Venmurasu IV

04-நீலம்

ஜெயமோகன்



Neelam is the story of Krishna and Radha. At once romantic and lyrical, it describes Krishna through Radha's eyes and develops the archetypes underlying the Advaita philosophies. Neelam also follows the story of Kamsa, who was slain by Krishna.!

திருப்பல்லாண்டு

’உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.

‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்.

சோலைக்குள் பல்லாயிரம் பறவைச்சிறகுகள் முதல்துடிப்பைப் பெற்றன. பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை.

‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்!  கருநீலத் தழல்மணியே!’ என்றது நாகணவாய்க்கூட்டம். சோலையின் மேல் விரிந்த வானில் மேகங்கள் நாணத்தின் ஒளி கொண்டன. உச்சிமரங்களின் நுனித்தளிர்கள் முதல் அமுதத்துளி உண்டு ததும்பி முறுக்கவிழ்ந்தன. பறவைச்சிறகுகள் தாங்கள் மேகங்களால் ஆனவை என்றறிந்து கொள்ளும் பெருங்கணம்.

‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன. சொடுக்கிய நீள்கழுத்துக்களில் மின்னிமறைந்த பசுநீல மணிவெளிச்சம் அக்காட்சியை தான் அறிந்திருந்தது.

‘இதுவே நீ! இவையே நீ’ என்றது நீலமணிக்குருவி..குருத்துகளில் இருந்து தண்ணொளி இலைகளுக்குச் சொட்டி பரவித் ததும்பி வழிந்தது. நீலம் பசுமைகொள்ளத்தொடங்கியபோது கண்விழித்தெழுந்துவந்தது பறக்கும் வேய்ங்குழல். ‘கண்ணா வாராயோ! கண்ணா வாராயோ!’ என்றது. சோலையெங்கும் பின் அச்சொல்லே நிறைந்தது

இனியவளே, உன் ஆயர்குடி இல்லத்தின் அழகிய சிற்றில் அறைக்குள் புல்பாய்மீது தலையணையை மார்போடணைத்து அன்னையின் மீது இடக்காலைத் தூக்கிப்போட்டு நீ துயின்றுகொண்டிருக்கிறாய். உன் சிறுசெவ்விதழ்களில் இருந்து வழியும் மதுரத்தை நீ இனி ஒரு துளியும் வீணாக்கலாகாது தோழி. இதோ புதுவசந்தத்தின் மலர்ப்பொடியும் குளிர்த்துளிகளும் புள்ளொலியும் சுமந்து உன் சாளரவாயிலை மெல்லத்திறந்து வந்து உன்னருகே அமர்கிறேன்.

மண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ. ஆயர்குலச் செல்வி, அழகால் நீ இப்புவிக்கே பேரரசி. பொன்னுருகி வழிந்த உன் நெற்றி வகிட்டின் நுனியில் அசையும் குறுங்குழல் சுருள்களை நீவுகின்றேன். உன் மூக்கின் மலர்வளைவை முத்தமிடுகிறேன். உன்மேலுதட்டின் பூமயிர் பரப்பில் என் மூச்சு பரவுகிறது. உன் மொட்டு விரியா இதழ்களை சுவைக்கிறேன். கன்னி, உன் அழகிய கழுத்தின் மூன்று பொன் வரிகளையும் என் விரல்களால் வருடி அறிகிறேன்.

அங்கெலாமில்லை என்பதுபோல் தளிர் விரல் விரித்து விழுந்து கிடக்கும் உன் இடக்கையின் கைவெண்மையில் எழுந்த அவன் சங்குக்கு முத்தம். பொன்பதக்கத்தில் ஓடிய பொன்வரிகளுக்கு முத்தம். உன் இடக்கையைத் தூக்கி இவ்வுலகை வாழ்த்து. தேவி, சக்கரம் திகழும் உன் அழகிய வலக்கை இங்குளான் என்று உன் நெஞ்சிலமர்ந்திருக்கிறது. நாளை அவனை சிறுசெல்லக்கோபம் கொண்டு அடிக்கவிருப்பது அது. இவ்வுலகில் காமத்தைப் படைத்தளித்து விளையாடும் கயவனை நீயன்றி வேறுயார்தான் தண்டிப்பது?

முத்தத்தால் மட்டுமே அறியமுடிபவளே. உன் முத்தங்களை எல்லாம் சேர்த்து வை. இளவியர்வையின் மணம் பரவிய உன் முகிழா இளமுலைக்குவைகளை நான் அறிகிறேன். மலர்க்காம்பு நாணம் கொண்டு மலருக்குள் மறைவதுண்டோ தோழி? என் நாவால் தீண்டி அவற்றை விழிப்புறசெய்கிறேன். இதோ, பொற்குவை ஆவுடை மேல் எழுந்தன இரு  இளநீல சிவக்குறிகள். தேவி, உன் மென்வயிற்றுக் குழைவில் விழுந்தால் அப்பொன்நதியின் சுழியில் மறைந்து எந்த யுகத்தில் விழித்தெழுவேன்?

உன் நீலச்சுடர் அல்குலுக்குள் மட்டும் நான் உன் மைந்தனாகிறேன். அது கரந்திருக்கும் பெருநதிகளின் ஊற்றுமுகங்கள் இன்னும் தவம் முடிக்கவில்லை. ஒன்றையொன்று தழுவி உறங்கும் உன் இளந்தொடைகள் தங்கள் கனவில் இன்னும் சற்று திளைக்கட்டும். அவை ஓடும் தொலைவுகள் அப்பால் காத்திருக்கின்றன. வெள்ளிச்சரமணிந்த உன் பாதங்கள் வைரமுடிசூடிய பேரரசியரின் முகங்கள். தேவி, அப்பாதங்களை தலையில் சூடுபவன் யாரென்றறிவாயா?.

நானறிவேன், ஆனால் சொல்ல மாட்டேன். உன் சிற்றில் பருவத்தில் மண்பறந்தமைக்காக என்னை வசைபாடினாயல்லவா? உன் ஊஞ்சலை நான் ஆட்டியதையும் மறந்தாயல்லவா? பொய்யில்லை, நான் அறிவேன். நானறியாத ஏதும் இம்மண்ணில் இல்லை. ஏனென்றால் இங்குள்ள அனைத்தையும் தீண்டும் வரம்பெற்றவன் நான்.

புவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக மலர்களை விரியவைத்து கனிகளைச் சிவக்கவைத்து நதிகளைச் சிலிர்க்கவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

கோபியர்களின் தாயே, என் பெயர் தென்றல். நான் நில்லாதவன். நின்றது உன் அழகைக் கண்டு மட்டுமே. அதனால் இதோ கண்ணுக்குத்தெரியாதவனாகிய நான் பேரழகனானேன்.

இன்னமும் துயிலுதியோ இளநங்காய்? இனியும் வேளை வருமென்று எண்ணினாயா? எத்தனை பிறவிப்படிகளில் ஏறி ஏறி இங்கு வந்துசேர்ந்திருக்கிறாயென்று அறிவாயா?

ஆம், இன்னும் அரைநாழிகைவேளை. அதற்குப்பின் உனக்குத் துயிலே இல்லை. பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது. உன் புளிப்பும் துவர்ப்பும் மறைந்துவிட்டன தோழி. மதுரமாகி நிறைந்துகொண்டிருக்கிறாய்.

என்ன பெயரிட்டனர் உனக்கு? ராதை! இளையவளே, அப்பெயரை உனக்கிட்டமைக்காக உன் அன்னைக்கும் உன் தந்தைக்கும் அவர்களின் ஏழுதலைமுறைக்கும் இதோ விண்ணுலகை அளிக்கிறேன். அப்பெயரிட்டநாளில் அங்கிருந்த அனைவருக்கும் விண்ணுலகை அளிக்கிறேன். அவனுக்கு அப்பெயரன்றி வேறில்லை என்றால் உனக்கு இப்பெயரன்றி வேறேது? ராதை, இக்கணம் நீ உன் துயிலில் தாண்டிய யுகங்கள் எத்தனை என்றறிவாயா?

ஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை தோழி. சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..

விண்சுருங்கி அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம். சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று வைத்தான் பாதகன்! அப்பிழையாலே அவன் தானும் ஆணாகப் பிறக்கவேண்டுமென்றானான்.

பெண்மையின் முழுநிறையே, மலரிதழ் ததும்பித்திரண்டு ஒளிரும் பனித்துளி போன்றது கன்னிமை. நீ அழியா பெருங்கன்னி. பெறாத கோடிப் பிள்ளைகளால் இப்புவியை நிறைக்கவிருக்கும் பேரன்னை! நீ வாழ்க! உன் பெயர் இனி யுகயுகங்களுக்கு வாழும். அடி, ஆயர்குலச்சிறுக்கி! பிரம்மகணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் உன் பெயர் வாழும்.

நாதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் இதழ்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. வேதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் முலைக்கண்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. கீதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் நாபிக்கமலத்துக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.

ஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே, உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.

ராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக! இக்கணம் எழுந்தமர்க கண்ணே. அதோ அவன் பெயர் சொல்லி ஆர்க்கின்றது குயில்கூட்டம்.

பகுதி ஒன்று : மணி நீல மலர்க்கடம்பு

[ 1 ]

உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்!’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.

தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி முட்டுகளின்மேல் முகம்சேர்த்து அமர்ந்துகொண்டாள். இன்னதென்றறியாமல் எண்ணி எண்ணி ஏங்கி மறுகிய இளநெஞ்சம் ஏக்கத்தின் சொல்வடிவாக ‘ஏனுளேன்?’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன்! ஏனுளேன்!’ என்று குரலின்றி கூவியது தாபத்தைச் சொல்லத்தெரியாத பெண்குயில்.

ஆவணிமாதத்து எட்டாம் கருநிலா நாளின் புலரியில் யமுனைநதிக்கரையிலமைந்த பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் இல்லத்தில் அவரது ஒரேமகள் ராதை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கண்ணீரின் இனிமையை பெண்களன்றி யாரறிய முடியும்? ஒவ்வொரு துளியும் தித்திக்கும் கன்னிமையின் விழிநீரை அவள் முதல்முதலாக அறிந்தாள். சொல்லில் நிறையும் மதுரகவிப்பொருள் போல மென்மயிர் வகிடு முதல் உள்ளங்கால் வெண்மை வரை நிறைந்தது கண்ணீர். வேய்ங்குழலை நிரப்பி வழியும் இசையென வழிந்தது.

மெல்லிய விசும்பல் ஒலி அரையிருளில் எழக்கேட்டு கண்விழித்த அன்னை புரண்டு தன் உடலொட்டிப் படுத்திருந்த அவள் விலகிவிட்டிருப்பதை உணர்ந்து "என்னடி?'' என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். "ஏனடி?" என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு "காய்ச்சலோடி?" என்று மீண்டும் கைநீட்டி அவள் நெற்றியை தொடவந்தாள். தொடப்படுவதற்குள்ளாகவே ராதை அத்தொடுகையிலிருந்து அகம் விலகப்பெற்றாள்.

அன்னையின் தொடுகையை என் அகம் விலக்கும் விந்தைதான் என்ன? இனி அவள் இடைமேல் கால்வைத்து ஒருபோதும் நான் துயிலப்போவதில்லை. ஆழ்துயிலில் நான் அயர்கையில் அவள் தோளில் என் வாய்நீர் சொட்டப்போவதில்லை. அவள் கை என் குழல்கோதுகையில் கனவுக்குள் புன்னகைக்கப்போவதில்லை. இளங்காலைக்குளிரில் அவள் முந்தானையை இழுத்து நான் சுருண்டு அவள் கனத்த தொய்முலைகளை காற்றுக்கு விடப்போவதில்லை. அம்மா, உன் மகள் சென்ற கணத்தில் உன்னிலிருந்து உதிர்ந்துவிட்டிருக்கிறாள்.

பிறிதொரு பெரும்பேதமைக்குள் வாழ்ந்திருந்த அன்னை ஏதுமறியாதவளாய் அவள் கழுத்தையும் கன்னங்களையும் தொட்டுநோக்கினாள். "வெம்மையேதும் இல்லையேடி" என்றாள். "ஆவணி மாதத்து இளமழை ஆகாதென்றேனே? சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்" என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். "கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்" என்று சொல்லி எழுந்தாள். "என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி?"

யார் நீ? என் ஆலயத்துக் கருவறை முற்றம் வரை தயக்கமின்றி வருகிறாயே. விலகு. இங்கே பீடம்கொண்டவன் மலரும் மலராடையும் அணியும் முடியும் அற்றவனாக நின்றிருக்கும் அதிகாலைவேளை இது. அவனுக்காக இரவுக்காற்று பரப்பிவைத்த மென்மணல் பரப்பின் கதுப்பில் எளிய முதியவளே உன் பாதம் படியலாகாது. உள்ளங்கை ஒளிமணியை தொலைதூரத்து விண்மீன்போலப் பார்க்கும் உன் பேதைவிழிகளை, அன்னமிட்டு அன்னமிட்டு அன்னமய உடலை மட்டுமே தொட்டறியும் உன் நரம்போடிய கைகளை, என் பெயர் சொல்கையில் மட்டும் இசைக்கருவியாகும் உன் உதடுகளை வெறுக்கிறேன். விலகிச்செல், இவ்வாலயத்தில் ஒருவருக்கே இடம்.

கொல்லையில் கட்டுக்கயிற்றை இழுத்து மெழுகுமூக்கை நீட்டி கத்தும் கன்றின் குரலாக என் அகம் ஆனதென்ன? முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி? பர்சானபுரி எழுந்துவிட்டது. நூறு தொழுவங்களில் பசுக்கள் நாதமெழுப்புகின்றன. அவற்றின் அடியில் மண்டியிட்டமர்ந்து வெண்ணை தொட்ட கைகளைக் கொண்டு காம்பு பற்றிக் கறக்கும் ஆயர்கள் என் குடியின் வேதத்தை எழுப்புகிறார்கள். கழுத்துமணிகளின் இசையில் கண்விழித்த பால்மழலைகளின் அழுகைகள் கலக்கின்றன. இங்கிருக்கிறேன், எவரோ மறந்து விட்டுச் சென்ற வைரம் போல.

அப்பால் யமுனைநதிக்கரையின் சோலைகளில் இன்று அத்தனை பறவைகளும் கிளர்ச்சி கொண்டிருக்கின்றன. இளந்தூறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள்வேதம். மையல்கொண்டிருக்கின்றது மணிப்பொழில். அங்கே கேட்கும் அத்தனை பறவைக்குரல்களையும் ஒன்றொன்றாய் தொட்டுத் தொட்டு மீள்கிறேன். ஒவ்வொரு சொல்லும் அதுவே. ஒரு சொல்லும் அவனல்ல. தனித்து கனத்து என் தாபம் திரும்பிவந்து தன் கூடணைந்து நெட்டுயிர்த்து வாயில் மூடும் கணம் தேன்மாமரத்தின் கிளையில் வந்தமர்ந்த குயில் அவன் பெயரைச் சொன்னதைக் கேட்டேன். அக்கணமே இறந்தேன்.

"அம்மா!" என்று அலறியபடி அடுமனைக்குள் ஓடிவந்து தன்னை அணைத்துக்கொண்ட மகளின் நடுங்கும் சிறிய உடலை தன் மார்போடு சேர்த்து குனிந்து அவள் நீலப்பெருவிழிகளைக் கண்டதுமே கீர்த்திதை புன்னகைத்தாள். "ஒன்றுமில்லையடி... ஒன்றுமே இல்லை. அஞ்சாதே" என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டாள். "வா, என் கண்ணே..." என்று கைகள் பற்றி கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். "பேதையே, இதற்கா இத்தனை விழிநீர்? மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது?"

ஓடிச்சென்று ஒருகைப்பிடி கன்னிப்பசுஞ்சாணி எடுத்து நீரில்கரைத்து இல்லத்தின் தென்மேற்கு மூலையை மெழுகினாள். பச்சரிசி மாவெடுத்து நீரில் கரைத்து 'பெருகுக! வளர்க! வாழ்க!' என்று மும்முறை சொல்லி கோலமிட்டு அதன்மேல் மரத்தாலான மணையிட்டு அவளை அமரச்செய்தாள். அத்தனை தெய்வங்களையும் இப்பால் நிறுத்த ஓர் உலக்கையை அவள் முன் வைத்தாள். அப்பால் தான் மட்டுமே தெய்வமாக அமர்ந்திருந்த அவளை நோக்கி "தென்கடல் முனைநின்ற தெய்வத்திருவே வாழ்க!" என வாழ்த்தி வணங்கியபின் முதிய உடல் குலுங்க கண்ணீரும் சிரிப்புமாக ஓடிச்சென்று தன் பூசனைத்தட்டை எடுத்து முற்றத்திற்கு வந்து நின்று அதை தூபக்கரண்டியால் தட்டி ஒலியெழுப்பினாள். அக்கணமே ஆயர்ச்சேரி உவகையில் நகைத்துக்குலுங்கத் தொடங்கியது.

தேன்கொண்டு கூடுதிரும்பும் தேனீக்களைப்போல ஆயர்பெண்டிர் அக்காரமாவும், அரிசிப்பொரியும் மஞ்சள்நீரும் மலர்களுமாக அவள் வீட்டை நோக்கிவரத்தொடங்கினர். கன்றுகளை கறந்துகட்டி திரும்பிவந்த ரிஷபானு நகையொலியும் நகைப்பொலியுமாக தன் இல்லத்தைச் சூழ்ந்திருந்த பெண்களைக் கண்டு திகைத்து நின்றார். அவரை நோக்கி ஓடிவந்த கீர்த்திதை அருகே வந்ததும் நெடுங்காலம் முன்பு தான் மறந்துவிட்டுவந்த நாணத்தை திரும்பப்பெற்று முகம்சிவந்து மூச்சிரைக்க நின்றுவிட்டாள். "என்ன? என்ன?" என்றார் ரிஷபானு. "நம் மகள் இல்லம் நிறைத்தாள்" என்றாள் கீர்த்திதை. அதைச்சொன்ன அக்கணமே அவர்களிருவரும் அவள் தங்கள் கைகளில் இருந்து நழுவிவிட்டதை உணர்ந்து கண்ணீர் துளிர்த்தனர்.

நெடுமூச்சுடன் உயிர்த்தெழுந்த கீர்த்திதை "இரு தரப்பு மூதன்னையரையும் முறைப்படி அறிவிக்கவேண்டும். தாய்மாமன்களை அழைக்க தங்கள் தம்பியரே செல்லவேண்டும்" என்றாள். "ஆம்" என்று சொல்லி ரிஷபானு புன்னகைத்தார். "வாருங்கள்" என்று அழைத்துச்சென்று உள்ளறையில் மரப்பெட்டியில் தாழைமடலிட்டு மூடிவைத்திருந்த பொன்னூல் நெய்த பட்டுப்பாகையை எடுத்து அவரிடம் அளித்து "தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்றாள். "கன்றோட்டும் சிறுகோலே செங்கோலாக, இன்று ஒருநாள் விண்ணவரும் வணங்கும் அரசனாக ஆனீர்" என்றாள்.

பொற்பட்டுத் தலைப்பாகை சுற்றி, கங்கணமும் குண்டலங்களும் அணிந்து மார்பில் மலர்மாலை துவள தன் இல்லத்துத் திண்ணையில் சித்திரப்பட்டுப்பாய் விரித்து கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டார் ரிஷபானு. செய்திகேட்ட அவர் தம்பியர் ரத்னபானுவும், சுபானுவும், பானுவும் தாங்களும் பட்டுத் தலைப்பாகையும் மலர்மாலையும் அணிந்தவர்களாக வந்து வணங்கினர். எவரையும் குறித்து நோக்காது மிதந்த விழிகளுடன் செருக்கி தலைதூக்கி "அடேய், இன்று எது முறைமையோ அதையெல்லாம் நிகழ்த்துங்கள். தேவையென்றால் எனக்குரிய அத்தனை பசுக்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ரிஷபானு ஆணையிட்டார். தோள்குறுக்கி வணங்கி "அவ்வண்ணமே" என்றனர் தம்பியர்.

பர்சானத்தின் சரிவுக்கு அப்பாலிருந்த பத்ரவனத்திலிருந்து கீர்த்திதையின் தங்கை கீர்த்திமதி அங்கிருந்தே மூச்சிரைக்க ஓடிவந்தாள். நாணத்தை முற்றிலுமிழந்தவளாக திண்ணையில் அமர்ந்திருந்த ரிஷபானுவை நோக்கி வாய்விட்டுச் சிரித்து "அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கிறீர்கள் அத்தான்! என்கண்ணே பட்டுவிடப்போகிறது!" என்றாள். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி இல்லத்திற்குள் ஓடிச்சென்று தென்மேற்கு மூலையில் கொலுக்கொண்ட செல்வத்தை நோக்கியதும் தீச்சுட்டவள் போல ஒரு கணம் துடித்து "உன்னை முதலில் காணக் கொடுத்துவைத்தவள் அவளல்லவா கண்ணே?" என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து "உனக்குமட்டும் தெய்வங்கள் அள்ளிக்கொடுக்கின்றன அக்கா!" என்று சொன்னதுமே அகம்வெந்து கண்ணீர் விட்டாள்.

"நீயே இப்படிச் சொல்கிறாய். இவள் மாமியர் வந்தால் என்னை என்னதான் சொல்லமாட்டார்கள்?" என்றாள் கீர்த்திதை. "உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்?" என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் "முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி" என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். "இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்?" என்றாள் கீர்த்திமதி. "தாத்ரியும் கௌரியும் வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் முந்தி ஓடிவந்தோம். தாதகி குழந்தையுடன் வருகிறாள்" என்றாள் மேனகை.

"அய்யோடி, தனியாகவா அமரச்சொன்னாய்? அவள் தோழிகளை அருகமரச்செய்யவேண்டாமா? இதைக்கூடவா சொல்லிக்கொடுக்கவேண்டும் உனக்கு? என்றைக்குத்தான் அறிவு வரப்போகிறது?" என்றாள் ஷஷ்தி. மேனகை "பொன்னகை போடாமலா என் செல்லத்தை அமரச்செய்தாய்? இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு" என்றபடி ராதையின் அருகே சென்றாள். "அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில்? என் தெய்வமே" என்றாள் மேனகை.

அருகே சென்ற மாமியர் இமைதாழ்ந்து பாதிமூடிய விழிகளுடன் இருந்த அவளைக் கண்டு பேச்சிழந்து கைகூப்பினர். "மதுரம் நிறைந்த பொற்கலம்" என்றாள் மேனகை. அச்சொல் கிளையில் அமராத பறவை போல அங்கிருந்த அமைதியின் மேல் தவித்தது. உள்ளே ஓடிவந்த தாத்ரியும் கௌரியும் "எங்கே? எங்கே என் கொன்றைமலர்க்குண்டு?” என்றபடி வந்து அருகே நின்று கால்தளர்ந்து தமக்கையரின் தோள்பற்றிக்கொண்டனர். உள்ளும் புறமும் பெண்கள் ஒலித்து நிறைந்திருந்த சிற்றிலில் முற்றிலும் தனிமையில் இருந்த அவளை மட்டும் நோக்கி நின்றனர்.

பத்மவனத்தில் இருந்து ரிஷபானுவின் அன்னை சுகதை வந்தாள். அவள் கால்கழுவிக்கொண்டு உள்ளே நுழையும்போதே இரு கைகளிலும் இனிப்புகளுடன் கீர்த்திதையின் அன்னை முகாரையும் வந்தாள். பெருஞ்செல்வத்தை பதுக்கிவைத்த வணிகன் அயலூரானை என இரு கிழவியரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். இவ்வளவு போதும் என்று ஓர் சிறுநகை பரிமாறினர். உள்ளே வந்ததுமே முகாரை "என் கண்ணே, இன்று அதிகாலையிலேயே குயில் பாடியதே இதனால்தானா?" என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே?" என்றாள்.

லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் வளையலோசையும் வெட்கிய சிரிப்போசையுமாக வந்தனர். பட்டுப்பாவாடை ஒலி அவர்களின் கிசுகிசுப்பொலியுடன் இணைந்தும் விலகியும் மாயம் காட்ட, பேசிப்பேசி அசையும் தலைக்கு இருபக்கமும் ஒளிமணிக்குழைகள் கன்னம் தொட்டு கன்னம் தொட்டு ஆடிக்கொண்டே இருந்தன. சுதேவியும், துங்கவித்யையும், இந்துலேகையும் அவர்களுக்குப் பின்னால் கொலுசுகள் ஒலிக்க ஓடிவந்து தோள்தொட்டு சேர்ந்துகொண்டனர். மெல்லுதடுகளுக்கு மேல் இளவியர்வை பனித்திருக்க உள்ளே வந்து தங்கள் தோழியைக் கண்டு "யாரிவள்?" என்று திகைத்தனர்.

"ஒன்பதிலேயே ஒருத்தி அமரமுடியுமா என்ன?" என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். "மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா?" முகாரை "ஆனதில்லை. ஆனால் இந்தமரம் எளிதில் தீப்பற்றுவதென்று நினைக்கிறேன்" என்றபின் குனிந்து நகைத்து "குன்றாப் பெருந்தாபம் கொண்டவளாக இருப்பாள்" என்றாள். சமையற்கட்டுமுழுக்க பெண்களின் சிரிப்பொலி எழுந்தது. சினத்துடன் முகத்தை நொடித்து சுகதை "வீண்சொல் பேசவேண்டாம் பெண்களே. என் மடமகளுக்கு ஒன்றும் தெரியாது" என்றாள். "அவளுக்குத் தெரியாததை அந்த மாமரத்துக்குயில் சொல்லிக்கொடுக்கும்" என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.

நீங்களெல்லாம் யார் பெண்களே? உங்கள் விழிகள் பார்க்கும் எதையும் எப்போதுமே பார்த்திராத எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு? அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஆயர்மடமகள் என்கிறீர்கள். போஜர் குலக்கொழுந்து என்கிறீர்கள். அவள் யார்?

"மன்று சூழ்ந்து மந்தணம் பேசியது போதும் பெண்களே. மங்கையை கூட்டிச்சென்று நதிக்கரை மலர்க்கிளை ஒன்றை ஒடித்து கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லவேண்டுமென்று உங்களில் எவருக்குமே தெரியாதா? நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா?" என்றாள் முதுபெரும்செவிலியான நந்திதை. "ஆம், அது முறைமை" என்றாள் சுகதை. "பொறுத்தருள்க அன்னையே. அத்தனைபேரும் பித்துகொண்டிருக்கிறோம்" என்றாள் கீர்த்திமதி.

முதுதந்தையர் மகிபானுவும் இந்துவும் பெரியதலைப்பாகை அணிந்து கோலூன்றி வந்து சேர்ந்தனர். தாய்மாமன்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் அவர்களை கைப்பிடித்து படியேற்றி பட்டுப்பாய்விரித்த திண்ணையில் அமரச்செய்தனர். பொற்தலைப்பாகை அவர்களின் கால்களில் பட வணங்கிய ரிஷபானுவின் சூடான கண்ணீரை அவர்கள் உணர்ந்தனர். அவர் இழந்ததென்ன என்றறிந்திருந்த முதுதாதையர் முதுமைகனிந்த கண்கள் சுருங்க நகைத்து "மூடா, மின்னல்தாக்கிய மரம்போல விண்ணவர்க்கு உகந்தது எது?" என்றனர்.

மாமியரை மணந்த மாமன்கள் குசனும் கசனும் வந்தனர். அவர்களுடன் காட்டில் ஆநிரை மேய்க்கச்சென்றிருந்த ராதையின் தமையன் ஸ்ரீதமன் ஓசையின்றி வந்து எவராலும் அறியப்படாமல் முற்றத்து மாமரத்தின் கீழே நின்று அக்கூட்டத்தின் பேச்சொலிக்குள்ளும் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த குயிலை கேட்டுக்கொண்டிருந்தான். மீண்டுமொரு பெண்குரல் சலசலப்பு இல்லத்துக்குள் எழுந்தது. அவன் பெருமூச்சு விட்டு கால்மாற்றி நின்றான்.

சேமக்கலத்தை கரண்டியால் தட்டியபடி முதுசெவிலி நந்திதை முன்னால் செல்ல லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் தொடர்ந்தனர். நடுவே பொற்பட்டுச்சால்வையால் முற்றிலும் முகமும் உடலும் மூடிக்கொண்டு ராதை நிலம்நோக்கி நடந்துசென்றாள். சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அவளுக்குப்பின்னால் காதோடு இதழ் தொடச் சிரித்துச் சிரித்து அகச்சொல் பேசிச்சென்றனர். அன்னையரும் மாமியரும் என முதுபெண்டிர் அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.

இந்த மண்ணுக்குமா நான் அயலாகிவிட்டேன்? இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன? நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன்? ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே? எவர் நடந்து செல்வதற்கான பாதை நான்?

யமுனையின் ஒளியை இலைகளின் அடியில் காண்கிறேன். இந்த மதுவனத்தின் அத்தனை இலைகளிலும் யமுனை ஓடிக்கொண்டிருப்பதை இன்றுதான் அறிந்தேன். உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது? அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே. ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.

"மகளே, இந்தச் சோலைமரங்களில் உனக்கு உகந்த ஒன்றின் சிறுகிளையை ஒடித்து எடுத்துக்கொள். வாழ்நாளெல்லாம் காதலிலும் தாய்மையிலும் உன்னுடன் துணையாக அது இருக்கும்" என்றாள் முதுபெரும் செவிலி. ராதை ஒருகணமும் தயங்காமல் சென்று அந்த முதுகடம்பின் கீழ்க்கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டாள். "ஆ!" என்றாள் முதுபெரும் செவிலி. "அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது!” யமுனைநதிக்கரையில் பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் தழுவி நகைத்தது.

மலர்க்கிளையை கையிலேந்தி திரும்பிய ராதை அப்பால் விரைவழிந்த கரையோர நீர்மீது பூத்து நிறைந்து காற்றிலாடிய நீலக்குவளை மலர்வெளியின் மீது சென்ற சிறுபடகொன்றைக் கண்டாள். முகம் மறைய தலைப்பாகையைத் தாழ்த்தி அணிந்து குனிந்தமர்ந்த ஒருவர் அதை துடுப்பிட்டு செலுத்திக்கொண்டிருக்க படகின் பலகைமேலிருந்த மூங்கில்கூடையொன்றுக்குள் சிற்றசைவொன்று தெரிந்தது. மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம்.

வெண்முரசு விவாதங்கள்

முகிழ்முலை கனிதல்

முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து பரவிய குங்குமம் கொண்ட பொன்னுதலுடன் துயில் ததும்பும் விழிகளால் நோக்கி “என்னடி?” என்று லலிதை முனகினாள். “என்னுடன் வருகிறாயா?”என்று மெல்லியகுரலில் ராதை கேட்டாள்.

“எங்கே?” என லலிதை திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். சிற்றகல் ஒளியில் செம்மை மின்னிய முகத்தைக் கண்டு “என்னடி இது? கூந்தல் நீவி முடைந்திருக்கிறாய்? ஆடை திருத்தி அணிகள் ஒருக்கியிருக்கிறாய். எங்கே கிளம்புகிறாய்? அய்யோ!” என்று பதறினாள். “நான் அம்மைந்தனை தேடிச்செல்லவிருக்கிறேன்” என்றாள் ராதை. லலிதை திகைத்து “எந்தக்குழந்தையை?” என்றாள். “இன்று மாலை முதுதாதை சொல்வதைக் கேட்டேன். அந்த கருநீலக்குழந்தை சென்ற இடத்தை அறிந்தேன்” ராதை சொன்னாள்.

லலிதை மூச்சிழுத்து இளமுலைகளைக் கையால் அழுத்தி “பிச்சி போல் பேசுகிறாய்! இவ்விடியல் கருக்கலில் எப்படி அத்தனை தொலைவு செல்லமுடியும்?” என்றாள். “நான் சென்றாகவேண்டும். சற்றுமுன் என் கனவில் அந்த செவ்விதழ் பாதம் விரிந்த நீலக்கழல்களை மீண்டும் கண்டேன்” என்று ராதை சொன்னாள். “நீ வரவில்லை என்றால் நானே செல்கிறேன். என் உள்ளம் அப்போதே கிளம்பி பாதிவழிசென்றுவிட்டது” என்று செம்பட்டு மேலாடையை கையில் எடுத்தாள்.

“குடிநிறைத்த குமரி பன்னிரு நாட்களுக்கு வெளியே செல்லவே கூடாதடி. சேமக்கல ஒலியும் காவல்பெண்டிர் துணையும் காப்புமலர்க்கிளையும் கொண்டு நீராடச்செல்வதற்கு மட்டுமே நெறி ஒப்புகிறது... அன்னையோ மாமியோ அறிந்தால் அக்கணமே பிரம்பை எடுத்துவிடுவார்கள்” என்று லலிதை கூறிக்கொண்டிருக்க ராதை தன் சதங்கைக்குமேல் மென்துகிலைச் சுற்றினாள். கைவளைகளுக்குமேல் மேலாடையைச் சுற்றினாள்.

“என்ன செய்கிறாயடி பிச்சி?” என்றாள் லலிதை. “வளையலோசையும் சதங்கை மணியோசையும் இங்கு எவரையும் எழுப்பவேண்டியதில்லை” என்றாள் ராதை. “ஒவ்வொன்றாக கழற்றுவதற்கு இங்கே ஒளியில்லை” என்றபின் தன்னைச்சுற்றித் துயிலும் தோழியர் பாய்களுக்கு நடுவே சேற்றில் நடக்கும் நீர்க்கொக்கு போல நீளக்கால் எடுத்துவைத்து கடந்துசென்றாள்.

“அய்யோ... நான் என்ன செய்வேன்” என்று புலம்பிய லலிதை அவளைப்போலவே அணிகளில் துணிசுற்றி காலெடுத்துவைத்து பின்னால் வந்தாள். “இத்தனை களவும் என்று நீ கற்றாய்? நீ யாரென்றே என் அகம் திகைக்கிறதே” என்றவள் அடுமனையின் மேடையில் இருந்த வெண்ணைக்கலங்களின் விளிம்புநெய்யை வழித்து கதவின் தாழில் பூசி அதை ஓசையின்றி மெல்லத்திறந்த ராதையை நோக்கி நெஞ்சில் கைசேர்த்தாள்.

வண்ணச்சிறகெழுந்தது போல் மேலாடைபறக்க வெளியிருளின் முன் நின்ற ராதையை நோக்கி “வேண்டாமடி. கருக்கிருட்டில் பெண்டிர் செல்லக்கூடாதென்பர் மூதன்னையர்” என்று அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள். “இருட்டிலும் எனக்கு விழி தெளிகிறது. இதோ முற்றத்து மரத்தின் ஒவ்வொரு இலையையும் காண்கிறேன்” என்று அவள் இருளுக்குள் காலெடுத்து வைத்தாள். “பெண்கள் செய்யக்கூடாத செயலடி இது” என்றாள் லலிதை. “நான் பெண்ணே அல்ல” என்று ராதை சிரித்த ஒலி இருளில் புள்சிலம்பியது போலக் கேட்டது.

“நில்லடி... தனியாக உன்னை எப்படி விடுவேன்” என்று லலிதை பின்னால் ஓடினாள். “மாயவரும் பேயவரும் உலவும் விடிகாலை என்பார்களே” என்று அரற்றியபடி அவளைத் தொடர்ந்து மூச்சிரைக்க விரைந்தாள். “என்னை ஆட்கொண்டிருக்கும் பெருமயல் கண்டு மாயவர் அஞ்சுவர். பேயவர் உடன் வந்து நடமிடுவர்...” என நகைத்தபடி ராதை பசுஞ்சாணி மணக்கும் ஆயர்க்குடில்கள் இருளில் நிரைவகுத்து அமைந்த தெருவில் இலைவருடிச்செல்லும் இளங்காற்று போலச் சென்றாள். “சிறகு முளைத்தபின் எந்தப்பறவையும் கூடுகளில் அமர்ந்திருப்பதில்லை தோழி.”

பசுக்களின் மடி நிறைக்கும் தெய்வங்களின் பெயர்களை நாவுக்குள் சொல்லி ஊழ்கத்திலிருக்கும் மூதன்னையர் போல பனிசொட்டும் இலைநுனிகளுடன் இருளுக்குள் மூழ்கிநின்ற பெருமரங்கள் அரணிட்ட யமுனைப்பாதையில் சென்று இருளுக்குள் கனிவே ஒளியாக ஓடிக்கொண்டிருந்த நதிக்கரையை அடைந்தனர். “இவ்வழியேதான்” என்று கைசுட்டிய ராதை அத்திசை நோக்கி பாய்ந்து சுழித்தோடிச் சென்றாள்.

“எங்கே? எங்கென்று சொல்லடி” என்றாள் லலிதை. “இவ்வழியே நான் செல்வதுபோலக் கனவுகண்டேன். என் முன் தென்றலில் ஏறி மலர்கள் சென்றுகொண்டிருந்தன. நீலம்பூத்து விழி நிறைந்த யமுனையின் கரையோரமாக. கடம்பு மலர்க்கம்பளம் விரிந்த பாதையின் வழியாக. அங்கே ஓர் ஆயர்ச்சிறுகுடியில் அன்னையின் முலைவெம்மையில் ஒடுங்கி உறங்கும் நீலச்சிறுமணியைக் கண்டேன்” என்றாள் ராதை. “நீலக்கடம்பு பூத்து நின்றிருக்கும் நடுமுற்றம். அதன் வலப்பக்கம் இரட்டை மருதமரங்கள் நிழல் விரித்து நின்றிருக்கும்.”

லலிதை 'அய்யோ! என்ன செய்வேன். ஏதோ அறிவின்மையில் இப்பிச்சியுடன் இத்தனை தொலைவுக்கு வந்துவிட்டேனே...' என்று ஏங்கினாள். திரும்பிச்செல்லலாமா என ஒரு கணம் எண்ணி நோக்கியபின் அப்பால் அகன்று சென்ற ராதையை நோக்கி “நில்லடி! நில்லடி அங்கே!” என்று கூவியபடி ஓடினாள்.

நீர்த்துளி கனத்த மலர்க்கிளைகளை நகைத்தபடி துள்ளிக்குதித்து கையால் அடித்து சிதறவைத்துச் சிரித்துக் கூவினாள். சிறுமலர்களைப்பற்றி உருவி எடுத்து தன் தலையில் தானே தூவி உடல்குறுக்கி சிலிர்த்துக்கொண்டாள். புதரில் தலையெடுத்த இளமானைக் கண்டு கூவிநகைத்து துரத்திச்சென்று அள்ளித்தழுவிக் கொண்டாள். ஒளிவிட்டு சாலையைக் கடந்த கருநாகத்தை ஓடிச்சென்று எடுத்து தன் கழுத்திலணிந்துகொண்டாள். “ராதை! ராதை!” என்று அரற்றுவதன்றி ஒன்றும் செய்ய இயலாதவளாக உடன் சென்றுகொண்டிருந்தாள் லலிதை. “பிச்சி ஆகிவிட்டாயா? தோழி, சற்று நில்! நான் சொல்வதைக்கேள்” என்று கூவினாள்.

ராதை உரக்க நகைத்து “பிச்சியாவதென்ன, பேய்ச்சியாவதென்ன, இங்குள ஏதுமாவதென்ன. நான் அங்குளேன். அருகுளேன். எஞ்சுகிலேன். ஏதுமிலேன்” என்றபின் கைவிரித்து ஓடத்தொடங்கினாள். அவள் பின்னால் ஓடிச்சென்று அவள் கையைப்பற்றி இழுத்து “ராதை, நம் இல்லம் திரும்புவோம் வா” என்றாள் லலிதை. “நீ யார்?” என்று அவள் கையை உருவிக்கொண்டு சினந்து கேட்டாள். “என் கைவளை உடைய பற்றி இழுக்க உனக்கேது உரிமை?” கண்ணீர் வழிய “ராதை ராதை ராதை” என்றாள் லலிதை.

கிழக்கின் இளங்கதிர்களால் யமுனை ஒளிப்பெருக்காக மாறியபோது குசவனத்தையும் கொன்றைவனத்தையும் செண்பகவனத்தையும் கடந்து அவர்கள் ஆயர்குடிகள் வாழும் சிற்றூரைச் சென்றடைந்தனர். சற்றுமுன் விழித்தெழுந்த ஊரெங்கும் கன்றுகள் முலைக்குத் தாவும் குரலும் அன்னைப்பசுக்கள் அருகழைக்கும் மறுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தன. கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால்கறக்கும் ஒலிகள் எழுந்தன. ஒலித்து ஒலித்து நிறைந்து நுரைத்து ஞானத்தின் அமைதிகொண்டன சிறுபாற்குடங்கள். உள்ளே சென்று பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக்கொண்டன. அவற்றை கணவர் கைகளில் இருந்து வாங்கி உள்ளே கொண்டுசென்ற ஆய்ச்சியர் முற்றத்தில் விரைந்தோடும் இரு பெண்களை நோக்கி “யாரிவர்? இவ்வேளையில்?” என வியந்து நின்றனர்.

இரவுக்காற்று வீசிப்படிந்த மென்மணல் அலைகள்மேல் காலடித்தடம் பதிய ராதை விரைந்தாள். வெண்மலர் வீழ்ந்து கிடந்த அப்பாதத்தடங்களை மிதிக்கலாகாதென்ற உள்ளுணர்வால் சற்றே விலகி ஓடினாள் லலிதை. அந்த ஊர் கோகுலம் என்றும் அங்கே முன்பொருமுறை கன்றுஅணையும் விழவுக்கு தோழியர் சூழ தான் வந்திருப்பதையும் உணர்ந்தாள். ஊர்நடுவே எழுந்த இரண்டடுக்குக் கூரைகொண்ட புல்வீடு ஊர்த்தலைவர் நந்தகோபனுடையது என்று அவள் உணர்ந்தபோது ராதை அதை நோக்கித்தான் செல்கிறாள் என்றும் அறிந்தாள்.

“இதுதான். இங்குள்ள ஒவ்வொரு கூழாங்கல்லையும் நான் கண்டேன். ஒவ்வொரு மலரின் நோக்கும் என்னை அறிந்துள்ளது. ஒவ்வொரு இலைநுனிச் சொல்லும் என் பெயர் சொல்கிறது” என்றாள் ராதை. பிறிதொரு இல்லமென்னும் நாண் சற்றுமில்லாது மரப்படிகளில் ஏறி பசுஞ்சாணி மெழுகப்பட்ட திண்ணையில் கால்வைத்து வெள்ளிச்சதங்கைகளும் வெண்சங்குவளையல்களும் ஒலிக்க உள்ளே சென்றாள்.

வாசலிலேயே நின்ற லலிதை அவ்விடத்தை அவளும் எங்கோ கண்டதாக உணர்ந்து மெய்விதிர்த்தாள். அன்னைப்பசு நக்கிநக்கித் துவட்டிய ஈரநாத்தடம் படிந்த மென்மயிர் உடலுடன் அதிகாலையில் சிலிர்த்து நின்றிருக்கும் சிறு கன்றென குளிர்வானிலிருந்து எழுந்த தென்றலில் புல்பரப்புகள் படிந்து நின்றிருந்தது கோகுலம். அண்ணாந்து அன்னையின் அடிவயிற்றை நக்கும் இளம்கன்று என இலைகளால் வானைத் துழாவியது நீலக்கடம்பு. அப்பால் சொல்லாக் காதல் தேங்கிய விழிகள் என இலைகள் பளபளத்து நின்றன இரட்டை மருதுகள். அதிகாலைப் பசுஞ்சாணி தெளிக்கப்பட்ட முற்றத்தில் ஓரிரு வெண்மலர்களுடன் ஒரு பொற்தகடென பழுத்த இலை ஒன்று விழுந்து கிடந்தது.

அஞ்சி வளையும் மணிமயில் கழுத்தென ஒரு நொடி. சிலிர்த்துத் தோகை நடுங்கும் மறு நொடி. மலர் உதிரும் கிளையசைவென ஒரு நொடி. வானிலெழும் புள்சிறகென மறு நொடி. வெளித்த வெறும் வானமென ஒரு நொடி. பெருகும் மேகவெள்ளமென மறு நொடி. ஒளியென ஒரு நொடி. அதிலோடும் ஓங்காரமென மறு நொடி. காலமே, இங்கே சுழித்துச் சுழித்து நீ நின்றிருந்தால் அங்கே பிரம்மம் எவ்வண்ணம் தன்னை நிகழ்த்தும்?

மோனம்சூடி அமர்ந்திருந்தது கோகுலம். ஓசைகளை எல்லாம் தானாக்கிக் கொண்டு எழுந்தது பேரமைதி. இலைகள் சலசலக்கும் அமைதி. கன்று ஒன்று அன்னையே என்னும் அமைதி. கலம் ஒன்று முட்டிக்கொள்ளும் அமைதி. மத்துக்கள் வெண்ணையைத் திரட்டும் அமைதி. எங்கோ ஓர் அன்னை தன் மகவைக் கொஞ்சும் அமைதி. அமைதியில் மிதந்தசைந்தன புல்கூரை கவிழ்ந்த இல்லங்கள். அமைதியின்மேல் வழிந்து நிறைந்தது காலையிளவெயில். அமைதியின் மேல் சிறகடித்தன சிறுபுட்கள்.

தென்றல் விரிந்த மென்மணல் பரப்பில் எழுதப்பட்டிருந்தன பறவைமென்விரல் மந்திரங்கள். ஒளிச்சரடான சிலந்தி வலையில் சுழன்று சுழன்று சுழன்று தவித்துக்கொண்டிருந்தது சிறுமலரிதழ்ச் சருகு. ஏன் என்றது தொலைதூரக்காகம். ஆம் ஆம் என்றது அண்மையிலொரு சிட்டு. இங்கே இங்கே என்றது முற்றத்தில் வந்து சிறகடுக்கி அமர்ந்து மஞ்சள்பட்டையிட்ட சிறுமணி விழிகளால் நோக்கிய மைனா. இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதென்ன? எந்தப்பெருநாடகத்தின் துளியில் அமர்ந்திருக்கிறேன் அன்னை இடையமர்ந்து விழவு காணச்சென்ற விழிதெளியா கைம்மகவென?

உள்ளே சென்ற ராதையின் உடைவண்ணம் இருளில் மூழ்கியதை கண்டாள். நடுங்கும் காலடிகளுடன் அவளும் உள்ளே சென்றாள். அரையிருளில் தரையிலிட்ட புல்பாயில் மரவுரி விரிப்பின் மீது ஒருக்களித்து விழிவளர்ந்தது வானாளும் விரிநீலம். ஓடும் கால்கள் என ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழே நகங்கள். தெச்சிப்பூங் கொத்தே விரல்கள். பாதங்களும் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவிந்து முகம் சுளித்து செல்லம் சிணுங்குமோ? கட்டைவிரல் விலகி உடல் நெளித்து நாணுமோ? நீலக்குவளை மலர்க்குழாயென கணுக்கால். கரண்டையில் எழுந்த சிறுமடிப்பு. நீலம் செறிந்த முட்டுக்கள். இப்புவியாள இரு பாதங்களே போதுமே. ஏன் முழுதாக வந்தாய்?

ராதை அருகமரும்போதுதான் தன்னுள்நிறைந்த மயக்கத்தில் விழிகரைந்துகிடந்த யசோதை விழித்து நோக்கினாள். செவ்வரியோடிய பெரிய விழிகளால் திகைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்த உலர்ந்த இதழ்கள் மெல்லப்பிரிய ஏதோ கேட்கவந்து நின்றுவிட்டாள். ராதை பிறிதொன்றையும் அறியா பேதைவிழி கொண்டவளாக மைந்தனை நோக்கி குனிந்தாள். உலர்ந்த பாலாடை என முதற்தோல் படிந்த சிறுதொடைகள் கவ்விப் பற்றிய சிறுகிண்கிணி மென்குருத்து. மடிந்த மென்வயிறு. மேலே குவிந்த இருமார்பின் தேன்சொட்டுகள். முட்டைக்குள் விழித்த கிளிக்குஞ்சின் இருமணிவிழிகள்.

ஒன்றெனச் சொல்லி நீட்டிய பட்டுநகம் எழுந்த வலக்கைச் சுட்டுவிரல் சுட்டியதை அருந்தவச்சொல்லெனக் கரந்ததோ மடிந்த நான்குவிரல்களின் நகம் அழுந்திய வெண் கைமலர்? இங்கென மரவுரியிலமர்ந்தது இடக்கை. மணிக்கட்டின் மடிப்புகள். மேல்கையின் கதுப்புகள். இதழ்பிரித்து வெளியே எடுத்த புல்லிமலர்த் தோகை அடுக்கென விரல்கொத்து. இங்கு இவ்விழிகளறியும் இவ்வுலகுக்கப்பால் எங்கு நின்று எதையுணர்வேன்? தங்கி நின்று தயங்கி நின்று துளித்தாடும் இச்சிறு உயிர்த்துளி உலைந்தாடி உதிர்ந்துவிடும் கண்ணே. போதும், இவ்வழகுக்குமேல் ஒரு துளியழகையும் தாளாது இப்புவியென்றறிந்தபின் இவ்வளவோடு அமைந்தாயா?

அமுது எனச் சொல்லிக் குவிந்திருந்தது கொழுங்கன்னம். முலை என்று அமைந்திருந்தது செம்மணி வாய்மலர்க்குமிழ். அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்? அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா? சுட்டுவிரலால் சற்றே தொட்டு வைத்ததுபோன்ற சிறு மூக்கு. பொன்னகையில் கொல்லன் ஊதிஊதியிட்ட இருசிறுதுளைகள். மூச்சிலாடும் கழுத்தின் கதுப்பு. மூடிய இமைகளுக்குள் கனவிலாடும் விழிகள் நெளிந்தமையும் சிறுநடனம். நடக்கும் யானையை மூடிய நீலப்பட்டுக் கம்பளங்கள். கருங்குழல் நுரைச்சுருள்கள் விழுந்துகிடக்கும் நீலஎழில்நுதல். காற்றசைக்கும் குழல்பிசிறுகள் நெளிந்தாடி நெளிந்தாடி கொன்று படைத்து உண்டு உலகாண்டன.

படிந்த சிறுபண்டியின் செவ்வரிக்கு நூறுமுறை இறப்பேன். மடிந்த சிறுபுயங்களில் விழுந்த கோடுக்கு ஆயிரம் முறை இறப்பேன். பிரிந்த செவ்விதழ்களுக்குள் பால்விழுது தங்கிய ஈறுநுனி மொட்டுக்கு பல்லாயிரம் முறை இறப்பேன். கண்நீலக்கருமணியே உன் மூக்குவளைவின் இந்த அழுந்தலுக்காக கோடிமுறை இறப்பேன். இவ்வழகின் முழுமுனையின் இப்பால் இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன். சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன்.

செவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். உலைக்கனலில் வைத்து ஊதிக்காய்ச்சிய பொற்சிலை எனச் சிவந்து மூச்சு சீறி அதை தன் செவ்விழிகளால் நோக்கினாள். உலகேழும் எரித்து விண்ணேழும் மிளிரச்செய்து ஊழியிருள் நிறைக்கும் அவ்வொளித்தழலை தன் இதழ்களில் வைத்து “இன்றிருந்தேன், இனியுள்ளேன்” என்று நெடுமூச்செறிந்தாள். அங்கிறந்து எங்கோ பிறந்து அங்கு மீண்டு இங்கெவள்நான் என்று திகைத்தாள். ஓங்கி உள்ளறைந்த பேரலை ஒன்றில் திகைத்தபின் முன் துடித்தெழுந்து இரு கைகளாலும் அந்நீலச்சிறுபாதங்களை அள்ளி ஆழத்தீ கொதித்த முலைக்குவை முகப்பில் வைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கன்னத்தின் வெம்மையில் கண்ணீர்த்துளி உலர்ந்து மறைந்தது.

“உன்னை நான் கனவில் கண்டேன்” என்று யசோதை கனவிலுரையாடுபவள் போலச் சொன்னாள். “உன்னையல்ல மணலில் பதிந்து சென்றிருந்த உன் பாதங்களை. நீ நடக்கவில்லை, நடனமிட்டுச் சென்றிருந்தாய். அதன் மேல் வெண்மலர்கள் உதிர்ந்துகிடந்தன.” ராதையின் கழுத்திலும் கன்னத்திலும் மயிர்சிலிர்ப்பின் புள்ளிகள் எழுந்தன. “இன்றுகாலை கோலமிடுகையில் என் முற்றத்திலும் அப்பாதத் தடங்கள் விழுந்திருப்பதைக் கண்டேன்.” லலிதை தொழுதபடி கால்தளர்ந்து அமர்ந்து “அவள் பெயர் ராதை. பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் மகள்” என்றாள். “மண்ணில் பிறிதொருத்தி இப்பேரெழிலை இனி கொள்ளமுடியாது. நீ வாழ்க!” என்றாள் யசோதை.

உடல் எத்தனை மகத்தானது. அவனுக்காக அழகுகொள்ளும் வரம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நிலையிழந்தாடும் உள்ளமே இரங்கத்தகுந்தவள் நீ. இங்கே நான், இதோ நான், இவ்வண்ணமே நான் என இருத்தலே அறிவிப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் வரம் உனக்கில்லை. உள்ளி உள்ளி ஓராயிரம் தவம்செய்தாலும் ஓதி நூல் ஒருகோடி அறிந்தாலும் இவ்வுடலறிந்ததை அகம் அறியுமா என்ன? உன்னை என் கண்களால் அறிகிறேன். என் உதடுகளால், கைகளால், கன்னங்களால் அறிகிறேன். உன்னை அறிந்து உருகித் துளிக்கின்றன என் மார்பில் பூத்த மலர்க்குவைகள். எங்கோ விழுந்து திகைத்து விழிமலைத்துக் கிடக்கிறது என் இளநெஞ்சம்.

வெண்முரசு விவாதங்கள்

பகுதி இரண்டு: 1. சொல்லெழுதல்

கன்றுகளின் கழுத்துமணியோசைகள் சூழ்ந்த பர்சானபுரியின் ஊர்மன்றில் நின்றிருந்த கல்லாலமரத்தின் அடியில் மரப்பீடத்தின்மேல் புலித்தோலைப் போட்டு அமர்ந்துகொண்டு ஆயர்குடியின் முதுதாதை மகிபானு தன் தொல்குடியின் கதையைச் சொன்னார். எதிரே இருந்த ஏகநம்ஷையின் சிற்றாலயத்துக்குள் நெய்ச்சுடர் நின்றெரிய, கருநாகத் தொகை போலெழுந்த பதினாறு கைகளிலும் கொலை ஆயுதங்களுடன் செவ்வைரக் கண்கள் ஒளிவிட வெண்பல் வாய்திறந்து வெறிக்கோலம் கொண்டு நின்றிருந்தாள் அன்னை. அவள்முன் படைக்கப்பட்டிருந்த செம்மலர்களும் அரிசிப்பொரியும் காற்றில் பறந்து முற்றத்தில் வீழ்ந்துகிடந்தன.

மன்றுமுன்னால் குளிருக்கு மரவுரிகளைப் போர்த்தியமர்ந்த மூதன்னையரின் மடிவெம்மையில் ஒண்டி அமர்ந்து திரண்ட நீள்விழிகளுடன் குழந்தைகள் கதை கேட்டிருந்தன. தரையிலிட்ட பாய்களில் அமர்ந்த பெண்களும் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஆண்களும் அறியும்தோறும் அறியவிரும்பும் தொல்கதையை ஒவ்வொரு சொல்லாக மீண்டும் கேட்டனர். கால்நீட்டி அமர்ந்திருந்த முதியவர்கள் அந்த மன்றில் முன்பிருந்து அக்கதையைச் சொன்ன அத்தனைபேரின் சொற்களும் அங்கே நிறைந்த குளிர்காற்றில் இருப்பதாக உணர்ந்தனர்,

“ஒற்றைப்பெருஞ்சொல்லால் உலகுபடைத்த உத்தமரான அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் பிறந்த மைந்தர்கள் மூவர் முதன்மையானவர்கள். சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் ஆகியோரை ஆயர்குடிகள் வணங்குகின்றன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ். ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்து அறம்திகழ்ந்தது இம்மண்ணில். மூதாதை யயாதியை வாழ்த்துவோம். அவரது குருதி நம் வனங்களில் வேங்கையும் கொன்றையுமாக மலர்க. அவரது கண்ணீர் நமது வனங்களில் கடம்பும் மருதமுமாக மலர்க. அவரது சொற்கள் நம் எண்ணங்களில் வேரோடி இலை தழைத்து எழுக!” மகிபானு கைகூப்பி வணங்கினார்.

“யயாதி மாமன்னர் மணந்தவள் அசுரர்குலத்தரசி தேவயானி. தேவயானிக்கு மணிவயிறு வாய்த்தவர் நம் குலமூதாதை யது. யதுவின் குருதி முளைத்த குலமென்பதனால் நாம் யாதவர். தந்தை சொல்லேற்று யது தன் கோலூன்ற நிலம்தேடி வந்து கோடையில் மெலிந்தோடிய பர்ணசா ஆற்றின் கரையில் அமைத்த நன்னாடே முதல் யாதவ மண் என்பார்கள். ஒவ்வொரு குடியில் இருந்தும் பன்னிரு வருடங்களுக்கொருமுறை பர்ணசா நதிக்கரைக்குச் சென்று ஊற்று தோண்டி நீராடி யதுவின் கால்பட்ட மண்ணெடுத்து கைப்பிடிக்குவையாக்கி மலரும் நீரும் கொடுத்து வணங்கி மீளும் மரபுகொண்டவர் யாதவர். நானும் அவ்வண்ணம் சென்று என் கடன் கழித்துள்ளேன்” என்றார் மகிபானு.

மகிபானுவின் முதுகுரல் அவர்பின் எழுந்த கரியவானின் விண்மீனுடன் சேர்ந்து நடுங்கி ஒலித்தது. குலத்தோரே கேளுங்கள், யாதவமுதல்மன்னன் யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என மைந்தர் நால்வர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்குப் பிறந்தவர்கள் மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூவர். ஏகவீரன் என்று நம் மன்றுதோறும் அமர்ந்து மலர்கொள்பவர் ஹேகயரே. யாதவப்பெருங்குலம் வேலேந்தி வென்றதும் கோலேந்தி அமர்ந்ததும் குடிசொல்லி நின்றதும் சொல்நிறுத்திச் சென்றதும் ஹேகயசக்ரவர்த்தியின் காலத்திலேயே. யாதவர்சொல் உள்ளவரை வாழும் நம்குலத்து முதல்மன்னர் கார்த்தவீரியர் பிறந்ததும் ஹேகயகுலத்திலேயே என்றறிக. ஆயிரம் தோள்கொண்டான் அணையாப்பெரும் புகழைப் பாடுகின்றன யாதவர் நிலத்தில் துளைகொண்ட மூங்கில்களெல்லாம். அவன் வாழ்க!

ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்து விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் அரசுகளாகியது. ஐந்து விரல்களாலும் யமுனாவர்த்தத்தை அள்ளிப்பற்றி தான் கொண்டது யமுனை. அமர்ந்திருக்கும் ஆமையே அவர்களின் குலமுத்திரையாக ஆகியது. அவர்களின் கலங்களில் நெய்யும் உள்ளங்களில் வாய்மையும் நிறைந்தன. ஆக்னேயர்கள் என அவர்களை அரசர்கள் வணங்கினர். எங்களை அரசர்கள் அறியவேண்டாம். வைதிகர் அறியவேண்டாம். ஷத்ரியர் எங்களை எண்ணவும் வேண்டாம். அவிகொள்ள வந்து நிற்கும் தெய்வங்களனைத்தும் எங்களை அறியும் என்றனர் யாதவர்.

மாகிஷ்மதியை ஆண்ட கார்த்தவீரியனுக்கு ஜயத்துவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என மைந்தர்கள் ஐவர். மதுவுக்குப் பிறந்தவர் விருஷ்ணி. இனியவர்களே, விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலம் எனப்பட்டனர். விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என மைந்தர் நால்வர். யுதாஜித்தின் உடல் விரிந்த முளைகளையே விருஷ்ணிகுலம் என்றனர் சான்றோர். ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், என நீர்கண்ட நிலமெங்கும் தழைக்கும் புல் என எழுந்தது விருஷ்ணிகுலம்.

விருஷ்ணிகுலத்து விடூரதர் கருநீர் யமுனையின் கரைசேர் மாநகர் மதுரையை ஆண்டார். ஹேகயகுலத்து ஏகவீரர் அமைத்த அந்நகர் ஆயிரம் யாதவப்பெருங்குலங்களால் நெய்பெய்து எழுப்பப்படும் வேள்வித்தீ என பெருகிக் கொண்டிருந்தது. நெய்யை நாடிய தெய்வங்களெல்லாம் எரியில் எழுந்து வந்து மதுரா மதுரா என்றே நா துடித்தன. ஆக்னேயபுரி என்றும் கோபாலபுரி என்று மதுபுரி என்றும் மாயாபுரி என்றும் கவிஞர் அதை வாழ்த்தினர்.

விருஷ்ணிகுலத்து விடூரதரின் கோல் நின்ற நகர் வேதச் சொல்நின்ற நெடுங்களம் என விண்ணவர்க்கு உவப்பானதாக இருந்தது. என் குலமே, இங்கமர்ந்து எளியேனின் கல்லாச் சொல்தேர்ந்து சொல்லத்தக்கதோ யாதவகுலப்பெருமை? கார்மேகத்தை தன் கேள் என்னலாம் கருங்குருவி. அதன் குரல் இடியோசைக்கு நிகர்கொள்ளுமா என்ன?

விடூரதரின் கொடிவழி வந்தமைந்தர் ஹ்ருதீகர். ஹ்ருதீகரின் மைந்தர் சூரசேனரே மதுராவுக்கு உரிமைகொண்டவர். மைந்தர்களே, மண்ணாள்வோன் ஒருகையில் அனலும் மறு கையில் புனலும் கொண்டிருக்கவேண்டும் என்கின்றன நூல்கள். எரிதலும் அணைதலுமாக அவன் நின்றாகவேண்டும். படர்தலும் குளிர்தலுமாக அவன் சொல் அமைந்தாகவேண்டும். மண்ணில் வாழ்கின்றாள் பேராசையின் தெய்வமான திருஷ்ணை. அன்னைப்பெரும்பசுவின் கருணைவிழிகளிலேயே அனலென குடியேறும் பேராற்றல் கொண்டவள் அவள். மண்ணை ஒருகண்ணால் நோக்கும் மன்னன் மறுகண்ணால் தன் மூதாதையரின் சொல்லையும் நோக்கியாகவேண்டும்.

யாதவகுடிசெய்த பாவத்தால் அறம்பிழைத்தார் விடூரதரின் மெய்த்தம்பி குங்குரர். விடூரதரின் கொடிவழியை மதுராவிலிருந்து துரத்தி நகரை படைகொண்டு பற்றிக்கொண்டார். குங்குரரின் கொடிவழி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகரின் மைந்தர்கள் உக்ரசேனரும் தேவகரும். உக்ரசேனர் மதுராபுரியின் மணிமுடி சூடினார். தேவகர் உத்தரமதுராபுரிக்கு அரசரானார்.

விதர்பநாட்டு வேடர்குலமன்னர் சத்யகேதுவின் மகள் பத்மாவதியை மணந்தார் உக்ரசேனர். அவள் வயிற்றில் பிறந்தவர் மதுராபுரியின் முடிகொண்டுள்ள கம்சதேவர். இளையோரே, அடித்தளத்தில் அளவுபிழைத்த மாளிகை கோபுரத்தில் கோணலையே காட்டும் என்றறிக. மூத்தோர் நெறிமீறும் முதலடியிலேயே முற்றழிவின் முதற்சொல்லும் சொல்லப்பட்டுவிட்டது. வாழும் மானுடரைச்சுற்றி நிறைந்திருக்கின்றது மூதாதையரின் மூச்சு. அறிந்தவற்றை மீறலாகும், அறியாமல் இங்கிருக்கும் அவர்களை எவர் மீறிச்செல்ல முடியும்?

விருஷ்ணிகுலத்து சூரசேனரின் மைந்தர் வசுதேவர் தந்தை சொல் கேளாது தன் விருப்பே வழிகாட்ட மதுராபுரிக்குச் சென்று உக்ரசேனரின் அமைச்சரானார். அவர் தங்கை பிருதை மார்த்திகாவதியின் போஜர்குலத்து குந்திபோஜரின் மகளாகச் சென்றாள். வசுதேவரை தன்னுடன் வைத்து விருஷ்ணிகுலத்தை வென்றெடுக்கலாமென்று எண்ணினார் கம்சர். குந்தியை மணந்து போஜர்களையும் வென்றால் யாதவகுலங்களனைத்தையும் ஆளும் முதன்மை கொள்ளலாமென்று திட்டமிட்டார்.

குந்திதேவியோ அஸ்தினபுரியின் அரசியாகச் சென்றாள். அஸ்தினபுரியுடன் பகைமைகொண்டு மகதத்தின் அரசர் ஜராசந்தனிடம் சென்று கம்சர் பணிந்தார். ஜராசந்தரின் ஆசைமனைவியர் பெற்ற ஆஸ்தி, பிராப்தி என்னும் இரு அரசமகளிரை மணந்து மகதத்தின் பெரும்படைகளை அழைத்துவந்து மதுராபுரியை நிறைத்தார்.

யாதவர்களின் தொல்நகரில் இன்று மகதர்களின் வேல்கள் மின்னி நிறைந்துள்ளன. நம்குடி மூதாதையர் பெயர்களை மகத நாட்டு வீரர்கள் விரல்சுட்டி அதட்டி அருகழைப்பதை நான் கேட்டேன். மண்ணிலெவருக்கும் மிடிமைசெய்யா நம் முதுகுடி மூத்தோர் நாணித் தலைகுனிந்து நகர் நீங்கும் கண்ணீர்த்துளிகளை கண்டேன். விண்ணிலமர்ந்த ஹேகயரும் கார்த்தவீரியரும் எழுப்பிய நீள்மூச்சின் வெம்மையை என் உடலெங்கும் அறிந்தேன்.

உத்தர மதுராபுரியையும் ஒருங்கிணைத்து மதுராபுரியை விரித்தெடுக்க விழைந்தார் கம்சர். தேவகரின் மைந்தர்களான தேவானன், உபதேவன், சுதேவன், தேவரக்‌ஷகன் என்னும் நான்கு பெருவீரர்கள் இருக்கையில் போர்மூலம் அது நிகழாதென்றறிந்தார். ஆகவே தேவகியை தன் அமைச்சர் வசுதேவருக்கு மகற்கோள் எடுப்பதொன்றே வழி என்று எண்ணி தூதனுப்பினார். தூதனை வணங்கி “மதுராபுரியின் மண் வேண்டுமா என்று என் மகளே சொல்லட்டும்” என்று சொல்லியனுப்பினார் தேவகர்.

அறத்தை வெல்லும் ஆசை கொண்ட கம்சரை அஞ்சிய தேவகர் தன் மகளுக்கு தன்மண ஏற்பு நிகழ்வை அமைத்திருந்தார். பதினெட்டு யாதவகுலங்களுக்கும் அழைப்பிருந்தமையால் நானும் என் மூன்று தோழர்களும் அவ்விழவுக்குச் சென்றிருந்தோம். ஷத்ரிய மன்னர்களும் விழாவுக்கு வரவேண்டுமென்று தூதர்களை நாடெங்கும் அனுப்பியிருந்தார் தேவகர். யமுனையின் பெருக்கில் கொடிகள் அசையும் அணிப்படகுகள் பாய் புடைத்து வந்துகொண்டே இருந்தன. உத்தரமதுராபுரியின் தெருக்களிலெங்கும் ஒரே பேச்சுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. தங்கையின் திருமணத்துக்கு மதுராபுரியின் கம்சதேவருக்கு அழைப்பில்லை.

நாங்கள் தங்கிய ஆக்னேய சத்திரத்திலும் இரவெல்லாம் அதுவே பேச்சாக இருந்தது. இளவரசி தேவகிக்கும் விருஷ்ணிகுலத்து வசுதேவருக்கும் காதலிருந்ததாக ஒரு செய்தி நகரில் உலவுவதாக சித்ரபதத்தில் இருந்து வந்த யாதவராகிய தாமசர் சொன்னார். “தாசிகள் சொல்லும் செய்திகளை நம்பியா அரசு சூழ்வது?” என்று நான் சினந்து கேட்டேன். “இளவரசிக்கு வசுதேவரை பிடித்திருந்தால் தேவகர் ஏன் அதை மறுக்கவேண்டும்?” என்றேன். “முதுயாதவரே, வசுதேவர் இன்று கம்சரின் கையிலிருக்கும் சிறு பாவை மட்டுமே” என்றார் தாமசர்.

சினம்கொண்டெழுந்து “விருஷ்ணிகுலத்தின் கொழுந்து ஒருபோதும் வாடுவதில்லை யாதவரே” என்று நான் கூவினேன். “விடூரதரின் கொடிவழிவந்தவர், சூரசேனரின் மைந்தர் எவருக்கும் அடிமைசொல்லமாட்டார். அவர் வந்து தேவகியை கைப்பிடித்துக் கொண்டு சென்றால் அவரது கொடிக்கீழே யாதவகுலங்கள் அணிவகுக்கும். மதுராபுரியின் கொடியன்றி வேறேதும் யமுனையில் பறக்காது” என்றேன். ஆனால் அங்கிருந்த எவரும் என் குரலை ஏற்கவில்லை என்று அவர்களின் அமைதியைக் கண்டு அறிந்துகொண்டேன். பத்ரவனத்தின் நெய்வணிகரான ரிஷபாக்‌ஷர் “விரைவில் எரியும் மரம் விறகாவதில்லை” என்றபோது அனைவரும் தலையசைத்தனர்.

மறுநாள் மணநிகழ்வுக்காக நகர்மன்றுக்குச் சென்றபோதுதான் ஏறுதழுவலையே மணநெறியாக தேவகர் அறிவித்திருப்பதை அறிந்தேன். ரிஷபாக்‌ஷர் “இப்போது அறிந்துகொள்ளுங்கள் முதுயாதவரே. நூல்கற்று நெறிதேரும் வசுதேவர் ஒருபோதும் மணமன்றில் வந்து நின்றுவிடலாகாதென்றே இந்நெறியை வைத்துள்ளார் தேவகர்” என்றார். அங்கிருந்த அத்தனை நெஞ்சங்களிலும் ஓடியது அவ்வெண்ணமே என்று முகங்கள்தோறும் சென்றமர்ந்து எழுந்த என் விழிகள் அறிந்தன. மன்று அமர்ந்து அவை நோக்கி வியந்துகொண்டேன், அங்குள்ள ஒவ்வொருவரும் விழைவதெதை என்று. இளையோரே, எப்போதும் மக்கள் விழைவது இயலாதது நிகழ்வதையே.

மன்றுநின்றது மாகாளை ஒன்று. மின்னும் கூர்முனை பொருத்திய கொம்புகளுடன் மலையிறங்கி வந்த பெரும்பாறை போன்ற கரிய காளைக்களிறு. தோரணங்களாடிய அவைமேடையில் தேவகர் தன் அரசியுடன் வந்தமர்வதை அமைச்சரும் படைத்தலைவரும் கொலுக்கொள்வதை வேதநாதத்தை மங்கலப்பேரொலிகளை முறைமைச்சொற்களை வாழ்த்தொலிகளை எதையும் கருதாமல் அவ்வெருதை மட்டுமே நோக்கி அமர்ந்திருந்தேன். அதன் சின்னஞ்சிறுவிழிகளில் தேங்கிய மதத்தைக் கண்டபோது காதலின் விரைவெழுந்து வசுதேவர் வந்து நின்றுவிடலாகாதே என்று அஞ்சினேன். மைந்தரே, நூறு மதஏறுகளை களம்பற்றி வென்றவன் நான். அவ்வெருதுக்கு நிகரான ஒன்றைக் கண்டதில்லை.

செருக்கடித்து முன்காலால் மண்கிளறி தலைசாய்த்து விழி உருட்டி மூச்சு சீறி நின்றது. பெருவெள்ளமெழுந்த யமுனை போல அதன் உடல் ஆங்காங்கே சிலிர்த்துக்கொண்டது. அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்தது தேவகியின் கழுத்திலணியப்படவேண்டிய மஞ்சள்நூல் மணிமங்கலம். சுற்றிலும் பட்டு விதானங்களுக்குக் கீழே அமைந்த அணியிருக்கைகளில் இளமன்னர் அமர்ந்திருந்தனர். அங்கனும் வங்கனும் கங்கனும் கலிங்கனும் மாவலியும் தேவலனும் என ஷத்ரியர் பதினெண்மர் அங்கு வந்திருந்தனர். நூற்றெட்டு யாதவகுடித்தலைவர் வந்திருந்தனர். இளையோர் தசைபுடைத்த கைகளால் மீசையை வருடி எருதை நோக்கி நின்றனர்.

அன்றுதான் துவள்கொடி போல் உடல்கொண்ட தேவகியை நான் முதலில் பார்த்தேன். நீளச்செம்முகத்தில் அகன்றகருவிழிகள் அடைகாக்கும் கருங்குருவி போல வெண்விழிகள் மேல் சிறகுசரித்திருப்பதை கண்டதுமே அவள் உள்ளத்தை அறிந்துகொண்டேன். அவையமர்ந்ததுமே அவள் மன்றுமுழுக்க விழிதுழாவி பின் தலைகுனிந்து நெட்டுயிர்த்ததைக் கண்டு அவள் தேடுவது எவரை என்றும் உணர்ந்துகொண்டேன். அவர் அங்கிருக்கவேண்டும் என்று நானும் வேண்டிக்கொண்டேன்.

ஆனால் உத்தரமதுராபுரியைச்சுற்றி தன் முழுப்படைகளையும் நிறுத்தி நீரிலும் நிலத்திலும் மதுராபுரியின் பாதைகளனைத்தையும் மூடியிருந்தார் தேவகர். எதிர்ப்படும் ஒவ்வொரு வீரனின் விழிகளிலும் படைக்கல முனைகளிலும் இருந்த தேடலை நினைவுகூர்ந்தேன். நலம் திகழ்க என்று என் நெஞ்சுக்கு நானே சொல்லி அமர்ந்திருந்தேன். அரியணையில் அமர்ந்திருந்த தேவகர் விழிசரித்து அருகே வணங்கிய அமைச்சர்களுக்கு ஆணைகளை இட்டுக்கொண்டே இருப்பதைக் கண்டேன்.

நிமித்திகன் எழுந்து யாதவகுலமுறையைக் கிளத்தினான். மண்வாழ்த்தும் நீர்வாழ்த்தும் குடிவாழ்த்தும் கோன்வாழ்த்தும் சொல்லி மணமன்றின் முறைமைகளை அறிவித்தான். எருது கொள்ளலே மணநெறி என்று அவன் சொன்னதும் அவை பேரொலி எழுப்பி அதை வரவேற்றது. மணம்கொள்ள வந்தவர்கள் மேலாடைகளைந்து கச்சிறுக்கி களம் வந்து நின்றனர். ஆனால் மேடைமுகப்பு திறந்து காளை வெளிவந்ததும் களம்வந்தவர்களில் பலர் பின் நடந்தனர். அவர்களைக் கண்டு அவையினர் எக்காளமிட்டு கூவிநகைத்தனர்.

மதவிழிகளால் மன்றை நோக்கி கனத்த குளம்புகளை மெல்ல எடுத்துவைத்து சரிந்த பெருந்திமில் மெல்ல குலைந்தசைய கழுத்துத் தசைவளைவுகள் உலைந்து உலைந்தாட செம்மண் பரவிய களத்திற்கு வந்து கூரொளி மின்னிய கொம்புகளைத் தாழ்த்தி அசையாமல் நின்றது எருது. அதன் மூச்சின் ஒலியை அனைவரும் கேட்டனர். அதன் உடல் சிலிர்ப்பை அனைவரும் கண்டனர். சிரிப்புகள் அடங்கி அஞ்சிய விழிகளாக ஆயிற்று ஆயர்ப்பெருஞ்சபை.

எருது முன்னெழுந்தோறும் அங்கனும் வங்கனும் அஞ்சி பின்வாங்குவதைக் கண்டேன். மாளவன் தன் கைகளை முன்னால் நீட்டி மெல்லச்சென்று விலாவணைய நாகமென சீறித் திரும்பி அவனை கொம்பிலெடுத்து குலைத்து வீசியது எருது. சிறுத்தைகள் போல பாய்ந்து அதன்மேல் விழுந்தனர் இளையோர். கருநாகப்பின்னல் போல கைகள் அதைச்சுற்றிக்கொண்டன. இளையோரே, அவர்கள் கால்கள் காற்றில் சுழல அலறி எழுந்து சிதறிவிழுந்ததையே அங்கிருந்தோர் கண்டோம். இடிந்த வீட்டின் உத்தரங்களும் தூண்களும்போல கிடந்த அரசர்கள் மீது குளம்புதூக்கி வைத்து குதித்து வந்து நாற்புறமும் நோக்கி சீறிச்செருக்கடித்து மண் தோண்டிப்பறக்கவைத்து நின்றது காளை.

தேவகரின் அவைப்பெண்டிர் தங்கள் நெஞ்சங்களை கைகொண்டு பற்றி திகைத்து அமர்ந்திருந்தனர். இளவரசியர் சுருதேவியும் யசோதையும் சுருதிஷ்ரவையும், ஸ்ரீதேவியும், உபதேவியும் ஸ்வரூபையும் பெருமூச்சு விட்டு மெல்ல அமைந்தனர். நடுவே தேவகி கண்ணீர் வழிய அவைக்களத்தை நோக்கி அமர்ந்திருந்தாள். இளையோரே, அன்று அப்பெண்டிரின் கைகவரும் ஆண்மகனே அவை நிற்கவில்லை என்றுதான் அனைவரும் எண்ணினர்.

அப்போது தேவகரின் சேடியர் நடுவிருந்து செம்மஞ்சள் ஆடையணிந்த முதுசேடி ஒருத்தி எழுந்து மன்றுநோக்கி ஓடிவரக்கண்டோம். உடனே அவை அறிந்துகொண்டது அது கம்சதேவர் என்று. அவைக்கொலுவமர்ந்த தேவகர் எழுந்து கைநீட்டி ஆணையிட்டுக் கூவ அதற்குள் மேலாடை களைந்து இடைக்கச்சை இறுக்கி கம்சர் களம்வந்து நின்றுவிட்டார். திகைத்து எழுந்து நின்ற தேவகரின் விரித்த கரங்கள் அசைவிழந்தன. கம்சர் தொடைகளை ஓங்கி அறைந்த ஒலிகேட்டு பெருங்காளை சினந்து சீறி தலைதாழ்த்தியது. அதன் பின்னங்கால் மண்ணைக் கிளற குறியவால் சுழன்று சுழித்து நின்றது.

காளை பாய்வதற்குள் கம்சர் பாய்ந்து அதன் கொம்புகளைப் பற்றிக்கொண்டார். தன் வலக்காலை அதன் முன்னிரு கால்களுக்கு நடுவே செலுத்தி உந்தி நிலையழியச்செய்து மண்ணில் சரித்தார். பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்து நான்குகால்களையும் உதைத்துத் துடித்த காளையின் கொம்பிலிருந்த மங்கலநாணை பறித்தெடுத்து எழுந்து நின்று தன் தோள்களை ஓங்கியறைந்து “இது என் நண்பன் வசுதேவனுக்காக நான் வென்ற மங்கலநாண்! இதை எதிர்ப்பவன் எவனும் இக்கணமே இங்கு களமிறங்கலாம்!” என்றார். வங்கன் கைதூக்கி “வாழ்க மதுராதிபன்!” என்று கூவ பிற மன்னர்களும் வாழ்த்துரை எழுப்பினர்.

தேவகரின் படைப்பிரிவிலிருந்து மூன்றுகுதிரைகள் இழுத்த விரைவுத்தேர் படையரணை உடைத்து உள்ளே வந்தது. சூதனைப்போல் தலைக்கச்சை அணிந்து ரதத்தில் நின்ற வசுதேவரைக் கண்டதும் அவைப்பெண்டிர் நடுவிலிருந்து தேவகி இறங்கி ஓடிவந்து அவர் கைகளைப்பற்றிக்கொண்டாள். ரதமோட்டி வந்த ஸினி வாள் சுழற்றி முன் சென்று அவையமர்ந்த இளவரசியரை கூட்டிவந்து ரதத்தில் ஏற்றிக்கொண்டார். படைக்கலமேந்தி ஓடிவந்த வீரர்களை வீழ்த்தி விரைந்துசென்ற கம்சர் அமரத்தில் ஏறிக்கொள்ள தேவகியைத் தூக்கி தேர்த்தட்டில் ஏற்றிக்கொண்டு வசுதேவர் நின்றார்.

சினந்தெழுந்து குதிரைகளில் ஏறி வந்தனர் இளவரசர்கள். பறந்தெழுந்த அம்புகளையும் வேல்களையும் விலக்கி துள்ளி ஆர்ப்பரித்த ஊர்மக்கள் குரல் நடுவே தேரை ஓட்டிச்சென்றார் கம்சர். அவருக்குப்பின்னால் நூறு விரைவுத்தேர்கள் வில்லாளிகளுடன் துரத்திச்செல்ல வில்லேந்தி நாணொலித்து முன்னால் எழுந்தனர் தேவகரின் மைந்தர். மன்றிலிருந்து எழுந்தோடி காவல்கோபுரமொன்றில் ஏறிச்சென்று அவ்விரைவாடலை நான் கண்டேன். மண்ணில்பரந்த செம்மேகமென புழுதி சுருண்டெழ அதன் மேல் சகடங்கள் அதிர அச்சுகள் கூவ கொடிகள் துடிதுடிக்க நிலம்நடுங்கி ஊரிடிந்து சரியும் பேரொலி எழுப்பி உருண்டோடிச் சென்றன தேர்கள்.

கம்சரின் குதிரைகளின் உடலில் அம்புகள் தைத்து குருதி வழிந்தது. அவரது கொழுத்த பெருந்தோளில் ஒரு அம்பு தைத்து நின்றது. வலக்கையால் கடிவாளம் பற்றி இடக்கையால் அவர் விட்ட அம்புகள் பட்டு ரதங்களில் ஓடிய வீரர்கள் உதிர்ந்து விழுந்து துடித்தனர். அவர்கள் மேல் சகடங்கள் ஏறிச்சென்றன பிற ரதங்கள். பின்னர் புழுதியடங்கியபோது உடைந்த ரதங்களும் துடிக்கும் குதிரைகளும் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தன.

உத்தரமதுராபுரியில் இருந்து யமுனைக்கரையோரமாகவே சென்றனர் வசுதேவரும் கம்சரும். படையரண்களை உடைத்து சோலைகளைக் கடந்து மதுராபுரியின் புறநகர்ச் சோலையை அடைந்து செம்மண் படிந்த சிறுசாலையில் ஏறிச்சென்றபோது அங்கு நிகழ்ந்ததென்று ஒரு கதை சொல்லப்படுகிறது. இளையோரே, எல்லையாளும் ஏகநம்ஷையின் சிற்றாலயத்தில் வெறியாட்டெழுந்து கைவிரித்து கனன்றாடி வெளியே ஓடிவந்த முதுமகள் ஒருத்தி கம்சரை நோக்கி கைசுட்டி “குலமுறை அறியா குருடா! உன் மண்ணாள வேண்டியவன் மருகன் அல்லவா! உன் தங்கை வயிற்றில் பிறப்போன்! எட்டாமவன்! உன் உயிர்குடித்து தலைமுறைப் பழிதீர்ப்பான்! என்றுமழியா பெரும்புகழ்பெறுவான்!” என்று கூவிச் சுழன்று ஆடி தளர்ந்து விழுந்தாள்.

தேர்த்தட்டில் அமர்ந்திருந்த கம்சதேவர் அவ்வெறி விழிகளை அருகே கண்டு அஞ்சி சொல்லற்றார். ரதம் அரண்மனைக்குச் சென்றதுமே நிமித்திகரை அழைத்து அதன் நெறியும் பொருளும் என்ன என்று கேட்டார். “அரசே, நீங்கள் யாதவப்பெண்ணுக்குப் பிறந்தவர் அல்ல. பசுக்குலத்தின் அரசுரிமை பெண்வழியே செல்வதென்றறிக. குங்குரரின் கோலுக்குரியவள் தேவகரின் மகளே. அவள் மணிவயிற்றுதிக்கும் மைந்தனுக்குரியதே மதுராபுரியின் பட்டம்” என்றார் நிமித்திகர்.

“அதன்பின்னர் தேவகியையும் வசுதேவரையும் எவரும் பார்த்ததில்லை” என்றார் முதுயாதவராகிய மகிபானு. “அவர்கள் மதுராபுரியின் சிறையிருளில் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தேவகி எட்டு மைந்தரைப் பெற்று எட்டையும் தன் கையால் கொன்றபின்னரே அவளை கம்சர் விடுவிப்பார் என்கிறார்கள் மதுராபுரிக்கு நெய்கொண்டுசெல்லும் ஆயர்கள். ஏழுமைந்தர்களை கொன்றுவிட்டார் என்றும் எட்டாவது மைந்தன் கருவிலிருக்கிறான் என்றும் சந்தைக்கு வந்த மதுராபுரி வணிகன் சொன்னதை நானே கேட்டேன்.”

இலைநுனிகளில் இருந்து பனிசொட்டத்தொடங்கியது. கன்றுமணிகளின் தாளத்துடன் அவ்வொலி இணைந்துகொண்டது. பெருமூச்சுவிட்டு அசைந்தமர்ந்த மகிபானு “மண்ணில் மாளாப்பெருந்துயரம் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இளையோரே. ஆனால் அன்னையரின் விழிநீருக்கு அவையேதும் இணையில்லை. மன்னவர் ஆள்வதும் அறங்கள் திகழ்வதும் தெய்வங்கள் எழுவதும் அன்னை விழிநீரின் ஈரத்தில் வேரூன்றியே” என்றபின் திரும்பி கோயில் நோக்கி கைகூப்பி “தாயே, தாங்குபவளே, நீ முனியாதவரை இங்கு வாழும் எளிய மானுடம்!” என்று சொல்லி கையூன்றி எழுந்தார்.

பகுதி இரண்டு: 2. பொருளவிழ்தல்

யமுனைக்கரையில் சரிவில் வேரிறக்கி, விழுதுகளால் நீர்வருடி, தன் முகத்தை தான்நோக்கி நின்றிருந்த ஆலமரத்தடியில் ஆயர்குடிப்பெண்கள் கூடி நீராடிக்கொண்டிருக்க வேர்ப்புடைப்பில் அமர்ந்து அவர்கள் தந்த நறுஞ்சுண்ண வெற்றிலையைச் சுருட்டி வாயிலிட்டு மென்று சுவையூறிச் சொக்கி முகம் வியர்த்த முதுசெவிலி சொன்னாள் “அஞ்சுபவன் உள்ளத்தில் ஐந்து பேய்கள் குடியேறுகின்றன பெண்களே. ஐயமும், தனிமையும், விழிப்பும், குரூரமும், நிறைவின்மையும் என அவற்றை அவன் அறிவான். தன்னைத்தானே அஞ்சுபவனிடமோ ஐந்து பேய்களையும் தேர்க்குதிரைகளாகக் கட்டி விரையும் ஆறாவது பெரும்பேய் குடியேறுகிறது. அதை ஆணவம் என்கின்றனர் சான்றோர். அது தொட்டவனை தான்கொண்டு செல்வது. பட்டகுடியை பாழ்நிலமாக்கியபின்னரே விலகுவது.”

விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்களுக்கு கீழே விரிந்திருக்கும் நதிகளும் மலைகளும் நாடுகளும் நகரங்களும் கொண்ட விரிநிலம் ஒரு பெரும் ஆடுகளம். அதைச்சுற்றி அமர்ந்து அவர்கள் சிரித்து அறைகூவியும் தொடைதட்டி எக்களித்தும் காய்நகர்த்தி களிகொண்டு விளையாடுகிறார்கள். கைநீட்டி காய் அமைக்கும் தெய்வத்தின் கரங்களுக்குத் தெரிவதில்லை கீழே கண்ணீரும் குருதியுமாக கொந்தளித்து அமையும் மானுடச்சிறுவாழ்க்கை. எங்கோ ஒரு கரு அமைக்க நீண்ட தெய்வத்தின் கை நிழல் மதுராபுரியின் மேல் கருமேகமாகப் படர்ந்தது. காலம் கருமைகொண்டது. கனவுகளுக்குள் இருள் சுழித்தது.

ஏகநம்ஷையின் ஆலயத்தில் சன்னதம் வந்தெழுந்த முதுமகள் சொன்னதைக்கேட்டு கம்சதேவர் நாகத்தைக் கண்ட குதிரைபோல உடல் நடுங்கி மெய்சிலிர்த்து அமர்ந்துவிட்டார். அவளைத் தொடர்ந்தோடிவந்த பூசகர்கள் அவள் கைகளைப் பற்றி இழுத்து அமரச்செய்து மன்னரைப் பணிந்து பொறுத்தருளும்படி கோரினர். பொருளின்மை ஒளிவிட்ட பெரிய விழிகளுடன் மெல்ல உறுமி குதிரைகளை மெல்லத்தட்டி ரதத்தை திடுக்கிட்டு எழச்செய்து முன்னகர்ந்தார் அரசர். செல்லும் வழியெங்கும் ஒரு சொல்லும் சொல்லாமல் கூழாங்கல் பதித்ததுபோன்ற விழிகளுடன் அமர்ந்திருந்தார். அரண்மனை முற்றத்தை அடைந்ததும் நீள்மூச்சுடன் விழித்தெழுந்து கடிவாளத்தை சேவகன் கையில் கொடுத்து ஒரு கணமும் திரும்பாமல் நடந்து உள்ளே சென்றார்.

