்போல் உணர்ந்தாள் அமிதை.

அத்தனைபேர் சூழ வாழ்த்தொலி எழுப்பியும் முற்றிலும் தனித்தவள்போல் சென்று கருவறையில் எரிந்தணைந்த சிதையென நின்ற சாம்பல்நிற அத்திரி மேல் கால்மடித்து அமர்ந்திருந்த கரியநிற அன்னையை நோக்கி வணங்கினாள். கருங்கூந்தல் இறங்கி மண்ணில் பரவி வேர்களெனச் சுற்றி மேலே சென்றது. கருமணி ஆரங்கள் அணிந்து கரிய பட்டு சுற்றி அமர்ந்திருந்த அன்னையின் காலடியில் நீலமணிக்கண்களில் விளக்கொளி மின்ன நூற்றெட்டு காகங்கள் செதுக்கப்பட்டிருந்தன.

இடது மேற்கையில் சூலமும் கீழ் கையில் கபாலமும் வலது மேற்கையில் உடுக்கையும் கீழ் கையில் நீலமலரும் கொண்டு அன்னை அமர்ந்திருந்தாள். திறந்த வாயில் இருந்து குருதியிலை என நீண்ட நாக்கு தொங்கியது. இருபுறமும் மூன்றாம் பிறைகள் என வெண்தேற்றைகள் வளைந்திருந்தன. உருண்ட கருவிழிகள் வெறித்து ஊழிப் பெரும்பசியென காட்டின.

வலம்வந்து வணங்கி மலர்கொண்டு திரும்புகையில் அவளிடம் ஒரு சொல்லேனும் பேச அமிதை விழைந்தாள். நூறுமுறை சொல்லெடுத்து நழுவவிட்டு பின் துணிந்து அருகேசென்று ”இளவரசி” என்றாள். ருக்மிணி திரும்பி நோக்கவில்லை. அமிதை அவளுக்குப் பின்னால் ஓடினாள். ஒரு சொல்லேனும் அவளிடம் கேட்க விழைபவள் போல. சொல்லற்ற தவிப்பே உடலசைவானவள் போல.

அவள் துயரத்தால் மேலும் மேலும் எடை கொண்டவள் போலிருந்தாள். முற்றிலும் தான் மட்டுமே புடவியில் எஞ்சியவள் போலிருந்தாள். அங்கு அவள் நெஞ்சு நிறைந்த மாயன்கூட இல்லை. அவளைத் தொடர்ந்து சென்ற அமிதை வளைந்து வழிந்தோடும் கரியநாகமொன்றென அவளை உணர்ந்தாள்.

ஒளி எழுந்து பரவ அலையடித்துச் சென்று கொண்டிருந்த வரதாவின் கரையில் விரிந்த மணல்வெளியை நோக்கி திரும்பி அமைந்திருந்தது எட்டாவது துர்க்கையான மகா கௌரியின் பேராலயம். ஏழடுக்கு மாளிகை மரத்தால் கட்டப்பட்டு மேலே வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதி அணி சேர்க்கப்பட்டிருந்தது. முதல்மாடத்தில் பாதாள நாகங்களும் இருண்ட கரிய தெய்வங்களும் விழி சினந்து வாய்திறந்து நா நீட்டி கீழ்நோக்கி கூர்ந்திருந்தன. இரண்டாவது அடுக்கில் மானுடரின் வாழ்க்கை சித்திரங்களாக பொறிக்கப்பட்டிருந்தது. படைக்கலம் ஏந்தி போர்புரியும் வீரரும் கலந்த வண்ணச்சித்திரக்கோலம் நீரலையில் ஆடும் வண்ணச்சேலை போல வளைந்து சுற்றியிருந்தது.

மூன்றாவது அடுக்கில் யக்ஷர்களும் நான்காவது அடுக்கில் கின்னரரும் ஐந்தாவது அடுக்கில் கிம்புருடரும் ஆறாவது அடுக்கில் மூதாதையரும் தீட்டப்பட்டிருந்தனர். ஏழாவது அடுக்கில் தேவர்கள் மலர் மாலைகள் ஏந்தி பொன்மணி முடிசூடி முகில்களில் பறந்தனர். இந்திரனின் வ்யோமயானமும் காமதேனுவும் கற்பகமரமும் தெரிந்தன. உச்சியின் மூன்று கலசங்கள் மும்மூர்த்திகளை குறிப்பவை. அவற்றின்மேல் எழுந்து ஒளிவிட்ட வெண்படிகக்கல் தூயமுழுமையாகிய அன்னை. ஆயிரமிதழ்த் தாமரையில் நெற்றிமையத்தில் எழும் ஒளி.

அமிதை தன் அருகே அமர்ந்திருந்த ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். முற்றிலும் புதிய எவளோ என ஆகி அமர்ந்திருந்தாள். ஒரு மானுடச் சொல்லேனும் இனி அவள் இதழ்களிலிருந்து எழாதென்று தோன்றியது. கைநழுவி விழப்போகும் அரும்பொருளை ஆரத்தழுவும் பதைப்புடன் அவள் நெஞ்சு விம்மியது. அவளுடன் பேச மீண்டும் மீண்டும் நூறு முறை சொல்லெடுத்தாள். ஒவ்வொரு சொல்லும் அவள் நெஞ்சு தொட்டதுமே சிறகுதிர்த்து புழுவாகியது.

ருக்மியின் படை சென்று மகாகௌரி ஆலய முகப்பில் அணி வகுக்க இசைச்சூதர்களின் தேரும் சேடியர் தேரும் சென்று விலக உருவான வட்டத்தில் அவள் தேர் சென்று நின்றபோது ருக்மிணி எழுந்து நின்றாள். படிகளில் கால்வைத்து இறங்கிச்சென்றபோது நீர்மேல் நடப்பவள் போல் மாறியிருந்தாள். அருகே நடந்த அமிதை அவளுடலில் இருந்து பனிமலைகளின் தண்மை பரவுவதை உணர்ந்தாள். குளிர்காலத்தில் காட்டின் தண்மையை முழுக்க பலநூறு சிற்றோடைகளாக தன்முன் இழுத்துக்கொண்டு ஆழங்களில் சுருண்டுறையும் மலைச்சுனை போலிருந்தாள்.

ருக்மிணியை எதிர்கொண்ட ருக்மி “இன்னும் ஓராலயம் மட்டுமே இளவரசி. இன்று வழிபாடு முடிந்ததும் அரண்மனைக்குச் சென்று இளைப்பாறி அரசவைக்கு வருக! மூன்று நாழிகையில் அவை கூடவேண்டுமென்று முரசறிவிக்கப்பட்டுள்ளது. மன்றுகூட சிசுபாலரும் சிற்றரசர் பன்னிருவரும் வந்துள்ளனர். அவையமர அரசர் ஒப்புக்கொண்டுள்ளார்” என்றான். அமிதையை நோக்கி “இன்று நம் ஊழின் நாள்” என்றான். அமிதை தன் விழிகளை சொல்லேதுமின்றி வைத்துக் கொண்டாள். ருக்மிணி அவனை நோக்கி புன்னகைத்து பின் உள்ளே சென்றாள்.

அதைக்கண்டு சற்று குழம்பி நின்றுவிட்டு ஓசையின்றி காலடிகளை வைத்து தொடர்ந்துவந்த ருக்மி அமிதையிடம் ”அவள் புன்னகைக்கிறாள். அவ்வண்ணமெனில் இன்று அரசவையில் எழப்போகும் அறிவிப்பை ஏற்கிறாள் என்றல்லவா பொருள்?” என்றான். ”இளவரசே, அவள் புன்னகையின்றி இருந்த பொழுதை தாங்கள் கண்டதுண்டா?” என்றாள் அமிதை. ருக்மி கண்கள் அலைவுற "ஆம், ஆனால் இன்று அவள் முகத்திலிருந்தது எப்போதும் உள்ள புன்னகையல்ல. ஆறுதல் அளிக்கும் அன்னையின் புன்னகை. அவள் என் துயரை அறிந்திருக்கிறாள். நான் சிக்கியுள்ள இக்கட்டிலிருந்து என்னை விடுவிக்க உளம் கொண்டிருக்கிறாள்” என்றான்.

அமிதை திரும்பி ருக்மிணி முன்னால் சென்றுவிட்டதை அறிந்து தலைவணங்கி ஓடி அருகணைந்தாள். கருவறையில் மாகாளை மேல் அமர்ந்த கோலத்தில் இருந்தாள் மகாகௌரி. வெண்சுண்ணத்தால் சமைக்கப்பட்டிருந்தது அவள் சிலை. வெண்கலை ஆடை அணிந்திருந்தாள். இரு மேற்கைகளில் வெண் தாமரையுடன் இரு கீழ்க்கரங்களும் அஞ்சலும் அருளலுமாக மலர விழி கனிந்திருந்தாள். கருங்கூந்தல் ஏழுபின்னல்களாக தோளில் தவழ்ந்தது. வெண்படிக மணிகளால் ஆன மாலையை குழலிலும் கழுத்திலும் இடையிலும் சுற்றியிருந்தாள். அவள் காலடியில் மும்மூர்த்திகள் தலை வணங்கி நின்றிருந்தனர்.

ஏழு திரி கொண்ட மலர் விளக்கு ஏந்தி பூசகர் அவளுக்கு சுடராட்டு செய்தபோது ஒற்றைச்சொல் நின்று ததும்பும் இதழ்கள் மறுகணம் மலருமென மயக்கூட்டின. ருக்மிணி அவளை வழிபட்டு மலர்கொண்டு திரும்புகையில் அருகே நின்றிருந்த அமைச்சர் ”கருவறைவிட்டு கௌரியே எழுந்தருளியது போல்” என்றார். அமிதை அவரை திரும்பி நோக்கிவிட்டு நீள்மூச்சு விட்டாள். மீண்டும் ருக்மியை நோக்கி விழிமலர புன்னகைத்து ஆலய முகப்புக்குச் சென்று தன் தேரில் ஏறிக்கொண்டாள் ருக்மிணி.

”ஆம், அவள் புன்னகை உரைப்பது ஒன்றே. அவள் அனைத்தும் அறிந்தவள். என் சொற்கள் எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அவளிடம் நான் சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். அமிதை “நானும் நெடுந்தொலைவில்தான் உள்ளேன் இளவரசே” என்றபின் தேரில் ஏறிக்கொண்டாள். தேர் கிளம்ப பாகன் புரவிகளின் கடிவாளத்தை சுண்டுவதற்குள் ருக்மி விரைந்துசென்று தன் புரவியில் ஏறிக்கொண்டு ஒன்பதாவது துர்க்கையான சித்திதாத்ரியின் ஆலயம் நோக்கி சென்றான்.

வரதா ஆழிவண்ணன் கையில் அமைந்த ஆழிபோல பெரும்சுழியாக நின்று சுற்றி எழுந்து செல்லும் பூர்வாக்ஷம் என்னும் கரையிலிருந்த ஓங்கிய கரிய பாறையின் உச்சியிலிருந்தது சித்திதாத்ரியின் ஆலயம். அங்கு செல்ல பாறையின் புரிநூல் போல நூற்றியெட்டு படிகள் சரிவாக வெட்டப்பட்டிருந்தன. படிச்சரடின் உச்சியில் ஆலயத்தின் முகமுற்றம் பாறையில் அரைவட்டமாக வெட்டப்பட்டிருந்தது.

வரதாவில் ஒழுகிவந்த இலைகளும் தழைகளும் நெற்றுகளும் இணைந்து சுழற்றப்படும் மாலையாகி பின் மாபெரும் வில்லென வளைந்து அஞ்சியதைப்போல வட்டத்தின் விளிம்பில் தத்தளித்து மெல்ல மெல்ல ஆவல் கொண்டு விரைவு மிகுந்து சுழன்று உருவான சக்கரத்தின் நடுவே விண்வடிவோனின் உந்தி என சுழித்த மையம் நோக்கிச் சென்று ஓசையின்றி புதைந்து மறைந்தன.

நீர்க்கரையில் நின்று நோக்குகையில் அரைவட்டப் பாதையில் விரையும் நெற்றுகளையும் தழைகளையுமே காண முடிந்தது. சித்திதாத்ரியின் ஆலயமுற்றத்தில் நின்றால் மட்டுமே பெருஞ்சுழியின் முழுத்தோற்றத்தையும் காணமுடியும். படிகளின் முகப்பிலிட்ட பன்னிருகால் பந்தலில் வியர்வை வழிய உடல் சிலிர்த்து பிடரி குலைத்து இருமியும் மூச்சு சீறியும் நின்றன புரவிகள். அவற்றிலிருந்து குதித்து தங்கள் கவசங்கள் அணிந்த உடல்களை அணி நிரக்கச் செய்தனர் ருக்மியின் படை வீரர்கள்.

படைக்கு முன்னால் நெஞ்சில் இரும்புக்கவசமும் கால்களிலும் கைகளிலும் யானைத்தோல் கவசமும் கொண்டு ருக்மி நின்றான். அவனருகே நின்ற சுமந்திரர் மெல்லியகுரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். ருக்மிணியின் தேர் வந்து நின்றதும் ஓடிவந்து அதன் புரவிகளின் கடிவாளங்களைப் பற்றிய சேவகர் தேரை நிறுத்தினர். முன்னரே இறங்கிய இசைச்சூதரும் சேடியரும் இருபுறங்களிலாக விலகி மங்கலஇசையும் வாழ்த்தொலியும் முழக்கினர். ஆலயத்திற்குள்ளிருந்து வெளிவந்த பன்னிரு இசைச்சூதர்கள் கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க அவர்களுக்கு வரவேற்பு இசை எழுப்பினர்.

சித்திதாத்ரியின் பாறைமேல் சாய்ந்து கிளைவிரித்திருந்த நூற்றுக்கணக்கான செண்பகமரங்கள் நீலவிழிகளென செவ்விதழ்களென மலர் உதிர்த்திருந்தன. ருக்மிணி இறங்கி விழிதூக்கி மேலே எழுந்து நின்ற அன்னையின் ஆலயத்தை பார்த்தாள். கற்களாலான சிறிய ஆலயம் குன்று சூடிய முடிபோல தெரிந்தது.

”நூற்றி எட்டு படிகள் இளவரசி” என்றார் ஆலய காரியக்காரர். ”இங்கு அன்னை தன் உளம்கொண்ட உருத்திரனின் ஒருபகுதியாக அமர்ந்திருக்கிறாள். மாளாதவம் புரிந்து அன்னை அடைந்தபேறு இது என்பார் சூதர். மணநாள் அன்று மங்கலம் கொள்ள கன்னியர் வரும் ஆலயமாக ஆயிரம் ஆண்டுகளாக இது அமைந்துள்ளது. இடப்பாகம் என்றமைந்த இளநங்கையைக் கண்டு மலர்கொண்டு சென்றால் மணம் சிறக்கும்” என்றார். அவரை நோக்கி புன்னகைத்து ”ஆம், அறிவேன்” என்றாள் ருக்மிணி.

பகுதி பத்து : கதிர்முகம் - 8

கரிய மார்பில் உருத்திரவிழிமணி மாலைபோல வளைந்துகிடந்த சித்திதாத்ரியின் ஆலயத்தின் பாறைவெட்டுப்படிகளில் இடையுலைத்து தோளசைய உடல்சூடிய அணிகள் ஒலிக்க ஆடைகள் அலைகளென ஒலிக்க ஏறும் ருக்மிணியை அமிதை பதைக்கும் நெஞ்சுடன் தொடர்ந்தாள். கருங்கல் வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட ஆலயத்தின் மேல் கற்சிற்பங்கள் செறிந்த மூன்றடுக்கு சிறுகோபுரம் அமைந்திருந்தது. தவமுனிவர் தலைமேல் சுற்றிய சடைமுடிக்கற்றையெனத் தெரிந்த அதன்மேல் மலர்க்காவிக்கொடி காற்றில் பறந்தது.

பாறைவெட்டு அரைவட்ட முற்றத்தில் நின்ற ருக்மிணி இடையில் கைவைத்து திரும்பி அவள் முன் வரதாவில் எழுந்த ஒற்றை நீர்விழியை நோக்கினாள். வான் விரிவை அள்ளி சுழித்துக் கொண்டிருந்தது அது. பலநூறுமுறை நோக்கியதென்றாலும் அங்கு நின்று அவ்வண்ணம் பார்க்கையில் அமிதை நெஞ்சு நடுங்கினாள். அச்சுழிக்கு அடியில் அறியாத இருளுலகங்கள் அடுக்கடுக்காக அமைந்திருப்பது போல, அங்கே விழித்த கொலைவிழிகள் துலங்க, குருதி விடாய் கொண்ட வாய் திறக்க, ஓசையற்ற குளிர்ந்த காலடியோசைகள் முழங்க ஆழுலகத்து தெய்வங்கள் வந்து காத்திருப்பது போல உணர்ந்தாள்.

பூசகர் வெளிவந்து "வருக இளவரசி, முறை கொள்க!” என்றார். அவர் நீட்டிய தட்டிலிருந்து மலர் கொண்டு உள்ளே சென்ற ருக்மிணி அங்கே கருவறையின் இருபுறமும் எழுந்த அகல்சுடர் மலர்நிரைக்கு நடுவே நின்றிருந்த ஆகம்கனிந்த அண்ணலையும் அவனென்றான அன்னையையும் நோக்கினாள். ஓருரு என நின்றது உலகாளும் இருமை. வலதுடலில் சடைமகுடமும் சுடர்விழியும் திமிர்த்து எழுந்த தோளும் சல்லடம் அணிந்த இடையும் கழலணிந்த காலும் தடக்கை கொண்ட சூலமும் என அவன் தெரிந்தான். இடதுடலில் மலர்குழைந்த முடியும் குழையணிந்த காதும் நாண்பூண்ட நீள்விழியும் நகைகரந்த சிற்றிதழும் கழையெழில் மென்தோளும் முலைச்சரிவும் இடைவளைவும் தொடைமுழுப்பும் நிறைகொண்டு ஊன்றிய சிறுசெம்பாதமுமாக அன்னை நின்றிருந்தாள்.

அன்னை கையில் முற்றிலும் மலர்ந்ததொரு மலரை வைத்திருந்தாள். விழிதூக்கி கை கூப்பி அன்னையை நோக்கி நின்ற ருக்மிணி பின்திரும்பி அமிதையிடம் “நலம் திகழ்க, அன்னையே” என்றாள். நா பட்ட கண்டாமணி வளையமென நெஞ்சதிர என்ன சொல்கிறாள் இவள் என அமிதை இடக்கையால் முலைக்குவையை அழுத்திக்கொண்டாள். மீண்டுமொரு சொல் இன்றி திரும்பி பூசகர் அளித்த மலரும் குங்குமமும் பெற்று குழலிலும் மேல்நெற்றியிலும் அணிந்து ருக்மிணி வெளிவந்தாள். அவள் பின் பதறும் கால்களுடன் அமிதை ஓடினாள்.

தெய்வங்களே, இத்தருணம் நான் விழுந்துவிடலாகாது. நான் நெஞ்சுதிர்ந்து நிலையழிந்து விடலாகாது. என் இளையோள் அவன் கரம் பிடிக்கும் அக்கணத்தை நான் காண வேண்டும். இனி இவ்வுயிர் உடல் தங்கும் நாளெல்லாம் நினைத்திருக்க எனக்கொரு விழியோவியம் வேண்டும். இந்நிறைவை நோக்கியே இதுநாள் வரை வந்தேன். முலை கனிந்தேன். உடல் மலர்ந்தேன். உளமுருகி உளமுருகி வாழ்ந்தேன். அஞ்சி ஐயுற்று துயர்மிஞ்சி களியாகி பித்தாகி இருந்தேன்.

ருக்மிணி ஆலயமுற்றத்தை சென்றடைவதற்குள் அங்கு எழுந்த போர்க்குரல்களை அமிதை கேட்டாள். அங்கே ருக்மி உரத்த குரலில் வாளை நீட்டி கூவியபடி ”சூழ்ந்து கொள்ளுங்கள்! அணுகுங்கள்! படைக்கலமேந்திய எவரையும் கொன்றுவீழ்த்துங்கள்!” என்று கூவினான். குதிரைகள் சவுக்கடி பட்டு கனைப்பொலி எழுப்பியபடி குளம்புகள் தடதடக்க மண்சாலையில் ஓடி வரதாவின் பெருஞ்சுழியின் வளைவு விளிம்பை அடைந்தன. நீர் வருடிச்சென்ற வரதாவின் கரைமணலில் பதிந்து இறங்கி சூழ்ந்தன. வீரர்கள் போர்க்குரல் எழுப்பினர்.

முற்றத்து விளிம்பிற்கு வந்த அமிதை சுழியின் விளிம்பில் மூன்று படகுகள் கயிற்றால் கட்டப்பட்டு சுழற்றப்படுபவை போல விரைந்து வருவதை கண்டாள். வரதா ஏந்திய நீர்வில்லில் இருந்து எழுந்த மூன்று அம்புகள். அவற்றிலிருந்து சிறு வெள்ளி மூக்கு கொண்ட பறவைகள் என அம்புகள் எழுந்து இறங்கி கரையோரமாக சென்ற வீரர்களைத் தைத்து புரவிகளிலிருந்து அலறி விழச்செய்தன. விழுந்தவர்கள் மேல் மிதித்துச் சென்ற புரவிகள் கால்தடுமாறி துள்ளி விலக அவற்றில் இருந்த வீரர்கள் கூச்சலிட்டனர்.

படகுகளிலிருந்து எழுந்த அம்புகள் ஒவ்வொன்றும் தங்கள் இலக்கை அடைய முன்னர் சென்ற ருக்மியின் படை முழுமையாகவே நீர்க்கரையில் விழுந்து உடல் துடிக்க நெளிந்தது. சேற்றுடன் குழம்பி புழுக்களென்றாகியது. முதற்படகு கரைமணலில் அடியூன்றி விலாகாட்ட அதிலிருந்து நீண்டகாலெடுத்து நீரில் பாய்ந்து இறங்கி வந்த இளைய யாதவனை அமிதை கண்டாள். முன்பொருமுறையும் கண்டிராதபோதும் என்றும் அருகே என அறிந்திருந்த உடல் அது என்றுணர்ந்தாள். குழல்கற்றையில் அப்பொழுதும் பீலிவிழி திறந்திருந்தது. விழிகள் இமைசரித்திருக்க அவன் உடலில் ஒளிகொண்ட மான்விழியென இளநீலம் மிளிர்ந்தது.

அவன் தூக்கிய கையிலிருந்து எழுந்த படையாழி பிறிதொரு நீர்ச்சுழியென வானில் எழுந்து வந்து வண்டென முரண்டு அமைந்து மலரென தலை கொய்து மீண்டது. ஒற்றை விரைவில் மூன்று தலை கொண்டு மீளும் படையாழி ஒன்று இப்புவியில் உண்டென்று பெருங்கவிஞர் சொன்னாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். தொட்டுத் தொட்டு உயிர் வீழ்த்தும் அவ்வாழி முன்பு தான் அளித்ததை உரிமையுடன் பெற்றுக்கொள்வது போல உயிர் வாங்கியது. அறுந்த தலைகள் புன்னகைக்கும் விழிகளுடன் மணலில் சரிந்து குழல் இழுபட உருண்டன. குருதியுமிழும் உடல்கள் நின்று கையசைத்து கால்தள்ளாடி மண் அணைத்து விழுந்தன.

நீர்ப்பெருக்கின் விரைவில் படகுகள் சுழிக்க அவற்றை கழியூன்றி நிறுத்தினர் குகர். இரண்டாவது படகில் இருந்து பாய்ந்து இறங்கிய பலராமர் தன் இரு கரங்களிலும் சங்கிலிகளில் கட்டப்பட்ட பெரும் கதாயுதங்களுடன் ஓடி வந்து அங்கே பதறி நின்றிருந்த புரவி ஒன்றில் பாய்ந்து ஏறி வேலுடனும் வாளுடனும் கூச்சலிட்டபடி அணுகிய ருக்மியின் படைகளுக்குள் புகுந்தார். இரும்பு கதாயுதங்கள் அவர் விலாவிலெழுந்த இரு சிறகுகள் என சுழன்று தலைகளை நுரைக்குமிழிகளென உடைந்து சிதறச்செய்தன. சில கணங்களில் அவரது வெண்பளிங்கு உடல் குருதி வழிய அக்கணம் பிறந்த குழந்தையென்றாயிற்று.

களிகொண்டிருந்தார் பலராமர். சிரித்தபடி “வருக வருக” என்று கூவினார். சுழலும் கதைகளிலிரிந்து தெறித்த குருதி மழையென அவர் மேலேயே பொழிந்தது. அந்த செம்மழையால் சூழ்ந்து காக்கப்பட்டவராக ருக்மியின் படைகளை ஊடுருவி வந்தார். தோளில் பட்ட கதாயுதத்தின் அடியால் படைத்தலைவன் ஒருவன் முட்டை என சலம் சிதறி விழுந்தான். அவன் மேல் குளம்பு வைத்து குதித்து வந்த பலராமரின் புரவியும் குருதிக்குமிழியென்றாகிவிட்டிருந்தது. அதன்பிடரிமயிர்களிலிருந்து செம்மணிகள் சிதறின.

அவருடன் செம்புரவியிலேறி வந்த இளைய யாதவன் செம்பறவையின் இறகுகள் மேல் அமைந்த நீலக் கழுத்தென தோன்றினான். குலையா நடையுடன் ஆலயமுற்றத்தை அடைந்த ருக்மிணி விண்ணிறங்கியவன் போல் ஒழுகி வந்த அவனை விழி விரித்து நோக்கி இருகரம் கூப்பி சிலையென நின்றாள். பல்லாயிரம் யுகங்கள் அங்கு அம்முற்றத்தில் அவ்வண்ணம் தவம் இயற்றுபவள் போல. அக்கணம் அணைவதை எப்போதோ அறிந்திருந்தவள் போல.

அந்த ஒரு கணம் பல்லாயிரம் பகுதிகளாக துண்டுபட்டு சிதறி தன் முன் நிற்பதை அமிதை கண்டாள். ஒன்றில் அவமதிப்பும் சினமும் கொண்டு இழுக்கப்பட்ட திரைச்சீலையின் சித்திரம் போல் சுளித்த முகத்துடன் விரித்த கண்களுடன் வெறிகொண்டு கூவியபடி தன் வாளைச்சுழற்றி முன்னால் பாய்ந்தான் ருக்மி. இன்னொன்றில் எப்போதும் களிஎழுந்த விரிந்த முகத்தில் குருதித்துளிகள் மணிகளென உருண்டோட கூந்தலிழைகள் குருதி சொட்டி தோளில் விழுந்து புரள தசைபுடைத்து எழுந்த பெரும் கைகள் தூக்கிச்சுழற்றும் கதைகள் இரும்புச் சகடமொன்றில் சக்கரங்கள் போல சுழன்று வர பலராமர் வந்தார்.

பிறிதொன்றில் புன்னகைக்கும் இதழ்களும் கனவில் மயங்கிய கருவிழிகளும் நீலமென மலர்ந்த சிறுதோள்களும் கொண்டு காலைமுகில் என வானில் அசைந்த புரவிமேல் இளைய யாதவன் வந்தான். மற்றொன்றில் அவன் சக்கரம் பசியடங்கா பாதாள விலங்கின் நா என சுழன்று குருதித்துளிகளென மானுடரை நக்கிச் சென்றது. அவன் கொண்ட போர்வெறி முழுக்க அவன் புரவியின் விழிகளில் தெரிந்தது. அதன்மேல் அவன் ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான்.

வேறொன்றில் படைத்தலைவனொருவன் சிதறித்தெறித்தான். ஒன்றில் தலையற்ற உடலொன்று புரவி மேல் தத்தளித்து குப்புற விழுந்தது. ஒன்றில் புரவியால் மிதிபட்டு நெஞ்சு பிளந்த ஒருவன் அலறினான். ஒன்றில் புரவி தலையுடைந்து காதிலும் மூக்கிலும் குருதி சிதற விழுந்து துடித்தது. ஒன்றில் தனித்த வாளொன்று மணலில் கிடந்தது. ஒன்றில் சிறகு நடுங்க அம்பு ஒன்று மணலில் தைத்து நின்றது. அதன் நிழல் அருகே மணலில் விளையாடியது.

ஒன்றில் இனி இல்லை என இறக்கும் கையொன்று சுருங்கி விரிந்தது. ஒன்றில் இனி இவ்வுலகில் இல்லை என காலொன்று மண்ணை உதைத்தது. ஒன்றில் பெரும் சக்கரம் கையில் சுழல விண்ணளந்தோன் கொண்ட நீர் வடிவம் என வரதா ஒளிர்ந்து கிடந்தது. பல்லாயிரம் கணங்கள் ஒன்றென இணைந்த மறுகணத்தில் இளைய யாதவன் வந்து தன் நீண்ட வலக்கையை நீட்டி ருக்மிணியை இடைவளைத்து சுற்றி அள்ளி புரவியிலேற்றிக் கொண்டான்.

அமுதகணமென அதை நோக்கி திகைத்த அமிதையின் அகத்தின் கிளைமேல் அமர்ந்திருந்த கிளி ஒன்று சொன்னது. ஆடை சிறகென எழுந்து பறக்க குழல் நெளிந்து காற்றில் உலைய புரவி மீது அமர்ந்து செல்லும் ருக்மிணியை அவள் கண்டாள். அவள் வலக்கரத்தை தன் இடக்கரத்தால் அவன் பற்றி இருக்கும் இறுக்கத்தை நோக்கி அவள் எப்போதும் அப்படியே இருந்தாள் என்றுணர்ந்தாள்.

அங்கு அவள் நின்றிருந்தாள். அதை என்றோ இளமையில் உணர்ந்திருந்தாள். கைம்மகவென எழுந்தமர்ந்து களிப்பாவை ஏந்தி விளையாடத் தொடங்கியபோதே அவள் அதை அறிந்திருந்தாள். சிற்றாடை கட்டி மரமேறி மலர்கொய்து விளையாடியபோது, கன்னியென்றாகி காதலுற்று கண்கலுழ்ந்தபோது, அன்னையாகி உடல்பெருகி உளம் நிறைந்தபோது, குருதிவார பெற்றெடுத்த மகவின் சிறுசெவ்வுடலின் இறுதித்துடிப்பைக் கண்டு முலைவிம்மியபோது, முலைதேங்கிய சுடுசீம்பாலை உயிர்பதற வலிகொண்டு கதறியபடி கறந்து சுவரில் பீய்ச்சியபோது.

பின்பு அவள் கையில் வந்தது கனி. முலைசப்பி அவள் கலிதீர்த்தது. உடலுருகி அவளுக்கு ஊட்டுகையில் பெண்ணென்றானது எதற்கென அறிந்தாள். பின் அவளுடன் இருந்தாள். அவளென்றாகி வாழ்ந்து அக்கணம் வரை வந்தமைந்தாள். மீண்டும் குழவியாகி சிறுமியாகி கன்னியாகி காதலாகி அன்னையும் ஆகி நின்றாள். அக்கணம். பெருந்தனிமையென வானும் மண்ணும் மானுடரைச்சூழும் இக்கணத்தை ஏன் படைத்தது புடவிகொண்டு பகடையாடும் பிரம்மம்?

அமிதை கால்தள்ளாட நடந்தாள். சென்றவழியெங்கும் குருதிசிதறி செம்மண்ணுடன் குழைந்து கிடந்தது. மண்ணை அள்ளிப்பற்றிய விரல்கள். வான்நோக்கி விழித்த விழிகள். சொல்லிமுடியாத உதடுகள். தொலைவில் கைவிடப்பட்ட புரவி ஒன்று தான் பட்ட புண்ணை நக்கியபடி எவருடன் என்றிலாது குரலெழுப்பி மன்றாடியது. வரதாவின் ஒளிகொண்ட இலைகள் காற்றிலாடின. பறவைகள் ஏதுமறியாதவை என ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.

அனைத்து ஒலிகளும் அணைந்தன. அவள் முன் அங்கிருந்து இளையவன் ஒருவன் வந்தான். சிரித்த முகத்தின் ஒளிமிக்க பற்களை அவள் தொலைவிலேயே கண்டாள். அவன் நடை நன்கறிந்ததாக இருந்தது. அணுக அணுக தெளிந்த கண்கள் மிக அணுக்கமானவை. நீல நரம்போடிய நீண்ட கைகள். இறுகிய இடை. சிறுசெவ்வுதடுகள். அவன் அவள் முன் வந்ததும் நின்று “அன்னையே, வருக!” என்றான்.

“மைந்தா, நீ?” என்றாள் அமிதை. “என்னை அறியமட்டாயா?” என்று அவன் கேட்டான். அக்குரலை எத்தனை முறை முன்பு கேட்டிருப்பாள். அவனா? “அன்னையே, உன் வயிற்றில் பிறந்தேன். பின் அவள் உடலில் அமைந்து உன் முலையுண்டேன்.” அவள் கண்கள் நிறைந்து வழிந்தன. நெஞ்சைப்பற்றிகொண்டு “நீயா? மைந்தா, நீயா?” என்றாள். “அங்கு எப்போதும் ஒளிதான் அன்னையே. இசையே ஒலியென்றான ஓர் உலகு.” அமிதை அவன் கைகளை பற்றிக்கொண்டாள். இரு கைகளாலும் பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்தாள். “வருகிறேன் மைந்தா. அங்கே வருகிறேன். உன்னுடன் இருக்கிறேன்.”

“நெடுநாள் காத்திருந்தேன் அன்னையே. உன்னுடன் நிலவாடினேன். தென்றல்கொண்டாடினேன். உன் கை உணவுண்டு உன் சேக்கையில் உறங்கினேன். ஆயினும் உன்னை முழுதடைந்திலேன். இனி முடிவிலி வரை உன்னருகே இருப்பேன். அங்கு காலமே இல்லை அல்லவா? அங்கு எதுவுமே திகட்டுவதில்லை அன்னையே.” அமிதை “ஆம், ஆம், அதற்கென்றே இருந்தேன் என் குழவியே” என்றாள்.

அவன் அவள் இடையை தன் கைகளால் வளைத்தான். இறகென அவளைத் தூக்கிக் கொண்டான். “என் எடை எங்கு போயிற்று?” என்றாள். “அது மும்மலம் சேர் ஊன்தடி. உனக்கெதற்கு அது?” என்றான். “அங்கு எப்போதும் விளையாட்டு மட்டுமே. இருத்தலென்பது இன்பம் மட்டுமே.” அமிதை அவனுடன் முகில்களில் மேல் ஏறிச்சென்றாள். “மைந்தா, நீ கொண்ட நீலப்பீலி எங்கே? வேய்ங்குழல் எங்கே?” என்றாள். “நீ விழைந்தால் சூடிக்கொள்கிறேன் தாயே” என்றான் அவன்.

பகுதி பத்து : கதிர்முகம் – 9

இளைய யாதவனின் வலது கை அரவென நீண்டு தன் இடையை வளைத்து தூக்கி ஆடைபறக்கச் சுழற்றி புரவியின் முதுகில் அமரவைத்த கணம் ருக்மிணியின் நெஞ்சில் மீண்டும் மீண்டும் துளித்துளியாக நிகழ்ந்தது. புரவித் தொடைகளின் இறுகிய தசை அசைவுகளை, உலையிரும்பை அறையும் கூடங்களென தூக்கி புழுதியின் ஆவி பறக்க வைக்கப்பட்ட பெரிய குளம்புகளுக்கு அடியில் வேல்பட்ட வடுவென மின்னிய தேய்ந்த லாடங்களை, சுழன்ற கமுகுப்பூக்குலை வாலை, சற்றே திரும்பிய கழுத்தின் பிடரி மயிர் நலுங்கலை, விழிகளில் மின்னிச் சென்ற அறிதலை, அவள் உடல் சென்றமர அதன் முதுகுப் பீடம் சற்றே வளைந்து ஏற்றுக்கொண்ட குழைவை.

காதுக்குப் பின் தொட்ட அவன் மூச்சை, இடை வளைத்து மென் வயிற்றை அழுத்திப் பற்றிய விரல்களில் படையாழியும் அம்பும் பயின்று காய்த்த தடிப்பை, அவன் மார்பிலணிந்த இரும்புக்கவசத்தின் குளிரை, பின் தலையில் முட்டிய தோளெலும்பின் உறுதியை, கடிவாளத்தை சுண்டிய இடக்கையில் மடிந்த விரல் இருமுறை அவள் முலைகளை தொட்டுச் சென்றதை, விடைத்த சிறிய காதுகளுக்கு அப்பால் புரவியின் நரம்பு பின்னிய நீள் முகத்துக்கு முன் பறந்து மீண்ட படையாழியிலிருந்து சிதறித் தெறித்த குருதியை. அப்பால் தலை அறுந்து கைகள் விதிர்க்க மல்லாந்த வீரன் ஒருவனின் உடலை, துண்டுபட்டு விழுந்த தலை உறுத்த விழி ஒரு கணம் அதிர உதடு நடுங்க மண்ணில் புரண்டதை…

சூழ ஒலித்த அலறல்களும் புரவி குளம்பொலிகளும் படைக்கல உலோகங்கள் மோதும் குலுங்கலும் தொலைவிலெங்கும் ஒலித்த கொம்பின் அலறல்களும் ஒன்றாகி முழக்கமாகி விரிந்து உலகென்றாகியது அக்கணம். அதன் ஒர் எல்லையில் இருந்து மறு எல்லை நோக்கி உறைந்த ஒற்றைச் சொல்லுடன் அவள் சென்று கொண்டிருந்தாள். முன்னங்கால்களை மண்ணில் ஊன்றி அக்கணத்தில் இருந்து எழுந்து உடல் அதிர அடுத்த கணத்தில் விழுந்தது புரவி. அதிர்ந்த உடலை சூடிய அகம் அதிர்ந்து அக்கணத்தை அறிந்த போது முந்தைய கணம் நீலம் என்ற சொல்லாக இருந்தது அறிந்து அவள் வியந்தாள்.

அவன் கைக்கு வந்த ஆழி விரல் தொட்டு சுழன்றெழுந்து மீண்டும் தெறித்து தலை கொண்டு எழுந்து பறந்து மீண்டது. ஒளிக்கதிரின் விரைவு கொண்டு வெள்ளிப் பறவையென சுழன்றபடி அவனுக்கு அது வழி சமைத்தது. உருளும் இரு கதைகளை சினம் கொண்ட கழுகுச்சிறகென தன்னைச் சூழ பறக்கவிட்டு புரவி மேல் அவனைக் காத்தபடி தொடர்ந்தார் பலராமர். அவரைத் தொடர்ந்து வந்த ருக்மி “நில், இளைய யாதவனே, நில்” என்று கூவியபடி தன் வாளை சுழற்றியபடி ஓடி வந்தான். இடக்கையால் அவன் வீசிய வேல் மூத்த யாதவரின் கதையில் பட்டு உலோக நகைப்புடன் சிதறித் தெறித்தது. நகைத்தபடி திரும்பி கடிவாளத்தை கவ்விப்பிடித்திருந்த தொடையை அசைத்து புரவியை நிறுத்தி அவனை எதிர் கொண்டார் பலராமர்.

இளைய யாதவனின் புரவி பன்னிரு கணங்களாக பன்னிரு காலடிகளாக பன்னிரு உடல் அதிர்வுகளாக காலத்தைக் கடந்து இளமணல் பரவிய வரதாவின் கரையை அணுகி கால்சிக்கி விரைவழிந்து தலைவளைத்து நிற்க அவள் இடை வளைத்து அள்ளிக்கொண்டு தாவி இறங்கி இரு கைகளாலும் தூக்கி அவளை படகுக்குள் வீசினான். சுழன்று வந்த ஆழியை மீண்டும் செலுத்தி பாய்ந்து வில்லுடன் வந்த வீரன் ஒருவனை சீவி வீழ்த்திவிட்டு படகுக்குள் இளைய யாதவன் ஏற விம்மும் வண்டென அவன் கையை வந்து அடைந்து குருதியை உதறி அடங்கியது ஆழி.

பலராமரை நோக்கி வந்த ருக்மி தன் நீண்ட வாளால் கதை ஏந்திய அவர் கையை வெட்ட முயன்றான். கணுக்கையில் சுற்றிய இரும்பு சங்கிலியால் கதையை நீட்டி சுழற்றி அவன் புரவியின் விலாவை அறைந்தார் பலராமர். நொறுங்கும் எலும்பு ஒலிக்க மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் குருதி சிதற அலறியபடி சரிந்து விழுந்து முதுகு உரச விரைந்து சென்று நான்கு குளம்புகளையும் மேலே காட்டி துடித்துப் புரண்டெழுந்தது புரவி. அதன் அடியில் விழுந்து எழுந்த ருக்மி குனிந்து தன் வாளை எடுத்தபடி ஓடி வருவதற்குள் அவன் தோளை எட்டி உதைத்து பின்னால் சரித்துவிட்டு சிரித்தபடி படகை நோக்கி பாய்ந்த பலராமர் திரும்பி உரத்த குரலில் “இளையோனே, நீ எதிர் கொள்ளும் போரல்ல இது. செல், துவாரகையின் பட்டத்தரசியின் தமையனென பெருமை கொள்” என்றார்.

பின்னால் ஓடி வந்தபடி ருக்மி நெஞ்சில் ஓங்கியறைந்து “குருதியால் இதற்கு மறுமொழி சொல்வேன். குருதிக்காக தேடி வருவேன்…” என்று கூவினான். “இந்த மண்ணிலிருந்து அவளுடன் நீங்கள் செல்ல விடமாட்டேன். சென்றால் ஒருமீசை எடுத்து பேடியென்றாகி நிற்பேன்… இது என் மூதாதையர் மேல் ஆணை!” கதையைச் சுழற்றி தன் கையில் எடுத்து தொடை மேல் வைத்தபடி ”இளையவனே, இக்கணம் கொன்று செல்வது எனக்கு அரிதல்ல. ஆனால் என்றேனும் உனை நெஞ்சுடன் தழுவ விழைகிறேன்” என்றார். “குருதி! குருதியால் என் மறுமொழி!” என்று ருக்மி கூவினான்.

இளைய யாதவன் ஏறிய படகு சுழலில் பாய்ந்தேறி வளைந்து சென்றது. அடுத்த படகில் பலராமர் ஏறிக் கொண்டதும் அதன் குகர்கள் நால்வர் பெருங்கழிகளால் கரையை உந்தி வரதாவின் சுழிக்குள் அதைச் செலுத்தினர். துவாரகையின் நான்கு படகுகளும் வரதாவின் சுழியில் விரைந்தேறி விலக ருக்மி “விடாதீர்கள்… தொடர்ந்து நமது படைகள் எழும் வரை அவர்களை ஆற்றின் மேல் தடுத்து நிறுத்துங்கள்” என்று கூவியபடி ஆற்றின் கரை ஓரமாக ஓடினான். கொம்போசை கேட்டு ஓடி வந்த விதர்பத்தின் வீரர்கள் பாய்ந்து படகுகளில் ஏறிக் கொண்டனர். அவற்றின் குகர்கள் கழிகளை உந்தி படகுகளை சுழி வளையத்தில் ஏற்றி துவாரகையின் படகுகளைத் தொடர்ந்தனர்.

ருக்மி ஓடி வந்து ஒரு படகில் ஏறிக் கொண்டபடி “விரைந்து செல்க!” என்று கூவினான். திரும்பி கரைகளில் சிதைந்தும் அறுந்தும் குருதி வழியத் துடித்தும் கிடந்த உடல்களுக்கு நடுவே ஒடிவந்த தன் படைத்தலைவர்களை நோக்கி “செய்தி அனுப்புங்கள்! விதர்ப்பத்தின் படைகள் அனைத்தும் வரதாவில் எழட்டும்! இவர்கள் நெடுந்தொலைவு செல்ல முடியாது. நமது பெரும்பாய் படகுகள் அவர்களை ஒரு நாழிகைக்குள் எட்டி விட வேண்டும். இது என் ஆணை!” என்று கூச்சலிட்டான்.

ருக்மியின் படகு சுழியை கலைத்து யாதவப்படகுகள் உருவாக்கிய அலைகளில் எழுந்து விரைந்தது. தொலைவில் இளைய யாதவனின் படகில் இருக்கும் ருக்மிணியை ஒரு சிறு பட்டாம்பூச்சியென அவன் கண்டான். இரு கைகளையும் விரித்து “விரைக! விரைக!” என்று கூவினான். அவன் கையில் இருந்து வளைந்து எழுந்த அம்புகள் வரதாவின் நீர்ப்படலத்தை சற்றே கிழித்து வெள்ளி மணிகளை எழுப்பி ஒளி சிதறவைத்து சிற்றலைகள் எழ, தன் நிழல் பிறிதொரு ஆழி எனத் தொடர, சுழன்று வந்த இளைய யாதவனின் படையாழி படகில் சென்ற அமரக்காரனை தோள் அறுத்து பிறிதொருவனின் தலை அறுத்து குருதித் துளிகளுடன் நீரில் விழுந்து கீற்றென சிற்றலை ஒன்றை கீறி மூழ்கி பறவைக் குளியலிட்டு புதிதாக மேலெழுந்து ஒளிச்சுழியென சென்று கூடணைவதுபோல் அவன் கையை தொட்டு அக்கணமே அங்கிருந்து மேல் எழுந்து கிளம்பி வந்து பிறிதொரு வீரனின் தலை கொய்தது.

அமரம் இழந்த அப்படகு சுழியின் பெருவளைவில் தத்தளித்து அலையொன்றில் ஏற முயன்று அவ்விரைவினாலேயே கவிழ்ந்தது. அதில் இருந்த வில்லேந்திய மூன்று வீரர்களும் நீருக்குள் விழுந்து துழாவி எழுந்து கை நீட்டி மூச்சுக்கென தவிக்கும் இறுதி முகம் காட்டி நீரில் மூழகினர். பசி எழுந்த அன்னைப்புலி போன்ற தன் கைகளால் அவர்களை அள்ளிச்சென்றாள் வரதா. திறந்து கிடந்த குகைச் சுழிக்குள் அவர்கள் சென்று புள்ளிகளாகி அழிந்தனர். ருக்மி பின்னால் வந்த படகில் தொற்றி ஏறிக்கொண்டான்.

யாதவர்களின் படகுகளிலிருந்து எழுந்த அம்புகளால் தொடர்ந்து தன் படகுகளில் இருந்து வீரர் அலறியபடி நீரில் விழுந்ததை ருக்மி கண்டான். அவன் தொடுத்த அம்பு பட்டு யாதவப் படையினர் அலறியபடி நீரில் விழுந்தனர். தன் மேல் தொட்ட ஒவ்வொன்றையும் நெருப்பென குமிழி எழுப்பி உள் வாங்கி அக்கணமே மாய்த்து யாதொன்றும் அறியாதது போல சுழன்று கொண்டிருந்தது வரதாவின் கொலை விழி.

ருக்மி குழல் பறக்க நனைந்த ஆடை உடல் ஒட்டித் துடிக்க கால் பரப்பி படகு மேல் நின்றான். நீண்ட கட்டைவிரல் மேல் ஊன்றி அம்பைத் தொடுத்தான். அவன் அம்புகள் நீண்டு எழுந்து வளைந்து வரதாவின் நீர் பெருக்குள் விழுந்து மறைந்தன. இளைய யாதவனின் படகு தொலைவில் எழுந்து சுழியின் இறுதி விளிம்புக்கு அப்பால் பாய்ந்தது. தொடர்ந்து பலராமனின் படகு சுழியை மீறிச் சென்றது. “விரைவு! விரைவு!” என்று கூவிய ருக்மி அக்கணமே உணர்ந்தான், அவன் படகை ஓட்டிய குகர்களில் இருவர் கை சோர்ந்துவிட்டனர் என. அவர்களின் துடுப்பு ஒன்று வலுவிழக்க அவன் படகு சற்றே சரிந்து சுழிப்பெருக்கின் வளைவுக்குள்ளேயே சிக்கிக் கொண்டது.

வரதாவின் கண்காணா விசைச்சரடு அப்படகை சுழற்றி யாதவர்களின் படகில் இருந்து விலக்கிக் கொண்டு சென்றது. எதிர்த்திசையில் விரையும் தன் படகில் நின்றபடி நெடுந்தொலைவில் மறைந்த யாதவப் படகுகளை நோக்கி தொடையில் ஓங்கி அறைந்து கால்களை படகுப் பலகையில் இடித்து ருக்மி வெறி கொண்டு அலறினான்.

ருக்மியின் படகு வளைந்து விரைந்த நீர்ப்பாதையில் சிறகொடுக்கி மண்ணிலிறங்கும் வெண்கொக்கு போல விரைந்து சித்திதாத்ரியின் ஆலய முகப்பை நோக்கிச் சென்றது. ஒன்பதாவது துர்க்கையின் ஆலயம் அமர்ந்த கரிய குன்று அவனை நோக்கி வந்தது. அதன் மேல் அமர்ந்த ஆலயத்தின் உச்சியில் தழலென கொடி பறந்தது.

கால் தளர்ந்து படகில் அமர்ந்து தலையில் கை வைத்து ஒரு கணம் அவன் விம்மினான். படகு ஆலயத்தருகே மணல் கரையை நோக்கிச் சென்றதும் பொறுமையிழந்து பாய்ந்து இறங்கி இடுப்பளவு நீரில் கால் துழாவி தள்ளாடி மேலேறி அப்போதும் துடித்துக் கொண்டிருந்த குருதியுடல்களையும் குதிரைக் கால்களையும் கடந்து தாவி ஓடி கரைக்கு வந்தான். மண்சாலையின் மறு எல்லையில் வல்லூறுக் கொடி பறக்க நான்கு புரவிகள் இழுக்க விரைவுத் தேரில் சிசுபாலன் வருவதைக் கண்டான். “சேதி நாட்டு அரசே!” என்று இருகைகளையும் விரித்துக் கூவியபடி அத்தேரை நோக்கி ஓடினான். பின்னால் பன்றிக் கொடி பறக்க வராக நாட்டு சிற்றரசன் பிருஹத்சேனனும், எலிக் கொடி பறக்க மூஷிக நாட்டு சிற்றரசன் சசாங்கனும், கன்றுக் கொடி கொண்ட உபபோஜ நாட்டு சம்விரதனும் வருவதைக் கண்டான்.

அவர்களுக்குப் பின்னால் புரவிப் படையொன்று இடிந்திறங்கும் மலையென பேரொலியுடன் வந்து கொண்டிருந்தது. தேர் விரைவழியாத போதே பாய்ந்திறங்கி மண்வந்த பறவையென கால்வைத்து வந்து நின்ற சிசுபாலன் உரக்க ”என்ன நிகழ்ந்தது? விதர்ப்பரே, எங்கே இளவரசி?” என்றான். “துவாரகையின் திருடன் அவளை கவர்ந்து சென்று விட்டான், சேதி நாட்டரசே” என்றான் ருக்மி. உடைந்த குரலில் அழுதபடி “இனி இங்கு முகத்தில் மயிர் வைத்து வாழமுடியாதவனாக என்னை ஆக்கி விட்டான். என் நகர் புகுந்து என் குலக்கொடியை கொண்டு அவன் செல்வானென்றால் அதன் பின் நான் என்ன வீரன்?” என்றான்.

சிசுபாலன் திரும்பி ஓடி தன் தேரில் ஏறிக் கொண்டு “இன்னும் பிந்தி விடவில்லை விதர்பரே. பாய் அற்ற படகுகளில் வரதாவில் நெடுந்தொலைவு சென்றிருக்க முடியாது. இச்சுழி கடந்து மறு எல்லை அடைந்ததும் காட்டுக்குள் புகுந்திருப்பான். அங்கு அவன் வந்த புரவிகள் நின்றிருக்கும். நம் எல்லை கடப்பதற்குள் அவனைக் கைப்பற்றி விடலாம். பிறிதொருவர் அறியாமல் வந்திருக்கிறான். எனவே, பெரும்படையுடன் வந்திருக்க வழியில்லை. அவனைச் சூழ்வோம். தலை கொண்டு மீள்வோம். அதற்கென தருணம் வாய்த்திருக்கிறதென எண்ணுவோம் எழுக” என்றான். ருக்மி “ஆம், இறுதிக் கணம் வரை இலக்கு அது” என்று கூவியபடி தன் படைத் தலைவனை நோக்கி “விதர்ப்பத்தின் படைகள் அனைத்தும் மறுகரை செல்லட்டும்! இக்கணமே” என்று ஆணையிட்டான்.

புரவியில் ஏறிக் கொண்ட ருக்மி சிசுபாலனை முந்தி முன்னால் சென்றான். விதர்ப்பத்தின் புரவிகளும், பன்னிரு சிற்றரசர்களின் விரைவுத்தேர்களும் வரதாவின் கரையோரமாக விரைந்தன. மூதன்னையர் கோயில் கொண்ட சிற்றாலயங்களில் பூசனை செய்யவும், படுகள வீரர்களுக்கு அமைத்த பலி பீடங்களில் படையல் இடவும் நின்ற விதர்ப்பத்தின் குடி மக்கள் வியந்து நோக்க அப்படை சென்றது. அவர்களுக்கு அருகே நீரலையில் ஒளி எழுந்து வரதா விரைந்தது.

படகுத்துறையில் இருந்து பாய் விரித்த பன்னிரண்டு பெரும் படகுகள் வரதாவில் எழுந்து சுழியைக் கடந்து விரைந்து வந்தன. அவை அணுகும் இடத்தில் சிசுபாலன் தேர் நிறுத்தி இறங்கினான். மூச்சிரைக்க புரவியில் வந்திறங்கிய ருக்மி “இப்படகுகளில் வரதாவைக் கடப்போம். அவர்கள் காட்டை கடப்பதற்குள் பிடித்துவிட வேண்டும்” என்றான். சிசுபாலன் “நாம் செல்வதல்ல, நம் புரவிகள் செல்ல வேண்டும்” என்றான். “நமக்கு அங்கே விரைவே முதன்மைப் படைக்கலம்...”

விதர்ப்பத்தின் முதற்பெரும்படகு பாய்களை மண்ணிறங்கும் பறவையென பின்சரித்து அலைகளில் நுனி மூக்கு எழுந்து அமைந்து அணுகிவந்து அடிவயிறு மணலில் உரச நீர்விளிம்பு வரை வந்து நின்றது. சிசுபாலன் “விதர்ப்பரே, கணங்களே உள்ளன நமக்கு” என்று கூவியபடி கையசைத்துக் கொண்டு பாய்ந்து படகில் ஏறினான். படகில் இருந்து நீட்டி கரைமேல் படிந்த பாலம் வழியாக அவன் விரைவுத் தேரை ஏற்றினான் பாகன். புரவிகள் குளம்புகள் ஒலிக்க தொடர்ந்து ஏறின.

இரண்டாவது படகு வந்து மணலில் உரசியது. அஞ்சிய எறும்புகள் புற்று புகுவது போல அங்கிருந்த புரவிகளும் வீரர்களும் படகுக்குள் ஏறிக் கொண்டதும் “கிளம்புக!” என கூவியபடி சிசுபாலன் அமரத்திற்கு ஓடி நின்று கை வீசினான். அமரக்காரன் கயிறுகள் பிணைக்கப்பட்ட பெருவளையத்தைச் சுழற்ற இறுகி நின்ற வடங்கள் திசைமாற்றி சுழலத்தொடங்கின. புடைத்த பாய்கள் எழு பறவையென விரிந்தன. படகு அலைகளில் மூக்கு வைத்து ஏறி முன்சென்றது.

குஞ்சுகளை உடலெங்கும் ஏந்தி ஒளி நூலில் தொற்றித் தாவி ஏறும் அன்னைச் சிலந்தியென புரவிகளைச் சுமந்து சென்றன படகுகள். “மறுஎல்லை, மறுஎல்லை” என்று சிசுபாலன் கூவினான். “நமது விற்கள் நாண் ஏறட்டும். ஒன்று பிழைக்காமல் நமது அம்புகள் உயிர்பருக வேண்டும்.” அவனது படை வீரர்கள் தலைக்கு மேல் குரங்கு வாலென வளைந்த இரும்பு விற்களை கால்கட்டைவிரல் பற்றி நிலம் நாட்டி எருமைத் தோல் நாண்களை இழுத்து இறுக்கி தோளிலிட்ட இறகுவிரித்த அம்புக் குவைகளுடன் மறுகணம் இதோ எனச் சித்தமாக இருந்தனர்.

வரதாவின் பெருக்கை கடந்து கரையோர எதிர் ஒழுக்கை அடைந்தும்கூட யாதவப் படகுகள் விரைவழியாமல் சென்று குறுங்காட்டிலிருந்து நீர் அருந்தும் விலங்குகள் போல குனிந்து நீர்ப் பெருக்கை தொட்டு நின்ற மரங்களின் இலைத் தழைப்பை ஊடுருவின. படகின் அலைகளால் நீர்ப்பாவை அலையுற மேலே எழுந்த காற்றில் கிளைகள் அசைய அஞ்சி உடல் சிலிர்க்கும் பெரு விலங்கென குறுங்காடு அவர்களை எதிர்கொண்டது.

நிழல்காட்டுக்கும் தழைக்காட்டுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் யாதவப் படகுகள் தங்களை செருகிக் கொண்டன. பாய்ந்து கரையிறங்கி நாணல் செறிந்த சதுப்பின் ஊடாக நடந்து கரை ஏறிய இளைய யாதவன் திரும்பி ருக்மிணியிடம் “வருக” என்றான். அவள் எழுந்து நீட்டி நின்ற சிறு கிளை ஒன்றை கையால் பற்றி தன் முகத்தில் உரசாமல் விலக்கியபடி இடக்கையால் ஆடை மடிப்புகளைப் பற்றி இறங்கி முழங்கால் அளவு சகதியில் நடந்து இளைய யாதவன் சென்றதனால் வகிடு கொண்டிருந்த நாணல் பரப்பின் ஊடாக அவனை அனுகினாள்.

பின்னர் வந்த படகில் இருந்து பாய்ந்திறங்கி சேற்றைக்கலக்கும் யானை போல் வந்த பலராமர் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து மும்முறை ஊதினார். யாதவர்களின் படகில் இருந்த வீரர்களில் நால்வர் மட்டுமே எஞ்சினர். பலராமரின் தோளில் ஓர் அம்பு குத்தியிருந்தது. அவர் அதை பிடுங்கி வீசிய போது அதன் இரும்பு அலகு அவர் தசைக்குள்ளேயே புதைந்திருந்தது. சங்கொலி கேட்டு தொலைவில் குறுங்காட்டின் ஆழத்தில் இருந்து கனைத்தபடி யாதவர்களின் குதிரைகள் கிளம்பி வந்தன.

காற்று கிளையுலைத்து வந்து சூழ்வது போல அவர்களை வளைத்துக் கொண்ட புரவிகளில் இருந்து இறங்கிய யாதவ வீரர்கள் ஓடிவந்து படகுகளை அணுகினர். அங்கே குருதி வழியக் கிடந்த உடல்களை கண்டதும் திகைத்தனர். “உயிருடன் எவரும் எஞ்சவில்லை” என்ற பலராமர் திரும்பி இளைய யாதவனை நோக்க அவன் அவர்களை நோக்காது ருக்மிணியின் கையை பற்றிக்கொண்டு ஓடிச்சென்று முன்னால் வந்த வெண்புரவியின் மேல் ஏறினான். ஒரு சொல்லும் ஆணையிடாது அதை குதிமுள்ளால் குத்தி கனைத்து பிடரி சிலிர்த்து முன்னங்கால் தூக்கி சீறி எழச்செய்து கிளையிலைப் பச்சைத்தழைப்பை கீறி குறுங்காட்டுக்குள் பாய்ந்தான்.

முள்செறிந்த குறும்புதர் அலையடித்த காட்டுக்குள் இறகு குவித்துச் செல்லும் செம்போத்து போல சென்றது அவனுடைய செம்புரவி. பலராமர் “தொடருங்கள். அவர்கள் தொடர்ந்து வருவது உறுதி” என்று கூவியபடி புரவி ஒன்றில் ஏறிக் கொண்டார். தன் கைகளில் கட்டப்பட்ட இரும்புக் காப்பை அவிழ்த்து வரும்போதே நீரில் கழுவி குருதி களைந்த கதையை தூக்கி ஒரு வீரனிடம் வீசினார். அவன் அதை பற்றி ஒரு புரவியின் இரு பக்கமும் துலாக்களென கட்டினான். அப்புரவி பலராமருக்கு அருகே விரைந்தது. புரவிப்படை புதர்களை விலக்கி தாவி ஊடுருவி விரைந்தது.

ருக்மிணி அக்கணம்வரை தானிருந்த எண்ண அலைகளில் இருந்து இறங்கியவள் போல சூழலை உணர்ந்து “எங்கிருக்கிறோம் நாம்?” என்றாள். “மாளவத்தின் எல்லை நோக்கி செல்கிறோம். அது நம் நட்பு நாடு. அங்கு சென்றதும் விதர்ப்பத்தின் படைகள் நம்மை தொடர முடியாது” என்றான் இளைய யாதவன். “இன்னும் எத்தனை தொலைவு?” என்றாள். இளையவன் சிரித்து “என்னை நீ அறிவதற்குப் போதுமான தொலைவு” என்றான். என்ன சொல்கிறான் என்று திகைத்து அவள் தலை தூக்க சிரிக்கும் அவன் விழிகளைக் கண்டாள்.

அவன் கை அவள் வயிற்றை சுற்றி உந்திச் சுழியில் சுட்டு விரல் அழுந்தி சற்றே சுழிக்க அவள் கைகள் நடுக்கத்துடன் அதை பற்றி உடல் திமிறி “என்ன இது? வீரர்கள் சூழ்ந்திருக்கும் புரவியின் மேலே?” என்றாள். அவன் “புரவி முதுகும் உரிய முறையில் மஞ்சமாக முடியும்” என்றான். அவள் ”யாதவரே, இது முறையல்ல” என்று திமிறினாள். ”காமத்தில் முறையென்று ஒன்றுண்டா?” என்றான் இளைய யாதவன். “எதற்கும் முறையென்று ஒன்றுண்டு என்று பயின்ற அரசகுலத்தவள் நான்” என்றாள். “மீறுவதெப்படி என்று என்னிடம் கற்றுக்கொள்” என்றான் இளைய யாதவன்.

அவள் தன்னை வளைத்த அவன் கையை ஓங்கி அறைந்தபடி “என்னை இறக்கிவிடுங்கள்… இங்கு நான் இறங்கிக் கொள்கிறேன். எவருக்கும் காமக்கிழத்தியாக நான் வரவில்லை” என்றாள். “என் நெஞ்சமர்ந்த திருமகள் என்றே வந்தாய். பிறகென்ன?” என்றான் இளைய யாதவன். “நீ கொண்டுள்ள இவ்வுடலே என் நெஞ்சம் அல்லவா?”

“விதர்ப்பத்தின் பெரும் படகுகள் விரைவில் நம்மை எட்டி விடும். நீங்கள் எண்ணுவது போல் எளிதில் தப்பி மாளவம் சென்று விட முடியாது” என்றாள் ருக்மிணி. “ஆம், அறிவேன். விதர்ப்பம் வஞ்சம் கொண்டுள்ளது. எனவே அதன் விரைவு முதிர்ந்துள்ளது” என்றான் இளைய யாதவன். “கூடிப்போனால் இன்னும் ஒரு நாழிகைக்குள் விதர்ப்பத்தின் படைகளும், சேதி நாட்டரசனின் துணைப்படைகளும், சிற்றரசர்களின் படைகளும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.”

ருக்மிணி முற்றிலும் திரும்பி அவன் தோள்களை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு “என்ன சொல்கிறாய் யாதவனே?” என்றாள். அவன் விழிகளும் உதடுகளும் சிரிப்பதற்கென்றே செதுக்கப்பட்டவை போல் இருந்தன. “நமக்கு இரு நாழிகை நேரம் இருக்கிறது. இப்புரவி மேல் ஓர் இனிய வாழ்க்கை நிகழ்ந்து கனவென்றாக போதிய காலம் உள்ளது” என்றான். “அய்யோ என்ன இது? என்ன சொல்கிறாய் இளையோனே? நீ விளையாட்டு ஓயாத சிறுவன் என்று சூதர் சொல்லில் அறிந்தேன். சித்தம் பழகாத பேதை என்று அறிந்திருக்கவில்லை” என்றாள். “பேதை என்பவன் பெருங்களியாட்டில் இருப்பவன்” என்றான்.

அவள் செவிகூர்ந்து “இளையோனே, புரவிக்காலடிகளைக் கேட்கிறேன். நம்மைச் சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் வீரர்கள்” என்றாள். அவன் அவள் புறங்கழுத்தின் புன்மயிர்பிசிறலை நாவால் சுழற்றி கடித்து இழுக்க அவள் “ஆ” என்றாள். ”நம்மைச்சூழ்ந்து விழிகள் இளையோனே. என்னை நாணிலியாக்காதீர்” என்றாள். “இவர்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே விழிகளனைத்தும் முதுகில் இருக்கும்” என்றான் இளைய யாதவன். “நீ அஞ்சவில்லையா?” என்றாள். “நான் அஞ்சக்கூடியதும் நானே” என்றான். அவள் இடைவளைத்து முலைகளை முழங்கைகளால் அழுத்தி திரும்பிய கன்னத்தில் முத்தமிட்டான்.

புரவி விரையும் அதிர்வில் உடல் நீர்த்துளி செறிந்த பூக்குலையென நலுங்க, காற்று முகத்தை வருடி குழலை அள்ளி பறக்கவிட, ஆடையெழுந்து எழுந்து சிறகடிக்க மண் விட்டு விண்ணில் எழுந்து திசை நோக்கி உதிர்பவள் போல் சென்றாள். மரக்கிளைகள் பாய்ந்து வந்து அவள் முன் வணங்கி விரிந்தன. கிளைகள் நடுவே விழித்த வானம் ஒளி வழிவது போல் கடந்து சென்றது. ஒவ்வொரு இலை நுனியும் பச்சைப் பெருக்கென காட்டை காணும் காட்சி கனவன்று ஒரு கணமும் விழிப்பென்று மறுகணமும் மாயம் காட்டின.

என்னுள் எழும் இவ்வச்சம் நான் அறிந்திலேன். அதை சுழித்து தன்னுள் ஆழ்த்தி கொப்பளித்ததும் இக்களிவெறி என்னுள் உள்ளதென்று எவ்வகையிலும் நான் அறியேன். இன்று என்னை கண்டுகொண்டிருக்கிறேன். என்னுடலில் என் விரைவில் என் துணிவில். இந்த வானும் இந்த மண்ணும் என் காலடியில் சுருண்டு மயங்கும். என்னை அணைத்து ஏந்தி விண்ணில் செல்லும் இந்த நீலமுகில் வண்ணன் மட்டுமே மெய். காலமழிய விழிமயங்க இங்கிருப்பேன் போலும். இனி என்பது இல்லை என்றாக இக்கணமே எப்போதுமென நீளும் போல.

எண்ணியிராதது எல்லாம் அடிகலங்கி சுழித்து எழுந்து மேலே வந்து குமிழியிடும் இப்பரப்பே நானா? என்னுடையதென்று எண்ணுகையிலே நான் நாணும் இவையனைத்தும் நானா? எஞ்சியதென்று நான் விட்டுச் செல்லும் அங்கிலாத ஒன்று. இப்புவியில் இதுவரை பிறந்து மலர்ந்து மதமூறி மங்கையென்றான அனைவரும் கொண்ட கனவனைத்தும் குவிந்து இங்கிருக்கின்றன.

உண்பதற்கென்று பிறந்த வாய் மட்டுமே கொண்ட நீர்வாழ் சிற்றுயிர் நான். இப்புவியையே சிறு கொப்புளம் என்றாக்கி செரித்த பின்னும் ஏங்கும் பேரிருள் நிலம். விண்மீன்கள் நிறைமிகுந்து வந்து விழுந்து மறையும் இருளின் பெரும் சுழி.

என் உடலில் முளைக்கின்றன பல்லாயிரம் களங்கள். பலகோடி கொலைப் படைக்கலங்களை ஏந்தியுள்ளேன். விழிமணி ஆரம் கொண்டு காலம் சமைக்கிறேன். கருமணி ஆரம் கொண்டு இருள் சமைக்கிறேன். தழலென எழுந்த சிம்மம் ஏறியுள்ளேன். வெண் பகலென எழுந்த விடை ஏறியுள்ளேன். இரவென குளிர்ந்த எருமை மீது ஏறியுள்ளேன். எட்டு திசை வானுமென இங்கிருக்கிறேன்.

அவன் இதழ் வந்து அவள் புறங்கழுத்தின் மயிர்ப்பிசிறை முத்தமிட்டது. அலை புரண்டது கடல். உயிர் கொண்டு நெகிழ்ந்தது மலைப்பாறை. தோள்களை இடையை தொட்டுச் சென்றது கனலென்றான கை. கைதொட்டு அவள் உடலில் இருந்து உடலென்றான தெய்வங்களை எழுப்பின. முகிழ்த்தெழுந்தன மலைகள். ஊறிப்பெருகின நதிகள். அலை புரண்டு விழித்தன பெருங்கடல்கள். பொன் பதக்கத்தில் பெயர்ந்த மணி மீண்டு வந்து அங்கு அமைவது போல அம்மார்பில் அமைந்தாள். புரவி மீது இருந்தவர் என்றென்றுமென ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைக்கும் அருவும் திருவும்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1

திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறு கூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது  வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதர் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்லியரின் மகள் ஹைமவதியை மணம் கொள்ள அவனுக்கு உடன்பாடுள்ளதா என்பதை அறிவிக்கவேண்டுமென்று கோரியிருந்தார்

மூன்றுநாட்களுக்கு முன்பு சல்லியரின் மணத்தூது பாஞ்சாலத்தை எட்டியிருந்தது.  எட்டுமங்கலங்களுடன் வந்த ஏழு அவைத்தூதர் துருபதரைச் சந்தித்து சல்லியரின் சொற்களை சொன்னார்கள். பாஞ்சாலமும் மத்ரமும் இயல்பாகவே இணையவேண்டிய நாடுகள், இரண்டுமே அஸ்தினபுரியின் இரு கைகளெனத் திகழவேண்டியவை என்றிருந்தார் சல்லியர். இளவரசி ஹைமவதியின் இயல்புகளை சூதர்பாடியதும் நிறைவளிப்பதாக இருந்தது என்று துருபதர் சொல்லியிருந்தார்

திருஷ்டத்யும்னன் சுருளை பிறிதொரு முறை படித்துவிட்டு அதை அருகே இருந்த சுடரில் பற்றவைத்து சாம்பலாக்கினான்.  உதிர்ந்த கரிச்சுருள்களை குவளை நீரில் இட்டுவிட்டு நிலைகொள்ளாது எழுந்து அறைக்குள் நடந்தபின் சாளரத்தருகே சென்று வெளியே ஆழத்தில் கரை மீது நுரைக்கோடென படிந்த அலைகளில் தொடங்கி விழி தொடும் எல்லையில் வான் விளிம்பாக நின்ற துவாரகையின் நீலக்கடலின் அலைகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏவலன் வந்து வாசலில் நிண்று யாதவர் என்று அறிவித்ததும் நீள் மூச்சுடன் வரச்சொல் என்றான்.

அவ்வாணை எழுவதற்குள்ளேயே சாத்யகி காலடிகள் ஒலிக்க “காலைத்துயிலா? இரவில் நெடுநேரமாயிற்றோம்” என்று உரக்கக் கேட்டபடி  உள்ளே வந்து பீடத்தில் அவன் மேலிருந்த சுவடியை நோக்கி ”இன்றென்ன காவிய வழிபாடா ?” என்றான்.  திருஷ்டத்யும்னன் புன்னகைத்து  “ஆம் உங்கள் இளைய யாதவரின் லீலைகள் தான்” என்றான்.

பீடத்தில் கிடந்த  சுவடிக்கட்டை  கையிலெடுத்து புரட்டிய சாத்யகி ”அஷ்டாத்யாயி இனிமையான சொல்தேர்வுக்காகப் புகழ் பெற்றது. இங்குவந்த நாட்களில் மணிநீலக்கோட்டத்தில் சுப்ரர் என்ற பண்டிதர் பன்னிரண்டுநாட்களாக இதைப்பாடம்சொன்னார். இளைய யாதவரின் எட்டு துணைவிகளுக்கும் இணையான இடம் கொடுக்கும் நூல் இது ஒன்றே என்பார்கள் ” என்றான். திருஷ்டத்யும்னன் சாளரத்துக்கு முதுகு காட்டி திரும்பி நின்று சிரித்து ”ஆம் எட்டு திருமகள்களை இளையவர் மணந்ததாக காட்டுகிறார்” என்றான்

சாத்யகி நினைவுகூர்பவனைப்போல ஏடுகளைப் புரட்டியபடி ” முதலில் ஆதி லட்சுமியாகிய விதர்ப்பினி.  அன்னலட்சுமி என்று அவளை சொல்கிறார்” என்றான். “அவளை நேரில் பார்த்தபோதும் அதையே எண்ணினேன். விளைந்த கதிர்போலிருந்தாள்” சாத்யகி நகைத்து ”அன்னலட்சுமி என்பது உண்மைதான். இன்று இந்நகரில் உணவறை அனைத்தும் விதர்ப்ப அரசியின் ஆணைப்படியே இயங்குகின்றன. அவள் வந்து தன் கைகளால் உணவளிப்ப்தை பெரும் கொடையென இம்மக்கள் எண்ணுகிறார்கள் ” என்றபின் மேலும் சிரித்தபடி ”கவிஞர் சமைத்தளிக்கும் முகங்களை தங்களுக்கென சூடிக்கொள்வதே மானுடருக்கு எளிதானது” என்றான்.

“இளைய யாதவரே கூட அப்படித்தானோ ?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி விழிமாறுபட்டு “இல்லை பாஞ்சாலரே, ஒவ்வொரு முறையும்  இக்கவிஞர் காணாத ஒன்றை நோக்கி  அவர் எழுவதை பார்க்கிறேன் ”என்றான் ”அவர் ஆடும்சிறுகுழவி போல. அதை நம்மால் வரையறுக்கவே முடியாது  அவை செல்லும் உச்ச எல்லை என நாம் எண்ணுவதற்கு அடுத்தநிலையிலெயே எப்போது நாம் அவற்றைக் காண முடியும். மைந்தரை சற்றும் புரிந்து கொள்ளாதவர் அன்னை தான் என்பார்கள் ”என்றான்.

திருஷ்டத்யும்னன் “இரண்டாவது அரசி தனலட்சுமி என்கிறார் .செல்வத்திருமகள்  ஏன் எளிய யாதவர் குடியை நாடி வந்து பிறந்தாள் என விளக்குவதற்கு எட்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்” என்றான். சாத்யகி ”ஆம். எட்டும் இன்றும் எங்கள் குடிகளில் பாடப்படுகின்றன. கன்றுபெருகி கலம்நிறையச்செய்யும் பாடல்கள் அவை என அவை என்கிறார்கள்.” என்றான். “ஆனால் அவர் சொல்வது எங்களுக்குள் உள்ள நம்பிக்கைதான். கால்நடைகளன்றி பிறிதெதையும் செல்வங்களே அல்ல என்கிறார். மானுடர் இப்புவியில் நுகரும்  பொருட்களில் காற்றும் நீரும் மண்ணும்  தெய்வங்களுக்கு உரியவை. மணியும் பொன்னும் மண்மகள் அளிப்பவை.. எனவே அவற்றை எந்த மானுடனும் தெய்வங்களுக்கு கொடையளிக்க முடியாது ”

“மானுடன் இங்கு பெருக்கி எடுக்கும் பெருஞ்செல்வம் என்பது கால்நடைகள் மட்டுமே . கதிர்மண்கள் நாளவனாலும் நிலமகளாளும் இணைந்து சமைக்கப்படுபவை. கால்நடை மட்டுமே முற்றிலும் மானுடனால் வளர்த்து நிறைக்கப்படுவது. அதுதான் ஆகவே தான் தொன்று முதலே தெய்வங்களின் மானுட படையல் என்பது கன்றும் கால்நடைகளும் என வகுத்தனர். எண்ணி நோக்கும் போது உகந்ததென்றே தோன்றுகிறது அது”. என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “பிரபாகரர் யாதவ குலத்துதித்தவரோ?” என்றான். சிரித்தபடி சாத்யகி “ யாதவரை விட பசுக்களை விரும்புபவர் வேதியர் அல்லவா ?” என்றதும் திருஷ்டத்யும்னன் வெடித்து நகைத்தான். சாத்யகி  நூலைப்புரட்டியபடி “மூன்றாவது அரசியை நேரில் கண்டவர்கள் அவள் கஜலட்சுமி என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்வார்கள்” என்றான். சிரிப்பை அடக்கமுடியாமல் அருகே வந்தபடி ”ஆம், உண்மை” என்று சிரித்தான் திருஷ்டத்யும்னன் .

“பிற அரசியரை நேரில் காணும்போது அவர்கள் பிரபாகர் அளித்துள்ள பட்டங்களுக்கு முற்றிலும் உரியவர்கள் என்றே தோன்றுகிறது அது நம் உள்ளங்களை இக்காவியங்கள் நெறிப்படுத்தியிருப்பதனால் இருக்கலாம். விழிகளை ஆள்வது உள்ளத்தில் ஓடும் மொழியின் பெருக்கு என்பார்கள்” என்றான் சாத்யகி. ”அதையே நானும் எண்ணினேன்” என்றான் திருஷ்டத்யும்னன். ”இந்நகர்போல காவியமாக ஆகிக்கொண்டே இருப்பது பிறிதொன்றில்லை. இளையயாதவர் ஒன்றை சொல்லி முடிக்கையில் அது நேராகச் சென்று காவியத்தில் அமர்ந்துகொள்கிறது என்று படுகிறது”.

சாத்யகி சிரித்து “இங்கே வீதிகளில் விழிநட்டு நடக்கவேண்டும் என்பார்கள். விழுந்தால் காவியங்களில் சிக்கிக்கொள்வோம். அங்கிருந்து மீள்வது அரிது” என்றான். “நாம் அங்கே நம்மை ஆடியில் பார்த்துக்கொண்டால் திகைத்து அலறிவிடுவோம். நமக்கு கூருகிர்களும் வல்லெயிறுகளும் முளைத்திருக்கலாம். நமது பற்கள் வைரக்கற்களாக மாறியிருக்கலாம்” திருஷ்டத்யும்னன் “நாமறியா கன்னியருக்கு நாம் கொழுநர்களாகி விட்டிருப்போம் இல்லையா?” என்றான். “விளையாட்டில்லை பாஞ்சாலரே, இங்குள்ள எவருக்கும் இறந்தகாலம் என்பது அவர்களின் நினைவு அல்ல. அந்நினைவாக மாறிப்படிந்திருக்கும் காவியங்களே” என்றான்.

“ஒரு விந்தையான உணர்வாக அது உடனிருக்கிறது” என்றான் திருஷ்டத்யுய்ம்னன் “நான் காணும் இந்த பெருமாளிகைகள், சுழல்வடிவத்தெருக்கள், உச்சியில் எழுந்த பெருவாயில், அதன்காலடியில் விரிந்த பெருந்துறைமுகம்... இவையெல்லாம் உண்மையில் பருவடிவப்பொருட்கள்தானா? வெறும் மொழியாலமைந்தவையா? இவ்வழகுகள் கவிஞன் சமைத்தச் சொல்லணிகளா? சிலசமயம் சென்று தொட்டுப்பார்க்கத்தோன்றும். ஆம், இவை கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும்தான் என்று சொல்லிக்கொள்வேன். மறுகணம் காவியத்திலும் கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும் கடினமானவைதானே என நினைப்பேன்”

சாத்யகி “விழித்தெழமுடியாத கனவில் வாழ்வதென்பது ஒரு நல்லூழ் பாஞ்சாலரே” என்றான். “அங்கே புறவுலகில் நிகழ்பவை அனைத்தும் மானுடர் அறியவொண்ணா பேரொழுங்கில் இயங்குகின்றன. ஆகவே அவை எப்போதும் ஒழுங்கற்றவை என்று உளம்மயங்கச் செய்கின்றன. ஒவ்வொன்றும் பொருளற்றிருக்கிறது. சிதறிக்கிடக்கிறது. இந்தக்காவியப்பெரும்பரப்பில் அனைத்தும் அணிகலனில் மலர்வரிகளும் மணிகளுமென சீராக பொருந்தியிருக்கின்றன. பொருளற்றவை என ஏதும் இங்கில்லை. இலக்கணத்தில் அமைந்த ஏழுபொருள்கொண்ட அழகிய சொற்களால் ஆன வானமும் மண்ணும் மாளிகைகளும் மானுடரும்...”

சாத்யகி “இதன் நாயகன் அவர். இவை அவரது ஆடல்கள். ஆனால் அவர் மட்டும் இக்காவியத்திற்கும் அப்பால் எங்கோ இருக்கிறார்” என்று தொடர்ந்தான். உடனே புன்னகைத்து “ஆனால் அதையும் முன்னரே காவியத்தில் சொல்லிவிட்டார்கள். மண்ணில் ஆழ அடிபரப்பி நின்றிருக்கும் மலைகளை நிமிர்ந்து நோக்கினால் அவை முகில்சூடி விண்ணின் பகுதியாக நின்றிருக்கக் காணலாம் என”. திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான்

சற்றுநேரம் எண்ணங்களில் இருவரும் வழிதவறினர். சாத்யகி மீண்டும்சுவடிகளை எடுத்து  புரட்டியபடி ”இளையவனின் எட்டுத்துணைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒரு அத்தியாயம் ...பெரும்பாலான நூல்களில் சத்தியபாமையும் ருக்மணியுமன்றி பிறர் வெறும் பெயர்களாகவே எஞ்சுகிறார்கள் . ஏனென்றால் யாதவர்களின் பாணர்களோ ஷத்ரியர்களின் சூதர்களோ பாடியவை அவற்றின் மூலவடிவங்கள். பிரபாகரர் ஒவ்வொருவரின் கதையையும் இணையாக அமைத்திருக்கிறார் ” என்றான்.

” நான்காவது அத்தியாயம் காளிந்தி .யமுனைக் கரையின் மச்சகுல சிற்றரசர் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் பிறந்தவர் .கனகை  என்று தன் அன்னையால் அழைக்கப்பட்டார் .யமுனையின்  நிறம் கொண்டவராதலால் காளிந்தி என்றனர் குலப்பாடகர். யமுனைக் கரையிலிருந்த களிந்தகம் என்னும் சிறு நாணல் தீவில் ஏழு வருடங்கள் தவமிருந்து இளையவனை அடைந்தார் .யமுனையிலெழுந்த மீன் கணம் ப்போல் மைந்தர்கள் கொண்டவர் என்பதனால் அவரைச் சந்தான லட்சுமி என்கிறார்  பிரபாகரர். மைந்தர்செல்விக்கு சங்குசக்கரக்குறி அடிவயிற்றில் என்று நிமித்திகர் சொல்கிறார்கள்”

“ஐந்தாமவள்  நக்னஜித்தி. கோசல நாட்டு மன்னர் நக்னஜித்துக்கு  முதல் மகள் எனப்பிறந்தார். சத்யை என்று கௌசல்யை என்றும் பெயர் கொண்டவர். ஏழு பெருங்காளைகளை அடக்கி மணத்தன்னேற்புப் பந்தலில் இளைய யாதவரால் வெற்றி கொள்ளப்பட்டவர். இரு புயங்களிலும் சங்கும் சக்கரமும் அமைந்தவர்.  அவரை  விஜயலக்ஷ்மி என்கின்றார் பிரபாகரர்” என்று சாத்யகி வாசித்தான். நிமிர்ந்து “இங்கே வெற்றிக்கான வேள்விகளில் அமர்பவள் நக்னஜித்தியே..” என்றான்.

சுவடியைப்புரட்டி “ ஆறாவது அரசி மித்ரவிந்தை சுதத்தை என்றும் சைப்யை என்றும் பெயர் கொண்டவள் அவந்தி நாட்டு அரசர் ஜயசேனருக்கும் ரஜதிதேவிக்கும் பிறந்த மகள். தான்யலட்சுமி  என்று அவரை  பிரபாகரர் கொண்டாடுகிறார் . இங்கு நிலம் ஒருக்கும் நாளிலும் முதற்கதிர் அறைசேர்க்கும் விழவிலும் கொலுவமர்பவர் அவரே. இரு கன்னங்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர்” என்றான் சாத்யகி “மத்ரநாட்டு பிரஹத்சேனரின் மகள் லக்ஷ்மணை ஏழாவது அரசி. சாருஹாசினி என்று அவளை சூதர் வழிபடுகிறார்கள். வீணைக்கலை தேர்ந்த அவரை இங்கு வித்யாலட்சுமி என்பது மரபு. அனைத்து கலைவிழவுகளிலும் அன்னையே முதல்வி”

சாத்யகி தொடர்ந்தான் “ எட்டாவது அரசி கேகய நாட்டு மன்னர் திருஷ்டகேதுவுக்கும் சுருதகீர்த்திக்கும் மகளாகப்  பிறந்தாள். அன்னை கைகேயி  இரு தோள்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர். அவரை வீரலட்சுமி என்று அழைக்கிறார்  பிரபாகரர். படைக்கலப்பூசனையிலும் பலிநிகழ்வுகளிலும் அன்னையே கொற்றவை என வந்து பீடம்கொள்கிறார்” திருஷ்டத்யும்னன் “எட்டு அன்னையர். வாழும்போதே கோயில்கொண்டவர்கள்” என்றான் “காவியங்கள் அவர்களின் வண்ணநிழல்கள் என்று தோன்றுகிறது. காலம் சரியச்சரிய அவை நீண்டு வளர்கின்றன”

சாத்யகி புன்னகைத்தான் . திருஷ்டத்யும்னன் திரும்பி மீண்டும் தொலைகடலை நோக்கத்தொடங்கினான். ஏட்டுக்கட்டை மூடி அடுக்கிக் கட்டி பீடத்தில் வைத்தபடி சாத்யகி அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தான்.பின்னர்  “ இன்று தங்களை பாலைவனத்தின் புரவியாடல் ஒன்றுக்கு அழைத்து செல்லலாம் என்று வந்தேன்” என்றான்

திருஷ்டத்யும்னன் எண்ணம் கலைந்து காற்றில் பறந்த குழலை சிறகாக விரித்து தோள் மேல் சரித்தபடி “ இல்லை யாதவரே, இன்று பாஞ்சாலத்திற்குத் திருமுகம் ஒன்று அனுப்பும் பணி உள்ளது “  என்றான். அவன் மேலே சொல்ல விழைகிறானா எனபது போல் சாத்யகி நோக்க ”தந்தையின் திருமுகம் வந்துள்ளது. சல்யரின் மகளை நான் மணக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்” என்றான். ”சல்யரின் தூது தேடி வந்துள்ளது. பாஞ்சாலத்தின் தகுதிக்கு உகந்தது  அவ்வுறவு. சல்லியர்  பாண்டவர்களுக்கு மிக அணுக்கமானவர்.பாஞ்சாலத்தின் படைக்காவலுக்கும் மத்ர நாட்டின் உதவி இன்று தேவை”

சாத்யகி தலையசைத்தன்.  “அஸ்வத்தாமா அருகிருக்கும் வரை ஒரு கணமும் பாஞ்சாலம் பாதுகாப்புடன் இல்லை. அஸ்தினபுரியோ    தொலைவில் உள்ளது. மலை இறங்கி வரும் படைகளை எதிர் கொள்ளவும் அஸ்தினபுரியின் படைகளுக்கு பயிற்சி இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன் “ மத்ரம் பால்ஹிக நாடுகளில் ஒன்று. பால்ஹிகத்தின் உறவென்பது அனைத்து மலை நாடுகளையும் அருகணையச்செய்யும். தந்தை சல்யரின் மகளை அவரே உவந்திருப்பாரென்றே எண்ணுகிறேன் .மத்ரம்  மகள்கொடைக்கென தூது அனுப்புவதை எவ்வண்ணமோ தந்தை தூண்டியிருக்கக் கூடும் ”

சாத்யகி “அரசுசூழ்தலில் அது முறைதானே?” என்றான். திருஷ்டத்யும்னன் ”பாஞ்சால அரசர்கள் தங்கள் குடிகளுக்குள்ளேயே மணம் கொள்ளவேண்டுமென்ற நெறி நெடுங்காலம் எங்களை தனிமைப் படுத்திவிட்டது. என் தமையன்கள் அனைவருமே எங்கள் ஐங்குடியிலேயே பெண் கொண்டிருக்கிறார்கள். நான் அதைக் கடந்து பெண் கொள்வதென்பது பாஞ்சாலம் தன் வாயிலொன்றை திறப்பது . இத்தருணத்தில் அது இன்றியமையாதது .பாஞ்சாலத்தின் மணி முடி எனக்கில்லை என்பதனால் தகுதி உடைய பெருமன்னர் மகள்கள் எவரையும் நான் கோர முடியாது மத்ர நாட்டு இளவரசியைப்போல் ஒரு பெண்ணை நான் அடைவது முற்றிலும் அரிது” என்றான்.

சாத்யகி ”எனில் இத்தனை சிந்திக்க ஏதுள்ளது? மணம் கொள்ள சம்மதம் என்று செய்தி அனுப்ப வேண்டியது தானே?” என்றான். “ ஆம் எண்ணப்புகுந்தால் அத்தனை  சொல்நெறிகளும்  ஆம் என்ற செய்தியை நோக்கியே என்னை செலுத்துகின்றன. ஆனால்...” என்றான். பின்பு “ சில சமயம் காட்டில் நமது குதிரை தயங்கி நின்றுவிடும் யாதவரே. சுற்றி நாம் எதையும் காணமாட்டோம் புரவி அங்கே நிற்பதற்கு அடிப்படை என ஏதும் நம் விழிக்கோ சித்தத்திற்கோ சிக்காது .அதை தட்டி ஊக்குவோம். கடிந்து ஆணையிடுவோம் . சினம்கொண்டு குதி முள்ளாலும் சவுக்காலும் புண்ணாக்குவோம். உடல் நடுங்கி விழி உருட்டி மூச்சு சீறி அசையாமல் நின்றுவிடும்”

“புரவிக் கலையறிந்தவ்ர்கள் சொல்வார்கள் புரவி அறிந்ததை ஒரு போதும் மானுடன் அறியமுடியாது என்று. புரவி திரும்பாத திசைக்கு அதைச் செலுத்துவது இறப்புநோக்கி செல்வது” என்றான்  “இப்புள்ளியில் என்னால் நெஞ்சு  நிலைத்துவிட்டதை உணர்கிறேன். சித்தச் சவுக்கால்  அடித்துக் கொண்டே இருக்கிறேன்”

சாத்யகி சற்று தயங்கி பின் முடிவெடுத்து  “பாஞ்சாலரே, உங்கள் தோழனென நான் சொல்லக்கூடும் என்றால் உறுதியாக இதை உரைப்பேன் .தாங்கள் ஒருபோதும்  அந்த விறலியை மணம்கொண்டு அரசுகட்டிலில் அமர்த்த முடியாது.  அரசகுடியினர் அதை ஏற்கப்போவதில்லை. தங்களுக்கு அவைதோறும் அவமதிப்பே எஞ்சும்.” என்றான் “அரசகுடிப்பிறந்தோர் அவர்களின் குடிக்கு கட்டுப்பட்டோர் எண்ணத்திலும் செயலிலும் தங்கள் மக்களின் நலம் மட்டுமே நாட வேண்டும்  அதற்கு உகந்ததன்றி பிறிதெதையும் செய்யக்கூடாது. இத்தருணத்தில் அஸ்தினபுரியின் அவையில் உங்கள் இடம் என்ன என்பதும் மலையரசுகளில் நிரையும் உங்கள் தோழர்கள் எவரென்பதும் அன்றி எதுவுமே வினாவல்ல. எப்படி நோக்கினா;லும் மத்ர நாட்டு இளவரசியை மணம் புரிவதன்றி பிறிதெதுவும் உகந்ததல்ல”

“ஆம் அதை உணர்கிறேன் ” என்றான் திருஷ்டத்யும்னன். “அன்று என்று சொல்ல ஒரு சொல்லேனும் என்னிடமில்லை. நான் கற்ற அனைத்துகல்வியும் அதையே ஆதரித்து நிற்கிறது. ஆயினும் யாதவரே ஒரு வேளை இப்புரவி அஞ்சி நிற்பது பாஞ்சாலத்தின் நலன் கருதியோ என்னவோ? என் அற்யாவிழைவை மட்டுமே இது சுட்டுகிறது என்று எப்படி கொள்ளமுடியும்? நாமறியாத எதிர்காலமெதையோ அது தன் நுண்ணுணர்வால் உய்த்திருக்கலாமல்லவா?” சற்றே சலிப்புடன் சாத்யகி “ இது சொல் விளையாட்டு இப்படி தன்னை  எவ்வகையிலும் நிறைவுறுத்திக் கொள்ள அறிவுடையோரால் முடியும்” என்றான்

” இன்றே நான் தந்தைக்கு சொல்லனுப்ப வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன் “ மிஞ்சினால் நாளை அதற்குமேல் எனக்கு காலமில்லை ஆனால் என் நெஞ்சு குழம்பிஇருக்கிறது. இத்தருணத்தில் அச்சொல்லை அளிக்க என் அகம் துணியவில்லை. இன்னும் ஒரு மாதம், இம்முடிவை ஒத்திப்போடுவேனென்றால் என் அகம் சற்றுத் தெளியும் .ஒவ்வொன்றும் குழம்பி அலையும் ஒவ்வொன்றும் பிரிந்து அமையும் .அதன் பின் இன்னும் தெளிவாக முடிவெடுக்க முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். “ தாங்கள் என்னிடம் கோருவதென்ன?” என்றான் சாத்யகி .

திருஷ்டத்யும்னன். ”ஒரு மாதம் இம்மண நிகழ்வை ஒத்திப்போடுவதற்கான வலுவான ஒரு சொல்.அதுமட்டுமே” என்றான். ”என் எளிய தயக்கங்களோ ஐயங்களோ எந்தையை நிறைவிக்காது. அவர் மேலும் சினம் கொள்ளவே வழி வகுக்கும் இன்று வந்த ஓலையிலிருந்தது அழைப்பு அல்ல ஆணை .நான் இங்கு வந்த பணி முன்னரே முடிந்தும் விட்டது மைந்தனென அவ்வாணையை ஏற்று நான் கிளம்பியாக வேண்டும்” என்றான்.

சாத்யகி ”அதை நாம் இன்று மாலைக்குள் கண்டடைவோம். இவ்வகை இக்கட்டுகளுக்கு சற்று நேரமளிப்பதே உகந்தது “ என்றான். கைதூக்கிச் சோம்பல் முறித்து “பாஞ்சாலரே நீர் வரவில்லை என்றால் நானும் புரவியாடலுக்கு செல்ல விரும்பவில்லை .இன்று சில அலுவல் பணிகளை முடிக்கலாமென எண்ணுகிறேன் விதர்ப்ப அரசி அரசுமன்று சூழும் விழவு நாளை நிகழவிருக்கிறது . மாளவரும் கூர்ஜரரும் சைப்யரும் மத்ரரும் தங்கள் முதன்மை அமைச்சர்களை தூதாக அனுப்பியிருக்கிறார்கள் . ஏழு சிற்றரசர்கள் நேரில் வந்துள்ளனர். ஒவ்வொருவரையும் எதிர் கொண்டழைத்து முறைமை செய்து அவர்களுக்குரிய மாளிகைகளில் அமர்த்தும் பணியையே சென்ற இரண்டு நாட்களாக இரவும் பகலுமென இயற்றி வருகிறேன். சற்று உளம் திருப்பி ஓய்வு கொள்ளலாமென்று இந்தப்புரவி ஆடலை ஒருங்கமைத்தேன்” என்றான்.

“சிற்றரசர்கள் யார் யார் வந்துள்ளனர்?” என்றான் திருஷ்டத்யும்னன் . “பன்னிரு சிற்றரசர்களால் சூழப்பட்டது யாதவக் குடி அவர்களில் எழுவர் நேரில் வந்துள்ளன்ர் ஐவர் தூதுக்கு மறுமொழி அளிக்கவில்லை அவர்கள் மகதத்திற்கு தூதனுப்பியுள்ளனரா என்று நம் ஒற்றர்கள் நுணுகி நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு வராதவர் அனைவரும் எதிரிகளே என்பது தான் அக்ரூரரின் நிலை. யாதவரோ போர் என ஒன்று நிகழ்வதற்கு முந்தைய கணம் வரை எவருமே எதிரிகளல்ல என்ற எண்ணம் கொண்டவர் மந்தண அறையில் ஒவ்வொரு நாளும் சொல்லாடல் சுழன்று கொண்டிருக்கிறது ”என்றான் சாத்யகி

“மன்று சூழ்தலுக்கான உடனடித்தேவை என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன் ”ஒவ்வொரு நாளும் முகில் கறுத்துச் சூழ்வது போல மகதத்திற்கும் இளைய யாதவருக்குமான பூசல்கள் வலுப்பெற்று வருகின்றன. காசி நாட்டு எல்லைகுள்  யாதவர் படை நுழைந்ததும் அதற்கு முன் மகதத்தின் எல்லைகளை நோக்கி நமது படைகள் அணி நீக்கம் செய்ததும் ஜராசந்தரை சினம் கொள்ளவைத்துள்ளது. மதுராவிலிருந்து மதுவனம் வரைக்கும் அனைத்து யாதவ நகர்கள் அருகிலும் மகதத்தின் படை  புதிய நிலைகளாக வந்து அமைந்துள்ளது” சாத்யகி சொன்னான் “நாளெழும்போதெல்லாம் கடுமையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன”

” ஓங்கிய கதாயுத்துடன் நம் கோட்டை வாசலில் வந்து நின்றிருக்கிறார் ஜராசந்தர் என்று அக்ரூரர் சொல்கிறார்” என சாத்யகி தொடர்ந்தான் “எக்கணமும் போர் வெடிக்கும் என்கிறார்கள் அமைச்சர்கள். இளைய யாதவரோ எதையும் எண்ணாதவர் போல் தன்னியல்பில் இசையிலும் போர் விளையாட்டிலும் ஈடுபட்டிருக்கிறார். மூத்த யாதவருக்கு போரென்பது போர்முரசு முழங்கும் கணத்தில் தொடங்குவது மட்டுமே. துவாரகை அதை வெல்ல இப்புவியில் ஒரு நாடுண்டோ என எண்ணியுள்ளது .இந்நகரில் புரவியில் உலாவுகையில் பாரத வர்ஷமே  இதன் மேல் பகை கொண்டுள்லது என்ற எண்ணமே எவரிடமும் இல்லை என்று தோன்றுகிறது”

“ அயல் வணிகர் இந்நாட்டின் அரசியலை முற்றும் அறிந்திராதவர் .அயல் வணிகரிடமன்றி பிறரிடமும் உரையாடாத இந்நகர் மக்களோ அவ்வரசியல் அறிந்தும் புரிய முடியாத உளம் கொண்டவர்கள் /நடுவே வீரரும் அமைச்சரும் என சிலர் நின்று அலைமோதிக் கொண்டிருக்கிறோம் ” என சத்யகி தொடர்ந்தான் “இந்த மன்று சூழ் நிகழ்வில் சிற்றரசரும் நட்பு நாட்டரசரும் அமர்வதேகூட வெறும் நடிப்புதான் என்று எனக்கு தோன்றுகிறது இங்கும் படை சூழ்தலும் அரசு சூழ்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன  என்று மகதத்திற்கு காட்ட விரும்புகிறார் இளைய யாதவ.ர் அந்நாடகத்திற்கு அக்ரூரரிலிருந்து இவ்வெல்லையில் நான் வரை அனைவரையும் நடிக்க வைக்கிறார் ”

சாத்யகி உடனே முகம் மாறுபட்டு சிரித்து ”இவற்றுக்கு பொருளென ஒன்றுண்டு என்றால் அது யாதவ அரசியிடமிருந்து சியமந்தக மணியை விதர்ப்ப அரசிக்காக நீர் எப்படி கொண்டுவரப்போகிறீர் என்பதில்தான்” என்றான் திருஷ்டத்யும்னன் புன்னகைத்து ”அந்த மணி தன் வழியை தானே உருவாக்கிக் கொள்ளும். எவர் முடியில் அது அமர வேண்டுமென அது அறிந்திருக்கும்” என்றான். “ ஆம் இது நாள்வரை அந்த மணி செய்த பயணங்களை எண்ணுகையில் வியப்புறுகிறேன்”  என்றான் சாத்யகி “ விதர்ப்ப அரசி அந்த மணியை நீங்கள் கொண்டுவந்து விட்டீர்கள் என்றே எண்ணுவது போல் உள்ளது . அவள் சேடியரும் பிறரும் சியமந்தகம் சூடி அரசி அமர்கையில் அணிய வேண்டிய பிற ஆடைகளையும் அணிகளையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்”

”எனது உளவுச்சேடி ஒருத்தி அதைச் சொன்னபோது முதலில் சற்றே நகையாடத்தோன்றினாலும் பிறகுதோன்றியது விதர்ப்பினி அரசு சூழ்தல் அறியாவிட்டாலும் மானுடரை அளவிடதெரிந்தவள் என. தங்களை மதிப்பிட்டே அவ்வெண்ணத்தை கொண்டிருக்கிறாள்” என்றான் சாத்யகி திருஷ்டத்யும்னன்  “யாதவரே, இன்று நானும் நான் என சொல்ல அஞ்சும் இடத்திற்கு வந்துள்ளேன். நீலச் சுடர் சூடிய அந்த கல் ஆடும் களத்தில் ஒரு கருவென நின்றிருப்பதாக உணர்கிறேன். நிகழ்வது ஆகுக” என்றான்

“ எப்போது யாதவ இளவரசியை சந்திக்கவிருக்கிறீர்கள்?” என்றான் சாத்யகி ”இன்றிரவு அரசவைக்கு மாலை செல்வேன். அவை அமர்ந்து இரவுணவுக்குப்பின் தன் அரசுசூழ் சிற்றறையில் என்னை பார்க்க யாதவ அரசி நேரம் வகுத்து அளித்திருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான் சிரித்தபடி “ நலம் திகழ்க” என்று சாத்யகி எழுந்து கொண்டான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1

திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது  வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதன் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்யரின் மகள் ஹைமவதியை மணம் கொள்ள அவனுக்கு உடன்பாடுள்ளதா என்பதை அறிவிக்கவேண்டுமென்று கோரியிருந்தார்.

மூன்றுநாட்களுக்கு முன்பு சல்யரின் மணத்தூது பாஞ்சாலத்தை எட்டியிருந்தது.  எட்டுமங்கலங்களுடன் வந்த ஏழு அவைத்தூதர் துருபதனை சந்தித்து சல்யரின் சொற்களை சொன்னார்கள். பாஞ்சாலமும் மத்ரமும் இயல்பாகவே இணையவேண்டிய நாடுகள், இரண்டுமே அஸ்தினபுரியின் இரு கைகளெனத் திகழவேண்டியவை என்றிருந்தார் சல்யர். இளவரசி ஹைமவதியின் இயல்புகளை சூதர்பாடியதும் நிறைவளிப்பதாக இருந்தது என்று துருபதர் சொல்லியிருந்தார்

திருஷ்டத்யும்னன் சுருளை பிறிதொருமுறை படித்துவிட்டு அதை அருகே இருந்த சுடரில் பற்றவைத்து சாம்பலாக்கினான்.  உதிர்ந்த கரிச்சுருள்களை குவளை நீரில் இட்டுவிட்டு நிலைகொள்ளாது எழுந்து அறைக்குள் நடந்தபின் சாளரத்தருகே சென்று வெளியே ஆழத்தில் கரைமீது நுரைக்கோடென படிந்த அலைகளில் தொடங்கி விழிதொடும் எல்லையில் வான்விளிம்பாக நின்ற துவாரகையின் நீலக்கடலின் அலைகளை நோக்கிக் கொண்டிருந்தான். ஏவலன் வந்து வாசலில் நின்று யாதவர் என்று அறிவித்ததும் நீள் மூச்சுடன் வரச்சொல் என்றான்.

அவ்வாணை எழுவதற்குள்ளேயே சாத்யகி காலடிகள் ஒலிக்க “காலைத்துயிலா? இரவில் நெடுநேரமாயிற்றோ?” என்று உரக்கக் கேட்டபடி  உள்ளே வந்து பீடத்தின் மேலிருந்த சுவடியை நோக்கி ”இன்றென்ன காவிய வழிபாடா?” என்றான்.  திருஷ்டத்யும்னன் புன்னகைத்து  “ஆம், உங்கள் இளைய யாதவரின் லீலைகள்தான்” என்றான்.

பீடத்தில் கிடந்த  சுவடிக்கட்டை  கையிலெடுத்துப் புரட்டிய சாத்யகி ”அஷ்டாத்யாயி இனிமையான சொல்தேர்வுக்காக புகழ்பெற்றது. இங்குவந்த நாட்களில் மணிநீலக்கோட்டத்தில் சுப்ரர் என்ற பண்டிதர் பன்னிரண்டுநாட்களாக இதை பாடம்சொன்னார். இளைய யாதவரின் எட்டு துணைவிகளுக்கும் இணையான இடம் கொடுக்கும் நூல் இது ஒன்றே என்பார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் சாளரத்துக்கு முதுகுகாட்டி திரும்பிநின்று சிரித்து ”ஆம், எட்டு திருமகள்களை இளையவர் மணந்ததாக காட்டுகிறார்” என்றான்.

சாத்யகி நினைவுகூர்பவனைப்போல ஏடுகளைப் புரட்டியபடி ”முதலில் ஆதிலட்சுமியாகிய விதர்ப்பினி.  அன்னலட்சுமி என்று அவரை சொல்கிறார்” என்றான். “அவரை நேரில் பார்த்தபோதும் அதையே எண்ணினேன். விளைந்த கதிர்போலிருந்தார்.” சாத்யகி நகைத்து ”அன்னலட்சுமி என்பது உண்மைதான். இன்று இந்நகரில் உணவறை அனைத்தும் விதர்ப்ப அரசியின் ஆணைப்படியே இயங்குகின்றன. அவர் வந்து தன் கைகளால் உணவளிப்பதை பெரும் கொடையென இம்மக்கள் எண்ணுகிறார்கள்” என்றபின் மேலும் சிரித்தபடி ”கவிஞர் சமைத்தளிக்கும் முகங்களை தங்களுக்கென சூடிக்கொள்வதே மானுடருக்கு எளிதானது” என்றான்.

“இளைய யாதவரேகூட அப்படித்தானோ?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி விழிமாறுபட்டு “இல்லை பாஞ்சாலரே, ஒவ்வொருமுறையும்  இக்கவிஞர் காணாத ஒன்றை நோக்கி  அவர் எழுவதை பார்க்கிறேன்” என்றான். ”அவர் ஆடும் சிறுகுழவி போல. அதை நம்மால் வரையறுக்கவே முடியாது.  அவை செல்லும் உச்ச எல்லை என நாம் எண்ணுவதற்கு அடுத்தநிலையிலேயே எப்போதும் நாம் அவற்றை காணமுடியும். மைந்தரை சற்றும் புரிந்து கொள்ளாதவர் அன்னைதான் என்பார்கள் ”என்றான்.

திருஷ்டத்யும்னன் “இரண்டாவது அரசி தனலட்சுமி என்கிறார். செல்வத்திருமகள் ஏன் எளிய யாதவர் குடியை நாடிவந்து பிறந்தார் என விளக்குவதற்கு எட்டு பாடல்கள் எழுதியிருக்கிறார்” என்றான். சாத்யகி ”ஆம். எட்டும் இன்றும் எங்கள் குடிகளில் பாடப்படுகின்றன. கன்றுபெருகி கலம்நிறையச்செய்யும் பாடல்கள் அவை என்கிறார்கள்” என்றான். “ஆனால் அவர் சொல்வது எங்களுக்குள் உள்ள நம்பிக்கைதான். கால்நடைகளன்றி பிறிதெவையும் செல்வங்களே அல்ல என்கிறார். மானுடர் இப்புவியில் நுகரும்  பொருட்களில் காற்றும் நீரும் மண்ணும்  தெய்வங்களுக்கு உரியவை. மணியும் பொன்னும் மண்மகள் அளிப்பவை.. எனவே அவற்றை எந்த மானுடனும் தெய்வங்களுக்கு கொடையளிக்க முடியாது.”

“மானுடன் இங்கு பெருக்கி எடுக்கும் பெருஞ்செல்வம் என்பது கால்நடைகள் மட்டுமே. கதிர்மணிகள் நாளவனாலும் நிலமகளாலும் இணைந்து சமைக்கப்படுபவை. கால்நடை மட்டுமே முற்றிலும் மானுடனால் வளர்த்து நிறைக்கப்படுவது. ஆகவேதான் தொன்று முதலே தெய்வங்களின் மானுடப் படையல் என்பது கன்றும் கால்நடைகளும் என வகுத்தனர். எண்ணி நோக்கும்போது உகந்ததென்றே தோன்றுகிறது அது” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “பிரபாகரர் யாதவ குலத்துதித்தவரோ?” என்றான். சிரித்தபடி சாத்யகி “யாதவரைவிட பசுக்களை விரும்புபவர் வேதியர் அல்லவா?” என்றதும் திருஷ்டத்யும்னன் வெடித்து நகைத்தான். சாத்யகி  நூலைப்புரட்டியபடி “மூன்றாவது அரசியை நேரில் கண்டவர்கள் அவர் கஜலட்சுமி என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்வார்கள்” என்றான். சிரிப்பை அடக்கமுடியாமல் அருகே வந்தபடி ”ஆம், உண்மை” என்று சிரித்தான் திருஷ்டத்யும்னன்.

“பிற அரசியரை நேரில் காணும்போது அவர்கள் பிரபாகரர் அளித்துள்ள பட்டங்களுக்கு முற்றிலும் உரியவர்கள் என்றே தோன்றுகிறது. அது நம் உள்ளங்களை இக்காவியங்கள் நெறிப்படுத்தியிருப்பதனால் இருக்கலாம். விழிகளை ஆள்வது உள்ளத்தில் ஓடும் மொழியின் பெருக்கு என்பார்கள்” என்றான் சாத்யகி. ”அதையே நானும் எண்ணினேன்” என்றான் திருஷ்டத்யும்னன். ”இந்நகர்போல காவியமாக ஆகிக்கொண்டே இருப்பது பிறிதொன்றில்லை. இளைய யாதவர் ஒன்றை சொல்லி முடிக்கையில் அது நேராகச் சென்று காவியத்தில் அமர்ந்துகொள்கிறது என்று படுகிறது.”

சாத்யகி சிரித்து “இங்கே வீதிகளில் விழிநட்டு நடக்கவேண்டும் என்பார்கள். விழுந்தால் காவியங்களில் சிக்கிக்கொள்வோம். அங்கிருந்து மீள்வது அரிது” என்றான். “நாம் அங்கே நம்மை ஆடியில் பார்த்துக்கொண்டால் திகைத்து அலறிவிடுவோம். நமக்கு கூருகிர்களும் வல்லெயிறுகளும் முளைத்திருக்கலாம். நமது பற்கள் வைரக்கற்களாக மாறியிருக்கலாம்.” திருஷ்டத்யும்னன் “நாமறியா கன்னியருக்கு நாம் கொழுநர்களாகி விட்டிருப்போம் இல்லையா?” என்றான். “விளையாட்டில்லை பாஞ்சாலரே, இங்குள்ள எவருக்கும் இறந்தகாலம் என்பது அவர்களின் நினைவு அல்ல. அந்நினைவாக மாறிப்படிந்திருக்கும் காவியங்களே” என்றான்.

“ஒரு விந்தையான உணர்வாக அது உடனிருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் காணும் இந்தப் பெருமாளிகைகள், சுழல்வடிவத்தெருக்கள், உச்சியில் எழுந்த பெருவாயில், அதன்காலடியில் விரிந்த பெருந்துறைமுகம்... இவையெல்லாம் உண்மையில் பருவடிவப்பொருட்கள்தானா? வெறும் மொழியாலமைந்தவையா? இவ்வழகுகள் கவிஞன் சமைத்த சொல்லணிகளா? சிலசமயம் சென்று தொட்டுப்பார்க்கத்தோன்றும். ஆம், இவை கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும்தான் என்று சொல்லிக்கொள்வேன். மறுகணம் காவியத்திலும் கல்லும் மண்ணும் மரமும் சுண்ணமும் கடினமானவைதானே என நினைப்பேன்.”

சாத்யகி “விழித்தெழமுடியாத கனவில் வாழ்வதென்பது ஒரு நல்லூழ் பாஞ்சாலரே” என்றான். “அங்கே புறவுலகில் நிகழ்பவை அனைத்தும் மானுடர் அறியவொண்ணா பேரொழுங்கில் இயங்குகின்றன. ஆகவே அவை எப்போதும் ஒழுங்கற்றவை என்று உளம்மயங்கச் செய்கின்றன. ஒவ்வொன்றும் பொருளற்றிருக்கிறது. சிதறிக்கிடக்கிறது. இந்தக்காவியப்பெரும்பரப்பில் அனைத்தும் அணிகலனில் மலர்வரிகளும் மணிகளுமென சீராக பொருந்தியிருக்கின்றன. பொருளற்றவை என ஏதும் இங்கில்லை. இலக்கணத்தில் அமைந்த ஏழுபொருள்கொண்ட அழகிய சொற்களால் ஆன வானமும் மண்ணும் மாளிகைகளும் மானுடரும்...”

சாத்யகி “இதன் நாயகன் அவர். இவை அவரது ஆடல்கள். ஆனால் அவர் மட்டும் இக்காவியத்திற்கும் அப்பால் எங்கோ இருக்கிறார்” என்று தொடர்ந்தான். உடனே புன்னகைத்து “ஆனால் அதையும் முன்னரே காவியத்தில் சொல்லிவிட்டார்கள். மண்ணில் ஆழ அடிபரப்பி நின்றிருக்கும் மலைகளை நிமிர்ந்து நோக்கினால் அவை முகில்சூடி விண்ணின் பகுதியாக நின்றிருக்கக் காணலாம் என.” திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான்.

சற்றுநேரம் எண்ணங்களில் இருவரும் வழிதவறினர். சாத்யகி மீண்டும் சுவடிகளை எடுத்து  புரட்டியபடி ”இளையவரின் எட்டுத்துணைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒரு அத்தியாயம்... பெரும்பாலான நூல்களில் சத்தியபாமையும் ருக்மிணியுமன்றி பிறர் வெறும் பெயர்களாகவே எஞ்சுகிறார்கள். ஏனென்றால் யாதவர்களின் பாணர்களோ ஷத்ரியர்களின் சூதர்களோ பாடியவை அவற்றின் மூலவடிவங்கள். பிரபாகரர் ஒவ்வொருவரின் கதையையும் இணையாக அமைத்திருக்கிறார் ” என்றான்.

”நான்காவது அத்தியாயம் காளிந்தி. யமுனைக்கரையின் மச்சகுலச் சிற்றரசர் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் பிறந்தவர். கனகை  என்று தன் அன்னையால் அழைக்கப்பட்டார். யமுனையின்  நிறம் கொண்டவராதலால் காளிந்தி என்றனர் குலப்பாடகர். யமுனைக் கரையிலிருந்த களிந்தகம் என்னும் சிறு நாணல்தீவில் ஏழு வருடங்கள் தவமிருந்து இளையவரை அடைந்தார். யமுனையிலெழுந்த மீன்கணம் போல் மைந்தர்கள் கொண்டவர் என்பதனால் அவரை சந்தானலட்சுமி என்கிறார்  பிரபாகரர். மைந்தர்செல்விக்கு சங்குசக்கரக்குறி அடிவயிற்றில் என்று நிமித்திகர் சொல்கிறார்கள்.”

“ஐந்தாமவர்  நக்னஜித்தி. கோசல நாட்டு மன்னர் நக்னஜித்துக்கு  முதல் மகள் என பிறந்தார். சத்யை என்றும் கௌசல்யை என்றும் பெயர் கொண்டவர். ஏழு பெருங்காளைகளை அடக்கி மணத்தன்னேற்புப் பந்தலில் இளைய யாதவரால் வெற்றி கொள்ளப்பட்டவர். இரு புயங்களிலும் சங்கும் சக்கரமும் அமைந்தவர்.  அவரை  விஜயலக்ஷ்மி என்கின்றார் பிரபாகரர்” என்று சாத்யகி வாசித்தான். நிமிர்ந்து “இங்கே வெற்றிக்கான வேள்விகளில் அமர்பவர் நக்னஜித்தியே...” என்றான்.

சுவடியைப்புரட்டி “ஆறாவது அரசி மித்ரவிந்தை. சுதத்தை என்றும் சைப்யை என்றும் பெயர் கொண்டவர். அவந்தி நாட்டு அரசர் ஜயசேனருக்கும் ரஜதிதேவிக்கும் பிறந்த மகள். தான்யலட்சுமி  என்று அவரை  பிரபாகரர் கொண்டாடுகிறார் . இங்கு நிலம் ஒருக்கும் நாளிலும் முதற்கதிர் அறைசேர்க்கும் விழவிலும் கொலுவமர்பவர் அவரே. இரு கன்னங்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர்” என்றான் சாத்யகி. “மத்ரநாட்டு பிரஹத்சேனரின் மகள் லக்ஷ்மணை ஏழாவது அரசி. சாருஹாசினி என்று அவரை சூதர் வழிபடுகிறார்கள். வீணைக்கலை தேர்ந்த அவரை இங்கு வித்யாலட்சுமி என்பது மரபு. அனைத்து கலைவிழவுகளிலும் அன்னையே முதல்வி.”

சாத்யகி தொடர்ந்தான் “எட்டாவது அரசி கேகயநாட்டு மன்னர் திருஷ்டகேதுவுக்கும் சுருதகீர்த்திக்கும் மகளாகப் பிறந்தார். அன்னை கைகேயி  இரு தோள்களிலும் சங்குசக்கரம் அமைந்தவர். அவரை வீரலட்சுமி என்று அழைக்கிறார்  பிரபாகரர். படைக்கலப்பூசனையிலும் பலிநிகழ்வுகளிலும் அன்னையே கொற்றவை என வந்து பீடம்கொள்கிறார்.” திருஷ்டத்யும்னன் “எட்டு அன்னையர். வாழும்போதே கோயில்கொண்டவர்கள்” என்றான். “காவியங்கள் அவர்களின் வண்ணநிழல்கள் என்று தோன்றுகிறது. காலம் சரியச்சரிய அவை நீண்டு வளர்கின்றன.”

சாத்யகி புன்னகைத்தான். திருஷ்டத்யும்னன் திரும்பி மீண்டும் தொலைகடலை நோக்கத்தொடங்கினான். ஏட்டுக்கட்டை மூடி அடுக்கிக்கட்டி பீடத்தில் வைத்தபடி சாத்யகி அவனை நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் “இன்று தங்களை பாலைவனத்தின் புரவியாடல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லலாம் என்று வந்தேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் எண்ணம் கலைந்து காற்றில் பறந்த குழலை சிறகாக விரித்து தோள் மேல் சரித்தபடி “இல்லை யாதவரே, இன்று பாஞ்சாலத்திற்கு திருமுகம் ஒன்று அனுப்பும் பணி உள்ளது“  என்றான். அவன் மேலே சொல்ல விழைகிறானா எனபதுபோல் சாத்யகி நோக்க ”தந்தையின் திருமுகம் வந்துள்ளது. சல்யரின் மகளை நான் மணக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்” என்றான். ”சல்யரின் தூது தேடி வந்துள்ளது. பாஞ்சாலத்தின் தகுதிக்கு உகந்தது அவ்வுறவு. சல்யர்  பாண்டவர்களுக்கு மிக அணுக்கமானவர். பாஞ்சாலத்தின் படைக்காவலுக்கும் மத்ர நாட்டின் உதவி இன்று தேவை.”

சாத்யகி தலையசைத்தான்.  “அஸ்வத்தாமா அருகிருக்கும்வரை ஒரு கணமும் பாஞ்சாலம் பாதுகாப்புடன் இல்லை. அஸ்தினபுரியோ    தொலைவில் உள்ளது. மலை இறங்கி வரும் படைகளை எதிர்கொள்ளவும் அஸ்தினபுரியின் படைகளுக்கு பயிற்சி இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “மத்ரம் பால்ஹிக நாடுகளில் ஒன்று. பால்ஹிகத்தின் உறவென்பது அனைத்து மலைநாடுகளையும் அருகணையச்செய்யும். தந்தை சல்யரின் மகளை அவரே உவந்திருப்பாரென்றே எண்ணுகிறேன். மத்ரம்  மகள்கொடைக்கென தூது அனுப்புவதை எவ்வண்ணமோ தந்தை தூண்டியிருக்கக் கூடும்.”

சாத்யகி “அரசுசூழ்தலில் அது முறைதானே?” என்றான். திருஷ்டத்யும்னன் ”பாஞ்சால அரசர்கள் தங்கள் குடிகளுக்குள்ளேயே மணம் கொள்ளவேண்டுமென்ற நெறி நெடுங்காலம் எங்களை தனிமைப்படுத்திவிட்டது. என் தமையன்கள் அனைவருமே எங்கள் ஐங்குடியிலேயே பெண் கொண்டிருக்கிறார்கள். நான் அதைக் கடந்து பெண் கொள்வதென்பது பாஞ்சாலம் தன் வாயிலொன்றை திறப்பது. இத்தருணத்தில் அது இன்றியமையாதது. பாஞ்சாலத்தின் மணிமுடி எனக்கில்லை என்பதனால் தகுதி உடைய பெருமன்னர் மகள்கள் எவரையும் நான் கோர முடியாது. மத்ர நாட்டு இளவரசியைப்போல் ஒரு பெண்ணை நான் அடைவது முற்றிலும் அரிது” என்றான்.

சாத்யகி ”எனில் இத்தனை சிந்திக்க ஏதுள்ளது? மணம் கொள்ள சம்மதம் என்று செய்தி அனுப்ப வேண்டியதுதானே?” என்றான். “ஆம். எண்ணப்புகுந்தால் அத்தனை  சொல்நெறிகளும்  ஆம் என்ற செய்தியை நோக்கியே என்னை செலுத்துகின்றன. ஆனால்...” என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு “சில சமயம் காட்டில் நமது குதிரை தயங்கி நின்றுவிடும் யாதவரே. சுற்றி நாம் எதையும் காணமாட்டோம். புரவி அங்கே நிற்பதற்கு அடிப்படை என ஏதும் நம் விழிக்கோ சித்தத்திற்கோ சிக்காது. அதை தட்டி ஊக்குவோம். கடிந்து ஆணையிடுவோம். சினம்கொண்டு குதி முள்ளாலும் சவுக்காலும் புண்ணாக்குவோம். உடல் நடுங்கி விழி உருட்டி மூச்சு சீறி அசையாமல் நின்றுவிடும்” என்றான்.

“புரவிக் கலையறிந்தவ்ர்கள் சொல்வார்கள், புரவி அறிந்ததை ஒருபோதும் மானுடன் அறியமுடியாது என்று. புரவி திரும்பாத திசைக்கு அதைச் செலுத்துவது இறப்புநோக்கி செல்வது.  இப்புள்ளியில் என் நெஞ்சு  நிலைத்துவிட்டதை உணர்கிறேன். சித்தச் சவுக்கால்  அடித்துக்கொண்டே இருக்கிறேன்.”

சாத்யகி சற்று தயங்கி பின் முடிவெடுத்து  “பாஞ்சாலரே, உங்கள் தோழனென நான் சொல்லக்கூடும் என்றால் உறுதியாக இதை உரைப்பேன். தாங்கள் ஒருபோதும்  அந்த விறலியை மணம்கொண்டு அவளை அரசுகட்டிலில் அமர்த்த முடியாது. அரசகுடியினர் அதை ஏற்கப்போவதில்லை. தங்களுக்கு அவைதோறும் அவமதிப்பே எஞ்சும்” என்றான். “அரசகுடிப்பிறந்தோர் அவர்களின் குடிக்கு கட்டுப்பட்டோர். எண்ணத்திலும் செயலிலும் தங்கள் மக்களின் நலம் மட்டுமே நாட வேண்டும்.  அதற்கு உகந்ததன்றி பிறிதெதையும் செய்யக்கூடாது. இத்தருணத்தில் அஸ்தினபுரியின் அவையில் உங்கள் இடம் என்ன என்பதும் மலையரசுகளில் உங்கள் தோழர்கள் எவரென்பதும் அன்றி எதுவுமே வினாவல்ல. எப்படி நோக்கினாலும் மத்ர நாட்டு இளவரசியை மணம் புரிவதன்றி பிறிதெதுவும் உகந்ததல்ல.”

“ஆம். அதை உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவ்வாறன்று என்று சொல்ல ஒரு சொல்லேனும் என்னிடமில்லை. நான் கற்ற அனைத்துக்கல்வியும் அதையே ஆதரித்து நிற்கிறது. ஆயினும் யாதவரே, ஒரு வேளை இப்புரவி அஞ்சி நிற்பது பாஞ்சாலத்தின் நலன் கருதியோ என்னவோ? என் அறியாவிழைவை மட்டுமே இது சுட்டுகிறது என்று எப்படி கொள்ளமுடியும்? நாமறியாத எதிர்காலமெதையோ அது தன் நுண்ணுணர்வால் உய்த்திருக்கலாமல்லவா?” சற்றே சலிப்புடன் சாத்யகி “இது சொல் விளையாட்டு. இப்படி தன்னை  எவ்வகையிலும் நிறைவுறுத்திக் கொள்ள அறிவுடையோரால் முடியும்” என்றான்.