வளையோரே, அறிவிலாதோர் அக்கணமே அச்சம் மூலம் அனைத்தையும் அறிந்திருப்பர். அறிவுடையோர் அறிவின்மூலம் அறிந்துகொள்வர். அறிவிருந்தும் அறியாமை கொண்டவனோ அறியவேமுடியாதவன். தேவகியின் கரம்பற்றி இறங்கி அரண்மனை இடைநாழியில் நடந்த வசுதேவரிடம் அவள் வியர்த்துக்குளிர்ந்த கைகளால் புயம்பற்றி விரிந்த விழிகளில் ஈரம் பரக்க “என்ன எண்ணுகின்றார் தமையனார்?” என்றாள். “அஞ்சாதே. அச்சொல்லில் அவர் நிலையழிந்துவிட்டார். என் சொல்லில் அவரை நிலை நிறுத்துகிறேன்” என்றார் வசுதேவர். “என் அகம் நடுங்குகிறது இறைவ” என்றாள் தேவகி. “இந்நகரும் இங்குள அரசும் என் சொல்லில் அமைந்தவை என்றுணர்க. இன்று மாலையே உன் தமையன் வந்து உன்னிடம் பேசுகையில் அதை உணர்வாய்” என்றார் வசுதேவர்.

மந்தண அறைபுகுந்த மன்னர் தன் நெஞ்சுடன் தனித்திருந்தார். நிகழ்ந்ததை அறிந்து அருகணைந்த அமைச்சன் கிருதசோமன் வணங்கி “சொல்நிகழ்ந்தது நல்லூழென்றே அடியேன் எண்ணுகிறேன் அரசே. ஆவதென்ன என்று நோக்க அனைவருக்கும் ஒரு வாய்ப்பு அது” என்றான். காய்ச்சல் பரவிய கண்களுடன் நோக்கிய கம்சர் “சொல்லும் அமைச்சரே, இன்று நான் செய்யவேண்டியதென்ன?” என்றார் “அன்னையில் எழுந்த சொல் மெய்யே. யாதவகுலமுறைப்படி பெண்வழி செல்வதே மண். இந்த மண்ணும் இதன் மணிமுடியும் உங்கள் தங்கைக்குரியவையே. அவள் கருவிலெழும் மைந்தர் இம்மண்ணைக் கொள்வதே நெறி. மதுராபுரியின் மக்களின் அக விழைவே அன்னையின் சொல்லேறி வந்தது” என்றான் கிருதசோமன்.

“இக்கணமே அவளைக் கொல்கிறேன். உயிர்போனபின் அவள் வயிற்றில் எப்படி முளைக்கும் என் குலமறுக்கும் கரு?” என்று உடைவாளை உருவியபடி எழுந்தார் கம்சர். “அரசே, அன்னை சொல் பொய்க்காது. இம்மண்ணை உங்கள் தமக்கையின் எட்டாவது மைந்தன் ஆள்வது நிகழ்ந்தாகவேண்டும்” என்றான் கிருதசோமன். ”அவள் இறந்தால் அவள் ஆறு தங்கையரின் கருவில் மைந்தர் பிறக்கலாம்.” திகைத்து “என்ன சொல்கிறீர் அமைச்சரே?” என்று விழிமலைத்தார் கம்சர். கிருதசோமன் “அரசே, மைந்தர் பிறக்கட்டும். அன்னை கருவிட்டு இறங்கி அவர்கள் நம் கைகளுக்கே வரட்டும். ஏழு மைந்தரை கருமணம் காய்வதற்குள்ளேயே கொல்வோம். எட்டாவது மைந்தனுக்கு பிறந்த அன்றே மணிமுடி சூட்டுவோம். அவன் தலையை அக்கணமே கொய்து அம்மணிமுடியை நீங்கள் வென்றெடுங்கள். மன்னனைக் கொன்று மணிமுடி கொய்தல் ஷாத்ர நெறியே ஆகும். நெறிப்படியும் முறைப்படியும் அம்மணிமுடிக்கு நீங்களே உரிமைகொள்ளலாம்” என்றான்.

அமைச்சனை ஆரத்தழுவி “ஆம், அதுவே முறை! அதுவே நான் செல்லும் நெறி!” என்று கூவிச்சிரித்தார் கம்சர். படைத்தலைவன் சுபூதனை அழைத்து தேவகியையும் வசுதேவனையும் கற்சிறையில் அடைக்க ஆணையிட்டார். “இவ்வுலகொரு சிறைக்கூடம் என்பார்கள் சூதர்கள். சிறைக்கூடத்தையே உலகாக்க நூல்கற்றவனால் முடியும் என்று நான் சொன்னதாகச் சொல்” என்று சொல்லி கம்சர் புன்னகைத்தார். சுபூதன் வணங்கி “கற்றகல்வியில் கல்பெயர்க்கும் கலை இல்லையேல் அவர் காலம் முழுக்க அங்குதான் இருப்பார் அரசே” என்றான். தொடையில் அறைந்து கூவி நகைத்தார் கம்சர்.

கற்சிறைக்குள் செல்லும் வரை வசுதேவர் “நான் அரசரைப் பார்க்கவேண்டும். அவரிடம் ஒரு சொல்லேனும் பேசவேண்டும்” என்று கூவிக்கொண்டிருந்தார். இரும்புக்கதவுகள் கூவியபடி மூடிக்கொள்ள இரும்புக் குறடுகள் ஒலிக்கும் காவலர் காலடிகளே புறவுலகென்றானதை உணர்ந்தபோது உடைந்து முழங்காலில் முகம் சேர்த்து அமர்ந்து அழுதார். அவர் அருகே அமர்ந்த தேவகி “சிறை எனக்குப் புதிதல்ல வீரரே. கன்னிச்சிறையில் இருந்தேன். கொழுநரின் சிறைக்கு வந்துள்ளேன். அன்னைச்சிறை வழியாகச் சென்று சிதையேறினாலும் என் வாழ்க்கை முழுமை உடையதே” என்றாள்.

நீர்வழியும் கண்களால் அவளை ஏறிட்டு நோக்கிய வசுதேவர் “இக்கணத்தில் திரைவிலகி அனைத்தையும் காண்கிறேன் அரசி. நான் கற்றறிந்த மூடன். அறிவிலிக்கு நூல்கள் அறியாமையை மட்டுமே அளிக்கின்றன” என்றார். “அறிதலும் அறியாமையும் கொண்டு வாழ்வை ஆடமுடியுமா என்ன? இது தெய்வங்களின் ஆடற்களம். இதில் வெல்லலும் தோற்றலும் இல்லை. விதியறிந்து அமைதலொன்றே விவேகமாகும்” என்று அவள் சொன்னாள். நீளமுகமும் நீலச்செண்பக விழிகளும் கொண்ட மெலிந்த பெண்ணின் தோளில் தன் கைகளை வைத்து “அறியவேண்டியதை எல்லாம் அறிந்திருக்கிறாய். என் அறியாமையையும் ஏற்றருள்க. இன்று உன் முன் முழுதமைகிறேன். நான் உன் சிறுமைந்தன்” என்றார் வசுதேவர்.

அன்றிரவு அவள் தன் மெல்லிய கரங்களால் அவரைத் தொட்டபோது அட்டை போல உடல் சுருங்கிக்கொண்டார். அவளுடைய கைக்கொடிகள் அவர் உடலைச் சூழ்ந்தபோது “வேண்டாம் தேவி, இந்தக் கற்சிறையில் நான் உன்னைத் தொட்டால் என் அகத்தில் ஓர் ஆண்மகன் கூசிச்சிறுக்கிறான்” என்றார். ”சிறையிலெனில் சிறையில். நாம் கைப்பிடித்தது இதற்காக அல்லவா? எங்கோ காலவெளியில் நம் ஊனும் குருதியும் பெய்யப்படுவதற்காகக் காத்திருக்கும் நம் குழந்தைகளுக்காக” என்று அவள் சொன்னாள். “நம்மைச் சிறையிட்டிருக்கும் வீணனின் ஆணையை அல்லவா நிறைவேற்றுகிறோம்?” என்று வசுதேவர் விம்மினார்.

அவள் அவர்முகத்தில் முகம்சேர்த்து, “அன்னையின் குரலெழுந்த முதுமகள் சொன்னது அரசனை நோக்கி என ஏன் எண்ணவேண்டும்? அது எனக்கான ஆணை என்றே நான் கொள்கிறேன். எட்டு மைந்தரைப்பெற்று என் கடன் தீர்க்க இப்பிறவியை அடைந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “எத்தனை கொடியதென்றாலும் ஒரு பிறவியில் செய்யவேண்டியதென்ன என்று அறியமுடிந்தவர் நல்லூழ் கொண்டவரே. இலக்கறிந்த பறவைக்கு திசைதடுமாற்றம் இல்லை...” அவர் அவள் கைகளைப்பற்றி “உன் சொற்களில் திகழும் இந்த ஒளியை ஒரு நூலிலும் நான் கண்டதில்லை” என்றார்.

ஆனால் தன் வயிற்றில் கருநிலைத்ததை அறிந்ததுமே அவள் பிறிதொருத்தியானாள். நாள்தேர்ந்து திதிகணித்துக் காத்திருந்தவள் அதை உணர்ந்ததும் கால்பின்ன ஓடிவந்து அவர் அருகே விழுந்தமர்ந்து மூச்சிரைக்க “என்னுள் உயிர்நிறைந்திருக்கிறது யாதவரே!” என்றாள். முகம் வியர்க்க உடல் அதிர அவர் கைகளைப்பற்றிக்கொண்டு “நான் இங்கிருக்க மாட்டேன். என் மைந்தனை அவ்வரக்கன் கை தொட ஒப்பமாட்டேன். என்னை எப்படியேனும் தப்பவைத்து கொண்டு செல்லுங்கள்!” என்று விம்மி அழுதாள். துடிக்கும் உதடுகளும் விரிந்த மழைக்கண்களுமாக வெறுமொரு பேதையாக “என் மைந்தனை இழந்து உயிர்கொள்ள மாட்டேன். எவர் கால்களிலும் விழுகிறேன். எந்நெறியையும் கடக்கிறேன். எவ்விழிவையும் ஏற்கிறேன். என் மைந்தன் ஒருவனன்றி இப்புவியில் எனக்கேதுமில்லை” என்றாள்.

செயலற்று அவளை நோக்கி “என்ன சொல்கிறாய் அரசி? நாம் அவ்வரக்கன் கைவெள்ளையில் வைத்து கூர்ந்து நோக்கும் இரு சிறு பூச்சிகள் மட்டுமே. நாம் செய்வதற்கேதுமில்லை” என்றார். “சீ, நீயுமொரு ஆண்மகனா? இச்சொல்லை என் விழிநோக்கிச் சொல்லி அமர்ந்திருக்கவா அன்னை வயிற்றில் பிறந்தாய் இழிமகனே?” என்று தேவகி சீறினாள். “ஏதேனும் செய். கொல். இல்லையேல் செத்து அழி. இங்கிருக்காதே. என் குருதியில் ஊறும் மைந்தனுக்கு தந்தையாக இருப்பதென்றால் இச்சிறையின் கற்சுவரை உன் தலையால் முட்டி உடை. உன் குலதெய்வங்களை இங்கே அழைத்து கொண்டு வந்து நிறுத்து” என்று கூவினாள்.

கருமுதிர அவள் பித்தெழுந்தவளானாள். கேட்கும் குறடொலியை எல்லாம் வாளுடன் வரும் ஒலியாக அறிந்து உடல்நடுங்கி தோள் ஒடுங்கி மூலையில் செறிந்துகொண்டாள். நிழல்களை நோக்கிக் கைநீட்டி கூவி அலறினாள். தன் கைத்தொடுகையிலேயே விதிர்த்தெழுந்து பெருங்குரலில் கதறினாள். இரவும் பகலும் துயிலிழந்தவளாக சுற்றிவந்தாள். அவள் தோள்கள் தொய்ந்து தோல் வெளிறியது. வாய் உலர்ந்து விழிகள் கருகின. நடுங்கும் கைவிரல்களால் உணவை அள்ளி உண்ணமுடியாதவளானாள். மெலிந்த தொண்டையால் நீரும் பருகமுடியாதவளானாள். பொருளற்ற சொற்துளிகள் சொட்டி உதிரும் வாயுடன் கலுழ்ந்து வழியும் விழிகளுடன் எங்கும் அமரமுடியாதவளாக எங்குமிருந்தாள். எதையும் நோக்காத விழிகளால் சுவர் துளைத்து நோக்கி தவமிருந்தாள். கலைந்து எழுந்து குனிந்து தன் வீங்கிய வயிறை நோக்கி இது என்ன என்று திகைத்தாள்.

குருதிவாசனை அறிந்து வசுதேவர் கண்விழித்தெழுந்த இரவில் இருளுக்குள் முனகியபடி அமர்ந்திருந்த தேவகியை உணர்ந்தார். நெய்விளக்கை ஏற்றி கையிலெடுத்து அருகே சென்று குனிந்து “தேவி” என்றபோது அவள் “தின்றுவிட்டேன்! குருதிச்சுவை அறிந்தேன்! தின்றுவிட்டேன்!” என்று பேதைமொழி சொல்லி வறண்ட விழிகளால் நோக்கி பல்காட்டி நகைத்தாள். அடிவயிற்றில் உதைபட்டவள் போல கைகால்கள் அகல குருதியின் வெந்நா வந்து அவர் காலைத் தீண்டியது. அலறியபடி நெளிந்து தாவி அவர் கைகளைப்பற்றிக்கொண்டு “என் குழந்தையை காப்பாற்றுங்கள் யாதவரே. அவ்வரக்கன் அவனைக் கொல்ல விடாதீர்!” என்று கூவியபடி உடல் வலிப்பு கொண்டு அதிரத்தொடங்கினாள்.

ஓசைகேட்டு சேவகன் ஓடிச்சென்று செய்தி சொல்ல மருத்துவச்சிகள் இரும்புக்கதவு திறந்து உள்ளே வந்தனர். மார்கழி மாதத்து கடுங்குளிரில் விரைத்துப் போயிருந்த கல்திண்ணையில் அமர்ந்தபடி தேவகியின் வலியின் ஒலியைக் கேட்டு வசுதேவர் கண்ணீர் உகுத்தார். மைந்தனின் முதல்குரல் எழுந்ததும் கதறியபடி கல்லில் முகம் சேர்த்து கருக்குழந்தை போல் ஒடுங்கிக்கொண்டார். குருதிப்பூச்சைத் துடைத்து மென்பட்டில் பொதிந்து மூங்கில்கூடையில் இட்டு மைந்தனை அவர்கள் கொண்டுசென்றனர். எழுந்தமர்ந்து ஒரு கணம் அம்முகத்தை நோக்கவேண்டுமென்று அவர் எண்ணியபோது வலக்கையும் வலக்காலும் இழுத்துக்கொள்ள வாய்கோணி எச்சில் வழிய குளிர்திண்ணையில் திளைத்து பின் நினைவழிந்தார்.

மறுநாள் தேவகியின் குரல்கேட்டு விழித்துக்கொண்டார். வனநீலி எழுந்த பூசகி போல் உடல் முறுக்கி தொண்டைபுடைக்க இருகைகளாலும் கருங்கல்தரையை ஓங்கியறைந்து அவள் ஓலமிட்டாள். களிம்பேறிய செம்புச்சிலைபோல் அவள் உடல் பசுமைபூத்திருப்பதை அறைக்கு வெளியே கதவில் பாதிமறைந்து நின்று அவர் கண்டார். அக்கணமே இறந்து அங்கே கிடக்கவேண்டுமென்று ஏங்கினார். அவள் கண்கள் முன் சென்று நின்றால் பசிகொண்ட வேங்கைபோல தன்னை உடல்கிழித்து குதறி வீசுவாள் என்றெண்ணினார். அவள் சொல்லொன்று தன் மேல் பட்டால் தன் ஏழுதலைமுறை மூதாதையர் இருள்வெளிக்கு இழிவார்கள். அவள் ஒரு நோக்கு தன்னைத் தொட்டால் தன் தெய்வங்கள் இடிபட்ட பசுமரமென நின்றெரியும்.

செவிலியர் அவள் வீங்கிய சிறுமுலைகளைப் பிழிந்து பாலெடுத்தனர். வெண்சங்குக் கிண்ணத்தில் பாலுடன் ஊறிக் கொட்டியது கொழுங்குருதி. கண்ணீர் வழிந்து நனைந்த மேலாடையில் ஊறி வந்தன குருதி வட்டங்கள். சொட்டி வடிந்தொடியும் புயல்மழைக்கிளை என அவள் தொய்ந்து அமைந்த கல்தரையில் எண்ணித் தயங்கி வழிந்து வந்தது கண்ணில்லாத செந்நிறப்புழு போன்ற குருதி. மூடிய விழிகள் அதிர்ந்து அதிர்ந்து அமைய துடித்து அடங்கிய தொண்டைக்குழிக்குள் நின்றது அவள் இடாது அம்மைந்தன் சூடாது விண்ணின் நாதவெளியில் தங்கிவிட்ட அவன் பெயர்.

இனி அது நிகழலாகாதென்றே வசுதேவர் எண்ணியிருந்தார். ஆனால் விழித்தெழுந்த அவளோ துள்ளும் உவகையுடன் ஓடிவந்து அவரை அணைத்துக்கொண்டாள். கண்பூத்துச் சிரித்து “அறிந்தீர்களா? என் மைந்தன் நேற்று என் கனவிலெழுந்து வந்தான். செந்நிற சிறுமலர் போல. அவன் கொழுங்கன்னம் குழிந்த சிற்றிதழ் நகையை நான் கண்டேன். அவனை அணைத்து என் நெஞ்சோடு சேர்த்தபோது என் நெஞ்சுக்குள் இறுகிய செம்பளிங்குக் கட்டி ஒன்று உடைந்து உருகி வழிவதாக உணர்ந்தேன். அவனுக்கு நானிட்ட சுமுகன் என்னும் பெயரை அவன் கண்கள் வாங்கிக்கொண்டன. அவ்விழிகளை குனிந்து நோக்கி இரவெல்லாம் அவனை அழைத்துக்கொண்டிருந்தேன். பெயரற்று என் மடியில் வந்தவன் சுமுகனல்லவா நான் என்று என்னிடம் சொல்லி புன்னகை புரிவதைக் கண்டேன்” என்றாள். திகைத்து அவள் தோளைத் தழுவி “ஆம், அரசி, நானும் அவனைக் கண்டேன்” என்றார் வசுதேவர்.

தன் வயிறொழிந்ததை அரசி அறியவேயில்லை. எப்போதேனும் ஒரு நாள் அவள் அதை உணர்ந்து “எங்கே என் மைந்தன்? யாதவரே, எங்கே என் வயிற்றின் நிறைவு?” என பதறியோடி அருகே வருகையில் அவளை மெல்ல அணைத்து “நம் மூதாதையரைத் தேடி அவன் சென்றிருக்கிறான் அரசி. நாளை எழுந்தருள்வான்” என்று கண்களில் படர்ந்த ஈரத்துடன் சொல்வார் வசுதேவர். மீண்டும் மீண்டும் அவள் நிறைந்து ஒழிந்துகொண்டிருப்பதை அவளறியவே இல்லை. குன்றா கருவுடன் எட்டு வருடங்கள் சிறையிலேயே அகம் நிறைந்து இருந்தாள். களிப்பும் கனவும் சிரிப்பும் நாணமுமாக கலையாப் பெருங் கனவொன்றுக்குள் அவள் வாழ்ந்தாள்.

காலமொன்றே பெருஞ்சிறை என்றறிந்தார் வசுதேவர். காலமில்லா வெளியில் சுவர்கள் பொருளிழந்து திகைத்து நின்றன. அவள் உத்தரமதுராபுரியின் நந்தவனத்தில் உலவினாள். யமுனையின்மேல் படகோட்டினாள். குழந்தையும் குமரியுமாக வாழ்ந்தாள். அவள் உடல் உவகையால் நிறைந்து பேரழகு கொண்டது. முகம் முழுக்கதிர் விரியும் சந்திரவட்டம் ஆயிற்று. கண்களில் இளங்காலையின் ஒளி எழுந்தது. சிரிப்பில் புதுமலர்களின் வண்ணம் மலர்ந்தது. கன்றின் துள்ளல் கொண்டாள். நீரோடையின் நெளிவு கொண்டாள். மலர்க்கொடியின் அசைவு கொண்டாள். தென்றல் எடுத்து விளையாடும் மயிலிறகு போல அங்கெல்லாம் பறந்தலைந்தாள்.

அவரிடம் “ஏன் முகம் கனத்திருக்கிறீர்கள் யாதவரே? விருஷ்ணிகுலத்து வேந்தனின் தந்தை துயருறலாமா?” என்று அவள் சிரித்து தோள்சேர்ந்து கேட்கையில் “இல்லை, துயரே இல்லை அரசி” என்று வசுதேவர் சொன்னார். “நம் மைந்தன் வளர்ந்துகொண்டிருக்கிறான். கண்வளர்ந்து முகம் வளர்ந்து கை வளர்ந்து கால்வளர்ந்து கனவு வளர்ந்து அவன் எழுகிறான். கைதொட்டு அவன் அசைவை நான் அறிகிறேன். அவன் புன்னகையை கனவில் காண்கிறேன்” என்று அவள் சொன்னாள்.

“அவன் கன்னங்கரியவன். ஆகவே கிருஷ்ணன் என்று அவனுக்குப் பெயரிட்டேன். ஆனால் அப்பெயரை அத்தனை பேரும் அழைப்பார்களே என்று ஏங்கினேன். எனவே நான் அவனுக்குக் கண்ணனென்று பெயரிட்டேன். கைகளும் கால்களும் சிரிப்பும் சொல்லும் என அவன் எதுவாக இருந்தாலென்ன? என் கண்ணுக்கு அவன் கண் மட்டுமே. கண்ணாகி வந்தவனுக்கு கண்ணன் என்றல்லாமல் பெயருண்டா என்ன?” என்றாள் பெண்ணென்றான பெருசுமைகொண்ட பேதை.

அனைத்துத் தடைகளையும் மீறி வசுதேவர் அழத்தொடங்க “அய்யோ, என்ன அழுகை இது? மைந்தனை நினைத்தால் இவ்வழுகை என்றால் மடிநிறைத்து அவனை எடுத்தால் எப்படி அழுவீர்? யாதவரே, மானுடனாகப் பிறந்தமைக்கே பொருள் அளிக்கும் பொற்கணங்கள் வழியாகச் செல்லப்போகிறீர். வாழும் ஒவ்வொரு கணமும் ஒரு மணிமுத்தாக அம்முத்துக்கள் வழியாகச் செல்லப்போகிறது கண்ணனென்ற சொல்லெனும் கருஞ்சரடு. அம்மணிமாலையை அணிந்து இவ்வுலகை ஆளவிருக்கும் மாமன்னர் நீர்” என்றாள். பொருளிழந்து வழியும் சொற்களில் மட்டும் குடியேறும் பேரழகைக் கண்டு அவர் கண்ணீருடன் நகைத்தார்.

"இளையோரே, இன்னொரு நறுவெற்றிலை சுருளெடுத்து எனக்களியுங்கள். நானறியேன் அங்கு நிகழ்ந்தவை என்னவென்று. இம்மாதம் அஷ்டமி ரோகிணியில் அன்னை மணிவயிறு ஒழிந்தாள். அக்கருவை கைதொட்டு எடுத்தவள் நான். கருக்குருதி பூசிய நீலப்பட்டுடலை என் கண்ணாலும் கருத்தாலும் கடந்துறையும் மெய்யாலும் மெய்யிறந்த நுண்ணாலும் அறிந்தேன். உலகாளும் செம்பாதங்களை என் சென்னியில் சூடினேன். இளவெந்நீரால் பூம்பட்டுச்சுருளை நனைத்து அவனைத் துடைத்தேன். நீலமணியின் ஒளியெழுந்து இருளறைக்குள் ஒளியெழக்கண்டேன். மூங்கில் கூடையில் வெண்பட்டு விரித்து அவனைப் படுக்கவைத்து சேடியரிடம் கையளித்தேன். மறுநாள் நானறிந்தேன். மதுரையின் மாமன்னர் எட்டாவது மகவையும் கொன்றுவிட்டார் என்று.”

மூச்சொலிகள் எழ நீர் விட்டெழுந்து நெஞ்சுபொத்தி நின்றனர் ஆயர்குலமகளிர். பொக்கை வாய் காட்டிச் சிரித்து செவிலி சொன்னாள் “அவன் ஆடலை அறிந்தவர் இங்குளரோ பெண்களே? மன்னனின் கைவாள் போழ்ந்து எரிசிதைக்கனுப்பிய உடல் ஒரு பெண்மகவு என்கிறார்கள் அரண்மனைச் சேடியர்” என்றாள். “யாரந்த மகவு?” என்றனர் ஆய்ச்சியர். “அந்த நீலமைந்தன் எங்குளான்?” என்று எழுந்து ஈரம் சொட்ட அவள் அருகே வந்தனர். “நானொன்றறியேன். இனி ஒருமுறை அப்பாதங்களை நோக்கி விழிதெளிக்கும் வாழ்நீளமும் எனக்கில்லை. ஒரு நோக்கு கண்டதனாலேயே இப்பிறவிக் கடல்நீந்த புணை பற்றியவளானேன்” என்றாள் செவிலி.

பகுதி இரண்டு: 3. அனலெழுதல்

வண்ணத்தலைப்பாகை வரிந்து சுற்றிய தலையும் கம்பிளிமேலாடையும் கையில் வலம்புரிக்குறிக்கோலும் தோளில் வழிச்செலவுமூட்டையுமாக பரிநிமித்திகன் பர்சானபுரிக்குள் வந்தான். அவன் விறலி தோளில் தொங்கிய தூளியில் விரலுண்ணும் விழிவிரிந்த கைம்மகவை வைத்திருந்தாள்.

அவர்கள் முன்னால் அணிக்கம்பளமிட்ட முதுகும் மலர்ச்செண்டு விரிந்த தலையும் நெட்டிமாலையணிந்த கழுத்துமாக மணியோசையும் அணியோசையும் எழுப்பி தலையாட்டி வந்தது நிமித்தப்பரி. பர்சானபுரியின் இளங்கன்றுகள் குதிரைவாசனை அறிந்து மூக்கு தூக்கி சீறி குளம்பொலி எழுப்பின. திகைத்த பசுக்கள் பெருவிழிகளை உருட்டி மூக்கைச்சுளித்து கன்றுகளை நோக்கி குரல்கொடுத்தன.

“இன்று இவ்வூர்” என்றான் பரிநிமித்திகன். “இந்த மண் வாழ்க!” குளம்போசை எழ வலதுகால் எடுத்துவைத்து ஊர் மன்றுநடுவே வந்து நின்றது நிமித்தப்பரி. “ஆயர்குடியில் பசுக்குலம் செழிக்கட்டும். அறவோர் வீடுகளில் நெய்க்கலம் நிறையட்டும். மன்றமர்ந்த நிமித்திகன் மடிநிறையட்டும். அவன் சொல்நிறையட்டும். அச்சொல் விழுந்த மண்பொலிந்து மலர்விரியட்டும்!” என்று நிமித்திகன் தன் குறுமுழவை ஒலித்து குரலெழுப்பினான்.

அந்தியிறங்கத்தொடங்கிய வேளை ஆயர்கள் தங்கள் பசுக்களைத் திரட்டி அணிநிரைத்து கோல்கொண்டு வழிநடத்தி சிற்றோடைகளைக் கடந்து மலைச்சரிவில் இறங்கி ஊர்திரும்பிக்கொண்டிருந்தனர். மலர்க்குச்ச வால்கள் ஒன்றாகச் சுழன்றன. குளம்புகளின் தாளப்பெருக்கை ஏற்று தாளமிட்டன மலைப்பாறை உருளைகள். நாநீட்டி தலைதாழ்த்தி கன்றுகளை அழைத்தன கனிந்த முலைகள்.

மாலைக்கறவைக்காக பாற்குடங்களை ஏந்திய ஆய்ச்சியர் தொழுவுக்குச் சென்று இள வைக்கோல் கூளம் பரப்பி இதம் செய்தனர். பிரிந்து நின்ற இளங்கன்றுகள் அன்னையரின் வாசனை அறிந்து குரலெழுப்பின. பசுக்களுடன் வந்த கொசுக்கூட்டம் பாடும் மேகம்போல ஊரைச்சூழ்ந்துகொள்ள தூமக்கலன்களில் இதழ்விரிந்த கனல் மேல் குங்கிலியமும் அகிலும் தைலப்புல்சுருளும் இட்டு சிற்றூரின் எட்டுமூலைகளிலும் வைத்து அதை நீலப்புகையால் மூடினர். மேலாடைக்குள் மறைந்த கல்நகை போல மேகத்திற்குள் திகழ்ந்தது பர்சானபுரி.

திண்ணையில் இருந்த முதிய ஆயர்கள் கோலூன்றி கால்நீட்டி வைத்து மன்றுக்கு வந்து நிமித்திகனைச் சூழ்ந்துகொண்டனர். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்தனர். இன்சுவைப் பாற்கஞ்சியும் சுட்டகிழங்கும் அக்காரச் சுக்குநீரும் கொண்டு வந்து கொடுத்தனர் இள ஆய்ச்சியர் இருவர். ”ஊர் புகுந்தாய் நற்சொல் விடுத்தாய். நீயும் உன் குலமும் வாழ்க. உன் சொற்கள் இங்கே வேர்கொள்க” என்று வாழ்த்தினர்.

உணவுண்டு இளைப்பாறி மன்றமர்ந்த நிமித்திகன் கார்காலம் வரும் வழியும் கன்றுகளின் நலமும் குறித்து கணித்துச் சொன்னான். “எங்கிருந்து வருகிறீர் நிமித்திகரே?” என்று ஆயர்முதுமகள் ஒருத்தி கேட்க திகைத்து அவளை நோக்கி சிலகணங்கள் விழிமலைத்துவிட்டு “மதுராபுரியிலிருந்து செல்பவன் நான் அன்னையே. எந்நகரையும் நீங்குகையில் அங்குள்ள எல்லைத்தெய்வங்களை வாழ்த்தி மறுமுறை அங்கே வருவோமென்று சொல்லுரைத்து காலெழுபவர்கள் நாங்கள். இம்முறை மதுராபுரியின் எல்லை கடக்கையில் தெய்வங்களை எண்ணாமல் எவ்விழிகளையும் நோக்காமல் கச்சை இறுக்கி காலெடுத்து வைத்தோம். இனி அந்நகரில் எளியேனும் என் குலமும் ஒருபோதும் நுழையப்போவதில்லை” என்றான்.

அவன் சொல்வதன் பொருளுணர்ந்து அங்கிருந்தோர் உடல்சிலிர்த்து நீள்மூச்செறிந்தனர். காற்றிலேறிய சொற்கள் சில அவர்களுக்கும் வந்து சேர்ந்திருந்தன. “அறம் அழிந்த மதுராபுரியில் நடுமதியத்திலும் நீள்நிழல் திகழ்கிறது ஆயர்களே. அதை நான் என் விழிகளால் கண்டேன்” என்றான் பரிநிமித்திகன். “அன்னைப் பெரும்பசுக்கள் குருதித்துளிகளை கறக்கக் கண்டேன். சுழன்றெழும் பெருங்காற்றிலும் கொடிகள் துவண்டிருக்கக் கண்டேன். நள்ளிரவின் இருளுக்குள் எவர் கையும் தொடாமலேயே பெருமுரசுகள் விம்மி அதிர்வதைக் கேட்டேன்.” அங்கிருந்த ஒவ்வொரு விழியையும் மாறிமாறி நோக்கி அவன் சொன்னான் “ஆவதும் அழிவதும் தெய்வங்கள் கைகளிலே. ஆனால் அழிவை அளிக்கும் தெய்வங்களை தவம்செய்து தன்னிடம் வரவழைப்பார் தீயோர். அதை மாமதுரை நகரில் நான் கண்டேன்.”

தங்கை தேவகிக்கு அஷ்டமிரோகிணி நாளில் பிறந்த மகவை எடுத்துவர படைத்தலைவன் சுபூதனிடம் ஆணையிட்ட கம்சர் கொலைக்கூடத்துக்கு மணிமுடியும் உடைவாளுமாக தானே வந்து அமர்ந்துகொண்டார். அவரது எட்டு தம்பியர் நியகுரோதனும், சுநாமனும், கங்கணனும், சங்குவும், சுபூவும், ராஷ்ரபாலனும், பத்முஷ்டியும், சுமுஷ்டியும் அவரைச்சுற்றி அமர அமைச்சன் கிருதசோமன் கைகட்டி அருகே நின்றான். சுபூதன் கொண்டுவந்த மூங்கில்கூடையில் சிறுகையை வாயிலிட்டு கால்மடித்து தோள் ஒடுக்கித் துயின்றது சிறுமகவு. “அஷ்டமி ரோகிணியில் பிறந்த எட்டாம் மகவிது” என்றான் சுபூதன். ”ஏழு மைந்தரின் குருதி விழுந்த இக்கூடத்திலேயே இம்மகவும் சாகட்டும். உடன்பிறந்தோர் விண்ணில் ஒன்றாகட்டும்” என்று கம்சர் நகைக்க உடன்பிறந்தோர் நகைகூட்டி இணைந்துகொண்டனர்.

“எட்டாம் மகவு மதுராபுரியின் முடிசூடும் என்றது எல்லைப்பெருந்தெய்வம். அச்சொல்லே ஆகட்டும் அரசே” என்றான் கிருதசோமன். “அதைக் கொன்று குருதிகொண்டு அம்முடியை நீங்கள் கொள்ளுங்கள். தெய்வத்தின் சொல்லை அதற்கே திருப்பியளிப்போம்." சிரித்து தொடைதட்டி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் கம்சர். அணிப்பெருந்தாலத்தில் மதுராவின் மணிமுடியும் செங்கோலும் கொண்டுவரப்பட்டது. கூடையிலிருந்து மகவை எடுத்து குருதிக்கறை படிந்த பலிபீடத்தில் வைத்து சுபூதன் விலகி நின்றான். பலிபீடத்தின் தண்மை தன் உடலில் பட்டதும் துடித்து விழித்து கைகால்களை காற்றில்வீசி, உடலதிர, சிறுமுகம் செம்மை கொண்டெரிய, செந்நிறப்புண் போன்ற வாய்திறந்து வீரிட்டழுதது மகவு.

அமைச்சன் கிருதசோமன் மணிமுடியை கொண்டுசென்று சிறுமகவின் தலையருகே வைக்க உடைவாளை ஒளியுடன் உருவி கையிலெடுத்து அதன் அருகே சென்றார் கம்சர். கால்களை உதைத்து உதைத்து பலிபீடத்தில் மேலெழுந்த சிறுகுழவி தலையால் மணிமுடியைத் தட்டி மறுபக்கம் மண்ணில் விழச்செய்தது. வாள் தாழ்த்திய கம்சர் சினந்து கைநீட்டி “பிடி அக்குழவியை!” என்று கூவி அருகணைவதற்குள் மேலுமிருமுறை காலுதைத்து மேலெழுந்து பலிபீடத்திலிருந்து மணிமுடிமேல் தலையறைந்து விழுந்து மெல்லிய விக்கல் ஒலியுடன் துடித்து இறந்தது குழந்தை. கிருதசோமன் ஓடிச்சென்று குழந்தையின் துடிக்கும் உடலை விலக்கி குருதி சொட்டும் புலிவாய் பற்கள் போல வைரங்கள் பதித்த மணிமுடியை கையில் எடுத்தான்.

சுபூதன் குழந்தையின் சிற்றுடலைத் தூக்கி “இறந்துவிட்டது அரசே” என்றான். “மணிமுடி சூடாமலா?” என்று கம்சர் திகைத்து கூவி வாளுடன் திரும்பினார். “நிமித்திகரை அழையுங்கள்... அழையுங்கள்!” என்று கூவியபடி இடைநாழியில் உடல்பதறி ஓடினார். தம்பியர் “நிமித்திகர்கள்! நிமித்திகர்கள்!” என்று கூச்சலிட்டபடி அவர் பின்னால் விரைந்தனர். மணியோசையெழ வாளை வீசிவிட்டு மந்தண அவை புகுந்து மஞ்சத்தில் சரிந்து மூச்சிரைக்க “இக்கணமே அறிந்தாகவேண்டும். என்ன நிகழ்கிறது இங்கே? தெய்வமெழுந்து சொன்ன சொல் எப்படிப் பொய்யாகும்?” என்று கம்சர் கூவினார்.

அறைபுகுந்த நிமித்திகர் எழுவர் நாளும் பொழுதும் கணித்து “அரசே, அஷ்டமிரோகிணி நாளில் தங்கள் தங்கையின் கருவில் பிறந்தவன் மைந்தன். எட்டு மங்கலங்களும் அமைந்த மணிவண்ணன்” என்றனர். “சங்கு சக்கரம் அமைந்த கரத்தன். தாமரையிதழ் விழிமலரன். மார்பில் திருவாழும் மணிமுத்திரை கொண்டோன். சான்றோர் தலையில் சூடும் அருமலர் அடியன்” என்றனர். “அம்மைந்தன் இந்நகரை ஆள்வது உறுதி. அது தெய்வத்தின் சொல்.”

விழிமலைத்து வாய்திறந்து கம்சர் அமர்ந்திருக்க அமைச்சன் “அவ்வண்ணமெனில் இக்குழந்தை எது? எங்குவந்தது இது?” என்று கூவினான். “இதன் வலக்கையில் அனல்குறி உள்ளது. இடக்கையில் முப்புரிவேல்குறி திகழ்கிறது. மண்வந்து மறைந்த கொற்றவை இவள். யோகமாயை என ஆயர்குலம் என்றும் வழிபடும் இறைவடிவம்” என்றனர் நிமித்திகர். துடித்தெழுந்து தோள்தட்டி கம்சர் கூவினார் “எங்கே அந்த மைந்தன்? என்னைக் கொன்று என் நாடுகொள்ளப்போகும் என் குலத்தின் விஷநீல வேர்க்கொடுக்கு எங்கே? இக்கணமே அவன் என் முன் வரவேண்டும். எழுக மதுராவின் நால்வகைப்படைகளும்!”

கொலைப்படைக்கலங்கள் ஏந்தி எட்டுத்திசை நோக்கி எழுந்தனர் தம்பியர் எண்மர். நியகுரோதனும், சுநாமனும், கங்கணனும், சங்குவும், சுபூவும், ராஷ்ரபாலனும், பத்முஷ்டியும், சுமுஷ்டியும் எழுப்பிய படைக்குரல் கேட்டு அஞ்சி மதுராவின் காவல்தெய்வங்கள் ஆலயபீடங்களில் அஞ்சியநாக்குகள் தொண்டைக்குழிகளில் என ஒட்டிக்கொண்டன. ”அறம் நினையவேண்டாம். நூல்நெறி நினையவேண்டாம். குலமூத்தோர் சொல் நினையவும் வேண்டாம். அஷ்டமிரோகிணியிற்பிறந்த அத்தனை மைந்தரையும் கொன்று மீள்க!” என்றார் கம்சர். “ஆம், இன்றே குருதியில் ஆடி அமைகிறோம்!” என்று கூவிக் கிளம்பினர் தம்பியர்.

சிறைக்கதவைத் திறந்து உள்ளே சென்று கல்மஞ்சத்தில் கண் துயிலாது கிடந்த தேவகியையும் வசுதேவரையும் கண்டு கம்சர் கூவினார். “சொல்லிவிடுங்கள், எங்கே உங்கள் எட்டாமவன்? இதோ படைக்கலம் கொண்டு சென்றிருக்கின்றனர் என் சொல்தவறா தம்பியர் எண்மர். பசியாறா புலிநாக்குபோல செங்குருதி நக்கி நக்கித் திளைக்கின்றன அவர்களின் உடைவாள்நுனிகள். நீங்கள் எண்ணும் ஒவ்வொரு கணமும் மதுராவில் ஒரு இளமைந்தன் உயிர்துறக்கிறான். பசுங்குருதி வாசனையை இந்தக் காற்றில் உணருங்கள். அன்னையர் அழுகுரலை செவிகூருங்கள். சொல்லுங்கள் எங்கே மதுராவின் இளவரசன்?”

கம்சரின் காலில் விழுந்து தேவகி கதறியழுதாள். “மைந்தரை விட்டுவிடு மூத்தோனே. என் மைந்தன் இருக்குமிடத்தை நானறியேன். அதை எவ்வண்ணமேனும் கேட்டுச் சொல்கிறேன். அவனை உன் கைகளுக்கு அளிக்கிறேன். அவன் குருதிகொண்டு உன் பழி தீர்த்துக்கொள். அறியாச்சிறுபாலகரையும் அவரைப்பெற்ற அன்னையரையும் கொன்று குலப்பழி கொள்ளாதே!” “தந்தையைக் கொன்று நான் பெற்ற மண் இது இளையோளே. மருகனைக் கொன்றுதான் நான் இதை ஆளவேண்டுமென்பது ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக. எங்கே உன் மைந்தன்? அவன் தலையில் இம்மணிமுடியை வைத்து அத்தலையை வெட்டி நான் என் கால்களில் வைத்தாகவேண்டும்... அதன்பின் அம்மணிமுடியைச் சூடி இப்பாரதவர்ஷத்தை ஆள்வேன் நான்.”

“பாவத்தில் நனைந்த அரியணைகள் அசைவின்றி அமைந்த கதையே இல்லை கம்சா” என்றார் வசுதேவர். “பாவத்தின் துளிபடாத அரியணை எங்கே அமைந்துள்ளது சொல்லும் மைத்துனரே” என்று கம்சர் நகைத்தார். “என் தந்தையைக் கொன்று இதை நான் அடைந்தபோது என் வலக்கரத்தருகே நூலேந்தி நின்றவர் நீரல்லவா?” தலைகுனிந்து “ஆம், அப்பெரும்பழிக்காகவே என் கைகளில் ஏழுமைந்தரை ஏந்தி உனக்களித்த ஏலாப்பெருந்துயரை அடைந்தேன். இனி இவ்வாழ்வுள்ள கணம் வரை கண்ணீரின்றி துயிலமுடியாத நினைவுச்சுமையை கொண்டேன். ஏழுபிறவிகள் இங்கே பிறந்திறந்து பிறந்திறந்து அவர்களுக்கு நீர்க்கடன் செய்யவேண்டியவனானேன்...” என்று சொல்லி கண்ணீருடன் தலைகுனிந்தார் வசுதேவர்.

“எட்டாம் மைந்தன் இருக்குமிடத்தை நீர் அறிவீர். அதைச் சொல்லாவிட்டால் அதோ நகரெங்கும் வாள்போழ்ந்து குருதிப்பிண்டமாக மண்ணில் விழும் அத்தனை இளமகவுகளின் பழியும் உம்மைச்சேரும். ஏழாயிரம் பிறவிதோறும் கங்கையையும் யமுனையையும் அள்ளியள்ளி இறைத்தாலும் அழியாது உமது பெரும்பாவம்” என்றார் கம்சர். “எழுந்து வந்து இச்சாளரத்தருகே நின்று கேளும். அன்னையர் அழுகுரல்களில் ஒலிப்பதென்ன என்று அறிவீர்” என்றார். தன் கனத்த கைகளால் வசுதேவரின் தோள்பற்றித் தூக்கி சாளரத்தருகே தள்ளி “கேளும்... உம் செவிநிறையட்டும்! கேளும்!” என்றார்.

நாகம் ஏறிய புள்மரமென ஒலித்த நகரை வசுதேவர் உணர்ந்தார். அன்னையர் குரல்களில் அவரது பதினான்கு தலைமுறையினரும் தீச்சொல் பெறுவதைக் கேட்டார். காற்றுவெளியில் தவிக்கும் சூரசேனரை, தேவபிதூஷரை, ஹ்ருதீகரை, ஸ்வயம்போஜரை, பிரதிஷத்ரரை, ஷார்மரை, சூரசேனரை, விடூரதரை, சித்ரரதரை, பாஜமானரை, பீமரை, சத்வதரை, புருகோத்ரரை, புருவாஷரை, மதுவை அறிந்தார். அவர்கள் 'மைந்தா, வசுதேவா!' என்று அலறிக்கூவும் பெருங்குரலைக் கேட்டு மெய்விதிர்த்தார்.

கண்ணீர் மார்பில் வழிய கைகூப்பி திரும்பி கம்சரிடம் “ஆம், இதோ அனல்நின்று அழிகின்றனர் என் மூதாதையர். அழியாப்பெருநரகத்தில் நான் காலமில்லாது நின்றெரிவேன். ஆனால் என் மைந்தனுக்கு நான் எதை அளிக்கமுடியும்? மண்ணில்லாதவன். ஒரு கன்றுகூட இல்லாத யாதவன். கற்ற சொல் ஒவ்வொன்றையும் மறந்தவன். சேர்த்த நற்பேறென ஒன்றில்லாதவன். என் எளியபெயரை அவன் சூடும்போது உடன்வைத்து நான் கொடுப்பதென்ன? இதோ இப்பெருந்துயரை அளிக்கிறேன். அவனுக்காக அவன் தந்தை எழுநூறு பிறவிக்காலம் அணையாச்சிதையில் எரியச்சித்தமானான் என்று அவன் அறியட்டும். அவனுக்களிக்க அதுவன்றி என்னிடம் வேறில்லை” என்றார்.

திகைத்து பின் சினம்வெறித்து சீறிப்பல்காட்டி கம்சர் கூவினார் “நீர் சொல்லவில்லை என்றாலும் இன்னும் சிலநாட்களில் உம் மைந்தன் அழிவான். அஷ்டமிரோகிணியில் ஆயர்குலத்துதித்த ஒரு மைந்தனும் வாழப்போவதில்லை. உம் மைந்தன் தன் தோழர்களின் குருதியில் நீந்தி மூதாதையரைச் சென்றடைவான்.” ஓடிவந்து அவன் கால்களைப்பற்றி “மூத்தவரே, என் குழந்தைகளை விட்டுவிடுங்கள்” என்று கூவி உடல் விதிர்த்து தேவகி மூர்ச்சை கொண்டாள். அவள் தலையை தன் காலால் உதைத்து “இவள் பழிசுமந்து பட்டமரமாக வேண்டாமெனில் சொல்லும் எங்கே அவன்?” என்றார் கம்சர்.

நெடுமூச்செறிந்து கைகூப்பி “இன்று உம் சொற்களில் அறிகிறேன் அரசே. என் மைந்தன் குருதிப்பெருவெள்ளத்தில் நீந்திக்களிக்கவே இப்புவிப் பிறந்தவன். அவன் பிறப்பதற்குள்ளாகவே அவன் ஆடும் களங்கள் அமைந்துவிட்டன. படைக்கலங்கள் கூர்கொண்டுவிட்டன. அவன் ஒழுக்கும் குருதி அன்னத்தில் இருந்து சிவந்து அனலாக எழுந்து விட்டது” என்றார் வசுதேவர். “குருதியில் திரட்டிய மெய்மையை இம்மண்ணில் நாட்டிவிட்டுச் செல்வதற்காக வந்தவன் அவன்.”

ஒருகணத்தில் அகச்சுமை அனைத்தையும் உதிர்த்து வசுதேவர் புன்னகை செய்தார். “இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன். அவனாடும் ஆடலென்ன என்று அவனே அறிவான். தன்னை நிகழ்த்தத் தெரிந்த தலைவன் அவன். இதோ, உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே.”

பித்துகொண்டவர் போல பல்காட்டி நகைத்து எழுந்து இரு கைகளையும் நீட்டி கூவினார் “பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” கைதட்டி நடனமிட்டு கூவிநகைத்து கம்சரைச் சுற்றிவந்தார். திகைத்து சிறைவிட்டோடும் அரசருக்குப்பின்னால் வந்து கைநீட்டி “வாளேந்திய பேதை! ஆனால் அவன் காலடியில் நெஞ்சுபிளந்து படைக்கும் பெரும்பேறுபெற்றோன்! வாழ்க! உன் பெயர் என்றும் இப்புவியில் வாழும்!” என்று அவர் கூவி நகைத்தார்.

ஆயர்குடிகளே, யானைமத்தகம் பிளந்த கால்களுடன் மலைப்பாறை ஏறிச்சென்ற சிம்மத்தின் தடம் கண்டு திரும்பிய வெள்ளாட்டின் விழிகளை என் முகத்தில் பாருங்கள். சுவைத்த முலைக்காம்பின் குமிண்வடிவம் எஞ்சியிருக்கும் உதடுகள் சிலைக்க தலைகொய்யப்பட்ட மைந்தரை கண்டுவந்தவன் நான். அன்னை இடையமர விரித்த கால்கள் விரைத்திருக்க விழிமலைத்து குருதியாடிக்கிடக்கும் உடல்களைக் கண்டு அம்மண்ணில் விழுந்து அள்ளியள்ளி தலையிலிட்டு ஆறாப்பழி கொண்டவன் நான்.

புன்மயிர் மென்தலைகள். கொழுவிய பால்கன்னங்கள். சந்தனத்துளியென மூக்குகள். பட்டு மொட்டெழுந்த பண்டிகள், சிறுதளிர்விரல்கள். பெருவிரல் நெளித்த பாதங்கள்.. பாலாடைபடிந்த பைதல் விழிகள். கொய்த காய்க்காம்பில் பால்சீறும் கள்ளிச்செடி போல கதறி மண்சேர்ந்த அன்னையர் கைபதறி அள்ளிய மண் சிலிர்ப்பதைக் கண்டேன். நான் கண்டவற்றுக்காகவே என்னை கழுவேற்றுங்கள் தெய்வங்களே!

இங்கு இனி மீளமாட்டேன். இம்மண்ணை இனி எண்ண மாட்டேன். என் குலமகள் வயிற்றில் பிறந்த மைந்தன் என் சொல் ஏந்தி மீண்டு வருவான். அன்றும் மதுராபுரி குருதிக்கொடை கொடுத்துக்கொண்டிருக்கும். துலாத்தட்டுகளால் ஆனது இப்புவியென்று எனக்குக் கற்பித்த எந்தை வாழ்க! வாளுக்கு அஞ்சி வாழும் அறம் மறந்தவர் ஒவ்வொரு கணத்தையும் மீண்டும் உணர்ந்தாகவேண்டும். குருதியால் குருதியை கண்ணீரால் கண்ணீரை பழியால் பழியை நிகர்த்தாகவேண்டும்.

ஆயர்க்குடி ஆன்றோரே! இங்கு இம்மேடையிலமர்ந்து சொல்கிறேன், எளிய நிமித்திகன். இம்மண்ணில் ஒரு சொல்லும் வீணாவதில்லை. ஒரு துளிக்கண்ணீரும் வெறுமே உலர்ந்தழிவதில்லை. ஓம்! ஓம்! ஓம்!

பகுதி மூன்று: 1. பெயரறிதல்

பெயரிடப்படாத ஆயிரம் மைந்தர்கள் அதிகாலைச்சூரியனின் செம்பொன்னொளியில் தும்பிகளாகவும் வண்டுகளாகவும் வண்ணத்துப்பூச்சிகளாகவும் தேன்சிட்டுகளாகவும் ஒளிரும் சிறகுகள் கொண்டெழுந்தனர். ஒளிப்பெருக்கில் நீந்தித் திளைத்து, இளங்காற்றிலேறி பறந்து, பசுந்தளிர்களின் குளிரிலாடி, மலர்ப்பொடிகள் சூடி கோகுலத்தை நோக்கிச் சென்றனர். நீலக்கடம்பின் மலர்க்கொத்துகளிலும் இணைமருதத்தின் இளந்தளிர்களிலும் குடியேறி இசைத்து காற்றில்நிறைந்தனர். வண்ணச்சிறகடித்து ஒளி துழாவினர். முதற்காலை ஒளியில் முற்றத்தில் வந்து நின்ற யசோதை “எந்தையே! எழில்வெளியே” என்று தன் கைகளைக் கூப்பி கண்நெகிழ்ந்தாள்.

தட்சிணவனத்தில் இருந்து அவள் அன்னை படாலைதேவி வெண்தயிர் நுரைக் கூந்தலில் நீராட்டின் நீர்த்துளிகள் சொட்ட பழுத்த இலைபோல் செம்மஞ்சள் பூத்த முதுமுகத்தில் நிறைந்தெழுந்த சிரிப்புடன் இருள்விலகா சிறுபாதையில் ஓடிவந்தாள். “இன்று விடிந்தது ஈரேழுலகும். என் கண்ணே! உன் தெய்வத்துக்கு இன்று பெயர் அமைகிறது!” என்று கூவியபடி மலரும் கனியும் நிறைந்த கூடையை கொண்டுவந்து அவள் சிற்றில்திண்ணையில் வைத்தாள். “அவன் பெயர்சொல்லி எழும் முதற்குரல் என்னுடையதென்று நான் நேற்று கனவுகண்டேன். வான்நிறைந்த வள்ளல் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கரிச்சானைத் துயிலெழுப்பி காலையை அறிவிக்க வைத்தேன்” என்று மூச்சிரைத்தாள்.

வெண்பளிங்குக் கொண்டை காதோரம் சரிய மறுபக்கச் சாலையில் ஓடிவந்தாள் நந்தனின் அன்னை வரியாசி தேவி. “என் நிறைமூச்சில் ஒலித்தடங்கும் ஒருபெயரென்ன என்றறியும் பெருநாள் இது! கண்துயிலாது காத்திருந்தேன். கருமை கனிந்து இந்நாள் நிகழ்ந்ததை அறிந்திலேன்!” என்று கூவியபடி பொரிமலரும் தேனுருளையும் நறுநெய்யும் கனிச்சாறும் கொண்ட கூடையுடன் ஓடிவந்து திண்ணையிலமர்ந்தாள். “இன்று என ஒருநாள் இனி நிகழாதென்கிறது என் கைதொட்ட நூல்களெல்லாம். நன்று நிகழ்ந்தது என்று தெய்வங்கள் புள்வடிவாகக் கூவுவதைக் கேட்டு ஓடிவந்தேன்” என்றாள்.

மாந்தளிர் தோரணமும் மலர்க்குவைத் தொங்கல்களும் ஆடிய முற்றத்தில் ஆறுவண்ண மணற்கோலமிட்டு அணிசெய்திருந்தான் நந்தன். இரவெல்லாம் துயிலாது அவனும் அவன் தம்பியர் உபநந்தனும் அபிநந்தனும் சனந்தனும் நந்தனனும் கோகுலத்தின் அத்தனை பாதைகளிலும் யமுனைமணலை கொண்டுவந்து நிறைத்தனர். அத்தனை மரக்கிளைகளிலும் மலர்த்தோரணம் அமைத்தனர். அத்தனை ஆநிரைகளின் கொம்புகளையும் வண்ணக்கிளைகளாக்கினர். அத்தனை பசுக்களும் மணிமாலை சூடின. அத்தனை காளைகளும் சங்குமாலை அணிந்தன. நெற்றிச்சுட்டியும் நெட்டிமாலையும் கால்மணியும் கழுத்தணியும் அணிந்த கன்றுகள் துள்ளிக்குதித்து வால் சுழற்றிச் சுழன்றன.

பட்டுச்சால்வை போர்த்தி தலைகொள்ளா பாகையணிந்து குண்டலம் ஒளிவீச 'இன்றுநான் இவ்வுலகாள்வோன்!' என்று வந்தார் யசோதையின் தந்தை சுமுகர். 'இவ்வுலகில் நிகரற்றோன் இனியெவன்?' என்று நரைமீசை கோதி நரைகூந்தலில் மலர்சூடி கைக்கோல் கொண்டு பல்லக்கிலேறிவந்தார் நந்தனைப்பெற்ற பர்ஜன்யர். அவர் முன் மலர்க்கோலேந்தி “வழிவிடுங்கள்! வழிவிடுங்கள்! குலமூத்தார் குடிவாழ்த்தி வணங்குங்கள்!” என்று கூவி வந்தனர் ஆயர்கள் எழுவர்.

முதற்சங்கு ஒலித்ததும் கோல்தொட்ட முரசென்றாயிற்று கோகுலம். அன்னையர் எழுந்து மைந்தரை எழுப்பினர். பிள்ளைகள் எழுந்து யமுனைக்கு ஓடி நீர்ப்பெருக்கில் மீன்களெனத் துள்ளி விழுந்தனர். நறுங்கூந்தல் எண்ணையும் உடல்பூச மலர்ப்பொடியுமாக கோகுலத்து இளமங்கையர் நீலக்காலை விரிந்த பாதையில் நீராடச்சென்றனர். அவர்கள் சிரித்து பேசிச்சென்ற சொற்கள் சோலைகளில் எழுந்த கிள்ளைமொழிகளுடன் கலந்தன. யமுனையின் வெண்மணற்பரப்பில் பதிந்த பாதங்கள்மேல் உதிர்ந்தன பொற்புன்னைமலர்த்துகள்கள். 'இன்று! ஆம் இன்று!' என அலையடித்து அலையடித்து கரைதழுவிக் குமிழியிட்டோடியது காளிந்தி.

விண்சாமரங்கள் விரிந்தெழுந்தன. வெண்குளிர்மலர்கள் செம்மைகொண்டெரிந்தன. நீலத்தடாகங்கள் விழிமலர பச்சைவனத் தோகைவிரித்து எழுந்தது கோகுலம். ஆயிரம் மலரிதழ்களில் பல்லாயிரம் மணிச்சிறகுகளில் ஒளிவிட்டெழுந்தனர் ஆதித்யர்கள். கோடிச்சிறகுகள் கொண்ட பெரும்பறவை ஒன்று கிழக்கிலெழுந்து விரிந்து நின்றது. ஒளியின் இசையைக் கேட்டன தும்பிகள். ஒளியின் இனிமையை சுவைத்தன முட்டைக்குஞ்சுகள். ஒளியின் வாசத்தில் எழுந்தன கூட்டுப்புழுக்கள். ஒளியின் தண்மையில் சுருண்டன வளைநாகங்கள்.

விரஜபூமியின் ஆயர்குடிகள் தேன் சொட்டு நோக்கிச்செல்லும் எறும்புக்கூட்டங்கள் என மலர்க்கூடைகளும் மதுரக்கலங்களும் ஏந்தி அணிகளும் ஆடைகளும் மணிகளும் மாலைகளும் அணிந்து நந்தனின் இல்லத்தை நோக்கிச் சென்றனர். காற்றிலாடிச் சூழ்ந்த வண்ணங்களில் மூழ்கிச்சுழன்றது சிற்றில். பெண்களின் சிரிப்பொளியால் உள்ளறையின் இருள் விலகியது. அவர்களின் வளைகுலுங்கி சுண்ணச்சுவர் அதிர்ந்தது. “எங்கே எங்கள் குலமுத்து? எங்கே ஆயர் குடிவிளக்கு? எங்கே எம் கனவுகளை ஆளவந்த கள்வன்?”என்றெழுந்தன இளங்குரல்கள்.

மண்ணளந்து விண்ணளந்து மாவெளியளந்து தன்னளந்து தனித்தோன் கையளவு உடல்கொண்டு வந்தமைந்த சிறுதொட்டிலைச்சுற்றிச் சூழ்ந்து நின்று களிவெறியெழுந்து கூவினர் பெண்கள். செம்பஞ்சுக் கைகளின் பொன்னிற அலைகளில் ஆடியாடி உலைந்தது நீலமலர்மொட்டு. வானிலெழுந்தது. வளைந்து அமிழ்ந்து கொதிக்கும் செவ்வுதடுகளால் எற்றி அலைப்புண்டது. நீலவிழிக்கூட்டம் நடுவே ஒரு கருநீலப்பெருவிழியென ஒளி மின்னி நின்றது. களிவெறிகொண்டு சிவந்த வெண்விழிகள் ஒற்றி ஒற்றிச் சிவந்தன சிறு செம்மலர்ப்பாதங்கள். தொட்டகைகள் சிலிர்க்க தொடாத கைகள் தவிக்க கோடித்தவிப்புகளின் பாலாழி நடுவே பைந்நாகப்பாய் மேல் என பட்டுச்சுருள்மேல் கை விரித்து கண்மலர்ந்து கிடந்தது கனிநீலம்.

“பெண்களே, கைவிலக்குங்கள். கண்மைச் சிமிழென என் கைம்மகவை தொட்டுத்தொட்டுக் கரைத்துவிடாதீர்” என்று கைவீசி குரல்கொடுத்தாள் படாலைதேவி. கண்ணேறுகழிக்க கரிகுழைத்துவந்த மூதன்னை வரியாசி கை திகைத்து நிற்க கூவிச்சிரித்து “உன் கருமேக வண்ணனுக்கு சந்தனமும் குங்குமமும் கரைத்து கண்ணேற்றுக் குறியிடுக” என்றார்கள் ஆயர்குலப்பெண்கள். ”அவனுக்குப் பசிக்கும் நேரம் இது பெண்களே, சற்று விலகுங்கள்” என்றாள் யசோதை. ”வந்த நாள்முதல் அவன் அருந்தியது உன் முலையல்லவா? இங்கு ஆயர்குடியில் அவனுக்காக ஊறும் முலைகளில் அவன் அருவியாடலாமே” என்றாள் ஆயர்முதுமகள் அனசூயை.

திண்ணையில் அமர்ந்திருந்த நந்தன் “ஒருகணமும் ஓயாமல் சிரிப்பதற்கு என் சிறுமைந்தன் அங்கே என்னதான் செய்கிறான்?” என்றான். ஆயர்குலப்பாடகன் மந்தன் அவனருகே குனிந்து “அன்னை அமுதுண்டு அறிதுயிலில் இருக்கிறான் அனைத்தையும் ஆட்டுவிக்கும் சிறுக்கன். அவனைச் சூழ்ந்து நின்று கடல்மொண்டு நீராடிக் களிக்கின்றனர் பெண்கள்” என்று சொல்லி நகைத்தான். நகைமுகங்கள் சூழ்ந்து மகிழ்வென்று மட்டுமே பொருளாகும் சொற்களை கூவிக்கொண்டிருந்த கோகுலத்தின் மீது இளவெயிலில் சிறகடித்து துள்ளிச்சுழன்றனர் பெயரிலாத பிள்ளைகள் ஆயிரம்பேர். அவர்களை நோக்கி விழிமலர்ந்து கை விரித்து உதடுநீண்டு புன்னகைத்து எழ முயன்று தன் உடலுணர்ந்து அழுதது ஆயர்ச்சிறு மகவு.

மைந்தனின் அழுகை ஒலிகேட்டு “என்ன? ஏன் அழுகிறான் என் தலைவன்?” என்று பதறி உள்ளறைக்குள் சென்றான் நந்தன். முலை தவித்து முந்திவந்த அன்னையர் ஐவர் அவனை அள்ளி அணைத்து மார்போடு சேர்த்து “என்ன வேண்டும்? மன்னனுக்கில்லாத ஏதுண்டு இவ்வுலகில்? என் செல்வனுக்கு என்ன வேண்டும்?” என்றனர். முட்டி பிடித்த சிறுகைகளை விரைத்து கால்களை உதைத்து காற்றில் உடல் வளைத்து எம்பி எம்பி அழுதான் ஆயர்குலத்து மைந்தன். “என்னிடம் கொடுங்கள்” என்று ஓடிவந்து அவனை வாங்கி முலைசேர்த்தாள் யசோதை. முகம் திருப்பி தலையசைத்து கால்களை உதைத்து அழும் குழந்தையை சூழ்ந்து கொண்டது ஆய்ச்சியர்கூட்டம்.

“விலகுங்கள்... என் மைந்தன் மேல் காற்றும் ஒளியும் படட்டும்” என்று கூவினாள் படாலை. மயிற்பீலி விசிறி கொண்டு வந்து வீசினாள் வரியாசி. அழுகை வலுத்து வலுத்துச்சென்றபோது கோகுலமே தவித்துச் சூழ்ந்து நின்றது. சிற்றெறும்பு கடித்ததோ? சிறுக்கியரின் நகம்தான் பட்டதோ? சிறுவயிறு வலித்ததோ? சீறும் விழிக்கோள் கொண்டதோ என்று ஒவ்வொரு வாயும் ஒவ்வொன்றைச் சொல்லின. “அன்னை அணைத்தும் அடங்காத அழுகை உண்டோடி? அவனுக்கென்ன வேண்டும் என்று அவனே அறிவான். கண்ணீர் விட்டு காத்திருப்பதன்றி நான் செய்வதேது?” என்று தவித்துச் சொன்னாள் யசோதை.

சோலைக் கிளிக்கூட்டம் மணிவிளைந்த வயலில் இறங்கியது போல யமுனைக்கரை பாதையினூடாக வந்தது இளமங்கைக்குழாம் ஒன்று. “யார் அவர்கள், இத்தனை பேர்?” என்றாள் முதுஆய்ச்சி ஒருத்தி. “பர்சானபுரியின் இளமங்கையர். மைந்தனைப்பார்க்க அவர்களில் ஒருத்தி அன்று வந்திருந்தாள்” என்றாள் இளஆய்ச்சி. “மலர்க்கூட்டம் மிதந்துவரும் மலைப்புதுவெள்ளம் போலிருக்கிறார்கள்” என்றான் ஆயர்க்குடிப்பாவலன் மந்தன். “இல்லை விண்மீன் கூட்டம் விழுந்த நதிப்பெருக்கோ?” என்றான் அவன் இணைப்பாடகன் உபமந்தன்.

லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் இந்துலேகையும் சிரித்தபடி மூச்சிரைக்க முதலில் ஓடிவந்தனர். பின்னால் மண்டலியும் மணிகுண்டலையும் மாதலியும் சந்திரலலிதையும் மாதவியும் மதனாலசையும் மஞ்சுமேதையும் சசிகலையும் சுமாத்யையும் மதுரசேனையும் கமலையும் கமலலதிகையும் மாதுரியும் சந்திரிகையும் பிரேமமஞ்சரியும் மஞ்சுகேசியும் வண்ணப்பட்டாடைகள் காற்றில் சுழன்று பறக்க காற்றிலேறி வரும் வண்ணத்துப்பூச்சிக்கூட்டம் போல ஓடி வந்தனர்.

லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் மதோன்மதையும் சூழ கனவிலெழுந்தவள் போல வந்தவள் பெயர் ராதை என்றான் நந்தன். பர்சானபுரியின் ரிஷபானுவின் செல்வி. “காணுமெதையும் காணாத கண்கள். காணாதவற்றை எல்லாம் கண்டறியும் கண்கள். அவள் கண்களறிபவை கண்களுக்குரியவை அல்ல” என்றான் மந்தன். “யாழ்தேரும் விரலுடன் பிறந்தமையால் நான் வாழ்த்தப்பட்டேன். சொல்தேரும் நாவு கொண்டிருப்பதனால் நான் முழுமை பெற்றேன். கண்ணே, என் சொல்லே, கருத்தே, நான் கற்ற கவியே, இக்கணத்தை இப்புவியின் அழியாக் காலத்தில் நிறுத்து!” என்று கூவினான்.

மதுமாவதியும் வாசந்தியும் ரத்னாவலியும் மணிமதியும் கஸ்தூரியும் சிந்தூரியும் சந்திரநவதியும் மாதிரையும் பின்னால் வந்தனர். மலரொழுகும் நீர்ப்பெருக்கில் பின் தொடரும் வண்ணநிழல்கள். “அவள் கால்படா மண் தவிக்கிறது. அவள் கைபடாத மலர்க்கிளைகள் தவிக்கின்றன. அவள் விழிபடாத முகங்கள் ஏங்குகின்றன. விழியறியா வனவெளியில் பூத்த தனிமலரோ அவள் புன்னகை?” என்றான் மந்தன். “தானன்றி பிறரில்லா பாலைவெறும் விரிவில் நடக்கிறாள். ஒற்றைத் தனிப்பறவை கீழ்வானில் கூடணையச்செல்வதுபோலச் செல்கிறாள். பிரேமையெனும் ஒரு சொல்லை மானுட உருவம் கொள்ளச்செய்தான் மதனன். தன் தொழிலில் முழுமை கொண்டு எரிந்தணைந்து உருவழிந்தான்.”

“என்னவென்று தெரியவில்லை பெண்களே. இத்தனை நேரம் அறிந்தறிந்து விழிவளர்ந்தான். இப்போது ஓயாது கலுழ்கின்றான். அவன் தேடுவதெதை என்று தெரியாமல் தவிக்கின்றோம்” என்றாள் வரியாசி. லலிதை “இவள் கைதொட்டால் அவன் குளிர்வான் அன்னையே” என்றாள். திகைத்து நோக்கிய வரியாசியை நோக்கி “நேற்றுமுதல் இவள் தன் பெயர் தேவகி என்கிறாள். விழிநோக்கி பேசாமல் நிலம் நோக்கி அமர்ந்திருக்கிறாள்” என்றாள். “நேற்று அந்தி மயங்கியதை இன்று காலை விடிந்தது என்று சொல்லி மலர்சூடிக் கிளம்பினாள். நாங்கள் தோழியர் அவளை அணைத்துத் தடுத்து இப்போது கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம்” என்றாள் சுசித்ரை.

ஒரு சொல்லும் கேளாதவளாய் ஒரு முகமும் அறியாதவளாய் ராதை உள்ளே சென்று யசோதை அருகே அமர்ந்து கைநீட்டி மைந்தனை வாங்கிக்கொண்டாள். விக்கியணைந்த அழுகையுடன் மைந்தன் புரண்டு அவள் மேலாடையை தன் கைகளால் பற்றிக்கொண்டான். “அய்யோடி! இதென்ன நகைப்பு? இவளுக்காகத்தான் இவ்வழுகையா?” என்றாள் ஆய்ச்சியரில் ஒருத்தி.

“பிள்ளையைக் கொடு பெண்ணே” என்று படாலைதேவி அவனை வாங்க அவள் நெற்றிக்கூந்தல் முடியைப்பற்றிக்கொண்டு அவளிடம் வந்தான். அவள் சிரித்து தலைகுனிய “கூந்தலிழை பற்ற கற்றுக்கொடுக்கவேண்டியதில்லை கள்வனுக்கு” என்றாள் இன்னொரு ஆய்ச்சி. முகம்சிணுங்கி கால்நெளித்த மைந்தனை “அய்யய்யோ... இல்லை... இல்லை என் செல்லமே. நீ உன் அரசியிடமே இரு என் அரசே” என ராதையிடமே திருப்பியளித்து சிரித்தாள் மூதன்னை.

விழிகளாலேயே முத்தமிட்டு முத்தமிட்டு முத்தங்களே கணங்களாகி காலமாகி முடிவிலியாகி முன் சென்றொடுங்கிய முள்முனையில் அமர்ந்திருந்தாள் ராதை. அவளைச்சுற்றி பெயர்சூட்டு விழாமங்கலம் நிகழ்ந்துகொண்டிருந்தது. “ஆயர்குடிப்பிறந்த இவன் பெயர் நந்தகுமாரன்” என்றார் பர்ஜன்யர். “என்பெயரை இதோ அடைந்தேன்” என்று சொல்லி சிறகதிரச் சுழன்று சென்றான் பெயரிலியாக வந்த மைந்தர்களில் ஒருவன். “இல்லை, என் மைந்தனுக்கு நான் அபிஜித் என்று பெயரிடுவேன்” என்றாள் வரியாசி கைதூக்கி. “ஆம் அப்பெயர் எனக்கு! அப்பெயர் எனக்கு” என்று கூவி அதைச் சூடிச்சென்றான் காற்றுவெளியில் வந்த இன்னொரு மைந்தன்.

அனிஷனை, வனவிகாரியை, வங்கனை, வங்க விகாரியை, வனவாரியை, விரஜனை, தாமோதரனை, தர்சனை, துருபதனை, கனசியாமனை, கிரிதரனை, கோபாலனை, கோபேஸ்வரனை, கோவிந்தனை, ஹரியை, ஹரிஹரனை, ஜகமோகனனை, ஜஸ்பாலனை, கேசவனை, கிசோரகனை, மாதவனை, மதுசூதனனை, முரளிதரனை, முகுந்தனை, மனமோகனனை, மகேசனை, மனோகரனை, முரஹரியை, நந்தனனை, ரசவிஹாரியை, ரசேஸ்வரனை, சாகேதனை, ஸ்ரீகாந்தனை, சித்தாந்தனை, சியாமசுந்தரனை, வனமாலியை, வனஸ்ரீதரனை, வசுபதியை, வாசுதேவனை, விரஜலாலனை, விரஜமோகனனை, ஜயனை, யதுநாதனை, யதுநந்தனனை, யதுராஜனை, யதுவீரனை என ஆயிரம் பெயர்களை அள்ளி அள்ளிச் சூடிச்சென்றனர் விண்ணில் வந்த மைந்தர்.

மழைவிழும் மலைப்பாறை போல ஒளிர்ந்து பொழியும் பெயர்களால் மூழ்கடிக்கப்பட்டு பெயர்களுக்கு அப்பால் இருந்துகொண்டிருந்தான் கரியோன். “எத்தனை பெயர்களடி? இத்தனை பெயரிட்டழைத்தால் அவன் எவரை நோக்கி எதை ஏற்பான்?” என்றாள் மூதன்னை ஒருத்தி. “கன்னங்கரியோன் என்பதைக் காட்டிலும் இவனுக்குப் பெயர் உண்டோடி? இவனை கிருஷ்ணன் என்கிறேன்” என்று சொல்லி யசோதை அவனை அள்ளி தன் நெஞ்சோடணைத்துக்கொண்டாள். இருகைகளையும் கால்களையும் அசைத்து அள்ளத்துடிப்பவன் போல எம்பிய மைந்தனின் நீலமலர்முகத்தின் சிறுசெவ்விதழ்கள் நீண்டு எழுந்தது சிரிப்பு. “சிரிக்கிறான்! தெய்வங்களே, மூதாதையரே, அவன் பெயரென்ன என்று அவனே சொல்லிவிட்டான்” என்று யசோதை கூவினாள்.

“மைந்தர்கள் எவருக்கும் பெயரில்லை மாதரசியே. அவை அன்னையரும் தந்தையரும் தங்கள் பேரன்புக்குச் சூட்டிக்கொள்ளும் பெயர்கள் மட்டுமே” என்றான் யாழ் மீட்டிய மந்தன். மைந்தனை தந்தை வழி மூதாதை பர்ஜன்யரின் மடியில் அமர்த்தி தாய்வழி மூதாதை சுமுகர் தளிர்வெற்றிலை மூன்றை ஒன்றுமேல் ஒன்றடுக்கி அவன் இளங்காதில் அமைத்து உவகையில் நெளிந்த வாய்குவித்து “கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று அழைத்தார். விரிந்த மணிவிழிகள் அவ்வொலி கேட்டு சரிந்து குவிய ஆயர்குடிகளனைவரும் கைகள் கொட்டி “கரியோய்! கருமணியே! கருவெளியின் உந்திப்பெருஞ்சுழியே!” என்று கூவி ஆர்த்தனர்.

மூதன்னையர் வரியாசியும் படாலையும் மைந்தனை அள்ளி முகம்சேர்த்து “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று சொல்லி மூச்சிழுத்து மைந்தனின் மெல்லுடலில் தவழ்ந்த கருவறை வாசத்தை கனவுகளில் நிறைத்துக்கொண்டனர். நடுங்கும் கைகளில் மைந்தனை வாங்கிய பர்ஜன்யர் அழிவின்மை என்பதோர் அலைவந்து தன்னை அறைவதை உணர்ந்து உடல்நடுங்கினார். “எனக்கு... என் கைகளுக்கு” என்று ஒவ்வொருவரும் முட்டி கைநீட்டி வாங்கி முகம் சேர்த்து வானளந்தனர்.

பித்தெழுந்த பெருமௌனத்துடன் அமர்ந்திருந்த ராதையின் மடியில் லலிதை மைந்தனை வைத்தாள். “உன் மைந்தனடி தேவகி” என்றாள். குனிந்து தன் மடியில் விரிந்து கிடந்த மணியொளியை நோக்கினாள் ராதை. கண்நீலப்புள்ளிகள் மட்டுமே ஒன்றாகி ஒரு கண்ணாகிக் கிடந்தது என்றுணர்ந்து அள்ளி தன் முகம் சேர்த்து ஆவி உருகிக் குளிர்ந்து சொட்டும் அகக்குரலில் “கண்ணா!” என்றழைத்தாள். “ஆம் அதுவே நான்” என்று அசைவிழந்து அவள் கூந்தலிழை பற்றியது அது.

பகுதி மூன்று: 2. பெயராதல்

ஆயர் சிறுமகளே, உனக்கிருக்கும் ஆயிரம் பணிகளை உதறிவிட்டு அதிகாலையிலேயே எழுந்து எங்கு ஓடிச்சென்றுவிட்டாய்? கைதுழாவி, கூந்தல் அலைதுழாவி நீ குளிராடும் யமுனைப்படித்துறையின் புன்னைமலர்ப்படலம் இன்னும் கலையவில்லை. உன் வெண்பஞ்சுப் பாதம் மெத்திட்டு மெத்திட்டு ஓடிவரும் பனிசுமந்த புல்பரப்பும் உன் ஈரப்பாவாடை உடல் ஒட்டி இழுபட்டு மந்தணம் பேசிச்செல்லும் இருள் படிந்த சிறு வழியும் காத்திருக்கின்றன. அதோ உன் தொழுவங்களில் அன்னை மடிக்கீழே கன்றுகள் உனக்காக வால் தூக்கி நாசிகூர்கின்றன.

அரசி, உன் கரம்தொட்டு வருடி கறந்தெடுக்கும் புதுப்பால்நுரை எழும் பொன்னொளிர் சிறுகலம் வெறுமையள்ளி வீற்றிருக்கிறது. அதை நிறைக்கும் அமுதம் விண் நிறைந்த பாற்கடலில் அலைததும்பி எழுந்து அன்னைப் பசுவின் அகிடுகளில் துளிவிட்டு ததும்பி நின்றிருக்கிறது. எங்கே சென்றிருக்கிறாய்? இளங்காலை இருள் விலகும் முன்னரே கன்னியர் இல்லம் விட்டுச்செல்வது முறையா? நில் நில், உன்னுடன் துணைவருகிறேன். என்னை சேர்த்துக்கொள், உன் இடையாடையில் ஆடுகிறேன். உன் மலர்க்குழலை உலைக்கிறேன். உன் மங்கல மணத்தை நீ செல்லும் வழியெல்லாம் நிறைக்கிறேன்!

விடிவதற்குள்ளேயே ராதை கோகுலத்தை அடைந்துவிடுவாள். அவள் வந்தபின்னரே கருக்கல் துயில்மயக்கம் விலகி யசோதையும் கண்விழிப்பாள். மொட்டலர்ந்த வல்லியை, முழுக்குருடர் தொட்டறியும் எல்லியை, தொட்டில் விட்டெடுத்து தன் மொட்டுமுலைகள் மேல் அள்ளி அணைத்து ராதை முதல்முத்தம் ஈந்த பின்னரே அன்னைதரும் முத்தம் அவனைத் தீண்டும். "உன் குடியில் உனக்கு வேலையென ஒன்றில்லையோடி? உன் தாய்தந்தை உன்னை தேடுவதில்லையோ?” என்பாள் யசோதை. “ஆயர்குலமகள் வாழும் குடி ஒன்றை தாங்குபவள் அல்லவா? உன் வாசலில் கோலமிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறாயா?”

கருமை ஒளிரும் மைந்தனை கைநிறைய அள்ளியிருக்கையில் எவ்வினாவும் ராதையை தொடுவதில்லை. நீலமெழுந்த மெல்லுடலின் இசையைக் கேட்பாள். செவ்விதழ் குமிண்சிரிப்பை உண்பாள். பால்மணக்கும் மூச்சின் வண்ணங்களில் கண்ணளைவாள். செல்லக்கழலின் சிற்றொலியை தோள் விரித்து அணைப்பாள். சிறுகால்களின் உதைகளை முகர்வாள். அங்கெலாம் அவனிருப்பான், அவளோ அங்கிருப்பதேயில்லை. அன்னை விழி நோக்காத சிறுமகவுதான் அவளும் என்றெண்ணிக்கொள்வாள் யசோதை. கனவில் மலர் எழுந்ததுபோலத்தான் அவளும் புன்னகைத்துக் கொள்கிறாள்.

பாலருந்தும் வெண்சங்கை உதைத்துக் கவிழ்க்கிறான். வீசிய சிறுகைபட்டும் உருண்டோடுகிறது விளையாட்டுச் சிறுசக்கரம். தன் வயிற்றை தான் தொட்டு புடவியை அறிகிறான். தன் கைகளை ஆட்டி ஆட்டி காலத்தை சூழவைக்கிறான். மார்பமைந்த தேவி வந்து மலர் காட்ட இதழ் விரித்து கண்ணொளிர்ந்து சிரிக்கிறான். ஒற்றைக்கால்தூக்கி மூவுலகை அளக்கிறான். மற்றைக்கால் அசைத்து விண்ணிலெழ முயல்கிறான். அரைக்கணமும் பசி தாளாது சிவந்து துடித்தழுகிறான். "கச்சவிழ்க்கும் கணம்கூட அளிக்க மாட்டாயா? ஊழிப்பெரும்பசியா உனக்கு? உலகேழும் உண்டுதான் அமைவாயா?” யசோதை ஒருமுலையை அவன் வாயிலூட்டி ஊற்று சீறும் மறுமுலைக்கண்ணை கைகளால் பற்றிக்கொள்கிறாள். கட்டை விரல் நெளித்து கண்சொக்கி கடைவாய் வழிய அவன் அருந்தும் அமுத வெளியாகிறாள்.

பாதிவயிறானதும் தலைதிருப்பி கையசைத்து வாய் நிறைத்து வெண்கடல் வழிய சிரித்து பொருளாகா பெருஞ்சொல் ஒன்றைச் சொல்கிறான். அவன் நீலமுகம் மீது ஊற்றெழுந்து வழிகிறது அவள் நெஞ்சுருகும் இளநீல கொழுங்குருதி. அடுக்கு மலர்போல மடிந்த மென்தொடையில் மெல்ல அடித்து “என்ன விளையாட்டு? குடிக்கிறாயா, இல்லை காற்றுக்கே கொடுத்துவிடவா?” என்று அதட்டுகிறாள் அன்னை. தலைதிருப்பி ராதையை நோக்கிச் சிரித்து கைநீட்டி கால்களால் மடியை உதைத்து எம்புகிறான். அவனை அள்ளி எடுத்து அன்னையின் பாலுடன் அமுதும் வழியும் குளிர்ந்த வாயை கன்னம் சேர்த்துக்கொள்கிறாள். காலுதைத்து எம்பி எம்பிக்குதித்து “இங்கு இங்கு” என்கிறான்.

உதடுகுவித்து “முத்தம். முத்தம் கொடு... முத்தம்கொடு என் முத்தே” என்று அவள் கேட்க கண் மின்னச் சிரித்து கைகளை விரித்து ஆட்டி “அம்மு அம்மு” என்று துள்ளுகிறான். கழுத்தின் மென்சதை மடிப்புகளுக்குள் தோளின் இடுக்குகளுக்குள் ஊறிவழிந்திருக்கிறது ஆயர்குலத்து அன்னையரின் ஆயிரம் தலைமுறை குருதிப்பால் சரடு. “பால்குடித்தாயா? பாற்கடலில் நீந்தினாயா? பழிகாரா? எத்தனைபேருடன் ஒரே கணத்தில் விளையாடுவாய்?” என்று ராதை அவன் வாய்மலர்வை தன் விரல்நுனியால் துடைத்தாள். இடைவளைத்து புரண்டு அன்னையை நோக்கி கைநீட்டி அவளும் வேண்டும் என்றான். “ஒற்றைக் கணத்தில் ஒருத்திதான் உன்னை அள்ளமுடியும் என் சிறு மூடா” என்று சிரித்தாள் யசோதை.

உலர்சாணி அடைகளை அடுக்கிய உறையடுப்பில் வெண்கலப் பானையை ஏற்றி வேப்பந்தளிரும் மகிழம்பூவும் இட்டு காய்ச்சிய வெந்நீரை மலர்மணக்கும் ஆவியெழ அள்ளி வாயகன்ற பாத்திரத்தில் வளாவி வைத்தாள் ராதை. கஸ்தூரிமஞ்சள் கலந்து இடித்த செம்பயறுப்பொடியை சிறு சம்புடத்தில் எடுத்து அருகே வைத்து கால்நீட்டி அமர்ந்துகொண்டாள் யசோதை. சந்தன எண்ணையிட்டு நீவி மெழுகிய சிறுமேனியை கைவழுக்க விரல் நழுவ அள்ளி மடியிலிட்டு தலைவருடி தோள் வழித்து கால்களில் படுக்கவைத்தாள். முழங்காலில் குப்புறப்படுத்து காலுதைத்து கைநீட்டி நீந்தி மேலெழமுயல்பவனின் செல்லச்சிறு புட்டங்களில் கைகளால் மெல்லத்தட்டி “எங்கே செல்கிறாய்? ஒரு கணமும் அசைவறாமலிருக்க நீயென்ன மாமதுரை கோட்டைமேலெழுந்த வெற்றிக்கொடியா? யாதவர்களின் வேள்விக்குண்டத்திலெழுந்த தென்னெருப்பா? அடங்கு. இல்லையேல் அடிவாங்கி அழுவாய்” என்றாள் யசோதை.

இளவெந்நீரை அள்ளி விடுகையில் நீலத்தாமரையிதழில் நீர்மணிகள் உருண்டோடும். செம்மஞ்சள் பொடி தேய்க்கையில் நீலத்தில் பொன்வழியும். தலைமேல் நீர் விழுகையில் வாய்திறந்து மூச்சடக்கி எம்பி கைநீட்டுகிறான். நீரோடும் சிறுமேனி கைநழுவி விடுமோ என்று யசோதை அள்ளிப்பற்ற சிறுபுயத்தின் மென் தசைகள் அழுந்தக் கண்டு கால்களைப் பற்றிக்கொள்கிறாள் ராதை. “கண்களுக்குள் பொடி விழுவதற்காகவே முகம் திருப்புகிறான் சதிகாரன். கண்ணீரில்லாமல் இவன் குளித்துமுடிப்பதேயில்லையடி” என்றாள் யசோதை. கதறி கைகால் உதைத்து வெண்கலக்கிண்ணியை மணியோசை கொள்ளச்செய்கிறான். நீர்செம்பை உதைத்து ஓடவைக்கிறான். தீத்தழல் போல கைகளில் பற்றி எழுந்து படர்கொழுந்தாடி நெளிகிறான். மென்துகிலால் மெல்லப் பொத்தி எடுத்தணைத்து தலைதுவட்டுகையில் அக்கணமே பசி எழுந்து அன்னைமுலையைப் பற்றிக்கொள்கிறான்.

பாலருந்தி கைநெளித்து மெல்லக் கண்வளர்கிறான். அருகே முழந்தாளிட்டு அமர்ந்து ராதை மண்மகள் நினைத்தேங்கும் அவன் மலர்செம்பாதங்களை துடைக்கிறாள். மென்தசை மலர்மடிப்புகளை ஒவ்வொன்றாக நீவி விரித்து ஒற்றி எடுக்கிறாள். தாழைமலர்ப்பொடிசேர்த்து இடித்தெடுத்த நறுஞ்சுண்ணத்தூளை மெல்ல தளிர் மேலிட்டு பூசுகிறாள். அவள் சிவந்த மெல்விரல்கள் தீண்டுகையில் முலைக்கண் விட்டு வாயெடுத்து இதழோரம் கோடுவிழ இமையிதழ் மயிர்கள் ஒட்டிப்படிந்திருக்க கண்மூடிச் சிரிக்கிறான். கண்ணீர் மல்கி குனிந்து அவன் பூம்பாதம் கையிலெடுத்து இதழ்சேர்ப்பவள் அக்கணம் முழுமைகொண்டு மறுகணத்தில் மீண்டும் பிறந்தாள்.

“துயிலும்போதன்றி அவனுக்கு திலகமிட எவராலும் இயலாது” என்றாள் யசோதை. “நீலச்சிறுமுகத்துக்கு பொன்னிறத்தில் பொட்டிடுவேன். என் ஆயர்குடிகளில் பொன்னிறத்தில் கண்ணேறு களைபவன் இவன் ஒருவனே" என்றாள். அரைத்துயிலில் மெல்ல விரிந்த கைமுடிச்சுக்குள் இருந்தது அன்னையின் கூந்தலிழை ஒன்று என்று கண்டு ராதை மெல்ல அதை விலக்கி புன்னகைத்தாள். "கூந்தலிழை பற்றுவதை அவ்வுலகிலேயே கற்றுவந்திருக்கிறான் கள்வன்” என்று அன்னை சொல்ல கண்பொங்கி அவளும் சிரித்தாள். துயில்கொள்ளும் மைந்தனருகே மயிற்பீலி விசிறியுடன் கண்மலர்ந்து கருத்தழிந்து அமர்ந்திருந்தாள்.

ராதையின் இடையமர்ந்து அவள் கைசுட்ட கண்ணோட்டி கண்டவையே அவன் அறிந்தவை அனைத்தும். சிறகுகள் பறக்கும் இதழ்கள் என்றும் மலரிதழ்கள் பறக்கத்துடிக்கும் வண்ணச்சிறகுகள் என்றும் அவன் அறிந்தான். மரங்களில் விரிந்த பல்லாயிரம் செவிகளை, மான்களில் சிலிர்த்தசையும் இரு இலைகளை, தும்பியின் துதிக்கைச்சுருளை, யானையின் சிறகுகளை, ஆலமரத்தின் வால்குஞ்சங்களை, ஆநிரைகளின் விழுதுகளை, வீடு பறக்கும் வானை, மேகம் உறைந்த மலைத்தொடர்களை, யமுனையின் அனல் நெளிவை, சுடர்விளக்கின் குளிரூற்றை அவள் விழிகள் வழியாகவே கண்டடைந்தான்.

தென்றலை அறிந்து அவள் இடையமர்ந்து துள்ளினான். கைநீட்டி வெயிலை அள்ளித் தரச்சொல்லி அடம்பிடித்தான். இடியோசை கேட்டு சிலிர்த்து அவள் தோள்தழுவி இறுக்கி கழுத்துவளைவில் முகம்புதைத்தான். நிலவை நோக்கி "தா தா'' என்று கை நீட்டி விரலசைத்தான். இருண்டவானில் எழுந்த விண்மீன்களை நோக்கி விழிமலைத்து அமர்ந்திருந்தான். கண்சொக்கி கருத்தழிந்து கட்டைவிரலை வாய்க்குள் செலுத்தி தலைதொங்கி துயின்றான். அவள் தோளில் குளிர்ந்து வழிந்தது அவன் கண்ட கனவு. அவனை மார்போடணைத்து “என்ன கனவு என் கண்ணனுக்கு?” என்று அவள் கேட்டாள். நாக்கு சுழற்றி தன் இனிமையை தான் சுவைத்து “உம்” என்று அவன் பதில் சொன்னான்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு சொல்லிருப்பதன் விந்தையில் துள்ளித்ததும்பி கை வீசிச் சிரித்தான். “மா!” என்று வானைச்சுட்டிக்காட்டினான். அச்சொல்லாலேயே பசியையும் மகிழ்ச்சியையும் துயிலையும் விழிப்பையும் வீட்டையும் சுட்டினான். ஆற்றலைச் சொல்லும் ஒலியே “பா” என்று கண்டுகொண்டான். கனத்த புயங்களில் இறுகிய மரத்தடிகளில் பாறைப்பரப்புகளில் அச்சொல்லை அடைந்துகொண்டே இருந்தான். இருத்தலே தானென்றறிந்து தன் வயிற்றை தான் தொட்டு கண்ணொளிர நகை மலர்ந்து “ண்ணன்” என்றான். இங்கே, இது, இப்போது, இனி என அனைத்துக்கும் அதையே சொல்லாக்கினான்.

சொல்பெருகி உலகாகும் விந்தையை அவள் குரல் வழியாக கண்டைந்தான். ஒவ்வொன்றையும் சுட்டும் அவள் விரலையும் குவிந்து நீண்டு விரிந்து ஒலிக்கும் அவள் உதடுகளையும் புன்னகையும் பாவனை அச்சமும் எழுந்துவரும் அவள் கண்களையும் மாறிமாறிக் கண்டு அவன் சிந்தைமொழியை அடைந்தான். ஒன்று முளைத்து ஓராயிரமாகும் முடிவிலா மாயமே சொல்மொழி என்றுணர்ந்தான். காகம் என்று கருமேகத்தை கண்டடைந்தான். கிளி என்று இலைகள் அனைத்தையும் சொன்னான். குருவி என்று தன் கைவிரல் குவித்துக் காட்டினான். பூ என்று அவள் செவ்விதழ்கள்மேல் கைவைத்துச் சிரித்தான்.

கோப்பைகளையும் கிண்ணங்களையும் கரண்டிகளையும் வீட்டுக்குள் பரப்பிவைத்த அதே அன்னை பேருருக்கொண்டு விளையாடி எழுந்துசென்றதே வெளி என்றறிந்தான். “அங்கு!” என்று கைசுட்டி அதைச் சொல்லி எழுந்து செல்லத் துடித்தான். மலைகளையும் நதிகளையும் காடுகளையும் வைத்தவளின் முந்தானை நெளிவை வெயிலென்று கண்டு இரு கைகளையும் விரித்து அதில் பறந்தாட விழைந்தான். “போ, போ” என்று இடையமர்ந்து துள்ளித்துள்ளி ராதையிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். “அங்கே! அங்கே” என்று கைநீட்டிக்கொண்டே இருந்தான். சிரித்துக்கொண்டே “அங்கேயா? அங்கேயா?” என்று கேட்டு அவள் அவனை எடுத்துக்கொண்டு ஓடினாள்.

பச்சைவெளிமேல் இளமஞ்சள் ஒளிவிரிந்த அந்தியில் யமுனைக்கரை மேட்டின் எல்லைவரை சென்று நின்றாள். கைவிரித்து காலுதைத்துத் தாவிஎழும் மைந்தனுக்கு புரவியாக கால் விரைந்தாள். அந்நீலக்கொடி பறக்கும் மரமாக அங்கே நின்றிருந்தாள். பின் நீலத் தழல் பற்றி நின்றெரியும் விறகாக தன்னை உணர்ந்தாள். நீட்டிய கைகளுக்கு அப்பால் குடைசாய்த்தது போல் நின்றிருந்த நெடுவானைக் கண்டு அசைவழிந்து விழி ஒளிர்ந்து அமர்ந்திருந்தவன் மெல்ல நெடுமூச்செறிந்து அவள் கழுத்தில் கையிட்டு தோளில் முகம் சேர்த்து “ராதை!” என்றான். மழைபட்ட நீர்ப்பரப்பாக உடல் சிலிர்த்து “உம்?”என்று அவள் கேட்டாள். “ராதை!” என்று சொல்லி கண்மூடி முகம்புதைத்தான்.

அந்தியிருளில் அமிழாதொளிர்ந்த நீலத்தை ஒரு கணம் நோக்கி 'யாரிவன்?' என்று திகைத்தாள். செவி அறிந்ததா சிந்தை மயங்கியதா என்று தவித்தாள். 'யார்? யார்?' என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். செவியிலாது விழியிலாது சொல்லிலாது கருவறை அமர்ந்த கருஞ்சிலை போல் அவள் இடையமர்ந்திருந்தான். நெஞ்சுபொங்கி எழுந்த பேரலையால் துடித்தெழுந்த கைகளுடன் அவனை மார்போடணைத்து “ஆம், நான் ராதை! ராதை நான்” என்று அவள் விம்மினாள். கண்ணீர் பெருக முத்தமிட்டு “ராதை! ராதை! ராதை!” என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இனித்து இனித்து இருளை நிறைத்த ஒற்றைச் சொல்லுடன் தன் ஆயர்குடி மீண்டாள். ஒவ்வொரு காலடியிலும் அச்சொல்லாகி நெகிழ்ந்தது மண். ஒவ்வொரு மூச்சிலும் அச்சொல்லாகி நெளிந்தது காற்று. ஒவ்வொரு அசைவிலும் அச்சொல்லாகி விண்மீன் சூடி அதிர்ந்தது வானம். அச்சொல்லில் ஏறி அச்சொல்லின் அலைகளில் மிதந்து அவள் தன் இல்லம் அணைந்தாள். “எங்கு சென்றாயடி?” என்று கேட்ட தன் அன்னையை பாய்ந்து அணைத்து “ஏன் இப்பெயரை எனக்கிட்டாய்? என்ன பொருள் இதற்கு?” என்றாள்.

புன்னகையுடன் அவள் கூந்தல்தழுவிய அன்னை “ராதை என்றால் ராதிப்பவள். ஆராதிப்பதற்குரியவள் அல்லவா நீ?” என்றாள். “ஆம் ஆம் ஆம்” என்று சொல்லிச் சிரித்து அன்னையை முத்தமிட்டு மீண்டும் தழுவிக்கொண்டாள் ராதை.

பகுதி நான்கு: 1. செழுங்குருதி

கானகத்தில் கன்று மேய்க்கும் கன்னியரே கேளுங்கள். கன்னங்கருநீர் காளிந்தி கிளைவிரித்து ஓடும் சிறுவழியெல்லாம் சென்று ஆயர்குடி தோறும் அணுகி, நறுநெய் வாங்கி நிறைகுடம் தளும்ப மதுராபுரி அணையும் ஆக்னேயன் நான். யமுனையிலோடும் படகிலே என் தாய் என்னை ஈந்தாள். நீரலையில் தாலாடி நான் வளர்ந்தேன். மத்தொலியில் திரண்டெழும் வெண்ணை அறியும் கதையெல்லாம் நானும் அறிவேன்.

நெய்பட்டு நெகிழ்ந்துலர்ந்து அகல்திரியென கருமைகொண்டிருக்கிறது என் சிறுபடகு. நெய்யுடன் நதிமீன் சேர்த்துண்டு திரண்டுள்ளன என் கரிய தோள்கள். காளிந்தியை கரிய உடை கலைத்து இடைதொட்டு நகைக்க வைக்கின்றன என் துடுப்புகள். அன்னைக்கு உகந்தவை அவள் சிறுமகவின் கைகள் அல்லவா?

பர்சானபுரிவிட்டு கோகுலம் செல்கிறீர்கள்! நங்கையரே, உங்கள் ஆடைகளில் மணக்கிறது கூடு விட்டு மலர்நாடி பறந்தெழும் மதுகரத்தின் மகரந்த வாசம். உங்கள் மொழிகளில் எழுகிறது சிறகு கொண்ட யாழின் சிறுதந்தி நாதம். வாழிய நீவிர்! உங்கள் கண்களின் ஒளியால் என் காலையை எழில் மிக்கதாக்கிக்கொண்டேன்.

அங்கே நடுப்பகலிலும் இருண்டிருக்கிறது நதியாளும் நகர் மதுரை. அந்த இருள்கண்ட என் விழிகளிலும் எத்தனை துடைத்தாலும் கண்மைச்சிமிழில் கரி போல இருள் எஞ்சியிருக்கிறது. அதன் தெருக்களில் நடக்கையில் துணி கசங்கும் மென்குரலில் நம் நிழல் நம்முடன் உரையாடுவதைக் கேட்கமுடிகிறது. நாம் தனித்திருக்கையில் பஞ்சு உதிர்ந்து பதிந்தது போல நம்மருகே வந்தமரும் இருப்பொன்றை உணரமுடிகிறது. ஆயர்மகளிரே, அங்கே எவ்வுயிரும் தன்னுடனும் தெய்வத்துடனும் தனித்திருக்க இயலவில்லை.

அன்றொருநாள் பின்னிரவில் என் நெய்த்தோணியை துறையொதுக்கி சிறுபணம் சேர்த்த முடிச்சை இடைபொருத்தி நகருள் நுழைந்தேன். சத்திரத்தை நெருங்கும்போது வானில் எழுந்த வௌவால் சிறகோசையைக் கேட்டேன். நிமிர்ந்து நோக்கி நடந்தவன் இருண்டவானை அறிந்த விழிவெளிச்சத்தில் அவர்களைக் கண்டேன். கரும்பட்டுச் சிறகு எழுந்த சிறுகுழந்தைகள். அவர்கள் கண்கள் மின்ன நகரை நோக்கி மழலைச் சிறுகுரல் பேசி பறந்து சுழன்றுகொண்டிருந்தனர். சிறகுகள் கலைத்த காற்றில் வழிவிளக்குச் சுடர்கள் அசையவில்லை. கிளையிலைகள் இமைக்கவில்லை.

நகரின் இல்லங்கள் துயில் மறந்து பித்தெழுந்து அமர்ந்திருந்தன. அவற்றை அள்ளி வானில் கொண்டுசெல்ல விழைவதுபோல காற்றில்லா இருள்வானில் படபடத்துக்கொண்டிருந்தன கொடிகள். உள்ளே வெம்மை ஊறிய மஞ்சங்களில் அன்னையர் அசைந்தமைந்து நெடுமூச்செறிந்தனர். அவர்களின் சீழ்செறிந்த முலைப்புண்கள் விம்மித்தெறித்து வலி கொண்டன. எண்ணி ஏங்கி கண்ணீர் உகுத்து அவர்கள் சொன்ன சிறுசொற்கள் தெருவில் வந்து விழுந்தன. கழற்றி புழுதியில் வீசப்பட்ட மணிநகைகள் போல. பிடுங்கி எறியப்பட்ட ஒளிரும் விழிகள் போல. உயிரதிர்ந்து துள்ளும் துண்டுத் தசைகள் போல.

சோர்ந்து தனித்த கால்களுடன் நெடுமூச்செறிந்து நடந்து சத்திரத்துத் திண்ணையில் சென்று படுத்துக்கொண்டேன். எங்கோ மெல்லத்துயில் கலைந்த முதுமகன் ஒருவன் ’எங்கு செல்வேன்? ஏது சொல்வேன்!’ என ஏங்கி திரும்பிப்படுத்தான். பித்தெழுந்த அன்னை போல மதுராபுரி என்னை அறியாது எதையும் நோக்காது தன்னில் உழன்று தானமர்ந்திருந்தது. இரவெங்கும் தெருவில் அலையும் வணிகர் கூட்டங்கள் மறைந்துவிட்டிருந்தன. துறைதோறும் செறியும் தோணிகள் குறைந்துவிட்டிருந்தன. ஆடல் முடிந்து அரங்கில் வைத்த முழவுபோலிருந்தது இரவின் மதுரை. நோயுற்றோன் அழுதோய்ந்து எழுவது போலிருந்தது அதன் காலை.

செங்காந்தள் முளையெழுந்த காடுபோலாயிற்று அந்நகரம் என்றனர் கவிஞர். காலை கண்விழித்து நோக்கிய கைவிரிவில் விரிந்தது குருதிரேகை. அங்கே கால்வைத்துச் சென்ற சேற்று வழியெல்லாம் சொட்டிக்கிடந்தது செழுங்குருதி. வடித்து நிமிர்த்த பானைச்சோற்றுக்குள் ஊறியிருந்தது குருதிச்செம்மை. அள்ளி வாய்க்கெடுத்த கைச்சோற்றில் இருந்தது குருதியுப்பு. குடிக்க எடுத்த நீரில் கிளைத்துப் படர்ந்தாடியது குருதிச்சரடு. புதுப்பனி பட்ட புழுதியில் எழுந்தது குருதிமணம். கனத்த இரவுகளில் வெம்மழையாய் சொட்டிச் சூழ்ந்தது செங்குருதி. ஓடைகளை நிறைத்து நகர்மூடி வழிந்தது செம்புனல்வெள்ளம்.

யதுகுலத்து கொடிமலர்களே, அன்று நானறிந்தேன். மானுடரைக் கட்டிவைத்திருக்கும் மாயச்சரடுகள்தான் எவை என்று. தங்கள் குழந்தைகளின் குருதி கண்டு அஞ்சி இல்லங்களுக்குள் ஒண்டி உயிர்பேணியவர்கள் பின்னர் அனலிலும் புனலிலும் தெருவிலும் வீட்டிலும் குருதியையே கண்டு நிலையழிந்தனர். உண்ணாமல் உறங்காமல் குமட்டி துப்பி கண்ணீர் வடித்து ஏங்கினர். சாவே வருக என்று கூவி நெஞ்சுலைந்தனர். அவர்கள் முற்றங்களில் கிடந்து துள்ளின வெட்டி வீசப்பட்ட இளங்குழந்தைகளின் உடல்கள். மண்ணை அள்ளிக் கிடந்தன மலர்க்கரங்கள். ஒளியிழந்த மணிகள் போல விழித்துக்கிடந்தன சின்னஞ்சிறு விழிகள். சொல்லி முடியாத சிறுசொற்கள் எம்பி எம்பித்தவித்தன.

நாளென்று மடிந்து பொழுதென்று குவிந்து வாழென்று சொல்லி வந்துநின்றது காலம். அதன் சகடத்தில் ஒட்டி சாலைகளைக் கடந்து செல்வதே வாழ்வென்று கற்றனர் மானுடர். அறமோ நெறியோ குலமோ குடியோ அல்ல, மானுடர்க்கு ஊனும் உணர்வும் இடும் ஆணை இருத்தலொன்றே என்று உணர்ந்தனர். நாள் செல்லச் செல்ல செங்குருதிச் சுவையில் இனிமை கண்டனர். பாலில் நெய்யே அன்னத்தில் குருதி என்று அறிந்தனர். குருதியுண்டு வாழ்ந்த குலதெய்வங்கள் அவர்களின் இருளாழத்தில் இருந்து விழிமின்னி எழுந்து வந்தன. நாச்சுழற்றி நீர்வடிய கொழுப்பேறும் ஊனெங்கே குமிழிக்குருதியெங்கே என்று உறுமின. ஆறாப் பெருநோயிலும் அகத்தெங்கோ இன்புறுவான் மானுடன். பாவத்தில் பெருங்களிப்புறுவான். இருளிலேயே விடுதலையை முழுதறிவான்.

பசி மீறி தன்னுடலையே தான் தின்னும் விலங்கொன்றில்லை. உயிருக்கு அஞ்சி உற்ற மகவை கைவிட்டு ஓடுகையில் உதறி உதறி தன்னையே விட்டோடிவிடுகிறது மானுடக் கீழ்விலங்கு. அன்னைப்பெருஞ்செல்வங்களே, தங்கள் குழந்தைகளின் குருதி கண்டும் அச்சத்தால் அடிபணிந்த கீழ்மக்கள் பின் அடைவதற்கேதுமில்லை. ஆழம் வறண்ட அடிக்கிணற்றின் சேற்றைக் கண்டபின் அறிவதற்கு ஏதுள்ளது? பாவத்தின் பெருங்களியாடலைக் கண்டமானுடர் தெய்வங்களிடம் கோரும் கொடையென்று எதைச் சொல்ல?

மதுரைப்பெருநகரில் மானுடம் கட்டவிழ்ந்து மதம் கொண்டாடுகிறது. அங்கே ஒருவேளை உணவுக்காக உடன்பிறந்தான் கழுத்தை அறுக்கலாம். பெற்றதாயை பெண்ணாக்கலாம். பிறந்த மகவை கொன்றுண்ணலாம். அறச் சொல்லை அடியணியாக்கலாம். பேணும் தெய்வத்தை பேயாக்கலாம். அறிக, தன் மகவை கொன்று தின்னும் விலங்குக்கு காடே அடிமையாகும். அதன் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. குழந்தைப்பலி கொண்ட குலங்களின் நகங்களெல்லாம் வாள்களாகின்றன. பற்களெல்லாம் அம்புகளாகின்றன. அவர்களின் கண்களில் வாழ்கின்றது வஞ்சமெழுந்த வடவை. அவர்களைக் கண்டு பாதாள நாகங்கள் பத்தி தாழ்த்தும். அறமியற்றிய ஆதிப்பெருந் தெய்வங்கள் அஞ்சி விலகியோடும்.

மதுரை நகர்நடுவே மதயானை என அரியணை அமர்ந்திருக்கிறார் கம்சர். குருதி சொட்டும் கொலைக்கரங்களுடன் அவர் தம்பியர் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் கொடுவாளை தெய்வமென்று கொண்டாடுகின்றனர் அங்குள தொல்குடிகள். மகதம் கம்சரை அஞ்சி துணை கொள்கிறது. கங்காவர்த்தமோ அவர் பெயரை கேட்டதுமே நடுங்குகிறது. யமுனையில் ஓடும் அலைகளில் குளிராக அவர் மீதான அச்சம் படர்ந்து செல்கிறது. அணிபட்டுத்துணிமேல் விழுந்த அனல்துளி என மதுராபுரியைச் சொல்கின்றனர் அறிந்தோர். மாமதுரை கோட்டைக்குமேல் எழுந்த கொடிகள் ஒருகணம்கூட அசைவழிந்து அமைவதில்லை என்கின்றனர் சூதர்.

விழியொளிரும் மடமகளீர், மதுரை விட்டு வந்த மாகதர் சொன்ன இக்கதையை நான் கேட்டேன். கம்சரின் அமைச்சர் கங்கையைக் கடந்துசென்று இமயத்தில் தவம்செய்யும் முதுமுனிவர் துர்வாசரிடம் எப்போதும் எவராலும் வெல்லப்படாதவன் யார் என்று கேட்டார். தன்னை வென்று தான்கடந்தோனை வென்றுசெல்ல தெய்வங்களாலும் ஆகாது என்று அவர் சொன்னார். ‘அப்பாதையில் செல்லும் அச்சமில்லா மானுடன் இன்று எவன்?’ என்று அமைச்சர் கோரினார். தன் வேள்விக்குளத்தில் எரிந்த தென்னெருப்பிடம் துர்வாசர் கேட்டார் ‘தன்னைக் கடந்துசெல்லும் தனிவழி கண்டவன் ஒருவனைக் காட்டுக’ என்று. செந்தழலில் நின்றெரிந்து தெரிந்தது கம்சர் முகமே.

அணிநகையீர், அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் உணர்வுகளால் கட்டுண்டோன். அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன். அதையும் வென்று நின்றவர் கம்சர். அவர் செய்ய ஆகாதது என்று இனி இப்புவியில் ஏதுமில்லை என்றது நெருப்பில் எழுந்த உடலிலாச் சொல். மதுராபுரியின் மாமன்னனை வெல்ல இனி தெய்வங்களும் எழமுடியாது என்றனர் முனிவர். அமுதும் நஞ்சும் அதுவே ஆம் என்பதனால் நன்றோ தீதோ முழுமை கொண்டால் அது தெய்வமே என்றார் துர்வாசர். முழுமை கொண்ட முதற்பெரும் பாவத்தால் கம்சரும் தேவனானார் என்று சொல்லி பாடினார் முதுமாகதர்.

களிற்றெருதின் நெஞ்சுபிளந்துண்ட வேங்கையின் நாக்கு போன்றது கம்சரின் உடைவாள் என்றனர் சூதர். ஒருபோதும் அதில் குருதி உலர்வதில்லை. நூறுமுறை நன்னீரில் கழுவி நான்குவகை துணியில் துடைத்து மலரும் பீலியும் சூட்டி படைமேடையில் வைத்தாலும் அதன் நுனி ததும்பி உருண்டு சொட்டி நிலத்தில் புதுக்குருதி வழிந்துகொண்டிருக்கும். குருதி நனைக்கும் கம்பளங்களை நாழிகைக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டிருப்பார்கள் சேவகர்கள்.

தன் உடைவாளை கையில் எடுத்து எங்கிருந்து வருகிறது அக்குருதி என்று பார்ப்பது கம்சரின் வழக்கம். ஆணிப்பொருத்துக்கள் புண்வாய்கள் போல குருதி உமிழும். பிடிகளில் அமைந்த செவ்வைரங்கள் நிணத்துண்டுகளாக கசிந்துகொண்டிருக்கும். அணிச்செதுக்குகள் தசை வரிகளாகி செந்நீர் வழியும். வெற்றறையில் வாளைச்சுழற்றி மூச்சுவிட்டு அமைகையில் சுவர்களெங்கும் தெறித்து துளிகனத்து கோடாகி வழிந்து நிலம் தொட்டு இணைந்து ஓடும் சோரிப்புனல். இடைக்கச்சை நனைக்கும். தொடைவழி ஒழுகி பாதங்களில் ஊறும். கால்தடங்களாகிப் பதியும். உலர்ந்து செங்கோலமாகி அரண்மனையை நிறைக்கும். குருதியில் வாழ்ந்தார் கம்சர். குருதியின்றி வாழமுடியாதவரானார்.

காலையிளவெயிலில் குருதிமுத்துக்கள் சொட்டிச் சிதறி விழ வாள்சுழற்றி களமாடிக்கொண்டிருக்கையில் நீலமணிச் சிறுகுருவி ஒன்று பொன்னிற அலகுச்சிமிழ் திறந்து காற்றிலெழுந்த செங்குமிழ் போல ஒளிரும் குரலெழுப்பி சிறகால் வெயில் துழாவும் இசையொலிக்க உள்ளே வந்தது. முதல்முறையாக தன் முன் அச்சமில்லா விழியிரண்டைக் கண்ட கம்சர் திகைத்து வாள் தாழ்த்தி அதை நோக்கினார். இளநீல மலர்ச்சிறகு. மயில்நீலக் குறுங்கழுத்து. செந்தளிர்போல் சிறு கொண்டை. செந்நிற விழிப்பட்டை. அனல்முத்துச் சிறுவிழிகள். பொன்னலகை விரித்து ‘யார் நீ?’ என்றது குருவி. ‘நான்!’ என்றார் கம்சர். ‘நீ யார்?’ என்றது அது.

சினந்து வாள் சுழற்றி அதை வெட்டி வெட்டி முன்னேறிச் சுழன்று மூச்சிரைத்து அயர்ந்து நின்றார் கம்சர். சுழன்று ஒளியாக அறை நிறைத்த வாள்சுழிக்குள் மூழ்கி எழுந்து துழாவித்திளைத்தது சிறுகுருவி. அவர் தாழ்த்திய வாளைத் தூக்கியபோது வந்து அதன் நுனியில் புல்வேர் போன்ற சிறுகால்விரல் பற்றி அமர்ந்து ‘நீ யார்?’ என்றது. அதை அவர் வீசிச்சுழற்றி மீண்டும் வெட்ட சுவர்களெல்லாம் குருதி எழுந்து தசைப்பரப்பாக நெளிந்தன. தன் உடலும் குருதியில் குளிக்க கருவறைக்குள் நெளியும் சிறுமகவென அங்கே அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்து பதைத்து நின்றார். ஒருதுளியும் தெறிக்காத நீலச்சிறகுகளை விரித்தடுக்கி மீண்டும் அவர் முன்னால் படைமேடையில் வந்தமர்ந்து ‘நீ யார்?’ என்றது.

உள்ளிருந்து ஊறி உடைந்தழியும் பனிப்பாளம்போல கம்சர் நெக்குவிட்டு விம்மி அழுது நிலத்தமைந்தார். அருகே செந்நாவென நெளிந்த உடைவாள் அவர் மடியைத் தொட்டு தவழ்ந்தேற முயல தட்டி அதை விலக்கிவிட்டு தரையில் முகம் சேர்த்து கண்ணீர் வழிய கரைந்து அழிந்தார். அவர் அருகே வந்தமர்ந்து ‘நீ யார்?’ என்றது சிறுநீலம். செங்கனலெரியும் விரிவிழி தூக்கி அவர் நோக்க ‘யார் நீ?’ என்றது. அதன் மழலைச்சிறு சொல்லை பைதல்விழிகளை கண்ணருகே நோக்கினார் கம்சர். கையெட்டினால் அதை பிடித்திருக்கலாம். ஆனால் தோள்முனையில் இறந்து குளிர்ந்திருந்தது கரம். நனைந்த கொடியென அமைந்து கிடந்தது நெஞ்சம்.

அன்று மதுராபுரியின் ஊன்விழா. ஆயிரமாயிரம் ஆநிரைகளை கழுத்தறுத்து கலம் நிறைய குருதி பிடித்து குடித்தாடிக்கொண்டிருந்தனர் நகர்மக்கள். ஊன் தின்று கள்ளருந்தி உள்ளே எழுந்த கீழ்மைகளை அள்ளித் தலையில் சூடி தெருக்களெல்லாம் நிறைந்திருந்தனர். செருக்களத்து நிணம்போல சோரியூறி நாறியது நகரத்து மண்பரப்பு. இழிமைகொண்டு நாறியது மக்கள் நாப்பரப்பு. தெய்வங்கள் விலக இருள்நிறைந்து நாறியது சான்றோர் நூல்பரப்பு. நடுவே சொல்லிழந்து சித்தமிழந்து கண்ணீர் விட்டு தனித்திருந்தான் அவர்களின் அரசன். அவன் கோட்டைமேல் அத்தனை கொடிகளும் நாத்தளர்ந்து கம்பங்களில் சுற்றிக்கொண்டிருப்பதை அங்கே எவரும் காணவில்லை.

கோபியரே, அதோ கோகுலம். அங்கே ஆநிரைகள் பால்பெருகி மடிகனத்து அழைக்கும் ஒலியெழுகிறது. கன்றுகள் துள்ளும் மணியோசை கேட்கிறது. உங்கள் இளநெஞ்சம் துள்ள என் தோணி திரையெழுந்தாடுகிறது. மணிச்சலங்கை ஒலிக்க மென்பாதம் தூக்கிவைத்து இறங்குங்கள். மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா சிறுவிதைக்குள் வாழும் முளைக்கருவை வாழ்த்துங்கள். மணிக்குரல் பறவை ஒன்று மெல்விரல்பற்றி சுமந்துசெல்லும் அளவுக்கே சிறியது இப்புவியென்றனர் மெய்யறிந்தோர். சின்னஞ்சிறியது வாழ்க! மலரினும் மெல்லியது நலம் வாழ்க! சொல்லாது கேளாது அறியாது அழியாது நிலைநிற்கும் நுண்மை நீடூழி வாழ்க!

பகுதி நான்கு: 2. பாலாழி

கைப்பிரம்பும் இடைக்கூடையும் கொண்டு கொண்டைச்சுமையும் கொசுவக்கட்டுமாக மலைக்குற மங்கை ஒருத்தி ஆயர்குடி புகுந்தாள். கன்னி எருமைபோல் கனத்த அடிவைத்து இளமூங்கில் போல் நிமிர்ந்து அசைந்தாடி வந்து “அன்னையரே, கன்னியரே, குறிகேளீர்! குறவஞ்சி மொழி கேளீர்! அரிசியும் பருப்பும் அள்ளிவைத்து அழியாச்சொல் கேளீர்!” என்று கூவினாள்.

ஆய்ச்சியர் கண்மயங்கும் ஆக்கள் அசைபோடும் நடுமதியம். நிழலுண்டு நிறைந்த நெடுமரங்கள் அசைவழிந்து நின்றன. சிறகொடுக்கி கழுத்து புதைத்து துயின்றன காகங்கள். குறத்தியின்  காற்சிலம்பொலி கேட்டு எழுந்து விழியுருட்டி நோக்கி கன்றுகள் குரல்கொடுத்தன. குளிர்மெழுகப்பட்ட திண்ணையில் கூடை இறக்கி அமர்ந்த குறத்தி ஆய்ச்சி கொடுத்த குளிர்மோர் கலத்தைத் தூக்கி மார்பு நனைய முழுதருந்தி நீளேப்பம் விட்டு கால்நீட்டி தளர்ந்தமர்ந்தாள்.

“களிந்த மலை பிறந்தேன். காளிந்தியுடன் நானும் நடந்தேன். ஆயர்பாடிகள் தோறும் சொல்கொடுத்து நெல்கொண்டு வந்தேன். நற்காலம் வருகிறது. நலமெல்லாம் பொலிகிறது. ஆயர்குடங்களிலே அமுது நிறையும். ஆய்ச்சியர் கைகளிலே அன்னம் நிறையும். இல்லங்கள் தோறும் தொட்டில் நிறையும். தேடிவரும் பாணர்களின் மடிநிறையும். குறத்தியர் கூடை நிறையும். நிறைக பொலி! நிறைக பொற்பொலி!”

நெய்யால் கலம் நிறைய நெல்லால் கூடைநிறைய அகம் நிறைந்த குறத்தியிடம் “மாயக்கதை ஒன்று சொல்க மலைக்குறமகளே” என்றனர் திண்ணை நிறைந்த ஆய்ச்சியர். “நான் கண்ட கதை சொல்லவா? என் தாய் விண்ட கதை சொல்லவா? நூல்கொண்ட கதை சொல்லவா? என் கனவில் சூல் கொண்ட கதை சொல்லவா?” என்று குறத்தி சொல்லலானாள்.

மதுராபுரி நகர்வாழ்ந்தாள் மங்கை ஒருத்தி. அவள் பெயர் பூதனை. அவளுடன் பிறந்தார் இருவர். பகன் மாளாப்பசி கொண்டிருந்தான். அகன் அணையாத காமம் கொண்டிருந்தான். பசியால் தன் உடலை தானே உண்ணும் தீயூழ் கொண்டிருந்தான் பகன். தன் உடல்மேல் தானே காமம் கொண்டிருந்தான் அகன்.

நினைவறிந்த நாள் முதலே மரப்பாவை மகவை மடியிருத்தி சீராட்டி முலையூட்டி மலர்சூட்டி விளையாடினாள். கருப்பையே அகமாக முலைக்குவையே உடலாக வளர்ந்தாள். குழவிக்கென்றே வளைந்திருந்தது அவள் இடை. அவர்கள் தோள் வளைக்கவென்றே நெகிழ்ந்திருந்தன அவள் கை வல்லிகள். மழலைச் சொல் கேட்கவே செவிகள். அவர்களிடம் கொஞ்சிக் குழையவே குரல் கொண்டிருந்தாள். அன்னையன்றி பிறிதாக ஒருகணமும் இருந்ததில்லை.

கன்னிமையை அறிந்ததுமே கடந்துசென்று தாயானாள். அவள் கணவன் பிரத்யூதன் கடலறிந்த சிறு எரிமீன். நிலம் புதைந்த சிறுவிதை. அவள் அவன் முகத்தையும் நோக்கியதில்லை. கருநிறைந்த வயிற்றைத் தொட்டு காலம் மறந்தாள். கணம் கணமாய் நீர் சொட்டி நிறைந்தொளிரும் மலைச்சுனைபோல் கனவு சொட்டி கண்ணீர் சொட்டி கருவறை நிறைந்தாள். வானை அள்ளி தன்னில் விரித்து மேகம் சுமந்து குளிர்கொண்டு காத்திருந்தாள். பால்நிறைந்து முலை கனக்க தவம் நிறைந்து அகம் கனக்க தளிர் நுனியில் ததும்பி நிற்கும் துளிபோல ஒளிகொண்டாள். பாலாழி அலையெழுந்து நுரைகொண்ட அவள் நெஞ்சில் பைந்நாகப் பாய்விரித்து பள்ளிகொண்டிருந்தான் அவள் மைந்தன்.

செஞ்சுடரோன் விலக்கியெழும் கருந்திரை போல் தன்னை உணர்ந்தாள். கதிரவனின் முதற்குரலைக் கேட்டாள். கதிரெழும் குருதிவாசம் அறிந்தாள். சிறுசுடரோன் கைவீசி கால்வீசி ஆடும் களிநடத்தைக் கண்டாள். கைநனையத் தூக்கி கண்ணெதிரே காட்டிய குழவியை கை நீட்டி தொடமுடியாது நடுங்கினாள். உடலதிர உளம் விம்மி கண்ணீர் மார்பில் உதிர “ஏன் பிறந்தேன் என்றறிந்தேன்” என்று சொல்லி நினைவழிந்தாள். அவள் நெஞ்சகத்தில் ஊறி முலைமுகட்டில் முட்டி மதகதிர தெறித்து நின்றது கொதிக்கும் குருதிப்பால்.

அன்னைப்பால் கட்டியிருந்தமையால் அகிடுப்பால் கொடுத்து அம்மகவை ஆற்றிவைத்தனர் சூலன்னையர். உடல் வெம்மை ஓய்ந்து தசைநாண்கள் தளர்ந்து அவள் கண்விழித்தபோது முதற் குமிழியாக எழுந்தது குழந்தை நினைவு. “என் மைந்தன். என் ஆவி. என் தெய்வம்” என்று அவள் கைநீட்டி கூவி எழுந்தாள். “அடங்குக அன்னையே. மைந்தன் வாய்தொட்டு உன் முலைக்கண் திறக்கவேண்டும். அவன் விடாயறிந்து உன் நெஞ்சத்து ஊற்றுகள் உயிர்கொள்ள வேண்டும். கண்ணீர் ஒழிந்து கனியட்டும் உன் கண்கள். பித்தத் திரை விலகி தெளியட்டும் உன் சித்தம்” என்றனர் மருத்துவ மகளிர்.

“என் மைந்தன்! என் மைந்தன்!” என்னும் தவச்சொல்லில் ஒவ்வொன்றாய் முளைத்தெழுந்தன அவள் உளமறிந்த விதைத்துளிகள். ஒவ்வொன்றாய் தளிர்விட்டன அவள் அங்கங்கள். முலைக்கண்கள் திறந்து ஊற்றெழுந்து மழைக்கால மலையருவி என வழிந்தன. கை நீட்டி “என் மைந்தன். என் மணிச்செவ்வாய்” என அவள் கூவ அன்னை ஒருத்தி மைந்தனை அள்ளி அவள் கைகளில் அளிக்கும் அக்கணத்தில் கதவை உடைத்து குருதி சொட்டும் கொலைவாளுடன் உள்ளே நுழைந்தான் கம்சரின் படைவீரன். அன்னையின் கை பற்றி அவள் ஆருயிரைப் பறித்தெடுத்து அக்கணமே வெட்டி நிலத்திலிட்டான்.

அக்கணத்தில் எழுந்த அகச்சொல் அவள் நெஞ்சில் கொதித்துருகி உறைந்து கல்லாகி நிற்க அதில் முட்டி நிலைத்தாள். அச்சொல்லே விழிவெறிப்பாக உதட்டுச்சுழிப்பாக கன்னநெளிவாக ஆனாள். கையில் வைத்திருக்கும் எதையும் முலையுண்ணும் மகவென்று எண்ணினாள். அருகணையும் ஒவ்வொருவர் கையிலும் கொலைவாளையே கண்டாள். கைநகமும் பல்முனையும் சீற குழவிகொண்ட குகைப்புலிபோல் தன் கண்பட்ட ஆண்களை எதிர்த்துவந்தாள். குரல்வளை கடித்து குருதி குடித்து அலறி வெறிநடமிட்டாள். குருதிச்சுவை கண்டபின் வெறித்த விழிகளும் விரிந்த உகிர்களுமாக தேடியலைந்து மானுடரை வேட்டையாடினாள். கொன்று குருதியுண்டாள். முலைகொண்ட அன்னையில் எழுந்தது பலிகொண்டு கூத்தாடும் பெரும்பேய்வடிவம்.

பித்தியென்றும் பேய்ச்சியென்றும் பாழ்நிலத்துப் பாவை என்றும் அவளை அஞ்சி விலகியது குலம். குடியிழந்து வீடிழந்து வெட்டவெளி வாழும் விலங்கானாள். குப்பையில் உணவுண்டு புழுதியில் இரவுறங்கி கொழுங்குருதிச் சுவைதேடி நகரில் அலைந்தாள். அவளைக் கண்டதுமே அஞ்சி கல்வீசி விலகியோடினர். வீரர் வேல்நீட்டி அம்புகூட்டி அவளை துரத்தியடித்தனர். வேல்பட்ட புண்ணாலோ விடம் வைத்த உணவாலோ அவள் சாகவில்லை. புண்நிறைந்த பேருடலும் கண்ணீர் கலுழ்ந்திழியும் கருவிழிகளுமாக அவளை கனவில் கண்டனர். எரிநிலமாளும் விரிகுழல் கொற்றவை என்று அவளை எண்ணினர். நீல உடலும் நெருப்பெரியும் முகமுமாக அவள் மதுரா நகர்வாழ்ந்தாள்.

கொலையுகிர் கொற்றவைக்குள் வாழ்ந்தாள் முலைகொண்ட பேரன்னை. இளமைந்தரைக் கண்டால் வான்நெருப்பு குளிர்மழையாவதை அனைவரும் கண்டனர். முலைசுரந்து வெண்சரடுகளாக நின்று சீற முகமெங்கும் பெருங்கருணை நகை பொலிய கை நீட்டி பாவை காட்டி கொஞ்சும் ஒலியெழுப்பி அவள் அருகணைவாள். அன்னையர் தங்கள் மைந்தரை அள்ளி மார்புசேர்த்து ஓடி கதவடைத்து இருளுக்குள் ஒளிந்துகொள்ள இல்லத்தின் முற்றத்தில் நின்று முகக்கண்ணும் முலைக்கண்ணும் சுரந்தழிய கூவி ஆர்த்து கைகூப்பி கரைவாள்.

ஒவ்வொரு முற்றமாகச் சென்று மன்றாடி கைகூப்பி நின்று செய்த தவம் மைந்தரைக் கவர்ந்துசெல்லும் கலையாகக் கனிந்தது. நாளும் பொழுதும் நாகூட அசையாமல் முற்றத்துப் புதரில் ஒளிந்திருப்பாள். நிழலுடன் உடல்கரைந்து ஓசையின்றி நடந்து வருவாள். காற்று கடப்பதுபோல காவல்நாய்கூட அறியாமல் திண்ணையிலும் உள்ளறையிலும் புகுந்து தொட்டில் குழந்தையை கவர்ந்துசெல்வாள். முலைகொடுத்த அன்னை அருகணைத்து விழித்திருக்க மூச்சொலியும் எழாமல் மகவை கொண்டுசெல்லும் மாயமறிந்திருந்தாள். காற்றசைந்தாலும் காகச் சிறகசைந்தாலும் அவளை எண்ணி அஞ்சி மெய்சிலிர்த்து மைந்தரை அள்ளி மார்போடு சேர்த்தனர் அன்னையர்.

அவளை அருகே கண்ட குழந்தைகள் அமுதூட்ட அருகணையும் அன்னையென்றே உணர்ந்து கைநீட்டி சிரித்து கால்மடித்து துள்ளி வந்து தோள் தழுவி முலைகளில் முகம்சேர்த்தன. அன்னையர் வந்து கைநீட்டி கரைந்தழுது அழைத்தாலும் அவை திரும்பவில்லை. மைந்தருடன் ஓடி யமுனைக்கரைக்குச் செல்பவளுக்குப்பின்னால் படைக்கலமும் புகைமருந்தும் கொண்டு நகர்மாந்தர் ஓடினர். கைகொட்டி கூச்சலிட்டு முரசறைந்து கொம்பு ஆர்த்து அவளை அழைத்தனர். கைகளில் மகவிருந்தால் அவள் விழிகள் ஒருகணமும் திரும்புவதில்லை. அவள் பித்தின் பெருந்திரையை மைந்தன்றி எதுவும் கிழிக்கவில்லை.

கோட்டைமேலமர்ந்தும் மரக்கிளைமேல் ஒளிந்தும் அவள் முலையூட்டினாள். வயிறு நிறைந்து வாய்வழிய முலையுண்டு முலைகுளித்து குழந்தைகள் கைவழுக்கின. அவள் அமர்ந்துசென்ற இடங்கள்தோறும் முலைப்பால் குளம்கட்டிக்கிடந்தது. பாயும் படைக்கலமோ மேலெழும் புகைக்கலமோ அவளை வீழ்த்தவில்லை. ”பெற்று பிள்ளையற்று இத்தனைநாள் ஆயிற்றே? இன்னுமா அவளுக்கு வற்றவில்லை?” என்றார்கள் இளம்பெண்கள். “அவள் அகமெரியும் அனலில் வெந்துருகி வழிகின்றன நெஞ்சத் தசைத்திரள்கள்” என்றனர் முதுபெண்டிர். “அவள் சிதைகூட முலைநெய்யில்தான் நின்றெரியும் பெண்டிரே” என்றனர்.

யமுனைத்தடத்தில் ஆயர்குடியொன்றில் மதுரைநகர் பிழைத்த மைந்தன் ஒருவன் வாழ்கின்றான் என்று அறிந்தான் கம்சரின் அமைச்சன் கிருதசோமன். யமுனைக்குழியொன்றில் விழிதுஞ்சும் பூதனையை நஞ்சுவாளி எய்து துயில் வீழ்த்தி சிறைப்பிடித்தான். அவள் முலைக்கண்களில் கொடுநாக விஷம் பூசி இரவுக்குள் படகிலேற்றிக் கொண்டுவந்து அம்மைந்தன் வாழும் ஆயர்குடியின் வேலிப்புறத்தே இறக்கிவிட்டுச் சென்றான். நச்சுபூசிய வாளியுடன் விழிதளரா வில்லவர் காவலிருக்கும் அக்குடிக்குள் படைவீரர் புக முடியாது. ஆனால் மதயானை அஞ்சும் வேலிக்குள் விஷநாகம் புகுந்துவிடும் என்று அமைச்சன் அறிந்திருந்தான்.

விழிதெளிந்து எழுந்த பூதனை அக்கணமே அறிந்தது பாலருந்தும் பாலகனின் வாய்மணம்தான். வஞ்சச்சிறுத்தை போல பஞ்சுப்பொதிக் கால்வைத்து காவலர் விழிஒழிந்து வேலிமுள்விலக்கி உள்ளே நுழைந்தாள். கன்றுகளை எண்ணி நெஞ்சுதுயிலாத அன்னைப்பசுக்களும் அவள் வருகையை அறியவில்லை.

கன்னங்கரியோனுக்கு விழவுகொண்டாட கலம் நிறைய இனிப்புகளுடன் வந்தமைந்திருந்தனர் பெண்கள். இல்லத்தின் அறைகளெங்கும் அவர்களின் சிரிப்பொலியும் வளையொலியும் நிறைந்திருந்தன. மைந்தனுக்காக அவர்கள் மதுரம் சமைத்தனர். பின் அம்மதுரத்தில் மைந்தனை சற்றே மறந்தனர். அவர்களின் விழி விலகிய ஒரு கணத்தில் கிண்கிணிச் சிறுநகை அசைய கூந்தல் மயில்விழி நகைக்க அவன் வெளியே சென்றான். அவன் விலகியதை அவர்கள் அறியவில்லை. அவன் மீதான அவர்களின் பிரேமை அவனைவிட அதிக ஒளிகொண்டு அவர்களைச் சூழ்ந்திருந்தது.

தென்றல் ஆடும் சிறுமுற்றத்தில் திண்ணைவிட்டு தவழ்ந்திறங்கி கூழாங்கல் பொறுக்கி வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்த மைந்தனைக் கண்டு அவள் கண்கள் கனிவூறி விரிந்தன. இதழ்கள் குவிந்து இன்னொலிகள் எழுப்பின. அலையிலாடும் அல்லிமொட்டுகள் என, காதல்கொண்ட நாகங்கள் என, மலர் சூடிய கொடித்தளிர்கள் என அவள் கைகள் அவள் நெஞ்சுநிறைந்த காதலை நடித்தன. நடை நடனமாகியது. பாதங்கள் காற்றில் பதிந்து வந்தன. அவள் விரல்நுனிகள் ஒவ்வொன்றும் முலைக்காம்புகளாகி அமுது சுரந்து நின்றன.

அன்னை வடிவுகண்ட மைந்தன் வெண்மொக்குப் பல்காட்டி நகைத்து செவ்விதழ் குவித்து “ம்மா!” என்றுரைத்து சிறுவிரல் நீட்டி தனக்கே சுட்டிக்கொண்டான். அவள் கையசைத்து “வா!” என்றபோது எழுந்து இடையில் தொங்கியாடிய அரையணிச் சிறுமணியை கையால் பிடித்திருத்து இதழ்நீண்டு மலரச் சிரித்து “ம்மா, அது, ம்மா” என்று தன்னிடமே சொல்லிக்கொண்டான். “கண்ணே வா... அம்மாவிடம் வா” என்றாள் பூதனை. துள்ளிச் சிறுபாதம் மண்ணில் பதிய ஓடிவந்து எட்டி கைநீட்டி அவள் கழுத்தை வளைத்து தொற்றி இடையில் ஏறிக்கொண்டான். முலையமுதின் மணம் அறிந்து வாயூற “நீ ம்மா!” என்று அவள் நெஞ்சைத் தொட்டுச் சொன்னான். “தா” என்று அவள் மண்படிந்த ஊன்மணமெழுந்த மேலாடையைப்பற்றினான்.

குட்டியை கவ்விக் கொண்டுசெல்லும் தாய்ப்பூனைபோல அவனை அள்ளி ஆவிசேர்த்தணைத்து புதர்வழியாகக் கொண்டுசென்றாள் பூதனை. குலைத்த இலையசையாமல் கூழாங்கல் அசையாமல் பொத்திப் பாதம் வைத்து வழியும் நீரோடைபோலச் சென்றாள். யமுனைக்கரை பள்ளத்தைச் சென்றடைந்து மைந்தனை மடியிருத்தி அமர்ந்தாள். கச்சின் முடிச்சை கையவிழ்க்கையிலேயே இறுகிய உள்ளத்தின் அத்தனை முடிச்சுகளும் அவிழப்பெற்றாள். மகவை மடிமலர்த்தி மொட்டு இதழெடுத்து முலைக்காம்பில் பொருத்தி “உண்டு வளர்க என் உலகளந்த பெரியவனே” என்றாள். தன் நாவெழுந்து வந்த சொல்லை செவிகேட்டு திகைத்து உடல் சிலிர்த்தாள்.

பாலாழி அலைப்பரப்பின் அடித்தட்டாய் உடல்விரித்துப் பரந்திருந்தாள். மழைமேகப் பெரும்பரப்பாய் மண்மூடி நிறைந்திருந்தாள். வெள்ளருவி பெருகிவரும் மலைச்சிகரமென எழுந்திருந்தாள். நெஞ்சுடைந்து அனல் பெருகும் எரிமலையாய் வழிந்திருந்தாள். அவள் அங்கிருந்தாள். ஆயிரம் கோடி விழிமலர்ந்து அன்னைப் பெருந்தெய்வங்கள் அவளைச் சூழ்ந்திருந்தனர்.

பாவிசைந்த காவியம் கொண்டு அவனுக்கு அமுதூட்டிய முனிவர் அறிந்தனர். பண்ணிசைத்து பாற்கடலாக்கி அவன் பாதங்களை நனைத்த இசைஞானியர் அறிந்தனர். தேவர்கள் அறிந்தனர். தெய்வங்கள் அறிந்தனர். அவன் மார்பில் உறைந்த திருமகள் அறிந்தாள். அவன் மலர்ப்பாதம் தாங்கிய மண்மகள் அறிந்தாள். அவனை கருக்கொண்டு பெற்ற அன்னை அறிந்தாள். அவனுக்கு அகம் கனிந்து அமுதூட்டிய பெண்ணும் அறிந்தாள். காதல் மதுவூட்டி அவனை கனியச்செய்யும் அவளும் அதை அக்கணமே அறிந்தாள். ஒரு போதும் ஒருமதுவும் அவனுக்கு அத்தனை தித்தித்ததில்லை என்று. பிறிதொருவர் அகத்தையும் மிச்சமின்றி அவன் உண்டதில்லை என்று.

உண்டவையும் உடுத்தவையும் கற்றவையும் கனிந்தவையும் ஒவ்வொன்றாய் உருகி வழிந்தோடி வந்தன. அன்னைமடிக் குழவியானாள். கன்னிச்சிறுபெண்ணானாள். கருக்கொண்டு நிறைந்தாள். முலைகனிந்து பெருகினாள். பேயாகி எழுந்தாள். பெருங்குரலெடுத்து உலைந்தாடி விழுந்தாள். கண்ணீர் வழிய கைகால்கள் சோர குளிர்ந்து கிடந்தாள். அவள் முன் முலையருந்தி நெளிந்தது. கைகால் வளர்ந்து காளையாகி எழுந்தது. வில்லேந்தி தேரூர்ந்து முடிசூடி மண்மேவி வளர்ந்தது. ஆழியும் வெண்சங்கும் ஏந்தி அரங்கமைந்து அமர்ந்தது. வான் நிறைத்து வெளிநிறைத்து தான் நிறைந்து கடந்தது.

சொல்லிச் சொல்லி சொல்லவிந்து ஆயர்முன்றிலில் அமர்ந்த குறமங்கை மெய்சோர்ந்து குரல்தளர்ந்து பின்சரிந்து விழுந்தாள். அவள் கைவிரல்கள் இறுகி கழுத்துவேர்கள் புடைத்து கண்ணிமைகள் சரிய கானகக் குரலெழுந்தது. ‘பூதனை வீழ்ந்தாள். தன்னை தானுண்டு அழிந்தான் பகன். தன் மீது தான் படிந்து மறைந்தான் அகன். விழுவதற்கு மண்ணில்லாத மழையானான் பிரத்யூதன்.’ அவள் குரல் நெடுந்தொலைவில், ஆழத்து நினைவுக்குள் என எழுந்தது. ”பூதம் நான்கும் நிலைகொண்ட முதல்பூதம். கருவுறும்போதே திருவுறும் தெய்வம். கரந்தமைந்ததெல்லாம் கனிந்து சுரந்தெழும் முதலன்னை. நீராக பாலாக நிறைந்தொழுகும் பெண்மை! அவள் வாழ்க! அவள் கருகொண்ட பேரழகுகள் வாழ்க! அவள் முலைகொண்ட பெருங்கருணை வாழ்க!”

அருள்கொண்ட சொல்லில் மருள்கொண்ட பொருள் கொள்ளாது ஆய்ச்சியர் சூழ்ந்து நின்றனர். “அன்னையே, மீள்க. மலைக்குறத்தெய்வமே மீள்க!” என்று வணங்கினர். குகைச்சிம்மக் குரலெழுப்பி குறத்தி உறுமியமைந்தாள். “பூதச்சாறுண்ட புதல்வனை வாழ்த்துக. பொருந்தி இதழமைத்து பூதச்சுவை கண்ட பெருமானை வாழ்த்துக! ஒருதுளியும் எஞ்சாத பூதக் கனிச்சாற்றை வாழ்த்துக!” கைகூப்பி நின்று “ஓம் ஓம் ஓம்” என்றனர் ஆயர்குலமகளிர்.

பகுதி நான்கு: 3. சுழலாழி

ஆறு கடந்துசெல்லும் ஆநிரைக்குளம்புகளின் ஒலிபோல தயிர்க்கலங்களை மத்துகள் கடையும் ஒலி எழுந்த புறவாயில் திண்ணையில் ஆய்ச்சியர் கூடி அமர்ந்து கள்ளக்குரலில் கதைபேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் நடுமதிய நேரம். சரடு தாழ்த்தி மத்தை நிறுத்திய ஆயரிளம்பெண் ஒருத்தி “அக்கையீர், இதுகேளீர், நான் கண்ட கொடுங்கனவு. புள்ளும் இளங்காற்றும் பேய்முகம் கொண்டது. வானும் முகில்குவையும் நஞ்சு சொரிந்தது. பைதலிள வாயில் நாகம் படம் விரித்து நாவெனச் சீறியது. அன்னைவிழியில் அனல் எழுந்து கனன்றது. கருவறைப் பீடத்தில் கன்றின் தலைவெட்டி வைக்கப்பட்டிருந்தது” என்றாள்.

மன்றமர்ந்து மந்தணம் பேசி மகிழ்ந்திருந்த ஆய்ச்சியர் கூட்டம் இதழ் மலைத்து விழி நிலைத்து அமைந்தது. “என்னடி இது மாயம்? எங்கு நிகழ்ந்தது இது?” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. “நெய் விழுந்த நெருப்பைப்போல் கொடிகளாயிரம் கொழுந்துவிடும் மாமதுரை நகரை நான் கண்டேன். அங்கே உப்பரிகையில் தம்பியரும் தளபதியரும் சூழ வந்து நின்றார் கம்சர். ஒற்றர் சொன்ன செய்திகேட்டு திகைத்து பின் கொதித்து வாளேந்தி கிளம்பிய அவரை இரு கைகளையும் பற்றி நிறுத்தினர் தம்பியர். அப்போது வானிலெழுந்த வெண்பறவை ஒன்றைக் கண்ட அமைச்சன் சுட்டிக்காட்டினான். உடலற்ற சிறகிணையாக வானில் சுழன்றது அப்பறவை” என்றாள் ஆயரிளம்பெண்.

வில்லெடுத்து சரம் தொடுத்து அப்பறவையை வீழ்த்த முயன்றனர் தம்பியர். அம்புதொட்ட அப்பறவை சிதைந்து ஆயிரம் சிறகுகளாகி சுழலாகிச் சேர்ந்து பறந்து மறைந்தது. நிமித்திகரை அழைத்து நாடெங்கும் சென்று அவ்வித்தையை அறிந்து வர கம்சர் ஆணையிட்டார். அமைச்சன் கிருதசோமன் அப்பறவையை ஆளும் மாய மலைவேடன் திருணவிரதன் என்பவனை அழைத்துவந்தான். பறவைக் கால்போல செதிலெழுந்த சிற்றுடலும் நீண்ட வெண்குழலும் கூரலகுபோல் மூக்கும் கூழாங்கல் விழிகளும் கொண்டிருந்தான் திருணவிரதன். “உன் நெறியென்ன சொல்” என்றார் அரசர். “காற்றைக் கையாளும் கலையறிந்த வேடன் நான். எண்மூன்று மாருதர்கள் என் ஆணைக்கு அடிபணிவர்” என்றான் திருணவிரதன்.

“எவ்வண்ணம் கற்றாய் அக்கலையை?” என்று அரசர் கேட்க “அம்பைத் தவம்செய்து பறவையை அறிந்தேன். பறவையைத் தவம்செய்து இறகுகளை அறிந்தேன். இறகுகளைத் தவம் செய்து பறத்தலை அறிந்தேன். பறத்தலைத் தவம் செய்து காற்றை அறிந்தேன். காற்றைத் தவம்செய்து அசைவின்மையை அறிந்துகொண்டேன்” என்றான் திருணவிரதன். “காற்றென்பது வானத்தின் சமனழிதல். காற்றாகி வந்தது வானத்தின் அசைவிலா மையம். அம்மையச்சுழியில் அமர்ந்தது விழைவு எனும் ஒற்றைப்பெருஞ்சொல்.”

ஊழ்கத்திலமர்ந்த ஞானியரின் உள்ளம் சூழ்ந்து பறந்தேன். இறந்த அன்னையின் முலையுறிஞ்சி ஏங்கும் சிறுமகவு. குலம் வாழும் நங்கையர் கனவுக்குள் அணையாத அனலூதி தழலெழுப்பி நகைத்தேன். வேள்விக்குண்டம் அவிதேடி விழித்திருக்கிறது. தசையழிந்து நரம்பழிந்து தலைசரிந்து நாத்தளர்ந்து தென்வழிக்கு திசைகொண்டோர் கண்ணுள்ளே புகுந்து கண்டேன். பளிங்கில் புழுவென தேனில் ஈயென இறுதித்துளியும் இழையும் தேடல். அறவோர் சொல்லிலும் அறிந்தோர் எழுத்திலும் துறந்தோர் வழியிலும் தூயோர் மெய்யிலும் தொட்டறிந்தேன். தொட்டறியா காற்று குடியிருக்கும் கல்லிடைவெளிகளே கட்டடமென்று காற்றில்லா இடமொன்றில்லை. சிறகசையா வானமென்றும் இல்லை. அரசே, இன்றிருந்தேன் இனியிருப்பேன் நன்றிருப்பேன் நானில்லாது என்றுமிருக்கும் ஏதுமில்லை என்றுணர்ந்தேன். நானே சிறகானேன்.

“நன்று, உன் கலையிங்கு காட்டுக!” என்று மன்னன் உரைத்தான். கைகளிரண்டும் விரிந்து சிறகாக, கண்களிரண்டில் மணிவெளிச்சம் மின்னியெழ கழுகுக்குரல் கொடுத்து அவன் வானிலெழுந்தான். சிறகடித்துப் பறந்து நகர்மீது சுழன்றான். கண்கூர்ந்து நகரை நோக்கி வானில் நின்றான். அவன் நிழலோடிய தெருக்களில் குழந்தைகள் அஞ்சி குரலெழுப்பின. ஆநிரைகள் ஓலமிட்டு உடல் நடுங்கின. இல்லம் ஒளிர்ந்த சுடர்களெல்லாம் துடித்தாடி அணைந்தன. இரைகண்ட பருந்தைப்போல அவன் மண்ணில் விழுந்து வளிதுழாவி மேலெழுந்து வந்தான். தான் கூர்உகிர் நீட்டி கவ்வி எடுத்த இரைகளைக் கொண்டுவந்து அரசன் முன் குவித்தான்.

அக்கையீர், தோழியரே, அத்தனையும் விழிச்சிறுபந்துகள் என்றுகண்டேன். இமைச்சிறகுகள் துடிக்க பறந்தெழத் தவிக்கும் கருநீலச் சிறுபறவைகள். கருமணிகள் உழன்றலைய துடிதுடிக்கும் இதயங்கள். திகைப்பாக தவிப்பாக துயராக தனிமையாக விழித்தமைந்த பார்வைகள். இமைகளை பிய்த்தெடுத்து குவித்து வைத்து திருணவிரதன் சொன்னான் “பறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள். இச்சிறகுகளை நானறிவேன். இவைதேடும் காற்று வெளியிடை இவற்றை விடுப்பேன்.” இமையிரண்டை இணைத்துப் பறவையாக்கி அவன் வானில் விட்டான். தோழி, விழியின்மை என்பது ஒரு பார்வையாவதைக் கண்டேன். சிறகின்மை என்பது ஒளியின்மையாவதைக் கண்டேன்.

“நன்றிது செய்க! இந்நிலத்தில் நீ ஆற்றும் பணியொன்றுள்ளது!” என்று சொல்லி அரசன் அவனை ஏவுவதைக் கண்டேன். அச்சம் கொண்டு என் ஆடையற்ற நெஞ்சை கைகளால் அள்ளி போர்த்திக்கொண்டேன். என் கனவுகளின் சுவர்ச்சித்திரங்களை எல்லாம் பதறும் கரங்களால் விரைந்து விரைந்து அழித்தேன். நான் மறந்து கைவிட்ட சொற்களை எல்லாம் தேடித்தேடிச் சேர்த்து எரித்தேன். எதுவும் எஞ்சாமல் என் அகத்தை ஆக்கி வான் நோக்கி அமர்ந்திருந்தேன். அவன் நிழல் என்னைக் கடந்து செல்வதைக் கண்டபோது கண்களை மூடிக்கொண்டு காத்திருந்தேன். என் தலையைக் கவ்விய குளிர்ந்த உகிர்களை உணர்ந்தேன். பின் என் கண்களை கவ்விக்கொண்டு செல்லும் சிறகுகளை அறிந்தேன். அக்கண்களில் இருந்தது நான் காணாத காட்சிகளினாலான என் அகம்.

புழுதியும் சருகும் பறக்கும் சுழற்காற்றாக அவன் ஆயர்ப்பாடி ஒன்றின் மேல் இறங்குவதைக் கண்டேன். கரிய இமைச்சிறகுகள் சுழன்றிறங்கின. விழிமணிகள் ஒலியுடன் பெய்தன. சிறகுகள் சுழன்ற காற்றில் சொல் சொல் சொல் என்ற ஒலியமைந்திருந்தது. சொல்லாமல் அறியாமல் சுடரும் ஒன்றின் மீது பெய்து பெய்து சூழ்ந்தது சுழல்காற்று. காற்று அள்ளிய கண்கள் சூழ்ந்து ஒரு கண்ணாயின. கண்சுழியில் அமைந்திருந்தது அச்சொல். அழியாச்சொல், அறியாச்சொல், அறியாமையில் அமர்ந்த சொல். அதுவே ஆம் என இவ்வுலகை ஆக்கிய சொல். எனக்கே எனக்கென்று எப்போதும் ஒலிக்கும் வேதம். எல்லா கருவறையும் நிறைத்தமர்ந்த தெய்வம். எரிந்தமரா நெருப்பு. எழுவதையே அசைவாகக் கொண்ட எரி. உண்டவித்து உண்டவித்து மானுடரை மாளாச்சிதையாக்கி நின்றெரிக்கும் மூலம். மூலாதாரம். முதல் நின்ற மலர்மொக்கு. மொக்கில் எழுந்த முதல்காற்று. உயிர்ப் பெரும்புயல்.

நாவாயிரம் எழுந்து நக்கி நக்கி காற்றை உண்ட நாக்குமரம் ஒன்றை அங்கே கண்டேன். ஈரக்கொழுந்து மூக்கெழுந்து மூச்சிழுத்து சுவையறிந்து சீறிய செடிகளைக் கண்டேன். தழுவ நீண்டு வெளிதுழாவும் தளிர்க்கொடிகள். மொக்கவிழ்ந்து மொட்டு காட்டும் மலர்க்குழிகள். சீறியெழும் நாகங்களின் சீறா மணிவிழிகளைக் கண்டேன். அவையமைந்த புற்றுகள் வாய்திறந்து சொல்லற்று விரியக்கண்டேன். மண்மழை பொழியும் ஒலியில் சருகுப்புயல் படியும் குரலில் ஊழியின் ஒரு சொல் கேட்டேன். ஒருசொல்லாகி நின்ற இப்புவியின் பொருளை அறிந்தேன். அக்கையீர், அக்கணம் வானில் நானோர் வாய்திறந்த பேயுருவாய் விழிதிறந்து கால்திறந்து கீழ்நோக்கி நின்றிருந்தேன். நானென்றொரு பெரும்பசியை நாற்றிசையும் எழுந்தாலும் நிறையாத நாழிச்சிறுகிணற்றை நான் கண்டுகொண்டேன்.

சிரித்து வான் சுட்டி பைதல் சிறுமொழியில் அறியாச் சொல்லொன்று அருளி கையூன்றி மண் தவழ்ந்து ஆயர்பாடியின் சிற்றில் விரியத்திறந்து முற்றத்தை அடைந்த கருமணிவண்ணனைக் கண்டு இடிபோல உறுமி இருகை விரித்து பறந்திறங்கினேன். என் உடல்திறந்து வாயாகி அவனைக் கவ்வி உண்டு உடலாக்க விழைந்தேன். கன்னங்கரிய காலப்பெருந்துளி. நீலம் ஒளிரும் நிலையிருள் குழவி. அவனைச்சூழ்ந்து பறந்த ஆயிரம் கோடி மணல்துளிகளில் ஒன்றானேன். அவனை அள்ளி கைகளில் எடுத்து வானோக்கி எழுந்தோம். அள்ளி உண்ண வாய் விரித்து எங்கள் அகம் திறந்து எழுந்து வந்தான் திருணவிரதன்.

அவன் சுற்றிய பொன்னுடைகள் கிழிந்தழிந்தன. அவன் மணியாரம் உதிர்ந்து மழையாகியது. கால்தளையை கைவளையை செவிக்குழையை செவ்வாரத்தை கிங்கிணியை நுதல்மணியை உடைத்து எறிந்தோம். மெய்யுடலை மணிவண்ண மெல்லுடலை ஆயிரம் கையிலேந்தி வான்வெளியில் சுழன்றோம். “எஞ்சுவதொன்று, அதோ நீலப்பீலி கொண்ட குஞ்சி” என்றனர் தழல்கொண்டு சுழன்ற என்னைப்போன்ற எண்ணிறந்தோர். ஆயிரம் வெறிக்கரங்கள் அவன் குழலணிந்த நீலப்பீலியை நோக்கி நீண்டன. தழலைத் தீண்டிய நெய்விழுதென உருகிச் சொட்டியழிந்தன. நீலச்சுடரென எரிந்தது. நீல விழியென நகைத்தது. நீலமலரென ஒளிர்ந்தது.

பெருஞ்சினம் கொண்டு பேயென குரைத்து திருணவிரதன் எழுந்துவந்து அதைச் சூழ்ந்தான். உகிரெழுந்த கைகளால் அதை அள்ளப்போனான். வெம்மை தாளாது அலறி சிறகெரிந்து வீழ்ந்து சென்றான். மீண்டும் எழுந்து வந்து அதைக் கவ்வி இதழ் எரிந்தான். எரிமலர் சூடிய குளிர்மலர் என எங்கள் மண்சுழிக்குள் கிடந்தான் ஆயர்குலச் சிறுவன். மாயமிதென்ன என்று அலறி சுழன்றலையும் திருணவிரதனைப் பார்த்தேன். அவன் விழிகளுக்குமேல் எழுந்த இமைகள் சிறகடித்து விலகக் கண்டேன்.

பெண்டிரே, தோழியரே, நான் கண்டகாட்சியை எவ்வண்ணம் இங்குரைப்பேன். பதினாறாயிரம் பெண்களின் உடலென்னும் அலைவெளியாக காளிந்தி ஓடுவதைக் கண்டேன். அதில் காமம் கனிந்த கரிய உடல் நீந்தித் திளைப்பதைக் கண்டேன். மதமூறும் மத்தகங்கள். கள்வழியும் கருமலர்கள். கண்ணீர் கனிந்த கருவிழிகள். சந்தனக் கொழுஞ்சேற்றில் களிவெறி கொண்டு குளித்தாடிய இளங்களிறு. உடலாகி எழுந்தது நாகபடம். உடலென்னும் படமாகி எழுந்தது நாகவிஷம். நடமாடிச் சொடுக்கி பதிந்தது நச்சுப்பல். வீங்கி கனத்தாடி எழுந்தது கொழுங்குருதிச் செங்கனி. கைநகங்கள் சீறி கடும்விஷம் கொள்ளும் காமப்பெருவேளை. வேட்கை கொண்டெழும் வேங்கைக்குருளையின் குருதிச்செவ்வாய். பாலருந்தி துளி ஒதுங்கிய இதழ்குவியம். செம்மலரில் அமர்ந்த சிறுசெவ்வண்டின் துடிப்பு. அங்கு சிவந்து கனிந்து எழுந்தது தலைகீழ் கருநெருப்பு.

புள்ளுகிர் கவ்விய பெருந்திமில். கானக் குழிமுயலின் மூக்கின் துடிப்பு. அதன் கால்நகங்கள் அள்ளும் செழும்புல்லின் தயக்கம். துள்ளி கரைவிழுந்த நீலச்சிறு மீன். வெண்மலர் மீதமர்ந்த கருவண்டு. புகைச்சுருளவிழ்ந்த வேள்விக்குண்டம். கள்மலர்ந்து சொட்டும் கருக்கிளம் பாளை. கருவிழியின் நிலையழிதல். செவ்வுதடில் சுருண்டழிந்த சொல். மந்திரம் என ஒலிக்கும் மூச்சு. மூச்செழுந்தசையும் துகில் மென்மை. இவ்வுலகாளும் இதழ்மென்மை. வெண் தழல் கொடிபறக்க துடித்தாடும் பொற்கம்பம். சிரமெழுந்த பெருந்தனிமை. சூழ்ந்து வெம்மையென பெருந்தனிமை. சொல்லழிந்த பெருந்தனிமை. ஊழிச்சொல்லெழுந்த பெருந்தனிமை. மண்ணழிந்த பெருந்தனிமை. காற்று வெளித்தாடும் வெறுந்தனிமை. காற்றான கருந்தனிமை. காற்றில் கரைந்தாடும் ஒரு மந்திரம். ஊற்றுத்தசை விழுதின் வெம்மணம். எஞ்சும் வெறுமை.

திசை நிறைத்த திருணவிரதன் சிறகற்று பேரொலியுடன் மண்ணில் விழுவதைக் கண்டேன். அவன் உடல் பட்ட மண் குழிந்து உள்வாங்கி அமையும் ஒலிகேட்டேன். அவன் மீது அவன் கவர்ந்த விழிமணிகள் இமையிதழ்கள் உதிர்ந்துதிர்ந்து மூடக்கண்டேன். அவன் மேல் அந்த நீலப்பீலி நிறைசிறகுகளாக விரிந்து குடைபிடிக்க பஞ்சு சூடிய விதைமணி போல் அவன் பறந்திறங்கக் கண்டேன். கருநிற விழியொளியன். விழிநிறக் கரியொளியன் ஆயரிளம் குலமைந்தன். அழியாத அச்சொல்லே உதடாக அச்சொல்லே விழியாக அச்சொல்லே விரல்மொழியாக அமைந்தங்கு அவன் மேலமர்ந்திருந்தான்.

எத்தனை கடல்கள். எத்தனை அலைநெகிழ்வுகள். ஆழத்து அசைவின்மைகள். சேற்றுப்பரப்பில் படிந்த நினைவுகள். பாசிமூடிய பழமைகள். எழுந்தமைந்து எழுந்தமைந்து தவிக்கும் நிலையின்மைகளுக்குமேல் எழுந்த பெருவெளியில் பறக்கும் புள்ளினங்கள். கோடி முட்டை வெம்மைகொண்டு புழுவாகி புல்லாகி எழுந்து அவற்றுக்கு உணவூட்டும் அவையறியா ஆழம். ஆழத்து நீலம். நீலத்தின் ஆழம் நிலையழியா நீர்மைக்குள் ஒளியெழும் வண்ணம். முகிழா முற்றா பெருங்காமம் முழுமைகொண்டு ஊழ்கப்பெருமோனம் ஆனதென்ன? மோகப்பேரலைகள் உறைந்து பெருமலைகள் என்றான ஆடலென்ன? இங்கு வந்தமர்ந்து தானுணராது தன்னையறிவிக்கும் திசையின்மை சொல்லின்மை பொருளின்மை எனும் எல்லையின்மைதான் என்ன?

கைவிரித்து கண்விரித்து குரல் கனத்து ஆயரிளமகள் சொன்னாள். பிரேமையெனும் பீலி சூடியவன் அச்சிறு மைந்தன் என்றறிந்தேன் தோழி. அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்கும் மோகப்பெரும்புயலேதும் இல்லை இப்புவியில் என்று கண்டேன். அதன் வரிமணிப்பீலிவிழி நோக்கி நோக்கி நகைத்து நிற்க அதைச் சுற்றி சுழன்று அயர்ந்து அமைந்தன சுழற்பெருங்காற்றுகள். கனலறியும் காற்றுகள். தழலாடி திளைக்கும் மாருதர்கள். வெற்றிடமெங்கும் நிறையும் விண்மைந்தர்கள். காற்றை எடுத்து தன் பீலிச்சுழலுக்குள் அமைத்து கண்மூடி கைமார்பில் சேர்த்துக்கிடந்தது ஆயர்ச்சிறு குழவி.

இங்கென் சிற்றிலில் விழித்துக்கொண்டேன். அலறி ஓடிவந்து மைந்தனை அள்ளி எடுத்து ஆடையால் மண் துடைக்கும் அன்னை ஒருத்தியைக் கண்டேன். அவளைச்சூழ்ந்து அழுகைக்குரல் கொடுத்து கைபதைக்க குரல் பதற நின்றிருக்கும் ஆய்ச்சியர் பெரும்குழுவைக் கண்டேன். அவன் விழிமலர்ந்து மென்னகை ஒளிர்ந்து “அம்மா” என்றழைத்து சிறுகைகள் விரித்து அவள் நெஞ்சுக்குத் தாவி ஏறிச்சென்றான். அன்னை கைகள் அவனைத் தொடவில்லை. அன்னை நெஞ்சு அவனை அறியவில்லை. அவள் மூச்சிலோடும் முதற்பெரும் காற்று அறிந்திருந்தது. அக்காற்று தீண்டி கண் விழித்த கனல் அறிந்திருந்தது. ஒரு கணம் கை நழுவ அன்னை திகைத்தாள். உடனே “கிருஷ்ணா” என்றழைத்து நெஞ்சோடு இறுக்கி அக்கனல்மேல் ஆற்றுப்பெருக்கொன்றை அணையவிழ்த்து விட்டாள்.

ஆயர்மகள் சொல்லி அமைந்தாள். “காற்றறியும் கனலை, கனலாகி நின்ற ஒளியை, ஒளியாகி வந்த இருளை, இருளின் சுழியை, சுழியின் எழிலை அங்கு கண்டேன். கனவழிந்து நினைவடைந்தேன். “கண்ணா கரியவனே! என்றொரு புள் ஏங்கும் சொல் கேட்டேன். நானறிந்த கனவுக்கு என்னபொருள் என்றறியேன்.”

மூதாய்ச்சி ஒருத்தி “எக்கனவும் எவருக்கும் உரியதல்ல பெண்ணே. களிந்த மலைபிறந்து கருநீல அலைப்பெருக்காய் நம் ஊர் நுழையும் காளிந்தி அது. நாம் அதை அள்ளிக்குடித்து ஆடைநனைத்து நீராடி மீள்கிறோம். நம்மை அள்ளி நம்மை அறியாமல் நம் துறைகடந்து தன் திசை தேர்ந்து தனித்துச் செல்லும் முடிவிலியே அவள்” என்றாள். “காளிந்தியைப் போற்றுவோம்! தண்புனல் பெருக்கைப் போற்றுவோம். மழைவெள்ளத்தை குளிரமைதியை கோடை வெம்மையை கோடித்துளிகளில் ஒளிரும் விழிகளை வணங்குவோம்” என்றனர் ஆயர் மகளிர்.

பகுதி ஐந்து: 1. பீலிவிழி

ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் மெல்லத்திரண்டுகொண்டிருந்தது விண்.

வருகிறது மாமழை. வண்ணத் தொடிவளையீர், அவன் பெயர்சொல்லி சுழன்றடித்து வெறிகொண்டு ஆடவிருக்கின்றன மரக்கிளைகள். அவன் கால்நினைத்து விழிநிறைந்து சொட்டி அதிர்ந்து உதிர்ந்து பரவவிருக்கும் மலர்கள் விரிந்துவிட்டன. அவன் கையசைத்து அள்ளி களியாடும் குளிர்மணித்துளிகள் விண்ணடுக்குகளில் கனத்து கனத்து எழுகின்றன. அவன் படகோட்டி விளையாடும் செம்மண் சிற்றோடைகள் கருமேகத் தோள்களிலிருந்து மெல்லச் சரியத் தொடங்குகின்றன. அவன் சிறுகுஞ்சி முடிப்பிசிறில் ஒளித்துகள்களாகி அணிசெய்யும் மணித்துளிகள் எங்கோ புன்னகைக்கத் தொடங்கிவிட்டன.

உங்கள் இளமுலை இடுக்குகளில் வெம்மையெழுகிறது. வியர்வை குளிர்ந்து மென்வயிற்றின் சிறுதுளிச் சுழியை எட்டுகிறது. மேலாடை எடுத்து மெல்ல விசிறி செவ்விதழ் மலரை மொட்டாக்கி சலித்துக்கொள்கிறீர்கள். விழிதிருப்பி அசைவின்றி கனவில் நிற்கும் மரக்கூட்டங்களை நோக்கி என்ன இது என்கிறீர்கள். செவிநிலைத்து தலைதாழ்த்தி மூச்செறிந்து நின்றிருக்கும் பசுக்கூட்டம் நோக்கி 'என்ன ஆயிற்று இவற்றுக்கு?' என்கிறீர்கள். உங்கள் வியர்வை குளிர்ந்து உப்பாகிறது. மாயக்குழந்தை ஒன்று பின்னால் வந்து மெல்ல சிறுகைநீட்டி கழுத்தணைத்தது போல வருகிறது குளிர்காற்று.

அணிவளையீர், வந்தது கார்காலம். வானிலெழுந்தன கருமுகில் மழைக்கோட்டைகள். ஒளிகொண்டன அவற்றின் மணிமகுடப் பெருமுகடுகள். அங்கே எழுந்து பறக்கின்றன வெள்ளிக்கொடிகள். ரதங்களோடிய பெருவழிப்பாதைகளில் விழுந்து கிடந்தன விண்நடப்போர் பாதப் பொற்தடங்கள். குளிர் இறங்கி மண்ணில் பரவி கூழாங்கற்களை சிலிர்க்கச்செய்கிறது. வேதச்சொல்லெடுத்து நாதக்குரலெழுப்பி நிறைக்கின்றது தேரைப்பெருந்திரள். குஞ்சுகளை சிறகணைத்து கிளைகூடி கழுத்து குறுக்கி அவ்வேதம் கேட்டு விழிமூடுகின்றன பறவைகள். தண்ணென்ற நினைவொன்று கருக்க வைத்த நீர்ப்பரப்பை வருடிச் சிலிர்க்கவைக்கின்றன நீர்நடப்பூச்சிகள். துள்ளி எழுந்தமைந்தது யமுனையில் வெள்ளிமீனென ஒரு பெயர்.

மேகக்குவைகளில் வைரச்சவுக்கெனச் சுழன்று சுழன்றடங்கியது அப்பெயர். திசைகள் புரண்டமைந்து முழங்கிச்சென்றது அப்பெயர். உங்கள் சிறுமுலைக்காம்புகள் குளிர்கொண்டு விரைத்தெழ இளந்தோள் குறுக்கி “என்னடி இது?” என்று தோழியரை தோளணைத்து சொல்லிக்கொள்கிறீர்கள். கன்னியரே கோபியரே, உங்கள் அனைவரையும் அவன் கைவந்து தழுவிச்சென்றதை நீங்கள் அறியவில்லை. மாயக்கைகள் மீட்டும் மெல்லிய யாழ்களே நீங்கள் வாழ்த்தப்பட்டவர்கள். மாயச்சொல்லுக்கு நடமிடும் குளிர்தழல்களே நீங்கள் ஒளிவிடும் வரம்கொண்டவர்கள்.

கருக்கொண்ட நாகமென வளைந்து அசைவிழந்த காளிந்தியின் மேல் சிறுபடகில் துழாவி வந்தனர் மதுவனத்தில் இருந்து ஓர் அன்னையும் அவள் மைந்தனும். யமுனைக்கரையணைந்து ஆலமரத்து வேர்த்துறையில் படகணைத்து வெண்தாமரை மலர்போன்ற விழிவிரிந்த மைந்தனை எடுத்து மார்போடணைத்து கலைந்த குழல் நீவி ஆயர்பாடி நோக்கிச் சென்றாள் அன்னை. படைக்கலம் கையிலேந்தி மூவர் அவளுடன் சென்றனர். கோகுலம் விட்டு பர்சானபுரிக்குக் கிளம்பிய ராதை தன் படகைத் தொட்ட புன்னை மலர்க்கிளையை மெல்லப் பற்றி குனிந்து “யாரடி அது?” என்றாள். “மதுவனத்தின் ஆயர்குடித்தலைவர் சூரசேனரின் மைந்தர்களில் இளையவர் வசுதேவரின் முதல் மனைவி அவள். ரோகிணி என்று அவள் பெயர்” என்றாள் லலிதை. “அவர் கையிலிருப்பது அவள் மைந்தன் பலராமன்”

ராதை “என் கரியவனின் வெண்நிழல் அல்லவா? அவனை கையில் எடுத்து தலையில் சூட விழைகிறேன்” என்றாள். “கண்ணனுக்கு உறவாகாத மைந்தனை நீ கண்டதுண்டா?” என்றாள் லலிதை. “கண்ணனன்றி இப்புவியில் குழவியேது?” என்று பல் ஒளிர புன்னகைத்தாள் ராதை. “ஒரு குவளையில் நிறைவதல்ல விண்பசுவின் பாற்கடல். ஓருடலில் அமைவதல்ல மண்ணெழுந்த விண்ணமுது.” கண்கள் சிவக்க கரைநோக்கி “எத்தனை அன்னையரடி ஒருவனுக்கு?” என்று சொல்லி பெருமூச்செறிந்தாள் விசாகை. “ஆம், எத்தனை முலையுண்பான்? எத்தனை கையறிவான்? எத்தனை மடிகளில் தவழ்வான்? வீணன், வெறும் சிறுக்கன். பித்தாகி பெண்கள் புலம்புவதற்கென்றே பிறந்தான்” என்றாள் சுசித்ரை.

“ஏடி, ஏனிந்த பொறாமை? இப்புவியில் பெண்ணென்று முலைகொண்டு விழிகனிந்து அவனை எண்ணுபவர்களெல்லாம் நானல்லவா? இவ்வோருடலில் இருந்து அவனை அறிந்து நிறைகிலேன். ஓராயிரம் அன்னையராகி மண்நிறைத்து அவனைச் சூழ்வேன். தலைமுறை தலைமுறையாக முலைநிறைத்து அகம்இனித்து அவனுக்காகப் பிறந்து வருவேன். அன்னையென்று ஆனதெல்லாம் கண்ணன் அள்ளியுண்ணும் கனியமுதேயல்லவா?” என்றாள் ராதை “இதோ, கனியெழுந்த மரங்கள் அமுதுறையும் பெரும்பசுக்கள் நீர்பெருகும் காளிந்தி எல்லாமே அன்னைவடிவல்லவா? இவையனைத்திலும் இருப்பவள் நானல்லவா? இன்னும் இன்னும் என்றே என் கண்ணனுக்காக விரிகிறேன். கடலை அள்ளி உண்ண கைகோடி வேண்டுமடி பெண்ணே!” சிரித்து கைவளை ஒலிக்க அவள் தோளில் தட்டி “போடி பெரும்பிச்சி. உன்னை நிகர்க்க இப்புவியில் நீயே” என்றாள் சம்பகலதை.

கோகுலத்து நந்தனின் இல்லம் நோக்கி ரோகிணி செல்ல செய்தியறிந்து கைவிரித்து நகைத்தோடி வந்தாள் யசோதை. “என் சிறுகுடிலில் உன் கால் தொட தவம் செய்தேன் அக்கா. இன்றுகாலை மகிழம்பூ மணம்கேட்டு கண்விழித்தேன். காகக்குரல் கேட்டு நாள் கொண்டேன். அப்போதே அறிந்தேன் என் இல்லம் இன்று மலருமென்று” கைநீட்டி மைந்தனை வாங்கி “அய்யோ என் கருவண்ணன் அன்று பாலுருளிக்குள் பாய்ந்து இப்படித்தான் எழுந்துவந்தான். ஒன்றென வந்து இயற்றியது போதாதென்றா இரண்டென எழுந்து வந்தாய், கள்வா?” என்று கூவி கண்கள் கனிய கட்டியணைத்து முத்தமிட்டாள் .”என் மைந்தனை எனக்குக் காட்டடி” என்று சொல்லி ரோகிணி ஆடை ஒலிக்க கால்களில் பட்டு கற்கள் தெறிக்க மூச்சிரைக்க ஓடி இல்லத்துக்குள் புகுந்தாள்.

பால்நிறப் புல்பாயில் விரித்த அரவுநிற மரவுரியில் ஒருகை தலைவைத்து மறுகை தொடை சேர்த்து சேவடி இணைத்து மணிமார்பில் ஒரு மலருதிர்ந்து கிடக்க மல்லாந்து விழிவளர்ந்தான் மைந்தன். வாயில் கைசேர்த்து நின்ற ரோகிணி “மாலே, மணிமார்பா, மலைநின்ற பேருருவே, அலைகடல்மேல் படுத்த அறிதுயிலா!” என்று தன் அகம்கூவப்பெற்றாள். சொல்லுருகி விழிதுளிக்க நின்றாள். பின்னால் வந்து நின்ற யசோதையின் காலடியோசை கேட்டு உடல் விதிர்த்து “என்னடி இது, பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன் போன்றே துயில்கிறான்? யாரிவன்? நம் கைதொட வந்த கடந்தோனே தானா?” என்றாள். கண்கள் பூத்துச் சிரித்து “நாம் ஏதறிவோம் அக்கா? விதையில் உறங்குவதை மண் அறியாதல்லவா?” என்றாள் யசோதை.

யசோதையின் கையில் இருந்து இறங்கிய பலராமன் கரியவனை கைசுட்டி “அம்மா, அது நானா?” என்றான். அன்னை நகைத்து குனிந்து அவன் கன்னம் தொட்டு “ஆம், அது நீயே” என்றாள். “இங்கெல்லாம் அது உறைகிறது என்பார் நூலோர்” என்றான் பலராமன். யசோதை வாய்பொத்தி நகைத்து “நூலறிந்த மெய்யெல்லாம் மைந்தர் நாவில் வந்து நிற்கின்றன” என்றாள். ராமன் ஓடிச்சென்று இளையோன் அருகே அமர்ந்து அவன் தோள் பற்றி உலுக்கி "கரியவனே என்ன துயில்? எழுக!” என்றான். கண்மலர்ந்த கணமே வாய்மலர்ந்து நகைத்தான் சிறியவன். “அம்மா,நான் நகைக்கிறேன்” என்றான் பலராமன். “ அது உன் இளையோன். உன் பெயருடன் என்றுமிருப்போன்” என்றாள் ரோகிணி.

துள்ளி எழுந்து பாயில் அமர்ந்து துயில்கையில் அன்னை தன் குடுமியில் கட்டிய மலர்மாலையை கையால் இழுத்து எடுத்து வீசி மீண்டும் வெண்மணிப்பற்கள் காட்டி கன்னக்குழி தெளிய நகைத்தான் கண்ணன். “என்னை நோக்கி நகைக்கிறான்!” என்று சொல்லி “அவனுக்கு என்னை எப்படித்தெரியும்?” என்றான் பலராமன். “உன் முகம் கொண்ட மூதாதையர் அவன் கனவில் வந்திருப்பார்கள்” என்றாள் ரோகிணி. கண்ணன் இரு கைகளையும் விரித்து “தா தா” என்று சிறுபுட்டம் துள்ள எம்பினான். “வா” என்று அவனை அள்ளி தோள் சேர்த்த பலராமன் “ஆ!” என்று அலறி விலகினான். சிரிக்கும் கண்ணனை நோக்கி கண்ணீருடன் “கடிக்கிறான்!” என்றான். அவன் வெண்தோளில் விழுந்திருந்த வடு நோக்கி சிரித்து “புலிக்குருளை பாதத் தடம்போலிருக்கிறதேடி” என்றாள் ரோகிணி

“அய்யோ அக்கா, இவனுக்குப் பல்முளைத்த பின்பு ஆயர்குடியிதில் இவன் பற்தடம் படியாத தோளே இல்லை. அவன் கள்ளச்சிரிப்புடன் கண் ஒளிர்ந்தாலே தோள்பொத்தி விலகிவிடவேண்டும்” என்றாள் யசோதை “இதோபார். உலக்கையை உரலடியை மரத்தட்டை முழக்கோலை. புலியாக புதல்வன் வரத் தவமிருந்தால் எலியாக வந்து வாய்த்திருக்கிறது” என்றாள் யசோதை. “இப்புவியையே கடித்துண்ண விழைகிறாயா? நீயென்ன ஊழிப்பெருநெருப்பா?” என்று குனிந்து கண்ணனின் கன்னத்தை தொட்டாள் ரோகிணி. “என்னடி இவன் ஏதோ தன்னகத்தே கரந்தவன் போல விழிக்கிறான்? மறைவேதம் நான்கையும் மடித்து உள்ளே மறைத்துக் கொண்டிருக்கிறானோ?”