”இன்றே நான் தந்தைக்கு சொல்லனுப்ப வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “மிஞ்சினால் நாளை. அதற்குமேல் எனக்கு காலமில்லை. ஆனால் என் நெஞ்சு குழம்பி இருக்கிறது. இத்தருணத்தில் அச்சொல்லை அளிக்க என் அகம் துணியவில்லை. இன்னும் ஒரு மாதம், இம்முடிவை ஒத்திப்போடுவேனென்றால் என் அகம் சற்று தெளியும். ஒவ்வொன்றும் குழம்பி அலையும், ஒவ்வொன்றும் பிரிந்து அமையும். அதன் பின் இன்னும் தெளிவாக முடிவெடுக்க முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். “தாங்கள் என்னிடம் கோருவதென்ன?” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் ”ஒரு மாதம் இம்மண நிகழ்வை ஒத்திப்போடுவதற்கான வலுவான ஒரு சொல். அதுமட்டுமே” என்றான். ”என் எளிய தயக்கங்களோ ஐயங்களோ எந்தையை நிறைவிக்காது. அவர் மேலும் சினம் கொள்ளவே வழி வகுக்கும். இன்று வந்த ஓலையிலிருந்தது அழைப்பு அல்ல. ஆணை. நான் இங்கு வந்த பணி முன்னரே முடிந்தும் விட்டது. மைந்தனென அவ்வாணையை ஏற்று நான் கிளம்பியாக வேண்டும்” என்றான்.

சாத்யகி ”அதை நாம் இன்று மாலைக்குள் கண்டடைவோம். இவ்வகை இக்கட்டுகளுக்கு சற்று நேரமளிப்பதே உகந்தது“ என்றான். கைதூக்கி சோம்பல்முறித்து “பாஞ்சாலரே, நீர் வரவில்லை என்றால் நானும் புரவியாடலுக்கு செல்ல விரும்பவில்லை. இன்று சில அலுவல்பணிகளை முடிக்கலாமென எண்ணுகிறேன் விதர்ப்ப அரசி அரசுமன்று சூழும் விழவு நாளை நிகழவிருக்கிறது. மாளவரும் கூர்ஜரரும் சைப்யரும் மத்ரரும் தங்கள் முதன்மை அமைச்சர்களை தூதாக அனுப்பியிருக்கிறார்கள். ஏழு சிற்றரசர்கள் நேரில் வந்துள்ளனர். ஒவ்வொருவரையும் எதிர்கொண்டழைத்து முறைமை செய்து அவர்களுக்குரிய மாளிகைகளில் அமர்த்தும் பணியையே சென்ற இரண்டு நாட்களாக இரவும் பகலுமென இயற்றி வருகிறேன். சற்று உளம் திருப்பி ஓய்வு கொள்ளலாமென்று இந்தப்புரவி ஆடலை ஒருங்கமைத்தேன்” என்றான்.

“சிற்றரசர்கள் யார் யார் வந்துள்ளனர்?” என்றான் திருஷ்டத்யும்னன். “பன்னிரு சிற்றரசர்களால் சூழப்பட்டது யாதவக்குடி. அவர்களில் எழுவர் நேரில் வந்துள்ளனர். ஐவர் தூதுக்கு மறுமொழி அளிக்கவில்லை. அவர்கள் மகதத்திற்கு தூதனுப்பியுள்ளனரா என்று நம் ஒற்றர்கள் நுணுகி நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு வராதவர் அனைவரும் எதிரிகளே என்பதுதான் அக்ரூரரின் நிலை. யாதவரோ போர் என ஒன்று நிகழ்வதற்கு முந்தையகணம் வரை எவருமே எதிரிகளல்ல என்ற எண்ணம் கொண்டவர். மந்தண அறையில் ஒவ்வொரு நாளும் சொல்லாடல் சுழன்று கொண்டிருக்கிறது” என்றான் சாத்யகி.

“மன்று சூழ்தலுக்கான உடனடித்தேவை என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். ”ஒவ்வொரு நாளும் முகில் கறுத்துச் சூழ்வது போல மகதத்திற்கும் இளைய யாதவருக்குமான பூசல்கள் வலுப்பெற்று வருகின்றன. காசி நாட்டு எல்லைக்குள் யாதவர் படை நுழைந்ததும் அதற்கு முன் மகதத்தின் எல்லைகளை நோக்கி நமது படைகள் அணி நீக்கம் செய்ததும் ஜராசந்தரை சினம் கொள்ளவைத்துள்ளது. மதுராவிலிருந்து மதுவனம் வரைக்கும் அனைத்து யாதவ நகர்கள் அருகிலும் மகதத்தின் படை  புதிய நிலைகளாக வந்து அமைந்துள்ளது” சாத்யகி சொன்னான். “நாளெழும்போதெல்லாம் கடுமையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.”

”ஓங்கிய கதாயுதத்துடன் நம் கோட்டை வாசலில் வந்து நின்றிருக்கிறார் ஜராசந்தர் என்று அக்ரூரர் சொல்கிறார்” என சாத்யகி தொடர்ந்தான். “எக்கணமும் போர் வெடிக்கும் என்கிறார்கள் அமைச்சர்கள். இளைய யாதவரோ எதையும் எண்ணாதவர் போல் தன்னியல்பில் இசையிலும் போர் விளையாட்டிலும் ஈடுபட்டிருக்கிறார். மூத்த யாதவருக்கு போரென்பது போர்முரசு முழங்கும் கணத்தில் தொடங்குவது மட்டுமே. துவாரகை அதை வெல்ல இப்புவியில் ஒரு நாடுண்டோ என எண்ணியுள்ளது. இந்நகரில் புரவியில் உலாவுகையில் பாரத வர்ஷமே  இதன் மேல் பகை கொண்டுள்ளது என்ற எண்ணமே எவரிடமும் இல்லை என்று தோன்றுகிறது.”

“அயல் வணிகர் இந்நாட்டின் அரசியலை முற்றும் அறிந்திராதவர். அயல் வணிகரிடமன்றி பிறரிடமும் உரையாடாத இந்நகர் மக்களோ அவ்வரசியல் அறிந்தும் புரியமுடியாத உளம் கொண்டவர்கள். நடுவே வீரரும் அமைச்சரும் என சிலர் நின்று அலைமோதிக் கொண்டிருக்கிறோம்” என சாத்யகி தொடர்ந்தான். “இந்த மன்றுசூழ் நிகழ்வில் சிற்றரசரும் நட்பு நாட்டரசரும் அமர்வதேகூட வெறும் நடிப்புதான் என்று எனக்குட்க் தோன்றுகிறது. இங்கும் படைசூழ்தலும் அரசுசூழ்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன  என்று மகதத்திற்கு காட்டவிரும்புகிறார் இளைய யாதவ.ர். அந்நாடகத்தில் அக்ரூரரிலிருந்து இவ்வெல்லையில் நான் வரை அனைவரையும் நடிக்க வைக்கிறார்.”

சாத்யகி முகம் மாறுபட்டு சிரித்து ”இவற்றுக்கு பொருளென ஒன்றுண்டு என்றால் அது யாதவ அரசியிடமிருந்து சியமந்தக மணியை விதர்ப்ப அரசிக்காக நீர் எப்படி கொண்டுவரப்போகிறீர் என்பதில்தான்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து ”அந்த மணி தன் வழியை தானே உருவாக்கிக் கொள்ளும். எவர் முடியில் அது அமர வேண்டுமென அது அறிந்திருக்கும்” என்றான். “ஆம். இதுநாள்வரை அந்த மணி செய்த பயணங்களை எண்ணுகையில் வியப்புறுகிறேன்”  என்றான் சாத்யகி. "விதர்ப்ப அரசி அந்த மணியை நீங்கள் கொண்டுவந்து விட்டீர்கள் என்றே எண்ணுவது போல் உள்ளது. அவர் சேடியரும் பிறரும் சியமந்தகம் சூடி அரசி அமர்கையில் அணிய வேண்டிய பிற ஆடைகளையும் அணிகளையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

”எனது உளவுச்சேடி ஒருத்தி அதை சொன்னபோது முதலில் சற்றே நகையாடத்தோன்றினாலும் பிறகு தோன்றியது விதர்ப்பினி அரசு சூழ்தல் அறியாவிட்டாலும் மானுடரை அளவிடத்தெரிந்தவர் என. தங்களை மதிப்பிட்டே அவ்வெண்ணத்தை கொண்டிருக்கிறார்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன்  “யாதவரே, இன்று நானும் நான் என சொல்ல அஞ்சும் இடத்திற்கு வந்துள்ளேன். நீலச்சுடர் சூடிய அந்தக் கல் ஆடும் களத்தில் ஒரு கருவென நின்றிருப்பதாக உணர்கிறேன். நிகழ்வது ஆகுக!” என்றான்.

“எப்போது யாதவ இளவரசியை சந்திக்கவிருக்கிறீர்கள்?” என்றான் சாத்யகி. ”இன்றிரவு அரசவைக்கு செல்வேன். அவை அமர்ந்து இரவுணவுக்குப்பின் தன் அரசுசூழ் சிற்றறையில் என்னைப் பார்க்க யாதவ அரசி நேரம் வகுத்து அளித்திருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சிரித்தபடி “ நலம் திகழ்க!” என்று சொல்லி சாத்யகி எழுந்து கொண்டான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 2

திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை முகப்புக்கு வந்து சாத்யகியை நோக்கி கை அசைத்து புன்னகை புரிந்தான். அவனிடம் வழக்கமான சிரிப்பு இல்லாமல் இருப்பதைக் கண்டு ”இன்னமும் முடிவெடுக்க முடியவில்லை போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் தேரில் ஏறி எடையுடன் பட்டு விரித்த இருக்கையில் அமர்ந்து தன் கைகளை முழங்கால் மேல் வைத்துக்கொண்டு “ஆம்” என்று தலையசைத்தான்.

“முடிவெடுக்க முடியவில்லை என்பதையே அதற்கான விளக்கமாக சொல்லும் படைத்தலைவன் ஒருவன் என்னிடம் இருக்கிறான்” என்றான் சாத்யகி. ”அவனை பலமுறை இகழ்ந்திருக்கிறேன். ஆனால் அவன் உண்மையை சொல்கிறான். நாம் வேறு சொற்களில் அதை விளக்குகிறோம் என்று பின்னர் தோன்றியிருக்கிறது.” திருஷ்டத்யும்னன் “யாதவரே, நாம் அரசவைக்குச் செல்வதற்கு முன் மத்ரநாட்டு அரசியை பார்க்கச் செல்கிறோம்” என்றான். சாத்யகி சற்று வியப்புடன் “மாத்ரியையா? ஏன்?” என்றான். “அங்கிருந்து அழைப்பு வந்தது” என்றான் திருஷ்டத்யும்னன். “இப்போதா?” என்றான் சாத்யகி. “ஆம். அரசவை கூடுவதற்கு முன் தன்னை வந்து சந்திக்கும்படி மாத்ரியின் ஆணை வந்துள்ளது.”

சாத்யகி ”அப்படியென்றால், தாங்கள் அரசவைக் கூட்டத்துக்குப்பின் யாதவ அரசியை சந்திக்கவிருப்பதைப் பற்றி மாத்ரி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தலையசைத்து “எதற்காகவென்று உணரமுடியவில்லை” என்றபின் “அப்படியென்றால் தங்கள் தந்தை அனுப்பிய தூதைப்பற்றி மத்ரநாட்டு அரசி அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவர்களுக்கும் அங்கு அவையில் ஒற்றன் இருந்திருப்பான். சல்யரின் தூது மத்ர நாட்டில் இருந்து கிளம்புகையிலேயே அவர் அறிந்திருப்பார்” என்றபின் திருஷ்டத்யும்னன் “இதில் மாத்ரியின் ஆர்வம் என்ன?” என்றான்.

சாத்யகி “பாஞ்சாலரே, சல்யரின் மகளை தாங்கள் மணமுடிப்பதை மாத்ரி விரும்பமாட்டார்” என்றான். திகைப்புடன் “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி "மாத்ரியை இளைய யாதவர் மணம் கொண்ட முறையை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “சூதர் பாடல்களில் கேட்டிருக்கிறேன். அஷ்டாத்யாயியில் அதை வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து அரசியலை உய்த்துணர கூடவில்லை” என்றான்.

சாத்யகி “நான் விரிவாக உரைக்கிறேன். நமக்கு நேரமுள்ளது“ என்றபின் பாகனின் தோளைத்தட்டி தேரை கொற்றவை ஆலயமுகப்பின் செண்டுவெளிக்கு செலுத்துமாறு ஆணை இட்டான். தேர் துணைச்சாலையில் திரும்பி மேடுபள்ளங்களின்மேல் சகடங்கள் விழுந்து எழுந்தமையால் ஒலி எழுப்பியபடி சென்றது. நுகம் வளைத்து புரவிகள் கழுத்து திருப்பி நீள்மூச்சிட்டு குளம்புகள் உதைத்து வால்குலைத்து நிற்க செண்டுவெளியின் தெற்கு மூலையில் நின்றது தேர். சாத்யகி இறங்கி வடுக்கள் நிறைந்த முகம் என புரவிக்குளம்புகள் இடைவெளியில்லாமல் படிந்த செம்மண் முற்றத்தின் மறுஎல்லையில் ஏழு தட்டுகள் கொண்ட கூம்புக்கோபுர முகடுடன் நின்ற கொற்றவை ஆலயத்தையும் அதன்மேல் பறந்த செந்நிறக் குருதிக்கொடியையும் நோக்கினான்.

திருஷ்டத்யும்னன் அருகே வந்து நின்றான். சாத்யகி “இளவரசே, முன்பு மத்ர நாட்டில் இருந்து சல்யரின் தூது ஒன்று துவாரகைக்கு வந்தது. இளவரசி லக்ஷ்மணையை மாத்ரி என்ற சொல்லால் சுட்டலாகாது, மத்ர நாட்டுக்கும் அவள் தந்தை பிருஹத்சேனருக்கும் எவ்வித உறவும் இல்லை என்று” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம். அதை நான் அறிவேன். சல்யரின் கொடிவழியில் வந்தவரெனினும் முடிசூட உரிமையற்றவர் பிருஹத்சேனர்" என்றான். "முடி சூடும் உரிமையற்ற தாயாதியர் எந்த அரசகுலத்திலும் உண்டு. அவர்களுக்கென நெறிகளும் முறைமைகளும் வகுக்கப்பட்டுள்ளன."

"பிருஹத்சேனர் சல்யரின் அன்னை கிருபாதேவியின் இளையோனாகிய சுகேசவர்மரின் முதல் மைந்தர். சல்யரின் தந்தை ஆர்த்தாயனரின் அரண்மனையில் பிருஹத்சேனர் இளவரசர்களில் ஒருவராக வளர்ந்தார். சல்யரின் களித்தோழராக இருந்தார். ஆனால் சல்யரின் விற்தொழில் தேர்ச்சியும், படைத்திறனும் துணிவும் அற்றவராக இருந்தார். அறியா இளமையில் அவரை வளர்த்த செவிலியன்னை ஒருத்தி மடியிலிருந்து அவர் வீணையை தொட்டறிந்தார். படைக்கலப் பயிற்சிக்கு சென்றபோதும்கூட அவர் உள்ளம் வீணையிலேயே இருந்தது. இரவுகளில் எவருமறியாது அரண்மனைச் சூதரிடம் வீணை கற்றுக்கொண்டார்” சாத்யகி சொன்னான்.

வீணை பழகிய அவரின் விரல்கள் வில்லையோ வாளையோ ஆளும் திறனற்று இருந்தன. அவர்களின் ஆசிரியரான விஜயவர்மரின் குருகுலத்தில் ஒரு வில்தேர்வில் ஏழு முறை அவரது அம்புகள் பிழைபட்டன. சினம்கொண்டு எழுந்துவந்து வில் மூங்கிலால் அவரை ஓங்கிஅறைந்த ஆசிரியர் அவர் குடுமியைப்பற்றி எழுப்பி சுவரோடு சேர்த்து நிறுத்தி ”மூடா, இங்கு நீ என்னிடம் கற்றதெல்லாம் எங்கு சென்றன? இங்கு நீ அமர்ந்திருக்கையில் உன் உள்ளம் எங்கிருக்கிறது?” என்றார். ”நீ நான் அளித்த பயிற்சிகள் எதையும் ஆற்றவில்லை. உன் கைகளைக் காட்டு. அங்கு நாண் தழும்பு உள்ளதா என்று பார்க்கிறேன்” என்று கூறி அவர் கரங்களை தூக்கிப்பிடித்துப் பார்த்தார். அங்கு நாண் தழும்புகளுக்கு மாறாக சுட்டு விரலில் வீணைநரம்பு பட்டு காய்த்த தழும்பு இருந்தது.

அதைத்தொட்டு நோக்கி "உண்மையைச் சொல்! நீ செய்யும் பயிற்சி என்ன? எப்படைக்கலத்தை நீ வெல்கிறாய் நான் அறியாமல்?” என்றார் விஜயவர்மர். பிருஹத்சேனர் கைகூப்பி கண்ணீர்மல்கி “என் இறையே பொறுத்தருள்க! இரவுகளில் நான் வீணை பயில்கிறேன்” என்றார். “வீணையா?” என்று நம்பமுடியாமல் கேட்டார் விஜயவர்மர். தலைகுனிந்து “ஆம்” என்றார் பிருஹத்சேனர். பற்றியிருந்த குடுமியைச் சுழற்றி அவரைத்தூக்கி சேற்றில் வீசி ”சீ! இழிமகனே, இப்பயிற்சிக்களத்தில் நின்று என் முகம்நோக்கி இதைச் சொல்ல நீ நாணவில்லையா? வாளெடுத்து களம்காண வேண்டிய கைகளால் வீணையை மீட்டுவதற்கு நீயென்ன சூதனா? உன் தாயின் களவில் பிறந்தாயா?” என்று கூவினார். மண்ணில் விழுந்து ஆடைகலைய குழல்சிதறக் கிடந்து கண்ணீர் வழிய பிருஹத்சேனர் விம்மினார். அவரை ஓங்கி உதைத்து ”எழுக! இக்கணமே என் கல்விக்கூடம் விட்டு செல். இனி ஒருமுறையும் உன் முகத்தில் நான் விழிக்கலாகாது. உன்னை பேடி என்று நான் எண்ணுவதனால் மட்டுமே இப்போது நெஞ்சைப் பிளந்து உயிர் குடிக்காமல் விடுகிறேன். செல்க இழிமகனே!” என்றார் விஜயவர்மர்.

மண்ணில் தவழ்ந்து உடலெங்கும் சேறும் பொடியும் படிந்து எழுந்து கூடியிருந்த பிற மாணவர்களின் இளிவரல் நகைப்பைக் கண்டு விழிதாழ்த்தி உடல்குறுக்கி கூப்பிய கை அணைந்த மார்பின்மேல் கண்ணீர் சொட்ட பிருஹத்சேனர் களம்நீங்கினார். பின்னர் அவர் மத்ரபுரியில் தங்கவில்லை. தனியராகக் கிளம்பி காசிக்கும் பின் மகதத்திற்கும் இறுதியாக தென்னகத்திற்கும் சென்று அங்கிருந்த பாணரிடம் யாழும் வீணையும் கற்று தேர்ந்தவரானார். வீணை அவர் நெஞ்சாகியது. விண்ணில் அவருக்கென பேசும் தெய்வமாகியது என்பது சூதர் சொல்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின் அவரது ஆசிரியர் ஜயசேனர் தன் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்திக்கொண்டிருந்தபோது களத்தை வளைத்த மூங்கில்வேலியை விலக்கி தன் வீணையுடன் பிருஹத்சேனர் வந்தார். ஓங்கிய வேங்கை மரத்தின் உச்சியில் மலர்ந்திருந்த ஒற்றைமலர் ஒன்றைச்சுட்டி அதை அம்பால் வீழ்த்தவேண்டும் என்பது விஜயவர்மர் தன் மாணவர்களுக்கு அளித்த தேர்வு. விற்களுடன் நிரைவகுத்து நின்ற மாணவர்கள் அம்பறாத்தூணியில் ஏழு அம்புகளை மட்டுமே சூடியிருந்தனர். ஆசிரியர் ஆணையிட்டதும் ஒவ்வொருவராக வந்து நின்று அம்புகொண்டு மலர்கொய்ய முற்பட்டனர்.

அவர்களின் விற்களில் இருந்து எழுந்த அம்புகள் ஒவ்வொன்றாக வளைந்து அம்மலரைச் சூழ்ந்திருந்த இலைகளையும் தளிர்களையும் சீவி நிலம் மீண்டன. காற்றிலாடும் கிளையில் இலைகளுக்கு நடுவே இருந்த அம்மலரை மட்டும் தொட எவராலும் முடியவில்லை. சல்யர் இறுதியாக வந்தபோது ஆசிரியர் “இளையோனே, இக்கல்விக்கூடம் உன்னால் நிறைவுற வேண்டும்” என்று மன்றாடும் குரலில் சொன்னார். “ஆம்” என தலைவணங்கியபின் சல்யர் அம்புகளைத் தொடுத்தார். ஏழு அம்புகளில் ஆறு இலையையும் தளிரையும் கொய்தன. ஏழாவது அம்பு அம்மலரை வீழ்த்தியது. அனைவரும் ஆரவாரம் எழுப்பியபோது இளிவரல் குரல் ஒன்று எழுந்தது.

அனைவரும் நோக்க சிரித்தபடி அங்குவந்த பிருஹத்சேனர் அவர்களை நோக்கி இகழ்ச்சியுடன் நகைத்து ”இவ்வெளிய உலோக முனைகளை ஆளவா இத்தனைப் பெருந்தவம்?” என்றார். சினம் கொண்ட சல்யர் திரும்பி "இவ்வெளிய உலோக முனைக்கு நீ இமைப்பதற்குள் உன் உயிர் குடிக்கும் ஆற்றல் உண்டு மூடா” என்றார். “இமைக்க எண்ணம் எழுவதற்குள் உயிர் குடிக்கும் ஆற்றல் இந்த வீணைக்கும் உண்டு” என்றார் பிருஹத்சேனர். ”எளிய காற்றால் அள்ளிச்செல்லப்படும் கருவி உங்களுடையது. விண்ணை ஆளும் கருவியைக் கொண்டவன் நான். காண்கிறீர்களா?”

“என்ன சொல்கிறாய்?” என்று கூவி அம்புடன் அருகே வந்த தன் ஆசிரியரிடம் “விஜயவர்மரே, நீங்கள் இம்மரத்திலே எம்மலரையும் சுட்டுங்கள் எனக்கு. ஏழு அடிகள் கூடத் தேவையில்லை. ஒன்றே போதும்” என்றார் பிருஹத்சேனர். சினம் கொண்ட ஆசிரியர் மரத்தின் கிளைகளுக்குள் மறைந்து இருந்த சிறுமலர் ஒன்றைச் சுட்டி ”அதை வீழ்த்து” என்றார். பிருஹத்சேனர் அதை நோக்கி விழிகூர்ந்து அமர்ந்து வீணையை மடியில் அமர்த்தி முதற் சுருதியை எடுத்தார். மலர் ஒரு காற்றால் கொய்யப்பட்டு சிறிய மஞ்சள் பறவையென பறந்து வந்து பிருஹத்சேனரின் மடிமீது விழுந்தது.

சினத்தால் நிலைமறந்து விஜயவர்மர் திரும்பி “சல்யனே, அதோ அந்த மதகளிற்றை உன் அம்புகள் மத்தகம் பிளந்து வீழ்த்தட்டும்” என்றார். சொல்லி முடிப்பதற்குள் மத்தகம் அம்பால் பிளக்கப்பட்டு கொம்பு நிலத்தில் குத்தியிறங்க, துதிக்கை நெளிந்து அமைய, முன்னங்கால் மடித்து அலறிச் சரிந்து, ஒருக்களித்து வயிறெழ விழுந்து, வால் சுழல கால்துடிக்க சங்கொலி என மும்முறை கூவி உயிர் விட்டது களிறு. ”அதற்கடுத்த களிறை நீ வீழ்த்து” என்ற விஜயவர்மர் கைதூக்கி அதை பிருஹத்சேனரை நோக்கி ஏவும்படி ஆணையிட்டார்.

பாகனின் துரட்டியால் குத்தப்பட்ட களிறு கடும் சினத்துடன் துதிக்கை வீசி, கொம்பு உலைத்து, காதுகோட்டி பிளிறியபடி பெரும் கால்களை எடுத்து பிருஹத்சேனரை நோக்கி வந்தது. அச்சமில்லாதவராக தன் வீணையுடன் அதன் முன் சென்று அவர் இசை மீட்டினார். முன்பே அறிந்த ஒன்றைக் கேட்டது போல அது செவிதழைத்து துதிக்கை தாழ்த்தி அசையாது நின்றது. பின்பு ஐயத்துடன் காலெடுத்து அருகணைந்து துதிக்கை நீட்டி அவர் கால்களைத் தொட்டது. முழங்கால் மடித்து அவர் முன் அமர்ந்து கொம்புகளை நிலத்தில் தாழ்த்தி அவ்விசையைக் கேட்டு மயங்கி அங்கிருந்தது.

வெற்றியுடன் எழுந்த பிருஹத்சேனர் “விஜயவர்மரே, படைக்கலம் என்பது மானுடஉள்ளத்தின் பருவடிவே. ஆற்றலால் அல்ல, நுண்மையாலேயே கருவிகள் வெல்லற்கரியவை ஆகின்றன. எந்த வில்லை விடவும் நுண்மையானது யாழும் அதன் சுருதியும் என்றுணர்க! இந்த மண்ணில் முன்பு விழுந்து எழுந்து கண்ணீருடன் விலகிய கணமே நான் அறிந்தேன், உங்களை சினம்கொள்ளச்செய்வது எது என. உங்கள் கருவிகளில் ஒவ்வொருநாளும் நீங்கள் அறியும் நிறைவின்மைதான். நான் அந்நிறைவை அடைந்தேன். அதற்கு எனக்கு அருளிய அனைத்து நல்லாசிரியர்களையும் இங்கு வணங்குகிறேன்” என்று சொல்லி அந்த மண்ணை கைதொட்டு ”மண் சான்று” என்று கூறி திரும்பிச் சென்றார்.

மத்ர தேசத்து ஆர்த்தாயனருக்கு இரு மனைவிகள். மூத்தவளின் மைந்தர் பட்டத்தரசரான சல்யர். இளையவளின் மைந்தர் கிருதர். இரண்டாமவர் என்பதனால் த்யுதிமான் என்றழைக்கப்பட்டார். அப்பெயரே அவருக்கு நிலைத்தது. இரண்டாமவர் என்று முற்றாக வகுக்கப்படுதலின் சுமையை நினைவுநின்ற நாள் முதல் தாங்கி இருந்தார் த்யுதிமானர். களத்தில், அரண்மனையில், மகிழ்வறையில் எங்கும் இரண்டாமவர் என்றே ஆனதன் இளிவரலால் துயருற்றார். வெற்றி கொள்ளும் வாளும் பிழைக்காத வில்லும் கொண்ட சல்யரின் முன் எங்கும் ஏவலனுக்குரிய இடமே தனக்கு என்றுணர்ந்தார்.

”பாஞ்சாலரே, தன்னை இழித்து உணர்பவனின் அனைத்து இலக்குகளும் பிழைக்கும். த்யுதிமானின் வாள் அவர் கையில் நிற்கவில்லை. அம்புகள் குறி தேரவில்லை. அவரது சொற்களெல்லாம் நனைந்த சிறகுகள் கொண்டிருந்தன” என்று சாத்யகி தொடர்ந்தான். “அந்தப் பெருந்துயர் அவரை துணையற்றவராக்கியது. மத்ர நாட்டில் சல்யரின் மேல் பெருவியப்பு அற்ற விழிகள் கொண்ட எவரையும் அவர் காணவில்லை. எனவேதான் பிருஹத்சேனர் அவருக்கு விருப்புக்குரியவரானார். வீணை மீட்டி வென்று திரும்பிய அவரை தேரில் சென்றழைத்து தன் அரண்மனையில் அமர்த்தி பரிசிலும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தார் த்யுதிமானர். அவருடன் நெஞ்சு பகிர்ந்து சொல்லாடிக் களித்தார்.”

மத்ரநாட்டு இளையவரின் அரண்மனையில் அவருக்கிணையான பீடம் பிருஹத்சேனருக்கு அளிக்கப்பட்டது. அவரையும் “இளவரசே” என்று ஏவலர் அழைத்தனர். நூறுமுறை அவ்வாறு அழைக்கப்படும் ஒருவர் பின்னர் தன்னை இளவரசர் என்றே எண்ணிக்கொள்வதில் வியப்பில்லை. பிருஹத்சேனர் மத்ர நாட்டு மண்ணுக்கு தானும் உரியவர் என்றே உணர்ந்தார். ஆணைகளிடும் குரலில் அவை வந்திறங்கும் நடையில் எங்கும் அதையே பயின்றார். அவையோர் அறிந்திருந்தனர் அதன் எல்லை. இளையவரும் எங்கோ அறிந்திருந்தார். அறியாதவர் பிருஹத்சேனர் மட்டுமே.

ஆர்த்தாயனர் மண்மறைந்தபோது மணிமுடிக்கு பூசல் தொடங்கியது. ஒருவரும் அதை சொல்லென மாற்றவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் அறிந்ததாக இருந்தது அது. சல்யர் மண்ணில் ஒரு பிடியையேனும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை அறிந்த இளையவர் செளவீரர்களின் உதவியை நாடினார். பால்ஹிக நாடுகளில் செளவீரமும் யவனமும் மத்ரத்தை அன்று அஞ்சிக் கொண்டிருந்தன. வில்தேர்ந்த சல்யர் ஒருங்கிணைந்த பால்ஹிகத்தின் பேரரசராக முடிசூடி அமர முனையாமல் இருக்கமாட்டார் என அறிந்திருந்தனர். எவ்வண்ணமேனும் சல்யரை முடி நீக்கம் செய்ய வாய்ப்பு நோக்கி இருந்தவர்களுக்கு வந்து அமைந்த நற்தருணம் என்றிருந்தது த்யுதிமானின் தூது. அவர்களின் படையும் செல்வமும் அளித்து த்யுதிமானை ஆதரித்துநின்றனர்.

செளவீரம் முன்பே மகதத்துடன் சொல் உறவு கொண்டிருந்தது. பால்ஹிக நாட்டில் வலுவான வேர்களை ஊன்ற விரும்பிய ஜராசந்தரின் தந்தை பிரகத்ரதர் தன் படைகளை மலைகடந்து அனுப்ப ஒப்புக்கொண்டார். அச்செய்தி தன்னை வந்து அடைந்ததும் பிறிதெவரும் எண்ணாத ஒன்றை சல்யர் செய்தார். தேரில் ஏறி நேராக தன் இளையவனின் அரண்மனை முகப்பில் சென்று இறங்கினார். நீராடி மன்றமர்ந்து வந்த செய்திகளை ஆய்ந்துகொண்டிருந்த த்யுதிமானிடம் சென்று நின்று “இளையவனே, உன்னிடம் நம் மூதாதையரை சான்றாக்கி சில சொல் உரைக்கவேண்டும் என்று வந்தேன்” என்றார். “சொல்க!” என்றார் த்யுதிமானர். அப்போது பிருஹத்சேனர் எழுந்து செல்லும் முறைமையை பேணியிருக்கவேண்டும். அது அவரது எண்ணத்தில் உறைக்கவில்லை. வீணையுடன் அங்கேயே ஆவல்மீதூற அமர்ந்திருந்தார்

சினம் கொண்ட சல்யர் “உன் தோழரை வெளியே அனுப்புக!” என்று சொன்னபின்னர் த்யுதிமானர் பிருஹத்சேனரை நோக்கி “சற்று வெளியே சென்று அமருங்கள்” என்றார். பிருஹத்சேனர் வீணையுடன் எழுந்து முகமன் சொல்லாமல் வெளியே சென்றார். முழுதுரிமை கொண்ட அரசகுடியினரான தன்னை அவமதித்துவிட்டதாகவே அவரது எளிய உள்ளம் எண்ணியது. தமையனும் இளையோனும் அமர்ந்து உரையாடினர். சல்யர் “இளையோனே, மத்ர நாட்டின் மன்னனாக முடிசூட விழைவதை நான் அறிந்தேன். அயலவரிடம் நீ உதவிகோரினாய் என்று கேட்டபோது நான் நம்பவில்லை. அவ்வெண்ணம் உனக்கு இருக்கும் என்றால் என் மூதாதையரை சான்றாக்கி இதை உரைக்கிறேன். இந்நாட்டுக்கு முற்றுரிமை கொண்ட மன்னனாக நீ முடிசூடு. உன் மூத்தவனாக மட்டுமே இந்நாட்டில் இருக்கிறேன். நீ விழைந்தால் இந்நாட்டை விட்டு விலகவும் ஒப்புக்கொள்கிறேன். உன் அச்சம் நீங்க ஒரு சொல் அளிக்கவும் சித்தமாக உள்ளேன். நீ விழைந்தால் நான் பீஷ்மரைப்போல மணமுடிக்காமல் காமவிலக்கு நோன்பு கைகொள்கிறேன்” என்றார்.

திகைத்து உடல்நடுங்க அமர்ந்திருந்த த்யுதிமானர் பின்னர் எழுந்து அவர் காலில் விழுந்து பற்றிக்கொண்டு “மூத்தவரே, இளையவன் மட்டும் அல்ல இழிந்தவனும்கூட என்று காட்டிவிட்டேன். என்முன் நின்று இச்சொல்லை சொல்லும் இடத்திற்கு தங்களை கொண்டுவந்ததற்காக நாணுகிறேன். தங்கள் அடி விழுந்து கிடக்கும் இவ்வெளியவன் மேல் கருணை காட்டுங்கள்” என்றார். அவரை அள்ளி நெஞ்சோடு அணைத்து "இளையவனே, உன்னை தோளில் தூக்கி அலைந்திருக்கிறேன். உன் நலம் நாடாத ஒன்று எனக்கில்லை” என்றார் சல்யர்.

த்யுதிமானர் “மூத்தவரே, எனக்கு மண் தேவையில்லை, உங்கள் அருள் ஒன்றே போதும். உங்கள் நிழலில் வாழ்கிறேன்” என்றார். ”நீ விழைந்தபின் அதை மறுக்க முடியாது. விழைவு உடல் புகுந்த நோய் போல் முற்றிலும் விலகுவதில்லை. வருக, மன்றமர்ந்து இந்நாட்டை இருபகுதியாக பிரிப்போம். உத்தர மத்ரத்தில் மன்னனாக நீ முடிசூடு. தட்சிண மத்ரம் என்னிடம் இருக்கட்டும். எப்போதும் எந்நிலையிலும் இருநாடுகளும் ஒன்றாக இருக்கும் என்று குலமூத்தாருக்கு வாக்களிப்போம். தந்தை அமர்ந்த அரியணையில் பிறிதொருவர் அமர நேர்ந்தால் மூத்தார் பழிச்சொல் ஏற்று நம் கொடிவழி அழியும். பழி சூழ்ந்து நாம் சிதை ஏற நேரும். அது நிகழலாகாது” என்றார். “ஆம் மூத்தவரே” என்று அழுதார் இளையவர்.

மத்ரம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. உத்தர மத்ரத்தில் மன்னராக த்யுதிமானர் பதவியேற்றார். அத்தருணத்தில் தன் இளையவரிடம் ஒரு சொல்லை வேண்டிப் பெற்றார் சல்யர். அதன்படி பிருஹத்சேனர் அரண்மனையில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்களிக்கப்பட்ட அரசுக்குறிகள் முறைமைகள் அனைத்தும் விலக்கப்பட்டன. இசைக்கு அப்பால் உலகுணராத பிருஹத்சேனர் எதையும் அறியவில்லை. தன் யாழுடன் அவை புகுந்தபோது எதிர்கொண்ட அவைநடத்தும் சிற்றமைச்சர் அவரை “தங்கள் இடம் இங்கு வகுக்கப்பட்டுள்ளது இசைவாணரே” என்று சொல்லி அழைத்துச்சென்று சூதர்நிரையில் அமரவைத்தார். அங்கு போடப்பட்டிருந்த சிறியபீடத்தைக் கண்ட பின்னர்தான் என்ன நடந்தது என்று பிருஹத்சேனர் உணர்ந்தார். வெங்குருதி குமிழியிட்டு தலைக்குள் கொப்பளிக்க யாழேந்திய கரங்கள் நடுங்க நின்றார். உதடு துடிக்க “எவர் ஆணை இது?” என்றார். ”இரு அரசர்களும் இணைந்து அளித்த ஆணை. இங்கு அரசகுடி பிறந்தவரே இளவரசர்களாக இருக்க முடியும் ” என்றார் அமைச்சர்.

அனல் பழுத்துச்சிவந்து அமைந்ததுபோல் பீடத்தைப் பார்த்து சில கணங்கள் நின்றபின் தன் வீணையை நெஞ்சோடு அணைத்தபடி சென்ற வழியெங்கும் கண்ணீர்சிந்த தன் அரண்மனைக்கு மீண்டார். அன்றிரவே தன் வீணையுடன் கிளம்பி செளவீர நாட்டை அடைந்தார். மத்ர நாட்டில் இருந்து ஒருவர் நாடி வந்ததற்கு செளவீரர்கள் மகிழ்ந்தனர். அவருக்கு அங்கு ஒரு மாளிகையும் இல்லமும் அளித்தனர். இரண்டாண்டுகாலம் அங்கு எவரையும் விழிதூக்கிப் பாராமல் தன் அரண்மனை அறைக்குள்ளேயே விழித்திருக்கும் நேரம் வீணை உடனிருக்க வாழ்ந்தார். அவர் அங்கிருப்பதை அனைவரும் மறந்து விட்டிருந்தனர்.

யவன நாட்டுக்கு ஒரு தடையற்ற வணிகச் சாலையை பெற விரும்பிய மகதம் செளவீரத்திடம் நிலம் கோரிப் பெற்றது. அதன் மறுபக்கமிருந்த மத்ரத்திடம் நிலம் கோரச் சென்ற அமைச்சர்களை சல்யர் மறுசொல் அளித்து திருப்பி அனுப்பினார். மத்ரத்தின் ஒரு காலடி நிலமும் எவருக்கும் அளிக்க முடியாது என்றார். மத்ரத்தின் மண் வழியே உரிய சுங்கம் அளித்து மகதத்தின் வண்டிகள் செல்லலாம் என்றார். மகதம் எங்கும் சுங்கம் அளிக்கும் வழக்கமில்லை என்று மகதச் சக்ரவர்த்தி பிரகதத்தரின் தூதுவர் சொன்னார்.

மறுநாளே மகதத்தின் பெரும்படை வந்து மத்ரநாட்டின் கீழ் எல்லையின் எண்பத்தேழு மலைக்கிராமங்களையும் நதிக்கரைக் காடுகளையும் கைப்பற்றியது. அத்தனை விரைவில் ஒரு பெரும்படை தன் நாட்டுக்குள் புகும் என சல்யர் எதிர் நோக்கியிருக்கவில்லை. சல்யரின் எதிர்ப்பை முன்னரே உய்த்து படைகொண்டு விட்டபின்னரே தூதனுப்பியிருந்தார் பிரகத்ரதர். மகதப் படை உள்ளே புகுந்த போது பால்ஹிக நாடுகள் தன்னை துணைக்கும் என்று எண்ணியிருந்தார், அதுவும் நிகழவில்லை. மகதப்படைகள் அவ்வழியாக வணிகச்சாலையை அமைத்து நெடுகிலும் காவல்மாடங்களை நிறுவி நிலைப்படைகளை நிறுத்தினர்.

மத்ரநாட்டில் கைப்பற்றிய நிலங்களை படைநிறுத்தி மகதக்கொடியுடன் ஆள்வது இயல்வதல்ல என்று சில நாட்களிலேயே பிரகத்ரதர் புரிந்துகொண்டார். ஒவ்வொரு கிராமமும் மலைச்சரிவுகளில் வழிந்தும் தேங்கியும் காடும் ஓடையும் சூழ தனித்துக்கிடந்தது. படை அனுப்பி அவற்றை எப்போதைக்குமென வெல்வது இயல்வதல்ல. மத்ரத்தின் கொடி அடையாளம் இன்றி அங்கொரு நிலையான ஆட்சி அமைக்க இயலாதென்று உணர்ந்தார். செளவீர நாட்டு சுருதகோஷர் ஒர் எண்ணத்தை சொன்னார். அதை ஏற்று அந்நிலத்தை உபமத்ரம் என்றொரு தனி நாடாக்கி பிருஹத்சேனரை அதற்கு அரசராக மகதம் முடிசூட்டியது.

தனக்கென ஒரு நாட்டைப்பெற்ற பிருஹத்சேனர் செளவீர நாட்டரசர் சுருதகோஷரின் இளைய மகள் மிலிந்தையை மணந்து அரசாளலானார். அவருக்கு சோமகீர்த்தி என்ற மைந்தன் பிறந்தான். அவனுக்கு இளையவளாகப் பிறந்தவள் லஷ்மணை. புன்னகையில் ஒளிபெறும் எழில்முகம் கொண்ட அவளை சாருஹாசினி என்றழைத்தனர் உபமத்ரத்தினரும் சௌவீரரும். யானையின் காலடியில் நின்று சிம்மத்திடமிருந்து தப்பும் மான்போலிருந்தது உபமத்ரம்.

”சல்யரின் மத்ரமும் சௌவீரமும் தவிர்த்த பிற பால்ஹிகநாடுகளும் பிருஹத்சேனரை அரசரென ஏற்றதில்லை. உபமத்ரம் ஒரு நாடென்று ஒப்புக்கொள்ளப்பட்டதுமில்லை” என்றான் சாத்யகி “மத்ரநாட்டின் கொடியடையாளத்தை குலமூத்தார் வரிசையை உபமத்ரம் கொள்வதை சல்யர் எப்போதும் எதிர்த்துவருகிறார். மத்ரநாட்டரசி என லக்ஷ்மணை எந்த அவையிலும் வழங்கப்படுவதை அவர் மறுக்கிறார்.” திருஷ்டத்யும்னன் “மத்ரநாட்டரசிக்கு சல்யரின் தூதுபற்றி தெரிந்திருக்குமென்பதில் ஐயமே இல்லை” என்றான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 3

”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் அமர்ந்து அவை நிகழ்வுகளில் பங்கெடுப்பதை பெரும் வெகுமதி என்றே அவர் எடுத்துக் கொண்டார்.”

ஆயினும் தன் மகள் பேரழகியாக கண்முன் மலர்ந்து வருகையில் அவர் கவலை கொண்டார். அவள் அன்னை பிங்கலை தன் ஐயங்களை ஒவ்வொருநாளும் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். பால்ஹிகநாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு அவள் அரசியென்று சென்றாலொழிய கொடிவழிக்கு குலமதிப்பு அமையப்போவதில்லை. ஆனால் அதை மகதம் ஒருபோதும் விரும்பாது. மகதத்தின் எண்ணப்படியே இளவரசிக்கு மணமகனை தேடமுடியும். அது குடிமதிப்புக்குரியதாக இருக்குமா? குலக்குருதி அழிந்தபின் எஞ்சும் அடையாளம் என்ன? அரசியின் ஐயங்களின் ஊடாக துயருற்ற இரவுகளை கழித்தார் பிருஹத்சேனர்.

மணவுறவுகளின் வழியாக உபமத்ரம் ஒரு தனித்த அரசகுடியாக அடையாளம் பெற்றுவிடுவதை மகதம் விரும்பாது என்றே அமைச்சரும் சொன்னார். தகுதிக் குறைவான அரசகுலங்களில் ஒன்றில் இருந்தே மணமகன் வருவான். மச்சர்களோ மலைவேடரோ ஜராசந்தருடன் இணைந்திருக்கும் ஆசுரநாட்டு சிறுகுடிகளோ. “பால்ஹிக அவையில் அமரமுடியவில்லை என்றாலும் நாம் மத்ர அரசகுடியினர் என்றிருந்தோம். அவ்வண்ணம் ஓர் உறவு நிகழ்ந்தால் மலைவேடர் நிலைக்கு நாம் இழிவோம். பிறகு ஒருபோதும் நம் கொடிவழியினர் பால்ஹிக குலங்களில் ஒன்றில் குடிக்குறிகொண்டு வாழமுடியாது” என்றாள் அரசி.

எதை எண்ணினாலும் அவ்வினாவையே சென்றடைந்தது உள்ளம். எவ்வினாவுக்கும் முடிவில் முற்றமூடிய நெடுஞ்சுவரே நின்றது. “எவரும் அறியாது பால்ஹிகக்குடிகளில் ஒன்றுடன் மணவினை நிகழ்த்தினால் என்ன?” என்று அரசர் வினவினார். அமைச்சர் ”அவ்வண்ணம் ஒரு மணம் நிகழும் என்றால் மறுகணமே நீங்கள் முடியிழந்து மகதத்தின் இருட்சிறைக்குள் செல்லவேண்டும். மகதத்தைப் பகைத்து நம் இளவரசியைக் கொள்ளும் துணிவுள்ள அரசர் எவரும் இம்மலைச்சாரலில் இல்லை” என்றார். "நான் என்ன செய்வது அமைச்சரே?" என்று மனமுடைந்து கேட்டார் பிருஹத்சேனர்.

"இப்போதிருக்கும் வழி ஒன்றே. சென்று சல்யரின் கால்களில் விழுவது. அடைக்கலம் கோரி அவர் மண்ணை அவரிடமே அளிப்பது. உங்கள் மணிமுடி இல்லாமல் ஆகும். ஆனால் குலம் எஞ்சியிருக்கும். மகதத்திடம் இருந்து உங்கள் உயிர் காக்கப்படும். மணிமுடியை நீங்கள் இழந்தாலும் என்றும் உங்கள் கொடிவழியினர் பால்ஹிகர்கள் என்று வாழமுடியும்" என்றார் அமைச்சர். ”ஆம் அரசே, அதுவொன்றே வழி” என்றார் படைத்தலைவர். அரசியும் “நானும் எண்ணி எண்ணி அங்குதான் சென்றடைகிறேன்” என்றாள்.

அந்த இரக்கமற்ற உண்மையை எதிர்கொள்ளமுடியாது தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்தபின் எழுந்து ஒரு சொல்லும் சொல்லாமல் மகளிர்மாளிகைக்குச் சென்று யாழெடுத்து மீட்டத் தொடங்கினார் அரசர். அவர் விரல்பட்ட வீணை அவ்வினாவையே எழுப்பியது. வீணையொலி கேட்டு அருகே வந்தமர்ந்த இளவரசியைக் கண்டு நெஞ்சு கலுழ்ந்தார். அரசப்பெண்டிர் கலைமானின் கால்கணு போன்றவர்கள் என்பது முதுமொழி. விசையனைத்தும் வந்துசேரும் மெல்லிய தண்டு. தேர்ந்த வேடன் அங்குதான் உண்டிவில்லால் அடிப்பான்.

'முடிவெடுங்கள் முடிவெடுங்கள்' என்று ஒவ்வொருநாளும் அரசி சொன்னாள். ”நான் ஒன்றும் அறியேன். நீ ஆவது செய்” என்றார் பிருஹத்சேனர். ”அமைச்சர் சொன்னதே உகந்த வழி. வெற்றாணவத்தால் நாமிழைத்த பிழையின் சுமையே இவையெல்லாம். சல்யரிடம் சென்று காலடி பணியுங்கள்” என்றாள் அரசி. அமிலம் பட்டதுபோல நெஞ்சு எரிய “சீ” என கை ஓங்கி அவளை அடிக்கச்சென்று பின் நின்று ”நாணிழந்து சூதன் என்றாகி அவர் அவையில் அமர வேண்டுமா? ஆண்மையற்றவன் என்று என்னை அவையில் இகழ்ந்தசொல் இன்னும் என் செவிகளில் உள்ளது. அவர்முன் சென்று ஆம் அவ்வாறே என்று அமைய வேண்டுமா? என்ன சொல்கிறாய்?” என்றார். "ஆம். அது இழிவே. இத்தனை நாள் மணிமுடி சூடியதற்கு அது ஈடு. ஆனால் எஞ்சுவது நம் மகளின் குலம். அவள் குருதியில் பிறக்கும் மைந்தரின் அடையாளம். இன்று நாம் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றாள் அரசி.

”அதைவிட நான் உயிர் துறப்பேன்” என்றார் பிருஹத்சேனர். “இறப்பதென்றால் அதற்குமுன் உங்கள் கொடிவழிக்கு வழிகோலிவிட்டு செல்லுங்கள்” என்றாள் அரசி. “இன்றறிந்தேன், குருதிதேடும் கான்விலங்குகள் உறவுகள். குருதிவிளையும்வரைதான் நாம் பேணப்படுவோம்” என்று சொல்லி தன் யாழுடன் வெளியே நடந்தார் பிருஹத்சேனர். ”என்னசெய்வது அமைச்சரே? இவரது வெற்றாணவத்தால் என் மகள் குலமிலி ஆகவேண்டுமா?” என்றாள் அரசி. “ஆற்றலற்ற உள்ளங்கள் எப்போதும் மிகையாகவே எதிர்வினை புரியும் அரசி. அவர்கள் தங்கள் ஆற்றலின்மையை அஞ்சுகிறார்கள். அதை சினத்தால் மறைக்கிறார்கள்” என்றார் அமைச்சர். “இறுதியில் அவர் அடிபணிந்தாகவேண்டும். நின்றுமறுக்கும் வல்லமை கொண்டவரல்ல அவர்.”

காட்டுக்குள் நுழைந்து மலைப்பாறை ஒன்றில் அமர்ந்து அந்தி எழும் வரை வீணை மீட்டினார் பிருஹத்சேனர். இருளில் குளிர்ந்த பாறையில் உடல் பதித்து அதிர்ந்துகொண்டிருந்த யாழைத் தழுவிப் படுத்து கண்ணீர் உகுத்தார். எண்ணி எண்ணி தொடுவானம் வரை சென்ற சொற்சரடுகள் அனைத்தும் ஓய்ந்தபின் விழிசோர்ந்து கால்தளர்ந்து பின்பு மறுநாள் திரும்பி வந்தார். அரசியிடம் வந்து "வேறு ஒன்றும் எண்ண என்னால் இயலவில்லை. நேற்றிரவுடன் நான் இறந்துவிட்டேன் என்றே கொள்கிறேன். உங்கள் விழைவுப்படி உடல் சென்று சல்யரின் கால் பனியும்" என்றார். இரக்கமற்ற இரு வாள்நுனிகளென விழிகள் கூர்ந்திருக்க அரசி அவ்வாறே என தலையசைத்தாள். மறுமொழி ஒன்று வருமென ஏங்கியவராக பிருஹத்சேனர் அமைச்சரை நோக்கினார். "ஆம் அரசே. அது ஒன்றே வழி" என்றார் அமைச்சர். தன்னந்தனிமையில் விண்ணுக்குக் கீழ் நிற்கும் உணர்வை அடைந்து நெஞ்சுபொங்கி விழிகலங்கியபின் அதை இமைகொட்டி வென்று நீள்மூச்சென வெளிப்பட்டு வீணையை அணைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டார்.

அன்று மாலை அவர் மத்ரபுரிக்கு கிளம்பும் முறை ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. அவர் ஆணைப்படியே அமைச்சர் மத்ரபுரிக்கு அவர் வருவதை அறிவித்து பறவைத்தூது அனுப்பினார். 'மத்ரநாட்டு அரசர் சல்லியர் பாதம் பணிந்து அடைக்கலம் கொள்ள அவரது குடிவழி வந்த எளியோனாகிய பிருஹத்சேனன் விழைகிறேன்’ என்ற வரியை அமைச்சர் வாசித்தபோது பிருஹத்சேனரின் தொடை நடுங்கியது. ”திருமுகத்தில் முத்திரையிடுங்கள் அரசே” என்று அமைச்சர் சொன்னதும் ஒருகணம் சினம் எழுந்தது. மறுகணமே கசப்பு நிறைந்த சிரிப்பு வந்தது. “எளியோன் என்றா அரசன் என்றா?” என்றார். அமைச்சர் “இது ஓர் அரசு சூழ்தல். தாங்கள் அரியணை அமர்ந்திருக்கும் வரை அரசரே” என்றார். “அரியணை இன்னும் எத்தனைநாள்?” என்றார் பிருஹத்சேனர். அமைச்சர் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் வருகையை எதிர்நோக்குவதாக சல்யரின் மறுமொழியும் வந்தது. அரசரும் அரசியும் இளவரசியுடன் அன்று மாலை கிளம்பி மறுநாள் புலரியில் மத்ரபுரி செல்வதாகவும் அன்று பின்மாலையில் சல்யரை அவையில் சந்திப்பதாகவும் ஒருங்கிணைப்பட்டது. சல்யருக்கான ஐவகை பரிசில்களும் தேரில் ஏற்றப்பட்டன. அரசணித் தோற்றம் பூண்டு வந்த பிருஹத்சேனர் எவர் விழியையும் நோக்காது விடைபெற்று தேரில் ஏறி அமர்ந்து ஒரு சொல்லும் சொல்லாமல் புரவிகளை நோக்கி அமர்ந்திருந்தார். தனித்தேரில் அரசியும் இளவரசியும் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் நிலைகுலைந்த உள்ளம் கொண்டிருந்தனர். இருளில் மலைவிளிம்பிலிருந்து குதிப்பதுதான் அது என அவர்கள் அறிந்திருந்தனர். அங்கே நீரோ மென்சதுப்போ இருக்கலாம். கரும்பாறை வாய்திறந்த பெரும்பள்ளமும் காத்திருக்கலாம்.

புரவிக் குளம்படிகள் ஒலிக்கத்தொடங்கியபோது பிருஹத்சேனர் உடல்நடுங்கினார். தேர் நகரைவிட்டு நீங்கியபோது தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வழிநெடுகிலும் எழுந்த வாழ்த்தொலிகள் எதையும் ஏற்கவில்லை. எல்லைக் காவல்மாடங்களில் வணங்கியவர்களை நோக்கவுமில்லை. அரசியின் தேரின் திரைச்சீலைகள் விலக்கப்படவில்லை. அரசி மெல்லமெல்ல அழத்தொடங்கிவிட்டிருந்தாள். இளவரசி முகத்திரைமூடி அழும் தாயை நோக்காமல் வெளியே உடன் ஓடிவந்த காட்டையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

அவர்களுடன் பதினெட்டு புரவிவீரர்களும் ஏழு அகம்படியினரும் அமைச்சரும் மட்டும் சென்றனர். உபமத்ரத்தின் குயில்கொடியுடன் வீரன் ஒருவன் முன்னால் சென்றான். உபமத்ரம் மகதத்தின் படைகளால் சூழப்பட்டிருந்தது. அதன் நிலைப்படைத் தளபதிக்கு எச்செய்தியும் சொல்லப்பட்டிருக்கவில்லை. உபமத்ரத்தின் வட எல்லையில் இருந்த கொற்றவை ஆலயத்தில் அரசரும் அரசியும் தன் மகளுக்காக மங்கலப்பூசனை செய்வதாகவே வெளியே அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப கொற்றவை ஆலயத்தில் அலங்காரங்களும் பலிவழிபாட்டுமுறைமைகளும் ஒருக்கப்பட்டிருந்தன. பன்னிரு பலியாடுகள் அரசருடன் பலிக்கென கொண்டு செல்லப்பட்டன.

கொற்றவை ஆலயத்தில் பலிகொடுத்து பூசை முறைமைகள் இயற்றி அனைவரும் ஊன்சோறு உண்டு படையல் மதுவை அருந்தி மகிழ் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அரையிருளில் பிருஹத்சேனரும் மிலிந்தையும் லக்ஷ்மணையும் கிளம்பி எல்லையென அமைந்த சிற்றோடையை அடைந்து மத்ர நாட்டுக்குள் செல்வதாக வகுத்திருந்தார் அமைச்சர். அரசகுலம் நீங்கிச்சென்ற செய்தி மிகவிரைவிலேயே வெளிப்படும் என்றும் உடனே அரண்மனையினரும் அமைச்சர்களும் சிறைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிந்திருந்தார். முதலில் அவர் கழுவேற வேண்டியிருக்கும். தன் மைந்தனிடம் கழுவேறி உயிர்விட்டபின் தனக்கு ஆற்றவேண்டிய நீத்தார்கடன்கள் என்னென்ன என்று ஓலையில் எழுதியளித்துவிட்டு அவர் வந்திருந்தார்.

கொற்றவை ஆலயம் காட்டின் ஓரமாக இருந்த கரும்பாறை ஒன்றில் குடைந்து உருவாக்கப்பட்டது. எட்டுதடக்கைகளும் நெற்றிப்பிறையும் கொண்டு சினந்து செவ்விழி சூடி அமர்ந்திருந்த அன்னை பாறைச்சுவரிலேயே செதுக்கப்பட்டிருந்தாள். ஆலயமுகப்பை அடைந்து இறங்கி அங்கிருந்த சிற்றோடையில் கால்கழுவி ஆலயத்துக்குள் சென்ற பிருஹத்சேனர் தன் பீடத்தில் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு அமர்ந்தார். அருகே மேலாடையால் முகம்மூடி மிலிந்தை அமர பின்னால் இளவரசி அமர்ந்தாள். பூசகர்கள் நெறிகாட்ட அரசரும் அரசியும் பொறிஅமைக்கப்பட்ட செயல்பாவை போல் முறைமைகளை செய்தார்கள்.

பலி பீடத்தருகே ஒவ்வொன்றாக இழுத்து வரப்பட்டு தழைகாட்டி கழுத்துநீட்டச் செய்யப்பட்டு நீர்தெளித்து ஒப்புதல்பெற்று தலைவெட்டப்பட்ட ஆடுகள் கால்உதைத்து மெய்விதிர்ப்பு கொண்டு விழிஉறைந்து அசைவின்மைக்குள் மூழ்கிச் செல்வதை வெறுமனே நோக்கிக் கொண்டிருந்தார். அவ்வூனை உரித்து தினைச்சோறுடன் சமைத்து அன்னைக்கும் உடனமர்ந்த பதினெட்டு துணைத்தெய்வங்களுக்கும் படைத்தனர். பின்பு வீரரும் பூசகரும் துடியும் முழவும் என விழவு கொண்டாடிய சூதரும் ஊனுணவுக்கென வந்த மலைமக்களும் ஊனுணவுகொள்ள அமர்ந்தனர். அன்னைக்கு பதினெட்டு புதுமண்கலங்களில் படைக்கப்பட்ட எரிமண மலைமதுவை தொன்னைகளில் வாங்கி மூக்குவழிய அருந்தினர். ஊன்சோறு அள்ளி உண்டு கூவி நகைத்து நடனமிட்டு கொண்டாடினர். அவர்கள் ஏற்றிய பந்தங்களும் பெருங்கணப்புகளும் காடெங்கும் சுடர் விட்டன.

கையில் மதுவுடன் அமர்ந்திருந்த அரசர் அருகே வந்த அமைச்சர் குனிந்து “அரசே, கிளம்பும் நேரம்” என்றார். பிருஹத்சேனர் எழுந்து தன் ஆடையை சீரமைத்து தொடர்ந்துவந்த அரசியையும் இளவரசியையும் திரும்பி நோக்காமல் தேரில் ஏறிக்கொண்டார். ஓசைகளின்றி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். மது உண்டு களித்திருந்த எவரும் அதை அறியவில்லை. சகடங்களை மெல்ல உருட்டி புதர்செறிந்த காட்டை வகுந்து சென்றார்கள். அமைச்சர் “நான்காவது சிற்றோடைக்கு அப்பால் மத்ரம் அரசே. அதைக் கடந்தபின் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை” என்றார்.

மத்ர நாட்டின் எல்லையென ஓடிய சிற்றோடை பச்சை ஆடைக்குள் கரந்த வஞ்சக்கூர்வாள் என மின்னித்தெரிந்தது. அதன் ஓசை காதில் விழுந்ததுமே உடல்நடுங்க தேரில் எழுந்துவிட்டார். இரு கைகளாலும் தேர்த்தூண்களைப் பற்றியபடி நின்றார். மலைவிளிம்பில் சிறுகொடியில் பற்றித்தொங்க காலடியில் அடியற்ற பேராழம் தென்படுவதைப் போல பதைத்தார். புரவி நீரோடையை நெருங்கியது. கூழாங்கற்சரிவில் அதன் சகட ஒலி மாறுபட்டது. ஓடையை அளையும் ஆரக்கால்கள் மான்கூட்டம் நீர் அருந்துவதுபோல் ஒலித்தன. மறுபக்கக் கூழாங்கற்சரிவில் தேர் ஏறியபோது அவர் பின்னால் சரிந்தார்.

எல்லை கடந்ததும் பாகன் சற்று எளிதாக ஆகி கடிவாளத்தை தழைக்க குதிரைகள் கால்களை மெல்லவைத்தன. அந்த ஒலிமாறுபாட்டை உணர்ந்ததுமே பிருஹத்சேனர் கைகளை விரித்து ”நில்லுங்கள்! நிறுத்துங்கள் தேரை!” என ஆணையிட்டார். பாய்ந்து தேரில் இருந்து இறங்கி திரும்பி புண்பட்ட பன்றி என காட்டுப்புதர்களைக் கடந்து ஓடி உபமத்ரத்தின் எல்லைக்குள் நுழைந்தார். பின்னால் வந்த தேரிலிருந்து இறங்கிய அரசி “அரசே!” என்று கூவியதை அவர் கேட்கவில்லை.

”அரசே, என்ன ஆயிற்று?” என எதிரே பதைத்து ஓடிவந்த அமைச்சரிடம் "அமைச்சரே, என் குடி இழிந்து கொடிவழிகளின் மேல் பழி விழுந்தாலும் சரி, மலை வேடருக்கும் மச்சர்களுக்கும் நிகராக அமர்ந்துண்ணும் இழிவடைந்தாலும் சரி, இதை என்னால் இயற்ற முடியாது. உயிர் இழத்தலைவிட கொடியது. எரிநரகைவிட கொடியது. மலப்புழுவெனப் பிறத்தலைவிடக் கொடியது… என்னால் இயலாது அமைச்சரே” என்று கூவி கண்ணீர் விட்டபடி அவர் முன் காலோய்ந்து விழுந்தார்.

அவர் சென்றதையும் மீண்டதையும் மகதம் அறிய சிலநாழிகைகளே போதுமென பிருஹத்சேனர் அறிந்திருந்தார். எதிர்பார்த்தபடியே சிலநாட்களில் உபமத்ரத்திற்கு மகதத்தின் செய்தி வந்தது. மச்ச நாட்டு அரசர் உலூகரின் மகன் சம்புகனுக்கு அவர் மகள் லக்ஷ்மணையை மணம் பேசிய அச்செய்தியுடன் வந்த மகதத்தின் அமைச்சர் கலிகர் ஜராசந்தர் அம்மணவிழாவுக்கு நேரில் வந்து உபமத்ரத்தை வாழ்த்தவிருப்பதாக சொன்னார். அதிலிருந்தது ஒரு தண்டனையும் கூட என அறிந்தார் பிருஹத்சேனர். அரியணையில் அமர்ந்திருந்தவர் ஒரு சொல்லும் சொல்லாமல் உறைந்த முகத்துடன் ஓலையை வாங்கி ஓரிரு வரிகளை படித்துவிட்டு தன் அமைச்சரிடம் கொடுத்துவிட்டார்.

மகதத்தின் அமைச்சர் கலிகர் “இக்கடிமணம் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் நிகழவேண்டுமென்று ஜராசந்தர் விரும்புகிறார். எல்லைப்பகுதி நட்புநாடுகளை நேரில் காணும் பொருட்டு அவர் இம்மாதம் முழுநிலவு நாளில் கிளம்புகிறார். சௌவீரத்திற்கு வந்தபிறகு இங்கும் வருவார். அவர் வரும்பொழுது மணநிகழ்வை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வளர்பிறை பதின்மூன்றாம் நாள் உகந்தது. காலைநேரம் திருமணத்திற்கு உரியது என ஜராசந்தர் கருதுகிறார். மாலைநேரங்களில் அவர் மது அருந்தி கலைகள் தேர்வதனால் அவை நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இல்லை” என்றார்.

அரியணை அருகே அமர்ந்திருந்த அரசி சற்றே சினத்துடன் ”மணமகனையும் மணநாளையும் மட்டுமின்றி நேரத்தையும் குறித்து அனுப்பியிருக்கிறார் உங்கள் அரசர்” என்றாள். கலிகர் சினம் தெரிந்த விழிகளுடன் “என் சொல் பொறுத்தருள்க அரசி! அவர் உங்களுக்கும் அரசரே” என்றார். அரசி தன் மேலாடையை நெற்றிமேல் இழுத்துவிட்டுக்கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டாள். பிருஹத்சேனர் ”இதில் மாற்றுச்சொல் ஏதும் நான் சொல்வதற்கில்லை கலிகரே. நான் மகதச் சக்ரவர்த்தியின் அருள்நாடி நிற்பவன் “என்றார்.

சற்றே விழிகனிந்த அமைச்சர் ”மச்ச நாட்டு இளவரசரை நான் நேரில் பார்த்ததுண்டு. அவரது தோற்றம் அழகியது அல்ல. அவர் குலம் உயர்ந்ததும் அல்ல. அவர்கள் சென்ற ஐந்து தலைமுறைகளாகவே அரசகுடியென கருதப்படுகிறார்கள். படைக்கலமேந்தி போரிடவோ நூல் கற்று மன்றம் வரவோ இன்னும் அவர்களில் எவரும் பயிற்சி பெறவில்லை. உண்மையில் இளவரசர் இன்னும் சர்மாவதியில் மீன்பிடிக்கும் பரதவராகவே நாட்களை கழிக்கிறார். ஆயினும் இனிய குணமுடையவர். பிறரை புரிந்துகொள்ளும் விழிகள் கொண்டவர். உங்கள் இளவரசி ஒருபோதும் அவரை வெறுக்கமாட்டாள்” என்றார்.

அவர் சொற்களில் ஒலித்தது சிறிய ஏளனமா என்று எண்ணியபடி பிருஹத்சேனர் நோக்கினார். அமைச்சர் ”நீங்கள் எண்ணுவது புரிகிறது பிருஹத்சேனரே. நான் என் உள்ளக்கிடக்கையைத்தான் சொன்னேன். நானும் ஏழு பெண்களுக்கு தந்தைதான். என் மகள்களை குலமும் செல்வமும் கொண்ட இளைஞர்களுக்கு மணம் முடித்தேன். அவர்களில் நல்லியல்பு கொண்ட இருவரிடம் மட்டுமே என் பெண்கள் மகிழ்ந்து வாழ்கிறார்கள். பிற மணங்களனைத்துமே அவர்களுக்கு ஒருவகை இறப்புகளாகவே அமைந்தன. இன்று நான் சொல்வது உபமத்ரத்தின் அரசரிடமல்ல இளம் பெண்ணொருத்தியைப் பெற்ற தந்தையிடம்” என்றார்.

பெருமூச்சுவிட்டு பிருஹத்சேனர் சொன்னார் ”இத்தகைய எளிய சொற்களால் என்னை நிறைவு செய்து கொள்ளவேண்டியதுதான். பிறிதொரு வழியும் எனக்கில்லை அமைச்சரே.” பேச்சை விலக்கும்பொருட்டு கலிகர் புன்னகைத்து “தாங்கள் வீணை வல்லவர் என்றார்கள். உங்கள் இசையை கேட்க விழைகிறேன் அரசே” என்றார். பிருஹத்சேனர் ”தவறான வினா அமைச்சரே. என் இளவயதில் அவமதிக்கப்பட்ட இளமையின் சீற்றத்துடன் சென்று இவ்வுலகையே உதறி அது ஒன்றே அடைக்கலமெனக் கருதி அடிபணிந்து இசையை அடைந்தேன். இன்று அதை நான் இழந்துவிட்டேன்” என்றார்.

“இறைவனைக் காண்பதற்கு நிகரான தவம் செய்து இசையை அடைந்தேன். ஆனால் என்று மீண்டு வந்து என் ஆசிரியர் முன் நின்று வென்றேனோ அப்போதே அதன் பணி முடிந்துவிட்டது. அதன் பின் என் வீணை வெறும் கேளிக்கைப் பொருளாகவே இசைத்திருக்கிறது. என் வெற்று ஆணவத்தை மட்டுமே அது வெளிக்காட்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அது தன் நுண்மையை இழப்பதை நான் அறிந்திருக்கவில்லை. என் மகள் தன் கைகளால் வீணையைத் தொட்டு கற்றுக் கொண்டது என்னிடம். ஒவ்வொரு நாளும் தன் கனவின் இசையை அவள் விண்ணிலிருந்து பெற்றுக்கொண்டான். ஒரு முறை அவள் இசைக்கையில் பிறிதொரு அறையிலிருந்து கேட்ட நான் எண்ணியிருக்காத கணமொன்றில் உள்ளம் திறந்து உடல் சிலிர்த்தேன். அவ்வறைக்குள் சென்று பார்த்தபோது அறைமுழுக்க தோட்டத்துச் சிறுகுருவிகள் வந்தமர்ந்து இசை கேட்பதைக் கண்டேன். நான் விட்ட இடத்திலிருந்து தொட்டு அவள் முன் சென்றிருக்கிறாள் என்று அறிந்தேன். நான் இழந்ததென்ன என்று புரிந்து கொண்டேன், இன்று என்னிடமிருப்பது ஓசையை மட்டுமே கிளப்பும் ஒரு வீணை மட்டுமே” என்றார்.

அமைச்சர் ”தாங்கள் உளமிசைந்தால் நான் இளவரசியின் இசையை கேட்க விழைகிறேன்” என்றார். “வேதமறிந்த பிராமணராகிய நீங்கள் கேட்டு ஒரு சொல் வாழ்த்தினாலும் அது இளவரசிக்கு கொடையே” என்றார் பிருஹத்சேனர். அமைச்சரை அன்று மாலை தன் மகளிர் மாளிகையின் சிற்றவைக்கு வரச்சொன்னார். அங்கு அவரும் அரசியும் அரச மகளிர் நால்வரும் மட்டும் அமர்ந்த அவையில் அவர் கோரியதற்கிணங்க இளவரசி லக்ஷ்மணை தன் வீணையை மீட்டி இசைக்க ஒப்புக்கொண்டாள்.

சேடியர் வந்து அவள் அமர செம்பட்டு விரித்த பீடத்தை ஒருக்கிவிட்டுச் சென்றனர். அருகே துணைப்பீடங்களிட்டனர். அமைச்சர் தாம்பூலத்தை எடுத்து சுருட்டிக் கொண்டிருக்கும்போது மெல்லிய சிலம்பொலியை கேட்டார். இயல்பாக விழி திருப்பியவர் திறந்த கதவுக்கு அப்பாலிருந்து மெல்ல இருளில் வண்ணங்கள் பூத்து உள்ளே வந்த மத்ர நாட்டு இளவரசியைக்கண்டார். தன்னை அறியாது எழுந்து நின்றார். இயல்பாக கூப்பிய கைகளுக்குள் இருந்த வெற்றிலைச் சுருளை உணர்ந்து திகைத்து மீண்டும் தாலத்திலேயே வைத்தார். அவர் கண்டது மெய்களை அனைத்தும் அறிந்து அறிவதற்கு அப்பால் என நின்ற கல்வித் திருமகளை.

பீடத்தில் வந்தமர்ந்து தந்தையையும் அமைச்சரையும் வணங்கி அன்னையை நோக்கி புன்னகைத்து இளவரசி வீணையை மடியிலிருத்திக் கொண்டாள். அதன் கம்பிகளை அவள் நீண்டமெல்லிய விரல்கள் முறுக்கின. மெல்ல வருடி இறுக்கத்தை அறிந்தன. அவள் மீட்டத் தொடங்குவதற்குள்ளாகவே அமைச்சர் தேனிசை ஒன்றை கேட்டுவிட்டார். வீணை இசையென மாறத் தொடங்கியபின் அவர் அங்கு இல்லை. பருப்பொருளென தன்னை விரித்து இங்கே நிறைந்திருக்கும் மாயை ஒலி மட்டுமே என அவர் முன் நின்றது. மீட்டி முடித்து இளவரசி கை கூப்புகையில் கண்ணீர் வார நெஞ்சில் கை சேர்த்து தாடியின் வெண்மயிர்களில் விழிநீர் முத்துகள் தங்கி ஒளிர அமைச்சர் அமர்ந்திருந்தார். பின் எழுந்து அரசரை வணங்கி தன் மாளிகைக்கு மீண்டார். மறு நாள் கிளம்பி மகதத்திற்கு சென்றார்.

ஜராசந்தரிடம் அவர் சொன்னது என்ன என்பதை நூல்கள் வகைக்கொன்றாக சொல்கின்றன. அறிவதெல்லாம் ஆகி நின்ற கலைத்திருவை கண்களால் கண்டதாக அவர் சொன்னார் என்கிறார்கள். நிகரற்ற வைரம் தூய வெண்பட்டிலேயே அமர்ந்திருக்கவேண்டும். மண்ணாளும் மணிமுடி ஒன்றே அதை சூட வேண்டும். தெய்வம் என்பது ஏழ்நிலை மாடம் எழுந்த பேராலயத்திலேயே அமர வேண்டும் என்று அவர் சொன்னார்.

இளவரசி அழகு குறித்த அவரது சொற்கள் ஜராசந்தரை ஈர்த்திருக்க வேண்டும். சில நாட்களுக்குப் பின் அவர் கிளம்பி பிறநாடுகளைத் தவிர்த்து நேராக உபமத்ரத்திற்கு வந்தார். அவரது வருகை அச்சுறுத்தினாலும் மெல்லமெல்ல பாரதவர்ஷத்தின் பெரும் சக்ரவர்த்தி ஒருவரின் வருகையின் களியாட்டை உபமத்ரம் அடைந்தது. அரசவை கூடி மகத்தின் பேரரசருக்கு வரவேற்பு முறைமைகள் அமைத்தது. நகரம் கொடித்தோரணமும் மலர்த்தூண்களும் பட்டுப்பாவட்டாக்களுமாக அணிகொண்டு பூத்தது.

மதமெழுந்த பெருங்களிறுகள் நூறும் ஆயிரம் வெண்புரவிகளும் ஐந்தாயிரம் கவசவேல் படையினரும் அணிச்சேடியரும் இசைச்சூதரும் அகம்படியாக வர நகர்நுழைந்தார் ஜராசந்தர். முரசுகள் இயம்ப கொம்புகள் பிளிற நகர்வாயிலில் சென்று நின்று அவரை தாள்தொட்டு வாள்தாழ்த்தி வணங்கி வரவேற்று அழைத்து வந்தார் பிருஹத்சேனர். தனது அரியணையில் ஜராசந்தரை அமரச்செய்து அருகே எளிய பீடத்தில் அமர்ந்துகொண்டார். அரசியும் இளவரசியும் அவர் அருகே ஜராசந்தரைப் பணிந்து நின்றனர். உபமத்ரத்தின் மணிமுடியையும் செங்கோலையும் தான் அணிந்து அமர்ந்து குடிகளுக்கும் வணிகருக்கும் கொலுவளித்தார் ஜராசந்தர். வேதியருக்கும் புலவருக்கும் சூதருக்கும் பாணருக்கும் விறலியருக்கும் தொழும்பருக்கும் அவர்கள் வாழ்நாளில் கண்டிராத பெரும் பரிசுகள் அளிக்கப்பட்டன. வணிகர்களுக்கான சாத்துகள் பிறப்பிக்கப்பட்டன. அதன் பின் மத்ரகுடிகள் அதுவரை அறிந்திராத பெரும் உண்டாட்டொன்று நிகழ்ந்தது.

உண்டாட்டு நிகழ்வில் விருந்துக்கு முன் தன்னறையில் மது அருந்தி அமர்ந்திருந்த ஜராசந்தர் உபமத்ரத்தின் இளவரசியை தான் மணக்கவிருப்பதாக சொன்னார். பிருஹத்சேனர் திகைத்து எழுந்துவிட்டார். ஜராசந்தருக்கு பதினெட்டு துணைவியர் முன்னரே இருப்பதை அவர் அறிந்திருந்தார். முறைசாரா துணைவியர் எண்ணிலடங்காதவர். பட்டத்து அரசி வங்கத்து அரசனின் மகள். அரண்மனையில் ஒரு சேடி என்பதற்கு அப்பால் தன் மகளுக்கு இடமிருக்கப்போவதில்லை என்று உணர்ந்தார். ஆயினும் அவரால் சொல்லெடுத்து முன்வைக்க இயலவில்லை.

“உமது மகளை இன்று அவையில் பார்த்தேன் மகதத்தின் மகளிரறையில் அன்றி வேறெங்கும் இருக்கலாகாது அவள். அவள் அழகு பேரரசர்களுக்குரியது” என்று சொல்லி ஜராசந்தர் நகைத்தார். பிருஹத்சேனர் சொல் அடங்கி விழிநனைந்து அமர்ந்திருந்தபோதிலும் அரசி அச்சொற்களைக்கேட்டு மகிழ்ந்தாள். ”மகதத்தின் அரசருக்கு துணைவியாவது எனது குடி மூதாதையருக்கு உவகையளிப்பது. எனது மகளின் வாழ்வு இப்போது பூத்தது. இதைவிட பெரிய கொடை என ஏதும் நாங்கள் வேண்டவில்லை” என்றாள்.

திரும்பி தன் அமைச்சரை நோக்கிய ஜராசந்தர் ”அமைச்சரே, அவ்வண்ணமெனில் இனி பிந்தவேண்டியதில்லை. இளவரசியை கைக்கொள்ள நல்ல நாளும் கோளும் தெரிந்து சொல்ல நிமித்திகருக்கு ஆணையிடுக!” என்றார். கலிகர் “அவ்வண்ணமே” என்று தலைதாழ்த்தினார்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 4

அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன? ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்? மடியிலிட்டு வளர்த்தோம்? பொன்னும் மணியுமிட்டு அணி செய்தோம்? நம் மூதன்னையருக்கு அடுக்கும் செயலா இது? அதற்கு ஒரு போதும் ஒப்ப மாட்டேன்.”

அரசி நிகரான சினத்துடன் திரும்பி முகம் உருகும் அரக்குப்பாவையென சுளிக்க “வேறு என்ன செய்யவிருக்கிறீர்கள்? மச்ச நாட்டுப் பரதவனிடம் நதியில் மீன்பிடித்து அவள் வாழ வேண்டுமா? அவள் வயிற்றிலுதிக்கும் குழந்தைகள் செம்படவர்களாக சிற்றாடை கட்டி சேற்றில் உழல வேண்டுமா?” என்றாள். “அவள் ஊழ் இது என்றால் அவ்வாறே அமையட்டும். ஜராசந்தர் அரண்மனையில் அவள் இடம் எதுவாயினும் அரச முறைமைகளுக்கு அவள் உரியவளாக இருப்பாள். செம்பட்டுத்திரையிட்ட பொற்பல்லக்கும் அகம்படி வீரர்களும் அணிச்சேடியரும் அவளுக்கு அமைவார்கள். ஆணையிடவும் அரண்மனை வாழவும் தகுதி அமையும். அவள் மைந்தர் இளவரசர்களாகவே அறியப்படுவார்கள்” என்றாள்.

பின் அவள் குரல் தழைந்தது. “யாரவறிவார்? அவர்களில் வீரமும் நுண்ணறிவும் கொண்ட மைந்தர் பிறந்து என்றோ ஒரு நாள் மகதப் பெருநிலத்தின் ஒரு பகுதியை வெல்லக்கூடும். முடிசூடி கோல்கொண்டு அரியணையமர்ந்து அவர்கள் ஆளவும் கூடும். மகதநிலம் மிகப்பெரியது. நெடுங்காலம் அது ஒற்றைநாடென திகழமுடியாது” என்றாள். பெருமூச்சுடன் மஞ்சத்தில் மெல்ல அமர்ந்து “இன்று நாம் எண்ணக்கூடியது இதுவே. பெருஞ்சுவரிலிருக்கும் ஒரேவாயில். நமக்குப்பின் காலப்பெருவெள்ளம்” என்றாள்.

“நான் இதற்கு எப்படி ஒப்புவேன்? என் உள்ளம் சொல்கிறது என் இளையோள் அந்த மச்சர்குடி மைந்தனுடன் காதல் கொண்டு வாழமுடியும். இந்த மதகளிற்றின் முன் அவள் மிதிபட்டு மண்ணில் உழல்வாள்” என்றார் பிருஹத்சேனர். “அது அரச குலப்பெண்டிரின் ஊழ். அவர்களில் இனிய காதல் வாழ்க்கையை அடைந்தவர்கள் மிகச்சிலரே. அரண்மனைக்கும் மணிமுடிக்கும் அவர்கள் கொடுக்கும் நிகர்விலை அது” என்றாள் அரசி. “என் இளமையில் பெருநிலம் ஆளும் திண்தோள் கொண்ட வீரன் ஒருவனை கனவுகண்டேன். வீணைநரம்பன்றி பிறிதறியாத உங்களுக்கு அரசியாகி இந்தச் சிற்றூரின் மரவீட்டில் பொய்யரசை ஆளவே எனக்கு ஊழிருந்தது.”

அன்றிரவெல்லாம் தன் அரண்மனையில் துயில் கொள்ளாது அமர்ந்திருந்த பிருஹத்சேனர் நெடுநாட்களுக்குப் பின் தன் வீணையை எடுத்து அதை மீட்டினார். ஒன்றுடனொன்று இணையாமல் தனித் தனியாக அதிர்ந்த உலோக விம்மல்களின் நிரையாக எழுந்தது இசை. ஆனால் அவர் உளம் கொண்ட துயரங்களனைத்தையுமே சொல்லி முடித்து அந்நிறைவை தன் குடத்திற்குள் நிறைத்து ரீங்கரித்தது. அதன் மேல் கவிழ்ந்து துயின்று கம்பித் தடங்கள் செவ்வரிகளாகப் படிந்த முகத்துடன் எழுந்தார். ஆடி முன் நின்று அறியாத தெய்வம் ஒன்று தன் சவுக்கை அவர் முகத்தில் வீசிச் சென்றதுபோல தெரிந்த அந்த வடுநிரையை நோக்கி நீள்மூச்செறிந்தார்.

அவ்வரிகளை மெல்ல விரல்களால் வருடிக்கொண்டிருந்தபோது தன்னுள் ஓர் இசை எழுவதை உணர்ந்தார், குருதியாலான கம்பிகள் கட்டப்பட்ட யாழ் தன் உடல். அது மீட்டும் இசையை செவிகளுக்கு அப்பால் அகச்சிறையில் வாழும் ஆத்மனால் மட்டுமே கேட்க முடியும். என்ன என்றறியாமல் அவர் உடல் அப்போது விதிர்த்தது. தன்னுள் எழுந்த அறிதல் ஒன்றின் விளைவு என உணர்ந்தபின்னரே அவர் அவ்வறிதலை சொற்களாக ஆக்கிக்கொண்டார். அதுவா அதுவா என மீண்டும் மீண்டும் தொட்டுத்தேர்ந்தார். கல்லா வைரமா என மயங்கும் வணிகனின் பதற்றத்துடன். பின் புறங்கழுத்தில் விழுந்த குளிர்ந்த அடி போல அதை உணர்ந்தார்.

அவர் மகள் ஜராசந்தனுக்கோ மச்சனுக்கோ மணமகள் அல்ல என்று. அவள் வாழும் இடம் பிறிதொன்று. தூய இசைமீட்டி அவள் செய்த தவம் அவளை அங்கு மட்டுமே கொண்டுசேர்க்கும். அவள் இசைத்தெய்வங்களால் சூழப்பட்டிருக்கிறாள். அவை அவளை தங்கள் மெல்லிய சிறகுகளால் சுமந்துகொண்டுசெல்கின்றன. எங்கு அவை தங்கள் சிறகமைத்து அமரமுடியுமோ அங்குதான் கொண்டுசெல்கின்றன. எவ்விடம் என்று அவர் அறிந்திருக்கவில்லை. எவரென்று உய்த்திருக்கவில்லை. ஆனால் திருமகள் தன் ஆலயத்தை சென்றடைவாள் என்று முழு உறுதியுடன் உணர்ந்தார்.

நிறைந்த உள்ளத்துடன் அவர் தன் மந்தண அவைக்கு வந்தபோது மத்ர குலத்தின் குடிமூத்தோர் எழுவர் சினத்துடன் அங்கு வந்திருந்தார்கள். முந்தைய நாள் அரியணையில் ஜராசந்தன் அமர்ந்தது அவர்களை கிளர்ந்தெழச்செய்திருந்தது. முகமன் ஏதுமின்றி சினத்துடன் கைநீட்டி எழுந்த பத்ரகுடியின் மூத்தாரான வீரபத்ரர் “அரசே, மத்ர நாட்டு மணிமுடிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். ஆசுர குலத்து ஜரையின் மைந்தனுக்கு அடிபணிந்து நிற்க எங்களால் ஆகாது” என்றார்.

சங்ககுடியின் மிருகசீர்ஷர் “அந்தக் குலமிலி என்று இவ்வரியணையில் அமர்ந்தானோ அப்போதே நாங்கள் மத்ரர்கள் அல்லவென்று ஆகிவிட்டோம் இனி இம்மண் எங்களுக்குரியதல்ல. எங்கள் குடிகளனைத்தும் கிளம்பி மத்ரபுரிக்கு செல்கிறோம்” என்றார். “இன்று ஜராசந்தனின் தொழும்பனாக தாங்கள் இவ்வரியணை அமர்ந்திருக்கின்றீர். மத்ரரென்று இனி பெயர் சொல்ல வேண்டாம்” என்றார் பிருங்க குடியின் சம்விரதர்.

பிருஹத்சேனர் "எம்முடிவையும் எடுக்கும் நிலையில் நானில்லை. படையற்றவன். அரசன் என்று பெயர் மட்டுமே கொண்ட சிற்றரசன். என்னால் ஆவது ஏதுமில்லை. அணைவது நிகழ்க!” என்றார். ”அது உங்கள் விருப்பம். ஆனால் எங்கள் குடி பிறந்த இளவரசியை நீங்கள் அசுரக்குருதிகொண்ட அவலனுக்கு அளிக்கிறீர்கள். மூதன்னையர் வாழும் எங்கள் இல்லங்களில் இச்செய்தி அளித்த பெரும் சினத்தை அறிவீர்களா?” என்றார் சிருதகுடியின் பிருகதர். “இளவரசியை ஜராசந்தன் கொள்ள ஒப்பி வெறுங்கையுடன் நாங்கள் நாடு நீங்க மாட்டோம். இங்கு வந்தது எங்களுடன் அவளையும் அழைத்துச் செல்வதற்காகவே.”

”ஆம் ஆம்” என்றனர் குடிமூத்தார். “அதுவும் என் ஆணையில் இல்லை. இவ்வரண்மனையே மகதத்தின் படைகளால் ஆளப்படுகிறது. உங்களால் முடிந்தால் அழைத்துச் செல்லலாம்” என்றார் பிருஹத்சேனர். “எங்களிடம் வாளில்லாமல் இருக்கலாம் அரசே. வாள் முனையில் வீழ்த்த தலையிருக்கிறது. எங்கள் பதினெட்டு தலைகள் விழுந்த இம்முற்றத்திலிருந்து ஜராசந்தர் அவளை கொள்ளட்டும். அசுரன் அவளைக்கொள்ள எங்கள் புல்லுயிர் காத்து இங்கு இருந்தோம் என்ற பழி தேவையில்லை. மறைந்து விண்ணேகி அன்னையர் முன்சென்று நாங்கள் நாணி தலைகுனிய வேண்டியதில்லை” என்றார் சம்விரதர்.

பிருஹத்சேனரின் அமைச்சர் ”ஆவதென்ன என்று பார்ப்போம் குடிமூத்தாரே. உங்கள் எதிர்ப்பை ஜராசந்தருக்கு அறிவிக்கிறேன். இங்கு இவ்வரசை அவர் அமைத்ததும் உங்களை குடித்தலைவர்களென கோல்கொள்ளசெய்ததும் இது மத்ரநாடு என தொடர்வதற்வதற்காகவே. உங்கள் உணர்வுகளை அவர் புரிந்து கொள்ளாமலிருக்கமாட்டார்.” என்றார். “அவனிடம் எங்களுக்கு முறையீடு ஏதுமில்லை” என்றார் சம்விரதர். “நான் முறையிடுகிறேன். கலிகர் சொல்புகும் செவிகொண்டவர்” என்றார் பிருஹத்சேனரின் அமைச்சர்.

அமைச்சர் மகதர் அமைந்த மாளிகைக்குச் சென்று அங்கு தன் வீரருடனும் அமைச்சருடனும் மதுவருந்தி பகடையாடிக்கொண்டிருந்த ஜராசந்தர் முன்நின்று வணங்கி மத்ர குடியினரின் எதிர்ப்பைப் பற்றி சொன்னார். “குடிமூத்தார் தலைவிழ நாம் இங்கு கோல்கொள்ள முடியாது அரசே” என்றார். முதலில் ஏளனமும் சினமும் கொண்டு நகைத்தபடி ”என் வீரர்களை அனுப்புகிறேன். அவர்கள் பதினெட்டு பேரும் இங்கு வரட்டும். அவர்கள் என் சொல்லுக்கு மறுசொல் எடுக்கிறார்களா என்று பார்க்கிறேன்” என்றுதான் ஜராசந்தர் சொன்னார். ஆனால் அமைச்சர் கலிகர் “அவர்கள் இறப்புக்கெனவே வந்திருக்கிறார்கள் அரசே. படைகொண்டு அச்சுறுத்தமுடியாது” என்றதும் திகைத்து நோக்கினார்.

“இவ்வரியணை முற்றத்தில் தங்கள் தலை இட்டு உங்கள் கோலுக்கு பழி சேர்க்க வந்திருக்கிறார்கள். அவ்வாறு நிகழுமென்றால் இங்குள்ள மத்ரகுடிகள் மலைகடந்து செல்வார்கள். நம்மால் அவர்களை தடுக்கமுடியாது. இங்கு மகதப்படை மட்டுமே எஞ்சும். குடிகளென எவரும் இல்லாமல் இங்கு வாழ்வது அரிது” என்றார் கலிகர். ஜராசந்தர் தன் மீசையை முறுக்கியபடி சின்னஞ்சிறு விழிகள் ஒளியிழக்க தன்னுள் ஆழ்ந்து அமர்ந்தார். அமைச்சர் கலிகர் ”அதற்கு வழியொன்றுள்ளது அரசே” என்றார். ”பாரதவர்ஷமெங்கும் மறுக்கவியலாத மணமுறை என்பது மணத்தன்னேற்பே. மத்ர நாட்டு இளவரசிக்கு பிருஹத்சேனர் மணத்தன்னேற்பு நிகழ்வை ஒருங்கு செய்யட்டும்.”

ஜராசந்தர் திரும்பி “எண்ணி சொல்லெடுக்கிறீரா அமைச்சரே? இன்றுவரை எந்த மணத்தன்னேற்பிலும் நான் வென்றதில்லை. கதையில் எனக்கு நிகரானவர் என பலராமரும் பீமனும் கீசகனும் துரியோதனனும் இருக்கையில் உறுதியான வெற்றி என்று நான் அதை சொல்ல முடியாது. வில்லென்றால் பார்த்தனும் கர்ணனும் இளையயாதவனும் அஸ்வத்தாமனும் இருக்கையில் நான் எதை வெல்ல முடியும்?” என்றார். அமைச்சர் ”ஆம். மணத்தன்னேற்பு அறிவித்தால் அவர்கள் வந்து சேர்வார்கள். பார்த்தன் வந்தால் வில்லிலும் பலராமர் வந்தால் கதையிலும் தாங்கள் வெல்வது அரிது. ஆனால் அதற்கும் வழியொன்றுள்ளது” என்றார்.

“நாம் நமது சிற்பியை இங்கு அனுப்புவோம் நாம் மட்டுமே வெல்லும் உள்நுட்பம் கொண்ட பொறி ஒன்றை அவன் அமைக்கட்டும். அதை வெல்ல பார்த்தனால் இயலாது. துவாரகையின் மன்னனாலும் இயலாது. கர்ணனாலும் இயலாது. நாம் வெல்வோம், மாத்ரியை கொண்டு செல்வோம். பாரத வர்ஷத்தின் ஷத்ரியர்கள் அதை எதிர்க்க முடியாது. குடிகள் அனைவரும் அதை ஏற்றேயாக வேண்டும்” என்றார். ”நான் மட்டுமே வெல்லும் பொறி என்றால்,..” என்று ஜராசந்தர் இழுக்க ”அதை நானறிவேன், தங்களுக்கு அமைத்துக் காட்டுவேன். மணநிகழ்வு நாள்வரை அப்பொறியிலேயே நீங்கள் பயிற்சி எடுக்கலாம். அதன் நுட்பமென்ன என்றறியாத எவரும் அதை வெல்ல முடியாது” என்றார் கலிகர்.

அஸ்தினபுரியருகே கானாடிக்கொண்டிருந்த பார்த்தரும் இளைய யாதவரும் மாத்ரியின் மணத்தன்னேற்புக்கான அறிவிப்பை மத்ரத்திலிருந்து வந்த பிராமணத்தூதரின் வழியாக அறிந்தனர். துரியோதனனும் கர்ணனும் அதற்கு செல்லவிருப்பதாக அஸ்தினபுரியிலிருந்து வந்த ஒற்றன் சொன்னான். முன்னரே மாத்ரியைப் பற்றி இளைய யாதவர் ஓரிரு சொற்கள் சொன்னதை அர்ஜுனர் நினைவுகூர்ந்தார். அச்சொற்களில் ஒருவரி எண்ணத்தில் ஒளிகொண்டது. “இசையின் முழுமையறிந்தவள் அவள்.” புன்னகையுடன் அர்ஜுனர் ”இளைய யாதவரே, அவ்விளவரசியை தாங்கள் வெல்ல விரும்புகிறீர்களா?” என்றார்.

“ஆம்” என்றார் இளைய யாதவர். விழிதிருப்பியபடி “பால்ஹிக மலைக்குடிகளில் ஒரு நாடு எனக்கென இருந்தாக வேண்டும். துவாரகையின் வேர்களில் ஒன்று அங்கு இறங்கிச் சென்றாலொழிய நான் உத்தரபதம் மீது ஆணைகொண்டிருக்க மாட்டேன்" என்றார். பார்த்தர் “அவ்வண்ணமெனில் இவளே அதற்குரியவள்” என்றார். “ஆம், அதை நான் கணித்தேன். ஆகவே முன்னரே அவளைப்பற்றிய அத்தனை செய்திகளையும் திரட்டிவிட்டேன். அழகி. இன்னிசை தேர்ச்சி கொண்டவள். அவளை வித்யாலக்ஷ்மி என்றனர் சூதர்” என்றார். அர்ஜுனர் சிரித்தபடி “வடபுலப்பாதைக்கு அவள் உதவாவிடில் அவளை ஏற்க மாட்டீர்கள் அல்லவா?” என்றார். இளைய யாதவர் சிரித்து “அவள் பெயரை அறிந்த கணமே ஏற்றுவிட்டேன்” என்றார். ”இனி எஞ்சுவது அவள் என்னிடம் வந்து சேர்வது மட்டுமே.”

மண நிகழ்வுக்கு அவர்களிருவரும் ஒரே தேரில் வந்திறங்கினர். சப்தசிருங்க மலை மடிப்பில் இருந்த உபமத்ரத்தின் தலைநகராகிய ஹம்சபுரியில் மணத்தன்னேற்பு விழவிற்கென அணிமுற்றம் ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அரண்மனை மிகச்சிறியது. மரத்தாலான பன்னிரண்டு அறைகளும் மூன்று கூடங்களும் மட்டும் கொண்டது. அதன் இரு பக்கமும் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்கும் சிறு மரவீடுகள் இருந்தன. மகதத்தின் சுங்கநாயகத்தின் மாளிகை மன்னர் அரண்மனையைவிட பெரிதாக அமைந்திருந்தது. மகதத்தின் நிலைப் படைத்தலைவனின் மிகப்பெரிய மாளிகை அப்பால் பெருஞ்சாலையின் ஓரத்தில் படைவீடுகள் சூழ அமைந்திருந்தது. அங்குதான் ஜராசந்தர் தங்கியிருந்தார்.

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைச்சாலையின் எல்லையில் மலையிறங்கிய உருளைக்கல் அடுக்கிக் கட்டப்பட்ட முந்நூறு சிற்றில்லங்கள் சிதறிக் கிடக்கும் அலைமண் பரப்பே அந்நகர். மணத்தன்னேற்புக்காக வந்த மன்னர்களுக்கு மலைச்சரிவில் மரப்பட்டைகளால் சுவர்கட்டி ஈச்சஓலையால் கூரையிட்டு அமைக்கப்பட்ட சிறிய பாடிவீடுகளே அளிக்கப்பட்டன. அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் தங்கிய பாடிவீட்டின் மேல் அவர்களின் கொடிபறக்கும் மூங்கில் எழுந்து நின்றது.

அங்கு யாதவருடன் தங்கிய பார்த்தர் என்ன நிகழ்கிறதென்பதை தன் உளவுச்செய்திகளைக் கொண்டு புரிந்துகொண்டார். ”இந்நகரும் இச்சிற்றரசும் பால்ஹிக மண்ணுக்குள் ஒரு வணிகப்பாதை அமைக்கும் பொருட்டு மகதத்தால் உருவாக்கப்பட்டவை. பிருஹத்சேனரின் மகளை தான் மணம் கொள்வதை மத்ர நாட்டு குடிகள் ஏற்கும் பொருட்டு ஜராசந்தர் நடத்தும் நாடகம் மட்டும் இது” என்று இளைய யாதவரிடம் சொன்னார். “அந்தப் பொறி நாமறியாத நுட்பமுடையது. அதை தான்மட்டும் வெல்லவே ஜராசந்தர் அமைத்திருப்பார். மகத நாட்டிலிருந்து வந்த கலிங்கத்துச் சிற்பி ஒருவனால் அது சமைக்கப்பட்டுள்ளது. அவன் பெயர் சுபகன்.”

இளைய யாதவர் காலையில் மலைச்சரிவின் இளவெயிலில் சிறுபறவைகள் சூழ அமர்ந்து குழலிசைத்துக்கொண்டிருந்தார். “அப்பொறிக்கு நிகரான பிறிதொன்றை அமைத்து அவன் ஜராசந்தனுக்கு அளித்திருப்பான். மகதத்தில் அவர் அப்பொறியில் நீண்ட பயிற்சி எடுத்திருப்பார்” என்றார் பார்த்தர். இளைய யாதவர் குழலைத்தாழ்த்தி உளமளிக்காது தலையசைக்க ”இளையவரே, நான் அதிலுள்ள பேரிடரைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் குழலிசைத்து பிறிதெவருடையதோ வாழ்வென்று அதை கேட்டிருக்கிறீர்கள்” என்று பார்த்தர் சினந்தார். “பாண்டவரே, இவை அனைத்தும் பிறிதெவருடைய வாழ்க்கையோ அல்லவா? என் வாழ்க்கை என்று இவற்றை நடிக்கிறேன்” என்றார்.

மேலும் சினந்து ”இந்த வீண்வேதாந்தச் சொற்களை சில தருணங்களிலேனும் நான் வெறுக்கிறேன்” என்றபடி பார்த்தர் வெளியே சென்றார். முற்றத்துக்குச் சென்று அந்தப் பொறியை கூர்ந்து நோக்கியபடி பன்னிருமுறை கடந்து சென்றார். பின்பு அதை கன்றுத் தோலில் பன்னிரு வரைபடங்களாக வரைந்தார். அப்பன்னிரு வரைபடங்களையும் ஒன்றாக்கி ஒற்றை ஓவியமாக்கினார் மகிழ்வுடன் வந்து ”இளையவரே, அப்பொறியின் நுட்பத்தை புரிந்துகொண்டேன். நாம் அதை நோக்கி தொடுக்கும் ஒவ்வொரு அம்பையும் காற்றசைவால் அறியும் சிறகுகள் கொண்டது அது. ஒவ்வொரு அம்பு கடந்து செல்லும்போதும் தன்னை ஒரு முறை மாற்றிக் கொள்கிறது. ஆகவே அதை முன்னரே கணித்து வெல்லமுடியாது” என்றார்.

“அதை நோக்கிச் செல்லும் அம்புகளை எண்ணி கணக்கிட்டு ஒவ்வொரு அம்புக்கும் அது எங்ஙனம் மாறுகிறது என்று அறிந்து நாண் தொடுப்பவனே அதை வெல்ல முடியும்” என்றார். அதுவும் பிறிதெவருடைய செய்தியோ என்பது போல இளைய யாதவர் அமர்ந்திருந்தார். ”ஜராசந்தருக்கு அந்த கணிப்புமுறை பயிற்றுவிக்கப்பட்டிருக்கும். அங்கே அம்புகள் தொடுக்கப்படுவதை நான் எண்ணிக்கணக்கிட்டு அப்பொறியையும் நோக்கினேன் என்றால் அம்முறையை உய்த்துவிடுவேன். நாம் இறுதியில் களமிறங்குவோம்” என்றார் பார்த்தர்.

மணத்தன்னேற்பு நாளில் முற்றத்தில் மூங்கில் தூண்களுக்கு மேல் தொங்கவிடப்பட்ட செம்பாலான இலக்கு வீரர்களுக்கு அறைகூவலாக நிறுத்தப்பட்டது. மணத்தன்னேற்பு நிகழ்வுக்கு வந்திருந்த பல நாட்டு இளவரசர்களும் மன்னர்களும் அதைச் சூழ்ந்து அரைவட்டமாக அமர்ந்திருந்தனர். நடுவே பொற்பட்டு விரித்த பீடத்தின்மேல் தன் பெருங்கைகளை மடிமீது கோர்த்து சிறுவிழிகள் கரந்த வஞ்சமும் கூர்ந்த மீசைக்குக் கீழ் மடிந்த இதழ்களில் ஏளனச் சிறுநகைப்புமாக ஜராசந்தர் அமர்ந்திருந்தார். அஸ்தினபுரியிலிருந்து துரியோதனரும் கர்ணரும் வந்து அமர்ந்திருந்தார்கள். அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் சிசுபாலரும் வந்திருந்தார்கள்.

பார்த்தர் துணை வர இளைய யாதவர் அவை புகுந்தபோது அனைவரும் அவர்களை நோக்கினர். அவர்கள் அமர்வதுவரை விழிதொடர்ந்து பின் தங்களுக்குள் ஓரிரு சொற்கள் பேசினர் அவையோர். அவ்வொலி தேனீக்கூட்டம் பறப்பதுபோல் ரீங்கரித்தது. எதிரே போடப்பட்ட அரைவட்ட அரச பீடத்தின் நடுவே அரியணையில் பிருஹத்சேனர் அமர்ந்தார். அருகே அரசி மிலிந்தையும் மறுபக்கம் அமைச்சரும் அமர்ந்தனர். பின்னால் படைத்தலைவர் நின்றார். வலப்பக்கம் இசைச்சூதரும் அணிச்சேடியரும் நிரைவகுக்க இடப்பக்கம் குடித்தலைவர் எழுவரும் கோல்களுடனும் தலையணிகளுடனும் கல்லெனச் சமைந்த முகங்களுடன் இருந்தனர். உபமத்ரத்தின் நகர்மக்கள் அரங்கைச்சூழ்ந்து நின்றனர்.

நிமித்திகர் மேடையேறி மத்ர மண்ணையும் குலதெய்வங்களையும் பிருஹத்சேனரின் கொடிவழியையும், ஏழுகுடிகளையும் வாழ்த்தி அங்கு அரச முறைப்படி மணத்தன்னேற்பு நிகழவிருப்பதை அறிவித்தார். மத்ர நாட்டு இளவரசி லக்ஷ்மணையின் அழகையும் கல்வியையும் புகழ்ந்து சூதர்கள் இருவர் பாடினர். இரு அணிச்சேடியரால் வழிநடத்தப்பட்டு பொன்னூல் பின்னிய வெண்பட்டாடை அணிந்து குழலில் வெண்மலர்கள் சூடி வெண்கல்லால் ஆன மணியாரம் அசைய மாத்ரி வந்து தன் வெண்பட்டுப் பீடத்தில் அமர்ந்தாள்.

அங்கிருந்த விழிகள் அனைத்தும் அவளைக்கண்டு ஒளிகொண்டன. சூதர் சொல்வழி அறிந்து தாங்கள் வரைந்த உள்ளத்து ஓவியங்கள் அனைத்தும் நேர்க்காட்சி முன் வெற்று வண்ணங்கள் என்றாவதை உணர்ந்தனர். அப்பகுதிக்கே புத்தழகொன்று குடிவந்தது. அவளை வேட்க வந்திருந்த வீரர் முகங்கள் அனைத்தும் காலைக்கிழக்கு நோக்கிய பொற்குடங்கள் என ஒளி கொண்டன.

நிமித்திகர் எழுந்து மூங்கில் மேல் தொங்கும் செம்பு இலக்கு நடுவே இருக்கும் சக்கரத்தின் புள்ளியை அம்பினால் அடிப்பவர் வெல்வார், இளவரசியை கைக் கொள்வார் என்பது போட்டிமுறை என அறிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெல்வார்க்ள் என்றால் அவர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் வெல்ல வேண்டும். வென்றவர் இளவரசியை கைக்கொள்ள அனைத்துவகையிலும் உரிமை கொண்டவராவார் என்றார்.

முரசு ஒலித்ததும் அரசரும் இளவரசரும் ஒவ்வொருவராகச் சென்று வில்நாட்டி நாண்பூட்டி அம்பு தொடுத்தனர். அந்த செம்புப் பொறி ஏழு சிறகுகள் கொண்ட சக்கரம். அதன் சிறகுகள் மூச்சுக்காற்றுக்கே சுழல்பவை. அம்பு செல்லும் காற்றை அவை பூனைச்செவிகள் என அறிந்தன. அவற்றின் அசைவினால் அச்சக்கரம் முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக சுற்றிக்கொண்டிருந்தது. சிறகுகள் வழியாக தன்னை திருப்பிக்கொண்டு அம்புகளுடன் பகடையாடியது அது. முதல் சில அம்புகள் தொடுக்கப்பட்டதுமே அனைவரும் அதை அறிந்தனர்.

அதை வெல்வது எளிதல்ல என்று தெளிவானதும் அத்தனை விழிகளும் கர்ணரையே நோக்கின. அவர் வந்து அவை நடுவே நின்றபோது கண்களிலும் முகத்திலும் இருந்த நம்பிக்கையைக் கண்டு அவரே வெல்வாரோ என்று பார்த்தரும் எண்ணினார். மூன்று அம்புகளில் முதல் அம்பு கடந்து சென்றது. இரண்டாவது அம்பு சக்கரத்தைப் பதித்த சரடுமேல் குத்தி நின்றது. மூன்றாவது அம்பு சுற்றி நின்ற சிறகுகளில் ஒன்றை உடைத்தது. மையத்தை அம்புகள் தொடாமை கண்டு நம்பாதவர்போல் திகைத்து அவையை நோக்கிவிட்டு தன் வில்லை அங்கேயே வீசி கர்ணர் திரும்பிச் சென்று துரியோதனர் அருகே எடையுடன் அமர்ந்தார். துரியோதனர் சரிந்து அவரிடம் ஏதோ கேட்க கையசைத்து பொறுமை இழந்து மறுமொழி சொன்னார்.

அவையினர் அனைவர் நோக்கும் பார்த்தரை நோக்கி திரும்பின. அவர் எழுந்து சென்றபோது கர்ணரின் முனகல் ஒலி மட்டும் முரசொலிபோல அனைவருக்கும் கேட்டது. அவை நடுவே நின்று ஒருமுறை கர்ணரையும் ஜராசந்தரையும் நோக்கிவிட்டு வில்லெடுத்து மும்முறை அம்பு தொடுத்தார். முதலிரு அம்புகளும் பிழைத்தன. மூன்றாவது அம்பு அப்பொறியின் உள்சிறகுகளிலொன்றை உடைத்து வந்து விழுந்தது. வில்தாழ்த்தி பார்த்தர் மீண்டபோது அவர் இதழ்களில் ஏன் புன்னகை இருந்தது என அனைவரும் வியந்தனர்.

ஜராசந்தர் எழுந்தபோது சிறுநகைப்பு பரவியது. பார்த்தர் நின்று தோற்ற இடத்தில் கதை பழகும் துதிக்கைத் தோள்கள் கொண்ட ஜராசந்தர் வெல்வதெப்படி என்று எண்ணினர். மீசைக்குள் கரந்த வஞ்சச் சிரிப்புடன் வில்லேந்திச் சென்ற ஜராசந்தர் மேலே நோக்கி விழி கூர்ந்து முதல் அம்பை தொடுத்தார். சக்கரம் தன்னை திருப்பிக் கொண்டு அதைத் தவிர்த்தது. ஜராசந்தரின் உடலில் சிறு நடுக்கம் ஒன்று கடந்து செல்வதை காண முடிந்தது. நெடுநேரம் கூர்ந்து நோக்கி அம்பெடுத்து தொடுத்தபோது பொறி மீண்டும் தன்னை விலக்கிக்கொண்டதைக் கண்டார்.

ஜராசந்தரின் கால்கள் நடுங்குவதை அனைவரும் கண்டனர். மூன்றாவது அம்பு பிழைக்கும் என்பதும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. எங்கோ எவரோ மெல்ல சிரித்தனர். அந்த ஒலி அடுக்கி வைக்கப்பட்ட செம்புக்கலங்கள் அதிர்வை கடத்துவது போல எங்கும் சென்று அவையை நகைக்கவைத்தது. மூன்றாவது அம்பும் பிழைத்தபோது சினம் தாளாமல் தன் தொடையை ஓங்கி அறைந்து அம்புபட்ட யானை என உறுமி உடல் தசைகள் புடைக்க களம் நடுவே நின்றார். அமைச்சர் கலிகர் "அரசே" என மெல்ல அழைக்க தன் உள்ளத்தை அடக்கி திரும்பி வந்து அமர்ந்தார்.

இளைய யாதவர் எழுந்தபோது எவரும் எண்ணவில்லை அவர் வெல்வாரென்று. ஆனால் இளநகையுடன் சென்று சிறுமைந்தன் போல் வில்லெடுத்து அக்கணமே வளைத்து முதல் அம்பிலேயே சக்கரத்தை உடைத்து வென்றார். சில கணங்கள் தங்கள் விழிகளை நம்பாமல் அமர்ந்திருந்தது அவை. நிமித்திகன் வெள்ளிக்கோலைச் சுழற்றியபடி மேடைமேல் பாய்ந்தேறி “துவாரகையின் இளைய யாதவர் இப்போட்டியில் வென்றிருக்கிறார்” என்று கூவிய பின்னரே அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது. அதன் பின்னரே ஷத்திரியர் அங்கு என்ன நடந்ததென உணர்ந்தனர்.

ஜராசந்தர் பெருஞ்சினத்துடன் எழுந்து கடல்நண்டு போல் தன் பெருங்கரங்களை விரித்தபடி இளைய யாதவரை நோக்கி வந்தார். “இது வஞ்சம்! இது சூது! மாயத்தால் இளவரசியை மணம் கொள்ள விடமாட்டேன்!” என கூவ "மாயம் செய்தவர் நீர் மகதரே. இத்தனை விழிகளுக்கு முன் முறையாக மாத்ரரின் கன்னியை நான் கொண்டிருக்கிறேன். நெறிப்படி அவள் என்னுடையவள்” என்ற இளைய யாதவர் கையில் மாலையுடன் நின்ற இளவரசியை அணுகி அவள் வலக்கையை பற்றினார். இளவரசி அம்மாலையை அவர் தோளில் அணிவிக்க அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

“நிறுத்துங்கள்! நிறுத்துங்கள் அவனை!” என தன் படைகளுக்கு ஆணையிட்டபடி ஜராசந்தர் ஓடிவந்தார். “ஏன் நிறுத்த வேண்டும்? முறைப்படி இளைய யாதவர் இளவரசியை மணம் கொண்டிருக்கிறார்” என்று அஸ்வத்தாமா சொன்னார். கர்ணர் உரக்க “ஆம் மகதரே, நம் விழிமுன் நிகழ்ந்த போட்டி இது. வென்றவருக்குரியவள் இளவரசி” என்றார். “நான் ஒப்ப மாட்டேன்…” என்று கூவிய ஜராசந்தர் “இச்சூது என்னவென்று மன்று கூடி விசாரிக்க வேண்டும். அதுவரை இளவரசி இந்நகர் விட்டு செல்லமுடியாது” என்றார்.

அவர் தன் படைத்தலைவரையும் வீரரையும் நோக்கி ஆணையிட அவர்கள் படைக்கலங்களுடன் இளைய யாதவரை சூழ்ந்தனர். ஆஷாடமாதத்தில் ஒருமுகில் மட்டும் கறுத்து சிறுமழை பெய்வதுபோல அங்கு ஒரு சிறு போர் நடந்தது. இளைய யாதவரின் படையாழி பட்டு பன்னிருவர் துண்டாகி விழுந்தனர். பார்த்தரின் அம்புகளால் பதினெண்மர் சரிந்தனர். மகதரின் படைகளை கர்ணரும் அஸ்வத்தாமரும் வில் கொண்டு செறுக்க இளைய யாதவர் இளவரசியை தூக்கிச் சென்று தன் தேரிலேறி விரைந்தார். பின்தொடர்ந்த மகதத்தின் படைகளை அம்பால் வேலிகட்டி செறுத்து அவருக்குபின் நின்றார்கள் பார்த்தரும் கர்ணரும் அஸ்வத்தாமாவும்.

”இளைய யாதவர் குருதித்தடம் கோடாக நீள தேரை நகர்வீதியில் செலுத்தி ஹம்சபுரியின் எல்லை கடந்து மீண்டார்” என்றான் சாத்யகி. ”இளைய யாதவர் அடைந்த பெருவெற்றிகளில் ஒன்றாக மாத்ரியை மணம் கொண்டது சொல்லப்படுகிறது. சொல்லிச் சொல்லி ஒவ்வொருவரும் அருகிருந்து பார்த்ததுபோல் வளர்ந்திருக்கிறது. இக்கதையை நானே உடன் வாழ்ந்ததுபோல் அறிவேன். ஒவ்வொரு முகத்தையும் சொல்லையும் உணர்வையும் மீட்டிக் கொள்கிறேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் ”சல்யர் அந்நிகழ்வுக்கு வந்திருந்தாரல்லவா?” என்றான். “இல்லை. சல்லியரும் பால்ஹிக நாடுகள் பிறவும் அந்நிகழ்வை புறக்கணித்தன. இன்னும் உபமத்ரம் ஒரு நாடாக அஸ்தினபுரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை” என்றான் சாத்யகி. ”இன்று உம்மிடம் மாத்ரி பேச விரும்புவதும் அதை ஒட்டியே என எண்ணுகிறேன்.” திருஷ்டத்யும்னன் தலையசைத்தான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 5

மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே ”தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே. நான் இங்கு காத்திருக்கிறேன்” என்றான். ”உள்ளே வந்து முகமன் சொல்வதாயின் அதற்கு மேலும் பல அரசியல் உட்பொருட்கள் விளையும். துவாரகையில் ஒவ்வொரு சந்திப்பும் நாற்கள விளையாட்டின் காய்நீக்கங்கள்தான்.” திருஷ்டத்யும்னன் “இருந்தாலும்…” என்று தொடங்க “தங்கள் சந்திப்பு நெடுநேரம் தொடர வாய்ப்பில்லை” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் “ஆம். என்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று உய்த்துணர முடியவில்லை. அது நான் பொருட்படுத்தும்படி பெரிதாக இருக்கும் என்றும் எண்ணவில்லை” என்றான். சாத்யகி புன்னகைத்தான். திருஷ்டத்யும்னனை லக்ஷ்மணையின் அமைச்சர் விஃபூதர் வணங்கி வரவேற்றார். காவல் வீரர்கள் அரசமுறைப்படி வாழ்த்தொலி எழுப்பினார்கள். வளைந்த பெருந்தூண்கள் தாங்கிய உயர்ந்த கூரைகொண்ட இடைநாழி வழியாக பளிங்குத்தரையில் நிழல் தொடர நடந்துசெல்லும்போது அத்தூண்களின் உச்சியில் இருந்த கவிழ்ந்த மலர்க்குவை அமைப்பை திருஷ்டத்யும்னன் அண்ணாந்து நோக்கினான். அவன் சென்ற அனைத்து அரசியர் மாளிகைகளும் ஒரே யவனச் சிற்பமுறைப்படி கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

புன்னகையுடன் இடைநாழியின் மறுபக்கம் சென்று சிம்மமுகப்பு கொண்ட கைப்பிடி வளைந்தேறிய அகன்ற மரப்படிக்கட்டில் ஏறி உள்ளே சென்றான். அங்கு நின்றிருந்த அரசியின் அணுக்கச்சேடி வணங்கி அவனை அழைத்துச்சென்று அரசியின் சிற்றவைக்கூடத்தின் வாயிலுக்கு முன் நிறுத்தினாள். திருஷ்டத்யும்னன் அவள் உள்ளே சென்று ஆணை பெற்று வருவதுவரை அங்கே காத்து நின்றான். சற்று நேரமே அங்கு நின்றிருந்த போதும் உள்ளம் கொண்ட தொலைவை அவன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். கதவு மீண்டும் திறந்து அங்கே சேடி தோன்றி அவனிடம் உள்ளே செல்லும்படி சொன்னாள்.

அவன் அக்கணம் வரை எண்ணிக்கொண்டிருந்தது லக்ஷ்மணையின் தோற்றத்தைப்பற்றி மட்டுமே என உணர்ந்து திருஷ்டத்யும்னன் மீண்டும் புன்னகைத்துக் கொண்டான். இளைய யாதவரின் எட்டு துணைவியரையும் சொல் வடிவாக்கி நாடெங்கும் பரப்பி விட்டிருந்தனர் சூதரும் கவிஞரும். அகத்தில் எழுந்த அப்பேரழகியரை நேரில் காண்கையில் மண்ணிலிறங்கும் சோர்வு எழும் என்றே எண்ணுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் அச்சொற்களுக்கு மேலாகவே அவர்கள் தோன்றினர். அச்சொற்களை அவர்களும் ஓவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலரும் சுடரும் காட்டும்தோறும் கற்சிலையில் தெய்வம் எழுவதுபோல அவர்கள் மலர்ந்தெழுகிறார்கள்.

சூதர்களின் கவிச்சொற்கள் சமைத்த திருமகளை சித்திரம் எழுதினாற் போலிருந்த லக்ஷ்மணையைக் கண்டதும் அவன் அதுவரை கண்டிருந்த அழகியரில் நிகரற்றவள் அவள் என எண்ணினான். அவ்வறை விட்டு வெளியே சென்றதும் நால்வரில் எவர் அழகி என குழம்பப்போகிறோம் என்று எண்ணி அப்புன்னகையுடன் தலைவணங்கி ”மத்ர நாட்டு அரசியை வணங்குகிறேன். தங்கள் சொல்லுக்கு என் வாள் பணிகிறது. பாஞ்சால நாட்டுக்குடிகளும் மூதாதையரும் தெய்வங்களும் தங்களை வணங்கும் வாய்ப்பை நான் பெற்றமைக்காக மகிழ்கிறார்கள். துருபதன் குலமும் பெருமை கொள்கிறது” என்றான்.

பீடத்தில் அரசணிகோலத்தில் அமர்ந்திருந்த லக்ஷ்மணை அவனை நோக்கி ”தங்களை சந்திக்கவேண்டும் என விழைந்திருந்தேன். சியமந்தக மணிக்காக போர்புரிந்து தாங்கள் மீண்டபோது சூதர் உங்களைக் குறித்தே பாடிக்கொண்டிருந்தனர். அச்சொற்களைக்குப் பின் இருந்த இளையோனைக் காண ஆவல் கொண்டேன். இன்று இவ்வண்ணம் கண்டதில் மகிழ்கிறேன்” என்றாள். முகமன் ஏதும் இன்றி நேரடியாக அவள் பேசியது அவனை மீண்டும் புன்னகைக்க வைத்தது. ஒன்று அரசமுறைமைகள் அறியாத சிற்றரசின் இளவரசி அவள். அவ்வெளிமையே அவள் ஆற்றலாக இருக்கக் கூடும். அல்லது அவள் மிகத்தேர்ந்த அரசவை நடிப்பை பயின்றவள்.

அவ்வெண்ணத்தை அறிந்து தொடர்வது போலே லக்ஷ்மணை “எனக்கு அரசு சூழ்தல் எதுவும் தெரியாது பாஞ்சாலரே. என் சிற்றில்லத்தில் முதுவேளிர் மகள் போலவே நான் வளர்ந்தேன். நினைவறிந்த நாள் முதலே இசையன்றி வேறெதுவும் கற்கவில்லை” என்றாள். “ஆகவேதான் என் தோழியை இங்கு வரசொன்னேன். உங்களிடம் என் உள்ளத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவள் உடனிருப்பது நன்று என நினைத்தேன்” என்றாள். ”யார்?” என்றான் திருஷ்டத்யும்னன். ”கேகய நாட்டு அரசி பத்ரை” என்றாள் லஷ்மணை. ”ஆம், அது நன்றே” என்று சொன்ன திருஷ்டத்யும்னன் “இளைய கைகேயியைப்பற்றி நற்சொற்களை கேட்டிருக்கிறேன். அவர் தந்தை திருஷ்டகேது அமைத்த அரச நிகழ்வொன்றுக்கு இளமையில் தந்தையுடன் சென்றிருக்கிறேன். அவரது அன்னை சுருதகீர்த்தி இளமையில் என்னை மடியில் அமர்த்தியிருக்கிறார்” என்றான்.

லக்ஷ்மணை முகம் மலர்ந்து “அணுக்கமாகிவிட்டோம் பாஞ்சாலரே” என்றாள். “தன் தந்தைக்கு உங்களைத் தெரியும் என்று முன்னரே பத்ரை சொல்லியிருந்தாள். இத்தனை அணுக்கம் என்று அறிந்திருக்கவில்லை.” முகமன் சொல்லை அப்படியே பொருள்கொண்டு அவள் பேசுவதை உணர்ந்து மீண்டும் புன்னகைத்து திருஷ்டத்யும்னன் ”ஆம், நான் அவர்களுக்கு மைந்தனைப்போல” என்றான். ”அந்நம்பிக்கையில்தான் உங்களை வரச்சொன்னேன்” என்றாள் லக்ஷ்மணை.

கதவு திறந்து சேடி வந்து வணங்கி ”கேகய நாட்டு அரசி” என்றாள். ”வரச்சொல்” என்றாள் லக்ஷ்மணை. கதவு திறந்து உள்ளே வந்த கைகேயி ஆண்மை நிறைந்த தோள்களும் விரிந்த கூர்விழிகளும் இடைவரை சரிந்த கரியகூந்தலும் கொண்ட ஷத்ரியப் பெண். அவள் நடந்தபோது இறுகிய இடையசைவிலும் சீரான கால்வைப்பிலும் படைக்கலப் பயிற்சி பெற்றிருக்கிறாள் என்பது புரிந்தது. கழுத்தும் புயங்களும் போர் வீரர்களுக்குரியவை என இறுகியிருந்தன. நீள்வட்ட முகம். காதோர மயிர் நன்கு இறங்கி மேலுதட்டில் நீலநிற பூமயிர்ப் பரவலுடன் பெரிய கூர்மூக்குடன் வெண்கலச்சிற்பம் போலிருந்தாள். சற்றே தடித்து வளைந்த கீழுதடுடன் பெரிய வாய் உறுதி தெரியும்படியாக அழுந்தி மூடியிருந்தது.

திருஷ்டத்யும்னன் எழுந்து “கேகய நாட்டு அரசியை வணங்குகிறேன். பாஞ்சாலத்தின் குடிகளும் மூதாதையரின் குலதெய்வங்களும் பணிகின்றன” என்றான். அக்கணமே லக்ஷ்மணை வாய்பொத்தி வளையல் ஒலியும் சிரிப்பொலியும் கலக்க ”இதைத்தான் எனக்கும் சொன்னார்” என்றாள். திருஷ்டத்யும்னன் ஒருகணம் அவளை திரும்பி நோக்கினான். பின்பு பத்ரையின் விழிகளில் சற்றே திரும்பி ஒளிகாட்டி மறைந்த இரு கூர்வேல் நுனிகளை பார்த்தான். பத்ரை ”தங்களை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு கேகயமும் நானும் பெருமை கொள்கின்றோம்” என்றாள். ”நானும் இப்படி சொல்லியிருக்க வேண்டுமோ?” என்றாள் லக்ஷ்மணை.

இம்முறை திருஷ்டத்யும்னன் சிரித்து விட்டான். ”அரசி, முகமன்கள் என்பவை இரு காட்டு எருமைகள் சந்தித்துக் கொள்ளும்போது கொம்புகளை மெல்ல தட்டிக்கொள்வது போல என சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். உடல் அதிர நகைத்தபடி “கொம்பு இல்லாத எருமை என்ன செய்யும்?” என்றாள் லக்ஷ்மணை. திருஷ்டத்யும்னன் ”கொம்பற்றவை முன்னரே தலைதாழ்த்தி தங்களுக்கு கொம்பு இல்லையென்பதை சொல்லிவிட வேண்டியதுதான்” என்று சொல்லி சிரித்தான்.