“ஓட்டைப் பானை போல் ஒழுகிக்கொண்டிருப்பான். நானென்ன செய்வேன்? இது என் வீடு மணக்கும் பன்னீர் என்று மனம்கொண்டேன்” என்று கண்ணனைத் தூக்க துளி சொட்டி கால் உதைத்து அவன் அன்னை இடையில் அமர்ந்துகொண்டு தலைவாழைக் குலைபோல தொங்கி கைநீட்டி மூத்தோனை நோக்கி “தா தா” என்றான். “என்ன கேட்கிறான் இளையோன்?” என்றான் பலராமன். “தா தா என்று கேட்கிறான்... நான் எதைக்கொடுப்பது?” ரோகிணி நகைத்தபடி “உன்னை முழுதாகக் கேட்கிறான். எதையும் எஞ்சவிடாது கொடு” என்றாள். “யாரைப்பார்த்தாலும் அவன் கைநீட்டி கேட்கிறான். எதைக்கொடுத்தாலும் வாயில் வைத்துக் கடித்து தூக்கி வீசிவிடுவான்” என்றாள் யசோதை.

குனிந்து அவன் முகத்தை நோக்கி “குமிண்சிரிப்பு எதற்காக? எதைக் கருக்கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கிறாய்?” என்றாள் ரோகிணி. கைநீட்டி தழலென எம்பி எம்பிச் சிரித்தான் கண்ணன். “தா தா” என்றான். "தாதனல்ல மூடா, அவன் உன் அண்ணன். உன்னைப்போல் கரியநிறம் கொண்ட கள்வனல்ல. வெண்மை ஒளிரும் வேந்தன்” என்றாள் யசோதை. “சொல், வாய்மலர்ந்து சொல் என் முத்தே. அண்ணன் அண்ணன்.” கண்களில் ஒளியுடன் நோக்கி நகைத்து “த்தா” என்றான் கண்ணன். “எதைக்கேட்கிறான் இளையோன்?” என்றான் பலராமன். “கடிக்க தோள் கேட்கிறான், வேறென்ன?” என்று யசோதை நகைத்தாள்.

“என் செல்வனை என்னிடம் கொடு” என்று வாங்கி கையில் வைத்து “நீலச்சிறுதழல் போலிருக்கிறான். நிலத்தமையாது வானுக்கு எழுகிறான். மண்தொட்டவன் விண்தொட விழைகிறான்” என்றாள் ரோகிணி. “இருங்கள் அக்கா, இவனுக்கு பால் காய்ச்சி எடுக்கிறேன்” என்றாள். “பாலெனும் சொல் கேட்டதுமே துள்ளுகிறானே. இவனுக்கு உன் மொழி தெரியுமா?” என்றாள் ரோகிணி. “அவனுக்குத்தெரியாமல் இங்கு எவரும் எதையும் பேசிவிடமுடியாதென்று சொல்கின்றன அவன் விழிகள். மொழிபடியா மழலை என்கின்றன நம் விழிகள்” என்றாள் யசோதை.

பலராமன் ரோகிணியின் ஆடையை இழுத்து “அன்னையே, இளையோன் ஏன் இனிக்கிறான்?” என்றாள். அவள் திகைத்து “நீ என்ன அவனை கடித்துப்பார்த்தாயா?” என்றாள். வெட்கி விழித்தாழ்த்தி காலை ஆட்டி பலராமன் “அவன் மட்டும் என்னைக் கடிக்கவில்லையா?” என்றான். யசோதை நகைத்து “நானும்தான் என் அக்கார உருளையை அடிக்கடி கடித்துப்பார்ப்பதுண்டு” என்றாள். “ண்ணா” என்றான் கண்ணன். “அய்யோடி, இதென்ன அண்ணன் என்கிறான்?” என்று ரோகிணி கூவினாள். யசோதை திரும்பி “சொல்லிவிட்டானா? என் செல்லக்கரும்பே சொல் அண்ணா” என்றாள்.

கண்களில் கதிரவன் தொட்ட நீர்த்துளி என ஒளி மின்ன “ண்ணா ண்ணா” என்று யசோதையை நோக்கித் தாவினான் கண்ணன். “மூடா, நான் உன் அம்மா. இதோ இது அண்ணா. சொல், அண்ணா” உவகையால் ரோகிணியின் இடையில் துள்ளி காலாட்டி கைவீசி “ண்ணா ண்ணா” என்றான். “சொல் கண்ணல்ல, இதோ உன் அண்ணன்... சொல் அண்ணா” வெட்கி ரோகிணியின் தோளில் முகம் புதைத்து “ண்ணா” என்றான். “அய்யே அது உன் பெரியன்னை. அதோ அது உன் அண்ணா” என்றாள் யசோதை. பலராமன் அருகே வந்து அவன் காலைப்பிடித்து ஆட்டி “அண்ணன்... நான் உன் அண்ணன்” என்றான். எச்சில் பளிங்குச்சரடாக வழியும் ஊற்றுச்செவ்விதழை மலரச்செய்து சிரித்து கைநீட்டி குனிந்து துள்ளினான்.

“நாம் கேட்டால் அழைக்கவே மாட்டான், பழிகாரன். ஆயர்மகளிரிடம் இவன் என்னை அம்மா என்றழைக்கிறான் என்று சொல்லி கண்ணீர் மல்கினேன் அக்கா. அன்று முழுக்க ஆயிரம் முறை மன்றாடினேன். ஒரு முறைகூட சொல்ல மறுத்துவிட்டான். எப்படித்தான் இவனறிகிறானோ அன்னையைப் பழிவாங்கும் வழிமுறைகள்” என்று யசோதை சொன்னாள். “இளையோனை என் கையில் கொடுங்கள் அன்னையே” என்றான் பலராமன். “நீ அவனை கீழே போட்டுவிடுவாய். இதோ தரையில் விடுகிறேன். நீ அவனுடன் விளையாடு” என்றுரைத்தாள் ரோகிணி.

தரையிலிறங்கிய கணமே தவழ்ந்து விரைந்து சுவர்மூலையை அடைந்து அமர்ந்து திரும்பி பலராமனை நோக்கி நகைத்து “த்தா தா” என்றான். அண்ணன் அருகே வர வெண்கலக் கிண்ணத்தில் கரண்டிபடும் ஒலியுடன் நகைப்பு ஒலிக்க தவழ்ந்தோடினான். அவன் ஓடிச்சென்று பற்றியதும் அப்படியே தரையில் படுத்து புரண்டு கைகால்களை ஆட்டி சிரித்தான். “சிரிக்கிறான் இளையோன்” என்றான் பலராமன். “அவன் என்னைக் கடித்தால் நானும் கடிப்பேன்.”

சூடான பசும்பாலை வெள்ளிக்கிண்ணத்தில் எடுத்து கண்ணனருகே சென்று “பால்! பால்!” என்றாள் யசோதை. கைகளை காலாக்கி விரைந்தோடி அருகணைந்து அன்னை ஆடைபற்றி எழமுயன்றான். “எழுவதற்கு இடையையா முதலில் தூக்குவாய்? மூடா, உனக்கென மண்நெறிகள் மாறும். வான் நெறிகளுமா வளையும்?” என்று சிரித்தாள் ரோகிணி. யசோதை அவனைத் தூக்கி கையில் கிண்ணத்தைக் கொடுத்து கீழே பற்றிக்கொண்டாள்.”தா தா” என்று திரும்பி அவள் கையால் பிடிக்கக்கூடாதென்று உதறினான். சிந்திய பால் சிறுபண்டி வழியே வழிய இரு கைகளாலும் பற்றி மேலே தூக்கி அருந்தினான். கிண்ணத்தை ஒரு கையால் பற்றி ஆட்டியபடி பால்வழியும் வாயில் மேலண்ண வெண்பற்கள் மின்ன நகைத்தான்.

“ஆயிரம் பிறவியில் அறிந்ததுபோல் நகைக்கும் ஒரு குழந்தையை நான் அறிந்ததே இல்லையடி. கடலுக்கில்லை கண்ணேறென்று நெஞ்சமைகிறேன். என்றாலும் எளியவள் அகம் கனிந்து உன் கன்னம் தொட்டு நெட்டிமுறிக்கிறேன். கண்ணொளியே உடலாக ஒளிகொண்ட கண்மணியே, உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று ரோகிணி கண் நனைந்தாள். கிண்ணத்தை ஓசையெழ தூக்கி வீசிய கண்ணன் கால்களை உதைத்து இறக்கிவிடக்கோரினான். சறுக்கி அவன் இறங்க யசோதையின் ஆடையும் அவனுடனே சென்றது. “ஒருகையால் முந்தானை பற்றாமல் ஒருநாளும் இறங்கியதில்லை...” என்று சொல்லி அதைப்பிடுங்கி மார்பிலிட்டாள். தரையில் தவழ்ந்தோடி கிண்ணத்தை எடுத்து தலைமேல் ஆட்டி சிரித்தான். “கண்சிரிக்கும். வாய் சிரிக்கும். மைந்தர் முகம் சிரிக்கும். கண்டதே இல்லையடி, உடலே ஒரு சிரிப்பாவதை” என்று ரோகிணி உரைத்தாள்.

“முன்னரே வருவீர்கள் என்று எண்ணினேன் அக்கா” என்றாள் யசோதை. “செய்திகேட்ட நாள் முதலே செய்த தவம் இன்றே விளைந்தது யசோதை. நாடெங்கும் அலைகின்றனர் மதுரையின் ஒற்றர்கள். மதுவனத்து காடெங்கும் அவர்கள் காலடிகளைக் காண்கிறோம்” ரோகிணி சொன்னாள். “இன்றுதான் மதுராபுரியிலிருந்து செய்திவந்தது. விருஷ்ணிகளும் போஜர்களும் யாதவப்பெருங்குலங்கள் அனைத்தும் கொடிபிணைத்து கங்கணம் அணிந்து கம்சனுக்கு எதிராக அணிதிரண்டுள்ளன. கம்சனின் படைகள் இனிமேல் மதுராபுரிக்கு வெளியே கால்வைக்கமுடியாது. கேட்டதுமே கிளம்பிவிட்டேன்...” என்றவள் திரும்பி கண்ணனை நோக்கி “கணவனை கண்டநாள் குறைவு. என் தாயுடன் இருந்த நாளும் சிலவே. ஆனால் என் கருமணியைக் காணாது காத்திருந்த நாட்களையே நான் என்றென்றுமாக இழந்திருக்கிறேன்” என்றாள்.

“ண்ணா நா” என்ற குரல்கேட்டு யசோதை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். கிண்ணத்தை வலக்கையில் எடுத்து பலராமனுக்கு நீட்டியபடி இடக்கையை ஊன்றி தவழ்ந்துசென்றான் கண்ணன். “அழைத்துவிட்டானே!” என்று ரோகிணி வியக்க “சொல்லாதீர்கள் அக்கா. இக்கணமே மொழிமாறவும் கூடும்” என்றாள் யசோதை. “ண்ணா, ண்ணா” என்று சொல்லி கால்மடித்து அமர்ந்திருந்த பலராமன் தோள்தொட்டு எழுந்தான் கண்ணன். எழுந்தமர்ந்து எழுந்தமர்ந்து “ண்ணா ண்ணா” என்று சிரித்தான். “இனி சிலநாட்கள் கோழிக்குஞ்சுக்கு குரல்வந்ததுபோல் இவ்வொரு சொல்லைத்தான் எங்கும் கேட்போம்” என்று சொல்லி யசோதை நகைத்தாள்.

தன் தலைசூடிய மயிற்பீலியை பிய்த்து கையில் வைத்து ஆட்டி “ராதை!” என்றான். அதை அண்ணனை நோக்கி வீச தலைக்குமேல் கைதூக்கினான். பின்பக்கம் எழுந்து பறந்து சென்று விழுந்தது நீலம். அதை தொடர்ந்தோடிச் சென்று அள்ளிக்கசக்கி எடுத்து வாயில் வைத்து எச்சில் வழியக் கடித்து அன்னையை நோக்கி விழிதூக்கி நகைத்து நீட்டி “ராதை!” என்றான். “யாரடி அது ராதை?” என்று ரோகிணி கேட்டாள். “இவன்மீது பித்துகொண்டவள். பர்சானபுரியின் பெண்களில் ஒருத்தி” யசோதை சொன்னாள். “அவள் மாயம் தெரிந்தவள் யசோதை. அவன்மீது தன் விழிகளை எப்போதும் விட்டுச்சென்றிருக்கிறாளே” என்றாள் ரோகிணி.

“என் விழிகளைச் சொல்லி வியக்கிறாள் அன்னை ரோகிணி” என்றாள் ராதை. “எங்கே? எப்படி அறிந்தாய்?” என்றாள் லலிதை. “பிச்சி அறியாத பேச்சுண்டோ? அவள் தன் விழிகளை அங்கே விட்டுவந்திருக்கிறாள்” என்றாள் சம்பகலதை. “ஆம், கண்ணனை நான் காணாத கணமொன்றுள்ளதோ?” என்று ராதை சிரித்தாள்.

அதோ அவனைக்குனிந்து நோக்கி “மூத்தோனைக் கடிக்கலாகாது கண்ணா” என்கிறேன். சிரித்து “கடிக்கட்டும், அவன் தோள்களணியும் அணிகளடி அவை” என்கிறேன். “பாலருந்திய கிண்ணத்தின் மேலா அமர்வாய்? கண்ணா, அடிவாங்குவாய். இறங்கு” என்கிறேன். “அன்னம் கொடுக்கும் நாளேதடி?” என்று நான் கேட்க “நாள் நோக்கிச் சொல்ல நிமித்திகரை நாடவேண்டும்” அக்கா என்கிறேன்.

“விழிகளால் சூழ்ந்திருக்கிறேன். என் நெஞ்சத்தால் அவன் மேல் கவிந்திருக்கிறேன்” என்றாள் ராதை. “கண்ணனாகி என்னை கைகளில் வைத்திருக்கிறது காலம். என் பிரேமையாகி அவன் முன் சென்று நிற்கிறது ஞாலம்.” விழிவெறிக்க பித்தில் முகம் வெம்மை கொள்ள “கண்ணனை என் நெற்றிச்சுட்டியாக அணிந்துள்ளேன். என் புன்னகைமேல் ஆடும் புல்லாக்கு அவனே. பேசப்பேச பித்தெழுந்து என் விழிகளுடன் சேர்ந்து துள்ளும் காதணியும் அவனே. என் முலைசூடிய மணிமாலை. ஆலிலைப் பொன் அரைஞாண். என் கைவளைகள் மோதிரங்கள். அடி, என் காலணிந்த சிலம்பும் பாதமணிந்த புழுதியும் அவனேயல்லவா?”“ என்றாள்.

கன்னியரின் கருங்குழல் பின்னலென வண்ண மலர்சுமர்ந்து மூன்று ஒழுக்குகள் முந்திப்பிணைந்து கரிய ஒளிஎழுந்து காளிந்தி ஒழுகியது. கீழ்த்திசையில் எழுந்த கருமேகம் நதி எடுத்த நச்சுப் படம்போல நின்றது “முகிலெழுந்து குளிர்கிறது. மாமழை மணக்கிறது” என்றாள் லலிதை. “அதோ நீலமயிலொன்று தோகை விரித்தாடுகிறது” என்றாள் சம்பகலதை. “அதோ இன்னொரு மயில். அதோ” என்று கைசுட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெதெழுந்தன ஆயிரமாயிரம் பீலிவிழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீலப்பார்வைகள்.

பகுதி ஐந்து: 2. நறுவெண்ணை

மின்னற் கனவுகள் மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்த மேகக்கருவானை நோக்கியபடி ஆயர்குடியின் சாணிமெழுகிய திண்ணையில் அமர்ந்து மடிக்குழியில் இளையோனும் தோள்சாய்ந்து மூத்தோனும் அமர்ந்திருக்க ரோகிணி கதைசொன்னாள். அவள் முந்தானை முனையை விரலில் சுழற்றி வாய்க்குள் வைத்து கால்நீட்டி கண் பிரமித்து வான் நோக்கி அமர்ந்திருந்தான் கரியோன். குளிர்காற்றில் அவன் குஞ்சிமயிர் அசைய மெல்லுடல் புல்லரித்து புள்ளி கொள்ள கட்டைவிரல் சுழித்து கால்களை நெளித்துக்கொண்டான். தோள்வெம்மைக்கு ஒட்டிக்கொண்ட வெண்ணிறத்தான் அவள் கைகளுக்குள் கைநுழைத்து இறுக்கிக்கொண்டான்.

“முதற்பெரும்பொருளாக அமைந்தது முற்றிருளே என்பர் நூலறிந்தோர்” என்றாள் ரோகிணி. “அன்னையே, அது என்ன?” என்று பலராமன் கேட்டான். அகவிரைவெழுந்து திரும்பி எச்சில்நனைத்த சுட்டுவிரல் தூக்கி நீலவிரிவிழிகள் விரித்து ஈரமலர்ச்செவ்வுதடுகள் சுழித்து “அது அது அது” என்றான் கண்ணன். பிறகு திரும்பி வானைநோக்கிச் சுட்டி அவர்கள்மேல் எழுந்த கருமேகக்குவை நோக்கி “பசு!” என்றான். “அய்யோ, என் கண்ணே” என்று கூவி அவனை அள்ளி தன்னோடணைத்து இறுக்கி “ஆமாம், அது ஒரு பெரும்பசுவேதான். அய்யோ, இதற்குமேல் என்ன சொல்வேன்?” என்று சிரித்தாள் ரோகிணி. வெட்கி விழிதாழ்த்தி உடல்வளைத்தான் நீலமணி நிறத்தான்.

“பசுவா அன்னையே?” என்றான் பலராமன். “ஆம், அது ஒரு மிகப்பெரிய பசு. கன்னங்கரிய நிறமுடையது. அந்தப்பசுவுக்கு அன்னை இல்லை. அதுவாழ தொழுவும் இல்லை. அது நிற்க மண்ணோ அது உண்ண புல்லோ அது நீராட நதியோ ஏதும் இல்லை.” கண்ணன் கட்டை விரல்கள் விலகி நிற்க கைகளை விரித்து “இல்லை!” என்றான். துடிப்புடன் திரும்பி அவள் தாடையைத் தொட்டு திருப்பி “அம்மா அம்மா அம்மா” என்று திக்கி மீண்டும் கைவிரித்து “இல்லை!” என்றான். “ஆமாம் கண்ணே, ஒன்றுமே இல்லை. அந்தப்பசு மட்டுமே அங்கே நின்றிருந்தது” என்றாள் ரோகிணி.

“அன்னை இல்லையேல் அது எப்படிப்பிறந்தது?” என்று பலராமன் கனத்த தலையை சற்றே சாய்த்து கேட்டான். “இருளில் முதலில் அதன் கருவிழி ஒன்று மட்டும் ஒளிகொண்டு தோன்றியது. அந்தக்கருவிழித் துளியைச் சுற்றி அந்தக்கரியபசு உருவாகி வந்தது” என்றாள் ரோகிணி. “ஆம், நான் பார்த்தேன். இருளில் பசுவின் கண்கள் மட்டும்தான் ஒளியுடன் தெரியும்” என்ற பலராமன் “அன்னையே, நம் கரியவன் நேற்றுமாலை உள்ளறை இருட்டுக்குள் சென்றபோது பார்த்தேன். இவனும் பசுவின் கண்கள் போல தெரிகிறான்” என்றான். “அதனால்தானே அவன் கண்ணன்” என்று அவனை வளைத்துக்கொண்டாள் ரோகிணி. அவன் தன் சிறுபண்டியில் இரு கைகளாலும் தட்டி “கண்ணன்!” என்றான். மேலும் சற்று சிந்தித்து ஆதுரத்துடன் “கண்ணன், பாவம்” என்றான்.

பலராமன் வாய்பொத்திச்சிரித்து தணிந்த குரலில் “அவன் நல்ல குழந்தை என்று அவனே சொல்லிக்கொள்கிறான்” என்றான். “என் செல்லம் நல்ல குழந்தைதானே?” என்றாள் ரோகிணி. “நல்லகுழந்தை எங்காவது கோதுமை மாவில் சிறுநீர் கழிக்குமா?” பலராமன் கோபத்துடன் கேட்டான். “அவன் தெரியாமல் செய்திருப்பான்” என்று ரோகிணி சொல்ல “தெரிந்தேதான் செய்கிறான் அன்னையே. கையால் பிடித்து நீட்டி சிறுநீர் பெய்தபின் என்னைப்பார்த்து சிரித்தான். இளையஅன்னை ஓடிவந்தபோது என்னை சுட்டிக்காட்டி அண்ணா அண்ணா என்று சொல்லி நான் அதைச்செய்தேன் என்று சொல்கிறான்.”

ரோகிணி குனிந்து கண்ணனை நோக்கி “அப்படியா சொன்னாய் திருடா?” என்றாள். அவன் தன் வயிற்றைத் தொட்டு நோயுற்றவன் போல நொய்ந்த முகம் காட்டி “கண்ணன் பாவம்!” என்றான். அவள் சிரித்து அவன் தலையைப்பிடித்து ஆட்டி “பேசுவதெல்லாம் புரிகிறது. கண்ணைப்பார்த்தாலே தெரிகிறதே கள்ளமெல்லாம்” என்றாள். பலராமன் அவள் தோளைப்பற்றி அசைத்து “அந்தப்பசு என்ன செய்தது?” என்றான். “அந்தப்பசு அங்கேயே நின்றிருந்தது. அதை யாருமே பார்க்கவில்லை. ஆகவே அதற்கு நிறமே இல்லை. அதனால்தான் அது கருமையாக இருந்தது. அதன் குரலை யாருமே கேட்கவில்லை. ஆகவே அது ஊமையாக இருந்தது.”

கண்ணன் அவள் கன்னங்களை எச்சில் சிறுகையால் பற்றித்திருப்பி “பசு பசு பசு பாவம்” என்றான். பலராமன் “பிறகு?” என்றான். “தான் மட்டும் தனித்திருந்து அந்தப்பசுவுக்கு சலித்தது. ஆகவே அது தன்னைப்போல ஒரு குட்டியைப்போட்டது. கன்னங்கரிய கன்று. கண்கள் ஒளிவிடும் காளைக்குழவி.” பலராமன் நகைத்து “அந்தக் கன்று என்ன செய்தது?” என்றான். “அது அந்தப்பசுவை அம்மா என்றழைத்தது. ஆகவே அந்தப்பெரும்பசு அம்மாவாக மாறியது. குட்டி அம்மா அம்மா என்று கூப்பிட அன்னை அதை கண்கனிந்து நா நீட்டி நக்கியது.”

கண்ணன் சுட்டுவிரலைத் தூக்கி தீவிரம் நிறைந்த முகத்துடன் “அம்மா!” என்றபின் திரும்பி வீட்டுக்குள் பார்த்து உடலில் கூடிய துடிப்புடன் பாய்ந்து எழுந்து ஓடப்போனான். “எங்கே போகிறாய்? ஒரு கணம் அமராதே. என்னவோ இவனே ஈரேழுலகும் இயற்றி இயக்குவதுபோல ஒரு நினைப்பு... அமர்கிறாயா இல்லையா? அசையக்கூடாது” என்று அவன் புட்டத்தில் அடித்து திருப்பி இழுத்து அமரச்செய்தாள் ரோகிணி. “அம்மா என்றதுமே தின்பதற்கு நினைவு வந்து எழுந்து போகிறான்” என்றான் பலராமன். உடனே குரல் தாழ்த்தி “அம்மா, எனக்கு அப்பம்?” என்றான். "கதைதானே கேட்கிறாய்? நடுவே எதற்கு நாநீளம்? நீ முதலில் ஒழுங்காக இரு” என்றாள் ரோகிணி.

“அந்த அன்னைப்பசுவின் நாக்கு ஒளிமிக்கது. அதைத்தான் நாம் மின்னல்களாகப் பார்க்கிறோம். சிறுகுட்டியை அது நக்கி நக்கி ஒளிவிடச்செய்கிறது” என்றாள் ரோகிணி. “அந்தக்குட்டி அன்னையின் கால்நடுவே சென்று அகிடைத் தேடிக்கண்டடைந்து வாயால் கவ்வி முட்டிமுட்டி பால் குடித்தது.” பலராமன் ஊறிய வாயை விழுங்கி “இனிய பாலா?” என்றான். “சீ, ஆயர்குடிபிறந்தாய், வெண்ணைக்கட்டி போலிருக்கிறாய், உனக்கென்ன பாலே சலிக்காதா?” என்று அவனை மெல்ல அடித்தாள் ரோகிணி.

அன்னை தமையனை அடிப்பதைக் கண்டதும் கன்ணன் தன் வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றபின் விழிசரித்து ஆழ்ந்து சிந்தித்து எடைகொண்ட எண்ணங்களை முழுவிசையாலும் முன்னகரச்செய்து அவ்வெதிர்விசையில் உடல் சற்று கோணலாக உறைந்து இருகணங்கள் கழித்து மீண்டு “கண்ணன், பால், சீச்சீ” என்றான். பிறகு எழுந்து வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றான் “அய்யோ, நீயேதான் சொல்லிக்கொள்ள வேண்டும்... ஆயர்பாடியில் உன்னைப்பற்றி ஒரு நல்ல வார்த்தை காதில் விழவில்லை” என்றாள் ரோகிணி. “நீ விளையாடியதைச் சரிசெய்வதே ஆயர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.”

“அன்னையே, அந்தப்பால் எங்கே?” என்றான் பலராமன். “அந்தப்பால் மிகமிக வெண்மையானது. கரிய கன்றின் வாயிலிருந்து வழிந்து அது வானம் முழுக்க நிறைந்தது. நாம் கீழே இருந்து பார்க்கும்போது வெண்ணிறமான வெயிலாக அது தெரிகிறது. இரவில் அது நிலவொளியாக வழிகிறது” என்றாள் ரோகிணி. “முன்பொருகாலத்தில் ஆயர்குலத்து அன்னை ஒருத்தி அந்தப் பாலை அதிகாலையில் ஒரு கலத்தில் அள்ளிவிட்டாள். அந்தக்கலம் நிலவுருளை போல ஒளிவிட்டது. அதை கைதொட்டு எடுத்த அவள் உடலும் ஒளிவிட்டது. அவள் சென்ற வழியும் அவள் உடல்தீண்டிய புற்களும் இலைகளும் எல்லாம் ஒளியாயின. அவள் உடல் ஒளியால் வெம்மைகொண்டது.”

பலராமன் "உம்" என்றான். கண்ணன் இருகைகளாலும் முந்தானைச்சுருளை வாய்க்குள் செலுத்திக்கொண்டான். அது ஊறி அவன் மார்பில் எச்சில் வழிந்தது. “தன் இல்லத்து உள்ளறைக்குள் கொண்டுவைத்து அந்தப்பாலை அவள் தயிராக்கினாள். வெம்மை இழந்து உறைந்த தயிரை அவள் மத்தெடுத்துக் கடைந்தாள். அவள் வழித்தெடுத்த வெண்ணை வெண்ணிறவைரம் போலிருந்தது. வெண்பனிபோலக் குளிர் கொண்டிருந்தது.” மிகத்தாழ்ந்த குரலில் “அது இனிக்குமா அன்னையே?” என்றான் பலராமன். “அறைவேன் உன்னை. வேறு நினைப்பே இல்லையா?” என்றாள் ரோகிணி. கண்ணன் “உம்” என்றான்.

“அய்யோ என் கருமுத்தே, கதைகேட்கிறாயா நீயும்?” என்று அவனைக் குனிந்து முத்தமிட்டு ரோகிணி சொன்னாள் ”அந்த வெண்ணை அவள் உறியிலேயே இருந்தது. அவள் அதை அஞ்சினாள். ஆகவே எவரிடமும் அதைச் சொல்லவுமில்லை. ஒருமுறையேனும் அதைத் திறந்து அவள் நோக்கவுமில்லை. அது அங்கிருப்பதை மட்டும் அறிந்திருந்தாள். அதை மட்டும் நினைப்பாகக் கொண்டிருந்தாள்.” “அதை பூனை தின்றுவிட்டதா?” என்று பலராமன் கேட்டான். “பூனையால் அதைத் தொடமுடியுமா? அது வெண்வைரம் அல்லவா?” என்றாள் ரோகிணி. “உறிக்குள் உறைந்திருந்த அது வெளியே நிகழும் அனைத்தையும் அறிந்திருந்தது. சிறுவெயிலிலும் தனக்குள் உருகியது. குளிரில் உறைந்து கல்லாகியது.”

“பிறகு?” என்று பலராமன் அவள் கைகளைப் பிடித்தான். “ஒருநாள் அவர்களின் ஆயர்பாடியில் வெயில் ஏறி ஏறிச் சென்றது. நாய்களெல்லாம் நாக்குகளை நீட்டின. பசுக்களெல்லாம் தலைதாழ்த்தி கண்ணீர் வடித்தன. வெயிலுக்கு அஞ்சி ஆயர்முதுமகள் தன் இல்லத்தில் தனித்திருந்தாள். அவள் அன்னைக்கரும்பசுவையும் அதன் காரான் குட்டியையும் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் உறிக்குள் வெண்ணை உருகி நெகிழ்ந்தது. நெய்யாகி மணத்தது. மணம் அறிந்து வியந்து அவள் எழுந்து நோக்கியபோது இருளறைக்குள் தொங்கிய உறிப்பானைக்குள் அந்த நெய் செந்நெருப்பாக தழல்விட்டு எரிந்ததைக் கண்டாள்.”

“பிறகு?” என்றான் பலராமன். “அந்த நெருப்பில் எரிதேவன் எழுந்துவந்தான். அவளை கைப்பற்றி விண்ணகம் கொண்டுசென்றான். விண்ணில் ஒரு செம்மேகத்தீற்றலாக மாறி அவள் விரிந்துசென்றாள். வானாளும் கதிரவனைக் கண்டாள். பின்னர் கிழக்குமுதல் மேற்குவரை நிறைந்திருக்கும் ஆதித்யர்களின் முடிவிலியைக் கண்டாள். அவர்களை தன் ஆடையின் வைரங்களாக அணிந்து விரிந்து கிடக்கும் இருள்வடிவைக் கண்டு அதில் கலந்து மறைந்தாள்” என்றாள் ரோகிணி. “அவள் நம் மூதன்னை. அவள் பெயர் ராதை.”

“ராதை!” என்று சொல்லி கண்ணன் தன் தலையில் சூடிய மயிற்பீலியை தொட்டான். “ராதை!” என்று கண்களில் சிரிப்பின் ஒளியுடன் சொல்லி எழுந்து தலைக்குமேல் கை தூக்கி “ராதை!” என்றான். “பர்சானபுரியிலிருந்து வருபவள் பெயர் ராதை தானே?” என்றான் பலராமன். “மூதன்னை பெயர்தான் அவளுக்கும். அவளும் ஒருநாள் நம் மூதன்னையாவாள்” என்றாள் ரோகிணி. “ராதை!” என்று சொல்லி இருகைகளையும் விரித்து “ராதை! ராதை அங்கே...” என்று கண்ணன் சொன்னான். உடனே நினைத்துக்கொண்டவன் போல முற்றத்தில் பாய்ந்திறங்கி தவழ்ந்தோடத் தொடங்கினான்.

“பிடி பிடி அவனை... எங்கே செல்கிறான்? பர்சானபுரிக்கே ஓடிவிடுவான் போலிருக்கிறதே” என்றாள் ரோகிணி. பலராமன் ஓடிச்சென்று அவனைப் பற்றி இழுக்க அவன் தரையில் அமர்ந்து கால்களை புழுதியில் உதைத்து “ராதை! ராதை போவேன்... கண்ணன் ராதை போவேன்!” என்று கதறி அழத்தொடங்கினான். “இழுக்காதே” என்று சொல்லி ஓடிவந்த ரோகிணி அவனை அள்ளித்தூக்கி இடையமர்த்தி “ராதைதானே, இதோ வந்து விடுவாள்... இதோ வந்துவிட்டாளே. ராதை ஓடிவா... ஓடிவா” என்றாள். கால்களை உதறி “ராதை. ராதை... கண்னன் ராதை போ” என்று சொல்லி அவன் கண்ணீர் துளிகள் சிறுதொந்தியில் சொட்ட வாய்திறந்து அழுதான்.

அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ரோகிணி “யசோதை, இவனை வளர்க்கும் பொறுமை இருந்தால் கிஷ்கிந்தையை கட்டியாளலாம். கழுவிவிடுகிறேன். வெந்நீர் இருக்கிறதா?” என்றாள். “நான் கழுவுவதே இல்லை... இவன் அழுக்கை கழுவ யமுனை போதாது” என்றாள் சமைத்துக்கொண்டிருந்த யசோதை. நீர்க்கலம் அருகே சென்றதும் கண்ணன் கைநீட்டி தொங்கி “கண்ணன்... நீர்” என்று துள்ளத் தொடங்கினான். அவனை இறக்கி விட்டதும் செம்பை நோக்கி கை நீட்டி “நான். நான்” என்று துள்ளினான். அவள் செம்பை அளிக்க அதை இரு கைகளாலும் பற்றி நீரை அள்ளி தன் வயிற்றில் ஊற்றிக்கொண்டு “கண்ணன், நீர்” என்றான்.

“பானைநீரை முழுதாக விட்டபிறகுதான் வருவான்... நான் எத்தனைகுடம் நீர்தான் அள்ளிவருவேன்!” என்றாள் யசோதை. இருவரையும் குளிப்பாட்டி துடைத்து கொண்டுவந்து உள்ளறையில் விட்டு “மழைவரப்போகிறது பலராமா. நீயும் இளையோனும் இல்லத்துக்குள் விளையாடுங்கள்” என்றாள் ரோகிணி. “கண்ணன் பாவம்” என்றான் கண்ணன். அதைக்கேட்டபோதே ரோகிணிக்கு எங்கோ பிழையொன்று தெரிந்தது. அவள் சமையலறைக்குள் வந்து யசோதைக்கு உதவிசெய்யத் தொடங்கியபோதே பேரோசையுடன் ஏதேதோ நிலத்தில் விழுந்தன. அழுகையொலியும் கூச்சலும் எழுந்தது.

அவர்களிருவரும் ஓடிச்சென்று உள்ளறையை நோக்கி திகைத்து நின்றனர். வெண்ணைப்பானை அடுக்குகளுடன் உறி அறுந்து தரையில் விழுந்து உடைந்து பரவியிருந்தது. அதிலமர்ந்து அழுதுகொண்டிருந்த கண்ணன் அன்னையைக் கண்டதும் கைநீட்டி எழுந்து கால்வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து மீண்டும் விழுந்து புரண்டு எழமுயன்று உருண்டு வழுக்கி கைகால்கள் நழுவி வெண்ணையில் நீச்சலிட்டான். யசோதை சிரித்து வாய்பொத்தி உடல் நடுங்க ரோகிணி முகத்தில் வெண்ணைத்திவலை வழிய நின்ற பலராமனிடம் “என்ன செய்தாய்? எப்படி நிகழ்ந்தது?” என்று கை ஓங்கிச்சென்றாள்.

“அவன்தான் வெண்ணை வெண்ணை என்று உறியருகே கொண்டு சென்றான். அவன் சுட்டிக்காட்டியதனால்தான் நான் தூக்கினேன்” என்று பலராமன் சுவரோடு சேர்ந்து நின்று நடுங்கிச் சொன்னான். “கால்திருந்தா குழந்தை அவன். அவனையா நீ ஏற்றிவிட்டாய்? மூடா” என்று அவனை அடித்தாள் ரோகிணி. “அக்கா, அவன் மேல் பிழையில்லை. இங்கு நிகழும் எல்லாபிழைக்கும் இவனே ஆதாரம். சாளரம் வழியாகவே ஏறிச்சென்றிருக்கிறான் ஒருமுறை” என்று சொல்லி கண்ணனை அள்ளிய யசோதை கால்வழுக்கி தானும் விழுந்தாள்.

“அய்யோ” என்று ரோகிணியும் நகைக்க பலராமன் வாய்பொத்தி நகைத்து சுவர்நோக்கி திரும்பிக்கொண்டான். அன்னை விழுந்ததை கண்ணன் திகைத்து நோக்க “அக்கா, முதலில் இந்தக் கரியோனை தூக்குங்கள். நான் சுவர் பற்றி எழுகிறேன்” என்றாள் யசோதை. “அவன் வெண்ணைச்சகதியில் என்னையும் இழுத்துவிடுவான் போலிருக்கிறதே” என்றபடி சுவர் பற்றிச்சென்று கரிய கையைப்பிடித்து இழுத்தாள் ரோகிணி. “பற்றப்பற்ற வழுக்கிச்செல்கிறான். இவனைப் பற்றி நிறுத்தும் கை எங்கும் இல்லையடி” என்றாள். யசோதை எழுந்து அவனைத் தூக்கி எடுக்க கையிலிருந்து வழுக்கி உருவி நிலத்தில் விழுந்து எழமுயன்று மீண்டும் சறுக்கி மீண்டும் எழுந்து மீண்டும் சறுக்கினான்.

“இளையோனை அப்படியே இழுத்துச்செல்லலாம், எளிது” என்று சுவர் அருகே நின்று பலராமன் ஆலோசனை சொன்னான். “சீ, வாய் மூடு, உன்னால்தான் எல்லாம். இத்தனை வெண்ணையை எவர் வந்து துடைப்பது? நினைக்கவே இடுப்பு வலிக்கிறது” என்றாள் ரோகிணி. “நாயை கூட்டிவந்தால் நக்காதா?” என்று பலராமன் கேட்டான். யசோதை நகைத்து “ஆகா, செய்வதையும் செய்துவிட்டு அதை சரிசெய்யவும் சிந்திக்கும் பிள்ளைகள் எங்குள்ளனர்?” என்றபடி கண்ணனை தன் முந்தானைத் துணியில் சுற்றி பிடித்து கொண்டுசென்றாள். கால்களை உதறி “ண்ணை ண்ணை” என்று கதறிக்கொண்டே அவன் சென்றான்.

முற்றத்து மண்ணை அள்ளிக்கொண்டு வந்து வெண்ணைமேல் கொட்டி விரித்து உடைந்தகலங்களுடன் அதை அள்ளி கூடையில் எடுத்துக்கொண்டாள் ரோகிணி. “அன்னையே, கூடையை நான் எடுத்துவரவா?” என்றான் பலராமன். “என் கையருகே வந்தால் உன் கன்னத்தை கிழித்துவிடுவேன். சென்று குளித்துவிட்டு வா” என்று சீறி அவள் கூடையைத் தூக்கினாள். “அவன்தான் அன்னையே என்னை வெண்ணை நோக்கி கூட்டிச்சென்றான். தூக்கிவிட்டால் எடுத்துத் தருவதாகச் சொன்னான். அன்னை அறியாமல் தின்றுவிடலாம், அதில் பிழையே இல்லை என்றான்.”

சினந்து திரும்பிய ரோகிணி “யார், மொழிமுளைக்காத சிறியவனா? அவனா உன்னிடம் சொன்னான்?” என்றாள். பலராமன் குழம்பி பின்னடைந்து “அவன்தான் சொன்னான்... உண்மை அன்னையே, அவனே சொன்னான்” என்றான். ரோகிணி சினத்தை அடக்கி “எப்படிச் சொன்னான்?” என்றாள். “வாயால் சொல்லவில்லை.” ரோகிணி கண்களைச் சுருக்கி “பிறகு எப்படிச் சொன்னான்?” என்றாள். பலராமன் மேலும் குழம்பி தலைகுனிந்து “சொன்னான்” என்றான். “நீ பொய்யுரைத்து மீள நினைக்கிறாய்” என்றாள் ரோகிணி. “இல்லை அன்னையே, அவனால் என்னிடம் பேசமுடிகிறது” என்று சொன்ன பலராமன் சட்டென்று கண்களில் கண்ணீருடன் தொண்டை அடைக்க “அவன் பேசுகிறான்” என்றான்.

ரோகிணி அவன் தலையைத் தொட்டு “சரி, அவன் உன் இளையோன். உன் உதிரம். அவன் பேசுவதை நீ கேட்கலாம்... அதிலென்ன?” என்றபின் வெளியே சென்றாள். அவள் வெண்ணையை அள்ளி முடிக்கவும் கால்கள் துள்ளும் கண்ணனை துணியால் சுற்றி தூக்கிக்கொண்டு வந்தாள் யசோதை. “இதை விட கன்றுக்குட்டிக்கு மூக்குக் கயிறு போடுவது எளிது... மூன்று கலங்கள் உடைந்துவிட்டன. இனி இந்த இல்லத்தில் கல்லால் ஆன கலங்கள்தான் வேண்டும்” என்றாள். “கல்லால் ஆன தொட்டிகள்தானே உள்ளன?” என்று பலராமன் ஐயம் கேட்டான். அதேகணம் அவள் கையில் இருந்து வழுக்கி உருவி கண்ணன் கீழே விழுந்தான்.

“மாவிட்டு கழுவிவிட்டிருக்கவேண்டும் நீ” என்றாள் ரோகிணி. “அத்தனை குளியல்பொடியையும் போட்டேன் அக்கா. போதாதென்று சமையலுக்கு வைத்திருந்த பருப்புப்பொடியையும் போட்டேன். எத்தனை வெண்ணையைத்தான் வழித்தெடுப்பது?” என்று சொன்ன யசோதை “அங்கேயே கிடக்கட்டும். தூக்கி வைத்து என்ன செய்ய?” என்று உள்ளே சென்றாள். கண்ணன் எழுந்து அமர்ந்து தன் குறியை பற்றி இழுத்து நீட்டி சிரித்து “ராதை!” என்றான். “அய்யே!” என்று பலராமன் வாயைப் பொத்தி நகைத்தான்.

ரோகிணி வந்து அவனை அள்ளி எடுத்து கைகளில் இறுக்கி “ராமா, இவனுக்கொரு ஆடை கொண்டுவா” என்றாள். அவன் முகத்தை தன் முகத்துடன் சேர்த்து “குழம்பிலிட்ட காய் போல மணக்கிறாயே. எதற்கு வெண்ணையை எடுத்தாய்? உனக்கு வெண்ணை வேண்டுமென்றால் அன்னை அளிக்கமாட்டேனா?” என்றாள். “உள்ளுருகும் வெண்ணையெல்லாம் எனக்கல்லவா?” என்றான் கண்ணன். அவள் திகைத்து அவனை நோக்கி “நீயா சொன்னாய்?” என்றாள். அவன் பேதை விழி மலர்ந்து எச்சில் குழாய் மார்பில் வழிய உதடுகளை வளைத்து வயிற்றைத் தொட்டு “கண்ணன், பாவம்” என்றான்.

பகுதி ஐந்து: 3. வேய்குழல்

இரவு மழை ஓயாத அழைப்பு. மன்றாடல். மறுக்கப்பட்ட பேரன்பின் சினம். மூடப்பட்ட அனைத்தையும் முட்டிமுட்டி கொந்தளிக்கிறது. இடைவெளிகளில் கசிகிறது. ஓலமிட்டு ஓய்ந்து சொட்டி அமைகிறது. ஒற்றைச்சொல் என ஒலித்து ஒலித்து அமைதிகொள்ளும்போது மீண்டும் எங்கிருந்தோ ஆற்றாமல் பொங்கி வருகிறது. மேலும் வெறியுடன் வந்து முழுதுடலாலும் மோதுகிறது. இரவுமழையை இல்லத்து இருளுக்குள் போர்வைக்குள் ஒடுங்கி கேட்டிருப்பவர்கள் இரக்கமற்றவர்கள்.

ராதை மெல்லஎழுந்து பட்டுநீர்த்துளிகள் பரவிய சாணித்தரையை மெல்ல மிதித்து கதவைத் திறந்தாள். குளிர்ப்பெருங்கரத்தால் அவளை அள்ளி எடுத்து நெஞ்சோடணைத்து சுழன்று கூத்திட்டு கூவி ஆர்த்து கொப்பளித்தது பெருமழை. பற்கள் ஒளிவிட்டெழ இடித்து சிரித்தது வானம். நீரில் முடிவிலாது கரைந்துகொண்டே இருந்தாள். தோல் குளிர்ந்து தசை குளிர்ந்து குருதி குளிர்ந்து இதயம் குளிர்ந்து எண்ணங்களும் குளிர்ந்தபோது அறிந்தாள் கனன்று கனன்று உள்ளிருக்கும் வெம்மையை. இரு கைகளையும் நீட்டி “கனசியாமா! ககனக் காரிருளே! கண்ணா!” என்று கூவினாள். பின்னர் இருளுக்குள் சிலம்பொலிக்க ஓடத்தொடங்கினாள்.

மழை அவளை கொண்டு சென்றது. கோகுலத்தின் எல்லையில் அவளை அறிந்த நாய்கள் நீர்த்திரைக்கு அப்பால் குரலெழுப்பி முனகின. நந்தனின் இல்லத்தில் அவள் வாசமறிந்த பசுக்கள் இரண்டு ஓங்கி குரலெழுப்பின. மழை அறைந்துகொண்டிருந்த காட்டுமரப்பலகைக் கதவருகே அவள் நின்றாள். சிறுகுடில் புற்கூரையை, மண்பூசிய சுவர்களை, விரிசலிட்ட பலகைக்கதவை, சாணி மெழுகிய திண்ணையை அலையலையாக எழுந்து எழுந்து சுழன்று அறைந்தாள். கூந்தல் சுழற்றி கூவி ஆர்ப்பரித்து ஆடிக்கொண்டு அங்கே அசைவின்றி நின்றாள். அத்தனை இடைவெளிகள் வழியாகவும் அவள் அந்த ஆயர்சிறுகுடிக்குள் நுழைந்தாள். அன்னை முலைச்சூட்டில் உருகியதுபோல் ஒட்டிக்கிடந்த நீலமேகத் துளியை துளிப்பிசிறாக குளிராக நீரோசையாக தழுவிக்கொண்டாள்.

காலையில் வாயில் திறந்த ரோகிணிதான் அவளைக் கண்டு திகைத்து “என்னடி இது? நீ பர்சானபுரியின் ராதை அல்லவா?” என்றாள். கூந்தல் நுனி சொட்ட உடலொட்டிய ஆடையுடன் நீலமோடிய நரம்புகள் தெரிய பாளைமெருகு கொண்ட புத்துடல் மிளிர வாயில்படியில் அமர்ந்திருந்த அவள் தலைதூக்கி பித்தெழுந்த விழிகளால் யாரிவளென்பது போல நோக்கினாள். “அய்யோ, யசோதா, இங்கு வந்து பார் இவளை” என்றபடி உள்ளே ஓடினாள் ரோகிணி. அவள் குரல் கேட்டுவந்த யசோதை புன்னகைத்து “அவள் ராதை. அவள் அறிந்தது ஒன்றே” என்றாள்.

உள்ளே நுழைந்து துயில்கொண்டிருந்த கண்ணனை மரவுரிப்படுக்கைவிட்டு தூக்கி ஈரமுலைமேல் அணைத்துக்கொண்டாள். கண்விழிக்காமலேயே அவன் “ராதை” என்று புன்னகைத்தான். “எப்படித்தெரிகிறது அவனுக்கு?” என்றாள் ரோகிணி. “அவள் மணமும் கையும் அவனறிந்தவை” என்றாள் யசோதை. கண்ணனைத் தூக்கி மடியமர்த்தி அவன் மென்மயிர் குஞ்சியை முகர்ந்து விழிசரித்தாள் ராதை. “அவள் இங்கில்லை அக்கா. அவள் இருக்கும் இடத்தில் அவனிருக்கிறான்” யசோதை சொன்னாள். “ஏடி பெண்ணே, உலராடை அளிக்கிறேன். ஈரக்கூந்தல் துவட்டி உடைமாற்றிக்கொள். அவன் உடலை ஈரமாக்காதே” என்றாள்.

அவள் ஈர உடை மாற்றிக் கொள்கையில் ரோகிணி மெல்ல “எனக்கு இவள்மேல் போல் ஒரு பொறாமை எப்போதும் எவர்மேலும் வந்ததில்லையடி” என்றாள். யசோதை புன்னகை செய்து “இலையில்லாமல் கிளைமுழுக்க பூக்கும் யோகம் காட்டில் சில மரங்களுக்கே” என்றாள். கண்ணன் கண்விழித்து “ராதை! ராதை! ராதை” என்று சொல்லும் ஒலி கேட்டது. அவனுக்கான பாலுடன் வெளியே சென்ற ரோகிணி ராதையின் காலில் நின்று எழுந்தமர்ந்து “ராதை ராதை” என சொல்லிக்கொண்டிருந்த கண்ணனைக் கண்டு “ஏற்றமிறைக்கிறானா என்ன?” என்றாள். யசோதை பின்னால் ராதைக்கான பால்கஞ்சியுடன் வந்து “கடலை இறைக்கிறான் மூடன்” என்றாள்.

கஞ்சியை அருந்தியதும் கரிய மைந்தனை கையில் எடுத்துக்கொண்டு ராதை கிளம்பினாள். பலராமன் அவள் பின்னால் ஓடியபடி “ராதை, நான் நேற்று வெண்ணையை...” என்று பேசிக்கொண்டு சென்றான். “எங்குசெல்கிறாயடி?” என்று ரோகிணி கேட்டது அவள் காதிலேயே விழவில்லை. “தன் உடைமை என்று எண்ணுகிறாள்” என்றாள் ரோகிணி. சமையலறையில் நெருப்பை மூட்டிக்கொண்டு “தன் கைகால் என்றல்லவா எண்ணுகிறாள்?” என்றாள் யசோதை. கண்ணன் கைகளை நீட்டி கால்களை உதைத்து எம்பிக்குதிப்பதை அவள் கண்டாள். “கைநீட்டிக்கொண்டே இருப்பான். தொடுவான் வரை சென்றாலும் நீட்டுவான்” என்றாள் யசோதை. “அந்தப்பேதையும் அவனை தொடுவானுக்கே கொண்டு செல்வாள்.”

மழை ஓய்ந்த மண்ணில் ஒரு காலடிகூட இல்லை. நீரோடிய வரித்தடங்கள் அன்னை வயிற்று வெண்கோடுகள் என விரிசலோடிக்கிடக்க அவற்றின் ஓரங்களில் ஒதுங்கிக்கிடந்த மலர்க்குவைகளை பலராமன் “செந்நிறப்பூனைக்குட்டி!” என்றுகூவி குனிந்து அள்ளப்போனான். “அள்ளாதே, அவற்றுக்குள் நாகக்குழவி சுருண்டிருக்கக்கூடும்” என்றாள் ராதை. “ஏன் பூவிலுறைகிறது நாகம்?” என்று பலராமன் கேட்டான். “பூவிலுறைகின்றது தேன்” என்றாள் ராதை. “தேனை விழைகின்ற சிற்றுயிர்கள். அவற்றை விழைகின்றது கருநாகம்” என்றாள் ராதை. “தேன் விரும்பிய சிற்றுயிர்களை உண்டு தேனை அறிகிறது கருநாகம். கன்னங்கருநாகம். கருமணிவிழிநாகம்.”

பலராமன் கொன்றை மரத்தடியில் விரிந்த மஞ்சள்மலர்க்கம்பளம் நோக்கி “அங்கே நான் விளையாடலாமா?” என்றான். “யாருக்காக விரித்ததோ கொன்றை அம்மலர்விரிப்பை? நாம் தீண்டலாமா?” என்றாள் ராதை. “நாம் எப்படித் தெரிந்துகொள்வது அதை?” என்று பலராமன் கேட்டான். “அதனிடமே கேட்கலாமே?” என்று ராதை கைகளை இதழ்சேர்த்து உரக்க “பொன்பூத்த கொன்றையே, உன் வண்ணவிரிப்பில் எவர் காலடிகள் படவேண்டும்?” என்றாள். கொன்றை நீர் சொட்டும் ஒலியுடன் அமைதியாக நின்றது. “அது நாணுகிறது” என்றாள். “ஏன்?” என்றான் பலராமன். “அகத்தைச் சொல்ல நாணமிருக்காதா என்ன? உடலெங்கும் பூத்து நூறுநாழிகை மணமெழுந்தாலும் ஒரு சொல் எழுவதற்கு இத்தனை கூசுகிறாளே பேதை?”

அவள் இடையில் விழித்த கண்மட்டுமாக சிலைத்திருந்த கண்ணன் காற்றுபட்ட மலர்க்கிளையெனக் கலைந்து “நான் நான் நான்” என்று கால்களை உதைத்து சரிந்திறங்கினான். ராதை அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டாள். அவன் தன் இடது காலைத்தூக்கி வலப்பக்கமாக நிலையழிந்து வளைய ராதை பிடித்துக்கொண்டு “விழாதே, காலை வை. காலை வை கண்ணா” என்றாள். அவன் தன் செல்லச்சிறு பாதத்தைத் தூக்கி மண்மேல் மெல்லவைத்தான். அக்கணம் வீசிய காற்றில் கொன்றையின் மலர்க்கிளைகள் கொந்தளித்து அமைய மலர்மழை பொழிந்தது. ராதை சிரித்து “கோடைமழையாடிய கொன்றைமகள் உனக்காகவே மலர்மஞ்சம் விரித்திருக்கிறாள்” என்றாள்.

முதற்காலை ஊன்றியபின் நின்றகாலைத் தூக்கும் சிந்தை எழாமல் கண்ணன் தள்ளாடி திரும்பி கைநீட்டி “தூக்கு தூக்கு” என்றான். ராதை அவனை தூக்கி வைத்து “வலக்காலை எடுத்து வை... காலை எடு கரியோனே” என்றாள். பலராமன் அமர்ந்து கண்ணனின் வலக்காலைத் தொட்டு “இந்தக்காலை... இந்தக்காலை எடு” என்று உரக்கக் கூவி கற்றுக்கொடுத்தான். இரண்டு காலில் நின்று சற்று ததும்பியபின் எதற்கு இச்சிக்கல் என்று எண்ணி கால்மடித்து அமர்ந்து தவழப்போனான். ராதை அவனை கைகளைப் பற்றித் தூக்கி “நடந்துசெல்... நட” என்றாள். மீண்டும் இடக்காலைத் தூக்கி காற்றில் ஆட்டி இடப்பக்கமாகத் திரும்பி மண்ணில் வைத்து அசைந்து நின்றான்.

“இந்தக்காலைத் தூக்கு இந்தக்காலைத் தூக்கு” என பலராமன் அவன் வலக்காலைத் தொட்டு கூவினான். அவன் கூவுவதைக் கண்டு வாய் வழியச் சிரித்தபடி அறியாமல் வலக்காலைத் தூக்கிவைத்து அதே விசையில் இடக்காலையும் தூக்கி வைத்து திகைத்து நின்று திரும்பி ராதையிடம் “தூக்கு தூக்கு” என்றான். “முடியாது, இனி நீதான் என்னைத் தூக்கவேண்டும்” என்றாள் ராதை. அவன் கைகளைப்பற்றி அவள் மெல்ல முன்னகர்த்த அவன் கால்களைத் தூக்கிவைத்து நடந்தான். அவள் வலக்கையை விட்டு இடக்கையைப் பற்றிக்கொண்டாள். “இளையோன் நடக்கிறான்!” என்றான் பலராமன். “அன்னையிடம் ஓடிப்போய் சொல்லி வருகிறேன். இளையோன் நடக்கிறான்!”

வண்டு ஒன்று யாழிசையுடன் அருகே வந்து பறந்து சுழன்றது. அதை நோக்கி கைநீட்டி “நான் நான்” என்றான் கண்ணன். அது கொன்றைமரம்நோக்கிச் செல்ல கையை நீட்டி விரல்களை அசைத்து “அது அது” என்று சொல்லிக்கொண்டு விரைந்து காலெடுத்து வைத்தான். “ஓடுகிறானே” என்று சொல்லிக்கொண்டு அவனை கைப்பிடித்து கொண்டுசென்றாள் ராதை. அவன் மலர்ப்பரப்பில் கால்வைத்ததும் இன்னொரு காற்றலையில் கொன்றை மலர்மழைபொழிந்து அவன்மேல் பொற்துகளைப் பரப்பியது. “மூன்றடியால் மூவுலகளந்த முழுதோன் நீ” என்று சொல்லி அவனைத் தூக்கிச் சுழற்றி தன் இடையமர்த்தி அவனுடலில் படிந்த மலர்துகளை ஆடையால் துடைத்தாள் ராதை.

மலர்கள் மேல் ஓடிய பலராமன் “மெத்தென்றிருக்கிறது!” என்று கூவி நகைத்தான். “நான் நான்” என்று சொல்லி ராதையின் இடையிலிருந்து இறங்கி மலர்மேல் அமர்ந்து இருசிறுகைகளாலும் அள்ளி தன் முதுகிலேயே வீசி “நான் நான்" என்றான் கண்ணன். “அவனுக்கே பூ போட்டுக்கொள்கிறான்” என்று சுட்டிக்காட்டி சிரித்த பலராமன் அருகே வந்து பூக்களை அள்ளி கண்ணன் மேல் பொழிந்து “கரியவன்... கோயிலில் இருக்கும் சிலை போலிருக்கிறான்” என்றான். ராதை நகைத்து “ஆம், அவனிருக்கும் கோயில்களுக்கு அளவே இல்லை” என்றாள்.

இருமைந்தர்களுடன் அவள் குறுங்காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தாள். தோகைவிழி மலர்ந்த மயில்கூட்டம் அவர்களைக் கண்டு எழுந்து உச்சிக்கிளைகளை அடைந்து ஒளிக்கழுத்து வளைத்து நோக்கி அகவியது. கழுத்து வளைத்து நோக்கி செவிகூர்ந்து நின்றபின் துள்ளி புற்பரப்பின் மேலெழுந்து அமைந்து ஓடியது ஒரு புள்ளிமானிணை. தலைக்குமேல் பரந்த பசுந்தழைக்கூரைமேல் குயில் கூவிக்கொண்டே இருப்பதைக் கண்ட கண்ணன் கைகளை தலைக்குமேல் தூக்கி விரல்களை மலரச்செய்து “கூ” என்றான். அவன் உதடுகளின் சுழிப்பைக் கண்டு அகம்பொங்கி நெஞ்சோடணைத்து “கண்ணே கண்ணே கண்ணே” என்றாள் ராதை. அவன் அவளிடமிருந்து திமிறி விடுபட்டு மேலே நோக்கி “கூ கூ” என்றான். பட்டுக்கழுத்தின் சிறுவரிகளைக் கண்டு மூக்கை அதிலுரசி முனகினாள் ராதை.

வேய்மூங்கில் காட்டுக்குள் மென்காற்று சலசலப்பாக நிறைந்து அலையடித்துக்கொண்டிருந்தது. “சிறுமூங்கில்!” என்றான் பலராமன். “அதன் இலைகள் அரம் கொண்டவை. அறுத்து குருதி சுவைப்பவை. அருகணையாதே” என்று ராதை சொன்னாள். உள்ளே நிழலொன்று கிளையொடியும் ஒலியுடன் சென்றது. பலராமன் “யானை!” என்றான். ”ஆம், மூங்கில் யானைக்குமட்டும் இனிக்கும்” என்றாள் ராதை. பலராமன் “யானையை மூங்கில் இலை அறுக்காதா?” என்றான். “அறுக்காது” என்று ராதை சொல்ல “ஏன்?” என்றான். ராதை புன்னகையுடன் குனிந்து “ஏனென்றால் யானை கரியது” என்றாள். “அதற்கு மட்டும் ஏன் மூங்கில் இனிக்கிறது?” என்று பலராமன் விழி உருட்டி கேட்டான். “மூங்கிலுக்குள் ஊறும் இனிப்பை அதுமட்டுமே அறியும்” என்று ராதை சொன்னாள்.

“பிறரறியா இனிமை அதில் எப்படி உறைகிறது?” என்றான் பலராமன். ராதை “அதை நானறியேன். மூத்தோர் சொல்லி அறிந்தேன்” என்றாள். அப்போது மூங்கில்கழைகள் இடைவளைத்து கைவீசி வணங்க காற்றுவிரைவொன்று அவர்களைக் கடந்துசென்றது. ராதை குயிலோசை ஒன்றைக் கேட்டாள். “குயில்!” என்றான் பலராமன். மீண்டும் அவ்விசை ஒலித்ததும் “குயிலல்ல, மூங்கில்” என்று ராதை சொன்னாள். “இங்கே மிக அருகே, ஏதோ மூங்கில் ஒன்று இசைகொள்கிறது.” பலராமன் “மூங்கிலில் இசை உறைகிறதா?” என்றான். “ஆம், யானை அறியும் கழையினிமை அந்த இசையே” என்றாள் ராதை.

கண்ணன் கையை வாயில் வைத்து “கூ” என்றான். “என் கருங்குயிலே” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ராதை. “என் கண்ணனை நோக்கி இசைத்த அந்தக்குழலெங்கே?” என்று மூங்கில் இலைகளை விலக்கித் தேடினாள். மீண்டும் ஒரு காற்று கடந்துசென்றபோது அதைக் கண்டுகொண்டாள். வண்டு துளைத்து காய்ந்து நின்றிருந்த பொன்னிற மூங்கில்குழல். அதை தன் இடையிலிருந்த புல்கொய்யும் ஆய்ச்சியர் அரிவாளால் வெட்டி எடுத்தாள். “அது ஏன் பாடுகிறது?” என்று பலராமன் குனிந்து கேட்டான். “அதை வண்டு துளைத்துவிட்டதல்லவா?” பலராமன் அதை மெல்லத் தொட்டு “வண்டுதுளைக்கும்போது இதற்கு வலித்திருக்கும் அல்லவா?” என்றான். ராதை “ஆம், மிகவும் வலிக்கும். நூறாயிரம் அம்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து தைத்தது போலிருக்கும்” என்றாள். “பாவம்” என்றான் பலராமன்.

கண்ணன் தன்னைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றான். “ஆமாம், அதையே சொல்லிக்கொண்டிரு. தசை துளைத்து இதயம் துளைத்து ஆன்மாவைத் துளைக்கும் கருவண்டு நீ” என்றபின் ராதை அதை வாயில் வைத்து மெல்ல இசைத்தாள். “அதே இசை!” என்று பலராமன் வியந்தான். “என்ன சொல்கிறது மூங்கில்?” என்றான். “என்ன சொல்கிறது? நீயே சொல்” என்று அதை மீண்டும் வாசித்தாள். பலராமன் “வரமாட்டாயா என்று சொல்கிறது” என்றான். “அப்படியா சொல்கிறது? அதுவும்தான் காத்திருக்கிறதா?” என்ற ராதை மீண்டும் வாசித்து “இப்போது?” என்றாள். “இப்போதும் அதையேதான் சொல்கிறது” என்றான் பலராமன்.

கண்ணன் கைநீட்டி “நான் நான்” என்றான். “அவன் கடித்துவிடுவான்... வேண்டாம்” என்று பலராமன் தடுத்தான். “கடிக்கட்டுமே” என்று அவன் வாயில் குழலை வைத்து “ஊது... ஊது என் கருவண்டே” என்றாள். அவன் ஊதியபோது பலராமன் சிரித்து “காற்றை உள்ளே இழுக்கிறான்... அவனுக்குத் தெரியவில்லை...” என்றான். கண்ணன் வயிற்றை எக்கி காற்றை இழுத்தபின் அதை கையால் தள்ளிவிட்டு இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி “கூ கூ” என்றான்.

“நான் ஊதுவேன்” என்று வாங்கிய பலராமன் வாயில் வைத்து ஊதியபோது காற்று மட்டும் வெளிவந்தது. “இசை எங்கே?” என்றான். “அதை முழுக்க அவன் உறிஞ்சி எடுத்துவிட்டானே” என்றாள் ராதை. “எல்லா இசையையுமா?” என்றான். “ஆம், இந்த மூங்கில்காட்டிலுள்ள அத்தனை மூங்கில்களின் இசையையும்” என்று சொன்னாள் ராதை. “இனி மூங்கிலில் இசையே இருக்காதா?” என்று பலராமன் கேட்டான். “இருக்கும், அதெல்லாம் அவன் வாயிலிருந்துதான் வரும்.”

கண்ணன் கைநீட்டி “நான்! நான்!” என்றான். “இந்தா வாசி” என்றாள் ராதை. அதை கைகளால் பற்றி வாய்க்குள் வைத்து கடித்தான். “கடிக்கிறான்” என்று பலராமன் கூவினான். “கடிக்கட்டும், அது மூங்கிலுக்குப்பிடிக்கும்” என்றாள். அவன் அதை தன் இதழ்களில் வைத்து “ஊ” என்றான். தூக்கி முன்னால் எறிய முயன்று பின்னால் எறிந்தான். முன்னால் அதை தேடிவிட்டு திரும்பி பின்னால் நோக்கி அதை எடுத்து மீண்டும் எறிந்தான். மறுமுறையும் அவன் தலைக்குப்பின்னால்தான் விழுந்தது. “போ” என்று சொன்னபடி அதை மீண்டும் எடுத்து வாயில் வைத்தான்.

“எனக்கு இன்னொரு மூங்கில் வேண்டும்” என்றான் பலராமன். “இரு” என ராதை திரும்பியபோது ஓர் இசையைக் கேட்டாள். திகைத்துத் திரும்பியபோது கண்ணன் கண்பொங்கி நகைத்து “இந்தா” என்று குழலை நீட்டினான். “நீயா? நீயா வாசித்தாய்? கள்வா கரியவனே, என்னிடம் விளையாடாதே” என்றாள். அவன் சிரித்து அதை வீசி “போ” என்றான். “அவன் தான் வாசித்தான். நான் பார்த்தேன்” என்றான் பலராமன். “அவனா? அவன் வாயாலா?” என்று ராதை நெஞ்சை அழுத்தியபடி கேட்டாள். “ஆம்” என்றான் பலராமன்.

“கண்ணா, விளையாடாதே... நீயா வாசித்தாய்? இன்னொருமுறை வாசி என் செல்வமே” என்று அவள் அந்தக்குழலை அவனிடம் திரும்ப அளித்தாள். அதையே ஒரு விளையாடலாக எடுத்துக்கொண்டு அவன் தூக்கி வீசினான். “கண்ணா... என் கண்ணல்லவா? என் செல்லக்குலுக்கை அல்லவா?” என்று அவள் மீண்டும் மீண்டும் எடுத்துக்கொடுத்தாள். அவன் சிரித்து “போ போ” என்று கூவியபடி வீசிக்கொண்டே இருந்தான். அவள் “போ, என்னை பித்தியாக்கி விளையாடித்தான் நீ வினைமுடிக்கவேண்டுமா?” என்றாள்.

அப்பால் “கண்ணா, ராதை!” என்று யசோதையின் குரல் கேட்டது. பலராமன் “சிற்றன்னை அழைக்கிறாள்” என்றான். “அதற்குள் எனக்கு ஒரு மூங்கில் வேண்டும்.” அவள் கண்ணனை விட்டுத் திரும்பி மூங்கிலை வெட்டும்போது மீண்டும் அந்த இன்னிசை எழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பினாள். கண்ணன் வாயில் குழலிருப்பதைக் கண்டாள். “நான் சொன்னேனே?” என்றான் பலராமன். அவள் இருகைகளாலும் நெஞ்சுக்குழியை அழுத்தி நோக்கி நின்றாள். “கண்ணா, பலராமா!” என்று யசோதை குரல் கேட்டது.

ராதை நடுங்கும் கரம் நீட்டி அவனை எடுத்துக்கொண்டாள். கையில் குழலை ஆட்டியபடி அவன் “கண்ணன் பாவம்” என்றான். அவள் பெருமுச்சு மட்டும் விட்டுக்கொண்டிருந்தாள். அன்னையிடம் மகனை அளித்தபோதும் ஒரு சொல் பேசவில்லை. கூடணைந்த கருஞ்சிட்டின் இறகுகள் போல அவள் விழிகள் தாழ்ந்திருந்தன. “ஏனடி? ஏனித்தனை பெருமூச்சு?” என்றாள் யசோதை. அவள் தலையை அசைத்து பின் இமைப்பீலி நனைத்து ஒளிவிட்ட விழிநீரை உதிர்த்தாள். “ஏனடி?” என்று யசோதை கேட்க “ஒன்றுமில்லை மாமி” என்றாள். “பிச்சியடி நீ” என்று யசோதை சொன்னாள்.

அவள் திரும்பிச்செல்லும் வழியில் மழை எழுந்து சரிந்தது. நூறு யமுனைகள், ஆயிரம் கங்கைகள் விண்ணுடைத்து விழுந்தன. அவள் நீர்த்திரைகளை விலக்கி விலக்கிச் சென்று தன் இல்லத்தை அடைந்தாள். மழைப்பேரொலிக்குள் முறியாது கேட்டுக்கொண்டிருந்தது குழல்சிறுநாதம். “கொட்டும் மழையில் எங்கு சென்றிருந்தாயடி? கோகுலத்துக்கா?” என்றாள் அன்னை. அவள் நெற்றியைத் தொட்டு “கொதிக்கிறதே” என்று சொல்லி அழைத்துச்சென்று ஈர உடை நீக்கி படுக்க வைத்தாள். குளிர்ந்து குறுகிய உடலை போர்வைக்குள் ஒடுக்கி எரியும் விழிகளை மூடிக்கிடந்து அவள் அந்தக் குழலொழுகிய எழிலிசையை கேட்டுக்கொண்டிருந்தாள்.

நான்குநாள் அவள் வெப்பநோயில் கிடந்தாள். உதடுகள் உலர்ந்து செவிகள் சிவந்து கண்கள் மூடி நடுங்கிச் சுருண்டிருந்தாள். “பேய்மழைக்குள் சென்றிருக்கிறாள், என் பிச்சியை நான் எப்படிப் பாதுகாப்பேன்! என்ன செய்வேன்!” என்று அன்னை மறுகினாள். சுக்கும் மிளகும் திப்பிலியும் இட்டு எரிநீர் கொதிக்கச்செய்து அளித்தாள். தேவதாருப்பசையை நெற்றியில் இட்டாள். அவள் இமைகளிட்ட விரிசலுக்குள் வெண்விழி செம்மலர்போல் சிவந்திருந்தது. அவள் இளநெஞ்சு எழுந்தமைந்துகொண்டிருந்தது. செம்பஞ்சு மலர்ப்பாதங்கள் நெருப்பில் வாட்டியதுபோலிருந்தன.

நான்காம்நாள் நள்ளிரவில் நீராவிப்பானைக்குள் நின்று மீண்டவள்போல் உடல் வியர்த்து குளிர் நடுக்க அவள் விழித்துக்கொண்டாள். எங்கிருக்கிறோம் என்றறியாமல் இருளில் விழிமலர்ந்து கிடந்தாள். வெளியே இருளின் தொலைவுக்குள் மூங்கில்காட்டில் ஆயிரம் குழல்களை அந்நான்குநாட்களில் துளைத்திருந்தன கருவண்டுகள். ஆயிரம் கழைக்குழல்கள் இசைத்தன அவள் மட்டுமே அறிந்த அந்தப் பண்ணை. நீலநிறத்தில் உருகி உருகி வழிந்தோடியது வேய்ங்குழல் நாதம். கொன்று கொன்று உயிர்ப்பிக்கும் விஷம் கொண்ட கீதம்.

பகுதி ஐந்து: 4. ஏழுலகு

மண்மேவும் மழை இனியது. மென்சாரல் ஒளிகொள்ள விலகி விடியும் மழை மேலும் இனியது. மழைமேவிய மணல்முற்றம் என் நெஞ்சம்போல் தூயது. அதில் என் காலடியும் விழலாகாது. கண்ணா, இங்கு உன் இளம்பாத மலர் உதிர்ந்த தடமல்லவா விரிய வேண்டும்? செல்லும்தடம் காண ஆற்றேன். என் இல்லம் நோக்கி வரும்தடம் கண்டு அகம் உவப்பேன்.

எங்கே உன் வருகைச் சுவடு? மென்பாத முத்தம்? மலர்மாலை விழுந்ததுபோல் என் மணல்முற்றம் அதைச் சூடிக்கிடப்பதை கனவில் கண்டேனே. எங்கே உன் சிறுவிரல் தடவரிசை கொள்ளும் சிறுசிரிப்பு? செந்தாமரை மலரிதழ்கள் எனச் சிவந்தனவா அவை? செண்பக மலரிதழ்களின் நீலம் கொண்டவையா? இளங்காலை ஒளி அறியாத மலர்க்கோலம் உண்டா? கருவண்ணா, உன் பாதத்தடம்தேடி இம்மணல்வெளியில் அதுவும் ஏன் அலைகிறது?

அப்போதுதான் ராதை அதைக் கண்டாள். சின்னஞ்சிறு பாதத் தடமொன்று அவள் முற்றத்தை நோக்கி மென்மணல் கதுப்பில் பதிந்திருந்தது. நெஞ்சுலைந்து ஒரு கணம் நின்று பின் ஓடிச்சென்றமர்ந்து குனிந்து அதைப் பார்த்தாள். நடுங்கும் நுனிவிரலால் அதைத் தொட்டு “நீயா? கரியவனே, கார்முகிலே, காலடியாய் வந்தது யார்? நீலமலர் பூத்ததுபோல் நீயே எழுந்தாயா?” என்றாள். நீயென்றால் எங்கே இன்னொரு பாதத் தடம்? ஒற்றைக்காலூன்றி மறுகாலை எங்குவைத்தாய்? அவள் தன் இளநெஞ்சில் கைவைத்து ஏங்கி நின்றாள். மூச்செறிந்து மெய்ப்புகொண்டு கண்பனித்து குரலுடைய “ஆம், நீதான்” என்றாள்.

பின்னர் ஒருகணமும் அவள் பாதம் தரிக்கவில்லை. யமுனைக்கரைமீது இளம்பாதச் சிலம்பொலிக்க ஆடை அலையடிக்க கருங்கூந்தல் கலைந்தாட ஓடி கோகுலத்தை அடைந்தாள். “யாரது பிச்சியை துரத்தியது?” என்றாள் அரையில் பால்குடம் அமைத்துச்சென்ற ஆய்ச்சி ஒருத்தி. “அவளைத் துரத்துவது அவளேதான். கருநாகத்தை விழுங்கிய பொன்நாகம். இரண்டும் இணைந்து ஒன்றாகும் வரை வலிகொண்டு நெளியத்தான் வேண்டும்” என்றாள் வழித்தெடுத்த வெண்ணையுடன் வழிநோக்கிய மூதாய்ச்சி.

நந்தனின் இல்லத்து முற்றத்தில் ஆயர்ச்சிறுவர் கூடி ஆர்ப்பரித்து களியாடினர். நீரடியில் நெளியும் தாமரைக்கொடி அடர்வாய் சிறுதளிர்க்கால்கள். நடுவே நீலமலர் மூழ்கியதுபோல் நின்றிருந்தான் கண்ணன். சிறுகைகளைத் தூக்கி "நானும் நானும்" என்று கூவி துள்ளிக்கொண்டிருந்தான். மரக்கிளைமேல் ஒரு சிறுவன் ஆட்டி மலர்பெய்ய மண்ணில் உதிர்ந்த மலர்பொறுக்கி கூவினர் இளமைந்தர். இத்தனை பேர் நடுவே ஒரு முகமே தெரிவது ஏன்? இத்தனை குரல்களிலே ஒருகுரலே கேட்பது ஏன்? பிச்சி மனம் பேதைவிழி ஒன்றையே உலகாக்கி அவ்வுலகில் தனித்துறையும் விந்தைதான் என்ன!

ஆடலில் ஆழ்ந்திருந்தான் கண்ணன். மலர்முகம் கைத்தண்டில் விரிந்திருக்க திண்ணைமேல் அமர்ந்து விழிமின்ன பல் ஒளி மின்ன கண்ணனின் களியாட்டில் தானும் ஆழ்ந்தாள் ராதை. மலர்பொறுக்கி தன் தலைமேல் போட்டு கூவினான். இன்னொருவன் கையின் மலர்க்குவையை தட்டி உதிர்ந்த மலர்மேல் கால் வைத்து சிரித்தோடினான். கைதூக்கி மலர்கொள்ள தாவும் கோபனின் இடைசுற்றிய ஆடையை இழுத்துவிட்டான். அவன் கையோங்கி அடிக்கவர மூத்தோன் பின் ஒளிந்துகொண்டான்.

தெளிநீரில் துள்ளும் ஒளிமீன்கள். சிறுகாற்றில் சிறகடிக்கும் சிட்டுகள். விரல்தளிர்கள். கை இலைகள். கொடித்தண்டுகள். விழிநீல மலர்கள். பால்வெண் மலர்கள். செவ்விதழ் மலர்கள். கூவி ஆர்ப்பரிக்கும் குறுங்காடு. மிதிபட்டு மிதிபட்டு நெஞ்சு நெகிழ்கிறாள்.  மெல்ல மெல்ல என்று பதைக்கிறாள். விழுபவனை நோக்கி எழுந்து வருகிறாள். அள்ளி ஏந்தி முலைகனிகிறாள். அன்னையறியும் பாதங்கள். அவள் கருவறைச் சுவரில் உதைத்து நீந்தி விலகியவை. தரிப்பவள். ஊட்டுபவள். அணைப்பவள். புதைத்துக்கொள்பவள். சூழ்பவள். நிறமும் மணமும் நிழலும் சுவையும் இசையும் என்றானவள்.

அகன்று அகன்று சென்றுகொண்டிருந்தாள் ராதை. நான்கு திசைதொட்டு அங்கே இறங்கிவந்த வான் தொட்டு விரிந்தாள். மலைகளை ஏந்தி நதிகளை தோளிலிட்டு கடல்களை உடுத்தி நிலவும் கதிரும் சூடி தானன்றி பிறிதிலாத வெளியொன்றில் கிடந்தாள். அவள் தோள் தொட்டு யசோதை அமர்ந்ததும் திகைத்து அதிர்ந்து விழிதூக்கினாள். “எப்போது வந்தாய்? ஆயர்மகளே, உன் குரல் கேட்கவில்லையே” என்றாள். ராதை புன்னகைத்து “மண்மகளானேன்” என்றாள். “அவன் மார்பமரும் மணமகளும் ஆகிவிடு, வேறென்ன?” என்றாள் முகமெங்கும் நகை எழுந்த யசோதை.

கையிலிருந்த இளம்பாலை அவளுக்கு அளித்து “பர்சானபுரியில் இருந்து ஓடியே வந்திருப்பாய்? உண்பதில்லை உடுப்பதில்லை. உறக்கமும் இல்லை. ஊரெல்லாம் உன்னை பிச்சி என்கிறார்கள்” என்றாள் யசோதை. பாலை வாங்கி அதை நோக்கி புன்னகைத்தாள் ராதை. “என்ன சிரிப்பு?” என்றாள் யசோதை. “பாற்கடல் அலையில் பள்ளி கொண்டிருக்கிறது ஒரு கட்டெறும்பு” என்றாள். “பிச்சியேதான் நீ. உன் அன்னை செய்த பெரும்பாவம்” என்று யசோதை தலையில் அறைந்தாள். “நீராட்டி விடும்நேரம். வானரப் படையிதிலே ஒரு வாலை எப்படி பிரித்தெடுப்பேன்” என்று வியந்தாள்.

ஆயரிளமைந்தர் சிறுகைகள் கோர்த்து சுழிவடிவம் கொண்டு நிற்க நடுவே ஒருவன் நின்று கூவிச்சிரித்தான். வெளியே நின்றவன் கைகள் தோறும் முட்டி கைநீட்டி தொடமுயன்றான். வேட்டையே விளையாட்டாக அவர்கள் கன்றும் புலியும் ஆநிரையும் கோல்களுமாக உருமாறினர். நடுவே அவர்களின் ஓடும் கால்நடுவே ஊடுருவிச் சென்று முற்றத்து மூலையில் குவிந்த மழைமணலை சிறுகை கோட்டி அள்ளிவந்து “மண்! மண்! மண்!” என்று கூவி இறைத்து நகைத்தான் கண்ணன். அவன் தலையெங்கும் பரவி சிறுதோளில் கொட்டியது செம்மணல் புழுதி. அவன் விளையாடும் களத்தில் அவர்களெவரும் ஆடவில்லை.

“என்னடி ஆடல் இது? இவர்களெல்லாம் மூத்தோர். இவனோ கால் திருந்தா சிறுமைந்தன். அவர்கள் ஆடும் நெறியேதும் அறியான். அவர்கள் மொழியிலும் அமையான். எதைக்கண்டு மகிழ்கின்றான், எதற்காகக் கூவுகின்றான்?” என்று யசோதை சிரித்தபடி கேட்டாள். “அவன் வழியே அதுதானே? கன்றில் எழுந்து துள்ளுவதும் சிறுகுஞ்சில் எழுந்து சிறகசைப்பதும் மீனில் வந்து ஒளிகொள்வதும் நாமறியா ஒன்றின் இளமை அல்லவா? என்றும் நிலைக்காத ஆடல் நிறைந்தது அவன் நெஞ்சம். நீருக்கு அலையையும், ஒளிக்கதிருக்கு பறத்தலையும், காற்றுக்கு சுழல்தலையும், நெருப்புக்குக் குழைதலையும் யார் கற்றுத்தரவேண்டும்?” என்றாள் ராதை.

“மாயக்கணம் ஒன்றில் இங்கே ஆடும் முகமெல்லாம் அவனாகும் விந்தையை அறிவாயா?” என்றாள் யசோதை. “இங்கு வேறு முகமொன்று உள்ளதா என்ன?” என்றாள் ராதை. யசோதை ஒருகணம் அவளை நோக்கி “பெற்றெடுக்காமல் முலையேந்தி ஊட்டாமல் எப்படியடி அன்னையர் போற்றும் அன்னையானாய்?” என்றாள். ராதை நாணி முகம் சிவந்து “நானறியேன் மாமி. கருநிறைந்தால்தான் ஆயிற்றா? கனவுநிறையலாகாதா?” என்றாள். நெடுமூச்செறிந்து “ஆம், அந்தத் தாய்மை மேலும் தூயதோ என்னவோ?” என்றாள் யசோதை.

இருவரும் சொல்லாத சொற்களின் இருகரையிலும் நின்று நினைப்பொழிந்து நெடுநேரம் அங்கிருந்தனர். ராதை கைநீட்டி “அங்கே ஆடல் மாறியிருப்பதைப் பாருங்கள் மாமி!” என நகைத்தாள். ஆயர்ச்சிறுவரெல்லாம் மண்ணை அள்ளி காற்றில் தூற்றி “மண்! மழை கொண்டுவந்த மண்! யாருக்கு வேண்டும்? பணத்துக்கு பத்து படி!” என்று கூவி விளையாடிக்கொண்டிருந்தனர். கண்ணன் நடுவே நின்று “மண்... ஏய் மண் அங்கே போ” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தான். யசோதை வியந்து வாய்பொத்தி “அவன் என்றுமே இப்படித்தானடி. அவன் எண்ணுவதை நம் சித்தமாக்கும் கலை பயின்று வந்தவன்” என்றாள்.

ஒன்றில் தொட்டு பிறிதொன்றுக்குச் சென்றது விளையாட்டு. மண் அள்ளி எறிந்தவர்கள் மண்குவித்து கோட்டை என்றனர். அக்கோட்டைக்குள் இலை கொண்டு கொடி கட்டினர். அக்கொடியை கைப்பற்ற படைகொண்டு வந்தனர். படை வந்து நின்று ஆநிரையென்றாயிற்று. அதன் பால் கொண்டு விற்க படகு வந்து நின்றது. படகருகே வந்து மீன்கள் துள்ளின. மீன்களை நோக்கி வலைகள் எழுந்தன. மீன்கள் மூழ்கிய ஆழத்தில் நாகங்கள் நெளிந்தோடின. நாகங்களின் நாவில் ஒளிவிட்டது நீலமணி. நீலமணி ஏந்தி ஓடிய கண்ணனைத் துரத்திச்சென்றது நாகக்கூட்டம்.

“என்னடி நிகழ்கிறது இங்கே?” என்று திகைத்தாள் யசோதை. “ஆடல்” என நகைத்து “அதை அவனே வழிநடத்திச்செல்கிறான்” என்றாள் ராதை. “அதற்கொரு பொருளில்லையா என்ன?” என்றாள் யசோதை. “பொருளை அவனே அறிவான். அவன் ஆடலுக்கு ஆட்படுவதே பிறர் ஆடல்” என்றாள் ராதை. “எத்தனை உலகங்கள். எத்தனை விண்ணகங்கள். நான் சொன்ன கதையெல்லாம் இப்படி ஒன்றாகிக் கலந்து ஒருலீலை ஆனதென்ன!” என்று யசோதையும் நகைத்தாள்.

“ஆடிச்சலிப்பதில்லை அவன் அகம். ஊரெங்கும் ஓடிச்சலிப்பதில்லை அவன் பாதங்கள். அவனுடன் ஊடிச்சலிப்பதுமில்லை என் உள்ளம்” என்றாள் யசோதை. நெடுமூச்செறிந்து தன் கையில் தலைதாங்கி அமர்ந்தாள். “உன்னிடமின்றி எவரிடம் சொல்வேனடி? என் உள்ளம் கொள்ளும் மாயத்தை எவர் அறிந்தாலும் என்னையும் பிச்சி என்பார்.” ராதை புன்னகைத்து “பிச்சியாகா அன்னையென புவியில் எவருமில்லை மாமி” என்றாள். “ஆம்” என்று சொல்லி பெருமூச்செறிந்து கைகளில் முகம் புதைத்தாள் ஆயர்குலத்து அன்னை.

ஆவி பதைக்க, ஆகம் துடிக்க, கண்கள் கரைந்தழிய, கால்கள் தளர அவனருகே ஓடிவருவதையே பேரின்பமெனக் கொள்கிறதடி என் உள்ளம். அருகே இருந்தால் தொலைவை அறிவதெப்படி? அகன்றுசெல்ல ஆயிரம் காரணம் தேடுவேன். என்னை ஆட்டிவைக்கும் மாயன். எனக்கென்றொரு எண்ணமில்லாதாக்கிய பேயன். என் அகம் கொத்தி நீலம் நிறைத்த நாகம். என் உளம் நிறைந்து பிறிதிலாதாகிய பெருநஞ்சு. எத்தனை பாவனைகள். எத்தனை அகச்சொற்கள். எத்தனை பாதைகளில் இவனை விட்டு விலகிச்சென்றிருக்கிறேன். எங்கெங்கோ நின்று இவனை நோக்கியிருக்கிறேன். இப்புவியில் இவனை வெறுக்க என்னைவிடக் காரணம் அறிந்தோர் எவருமில்லையடி. இவனை நோக்கி கோடிமுறை ஓடிவந்தவரும் பிறரிருக்க மாட்டார்.

ஆயிரம் வழிப்பின்னல்களில் ஒன்றில் இமையா விழியொளியும் செந்நிறத் தழல்நாக்கும் கொண்டு படமெடுத்து நின்ற கருநாகம் ஒன்றைக் கண்டேன். அது என் காலைத் தீண்டி நஞ்சழுத்திச் சென்றதை உணர்ந்தேன். அந்நஞ்சு இறுகி ஒரு நீலச்சிறுமணியாக என் நெஞ்சில் உறைகிறதடி. அவ்வழியை அஞ்சி அன்று ஓடி வந்தேன். மீண்டும் ஒருமுறையும் அத்திசையை நாடேன் என்று மீளமீளச் சொல்லிக்கொண்டேன். ஆனால் பின்னிரவில் துயில் விழித்து இவன் சிறுகாலை நெஞ்சிலிட்டு கண்விழித்துக் கிடக்கையில் அதை எண்ணாமலிருக்க என் அகத்தால் இயலாது. அதன் இருள்விரிந்த புதர்வழியில் சிலிர்த்துகூசும் சிற்றடிவைத்துச் செல்வேன். அங்கே அந்த விஷமணியை எடுத்து அதன் குளிரொளியை அறிவேன்.

அங்கிருந்து ஓடிவந்து இவன் அடியிணையில் விழுவேன். எழுநரகும் கடந்து வந்த இழிவெல்லாம் என்னில் திரண்டிருக்கும். சிறுகாலை அள்ளி சிரம்வைத்து கண்ணீர்விடுவேன். மலர்மொக்குக் கைகளை மாறி மாறி கண்களில் வைப்பேன். என் அகமறிந்த சொல்லெல்லாம் அணிதிரட்டி அவன் முன் பொழிவேன். கரியோனே, விண்ணளந்த கழலோனே, என் நெஞ்சளப்பது உனக்கொன்றும் அரிதல்ல. நீயறியா இருளில்லை. நீ தொடாத ஆழமில்லை. உன் ஒரு சொல்லால் என் இருள்வானை ஒளியாக்கு. கண்ணா, உன் கழல்தொட்டு உதிரும் கண்ணீரே என் பூசைமலர் என்பேன்.

விரலிடுக்கில் விழிநீர் ஊறிப்பெருக விம்மியழும் யசோதையை நோக்கி ராதை அமர்ந்திருந்தாள். “அன்னை நெஞ்சில் ஆலகாலம் முளைப்பதுண்டோ? இது என்ன பழி என்று எங்குநான் போய்ச்சொல்வேன்?” என்றாள் யசோதை. ராதை அவள் தோள் தொட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். யசோதை “ஆயர்குடிகளிலே யாரும் அறியாச் சேதி இது பெண்ணே. இவன் என் கருநிறைத்து பிறக்கவில்லை. என் கண்ணீரில் எழுந்து வந்தான்” என்றாள். ”நான் பெற்றெடுத்தவள் உன்னைப்போல் ஒரு செல்வி. குருதிமூடியச் சிறுமுகமாக அவளை ஒருகணம்தான் கண்டேன். அவளைக் கொண்டுசென்று இவனை என் முலைசேர்த்து படுக்கவைத்தார் என் கொழுநர்” என்றாள்.