அவர்களின் சிரிப்பை சற்றும் பகிர்ந்து கொள்ளாமல் இறுக்கமான அசைவுகளுடன் தன் குழலை பின்னால் விலக்கிப்போட்டு ஆடை சீரமைத்து பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்து கால்மேல் கால் போட்டு கைகளை முழங்கால் மேல் வைத்த பத்ரை “இன்று மாலை யாதவ அரசியை சந்திக்கவிருக்கிறீர்கள் அல்லவா” என்றாள். ”ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன் .

லக்ஷ்மணை “பத்ரையின் ஒற்றர்களும் எங்குமுள்ளனர் இளவரசே” என்றாள். சினத்துடன் பத்ரை திரும்பி அவளை நோக்க பிழையாக ஏதோ சொல்லிவிட்டோம் என்றுணர்ந்த லக்ஷ்மணை “இவ்விளையாட்டு எதிலும் நான் இல்லை. என்ன நிகழ்கிறது என்பதே எனக்கு புரிவதில்லை. இசை மிக எளியது. அரசூழ்தலுக்கு அதில் இடமில்லை” என்றாள். பத்ரை அவள் விழிகளையே கூர்ந்துநோக்க அதில் வந்த ஆணையை பெற்றுக் கொண்ட லக்ஷ்மணை பொறுத்தருளக்கோரும் பூனை என சற்றே உடல் ஒசிந்து அமர்ந்தாள்.

பத்ரைக்கு முற்றிலும் மாறாக கொடிபோன்ற நீண்ட மெல்லிய உடலும், வட்டமான குழந்தை முகமும் கொண்டிருந்தாள் லக்ஷ்மணை. சிரிக்கும் சிறிய கண்களும். சிவந்த கொழுங்கன்னங்களும் குமிண்சிற்றிதழ்களும் தொட்டு வைத்தாற்போல் மூக்கும் அவளை சிறுமியென்றே காட்டின. சற்றே முன்வளைந்த தோள்களும். உருண்ட கைகளும் மலர்க்குடம் போன்ற நீண்ட விரல்களுமாக அவள் வீணைக்கெனப் பிறந்தவளெனத் தோன்றினாள். வெண்கலைதேவி என பொற்பின்னல்களிட்ட வெண்பட்டாடை அணிந்து வெண்முத்து மாலை முலைகள் மேல் தவழ, நுரையெனச் சுருண்ட குழலிலும் வெண்முத்தாரம் சூடி பனிபடிந்த மலர்மரம்போலிருந்தாள்.

லக்ஷ்மணை சொல்லாப் பொருளறியாதவள். பத்ரையோ கருவறைக்குள்ளிருந்தே படைக்கலம் கொண்டு பிறந்தவள் போல் இருந்தாள். செந்நிறப் பட்டும் செவ்வைர ஆரமும் செங்கனல் கற்கள் ஒளிவிட்ட குண்டலங்களும் அணிந்து கூரிய நிலைவிழிகளுடன் புதரில் இரைக்கெனக் காத்திருக்கும் வேங்கை போல நோக்கியிருந்தாள். திருஷ்டத்யும்னன் ”இன்று தங்களை சந்திக்க நான் வந்தது எதற்காகவென்று அறிய விழைகிறேன் அரசி” என்றான். பத்ரை ”இதற்கு முன் நீங்கள் விதர்ப்பினியை சந்தித்திருக்கிறீர்கள். அவள் யாதவ அரசியிடம் ஏன் உங்களை அனுப்பினாள் என்று எனக்குத் தெரியும்” என்றாள்,

திருஷ்டத்யும்னன் ஆமென தலை அசைத்தான். ”சியமந்தகத்தைப் பெற்று வரும்படி அவள் ஆணையிட்டிருக்கிறாள் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகம் அவளுக்கு உரியது என்று எண்ணுகிறாள்” என்றாள் பத்ரை. “சிற்றிளமையிலேயே அவள் விழிகள் அதில் பதிந்துவிட்டன என என் தந்தை சொல்லி அறிந்துள்ளேன்” என்றாள். “விதர்ப்ப அரசி சியமந்தகத்தை எங்கு பார்த்தார்” என்றான் திருஷ்டத்யும்னன் வியப்பை காட்டிக்கொள்ளாமல்.

”கேகய நாட்டில் முன்பொருமுறை என் தந்தை அரசர்கள் அனைவரையும் வரவழைத்து பெருவிருந்தொன்றினை நடத்தினார். நான் பிறந்து அரைமணி அணியும் இருபத்தி எட்டாவது நாள் விழவு அது. சூழ்ந்திருந்த அணுக்க நாட்டரசர்கள் அனைவரையும் என் தந்தை கேகயத்துக்கு அழைத்திருந்தார். புராணப்புகழ்பெற்ற இக்‌ஷுவாகு குலத்து அரசர் தசரதனின் இளைய துணைவி பத்ரையின் பெயரே எனக்கு இடப்பட்டுள்ளது. என்னையும் பிறந்த நாள் முதலே கைகேயி என்றே அழைத்தனர். என் பிறப்புத்தருணத்தைக் குறித்த நிமித்திகர்கள் கேயகத்தின் பொன்னாட்கள் மீண்டு வந்துவிட்டன என்றனர். அதை பாரதவர்ஷமெங்கும் அறிவிக்க விழைந்தார் எந்தை. அவ்விழவுக்கு பாரதவர்ஷத்தின் பத்தொன்பது ஷத்ரிய மன்னர்கள் வந்திருந்தனர். யாதவர்கள், மச்சர்கள், மதிநாரர்கள், ஆசுர குடியரசர்கள் என பெரும் அரசமன்று அன்று கூடியது.”

ஹரிணபதத்தின் சத்ராஜித்தும் அவர் இளவல் பிரசேனரும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பெருமன்று கூடுவதற்கென்றே கலிங்கச் சிற்பிகளை வரவழைத்து பெருமாளிகை ஒன்றை அமைத்து அதன் நடுவே நீள்வட்ட வடிவில் ஓர் அவையரங்கும் அமைத்திருந்தார் எந்தை. ஷத்ரியர்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டு அவை அமர்த்தப்பட்டனர். சிற்றரசர்கள் தங்கள் குலவரிசைப்படி அமர்ந்தனர். பன்னிரண்டாவது நிரையில் வலதுஓரத்தில் ஹரிணபத்தின் சிற்றரசருக்கான பீடம் போடப்பட்டிருந்தது. அன்று அங்கு வந்தவர்களில் மகதத்தின் அரசரும், கோசலத்தின் அரசரும், விதர்ப்பத்தின் அரசரும், வங்க மன்னரும், கலிங்க மன்னருமே அனைவராலும் நோக்கப்பட்டனர். மக்களின் வாழ்த்துக்கள் அவர்களை நோக்கியே சென்றன. அஸ்தினபுரியின் பீஷ்மப் பிதாமகர் வந்தபோது பிறர் எவரும் அடையாத வாழ்த்தைப் பெற்றார்.

அனைவரும் அவையமர்ந்து சற்று கழித்தே சத்ராஜித் வந்தார். அவர் தன் மார்பில் சியமந்தக மணியை அணிந்திருந்தார். அவையெங்கும் மூச்சும் சொல்லும் கலந்த முழக்கம் எழுந்தது. பீஷ்மர் அன்றி பிற அனைவருமே திரும்பி சத்ராஜித்தை நோக்கினர். சற்று நேரம் அந்த அவையில் சியமந்தகமன்றி பிறிது எதுவும் மையம் கொண்டிருக்கவில்லை. ஒளிமிக்க தாலம் என தன் மீது சத்ராஜித்தை சியமந்தகம் ஏந்தி வந்தது என அவைக் கவிஞர் பின்பு பாடினார். நெஞ்சில் திறந்த இளஞ்சூரிய விழியுடன் கைகளைக் கூப்பியபடி இதழ்களில் ஏறிய புன்னகையுடன் வந்த சத்ராஜித் தன் பீடத்தில் அமர்ந்து கால்மேல் கால் போட்டமர்ந்து எதையும் நோக்காத விழிகளுடன் அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் கழித்தே அவையில் இருந்த அமைதியை உணர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலை மீள அவை பெருமூச்சுகள் நாகக்கூட்டமென சீறும் ஒசையுடன் விழித்தெழுந்தது. அதன் பின் ஒருவரும் சியமந்தகத்தை நோக்கவில்லை. அந்த விழி அங்கு திறந்திருப்பதை அவர்களின் உடலில் ஒவ்வொருகணம் உணர்ந்தபோதும் முகங்கள் பிறிதொரு பாவனையை காட்டின. அங்கிருந்த எந்த மானுடரையும் விட பெரியதாக அந்த மணி திகழ்ந்தது.

முரசொலித்து கொம்பெழுந்ததும் அரசர் அரசியுடன் அவைபுகுந்தார். வைதிகமுறைமைகளும் அரசச்சடங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன. நான் பொற்தொட்டிலில் பட்டின்மேல் படுக்கச்செய்யப்பட்டு அவை நடுவே கொண்டுவைக்கப்பட்டேன். வைதிகர் தங்கள் முறைமைகளைச் செய்து மலரிதழ்களால் கங்கை நீரைத் தொட்டு என்மேல் தூவி தூய்மையாக்கி வேள்விச் சாம்பலை நெற்றியிலிட்டு அவியன்னம் ஊட்டி வாழ்த்தினர். பின்னர் அவைக்கொலுவமர்ந்த முடிமன்னர் ஒவ்வொருவரும் முறைப்படி வந்து என்னை வாழ்த்தி என் அன்னையின் கைகளில் மகவுப்பரிசில்களை அளித்தனர். வைரங்களும் மதிப்புறு மணிகளும் அரும்பொருள் பிறவும் வந்தன.

ஆயினும் எப்படியோ அதன் ஒருமையை இழந்துவிட்டிருந்த சொல்லப்படாத ஒன்றாக சியமந்தகமே அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தது. சத்ராஜித் தன் இளையோனுடன் அருகில் வந்து எந்தையையும் தாயையும் வணங்கி எனக்கு சிறு செம்மணிக் கணையாழியை அணிவித்தார். முகமன்களை அவருடன் எந்தை பரிமாறிக்கொண்டிருந்தபோது காலுதைத்து நான் எழமுயன்றேன். என் தொட்டில் நோக்கிக் குனிந்து என் கால்களை முத்தமிட முனைந்த சத்ராஜித்தின் கழுத்தில் தொங்கிய சியமந்தகமணி தொங்கிய மணிமாலையை என் சிறுகைகளால் பற்றிக்கொண்டேன். சிரித்தபடி சத்ராஜித் அதைக் கழற்றி என் தோளில் வைத்து “திருவென எழுந்த இளவரசிக்கு இது வெறும் கூழாங்கல்லே. கொள்க!” என்றார்.

”செம்மலருள் சூரியன் எழுந்தருள்வது போல” என்று அருகே நின்ற அவைக்கவிஞர் அணிக்கூற்று சொன்னார். எந்தையும் பிறரும் மகிழ்ந்து இன்சொல் உரைக்க அருகே நின்றிருந்த விதர்ப்ப அரசி சுஷமையின் கையில் இருந்த இரண்டு வயதான இளவரசி ருக்மிணி கைநீட்டி அந்த மணி தனக்கும் வேண்டுமெனக் கோரி வீறிட்டு அழத் தொடங்கினாள். சுஷமை அவளை அடக்க முயன்று முடியாமல் முகம் சுளித்து அருகே நின்ற செவிலியன்னை அமிதையிடம் கொடுத்தாள்.

அமிதை மென்சொல் கூறி ஆறுதல்படுத்தியும் திசைமாற்றி நோக்க வைத்தும் அவள் சித்தத்தை விலக்க முயன்றபோதும் உறுதியுடன் திரும்பி சியமந்தகத்தை நோக்கி கைசுட்டி கதறிக்கொண்டிருந்தாள். சத்ராஜித் அந்தச் சூழலின் இயல்பின்மையை ஆற்றும் சிரிப்புடன் ”பெண்கள் அணிகளை கருவிலேயே கண்டடைகிறார்கள்” என்றார். அத்தருணத்திற்கென விழி ஒளிராமல் இதழ்மட்டும் வளைத்து எந்தை நகைத்தார். என் அன்னை என் கைகளால் பற்றப்பட்டிருந்த சியமந்தகமணியை மெல்ல விலக்கி எடுத்து ”அழாதீர்கள் இளவரசி, இதோ நீங்களே வைத்து விளையாடுங்கள்” என்று ருக்மணியிடம் கொடுத்தாள்.

அமிதையின் இடையிலிருந்து தாவி இரு கைகளாலும் அதை வாங்கி வாயில் வைத்து கடித்த அவளை நோக்கி அவை நகைத்தது. ஓசைகேட்டு கண்ணீருடன் அனைவரையும் மாறி மாறி நோக்கி பகை கொண்டவள் போல திரும்பிக் கொண்டாள் விதர்ப்ப இளவரசி.

அன்று அவை பிரியும் வரை தன் கையிலேயே அந்த நீலமணியை அவள் வைத்திருந்தாள். அதை அன்றி பிறிது எதையும் அவள் நோக்கவில்லை என்று அமிதை சொன்னாள். அவளை அந்த மணி இமையா விழியால் நோக்கிக் கொண்டே இருந்தது. அரச நாகத்தின் விழிமணிகளால் மயக்கப்பட்டு அசைவன்றி நின்றிருக்கும் எளிய இரைபோல சொல்மறந்து இருப்பழிந்து அதன் நீலத்தை நோக்கி பித்தெழுந்த விழிகளுடன் ருக்மிணி கிடந்தாள். மாளிகையில் அவள் மஞ்சத்தில் அவளை இருத்தி கைகளில் அந்த மணியைக் கொடுத்து அன்று முழுக்க காத்திருந்தினர். இரவில் அவள் தன்னிலை அழிந்து மயங்கியபிறகு அதை எடுத்துச்சென்று சத்ராஜித்திடம் அளித்தனர்.

”சத்ராஜித் எண்ணி வந்த வினை முடிந்துவிட்டிருந்தது. பாரத நாட்டின் பேரரசர்கள் வந்த அவையில் அவரது வருகையையும் அவர் சூடியமணியையும் தவிர வேறெதையும் மக்கள் பேசவில்லை. இளைய விதர்ப்பினி சியமந்தகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டதைப் பற்றி சூதர் பாடினர்” என்றாள் பத்ரை. “அன்று அவள் உள்ளத்தில் பதிந்த சியமந்தக மணி அது. இதுநாள் வரை தன் ஆழத்தில் அவ்விழைவை சூடிக் கொண்டிருக்கிறாள். இன்று அவள் அம்மணியை கோருவது இயல்பானதொன்றல்ல. அவளிடம் சென்றபின் அது மீளப் போவதுமில்லை.”

திருஷ்டத்யும்னன் சொல்ல எண்ணியதை இதழ்களுக்குள் நிறுத்திக் கொண்டான். “உறுதியாக நான் அறிவேன், அரசவையில் ஏதோ ஒன்று நிகழும். அது உடனே புராணமாகும். எனவே எவராலும் மறுக்க முடியாது. அதன்பின் சியமந்தகம் ருக்மிணியுடையதாகவே என்றுமிருக்கும். பாஞ்சாலரே, அவள் வாழ்வின் முதன்மை இலக்கென்பது அந்த மணியை அடைவதுதான் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றாள் பத்ரை. லக்ஷ்மணை ”ஆம் நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “என்னை நுண்ணிய இக்கட்டுகளில் சிக்க வைக்கிறீர்கள் அரசி” என்றான். “நான் விதர்ப்ப நாட்டு அரசிக்கு வாக்களித்துவிட்டேன். சியமந்தகத்தை யாதவ அரசியிடம் கோரிப்பெற்று அவர்கள் நாளை அரசர்மன்று அமரும் போது தோள் சூட அளிப்பதென்று. அதில் இருந்து பின் எட்டு எடுத்து வைக்க என்னால் ஆகாது.” பத்ரை “ஆம், அதை அறிவேன். தாங்கள் நான் பின்வாங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்த மணியை முறைப்படி யாதவ அரசியிடம் தாங்கள் கோரிப் பெறலாம். விதர்ப்பினிக்கு அளிக்கவும் செய்யலாம். ஆனால் அது விதர்ப்பினிக்கு மட்டுமான மணியாக ஆகக் கூடாது. எனக்கும் அதில் உரிமை உண்டு. அந்த மணி அவள் கைகளில் அளிக்கப்படுவதற்கு முன்னால் என் தோளில் அணிவிக்கப்பட்டது” என்றாள். லக்ஷ்மணை “ஆம், அது முறைதானே” என்றாள்.

பத்ரை “இளைய யாதவரை மணந்த பிற மகளிரைப் போன்றவளல்ல நான். பாஞ்சாலரே, நான் முடியரசன் உவந்தளித்த மணமகளாக இந்நகருள் வந்தேன். நூறு யானைகள் என் மகள்செல்வத்தை சுமந்துவந்தன. உடன்வந்த என் தமையன்கள் முத்தாரம் சுற்றிய முடிசூடி பொற்தேரேறி இந்நகரின் பெருவீதிகளில் உலாவந்து என்னை அரண்மனை சேர்த்தனர்” என்றாள்.

"பாஞ்சாலரே, துவாரகைக்கு அரசரமரும் அவைகளில் இடமில்லாத ஒரு காலமிருந்தது. இளைய யாதவரை அரசர் என்று எவரும் ஒப்பாத நாட்கள் அவை. ஷத்ரியர்கள் அவரை பகடையில் முடிவென்ற எளிய சூத்திரன் என்று இழித்துரைத்தனர். அன்று விதர்ப்பினியை அவர் கவர்ந்து வந்ததை ஷத்ரியர்கள் பெருஞ்சினத்துடன் எதிர் கொண்டார்கள். பன்னிரு ஷத்ரிய நாடுகள் படைதிரட்டிச்சென்று துவாரகையை வென்று இளைய யாதவரைக் கொன்று ஷத்ரியப் பெண்ணை சிறைமீட்டு வரவேண்டுமென்று ஒரு திட்டம் பேசப்பட்டது. கங்காவர்த்தத்துக்கும் துவாரகைக்கும் நடுவே இருந்த பெரும் பாலைவனம் ஒன்றே அவர்களைத் தடுத்தது. இல்லையேல் இந்நிலம்காணா பெரும் போரொன்று அன்று நிகழ்ந்திருக்கும். வென்றாலும் வீழ்ந்தாலும் துவாரகை அழிந்திருக்கும்."

"நீர் அறிந்திருக்கமாட்டீர். ஷத்ரியர்கள் அவையொன்று காசியில் கூடியது. ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் நாற்பத்தேழு நாடுகளின் மன்னர் அங்கே அமர்ந்திருந்தனர். அன்றுமுதல் எங்கும் எந்த அவையிலும் அரசர் என இளைய யாதவரை அமர வைக்கலாகாது என முடிவெடுத்தனர். அந்த அவையில் என் தந்தை அமர்ந்திருந்தார். ஷத்ரியர்களின் முழு முடிவுக்கு அவரும் ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்டார். திரும்பி கேகயத்துக்கு அவர் வந்தபோது என் தமையன்கள் ஐவரும் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் சொன்னதை நானும் திரைக்குப்பின் அமர்ந்து கேட்டேன்."

”'வல்லமையாலேயே ஷத்ரியன் உருவாகிறான், முறைமைகளால் அல்ல' என்றார் என் முதற் தமையன் சந்தர்த்தனர். 'வருங்காலத்தில் துவாரகையே பாரதவர்ஷத்தின் பெரும் வணிக மையமாக இருக்கக் கூடும். ஏழு வகை அயல் நாட்டவரும் வந்திறங்கும் பெருந்துறைமுகம் அது. அதை ஆளும் இளைய யாதவர் நிகரற்றவர். செல்வம் குவியும் கருவூலம் கொண்டது அந்நகர். பாரதவர்ஷத்தின் முடிசூடிய முடியில் அமர்ந்த ஒளிரும் வைரம் என்றே சூதர் பாடுகின்றனர். உண்பதும் உறங்குவதும் அன்றி ஏதும் அறியாத அரண்மனைகளில் வலை எலி என கொழுத்து அலையும் இந்த ஷத்ரியர்களுக்காக அந்நாட்டை நாம் பகைத்துக் கொண்டோமென்றால் இழப்பு நமக்கே' என்றார்."

”'தந்தையே, நாம் பெரும்புகழ் கொண்ட ராமனின் உறவு கொண்டவர்கள். பெருமையழிந்து இன்று இந்த ஷத்ரிய நாடுகளால் நெருக்கப்பட்டு நதிக்கரையில் நின்றிருக்கிறோம். நமது துறைமுகமோ நூறாண்டுகளாக நிழல்பட்ட செடிபோல தேங்கி நிற்கிறது. இங்கு பெருவணிகர் வருவதில்லை. நம் அரண்மனைகள்கூட நூறாண்டு பழமையானவை. நமக்கிருப்பது குலப்பெருமை ஒன்றே. வணிகம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதைக் கொடுத்து அதற்குரிய உச்சவிலை ஒன்றை பெறுவதல்லவா? இன்று இளைய யாதவர் விழைவது ஷத்ரிய குலப்பெருமை ஒன்றையே. அதை நாம் அவருக்கு அளிப்போம். பாரதவர்ஷத்தின் பெரும் செல்வ நாடொன்றின் உறவை அடைவோம்' என்றார் இளையவர் கோவர்த்தனர்."

“'துறைமுகத்தை மீட்டுக் கட்டுவோம். அரண்மனைகளை சீரமைப்போம். இன்று நம் கையில் வாளில்லை. ஆகவே மறுகையில் இருக்கும் துலாமுள் மேல் நமக்கு கட்டுப்பாடில்லை. இங்கு வரும் வணிகர்கள் சுங்கம் அளிக்கவில்லை, அளிக்கொடை செய்கிறார்கள். நாம் மன்னர்கள் அல்ல, சூதர்கள். துவாரகையின் படைபலம் இருக்குமென்றால் இங்கு நாம் விரும்பும் வணிகத்தை அமைக்க முடியும்' என்றார் மூன்றாவது தமையன் பிரவர்த்தனர். ஓர் இரவு முழுக்க அவையில் நிகழ்ந்த உரையாடலுக்குப் பிறகு எந்தை 'நீங்கள் விழைவதே ஆகட்டும்' என்று ஒப்புதல் அளித்தார்."

"அதன்படி என் நான்காவது தமையன் ஹரிதவர்த்தனரும் ஐந்தாவது தமையன் ஸ்ரீவர்த்தனரும் துவாரகைக்கு வந்து இளைய யாதவரைப் பார்த்து என்னை மணம் கொள்ளும்படி கோரினர். அன்று துவாரகையின் அமைச்சர்கள் உவகை கொண்டு கண்ணீர் மல்கினர் என்றார் என் தமையன். தொல்புகழ் கொண்ட ஷத்ரிய இளவரசியை இளைய யாதவர் மணப்பது அவர் தேடிய நெடுங்கால அவையொப்புதலை பொற்தாலத்தில் வைத்து நீட்டுவதற்கு நிகர் என்றார் அக்ரூரர். பிறிதொரு சொல் இன்றி இதை ஏற்கிறோம் என்றார் பலராமர். அதன்படி கன்யா சுல்கமாக ஆயிரம் ஒளிர்வைரங்களை எந்தைக்கு அளித்து ஆயிரம் யானைகளின் மேல் வரிசையைக் கொண்டு வந்து கேகயத்தின் கோட்டை வாயிலில் நின்றார் இளைய யாதவர்."

”அரசமுறைப்படி அவர் மணந்த முதல் பெண் நான். தொன்மையான ஷத்ரிய நெறிகளின்படி உண்மையில் அவருக்கு நான் மட்டுமே அரசி. சியமந்தகத்தை சூடும் உரிமை கொண்டவள் நான் மட்டுமே. எனது பெருந்தன்மையால் பிறருக்கு நான் அளிக்கலாம். ஆனால் பிறர் அதை உரிமை கொண்டாட நான் ஒப்ப முடியாது” என்றாள் பத்ரை. திருஷ்டத்யும்னன் “புரிகிறது அரசி” என்று மட்டும் சொன்னான். ”செல்லுங்கள்! அவளிடம் அந்த மணியை பெறும்போதே அது பிற ஷத்ரிய அரசியருக்கும் உரியதே என்று சொல்லி பெறுங்கள். ருக்மிணியிடம் அளிக்கும்போதும் அதை சொல்லுங்கள். நாளைமறுநாள் கொற்றவை ஆலயத்துப் பூசனைக்கு நான் தலைமை ஏற்கிறேன். அன்று சியமந்தகம் என் மார்பில் அணி செய்ய வேண்டும்.”

திருஷ்டத்யும்னன் “அரசி, சியமந்தகத்தை அளிப்பதற்கு இன்னும் யாதவ அரசி ஒப்புக் கொள்ளவில்லை” என்றான். ”அவளை ஒப்புக்கொள்ள வைக்க உம்மால் முடியும் என்று நான் அறிவேன். நீர் அரசுசூழ்தல் கலையறிந்தவர், துரோணரின் மாணவர். எவ்வண்ணமேனும் அதை பெறுவீர். ஒருபோதும் அது ருக்மிணிக்குரியதாகலாகாது. அதை முன்னரே உமக்கு உணர்த்த விரும்புகிறேன்” என்றாள் பத்ரை. ”ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன்.

பத்ரை சற்றே எளிதாகி புன்னகை செய்து “இவ்வண்ணமொரு அரசுப் பணியாக தங்களை காண நேர்ந்தது சற்று வருத்தமாக உள்ளது பாஞ்சாலரே. எனினும் என் இளையோனாக இப்பணியை ஒப்படைப்பது நிறைவளிக்கிறது” என்றாள். “அது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு” என திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.

லக்ஷ்மணை “நான் உங்களை அழைத்தது மேலும் ஒரு செய்திக்காக” என்றாள். திருஷ்டத்யும்னன் திரும்பி “சொல்லுங்கள் அரசி” என்றான். ”சல்யரின் மகளை உங்களுக்கு மணம் பேசியிருப்பதாக நான் அறிந்தேன்” என்றாள். “ஆம் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “சல்யர் இன்று அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர். அஸ்தினபுரியோ இளைய யாதவருக்கு அணுக்கமானது. எனினும் எந்தை சல்யரை ஏற்றுக் கொள்ளவில்லை என அறிந்திருப்பீர்” என்றாள்.

பத்ரை புன்னகையுடன் “சல்யர் இனியும் இவர் தந்தையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பது மேலும் உண்மை” என்றாள். சற்றே புண்பட்டு கண்களை சுருக்கிய லக்ஷ்மணை "ஆம்" என்றாள். “உங்களது மணநிகழ்வு பாஞ்சாலத்தின் அரசியல் முடிவு. ஆனால் எந்தை வரவேண்டும் என்றால் சல்யர் முறைப்படி உபமத்ர அரசவைக்குச் சென்று அழைப்பு விடுக்கவேண்டும். எந்தை வராவிட்டால் நானும் வரமாட்டேன். கேகயத்து அரசியும் வரப்போவதில்லை. எட்டு அரசியரும் அமராது இளைய யாதவர் மட்டும் வரக்கூடிய மண நிகழ்வுக்கு நீர் ஒப்புவீர் என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றாள்.

திருஷ்டத்யும்னன் “இளவரசி, அந்த மணம் நிகழும் என்று இன்னும் உறுதியாகவில்லை. நிகழும் என்றால் எட்டு அரசியரும் எழுந்தருளத்தான் அது நிகழும். இது உறுதி” என்றபின் எழுந்து தலைவணங்கி “விடை பெறுகிறேன்” என்றான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6

சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம் அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்" என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. "அவளது ஆணையையா?" என்றாள். "ஆம்" என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு "அமர்க!" என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான்.

சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு அமைதியால் சூழ்ந்து இறுக்கப்பட்டு அமர்ந்திருந்தனர். சத்யபாமா பேச்சை துவக்கட்டும் என்று திருஷ்டத்யுமனன் காத்திருந்தான். அவனுடைய ஓர் உடலசைவோ குரலின் தொடக்கமோ அவளுக்கு தேவைப்பட்டது. வேட்டைப்பூனையின் புலனடக்கத்துடன் தன்னை முற்றிலுமாக அணைத்துக் கொண்டு திருஷ்டத்யுமனன் இருந்தான். விழிகளை சற்றே சரித்து ஆடிக்கொண்டிருந்த சாளரத் திரைச்சீலையின் விளிம்பை நோக்கியபடி கைகளை விரல் கோத்து மடியில் இட்டுக்கொண்டு உடலில் எந்த அசைவும் எழாது இறுக்கிக் கொண்டான்.

உடலசைவு காலத்தை அலகுகளாகப்பிரித்து அளவிடுவது. அளவிடப்படும் காலம் மீது ஏறி நெடுந்தூரம் செல்லமுடியாது. செய் செய் என்று அது ஆணையிடும். ஏதும் செய்யாதபோது எடைகொண்டு ஒவ்வொரு உடல்கணுமேலும் ஏறி அமரும். ஒவ்வொரு எண்ணத்துடனும் பின்னி முயங்கி இறுக்கி நெரிக்கும். 'உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று துரோணர் சொல்வதுண்டு. 'அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம். கற்சிலைமேல் படியும் ஆடை போல. பின்னர் வெறும் வண்ணப்பூச்சாக ஆகிவிடுகிறது. உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல. உள்ளத்தை உடலால் வெல்லமுடியும் என அறிந்தவன் வீரன். மாபெரும் யோகிகள் அடையாத உச்சங்களை எளிய வீரர்கள் சென்றடையலாகும்' துரோணர் விழிமூடி தன்னுள் மூழ்கியவர் என சொல்லெடுத்துக்கொண்டிருந்தார்.

சத்யபாமாவின் உடலில் காலம் பதறிக் கொண்டிருந்தது. அவள் தன் கட்டை விரலால் தரையில் விரிக்கப்பட்ட தடித்த மரவுரிக் கம்பளத்தை நெருடிக்கொண்டிருந்தாள். சுட்டுவிரல் மேலாடை நுனியை சுழற்றிக் கொண்டிருந்தது. விழிகள் அவள் உள்ளத்தில் ஓடிய எண்ணங்களுக்கு ஏற்ப அசைந்தோடின. இதழில் அவள் சொல்லாத சொற்கள் குவிந்து மலர்ந்து தயங்கி உள்ளிழுக்கப்பட்டு மறைந்தன. இப்புவியை அவள் உணர்ந்ததும் மெல்லிய அதிர்வுடன் விழித்து அவனை எவர் என வியக்கும் கணமொன்றில் நோக்கி மீண்டு “என்ன சொன்னாள்?” என்றாள். "யார்?" என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் அவளை பொறுமையிழக்கச்செய்யும் என அறிந்திருந்தான்.

அவள் குரல் உயர்ந்தது. “அவள் என்ன சொன்னாள் என்று எனக்குத் தெரியும். சியமந்தகத்தை என்னிடம் இருந்து வாங்கி வரச்சொல்லியிருப்பாள். நாளை அரசர் அவையில் அதை முடிசூடி அவள் அமர்ந்திருக்க விழைகிறாள்” என்றாள். “அவள் நாளை அரசர்கூடிய பேரவையில் துவாரகையின் பட்டத்தரசி என அமரப்போவதில்லை. யாதவப் பெண்ணாகிய என்னை இன்னமும் பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மட்டுமே அவள் அவையமர்கிறாள். அது ஓர் அரசுசூழ்தல்முறை மட்டுமே. அனைவரும் அதை அறிவர். இங்கு நகராள்வதும் இளைய யாதவர் இணையமர்வதும் நானே. சியமந்தக மணியை மார்பில் அணிந்து ஷத்ரிய அவையில் அமர்ந்தால் அரசர் நடுவே அவள் பட்டத்தரசி என அறியப்படுவாள் என்று எண்ணுகிறாள். நான் ஒருபோதும் அதற்கு ஒப்பப் போவதில்லை” என்றாள்.

திருஷ்டத்யும்னன் "அரசி, சியமந்தகத்தின் மேல் தனக்கும் ஓர் உரிமை உள்ளது என்று விதர்ப்பினி சொல்கிறார். தங்களிடம் அதை முறைப்படி சொல்லும்படியே என்னைப் பணித்தார்” என்றான். இரு கைகளையும் கைப்பிடி மேல் வைத்து சற்றே முன்னால் நகர்ந்து வியப்புடன் விரிந்த விழிகளுடன் "சியமந்தகத்தின் மேலா? அவளுக்கா? என்ன உரிமை?" என்றாள். "அது யாதவர்களின் குடிச் செல்வம். அவளுக்கும் அதற்கும் என்ன உறவு? வீண்சொல் எடுக்கிறாள். அவள் வஞ்சம் இங்கு ஒருபோதும் நடக்கப் போவதில்லை.”

திருஷ்டத்யும்னன் "அரசமுறைமைகள் குடிமுறைமைகள் என முன்னோர் வகுத்த சில உள்ளன அரசி” என்றான். ”என்ன உரிமைகள்? யாதவர்களை ஒடுக்கும் ஷத்ரியர்களுக்கும் யாதவர்களுக்கும் பொதுவான முறைமைகள் என்ன? தங்கள் அவையில் நிகரமரவே யாதவர்களுக்குத் தகுதியில்லை என்பவர்களுக்கு யாதவ மணி மட்டும் தகுதி கொண்டதாகி விடுமா? என்ன சொல்கிறார்கள்?” என்றாள். அவளுடைய படபடப்பைக் கண்டு உள்ளூர புன்னகைத்தபடி திருஷ்டத்யும்னன் அவளை மேலும் உணர்வெழுச்சி நோக்கி தள்ளினான். “அரசி, என்னதான் இருந்தாலும் பாரதவர்ஷம் என்பது ஷத்ரிய நிலம் அல்லவா? போர்வென்று முடிகொண்ட ஷத்ரியர்கள் அமைத்த நெறிகளை ஏற்றுதானே எவராயினும் ஒழுக முடியும்?” என்றான்.

சத்யபாமா உரத்த உடைந்த குரலில் "எவர் சொன்னது அது? ஷத்ரியர் என்பவர் எவர்? லகிமாதேவியின் சூத்திரப்படி எவர் ஒருவர் மண்ணை வென்று அரியணை அமர்ந்து கோல் ஏந்தி முடிசூடும் வல்லமை கொண்டிருக்கிறாரோ அவர் மேல் வெண்குடை கவிந்தாக வேண்டும். இந்த மண்ணை வென்றவர் என் கணவர். இப்பாரதவர்ஷத்தில் எவரும் அமராத அரியணையில் அமர்ந்தவர். ஷத்ரியகுலமே இங்கு வந்து அவருக்கு அடிபணியும் நாள் வரத்தான் போகிறது" என்றாள். "ஆம். அதை நானும் அறிவேன். அந்த நாள் வரும் வரை நாம் ஷத்ரியர் சொல்லுக்கு பணிந்தே ஆக வேண்டும். இளைய யாதவர்கூட ஷத்ரியருக்கு அஞ்சியே விதர்ப்பினியை தன் பட்டத்தரசியாக ஷத்ரிய அவையில் அமர வைக்கின்றார்” என்றான்.

“அதைப் பற்றித்தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றாள் சத்யபாமா. ”இனியும் எதற்கு இந்த நாடகம்? இந்நகர் கட்டப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட முறை அது. அன்று நம் கருவூலம் வலுப்பெற்றிருக்கவில்லை. நம் படை வல்லமை வளர்ந்திருக்கவில்லை. இன்று எட்டு புறங்களிலும் நம் படைகள் பெருகியுள்ளன. பாரதவர்ஷத்தின் எந்த நாடும் எண்ணிப்பார்க்க முடியாத பொருளாற்றல் கொண்டிருக்கிறோம். எவருக்காக இனி நான் அஞ்ச வேண்டும்? நாளை சியமந்தகத்தை நானே சூடி வருகிறேன். பட்டத்தரசியாக அரசர் அவையில் நான் அமர்கிறேன். வந்திருக்கும் சிற்றரசர்களில் எவர் அவையை புறக்கணிக்கிறார் என்று பார்க்கிறேன்."

திருஷ்டத்யும்னன் "என்றாயினும் அதை தாங்கள் செய்தே ஆக வேண்டும்” என்றான். அவள் தலையை அசைத்து குழலை பின்னால் தள்ளி ”ஆம், எதற்கும் ஓர் இறுதி முடிவு வந்தாக வேண்டும்” என்றாள். திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். "இந்தப் பூசல் எழுவதற்காகவே சியமந்தகத்தை இளையவர் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்” என்றான். “இந்த மணி செல்லும் இடமெல்லாம் பூசலை உருவாக்குகிறது என்பார்கள். அதுவே நிகழ்கிறது.” சத்யபாமா “இந்தப்பூசல் இவளே உருவாக்குவது. இவளது பேராசை” என்றாள். திருஷ்டத்யும்னன் "அதற்கு முன் விதர்ப்பினியின் தரப்பைச் சொல்ல ஒப்புதல் உண்டா?"’ என்றான். “சொல்லும்” என்றாள் சத்யபாமா.

”அரசி, தங்கள் தந்தை சத்ராஜித் இந்த மணியை மார்பில் அணிந்து ஒருமுறை கேகய நாட்டுக்கு சென்றிருக்கிறார். இளைய கைகேயி பத்ரையின் இடைமணி விழாவை சிறப்பிக்கையில் விளையாட்டென சியமந்தகத்தை எடுத்து சிறுமகவான விதர்ப்பினிக்கு அணிவித்திருக்கிறார். அதற்கு சூதர்சொல் சான்றுகள் உள்ளன” என்றான். சத்யபாமா திகைத்து ”அதனால் என்ன?” என்றாள். ”தங்களுக்கு அந்த மணி அணிவிக்கப்படுவதற்கு முன்னரே விதர்ப்பினிக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று தங்கள் தந்தை அந்த மணி மீது அவளுக்கும் உரிமை உண்டு என்று ஒரு சொல் சொன்னதாக விதர்ப்பினி சொல்கிறார்.”

உரக்க “பொய்!” என்று கூவியபடி எழுந்துவிட்டாள் சத்யபாமா. "நானும் அதை நம்பவில்லை அரசி. ஆனால் அந்நிகழ்வு உண்மை. சியமந்தக மணியைச் சூடி விதர்ப்பினி அன்று அவை சுற்றிவந்தது பாடப்பட்டுள்ளது. தங்கள் தந்தையே அளித்த மணியை சிற்றுணர்வால் ஆளப்படும் தாங்கள் மறுக்கிறீர்கள் என்று பொன்விழையும் பாணர் எழுதி நிறுவ அதுவே போதும்” என்றான். "நிறுவட்டும்” என்றாள் சத்யபாமை. "ஆம், சிற்றுணர்வேதான். என் குடிச் செல்வத்தை பிறிதொருத்தி சூட நான் ஒப்ப முடியாது. அதை அவள் தொட்டால் இந்த மணி நெருப்பாக எரிந்து அவள் குடியை எரிக்கும்.”

“ஆம் அரசி. அதை நானும் அறிவேன்” என்றான் திருஷ்டத்யும்னன். ”தங்களை ஏன் பட்டத்தரசியாக ஏற்க முடியவில்லை என்றிருக்கிறார்கள் இவர்கள் என்று அறிந்திருக்கிறீர்களா?” தளர்ந்த காலடிகளுடன் அமர்ந்து ”ஏன்?" என்றாள் சத்யபாமா. "தாங்கள் அரச குடி பிறக்கவில்லை. அரச குடிக்குரிய பெரும்போக்கும் கொடைத்திறனும் நிலைபேறுள்ள நோக்கும் தங்களிடமில்லை. முடிசூடினாலும் எளிய யாதவப் பெண்ணாகவே உளநிலை கொண்டுள்ளீர்கள். இந்நிகழ்வையே அதற்கென முதற்சான்றாக அவர்கள் முன்வைப்பார்கள்.”

பற்களைக் கடித்து “முன் வைக்கட்டும். அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை” என்றாள் சத்யபாமா. "இந்த மணி ஒன்றால்தான் இந்நகர்வாழ் மூடர் நடுவே நான் ஷத்ரியப்பெண்ணான அவளைவிட ஒரு படி மேலாக எண்ணப்படுகிறேன். யாதவரின் குடித்தலைவி என்ற இடமே என்னை பட்டத்தரசியாக்குகிறது இளவரசே. இம்மணியைச் சூடி அவளும் அமர்வாள் என்றால் யாதவர்கூட அவளை ஏற்க மாட்டோம் என்று சொல்லத் தயங்குவர். யாதவகுலம் ஏற்றுக்கொண்ட அரசமகள் எனும் நிலையில் அவள் அவையில் முதன்மை கோரினால் மன்று அதை மறுக்கவியலாது.”

”நீங்கள் எண்ணுவது போல அவள் தனித்தவள் அல்ல” என்றாள் சத்யபாமா. “அரசுசூழ்தல் அறிந்த அமைச்சர்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். இன்று துவாரகையின் அரசியாக அவள் ஆவதை ஷத்ரியர்களும் விழைகிறார்கள். ஒருவேளை விதர்ப்பத்தில் இருந்தேகூட ஒற்றர்கள் அவளுக்கு நெறிவகுத்து அளிக்கக்கூடும். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அரசாடலின் காய்கள். இதில் என் ஆடல் இது, சியமந்தகத்தை எந்நிலையிலும் அவளுக்கு அளிக்க  முடியாது.”

திருஷ்டத்யும்னன் மாறாமல் புன்னகைத்து "உண்மையில் இதையே நான் எண்ணினேன்” என்றான். "தங்கள் சொற்களை விதர்ப்பினிக்கு அளிக்கிறேன்" என்றபடி எழுந்து தலைவணங்கினான். “அவளிடம் சொல்லும், இந்த வீண் விழைவுகளைக் கடந்து இந்நகர் வெற்றியுடன் வாழ அவளால் என்ன இயலுமோ அதைச் செய்யும்படி நான் ஆணையிட்டேன் என்று. பிறிதெதுவும் இங்கு நிகழாது என்று அவள் தெளிவு கொள்ள வேண்டும் என்று நீரும் வழிகாட்டும்” என்றாள் சத்யபாமா.

திருஷ்டத்யும்னன் மீண்டும் தலைவணங்கி “விடைகொள்கிறேன் அரசி. இச்செய்தியை நான் கேகயத்து அரசிக்கும் தெரிவிக்கவேண்டும். இன்றிரவுக்குள் முடித்தேன் என்றால் என் பணி நிறைவடைந்தது” என்றான். “கைகேயிக்கா? ஏன்?” என்றாள் சத்யபாமா ஐயத்துடன். “அதைச் சொல்லவிட்டுவிட்டேன் அரசி” என்றான். ”சொல்லும்” என்றாள் சத்யபாமா. "ஏனென்றால் சியமந்தகமணியை விதர்ப்பினிக்கு மட்டுமென அளிக்கலாகாது, எண்மருக்கும் அதில் நிகர் உரிமை உள்ளது என்று என்னிடம் கைகேயி சொன்னார்” சத்யபாமா ஏளனமாக “அவளுக்குமா? என்னதான் எண்ணியிருக்கிறார்கள் இவர்கள்?” என்றாள். “அரசி, அவர்களனைவரும் துவாரகைக்கு அரசியர் அல்லவா?” என்றான் திருஷ்டத்யும்னன்.

“ஆம், ஆனால் இங்கு பட்டத்தரசி என்பவள் நான்” என்றாள். “அது மாறாத உண்மை அரசி. ஆனால் பிற அனைவரும் என்ன எண்ணுகிறார்கள் என்பதும் உணரப்படவேண்டியதல்லவா? எண்மர் அமர்ந்த முழுப்பேரவையில் எவர் பட்டத்தரசி என்னும் வினா எழும் என்றால் அதை எப்படி எதிர்கொள்வது?” சத்யபாமா விழிசுருக்கி "ஏன்?” என்றாள். ”அவ்வாறு எழ வாய்ப்பில்லை. ஆனால் அது எழும் என்றால் முறைமைப்படி அவர்கள் ஐங்குடியினரும் அமரும் ஓரு பொதுமன்று கூடவேண்டும் என்றுதான் கோருவர். இங்குள்ள ஷத்ரியர்கள் அதில் முன்னிற்பார்கள். அந்த அவையில் யாதவர்களின் குரல் ஒன்று மட்டுமே தங்களுக்கு ஆறுதலாக ஒலிக்கும். பிறர் குடியையே தேர்வார்கள் எனபதனால் விதர்ப்பினிக்கு ஒப்புதல் அளிக்கக்கூடும்.”

“அவ்வண்னமெனில் அடுத்த வினா எட்டு அரசியரும் எவ்வண்ணம் விழைகிறார்கள் என்பதே. அவர்களில் தங்களை ஆதரிப்பவர் எவர் என்று நாம் நோக்கியாகவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். சத்யபாமா பெருமூச்சுடன் "அப்படியொன்று நிகழுமா என்ன?” என்றாள். ”ஆம். இறுதியில் அதுவே நிகழும். அரசு சூழ்தலில் யாதவர்களுக்கு என தனிநெறிகள் இல்லை. அவர்களது சிறிய குடியரசுகளுக்கு இதுவரை ஷத்ரிய நெறிகளே வழிகாட்டுகின்றன. முடியரசின் நெறிகள் என்றும் ஷத்ரியர்களுக்கே நலம்பயப்பவை.”

“என்ன நிகழும்?” என்றாள் சத்யபாமா. “எட்டரசியரின் கருத்தை பெருமன்று உசாவலாம். விதர்ப்பினியை அரசியாக்க வேண்டும் என்று பிற ஷத்ரிய அரசியர் கோரலாம். அவ்வண்ணம் ஆக்கவில்லை என்றால் தாங்கள் அவையமர மாட்டோம் என்று மறுக்கவும் செய்யலாம். அவர்களை மன்னரோ மன்றோ கட்டுப்படுத்த முடியாது. அவ்வண்ணம் அரசியர் மறுத்தார்கள் என்றால் இங்கு குடிமன்றுகள் எவையும் கூடமுடியாது. அரசுமன்றுகளும் முறைப்படி அமையாது. குலதெய்வங்கள் பூசனை கொள்ளாதொழியும். அந்த இக்கட்டை எந்த அரசும் விரும்பாது” என்றான் திருஷ்டத்யும்னன்.

சத்யபாமா "இதை நான் எண்ணியதில்லை"’ என்றாள். ”பிற அரசியர் அறுவரையும் நாங்கள் இருவரும் பொருட்டென எண்ணிக் கொண்டதே இல்லை. அவர்கள் எண்ணுவது என்ன என்று அறிந்திருக்கவுமில்லை.” திருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல அரசி. விதர்ப்பினி அரசியரை நன்கு அறிந்தே இருக்கிறார்கள்” என்றான். “சற்றுமுன் நான் மாத்ரியை கண்டுவிட்டு வந்தேன்” என அவன் சொல்வதற்குள் “மாத்ரியையா? என் உளவுச் சேடியர் சொல்லவில்லையே?” என்றாள் சத்யபாமா.

சிரித்தபடி ”தங்கள் உளவுச் சேடிகள் அனைவருமே விதர்ப்பினியை மட்டுமே முன் நோக்குகின்றனர். பிற அறுவரையும் அவர் பெயர்களுக்கு மேல் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். ”இன்று நான் மாத்ரியின் மந்தண அவைக்குச் சென்றபோது ஒன்று கண்டேன். எட்டு அரசியரும் தங்களுக்கென தனி அரசியலை கொண்டிருக்கிறார்கள். அதில் மாத்ரி கேகய நாட்டு அரசி பத்ரையின் சொற்படி ஆடும் பாவை.” சத்யபாமா “ஆம். நான் அதை உணர்கிறேன். பத்ரை போர்த்தொழில் கற்றவள். அரசு சூழ்தல் அறிந்தவள். ஷத்ரியப் பெண் என்ற ஆணவம் கொண்டவள்” என்றாள்.

”உண்மை. நிமிர்ந்த தோள்களும் நேர்நோக்கும் கொண்டவர் கைகேயி. ஆணையிடும் குரலில் என்னுடன் பேசினார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். ”அவருக்கு இடைமணி அணிவிக்கும் விழாவுக்கு விதர்ப்பினி அங்கு வந்தார் என்றும் தங்கள் தந்தை சியமந்தகத்தை விதர்ப்பினிக்கு அணிவித்திருப்பதற்கு தானே சான்று என்றும் பத்ரை சொன்னார். அதையே நான் சற்று முன் சொன்னேன்.” சத்யபாமா “ஓ” என்று சொல்லி எண்ணம் அழுந்த பீடத்தில் சாய்ந்தாள்.

"அரசி, இன்னொன்று கருதப்படவேண்டும். பத்ரையும் ஷத்ரியமகள். அவர்களின் குரல் எழுவது எப்படியானாலும் அதன் இறுதியிலக்கு விதர்ப்பினிக்காகவே என்று எளிதில் உய்த்துணரலாம். அதற்குத் துணையாக மலைமகள் லக்ஷ்மணையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவைமன்றில் ஷத்ரியர்களும் பிறரும் என இருபால் பிரிவினை உருவாகும் என்றால் ஷத்ரியர்களின் குரல் வலுக்கவேண்டும் என்பதற்காகவே முடிவல்லமை இல்லாத உபமத்ரத்தின் அரசியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நெடுந்தூரம் சென்றுவிட்டார் என்பதை அவர்களின் பேச்சிலிருந்து அறிந்தேன். இனி அவையில் இளைய யாதவர் எழுந்து அரசியர் மன்றை நோக்கி உங்கள் ஆணை என்ன திருமகள்களே என்று வினவினால் விதர்ப்பினியின் குரலே ஓங்குமென்று எண்ணுகிறேன்” என்றான்.

சத்யபாமா ஏதோ சொல்லவந்தபின் தயங்கி நீள்மூச்சுடன் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தாள். “ஆம்” என்று தனக்குத்தானே தலையசைத்தாள். திருஷ்டத்யும்னன் அவள் உள்ளம்குவிந்து மீண்டும் பேசவருவது வரை பொறுமைகாக்கவேண்டும் என முடிவெடுத்து தன் உடலை இருக்கையில் சாய்த்து அசைவிழந்தான். அவள் அலைபாய்ந்த கருவிழிகளுடன் விரல்களால் ஆடையை சுழற்றியபடி நெடுநேரம் அமர்ந்திருந்தாள். காற்று கடந்து செல்லும் சுனையென அவள் உடலில் எண்ணங்கள் சிறுஅசைவுகளாக நிகழ்ந்து கொண்டிருந்தன. பிரிந்து பிரிந்து செல்லும் எண்ணங்களை வளைதடியில் தட்டித் தொகுக்கும் ஆயனென அவள் உள்ளம் தவிப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

சத்யபாமா நீண்ட மூச்சுடன் திரும்பி “என்னசெய்வது பாஞ்சாலரே? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை” என்றாள். “அவருக்கு அவள் மேல் உள்ள அன்பையும் நான் அறிவேன். எட்டரசியர் அவையில் அவளுக்கு உகந்தமுறையில் சொல் எழுந்தால் அக்கள்வர் அவளுக்கு மணியை அளிக்க அதையே சுட்டிக்காட்டவும் செய்வார். யாதவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. சிறியகுலமாகிய அந்தகர்கள் நான் அரசியானால் மேலெழுந்துவிடுவார்கள் என அஞ்சும் விருஷ்ணிகளும் போஜர்களும் அதை ஆதரிக்கக்கூடும்...” பின்பு தனக்குத்தானே தலையசைத்து “நீங்கள் எண்ணுவதைவிடவும் இக்கட்டு வலுவானது” என்றாள்.

“அரசி, இன்று இங்குள்ள நிலைமையை நாம் தொகுத்துப் பார்க்க முயல்வோம்” என்று அவன் சொன்னதும் அவள் உள்ளம் தனித்துச் சுழல்வதைக் காட்டும் விழிகளுடன் மெல்ல தலையசைத்தாள். “எட்டு அரசியரில் கோசல அரசி நக்னஜித்தியும், அவந்தி அரசி மித்ரவிந்தையும், கேகயத்து அரசி பத்ரையும், விதர்ப்பினியும் சத்ரியர். தாங்களும் கான்வேடர் குலத்து அரசி ஜாம்பவதியும் மச்சர்குலத்து அரசி காளிந்தியும், மத்ர அரசி லக்ஷ்மணையும் ஷத்ரியர்கள் அல்ல. துலாமுள் இரு பக்கமும் அசையாது முற்றிலும் நிலை பெற்றிருக்கும் சூழல் இன்றுள்ளது. அதை உணர்ந்து தங்கள் தரப்பில் ஒலிக்க வேண்டிய குரலில் ஒன்றை விதர்ப்பினியின் தரப்பு வென்றுள்ளது. லக்ஷ்மணை பத்ரையின் தோழியெனச் சென்று விதர்ப்பினியை ஆதரிப்பார்கள் என்றால் தாங்கள் முன்னரே தோல்வியடைந்து விட்டீர்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சினத்துடன் இரு கைகளையும் அரியணையின் பிடியில் அடித்து சத்யபாமை கொதித்தாள். “மூடப்பெண், அவளை இப்போதே வரவழைக்கிறேன். அவள் இங்கு நகர்நுழைந்தபோது இங்குள்ள முதற்குடி யாதவரும் வணிகப் பெருமுதலிகளும் அவள் அரசி அல்ல என்றும் அவள் அரியணையமர ஒப்ப மாட்டோம் என்றும் பேசிக் கொண்டதை நான் அறிந்தேன். என் அகம்படியினருடன் அணிவாயில் முகப்பு வரை சென்று எதிர்கொண்டு அழைத்து பட்டத்துயானை மீதேறி அவளை அழைத்து வந்தேன். இங்கு அவருக்கு நிகராக அரியணையில் அவளை அமர்த்தி அரச முறைமைகள் அனைத்தையும் செய்ய வைத்தேன். அன்று என் இடைவளைத்து தோளில் சாய்த்து கண்ணீர் விட்டாள். அவளை எண்மரில் ஒருத்தியாக்கியது இளைய யாதவரின் காதலல்ல, நான் கொண்ட கனிவு. அதை அவள் மறந்துவிட்டாளா என்று கேட்கிறேன்.”

“மறந்திருக்க மாட்டார்கள் அரசி” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால் அன்றே அவரை வெல்லும் நோக்கம் விதர்ப்பினிக்கு இருந்தது என்றால் இதைவிட நெகிழ்வான சில நிகழ்வுகள் அவர்களுக்குள்ளும் நிகழ்ந்திருக்கலாம். லக்ஷ்மணை எளியவர். இசையன்றி அரசியல் அறியாதவர். ஏதேனும் தருணத்தில் அவரால் சொல் ஒன்று அளிக்கப்பட்டிருக்கலாம். இன்று நாம் ஏதும் சொல்ல முடியாது.”

சத்யபாமை முற்றிலும் தளர்ந்து பீடத்தில் சாய்ந்தாள். தருக்கி நிமிரும் அகவிரைவு கொண்டவர்களின் இயல்புக்கேற்ப அனைத்து எழுச்சிகளும் விரைவிலேயே விலக பாய்கள் அவிழ்ந்து சரிய அசைவிழந்த படகென ஆனாள். திருஷ்டத்யும்னன் “நான் கேகயத்து அரசியின் சொல்லை மீண்டும் தங்களிடம் சொல்லவிழைகிறேன் அரசி. அதில் நாம் செல்லவேண்டிய திசைக்குறிப்பு உள்ளது” என்றான். சத்யபாமா விழிமட்டும் திருப்பி நோக்கினாள். “சியமந்தகம் எட்டு அரசியருக்கும் நிகர் உரிமை கொண்டதாகவே அமைய வேண்டும் என்று அவர் சொன்னார் அல்லவா? அதை நாம் ஏற்கலாம்” என்றான். “அதை...” என்று தளர்ந்த குரலில் கேட்ட சத்யபாமை சற்றே சினம் எழ “விதர்ப்பினி கோருவதனால் இவளும் கோருகிறாள். பிற அனைவரும் கோருகிறார்களா என்ன?” என்றாள்.

“முறைப்படி அவ்வண்ணம் கோர அவர்களுக்கு என உரிமை உண்டு அல்லவா? நாம் வேண்டுவது அதுவே” என்றான் திருஷ்டத்யும்னன். “தாங்கள் இளைய யாதவரின் பட்டத்தரசியாக முடிசூடி இங்கு அமர்ந்திருக்கையில் தனிக் கருவூலமோ தங்களுக்கென உரிமைப் பொருளோ கொண்டவரல்ல. சியமந்தகம் என்று இங்கு வந்ததோ அன்றே இளைய யாதவரின் கருவூலப் பொருளாகிவிட்டது. அரசி, அரசநெறிப்படி தாங்கள் அணிந்துள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் கூட கருவூலத்துக்குரியவையே. எட்டு அரசியரும் அக்கருவூலத்துக்கு நிகர் உரிமை கொண்டவர் என்பதால் சியமந்தகமும் அவர்களுக்கு உரிமை கொண்டதே” என்றான்.

சத்யபாமையின் விழிகளில் மெல்லிய ஆவல் ஒன்று தெரிந்தது. “அவ்வண்ணமெனில் அவளை விதர்ப்பினியின் குரலாக கொள்ளவேண்டியதில்லை. அவளுக்கு எதிராகவும் கொண்டுசெல்லலாம், அல்லவா?” திருஷ்டத்யும்னன் “ஆம் அரசி, அங்குதான் நமக்கு சிறுவாய்ப்பு உள்ளது” என்றான். “தன்னை விதர்ப்பினியின் கீழே அமர்த்திக் கொள்ள கைகேயி சித்தமாக இல்லை என்றே எண்ணுகிறேன். விதர்ப்பமும் கேகயமும் நிகர்நிலை நாடுகள் என்பதால் தானும் பட்டத்தரசிக்கு நிகரே என்றே அவர் எண்ணலாம். இயல்பில் எங்கும் தலை வணங்கா தன்மை கொண்டவர் கைகேயி. ஆகையால் அவரை வீரலட்சுமி என்று இங்கு சூதர் அழைக்கிறார்கள். உண்மையில் அவ்வழைப்பினாலேயே அவர் உள்ளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபோதும் விதர்ப்பினிக்கு வெறுந்துணையாக அமையமாட்டார். சியமந்தகத்தை அவர் கோருவது உங்களுக்கும் விதர்ப்பினிக்கும் நிகராக அமைவதற்காகவே. தனக்கென கோரமுடியாது என்பதால் எண்மருக்காகவும் கோருகிறார்.”

“இன்று நாம் செய்யக்கூடுவது அவர்களைப் பிரிப்பதே” என்றான் திருஷ்டத்யும்னன். ”இரண்டு அணிகளாக அவர்கள் பிரிந்தால் தாங்கள் வெல்வது எளிது” என்றான். சத்யபாமா “ஜாம்பவதி எந்நிலையிலும் என்னுடன் இருப்பாள் அதில் ஐயமேதுமில்லை” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். “காளிந்தியும் தங்களுக்காக பேசுவார். எஞ்சும் இருவரும் ஷத்ரியப் பெண்கள். அவர்களில் ஒருவரை தாங்கள் வென்றெடுப்பீர் என்றால் அவையில் பிறிதொரு குரலெழாது வெல்ல முடியும்.” சற்றுநேரம் உளம்துழாவியபின் ”காளிந்தியிடமும் ஜாம்பவதியிடமும் நான் ஆணையிட முடியும்” என்று சத்யபாமா சொன்னாள்.

“ஆம் அரசி, அவர்களுக்கென தனி உள்ளங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஷத்ரிய இளவரசிகள் அவ்வாறல்ல. இளமையிலேயே மண்ணாளும் கனவுகளுடன் வளர்கிறார்கள். பிறிதொருவருக்குக் கீழாக இருப்பதில் ஆணவம் புண்படுகிறார்கள். அவர்களை நோக்கி நாம் ஆணையிட முடியாது. அவர்கள் கோரும் ஏதோ ஒன்றைக் கொடுத்து ஓர் அரசுமுறைப் புரிதலை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடியும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று கைகேயியை வென்றெடுக்க மிக எளிய வழி ஒன்று தங்களுக்கு உள்ளது. சியமந்தகத்தை அவர்களுக்கும் அளிப்பதாக சொல்லுங்கள்.”

“என்ன சொல்கிறீர்?” என்று அரையுள்ளத்துடன் சினந்தாள் சத்யபாமை. “ஆம் அரசி, தங்களுக்கு நிகராக சியமந்தகம் விதர்ப்பினிக்கு மட்டும் அளிக்கப்படும் என்றால் மட்டுமே விதர்ப்பினி வெற்றிகொள்கிறார். அரசியர் எண்மருக்கும் அந்த மணியை அளிக்கிறீர்கள் என்றால் வேடர்குலத்து ஜாம்பவதி அணியும் அதே மணியை தானும் அணிவதாகவே விதர்ப்பினி எண்ணமுடியும். தங்கள் இயல்பான பெருந்தன்மையால் அந்த மணியை எண்மருக்கும் அளித்தீர்கள் என்று சூதர்களை பாட வைக்கமுடியும். அந்நிலையில் என்றும் அந்த மணி தங்களுக்குரியதாக இருக்கும். பிற எழுவரும் வெறுமனே அதைச் சூடி அமர்வதாகவே பொருள் கொள்ளப்படும்.”

“ஆனால் நாளை அவையில் அவள் அமர்ந்து அணிந்திருப்பது...” என்று சத்யபாமா சொல்லத் தொடங்கவும் “நாளை மாலை அரசப்பேரவையில் விதர்ப்பினி சியமந்தகத்தை சூடுவதற்கு முன்னதாகவே உச்சிப்பொழுதின் அவையில் அதை பத்ரை சூடட்டும். புலரியில் எண்குலத்து மூதன்னையர் ஆலயத்தில் பூசனை முடிக்கச் செல்லும் ஜாம்பவதி அதை அணியட்டும். விதர்ப்பினி மீண்டும் அணியும்போது அந்த அணிதல் எப்பொருளும் இல்லாதாகிவிட்டிருக்கும்" என்றான்.

சில கணங்கள் அச்சொற்களின் முழுப்பொருளை உணராதவள் போல் இருந்த சத்யபாமை முகம் மலர்ந்து “ஆம். அது உகந்த வழியே” என்றாள். “சியமந்தக மணியை தங்களிடம் பெற்று அரசியார் ருக்மிணிக்கு அளிப்பதாக வாக்களித்துள்ளேன். அதே வாக்கை பத்ரைக்கும் லக்ஷ்மணைக்கும் அளித்துள்ளேன். எண்மருக்கும் மணி அளிக்கப்படக்கூடாது என்று நான் எவரிடமும் சொல் பெறவில்லை. தாங்கள் எண்ணிய இலக்கும் ஈடேறும், என் சொல்லும் கனியும்” என்றான் திருஷ்டத்யும்னன். சத்யபாமை சிரித்தபடி “அவ்வண்ணமே ஆகுக!” என்றாள்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 7

சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி நின்றான். அணுகிய திருஷ்டத்யும்னன் ”உள்ளுணர்வால் தங்களை இங்கு எதிர்பார்த்தேன் யாதவரே” என்றான். சாத்யகி ”தாங்கள் இங்கு என்ன பேசியிருக்கக்கூடும் என்பதை அன்றி எதையும் எண்ண முடியாதவனாக இருந்தேன் பாஞ்சாலரே. அரசவவைக்கூடத்தில் ஒரு கணம்கூட என் உடல் அசைவின்றி அமையவில்லை. உண்டாட்டு அறையின் உடற்கொந்தளிப்புடன் அது இசையவுமில்லை” என்றான்.

திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான். “தாங்கள் யாதவ அரசியிடம் பேசி முடிப்பதற்கு எவ்வளவு நேரமாகும் என்று கணக்கிட்டு வெளிவரும் தருணத்தில் இங்கு வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. ஆகவே கிளம்பி இங்கு வந்து தேரிலேயே காத்திருக்கலாம் என்று எண்ணினேன்” என்ற சாத்யகி விழிகூர்ந்து ”மிக விரைவில் வந்துவிட்டீர்கள்” என்றான். ”சுருக்கமான சந்திப்புதான்” என்றான் திருஷ்டத்யும்னன் தேரிலேறிக் கொண்டபடி.

“என்ன சொன்னார்கள்?” என்றான் சாத்யகி. ”சியமந்தகமணியை பெற்று வந்திருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சில கணங்கள் சாத்யகி ஓவியம் போலிருந்தான். காற்று வந்து தொட்டது போல கலைந்து "உங்களிடமா? சியமந்தகமா? என்றான். ”ஆம் ,நாளை விதர்ப்பினி அவையில் சூடி அமர்வற்கு” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி மூச்சை துருத்தி என வெளிவிட்டு பின்னர் சட்டென்று சிரிப்பு பற்றிக்கொள்ள ”பிறிதொருவர் என்றால் மணியை திருடிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றே எண்ணுவேன்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து ”ஒரு வகையில் திருட்டுதான். என் அரசுசூழ்கைப் பயிற்சியால் அவர்களின் உள்ளத்துக் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்தேன்” என்றான். சாத்யகி “நான் இன்னமும் நம்பவில்லை. விதர்ப்பினிக்காக யாதவ அரசி அவரே சுடர்மணியை எடுத்து அளிப்பது என்றால்... துவாரகையில் ஒரு வேளை இளைய யாதவர் இம்மாயத்தை நிகழ்த்தக்க்கூடும். பிறிதொருவரால் இயலும் என்றே எண்ணமுடியவில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் ”இந்த மணி விதர்ப்பினிக்கு மட்டுமல்ல” என்றான். ”நாளை காலை இதை ஜாம்பவதி அணிவார். உச்சிவேளையில் கைகேயி அணிவார். அதன் பின் இரவிலேயே விதர்ப்பினியிடம் இது சென்றடையும்..”

ஒரு கணத்துக்குள் திருஷ்டத்யும்னன் எடுத்த சூழ்மதி அனைத்தையும் புரிந்துகொண்ட சாத்யகி உரக்க சிரித்தபடி தேர்த்தட்டில் இருந்து எழுந்துவிட்டான். “ஆம், இப்படியொரு வழி இருக்கிறது. இதை நான் எண்ணவே இல்லை. இப்போது சியமந்தகம் சூடும் தனித்தகுதியை யாதவஅரசி அழித்துவிட்டார். அதை விதர்ப்பினி அடைந்து ஆவதொன்றும் இல்லை. ஆனால் அனைவரும் நிகரென்று ஆகும் போது சியமந்தகத்தை அளித்தவர் என்ற இடத்தில் ஒரு படி மேலாகவே அவர் இருப்பார்” என்றான்.

”அவ்வளவுதான்” என்றபடி கால்களை நீட்டி அமர்ந்த திருஷ்டத்யும்னன் தன் இடைக்கச்சையை அவிழ்த்து அதில் இருந்த சிறிய பொற்பேழையை எடுத்தபடி “பார்க்கிறீர்களா?” என்றான். சாத்யகி பதற்றத்துடன் அதைத் தொட்டு விலக்கி “வேண்டாம்” என்றான். ”ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். ”இவ்வளவு அண்மையில் நான் இதை பார்த்ததில்லை. எப்போதும் அவைமேடையில் தொலைவில்மட்டுமே கண்டிருக்கிறேன். எச்சரிக்கும் விழி. சிலசமயம் அச்சுறுத்தும் நோக்கு. ஒரே ஒருமுறை புன்னகைத்தது, கிருதவர்மர் தண்டிக்கப்பட்ட அன்று.”

”இப்போது பாரும்” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை... இங்கில்லை. இதைப் பார்ப்பது ஓர் அரிய தருணம். இவ்வளவு இயல்பாக அது நிகழக்கூடாது. ஏற்ற இடத்தை தேர்வு செய்கிறேன்” என்றான் சிரித்தபடி. ”சரி, தேர்வு செய்யும்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அண்ணாந்து விண்மீன்கள் ஒழுகிச் சென்ற கரிய வானத்தை நோக்கிய பின் “நாம் கீழே நாளங்காடி பூதத்தின் ஆலயத்துக்குச் செல்வோம்” என்றான். திருஷ்டத்யும்னன் ”அவ்வாறே” என்று சொன்னதும். தேரோட்டியிடம் ”நாளங்காடி” என்றான் சாத்யகி.

தேரின் அசைவுகளுக்கேற்ப உள்ளத்துச் சொற்கள் ஒழுங்கமைய இருவரும் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். சாத்யகி வலிகொண்டவன் என உடல் அசைந்துகொண்டே இருந்தான். பின்பு ”பாஞ்சாலரே, இதை முதலில் அண்மையில் பார்க்கையில் உங்கள் உடல் பதறவில்லையா?” என்றான். ”இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “உண்மையில் அத்தனை எளிதாக இதை என்னிடம் அளித்துவிடுவார் யாதவ அரசி என நான் எண்ணவில்லை. எண்மரும் இதைச் சூடுவதே உகந்த வழி என்று அரசியிடம் நான் சொல்லி புரியவைத்ததும் எழுந்து இடையில் கை வைத்து சாளரம் வழியாக கடலை நோக்கி நின்றார். திரும்பி என்னிடம் பாஞ்சாலரே, இந்த மணி ஒரு துளிக் கடல் என்று எனக்குத் தோன்றியுள்ளது என்றார். கடலளவு ஆழம்கொண்டது. இதன் ஈடற்ற ஈர்ப்பு அதனால்தான் என்றபின் மேலும் ஏதோ சொல்ல விழைந்து சொல்லின்றி அமைதியடைந்தார்.

“பின் அவரில் ஏதோ எழுவதை கண்கள் மாறுவதில் இருந்து தெரிந்துகொண்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “சட்டென்று திரும்பி தன் அணுக்கச் சேடியிடம் 'கீர்த்தி, அந்த மணியை எடுத்து வா" என்றார். அப்போதும் அது சியமந்தகமே என்று என்னால் எண்ணக் கூடவில்லை. நான் அவர் ஆடை காற்றில் நெளிவதையும் சுடரொளியில் அணிகள் மின்னுவதையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வறையில் முடியும் அணியும் சூடி அவர் நின்றிருக்கையில் வளைதடி ஏந்தி கன்று மேய்த்து கான் விளிம்பு ஒன்றில் சந்தித்தால் மேலும் அழகாய் இருப்பார் என்று எண்ணினேன். அவ்வெண்ணத்திற்க்காக புன்னகைத்தேன்.”

“கீர்த்தி வந்து செம்பட்டால் மூடிய தாலம் ஒன்றை பீடத்தில் வைத்தாள். அதில் ஏதோ ஓலையோ கணையாழியோ என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது எண்ணுகையில் எங்கோ என் உள் ஆழம் அது சியமந்தகம் என்று அறிந்திருந்தது என்றும் அதை நேருக்கு நேர் மறுத்து மேற்பரப்பில் கையால் அலையெழுப்பிக் கொண்டிருந்தேன் என்றும் தோன்றுகிறது. யாதவ அரசி அந்தப் பேழையை எடுத்து என்னிடம் நீட்டி தாங்கள் கூறியபடி இதோ சியமந்தகத்தை அளித்துவிட்டேன்.  உகந்த வண்ணம் செய்யுங்கள் என்றார்.”

“சியமந்தகம் என்ற சொல் என் செவிக்கு வந்ததும் என் கைகள் நடுங்கத் துவங்கின. அனல்விடாய் கொண்டவன் போல என் நாவு வறண்டது” என திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “அதை தொடலாகாது என்று எண்ணினேன். அந்த மணிக்கு மிக அருகே கண்காணா பெருந்தெய்வம் ஒன்று நின்றிருப்பது போல் தோன்றியது. அதை நோக்கியபடி விழிதிறந்து அமர்ந்திருந்தேன்.”

”இதை ஏழு அரசியரும் சூடட்டும். தேவையென்றால் முறையான திருமுகம் ஒன்றை மகளிர் அரண்மனையில் இருந்து விடுக்கிறேன் என்று அரசி சொன்னார்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் தலைவணங்கி ஆம் அரசி தங்களால் அளிக்கப்பட்டது என்று ஓலை மூலமாக நிறுவப்பட வேண்டும் என்றேன். தங்கள் குடிச்செல்வமான சியமந்தகம் இளையயாதவரின் கால்களுக்கு தங்களால் சூட்டப்பட்டது என்றும் இளைய யாதவர் சூடிய பிற ஏழு அரசியருக்கும் இந்த அருமணி நிகர்உரிமை கொண்டது என்றும் அவ்வாணை சொல்லவேண்டும். தங்களின் குடிமுத்திரை அவ்வோலையில் பதிக்கப்பட வேண்டும். துவாரகையின் அரசியாக அல்ல, ஹரிணபதத்தின் இளவரசியாக அவ்வோலை எழுதப்பட வேண்டும் என்று சொன்னேன். ஆம் என்றபடி புன்னகைத்து அவர் அமர்ந்து கொண்டார்.”

“பேழையைத் திறந்து மணியை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதற்கென அகம் உன்னிய ஒவ்வொரு கணத்திலும் பேழையை உள்ளத்தால் மேலும் தள்ளி விட்டேன். ஒழுக்கில் நம்மை நோக்கி வந்த நெற்று நம் உடலின் அலைகளால் அணுகாது விலகி விளையாடுவது போல் இருந்தது” என்றான் திருஷ்டத்யும்னன். “அறைக்குள் இருந்த செவ்வொளியில் பீடத்தில் அமர்ந்திருந்த யாதவ அரசியை நோக்கினேன். அவரது சிறிய முகம் வியர்வை பனித்திருந்தது. எடை ஒன்றை இறக்கி வைத்தவர் போல் இருந்தார். அப்போது உணர்ந்தேன், அவர் அதை அதுவரை சுமந்து கொண்டிருந்தார் என்று. எவ்வண்ணமேனும் பிறிதொருவரிடம் அதை அளிக்கக் காத்திருந்தார்.”

பெருமூச்சுடன் உடல் எளிதாகி அமர்ந்து “சியமந்தகம் அவரிடம் இளையயாதவரால் ஏன் அளிக்கப்பட்டது என எண்ணிக்கொண்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “நாற்களத்தில் முழுவல்லமை கொண்ட காய் ஒன்று அவரை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. இத்தனை நாள் அதற்கு எதிர்நகர்வு செய்யும் வழியறியாது தவித்துக் கொண்டிருந்தார். அதை என்னிடம் அளித்ததும் ஆட்டத்திலிருந்து விலகிக்கொண்டுவிட்டார்.“ சாத்யகி “ஆம், அதை என்னால் உணரமுடிகிறது” என்றான்.

“எண்ணங்கள் என் மீதாக கடந்து செல்கையில் அவையனைத்தும் அப்பேழையைத் திறப்பதைச் சுற்றியே அமைந்திருப்பதைக் கண்டேன். யாதவரே, எண்ணங்கள் மையம் கொண்டு சுழன்று சுருள் வடிவாவதை அப்போதுதான் உணர்ந்தேன். ஒரு கணத்தில் என்ன ஒரு மூடத்தனம் என்று எண்ணினேன். ஏன் அந்தத் தயக்கம்? அஞ்சுவதனால் அடையப்போவதென்ன? அக்கணமே எண்ணப்பெருக்கை அறுத்தபடி பெட்டியை எடுத்துத் திறந்தேன். உள்ளே சியமந்தகம் எளிய நீல மலரிதழ் போல் தெரிந்தது. ஒளியே இல்லை.  விளக்கை நோக்கி அதை திருப்பினேன். செவ்வொளியில் அது சற்று பச்சை நிறம் கொள்வது போல் இருந்தது. தளிரிலை போல.”

“அப்போது நான் அடைந்த ஏமாற்றம் எனக்கு பெருத்த ஆறுதலை அளித்தது ஏன் என எண்ணிக்கொண்டே இருக்கிறேன். நச்சுநாகம் என அஞ்சியது நீர்ப்பாம்பு எனத் தெளிந்ததுபோல. ஆனால் மெல்ல ஏமாற்றத்தின் விசை கூடியது. நான் எண்ணிவந்த அரிய தருணம் வீண் என்றாகிறதா என மயங்கினேன். அதுதானா என்று விரல்களால் எடுத்து நோக்கினேன். சீராக சரிவுகள் வெட்டப்பட்ட இருபத்து நான்கு பட்டை கொண்ட படிகக்கல். கல்லென்று அதை ஒரு போதும் கருத முடிந்தது இல்லை என்று எண்ணினேன். சித்தம் கொண்ட எழுச்சிக்கு அடியில் கைவிரல்கள் அதை கல் என்றே சொல்லிக்கொண்டிருந்தன.”

“அப்போது எனக்குத் தோன்றியது என்ன என்று இப்போது வகுத்துக்கொண்டிருக்கிறேன். ஒற்றைச் சொல். கல். இது கல் இது கல் என்றே என் சித்தம் உரைத்தது. ஆம், கல் மட்டுமே. பிறிதனைத்தும் நம் அச்சங்களும் விழைவுகளும் படிந்து உருவானவை. வெறும் கல். இதோ இந்நகர் அமைந்திருக்கும் பாறை போல. அங்கு மலைமேல் எழுந்திருக்கும் பெருவாயில் போல” என்றான் திருஷ்டத்யும்னன். ”அந்தப் பேழையை எடுத்து இதைப் பார்க்கும் கணத்தை நீர் இத்துணை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எண்ணுகிறேன். அதை அரியதொரு தருணமாக ஆக்கும்போதுதான் அது வல்லமை கொள்கின்றது. அதன் விழிநோக்கி நீ வெறும் கல் என்று சொல்லும். அதை நீர் வெல்வீர். உன்னை அஞ்சுகிறேன் என்று உணர்ந்த கணமே அந்தக் கொலைத்தெய்வம் பேருருக்கொள்ளும்.”

சாத்யகி ”பாஞ்சாலரே, உங்களுக்கு இந்த மணி எளிய நிகழ்காலம். யாதவருக்கு இது கதைகளும் உணர்வுகளும் பின்னி விரியும் இறந்தகாலம். இந்த விழி உங்களிடம் எளிய சொல்லொன்றை சொல்லியிருக்கலாம். என்னிடம் பெருங்காவியங்களையே உரைக்கும்" என்றான்.

நாளங்காடி இரவில் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. கடைமுகப்புகள் அனைத்தும் தடித்த தோல்திரைகளும் ஈச்சைத் தட்டிகளும் மூங்கில் படல்களும் இழுத்து இறக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவற்றில் வரையப்பட்ட வண்ணஓவியங்கள் தெருமுனைப் பந்தங்களின் ஒளியில் தழலாடின. வணிகர்களின் குலக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் நிறமிழந்திருந்தன. கற்தூண்களில் எரிந்த மீன்நெய்ப் பந்தங்கள் காற்றிலிருந்த மழைத்துளிகள் பட்டு மெல்ல வெடித்து தழைந்தாடி ஒரு கணத்தில் சிறகோசையுடன் எழத் துடித்து மீண்டும் சீறி தழலிட்டுக் கொண்டிருந்தமை செவ்விதழ் சிறகுடன் பருந்துகள் அமர்ந்து கூருகிர் கவ்விய இரைகளை கொத்தி உண்பது போல் தோன்றியது.

ஒழுகுநீர்ப்பாதைகளுக்குள் இருந்து சாலைமேல் வந்த எலிகளைப் பிடிப்பதற்காக முன்னங்கால் நீட்டி ஊன்றி பின்னங்கால் மடித்து கேளா ஒலிக்கு மெல்ல செவிதிருப்பியபடி ஊழ்கத்தில் என அமர்ந்திருந்த பூனைகள் தேரொலி கேட்டு தோல் அதிர்ந்து விழி மட்டும் திறந்து நோக்கி சிறு செந்நா நீட்டி மென்குரல் கூவி நோக்கின. சுவர் ஓரமாகச் சென்ற எலிகள் அதிர்வுணர்ந்து நின்று நுண்மயிர் சிலிர்த்து மணிக் கண்களை காட்டின. பின் நீரில் பாய்ந்து சலசலத்தோடி மறைந்தன. புறாக்கள் அங்காடி மாடங்களின் விளிம்பில் தொற்றி அமர்ந்து குறுகும் ஒலி சூழ்ந்திருந்தது.

தெருமுனைகளில் அமைந்த தட்டிக்கூடாரங்களில் அங்காடிக் காவலர்கள் துயின்று கொண்டிருந்தனர். அவர்களின் கால்களும் துயிலில் விழுந்த கைகளும் மழைத்துளி வழிந்த தட்டிப்பரப்புக்கு அடியில் தெரிந்தன. ஒரே ஒரு காவலன் மட்டும் சகட ஒலி கேட்டு கையூன்றி ஒருக்களித்து கள் மயக்கமும் துயிலும் கலந்த விழிகளால் பொருளின்றி நோக்கி மீண்டும் தலை சாய்த்துக்கொண்டான். சுண்ணாம்புக் கல் பரப்பப்பட்ட தேர்ச்சாலை கால்களும் சகடங்களும் பட்டுத் தேய்ந்து நீர் பரவியது போல பளபளத்தது. பந்தங்கள் தலை கீழ் நதியில் தொங்கி ஆடின. தேர் தன் உடைந்து பரவிய நிழல்கள் போல் சென்றது.

அங்காடி பூதத்தின் பெருஞ்சிலை நாற்தெருக்கள் சந்திக்கும் மையத்தில் வடங்கட்டி சூழப்பட்ட சதுக்கத்தின் நடுவே அமைந்த கற் பீடத்தின் மேல் நின்றிருந்தது. வலக்கையில் பற்றி நிலம் பதித்த உழலைத்தடியும் இடக்கையில் சுற்றிய பாசாயுதமுமாக பத்து ஆள் உயரத்தில் எழுந்த பூதத்தின் நிழல் பெரும்பூதமென நீண்டு தரையில் விழுந்திருந்தது. உறுத்த விழிகளும் இளநகை எழுந்த பெரியவாயும் இளம்பிறையென வளைந்த பன்றித் தேற்றைகளும் தோளில் சரிந்த குழல் சுருளும் அகன்று இரு பலகைப்பரப்பென எழுந்த மார்பும் தொப்புள்சுழி ஆழ்ந்த பெருவயிறும் மண்ணில் ஆழ ஊன்றிய பெருந்தொடைகளும் நரம்புகள் புடைத்த கால்களும் கொண்டிருந்த பூதம் அக்கணம் மண்பிளந்து எழுந்தது போலிருந்தது. அதற்கு முன் அணிந்தவை என இடையில் சல்லடமும் தோள்வளைகளும் ஆலிலை ஆரமும் நாகக்கழலும் நாகக்குண்டலங்களும் தெரிந்தன.

தேரை நிறுத்தி பாகன் திரும்பி நோக்க ”போதும்” என்று கையசைத்து சாத்யகி இறங்கினான். சுண்ணாம்புப் பாறைத் தளத்தில் குறடுகள் உரசி ஒலிக்க அருகே சென்று இடையில் கைவைத்து நின்று பூதத்தை நோக்கினான். திருஷ்டத்யும்னன் இறங்கி அவன் அருகே வந்தான். பூதச் சதுக்கத்தின் நான்கு மூலைகளிலும் எழுந்த பந்தத்தூண்களின் தழல்கள் ஆடின. அப்பகுதியே அந்தி என சிவந்திருந்தது. அருகிருந்த கலிகை அன்னையின் சிற்றாலயமும் அதற்கப்பால் இருந்த அன்னையரின் மரத்தாலான சிற்றாலயங்களும் அவ்வொளியில் அசைந்து கொண்டிருந்தன.

திருஷ்டத்யும்னன் ”இத்தகைய ஓர் தெய்வம் வேறெந்த நகரிலும் இல்லை” என்றான். ”இது தென்னவர் தெய்வம்” என்றான் சாத்யகி. ”அங்கே கடல் சூழ்ந்த மூதூர்மதுரையிலும் பெருநகர் புகாரிலும் வணிகத் தெருக்களின் மையங்களில் இத்தெய்வத்தை நாட்டியிருக்கிறார்கள். தென்னகம் ஏகிய அகத்தியர் தன் சொல்லில் இருந்து இத்தெய்வத்தை எழுப்பியதாக சொல்கிறார்கள். சொல்லுக்குக் காவலென நின்றிருப்பதனால் இதை வாய்மைப்பூதம் என்பதுண்டு. இதன் முன் நின்று உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு இது சான்றுரைத்து தலையசைக்கும். பின்பு அவை சொன்னவரின் சொற்களல்ல. கேட்டு நின்ற பூதத்தின் சொற்கள்.”

“தென்னக வணிகர் இதை நம்பியே பொருள் கொண்டு பொருள் அளிக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்தும் நின்றாளும் சொல் அது” என்றான் சாத்யகி. “இங்கு தென்னவரின் வணிகம் பெருகியபோது சதுக்கப்பூதத்தை நாட்ட வேண்டும் என்று கோரினர். இளையவ யாதவர் அங்கிருந்து பெருஞ்சிற்பிகளை வரவழைத்து நாளங்காடியிலும் அல்லங்காடியிலும் இரு பூதங்களை நிறுவினார். நாளங்காடி பூதம் பகல்பூதம் என்றும் அல்லங்காடி பூதம் இரவுப்பூதம் என்றும் சொல்லப்படுகிறது. அல்லங்காடி பூதம் பகலில் விழிதிறக்கும் நாளங்காடி பூதமோ இரவில்தான் விழிதிறக்கும். தங்கள் முன் சொல் அளித்தவன் வினைமுடித்து வீடேகி விழி மயங்கும்போது எழுந்து ஒவ்வொருவரையாக அணுகி அவர்களின் நெற்றிப் பொட்டைத் தொட்டு அச்சொல்லை ஒரு முறை நினைவுறுத்தி திரும்பும் என்கிறார்கள். ஒரு நாளும் அச்சொல்லை அவர்கள் மறக்க பூதம் விடுவதில்லை.”

திருஷ்டத்யும்னன் விழிதூக்கி பூதத்தின் முகத்தை நோக்கி ”இப்போது இந்த பூதம் விழித்திருக்கிறது அல்லவா?” என்றான். “ஆம்” என்று சிரித்த சாத்யகி ”நான் அவ்வப்போது இங்கு வருவதுண்டு. எனக்கென ஒரு சொல்லை இந்நகர் புகுந்த முதல் நாளில் எடுத்திருந்தேன். சஞ்சலங்கள் என எதையும் உணர்ந்ததில்லை. ஆனால் காலம் என விரிந்திருக்கும் வலை என்ன பொருள் கொண்டிருக்கிறதென்று அறியேன். எனவே இங்கு வந்து நான் அறிந்த காலத்துக்கு என் அகச்சான்றை நிறுத்துவேன். அறியாத வருங்காலத்துக்கு நீயே சான்று என்று சொல்லி வணங்குவேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் புன்னகைத்து சற்று அருகே சென்று விண்மீன்கள் சூடி நின்றிருப்பது போல் தலை ஓங்கி எழுந்த பூதத்தை நோக்கினான். அவ்வுயரத்தில் வெறித்த விழிகள் எம்மானுடரையும் நோக்காது வானில் நின்றன. ”யாதவரே, நாம் ஏன் சொல்லளிக்கிறோம்? நிலையற்றுக்கொந்தளிக்கும் அலைப்பரப்பு நாம் வாழும் சொல்லுலகு. நிலைபேறுள்ளவை என சொல்லுக்கு அப்பால் எழுந்து நின்றிருக்கின்றன ஐம்பூதங்கள். அவற்றை சான்றாக்குகையில் சொல்லையும் நிலைகொண்டதாக்குவதாக மயங்குகிறோம். மானுடர் எளியவர். எனவே மாறாச் சொல் என எதையும் மானுடன் சொல்லலாகாது. அப்படியொன்றை சொன்ன கணமே ஐம்பூதங்களும் இளிவரல் நகையுடன் அவனை சூழ்ந்து கொள்கின்றன. பீஷ்மரே ஆனாலும் மானுடனால் எச்சொல்லையும் முற்றாக கடைப்பிடிக்க இயலாது.”

சாத்யகி ஏதோ சொல்ல வந்து தயங்கி இதழ் கோட்டினான். பின்பு பெருமூச்சுடன் ”நீர் பூதம்போன்றவர் பாஞ்சாலரே. இரக்கமற்றவர். சில சமயங்களில் உம்முடன் இருக்க அஞ்சுகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து ”துரோணர் போன்ற ஆசிரியர் ஒருவரிடம் சொல் பயின்றால் வரும் வினை அது. புதிய தருணங்களில் அழகிய சொற்றொடர்களை அமைத்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்து தப்ப முடியாது. எங்கோ சூதர்கள் அச்சொற்களை காவியங்களில் பொறிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம். சூழ்ந்திருக்கும் அனைத்திலும் செவிகள் எழுந்துவிட்டன என்ற கற்பனை” என்றான்.

திருஷ்டத்யும்னன் "இவ்விடத்தை ஏன் சியமந்தகத்தை நோக்க நீர் தேர்வு செய்தீர் என எனக்குப் புரியவில்லை" என்றான். சாத்யகி “நான் அதைப் பார்க்கையில் எனக்கு இப்பூதம் சான்று நிற்க வேண்டும். காட்டுங்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் தன் கச்சையிலிருந்து அந்தப் பொற்பேழையை எடுத்து நீட்டினான். அதை வாங்காமல் இடையில் கைவைத்து உதடுகளை இறுக்கியபடி சிலகணங்கள் சாத்யகி நோக்கி நின்றான். ”பாருங்கள் யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி ஒரு கணத்துக்குப் பின் அதை வாங்கி மூடியை திறந்தான். உள்ளே இருந்த கல் உலோகப்பரப்பு போல் பந்த ஒளியை எதிர் கொண்டு மென்மையாக மின்னியது. சேற்றுக்குள் இருக்கும் தவளையின் விழி என திருஷ்டத்யும்னன் எண்ணி அவ்வெண்ணத்துக்காக புன்னகைத்துக்கொண்டான். சாத்யகி “நீர்க்குமிழி” என்றான். குறுவாள் நுனியை தடவுவதைப் போல் அதைத் தொட்டு நிமிர்ந்து ”கூர்மையாக இருக்கும் என்ற உளமயக்கில் இருந்தேன். இத்தனை மென்மையாக இருப்பது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றான்.

பெருமூச்சுடன் அதை நோக்கியபின்பு மெல்ல இருவிரலால் பற்றித்தூக்கி பந்த ஒளியில் காட்டி ”வைரம் ஒளியை வாங்கி எரியத் தொடங்கும்” என்றான். ”இது ஒளிவிடுவதை நான் காணவில்லை. இருண்ட அறைகளில் ஒரு வேளை சற்று ஒளிவிடுவதாகத் தெரியலாம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அதை நோக்கி நின்றபின் திரும்பி ”உண்மையில் உள்ளம் சோர்ந்திருக்கிறது. உமது சொல் என் அகம்பதிந்தமையால் இருக்கலாம். வெறும் கல் இது என்றே உள்ளம் சொல்கிறது” என்றான்.

அதை பேழையிலிட்டு மூடியபடி “என் குலம் சுமந்த கதைகள் எவையும் இதன் மேல் வந்தமரவில்லை ” என்றான். “இனி நான் எப்போதும் ஒரு கல் என்றே இதை எண்ணுவேன் போலும்” என்றபடி அதை திரும்ப அளித்தான். திருஷ்டத்யும்னன் அதை வாங்கிக்கொண்ட பின் சாத்யகி தன் தோள்கள் தளர்ந்து கைகள் உடலை உரசி பின் விழ பெருமூச்சுவிட்டு “இதுவும் நன்றே” என்றான். “இவ்வேளையில் இப்படி இதை பார்த்துவிட்டதனால் ஒவ்வொரு கணமும் அஞ்சியதில் இருந்து விடுபட்டவன் ஆனேன். இக்கணம் இத்தனை எளிதாக என்னை கடந்துபோகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை” என்றான்.

திருஷ்டத்யும்னன் அவனுடைய நிலைகொள்ளாமையை நோக்கிக் கொண்டிருந்தான். ”இந்த மணியை துவாரகையில் ஒவ்வொருவர் மீதும் ஏவி விளையாடுகிறார் இளைய யாதவர். இதோ எட்டு அரசியருக்கும் முன்னால் இது வைக்கப்பட்டுவிட்டது” என்றான். "நாளை புலரியில் இதை நான் ஜாம்பவதியை நோக்கி செலுத்துகிறேன்.” சாத்யகி “யானை சூதறியாது என்பர்” என்று புன்னகை செய்தான். “ஆனால் இது அஞ்சும் நெருப்புத்துளி” என்றான் திருஷ்டத்யும்னன். “இந்த மணி உம்மிடம் இருக்கட்டும். நாளை பிரம்மதருணத்திற்கு முன்னரே இதை ஜாம்பவதியிடம் ஒப்படைத்துவிடும்.”

“நானா?” என்றான் சாத்யகி. “இன்று இனிமேல் நான் அரசியை சந்திக்கமுடியாது. நான் அவரை சந்திக்க அரசமுறைமைகள் உள்ளன. இந்நகரின் ஊழியராக உமக்கு அவை ஏதுமில்லை.” சாத்யகி “ஆனால்…” என்றான். “அஞ்சுகிறீரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, இது வெறும் கல்” என்றான் சாத்யகி. “ஆம், அச்சொல்லையே பற்றிக்கொள்ளும்” என்றான் திருஷ்டத்யும்னன்.

நள்ளிரவுக்கான பொழுதறிவிப்புச் சங்கு தொலைவில் துறைமுகப்பின் காவல் மாடத்தில் எழுந்தது. தொடர்ந்து பெருமுரசும் சோம்பல் முறிக்கும் சிம்மம் என ஒரு முறை உறுமி அமைந்தது. " செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி ”ஆம்” என்றபடி சிரித்து “இன்று என் உடலில் இருந்து நிறை அனைத்தும் விலகியது போல் உணர்கிறேன். தேரைப் பற்றியபடி காற்றில் மிதந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றான். ”முயன்று பாரும்” என்றபடி திருஷ்டத்யும்னன் தேரில் ஏற சாத்யகி திரும்பி பூதத்தை ஒருமுறை நோக்கியபின் தானும் ஏறினான்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 8

திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சுநிலையின் அறைவாயில் கதவு திறப்பதற்காக காத்து நின்றான். மெல்லிய முனகலுடன் திறந்த வாயில் வழியாக அக்ரூரரே இரு கைகளையும் விரித்தபடி “வருக வருக இளவரசே! என் அலுவல் அறை நல்லூழ் கொண்டது. தங்கள் வருகை அதன் வரலாற்றில் என்றும் இருக்கும்” என்றபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். ”தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னபோது அங்கு வருவதற்கான ஒப்புதலையே கோரினேன்” என்றார். திருஷ்டத்யும்னன் ”தாங்கள் மூத்தவர். நான் இங்கு வருவதுதான் முறை” என்றபடி அவர் கைகளை தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான். ”இத்தருணத்துக்காக பெருமை கொள்கிறேன் மூத்த யாதவரே” என்று மறுமுகமன் உரைத்தான்.

“வருக!“ என்று அக்ரூரர் அவனை அழைத்துச் சென்றார். புலரி வெளிச்சம் எழுவதற்கு முன்பே அவரது அலுவல்கூடம் நிறைந்திருந்தது. துணையமைச்சர்களும் அலுவல்நாயகங்களும் தங்கள் பீடங்களில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முன்பும் நெய்விளக்கு கொத்துச் சுடர்களுடன் நின்றிருந்தது. அக்ரூரரின் பீடத்தினருகே ஓலைகளுடனும் எழுத்தாணிகளுடனும் நின்றிருந்த மூன்று சிற்றமைச்சர்களும் திருஷ்டத்யும்னனை கண்டதும் தலைவணங்கி ”பாஞ்சால இளவரசரை வணங்குகிறோம். எங்கள் நல்லூழால் தங்களை காணப்பெற்றோம்” என்று முகமன் உரைத்தனர். ”இளவரசரிடம் சற்று உரையாடிவிட்டு வருகிறேன்” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அருகே திறந்திருந்த சிறுவாயில் வழியாகச் சென்று ”உள்ளே வருக" என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் உள்ளே சென்றதும் கதவைச் சாற்றிவிட்டு வந்து குறுபீடத்தில் அமர்ந்தார். ”அமருங்கள் பாஞ்சாலரே” என்று திருஷ்டத்யும்னனை அமரவைத்தார்.

“முதல் விடியலிலேயே அலுவல்நாயகங்களும் அமைச்சரும் கூடியிருப்பது விந்தையாக உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். ”அமைச்சுப் பணிக்கு மிக உகந்த நேரமென்பது பிரம்மமுகூர்த்தமே” என்றார் அக்ரூரர். ”உள்ளம் தெளிந்து புது எண்ணங்கள் வருவதற்கு தெய்வங்கள் அருளும் தருணம் இது.” திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். “ஒவ்வொரு எண்ணமும் சரியான சொல்லில் சென்று அமர கலைவாணி புன்னகைக்கும் நேரம். சித்தம் சார்ந்த எத்தொழிலும் முன்புலரியிலேயே நிகழவேண்டும் என்று அனைத்து நூல்களும் சொல்கின்றன.” திருஷ்டத்யும்னன் சிரித்து “ஆம். அனைத்து குருகுலங்களும் கல்வியை பிரம்ம தருணத்திலேயே நிகழ்த்துகின்றன. துரோணரின் குருகுலத்தில் விடியல் எழும்போது அன்றைய கல்வி முடிந்திருக்கும். ஆனால் எந்த அமைச்சுத்தொழிலும் வெயிலுக்கு முன் தொடங்கி நான் பார்த்ததில்லை” என்றான்.

அக்ரூரர் “அதற்கான சூழலும் இங்கில்லை. பெரும்பாலான அரசர்கள் மதுவருந்தி மகிழ்ந்து இரவு துயில நெடுநேரமாகும். எனவே அவர்கள் வெயில் பட்டே விழிக்கிறார்கள். அவர்கள் துயில்வதுவரை உடனிருக்கும் அமைச்சர்கள் விழிக்கையில் கண்முன் நின்றாக வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களுக்கும் அந்தக் கால ஒழுங்கு அன்றி வேறு வழியில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் ”இளைய யாதவர் இரவு விழிப்பதில்லையா?” என்றான். அக்ரூரர் சிரித்து “எட்டு துணைவிகளைக் கொண்டவர் எப்படி இரவில் அலுவல் நோக்குவார்? அந்தி சாய்வதற்கு முன்னரே அணி சூடி நறுமணம் பூசி மகளிரறைக்கு கிளம்புபவர் அவர் என்பது இங்கு அனைத்து சூதராலும் பாடப்பட்டதுதான்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அது நன்று” என்று சிரிக்க அக்ரூரர் “ஆனால் முதல் விடியல் என்றுமே அவருக்கு நகருக்கு வெளியே எங்கோதான். அவரும் அவரது படைத்துணைவரும் மட்டும் இருக்கும் ஓரிடம். குறுங்காடுகள் பாலை நிலங்கள் ஆழ்கடல்கள்…” என்றார். ”அப்போது வானுடனும் மண்ணுடனும் தனித்து நின்று உரையாட விழைவார். அவர் கற்றுக்கொண்டதனைத்தும் அங்குதான்.” திருஷ்டத்யும்னன் ”இளைய யாதவர் படைக்கலங்களையும் வேதாந்தத்தையும் எங்கு கற்றுக்கொண்டார் என்பது பாரதவர்ஷம் முழுக்க வகைவகையாக பேசப்படுகிறது” என்றான்.

அக்ரூரர் ”அவருக்கு பதின்வயது முதல் அணுக்கமானவன் நான். எனக்கே அது இன்னமும் விடுகதைதான். பல்லாண்டுகள் எவருமறியாத வாழ்க்கையில் இருந்திருக்கிறார் என்றறிவேன். தவமுனிவர்களுடன் கானுறைந்திருக்கிறார். போர்த்தொழில் கற்றவரிடம் உடன் அமைந்திருக்கிறார். மலை வேடர்களுடனும் மச்சர்களுடனும் எங்கெங்கோ வாழ்ந்திருக்கிறார். என்ன கற்றார் என்பது அவரது கல்வி வெளிப்படும் தருணத்தில் மட்டுமே தெரியும். அவர் அறியாதது ஏதுமில்லை என்று ஒவ்வொரு தருணத்திலும் நம் சித்தம் மயங்கும். அந்த ஆடலில் என்றென்றுமென நம்மை வைத்திருப்பார்” என்றார்

“பாஞ்சாலரே, அவர் ஒரு பெருமானுடர் என அவைச்சூதர்களால் சொல்லிச்சொல்லி உருவாக்கப்பட்டவர் என்றும் அதை அவரே திட்டமிட்டு நிகழ்த்துகிறார் என்றும் ஷத்ரியர் அவைகளில் நகையாட்டு எழுவதுண்டு என நான் அறிவேன்” என்று அக்ரூரர் தொடர்ந்தார். “ஆனால் நான் ஒன்றை சொல்லமுடியும். எந்தப் பெருவீரனும் அவனை அணுகித் தெரிந்தவர்க்கு அத்துணை வீரனல்ல. மானுடரை அணுகும்தோறும் அவர்களின் அச்சமும் அலைவுறுதலும்தான் அறியவரலாகும். கருவறை நோக்கி அமர்ந்திருக்கும் முகமண்டபத்து கருடன் சிலை என நான் ஒருகணமும் விழி கொட்டாது அவரை நோக்கிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கணமும் அவர் வளர்ந்து பேருரு பெறுவதையே நோக்கிக் கொண்டிருக்கிறேன். இன்று அப்பேருருவில் அக்கணத்தில் தெரியும் ஒரு சிறுபகுதியை மட்டும் காண்பவனாக ஆகிவிட்டிருக்கிறேன். இக்கடல் போல நம் கண் முன் விரிந்திருந்தும் ஒருபோதும் நம்மால் காணமுடியாத ஒன்றாக அவர் உருவெடுத்துவிட்டிருக்கிறார்.”

“அதிமானுடன்தான் என்கிறீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் விழிகளை நோக்கி ”இல்லை” என்றார் அக்ரூரர். ”மானுடரே அல்ல என்று எண்ணுகிறேன். மண்ணில் மானுடர் என்று தெரியவரும் உள்ளங்கள் கொண்டுள்ள எப்பண்பும் அற்றவர் அவர். இங்கு ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் விளிம்பில் அயலென நின்றிருக்கும் நாம் எப்போதும் உடலெனத் திறந்த இவ்வைந்து பொறிகளால் அவரை கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இவன் மானுடன் இவன் மானுடன் என்று ஒவ்வொரு கணமும் நம் சித்தத்தால் அறிவுறுத்தப்படுகிறோம். உள்ளம் என்பது உடலால் நிகழ்த்தப்படுவது. ஆனால் அவர் மானுடரல்ல என்று என்னுள் ஏதோ ஓர் புலன் சொல்கிறது. அது அறிவல்ல. மானுட உணர்வும் அல்ல. இரவில் மூதாதையர் நடமாட்டத்தை உணரும் நாய் கொண்டுள்ள நுண்புலன் என்று அதை சொல்வேன்.”

தன்னுள் எழுந்த அந்த மிகையுணர்வை வெல்வதற்காக அக்ரூரர் நகைத்து ”இது என் அச்சமாக இருக்கலாம். மூத்த யாதவனாக என் விழைவாகவும் இருக்கலாம். பிறிதொரு விழிகளுக்கு இது வெறும் உளமயக்கென்று தோன்றலாம். ஆனால் இந்த உணர்வறிதல் இதோ இந்த இரும்புத்தூண்போல் என் அருகில் என்றும் நின்றுள்ளது” என்றார்.

திருஷ்டத்யும்னன் சிலகணங்கள் அவரை நோக்கிவிட்டு ”அக்ரூரரே, இத்தருணத்தை எளியதோர் நகையாட்டினூடாக கடந்து செல்லவே என் ஆணவமும் அறிவும் சொல்கின்றன. ஆனால் தாங்கள் உணர்ந்த இதை நானும் அடைந்திருக்கிறேன்” என்றான். அக்ரூரர் விழிகளை அவனை நோக்கி திருப்பி என்ன என்பதுபோல் பார்த்தார். ”குறிப்பாக போர்க்களத்தில்… அங்கு அவர் மானுடராக இல்லை. தூயவடிவில் இறப்பே உருவென எழுந்தருளியது போல் இருக்கிறார். அங்கு அவர் உயிர்கொள்ளும்போது காற்றென ஒளியென ஊடாடி இப்புவியை சமைத்து நிற்கும் அடிப்படைகளில் ஒன்றே இறப்பும் என்று தோன்றுகிறது. நோக்கங்களும் இலக்குகளும் சூழலும் தருணங்களும் அனைத்தும் நாம் சமைத்துக்கொள்வதே என்று எண்ணினேன். இறப்பு என்பது அவ்வறிதல்களுக்கு அப்பாற்பட்டது. அது ஓர் உடல் கொண்டு வந்து தன்னை நிகழ்த்துகின்றது...”

“இப்பேரழகரை, அன்னைக்கு நிகரான உளக்கனிவு கொண்ட அரசரை, களத்தில் கொலையின் மானுட வடிவாகக் காண்பதென்பது எளிதல்ல. இது எனது இடரென்று நான் எண்ணவில்லை. களத்தில் யாதவ வீரர் ஒருவர்கூட திரும்பி அவரைப் பார்ப்பதில்லை என்று கண்டிருக்கிறேன். விழி திருப்பி அவரை நோக்கும் வல்லமை கொண்ட பிறிதொரு யாதவர் பலராமர் மட்டுமே. களத்தில் நெருப்பு போல, புயல் போல, கொடுநோய் போல பேரழிவு மட்டுமே என திரண்டு நின்றிருக்கும் அவரைப் பார்த்த பின்பு அரியணை அமர்ந்திருக்கும் அவர் புன்னகையை நோக்குகையில் பெருவினா ஒன்றின் முன் முட்டு மடங்கி வளைந்து மண்தொட்டு என் கல்வியும் ஆணவமும் வணங்குகின்றன” திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.

“பின்பொருமுறை எண்ணினேன். இப்பெருமுரண்பாட்டை என்றேனும் அவர் விளக்கக்கூடும். இனிய அழகிய நூல் ஒன்று அவர் குரலால் இந்த மண்ணில் எழக்கூடும். தலைமுறைகள் குமிழியிட்டு மறையும் முடிவற்ற மானுடப் பெருக்கு ஒவ்வொருநாளூம் அதைக்கற்று அப்பெருவினாவின் முன் சித்தம் திகைத்து பின் அதைக் கடந்து இங்குள்ள யாவற்றையும் சமைக்கும் அங்குள்ள ஒன்றின் புன்ன்கையை அறியக்கூடும். இதுவரை இது என் உளமயக்கென்றே எண்ணியிருந்தேன். தாங்களும் அதை சொல்கையில் நான் பித்தனல்ல என்று சிறு தெளிவை அடைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

“அதை முதலில் உணர்ந்த தருணமொன்றுண்டு” என்றார் அக்ரூரர். ”இன்று காலை முதல் விழிப்பில் அதை என் உள்ளம் அக்காலமே மீண்டது போல் அறிந்தது. அகஇருப்பில் அங்கு வாழ்ந்தேன். பின்பு விழித்துக்கொண்டு இன்று ஏன் அது மீண்டது என்று வியந்தேன். இளைய யாதவர் கோசல அரசி நக்னஜித்தியை வென்றெடுத்த நாள் அது. அன்று உடன் நானும் இருந்தேன். கோசலத்தின் புழுதி பறக்கும் கோடைகாலத் தெருக்களின் ஓசைகளை, வியர்வையும் வாடும் மலர்களும் நீராவி எழும் தளர்ந்த இலைகளும் சுவர்களின் கொதிக்கும் சுண்ணமும் கலந்த மணத்தை உணர்ந்தேன். ஒவ்வொரு முகங்களையும் தனித்தனியாக கண்டேன். எழுந்து நீராடிக் கொண்டிருந்தபோது கோசலத்து அரசியின் அழைப்பு வந்தது.”

“பிறிதொரு நேரமென்றால் அத்தற்செயலில் இருந்த ஒத்திசைவை எண்ணி வியந்திருப்பேன். இப்போது இவையனைத்தும் தொழில் தேர்ந்த கையொன்றால் தொட்டெடுத்து பின்னப்படும் பெருவலை ஒன்றின் கண்ணிகளே என்று அறிந்துள்ளேன்” என அக்ரூரர் தொடர்ந்தார். “தங்களைக் கண்டபோது இயல்பாக அவரைப்பற்றி அச்சொற்களை எடுப்பதற்கும் இன்று காலை எண்ணிய நிகழ்வே தொடக்கம்.” திருஷ்டத்யும்னன் மிக நுட்பமாக அவர் தான் பேச வருவதை நோக்கி தன்னை கொண்டு சென்றுவிட்டதை உணர்ந்தான். அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

“கோசலத்து அரசி தங்களை நான் கண்டு சியமந்தகத்தைப் பெற்று வரவேண்டுமென்று என்னை பணித்திருக்கிறார்” என்றார் அக்ரூரர். “காலையில் சந்தித்தீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம். எழுந்ததுமே மகளிர் அரண்மனைக்குச் சென்று கோசல அரசியையும் அவருடன் இருந்த அவந்தி நாட்டு அரசியையும் சந்தித்தேன். இருவரும் சினம் கிளர்ந்திருக்கிறார்கள்” என்றார் அக்ரூரர் .திருஷ்டத்யும்னன் எங்கோ அதை எதிர்பார்த்திருந்தான்.

”சியமந்தக மணிக்கு எண்மரும் உரிமை கொள்ளவிருப்பதாக நேற்று யாதவ அரசியின் மாளிகைச் சேடியர் பேசிக்கொண்டது உளவுச் செய்தியாக இருவருக்கும் வந்தடைந்துள்ளது. எண்மரும் எப்படி அதை உரிமை கொண்டாட முடியும் என்று இருவரும் வினவுகிறார்கள். அருமணிகளை முடிகொண்ட ஷத்ரியர் அன்றி பிறர் சூடலாகாது என்று நெறி உள்ளது என்கிறார்கள். எனவே ஜாம்பவதியும் காளிந்தியும் அந்த மணியை சூடலாகாது என்கிறார்கள். மாத்ரியின் தந்தை முடிகொண்டவர் என்பதால் அவர் அதைச் சூடுவதில் பிழையில்லை. ஆனால் காளிந்தியும் ஜாம்பவதியும் அதைச் சூடினால் பிற ஷத்ரிய அரசியர் அதைச் சூடலாகாது என்கிறார்கள்.”

திருஷ்டத்யும்னன் வெறுமனே புன்னகைத்தான். ”இந்தப் பார்ப்பனப்பழியை இதன் பீடத்திலிருந்து எழுப்பியவர் தாங்கள். எளிதில் அதிலிருந்து தப்பமுடியாது. இதை தாங்களே கையாள வேண்டுமென்று விரும்பினேன். அதைப்பற்றியே தங்களிடம் பேச விழைந்தேன்” என்றார் அக்ரூரர். “நான் கோசல அரசியை பார்க்க விழைகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். ”பார்க்கலாம். நீர் அவர்களிருவரையும் நேரில் சந்தித்து உரையாடுவதே தெளிவை அளிக்கும்” என்ற அக்ரூரர் உரக்க சிரித்து ”அல்லது முழுக்குழப்பத்தை நோக்கி கொண்டுசெல்லும். குழப்பத்தின் உச்சியில் எங்கோ ஒரு தெளிவு முளைத்தாக வேண்டுமென்பது மானுட நெறி” என்றார்.

திருஷ்டத்யும்னனும் நகைத்தான். அக்ரூரர் ”எண்மரும் அந்த மணியை சூடுகையில் எவர் சூடுவதும் ஒரு பொருட்டின்றி ஆகிறது என நீர் எண்ணுவது புரிகிறது. அதை உணருமளவுக்கு ஷத்ரிய அரசியர்கள் நுட்பம் கொண்டவரே. இன்னும் சியமந்தகம் எண்மருக்கும் உரியதென அறிவிக்கப்பட்டுள்ளதென்ற செய்தி விதர்ப்பினிக்கு செல்லவில்லை. அவர் எப்படி சினம் கொள்வாரென்று இனிமேல்தான் அறிய வேண்டும்” என்றார்.

திருஷ்டத்யும்னன் தன்னுடலை எளிதாக்கிக் கொண்டு கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தான். ”நான் படைக்கலப் பயிற்சி எடுத்து நெடுநாள் ஆகிறது. என் மூட்டுப்பொருத்துகள் துருப்பிடித்து இறுகி உடல் இரும்புப்பாவை போல் காலையில் தோன்றுகின்றது” என்றான். அக்ரூரர் ”உள்ளம் அதற்கேற்ப மிகைப் பணி புரிகிறதல்லவா?” என்று சிரித்தார். திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தபடி ”ஆம், இங்கு இளைய யாதவர் ஆடவேண்டிய களம் ஒன்றில் நான் ஆடுவதாக உணர்கிறேன். இது எதுவரை செல்லும் என்று பார்க்கிறேன்” என்றான். பின்பு ”தாங்கள் கோசல அரசியை இளைய யாதவர் வென்ற தருணத்தைப்பற்றி சொல்ல வந்தீர்கள்” என்றான். ”ஆம்” என்றார் அக்ரூரர்.

"பாஞ்சாலரே, தாங்கள் அறிந்திருப்பீர். பெரும்புகழ் கொண்ட இக்ஷுவாகு குலத்து அரசர் ராமனின் தாய் கோசலத்து அரசி. தொல்வரலாறு கொண்ட ஷத்ரிய நாடுகள் ஒன்றாக இருந்தாலும் ராமனின் அன்னை பிறந்ததனாலேயே புராணத்தில் இடம் பெற்றது அது. இன்றும் அந்நகர் வாயிலில் பேரன்னையாக எழுந்தருளியிருப்பவள் கோசலையே. நகருள் அனைத்து தெருக்களிலும் அவளுக்கு ஆலயங்கள் உள்ளன. பெருங்கருணையரசி என்று குடிகளால் அவர் வணங்கப்படுகிறார். ஒரு வகையில் அது சுமை. கோசலை என்ற புராணப் பெருமிதத்திலிருந்து கோசலம் பின்னர் வெளியே வரவே இல்லை. அதன் தொழில் பெருகவில்லை. நகர் வளரவில்லை அங்காடிகள் சிறு கடைவீதிகள் போல சிறுத்துக் கிடக்கின்றன. அங்குள்ள ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த புராண காலகட்டத்தில் விழிமயங்கி உலவுகிறார்கள் என்று தோன்றும்.”

“சென்ற பலதலைமுறைகளாக கோசலத்து மன்னர்களும் ராமனின் குடிநீட்சி கொண்டவர்கள் என்று தங்களை எண்ணி அதன்பின் எச்சமருக்கும் வாளெடுக்காது அமர்ந்திருக்கிறார்கள். ராமனின் இளையோன் சத்ருக்னரால் கோசலம் ஆளப்பட்டது. அவர் லவணர்களை வென்று மதுராபுரியின் நகரத்தையும் துறைமுகத்தையும் அமைத்தார். வடக்கே இமயமடி வரை சென்று யமுனைக் கரையை முழுவதும் வென்றார். கங்காவர்த்தத்தின் பன்னிரு ஷத்ரிய நாடுகள் அவருக்கு கப்பம் கட்டின. அதன் பின் மெல்ல கோசலம் சரிவுற்றது, பின்னர் எழவேயில்லை.”

”காட்டில் மதயானை சென்ற தடம் தெரிவதுபோல இன்றைய கோசலம் என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார்” என அக்ரூரர் சொன்னார். ”ஆயினும் பாரத வர்ஷத்தின் ஷத்ரிய குலங்கள் அனைத்தும் கோசலத்துடன் மண உறவு கொள்ள விழைவு கொண்டிருந்தன. உருவாகி வரும் புதிய அரசுகளின் மன்னர்களுக்கு அது ஆரியவர்த்தத்தின் அவை ஒப்புதல். பழைய ஷத்ரிய மன்னர்களுக்கோ தங்கள் குலப்பெருமைக்கு மீண்டும் ஒரு சான்று. எனவேதான் கோசலத்தின் இளவரசியை வேட்க பாரதத்தின் அனைத்து அரசர்களும் முனைப்பு கொண்டிருந்தனர். சூதர்கள் சொல்வழி அவர் அழகும் அவர் பிறவிநூல் சொன்ன நல்லூழ்குறிகளும் அனைவரும் அறிந்தவையாக இருந்தன.

அக்ரூரர் தொடர்ந்தார் “இங்கு துவாரகையின் மைந்தர்களும் இளைய யாதவர் இளைய கோசலையை மணம் கொண்டே ஆக வேண்டுமென்று தாங்களே முடிவு கொண்டுவிட்டனர். எப்போது அவர் செல்லப்போகிறாரென்று நகருலா செல்லும்போது முதுபெண்கள் அவரிடம் நேரடியாகவே கேட்கத் தொடங்கினர். மகதமும் கலிங்கமும் வங்கமும் கோசலைக்காக தங்கள் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தன. ஜயத்ரதனுக்கு அவர்மேல் பெருவிழைவு இருந்தது. எவருக்கு மணக்கொடை அளித்தாலும் பிறர் எதிரியாவார்கள் என்றறிந்த கோசல மன்னர் நக்னஜித்துக்கு அவரது அமைச்சர்கள் ஒரு வழி சொன்னார்கள்.”

திருஷ்டத்யும்னன் ”மணத்தன்னேற்பு, வேறென்ன?” என்றான். ”ஆம் அதுவே. ஆனால் அதை தங்களுக்குரிய முறையில் அவர்கள் நிகழ்த்திக் கொண்டனர்” என்றார். ”ராமனின் கொடிவழிக் கதையை சொல்லும் ரகுகுலசரிதம் என்னும் காவியத்தை தாங்கள் அறிந்திருக்கலாம்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் ”கற்றுள்ளேன்” என்றான். ”அதில் ராமன் தன் விற்திறனை நிறுவ ஓர் அம்பில் ஏழு மரங்களை முறித்தான் என்றொரு கதை வருகிறது. அதற்கு நுண்ணிய வேதாந்தப் பொருள் கொள்வது வழக்கம்.”

”ஏழு மரங்களும் உடலில் சுழலும் ஏழு யோகத்தாமரைகளே என்பார்கள். மூலாதாரம் முதல் சகஸ்ரம் வரை மலர்ந்த ஏழு புள்ளிகள். அவற்றை தன்னிலை என்ற ஒற்றைப்பாம்பால் நேர்கோடென ஆக்கி ஊழ்கமெனும் அம்பால் முறித்து மெய் நிலையை அடைந்தான் ராமன் என்பதே அதன் பொருள் என்பார்கள்” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து ”எளிய முறையில் ஏழு விண்ணுலகங்கள் என்பதுண்டு” என்றான்.

அக்ரூரர் ”ஏழு கீழுலகங்கள் என்பவரும் உண்டு” என்றார். “ஏழு என்ற எண் ஊழ்கத்தளத்தில் நுண்பொருள் பல கொண்டது. எதுவாயினும் ஆகுக, இம்முறையும் அதற்கிணையான ஒன்றையே அமைக்கவேண்டுமென்று கோசலத்து அமைச்சர்கள் முடிவெடுத்தனர். அங்கே அவர்கள் பெருந்தொழுவத்தில் ஏழு களிற்றுக்காளைகள் இருந்தன. அவற்றுக்கு சூரியனின் ஏழு புரவிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. காயத்ரி, பிருஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்தி.” திருஷ்டத்யும்னன் “வேதங்களின் ஏழு சந்தங்கள்” என்றான். “ஆம் ஏழுநடை” என்றார் அக்ரூரர்.

அவை வெறும் காளைகள் அல்ல. இமயமலையில் வாழும் கருங்களிறுகளை அறிந்திருப்பீர்கள். அவை எந்நிலையிலும் மானுடரை ஏற்காதவை. இளமையிலேயே கன்றுகளை கைப்பற்றி கொண்டுவந்து பேணி தழுவி உணவிட்டு வளர்த்தாலும் அவை இணங்குவதில்லை. அவற்றுக்குள் மானுடர் நிறைந்து வாழும் நகரங்கள் உளம் பதிவதில்லை. எங்கிருந்தாலும் எப்புறமும் வெறுமை திறந்த இமயச்சரிவிலேயே அவை வாழ்கின்றன. அவற்றுக்கு ஒதுங்கி வழிவிடத்தெரியாது என்பார்கள். மக்கள் திரளோ இல்லங்களோ எதுவாக இருப்பினும் ஊடுருவிக் கடந்து அப்பால் செல்வதே அவற்றின் வழக்கம். கொடுங்காற்றென செல்லும் வழியை இடித்தழிப்பவை.

கோசலத்தின் ஏழு களிற்றுக்காளைகள் அவற்றைப் பேணிய ஏழு சூதர்களை அன்றி பிறரை அறியாதவையாகவே உடல்பெருகி வளர்ந்தன. அச்சூதரும்கூட அவற்றின் நாசி துளைத்து இழுத்துக்கட்டிய இருபக்க வடங்களை இருவர் இழுத்துப் பற்றியிருக்கையில் மட்டுமே அருகணைய முடியும். மூங்கில் சட்டங்களில் அசைவற்றுக் கட்டி நிறுத்திய பின்னரே நீராட்ட முடியும். மூக்குவடத்தை இறுகக்கட்டிவிட்டே அணி செய்ய முடியும். அவ்வேழு களிறுகளையும் வென்று அவை நிற்பவரே கோசலையைக் கொள்ளும் தகுதி கொண்டவர் என்று முறைப்படி அறிவித்தார் நக்னஜித்.

திருஷ்டத்யும்னன் ”பாரத வர்ஷத்தில் எவர் அவற்றை வெல்ல முடியுமென அவர் அறிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவ்வறிவிப்பைப் பெற்றதுமே அது இளைய யாதவரை நோக்கி விடுக்கப்பட்டது என்பதை ஜராசந்தரும் ஜயத்ரதனும் பிறரும் அறிந்து கொண்டனர். புராணப்புகழ் கொண்ட கோசலம் தன்னை யாதவச் சிறுகுடியென அறிவித்துக் கொண்டிருக்கிறது என்று தன் அவையில் ஜராசந்தர் எள்ளி நகையாடினார் என்று கூட அறிந்தேன்” என்றார் அக்ரூரர். “ஓற்றர்கள் வழியாக அக்காளைகளின் இயல்புகளை ஒவ்வொரு அரசரும் தெரிந்து கொண்டனர். எவரும் அவற்றை அணுகத் தலைப்படவில்லை. ஒரு காளை என்றால்கூட சிலர் துணிந்திருக்கக்கூடும். ஏழு காளைக்களிறுகளை ஒரே களத்தில் நேர்கொள்வதென்பது இளைய யாதவருக்கே இயல்வதாகுமா என்று நானும் ஐயப்பட்டேன்” என அக்ரூரர் தொடர்ந்தார்.

எனவேதான் இளவரசியை வெல்ல இளையவர் கிளம்பியபோது உடன் செல்ல விழைந்தேன் .என் விழைவை அறிந்தவர் போல திரும்பி “காளைகளை நான் வெல்லும் முறையை காண விழைகிறீரா அக்ரூரரே?” என்றார். ”ஆம்” என்றேன். அருகே நின்ற மூத்தவர் ”இதில் என்ன முறை இருக்கிறது? காளைகளை வெல்ல ஒரே வழி கொம்புகளைப் பற்றி கீழே தாழ்த்துவது மட்டுமே” என்றார். “என் வரையில் மேலும் எளிய வழி ஒன்றுள்ளது” என்று மேலும் நகைத்தார். ”காளை நம்மைநோக்கி கொம்பு தாழ்த்துவதற்குள் அதன் நெற்றிப்பொருத்தில் ஓங்கி அறைந்து மண்டை ஓட்டை உடைக்கவேண்டியதுதான். குருதி வழிய அங்கே விழுந்து அது இறக்கும். மாட்டைக் கொல்வது யாதவனுக்கு குலநெறி அல்ல. ஆனால் அவ்வூனை உண்டு முடிப்பதென்றால் செய்யலாம். ஏழு களிறுகளையும் உண்ண முடியாவிட்டாலும் ஒன்றை முழுமையாக நானே உண்ணமுடியுமென்று தோன்றுகிறது.” கூடி நின்றவர் நகைத்தனர். நான் விழிதாழ்த்திக்கொண்டேன்.

சற்று உள்ளப்பதைப்புடனேயே அவர்களுடன் கிளம்பினேன். கோசலத்தை நாங்கள் அடைந்தபோது சிறிய கோட்டை வாயிலில் அமைந்த கௌசல்யை அன்னையின் ஆலயம் கோடைகாலத்துத் தளிர்களாலும் மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணச்சிறுகுடைகளாலும் அணி செய்யப்பட்டிருந்தது. இளைய யாதவரின் அணி நூறு புரவிகளில் கோசலத்தின் முகப்பை அடைந்தபோது கோட்டைக்கு மேல் காவல்மாடத்திலிருந்து பெருமுரசு எழுந்து வாழ்த்தியது. வாயில்முற்றத்தில் காத்து நின்ற நக்னஜித்தும் அவரது அகம்படியினரும் அணுகி வந்து தலை வணங்கி முகமன் சொல்லி வரவேற்றனர்.