“ஆயர்குடிவாழ வந்தவன் இவன் என்றார். இவனை மடிகொள்ள நான் ஏழ்பிறவி நலம் செய்தேன் என்றார். நான் ஒருசொல்லும் கேட்கவில்லை. இவன் நீலமணி ஒளியை சேவடி எழிலை மட்டுமே கண்டேன். குனிந்து இவன் குமிழுதட்டை நோக்கினேன். என் முலையவிழ்ந்து ஊறக்கண்டேன். என் மகன், என் உயிர், எவ்வுயிர்க்கும் இறைவன் இவன் என்று அள்ளி அணைத்துக்கொண்டேன்.” கண்ணீர் பெருகி முட்டில் முகம் சேர்த்து தோள்குலுங்க தேம்பி அழுதாள். “என் முலையுண்டு நிற்கின்றான். அதன் முன் என் மகவுண்டு பசி தீர்த்தவன் அல்லவா?” என்றாள் யசோதை. ”பழிகாரன்! எத்தனை பசுங்குருதி நீராடி வந்துதித்தான். இத்தனை குருதிக்கும் இவன் என்ன பதில் சொல்வான்?”

நீள்மூச்சு விட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் ராதை. “சொல்லடி, இவனை இடையமர்த்தி செல்கையில் நீ உணர்வதில்லையா இவன் எடையென்ன என்று? உடலற்ற ஆயிரம் மைந்தர் இவனுடன் அமர்ந்திருக்கவில்லையா? இவன் முற்றத்தில் தனித்து விளையாடுகையில் ஒருநாள் கண்டேன். விழிதுடிக்க ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிச்சுற்றி சிறகடிப்பதை. எளிய மாதர் இடையமர்ந்து சிரிப்பவன் தன்னுள் கரந்துள்ளது என்ன? இந்த நீலச்சிறு சிமிழில் நிறைந்துள்ளது அமுதா நஞ்சா? ஒருநாளும் எண்ணியதில்லையா நீ?” என்றாள் யசோதை.

“மாமி, நான் எண்ணுவதே இல்லை. கண்ணனென்ற பேரில் கருத்தழிந்து சொல்லிழந்து வெட்டவெளியில் விரிந்தழியும் ஒளிபோலாகிறேன். நான் என்ன சொல்வேன்?” என்று சொன்ன ராதை “வினாவாக அவன் நின்றால் விடையெனவும் அவனே ஆவான். உங்கள் இடையமர்ந்து முலையருந்த அவன் கொண்ட எண்ணம் ஏதென்று ஒருநாள் அறிவீர்கள்” என்றாள்.

தானுமொரு நெடுமூச்சு விட்டு “ஆம், அவ்வண்ணமே ஆகுக. இப்பேரன்பின் அமுதத்தால் அந்நஞ்சு ஊறியதா? இல்லை அந்நஞ்சை உட்கொள்ள நான் கண்ட அமுதா இது? அதை அவனே மொழிகொண்டு அறிவுறுத்தும் ஒருநாள் வருவதாகுக” என்றவள் வெந்நீர் ஊறிய விழியிமை ஒற்றி “எங்கோ பலிபீடமொன்றில் பசுங்குருதி கொட்டி மடிந்தாள் என் மகள். அக்கணம் அவள் உதடு குவித்து ஒரு சொல் உரைத்திருப்பாள். அன்னை என்றா? அறியேன்” என்றாள்.

மூச்சிரைக்க ஓடிவந்த இளமைந்தன் பிருஷதன் “அன்னையே, கண்ணன் மண்ணைத் தின்கிறான்” என்றான். யசோதை மறந்தெழுந்து “எங்கே அவன்? எத்தனை முறை சொல்வது அவனிடம்?” என்று திரும்பி மண்ணில் கிடந்த மலர்க்கொம்பை எடுத்து நடந்தாள். திண்ணை விட்டெழாமல் ராதை அதை நோக்கி அமர்ந்திருந்தாள். மண்ணில் கையூன்றி கனத்த தொடை மடித்து அமர்ந்திருந்த கண்ணன் அவனை நோக்கி போ என்று தலையசைத்தான்.

“என் கையின் பழத்தைப் பிடுங்கினான். நான் அதைப்பிடுங்குகையில் மண்ணிலிட்டு மிதித்தான்” என்று சொல்லி பிருஷதன் பின்னால் வந்தான். “மண் தின்றால் நோயுண்டு என்றேன். என்னை நோக்கி போ என்று தலையசைத்தான்” என்றான். ரிஷபன் ஓடிவந்து “இல்லை, நீ சொல்லவில்லை” என்று அவன் தோளைப் பிடித்தான். ”போடா... நான் சொன்னேன். அவன் கேட்கவில்லை” என்று பிருஷதன் சொல்ல இருவரும் இளங்கன்றுபோல் தலைசேர்த்து கொம்பு கோர்த்து மல்லிட்டு சுற்றிவந்தனர்.

கைக்கோலை ஓங்கி யசோதை கண்ணனருகே குனிந்தாள். “மண்ணை உண்ணாதே என்று எத்தனை முறை சொன்னேன்? நீயென்ன மதியற்ற மூடனா, மதம் கொண்ட மூர்க்கனா?” என்றாள். பிருஷதன் பிடியுதறி வந்த ரிஷபன் “அன்னையே, அது மண்ணல்ல. கோவைச் சிறுகனி” என்றான். “இல்லை மண், நானே கண்டேன். வாயில் மண்ணள்ளிப்போடுவதை” என்றான் புழுதி துடைத்தபடி பின்னால் ஓடிவந்த பிருஷதன்.

“மண்ணைத் தின்றாயா?” என்றாள் அன்னை. கண்ணன் விழியுருட்டி தலையசைத்து இல்லை என்றான். “பொய் சொல்கிறான். அவன் தின்றது மண்!” என்றான் பிருஷதன். “நீ வீட்டுக்குப் போவாய் அல்லவா?” என்றான் ரிஷபன். பிருஷதன் திகைத்து “அன்னையே, அவன் என்னை அடிப்பான்” என்றான். திரும்பி “போடா! அவன் மட்டும் என் கனியை பிடுங்கலாமா?” என்றான். யசோதை குனிந்து கோலை ஆட்டி “வாயைத் திற... திறக்காவிட்டால் அழுவதற்காகத் திறப்பாய்” என்றாள். கண்களை உருட்டி தலையை ஆட்டிய மைந்தனைத் தூக்கி நிறுத்தி “வாயைத் திறந்து காட்டு. வாயிலிருக்கும் மண்ணைக் காட்டு” என்றாள்.

அவள் கோலை ஓங்குகையில் அவன் வாயைத் திறந்தான். யசோதை வாய்க்குள் ஒருகணம் நோக்கி அயர்வொலி எழுப்பி கால்தளர்ந்து பின் சரிந்து கையூன்றி அமர்ந்துகொண்டாள். ராதை எழுந்தோடி அவளைப் பற்றி “மாமி, என்ன ஆயிற்று?” என்றாள். “இவன் வாய்க்குள் நான் கண்டதென்ன? தெய்வங்களே, இங்கு நான் கண்டதென்ன?” என்றாள் யசோதை. ராதை “எழுந்து வாருங்கள்” என்று அவளைத் தூக்கி கைசேர்த்து திண்ணையில் அமரச்செய்து நீர்கொண்டுவந்து கொடுத்தாள். சிறுகுடத்து குளிர்நீரை உடல்நனைய உண்டு மூச்சு விட்டு கண்களை மூடி கையூன்றி அமர்ந்தாள். “நான் கண்டதென்ன? எந்தையரே, நான் கண்டதென்ன?”

“நானும் கண்டேன்” என்றாள் ராதை மெல்ல. கண்களைத் திறந்து “நீயா?” என்றாள். “உங்கள் விழிகாண்பதெல்லாம் நானும் காண்பேன்” என்றாள் ராதை. முகம் வியர்த்து கண்மூடி “இனி நான் காண்பதற்கேதும் இல்லையடி” என்றாள் யசோதை.

பகுதி ஆறு: 1. நீர்மரம் பூத்தல்

நீரெல்லாம் கங்கை என்று சொல்லி என்னை வளர்த்தாள் என் அன்னை. நான் கண்ட முதல் கங்கை முத்தமிடக் குனிந்த என் அன்னையின் நெற்றியில் சரிந்த ஈரக்கூந்தலில் நின்று ஒளிர்ந்து என் முகத்திலுதிர்ந்த தனிமுத்து. அதன்பின் எத்தனை கங்கைகள். கூரை முனை சொட்டி, இலை நுனி சொட்டி, முற்றத்தில் நெளிந்தோடி, இணைந்து சிற்றருவிகளாகித் துள்ளி, நுரையெழுந்து நகைத்துச்செல்பவை. யமுனையின் தங்கைகள். கரியநீர் காளிந்தி. அவள் சென்றணையும் கரைதெரியா கங்கை அலைப்பெருக்கு.

அக்கா, நான் கங்கைப் பெருக்கை ஒருமுறையே கண்டிருக்கிறேன். என் தந்தையுடன் காசிக்குச் சென்றிருக்கையில். அஞ்சி கண்பொத்தி படகுக்குள் ஒடுங்கிக்கொண்டேன். என்னை இழுத்துத் தூக்கி “பாரடி, அதோ கங்கை! இனியொருபோதும் நீ காணமுடியாமலாகலாம் அன்னையை” என்றாள் என் மூதன்னை. கண்களை மூடிக்கொண்டு “வேண்டாம் வேண்டாம்” என்று அழுதேன். நான் அதை பார்க்கவேயில்லை. பெருநாவாய் விலாக்களில் அறையும் அதன் நீர்க்கரங்களைக் கேட்டேன். கரைகளை உண்டு நகர்த்துறைகளைத் தின்று அதன் நாக்குகள் எழுப்பும் சொல்லைக் கேட்டேன். அஞ்சி உடல்நடுங்கிக்கொண்டே இருந்தேன்.

என் வீட்டுமுற்றத்துச் சிற்றருவி சென்றுசேரும் யமுனை என்றும் எனக்குரிய கங்கை. என்னைப்போன்றே அவளுமொரு ஆயர்க்குலமகள். மண்மணமும் புதுச்சாணிமணமும் புளித்தபால் மணமும் கொண்டவள். என் தோளணைத்து செவியில் பேசும் மென்குரல் தோழி. அவளறியாத ஏதும் என்னகத்தே இல்லை. அக்கா, நீரென்றால் பூமியின் உள்ளம் என்றனர் நூலோர். எண்ணங்களெனப் பிரிந்தும் உணர்வுகளெனக் குவிந்தும் கனவுகளென ஒளிர்ந்தும் காமமெனக் கரந்தும் மண்ணை நிறைத்தோடுவது நீர். இப்புவியோ நீர்மையெனும் கருணை காலாக கையாக சிறகாக முளைத்தெழுந்த பசுமை. தளிராக எழுந்த அனல். மலராக விரிந்த வான். அதில் காற்றாக எழுந்த மணம். தேனாக ஊறிய தெய்வம். யமுனையிடம் நான் சொல்லாத ஏதுமில்லை அக்கா. யமுனை சொல்லி நானறிந்ததே என் அகம் நிறைந்த அனைத்தும்.

கோகுலத்து இல்லத்தின் சிற்றில் பின் திண்ணையில் தயிர்கடையும் மத்தின் புறாவொலியுடன் இணைந்தெழுந்த இன்குரலில் யசோதை சொன்னாள். அருகே வெண்ணை வழித்தெடுத்த கலத்தைக் கையிலேந்தி ரோகிணி கேட்டிருந்தாள். அப்பால் வெண்ணைக்கிண்ணியுடன் இடையில் கண்ணனுடன் குயில் குரல்காட்டி ஊட்டிக்கொண்டிருந்தாள் ராதை. அவளருகே கற்கள் பொறுக்கி நீரோடையில் எறிந்துகொண்டிருந்த பலராமன் “வெண்ணை ! வெண்ணை!” என்றான். வெண்ணையை விழுங்கிவிட்டு “கண்ணன்! கண்ணன்!” என்றான் கரியோன். “மதுவனத்திலும் மூத்தோன் எக்கணமும் இளையோனுடன்தான் இருந்தான். அவன் சொல்லில் எழுந்த கண்ணனை எப்போதும் நான் கண்டுகொண்டிருந்தேன்” என்று ரோகிணி சொன்னாள். “ஆம், இவனை எண்ணாமல் இமைப்பொழுதும் இருக்கமாட்டோம். இவன் கதைதான் இது” என்றாள் யசோதை.

அக்கா, கன்னிச்சிறுவயதில் நம் கொல்லை நிறைத்தோடும் நதிப்பெருக்கில் நீராடி எழுந்து வந்து கரைநின்ற இணைமருதங்கள் நடுவே சென்று ஆடைமாற்றினேன். விழிகளின் காமத்தை என் முலைமொட்டுக்காம்புகள் கண்டறியத் தொடங்கும் பருவம். உடல்சிலிர்த்து அஞ்சி உடையள்ளி முலைமறைத்து விழியோட்டி நோக்கினேன். எங்கும் விழியேதும் இல்லை என்றறிந்து மேலும் அஞ்சினேன். குவளை மலரிதழோ கூழாங்கல் ஒளியோ விழியாகி எனைத் தொட்டது என்று எண்ணி நோக்கி நோக்கி மயங்கினேன். ஆடையால் உடல்மூடி தோள்குறுக்கி கால்பின்ன ஓடிச்சென்று மோர்கடைந்த அன்னையின் மடிசேர்ந்து அமர்ந்துகொண்டேன். “என்னடி, ஏனடி?” என்றாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டியபின் விழிபொங்கி வாய்விம்மி அழத்தொடங்கினேன்.

“கன்னியரைக் காண கந்தர்வர் வருவதுண்டு. மலராக விழிகொண்டு தெய்வங்கள் விரிவதுண்டு. படமெடுத்த நாகங்கள் பாதாளமூர்த்திகள் கண்பெற்று எழுவதுண்டு” என்றாள் அன்னை. உப்பும் மிளகும் காரக்கற்பொடியும் கலந்து அடுப்பிலிட்டு நெட்டிமுறித்து, நெஞ்சு கைசேர்த்து, துப்பி கனலில் இட்டு கண்ணேறு கழித்தாள். இலைத்தாலச்சுருளில் காப்பெழுதி இடைசுற்றிக் கட்டினாள். “நடுவேளைப் பொழுதுகளில் நடந்து செல்லாதே. தென்றல் தாலாட்டும் தண்ணிழல்கீழ் தனித்திருந்து துயிலாதே” என்றனர் மூதன்னையர். ஆனால் அந்த காணாநோக்கையே என் கன்னிமனம் எண்ணிக்கொண்டிருந்தது. யமுனைப்பெருக்கருகே யார் வந்து அமர்ந்திருந்தது? கன்னியுடல் கவின்காண கண்கொண்ட தேவன் எவன்? ஒருபொழுதும் ஓயாமல் என் நெஞ்சில் அவ்வெண்ணமே குளிர்கொண்டோடிக் கொண்டிருந்தது.

அந்த இணைமருது மரங்களருகே மட்டுமே அவ்வுணர்வை நான் அடைந்தேன். ஒவ்வொருமுறை அவற்றின் அருகே செல்கையிலும் என் உடலெங்கும் ஊசிநுனிகள் வருடுவதை உணர்ந்தேன். கண்பட்டால் நோகும் கன்னியுடல். கண்படா நேரத்தில் காட்சிக்காய் தவித்திருக்கும். பின்னர் உறுதிகொண்டேன், அந்த நீர்மருத மரங்களே என்னை நோக்கும் விழிகளென. அவ்விழிப்பார்வைக்காய் அங்குசென்று அமர்ந்திருப்பேன். பெருந்தடியில் எழுந்த பொந்துகள் விழியாகி ஒளிகொள்ளும். வெள்ளி மின்னும் வேர்ப்புடைப்புகள் வெம்மைகொண்ட மடியாகும். தடித்து புடைத்தெழுந்த அடிமரமே இடையாகும். தழையோசை கொண்டு என்னைத் தாலாட்டி துயிலளித்து கனவுகளில் எழுந்து காட்சியளித்தனர் இருவர்.

பொன்னுடல் கொண்டோன் ஒருவன். வெள்ளியுடல் கொண்டோன் இன்னொருவன். காமம் மின்னும் காளையின் விழிகள் ஒருவனுக்கு. அகமறிந்த தோழியின் ஆழ்குரல் இன்னொருவனுக்கு. ஒருவன் படைக்குதிரை, பிறிதொருவன் அன்னச்சேவல். ஒருவன் சுழல்காற்று. மற்றவனோ இளந்தென்றல். அவன் சொல்லற்ற தசைவீரம். இவனென்றால் கவிநனைந்த மொழிப்பெருக்கு. ஒருவன் தன்னந்தனியன், என்னைமட்டும் அறிந்தவன். இன்னொருவன் எங்கும் நிறைந்தவன், எல்லாமறிந்தவன். இருவரை காமுற்று இனிய கனவுகளில் அங்கே கிடப்பேன். என் அன்னை தேடிவந்து என்னை கண்டடைந்து வசைபாடி அடித்து இழுத்துச்செல்வாள். இணைமருதின் விழியொழிய எத்தனையோ பூசைசெய்தாள். என் உடலெங்கும் தாலிகளும் காப்புகளும் நிறைந்தன. என்னை அழைக்கும் இனிய மென்குரலை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பேன்.

கைநோக்கி குறிசொல்லும் களிந்தமலைக் குறத்தி ஒருநாள் கோகுலத்துக்கு வந்தாள். தானியமும் நெய்யும் கொடுத்து என் அன்னை அவளை திண்ணையில் அமர்த்தி என் கைக்குறி தேர்ந்து கனவுகளை அளக்கச் சொன்னாள். என் ஆழத்தை நானே அஞ்சி “வேண்டாம்! வேண்டாம்!” என்று இருளறைக்குள் ஒடுங்கி முட்டுகளில் முகம் புதைத்தேன். அன்னை என் தோள் பற்றி “வாடி, என்ன அச்சம்?” என்றாள். “அவளை அங்கே வைத்திருப்பவன் எவனென்று நானறிவேன்” என்றாள் குறத்தி. சினந்தெழுந்து வெளிவந்து கை நீட்டி “சொல், யாரென்று” என்றேன். வெற்றிலைச் சிவப்பூறும் சிரிப்பு எழுந்த வாய்குவித்து “கையில் உள்ளது கரந்தமைந்த அனைத்தும் கன்னியிளங்குயிலே. சொல்லில் எழாதவை குறத்தி சிரிப்பில் முளைக்கும் சித்திரப்பூமயிலே” என்றாள்.

மலைக்குறத்தி சொன்னகதை கேட்டு அன்னை அஞ்சி நெஞ்சு பொத்திக்கொண்டாள். கங்கை நீர்ப்பெருக்கின் கதை சொன்னாள் குறத்தி. “பெருகுவதே கங்கை. ஊறுவதும் சொட்டுவதும் ஒழுகுவதும் துள்ளுவதும் ஓசையெழப் பொங்குவதும் எல்லாம் பெருகுவதற்கே. பெருகுவதோ பெருநீர் கடல்சேர்வதற்கே. கங்கையை ஈசன் கரந்த மனமென்றார் முனிவர். அவன் காமப்பெருக்கென்றார் கவிஞர். அலையடிக்கும் நீலமலர்களால் விண்நோக்கி சிரிப்பவள் கங்கை. சிறகசைக்கும் மீன்களே கண்களாக தன்னைத்தான் நோக்குபவள் கங்கை.”

கங்கையில் காமம் ஆடவராத தேவரில்லை, தெய்வமில்லை என்றாள் கருங்குறத்தி. கருவூலமாளும் குற்றுடல் குபேரனின் மைந்தர் இருவர் ஐந்து அப்சரக் கன்னியருடன் அங்கே நீர்விளையாடவந்தனர். ஒருவன் நளகூபரன். இன்னொருவன் மணிகிரீவன். தாமரைஎழிலன் வெண்ணிறமானவன். மணிக்கழுத்தன் கருநிறமானவன். வெண்ணிறக்காமம் எரிந்தெரிந்தழிவது. கருநிறக்காமம் உறைந்துருகுவது. இன்னும் இன்னுமென எழுவது வெண்மை. என்னுள் என்னுள் என ஆழ்வது கருமை. அன்னையே, கன்னியே, இருமுகமும் கொண்ட காமம் ஒருபோதும் ஒடுங்குவதில்லை. இருதட்டு கொண்ட துலாவில் முள் நிலைப்பதில்லை. ஒன்றை உண்டு ஒன்று பெருகும் தீயும் நெய்யும் உண்டெனில் அங்கே வெம்மை அணையுமா என்ன? அன்னமயி, பிராணமயி, மனோமயி, ஞானமயி, ஆனந்தி என்னும் ஐந்து கன்னியரும் அவர்களுக்கு அள்ளி அள்ளி அமுதூட்டினர். கங்கையும் நாணி கண்புதைத்து சுழித்தோடினாள்.

காலம் கங்கைக்குமேல் பெருகிப்பெருகி வழிந்தோடிக்கொண்டிருக்க அவர்கள் முடிவிலாது நீர்விளையாடிக்கொண்டிருந்தனர். பிரேமையை பேராற்றலாகக் கொண்டவர் இசையால் இசைவடைந்தவர் நாரத முனிவர் விண்வழிச்செல்லும் ஒளிமுகிலொன்றில் ஏறி அவ்வழி சென்றார். அவரைக் கண்டு அஞ்சிய ஐந்து கன்னியரும் ஆடைகளை அள்ளிப்பற்றி ஐந்து தாமரைகளாக நீர்மேல் எழுந்து வெட்கி இதழ்குவித்து நீரில் முகம் நோக்கி நின்றனர். விண்நோக்கி எழும் விழியற்றிருந்த ஒளியனும் இருளனும் அவர்களை அள்ளிப்பற்றி முத்தமிட்டு இதழ்மலரச்செய்ய முயன்றனர். சினம்கொண்ட முனிவர் மேலிருந்து தீச்சொல் விடுத்தார். “நீர்மையெல்லாம் நீள்வது நெடுங்கடல் சேர்வதற்கென்று அறியாத மூடர்களே! நீங்கள் காலத்தவம் செய்து கடன் கழிப்பீர்” என்றார்.

கரியோனும் வெண்மையோனும் இரு நீர்மருதுகளாக யமுனைக் கரையருகே முளைத்தெழுந்தனர். வேர் கிளை நீட்டி நீரிலாடி அடிமரம் கனத்தெழுந்து விண்ணில் கிளையாடி நின்றனர். உடலெங்கும் விழியெழுந்து கிளையெங்கும் நாவெழுந்து தவம் செய்தனர். அவர்களின் அழியாக்காமம் சாறாக ஊறி மதநீர் கொண்ட மலராகச் செறிந்து காற்றில் மணத்து நீரில் உதிர்ந்து பரவியது. அவர்கள் தங்கள் காமம் முறிந்து காதல் விரியும் கணமொன்றுக்காகக் காத்திருக்கின்றனர். கன்னியரைக் காமுறும் மரங்கள் அவை. அவர்களின் கண்பட்ட கன்னி உன்மகள் என்றாள் குறத்தி.

அக்கா, அன்றுசென்று மறுநாளே எனக்கு ஆயர்குடியில் மணமகன் தேர்ந்தனர். என்னை மணந்து என் குடிவந்தார் இவன் தந்தை நந்தகோபர். அதன்பின் நீர்மருதின் அடியில் ஒருகணமும் நான் சென்றதில்லை. ஆனால் முன்காலை எழுந்து முற்றத்தை நோக்குகையில் நீர்மருதின் இலைகள் நிறைந்திருக்கக் காண்பேன். கண்மூடி பல்லிறுக்கி என் துடைப்பத்தால் கூட்டி ஒதுக்கி குப்பைக்குள் தள்ளுவேன். நீர்மருது பூக்கும் இளவசந்த காலத்தில் மதம் மணக்கும் மலர்க்குவைகள் என் குடிலின் கூரை நிறைத்து காற்றில் உதிரும். சாளரவிரிசலில் புகுந்து வந்து இருள்நிறைந்த இரவுகளை நிறைக்கும். நீர்மருதை நினையாமல் நான் ஒருநாளும் வாழ்ந்ததில்லை.

அக்கா, நேற்று முன் தினம் நிகழ்ந்ததென்ன என்றறிய மாட்டீர். கன்னங்கரியவனை என் கையணைத்து முலைசேர்த்து சிறுமொட்டு வாயில் கருமொட்டு வைத்து அமுதூட்டிக் கொண்டிருந்தேன். “எத்தனைநாள் முலைகுடிப்பாய்? கால்முளைத்து கைமுளைத்து சொல்முளைத்து எழுந்துவிட்டாய். கண்ணா, இனி அன்னைப்பாலுண்டால் உன்னை யார் ஆணென்பார்?” என்று சிறுதொடையில் அடித்து சிரித்துக்கொண்டேன். வலக்கையால் இவனை வரிந்தணைத்து இடக்கையால் மத்துச்சரடை இழுத்துக்கொண்டிருந்தேன். முன்வசந்தம் அறிந்த முமுட்சுக்கள் நாதக்குரல் கொண்டு வேதச்சொல் கூவுவதைக் கேட்டேன். நீர்மருதின் மதநெடியை ஒருகணம் என் நெஞ்சில் அறிந்தேன்.

அக்கா, என்னென்பேன்! எப்படி அதைச் சொல்வேன்? அக்கணம் இவன் தன் இடக்காலை நீட்டி என் மோர்க்கலத்தை உதைத்தான். மோர்க்கலம் உடையக்கண்டு மனம்குமுறா ஆய்ச்சி எவருண்டு? வெண்ணை திரளாத வெறும்தயிர் சிதறிப்பரந்து அங்கெல்லாம் நிறைந்தது. நெஞ்சில் எழுந்த சினத்தை நானுணரும் முன்னரே அள்ளி அவனை அங்கே இறக்கி விட்டேன். கண்ணில் வெம்மையெழ “கண்ணா, பாலைச் சிந்துபவன் ஆயனல்ல. ஆயர்குடிப்பிறந்தும் ஆகாதது செய்தாய்” என்று கூவி அவனை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கெல்லாம் நோக்கி அலைந்தேன். கன்றைக் கட்டும் கயிறைக் கண்டு அதை எடுத்துவந்தபோது சிற்றுரல்மேல் ஏறியமர்ந்து பூனைக்கு வெண்ணையூட்டும் சிறுவனைக் கண்டேன். “செய்வதெல்லாம் செய்துவிட்டு சிறிதும் நாணிலாது விளையாடுகிறாயா?” என்று கூவி அவனை நோக்கி ஓடினேன்.

சிரித்து கையசைத்து சுற்றி விரைந்தோடும் அவனை சுழன்றுசென்று பற்ற இயலாது மூச்சிளைத்தேன். சின்னஞ்சிறுகாலில் கன்றும் இளமானும் குடிகொள்வதை அறிந்தேன். இளைத்து இடையில் கைசேர்த்து “கண்ணா நில்... நில்” என்று சொன்னேன். “போ, நீ நனைந்திருக்கிறாய்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று திகைத்தேன். “நீ நீரோடை!” என்றான். அறிந்து சொல்கிறானா அறியாப் பிழைமொழியா? என்னவென்றறியாமல் விழிதிகைத்து அங்கே நின்றேன். “வா அருகே, அமுதூட்டுவேன்” என்றேன். “பொய்யுரைக்கிறாய் நீ” என்றான். “பொய்யல்ல கருவண்ணா, உனக்கு இதோ பார் ஊறுகிறது என் நெஞ்சு” என்றேன். ஐயம் கொண்டு தயங்கி அருகே வந்து “நான் நல்ல குழந்தை” என்றான். அள்ளி அவனை அப்படியே கைப்பிடித்து கன்றுக் கயிற்றால் கையிரண்டும் சேர்த்துக் கட்டினேன்.

“கோகுலமெங்கும் கோபியர் உன்னைத்தான் சொல்கிறார்கள். வெண்ணை திருடியுண்டு கலமுடைக்கிறாய். கன்றின் பாலை கவர்ந்துண்கிறாய். கன்னியர் குழலை பற்றி இழுக்கிறாய். அன்னையர் ஆடையை அள்ளிக் கொள்கிறாய். உன்னை அஞ்சி ஆயர்மைந்தர் முற்றத்துக்கே வருவதில்லை” என்றேன். “இன்றெல்லாம் இங்கே இரு. ஒருநாள் உன் கால்கள் ஓய்ந்தால் உலகுநடப்பதொன்றும் குறைந்துவிடாது” என்று அவனை இழுத்து அவ்வுரலில் கட்டிவைத்தேன். “கண்ணன் நல்ல குழந்தை” என்றான். “நல்ல குழந்தையென்றால் இங்கேயே இன்றிரு” என்றேன். “பூனைக்கு வெண்ணை” என எஞ்சிய வெண்ணையை சுட்டிக்காட்டினான். “நான் அதை பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். “கண்ணன் அங்கே போவேன்” என்றான். “உன்னால் முடிந்ததைச் செய்” என்று உள்ளே சென்றேன்.

உரலில் கட்டியிருக்க எங்குசெல்வான் என்று எண்ணி உலையேற்றி ஊண்சமைக்க முற்பட்டேன். அக்கா, வானிடிந்து வீழ்வதுபோல் பேரோசை எழக்கேட்டு ஓடி வெளியே சென்றேன். உரலில் இல்லை என் கண்ணன் எனக்கண்டு “கண்ணா! எங்கு சென்றாய்? கரியவனே? என்ன செய்தாய்?” என்று கூவி கைபதைக்க கால் தளர ஓடினேன். காளிந்தி கரையருகே இரு மருதும் குடைசாய்ந்து விழுந்திருக்கக் கண்டேன். அவற்றில் கூடணைந்த பறவைகள் கூடி எழுந்து வான்சுழன்று குரலெழுப்பக் கேட்டேன். வேர்பிளந்து எழுந்த செம்மண் குழியும் யமுனை நீர்பிளந்து அலைத்த கிளைக்கொத்தும் என தடி பிளந்து கிடந்த மருதமரங்களைக் கண்டு கண்மயங்கி தலைசுழன்று மண்ணில் விழுந்தேன்.

ஆயர்குலமே ஆர்ப்பரித்து ஓடிவந்து “கண்ணனெங்கே? கண்ணனைப்பார்” என்று கூவுவதைக் கேட்டு இறந்தேன். “இங்கிருக்கிறான் இளவன். அவன் கருமேனியில் ஒரு மண்கூடப் படவில்லை” என்றொரு குரல் கேட்டு மீண்டும் பிறந்துவந்தேன். ஆயர் இருவர் கண்ணனைத் தூக்கிக் கொண்டுவந்து என் கையருகே நிறுத்தினர். “மானுடனா இவன்? மண்வந்த தேவனா, மாயப் பெருநாகம்தானா?” என்றார் அண்டைவீட்டு ஆயர். “இவன் இழுத்துச்சென்ற உரல்பட்டு விழுந்திருக்கின்றன இரட்டைப்பெருமரங்கள். எங்குசென்றுரைப்பது இதை?” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. மழையூறி வேர்நைந்திருக்குமோ, முதுமைகொண்டு உள்ளீடற்றிருக்குமோ, காளிந்தி நீர் கொண்டு கரையுடைந்திருக்குமோ என்றெல்லாம் பேச்சுக்கள் சூழ இவன் கண்களை நோக்கி “கண்ணா நீ ஏழுலகும் அறிபவனா? அன்னைமனம் அறியும் ஆற்றலுள்ள ஒருமகனா?” என்று கேட்டேன். விழிமலர்ந்து சிரித்து கைதூக்கி “அம்மரம் இம்மரம், அம்மரம் இம்மரம்” என்றான்.

அங்கே விழுந்துகிடந்த ஒற்றை மருதமலர் எடுத்து முகர்ந்தேன். வெற்றுமலராக என் விரல்கொண்டிருந்தது. வீசிவிட்டு கண்ணனைக் கையில் எடுத்து நெஞ்சணைத்து நின்று அம்மருதின் ஓங்கிய வெண்தடிகளை நோக்கினேன். வேர்கொண்டு உண்டதெல்லாம் வான்கொண்டு அறிந்ததெல்லாம் நீர்கொண்டு செல்ல நிறைந்து கனத்து அங்கே கிடந்தன அவை. தண்மணிக்கழுத்தனும் தாமரைஎழிலனும் விண்ணகம் புகுந்திருப்பர் என்று எண்ணிக்கொண்டு புன்னகைத்தேன். திரும்பி நடக்கையில் என்னுள் இருந்து எப்போதும் கனத்த எடைமிக்க கரும்பாறைகளெல்லாம் உதிர்ந்திருப்பதை அறிந்தேன். அக்கா, நாளை விண்ணகம் ஏறுகையில் வெறும் சிறகிரண்டு போதும் எனக்கு. முகில்வெளியில் பறப்பேன். விண்ணொளியில் கலப்பேன். விரிவானின் எல்லையில் விழிபூத்தெழுந்த என் நீலமணிவண்ணனின் நிலவுமுகம் காண்பேன்.

வெண்ணைக்கலத்தை உள்ளறைக்குள் கொண்டுசென்று வைத்து வந்த ரோகிணி “சற்று நீ எழுந்துகொள். சரடை நான் பற்றுகிறேன்” என்றாள். யசோதை எழுந்து இடையில் கைவைத்து மத்து சுழலும் பால்அலைகளை நோக்கி நின்றாள். “எந்தக்கை இழுக்கும் எச்சரடு இழுத்து இழுத்து கடைகிறது நம் உள்ளுறையும் அமுதை? எந்தக்கை திரட்டி எடுக்கிறது நம் அகமுணரும் நெய்யை?” என்றாள். புன்னகையுடன் தலைகுனிந்து “எரிவிளக்கு நெய்கோரும் கருவறை ஒன்றுள்ளது என்கிறார்கள்” என்றாள். அப்பால் ராதை “கரியவனே, கனலெல்லாம் எரிந்தணைந்த கரியே” என்று நகையாடி அழைக்க “போ, உன்னுடன் பேசமாட்டேன்” என்றான் கண்ணன்.

“மருதம் சரிந்த கதைகேட்டு இவன் தந்தை அஞ்சிவிட்டார். இங்கே நிகழ்வனவெல்லாம் நன்றல்ல என்கிறார். கோகுலம் விட்டு வேறெங்காவது செல்லலாம் என்கிறார்” என்றாள் யசோதை. “வேறு இடம் நோக்கியிருக்கிறார்களா?” என்று ரோகிணி கேட்டாள். “அங்கே மலர்மரங்கள் மட்டுமே வளரும் வனமொன்றுள்ளது. அதை விருந்தாவனம் என்கிறார்கள். அங்கே குடில்கள் அமைக்க கழியும் புல்லுமாக ஆயர்கள் சென்றிருக்கின்றனர்” என்றாள் யசோதை. “அங்கே மலர்களெல்லாம் இரவில் இன்னிசை எழுப்புகின்றன என்கிறார்கள். விண்ணின் கைகள் மீட்டும் யாழ் அது என்கிறார்கள்.”

ரோகிணி கடைவதை நிறுத்தி புன்னகை செய்து “கண்ணனுடன் இவள் வந்தால் கல்லும் குழலிசைக்கும்” என்றாள். யசோதை திரும்பி நோக்கி “இவள் அகமெழுந்த மரங்களில்லையோ?” என்றாள். “ஒருமரமே கிளைவிரித்து விழுதூன்றி காடாகும் நிலமல்லவா அவள்?” என்றாள் ரோகிணி.

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல்

ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த்தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் தனித்துறையும் ஒருநிலமும் இங்கில்லை என்றறிக. இங்கே நம் காலுக்கடியில் நாகப்புழைகள் ஓடுகின்றன. நஞ்சூறும் காற்றில் நம் மூச்செழுகிறது. கன்றுடன் பசு கூட்டி குடிபெருகி நாம் வாழ பிறிதொரு இடம்தேர்வோம்.”

அன்று பின்மதியம் கன்றும் பசுவும் அவிழ்த்தெடுத்து கலமும் பொருளும் கட்டிச்சுமந்து குடியனைத்தும் கூடி அங்கே வாழ்ந்த கதை பேசி விட்ட நினைவுகளை எண்ணி விலகிச்சென்றனர். எந்தை மூதாயர் ஒரு கனல்சுள்ளி கையிலெடுத்து காற்றூதும் திசைதேர்ந்து “கெடுக எங்கள் தீங்கனைத்தும். பொலிக எங்கள் பசுக்குலங்கள். எழுக எரிமலர்! மூள்க முப்புரப்பெருங்கனல்!” என்று கூவி அதை ஒரு புற்கூரைமேல் வைத்தார். செந்நெருப்பின் ஒளியிதழ் மலர்வதைக் கண்டேன். பறக்கும் கொடிபோல அனல் நாவொலிக்க எங்கள் குடில் மீதெழுந்தது எரிமரம். கருங்கிளை விரித்து கைவிரித்து நின்றாடியது. மலைச்சரிவேறி நின்று நோக்கியபோது வெந்து வெண்சாம்பலாகி விரிந்த என் குடியைக் கண்டேன்.

நான்குசோலை கடந்து நடந்து வந்து நின்ற இடம் கோகுலம். இங்கே மண்ணில் விழுந்துகிடந்த மரமொன்று தளிர்விட்டெழுந்ததைக் கண்டோம். அதன் அடிமரத்துச் சிறுபொந்தில் கூடுகட்டி குஞ்சு பொரித்த அன்னைக்காகம் ஒன்றைக் கண்டோம். கூட்டுக்குள் மணிவிழி விரித்து மலர்சிறை பிரித்து காகக்குஞ்சொன்று எங்கள் காலடி கேட்டு எம்பி நோக்கியது. அருகே கருங்குயில் கரந்திட்ட சிறுமுட்டை விரிந்து எழுந்துவந்த சிறுமணிக்குஞ்சொன்று செவ்வுதடு பிளந்து மெல்லியகுரலெழுப்பக் கேட்டோம். “மதியறிந்த காகம் மண்ணுயரத்தில் கூடுகட்டும் இவ்விடம் நாகம் குடியேறா நலமுடையது. இங்கு அமைக நம் குலம். இங்கு பெருகட்டும் நம் குடி” என்றார் எந்தை மூதாயர். “பொலிக! பொலியே பொலிக!” என்று குரவையிட்டனர் பெண்கள்.

“கோகிலம் விரிந்த இவ்விடம் கோகுலமென்றே அழைக்கப்படுக. இங்கே அன்னை மடிநிறைத்து ஆயர் குடி நிறைத்து ஆன்றோர் சொல்நிறைத்து அகிலம் புகழ்நிறைக்கும் மைந்தன் ஒருவன் நிகழ்க. காகக்கூட்டின் குறிகள் சொல்லும் குறிப்பு அதுவே” என்றார் எந்தை. “ஆம். பொலிக! பொலியே பொலிக!” என்றனர் ஆய்ச்சியர். கோகுலத்தில் குடியமர்ந்தோம். எங்கள் குலம்செழிக்கலானோம். மந்தைப்பசு பெருக மனைதோறும் பெருகியது மாமங்கலம். கோகுலத்தில் ஒருபோதும் பசியென்றும் பிணியென்றும் பகையென்றும் போரென்றும் எதையும் நான் கண்டதில்லை. அன்று சொன்ன அச்சொல் பலிக்க இன்றுவந்தான் என் கைநிறைக்கும் இனியமகன். இளநீலம் மலர்ந்த ஒளிவிழியன். முத்தை ஈன்று மூழ்கி மறையும் சிப்பியென ஆனது கோகுலம். அதோ நாம் விட்டுச்செல்லும் அன்னைமடியென அது தனித்து நிற்கிறது.

அன்னை வரியாசி சொன்னசொல் கேட்டு ஆய்ச்சியர் கோகுலத்தை நோக்கி கண்பொங்கி திரும்பினர். “கோகுலம் இனிமேல் கன்றுசூழும் மன்றாகி இங்கிருக்கும். கண்ணன் அடிபட்ட மண்ணென்று நம் குலந்தோறும் அதன் பெயர் வாழ்ந்திருக்கும்” என்று சொல்லி வரியாசி கைகூப்பினாள். யக்‌ஷவனம் பிலக்‌ஷவனம் இந்திரவனம் என்னும் மூன்று சோலைகளைக் கடந்து அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர். தொலைவிலேயே குயில்குலம் கூவும் குரல்கேட்டு வியந்து கைகொண்டு வாய்பொத்தி முகம் மலர்ந்து நின்றுவிட்டனர். “கோடைக்குயில் கீதம் இத்தனை நாதம் கொண்டு எங்கும் கேட்டதில்லையடி” என்றாள் வரியாசி. ஒன்று கேட்க ஒன்று உரைக்க இன்னொன்று ஐயப்பட பிறிதொன்று விளக்க அருகே ஒன்று வியக்க அங்கே ஒன்று நகைக்க அப்பால் ஒன்று பாட அங்கே நிறைந்திருந்தது ஒற்றைச்சொல் என்று வரியாசி உணர்ந்தாள். ஒன்றை அறிவதில் இத்தனை உணர்வுகளா என்று எண்ணினாள். ஒன்றானது தன்னை பலவாக்குவது அவ்வாறல்லவா என்று அமைந்தாள்.

விருந்தாவனத்தில் மலர்பூத்த மரங்களின் நடுவே பசுமை ஒளிர்ந்த புல்விரிவில் பிறைவடிவில் அமைந்திருந்தது ஆயர் பாடி. நடுவே மூன்றடுக்குக் கூரையுடன் நான்குபுறமும் சாளரங்களுடன் இரண்டு திண்ணையும் இருமருங்கும் தொழுவங்களுமாக எழுந்திருந்தது நந்தகோபனின் இல்லம். அன்னை இடையமர்ந்து அகல் விழி திறந்து நோக்கி அசைவிழந்திருந்த கண்ணனை நோக்கிக் குனிந்து “என்ன விழி இது? ஏனிந்த மோனம்? கண்ணன் நெஞ்சில் ஓடும் எண்ணங்கள் ஏது?” என்றாள் வரியாசி. “கரியவனே, இது உன் இல்லம். இது நீ விளையாடும் எழில்மலர்ச் சோலை. இதன் பெயர் விருந்தாவனம்.” வலக்கையை வளைத்து புறங்கை மூட்டை வாய்சேர்த்து எச்சில் வழிய சுவைத்துக்கொண்டிருந்த மைந்தன் கைவிலக்காமலேயே கண்களால் புன்னகைத்தான்.

அவன் கைகளை விலக்கி சிறுவாய் கனிச்சாற்றை சுட்டுவிரலால் துடைத்து “அதோ உன் இல்லம்” என்றாள் மூதன்னை. “இல்லம்” என்று ஈரச்சிறுவிரல் சுட்டி அவன் சொன்னான். பின்னர் கால்களை உதைத்து குதிரைவீரன் போல எம்பி “ராதை! ராதை!” என்றான். “அதையே சொல்லிக்கொண்டிரு. உனக்கென்ன அன்னையரும் மாமியரும் அயலாரும் உற்றாரும் பெண்கள் அல்லவா?” என்றாள் வரியாசி. “அவள் இடையமர்ந்து வளர்ந்தவன். அவள் மொழிகேட்டு மலர்ந்தவன். அவளையன்றி எவள்பெயர் சொல்வான்?” என்றாள் யசோதை. வரியாசி உதட்டைச் சுழித்து “உன்னைச்சொல்லவேண்டும் பெண்ணே. உன்மைந்தன் உன்னிடையில் இருக்கையிலும் அவள் நெஞ்சில் தவழ்கிறான்” என்றாள். “அவன் நெஞ்சில் அழியாது குடிகொண்ட அழகல்லவா அவள்?” என்றாள் யசோதை.

கண்ணன் கீழிறங்கி இல்லம் நோக்கி இளம்காலடி வைத்து ஓடத்தொடங்கினான். திண்ணையருகே நின்று தொற்றி மேலேறி உள்ளறைக்குள் ஓடி பின்கட்டில் வெளிவந்து இடம் வந்து தொழுவத்தில் நுழைந்து “இல்லம்!” என்றான். மீண்டும் முன்முற்றம் வந்து பின்முற்றம் சென்று வலம் வந்து தொழுவம் கண்டு முற்றத்து வந்து “இல்லம்!” என்றான். “ஒரு வீட்டை எத்தனை முறைதான் சுற்றுவாய்?” என்று சொல்லி யசோதை நகைத்தாள். இல்லத்துக்குள் நுழைந்து இருண்ட வைப்பறைக்குள் சென்று கூரைமுளை நோக்கி கைசுட்டி “இங்கே உறி!” என்றான். “அங்கே வெண்ணைப்பானையை வை என்கிறானடி உன் மகன். அவன் கவர்ந்தெடுக்க ஏற்ற இடம் ஏதென்று அவனே சொல்லிவிட்டான்” என்றாள் யசோதையின் தோழி அனகை. “சிரிக்காதே, உன் வீட்டிலும் உறியமையும் இடமேதென்று அவன் இப்போதே அறிந்திருப்பான்” என்றாள் அவள் தோழி கனிகை.

“பர்சானபுரியின் இளமகள் வருவதற்கு இன்னமும் அருகுள்ளது இந்த இடம்” என்றாள் அனகை. “அவள் வந்து தொட்டால் இவன் நீர் பட்ட பால்பொங்கல் அல்லவா?” என்றாள் கனிகை. கையில் பொரிமலரும் மலர்க்குவையும் கொண்டு யசோதை இல்லம் புகுந்தாள். அடுமனையில் நெருப்பேற்றி பால்கலம் நிறைத்து பொங்கி எடுத்துவைத்தாள். “பொலிக! பொலி பொலிக!” என விருந்தாவனமெங்கும் ஆய்ச்சியர் குரலெழுந்தது. “கண்ணா, பாலுண்ண வாராய்!” என ஆயர்மகளிர் இல்லம் தோறும் நின்று அழைத்தனர். மயில்பீலி மணிக்குழலும் கையில் வேய்ங்குழலும் கொண்டு இல்லம் தோறும் சென்று பாலுண்டு மீண்டான். வாய்நிறைக்கும் பால்மணம் கொண்டு வீடுவந்த மைந்தனை அள்ளி முகர்ந்து “எத்தனை இல்லத்தில் உண்பான் இவன்? இனி நாம் என்ன ஊட்டுவது இவனுக்கு?” என்று வரியாசி கேட்டாள். “பாற்கடலையே குடித்தாலும் பசியாறமாட்டான். நள்ளிரவில் முலைதேடி பாலெங்கே என்பான் பழிகாரன்” என்றாள் யசோதை.

காலையில் எழுந்து கண்விழித்ததுமே கண்ணனெங்கே என்றுதான் பார்ப்பாள் வரியாசி. கதவு விரிந்திருக்க முற்றத்து மென்மணலில் காலடித்தடம் கிடந்தால் கண்ணன் சென்ற திசை தெரியும். “அன்னையே, சற்றுமுன் எங்கள் வீட்டில் பால்குடித்தான்” என்று ஒருத்தி கூவிச்சொல்வாள். “என் வீட்டு மைந்தனும் அவனுடன் சென்றுவிட்டான். யமுனையில் கோடைநீர்ப்பெருக்கெடுக்கும் காலம். என்னென்று சொல்வேன்? உங்கள் புதல்வன் கால்களுக்கொரு பூட்டுபோட வழியில்லையா?” என்பாள் இன்னொருத்தி. “மலர்கொழுத்த மாமரத்தை உலுக்காதே. மா நிறைந்தால் கனியெல்லாம் உனக்குத்தானே என்றேன். பன்னிரு வானரங்களை படைதிரட்டி கூட்டிவந்து ஏறி உலுக்கி என் முற்றத்தில் பரப்பிச்சென்றான். இன்று காலை புதுமலர் பூத்து சினைப்பசு போல சிரம் தாழ்த்தி நிற்கிறது என் முற்றத்து மாமரம்” என்பாள் ஒருத்தி. “கண்ணனெங்கே அன்னையே? புதுநெய் உருக்குகிறேன். அதிலிட்ட கருவேப்பிலைக் கொழுந்தை உண்ண நேற்றே அவன் சொல்லிவைத்திருந்தானே?” என்று அவளிடமே கேட்பாள் இன்னொருத்தி.

ஒருமைந்தன் உலகெல்லாம் நிறைய முடியுமா என்று நான் வியப்பேன். கண்ணனென்று கண்டதெல்லாம் புற்றெழுந்து சிறகுகொள்ளும் புதுமழையின் ஈசல்பெருக்குதானா? ஆயிரம் கண்ணன்கள். பல்லாயிரம் சிறகுகள். எங்கு சென்று எந்த மைந்தனைத் தேடுவேன்? ஆயர்குடியில் அத்தனை மைந்தர்களும் மாயன் போலிருந்தால் முதுமகள் என்ன செய்வேன்? இடையில் கைவைத்து சோலைநடுவே நின்று கூவி அழைப்பேன். “கண்ணா, கரியோனே, எங்குள்ளாய்? மூதன்னை கால்வருந்தலாமா? கூவி அழைத்து குரலழியலாமா? வந்து அமுதுகொள். உன் அன்னைக்கு பொழுது கொடு!” சோலை நிறைக்கும் நீலமலரெல்லாம் கண்ணன் உடல் போல கண்ணுக்குத்தெரிந்தால் எத்தனை வழிசெல்வேன்? எங்கு சென்று தேடுவேன்?

கண்ணனைக் கண்டுவிட்டால் சோலையெல்லாம் சிரிக்குமொலி கேட்பேன். கண்ணா, அன்னைமனத்தை அறியாதவனா நீ என்று அயர்ந்து நிழல்தேர்ந்து அமர்ந்தால் அருகே மரக்கிளையில் இருந்து குதித்து என் கால்களை பற்றிக்கொள்வான். “அன்னையே, அழுத்திவிடவா?” என்பான். கையை விலக்கு கரியவனே, உன் மலர்க்கரங்கள் தொட்டபின்னர் இக்கால்கள் மண் தொட்டு நடக்குமா என்ன? விண்ணளாவும் கால்களுடன் என் உதிரம் வாழும் இம்மண்ணிலெப்படி நிற்பேன்?

மங்கையரே கேளுங்கள். அன்னை நெஞ்சில் கனிவுக்கு மேலே கடுமை எழும். அகம் கொள்ளும் அச்சம் எழுந்து ஆட்டுவிக்கும். மூவுலகும் நிகர்கொள்ளும் முழுமணியை தன் முந்தானை முடிச்சில் கரந்தவளுக்கு விழிதுஞ்ச வழியுண்டா என்ன? இரவில் துயில்கையிலும் சிற்றகலை ஏற்றிவைப்பேன். அதில் ஆடும் சுடர்போல அசைவே என் அகமாகி இரவிருப்பேன். பூவுதிரும் ஒலிகேட்டும் பதறி அகம் விதிர்ப்பேன். கைநீட்டி அருகே கண் துஞ்சும் கரியோனை தொட்டறிவேன். சிறுகாலைத் தொட்டு மணிக்கழலை உருட்டி விரல்தளிர்களை எண்ணி துயிலாழ்வேன்.

விரஜகுலத்தீர் கேளுங்கள்! விழிக்கு அப்பாலும் என் அகம் நோக்கியிருக்கும். அதனால்தான் நள்ளிரவில் விழித்தெழுந்து நாகத்தின் பேருருவைக் கண்டேன். அகல்விளக்கின் சுடர்மேல் விழுந்த மலரிதழின் நிழலென எழுந்து கூரைவளைவில் குனிந்து என் மைந்தனை நோக்கி விழியொளிர்ந்துகொண்டிருந்தான். குரலிழந்து கையசைத்து நான் கூவிக்கொண்டிருக்க மலர்பற்றி எரியும் தழலசைவில் அவன் படமாடி பின் அனலாகி எழுந்தாடி அணைந்து மறைந்தான். அன்றுமுதல் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவன் காலடியைத் தொடர்ந்து காடெங்கும் சோலையெங்கும் சென்றுகொண்டிருந்தேன். நீலச்சிறுபாதம் நடந்துசென்ற தடமருகே நீர்வழிந்த வரிபோல பாம்பு இழைந்துசென்ற பாதையொன்று போகக் கண்டேன். அவன் கண்துயிலும் மரநிழலில் குறும்புதர் செறிவுக்குள் நஞ்சின் மணம் எழ உணர்ந்தேன்.

யாரிடம் சொல்வேன்? எப்படி சொல்லாக்குவேன்? அச்சம் கனத்து அகத்தே நஞ்சாகி நானுமொரு நாகமானேன். அவன் செல்லும் வழி தேர்ந்து சென்ற இடத்தில் யமுனை விழிகொண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டேன். குளிர்நீர் காளிந்தி அங்கே கொப்பளித்து குமிழிகொண்டாள். செல்லும் வழியெங்கும் சோலையெழும் நீர்ப்பெருக்கு அங்கு மட்டும் பசுமை ஏதுமின்றி பாழ்பட்ட கரை கொண்டிருந்தது. ஒருபறவைச் சிறகுகூட அசையாத வெறும் வானம் அங்கே கவிந்திருக்க கண்டேன். தனிநீலக் கடம்பொன்று தாழ்ந்து நின்ற சுழிக்கரையில் கனலருகே என்பதுபோல் உடல் வேர்த்து நின்றிருந்தேன். நீரில் நெருப்புறையக் கண்டேன். நீலவானம் சுழித்தழியக் கண்டேன். அச்சுழிக்குள் எழுந்தமைந்த கன்னங்கரிய பெருந்தழலொன்றைக் கண்டேன். நீள்நாகம் ஒன்றின் வாலசைவென்று அதை உணர்ந்தேன்.

கன்று ஒன்றின் கயிறு பற்றி மூன்று சோலை வழிகடந்து குறிதேரச் சென்றேன். வேப்பிலைக் கொழுந்தெடுத்து வெறிகொண்டாடி குறிசொன்னாள் குறத்திமகள். ஆறாயிரம் யோசனைக்கு அப்பாலுள்ளது ஆயிரம் காதம் அகலமுள்ள ரமணகத்தீவெனும் பாதாள உலகம். அதன் வானிலெழுந்த அனலோனின் நிழல் விழுந்து ஒரு நாகமாகியது. தன் மைந்தனை குனிந்து நோக்கி முகம் மலர்ந்த எரிதேவன் “கரியோனே, காளியனே” என்றழைத்தான். ஐம்பெரும் பூதங்களையும் தலைகளாக்கினான். தன் ஐந்து விரல்களையே செந்நாக்குகளாக அளித்தான். ரமணகத்தீவில் ஒற்றைப்பெருந்தெய்வமாக, அரசும் குடியும் அவனேயாக ஆட்சி செய்தான் காளியன்.

விண்ணவன் ஏறும் புள்ளரசன் வானில் பறக்கும் நிழல்கண்டு மண்ணிலும் ஆழத்திலும் வாழும் நாகங்களெல்லாம் தலைதாழ்த்தி தன்னுடலில் தான்சுருண்டு ஒடுங்கவேண்டுமென்பது நெறி. அனலோன் மைந்தனென்னும் ஆணவத்தால் தழல்சிறகு நிழல்கண்டும் தலைஐந்தும் தூக்கி காளியன் நா பறக்கச் சீறினான். குனிந்து நோக்கிய சிறகோன் உகிர்கவ்விய இரை கீழே விழுந்தது. ஐந்து வாய் விரித்து நெளிந்தோடிச் சென்று அதை எடுத்து உண்டான். சீறித் தழைந்துவந்து நாகத்தலை ஐந்தும் கொத்தி நீலக்குருதி வழிய தூக்கிச் சென்றது விண்ணாளும் பெரும்புள். வடவானில் சிரமெழுந்த இமய முடிமீது கொண்டுவைத்து கொத்தி உண்ண எண்ணியது.

“எந்தையே! எனைக்காக்க எழுந்தருள்க” என்று காளியன் ஏங்கும் குரல்கேட்டார் எரிவடிவோன். விரிதழல் முகிலென வானிலெழுந்தார். வெம்மைகொள் கரத்தால் புள்ளரசன் சிறகை அறைந்தார். உகிர்நழுவி மண்ணில் விழுந்து நெளிந்து படமெடுத்த மைந்தனிடம் “பிருந்தாவனம் செல்க. அங்கே சௌபரி முனிவர் தவம்செய்த நீர்ச்சுழியில் குடிகொள்க. இப்புவியில் புள்ளரசன் அணுகமுடியாத இடம் அதொன்றே” என்றார். நிலத்தில் நெளிந்தோடி நீரில் பாய்ந்து மூழ்கி வந்து பிருந்தாவனத்தருகே யமுனைச்சுழியொன்றில் குடிகொண்டான் அனல்மைந்தன். காளியனின் நாநுனியில் வாழ்கின்றான் செங்கனலோன். அவன் வால்நுனியில் எழுகின்றான் கருந்தழலோன் என்றாள் குறிசொன்ன குறத்தி. சௌபரி முனிவர் சொன்ன சொல் நின்றிருக்கும் நீர்ச்சுழியில் பெருஞ்சிறகோன் இறங்க மாட்டான். காளியனை வெல்ல இப்புவியில் எவருமில்லை என்றாள்.

அஞ்சி உடல்நடுங்கி கண்ணீர் வழிந்தோட குடிமீண்டேன். குறிச்சொல்லை எடுத்துரைத்து அன்னையர் நெஞ்சை அழியவிடலாகாதென்று உறுதிகொண்டேன். என் உடலெங்கும் விழியாகி மைந்தனை வழிதொடர்ந்தேன். யமுனைக்கரையோரம் தோழர்சூழ்ந்தாடி அவன் செல்லும்போதெல்லாம் தொடர்ந்தோடி அழைத்துவந்தேன். “பித்தியானாள் பேரன்னை. பெயரன் பெயர் சொல்லி சோலையெங்கும் அலைகின்றாள்” என்றனர் ஆயர்குலமகளிர். நான் எண்ணுவதென்ன என்று எங்கனம் உரைப்பேன்? ஆயிரம் கால்முளைத்த ஆயர்ச்சிறுவனை எப்படித் தொடர்வேன்? கன்னியரே, கேளுங்கள். கண்ணனை அறிவதற்கு கண்ணீரொன்றே வழியென்றறிந்தேன்.

நேற்று மதுவனத்தில் இருந்து ரோகிணியுடன் பலராமன் வந்திருந்தான். விருந்தாவனத்தைக் காட்டுகின்றேன் வா என்று தம்பி தமையனை அழைத்துச்சென்றான். அவன் சென்ற வழிதேடி புதரளைந்து மரக்கிளை விலக்கி நானும் சென்றேன். எதிரேவந்த மைந்தனிடம் “எங்கே என் கண்ணன்?” என்றேன். “வனமாடி வியர்த்ததனால் நீராடிவரலாம் என்றான். யமுனைக்குச் செல்லாதே என என் அன்னை சொன்னதனால் நான் மட்டும் மீண்டேன்” என்றான். “கண்ணா! நதிப்பெருக்கில் நஞ்சுள்ளது.வேண்டாம் விலகிவிடு” என்று கூவி நான் விருந்தாவனத்தின் சோலைமரங்கள் நடுவே விரைந்தேன்.

நீர்ச்சுழியின் மீதெழுந்த நீலக்கடம்பில் நின்றிருக்கும் மைந்தனை தொலைவிலேயே கண்டுவிட்டேன். கைநீட்டி கண்ணா கரியவனே என்று கூவி அணுகிச்சென்றேன். அவன் கையிலொரு மரப்பந்திருந்தது. அவன் பந்தை வீச இளங்கோபர்கள் ஓடிப்பிடித்து திரும்ப எறிந்தனர். அம்மானையாடும் கையாக அசைந்தது கடம்ப மலர்க்கிளை. அதிலொரு நீலக்கரும்பந்தாக துள்ளியாடினான் என் சிறுமைந்தன். என் ஆழத்தில் எழுந்து அடிவயிற்றில் கொழுந்தாடி சிந்தையைப் பழுக்கவைத்த செங்கனலை என்னென்பேன். அன்னையென்றான அக்கணமே பெண்ணறியும் பெருநெருப்பல்லவா அது? சிதையேறி எரிகையிலும் விண்ணேறிச் செல்கையிலும் ஆடையென அகம்சூடும் அனல் அல்லவா? “கண்ணா குலக்கொழுந்தே. நில் அங்கே. அன்னை குரல் கேள்” என்ற என் குரலைக் கேட்டு அவன் ஒருகணம் திரும்பினான். அம்முகத்தில் எழுந்த இளநகையைக் கண்டேன். மறுகணமே கால்நழுவி கருநீர்ச்சுழிக்குள் விழுந்தான்.

ஆயிரம் நூல்கற்று அமைந்தாலும் அதைச்சொல்ல மொழிகொள்ளேன் அன்னையரே. அலையிளகிக் கொந்தளிக்கும் நீர்ச்சுழியைப் பிளந்தெழுந்து ஐந்து தலைசீற வால்சுழல எழுந்துவந்தான் காளியப்பெருநாகம். கருந்தழல் கொழுந்தாடல். எரிந்தாடும் செந்நாக்கு. சீறும் அனல்மூச்சு. ஏழு தலைமுறையின் அன்னையரெல்லாம் என்னுடலில் எழுந்துவரக்கண்டேன். ஆயிரம் கைகள் அடிவயிற்றில் அறைந்து அலறுவதைக் கேட்டேன். அக்கணம் அறிந்தேன் அன்னையாகி நிற்பதன் வதை என்ன என்று. விண்ணாளும் தெய்வங்கள் என் மீது ஏற்றிய சுமை என்ன என்று.

நீருள் புகுந்து நீந்தும் நீலக்கரங்களைக் கண்டேன். பின் அலைபிளந்து எழுந்து ஐந்து தலை மீது ஆடும் கால்களைக் கண்டேன். உலகேழும் சுமப்பவன் கொண்ட எடைபோல அவன் சிறுகால்கள் ஐந்துதலை அரவை அழுத்தி நீருள் செலுத்தக் கண்டேன். மண் உமிழ்ந்தது நீலவிஷம். நெருப்புமிழ்ந்தது செவ்விஷம். நீர் உமிழ்ந்தது பால்விஷம். காற்றுமிழ்ந்தது கருவிஷம். விண் உமிழ்ந்தது பொன்விஷம். ஐந்து நஞ்சும் அனல்காற்றென சீறிவந்து விழுந்த நீர் சினந்து கொதிப்பதைக் கண்டேன். நெருப்புண்ணும் நீரின் சீற்றத்தைக் கேட்டேன். அலையிளகி அலையிளகி கொந்தளிக்கும் ஆற்றின்மேல் விண்ணிலொரு செம்மேகமாக எரிதேவன் எழுந்துவரக்கண்டேன். அவன் தன் அனல் கைகள் வீசி அழுவதைக் கேட்டேன்.

அணைந்தது கருந்தழல். அலையடங்கி அமைந்தது கருநதி. அதிலாடி எழுந்தது என் கருநீலக் கண்ணன் கழல். நீந்திக் கரைசேரும் நீலமேக நிறத்தானை கூடி கூச்சலிட்டு ஓடிச்சென்று தழுவும் ஆயர்மைந்தரைக் கண்டு அங்கே அயலவள் போல் நின்றேன். கைகளும் கால்களும் என் கண்களும் குளிர்ந்து நின்றன. கருத்தும் கடந்து நின்ற கனலும் அணைந்து நின்றன. அன்னையரே, ஆய்ச்சியரே, என் ஆயிரம் தலைமுறை அன்னையரெல்லாம் அழலவிந்து அமைந்ததை உணர்ந்தேன். இங்குள்ள அனைத்தும் ஆற்றும் அங்குளப் பொருள் ஒன்றைக் கண்டேன். எங்குமுளது வந்து என் கையில் தவழ்ந்ததை அறிந்தேன். என்னவன் என்னுயிர் என்று மன்னுயிரென்னால் மயங்கும் வண்ணம் உணர்ந்தேன். அக்கணமே அவனிலிருந்து உதிர்ந்து எங்கோ சென்று நின்றேன்.

காளியனிலாடிய கரியவனைத் தூக்கி நடமிட்டு கொண்டுசென்றது கோபச்சிறுவர் குழாம். அவர்களை விட்டுப்பிரிந்து சென்று பூத்தமலர் மரமொன்றின் கீழே அமர்ந்துகொண்டேன். ஆழியும் வெண்சங்கும் கொண்டோன். ஊழிமுதலெழுந்து பாழிவரை நிறைந்தோன். அறிந்தறிந்து நிறைந்தாலும் அப்பால் எஞ்சும் அரும்பொருள். என்னுள் எரிந்தெரிந்து நின்றதெல்லாம் அவன் ஆடல். இனி இவ்வுடலில் எஞ்சுவதெல்லாம் ஒரு சிறு நினைப்பு. கருவுக்குள் புகுந்த அணுவுக்குள் வாழும் உயிர்த்துளி. பற்றியதெல்லாம் உதிர்த்து பாசமறுக்கும் ஒரு பெயர். ஒற்றைத்தனிப்பெயர்.

பகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர்

ஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என வாழ்வமைந்தோன். கலம்நிறைந்த புதுப்பால்போல் குலமகளை மணம் கொண்டேன். சிறுகுடியில் நலம் சூழ்ந்து ஒருமகவை பெற்றேன். நன்று சூழ்க! என் மடியமைந்த சிறுமைந்தன் என்னை மன்னவர் கோல்துணைக்கும் மணிமுடியை சூடவைத்தான். அரியணையில் அமர்ந்த அரசனென்றே உணரச் செய்தான். ஏழ்கடலும் அலையடிக்கும் இருநிலத்தை ஆளவைத்தான். விண்ணவரும் வந்து மலர்பொழிந்து வாழ்த்தவைத்தான். மண்ணவரில் முதல்வனென்றே என்னை இருத்திவைத்தான்.

அதிகாலை அவன் காலெடுத்து கண்ணிலொற்றி விழித்தெழுந்தால் விடியலெல்லாம் புதுப்பொன்னொளி கொள்வதை கண்டேன். அவன் உள்ளங்கால் மலரில் உதடுகுவித்து முத்துகையில் என் கள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் வழிவதை அறிந்தேன். அன்னைப்பால் மணக்க அவளுடலின் ஒருதுளிபோல் அவன் துயிலக்கண்டு அகம்பொங்கி குரல்விழுங்கி நான் நின்ற அந்த முதல்நாளை நினைவுறுகிறேன். அன்றென் நெஞ்சத்திரையின் நுனிபற்றி எழுந்த நெருப்புத் துளியல்லவா? இன்றென் சிந்தைவெளியெங்கும் கிளைசெழித்து நின்றாடும் செந்தழல்வனமல்லவா? எரிமேல் கூளமென சொல்மேல் சொல்லிட்டு அவனைச் சொல்ல முயன்று எஞ்சிய சாம்பல் துளியெடுத்து நெற்றியில் பொட்டிட்டு நின்றிருக்கும் எளியோன். கண்ணனென்ற ஒருசொல்லே என்னை கடைத்தேற வைக்குமென்று அறிந்தோன். என்னை வாழ்த்துங்கள் ஆயர்களே. என் ஏழு மூதாயரை கைகூப்பி வணங்குங்கள்!

"நீலமலர்க் குவளை நிலத்தே மலர்ந்ததுவோ! ஆலமணி திரண்டு ஆயர்குடி வந்ததுவோ! கருமேகக் கீற்றெழுந்து கண்மணியாய் எழுந்ததுவோ! உருக்கொண்டு மண்வந்த வான்நீலம் நீதானோ? உலகாள வந்த மன்னவனே இவன்தானோ? பலகாலம் காத்திருந்த பகலவன் எழுந்தானோ?” என அகமதிர இசைந்தொலிக்கும் ஆய்ச்சியர் குரவை ஒருகணமும் அறுந்ததில்லை. அவன் வந்துதித்த ஆவணி அட்டமியில் தாலம் இசைத்து கைத்தாளமிட்டு அச்சொற்கள் பாடி புதுத்தளிரும் மலர்க்கொத்தும் ஏந்தி மஞ்சள் நீர்தொட்டு மண்மேல் தெளித்து அவர்கள் என் இல்லத்தைச் சுற்றி வருகையில் இருசெவியும் மூடி தலைப்பாகை இறுக்கி கண்களை அசைக்காமல் கால்மேல் காலிட்டு திண்ணையில் அமர்ந்திருந்தவன் அல்லவா நான்? எந்த விழி அவர்களைக் கண்டது? எந்த செவி அவர்களின் சொல் கொண்டது? எந்த மனம் அவர்களாகி என் இல்லம் சுற்றியது? ஆயரே தோழர்களே, எத்தனை ஆயர் என்னுள்ளே வாழ்கிறார்கள்?

கண்ணனை ஒருபோதும் நான் கையில் எடுத்து கொஞ்சவில்லை. அவன் நீலவிழியை நேர்கொண்டு நோக்கவில்லை. அவன் கண்முன்னால் என்னை கடுஞ்சொல் தாதனென்றே படைத்திருந்தேன். தீம்பால் பசுபோலே என் நெஞ்சம் கனிகையிலும் திமிலெழுந்த காளைபோல் உறுமவே பயின்றுகொண்டேன். என்முன் விழிதூக்கி ஒருசொல்லும் இளங்குமரன் சொன்னதில்லை. என் பாதப்பணி செய்து பணிந்து நிற்றலன்றி வேறுசெயல்கொண்டு என் முன்னே வந்ததில்லை. எந்தையர் முகம் அவன், என் கழல் என்றே எண்ணியிருந்தேன்.

கோடி கன்றுகளில் ஒருகன்றில் தெய்வம் குடியேறும். வெண்முடிமேல் அமர்ந்தவனின் வெள்ளெருது வந்துதிக்கும். அதன் கொம்புகண்டு அஞ்சும் கொலைச்சிம்மம் என்பார்கள். அதன் திமில்கண்டு பின்வாங்கும் மதகளிறு என்றறிவோம். அந்த கால்நடந்து காடு சேறாகும். மரங்கள் வளைந்தாடும். நதிகளில் நுரைபெருகும். பெருமலைகள் குனிந்து நோக்கும். நந்தி வந்துதிக்க ஆநிரைகள் பெருகியெழும். அது நடந்த காடெல்லாம் அமுதம் அலையடிக்கும்.

தெய்வச்சிறுகன்றின் திமிராடல் கண்டு ஆயர் குடிகொள்ளும் திகைப்பையெல்லாம் நானறிந்தேன். வெண்ணை திருடி உண்கின்றான் என்பார்கள். இல்லமெல்லாம் புகுந்து கள்ளவினை இயற்றுகிறான் என்பார்கள். "உண்ணும் உணவிலே மண்ணெடுத்துப் போடுகிறான், ஊருணி நீரிலே முள்வெட்டி நிறைக்கிறான், பெண்களின் ஆடைபற்றி இழுத்தோடிச் செல்கின்றான். பேசாச் சொல்லெல்லாம் பிதற்றும் நாணிலாதான். பிள்ளையென்று இவனைப்பெற்று பெரும்பிழை செய்துவிட்டாய்!" எத்தனை குரல்கள். இக்குடியில் நான் கேட்க இனியொரு சொல்லும் எஞ்சவில்லை என்னவரே.

“ஒவ்வொருநாளும் ஒருவகை முறையாடல். அத்தனையும் செய்யும் ஒருபிள்ளை வேறில்லை. ஆய்ச்சியர் குரல்கேட்டு அஞ்சி ஒளிந்திருப்பேன். இவனை கட்டிவைக்க கயிறில்லை. சிறைவைக்கும் சொல்லில்லை. நான் என்ன செய்வேன்? குதிரைக்குட்டியை பசுபெற்றால் என்னாகும்?” என்று என் குலமகள் வந்து கண்ணீர் வடிப்பாள். ”எத்தனை கலம்தான் உடையும் ஒருநாளில்? எத்தனை கன்றுகள் கயிறவிழ்ந்து காடேகும்? எத்தனை ஆய்ச்சியர் ஆடைகிழியும்? எத்தனை இளமைந்தர் கண்ணில் மண்நிறையும்? இனித்தாங்க என்னால் முடியாது. நாளை காடேகும்போது இவனை கையோடு கொண்டுசெல்லுங்கள். நான் நிறைந்தேன், இனி எனக்குள் இவனுக்கு இடமில்லை” என்பாள்.

உள்ளே பனியுருக முகத்தில் நெருப்பெரித்து “கண்ணா!” என்றேன். கண்கள் இமை தாழ்த்தி கால்கள் நீக்கிவைத்து வந்து அன்னை உடைபற்றி பாதி உடல்மறைத்து நின்றான். “இவள் சொன்னதெல்லாம் உண்மையா?” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தான். “அடி சிறுநாயை. செய்வதெல்லாம் செய்துவிட்டு சத்தியம் வேறா?” என்றேன். “அதையெல்லாம் செய்தவன் நானல்ல வேறு கண்ணன்” என்றான். “நல்ல விடை. ஒருவனைத் தாங்கவே இவ்வுலகு போதவில்லை. எத்தனைமுறை கேட்டாலும் இதையேதான் சொல்லிநிற்பான்” என்றாள் என் துணைவி.

மூண்ட சிறுசினத்தை மெல்ல அடக்கி “நீயன்றி இங்கே வேறு கண்ணன் யார்?” என்றேன். “இரண்டு கண்ணன் இருக்கின்றான்” என்று மூன்று விரல் காட்டி “முதல் கண்ணன் கெட்டவன். இந்தக்கண்ணன் நல்லவன்” என்று சொல்லி எஞ்சிய ஒரு விரல் நோக்கி சற்றே திகைத்து “இந்தக்கண்ணன் வானத்திலே” என்றான். “சொல்லுதிர்த்து ஒளிந்துகொள்ள எண்ணாதே, சிறுமூடா. ஆய்ச்சியர் குடம் உடைத்தது யார்?” என்று அதட்டினேன். வானெழுந்த சுனைபோல ஆழம் வரை தெளிந்த விழியிரண்டால் என் விழிநோக்கி “அது கெட்ட கண்ணன்” என்றான். “அவன் எங்கே?” சற்றே தலைசரித்து சிந்தித்து “அங்கே” என்றான். கைசுட்டி அவன் காட்டிய இடத்தில் ஒரு நீலவண்ணன் நின்று சிரிக்கக் கண்டேன்.

விழிமயக்கா என் வீண்சிந்தை மயக்கா என்று திகைத்து மெய்ப்புற்று கைநடுங்கி கால்சோர்ந்தேன். திரட்டி என்னை மீட்டு திரும்பி அவனை நோக்கி “அப்படியென்றால் நீ ஒன்றுமே செய்வதில்லையா?” என்றேன். பால்நுரைபோல் சிரித்து கண்மலரில் ஒளி நிறைத்து “தந்தையே, நான் ஒன்றுமே செய்வதில்லை” என்றான். மூச்சிழுத்து மனம் ஆற்றி மெல்ல சொல் கூட்டி “ஒன்றுமே செய்யாமல் நீ எப்படி இருக்கிறாய்?” என்றேன். பனிகனக்கும் குவளைமலர்போல் சொல்திரண்ட சிறுமுகத்துடன் என் அருகே வந்து தொடைதொட்டு விழிதூக்கி “தந்தையே, அங்கே நேற்று ஒரு ஆலமரம் கண்டேன். அதில் இரண்டு கிளிகள். ஒருகிளிபோன்றே இன்னொன்று. ஒன்று பழம் தின்றுகொண்டிருந்தது. ஒன்று வெறுமே நோக்கி அமர்ந்திருந்தது” என்றான்.

“என்ன பசப்புகிறாய்? வீண்கதை சொல்லாதே” என்றேன். அவனே ஓடிச்சென்று கன்றோட்டும் கோலெடுத்துக் கொண்டு வந்து என் கையில் தந்து “அந்தக் கண்ணன்தான் அனைத்தும் செய்கிறான். அவனை அடியுங்கள்” என்று கைகாட்டினான். திரும்பி நோக்க அஞ்சி “நீ அவனைப் பார்த்ததுண்டா?” என்றேன். “அவனும் என்னைப் பார்த்ததுண்டு” என்றான். ஈதென்ன பதில் என்று என் நெஞ்சம் குழம்ப “என்ன சொல்கிறாய்?” என்றேன். “எங்கள் இருவரையும் அவன் பார்ப்பான்” என்றான். “யார்?” என்றேன். “அந்த கண்ணன்” என்று வானை நோக்கி சுட்டிக்காட்டினான்.

அதற்குமேல் பேசினால் எனக்குத்தான் அகமழியும் என்றறிந்தேன். “பேச்செல்லாம் வேண்டாம். செய்தபிழை ஏற்று தண்டம் கொள்” என்றேன். “தங்கள் ஆணை!” என்று சொல்லி திரும்பி நின்று சிற்றாடைதூக்கி குனிந்து சிறுபுட்டம் காட்டி நின்றான். நீலத்தாமரை மொட்டுகள் இரண்டு. மேகம் குழைத்துருட்டிய இரு தளிர்க்கோளங்கள். என் கையில் நடுங்கியது கோல். “போடு, தோப்புக்கரணம் நூறு” என்று சொல்லி கோலை கூரையில் செருகி வெளியே சென்றேன்.

பாலருந்தும் கன்றின் கிண்கிணி என சிறுசிரிப்பின் ஒலிகேட்டு கதவருகே நின்று கண் சரித்து நோக்கினேன். “ஒன்றேய்” என்று சொல்லி தோப்புக்கரணம் போடக்குனிந்தவன் கையூன்றி குட்டிக்கரணம் போட்டு புரண்டு விழுந்து எழுந்து நின்றான். வாய்பொத்தி உடல்குலுங்க கண்கள் ஒளிகொள்ள அன்னை சிரித்தாள். “இரண்டேய்!” என்று சொல்லி அவன் என்னைப்போல் நடந்து, என் கையால் மீசை வருடி, என் விழிபோல் நோக்கி, என் அசைவில் கரணமிட அன்னை சிரித்து அப்படியே அமர்ந்துவிட்டாள். “மூன்று” என்று சொல்லி அவன் மீண்டும் குனிய அவள் எட்டி இதழ்குவித்து அவன் செல்லச்சிறுகுண்டி மென்சதைமேல் முத்தமிட்டாள்.

அன்பரே, ஆயர்குடித் தோழரே, அக்கணத்தில் ஆணாகி வந்த என் ஆன்மாவை வெறுத்தேன். இவ்வுடலில் மீசையும் புயங்களுமாய் வந்து நிற்கும் என் மூதாதை வடிவங்களைக் கசந்தேன். உள்ளே சென்று அவள் கூந்தல் குவை பற்றி அந்த வாயில் அடித்து வெறிதீர்க்க விழைந்தேன். என் செல்வக்களஞ்சியத்தை, நானேந்தும் செங்கோலை, என் கோட்டைக் கொடியை, என் சிதையின் தழலை பிறிதொருவர் உரிமைகொள்ள ஒருபோதும் ஒப்பேன். உயிர்கொடுத்தும் அதைச் செறுப்பேன். ஒவ்வார் தலையறுத்தும் ஒறுப்பேன். ஆம், வீண் சொல் அல்ல இது!

துடித்தாடும் தழல்போன்ற மைந்தனுக்குத் தந்தையாவது என்பது குளிர்ந்துறையும் தடாகமாதலே என்றறிகிறேன். அடங்காக் கன்றுக்கு அத்தனாகும் வழிஎன்பது அடிஎண்ணி நடக்கும் பெருந்திமில் காளையாவது மட்டுமே. இந்நாட்களில் என்னில் எழுந்த அசைவின்மையை அறிகிறேன். பெருங்களிறு நீரில் செல்வதுபோல பேராற்றலுடன் எளிதே ஒழுகுகிறேன். ஆயர்குலத்தோரே, என் விழிகண்டு வினைவலர் பணிவதை காண்கிறேன். என்னுடன் பேசுகையில் உங்கள் சொற்கள் தணிவதைக் கேட்கிறேன். கப்பநிதிகொண்டு மதுராபுரிசென்றபோது கம்சரும் என் கண்நோக்கி கண்கள் விலக்கியதை அறிந்தேன். இப்புவியில் என் நிகர் நின்று சொல்லெடுக்க இனி விண்ணளந்தோன் தன் உருமாற்றி வந்தெழுதல் வேண்டும். அவன் அருகமையும் செந்நிறத்தானும் புவிபடைத்தானும் கூட என்னை வணங்கியாகவேண்டும். அறியுங்கள், நான் ஏழுலகாக்கிய ஒருபெரும்பொருளை மைந்தனெனப் பெற்ற மானுடன். அழிவற்றோன். ஆயர்குலத்தரசன். ஆழிபோல் புகழுள்ளோன்.

அன்றொருநாள் இதை நான் அறிந்தேன். என் மைந்தன் மண்ணுதைத்து மறிந்தமைந்ததை மூத்தாரை முறைசெய்து கொண்டாடும் ஔத்தானிக நாளன்று நிகழ்ந்தது இது. ஆயர்குலத்தோடு அன்னைப்பசுவொன்றோடு மைந்தனை இடையெடுத்து நானும் என் குலமகளும் களிந்தமலைச்சாரலில் குடிகொள்ளும் கருங்கழல் அன்னையை வணங்கச் சென்றோம். கரும்பாறை குகைக்குள்ளே காரிருள் பீடத்தில் பேருருவம் கொண்டிருந்த பேராய்ச்சி பாதத்தில் மலர்சூடி மங்கலம் படைத்து வணங்கினோம். மைந்தனை அவள் காலடியில் வைத்து குரவைக் குரலெழுப்பி வாழ்த்தியபோது வேல் கைகொண்டு சூர் அகம் கொண்டு எழுந்த சாலினி ஒருத்தி “எழுந்தது அறவாழி. இனிச்சுழலும் அது இந்த யுகம் தழுவி. அவ்வாறே ஆகுக! சூழ்க நலம்!” என்று அருளுரை செய்தாள்.

அவள் சொற்களென்ன என்று நான் உணரவில்லை. அன்று என் மைந்தன் பசித்து கைகால்கள் உதறி அழுதான். அன்னை அவனை அள்ளி கொண்டுசென்று முலைகொடுத்து உறக்கினாள். சிறுமழைத்தூறல் இருந்தமையால் அவனை நாங்கள் சென்ற மாட்டுவண்டியின் அடியில் சேலைத்துணியால் சிறுதொட்டில் கட்டி படுக்கவைத்தோம். கொற்றவையின் கோயிலில் ஊன்படைப்பும் தீப்படைப்பும் எஞ்சியிருந்தமையால் ஆயர்குடி முழுக்க அவள் காலடியில் நின்றிருந்தது. என் உடலை விழியாக்கி மைந்தனை முதுகால் நோக்கி நின்றிருந்தேன். பூசை ஒலிநடுவே ஒரு அச்சுமுறியும் ஒலிகேட்டேன். முன்னின்ற சகடம் ஒன்று முறிந்து சரிவதைக் கண்டேன். ஒன்று முட்டி ஒன்று என்று வண்டிகள் சரிந்து விசையெடுத்து மலைச்சரிவில் உருண்டெழப்போவதை உணர்ந்தேன்.

கண்ணா என்ற சொல் என் கருத்தில் எழுந்து நாவை அடைவதற்கு முன்பே அங்கு நிகழ்ந்ததை என் சிந்தை அறிந்தது. மைந்தன் தன் இளநீலச் சிறுகாலால் தன் வண்டிச் சக்கரத்தை உதைத்தான். அச்சு உடைந்து வலிகொண்டு கூவி சரிந்தெழுந்து விலகி தன்னை உணர்ந்து திகைத்து நின்றது. பின்னர் தான் தேர்ந்த திசை நோக்கி உருண்டோடியது. அன்னையும் பிறரும் அலறிக்கூவி அருகணைந்து மைந்தனை எடுத்து மார்போடணைக்க நான் மட்டும் விலகி நடந்தேன். சகடம் சென்ற தடம் தேர்ந்து சரிவிறங்கிச் சென்றேன்.

தோழரே, நான் கண்ட எதையும் நெஞ்சக்குழி விட்டு நாவுக்கு எடுத்ததில்லை. சகடத்தடம் ஒரு சாட்டை வடுபோல குருதிவரியாக குமிழியிட்டு நீளக் கண்டேன். செங்குருதி ஊறும் சிற்றோடை என அது மரத்தடிகள் உடைத்து கரும்பாறை குவை உடைத்து மலையிறங்கிச் செல்லக்கண்டேன். குளிர்கொண்ட சிறுகுஞ்சென கூசி சிறகணைத்து மெய்நடுங்கி மனம் உறைந்து அதன் வழியே சென்றேன். அச்சகடம் சென்று ஒரு தெளிநீர் தடாகத்தில் விழுந்து அலையெழுப்பி மூழ்கி மறையக்கண்டேன். அச்சகட வளையமே ஆயிரம் அலையாழிகளாக மலர்ந்தெழுந்து வரக்கண்டேன்.

ஒன்றுக்குள் ஒன்றாக ஓராயிரம் இதழ்விரியும் முடிவிலித்தாமரை. அதில் ஆயிரம் கோடி ஒளிநிழல்கள். ஒவ்வொன்றிலும் எழுந்தமரும் நீலமலர் முகம். நான் கண்டது கனவேதானா? கன்று தேர்ந்து காட்டில் வாழும் ஆயன் விழிசேர்ந்ததுதான் என்ன? வானுறையும் மெய்யா? சொல்லறியா பொருளா? அங்கு நின்று அதைக் கண்டது இங்கு நின்று இதைச் சொல்லும் எளியேன்தானா? தோழரே, தோள்தழுவி என் இளமையை அறிந்தோரே. துயர் தழுவி என் முதுமையை அறிவோரே. சொல்லுங்கள் நான் ஆயர்குடிபிறந்த நந்தனென்ற அவனேதானா?

அலைச்சுழியின் மலர்வளைய மையத்தில் மலர்ந்து நின்ற நீலத்தாமரை சிறு மொட்டு ஒன்றைக் கண்டு அங்கே நின்றிருந்தவன் நான். குயிலொன்று புதர்மறைந்து கூவிக்கூவி ஒரு சொல்லையே காட்டின் குரலாக்கி நிறைக்கக் கேட்டவன் அவன். கற்றறிந்ததெல்லாம் மறந்து கருத்துறைந்ததெல்லாம் இழந்து முற்றழிந்த மனம் கொண்டு நின்ற பேதை. பின் காலமென்று கூவியது கருங்குயில். காடென்று கூவி கருத்தளித்தது. குலமென்று கூவி நினைவளித்தது. பகலென்றும் இரவென்றும் கூவி அனைத்தையும் படைத்தளித்தது.

என் குலம் மீண்டேன். அன்னை மார்பில் மலர் மொக்கு வாய் திறந்து நகைக்கும் மைந்தனைக் கண்டேன். கை ததும்ப கால் ததும்ப அவன் உடல் நிறைக்கும் உவகை கண்டு உடல் விதிர்த்தேன். அச்சுழிமையத்தில் அலையெழுந்து என் குலமெல்லாம் நிறைந்தது பேருவகை. ஆனந்தமய பெருஞ்சுழி. ஆயர்குலமெனும் நெற்றியிட்ட நீல நறுந்திலகம். பனிமலையடுக்குமேல் உதித்தெழும் பால்நிலவு. மண்ணை ஒளியாக்கும் விண்ணின் ஊற்றுமுகம். ஐந்து பசுக்களும் பால்கனிந்து பெருகி கலம் நிறைக்கும் சிறுகன்று. முட்டிமுட்டி முலை நெகிழ்க்கும் அதன் சிறுமூக்கு. மூலாதாரம் முற்றிக்கனியும் முழுமுட்டல். பால். பாலெனும் பெருவெள்ளம். பால்கங்கை. பாற்கடல். பிறிதொன்றிலாமை. பங்கயத்திருவடி. பன்னீர்த் தண்துமி. ததும்பா நிறையா பேரொளிப் பனித்துளி.

என்ன சொல்கிறேன் என்றறியேன். சொல்லின்மை என்பதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அன்று சிறுமழைச் சாரலின் தோகை சுழன்று சுழன்று அடிக்க எஞ்சிய வண்டிகளில் பெண்டிரையும் பிள்ளைகளையும் ஏற்றி மலையிறங்கி குடி மீண்டோம். காவலராக சிலர் கோலேந்தி முன்செல்ல எண்ணைப்பந்தம் ஏந்தி சிலர் பின்னால் வந்தனர். நடுவே என் மைந்தன் அமர்ந்த வண்டியின் கழிபற்றி நான் நடந்தேன். சகட ஒலியில் காட்டில் துயின்ற பறவைகள் எழுந்து கூவிய சொற்களைக் கேட்டேன். ஈர இருளில் வெளவால்கள் நீந்திச்செல்வதைக் கண்டேன். பேசிச் சிரித்துவந்தவர்கள் வழிக்களைப்பில் மூச்சு மட்டுமாக சூழ்ந்து வந்தனர்.