இளைய யாதவர் நக்னஜித்தை வணங்கி ”ரகுகுலத்து ராமனின் அன்னை பிறந்த மண்ணில் கால்வைக்கும் நல்லூழுக்காக விண்ணளந்த பெருமானை வணங்குகிறேன் அரசே” என்று சொன்னார். அக்குறிப்பால் மகிழ்ந்த நக்னஜித் ”ஆம். எங்கள் குலம் ராமனின் கொடி வழி வந்தது. தம்பி சத்ருக்னர் இருந்து ஆண்ட அரியணையில் எந்தையரும் நானும் கோல்நாட்டி முடிசூடி குடை கொண்டிருக்கிறோம்” என்றபின் கைகூப்பி “நகர் புகுக துவாரகை தலைவரே”என்றார்,

கோசலத்தின் அரசத் தேரிலேறி மூத்தவரும் இளையவரும் நகர்வலம் சென்றனர். கோட்டைப் பெருவாயிலைக்கடந்து அரசச்சாலைக்குள் நுழைந்ததும் இருபுறமும் கூடியிருந்த கோசலத்து மக்களின் வாழ்த்தொலி வந்து சூழ்ந்துகொண்டது, அரிமலர் மழையில் கை வணங்கி இளையவர் சென்றார், அவர்களை நோக்கிய கோசலவிழிகள் ஒவ்வொன்றும் அடைந்த சிறு அதிர்வை நான் கண்டேன். முன்னரே அறிந்த ஒருவரை மீளக்காணும் உணர்வு அது என்று எனக்குத்தோன்றியது. அவரது தோள்களைத் தொட்டுத் தாவிய விழிகள் தாள்வரை வந்து மீண்டன. பெண்டிர் அவரை மேலும் காணும் பொருட்டு பிறரை உந்தி முன் வந்தனர். பல முதியவர்கள் வாழ்த்தும் சொல் எழாது சற்றே வாய் திறந்து திகைத்து நோக்கியிருப்பதைக் கண்டேன்.

அவர்கள் எண்ணுவதென்ன என்பது என் உள்ளத்தில் எழுவதற்கு முன்பே ஒரு முதியவள் இருகைகளையும் விரித்து தேரை நோக்கி ஓடிவந்து பெருங்குரலில் “மீண்டும் கோசலத்துக்கு எழுந்தருளினான் தசரத ராமன்! என்னவரே, குடியே, கேளீர்! இவன் ராமன்!” என்று கூவினாள். அக்கணம் என் உடல் மெய்ப்புற்றது. விழி உருகி கை கூப்பி தேர்த்தட்டில் நானும் அவரை வணங்கி நின்றேன். அனுமனோ அங்கதனோ வீடணனோ என அப்போது என்னை உணர்ந்தேன்.

குழற்பீலி சூடி, சக்கரம் இடை அமைத்து, நீலமணி மேனியுடன் நின்றவன் வில்லேந்தி தம்பியர் துணையுடன் எழுந்த கௌசல்யை மைந்தனே என்று அப்போது முழுதுணர்ந்தேன். என் முன் அலையடித்த கோசலத்து முகங்கள் அனைத்தும் ஒரு சேரக்கூவின. ”தசரத ராமன் வாழ்க! ரகுகுலத்தோன்றல் வாழ்க! சீதை கொழுநன் வாழ்க! இலங்கை வென்று அயோத்தியை ஆண்ட எந்தை இங்கெழுக!” கண்முன் காலம் தன்னை அலையென சுருட்டி பின்னகர்வதை அறிந்தேன்.அங்கிருந்தவன் ராமன். அங்கு நிகழ்ந்தது அவன் வாழ்ந்த திரேதாயுகம்.

நான் அதில் இருந்தேன் பாஞ்சாலரே. கோசலத்து அரண்மனைக்குச் சென்றால் கௌசல்யையை, கைகேயியை, சுமித்ரையைக் காண முடியும். இன்னும் சில அறைகளைக் கடந்து உட்சென்றால் கண் கனிந்து எழுந்து மைந்தனுக்காகக் காத்திருக்கும் தசரதச் சக்ரவர்த்தியை காணமுடியும். எங்கோ பத்து தலைகளும் பெருபுயங்களுமாக இலங்கை வேந்தனே இருக்கக்கூடும். என் உடல் அருவி விழும் மரக்கிளை போல அதிர்ந்து கொண்டிருந்தது.

கோசலத்தின் புழுதிபடிந்த தெருக்களினூடாக தேர் செல்லும்போது இளங்காலை ஒளியிலெழுந்த புழுதியின் முகில் பொன்னென ஆயிற்று. நீலம் பொன் மூடிப் பொலிந்தது. அரண்மனையின் உப்பரிகை எழுந்த தேர்வீதி வழியாகச் சென்றபோது அது கோசலமல்ல மிதிலை என்றே உணர்ந்தேன். அங்கு உப்பரிகை முகட்டில் விழிமலர்ந்து எழுந்தவள் ஜானகி. எத்தனை நூறு கவிஞர்களால் இயற்றப்பட்டது அத்தருணம்! இன்னும் எத்தனை கவிஞர் சொல்லில் மீண்டெழப்போவது! பாஞ்சாலரே, அத்தருணத்தின் அணிவிளிம்பில் அன்று நானும் நின்றிருந்தேன். வளைந்து சென்ற சாலையில் தேர் திரும்பியபோது இளையவர் விழி தூக்கினார். உப்பரிகையில் தன் இரு சேடியர் அருகே நிற்க அணிச்செதுக்கு மரத்தூணைப் பற்றி நின்ற அன்னை குனிந்து கீழே நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 9

”கோசலத்தின் அரண்மனை மிகத் தொன்மையானது” என்றார் அக்ரூரர். ”அன்றெல்லாம் கங்கை வழியாக கொண்டு வரப்படும் இமயத்துப் பெருமரங்களே மாளிகை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. பெரும்படகுகள் எனத் தோன்றிய மரத்தடிகளை அடுக்கி எழுப்பப்பட்ட அடித்தளம் மீது உருண்டு எழுந்த தூண்களின்மேல் கூரைஉத்தரங்கள் எடையுடன் அமர்ந்திருக்கும். மரப்பட்டைக் கூரை கூம்பு என உயர்ந்து கருகி மலைப்பாறைகுவைகள் போல நின்றிருக்கும். பண்படாத தூண்களும் மழைநீர் வழிந்து கரைந்து கறுத்த பலகைப் பரப்புகளுமாக அவை பெருங்களிறுகள் என்று தோன்றும். அதற்கேற்ப காற்றில் அவற்றின் மர இணைப்புகள் சற்றே முனகுவதையும் கேட்கமுடியும். ஏழு மாளிகைகள் அரை வட்டமாக சூழ்ந்த களமுற்றத்தில் தென்மேற்கு எல்லையில் தென்னிலத்துக் கொற்றவையின் கற்சிலை அமைந்த சிற்றாலயம் இருந்தது. கொற்றவைமுன் உறுதிகோள் சடங்கு நிகழ்ந்தபின் களமாடல்.”

விடியலில் முதற்கதிர் எழுந்தபோது இளைய யாதவரும் மூத்தவரும் நீராடி அரைத்தோலாடை அணிந்து அணிகளின்றி ஆடுகளம் சேர்ந்தனர். கோசலத்தின் பேரமைச்சர் ருத்ரசன்மர் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் அரண்மனைக்கு நேரில் வந்து முறைமை சொல்லி வணங்கி இருவரையும் அழைத்துச் சென்றார், கோசலத்தின் வேலேந்திய காவலர் முப்பதுபேர் எங்களுக்கு அகம்படி அமைத்தனர். விருந்தினர் அரண்மனையிலிருந்து களமுற்றம்வரை செல்லும் பாதையின் இருபக்கமும் எங்களை பார்ப்பதற்காக கோசலத்துப் படைவீரர்கள் செறிந்த முகங்களென வெளிநிறைத்தனர்

அன்று இளைய யாதவர் வெல்வாரென்பது முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்நகரும் களிற்றுக் காளைகளும் இளவரசியும் அவருக்காகவே காத்திருந்தது போல, நூற்றாண்டுகளுக்கு முன் எப்போதோ இறுதியாக அந்நகரிலிருந்து விடைபெற்றுச் சென்ற ரகுராமன் இளைய உடல் கொண்டு மாறாப் புன்னகையுடன் திரும்பி வந்தது போல அவர்கள் உணர்ந்தனர், பாஞ்சாலரே, இன்று எண்ணினாலும் என் உடல் சிலிர்க்கும் நினைவு அது. ஒருவர்கூட துவாரகையின் அரசரை வாழ்த்தி குரல் எழுப்பவில்லை. அத்தனை நாவுகளும் அவரை ராமன் என்றே அழைத்தன. அவர் கால் வைத்துச் சென்ற இடங்களை நோக்கி கோசலத்து மக்கள் இடிந்து சரியும் மணற்கரையென விழுந்து புழுதி தொட்டு சென்னி சூடி வணங்கினர்.

கொற்றவை ஆலயத்துக்கு அருகே போடப்பட்டிருந்த அரச மேடையில் அரசர் நக்னஜித்தும் அவரது துணைவி சுபையும் அரியணை வீற்றிருந்தனர். சிற்றமைச்சர்களும் தளபதிகளும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்றிருந்தனர். இருள்பிரியா நேரத்திலேயே நகரெங்கும் இருந்து ஊறித் திரண்டு சூழ்ந்த மக்களால் ஆனதாக இருந்தது அவ்வெளி. அவர்களின் குரல் முழக்கம் நாங்கள் சென்ற அரண்மனை இடைநாழியின் சுவர்கள் தோறும் ஒலித்துக் கொண்டிருந்தது. காலையின் நிழலெழா மென்வெளிச்சத்தில் தொலைவில் தெரிந்த அவர்களின் முகங்கள் ஒவ்வொன்றும் விழிப் புள்ளிகள் துலங்கும் அளவுக்கு தெளிந்திருந்தன.

யாதவர் வெளி முற்றத்தை அடைந்ததும் அங்கு கூடிநின்ற பெருந்திரள் ஒற்றைக்குரலாக இளைய ரகுராமனை வாழ்த்தி எழுந்தது. மூத்தவர் என்னை நோக்கித் திரும்பி “இவனை தொல்புகழ் ராமன் என்கிறார்கள் அக்ரூரரே” என்றார், ”யாரறிவார்?” என்றேன். அவர் என் தோளில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து ”அவ்வண்ணமெனில் நான் யார்? அகலாது அவனை துணைத்த இலக்குவனா என்ன?" என்றார். நான் புன்னகைத்தேன். பலராமர் விழிதிருப்பி அங்கு அலையடித்த மானுட உணர்ச்சிகளை சற்றுநேரம் நோக்கிவிட்டு என்னை நோக்கி திரும்பினார்.

கையை என் தோளைச் சுற்றி வளைத்து எலும்புகள் முனக தன்விலாவுடன் இறுக்கிக் கொண்டு குனிந்து என் காதில் ”ஆமெனில் நான் நிறைவுறுவேன் அக்ரூரரே. பேருடலும் மூப்பும் கொண்டிருந்தாலும் இவனருகே என் உள்ளம் இளையவனாகவே எப்போதும் உணர்கிறது. இன்றெனக்கு இவன் அணுக்கப்பணி பல செய்கிறான். ஆடை எடுத்து வைக்கிறான். படைக்கலம் தீட்டுகிறான். என் பாத அணிகளை இவன் துலக்கி வைப்பதும் உண்டு. முன்பொருமுறை இளையவனாக அமர்ந்து இப்பணிகளனைத்தையும் இவனுக்கு நான் செய்திருப்பேனோ என்று எண்ணியுள்ளேன். பிறிதொரு பிறவியில் இவனுக்கு அணுக்கனாகப் பிறந்து இவ்வனைத்தையும் மாற்ற வேண்டுமென்று விழைந்திருக்கிறேன்” என்றார்.

களமுரசு முழங்கியது. கொம்புகள் அறைகூவின. கூட்டம் முந்தி வட்டம் சுருங்கியது. இரு கைகளையும் கூப்பியபடி முற்றத்தில் நுழைந்து, தன்னை சூழ்ந்து கொந்தளித்த வாழ்த்துக்களை உடலில் ஒவ்வொரு மயிர்க்காலாலும் ஏற்றுக்கொண்டு, களத்திலமைந்த செம்புழுதியில் கால்கள் படிந்த தடம் மலரிதழ்களென உதிர்ந்து உதிர்ந்து தொடர நடந்து மேடையை அடைந்தார் இளைய யாதவர். கோசலர் தலைவணங்கி ”கோசலத்தின் பெருங்களம் தங்களை வரவேற்கிறது இளைய யாதவரே. தாங்கள் வெல்ல வேண்டுமென்று எனது முன்னோர் விழைக! தெய்வங்கள் அருள் செய்க!” என்றார்.  இளைய யாதவர் அவ்வாழ்த்தை ஏற்று தலைவணங்கி ”இத்தருணத்தில் என் குலம் அருளிய வாழ்த்தனைத்தும் என் தோள்களில் ஆற்றலாகுக!” என்றார்.

யாதவர் இருவருக்கும் கொற்றவை ஆலயத்தில் இருந்து மலராட்டு முடிந்த மலரிதழ்கள் கொண்டுவந்து தரப்பட்டன. அவற்றில் ஒரு செண்பகத்தை எடுத்து தன் சுரிகுழல் கட்டில் செருகிக் கொண்டார் இளைய யாதவர். மூத்தவர் தன் கைகளை விரித்து தசைகளை நெகிழ்த்தி இறுக்கி பின் அமைந்து என்னை நோக்கி ”அக்காளைகளை முன்னரே ஒரு முறை பார்த்துவிடலாம் என்று இவனிடம் சொன்னேன். வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டான். நேற்று வந்தது முதல் இந்நகரில் வீணே சுற்றி வந்து கொண்டிருந்தான். இரவெல்லாம் சோலைநடுவே அமர்ந்து குழலிசைத்தான். இவன் எண்ணுவதென்ன என்றறியேன்” என்றார்.

”குழலிசையை நானும் கேட்டேன்” என்றேன். ”இப்போது அப்பெரும் களிறுகள் அவை புகுகையில் தன் குழலெடுத்து இசைத்தாரென்றால் அவை கொம்பு தாழ்த்தி மண்டியிடுமென்பதில் ஐயமில்லை.” பலராமர் “ஆம். சினம் கொண்ட மதகளிறு அவன் இசைகேட்டு கொம்பு தாழ்த்தி செவி கோட்டி சிலைப்பதை பல முறை நான் கண்டிருக்கிறேன். இவை என்ன இருந்தாலும் ஆயருக்குகந்த காளைகள். ஆனால் அது முறையல்ல. இங்கு களம்நின்று அவற்றை வெல்லவே அறைகூவல் விடப்பட்டுள்ளது” என்றார். “வெல்வதொன்றே வாழ்வெனக் கொண்டவர் அவர் மூத்தவரே” என்றேன்.

கொற்றவை ஆலயத்திலும் அருகமைந்த ஏழன்னையர் பதிட்டைகளிலும் காவல்பூதங்களுக்கும் கருங்கண் இயக்கியருக்கும் பூசனைகளும் கொடைகளும் முடிந்தபின்பு அரசநிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோல் சுழற்றி நின்றான். பெருமுரசம் மும்முறை முழங்க கொம்புகள் பீறிட்டு அடங்கின. கூட்டம் அரவம் அவிந்து வண்ணச்சூழலென மாறியது. மின்னி நின்ற விழிகள் ஒவ்வொன்றும் இளைய யாதவரின் தோள்களையும் கைகளையும் இடையையும் நோக்கின. நிமித்திகன் கோசலத்தின் குலமரபையும் குடிமுறையையும் கொடிச்சிறப்பையும் சொல்லி குடை விரிய கோல் நிலைக்க வாழ்த்தினான். குலதெய்வங்களை வழுத்தியபின் கோசலத்து இளவரசி நக்னஜித்தியின் பிறவிநாள் சிறப்பையும் பேரழகையும் உரிய சொல்லெடுத்து உரைத்தான்.

அங்கு ஆன்றோர் முறைப்படியும் ஷத்ரிய நெறிப்படியும் மணக்கோளுக்கென களம் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தான். ஏழு களிற்றுக் காளைகள் களம்கொணரப்படும். அவற்றை தன் தோள்வல்லமையால் அடக்கி வெல்பவர் இளவரசியைக் கொள்ளும் தகுதி படைத்தவர். அவரைக் கொள்ளவேண்டுமா என்று முடிவெடுக்கும் உரிமை இளவரசிக்கு உண்டு. ”இளவரசி அவரது தோளில் மாலையிடும்போது பாரத வர்ஷத்தின் ஐம்பத்தியாறு ஷத்ரிய நாடுகளும் அக்கடிமணத்தை ஏற்றுக் கொண்டன என்று பொருள். மூதாதையரும் முனிவரும் குல தெய்வங்களும் அவ்விணையை வாழ்த்துகின்றன. மங்கலம் பொலியட்டும்!” என்று சொல்லி நிமித்திகன் வெள்ளிக் கோல் தூக்கி மும்முறை ஆட்டினான். மீண்டும் பெரு முரசங்கள் முழங்கின. கொம்புகள் மும்முறை அறைகூவலென ஒலித்து அடங்கின.

என் விழிகளை அந்தக் களமுற்றத்தின் மறு எல்லையில் நாட்டப்பட்ட இரு மரத்தூண்களுக்கு நடுவே இருந்த வாடிவாயிலின்மேல் நாட்டி இருந்தேன். அங்கு எக்கணமும் தோன்றவிருக்கும் களிற்றுக் காளைகளை அதற்கு முன் என் கற்பனையால் ஆயிரம் முறை தீட்டி எழுப்பி இருந்தேன். இமய மலைமுடிகளை நான் கண்டதில்லை. அவற்றை பெருங்களிறுகளின் புள்ளிருக்கைகள் என்று கவிஞர் நிகர்மொழி கூறியிருப்பதை கற்றிருக்கிறேன். பனிப்படலங்கள் ஒளிர வெண்காளைகளென சிலிர்க்கும் இமயமுடிகள். காலை ஒளியில் அவை பொற்கவசம் அணிந்து ஊழ்கத்தில் ஆழ்ந்து நின்றிருக்கும். மலையென புறமெழுந்த ஓராயிரம் களிற்று நிரைகளாகவே இமயத்தை நான் அன்று அகம் கண்டிருந்தேன். எனவே பேரமைச்சர் தன் கையை அசைத்ததும் மறு எல்லையில் முரசு முழங்க தூண்களுக்கு இரு பக்கமும் நின்றிருந்த வீரர்கள் கை வீச ஒருவன் கொம்பு ஊதி ஆணையிட வாடிவாயிலை மறைத்திருந்த மூங்கில் படல் விலக்கப்பட்டு முதல் களிறு முகம் காட்டியபோது இமயத்தைக் கண்டதாகவே உணர்ந்தேன்.

பொன்னிறக் களிறு அது. பெருநாரை அலகு போல சிறிய பொன்னிறக்கொம்புகள் பிறையென வளைந்து ஒன்றையொன்று சுட்டி நின்றன. பரந்த நெற்றியில் சங்கு மணி அணிந்திருந்தது. கரிய மூக்கு மூச்சுக் காற்றில் விரிந்து சுருங்குவதை அத்தொலைவிலிருந்தே அண்மையிலென கண்டேன். வாடிவாயில் முகப்பின் இரு பெருமரங்களும் இரு விலாக்களை உரசும் அளவுக்கு பேருடல் கொண்டிருந்தது. அவ்வுடலை தாங்குமோ என ஐயுறுமளவுக்கு சிறிய முன்னங்கால்கள். உடலெடையால் சற்றே பிளவுண்டு புழுதி மண்ணில் ஆழ்ந்த பெரிய குளம்புகள். மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென கழுத்துச் சதை உலைந்தது. மரக்கலத் துடுப்புகள் போல செவிகள் காற்றைத் துழாவின. பாஞ்சாலரே, அதற்கு நிகரென இன்னொரு காளையை நான் பின்னரும் கண்டதில்லை. வாடிவாயில் முகப்பில் தலை தூக்கி நின்று தன் அச்சமற்ற விழிகளால் அங்கிருந்த பெருங்கூட்டத்தை அது நோக்கியது. பின்னால் இருந்த வீரன் அதை கோலால் தட்டி வெளிச்செல்லும்படி ஊக்கினான். ஐயுற்று தலை தாழ்த்தி புழுதியை முகர்ந்தது. அதன் தோல் சிலிர்ப்பதை தொலைவிலேயே கண்டேன்.

பின் அது எண்ணி முன் வலது காலைத் தூக்கி புழுதி மேல் வைத்துவிட்டு திரும்ப எடுத்துக் கொண்டது. மீண்டும் வீரன் அதைத் தட்டி ஊக்க அக்காலைத் தூக்கி வைத்து மண்ணை இருமுறை தோண்டி பின்னால் பறக்கவிட்டது. தலை தாழ்த்தி குன்றென எழுந்த புள்ளிருக்கை சிலிர்க்க தலையை அசைத்தது. அதன் காதுகள் அடிபடும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி அங்கே நிறைந்திருந்தது. மீண்டும் வீரன் அதை பின் தொடையில் கழியால் தட்டி ஊக்க மெல்ல காலெடுத்து வைத்து களம் புகுந்தது. அதன் உடலில் தசைகள் குலுங்கி அதிர்வதைக் கண்டேன். புள்ளிருக்கை வலப்பக்கமாக சற்றே தழைந்து ஆடியது. வயிற்றிலும் விலாவிலும் தோல் சிலிர்த்தது. தலையைக் குடைந்து காதுகளை அடித்தொலி எழுப்பியது. மூச்சு சீற குனிந்து மீண்டும் புழுதியை முகர்ந்து தலை தூக்கி மதம் பரவிய விழிகளால் இரு பக்கமும் நின்றவர்களை நோக்கியது.

களம்சூழ்ந்து நின்ற மக்கள் அறியாத அச்சத்தால் பின்னடைய நோக்கியிருக்கவே களம் பெரிதாகிக் கொண்டே சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது வெண்ணிறக் காளை உள்ளே வந்தது. சற்றே ஐயுற்றது போல சூழ்ந்திருந்தவர்களை நோக்கியபின் முதற்காளையை அணுகி அதன் விலாவை முகர்ந்து உடல் சிலிர்த்து பெருமூச்சுவிட்டது. மூன்றாவது காளை உள்ளே வந்ததும் அப்பெருங்களம் நிறையத்தொடங்கிவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். நான்காவது ஐந்தாவது காளைகள் வந்தன. அவையனைத்தும் ஒரே உடலளவு கொண்டவை. முற்றிலும் ஒன்றே போன்ற கொம்புகள். ஒரு காளை பிறிதொன்றைப்போல் அமைவது அரிதென்பது எந்த யாதவனும் அறிந்ததே. ஒன்றின் நிழல் போல் பிறிதொரு காளை இருந்தது. அங்கு நிகழ்வது உண்மையல்ல, ஏதோ காவியத்தின் விவரணை என்று எண்ணச்செய்தது.

ஆறாவது காளை வந்து பிறகாளைகளை நோக்காது நடந்து களமுற்றத்தை அடைந்து நின்றது. அது தன்னை வெல்லப்போகிறவன் இளைய யாதவரென்று அறிந்து கொண்டதுபோல அவரை நோக்கி ஓரடி வைத்து சற்றே தலை தாழ்த்தி மூச்சு சீறியது. இடது முன்னங்காலால் புழுதி மண்ணைக் கிளறி தலைதாழ்த்தி பிறைக்கொம்புகளை முன்சரித்து பிடரியை சிலிர்த்துக் கொண்டது. ஏழாவது காளை வாடிவாயிலிலேயே பாதி உடல் மட்டும் வெளித்தெரிய சிலை என அசைவிழந்து நின்றது. சூழ்ந்திருந்த அனைவரும் அப்போது காளைகளை நோக்கிக் கொண்டிருந்தனர். நோக்குகளையே தொடுகைகளாக உணர்ந்து அவற்றின் உடல்கள் சிலிர்த்துக் கொண்டிருந்தன. பாறையில் படிந்த பாசியின் மென்மை கொண்ட தோல். காலையொளியில் அவற்றின் தசை வளைவுகள் எண்ணெய் பூசப்பட்டவை போல மின்னின. சுழலும் வால்களின் அசைவுகள். ஒரு காளையில் சிறுநீர் சொட்டத் தொடங்கியதும் இன்னொன்று அருகே சென்று குனிந்து அச்சிறுநீரை முகர்ந்து மெல்ல முக்காரியிட்டது. போர் முதிர்ந்த கணத்தில் பெருவீரனின் வில்லொன்று நாணொலி எழுப்பியது போல அவ்வொலி கேட்டு அங்கிருந்த அனைவர் உள்ளமும் அச்சம் கொண்டு உடல் சிலிர்ப்பதை உணரமுடிந்தது.

அக்கணம் நான் அச்சம் கொண்டேன். அக்களிறுகளை வெல்வது மானுடர் எவருக்கும் ஆகாதென்று எண்ணினேன். இளைய யாதவர் அவற்றால் கொல்லப்படவும் கூடுமென்று எண்ணியதை இப்போது நினைவுகூர்ந்தால் புன்னகையே அடைகிறேன். ஆனால் அத்தருணத்தில் அந்த ஏழு கொலைவிழிகளுக்கு முன் அவ்வச்சம் கற்பாறை போல் பரு வடிவம் கொண்டு முன்னால் நின்றது. ஒன்றே போல் அமைந்த பேருடல் கொண்டிருந்தவை ஆயினும் அக்களிறுகள் ஏழும் ஏழு உளஇயல்புகள் கொண்டிருந்தன. அவ்வியல்புகள் அவற்றின் உடல் சிலிர்ப்பில், செவியசைவில், நோக்கில், காலூன்றலில் தெரிய அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நின்றன. நான்காவது காளையின் முகம் ஒருமுறைகூட தெரியவில்லை அதன் வால் சுழலல் மட்டுமே அங்கிருந்து பார்க்கையில் தெரிந்தது. திரும்பிய காளை ஒன்றின் பின்னங்காலைக் கண்டபோது காளைகளின் விசை அனைத்தும் அந்தப் பெருந்தொடைகளிலேயே அசைவின்மையென இறுகி நின்றிருப்பதாக உணர்ந்தேன். புள்ளிருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக கொழுத்து சரிந்து சிறு அசைவிலேயே பொதி என குலுங்கின.

ஆறாவது காளை நடன அரங்குக்கு வரும் தலைக்கோலி என உடல் குலுங்க மெல்லடி எடுத்து வைத்து மேலும் முன்னால் வந்தது. பேருடல் நலுங்க அது அணுகும்போது குளம்புகள் ஒன்றன்பின் ஒன்றென விழுந்த நேர்கோட்டை கண்டேன். புழுதியில் ஒரு செம்மலர் மாலை விழுந்தது போல் அந்தத் தடம். இளைய யாதவரை நோக்கி வந்து தனக்குரிய இடத்தை வகுத்துக் கொண்டது போல் ஒரு புள்ளியில் நின்று தலை தூக்கி அவர் மணத்தை பெற்றுக் கொண்டு துருத்தி என மூச்சுவிட்டு தலையை சற்றே அசைத்தது. அதன் நோக்கைக் கண்டு திரும்பி நான் இளைய யாதவரை பார்த்தேன். களம் இறங்கும் வீரனின் உடலிறுக்கமும் விழிக்கூர்மையும் கொண்டு அம்பேற்றபட்ட வில்லென அவர் நின்றிருப்பார் என எண்ணினேன். அவரோ மரக்கிளையில் நின்று தொலை தூரத்துப் புல்வெளியை நோக்கி இதழ்களுக்குள் பாடிக் கொண்டிருக்கும் யாதவன் போல எளிதாக அமைந்த உடலுடன் இளமைந்தனுக்குரிய தளர்ந்த தோள்களுடன் இடையில் கை வைத்து நின்றார்.

கனவென மயங்கிய கண்களும் புன்னகை துளிர்த்த சிற்றிதழ்களும் ஏதோ இனிய நினைவைக் காட்டிய அழகிய முகமும் அவர் அங்கு போர் புரிய வந்தவர் என்பதை மறந்துவிட்டாரா என மயங்கச்செய்தன.பாஞ்சாலரே, இவ்விளையவர் என்னிடம் ஆடத் தொடங்கி அப்போதே நெடுநாளாகிவிட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும் மீண்டும் மீண்டும் இனிய முறையில் நான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தேன். தோற்பதன் பேரின்பத்தை தந்தையருக்கு அளிக்கின்றனர் மைந்தர்.

களநிகழ்வு தொடங்குவதற்கான அறைகூவலுக்காக நிமித்திகன் தன் இடைச்சங்கை எடுத்து ஒலித்து ஓய்ந்ததும் களம் சூழ்ந்திருந்த மக்கள் அறியாது ஒருவரோடொருவர் நெருங்க சுவர் உடல்செறிந்து சுருங்கி வந்தது. மூத்தவர் “இளையோனே, உன் தருணம்” என்றார். இளைய யாதவர் குனிந்து தமையன் கால்களைத் தொட்டு சென்னி சூடியபின் ஒரு கைப்பிடி புழுதியை அள்ளி தன் இருகைகளையும் அதில் உரசிக் கொண்டு கூர்ந்த நோக்கும் எண்ணி வைத்த வேங்கைச்சிற்றடிகளுமாக முன்னகர்ந்தார். அவரது ஒவ்வொரு அடியையும் தன் உடல் சிலிர்ப்பால் அறிந்தபடி ஆறாவது களிற்றுக்காளை அசையாது நின்றது. இங்கிருந்து பார்க்கையில் அதன் இரு விழிகளும் பக்கவாட்டில் இருந்தமையால் நோக்கற்ற பாறைப்பரப்பென முகம் தெரிந்தது.

அதை அணுக அணுக இளைய யாதவரின் அடிவைப்பு விரைவழிந்தது. அதன் முகத்திற்கு நேராக பத்தடி தொலைவில் நின்று தன் இரு கைகளையும் தேள்கொடுக்குகள் போல முன்னால் நீட்டியபடி அவர் அசைவிழந்தார். பின்னால் நின்ற ஐந்து களிறுகளும் திரும்பி அவரை நோக்கின. நான்காவது களிறு தலைதாழ்த்தி மெல்ல உறுமியது. ஏழாவது களிறு களம் புகுமென எண்ணி நான் நோக்கினேன். அது களிறா அங்கு அமைக்கப்பட்ட பாவையா என்று ஐயம் எழும்படி அது செவியைக் கூட அசைக்காது நின்றிருந்தது.

இளைய யாதவரும் ஆறாவது காளையும் ஒருவரையொருவர் நோக்கி காலமின்மையில் அவ்வாறே என்றும் இருப்பவர்கள் போல தெரிந்தனர். இருவர் உடலிலும் மூச்சு ஓடுகிறதா என்றே ஐயம் எழுந்தது. அக்கணம் ஒன்றுணர்ந்தேன். அவர்களில் எவர் முதலில் அசைகிறார்களோ அவர் தோற்பது உறுதி. போர் முடிவாவது அங்குதான். இரு உடல்களையும் ஒரே நோக்கில் அறிந்தபடி நானும் அசைவற்று நின்றேன். காளையின் விலாவும் முதுகும் சிலிர்த்தன. புள்ளிருக்கை விதிர்த்தது. அதன் செவியோ மடிந்த கழுத்துச் சதையோ கால்களோ அசையவில்லை. அதன் உடலுடன் தொடர்பற்றதுபோல கருங்குச்சம் கொண்ட குறிய வால் சுழன்றுகொண்டிருந்தது.

இளைய யாதவர் எழுதிய பாவையென நின்றார். பிளவறு பெருங்காலம் கணங்களாகி, கணமொன்றே எஞ்சி, அதுவே விரிந்து நிகழ்காலமென்றாகும் அசைவின்மை. முதல் அசைவு எவரில் எழும் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை. எவ்வண்ணம் எழும் என்று மட்டுமே எண்ணி நெஞ்சு எடைகொண்டு கால்கள் தெறிக்க நின்றிருந்தேன். எண்ணியிருந்த கணம் மிக அண்மையில் அணுகி விலகி மீண்டும் மிக அண்மையில் என தன்னை காட்டிக்கொண்டிருந்தது. அத்தனை எண்ணியிருந்தும் சித்தம் தவறவிட்ட சிறுகணம் ஒன்றில் காளை தலைதாழ்த்தி உறுமியது. முன்வலக்காலால் மண்ணை உதைத்து புழுதி கிளப்பியது. அப்போதும் அசையாதவராக இளைய யாதவர் நின்றிருந்தார். மும்முறை தலையசைத்து செவிகளை உடுக்கென அடித்து காலால் புழுதியை அள்ளி பின்னால் செலுத்திய காளையின் உடல் காற்றேற்ற பாய்மரமென புடைத்து சற்றே பின்னால் செல்வதைக் கண்டேன். மறுகணம் அது விசையுண்ட பந்தென எழுந்து இளைய யாதவரை நோக்கி பாய்ந்தது.

யாதவரின் உடல் ஊதப்பட்ட தழல்சுடரென வளைந்து அதன் கொம்புகளை முழுமையாக தவிர்த்தது. மறுகணம் அவரது வலக்கை நீலச்சவுக்குபோல பறந்து காளையின் கழுத்தை சுற்றிக் கொண்டது. இடது கை அதன் கொம்பைப் பற்றியது. கால்கள் நிலம் தொடாமல் காற்றிலாட காளையின் கழுத்தில் உடல் தொங்க அரைவட்டமென களத்தை சுற்றி வந்தார் யாதவர். அவரைத் தூக்கி வீசிவிட முயன்று உடல் விதிர்க்க கால் ஊன்றிச் சுழன்றது காளை. நான்கு கால்களையும் மண்ணில் உதைத்து காற்றில் எழுந்து பேரெடையுடன் விழுந்து தசை அதிர நின்று திமிறி முதுகுச்சிலுப்பலால் அவரை வீசிவிட முயன்றது. முறுக்கிய வாலுடன் தன் உடலை வளைத்து சுழன்று சுழன்று கொம்பைச் சரித்து அவரை குத்த முயன்றது. இறுகிய தசைகள் அதிர அதன் கொம்பை வலக்கையாலும் புள்ளிருக்கையை இடக்கையாலும் பற்றியபடி மண்ணில் கால்கள் உரசிக்கோடிழுத்து வட்டமிட அவர் சுழன்றார்.

காளையின் சினம் கூடக்கூட அதன் உடலெங்கும் அசைவுகளில் கட்டற்ற விரைவெழுவதைக் கண்டேன் அவரைத் தூக்கியபடி அது குளம்புகள் மிதிபட்டு நிலமதிர துள்ளிக் குதித்து களத்தை சுற்றி வந்தது. இளைய யாதவரின் கால்கள் ஊன்றவேயில்லை. அவர் காற்றில் நடந்தார். வெறும்வெளியில் நீச்சலிட்டார். பின்பொரு அறியாக்கணத்தில் அவரது வலதுகால் நீண்டு துள்ளி விழுந்து மண்ணைத் தொட்ட காளையின் முன்கால்களுக்குள் புகுந்தது. நிலை தடுமாறி சரிந்து விலாவறைந்து பேரொலியுடன் புழுதியில் விழுந்தது காளை. அதன் மேல் விழுந்த இளைய யாதவர் அப்போதும் பிடிவிடாத கொம்பை நன்கு சரித்து காளைக்கழுத்தை வளைத்து மண்ணுடன் இறுக்கினார். அதன் பெருங்குளம்புகள் இரண்டு காற்றை உதைத்தன. கீழிருந்த இருகால்களின் குளம்புகள் மண்ணை மிதித்துத் தள்ளின. வால் புழுதியில் அளைந்தது. விழிகள் உருண்டு சரிய மூச்சு புழுதியை பறக்க வைக்க கோல்பட்ட முரசு போல வயிறதிர்ந்து அது உறுமியது.

அதன் ஆற்றலுக்கு நிகராக அவரது மெல்லிய கைகளின் விசை நின்ற விந்தையை விழியன்றி பிறிது எது சொல்லியிருந்தாலும் வீண்கதை என்றே எண்ணியிருப்பேன். அதன் கொம்பை முழுவிசையாலும் வளைத்து தலையை புழுதியுடன் அழுத்தி பற்றிக்கொண்டார். முழு விசையுடன் அனைத்து எடையுடன் அவரை செறுத்த காளை காற்று முற்றடங்கியபின் பாய் அமைவது போல தளர்ந்து அசைவழிந்தது. அங்கிருந்த அனைவரும் ஒரே தருணத்தில் அதை உணர்ந்தவர்கள் போல ”தசரத ராமன் வென்றான்! கோசலத்து மைந்தன் வென்றான்! வாழ்க ரகுகுலம்! வாழ்க கோசலம்!” என்று குரலெழுப்பினர்.

அக்குரலால் சீண்டப்பட்டதுபோல சற்று உடல் திருப்பி பின்கால் காட்டி நின்றிருந்த நான்காவது காளை உறுமலுடன் குளம்புகளால் நிலத்தை அறைந்தபடி தலை தாழ்த்தி பாய்ந்தது. அதன் கொம்புகள் ஈட்டிகள் போல் இளைய யாதவரை நோக்கி வந்தன. என்னுள் வாழ்ந்த தந்தை அலறி எழுந்த அக்கணத்தில் விழுந்த களிற்றின் கொம்பிலிருந்த பிடிவிட்டு துள்ளி எழுந்தார் இளைய யாதவர். புழுதியில் கால் அளைய பின்னால் சரிந்து கொண்டார். பிடி விலகிய ஆறாவது காளை முன்னங்காலுதைத்து எழுந்து கொம்பு திருப்பியது. இரு காளைகளின் கொம்புகளும் ஒன்றுடனொன்று பிணைந்து கொண்டன. அக்கணத்தில் பாய்ந்து அக்கொம்புகளை ஒன்றுடனொன்று சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டார் இளைய யாதவர். என்ன நிகழ்கிறது என்றறியாது இரு காளைகளும் ஒன்றையொன்று முட்டி ஒன்றின் விரைவை இன்னொன்று அழித்து தசைகள் புடைக்க அசைவிழந்தன. இரு காளைகளின் கொம்புகளையும் சேர்த்துப் பற்றியபடி நடுவே இளைய யாதவர் சுழல மலைவெள்ளம் இறங்கிய பெருஞ்சுழிபோல இரு காளைகளும் வட்டமாக சுற்றி வந்தன.

மூன்றாவது காளை அதைக் கண்டு முன்னங்காலை நிலத்தில் தட்டி தலைதாழ்த்தி உறுமியது. பின்னர் பாய்ந்து அருகே வந்தது. மிக இயல்பாக துள்ளி ஆறாவது காளையின் முதுகின் மேல் படுத்துப் புரண்டு மறுபக்கம் வந்த இளைய யாதவர் அவ்விருகாளைகளின் பூட்டிய கொம்புகளால் மூன்றாவது காளையின் கொம்பை தடுத்தார். மூன்று இணைகொம்புகளும் விந்தையான முறையில் ஒன்றுடனொன்று சிக்கிக் கொண்டன. என்ன செய்யவிருக்கிறார் என்று சூழ்ந்திருந்த கோசலத்து மைந்தர் அனைவரும் அதற்குள் உணர்ந்து கொண்டனர். வாழ்த்தொலிகள் முரசொலி என எழுந்து சூழ்ந்தன. சுற்றிவரும் காளைகளின் குளம்புகளால் செம்புழுதி எழுந்து முகிலென காட்சியை மறைத்தது. செம்பட்டுத் திரையில் வரைந்த சித்திரம் அசைவதுபோல் தெரிந்தது. அங்கு நிகழ்ந்த அச்சுழியை பிற இரு காளைகளாலும் தவிர்க்க முடியவில்லை. முதல் காளை எச்சரிக்கையுடன் காலெடுத்து அருகே வந்தது. சுழன்று கொண்டிருந்த மூன்று காளைகளின் கொம்பு மையத்தை நோக்கி அதுவே வந்து கொம்பு கோர்த்துக் கொண்டது. சற்று நேரத்தில் இரண்டாவது காளையும் ஐந்தாவதும் வந்து அச்சுழியில் இணைந்து கொண்டன.

ஆறு காளைகளின் கொம்புகள் ஒன்றுடனொன்று பிணைந்து உருவான மையம் பிரம்புக் கூடையின் மையப் பொருத்து போலவே தோன்றியது. அதைச் சூழ்ந்து காளைகளின் உடல்கள் உச்சகட்ட விசையில் தசைகள் இறுகி நின்றிருக்க, பக்கவாட்டில் கால்கள் நடக்க சுழன்றன. ஒன்றுடனொன்று முற்றிலும் சமன் செய்த விசையால் பேரெடையை தூக்கும் சக்கரம் ஒன்றின் சுழற்சி போல மெதுவாக இயங்கியது. ஏழாவது காளை அப்போதும் அதை நோக்கியபடி அங்கு நின்றிருந்தது. இளைய யாதவர் காளைக்கொம்புகளின் பின்னலை தன் கைகளால் இணைத்து ஒன்றாக்கி பற்றியிருந்தார். ஆறாவது காளையின் மேல் தன் உடல் பதித்து படுத்தபடி அவரும் அச்சுழியில் வட்டமிட்டார். கண்முன் சுழன்று கொண்டிருந்த அந்த உயிர்ப்பொறியை நோக்கி நின்றேன்.

அது நிகழ்ந்தபோது அக்காட்சியின் எழுச்சி என்னை ஆட்கொண்டிருந்தது. பின்னர் அதன் விந்தை என்னை சொல்லறச்செய்தது. ஒவ்வொரு காளையின் உடலும் ஒன்றுடனொன்று முற்றிலும் நிகர் செய்திருந்தன. அப்போதுணர்ந்தேன். அதிலொருகாளை சற்று பெரிதென்றால்கூட அப்பொறியின் முழுமை அழிந்து அச்சுழற்சி உடைந்திருக்கும். ஒன்றை ஒன்று முழுமையாக நிரப்பி அவ்வண்ணம் ஒரு சக்கரமாக ஆகும் பொருட்டே உடல் கொண்டவை போல அவை சுழன்று கொண்டிருந்தன. இளைய யாதவர் தன் வலக்கையால் இடைக்கச்சையை அவிழ்த்து உருவி எடுத்தார். அதை அக்கொம்புகளுக்குள் செலுத்தி மிக விரைவாக ஒன்றுடனொன்று சேர்த்து பின்னிக் கட்டி இறுக்கினார். பின்பு அதிலொரு கொம்பைப் பற்றி நுட்பமான முறையில் திருப்ப காளைகள் கழுத்துத்தசைகள் இறுகித்தெறிக்க விழியுருட்டி மூச்சிரைத்து தலை சரித்தன. ஒரு காளை வலியுடன் முனக மறுகணம் இடிந்து சரியும் மாளிகை போல ஒன்றின் மேல் ஒன்றாக நிலத்தில் விழுந்தன.

குளம்புகள் மண்ணையும் காற்றையும் உதைத்தன. பேருடல்கள் ஒன்றையொன்று பிதுக்கி நெரிப்பதை கண்டேன். கொம்புகளில் சிக்கி நிலம் விழுந்த அவை கால்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கி அசைவிழக்க செயலற்று மண்ணில் கிடந்தன. அக்கொம்புகள் மேல் கால் வைத்து ஏறி நின்று இரு கைகளையும் விரித்தார் இளைய யாதவர். மேடை அமர்ந்திருந்த நக்னஜித் தன்னிலை மறந்து எழுந்து இரு கைகளையும் விரித்து ”கோசல ராமன் வென்றான்! கோசலம் வென்றது!” என்று கூவினார். சூழ்ந்திருந்த பெருந்திரள் களிவெறியின் உச்சத்தில் எழுந்து கை வீசி ஆடைகளை அள்ளி வீசி பறக்கவிட்டு ஆர்ப்பரித்தது.

இளைய யாதவர் பாய்ந்து மறுபக்கம் சென்றார் வாடி வாயிலில் அப்போதும் பாதி உடல் காட்டி நின்றிருந்த ஏழாவது காளை முதல் முறையாக தலை தாழ்த்தி கொம்பை முன்நீட்டி அவரை எதிர்கொண்டது. அவர் அதை நோக்கி எளிய காலடிகளுடன் நடக்க காதுகளை அடித்துக் கொண்டு கொம்பைக் குலுக்கி முன்னங்காலால் புழுதியை உதைத்து பின்னர் நீர்ப்பெருக்கில் வரும் படகு போல முகம் தாழ்த்தி அவரை நோக்கி பாய்ந்து வந்தது. என்ன நிகழ்கிறதென்று எவரும் அறிவதற்கு முன்னரே அப்போர் நடந்து முடிந்தது. தரையில் இடக்கால் மடித்து அமர்ந்த இளைய யாதவர் வலக்காலை நீட்டி , நிலத்தை அறைந்து பாய்ந்து வந்த முன்னங்கால்களில் ஒன்றை ஓங்கி உதைத்தார். நிலைதடுமாறிய ஏழாவது பெருங்காளை பேரோசையுடன் மண்ணை அறைந்து விரைவழியாமலேயே உரசி நெடுந்தூரம் பாய்ந்து சென்றது. எழுந்து அதன் மேல் பாய்ந்து விழுந்து அதே விரைவில் அதன் கொம்பையும் புள்ளிருக்கையையும் பற்றிக்கொண்டு வலக்காலால் அதன் குளம்பை மண்ணோடு சேர்த்து அழுத்திக் கொண்டார். காளையின் வால் புழுதியை அளைய பின்னங்கால்களிரண்டும் காற்றில் குளம்பு துழாவ சில கணங்களிலேயே அது அடங்கியது.

இளைய யாதவர் எழுந்து வாடி வாயிலை நோக்கி சென்று அதன் இரு மரத்தடிகள் மேலும் கால் வைத்து எழுந்து நின்று கை தூக்கினார். திகைத்து எழுந்த ஏழாவது காளை அவரை நோக்கி ஏதும் விளங்காதது போல் நின்றது. காலை தரையில் உரசியபடி தலைதாழ்த்தி அவருக்கென எதையோ சொன்னது. கச்சைத்துணியின் கட்டிலிருந்து கொம்புகளை உருவிக்கொண்ட நான்காவது காளையும் ஆறாவது காளையும் சற்றே நொண்டியபடி விலகி எழுந்து நின்றன. தளர்ந்த கட்டிலிருந்து கொம்புகளை உருவி எழுந்த காளைகள் கால்களை உதைத்தபடி தலையை குலுக்கிக்கொண்டு முற்றத்தில் சிதறிப்பரந்து ஒன்றை ஒன்று நோக்கி நீள் மூச்செறிந்தன. அவற்றைச் சுற்றி கோசலத்து மக்கள் குரலெழுப்பி கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.

நிமித்திகன் அவையில் ஏறி ”கோசலத்துப் பெருங்குடிகளே! காற்றிலெனச் சூழ்ந்திருக்கும் குல மூதாதையர்களே ! அவிகொள்ளும் தேவர்களே! தெய்வங்களே! இதோ அறிக! துவாரகையின் இளைய யாதவர் இங்கு அமைந்த களநிகழ்வில் வென்றிருக்கிறார். கோசலத்து இளவரசியை மணக்கும் தகுதி கொண்டிருக்கிறார். அவ்வண்ணமே ஆகுக!” என்று அறிவித்தான். ”வென்றவன் கோசலத்து ராமன்!” என்று கூடி நின்ற அவையினர் கூச்சலிட்டனர். இளைய யாதவர் களத்தில் இறங்கி அங்கு நின்ற காளைகளைக் கடந்து மேடை நோக்கி வந்தார். அவரைக் கண்ட காளைகள் ஒவ்வொன்றும் தலை தாழ்த்தி உடல் சிலிர்த்து விழியுருட்டி விலகிக் கொண்டன.

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 10

கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா என்று கோசலத்து முதுவைதிகர் கார்க்கியாயனர் வினவினார். தலைகுனிந்து விரல்களால் மேலாடையைப் பற்றிச் சுழித்தபடி “ஆம்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னதும் நிறைந்திருந்த அவையினர் எழுந்து “ஆழிவண்ணனை அணைந்த திரு வாழ்க! அவள் கரம் கொண்ட நீலன் வாழ்க! வெற்றி கொள் துவாரகை வாழ்க! புகழ் சேர் கோசலம் வாழ்க!” என்று குரல் எழுப்பினர்.

கார்க்கியாயனரின் அழைப்பின்படி கோசலமன்னர் நக்னஜித் தன் துணைவி பிரபாவதியுடன் வந்து மகள் கைபற்றி “அவையோர் அறிக! என் முதுமூதாதையர் அருளால் மூதன்னையர் வடிவில் இவளை ஈன்றேன். தெய்வம் எழுந்தருளிய ஆலயமென இவளிருந்த அரண்மனை இதுகாறும் இருந்தது. இன்று என் செல்வம் அனைத்தையும் அளித்து இவளை யாதவ இளையவருக்கு அளிக்கிறேன், கொள்க!” என்று இளைய யாதவரிடம் நீட்டினார்.

வெண்தாமரை அருகிருந்த நீலம் என அவைநின்ற இளையவர் விழி ஒளிர்ந்த நகைப்புடன் “எங்கிருந்து சென்றாளோ அங்கு மீள்கிறாள்” என்றார். அவர் சொன்னது என்ன என்று நானோ அருகிருந்தவரோ அறியவில்லை. இளையவர் கைபற்றி அரங்கின் முன் இளவரசி வர இருவரும் தலைதாழ்த்தி அவையை வணங்கினார். அரிமலர் மழைபொழிய சேடியர் அளித்த தாலத்தில் இருந்து செம்மலர் தொடுத்த மாலையை எடுத்து இளையவரின் கழுத்தில் இட்டாள். வெண்மலர் தொடுத்த மாலையை அவர் அவளுக்கு அணிவித்தார்.

நிமித்தகன் மேடையேறி கோல் தூக்கி மண நிகழ்வு முடிந்ததை அறிவிக்க அரண்மனைப் பெருமுரசம் முழங்கியது. அதைக் கேட்டு காவல் மாடங்களின் முரசுகள் ஒலிக்க அந்நகரமே ஒரு பெரும் முரசென விம்மியது. அதன் கார்வையென தெருக்கள் தோறும் இருந்து எழுந்த பொது மக்களின் வாழ்த்தொலிகள் பொங்கின. பாஞ்சாலரே, அந்நகர் அந்நாளுக்காக தவமிருந்தது என்று அறிந்தேன். அதன் பின் எந்நாளும் அதை எண்ணியிருக்குமென உறுதிகொண்டேன்.

“பெரும் புகழ் கௌசல்யையின் இளைய வடிவம் இவள். இவள் மணிவயிற்றில் எழுக இன்னொரு ராமன்!” என்று கார்க்கியாயனர் வாழ்த்தினார். அவையின் வலப்பக்கத்தில் ஏழு வைதிகர் இளங்காலையிலேயே எழுப்பி நிறுத்திய வேள்விக்குளத்தின் அருகணைந்து தென்னெருப்பைச் சான்றாக்கி கார்க்கியாயனர் தொட்டளித்த மங்கல நாணை கௌசல்யையின் கழுத்தில் அணிவித்தார். மங்கலச்செல்வியின் கைபற்றி ஏழுஅடி எடுத்து வைத்து மண நிறைவு செய்தார். குல மூதாதையரும் பெருங்குடித் தலைவர்களும் வணிகத் தலைவர்களும் வந்து மணத்துணையினை வாழ்த்தி பரிசில் அளித்தனர்.

அங்கு நிகழ்ந்த மணமே அதற்கு முன்பு பலமுறை நிகழ்ந்த ஒன்றின் மறு நடிப்பே எனத் தோன்றுவது எனக்கு மட்டுமா என எண்ணிக் கொண்டேன். மணமக்களை வாழ்த்த எழுந்த முதல் முதுசூதர் “பல்லாயிரம் முறை பாலாழி விட்டெழுந்து அரச கோலம் கொண்டு தன் திருமகளை அடைந்தான் அவன். மீண்டும் ஒரு முறை அதைக் காண விழிபூக்கப் பெற்றோம். நாம் வாழ்க!” என்று சொன்னபோது என் மெய் சிலிர்த்தது.

மணமுடித்து வெளியே இளையவர் வந்தபோது ஏழு களிற்றுக் காளைகளும் அணி செய்யப்பட்டு கொம்புப் பூண்களும் சங்கு மாலைகளும் அணிந்து நிரையாக நின்றிருந்தன. அவற்றின் அருகணைந்து ஒவ்வொன்றின் பிடரியையும் புள்ளிருக்கையையும் நெற்றிக்குமிழியையும் மூக்குப் பெருநரம்பையும் தொட்டு வருடி இளையவர் குலாவினார். அன்னையை அணைந்த கன்றுகள் போல அவை ஆகிவிட்டிருப்பதை கண்டேன்.

இளையவர் விடைவென்ற நிகழ்வை கவிச்சூதர் ஒருவர் “ஏழு களிற்றுக் கன்றுகளுக்கு முன் ஏழு உருவங்களாக அவன் எழுந்தான். ஏழு மேருக்களும் ஒன்றாகி அவன் முன் நின்றன” என்று பாடியதை கேட்டேன். ”ஏழு வண்ணக் கதிர்களும் ஒன்றானது போல. ஏழு சந்தங்களில் எழுந்த வேதம் ஓங்காரமெனக் குவிந்தது போல” என்றார் சூதர். ”இணைப்பவன் ஒன்றாக்குபவன். அவ்வொன்றே தானென ஆனவன் அனைத்தையும் கடந்தவன். இங்கு எழுந்தருள்க அவன் அருள்!” என்று முடித்தார்.

கண்ணீர் வார கைகூப்பி நின்றிருந்த கோசலர் தன் தோள்தழைந்த மணிமாலையைக் கழற்றி சூதர் கழுத்தில் அணிவித்து தோள் தழுவி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அரசி முகம்பொத்தி விரல் மீறி வழிந்த கண்ணீருடன் தோள் குறுக்கி நின்றாள். அவைப் பெண்டிர் அனைவரும் விழி சோருவதைக் கண்டேன். அவையமர்ந்த அவையோர் சொல்லற்ற திளைப்பொன்றில் மூழ்கியதைக் கண்டேன். அங்கு காற்றென நிறைந்திருந்தது ஒரு சொல். அதை வாழ்க என பொருள் கொண்டது என் அகம்.

அன்று முதல் மறுநாள் உச்சி வரை மாபெரும் உண்டாட்டுக்கு நிமித்திகன் ஆணையை அறைகூவினான். நகரில் எட்டு இடங்களில் உண்டாட்டு முற்றங்கள் திறக்கப்பட்டன. முந்தைய நாள் இரவே பதினான்கு அடுமனைகளில் சமைத்து குவிக்கப்பட்ட உணவுவரிசைகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. உண்டு குடித்து மயங்கி விழித்து உண்டு விழுந்து எழும் களியாட்டு முடிந்ததும் அச்சிறு நகரமே உண்டொழிந்த மிச்சில் களமென்றானதைக் கண்டேன்.

மறுநாள் நற்புலரியில் நகர்விட்டு கன்னியுடன் கிளம்ப இளையவர் முடிவெடுத்தார். செய்தியை நான் சென்று கோசலருக்கு சொன்னேன். உண்டாட்டின் சோர்வும், உளம்நிறைந்த மயக்குமாக தன் மஞ்சத்தில் கிடந்த நக்னஜித் எழுந்து ”என் தேவி ஒழிந்த இந்நகர் பறவை விட்டுச்சென்ற வெறும் கூடல்லவா? இங்கு இனி எங்ஙனம் நான் வாழ்வேன் அமைச்சரே?” என்றார். “அஞ்சற்க! இன்னமும் ஒரு வருடத்தில் இவ்வரண்மனை நிறைய ஓர் இளவரசன் எழுந்தருள்வான்” என்றேன்.

ஒளிபட்ட மணியென முகம் மலர “ஆம், அது நிகழும். அதை உணர்கிறேன்” என்று சொல்லி என் கைகளை பற்றிக்கொண்டு “இங்ஙனம் இவை நிறைவடையும் என்று என்றோ அறிந்திருந்தேன். மங்கலம் அன்றி ஏதும் துலங்காதவள் என் மகள் என்று அவள் பிறந்த நாளிலேயே உணர்ந்தேன். அவள் உடலில் எழுந்த ஆழியும் வெண்சங்கும் அழியாத நற்குறிகள் என்று அன்றே நிமித்திகர் கூறினர். அவளை வெற்றித் திரு என்று பாடினர் சூதர். அவளை அடைந்த துவாரகை இனி ஒருபோதும் தோல்வியை அறியாது” என்றார். நான் “ஆம் அவ்வாறே ஆகுக!” என்று தலைவணங்கினேன்.

மறுநாள் காலை பிரம்ம தருணத்தில் கிளம்பி நகரின் அன்னையர் ஆலயங்கள் அனைத்திலும் பூசனை முடித்து ஆழிவண்ணன் ஆலயத்தில் வழிபட்டு காவல்தெய்வங்களிடம் விடைபெற்று கதிர்எழும் வேளையில் நகர் நீங்குவது என இளையவர் முடிவு செய்திருப்பதை சொன்னேன். ”அவ்வண்ணம் நிகழ்க மங்கலம்! அவருடன் நூறு தேர்களில் என் களஞ்சியத்தில் இருந்து எழுந்த மகட்செல்வமும் செல்லும். என் மகள் செல்லும் இடமெல்லாம் பொன்னும் மணியும் தொடரும்” என்றார் நக்னஜித்.

அன்றிரவெல்லாம் நகர் துயிலவில்லை என்பதை மாளிகை முகப்பில் இருந்து நோக்கினேன். இளவரசி நகர்விட்டு மறுநாள் காலை கிளம்ப இருக்கும் செய்தி சொல்லிலிருந்து சொல்லெனப் பரவி நகரை துயர்கொண்ட விரல் யாழை என மீட்டிக் கொண்டிருந்தது. இல்லங்களில் விளக்கொளிகள் அணையவில்லை. சாளரவிழிகள் எவையும் மூடவில்லை. அங்காடிகள் தோறும் பந்தங்கள் குமிழியிட்டுக் கொண்டிருந்தன. பிரம்ம கணத்திற்கென மணிவண்ணன் கோட்டத்து ஏழுநிலை மாடத்து மேலிருந்த வெண்கல மணி முதல் முழக்கத்தை எழுப்பியபோது என் நெஞ்சே அதிர்ந்தது.

நீராடி ஆடைமாற்றி நான் இளையவரின் அறைவாயிலை அடைந்தபோது அக்கணம் வரைந்து முடித்த அழகோவியம் போல் அவர் அங்கிருந்தார். ஈரக் குழல்கள் தோளில் சரிய வெண்பளிங்குப் பெருந்தோள்களில் மணியாரங்களுடன் மூத்தவர் நின்றிருந்தார். இடிக் குரலில் என்னை நோக்கி “எங்கு சென்றிருந்தீர்? வேளை எழுந்துவிட்டது அல்லவா?” என்றார். “ஆம் மூத்தவரே. நாம் கிளம்புவோம்” என்றேன். படியிறங்கி அரண்மனை முற்றத்துக்கு வந்தபோது எங்களுக்காக கோசலத்தின் வெள்ளித்தேர் நின்றிருந்தது. வெண்புரவிகள் பூட்டப்பட்டு பாகன் அமர்ந்திருந்தான்.

இருள் இதழ்விரிந்து முடியாத அரசவீதியில் புழுதிபடிந்த தெருவில் மெத்தைமேல் உருண்டோடும் களித்தேர் என சென்று கோசலத்து அரசமனையின் முகமுற்றத்தை அடைந்தோம். அங்கு நக்னஜித்தும் அவர் துணைவியும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் பந்த ஒளியில் செந்நிறச் சிற்பங்களென நின்றிருந்தனர். கார்க்கியாயனர் கங்கை நீர் நிறைந்த பொற்கலங்கள் ஏந்தி பதினாறு இளைய வைதிகருடன் நின்றிருந்தார். அப்பால் அணிச்சேடியரும் இசைச்சூதரும் நின்றனர். செவ்வொளியில் உருகிச் சொட்டிய பொற்துளிபோல அணித்தேர் ஒன்று நின்றிருந்தது. இளையவரின் தேர் முற்றத்துக்குள் நுழைந்ததும் ஒளிரும் கவசங்களும் அனல்சூடிய வேல் நுனிகளுமாக நின்றிருந்த படைவீரர்கள் வாழ்த்தி குரலெழுப்பினர்.

கோசலத்தின் பேரமைச்சர் வந்து இளையவரையும் மூத்தவரையும் முகமன் சொல்லி வாழ்த்தி வரவேற்றார். இருவரும் இறங்கிச் சென்று நக்னஜித்தின் முன் நின்று தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்தனர். மறுமுகமன் சொல்லும் நிலையில் மன்னர் இருக்கவில்லை. வெப்பநோய் உச்சத்தில் உடல் கொதிக்க நின்றிருப்பவர் போல் இருந்தார். இதழ்கள், விரல்நுனிகள், இமைகள் எங்கும் துடிப்பு ஓடிக் கொண்டிருந்தது. அரசி முதுசேடி ஒருத்தியால் தாங்கப்பட்டிருந்தார். அருகே நின்ற படைத் தலைவன் “இளவரசி அணிக்கோலம் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.

பிறகு ஒருபோதும் நிகழாதது என்று ஒரு கணமும் என்றோ கண்டு உணர்ந்தது என மறு கணமும் தோன்றச் செய்யும் அருங்கணங்களில் ஒன்று அது. எனவே அக்காட்சிகளை முழுக்க விழிகளால் தொட்டு எடுக்க விழைந்தேன். பந்த ஒளியில் அசைந்த பெருமரத்தூண்களில், கரிய கூரைச் சரிவில், மங்கிய தொன்மையான வண்ணச்சித்திரங்கள் கொண்ட மரச்சுவர்களில், தரையில் ஊற்றிய மஞ்சள் நீரின் ஈரத்தில் அலையடித்த பந்தத்தின் ஒளியையும் சூழ்ந்திருந்த விழிகள் ஒவ்வொன்றிலும் எழுந்த சுடர்த் துளியையும் தொட்டுத் தொட்டு அள்ளி என்னுள்ளே வரைந்து கொண்டிருந்தேன்.

உள்ளே கொம்பொலி எழுந்தது. மங்கல இசை முழங்க இளவரசி வருவதை செவியறிந்தது. மரக்கதவு திறந்ததும் விண்திறந்து பொழியும் சிறு மழை போலே இசை குளிர்ந்து கவிந்தது. பந்தத்தின் ஒளிபட்டு கன்னமும் கழுத்தும் மின்ன, குழல்புரிகள் பொன்னெனச் சுருண்டிருக்க பொன்னூல் பின்னிய அணிப்பட்டாடையும், வைரங்கள் வயின் வயின் இமைத்த மணியாரங்களும், வளையல்களும், குழைகளும், தோள்வளைகளும், மேகலையும் பூண்டு இளம் கௌசல்யை அடியெடுத்து முற்றத்துக்கு வந்தாள்.

அவளுக்கு இருபுறமும் எண்மங்கலங்கள் எடுத்த அணிச்சேடியர் வந்தனர். இசைச் சூதர் இரு பிரிவுகளாக மங்கலம் சூழ்ந்து தொடர்ந்தனர். முற்றத்தில் நின்ற மங்கலச் சேடியர் எழுந்து குரவையிட்டபடி அவளை எதிர்கொண்டு குருதியென செந்நீரும் செம்மலரும் சுடரும் காட்டி வரவேற்றனர். முற்றத்து இசைச் சூதர் எழுந்து மங்கல இசை எழுப்பி இணைந்துகொண்டனர். அரசப் படையினர் எழுப்பிய வாழ்த்தொலிகள் முற்றத்தை நிறைத்தன.

இளவரசி கையில் பொற்குடம் ஒன்று ஏந்தி வந்தாள். அதில் வைத்த மாவிலையின் நடுவே பொன்னிறத் தெங்கம்பழம் இருந்தது. அரண்மனைத் தாழ்வாரத்தின் ஏழு நீளக்கற்படிகளில் ஒவ்வொன்றாக இறங்கியபின் திரும்பி ஏழாவது படியில் அப்பொற்குடத்தை வைத்து வணங்கினாள். நக்னஜித்தும் துணைவியும் நெஞ்சு விம்மி கால்தளர்வதைக் கண்டேன். இளவரசி அவர்களை அணுகி இருவர் கால்களையும் முழந்தாள் இட்டு தொட்டு விழி ஒற்றி சென்னி சூடி வணங்கினாள். கை நீட்டி அவள் குழல் தொட்டது அன்றி இதழ் அசைத்து ஒரு சொல்லும் எடுக்க அவர்களால் இயலவில்லை.

அவள் தொழுதபடி எழுந்தபோது நக்னஜித் மெல்லிய விம்மலுடன் திரும்பிக்கொண்டார். அரசியைத் தாங்கி நின்ற முதியவள் “சென்று வாருங்கள் இளவரசி! மழை சுமந்த முகில் சென்ற இடமெல்லாம் பசுமையே காணும் என்பார்கள். அவ்வண்ணமே ஆகுக!” என்றாள். இளவரசிக்குப் பின்னால் மேலாடையால் முற்றிலும் முகம் மறைத்து நெஞ்சைப்பற்றிக் கொண்டு நின்ற அவள் செவிலி நடுங்கும் கைகளால் தன் மகவின் முழங்கையை பற்றிக் கொண்டு “சென்று வாருங்கள் இளவரசி! இங்கு தாங்கள் விளையாடி விட்டுச்சென்ற பாவைகள் எங்களுக்கு எஞ்சியிருக்கும்” என்றாள்.

சூழ்ந்திருந்த விழிநீர் அவளை கலங்க வைக்கவில்லை என்று அறிந்தேன். மணக்கோலம் கொண்டபோது தெரிந்த அதே முகமலர்வு அவ்வண்ணமே இருந்தது. அப்பண்பை அதற்கு முன் இளைய யாதவரிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். பாஞ்சாலரே, முகமலர்வு என்பது எவரிலும் நிலையாகத் தெரிவதல்ல. சுடர் போல அது எழுந்தும் விழுந்தும் அலைவுற்றே மானுடரிடம் திகழும். சித்திரம் என எழுதிய முகமலர்வு என்பது தெய்வங்களுக்கு உரியது. இளைய யாதவரின் அதே முகமலர்வு அரசியிலும் திகழ்வதைக் கண்டு நாம் அறியாத பேரிணை ஒன்று அங்கு நிகழ்ந்ததோ என்று உளம்வியந்தேன்.

இளையவர் இளவரசியின் கைபற்றி “அரசே, விடைகொடுங்கள்” என்று சொன்னார். நக்னஜித் இரு கைகளையும் தூக்கி “தெய்வங்கள் வாழ்த்தட்டும். காலம் சூழ்ந்து பொன்தூவட்டும். காவியங்களின் சொற்கள் தொடர்ந்து வரட்டும். எளியவன் விழிநீர் உங்கள் சுவடுகளில் உதிரும். அதுஒன்றே என்னால் ஆகக்கூடுவது” என்றார். வைதிகர் வந்து கங்கை நீர் தெளித்து வேதம் ஓதி வாழ்த்தினர். கார்க்கியாயனர் அவளை வழிநடத்தி அணித்தேரில் ஏறச் செய்தார்.

இளைய யாதவரும் மூத்தவரும் நானும் ஏறிக்கொண்ட தேர் முன்னால் செல்ல இளவரசியும் ஏழு பரிசில் சேடியரும் ஏறிக்கொண்ட தேர் தொடர்ந்தது. வெளியே காத்து நின்ற காவல் புரவிகள் கவச வீரர்களுடன் குளம்படி முழங்கி முன் சென்றன. அவர்களுக்குப் பின்னால் மங்கலச் சேடியர் ஏறிய தேர்களும் இசைச் சூதர்கள் ஏறிய தேர்களும் சென்றன. தொடர்ந்து மகள் செல்வம் கொண்ட வண்டிகளும் தேர்களும் சென்றன. அரசருக்கும் இளையயாதவருக்கும் இளவரசிக்கும் பின்னால் மீண்டும் பரிசில் தேர்கள் அணிவகுத்தன.

அவ்வணிவலம் அரசப் பெருவீதியை அடைந்ததும் மாளிகைகளிலும் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் சாலை ஓரங்களிலும் அங்காடி முகப்புகளிலும் கூடிய மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தினர். ”பெருந்தோள் ராமன் ஜானகியைக் கொண்டான். இப்பெருநாளில் எங்கள் குலத்திருவை யாதவன் கொண்டான். தந்தையரே மூதன்னையரே இங்கு எழுந்தருள்க! குலதெய்வங்களே உங்கள் வாழ்த்துகள் எழுக! விண் நிறைந்த கந்தர்வர்களே உங்கள் இசை எழுக! மண்எழுந்த கவிஞர்களே உங்கள் சொல்மழை எழுக” என்று வாழ்த்தினர்.

அரண்மனை முகப்பில் இருந்த கோசலை அன்னையின் ஆலயத்தில் வணங்கி பின் நகரமைந்த ஒவ்வொரு தெய்வத்தையும் வாழ்த்தி கோட்டை முகப்பில் எழுந்த மணிவண்ணன் கோட்டத்தில் மலர்கொண்டு விடைபெற்று பெருவாயிலைக் கடந்தனர். மீண்டும் ஒரு முறை நகர் காத்து அமைந்திருந்த கோசலை அன்னையை வணங்கி இளவரசி பெருஞ்சாலையில் ஒழுகிய தேரில் ஏறிக் கொண்டார்.

எங்கள் அணி நகர் நீங்குவதை ஒற்றர்கள் எங்கோ நோக்கி இருந்தனர். யாதவ இளவரசியை இளையவர் மணம் கொண்டதை முன்னரே ஒற்றர் செய்தி வழியாக கலிங்கரும், வங்கரும், மகதரும் அறிந்திருந்தனர். ஜயத்ரதரின் படைகளும் அவர்களுடன் இணைந்து கொள்ள நகர்சூழ்ந்த குறுங்காட்டைக் கடந்து கோசலத்தின் எல்லையை நாங்கள் நீங்கியதுமே பன்னிரு படைப்பிரிவுகளாக வந்து வளைத்துக்கொண்டனர்.

மூத்தவர் தோள்தட்டி உரக்க நகைத்து ”நன்று! ஒரு போர்கூட இன்றி எப்படி மகள் கொண்டு நகர் மீள்வது என்று எண்ணியிருந்தேன். மிகநன்று!” என்றார். “இளையவனே, இளவரசியுடன் நீ இந்நகர் நீங்கு. நம் நகர் சென்று சேர். இப்போரை நான் நிகழ்த்துகிறேன்” என்றார். இளையவர் புன்னகைத்து கையசைக்க நானும் மூத்தவருமாக அப்படையை எதிர்கொண்டோம்.

“என் தோளில் சிசுபாலனின் அம்பு பட்டது. இளைய யாதவருக்கு நான் அளித்த மணப் பரிசாக அம்மண்ணில் குருதி சிந்தினேன். அவர்களை அங்கே தடுத்து நிறுத்திவிட்டு நாங்கள் துவாரகை மீண்டபோது வெற்றித்திரு நகரில் எழுந்ததைக் கொண்டாடும் முகமாக துவாரகை களிவெறி கொண்டிருந்தது. மதுக்கிண்ணமென்றே ஆனது நகர். எவரும் எவரையும் அறியாது விழுந்து கொண்டிருந்தனர் நகர்மக்கள்” என்றார் அக்ரூரர்.

திருஷ்டத்யும்னன் அக்கதை கேட்டு அந்நாடகத்தில் தானும் நடிப்பவன் போல் விழிமயங்கி நெடுநேரம் அமர்ந்திருந்தான். பின்பு அக்ரூரரிடம் “யாதவரே, என்ன சொன்னாலும் அரசெழுந்து அமைந்த பெருமணம் கொண்டு இந்நகர் புகுந்த இளவரசியர் பிறருக்கு நிகரல்ல. இளையவரின் நெஞ்சில் எட்டு அரசியர் கொள்ளும் இடம் நிகராக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் நிகரானவர்கள் அல்ல” என்றான். “நானும் அதை உணர்கிறேன். விண்ணில் அவர்கள் இணையாகலாம். மண்ணில் அல்ல” என்றார் அக்ரூரர். “மச்சநாட்டரசரின் மகள் காளிந்தி இங்கு ஒற்றை மரவுரியாடையுடன் நகர்புகுந்தாள். இங்குள்ள ஒரு பெண்கூட அதை மறக்கவில்லை.”

திருஷ்டத்யும்னன் புன்னகைசெய்தான். “நகரில் மட்டுமல்ல. அரசவையில்கூட காளிந்தியை எவரும் அரசியென்றே எண்ணுவதில்லை. இளையவருக்கு ஏதோ படைத்தேவை இருந்தமையால் நிகழ்ந்த மணம் என்பதே கணிப்பு. மச்சகந்தி என்று அவளை எவருமறியாது பகடியுரைப்பவரும் உண்டு.” திருஷ்டத்யும்னன் “அரசகுலங்கள் குருதியால் ஆக்கப்படுகின்றன” என்றான்.

“ஆம், ஆகவேதான் ஷத்ரிய அரசி ஒருத்தி தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிடும் போது மீற முடியாதவனாகிறேன். இன்று உங்களிடம் இருந்து சியமந்தக மணியைப் பெற்று தன்னிடம் ஓப்படைக்கும்படி அரசி கௌசல்யை ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்றே உம்மை பேசுவதற்கு அழைத்தேன்” என்றார். “சியமந்தகத்தையா?” என்று சற்றே திகைப்புடன் திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம், அந்த மணி தங்களிடம் அல்லவா உள்ளது?” என்றார் அக்ரூரர். “அரசி இன்று காலை அதை ஜாம்பவதி சூடி தன் குல வழிபாட்டுக்கு செல்லக்கூடும் என்று அஞ்சுகிறார். அதை ஜாம்பவதி சூடலாகாது என்பதற்காகவே என்னை ஆணையிட்டு அனுப்பியிருக்கிறார்.”

திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “பொறுத்தருள்க அக்ரூரரே! சியமந்தகம் என்னிடம் இல்லை” என்றான். அக்ரூரரின் விழிகளில் எழுந்த வினவை நோக்கி ”அது இப்போது சாத்யகியிடம் உள்ளது” என்றான். “சாத்யகியிடமா?” என்றார் அக்ரூரர். “ஆம், புலரி எழுந்ததும் ஜாம்பவதி தன் குல மூதன்னையரை வழிபட எழுவார். அப்போது சியமந்தகத்தை அவரிடம் கொடுக்கும்படி சொல்லி நேற்றிரவு அவரிடம் அளித்தேன்.”

“சாத்யகியிடமா” என்று அக்ரூரர் மீண்டும் கேட்டார். அவர் நெற்றியில் விழுந்த முடிச்சை திருஷ்டத்யும்னன் நோக்கினான். “ஏன்?” என்றான். “ஒன்றுமில்லை” என்றார் அக்ரூரர். “சாத்யகியை ஐயுறுகிறீரா யாதவரே?” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் என்னை எண்ணியே ஐயுறவில்லை” என்று புன்னகைத்தார் அக்ரூரர். “அந்த மணி ஓவ்வொருவரிடமும் விளையாடாது அமையாது என்று இப்போது உணர்கிறேன்.”

திருஷ்த்யும்னன் சற்றே அசைந்து அமர்ந்து “அவ்வாறல்ல யாதவரே” என்றான். ”இளைய யாதவருக்காக ஐந்து தொழும்புக் குறிகள் சூடியவர் அவர் ஒருவரே. அனைத்து ஐயங்களுக்கும் அப்பாற்பட்டவர் அவர். இத்தருணம் மணியுடன் அவர் சென்று ஜாம்பவதியிடம் அளித்திருப்பார்.” விழிகளில் அறியமுடியாத ஓர் ஒளியுடன் “அளித்தால் நன்று” என்ற அக்ரூரர் “நான் எண்ணிக்கொள்வது எல்லாம் அதை அவனிடம் அளிக்க உம்மைத் தூண்டியது எது என்பதைப் பற்றித்தான்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “நாளை புலர்காலை அரசி அணி செய்வதற்கு முன்னரே மணி அவரிடத்தில் இருந்தாக வேண்டும். அரசகுடி பிறந்த நான் முறைமைப்படி நள்ளிரவுக்குப் பின் அரசியை சந்திக்கலாகாது. ஆகவே சாத்யகியிடம் அளித்தேன்” என்றான். அக்ரூரர் “அது சாத்யகிக்கு வைக்கப்படும் தேர்வாக இருக்கும். ஒரு வேளை உமக்கான தேர்வாகக் கூட இருக்கலாம்” என்றார். திருஷ்டத்யும்னன் “மிகையாக ஐயுறுகிறீர்கள் என்று எண்ணுகிறேன் யாதவரே” என்றான். அக்ரூரர் புன்னகைத்தார். தன் உள்ளம் ஏன் படபடக்கிறது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 1

திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சு மாளிகையிலிருந்து வெளிவந்து தேர்நிலையை அடைந்து அந்த முற்றமெங்கும் பரவி நின்றிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் நோக்கியபடி எதையும் உணரா விழிகளுடன் இடையில் கைவைத்து சற்றுநேரம் நின்றான். ஏனிங்கு நிற்கிறோம் என்ற எண்ணம் முதலிலும் எதையோ எண்ணிக்கொண்டிருந்தோமே என்ற வியப்பு பின்னரும் எழுந்த உடனே தீயின் தொடுகை போல அந்நினைவு எழுந்தது. துடித்து எழுந்த உடலுடன் தன் தேரை நோக்கிச் சென்று அதில் ஏறி அமர்ந்து பாகனிடம் “மாளிகைக்கு” என்றான்.

அவன் தேர் சகட ஒலியுடன் எழுந்து பிற தேர்களின் இடைவெளிகள் வழியாகச் சென்று பெருஞ்சாலையை அடைந்து கல் தளத்தில் விரையத் தொடங்கியபோது உள்ளம் மேலும் விரைவுகொண்டு எழுந்து தேருக்கு முன்னால் படபடத்துப் பறந்தது. எண்ணம் எதுவும் நிலைக்காமல் அவன் தேர் நிலையில் நின்றபடி கைகளால் தூணை தட்டிக்கொண்டிருந்தான். பின்பு ஏன் நிற்கிறோம் என்று உணர்ந்தபடி பீடத்தில் அமர்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான். கால்களை நீட்டி உடம்பை சரித்து அமர்ந்தபடி தனக்குள் ‘என்ன நிகழ்ந்துவிட்டது?’ என்றான். அக்ரூரர் அவரது இயல்புக்கேற்ப சிறு ஐயமொன்றை அவருள் எழுப்பியிருக்கிறார். அது அவருடைய முற்காலச் செயலிலிருந்து எழுந்த ஐயம். அவன் ஐயப்படுகிறானா? இல்லை. சாத்யகியை அவனுக்குத் தெரியும்.

ஆனால் அச்சொற்கள் எத்தனை மேலோட்டமாக உள்ளத்தைக் கடந்து செல்கின்றன என்று உணர்ந்தான். உள்ளே நீருள் விழுந்துகிடக்கும் கொலைவாள் போல அலைகளை தன் மேல் ஏந்தியபடி அசைவற்றுக்கிடந்தது அந்த ஐயம். ஆம், நான் ஐயப்படுகிறேன். அமராமல் கிளைதோறும் தவிக்கும் பறவைபோல அவன் எண்ணங்கள் எழுந்து தவித்தன. மீண்டும் தூணைப்பற்றியபடி நின்றான். ஆம், நான் ஐயப்படுகிறேன்... ஆனால் அந்த ஐயத்தின் அடிப்படை என்ன? நெஞ்சு படபடக்க தூணை கையால் தட்டினான். என் அகம் கொள்ளும் இருள்தான். மானுடர் மானுடரை தங்கள் இருளைக்கொண்டே அறிந்து மதிப்பிடுகிறார்கள்.

ஏன் இந்த வீண் எண்ணங்கள்? இன்னும் சற்று நேரத்தில் அனைத்தும் தெளிவாகி விடப்போகின்றன. அப்போது என்ன எண்ணுவேன்? இவ் ஐயங்கள் அனைத்தும் பொய்யென்றானால் சாத்யகிக்கு பெருந்தீங்கு இழைத்தவனாவேனா? குற்றஉணர்வு கொண்டு அவனை மார்போடணைத்து கண்ணீர் மல்குவேனா? இல்லை, இவ் ஐயங்களுக்கு அடிப்படை எனது இருள். அதை நான் எவரிடமும் காட்டிக் கொள்ள முடியாது. என்னிடம்கூட நான் ஒரு கணமும் அதை மறுத்துக் கொள்ள முடியாது. ஏன் அந்த மணியை கையில் வந்த சற்று நேரத்திலேயே பிறிதொருவன் கைகளில் அளித்தேன்? என் களத்தில் இருந்த அந்தக்காயை திசை திருப்பி அனுப்பினேன்? இல்லை, நான் ஜாம்பவதியிடம் அதைக் கொடுக்க விழைந்தேன் என்று சொல்லிக் கொண்டதுமே பிறிதொரு மனம் எழுந்து சீறியது. அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. நான் எண்ணியது அதுவல்ல. எனவே அந்த மணியை சாத்யகியின் கையில் கொடுத்த மறுகணமே என் உள்ளம் எடையழிந்து எழுந்து பறந்தது.

திரும்ப அமர்ந்து தலையை தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டான். தலைமேல் தடியொன்று விழுந்ததுபோல தேர் சென்று நின்ற ஒலி கேட்டது. எழுந்து மேலாடையை சீர் செய்தபோது தன் கண்கள் அனல்பட்டது போல் எரிவதை, கீழுதட்டை பற்கள் இறுகக் கடித்திருப்பதை, கை விரல்கள் இறுக சுருண்டிருப்பதை உணர்ந்தான். படிகளில் இறங்கி குறடு ஒலிக்க முற்றத்தில் நடந்து மாளிகையின் படிகளில் ஏறும்போது எதிரே வந்த அமைச்சரிடம் “அரசி ஜாம்பவதி குலதெய்வ ஆலயத்திற்கு சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், சென்று விட்டார் இளவரசே” என்றார் அமைச்சர்.

நெஞ்சு ஆறுதல்கொண்டு அலை இறங்கி அமைய மூச்சுவிட்டான். மறுகணமே பிறிதொரு அலை அடுத்த வந்து அறைந்து மோதியது. “சாத்யகி ஜாம்பவதியின் அரண்மனைக்கு எப்போது சென்றார்?” என்றான். அமைச்சர் ”இளவரசே, சாத்யகி அரசியின் இல்லத்திற்கு செல்லவே இல்லை” என்றார். திருஷ்டத்யும்னனால் நிற்க முடியவில்லை. உள்ளங்கால் வியர்த்து உலோகக் குறடிலிருந்து சறுக்குவதுபோல் உணர்ந்தான். உடல் நிலையழிவதை காட்டிக் கொள்ளலாகாது என்று எண்ணி அவ்வெண்ணத்தாலேயே கால்களைப் பொருத்தி நிறுத்தி “உளவுச்செய்தி வந்ததா?” என்றான்.

“ஆம் இளவரசே, அவரிடம் சியமந்தகம் அளிக்கப்பட்டிருப்பதை நேற்றிரவு சொன்னீர்கள். ஆகவே அதை அவர் ஜாம்பவதியிடம் எப்போது அளிக்கிறார் என்பதை எனக்குத் தெரிவிக்கும்படி அங்கிருக்கும் உளவுச்சேடியிடம் சொல்லியிருந்தேன். இன்று காலை சற்று முன்பு வரை சாத்யகி அரண்மனைக்கு செல்லவில்லை. அரசி குலதெய்வங்களை வழிபட கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.” திருஷ்டத்யும்னன் “மணி இல்லாமலா?” என்று மிகத்தாழ்ந்த குரலில் கேட்டான். “ஆம்” என்றார் அமைச்சர்.

“சியமந்தகம்?” என விழிகளை அமைச்சரை நோக்கி திருப்பாமல் திருஷ்டத்யும்னன் கேட்டான். “இளவரசே, சியமந்தகம் அரசியிடம் அளிக்கப்படவில்லை.” திருஷ்டத்யும்னன் குளிர்ந்து இரும்பாலானவை போலாகிவிட்டிருந்த தன் கால்களை அசைத்து சென்று அங்கிருந்த பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் வைத்துக்கொண்டு ஒளி பரவத்தொடங்கியிருந்த முற்றத்தை நோக்கியபடி “சாத்யகியைப்பற்றி உசாவினீரா?” என்றான். “ஆம், அவர் அரசியை சந்திக்க வரவில்லை என்று அறிந்த உடனேயே அவர் எங்கிருக்கிறார் என்றறிய ஒற்றர்களிடம் சொன்னேன். நேற்றிரவு அவர் தன் அரண்மனையிலிருந்து புரவியில் கிளம்பிச் சென்றிருக்கிறார்.”

அதிர்ந்து விழிதூக்கி அமைச்சரின் கண்களைப் பார்த்த திருஷ்டத்யும்னன் அஞ்சியவன் என பார்வையை விலக்கிக் கொண்டான். அமைச்சர் விழிகளில் தெரிந்தது ஒரு நகைப்பு. நாகத்தின் விழிகளில் மானுடரை நோக்கிய இளக்காரம் ஒன்று தெரிவதாக சூதர் பாடல் ஒன்று சொல்வது நினைவுக்கு வந்தது. யுக யுகங்களாக கூடாது குறையாது ததும்பி நின்றிருக்கும் ஏளனம் அது. மானுடக் கண்களிலும் நாகம் திகழும் கணங்களுண்டு போலும்.

நெஞ்சை ஒருக்கி மீண்டும் அவர் விழிகளை நோக்கி ”அவர் சென்ற அலுவல் என்ன என்று உசாவினீரா?” என்றான். “இல்லை. அலுவல் என எதையும் அவர் தன் ஊழியர்களிடம் சொல்லவில்லை. பின்னிரவில் அரண்மனை விட்டு வந்தார். தன் பயணப்பையை சித்தமாக்கியிருந்தார். அவற்றை புரவியில் போட்டுக்கொண்டு ஏறி அமர்ந்து நகரின் ஊடுவழிகளினூடாகச் சென்று கோட்டை வாயிலையும் தோரண வாயிலையும் கடந்து அப்பாலெழுந்த பாலைக்குள் சென்றுவிட்டார்.”

அந்த ஏளனம் அமைச்சருடையதல்ல. அத்தருணத்துக்குரியது. அத்தருணத்தை ஆளும் தெய்வத்துக்குரியது. அந்த தெய்வம் நாக வடிவம் கொண்டதுதான், ஐயமேயில்லை. திருஷ்டத்யும்னன் “காவல்மாடங்களில் என்ன சொல்லியிருக்கிறார்?” என்றான். “தன் முத்திரை கணையாழியைக் காட்டி அரசுப்பணிக்காகச் செல்வதாகவே சொல்லியிருக்கிறார். அவ்வண்ணமே அவர்கள் தங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்.”

நெஞ்சில் நிறைந்திருந்த கடுங்குளிரை மூச்சுகளாக வெளியே விட்டபடி குளிர்ந்து நுனிநடுங்கிக் கொண்டிருந்த விரல்களை ஒன்றுடன் ஒன்று கோத்து திருஷ்டத்யும்னன் அசையாது அமர்ந்திருந்தான். “தோரணவாயிலைக் கடந்த பின்னர் அவர் எங்கு சென்றார் என்பதை எனக்குத் தெரிவிக்கும்படி வணிகப்பெருஞ்சாலையில் உள்ள நான்கு காவல்மாடங்களில் இருக்கும் நமது ஒற்றர்களிடம் பறவைத்தூது விட்டு ஆணையிட்டேன். சற்று முன்னர்தான் அச்செய்திகள் வந்தன. வணிகப்பாதை எங்கும் அவர் தென்படவில்லை.”

திருஷ்டத்யும்னன் உடலில் சிறிய அசைவொன்று நிகழ்ந்தது. அவன் விழிதூக்கவோ வினவவோ இல்லை. அமைச்சரே தொடர்ந்தார் “அவ்வண்ணமெனில் அவர் பாதை தேரவில்லை. தோரணவாயிலை விட்டு சென்றதுமே விலகி பாலை நிலத்துக்குள் புகுந்து விட்டிருக்கிறார். மந்தணச் சிறுபாதை எதையோ அறிந்து அதனூடாக இந்நகரை விட்டு விலகிச் செல்கிறார்.”

திருஷ்டத்யும்னன் தன் தலையிலிருந்து அனைத்து எண்ணங்களும் துளிகளாகப் பனித்து வழிந்து திரண்டு சொட்டிக் கொண்டிருக்கும் தாளத்தை உணர்ந்தான். நீராவி படிந்து ஈரமாகும் மரவுரி போல அவன் உடல் வியர்த்து தளர்ந்தது. பீடத்தில் நன்கு ஒட்டிக் கொண்டது. நிமிர்ந்து அமைச்சரை நோக்கி “ஒருவேளை அவர் பிறர் எவரிடமாவது சியமந்தகத்தை ஒப்படைத்து ஜாம்பவதியிடம் கொடுக்கும்படி ஆணையிட்டிருக்கலாம். அரசுமுறைப் பயணமாகவே பாலைக்குள் புகுந்திருக்கலாம்” என்றான். அச்சொற்கள் அளித்த திண்மையால் குரல் எழ “பிறர் எவருக்கும் தெரியாத ஆணையொன்றை இளைய யாதவர் அவருக்கு அளித்திருக்கலாம்” என்றான்.

அமைச்சர் “அதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிகழ்ந்தவை அனைத்தையும் ஒன்றுடனொன்று பொருத்துகையில் அவர் சியமந்தகத்துடன் சென்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது. சியமந்தகத்தை எளிய வீரனிடம் அவர் ஒப்படைக்க மாட்டார். அவருக்கு இணையான அமைச்சரோ படைத்தலைவரோ நேற்றிரவு அவரை சந்திக்கவில்லை” என்றார். தன்னைச் சூழ்ந்து எடை மிக்க கற்கள் அடுக்கப்பட்டு இடைவெளி இன்றி சுவர் எழுப்பி மூடப்படுவதை உணர்ந்தவன் போல திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். மிக்க் குறுகலான சதுரம். கை நீட்டினால் நான்கு சுவர்களையும் தொட முடியும். சுவர் எழுந்து எழுந்து மேலே சென்றது. சதுர வடிவ வானம் குறுகிக் குறுகி ஒரு புள்ளியாகி பின்பு மறைந்தது. இருளும் வெம்மையும் தேங்கிய காற்று அவன் மூச்சை வாங்கி திருப்பி அளித்தது.

மூச்சுத் திணறி நெஞ்சு புடைத்தது. மேலும் மேலும் மூச்சு என அவன் உளம் தவித்தது. சட்டென்று இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகளில் அறைந்தபடி எழுந்து “என் புரவி சித்தமாகட்டும்” என்றான். “இளவரசே!“ என்றார் அமைச்சர். ”என் புரவி பயணப்பையுடன் சித்தமாகட்டும். உடனே” என்றபடி திருஷ்டத்யும்னன் தன் அறைக்குள் விரைந்தான். அவனது குறடோசை படிகளில் முழங்கியது. பேழையிலிருந்து பொன் நாணயங்களை எடுத்து கச்சைக்குள் செருகிக் கொண்டான். உடைவாளை எடுத்து தோல்கச்சை கொக்கியில் மாட்டியபடி படிகளில் விரைந்திறங்கி கூடத்திற்கு வந்தபோது அமைச்சர் அவனது பயணப்பைகளை அவரே எடுத்துக்கொண்டு சென்று வெளியே நின்ற கரிய புரவி முதுகில் போட்டுக் கொண்டிருந்தார்.

மாளிகை விட்டு இறங்கி புரவியை நோக்கி வந்தபடி “என்னிடம் பறவை வழி தொடர்பிலிருங்கள். எச்செய்தியையும் எனக்குத் தெரிவியுங்கள்” என்றான். “கழுகுகள் எங்கிருந்தாலும் என்னை தேடிவரும் பயிற்சி கொண்டவை…” என்றபடி புரவி மேல் தாவி ஏறிக் கொண்டான். கடிவாளத்தைப் பற்றியபடி அமைச்சர் “இளவரசே, இப்பாலைவனம் நாற்புறமும் திறந்த பெருவெளி. அங்கே குளம்புச் சுவடுகள் அரைநாழிகைக்குமேல் நீடிப்பதில்லை. வழி தெரிந்த பாலைநிலமக்களின் உதவியின்றி எவரும் இங்கெங்கும் செல்ல முடியாது. மாயப்பசுமை காட்டி கொல்லும் நச்சுவெளி இது என்று இங்கு சொல்கிறார்கள்” என்றார்.

“அவரை நெடுந்தொலைவு செல்ல நான் விடக்கூடாது. சியமந்தகத்துக்கு நான் பொறுப்பு. அதிலிருந்து நான் விலகமாட்டேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால் எப்படி அவரை தொடர முடியும்?” என்றார் அமைச்சர். “ஏனெனில் என்னில் பாதி அவரிடமிருக்கிறது. நான் தொடர்வது அதையே” என்றபடி திருஷ்டத்யும்னன் குதிமுள்ளால் புரவியைக் குத்தி அதை கனைத்தபடி முன் கால் தூக்கி பாய்ந்தெழச்செய்து முற்றத்தை சிலகணங்களில் கடந்து அரண்மனையை இணைக்கும் சிறு பாதைக்குள் தடதடத்து கற்பாளங்கள் பந்த ஒளியில் பளபளத்த அரசப்பெரும்பாதையை நோக்கி விரைந்தான்.

அத்தனை சிற்றாலயங்களிலும் புலரி வழிபாட்டிற்கென அகல்சுடர்கள் ஏற்றப்பட்டுவிட்டிருந்தன. மணிகளும் சங்குகளும் குறுமுழவுகளும் ஒலிக்கும் முழக்கம் தெருக்கள் அனைத்திலிருந்தும் எழுந்து துவாரகையின் மேல் கவிந்திருந்த உப்பு கலந்த கடல்காற்றை அதிரச்செய்து கொண்டிருந்தது. கோபுரமுகடுகளில் எரிந்த மீனெண்ணெய் விளக்குகள் சுடர் தாழ்ந்து ஒளி இழந்து கொண்டிருந்தன. வானம் புகைப்படலம் போல் மூடியிருந்தது. இடப்பக்கம் ஆழத்தில் கரை விளிம்புகளில் அலைகளின் வெண்வளையங்கள் பெண்களுக்கு சேலைகளை எடுத்துப்போடும் வணிகனின் கைத்திறன் போல ஒன்றன்மேல் ஒன்றாக வந்து விழுந்து கொண்டிருந்தன. நீலநெளிவின் மறுஎல்லையில் தொடுவான்கோடு நத்தை ஊர்ந்து சென்ற தடம் போல் மெல்லொளி கொண்டிருந்தது.

சாலையெங்கும் பூசனைப்பொருட்களுடனும் ஆலய வழிபாட்டுக்குரிய கலங்களுடனும் சென்று கொண்டிருந்தவர்களை வளைந்து கடந்து, நீராடி ஆவி எழும் இருளுடலுடன் வந்து கொண்டிருந்த எட்டு யானைகளைத் தாண்டி, அரண்மனைக்கு சென்று கொண்டிருந்த மஞ்சல்களையும் தேர்களையும் பின்னிட்டு முதல் காவல்மாடத்தை அடைந்தான். தன் கணையாழியைக் காட்டிவிட்டு நில்லாமலேயே கோட்டை வாயில் நோக்கிச்சென்றான். அங்கே புலரியில் திறந்த பெருங்கதவினூடாக மலைப்பெருக்கு உள்ளிறங்குவது போல வணிகர்களின் வண்டிகளும் அத்திரிகளும் தேர்களும் சகடஒலியுடனும் விலங்குகளின் மூச்சொலிகளுடனும் கனைப்பொலிகளுடனும் உள்ளே பெருகி வந்து கொண்டிருந்தன. கோட்டைக் காவலனிடம் சாத்யகியைப்பற்றி கேட்கவேண்டுமென்று எண்ணி நாநுனி வரை வந்த சொல்லை அடக்கிவிட்டு புரவியைக்கிளப்பினான். மூன்று பிரிகளாக ஒன்றை ஒன்று தொட்டும் விலகியும் வந்து கொண்டிருந்த பயணிகள் பெருக்கின் இடது ஓரமாக பெரு நடையுடனும் முழுப்பாய்ச்சலுடனும் புரவியை செலுத்தி தோரணவாயிலை அடைந்தான்.

காலை ஒளி எழாத வானின்மீது தோரணவாயில் துலங்கி எழுந்திருந்தது. முற்பரப்பின் மேல் முகிலில் செதுக்கி எடுத்தது போல அதன் சிற்பங்கள் விழி திறந்து வாய் விரித்து நோக்கி நின்றன. துவாரகையின் பாலைவனம் கார் மேவிய வானம் கொண்டது. நிலத்திலிருந்து எழும் வெங்காற்றால் மேலே தூக்கப்படும் கார்முகில்கள் கடலிலிருந்து வரும் உப்புக்காற்றின் விசையால் பெரும்பாய்களென சுருட்டி அள்ளப்பட்டு வடக்கு நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன என்பார்கள் வணிகர்கள். வருடத்தில் ஓரிரு முறையே அவை நீர் முழுத்து துளிகளென ஆகி பாலைவனத்தின் மேல் விழும். சமர்களத்தின் கோடி அம்புகள் போல, காற்றுக்காலத்தில் அத்திக்காட்டின் பழங்கள் போல உதிரும். பாலைவனம் முத்து வெளியாக மாறும். செம்மணல் புழுதியில் கோடி கோடி சிறுமலர்கள் எழும். கண்ணெதிரே இளஞ்செந்நிலம் நிறம் மாறி குருதிப்பட்டாகும். குருதி குழம்பாகி வழியும். ஊறி மறைந்தபின் செஞ்சதைக் கதுப்பாகும்.

விழுந்த மழை அனைத்தையும் அக்கணமே உள்வாங்கி தன்னுள் நிறைக்கும் மந்தணப் பெருங்கலங்கள் அதற்கடியில் உள்ளன என்பார்கள். மழை நின்ற மறுகணம் ஒரு சொட்டு நீரை விரல் தொட்டு எடுக்க முடியாது. சற்று நேரத்தில் மண்ணுக்குமேல் உடல் வியர்த்து வழியச்செய்யும் நீராவியே நிறைந்திருக்கும். மேலும் சற்று நேரத்தில் பாலைப்பெருவெளி செம்பொருக்குத் தோல் கொண்டுவிடும். அதன் மேல் புரவிகள் செல்கையில் பொருக்கு உடைந்து தடம் நீளும். கடலிலிருந்து ஓரிரு பெருங்காற்றுகள் எழுந்து சென்று பாலையை கடந்து சென்றால் பொருக்குதிர்ந்து மீண்டும் புழுதியாகும். அப்புழுதிக்கு அடியில் இருக்கும் ஈரம் ஏன் அத்தனை வெம்மை கொண்டிருக்கிறது என்பது விந்தை. வெட்டுண்ட தசைக்குள் கைவிட்டது போல அந்த மென்மையின் வெம்மையை உணர முடியும். பாலையை அவனிடம் விவரித்த துவாரகையின் பெருவணிகர் “என் வாழ்வில் நெடுநேரத்தை இச்செம்பாலையிலேயே கழித்திருக்கிறேன் இளவரசே. ஆனால் இன்னும் நான் இதை சற்றும் அறிந்திலாதவன். இதன் ஆட்டத்தில் ஒவ்வொரு முறையும் தோற்பவன். உளம் மயக்கும் மாயப்பெருவெளி இது. அதற்கிணையென சொல்லவேண்டுமென்றால் இந்நகரை தன் ஆடலால் பித்தெழச் செய்து அமர்ந்திருக்கும் இளைய யாதவரையே எண்ணுவேன்” என்றார்.

பாலை விளிம்பில் புரவிக் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி திருஷ்டத்யும்னன் தெய்வங்களின் வில்லென தன்னைச் சூழ்ந்திருந்த தொடுவானத்தின் வளைவை நோக்கி சில கணங்கள் அசைவற்று இருந்தான். வானம் படிந்திருந்த வட்டத்தின் பொருத்தில் சில பாறைகள் தெரிந்தன. கடல் நாவாய்களென அவை அசைந்து கீழ்த்திசைநோக்கி சென்றுகொண்டிருப்பதாக விழிமயக்கு ஏற்பட்டது. குவைகளெனத் திரளாமல் படலமென்று பரவிய முகில்களின் சிற்றலைகளுடன் விரிந்திருந்தது வானம். அக்கணம் எடுத்து உதறி விரிக்கப்பட்டது போல் ஒரு தடம் கூட இல்லாமல் கிடந்தது செம்புழுதி அலையாலான பாலை. பாலைநிலம் நினைவுகளை வைத்திருப்பதில்லை என்றார் வணிகர். அது தன்னை மூன்று நாழிகைக்கொருமுறை புதிதென பிறப்பித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் அன்றென ஆகி வந்து நிற்கிறது.

அவன் விழிகளை மூடிக் கொண்டான். அப்பெருவிரிவை நோக்கி வியந்து மலைத்து சொல்லின்றி அடையும் அறிதலொன்றில் தன்னுள் எங்கோ ஒரு தடம் உள்ளது. தன் நடுங்கும் விரல் நுனியால் ஆழத்துச் சதுப்பை துழாவித் துழாவி தேடிக்கொண்டிருந்தான். வெளியே உருண்டோடும் பாறைகளின் பெருக்கென ஓசையிட்டுக் கொண்டிருந்தது வணிகர் நிரை. விழிதிறக்காமலேயே புரவியை தூண்டித் தூண்டி நடக்க வைத்தான். பின்பு பெருமூச்சுடன் குதிகாலால் அதைத்தூண்டி பெருநடையாகச் செய்தான். ‘விழிதிறக்காதே. பாலைவனம் உன்னை சூழ விட்டுவிடாதே’ என்று தனக்குத்தானே ஆணையிட்டுக் கொண்டான். புரவியை மீண்டும் மீண்டும் தூண்டினான். மென் மணலில் அதன் அகன்ற குளம்புகள் புதைந்து எழுப்பும் ஒலி நீருக்கு மேல் நெற்றுகள் விழுவது போல கேட்டது.

மெல்ல வணிகர் நிரைகளின் ஓசைகள் பின்னால் எங்கோ புதைந்து மறைந்தன. செவிகளை நிறைக்கும் பாலையின் அமைதி மட்டும் சூழ்ந்திருந்தது. அதற்கு அடியில் தரையில் மணலை அள்ளித்தூற்றும் கடற்காற்றின் ஓசை கேட்டது. செவி கூர்ந்தால் பொருக்குமணல் மேல் நத்தை செல்லும் ஒலி கேட்பது போல. திருஷ்டத்யும்னன் கண்களைத் திறந்து சூழ நோக்கினான். சிறிய அலைகளாக எழுந்து அமைந்திருந்த செம்பட்டுப்பாலையின் நடுவே அவனுடைய புரவியின் ஒற்றைத்தடம் மட்டும் பின்தொடர தனித்து நின்றிருந்தான். மீண்டும் ஒரு ஆணைக்காக அவன் புரவி தலைதூக்கி சற்றே விழியுருட்டி காத்து நின்றது. அதன் கழுத்தை கைகளால் வருடி முன்னால் செலுத்தினான். சீராக காலெடுத்து வைத்து மணல் அலைகளில் இறங்கி மணல் சரிவில் ஏறி மீண்டும் இறங்கி அது சென்றது.

எங்கு செல்கிறோம் என்று உள்ளத்தின் ஆழத்தில் ஒரு குரல் எழ திருஷ்டத்யும்னன் சற்றே நிலையழிந்தான். இந்தப் பாலையிடம் எவ்வினாவையும் எழுப்ப முடியாது. எத்திசையிலும் மாறாத ஊமைப்புன்னகையுடன் அது நின்றிருக்கிறது. என்னுள் இருளுக்குள் பாம்பு சென்ற தடம் போல ஒன்றுள்ளது. விழிகளால் தொட முடியாத கால்களால் உணர முடியாத ஓசைகளும் அறியமுடியாத ஒன்று. அச்சமொன்றினாலே தொடர முடிவது. அது ஒன்றே பாதை. திருஷ்டத்யும்னன் சற்று நேரத்தில் ஒன்றை கண்டுகொண்டான். உள்ளத்தை உடலிலிருந்து முற்றிலும் பிரித்து அதில் தனித்தனி அலைகளாக அடித்துக் கொண்டிருந்த எண்ணங்களுக்கு முற்றிலும் கையளித்துவிட்டான். உடல் இயல்பாக அது அறிந்த பாதை ஒன்றை தெரிவு செய்து சென்றது. அந்த தெளிவு அவனை ஆறுதல்படுத்தியது. அதுவரை புரவி மீது அச்சத்தால் விடைத்தவன் போல நிமிர்ந்தமர்ந்திருந்த அவனுடல் சற்றே தளர்வாகி அசைவுகளை வாங்கி இயல்பாக நெளிந்தபடி அமைந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று தொடுத்து முற்றிலும் தொடர்பற்ற வழிகளினூடாக சென்றது உள்ளம். அதைத் தொடர்ந்து வந்த புரவிக்குளம்புகளின் தாளம் அவ்வெண்ணங்களை ஒழுங்கமைப்பதை உணர்ந்தான். பின்பு தன்னிலை உணர்ந்த போது அவ்வெண்ணங்கள் எதிலும் சாத்யகி இல்லையென்பதை உணர்ந்தான். அவன் அரண்மனை அறைகள், துவாரகையின் அரசியர் முகங்கள், துறைமுகத்தின் நாவாய்களில் புடைத்த பெரும்பாய்களில் எழுந்த பூத முகங்கள் என காட்சிகளாகவே அவை அமைந்திருந்தன. ஒவ்வொரு எண்ணக்காட்சியும் சாத்யகியை அவனிடமிருந்து விலக்கி நிறுத்தவே பாவனை கொள்கிறது என்றுணர்ந்தான். ஆனால் ஒவ்வொன்றுக்குப் பிறகும் மாறாஉறுதியுடன் மீண்டும் சாத்யகியையே வந்து தொட்டது சித்தம். தொட்டதுமே துடித்து எழுந்து மீண்டும் பிறிதொன்றில் பாய்ந்தது. நெடுநேரத்திற்குப் பின் உணர்ந்தான், அவன் பாஞ்சாலத்தையும் எண்ணவில்லை. அங்கே விழிநீர் நிறைந்த நோக்காக அவன் விட்டுவந்த சுஃப்ரையைப் பற்றியும் எண்ணவில்லை.

சுஃப்ரை என்ற சொல் அவனை மலரசெய்தது. அவள் நெற்றியின் இருபுறமும் அலையடித்திறங்கிய குழல்சுருளை, அழகிய வட்ட முகத்தை, புரியாத தவிப்பொன்றில் துளித்து நிற்கும் சிறிய விழிகளை, கொழுவிய கன்னங்களை, குமிழ் எழுந்த உதடுகளை மிக அண்மையிலென கண்டான் அப்பெரும்பாலையின் திரைமுழுக்க நிறைப்பதாக அவள் முகத்தை எழுப்பிவிட முடியுமென்று தோன்றியது. புரவியைத் தூண்டி பாய்ந்தெழுந்து அம்முகத்திற்குள் புதைந்து மறைந்துவிட முடியும். இங்கென்ன செய்கிறேன்! நான் செய்வதற்கொன்றே உள்ளது. புரவியை திருப்புவது. துவாரகையின் நகர் நுழைந்து என் உடைமைகளை எடுத்துக்கொண்டு நாவாய் ஏறி பாஞ்சாலம் திரும்புவது. அவளைக் கண்டு சிறிய தளிர்க்கரங்களை பற்றிக்கொண்டு மீண்டு வந்து விட்டேன், என்றும் உன்னுடன் இருப்பேன் என்று சொல்வது.

ஆம், அதுவன்றி பிறிதெதுவும் பொய்யே. இந்நாடகங்கள் அனைத்தையும் நான் நடிப்பது அவளிடமிருந்து என்னை விலக்கிக் கொள்வதற்காக. ஆனால் இந்த ஆறு தன் ஆயிரம் அலைகளால் என்னை அடித்துச் சுழற்றி சென்று அவ்வருவியில் வீழ்த்தப் போகிறது. கை கால்களைத் துழாவி எதிர்நீச்சலிடுகிறேன். இவையனைத்தும் அந்தத் தவிப்பன்றி பிறிதல்ல. ஆனால் இந்த சியமந்தக மணி! இதை மீட்டு மீண்டும் சத்யபாமையிடம் அளித்துவிட்டால் என் பணி முடிந்து விட்டது. இனி ஒரு கணம் இங்கு தங்குவதில்லை. திருஷ்டத்யும்னன் தொலைவில் சாத்யகியை கண்டுவிட்டான். பழுத்த எழுத்தோலைகளை அடுக்குவிரித்ததுபோலத் தெரிந்த பாலையின் மணல்மடிப்புகளுக்குமேல் எழுத்தாணியால் குறிக்கப்பட்ட ஒற்றை எழுத்து போல தெரிந்தது அவனுருவமே என்று விழி உணருமுன்பே சித்தம் அறிந்தது.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 2

கடல் நீர்ப்பரப்பில் படகு ஒழுகுகிறதா நின்றிருக்கிறதா என்றறியாது விழிமயக்கு ஏற்படுவது போல் சாத்யகி மணல் வெளியில் தெரிந்தான். தன் புரவியோசை அவனை எட்டிவிடக்கூடாது என்பதற்காக கடிவாளத்தை இழுத்து நிறுத்திய திருஷ்டத்யும்னன் அவனுக்கும் தனக்குமான தொலைவை விழிகளால் அளந்தான். பாலையில் அத்தொலைவை தன் புரவி எத்தனை நாழிகையில் கடக்கும் என அவனால் கணிக்க முடியவில்லை. பாலையில் விரைவதற்குரிய அகன்ற லாடம் கொண்ட சோனகப்புரவி அது. ஆயினும் பொருக்கு விட்டிருந்த செம்புழுதி வெளியில் கால் புதைய அது தள்ளாடியே வந்தது. உடல் வியர்த்து உருண்டு சொட்ட கடைவாயில் நுரை சல்லடை போல் தொங்க தலை தாழ்த்தி மூச்சிரைத்துக் கொண்டிருந்தது.

திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கி விரைவது பொருள் உள்ளதாக ஆகுமா என்று எண்ணினான். விழிமுன் அவனை நிறுத்தி குளம்புச்சுவடுகள் அழியாமல் பார்த்துக் கொள்வது ஒன்றே வழி என்று பட்டது. பாலையைச் சூழ்ந்த எந்தச் சிற்றூரிலும் அவனுக்கு அடைக்கலம் கிடைக்க வாய்ப்பில்லை. மறுகணம் அவன் தன்னை முன்னரே பார்த்து முழுவிரைவில் விலகிச் சென்று கொண்டிருக்கிறானோ என்ற எண்ணம் எழுந்தது. தன் புரவி விரைவழியாது தொடராவிட்டால் விழி எல்லையில் இருந்து அவன் விலகிச் சென்றுவிடக் கூடும்.

குனிந்து புரவியின் வாயில் தொங்கிய நுரைக் கூட்டை கையால் தொட்டு வழித்து அதன் கண்களைச் சுற்றி தடவினான். வெப்பமாறி அது களைப்புடன் பெருமூச்சுவிட்டது. அப்போது கீழ்வானில் காலை ஒளி கசிந்து எழத்தொடங்கிவிட்டிருந்தது. முகில்சிதர்கள் மூடிய வானில் ஊறிப் பரவிய ஒளி அதை அழுக்கு படிந்த வெண்பட்டுப் பரப்புபோல ஆக்கியது. அதுவரை தெரியாது இருந்த பாலை மணலின் மடிப்புகளும் வளைவுகளும் துலங்கத் தொடங்கின. வளைவுகள் பஞ்சாலானவை போல மென்மையை விழிக்கு காட்டின.

இன்னும் சற்று நேரத்தில் பாலைநிலம் கண்கூசும் ஒளியை தேக்கிக்கொள்ளும். வெயில் எழும்போது பாலையின் உள்ளுறைந்த அனல் பெருகி காற்று உருகி கொதிக்கத் தொடங்கும். அப்போது புரவி மேலும் களைத்துவிடும் என்று திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அத்திசையில் எங்கு பாலைச்சுனை இருக்கிறதென்று அவன் அறிந்திருக்கவில்லை. நச்சுச்சிலந்தி என நாளவன் அமர்ந்திருக்கும் பெரிய வலை இப்பாலை.

முடிவெடுக்க முடியாமல் அவன் கடிவாளத்தைப் பற்றியபடி அங்கேயே நின்றிருந்தான். தலைக்கு மேல் எங்கோ ஒரு முகில் விலக அருகே ஒரு மானுட உருவம் எழுவது போல அவன் நிழல் நீண்டு சரிந்தது. அதை குனிந்து நோக்கி பொருளற்று சில கணங்கள் விழித்துவிட்டு மீண்டும் நோக்கியபோது பாலையின் அலைகளுக்கு அப்பால் சாத்யகியின் உருவம் அசைவற்று இருப்பதாக உணர்ந்தான். பாலையில் அவன் விழுந்துகிடக்கிறான் என்று தோன்றியது. புரவியுடன் அவனை அம்பெய்து கொன்று எவரேனும் அந்த மணியை கவர்ந்து சென்றிருக்கக் கூடுமோ? புரவி நின்றிருக்கிறதா விழுந்து கிடக்கிறதா என்று அத்தனை தொலைவில் விழி காட்டவில்லை. விழியென்பது எத்தனை திறனற்ற கருவி! அவ்விழியுலகு உருவாக்கும் உலகென்பது எத்தனை பெரிய பொய்!

எதற்கு இக்கணம் இவ்வெண்ணங்கள்? இத்தருணத்தை இன்னும் சில நொடிகள் கடத்திச் செல்ல விழைகிறேன். சவுக்கொன்று பிடரியை அறைந்தது போல திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். மிக மெல்ல அவனுடைய உருவம் பெரிதாகிக் கொண்டிருந்தது. விழிமயக்கா எனத் தத்தளித்து இல்லை என தெளிந்தான். சிறு வண்டு ஒன்று உருப்பெற்று அணுகுவது போல.

அவன் புரவி அதை அறிந்துகொண்டது. நின்ற இடத்திலேயே கால் மாற்றி வைத்து வால் சுழற்றி மெல்ல செருக்கடித்தது. திருஷ்டத்யும்னன் உடல் தளர்ந்தான். திரும்பி வருகிறான். எவரோ சியமந்தகத்தை அவனிடம் இருந்து கவர்ந்து சென்றிருக்க வேண்டும். துரத்தி அதை வென்று மீட்டு வருகிறான். அவனைப்பற்றி எண்ணிக்கொண்ட அனைத்தும் பொய். அந்த ஆறுதல் எழுந்த மறுகணமே அதற்குள் இருந்து கிழித்து மேலெழுந்து வந்த எண்ணம் ஒன்று பெரிதாகியது. கவர்ந்து சென்றவனிடம் இருந்து சியமந்தகத்தை மீட்டிருப்பான் என்று என்ன உறுதி? கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் வருகிறானா? அந்த அலையைக் கிழித்து எழுந்தது அடுத்த எண்ணம். ஒரு வேளை எங்கோ சியமந்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு கதை ஒன்று சொல்ல விழைகிறானா?

மூடன்! இந்தச் சிறு நீலமணியைக் கொண்டு இவன் எதை அடையப் போகிறான்? கோட்டையும் காவலும் கருவூலமும் கொண்ட அரசருக்கே அருமணிகள் பெரும் சுமை. இல்லை, இது ஒரு பெருந்தெயவம். இவனுக்கு இந்த யாதவமணி நாடொன்றையும் சிறு குலச்சூழல் ஒன்றையும் அருளக்கூடும். அந்தச் சொல்லுறுதி அம்மணிக்குள் ஒளிக்கப்பட்டுள்ளது. அதன் நீல விழிக்குள் ஓடும் நீரோட்டம் என்பது அச்சொல்லளிப்புதான்.

திருஷ்டத்யும்னன் சாத்யகியின் தோற்றம் அணுகி வருவதை உறுதி செய்துகொண்டான். நினைத்ததைவிட விரைவாக அவன் வந்து கொண்டிருந்தான். விழி தொடும்போது நெடுந்தொலைவு என காட்டியது. எண்ணி இருந்ததைவிட சடுதியில் குறைந்தது. அவன் நீள்நிழல் ஒருபக்கமும் புழுதிப்புகைவால் இன்னொரு பக்கமும் என இரு சிறகுகளாக விரிய சிறுபூச்சியாக பின் பறவையாக சாத்யகி உருவம் கொண்டான். இங்கு வந்து என்ன சொல்லப் போகிறான்? எச்சொல் எடுத்தாலும் அதில் வஞ்சத்தின் களிம்பு படிந்திருப்பதை உணராமல் இருப்பானா? மூடா, இன்று நீ செய்தது எதுவும் பிழையே. கிளம்பிச் செல்! பிறிதொருமுறையும் என் முன் எழாது இரு! செல்! சென்று விடு! விலகு! தயவு கூர்ந்து விலகு! உடல் பிளந்து எழுந்தது வெம்மையென சூழும் ஒரு மன்றாட்டாக அச்சொல். விலகு! வராதே!

திருஷ்டத்யும்னன் தனக்குப் பின் தொலைவில் எங்கோ புரவியின் குளம்படியோசையை கேட்டான். ஈரமுரசுத்தோலில் கழிகள் ஒலிப்பதுபோல, இருண்ட அறையில் வௌவால்களின் சிறகடிப்பு போல அவ்வொலி கேட்டது. சற்று நேரத்தில் வட திசைச் சரிவில் அவ்வொலி எழுந்தது. செவி கூர்ந்து நோக்கி நிற்கவே அது சென்று எதிரே எழுந்து வந்துகொண்டிருந்த உருவத்தில் படிந்தது. புரவியின் காலடிகளை, குளம்புகளின் சுழற்சியை காணமுடிந்தது. தாழ்ந்த தலையுடன் கொக்குபோல வந்த கரிய புரவியின் கழுத்தோடு தலைசாய்த்து தொடைகளால் அதன் விலாவைத்தழுவி அமர்ந்திருந்த சாத்யகி உருகி வழிந்தவன் போலிருந்தான்.

பின்பு அவன் குழல்சுருள்கள் எழுந்து காற்றில் பறப்பதை, புரவியின் நாசித்துளைகளை கண்டான். தன்னைச் சூழ்ந்து பறவைகளின் சிறகடிப்பு போல ஒலித்த புரவிக் குளம்புச் சத்தத்தை கேட்டான். திருஷ்டத்யும்னன் சேணத்தில் காலூன்றி தன் புரவியில் இருந்து இறங்கி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். அவன் புரவி தலையசைத்து மெல்ல கனைத்தபடி சற்றே விலகி குனிந்து தரையை முகர்ந்து வால் சுழற்றி உடல் சிலிர்த்தது. அணுகி வந்த சாத்யகியின் புரவியின் குளம்புகள் விரைவழிந்தன. தரையிறங்கும் பறவையென அது நெட்டுக்கால் தூக்கி வைத்து வந்தது.

ஒவ்வொரு குளம்பும் தனித்தனியாக ஒலிக்க அது அணுகுவதை கணம் கணமென கண்டான். சாத்யகி கடிவாளத்தை இழுக்க புரவி தலைதூக்கி முகம் வளைத்து மெல்ல கனைத்து பக்கவாட்டில் திரும்பியது. வால் சுழற்றி முன்னங்கால்களை இரு முறை மாற்றி உதைத்து மூச்சுசீற வாய்நுரை துளிகளாகிச் சொட்ட நின்றது. கடிவாளத்தை இடக்கையால் பற்றியபடி கால்சுழற்றி மணலில் தாவி இறங்கிய சாத்யகி பெருமூச்சுவிட்டபின் இடையில் கையூன்றி அசைவற்று அவனை நோக்கியபடி நின்றான்.

திருஷ்டத்யும்னன் அசைவின்றி நிற்பதன்றி வேறெதுவும் அங்கு ஆற்றவியலாது என்று எண்ணினான். அவ்வெண்ணம்கூட அவன் அசைவற்ற உடலுக்கு அப்பால் எங்கோ எழுந்தது. கையில் கடிவாளத்தை உணர்ந்த சாத்யகி அதை மீண்டும் புரவியின் மேலே வீசினான். அவ்வசைவால் கலைந்த சித்தம் முடிவெடுக்க உறுதியான காலடிகளுடன் நடந்து அணுகி வந்தான். அவன் அடிவைப்பிலிருந்த உறுதி திருஷ்டத்யும்னனில் சிறு ஐயத்தை கிளப்பியது. அறியாது அவன் கை உடைவாளின் உலோகப்பிடியை தொட்டது. விழியால் சாத்யகியின் இடையில் இருந்த உடைவாளைத் தீண்டியபின் நிமிர்ந்து அவன் கண்களை நோக்கினான்.

நிலைகுத்திய நோக்குடன் கனவில் எழுந்தவன் போல சாத்யகி வந்து கொண்டிருந்தான். அவன் காலடிகள் செம்மணலில் புதைந்து மணல் பொருபொருக்கும் ஒலி எழுப்பின. குறடுத் தடங்கள் அவனுக்குப் பின்னால் இரு ஆமைகளின் நிரைகளாக நீண்டன. அவன் மூச்சு தன்னை தொடும் என திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகியின் விழிகள் அவன் விழிகளை தொட்டன. ஒரு சொல்கூட இல்லாமல் இரு கூர்வேல் நுனிகள் என தெரிந்தன.

திருஷ்டத்யும்னன் தன் இதழ்களை நீவிக் கொண்டான். இதயம் ஒலிப்பதை செவிகளில் கேட்டான். 'அஞ்சுவது நானா? என்ன விந்தை!' என எண்ணிக் கொண்டான். இத்தருணத்தை இத்தனை குளிர்ந்த கரிய பெரும்பாறையென என் மேல் ஏன் ஏற்றிவைத்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வென்று மேல் எழ வேண்டியவன் நான். ஆனால் நிழலென தரையில் விழுந்து நீண்டு கிடக்கிறேன்.

சாத்யகி “வணங்குகிறேன் பாஞ்சாலரே. தங்களிடம் பிழை ஒப்புதல் செய்யவே வந்தேன்” என்றான். “தாங்கள் எனக்களித்த மணியைக் கவர்ந்து தப்பிச்சென்றேன். செல்லமுடியாதென்று உணர்ந்து அடிபணிவதற்காக மீண்டேன். இதை தங்களிடம் ஒப்படைத்து சிறைப்படுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “என்ன நடந்தது?” என்றான். அவன் குரல் வேறு எவருடையதோ என ஒலித்தது.

“நேற்று இந்த மணியை தாங்கள் என்னிடம் அளித்துச்சென்ற பிறகு என் அறைக்குச் சென்றேன். பின்பு அதைக் கவர்ந்து எனக்கென வைத்துக் கொள்ள கரவெண்ணம் கொண்டேன். உடனே இதை எடுத்துக் கொண்டு பயணப்பைகளுடன் என் புரவியில் தப்பி ஓடினேன். துவாரகையின் கருவூலத்தைக் கவர்ந்த கள்வன் நான். பிழையுணர்ந்து திரும்பி வந்துள்ளேன்” என்றான். அடைத்தகுரலில் “யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி தன் கச்சையில் இருந்த அப்பொற் பேழையை எடுத்து நீட்டினான்.

திருஷ்டத்யும்னன் அந்தக் கையை அது என்னவென்றே அறியாதவன் போல நோக்கினான். வலக்கை பொற்பேழையுடன் திருஷ்டத்யும்னனிடம் நீட்டப்பட்டிருந்தது. அதில் நடுக்கம் ஏதும் இருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் கை அதை வாங்குவதற்கு எழவில்லை. அவன் நெஞ்சு அளித்த ஆணையை அவன் கை பெற்றுக் கொள்ளவில்லை. சாத்யகி பெற்றுக் கொள்ளும்படி பேழையை சற்று ஆட்டினான். அவ்வசைவையே ஆணையாக ஏற்றுக்கொண்டு திருஷ்டத்யும்னனின் வலக்கை அவனறியாமல் சற்று உயர்ந்தது.

அக்கணம் அவன் விழி திரும்பி சாத்யகியின் இடக்கையை நோக்கியது. சாத்யகி அக்கையால் தன் உடைவாளை உருவி தூக்குவதற்குள் பாய்ந்து அவன் கணுக்கையை பற்றிக் கொண்டான் திருஷ்டத்யும்னன். தன் இடக்காலால் ஓங்கி சாத்யகியின் ஊன்றிய வலக்காலை உதைக்க நிலை தடுமாறி சாத்யகி பின்னால் விழுந்தான். பிடிக்குள் நின்ற சாத்யகியின் உடைவாளைப் பற்றி திருப்பி தூக்கி வீசினான். அவன் மார்பின்மேல் முழங்காலை ஊன்றி இடது கணுக்காலை தன் காலால் அழுத்தி மணலுடன் அவனை ஆழ அழுத்தினான்.

உலோகம் மென்மணலில் உரசிச் செல்லும் ஒலியுடன் சென்ற வாள் மணலைச் சீவியபடி பாதி புதைந்தது. பொற்பேழை சாத்யகியின் கையில் இருந்து நழுவி மணலில் முக்கோணமென புதைந்து கிடந்தது. தன் பற்கள் வலிப்பு வந்தது போல கிட்டித்துக்கொள்ள கழுத்து தசைகள் இழுத்து நின்றதிர “என்னை உயிர்துறக்க விடுங்கள் பாஞ்சாலரே! நட்பின் பொருட்டு உங்கள் கால் தொட்டு மன்றாடுகிறேன். தன்னிறப்பின் சிறுமதிப்பையேனும் நான் கொள்ள அருளுங்கள். இத்தருணத்தில் என் சங்கு அறுத்து என் குருதி வீழ்த்தினேன் என்றால் சற்றேனும் என் குலம் ஏற்றுக்கொள்ளும்” என்றான்.

“யாதவரே யாதவரே” என்று இடறிய குரலில் அழைத்தான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “நான் வாழ மாட்டேன். முன்னரே இறந்துவிட்டேன். இனி உங்கள் வஞ்சத்தின் பொருட்டு இவ்வுடல் எஞ்ச வேண்டும் என்றால் அவ்வாறே ஆகுக” என்றான். “யாதவரே, என்ன நிகழ்ந்தது உங்களுக்கு?” என்றான் திருஷ்டத்யும்னன். “சதுக்கப் பூதம் முன் சொன்னீர்கள். மாறாச் சொல் எதையும் மானுடர் சொல்லலாகாது என” என்றான் சாத்யகி. “அச்சொல்லின் பொருளை இப்போது உணர்கிறேன்.”

திருஷ்டத்யும்னனின் பிடி தளர்ந்தது. சாத்யகியின் உடல் மேலிருந்து அவன் எழப்போனான். மறுகணம் உடைந்து அவன்மேல் விழுந்து அவன் தோள்களைச் சுற்றி தன் கையால் வளைத்து நெஞ்சோடு இறுக அணைத்து அவன் காதில் “யாதவரே, என் நெஞ்சை இன்னுமா நீர் உணரவில்லை?” என்றான். உலோகம் கிழிபடும் ஒலியுடன் சாத்யகி அவனை தழுவிக் கொண்டு தோளில் முகம் புதைத்து அழத் தொடங்கினான். அவ்வுடல் தன் கைக்குள் அதிர்ந்து கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.

வெய்யவிழிநீர் தன் தோள்களையும் மார்பையும் நனைத்து வழிந்ததை, எரியும் பச்சைமரம் வெடிப்பதுபோல் விம்மல்கள் எழுந்ததை அறிந்தான். ஒரு அழுகை காலத்தை கற்பாறைகள் என மாற்றி நிற்கச் செய்துவிடும் என பின்பு நினைவு மீண்டபோது உணர்ந்தான். சாத்யகியின் குழலை அள்ளிப் பற்றித் தூக்கி “யாதவரே, இப்பிழை என் நெஞ்சுக்கு பெரிதெனப் படவில்லை. இது ஒரு கணம் நீர் கொண்ட உளப்பிறழ்வு மட்டுமே. இவ்வுலகில் இதை நான் மட்டுமே இன்று அறிந்துள்ளேன். பிறிதெவரும் அறியப் போவதில்லை” என்றான்.

“யாரும் அறியாவிட்டால் என்ன? என் நெஞ்சு அறிந்துள்ளதே?” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “நீர் இங்கு விழைவது இறப்பென அறிகிறேன். ஆனால் உமது இடக்கரம் அவ்வாள் நுனியை தொட்டபோது என் நெஞ்சு உரைத்த ஒன்றை நான் சொல்லியே ஆகவேண்டும். யாதவரே, இப்புவியில் மானுடர் எவரும் இறப்பை விழைவதில்லை. எதுவரினும் எஞ்சி வாழ்வதென்பதே உயிர்களின் அடிப்படை விழைவு. ஆனால் ஒவ்வொருவருக்கும் அதுவன்றி ஒரு கணமும் வாழமுடியாது என்று சில உறவுகள் இருக்கும். இப்புவியில் இன்றுவரை நான் அறிந்ததில் உங்கள் உறவொன்றே அத்தகையது. நீர் மாய்க்கும் உயிர் உம்முடையது மட்டுமல்ல” என்றான்.

சாத்யகியின் உடல் வாள் இறங்கியது போல அதிர்ந்தது. திருஷ்டத்யும்னனின் முழங்கை மேல் கைவைத்து பற்றிக்கொண்டு விழிதூக்கி அவனை நோக்கி “ஆம்” என்றான். “நீர் இன்றி நான் இல்லை யாதவரே. இது நட்பல்ல. அதற்கப்பால் ஒரு சொல் இருக்கும் என்றால் அது.” எத்தனை எளிய சொற்களில் எதை சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று நெஞ்சு துணுக்குற திருஷ்டத்யும்னன் சாத்யகியின் கையை உதறி எழுந்துகொண்டான். உடலில் இருந்து மணல் உதிர ஆடையை உதறி திரும்பி நான்கு எட்டு எடுத்து வைத்து நின்றான். ஒளிகொண்ட வானத்தின் கீழே அலை அலையென எழுந்து உறைந்திருந்தது பாலை.

“வீண் மெல்லுணர்வொன்றை உங்கள் மேல் சுமத்தவில்லை யாதவரே. நான் உணர்வதை நீங்கள் உள்ளூர உணரவில்லை என்றால் உங்களுக்குத் தடையில்லை. அங்கு கையருகேதான் உங்கள் வாள் கிடக்கிறது” என்றான். சாத்யகி இரு கைகளையும் மணலில் ஊன்றி மெல்ல எழுந்து அமர்ந்தான். அவர்கள் நடுவே பாலையின் காற்று மணல் உதிரும் மெல் ஒலியுடன் நெடுநேரம் கடந்து சென்றது.

திருஷ்டத்யும்னன் “என்னுடன் வாருங்கள் யாதவரே! இப்புவியில் நான் இருக்கும் காலம் வரை இருங்கள். என்றோ ஒரு நாள் இன்று நான் உங்கள் முன் நின்று விடும் இந்த விழிநீருக்கு ஈடு செய்யுங்கள். பிறிதொரு களம் வரலாம். அங்கு நான் பெரும் பிழைசெய்து களம்படக்கூடும். அக்கணம் எண்ணி என் நெஞ்சமர ஒரு முகம் வேண்டும் யாதவரே. நெஞ்சறிந்த என் இளமை முதல் என்னை அச்சுறுத்தும் கொடும்கனவுகளில் மெய்த்துணையென இன்று உங்கள் கை உள்ளது. அதை இழக்க நான் விழையவில்லை” என்றான்.

சாத்யகி பெருமூச்சு விட்டான். மீண்டும் ஒரு பெருமூச்சுவிட்டு எழுந்து கைகளால் குழலைக் கோதி பின்தள்ளி ஒரு முடிச்சரடை எடுத்து அதை கட்டிக்கொண்டான். பின் திரும்பிச்சென்று தன் உடைவாளை எடுத்து உறைக்குள் இட்டான். அந்த உலோக ஒலி சிறு பறவை ஒன்றின் அகவல் போல ஒலிக்க திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி கன்னங்களில் வழிந்த கண்ணீருடன் புன்னகைத்தான். சாத்யகி உதடுகளை இறுக்கி கண்ணீர் வழிய மென்நகை புரிந்தான். “என்னுடன் இரும் யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்றான் சாத்யகி.

இரு புரவிகளும் இணையாக தளர்ந்த காலடிகள் எடுத்துவைத்து திடஒளி போல கிடந்த பாலைநிலத்தின் அலைகளின் மேல் நடந்தன. புலரியில் செந்நிறம் கொண்டிருந்த மணல் எப்படி அத்தனை வெளுத்தது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். அருகே நோக்கி பின் விழி தூக்குகையில் மணல்வளைவுகள் கடல் போலவே அலைபாய்ந்தன. தொடுவான்கோடு புகைக்கு அப்பாலென நெளிந்தது. மிகத் தொலைவில் ஒரு பாலைச் சோலை இருக்கக்கூடுமென பறவைக் குரல்கள் காட்டின. வரும்போது தெரியவில்லை. திரும்பும்போது துவாரகையின் தோரண வாயில் நெடுந்தொலைவில் எங்கோ என நெஞ்சு உணர்ந்தது. நான்கு திசைகளிலும் மானுடம் இன்னமும் தோன்றவில்லை என்ற உளமயக்கு உருவாக்கும் வெறுமையே சூழ்ந்திருந்தது.

நெடுந்தூரம் வந்த பின்னரே சாத்யகியிடம் ஒரு சொல்லும் பேசவில்லை என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். ஆனால் பிறிது எதையும் பேச முடியாது என்றும் தோன்றியது. இருமுறை திரும்பி நோக்கி சொல் எழாது தலை அசைத்துவிட்டு பின்பு முடிவெடுத்து திரும்பி “என்ன நிகழ்ந்தது?” என்றான். சாத்யகி உலர்ந்த உதடுகளை நனைத்தான். “சொல்லும், மொழியாக மாறும் உணர்வுகள் நமக்கு வெளியே பொருட்களென ஆகின்றன. அவற்றை ஐம்புலன்களாலும் காணமுடியும். ஆராயமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி மெல்லிய குரலில் “நான் எதையும் இப்போது கோவையாக உணரவில்லை பாஞ்சாலரே” என்றான். “அறைதிரும்பி குறுபீடத்தில் அந்த மணியை வைத்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தேன். அதை திறந்து நோக்க வேண்டும் என்று என் மிக அருகே நின்ற ஓர் அறியா இருப்பு என்னிடம் ஆணையிட்டது. திரும்பலாகாது என்று பல்லாயிரம் முறை எனக்கு சொல்லிக் கொண்டேன். திற திற என்று ஆணையிட்டபடி அவ்விருப்பு ஆடிப் பாவைகளென தன்னைப் பெருக்கி என்னைச் சூழ்ந்தது. எடைதாளாது என் அகம் முறிந்த கணத்தில் குனிந்து இதைத் திறந்தேன். உள்ளே அந்த மணி ஒளி சுடர்ந்து கொண்டிருந்தது. அதில் இருந்து விழி விலக்க முடியவில்லை. பின்பு நான் எண்ணியது எல்லாம் ஒன்றே. அந்த மணி எனக்கு மட்டுமே உரியது. பிறர் எவருக்கும் அதன் மேல் விழி தொடும் உரிமைகூட இல்லை. எனக்கு என்னும் ஒற்றைச் சொல்லாக மட்டுமே அக்கணத்தை அவ்வுணர்வை சொல்வேன்.”

திருஷ்டத்யும்னன் தன் இடையில் இருந்த சியமந்தகத்தைத் தொட்டு “இப்போது என்னையும் இது அச்சுறுத்துகிறது யாதவரே” என்றான். “யாதவர்கள் எவரையும் இது விட்டு வைக்காது” என்றான் சாத்யகி. “இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். அவனை நோக்காது “உம்மிடம் நான் இதை கொடுத்ததே ஓர் இரவு இதை வைத்திருக்கும் ஆற்றல் எனக்கில்லை என்று உணர்ந்ததால்தான். இளைய யாதவருக்கு என ஐந்து தொழும்பர் குறிகளைப் பெற்ற உடல் கொண்ட உம்மால் இதன் மாயத்தை வெல்ல முடியும் என்று எண்ணினேன்” என்றான்.

“பாஞ்சாலரே” என்று வியப்புடன் அழைத்தபடி சாத்யகி அருகே வந்தான். “எண்ணிப் பாரும். நீர் இதை கவர்ந்து சென்றிருப்பீர் என்று எப்படி எண்ண முடிந்தது என்னால்? நீர் சென்ற வழியை நான் இத்தனை தெளிவாகக் கண்டடைந்தது எப்படி? யாதவரே, நீர் ஆற்றிய இதை நான் பல முறை கனவில் நிகழ்த்திவிட்டேன்” என்றான் திருஷ்டத்யுமனன். சாத்யகி பெருமூச்சுவிட்டான். “இதை பிறிதொருவர் அறிய வேண்டியதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “அறியாமல் இருப்பார்களா?” என்றான் சாத்யகி. “அறிவார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் மிகைவிழைவாலேயே இந்த மணியை அணுகுகிறார்கள். அகக்கனவில் இதைக் கவர்ந்து தப்பி ஓடாத எவரும் இந்நகரில் இருக்க மாட்டார். அனைவரும் அறிந்த ஒன்றென்பதனாலேயே எவராலும் சொல்லப்படாத ஒன்றாக இது எஞ்சும். அவ்வாறே இருக்கட்டும்.”

திருஷ்டத்யும்னன் திரும்பி சிரித்தபடி “கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?” என்றான். சாத்யகி புன்னகைத்தான்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 3

தோரண வாயிலின் பெருநிழல் நாணிழுத்து வளைக்கப்பட்ட அம்பு போல் மணலில் விழுந்து கிடந்தது. அதன் மேல் ஏறி மற்போருக்கு காலூன்றி நிற்கும் வீரனென தெரிந்த அணித்தூண்களின் நடுவே புகுந்தது வணிக வண்டிகளின் நிரை. திருஷ்டத்யும்னன் அறியாமல் தன் கை கடிவாளத்தை இழுக்க புரவி விரைவழிவதை உணர்ந்தான். திரும்பி நோக்கிய போது சாத்யகியின் புரவியும் அவ்வண்ணமே விரைவழிவதைக் கண்டு ‘யாதவரே நாம் விரும்பாததை நமது முகங்கள் வெளிக்காட்டவேண்டியதில்லை’ என்றான்.

திருஷ்டத்யும்னனின் விழிகளைத் தவிர்த்த சாத்யகி ’ஆம்’ என்றான். ஆனால் அவன் முகம் தாள முடியாத வலி எழுந்தது போல் இழுபட்டு இதழ்கள் கோணலாகி இருந்தன. ’யாதவரே, இந்நகருக்கு நாம் காவல் வீரர்கள் மட்டுமே மண்ணின் களியாட்டம் எதிலும் காவலனுக்குப் பங்கில்லை .என்றோ ஒரு நாள் அதற்காக குருதி சிந்துவது மட்டுமே அவனுக்கிருக்கும் உரிமை. அவனுடைய பிழைகளையும் வீழ்ச்சிகளையும் எல்லாம் அக்குருதி ஈடு செய்துவிடும்” என்றான் திருஷ்டத்யும்னன் ”ஆம்” என்று சாத்யகி புன்முறுவல் செய்தான் அச்சிரிப்ப்பு சற்றும் தெரியாமல் சற்றே கலங்கியது போலிருந்தன அவன் விழிகள்.

தோரணவாயிலை அணுகி அதன் நிழலை நோக்கிச் சென்றபோது அச்சம் கொண்டது போல் தன் உடல் மெய்ப்பு கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். எத்திசையிலிருந்தும் நஞ்சு நா கொண்ட அம்பு ஒன்று வந்து தைக்கக்கூடுமென முதுகுத்தோல் விதிர்த்து காத்திருந்தது. பெருநிழலின் எல்லையைக் கடந்து உள்ளே சென்ற போது அதன் குளிர்ந்த பேரெடை தோளெலுபை அழுத்தி முறிக்கமுயன்றது. மறுபக்கம் சென்றபின் திரும்பி உள்ளே வந்த சாத்யகியை நோக்கிய போது நிழல் அவனை இரண்டாக வெட்டி தனித் துண்டுகளாக உள்ளே அனுப்புவதைக் கண்டான்.புன்னகையுடன் ”நிழலின் எடை” என்றான் திருஷ்டத்யும்னன். அவன் சொன்னதை முற்றிலும் உணர்ந்து கொண்டு புன்னகைத்து ”ஆம், விண்சொடுக்கும் சாட்டை”என்றான் சாத்யகி.

“சில தருணங்களில் வாள்நிழலின் கூர்மையை நாம் உணரமுடியும் யாதவரே” என்றான் திருஷ்டதுய்ம்னன். சாத்யகி பெருமூச்சுவிட்டான்.ஆனால் தோரணவாயிலைக் கடந்து அரசப் பெருவீதியில் நுழைந்து கோட்டை முகப்பை நோக்கி சென்ற போது தன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல அவிழ்ந்து உள்ளமும் எளிதாவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். இறுக முறுக்கிய கரவுப்பொறிகள் போல நிரப்பியிருந்த ஒவ்வொரு சொல்லும் புரியவிழ்ந்து பிடி நெகிழ்ந்து உதிர்ந்து மறைய கனிகள் விடுபட்ட கிளை என உள்ளம் எழுந்தது. அதன் இலைகள் காற்றில் ஆடின.

சுஃபரையின் நினைவு வந்தது. அவளுடைய நீண்ட நீர்ப்படல விழிகள். ஒளிவிடும் மென்மையான கொழுங்கன்னங்கள். சிற்மூக்கு நுனியில் மையம் கொண்ட வட்டமுகம்.அவன் திரும்பி சாத்யகியிடம் ”நான் இப்போது எதை எண்ணிக் கொண்டிருக்கிறேனென்று தங்களால் சொல்லமுடியுமா ?’என்றான். சாத்யகியின் கண்களில் முதல் முறையாக சிரிப்பொன்று வந்தது. ”சிறிய சிரிக்கும் விழிகள் விரிந்த வட்ட முகம்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து ”குமிழ் உதடுகள்” என்றான். ”ஆம் ”என்றான் சாத்யகி

சாத்யகியும் எளிதாகிக் கொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான் ”எவ்வண்ணம் என்று அறியேன் இக்கட்டுகளில் நான் அவளை நினைப்பதில்லை. அது விலகிச் சென்று என் உள்ளமும் உடலும் எளிதாகும்போது அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். ”இக்கட்டுகளில் உங்கள் ஆழுள்ளம் தன்னை அறியாது அவளைத் தெரிவு செய்கிறது. அதைக் கொண்டு இக்கட்டுகளை நிகர் செய்து கொள்கிறது. பின்னரே உங்கள் அலையுள்ளம் அதை அறிகிறது” என்றான் சாத்யகி. ”அப்படி தங்களுக்குள் எழும் முகம் ஒன்றில்லையா யாதவரே?”என்றான் திருஷ்டத்யும்னன். ”உள்ளது அந்த முகத்தையே இப்போது எண்ணிக் கொண்டிருக்கிறேன் ”என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் நோக்க ”நீல முகம்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்து ”ஆம் அதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும்” என்றான்

”பிறிதொன்றில்லை பாஞ்சாலரே இப்பிறவியில் அவ்வொரு முகம் மட்டுமே” என்றான். பின்பு ”இன்று அதன் முன் எப்படி சென்று நிற்பேன் என்ற எண்ணமே தோரண வாயில் வரை என்னை அழுத்தியது உள்ளே நுழைந்த மறுகணம் ஓர் எண்ணம் வந்தது. அவரறியாத எதையாவது என்னுள்ளே வைத்திருந்தேன் என்றாலல்லவா நான் அஞ்சி தயங்க வேண்டும் ?அவரறியாத எதுவும் இங்கில்லை ஆடையின்றி அகத்தை கொண்டு நிறுத்தும் ஆலயமுகப்பு அவர் விழிகள்.அன்னை முன் மலம்பரவிய உடலுடன் சென்று நிற்காத மைந்தருண்டா என்ன?என் இருள்களும் இழிவுகளும் மேலும் துலங்கட்டும் அவ்விடுதலை என்னை மேலும் ஆற்றல் கொண்டவனாக்கும்” என்றான். பெருமூச்சுடன்” அவ்வெண்ணம் எழுந்ததுமே என் உள்ளம் மலர்ந்துவிட்டது. இனியதொரு நிகழ்வுக்காக சென்று கொண்டிருப்பவனாக உணர்கிறேன். அவர் முன் நின்றபின் காலையில் முதற்சிறகு விரித்து எழும் பறவை என என்னை அறிவேன்”

திருஷ்டத்யும்னன் “நானும்” என்றான். பின்பு நகைத்தபடி ”உண்மைதான் நீர் உரைக்கும்போது நானும் உணர்கிறேன், எங்கேனும் ஒரு விழி முகப்பில் முற்றிலும் ஆடையின்றி என் உள்ளத்தைக் கொண்டு விரிக்க முடியுமென்றால் அது சுஃப்ரையிடம் மட்டுமே. எனக்கு அவள் முதற்பொருளெனப்படுவது அதனால்தான்” சாத்யகி ”மத்ர நாட்டு அரசியை மணப்பது குறித்து என்ன முடிவு எடுத்துளீர்?” என்றான். திருஷ்டத்யும்னன் ”அதைப்பற்றி பேசத்தான் அக்ரூரரை நாடிச்சென்றேன். அதை எவ்வண்ணமோ அவரும் உணர்ந்திருக்கக் கூடும், கோசல நாட்டு அரசியை இளைய யாதவர் மணம் கொண்ட கதையை விரித்துரைத்தார் அதில் எனக்கான விடை இருந்தது”

சாத்யகி என்ன என்பது போல் நோக்கினான். ”நான் அரச குலத்தவன். அரச மகள் ஒருத்தியை மணக்கையிலேயே அரசர் நடுவே எனது மணம் பொருள் உள்ளதாகிறது. பெரும்புகழ் துவாரகையின் தலைவனால் மணக்கப்பட்டும் கூட காளிந்தி அரசியாகவில்லை. எளிய மீனவப்பெண்ணாகவே இங்குளோர் அனைவராலும் பார்க்கப்படுகிறார். என் தோள் சேர்வதனால் சுஃப்ரை தன் குலத்தை இழப்பதில்லை. விறலியும் பரத்தையுமாகவே அவள் பார்க்கப்படுவாள்” சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு அச்சொற்கள் பொருள்படவில்லை என்று தோன்றியது

“என்றோ ஒரு நாள் எங்கோ ஒரு மண்ணை ஆளவேண்டுமென்ற விழைவுதான் என்னை க்ஷத்திரியனாக்குகிறது. அவ்விழைவுக்கு உகந்தவள் சல்லியரின் மகளே .மத்ரம் எனும் நட்பு நாடு எனக்குத் தேவை. அவர் அளிக்கும் மகட்செல்வம் எனக்கு மட்டுமென உடனிருந்தாக வேண்டும். என்றாவது களம் புகுந்தால் சல்லியரின் திறன்மிக்க வாள் எனக்குத் துணை வரவும் வேண்டும்” என்று திருஷ்டதுய்ம்னன் தொடர்ந்தான்.சாத்யகி ”இத்தனை தெளிவான் சொற்களில் இம்முடிவை சொல்வது நிறைவளிக்கிறது பாஞ்சாலரே .இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை.” என்றான். “ஆம் இன்றே நான் எந்தைக்கு மறுஓலை அனுப்பவிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கோட்டை வாயிலைக்கடந்து நகர் நடுவே வளைந்து சென்ற பெரும்பாதையின் முதற்புரியில் அவர்களின் புரவிகள் சீரான குளம்படித் தாளத்துடன் மேலேறின. சாத்யகி ”ஒவ்வொன்றும் இத்தனை தெளிவாக எப்போதும் இருந்ததில்லை. ஒவ்வொரு எண்ணமும் முழுமை கொண்ட சொற்களால் ஆனதாக உள்ளது. உயர் அழுத்த நெருக்கடி ஒன்றுக்கு பின்னரே இத்தெளிவு கை கூடும் போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் ”ஆம் நானும் அதையே எண்ணினேன் ”என்றான். சாத்யகியின் புரவியின் நிழல் தன் புரவியின் நிழலுடன் இணைந்து ஒன்றாவதை திருஷ்டத்யும்னன் கண்டான். எட்டுக்கால்கள் கொண்ட பெரிய பூச்சிபோல இரண்டு தலைகளுடன் சென்றது அது,

அரசப்பெரும்பாதையின் எட்டாவது வளைவில் துவாரகையின் துணைப்படைத்தலைவன் விஜயவர்மன் தன் கரும் புரவியில் விரைந்து வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அதில் இயல்புக்கு மாறான ஏதுமில்லை என்ற போதிலும் முதற்கணத்திலேயே அவன் தன்னை நோக்கி வருவதை அகம் உணர்ந்ததெப்படி என்று வியந்தான் புரவியின் கடிவாளத்தை இழுத்தபடி காத்து நின்றபோது அவ்வெண்ணத்தையே சாத்யகியும் அடைந்திருப்பதை அவன் தன் புரவியை இழுத்து நிறுத்தியதிலிருந்து தெரிந்தது. விஜயவர்மன் அவர்களை பார்த்தபின் விரைவிழந்தான். அவனது புரவியின் குளம்புகள் பாடல் தேய்ந்த நிலையில் கிணைப்பறை மேல் தட்டி அமையும் விரல்கள் போல தரையில் பாவிய கருங்கல்பாளங்கள் மீது விழுந்தன. அருகே வந்து கடிவாளத்தை இழுத்து புரவியை சற்றே பக்கவாட்டில் திருப்பி அவர்களை நோக்கி தலைவணங்கினான், ”பாஞ்சாலரையும் யாதவரையும் வணங்குகிறேன் தங்களுக்கென அரசர் அளித்த ஓலையுடன் வந்திருந்தான்”

“யார் ?”என்று சுருங்கிய கண்களுடன் திருஷ்டத்யும்னன் கேட்ட மறுகணமே என்ன அறிவற்ற வினா இது என்று எண்ணிக் கொண்டான் .”இளைய யாதவர் இந்த ஓலையை தங்களிடம் அளிக்கச்சொன்னார்”. திருஷ்டதுய்ம்னன் “ என்னிடமா, யாதவரிடமா?” என்றான் . ”நீங்கள் இருவரும் சேர்ந்து தோரணவாயிலுக்குள் நுழைவீர்கள் அப்போது இதை அளிக்கும்படி எனக்கு ஆணை ” என்றான் விஜயவர்மன். உயிர் பிரியும் கணம் என விரைப்பு கொண்டு கடிவாளத்தை இழுத்த தன் கையை உணர்ந்து உடனே உள்ளத்தின் அனைத்து பிடிகளையும் விட்டு உடலை தளர்த்தியபடி ”எப்போது இதைச் சொன்னார் ?”என்றான் .”இன்று புலரியில்” என்றான் விஜயவர்மன். ”மூன்று நாழிகைக்கு முன்பு” என்று மீண்டும் சேர்த்துக் கொண்டான்.

திருஷ்டத்யும்னன் சொல்லின்றி கைநீட்டி அந்த ஓலையை பெற்றுக்கொண்டான். விஜயவர்மன் தலைவணங்கி தயங்க “நன்று விஜயவர்மரே” என்றான் சாத்யகி. விஜயவர்மன் சாத்யகியை நோக்கி புன்னகைத்துவிட்டு புரவியைத் திருப்பிக் கொண்டு சென்றான். கையில் ஓலையுடன் திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி ”மூன்று நாழிகைக்கு முன்பு என்றால்…” என்றான். “அப்போது தாங்கள் என்னை சந்தித்திருக்கவே இல்லை”. திருஷ்டதுய்ம்னன் “ பறக்கும் புள்ளுக்கு பத்து முழம் முன்பு என்று பழஞ்சொல் உண்டு கூட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே அம்பு கிளம்பியிருக்கிறது” என்றபின் இதழ் விரித்து புன்னகைசெய்து “ஆனால் அதில் வியப்பதற்கொன்றும் இல்லை அல்லவா?” என்றான். சாத்யகியும் புன்னகைத்து ”ஆம் ”என்றான்

திருஷ்டத்யும்னன் ஓலை அடங்கிய மூங்கில் குழல் வலது ஓரத்தில் மூடப்பட்டிருந்த மெழுகுப்பூச்சை கையால் நெகிழ்த்தி மரத்தாலான அதன் மூடியைத் திருகி வெளியே எடுத்தான், உள்ளே சுருளாக இறுக்கப்பட்ட மெல்லிய தாலியோலை இருந்தது .அதை எடுத்து விரல்களால் நீவி பற்றிக் கொண்டான் நாணம் கொண்ட இளம் பெண்ணென அது தன்னை சுருட்டிக் கொண்டது. திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை விட்டுவிட்டு இரு கைகளாலும் இரு நுனிகளையும் பற்றி அதை படித்தான். ”பாஞ்சாலரே வஞ்சத்திற்கு தண்டமென்ன என்றறிவீர் சதுக்கப்பூதம் நின்றிருக்கும் நகர் மையத்தில் அதை நிறைவேற்றும்படி அரசாணை”. இளைய யாதவர் அரச முத்திரை அதிலிருந்தது, மீண்டுமொரு முறை அச்சொற்களைப்படித்தபின் அவன் கையை விட விரைந்து சுருண்டு அட்டையென ஆயிற்று ஓலை

சாத்யகி அவனை நோக்கியபடி விழிநாட்டி இழுத்த கடிவாளம் இடக்கையில் நின்றிருக்க வலக்கை உடைவாளைத் தொட்டது போல் விழுந்திருக்க புரவியில் அமர்ந்திருந்தான். திருஷ்டத்யும்னன் அந்த ஓலையை அவனிடம் நீட்டினான். ”வேண்டியதில்லை” என்றான் சாத்யகி. “ஏன்?” என்றான். ”என்னை சிறைப்பிடித்துக்கொண்டு தோரணவாயிலில் நீங்கள் நுழைவீர்கள் என்று அறிந்தவர் எதை ஆணையிட்டிருப்பார் என்று எளிதில் உய்த்துணர முடியும்” என்ற சாத்யகி ”பாஞ்சாலரே இளைய யாதவர் முறைமை சார் தண்டத்திற்கு ஆணையிட்டிருந்தார் என்றால் அதை நிறைவேற்றுவது உங்கள் கடமை” என்றான்.

திருஷ்டத்யும்னன் சில கணங்கள் சாத்யகியை நோக்கிவிட்டு பெருமூச்சுடன் விழிதிருப்பி சுழன்றேறிச்சென்ற பாதையின் மறுஎல்லையில் விழுந்து கிடந்த மாளிகையின் நிழல் ஒன்றை நோக்கினான். அதன் உச்சியில் இருந்த கொடி சிறகறுந்து கீழே விழுந்த வவ்வால் என துடித்துக் கொண்டிருந்தது அதையே நோக்கியபடி ”அவ்வாணையை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை யாதவரே” என்றான். சாத்யகி ஏதோ சொல்லவர கையமர்த்தி ”இப்புவியில் எந்த நெறியையும்விட ,எத்தெய்வத்தின் ஆணையையும்விட இன்று தாங்கள் இந்நகரில் கழுவேற்றப்படுவீர்கள் என்றால் அருகே பிறிதொரு கழுவில் அமர்ந்திருப்பதை மட்டுமே என் கடமை எனக் கொள்வேன் ” என்றான்.

சாத்யகியின் உளம் கொண்ட அதிர்வை அவன் புரவியில் எழுந்த அசைவே காட்டியது குளம்படிகள் ஒலிக்க அருகே வந்து ”பாஞ்சாலரே” என்றான். கை நீட்டி அவன் கையைப்பற்றிக் கொண்டு ”யாதவரே இத்தருணத்தில் நாம் அடைந்த தெளிவைப்போல பிறிது எப்போதும் அடைந்ததில்லை. எண்ணுவதற்கோ மாற்று கணிப்பதற்கோ ஏதுமில்லை” என்றான். ”என்ன செய்யவிருக்கிறீர்கள்?” என்றான் சாத்யகி. ”இளைய யாதவரிடம் சென்று நிற்கப்போகிறேன் .அவர் விழிகளை நோக்கி இதுவே என்முடிவென அறிவிப்பேன். அவரளிக்கும் தண்டம் எதுவாக இருப்பினும் அதன் முன் தலைபணிவேன்” என்றான் திருஷ்டதுய்ம்னன்

சாத்யகி ”அவ்வண்னமெனில் தயங்க வேண்டியதில்லை ,கிளம்புவோம்” என்றான் ”இல்லை இது என் உளச்சான்றின் மொழி” என்றான் திருஷ்டதுய்ம்னன். “இதை சதுக்கப்பூத்த்தின் விழி முன் நின்றுதான் நான்சொல்ல வேண்டும் .சொல்காக்கும் ஆற்றல் கொண்டது அத்தென்னகத் தெய்வம். அதன் கையில் உள்ள உழலைத்தடியும் பாசச்சுருளும் முடிவு செய்யட்டும் பிழையென்ன அறமென்ன என்று”. சாத்யகி ”ஓலையில் சதுக்கப்பூதம் பற்றி அவர் சொல்லியிருக்கிறாரா?” என்றான். ”ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.”நாம் நேற்ற்ரவு அங்கு பேசியதை அறிந்திருக்கிறார்” என்றான் சாத்யகி “அவரறியாத ஒன்று இந்நகரில் இல்லை”திருஷ்டதுய்ம்னன் உரக்கச் சிரித்து ”யார் கண்டது? அல்லும் பகலும் என இரு பெரும் பூதங்களாக சொல்லுக்கு உறுதி தேர்ந்து இங்கெழுந்து நின்றிருப்பதும் அவர்தானோ என்னவோ” என்றான்.

இருவரும் சிரித்தபடியே புரவிகளில் விரைந்தனர். அணுக்கப்பாதையில் விரைந்து மூன்று வளைவுகளைக் கடந்து நாளங்காடியின் நெரிசலான தெருவுக்குள் நுழைந்தனர். இளம்புலரியிலேயே அங்காடி விழித்தெழுந்துவிட்டிருந்தது. வெயில் ஏற ஏற அங்கு வியர்வை வழியும் உடல்களுடன் வணிகரும் பொருள் கொள்ள வந்தவரும் பொதி சுமக்கும் ஊழியர்களும் சிறு வண்டிகளை இழுத்த அத்திரிகளும் கழுதைகளும் சிற்றுணவு தேடி சுற்றிவந்த நாய்களும் என உயிரசைவுகள் நிறைந்திருந்தன. திருஷ்டத்யும்னன் ”வழி !வழி விடுங்கள்!” என்று உரக்கக்கூவி ஒருவரை ஒருவர் தோள் முட்டி மாறி மாறிக் கூச்சலிட்டு வழி நிறைந்திருந்த மக்களை விலக்கிச் சென்றான்.

அனைத்து கடைகளும் திறந்து தென்னகத்து சங்கும், நறுஞ்சுண்ணமும், அகிலும் ,பொற்குவை என மஞ்சளும், மென்மணம் எழுந்த சுக்கும், கொம்பிலும் தந்தங்களிலும் வெண்பளிங்கிலும் செதுக்கப்பட்ட அருங்கலைப்பொருட்களும், பருத்தியாடைகளும் குவிக்கப்பட்டிருந்தன. சிறுசெப்புகளில் கோரோசனையும் புனுகும் சவ்வாதும் விற்ற நறுவணிகர்களின் கடைகளை மூக்கால் கடந்துசென்றனர். தங்கள் குடிமுத்திரை கொண்டு கொடிகள் பறக்க அருகே அமர்ந்திருந்த வணிகர்கள் உரக்க கை தூக்கி பொருள் கொள்ள வந்தவர்களை அழைத்தனர். தீரா குலப்பூசலின் உச்சியில் இருப்பவர்கள் போல விலை பேசி பூசலிட்டனர். ஏதோ ஒரு மாயக் கணத்தில் பூசல் முழுமையுற இரு தரப்பினரும் புன்னகைத்து பிறிதொரு மொழியில் பேசத்தொடங்கினர். விற்கப்பட்டதுமே பொருள் அதன் மேலிருந்த விழிகளை இழந்து மண்ணில் வந்து விழுந்தது. வணிகர்கள் அவற்றை எடுத்து இலைகளாலும் கமுகுப்பாளைகளாலும் பனையோலைகளாலும் பொதியத்தொடங்கினர்

தென்னகத்து நெடும்பனையின் ஓலையாலும் நாராலும் செய்யப்பட்ட வலுவான பொதிப்பெட்டிகள் இளநீலம், இலைப்பச்சை, செம்மண் நிறங்களில் இருந்தன. திருஷ்டத்யும்னனிடம் சாத்யகி ”இவர்களின் கரும்பனை பாதாளத்திலிருந்து எழுந்து வந்த பெருநாகம் ஒன்று உடல் கொண்டது என்கிறார்கள் அம்மரத்தைப்பார்க்கையில் அது உண்மை என்று உணர்வோம். இவர்களுக்கு கள்ளும் ,இனிப்பும், காயும், கனியும், கிழங்கும், பாயும், பெட்டியும், கூரையும், தூணும், நாரும் என அனைத்துமாக ஆகும் ஒற்றை மரம் அது ”என்றான். ”இவர்கள் எழுதுவது இந்தப் பனையோலையில்தான். அது தாலியோலைகளைப்போல மென்மையானது அல்ல. வாள்த்தகடுகளுக்கு நிகரான உறுதி கொண்டது. ஒரு முறை எழுதப்பட்ட சுவடி மூன்று தலைமுறைகளைக்காணும் என்கிறார்கள்” என்றான்

எழுது பொருளாக ஆக்கப்பட்ட பொருள்களை விற்கும் கடையொன்றைச் சுட்டிக் காட்டி ”இங்கும் பிறவி நூல்கள் குறிப்பதற்கு தென்னகத்து நெடும்பனையின் ஓலையையே விரும்புகிறார்கள்” என்றான். கையளவு நீளத்தில் தறிக்கப்பட்டு நிழலில் உலர்த்தி கற்சக்கரத்தால் உருட்டி சீரமைக்கப்பட்ட சீரான சுவடிகள் பித்தளைத் தகடுகளாக மின்னின. தீயா சுட்டு துளையிட்டு அதில் செம்பட்டு நூல்கோத்து நூலாக்கியிருந்தனர். எழுதப்பட்ட சுவடிகள் ஓரங்களில் மஞ்சளும்சுண்ணமும் கலந்த செங்குழம்பு பூசப்பட்டு மஞ்சள் பட்டுநூலால் சுற்றிக் கட்டி அடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் எழுதுவதற்கான கூர்முனை கொண்ட எழுத்தாணிகள் நாகதலையும் அரிமுகத்தலையும் ஆலிலைத்தலையும் கொண்டு அருகே குவிக்கப்பட்டிருந்தன.

திருஷ்டத்யும்னன் சாத்யகியை நோக்கி புன்னகைத்து ”இளமையிலேயே ஏடும் எழுத்தாணியும் எனக்கு உளமொவ்வாதவையாகவே இருந்தன. ஏனென்று இப்போது நினைவுறுகிறேன். அன்னை மடியில் நான் அமர்ந்திருந்த வயதில் முதுகணியர் ஒருவர் மெல்லிய ஒலையை எழுது பலகையில் வைத்து நீவி நான்கு விரலால் இறுகப்பற்றிய கூர் எழுத்தாணியால் அதில் எழுதுவதைக் கண்டேன். அது ஒரு வதை என்று தோன்றியது .அந்த ஓலை குருதி வழிய உடல் நெளிப்பது போல. ஓலைக்கு வலிக்கும் என்று நான் அழுதேனென்று செவிலியர் நெடுங்காலம் சொல்லி சிரிப்பதுண்டு முதுகணியர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து எழுத நான் எழுந்து சென்று என் களிப்பாவை ஒன்றை தூக்கி அவர் தலையில் அடித்தேன் அந்த ஓலையை அவர் கொல்கிறார் என்று கண்ணீர் விட்டு அழுதேன் பின்னர் செவிலியும் சேடியும் நகையாட்டு வழியாக அந்நிகழ்வை என்னெஞ்சில் ஆழ நாட்டினர்”

“இளம் குருகுலக்கல்விக்கு சென்ற போது ஏடு தொட்டெடுத்து பீடத்தில் வைத்து என்னை மடியமர்த்தி முதலாசிரியர் எழுத்தாணியை என்கையில் அளித்தபோது இருகையின் விரல்களையும் இறுகப்பற்றியபடி எழுத மாட்டேன் என்று சொல்லி அழுதேன் இரு கால்களையும் உதறி எழ முயன்றேன் முதலெழுத்தை மட்டும் என்னை எழுதச்செய்வதற்குள் ஒரு நாழிகை நேரமாகியது என்றார்கள். பின்னரும் எழுத்தாணியால் ஏட்டில் எழுதுவது என் தோலின்மேல் வாளால் கீறிக் கொள்வது போன்ற உணர்வையே அளித்தது இன்றும் ஓலைகள் என்னை அச்சுறுத்துகின்றன” என்றான் திருஷ்டதுய்ம்னன் “யாதவரே மானுட எண்ணங்கள் நீரலைகள் போன்றவை ஒவ்வொரு கணமும் அவை நிகழ்ந்து கொண்டிருப்பதே அவற்றின் அழகு. நீரலைகளை நோக்கி கல்லில் செதுக்கி வைப்பது போன்றது எழுத்து .அது அலையல்ல மானுடனின் அச்சத்தின் சான்று மட்டுமே”

“நிலையின்மையென இங்கு நிறைந்துள்ள அனைத்தையும் சொல்லாலும் விழியாலும் தொட்டு நிலைத்தவை என ஆக்க முயல்கிறது மானுட அச்சம். நிலையற்று விரிந்திருக்கும் இப்பெருவெளியே உண்மை. அதை தன் இருண்ட சிற்றாலயத்தில் ஒரு கற்சிலையாக நாட்ட விழைகிறார்கள். இச்சுவடிகளில் பதிந்திருக்கும் ஒவ்வொரு எழுத்தும் ஒரு தெய்வம். கல்லில் கட்டுண்டு விழி பதைத்து நிற்கும் தெய்வம்” என்றான் திருஷ்டதுய்ம்னன் சாத்யகி திருஷ்ட்த்யும்னனின் அந்த சொற்பெருக்கை முழுக்க உள்வாங்காதவன் போல விழிகளால் கேட்டுக்கொண்டு தொடர்ந்து வந்தான். ”எத்தனை சொற்கள்! ஒரு பெரு நகரத்தில் ஒரு நாழிகைக்குள் எழுதிக் குவிக்கப்படும் ஏடுகள் எத்தனை ஆயிரம். சுங்கம் ,வணிகம் ,அரசாணைகள் ,காவியங்கள் ,கடிதங்கள், கருவூலக்கணக்குகள். இவ்வனைத்தும் என்றும் அழியாதவை என்று மானுடர் எண்ணிக் கொள்கிறார்கள். அவை இக்காலமெனும் பெரும் பெருக்கில் வெவ்வேறு எழுத்துக்களே”

சாலையின் மறுபக்கம் ஒற்றைநோக்கில் எழுந்து தெரிந்த நாளங்காடிப் பூதத்தின் சதுக்கத்தில் சிறுகுழுக்களாக வணிகர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். ஒவ்வொரு குழுவாக எழுதப்பட்ட வணிக ஓலையுடன் சென்று அதன் காலடியில் நின்றனர். காலைவெயில் விழுந்திருந்த பூதத்த்தின் பேருடல் உறை உருவி எழுந்த வாள் என மின்னிக் கொண்டிருந்த்து அதன் கால்நகங்கள் ஒவ்வொன்றும் ஒரு செம்புக்குவளைகள். சிறுமண்டைகளால் ஆன பெருங்கழல். கால்களுக்கு நடுவே இருந்த சிறிய பீடத்தில் மலரும், செந்தூரமும் ,கைப்பிடி மண்ணும், அரிசியும் சிறுகுவளை நீரும் கொண்ட தாலத்தில் எழுதப்பட்ட சாத்தோலையை வைத்து அதை எழுதியவரும் அளிப்பவரும் பெறுபவரும் அருகே நின்று வணங்கினர். பின்னர் ஓலையை எடுத்து சென்னியிலும் விழியிலும் நெஞ்சிலும் வைத்து சொல்லளிப்பவர் பெறுபவருக்கு நீட்டினார் .அவர் அதை வாங்கி தன் நெஞ்சிலும் விழியிலும் தலையிலுமாக வைத்துக் கொண்டார் .இருவரும் மும்முறை தலை வணங்கி புறம் காட்டாமல் விலகினர்

“அங்கே இந்த ஓலையை நானும் வைக்கப்போகிறேன்” என்றான் திருஷ்ட்த்யும்னன் ”இது நாம் எழுதிய ஓலை அல்ல” என்றான் சாத்யகி, ”நாம் இந்த ஓலையை ஏற்கவில்லை என்பதை பூதம் அறியட்டும் மண்ணில் காலூன்றி விண்ணில் தலை புதைத்து திசைநோக்கி நின்று மானுடருடன் ஆடும் நீலப்பூதம்” என்றான் திருஷ்ட்த்யும்னன்

சாத்யகி நகைத்து ”ஆம் அதைச்செய்வோம்” என்றான் .திருஷ்ட்த்யும்னன். “பாஞ்சாலரே இதே நகரில் இதே பிழையை செய்ததற்காக கிருதவர்மனை நீங்கள் தேரிலேற்றி கைதளைத்து கொண்டு வந்து அவை நிற்கச்செய்தீர்கள்” என்றான்.

திருஷ்டதுய்ம்னன் ”ஆம் அவன் செய்த பிழைக்கு அத்தண்டம் உரியதே. அது அரசருக்குரிய நெறி. அதில் எனக்கு மாற்று எண்ணம் இப்போதுமில்லை” என்றான். ”அரசநெறி நீளவேண்டுமென்றால் நூல் எழுதிய சொல் பிழைக்கலாகாது. ஆனால் நூலை மட்டுமே கற்று அறமாற்ற நுண்ணுணர்வுகொண்ட மானுடன் ஒருவன் அரியணை அமரவேண்டியதில்லை .பேரறம் ஒன்றுக்காக அனைத்துச் சொற்களும் கடந்து செல்லும் முடிவை எடுப்பதற்கே அங்கொரு அரசன் தேவையாகிறான். இன்றும் எனக்கு தயக்கமில்லை. இங்குள்ள எவரிழைத்தாலும் ஓர் அரசனாக தண்டமளிக்க நான் தயங்க மாட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு இப்புவியில் இதுவரை எழுந்த அனைத்துச் சொற்களும் அளிக்கும் அறங்களுக்கு அப்பாற்பட்டவர். அது எனக்கான பேரறம் என்றே எண்ணுகிறேன் பிழை என்றால் என்னை சதுக்கப்பூதம் கொல்லட்டும்”

சாத்யகி சிரித்து ”பார்ப்போம்” என்றான். திருஷ்ட்த்யும்னன் மூன்று படிகளிலேறி சதுக்கப்பூத்த்தின் காலடிகளை அடைந்தான் மூங்கில் குழாய்க்குள் சுருட்டி போடப்பட்ட ஓலையை எடுத்து பூதத்தின் இரு கால்களின் நடுவே வைத்தான். இருவரும் இருபக்கமும் கைகூப்பி நின்றனர். ”என் இணை இவன். இவன் பொருட்டு எப்பிழையையும் பொறுப்பதும் இவனுக்கென உயிர் துரப்பதும் என் கடனென நினைகிறேன். இது பிழையெனில் இப்பெரும் பாசம் என்னை கை கால் பிணைக்கட்டும் இவ்வுழலைத்தடியால் என் தலை உடைந்து தெறிகட்டும் ஆம் அவ்வண்ணமே ஆகுக” என்றான் திருஷ்டதுய்ம்னன். பூதத்தின் இட்து பெருவிரல் நகத்தை தொட்டு சென்னியிலும் விழியிலும் நெஞ்சிலும் சூடினான் .சாத்யகி அவ்வண்ணமே வணங்கி பெருமூச்சு விட்டான்

சிலகணங்களுக்குப்பின் ஓலையைக் கையில் எடுத்தபடி படிகளில் இறங்கி வெளியே வந்தனர். ”இனி பூதம் முடிவெடுக்கட்டும்” என்றான் திருஷ்ட்த்யும்னன்.”பாஞ்சாலரே, நீங்கள் இச்சொற்களை முதன் முறையாகச் சொன்னபோது என் உள்ளம் உருகி பொங்கியலைத்தது. இங்கு பூதத்தின் காலடிகளில் மீண்டும் கேட்டபோது இதிலென்ன இருக்கிறது, இது மாறாப் பேருண்மை என தோன்றியது. நாம் இன்று இந்த நட்பை அடையவில்லை ஏழாவது முறையாக கண்டடைந்திருக்கிறோம்” என்றான் சாத்யகி. அவனை நோக்கி சிரித்தபடி ”மேலும் உரையாடத்தொடங்கினால் எளிய சொற்களால் இக்காற்றுவெளியை நிறைத்துவிடுவோம் யாதவரே. வருக துவாரகையின் அவை மன்றுக்கு சென்று நிற்போம் ”என்றான் திருஷ்ட்த்யும்னன்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 4

சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் என நகர்மையத்தில் அமைந்த யாதவரின் அரண்மனை நோக்கி புரிசுழல் சாலையில் ஏறிச்சென்றபோது சாத்யகி மெல்ல மெல்ல ஒலி அவிந்து இன்மை என்றாகிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். முன்னால் சென்றபோது தொடர்ந்து வரும் புரவியின் மேல் சாத்யகி இல்லையென்றே தோன்ற துணுக்குற்று இருமுறை திரும்பி நோக்கினான். ஒருமுறை சாத்யகியின் விழிகளை சந்தித்தபோது அவை தன்னை அறியவில்லை என்றுணர்ந்து திரும்பிக்கொண்டு அறியா அச்சம் ஒன்று தன்னுள் நிகழ்வதை அறிந்தான்.

ஏதாவது ஒன்றை அவனிடம் கேட்பதனூடாக அவன் மேல் இறங்கிச் சூழ்ந்த அவ்வொலியின்மையை கிழிக்கமுடியும் என்று எண்ணினான். ஆனால் அவன் உள்ளத்தில் எழுந்த ஒவ்வொரு சொல்லும் பொருளிழந்து கூரற்று தெரிந்தன. பலமுறை சொற்களை எடுத்து நெருடி பின் நழுவவிட்டு இறுதியில் பெருமூச்சுடன் புரவிமேல் சற்று அசைந்து அமர்ந்தான். பன்னிரண்டாவது பாதை வளைவை கடந்தபோது இயல்பாக விழிதிருப்பிய திருஷ்டத்யும்னன் வியந்து கடிவாளத்தைப்பற்றி இழுத்து நிறுத்தி எதிர்ச்சுவரை நோக்கினான். திரும்பி சாத்யகியை நோக்கிவிட்டு வியப்புச்சொல் ஒன்று ஒலியின்மையாக தங்கிய உதடுகளுடன் மீண்டும் அச்சுவரை நோக்கினான்.

இணைக்குன்று மேல் எழுந்த துவாரகையின் பெருவாயில் அச்சுவரில் தலைகீழ் நிழல்வடிவில் விழுந்து கிடந்தது. விழிமயக்கா என்று வியந்து புரவியை ஒரு எட்டு எடுக்க வைத்து தலை நீட்டி மீண்டும் நோக்கினான். நிழல்கொள்ளும் பலநூறு தோற்றங்களில் ஒன்று போலும் என்று சொன்ன சித்தத்தை உறைய வைத்தபடி அது அதுவேதான் அதுவேதான் என்று எக்களித்தது அவனுள் உறையும் சிறுவனின் நோக்கு. ஒவ்வொரு சிற்பமும் நிழலுருவாக தெரிய நீர்ப்பாவை போல் மெல்ல அசைந்தபடி தெரிந்தது பெருவாயில். அந்த மாளிகை தன் வெண்பளிங்கு மார்பின்மேல் அணிந்த அட்டிகை போலிருந்தது.

திருஷ்டத்யும்னன் அருகே வந்துநின்ற சாத்யகியிடம் “பெருவாயில்!” என்றான். சாத்யகி "ஆம், காலையிலும் மாலையிலும் இளவெயில் எழும்போது சில சுவர்களில் பெருவாயிலின் இத்தலைகீழ் வடிவம் எழுவதுண்டு” என்றான். திருஷ்டத்யும்னன் “எவ்வாறு?” என்று நோக்க சாத்யகி கைநீட்டி “அதோ அந்த மாளிகையின் சிறு சாளரம் துளைவிழியென மாறி அப்பால் எழுந்த பெருவாயில் மேல் விழுந்த ஒளியை அள்ளி இங்கு தலைகீழாக சரித்துக் காட்டுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் புரிந்துகொண்டு “ஆம், சில ஆலயங்களிலேயே இவ்வமைப்பு உள்ளது. முகப்புப் பெருங்கோபுரம் உள்ளறை ஒன்றின் சுவரில் தலைகீழாகத் தெரியும்” என்றான். "ஆனால் அதை மிகச்சிறிய நிழலாகவே கண்டுள்ளேன்” என்றான். சாத்யகி “இங்கு அனைத்துமே பெரியவை” என்று சொன்னபின்  நீள்மூச்சு விட்டான்.

மீண்டும் ஒருமுறை அக்கோபுரத்தை நோக்கியபின் “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். புரவிகள் எடைமிக்க குளம்போசையுடன் கற்பாளைங்களை மிதித்து முன் சென்றன. இறுதி வளைவிற்கு அப்பால் தொலைவில் வெண்சுண்ணத்தில் எழுந்த இளைய யாதவரின் மாளிகை தெரிந்தது. நிரை வகுத்த பெருந்தூண்களுடன் அது தந்தத்தால் செதுக்கப்பட்ட சீப்பு போல என்று திருஷ்டத்யும்னன் நினைத்தான். அக்கணமே சாத்யகி “பூதம் ஒன்றின் பல்நிரை விரிந்த நகைப்பு” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்க அச்சம் எழுந்த முகத்துடன் கடிவாளத்தை நரம்பு புடைக்க இறுகப்பற்றி இறுகிய பற்களின் ஊடாக நாகச் சீறல் போல எழுந்த குரலில் “இல்லை, நான் அங்கு வரப்போவதில்லை பாஞ்சாலரே” என்றான் சாத்யகி. “அப்பேருருவப் புன்னகையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.”

“ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது... அம்மாளிகையின் தூண் நிரை...” என்று நடுங்கும் கைகளால் சுட்டி சாத்யகி சொன்னான். “ஒருமாளிகை புன்னகையென மாறுவதை இப்போதுதான் பார்க்கிறேன். எப்போதும் இது என்னை நோக்கி இளிவரல் நகை விடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது. இப்போதுதான் நான் அதை காண்கிறேன்.” மெல்லிய விம்மலால் இடறிய குரலில் “இல்லை பாஞ்சாலரே, அதை எதிர்கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே!” என்று சொல்லி அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்ற கை நீட்டி சாய்வதற்குள் சாத்யகி கால்களை ஓங்கி புரவியின் விலாவில் உதைத்து கடிவாளத்தை இழுத்து அதைத் திருப்பி உருளைக்கற்கள் மலையிறங்கும் ஒலியுடன் கல்பாவிய சரிவுப்பாதையில் சுழன்றிழிந்து சென்றான்.

அவன் புரவியின் வால் சுழல்வதை, பின்னங்கால் சதைகள் நெகிழ்வதை சில கணங்கள் நோக்கிவிட்டு “யாதவரே!” என்று கூவியபடி தன் புரவியையும் குதிமுள்ளால் குத்தி எழுப்பி அது கனைத்து காற்றில் எழுந்து முன்குளம்பு மண்ணை அறைந்து பின் குளம்பு அதைத் தொடர்ந்து விழ விரைந்து சென்றான். சாத்யகியின் புரவி பேயெழுந்தது போல கனைத்தபடி எதிரே வந்த பிற புரவிகளையும் வணிகர்களின் மஞ்சல்களையும் சுமையேறிய அத்திரிகளையும் ஊடுருவிச் சென்றது. வௌவால் போல அறியா விழியொன்றால் செலுத்தப்பட்டது அது என்று தோன்றியது. அப்புரவி சென்ற வழியையே அவனும் தேர்ந்ததால் திருஷ்டத்யும்னனும் அதை தொடரமுடிந்தது. இருப்பினும் “விலகுங்கள்! விலகுங்கள்!” என கூவியபடியே அவன் சென்றான்.

அரச நெடும்பாதையில் சென்ற பன்னிரு சுழல்வழிகளையும் திரும்ப இறங்கி பக்கவாட்டில் கிளைத்த சூதர் தெருவுக்குள் நுழைந்தான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் அவனிடமிருந்து விழிவிலக்காது தொடர்ந்தான். உடம்பெங்கும் மூச்சின் அனல்பரவ குழலிலிருந்தும் காதுகளின் இதழ்களிலிருந்தும் எதிர்க் காற்றில் வியர்வை சிதறித் தெறித்தது. சாத்யகி புரவியை இழுத்து நிறுத்த முயல விரைவழியாத அப்புரவி சக்கரம் போல மும்முறை சுற்றி கால்களை மாறி மாறி உதைத்து தலை தாழ்த்தி நுரை தொங்க, மூக்கு விடைத்துச் சீறி, விழியுருட்டி நின்றது. அவனைத் தொடர்ந்த திருஷ்டத்யும்னனின் புரவி அதனை சற்று வளைந்து கடந்து ஒருமுறை வட்டமிட்டு எதிராக நின்றது.

“யாதவரே, என்ன செய்கிறீர்?” என்றான் திருஷ்டத்யும்னன். பேய் எழுந்த விழிகளுடன் “என்ன? என்ன?” என்றான் சாத்யகி. “என்ன செய்கிறீர்? எப்படி வந்தீர் தெரியுமா? உமது புரவிக்குளம்புகளில் சிக்கி எவரேனும் உயிரிழந்திருக்கவும் கூடும். தெய்வங்கள் துணை இருந்ததால் தப்பினீர்” என்றான். சாத்யகி பித்தனின் நோக்குடன் ‘உம்?’ என்றான். “யாதவரே, யாதவரே” என்று திருஷ்டத்யும்னன் உரக்க அழைத்தான். சிறகற்று மண்ணில் விழுந்தவனைப் போல ஓருடலசைவுடன் சாத்யகி மீண்டான். தலைதூக்கி “பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, அனைத்தையும் உதறி அவர் முன் அம்மணமாக நிற்கும் பொருட்டு சென்றவர் நீங்கள்” என்றான்.

“என்னால் இயலவில்லை பாஞ்சாலரே. ஒவ்வொன்றாக கழற்றிக்கொண்டு வந்தேன். கையளவுக்கு மட்டும் எஞ்சிய ஒன்று என்னை தடுத்தது. அச்சிறு ஆணவமே என்னை நானென்று ஆக்குகிறது. இப்பெயரை, இக்குலத்தை, இவ்வுடலை, இவ்விழைவை நான் சூடச்செய்கிறது. அதையும் இழந்தால் உப்புப்பாவை கடலை அடைந்தது போல நான் எஞ்ச மாட்டேன். மீட்பும் இறப்பும் இன்மையும் ஒன்றென ஆகும் ஒரு தருணம் அது.”

சாத்யகி சொன்னான் “அடியிலா ஆழம் ஒன்றின் இறுதி விளிம்பை அடைந்தது போலும் உடல் மெய்ப்புற்றது. அவ்வாழத்திலிருந்து எழுந்து வந்த கடும் குளிர்காற்றுபோல அச்சம் என்னை பின்தள்ளியது. என்னால் அங்கு வரமுடியாது. எத்தனை கீழ்மகனாக எஞ்சினாலும் சரி, தீரா நரகத்தில் இழிசேற்றில் புழுவென நெளிந்தாலும் சரி, இவ்வாணவம் ஒரு துளி என்னிடம் எஞ்சியிருக்க வேண்டும். இது மட்டுமே நான். இக்கீழ்மையின் நிழல் துண்டு மட்டுமே சாத்யகி என்னும் வீரன்.”

“இறப்புக்கு அஞ்சுகிறீர்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, என்று குருநாதரின் கால்களைத் தொட்டு வணங்கி முதல் படைக்கலத்தை எடுத்து களம் நிற்கிறானோ அன்றே போர்வீரன் இறப்பின் மீதுள்ள அச்சத்தை வென்றிருப்பான். ஆனால் அடையாளம் அழிவதை, ஆணவம் கழிவதை அவன் தாளமாட்டான். வீரனின் இறப்பென்பது உண்மையில் அதுவே” என்றான்.

திருஷ்டத்யும்னன் சாத்யகியின் அருகே புரவியை செலுத்தி அவன் தோளை தொட்டான். “அக்கணத்து உணர்வெழுச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது யாதவரே. ஆனால் அது ஒரு கணம்தான். தீயவை செய்வதற்கு முன் கடக்கவேண்டிய ஒரு கணம் உண்டு என்று ஒருமுறை என் ஆசிரியர் சொன்னார். நூற்றியெட்டு தெய்வங்களால் காக்கப்படும் பெரும் அகழி அது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டு எழுந்து வந்து நம்மை விலக்கும். மூதாதையென, குல தெய்வங்களென, அறநெறிகளென, அயலென, உறவென, குலமென, குடியென, கல்வியென, அகச்சான்று என உருக்கொண்டு சினந்தும் அழுதும் நயந்தும் பேருரு காட்டியும் பேதையென நின்றும் சொல்லெடுக்கும். ஒரு கணத்தில் அவற்றை தாண்டிச் சென்றுதான் தீயவை எவற்றையும் நாம் ஆற்றுகிறோம்.”

“பின்பொரு நாள் துரோணரின் அச்சொற்களை எண்ணிக்கொண்டிருந்தபோது நான் அறிந்தேன் நல்லவை ஆற்றுவதற்கும் அதே ஒரு கண தடையே உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். “அதே அடியிலா அகழி. நூற்றியெட்டு பாதாள தெய்வங்கள் அங்கும் எழுந்து வருகின்றன. அச்சமென, ஐயமென, விழைவென, ஆணவமென உருக்காட்டுகின்றன. அக்கணத்தைக் கடந்து நாம் உரியவற்றை இன்றியமையாதவற்றை மேன்மையானவற்றை முழுமையை அடைய முடியும். ஒரு கணம்தான் யாதவரே, என் கை பற்றிக்கொள்ளுங்கள். அவ்வகழியை இணைந்தே கடந்து செல்வோம். இத்தருணத்தில் அதை கடக்காவிடில் பிறகு ஒருபோதும் அது நிகழாமல் ஆகிவிடும். ஒரு கணம் விரிந்து ஒரு பிறவியென்றாகலாம். ஏழ்பிறவியென எழலாம். முடிவிலி கூட ஆகலாம்.”

சாத்யகி தன் புரவியின் கழுத்தில் வளைந்து முகம் பதித்துக்கொண்டான். அவன் கண்களிலிருந்து நீர் உதிர்ந்து அதன் பிடரி மயிரில் சொட்டியது. “வருக!” என்று மிகத்தாழ்ந்த குரலில் திருஷ்டத்யும்னன் அழைத்தான். அவ்வொலியை தன் உடலில் பரவிய தோல்பரப்பால் கேட்டான். “வருக!” என்று மேலும் குரல் தழைந்து அவன் அழைத்தபோது ஒவ்வொரு மயிர்க்காலும் அதைக் கேட்டு அசைந்தது. சாத்யகி நெஞ்சு முட்டிய நீள்மூச்சை வெளியிட்டான்.

அக்கணத்திலென அப்பால் ஒரு தட்டுமணி முழங்கியது. “பீலிவிழி அறியும் பொய்மை அனைத்தும்! பீலிவிழியன்றி மெய்மைக்கு ஏது காவல்? நெஞ்சே! பீலிவிழி அன்றி விண்ணறிந்த மண்ணறிந்த பிறிதேது?” என்று பாடியபடி சூதன் ஒருவன் பக்கவாட்டு சந்து ஒன்றிலிருந்து அவர்கள் முன் தோன்றினான். பாடியபடியே அவர்களை நோக்கி புன்னகைத்து கடந்து சென்றான். “பீலிவிழி இமைப்பதில்லை. விழியிமைக்கும் இடைவெளிகளில் வாழும் தெய்வங்களே! உங்களைப் பார்க்கும் விழி அது ஒன்றே அல்லவா?”

திருஷ்டத்யும்னன் அப்போது அவ்வுணர்ச்சிகள் அனைத்தையும் அடுமனை மணங்களை அள்ளி அகற்றும் சாளரக்காற்று போல அந்தப் பாட்டு விலக்குவதை அறிந்தான். “சூதரே” என்றான். சூதன் நின்று “வணங்குகிறேன் இளவரசே” என்றான். “இப்பாடல் எதிலுள்ளது?” என்றான். “இது விழிபீலி என்ற குறுங்காவியம். எனது குருமரபின் ஏழாவது ஆசிரியர் கச்சரால் எழுதப்பட்டது. நாங்கள் இதைப் பாடி அலைகிறோம்” என்றான். “பாடுங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கால்சுழற்றி புரவியிலிருந்து இறங்கியபடி திரும்பி சாத்யகியிடம் “வருக யாதவரே!” என்றான். சாத்யகி அசையாமல் இருந்தான். “வருக யாதவரே, இது ஒரு தருணமாக அமையலாமே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி எடைமிக்க உடலை மெல்ல புரவியிலிருந்து இறக்கி தள்ளாடுவது போல ஒரு கணம் நின்றபடி அவர்களை நோக்கினான். பின்னர் நெடுமூச்சுடன் கடிவாளத்தை புரவிமேல் வீசிவிட்டு திருஷ்டத்யும்னனை தொடர்ந்தான்.

அருகே இருந்த கல்மண்டபத்தின் திண்ணையில் திருஷ்டத்யும்னன் ஏறி அமர்ந்துகொண்டு “அமருங்கள் யாதவரே” என்றான். உடலை கால்களால் உந்தி முன்செலுத்தி வந்து அவனருகே அமர்ந்து கைகளை நெஞ்சில் கட்டி தலைகுனிந்து அமர்ந்தான் சாத்யகி. புன்னகையுடன் அவர்கள் முன்வந்து எதிர் படியில் அமர்ந்து கொண்ட சூதன் “தொடக்கத்திலிருந்தே பாடலாமா?” என்றான். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சூதன் தன் தட்டுமணியின் சீரான தாளத்துடன் பாடத் தொடங்கினான். “இனியவர்களே, கேளுங்கள்! இளையோன் கதை கேளுங்கள்! கொண்டு வந்த வினைக் கணக்கு தீர்க்கும் மானுடரே, கேளுங்கள்! இங்கெழுந்த வாழ்வில் இன்சுவை அனைத்தும் தேடும் இளையோரே, கேளுங்கள்! வாள் ஏந்தி புகழ் ஈட்டும் வீரரே, கேளுங்கள்! இது அவந்திநாட்டு அரசியின் கதை. அவளை மித்திரவிந்தை என்றனர் மூத்தோர். அன்னை சுதத்தை என்றார். தந்தை சுவகை என்றார். குலம் வழுத்தும் பாவலரோ சிபி மன்னன் குலக்கொடியான அவளை சைப்யை என்றனர். தொல்புகழ் அவந்தியின் மன்னர் ஜெயசேனன் துணைவி ரஜதிதேவியில் பெற்றெடுத்த புதல்வி அவள். திருமகளென குலமெழுந்தவள். அவள் அடிசேர் மண்ணை வணங்கி அலகிலா செல்வமடைந்து பொலிக! ஆம், அவ்வாறே ஆகுக!”

அவந்திநாடாளும் ஷத்ரியத் தொல்குடி மாமன்னர் ஜெயசேனர் மதுவனத்து யாதவக் குடித்தலைவர் சூரசேனரின் இளைய மனைவி சித்திதாத்ரியின் மகள் ரஜதிதேவியை மணந்தபோது ஷத்ரிய அவைகளில் இளிவரல் எழுந்தது. குலம் இழந்து முடி மீது அவநிழல் விழச் செய்தார் ஜெயசேனர் என்றனர். ஆனால் சர்மாவதியின் எல்லையில் அமைந்த அவந்திநாடு ஏழு ஆசுர சிறுநாடுகளால் சூழப்பட்டிருந்தது. தலைக்கு மேல் பெரும்பாறைகள் உருண்டமர்ந்திருக்க நடுவே கைக்குழந்தையை இடையில்சூடி நின்றிருக்கும் பதற்றத்தை எப்போதும் கொண்டிருந்தார் ஜெயசேனர். பெருநாடுகளோ ஆசுரகுடிகளை அஞ்சி அவர் வந்து தங்கள் காலடியில் பணியவேண்டுமென எதிர்பார்த்தன.

மதுராவை யாதவர் வென்றதும் ஒரு புது காலகட்டம் தொடங்கவிருப்பதை உணர்ந்தார். விருஷ்ணிகுலத்து வசுதேவரின் தங்கை அழகி என்றும் நூலறிந்தவள் என்றும் அறிந்தார். பொன்னும் மணியும் கன்யாசுல்கமென அனுப்பி வசுதேவரின் வாக்கு பெற்று சித்திதாத்ரியின் உள்ளத்தை வென்றார். தயங்கிய சூரசேனரை கனியச்செய்து மணவாக்கு பெற்று ரஜதிதேவியை அடைந்தார். அவர்களுக்கு ஒன்பது பேரழகுகளும் சங்கு சக்கரக் குறியுமாக மகள் ஒருத்தி பிறந்ததும் ஷத்ரியரில் இழிநகைகள் பொறாமைகளாக மாறின. மித்திரவிந்தை சூதர்களின் சொற்கள் வழியாக இளவேனிலில் வேங்கை மரம் உதிர்த்த மலர்கள் ஊரெங்கும் பரவி மணப்பது போல் புகழ் பெற்றாள்.

ஜெயசேனரின் பட்டத்தரசியான மாளவத்து குலமகள் பார்கவிக்கு விந்தர் அனுவிந்தர் என இரு மைந்தர்கள் அப்போதே தோள்பெருத்து போர்க்குண்டலம் அணிந்து விட்டிருந்தனர். இருவரும் அரசர் யாதவ இளவரசியை மணந்ததை விரும்பவில்லை. யாதவர் படைத் துணையுடன் அசுர மன்னர்களை வென்றனர். அதன் பின் ஒவ்வொரு நாளும் யாதவர்களின் படைவல்லமையை எண்ணி அமைதி இழந்தனர். “முள்ளை எடுக்க முள்ளை நாடினோம் இளையோனே... இனி இப்பெரிய முள்ளை வீசிவிட்டு முன்னகர்வது எங்ஙனம் என்பதுவே வினா” என்றார் விந்தர். “ஒவ்வொருநாளும் சிதல்புற்றென யாதவர் வளர்கிறார்கள்.”

மித்திரவிந்தை பிறந்து இவள் முடிசூடி நாடாள்வாள் என்று நிமித்திகரின் நற்குறிச் சான்று பெற்று நாளும் அழகு பொலிய வளரத் தொடங்கியபோது விந்தரும் அனுவிந்தரும் அச்சம் கொண்டனர். “இளையோனே, யாதவர்கள் அவள் தங்களுக்குரியவள் என எண்ணுகிறார்கள். துவாரகையில் அமர்ந்த இளைய யாதவன் அவளை மணம் கொண்டான் என்றால் மாகிஷ்மதி அவர்களின் சொல்லுக்குள் செல்லக்கூடும்” என்றார் விந்தர். “நம் தந்தையே மாகிஷ்மதியை இடையனின் கால்களில் வைத்து வணங்க உள்ளம் கொண்டிருக்கிறார் என்று ஐயுறுகிறேன்” என்றார் அனுவிந்தர்.

அந்நாளில் ஒருமுறை அஸ்தினபுரியின் அவை விருந்துக்குச் சென்ற அவந்தி வேந்தர் விந்தரும் அனுவிந்தரும் காலையில் கதாயுதப்பயிற்சிக்காக துரியோதனரின் களம் சென்றனர். இரும்பு கதை ஏந்தி ஒரு நாழிகை நேரம் தன்னுடன் தோள் பொருதிய விந்தரை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு துரியோதனர் சொன்னார் “இன்று முதல் நீர் என் தோழர். வாழ்விலும் முடிவிலும் என்னுடன் இரும்!” புவியாளும் பெருமன்னனின் விரிதோள்களின் அணைப்பு விந்தரை அகம் நெகிழச் செய்தது. அத்தோள்களில் முகம் சாய்த்து விழிநீர் உகுத்து “இன்றென் வாழ்வு நிறைவுற்றது. இனி என்றும் தங்கள் அடிகளில் அமர்பவனாகவே எஞ்சுவேன்” என்றார்.

அன்று உண்டாட்டின்போது அவந்தியின் அரசர் இருவரை தமக்கு இருபக்கமும் அமரச் செய்து தன் கையால் உணவள்ளி ஊட்டினார் துரியோதனர். தன் தம்பியருடன் சேர்ந்து கானாட அழைத்துச் சென்றார். அஸ்தினபுரியிலிருந்து திரும்புகையில் அனுவிந்தர் “மூத்தவரே, நம் இளவரசியை அஸ்தினபுரியின் நாளைய அரசர் கொள்வார் என்றால் எதையும் அஞ்சவேண்டியதில்லை. யாதவர் அஞ்சும் படைபலம் நமக்கு வரும். நிமித்திகர் சொல் பிழைக்காது நம் இளையோள் பெருநிலத்து முடியும் சூடுவாள்” என்றார். நெஞ்சு விம்ம எழுந்து இளையோனை தோள் சேர்த்து அணைத்துக்கொண்டு “ஆம், பொன் ஒளிர் பெருவாயில் திறந்ததுபோல் உணர்கிறேன். இது ஒன்றே வழி” என்றார் விந்தர்.

தன் இளையவளுக்கு துரியோதனர் மணக்கொடை அளிப்பதை ஏற்க விழைவதாக ஒலைத் தூதொன்றை அனுப்பினார் விந்தர். துரியோதனர் அப்போது காசிநாட்டு இளவரசியை மணந்து மலர்வனம் ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார். ஓலை நோக்கியபின் “காசி நாட்டு அரசி ஒப்புவாள் என்றால் அந்த மணம் நிகழட்டும்” என்றார். “வல்லமை கொண்ட அரசொன்று அரியணைக்கு வலப்பக்கம் நிற்குமென்றால் அது நன்றே. அவந்தி நாட்டு அரசி அவை புகட்டும்” என்று அவர் ஒப்புதல் அளித்தார்.

அஸ்தினபுரியின் இளவரசர் அவந்தி நாட்டு இளவரசி மித்திரவிந்தையை மணக்க இருக்கிறார் என்று சிலநாட்களுக்குள்ளேயே பாரதவர்ஷமெங்கும் சூதர்கள் பாடி அலையத் துவங்கினர். அச்செய்தியை அறிந்தார் மூத்தவர் பலராமர். அவையமர்ந்து இசைத்துக்கொண்டிருந்த இளையவரின் முன் சென்று நின்று தன் இரு பெரும் கரங்களை ஓங்கித் தட்டி “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது நம்மைச் சூழ்ந்து என்றறிவாயா? இங்கு வீணே இக்கம்பிகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு அமர்ந்திருக்கிறாய். மூடா!” என்று கூவினார். “சொல்லுங்கள் மூத்தவரே” என்றார் இளையவர்.

“அறிவிலியே கேள், சர்மாவதியினூடாக உஜ்ஜயினி வந்து பாலைவனப் பாதை வழியாகவே துவாரகைக்கு வருவதே இன்று நம் வணிகப்பாதையாக உள்ளது. அவந்தியை அஸ்தினபுரி மண உறவுடன் பிணைத்துக்கொள்ளுமெனில் ஒவ்வொரு முறையும் அஸ்தினபுரிக்கு சுங்கம் கட்டி நாம் இங்கு வரவேண்டி இருக்கும். அது கூடாது. அவந்தி நம்முடனே இருந்தாக வேண்டும். இன்று வரை யாதவர்களால் படைநிறைத்து ஆளப்படும் மாகிஷ்மதி நம் வணிகத்தின் விழுதாக அமைந்துள்ளது. உஜ்ஜயினியும் அவ்வாறே அமையவேண்டும்” என்றார்.

“வணிகத்தைப் பற்றி தங்களிடம் யார் சொன்னது மூத்தவரே?” என்று புன்னகையுடன் கேட்டார் இளையவர். “என்னிடம் அக்ரூரர் சொன்னார். சொன்னதுமே இங்கு வந்துவிட்டேன்” என்றார் பலராமர். தொடர்ந்து உள்ளே நுழைந்த அக்ரூரர் “ஆம் இளையவரே. உஜ்ஜயினி நம் கையை விட்டு செல்லலாகாது” என்றார். இளையவர் தன் கையிலிருந்த யாழை அகற்றிவிட்டு எழுந்தார். “அவந்தி நாட்டு அரசு குறித்து சூதர் பாடிய பாடல்கள் அனைத்தும் கேட்டுள்ளேன். ஆனால், அவள் என்னை மணக்க விழைகிறாள் என்று அறிந்திலேன். அவ்வுறுதி இன்றி அவளை எங்ஙனம் நான் கொள்ள முடியும்?” என்றார்.

“என்ன பேசுகிறாய் இளையோனே? ஷத்ரியன் பெண் கொள்வதற்கு பெண்ணுள்ளம் உசாவும் வழக்கம் உண்டா?” என்றார். “நான் ஷத்ரியன் அல்ல. குழலேந்தி மலர்மரத்தடியில் அமர்ந்திருக்கும் யாதவன்” என்றார் இளையவர். “யாதவனா என்று கேட்டால் நான் ஷத்ரியன் என்று மறுமொழி சொல்வாய். உன்னுடன் பேச என்னால் ஆகாது” என்று சொல்லி கைதூக்கி “இதோ, நான் ஆணையிடுகிறேன். உஜ்ஜயினியின் இளவரசியை நீ கொணர்ந்தாக வேண்டும். மறுமொழி எதுவும் கேட்க விழையேன்” என்று சொல்லி பலராமர் வெளியே சென்றார்.

அக்ரூரர் “இளையவரே, பிறர் அறியாமல் விரைந்து ஒரு மணத்தன்னேற்பு நிகழ்வை ஜெயசேனர் ஒருக்கக்கூடும். விந்தனும் அனுவிந்தனும் இளவரசியை துரியோதனனுக்கு வாக்களித்திருப்பதாகவே சொல்கிறார்கள்” என்றார். இளையோன் “பார்ப்போம்” என்றார். “எங்கு உதித்து எங்கு அவள் எழுந்தாள் என்று அறிவேன். அங்கு அவள் சென்றாக வேண்டும் அல்லவா?” என்றார். அக்ரூரர் “புரியவில்லை இளையவரே” என்றார். அவர் புன்னகைசெய்தார்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 5

மித்திரவிந்தை பிறந்த அவ்வருடம்தான் உஜ்ஜயினியை தனிநாடாக தங்களுக்கு பிரித்தளிக்க வேண்டுமென்று கோரி விந்தரும் அனுவிந்தரும் குலப்பெருமன்றை கூட்டினர். அதில் அவர்களின் அன்னையும் பட்டத்தரசியுமான மாளவஅரசி பார்கவியின் அணுக்கரான குலமூத்தார் சுருதகிருஷ்ணர் அவையில் எழுந்து ஜெயசேனர் யாதவ அரசியை மணந்ததனால் குலமிழந்து பெருமை குறைந்துவிட்டார் என்று அவரும் அவர் குலமும் எண்ணுவதாக அறிவித்தார். அவரை ஆதரித்து மூன்று குலத்தவர் கூச்சலிட்டனர். அதை எதிர்த்து பிறர் கூச்சலிட அரசி சினத்துடன் எழுந்து தன் கொடிவழி வந்த இளவரசர் இனி குலமுறை பிழைத்த அரசருக்குக் கீழே இருந்து ஆள முடியாது என்றாள். அவர்களுக்கென தனி நாடும் முடியும் கொடியும் வேண்டுமென்று சொன்னாள்.

ஜெயசேனரின் அமைச்சர் பிரபாகரர் அவந்தி தொல்பெருமை கொண்ட நாடென்றாலும் குடிபெருகாது படைசிறுத்த அரசு என்றும், சூழ்ந்துள்ள ஆசுர நாடுகளின் அச்சுறுத்தலை யாதவப்படையின்றி வெல்ல முடியாதென்றும் சொன்னார். சினத்துடன் எழுந்து “நாணிழந்து அவை நின்று இதை உரைக்கிறீர் அமைச்சரே. ஆசுரக் கீழ்மதியாளரை வெல்ல யாதவச் சிறுமதியாளர் தேவை என்று உரைக்க முடிசூடி அமர வேண்டுமா ஒரு ஷத்ரியன்? எங்குளது இவ்வழக்கம்? இதை சூதர் நூலில் பொறித்தால் எத்தனை தலைமுறைகள் அவைகள்தோறும் நின்று நாண வேண்டும்? இன்று ஷத்ரியர் கூடிய பேரவையில் அவந்தி என்னும் பேரே இளிவரலை உருவாக்குகிறது அறிவீரா?” என்றாள் பார்கவி.

“குலமிலியின் துணைவியாக இம்மணிமுடி சூடி இங்கமர எனக்கு நாணில்லை. ஏனெனில் உயிருள்ளவரை இம்மங்கலநாணை பூணுவேனென்று உரைத்து இங்கு வந்தவள் நான். என் மைந்தர் அவ்வண்ணம் அல்ல. அவர்கள் பிறந்தபோது தூய ஷத்ரியரின் மைந்தர். இவர் கொண்ட காமத்தின் பொருட்டு அவர்கள் ஏன் குலமிழக்க வேண்டும்?” என்று பார்கவி கூவினாள். கைகளை தூக்கியபடி “நான் இன்று என் மைந்தருக்காக அல்ல, என் கொடிவழியினருக்காக பேசுகிறேன். இதை ஏற்கமுடியாது. ஒருபோதும் மூதன்னையர் முன் நின்று நான் இதை ஏற்றேன் என்று சொல்லமுடியாது” என்றாள்.

அரசியின் எரிசினமே அவள் குரலை அவையில் நிறுவியது. மன்று மேலும் அவளை நோக்கி சென்றது. சிறுசாரார் "முடிசூடி அமர்ந்த மன்னனுக்கு  முழுதும் ஆட்பட்டிருப்பதே குடிகளின் கடமை” என்றனர். பெரும்பாலானவர்கள் திரண்டு “குலமிழந்த அரசரின் கோல்நீங்கிப்போக இளவரசர்களுக்கு உரிமை உண்டு. தங்கள் குருதிகாத்து கொடிவழி செழிக்கவைக்க அவர்கள் முயல்வது இயல்பே” என்று கூறினர். கண்முன் தன் குடியவை இரண்டாகப்பிரிந்து குரலெழுப்பி பூசலிடுவதைக்கண்டு ஜெயசேனர் நடுங்கும் உடலுடன் கைகளை வீசி “அமைதி! குடிகளே, குலமூத்தாரே, சான்றோரே! அமைதி கொள்ளுங்கள்! நாம் இதை பேசி முடிவெடுப்போம்!” என்று கூவிக்கொண்டிருந்தார்.

அவர்களோ ஒவ்வொருவரும் பிறிதொருவரின் சொல்லினால் புண்பட்டனர். ஒவ்வொருவருக்கும் அவையில் தனிப்பட்ட எதிரிகளிருந்தனர். தன் எதிரியைக் கொண்டே தான் எடுக்கும் நிலைப்பாட்டை முடிவு செய்தனர். பூசலிடுவதின் பேரின்பத்தில் ஒருவர் மேல் மிதித்து பிறிதொருவர் ஏற விண்ணில் விண்ணில் என எழுந்து முகில்கள் மேல் அமைந்து வாள் சுழற்றினர். சொற்கள் கூர்மைகொண்டு கிழித்த குருதி பெருகி அவை நிணக்குழியாகியது. அதில் வழுக்கி விழுந்தும் எழுந்தும் புழுக்களைப்போல நெளிந்தனர்.

பொறுமை இழந்த ஜெயசேனர் எழுந்து கைகளைத்தட்டி “கேளீர்! கேளீர்! இதோ அறிவிக்கிறேன். அவந்தி இருநாடுகளெனப் பிரிந்தது. இனி அவர்கள் என் மைந்தர்கள் அல்ல. உஜ்ஜயினியை தலைநகராக்கி அவர்கள் தனிமுடிகொண்டு ஆளட்டும். தெய்வங்கள் சான்று. மூதாதையர் சான்று. இந்த அவையும் என் குடையும் கொடியும் சான்று” என்று ஆணையிட்டார். அதற்கென்றே பூசலிட்டபோதும் அத்தனை விரைவில் அவ்வறிவிப்பு எழுந்தபோது அவைமன்றில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து சொல்லழிந்தனர்.

நடுங்கும் கைகளுடன் நின்று தன் அவையினர் விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி பின் தலைமேல் இருகைகளை கூப்பி "அனைவரையும் வணங்குகிறேன். என் குலதெய்வங்களின் அருளால் மூதன்னையர் முகம் கொண்டு எனக்கொரு மகள் மடிநிறைத்திருக்கிறாள். திருமகள் அவள் என்றனர் நிமித்திகர். அவள் பிறந்த நாளன்று இங்கு இந்நாடு பிளவுறுமென்றால் அது தெய்வமென எழுந்தருளிய அவள் ஆடலே என்று கொண்டு நெஞ்சமைகிறேன். மங்கலமன்றி பிறிதறியாதவள் அவள் என்றனர் நிமித்திகர். மங்கலம் நிகழும் பொருட்டே இது என்று துணிகிறேன். அவள் அருள்க!” என்றபின் சால்வையை எடுத்து தோளிலிட்டு பின்னால் எழுந்து பதைத்த எவர் சொல்லையும் கேட்காமல் திரும்பி உள்ளறைக்குச் சென்றார். அவர் செல்லவிருப்பதை உணராது நின்ற குடைவலனும் அகம்படியினரும் அவருக்குப்பின்னால் ஓடினர். அவை அரசியையும் இளவரசர்களையும் நோக்கி செயலிழந்து அமர்ந்தது.

இளவரசி பிறந்த வேளையில் நாடு பிளவுண்டது என்று அவந்தியில் அவச்சொல் சுழன்றது. அவள் மாமங்கலை என்று சொன்ன நிமித்திகரோ “ஆம், நானே உரைத்தேன். அது என் சொல்லல்ல, என்னிலெழுந்தருளும் என் மூதாதையரின் பெருஞ்சொல். சொல் பிழைத்த வரலாறு அவர்களுக்கு இல்லை. மாமங்கலை மண்மேல் வந்துவிட்டாள். கிளைவிரித்து மலரெழுந்து கனி பழுத்து நிறைவாள். ஐயமொன்றில்லை” என்றார். விந்தரும் அனுவிந்தரும் அவர்கள் அரசநிகரிகளாக இருந்தாண்ட அதே மண்ணை தனிமுடியாகப் பெற்று எல்லை அமைத்து எடுத்தனர்.

அவந்தியின் தலைநகராகிய மாகிஷ்மதி ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றென அது உருவான தொல்பழங்காலத்தில் கட்டப்பட்டது. தாழ்ந்த மரக்கட்டடங்கள் ஒன்றுடனொன்று தோள் முட்டிச் சூழ்ந்த அங்காடி முற்றமும் அதன் தென்மேற்கு மூலையில் ஏழன்னையர் ஆலயமும் நடுவே கொற்றவையின் கற்கோயிலும் கொண்டது. சிற்றிலையும் சிறுமலரும் எழும் குற்றிச்செடி போல் அந்நகர் காலத்தில் சிறுத்து நின்றிருந்தது. அங்கு பெரும் துறைகள் இல்லை. அங்காடிகள் அமையவில்லை. மலைப்பொருள் கொள்ள வரும் சிறுவணிகரும் பொருள்கொண்டு இறங்கும் பழங்குடிகளுமன்றி பிறர் அணுகவில்லை.

உஜ்ஜயினியோ ஒவ்வொரு நாளும் புது ஊர்கள் பிறந்து கொண்டிருந்த தண்டகாரண்யப் பெருநிலத்தை நோக்கிச் செல்லும் வணிகப்பாதையின் விளிம்பில் அமைந்திருந்தது. சர்மாவதியில் கட்டப்பட்ட புதிய துறைமுகத்தை கொண்டிருந்தது. தென்மேற்கே விரிந்த பெரும்பாலையில் கிளை விரித்துச் சென்று சிந்து நாட்டுக்கும் துவாரகைக்கும் வணிகம் அமைத்த மணற்சாலைகளின் தொடக்கமாக இருந்தது. எனவே ஒவ்வொரு நாளும் செல்வம் அங்கு குவிந்தது. விந்தரும் அனுவிந்தரும் அந்நகரைச் சுற்றி ஒரு கற்கோட்டையை எழுப்பினர். காவல்மாடங்களில் தங்கள் மணிப்புறா கொடியை பறக்கவிட்டனர். துவாரகையை அமைத்த சிற்பிகளை வரவழைத்து வெண்சுதை மாடங்கள் கொண்ட ஏழு அரண்மனைகள் கட்டிக் கொண்டனர். அவர்களுக்கென தனிப்படையும் அமைச்சும் சுற்றமும் அமைந்தன.

காலம் பெருக களஞ்சியம் நிறைய வளைநிறைத்து உடல் பெருத்த நாகங்களென்றாயினர் உடன்பிறந்தார். மாகிஷ்மதியும் தங்களுக்குக் கீழே அமைந்தாலென்ன என்ற எண்ணம் கொண்டனர். விந்தர் அனுவிந்தரிடம் சில மாறுதல்களை முன்னரே கண்டிருந்தார். இளையவராகவும் இரண்டாமவராகவும் இருப்பதில் கசப்பு கொண்டவராகத் தெரிந்த அனுவிந்தரை மாகிஷ்மதியின் மன்னராக்கி தன் இணையரசராக அறிவிக்க வேண்டுமென்று திட்டமிட்டார். ஏழு பெண்ணழகுகளும் எழுந்து வளர்ந்த இளவரசியை யாதவகுலம் கொள்ளலாகாது  என்றார் விந்தர். அவள் இளைய யாதவனை எவ்வகையிலும் அறியலாகாது என்றார் அனுவிந்தர். “பெண் உள்ளம் கவரும் மாயம் கற்றவன் அவன். அவனைக்குறித்த ஒரு சொல்லும் ஒரு தடயமும் அவளை சென்றடையலாகாது” என்று ஆணையிட்டனர்.

விந்தரும் அனுவிந்தரும் அமைத்த ஒற்றர் வலையத்தால் மகளிர் மாளிகை முற்றிலும் சூழப்பட்டது. நினைவறிந்த நாள் முதலே தமையர்களின் ஆணைக்கு அமையும் சேடியரும் செவிலியரும் ஏவலரும் வினைவலரும் படைவீரரும் சூழ இளவரசி மித்திரவிந்தை வளர்ந்தாள். அவள் செவியில் விழும் ஒவ்வொரு சொல்லும் ஏழுமுறை சல்லடைகளால் சலிக்கப்பட்டது. இளைய யாதவர் என்ற சொல்லையோ துவாரகை என்ற ஒலியையோ அவள் அறியவில்லை. அவள் வேய்ங்குழல் என்றொரு இசைக்கருவி இருப்பதை அறியவில்லை. மயிலென ஒரு பறவையை கண்டதில்லை. அவள் விழிகளில் நீலம் என்னும் நிறம் தெரிந்ததே இல்லை. ஆழியும் சங்கும் அங்குள்ள பிறர் சித்தத்திலிருந்தும் மறைந்தன.

அவந்தி இரு நாடெனப்பிரிந்தபோதே ஜெயசேனர் உளம் தளர்ந்துவிட்டார். அரண்மனைக்கு வெளியே அவரைக் காண்பது அரிதாயிற்று. அவையமர்ந்து அரசு சூழ்தலும் அறவே நின்று போயிற்று. அமைச்சர் பிரபாகரர் ஆயிரமுறை அஞ்சி ஐயம்கொண்ட சொல்லெடுத்து இடும் ஆணைகளால் ஆளப்பட்டது அந்நகரம். குடிகள் பொருள் விரும்பியும் குலம்நாடும் சூழல் விரும்பியும் ஒவ்வொரு நாளுமென உஜ்ஜயினிக்கு சென்று கொண்டிருந்தனர். அரண்மனை உப்பரிகையில் ஒரு நாள் காலையில் வந்து நின்று நோக்கிய ஜெயசேனர் கலைந்த சந்தை நிலமென தன் நகரம் தெரிவதைக் கண்டு உளம் விம்மினார்.

அவரைச் சூழ்ந்து ஒற்றர்களையே அமைச்சென படையென குடியென ஏவலரென எண்ணி  நிறைத்திருந்தனர் மைந்தர். வெறுமை அவரை மதுவை நோக்கி கொண்டு சென்றது. ஓராண்டுக்குள் விழித்திருக்கும் நேரமெல்லாம் மது மயக்கில் இருப்பவராக அவர் ஆனார். உடல் தளர்ந்து மதுக்கோப்பையை எடுக்கும் கைகள் நடுங்கி மது தளும்பி உடை மேல் சிந்தலாயிற்று. கண்கள் பழுக்காய்ப் பாக்குகளென ஆயின. உதடுகள் கருகி அட்டைச்சுருளாயின. கழுத்திலும் கைகளிலும் நரம்புகள் கட்டு தளர்ந்த விறகின் கொடிகள் என்று தெரிந்தன. படுக்கையிலிருந்து எழும்போதே மதுக்கிண்ணத்துடன் ஏவலன் நின்றிருக்க வேண்டுமென்றாயிற்று.

நாளெழுகையில் மதுவருந்தி குமட்டி கண்மூடி அமர்ந்திருப்பவரை ஏவலர் இருவர் மெல்ல தூக்கி காலைக் கடன்களுக்கு கொண்டு செல்வர். புகழ் பெற்ற அவந்தியின் அருமணிபதித்த மணிமுடியை சூடும் ஆற்றலையும் அவர் தலை இழந்தது. எனவே ஏழன்னையர் வழிபடப்படும் விழவுநாளில் மட்டும் அரைநாழிகை நேரம் அந்த மணியை அவர் சூடி அமர்ந்திருந்தார். அரியணைக்குப்பின் வீரனொருவன் பிறரறியாது அதை தன் கையால் பற்றியிருந்தான். வலக்கையில் அவர் பற்றியிருந்த செங்கோலை பிறிதொருவன் தாங்கியிருந்தான். அரியணையில் அமருகையில் சற்றுநேரம் கூட மதுவின்றி இருக்க முடியாதவரானார்.

உற்ற ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு நெறிநூலும் காவியமும் இளவரசிக்கு கற்பிக்கப்பட்டன. இசையும் போர்க்கருவியும் பயிற்றுவிக்கும் சூதரும் ஷத்ரியரும் அமர்த்தப்பட்டனர். ஆனால் விந்தரின் அமைச்சர் கர்ணகரின் கட்டுப்பாட்டில் இருந்தது அவள் கல்வி. ஒவ்வொரு நூலும் முற்றிலும் சொல் ஆயப்பட்டன. ஒவ்வொரு கலையும் நுணுகி நோக்கப்பட்டது.. சிற்பியரும் சூதரும் இணைந்து கல்லிலும் சொல்லிலும் செய்த பொய்யுலகொன்றன்றி பிறிதேதும் அறியாது வாழ்ந்தாள். பொய்மை அளிக்கும் புரை தீர்ந்த மகிழ்வில் திளைத்தாள். அவள் செல்லுமிடமெங்கும் முன்னரே சென்று அவளுக்கான உலகை அமைக்கும் வினைவலர் திரள் குறித்து அவள் உணர்ந்திருக்கவில்லை. அவள் அறிந்தவற்றாலான அச்சிறு உலகுக்கு அப்பால் புன்னகையும் குழலிசையும் நீலமுமென நிறைந்திருந்தான் அவள் நெஞ்சுக்குரியவன்.

பன்னிரண்டாவது வயதில் சர்மாவதியில் இன்னீரில் ஆடி எழுந்து ஈரம் சொட்ட அவள் வந்து மறைப்புரைக்குள் நின்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது குழலிசை ஒன்றை கேட்டாள். அதுவரை கேட்டிராத அவ்வோசை எதுவென்று அகம் திகைத்து ஆடையள்ளி நெஞ்சோடு சேர்த்து நின்றாள். தன்னைச் சூழ்ந்து ஒலித்த மென்பட்டு நூல் போன்ற அவ்விசையைக் கேட்டு அவள் முதலில் அஞ்சினாள். கந்தர்வரோ கின்னரரோ கிம்புருடரோ அறியா உருக்கொண்டு தன்னை சூழ்ந்துவிட்டதாக எண்ணினாள். அச்சக்குரலெழுப்பி ஓடிவந்து செவிலியிடம் “அன்னாய், நான் ஒரு ஒலி கேட்டேன். வெள்ளிக்கம்பியை சுற்றியது போன்ற அழகிய இசைச்சுருள் அது” என்றாள்.

எது அவ்வொலி என்று எண்ணி எழுந்து அறைக்குள் புகுந்ததுமே செவிலியும் அக்குழலிசையை கேட்டாள். என்ன மாயமிது என்று எண்ணி மலைத்து சுவருடன் முதுகு சேர்த்து தன் நெஞ்சம் அறைவதைக் கேட்டு நின்று நடுங்கினாள் மெல்லிய குழலோசை செவ்வழிப்பண்ணில் ’இன்று நீ! இன்று நீ!’ என்று சொல்லிக்கொண்டிருந்தது. முலை கனிந்த பேருடல் குலுங்க வெளியேறி இடைநாழி வழியாக ஓடி ஏவலரை அழைத்து “பாருங்கள்! எங்கொலிக்கிறது இவ்விசை?” என்றாள். ஏவலர் வரும்போது அந்த இசை நின்றுவிட்டிருந்தது. “இங்குதான் எங்கோ அவ்விசையை எவரோ எழுப்புகிறார்கள். நான் கேட்டேன்” என்று செவிலி கூவினாள்.

வாளுடனும் வேலுடனும் ஆடை மாற்றும் அறையைச்சூழ்ந்து ஒவ்வொரு மூலையிலும் இடுக்கிலும் தேடினார்கள் வீரர்கள். “செவிலியன்னையே, இங்கு மானுடர் வந்ததற்கான தடயமேதுமில்லை” என்றான் படைவீரன். “அவ்வண்ணமெனில் குழலிசை இசைத்தது யார்? நான் கேட்டேன்” என்றாள் செவிலி. “அது மாயமாக இருக்கலாம். அவனறியாத மாயம் ஏதுமில்லை என்று சூதர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்” என்றான் வீரன். “வாயைமூடு. இச்சொல்லை சொன்னதற்காகவே நீ கழுவிலேறுவாய்” என்று செவிலி சீறினாள்.

தேரிலேறி நகர் மீளும்போது அவளருகே ஈரக்குழல் காற்றில் பறக்க உடல் ஒட்டி அமர்ந்திருந்த மித்திரவிந்தை மெல்லிய குரலில் “அந்த இசைக்கு என்ன பெயர் அன்னாய்?” என்றாள். "அது இசையல்ல பிச்சி, வெறுமொரு ஓசை” என்றாள் செவிலி. “இல்லை, நான் இதுவரை கேட்ட எவ்விசையையும் வெல்லும் இனிமை கொண்டது அது. யாழும் முழவும் காற்றொலிக்கும் பிறவெதுவும் அதற்கிணையாகாது. அன்னையே, பிற இசையனைத்தும் இலைகளும் தளிர்களுமென்றால் இவ்விசையே மலர்” என்றாள். கண்மூடி முகம் மலர்ந்து “நறுமணம்போல் மெல்லொளி போல் இன்சுவைபோல் இளங்குளிர்போல் இசையொன்று ஆக முடியுமா? இன்று கண்டேன். இனி ஒரு இசை என் செவிக்கு உகக்காது” என்றாள்.

அரண்மனைக்குச்செல்லும் பாதையில் அவள் முன் எழுந்த காட்சிகள் அனைத்திலும் அந்த இசை பொன்னூல் மணிகளில் என ஊடுருவிச் செல்வதை கேட்டாள். தன் அறைக்குச்சென்று புத்தாடை புனைந்து அணிகள் பூண்டு இசையறைக்குச் சென்று அமர்ந்தவள் யாழ் தொட்டு குறுமுழவு தொட்டு சலித்தாள். “இக்கருவிகள் எவையும் அவ்விசையை எழுப்ப முடியாது. குயிலைச் சூழ்ந்த காகங்கள், நாகணவாய்கள், மைனாக்கள் இவை.  வான்தழுவும் கதிரொளியை கல்லில் எழுப்ப முயல்வது போன்றது அன்னையே, இவை தொட்டு அவ்விசையை உன்னுவது.”

“அது இசையல்ல குழந்தை, ஏதோ கந்தர்வர்கள் செய்த மாயம். அதற்கு உன் உள்ளத்தை அளிக்காதே. விலகிவிடு. ஒவ்வொரு நாளும் உன்னைச்சூழும் செயல்களில் எண்ணத்தை நாட்டு. இல்லையேல் அக்கந்தர்வன் உன்னை கவர்ந்து செல்வான். விண்முகில்களில் வைத்து உன்னை நுகர்வான். சூடியமலர் என மண்ணில் உதிர்த்து மறைவான்” என்றனர் செவிலியர். அஞ்சி எழுந்தோடி அன்னை கழுத்தைச் சுற்றி இறுக அணைத்தபடி “என்னை ஏன் அக்கந்தர்வன் கொண்டு செல்லவேண்டும்?” என்றாள். "கன்னிக் கனவுகளைத் தொட்டு அவர்களை மலரச்செய்பவன் கந்தர்வன். முழுதும் மலர்ந்த மலர்களை தனக்கென சூடிச்செல்வான். கன்னியர் கனவுகளை உண்டுதான் அவர்கள் உயிர்வாழ்கிறார்கள். இளையோளே, கந்தர்வரின் இசைக்கும் நறுமணத்துக்கும் முழுமனம் அளிக்காதிருப்பதே கன்னியர் தங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்” என்றாள் செவிலி.

இளவரசி முகம் வெளுத்து செவிலிமுலையில் முகம் சேர்த்து உடல் நடுங்கினாள். பின்பு விழி தூக்கி “என்னால் இயலவில்லை அன்னையே. என் உளம் முழுக்க விசையாக்கி விலக்க விலக்க பேருருக்கொண்டு என்னைச் சூழ்கிறது அவ்விசை. அந்த மெட்டன்றி பிறிதெதையும் என் செவியறியவில்லை. சித்தம் என் எண்ணங்களையே தான் வாங்கவில்லை” என்றாள். “இப்போது என் விழிகளில் விரல்நுனிகளில் ததும்புகிறது அது. நான் பார்க்கும் இவ்வொவ்வொன்றும் மெல்லிய ஒளிவளையமாக அவ்விசையை சூடியுள்ளன” என்றாள். "அன்னையே, என் உடலே ஒரு நாவென்றாகி தித்திக்கிறது. பாருங்கள்! தித்திப்பு என் கைகளில், இதோ என் தோள்களில்,  இக்கணம் என் நெஞ்சில், இடையில்...” என்று கூவினாள்.

அன்றிரவு தனிமையில் மென்சிறகுச் சேக்கையில் விழிமூடி படுத்திருக்கையில் அவ்விசையை கேட்டாள். பெருகிவந்து அவளைச் சூழ்ந்து அந்த மஞ்சத்தை மெல்ல தூக்கி சாளரம் வழியாக வெளியே கொண்டு சென்று விண்மீன்கள் செறிந்த கோடை காலத்து வானின் முகில்களின் மீது வைத்துச் சென்றது. அனலேறிய விழிகளுடன் அன்றிரவு முழுக்க அவ்விசையையே கேட்டுக்கிடந்தாள். தன்னை இங்குவிட்டு அங்கு சென்று திரும்பி நோக்கி இவளெவள் இதுவென்ன என்று வியந்தாள். அது நான் அங்கே நான் என இருந்தாள்.

ஏவலரை அனுப்பி அக்குளியலறையை நன்கு நோக்கிய செவிலி அதன் மூங்கில் கழி ஒன்றில் வண்டு இட்ட துளை வழியாக காற்று வெளியேறும் ஒலியே அது என்று அறிந்தாள். அத்துளைகளை உடனடியாக மூட ஆணையிட்டாள். “இளவரசி, வண்டு துளைத்த வழியில் காற்று கடந்து செல்லும் ஒலி அது. இசை அல்ல என்றுணர்க!” அவள் நீள்மூச்செறிந்து “ஆம், அவ்வண்ணமே நானும் எண்ணினேன்” என்றாள். “வெறுமொரு மானுட இதழ் எழுப்பும் இசையல்ல அது. விண்வடிவான ஒன்றின் மூச்சு. இசையாக மாறி எழுந்தது. செவிலியன்னையே, இனி ஒரு மண்ணிசைக்கென என் செவிகளை கொடுக்கலாகாது” என்றாள்.

நாளும் பொழுதும் என வாரங்களும் மாதங்களும் அவ்விசையில் அவள் இருந்தாள். கண் குழிந்து உடல் மெலிந்து இளங்காற்றில் நடுங்கும் சிலந்திவலை போல் நொய்மை கொண்டாள். “எண்ணெய் தீர்ந்த சுடரென குறுகிக் கொண்டிருக்கிறாள். இனி வாழ மாட்டாள்” என்றனர் சேடியர். “கந்தர்வன் அவள் நலமுண்ணுகின்றான். இனி அவள் சூடுநர் இட்ட பூ.” அன்னை மருத்துவரைக் கொண்டு அவளை பார்க்க வைத்தாள். ”நோயென்று ஏதும் உடலில் இல்லை அரசி. ஆனால் சென்று தொடுவானில் மறையும் குதிரையின் குளம்படி என அவள் நரம்புகள் அதிர்வை இழக்கின்றன” என்றார் மருத்துவர். “அன்னை இங்கிருந்து தன்னை விலக்க எண்ணிக்கொண்டாளோ என்று ஐயுறுகிறேன். இதற்கு மருத்துவம் செய்வதற்கொன்றுமில்லை. அவளே எண்ணங்கொள்ள வேண்டும்.”

பாலும் இளநீருமன்றி எதுவும் பருக முடியாதவளானாள். அவள் இதழ்களிலிருந்து சொற்கள் மறைந்தன. விழிகள் எவரையும் நோக்காதவையாயின. மூச்சு ஓடுவதையும் காணமுடியாமலாகியது. உலோகப்பரப்புகளின் ஊடாக வண்ண நிழலொன்று செல்வதுபோல் ஓசையற்று நடந்தாள். ஒவ்வொரு நாளும் அவளைக்கண்டு நெஞ்சு கலுழ்ந்தாள் செவிலி. அவள் படுக்கையறை மஞ்சத்தின் கீழ் கால் மடித்தமர்ந்து கை நீட்டி நீல நரம்புகள் புடைத்த அல்லிமலர்க் கால்களைத் தொட்டபடி தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். முலை சேர்த்து அவளுக்கு அமுதூட்டிய பகல்களை தோளிலேற்றி தோட்டத்தில் உலவிய மாலைகளை மடிசேர்த்து அமர்த்தி விண்மீன் காட்டிச் சொன்ன இரவுகளை எண்ணி எண்ணி உளம் உருகினாள். இரவும் பகலும் அங்கிருந்து அவள் கால்களை வருடிக் கொண்டிருந்தாள். அவளிலிருந்து அவள் விழைந்த கைம்மகவை அள்ளி அள்ளி எடுப்பவள்போல.

விடியலில் ஒரு நாள் துயின்று புலரியொளியில் எழுந்தபோது அக்கால்கள் குளிர்ந்திருப்பதை கண்டாள். திடுக்கிட்டு எழுந்து இறந்த மீன்கள் போல குளிர்ந்திருந்த அவ்விரல்களைப் பற்றி அசைத்து “இளவரசி இளவரசி” என்று கூவினாள். விழிப்பின்மை கண்டு பதறி விழுந்துகிடந்த அவள் இரு கைகளையும் தூக்கி தன் கன்னங்களில் அறைந்து கொண்டாள். மித்திரவிந்தையின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது. அவள் மூக்கில் கை வைத்தபோது மூச்சு ஓடுவதை உணரமுடியவில்லை. இமைகளைத் தூக்கியபோது கருவிழி மறைந்து பால்படலம் மட்டுமே தெரிந்தது. “தெய்வங்களே! என் குலதெய்வங்களே!” என்று ஓசையின்றி அலறியபடி மஞ்சத்தில் தானும் விழுந்தாள் செவிலி.

அக்கணம் அவளில் எழுந்தது அவள் செய்தேயாக வேண்டிய பணி.  இளவரசியின் இரு கைகளையும் இறுகப்பற்றி அள்ளித்தூக்கி தன் நெஞ்சோடணைத்து வெள்ளைச் சங்குமலர் போன்ற செவிமடலில் வாய்வைத்து “அவன் பெயர் கிருஷ்ணன். கன்னியருக்கு அவன் கண்ணன். இப்புவிக்கு ஆழிவெண்சங்குடன் அமர்ந்த அரசன். அன்றலர்ந்த நீலன். பீலி விழி பூத்த குழலன். அவன் இதழ் மலர்ந்த இசையையே நீ கேட்டாய். இப்புவியை உருக்கி வெண்ணிலா வெள்ளமாக ஆக்கும் அவ்விசையைப் பாடாத சூதர் இங்கில்லை. அன்னையே, நீ அவனுக்குரியவள்” என்றாள். அதை சொன்னோமா எண்ணினோமா பிறிதொரு குரல் அருகே நின்று அதைக் கூவக்கேட்டோமா என மயங்கினாள்.

வாழ்வெனும் பெருக்குக்கு கரையென்றான இருளுக்கு அப்பால் சென்றுவிட்டிருந்த அவள் தன் குரலை கேட்டாளா என்று அவள் ஐயுற்றாள். மீண்டும் மீண்டும் “அவன் பெயர் கிருஷ்ணன், உன் நெஞ்சமர்ந்த கண்ணன்” என்று கூவினாள். “அன்னையே எழுக! உன் கைமலர் மாலை சூடும் நீலத்தோள் கொண்டவன் அவன். உன் விழிமலர் நோக்கி விரியும் முகக்கதிர் கொண்டவன். அவன் பெயர் கிருஷ்ணன். உன் முத்தங்கள் கரைந்த மூச்சில் அவன் பெயர் கண்ணன்.”

என்ன செய்கிறேன், எவர் சொற்கள் இவை என்று தனக்குத்தானே வியந்தபடி மெல்ல அக்குளிர்ந்த உடலை தலையணை மேல் வைத்தாள். எழுந்து நின்று இரு கைகளாலும் முலைகளை அழுத்தியபடி இதழ் விம்ம கண்ணீர் வார நோக்கி நின்றாள். விழிகள் அசையாது அவள் முகத்திலேயே நிலைக்க மென்புன்னகை ஒன்று தன் மகளின் முகத்தில் மலர்வதைக் கண்டாள். “அன்னையே, எந்தாய்!” என்று அலறியபடி முழந்தாள் நிலத்தில் ஊன்ற விழுந்து அவள் இரு கைகளையும் பற்றி தன் தலைமேல் அறைந்தபடி “விழித்தெழுக! பிழை பொறுத்து என்னை ஆள்க! அன்னையே, என் குலதெய்வமே, மலர் அமர்ந்த செந்திருவே” என்று கதறினாள்.

புன்னகை இதழ்களை மலரச்செய்ய விழி விரித்து அவளை நோக்கி மெல்லிய குரலில் “கிருஷ்ணன்” என்றாள் மித்திரவிந்தை.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 6

ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே.

அவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்திருந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. காலையொளி எழுந்ததும் பறவைகள் சாளரங்களினூடாக வந்து அவள் அறைக்குள் சுழன்றன. "அவள் கைதொட்டு அளித்த வெறும்நீர் இனிக்கிறது. அவள் செல்லுமிடங்களில் மலர்கள் இதழ்விரிக்கின்றன" என்று சேடி ஒருத்தி கேலியென சொன்னாள். “ஆம்” என்றாள் செவிலி. "இசையென அவளை சூழ்ந்திருக்கிறான்.” அஞ்சி “கந்தர்வனா?” என்றாள் சேடி. “ஆயிரம்கோடி கந்தர்வர்களின் அரசன்” என்றாள் செவிலி.

அவளிடம் அவனைப்பற்றி எவரும் பிறகெதையும் சொல்ல நேரவில்லை. முட்டைவிட்டு எழும் பறவைக்குஞ்சு நீலவானை முன்னரே அறிந்திருக்கிறது. அன்னை அதற்கு அளிப்பதெல்லாம் சிறகுகளைப்பற்றிய நினைவூட்டலை மட்டும்தான். ஓரிரு வாரங்களுக்குள் அவனைப்பற்றி அவளறியாத எதுவும் புவியில் எஞ்சவில்லை என்பதை செவிலி அறிந்தாள். அவன் பெயரை அவள் ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒருகணம்கூட அவனை விட்டு உளம் விலகவுமில்லை.

பறவை வானிலிருக்கிறது. அது வானை நோக்குவதேயில்லை. மண்ணில் அது வானை காண்கிறது. அவன் குழல்சூடிய பீலிவிழியை, நீலநறும் நெற்றியை, இந்திரநீலம் ஒளிவிடும் விழிகளை, குவளைமலர் மூக்கை, செவ்விதழ்களை, இளந்தோள்களை, கௌஸ்துபச் சுருள் கொண்ட மார்பை, பொற்பட்டு சுற்றிய அணியிடையை, கனலெனச் சுற்றிய கழல்மணியை, சிரிக்கும் கால்நகவிழிகளை, நாகமென நீண்ட கைகளை, துளைகொண்ட குழல்தொட்டு இசைமலரச் செய்யும் மாயவிரல்களை, இடைசூடிய ஆழியை, வெண்சங்கை ஒவ்வொரு நாளும் தன் அணியறை ஆடியில் தான் என நோக்கினாள்.

அவன் ஆண்ட பெருநகரத்துத் தெருக்கள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒருநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. ஒவ்வொரு விழியிலும் அவளுக்கான ஏழ்பிறவிப் புன்னகை இருந்தது. அவளுக்கான அரண்மனையும் அலர்காடும் காத்திருந்தன. அவள் அமர்ந்து எழுந்த வெம்மையுடன் அரியணை இருந்தது அங்கே.

ஒவ்வொரு நாளும் அவள் புத்தாடை அணிந்துகொண்டாள். ஒருமுறை சூடிய மணிகளையும் அணிகளையும் பிறிதொருமுறை சூட மறுத்தாள். “என் உளம் அமர்ந்தவன் நூறுநூறு முறை நோக்கிச் சலித்தவை இவை தோழி” என்றாள். சேடி வியந்து பிறசேடியின் விழிகளை நோக்கியபின் “இவை இன்றுவந்தவை இளவரசி” என இன்னொரு அணிப்பேழையை திறந்தாள். வீணையை யாழை நந்துனியை நாகக்குழலை மட்டுமன்றி துடியை கிணையை பறையைக்கூட அவள் குழலென்றே கேட்டாள். களிற்றுயானை என இமிழ்ந்த பெருமுரசும் அவளுக்கு இன்குழல் இசைச்சுருளென்றே ஆகியது.

செவிலி அவள் நிலையை எவருமறியாது காத்திருந்தாள். ஆயினும் ஆசிரியர் வழியாக சூதர் வழியாக சேடியரென அமைந்த உளவர் வழியாக செய்தியை அறிந்தனர் அவள் தமையர். “அவள் நோய்கொண்டிருக்கிறாள்” என்றார் விந்தர். “அவளை நாம் சிறையிலடைத்துள்ளோம். தனிமையில் நொய்ந்துவிட்டாள்” என இரங்கினார் அனுவிந்தர். “சென்று அவளை நோக்கி நிலையறிந்து வா” என தன் துணைவி சுஜாதையை அனுவிந்தர் மாகிஷ்மதியின் கன்னிமாடத்துக்கு அனுப்பினார்.

அரசமுறைப் பயணமாக மாகிஷ்மதிக்குச் சென்று கன்னிமாடத்தில் உறைந்த இளவரசியைக் கண்டு மீண்டுவந்த சுஜாதை “அரசே, காற்று புகாது மூடிய செப்புக்குள் முல்லைமொட்டு வெண்மலர்கொத்தாவது போன்ற விந்தை சொல்நுழையா இற்செறிப்புக்குள் கன்னியர் காதலியராவது. வான்பறக்கும் புள்ளின் வயிற்றுக்குள் அமைந்த முட்டையில் வாழும் குஞ்சின் பறத்தலுக்கு நிகர் அது. அவள் இன்று நாமறியா ஒருவனை உளம் அமர்த்தியிருக்கிறாள்” என்றாள்.

திகைத்து “யாரவன்? யாதவனா?” என்றார் அனுவிந்தர். “அவனேதான். வேறுயார் இந்த மாயத்தை செய்ய இயலும்?” என்றார் விந்தர். “அவளிடம் ஆயிரம் சொல்லெடுத்து உசாவினேன். அவன் பெயரோ குலமோ ஊரோ அவள் சொல்லில் எழவில்லை. ஆனால் அவள் உள்ளம் அமைந்தவன் இளைய யாதவனே என்பதில் எனக்கும் ஐயமில்லை. கன்னி ஒருத்தியின் உடலே யாழென ஆகி இசைநிறையச்செய்ய இயன்றவன் அவன் மட்டுமே” என்றாள் சுஜாதை.

“இனி அவள் மகளிர்மாளிகைக்குள் எவரும் நுழையலாகாது. இன்றே அவளை அஸ்தினபுரியின் அரசருக்கு மணம்பேசுகிறேன்” என்றார் விந்தர். “மூத்தவரே, அது எளிதல்ல. மணத்தன்னேற்பு வழியாக அன்றி எவ்வழியாக அவளை அஸ்தினபுரியின் அரசர் மணந்தாலும் நாம் மகதருக்கும் கீசகருக்கும் எதிரிகளாவோம்…" என்றார் அனுவிந்தர். “மணத்தன்னேற்பில் நாம் எதையும் முன்னரே முடிவெடுக்க முடியாதல்லவா?” என்றார் விந்தர். “முடியும், நான் எண்ணிவகுத்துள்ளேன்” என்றார் அனுவிந்தர்.

அனுவிந்தரும் விந்தரும் மந்தண மன்றுகூடி சூது சூழ்ந்து நிறைமதி நாளில் மாகிஷ்மதியில் அவளுடைய மணத்தன்னேற்புக்கு நாள் ஒருக்கினார்கள். அதில் போட்டி என்பது கதாயுதப்பயிற்சி மட்டுமே என முடிவெடுத்தனர். அவ்வழைப்பு அத்தனை அரசர்களுக்கும் ஜெயசேனரின் ஆணைப்படி முத்திரையிடப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் விந்தரும் அனுவிந்தரும் எண்ணி முடிவெடுத்த பன்னிரெண்டு ஷத்ரிய அவைகளுக்கும் பதினெட்டு சிறுகுடி மன்னர்களுக்கும் அன்றி பிற எந்நாட்டிற்கும் உரியநேரத்தில் சென்றடையாமல் மதிசூழப்பட்டது. ஒவ்வொரு நகருக்கும் அவந்தியால் வகுக்கப்பட்ட நேரத்தில் பிந்திச்செல்லும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். ஜராசந்தருக்கும் கீசகருக்கும் அஸ்தினபுரியின் பீமனுக்கும் மணத்தன்னேற்பு நாளுக்கு மறுநாள்தான் ஓலைகள் சென்றடைந்தன.

துவாரகைக்கும் மாகிஷ்மதிக்கும் நடுவிலிருந்த பெரும்பாலைநிலத்தை எண்ணிய அனுவிந்தர் அன்று விடியலில் செய்தி கிடைத்தால் போதுமென வகுத்தார். ஜெயசேனரின் ஓலையுடன் வந்த அவந்தியின் தூதன் புழுதிபடிந்த புரவியுடன் துவாரகையின் எல்லையில் அமைந்த காவல்மாடத்தை அன்று பின்மாலையில் அடைந்தான். தூதென்று அவன் சொன்னான், ஏதென்று சொல்லவில்லை. ஆனால் அவன் உணவுண்டுகொண்டிருக்கையிலேயே அவன் இடையிலிருந்து அந்தச்செய்தி அகற்றப்பட்டது. அதை போலிசெய்தபின் முதலோலை மீளவைக்கப்பட்டது. தூதன் சற்று இளைப்பாறி வெயிலமைந்தபின் துவாரகை நோக்கி கிளம்பும்போது காவலர்தலைவன் அனுப்பிய பறவைத்தூது துவாரகைக்கு சென்றுவிட்டது.

பறவை அக்ரூரரின் மாளிகைச் சாளரத்தில் அந்திக்கருக்கலில் வந்து அமர்ந்தது. அவந்தியின் அரசர் ஜெயசேனரின் இளமகள் யாதவ இளவரசி மித்திரவிந்தையின் மணத்தன்னேற்பில் கலந்துகொண்டு கதாயுதம் ஏந்தி களம் கொள்ள வேண்டுமென்று இளைய யாதவரை அழைத்திருந்தார் அமைச்சர் பிரபாகரர். அவ்வழைப்பில் ஏழு நாட்களுக்கு முந்தைய நாள் குறியிடப்பட்டிருந்ததைக் கண்டதுமே அனைத்தையும் அறிந்துகொண்ட அக்ரூரர் உடல்பதற சால்வை நழுவி இடைநாழியிலேயே உதிர ஓடி மூச்சிரைக்க இளைய யாதவரின அவைக்களத்தை அடைந்தார்.

நூலவைக் கூடத்தில் புலவர் சூழ அமர்ந்து வங்கநாட்டுக் கவிஞர் கொணர்ந்த காவியமொன்றை ஆய்ந்து கொண்டிருந்த இளையவர் முன் சென்று நின்று “இளையவரே, தாங்கள் சூடவேண்டிய அவந்திநாட்டு இளவரசியை பிறர் கொள்ளும்படி வகுத்துவிட்டனர். அவளுக்கு நாளைக்காலை மணத்தன்னேற்பு என்கின்றனர். செய்தி பிந்திவரும்படி வஞ்சமிழைத்துள்ளனர்…” என்று கூவினார். “ஏதுசெய்வதென்று அறியேன். இளவரசியை பிறர் கொண்டால் அது துவாரகைக்கு இழப்பு. அஸ்தினபுரியின் இளவரசர் கொண்டால் மேலும் இக்கட்டு…” என்றார்.

இளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி தன் தோழர் ஸ்ரீதமரிடம் “அவந்திக்கு நாளை புலரிக்குள் சென்று சேர வாய்ப்புள்ளதா ஸ்ரீ?” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் முடியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்?” என்றார். “வழியில் ஏழு காவல்மாடங்கள் உள்ளன. அங்கே புரவிகளை காத்து நிற்கும்படி ஆணையிடுவோம். புரவிகளை மாற்றிக்கொண்டே செல்லலாமே” என்றார் சங்கமர்.

“ஆனால் அப்புரவிமேல் செல்வது மானுட உடல்” என்றார் அக்ரூரர். “அதற்கும் களைப்பும் பசியும் உண்டு.” சங்கமர் “நான் மானுட உடல்களைப்பற்றிப் பேசவில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் இப்போதே கிளம்புவோம். இன்னும் ஓர் இரவு நமக்கிருக்கிறது” என்று இளையவர் எழுந்தார். பலராமர் “இளையோனே, நானும் உடன் வருகிறேன்” என்றார். “மூத்தவரே, தங்கள் உடலைச் சுமக்கும் புரவி அத்தனை தொலைவு வர முடியாது. இங்கு என் மணிமுடிக்குக் காவலாக தாங்கள் இருங்கள்” என்றார் இளையவர். “இந்தப்பயணத்தை தனியாகவே நிகழ்த்த விரும்புகிறேன். நான் அவைபுகுவதை அவர்கள் அறியலாகாது” என்றார்.

“அக்ரூரரும் சங்கமரும் ஒரு சிறியபடையுடன் இன்றே அவந்திக்கு கிளம்பட்டும். அவர்கள் செல்வதை அவந்தியின் ஒற்றர்கள் விந்தருக்கு அறிவிப்பார்கள். நான் செல்வதை அச்செய்தி மறைத்துவிடும்” என்று இளைய யாதவர் ஆணையிட்டார். அக்ரூரர் “இளவரசே, இன்னும் நாம் அறிந்திராத ஒன்றுள்ளது. அவந்தி நாட்டு இளவரசியின் உள்ளம்” என்றார். "யாதவர் என்ற சொல்லே அவள் காதில்விழாது வளர்த்துள்ளனர். அவையில் அவள் தங்களை அறியேன் என்று உரைத்துவிட்டால் அதைவிட இழிவென வேறேதுமில்லை.”

இளையவர் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றார். அக்ரூரர் “அத்துடன் அவர்கள் எவரேனும் களம்புகுந்து இளவரசிக்காக சமராடலாமென ஐயம் கொண்டிருப்பதால் அவளை அவைக்களத்துக்கு கொண்டுவராமலும் போகலாம். அந்நிலையில் பெரும்படை கொண்டுசென்று அவந்தியை வென்று அரண்மனையைச் சூழ்ந்து மகளிர்மாளிகையை உடைத்தாலொழிய அவளை கைபற்ற முடியாது. அது துவாரகையால் இப்போது இயல்வதல்ல. அவந்தி இளவரசர்கள் அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர்கள்” என்றார்.

அக்ரூரர் தொடர்ந்தார் “தனியாகச் சென்று எவ்வண்ணமேனும் இளவரசியை தாங்கள் சந்தித்து அவள் உள்ளம் தங்களை ஒப்பும்படி செய்தால் மட்டுமே அவளை அடைந்து மீளமுடியும். தாங்கள் இதை முன்னரே செய்திருக்கவேண்டும். மிகவும் பிந்திவிட்டோம் என அஞ்சுகிறது என் உள்ளம்.” நகைத்தபடி இளைய யாதவர் “கதிர்விளைவது அப்பயிரின் எண்ணப்படி அல்ல, வானாளும் காற்றுகளின் கருத்துப்படியே என வேளாளர் சொல்வதுண்டு அக்ரூரரே” என்றார். “நம்முடன் பெண் ஒருத்தி வருவாளென்றால் அவளை அவந்திநாட்டு மகளிர்மாளிகைக்கு அனுப்ப முடியும். அவள் சென்று இளவரசியிடம் உரையாடி உளம் அறிந்து வரக்கூடும்.”