தோள்நழுவி மண்ணில் விழுந்த மேலாடையை எடுக்க கைப்பந்தத்துடன் ஒருவன் குனிந்தான். என்ன ஒலியென்று திரும்பிய நான் மண்தொட்டு விண் உரசி உருண்டுசெல்லும் பெருஞ்சகடம் ஒன்றைக் கண்டேன். காடுகள்மேல், மலைப்பாறை அடுக்குகள் மேல், வழிச்சுருள்மேல், வெள்ளருவிக்கூட்டம் மேல் உருண்டு எழுந்துசென்றது கரியபேராழி. நெஞ்சு நடுங்கி கழிபற்றி கண்மூடி அங்குள்ள இருள்வழியிலும் அதுவே உருண்டோடக் கண்டேன்.

ஆயரே, தோழரே, ஆழிவண்ணம் கண்டவன் அதன்பின் ஆயனாகி அமர்ந்திருக்கலாகுமோ? கால்பதறும் மலைவிளிம்பில் காரிருளில் எப்படி நிற்பேன்? ஒன்றுசெய்தேன். கடுஞ்சொல் தந்தையென என்னை மேலும் இறுக்கி இப்பக்கம் இழுத்துக் கொண்டேன். இங்கு இதோ இவ்வண்ணம் நின்றிருக்கிறேன்.

பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல்

“முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் நாட்கள் அவை.”

உடல்பூத்த பின்னரும் ராதை உளம்பூக்கவில்லை என்றனர் ஆய்ச்சியர். அவள் கண்கள் உலகை அறியவில்லை. அவள் கால்கள் மண்ணை தொடவுமில்லை. நதிக்கரைக் காற்றைப்போல் மலையிழியும் ஓடையைப்போல் அவள் அறியா விசைகளால் ஆற்றுப்படுத்தப்பட்டாள். அவளுடன் மலர்ந்த தோழியரெல்லாம் கண்ணிமைகள் தாழ, செவ்விதழ்கள் பழுக்க, கைவிரல்கள் ஆடை சுழிக்க, நீள் கழுத்து மயிலெனச் சொடுக்க, பேரியாழ் கார்வையென குரல்தாழ்த்தி, இளநாணம் இடைகலந்து பேசத்தொடங்கினர். கள்ளம் கலந்து அவர்கள் பேசும் ஒலியை கன்னம் தொட்டாடும் காதணிகளே அறிந்தன. கண்ணை விட கண்முனை ஒளிகொள்ளும் பார்வைகளை நெற்றி வழிந்து நெளிந்தாடும் குழல்சுருள்களே அறிந்தன.

அவர்களுடன் சேர்ந்து பால்கறந்து கலம் மூடுகையிலும் புல்லறுத்து தொழுசேர்க்கையிலும் மோர்கடைந்து வெண்ணை திரட்டுகையிலும் நெய்யுருக்கி நிறைக்கையிலும் அவள் அவர்களுடன் இருக்கவில்லை. மலையோடையை பொன்வழிதலாக்கும் மாலைவெயில் அவள் மீது படவில்லை. “பிச்சி இன்னும் பூக்கவில்லை” என்றாள் லலிதை. “கன்னிப்பருவம் காணாமல் அன்னை என்றானாள். இனி மூதன்னையாகி முழுமைகொள்வாள்” என்றாள் சம்பகலதை. லலிதை சிரித்து அவள் செவியில் இதழ்சேர்த்து “ஒவ்வொரு மலருக்கும் ஒரு வண்டு உண்டென்பார். இவள் நெஞ்சக்கதவு நெகிழ்ப்பவன் எங்கோ கழல்கொண்டு தோள்கொண்டு கண்ணில் ஒளி எழுந்து சொல்லில் முழவு எழுந்து உருவெடுத்துக்கொண்டிருக்கிறான்” என்றாள்.

விசாகை ஏதோ சொல்ல சுசித்ரையும் இந்துலேகையும் மாதவியும் வெண்கலக்குடங்கள் படிகளில் உருண்டதுபோல சிரித்தனர். அன்று பிறந்த இளங்கன்றின் கண்களுடன் ராதை திரும்பி நோக்கி “ஏனடி?” என்றாள். “ஒன்றுமில்லை” என்று சொன்ன லலிதை “கன்றின் நெற்றியென முட்டத்தவிக்கின்றன கருவண்டு அமராத தாமரை மொட்டுகள் என்று ஒரு பாடலுண்டு தெரியுமா?” என்றாள். “இல்லையே” என்றள் ராதை. “அதைப்பாடும் நம் இளம்பாணன் மருதனை இனி யமுனைக்கரைக்கு யாழுடன் வந்தால் முழங்காலை முறித்து ஆற்றில் எறிவேன் என்றாள் நம் மூதன்னை முகாரை, அதையேனும் அறிவாயா?” என்றாள். “நானொன்றும் அறிந்ததே இல்லையடி” என்றாள் ராதை.

“நீ அறியா யமுனை ஒன்றில் நித்தமும் நீராடுகிறாய் தோழி” என்றாள் லலிதை. “என்னடி சொல்கிறீர்கள்? உங்கள் சொற்களெல்லாம் புதிர்களான மாயமென்ன?” என்றாள் ராதை. கோபியரெல்லாம் கூவிச்சிரித்த குரல் கேட்டு மூதன்னை முகாரை சினந்த முகம் நீட்டி “என்னடி அங்கே இத்தனை சிரிப்பு? இளம்பெண்கள் சிரிப்பதற்கோர் அளவுண்டு. பூ கனக்கும் மரக்கிளையில் காய் கனப்பதில்லை” என்றாள். அலைநுரை பனியானதுபோல சிரிப்பைத் தேக்கி அமைந்து அன்னை தலைமீண்டதும் உடைந்து ஒலிசிதறி குலுங்கினர் கன்னியர்.

“அன்னையரெல்லாம் அஞ்சும் அளவுக்கு கன்னியரில் உள்ள பிழைதான் ஏதடி?” என்று சசிகலை கேட்டாள். “இவள் போல் பிச்சி என்றாகி பேதை விழிகொண்டு திக்கின்றி காலமின்றி திகைத்தலைவோமென்று எண்ணுகிறார்களோ?” என்றாள் மஞ்சுகேசி. சிரிக்கும் தோழியின் தோள் தொட்டு ஈரமொழி கொண்டு “இவள் பித்தின் துளியொன்று என் மடியில் விழுமென்றால் என் இல்லம் என் அன்னை எந்தை என் தெய்வம் எல்லாம் இழந்து இவளுடனே செல்வேனடி” என்றாள் லலிதை. ஒருகணத்தில் சிரிப்பணைந்து கோபியர் ராதையை ஓரவிழியால் நோக்கி அவரவர் உள்நிறைந்த அழியாத் தனிமைக்குள் சென்று அமைந்தனர்.

திமிறும் காளைக்கன்றை இளந்திமில் சேர்த்து அணைப்பதுபோல ராதை கண்ணனைத் தழுவுதல் கண்டு ஒருநாள் லலிதை கேட்டாள் “கோகுலத்தின் இளமகன் வளர்ந்துவிட்டான். அதை உன் விழியறியவில்லை என்றாலும் கையறியவில்லையா?” ராதை விழிசுருக்கி “யார் வளர்ந்தது? கண்ணனா? நானறியேனடி” என்றாள். லலிதை சற்றே சினந்து, “பிச்சி, மலையில் மழை விழுந்து யமுனை பெருகுவதை நீர்நோக்கி அறியமுடியாது. கரையோர மரம் நோக்கி அறியவேண்டும். கண்ணனை நோக்காதே, உன்னை நோக்கு” என்றாள்.

“என்னுள் ஏதும் மாறவில்லையேடி. என் கண் நிறைத்து கை ததும்பும் குழவியென்றே அவன் தெரிகிறான்” என்று சொன்ன ராதையை நோக்கி குனிந்து லலிதை “எவரிடம் நீ விளையாடுகிறாய்? உலகுடனா, உலகாகி உன்னைச்சூழ்ந்த அவனிடமா, அவனைச்சூழ்ந்த உன்னிடமா, உன்னுள் உறையும் தனிமையிடமா?” என்றாள்.

ராதை காலைஒளிநிறைந்த நீலமலர் போல விழிவிரித்து “நீ சொல்லும் ஒரு சொல்லும் எனக்குப் பொருளாகவில்லையடி” என்றாள். லலிதை சீறி முகம் சிவக்க “பால்மணம் மாறி அவன் உடலில் புதுமழைபட்ட மண்மணம் எழுவதை நீ அறியவில்லையா? இளம்பிஞ்சு கைகால்கள் இறுகுவதை, பைதல் குறுமொழி மணியோசையாவதை கண்டதேயில்லையா? சொல், அவன் கண்ணிலெழும் சிரிப்பை, சொல்லில் எழும் குறும்பை நீ இன்னுமா அறியவில்லை? அகநாடகம் ஆடுவதை நிறுத்து. நீ அடியெடுத்துவைத்த நாள்முதலே உன்னை அறிந்தவள் நான்” என்றாள்.

“கண்ணன் கால்கொண்டதை அறிவேன். அவன் சொல்முழுத்து பொருள்கனப்பதை அறிவேன். ஆயினும் நானறிந்த கண்ணன், நானறிந்த கண்கள் என்றே என் அகம் சொல்கிறது தோழி” என்று சொன்னாள் ராதை. ”உன்னை நீ உதறாமல் ஒருசொல்லும் உணரமாட்டாய்” என்று சொல்லி எழுந்துசென்றாள் லலிதை.

கோபியரெல்லாம் கண்ணனை விட்டு உடலால் விலகி உள்ளத்தால் அணுகுவதை ராதை கண்டாள். நேர்விழிப்பார்வை விலக்கி நுனிவிழி நோக்கால் அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவன் சென்றவழி எல்லாம் அவர்கள் விழிசென்று அமைந்திருந்தது. அவன் விழிதிரும்பும்போது அவை சிறகுதாழ்த்தி மணிமூடி மயங்கின. அவன் நேர்கொண்டு பேசுகையில் விழிவிலக்கி தலைகவிழ்ந்துசென்றனர். பின் அவன் பெயர் சொல்லி தங்களுக்குள் நாணினர்,

அவர்களறியும் கண்ணன் யார்? என்னதான் ஆயிற்று அவனுக்கு? அவன் நீலமணிக்கால்கள் நிலத்தமைவதன் உறுதி. கங்கணம் அணிந்த கைகள் வளைதடி வீசுவதன் தேர்ச்சி. சொற்களில் ஏறும் மும்முனைக் கூர்மையின் ஒளி. கண்நோக்கி நிற்கையிலேயே அவன் கண்ணனல்ல என்றாகிப்போவானா என்ன? ராதை நூறுவிழிகளால் நோக்கி நின்றாள். நூறாயிரம் முறை எண்ணி எண்ணி அகம் சலித்தாள். என்னவன், என் கண்ணன், என் கை, என் கழல், என் உடல் என்றே சொல்லி அவளைச் சூழ்ந்திருந்தது எளியசிந்தை.

பிச்சியென பெயர்கொண்ட அவளை எண்ணி அன்னை உறும் பெருந்துயரை அவள் அறிந்தாள். “நீ கோகுலம் சென்றதற்கு நான் ஒன்றும் சொன்னதில்லை. விருந்தாவனம் செல்ல நான் ஒப்பேன். அந்த ஆயர்மைந்தன் இன்று ஆளாகி எழுந்துவிட்டான். ஊர்அலர்சூழ்ந்தால் உன்னை எவர்கொள்வார்?” என்றாள்.

“எவரென்னை கொள்ளவேண்டும்? என்னை கொள்ளும் விரிவுள்ள இல்லம்தான் ஏது?” என ராதை நகைத்து “ஒருதுளியும் வழியாமல் யமுனையில் அணைகட்ட எவரால் இயலும்? அன்னையே, நான் மண்ணுலகில் எவருக்கும் பெண்ணல்ல” என்றாள். “பின் நீ யார், விண்ணவர் கொள்ள வந்தாயா?” என்று அன்னை சீற “என் உள்ளம் விரிந்தமைய விண்ணிலும் வெளியில்லை அன்னையே” என்றுரைத்து ஆடை காற்றாட கூந்தல் எழுந்தாட வெளியே ஓடினாள்.

காற்றையும் மலையூற்றையும் சிறையிடுதலாகாது என்று கீர்த்திதை அறிந்திருந்தாள். ஆய்ச்சியர் நகையாடலை ஆயர்குலங்களில் பரவும் அவச்சொல்லை ஒவ்வொரு நாளும் கேட்டாள். “அக்கா, கன்னிப்பருவத்தின் கால்தரிக்காமை நாமறியாததா? இலவம் பஞ்சு போன்றோர் பிறர். இவளோ வெண்மேகப்பிசிர்” என்றாள் ராதையின் சிற்றன்னை கீர்த்திமதி.

“செய்வதற்கொன்றே உள்ளது மூத்தவளே, இவளுக்கொரு தாலிமலர் தேடியளிப்போம். கண்மறைத்துக் காற்றடிக்கும் காட்டுவெளியே கன்னிப்பருவம் என்பார். அங்கே கணவனின் கையொன்றே வழித்துணையாகும். நாமெல்லாம் அறிந்த கதைதானே அது?” என்றாள் அத்தை பானுமுத்திரை. “நாமிருந்த நிலையிலா இவளிருக்கிறாள்? நீங்களும் கண்கொண்டு காணத்தானே செய்கிறீர்கள்” என்று கீர்த்திதை கண்ணீர் வடித்தாள்.

மழைக்கால இருளகன்று பசுங்காட்டில் வெயில் பரவும் பருவத்தில் மூதன்னை முகாரையின் இல்லத்தில் ரிஷபானுவின் குடிப்பெண்கள் கூடியமர்ந்தனர். தந்தைவழி அன்னை சுகதையும் சிற்றன்னை கீர்த்திமதியும் அத்தை பானுமுத்திரையும் வந்தனர். மாமியர் மேனகையும் ஷஷ்தியும் கௌரியும் தாத்ரியும் தாதகியும் வந்தனர். மங்கல மஞ்சள் நீரில் கால்கழுவி புதுசாணிமெழுகிய உள்ளறையில் புல்பாய் விரித்து வட்டமிட்டு அமர்ந்துகொண்டனர்.

தாம்பூலத்தட்டை நடுவில் வைத்து முகாரை “நன்றுசூழ இன்று கூடியிருக்கிறோம் பெண்களே. நம்குடி மூதன்னையர் எல்லாம் காற்றுவெளியில் வந்து இச்சிறுகுடியைச் சூழ்வதாக” என்றாள். சுவர்மூலையில் அமர்ந்திருந்த கீர்த்திதை “அன்னையர் கருணையால்தான் என் பெண் வாழவேண்டும்” என்றாள். “என் மகளுக்கென்ன குறை? ஆயர்குடி நிறைந்த ஆயிரம் பெண்களிலே இவள்போல மங்கலமும் மனையழகும் கொண்ட இன்னொருத்தி எவள்?” என்றாள் பானுமுத்திரை.

ராதையின் தங்கை அனங்க மஞ்சரி அன்னையின் மடிதொட்டு மெல்லிய குரலில் “தமக்கைக்கா மணம் சூழ்கிறார்கள்?” என்றாள். “போடி, போய் உன் இளையோருடன் ஆடு. இங்கே உனக்கென்ன வேலை?” என்று அவளை வெளியே ஏவினாள் கீர்த்திமதி. அவள் எழுந்து முகம் நொடித்து வெளியே சென்றதும் குரல் தாழ்த்தி “நான் என்ன சொல்வேன் அன்னையீர், என் மகள் பிச்சி என்றல்லவா ஆயர்குடி எங்கும் பேச்சுள்ளது?” என்றாள் கீர்த்திதை. “சொன்னவள் வாயைக்கிழிக்காமல் இங்கு வந்து புலம்புகிறாய்? யாரவள் சொல்” என்று குரல் எழுப்பினாள் சிற்றன்னை கீர்த்திமதி

“பேசிப்பயனென்ன? எங்கும்தான் அப்பேச்சுள்ளது” என்று முகாரை சொன்னாள். “தழலை மறைக்க திரைகளால் ஆகாது பெண்களே. அவளை இன்று மணம் கொள்ள ஆயர்குடிகளில் எவரும் வரமாட்டார் என்பதே உண்மை.” அச்சொல்லின் எடையால் சிந்தை அழுந்தி பெண்களெல்லாம் அமைதிகொண்டனர். “நான் என்ன செய்வேன்? இச்சேதி ஏதும் அறியாமல் காடும் கன்றுமென வாழ்கிறார் அவள் தந்தை. கள்புளித்து நுரைப்பதுபோல் ஒவ்வொரு நாளும் இவள் பித்து எழுந்து பெருகுகிறது” என்றாள் கீர்த்திதை.

“காலை மலர்போல பொலிகிறாளே. காணும் கண்கூடவா இல்லை இக்குலத்தில்?” என்று பானுமுத்திரை சொன்னாள். “அவ்வெழில் கண்டு அல்லவா அஞ்சுகிறார்கள்? அவளுக்குள் ஆயிரம் கைகொண்ட அன்னைப்பெருந்தெய்வம் ஒன்று உறைகிறது என்று ஆய்ச்சி ஒருத்தி சொல்லக்கேட்டேன். அவள் அருகே சென்றால் முலைசுரப்பின் மணமெழுகிறது என்றாள் இன்னொருத்தி. அவள் மண்ணில் கால்படாமல் வளிதுழாவிச்செல்வதை கனவில் கண்டேன் என்றாள் அவள் தோழி. எத்தனை சொற்கள். அவள் செய்திபேசும் சிந்தையிலும் பித்து நிறைகிறது” என்று அன்னை கீர்த்திதை சொன்னாள்.

மெல்லமெல்ல சொல்லவிந்து பெண்டிர் அமைதிகொள்ள அன்னை முகாரை “நானொன்று சொல்கிறேன். சிந்தித்துச் சொல்லுங்கள் பெண்களே” என்றாள். அவளை நோக்கிய பெண்களின் விழி தவிர்த்து “அக்கரையின் ஆயர்குடியொன்றில் ஜடிலை என்னும் ஆய்ச்சி ஒருத்தி இருப்பதை குடிப்புகழ் பாடும் பாணன் சொல்லி அறிந்தேன். கைம்பெண் அவள். அவள் மகள் குடிலையும் கைம்பெண்ணே. அவள் மைந்தன் அபிமன்யூ தென் மலைச்சாரலில் ஆயிரம் பசுநிறைந்த கொட்டில் கொண்டவன் என்றான்.”

உடல் அசையும் ஒலிக்குப்பின் கீர்த்திதை “நம் பெண்ணை ஏற்க அவன் கொண்ட குறை என்ன?” என்றாள். அச்சொற்கள் கேட்டு அங்கிருந்த அன்னையர் விழிநடுங்கி அவளை நோக்கினர். தான் கேட்ட வினாவின் உட்பொருளை அப்போதே அறிந்த கீர்த்திதை விழிதாழ்த்திக்கொண்டாள். “அவன் தந்தை ஆயனல்ல, வேடன்” என்றாள் முகாரை. “மரபுள்ள ஆயர்குடியேதும் அவனுக்கு மகற்கொடை புரியாது. நம் குடிப்பெருமை அவன் அறிவான். நம் மகளையும் நன்கறிந்திருப்பான்.”

தெளிநீர் சுனையில் திளைத்துச் சுழலும் மீன்கள் போல ஓசையற்ற உரையாடலொன்று அங்கே நிகழ்ந்தது. மெல்ல உடலசைத்து “நாம் தேர ஏதுமில்லை அன்னையே. என் பிச்சிக்கும் மணமாலை விழுமென்றால் அதுவே போதும்” என்றாள் கீர்த்திமதி. “அவள் தந்தைக்குச் சொல்லத்தான் என்னிடம் சொல்லில்லை அன்னையே” என்று சொல்கையிலேயே கண்ணீர் உதிர்த்தாள்.

அன்னை சுகதை குரல்தீட்டி “அவனும் அறிந்திருப்பான்” என்றாள். கீர்த்திதை அஞ்சிய விழி திருப்பி நோக்க “தந்தைக்கும் விழியுண்டு பெண்ணே. காட்டில் இருந்தாலும் அவன் கண் ஒன்று இங்குதான் விழித்திருக்கும்“ என்றாள். கீர்த்திதை நீள் மூச்செறிந்து “ஆம், இப்போது அதை அறிகிறேன்” என்றாள். “மைந்தனை அன்னை அறிவாள். மகளை தந்தை அறிவார். அணுக்கத்தால் அறியாதவை எல்லாம் விலக்கத்தால் துலங்கிவரும்” என்றாள் சுகதை. விரல்பாவை சரடவிழ்ந்ததுபோல அங்கிருந்த அன்னையரெல்லாம் மெல்ல எளிதாகி மூச்செறிந்தனர். கைநீட்டி வெற்றிலை எடுத்தனர். “அவ்வண்ணமே ஆகுக” என்று கீர்த்திதை சொன்னாள்.

பின்பொருநாள் அன்னை ராதையிடம் “ஆயர் மகளே, உன்னை மணம் கொள்ளும் ஆயனும் அவன் அன்னையும் கன்றுடன் நீ காட்டில் நிற்கையில் உன்னைக் கண்டு உளம் உவந்துள்ளனர்” என்றாள். அச்சொல்லை அவள் அறிந்ததுபோலவே தோன்றவில்லை. மேலாடை எடுத்து தோளிலிட்டு அவள் வீடு விட்டு இறங்குகையில் அன்னை அவள் கையைப்பற்றி “இனி நீ இல்லம் நீங்கலாகாது. இன்னொரு மனைநிறைக்கும் மணமகள் நீ. முறைமீறிச் சென்றால் முதற்பழி உன் தந்தைக்கே” என்றாள். “நான் இங்கிருப்பதனால் இங்குளேன் என்றாவேனோ?" என்று சொல்லி நகைத்து அன்னை கை அகற்றி சிறகடித்தெழுபவள்போல் விலகிச்சென்றாள் ராதை.

மழைக்கலங்கல் தெளிந்து நீலநீர்ப்பெருக்காய் கரைதழுவி ஓடிய யமுனைக்கரைமேல் அவள் செல்லும்போது வேர்ப்படிகள் அமைந்த துறையிலிருந்து லலிதை அவளை அழைத்தாள். “வாடி, இன்று நீரெங்கும் நிறைந்துள்ளது நீர்மருத மலர்வாசம்.” கரையில் நின்று “இல்லை, நான் பிருந்தாவனம் செல்லும் நேரம்” என்றாள் ராதை. “அவளை பிடியுங்களடி” என்று சம்பகலதை கூவ ராதை விலகி மலர்பூத்த கொன்றைவனத்துக்குள் ஓடினாள். ஈர ஆடை விசும்பி ஒலிக்க கோபியர் அவளைத் துரத்தி வளைத்து பிடித்தனர். வளையல் நொறுங்க மேலாடை கழன்று விழ கைபற்றி இழுத்து வந்து நீரில் இட்டனர்.

“எங்களுடன் இளம்புனலாட தயங்குகிறாய். ஆயர்ச்சிறுவருடன் நாளெல்லாம் ஆடுகிறாய். நாணமில்லையாடி உனக்கு?” என்றாள் கஸ்தூரி. விசாகை அவள் மேல் நீரள்ளி வீசி “காளிந்தி உன்னைத் தழுவினால் கற்பிழப்பாயோ? ஆயர்குலச்சிறுவன் தோள்தழுவினால் மட்டும் உன் தெய்வங்கள் வந்து சாமரம் வீசுமோ?” என்றாள். சினந்து “என்ன சொல்லடி சொல்கிறாய்? உன் நாவென்ன நெளியும் நாகமா?” என்று ராதை அவள் கூந்தலை பிடித்திழுத்தாள்.

“ஏனடி சினம்? அவன் கன்றுமேய்க்க குழலூதி நின்றான். நீ கண்மயங்கி அங்கே கன்றாகி நின்றதை நாங்களும் கண்டோம்” என்றாள் சுசித்ரை. ராதை கண்ணீர் மல்கி “கீழ்ச்சொல் கேட்டு என் செவிகூசுகிறது. நான் செல்கிறேன்” என்று கரைநோக்கிச் செல்ல “அவளைப்பிடித்து நீரிலாழ்த்துங்களடி” என்று லலிதை கூவினாள். கோபியர் பாய்ந்து ராதையின் கைகளைப்பற்றி நீரில் இழுத்துச்சென்றனர். மூச்சில் நீர்கலக்க ராதை வாய் திறந்து கூவி அவர்களை அலை சிதற அறைந்தாள். அவள் கைகளையும் கால்களையும் அள்ளிப்பற்றினர் தோழியர்.

“அய்யோ, என் ஆடையை விடுங்களடி!” என்று ரங்கதேவி கூவி நீரில் மூழ்க அப்பால் லலிதை அவள் மார்பில் சுற்றியிருந்த ஆடையைத்தூக்கிக் காட்டி “இங்கிருக்கிறது! வேண்டுமென்றால் வந்து என் குலம் வாழ்த்தி தலைவணங்கி பெற்றுக்கொள்” என்றாள். ரங்கதேவி ராதையின் ஆடையைப் பற்றி இழுத்து அவளைச் சுழலவைத்து பொன்னுடல் மின்னி நீரில் மறைய தன் கையில் எடுத்தாள். சிரித்துக்கூவி அதை கையில் சுழற்றிக்கொண்டு “யமுனையை ஆடையாக்கினாள் ஆயர்குலமகள் ஒருத்தி. மண்ணுலகில் ஒருபெண் இதைவிடப்பெரிய ஆடையை அணியலாகுமோ?” என்றாள்.

ராதை நீரில் மூழ்கி விலகி கூந்தல் அலையிலாட கரியநிற தாமரை போல் தலை தூக்கி “ஆடையை அளித்துவிடு... வேண்டாமடி. எவரேனும் வந்தால் என்னாகும்!” என்றாள். “ஆயர் மைந்தனுடன் நீ கொண்ட உறவென்ன சொல்” என்று ரங்கதேவி கூவினாள். இந்துலேகையின் ஆடையை விசாகை பற்றிச் சுருட்டி யமுனை நீர்ப்பெருக்கில் எறிந்தாள். “அய்யோடி, என் ஆடை!” என்று லலிதை நீந்தி அதைப்பற்றச்சென்றாள். அது செம்மலர்போல் சுழித்து மறைய “அவ்வாறென்றால் எவருக்கும் இங்கே ஆடைவேண்டாம்” என்று கூவி அவள் துங்கவித்யையின் ஆடையைப் பற்றி இழுத்துச் சுருட்டி வீசினாள்.

“என்னடி ஆடலிது? ஆடை அகற்றி ஆடுவதா? நாமெல்லாம் ஆயர்குலப் பெண்கள் அல்லவா?” என்று மூத்தவளான லசிகை கூவினாள். அவள் முலைமேல் ஒட்டிய ஆடையை இருவர் பிடித்திழுத்து கொண்டுசெல்ல கைகளால் தோள்பொத்தி நீரில் அமிழ்ந்தாள். மாறிமாறி ஆடைகளைப்பற்றி நீரில் வீசி சிரித்தனர். பொன்மீன்கள் உடல் மிளிர அலையெழுப்பி துள்ளியாடின. ஒன்றுடன் ஒன்று உரசி நழுவிச் சென்றன மெல்லுடல்கள். சிறுமுலைக்குமிழ்கள். சிற்றிடை வளைவுகள். நீர்க்குமிழி நின்றிருக்கும் தோள்கள். அலைவழுக்கிச் செல்லும் தொடைகள். சிரிக்கும் கண்கள். கூவி விரிந்த இதழ்கள். நீர்த்துளி என ஒளிரும் பற்கள்.

உடலான நாள் முதல் ஒருநாளும் அறியாத விடுதலை. எதனால் கட்டுண்டோம் என்று அறிந்தன உடல்கள். எதையுதறி எழவேண்டும் என்று அறிந்தன நெஞ்சங்கள். எதுவாகித் திளைக்கவேண்டும் என்று அறிந்தன ஆழங்கள். அவர்களை அலைசூழ்ந்து தழுவிச் சுழித்துச் சென்றது காளிந்தி. சிறு மீன்கள் எழுந்து விழிமலைத்து அவர்கள் உடல் வழுக்கிச் சென்றன. பாசிப்பசும் மொட்டுகள் கூந்தல்களில் ஒட்டி அலையுடன் எழுந்தமைந்தன. நீர்மருத மலர்கள் அரக்குமணத்தை அவர்கள் உடலில் பூசிச்சென்றன.

பின்னர் அவர்கள் தங்கள் உலகை, காலத்தை உணர்ந்தபோது மாலைப்பொன்வெயில் நீர்மேல் விரிந்திருந்தது. “வீட்டில் தேடிச்சலித்திருப்பார்களடி. என் கன்றுகள் தானே தொழுமீண்டிருக்கும்” என்று ரங்கதேவி எழுந்தாள். தன் கைகளை விரித்து நோக்கி “அல்லிபோல வெளுத்துவிட்டதடி. நீலநரம்போடும் வழியெல்லாம் தெரிகிறது” என்றாள் லலிதை. மேலே நீலக்கடம்பின் நிழலில் கழற்றிவைத்த ஆடைக்குவை நோக்கிச் சென்ற ரங்கதேவி “அய்யோடி! என்ன இது? ஆடையேதும் இங்கில்லை” என்றாள்.

கோபியர் திகைத்து கரைநோக்கி வந்தனர். “என்னடி சொல்கிறாய்? ஆடைகள் எங்கு செல்லும்? காற்றில் சென்று புதரில் விழுந்திருக்கும்” என்றாள் லலிதை. “புதரிலும் இல்லையடி” என்றாள் ரங்கதேவி. “இங்கே குரங்குகளும் வருவதில்லை” என்று சம்பகலதை கூவினாள். ராதை எழுந்து “சருகுக்குள் பாரடி” என்றபோது கடம்பமரம் கனிந்ததுபோல் எழுந்த குழலிசையைக் கேட்டாள். அதைக்கேட்கும் தருணமெல்லாம் அவள் உடல் சிலிர்த்து அசைவிழக்கும். விழிதூக்கி கடம்பின் மலர்க்கிளையில் அமர்ந்து இசைபெருக்கும் கண்ணனை நோக்கி கதிரொளி வாங்கும் மலர்மரமென நின்றாள்.

“ஆயர்சிறுவன்! அவன் கையில் உள்ளதடி நம் ஆடைகளெல்லாம்!” என்று சம்பகலதை கூவினாள். மீன்கூட்டம் துள்ளி விழுவதுபோல உடல் மறைத்த பெண்கள் நீரில் பாய்ந்து விழுமொலி கேட்டாள் ராதை. “பிச்சி, என்னடி செய்கிறாய்? வா இங்கே” என அவள் கைபிடித்து இழுத்து நீரில் வீழ்த்தினாள் லலிதை. குழலிசை பொன்வண்ணப்பூங்கொடியென அசைந்தது. புகைச்சுருள் போல் அலைந்தது. தழல்நுனிபோல் பறந்தது. விழுந்து நாகமென நெளிந்தது. வளைந்து அருவியென பொழிந்தது. பெருகி யமுனையென சென்றது.

“கண்ணா, ஆடைகளை கொடுக்க மாட்டாயா? நீ கோகுலத்தில் நாங்கள் கைகளில் எடுத்த குழந்தை அல்லவா? எங்கள் கையால் அமுதுண்டவனல்லவா?” என்றாள் விசாகை. ரங்கதேவி “அவனிடம் என்னடி பேச்சு? மூழ்கி ஒரு கல்லெடுத்து வீசி அவனை வீழ்த்துங்கள்” எனக்கூவினாள். நீரை அள்ளி அவனை நோக்கி வீசிய சம்பகலதை தன் இளமுலை அசைவை தானே உணர்ந்து சிரித்து நீரில் மூழ்கிக்கொண்டாள். கல்லெடுத்து வீசப்போன ரங்கதேவி கைதூக்கியதுமே தானும் அமிழ்ந்தாள். சிரித்து “அதற்கு அவனை இரு கைகூப்பி வணங்குவதே சிறந்தது” என்றாள் லசிகை. “போடி, அவன் இன்னும் சிறு மைந்தன்” என்று காதம்பரி அவள் தலைமுடியை பிடித்திழுத்தாள்.

பொன்னொளியை தான் கரந்து நீலமென எழுந்துவந்த இளங்கதிரோன். அவன் வருகைக்காய் எழுந்து குளிர்நீர் துளிசூடி இதழ் சிலிர்த்து நின்றன தாமரைமொட்டுகள். நாண் விழிபுதைத்த இளையவை. சினந்து சிவந்தெழுந்த நோக்கு கொண்டவை. கரியவிழி கனிந்தவை. கை தொடாமல் அவற்றைத் தழுவி இதழ்படாமல் அவற்றை முத்தமிட்டு விளையாடியது குழலிசை. மொட்டுகளைக் கோத்து மாலையாக்கும் பொற்சரடு. நெளிந்து நெளிந்து நீரில் மகிழ்ந்தாடும் ஒளி. மலர்தேடி மலர்தேடி அமராமல் சலித்து மயங்கி வழிமறந்தன கருவண்டுகள். வண்டு ரீங்கரித்துச் சுழல குழைந்து தளர்ந்தன தேன்குவைகள்.

“கண்ணா, கைதூக்கி உன்னை இறைஞ்சுகிறோம். ஆடைகளை அளிப்பாயா?” என்றாள் விசாகை. “என்னடி சொல்கிறாய்?” என்று சினந்தாள் ரங்கதேவி. “விரும்பாவிட்டால் நீ இங்கேயே நில்” என்று சொல்லி லலிதை “கரியோனே, உன் மலராடலுக்கு வசந்தமெழுந்த பெருங்காடும் போதாதா? என்னதான் எண்ணுகிறாய்?” என்று கூவினாள். “கைகூப்பி அடிபணியுங்கள். உங்கள் ஆடைகளை அடைவீர்” என்றான் கண்ணன். “ஆடையின்றி நோக்கி நீ அடைவதுதான் என்ன?” என்று சினந்து கேட்டாள் ரங்கதேவி. கண்களில் குறுநகை ஒளிர “கண்கள்” என்றான் கண்ணன்.

தலைமேலே கைகூப்பி கோபியர் நீர்விட்டெழுந்துவர கூவிநகைத்து ஆடையள்ளி வீசி மறுபுறம் குதித்தோடி மறைந்தான். அவன் சென்றவழியில் அசைந்த புதரிலைகள் நாவசைத்துச் சொன்ன ஒருசொல்லை அவள் கேட்டாள். “நெறியிலாதான். நாணிலாதான். குழலிசைத்தால் எல்லாமே கைவருமென்று எண்ணும் அறிவிலாதான்” என்று ரங்கதேவி சினந்து சொன்னாள். “அவன் அன்னையிடம் சொல்லி அறிவுறுத்தவேண்டும்” என்றாள். “எதைச்சொல்வாய்? அவன் கண்களையா, குழலையா, இல்லை அவன் அறிந்த நம் ஆடையற்ற கண்களையா?” என்றாள் லலிதை. கோபியர் மணிக்கூட்டமென நகைத்து ஆடை அணியலாயினர்.

இருள் பரவும் நதிக்கரை மேட்டில் ஆடையால் உடல்மூடி தோள்குறுகி நடந்தாள் ராதை. கால்பின்ன தன் இல்லம்புகுந்து “அன்னையே!” என்றழைத்தாள். “என்னடி இந்நடுக்கம்? நெடுநேரம் நீராடினாயா?” என்றாள் அன்னை. ராதை அவள் விழிநோக்காது “நீ பார்த்த ஆய்மனையில் மணம்கொள்ள சித்தமானேன். செய்தி சொல்லி அனுப்பு” என்று சொல்லி நிலத்தமர்ந்து முழங்காலில் முகம் வைத்து நத்தையென இறுகிக்கொண்டாள்.

பகுதி ஏழு: 2. அகம் அழிதல்

முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள் எழுந்த முதல் இசையைக்கேட்டு தானே திகைத்து காற்றோடி எழுந்த மூச்சு நிலைக்க அசைவழிந்திருக்கும். பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை. வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. கனிவூறிய விதையை. விதை கொண்ட அமைதியை.

நள்ளிரவின் இருளில் கருநாகம் சுற்றி மேலேறும் தழுவலின் மென்மையை அது பாடியிருக்குமா என்ன? அதன் சிறுமுட்டைகள் கனக்கும் குழலகத்தை விஷநாக்கு நீட்டி வளையும் ஆயிரம் கருநாகங்கள் அதில் எழுந்து தழுவி கீழே வழிவதை அந்தக் கருநாகம் கூட அறிந்திராது. மூங்கில் முத்தில் மணியொளிரும் விழி எழுந்தது எப்படி? நீர் நீண்ட நெளிவில் நஞ்செழுந்தது எப்படி? இசையாகி எழுகையில் வனமாகி நிறையலாகுமெனக் கண்டடைந்த மூங்கில் வாழ்த்து பெற்றது. அதில் வந்தமரும் கருங்குயில் திகைக்கிறது. அதன் பாடலை மீளப்பாடும் மரக்கிளையைக் கண்டு. இருளுக்குள் ஓடும் காற்று சுழன்று கூந்தல் பறக்க திரும்பி வருகிறது. அதன் அகத்தேடலை ஒலியாக்குவது யாரென்று.

ராதை வேய்குழலைக் கேட்டுக்கொண்டே இருந்தாள். வெளியே அவள் இல்லம் சூழ்ந்த மூங்கில்காட்டுக்குள் எங்கோ பாடிக்கொண்டே இருந்தது அது. இல்லத்தின் இருண்ட வைப்பறைக்குள் புல்பாயில் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். “வேனில் எரிகிறது வெளியே. ஏனடி போர்த்தியிருக்கிறாய்? உடல் காய்கிறதா உனக்கு?” என்று கீர்த்திதை நூறுமுறை தொட்டு நோக்கினாள். தொடும் கையெல்லாம் பனியிலூறியதுபோல விதிர்க்கச்செய்யுமளவுக்கு அவள் சருமம் மென்மைகொண்டிருந்தது. கட்டைச்சரடை இழுத்து இழுத்து விம்மவைக்கப்பட்ட முரசுத்தோல் போல. பனிக்காலையில் காற்றின்றி படர்ந்த காட்டுச்சுனையின் நீர்ப்பரப்பு போல. “என்னடி செய்கிறது உனக்கு?” ராதை இருளில் விழிமின்ன நோக்கினாள். “என்னென்று நான் எங்கனம் அறிவேன் அன்னையே?”

வான் நீலம் ஒளிவிடும் இரவுத்தடாகமென அவள் விழிகள். கருநாகம் குடியேறிய சிதல்புற்றின் குழிகள். நெய்கொதிக்கும் செம்புக்கலம் அவள் உடல். “என்னடி செய்கிறது? சொல்லித்தொலைய மாட்டாயா?” என்று தலையிலறைந்துகொண்டாள் அன்னை. இரவிருளில் தலைமறைத்த மருத்துவச்சி வந்து அவள் கைப்பிடித்து நாடி நோக்கி “பித்தம் பெருகி போத விளிம்பழிகிறதே. சிவமூலி முகர்ந்தாளோ? ஊமத்தை தின்றாளோ?” என்றாள். “நாடிகளில் நஞ்சு ஓடுகிறது. ஆய்ச்சியே, கருநாகப் பல்பட்டு கண்ணிருண்டோர் கைகளிலேயே இத்துடிப்பை இதுமுன்னர் அறிந்துள்ளேன்” என்றாள். அன்னை நெஞ்சழுத்தி விம்மி நின்றாள்.

இரவென்ன பகலென்ன எப்போதுமென ஒலிக்கிறது அக்குழல்நாதம். அதில் முத்தமிடும் உதடுகள்தான் என்ன? அதன் உடலான வடுக்களில் ஓடும் விரல்கள்தான் என்ன? சொல்லற்ற கீதம். சொல்திரளும் கணத்திற்கு முற்கணத்தில் தேங்கிச் சுழன்று சுழன்றாடும் நாகம். நீலம், நீலவிஷம், விஷக்காலம், காலாகாலம், காலன் கழல், கழலாடும் நடனம், கருமை. கரிய சுழியாகி இசையாகி சுருளாகி சுருள்மையமாகி செவியாகி சிந்தையாகி சத்தாகி சித்தப்பெருவெளியாகி ஆனந்தநிலையாகி நீலமணியாகி நின்றிருக்கும் இக்கணமே இப்பிரபஞ்சம் உருவாகி வாழ்ந்து நீண்டு மயங்கி அழிந்து நீலமாகும் காலமென்றானது. குழலே, நீலமொளிரும் விரல்களே, நீலம்பெருகிய பேரிசையே. இங்கு ஆம், இங்கு, இப்போது, இனியெப்போதுமென்று...

யாருக்காக இசைக்கிறாய் காரிருளே? என்னை பிச்சியாக்கி இருளுக்குள் இருளாக்கி ஒடுங்கவைத்தாய். என் அறைச்சுவர்களெல்லாம் குருதி வழியும் கருவறைச் சுவர்களாக சுருங்கி விரிகின்றன. உப்புச்சுவைக்கிறது கருவாழும் குருதி. உப்பாகி நிறைகிறது வெம்மைகொண்ட இருள். கருமுதிர்ந்து உலகடைந்த கருவாயில் வழியாக உள்ளே மீண்டு சுருண்டிருக்கிறேன். மூடுங்கள் அந்த வாயிலை. “அன்னையே, அந்த வாயிலை மூடுங்கள். என் கண்ணை கிழிக்கிறது கதவுச்சிறு வெளிச்சம்." “ஒற்றைத்தலைவலியா? ஒளிபட்டு நோகிறதா?” என்றாள் அன்னை. “அன்னையே, சாளரங்களை மூடுங்கள். அந்த ஒலி கேட்கலாகாது” என்றாள் ராதை. “மூடுங்கள் சாளரங்களை! மூடுங்கள் அன்னையே!” என்று கூவினாள்.

அன்னை திகைத்தாள். “இல்லத்துக் கதவெல்லாம் மூடித்தான் இருக்கிறது. எந்த ஒலி கேட்டாய்? இளையவளே, நீ கேட்கும் இசைதான் என்ன?” அன்னை பரிதவித்து அறைதோறும் சுற்றிவந்தாள். சித்தி கைபற்றி கொல்லைக்குக் கொண்டுசென்று “என்னசெய்வேன்? ஏதென்றறியேன். இல்லாத இசையொன்றைக் கேட்கிறாள் என் சிறுமி. இல்லத்து இருள் விட்டு எழுந்துவர மறுக்கின்றாள். இரவுபகலில்லை. ஊணும் நீருமில்லை. என்னாகப்போகிறாள்?” என்றாள். “அக்கா, அவள் கேட்கும் அவ்விசையின் சிறுதுளியை நாமும் கேட்டதில்லையா என்ன?” என்றாள் கீர்த்திமதி.

“கொழுநன் கைப்பிடிப்பாள். கருவுற்று பெண்ணாவாள். கன்னிமனம் கண்டதெல்லாம் கனவாகி மணியாகி உள்ளிருளில் ஒடுங்கும். பெண்ணாகி வந்ததில் இதுவே பேதைப்பருவம் என்பார்” என்று அவள் சொல்ல அன்னை முகம் குனித்து கண்ணீர் ஒற்றி “யானொன்றறியேனடி இளையவளே. இக்குவளை நுனி நுரைக்கும் என் மகளை அக்குவளை ததும்பாமல் ஊற்றிவிட்டால் இப்பிறவியில் இனியென்ன என்றமைவேன்” என்றாள். “இல்லம் தோறும் எழுந்தமையும் நெருப்பிது. அன்னையர் விழிநீரால் அணைவது” என்றாள் கீர்த்திமதி.

ஒவ்வொரு நாளாக ஆயர்குடி இதழ்விட்டுக்கொண்டிருந்தது. மூதன்னை முகாரை தன் பழைய பொன்னகைகளை கொண்டுவந்து மகளிடம் கொடுத்தாள். “மூதன்னையின் நகையணிந்து மணம்காணவேண்டும் சிறுமகள். இப்பொன்னை உருக்கி புதுநகைசெய். ஒன்றை மட்டும் என் நினைவாக வைத்துக்கொள்ளட்டும்” என்றாள். மூதன்னை சுகதை தன் மைந்தன் ரிஷபானுவிடம் “அன்னைவழி அன்னை அவள் உடல்சூடும் நகையெல்லாம் அளிக்கலாம். அவள் உளம்சூடும் பொற்தாலி தந்தைவழித் தாயே அளிக்கவேண்டும்” என்று அளித்தாள். “என் மூதாய் எனக்களித்தாள். உன் மகள் இதை நாளை வரும் ஒரு மகவுக்களிப்பாள். யமுனையில் ஓடும் சிற்றோடம் இது” என்றாள். அதை கையில் வாங்கி கண்ணோடு சேர்த்து நெஞ்சு விம்மி நெடுமூச்செறிந்தார் ரிஷபானு.

மாமியர் மேனகையும் ஷஷ்தியும் கௌரியும் தாத்ரியும் தாதகியும் தங்கள் அணியொன்றை அவளுக்கு அளித்தனர். சித்தி கீர்த்திமதி அவள் காதுக்கு அணியும் பொன்னூல் வரிப்பின்னல் கொண்ட பட்டாடையும் அளித்தாள். தேன் சேர்க்கும் ஈக்களென உறவும் சுற்றமும் கொண்டுவந்து சேர்த்தவற்றால் ரிஷபானுவின் குடி நிறைந்துகொண்டிருந்தது. வண்ண உடைகளின் ஒளிகொண்டு இல்லச்சுவர்கள் மிளிர்ந்தன. சிரிப்பொலியும் பேச்சொலியும் எழுந்து சாளரங்கள் முழங்கின. சமையற்கட்டில் எப்போதும் அடுப்புகள் எரிந்தன. மலர்மணம் கொண்டுவந்த தென்றல் நெய்மணம் கொண்டு சென்றது.

அத்தனைக்கும் நடுவே அவள் மட்டும் தனித்திருந்தாள். அறையிருளில் புல்பாயில் தன் கையால் தன்னை அணைத்து படுத்திருந்தாள். “எங்கே பொன்பூத்த கொன்றை? புதுவெள்ளம் எழுந்த கங்கை?” என்று கேட்கும் முதியவர்களிடம் காட்ட அன்னை உள்ளே வந்து நோக்கியபோது விழிமங்கி உதடு உலர்ந்து நெற்றிமயிர் கலைந்து எழுந்தமர்ந்து “யாரது?” என்றாள். அன்னை அவள் முகத்தை ஈரத்துணியால் துடைத்து கொம்புச்சீப்பால் குழல்சீவி புத்தாடை அணிவித்து பொன்னகைகள் பூட்டி கைபற்றி கொண்டுவந்து நிறுத்தினாள். ஒரு சொல்லும் கேளாமல் ஒன்றையும் அறியாமல் வேள்விக்கூடத்தில் எழுந்து வேறுலகில் அலையடிக்கும் தென்தழல் போல் அவள் நின்றிருந்தாள்.

தாய்மாமன் சீர்கொண்டு பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் கீர்த்திசந்திரனும் வந்தனர். மாமன்கள் கொடை நோக்க ஆயர்குடியே திண்ணையில் கூடியது. பொன்னும் புதுமலரும் ஆடைகளும் அணிப்பொருட்களும் கொண்ட தாலங்களை தொட்டுத் தொட்டு மதிப்பிட்டது. லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் இல்லத்திலேயே இருந்தனர். லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் மதுமதியும் இல்லத்து ஏவல் முடிந்தபோதே வந்து சூழ்ந்தனர். கோபியர் சிரிப்பொலியில் சலங்கை கட்டி ஆடுவதாய் தோன்றியது ராதையின் இல்லம்.

ஒவ்வொரு அணியாக தன் கழுத்தில் எடுத்துவைத்து தோழியரின் விழிகளில் அழகுநோக்கினர் கோபியர். ஒவ்வொரு அணியிலும் ஒருகணம் அவர்கள் மணமகளாகி மீண்டனர். “இத்தனை அணிகளுக்கும் அப்பால் எஞ்சுவதே அழகு என்பார்” என்றாள் லசிகை. “அணியெல்லாம் அல்லிவட்டம். பெண்ணழகே இதழ்களாகும்” என்றாள் மூதன்னை சிரித்தபடி. “இவ்வணிகளை அமைத்த பொற்கொல்லர்கள் இவற்றை இவள் அணிவதை காணவேண்டாம். இவை அழகிழக்கக் கண்டு அகமழிவார்கள்” என்றாள் ஆய்ச்சி ஒருத்தி. அன்னை முகாரை இன்முகம் காட்டி மெல்ல எழுந்துசெல்வது உப்பும் மிளகும் எடுத்து கண்ணேறு கழிப்பதற்கென்று அறிந்த கோபியர் விழிநோக்கி நகைத்துக்கொண்டனர்.

அக்கரை ஆயர்குடியில் இருந்து மணமகனின் அன்னை ஜடிலையும் அவள் மகள் குடிலையும் ஆய்ச்சியர் ஐவர் சூழ பெண்ணுக்கு அணிவிக்கும் பொன்னும் பட்டும் உப்பும் அரிசியும் கொண்டுவந்தனர். “பொன்மலர் போல் பெண் இருக்கிறாள். போய்ச்சேரும் குடியோ முட்புதர்போல் தெரிகிறதே” என்றாள் ஆய்ச்சி ஒருத்தி. “சேருமிடம் தேரும் நதியென ஏதுமில்லை” என்றாள் ஒரு மூதாய்ச்சி. “மண் சுவையே நீர்ச்சுவை. பெண்ணுக்கும் விதி அதுவே” என்றாள் இன்னொருத்தி. முகம் நொடித்து ஆயர்மகள் ஒருத்தி “பிச்சியென்றிருக்கிறாள். இவளை கைப்பிடித்து குடியேற்ற அவனும் பேயனென்றிருக்கவேண்டும்” என்றாள்.

மங்கலமணநாளில் ஆயர்குடியெங்கும் மாவிலைத் தோரணம் எழுந்தது. குடிதோறும் குலைவாழை கட்டி கோலமிட்டனர். ஆற்றுமணல் விரித்த வழிமருங்கில் அன்றலர்ந்த மலர்கட்டி அணிசெய்திருந்தனர். முழவும் கொம்பும் காலைமுதல் முழங்கின. இருளழியத் தொடங்கும் முன்னே கோபிகைக் கன்னியர் ராதையை எழுப்பி சேலைத்திரைகட்டி மஞ்சளும் சந்தனமும் கஸ்தூரியும் கோரோசனையும் பூசி குரவையிட்டு கொண்டுசென்று யமுனையில் நீராட்டினர். அணியறையில் அமர்த்தி பட்டாடை சுற்றி பொன்னகை பூட்டினர்.

பித்தெடுத்த விழி தூக்கி “எவர் எழுப்பும் இன்குழலோசையடி அது?” என்றாள் ராதை. “என்னடி கேட்கிறாய்? எங்குளாய் நீ?” என்று அவள் முகத்தை தூக்கினாள் லலிதை. “கண்திறந்து கனவிலிருக்கிறாயா? இக்காலை ஏதென்று அறிவாயா? இன்று உன் மணநாள். நீ கன்னிமை துறந்து கணவன் இல்லம் சேர்கிறாய்” என்றாள். “யார்?” என்றாள் ராதை. “என்னடி இது?” என்று லசிகை திகைக்க “இச்செய்தி எவருமறியலாகாது பெண்களே. பெண்கொண்ட பித்தெல்லாம் முலைப்பாலில் கரைந்து போகும்” என்ற கீர்த்திமதி “படி இறங்கி இவள் சென்றபின்னால்தான் என் தமக்கை பித்தழிந்து பெண்ணாவாள்” என்று நெடுமூச்செறிந்தாள்.

மலரணிந்து மங்கல இசை ஒலிக்க யமுனை நதிகடந்து வந்தன ஐந்து அணிப்படகுகள். அவற்றில் மணமகனின் தந்தையென வந்த சிறியதந்தை துர்மதர் மதுவருந்திச் சிவந்த சிறுவிழிகளுடன் வாய் நிறைத்து வெற்றிலைமென்று கழிபற்றி நின்றிருந்தார். அப்பால் தோழர் சூழ மலர்ப்பின்னல் கொண்டு முகம் மறைத்து மணமகன் அமர்ந்திருந்தான். பின்னால் வந்த பாய் விரிந்த சிறுபடகில் மணமகனின் அன்னை ஜடிலை வண்ண உடையணிந்து முகம் மறைத்து அமர்ந்திருக்க அருகே அவள் மகளும் தோழியரும் ஆய்ச்சியர் குழுவும் அமர்ந்திருந்தனர்.

“மணமகனின் பெயரென்னடீ?” என்றாள் லலிதை. “அபிமன்யு என்றார்கள்” என்று லசிகை சொன்னாள். “என்ன பெயர் கொண்டாலும் யாராக இருந்தாலும் பெயரற்றுப் போவதற்கே பிறந்தவனடி அவன்.” அவள் ஆடைபற்றி “என்னடி பேச்சு இது? மங்கலநாளில் மறைசொல் வரலாமா?” என்று ரங்கதேவி அதட்டினாள். லசிகை “அவன் முகம் மறைக்கும் மலர்களை பாரடி. அவையறியும் நான் சொல்வதன் பொருள்” என்றாள். “பேரழகென்பது அழகின்மையைத்தான் சூழப்பரப்புகிறதா என்ன? இவள் தானிருக்கும் இடமெல்லாம் தான் மட்டுமே ஆகும் இளங்கதிர் மலர்” என்று சொல்லி லலிதை பெருமூச்சு விட்டாள்.

முழவும் கொம்பும் முறைசேர்க்க மலர்மாலையும் மணிக்குடையும் மேலாடையும் மோதிரமும் கொண்டு ராதையின் தமையன் ஸ்ரீதமனும் ஆயர்களும் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அவள் தங்கை அனங்கமஞ்சரியும் ஆய்ச்சியரும் மலர்த்தாலமும் மஞ்சள்நீர்க்குடமும் கொண்டு குரவையிட்டு வந்தனர். படகுகள் கரையணைந்து மணமகன் மண் தீண்டியதும் அனங்கமஞ்சரி மஞ்சள்நீரால் அவன் தாள் கழுவி மலரிட்டு பூசை செய்தாள். மலர்மாலை சூட்டி மேலாடையும் மோதிரமும் அணிவித்து குடைகாட்டி அவனை கூட்டிவந்தான் ஸ்ரீதமன்.

ரிஷபானுவின் இல்லத்து முற்றத்தில் எழுந்த வெண்பந்தலில் அவர் தந்தை மகிபானு மஞ்சள்தலைப்பாகையும் குண்டலமும் மணிக்குச்ச மேலாடையும் அணிந்து பீடத்தில் அமர்ந்திருக்க இருபக்கமும் அவர் மைந்தர்கள் ரத்னபானுவும் சுபானுவும் பானுவும் அவ்வண்ணமே நின்றனர். மறுபக்கம் பீடத்தில் கீர்த்திதையின் தந்தை இந்து நீலத்தலைப்பாகை அணிந்து அமர்ந்திருக்க அருகே அவர் மைந்தர்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் கீர்த்திசந்திரனும் நின்றிருந்தனர். குரவை ஒலிக்க கொம்புகள் சேர்ந்தொலிக்க முழவும் முரசும் ஆர்ப்பரிக்க வந்த மண ஊர்வலம் இல்லத்தை அடைந்ததும் ரிஷபானுவும் கீர்த்திதையும் ஏழுதிரியிட்டு எரிந்த விளக்கும் நிறைகுடமும் பொன்மலரும் பொரியும் நிறைந்த மங்கலத்தாலமுமாக எதிர்கொண்டழைத்தனர்.

முதுதந்தையரை வணங்கி முறைமை செய்தபின் பீடத்தில் அமர்ந்த அபிமன்யுவை உள்ளிருந்து எட்டி நோக்கினர் பெண்கள். கீர்த்திமதி “அவளுக்கு இணையில்லை என்றாலும் ஆண்மகனே அவனும்” என்றாள். “ஆயிரம் பசுக்களை ஆளும் ஆயன் என்றார்கள். கையில் ஒரு கங்கணம் இல்லை. காலில் பொற்கழலும் இல்லை. அவன் அன்னையோ பழம்பட்டு உடுத்து பாழ்நெற்றி கொண்டு வந்திருக்கிறாள்” என்று அலர் பேசி விழி கோர்த்தனர் ஆயர்மகளிர்.

கீர்த்திதை அழைத்துச்சென்ற ஜடிலையும் குடிலையும் அவர்குலத்து மகளிரும் உள்ளறைக்குள் சென்று அமர்ந்தனர். குளிர்மோரும் இன்னீரும் கொடுத்து அவர்களை இளைப்பாற்றினர் கீர்த்திமதியும் மேனகையும் ஷஷ்தியும். தாத்ரியும் கௌரியும் தாம்பூலம் கொண்டுவந்தனர். தாதகி சந்தனம் கொண்டுவைத்தாள். பழங்களும் தேன்தினையும் பரிமாறினர். முகமன் சொல்லி முகம் மலர்ந்து “இக்குடியில் இனி உங்கள் சொல்நிற்கும்” என்றாள் கீர்த்திமதி. “இருகுடியை ஆளும் ஒருமைந்தன் வரவேண்டும்” என்றாள் மேனகை.

கோபியர் பெண்கள் கைவளை சிரிக்க, கால்சதங்கை சிரிக்க, கண்கள் சிரித்து, சிரிப்பொலி ஒலிக்க உள்ளறை நுழைந்து “உன் கொழுநன் இல்புகுந்தான். கொம்புபோல மீசை. எருமையென கருவிழிகள். திமில் அசையும் காளை நடை!” என்றனர். ராதை விழிதூக்கி “குழலிசைப்பது யாரடி?” என்றாள். “குழலா? முழவை குழலாக்கும் மதுவேதும் உண்டாயா?” என்றாள் ரங்கதேவி. லசிகை “பிச்சி செவிகளுக்கு எல்லாம் குழலிசையே” என்றாள். “என்னடி கேட்கிறாய்? எனக்குச் சொல்” என்று அமர்ந்த இந்துலேகையை குழல்பற்றி தூக்கி லலிதை “மந்தணம் பேசும் நேரமல்ல இது. மங்கல வினைசூழ அழைத்துச்செல்லவந்தோம்” என்று அதட்டினாள்.

மணவேளை வந்ததும் மண0மைந்தன் கைப்பற்றி துர்மதர் “ஆயர்குலப்பெரியீர். என் மைந்தன் ஆயர் குடிப்பிறந்தோன். ஆயிரம் பசுவுள்ளோன். கையிரண்டு நிறைய பொன்திரட்டி அளித்து கோரி நிற்கிறோம். உம் குடிப்பெண்ணை உவந்தளிக்கவேண்டும். என் குடி தழைக்க அருள்கொள்ளவேண்டும்” என கோரினார். மும்முறை பொன்னும் பூவும் கலந்து அள்ளி பெண்வழித் தாதை காலில் வைத்து துர்மதர் மகள் கோர அவர் எழுந்து வளைகோலைத் தூக்கி “அவ்வாறே ஆகுக! வாழ்க உன் குலம். வளர்க உன் குருதி!” என்றார். தந்தைவழித் தாதை மகிபானு வளைதடி தூக்கி “ஆமென்றுரைத்தேன். அது நலம் சூழ்க!” என்றார். தங்கள் வளைதடிகள் தூக்கி “வாழ்க! வாழ்க!” என்றனர் ஆயர்குடிமூத்தோர்.

“பெண்ணெழுக! பொற்பாதம் வருக!” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. கோபியர் வந்து ராதையை எழுப்பினர். சிறுகழுத்தில் மலர்மாலை கனக்க செந்நிறப் புத்தாடை அலையுலைந்து ஒலிக்க அஞ்சும் காலெடுத்து ராதை நடந்துவந்தாள். பொன்னிறத்தில் புறாக்கள் வருவதுபோல் அவள் சிறுபாதம் தத்தி வரக்கண்டு கைகூப்பி அன்னைமூதாதை இந்து “ஆள்பவளே, அன்னை வடிவானவளே. கன்றுடன் குலம் காக்கும் கொற்றவையே!” என்று வணங்கினார். கண் தூக்கி அவள் முகம் நோக்கிய அபிமன்யு அவள் தலைகுனிந்து வரவில்லை என்று கண்டு திகைத்தான். அக்கூட்டத்தில் எவரையோ தேடுபவள் என அவள் விழிகள் அலைந்தன. ஒவ்வொரு முகமாக சென்றமர்ந்து சென்றமர்ந்து மீண்டன.

இந்து எழுந்து இருகைகூப்பி குலத்தவரை வணங்கி “நன்று சேர்க, நலத்தோரே! இன்று என் இனியமகள் ராதையை இங்கிருக்கும் உங்கள் மொழிசூழ்ந்து நம் குலமூதாதையர் கண்சூழ்ந்து கைபற்றி அளிக்கிறேன். கன்றுடன் பசுசேர்ந்து இவள் இல்லம் பெருகுக. மடிநிறைந்து இவள் குலம் பெருகுக. இவள் தொட்ட கலம் நிறைக. இவள் கைப்பிடித்த கணவன் நெடுநாள் வாழ்க!” என்றார். “வாழ்க! வாழ்க!” என கூவி ஆர்த்தனர் ஆயர்குலத்தோர். முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் ஆர்த்தெழுந்தன.

பெண்டிரும் தோழியரும் குரவையிட, அன்னையர் மலரும் பொரியும் தூவி வாழ்த்த, குலம்சேர்ந்த பந்தலின் நடுவே மைத்துனரும் தம்பியரும் இருபக்கமும் நின்றிருக்க ஏற்றிய நெய்விளக்கில் எரிந்த தழல் சான்றாக ராதை கரம்பற்றி அபிமன்யுவுக்கு அளித்தார் ரிஷபானு. மாலை மாற்றி மணித்தாலி பூட்டி அவளை மணம் கொள்கையிலும் அவள் மருள் விழிகள் நிலையழிந்து தேடிச்சலித்து சுழன்று வருவதையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். கன்றுடன் கூடிய வெண்பசுவை ரிஷபானு அளிக்க ராதை அதன் கயிறு பற்றி அவனுக்கு அளித்தாள். பால்நிறைந்த மண்குடத்தை இடையேற்றி அவன் கைபற்றி நடந்து வெளியே சென்றாள்.

ஆயர்குலமாளும் விண்ணளந்தோன் ஆலயத்திலும் கொற்றவை குடிகொள்ளும் மலைக்குகையிலும் வழிபட்டு அவர்கள் இல்லம் மீண்டனர். ஆறுவகை கூட்டும் நெய்மணக்கும் கறிவகையும் தேனும் கனியும் கொண்ட விருந்துக்குப்பின் ராதையை கைப்பற்றி கூட்டிவந்து அறையில் அமர்த்தினர் கோபியர். “இன்றொருநாள் மட்டுமேனும் தலைகுனிந்தால் என்னடி? நாணமின்றி மணம் கொண்ட ஆயர்மகள் எவருண்டு?” என்றாள் ரங்கதேவி. “அங்கே குழலிசைத்தது யார்?” என்று மருண்ட விழி விரித்து ராதை கேட்டாள். லலிதை “அவளைச் சற்று துயில்கொள்ள விடுங்களடி” என்று கோபியரை அழைத்துவந்து அறைக்கதவை சாற்றினாள்.

நெஞ்சில் கைவைத்து நெகிழ்ந்துருகி விழிபனித்து கீர்த்திதை சொன்னாள் “இன்றென ஒருநாள் இவள் வாழ்வில் இல்லையென்றே நேற்றுவரை நான் நினைத்திருந்தேன் கன்னியரே. இனியெல்லாம் என் அன்னையரும் தேவியரும் உளங்கனியும் வழி.” லலிதை கோபியரை அழைத்து “எவரேனும் ஒருவர் எப்போதும் இங்கிருக்க வேண்டுமடி” என்றாள். “பிச்சி மனம் போகும் போக்கென்ன என்றறியேன். அவள் கணவன் கைபற்றி படகேறிச் செல்லும் வரை கண் ஒன்று அவள் மீது இருந்தாகவேண்டும்.” ரங்கதேவி “அவள் பித்து முதிர்ந்து பெரும்கனியாகி விட்டதோடி?” என்றாள். ஒருவர் முகம் ஒருவர் நோக்கி சொல்லற்று நின்றனர் கோபியர்.

பகுதி ஏழு: 3. அதுவாதல்

கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என் ஐம்புலன்களும் குழவிகளாகி முட்டிமுட்டி மோதிப்புரளும் முலைகிளர்ந்த பன்றி. பசித்த வாய்திறந்து ஈன்ற மகவை மென்று நாசுழற்றும் சிம்மம். தின்று தின்று தானே எஞ்சி தன் வாலை தான் விழுங்கும் நாகம். நாகமணி நீலம்.

என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன். விண்ணிழிந்து மண் நிலைத்த ஒற்றை மழைநூல். குழலே, கொல்லும் குழலே. குழலாகி வந்ததுவே, எரிந்து எரிந்து இப்புவியை அழிக்கும் அழலே! அனலாகி கதிராகி தழலாகி கரியாகி ஒளியாகி வெம்மையாகி நின்றிருக்கும் இருளே. அழியாதெழுக நீ. அதிவிதுவென தீண்டி அனைத்தும் ஆளவென மூண்டு இங்கெழுந்து ஆடுக! ஸ்வாகா! சுவைதேடும் உன் ஒளி நாவுக்கு ஸ்வாகா! உன் அணையாப்பெரும் பசிக்கு ஸ்வாகா! நீ உண்ட அகிலங்களுக்கு ஸ்வாகா! நீ எழுந்த ஆயிரம் நெய்க்கடல்களுக்கு ஸ்வாகா!

என் இருள்சுருண்டு நிறை திரண்டு பாறையென்றாயிற்று. நிலையழிந்து உருண்டுவந்து இம்மலைவிளிம்பு நின்றேன். காலடியில் ஓடி தொலைவெளியை தொட்டெழுந்தது நீலவானம். சொல்லிச் சொல்லி உலைகின்றது என் கால்சதங்கை. இங்கே சொல்லாத அனைத்துமாகி அமர்ந்தேன். மன்று எழுந்த சொல்லும் அன்னை நெஞ்சுரைத்த மொழியும் என் குலத்து மரபுரைத்த நெறியும் உருகிவழியும் எரிபீடம். கனல்கொண்டு சிவந்த கருபீடம். எந்தையரும் என் மைந்தரும் சிரமற்று துடிக்கும் குருதிப் பலிபீடம். அதில் தழலாடி நிற்பது நானல்ல, நீ.

ஆதலென்று இங்குள்ளன அனைத்தும். பெருங்காதலென்று கரந்துள்ளதோ நான்! வெறும் போதமென்ற வெண்நுரை. கோதறிந்த தும்பியென என் சித்தம் துளைத்ததோ நீ! சாதலென்றும் வாழ்தலென்றும் இல்லை. தீதறிந்து விலக்கலாகுமோ? நன்றறிந்து நிற்கலாகுமோ? கண்ணழிந்து காலழிந்த வெளியிருள்! ஒரு சொல்லெழுந்து விரிந்த விண்மீன் வெளி. அவை கண் கனன்று எரிந்துதிரும் சாகரப் பெரும்பாழ். இங்குளேன் இங்குளேனென்று ஆயிரம் கரைப்பாறைகளில் அறைந்து அறைந்து சிதறித் துளித்துத் துமித்து அலறியாடும் பெரும்பித்து நான்! மேலே அசைவற்ற வடவிண்மீனின் அழியாப் புன்னகை நீ!

ராதை ஏதும் அறியவில்லை. அவளைச்சூழ்ந்து பேசி நகைத்து உண்டு அமர்ந்து கிடந்து அமைந்தவர் அவளையும் அறியவில்லை. மாலை வெயிலெழுந்ததும் மணமகன் இல்லத்தார் மூத்தாரை வணங்கி விடைகொண்டனர். “என் இல்லத்து விளக்கை நான் கொண்டுசெல்ல ஒப்புங்கள்” என்று கைகூப்பி கேட்டாள் ஜடிலை. “மங்கலநாண் கொண்டு மணமகன் கைப்பற்றியதுமே அவள் உங்கள் மகள்” என்றாள் கீர்த்திதை. துர்மதர் சென்று இந்துவின் கைதொட்டு வணங்கி விடைகொண்டார். மைந்தர் சூழ மகிபானு எழுந்து வாயில் வரை வந்து வழியளித்தார். குடிலை ராதையின் கரம்பற்றி “எழுக, நம் இல்லம் சேரும் நேரம் அமைந்தது” என்றாள்.

கண்ணீர்விழிகளுடன் கீர்த்திதை ராதையின் தோள்பற்றி இதழசைத்து சொல்லசையாது நின்றாள். கீர்த்திமதி “மூதன்னையர் வாழும் மூன்றாமுலகில் உன் ஒவ்வொரு சொல்லுக்கும் கணக்குண்டு. உன் ஒவ்வொரு அடிக்கும் அளவுண்டு. இக்குடி நிறைந்து வளர்ந்தாய். அக்குடி நிறைய வாழ்வாய்” என்றாள். லலிதையும் விசாகையும் ராதையின் இரு கைகள் பற்றினர். லலிதை “மீன்கொத்தி ஒன்று மின்னி கடக்கும் தொலைவுதானடி. அங்கிருந்தாலும் நீ இங்குமிருப்பாய்” என்றாள். விசாகை புன்னகையில் கண்ணீருடன் “சென்றுவருக தோழி. இளமையென்பது காலையிளவெயில் என்பார்கள். மாலையிலும் பொன்னொளிரும் வெயிலெழும். அப்போதும் நாம் சேர்ந்திருப்போம்” என்றாள்.

அன்னையரை அடிதொழுது குடிமூத்தார் சொல்பெற்று ராதை கிளம்பினாள். உருளும் விழிகளுடன் ஒரு சொல்லும் பேசாமல் கணவன் கைபற்றி காலெடுத்து வைத்து அவள் இல்லம் நீங்கக் கண்டு ரிஷபானு விழிநீர் வழிய உதடுபூட்டி நின்றார். கொழுநன் குடைநிழலில் அவள் செல்வதைக் கண்டு உயிர்நீங்கிச் சென்றதை உடல் நோக்கும் நிலையிது என்று அறிந்தார் ரிஷபானு.

“என் மகளே” எனக்கூவி அவள் பின்னால் எழுந்தோடிய அன்னையை ஆயர்மகளிர் கைபற்றி நிறுத்தி “என்ன வினை செய்தாய்? மங்கலம் கொண்டு மகள் செல்லும்போது பின்னால் அழைக்கும் பெரும்பிழை ஆற்றலாமா?” என்றனர். “என் நெஞ்சில் பூத்தமலர் நீங்கியது இன்று” என்று கூவி உடல்சோர்ந்து தரைசேர்ந்தாள் அன்னை. அவள் தங்கை அருகமர்ந்து “மணம்கொடுத்த மங்கை கடன்கொடுத்த செல்வம் என்பார் மூத்தோர். வட்டியுடன் திரும்பிவந்து நம் கையில் சேர்வாள்” என்றாள்.

கண்மறையும் வரை நோக்கி நின்ற லலிதை கால்சலங்கை ஒலிக்க கைவளைகள் குலுங்க அவர்களை தொடர்ந்தோடினாள். அவளுடன் கோபியர்குழாம் சேர்ந்தோடியது. யமுனைக்கரைமேட்டில் நின்று படகேறும் ராதைக்கு கைவீசி விடைகொடுத்தனர். நீர்ப்பரப்பில் படகெழுந்து விலக அங்கே நின்ற புன்னைமரத்தின் கிளைகளில் ஏறி நின்று கூவினர். பெண்பூத்த புன்னை நீர் தொட்டு தாழ்ந்து ராதையை வழியனுப்பியது.

இல்லம் சேர்ந்ததை ராதை அறியவில்லை. அவள் விழியிருளக் கண்டு ஜடிலை “என்ன பார்க்கிறாய்?” என்றாள். “அங்கே குழலிசைப்பது யார்?” என்றாள் ராதை. அன்னையும் மகளும் அரைக்கணம் விழிதொட்டு மீண்டனர். “ஆயர்ச்சிறுவர் கன்றுசூழும் காடுள்ளது அங்கே” என்ற ஜடிலை “வலக்கால் வைத்து வாழ்த்துமொழி சொல்லி எங்கள் மனைநிறைக்க வருக” என்றாள். குத்துவிளக்கேந்தி மாமங்கலை ஒருத்தி மஞ்சள்நீரும் மலரும் காட்டி வரவேற்க இடையில் பாற்குடமும் வலக்கையில் நெய்ச்சுடரும் ஏந்தி ராதை நுழைந்தாள்.

புதுக்கலத்தை அடுப்பிலேற்றி பால் பொங்கவைத்தபோது நுரை எழுந்து நுனி தொட்டு காற்றில் பறக்கும் நேரம் திகைத்தவள்போல் ஒரு கணம் நோக்கி தவிப்போடு கூடத்தை திண்ணையை முகப்பை நோக்கி உள்ளே மீண்டாள். உள்ளறைகளை கொல்லையை தொழுவத்தை நோக்கி ஏக்கத்துடன் வந்தாள். பின் மீண்டும் முற்றத்துக்கு ஓடி வாயில் கதவுபற்றி நின்றாள். அப்பாலெழுந்த பாதைச்சுருளின் நுனியை, அங்கே இறங்கி ஒளிர்ந்த வானை, இளங்காற்றில் ஆடிய மரக்கிளைகளை, இலைநுனி ஒளித்துளிகளை நோக்கி விழிமலர்ந்து நெஞ்சுலைந்து கால்தளர்ந்து கை குழைய நின்றாள்.

“என்ன பார்க்கிறாய்?” என்று ஜடிலை கேட்க “யார் வந்தது?” என்றாள். “யாரை நீ எதிர்நோக்கினாய்?” என்று ஜடிலை கேட்டாள். “எவரோ அறியேன். என் முற்றம் தீண்டும் காலடி ஒன்றை எப்போதும் அறிகிறேன். அப்பால் ஒரு குழல்நாதம் எழுந்து சுழலக்கேட்கிறேன். எங்கிருந்தாலும் என்னுடனிருக்கும் இருப்பொன்றை உணர்கிறேன். ஆடைநுனியென என் அகம் பறக்கச்செய்யும் இளங்குளிர்காற்று. என் ஆத்மாவை படமெடுத்தாடச்செய்யும் மகுடி. நான் அறிந்து மறந்து மீளமறுக்கும் இளமாலைப் பண். முற்பிறப்பில் விலகி இப்பிறப்பில் எனைத்தேடும் பழைய உயிர்.” ஜடிலை குடிலையை நோக்கி “அறிந்தது அல்லவோ அனைத்தும்? ஆவன செய்யடி” என்றாள். ராதையை உள்ளறைக்குக் கொண்டு சென்று அமரச்செய்த குடிலை கதவை மூடி வெளியே தாழிட்டாள்.

மாலைசூழ்ந்ததும் மணமகனை ஆயர் புடைசூழ ஆற்றில் நீராட்டி அழைத்து வந்தனர். வெண்ணிற ஆடை அணிவித்து மலர்மாலை சூட்டி புனுகும் சவ்வாதும் பூசினர். “புதுமலரை கொய்பவன் பூமுள்ளை விரும்புவான். இளங்கன்றை வெல்பவன் தானும் துள்ளியாக வேண்டும்” என்று சொன்ன ஆயரிளைஞன் ஒருவன் நகைத்து அவன் தோள்தழுவினான். “வண்ணத்துப்பூச்சி இறகை வண்ணம் விரல் படாமல் பற்றும் கலை அறிக. தழலாடும் நெருப்பை கைசுடாமல் தீண்டும் கலை அறிக” என்றான் இன்னொருவன். “இலைநுனிப் பனித்துளி மெழுகிட்ட கைகளில் மணியாகும் என்பார் மூத்தோர்” என்றான் மூத்தோன் ஒருவன். நகைப்பொலியுடன் அபிமன்யுவை அறைசேர்த்தனர்.

குடிலை அறைதிறந்து நோக்க ராதை விழித்தெழுந்து “வந்துவிட்டானா?” என்றாள். “ஆம், இன்று உன் அறைமங்கல நன்னாள்” என்றாள் கூடவந்த ஆய்ச்சி ஒருத்தி. ராதையை நீராட்டி மெல்லுடை அணிவித்து நறுமலர் சூட்டி வாசநீர் தெளித்து கைப்பிடித்து கொண்டுசென்றனர். “ஊறிப் பெருகி எழுந்து ஊழிப்பெருக்காகி மூழ்கடிக்கும் கலையறிந்தது நீர். நதிசெல்லும் வழியை மண் அமைத்த தெய்வங்கள் வகுத்துள்ளன தோழி” என்றாள் அறைமங்கலத் தோழி. “சொல்லின்மை என்பதோர் பெருவல்லமை பெண்ணுக்குண்டு. வெல்லும் சொல் அறிக. மலர் கனியாகுக” என்று சொல்லி ராதையை கதவு கடந்து கால்வைக்கச் செய்தாள்.

மஞ்சத்தருகே எழுந்து நின்று மயங்கும் விழிகொண்டு தன்னை நோக்கிய அபிமன்யுவை ராதை புன்னகையுடன் பார்த்து “வேய்குழலை எங்கு வைத்தாய்? வேணுவனமே நீயாகி எழுந்த இசைகேட்டேன். உன் காலடிக்காய் என் பாதை காத்திருந்ததை அறிந்தேன்” என்றாள். விழியொளி அணைந்து அகமுனை கூர்கொள்ள “எவரைச் சொல்கிறாய்?” என்றான் அபிமன்யு. “உன் குழலோசை கேளாத ஒரு கணமும் செல்லவில்லை. என் அகமும் ஆடைமூடிய உடலும் என்னைச்சூழ்ந்த பொருள்வெளியும் அதில் நிறைந்த வான்வெளியும் அதிலூறும் ஒளியும் உன் இதழ்நாத ஏழ்வண்ணம் மட்டுமே. பண்ணெனும் சிறுவிரல் தொட்டுத்தொட்டு வரைந்தெடுத்த ஓவியம்! நலுங்கியசையும் வெண்பட்டுத்திரை!” என்றாள்.

மூச்சிரைக்க முகம் மலர அவள் சொல்லிறைத்துச் சென்றாள். “சிறுமொட்டுகளை முட்டிமலரச்செய்யும் கருவண்டு எழக்கேட்டேன். நீரோடைகளில் வேர்நுனிகள் அள்ளும் குளிரை தொட்டேன். வான்பறக்கும் சிறகுகளை அளையும் விரல்களை கண்டேன். எங்கிருக்கிறேன் நான் என்று உன்னைக் கேட்டேன். என்னுடன் என்று நீ சொன்னாய்.” விழி ஒளிர நகைத்து “ஆம், அறிவேன், என்றும் எப்போதும் நான் தனித்திருந்ததில்லை என்று சொன்னேன். நீ நடந்த புல்நிமிரும் முன்னே என் பாதம் பட்டு விடும். நீ தொட்ட பண் எழும் முன்னே என் செவிகள் கேட்டுவிடும்!” என்றாள். மஞ்சத்தில் சென்றமர்ந்து “நான் இங்கு வரும் வழியை அமைத்த அத்தனை காற்றுகளையும் அறிந்திருந்தேன்!” என்று சொல்லி நெஞ்சில் கைசேர்த்து “எத்தனை எளிய வழி. பறவைகளின் சிறகறியும் வழி அல்லவா அது?” என்றாள்.

“ராதை, உன் சொற்களை நீ அறிகிறாயா? பிச்சியா நீ?” என்றான் அபிமன்யு. மெல்ல அவள் அருகே வந்து இருகைவிரல்களையும் தன் கையில் எடுத்து “என் விழிகளைப்பார். நான் உன்னை மணம் கொண்ட ஆயன். என் பெயர் அபிமன்யு” என்றான். அவள் அவனை ஏறிட்டு நோக்கி “நான் இங்கிருக்கிறேன். இது மிக ஆழம். இருள். ஆனால் இசை இங்கே வரும்” என்றாள். “ராதை நான் உன் கைப்பிடித்தவன். உன் தாலி என்னுடையது” என்று அவன் சொன்னான். “நெடுந்தொலைவு! ஆனால் சென்றுவிட முடியும். எல்லா தொலைவும் சுருண்டு சுருண்டு ஒரு நூல்கண்டாகி சுற்றியிருக்கும் உன் குழல்!” என்றாள்.

பெருமூச்சுடன் அவன் பின்னகர்ந்து அவளைநோக்கி நின்றான். முகத்தசைகள் மெல்ல தணிந்தன. பின் அவன் கைகளும் தோள்களும் முறுக்கவிழ்ந்தன. ஈரத்துணி போல குளிர்ந்து கனத்த உடலை அசைத்து அறைமூலையில் இட்ட மரப்பீடத்தருகே சென்றான். அக்கணம் எழுந்த ராதை நடுங்கும் கைநீட்டி உரத்த குரலெழுப்பி “யார் நீ?” என்றாள். “என் அறைக்குள் எவ்வண்ணம் வந்தாய்? யார்?” உலர்ந்த உதடுகளை அசைத்து “ராதை!” என்று சொல்லத்தொடங்கிய அபிமன்யுவை நோக்கி அருகிருந்த குவளையை எடுத்து வீசி அஞ்சிய சிறுபறவையென ஓலமிட்டு “போ, வெளியே போ. என் இல்லத்துக்குள் எப்படி வந்தாய்?” என்றாள்.

விஷநீல நாகங்கள் என அவள் உடலெங்கும் முறுகி எழும் நரம்புகளை, தீப்பட்ட பச்சைக்கொடி போல புரண்டு நெளியும் தசைகளை, மழைசொட்டித் துடிக்கும் இலைநுனிகள் போன்ற விழிகளை, விழுந்துடைந்த ஆடியின் பாவையென கலங்கிய முகத்தைக் கண்டு அவன் அஞ்சி மூச்சிறுகி நின்றான். கைகளால் தன் அருகே அறைந்தும், கிழிபட்டுப் பறக்கும் குரலெழுப்பிக் கூவியும் ராதை துடித்தாள். “யார் நீ? எங்கு வந்தாய்? யார் நீ?” என்றாள்.

கதவைத் தட்டும் ஒலிகேட்டு திறந்த அபிமன்யு விழிதாழ்த்தி “அவள் என்னை அறியாள் அன்னையே” என்றான். “பிச்சி என்றார்கள். இவள் பேய்ச்சியென்றல்லவா தோன்றுகிறது!” என்றாள் ஜடிலை. குடிலை பின்னிருந்து வந்து அறைநுழைந்து “செல்க. நான் இவளை நோக்குகிறேன்” என்றாள். குடிலை அறைக்கதவை மூடி “செல்க. இன்று அஞ்சியிருப்பாள். இது புதிய இடம். நாளை விடிந்து இவ்வூரை இல்லத்தை அவள் அகம் அறிந்தபின்னர் அமைவாள்” என்றாள். அவள் விழிகளை நோக்கி “அன்னையே, தங்கள் அகம் அறிந்து அவ்வண்ணம் எண்ணுகிறீர்களா?” என்றான் அபிமன்யு.

விழிவிலக்கி “நாம் தேடியது நம் குடிவாழ ஒரு மணமகளை அல்ல. நாம் கொண்ட இழிவை வெல்ல ஒரு குலமுத்திரையை. இவள் வயிற்றில் இரு குழவிபிறக்கட்டும். அது நம் குடிக்கொரு கொடியாகும். அதுவரை பொறுத்தாகவேண்டும் நீ” என்றாள் ஜடிலை. “உள்ளே சென்று அவள் விழிகளைப்பாருங்கள். குடல்மாலை சூடி குருதிகுடிக்க எழும் கொற்றவை போலிருக்கிறாள்” என்று சொல்லி வெளியே சென்றான் அபிமன்யு. மெல்ல வெளிவந்த குடிலை கதவை மூடித்தாழிட்டு “சின்னாளென்றாலும் இவள் நம் இல்லத்திலிருந்தாகவேண்டும் அன்னையே. சிறைகொண்ட பறவை போல சிறகடித்துக்கொண்டே இருக்கிறாள். எங்குசெல்வாளென்று தெரியவில்லை” என்றாள்.

மெல்ல சாளரம் திறந்து உள்ளே நோக்கிய ஜடிலை மஞ்சத்தருகே மண்ணில் அமர்ந்து முழங்காலில் முகம்சேர்த்து கருங்குழல் வழியும் இளந்தோள்கள் அதிர்த்துகொண்டிருந்த ராதையை கண்டாள். அவள் உள்ளங்கால்கள் மண்ணில் நெளிந்து அவள் உள்ளம் ஓடும் விரைவைக் காட்டின. “நாம் காணும்போது இவள் இத்தனை பிச்சியென்றிருக்கவில்லை. இன்று என்னாயிற்று இவளுக்கு?” என்று ஜடிலை நெடுமூச்செறிந்தாள். “நம் நல்வினை சூழ நாளை நன்று நிகழுமென்று எண்ணுவோம்” என்றாள் குடிலை.

நள்ளிரவில் ஏதோ ஒன்று தொட்டெழுப்ப குடிலை எழுந்து அன்னையை தொட்டழைத்தாள். “அன்னையே, அறைக்குள் அவள் இருக்கிறாளா என்ன?” ஜடிலை எழுந்து “எங்குசெல்வாள்? கதவுத்தாழ்கள் அப்படியே உள்ளனவே” என்றாள். “இல்லை, அவ்வறைக்குள் இன்மையின் ஒலியைக் கேட்கிறேன்” என்றாள் குடிலை. “என் கனவில் அவள் பொன்னிறச் சிறகு விரித்து யாழென இன்னிசை எழுப்பி எழுந்து பறந்துசெல்லக் கண்டேன்.” ஜடிலை குழலை சுருட்டிக்கட்டி “என்னடி சொல்கிறாய்?” என்றபடி எழுந்து மெல்ல கால்வைத்து நடந்து அறையை அணுகி பிறைக்கண் சாளரம் வழியாக உள்ளே நோக்கினாள்.

“அய்யோடி, அவள் இங்கில்லை” என்று ஜடிலை கூவ “குரலெழுப்பவேண்டாம் அன்னையே. நம் குடிக்கன்றோ வீண்பெயராகும்” என்ற குடிலை கதவுத்தாழ் நீக்கி உள்ளே சென்றாள். மஞ்சத்தில் மரவுரியும் பீடத்தில் பழத்தட்டும் அவ்வண்ணமே இருந்தன. அறைக்குள் நிறைந்த காற்றில் கரைந்தவள் போல அவள் வாசம் மட்டும் எஞ்சியிருந்தது. “அன்னையே நோக்குக” என்றாள் குடிலை. தலைதூக்கி நோக்கிய ஜடிலை புல்கூரை துளைத்து ராதைசென்ற வழியை கண்டாள். அதனூடாக வெளித்த கருவானில் நின்றதிர்ந்தது ஒரு செவ்விண்மீன்.

விழவில் வழிதொலைந்த மகவின் செவிதேரும் அன்னை மொழி நீ. கைநீட்டி கண்ணீர்வார ஓடிவந்து என்னை அள்ளி முலைசேர்க்கும் பெருங்கருணை. நான்குதிசைமுனையும் ஒளிநூலால் இணைத்து வலையாக்கி நடுவே உடலென்னும் விழிகொண்டு அமர்ந்திருக்கும் விஷச்சிலந்தி. விஷநீலம் விரியுமிந்த இரவில் விண்மீன்கள் நடுங்குகின்றன. யமுனை கருமைகொண்டு சுழித்தோடுகிறது. கூந்தல் பெருக்கில் எழுந்த விண்மீன்கள். அலைவளைவுகளிலாடும் நிலவொளி. நிலவு கரையும் நீரலைகள். நீரின் பேரொலி. குனிந்து முகமென்று இருள்நோக்கும் கரைமரங்கள். இந்த இரவு இனிநிகழாது. இது அறியும் சொல் இனி மீளாது. கரந்துறையும் ஒன்று கண்டுகொண்டது களவை.

ஆடும் மரங்களெனும் குவையிருள்கள். அதனூடே ஓடும் பாதையெனும் நீளவடு. என் கால்கொண்ட விழியறியும். என் விழிகொண்ட இருளறியும். நீலவிஷமெழுந்த இரவில் எங்கோ சுடர்ந்து உதிர்கின்றது ஒரு எரிவிண்மீன். யமுனையில் நிலவின்மேல் நீந்துவது யார்? ஆம், அவளை நானறிவேன். பித்தெழுந்த பாவை. ஆயர் குடிமுளைத்த பேதை. யமுனை சுருங்கி ஓர் கருநீல ஓடையாகியது. எந்தக்குழல் எழுப்பும் கருநாதம் நீ? எந்தப் பண்ணின் ஏழு சுரம்? அலையலைகள். ஆடும் நிலாமலரின் இதழலைகள். இன்றிரவில் நான் அன்னையை அணையும் கன்று.

பிருந்தாவனத்தின் பாதை வழியாக ஈர உடை உடலொட்டி இழுபட்டு ஒலிக்க ஓடிக்கொண்டிருந்தாள். எங்கு எங்கென்று ஏங்கும் சிந்தைக்கு இங்கு இங்கென்று விரல் சுட்டின ஒவ்வொரு புதரும். ஆநிரைகள் செவிநிலைக்க பறவைகள் விழிமயங்க மேகக்குவைகள் மோனமலைகளாகி நிற்க எவரிசைக்கும் பேரிசை இப்பிரபஞ்சம்? என் இளநெஞ்சே எத்திசைநோக்கி உருகி வழிந்தோடுகிறது அது? குழலே, வேய்குழலே, உன் முன் விழிமயங்கி நிற்கும் இப்புடவியை என்ன செய்ய எண்ணுகிறாய்?