அக்ரூரர் “பெண் என்றால்…” என்று தயங்கி “அவந்தியில் நம் யாதவ வணிகர் சிலர் உள்ளனர். அவர்களின் மகளிர்களில்…” என தொடர “மதுராவிலிருந்து சுபத்திரை வந்திருக்கிறாள் அல்லவா? அவள் என்னுடன் வரட்டும்” என்றார் இளைய யாதவர். உரக்கநகைத்து “ஆம், அவள் வரட்டும். அவளுக்கும் ஒரு நல்ல சமராடலை கண்ட களிப்பு எஞ்சும்” என்றார் பலராமர். “ஆம், அவள் மட்டும் வந்தால்போதும்” என்றார் இளையவர்.

திகைப்புடன் “அரசே!” என்றார் அக்ரூரர். ஏதேனும் சொல்லலாகாதா என்னும் முகத்துடன் பிறரை நோக்கிவிட்டு அவர் “பெரும்பாலையை ஓரிரவில் பெண்ணொருத்தி கடப்பதென்றால்…” என்று தொடங்க இளையவர் “பெண்கள் எவராலும் இயலாது. சுபத்திரை மட்டுமே அதை ஆற்ற முடியும். அவள் வில்லின் உள்ளமறிந்தவள். புரவிகள் அவளை அறியும்” என்றார்.

“அரசே, மதுராவிலிருந்து இளவரசி இங்கு வந்து ஏழு நாட்களே ஆகின்றன. நெடும்பயணத்தின் களைப்பு இன்னும் ஆறவில்லை. இந்நீண்ட பயணத்திற்குப்பின் ஒருவேளை அதற்குப் பின் நிகழ இருக்கும் போரையும் இளவரசி எதிர்கொள்ள வேண்டும் அல்லவா?” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் “அவள் குன்றா வல்லமை கொண்டவள்” என்றார். பலராமர் தொடையில் அறைந்து நகைத்தார். “அவள் எனது பெண்வடிவம் அக்ரூரரே. கதையாடும் பெண் இப்பாரதவர்ஷத்தில் அவளொருத்தியே.”

“ஆம், அதை அறிவேன்” என்றார் அக்ரூரர். “ஆனால் நாம் இளவரசியை களத்துக்குக் கொண்டுசெல்கிறோம். அவர் வெல்வாரென்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வண்ணமேனும் அவர் சிறைப்பட நேர்ந்தால் அது குலமன்றுக்கு முன் கேள்வியாகும். அரசியல் சூழ்ச்சிகளே நிலைமாறும். எனவே அவர் தந்தையிடம் ஒரு சொல் ஒப்புதல் கேட்டாக வேண்டும்.” இளைய யாதவர் “அவள் என் தங்கை. என் தமையனின் சொல்லே போதும்” என்றார்.

“இல்லை அரசே, முறைமைப்படி மட்டுமே அவள் தங்கள் தங்கை. தந்தை வசுதேவருக்கும் முதல் அரசி ரோகிணி தேவிக்கும் பிறந்தவரென்பதனால் அவ்வண்ணமாகிறது. ஆனால், மதுராவின் அரசரான வசுதேவர் துவாரகைக்கு தன் இளவரசியை விருந்தனுப்பி இருப்பதாகவே அரச முறைமைகள் கொள்ளும். போருக்கு அவரை அழைத்துச் செல்ல மதுராவின் அரசரின் ஒப்புதல் தேவை” என்றார் அக்ரூரர்.

இளைய யாதவர் சற்று எண்ணிவிட்டு “ஆம் ஒப்புதல் தேவை. ஒப்புதல் கோரி ஒரு பறவைத் தூது அனுப்புங்கள்” என்றார். அக்ரூரர் “பறவை சென்று மீள இருநாட்கள் ஆகுமே?” என்றார். “உகந்தவழியை அவந்தியின் இளவரசர்கள் நமக்கு காட்டியிருக்கின்றனர் அக்ரூரரே. இருநாட்களுக்கு முன் நாள் குறித்து அத்தூது செல்லட்டும்” என்றார். அவர் என்ன எண்ணுகிறாரென்பதை விழி நோக்கி அறிந்த அக்ரூரர் “ஆனால்...” என மேலும் இழுக்க “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாங்கள் கிளம்பியாக வேண்டும். சுபத்திரைக்கு ஆணை செல்லட்டும்” என்றார் இளைய யாதவர்.

தனக்கென ஆழி ஒளிசூடி எழுந்ததை, வெண்சங்கு மூச்சுகொண்டதை மித்திரவிந்தை அறிந்திருக்கவில்லை. அவளுக்கு மணத்தன்னேற்புக்கென அரங்கு ஒருக்கப்பட்டிருப்பதை செவிலிதான் வந்து சொன்னாள். அரங்கு ஒருங்கி அதில் அணிவேலைகள் நடப்பதைக் கண்டு உசாவியபின்னரே அவளும் செய்தியை அறிந்திருந்தாள். மூச்சிரைக்க ஓடி மகளிர்மாளிகைக்குள் சென்று அவள் அமர்ந்திருந்த கலைமண்டபத்தின் தூண்பற்றி நின்று “இளவரசி, அங்கே தங்கள் மணத்தன்னேற்புக்கென அனைத்தும் ஒருங்கிவிட்டிருக்கின்றன. வரும் நிறைநிலவுநாள் காலை முதற்கதிர் எழுகையில் முரசு இயம்பும் என்கிறார்கள்” என்றாள்.

நிமிர்ந்து நோக்கிய நங்கையிடம் “தங்கள் உளம் வாழும் வேந்தருக்கு அழைப்பில்லை என்று அறிந்தேன் தேவி. அஸ்தினபுரியின் இளவரசர் மட்டுமே வெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இக்களம். கதையேந்தி எதிர் நின்று போரிட அவருக்கு நிகரென இருக்கும் நால்வர் ஜராசந்தரும் கீசகரும் பீமசேனரும் பலராமரும் மட்டுமே. அவர்கள் நால்வருமே இங்கு வராமல் ஒழியும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அஸ்தினபுரிக்கு அரசியென தாங்கள் செல்வது உறுதியென்றாகிவிட்டது என்கிறார்கள் ஏவலர்கள்” என்றாள்.

தன் உளம்நிறைத்து அருகிலென நின்றிருந்த அவனை நோக்கி முகம் மலர்ந்து அமர்ந்திருந்த திருமகள் திரும்பி “என்னை அவர் கொள்ள வேண்டுமென்பது அவர் திட்டமாக இருக்க வேண்டும் அல்லவா? அவர் என்னைக் கொள்வது என் தேவை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது?” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே!”

செவிலி சொல்லிழந்து நோக்கி “அவ்வண்ணமே” என்றாள். ஆனால் ஒவ்வொரு நாளும் வளரும் அச்சமும் பதற்றமும் கொண்டவளானாள். “இளவரசி, தன்னேற்புக்கென அழைப்பு மணநிகழ்வன்று காலையில்தான் யாதவ மன்னரை சென்றடையும். இங்கு வருபவர்கள் பதினெட்டு சிற்றரசர்களும் அஸ்தினபுரியின் பெருந்தோளரும் மட்டுமே. நிலையழிந்திருக்கிறேன். நினையாதது நடக்குமெனில் எப்படி உயிர்வாழ்வேன்?” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது? தன் விழைவெதுவோ அதை நிலைநாட்டும் வித்தை அறிந்தவர் அவர் என்கிறார்கள். அவர் எண்ணுவது நிகழட்டும்” என்றாள்.

மணத்தன்னேற்பு குறித்த அன்றே விந்தரும் அனுவிந்தரும் தங்கள் படைகளுடன் வந்து நகரை சூழ்ந்திருந்தனர். அரண்மனையில் ஜெயசேனர் தன் யாதவ அரசி ரஜதிதேவியுடன் அணுக்கர் சூழ அறியாச் சிறையிலிருக்க பட்டத்தரசி பார்கவியால் ஆளப்பட்டது மாகிஷ்மதி. கர்ணகரின் சொல்படி செயலாற்றினர் ஒற்றர். அரண்மனை முற்றத்தில் அமைந்த மணத்தன்னேற்புக் களத்தில் இடப்பக்கம் குலமூதாதையரும் குடிமுதல்வரும் அமரும் நூறு இருக்கைகள் அமைந்தன. வலப்பக்கம் மாலைகொள்ள வரும் அரசகுடியினருக்காக நாற்பது இருக்கைகள் மட்டும் போடப்பட்டன.

அக்ரூரரின் படைப்பிரிவு துவாரகையிலிருந்து கிளம்பியதை ஒற்றர்வழி அறிந்தார் அனுவிந்தர். “அவர்கள் கடுகி வருகிறார்கள். நாளை உச்சிவெயிலுக்குள் வந்துசேரக்கூடும்” என்றார். விந்தர் நகைத்து “புலரி மூப்படைவதற்குள் அஸ்தினபுரியின் இளவரசர் அவளுக்கு மாலையிட்டிருப்பார்” என்றார். “அவளை அம்மாளிகைக்கு வெளியே வீசும் ஒளியும் காற்றும்கூட தொடக்கூடாது. களம்வென்ற கௌரவர் மலர்மாலை கொண்டு சென்று நின்றிருக்கையில் அதன் வாயில் திறக்கட்டும். அவள் விழிதொடும் முதல் ஆண்மகனே அவர்தான் என்றாகட்டும்” என்றார். அனுவிந்தர் “ஆயினும் நாம் வாளாவிருக்கலாகாது மூத்தவரே. இளைய யாதவன் மானுடனல்ல மாயன் என்கிறார்கள். நாம் நூறுவிழிகள் கொண்டு துஞ்சாமலிருக்கவேண்டிய நேரம் இது” என்றார்.

மகளிர் மாளிகைக்குள் எவரும் நுழைய ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உள்ளிருந்து ஒருவரும் வெளியேறவும் முடியவில்லை. வேலணியும் வாளணியும் மாளிகையை சூழ்ந்திருந்தன. வில்லணியினர் காவல்மாடங்களில் கண்துஞ்சாதிருந்தனர். அனுவிந்தர் நூறு வேட்டைநாய்களை கொண்டுவந்து மகளிர்மாளிகையைச் சூழ்ந்த அணிக்கானகத்தில் நிறுத்தி அயலவர் மணத்தை கூர்ந்துசொல்லச் செய்தார். அவன் மாயச்சிறகுகொண்டு பறந்து வரக்கூடுமென்பதனால் மாளிகையைச் சூழ்ந்து நூறு கிள்ளைக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவை மணிக்கண்களால் வானை நோக்கி ‘எவர்? எவர்?’ என அஞ்சி அஞ்சி வினவிக்கொண்டிருந்தன.

“இளவரசி, இம்மாளிகைக்குள் நாகரும் தேவரும் நுழையமுடியாதபடி காவலிடப்பட்டுள்ளது” என்றாள் செவிலி. “இளைய யாதவர் நகர் நுழைந்தால்கூட இம்மாளிகையை போரில்லாது அணுகவியலாது. போரிடுவது இத்தருணத்தில் நிகழாது என்கிறார்கள்.” அச்சொற்களை உள்வாங்காமல் விழிமலர்ந்து புன்னகைத்து “இன்று காலைமுதல் இச்சிற்றெறும்புகள் என் அறைக்குள் வந்துகொண்டிருக்கின்றன அன்னையே. செந்நிறமும் கருநிறமும் கொண்டவை. இவற்றையே நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

செவிலி குனிந்து நோக்கி “மரச்சுவரின் விரிசல் வழியாக வருகின்றன” என்றாள். அவற்றிலொன்று இழுத்துச்சென்ற மணியை நோக்கி “இது வஜ்ரதானியம் அல்லவா? எங்கிருந்து கொண்டுசெல்கிறது?” என வியந்தாள். “செந்நிறமணிகளும் உள்ளன அன்னையே” என்றாள் மித்திரவிந்தை. “ஆம், அவை கேழ்வரகு மணிகள். அவை தினை மணிகள். பொன்னிறமானவை நெல்மணிகள்” என்றாள் செவிலி. “கீழே மகளிர்மாளிகையின் கூலக்களஞ்சியம் உள்ளது. அங்கிருந்து நிரைஎழுகின்றன.”

“கால்முளைத்த கூலமணிகள்” என மித்திரவிந்தை நகைத்தாள். “பேரரசி ஒருத்திக்கு சீர்கொண்டு செல்லும் யானைகள் என எண்ணிக்கொண்டேன்.” செவிலி அவளை நோக்கி “இளவரசி ஆடல்பருவத்தை நீங்கள் கடக்கவேயில்லை” என்றாள். “பொருள்சுமந்த சொற்கள் என பின்னர் தோன்றியது” என்றாள் மித்திரவிந்தை. பெரியதோர் வெண்பையுடன் சிலந்தி ஒன்று சென்றது. “அதுவும் கூலமூட்டையா கொண்டுசெல்கிறது?” என்றாள். “இளையோளே, அது அவளுடைய மைந்தர்மூட்டை” என்றாள் செவிலி. “எட்டு புரவிகள் இழுக்கும் தேர்போன்றுள்ளது” என்றாள் மித்திரவிந்தை. “நான் சென்று கூலப்புரையில் எங்குள்ளது விரிசலென்று கண்டுவருகிறேன்.”

அவள் தலையசைத்தபின் குனிந்து நோக்கினாள். மணிசுமந்து சென்ற எறும்புகளின் கண்களை நோக்க விழைந்து மேலும் குனிந்தாள். அவற்றின் சிறுகால்கள் புரவிக்குளம்புகள் போல் மண்ணை உதைத்து முன்செல்வதை கண்டாள். எத்தனைபெரிய விழிகள் என அவள் எண்ணிக்கொண்டாள். ‘இவை துயில்வது எங்கனம்?’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்?” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்?” என்றாள். “என் பெயர் ஹர்ஷை. நான் சோனகுலத்தவள்” என்றது செவ்வெறும்பு. “நாங்கள் மைந்தரால் பொலிந்தவர்கள். அங்கே எங்களவள் ஒருத்தி தன் வயிறுபெருத்து மைந்தர் செறிந்து காத்திருக்கிறாள். அவளுக்கென சீர்கொண்டுசெல்கிறோம்.”

“எத்தனை மைந்தர்?” என்றாள் மித்திரவிந்தை உடல்மெய்ப்புற. “என் பெயர் மித்ரை. நான் குலத்தால் ஹிரண்யை” என்றது பொன்னிற எறும்பு. “எங்களுக்கு எண்ணென ஏதுமில்லை. விருகன், ஹர்ஷன், அனிலன், கிரிதரன், வர்தனன், உன்னதன், மகாம்சன், பாவனன், வஹ்னி, குஷுதி என அம்மைந்தர் பெயர்கொண்டுள்ளனர்” என்றது. கருநிற எறும்பு திரும்பி “இன்னும் முடியவில்லை கன்னியே” என்றது. “என் பெயர் காளகுலத்து கண்வை. எங்கள் குடியெழும் மைந்தர்கள் இன்னுமுண்டு. சங்கிரமஜித், சத்வஜித், சேனஜித், சபதனஜித், பிரசேனஜித், அஸ்வஜித், அக்ஷயன், அப்ரஹ்மன், அஸ்வகன், ஆவகன், குமுதன், அங்கதன், ஸ்வேதன், சைஃப்யன், சௌரன் என அந்நிரை முடிவிலாது செல்கிறது.”

“மென்மையான சிறிய வளை. அதற்குள் செம்மணல் விரித்து எங்கள் குருதியால் பாத்தி கட்டியிருக்கிறோம். அவ்வெங்குழம்பில் அவை ஊன் உண்டு உயிர் துளிர்த்துக்கொண்டிருக்கின்றன. இவை அவர்களுக்கான கூலமணிகள்” என்றது வெண்ணிற எறும்பான தவளகுலத்து சங்கவை. விழிநீர் குளிர மித்திரவிந்தை பெருமூச்சுவிட்டாள்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 7

கம்சனின் சிறையிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் வசுதேவர் ரோகிணியை ஒருமுறையேனும் சந்திக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த வெண்ணிற மைந்தன் இளமையிலேயே பெருந்தோள் கொண்டு வளர்வதை சிறையிலிருந்து கேட்டு அகவிழியால் சித்திரம் எழுதிக்கொண்டார். தோள்தொட்டணைத்து உச்சி முகர்ந்து மகிழ்ந்தார். கம்சன் கொல்லப்பட்டு மதுராபுரி விடுதலைபெற்று அவர் சிறைமீண்டு வெளியே வந்தபோது கல்வாயிலில் உடலெங்கும் குருதி வழிய நின்ற இருமைந்தரையும் கண்டு இரு கைகளையும் விரித்தபடி அணுகி மெய்தளர்ந்து அவர்கள் கால்களில் விழுந்தார். பின்பு விழித்துக் கொண்டபோது அவர் கண்டது ஐராவதத்தின் துதிக்கை போன்ற இரு கைகளால் தன்னை ஏந்தி எடுத்துச் செல்லும் முதல் மகனை.

விழிதூக்கி அவன் கண்களை நோக்கி “மைந்தா நீயா?” என்றபடி மெலிந்த கைகளால் அவன் தோளை தொட்டார். யானை மருப்பை வருடியது போல உணர்ந்தார். இத்தனை இறுகிய பெருந்தோள்களுடன் இளமைந்தன் ஒருவன் இருக்க முடியுமா என்று வியந்தார். இவன் என் மகன் இவன் என் மகன் என எழுந்த நெஞ்சை கண்பட்டுவிடும் என்ற எண்ணத்தால் அடக்கி பற்களை இறுகக் கடித்தார். விம்மி எழுந்த அழுகை இதழ்களில் அதிர்ந்து வெளியேறியது. நூறு நெடுமூச்சுகளின் வழியாக தன்னை தளர்த்திக்கொண்டார். அன்றும் தொடர்ந்த சில மாதங்களும் எப்போதும் அவன் கைவளைப்பிற்குள் இருப்பதாகவே உணர்ந்தார். மைந்தனை ராமன் என பிறர் அழைக்க அவர் பலன் என்றே எப்போதும் சொன்னார்.

ரோகிணியை அவர் எண்ணவேயில்லை, மைந்தரையே உளம் சூழ்ந்திருந்தார். மதுவனத்திலிருந்து வந்த படகில் பலராமனின் அன்னை மதுராவை அடைந்த செய்தி அவர் பின்னுச்சிவேளை இளந்துயிலிலிருந்தபோது அமைச்சர் ஸ்ரீதமரால் கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் தன் முதல் மணத்துணைவியை அவர் நினைவுகூர்ந்தார். புன்னகைத்தபடி "முத்துக்களின் ஒளியில் சிப்பியை மறந்துவிட்டேன், நான் எளிய வணிகன்" என்றார். ஸ்ரீதமர் புன்னகைத்து "சிப்பியின் ஒளிமிக்க தசையையே முத்து என்கிறார்கள் அரசே” என்றார். “ஆம்” என்று நகைத்தபடி தன்மேலாடையை எடுத்துச்சூடி முகம் கழுவச்சென்றார். அங்கு ஆடியில் தன் முகம் நோக்குகையில் முதல்முறையாக முதுமையை உணர்ந்தார். தாடி நரையோடி நீண்டிருந்தது. எண்ணியவை ஏங்கியவை கைவிட்டவை கடந்துசென்றவை அனைத்தும் வரிகளென முகத்தில் பரவியிருந்தன.

நடுங்கும் காலடிகளுடன் படியிறங்கி முற்றத்தில் நின்ற தேரில் ஏறி "படித்துறைக்கு விரைக!” என்றார். எரிந்தும் இடிந்தும் பழுதடைந்த மதுராவை யாதவ வீரர்களும் யவனத்தச்சர்களும் செப்பனிட்டுக்கொண்டிருந்தனர். உடைந்தும் சிதைந்தும் கிடந்த மரப்பலகைகளின் மேலும் சட்டங்களின் மேலும் சகடங்கள் ஏறி இறங்கிச் சென்றன. தேரில் நின்று ஒவ்வொரு கணமும் குளிர்ந்த அலையாக பின்னோக்கிச்செல்ல ரோகிணியை தன் நினைவின் ஆழத்திலிருந்து மீட்டெடுத்தார். இளமகளாக தன் கைபிடித்து அவள் அருகணைந்த முதல் நாளை. அன்றறிந்த நாணம் நடுங்கும் அவள் உடலை. அதிலூறிய காமத்தின் மந்தண நறுமணங்களை. பிறிதொருவர் இலாதபொழுது செவியில் இதழ்தொட்டு அவள் கூறிய சிறு மென்சொற்களை. அவ்வுணர்வுக்கு ஒலி எழுந்ததென வெளிப்படும் மூச்சை. அவர் மட்டுமே கேட்ட சில ஒலிகளை.

துறைமேடைக்குச் சென்று இறங்கியபோது அவர் அழுது கொண்டிருந்தார். ஏவலன் அவர் தோள்களை மெல்ல தாங்கி விழாது பற்றினான். அலை ஒலியோடு தரைதழுவிச் சென்ற காளிந்தியின் இருள்நீலத்தை நோக்கிக் கொண்டிருந்தார். காலமில்லா வெளியில் எங்கென்று அறியாது நின்றிருந்தார். தொலைவிலென. முரசோசை கேட்டதும் துறைமேடை உயிர் கொண்டு எழுந்தது. காவல்மாடத்தின் உச்சியிலிருந்த பெருமுரசம் முழங்கியது. கொம்புகள் பிளிறி வருக என்றன. மலரில் வந்தணையும் பட்டாம்பூச்சியென இரு வண்ணப்பாய்கள் காற்றில் துடிக்க மெல்ல அருகுசேர்ந்தது அணித்தோணி. "அதுதான் அரசே” என்றார் ஸ்ரீதமர். "ஆம்” என்றார் வசுதேவர். "அதுதான் என பார்க்கும் முன்னரே உள்ளம் அறிந்துவிட்டது.” அவரது உளநடுக்கம் தாடியின் அசைவில் வெளிப்பட்டது.

படகின் உள்ளறைக்கதவு திறக்க மங்கலத் தாலத்துடன் அணிச்சேடி ஒருத்தி வெளிப்பட்டாள். தயங்கும் வாய் ஒன்று இதழ்பிரிந்து அறியாச்சொல் வெளிப்படும் தருணமென அவ்வறை வாயிலில் ரோகிணி தோன்றினாள். முகில் விலகி எழும் நிலவு போல் வெண்ணிறம் கொண்ட உடல், பொன்னூல் பின்னல் மேவிய மஞ்சள் பட்டாடை. கருங்குழல் புரிகள் சூழ்ந்த வட்ட வெண்முகம். எஞ்சும் கனவுகள் நிறைந்த நீல நீள்விழிகள். அவள் தன் நெடிய காலெடுத்து வைத்து படகு வளைவுக்கு வந்து நடைபாதை நீண்டு அணைவதற்காக காத்து நின்றபோது திரும்பி அரண்மனைக்கு ஓடிவிட வேண்டுமென்ற எண்ணத்தை வசுதேவர் அடைந்தார். வெண்சுதையில் வடித்த கொற்றவை போலிருந்தாள். ஆடைக்குள் மதகளிற்றின் துதிக்கைகள் என எழுந்த அவள் பருத்த தொடைகளை இடையின் இறுகிய அசைவை கண்டார். அவளை அவ்வண்ணமே அவர் அறிந்திருந்தார் என்றாலும் நெடுங்காலத் தனிமையில் அவரது அச்சமும் விழைவும் கலந்து அவளுடலை முழுமையாகவே மாற்றி புனைந்து கொண்டிருந்தது.

மணச்சொல்லாடல் நிகழ்ந்து கொண்டிருந்தபோது சூதன் ஒருவன் அவரிடம் சொன்னான். “இளவரசே, பெண்ணெனப் பிறந்ததனால் மட்டுமே கதாயுதம் எடுக்க முடியாமல் போனவர் யாதவ இளவரசி. நீள்வெண் கரங்களும் திரண்ட பெருந்தோள்களும் கொண்ட நெடிய உருவினர்.” அச்சொல் அன்று அவரது இளமையின் ஆணவத்திற்கு அறைகூவலாகவே ஒலித்தது. அவ்வண்ணமெனில் அவளையே கொள்வேனென்று எழுந்தது அகம். கம்சனின் ஒப்புதல் பெற்று தனிச்சிறு படகில் சென்று சுஷமம் என்ற பெயர் கொண்ட அவளது ஆயர்பாடியை அடைந்தார். யமுனைப் படித்துறையில் இறங்கி மேலேறிச்செல்லும் மரப்படிகளில் ஏறி அங்கு நின்ற பெருமருதத்தின் அடிமரத்தின் கீழ் நின்று நோக்கியபோது அப்பால் இரு வெண்காளைகளைக் கட்டிய கயிற்றை ஒற்றைக் கையால் பற்றி இடையில் பால்நிறைந்த பெருங்கலத்துடன் செல்லும் அவளை கண்டார்.

அக்காளைகளிரண்டும் மூக்கணைக் கயிறுகள் இடப்படாதவை. அவற்றில் ஒன்று அவரது மணமறிந்து சற்றே தலைதிரும்ப ஒரு கையால் அதை இழுத்து நிறுத்தினாள். அது தலை திருப்பி மூச்சிரைத்து உடல்வளைந்து நின்று வால்சுழற்றி சிறுநீர் கழித்தபின் கால் மாற்றி வைத்தது. இடையிலிருந்த பாற்குடத்தின் ஒரு துளியேனும் ததும்பவில்லை. அப்போதுதான் அவருள் அச்சம் எழுந்தது. திரும்பி படியிறங்கி படகேறி மீண்டுவிட வேண்டுமென்று எண்ணினார். அவ்வெண்ணத்திற்கு மேலென பெருவிழைவு அலையடித்து மூடியது. இப்பெண்ணை இங்கு தவிர்த்தால் எஞ்சிய வாழ்நாளெல்லாம் இவளுக்கென ஏங்கி அழிவோம் என்று எண்ணினார். இவள் முன் ஆணென தருக்கி எழ முடியாமலிருக்கலாம். இவள் கால்களில் அடைக்கலமென்றாகி நின்றால் முழு அருளும் பெற்று உய்யவும் கூடலாம். பிறிதொரு வழியும் எனக்கில்லை. இவளுக்குப் பின்னாலிருந்து என் சித்தம் ஒருபோதும் விலகப்போவதில்லை.

அவள் சென்ற பாதையில் தயங்கும் காலடிகளை வைத்து நுழைந்தார். அவள் சென்று நுழைந்த ஆயர் இல்லத்து வாயிலில் சென்று நின்று "அன்னையே” என்றார். தொழுவத்தில் ஒற்றைக்கையால் காளைகளை தறியில் சுற்றிக் கட்டிவிட்டு மறுகையால் பாற்குடத்தைச் சுழற்றி மேடை மேல் வைத்துக்கொண்டிருந்த அவள் திரும்பி நோக்கி கன்னத்தில் சரிந்த கார்நெடுங்கூந்தலை ஒதுக்கி "எவர்?” என்றாள். “நான் மதுராபுரியின் கம்சரின் அமைச்சன்” என்ற வசுதேவர் "மதுவனத்து சூரசேனரின் மைந்தன்” என தொடர்ந்தார். அவள் முகத்தில் நாணம் எழவில்லை. கண்களில் மட்டும் மென்னகை எழுந்தது. "தாங்களா? வருக!” என்றபடி மேலாடை திருத்தியமைத்து கீழாடையின் மடிப்புகளை சற்றே நீவி சீரமைத்தபடி வெளிவந்து திண்ணையில் நின்றாள். “வந்து அமர்க! தந்தையை வரச்சொல்கிறேன்” என்றாள்.

“நான்…” என்று சொல்லத்தொடங்கியபின் மீண்டும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்ற உணர்வை வசுதேவர் அடைந்தார். "அமருங்கள் அமைச்சரே” என்றாள் ரோகிணி. தன் மணத்தூது அங்கு சென்றடைந்த செய்தியை அவள் அறிந்திருக்கவில்லையோ என எண்னினார். ஆனால் மறுகணமே அவள் "தங்கள் மணத்தூது வந்தது. எங்கள் ஒப்புதலை தந்தை ஓலை வழியாக தெரிவித்துவிட்டார் என்றறிந்தேன்” என்றாள். அவள் விழிகளை நிமிர்ந்து நோக்க அஞ்சி தலை குனிந்து "இளவரசி, என்னைக் கண்டபின்னும் அம்முடிவை நீட்டிக்க முடியுமா உங்களால்?” என்றார். "ஏன்?” என்று அவள் வியந்தாள். "இது என் தந்தை எடுத்த முடிவல்லவா? அவருக்கு என்றும் கடன் பட்டவளல்லவா நான்?” வசுதேவர் தலை நிமிர்ந்து "எனது தலை உங்கள் தோளளவுக்கே உள்ளது இளவரசி” என்றார்.

"உங்கள் முன் என் தலை என்றும் தாழ்ந்தே இருக்கும் அமைச்சரே” என்றாள் ரோகிணி. அச்சொல்லில் இருந்த செதுக்கி எடுத்த முழுமை அவரை வியப்புறச் செய்தது. விழிதூக்கி நகை நிறைந்த அவள் முகத்தை நோக்கினார். “நான் அருளப்பட்டவனானேன்” என்றார். இதழ்கள் நடுவே வெண்பற்கள் ஒளிர "அவ்வண்ணமே நானும்” என்று சொல்லி “அமர்க!” என்றாள் அவள். பின்னர் மங்கலநன்னாளில் மூதாதையர் சொல்நின்று குலத்தவர் சூழ அவள் கையை பற்றுகையில் பொற்தேர் ஒன்றில் ஏறிய விண்ணவன் போல் தன்னை உணர்ந்தார். அகத்தறையில் அவள் உடலோடு அணுகி பிறிதிலாதிருக்கையில் அவள் செவியில் சொன்னார் “உன்னுடனிருக்கையில் நான் இந்திரன்.” காமத்தால் சிவந்த விழிகளோடு “ஏன்?” என்று அவள் கேட்டாள். “வெண்யானை மருப்பமர்கிறேன்” என்றார். அவர் தோளில் ஓங்கி அறைந்து "காமதேனு ஒன்றுக்காக காத்திருக்கிறீர்கள் போலும்” என அவள் நகைத்தாள்.

உண்மையில் அவ்வெண்ணம் உள்ளே எங்கோ எழுந்திருந்தது. இவள் எனையாளும் பெண்ணரசி. நான் ஆளும் பெண்ணொருத்தி எனக்குத் தேவை என்று அத்தனை அண்மையில் தன் உள்ளத்தை தொடரும் உளம் அவளுடையது என்றெண்ணியபோது அச்சம் மீதூறியது. தேவகியை அவர் மணந்தபோது அவள் விழிகளை நோக்காது தலைகுனிந்து “இது எனையாளும் அரசரின் ஆணை, ரோகிணி. நான் சொல்வதற்கேதுமில்லை” என்றார். அவள் அவர் தோளில் கை வைத்து மறுகையால் அவர் முகத்தை தூக்கி “நன்று, காமதேனுவுக்காக விரும்பினீர்களல்லவா?” என்றாள். திடுக்கிட்டு அவள் விழிகளை சந்தித்து அங்கிருந்த இனிய புன்னகையைக் கண்டு மலர்ந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து “என் மீது சினம் கொள்கிறாயா?” என்றார். “இல்லை, நீங்கள் நிறைவுற்றீர்கள் என்றால் அது எனக்கு மகிழ்வளிப்பதல்லவா?” என்றாள்.

பின்பு அவர் சிறையுண்டபோது அவளுக்கு ஒரு சொல்லை அனுப்பினார். "அச்சமும் சிறுமதியும் கொண்டதனால் உன்னுடன் நிகர் நிற்க இயலாதவனாக இதுநாள் வரை உணர்ந்தேன் தேவி. இன்று சிறைப்பட்டு இத்துயர் மலைகளைத் தாங்குகையில் இங்குள்ள தனிமை வழியாக முட்கள் கூர்ந்த இருளினூடாக உன்னை அணுகுகிறேன். எனையாளும் அரசி, என்றேனும் உனை காணும்போது உன்முன் தலை நிமிர்ந்து நிற்பேன். அருள்க!” மறுமொழியாக அவள் வெண்மலர் ஒன்றை வைத்துச் சுருட்டிய தாழைமடல் ஓலையை அவருக்கு அனுப்பினாள். "என்னுடன் தங்கள் முகம் கொண்டு வந்த இளமைந்தன் இருக்கிறான்.” பலராமனை நேரில் கண்டபோது என்றும் அவருள்ளிருந்த பொன்றாப் பெருவிழைவு உருவெடுத்து நின்றதுபோல் உணர்ந்தார். அவர் முகம், அவள் கொண்ட பேருடல். அவனுடைய பெருந்தோள்களை கையால் தழுவியபடி சொன்னார் "மறுபிறவியில் நான் அடைய விழைந்த உருவில் இருக்கிறாய் மைந்தா. உன் வழியாக நான் நிறைவுற்றவனானேன்.”

நடைபாலத்தில் இறங்கி அவரை அணுகிய ரோகிணி விழிநீர் சோர இரு கை கூப்பி நெஞ்சமர்த்தி நோக்கி நின்றாள். மெலிந்த கைகள் நடுங்க விழிநீர்த்துளிகள் ஒளிர்ந்து நிற்க வசுதேவர் நின்றார். காற்று பட்டு நாவான இலைப்புதர்வெளியென வாழ்த்தொலிகள் சூழ்ந்து எழுந்து அவர்களை தனிமை கொள்ளச் செய்தன. "வருக மதுராவின் அரசி!” என்று ஸ்ரீதமர் சொன்னார். வசுதேவர் அவளிடம் சொல்லத்தக்கவை அவை மட்டுமே என உணர்ந்து உளம் எழுச்சி கொள்ள "அரசி, வருக. நீ அமர்ந்து ஆள ஒரு அரியணை இங்குள்ளது. உன் இளமைந்தரால் ஈட்டப்பட்டது. இதுநாள் வரை உனக்கென காத்திருந்தது அது” என்றார். அவள் மேலும் ஒரு அடி எடுத்து வைத்து தன் வலக்கையை நீட்டி "தங்கள் காலடிகளில் அமர்வதற்கு மட்டுமே இத்தனை நாள் தவமிருந்தேன்” என்றாள்.

அன்றிரவு அவளுடன் இருக்கையில் அவள் திரண்ட தோள்களை மீள மீள விழிகளால் தழுவியபடி அவர் சொன்னார் “நீ மாறிவிட்டாய் அரசி. என் கைபற்றி இளமகளாக எழுந்தவள் இப்பன்னிரண்டு ஆண்டுகளில் பெருமகளாக திரண்டுவிட்டாய். உன் பொலிவுசூழ்ந்த பன்னிரண்டு ஆண்டுகளை நான் இழந்துவிட்டேன். மீண்டும் அவற்றை எப்பிறவியிலோ அடைய விழைகிறேன்.” அவரை மெல்ல அடித்து “என்ன இது வீண் சொல்?” என்றாள் ரோகிணி.

அன்று புலரியில் உளம் நிறைந்தெழுந்த எழுச்சியில் புரண்டு அவள் குழலுக்குள் கை செலுத்தி அள்ளி முகத்தை தன் முகத்தோடிணைத்து செவிகளில் “உன் சிறு வடிவொன்று எனக்குத் தேவை. ஒரு நாளும் விடாது அவளை நான் விழிகளால் வளர்ப்பேன். இப்பன்னிரண்டு ஆண்டுகளை ஒவ்வொரு கணமென மீண்டும் அவளில் காண்பேன். அருள்க!” என்றார். சிரித்தபடி அவரை வளைத்து தன் வெண்பளிங்குத் தேர்மேல் ஏற்றிக் கொண்டு செவியும் அறியாது நெஞ்சும் அறியாது ஆத்மாவுடன் நேரடியாகச் சொல்லும் சொற்களை அவள் சொன்னாள் "அவ்வாறே ஆகுக!”

பெருந்தோள் ரோகிணியின் மகளெனப் பிறந்தவள் சுபத்திரை. மதுராவின் அரசராக வசுதேவர் அமர்ந்தபின் பட்டத்தரசியாக முடிசூடிய ரோகிணியின் வயிற்றில் இளவரசியென்றே கருக்கொண்டாள். அவள் பிறப்பதற்கு முன்னரே பொற்தொட்டிலும், மணிவிழிபதித்த பாவைகளும், மலர்கள் விரிந்த தோட்டமும், செவிலியரும், சேடியரும் அவளுக்காக ஒருங்கியிருந்தனர். மகளை தாயின் கையிலிருந்து வாங்கி முகம் நோக்கி எடுத்து விழிமலைத்த வசுதேவரை நோக்கி அருகே நின்ற தேவகி சொன்னாள் "அக்கையின் அதே உருவம். மூத்த மைந்தனின் இணை நிற்கும் உயரத்தையும் தோள்களையும் ஒரு நாள் பெறுவாள்.” நெஞ்சு விம்மி கண்ணீர் ஊறி குழந்தை மேல் சொட்ட "ஆம்” என்றார் வசுதேவர்.

இரண்டாவது மாதத்திலேயே கையறைந்து கால் தூக்கிக் கவிழ்ந்தது குழந்தை. நான்காவது மாதத்திலேயே எழுந்தமர்ந்தது. பிற குழந்தைகள் தவழும் காலத்தில் கை நீட்டி ஓடி சுவர் பற்றி ஏறியது. இரண்டு வயதில் தேர்ந்த சொல்லெடுத்து மொழி பேசியது. நான்கு வயதில் மூத்தவர் பலராமர் குறுவாளெடுத்து அவள் கையில் அளித்து படைக்கலப் பயிற்சியை தொடங்கினார். பாரத வர்ஷத்திலேயே கதாயுதமெடுத்து போர் புரியும் பெண் அவளொருத்தி மட்டுமே என்றனர் சூதர். இருகைகளிலும் வாளேந்தி கால்களால் புரவியைச்செலுத்தி எதிர்வரும் எட்டு வீரர்களுடன் வாள் செறுத்துக் களமாட அவளால் இயன்றது.

யமுனைக்கரைக் குறுங்காடுகளில் அவள் புரவி தாவிச் செல்கையில் தொடர இளைய யாதவரால் அன்றி பிறிதெவராலும் இயலாதென்றனர் புரவிச்சூதர். ஆண்டு தோறும் மதுராவில் எழும் கன்றுசூழ் களியாட்டில் களமிறங்கி எதிர்வரும் களிற்றுக் காளையின் கொம்பு பற்றித் திருப்பி நிலத்தில் சாய்த்தடக்கி கழுத்திலணிந்த வெண்பட்டாடையை எடுத்து தன் தலையில் சுற்றிக்கொண்டு கைதூக்கி அவள் நிற்கையில் "இவள் பெண்ணல்ல. கன்னி உருக்கொண்டு வந்த மலைமகள் பார்வதி” என்றனர் மக்கள்.

சுபத்திரை இரு கைகளாலும் துடுப்பிட்டு யமுனையின் எதிரொழுக்கில் தனித்துச் சென்று மதுவனத்தில் தன் பாட்டனின் இல்லத்தில் விருந்தாடி அன்றே கிளம்பி நிலவெழுந்த நதியில் தனித்து மீண்டு மதுராவை அடைபவளாக இருந்தாள். எங்கும் அவளை எதிர்கொள்ளும் வீரர் எவரும் இல்லை என்று அறிந்திருந்தமையால் அவளை எண்ணி வசுதேவர் அஞ்சவுமில்லை. மதுராவின் வேள்விப்புரவி என்று அவளைப்பாடினர் கணியர். வெண்புரவி பொற்குளம்புகளும் செந்நெருப்பென சுழலும் வாலும் பொன்னொளிர் பிடரியும் கொண்டிருந்தது. "இப்பாரதவர்ஷத்தை எண்ணி அளந்து வலம் வரும் கால்கள் கொண்டவள் இவள். கடிவாளமிட்டு கையணைக்கும் வீரன் எங்குளான்? உலகமைத்த விண்ணவன் அறிவான்” என்றார் அவைப்புலவர் சுமந்திரர்.

மதுராவின் நகர்ப்புழுதியில் அவள் காலடிகளை மட்டும் தனித்தறியமுடிந்தது என்றனர் சூதர். அவை கருக்கொண்ட பிடியானையின் காலடிகள் போல ஆழப்பதிந்திருந்தன. அவளுடைய கதை தங்கள் கதையை தாக்குகையில் அவ்வடியை தங்கள் உடல் வழியாக மண் பெற்றுக்கொள்வதை எதிர்நின்ற பயிற்சியாசிரியர் உணர்ந்தனர். அத்தனை பேராற்றல் எவ்வண்ணம் பேரழகாகப் பூக்கிறது, எப்படி பெண்மையெனக் கனிகிறது என வியந்தனர். "கற்பாறையென அடிமரம் பருத்த கானகவேங்கையில் எழும் மலரின் இதழ் எத்தனை மென்மையானது? தேன் எத்துணை இனியது? மதகளிறு பெற்ற பிடி பெருமத்தகம் எழுந்து வருகையில் தெரியும் பெண்ணழகை எப்பெண் இப்புவியில் பெற்றிருக்கிறாள்?" என்றனர் சூதர்.

தன் துணைவியென ஒருமகள் என விழைந்து பெற்ற வசுதேவர் பின்னர் உணர்ந்தார், அவள் தன் உள்ளில் எழுந்த பெண்வடிவம் என. “ஆம் அரசே, ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுள் ஒரு பெண்ணை நடித்துக் கொண்டிருக்கிறான். இப்புவி என்பது அன்னை தான் விளையாட அமைத்த பெருங்களம். அதன் நடுவே தன் விண்மைய ஒளிப்பீடத்தில் அவள் அமர்ந்திருக்கிறாள். இங்குள அனைத்தும் அவளை நோக்கி தொழும்பொருட்டே எழுந்தவை. அன்னை எழுந்தருளாத ஆண்மகன் உள்ளம் ஏதுமில்லை” என்று சாக்தராகிய சுமந்திரர் பாடினார். “உள்ளமைந்த தாமரையில் எழுந்தருள்க தேவி! என் உடலறிந்த உன்னால் நான் சமைத்த உன்வடிவில் தோன்றுக!”

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் அவளை நோக்கிக் கொண்டிருந்தார். இளவயதிலேயே அவர் விழிகள் முன் இருந்து பழகிய அவள் அவரது நோக்கை உணராதவளானாள். என்றேனும் ஒருமுறை அவள் திரும்பி நோக்கி விழிமுட்டி “எந்தையே, ஏன் நோக்குகிறீர்கள்?” எனும்போது “இங்கு நான் நோக்க பிறிதென்ன உள்ளது?” என்பார் வசுதேவர்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 8

மதுராவின் ஒவ்வொரு செடியையும் சுபத்திரை அறிந்திருந்தாள். ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. அரண்மனையில் தன் மாளிகையில் அவள் இருக்கும் நேரமென்பது இரவில் துயிலும்போது மட்டுமே என்றனர் செவிலியர். இருள் புலரியில் விழித்தெழுந்து படைக்கலப் பயிற்சிக்கு களம் செல்வாள். பின்பு தோளிலேற்றிய அம்பறாத்தூணியுடன் இடக்கையில் வில்லுடன் புரவி மீதேறி குறுங்காட்டுக்குள் அலைவாள். வேட்டையும் கான்விளையாட்டுமென பகல் நிறைப்பாள். இரவெழுந்தபின் படகில் காளிந்தியில் களிப்பாள். நீராடி சொட்டும் உடையுடன் நள்ளிரவில் அரண்மனைக்கு மீள்வாள். இளவரசியருக்குரிய இற்செறிப்பு நெறிகளெதுவும் அவளை தளைக்கவில்லை. அரசகுடியின் முறைமைகள் எதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

"வேள்விப்புரவிக்கு பெருவழியென ஒன்றில்லை என்றறிக!” என்றார் அவைப்புலவர். "அதன் காலடி படும் இடங்கள் அதற்குரியவை ஆகின்றன. அங்கெழுகின்றன தொடர் பெரும்படைகள். பின்பு அவை அழியாத பெரும்பாதைகள் என்றாகின்றன. இப்புவியில் பாதை கட்டி ஒழுகுபவர் கோடி, பாதை சமைப்பவர் சிலரே. அவர்களையே தெய்வங்கள் அறிந்திருக்கின்றன.” மதுராவிலும் மதுவனத்திலுமென அவள் வளர்ந்தாள். பிற நிலங்களை அவள் விரும்பவில்லை. இளமையில் ஒரு முறை தன் முதற் தமையனின் தேரிலேறி துவாரகைக்கு வந்தாள். அன்று பேருருக் கொண்டு தலைமேல் எழுந்த தோரணவாயிலை முகில்குவை ஒன்று சரிந்து மண்ணில் இறங்கிய வளைவென எண்ணினாள். "அந்த முகில் ஏன் வளைந்திருக்கிறது?” என்று தமையனிடம் கேட்டாள். "அது முகில் அல்ல, வாயில்” என்று அவர் சொன்னார். “அவ்வாயில் வழியாக நம் நிழல்கள் மட்டுமே உள்ளே செல்லக்கூடுமா?” என்றாள். அவள் என்ன கேட்கிறாள் என பலராமர் வியந்து நோக்கினார்.

வெண்பளிங்குப் பெருமாளிகைகள் சூழ்ந்த நகரம் அவளை அச்சுறுத்தியது. தமையனின் கைகளை பற்றிக்கொண்டு விழிகளால் ஒவ்வொரு மாளிகைத் தூணையும் தொட்டுத் தொட்டு வந்தாள். வானிலிருந்து முகில் நிரைகள் புரிசுழல் பாதையில் இறங்கிப் படிந்தவை போலிருந்தன அம்மாளிகைகள். "மூத்தவரே இவை விண்ணிலிருந்து இழிந்தவையா?” என்றாள். "இல்லை, இவை மானுடரால் கட்டப்பட்டவை. யவனரும் சோனகரும் பீதரும் கலிங்கரும் தென்னவரும் இணைந்து எழுப்பியவை” என்று சொல்லி அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்து சுழற்றித் தூக்கித் தன் தோளில் அமர்த்திக்கொண்டார் பலராமர். மலைத்த விழிகளுடன் ஒளிரும் அவற்றின் சுவர்களையும் மாடக்குவைகளையும் நோக்கி வந்த சுபத்திரை “இவை இமயத்து உப்புக்கற்களால் கட்டப்பட்டவையா?” என்றாள். "இல்லை. யவன நாட்டு வெண்பளிங்கால் ஆனவை. வேண்டுமென்றால் அருகே சென்று நோக்கு” என்றார் பலராமர்.

“இம்மாளிகைகள் ஏன் நகைக்கின்றன?” என்றாள். திரும்பி நோக்கி வெடித்துச் சிரித்து "ஆம் அந்தத் தூண்களெல்லாம் பல்வரிசை போலிருக்கின்றன” என்றார் பலராமர். "மூத்தவரே, இவை மழை பெய்தால் உருகிச்செல்லுமா?” என்றாள். "மழை பெய்தாலா?” என்று கேட்டபின் சிரித்து "உருகுவதில்லை தங்கையே. இவை உறுதியான கற்கள்” என்றார். தலையசைத்து “இல்லை, இவை உருகி வழிந்தோடிவிடும். நான் நன்கறிவேன்” என்றாள் சுபத்திரை. “எப்படி தெரியும்?” என்றார் பலராமர். "அறிவேன். அரண்மனைக்குச் சென்றபின் இளையவரிடம் கேட்கிறேன்” என்றாள் சுபத்திரை. “கண்மூடினால் இவை நெரிந்து விரிசலிடும் ஒலியைக்கூட கேட்க முடிகிறது மூத்தவரே.”

அரண்மனை வாயிலில் அவளை எதிர்கொண்டு அள்ளி தன் நெஞ்சோடணைத்து தூக்கிக்கொண்ட இளைய யாதவர் "ஏன் என் இளவரசியின் விழிகளில் அச்சம் எஞ்சியிருக்கிறது?” என்றார். "எதிர்வரும் மதகளிற்றை அஞ்சாதவள் இந்நகரை அஞ்சுகிறாள். இது மழையில் உருகிவிடுமாம்” என்றார் பலராமர். "உருகிவிடுமா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. குனிந்து புன்னகையுடன் "ஆம் தங்கையே. ஒருநாள் இவை முற்றாக உருகி மறையும். ஒரு சிறுதடம் கூட இங்கு எஞ்சாது” என்றார் நீலன். “அவ்வண்ணமெனில் இவை உப்பால் ஆனவை அல்லவா?” என்றாள் அவள். “ஆம், இவையும் ஒருவகை உப்பே” என்றார் யாதவர்.

அவளை “வருக!” என்று அழைத்துச்சென்று அவளுக்கென அமைக்கப்பட்ட அணிமாளிகையை காட்டினார். அங்கு அவள் நீராட வெண்பளிங்கு சிறுகுளம் இருந்தது. அதனுள் மலர்மணம் நிறைந்த நன்னீர் நிரப்பப்பட்டிருந்தது. பொன்னும், மணியும், பளிங்கும், தந்தமும், சந்தனமும் கொண்டமைத்த களிப்பாவைகள் இருந்தன. மலர்ப்பந்து விளையாட தோழியர் நின்றிருந்தனர். உணவூட்ட தோழியரும் அணி செய்ய ஏவலரும் சூழ்ந்திருந்தனர். அவளோ உப்பரிகைக்குச் சென்று நின்று உச்சி வெயிலில் ஒளிவிட்ட மாளிகைகளை நோக்கி உப்புக் குவியல்கள் இவை என எண்ணிக் கொண்டாள். அங்கிருந்து விழி திருப்பி கீழே அலையடித்த பெருங்கடலை நோக்கினாள். "அன்னையே, இக்கடல் காளிந்தியை விட பெரிதா?” என்றாள். செவிலி புன்னகை செய்து "காளிந்தி சென்றணையும் பெருவெளி இதுதான். அதைப்போன்ற ஒரு நூறு பெரு ஆறுகள் சென்று நிறைந்தாலும் ஒரு துளியும் கூடாது தேங்கிய நீர்ப்பரப்பு” என்றாள்.

நீலத்தொடுவானை நோக்கி விம்மி நின்றபின் “இந்நீர் அருந்துவதற்குரியதா?” என்றாள். “இல்லை என் கண்ணே, வெறும் உப்புவெளி இது” என்றாள் செவிலி. "அந்த உப்பு அலையில் திரண்டு கரையென வந்ததா இந்நகர்?” என்றாள். “இது உப்பென்று எவர் சொன்னார்கள்? இது தூயவெண்பளிங்கில் எழுந்த மாநகர் அல்லவா?” என்றாள் செவிலி. “இளையவர் சொன்னார்” என்றாள் சுபத்திரை. பின்பு நீர்வெளியை நோக்கி நெஞ்சு மறந்து நின்றாள். தொலைவில் நின்ற சூரிய வட்டம் ஒரு பொன்மத்தெனத் தோன்றியது. அது சுழன்று சுழன்று கடைய அலைகள் விளிம்பை நக்கிச் சென்றன. அதில் பிறந்த வெண்நுரையை நோக்கினாள். கடல் கடைந்த வெண்ணையோ உப்பெனப்படுவது? எவர் கடைந்து வழித்துருட்டி வைத்தது இப்பெருநகர்? நீலம் பரந்த விண்ணை நோக்கி அவள் அஞ்சி நின்றாள். கருமுகில் கோத்து அங்கு பெருமழை எழுமெனில் இந்நகர் முற்றிலும் கரைந்து மீண்டும் கடல் சேரும். இங்கு சொல்லெனும் சுவடு மட்டுமே எஞ்சும்.

அஞ்சி திரும்பி ஓடி பாய்ந்து செவிலியை அணைத்து முலைக்குவடுகளில் முகம் மறைத்து "அன்னையே அஞ்சுகிறேன்! நான் அஞ்சுகிறேன்!” என்றாள். "ஏன் என் கண்ணே?” என்றாள் செவிலி. "இந்நீலக்கடலுக்கு அப்பால் எங்கோ வஞ்சமென கருமுகில் எழுகிறது. பெருமழை அதன் கருவில் ஒளிந்திருக்கிறது” என்றாள். “அங்கொரு பெருவாயிலை கண்டேன். அது விண் நோக்கித்திறந்து வருகவென மழையை அழைத்து நிற்கிறது.” அவள் சொல்வதென்ன என்று அறியாமல் "நீலம் இந்நகராளும் அரசரல்லவா?” என்றாள் செவிலி. திகைத்தவள் போல் நிமிர்ந்து அவளை நோக்கி "ஆம், என் இளைய தமையன் அக்கடல் நீலம் கொண்டவர். விண்ணீலம் கொண்டவர்” என்றாள். “நீலத்தால் சூழ்ந்துள்ளது இந்நகரம். நீலனால் ஆளப்படுகிறது” என்றாள் செவிலி. “நீலத்தால் சமைக்கப்பட்டது இது. நீலம் இதை உண்ணுமென்றால் அதுவே ஆகுக! நாம் ஏதறிவோம் கண்ணே?”

அதன் பின் விளக்கவொண்ணா சொல்லொன்று அவளை ஆற்றியது. நீலம் நீலம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். நீலமறியும் நீலம். நீலத்துடன் ஆடும் நீலம். பின்பு அவள் துவாரகைக்கு வந்ததே இல்லை. மதுராவுக்குத் திரும்பியபின் தன் அன்னையிடம் சொன்னாள் "அன்னையே, கடல்வெண்ணெயால் அமைந்த நகரம் அது. நீலம் சூழ்ந்தது. நீலத்தால் ஆளப்படுவது.” ரோகிணி “நீ பேசுவது ஒவ்வொன்றும் சூதர் சொல் போலிருக்கிறதடி” என்றாள். “இவற்றை பொருள் கொள்ள உன் இளைய தமையனால் அன்றி பிறரால் இயலாதென்று தோன்றுகிறது.” அவள் “நான் இனி அவரிடம் செல்லப்போவதில்லை. அவர் இங்கு வரட்டும்” என்றாள். துவாரகைக்குச் செல்வதை அவள் தவிர்த்தாள். மும்மாதத்திற்கு ஒருமுறை தந்தையைக் காண வரும் இளைய தமையனை எண்ணி ஒவ்வொரு நாளும் காலை கண்விழிப்பாள். ஒவ்வொரு இரவும் விழி அமைவாள்.

அவர் வந்து இறங்குகையில் புலரிக்குமுன்னரே வந்து நகரின் புறக்காவல் கோட்டத்து எட்டாவது மாடியில் விழிநட்டு நின்றிருப்பாள். அவர் புரவியின் புழுதி விண்ணிலெழுவதைக் கண்டதுமே கூவியபடி பாய்ந்திறங்கி தன் புரவியிலேறி அதை வெண்நாரையென வானில் பறக்கச்செய்து சென்று அவரை எதிர்கொள்வாள். புரவியிலிருந்தே தாவி அவர் தேர்த்தட்டில் ஏறிக் கொள்வாள். அவள் தோளைப்பற்றி "என்ன செய்கிறாய்? நீ என்ன புள்ளா?” என்பார். "இளநீலப் புள்ளென்று உங்களை சொல்கிறார்கள். நான் இணையெனப் பறக்கும் வெண்புள்” என்பாள். “முன்னரே ஒரு வெண்மதவேழம் என்னுடன் இணையாக மண்ணில் ஓடிவருகிறது பெண்ணே” என அவர் நகைப்பார். இருவரும் இணைந்து மதுராவுக்குள் நுழைகையில் ஒவ்வொருமுறையும் அந்நகரம் அதற்கு முந்தைய கணம் வானெழினியில் வரைந்தெடுத்தது போலிருக்கும்.

முதல் தழுவலுக்குப்பிறகு விருந்தாடி விடைபெற்று மீளும் வரை தன் தமையனை எவ்வண்ணமேனும் தொட்டபடியே இருக்கவே அவள் விழைவாள். குடியவை அமர்ந்து அவர் உரையாடுகையில் அவர் அருகமர்ந்து அவர் மேலாடை நுனியை தன் கையால் பற்றியிருப்பாள். அவர் அரியணை அருகே குறுபீடத்திலமர்ந்து அவர் முழங்காலில் ஒரு கை வைத்திருப்பாள். இரவில் அவர் துயில்கையில் அம்மஞ்சத்தருகே அமர்ந்து அவர் கைகளை தன் தோளில் வைத்து முழங்கை அணிந்த கங்கணத்தை சுழற்றிக் கொண்டு இறுதிச் சித்தமும் உருகி துயிலில் விழும் கணம் வரை அவரை உணர்ந்திருப்பாள். விழித்தெழுகையில் அவர் தொடுகையை உணர அவள் விழைவாள் என அவர் அறிந்திருந்தார். செவிலியரால் கொண்டு செல்லப்பட்டு தன் மஞ்சத்தில் துயின்று முதற்புள் குரல் கேட்டு அவள் விழிக்கையில் தன்னருகே புன்னகையுடன் அமர்ந்திருக்கும் தமையனையே வானெனக் காண்பாள்.

“மூத்தவரே, இன்று நானொரு கனவு கண்டேன்” என்று சொல்லி நகைத்தபடி எழுந்து அவர் கைகளை பற்றிக்கொண்டு சொல்லத்தொடங்குவாள். கனவுகளில் அவள் உலகில் மானுடரென பிறஎவரும் எப்போதும் வந்ததில்லை. விழிதிறந்த முதற்கணம் தெரிவது அவர் புன்னகைப் பெருமலர்முகம் என்றால் அதற்கு நிகரென பிறிதொரு பேரின்பம் மண்ணிலில்லை என்று அறிந்திருந்தாள். "மூத்தவரே, ஆழியும் வெண்சங்குமேந்தி நீங்கள் நின்றிருக்கும் பேராலயம் ஒன்றை கண்டேன். அங்குள சிற்பங்கள் அனைத்தும் உயிர் கொண்டிருந்தன. சுவர்கள் தோலதிரும் உயிர்ப்புடனிருந்தன. உங்கள் விழிகளோ இரு நீலச்சுடரென கருவறைக்குள் எரிந்தன” என்றாள். "நீ அங்கு ஒரு சிற்பமாக இருந்தாயா?” என்றார். “ஆம், நானறிந்த அனைவரும் அங்கு சிற்பமென இருந்தனர். அன்னை அங்கே சுரபி என்னும் ஆயர்தெய்வமாக இருகைகளிலும் ஆக்களைப் பற்றி இடையில் பாற்குடம் தளும்ப நின்றிருந்தாள்.”

“ஆனால் நான் வெண்பறவையாக சிற்பங்கள் நடுவே சிறகுரச பறந்தேன்” என்றபின் திகைத்து "மூத்தவரே, நான் அப்போது ராமா என்றழைத்துக் கொண்டிருந்தேன்” என்றாள். அவர் புன்னகைத்து “கோசலத்து ராமனை அழைத்தாய் போலும். அவனும் என்னைப்போல் நீலன். எனவே அவனே நான்” என்றார். “என்றும் அவன் சொல்லில் அமைந்திருந்தேன். இன்று இவ்வண்ணம் இங்கு எழுந்தேன்.” மூச்சிரைக்க அவள் சொன்னாள் “நான் அங்கு சூழப்பறந்தேன். பின்பு சென்று இளவல் பரதன் வில்லேந்தி அமர்ந்திருந்த இணைக்கருவறைக்குள் சென்றேன்.” மீண்டும் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அங்கு கருவறையில் சிலையென நின்று நான் வெளியே நோக்கிக்கொண்டிருந்தேன். பெருந்தூண்கள் நிரைவகுத்த நிழலும் ஒளியும் ஆடிய நீள்தாழ்வாரத்தில் கிரௌஞ்சங்கள் உங்கள் பெயர் சொல்லி கூவிக்கொண்டிருந்தன” என்றாள். “விந்தை! அவை கண்ணா என அழைத்தன.”

“நீ ஏன் துவாரகைக்கு வருவதில்லை?” என்று இளையவர் கேட்டார். "இங்கு மதுராவில் எழுந்தருளும் உங்களையே நான் விழைகிறேன். இங்கிருக்கும் நீங்கள் ஏறுதழுவும் யாதவ இளையோன். அங்கோ மணியொளிரும் முடி சூடி அமர்ந்திருக்கும் மாமன்னர். அது நீங்கள் உலவும் வானம், இது நீங்கள் வந்தமரும் சிறு மலர்க்கிளை. எந்தையே, இங்கேயே உங்களை காண விழைகிறேன்” என்றாள் சுபத்திரை. "ஆம், இக்கிளையில் பூத்த அழகிய வெண்மலர் நீ” என்று சொல்லி அவள் காதோர குறுநிரையை கையால் பற்றி சுழற்றி இறுக்க "ஐயோ” என்று சொல்லி அவள் கைகளை கட்டிக்கொண்டாள். “இன்று நாம் என்ன செய்யவிருக்கிறோம்? யமுனையில் ஆடுவோம் அல்லவா?” அவர் அவள் மூக்கைப்பிடித்து இழுத்து “நாம் சிறுதோணியில் மதுவனம் செல்வோம். பாட்டனாரை கண்டுவருவோம்” என்றார். “ஆம்” என்று அவள் எழுந்து அவர் தோள்களை பற்றிக்கொண்டாள்.

ரோகிணி "என்ன செய்கிறாய் மாயனே? இவள் உன்னையன்றி பிறிதிலாதிருக்கிறாளே?" என்றாள். "உன் செய்திகளை மட்டுமே கேட்கிறாள். நீ கற்ற நூலன்றி பிறிதொன்றை கற்காமலிருக்கிறாள். இவள் கனவில் பிறிதொரு முகம் எழுவதே இல்லை என்கிறாள்.” அருகே இருந்த தேவகி சிரித்தபடி "தங்கையர் அப்படி தமையனின் நிழலாக அமைவதுண்டு. உளம் கவர்ந்த ஒருவன் வந்து கைபற்றும் கணம் வரைதான் அது” என்றாள். தூண்பற்றிச் சுழன்று விளையாடிக்கொண்டிருந்த சுபத்திரை சீற்றத்துடன் “அன்னையே, வீண்பேச்சு வேண்டியதில்லை. பிறிதொரு ஆண்மகன் என் கைபற்றப் போவதில்லை” என்றாள். “பின் கன்னித் தவம் கொள்ளப்போகிறாயா என்ன? எங்கோ உனக்குரிய ஆண்மகன் பிறந்திருப்பானல்லவா?” என்றாள் தேவகி.

"அதையே நான் அஞ்சுகிறேன் இளையவளே” என்றாள் ரோகிணி. “இவள் உளம் நிறைக்க வேண்டுமென்றால் உன் இளைய மைந்தனைப்போல ஆயிரம் விழிகளும் பல்லாயிரம் கைகளும் கொண்டு இவளுடன் ஆடும் ஒருவனே வந்தாக வேண்டும்” என்றபின் நகைத்து "இவனே பிறிதொரு வடிவு கொண்டு வராமல் அது நிகழப்போவதில்லை” என்றாள். இளைய யாதவர் சிரித்தபடி "என் ஆடி நிழலொன்று இவளை அணுகட்டும்” என்றார். "அவ்வண்ணமெனில் நான் ஏழுமுறை அவனை தேர்வேன். முற்றிலும் நீங்களே என்றான ஒருவன் என்றாலொழிய என் கை பற்ற ஒப்பமாட்டேன்” என்றாள் சுபத்திரை. “ஆடி ஒன்று வாங்கவேண்டும் அவ்வளவுதானே?” என்று தேவகி நகைக்க “அந்த ஆடிக்குள் நான் புகுந்து கொள்வேன். என் பாவையையே அவ்விளையோன் மணப்பான். நான் ஒளிந்திருந்து நோக்கி நகைப்பேன்” என்றாள் சுபத்திரை.

ஆவணி மாதத்து ஏறுதழுவலுக்கு இளையவர் வந்திருந்தார். அவரைக்காண நகரைச் சூழ்ந்திருந்த யாதவ ஊர்களிலிருந்தெல்லாம் திரண்டு வந்த மக்கள் களம் நிறைத்து முகம் பேரலையென கொந்தளித்தனர். கொம்பு கூர்த்து மூச்சு சீறி மண்புரட்டி எதிர்வந்த பன்னிரு வெண்களிறுகளை வென்று அவர் கை தூக்கி ஆர்ப்பரித்தார். நான்கு களிறுகளை வென்று அவருக்கு நிகரென அவள் நின்றாள். "இளையவள்! கொற்றவை!” என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். உண்டாட்டு முடிந்து துவாரகைக்கு கிளம்புகையில் "இளையவளே, என்னுடன் வருக!” என்றார். “சென்று வாருங்கள் மூத்தவரே. இங்கு இருப்பினும் நான் உங்களுடனே வாழ்கிறேன் அல்லவா?” என்றாள் சுபத்திரை. “இம்முறை நீ துவாரகையில் இருந்தாக வேண்டும் சுபத்திரை” என்று சொன்னபோது அவர் விழிகளை நோக்கி ஒரு கணம் எண்ணி "ஆணை” என்றாள் சுபத்திரை.

உஜ்ஜயினி வரை நீர்வழியில் வந்து அங்கு ஒருநாள் தங்கி பாலைப்பெருநிலம் கடந்து துவாரகை நோக்கி சென்றபோது அவ்வழியை புதிதென மீண்டும் கண்டாள். மண்டபங்கள் எழுந்திருந்தன. சுனைகள் தோண்டப்பட்டிருந்தன. வணிகர் நிரை மும்மடங்கு பெருகியிருந்தது. நகர்முன் எழுந்த பெருந்தோரணவாயிலை நோக்கியபோது தொலைவில் அது ஒரு சிறு கணையாழி என மணலில் கிடப்பதை கண்டாள். நகர் தெருக்கள் வழியாக செல்லும்போது "இளையவரே, இந்நகரை முதலில் பார்த்தபோது இது உப்பாலானதா என்று வினவினேன், நினைவுள்ளதா?” என்றாள். "ஆம், உப்பே என்று உரைத்தேன் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “இன்று இது கற்பூரத்தால் ஆனதென்று தோன்றுகிறது” என்று அவள் சொல்ல “ஆம். ஒவ்வொரு கணமும் காற்றில் கரைகிறது” என்றார்.

"ஏன் அப்படி எண்ணினேன் என்று நூறு முறை எனக்குள் வினவிக்கொண்டு விட்டேன் மூத்தவரே. இது நிகரற்றதாக உள்ளது, மானுடத்திறனால் அமைந்ததாக அல்ல மானுட விழைவின் உச்சமாக தன்னை காட்டுகிறது. நனவென எண்ணக்கூடவில்லை. பெரும் கனவென படுகிறது. கலைந்துவிடுமென்ற அச்சமே கனவை பேரழகு கொண்டதாக ஆக்குகிறது” என்றாள் சுபத்திரை. இளைய யாதவர் புன்னகைத்து "கனவென அல்லாத ஏதுமில்லை இப்புவியில் என்று வேதாந்திகள் உரைப்பதுண்டு. நான் ஒரு நூலை உனக்கு இப்போது பாடம் சொல்லலாம் என நினைக்கிறேன்” என்றார். “ஓடும் தேரிலா?” என்றாள் அவள். “ஆம், தேரில் வகுப்பெடுப்பதே எனக்கு உகந்தது என நினைக்கிறேன். புரவியோட்டும்போதே என்னை முழுமையாக உணர்கிறேன்” என்றார். “அய்யோ, வேண்டாம். குளம்படித்தாளத்துடன் நூல் கற்றால் அதை ஓடிக்கொண்டுதான் நினைவுகூரவேண்டும்” என அவள் நகைத்தாள்.

துவாரகையின் மாளிகையில் ஒவ்வொரு கணமும் அவள் அமைதியை இழந்திருந்தாள். அதன் பேரவைக்கூடத்தில் சென்று இளைய யாதவரின் அருகமர அவள் உளம் கூடவில்லை. அதன் தெருக்கள் அவளை கவரவில்லை. அதன் துறைமுகத்துக்கு ஒரு முறைக்கு மேல் அவள் செல்லவும் இல்லை. பெரும் பாலை நிலமும் எவரோ களைந்திட்டுச் சென்ற செம்பட்டாடை போல கிடந்தது. துவாரகையின் சூதர்சாலைகளை மட்டுமே அவள் விழைந்தாள். அங்கு அவள் தன் தமையனைப் பற்றி எழுதப்பட்ட காவியங்களை மட்டுமே பயின்றாள். அச்சொற்களிலெழுந்த எண்வகை நிலங்களின் எட்டு திருமகள்களின் அழகில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள். எட்டு முகம் கொண்டு எழுந்தருளிய தன் இறைவன் ஒன்பதாவது அழகு முகத்தை தனக்கு அளித்ததாக நினைத்தாள்.

சூதர் அவரை சொல்லித்தீரவில்லை என்று கண்டாள். அவரை சொல்பவரெல்லாம் பெண்ணென்று ஆகும் விந்தையென்ன என்று எண்ணி மாய்ந்தாள். சொல்லச் சொல்ல இனிமை கொண்டன சொற்கள். நவில்தொறும் எழுந்தது நூல்நயம். ஒவ்வொரு வாயிலாக மூடி சூழ்ந்திருந்த புறவுலகிலிருந்து அவள் அகன்று சென்றாள். சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள். அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் இருந்தாள். அப்போது அவள் வாயிலை வந்து முட்டி நுழைந்து அழைத்தார் யாதவரின் இளமைத்தோழரான அமைச்சர் ஸ்ரீதமர். "இளவரசி தங்களை சித்தமாகச் சொன்னார் இளையவர். நாளை காலை முதல் நாழிகையில் புரவியில் அவருடன் கிளம்பி அவந்தி நாட்டுக்குச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டுள்ளார்” என்றார்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 9

கருக்கிருட்டிலேயே தோரணவாயிலைக் கடந்து விழிவெளிச்சமாகத் தெரிந்த பாலைவெளியை நோக்கி நின்றபோது எதற்காக சென்றுகொண்டிருக்கிறோம் என்று சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடிய கூந்தலை ஆற்ற நேரமில்லாததனால் தோளில் விரித்துப் பரப்பியிருந்தாள். விடிகாலைக் கடற்காற்றில் அது எழுந்து மழைக்குப்பின் காகம் என சிறகுதறி ஈரத்தை சிதறடித்துக்கொண்டிருந்தது. பாலையில் கடந்துசெல்லும் காற்று மென்மணலை வருடும் ஒலி கேட்டது. அந்த ஒலியை இருளில் கேட்க அகம் அமைதிகொண்டது. மிகமென்மையான ஒரு வருடல். துயிலும் மகவின் வயிற்றை அன்னை விரல் என. காற்று தன் அலைவடிவத்தை பாலையில் வரைந்துகொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டாள். காலையில் வெளிச்சமெழுகையில் இரவெல்லாம் நிகழ்ந்த மந்தண உரையாடலின் சான்றென விழிதொடும் வரை நீண்டிருக்கும் அலைவளைவுகள்.

அப்போது அவள் தான் பார்த்திராத பாலையை விரும்பினாள். முன்னரே வந்து அதை நோக்கியிருக்கலாமென எண்ணினாள். மூத்தவர் பன்னிப்பன்னி அழைத்தபின்னரும் பாலையாடலுக்குச் செல்லாத தன் தயக்கத்தை எண்ணி என்னாயிற்று எனக்கு என்று சொல்லிக்கொண்டாள். பாலையின் உயிர்களின் கண்களில் இருக்கும் தனிமையை எதிர்கொள்ளமுடியாதென்று தோன்றியது. காட்டில் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் அரணையின் கண்களில் அதைச்சூழ்ந்துள்ள உயிர்க்குலத்தை அது அறிந்திருப்பது தெரியும். மறுகணம் பேசவிருப்பது போன்ற ஒரு பாவனை. பாலையில் செம்மணலில் ஓடிவந்து வண்டிச்சகடத்தின் ஓசைகேட்டு திகைத்து நிற்கும் உடும்பின் விழிகள் முதல்முறையாக மானுடக்கண் தொடும் கூழாங்கற்கள். தெய்வங்களால் கூட கண்டடையப்படாதவை. பாலையில் ஒருபோதும் என்னால் வாழமுடியாது. இந்த விடியற்காலையில் என் உள்ளம் உவகை கொண்டிருக்கிறது. இப்பாலைநிலம் அவ்வுவகையாக தன்னை விரித்துள்ளது.

தெய்வங்கள் அறிக, எந்தை என்னை ஒரு பணிக்கென அழைத்திருக்கிறார். என்னை தன் இணையென கூட்டியிருக்கிறார். அப்பணி எதுவானால் என்ன? அதில் புண்பட்டால் உயிர்துறந்தால் என்ன? அவருடன் இந்த நீண்ட பாலையை கடக்கவிருக்கிறேன். நில்லாமல் செல்லவிருக்கிறேன். அப்பாலை நான் செல்லச்செல்ல நீளுமென்றால் என் வாழ்க்கையின் முழுக்காலமும் அதுவென்றே ஆகுமென்றால் நான் வாழ்த்தப்பட்டவள். எத்தனை மென்மையானது பாலை! கனிந்த உள்ளங்கை. அன்னைச்செவிலியின் தழைந்த அடிவயிறு. சந்தனமோ செங்குழம்போ உலர்ந்த பொருக்கு. இந்த வெந்தமணம் கமழும் காற்றுக்கு நிகரான எதையும் நான் அறிந்திருக்கவில்லை. இனி என் வாழ்நாளெல்லாம் இதையே எண்ணிக்கொண்டிருப்பேன்.

இது அவர் மூச்சென மணக்கிறது. சிறுமியாக இருக்கையில் என்னை அள்ளி தன் முகத்தோடு அணைத்து கன்னங்களில் அவர் முத்தமிடுவதுண்டு. தன் மூக்கால் வயிற்றை உரசி சிரிக்கவைப்பதுண்டு. தந்தையும் மூத்தவரும் முத்தமிடுவதுண்டு என்றாலும் இளையவரின் முத்தத்தின் நறுமணம் தனித்தது என்றே அறிந்திருக்கிறேன். ஆண்களின் மூச்சின் மணம் வேறு. பெண்களின் மூச்சு பசுமைநிறைந்த மழைக்காட்டின் மணம். சேறும் இலைத்தழைப்பும் கலந்தது. தந்தையின் முத்தம் வெயில்பட்டு உலரும் சுதைச்சுவர்களின் முத்தம். சுண்ணமும் பாசியும் கலந்தது. மூத்தவரின் முத்தம் காட்டுப்பாறையின் மணம். காலையொளியில் காயும் வெம்மை கொண்டது. கல்மணம். மண் மணம். புல்மணம். உப்புமணம். இளையவரின் மணம் எது? இந்தப் பாலை விடியற்காலையில் அளிக்கும் இந்த மணம்தான். இது தன்னந்தனிமையின் மணம். மண் மணம். மண்ணில் எரிந்த விண்ணின் மணம். அதன்மேல் காற்றெனப்பரவிய கடலின் மணம். இதுதான் நீலத்தின் மணமாக இருக்கவேண்டும்.

புரவியொலிகள் கேட்டன. அரண்மனையிலிருந்து இருளுக்குள் கிளம்பிவந்த இளைய யாதவரின் சிறிய குழு தோரணவாயிலருகே வந்தது. வெண்ணிறமான சோனகப்புரவியில் இளையவர் அமர்ந்திருந்தார். தொடர்ந்து ஏழு வீரர்கள் கரும்புரவிகளில் வந்தனர். குடிநீர் நிறைந்த தோற்பைகளுடன் மூன்று புரவிகள் அவர்களை தொடர்ந்தன. அரண்மனையிலிருந்து கிளம்பும்போதுதான் அவந்திக்குச் செல்கிறோம் என்பதன்றி பிறிதெதையும் சுபத்திரை அறிந்திருக்கவில்லை. நீராடி ஆடை மாற்றி அவள் வந்தபோது அவளுக்கான சோனகப்புரவி காத்து நின்றது. முதலில் அவள் பார்த்தது அதன் குளம்புகளில் லாடங்கள் இருமடங்கு அகன்று விரிந்திருந்ததைத்தான். அவள் மணம் கிடைத்ததும் சற்றே பொறுமை இழந்து அது முன் கால்களைத்தூக்கியபோது குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக வரிகொண்டிருப்பதை கண்டாள். மணல்மேல் புதையாமல் விரைவதற்கான லாடம் அது என்றார் அவளை அனுப்ப வந்திருந்த அமைச்சர் ஸ்ரீதமர்.

“இவள் பெயர் விலாசினி” என்றார் ஸ்ரீதமர். பக்கவாட்டில் நோக்குகையில் தலைக்கு மேல் எழுந்த பேருடலுடன் நின்ற புரவியின் கடிவாளத்தைப் பற்றி சேணத்தை மிதித்து கால் சுழற்றி ஏறிக் கொண்டபோது யவனப்புரவிகளின் பாதியளவுக்கே அதன் பருமன் இருப்பதை உணர்ந்தாள். அதை அணைத்த தொடைகளில் முதற்கணம் ஒரு குறையையே உணரமுடிந்தது. சிறகு இலாத வெண்பறவை போலிருந்தன அதன் நீள் கழுத்தும் முதுகும். பறவை அலகு போலவே நீண்டிருந்தது இரு நரம்புகள் புடைத்த நீளமுகம். அதன் மோவாயையும் கழுத்தையும் தட்டி ஆறுதல் படுத்தினாள். ஸ்ரீதமர் அவளிடம் "இளவரசி தங்களை நேரடியாக தோரணவாயிலுக்கே வரும்படி இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அவள் கிளம்பியதும் பிறிதொரு புரவியில் ஏறிக்கொண்டு அவளுக்கிணையாக வந்தபடி இளைய யாதவரின் எண்ணத்தை சொன்னார்.

முதலில் சற்று திகைத்தபின் சுபத்திரை சிரித்துவிட்டாள். “பெண்கவர தங்கையை அழைத்துச் செல்லும் முதல் வீரர் இவரென எண்ணுகிறேன் அமைச்சரே” என்றாள். அவரும் அத்தருணத்தின் பதற்றத்தை மறந்து வாய்விட்டு நகைத்து “ஆம், அவர் ஆணையிட்டபோது இதிலுள்ள விந்தையை நான் உணரவில்லை” என்றார். “பெண் கொண்டு வரவேண்டியவர் யார்? அவரா நானா?” என்றாள். ஸ்ரீதமர் இருளுக்குள் வந்த நகைப்போசையுடன் “அது அங்கு சென்றபிறகுதான் தெரியும்’’ என்றார். இருண்ட நகரத் தெருக்களில் விரைந்து தோரணவாயிலை அடைந்தபோது அங்கு முன்னரே இளைய யாதவரின் ஒற்றர்தலைவர் சுக்ரர் காத்திருந்தார். “இளவரசி, காலையில் முழுவெப்பம் எழுந்துவிடும். அதற்குப்பின் புரவி தாளாது. வெயில் எழுகையில் அவந்தியின் எல்லையில் இருந்தாகவேண்டும்…” என்றார். “இளையவர் அக்ரூரருடன் அரண்மனையிலிருந்து கிளம்பிவிட்டார்.”

இளையவர் அவளிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் புரவியைத் தட்டி பாலை நிலத்தை வரிந்து கட்டிய தோல் பட்டையெனச் சென்ற சாலையில் விரைந்தார். அக்ரூரர் “சென்றுவருக இளவரசி!” என்றார். அவள் தலைவணங்கினாள். ஸ்ரீதமர் தலையசைத்தார். அவள் புரவியை மரக்கிளையில் உந்தி எழுந்து சிறகடிக்கும் பறவையென விரைவடையச் செய்தாள். அதன் குளம்புகள் மண்ணை அள்ளி பின்னால் வீசி விரையும் ஒலி கேட்டது. அதன் கழுத்து முன்னால் நீண்டிருந்தது. சிலகணங்களிலேயே விழிகளின் மூடிய சாளரங்கள் ஒவ்வொன்றாகத் திறக்க பாலைவெளி மேலும் மேலுமென தெளிவடைந்துகொண்டு வந்தது. அதன் அலைவளைவுகள் மேல் விரல்கோதியது போன்ற வரிகளை காணமுடிந்தது. அதன் மேல் நின்றிருந்த முட்செடிகள் காற்றில் சுழன்று உருவாக்கிய அரைவட்டங்களை, சிற்றுயிர்கள் எழுப்பிய வளைகளுக்கு மேல் குவிந்த பன்றிமுலைகள் போன்ற மென்மணல் குவைகளை, சிறிய எறும்புத்துளைகளை. ஒரு சுள்ளி பட்டுத்திரை மூடிக்கிடக்கும் உடலென தன்னை முழுமையாகக் காட்டி மணல்மூடிக்கிடந்தது.

அவளுக்கு மிக அருகே இளைய யாதவர் புரவியில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கிணையாக புரவியில் சென்றபடி அவரது தோள்களையே அவள் நோக்கிக் கொண்டிருந்தாள். முதல் முறையாக இளைய யாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளை பொருத்திக் கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம். அவரோ மிதந்து ஒழுகிச் செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது. அது கரும்புரவியாக இருந்திருந்தால் இருளுக்குள் ஒரு புரவி இருப்பதே தெரிந்திருக்காது. விரைவை கூட்டாமல் குறைக்காமல் வானிலிருந்து விழும் பொருள் என செங்குத்தாக வடதிசை நோக்கிச் சென்றார். அவள் அவருடன் செல்வதற்காக ஓரவிழியால் இடைவெளியை கணித்தபடி சென்றாள்.

தீட்டப்பட்ட இரும்பெனத் தெரிந்தது வானம். முகில் படிந்திருந்தமையால் ஓரிரு விண்மீன்களே தெரிந்தன. கீழே விண்ணின் மெல்லிய ஒளியில் தானும் ஒளி பெற்றிருந்தது பாலைப்பரப்பு. இரு மெல்லொளிப்பரப்புகளும் சென்று தொட்ட தொடுவான் கோடு கூர்வாள் ஒன்றின் தீட்டப்பட்ட நுனியென கூர்ந்திருந்தது. அந்த முனை நோக்கி அவர்களை கொண்டு சென்றன புரவிகள். துவாரகையின் முதல் காவல்சத்திரத்தில் புரவிகளை மாற்றிக்கொண்டு சற்று நீரருந்தி அடுத்த புரவியில் கிளம்பிச் சென்றனர். மூன்றாவது சத்திரத்தில் புரவி மாற்றியபோது அவருடன் வந்த படைவீரர்கள் முற்றிலும் களைத்திருந்தனர். அங்கு காத்து நின்ற பிற படைவீரர்களை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். அவள் சற்றும் களைப்புற்றிருக்கவில்லை. ஆனால் அவள் களைப்புற்றாளா என்று ஒரு சொல்கூட அவர் கேட்கவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவ்வாறு கேட்காதிருந்தது அவளுக்கு உவகையளித்தது.

இதோ என்னருகே சென்று கொண்டிருக்கும் என் தமையன் என்னை முழுதறிந்திருக்கிறார். என்னுடலை, உள்ளத்தை. ஆனால் என் ஆத்மா கொள்ளும் பெருந்தவிப்பை அறிந்திருக்கிறாரா? பிறிதொன்றிலாது என்னை இவர் கால்களில் வைக்க உன்னும் இவ்வெழுச்சியை இவர் அறிவாரா? ஒவ்வொரு புரவிக் காலடி ஓசையும் அவள் இதயத்தின் துடிப்புகளோடு இணைந்தது. அந்தத் தாளம் ஒரு சொல்லாகி நீலம் நீலம் நீலம் என்று அவள் இருளுக்குள் சென்று கொண்டிருந்தாள். அந்தத் தவம் பூத்ததென கிழக்கே முதல் ஒளிக் கசிவைக் கண்டாள். கருமுகத்திலெழுந்த கனிவு. முதற் புன்னகை. சிறகுகளை அசைத்தபடி பறவைக்கூட்டங்கள் வானிலிருந்து துளித்துச் சொட்டி சிதறிப் பரவின. தலைக்கு மேல் சென்ற வலசைப்பறவை ஒன்று நீலா என்று அழைத்துக் கடந்தது. விண்ணறிந்திருக்கிறது அச்சொல்லை.

முகில்கள் பொன் பூசிக் கொண்டன. கீழ்சரிவிலெங்கும் உருகும் செம்பொன் வழிந்தது. சொல் சொல்லென்று ததும்பிச்சென்ற உள்ளப்பெருக்கில் இருந்து ஹிரண்யகர்பன் என்றொரு சொல்லை அவள் கண்டெடுத்தாள். இளவயதில் கற்ற வேதாந்த நூல்கள் எதிலோ இருந்தது அது என உணர்ந்தாள். பொற்கருவினன். புடவி சமைக்கும் உலை ஒன்றில் உருகி எழுந்த துளி. ஹிரண்யன், பொன்னன். வெளியில் ஒளியானவன். விண்ணில் கதிரவனாக எழுபவன். இரவில் கனவுகளாக நிறையும் முழுநிலவு. கடலாழியில் விண்மீன்கள் சூடிய ஆழம். இவ்வெண்ணங்கள் வழியாக எங்கு சென்று கொண்டிருக்கிறேன்? என் புரவி இங்கு மண்ணிலில்லை. இது அறிந்துளது என்னுள்ளத்தை. அடித்துப் பரப்பப்பட்ட பொற்தகடு போலாயிற்று பாலை. மேலே பழுத்துச்சிவந்தது பொற்கூரை.

அவந்தியின் முதல் காவல் கோட்டத்தை அவர்கள் அடைந்தபோது புலரியொளியில் அவர்களின் நிழல்கள் நீண்டு காவல் தெய்வங்களென பேருருக்கொண்டு தொடர்ந்து வந்தன. காவல் கோட்டத்து நூற்றுவர்தலைவன் அவர்களை எவ்வகையிலும் எதிர்பார்க்கவில்லை. மணத்தன்னேற்புக்கு வரும் அரசன் புரவியில் நேரடியாக வருவானென்று அவனிடம் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டான். இளைய யாதவருடன் வந்த வீரன் அவனை அணுகி அவந்தியின் ஓலையைக்காட்டி மணத்தன்னேற்புக்கு யாதவபுரியிலிருந்து வந்திருப்பதாக சொன்னபோது அவன் படியிறங்கி வந்து புரவியிலமர்ந்திருந்த இளைய யாதவரையும் சுபத்திரையையும் நோக்கினான். அவர்களை அடையாளம் காண முடியாமல் மீண்டும் ஒரு முறை இலச்சினையை நுண்ணிதின் நோக்கிவிட்டு அதில் மந்தணக்குறிகளைக் கொண்டு அவ்வோலையின் எண்ணை உய்த்தறிந்து அங்கிருந்த ஆவண நாயகத்திடம் அதை பதிவு செய்யும்படி ஆணையிட்டான். ஐயத்துடன் தலைவணங்கி “தாங்கள் உள்ளே செல்லலாம் யாதவர்களே” என்றான்.

அவர்கள் தலை வணங்கி மாகிஷ்மதிக்குள் செல்லும் மண் பாதையில் புரவிக்குளம்படிகள் நனைந்த கிணை மேல் விரல்கள் தொடுவதுபோல ஒலித்தபடி சென்றதை நோக்கி ஐயம் நிறைந்து நின்றான். புரவிகளின் சுழலும் வால்கள் தன் விழி எல்லைக்கு அப்பால் மறைந்தவுடன் எழுந்து திரும்பி தன் காவல் மாடத்திற்குள் சென்றவன் எவரோ பின்னின்று அழைத்ததுபோல அவ்வெண்ணம் வந்து திரும்ப ஓடி சாலையை நோக்கினான். பின்னர் அவர்கள் வந்த வழியை நோக்கி தான் கண்ட காட்சியை உள்ளத்திலிருந்து விழிகளுக்கு கொண்டுவந்து தீட்டினான். “ஆம் அவரேதான்” என்று கூவியபடி உள்ளே சென்று ஆவண நாயகத்திடம் “மச்சரே, இப்போது சென்றவர் துவாரகையின் இளைய யாதவர்” என்று கூவினான்.

“நான் உறுதியாகச் சொல்வேன். புழுதி மூடியிருந்ததால் எவரோ என எண்ணினேன். தன் குழல் பீலியையும் பொற்பட்டாடையையும் அவர் அணிந்திருக்கவில்லை. உடலில் அணிகளேதும் இல்லை. ஆனால் ஒரு கணம் அவ்விழிகளை கண்டேன். பிறிதொரு மானுடனுக்கு அத்தகைய விழிகள் இருக்க வாய்ப்பில்லை. அவரேதான், ஐயமில்லை” என்றான். ஆவண நாயகம் எழுந்து “நானும் அவ்வண்ணம் எண்ணினேன். இவ்வாயில் கடந்து செல்லுகையில் அவரது தோளை மட்டுமே நான் கண்டேன். ஆனால் அக்கணம் நானறியாது அவர் புகழ்பாடும் சூதர் பாடலின் வரியெனக்குள் எழுந்தது. நீலம் கடைந்த மூங்கில் என்றுண்டா தோழி என்று முணுமுணுத்துக் கொண்டேன். தாங்கள் இப்போது சொல்லும்போது உணர்கிறேன், அது இளைய யாதவரேதான்” என்றார்.

“அவ்வண்ணமெனில் இப்போதே நாம் செய்தி அனுப்பவேண்டும்” என்றான் காவலன். “இங்கிருந்து பறவைத்தூது அனுப்ப வழியில்லை. புரவி வீரனொருவனை அரண்மனைக்கு அனுப்புவோம். குறுக்கு வழியில் அவன் இவர்கள் செல்வதற்குள் அரண்மனைக்கு சென்றுவிட வேண்டும்” என்றான். பின்பு “இதற்கு எளிய தூதனொருவனை அனுப்புவது உகந்ததல்ல. நானே கிளம்புகிறேன். இப்போதே" என்றபடி வெளியே ஓடி "என் புரவி... என் புரவி எழுக!” என்று கூவினான். புரவியில் ஏறியபடியே அதை விரையச்செய்தான். மரங்கள் செறிந்த ஒற்றையடிப்பாதை வழியாக தலையை நன்கு குனிந்து புரவி தலைக்கு கீழாக வைத்துக் கொண்டு அதை உச்ச விரைவில் செலுத்தினான்.

அவந்திக்கான சாலையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். திரும்பி அருகே தெரிந்த பாறையொன்றின்மேல் புரவியை ஏற்றினார். அவரைத்தொடர்ந்த வீரர்கள் திரும்பி அவளை நோக்கியபின் கீழேயே நின்றனர். அவள் அவர்களை நோக்கி புன்னகைத்துவிட்டு அவரை தொடர்ந்தாள். அங்கிருந்து நோக்கியபோது முழுகுளம்புப் பாய்ச்சலில் செல்லும் காவல்கோட்டத்தலைவனை காணமுடிந்தது. புதர்கள் நடுவே அவன் மின்னி மின்னித்தெரிந்தான். “அவன் சென்று சேர்வதற்குள் நீ அவந்தியின் மகளிர் மாளிகையை அடைந்து உள்நுழைந்துவிடவேண்டும்” என்றார் இளைய யாதவர். மறுபக்கம் அவந்தியின் கோட்டைமுகப்பு தெரிந்தது. மண்ணாலான அடித்தளம் மீது மரத்தாலான மாடம் கொண்ட உயரமற்ற கோட்டையின் வாயில் இரண்டு பெரிய தூண்கள் மேல் நின்றிருந்தது.

“அங்கே இளவரசி இருப்பாள். அவளிடம் கேள், துவாரகைக்கு வருகிறாளா என. அவள் ஒப்புக்கொண்டாளென்றால் அழைத்துக்கொண்டு களமுற்றத்துக்கு வா” என்றார் இளைய யாதவர். வியப்புடன் “களமுற்றத்துக்கா மூத்தவரே?” என்றாள் சுபத்திரை. “ஆம், களம்வெல்லாது இளவரசியை கொண்டு செல்லக்கூடாது. ஷத்ரியப்பெண் அவள். பாரதவர்ஷத்தின் அவைகளில் அவளுடைய மங்கலத்தாலி ஏற்கப்படவேண்டும்.” சுபத்திரை “இன்னும் ஒரு நாழிகைக்குள் களத்திலிருப்பேன்” என்றாள். “அவள் என்னை ஏற்றாகவேண்டும். அவளிடம் கேள்” என்றார். “இளையவரே, எந்தப்பெண்ணிடமும் அவ்வினாவை கேட்கவேண்டியதில்லை. உன்னை இளையவர் தேர்ந்திருக்கிறார், கிளம்பு என்றுமட்டும் சொன்னால்போதும்” என்றாள் சுபத்திரை.

புன்னகையுடன் திரும்பிய இளையவர் “இளமையில் மூத்த அன்னையின் கன்னக்குழியை தொட்டு விளையாடுவேன் என்பார்கள். இன்று அதே புன்னகை உன்னில் எழுவதைப் பார்க்கிறேன். குழிவிழும் கன்னம் தானும் சிரிக்கிறது” என்றார். நாணி முகம் சிவந்த சுபத்திரை விழிவிலக்கி “நீங்கள் என்னை பார்ப்பதேயில்லை மூத்தவரே” என்றாள். “நான் உன்னைப்பார்க்கும் பார்வையை எவருக்கும் அளித்ததில்லை இளையவளே. அதனால் இப்புவியில் நீ மட்டுமே தனித்தவள்” என்றார். அவள் அங்கே மீண்டும் பிறந்தெழுந்தவள் போல் உணர்ந்தாள்.

“கிளம்புக!” என்றார் இளைய யாதவர். அவள் தலைவணங்கி தன்புரவியில் ஏறிக்கொண்டு பாறைச்சரிவில் பாய்ந்து செம்மண்பாதையை அடைந்து மையப்பாதையை தேர்ந்தாள். கோட்டைமுகப்பை அடைந்ததும்தான் தன்னிடம் ஆணையோலை என ஏதுமில்லை என்று உணர்ந்தாள். புரவியை சாலையோரத்துப் புதர் ஒன்றினுள் செலுத்திவிட்டு நடந்து சென்றாள். விழிகளால் துழாவிக்கொண்டிருந்தவள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஆய்ச்சியரை கண்டுவிட்டாள். அருகே சென்று அவர்களில் முதியவளை வணங்கி “நானும் நகருக்குள்தான் செல்கிறேன் ஆய்ச்சி” என்றாள். “நீ எந்த ஊர்?” என்றாள் அவள். “கிருவி குலத்தவள் நான். பார்வண பதத்தின் சப்தபாகுவின் மகள் பத்ரை” என்றாள். “தந்தை இன்று நகருக்குள் நெய்வணிகம் செய்ய வந்துள்ளார்.”

“நீ உஜ்ஜயினியிலிருந்து வருகிறாயா?” என்றாள் ஆய்ச்சி. “இப்போதெல்லாம் பெரிய வணிகர்கள் முழுக்க அங்கிருந்தே வருகிறார்கள். மாகிஷ்மதியே அவர்களின் நகரமென ஆகிவிட்டிருக்கிறது.” அவள் புன்னகை செய்து “ஆம், ஆனால் மாகிஷ்மதியைப்போல தொல்பெருமை உண்டா உஜ்ஜயினிக்கு? மாகிஷ்மதியின் அரசர்கள் புராணப்புகழ்கொண்டவர்கள் அல்லவா?” என்றாள். கிழவிக்கு அந்தச்சொற்கள் பிடித்திருந்தன. “அந்தக் கலத்தை கொடுங்கள் அன்னையே...” என உரிமையுடன் வாங்கி தன் தலையில் வைத்துக்கொண்டாள். இன்னொரு கிழவியிடமிருந்து பிறிதிரு கலங்களை வாங்கினாள். “நீ கலமேந்துவதைக் கண்டதும்தான் என் ஐயம் முழுமையாக விலகியது பெண்ணே. நீ இடையப்பெண்ணேதான். பிறர் இதுபோல நெய்க்கலம் ஏந்தமுடியாது” என்றாள் கிழவி.

“நெய்வழியாது கலமேந்தத் தெரிந்துகொள்வதுதானே ஆய்ச்சி அறியும் முதல் பாடம்” என்றாள் சுபத்திரை. “நான் ஏழடுக்குக் கலம் ஏந்துவேன் ஆய்ச்சி!” அவள் சிரித்து “உன் தோள்களை நோக்கினால் நீ பன்னிரு அடுக்கு ஏந்தினாலும் வியப்படையமாட்டேன்” என்றாள். அவர்கள் நடந்தபோது ஆய்ச்சி திரும்பி தன்னுடன் வந்தவர்களிடம் “பாருங்களடி, எப்படி நடக்கிறாள் என்று. நடனம்போன்றிருக்கிறது உடலசைவுகள். நல்ல இடையப்பெண் கலமேந்தி நடந்தால் அவள் உடலின் அசைவுகளில் ஒன்றுகூட வீணாகாது. ஆகவே அவளுக்கு களைப்பே இருக்காது.” சுபத்திரை சிரித்து “என் இல்லத்தில் நெய் உருகாத நாளே இல்லை ஆய்ச்சி” என்றாள்.

கிழவியைக் கண்டதுமே கோட்டைக்காவலர் விட்டுவிட்டனர். நகரத்தெருக்களில் நுழைந்ததும் சுபத்திரை அரண்மனையை கண்டுவிட்டாள். மூன்றடுக்கு மட்டுமே கொண்ட தொன்மையான மரக்கட்டட வளாகம் அது. அதன் உள்கோட்டை வாயிலில் வேல்களுடன் காவலர் நின்று நோக்கி உள்ளே அனுப்பினர். அதன் இடதுபக்கம் செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் உலைந்த இரண்டு அடுக்கு மரக்கட்டடம்தான் மகளிர்மாளிகை என அவள் உய்த்துக்கொண்டாள். கோட்டைக்காவலர் பெண்களை நோக்காமல் அனுப்பியதிலிருந்தே அங்குள்ள காவல் என்பது வெறும் தோற்றமே என அவள் உணர்ந்தாள். எப்போதும் காவல் என்பதே இயல்வது. அது ஒரு மாறாநெறியாக மாறி பழகிவிட்டிருக்கவேண்டும். இடர்வரும்போது மட்டும் காவல் என்பது சிலநாழிகைகள் மட்டுமே நீடிக்கும் ஒரு பதற்றநிலை. அந்த விரைவு வடிந்ததும் காவல் தளர்ந்துவிடும். தளர்ந்த காவல் என்பது இயல்பான காவலைவிடவும் குறைவானது.

“எந்தை அரண்மனைக்கு நான்கு கலம் நறுநெய்யுடன் போகச்சொன்னார். நான் அதை மறந்து கானாடி இருந்து விட்டேன். என் இருகலம் நெய்யும் இவ்விரு இளையோர் கொண்டுவரும் நெய்யும் எனக்குப் போதும். தாங்கள் ஒப்புக்கொண்டால் நேரடியாகவே அரண்மனைக்குச் செல்வேன்” என்றாள் சுபத்திரை. “இவற்றை நாங்கள் தெற்குவீதி வைதிகர்தெருவுக்கு வாக்களித்துள்ளோமே” என்றாள் கிழவி. “அன்னையே, இவை நறுநெய் என மணமே சொல்கிறது. அரண்மனைக்கு உகந்தவை இவை.” கிழவி எல்லா புகழ்மொழிகளையும் மிக இயல்பாக பெற்றுக்கொண்டு மகிழ்பவள். “ஆம், இவை என் நோக்கு முன் கடைந்து உருட்டப்பட்ட வெண்ணையை உருக்கி எடுத்தவை. வெண்ணையை உருக்குவதென்பது ஓர் மந்தணக்கலை. என் மூதன்னை எனக்கு கற்றுத்தந்தது. பிறருக்கு நான் இன்னமும் முழுமையாகச் சொல்லவில்லை” என்றாள்.

“அதை நான் முதல்மணம் பெற்றபோதே உணர்ந்தேன். இன்று அரண்மனையில் விழவு. இந்நறுநெய் அவர்களுக்கு உகந்தது. அருளவேண்டும். செல்லும் வழியில் வேறுநெய்யை நீங்கள் கொள்ளுங்கள். இந்த நான்கு கலங்களுக்கான விலையை இப்போதே அளித்துவிடுகிறேன்” என்றாள். கிழவி “வேறு வழியில்லை. அரண்மனைக்கு என்கிறாய்” என உடனே ஒப்புக்கொண்டாள். அவள் கிழவியிடம் வெள்ளிப்பணம் கொடுத்து இரு இளம் ஆய்ச்சியர் தொடர அரண்மனை நோக்கிச் சென்றபோது ஒருத்தி “நல்லவேளை, என்னை அழைத்தாய். நான் இதுவரை அரண்மனைக்குள் சென்றதில்லை” என்றாள். “நானும் சென்றதில்லை” என்றாள் மற்றவள். “அந்த மூதேவி சபரி என்னை அதற்காகத்தான் உறுத்து நோக்கினாள். அவளுக்கும் ஆசை.”

“நீங்கள் இருவரும்தான் உள்ளே செல்லுமளவுக்கு அழகான முகம் கொண்டிருந்தீர்கள்” என்றாள் சுபத்திரை. “அரண்மனைக்குள் அழகற்றவர்களை அவர்கள் விடுவதே இல்லை.” அவர்கள் இருவரும் முகம் மலர்ந்தனர். மூத்தவள் “ஆம், நான் அதை கண்டிருக்கிறேன்” என்றாள். இளையவள் உடனே சுபத்திரைக்கு அணுக்கமாக ஆகி “அக்கா, இன்று இளைய யாதவர் வந்து இளவரசியை கவர்ந்துசெல்வார் என்கிறார்களே, உண்மையா?” என்றாள். மூத்தவள் “போடி, எவ்வளவு காவல் பார்த்தாயல்லவா? எப்படி வரமுடியும்?” என்றாள்.

அவர்கள் இருவருமே ஒரே மறுமொழியை எதிர்பார்க்கிறார்கள் என உணர்ந்து “அவர் இந்நேரம் நகர் நுழைந்துவிட்டிருப்பார்“ என்றாள் சுபத்திரை. “அய்யோ, எப்படித் தெரியும்?” என்றாள் இளையவள். “எனக்குத் தோன்றுகிறது. இந்நேரம் நகருக்குள் வந்திருந்தால் மட்டுமே இளவரசியை கவரமுடியும். இன்னும் ஒருநாழிகை நேரத்தில் களம்கூடிவிடும் அல்லவா?” மூத்தவள் “நாம் களத்துக்கு போகப்போகிறோமா?” என்றாள். இளையவள் “இளவரசி களத்துக்கே வரப்போவதில்லை என்கிறார்கள்” என்றாள். “ஆம், ஆனால் அவளை நாம் மகளிர்மாளிகைக்குள் சென்று காணமுடியும்...” என்றாள் சுபத்திரை. “நான் உண்மையில் அதற்காகத்தான் செல்கிறேன். மகளிர்மாளிகைக்கு நம் மூவருக்கும் அழைப்பு இருப்பதாகவும் நெய்கொண்டு செல்வதாகவும் சொல்லப்போகிறேன்.”

மூத்தவள் “என்னை அரண்மனைக் காவலர்களுக்கு தெரியும். அமைச்சுமாளிகைக்கு நான்தான் நெய்கொண்டு செல்பவள்” என்றாள். “அப்படியென்றல் நீயே சொல், மகளிர்மாளிகைக்கு நம்மை வரச்சொல்லியிருப்பதாக. நேராகச் சென்று இளவரசியை பார்ப்போம். ஒருவேளை இளைய யாதவர் மாயம் செய்து அங்கே வந்து அவளைக் கவர்ந்தால் அதை நாம் நேரிலேயே பார்க்கலாம் அல்லவா?” இருவரும் உளஎழுச்சியில் உடல்மெய்ப்பு கொள்வதை காணமுடிந்தது. “அய்யோடி” என்றாள் மூத்தவள். இளையவள் “எனக்கு அச்சமாக இருக்கிறதடி” என்றாள். “என்ன செய்வார்கள்? பிழையாக வந்துவிட்டோம் என்போம். பிடித்து திரும்பக்கொண்டுவந்து விடுவார்கள். நாம் யாதவ குலம். இளைய அரசி யாதவப்பெண். இளவரசியும் யாதவப்பெண்ணே. மணம் காணவந்தோம் என்றால்கூட எவரும் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றாள் சுபத்திரை.

அவர்கள் மிக எளிதாக உள்ளே செல்லமுடிந்தது. காவல்கோட்டத்திலிருந்த வீரர்களில் இருவர் இருஆய்ச்சியரையும் அறிந்திருந்தனர். “என்ன கலிகை, அமைச்சுநிலைக்கா நெய்?” என்றான் ஒருவன். “இல்லை, இதை மகளிர் மாளிகைக்கு கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள்” என்று மூத்தவள் உடைந்த குரலில் சொல்வதற்குள் இளையவள் “உண்மையாகவே மகளிர்மாளிகைக்குத்தான் அண்ணா” என்றாள். சொல்லிவிட்டு சுபத்திரையை நோக்கி நாக்கை கடித்தாள். ஆனால் அவன் தலைப்பாகையை சீரமைத்தபடி “சரி, சென்று உடனே மீளுங்கள்” என்று சொல்லிவிட்டான்.

மகளிர்மாளிகை நோக்கிச்சென்ற முற்றத்தில் மரத்தடிகள் பதிக்கப்பட்டிருந்தன. மழையாலும் வெயிலாலும் கரும்பாறைபோல ஆகிவிட்டிருந்த தொன்மையான மரத்தில் குதிரைகளும் மனிதர்களும் செல்லும் வழி மட்டும் தேய்ந்து குழியாக நிறம்மாறி தெரிந்தது. நீர்வழிந்து பாசிபற்றி உலர்ந்த தடத்துடன் கருமையாக எழுந்திருந்த மகளிர்மாளிகையின் பழைய கருந்தூண்கள் பொன்னிறப்பட்டு சுற்றப்பட்டு சிற்றூர் வேளாண்குடி மணப்பெண்கள் போல் நின்றிருந்தன. அவை சூடிய பாவட்டாக்கள் சிறுபடகின் பாய்களென காற்றில் புடைத்திருந்தன.

மாளிகையின் முன்னால் இடைநாழியின் திண்ணையில் வேலும் வாளுமேந்திய காவலர் இருந்தனர். அவர்கள் படைக்கலங்களை பிடித்திருந்த முறையிலேயே உளமின்மை தெரிந்தது. சிலர் வாள்களை அருகே தரையில் வைத்துவிட்டு பிறருடன் நகையாடிக்கொண்டிருக்க சிலர் வாயிலடக்கிய பாக்கின் சுவையில் விழிசொக்கி அமர்ந்திருந்தனர். அவள் பிற ஆய்ச்சியரிடம் பேசிக்கொண்டே சென்றாள். அவர்கள் அணுகும்தோறும் நடுங்கத் தொடங்கினர். இளையவள் “என் கால்கள் நடுங்குகின்றன அக்கா, நான் நின்றுவிடுகிறேன்” என்றாள். “இனிமேல் நின்றால்தான் ஐயம் வரும்” என்றாள் சுபத்திரை.

அவர்களை காவலர் நோக்கினர். சுபத்திரை “அத்தனைபேரும் உன் இடைக்குமேல்தான் விழிநட்டிருக்கிறார்களடி” என்றாள். “அய்யோ” என்றாள் இளையவள். அவள் அச்சம் மாறி நாணம் எழுந்தது. “உங்கள் இருவரையும் இப்போது ஐம்பது பேரின் விழிகள் உண்கின்றன” என்றாள். “ஆம், என்னால் நடக்கவே முடியவில்லை” என்றாள் மூத்தவள். தன்னை இளையவளைவிட ஒரு படி மேலே நிறுத்த விழைந்தவளாக “கண்களாலேயே அளவெடுக்கிறார்கள். சூரிக்கத்தியால் நுங்குபோல தோண்டி எடுக்கவேண்டும்” என்றாள்.

“சூழ்ந்தெடுத்த காளையின் கண்ணை பார்த்திருக்கிறாயா? தவளை போல அதிர்ந்துகொண்டிருக்கும்” என்றாள் சுபத்திரை. “நூறு தவளைகள்” என்று சொல்லி சிரித்தாள். அறியாமலேயே இளையவள் சிரிக்க மூத்தவள் “சிரிக்காதே...” என்றாள். “அவள் சிரிப்பதை வீரர் விரும்புவார்கள். அவள் முகம் பொலிவுகொண்டிருக்கும் அப்போது” என்றாள் சுபத்திரை. மூத்தவள் “அந்த மீசைக்காரனின் கண்களைப் பார்த்தால் பெரிய சேற்றுத்தவளை போலிருக்கின்றன. கள்சேறு” என்று சொல்லி சிரித்தாள். சுபத்திரை அதை ஏற்று மேலும் சிரித்தபடி நடந்தாள். உடல் சுமையேந்தி உலைய அவர்கள் நடந்து இடைநாழியை அடைந்தனர்.

காவலர்தலைவன் “நெய்யா?” என்றான். சுபத்திரை “இல்லை, நெய்க்குடத்திற்குள் இளைய யாதவரை கொண்டுசெல்கிறோம்” என்றாள். “உன் வாயை பாதுகாத்துக்கொள் ஆய்ச்சி. அதன் பயன்கள் உனக்கே தெரியாது” என்ற காவலர்தலைவன் சிரிக்கும் கோரிக்கையுடன் பிறரை நோக்க அவர்கள் வெடித்துச்சிரித்தனர். சுபத்திரை “என் கைகளின் பயனும் எனக்குத்தெரியும்” என்றாள். “நெய்யை கொடுத்துவிட்டு வந்து என்னுடன் ஒருநாழிகைநேரம் இரு. உன் உடலின் முழுப்பயனையும் சொல்லித்தருகிறேன்” என்றான் அவன். “வாடி” என்று மூத்த ஆய்ச்சி இளையவளை இழுத்தாள். “நான் திரும்பிவந்து உனக்கு சொல்லித்தருகிறேன் மாமனே” என்றாள் சுபத்திரை. “வாடி, என் செல்லம் அல்லவா?” என்று அவன் சொல்ல வீரர்கள் கூச்சலிட்டு நகைத்தனர்.

மகளிர் மாளிகையின் நீண்ட இடைநாழிக்குள் நுழைந்ததும் சுபத்திரை திரும்பி நோக்கிவிட்டு நெய்க்கலங்களை கீழே வைத்தாள். “என்னடி இது? நாம் இளவரசியை பார்க்கவேண்டாமா?” என்றாள் இளையவள். “எனக்கு ஒரு பணி உள்ளது. நீங்கள் சென்று உங்கள் கலங்களை வைத்துவிட்டு இதை கொண்டுசெல்லுங்கள்” என்றபின் அவள் திரும்பி இடைநாழியை நோக்கித்திறந்த கூடத்திற்குள் சென்று கதவைமூடினாள். திகைத்து அவளை நோக்கி ஓடிவந்த முதல் காவலனை ஒரே அடியில் பக்கவாட்டில் சரித்து மரத்தரையில் உடல் அறைய விழச்செய்தாள். மண்டை உடைந்து மூக்கிலும் காதிலும் குருதி வழிய அவன் துடித்து இழுத்துக்கொள்ள இரண்டாமவனின் இடைக்குக் கீழே எட்டி உதைத்தாள். அவன் மெல்லிய ஒலியுடன் மடங்கிச்சரிய அவன் தலைமயிரைப்பற்றி கழுத்தை முறித்தாள். கீழே விழுந்துகிடந்தவனின் வாளை கையில் எடுத்துக்கொண்டு இறுதித்துடிப்பிலிருந்த இரு உடல்களையும் தாண்டிக்கடந்து மாடிப்படிகளில் ஏறி ஓடினாள்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 10

எல்லைக் காவல்கோட்டத் தலைவன் ரிஷபன் தன் புரவிமேல் அமர்ந்து ‘விரைவு விரைவு’ என உளம் தவித்தான். சூழ்ந்து வட்டமிட்ட குறுங்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் குளம்படியோசை சிதறிப் பெருகி மீண்டெழுந்து அவனை சூழ்ந்தது. ‘மேலும்! மேலும்!’ எனக் கூவியபடி குதிகால் முள்ளால் அதை துரத்தினான். காற்றில் எழுந்து சிற்றோடைகளை தாவினான். சிறு பாறைகள் மேல் துடியோசை எழுப்பிக் கடந்து சென்றான்.

மாகிஷ்மதியின் சிறிய கோட்டை வாயிலைக் கண்டதும் ஒருகணம் பெருமூச்சுடன் நின்றான். பின்பு தன் இடையில் இருந்த மாகிஷ்மதியின் கொடியை எடுத்து வீசி பறக்கவிட்டபடியே கோட்டை வாயிலை நோக்கி புரவியில் முழுவிரைவில் சென்றான். எத்தனை விரைந்தும் அசைவற்று கோட்டை வாயில் அங்கேயே நின்றது. 'எத்தனை தொலைவு! எத்தனை தொலைவு!’ என்று அவன் உள்ளம் தவித்தது. புரவி ஓடுகின்றதா நின்ற இடத்தில் காலுதைக்கிறதா என்று ஐயம் கொண்டான்.

கோட்டை அங்கேயே நின்றதென்றாலும் மேலும் மேலும் தெளிவு கொண்டன அதன் பழமையான தடிகளின் கருமைகொண்ட இரும்பு இணைப்புகள். மழையூறி வழிந்த அலை வளைவுகள் கருகிய பாசிப் பரப்பு மீது பறவை எச்சங்களின் வெண்ணிற வழிவுகள் என தெரிந்து கொண்டே இருந்தன. பின்பு அவன் கோட்டையின் பெருங்கதவத்தின் பித்தளைக்குமிழ்களின் ஒளியை அருகே கண்டான். கோட்டை முகப்பின் இருபக்கத்தின் யானைக்கால் தூண்கள் பட்டுத்துணிகள் சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தன. மரப்பட்டைக் கூரையிட்ட வளைந்த முகடுகளின் மேல் புதிய பட்டுக் கொடிகள் காற்றில் படபடத்தன. கொடித்தோரணங்களும் பட்டுப் பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் நடனமிட்டுக்கொண்டிருந்தன.

ஒற்றைப் புரவி செல்லுமளவுக்கு திட்டி வாயிலை மட்டுமே திறந்து வைத்து பன்னிரு காவலர் ஈட்டிகளும் வாள்களுமாக காவல் நின்றனர். கோட்டைக்கு மேல் எழுந்த காவல் மாடங்களில் நாண்பூட்டிய விற்களுடன் செறிந்திருந்தனர் வில்லவர். புதுத்தோல் இழுக்கப்பட்ட பெருமுரசங்கள் காவல் மாடத்தின் முரசு மேடையில் இரு பக்கங்களிலாக வட்டம் சரித்து அமர்ந்திருந்தன. திட்டிவாயிலின் முன்பு குளம்புகள் சடசடக்க வந்து நின்ற அவன் முன்னால் எட்டு ஈட்டிகள் ஒளிர்முனை சரித்தன. கடிவாளத்தை இழுத்து புரவியைத் திருப்பி நிறுத்தி மூச்சிரைக்க “நான் தென்மேற்கு காவல்மாடத்து நூற்றுவர் தலைவன். என் பெயர் ரிஷபன். அமைச்சர் கர்ணகரை உடனடியாக சந்திக்க விழைகிறேன். மந்தணச்செய்தி” என்றான்.

ஐயம் கொண்டவனாக கண்களைச் சுருக்கி நோக்கி “முத்திரை?” என்றான் கோட்டைக்காவலன். ரிஷபன் தன் கணையாழியைக் காட்டியதும் அதை மூவர் மாறி மாறி நுண்ணோக்கினர். “விரைவு” என்றான் ரிஷபன். “விரைவல்ல, இங்கு தேவையானது எச்சரிக்கைதான்…” என்றான் கோட்டைக்காவலன். “நாங்கள் முறைமைகளை விடமுடியாது.” பிறிதொருமுறை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தொட்டுக் கொண்டபின் தலைவன் தலையசைத்து “செல்க!” என்றான். எரிச்சலுடன் தலைகுனித்து “நல்லது” என்றபின் அவன் திட்டிவாயிலினூடாக உள்ளே சென்றான்.

மாகிஷ்மதியின் அரச வீதி குறுகியது. காட்டு மரத்தடிகளை அடுக்கி தேர்ச்சாலை போடப்பட்டிருந்தது. அதன் மீது குளம்புகள் ஒலிக்க அவன் புரவி கடந்து சென்றது. இருபக்கமும் மரத்தாலான சிறிய மாளிகைகள் மந்தைபோல விலாமுட்டி செறிந்திருந்தன. கொம்புகள் பூட்டி புறப்படாமிட்டு அணி செய்யப்பட்ட கன்றுகள் என அவை தோரணங்கள் கொடிகள் சூடி வண்ணம் பொலிந்திருந்தன. முற்றங்களில் மலரணிக்கோலங்களும் சுடர் ஏந்திய மண்செராதுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அங்காடி வீதிகளில் கடைகள் தோறும் மலர்மாலைகளை வளைத்துக் கட்டியிருக்க வணிகப்பொருட்களின் மணத்துடன் கலந்த மலர்மணம் காற்றில் குழம்பியது.

ஆங்காங்கு தென்பட்ட நகர்மக்கள் அனைவரும் புத்தாடை புனைந்து அணிகளும் பூண்டிருந்தனர். ஆனால் எங்கும் பெருவிழவுக்கென எழும் களிவெறி ஏதும் தென்படவில்லை. ரிஷபன் எல்லைக் காவல் மாடத்தருகே தன் இல்லத்தில் துணைவியுடனும் மைந்தருடனும் வாழ்ந்தான். ஆண்டிற்கு இருமுறைகூட அவன் மாகிஷ்மதிக்குள் வந்ததில்லை. ஒவ்வொரு முறையும் மழையில் கருத்த மரப்பட்டைக் கூரைகளும் கருநாகம் என கரிய பளபளப்பு கொண்ட பழமையான தூண்களும் தலைமுறைகளின் உடல்பட்டு தேய்ந்து உலோகப் பரப்பென ஒளிவிட்ட கல் திண்ணைகளும் கொண்ட அந்நகரத்தின் சிறிய மாளிகைகள் அவனை உள எழுச்சி கொள்ளச் செய்வதுண்டு.

மாகிஷ்மதியன்றி பிற நகர் எதையும் அவன் கண்டிருக்கவில்லை. உஜ்ஜயினியில் நூறு ஏழ்நிலை மாடங்களுண்டு என்று அங்கு சென்று வந்த சூதனொருவன் பாடக்கேட்டிருந்தான். பிறிதொரு சூதன் பல்லாயிரம் பன்னிருநிலை மாடங்கள் கொண்ட பெருநகரம் துவாரகை என்று பாடக்கேட்டு எள்ளிச்சிரித்து “அது துவாரகை அல்ல, ஹிரண்யகசிபுவின் மகோதயபுரம் போலும்” என்றிருக்கிறான். அன்று மாகிஷ்மதி நூல்கண்டு என சுருள் விரித்து நீண்டு சென்றது. கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை முகப்பு வரை அத்தனை இல்லங்களிருப்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். மூன்று காவல் முகடுகளிலும் புத்தாடை புனைந்து கூர்வேல் ஏந்திய காவலர் நின்றனர். செம்முரசுத் தோல்கள் இளவெயிலில் ஒளிவிட்டன.

அரண்மனைச் சிறுகோட்டை முகப்பின் மீது கட்டப்பட்ட சுனாதம் என்ற பேருள்ள தொன்மையான பித்தளை மணி துலக்கப்பட்டு பொற்குவளை என மின்னியது. உயரமற்ற மரக்கோட்டை முகப்பை அடைந்து இறங்கி தன்னை அறிவித்துக் கொண்டான். “கர்ணகரை சந்தித்தாகவேண்டும். நான் எல்லைக்காவல்மாடத்து தலைவன் ரிஷபன்” என்று கூவினான். அவன் குரலிலேயே இடர் ஒன்றை உய்த்துணர்ந்த காவலன் படியிறங்கி வந்து அவனுடைய முத்திரைக் கணையாழியை மும்முறை நோக்கியபின் “அரண்மனையின் வலது எல்லையில் நூற்றெட்டு தூண்கள் கொண்ட அணி மண்டபத்தில் மங்கலப் பொருட்கள் ஒருக்கப்படுகின்றன. அதை மேல்நோட்டம் விட்டபடி கர்ணகர் நின்றிருக்கிறார். செல்க!” என்றான்.

அவன் அரண்மனை முகப்புக்குள் நுழைந்து புரவியை தேர்முற்றத்தில் நிறுத்திவிட்டு தரையென விரிந்த மரப்பரப்பின் மேல் இரும்புக்குறடுகள் ஒலியெழுப்ப விரைந்தோடினான். அரைவட்டமெனச் சூழ்ந்த அரண்மனை மாளிகைகளுக்கு நடுவே இருந்த களமுற்றத்தின் மையத்தில் அவந்தியின் சிட்டுக்குருவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதற்கு வலப்பக்கமாக அமைந்த வேள்விக்குளத்தில் எரியெழுப்பி வைதிகர் எழுவர் வேதமோதிக் கொண்டிருந்தனர். இடப்பக்கம் உயரமில்லாது அமைக்கப்பட்ட மேடைமேல் இசைச்சூதர்கள் தங்கள் யாழ்களுடனும் முழவுகளுடனும் காத்திருந்தனர். அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும் மயிலணையும் அணியணைகளும் போடப்பட்டு காத்திருந்தது. அதன் வளைந்த மேற்கூரையிலிருந்து புதுமலர் மாலைகளும் தளிர்த் தோரணங்களும் தொங்கி காற்றில் உலைந்தன.

முற்றத்தைச் சுற்றி நடப்பட்டிருந்த மூங்கில்கழிகளை இணைத்துக் கட்டிய வடங்களிலிருந்து மலர் மாலைகளும் துணித் தோரணங்களும் தொங்கின. பாவட்டாக்களும் அணிப்பட்டங்களும் காற்றில் குச்சலம் அசைய திரும்பி உலைந்து பொறுமையிழந்த மயில்களென விழிமயக்கு காட்டின. மணநிகழ்வுக்கு வந்துள்ள அரசர்கள் அமர்வதற்கென போடப்பட்ட பீடங்களின் மேல் வெண்பட்டுகளை ஏவலர் விரித்துக் கொண்டிருந்தனர். பெருங்குடியினரும் குலத்தலைவர்களும் வணிகர்களும் அமர்வதற்கான பீடங்களின் மேல் மரவுரிகள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குலத்திற்கும் உரிய கொடிகள் அவ்விருக்கை வரிசைகளின் தொடக்கத்தில் நடப்பட்டு தெற்கிலிருந்து முற்றத்தைக் கடந்து சென்ற காற்றில் படபடத்தன.

நூற்றெட்டு கால் மண்டபத்தில் மலர்களும் காய்களும் கனிகளுமாக பொற்குடங்களில் நீரும் வெள்ளி நாழிகளில் ஒன்பது வகை மங்கலக் கூலங்களும் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அருகே இடையில் கைவைத்து கர்ணகர் நின்றிருந்தார். வெண்தலைப்பாகை மேல் அவர் சூடிய நாரை இறகை தொலைவிலேயே கண்டு அணுகிய ரிஷபன் மூச்சிரைக்க நின்று “அமைச்சரை வணங்குகிறேன். மந்தணச்செய்தி ஒன்றுள்ளது” என்றான். அக்குரலிலேயே பெரும்பாலும் உய்த்துணர்ந்து கொண்ட கர்ணகர் திரும்பி அவன் தோளில் கைவைத்து “என்ன செய்தி?” என்றார். “இளைய யாதவர்” என்றான் ரிஷபன். “படையுடனா?” என்றார் கர்ணகர். அவன் “இல்லை அமைச்சரே, அவரும் இளம்பெண்ணொருத்தியும் அணுக்கர்கள் சிலரும் மட்டுமே” என்றான்.

கர்ணகர் அருகே நின்ற தன் ஏவலனிடம் “நீர் சென்று படைத்தலைவரிடம் எனது ஆணையை அளியும். நமது எல்லைகள் அனைத்திலும் உடனே படை நகர்வு நிகழ்ந்தாகவேண்டும். நான் இளவரசர்களை சந்தித்தபின் வந்து மேலே என்ன செய்வதென்று ஆணையிடுகிறேன்” என்றபின் திரும்பி ரிஷபனிடம் “வருக!” என்றபின் உடல் குலுங்க அரண்மனை நோக்கி ஓடினார். ரிஷபன் ஒரு கணம் அவரை நோக்கி நின்றபின் தொடர்ந்தான்.

அவர் அரண்மனைப் படிகளில் ஏறும்போது விழவுச்செயலகர் அவரை நோக்கி வந்து “அரசர்கள் எழுந்தருளலாமா என்கிறார்கள். விழவுக்கு தடையேதுமில்லையே?” என்றார். கர்ணகர் சீற்றத்துடன் “என்ன தடை? தடையை எதிர்பார்க்கிறீரா? தடை நிகழ்ந்தால்தான் உமது உள்நிறையுமா?” என்றார். “இல்லை, அதில்லை” என்றார் செயலகர். “எந்தத்தடையும் இல்லை. அனைத்தும் சித்தமாகட்டும். இன்னும் அரைநாழிகைக்குள் அரசகுடியினர் அவை எழுவார்கள்” என்றபின் சால்வையை அள்ளிச்சுற்றிக்கொண்டு ஓடினார். செயலகர் ரிஷபனை நோக்க அவன் அவரது விழிகளைத் தவிர்த்து தானும் தொடர்ந்தான்.