குழலிசையின் இனிமையை நுனிநாக்கில் உணர்ந்தாள். உடலே ஒரு நாவாகி சுவைத்தாள். பண்ணெழுப்பிய வண்ணங்களைக் கண்டாள். ஈரக்குளிராக அந்த இசை சூழ்ந்தணைக்க சிலிர்த்தாள். ஏழுமணம் எழுந்த மலர்வெளி. பனியீரம் நனைந்த முழுநிலவு. அது தொட்டு வருடி சொட்டி வடியும் இலைப்பாளங்கள். ஒளிகொண்ட ஓடைகள். வெள்ளித்தகடான சுனைகள். மணியாகி சுடர் எழுந்த கூழாங்கற்கள். மண்ணில் வழிந்தோடிய பெருமோனம். நடுவே அசைவழிந்த அன்னைப்பசுவின் உடல்சாய்ந்து பொற்குழலை முத்தமிட்டு விரல் மீட்ட இசையாகி நின்றிருந்த ராதையை நோக்கி இல்லம் உதறி ஈர உடையுடன் கண்ணீர் துளி எரிய புன்னகை ஒளி மின்ன ஓடிவந்துகொண்டிருந்தான் கண்ணன்.

பகுதி எட்டு: 1. சொல்லாயிரம்

விடிந்தெழுந்து யமுனையில் குளிர்நீராடி ஈரத்தோள்களில் கூந்தலணிந்து கால்சிலம்பும் கைவளையும் ஒலிக்க வேர்ப்படிகளில் கால்வைத்து ஏறி நடந்த கோபியர் பெண்கள் என்றுமென அன்றும் அவனையே சொல்லிச்சென்றனர். “யமுனையின் அலைகளில் மலர்ந்தெழுந்த நீலக்குவளை. ஒரு கணமும் அதன் ஆடல் நிலைப்பதில்லை” என்றாள் குசுமிகை. “அவன் கையூன்றி தவழும் காலம் முதலே நானறிவேன். மண்ணில் அரைமணி தொட்டு இழைய எச்சில் சிறுமார்பில் வழிய என் இல்லம் வருவான். கற்படிகளில் கைவைத்தேறி என் சிற்றில் உள்ளறைக்குள் கையூன்றி இறங்குகையில் சில்வண்டின் ஒலியெழுப்பி ஈர இதழ் கோட்டி நகைப்பான். கண்டதுமே கைநீட்டி “தா தா” என்பான். எதைக் கொடுத்தாலும் ஏற்று மனம்மகிழ்வோர் தெய்வமும் குழந்தையும் என்பாள் என் அன்னை.”

“துளிவெண்ணை உருட்டி வாயில் தீற்றுவேன். அக்காரம் சேர்த்த அடிசில் குழைத்து சிறுதாலத்தில் வைத்து கையில் கொடுப்பேன். தாலம் ஒலிக்க அதை கையால் நகர்த்தி புறந்திண்ணை சென்று அமர்ந்திருப்பான். அங்கே அவனை அறிந்த காகங்களும் மைனாக்களும் சிறகடித்து சூழ்ந்துகொள்ளும். அவன் பெயர்சொல்லும் பூனைகளும் அவன் மணமறிந்த நாய்களும் வந்து அமர்ந்திருக்கும். இவ்வுலகை உண்கிறது உயிர்க்குலம். அக்கா, இங்கே உயிராகி வந்த ஒன்று தன்னை தான் உண்டு திளைத்தாடி நிற்பதை ஒருநாள் கண்டேன்.”

“அன்னையரைப் பித்தாக்கி அடிபணியச் செய்யும் கலையை மைந்தருக்குக் கற்பித்து மண்ணுக்கனுப்பிய தெய்வங்களை வணங்குவோம். இப்புவியில் சிறுபாதம் சூடும் சிரம்போல அழகியதோ மண்ணாளும் மன்னவரின் மணிமுடி? என் இல்லம் நோக்கி அவன் வருவதை எண்ணி காலை விடிந்ததுமே சாளர வாயிலில் நின்றிருப்பேன். ஏடி, உனக்கு இல்லத்தில் வேறு வேலையென ஏதும் இல்லையோ என்பாள் என் மாமி. அவளும் கலம் நான்கு கையில் எடுத்து கழனிப்பானை அருகே அமர்ந்து அவன் வருவதற்கே கண்வைத்திருக்கிறாள் என நான் அறிவேன். அதோ வருகிறது உன் நத்தை என்பாள். இடைசுற்றிய ஆடை மண்ணிலிழைய கண்ணொளிர நகைத்து கண்ணன் வரக்காண்பேன்.”

எண்ணமொன்று எழுவதுபோல் என் கண்முன்னே வளர்ந்தான். மழைவெள்ளம் இறங்கிவரும் நதிபோல பெருகிச்சென்றான். அவன் பாதப்பொதுப்பு வளைந்து விரல்கள் மண்கவ்வின. புறங்கையின் மென்கதுப்பில் புதுநரம்பு நீலம் கொண்டது. செல்லச்சிறுபண்டியும் சிறுமடிப்பு விழுந்த தொடையும் சிறுத்து வலுத்தன. இதழின் தேன்வழிதல் நின்று இரு பாற்பற்கள் ஒளிர்ந்தன. விலா எலும்பின் வரி எழுந்தது. நதிக்கரைவேர் போல தோளெலும்பு எழுந்தது. புயம் திரண்டு வந்தது. செம்பட்டுக் குழல்கற்றை கருமை கொண்டது. சில்வண்டுக்குரல் குயில்நாதமாயிற்று. அவன் விழிமணியின் ஒளித்துளிக்குள் சொல்லாத சொற்கள் நின்று சுடர்விட்டன.

காடெங்கும் அலைந்து மலைகடந்து மீள்பவனைக் கண்டு நிற்பேன். அவனை கைநிறைய ஏந்தி முகம் நிறைய முகர்ந்த நாளை நினைப்பேன். நீலக்கடம்பின் கிளையாடிச் செல்பவனை என் கையில் ஏந்தி தோளில் அணிந்துள்ளேன் என்றெண்ணி நகைப்பேன். ஆநிரைக்கு வழிகாட்டி கோலேந்திச் செல்பவன் என் கொல்லையிலே வழிதவறி நின்றழுத நாளைத்தான் நினைவூட்டுவான். நெறிகொண்ட சொல்லெடுத்து முறைபேசி அவன் நிற்கையில் என் வசைச்சொல்லை தான் சொன்ன கிளிப்பிள்ளை ஒன்றே என் நினைவில் கிளையாடும்.

ஆயினும் அன்னையர் அகம் கவரும் வித்தை சில வைத்திருந்தான். பால்கொதித்த கலத்தில் எஞ்சும் நுரைத்துளிபோல். மலரிருந்த கூடையிலே மணம் மிஞ்சி இருப்பதுபோல். இளையோனாக ஆனபின்னும் பாலகனாய் எண்ணவைத்தான். ஓரிரு சொற்களில் மழலை வைத்திருந்தான்..சொல்லெடுத்து தொடங்குகையில் சற்றே திக்க கற்றிருந்தான். கண்மூடி துயில்கையில் காலிடுக்கில் கைசேர்த்து கட்டைவிரல் வாய்சேர்ப்பான். காலை எழுகையிலே ஆடையின்றி புரண்டிருப்பான்.

கன்று கூட்டி கான்சென்று மீண்டாலும் அன்னை மடிசாய்ந்து முந்தானை கொண்டு முகம் மூடி துயில்வான். அடுமனையில் புகுந்து ஆடைபற்றி இழுப்பான். பின்னின்று அணைத்து பேய்க்குரல் விடுப்பான். உண்ண எடுக்கையில் கைபற்றி கவ்வி தானுண்டு எழுந்தோடுவான். கொழுநன் போல் பெயர் சொல்லி அழைப்பான். கரந்து வைத்ததெல்லாம் கண்டறிந்து கொண்டு செல்வான். கைவளை தொட்டெண்ணி கதைகேட்டு அருகிருப்பான். கண்ணீர் வடிக்கையிலே காரணம் கேட்காத இங்கிதமும் அறிந்திருந்தான். பெண்ணென்று கூட அவனை எண்ணிமயங்கிடுவேன். என்னசெய்வான் ஏதுசெய்வான் என்றெண்ணி எப்போதும் திகைக்கவைப்பான்.

“மணமுடித்து இருவசந்தம் வந்து சென்றபோதும் என் வயிறு நிறையும் வழியேதும் காணவில்லை. அன்னை காதில் கேட்டாள். மாமி அடுமனையில் கேட்டாள். ஊர்ப்பெண்டிர் மன்றில் கேட்டனர். என் உள்ளமோ எங்கும் கேட்டது. பூக்காத மரமா நான்? ஒலிக்காத முழவா? வேள்வித்தீ எழாத எரிகுளமா? என் கைநிறைத்து குடி நிறைக்கும் குழவியொன்று கோரி குலதெய்வங்கள் அனைத்துக்கும் முறைசெய்தேன். கானுறையும் பசும்புல்லுறையும் நீர்உறையும் நெடுந்தொலைவின் மலையுறையும் தெய்வங்கள் ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணி வழிபட்டேன். என் உள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் வழியும் இரவில் பெண்ணாகி வந்ததே பெரும்பாவம் என்றுணர்வேன்.”

“நத்தை நடந்தது. கிண்கிணி ஒலிக்க தத்தி ஓடியது. இல்லத்துக்குள் நுழைகையிலே 'அன்னையே, நான் வந்தேன்' என தன்னை அறிவித்தது. என் வெண்ணைக்கலங்களை உடைத்து உண்டது. என் அன்னக்கலத்தில் மண்ணெடுத்து வீழ்த்தியது. கையெழுந்ததோ சிறகைமைந்ததோ என ஆயர்குடியெங்கும் ஆயிரமாய் நிறைந்தது. குழலூதி மனம் கவர்ந்து மறுகணமே கூரைமேல் ஏறி கூக்குரலிட்டது. கனவில் இனித்து நனவில் கசக்கும் இக்கனியை எப்படி உண்போம் எப்படித் துறப்போம் என ஏங்கியது ஆய்ச்சியர் குழாம்.”

”முன்னொருநாள் கண்ணன் வந்து என் மடிமீதமர்ந்தான். அன்னையே என்றான். அது அது என்றான். என்ன சொல்கிறான் என்று நானுணரும் முன்னே மடியில் படுத்து என் முலையொன்றை பற்றிக்கொண்டான். உள்ளம் குறுகுறுக்க ஓரவிழியால் சூழநோக்கி என் கருமுலைக் கண்ணை அவன் செவ்விதழில் வைத்தேன். இமயம் பனியுருகி கங்கையென வழிவதுபோல் என் உடலே பாலாக எழுந்து ஒழுகுதலறிந்தேன். அலைகடல் உறைந்து நீலப்பளிங்காயிற்று. அவன் உண்டது போக என்னில் எஞ்சியதே நானென்பேன். இனியேதும் சொல்வதற்கிலேன். மெய்சிலிர்த்து கண்ணீர்துளித்து அன்றறிந்தேன் என் கை நிறையும் காலம் வந்தது என.”

“என் மடி எழுந்த மைந்தன் அக்கார்மேகம் கனிந்த துளி. ஆனால் இன்று அவன் செய்யும் ஒவ்வொன்றாய் எண்ணி வெந்து விழிநீர் வார்க்கிறேன். அன்னைபழி கொள்ளாதே, கண்ணா, சொன்னசொல்லை மீட்கலாகாது என்று அவனிடம் சொன்னேன். பழிகொள்ள வந்த பரம்பொருள் நான் என்று நகைத்து ஓடினான். நான் பெற்றெடுத்த பாதகனும் என் கைபிழைத்து பழிப்புகாட்டி அவன் பின்னால் ஓடிச்சென்றான்."

“ஸ்ரீதமா நில்! அவனுடன் செல்லாதே. என் குடிவாழ நோன்பெடுத்து உன்னை ஈன்றேன். அக்கரியவனோ கருணையற்ற வஞ்சகன். இல்லம் உதறி கானேக ஈராயிரம் வழியறிந்தோன். மலையுச்சி மோனம் விட்டு மாலை திரும்பி வர ஒருவழியும் அவனறியான்” என்றேன். “நாளிருண்டு விழிமறைகையில் கடுவெளியை அஞ்சி அவன் கால்பற்றி அழும் மைந்தராலேயே மனைமீள மனம் கொள்கிறான்” என்றேன். “காடும் குடியே. வானும் வீடே. அதை நீ அறிய இன்னும் நேரமுள்ளது தாயே” என்று காட்டுமரக்கிளைமேல் நின்று கூவிச் சொல்லி ஓடிமறைந்தான் என் மகன். என்ன சொல்வேன்!”

"ஒற்றை ஒருபிள்ளை. அவன் என் எண்ணச்சுழியின் மையம். அவனை பித்தாக்கி அலைப்பவனோ மலையிறங்கும் பெருவெள்ளம். யாரவன் என்றறிவீரோ தோழியரே? கன்றுமேய்க்கும் குலத்தில் இப்படியொரு கரியோன் பிறந்ததுண்டோ? அல்லிக்குளத்தில் எழுந்த குவளை. அவன் நம் மைந்தருடன் கூடி நின்றால் வெண்முலையின் நீலக்காம்பென்பான் யாழ்மீட்டி பாவிசைக்கும் ஆயர்குலப் பாணன். பேரழகு பாலன். ஞானமே சொல்லானவன். ஏனித்தனை பழிகொண்டு ஆடுகின்றான்? அவன் எண்ணிவந்து இயற்றுவதை எப்படித்தான் நாமறிவோம்?"

"கேளுங்கள் இதை. என் மைந்தன் நேற்றுவந்து சொல்கின்றான். கன்றுமேய்க்க காட்டுக்குள் செல்கையில் அவன் கைமீட்டிய குழல்நாதம் கேட்டு மனம் அழிந்து வழிமயங்கி நெடுந்தூரம் சென்று நிலைமறந்து நின்றனராம். அங்கே அவன் சருகுமெத்தையில் உடல்நீட்டி படுத்திருக்க ஏழுஇளமைந்தர் அவன் கால்தொட்டு வருடி சொல்கேட்டு இருந்தனராம். என் மைந்தன் சொன்னானாம். பனம்பழம் சுட்டு உண்ண விரும்புகிறேன். பாதையும் நானறிவேன். சென்றுவரலாமா என்று."

"கண்களை திறக்காமல் கண்ணன் புன்னகைக்க கண்ணா நீ வந்தால் வா, இல்லையேல் பனம்பழம் உனக்கில்லை என்று சொல்லி என் மகனும் என் தங்கை மாதுரியின் மைந்தன் சுபலனும் சென்றார்களாம். அங்கே பன்றிமுடி போலே பனை செறிந்த மலைமேட்டில் பழம்பொறுக்கி அலைகையிலே ஓர் உறுமல் கேட்டு மெய்விதிர்த்து நின்றனராம். களிறிளவு எழுந்து கபில உடல்கொண்டு கழுதையொன்று வரக்கண்டு கதறி கூவி அழுதனராம். ‘கண்ணா, எங்குளாய் நீ?’ என்று என் இளமைந்தன் கூவ கரிய நிறம் கொண்ட மலைவேடன் ஒருவன் மரமிறங்கி வந்து அக்கழுதைமேல் தாவி ஏறக்கண்டானாம்."

"கழுதையின் கால்பற்றி சுழற்றி அதை கரும்பாறை மேல் அறைந்து கொன்றானாம் அவ்வேடன். கபிலநிறக் குழலெழுந்து கருந்தோள்கள் விரித்து மண்கவ்வி விழுந்து உயிர்நீத்தவன் ஓர் கழுதைமுகத்து அரக்கன் என்றான் என் மைந்தன். காட்டுக்குள் மீளும்முன் கரியமுகம் விரிய அக்காடன் அளித்த நகை கண்ணனைப்போல் இருந்தது என்றான். ஓடிவந்து கண்ணனிடம் கண்டதெல்லாம் சொன்னபோது கண்ணில் ஒளிவிரிய புன்னகைத்து படுத்திருந்தான் என்றான். பள்ளிகொள்கையிலும் போர்புரியலாகும் மாயம் அறிந்தவன் என் தோழன் என்கின்றான். எங்கிதைச் சொல்வேன்? எவர் என் சொல் ஏற்பார்? பர்சானபுரிவாழும் அப்பிச்சி ஒருத்திக்கே இம்மாயமெல்லாம் தெரிந்திருக்கும்."

“நான் சொல்லவந்ததும் அவன் நடத்திவைக்கும் லீலையைத்தான்” என்றாள் சுமத்யை. “என் மைந்தன் சித்ரகனும் சொன்னான், இவன் செய்யும் செயலெல்லாம் பிழையென்று உணர்ந்தாலும் செய்யாமலிருக்க சிறுவர்களால் ஆகாதாம். இப்படியும் உண்டா இவ்வுலகில்? வெண்பாவைக் கூட்டத்தை ஆட்டிவைக்கும் கருஞ்சரடு. வெண்பறவை வரிசைக்கு வழிகாட்டும் கரும்பறவை. என்னதான் கண்டார்கள் இவனிடத்தில் இச்சிறுவர்? உண்பதற்கும் வருவதில்லை, கண்பார்க்க முடிவதில்லை. காலை எழுந்ததுமே கோலெடுத்து கிளம்பிவிட்டால் உறங்க வருவதற்கு தேடி அழைக்க வேண்டும். என்னடி மாயம் இது? ஆயர்குடி இதுபோல பேயனைக் கண்டதுண்டோ?”

“என் மைந்தன் சொன்னான் இவன் லீலை ஒன்றை. கண்கட்டி காட்டில் விளையாடுகையில் கண்ணன் சொன்னானாம், இம்முறை நாம் ஒரு புதுமுறை செய்வோம். இவ்விளையாட்டில் கன்றில்லா பசுக்களையும் காளைகளையும் சேர்த்துக்கொள்வோம். ஆநிரைகளாக ஆயர்சிறுவர்களும் ஆகும் ஓர் ஆடல். என் மைந்தன் குனிந்து புதர்நடுவே ஓடி அங்கு நின்ற காளையொன்றின் திமில்தொற்றி ஏறிக்கொண்டானாம். கொம்பு உலைத்து குளம்பால் மண்கிளறி களிறுபோல் பிளிறி அம்மிருகம் எழுந்ததும்தான் அது காளையல்ல என்றறிந்தானாம். பாறைகளில் தாவி பள்ளங்கள் கடந்து மலையுச்சி சென்றடைந்து அது விண்ணுக்குக் காலெழுப்பும் வேளையில் அவன் ’கண்ணா கருவண்ணா’ என்று கூவி அழுதானாம்.”

“அப்போது கருவண்ண மேனி காட்டுச்சிறுவன் ஒருவன் கோலோங்கி ஓடிவந்து அக்காளையின் காலைப்பற்றிக்கொண்டானாம். மண்ணில் விழுந்த என் மைந்தன் அங்கே நிகழ்ந்த மற்போரை பார்த்திருந்தானாம். காளைத்திமில் பற்றி கழுத்தை வளைத்தொடித்து மண்ணில் சரித்தானாம் மலைச்சிறுவன். காலிரண்டைப்பற்றி கரங்களால் தூக்கி காற்றில் சுழற்றி கண் திகைக்க விரிந்த மலைப்பள்ளத்தில் வீசினானாம். இதழ்நகைக்க என் மைந்தனை நோக்கி 'கண் சொல்வதெல்லாம் மெய்யல்ல என்றறிக' என்றுரைத்து காட்டுக்குள் மறைந்தானாம். அது கண்ணன் விழி, அவன் சொன்ன மொழி என்றான் என் மைந்தன். 'அன்னையே நாம் அறிபவன் கண்ணனல்ல. நம்மை அறிபவனே கண்ணன்' என்றான். என்னபொருள் அதற்கு? எனக்கேதும் தெரியவில்லை.”

“ஆம், என் மைந்தன் சொன்னதும் அதுவேதான்” என்றாள் மாலதி. “கானகத்தில் ஒருநாள் கன்றுகூட்டி நின்றிருந்த நம்குடிச் சிறுவரிடம் திசைநான்கும் நோக்கும் முகம்கொண்ட ஒருவர் வந்து நந்தன் மகனின் தோழரா நீங்கள் என்றாராம். முதியவர் ஏதோ முனிவரென்று எண்ணி ஆமென்றுரைத்தனராம் ஆயர்மைந்தர். கண்ணன் குழல் கேட்டு என்னவெல்லாம் கண்டீர் என்றாராம் அவர். இக்கானகத்து மரங்களெல்லாம் கானல்நீராக அலைபாயக் கண்டோம். வரிப்புலியும் மான்குலமும் ஒருகுலமென நிற்கக் கண்டோம். வானமொரு சுனையாக மண்ணை நோக்கக் கண்டோம். கானகச்சுனைகளிலே ககனவெளியைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்களாம். கண்ணன் குழலுக்கு உண்மைப்பொருள் காட்டுவேன், என்னுடன் வருக என அவர் அழைத்தாராம்.”

"மைந்தரை அம்முனிவர் மலைச்சாரல் ஒன்றுக்கு கொண்டு சென்றாராம். யாழின் குடத்துக்குள் நிறைந்திருக்கும் இசைபோல ஒருகணமும் ஓயாத குழலோசை நின்றிருக்கும் இடம் அது என்றாராம். அங்கு கண்கள் இமைப்பதில்லை. மலர்கள் உதிர்வதில்லை. விண்சுடர்கள் எல்லாம் விழிவிரித்து நின்றிருக்கும். தோன்றுவது மறைவதில்லை. நிகழ்வது நேற்றாவதில்லை. காலம் சுழித்து கடந்து செல்வதில்லை. நீரோடைகளிலே நிழலாட்டம் ஏதுமில்லை. நெஞ்சில் எழுந்த நினைவேதும் மறைவதில்லை. ஒருகணமே முடிவிலியாய் ஓர் இமைப்பே முழுதுலகாய் ஒரு நினைப்பே முழுவாழ்வாய் ஆகிநிற்கும் கனவுவெளி. அங்கே கோடானுகோடி யுகங்கள் வாழ்ந்திருந்தார். கண்ணன் குழலிசைக்கும் இசையாக அங்கிருந்தார்."

"அன்னையரே கேளுங்கள், மலைச்சரிவில் மைந்தர் மறைந்துவிட கண்ணன் அழைத்துவந்து நம் குடிசேர்த்த மைந்தர் எவர்? எண்ணிப் பார்த்ததுண்டா அம்மைந்தர் நம் இல்லம் அமைந்த விதம்? நாம் சொன்ன சொல்லெல்லாம் அவர்கள் முன்னமே அறிந்திருந்தனர். அன்னம் உருட்டி அவர் வாயில் ஊட்டுகையில் வெற்றிடத்தில் அவை சென்று விழுவதையே நாமறிந்தோம். அவர் கண்களால் நோக்கவில்லை. காதுகளால் கேட்கவில்லை. அங்கே உடல் இருக்கையிலும் எங்குமென சென்றுவந்தார். கால்வைத்து நடக்கையில் ஓசையேதும் எழவில்லை. 'என்னாயிற்று? ஏனிந்த மனமயக்கம்?' என எத்தனை முறை கேட்டோம். பதிலேதும் சொல்லாமல் அவர்புரிந்த இளநகையில் கண்ணனை அல்லவா கண்டு மனம் நிறைந்தோம்?"

"என் மைந்தர் சொன்னார். நான்முக முனிவர் நாணிய முகத்துடன் 'கண்ணனிடம் தோற்றேன். உண்மையெல்லாம் அறிந்தேன். இங்குள மைந்தரோ அங்குள மைந்தரோ எவர் அவன் மாயை என்றறியேன். என் கல்வியும் படைப்பும் சிந்தையின் நுண்மையும் சொல்லுள பொருளும் கண்ணனே என்றுணர்ந்தேன். அவன் கழல் பணிக என் சிரம் நான்கும். அவன் சொல்நிறைக என் சிந்தையெங்கும்' என்றாராம். 'இன்று செல்க இளையோரே. நன்று சூழ்க உங்கள் குலமெல்லாம்' என்று வாழ்த்தினாராம்.”

“அவர்கள் மலைச்சாரல் மீண்டபோது வேனில் குளிர்ந்து வசந்தம் எழுந்துவிட்டிருந்தது. கொன்றையும் வேங்கையும் மலர்விட்டிருந்தன. குளிர்நீர் பெருகி யமுனை கரைதொட்டோடியது. முற்றத்து மாமரம் மலரெழுந்து கிளைகனத்து நின்றது. அன்னையர் நெற்றிச்சரிவில் சில கூந்தலிழைகள் நரைத்திருந்தன. ஒவ்வொன்றும் தன்னில் காலத்தின் காலடிச்சுவடு கொண்டிருந்தது. அன்னையரோ அவர் சென்றதையே அறியவில்லை. வந்ததில் மகிழவில்லை. என்றுமுள சொற்களையே அன்றும் உரைத்தார். இல்லமெங்கும் அவர்கள் இருந்ததுபோல் இருந்ததென அறிந்தார்.

கனவு நிகழ்ந்ததா கண்டதெல்லாம் மெய்தானா என்று எண்ணி எண்ணி ஓய்ந்தமனம் மலர் உதிர்த்து மேலெழும் கொன்றையின் கிளைபோல அந்நினைவுகளை உதிர்த்து மீண்டது. யமுனை நீர் மொண்டு இடைசேரும் மண்குடம் இல்லம்சேர்ந்து ஒழிந்தாகவேண்டுமல்லவா? குன்றா பெருவெள்ளப் பெருக்கை அள்ள குடமறியும் வழி வேறென்ன?

மதானலசையும் மஞ்சரியும் கமலையும் காமலதையும் சசிகலையும் சந்திரிகையும் தாங்கள் கண்ட விந்தைகளை சொல்லிச் சொல்லி இருளில் நடந்தனர். கண்ணன் பெயர் சொல்லி கலம் வைத்தால் வெண்ணை பெருகும் விந்தையை ஒருத்தி சொன்னாள். ஆநிரைகள் கூட அவன் பெயரறியும் என்றாள் ஒருத்தி. ஏன், என் இல்லத்து மாமரம் அறியும் மைந்தன் அவன் பெயரை என்றாள் ஒருத்தி. சொல்லிப்பெருக்குகையில் நுரையென எழுந்து ஒளிகொள்ளும் அவன் பெயரில் தன் முகமும் காணுமென்று அவர்கள் அறிந்திருந்தனர்.

“நம் கருநிறைத்து வந்து முலையுண்டு வளரும் அத்தனை மைந்தரும் அவனே. ஆடிப்பாவைக்கு முடிவே இல்லையடி” என்றாள் மஞ்சரி. சந்திரிகை “அவன் ஆடலன்றி ஒருகணமும் அமையாது இக்குடியென்று அறியாத எவருண்டு நம்மிடையே?” என்றாள். “அவன் பெயர்சொல்லி விடியாத பொழுதில்லை. அவன் விழிஎஞ்ச அணையாத நாளில்லை” என்றாள் கமலை. “ஒருமைந்தன் வந்து உலகுய்யும் என்று ஒருநூலும் சொன்னதில்லை. நூலறிந்தோர் மெய்யறிவதில்லை என்பதற்கே அது சான்று” என்றாள் காமலதை. சசிகலை “கண்ணனாகி வந்ததுதான் இப்புவியில் காமமாகி வந்தது.. மோகமாகிச் சிவந்தது. குரோதக் கருமையாகி அடர்ந்தது, பேரருளாகி வெளுத்தது. பாற்கடலாகி விரிந்தது” என்றாள்.

பேசிப்பேசிப் பொருளழிந்து தன்னுள்ளே பேசாத ஒன்றை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அந்தப் பெரும்பொருளை மனம் பொத்தி கொண்டுசென்று இல்லம் சேர்த்தனர். ”கண்ணா” என்றுரைத்து மோர்க் கலமெடுத்துவைத்தனர். சரடு பூட்டி “கரியவனே” என்றனர். மத்துசேர்த்து “ககனத்தின் கருவிழியே” என்றனர். “கண்ணா காத்தருள்க” “கண்ணா காத்தருள்க” என்றது நுரையெழுந்த கலம். மாதர் கரங்களில் வேதச்சொல்லென ஒலித்தது மத்தோசை. மெல்லத் திரண்டு மென்மைகொண்டெழுந்தது மெய்ப்பொருள்.

பகுதி எட்டு: 2. பொருள் ஒன்று

யமுனைக்கரையில் அந்தணர்சேரியில் மதியவெயிலெழுந்த நேரம் திண்ணைகளிலும் அப்பால் ஆலமரத்து நிழல்மேடைகளிலும் ஆண்களெல்லாம் துயில பின்கொல்லைப் படிகளிலும் பசுக்கொட்டில்களிலும் பெண்கள் அமர்ந்து சொக்கட்டான் ஆடியும் சிறுசொல்பேசியும் சிரித்துக் கொண்டிருந்தனர். நெய்க்குடமேந்திய ஆய்ச்சியர் நால்வர் நடமிடும் இடையுடன் தெருவில் வரக்கண்டு “ஆய்ச்சியரே, இங்கு வருக!” என்று ஒருத்தி கூவினாள். “வெயிலெழுந்த பின்னர் நெய்கொண்டு வருகின்றாள். விடிந்தபின்னும் துயிலும் வீண்வழக்கம் கொண்டிருப்பாள்” என்றாள் ஓர் அந்தண முதுமகள்.

நெய்க்குடம் தாழ்த்தி நெடுமூச்செறிந்து முந்தானைச் சுருள்கொண்டு முகவியர்வை ஒற்றி அமர்ந்தனர் ஆய்ச்சியர். “நெய்யுருகும் வாசம் எழ வந்தீர். நன்று! நன்று! நாளை அதில் அனலெழுந்தாட வருவீரோ?” என்றாள் ஓர் இளம்பெண். “ஏது செய்வோம், அன்னையரே. எங்கள் குடிவாழ வந்த கோமகன் என்றெண்ணியிருந்தோம். இன்று அவனே எங்கள் பழிகொண்டு நிற்கும் பாதகனாகிவிட்டான்” என்றனர் ஆய்ச்சியர். “காலை எழுந்து கன்றுகூட்டி பால்கறக்கப்போனோம். தொழுநிறைந்து பால் வழிய நின்ற பசுவைத்தான் அங்கே கண்டோம். காடெல்லாம் தேடி கன்றைக் கண்டடைந்து தொழுசேர்த்து வெண்ணை திரட்டி எழும்போதே வெயிலெழுந்து வெளுத்துவிட்டது!”

“யாரவன்?” என்றாள் புதுமணப்பெண் ஒருத்தி. “நாளை அவனை எண்ணி நீயும் நாணம் கொண்டு நகைப்பாய்” என்றாள் இன்னொருத்தி. “கண்ணன் என்று அவன் பெயர். கருநிற வண்ணன். செய்வதெல்லாம் செய்தாலும் சிரிக்கவைத்து மறக்கவைக்கும் சிறுக்கன். யமுனை நீராடும் இளம்பெண்கள் அனைவருக்கும் அவன் பாதச்சுவடு படிந்திருக்கும் மண்தெரியும். முந்தையநாள் அவன் மூச்செழுந்த வழி தெரியும். அவன் செய்தவற்றைப் பேசி செய்தவற்றை எண்ணி பெண்கள் பொழுதோடும்.”

புன்னகையில் முகம் மலர்ந்து புதுமணப்பெண் சொன்னாள் “ஆம், மணமுடித்து இங்கு வந்து மண்ணில் கால் வைக்கையிலே அவனைக் கண்டேன். நீலக்கடம்பின் கிளையுலுக்கி நீர்மீது பாய்ந்தான். நீர்த்துளிகள் கொண்டு என்னை நனைத்துவிட்டுச் சென்றான்.” எண்ணி விழிமலர்ந்து வாய்பொத்தி நகைத்து “அந்தணர் மகளுக்கு ஆயிரம் நீர்மணிகள். மாந்தளிர் தோளுக்கு நீர்மணிமாலையே அழகு என்றான். அன்னை என் தோள் தொட்டு என்னடி இது வியப்பு. எத்தனையோ முறை நான் என்னுள் எண்ணிய சொல்லல்லவா என்றாள். அவன் விழிகளின் ஒளியை எண்ணி இவ்வூர் புகுந்தேன். அவன் குரலிசை எண்ணி பால்கலம் வைத்தேன். வெண் நுரையெழுந்து பொங்கி வழிந்தவன் அவனே!” என்றாள்.

“இங்கே மனம் மலர்ந்தது இருக்கட்டும். அங்கே உன் கணவனிடம் சொல்மலர்ந்து விடாதே. ஆயர்சிறுவன் அந்தணர் இல்லத்தில் நினைவாகவேனும் நுழையலாகாதென்பார். நெறியொன்றே அறிவெனக் கொண்ட நூலறிந்தோர் இங்குள்ளோர்” என்றாள் அன்னை ஒருத்தி. புதுப்பெண் அனகை நாணி தலைதாழ்த்தி “சொல்லாதவற்றால் ஆனதே உள்ளமென்று அறியாத பெண்ணுண்டோ?” என்றாள். “அடி கள்ளி, அறியாப்பெண் போல முகம் கொண்டிருந்தாலும் அகத்தியன் வயிற்றைப்போல் ஆழியன்றோ கரந்திருக்கிறாள்” என்று கைகொட்டிக் கூவி நகைத்தனர் பெண்கள்.

“பொல்லாங்கே செய்தாலும் பொன்விளைய வைப்பான். அவன் கால்பட்டு எங்கள் குடிபொலியக் கண்டோம். நோயில்லை துயரில்லை. நெஞ்சில் இருளில்லை. தந்தையர் சினத்தாலும் அன்னையர் வசையாலும் அவனை வாழ்த்துவதே அவன் வகுத்த விதி போலும்” என்று நகைத்து நெய்விற்று பணம் பெற்று குடம் எடுத்து விடைகொண்டனர் ஆய்ச்சியர். அவர்கள் செல்வதைக் கண்டபின் சிறுகுரல் கொண்டு “அரசன் என பொலிகின்றான். ஆயர்குலத்து ஏன் உதித்தான்?” என்றாள் ஒருத்தி. “மலையுச்சி மலரின் மணம் செல்லா திசையில்லை” என்று அன்னை அதற்கு விடையுரைத்தாள்.

அன்றறிந்தேன் கண்ணன் என் அகத்துக்கு யாரென்று. அன்றுமுதல் ஒருநாளும் அவனைநான் அறிந்தமுகம் கொண்டதில்லை. அவன் பெயர் சொல்லி பேசிநிற்பார். அவன் சென்ற திசைநோக்கி விழிபிணைப்பார். மந்தணம் பேசி மெல்லச் சிரிப்பார். யாதொன்றும் அறியாத பேதையைபோல் நான் இருப்பேன். ஒரு சொல் சொன்னாலும் ஒரு விழி அசைந்தாலும் என் பாற்குடம் உடைந்து பாதையெங்கும் சிந்திவிடும். மறைவாக நான் வைத்த மயிற்பீலி ஒன்றை இருளுக்குள் எடுத்து என் இருகன்னம் சேர்த்துவைப்பேன். யுகம்கோடி எழும்முன்னே ஒரு இளமயிலாய் தோகைவிரித்து அவனை நான் கண்டதுண்டு. ஆயிரம் விழிகளால் வியந்து அமைந்ததுண்டு. அவன் எழில்கண்ட இவ்விழிகள் இனிக்காண ஏதுமில்லை.

இல்லறத்தாளாக இங்கிருந்து நடிக்கின்றேன். சொல்லுவதெல்லாம் செய்து நிற்கின்றேன். “நீர்கொண்டுவா” என்கின்றார். “நெருப்பெடுத்து வை” என்கின்றார். நீரும் நெருப்புமாகி நின்றிருக்கும் வேளையிலும் நினைத்திருக்கும் ஒன்றுண்டு. நீரறியும் நெருப்பறியும் நெஞ்சமும் அதை அறியும். என்போன்ற பெண்கள் எவரையும் நான் அணுகவிடேன். யமுனை ஒன்றே என் உள்ளம் அறியட்டும் என்றிருந்தேன். என் சிதையில் படர்ந்தேறும் செந்நெருப்பும் அறியட்டும். முள் ஒளித்த கள்ளிப்பழம். கனவுறையும் களவுமனம். அச்சொல் நின்றெரியும் எரிமையம். ஒருபோதும் திரைவிலகா இருளாழம்.

அந்தணர்சேரியில் ஆங்கிரஸ் என்னும் வேள்வியொன்று இயற்ற மதுரை ஆண்ட மன்னனின் ஆணை வந்தது. தெருமூடிப் பந்தலிட்டனர். ஊர்நடுவே மன்றமைத்தனர். வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்தனர். வேள்விக்கோல் நட்டு யமுனை நீரூற்றி வளர்த்தனர். வைதிகர் கூடி வேள்விச்செயல் மூட்டினர். விடியலெழா பொழுதுமுதல் இரவணையும் வேளைவரை ஒருகணமும் நில்லாமல் வேலையென விரைந்தேன். நீர்க்குடம் கொண்டுவந்தேன். மாந்தளிர் கொய்து வந்தேன். நெய்க்குடம் எடுத்தேன். நெருப்புக்கு விறகெடுத்தேன். ஓடும் போது உடனோடும் அவன் முகம் பேசும்போது பின்னின்று புன்னகைக்கும். எரிகுளத்தில் எழுந்தாடும் நாவெல்லாம் அவன் பெயரே. எரிமுன்னர் ஒலித்த வேதமெல்லாம் அவன் புகழே.

"அனகை!" என்று கூவி அவளை அழைத்தாள் மாமி. “என்ன செய்கிறாய்? மண்ணில் நடக்கிறாயா, இல்லை உன் மனம் நிறைந்த கனவில் நடக்கிறாயா? பெண்ணுக்கு நிறை அவள் கண்ணுக்குள் உள்ளது என்பார். இனியொரு சொல் என் வாய்சொல்லிக் கேட்கலாகாது நீ” என்றாள். “நெருப்பின் நிறம் நோக்கி நின்றுவிட்டேன் மாமி” என்று அவள் ஓடிச்சென்றாள். “செந்நெருப்பும் கரியுமிழும் என்றறிந்தே நானும் முதிர்ந்தேன்” என்றாள் மாமி. உரக்க “அவியும் விறகும் கொண்டு சென்று வை. அங்கே நீரொழிந்த குடமிருந்தால் கொண்டுவா” என்றாள். அனகை கண்ணனுடன் ஓடினாள். கண்ணனுடன் குனிந்தாள். கண்ணனுடன் குடம் சுமந்தாள். எடையற்ற குடம் நிறைந்து தளும்புவதை அறிந்து மெல்ல நடந்து வந்தாள். அவள் இடைநனைத்து ஆடை நனைத்து அகம் நனைத்த ஈரத்தை உணர்ந்து குளிர்கொண்டாள்.

வேதம் எழுந்து மலைச்சரிவை நிறைத்தது. யமுனையில் சென்ற ஓடங்களில் படகோட்டிகள் பாட்டை நிறுத்தி செவிகூர்ந்து சென்றனர். மரங்களில் நிறைந்த பறவைகள் அவ்வொலியை அறிந்து அலகுபூட்டின. பின் அந்த ஒலியை மிஞ்சி காட்டில் எழுந்தது ஆநிரைகளின் ஓங்காரம். மாறிமாறிக் கூவும் கன்றின் குரலையும் பசுவின் விடையையும் கேட்டு சினந்தெழுந்த வேள்வித்தலைவர் “யாரங்கே? அந்த ஆநிரை மேய்க்கும் அறியாச்சிறுவனிடம் அப்பால் விலகிச் செல்ல ஆணையிடுங்கள். தேவர்கள் வானெழுந்து செவிகூரும் வேதம் இது என்று சொல்லி அவனை துரத்திவாருங்கள்” என்றார்.

மலைச்சாரல் சென்று மீண்டுவந்த இளவைதிகன் “எந்தையே, அங்குள்ளோன் ஓர் ஆயன். கன்னங்கரியோன். கல்வியறிந்தோன். தேவர்களெல்லாம் அங்கே ஆநிரை குரல்கேட்க வந்திருப்பதாகச் சொன்னான். ஆநிரைவேதம் அனைத்திலும் தூயதென்று சொல்லும்படி என்னை ஏவினான்” என்றான். கடும்சினத்தால் இதழ்துடிக்க “என்ன இழிசொல்! வேதத்தைப் பழித்த அந்த ஆயன் சொல் அழிக! அவன் பசுக்கள் நாவழிக! இவ்வெரிகுளத்தில் நின்றாடும் தென்னெருப்பே நீ சான்று” என்றார் வேள்வித்தலைவர்.

அப்போது வந்த குளிர்காற்றில் எரிகுளத்துத் தழல் சுழன்று அணையக்கண்டார். திகைத்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “ஏனென்றறியேன் ஆசிரியரே. நெய்விட்டேன். சமித்தை வைத்தேன். வேதச்சொல்லெழுப்பினேன். வெந்தெரிந்து மேலெழுந்தாடும் தழல் என்று எண்ணினேன். புகையெழுந்து அணைந்து கரி விரிந்து கிடக்கிறது” என்றனர் வைதிகர். “என்ன பிழை என்று ஏடெடுத்துப் பாருங்கள். திசைக்குறியும் புள்குறியும் தேருங்கள்” என்று வேள்வித்தலைவர் ஆணையிட்டார்.

அவிபாகம் உணவுக்குவை ஆறிக்கொண்டிருக்க ஆயர்குலத்து மைந்தர் ஐவர் தேடிவந்தனர். ஸ்ரீதமன், அம்சன், சுபலன், ரிஷபன், விசாலன் என்று பெயர் கூறினர். “நந்தகோபன் மைந்தன் கண்ணனின் களித்தோழர் நாங்கள். கன்றுகூட்டி இக்கானகத்தில் மேய்க்கவந்தோம். இங்கே வேள்வி முடிந்தால் அன்னம் இடுவார் என்றான் கண்ணன். பசித்து வந்தோம். உணவருளல் வேண்டும்” என்றனர்.

சினம் கொண்டு நிலைமறந்தார் வேள்வித்தலைவர். அருகே இருந்த தண்டத்தை எடுத்து ஓங்கி ஓடிவந்தார். “விலகிச்செல்லுங்கள் நீசர்களே. தேவர் உண்ணும் அவியை நாய் முகர்ந்து நோக்கியதோ? தெய்வங்கள் அணியும் மாலையை பேய் வந்து சூடலாகுமோ?” என்றார். “உங்கள் கால்பட்ட வேள்விநிலம் கறைபட்டுப் போயிற்று. இங்கே தென்னெருப்பு அணைந்த விதம் ஏனென்று தெளிவாயிற்று” என்றார். அவர் குரல்கேட்ட வைதிகர் எழுந்து கைநீட்டி வசைபாடினர். “இழிபிறப்பாளர் இங்கு எவ்வண்ணம் நுழைந்தார்? மன்னன் கோல் அகன்றதோ? கோட்டை கொடிதாழ்ந்ததோ? வேதச் சொல் வலுவிழந்ததோ?” என்று கூச்சலிட்டனர்.

கண் திகைத்து கால் தளர பின்னகர்ந்து “கண்ணன் சொல் கேட்டு வந்தோம்” என்றான் அம்சன். “ஆநிரைகள் மேய்த்தும் வானிழியும் ஒளியறிந்தும் கைக்குழலில் இசைசேர்த்தும் கானகத்தின் எழில்கண்டும் வாழ்பவர் நாம், வேதப்பொருளுண்ணும் தேவர்களும் நாமும் நிகரே என்றான். அதை நம்பி இங்கு வந்தோம். பிழையெல்லாம் பொறுத்தருள்க!” என்று கைகூப்பி ஸ்ரீதமன் பின்னகர்ந்தான். ஓடுகையில் சுபலன் “ஆயர் உண்ணும் உணவெல்லாம் அனலுண்ணும் அவியாகும் என்றால் இங்குள்ள வேதமறிந்தோர் பொருளறிவார் என்றான். அவன் சூதறியாமல் வந்துவிட்டோம். தீச்சொல் ஏவவேண்டாம்” என்றான்.

“கன்னங்கரியோன். குலமில்லா காட்டுமகன். வேதப்பொருள் நாமறிய தூதனுப்பி உரைக்கின்றான். ஏதறிந்தான்? இனி அவன் இங்குவந்தால் தீதறிவான். நீசன்!” என்றார் வேள்விமுதல்வர். “மூவேதம் ஒலித்த மன்றத்தில் மாடோட்டும் கீழ்மக்கள் விழிபட்ட விழுப்புக்கு வழியென்ன சொல்வீர். இனி நம் எரிகுளத்தில் அனலெழுப்ப என்னதான் செய்வோம்?” என்றார் முதுவைதிகர் ஒருவர். “நூறுமுறை நெய்யூற்றி குங்கிலியம் கூட்டி அனலூதி நோக்கிவிட்டோம். அணைந்த எரி எழவில்லை. அதன் பொருளும் புரியவில்லை” என்றனர் பிற வைதிகர்.

வேள்விக்கூடத்தின் பந்தல்பின் மறைந்து நின்று வந்தவரைக் கண்டேன். சொன்னதெல்லாம் கேட்டேன். ஓசையின்றி பின்னகர்ந்தேன். அடுமனைக்குள் சென்று அன்னம் எடுத்தேன். அறுசுவையும் கூட்டி தொடுகறிகள் கொண்டேன். கைநிறைய அமுதேந்தி காட்டுக்குள் கரந்தோடினேன். என் கால் சுற்றி ஆடை கிழிபடுவதை அறியவில்லை. என் உடலெங்கும் முட்கள் கிழிப்பதையும் உணரவில்லை. காட்டுமரத்தடியில் வேர்க்குவையில் சாய்ந்திருந்த கண்ணன் அருகே சென்று மூச்சிரைக்க நின்றேன். “என்ன இது?" என்றான். “வேள்விக்கு அவி!” என்றேன்.

கரும்பாறை வெடிப்பில் வெள்ளருவி எழுந்ததுபோல் கண்ணன் நகைத்தான். “பசிக்கு உணவாகாது பாழாகும் அன்னம் விடுக்கும் தீச்சொல்லுக்கு வேதமும் விடையல்ல. உங்கள் வைதிகர் வேதச்சொல்லறிவார், பொருளறியார்” என்றான். “நீ மட்டும் எப்படி அறிந்தாய் வேதத்தின் சாரத்தை?” என்றென்னைக் கேட்டான். “கரியவனே, எங்கள் குடிநடுவே மாமரத்தில் குயில் பாடும் நாதத்தில் கேட்டறிந்தேன் வேதத்தை” என்றேன். “இக்குரலா அது? நன்று தேர்ந்து சொல்” என்று தன் குழலெடுத்து இதழ்சேர்த்தான். அக்கானகமே கனவாகி உருகி ஒரு வெள்ளமென ஓடிச்சுழன்று அவனைச் சுற்றிச்சுழிக்கக் கண்டேன். அச்சுழலே நானென்றும் அறிந்தேன்.

காட்டுக்குள் புதரசையும் ஒலிகேட்டோம். எங்கள் அந்தணர்சேரியின் அத்தனை பெண்டிரும் அன்னத் தாலமேந்தி அங்கு வந்துசேர்ந்தனர். “ஆயர்ச்சிறுவர்களே, அமுதுண்டு வாழ்த்துங்கள். எங்கள் குடிவாழ, கொழுநர் நலம் வாழ உங்கள் சொல் நின்று காக்கட்டும்” என்றாள் மூதன்னை ஒருத்தி. “வேதம் தழைக்க உன் வாழ்த்தொன்றே போதும். உன் வாயுரைக்கும் சொல்லெல்லாம் வேதத்தின் கீதமென்றே முளைத்தெழும். கண்ணா, கரியோனே, உன் விரல் அணிந்த பொடிபட்டு எங்கள் வேள்விச்சாலை பொன்னணிய வேண்டும்” என்றாள் இன்னொரு மூதன்னை.

ஆயர்ச்சிறுவர் அமுதுண்டு மகிழ, அவர் காக்கும் அன்னைப் பெரும்பசுக்கள் சூழ்ந்து கருமணிக் கண்கொண்டு நோக்கி குரலெழுப்பி வாழ்த்த கானகத்தில் இருந்தோம். கரியோன் ஒளிபட்டு கொக்குச் சிறகுகள் மின்னுவதைக் கண்டோம். அவன் விழியருகே வந்த கதிரொளி குன்றுவதை அறிந்தோம். காலடி தேடி கொடிநுனிகள் தவழ்ந்துவந்தன. அவன் கைதொட்டு மீண்ட மண்ணில் விதை முளைத்தெழுந்தது. கன்றுகள் அவன் குரல்கேட்டு நின்று அன்னை அழைப்பதையும் மறந்தன.

ஏதென்று அதையுரைப்பேன்! அன்னைக்கு மகவாக, தோழியரின் தோள்சேர்ந்து, காதலனின் கைபற்றி, கணவனின் உடலணைத்து, மைந்தரின் மார்பறிந்து, பெண் கொள்ளும் நிறைவெல்லாம் அவன் ஒருவன் விழியாலே ஒருங்கறிந்து அங்கிருந்தோம். காலமில்லை. மேலே வானுமில்லை. மண்ணில் நாங்களில்லை. மலைப்பாறை சூடிய மலர்களென உணர்ந்தோம். எங்களை ஒவ்வொன்றாய் உதிர்த்து அவனை வணங்கி நின்ற மலர்மரமே இந்த யுகமென்றறிந்தோம்.

வீட்டில் எங்கும் காணாமல் எங்களை வழிதேர்ந்து தொடர்ந்து வந்து காட்டிலே கண்டுகொண்டனர். “எங்கு சென்று வருகின்றீர்?” என்றனர். “ஆயருக்கு அமுதுடன் சென்றோம்” என்றோம். “கண்ணன் பசி தீர்த்து அவன் கண்ணொளியை கண்டு மீள்கிறோம்” என்றோம். சினந்து முகம் சீறி “என்ன இது? எங்கள் விழியறிவதெல்லாம் மெய்யா? வேதங்கள் உரைப்பதெல்லாம் பொய்யா? உங்கள் நெறியெங்கு சென்றது? அன்னையரே நீங்களுமா அறம் மறந்தீர்? நாண் இழந்து குலம் மறந்து எங்ஙனம் இங்கு வந்தீர்?” என்று கூவினர். “கணவர்களை நீங்கி குழவிகளையும் கைவிட்டு காட்டுக்கு வந்து ஆயர்களுடன் ஆடுகிறீர். கற்பெனும் பெருங்கனலால் இக்கணமே எரிந்தழிவீர்” என்று தீச்சொல்லிட்டார் வேள்வித்தலைவர்.

மழைநனையும் கற்பாறை என முற்றும் குளிர்ந்து அங்கே நின்றோம். “எங்கு சென்றது உங்கள் வேதச் சொல் நெருப்பு?” என்றாள் என் மாமி. “உங்கள் சொல்லெடுத்து இவர்களின் ஒரு கூந்தலிழை பொசுக்கல் ஆகுமோ?” என்றாள் என் அத்தை. வாயிழந்து உடல் தளர்ந்து வைதிகர் நின்றிருக்க மூதன்னை ஒருத்தி ஓங்கி குரலெழுப்பினாள். “வேதமறியோம். வேள்விப்பொருளும் அறியோம். விலகி நின்று நோக்கும் வெறும்பெண்கள் நாங்கள். எங்கள் செவிகளிலே வேதம் ஓதுவதும் கன்றுதேடும் மூதா கூவுவதும் ஒன்றெனவே ஒலிக்கின்றது. வேறாகக் கேட்கும் வெற்றறிவை வேண்டோம்.”

“உங்கள் வேள்வித் தீ அணைந்தமைக்கு நூல் சொல்லும் முறையென்ன?” என்றாள் மூதன்னை. சொல் தயங்கி விழி தாழ்த்தி “கற்புள்ள பெண் வந்து தொட்டால் கனலெழுந்து ஆடும் எங்கள் வேள்விக்கூடத்தில்” என்றார்கள். மூதன்னை கைநீட்டி “இவரில் எவர் வந்து தொட்டாலும் எரியெழும் என்று காண்பீர்” என்றாள். அவள் கைசுட்ட நான் சென்று என் சிறுவிரலால் தீயணைந்த நெய்விறகைத் தொட்டேன். இதழ் எழுந்து நா நீட்டி நடமிட்டது வேள்வித்தீ. திகைத்து என்னைச் சூழ்ந்து “தீதற்ற வடமீனின் திறம் கொண்டோள் குடி வாழ்க!” என்று வாழ்த்தினர் என் குலத்தோர்.

வேதம் எழுந்தது. அப்பால் பசுக்களின் நாதமும் எழுந்தது. கைகூப்பி வணங்கி “கானகன் ஒருவன் காலடியில் மடியும் ஞானமெல்லாம் என்று நூலுரைத்த சொல்லறிந்தேன். இனி வேதமென்றாகி நிற்கும் விண்ணளந்த பாதங்கள் அறிந்து பணிந்தெழுவேன்” என்றார் வேள்வித்தலைவர். எங்கள் வேள்விச்சாலையில் சூழ்ந்தமர்ந்து அவர் கூவிய மறைமொழியில் எழுந்த நிறைமொழியை கரியோன் புகழென்று கேட்டு கண்ணீர் உகுத்து நின்றேன்.

கன்னியரே ஏதறிவீர். அலையெழுந்த நதிப்பரப்பில் ஆடி நிற்கும் மலரெல்லாம் வேரூன்றி நின்றிருக்கும் நீராழம் ஒன்றுண்டு. அன்றும் நான் ஆற்றில் இறங்கி ஆழத்தை அடைந்து என் அகத்தை தனித்துணர்ந்தேன். ஆடையின்றி நீந்தும் என் உடல் தீண்டி உருண்டுசெல்லும் நீர்மணிகள் எழுந்து விழிமணிகளாகி ஒரு மாலையென என்மேல் ஓடக்கண்டேன். அவை நீல மலர்மணிகளாகி என் தலைக்குமேல் வெடித்துமலரக் கேட்டேன். ஆழத்தில், இருளாழத்தில், இன்மையின் ஆழத்தில், அதன் எடைமிகுந்த நீலத்தில், பேரழுத்தப் பெருவெளியில் ஒரு சொல்லைக் கண்டுகொண்டேன்.

நானே ஒருபோதும் நாவால் தொடமாட்டேன். என்றோ ஒருநாள் அச்சொல் என்னை கண்டெடுக்கும். தன் பொருளை நானாக்கும். அதுவரை நான் இங்கிருப்பேன். இப்பெயர் கொண்டிருப்பேன். இவையெல்லாம் செய்திருப்பேன். இவையாகி அமைந்திருப்பேன். ஒருசொல்லே அனைத்துமாகும் ஓயாத லீலையென்ன என்றெண்ணி வியந்திருப்பேன்.

பகுதி எட்டு: 3. ஒன்றே அது

நீலக்கடலுக்கு அப்பால் சாலமலைத் தீவில் ஏழு தலைகொண்டு எழுந்து நின்ற துரோணாச்சல மலையரசன் மைந்தனாகப் பிறந்தான் கிரிராஜன். பன்னிருவரில் இளையோன். பைதலென தந்தை மடிதவழ்ந்தோன். கரியன். இளந்தளிர் விரிந்த மரமெழுந்த மேனியன். விண்ணின் குளிர்மேகம் கனிந்திறங்கும் நீலமுடியன். வெள்ளி மலையருவி எழும்குரலில் பிள்ளைமொழி பேசும் பேரழகன்.

அன்றொருநாள் காசி நகர்புகுந்து கங்கை நதியாட பேரொளிக்கதிராய் வான்வழி சென்ற புலத்திய மாமுனிவர் தீவில் இறங்கி துரோணமலையை வாழ்த்தி அருள்புரிந்தார். மலைக்குழவியை தன் மடிமீதமர்த்தி வானிலும் கடலிலும் விளையாடினார். மலையன் சொல்லும் மழலை கேட்டு மனம் களித்தார். அவன் சிறுமார்பு நனைத்திழியும் அருவிதொட்டு குளிர்ந்தார். கரும்பாறை மார்பை கைசோரத் தழுவினார். சிம்மக்குரல் எழுந்தோங்க அவன் சீறி எழும் சினம் கண்டு நகைத்தார்.

பிள்ளைமாயம் பின்வாங்கி போகுமிடம் தெளிந்து வர புலத்தியர் மலையரசை வணங்கி மைந்தனிடம் விடைபெற்றார். மலைமகவு கைநீட்டி ஏங்கியழக்கண்டு “என்னுடன் வருகிறாயா இளையோனே? கங்கை நதியும் காசிநகரும் இமயமுடியும் மேருப்பனியும் காட்டுவேன் உனக்கு” என்றார். “நான்! நான்!” என்று மலைக்குழவி கைநீட்டி மகிழ்ந்து எழக்கண்டு அள்ளி தோளிலேற்றி வானத்தில் ஏறி வடதிசை வந்தார்.

கருவெள்ளம் சுழித்தெழுந்த காளிந்தி நதிகண்டு “கங்கை! கங்கை இது! கங்கை!” என்று கைவீசி காலுதைத்து கரியன் துள்ளிவிழ அவன் நிறைபெருகி நிலையழிய முனிவர் கைநழுவி அவனை கரையிலே இறக்கிவைத்தார். மீண்டும் அவனை அள்ளியெடுக்க அவர் குனிந்து கைநீட்ட “இங்கிருப்பேன். இனிமேல் எழமாட்டேன். சங்கிருக்கும் சிறுகையும் சக்கர மறுகையும் பங்கய விழியும் கொண்டு பாலன் ஒருவன் வந்து என்னுடன் ஆடுவதை அகமெங்கும் கண்டேன். இதுவே என் இடமாகும், இங்கென் நிறையழியும்” என்றது மலைமகவு.

ஆயர்குலத்து மூத்தோரே, அறிவறிந்து அமைந்த தாதையரே, அன்று வந்து இங்கே தங்கியது இம்மலைக் குழந்தை. வற்றா மழையால் வறலுறா புல்வெளியால் நற்றா நிரைகாக்கும் நலத்தால் இதை கோவர்த்தனம் என்றனர். ஆயர்குலம் காக்கும் புதல்வன். ஆநிரை வாழ்த்தும் முதல்வன். கருநீலப் பட்டின் முந்தானை நுனி விரித்து காளிந்தி தழுவிச்செல்லும் கரியன். மேகக்குடை கவித்து மின்னல் முடிசூடும் மன்னன். அவன் வாழ்க! அவன் சாரலில் வாழும் ஆநிரைகள் வாழ்க. அவை புரக்கும் ஆயர்குலம் வாழ்க!

பிருந்தாவனத்துப் பெரும்பாணன் பிருஷதன் கைமுழவு மீட்டி கனத்த குரலெழுப்பி கரியன் புகழ்பாடி நின்றான். அவனைச்சூழ்ந்து கைதட்டி மகிழ்ந்தாடி கள்மயக்கும் களிமயக்கும் கூடி நின்றது ஆயர்ப்பெருங்குடி. “இன்று வந்தது இந்திரப்பெருவிழா! இங்கெழுக இன்கள்ளும் மங்கையரும். எழுக சிறியோர். எழுந்தாடுக நறியோர். கொழுந்தாடுக செந்தழல். நிலைமறந்து நின்றாடுக காமம்!” என்றான். “ஆம் ஆம் ஆம்” என்றது கூட்டம்.

நெய்க்குடங்கள் நிறைய நுரையெழும் கள்சுமந்து வந்தனர். மலரும் மாவின் மணமெழும் அப்பமும் கொண்டுவந்தனர். ஊன்சோறும் கனிச்சாறும் படைத்தனர். கொற்றவைக்கும் காளிக்கும் குலம் காக்கும் கூளிக்கும் பலியிட்டு வணங்கினர். அடிநிலம் ஆளும் அரவரசுக்கும் திசையாளும் நால்வருக்கும் அன்னமும் மலரும் கன்னல் இன்சோறும் அளித்தனர். பலியுண்ட தெய்வங்களின் புன்னகைக்கும் பெருவிழிகள் ஒளிகொண்ட விண்மீன்கள் என இருளெழுந்து தெரிய தலைமீதெழுந்தது திசையில்லா வெளிவிரிவு.

வெள்ளைப்பசுவொன்றை கொம்புதீட்டி கூராக்கி வெள்ளிமணிகட்டி மலர்மாலை அணிவித்து ஆயர்குடிகளெல்லாம் ஆடலிட்டு கொண்டுசென்றனர். அதன் குளம்பமைந்த குழிதொட்டு மண்ணெடுத்து சிரமணிந்து “குலம் காக்கும் தாயே! எங்கள் நலம் காக்க வேண்டும் அம்மா” என்று கூவினர். முழவுகளும் கொம்புகளும் மேளங்களும் தாளங்களும் கூடி ஒலிக்க கூத்திட்டு பின்தொடர்ந்தனர்.

மழைமேகம் இறங்கிவரும் மலைச்சாரலில் அமைந்த இந்திரனின் ஆலயத்தில் ஆயரெல்லாம் கூடினர். வெண்களிறு மருப்பேறி மின்னல் படை ஏந்தி விண்ணவர்கோன் அமர்ந்திருந்தான். அவன் முன் அன்னக்குவையும் அக்காரக்குவையும் கன்னல்சாறும் கள்ளும் படைத்திருந்தனர். ஆலயத்து முற்றத்தில் அமைந்த பலிபீடம் குருதிமலர்சூடி காத்திருக்க, அருகெழுந்த கம்பத்தில் பசுவைக்கட்டி கைகூப்பி வணங்கி சூழ்ந்தனர். அதன் மேல் பட்டாடை விரித்து நெற்றியில் திலகமிட்டனர். சங்கும் சல்லரியும் கிணையும் கின்னரியும் முழங்க அதை வலம் வந்து நீர்தெளித்து தூய்மை செய்தனர்.

“முகில்களின் அரசே எழுக! மின்னல் கதிர்களின் இறைவா எழுக! புல்வெளிகளை புரப்பவனே எழுக! எங்கள் ஆநிரை காக்கும் ஐயனே எழுக! பால்பெருக வருக! எங்கள் குடி விரிய வருக! நூல் துலங்க வருக! எங்கள் நெறி நிலைக்க வருக! விண் ஒளிர பொலிக! மண்ணில் மலர் மிளிர பொலிக!” என்று ஆயர்குலத்து முதுபூசகர் கூவினார். “விண்புரக்கும் தேவர்கள் இங்கு வருக! மண் நிறைக்கும் தேவர்கள் இங்கு வருக! இப்பலிபீடம் நிறைக்கும் தூயகுருதியை உண்டு மகிழ்க!”

கருவறை நீங்கி கொலை வாளுடன் வந்த பூசகர் சுற்றி நடமிட்டு சுழற்றி அலறி “இங்கெழுக தேவர்கள்! எங்கள் பலியுண்க நால்வரும்!” என்று கூவினார். ஓங்கும் வாள் எழுந்து ஒளி அசைய தன் கைதூக்கி எழுந்து குரலெழுப்பினான் கண்ணன். “நில்லுங்கள் பூசகரே. என் ஐயம் தீர்த்து இவ்வன்னைப் பசுவை பலிகொள்ளுங்கள்” என்றான். சினம் கொண்டு கை ஓங்கி நந்தன் ஓடிவந்தார். “என்ன செய்கிறாய்? கரியவனே, காலமெல்லாம் நாம் கடைப்பிடித்த நெறி இது” என்றார். “தந்தையே, செய்யும் செயலேதும் சொல்லால் நிலைநிறுத்தப்பட்டாகவேண்டும். சொல்லற்ற செயலோ வேரற்ற மலைமரமாகும். என் சொல் எதிர்த்து தன்சொல் சொல்லட்டும் இப்பூசகர்” என்றான் கண்ணன்.

“நாலாயிரம் வருடத்து நடைமுறை ஈதென்பார் என்னில் சொல் நிறுத்திய குடி மூத்தார். வைரக்கோலேந்தி முகில்கூட்டம் மேய்ப்பான், வண்ண வில்லேந்தி மண்நிறைக்கும் மழையாவான். விண்ணவர்க்கு அரசன். வேந்தருக்கு வேந்தன். வெண்களிறும் செங்கதிரும் விரிசுடர் மணிமுடியும் கொண்டோன். மழையே புல்லாகி பாலாகி நெய்யாகி நம் உணவாகி உயிராகி வேதச்சொல்லாகி விளைகின்றது என்பார். அவன் குடிகள் நாம். அவன் கொடையில் வாழ்கின்றோம். அவன் சொல்லில் அமைகின்றோம். அளிப்பவனுக்கு படைப்பதுதான் அடைவோர் கடனாகும். வெண்பசுவொன்றை அளித்து விண்ணவனை வணங்குதல் ஆயர்குடிகளெல்லாம் ஆற்றிவரும் செயலாகும்” என்றார் பூசகர்.

“ஆயரே கேளீர்! ஆநிரைகள் பேணாமல் நீர்நிலைகள் தேக்காமல் நாமிருந்தால் நம்குடிக்கு நலம் விளையும் என்பீரா?” என்றான் கண்ணன். “நற்செயலே நலமாக விளைகிறது” என்று நந்தன் பதில் சொன்னார். “நம் கையின் செயலாலே நாம் வாழ்வோம் என்றிருக்க தேவர்கள் செய்வதென்ன? தேவர்தம் செயலாலே நம் வாழ்க்கை என்றால் நாம் செய்ய ஏதுண்டு?” என்று கண்ணன் கேட்டான்.

“ஆனால் விண்ணவர் அருளாமல் மண்ணிலேது வாழ்வு?” என்றார் நந்தகோபர். “விண்ணவரை ஆளும் வெண்கடலோன் அருளுண்டு. அவன் கண்ணசைவில் வாழும் இந்த ககனங்கள் அனைத்தும். பண் ஒன்றே பலியாக பெற்று அருளும் பெரியோன். அன்னவர்க்கே அடிமைசெய்வோம்” என்றான் கண்ணன். “பூசகரே கேளீர். இவ்வன்னைப் பசுவை அறுத்திடும் செயலுக்கு விண்ணவன்தான் பொறுப்பா? இல்லை உங்கள் வேரும் விழுதும் கொள்ளும் அப் பழியா?” என்றான். திகைத்து “இது விண்ணவன் கொள்ளும் பலியல்லவா?” என்றார் அவர். “விண்ணவன் பலி விழைந்தால் தன் வைரக்கோல் கொண்டு அவனே அதை அடையட்டும். நம் கை வாள் முனையால் நம் அன்னை கழுத்தை நாமே அறுத்திடலாகுமா?” என்றான் கண்ணன்.

சொல்லிழந்து நின்ற சுற்றத்தை நோக்கி “இதோ இப்பசுவை நான் மீட்கிறேன். இதன் கழுத்தணிந்த கயிறை அறுக்கிறேன். நான் செய்தல் பிழை என்றால் விண்ணவன் இறங்கி வருக. அவன் வெண்மின்னல் கோல் என்னில் பதிக. அவன் இடியோசை சான்றாகுக!” என்று சொல்லி கண்ணன் அப்பசுவை விடுதலைசெய்தான். அஞ்சி உடல் நடுங்கி பின் விண்நோக்கி வியந்தபின் “கண்ணன் சொல் வாழட்டும். இக்குடியில் இனிமேல் அவன் சொன்ன முறையே அமையட்டும்” என்றார் நந்தர்கோபர். ஆய்ச்சியர் குரலெழுப்பி “அவ்வாறே ஆகுக!” என்றனர். அஞ்சி நின்ற ஆயர் குடியினரும் “அவ்வண்ணமே” என்றனர்.

“இந்திரனும் சூரியனும் எமனும் வருணனும் இலைநுனியின் பனித்துளிகள். அவர்கொண்ட ஒளியெல்லாம் அழியாத பெருங்கதிர் ஒன்றின் அருளாகும். ஒளியுருவானவனை ஒன்றேயாகி நின்றவனை உருவாகி அருவாகி கருவான திருவை வணங்குவோம். அவன் பலியேதும் கேட்பதில்லை. பழியேதும் கொள்வதில்லை. நற்சொல்லில் நற்செயலில் நல்லெண்ணம் கொண்டு வேள்விசெய்வோம். பகிர்ந்துண்டு களிப்போம். பாடலும் ஆடலும் கூடுவோம். எவர் பழியும் நமக்கில்லை. எம்முடன் இருக்கும் எந்தையின் பேரரருள்” என்றான் கண்ணன். “ஆம், ஆம், ஆம்” என்றது ஆயர்ப்பெருங்கூட்டம்.

ஆயரே, அன்னையரே, அன்று நான் கண்டேன் விண்ணிலெழுந்த மின்னல் விழியொன்றை. கீழ்த்திசை சரிவில் கருமேகம் உறுமக் கேட்டேன். ஆடலும் பாடலும் நகையாடலும் உண்டலும் குடித்தலுமாய் என்னைச்சுற்றி கழல்களும் சிலம்புகளும் வளைகளும் வாள்களும் ஒலித்தெழுந்து சூழ நான் மட்டும் தனித்து நின்றேன். வான் சினந்தெழுந்ததை நான் அறிந்துகொண்டேன். அதை கூவியறிவிக்க கூடும்செவியின்றி நாவில் சொல்தவிக்க நெஞ்சில் எண்ணம் பதைக்க ஆவினத்தோர் கூடும் அரங்கெல்லாம் சுற்றிவந்தேன்.

இரவெழுந்தது. விண்ணில் அரவக் கண்ணெழுந்தது. அப்பால் இருளின் பெண்ணெழுந்தாள். அவள் பேய்க்குழலெழுந்தது. அதில் ஆடும் வெறியெழுந்தது. கனல்எழுந்த களியாட்டு கடுகிநின்ற நதிக்கரையில் கம்பமெல்லாம் எழுந்தன. கனல் போன்ற கொடித்துணிகள் துடிதுடிக்கும் ஒலிகேட்டேன். பின்னர் வண்டின் சிறகுகள் போல இலைநுனிகள் அதிரும் ஒலிகேட்டேன். கூடணந்த காகங்கள் சிறகொடுக்கி சுருங்கக் கண்டேன். நண்டும் எலியும் நச்சரவக் குழவிகளும் வளை தேரக் கண்டேன். நரிகளும் நாய்களும் அளை தேர்ந்து அணையக்கண்டேன். வான் கிழியும் மின்னல் மேகக்குவை அதிரும் இடியோசை. இல்லையென்றே விரிந்த இருள்வெளியில் வேதச்சொல் ஒன்று விளங்கக் கேட்டேன்.

முதல்துளி விழுந்ததும் இளையோர் கூவிச் சிரித்தனர். அவர்கள் இடைபற்றி நின்ற துணையோர் கள்கலம் தூக்கி கூவினர். அத்திப்பழம் உதிர்வதுபோல் மெத்தென்ற ஒலியெழுப்பி அம்புகள் போல சீறிவந்து மண் தைத்து மலைச்சரிவெங்கும் விழுந்தன மழைத்துளிகள். கூரைகள் கொந்தளித்தன. கரும்பாறைப் பரப்புகள் கோலேற்ற முரசுகளாயின. பின்னர் வானெழுந்த வெள்ளமே திசைநான்கும் என ஆனது. வெள்ளித்திரை போல நின்று உலைந்தது. வெள்ளச் சுவர் போல சூழ்ந்து மறைத்தது. ஓங்காரமாகி ஒலித்தது மாமழை. உள்ளே ஆங்காரம் கொண்டு சிரித்தது கருமுகில். ஒளியதிரும் மழைத்தாரை நீர்நாணல் புதரென அடர்ந்தது. கருநீர் மயிர் சிலிர்த்து கரடியெனச் சினந்தது.

அரவுக்கூட்டம் வளைவிட்டெழுந்ததுபோல் ஆயிரம் நீர்ப்பெருக்குகள் நெளிந்திறங்கிச் சூழ்ந்தன. சிவந்த படம் வளைத்து சரிவுகளில் சீறின. அரவுண்டு பருத்தெழும் அரசநாகம் போல கரிய உடல் வீங்கி கரை நக்கி எழுந்தது காளிந்தி. கரைநின்ற பெருமரங்கள் கொம்பு குத்தி மண்டியிடும் வேல்பட்ட யானைகள்போல் நீர்தொட்டுச் சரிந்தன. இலைக்குவையும் கிளைக்கவையும் அலைகளில் ஆட மூழ்கி வேர் பிடுங்கி கைவிரித்து வெள்ளத்தில் சென்றன. கன்றை அன்னையென படிகளை நக்கியது வெள்ளச் செந்நாக்கு. தீத்தழல்போல் எழுந்து திண்ணைகளை எரித்தழித்தது. மண்சுவர் கரைத்து புல்கூரை சரித்து மழைவெள்ளம் கொண்டுசென்ற இல்லங்கள் மேலேறி நாய்கள் நிற்கக் கண்டோம்.

“இந்திரன் சினந்தான். இனி ஒரு கதியில்லை. ஏழைக்குலம் காக்கும் மந்திரம் ஏதுமில்லை. ஆநிரைகள் சாகும். ஆயர்குடி அழியும். மலைவெள்ளம் எழுந்து நம் இல்லங்கள் மண்ணாகும்” என்று ஒரு மூதாயர் கூவக்கேட்டேன். “முற்கதைகள் அறிந்த மூத்தோர் இருக்க சொற் களிக்கும் சிறுவன் வழிகாட்டலாகுமோ? பலியடையா விண்ணவனின் பெருஞ்சினத்தை ஆற்றும் வழியறிந்தோர் எவருண்டு?” என்றார். ”காலித் தொழுவங்கள் கால்சரிந்துவிட்டன. கன்றுகள் நடுங்கி குரலெழுப்புகின்றன. பசுக்கூட்டம் நீரில் பதைத்து நிற்கின்றது. இனி ஒன்றே வழியாகும். இந்திரன் அடிபணிவோம். குற்றமெல்லாம் பொறுத்து அவன் நம் குடிவாழ அருள்செய்வான்” என்றார் மூதாயர்.

ஆபுரக்கும் கோல் தூக்கி கண்ணன் எழுந்தான். “மூத்தோரே, அன்னையரே, ஆயர்குலத்தோரே, கேளுங்கள். யுகம் புரண்டு மாறினும் ஏழ்கடல் வற்றி மறையினும் வான் உருகி அழியினும் வேதம் பொருள் விலகினும் மாறாது நின்றிருக்கும் என்சொல்!” என்றான். ”என் சொல்லை நம்பி எழுவோர் இப்பாதத் தடம் தொடர்க!” என்று நடந்தான். அக்கணமே யசோதை தன் ஆக்களுடன் பின் எழுந்தாள். ஆய்ச்சியர் கூட்டம் அவள் காலடியில் கால்வைத்துச் செல்ல ஆயர்களும் அவ்வழியே தொடர்ந்தனர். மலைச்சரிவில் ஏறி மேடு நோக்கிச் சென்றனர்.

ஆவளரும் மலை நோக்கி ஆயர்குடி கனிந்தோன் சொன்னான். “இதுவே நாம் தங்கும் இடமென்றறிக. இக்குகைக்குள் அமர்ந்து இம்மழையை நாம் வெல்வோம்.” கோவர்த்தனம் அமர்ந்த மலைக்குவையின் கீழே கோபாலர் குடிபுகுந்தார். மைந்தரும் கன்றுகளும் மார்போடணைத்த குழவிகளும் சேர அன்னையர் அமர்ந்துகொண்டனர். உடலோடு உடல்சேர்த்து உயிர்கள் இதம் கொண்டன. வெளியே வானக்குளிரெல்லாம் வாரிப்பொழிந்து வெறிகொண்டு ஆடி விரிகூந்தல் சுழற்றி நின்றிருந்தது நில்லாப் பெருமழை.

எந்தையரே, என் சொல் வாழும் குடியினரே, கேளுங்கள். இடியோசை எழுந்தொலிக்க திசைநிறைத்த நாற்கரத்தில் திரண்ட மின்னல் படைகளுடன் விண்ணெழுந்த வியனுருவை நான் கண்டேன். அவன் செவ்விழிகள் சினம் கொண்டு மின்னி அணையக் கண்டு அஞ்சவும் மறந்து நின்றேன். “ஆயிரம் தலைமுறைகள் என் அடிபணிந்த ஆயர்குடிகள் இவர். இன்றென் ஆணையை இவர் மீற ஒருபோதும் ஒப்பேன்” என்று அவன் முழங்கிய வான்சொல் கேட்டேன். “எங்கே இவர் தலைவன்? என் சொல்லை மீறும் வழிசொன்ன சிறுவன்? என் சரம்கொண்டு அவர் குலம்நின்று போகையில் தன் கரம் கொண்டு அவன் வந்து அரண்செய்யலாகுமோ? நன்று! நன்று! இன்றே அதைக் காண்பேன்!" என்று அவன் முரசொலிபோல் இடியெழுப்பும் ஆணவமொழி கேட்டேன்.

மாரிப்பெரும் பெருக்கில் மாநதிகள் பொங்கி மலையிறங்கி வந்தன. புரவிப்படைபோல செம்பிடரி அலையடிக்க பெருகிவரும் குளம்புகள் ஓலமிட பாய்ந்து சரிவிறங்கின. அருவியெனப் பொழிந்து பசுங்காட்டை நீர்க்காட்டால் மூடி நிறைத்தன. ஆவளரும் மலையிடுக்கில் ஆயர்குலம் தங்கிய குகையின் கூரையென அமைந்த கரும்பாறை உடைந்து விழுந்தது. வானாக நீர் நிற்க திசையாக நீர் சூழ உடல்குறுக்கி உயிர் ஒடுக்கி கூவி அழுதனர் அன்னையரும் ஆயரும். கன்றுகொண்ட பசுக்களும் காளைக்கூட்டங்களும் எழுப்பிய ஒலி எழக்கேட்டு ஊழி முழுத்ததோ பாழி எழுந்ததோ என்று எண்ணி நானும் அஞ்சி அங்கே நின்றேன்.

அன்னையரே கேளீர்! ஆயர்குடி வந்த இளையோரே கேளீர்! புவிவிரிவே, காலப்பெருக்கே, காலத்தை உண்ணும் கடுவெளியே, வெளிசுருண்ட கவிச்சொல்லே கேளீர்! எளியோன், ஏழைப்பாணன், சொல்கொண்டு வான் படைப்போன் செப்பும் மொழியே சான்றாகி நிற்கட்டும். என் இருவிழியாலே நான் கண்டேன். மலைவிலகிய மடைதனிலே கண்ணனைக் கண்டேன். கன்னங்கரியோன், காளிந்தி கிளைநதிபோல் காலிரண்டும் கொண்டோன். மேகக்குவைபோல மேலெழுந்துவந்தான். தன் இடக்கையை நீட்டி கோவர்த்தன மலையை எடுத்தான். குடையாக அதைப்பிடித்து குகைக்கூரை மூடிக்கொண்டான்!

ஆம், நான் கண்டேன். ஆயிரம் விழியால் கண்டேன். ஆனதொரு புலனால் கண்டேன். மதகரிபோல் மலைஅசைந்து வரக்கண்டேன். மரங்கள் கூத்தாடும் மாமழையை வாங்கி அது விண் நிறைந்து விளங்கக் கண்டேன். கரியபெருந்தோளில் மேலாடை சரிவதுபோல் கரும்பாறை இழியும் அருவிக்குலம் கண்டேன். முகில்சூடும் முடிமீது இடியோசை ஒலித்து நிற்க ஆங்கே இந்திரன் திகைத்து கைசோர்ந்து நிற்கக் கண்டேன்.

எழுந்தது இடிமேளம். மேகக்குவைகளில் வலுத்தது துடிதாளம். எடுத்த நீலப் பாதம் மீது எழுந்தது மணியுடல். சுட்டிய சிறுவிரல்மேல் சுழன்றது மலைமகவு. என் கண்ணிரண்டும் காண, கருத்தழிந்து சுருங்க அங்கு நின்ற நான் அறிந்தேன். எங்கும் நிறைந்த பொருளொன்றின் ஏதுமான பெருவடிவம். கண்ணா, கண்ணிரண்டு அளித்து காட்சிப்பயனாகி மண்நிறைந்து நின்ற மணிவண்ணா. அக்கணத்தில் அழிந்தேன். அங்கு நின்றெரிந்தேன். எந்தன் சொல்பெருகிப் பொழிந்த பேரருவிகள் இழியும் கருமலைச்சாரலில் நின்றிருக்கும் கடம்பே. என் வண்ணங்களெல்லாம் வழிந்தோட எஞ்சும் இருளே!

ஒற்றைக் கைவிரல் ஒன்றுகுவித்து அவன் எற்றிவிளையாட, மலை பெற்ற மகவது துள்ளிநகைத்தொரு பிள்ளைநடமாட, வரிசிலை ஏந்திய வாரணன் அன்று அவன் புவிகாத்த கதைபோல, விரிமலை ஏந்திய விண்மகன் இன்றொரு புதுக்கதை செய்கின்றான். சிற்றிடையும் சிறுகழல் மணிகளும் சேர்ந்து சுழன்றாட, நெற்றியிலே விழும் குறுநிரை வளைந்து நெளிந்தாட, வெற்றியெழும் தடந்தோள் இணை விம்மி எழுந்தாட, பெற்றியெழும் பெருநடமெழுந்தது சிறியோன் விழி நாட!

கருமுகிலாடிடும் மலைமுடி கொண்டு அவன் களித்து நின்றாட கருவினில் ஆடிய உருவெழுந்து என் அகக் கனவு நிறைத்தோட பெருவெளியெங்கணும் பெருகிய நீர்வெளி அரங்கத் திரையாகும். இங்கென் சொல்லில் எழுவது சொல்லை அழித்து எஞ்சிடும் மொழியாகும். நடமிடும் மழையலை. ஆடி சுழன்றிடும் கருமலை. அங்கே நின்றருளியது என் நெஞ்செழுந்த பெருநிலை. கடுவெளியே, காரிருளே, ககனத்து அலைவிரிவே, அகம்நிறைக்கும் அழகே, மொழியே, சொல்லே, சுவையே, என் கைவந்த பொருளே, என் கண்நிறைந்த உருவே வருக! கண்ணா, ஆயர்குல மைந்தா வருக! நந்தன் குடிப்பிறப்பே என் முன் வந்தருள்க! என் சிந்தையள்ளும் சிற்றுருவாய் என் முன் நின்றருள்க! நான் கலம் நிறைத்து அமுதூட்ட கடிந்தொரு மொழிசொல்ல கைநிறைத்து தாலாட்ட கண்நிறைத்து பார்த்திருக்க கன்னங்கரியோனாகி வருக! கண்ணின் கருமணியாகி வருக! கண்ணா வருக! நீயலாது பிறிதிலாது என்னில் நிலைகொள்க! ஓம் ஓம் ஓம்!

பகுதி ஒன்பது: 1. அணிபுனைதல்

இரவென்று ஒன்று எழுவதற்காக மட்டுமே உருவானது வெறுமை திரண்ட பகல். அதில் ஒவ்வொன்றும் ஒளியால் உருமறைத்து நிறம் கூச நிறை மிகுந்து அமர்ந்திருக்கும். தன்னை தான் உணர்ந்து தனித்திருந்து நாணும். உருவுள்ள அனைத்தும் ஒரு துளி இரவை தங்கள் காலடியில் கரந்திருக்கும். அவ்விருளுக்குள் தங்கள் எண்ணங்களை ஒடுக்கி வெற்றுப் புன்னகையை வெளிக்காட்டும். பகல் ஒரு பாழ்நிலம். வானம் வழிந்திறங்கி மண் மூடி விரியும் வீண்வேளை.

பகல் ஒரு காத்திருப்பு மட்டுமே. அனல் வழியும் வான்விழி முன் அமைதிகொள்ளல். ஒற்றைச் சொல்லை உருவிட்டு உருவிட்டு அமர்ந்திருக்கும் தவம். ஒன்றான ஒன்றை உள்ளறிந்து எடைகொள்ளல். பசுந்தளிர்கள் சோர்கின்றன. மலரிதழ்கள் மணமிழக்கின்றன. மலையருவிகள் புகைகின்றன. யமுனைமேல் ஆவிப்பெருமூச்சின் அலை கிளம்புகிறது. அதன் நீலவெளிமேல் எழுந்தாடும் நிழல்கள் ஆழத்து இருளின் அமைதியை மறைக்கின்றன. யமுனை இதுவே நான் என பகலில் ஒரு முகம் காட்டுகிறது. ஆழத்தில் அது கரந்த இரவு புன்னகைக்கிறது.

பாரிஜாதமோ பகலின் பொருள் அறிந்தது. இலைத்தகடுகள் விரித்து ஒளிவெம்மையை மட்டும் அள்ளிக்கொள்கிறது. அதன் மொட்டின் இதழ்களுக்குள் ஒருதுளியும் சிந்தாத மோகம் முகிழ்த்திருக்கிறது. அதன்மேல் சுற்றிச்சுற்றிவரும் கருவண்டு ஏங்கி இசையெழுப்புகிறது. தென்றல் வந்து தீண்டிச் சுழன்று கடந்தோடுகிறது. எங்கு புன்னகைப்பதென்று அறிந்தவள் அவள். தன் சங்கில் கரந்த மது எவருக்காக என்று உணர்ந்தவள். நீலக்கடம்பும் கோலக்குயிலும் மட்டுமே அறிந்த ஒன்றை புன்னகையென சூடி பகலெல்லாம் தவமிருப்பவள்.

வெயில் எழுந்து வெம்மைகொண்டு வெம்பிப் பழுத்து வழிதோறும் உதிரும் வேளைவரை இல்லத்தில் என்னோடு தனித்திருப்பேன். என் கரங்களில் வாழும் எட்டு திருமகள்களும் எழுந்து பணிசூழும் வேளை. அனல் கூட்டி அன்னம் சமைக்கிறேன். ஆக்கூட்டம் புரக்கிறேன். யமுனை நீர் கொண்டு கலம் நிறைக்கிறேன். அமுதளித்து ஆன்றோர் கால்பணிகிறேன். இவள் எங்கள் குலக்கனி என்று என் மாமியே சொல்லக்கேட்கிறேன். கூடைக்குள் நாகம்போல் என்னுள் நானிருந்து விழிமின்ன நெளிகின்றேன்.

வண்ண மலரெடுத்து ஒருசரடில் கோர்ப்பதுபோல் கண்ணன் குழலிசையில் எண்ணமெல்லாம் கோத்ர்தமைப்பேன். கன்று கூவும் குழலோசை. அப்பால் காகங்களின் குழலோசை. மாமி கடிந்துரைக்கும் குழலோசை. நல்லகத்தாள் நகைகூறும் குழலோசை. இல்லமெங்கும் ஓடும் என் சலங்கையின் குழலோசை. அப்பால் யமுனை நதியில் காற்றோடும் குழலோசை. குழலோசை வழிகாட்ட இப்புவி நிகழும் மாயம் கண்டேன். குழலோசை இல்லாமல் ஒரு கணமும் இல்லையென்றறிந்தேன்.

அந்தி எழுகிறது. குருதி தோய்ந்த வாளை மெல்ல மண்மீது தாழ்த்துகிறது வானம். கிளைதேரும் பறவைகளின் குரல்கள் நிறைந்து வானத்தின் மோனம் குழம்புகிறது. முகமுள்ள அனைத்தும் செம்மை கொண்டு நாணுகின்றன. குளிர்ந்த யமுனைக்காற்று எழுந்து வருகிறது. பசுந்தழை வாடிய வாசம் சூடி என் இல்லத்தைச் சூழ்கிறது. இருக்கிறாய் என்கிறது. எழுக என்கிறது. என் ஆடைதொட்டசைத்து அகம் தீண்டி குளிர்வித்து மெல்ல நகைக்கிறது.

மாலையில் நான் மலர் பூக்கும் மரமாவேன். மஞ்சள்விழுதும் வாசமலர்ப்பொடியும் கொண்டு யமுனையில் இறங்கி நீராடுவேன். காளிந்தி நீர்ப்பரப்பாய் கரியோன் கரம் வந்து என் ஆடைபற்றி இழுக்க அள்ளிச்சுழன்று நாணுவேன். அங்கங்கள் எங்கும் அவன் விரல் ஓட முலைக்கண் விம்ம முகக்கண் சரிய அலைகளிலே ஆடிநிற்பேன். நீருக்குள் மூழ்கி நீலன் உடல்காண்பேன். அகன்ற மணிமார்பும் அணியெழும் தோளும் நீண்ட கைகளும் நீலவயிறும் குறுநரம்பும் சிறுசுழியும் தொட்டறிவேன். அவன்மேல் நீந்திச்செல்வேன். அவன் மேல் அமைந்து திளைப்பேன். மூச்சிழந்து அவனை முத்தமிடுவேன். வாய்நிறைய அவனை அள்ளி கொப்பளிப்பேன். ஒரு துளியேனும் அவனை உண்டபின்னரே மீண்டெழுவேன்.

“எத்தனை நேரமடி நீராடுவாய்? எழுந்து வருகிறாயா இல்லையா?” என்பாள் மாமி. எவர்குரலையும் நான் கேட்பதில்லை. என் விழிகள் எவர் நோக்கும் கொள்வதில்லை. “அந்தி என்று எழுந்தால் அவள் புத்தி திசைமாறும். பித்து தலைக்கேறி பேய்விழிக் கொள்வாள்” என்று என் நல்லகத்தாள் சொல்வாள். சிதல்புற்றில் குடியேறும் கருநாகம் நான். இவ்வுடலில் வாழ்கின்றேன். இம்முகத்தை இம்முலையிணையை இச்சிறு கைகளை இவ்விரு கால்களை இவ்வயிற்றை இளம்தொடையிணையை ஆள்கின்றேன்.