அரண்மனையின் இடைநாழிகளை அடைந்து தன்னை நோக்கி விரைந்து வந்த துணை அமைச்சர்களைப் பார்த்து கையசைத்து ஆணைகளை இட்டுக் கொண்டே சென்றார் கர்ணகர். “படைத்தலைவர்களை இளவரசரின் மந்தண அறைக்கு வரச்சொல்லுங்கள். அமைச்சர் பிரபாகரரும் அங்கு வரட்டும்” என்றார். துணை அமைச்சர் கிருதர் “அரசருக்குச் செய்தி?” என்று தொடங்கியதுமே “அரசருக்கு ஏதும் சொல்லப்படவேண்டியதில்லை சொல்லப்படவேண்டுமென்றால் அது மூத்தவரின் ஆணைப்படியே” என்றார் கர்ணகர். “ஆனால் எதுவும் தெரியவேண்டியதில்லை. விழவு நிகழட்டும்... அரசர் அவையமரட்டும். மங்கலங்கள் தொடங்கட்டும்.”

மூச்சிரைக்க இடைநாழியின் எல்லையிலிருந்த குறுகலான மரப்படிகளில் பாய்ந்து ஏறினார். பழைமையான மரப்படிகள் கருகியவை என தெரிந்தன. மணத்தன்னேற்பு நிகழ்வுக்காக புதுப்பிக்கப்பட்ட அவற்றில் ஓரிரு படிகள் மட்டும் புதுமர நிறத்தில் பல்வரிசையில் பொன் கட்டியதுபோல தனித்துத் தெரிந்தன. படிகளின் கைப்பிடிகள் பட்டு சுற்றப்பட்டிருந்தன. தூண்கள் தோறும் வண்ணப்பாவட்டாக்கள் காற்றில் அசைந்தன. ரிஷபன் அதற்கு முன் அரண்மனைக்குள் நுழைந்ததில்லை. அது உயரமில்லாத மரக்கூடங்களும் சிற்றறைகளும் கொண்டது என்பது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆனால் உள்ளம் ஒவ்வொன்றையும் வியந்துகொண்டும் இருந்தது.

அரண்மனையின் இரண்டாவது மாடியிலிருந்த மந்தண அறைக்குள் சென்ற கர்ணகர் அங்கு பீடத்தில் அரசணிகோலத்தில் அமர்ந்து சுவடிகளை நோக்கிக் கொண்டிருந்த அனுவிந்தரை நோக்கி தலைவணங்கி “இளவரசே” என்றார். அவர் வருவதை ஓசையாலேயே உணர்ந்து திகைத்து எழுந்த அனுவிந்தர் “இளைய யாதவரா? வந்துவிட்டாரா?” என்றார். “ஆம்” என்றார் கர்ணகர். “எங்குளார்?” என்றார் அனுவிந்தர். “நகர் நுழைந்துள்ளார்.” அனுவிந்தர் சுவடியை குறுபீடத்தில் வீசிவிட்டு உள்ளறைக்குள் விரைய அவரது சால்வை தரையில் இழுபட்டு விழுந்தது. அனுவிந்தரைத் தொடர்ந்து கர்ணகரும் செல்ல சற்று தயங்கியபின் ரிஷபனும் தொடர்ந்தான்.

உள்ளறை மேலும் சிறியது. அங்கே சிறிய பொற்பேழை ஒன்றிலிருந்து அருமணிகளை எண்ணி பிறிதொன்றில் போட்டுக்கொண்டிருந்த விந்தர் காலடியோசைகேட்டு திகைத்தெழுந்து “என்ன இளையோனே?” என்றார். ”நாம் அஞ்சியதுதான் மூத்தவரே. இளைய யாதவர் நகர் நுழைந்திருக்கிறார்” என்றார் அனுவிந்தர். “யார்? எப்போது?” என்றார் விந்தர் ஏதும் விளங்காமல். கர்ணகர் உரக்க “சற்று முன்னர்தான் அரசே. இவர் தென்மேற்குக் கோட்டைக்காவலர். இவர்தான் செய்தி கொணர்ந்தார்” என்றார். ஒருமுறை இமைத்துவிட்டு “படையுடனா?” என்றார் விந்தர். "இல்லை அரசே, படை ஏதும் கொணரவில்லை. தனியாக நகர் நுழைந்தார். நான் அவரைக் கண்டேன்” என்றான் ரிஷபன்.

“அவ்வண்ணமெனில் அவர்கள் இதற்குள் அரண்மனை புகுந்திருக்க வேண்டும். இங்கே இன்னும் அரைநாழிகைக்குள் மணத்தன்னேற்பு தொடங்கவிருக்கிறது என்று அறிந்திருக்கிறார்” என்றார் விந்தர். அனுவிந்தர் “ஆம். நான் அதை எண்ணத்தவறிவிட்டேன் அவந்தி எல்லைக்குள் நுழைந்திருந்தால் இந்நேரம் மாகிஷ்மதிக்குள்தான் வந்திருக்கவேண்டும். ஆனால் அவர்கள் நகருள் வந்த செய்தி கோட்டை வாயிலிலிருந்து இன்னும் நமக்கு வரவில்லை” என்றார். “இளவரசே, அவர்கள் மிக எளிய கோலத்தில் வந்தனர். நான் சற்று பிந்தியே உய்த்தறிந்தேன். கோட்டைக்காவலர் கூட்டத்தில் அவர்களை தவறவிட்டிருக்கலாம்” என்றான் ரிஷபன்.

“ஆம், அதுவே நிகழ்ந்திருக்கும்” என்றபின் அனுவிந்தர் வெளியே ஓடி அங்கு வந்த துணைஅமைச்சர் கர்க்கரிடம் “ஒற்றர்களை கேளுங்கள். நான்கு பக்கமும் படைகளை அனுப்புங்கள். இந்நகருக்குள் எவ்வழியிலேனும் இளைய யாதவரும் துணை வந்த பெண்ணொருத்தியும் நுழைந்திருக்கிறார்களா என்று நான் அறிந்தாகவேண்டும்” என்றார். “இக்கணமே இளவரசே” என்றபடி கர்க்கர் இறங்கி வெளியே ஓடினார். அனுவிந்தர் திரும்பி தன் பின்னால் வந்த கர்ணகரிடம் “நகர் நுழைந்திருந்தால் இன்னும் அரை நாழிகைக்குள் நமக்கு தெரிந்துவிடும். இந்நகர் ஒரு நாழிகை நேரத்திற்குள் சுற்றி வரும் அளவுக்கே சிறியது. இதில் எங்கும் எவரும் மறைந்துவிடமுடியாது” என்றார்.

அனுவிந்தர் அறைக்குள் மீண்டும் சென்றதும் விந்தர் “இளையோனே, அவருடன் ஏன் பெண்ணொருத்தி வருகிறாள்?” என்றார். பின்னர் கர்ணகரிடம் “அதைத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. புரவியில் ஓரிரவுக்குள் இத்தனை தொலைவு வரும் பெண்ணென்றால் அது சத்யபாமை மட்டும்தான். தன் முதல் துணைவியுடன் புதுமணம் கொள்ள அரசனொருவன் வருவானா என்ன?” என்றார். அனுவிந்தர் அதுவரை அதை எண்ணவில்லை. “ஆம். அவள் யாரெனத் தெரிந்ததா?” என்று கர்ணகரிடம் கேட்டார். “இல்லை இளவரசே” என்றார் கர்ணகர். ரிஷபன் “அவள் யாதவப்பெண் போல தெரிந்தாள். மிகஇளையவள்...” என்றான்.

விந்தர் பேழை இரண்டையும் மூடி வைத்துவிட்டு பீடத்தில் கால் தளர்ந்தவர் போல் அமர்ந்து தன் முகத்தை கைகளில் வைத்துக் கொண்டார். “என்னால் எதையும் எண்ணமுடியவில்லை. இந்த மணத்தன்னேற்புக்கு ஒரே ஒருவர் வரலாகாது என்று எண்ணினோமென்றால் அது இளைய யாதவரே. அவர் வருவாரென்றால் நாம் எண்ணிய எதுவும் நடக்கப்போவதில்லை” என்றார். அனுவிந்தர் “உளம் தளரவேண்டியதில்லை மூத்தவரே. அவர் படை வல்லமையுடன் இங்கு வரவில்லை. அஸ்தினபுரியின் அரசரோ திறன்மிக்க வில்லவரும் வாள்வீரரும் புடை சூழ வந்துள்ளார். நமது படைகள் இங்குள்ளன. நம்மை வென்று இங்கிருந்து அவர் செல்லமுடியாது. வந்து களம் நின்றாலும் கதை ஏந்தி போரிடும் வல்லமை கொண்டவரல்ல” என்றார்.

கர்ணகர் “பீமசேனரும் கீசகரும் பலராமரும் ஜராசந்தரும் வராதபோது பிறிதொருவர் நமது பெருங்கதாயுதத்தை தூக்கிச் சுழற்றி களம் வெல்வதைப்பற்றி எண்ணவேண்டியதேயில்லை” என்றார். அனுவிந்தர் “ஆம், அவர் களம் வந்து நிற்கப்போவதில்லை” என்றார். ரிஷபன் “ஒருவேளை மகளிர் மாளிகையைக் கடந்து நம் இளவரசியை கவர்ந்துசெல்ல அவர்கள் முயலக்கூடும்” என்றதும் அனுவிந்தர் திடுக்கிட்டு “மகளிர் மாளிகைக்கா? அவரா?” என்றபின் எழுந்து “ஆம். ஏன் அவர் பெண்ணுடன் வந்தார் என்று புரிகிறது. மகளிர் மாளிகைக்குள் சென்று அவளை கவரப்போகிறவள் அவளே” என்றார்.

“யார்?” என்றார் விந்தர். “அவள்தான். அவரது தங்கை சுபத்திரையைப் பற்றி சூதர் பாடி கேட்டிருக்கிறேன். தன் அன்னையைப் போல் பெருந்தோள் கொண்டவள். கதாயுதமேந்திப் போரிடும் பாரதவர்ஷத்துப் பெண் அவளொருத்தியே என்பார்கள்.” தன் உடைவாளை சீரமைத்தபடி அனுவிந்தர் வெளியே ஓடினார். குறடுகள் ஒலிக்க படிகளில் விரைந்திறங்கியபடி தன்னைத் தொடர்ந்து ஓடி வந்த கர்ணகரிடம் நமது “படைகளனைத்தும் மகளிர் மன்றுக்கு செல்லட்டும். அங்கே எவர் நுழைந்தாலும் அக்கணமே கொன்று வீழ்த்த ஆணையிடுகிறேன்” என்றார்.

அவர்கள் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த செயலகர் “அமைச்சரே, அரசர்கள் அவையமரத்தொடங்கிவிட்டனர். குலத்தலைவர்களும் குடிமுதல்வர்களும் அவை நிறைந்து கொண்டிருக்கின்றனர்” என்றார். “ஆம், அது நிகழட்டும்...” என்றார் அனுவிந்தர். அவர் தலைவணங்கி திரும்பிச்செல்ல கர்ணகரிடம் “இளவரசியை அவை மேடைக்கு கொண்டுவர வேண்டியதில்லை என்று எண்ணினோம். ஆனால் இப்போது அவள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடம் அவை மட்டுமே. அவளை படைசூழ அவைக்கு கொண்டு வருவோம். அவர் அவைக்கு வந்து நம் போட்டியில் வென்று அவளை அடையட்டும். இல்லையேல் அரசர்கள் அனைவரையும் போரில் வெல்லட்டும்” என்றார்.

இடைநாழிக்கு அவர்கள் வருவதற்குள்ளேயே மறுபக்க வாயிலினூடாக ஓடிவந்த படைத்தலைவர் முத்ரசேனர் உரக்க “யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்கள் அரசே. அங்கு நம் காவலர் சிலரைக்கொன்று இளவரசியின் அறைக்குள் சென்றுவிட்டார்கள்” என்று கூவினார். “சூழ்ந்துகொள்ளுங்கள். மகளிர் மாளிகையிலிருந்து எவரும் வெளியேறக்கூடாது. அதன் நான்கு வாயில்களிலும் படைகள் திரளட்டும்” என்று கூவியபடி குறடுகள் தடதடக்க அனுவிந்தர் வாயில் நோக்கி ஓடினார். மேலே முதல்படியில் வந்து நின்ற விந்தர் “என்ன? என்ன நிகழ்கிறது இளையவனே?” என்றார்.

“யாதவ இளவரசி மகளிர் மாளிகைக்குள் நுழைந்துவிட்டாள். இளவரசியை கவர்ந்துசெல்ல முயல்கிறாள்” என்றார் அனுவிந்தர். “அவள் இளவரசியை மறுபக்கமிருக்கும் கலவறைக்கான சாலைவழியாக கொண்டுசெல்லக்கூடும். இளைய யாதவர் தேருடன் அங்கு வருவார் என நினைக்கிறேன். உடனே அங்கு மேலும் படைகள் செல்லட்டும்.” கர்ணகர் “இளவரசே, இடைநாழி வழியாக அவர்கள் அவைமன்றுக்கு வரமுடியும்...” என்றார். “அவைமன்றுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள்... அங்கே அரசர்குழு படைகளுடன் உள்ளது” என்று சொல்லியபடி இடைநாழிக்குச் சென்றதுமே அனுவிந்தர் திகைத்து நின்றார். அவைமன்றில் எழுந்த ஒலிகள் அனைத்தையும் சொல்லிவிட்டன.

கர்க்கர் அத்திசையிலிருந்து பாய்ந்துவந்து “இளவரசே” என்றார். “இளவரசியை அழைத்தபடி யாதவ இளவரசி அவை மன்றுக்குள் நுழைந்துவிட்டிருக்கிறார்.” அனுவிந்தர் “அங்கு எவர் இருக்கிறார்கள்?” என்றார். “அரசரும் இரு அரசியரும் மன்றமர்ந்துவிட்டனர். அஸ்தினபுரியின் இளவரசரும் பெரும்பாலான அரசர்களும் வந்துவிட்டனர். மன்று நிறைந்துள்ளது” என்றபடி ஓடிய அனுவிந்தருக்கு இணையாக ஓடினார் கர்க்கர். பின்னால் வந்த விந்தர் “இங்கே, மன்றுக்கே வந்துவிட்டார்களா? இளைய யாதவர் எங்கே?” என்று கூவியபடி படிகளில் எடைமிக்க காலடிகளுடன் ஓடிவந்தார்.

ரிஷபன் அனுவிந்தருக்குப் பின்னால் ஓடினான். மன்று ஓசைகளும் அசைவுகளுமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. அரசரும் அரசியரும் மேடைமேல் எழுந்து நின்றிருக்க மன்றமர்ந்த அனைவரும் எழுந்துநின்று கைகளை வீசி கூச்சலிட்டனர். சிற்றரசர்கள் தங்கள் பீடங்களுக்கு முன் நின்று நோக்க துரியோதனன் மட்டும் பெருந்தோள்களில் தோள்வளைகள் மின்ன மார்பில் தொய்ந்த மணியாரங்களுடன் மீசையை நீவியபடி தொடைகளை நன்கு பரப்பி அசையாமல் அமர்ந்திருந்தான். அவனருகே அவனுடைய ஆடிப்பாவை என துச்சாதனன் அமர்ந்திருந்தான்.

மறுஎல்லையில் என்ன நிகழ்கிறதென்றே அவனால் முதலில் காணமுடியவில்லை. அங்கு வேல்களும் வாட்களும் ஏந்திய வீரர்கள் குழுமி ஒருவரோடொருவர் முட்டித்ததும்பி குழம்பி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அனுவிந்தர் அவர்களை நோக்கி ஓடியபடி “விலகுங்கள்! ஆணை!” என்று கூவினார். அவந்தியின் வீரர்கள் பயிற்சியற்றவர்கள் என்று சொல்லப்படுவதை ரிஷபன் கேட்டிருந்தான். அப்போது அது ஏன் எனத் தெரிந்தது. அனுவிந்தரின் குரல் கேட்டதுமே அத்தனைபேரும் ஒரேசமயம் விலக நடுவே ஒருகையில் மித்திரவிந்தையின் கைகளைப் பற்றி மறுகையில் குருதி சொட்டும் வாளுடன் நின்ற சுபத்திரையை பார்த்தான். அவள் காலடியில் ஏழு படைவீரர்கள் வெட்டுண்டு கிடந்து உடல்நெளிந்தனர்.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 11

மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள்.

மூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி "இளவரசி உள்ளே வருக!” என்றாள். "மீள்வேனா என்று அச்சமுறுகிறேன்” என்றாள் மித்திரவிந்தை. "பிறிதொரு உலகம் அது. அங்கு இங்குள அனைத்தும் உள்ளன. மீள்வதும் அங்கு தொடர்வதும் தங்கள் முடிவே” என்றாள் எறும்புப்பெண்.

"என் பெயர் விமலை. இங்கு சோனகுலத்துத் தலைவன் மகள்” என்றாள். அவளருகே நின்றிருந்த பிறிதொருத்தி ”என் பெயர் மித்ரை. ஹ்ருஸ்வ குலத்தவள். அஞ்ச வேண்டாம். வருக இளவரசி” என்றாள். மித்ரையின் தோள்களை மெல்ல பற்றிக் கொண்டு அஞ்சும் அடி எடுத்து வைத்து இருள் சுழி எனத் தெரிந்த புற்றுக்குள் இறங்கினாள். "சிற்றுலகம்” என்றாள் மித்திரவிந்தை. "உலகங்களனைத்தும் சிற்றுலகங்களே” என்றாள் மித்ரை.

செங்குத்தாக சுழன்று கீழிறங்கியது சுரங்கம். அச்சுருளின் சுவரைப் பற்றிக் கொண்டு நீர்வழிவதுபோல ஊர்ந்து இறங்கினர். சில கணங்களுக்குப்பின் விழிகள் இருளை ஒளியெனக் கொள்ளத்தொடங்கின. இருளுக்குள் இருளென புடைத்தெழுந்த காட்சிகள் தெளிவான உருவங்களாயின. காற்று மெல்லிய ஒழுக்கென கடந்து சென்றது. அனைத்து நிரையும் ஒரேதாளத்தில் அசையும் பல்லாயிரம் கால்களால் ஆனவையாக இருந்தன. முகக்கொம்புகள் அசைந்தசைந்து பேசிய சொற்களை முகக்கொம்புகள் கேட்டன.

மையப்பாதையின் இரு பக்கமும் பிரிந்து சென்றன பல நூறு கைவழிகள். அச்சிறு வளைவுகளின் ஓரங்களில் செறிந்த சிற்றறைகளில் கருவறை மணம் நிறைந்திருந்தது. அங்கே மைந்தர் உறங்கும் வெண்பையை நெஞ்சோடணைத்து கனவில் ஆழ்ந்திருந்தன அன்னையெறும்புகள். மெல்ல நொதித்துக்கொண்டிருந்த முலைப்பாலின் மணத்தில் சொல்லின்றி நடமாடினர் செவிலியர்.

குவிந்தெழுந்த மேடுகளில் நூற்றுக்கணக்கான சிற்றறை முகப்புகள் திறந்திருந்தன. அங்கே அமர்ந்து கீழே நோக்கி களியாடின பெரிய எறும்புகள். அப்பால் பெரும் களஞ்சியமொன்று உணவு அடுக்குகளால் நிறைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கணமும் ஓயாதவர்களென சுமை இழுத்துச் சென்றனர் ஏவலர். “இங்கும் அங்குளது போலவே குல அடுக்குகள் உள்ளன. படைக்கலம் ஏந்துபவர், அவர்களுக்கு சொற்களம் அமைப்பவர், அக்களம் நின்று ஆடும் அரசர், அரசருடன் இணைந்திருக்கும் சான்றோர், அவர்களுக்கு அகவிழி ஒளிகாட்டும் முனிவர்” என்றாள் மித்ரை.

சிரித்தபடி “ஆம், அனைவரும் உள்ளனர். அண்டிவாழ்பவர், வஞ்சம் கூறுபவர், மிகை விழைபவர், அழித்தலொன்றையே இயல்பெனக்கொண்டவர், தீமையில் உவகையை அறிபவர்” என்றாள் விமலை. மித்ரை “குருதியை இருளும் ஒளியும் ஆள்கின்றன இளையவளே” என்றாள்.

பாதை வளைந்து இறங்கி நீள்வட்டக் கூடமொன்றை சென்றடைந்தது. அங்கே கூடி அலையடித்து நின்ற இளையோர் நடுவே இருவர் கால்களையும் கைகளையும் பின்னி நிகர் விசை கொண்டு அசைவிழந்து மற்போரிட்டுக் கொண்டிருந்தனர். "இங்கு சமரில்லாத தருணமென ஒன்றில்லை” என்று மித்ரை சொன்னாள். “எங்கள் அரசு வென்றவருக்கு உரியது. இங்குள அனைத்தும் அரசுக்குரியவை. ஒவ்வொரு கணமும் ஆற்றலால் அளக்கப்படுகிறது.” விமலை “இங்குள்ள அனைத்துச் சொல்லும் செயலும் போரே” என்றாள்.

மித்திரவிந்தை வியந்த விழிகளுடன் இறங்கிச்சென்றாள். இரு பெண்களின் தோள்களைப் பற்றி எழுந்து நோக்கினாள். உடல்களில் கல்லித்த அசைவின்மை ஒரு கணத்தில் கலைந்து உச்சவிரைவென மாறி ஒருவன் மற்றவனை தூக்கிச் சரித்தான். தன் கால்களால் அவன் வயிற்றை உதைத்து மண்ணோடு அழுத்திக் கொண்டான். சூழ நின்ற குடியினர் கைவிரித்து ஆர்த்தெழுந்து அலையடித்தனர். தோற்றவன் எழுந்து தள்ளாடி விலக, வென்றவன் இரு கைகளையும் தூக்கி களத்தைச் சுற்றி வந்தான். பிறிதொரு மல்லன் தன் இரு கைகளையும் தூக்கி அறைகூவியபடி மன்று நடுவே வர அவனை ஊக்கியபடி கூச்சலிட்டது சூழ்ந்திருந்த கூட்டம்.

இருவரும் கைகளை மெல்ல அசைத்தபடி ஒருவரோடொருவர் விழிகோத்து சித்தம் நட்டு சுற்றி வந்தனர். அவர்கள் காலூன்றிய நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. அவ்வதிர்வில் சூழ்ந்திருந்தவர்களும் அசைந்தனர். எண்ணியிராத கணமொன்றில் நான்கு கால்களும் நான்கு கைகளும் ஒன்றுடனொன்று பின்னிக் கொள்ள பொங்கியெழுந்த விசைகள் இரண்டும் ஒன்றையொன்று சந்தித்தன. துலாக்கோல் முள்ளென இருபக்கமும் மாறி மாறிச்சென்ற ஆற்றல் முற்றான நிகர்நிலைப் புள்ளியை கண்டடைந்ததும் அசைவின்மையாயிற்று.

உறைந்தது என விழிக்குத்தெரிந்த அக்கணத்தின் உள்ளே மிக மெல்ல ஒருகணத்தின் கோடியில் ஒருபகுதி ஓர் அலகென ஆகி ஆற்றல் தன்னை அளந்துகொண்டது. காலம் ஒரு கணத்தின் தொடக்கத்திலிருந்து தொடுவானெனத் தெரிந்த மறு எல்லை நோக்கி சென்றது. அந்த ஓர் அலகின் மெல்லிய திசைதிரும்பலில் ஒருவன் பிறிதொருவனை வென்றான். சுழற்றி மண்ணில் அடிக்கப்பட்டவன் தன் கால்களால் வென்றவனை அறைவதற்குள் அவன் தன் முழு உடலாலும் விழுந்தவன் மேல் விழுந்து இறுகப்பற்றிக் கொண்டான்.

சூழ்ந்திருந்தவர்கள் மாயக்கனவொன்றில் இருந்து விடுபட்டவர்கள் போல் தங்களை உணர்ந்து கைதூக்கி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தனர். வென்றவன் எழுந்து இரு கைகளையும் விரித்து சூழநோக்கி வாழ்த்தொலியை ஏற்றான். அவர்களின் குரல்களினூடாக அவன் ஏறிஏறிச்சென்றான். அப்போது அக்களமெங்கும் இளநீல ஒளி எழுந்ததை அவள் கண்டாள். மென்குளிரொன்று பரவியதைப் போல் உணர்ந்தாள். அதை உணர்ந்தவர்கள் போல நீலம் தெரிந்த விழிகளுடன் ஒவ்வொருவரும் திரும்பி மறுதிசை நோக்கினர்.

அங்கிருந்து நீலமணி உடல்கொண்ட எறும்புருவான இளையவன் ஒருவன் எழுந்து வந்தான். “இளையோன்! விண்ணளந்தோன் வடிவென நம்முருவில் எழுந்தவன்!” என்று அவர்களில் ஒரு முதியவர் கூவினார். சிறுவாயில் ஒன்றிலிருந்து வெளிவந்து மேடையின் மேல் நின்றான். வென்று ஆர்ப்பரித்து நின்ற மல்லன் திரும்பி அவனைக் கண்டான். இருவர் விழிகளும் ஒன்றையொன்று தொட்டன. ஒருகணம் கொம்பு தாழ்த்தி பின்னெட்டு எடுத்துவைத்த அவன் மறுகணம் நிமிர்ந்து கைதூக்கி “வருக!” என்றான்.

மேலிருந்து ஒரே தாவலில் இளைய நீலன் இறங்கி வந்தான். இருவரும் கைகளை நீட்டியபடி சுற்றிவந்தனர். கூட்டம் ஓசையழிந்து நின்றது. இக்கணம் இக்கணம் என இருள் அதிர்ந்தது. அவர்கள் கைகோத்து தலைமுட்டி ஓருடலாக இறுகி உருண்டு அசைவிழப்பதை பின்னர் கண்டனர். வலியோன் பேருடலும் வஞ்சம் எழுந்த விழிகளும் கொண்டிருந்தான். ஆனால் அவன் உடல் உருகிவழிவதைப்போல் வலுவிழப்பதை அனைவரும் கண்டனர்.

இக்கணம் இக்கணம் என்று அங்கிருந்த உடல்வெளி பொறுமையிழந்தது. சட்டென்று அவ்வுடலில் பற்றி எழுந்த நீலத்தழல் போல எழுந்தான். அதை தன் நான்கு தடக்கைகளால் அறைந்து பரப்பினான். எட்டு கைகால்களும் அதிர்ந்து நடுங்க மாமல்லன் தன் கால்களை மடக்கி தலையால் நிலம் தொட்டான். உடல் மெல்ல அதிர "எந்தையே!” என்றான். அவன் உள்ளே ஏதோ முறியும் ஒலி கேட்டது. விழிகள் நிலைக்க முகக்கொம்புகள் நடுங்கி நிலைத்தன. ஆழ்ந்த அமைதி சூழ்ந்த அக்கூட்டத்தில் எவரோ என ஒரு பாடல் வரியை அவள் கேட்டாள். ’யுகங்கள் தோறும் நான் நிகழ்கிறேன்.’

அறைக் கதவு ஓங்கி உதைத்துத் திறக்கப்பட்ட ஓசை கேட்டு விண்ணிலிருந்து சரடற்று விழுந்தவள் போன்று பின்னுக்குச் சரிந்து கையூன்றி தலைதூக்கி நோக்கினாள். குருதிச் சொட்டுகள் தெறித்த நீண்ட வாளுடன், நிணம் ஒட்டி மெல்ல வழிந்த நீண்ட வெண்ணிறக் கைகளுடன் உள்ளே வந்த கன்னி “உம்” என உறுமினாள். "யார்?” என்று மித்திரவிந்தை நடுங்கியபடி கேட்டாள். அறியாமல் கையூன்றி பின்னால் நகர்ந்தாள்.

உரத்த குரலில் அவள் "இளவரசி, என் பெயர் சுபத்திரை. துவாரகையை ஆளும் இளைய யாதவரின் தங்கை. அவருக்கு அரசியாக எழுந்தருள தாங்கள் விழைவீர்கள் என்றால் என்னுடன் இக்கணம் கிளம்புங்கள்” என்றாள். ஆயிரம் முறை கேட்ட பெயர் எனினும் அவள் கேட்டதெல்லாம் ஒலியற்ற வடிவிலேயே என செவியில் அச்சொல் விழுந்தபோது உணர்ந்தாள். இளைய யாதவர் என்று சொல்ல முள்ளில் வண்ணத்துப்பூச்சியென சிறகு தைக்க அமைந்து துடிதுடித்தாள்.

"கிளம்புங்கள் இளவரசி. நமக்கு பொழுதில்லை" என்றாள் சுபத்திரை. "யார்? யார்?” என்றாள் மித்திரவிந்தை. "இளைய யாதவரை நீங்கள் அறிந்ததில்லையா? அவர் மேல் உங்கள் உள்ளம் காதல் கொண்டதில்லையா?” என்றாள். "நான் சற்று முன் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன்” என்றாள் மித்திரவிந்தை. "யுகங்கள் தோறும் நிகழ்பவர். அறனில அழித்து அறம் நாட்டும் வருகையர்.”

அவளுடைய பித்தெழுந்த விழிகளை நோக்கி சுபத்திரை புன்னகைசெய்தாள். “ஆம் மானுட உருக்கொண்ட விண்ணவர் அவர் என்று கவிஞர் பாடுகிறார்கள். விண்கதிர் மண் தழுவுதல்போல் இன்று உங்களை அவர் ஆட்கொண்டிருக்கிறார். ஒப்புதல் இருந்தால் எழுங்கள்.” மித்திரவிந்தை அஞ்சி "எந்தை…” என்றாள். “நான் கேட்பது உங்களிடம். கூலம் விளையும் வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்டாக வேண்டும்.” அவளுக்குப்பின்னால் காலடியோசைகள் கேட்டன. காவலர் கூச்சலிட்டு மேலேறி வந்தனர்.

மித்திரவிந்தை. "என் அன்னைக்கு…” என மீண்டும் தொடங்கினாள். "இனியொரு சொல் எடுக்கும் உரிமை எனக்கில்லை. என்னுடன் வர ஒப்புதல் இருந்தால் என்னை தொடருங்கள்” என்று சொல்லி சுபத்திரை திரும்பினாள். அப்பால் மரப்படிகளில் படைவீரர்கள் கூச்சலிட்டபடி ஏறிவந்தனர். திறந்த வாயிலினூடாக இரு கூர்வாள்கள் உள்ளே பாய்ந்தன. இரண்டையும் தன் வாளால் தடுத்த சுபத்திரை பூனை கிளை தாவுவதுபோல உடல் வளைத்து வாள் திருப்பி அவற்றை தெறிக்க வைத்தாள். வாளேந்திய இருவரும் நிலைதடுமாறும் கணத்தில் இருவர் கைகளையும் துண்டித்தாள்.

அவர்களுக்குப்பின்னால் வந்த வீரர்கள் தங்கள் முன் கையற்று வீழ்ந்த படைத்தலைவன் உடலை தொடாமலிருக்க பின்னோக்கி நகர்ந்து சென்றார்கள். அறுந்த கைகள் வாளை இறுகப்பற்றியபடி தசையிறுகி நெகிழ்ந்தன. அம்மாளிகையில் எழுந்த கைகள் வாளேந்தியிருப்பதுபோல தோன்றியது. மித்திரவிந்தை நடுங்கியபடி மேலும் பின்னடைந்தாள்.

விழிகளை எதிர்வந்த வாள்களுடன் சுழலவிட்டு "வருக இளவரசி” என்றபடி முன்னால் சென்றாள். அவள் கைகளில் வெள்ளிமலர் போலிருந்தது கூர்வாள். யாரிவள்? என்ன நிகழ்கிறது இங்கு? நானறிந்த இனிமைகள் இக்கொடுங்கனவுக்கு அப்பால் உள்ளனவா என்ன? இக்குருதியை மிதித்துக் கடக்காமல் நான் அங்கு செல்லவியலாதா? எழுந்து இவளைத் தொடர்கிறேன். இல்லை இங்கு இறந்த உடலென அமர்ந்திருக்கிறேன்.

தன் சித்தம் திகைத்து மயங்கி நிற்பதை உணர்ந்தாள். கரும்பாறையென்று அவள் பாதை மேல் அமைந்திருந்தது அக்கணம். அய்யோ இக்கணம், இது நான் நோக்கி இருந்த தருணம். இன்று சற்றே அஞ்சினாலும் இது என்னை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று அவள் சித்தம் தவித்தது. உளஎழுச்சி கொண்டு அப்பாறையை அள்ளிப் பற்றி புரட்டி விலக்க அவள் முனைந்தபொழுது அது வெறும் கருமுகிலென தன்னைக் காட்டி மறைந்தது. ஆனால் அதைக் கடந்து காலடி வைக்க அவளால் இயலவில்லை.

தன்னை எதிர்த்துவந்த வாள்நாவுகளை வாளால் எதிர்கொண்டு உரசிச் சுழற்றி விலக்கியும் மணியொலியுடன் தடுத்தும் அலறல்கள் எழ வெட்டிச்சரித்தும் சுபத்திரை தன் அறையிலிருந்து காலை எடுத்து வெளியே வைப்பதைக் கண்டதும் மித்திரவிந்தை நெடுந்தூரத்துக்கு அப்பால் உதிர்க்கப்பட்டுவிட்டவள் போல் உணர்ந்தாள். அறியாமல் எழுந்து ஓடி சுபத்திரையின் பின்னால் சென்று அவள் மேலாடை நுனியைப்பற்றியபடி "நான் வருகிறேன்” என்றாள்.

"இளவரசி என் முதுகுக்குப்பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள். தங்கள் கையோ உடலோ வெளிவரத் தேவையில்லை” என்றாள் சுபத்திரை. தன்னைவிட அரைமடங்கு பெரிய உடல் கொண்ட இளையவள் அவள் என்பதை மித்திரவிந்தை உணர்ந்தாள். கோட்டைச்சுவர் என அவள் முதுகு முன்னால் நிகழ்வதனைத்தையும் முற்றும் மறைத்தது. வாள் கொண்டு பாய்ந்துவந்த நால்வரை வெட்டி வீழ்த்தி சுபத்திரை இடைநாழிக்கு வந்தாள். மரத்தரையெங்கும் பசுங்குருதி சிதறி கால்கள் வழுக்கின. சூழ்ந்திருந்த மரச்சுவர்களில் குருதிச் சொட்டுகள் நழுவித் தயங்கி இணைந்து வழிந்து இறங்கின.

மாடிப்படிகளில் குறடுகள் முழங்க மேலும் வீரர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னரே வீழ்ந்துகிடந்தவர்களும் அவர்களின் குருதியிலாடிய சுபத்திரையின் நிமிர்ந்த உடலும் அவர்களை முன்னரே தோற்கடித்துவிட்டிருந்தன. ஒவ்வொரு கணமும் சுபத்திரையின் கைகள் பெருகுவதைப் போல் உணர்ந்தாள். அவளது வாளின் விசையில் பாதி கூட எதிர் கொள்ளும் வாள்களில் இல்லையென்பது அவை அறைபட்ட ஓசையிலிருந்து தெரிந்தது. அவள் வாள் தொட்ட படைவீரரின் வாள்கள் கல் பட்ட நாயென ஒலியெழுப்பி பின்னுக்குச் சென்றன. சில்லென்ற ஒலியுடன் உடைந்து தெறித்தன.

வாளையே எடைமிக்க கதாயுதம்போல சுழற்றினாள். ஒவ்வொருமுறை அவள் வாள் பிறிதொரு வாளை சந்திக்கையிலும் வலுவான மணிக்கட்டு அதிர்ந்தது. அவள் தோள்தசைகள் காற்றில் புடைக்கும் படகுப் பாய்கள் என ஆயின. ஒரு முறை அவள் கை சுழன்று வந்தபோது அவள் முன் நின்ற வீரனின் தலை வெட்டுண்டு தெறித்து நீர்கொண்ட மண்குடம் விழும் ஓசையுடன் மரத்தரையில் விழுந்து படிகளில் உருண்டது.

தன் உடல் முழுக்க குருதி வழிவதை மித்திரவிந்தை உணர்ந்தாள். குருதி நீராவியென எழுந்து சூழ முடியுமென்று அறிந்தாள். அதன் துளிகள் கன்னங்களில் தோள்களில் முதுகில் வருடியபடி வடிந்தன. முதல் சில கணங்களுக்குப்பின் குருதி அவளையும் மத்துறச்செய்தது. தெய்வங்களுக்குரிய இனிய மது அது என ஏன் சொல்கிறார்கள் என்று அப்போது உணர்ந்தாள். சித்தத்தை களியுறச்செய்யும் உப்புச் சுவையொன்றிருந்தது அதற்கு. உடலெனும் வேள்விக்குளத்தில் எரியும் நெருப்பு. ஒளி ஒரு திரவமாகும் என்றால் அது குருதி. விழைவும் வஞ்சமும் சினமும் செந்நிறம் கொண்டவை.

"இளவரசி, என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என்று கூவியபடி அவளை ஒரு கையால் பற்றி மறுகையால் வாளைச்சுழற்றியபடி சுபத்திரை படிகளை அடைந்தாள். தரையெங்கும் கைகால்கள் விரித்த உடல்கள் பலவாறாக விழுந்து ஓருடல் மேல் பிறிதுடல் ஏறி நான்குபக்கமும் இழுத்து உதறிக் கொண்டிருந்தன. வெட்டுண்ட கைகளும் தலைகளும் சிதறிக்கிடந்தன. படிகளில் வழிந்திறங்கிய கொழுங்குருதி கீழே சொட்டி கூடத்து மரத்தரையில் வட்டங்களாகி விளிம்பு நீண்டு ஓடையென ஒழுகத்தொடங்கியிருந்தது. அவர்கள் கீழே வந்தபோது மாடியிலிருந்து குருதி அருவி விழுதென கீழே நீண்டு நின்றது.

"இளவரசி! அவளுடன் இளவரசி இருக்கிறாள்!” என ஒரு காவலர் தலைவன் கூவினான். "அம்புகளும் ஈட்டிகளும் அமைக! இளவரசிக்கு புண்பட்டுவிடலாகாது!” வாள் ஏந்தி அவள் முன் வந்த வீரர்கள் ஒவ்வொருவராக கைநடுங்க விலகினர். அவளை இழுத்துக் கொண்டு சுபத்திரை இடைநாழியினூடாக ஓடினாள். ஒவ்வொரு அறைக்கதவையும் ஓங்கி உதைத்துத் திறந்து இருளிலும் ஒளியிலுமாக பாய்ந்து கடந்து குறுகிய படிகளில் அவளை இடை சுற்றித் தூக்கி தாவி விரைந்தாள்.

புலியன்னையால் குருளையென கவ்விக்கொண்டு செல்லப்படுவதாக மித்திரவிந்தை உணர்ந்தாள். எதிர்கொண்டு வந்த வீரனொருவனை வெறும் காலாலேயே சுவருடன் சேர்த்து உதைக்க அவன் வாயிலும் மூக்கிலும் பொங்கிவந்த குருதியைக் கண்டபோது அவளை வெண்காளை என்று எண்ணினாள். முன்கூடமொன்றைக்கடந்து செல்லும்போது ஒரு கணம் நின்று தன் குழலிலும் ஆடைகளிலும் சொட்டிய குருதித் துளிகளை அவள் உதறிக்கொண்டபோது மதமெழுந்த காட்டுப் பன்றியென வியந்தாள்.

தொலைவில் அவைமன்றின் பேரொலியை அவள் கேட்டாள். மன்றுக்கா செல்கிறோம் என்று வியந்தாள். வழி தவறிவிட்டாளா? அவள் தோளைப்பற்றியதுமே எங்கு செல்கிறோம் என்ற உறுதி அவளுக்கிருந்ததை உணர்ந்தாள். ஐயுறுபவளாகவோ அஞ்சுபவளாகவோ அவள் தோன்றவில்லை. குருதி சொட்டும் உடலுடன் படிகளில் ஏறி சிறு வாயிலைத் திறந்து அவள் எழுந்தபோது அங்கு நின்றிருந்த படைவீரர்கள் அஞ்சி பின்னகர்ந்தனர். எவரோ "கொற்றவை!” என்பதை அவள் கேட்டாள்.

மன்றுக்குச்செல்லும் செம்பட்டு விரித்த பாதையினூடாக விரைந்து சீர்ப்படிகள் வழியாக அவளைச் சுழற்றிப் பற்றித் தூக்கி மேலேற்றி அவள் நின்றபோது தன்னெதிரே விரிந்த மன்றை மித்திரவிந்தை கண்டாள். ஒளிரும் முட்களுடன் புதர் ஒன்று எழுந்து சூழ்ந்தது போல அவந்தியின் படைவீரர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். இடை சுற்றி அவளை முன்னால் தூக்கி தன்முன் நிறுத்தி வாளை முன்னால் நீட்டியபடி கால்களைப் பரப்பி வைத்து நின்றாள் சுபத்திரை.

"இளவரசி! இளவரசி மேல் படைக்கலன்கள் படலாகாது” என்று பின்னாலிருந்து எவரோ கூவ அவளைச் சூழ்ந்து நாகங்கள் என நெளிந்து அலையடித்தன பலநூறு வாள்முனைகள். தொலைவில் ஒரு குரல் எழுந்தது. திரை தூக்கப்பட்டது போல் படை வீரர்கள் விலக அவள் வெட்ட வெளியில் குருதி நீராடிய உடலுடன் நின்றாள். விழிகள் வெறித்த அவ்வெளிச்சத்தைக் கண்டு திகைத்து சுபத்திரையின் உடலுக்குப்பின் பதுங்கிக்கொண்டாள்.

அக்கணம் மன்றின் மறு எல்லையில் உடலலைகளின் மேல் நீலமலர் என வெண்புரவியில் அவன் எழுவதை கண்டாள். அவனைநோக்கி இடிந்துசரியும் நதிக்கரை என படைவீரர்கள் சூழ்ந்தனர். போர்க்குரல்கள் எழுந்தன. “நீலன்! இளைய யாதவன்! துவாரகையாளும் வேந்தன்” என்று அவையினர் கூச்சலிட்டனர். அவனைப் பார்ப்பதற்காக மக்கள் ஒருவர் தோள்மேல் பிறிதொருவர் என முண்டியடித்து ஏறினர். கைகளை வீசி ஆடைகளைத் தூக்கி மேலெறிந்து பிடித்து ஆர்ப்பரித்தனர். “நீலன். தோல்வியறியாத வீரன்” என்று சூதர் ஒருவர் கைதூக்கி கூவி குதித்தார்.

அவள் விழிகளே தானென நின்று அவனை நோக்கினாள். நீலத்தோள்கள் அலையென எழுந்தமைவதை, கருநாகக் கையிலிருந்த படையாழி எழுந்து மின்னலிட்டு மீள்வதை, அவன் குழல் சூடிய மயில்பீலியின் புன்னகையை, அவன் முன் செம்முத்துக்கள் செவ்விதழ்மலர்கள் செந்தழல்கீற்றுகள் என சிதறிய குருதியினூடாகக் கண்டாள். 'நஞ்சு, நஞ்சு’ என அரற்றியது நெஞ்சம். உயிர் கொல்லும் நஞ்சு. உளம் கொல்லும் நஞ்சு. அடைந்தவை அனைத்தையும் அழித்து தானென ஆகி நின்றிருக்கும் நஞ்சு. கொன்று உண்டு உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விளையாடும் அழியா நஞ்சு.

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் - 12

இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள யாவும் உன் புன்னகை.

நெடுநேரம் அவளுடைய எண்ணங்களால் மட்டுமே ஆனதாக இருந்தது குடிசூழ்ந்த பெருமன்று. அமைதி மலைப்பாம்பென மெல்ல உடல்நெளித்து அதை சூழ்ந்துகொண்டது. இறுகி இறுகி ஒருவரோடொருவரை நெரித்தது. தோள் இறுக நெஞ்சு முட்ட அவர்களின் நரம்புகள் புடைத்தெழுந்தன. கண்களில் குருதிவலை படர்ந்தது. மூதாதையர் மூச்சுக்கள் பிடரிகளை தொட்டன. விண்ணில் நூறுகோள்கள் மெல்ல தங்களை இடம் மாற்றிக்கொண்டன.

பட்டத்தரசி பார்கவி அந்த அமைதியின் மறுபக்கமிருந்த காணாக்கதவொன்றை உடைத்துத் திறந்து உட்புகுபவள் போல பெருங்குரலில் கூவியபடி கைநீட்டி முன்னகர்ந்தாள். “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்! கொல்லுங்கள்!” அவள் குரல் பெரியதொரு தாலம் போல விழுந்து சிலம்பியது. அனுவிந்தர் “நமது படைகள் எழுக! சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று கூவியபடி படிகளில் இறங்கி மன்றுமுற்றத்தில் ஓடினார். கர்ணகர் “புரவிப்படைகள் மன்றுபுகுக! காவல்மாடங்களுக்கு முரசொலி செல்லட்டும்...” என்று ஆணையிட்டுக்கொண்டு எதிர்ப்புறம் விரைந்தார்.

படைவீரர்கள் வாட்களுடன் முன்னால் செல்ல நீலனின் படையாழி சுழன்று வந்து முதல்வீரனின் தலைகொய்து சென்றது. அவனுடைய தலையற்ற உடல் ஆடும் கைகளில் வாளுடன் முன்னால் ஓடி தள்ளாடி குப்புறவிழ அவன் கால்கள் மண்ணை உதைத்து நீச்சலிட்டன. கைவிரல்கள் காற்றை அள்ளி அள்ளிப்பற்றின. அவனைத்தொடர்ந்து சென்றவன் தலையற்று அவன்மேலேயே விழுந்தான். குழல்சுழல விழிவெறிக்க வெள்ளிப்பற்களுடன் காற்றில்சுழன்ற தலை மண்ணை அறைந்து விழுந்து உருண்டு குருதிசிதற நின்றது. அம்முகத்தில் அக்கணத்தின் திகைப்பு நிலைத்திருந்தது.

மூன்றாமவன் கையை அறுத்து வாளுடன் வீழ்த்திய ஆழி அவனருகே நின்றவனின் வயிற்றைக்கிழித்து குருதித்துளிகளை கனல்பொறிகளெனச் சுழற்றியபடி சென்றது. சரிந்த குழலைப் பற்றியபடி அவன் கையறுந்துவிழுந்த தோழன் மேலேயே விழுந்தான். அடுத்த வீரன் ஓடிவந்த விசையில் நிலைதடுமாற அவன் தலைகடந்து சென்றது ஆழி. அவன் திகைத்து முழந்தாளிட்டான். அடுத்தவீரனின் தோளுடன் வாள் காற்றில் எழுந்து சுழன்று நிலம் அறைந்துவிழ அவனுடலின் நிகர்நிலை அழிந்து சுழன்று மறுபக்கத் தோள் மண்ணில் படிய விழுந்தான். முழந்தாளிட்டவனின் தோள்கள் துடிதுடித்தன. அவன் முன்னால் சரிந்து மண்ணில் கையூன்றினான். அவன் தலை பக்கவாட்டில் மெல்லத்திரும்பி விழித்தது. வாய் காற்றுக்காக திறந்து அசைந்தது. கன்னங்கள் இழுபட்டன. அவன் உடல் முன்பக்கமாக விழுந்தபோது தலை பின்பக்கம் சரிந்து முதுகின்மேலேயே விழுந்தது.

படையாழி அமைத்த வெள்ளிக்கோட்டைக்கு அப்பால் தொடமுடியாதவராக நீலன் வந்துகொண்டிருந்தார். மென்மழையெனப்பெய்த குருதியால் அவர் குதிரை செந்நிறமாகியது. அனலென அதன் பிடரிமயிர் பறந்தது. தன்மேல் விழுந்த சோரியை அது தசைவிதிர்த்தும் பிடரிமயிர் சிலிர்த்தும் உதறியது. விழுந்து நெளிந்த அறுபட்ட உடல்களின் மேல் தன் வெள்ளிக்கோல் கால்களைத் தூக்கிவைத்து நடனமென முன்னால் வந்தது. கைகளைத் தூக்கி அவர் உரக்கக் கூவினார்.

"அவையீரே, நான் இங்கு மேலும் குருதிபெருக்க விழையவில்லை. அரசே, ஷத்ரிய முறைப்படி உங்கள் அழைப்புக்கிணங்க அரசமகளை மணம்கொண்டு செல்ல வந்துள்ளேன்” என்றார். குளிர்நீர் அருவிக்குக் கீழ் என உடல் நடுங்க நின்றிருந்த பார்கவி அழுகையும் வெறியுமாக “என்ன பேச்சு அவனிடம்... நமது படைகள் அனைத்தும் வரட்டும். இறுதிவீரன் எஞ்சுவது வரை போர் நிகழட்டும்… விந்தா, அனுவிந்தா, எழுக களம்” என்றாள். தெய்வங்கள் சமைத்த போர்நாடகம் எனவிரிந்த அக்காட்சியால் சிலைக்கப்பட்டு அரசமேடையருகே நின்றிருந்த விந்தர் “இதோ அன்னையே” என தன் வாளை உருவினார். மித்திரவிந்தையருகே நின்றிருந்த அனுவிந்தர் திரும்பி நீலனை நோக்கி ஓடினார்.

மேடையிலமைந்த அரியணையில் அமர்ந்திருந்த ஜெயசேனர் கையூன்றி எழுந்து முன்னால் வந்தார். எதிர்க்காற்றில் நிற்பவர் போல உடல் வளைத்து ஆடி நின்று இரு கைகளையும் தூக்கி “நிறுத்துங்கள்… கர்ணகரே நில்லும்” என்று கூவினார். திகைத்து அவரை நோக்கித் திரும்பிய அரசி “அரசே…” என்று ஏதோ சொல்ல முயல்வதற்குள் “பேசாதே, இது என் அரசு” என்றார். “விந்தா, அனுவிந்தா, இது என் ஆணை. என் அழைப்புக்கிணங்க அவைபுகுந்தவர் அவர். மணத்தன்னேற்பு நிகழ்க!” அவரது கழுத்தின் தளர்ந்த தசைகள் கொதிக்கும் நீரென அலையிளகின. பற்களைக் கிட்டித்து உடல் நடுங்க திரும்பி அமைச்சரிடம் “பிரபாகரரே” என்றார்.

அமைச்சர் பிரபாகரர் அரசருக்குப் பின்னாலிருந்து கைகளைத் தூக்கியபடி முன்னால் வந்து “யாதவரே, இங்கு ஓர் மணத்தன்னேற்பு முறைமை ஒருங்கியுள்ளது. மன்றில் அமைந்துள்ள விசலம் என்னும் அந்த கதாயுதம் இத்தேர்வுக்கென கலிங்கச்சிற்பிகளால் வார்க்கப்பட்டது. எங்கள் கோட்டைக்காவல் தெய்வமான மேழிநாதருக்கு உரியது. அதை எடுத்து தோளிலேற்றி அறைகூவல்விடும் அனைவரையும் வென்று நிற்பவருக்குரியவள் எங்கள் இளவரசி” என்றார்.

புன்னகையுடன் நீலன் “அமைச்சரே, களம்வென்று மகள்கொள்ளவே வந்தேன். ஆனால் ஷத்ரிய முறைமைப்படி நானோ எனக்கென வந்துள்ள என் குடிகளில் ஒருவரோ இந்தத் தேர்வில் வென்றால் போதும். இப்போது என் தங்கை சுபத்திரை எனக்காக அந்த கதாயுதத்தை எடுத்து அறைகூவுவாள். இங்கு அவளுடன் கதைகோக்கும் வல்லமைகொண்ட எவரேனும் இருந்தால் எழுக!” என்றார். பிரபாகரர் “ஆனால்...” என்று சொல்ல கலிங்கன் எழுந்து “பெண்களுடன் ஷத்ரியன் போர்புரிவதில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் அவளுடன் போர் புரிய நீங்கள் ஒரு பெண்ணை அனுப்பலாம் கலிங்கரே” என்றார் நீலன்.

அரசர் அவையில் அனைவரும் மாறிமாறி கூச்சலிடத்தொடங்கினர். அவர்களை கையமர்த்தியபடி எழுந்து “யாதவரே, மணத்தன்னேற்பில் பெண்கள் எழுந்ததில்லை. இதற்கென முறையேதும் இதுவரை அமைந்ததில்லை” என்று மாளவர் கூவினார். “கதாயுதம் ஏந்தும் பெண்ணும் இதுவரை கண்டதில்லை” என்று நீலன் சிரித்தார். “ஆனால் நெறி என்பது ஒவ்வொரு கணமும் தெய்வங்களால் உடைக்கப்படுகிறது. ஆகவே நெறிவகுப்போர் தெய்வங்களை தொடர்ந்து சென்றாகவேண்டும். என்ன நெறியென்று முதுவைதிகர் கார்க்கியாயனர் சொல்க!”

கார்க்கியாயனர் “இதற்கு நெறியென ஏதுமில்லை” என்றார். கலிங்கர் “ஆம், இதுவரை நெறிவகுக்கப்படவில்லை. மன்று வந்து கதாயுதத்தை கையில் எடுக்க இவளுக்கு உரிமை இல்லை” என்றார். “ஆம், அவள் விலகட்டும்... இக்கணமே விலகட்டும்” என பிற மன்னர் கூவினர். விந்தர் “இங்கு பெண்கள் படைக்கலம் எடுத்து மன்று நிற்க ஒப்புதல் இல்லை. ஆணையிடுகிறேன், அவள் இக்கணமே விலகட்டும்... இளையோனே, அவளை விலக்கு” என்று ஆணையிட்டார். அனுவிந்தர் அவளை நோக்கி உடலில் ஓர் அசைவை காட்டினாலும் கால்கள் மண்ணிலிருந்து அசையவில்லை.

சுபத்திரை “ம்ம்” என்று உறுமினாள். அவைநிறைந்திருந்த அத்தனை விழிகளும் சுபத்திரையை சென்று தொட்டன. உடனே திரும்பி துரியோதனரை நோக்கின. அவர் தன் பீடத்தில் அங்கு நிகழ்ந்தவற்றை எளியதோர் நாடகம்போல நோக்கி அமர்ந்திருந்தார். சுபத்திரை மித்திரவிந்தையை பற்றியிருந்த பிடியை விட்டுவிட்டு வலக்கையால் குருதியுலர்ந்து சடைத்திரிகளென ஆகிவிட்டிருந்த குழல்கற்றைகளை அள்ளி தலைக்குப்பின் சுழற்றி முடிந்து செருக்குடன் முகம்தூக்கி இளங்குதிரையின் தொடையசைவுகளுடன் நடந்து மன்றுமுற்றத்தின் மையத்தை நோக்கி சென்றாள்.

மன்றுநடுவே போடப்பட்ட தாழ்வான பெரிய மரப்பீடத்தில் விசலம் வைக்கப்பட்டிருந்தது. துதிக்கையுடன் வெட்டி வைக்கப்பட்ட பெருங்களிற்று மத்தகம் போலிருந்தது அது. பெருந்தோள் கொண்டவர்கள் ஏந்தும் கதாயுதங்களைவிட இருமடங்கு பெரியது. உலையிலிருந்து எழுந்து எவராலும் ஏந்தப்படாததனால் உலையின் அச்சுவடிவம் அப்படியே பதிந்திருந்தது அதன்மேல். வார்க்கப்பட்டபோது எழுந்த குமிழிகள் அதன் கரிய பளபளப்பில் இளம் கன்னத்துப் பரு போல தெரிந்தன.

சுபத்திரை அதன்முன் சென்று நின்றபோது அரசர் நிரையில் எவரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்லும் ஒலி அனைவருக்கும் கேட்டது. எவரோ இருமினர். அவள் அதனருகே சென்று நின்று குனிந்து நோக்கினாள். வெண்விழிமுனைகளில் செம்மை மின்ன உயிருண்ட வேல் போன்றிருந்தன கண்கள். போர்முனையில் நூற்றுக்கணக்கான விற்கள் நாணேறுவதைப்போல அவள் உடலில் ஒவ்வொரு தசையாக இறுகுவதை மித்திரவிந்தை கண்டாள். குனிந்து அந்த பெருங்கதாயுதத்தின் குடுமியை காலால் உதைத்தாள். சினந்தது போல் அதன் கைப்பிடி மேலெழ அதைப்பற்றி அக்கணமே உடலை நெளித்துச் சுழன்று ஒரே வீச்சில் தன் முதுகுக்குப் பின்னால் பறக்கவிட்டு கொண்டுவந்து அதே விசையில் மேலேற்றி தோளில் அமைத்துக் கொண்டாள். இடையில் மறுகையை வைத்து கால் பரப்பி நின்று “உம்” என்ற ஒலியால் அரசர் அவையை அறைகூவினாள்.

அரசர் அவை திகைத்ததுபோல் அமர்ந்திருந்தது. அவள் ஒவ்வொரு அரசரையாக நோக்கி திரும்ப அவர்கள் விழிவிலக்கி துரியோதனரை நோக்கினர். நீலன் “இதோ ஓர் அறைகூவல் எழுந்துள்ளது. உங்கள் நெறி எதை வகுக்கிறது? அதை கூறுங்கள்” என்றார். விந்தர் “இது முறையல்ல... அமைச்சரே” என்றார். “அறைகூவல் வந்தபின் நெறியென ஏதுள்ளது அரசே? வெற்றியோ வீழ்ச்சியோ மட்டுமே இனி பேசப்படவேண்டியது” என்றார் அவர்.

சுபத்திரை துரியோதனரை நோக்கி நின்றாள். அவர் தன் மடியில் இரு கைகளையும் வைத்தபடி விழிஅசையாமல் அமர்ந்திருந்தார். “ம்ம்” என்று சுபத்திரை மீண்டும் அறைகூவினாள். அவ்வொலியால் உடலசைவுற்ற துச்சாதனர் தன் தமையனை நோக்கிவிட்டு அவளை நோக்கினார். காற்றில் கலையும் திரைஓவியம் போல பெருமூச்சுடன் எழுந்த துரியோதனர் தன் சால்வையை தோளில் சீரமைத்துக்கொண்டு கைகூப்பி “யாதவ இளவரசியை வணங்குகிறேன். கதாயுதநெறிகளின்படி நான் பெண்களுடன் போரிடுவதில்லை” என்றார். “மேலும் தாங்கள் என் ஆசிரியரின் தங்கை. இங்கு இப்பெருங்கதையை தாங்கள் தூக்கிய முறைமை எனக்கு மட்டுமே என் ஆசிரியர் கற்றுத்தந்தது. சுழற்சிவிசையை ஆற்றலென்றாக்கும் வித்தை அது.”

சுபத்திரை தலைவணங்கினாள். “தங்கள் பாதங்களை என் ஆசிரியருக்குரியவை என்றெண்ணி வணங்குகிறேன் இளவரசி. அவையில் தாங்கள் வென்று முதன்மை கொண்டதாக அறிவிக்கிறேன்” என்றார் துரியோதனர். துச்சாதனர் எழுந்து “எந்த அவையிலும் என் மூத்தவர் சொல்லே இறுதி. இளவரசி வென்றிருக்கிறார்” என்றார். மறுகணம் மன்றென சூழ்ந்திருந்த மானுடத்திரள் ஒற்றைப்பெருங்குரலென ஆயிற்று. “வெற்றி! யாதவ இளவரசிக்கு வெற்றி. அவந்திமகள் அரசியானாள். குலமே எழுக! சூதரே சொல் கொள்க!” என எழுந்தன வாழ்த்தொலிகள்.

சுபத்திரை கதாயுதத்தை சுழற்றி மண் அதிர தரையில் வைத்தாள். “மூத்த கௌரவரே, என் ஆசிரியரின் முதல் மாணவரென எனக்கும் நீங்கள் நல்லாசிரியர். தங்கள் கால்களை பணிகிறேன். தங்கள் வாழ்த்துக்களால் நானும் என்குலமும் பொலிவுறவேண்டும்” என்றாள். கைகூப்பி அருகணைந்து துரியோதனரின் கால்களைத் தொட்டு வணங்க அவர் திரும்பி தன் தம்பியை நோக்கினார். துச்சாதனர் பரபரக்கும் கைகளால் கச்சையிலிருந்து எடுத்து அளித்த பொன்நாணயங்கள் மூன்றை அவள் தலையில் இட்டு வாழ்த்திய துரியோதனர் “நீங்கா மங்கலம் திகழ்க! நிகரற்ற கொழுநரையும் அவரை வெல்லும் மைந்தனையும் பெறுக! என்றும் உம் குலவிளக்கென கொடிவழியினர் இல்லங்களில் கோயில்கொண்டமர்க!” என்றார்.

மித்திரவிந்தை தனித்து நிற்க முடியாமல் கால் தளர்ந்து விழப்போனாள். காற்றைப்பற்றிக் கொள்பவள் போல கை துழாவியபின் கண்களைமூடி இரு கன்னங்களிலும் கை வைத்து தன் அகத்துலாவை நிலைகொள்ளச்செய்தாள். அவன் குரல் எங்கோ எழுவதை கேட்டாள். எங்கிருக்கிறோம் என சில கணங்கள் மறந்தாள். மிக அருகில் கடலலையொன்று அணுகுவதை அறிந்து விழிதூக்கும்போது அவள் இடையை தன் கைகளால் சுற்றித் தூக்கி அவர் தன் கையில் எடுத்துக் கொண்டார். அவள் முலைகள் அவர் முகத்தில் அழுந்தின. அவர் தலை சூடிய பீலி அவள் முகத்தில் பட்டது. அவள் கால்கள் காற்றில் நடந்தன.

அவளை தூக்கிச்சென்று தன் புரவிமேல் வைத்தார். அனுவிந்தர் அவரை நோக்கி வாளுடன் கூச்சலிட்டபடி ஓடிவர சிரித்தபடி அதிலேறிக்கொண்டு அவையிலிருந்து வெளியேறினார் யாதவர். அவரது வலது கை அவள் இடையைச் சுற்றி தன் உடலுடன் அணைத்துக் கொண்டது. இடக்கையால் கடிவாளம் சுண்டப்பட்ட வெண்புரவி பாய்ந்து முற்றத்து மரப்பரப்பில் குளம்புகள் முழங்க விரைந்து சென்றது. அங்கு நின்றிருந்த யாதவப் படைவீரர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர். அவை மன்றிலிருந்து உரக்க நகைத்தபடி வெளியே ஓடிவந்த சுபத்திரை தன் புரவிமேல் ஏறி அதை கனைத்தபடி எழுந்து பாயச்செய்து அவரைத் தொடர்ந்து வந்தாள்.

மன்றுக்கு வெளியே கூடி நின்ற நகர்மாந்தர் வாழ்த்தொலி கூவினர். “இளைய யாதவன்! துவாரகை ஆளும் நீலன்! விண்ணிழிந்த தெய்வ உருவினன்! மண்ணாளும் மாமானுடன்! வாழ்க அவன் கொற்றம்! வாழ்க அவன் கோல்! வாழ்க அவந்தியின் அரசி!” அவளைச் சூழ்ந்து எழுந்த வாழ்த்தொலிகள் மேல் அவள் மிதந்துசென்றாள். மாமரக்காடு தளிர்விட்டது போல நகரமே வாழ்த்தும் நாவுகளால் ஆனதாக இருந்தது. ஒவ்வொரு முகத்தையும் அவளால் நோக்க முடிந்தது. ஒவ்வொரு கண்ணையும் நோக்கி அவள் புன்னகை செய்தாள்.

நகரத்தின் வெளிக்கோட்டை வாயிலைக் கடந்து செம்மண்பரவிய பெருஞ்சாலையை அடைந்தபோது பின்னால் போர்க்குரலுடன் தேர்களும் புரவிகளும் அவர்களை தொடர்ந்து வருவதை கேட்டாள். இளைய யாதவரின் தோள்களில் கை வைத்து எழுந்து திரும்பி பின்னால் நோக்க தன் தமையர்கள் விந்தரும் அனுவிந்தரும் இரு புரவிகளில் வில்லேந்தி தொடர்வதை கண்டாள். போர்க்கூச்சலெழுப்பி அவர்களின் முகங்கள் காற்றில் உறைந்திருந்தன. மிக அண்மையிலென அவ்விழிகளை காணமுடிந்தது.

அவந்தியின் படைவீரர்களின் அம்புகள் சிறு புட்கள் போல சிறகதிரும் ஒலியுடன் அவளை கடந்துசென்றன. மண்ணில் தைத்துநின்று நடுங்கிய அவற்றை கடந்துசென்றன புரவிகள். அவளுக்கிணையாக புரவியில் வந்த யாதவ வீரர்களில் ஒருவன் அலறியபடி கீழே விழுந்தான். பிறிதொருவன் எழுந்து உடல் திருப்பி நின்று வில் தொடுக்கையில் தோளில் அம்பு பட்டு முன்னால் விழுந்து தன் புரவிக்கால்களால் எற்றுண்டு சிதறினான். அவன் மேல் மிதித்துக் கடந்து வந்த புரவி திரும்பி நிற்க அதை பிறிதொரு அம்பால் அலறிச் சரியவைத்து அதன் துடித்து எம்பும் பேருடலை தன் புரவியால் தாவிக் கடந்து வந்தார் அனுவிந்தர்.

இளைய யாதவர் அவளிடம் “இளவரசி, இப்புரவியில் செல்க! உன்னை என் இளையவள் காக்கட்டும்” என்று சொல்லி கடிவாளத்தை அவளிடம் அளித்துவிட்டு ஓடும் புரவியிலிருந்து புள்ளெனப் பாய்ந்து வீரனை இழந்து ஒழிந்த புறபீடத்துடன் ஓடிவந்த புரவியின் மேல் பாய்ந்து ஏறி அதை திருப்பிக் கொண்டார். அக்கணமே அவர் கையிலிருந்து எழுந்த வெள்ளிச் சுழலாழி விந்தரின் புரவியின் கடிவாளத்தை அறுத்து மீண்டது. அது தடுமாறும் கணத்தில் மீண்டும் சுழன்று சென்று அவர் வில்லை அறுத்தது. மீண்டும் சுழன்று அவரது தோளில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தை உடைத்து மீண்டது. அவர் “நில்… நின்று போர் செய்… உன் முன் இங்கு இறந்தாலும் சிறப்பே” என்று கூவியபடி தொடர்ந்து வந்தார்.

சுபத்திரை அவளருகே வந்து ”விரைந்து முன்னால் செல்லுங்கள் இளவரசி. எங்கள் அமைச்சர் அக்ரூரரின் தலைமையில் யாதவப்படை அவந்தியின் விளிம்பை அடைந்துவிட்டிருக்கிறது” என்றபின் தான் திரும்பி தன் கையிலிருந்த வேலைத் தூக்கி வீசி அவந்தியின் படைத்தலைவனை மண்ணில் விழச்செய்தாள். விந்தர் “நில் யாதவனே, நின்று எங்களை எதிர்கொள்” என்று கூவியபடி வந்தார். அவரது தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது படையாழி. மீண்டும் சென்று அவர் தோள் வளையத்தை உடைத்தது. இளைய யாதவர் “உங்கள் மார்புக் கவசத்தை உடைக்க ஒரு நொடி போதும் எனக்கு. இங்கல்ல களம், திரும்பிச் செல்லுங்கள். பிறிதொரு போர் இருக்கிறது நமக்கு. அங்கு காண்போம்” என்று கூறினார்.

“இளையவனே, நாங்கள் உயிருடனிருக்க எங்கள் இளவரசியுடன் நீ எங்கள் எல்லையை கடக்கப்போவதில்லை” என்று கூவியபடி அனுவிந்தர் பாய்ந்து முன்னால் வந்தார். இரு கைகளாலும் மாறி மாறி படையாழியை செலுத்திய இளையவரின் புரவி அவர் உள்ளத்தில் இருந்தே ஆணைகளை வாங்கி விண்ணில் செல்லும் பறவையென முன்னால் செல்ல படையாழி அவந்தி நாட்டு வீரர்களின் உயிர்கொண்டு மீண்டதை அவள் கண்டாள். எத்தனை உயிர் உண்டால் இதன் பசி தணியும்? குருதியாடுந்தோறும் அது ஒளி கொண்டது. காதலில் நெகிழ்ந்த கை என சூழ்ந்துகொண்டது. கல்வியளித்து விடைதரும் ஆசிரியனின் தலைதொடும் வாழ்த்து போல கனிந்து உயிர்கொய்தது.

அனுவிந்தரின் குதிரை தன் முன்னங்கால்கள் அறுபட்டு தலை மண்ணில் மோதி விழுந்து பின்னங்கால்கள் ஓட்டத்தின் விசையில் தூக்க அவரைத் தூக்கி விசிறியபடி உருண்டு சிதறிச் சரிந்தது. மண்ணில் விழுந்த அவர் மேல் பின்னால் வந்த புரவி ஒன்று மிதித்துக் கடக்க அவரது உடல் தரையில் கிடந்து துடித்தது.

விந்தர் திரும்பி நோக்கிய கணம் அவரது புரவியின் கழுத்தை அறுத்துச் சென்றது படையாழி. பக்கவாட்டில் சரிந்து மண்ணில் நெடுந்தூரம் உரசி வந்து ஓடிய கால்களின் விசையறாது காற்றை உதைத்தது. எடைமிக்க புரவியின் விலாவுக்கு அடியில் கால்கள் சிக்கி அலறிய விந்தர் உருவியபடி எழுந்தபோது அவரது குழலை சீவி பறக்கவிட்டுச் சென்றது ஆழி. சுபத்திரை திரும்பி நோக்கி உரக்க நகைத்து "போர் முடிந்தது அவந்தியின் அரசி. இனி உங்கள் நகர் துவாரகை” என்றாள்.

விண்ணேகும் பறவை ஒன்று

வீழ்த்தியது ஓர் இறகை.

தோழரே இளஞ்சிறைப் பறவை

மணி நீலப்பறவை

வீழ்த்தியது ஓர் இறகை

மென்னிறகை

காற்றில் எழுதி இறங்கிய

இன்சிறகை, தன்னை

அப்பறவையின் பெயரென்ன?

தோழரே தோழரே

விண்ணீலமோ முடிவிலா பெரும் பறவை

வீழ்த்தியது அது ஓர் இறகை

இளநீல இறகை

மணிநீல இறகை

மண்ணில் சுழன்று தன்னை எழுதும்

ஓர் மெல்லிறகை

தோழரே அது இங்கு எழுதிசெல்வது என்ன?

இந்தக் காலடியெழுத்துக்கள்

சொல்லும் கதைதான் என்ன?

சூதனின் கைகள் கிணையின் தோல்பரப்பில் துள்ளுவதை சாத்யகி நோக்கியிருந்தான். முத்தாய்ப்பென விரல்கள் தோல்பரப்பில் ஆழ்ந்து முத்தமிட்டு விலக முத்தமிடப்பட்ட பகுதி அது பெற்ற பல்லாயிரம் முத்தங்களின் தடத்துடன் நின்று துடித்தது. மெல்ல அதிர்வடங்கி அது மீள்வதை மட்டும் அவனால் பார்க்க முடிந்தது. திருஷ்டத்யும்னன் அவன் தோளில் கை வைத்து “யாதவரே!” என்றான். சாத்யகி விழித்தெழுந்து புன்னகைத்தான்.

சூதன் தலைவணங்கி “நீலம்! விரிந்த வான் கீழ் அமர்ந்து கேட்கும் சொல்லெல்லாம் நீலம் படிந்ததே! நீலம் துணையிருக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி தன் இடையிலிருந்து பொற்காசுகளை எடுத்து அவன் இடைக்குக்கீழே தாழ்த்தி நீட்டினான். அவன் நீட்டிய கைக்கு மேல் தன் கை வரும்படி அமைத்து அக்காசுகளை அவன் எடுத்துக் கொண்டான். இருவர் தலையிலும் தன் இடக்கையை வைத்து வாழ்த்தி "வீரம் விளைக! வெற்றி துணையாகுக! வென்றபின் அறம் வழிகாட்டுக!” என்று தானும் தலைவணங்கி திரும்பிச் சென்றான்.

சாத்யகி பெருமூச்சுவிட்டான். திருஷ்டத்யும்னன் “இத்தருணத்தில் இப்பாடலுடன் இவர் வந்தது ஒரு நன்னிமித்தமே” என்றான். “அவர் வெற்றி கொள்ளப்படமுடியாதவர். விட்டு விலகி எங்கும் செல்ல இடமில்லை என்று இப்பாடல் எனக்குச் சொன்னது. திரும்புவதன்றி நமக்கு வேறு வழியில்லை யாதவரே.”  சாத்யகி புன்னகைத்து “மாறாக எனக்கு இப்பாடல் சொன்னது பிறிதொன்று. எங்கு எவ்வண்ணம் இருப்பினும் அங்கு நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும் இறை அவர். ஆட்கொண்டார் என்ற பெயரன்றி பிறிதொன்று நிகரில்லை” என்றான்.

தன் ஆடையை சீரமைத்து புரவியை நோக்கி சென்றபடி “பாஞ்சாலரே, அவர் நம்முடன் கொள்ளும் உறவு நான்குவகை என்கின்றன தொல்நூல்கள். தேடிவந்து முலை அருந்தும் கன்றுக்கு கனிந்தூட்டும் பசு. தன் குட்டியை வாயில் கவ்விச்செல்லும் புலி. குட்டி தன்னை கவ்விக்கொள்ளவேண்டுமென எண்ணும் குரங்கு. சினந்தால் குட்டியை உண்டுவிடும் பன்றி. ஆனால் ஐந்தாவது வகை ஆசிரியர் ஒருவர் உண்டென்று இப்போதறிந்தேன்” என்றான். “எந்தப்புதருக்குள் எவ்வகை வளைக்குள் சென்றொளிந்தாலும் காலடி மணம் முகர்ந்து தேடி வரும் ஓநாய். காத்திருந்து கைபற்றும் வேட்டைக்காரர். அவரிடமிருந்து நான் விழைந்தாலும் விலக முடியாது.”

“ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “இக்கதையிலேயே சுபத்திரை ஆற்றவிருக்கும் பணி என்ன என்று மித்திரவிந்தை சிறுமியாக இருக்கும்போதே இளையவர் அறிந்திருக்கிறார் என்று தெரிகிறது” என்று சிரித்தான் சாத்யகி. “பறக்கும் புள்ளுக்கு பத்துமுழம் முன்னால் என்பார்கள். புள் முட்டையிலிருக்கையிலேயே அம்பு எழுந்துவிடுவதை இப்போதுதான் காண்கிறேன்.” திருஷ்டத்யும்னன் “அரிய ஒப்புமை. ஒரு சூதருக்கு நாமே சொல்லிக்கொடுக்கலாம்” என்றான்.

“சிறுத்தை தன் இரையைக் கவ்வி புதர்கள் மேல் பாய்ந்து செல்வது போல் மித்திரவிந்தையுடன் இளையவர் வந்தார் என்று இச்சூதன் பாடிய வரி என் செவி தொடாமல் ஆன்மாவை தைத்தது. அப்போது அடைந்த மயிர்ப்பை என் உடல் எப்போதும் அறிந்ததில்லை. அக்கணமடைந்த மெய்மை இனி எஞ்சிய வாழ்நாளெலாம் எனை வழி நடத்தும்” என்றான் சாத்யகி. புன்னகைத்து “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 1

சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் புரவிகளில் ஏறி துவாரகையின் வணிகத்தெருவுக்கு வந்து புகைச்சுருள் என வானிலேறிய சுழற்பாதையினூடாக மேலேறினர். நகரம் எப்போதும்போல அசைவுகளும் ஓசைகளும் வண்ணங்களுமாக கொந்தளித்துக்கொண்டிருந்தது. இருபக்கமும் திறந்திருந்த கடைகளின் முன் குவிக்கப்பட்டிருந்த உலர்மீனும் புகையூனும் தேனிலிட்ட கனிகளும் மணத்தன. அதனூடாக இன்கள்ளின் மணத்தை அறிந்த திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் “யாதவரே, சற்று கள்ளருந்தி செல்வோம். இக்கணத்தை கொண்டாடுவோம்” என்றான்.

சாத்யகியின் கண்களில் ஒரு கணம் திகைப்பு வந்தது. திருஷ்டத்யும்னன் “யாதவரே, இக்கணம் உங்கள் உள்ளம் அதை விழைகிறது என்றால் யார் பொருட்டு அதை தடுக்கிறீர்கள்? நாம் இளையவர் முன் நம்மை முற்றுமெனத் திறந்து நிற்கப்போகிறோம். நம் மும்மலங்களுடன் அவர் அள்ளி தன் நெஞ்சோடு அணைப்பாரென்றால் அதுவே வேண்டும் நமக்கு. நீர் விழையாவிட்டாலும் நான் கள்ளருந்தப் போகிறேன்” என்றான். சாத்யகி ஏதோ சொல்ல வாயெடுக்க கைநீட்டித்தடுத்து “கள்ளுடன் ஊனும் உண்ணப் போகிறேன். இந்நாளில் நான் கட்டற்றுக் கொண்டாடவில்லை என்றால் பிறகெப்போது?” என்றான்.

சாத்யகியின் முகம் மலர்ந்தது. “ஆம். கள்ளுண்போம், ஊனுண்போம். குடுமியில் மலர் சூடி தாம்பூலம் மென்றபடி களிமயக்கக் கோலத்தில் சென்று அவர் முன்னால் நிற்போம். இளையவரே, உம் விழிமுன் இந்நகர் ஒரு மாபெரும் களியாட்டு. இந்நகர் அமைந்த இப்புடவி ஒரு மாபெரும் களியாட்டு. இதில் ஒவ்வொரு கணமும் நான் களிமகன் என்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் உரக்க நகைத்தபடி “ஆம், அதுவே நாம் அவருக்கு சொல்லும் மறுமொழி” என்று சொன்னபின் “வருக!” என்று புரவியைத் திருப்பி விரைந்தான்.

இருவரும் சாலை ஓரத்து சிறு சந்து ஒன்றுக்குள் சென்றனர். அங்கு அப்பகல் நேரத்திலும் கடல் வணிகரும் நாளெல்லாம் மகிழ்ந்திருக்கும் களிமகன்களும் தெருவோரத்து கல்பரப்புகளில் கூடியமர்ந்து ஊனுண்டு மதுவருந்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கை நீட்டி ஓடி அவனருகே வந்து “இதோ வந்துவிட்டார்கள், பகலிலும் கள்ளருந்தும் பெருவீரர்கள். தோழரே, இவர் எங்களுக்குரியவர். எனையாளும் இணை தெய்வங்கள் இவர்கள்” என்று கூவினான். “என் தலைவர்களே வருக! இவ்வெளியவனுக்கு கள் வாங்கி ஊற்றி அருள்க!” என்று தலைக்குமேல் கை குவித்தான். அவனுக்குப்பின்னால் நின்றிருந்த அவனுடைய தோழர்கள் உரக்க நகைத்து அவனை ஊக்கினர்.

அவன் அவர்களுடன் ஓடிவந்தபடி “இந்தத்தெருவுக்கு இவ்வேளையில் உங்களை கொண்டுவந்த தெய்வங்கள் வாழ்க!” என்றான். அவர்களின் புரவி கள்ளங்காடி முன் சென்று நின்றபோது அவன் பின்னால் வந்து “வீரர்களே, என் பெயர் குசலன். மென்மையான சொற்களை சொல்பவன். மென்மையானவை என்பவை நாம் விரும்புபவை. நாம் விரும்புபவை என்பவை நமது ஆணவத்தை வருடுபவை. நமது ஆணவமென்பது பிறிதெவருமிலாத தனி உலகில் நின்றிருக்கும் நெடுந்தூண். அத்தூணின் உச்சியில் வந்தமர்கிறது பாதாள நாகமொன்று. நான் அந்த நாகத்தின் பணியாள்” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “இவன் நன்கு பேசக்கற்றவன்” என்றான்.

“இளையவரே, இது என் பேச்சல்ல. கள்ளில் உறையும் தெய்வத்தின் குரல். இதோ இக்கள்விற்பவன் இருபதாண்டுகளாக எனக்குத் தெரிந்தவன். இவர்கள் இருக்கும் இக்களம் ஐம்பதாண்டு தொன்மையானது. ஆனால் இக்கள்ளின் முதுமூதாதை இருநூறு தலைமுறைக்கும் மேல் தொன்மையானது. இப்புவியில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையும் புதிதாக பிறந்தெழுந்தவை. மலர்கள், கனிகள், காய்கள்… கள் மட்டும் இறப்பற்றது. தன் உயிரை அடுத்த கலத்தின் கள்ளுக்கு அளித்துவிட்டு தேவர்களுக்கும் பாதாளதெய்வங்களுக்கும் அவியாகி வியனுலகும் மயனுலகும் செல்கிறது.”

வேதாந்தச் சொற்பொழிவாளன்போல அவன் தன் கைகளைத் தூக்கி கூவினான் “மாமன்னர் கார்த்தவீரியர் அருந்திய கள்ளின் எச்சம் இக்கலத்திலுள்ளது என்று சொன்னால் எப்படி மறுப்பீர்கள்? மானுடர் பிறந்திறப்பார். பாதாள நாகங்கள் பிறப்பும் இறப்பும் அற்றவை. வருக! கள்ளை வணங்குக! நாகங்கள் நஞ்சு சூடுவதுபோல பாலாழி பாம்பை ஏந்துவதுபோல கள்ளை கொள்க!” திருஷ்டத்யும்னன் “இவன் இக்கள்விற்பவனின் வழிகூவுபவன் போலும்” என்றான். கீழே நின்ற குசலன் “பிழை செய்கிறீர் இளவரசே. இங்கு வருபவர் ஒவ்வொருவருக்கும் அவருக்குரிய மதுவை சுட்டிக்காட்டும் கடமை கொண்டவன் நான். விண்ணுலகுக்கும் வீழுலகுக்கும் வழிகாட்டிகள் தேவை. மென்சிறகுகளும் ஒளிரும் விழிகளும் கொண்ட கந்தர்வர்களால் விண்ணுக்கு வழிகாட்டப்படுகிறது. இருண்ட உடலும் எரியும் விழிகளும் கொண்ட சிறிய நாகங்கள் பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றான்.

“அதோ, பெண்களால் துயருற்றவர்கள் அருந்தும் கள் அது. பெண்களால் மகிழ்வுற்றவர்கள் அருந்தும் கள்ளும் அதுவே. பொன்னால் துன்புற்றவர்களுக்குரியது அந்தக் கள். பொன்னால் மகிழ்வுற்றவர்களுக்கு அதன் எதிரிலுள்ள கள். நோய்க்கு அந்த முதியகள். அதனருகே இளங்கள் அதற்கு மருந்தாக. அச்செந்தலைப்பாகை அணிந்தவன் விற்பது அது. தனிமைத் துயர் கொண்டவர்களுக்கான கள்ளை அதோ சுவர்க்கர் விற்கிறார். நண்பருடன் இணைந்து களியாடுபவருக்குரிய கள் அதற்கப்பால் பன்னிரு குலத்து வணிகர்களால் விற்கப்படுகிறது” என்று குசலன் கூவினான். “இனியவர்களே, இது மெய்மையின் விளிம்பை அடைந்தவர்களுக்கான கள். இவ்வழி வருக... இதுவே உங்களுக்கு.”

அவர்கள் சிரித்தபடி இறங்கிக்கொண்டதும் “மெய்மை என்பது மயக்களிப்பது. பொருள் வரையறுக்கப்பட்ட இனிய சொற்களை வேண்டிய அளவு அள்ளிக்கொள்கிறார்கள். அஞ்சி அஞ்சி தொட்ட அவை கைகளுக்குப் பழகும்போது அள்ளிவீசி கைகள் பெருக அம்மானை ஆடுகிறார்கள். பின்னர் தங்கள் முற்றத்தில் களம் வரைந்து அவற்றைப்பரப்பி சதுரங்கமாடுகிறார்கள். இறுதியாக ஒவ்வொன்றாக எடுத்து பின்னால் வீசியபடி பாதைதேர்ந்து முன்செல்கிறார்கள். இறுதிக் கல்லையும் அவர்கள் வீசிவிடும்போது சிரிக்கத் தொடங்குகிறார்கள். சிரித்தபின் இக்கள்ளை அருந்துபவன் முடிவிலாது அச்சிரிப்பில் வாழ முடியும். அதற்கு முன் அருந்துபவன் திரும்பி வீசிய கற்களை ஒவ்வொன்றாக பொறுக்கத் தொடங்குகிறான்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “நீர் அச்சிரிப்பில் வாழ்பவர் போலும்” என்றான். “ஆம். கேட்டுப்பாருங்கள். இக்கள்மகன் காலையில் கடைதிறந்து தூபம் ஏற்றி பூச்சிகளை விரட்டி இக்கலத்தின் மூடியைத் திறந்து நெடுந்தூரம் ஓடிய புரவியின் வாய்நுரையென அதன் ஓரத்தில் படிந்திருக்கும் கள்நுரையை கையால் சற்று விலக்கி சிற்றெறும்புகளும் வண்டுகளும் மிதக்கும் மேல்படிவுக் கள்ளை மூங்கில் குழாயால் சுழற்றி அள்ளி முதலில் அளிப்பது எனக்கே. நான் அதை அரித்துக் குடிப்பதில்லை. இரவெலாம் கள்ளில் திளைத்து இறந்த உயிர்களைப்போல் எனக்கு அணுக்கமானவை பிற ஏதுண்டு?” என்றான் குசலன். சாத்யகி நகைத்தபடி “இவனுக்கு கள் வாங்கி அளிக்கவில்லையென்றால் இவன் நாவில் வாழும் கள்ளருந்திய கலைமகள் நமக்கு தீச்சொல் இடுவாள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “குசலரே, மெய்மை தேடும் இரு பயணிகளுக்குரிய கள்ளை நீரே சொல்லும். மெய்மை அடைந்தவருக்கானதை நீர் வாங்கி அருந்தும்” என்றான். “ஆம், இதோ” என்றபடி குசலன் திரும்பி கள்வணிகனிடம் “நாகா, எடு கள்ளை. முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். இரண்டாவது கள் சற்று வெளியே நுரை வழிந்திருக்க வேண்டும். மூன்றாவது கள் முற்றிலும் நுரையற்று பளிங்கு போல் அமைதி கொண்டிருக்கவேண்டும். மூன்றாவது கள் எனக்கு என்றறிந்திருப்பாய்” என்றான். நாகன் சிரித்தபடி “இளவரசர்களே, இவ்வேளையில் இவ்வாறு எவரையாவது இட்டு வருவது இவன் வழக்கம். இவன் சொல்லும் சொற்கள் அனைத்தும் இக்கணம் இவனில் எழுபவை. இவனில் ஊறிச்செல்லும் கள் இறங்கியபின் இதில் ஒரு சொல்லையேனும் நினைவுகூரமாட்டான்” என்றான்.

“அதையே நானும் சொல்கிறேன். எளியவன் நான், என்னில் எழுந்தருளியது கள்ளெனும் தேவன். அருந்துக கள்ளை! அருந்துக கள்ளை! இப்புவி ஒரு பெரும் ஆடல்! அதில் கள்ளென்பது நுண்களியாடல்! கள்ளறியாத கனவுகளேதும் இங்கில்லை. அருந்துக கள்ளே!” என்றான் குசலன். திருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக!” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்! விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான். உடம்பை சற்று உலுக்கியபின் “பிறிதொரு கோப்பை வேண்டுமல்லவா பாஞ்சாலரே?” என்றான்.

சாத்யகி அப்போதும் பாதிக் கோப்பையை குடித்து முடித்திருக்கவில்லை. “அவர் அருந்துவது குறைவு. அடைவது மிகுதி. அதை சென்றடைய நாம் மும்முறை அருந்த வேண்டும்” என்றான் குசலன். “கள் எழுக!” என்று திரும்பி நாகனிடம் சொன்னான். நாகன் சிரித்தபடி மீண்டும் கள்ளை அள்ளி சற்றே தூக்கி ஊற்றி நுரை எழுந்து சரியச் செய்தான். நுரையற்று அடியில் தங்கியதை குசலனின் கோப்பையில் ஊற்றினான். “அப்பங்கள்?” என்றான் குசலன். “ஊன் பொரித்து மாவில் வைத்து இலையில் சுற்றி சுட்ட அப்பங்கள் உயர்ந்தவை. ஏனெனில் வாழ்நாளெலாம் அன்னத்தை உண்ட விலங்கை இதில் அன்னம் உண்டிருக்கிறது” என்றான். சாத்யகி நகைத்தபடி கோப்பையை கீழே வைத்துவிட்டான். “இளவரசே, இவன் உயர் தத்துவமும் கற்றிருக்கிறான்.”

“ஏன் கள்ளங்காடி நடுவே ஒரு கீதை உரைக்கப்படலாகாதா? இளையவர்களே, வேதாந்த நூல் சொல்லும் கீதைகள் நூறு. அருகமர்ந்த மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. வழிச்செல்லும் வணிகர்களுக்கு சொல்லப்பட்டவை. கன்று சூழ்ந்தமர்ந்திருக்கும் ஆயர்களுக்கு சொல்லப்பட்டவை. வயலில் விதையுடனெழும் வேளிர்களுக்கு சொல்லப்பட்டவை. குடிநிறைந்த பெண்டிருக்கும் துணிந்து கீதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கள் முனையில் சொல்லப்பட்ட கீதை இது ஒன்றே. அவற்றில் ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு சொல் எடுத்து உருவாக்கப்பட்டது இது” என்றான் குசலன்.

சிரித்து “இதுவே முழுமையான கீதை போலும்?” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பல்லாயிரம் கள்ளக கீதைகளிலிருந்து ஒரு சொல் வீதம் எடுத்து உருவாக்கப்பட்ட பிறிதொரு கீதையே முழுமையானது. அது எழுக!” முகம் மாறி “குசலரே, இம்மண்ணில் அத்தனை பெரிய களியாட்டுக்கூடம் எது?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது ஒரு பெருங்களம். குருதி மழைத்து குருதி ஒழுகி குருதி உலரும் நிலம். அங்கு ஒவ்வொருவரும் கள்ளுக்கு நிகராக தங்கள் வஞ்சத்தை அருந்தி முழுமையான மதிமயக்கு கொண்டிருப்பார்கள். ஒருவன் மட்டிலுமே நெற்றிக்குள் விழிதிறந்தவனாக இருப்பான். அவன் சொல்வதே முழுமையுற்ற கீதை” என்றான் குசலன். தன் மதுக்கோப்பையை முழுமையாக இழுத்துக் குடித்துவிட்டு “நாகா, மூடா, நிறைந்த கோப்பைக்கும் ஒழிந்த கோப்பைக்கும் நடுவே இருக்கும் ஒரு கணம் தெய்வங்கள் வஞ்சம் கொள்ளும் பேருலகம் ஒன்று திறக்கும் தருணமென்று அறியாதவனா நீ? ஊற்றுடா” என்றான்.

நாகன் “மெல்ல மெல்ல இவன் உருமாறிக்கொண்டே இருப்பான். புழு பாம்பென்று ஆகும் மாற்றம். உருவெளி மயக்கம் என்று இங்கே சொல்வார்கள்” என்றான். “ஊற்றடா கள்ளை” என்றான் குசலன். சாத்யகி தன் கோப்பையை முடித்து கீழே வைத்து வாயை கையால் துடைத்துக் கொண்டான். “யாதவரே, இன்னுமொரு கோப்பை?” என்றான் நாகன். வேண்டாம் என்று கை சரித்தான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் இரண்டாவது கோப்பையை முடித்து மூன்றாவது கோப்பையை வாங்கும்போது குசலன் “மீண்டும்” என்று நான்காவது கோப்பைக்கு ஆணையிட்டான். சாத்யகி இனிய களைப்புடன் உடம்பைத் தளர்த்தி நீட்டிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் குசலனிடம் “சொல்லுங்கள் குசலரே, அந்த கீதையை உரைக்கப்போகிறவர் யார்? கள் கோப்பையுடன் நீர் களம் புகுவீரோ?” என்றான்.

“இல்லை. நூறு வஞ்சங்களை என்னால் காண முடியும். ஆயிரம் சினங்களை அறிய முடியும். பல்லாயிரம் விழைவுகளை தொட்டுணர முடியும். ஆனால் இன்றிருப்பவர் நேற்றிருந்தவர் நாளை எழுபவர் என இப்புவியில் நிகழும் அனைவரும் கொள்ளும் கோடானுகோடி வஞ்சங்களை சினங்களை விழைவுகளைக் கண்டு அவை ஒன்றையொன்று நிகர்செய்து உருவாக்கும் ஏதுமின்மையில் நின்று சிரிப்பவன் ஒருவன் மட்டிலுமே அதை உரைக்க முடியும். முற்றிலும் தனித்து நிற்கத் தெரிந்தவன். அவனையே யோகிகளின் இறைவன் என்கிறார்கள்... யோகீஸ்வரன்.” அவன் ஆவியெழும் உலைக்கலத்து துளை என ஏப்பம் விட்டு உடலை உலுக்கிக்கொண்டான். பழுத்திருந்த கண்கள் சிவந்து அனலில் வாட்டி எடுத்தவை போலிருந்தன.

“தலைக்குமேலும் மண் இருப்பவர் மானுடர். தலைக்குமேல் விண்ணிருப்பவர்கள் முனிவர். இளவரசர்களே, காலுக்குக் கீழும் விண் கொண்டவன் யோகி. அவன் யோகிகளின் தலைவன். முனிவர்கள் தங்கள் நெற்றிப்பொட்டில் அவன் பெருவிரல் நகத்தின் ஒளியை உணர்வார்கள். யோகீஸ்வரன்! என்ன ஒரு சொல். பொன்போல மிளிர்கிறது.” குசலனின் தலை தாழ்ந்து வந்தது. “நெற்றிப்பொட்டிலெழும் நகமுனை. நெற்றிப்பொட்டு...” என்றான். “மான்கண் போல. நீருக்குள் விழுந்த வெள்ளி நாணயம் போல. இலைத்தழைப்புக்கு அப்பால் ஒளிந்திருந்து நோக்குகிறது கட்டைவிரல்நகம். நெற்றிப்பொட்டில் எழும் ஆயிரம் இதழ் தாமரையின் மையம்.”

எடைமிக்க தலையை தூக்கமுயன்று முடியாமல் தரையில் அமர்ந்தான். கையை ஊன்றி உடலை இழுத்துச் சென்று கள்கடை நடுவே நாட்டப்பட்டிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான். “பேச்சுதான் பெரிதாக உள்ளது. கள் தாங்க உடலில்லை” என்றான் சாத்யகி. “அவர் குடிக்கும் குடிக்கு உடலென்று ஒன்று இருப்பதே வியப்பு” என்றான் நாகன். “மான்கண் நகம்!” என்று கைதூக்கி விரல்சுட்டி சொன்னான் குசலன். “தனித்த வேட்டைக்காரன் நான்! ஆறு முனைகளிலிருந்தும் அம்பெய்கிறேன். என் மூலாதாரத்தின் அம்பு தவறுகிறது. சுவாதிட்டானத்தின் அம்பு தவறுகிறது. மணிபூரகத்தின் அம்பு தவறுகிறது. அனாகதம் பிழைக்கிறது. விசுத்தி பிழைக்கிறது. ஆக்கினை நின்று தவிக்கிறது.”

“ஆறாவது அம்பு சென்று தைக்கும் ஏழாவது அம்பின் நுனி. ஆம் அதுதான்... அதுவேதான். ஆயிரம் பல்லாயிரம் சொல்லெடுத்து எய்பவர் அடையாத ஒன்றை சொல்லறியா வேடனொருவன் அடைவானோ?” குமட்டலெடுத்து பன்றிபோல் ஒலியெழுப்பி முன்னால் சரிந்து உடல் அதிர்ந்தான். ஆனால் வாந்தி வரவில்லை. வழிந்த கோழையை துடைத்தபின் தலையை இல்லை இல்லை என அசைத்தான். கொதிநீர் ஊற்று போல எச்சில் தெறிக்க அவன் இதழ்கள் வெடித்து வெடித்து மூச்சை வெளிவிட்டன. தலை தொய்ந்து தோளில் அழுந்தியது. ஊன்றிய கை விடுபட பக்கவாட்டில் விழுந்து துயிலத் தொடங்கினான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

மெல்லிய உடலாட்டத்துடன் திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் வெளியே வந்து புரவிகளில் ஏறிக் கொண்டனர். சாத்யகி “இதற்கிணையான விடுதலையை நான் அறிந்ததே இல்லை. கைவிரித்து சற்று எம்பினால் பறந்துவிடுவேன் என்று தோன்றுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் அவர் சொன்னதை எண்ணிக் கொண்டிருக்கிறேன். பொருளற்ற சொற்கள். ஆனால் உணர்வெழுச்சியுடன் சொல்லப்படுகையில் பொருளற்ற சொற்களைப்போல ஆற்றல் மிக்கவையாக பிறிதெதுவும் இல்லை” என்றான்.

காறித்துப்பிவிட்டு கையை மேலே தூக்கி “ஆ” என்றான் சாத்யகி. “இத்தனை கள்ளுக்கு அப்பாலும் உமது உள்ளம் சொல்லைக்கொண்டு களமாடுவது வியப்பளிக்கிறது. கலைத்து வீசும் அவற்றை… உப்புக் காற்று நிறைந்த இந்த வானம், களிவெறி கொண்ட முகங்கள் நிறைந்த இந்தத் தெரு… இது பாடுவதற்குரியது.” இரு கைகளையும் விரித்து “இந்திரநீலம்! நிறமொன்றேயான அது. பிறிதெதுவும் நிறமல்ல. தோழரே, நீலம் உருக்கொள்ளும் ஆடல் முகங்கள் அவையனைத்தும்” என்றான். கள்ளுண்டவனுக்குரிய சற்றே உடைந்த குரல் அவனுக்கு வந்துவிட்டிருப்பதைக் கேட்டு திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.

சாத்யகி இருபக்கமும் இருந்த மாளிகைகளை நோக்கி கை சுட்டி, உள்ளிருந்து எழும் சொல் அச்சுட்டலுக்கு உடனடியாக வந்து இணைந்து கொள்ளாமையால் சில கணங்கள் தவித்து சுட்டு விரலை சற்று ஆட்டியபின் “இம்மாளிகைகள்! இவை இத்தனை மகிழ்ச்சியானவை என்று எனக்கு இதுவரை தெரியாது பாஞ்சாலரே. இவை ஒவ்வொன்றும் என்னை நோக்கி சிரிக்கின்றன… இச்சிரிப்பை நான் பலகாலமாக அறிவேன். இன்றுதான் என்னால் திரும்பி சிரிக்க முடிகிறது” என்றான். ஒரு மாளிகையை நோக்கி கைகூப்பி “வணங்குகிறேன் வெண்பல்லரே” என்று இரு கைகளையும் விரித்தான். உரக்கச் சிரித்தபடி “ஆம், நாம் முன்னரும் கண்டிருக்கிறோம். அன்றெனக்கு அலுவல்கள் இருந்தன” என்றான்.

சுற்றிச்சுற்றி நோக்கியபடி “இத்தெருவில் உள்ள அத்தனை மாளிகைகளும் சிரிப்பதை இப்போதுதான் காண்கிறேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் தோளில் ஓங்கி அறைந்து “ஒரே நகைக்கொண்டாட்டமாக அல்லவா இருக்கிறது இது? என் செவிகள் உடையும் அளவுக்கு பேரொலி எழுகிறது” என்றான். இரு கைகளையும் தூக்கி வீசி “அஹ்ஹஹ்ஹஹ்ஹா!” என்று உரக்க சிரித்தான். அந்த விசையில் அவன் பின்னால் சரிய திருஷ்டத்யும்னன் அவன் புரவியின் கடிவாளத்தை பற்றிக்கொண்டான். “அதோ, நடுவே நின்று இடியோசையுடன் சிரிப்பது யார்? அதுதான் இந்த நீலன் கிருஷ்ணன் என்பவன் மாளிகையா?” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“அவன் என் களித்தோழன். அதுதான் உண்மை. அவனிடம் களமாடி கடலாடித்தான் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். அதை ஒருபோதும் நான் சொன்னதில்லை. ஏனென்றால் நான் இங்கு வருவதற்கு ஒருநாள் முன்னால் அவன் இங்கு வந்துவிட்டான். இங்கு வாழ்ந்த ஒரு பெரும் பூதம் அவனுக்கு இவ்வளவு பெரிய நகரை உருவாக்கி அளித்தது. இதோ இங்கு பல்வெண்மை ஒளிர நின்றிருக்கும் அத்தனை மாளிகைகளும் அப்பூதத்தின் ஏவலர்களே. அப்பூதமே அதோ அவ்விரண்டாம் குன்றின் மேல் ஒரு பெருவாயிலாக உருக்கொண்டு வளைந்து நின்றிருக்கிறது. அது கட்டியளித்த இந்த மாளிகையில் அமர்ந்து அவன் என்னிடம் ஐந்து குறிகளை உடலில் போடச்சொன்னான்.”

தன் தோளிலும் நெஞ்சிலும் அமைந்த தொழும்பக்குறிகளை கைகளால் அறைந்து “இவை எனக்கு சுமைகள். இந்த ஐந்து குறிகளுடன் என்னால் அவனை அணுக முடியவில்லை. அவன்முன் செல்லும்போதெல்லாம் நான் ஏவலனும் அவன் அரசனும் ஆகிறோம். அவன் முன் சென்று நின்று தலைவணங்குகையில் அந்த நாடகத்தைக் கண்டு எனக்குள் வாழும் இளையவன் நாணுகிறான். சினம் கொள்கிறான். அஞ்சி ஓடி என் கனவின் ஆழத்தில் எங்கோ அவன் பதுங்கியிருக்கிறான். அவனிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்றுதான், நீலா உனக்கெதற்கு இந்த வேடம்? இக்கீழ்மக்கள் சூழ்ந்து வாழ்த்தும் ஓசை? இறங்கிவா, நாமிருவரும் காடுகளில் கன்று மேய்ப்போம். நதிகளில் நீராடுவோம். களிக்களம் சேர்வோம்” என்றான்.

கையை இல்லை இல்லை என அசைத்து தரையில் காறித்துப்பி சாத்யகி சொன்னான் “ஆட்டத்தோழனொருவனை இத்தனை தொலைவில் காணும் இக்கீழ்மை என்னை வருத்துகிறது. இதோ சென்று கொண்டிருப்பது அதற்காகத்தான். அவன் அவை புகுந்து சொல்லப்போகிறேன். ‘அடேய் நீலா என்னுடன் களியாட வருவாயா இல்லையா?’ பொன்வண்டு தன் மேலோட்டை விட்டுவிட்டு உள்ளிருந்து புதிதாகக் கிளம்பிச் செல்வது போல இம்மூடர்கள் காணும் அவ்வரசை அரியணையை விட்டுவிட்டு உள்ளிருந்து அவன் எழுந்து வருவான். நான் அவனுடன் கிளம்பி கன்றுகள் மட்டும் நிறைந்த காட்டுமுகப்பை அடைவேன். அங்கு நான் அவனுக்காக கண்டுவைத்த நீலக்கடம்பு ஒன்று நின்றிருக்கிறது.” சிவந்த கண்களால் நோக்கி சுட்டு விரலை ஆட்டி சாத்யகி சொன்னான் “நீலக்கடம்பு!”

“நாம் அவனிடம் போவோம். நாங்கள் அங்கே…” கை சுட்டியபோது உடல் நிகர்நிலை இழக்க பின்னுக்குச் சரிந்த சாத்யகியை திருஷ்டத்யும்னன் பற்றிக் கொண்டான். “அங்கே அவ்வளவு தொலைவில் என்னுடைய ஆயர்பாடிக்கு சென்றுவிடுவோம். அங்கே இந்த மூடனை யாரும் அரசர் என்று நினைக்க மாட்டார்கள். கன்று சூழ்ந்து வா கள்வனே என்று மூதாய்ச்சியர் வெண்ணை கடைந்த மத்தால் அவனை மண்டையிலடிப்பார்கள். ஆம் மண்டையில்!” சாத்யகி உரக்க நகைத்து “மண்டையில்!" என்றுரைத்து அவனே அச்சொல்லால் மிக மகிழ்ந்து மேலும் மேலும் பொங்கிச் சிரித்தான். "ஆம், மண்டையில்! மண்டையிலேயே மத்தால் போட்டால்தான் இந்த மூடன் இவன் ஆடும் இந்த நாடகத்திலிருந்து வெளியே வருவான். மண்டையிலேயே!”

பற்களைக் காட்டி “மண்டையிலேயே!” என்று சொல்லிச் சிரித்தபடியே சாத்யகி வந்தான். அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி அரண்மனை வளாகத்தின் கோட்டை வாயிலை அடைந்தான் திருஷ்டத்யும்னன். அங்கிருந்த காவலர்கள் அவர்கள் வருவதை முன்னரே கண்டுவிட்டனர். அங்கே காத்து நின்றிருந்த சிற்றமைச்சன் ஒருவன் அவர்களை நோக்கி வந்து தலைவணங்கி “பாஞ்சாலரே, தாங்கள் இங்கு வருவீர்கள் என்றும் உங்கள் இருவரையும் நேரடியாகவே தன் கடல்மாளிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அரசரின் ஆணை” என்றான். “அரசர் இப்போது கடல் மாளிகையிலா இருக்கிறார்?” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி “அவன் எங்கும் இருப்பான். வெறும் யாதவமூடன்! தன்னை அரசன் என்று காட்டுவதற்காக கடல்நுரையை அள்ளி இங்கொரு நகரம் செய்து வைத்திருக்கிறான். அதில் வீண்மாளிகைகளை சமைத்திருக்கிறான். யவனமூடர் அமைத்த பீடத்தில் கலிங்கத்து மூடர் அமைத்த மணிமுடியைச்சூடி அமர்ந்திருக்கிறான்” என்றான். கைசுட்டி “இதோ நான் செல்கிறேன். சென்றதுமே அவன் இடைசுற்றிய கச்சையைப்பிடித்து வாடா இந்த விளையாட்டெல்லாம் எனக்கு முன்னரே தெரியும் என்று சொல்வேன்” என்றான். திருஷ்டத்யும்னன் கோணலாகச் சிரித்து “சற்று புளித்த கள்ளை அருந்தியிருக்கிறார்” என்றான்.

அமைச்சன் சிரித்து “கள் மிகுதியாகி ஆன்மா நனைந்துவிட்டால் இங்குள்ள ஒவ்வொருவரும் இளைய யாதவரைப்பற்றி இதைத்தான் சொல்கிறார்கள். நேற்றுகூட ஒரு வாயிற்காவலன் உள்ளே சென்று அவரை அடேய் கிருஷ்ணா என்னடா நினைத்திருக்கிறாய் உன்னைப்பற்றி என்று கேட்டுவிட்டான்” என்றான். பின்னால் நின்றிருந்த காவலர்கள் அடக்க முடியாது சிரித்துவிட்டனர். ஒருவன் “இதோ இங்கிருக்கிறான்… இவன்தான். இவன் பெயர் கோவிந்தன்” என சிரித்தபடி சொன்னான். “பாதி கடித்த பழம் ஒன்றைக் கொண்டு சென்று அவருக்கு கொடுத்தான். இந்தமாதிரி பழத்தை நீ தின்றிருக்க மாட்டாய் மூடா என்று அவரிடம் சொன்னான்” என்றான் இன்னொருவன்.

உள்ளே வேலுடன் நின்ற அந்தக் காவலன் நாணம் தாளாமல் திரும்பி சுவருடன் முகத்தை புதைத்துக்கொண்டான். சாத்யகி “அவனிடம் நான் சொல்வேன்… என்ன சொல்வேன்?” என்று அமைச்சனிடம் கேட்டான். “ஆனால் அவனுக்கு என்னைத்தெரியாது. நீ யார் என்று என்னைக் கேட்டால் ஓங்கி ஒரே உதை, புட்டத்திலேயே உதைப்பேன்” என்றபின் விழிகளைத் தூக்கி முகத்தை சற்று அண்ணாந்து “எங்கே…? புட்டத்தில்! ஹாஹாஹாஹா புட்டத்தில்!” என்று சொல்லி உடல்சீண்டப்பட்டதுபோல் சிரிக்கத்தொடங்கினான்.

திருஷ்டத்யும்னன் “கடல் மாளிகையில் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அரசர் இருக்கிறார். பிறர் எவருளர் என தெரியவில்லை. தங்கள் இருவரையும் அங்கு வரச்சொன்னார். பிறிதெவரிடம் ஆணையிட்டிருக்கிறார் என்று அறியேன்” என்றான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “நாங்கள் இத்தருணத்தில் இங்கு வருவோம் என அவர் அறிந்திருக்கிறாரா அல்லது எங்களை தேடி வரும்படி சொன்னாரா?" என்று கேட்டான். அமைச்சன் “இல்லை, இங்கு வருவீர்கள் என்றும் அப்போது இச்செய்தியை தங்களுக்கு அளிக்கவேண்டும் என்று மட்டுமே எனக்கு ஆணை. அதற்காகவே காத்திருந்தேன்” என்றான். தலையசைத்து “பார்ப்போம்” என்றான் திருஷ்டத்யும்னன். “பாஞ்சாலரே, புட்டத்தில்… அவன் புட்டத்திலேயே” என பொங்கிச்சிரித்தான் சாத்யகி.

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 2

கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது.. நெடுங்காலம் கடலுக்குள் அலை தழுவ தனித்து நின்றிருந்த ஆழத்து மலை ஒன்றின் கூரிய முகடு அது. அதனருகே இருந்த சிறிய கடற்பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கற்தூண்கள் நாட்டி கற்பாளங்கள் ஏற்றி கட்டப்பட்டிருந்த தேர்ப்பாதை கரையுடன் இணைந்து சுழன்று மேலேறி வந்து அரண்மனையின் பெருமுற்றத்தின் தென்மேற்கு எல்லையை அடைந்தது. அந்த ஒரு பாதையன்றி கடல் மாளிகைக்குச் செல்ல வேறு வழி ஏதும் இருக்கவில்லை. அரசருக்குரிய தனிப்பட்ட களியில்லம் அது என்பதால் பிற எவரும் அங்கு செல்ல ஒப்புதல் இல்லை.

சாத்யகி பல்லாயிரம் முறை முற்றத்தின் விளிம்பில் நின்று கடலுக்குள் வீசப்பட்ட தூண்டிலின் தக்கை என தெரியும் கடல்மாளிகையை பார்த்ததுண்டு என்றாலும் அங்கு செல்ல நேர்ந்ததில்லை. ஒரு முறையேனும் அங்கு செல்ல வாய்ப்புண்டு என்பதை எண்ணிப்பார்த்ததும் இல்லை. அமைச்சன் வழிகாட்ட சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் கடல்மாளிகைக்கான சுழற்பாதையின் தொடக்கத்தை சென்றடைந்தனர். அங்கிருந்த காவல் கோட்டத்துத்தலைவன் அமைச்சனிடம் “கடல்மாளிகைக்கான ஒப்புதல் ஓலையில் பொறிக்கப்பட்டு தங்களிடம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும் அமைச்சரே” என்றான். அமைச்சன் “என்னிடம் வாய்மொழி ஆணையே இடப்பட்டது. சற்று பொறுத்திருங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லி அலுவல் மாளிகை நோக்கி விரைந்தான்.

திருஷ்டத்யும்னன் புரவியில் அமர்ந்தபடி கீழே தெரிந்த கடல்மாளிகையையே நோக்கிக் கொண்டிருந்தான். மாபெரும் ஆடி போல் விண்ணொளியை எதிரொளித்த கடல் அவன் கண்களை சுருங்க வைத்திருந்தது. சாத்யகி மெல்லிய குமட்டல் ஒன்று எழ உடலை குலுக்கிக் கொண்டான். அவன் கண்களின் இமைகள் ஈரமான கடற்பஞ்சு போலாகி எடை கொண்டு தடித்து கீழிறங்கின. ஒவ்வொருமுறையும் அவற்றை உந்தி மேலே தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கண்களுக்குள் வெங்குருதி படர்ந்தது போல தொண்டை வறண்டு இருக்க நாவில் கொழுத்த எச்சில் ஊறிக் கொண்டிருந்தது. “கடலுக்குள் இத்தனை தொலைவில் ஒரு மாளிகை என்பது கட்டத்தொடங்குவதற்கு முன் நிகழவே முடியாத ஒரு கற்பனையாகவே இருந்திருக்க வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “என்ன?” என்றான் சாத்யகி. “இந்த மாளிகை! இங்கிருந்து நோக்குகையிலேயே கரைக்கும் அதற்குமான தொலைவு வியப்புறச்செய்கிறது” என்றான்.

“ஆம்” என்றான் சாத்யகி. “சாகரசிருங்கம் என்றும் கிருஷ்ணகிரி என்றும் அந்தப்பாறையை சொல்கிறார்கள். அதன் நான்கு பக்கமும் எழுநூறு கோல் ஆழத்திற்கு மேல் உள்ளது. உண்மையில் அது ஒரு பெரும் மலைமுடி. அங்கொரு மாளிகையை கட்டவேண்டும் என்பது இளைய யாதவரின் இலக்கு. ஆனால் அதைச் சுற்றி எப்போதும் அலைக் கொந்தளிப்பு இருப்பதால் அது இயல்வதல்ல என்று கலிங்கச் சிற்பிகள் சொல்லிவிட்டார்கள். பின்னர் கடற்பாறைகளில் கட்டும் திறன்மிக்க தென்னகத்துச் சிற்பிகளை இங்கு வரவழைத்தார். அவர்கள் அருகிலிருந்த பிற பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து அச்சாலையை உருவாக்கினர். அடியில் உள்ள மூழ்கிய கடல்பாறைகளை முத்துக் குளிப்பவர்களை அனுப்பி கண்டுபிடித்து அவற்றின் மேலிருந்தே தூண்களை ஊன்றி எழுப்பி மேலே கொண்டு வந்து அந்த தேர்ப்பாதை அமைக்கப்பட்டது. பன்னிருமுறை கட்டப்படுகையிலேயே அது இடிந்து விழுந்தது என்கிறார்கள். தென்னகச் சிற்பியாகிய சாத்தன் என்பவன் கடலை ஆளும் சாகரை என்ற தேவதைக்கு தன் கழுத்தை தானே அறுத்து குருதி பலி கொடுத்தபின்னரே அக்கட்டுமானங்கள் உறுதியாகி நிலைத்தன என்பது துவாரகையின் கதைகளில் ஒன்று.”

வேறெங்கோ இருந்து வேறெவரிடமோ அதை சொல்லிக் கொண்டிருக்கையில் கனவிலும் அதை கண்டு கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஒன்றை சாத்யகி அடைந்தான். “நாம் எங்கு போகிறோம்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். திருஷ்டத்யும்னன் “கள் உங்களில் மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது யாதவரே. அங்கிருந்து கிளம்புகையில் ஒருவராக இருந்தீர். இங்கு மூவராக இருக்கிறீர் என்று நினைக்கிறேன். அங்கு மாளிகைக்குச் செல்வதற்குள் ஒரு சிறிய படையாகவே மாறிவிடுவீர்” என்றான். “யார்?” என்று கேட்ட சாத்யகி மிக மெல்ல அச்சொற்களை புரிந்துகொண்டு தலையைத்தூக்கி உரக்க நகைத்தான். காவல் கோட்டத்திலிருந்த இரு வீரர்கள் அவனை வியப்புடன் எட்டிப்பார்த்தனர்.

கோட்டத்தலைவன் “இளவரசே, கள்ளருந்திய நிலையில் அரசரின் கடல் மாளிகைக்கு தாங்கள் செல்வது...” என தொடங்கியதும் சாத்யகி “மூடா, நான்கு பக்கமும் அலை நுரைக்கும் மாளிகையில் அமர்ந்து அவர் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கப்போகிறார்? யவன மது அருந்தி அழகிய பெண்கள் சூழ களித்திருப்பார். நானே நேரில்போய் அவர் முகத்தைப்பார்த்து சொல்கிறேன்... என்ன சொல்வேன்? என்ன? டேய் நீலா எனக்கும் ஒரு கோப்பையை இப்படிக் கொடு என்று சொல்வேன். ஆமாம்! அவர்களில் ஒரு கன்னியை...” சாத்யகி நிறுத்தி தலையை ஆட்டி “இரண்டு கன்னியரை நானும் தூக்கிச் செல்வேன்” என்றான். வீரர்களின் முகங்களில் தெரிந்த திகைப்பைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி திருஷ்டத்யும்னன் திரும்பிக் கொண்டான்.

புரவியில் மாளிகையில் இருந்து ஸ்ரீதமரும் அமைச்சனும் விரைந்து வரும் ஓசை கேட்டது. “ஸ்ரீதமரே வருகிறார்” என்றான் சாத்யகி. “அப்படியென்றால் பெரும்பாலும் என்னை கடல் மாளிகையில் கழுவில் ஏற்ற வாய்ப்புள்ளது. நான்கு பக்கமும் கடல் சூழ கழுவில் அமர்ந்திருப்பது சிறந்ததே. அங்கு எனக்கு கழுவன் பீடம் அமைக்கப்படுமென்றால் காலமெல்லாம் கடலோசையைக் கேட்டு மகிழ்ந்திருப்பேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “கடலை மீறி வந்து எவரும் பலி கொடுக்க மாட்டார்களே, பசித்திருக்க வேண்டுமே” என்றான். “நான் கடல் மீன்களை தின்பேன். அங்கு மிகச்சிறந்த நண்டுகள் கிடைக்கும்” என்றான் சாத்யகி. மீண்டும் ஏப்பம் விட்டு “எனது கள்ளில் நுரைபடிந்து கொண்டிருக்கிறது. கடல் மாளிகைக்குச் சென்றதும் மீண்டும் கள்ளருந்தாவிட்டால் என்னால் சிறப்பாக பேச முடியாது” என்றான்.

அருகே வந்து புரவியிலிருந்து இறங்கிய ஸ்ரீதமர் காவலனிடம் “இந்த ஓலைச் சாத்துடன் அவர்கள் இருவரும் உள்ளே செல்லட்டும்” என ஒப்புதல் ஓலையை அளித்தார். அவன் அதை இருமுறை வாசித்துவிட்டு உள்ளே சென்று அங்கிருந்த ஒலை அடுக்குகளில் கோத்து வைத்தான். ஸ்ரீதமர் “தாங்கள் செல்லலாம் இளவரசே” என்றார். சாத்யகி “அமைச்சரே, நான் மது அருந்தியிருக்கிறேன். அங்கு சென்று அந்த இளைய மூடனிடம் நான் மது அருந்தியிருக்கிறேன், ஆகவே மது அருந்துபவர்களுக்கான சிறப்புக் கழுவிலேயே என்னை ஏற்ற வேண்டும் என்று கேட்கப்போகிறேன்” என்றான். ஸ்ரீதமர் கண்களில் எதுவும் தெரியவில்லை. இளம் அமைச்சன் பதற்றத்துடன் அவன் முகத்தையும் திருஷ்டத்யும்னன் முகத்தையும் நோக்கினான். திருஷ்டத்யும்னன் “காற்றில் பறந்து சென்றுவிடுவார் என்று அஞ்சுகிறார். உரியமுறையில் கழுமரம் அமைக்கப்பட்டால் நிலையாக பதிந்து இருக்கலாமே என்று விழைகிறார்” என்றான்.

ஸ்ரீதமர் புன்னகையுடன் “பாஞ்சாலரே, இப்பெரு நகரமே ஒரு நீலப்பெருங்கழுவில் குத்தி அமரவைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். செல்க” என்றார். சாத்யகி “அஹ்ஹஹ்ஹா! இது கவிதை! கண்டிப்பாக இதை ஏதோ கள்ளறிந்த சூதன்தான் பாடியிருக்கவேண்டும். இதற்காக அந்த சூதனுக்கு...” என்று சொல்லி தன் இடையை தடவியபின் “என்னிடம் நாணயங்கள் இல்லை. நான் அரண்மனைக்குச் சென்று எடுத்து வருகிறேன்” என்று புரவியைத் திருப்பினான். “அது பிறகு. நாம் இப்போது கடல் மாளிகைக்கு செல்வோம். வருக யாதவரே!” என்றபடி திருஷ்டத்யும்னன் ஸ்ரீதமருக்கு தலைவணங்கி எல்லைக் காவல் மாடத்தைக் கடந்து கடற்பாறைகளை வெட்டி தளமிடப்பட்டிருந்த குறுகிய தேர்ப்பாதைச் சரிவில் புரவியில் இறங்கினான். சாத்யகி “சரிந்து செல்கிறது... பாதாள இருளுக்கான பாதை” என்று ஏப்பம் விட்டபடி தொடர்ந்தான்.

சரிவாகையால் புரவிகள் விரைந்தோட விழைந்து பொறுமை இழந்து தலையை அசைத்து கழுத்தை வளைத்தன. “நாம் பாய்ந்திறங்கிச் சென்றாலென்ன? பறக்கும் கடற்காக்கையின் இறகு போல சுழன்று இறங்க முடியுமென்று தோன்றுகிறது” என்றான் சாத்யகி. “இப்போதிருக்கும் நிலையில் தங்கள் புரவி மட்டுமே கீழே செல்லும். தாங்கள் இங்கு விழுந்து கிடப்பீர்” என்றான் திருஷ்டத்யும்னன். “யார் சொன்னது? நான் இந்தப்புரவியை எத்தனை நூறு முறை ஓட்டியிருக்கிறேன்! இந்தப் புரவியை எனக்குத் தெரியாது. இவளுக்கு என்னைத்தெரியும்” என்றான் சாத்யகி. “ஆகவேதான் சொல்கிறேன், அது உதிர்த்துவிட்டுச் சென்றுவிடும்” என்று திருஷ்டத்யும்னன் சிரித்தான்.

சீரான விரைவில் இரு புரவிகளும் சுழல் பாதையில் இறங்கிச் சென்றன. பாதையின் இருபக்கமும் பல்லாயிரக்கணக்கான சிறிய கல்பாத்திகளில் பாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்மணல் கொட்டப்பட்டு அதில் மலர்ச்செடிகள் நடப்பட்டிருந்தன. மேலிருந்து சிறிய ஓடைகள் வழியாக வந்த நீர் அந்த மண்ணில் கசிந்து பரவி செடிகளை பசுமை கொள்ளச்செய்திருந்தது. செந்நிற மலர்களைச் சுட்டி “குருதி போலிருக்கிறது” என்றான் சாத்யகி. “அந்த வெள்ளை மலர்களெல்லாம் குருதியில் மிதக்கும் கொழுப்புகள்.” ஒரு கணத்தில் குன்றின் சரிவு முழுக்க நிறைந்திருந்த பல்லாயிரம் பாறைப் பாத்திகளில் மலர்ந்த மலர்கள் அனைத்தும் குருதியலைகளாக மாறிய விந்தையை திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான்.

அதன் நடுவே எழுந்த நீல மலர்களைச்சுட்டி “அது அவன்தான். சுற்றிலும் குருதி அலையடிக்கையில் அங்கு நின்று குழலிசைத்துக் கொண்டிருக்கிறான்” என்ற சாத்யகி அவனை...” என்று ஏதோ சொல்ல வந்து புரவியை இழுத்து நிறுத்தினான். பிறகு தலை வெட்டுப்பட்டது போல் வெடவெடவென்று ஆட, புரவி மேலேயே சற்று நேரம் அம்ர்ந்திருந்துவிட்டு சற்று திரும்பி அவன் “குழலிசைக்கவில்லை. வேதாந்த வகுப்பெடுக்கிறான்...” என்று சொன்னபின் உரக்க நகைத்து “குருதி படிந்த வேதாந்தம். கொலை வாளின் தத்துவம் அது” என்றான். ”நீதிக்காக என்றால் கொலை வாளைவிட தூயது பிறிது ஏது? தன்னலம் அற்றவன் கையில் இருக்கும் கொலை வாளைவிட தெய்வங்களுக்கு உகந்தது வேறில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிவந்த கண்களால் நோக்கி “வெறும் சொற்கள். பொருளற்ற சொற்கள். இறப்பு, காமம், கண்ணீர்... இவை தவிர பிற அனைத்தும் வெறும் சொற்கள்” என்றான். “ஆம், மேலே எதைச் சொல்லும்போதும் வேதாந்தி இதையும் அறிந்திருப்பான்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி உடல் தளர்ந்து “ஆம். வேதாந்தம் என்றால் ஒவ்வொரு சொல்லுக்கும் தன்னை மறுத்தபடியே உரையாடும் ஒரு தரப்பு. எனவே அதனுடன் ஒருவரும் உரையாட முடிவதில்லை. வேதாந்தம் இம்மானுடம் அடைந்த ஞானத்தின் உச்சம். அதற்குப் பின்பு ஒரு ஞானமில்லை என்பதாலேயே அது ஞானமின்மையில் தன் பாதியை வைத்திருக்கிறது. எவனொருவன் வேதாந்தத்தை கற்கிறானோ அவன் வெறும் சொல்லளையும் மூடனாக ஆகிவிடுகிறான். வேதாந்தத்தை வைத்து விளையாடுபவனோ இப்புவியாளும் யோகியாகிறான். யோகத்தைக் கடந்து அலையலையென முடிவின்மை கொந்தளித்து ஓலமிடுகையில் தனித்து அமர்ந்து தன்னுள் நோக்கி தவமிருக்கிறான்” என்றான்.

சாத்யகி மீண்டும் சற்று குமட்டியபிறகு “இப்போது நான் என்ன சொன்னேன்?” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டான். சிரித்துக்கொண்டு “உயர் வேதாந்தம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அது சிறந்த கள் பாஞ்சாலரே. உண்மையிலேயே வேதாந்திகளுக்குரியது. அங்கிருந்த அவனை...” என்றபின் “அவன் பேரென்ன?” என்றான். “குசலன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அவன் உண்மையான வேதாந்தி. அவனை நான் வேதாந்தக் களிமகன் என்று அழைக்கிறேன்” என்றான். “நல்ல சொல். வேதாந்தக்களிமகன்! அப்படியென்றால் அதோ கடற்பாறைக்கு மேல் அமர்ந்திருக்கும் அவனை வேதாந்தப் பெருங்களிமகன் என்று அழைக்கலாமோ?” என்றான்.

“வேதாந்தம் இதோ துவாரகையின் இந்தக் கரை வரைக்கும்தான். கடலுக்குள் என்ன வேதாந்தம்? வெறும் களிகூர்ந்து அமர்ந்திருக்கிறான். பித்தன். பெரும்பேயன். அல்லது யோகி.” சாத்யகி தன் கையைத்தூக்கி “களியோகி!” என்றான். திருஷ்டத்யும்னன் அந்தச் சொல்லை ஓர் அலைவந்து உடலை அறைந்து தழுவிச் செல்வது போல் உணர்ந்தான். ஏதோ ஓரிடத்தில் இயல்பாகவே உரையாடல் நின்றுவிட உள்ளத்தின் வெறும் தாளமென ஒலித்த புரவிக் குளம்பொலிகள் தொடர இருவரும் இறங்கிச் சென்றனர்.

கடலை அணுகுந்தோறும் அலைப் பேரோசை வந்து அவர்களை சூழ்ந்துகொண்டது. சாத்யகி “கடலின் இப்பக்கம் அலைகள் மிகுதி. பாறைகள் இருப்பதனால் ஓசையும் நுரையும் எப்போதும் இருக்கும்” என்றான். முகத்தில் வீசப்பட்ட நீர்த்துமிகளால் அவன் சித்தம் கழுவப்பட்டு தெளிவடைந்துகொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் அவன் பேச்சை வாயசைவாக மட்டுமே அறிந்து “என்ன?” என்றான். “அலைகள்! ஓசை!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். “ஓசை!” என்று மீண்டும் சொன்னான். திருஷ்டத்யும்னன் “என்ன?” என்றான். சாத்யகி ஒன்றுமில்லை என்று கையசைத்தான்.

கடலின் ஓசை பெருகி வந்து செவிகளை நிறைத்து சித்தத்தை மூடியது. காலடியில் கடல் என்பதன் கூச்சம் உடலெங்குமிருந்தது. கடலின் ஒற்றைச்சொல்லையே தன் உள்ளமென உணர்ந்தான். அதுவரை தன் அகம் பொருளற்ற சொற்களால் நிறைந்திருந்ததை அப்போது அறிந்தான். கலைந்த தேனீக்கூடு போன்ற சித்தம் அப்போது ஒளிரும் விழிகளுடன் கரிய சிறகுகளுடன் ஒற்றைப் பெரும்பறவை அமர்ந்திருக்கும் கடற்பாறை முகடாக இருந்தது. கடல் முகப்பில் அமைந்திருந்த காவல்மாடத்தின் தலைவனுக்கு கொடி அசைவு மூலம் செய்தி வந்திருந்தது. அவன் இறங்கி வந்து இருவரையும் தலைதாழ்த்தி வணங்கி அங்கிருந்த சாவடியைக் கடந்து போகும்படி கையசைத்து வரவேற்றான். “இவன் உள்ளத்தில் சொல்லென்பதே இருக்காது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “என்ன?” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் இல்லையென்று தலையசைத்தான்.

துவாரகையின் அப்பகுதி முழுக்க யானைக் கூட்டங்களென, எருமை மந்தைகளென, பன்றி நிரைகளென கரிய பாறைகள் பெருகிக்கிடந்தன. நீலமுகில் வளைந்து ஒளிகொண்டு பெருகி வருவதைப்போல அணுகிய அலைகள் முதல் பெரும்பாறையில் முட்டியதுமே இரண்டாகப் பிரிந்தன. பின்பு பாறைக்குவை மேல் மோதி வெண்ணுரையாக மாறின. கரிய சீப்பு ஒன்று வெண்கூந்தலை சீவிச் செல்வது போலிருந்தது. வெண்சாமரம் என நுரைப்பெருக்கு வந்து பல்லாயிரம் பாறைகளை தழுவியது. பாலென நுரைத்து வழிந்தது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை நீராடும் அருள் கொண்ட பாறைகள். முடிவின்மையின் அறைபட்டு அறைபட்டு கரைந்தழியும் பேருருக் கொண்டவை.

“நீலம் நக்கியுண்ணும் இன்னமுது இவை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அச்சொற்களைக் கேட்காமல் திரும்பி அவனிடம் எதையோ சொன்னான். “என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி ஒரு கணம் என கையசைத்துவிட்டு அவனைச் சூழ்ந்து அறைந்து நுரைக்கொந்தளிப்பாக மாறி பாறைக் குடைவுகளையும் மடம்புகளையும் இடுக்குகளையும் நிறைத்து பொங்கி எழுந்து வெண்பளிங்குக் கற்களெனச் சிதறி நுரையென வழிந்து பின்பு பல்லாயிரம் வழிவுகளாக மாறித் திரண்டு எதிர் அலையென்றாகி பின் வாங்கிச் சென்ற கடலை நோக்கி காத்து நின்றான். அது சென்றபின் திரும்பி “நீலத்தின் முன் தருக்கி நின்றிருக்க இச்சிறு பாறைகளால் முடிகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான்.

அலைகள் பின்வாங்கிய வெளியில் ஒவ்வொரு கடல்பாறையும் காலடியில் கடல் கீழிறங்க ஒருகணம் பேருருவம் கொண்டன. வழிந்து சென்ற நுரையுடன் அடுத்த அலை வளைந்தெழுந்து சுருண்டு கரை நோக்கி வந்தது. அதன் பல்லாயிரம் நாக நாநுனிகள் வெள்ளியாலானவையாக இருந்தன. மீண்டும் அறைதல். மீண்டுமொரு பெரும் குமுறல். மீண்டுமொரு பால்பெருக்கு. மீண்டுமொரு வெண் சரிவு. “முடிவிலாது...” என்றான் சாத்யகி. “ஒன்று முடிவிலாது நிகழ்வதன் பொருளின்மைக்கு நிகரென இப்புவியில் வேறொன்றும் இல்லை. அதன் முன் மானுடம் உருவாக்கிக் கொள்ளும் ஒவ்வொரு சொல்லும் வெறும் ஒலியாகவே மாறிவிடுகிறது.”

அவர்களைச் சூழ்ந்திருந்த அனைத்தும் கடற்துமிகள் பட்டு உருகி வழிந்து கொண்டிருந்தன. பாறைப்பரப்புகள் அனைத்தும் குளிர்ந்து கறுத்து கனிந்து மறுகணம் நுரையென்றாகி விடும் என்பதைப்போல உளமயக்கு காட்டின. சில கணங்களுக்குள்ளே அவர்கள் உடலில் இருந்தும் உப்பு நீர் வழியத்தொடங்கியது. புரவிகள் கடல்துளிகள் சொட்டிய பிடரியைச் சிலிர்த்தபடி தலையை அசைத்து தும்மலோசை இட்டபடி அலைகளை வகுந்து சென்ற கற்பாதையில் நடந்தன. இருபக்கமிருந்தும் அலைகள் எழுந்து ஒரேசமயம் பாலத்தை அறைவதை திருஷ்டத்யும்னன் கண்டான். மேலே வானம் எந்த அளவுக்கு ஒளி கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு நீலம் செறிவு கொண்டது. வான் இருண்டிருக்கையில் கடல் சாம்பல்வெளியாகிறது. நீலமென்பது ஆழம் தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயம்.

எழும் பொருளற்ற எண்ணம் ஒவ்வொன்றையும் ஆம் ஆம் என ஆமோதித்தன அலைகள். அக்கணம் உடலெங்கும் எழுந்து ஒவ்வொரு விரல்நுனியையும் துடிக்க வைத்த விழைவென்பது புரவியிலிருந்து பாய்ந்து அவ்வலைகளால் அள்ளப்பட்டு பாறைகளில் அறைந்து சிதறடிக்கப்படவேண்டுமென்பதே. தலை உடைந்து மூளைச்சேறு வெண்ணைநுரை போல் கரும்பாறையில் வழிய வேண்டும். நெஞ்சுடைந்த குருதி அச்செம்மலர்கள் போல் சிதறி நின்றிருக்க வேண்டும். பசி கொண்ட நீல விலங்கு வெண்ணிற நா நீட்டி உண்டு உண்டு இப்புவியை ஒரு நாள் தன்னுள் எடுத்துக் கொள்ளப்போகும் பேருயிர். இச்சொற்கள் வெறும் கடற்பாறைகள். முடிவின்மையை அஞ்சி அதன் முன் நான் கொண்டு நிறுத்தும் உருவற்ற மொத்தைகள். பொருளற்ற சிதறல்கள். பேரலை வந்து பாறையின் பாதத்தை அறைந்தது. அதன் துமித்தெறிப்பு வளைந்து முல்லை மலர்க்கூடையை விசிறியது போல அவன் முன் ஒளிர்ந்து விழுந்தது. மறுபக்கமிருந்து பிறிதொரு அலை வந்து அறைந்து பளிங்கு மணிகளென பாறைமேல் சிதறி விழுந்தது.

கடல் மாளிகை தொலைவிலிருந்து பார்த்தபோது களிச்செப்பு போல் சிறிதாக இருந்தது. அணுகும் தோறும் அதன் பெரும் தோற்றம் தெளிந்து வந்தது. கடற்பாறையில் வெட்டி எடுக்கப்பட்ட ஆயிரத்து எட்டு தூண்களால் ஆன வட்ட வடிவ கல்மாளிகை அது. தூண்களுக்கு மேல் எழுந்த மேல் மாடத்தில் சாளரங்கள் கொண்ட வட்டமான உப்பரிகை அமைந்திருந்தது. அதற்கு மேல் கூம்புவடிவக் கோபுரத்தில் காவல் மாடங்கள். அதன் மேல் எழுந்த கல்குவடுக்கு நடுவே நாட்டப்பட்ட கற்தூணின் உச்சியில் இருபக்கமும் சங்கும் சக்கரமும் துலங்க நடுவே துவாரகையின் கருடன் தலை பொறிக்கப்பட்டிருந்தது. கடல்மாளிகையில் முதல்வாயில் அருகே இருபது வீரர்கள் படைக்கலன்களுடன் காவல் நின்றனர், அதன் வாயிலுக்கு மேலெழுந்த காவல் மாடத்தில் பன்னிரு வில்லவர் அமர்ந்திருந்தனர்.

தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் துமி வழிய ஒவ்வொரு கணமும் நடுங்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் பாதையின் இறுதி வளைவைக் கடந்ததுமே அது முற்றிலும் உலர்ந்து இருப்பதை அறிந்தான். அங்கு சென்றதுமே கடல் வெற்றோசை மட்டுமாக மாறி பின்னகர்ந்தது. காற்றில் எழுந்த பனிப்பிசிறு போன்ற துமி அல்லாமல் அங்கு நீரலைகளோ நுரைப்பிசிறுகளோ எட்டவில்லை. மேலும் சற்று முன்னால் சென்றபோது கடலோசையே சற்று அமிழ்ந்துவிட்டது போல் தோன்றியது. கற்பாளங்களின் மேல் படிந்த புரவிகளின் குளம்போசையை கேட்க முடிந்தது. அங்கிருந்த காவலன் அவர்களை அணுகி தலைவணங்கினான். அவர்களின் முத்திரைக் கணையாழிகளை வாங்கி மூவர் சீர்நோக்கினர். காவலன் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தான்.

குதிரையிலேயே அவ்வாயிலைக் கடந்து நிரைவகுத்த பெரும் தூண்களாலான மாளிகையின் கல்முற்றத்தில் சென்று நின்றனர். சாத்யகி புரவியில் அமர்ந்தபடியே திரும்பி துவாரகையை நோக்கினான் “சிரிக்கிறது அந்நகர்” என்றான் அச்சொல்லுடன் இணைந்து நோக்கியபோது அலை வளைவு ஒரு பெரும் பல்வரிசையாகத் தெரிய திருஷ்டத்யும்னனும் புன்னகைத்தான். சாத்யகி தலை தூக்கி இணைமலை மீது எழுந்த பெருவாயிலை பார்த்தான். “துவாரகையை வானில் தொங்க விட்டிருக்கும் ஒரு கொக்கி போல் தெரிகிறது. அந்தக் கொக்கி வலுவிழக்கையில் இந்நகரம் மண்ணில் விழும்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து “மண்ணில் விழாது, நீரில் விழுந்து அமிழ்ந்து மறையும்” என்றான். அந்தப் பெருவாயிலின் தோற்றம் சற்றுநேரம் இருவரையும் சித்தம் அழியச்செய்தது ”வானுக்கொரு வாயில்” என்றான் சாத்யகி. “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

மேலும் சில கணங்கள். ஒப்புமைகளாக, உருவகங்களாக, அணிச்சொற்களாக, நினைவுகளாக அதன்மேல் பெய்த அனைத்து எண்ணங்களும் வடிய எதுவுமின்றி வெறுமொரு வளைவென எழுந்து மலைமேல் நின்றது பெருவாயில். மண்டபத்தின் உள்ளிருந்து வந்த வீரன் தலைவணங்கி “அரசர் மேலே தெற்கு உப்பரிகையில் தங்களுக்காக காத்திருக்கிறார் இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி திருஷ்டத்யும்னன் இறங்கினான். கால்கள் நெடுந்தூரப்புரவிப்பயணம் செய்து மரத்துவிட்டவை போலிருந்தன. சாத்யகி இறங்கி சில கணங்கள் தள்ளாடிவிட்டு புரவியை பற்றிக் கொண்டான், இருவரும் கால்களை உதறினர். சாத்யகி கடிவாளத்தை வீரன் கையில் கொடுத்துவிட்டு இடையில் கையூன்றி முதுகை நிமிர்த்திக் கொண்டான். “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

நடக்கும்போது “பாஞ்சலாரே, இத்தனை உள நிறைவுடன் கழுபீடத்திற்குச் சென்ற பிறிதொருவன் துவாரகையில் இருந்திருக்க மாட்டான்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் அந்த வேதாந்த மதுவை இன்னும் அருந்தியிருந்தால் நாமே சென்று ஏறி அமர்ந்திருப்போம்” என்றான். சாத்யகி மாளிகையின் தூண்கள் சூழ்ந்த இடைநாழி எதிரொலிக்க உரக்க நகைத்து “பாஞ்சாலரே, என்னுடன் அந்த மதுக்கடைக் களிமகனையும் அருகே கழுவிலமரவைக்க விழைகிறேன். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் கள்வேதாந்தத்தைக் கேட்டு களித்திருக்க முடியுமல்லவா?” என்றான். வட்டமாகச் சென்ற மாளிகையின் படிகளில் ஏறியபடி “குருதி வேதாந்தம் என்று அவன் சொன்னானே, அதை இவரிடம் கேட்டுக் கொள்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி “அதை அவன் சொன்னானா இல்லை நான் சொன்னேனா?” என்றான். “யாரோ சொன்னார்கள் யாரோ கேட்டார்கள். இப்போது என்ன?” என்றபடி இடைநாழியில் இருவரும் நடந்தனர். அவர்களின் வலப்பக்கம் ஆற்றங்கரையின் மாபெரும் அடிமரங்களென எழுந்து மேலே சென்று எடைமிக்க கற்களாலான உத்தரங்களை சுமந்து நின்றன உருண்ட கற்தூண்கள். “சில சமயம் தூண்களை எண்ணி நான் இரக்கம் கொள்வதுண்டு” என்றான் சாத்யகி. “வாழ்நாள் முழுக்க எதையாவது சுமந்திருப்பது என்றால் எவ்வளவு கடினம்?… அந்த எடையை விட கடினம் அப்பொருளின்மை.” உரக்க நகைத்தபடி “என் மீது நான் சுமந்திருந்த எடைகளை தூக்கி வீசிவிட்டேன். கல் பறந்து போய் காற்றை உணரும் சருகு போல் நிற்கிறேன். அது என்னை அள்ளிச் சென்று முள் மேல் அமர வைக்குமென்றால் அங்கிருந்து எஞ்சிய காலமெல்லாம் நடுங்குவேன்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “துவாரகையில் நீர் நிறைய சூதர்க் களியாட்டுகளை பார்த்திருக்கிறீர். நன்கு சொல்லெடுக்கக் கற்றுள்ளீர்” என்றான். “என்னால் உயர்ந்த கவிதையை சொல்லிவிட முடியும். ஆனால் அரசுசூழ் மன்று ஒன்றில் ஊமையென நின்றிருப்பேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இப்போது நாம் செல்வது?” என்றான். “இது கவிமன்றா? அரசுமன்றா?” சாத்யகி “துவாரகையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. சுண்டிவிட்டு அவற்றை முடிவு செய்பவர் இவர்” என்றான். “அரசுமன்று என்றால் எனக்கு தெற்கு நோக்கிய கழுபீடம் கொடுங்கள் என்பேன். முன்னோர்களை நோக்கி முறைத்தபடி அமர்ந்திருக்க விழைகிறேன்.”

சாத்யகியை நோக்கி சிரித்தபடி திருஷ்டத்யும்னன் “கவிமன்று என்றால் இங்கொரு அலைவேதாந்தம் எழும். அது கடல்கீதை என்று அழைக்கப்படும். அதை சொல்பவன் மது அருந்தி தன் தெய்வத்தைத் தூக்கிப் பந்தாடும் ஒரு களிமகன். கேட்பவனோ தன் அடியாரின் கையிலொரு பந்தெனக் களிக்கும் தெய்வம்! நன்று” என்றான்.

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 3

கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. "வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ அத்தனை தெரிகின்றன.”

திருஷ்டத்யும்னன் ஒரு சிற்பத்தை நோக்கி நின்றான். கையில் ஏடும் இறகுமாக வெற்றுடலுடன் நடனக்கோலத்தில் நின்ற தெய்வம் விழிகளை தொலைதூரம் நோக்கித் தீட்டியிருந்தது. “இந்த தெய்வத்தின் சிலை அங்கே களியாட்டுமன்றிலும் உள்ளது. ஹெர்மியர் என்று அவர்கள் சொல்கிறார்கள். எழுத்தின் தெய்வம்” என்றான் சாத்யகி. கைசுட்டி “அதுவும் அவரே. எல்லைகளுக்கும் பயணத்திற்கும் ஹெர்மியர்தான் தெய்வம்.” அங்கே கையில் பயணத்திற்கான இரட்டை நாகங்கள் சுற்றிய சிறகுள்ள கோலும் தொலைவு நோக்கி சுட்டும் விரலுமாக அது நின்றது. கால்களிலும் சிறகுகள்.

ஆமைமேல் ஒரு கையை வைத்து சாய்ந்து நிற்கும் இன்னொரு சிலையைச் சுட்டி “கடற்பயணங்களை அமைப்பவரும் அவரே” என்றான் சாத்யகி. “நிகரற்ற மாயம் கொண்டவராக அவரை சொல்கிறார்கள்.” குதிரைலாட வடிவிலான நரம்பிசைக் கருவியை நெஞ்சோடு சேர்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றார். அப்பால் தோளில் ஒரு செம்மறியாட்டை தூக்கியபடி நிற்கும் சிலையைச் சுட்டி “அவரும் ஓர் ஆட்டிடையன் என்கிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்போதுதான் அச்சிலைகளை யவனர் அங்கு அமைத்தது ஏன் என சித்தத்தில் தெளிவடைந்தான்.

ஒவ்வொரு படி ஏறுகையிலும் சாத்யகியிடமிருந்து முற்றிலும் தனித்து விலகலானான். அவனது சொற்கள் மிக அப்பாலென ஒலித்தன. இறுதிப்படி முற்றிலும் தனித்திருந்தான். சாத்யகியும் அவ்வண்ணமே உணர்ந்தவன் போல அவனிடமிருந்து முடிந்தவரை விலகிக்கொண்டான். உப்பரிகைக்கூடத்தின் வாயிலில் நின்ற இரு காவலரும் அவர்களைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே செல்லும்படி பணித்தனர். திருஷ்டத்யும்னன் அவ்வாயிலைக் கடக்குமுன் ஒரு கணம் நின்றான். தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உரைப்பதற்குரிய சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து கோத்து திரட்டி வைத்திருந்தான். அப்போது எத்தனை தேடியபோதும் அவை எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை.

அந்தத் திணறல் அவன் உடலை எடை கொள்ளச் செய்தது. கணுக்கால்கள் கடுத்து உடல் ஒரு பக்கமாக சாய்ந்தது. தன் உடலை நிலை நிறுத்திக்கொண்டு நீள் மூச்சுடன் உறைந்தகால்கள் மேல் அசையாமல் நின்று பின்பு அசைத்து பெயர்த்து எடுத்துவைத்து உள்ளே சென்றான். உள்ளம் ஒரு சொல் இன்றி வெறும் பதைப்பு மட்டுமாக இருந்தது. கூடத்திற்குள் இளைய யாதவர் கடலை ஒட்டிய கைப்பிடியின் அருகே போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரைச்சுற்றி சிறிய அணிப்பீடங்களில் எட்டு அரசியரும், சுபத்திரையும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் உள்ளே நுழையும்போது அக்ரூரர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு அவர்கள் அனைவரும் திரும்பி நோக்க திருஷ்டத்யும்னன் அப்பார்வைகளை விலக்கி தலைகுனிந்தான். சாத்யகி தன்னைத் தொடரவில்லை என உணர்ந்து திரும்பி நோக்க அவன் அறை வாயிலிலேயே நின்று விட்டிருப்பதை கண்டான். அக்ரூரர் அவனை உள்ளே வரும்படி கையசைத்தார். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. தலை வெம்மை நோய் கண்டவன் போல ஆடியது.

எட்டு அரசியரும் அங்கிருப்பார்களென்று திருஷ்டத்யும்னன் எண்ணவில்லை. அரசியருடனிருக்கையில் தங்கையையும் அமைச்சரையும் ஏன் அழைத்தார் என்று எண்ணிக் கொண்டான். மீண்டும் சாத்யகியை திரும்பி நோக்கினான்.

இளைய யாதவர் சாத்யகியை நோக்கி “வா இளையோனே, நீ இங்கு வரும்போது விழைந்தது போல் ஒரு இனிய விளையாட்டுக்கென இங்கு கூடியுள்ளோம்” என்றார். சாத்யகி “இல்லை... நான்...” என்று சொல்லத்தொடங்கி இரு கைகளையும் கூப்பியபடி “நான் கள்ளருந்தியுள்ளேன் அரசே” என்றான். இளைய யாதவர் நகைத்தபடி “ஆம், அங்கு எனது இனிய மாணவன் ஒருவன் உங்களை சந்தித்திருப்பான். குசலனும் நானும் இணைந்து பல நாடுகளுக்கு சென்றுள்ளோம். பல முனிவர்களை சீண்டி இழிசொல்லும் தீச்சொல்லும் பெற்று தப்பியோடியிருக்கிறோம். அவன் நாவில் வாழும் கலைமகள் இரு கைகளிலும் சாட்டையை ஏந்தியவள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “ஆம் அரசே, அவரிடம் பேசும்போது எவ்வகையிலோ தங்களை அறிந்தவர் அவரென்று தோன்றியது” என்றான். அந்தப்பேச்சு அவனை இறுக்கத்திலிருந்து மீட்டது. “என்னை நன்கறிந்தவன் அவன்” என்றார் இளைய யாதவர். சாத்யகி பீரிட்ட அழுகையோசையுடன் “அரசே, நான் அவச்சொல் சொன்னேன். உங்களிடம் களியாடவேண்டுமென்று சொன்னேன். என் நெஞ்சில் கட்டாரியை குத்தி இறக்கும் வலியை விழைந்தே அவ்வண்ணம் சொன்னேன்” என்றான்.

இளைய யாதவர் உரக்க நகைத்தபடி எழுந்து “மூடா, நீ நானறியாத ஒரு சொல்லையேனும் சொல்ல முடியுமென்று எண்ணுகிறாயா?” என்றார். “இல்லை” என்றான் சாத்யகி. பின்பு திரும்பி ஓட விழைபவன் போல இரண்டு அடிகளை பின்னால் எடுத்து வைத்து அங்கிருந்த சுவரில் முட்டிக் கொண்டு கைகளைத் துழாவி அதை பற்றிக்கொண்டான். அவனை அணுகிய இளைய யாதவர் “மூடா மூடா” என்றபடி அவன் தோளில் கை வைத்து தழுவி இறுக்கி அணைத்துக் கொண்டார்.

“எந்தையே! எந்தையே!” என்றழைத்தபடி அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டான் சாத்யகி. “என்னிடம் ஏன் இப்படி விளையாடினீர்? என்னை ஏன் ஆராய்கிறீர்?” என்று தோளில் அழுந்திய உதடுகள் மூச்சில் வெம்மை கொள்ள அவன் கேட்டான். “உன்னிடம் அன்றி எவரிடம் விளையாடுவேன்? நீ எனக்காக ஐந்து தொழும்பர் குறிகளைச் சுமப்பவன் அல்லவா? உனக்கு இங்கு நிகர் எவர்?” சாத்யகி திகைத்து தலைதூக்கி நோக்கினான். இமைகளில் கண்ணீருடன் அவன் கண்கள் சுருங்கின.

“இளையோனே, ஒவ்வொருவரும் தன் எல்லையை தன்னுள் ஒவ்வொரு கணமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். அறிந்து வகுத்துக் கொள்பவனே அறிஞன் என்கிறோம். கடக்கத் துணிபவனே யோகி.” சாத்யகி “என் எல்லை என்னை அச்சுறுத்துகிறது எந்தையே” என்றான். “அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. தெய்வங்களுக்கு உகந்தது, தூயது” என்றார் இளைய யாதவர்.

“இளையோனே, இப்புவியில் ஒவ்வொரு உயிரும் தன்னை முழுதறியும் இறையாணையைப் பெற்றே வந்துள்ளது. தன் இருளையும் ஒளியையும் அறிந்து இருளென்றும் ஒளியென்றும் அமைந்திருக்கும் ஒன்றை அணுகுபவன் விடுதலை அடைகிறான். வருக!” என்று அவன் தோளை அணைத்து அழைத்து வந்தார். அருகே நின்ற திருஷ்டத்யும்னனை பிறிதொரு கையால் தோள் வளைத்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அரசியர் நடுவே சென்று அங்கிருந்த பீடங்களைக் காட்டி “அமர்க!” என்றார்.

இருக்கையில் அமர்ந்தபோது திருஷ்டத்யும்னன் தன் உடல் நீர் நிறைந்த பெருந்தோற்கலம் என உணர்ந்தான். எடையுடன் அவனை பீடம் நோக்கி அழுத்தியது. நாற்புறங்களிலும் ததும்பி அலை குலுங்கியது. திவலை எழுந்து தொண்டையைக் கரித்து மூக்கை அடைந்தது. இதழ்களை இறுக்கி தன்னை செறிவாக்கிக் கொண்டான். மழை நனையும் தவளை இலை மேல் அமர்ந்திருப்பது போல பீடத்தின் விளிம்பில் தொற்றி அமர்ந்து உடல் குறுக்கி தலைகுனிந்து அழுது கொண்டிருந்தான் சாத்யகி. மடிமேல் கோட்டிய கைகளில் விழிநீர் உதிர்ந்து கொண்டிருந்தது. பனையோலை கிழிபடும் ஒலியில் அவ்வப்போது விசும்பினான்.

திருஷ்டத்யும்னன் சூழ்ந்திருந்த அரசியரின் முகங்களை நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வு நிலையில் புல்நுனியில் பனித்துளி என உடலில் திரண்டெழுந்த விழிகள் கொண்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருக்கும் முறையிலேயே உள்ளம் அமைந்திருக்கும் வகை தெரிவதை விந்தையுடன் நோக்கினான். இரு கைகளையும் பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்து சிம்ம முகப்பை இறுகப்பற்றியபடி விரைப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் சத்யபாமா. அருகே கழற்றி கைபோன போக்கில் போடப்பட்ட பட்டுச்சால்வை போல பீடத்தில் வளைந்து அமர்ந்திருந்தாள் லக்ஷ்மணை. அவளருகே பத்ரை பீடத்தின் நுனியில் முழங்கால்கள் மேல் கைகள் வைத்து வேட்டைக்கு எழ சித்தமான சிறுத்தை போல் அமர்ந்திருந்தாள்.

பீடத்தை நிறைத்த கரிய உடலுடன் குழைந்த மண்ணில் செய்த சிற்பம் போல் அமர்ந்திருந்தாள் ஜாம்பவதி. ஆடை நுனியைப் பற்றி விரல்களால் சுழற்றியபடி கால் கட்டை விரலை தரையில் நெருடியபடி ருக்மிணி அமர்ந்திருக்க எங்கிருக்கிறோமென்றே அறியாதவள் போல மித்திரவிந்தை இருந்தாள். அவளருகே நக்னஜித்தி சலிப்புடன் என சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். எழுவரும் முதல்நிரையில் அமர்ந்திருக்க அவர்களுக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் தன்னை இளையவரிடமிருந்து ஒளித்துக்கொள்பவள் போல காளிந்தி அமர்ந்திருந்தாள்.

திருஷ்டத்யும்னன் அவளை முதலில் பார்க்கவேயில்லை. இருக்கும்போதே அங்கு தன்னை இல்லாதது போல் ஆக்கிக் கொள்ளும் கலை ஏவலருக்கு எளிதில் வருவது. அடிநிலை மாந்தர் அனைவரும் கற்றுக் கொள்வது. உள்ளம் மறைக்கப்படும்போது உடலும் மறைந்துபோகும் விந்தை அது என திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. அவள் உடலும் முகமும் விழிகளும்கூட அடிநிலை மாந்தருக்குரியதென தோன்றியது. அணிந்திருந்த அரச உடையை அவள் உடல் நாணியது போல் தெரிந்தது. கொடைநாளில் மட்டும் பட்டுசுற்றும் காட்டுத்தெய்வம் போல.

தோளிலிருந்து சரிந்த மேலாடையை வலக்கையால் சுற்றி இடையுடன் அழுத்திப் பற்றியிருந்தாள். கரிய வட்ட முகத்தில் நிறைந்த நீள் விழிகள். சிறு மூக்கு. குவிந்த சின்னஞ்சிறு உதடு. நீள்கழுத்து. அவள் நீளக்கைகள் காளிந்தியில் துடுப்பிடுவதற்கு உகந்தவை என்று அவன் எண்ணிக் கொண்டான். அக்கணமே அவள் பீடத்தில் அமர்ந்திருந்ததுகூட நீரில் செல்லும் படகொன்றில் உடலை நிமிர்த்தி தோளை நிகர் நிலையாக்கி இருப்பது போல் தோன்றியது. உடனே அவ்வெண்ணத்திற்காக சற்று நாணினான்.

இளையவர் சாத்யகியிடம் “இங்குள ஒவ்வொன்றையும் நான் முழுதறிகிறேன் இளையோனே. ஏனென்றால் நானன்றி எதுவும் இந்நகரில் இல்லை. மாளிகை முகடுகளில் பறக்கும் கொடிகளின் பட்டொளியும் இருண்ட கழிவு நீர் ஓடைகளில் எழும் சிற்றலையும் நானே. இந்நாள்வரை நீயென ஆகி நடித்ததும் நானே” என்றார். புன்னகையுடன் கை நீட்டி சாத்யகியின் தொடையைத் தொட்டு “நான் என ஆகி நீ நடித்ததையும் நான் அறிவேன்” என்றார்.

சாத்யகியின் உடல் குளிர்ந்த நீர்த்துளி விழுந்ததுபோல் சற்று அதிர்ந்தது. ஆனால் அவன் விழி தூக்கவில்லை. திருஷ்டத்யும்னன் அங்கிருந்த ஏழு அரசியரும் இளைய யாதவர் சொல்லப்போகும் பிறிதொன்றுக்காக காத்திருக்கிறார்கள் என்று உய்த்துக் கொண்டான். அங்கு அவர்கள் அதற்கெனவே வந்திருக்கிறார்கள். அமர்ந்த பின் ஒவ்வொரு கணமும் அதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவரோ அவர்களின் எதிர்பார்ப்புகளை தன் கைகளால் எற்றி விளையாடுகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர்களின் எதிர்பார்ப்பை நகையாடுகிறது.

சத்யபாமா மேலும் மேலும் சினம் கொண்டு வருவதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கொதிகலனில் இருந்து வெம்மை பரவுவதுபோல் அவள் உடல் கதிர் வீசிக் கொண்டிருந்தது. அவன் மீண்டும் காளிந்தியை நோக்கினான். பொன்நகைகளுக்கு அடியில் தன் இருகைகளிலும் அவள் இரும்பு வளையல்கள் இரண்டை அணிந்திருந்தாள். மச்ச நாட்டிலிருந்து யாதவப் பேரரசனை மணம் கொண்டு அரசியென தலைநகர் புகுந்து பாரதவர்ஷத்தின் பெருமாளிகையில் அமைந்த பின்னரும் அதை அவள் கழற்றவில்லை என்பது வியப்பளித்தது.

ஆனால் வியப்பதற்கொன்றுமில்லை என்ற எண்ணம் மீண்டும் வந்தது. இங்கிருந்து எழுந்து சென்று மீண்டும் காளிந்தியில் பகலும் இரவும் படகோட்ட இவளால் இயலும். மீன் கணங்கள் அனைத்தையும் அறிந்திருப்பாள். அலை நுட்பங்களும் அவற்றில் ஆடும் காற்றின் கணக்குகளும் காற்றை ஊதி விளையாடும் விண்ணின் மீன் நிரைகளையும் அறிந்திருப்பாள். இந்நகரம் கூட பெரு நதியொன்றில் மிதந்து செல்லும் சிறு படகென்றே அவளுக்கு பொருள்படும்.

அப்போது தெரிந்தது, அவள் அவர்களுக்குப்பின் ஒளிந்து அமர்ந்திருக்கவில்லை என. படகின் பின் இருக்கையில் அமர்ந்து இரு கைகளாலும் துடுப்பிட்டு அதை அவள் முன் செலுத்துகிறாள். என்ன உளமயக்கு இது என அவன் புன்னகையுடன் தன்னை நோக்கி வினவினான். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன்? நக்னஜித்தி விழிகளால் மித்திரவிந்தையிடம் ஏதோ வினவ அவள் இல்லை என்று கருவிழிகளை மட்டும் அசைத்து சொல்லி விலகுவதை கண்டான். லக்ஷ்மணை ஓர் எண்ணத்திலிருந்து மெல்லிய உதட்டுப்பிதுக்கம் வழியாக இன்னொன்றுக்கு சென்றாள். சத்யபாமா வழுக்கும் கைகளை சிம்மத்தலையில் ஒருமுறை உரசிக்கொண்டாள். காற்று சுடரில் அசைவைக் காட்டுவது போல ஒவ்வொருவரின் எண்ணங்களும் அக்கணமே உடலில் திகழ்ந்தன.

திருஷ்டத்யும்னன் அங்கிருந்து விலகிச் செல்ல விழைந்தான். வரும் போதிருந்த உணர்வுகளும் அதற்கேற்ப கோத்து உருவாக்கப்பட்ட சொற்களும் நெடுந்தொலைவில் எங்கோ கிடந்தன. நினைவுகளில் துழாவி உடைசல்களையும் சிதிலங்களையும் என அவற்றில் சில பகுதிகளை மட்டுமே மீட்க முடிந்தது. அங்கு உணர்வு நில்லா இளையவன் போல அமர்ந்திருந்தான். இந்த நாற்கள விளையாட்டின் மறுபக்கம் அமர்ந்திருக்கும் இவரோ தன்னையும் ஒரு பேதையென்றாக்கி முன் வைக்கிறார். பேதையென்றும் பித்தனென்றும் ஆகாமல் இவருடன் களம் நின்று காய்கோக்கவே எவராலும் இயலாது.

எட்டு திருமகள்கள், எட்டு வகை பேரழகுகள், எட்டு குன்றாச்செல்வக் குவைகள் இவர்கள் என்கின்றனர் சூதர். எட்டு முகம் கொண்டு எழுந்த விண் நிறைந்த பெருந்திரு. அது அறிந்திருக்குமா இவன் யாரென்று? அறிந்தபின்னரும் மாயை என்ற பொற்சித்திரப்பட்டுத்திரை அதை மூடியிருக்குமோ?

திருஷ்டத்யும்னன் காலடியில் பாம்பு ஒன்று இருக்கும் உணர்வு எழுவது போல சியமந்தகம் தன் இடையில் இருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை ஓர் உடலதிர்வாகவே அடைந்து இருக்கையிலிருந்து சற்று எழுந்துவிட்டான். இளைய யாதவரன்றி பிறர் விழிகளனைத்தும் அவனை நோக்கி திரும்பின. அதை உணர்ந்து அவன் இருக்கையில் சற்று பின்னால் சாய்ந்தான். இத்தனை நேரம் அதை மறந்துவிட்டிருந்ததன் விந்தை அவனை ஆட்கொண்டது. இத்தனை சொற்களும் நகையாட்டுகளும் அதை மறப்பதற்குத்தானா என்று எண்ணிக் கொண்டான்.

அதை உணர்ந்த உடனேயே அவன் இடைக் கச்சை இரும்பாலானது போலாயிற்று. பின்பு எரியும் அனல் போல் அது அவன் வயிற்றைத் தொட்டது. மெழுகை அனல் துளி போல் எரித்துக் குழைந்து உட்சென்றுகொண்டே இருந்தது. அதை எடுத்து பீடத்தின் மேல் வைக்க வேண்டுமென்றே எண்ணினான். அவ்வெண்ணம் பிறரெவரோ எண்ணுவது போல் எங்கோ இருந்தது. தொடர்பின்றி அவன் உடல் அங்கிருந்தது. அதை அவரிடம் அளித்துவிட வேண்டும், என்ன நிகழ்ந்தது என்று சொல்லி தன் எண்ணமென்ன என்று உரைத்துவிடவேண்டும். ஆனால் அதற்குரிய ஒரு சொல்கூட அவனிடம் இருக்கவில்லை. செய்யக்கூடுவது கச்சையுடன் அப்பேழையை எடுத்து அவர் முன் வைப்பதொன்றே.

ஆனால் சூழ்ந்திருந்த அரசியர் விழிநடுவே அதை தன்னால் செய்யமுடியாதென்று உணர்ந்தான். அவர்கள் ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு விதமாக எண்ணிக் கொள்வார்கள். அவன் அதை கவர்ந்து சென்றதாகக்கூட எவரேனும் எண்ணக்கூடும். அனைத்தும் அவன் ஆடிய ஆடலே என மயங்கக்கூடும். எண்ண எண்ண அவன் உருமாறி கள்வனென ஆகி வந்து நின்றான். சியமந்தகத்துடன் துவாரகையை விட்டு தப்பி ஓட முயன்ற அவன் சூழ்ந்த பாலையில் தொடு வானை நோக்கி திகைத்து நின்றபின் திரும்பி வந்திருக்கிறான்.

திகைத்து அவன் அக்ரூரரை நோக்கினான். சியமந்தகத்துடன் தப்பி காசிக்கு ஓடியதும் அவனேதானா? அதை கவர்ந்தமைக்காக வெற்றுடலுடன் தேர்த்தட்டில் அமர்ந்து அவை முன் வந்து குனிந்து விழுந்ததும் அவன்தானா? படையாழியால் கழுத்து வெட்டுப்பட்டு துடித்து விழுந்ததும் அவனேதானா?

என்னென்ன உளமயக்குகள்! இவற்றை என் முன் ஏதும் அறியாதவர் போல் அமர்ந்திருக்கும் இவர்தான் உருவாக்குகிறாரா? அனைவர் விழிகளும் தன் மேல் குவிந்திருப்பது போல் உணர்ந்தான். ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். எவரும் அவனை பார்க்கவில்லை. பின்னர் உணர்ந்தான், அவர்கள் அவனிடமிருந்து விழியை திட்டமிட்டு திருப்பி வைத்திருக்கிறார்கள் என. ஒவ்வொருவரின் அகவிழியும் அவனில்தான் இருக்கிறது. அவனில் அல்ல, அவன் இடையில் அமிழ்ந்த சியமந்தகத்தில்.

இப்போது செய்வதற்குள்ளது ஒன்றே, அதை எடுத்து பீடத்தில் வைப்பது. ஆம், பிறிதொன்றுமில்லை. அவனிடம் சொல்வதற்கான சொற்களேதும் உள்ளத்தில் இல்லை. ஆனால் அதை எடுத்து அவ்வண்ணம் வைக்கும் போதே ஒவ்வொன்றும் நிறைவுற்றுவிடுகிறது. அதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது? எந்தையே, உன் உடல் ஒளிர்ந்து சொட்டிய ஒரு துளி என்னிடம் வந்தது. அதை ஏந்தியிருக்கும் தகுதியும் ஆற்றலும் எனக்கில்லை. இதோ உன் காலடியிலேயே திரும்ப வைத்துவிட்டேன். அருள்க! அதற்கப்பால் எச்சொல் சொன்னாலும் அது ஆடல் களத்தில் காய்களென்றே ஆகும்.

எண்ணி எங்கோ இருந்த அவன் முன் சதைப்பிண்டமென பீடத்தில் அமர்ந்திருந்தது அவன் உடல். தன் எண்ணத்திலிருந்து கை நீட்டி அவ்வுடலைத்தொட்டு அசைக்கமுயன்றான். குருதி முழுக்க கலந்து ஓடி விரல்நுனிகள்தோறும் துளித்து நின்ற கள்ளில் ஊறி குளிர்ந்திருந்தது உடல். இளைய யாதவரின் இதழ்கள் அசைந்து “சியமந்தகம்” என்று சொல்வதைக் கண்டு அவன் திடுக்கிட்டான். மாபெரும் கண்டாமணியின் நா அசைவது போல செவிப்பறை உடையும் பேரொலியுடன் மேலும் ஒரு முறை அவர் சொன்னார் “சியமந்தகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!”

சியமந்தகமா என்றவன் வியந்தபோது அவர் சொல்வது பிறிதொரு சொல்லென உணர்ந்தான். “இந்நாளில்தான்...” என்றார் இளைய யாதவர். “நான்காண்டுகளுக்கு முன்பு...” என்ன சொல்கிறார் என்று திருஷ்டத்யும்னன் திகைப்புடன் சாத்யகியை நோக்கினான். சாத்யகி முற்றிலும் அங்கிருந்து விலகி விட்டிருந்தான். கடலிலிருந்து வந்த காற்று அந்தக் கூடத்தை சூழ்ந்திருந்த சாளரங்களினூடாக திரைச்சீலைகளை பறக்கவைத்து உள்ளே வந்து சுழன்று சென்றது. மிகத்தொலைவில் என கடலோசை கேட்டுக் கொண்டிருந்தது.

“அன்று நானும் அஸ்தினபுரியின் இளையவனும் யமுனை ஆட முடிவு செய்தோம்” என்றார் இளைய யாதவர். “நீராடி கரை சேர்ந்து பாறை ஒன்றில் அமர்ந்திருக்கையில் இந்த நதியின் ஊற்று முகம் எது என்று அவன் கேட்டான். சற்று வேதாந்த விளையாட்டை ஆடலாமென்று முடிவு செய்தேன். இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான் என்றேன். அவனும் அவ்வாடலை நிகழ்த்த சித்தமாக இருந்தான். பாறையில் புரண்டு என்னை நோக்கி எவர் சொன்னது என்றான்.”

இளைய யாதவர் சொன்னார் “நான் சிரித்து, ‘இவ்வுலகுக்கு நான் சொல்கிறேன்’ என்றேன்.” “இந்த ஆற்றின் ஊற்று முகம் இந்நதியின் மையமாகும்” என்றேன். “இந்த ஆறு எதுவோ அது அந்த மையத்தில் இருக்கும். இந்த நதி அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. சுழன்று அதற்கே திரும்பி வந்துகொண்டிருக்கிறது.” அவன் எழுந்து தன் இடையாடையை சுற்றி இறுக்கி “அதையும் பார்த்துவிடுவோம்” என்றான். “எங்கு செல்கிறாய்?” என்றேன். “படகொன்றை எடுக்கிறேன். இந்நதியின் ஊற்று முகம் வரை செல்வோம். நீ சொன்னது உண்மையா என்று பார்த்துவிடுவோம்” என்றான்.

நான் சிரித்தபடி “வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன” என்றேன். சிரித்தபடி அவன் “இது இரண்டாவது வேதாந்த கருத்து. நான் நீ சொன்ன முதல்கருத்தை மட்டுமே விவாதிக்க விழைகிறேன்” என்றான். “வேதாந்திகள் மண்ணில் காலூன்றி நின்று கேட்பவனுக்கு வாலையும் தனக்குத் தலையையும் காட்டும் விலாங்குமீன்கள். அதற்காகவே சாமானியம் விசேஷம் என்று உண்மையை இரண்டாக பகுத்து விடுகிறார்கள்” என்றேன். “உண்மையை எப்படி இரண்டாக பகுக்க முடியும்?” என்றான். நான் “ஏன், முளைக்கத்தொடங்குகையில் விதை இரண்டாக ஆகிறதல்லவா?” என்றேன். “உன்னுடன் பேசி வெல்ல முடியாது” என்றான் அவன்.

“பார்த்தா, நிகழ்தளத்தில் உண்மை என்பது நுண்தளத்தில் மேலுண்மை ஆகிறது. பகுபடும் உண்மை முழுமையுண்மையின் ஆடிப்பாவை மட்டுமே. உண்மை மேலுண்மை மேல் அமர்ந்திருக்கிறது, அலை கடல் மேல் அமர்ந்திருப்பதைப்போல. அலை நோக்குபவன் கடல் நோக்குவதில்லை. கடல் நோக்குபவன் கண்ணில் அலையும் கடலே” என்றேன். “சொல்லாடலை விடு. நான் வீரன். என் வில்லும் அம்பும் இம்மண்ணில் மட்டுமே இலக்கு கொண்டவை. நீ சொன்னதை என் விழி காண வேண்டும். என்னுடன் எழுக!” என்றான். “சரி, அவ்வண்ணமே ஆகட்டும்” என்று எழுந்தோம்.

இருவரும் யமுனைக் கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அவிழ்த்துக் கொண்டோம். துடுப்புகளுடன் ஏறி ஒழுக்குக்கு எதிராக துழாவத்தொடங்கினோம். நான் “யோகமென்பது நதியை அதன் ஊற்று முகம் நோக்கி திருப்புதல். நாம் யோகவழியில் சென்று கொண்டிருக்கிறோமா?” என்றேன். “யாதவனே, இனி நீ ஆயிரம் சொல்லெடுத்தாலும் நான் ஒன்றையும் உளம்கொள்ள மாட்டேன். ஊற்று முகம் என்பது மையமாக ஆவது எப்படி? அதையன்றி பிறிதெதையும் கேட்க விழைகிலேன்” என்றான். சிரித்தபடி நான் “அவ்வண்ணமே ஆகுக!” என்றேன்.

கை சலிக்க துழாவி யமுனையின் எதிரோட்டத்தில் சென்றோம். செல்லுந்தோறும் ஒழுக்கின் விசை கூடிக்கூடி வந்தது. ஆழம் மறைந்து அலை மிகுந்தது. அமைதி அழிந்து ஓசை எழுந்தது. அந்தியில் அதன் நடுவே அமைந்த பாறை ஒன்றில் துயின்றோம். மீண்டும் காலையில் எழுந்து மீனும் கனியும் உண்டு படகிலேறி துழாவி யமுனை குகைவிட்டு அரசநாகம் என எழுந்து வரும் இருட்காடுகளுக்குள் நுழைந்தோம். அங்கே பாறைகளின் இடுக்கில் நாணலிட்டு மீன்பிடிக்கும் மலைமச்சர்களின் சிற்றூர்கள் நூறு உள்ளன. அவர்கள் நூலறியாதவர், முடியெதற்கும் வரிகொடுக்காதவர். அவர்களின் ஊர்களை இரவின் திரைக்குள் ஓசையின்றி கடந்து சென்றோம்.

பின்னர் அருவி என யமுனை மண்பொழியும் மலைச்சரிவை அடைந்து நின்றோம். படகை கரையணைத்து புதரொன்றில் கட்டியபிறகு கரையோர சதுப்பில் வளைந்து நீர்தொட்டு நின்றாடிய கிளைகளின் வழியாக தாவிச்சென்றோம். நச்சுதோய் வாளிகளும் நட்பிலா மொழியும் கொண்ட புளிந்தர்களின் எல்லையை கடந்தோம். புளிந்தவனம் ஆரியவர்த்தத்தின் முடிவு என்பார்கள். எனவே புதர் எழுந்து மூடிய இருண்ட காட்டில் எங்கள் உடல்கரைந்து மறைய காற்றென சென்றோம்.

கரிய பாறைகளுக்கு மேல் நுரை அலைத்து எழுந்தது. வெண்சுடர் நின்றெரியும் விறகுக்குவை என காளிந்தி. “இருளுக்கு மேல் வழியும் ஒளி” என்று இடையில் கை வைத்து அவன் சொன்னான். “இருளும் ஒளியுமான ஒன்று. நாம் அதன் தொடக்கத்தை காணச்செல்கிறோம்.” நான் சிரித்தபடி “வேதாந்தத்தை வணிகனின் துலாத்தட்டில் வைக்க எண்ணுகிறாய் பாண்டவனே” என்றேன். “டேய் யாதவா, இனி உன் ஒரு சொல்லையும் கேட்கமாட்டேன் என்று முன்னரே சொல்லிவிட்டேன். வாயைமூடிக்கொண்டு வந்து நீ சொன்னதை என் கண்ணுக்குக் காட்டு” என்றான் இளைய பாண்டவன்.

மரக்கிளைகளிலிருந்து மரக்கிளைகளுக்குத் தாவி பாறைகள்மேல் தொற்றி ஏறி சென்றுகொண்டிருந்தோம். பனிப்பெருக்காக காற்று வீசிய மலை உச்சிக்கு சென்றோம். தேவதாருக்கள் எழுந்த பெரும் சரிவில் இரவு தங்கினோம். மீண்டும் கரிய அமைதி என எழுந்த பெரும்பாறைகளினூடாக தாவியும் இடுக்குகளில் ஊர்ந்தும் சென்றோம். எங்கள் கால் பட்ட கூழாங்கற்கள் தவம் கலைந்து எழுந்து பாறைகளில் அறைந்து தங்கள் நெடும் பயணத்தை தொடங்கின. அவை அமைந்திருந்த பள்ளங்கள் விழிகளெனத்திறந்து திகைத்து நோக்கின.

“இம்மலை முற்றிலும் கருமை கொண்டிருக்கிறது. ஆகவேதான் இதற்கு களிந்தமலை என்று பெயர் போலும்” என்றான். நான்காவது நாள் இமயத்தின் மைந்தனாகிய களிந்தமலையின் உச்சியை அடைந்தோம். “களிந்தனின் விழிகளில் இருந்து வழியும் களிநீர் என்று காளிந்தியை சொல்கிறார்கள். இம்மலையின் முடிகளில் எங்கோ அது உள்ளது” என்றான். மேலும் ஒரு நாள் சிற்றோடை என பால் நுரைத்து சரிவிறங்கிக் கொண்டிருந்த யமுனையின் கரைப்பாறைகளினூடாக சென்றோம். அங்கே கம்பளி ஆடை அணிந்து வளைதடி ஏந்தி செம்மறி மேய்த்துக் கொண்டிருந்த மலைமகன் ஒருவனை கண்டோம். அவனிடம் பொன் நாணயமொன்றை கொடுத்து களிந்தவிழியை காட்டும்படி கோரினோம்.

குளிரில் உறைந்து இருள்குவை என விரிந்திருந்த கரும்பாறைகளினூடாக சிற்றோடைகள் வழிந்து பாசி படிந்த பாதையில் எங்களை அம்மலைமகன் அழைத்துச் சென்றான். தன் சிற்றிளமையில் தன் தந்தையுடன் ஒரே ஒரு முறை அவன் களிந்த விழியை கண்டிருந்தான். அங்கு யமுனை வெண்பட்டுச் சால்வையென பாறைகள் நடுவே சுழித்தும் கரந்தும் வளைந்தும் கிடந்தது. அதன் ஓசை அத்தனை பாறைகளில் இருந்தும் எழுந்து கொண்டிருந்தது. முழவுகள் என முரசுகள் என முழங்கும் பாறைகள் நடுவே நாங்கள் சொன்ன சொற்களெல்லாம் புதைந்து மறைந்தன. பின் உள்ளமும் சொல்லிழந்தது.

பகல் அந்தியாவது வரை நடந்து களிந்தவிழி கனிந்த துளிகள் மண் தொடும் முதற் புள்ளியை அடைந்தோம். அங்கு அகத்திய முனிவர் நாட்டிய சிற்றாலயம் இருந்தது. கல்பீடத்தின் மேல் தோளிலேந்திய நிறைகலம் தளும்ப நீந்தும் ஆமை மேல் அமர்ந்திருந்த யமுனை அன்னையை கண்டோம். குளிர் நீரள்ளிப் படைத்து அவளை வணங்கிவிட்டு மேலேறினோம். நூறு பாறை இடுக்குகள் வழியாக தொற்றி ஏறி மேலே சென்றோம். வான்தொட நின்ற பெரும் பாறையொன்றின் மேல் விரிந்த வெடிப்பில் கால் பொருத்தி வரையாடுகளைப்போல் ஏறி மேலே சென்றோம்.

முதலில் சென்ற மலைமகன் நின்று தான் அணிந்திருந்த மயிர்த்தோலாடையை இறுகக் கட்டிவிட்டு எங்களை நோக்கி மேலே வரும்படி கையசைத்தான். நான் ஏறிய பின் கை கொடுத்து பார்த்தனை ஏற்றிக் கொண்டேன். மேலே ஏறியதும் சூழ்ந்திருந்த முகிலன்றி ஏதும் தெரியவில்லை. மலை உச்சியிலா மண்ணிலா எங்கு நிற்கிறோம் என்று உணரக்கூடவில்லை. “யாதவனே, என்ன தெரிகிறது?” என்றான் பார்த்தன். “காத்திருப்போம். சற்று நேரத்தில் இம்முகில் விலகும்” என்றேன். மலைமகன் அவனது மொழியில் “அரைநாழிகை நேரம்” என்றான்.

காற்று பல்லாயிரம் கைகளுடன் எங்களை அள்ளி வீச முயன்றது. தொலைதூரத்து மலை இடுக்குகளில் பனியை அள்ளிக் குவிக்கும் அதன் ஓசையை கேட்டோம். முகில் அடர்நிறம் மாறுவது தெரிந்தது. கலங்கிய நீர் தெளிவது போல் அது ஒளிகொண்டது. பின்பு அதில் ஒரு பகுதி விரிசலிட்டு விலகி வடக்காக எழுந்து சென்றது. அவ்விடைவெளியில் குளிர்ந்த ஒளிப்பெருக்கென சூரியனை கண்டேன். ஒளி மிகுந்து வந்தது. எங்கள் காலடியில் தாழ்வறை ஒன்று பிறந்தது. கரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் சரித்துவைத்த ஆடி போல வெண்ணிற பனித்தகடு ஒன்றை கண்டேன். வெயில் பட்டபோது சதை நீக்கிய முத்துச்சிப்பியென அது வானவிற்களை சூடியது.

மலைமகன் கை நீட்டி “களிந்த விழி” என்று சுட்டிக் காட்டினான். அப்பெரிய பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை கண்டேன். அது நிறைந்து வழிந்த நீலக்கோடு வளைந்து சரிந்திறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. இந்திரநீல விழி ஒரு கணமும் நோக்கு விலக்க ஒண்ணாத ஈர்ப்பு கொண்ட முதல் முழுமையின் கண். பார்த்தன் என் தோளைத் தொட்டு “அவ்விழிக்கு அப்பால் அது என்ன?” என்றான்.

அந்நீலவிழிக்கு அப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்தது. “அவனிடம் கேள்” என்றேன். “இளையோனே, அது என்ன?” என்றான் பார்த்தன். “கடலிலிருந்து வரும் முகில் அது. மண் தொடா நதி. நதி விண்ணில் வழிந்து இங்கு பெய்து களிந்தவிழியை நிரப்புகிறது.” மலைமகன் கைநீட்டி சொன்னான் “அங்கு வரும் நீர்தான் இங்கு காளிந்தியாக செல்கிறது.”

பார்த்தன் மூச்சிழப்பதை கண்டேன். “அது கடலை அடைகிறது என்கிறார்கள்” என்றான் மலைமகன். “அந்தக்கடலும் நீலம் என்கிறார்கள்.” மெல்ல திரும்பி நோக்கிய பார்த்தன் முகில்வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தைத் தொட ஒரு மாபெரும் வட்டத்தை கண்டான். என் கைகளைப்பற்றிக் கொண்டு “இப்போது கண்டேன், தொடக்கம் எதுவும் மையமே” என்றான்.

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 4

இளைய யாதவரின் குரலை திருஷ்டதுய்ம்னன் விழிகளால் என கேட்டிருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது

யமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம் பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம் பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். ஒற்றை நிலவு மட்டும் நீராடிய அலைப்பரப்பின் மேல் ஒரு சொல் எஞ்சியிராது ஒழுகினோம். பின்பு ஒரு கணத்தில் தன் உள்ளம் பொறாதவன் போல் அவன் எழுந்து இரு கைகளையும் விரித்து ”எத்தனை வெளிப்படையான பேருண்மை! இங்குள்ள ஒவ்வொன்றும் தொடக்கமே. தொடக்ம் ஒவ்வொன்றும் மையமே. மையங்களால் மட்டுமானது இப்புடவிப் பெருவெளி.” என்றான். பின்னர் ஒவ்வொன்றாக நோக்கி “இத்தனை நோக்கியும் இதை உணர முடியாமலாக்கிய மாயம்தான் என்ன?” என்றான்.

“நீ வேதாந்தத்தை போதிய அளவு அருந்தி விட்டாய் .இனி மலர்மாந்திய தேனீ போல உன் இல்லத்திற்கு திரும்பு. உன் கூட்டின் கலவறையில் அதை உமிழ் அங்கிருந்து அது நுரைக்கட்டும். இல்லையேல் உன் சிறகுகள் நனைந்து இற்றுவிடும்” என்றேன். “இல்லை, யாதவனே, இப்பேருண்மையைத் தாங்கியபடி என்னால் நிற்க முடியவில்லை. இதன் எடையால் என் ஒவ்வொரு உயிர்க்காலும் அழுந்துகிறது.என் தலை வெடித்து நெற்றிப்பொட்டினூடாக அனல் பீறிடுமென்று தோன்றுகிறது.” என்றான்.

அக்கணமே இரு துடுப்புகளையும் அசைத்து படகைக் கவிழ்த்துவிட்டேன். நீரில் விழுந்து சுழலில் இழுபட்டு மூழ்கிச் சென்ற அவன் எழுந்து நீருமிழ்ந்து “என்ன செய்கிறாய் மூடா?” என்றான். “தூயவேதாந்த்ததால் நீந்த முடியாது பார்த்தா, உன் கைகளாலேயே முடியும்” என்றபடி நானும் நீந்தினேன். என்னைத் தொடர்ந்து அவன் வந்தான் சுழற்றி அடித்த அலைகளை தோள் வல்லமையால் மீறி இருவரும் கரை சேர்ந்தோம் சேற்றில் நடந்து கரை அணைந்து நாணல் மண்டிய மணல் மேல் நின்றேன் சிரித்தபடி ஏறி வந்து சிரித்தபடி “ஆம் பித்தம் தெளிந்தது, இந்நதியை என் கைகளால் நீந்தி வந்தேன்” என்றான் நான் நகைத்து ”பாண்டவனே,நதியையும் நான் வேதாந்த்ததாலேயே நீந்திக் கடந்தேன்” என்றேன்.

இருவரும் மணல் மேட்டில் ஏறி அங்கிருந்த குறுங்காட்டை அடைந்தோம் ”பசிக்கிறது நான் இங்கு விளைந்த கனிகளை உண்கிறேன் நீ வேதாந்தத்தை உண்” என்றான். “ஒவ்வொருவரும் உண்பது தங்கள் உள்ளே விளைந்த அமுதை மட்டுமே” என்றேன் .”யாதவனே உன்னிடம் சொல்லாட இனி எனக்கு உள்ளமில்லை. பசியாறிய பின்னரே என் செவிதிறக்கும்” என்று சொல்லி அருகே நின்ற அத்தி மரம் ஒன்றில் அவன் ஏறினான் கீழே நான் நின்றிருந்தேன் மரத்தின்மேலிருந்து பார்த்தன் வியப்புடன் ”யாரிவள்?” என்றான்.

“யார்?” என்றேன். “ஒரு பெண்…. மஞ்சள் ஆடை அணிந்து அடர்காட்டினூடாகச் செல்கிறாள்” என்றான். ”அது சிறுத்தையாக இருக்கும். அல்லது பூத்த கொன்றை. உனக்கு வண்ணமேதும் பெண்ணே” என்றான். அவன் குனிந்து “உனக்கு?” என்றான். “பெண் ஏதும் வண்ணமே” என்று சிரித்தேன். “ஒரு பெண், ஐயமில்லை. இவ்வேள இவ்வேளையில் இங்கு எவர் வருவார்கள்? கந்தர்வ பெண்ணோ வன தேவதையோ?” என்றான். அவள் கால்கள் மண்தொடுகின்றனவா என்றேன்.அவன் ‘ஆம், மண் தொட்டுதான் நிற்கிறாள். காய்கனி கொய்கிறாள்” என்றான். “அவளிடம் சென்று எவளென்று அறிந்து வருக” என்றேன்.

யக்கமில்லாமல் பெண்ணிடம் பேச பார்த்தனைப்போல் என்னாலும் இயல்வதில்லை. மரத்திலிருந்து இறங்கி புதர்களை விலக்கிச் சென்று அவளை அணுகினான். அவள் அவனைக் கண்டு திகைத்து ஓடமுயல எளிதில் தாவி வழிமறித்தான். அவள் அவனை கந்தர்வன் என எண்ணி அஞ்சுவது தெரிந்தது. அவன் நிலத்தில் காலை ஊன்றி தன்னை மானுடன் என்று காட்டினான். தன் தோளில் பொறிக்கப்பட்ட குலக்குறியைக் காட்டி தன்னை அறிமுகம் செய்தான். அச்சொற்களினூடாக அவள் அழகை புகழ்ந்திருப்பான் என அவள் முகம் கொண்ட நாணம் காட்டியது. விழிகள் அலைய, உடல் காற்றிலாடும் கொடியென உலைய, அவள் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டாள். கொடிநுனியைப் பற்றி கைகளால் சுழித்தபடி கன்னத்துக் குழல்சுருள் அலைபாய தலையசைத்து முகவாய் தூக்கி விழிகள் படபடக்கப் பேசிக்கொண்டிருந்த அவளை நோக்கி நான் காத்து நின்றேன்.

நெடுநேரம் கழித்து அவன் அருகே வந்தான். “யாதவரே, அவள் பெயர் கார்க்கி.. இப்பகுதியின் எழுபத்திரண்டு மச்சர்குலங்களுக்கு அரசனாக உள்ள சூரியன் என்பவளின் இரண்டாவது மகள். அவள் தமக்கைபெயர் காளிந்தி. அவள் இங்கே ஒரு நாணல்மேட்டில் அமைந்த சிறுகுடிலில் ஏழாண்டுக்காலமாகத் தவம்செய்கிறாளாம்” என்றான். “எதன்பொருட்டுத் தவம்?” என்றேன். “வேடிக்கையாக இருக்கிறது. அவளுக்கு ஏழுவயதாக இருக்கையில் ஒரு முதுவைதிகன் இங்கு வந்திருக்கிறான். அவள் பிறவிநாளை கணித்து அவள் விண்ணாளும் திருமகளின் மண்வடிவம் என்றானாம். அவள் சந்தானலட்சுமி என்றும் அவளுக்கு நூற்றெட்டு மைந்தர் பிறப்பார்கள் என்றும் சொல்லி கைநிறைய பொன் பெற்றுச் சென்றிருக்கிறான்”

“வைதிகர் சொல்லறிந்தவர்கள்” என நகைத்தேன். “ஆம். இந்த மச்சர்கள் இப்போதுதான் மீனை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். படகோட்டி புளிந்தபுரிக்குச் சென்று மீன்கொடுத்து பொருள்கொண்டு மீள்கிறார்கள். அங்குள்ள கோட்டைகளையும் மாளிகைகளையும் படைகளையும் கலைகளையும் காண்கிறார்கள். அவர்களுக்குள் எழும் விழைவை பொன்னாக்கிக்கொள்ள வைதிகர் தேடிவந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பார்த்தன் “பாவம், இந்தபெண் அதை அவ்வண்ணமே நம்பிவிட்டிருக்கிறாள். தன்னை திருமகள் என்றே எண்ணிக்கொண்டு மண்ணில் எந்த மானுடரையும் மணக்கமாட்டேன், விண்ணளந்த பெருமாளுக்கே துணைவியாவேன் என்று உறுதிகொண்டு நோன்பு கொண்டிருக்கிறாள். அவள் தங்கை ஒவ்வொருநாளும் வந்து உணவுதெடித்தந்துவிட்டுச் செல்கிறாள். மற்றநேரமெல்லாம் அவள் இங்கே குடிலில் தனித்திருக்கிறாள்”

“எளியவள்” என்றேன். “அந்த நோன்பையும் அம்முதிய வைதிகனே சொல்லியிருக்கிறான். இங்கே யமுனையின் கரையில் தவக்குடில் அமைத்துத் தங்கும்படியும் இப்புவியில் எவையெல்லாம் அவளுக்கு இனியவையோ அவையனைத்தையும் துறக்குமாறும் வகுத்துரைத்திருக்கிறான்.” என்றான் பார்த்தன் “அவளுக்கு அவன் ஒரு தவநெறியையும் சொல்லியிருக்கிறான். யமுனையில் மின்னும் அத்தனை மீன்களையும் எண்ணி முடிக்கையில் அவளுக்கு விஷ்ணுவின் பேருருவத் தோற்றம் தெரியுமாம்” அவனுடன் நானும் நகைத்தேன். ”அந்த எளிய மச்சர்குலத்துப்பெண் அதை நம்பி இங்கு வந்து விழித்திருக்கும் நேரமெல்லாம் நதியில் மீன்களை நோக்கி எண்ணிக்கொண்டிருக்கிறாள்”

“அவள் அதை ஈடுபட்டுச்செய்தால் அதுவும் தவமே” என்றேன். “வேதாந்தத்தை மறுபடியும் எடுக்காதே. மீன்களை எண்ணி முடித்துவிடுவாள் என்கிறாயா?” என்றான். “எண்ணவும்கூடும்” என்றேன். “அவள் தவத்தை இன்றே முடிக்கலாமென நினைக்கிறேன்” என்றான் பார்த்தன். “எப்படி?” என்றேன். “அவள்முன் சங்குசக்கர கதாயுதமேந்தி விண்நீல வடிவுகொண்டு நிற்கப்போகிறேன். பேருருவத் தோற்றம் கண்டு அவள் காதல் கொள்வாள்” என்றேன். நான் சிரித்துக்கொண்டேன். “அவள் சூதர்பாடல்களிலும் சித்திரங்களிலும் கண்ட விண்ணளந்த பெருமாளை எண்ணிக்கொண்டிருக்கும் பேதை. அந்தச் சொற்களில் இருந்தும் வண்ணங்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே கூத்தர்களின் விண்ணவன்” என்றபடி அவன் தன் ஆடைகளைக் களையத் தொடங்கினான்.

கூத்தர்களிடம் அவன் ஒப்பனைக்கலையை செம்மையாகக் கற்றிருந்தான். உருமாறுவதில் அவனுக்கு நிகரென பிறிதொருவனை நான் கண்டதில்லை.நீலமலர் சாறெடுத்து உடலில் பூசிக்கொண்டான். வண்ணக்கொடிகளால் மலராடை அமைத்தான். ஆழியும் சங்கும் செய்தான். “இருட்டுகிறது” என்றேன். “ஆம், அந்தியிருளில் செம்பந்தஒளியில் தோன்றினால்தான் கூத்துவேடம் விழிகளை ஏமாற்றும்” என்றான். ”ஒரு பெண்ணுக்காக இத்தனை அணியமா?” என்றேன். “பெண்ணுக்காக அணிகொள்ளாத ஆடவன் உண்டா என்ன?” என்றான். “பெண்ணுக்கென பேடியும் ஆகலாம் என்றொரு சொல் உண்டு. தெய்வமாகலாகாதா என்ன?”

சங்கு சகடம் ஏந்தி கதை ஊன்றி அருள்புரியும் நான்கு தடக்கைகளுடன் அணிகொண்டு அவன் எழுந்தபோது விண்ணவன் என்றே தெரிந்தான். ”திருமகளே நம்பிவிடுவாள் போலுள்ளது பாண்டவனே” என்றேன். “இவள் மச்சர்மகள். இவள் நம்பாமலிருக்க மாட்டாள்” என்றான். காய்ந்த எண்ணைப்புல் பிடுங்கி பந்தங்களாகக் கட்டிக்கொண்டான். “என்ன செய்யவிருக்கிறாய்?’ என்றேன். ’இப்பந்தங்கள் திடீரென அவள் குடில்முன் பெருந்தழலாக எரியும் நிழல்கள் எழுந்து கூத்தாட அவ்வொளியில் நான் எழுவேன். திருமகளே உன் தவம் முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் நான் மானுட உருக்கொண்டு உன்னிடம் வருவேன் என்பேன்” என்றான். ”பந்தங்கள் சிலகணங்களில் அணைந்துவிடும். இருளுக்குள் மறைந்தபின் அணிகலைத்து என்னுருவில் அவளிடம் செல்வேன்” என்றான்

“வென்று வருக” என்று அவனை அனுப்பிவிட்டு யமுனைக்கரைப் பாறையிலேயே படுத்துக்கொண்டேன். விண்மீன்களை எண்ணிக்கொண்டிருந்தேன். சற்றுநேரம் கழித்து அவன் தொய்ந்த தலையுடன் வந்தான். “என்ன நடந்தது?’ என்றேன். “நான் அனலில் பேருருக் கொண்டு எழுந்தேன். மச்சர்குலத்திருமகளே உன் தவம் நிறைந்தது. நான் விண்ணளந்த பெருமாள் என்றேன். சீ, கூத்தனே விலகிப்போ என்று அருகிலிருந்த தூண்டில்முள்ளை எடுத்தபடி என்னை குத்தவந்தாள். அப்படியே ஓடிவந்து புதர்களுக்குள் ஒளிந்து தப்பினேன்” என்றான்.என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. “சிரிக்காதே யாதவனே, என் மாறுதோற்றம் இதுவரை பிழைத்ததில்லை. இந்த மீனவப்பெண் எப்படி அறிந்தாள் என எண்ண எண்ண உளம் ஆறவில்லை” என்று சலித்தபடி என்னருகே அமர்ந்தான்

”ஒருவேளை அவள் பெருமாளை முன்னரே கண்டிருப்பாள்” என்றேன். “நகையாடாதே. நான் உளம் சோர்ந்திருக்கிறேன்” என்றான். “நான் சென்று முயன்றுபார்க்கவா?” என்றேன். “இப்படியே செல்லப்போகிறாயா? வேடமிட்டுச் சென்றபோதே வெட்டவந்தாள்.” நான் “முயன்றுபார்க்கலாமே” என்றேன். “என் சங்குசகடத்தைக் கழற்றி அங்குள மகிழமரத்தடியில் போட்டேன். வேண்டுமென்றால் எடுத்துக்கொள்” என்றான். ”தேவையில்லை” என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றேன்.

நாணல்புதர்நடுவே நாணலாலும் ஈச்சையோலையாலும் கட்டப்பட்ட சிறிய தவக்குடில் தெரிந்தது. நான் நேராகச்சென்று அதன் மூடிய மூங்கில்படல் கதவை திறந்தேன். உள்ளே அவள் தர்ப்பைப்பாயில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தாள். என் ஓசைகேட்டு கண் திறந்து அஞ்சாமல் என்னை நோக்கினாள். நான் ”பெண்ணே யமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன?” என்று கேட்டேன். ”ஒன்று ”என்றாள். ”உன் தவம் நிறைந்தது. உன்னை கொள்ளவந்த விண்ணளந்த பெருமாள் நானே, எழுக” என்றேன். எழுந்து கைகூப்பி கண்ணீருடன் “என்னை ஆள்க என் தேவா” என்று சொல்லி அருகே வந்து பணிந்தாள். அவள் தோள்தொட்டு அணைத்துக்கொண்டேன்

அரசியர் புன்னகைசெய்தனர். திருஷ்டதுய்ம்னன் வியப்புடன் “நீங்கள் எப்படித் தோற்றமளித்தீர்கள்?” என்றான். “இதோ உங்கள்முன் எப்படி இருக்கிறேனோ அப்படி” என்றார் இளைய யாதவர். “அவள் நம்பிவிட்டாள், ஏன் என்று அவளுக்கே தெரியும். பலமுறை முன்னரும் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி தலைகுனிவாள். அவள் என்ன கண்டாள் என்று அறிய நானும் விழைகிறேன்” என்று நகைத்தபடி காளிந்தியை நோக்கினார். அவள் நாணப்புன்னகையுடன் தலைகுனிந்தாள். ”எப்போதும் இவள் மறுமொழி இதுதான்” என்றார் இளைய யாதவர் ‘மிகமிகச் சுழிந்து ஒருநாள் கேட்டேன், அவள் கண்டதென்ன என்று. ஆழிவெண்சங்கு ஏந்திய பரந்தாமனின் பேருருவம் என்கிறாள். எப்படி என்று அறியேன்” .

ருக்மிணி ”வேறென்ன, மது அருந்தியிருப்பாள்” என முணுமுணுத்தாள். சத்யபாபா “இதிலென்ன ஐயம் இருக்கிறது? தங்கள் தோள்களில் ஆழியும்சங்கும் உள்ளது. துவாரகைத் தலைவர் என நோக்கும் எவரும் அறிந்திருப்பார். மீன்பிடித்து கூழுண்டு வாழும் பெண்ணுக்கு அதைவிட நல்ல தருணம் ஏது அமையப்போகிறது?” என்றாள். நக்னஜித்தி புன்னகைசெய்தாள். பத்ரை “அத்துடன் தங்களுக்கும் அவளை கைகொள்ளவேண்டிய தேவை இருந்தது. புளிந்தர்நாட்டு எல்லையில் துவாரகையின் நட்பரசு ஒன்றை அமைத்துக்கொண்டீர்கள். புளிந்தர்களை அதைக் காட்டியே அச்சுறுத்தி அடிபணியச்செய்தீர்கள். இவளைத் தாங்கள் மணக்கையில் இவள் தந்தை சூரியர் நூறு படகுகளுக்குத் தலைவர் மட்டுமே. இன்று தன்னை மச்சர்குலத்து அரசர் என்று சொல்லிக்கொள்கிறார். பொன்னால் ஒரு மணிமுடி செய்து சூடிக்கொள்வதாகவும் அரியணையும் வெண்குடையும் சாமரமும் கூட கொண்டிருப்பதாகவும் கேள்வி” என்றாள்.

”இவள் அன்னை தன்னை மச்சர்குலப்பேரரசி என்று அறிவித்து அரசோலை ஒன்றையும் கோசலத்துக்கு ஒருமுறை அனுப்பினாள்” என்றாள் நக்னஜித்தி. பிற அரசியர் அனைவரும் புன்னகைசெய்தனர். “ஆம், இவளை மணந்தது எனக்கு அரசியல்நலன்களை அளித்தது. புளிந்தநாட்டுக்கு அருகே வலுவான மச்சர்கூட்டமைப்பு ஒன்று எனக்கிருப்பதனால் யமுனை முழுமையாகவே மதுராவின் ஆட்சியின்கீழ் இன்று உள்ளது” என்றார் இளவரசர். “இன்று நான் இவளைப் பார்த்த நன்னாள். ஆகவேதான் எண்மரையும் இங்கே வரும்படிச் சொன்னேன். அப்போதுதான் சியமந்தகத்துக்கான பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பதை அறிந்தேன்”

சத்யபாமை “என்ன பூசல்? எனக்கொன்றும் பூசலில்லை நான் அதை தங்களுக்கே அளித்துவிட்டேன். தங்களுக்குரியது அரசியர் எண்மருக்கும் பொதுவானதே. அதை ஜாம்பவதியிடம் அளிக்கக்கோரி பாஞ்சாலரிடம் நேற்றே அளித்துவிட்டேன்” என்றாள். ருக்மிணி “அரியகற்களை அரசகுடியினரன்றி பிறர் சூடும் வழக்கம் இல்லை. அதை ஷத்ரிய அவை ஏற்காது… நான் அதை மட்டும்தான் சொன்னேன்” என்றான். நக்னஜித்தி “ஆம், நானும் அதைமட்டுமே சொன்னேன்” என்றாள். பத்ரை “நான் அக்ரூரரை அழைத்து சியமந்தகம் ஜாம்பவதிக்கு அளிக்கப்படலாகாது என்று ஆணையிட்டேன். மறுக்கவில்லை” என்றாள். “அதுவே குலமுறை. நான் சொன்னதில் பிழையேதும் உண்டு என நினைக்கவில்லை” திரும்பி அக்ரூரரிடம் “அந்த ஆணையை அவர் மேற்கொண்டாரா என அறியவிழைகிறேன்”

“அரசி, சியமந்தகம் ஜாம்பவதியிடம் அளிக்கப்படவில்லை” என்றார் அக்ரூரர். முகம் மலர்ந்த பத்ரை “நான் விரும்பியது அதுவே” என்றாள். “பிற எவரிடமும் அளிக்கப்படவில்லை பத்ரை” என்றார் இளைய யாதவர் “அதை நேராக இங்கே கொண்டுவரும்படி நான் பாஞ்சாலரிடம் ஆணையிட்டேன். கொண்டு வந்துள்ளீர் அல்லவா?” ஒருகணம் திகைத்த திருஷ்டதுய்ம்னன் “ஆம், என்னிடம் உள்ளது” என்றான். தன் கச்சையிலிருந்து அந்தச் சிறிய பேழையை எடுத்து குறுபீடத்தில் வைத்தான்.

”அரசே, இது தங்கள் ஆடல் என நாங்கள் அறிவோம். இந்தமணி அரசகுடியினருக்குரியது. இதை எங்களில் எவர் சூடவேண்டுமென தாங்கள் ஆணையிடவேண்டும்” என்றாள் பத்ரை. ஜாம்பவதி “இந்த மணியை என் கழுத்தில் அணிந்து விளையாடியிருக்கிறேன். என் தந்தையால் கன்யாசுல்கமாக அளிக்கப்பட்டது இது. யாதவ அரசிக்குப்பின் இதில் உரிமைகொண்டவள் நானே” என்றாள். ருக்மிணி “பட்டத்தரசியாக எனக்கு இல்லாத உரிமை இங்கு எவருக்கும் இல்லை” என்றாள். ”துவராகையின் அரசியாக ஆனபின்னர் நான் எவரென ஆக்குவது குலமோ குடியோ அல்ல . நான் இந்நகரின் அரசி, என் உரிமையை ஒருநாளும் விட்டுத்தரமாட்டேன்” என்றாள் லட்சுமணை.

”இதைத்தான் பூசல் என்றேன்” என்று இளைய யாதவர் சிரித்தார் ‘நான் என்ன சொன்னாலும் அது மேலும் பூசலையே வளர்க்கும். ஆகவே அருமணிதேரும் அலைநோட்டக்காரர் ஒருவரை வரச்சொல்லியிருக்கிறேன்” என்றபின் திரும்பி “அக்ரூரரே, சாந்தரை வரச்சொல்லும்” என்றார். அக்ரூரர் தலைவணங்கி உள்ளே சென்று பெரியதலைப்பாகை அணிந்த பழுத்த முதியவருடன் திரும்பிவந்தார். பெருவணிகர்களுக்குரிய மணிக்குண்டலங்கள் அணிந்து மார்பில் பவள ஆரம் அணிந்திருந்தார். “துவாரகை அரசரையும் எட்டுத்திருமகள்களையும் வணங்குகிறேன்” என்றார் சாந்தர். அவரது நடையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அவர் தன்னைநோக்கித் திரும்பியபோதுதான் அவரது விழிகளை திருஷ்டதுய்ம்னன் கண்டான், மரத்தில் செதுக்கப்பட்டவை போலிருந்தன அவை.

“சாந்தர் தெற்கே கிருஷ்ணையின் கரையிலுள்ள குந்தலர்களின் நகரான விஜயபுரியைச் சேர்ந்தவர். அங்கே வைரங்கள் நதிகளில் விளைகின்றன. மணிநோட்டத்தை பன்னிருதலைமுறைகளாக அவர் குலம் செய்துவருகிறது” என்றார் இளைய யாதவர். விழியிழந்தவரா மணிநோக்குவது என திருஷ்டதுய்ம்னன் வியந்தான். அவருக்கு விழியில்லை என்பதை அப்போதும் உணராலம் ”நமது கருவூலத்து மணிகளை நோக்கும்பொருட்டு அவரை நான் வரச்சொன்னேன்” சத்யபாமா “சியமந்தகத்தை எவர் நோக்கி மதிப்பிடவேண்டும்? அது முழுமைகொண்ட மணி என்பதை உலகறியும்” என்றாள். “அரசி. மணிகள் அனைத்தும் முழுமை கொண்டவை. நாம் ஆராய்வது அவற்றுக்கும் அவற்றைச் சூடும் மானுடருக்குமான உறவென்ன என்பதைப்பற்றி மட்டுமே” என்றார் சாந்தர். அவரது விழியின்மையை அப்போது உணர்ந்துகொண்ட சத்யபாமா திகைத்து பிறரை நோக்கினாள். அத்தனை முகங்களிலும் குழப்பம் தெரிந்தது.

“ஆம், நான் அதைநோக்கவே வரச்சொன்னேன். பதிட்டை பெயர்ந்து பலிகொள்ளத்தொடங்கும் தெய்வம் போலிருக்கிறது சியமந்தகம். இதற்குள் அது தன்னை உரிமைகொண்டிருந்த இருவரை உண்டுவிட்டிருக்கிறது. ஆகவே அதைச் சூடத்தக்கவர் எவர் என நோக்கலாமென்று தோன்றியது” சத்யபாமா “அதை எப்படிக் கணிப்பீர்கள் சாந்தரே? பிறவிநூல்படியா?” என்றாள். “இல்லை அரசி, அரியமணிகள் மானுடர் தொடும்போது உயிர்கொள்கின்றன. அவற்றின் ஒளியில் நுண்ணிய வண்ண மாற்றம் நிகழ்கிறது. அந்தமாற்றத்தைக் கொண்டு அவருக்கும் மணிக்குமான உறவை அறியமுடியும்” அவர் தன் தோல்பையை வைத்து உள்ளிருந்து ஒரு சந்தனப்பெட்டியை வெளியே எடுத்தார். அதனுள் சிறிய நிறமற்ற படிகக்கல் இருந்தது. “அருமணி அடையும் நிறமாற்றத்தை பெரிதாக்கி அந்த புதுநிறத்தை மட்டும் இது காட்டும்”

“அரசியரே, உயிர்கள் மானுடரின் தொடுகையை அறிகின்றன. நாய்க்குட்டிகள் சிலர் கைகளில் அஞ்சாது உறங்கும். சிலரிடமிருந்து தவழ்ந்து வெளியேறத்துடிக்கும். சிலர் கைகளில் நடுங்கிக்கொண்டே இருக்கும். அருமணிகளும் அவ்வாறே. அவை மண்ணின் ஆழத்திலிருந்து வந்தவை என்று உணர்க. அவற்றில் ஆழத்தின் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவை மானுட ஆழத்தையும் நன்கறியும்” அவர் பேசியபடியே தந்தப்பேழையைத் திறந்து சியமந்தகத்தை வெளியே எடுத்தார். அவர் கையில் நீலத்துளி போல மெல்லிய ஒளியுடன் அது இருந்தது. அதை தன் முகத்தருகே தூக்கி “அரிய கல். மருவற்றது. யுகங்களுக்கு ஒருமுறை தன்மேல் நிகழும் வாழ்க்கையை நோக்க நிலத்தாள் எழுப்பி அனுப்பும் விழிகளில் ஒன்று.” என்றார்.

“எப்படித்தெரியும்?” என்றாள் ருக்மிணி. “என் விழிகளுக்கு அருமணிகளின் ஒளி மட்டும் ஓரளவு தெரியும்…” என்றார் சாந்தர் “ஆனால் இது தழலென எரிகிறது” அவர் அதை திருப்பித்திருப்பி நோக்கினார். “இருளின் ஒளி. காமாந்தகமும் மோகாந்தகமும் குரோதாந்தகமும் கடந்த சியாமாந்தகம்…” அவர் முகம் விரிந்தது. முகச்சுருக்கங்கள் இழுபடும் வலையென அசைந்தன. புன்னகையுடன் “அத்தனை ஆழத்திலிருந்து ஒரு பொருள் மண்ணுக்கு வரக்கூடாது அரசியரே. .யானையின் மத்தகத்தில் சிற்றுயிர்கள் வாழ்வதுபோல மண்மீது மானுடர் வாழ்கிறார்கள். ஆழத்தில் உறையும் மதத்தை அவர்கள் தாளமாட்டார்கள்”

பெருமூச்சுடன் அதை திரும்பவைத்தார் “ஏதோ ஒரு தீயகணத்தில் ஆழத்திலிருந்து இதையன்றி பிறிது எதையும் காணமுடியாத விழி ஒன்றால் இது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. நாளோன் பேரொளியிலிருந்து அனலோன் கொண்ட விழி” சத்யபாமா “இதை சூரியவடிவமாக என் குலம் வழிபடுகிறது” என்றாள். “சூரியனை வழிபட அருமணி எதற்கு? அன்று மலரும் ஒர் எளிய மலர்போதுமே?” என்றார் சாந்தர். “எட்டு தேவியரில் இந்த மணிக்குரியவர் எவர் என்று சொல்லுங்கள் சாந்தரே” என்றார் அக்ரூரர். “ஆம், அதைத்தான் எனக்குப் பணித்தார்கள்” என்றார் சாந்தர். ”முதல் அரசி தன் வலக்கையை நீட்டட்டும்”

சத்யபாமா கைநீட்டினாள். அவர் அதில் சியமந்தகத்தை வைத்தார். ”அரசி, மணி என்பது பொருளற்றது. ஒளியுமிழும் வெறும் கல் அது. உங்கள் உள்ளத்திலிருந்து பெற்ற ஒளியை விழிகளினூடாகப் பெற்று அது சுடர்கிறது. இந்த மணி உங்களுக்கு எப்படிப் பொருள்படுகிறதென எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் அகஒளி இதில் எழட்டும்” சத்யபாமா தயங்கியபடி இளைய யாதவரை நோக்கினாள். பின்பு கண்களை மூடினாள். அவள் கையில் இருந்த மணியினுள் மெல்லிய ஒளிமாற்றம் ஒன்று நிகழ்வதை * கண்டான். சாந்தர் அந்த படிகத்தை அதன் மேல் வைத்தார். அதிலிருந்த குழிக்குள் சியமந்தகம் அமைந்தது.

படிகம் செவ்வொளி வீசத்தொடங்கியது. முதலில் குருதி நிறைந்த பளிங்குக் கிண்ணம் போலிருந்தது.. பின்பு காற்றில் சீறும் கனலாக ஆகியது. அந்தக் செங்கதிர் அங்கிருந்த அத்தனை விழிகளிலும் தெரிந்தது. சாந்தர் படிகத்தை எடுத்தார். மணியை திரும்ப எடுத்து தந்தப்பேழையில் வைத்தபடி “தூய ரஜோ குணம் தேவி. உங்களுள் இருக்கும் இறைவன் மூன்றாவது அடி மண் விழைந்து பேருருவக் கால் தூக்கி நின்றிருக்கிறான். வென்று மேல்செல்ல மண்கொள்ள விழைகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு குருதிபூசிய ஒரு வாள்.ஆம், அவ்வாறே ஆகுக”

ருக்மிணியின் கைகளில் சியமந்தகத்தை வைத்தார். அவள் கண்களை மூடிக்கொள்ள படிகம் ஒளிபெறத்தொடங்கியதும் அதன்மேல் படிகத்தை வைத்தார். பால்நிறைந்த பளிங்குக்குவளை என ஆயிற்று படிகம். காலையொளியில் சுடரும் சங்கு. “முழுமையான சத்வ குணம் தேவி. உங்களுள் எழுந்த பாலாழியில் இறைவன் நாவாயிரம் கொண்ட நச்சரவம் மீது விழிமூடி அறிதுயிலில் பள்ளிகொள்கிறார். பிற ஏதுமின்றி அவனை முழுதடைய விழைகிறீர்கள். பணிந்து காலணைத்து பணிவிடைசெய்ய எண்ணுகிறீர்கள். இந்த மணி உங்களுக்கு ஒரு பால்கிண்ணம் ஆம் அவ்வாறே ஆகுக”

ஜாம்பவதியின் கையில் அதைவைத்தபோது கநுநீல ஒளி எழுந்தது. “முழுமையான தமோகுணம் அரசி. உங்களுள் எழுந்த தேவன் மண்மகளை வாளெயிற்றில் ஏற்றிவைத்த வராகம். கரிய மேனி. கன்மதம் கொண்ட கண்கள். அடியளந்து எழுந்து விண் தொட்ட பேருருவம். நீங்கள் அறிந்த அவனை அவனும் அறியலாகாதென்று எண்ணுகிறீர்கள். இந்த மணி நீங்கள் இளமையில் வழிதவறிச்சென்ற ஓர் இருட்குகை. அதன் சுவரில் முகமயிர் சிலிர்க்க விழிச்செம்மை எரிய நீங்கள் கண்ட கரிய பன்றி. ஓம் அவ்வாறே ஆகுக”

லக்‌ஷ்மணைக்குப் பொன்னிறம் எழுந்தது. “சத்வ ரஜோகுணங்களின் கலவை. பொற்சிறகுகள் கொண்ட கருடனின் மேல் ஏறிவரும் ஒளிமயமானவனை எண்ணுகிறீர்கள் அரசி. பீதாம்பரன் .அவனை இசைவடிவாக எப்போதும் உள்ளத்து யாழில் மீட்ட விழைகிறீர்கள். ஆம் அவ்வாறே ஆகுக”. மித்ரவிந்தைக்குப் பச்சை நிறம் தெரிந்தது. “சத்வ தமோகுணக்கலவை. அரசி, உங்களுக்குள் எழுந்தருளியிருப்பவர் நீங்கா நிலைபேறுடைய அச்சுதன். அனைத்து வளங்களுக்கு முழுமுதலானவர்.அவனை உங்களுக்குள் நிறைத்து முடிவிலாது மலர்ந்து எழ எண்ண்ய்கிறீர்கள். ஓம் அவ்வாறே ஆகுக”

பத்ரைக்கு செந்நீலம். “தமோரஜோ குண இணைவு அரசி. செம்பிடரி தழலென கதிரலைய உறுமியெழும் ஆளரி உங்கள் இறைவன். அவனுக்கிணையாக எரியுமிழும் விழிகளுடன் எழும் சிம்மம் மீதேறி போரிட விழைகிறீர்கள்ஓம் அவ்வாறே ஆகுக.”. நக்னஜித்திக்கு கருஞ்செம்மை நிறம். “ரஜோதமோகுணம் அரசி. உங்களுக்குள் அமர்ந்திருப்பவர் ஜனார்த்தனன். பிறவிப்பெரும்பாதையை வெல்பவர். இறப்பை வென்று முடிவின்மையை அவருடன் கொள்ள விழைகிறீர்கள்.ஓம் அவ்வாறே ஆகுக”

”தங்கள் அருட்கையை நீட்டுங்கள் அரசி” என்றார் சாந்தர். காளிந்தி சற்றுத் தயங்க “இன்று உன்னுடைய நாள் அரசி,. நீட்டு” என்றார் இளைய யாதவர். அவள் நாணத்துடன் எழுந்து முன்வந்து அவர் காலடியில் முழந்தாளிட்டு தரையில் அமர்ந்து கைநீட்டினாள். சாந்தர் சியமந்தகத்தை அவள் கையில் வைத்தார். அவள் விழிமூடி எண்ணிக்கொள்ள மணி நீலநிறமான கூழாங்கல் போல தெரிந்தது. சாந்தர் கூர்ந்து நோக்கியபடி அதை நோக்கி நன்றாகக் குனிந்தார். திருஷ்டதுய்ம்னன்னும் அது விழிமயக்கா உளமயக்கா என்று அறியாதவனாக கண்களை இமைகொட்டினான்

மேலும் சற்றுநேரத்தில் அது விழியறியும் உண்மையே எனத் தெளிந்தது. அரசியரும் குனிந்து அதை நோக்கினர். சத்யபாமா சற்று முன்னால் சரிய அவள் அமர்ந்திருந்த பீடம் கிரீச்சிட்டது. சியமந்தகம் கதிரவன் மறைகையில் நோக்கியிருக்கவே மேலும் ஒளியணைந்தது. நீலம் இளநீலமாகத் தெளிந்து நிறமிழந்து வெறும் பளிங்குத்துண்டென ஆயிற்று. ஒரு நீர்த்துளி என அவள் கையில் இருந்தது.

சாந்தர் “என்ன ஆயிற்று?” என நடுங்கும் குரலில் கேட்டார். “என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை” “அது முற்றிலும் நிறமிழந்துவிட்டது” என்றார் அக்ரூரர். ”நிறமிழந்தா? அவ்வண்ணமெனில் இவ்வறைக்குள் நீல ஒளி இருந்தாகவேண்டும்” என்றார் சாந்தர். “இல்லை, அறைக்குள் இயல்பான வானொளியே உள்ளது” என்றார் அக்ரூரர். சாந்தர் அதன் மேல் தன் படிகத்தை வைத்தார். படிகம் வெறும் வெண்கல் போல ஒளியிழந்திருந்தது. அவர் ”எனக்கு ஒன்றுமே தெரியவில்லை” என்றார்

“படிகம் சுண்ணம்போலிருக்கிறது சாந்தரே” என்றார் அக்ரூரர். “அனைவருக்குமா?” என்றார். “ஆம்” என்றான் திருஷ்டதுய்ம்னன். “அப்படியென்றால் இது அருமணி அல்ல. ஐயமே இல்லை” சத்யபாமா சீற்றத்துடன் “என்ன பேசுகிறீர்கள் என்று தெரிகிறதா? இதே அவையில் சற்றுமுன் யுகங்களுக்கு ஒருமுறை மானுடர் அறியும் அருமணி என்றீர்”. சாந்தர் “ஆம், அப்போது அப்படித்தெரிந்தது. ஆனால் இப்போது அது வைரமல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. என்ன மாயமென்று அறியேன். ஆனால் அந்த வைரம் அல்ல இது”

அவர் நடுங்கும் கைகளால் சியமந்தகம்த்தை எடுத்து தன் கண்ணருகே நீட்டினார். சிப்பி போன்ற வெண்விழிகள் நடுவே கூழாங்கற்கள் போலப் புடைத்த மணிவிழிகள் உருண்டு உருண்டு தவித்தன. “என் தொடுகை இதுவரை பிழைத்ததில்லை. உறுதியாகச் சொல்வேன், இது ஒன்பது அருமணிகளிலோ ஒன்பது நல்மணிகளிலோ ஒன்று அல்ல” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்றாள் ருக்மிணி. “ஐயமே இல்லை. இது தெய்வங்கள் எனக்களித்த ஆணவம் அழிப்பு. ஆம், நான் பிழைசெய்துவிட்டேன், இது மணியே அல்ல. வெறும் கூழாங்கல்”

“ஆம் சாந்தர்ரே, வெறும் கூழாங்கல்தான்” என்றார் இளைய யாதவர். “முன்பொருகாலத்தில் விழியிழந்த ஒருவரின் உளமயக்கால் அது தன்னை அருமணியாக ஆக்கிக்கொண்டது. பலநூறு விழியின்மைகள் வழியாக இக்கணம் வரை வந்தடைந்தது” சாந்தர் கைகூப்பினார். காளிந்தி விழிகளைத் திறந்து திகைத்து அமர்ந்திருந்த அவையை ஒன்றும் புரியாமல் நோக்கினாள். “அருமணி கூழாங்கல்லாக ஆனதென்றால் என்ன குறி அதற்கு? சொல்லும்”. சாந்தர் “அப்படி நான் கண்டடதில்லை. நூலறிவால் மட்டுமே சொல்லமுடியும்” என்றார். “சொல்லும்” என்றார்

“கதாம்ருத சாகரம் ஒரு கதையைச் சொல்கிறது. முன்பொருமுறை குபேரன் தன் கருவூலத்தை நிறைத்திருந்த அருமணிகளை எண்ணி ஆணவம் கொண்டிருந்தான். அவனைக் காணவந்த நாரதரிடம் அவற்றைக் காட்டி பெருமைபேசினான். உன் கருவூலத்திலேயே மதிப்புமிக்க மணி எது என்று கெட்டார். அதிலிருந்த ஷீரபிந்து என்னும் மணி விண்ணளந்தோன் பள்ளிகொண்ட பாலாழிக்கு நிகரானது என்று அவன் சொன்னான். அப்பாலாழியை தன் ஆயிரமிதழ்த் தாமரையில் திறந்த நுண்விழியால் நோக்கி அமர்ந்திருக்கிறார் அருந்தவத்தாரான பிருகு. அவர் இந்த மணியை பற்றி என்ன சொல்கிறார் என்று நோக்கு என்றார்” என்றார் சாந்தர்

“குபேரன் ஷீரபிந்துவை கொண்டுசென்று தவத்தில் மூழ்கியிருந்த பிருகுமுனிவரின் கைகளில் வைத்தார். அவர் விழிதிறந்து நோக்கி அதன் ஒளியைக் கண்டு உளமழிந்து தவத்தைக் கைவிடுவார் என எண்ணினான். ஆனால் அந்த மணி அவரது கைகளில் வைக்கப்பட்டதும் எளிய கூழாங்கல்லென ஆயிற்று. பதறிப்போன குபேரன் ஓடிச்சென்று அதை எடுத்துச்சென்று நோக்கினான். அது கூழாங்கல்லாகவே இருந்தது” சாந்தர் சொன்னார் “மகா யோகிகள் அருமணிகளைத் தொடமாட்டார்கள், தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை”

% புன்னகைத்து “சாந்தர்ரே அவர்கள் பிழையாகச் சொல்லவில்லை. என்னருகே அமர்ந்திருக்கும் இவள் மானுடம் அறிந்த மாபெரும் யோகிகளுக்கு நிகரானவள். இந்த மணியை கையில் வைத்திருக்கையில் இவள் எண்ணியது இருமையென ஏதுமற்ற பரம்பொருளின் மெய்த்தோற்றத்தை” என்றார். “என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே. என் குழந்தைப்பருவத்தில் இன்பெருக்கோடும் கரிய நதியென வந்து என்னை ஆட்கொண்டவள். என் வேய்குழல் போல என்னுடன் எப்போதும் இருப்பவள். என்றும் என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்படவேண்டியவள் இவளே.”

திருஷ்டதுய்ம்னன் ஒருகணம் உளம்பொங்கிவிட்டான். அதன் ஒலியென சாத்யகி மெல்ல விம்முவதைக் கேட்டான். இளைய யாதவர் அருகிருந்த மலர்க்கொத்திலிருந்து நீலமலர் ஒன்றை எடுத்து அவள் குழலில் வைத்து “இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மணப்பரிசை அளித்தேன். பொன்னை, மணியை, மண்ணை. இவளை மணம் கொள்ளச் செல்லும்போது இவள் தந்தைக்கு நீலமலர் ஒன்றை மட்டுமே கன்யாசுல்கமாக அளித்தேன்”

அவர் தன்னருகே நீலமலர் ஒன்றை வைத்திருந்தார். பனியீரத்துடன் அப்போது அலர்ந்தது போலிருந்தது அது. “இம்மலர் இவள் குழலில் என்றும் வாடாது ஒளிவிடுக” என்று அவள் குழலில் சூட்டினாள். உளஎழுச்சியால் காளிந்தி கைகளை விரித்து முகம்பொத்தி தலைகவிழ்ந்தாள். அவள் கழுத்தும் கன்னங்களும் புல்லரித்து பாலையில் மழைத்துளி விழுந்ததுபோல புள்ளிகளாக ஆகிவிட்டிருந்தன. சத்யபாமா எழுந்து சென்று அவள் வலக்கையைப்பற்றி “இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே, நீடூழி வாழ்க” என்று இடறிய குரலில் சொனனள். ருக்மிணியும் எழுந்து சென்று அவள் மறுகையைப் பற்றி “எழுக துவாரகையின் முதன்மை அரசி” என்றாள். பிற ஆறு அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்பினர்

இளைய யாதவர் சுபத்திரையிடம் “இளையவளே, இந்த மணியை அகற்று” என்றாள். தலைவணங்கிய சுபத்திரை முன்னால்வந்து இயல்பாக சியமந்தகத்தை எடுத்து சாளரம் வழியாக வெளியே போட்டாள். அது சென்று அலையோசையாகக் கேட்ட கடலில் விழுந்த தொடுகையை ஒவ்வொருவரும் தங்கள் உடலால் உணர்ந்தனர். சாத்யகி நீள்மூச்செறிந்தான். திருஷ்டதுய்ம்னன் அவனை நோக்கிப் புன்னகை செய்தான். நீல ஆழத்தில் அது சென்று அமையும் காட்சியைக் காணமுடிந்தது. இளைய யாதவர் “நாம் இன்னமுது உண்போம்” என்றார்

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 5

துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். வெண்பளிங்கில் செதுக்கப்பட்ட யவனக் களிப்பாவைகள். ஆடகப் பொன்னில் வடிக்கப்பட்ட காப்பிரிகளின் தெய்வச்சிலைகள். கிளிச்சிறையில் சமைக்கப்பட்டு அருமணிகள் பதிக்கப்பட்ட யவனநாட்டு அணிகலன்கள்.

நிகரற்ற பெருஞ்செல்வம் என திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். துவாரகைக்கு வருவதற்கு முன் என்றால் அச்செல்வக்குவையை அன்றி பிறிது எதையும் எண்ணியிருக்க மாட்டான். அப்பேழைகளை உள்ளமும் கணம்தோறும் சுமந்துகொண்டிருக்கும். முந்தையநாளே அவனுக்காக இளைய யாதவர் தன் கைகளால் தேர்வுசெய்த பரிசில்களைப்பற்றி அவனுடைய ஏவலர் தலைவன் வந்து சொன்னான். “பெருஞ்செல்வம் என்கிறார்கள். பாரதவர்ஷத்தின் பேரரசர்கள்கூட வியந்து நின்றுவிடும் அளவு நிகரற்ற செல்வம்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “அவர் எட்டு திருமகள்களின் அரசர். அவர் அளிக்கக் கூடாதது என இப்புவியில் ஏதுமில்லை” என்றான்.

முதல் நற்தருணத்தில் நீராடி ஆடையணிந்து கொண்டிருக்கையில் சாத்யகி வந்து கீழே காத்திருப்பதாக ஏவலன் சொன்னான். அவன் பயணத்துக்கான ஆடை அணிந்து உடைவாளை பூட்டியபடி கீழே பெருங்கூடத்திற்கு வந்தபோது அங்கே சாளரத்தருகே வெளியே நோக்கியபடி நின்றிருந்த சாத்யகி காலடி ஓசையில் திரும்பி நோக்கி புன்னகை செய்தான். அவன் கண்கள் துயில்நீப்பால் வீங்கியிருந்தன. புன்னகையும் ஒளியற்றிருந்தது. முன்புலரியின் குளிர் நிறைந்த கடற்காற்று சாளரங்கள் வழியாக வந்து கூடத்தில் சுழன்றது. ஆழத்தில் ஒரு நாவாய் மெல்லப் பிளிறியது.

“நம்முடைய நாவாய்தான்” என்று சாத்யகி சொன்னான். “காலையிலேயே அதில் பரிசுப்பொருட்களை ஏற்றத்தொடங்கிவிட்டனர்.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவற்றை பாஞ்சாலத்திற்கு கொண்டுசென்று சேர்ப்பது வரை நான் கண் துஞ்ச முடியாது” என்றான். சாத்யகியும் புன்னகைத்தபடி “அரசன் என்பவன் காவலன் அல்லவா?” என்றான். பொருளற்ற வெற்று உரையாடல். ஆனால் அத்தருணத்தில் பிறிது எதுவும் சொல்வதற்கு இருக்கவில்லை.

ஏவலர்தலைவன் வந்து “தேர் காத்திருக்கிறது இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியை நோக்கிவிட்டு “தேர் வேண்டியதில்லை. நாங்கள் புரவிகளிலேயே செல்கிறோம்” என்றான். சாத்யகியின் கண்களில் முதல்முறையாக புன்னகை வந்தது. “ஆம்” என்றான். இருவரும் படிகளில் இறங்கி முற்றத்திற்கு சென்றனர். அவர்களின் புரவிகளை சூதர்கள் கொண்டுவந்து நிறுத்தினர். திருஷ்டத்யும்னனின் புரவி அவனை நோக்கி மூச்சு சீறியபடி காலெடுத்து வைத்து தலையை அசைத்தது. சேணத்தில் கால் வைத்து கால் சுழற்றி தாவியேறியபடி “யாதவரே, இறகுபோல...” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று புன்னகைத்தபடி சாத்யகியும் ஏறிக்கொண்டான்.

திருஷ்டத்யும்னன் புரவியை குதி முள்ளால் எழுப்பி கற்பாதையில் ஓசை உருண்டு தொடர விரைந்தான். ‘ஏய் ஏய்’ என குதிரையை ஊக்கியபடி சாத்யகியும் தொடர்ந்து வந்தான். இரவெல்லாம் துயின்று எழுந்த துடிப்புடன் இருந்த புரவிகளும் முழுக்கால்களில் விரைய விரும்பின. ஒழிந்து கிடந்த விடியாத பொழுதின் சாலைகள் வழியாக வால் சுழற்றி குளம்புகள் அறைய புரவிகள் சென்றன. சுழல் பாதைகளில் காற்று இருபக்கமும் கிழிபட்டுப்பீரிட சென்றபோது வானிலிருந்து இறங்கும் சிறிய இறகு என உணரமுடிந்தது. குளம்படியோசை அனைத்துச் சுவர்களிலும் இருந்து பொழிந்து அவர்களை சூழ்ந்தது. அடுக்கடுக்காக எழுந்த துவாரகையின் வெண்முகில் மாளிகைகளிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக கேளாத்தொலைவு வரை இடியோசை என அவ்வொலி எதிரொலித்தது.

சுருளவிழ்ந்து கொண்டே இருந்த சாலையின் கீழே அனல் அவிந்து கங்கு நிறைந்த வேள்விக்குளம் போல பல்லாயிரம் செவ்வொளி விளக்குகளுடன் துவாரகையின் துறைமுகப்பு தெரிந்தது. எட்டு பீதர் பெருங்கலங்கள் பொதிகளை ஏற்றிக்கொண்டிருந்தன. நான்கு கலங்கள் அப்பால் அலைகளில் ஆடியபடி காத்து நின்றிருந்தன. நூற்றுக்கணக்கான சிறுகலங்கள் கனல்சூடி கரையோரமாகச் செறிந்து நின்று அசைந்தன. பொதிகளை தூக்கி வைக்கும் பெருந்துலாக்களின் மீது எரிந்த மீன்நெய் ஊற்றிய பீதர்நாட்டு விளக்குகள் எரிவிண்மீன்கள் போல இருண்ட வானில் சுழன்று இறங்கின. எரியம்புகள் போல சீறி மேலே எழுந்து சென்றன. பீதர்கலம் ஒன்று நூறு யானைகளுக்கு நிகராக பிளிறியது. அவ்வொலி மூடிக்கிடந்த கடைகளின் தோல் திரைகளில் எல்லாம் அதிர்ந்தது. பகைப்புலமென அலைகள் பாறைகளை அறையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

விழுந்துகொண்டே இருந்தனர். கீழே காலுக்கு அடியில் மிகத்தொலைவில் ஒளித்துளிகள் அலையடித்த கடல் விண்மீன்கள் மண்டிய வானம்போல. விழுகிறோமா எழுகிறோமா என உளம் மயங்கினான். அறைய வருபவை போல சாலையின் விளக்குத்தூண்கள் அவர்களை அணுகி கடந்துசென்றன. துறைமேடை அருகே வந்ததும் இருவரும் மூச்சிரைக்க நின்றனர். வியர்வை குளிர்ந்து முதுகில் வழிந்தது. காதுகளில் வெப்பம் எழுந்தது. நெடுந்தூரம் வந்துவிட்டதாக திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். துவாரகை மிகமிக அப்பால் எங்கோ இருந்தது. துறைமேடையின் நூற்றுக்கணக்கான விளக்குத்தூண்கள் சீரான கோடாக நிரைவகுத்திருந்தன. மீன்எண்ணை விளக்குகள் எரிந்த ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் பொன்னிறமான ஒளிவட்டம் விழுந்து கிடந்தது. அங்கே சிறிய பூச்சிகள் கனல் துளிகளாக சுழன்று கொண்டிருந்தன. ஒளிசிந்திய மண்ணில் கூழாங்கற்கள் பொன்னிறமாக மின்னின. உதிர்ந்துகிடந்த சருகுகள் பொற்தகடுகளாக பளபளத்தன.

அந்த விரைவோட்டம் தன் உள்ளத்தில் முந்தைய நாள் இரவு முதலே இருந்த அத்தனை அழுத்தத்தையும் இல்லாமலாக்கிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். சாத்யகி சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட பின்னர் தான் தானும் சிரிப்பதை முகத்தசைகளின் இழுபடலில் இருந்து உணர்ந்தான். “எப்போது பாஞ்சாலம் வருகிறீர்கள் யாதவரே?” என்றான். “விரைவில்” என்றான் சாத்யகி. “இங்கு சில பணிகள் உள்ளன. முடிந்ததும் கிளம்பிவிடுவேன்.” திருஷ்டத்யும்னன் “இந்திரப்பிரஸ்தத்தின் கட்டுமானப்பணிகளை மேல்நோட்டமிட நான் செல்வேன். அங்கு வாரும். நாமும் ஓரு நகரை அமைத்தோமென்றிருக்கட்டும்” என்றான். “ஆம், நானும் அதை பார்க்க விழைகிறேன்” என்றான் சாத்யகி.

அவன் முகம் மாறுபடுவதை திருஷ்டத்யும்னன் கண்டான். “எப்போது அஸ்தினபுரிக்கு செல்வீர்கள்?” என்றான் சாத்யகி. “முதலில் காம்பில்யம் சென்று தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவேண்டும். அதன் பிறகு தான்.” சாத்யகி நோக்கை விலக்கி இயல்பானதென ஆக்கப்பட்ட குரலில் “சுஃப்ரையை சந்திப்பீர்களா?” என்றான். “நான் தந்தையையும் தமையர்களையும் சந்திக்கவிருப்பதே அவளுக்காகத்தான்” என்றான் திருஷ்டதுய்ம்னன். சாத்யகி திரும்பவில்லை, ஆனால் அவன் உடலில் ஓர் அசைவு தெரிந்தது. “என் உடல் முழுமைகொண்டுவிட்டது யாதவரே. இந்தப் புரவியோட்டத்தில் அதை நன்குணர்ந்தேன். அதை தந்தையிடம் சொல்லப்போகிறேன். நான் மணம்செய்யவிருக்கும் பெண் எவர் என்றும் உரைப்பேன்.”

சாத்யகி மெல்லிய குரலில் “ஆனால் அவள்...” என்று சொல்லவந்து நிறுத்திக்கொண்டான். “ஷத்ரியர் என்னை ஏற்கவேண்டியதில்லை. குடியவைகள் ஒப்பவேண்டியதில்லை. என் தோள்கள் இருக்கின்றன. இணையென நீர் இருக்கிறீர். அழியாத் துணையாக அவர் இருக்கிறார். என் மண்ணை நான் வென்றெடுக்கிறேன். என் நாட்டை என் வாளால் அமைக்கிறேன். அதன் அரியணையில் பட்டத்தரசியாக அவள் அமர்வாள். அவள் கால்களைப் பணியாதவர்கள் என் வாளுக்கு மறுமொழி சொல்லட்டும்.” சாத்யகி திரும்பி நோக்கியபோது திருஷ்டத்யும்னன் பொற்சிலையென சுடர்விட்டுக்கொண்டிருந்தான். நோக்கை விலக்கி அவன் நீள்மூச்செறிந்தான்.

திருஷ்டத்யும்னன் மேலும் பேச விழைந்தான். எதையும் சொல்வதற்காக அல்ல. அவ்வுணர்ச்சியை சொல்லாக ஆக்கிவிட்டால் அதன் அழுத்தம் குறையும் என்பதற்காக. “நேற்று அவர் எனக்காகவே அதை சொன்னார். யோகம் என்றால் என்ன என்று.” அவன் சொற்கள் சாத்யகியின் உடலைச் சென்று தொடுவது போல அசைவு எழுந்தது. “அவள் அன்று அவள் என் வாள்வீச்சை எதிர்கொண்டது எப்படி என்று புரிந்துகொண்டேன். அது யோகம். மலையேறி தவம் செய்து மாமுனிவர் அடைவதை இந்தப் பேதையர் இல்லத்தில் அமர்ந்தே அடைந்துவிடுகிறார்கள்.”

சாத்யகி திரும்பி நோக்கினான். அவன் கண்களின் நீர்ப்பளபளப்பை திருஷ்டத்யும்னன் கண்டான். நடுங்கிய குரலில் “பேரரசிக்கு என் அடிபணிதல்களை தெரிவியுங்கள் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “ஆம்” என்றான். பின்னால் அவர்களின் தேர் வரும் ஒலி கேட்டது. “செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். இருவரும் புரவிகளில் பெருநடையாக துறைமுகப்பு நோக்கி சென்றனர். அதன்பின் ஒரு சொல்லும் தேவையிருக்கவில்லை. தன் உள்ளம் ஒரு துளி குறையாமல் ஒரு துளி கூடாமல் நிறைந்திருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.

துறைமேடையில் அவர்களுக்காக துறைமுக காவலர்தலைவர் காத்து நின்றிருந்தார். உடன் துவாரகையின் சிற்றமைச்சர் பார்த்திபரும் நின்றிருந்தார். பார்த்திபர் அருகே வந்து வணங்கி “பாஞ்சாலரை வணங்குகிறேன். அரசர் ஆணையிட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தும் நாவாயில் ஏற்றப்பட்டுள்ளன” என்றார். “பயண நன்னேரம் எப்போது?” என்றான் சாத்யகி. “புலரி முதல்சாமம் முதல்நாழிகை... இன்னும் அரைநாழிகை நேரம் உள்ளது. பேரமைச்சர் வருவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர். “பேரமைச்சரா?” என்றான் திருஷ்டத்யும்னன். “அது முறைமை அல்ல, ஆயினும் வரவேண்டும் என அவர் விழைவதாக சொன்னார்” என்றார் பார்த்திபர்.

மீண்டும் சாத்யகியிடம் ஏதாவது சொல்ல விழைந்தான் திருஷ்டத்யும்னன். ஆனால் என்ன சொன்னாலும் அது வெறும் ஓசையென ஒலிக்கும் என அப்போது தோன்றியது. அவனை தொடவேண்டுமென விரும்பினான். ஆனால் கைநீட்டி அவன் கைகளை பற்றவும் தயக்கமாக இருந்தது. அண்ணாந்து மேலே தெரிந்த பெருவாயிலின் விளக்குகளை நோக்கினான். அவை செந்நிற விண்மீன்கள் போல வானில் நின்றன. இயல்பாக என சாத்யகியின் தோளைத் தொட்டு “எரிவிழிகள்” என்றான். சாத்யகி அண்ணாந்து நோக்கி “ஆம்” என்றான். “இந்நகரை பிரிந்துசெல்கையில் இவை எவ்வண்ணம் பொருள்கொள்ளும் என நான் எண்ணிக்கொள்வதுண்டு.”

அவனும் தன் தொடுகையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறான் என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். புரவித்தொடை என இறுகிய தசைகள் கொண்ட தோள்கள். மேலும் இயல்பாக தோளைப் பற்றியபடி “நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். கடலுக்குள் சென்றபின் திரும்பி இந்தப் பெருவாயிலை நோக்கவேண்டும்” என்றான். இருவரும் அதை நோக்கியபடி ஒருவர் தொடுகையை ஒருவர் உணர்ந்தபடி நின்றனர். “நான் உம்மைப்பற்றி உணர்ந்ததை அவையில் அரசரிடம் சொல்லவேண்டுமென நினைத்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “அதற்கான சொற்களை எண்ணி எண்ணி கோத்து வைத்திருந்தேன். அதற்கான களம் அமையவில்லை.”

சாத்யகி “ஆனால் அவர் அறிவார்” என்றான். “நேற்று என்னிடம் சொன்னார். இரவு ஆணைகளைப் பெறும்போது இன்றுகாலை நீங்கள் விடைபெறுவதைப்பற்றி சொன்னேன். புலரிக்குமுன்னரே விடையளிக்கச் செல்வாய் அல்லவா என்றார். நான் ஆம் என்றேன். சிரித்தபடி ஒவ்வொருமுறை பார்த்தர் இங்கு வந்துசெல்லும்போதும் நகர் எல்லைவரை சென்று விடையளிப்பது தன் வழக்கம் என்றார்.” திருஷ்டத்யும்னன் உடல்சிலிர்த்தான். “உண்மையாகவா? அப்படியா சொன்னார்?” சாத்யகி புன்னகையுடன் “ஆம்” என்றான். “யாதவரே, நாம் உணர்வதைச் சொல்ல அதைவிட சிறந்த சொல் எது? கிருஷ்ணார்ஜுனர்களைப் போன்றவர் நாம்” என்றான். சாத்யகி “ஆம்” என்றான்.

பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டுவிட்டதைச் சொல்ல கலக்காவலன் கொம்பூதினான். அந்த ஓசையை அங்கே நின்றிருந்த பிற காவலர்த்தலைவர்களும் திருப்பி எழுப்பினர். யானைக்கூட்டங்களின் உரையாடல் போல ஒலித்தது அது. அவர்களின் கலம் கிளம்பவிருக்கிறது என்னும் செய்தியை அறிந்த பீதர்நாட்டு பெருங்கலம் ஒன்று முழக்கமிட்டபடி மெல்ல மூக்கைத் திருப்பத்தொடங்கியது.

தேர்கள் துறைமேடைக்குள் நுழையும் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் கைகளை எடுத்துக்கொண்டான். புரவிக் காவலர் முன்னால் வர அக்ரூரரும் ஸ்ரீதமரும் ஊர்ந்த தேர்கள் வந்து நின்றன. காவலர் தலைவனும் அமைச்சரும் சென்று வரவேற்றனர். சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தலைவணங்கி வாழ்த்து கூறினர். அக்ரூரர் இறங்கி அவர்களை கைதூக்கி வாழ்த்தினார். “இளையவரே, அரசர் உங்களிடம் ஒரு சொல் சொல்லும்படி என்னைப் பணித்தார். நீங்கள் மண் வென்று முடிசூடும்போது வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவன் வாளுடன் நின்றிருப்பான் என்றார். அவ்வாறே ஆகுக!” என்றார். திருஷ்டத்யும்னன் மெய்ப்பு கொண்டான். மெல்லிய குரலில் “அது என் தெய்வத்தின் சொல்” என்றான்.

“சென்றுவருக பாஞ்சாலரே. தங்கள் மீது இளையவர் கொண்ட அன்பு வியப்புக்குரியது” என்றார் ஸ்ரீதமர். “நேற்றிரவெல்லாம் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சாத்யகியின் நட்புக்காக உயிர் கொடுக்க முன்வந்ததாக சொன்னார். அத்தருணம் ஏதென்று நான் அறியேன். ஆனால் அச்செயல்வழியாக நீங்கள் இளையவரின் நெஞ்சம் புகுந்துவிட்டீர். மெய்நட்பை அறிந்தவன் தெய்வங்களுக்கு மிக உகந்தவன் என்று அவர் சொன்னார்.” அழுதுவிடக்கூடாது என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். நல்லவேளையாக பந்தவெளிச்சமிருந்தாலும் முகங்கள் நிழலிருளில் இருந்தன. கடற்காற்று முகத்தை குளிர்ந்த கரிய பட்டுத்துணியால் என துடைத்துக்கொண்டே இருந்தது.

அருகே வந்து பணிந்து “இளவரசே” என்றான் துறைநாயகம். “ஆம், நன்னேரம் ஆகிவிட்டது” என்றார் அக்ரூரர். “கிளம்புங்கள் பாஞ்சாலரே. முடிசூடிய மன்னராக நான் மீண்டும் தங்களை சந்திக்கிறேன்.” ஸ்ரீதமர் சிரித்து “ஆம், அப்போது துணையும் மகவும் அமைந்திருக்கும். மங்கலங்கள் சூழ்ந்திருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் முன்னால் சென்று குனிந்து இருவர் கால்களையும் தொட்டு வணங்கினான். “வெற்றியும் புகழும் அமைக!” என அக்ரூரர் தலைதொட்டு வாழ்த்தினார். “குருவருள் துணைவருக!” என்றார் ஸ்ரீதமர்.

அவன் திரும்பி சாத்யகியை நோக்கினான். இருளில் இரு நீர்த்துளிகள் என அவன் கண்கள் தெரிந்தன. கைநீட்டி அவன் வலக்கையை பற்றிக்கொண்டான். மரத்தாலானது போல காய்ப்பேறிய போர்வலனின் கை. அது குளிரில் என மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் தன் பிடியை இறுக்கிவிட்டு கையை இழுக்க முயல சாத்யகி மீண்டும் ஒருமுறை பற்றி இறுக்கினான். ஆனால் விழிகளை விலக்கிக் கொண்டான். திருஷ்டத்யும்னன் தன் கையை இழுத்து விலக்கிக்கொண்டு சென்று நடைபாலத்தில் ஏறினான். கலத்தின் மீது நின்று மீண்டுமொருமுறை அக்ரூரரையும் ஸ்ரீதமரையும் வணங்கினான்.

கலம் கரைவிலகி அலைகளில் ஏறிக்கொண்டபோதும் அவன் கரையில் நின்றவர்களை நோக்கிக் கொண்டு நின்றிருந்தான். அவர்கள் சிறுத்து மறைந்தனர். துறைமேடை ஊசல்படி என ஆடியபடி விலகியது. கரையணைந்திருந்த ஒரு பீதர்நாட்டுப் பெருங்கலம் துறையை மறைத்து பெருஞ்சுவராக எழுந்து வந்துகொண்டே இருந்தது. மீண்டும் தெரிந்தபோது துறைமேடை மிகச்சிறியதாக ஆகி அலைகளுக்கு அப்பால் ஆடிக்கொண்டிருந்தது. அதன்மேல் விண்மீன்கள் மின்னிய வானில் இரட்டைக்குன்றுகள் எழுந்திருந்தன. பெருவாயிலின் சுடர்கள் இரு விண்விழிகள் போல நோக்கு நிலைத்திருந்தன. செங்கனல் குவை போலிருந்தது துவாரகையின் சுருள்பாதைகளால் ஆன குன்று.

அவன் நீள்மூச்சுகள் எழுந்து உலைந்த நெஞ்சுடன் கலத்தின் அமரத்தில் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழி தெளிந்தது போல வான் விடிந்தது. கீழ்ச்சரிவில் முகில்களின் கிழக்குமுகங்கள் சிவந்து பற்றிக்கொண்டன. வானப்பரப்பு ஒளிபரவி விரிந்து கொண்டே வந்தது. கடற்பறவைகள் எழுந்து அலைகள் மேல் பறந்து இறங்கி எழுந்தன. அவன் கலத்தின் வடத்தின்மேல் ஒரு வெண்பறவை வந்து அமர்ந்து துயர்கொண்ட காகம்போல கரைந்தது. தொலைவில் துவாரகையின் பெருவாயில் ஒரு வெண்கல உருளியின் பிடி போல தெரிந்தது. ஒருகணம் உளஅதிர்வொன்றை அவன் உணர்ந்தான். அவன் அதைவிட்டு விலகுவதாகத் தோன்றவில்லை, அணுகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. விழிகளை மூடி மூடித்திறந்து அந்த உளமயக்கை வெல்ல முயன்றான். அவ்வெண்ணம் கற்பாறையில் செதுக்கப்பட்டதுபோல நின்றது. அவன் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தான்.

[இந்திரநீலம் முழுமை]


Venmurasu VII

Indraneelam is the story of the love of Krishna's Eight wives and their marriage to him. The locus of the story is the Syamantaka gem, the proverbial carnival form of Krishna. It tempts and teases the psyche of everyone around Him, it originates and ends within Him. Most of the story is told as seen through the eyes of Dhrishtadyumnan, the prince of Panjala who visits Dwarakai and his friendship with Satyaki.!