வேள்விக்கட்டைகள் கடைந்து கடைந்தெடுக்கும் கனல். வேங்கை விழியென மின்னி எழும் நீலச் சுடர். அவிதேடும் தென்னெருப்பு. வேத மொழிதேடும் எழுசுடர். வான வெளியெழுந்த முதல்கதிர். இவ்வனம் எரிக்கும் மின்மினி. இரவின் கிளையில் எழுந்த செம்மலர். இதழ் விரிந்து அமுதூறும் இன்மலர். கடலாழம் அறிந்த குதிரைமுகம். ஏழ்கடல் அள்ளி உண்ணும் குறுமுனிக் கமண்டலம். சிம்மக் குரலெழும் இருட்குகை. தன்னை தான் நோக்கும் தனித்த தவ விழி.

பாதவெண்மைக்கு செம்பஞ்சு குழம்பிடுவேன். நகம் தீட்டி மான்விழியாய் ஒளிரச் செய்வேன். விரல்தோறும் மணிவளையம் பூட்டுவேன். கணுக்காலில் கொலுசுமணி. முழங்காலில் செறிவளைகள். இடைசுற்றும் மேகலையில் எழுந்த மணிவிழிகள். அணிமூடும் அணியென்ன அணி? விழிமூடும் பொன்விழியில் பொறித்தது என்ன மொழி? கை வளைகள் குலுங்க காதணிகள் அணிவேன். காதணிக்கு சேர கைவளைகள் களைவேன். சங்குவளையும் நெளிவளையும் சக்கரவளையும் கொடிவளையும் மலர்வளையும் மான்விழிவளையும் மணிவளையும் தொடிவளையும் மாற்றி மாற்றி அணிந்து மனம் சலிப்பேன். கூடணையும் குருவிகள்போல கூவிச்சலித்து என் கைக்கொடியில் அமர்ந்து எழுந்து பூசலிடும் வளைக்கூட்டம்.

நகைகள் பூட்டி நின்றிருப்பதுதான் நானா? நாணி விழி கூசி ஒவ்வொன்றாய் களைவேன். அணிகளைந்து ஆடை களைந்து எஞ்சுவதை நோக்கி ஏங்கி திகைப்பேன். இம்முலை களைந்து தோள்களைந்து இடைகளைந்து அல்குல் தழல் களைந்து எழுந்தோட விழைவேன். அஞ்சி ஒருகணம் அங்கே நின்று பின் ஒவ்வொன்றாய் அள்ளி அணிந்து இங்குவருவேன். ஆடை மறைத்த உடல். அணிமின்னும் உடல். சொல் மறைத்த மனம். பொருள் மறைத்த அகம். அதோ ஆடியில் என் கண்கள். கொலை வஞ்சம் கொண்டோன் உடைமறைத்த குறுவாளின் நுனிமின்னல்.

கண்களை ஒளிக்கவே கண்ணனை அணிந்துகொள்கிறேன். என் தோள்வளையென மென்கதுப்பு கவ்வும் அவன் விரல்கள். என் இடைவளைக்கும் அவன் கைகள். என் முலைமேல் முத்தாரமென முத்தாடுவது அவன் செவ்விதழ்கள். அதன்மேல் பதிந்திருப்பவை பவழங்களல்ல பற்தடங்கள். நால்மணிகள் அல்ல நகக்குறிகள். என் கழுத்தில் ஒளிர்வது பதக்கமல்ல அவன் ஈர இதழ்த்தடம். என் கன்னங்கள் அணிவது அவன் மீசை முள்குத்திய மணிச்செதுக்கு. என் மூக்கிலாடுவது முத்தல்ல அவன் விழிமணி. நெற்றியில் துவள்வது அவனுக்கு நான் ஆட்பட்ட அத்தருணம். என்னை தழுவியிருப்பது அணியாகி வந்த கண்ணன். என் ஆடையென்றாகி ஆளும் கள்வன்.

கண்ணனை அணிந்தன கானகத்துச் செடிகள். வெண்முறுவல் பூத்தது முல்லை. கண்சிவந்தது அரளி. செம்முத்துகொண்டது தெச்சி. பால்துளித்தது தும்பை. பொன்கொண்டது கொன்றை. பூத்து பட்டணிந்தது வேங்கை.. நாணிக் கண்புதைத்தது செண்பகம். நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை. அஞ்சி விழிதூக்கியது அனிச்சம். குறுநகை எழுந்தது பாதிரி. வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம். நானும் அவனே என்றது குவளை. நானுமல்லவா என்றது நீலத்தாமரை. கானகனே உனக்காக முகம் எங்கும் மலர்பூத்தது மதகளிற்றுக்கூட்டம்.

வந்தது வனவசந்தம். விழிபூத்து நின்றது விண்மீன்வெளி. கீழே மலர் பூத்து கனத்தன மரக்குவைகள். இரவிலும் உறங்காது ஏங்கும் கருங்குயில். எழுநிலவு கண்டு கண்மலர்ந்த கானமயில். நீரோடைகளில் வழிகிறது நிலவு. சுனைகளில் சுழிக்கிறது அதன் ஒளிப்பொழிவு. முத்தமிடக் குவிந்த இதழே உடலானவன் நீ. முத்தத்தின் களிவெறியே ஒளியென்றானவன்.

நிலவுசூடிய இரவு. நீலவிழியொன்று எழுந்த நெற்றி. கனவுசூடிய இரவு. களவுக்குத் துணையாக காமன் அனுப்பிய கதிர். கைபிடித்துக்கொண்டுசெல்லும் கள்ளப்பெருந்தெய்வம். காமத்தில் நனைத்து காயவைத்து மீண்டும் எழுப்பும் கயவன். கொன்று உடலாக்கி உண்டு பசியாறி சென்று திரும்பும் முன் திசைவெளியில் உயிர்ப்பித்து இன்று பிறந்தாய் இனிக்கொள்க எல்லாம் என்று சொல்லி புன்னகைக்கும் மாயக்கொலைகாரன்.

கருநீல வண்ணன் வெண்ணிலவான மாயம்தான் என்ன? இன்றிரவில் இவ்வெழில் வனத்தில் வசந்தம் பெருகும் தளிர்மர ஒழுக்கில் இலைப்பரப்புகளில் படர்கிறது நிலவின் காமம். அள்ளி உண்டவை கண்கள். எரி எழக் கனன்றது இமையிலாக் கருங்கண். உலர்ந்து உலர்ந்து ஈரம் கொண்டன இதழ்கள். செவ்விதழ்கள். சொல்லற்ற இதழ்மலர்கள். கருஞ்சுடருள் செங்கனல். சொட்டிச் சொட்டி அசைகின்றன இலைநுனி நாக்குகள். பிறவிப்பெருந்திரை மறைத்த பெருநினைவுகள் எழுந்துவரும் வண்ணங்கள். ஆழத்தில் விழிகொண்டு நீரலைய சிறகசைத்து ஒளிதேடும் மீன்கணங்கள்.

நதியே, நீலநதியே, நீ இறங்கும் மலைச்சரிவில் நீ இழிந்த வான் சரிவில் எங்கு கொண்டாய் இவற்றை? நாணின்றி நான்குகரங்களால் அம்மானை ஆடுகின்றாய். அதோ எவரோ கால் ஒலிக்க வருகின்றார். அள்ளி வை ஆடைக்குள். இமைதாழ்த்தி அமர்ந்துகொள். இதயத் துடிநாதம் இருளே கேட்கும். குறுநிரையின் குழைந்தாடல் உன் கண்களே அறியும். ஏதுமறியா இளநங்கை என்று இங்கிருப்பாய் தோழி. உன் உடலெங்கும் மின்னும் அணிகொண்ட மணிவிழிகளுக்குள் அணையட்டும் உன் விழியொளிரும் ஒளிமணிகள்.

அணிசூடி அணியாகி என் அந்தி செல்கிறது. ஆடிமுன் நின்று நின்று சலிக்கிறேன். எங்கே என் அன்னம்? எங்கே என் மலர்ச்சரம் கொண்ட மணிவில்? முலை விம்மி மணிச்சரங்கள் அசைகின்றன. என் மொழி விம்மி முலைகள் எழுகின்றன. இவ்விளம் விரல்பற்றி எங்கிருந்தாலும் நினைப்பேன் என்றான். ஒருபோதும் உனைமறவேன் என்றான். கைபற்றி இடைசுற்றி குழல்நீவி இதழ் ஒற்றி எப்போதும் நீயே என்றான். எங்குளான்? இங்குள என் நினைவை ஒருகணமேனும் உணர்ந்தானா? ஆண்விழிகள் அகம் நோக்கும் ஒளியற்றவையா? முன்விரியும் வானமன்றி பின் சுருண்ட பாதையும் அவர் பார்ப்பதில்லையா? அவன் மார்பணிந்த என் முலைச்சாந்தின் மணம் அங்கிருக்குமா? அவன் தோள்வளைத்து விரிமுதுகில் நான் எழுதிய நகமுத்திரை காய்ந்திருக்குமா?

பொருள்வயின் பிரிந்தோர் புதுமழையுடன் வருவார் என்றான் பண்தேர்ந்த பாணன் அன்று. யாழ்தொட்டு இசைமீட்டி “விண் இருண்டு பண்பொழியும் மழைக்காலம்! இதுவே கண் நிறைத்த காதலுடன் அவன் அணையும் முல்லைப்பருவம்” என்றான். முல்லையும் பூத்தது. முகில்மலை எழுந்தது. மயில்குலம் தோகை விரித்தது. மான்கணம் மடப்பிடி தழுவியது. என் கைவளைகள் தாழ்கின்றன. குரல்தாழ்த்திச் சொல்கின்றன “இன்னுமென்ன தனிமை? இனியுமென்ன கண்ணீர்?” மழைச்சாரல் வருடிய மலைப்பாதைகளில் குதிரைக்குளம்புகள் ஒலிக்கின்றனவா? மரம் ஏறி அமர்ந்த மந்தி குரல் எழுப்புகின்றதா? தொலைதூர ஒலிக்கெல்லாம் திரும்புகின்ற சிறுபூனைச் செவியடி நான்.

மலர்கொண்டது நீலமணிக்கரும்பு. வெண்சாமர எழில்கொண்டது. கணுதோறும் கனிந்தது. கனியூறி ஒளிர்ந்தது. அதில் ஏறி திசை தாவ விரிந்தன ஐந்து மலர்கள். கூந்தல் மணம்கொண்ட முல்லை. விழியொளியாகும் குவளை. முலை மணம் கமழும் தாமரை. அடிவயிறாகும் அசோகம். அல்குல் ஆழ்மணம் கரந்த மாம்பூ. கிளைதோறும் செறிந்தன கிள்ளைகள். ஆயிரம் குரல் கொண்டு ஒரு சொல் கூவி ஆர்த்தன. அங்கே காலடி கேட்டேன். எங்கோ கழலொலி கேட்டேன். அனங்கன், அருணன், மதனன், மானஸஜன், காமன், புஷ்பபாணன். ஐந்து மலரால் பட்டு ஐம்புலனும் அழிந்தேன். அவன் நினைவொன்றே இங்கிருந்தது. ஆகமென்றாகி அமைந்தது அகம்.

மழையில் நிறைந்து வேனிலில் வறளும் மலைச்சுனை போல ஒவ்வொரு கணமும் உருவழிந்து மீண்டேன். காலடி ஓசையில் பூத்தேன். அது காற்றோசை என கணுதோறும் உதிர்ந்தேன். கழலோசை எனத் தளிர்த்தேன். அது கலமுருள்தல் என்று கருகினேன். பறவைச்சொல் இனிதென்று பசுமைகொண்டேன். பல்லி அதைச் சொல்லவில்லை என்று பாலையானேன்.

நீரில் ஊசலாடும் நதிக்கரை மூங்கிலின் வதையென்ன என்றறிந்தேன். ஒளியெனத் துள்ளி இருளென மூழ்கும் நதிமீனின் தவிப்பென்ன என்றறிந்தேன். காத்திருப்பு எனும் சொல்லில் இனி நான் கண்டடைய ஏதுமில்லை. கண்ணா, முழுமூடா, கண்கட்டி ஆடும் கள்வா. இனி என் முன் நீ வந்து எழிலாகி நின்றாலும் காத்திருக்கும் இன்பம் போலில்லை உன் கனியமுத முத்தமென்று கைநீட்டித் தள்ளுவேனா?

கண்பொத்தி நீ பின்வந்து அணைக்கையில் அதை கன்றின் நாபட்ட குளிரென்று கைதட்டி விலக்கினேன். நீ சிரித்த ஒலிகேட்டு திகைத்தெழுந்து கையுதறித் திரும்பினேன். என் உடல் அணிந்த நகையெல்லாம் விழியாக விரிந்ததுபோல் நீ அருகே நிற்கக் கண்டேன். “கண்ணா நீதானா? என் கண்ணை நான் ஏற்கலாமா?” என்றேன். “நானே. எனக்காக வாசமலர் சூடி வண்ணப்பட்டாடை சுற்றி வாசலில் விழிவைத்த வாசகசஜ்ஜிதை நீ!” என்றாய். “ஆம், இது மழைக்காலம். மண்ணும் விண்ணும் காத்திருக்கும் குளிர்ப்பருவம்” என்றேன்.

நாமிருவர் மட்டும் தனித்திருக்கும் இல்லம். உயிர்கொண்ட உடலைப்போல் சுவரெல்லாம் சிலிர்க்கக் கண்டேன். என் விழிநோக்கி “என்ன இது? நீ கன்னியல்லவா? ஒருகணமேனும் நாணலாகாதா?” என்றாய். “நாணுதற்கு நேரமில்லை. கை கண்டு கால் நாணும் உடலென்று ஒன்றுண்டோ?” என்றேன்.

அள்ளி எனை எடுத்து தன் அணிமார்பில் சேர்த்தான். அவன் தோளணிந்த தாரனைத்தும் பிய்த்து வீசினேன். சிரித்து ஏனென்றான். “இக்கணத்தில் இத்தோள்கள் என்னொருத்திக்கே உரிமை” என்றேன். அவன் என் செவிக்குள்ளே நகைத்த சிற்றொலியைக் கேட்டேன். என்குருதி நதியெங்கும் அலைகிளப்பும் சிரிப்பு. என் காட்டு இருளெங்கும் சுனைகள் சிலிர்க்கும் சிலிர்ப்பு.

“எத்தனை அணிகள். எத்தனை ஒளிகள். இத்தனைக்கும் உள்ளே எனக்காக ஏதுண்டு?” என்றாய். உன் தோளில் முகம் சேர்த்து இதழ் அழுந்திச் சிணுங்கி “கண்ணன் வருகையிலே நான் என்னதான் செய்வது?” என்றேன். சிவந்த முகம் தூக்கி “பார், இந்தச் சதங்கைகள் தாமரை வல்லிகள். என் இடையணிந்த மேகலையோ கொன்றை மலர்க்குலை. முலை தவழும் முத்தாரம் தென்னையிளம் பூமணிகள். தோள்வளையோ தாழைமடல். கைவளைகள் முல்லைத் தளிர்ச்சுருள்கள். வசந்தம் வருகையிலே மண் அணியும் அழகெல்லாம் கண்ணன் வருகையிலே நான் அணியவேண்டாமா?” என்றேன். மெல்ல அவன் செவியில் “இல்லை உன் மார்பணிந்த பெண் அணியும் அழகெல்லாம் எனக்களி” எனச் சிரித்தேன்.

அள்ளி எனை அவன் இளம்கையில் தூக்கி “மண்மகளை இவ்வாறு மருப்பேந்தி நிற்பதுவே என் வழக்கம்” என்றான். சிரித்து கூவி அவன் சிரத்தில் அடித்து என் கைவளைகள் உடைத்தேன். “வா, திருமகளாய் உன்னை ஆக்குகிறேன்” என்றான். அவன் விரல்தொட்ட இடமெல்லாம் மலர்பூக்கலானேன்.

என் நெற்றிமலர் எடுத்து நிலத்திட்டான். “அய்யோ அது வைரம்” என்றேன். “உன் நுதலொளிக்கு அது சிறுகல்லே” என்றான். குழல்முகில் தழுவிய பிறைநிலாவென்று இதழ்கொண்டு தொட்டான். முத்தாரம் மணியாரம் முலையழுந்தும் செம்பதக்கம் ஒவ்வொன்றாய் அகற்றி இதழொற்றினான். கைவளை சிணுங்கக் கழற்றினான். மேகலை மட்டும் அறிந்த மலர்முகர்ந்தான். நாணிக் கண்புதைக்கையில் “கைதொட கால்நாணலாகுமோ?” என்றான். “கைவிரல் நுனியையும் கண் அஞ்சுமல்லவா?” என்றேன். கூவிநகைத்து என் குழல்பற்றி சுழற்றி இதழ்முத்தம் ஈந்தான்.

என் வெறும்மேனிமீது புல்வெளிமீது தென்றல்போல் அவன் விழியோடியது. பின் பெருங்கடல்மீது புயல்போல அவன் மூச்சோடியது. “உன் உடல்கொள்ளும் மெய்ப்பே கண்ணனுக்கு பிடித்த அணி” என்றான். பின் அமர்ந்து என் காலெடுத்து தன் தலைசூடி “கண்ணன் அணியும் வைரமுடி இதுவே” என்றான்.

அந்தி எழுந்து அடர்ந்து இரவாகியது. சில்வண்டு நாதமொரு சரடாகி இணைத்த எண்ணங்கள் என்னும் கருநீல மலர்கள் ஆடும் இரவு. இரவெல்லாம் தனித்திருப்பவள் நான். இரவை உண்டு இரவை உயிர்த்து இரவிலாடி இங்கிருப்பவள். இரவின் குரல் தோடி. நீல அலைகளாக நெளிந்து நெளிந்தோடும் பண். தோடியெனும் நஞ்சு. நாகச்சுருளவிந்து மேகமென படமெடுத்தது. இருளுக்குள் இருளாக வழிந்தோடும் இமையா விழிச்சரடு. தோடிப்பெருக்கில் ஒரு ஓடம். அதிலொரு குழலேந்திய கரியோன். வெண்ணுரை பொங்கிய வெள்ளம். கூவிச் சரியும் அருவி. பின் விரிவெளியில் நெளிந்தொளிரும் பூபாளம்.

பகுதி ஒன்பது: 2. காத்திருத்தல்

விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான். நெய்யுண்டு கனன்றாடி விண் எழுந்து விலகும் எரி நீ. ஒருமுறை நாதொட்ட இசைவெள்ளம் ஒழியாது நிறைந்திருக்கும் ஆலயமணி நான். கிளையசைத்து காற்றிலெழும் கருங்குருவி நீ. நீ சென்ற வழியெனத் தெரிபவை உன் பாதத்தடங்களல்ல. இமைப்பழிந்த என் விழிநீர்க்குளங்கள்.

கார்காலம் வந்து சென்றது. கானகத்துக் குயில்களும் பாடல் மறந்தன. என் இல்லத்து முற்றத்தில் மழைவிரித்த மணல் நிறம் மாறியது. புல்விரிந்த வெளியில் துள்ளியலைந்த கன்றுகள் குரல் கனத்தன. காளிந்தி மெலிந்து கரை ஒதுங்கியது. குளிர் கனத்த இரவில் கூரைப்பனி சொட்டும் ஒலியாக காலம் நடந்தது. சொல் சொல் சொல்லென்று சொட்டியது பனி. சொல்லி ஓய்ந்து விடிந்த காலையை வெண் திரையிட்டு மூடியிருந்தது. அப்பால் சிறைகூப்பிய பறவை ஒன்றின் சிற்றொலியும் “சொல் சொல்” என்றே ஒலித்தது.

வெண்முட்டை உடைத்து வெளிவந்தது செங்குருதி ஆறாத கதிர்க்குழவி. என் முற்றத்தில் பசுஞ்சாணி மெழுகி பூசணிப்பூ வைத்து மாப்பொடி கொண்டு தேர்க்கோலமிட்டு “வருக” என்றெழுதி வைத்தேன். குளிர்கொண்ட தோள் ஒடுக்கி குறுந்திண்ணை அமர்ந்து அதை நெடுநேரம் பார்த்திருந்தேன். நீள்மூச்சு விட்டு அடுமனை புகுந்து அனல்மூட்டி நோக்கிநின்றேன். ஆயிரம் முறை அவ்வெரிபுகுந்து வெளிவந்தேன். ஏக்கம் என்றும் தனிமை என்றும் எதிர் நோக்கி இருத்தல் என்றும் எத்தனை சொற்கள். ஒரு சொல்லும் சொல்லாது கால்சிலம்பு உதிர்ந்த கல்மணியின் அமைதியை.

கருவண்ணா, அறிவாயா? இப்புவியில் கூந்தலும் சூடாமல் கருவண்டும் கொள்ளாமல் வாடி அழியும் கோடிமலர்களை? எவர் செவியும் கேளாமல் கூவித் தளரும் குயில்கணங்களை? காத்திருத்தல் என்பது கணம்தோறும் வாழ்தல். கைவிடப்படுதலோ கணம்தோறும் இறத்தல். இசை நின்றபின் எப்படி எஞ்சுகிறது உன் புல்லாங்குழல்? மண்ணுருக்கி விண்ணொளிர வைத்தபின் வெறும் மூங்கிலென ஆவதன் வெறுமைக்கு எது நிகர்? பெண்ணென்று விழித்தபின் கல்லென்று ஆவதன் பெருவலியோ அதை வெல்லும்.

வாராதிருத்தலாகுமோ? என் விழியுதிர்க்கும் வெய்யநீர் பாராதிருக்கலாகுமோ? இதுமுன் இப்புவியில் நேராதிருந்த கதையிதுவோ? யாராயிருந்தேன் அன்றெல்லாம்? என் குரல் தேராதிருக்கும் உன் செவிக்கே சொல்லூற்றி நிறைக்கிறேன். உன் நினைவிலொரு பேராயிருக்கும் பேறடைந்தேன் அல்லேன். பெற்றியும் பிறப்பும் பெருஞ்செல்வச் சிறப்பும் இல்லேன். உன் பாதத் தடம் தொட்டு கண் ஒற்றும் பேதையென்றே எஞ்சுவேன். ஒருசொல் உன் இதழுதிர்த்துச் செல்லுமென்றால் அதுமுளைத்து காடாகி மலர்வெளியாகி மணமாகி இசையாகி நிறையும் என் பாழ்நிலமெல்லாம். எங்குளாய் நீ? என் நெஞ்சுளாய். நிறைந்த கண்ணுளாய். கருத்துளாய். எங்கும் நீயே நின்றுளாய். இன்றென் நெஞ்சலர்ந்து காடாயிற்று நீ சூடும் தண்துழாய்.

ஒவ்வொருநாளும் அப்பெயரென விடிந்திருள வாழ்ந்திருந்தாள் ராதை. தன் ஆயர்குடியின் சிற்றில் தொழுவத்து ஆநிரைகளுக்கு அன்னையாக இருந்தாள். வெண்பசுவின் முதற்குரல் கேட்டு எழுந்தாள். அதை ஈரத்தடம் மாற்றிக்கட்டி புதுவைக்கோல் போட்டு நாள் தொடங்கினாள். ஐந்து பசுவும் கலம் நிறைக்க வாங்கி அறைசேர்த்தபின் யமுனை நீராடி வந்தாள். மாமிக்கு ஏவல்செய்து அவள் மகளுக்கும் பணிசெய்தாள். வளைகோல் ஏந்தி வனம்புகுந்து பசுக்கணம் மேய்த்துவந்தாள். புல்சுமந்து வந்து தொழுசேர்த்தபின்னர் மீண்டும் யமுனை நீராடி வந்தாள். அந்தி இருள்கையில் ஆயர்குடிதோறும் எழுந்த ஆழியோன் பெயர் கேட்டு கைதொழுதாள். எங்கள் கலம் நிறைந்த பாலெல்லாம் நெய்நிறையலாகுக என்று சொல்லி மாமி கைகூப்புகையில் அவ்வாறே ஆகுக என்று சொல்லி வணங்கி படுத்துக்கொண்டாள்.

வண்ணப்பாயில் மரவுரி போர்த்தி கண்மூடி படுத்து கண்ணனை நினைத்துக்கொண்டாள். புன்னகையுடன் பெருமூச்செறிந்து தன் கைவளையை தானே எண்ணி எண்ணி விழித்திருந்தாள். அரவுப்புற்றென அறையெங்கும் மூச்செழுகையில் இருளில் எழுந்து மேலாடை உடல்சுற்றி மெல்ல நடந்தாள்.

இல்லத்து முற்றத்தின் வெண்கடம்பின் அடியில் விழிவிரித்து விண்மீன் நோக்கி செவிகூர்ந்து ஏதோ ஒலிகேட்டு அமர்ந்திருந்தாள். நதிமீது சென்றன ஆயிரம் ஓடங்கள். ஆழத்து இருளுக்குள் அவற்றின் நிழல்கூட விழவில்லை. அங்கே மென்சதுப்பு சதைக்கதுப்பில் சிறுவிரலாக உடல்கொண்டு சிற்றுயிர்கள் எழுதி எழுதிச்சென்றன ஒற்றைப் பெயரை.

நூறாயிரம் முறை எழுந்தோடி யமுனைக் கரை வந்து நின்றிருப்பாள். அலையிளகும் நதி கண்டு அஞ்சி கால் நடுங்கி பின்னடைவாள். அப்பால் நிலவொளி எழுந்த மலைமரக்குவைகளில் காற்று கடந்தோடும். அது மீண்டும் வருகையில் மென்குழல் நாதம் ஒன்று மெல்ல ஒலித்தடங்கும். ஏது அந்த இசை? மலைமூங்கில் துளைகொண்டதா? இல்லை அவன் கைநின்று இதழ்பட்டதா? முன்பொருநாள் நிலவு அளைந்து நீர்கடந்து சென்ற ஒருத்தியை அவள் அறிவாள். அவள் கனவொன்றில் கண்ட கழலிணையை நினைப்பாள். ஏங்கி கண்ணீர் உதிர்த்து மீள்வாள். மீண்டும் தன் முற்றத்து வெண்கடம்பின் வேர்வந்து அமர்வாள்.

கரைகடக்கலாகாத நதி. சிறைப்பட்டு சிறகிழந்த கிளி. காட்டில் அன்னை மறந்து சென்ற கன்று. தன்னுள் ஊறி தானே வற்றி மறைந்து உலரும் காட்டுச்சுனை. ஓடு உடைக்க முடியாத பறவை. தான் சுற்றிய கூட்டுக்குள் சிறைப்பட்ட பட்டுப்புழு. எத்தனை அகநாடகங்கள் வழியாக என்னை அமைத்துக்கொள்கிறேன். ஒருநாளில் எத்தனை முகம் சூடி கண்ணீர் விடுகிறேன். கைவிடப்பட்டவள். பாழ்மரம் ஒன்று பற்றி பெருங்கடல் நீந்துபவள். பொய்த்த சொல் கொண்டு மெய்யுலகு சமைப்பவள். விரஹோத்கண்டிதை. விரல்தொடாது விம்மும் வீணை.

என் நெஞ்சே, எத்தனை இனியது கைவிடப்படாமலே விரகத்தை அறிவது. அளிக்கப்படாத வாக்கு பொய்ப்பது. நிகழாத துயரத்தில் நீந்தி அளைவது. “என்னடி உனக்கு வேண்டும்? எதைத்தேடி எந்நேரமும் அலைகின்றாய்?” என்று மாமி கேட்பாள். “எதை நோக்கி வாயிலில் நின்றாய்? எதைக்காணாமல் கண்ணீர் உகுத்து மீண்டாய்? எக்குரல் கேட்டு மீண்டும் எழுந்தாய்? எந்த தெய்வத்தின் பகடையடி நீ?” நானறிவேன். நானாடும் களங்களையும் அறிவேன். நானாடும் பகடையையும் நன்கறிவேன். “எதைக்கேட்டு புன்னகைக்கிறாய்? நான் என்னதான் சொல்லிவிட்டேன்” என்றாள் மாமி.

காகக் குரலெல்லாம் விருந்து வரும் செய்தியாகும். சகட ஒலியெல்லாம் என் இல்ல வழிதேரும். காலடிகள் எல்லாம் என் முற்றம்வரை வந்துசேரும். பாய்மரம் சுருக்கி படகு அணையும் போதெல்லாம் நெஞ்சம் துடித்து நிலையழிந்து போகின்றேன். வருகிறது வருகிறது என்றே வானம் என் வீட்டைச் சூழ்ந்துள்ளது. வரக்கூடும் வரக்கூடும் என்றே பொழுதணைந்து போகின்றது. வரும் நாள் இது வென்றே புலரி எழுகின்றது.

என் நெஞ்சே எத்தனை இனிது முடிவிலாது காத்திருப்பது. எத்தனை மகத்தானது நிறைவேறாத எதிர்பார்ப்பு. பேருருவம் கொண்ட விழைவு. ஆயிரம் கண்ணெழுந்த காமம். பல்லாயிரம் நாவெழுந்த மௌனம். பலகோடி கைகொண்ட செயலின்மை. இங்கு நான் இருக்கையில் அங்கு அவனிருக்கிறான் என்னும் துடிப்பு. எங்களுக்குள் தொலைவொன்றே தடை என்ற நடிப்பு.

ஆயிரம்கோடி பெண்களாய் கணம்தோறும் ஆடிநடிக்கிறேன். ஆயர்குல மாதவனோ ஒற்றைவிழிச் சிரிப்பால் என்னை ஒன்றாக்கிக் கொள்கிறான். வருவான் என மலர்பவளை, வாரான் என வாடுபவளை, இல்லை அவன் என ஏங்குபவளை, உடனுள்ளான் என நிறைபவளை அவன் காண்பதில்லையா? கரியோனே, காமச்சழக்கா, ஒரு பெண்ணின் உடலுக்குள் உலகுள்ள பெண்குலத்தை சேர்த்து வைத்து சுவைக்கிறாயா? மாயைதான் உன் மனம் நிறைக்கும் பேருருவாகுமா?

யமுனைக்கரை அணைந்த படகொன்றைக் கண்டு ஆடை பறக்க குழல் குலைய ஓடிவந்தாள் ராதை. இனிப்பும் கனியும் ஆடையும் கூட்டிய பொதி எடுத்து இறங்கி நின்று “என்னடி ஓடிவருகிறாய்? பேதை! உன் வீட்டுக்குத்தானே வருகின்றோம்” என்ற கீர்த்திதையை விழிபதைத்து நோக்கி “யார்?” என்றாள். “என்னடி இது? என்ன ஆயிற்று உனக்கு? அடி பிச்சி, அன்னைமுகம் மறந்தாயா?” என்று கீர்த்திதை அவள் தோளைப்பற்றினாள். விழிநடுங்க அவளை நோக்கி பின் குரல் தாழ்த்தி “போதும், ஊர்கூட்டி கூவ வேண்டுமா உன் மகள் இருக்கும் நிலையை?” என்றார் ரிஷபானு.

“இங்குதான் படகு வரும்” என்றாள் ராதை. “இந்நீலக் கடம்பின் கீழே. அக்கரையில் இருந்து குழல்நாதம் வந்து நிறையும். பாரிஜாதம் மணக்கும் பாதக்கழல் ஒலி குலுங்கும்.” அன்னை அவளை அணைத்து “என் மகளே. ஏதுசெய்கின்றதடி உனக்கு? என்னதான் வேண்டும்? என் உயிரள்ளி உண்ணாதே. வேண்டாம் என் கண்ணே!” என்று கண்ணீர் உகுத்தாள்.

கையுதறி கண்ணீர் துளி சிதறி “வருவேன் என்று சொல்லிச் சென்றவர் மீளவில்லை. சொல்லிய சொல்லோ தன் குருதி தான் குடித்து பெருகி அறை நிறைத்து நின்றிருக்கிறது” என்றாள் ராதை. “என் கைவளைகள் கழன்றன. மோதிரங்கள் உதிர்ந்தன. அரைமணிகள் காலிறங்கின. என் இல்லம் மட்டும் சிறிதாகியது. சுவர்கள் வந்து என்னை சூழ்கின்றன.”

அன்னையைக் கண்டதும் மாமி ஓடிவந்தாள். “கூரைமீது நெருப்பள்ளி வைத்ததுபோல் உங்கள் குலப் பிச்சியை எங்கள் இல்லத்தில் நிறுத்தினீர்கள். அவள் கொண்டுவந்ததெல்லாம் கொண்டுசெல்லட்டும். எந்நெறிக்கும் அடங்காள், இனி இக்குடியில் அமையாள்” என்றாள். ஆடைமுகப்பால் முகம் மறைத்து அன்னை கண்ணீர் விட்டாள். திண்ணை முனம்பில் தலைகுனிந்து தந்தை அமர்ந்திருந்தார். முகம் மலர்ந்து “உங்களிடம் உள்ளதோ கண்ணன் விட்ட தூது?” என்றாள் ராதை. “அய்யோ என் செய்வேன்!” என்று விம்மி அழுதாள் அன்னை. தலைப்பாகை கொண்டு முகம் மறைத்து எழுந்து நடந்தார் தந்தை.

“எவரிடம் சொல்வேன் இவள் செய்யும் கூத்தெல்லாம்?” என்றாள் மாமி. “அந்தியில் ஆடிநோக்கி அணியெல்லாம் சூடுகிறாள். வாயிலில் சென்று நின்று வானத்தை நோக்குகிறாள். காத்திருந்து ஏங்கி கண்ணீர் உதிர்க்கிறாள். பாய் விரித்து அருகமர்ந்து பார்த்தமர்ந்து இரவழிக்கிறாள். இவள் பித்தைக் கண்டு பித்தானோம் நாங்களும். அன்றொருநாள் இரவில் விழிக்கையில் இவள் கண்மூடி படுத்திருக்க இவளருகே நின்று ஒருவன் இமைக்காது நோக்கக் கண்டேன். கன்னங்கரியவன். கருமணிபோல் விழியன். பீலி விழி திறந்த குழலன். அலறி எழுந்ததுமே அது நிழலென்றறிந்தேன். ஆனால் மறுநாள் அவன் நின்ற இடத்தில் ஒரு பீலிமயிர் கண்டெடுத்தேன்.”

“ஒருமகளை ஈன்றேன். திருமகள்போல் வளர்த்தேன். ஆழிவெண்சங்கு அணிந்தபிரான் அவளைக் கொண்டான் என்றெண்ணி நிறைகின்றேன். அன்னை வேறென்ன செய்வேன்?” என்றாள் கீர்த்திதை. அவள் சென்ற வழியெங்கும் விழிநீர் உதிர்ந்தது. “அவள் செவ்வுதடு என் முலை கவ்விய குளிர் இன்னும் போகவில்லை. அவள் சொன்ன முதற்சொல் இன்னும் மறக்கவில்லை. அம்பு எழுந்தது என்றபின்னர் நாண் தளர்ந்து விம்முதலே வில் கொண்ட விதியாகும்” என்று படகில் அமர்ந்து அரற்றினாள்.

யமுனையின் அலைகளின்மேல் பாய் விரித்தெழுந்த படகில் அமர்ந்து இல்லம் விட்டு ஏங்கி ஓடிவந்து நீலக்கடம்பின் கிளைபற்றி நின்ற ராதையைக் கண்டாள். “அவள் காணும் உலகத்தை நான் காணமாட்டேனா? அங்கு எழும் அப்பழிகாரனின் முகம் கண்டு ஒரு மொழி உரைத்து மீள்வேனே. என் பேதை அவன் கைகளுக்கே அடைக்கலம். இனி அவள் வாழ்வெல்லாம் அவன்செயல்.”

லலிதையும் விசாகையும் ரங்கதேவியும் சுசித்ரையும் சம்பகலதையும் சுதேவியும் இந்துலேகையும் வந்தனர். அவளைக் கண்டு வண்ணப்பறவைகள் சிறகடித்து இறங்குவதுபோல் கையலைத்து கூவி அருகணைந்தனர். “ராதை! ராதையடி அது! ராதை!” அவள் தோள்தழுவி “என்னடி ஆயிற்று உனக்கு? ஏனிப்படி கண்வெளுத்து குழல்கலைந்திருக்கிறாய்? காய்ச்சலா?” என்றாள் இந்துலேகை.

லலிதை அவளை அணைத்து “சொல்லடி, என்ன ஒளித்திருக்கிறாய் உன்னுள்?” என்றாள். “ஒரு சொல்” என்றாள் ராதை. “என் கைதொட்டு கண்ணன் தந்துசென்ற வாக்கு.” கண்கள் தொட்டு கலைந்து “ஆம், அறிவோம்” என்றனர் கோபியர்.

“ஆயர்குலத்து நீலன் ஆண்மை கொண்டு விட்டானடி! அவன் கண்கள் நோக்கி நாங்கள் எங்கள் உடலுணர்ந்து கொண்டோம்” என்றாள் விசாகை. “அவன் அன்னை இன்று நாங்கள் அங்குசெல்ல விழைவதில்லை” என்றாள் ரங்கதேவி. சுசித்ரை நகைத்து “குழலிசை இனிமை கூடியது. ஆனால் அவன் குரலுடைந்து போயிற்றே” என்றாள். இந்துலேகை “நாண் கொண்ட வில் போல அவன் நடந்துசெல்லக் கண்டேன். நாண் இல்லா விழியொன்று என் விழிதொட்டு விலகக் கண்டேன்” என்றாள். “அவன் நீராடும் நீர் வந்து என்னைத் தொட்டதடி. நீலக்கடம்பின் பூமணம் அது” என்று சொல்லி மூச்சிரைத்து தழுவிக்கொண்டாள் சம்பகலதை.

“யாரையடி சொல்கிறீர்கள்?” என்றாள் ராதை. அவர்கள் ஏழ்நரம்பும் அதிரும் யாழ் என திரும்பி “ஏனடி? கண்ணனையா மறந்தாய்?” என்றார்கள். “கண்ணனென்றால் யார்?” என்றாள். “எங்குளான்? எக்குலத்தான் ? எக்குடிப் பிறந்தான்?” ரங்கதேவி சினந்து “இவள் நடிக்கின்றாள். பெருங்குடிபிறந்த பொற்பினாள் என்று பொய்க்கதை படிக்கின்றாள்” என்றாள்.

லலிதை “உன் கைபற்றி சொல்லளித்துச் சென்றவர் எவர்?” என்றாள். “கண்ணன் என் கணவன். பரதர் குடிப்பிறந்தான். படகேறி கடல் செல்வான். நீர்வெளி நிறத்தான். நிகரிலா அழகுகொண்டோன்” என்றாள் ராதை. ஏழ்நரம்பும் தளரும் யாழ் ஒலி எழ மூச்செறிந்தனர் கோபியர்.

“தென் திசையில் ஒரு நீலக்கடல் ஓரம் நான் நின்றிருக்கக் கண்டேன்” என்று ராதை சொன்னாள். "பெருமணல் உலகம். பொழியமைந்த துறைமையம். கடற்காகம் காத்திருக்கும் கட்டுமர நிரைகள். கண்டலும் புன்னையும் கடம்பும் தென்னையும் ஞாழலும் தாழையும் சூழ்ந்த நிலம். விரிநீர் ஆளும் வருணன் கோயில்கொண்ட சிற்றூரில் நானொரு பரத்தி என நின்றிருந்தேன். என் முன் அலைஎழுந்து நுரை விரிந்து துமி தெறிக்க கூவி ஆர்த்தது நீலக்கடல்."

"கொடுங்கடல் புகுந்து சுறா எறிந்து பெயர கொழுவேந்திச் சென்றவன் என் கைவளை உடைத்த கள்வன். அவன் கையில் என் குலத்து குறிகொண்ட நூல்சுற்றினேன். அவன் தோளில் நான் சாய்ந்த குங்குமம் படிந்தது. காற்றில் ஏறும் காகம்போல் கட்டுமரம் அலைமேல் ஏற கைவீசி கரை நின்றேன். என்னைச்சுற்றி நீலஇதழ் விரித்து நீர்த்துளி சுமந்து நின்றிருந்தது நெய்தல் மலர்தொகை. என்னைச்சுற்றி “கன்னி நீ! கடல்முனைக் குமரி நீ!” என்று சொல்லிச் சுழன்றது உப்புக் கடல் காற்று."

“காலூன்றி நின்று நானொரு கரும்பாறை ஆனேன். காலங்கள் என்மேல் வழிந்தோடக் கண்டேன். கன்னி என் கண்ணீர் கடல்மணலாயிற்று. காலையும் மாலையும் கையறு மதியமும் சோலையும் பாலையும் சொல்திகழ் நகர்களும் என் முன் அலையென எழுந்து அமைந்திடக் கண்டேன். என் கண்ணீர் தொட்டு கடல் சென்று மறைந்த கரியோன் வரக்காணேன்!” ராதை விம்மியழுதாள். அவள் கையிரண்டைப்பற்றி லலிதை “உனக்கு நான் சொல்ல ஏதுமில்லை தோழி. நீ வாழும் உலகில் நூறு செஞ்சூரியன், ஆயிரம் குளிர்நிலவு” என்றாள்.

பகுதி ஒன்பது: 3. கருத்தழிதல்

பெருந்துயர்போல் இப்புவியை பொருள்கொள்ளச் செய்வது பிறிதில்லை. சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சொல்ஒன்று குடியேறுகிறது. அச்சொல்லின் நிறை எழுந்து அவை மண்ணில் மேலும் மேலுமென அழுந்தி அமர்கின்றன. அவ்விடத்தில் அக்காலத்தில் முழுதமைகின்றன. அவை சுமந்து இப்புவியே பன்மடங்கு எடைகொள்கிறது. புவிசுமக்கும் ஆமையின் ஓடு நெளிகிறது. நீளும் தலையின் விழிகளில் நிறைகிறது முடிவிலியின் பெருஞ்சுமை.

இரும்பு உருகி வழிவதுபோல் காற்று. வெள்ளி விழுதுபோல் ஒளி. திசையெங்கும் கற்கள் தெறிப்பது போல் சூழ்ந்து தாக்கும் ஒலிப்பரப்பு. எண்ணங்கள் எடைகூடி என் மீதே படிந்துவிட்டன. காலமும் எடைகொண்டதோ? கரியமலைபோல அடுக்கடுக்காய் அலையுறைந்து அமைந்ததுவோ? வானக்கூரை வளைந்து இறங்கத் தொடங்கிற்றா? என் இல்லம் இறுகி உட்சுருங்கி ஒரு சிறுகூடாகி சிமிழாகி தொலைந்து போயிற்றா?

அனுப்பப்படாத செய்தி போல கொடியது ஏதுண்டு? எத்தனை காத்திருந்தாலும் அது வந்து சேர்வதில்லை. தெய்வங்களே நினைத்தாலும் அதை கையளிக்க முடிவதில்லை. அதற்கு சொல்லில்லை. பொருளும் இல்லை. விடுத்தவரும் பெற்றவரும் இல்லா விண் ஒன்றில் எப்போதுமென இருந்துகொண்டிருக்கிறது அது. இம்மண்ணில் அத்தனை மானுடரும் மறைந்தபின்னரும் அது அங்கிருக்கும்.

நதிக்கரையில் தலைசாய்த்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருக்கிறேன். என் நெற்றிமேல் உதிர்ந்த மலரை ஏறிட்டு நோக்கினேன். எத்தனை நாள் காத்திருந்தாய் இறுதிப்பற்றும் அழிவதற்கு? இக்கணத்தை தேர்ந்தெடுத்தது யார்? நீயா, உன்னில் நிறைந்திருந்து வழிந்தோடிய தேனா, மணமா? அதன் இதழ்களில் வண்ணமும் வாசமும் எஞ்சியிருந்தன. அதற்குள் வாழ்ந்த சிற்றெறும்புக்கூட்டம் தங்கள் உலகம் உதிர்ந்ததை அப்போதும் அறிந்திருக்கவில்லை.

என் மேல் எழுந்த அப்பூங்கொத்தில் எஞ்சிய மலர்களை நோக்கியிருந்தேன். உதிர்ந்த மலரை விட ஒரு சொல் நம்பிக்கை கொண்டவை. ஒவ்வொரு மலருக்கும் ஒரு சொல் ஒரு சொல்லென கூடி இறுதியில் உதிரும் அம்மலரிடம் இருப்பது ஓர் ஆறுதல்மொழி என்றாகுமோ?

மேலும் ஒரு மலர் என் மடியுதிர்ந்தது. என் கையில் எடுத்து கண்முன்னே நோக்கினேன். அதற்குள் உருக்கொளாது கருக்கொளாது வெறும் நினைப்பென வாழ்ந்த காடு பெருமூச்சுவிட்டது. அதில் மலரவிருந்த மலர்கள் கனியவிருந்த கனிகள் பாடவிருந்த பறவைகள் என்னிடம் சொல்லின ”இருத்தலெனும் பேறு எய்தாது இருத்தலைப்போல் துயருண்டோ?”

இன்னொரு மலர் உதிர்ந்து என் தோள் தொட்டு விழுந்தது. மெல்லிதழ் அடுக்கை எத்தனை முறைசெய்து பயின்று அமைத்தது மலர்களின் தெய்வம்? நுண்ணிய நரம்பின் பின்னல்கள். புல்லிவட்டத்தின் மலர்வை, அல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதி ஊதிப்பொருத்திய உலைமூச்சு எது? அந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கே? இங்கே வீணுக்கு உதிர்ந்து வெறுமைகொண்டு மட்கி மீண்டும் உப்பாகையில் எங்கு சென்று நின்று ஏங்கி விம்முகிறது இம்மலரின் எழில்?

அழிவதெல்லாம் அழகு. இப்புவியில் துயரெல்லாம் பேரழகு. உதிர்வதாலேயே மலரழகு. காலப்பெருவெளியில் கரைவதாலேயே மலை பேரழகு. ஏங்கி தலைகுனிகிறது ஆம்பல். இதழ் சுருங்கி சொல்லவிகிறது பாதிரி. கண்புதைக்கிறது கருவிளை. கனலணைகிறது காந்தள். எரிவிண்மீன் என உதிர்கிறது பலாசம். எங்கும் குருதியென வழிகிறது செம்மல். உதிர்ந்த மலர்களின் துயரால் பூசைசெய்யப்படுபவள் இப்புவியரசி.

உதிர்ந்து உதிர்ந்து ஒழிந்தது மலர்மரம். வண்ணமிழந்து அசைந்தன கிளைகள். நதி உமிழ்ந்த நீர்க்காற்றில் நீள்மூச்செறிந்து அசைந்தது நீலக்கடம்பு. பின்னர் இலையுதிர்க்கத் தொடங்கியது. “ஏன்?” என்று தலை தூக்கிக் கேட்டேன். “ஒவ்வொன்றாய் உதிர்க்காமல் நீந்திக்கடக்கலாகாது இத்துயரின் பெருங்கடலை” என்றது. தளிருதிர்க்கும் மரத்திலிருந்து பறவைக்கூட்டம் எழுந்துசென்றது. இளங்கிளையுதித்து அசைந்தது. பின் தன்னை உதிர்த்து நீரைத் தழுவி அசைந்தது. வேருடன் எழுந்து நீர்வழியே ஒழுகியது.

எழுந்து நின்று கால்பதற கண்பதைக்க நோக்கினேன். நதிக்கரை மரங்களெல்லாம் ஒவ்வொன்றாய் நீரில் உதிரக்கண்டேன். உதிரும் மலர்களைப்போல ஓசையின்றி. இதுவே விதி என்று ஏற்றுக் கொண்டதுபோல். இனியொன்றும் இல்லை என்று தடமேதும் எஞ்சாமல். நீலக்கடம்புகள். நீர்மருதுகள். கிளை விரித்த கொன்றைகள். இலைதழைத்த வேங்கைகள். மூங்கில் கூட்டங்கள் நாணல்புதர்கள்போல் செல்லக்கண்டேன். மேயும் பசுவின் நாக்கென பசுங்கரையை அள்ளிச்சென்றது யமுனை நீரோட்டம்.

நீரலைகளை நோக்கி நெஞ்சழிந்து நின்றிருந்தேன். யமுனை நீர்வற்றி குறைவதை பின்னர் கண்டேன். கலம் கொதிக்கும் நீரென கொப்பளித்து அலையடித்து விளிம்பு தாழ்ந்து விலகிச் சென்றது நதி. கருநீலம் வெளுத்து இளம்பச்சை ஆகியது. ஆற்றிடைக்குறைகள் ஆமை முதுகுகள் எழுந்து வரக்கண்டேன். நீரோட்டம் விரைவழிந்து சிற்றோடைத் தொகையாயிற்று, அரவுக்குழவிகள் போல் பின்னியும் பிரிந்தும் வெண்மணலில் நெளிந்து போரிடும் வாட்கள்போல் ஓடைகள் மின்னக்கண்டேன். பளிங்கு வெளி உடைந்து சில்லுகளாய் சிதறக் கண்டேன். பெருநதியின் மோனம் புலம்பும் சொற்களென சிதையக் கேட்டேன்.

விண் நோக்கி விரிந்த விழிகளென நீலக்குளங்களாகி நீண்டு கிடந்தது யமுனை. அதன் சேற்று அலையெழுந்த சதுப்பில் பாசிப்படலங்கள் படிந்தன. அதன் ஏட்டுப்பரப்பில் மூவிரல் எழுதி நடந்த பறவைகளும் சிறகடித்தெழுந்து மறைந்தன. வெண்கொக்குகள், விரிசிறை நாரைகள். நீர்க்காகங்கள், நீலமணி மீன்கொத்திகள். இறுதிப்பறவை எழுந்து சென்ற சிறகடிப்பை நெடுநேரம் தன்னில் நெடுமூச்செறிந்து வைத்திருந்தது நதி.

சேலையை முழங்கால் ஏற்றி சேற்று வெளியில் இறங்கி நடந்தேன். அறுநீர் சிறுகுளங்களில் வெள்ளிவிழிகள்போல் துள்ளியும் சுழன்றும் மீன்கள் தவிப்பதைக் கண்டேன். வானம் வானமென்று அவை அள்ளி விழுங்கி சிறகலைத்து விழித்தன. சருகுநெரியும் ஒலியுடன் மண் நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தது. படிகமணிமாலை போல் திசைமுனைவரை நீண்ட நீர்விழிகள் ஒவ்வொன்றாய் இமைமூடி மறைந்தன. என் காலடியின் சிறுகுட்டை சுருங்கி மையத்தில் சுழியாகி மறைய சேற்றுவெளியெங்கும் கொப்புளங்கள் உடையும் சிறுமூச்சுகளை கேட்டேன்.

துள்ளித்துள்ளி விழுந்து துடித்து விழித்து அசைவிழந்தன சிறுமீன்கள். சேற்றுப்பரப்பில் கால்வைத்து நடந்து சலித்தன நீர்ச்சறுக்கிகள். உலர்ந்த உதடுபிரிவதுபோல் மண்வெடிக்கும் மெல்லொலி கேட்டேன். வலைவிழுந்து விரிந்ததுபோல் என்னைச்சூழ்ந்து வெடிப்புகளாகப் பரவியது யமுனைவெளி. கானல் அலையடித்து கண்களை மூடியது. அனல்காற்று எழுந்து ஆடைபறக்கச் செய்தது. காலடியில் வெண்மணல் புதைய ஓடி மூச்சிரைக்க நின்றேன். வாழ்விருந்த சுவடெல்லாம் வீண்கனவாய் மறைய விரிந்திருந்த பாழ்நிலத்தைக் கண்டேன்.

நீர் நீர் என்று என் நினைவில் எழுந்து நெஞ்சில் குவிந்து நாவில் எரிந்து உடலெங்கும் பரவியது விடாய். உடும்புபோல் நா நீட்டி நீர் தேடி விழிசுற்றி நோக்கினேன். சுடுமணல் கால் சோர ஓடி விழுந்தேன். களைத்த செந்நாய்போல் மூச்சிரைத்தேன். வெட்டவெளியின் கீழ் திசைமூடி நின்றிருந்த வெறுமையைத்தான் கண்டேன். கண்ணருகே வந்து கானல் காட்டி நகைத்தன என் தெய்வங்கள். மன்றாடும் சொல்லெல்லாம் உதிர்ந்து உலரக் கண்டேன். என் இறுதிச்சொல்லும் உலர்ந்து மறைய எஞ்சியதே நான் என்று உணர்ந்தேன். அந்நுண்மையை நீ என்றும் நான் என்றும் இங்கென்றும் இனி என்றும் பகுத்தேன். அந்நான்கு திசையின்மேல் எழுந்து அனல்கக்கி நின்றிருந்தது என் வானக்கூரை.

புரோஷிதஃபர்த்ருகையை தொடர்கின்றன ஒலியற்ற கால்கொண்ட ஓநாய்கள். விழியொளிரும் செந்நாய்கள். பசித்த கழுதைப்புலிகள். அவள் குருதியின் சுவையை அவை அறியும். அவள் காலடியின் கண்ணீர் முகர்ந்து அவை நாதுளிக்கும். அவள் நெஞ்சத்தசை கிழித்து கொதிக்கும் குருதியுண்டு இதயத்துடிப்புண்டு அவை எழுந்து நடமாடும். இருளுக்குள் அவற்றின் ஒலி எழுந்து வளைந்தாடும்.

கைவிடப்பட்டவள் செல்லும் வழியெல்லாம் நீரின்மைகள். உயிரின்மைகள். அவள் குனிந்து நோக்கும் கிணறெல்லாம் பாதாள வாயில்கள். அங்கிருந்து விழியொளிர நோக்குகின்றன நிழல்நாகநெளிவுகள். பாலைப்பண்பாட யாழுக்கு நரம்பெதற்கு? முரசுக்கு தோலெதற்கு? அவை கொள்ளும் வெறுமையே நாதமாகும். என் மெலிந்த விரல்கள் தனஸ்ரீயை தொட்டெழுப்புகின்றன. என் உலர்ந்த உதடுகளில் காம்போதி சொட்டுகிறது. பாம்புச்சட்டையென மின்னி அசைகிறது. மணல்பாதத் தடம்போல மெல்லமெல்ல அழிகிறது.

தொலைதூரத்து மலைகள் கடுமைகொண்ட முகத்துடன் குனிந்துநோக்குகின்றன. அப்பால் உறுமி எழுகின்றது மணல்புயல். ஓங்கி அறைந்து ஓலமிட்டு வந்து சூழ்ந்து இரைந்து கடந்தோடுகிறது. சீறிச்சினந்தோடும் பிச்சியின் மேலாடை. தன்மேல் எழுந்தவற்றை எல்லாம் உள்ளிழுக்க விழைகிறது பூமி. தன் உள் கனலும் அனலுக்குள் மூழ்கடிக்கப் பார்க்கிறது. உள்ளும் புறமும் அனலாடும் நிலம். பாழ்நிலம். இங்கொரு நதி இருந்தது. அதில் கோடிமுகம்கொண்டு உயிர் வாழ்ந்தது. கணந்தோறும் நிழல்மாறியது. அதன் குளிரொளிமீது வானிறங்கியிருந்தது. பாழ்நிலம். தகிக்கும் வீண்நிலம். கோடி ஆண்டு எரிந்தாலும் கருகி அணையாத பெருஞ்சிதை.

உருமறைந்து நிழல் எஞ்சியது போலானாள் ராதை. எந்நேரமும் அவள் உடல் கொதித்துக்கொண்டிருந்தது. கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத்தொட்டு “ஓயாத வெம்மை. எம்மருந்தாலும் குளிராத அனல். என்னடி செய்வது?” என்றாள் மாமி. “ஊரிலுள்ள பச்சிலை ஒன்று மிச்சமில்லை. வைத்தியர்கள் இங்கே வருவதும் ஒழிந்தார். இனி நான் செய்வதற்கும் ஏதுமில்லை. இங்கு இவள் இறந்துவிட்டால் என் மகனை பழிசொல்வார். என் குலத்தை ஒதுக்கிவைப்பார். ஏதென்றறியேன், எப்பிழைதான் செய்துவிட்டேன்?”

“வெள்ளிக்குடத்தின் வளைவிலெழும் பாவைபோல் நீண்டு மெலிந்துவிட்டாள். வேனில் ஓடைபோல் வற்றி மறைவாளோ?” என்றனர் அண்டைவீட்டு ஆயர்ப்பெண்கள். அவள் கண்கள் உலர்ந்து ஒளியிழந்தன. இமைசுருங்கி கருநிழல் கொண்டன. வெந்த புண்போல வாய் வெடித்தது. ஆடை நில்லாது தோள் மெலிந்தது. கழுத்தில் மணிமாலை பாலம் போல் நின்றது. இடை துவண்டு உடல்நிற்காதாயிற்று. இளமுலைகள் ஒடுங்கின. கைநரம்புகள் எழுந்தன. “அகம் நின்று எரியும் சிதை என்றாயிற்று இவள் உடல்” என்றான் ஆயர்குலப்பாணன். “அவள் உளமேறி அமர்ந்த தேவன் உலகு விட்டு வானெழப்போகிறான்.”

வாயில் படிமீது அமர்ந்து வெற்றுவிழி விரித்து வெட்டவெளி நோக்கி அமர்ந்திருந்தாள். இரவும் பகலும் கடந்துசெல்வதை அவள் அறியவில்லை. இறப்பும் இருப்பும் ஒன்றேயான ஒரு சரடு. அதன்மேல் தன் உடலால் இழைந்து சென்றது சிறு நத்தை. சுருண்டு கனக்கும் தன் இல்லத்தை சுமந்திருந்தது. அதனுள் அது வாழ்ந்திருந்த இடம் வெறுமையென நிறைந்திருந்தது. செவியும் நாவும் விழியும் நாசியுமான கொம்புகளை காற்றில் அசைத்து அறியமுடியாமையை அறிந்தது. அதன் பின்னால் நீண்டு ஒளிரும் நிறம்குழம்பிய கோடு.

வேனல் எழுந்த வெம்மை பரவி கருகி நின்றது காடு. கிளை பட்டு நின்றது பெருமரம். அதன்மேல் மொட்டு மொட்டு என்று கொத்திக்கொண்டிருந்தது பூந்தலை மரம்கொத்தி. கொத்திக் கொத்தி அது அமைக்கும் நானிருக்கும் காலம். நத்தை ஊரும் வழியாக நீண்டுசெல்லும் நீ அமைந்த காலம். ஊர்ந்து ஊர்ந்து நத்தை உணரும் நீள்காலம். நத்தைக் கொம்புணரும் காலம். நத்தை உடலுணரும் காலம். நத்தை அகமுணரும் காலம். காலில்லா உடலுக்குள் எழுந்த பெரும்புரவி!

சாணிமெழுகாது மண்ணெழுந்த திண்ணையில் எறும்புகள் தேடிப்பரிதவித்தலைந்தன. கண்டாயா? கேட்டாயா? என ஒன்றுடன் ஒன்று கேட்டுக்கொண்டன. சிலந்தி வலைநோக்கி சிறகடித்தன பூச்சிகள். மண்குழியில் ஒவ்வொன்றையும் தன்னைநோக்கிச் சரித்துக்குவித்து அழைத்து புதைந்து அமர்ந்திருந்தது குழியானை. காலெடுத்து வைத்து பின்னகர்ந்து காலத்தை அறியும் விழியின்மை கொண்டது.

அந்த மென்சுழியில் மணற்புயல்கள் சுழல்கின்றன. ஆயிரம்கோடி பிரம்மன்கள் கருக்கொள்ளும் கருஞ்சுழி. அணையாத காலத்தை அள்ளி அணிந்த குழி. சரியும் மணலில் ஒரு காலடியும் நிலைப்பதில்லை. ஒவ்வொரு கணமும் அது புதியது. அப்போது அதற்கென்றே வாய்திறந்தது.

இந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சிறு இதயம். அவ்வுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. தவிப்பே கால்களானது. வியப்பே சிறுவிழிகளானது. செல்லாதே செல்லாதே என அவள் சிறுவிரலால் தள்ளிவிட்டாள். சுற்றிச்சுற்றி அது ஒருவழியையே தேடியது. தன் சுட்டுவிரலில் எடுத்து விழியருகே நோக்கினாள். குருதியே ஓர் உயிரானதோ? எங்கோ சுழித்தோடும் உதிர நதியொன்றின் துளியோ? இங்கே பச்சை ஊன் வாசம் பெருகி நிறைய வந்த அதன் தூதோ?

அவள் விரல் விட்டு உதிர்ந்து நான்குகால்களில் இழைந்து மணல் சரியும் காலப்பெருஞ்சுழி நோக்கிச் சென்றது. உடல்நடுங்க உலர்ந்த உதடுகள் அதிர அவள் நோக்கி குனிந்திருந்தாள். இதுவே, இங்கே, இதற்காகவே என கால் தூக்கி வைத்தது. புதைத்து இழுத்த விசையை அறிந்ததும் அஞ்சிப் பதைத்து அடியிழுத்து மீள முயன்றது. வெளிநோக்கும் காலடி ஒவ்வொன்றும் உள்நோக்கி கொண்டுசெல்லும் முறைகண்டு ஒலியின்றி கூவி அதிர்ந்தது. சுழிமையம் காத்திருந்தது. அதன் அடியிருளில் கரிய உடல் எழுந்தது.

கரிய விஷக்கொடுக்கு. அசையாமல் பற்றி ஆவி உறிஞ்சும் கரிய பெருங்கால்கள். கரியவாய் ஒன்று கடித்து உண்ணும் கனிந்த இதயத்தை கைகொண்டு நெஞ்சழுத்தி பார்த்திருந்தாள். விஷம் ஏறி துடிதுடித்து தளர்ந்து அமைந்தது இந்திரகோபம். குருதிக்குவைமேல் ஏறி உறிஞ்சி உண்டு சுவையறிந்து மதம் கொண்டு மத்தகம் அசைத்து கொம்பு உலைத்தது இருள். மண்சரிந்து மூடி ஏதுமறியாத இனிய மென்மையாக எஞ்சியது சுழி. வெறும் வெளியின் ஒற்றை விழி.

அழுகை ஒலிகேட்டு மாமி ஓடிவந்து பார்த்தாள். “என்னடி? எதைக்கண்டாய்? ஏன் அழுகின்றாய்?” என்றாள். எழுந்தோடி முற்றத்தையும் அப்பால் எழுந்த வழிகளையும் பெருநீர் புரண்டோடும் யமுனையையும் பார்த்தாள். மாமரங்கள் கிளைசலிக்காது நிற்கக் கண்டாள். ஆநிரைகள் கண்களில் ஈரம் கண்டாள். குயில் ஒன்று கூவும் கீதத்தின் துயரைக் கேட்டாள். திரும்பி வந்து “ஏனடி? ஏன் இந்தத் துயரம்? சொல்லித் தொலையடி, என் இல்லம் எழுந்த இருளே” என்று அவள் தலையிலும் தோளிலும் அடித்தாள்.

முடிபிடித்து உலுக்கி சுவர்மீது மோதி “சொல்லடி. வாய் திறந்து சொல்லடி. எவனுக்காக காத்திருந்தாய்? யாரை எண்ணி கண்ணீர் விடுகின்றாய்? குலமங்கை நெஞ்சில் விஷம் சேர்த்த கயவன் எவன்?” என்று கூவினாள். அஞ்சிய நாகம்போல் உடல்சுருட்டி முகம் புதைத்துக் கிடந்தவளை உதைத்து இழுத்து இருளறைக்குள் தள்ளினாள். “இனி உன்னை வாசலில் கண்டேன் என்றால் இருகாலும் அடித்து உடைப்பேன். நீ பித்தியல்ல, பிழை நெஞ்சச் சிறுக்கி” என்றாள். இருளுக்குள் மெல்ல விசும்பி உடலதிர்ந்து கிடந்தாள் ராதை.

பெருந்துயர்போல் இப்புவியில் ஓசையற்றது ஏதுமில்லை. மலைமுடிப்பாறைபோல எவரும் காண்பது. ஒருபொருளும் அற்ற முழுமை. ஒருவரும் கலைக்காத தனிமை. பெருந்துயர் போல் மானுடர்க்கு இனிதாவதொன்றும் இல்லை. அள்ள அள்ளப் பெருகும்.உண்ணும்தோறும் பசிக்கும். பெருந்துயர்போல் துணையாகும் தோழியும் வேறில்லை. ஒரு சொல் பேசாமல் உடனிருக்கும் கனிவு விழியாக வெம்மையாக சூழ்ந்தமையும் தகவு. பெருந்துயர்கொண்ட உள்ளம்போல் அழகியதொன்றும் இல்லை. அது தன்னை அள்ளி தான் நிறையும் விரிவு.

பகுதி பத்து: 2. விழி

அதிகாலையில் என் அரண்மனை அதிரக்கேட்டு விழித்தேன். அசுரர்களோ அரக்கர்களோ ஆழுலக நாகங்களோ என்று திகைத்தேன். கணம்பிரியா துணையான உடைவாளை கைதொட்டேன். எழுந்து இருள் நடந்து சென்றேன். இல்லை என்பது போல் சாளரத்தருகே நின்றேன். ஒருகணம் கழித்தே உணர்ந்தேன். என் மாடமுகட்டின் மணிக்கொடிகள் சிறகடிக்கும் ஒலிதான் என்று. களிகொண்ட பறவைகள் போல் சிறகடித்துக் கூவி கூர் நகம் கொண்ட கைகளால் என் மாளிகை முனைபற்றி வானிழுத்து ஏறமுயன்றன அவை. சுவர்களும் தரையும் பந்தச் சுடர்களும் திரைகளும் நடுங்கக் கண்டேன். அது என் அகம்நடுங்கும் அசைவே என்று பின் உணர்ந்தேன். வந்திழிந்து மண் தொட்ட நாளுக்குப்பின் இந்நாளே என் வாழ்வின் இன்னொருநாள் என்று எண்ணி நின்றேன்.

விடியலில் சுபூதன் வந்து வணங்கி “வரும் வழியை நோக்கி நின்றேன். வண்டிகள் அணைவது கண்டேன். முதல் வண்டியில் நந்தகோபரின் கன்றுக்கொடி கண்டேன்” என்றான். அறியாதெழுந்த சினம் எரிய “அதனுள் கருமைந்தன் இருக்கின்றானா என்று கண்டாயா? மூடா!” என்று இரைந்தேன். சுபூதன் “இப்போதே சென்று கண்டுவருவேன்” என்று விரைந்தான். நிலைகொள்ளா நடையுடன் அறை அளந்தேன். அணுக்கச்சேவகன் வந்து அரவமின்றி நின்று “அணிகொள்ளலாகுமா?” என்றான்.

நீராடி அமுதுண்டு அந்தப்புரம் சென்றேன். நெஞ்சழிந்து சொல்மறந்து அமர்ந்திருந்தேன். என் வருகையறிவிப்பு கேட்டு மகத அரசியர் மணிச்சிலம்பும் அணிகளும் ஒலிக்க வந்தனர். தாம்பூலத்தட்டுடன் ஆஸ்தி வந்து என் முன் அமர்ந்தாள். இன்கடுங்கள்ளுடன் பிராப்தி வந்து என் இடப்பக்கம் அமர்ந்தாள். “இன்று என்ன எழுந்தருளல் இத்தனை விடியலிலே? நேற்றிரவு தங்கள் தாள்பட்ட தடம் இந்தத் தரைவிட்டு அகலவில்லை” என்றாள் ஆஸ்தி. என்றும் என் உளம் நெகிழ்க்கும் அம்முகங்கள் வண்ணத் திரைப்பாவைகள் என வெறுமனே அசைந்தன. நெடுமூச்செறிந்து அவள் தந்த தாம்பூலத்தை தட்டி விலக்கி எழுந்து சாளரத்தருகே சென்று சரிந்தெழும் காலை ஒளிநோக்கி நின்றேன்.

என்னதான் எண்ணுகிறது என் நெஞ்சம்? அச்சமேதுமில்லை. ஐயமும் சற்றுமில்லை. மிச்சமில்லை மிச்சமில்லை என்று தொட்டு எரித்துச் சென்றபின்னும் எச்சமென்றே எஞ்சுகிறது என் அகமெழுந்தவை எல்லாம். இச்சகத்தில் உள்ளதெல்லாம் என்னுள் எப்பொருளும் கொள்ளவில்லை. என்னவென்று மயங்குகிறேன்? தாழ்திறக்கும் தருணம். அறியாத வாயிலொன்றின் இருள் அவிழும் அருங்கணம். என் ஊழ்திறந்து வைத்த ஒரு சொல்லின் பொருள் அறியவிருக்கிறேன். கரியன். என் படைகளுக்கும் பழிகளுக்கும் அரியன். துயிலிலும் விழிப்பிலும் நான் எண்ணும் அடியன். பீலிக்குழல் முடியன். என் குலப்பெயர் சூடும் மைந்தன். என் விழியின்னும் தீண்டாத முகத்தன்.

மெல்ல அருகணைந்து என் தோளணைத்து “நந்தர்குடிச் சிறுமைந்தன் வந்தணையும் நேரம் எது?” என்றாள் ஆஸ்தி. அவள் விழிநோக்கி “எவன்?” என்றேன். குரல் கனிந்து “தேவகி மைந்தன் என்றார். தேவரும் விரும்பும் நீலன் என்றார். நகருள்ள பெண்களெல்லாம் அவன் எழில்காண ஏங்கி வாயில் நிறைத்திருக்கின்றார்கள்” என்றாள் பிராப்தி. முகம் நெகிழ்ந்து நெஞ்சம் ஊறிக்கனத்து இடை ஒசிந்து ஆஸ்தி “அரண்மனையில் எவரும் நேற்றிரவு துயிலவில்லை. அவன் மணிநிறத்தழகும் அவன் சூடும் மயிற்பீலி அழகும் இடையணிந்த பொற்பட்டழகும் கழல் கொண்ட தாளழகும் சொல்லி சொல்லி விடியவைத்தார்” என்றாள்.

வெங்குருதி தலைக்கேற கைதூக்கி பின் அவர் விழிநோக்கி மெல்ல அடங்கி “செல்லுங்கள் உள்ளே. இனியிங்கு எவரும் நிற்கலாகாது” என்றேன். கால்தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து கையில் தலைசாய்த்து கண்மூடிக் கொண்டேன். நீல ஒளி நெளியும் நதியொன்று ஓடும் விழிப்பரப்புக்குள் நின்று சுழன்றெழுந்த நீலக்குழலோசை கேட்டேன். வியர்த்து எழுந்து விதிர்த்து நின்று அருகமைந்த மரக்கிளையின் குயில் அது என்று உணர்ந்தேன். எங்கிருக்கிறேன் நான்? என்னவென்று எஞ்சுகிறேன்? சென்றடைந்த தொலைவெல்லாம் பின் திரும்பி நடக்கிறேனா? வென்றடைந்ததெல்லாம் வீணென்று உணர்கிறேனா? இங்கிருக்கும் இவன் யார்? கம்சனென்று பெயர்கொண்டு கள்ளம் உளம்நிறைத்து வந்து நின்றிருப்பதுதான் என்ன?

கிருதசோமன் வந்தடுத்தான். வணங்கி முகம் தாழ்த்தி, “வில்விழவு கூட ஆயர் வண்டிகள் அணைந்துகொண்டிருக்கின்றன. நந்தன்மைந்தனுடன் அக்ரூரர் அரண் கடந்தார்” என்றான். பெருமுரசுப்பரப்பை தொட்டது முழைக்கழி. ஆழ்கிணற்றில் அலைகொண்டது இருட்சுழி. ஒரு சொல்லும் சொல்லாமல் தோளாடை சுற்றி எழுந்தேன். “அவர் அமைய அரண்மனை புறமாளிகை அளித்தேன். ஆவனவெல்லாம் செய்ய ஆணையும் இட்டேன்” என்றான். தலையசைத்து விழிதிருப்பி என் மஞ்சத்தில் துணையிருந்த உடைவாளை நோக்கி தலைதாழ்த்தினேன். நான் எண்ணுவது நின்று எஞ்சியது ஒரு சொல். “எப்படி இருக்கிறான் மைந்தன்?” அதை என் நா கேட்கவில்லை என்றறிந்து என்னை வியந்து களித்தது புத்தி. கேள் கேள் என்று உள்ளறைக்குள் உந்தியது சித்தம். கேட்பேனா என வியந்தது உள்ளமைந்த சித்தி.

விழியில் விஷம் ஒளிர குரலில் எடை கூட முகம் தாழ்த்தி “கொலைக்களிறு குவலயாபீடம் அணிகொண்டது. அதன் மத்தகத்தில் மதம் நிறைய மதுகொடுக்கச் சொன்னேன். அணிவாயில் முன் அதை நிற்கவைத்தேன். இளமைந்தன் சிறுதோளில் மலைவேங்கை மலர்மாலை அணிவிக்க ஆணையிட்டேன்” என்றான் கிருதசோமன். ”வேங்கை வாசத்தில் வேழம் எழும் என்றான் பாகன். இன்று மாலை அது மால் கொள்ளும். மைந்தன் உயிர் வெல்லும்” என்றான். என் அகம் திகைத்து அவனை ஏறிட்டேன். ஒருகணம் நோக்கி பின் ஒன்றுள் ஒன்றென அமைந்து “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றேன்.

என் மஞ்சத்தறை சென்று மது கொணரச்சொன்னேன். விழிசிவக்க உடல்ததும்ப வெற்றுச் சொற்களென சித்தம் சிதைந்தோட விழித்து படுத்திருந்தேன். என் கட்டில் எழுந்து யமுனைப் பெருக்கில் படகென ஓடுவதை உணர்ந்தேன். இந்த நாள் ஒன்று சென்றதென்றால் இனி நான் ஆவதற்கொன்றுமில்லை. இமை தொட்டு வருடும் அண்மையில் இமயத்தைக் கண்டதுபோல் இத்தருணத்தைக் காண்கிறேன். முன்னெடுத்து வைக்க ஓர் அணுவும் இடமில்லை. மலைப்பாறை என உறைந்த காலம். கரும்பாறை என மூடிய காலம். பாறை வழிதிறந்து பாதை எழவேண்டும். விண்ணில் நெறிகளை வைத்து மண்ணில் வாழ்வை விட்டு சூழ்ந்திருந்து சூதாடும் தெய்வங்களே இன்றொருநாளில் வாழ என்ன தவம் செய்துவிட்டேன். காலப்பெருக்கை இறுக்கிச்செறித்து ஒரு கணமென ஆக்கிவிட்டீர். யமுனைப்பெருக்கு ஓர் இலைநுனி தனித்துளி என்றாக்கி விட்டீர். இவ்வொற்றைக் கணத்தில் ஒரு யுகம் வாழ்வேன். பொற்கணம். பொலிந்து நிற்கும் அருங்கணம். நீலன் வந்தணைந்த கணம். நீலவிஷக் கணம்.

தம்பியர் வந்து அறைவாயிலில் நிற்கக் கண்டு எழுந்தேன். தலைகுனிந்து மஞ்சத்தில் அமர்ந்து “சொல்க” என்று கையசைத்தேன். நியகுரோதன் தலைவணங்கி “தேரேறி வந்தார் மூவர். அக்ரூரர் அருகே அமர்ந்திருந்த மைந்தரில் மூத்தோன் பலராமன். வெண்சுண்ண நிறத்தன். பெரும்புயத்து மல்லன். இளையோன் இன்முகம் கொண்டோன். கண்ணன் என்றழைக்கின்றார். நீலமணி வண்ணன். நீள்விழியன். நெடுங்கையன். இளங்கன்று நடையன்” என்றான். “கன்றோட்டும் கோல் அவன் கையில் இல்லை. கைநின்று தேய்ந்த வாள் ஒன்று உள்ளது. மூத்தவனோ கதை கொண்ட தோளன். கடும் நோக்கு விழியன்.”

சுநாமன் வணங்கி சொன்னான் "இன்றுகாலை நம் அரண்மனையின் ஆடைதுவைப்போனிடம் அரச உடையொன்றை கேட்டார் அக்ரூரர். 'ஆவோட்டும் இடையனுக்கு அரச உடை எதற்கு?' என்று அவன் பதிலுரைத்தான். இளையோன் அவன் தலையடித்து தரைவீழ்த்தி நெஞ்சில் கால் வைத்து நிமிர்ந்து சூழ நோக்கி 'இதோ இவன் பேணும் உடையனைத்தையும் நானெடுத்துள்ளேன், இதை மறுக்க எவர் எழுந்தாலும் வாளெடுத்து வந்து களம் வென்று சொல்லெடுக்கட்டும்' என்றான். அவன் கைவிரைவு கண்டோர் கால்தளர்ந்து பின்சென்றனர். அணியாடை புனைந்து அரண்மனை முன் அமர்ந்தான். இந்நகரை ஆளும் அரசன் போலிருக்கின்றான். மணிமுடியும் செங்கோலும் புனைய வந்தவன் எனத் தெரிகின்றான்."

கங்கணன் சொன்னான் "மூத்தவரே, மணிநீலம் குழைந்து மலர்போல ஆனதே அவன் மனமென்கின்றனர் விழவுக்கு வந்த வெளிநாட்டுச் சூதர். அரண்மனைக்கு சந்தனமும் லேபனமும் செங்குழம்பும் அகிலும் கொண்டுவரும் கிழவி திரிவக்கிரை இன்று அந்த அரண்மனை வழிவந்து அவன் எழில்கண்டு நின்றுவிட்டாள். 'நீலம் பொன்கொள்ளும் எழிலை என் விழி காணவேண்டும். என் கை நறும்சாந்து உன் இருதாள் சேரவேண்டும்' என்றாள். அவள் கைபற்றி முக்கோணல் கொண்ட அவள் முகம் தொட்டு தூக்கி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான் சிறியோன். ஒளிபட்ட படிகம் போல் அவன் உடல்பட்டு அவள் மேனி எழில்கொண்டது என்றனர் சூதர். கந்தர்வன் கைபட்ட யாழானாள், சிறகடைந்து வான்கண்ட சிறுகூட்டுப் புழுவானாள் என்று பாடுகின்றனர் பாணர்."

சுபூவும் ராஷ்டிரபாலனும் பத்முஷ்டியும் சுமுஷ்டியும் சங்குவும் அவன் புகழ் சொல்லி நின்றனர். அவர்கள் மொழியில் எழுந்த மைந்தனை நான் முன்னரே அறிந்திருந்தேன். நானறியாத ஏதை இவரறியப்போகின்றார்? அவனைப்பெற்ற தாயறிவாளோ, தந்தையும் அறிவானோ? உற்ற தாயும் உகந்த தந்தையும்தான் அறிவாரோ? ஆயர்குலம் அறியாது, அவனைச்சூழும் கோபியர் குழாம் அறியாது. ஆம், ஆயர் மடமாது அவள் ஒருத்தி அறிவாள். அரைக்கணம் ஒழியாது அவனை நினைத்திருந்தோர் நானும் அவளும் மட்டுமே. அவளறியாத ஒன்றை நானறிவேன் என்பதனால் அணுவிடை அவளை விஞ்சினேன். புன்னகையுடன் விழிதூக்கி “வில்விழவு எழுக! மைந்தனை அங்கே காண்பேன்” என்றேன்.

அரண்மனை தென்முற்றத்து அணியரங்கில் வேந்தமையும் மேடைக்கு வாழ்த்தொலிகள் சூழ்ந்தொலிக்க சென்றேன். முடியும் கோலும் குடையும் சாமரமும் சூழ அரியணை அமர்ந்தேன். என் இரு பக்கமும் ஆஸ்தியும் பிராப்தியும் அமர்ந்துகொள்ள என் குடிகள் எழுந்து என் முடிவாழ்த்தி கூவினர். சூதர் என் குடிவாழ்த்தி நின்றனர். வில்விழவு கூட ஆயர்குடிகள் அணிதிரண்டு எழுந்தனர். பன்னிரு குலத்துப் பெரியோரும் வந்தமர்ந்தனர். என் இளையோர் முறைசெய்து முகமன் உரைத்து அவர்களை அவைசேர்த்தனர்.

வண்ணங்கள் கலந்து வந்தமைந்த களம். கள்வெறிகொண்ட இளையோர். களிவெறி கொண்ட மகளிர். களமெங்கும் புன்னகையும் சிரிப்பும் புளித்த நுரையாய் நிறைந்தன. அங்கு புதுவெள்ளமெழுந்ததுபோல் பொங்கி நிறைவது என் நெஞ்சூறிய நஞ்சு. என் மக்கள், என் உள்ளம். என் பிழை முளைத்த பெருங்காடு. என் விழைவு கொழுத்தோடும் பெருநதி. தன்னை தான் தின்று சுவையறிந்த விழியற்ற புழுக்கள். முகம் சுளித்து அகம் கசந்து நோக்கி இருந்தேன். அணியரங்குகள் தோறும் பெண்விழிகள் ஒளி கொண்டன. கிளர்ந்து குரல்கொண்டு நிறைந்து நின்றிருந்தது நகர்த்திரள்.

அணிரதம் வந்து அரங்கு முன் நின்றது. அதில் ஆம்பலும் நீலமும் அருகருகே மலர்ந்ததுபோல் இரு இளையோர் நின்றிருந்தனர். மூத்தோனை ஒருகணமே நோக்கினேன். இளையோனை எஞ்சிய நேரமெல்லாம் நோக்கினேன். நீலம் எழுந்து நடந்ததுபோல் பாதங்கள். செண்பகச் செம்மை மண் தொட நீலமென்மை விண்நோக்கி மலர தொட்டுத் தொட்டு அருள்செய்து இருள் நீக்கி நடந்து வரும் நீலக்கதிர் குழவிகள் இரண்டு. கழல் நழுவும் கணுக்கால். கழுநீர் கொடி என கணுவெழுந்த முழங்கால். அரையணிக் கிண்கிணி. திண்நெஞ்சில் குடிகொண்ட திரு. இளமூங்கில் எழிற்கரங்கள். கங்கணம் கொண்ட கைமணி. அழியாச்சொல்லே அடவுகளானதென அசையும் சிறுவிரல்கள்.

புன்னகைக்கும் இதழ் மலர்கள். பொன் படிந்த மேலுதடு. வெண்பல் ஒளிரும் சொல்மலர்வு. அவன் கண்மலர்ந்த கனிவை என் விழிக் கரி தொட்டு கனன்றது. தோடணிந்த மலர்ச்செவிகள். தொட்டுத் தொட்டு மணி ஆடும் மென்கதுப்பு. நீலக்குழல் சரிந்த நெற்றி. நீர்மை நெளிந்த கருங்குழல். விழிதிறந்த பீலி. விரிந்தெழுந்த பாரிஜாதம். என் கண் நோக்கியதேதும் கருத்தறியவில்லை. கருத்தறிந்த ஒன்று அங்கே காட்சியாகவில்லை. அள்ளி அள்ளி நான் விட்ட ஆழ்கலம் நிறையவில்லை. அங்கே எழுந்த இருளின் விடாய் தீரவில்லை.

அவன் மணிமார்பில் மலராகி அசைந்தது வேங்கை. மத்தெழுந்த என் பட்டத்துயானை செவிகூர்ந்து தலையசைத்து உறுமியது. பொன்னசைந்ததோ பூவசைந்ததோ என காலெடுத்து வைத்து கரியோன் அருகணைய வெண்தந்தங்கள் தாழ்த்தி துதிக்கை சுழற்றி வெறிகொண்டு மூச்செறிந்தது குவலயாபீடம். அதன் சிறுவிழிகளில் மின்னுவது நான். அதன் முறச்செவியில் அசைவிழந்தது நான். கருங்கையில் நெளிகிறேன். வெண்தந்தங்களில் ஒளிர்கிறேன். மருப்பில் சிலிர்க்கிறேன். மூச்சில் சீறுகிறேன். அவன் அருகணைந்தபோது மூச்சுக்குள் அவன் பெயரைச் சொன்னேன். துதிக்கை சுழற்றி தலைமேல் தூக்கி அதை மீண்டும் பிளிறினேன். என் தாள் பிணைத்த தளையனைத்தும் உடைந்தன. இருளென எழுந்தேன். அவன் இடைபற்றித் தூக்கிச் சுழற்றி மண்மேல் அறையப்போனேன்.

கொலைவெறிகொண்டு கூவினர் என் குடிகள். “கொல்! கொலைமத வேழமே! கொல்! அரசப்பெருங்களிறே அவனைக் கொல்!” என்று கூச்சலிட்டு கை விரித்து நின்றாடினர். என் எழுந்த பெருங்கையை அவன் சிறுகை பற்றி வளைப்பதை உணர்ந்தேன். முன்பு மிதிலைநகரில் ராமன் கைபற்றி உடைத்த முக்கண்ணன் வில் உணர்ந்த முழுமையை உணர்ந்தேன். என் மத்தகம் மேல் நின்றன மலர்ச்சிறு கால்கள். அவற்றின் எடைகூடி என் உடல் நொறுக்கியது. என்னுள் சிறைகொண்ட இருள் செறிந்து தெறித்தது.

எடை எடை என்றே என் அகம் புடைத்துக் கூவியது. நினைவறிந்த நாள் முதலாய் நானறிந்ததெல்லாம் என் உடல்கொண்ட எடை ஒன்றுதான். என் கைவைத்து நோக்காத எதிலும் என் கால் பட்டதில்லை. சேற்றை அஞ்சினேன். சரிவில் செவிகூர்ந்தேன். ஏற்றங்களில் என்னை உணர்ந்தேன். நீரில் மட்டுமே நிறையழிந்து களித்தேன். இதோ எடை எடை என்று என் உடலெங்கும் நிறைந்தது என்மீது அமர்ந்த ஒன்று. மத்தகம் கனத்து என் உடல் மண்ணில் அழுந்தியது. மென்மணலாயிற்று கற்களம். துதிக்கை சுழற்றி கூவினேன். தூக்கிய தந்தங்களை உலைத்தேன். கைசுழற்றி அக்கால் பற்ற முனைந்தேன். வெட்டவெளி துழாவி வீணாக மீண்டேன். என் மேல் நின்றிருப்பதென்ன? நீலவானா? மண்மகள் அறியும் அதன் மாளாச் சுமையா?

குருதி உமிழ்ந்து இருட்குவையென சரிந்தேன். என் மேல் சரிந்து என் எடை விழுவதை உணர்ந்தேன். துடித்துச் சுழன்றமைந்த துதிக்கையில் தெறித்தது வெங்குருதி. நஞ்சுமிழும் நாகமென பீரிட்டு பரவியது. கலப்பையின் கொழுவென நிலம்அழுந்திய நீள்தந்தங்கள் அசைவழிந்தன. கருநாகக் குழவியென என் குறுவால் நெளிந்தமைவதை கண்டேன். நீள் மூச்சு விட்டு நிலம் நோக்கி என் அரியணையில் அசைந்தமர்ந்தேன். குருதிப்பூ சிதற நடந்துவரும் இளங்கால்கள் கண்டு கூவி கைநீட்டி எழுந்து நின்றேன்.

செங்குருதி படிந்த சிற்றுடல் என் அவை புகுந்தது. அக்கணம் பிறந்த குழவி. கருவறை கீறி எழுந்த சிறுதலையில் நனைந்து சொட்டியது கொழுங்குருதி. தொப்புள் கொடி உதைத்து நீந்தும் சிறுகால்கள். கண் திகைத்து நோக்கி கல்லெனச் சமைந்து அமர்ந்தேன். அவனைச்சூழ்ந்து சிறகடித்து வந்தன ஆயிரம் உதிரம் படிந்த உடல்கள். நான் அறிந்த துயரம் கொண்ட விழிகள். இருளில் என்னைச்சூழ்ந்து நின்றிருக்கும் நிலையழிந்த ஒளித்துளிகள். என் செவியில் ஒலித்தன பால்மறவா பைதல் ஒலிகள்.

நீர் பட்டு நுரை அவிந்த பாற்கலம் போல ஒலியணைந்து சமைந்தது என் அவை. விழிகளில் மட்டும் உயிர் எஞ்சும் ஓராயிரம் ஊன்சிலைகள். அலையவிந்த சுனைநடுவே நின்றது அன்றலர்ந்த நீலம். இரு கைதூக்கி உதறி குருதித் துளிஉதிர்த்தான். பாலன். இன்னும் முலைமறக்காத இதழன். விழி ஒளியன். அருள் மலர்ந்த கையன். அஞ்சலென்ற அடியன். ஆயிரம் பல்லாயிரம் கைகள் அகத்தே குவிவதைக் கண்டேன். அங்கு செறிந்த அமைதியின் ஆழத்தில் ஒரு சிறு விசும்பல் எழக்கேட்டேன். அகம் திகைத்து அங்கெல்லாம் நோக்கினேன். அத்தனை விழிகளிலும் அகம் ஊறி வழியக் கண்டேன். என் நெஞ்சிலும் சொட்டின நீர்த்துளிகள். வெய்யநீர். விழுந்த இடம் எரிக்கும் வெங்கனல் நீர்.

ஆணையின்றி பாய்ந்து சென்று களம் நின்றான் அவைமல்லன் சாணூரன். கனத்த கை நீட்டி வெண்ணிறத்தோன் தோள்பிணைத்தான். எருமையைச் சுழற்றி நிலத்தடிக்கும் சிறுத்தையைப்போல் அவனை வென்றான் மூத்தோன். அவன் நெஞ்சு மிதித்து நிலம் தோய்த்தான். என் தம்பியர் எண்மரும் தொடைதட்டி உறுமி களம்சென்று நின்றனர். எங்கோ இருந்து ஏதோ விழிகளால் நோக்கினேன். எத்தனை முறை நான் கண்ட போர் இது என்றே எண்ணிக்கொண்டேன். என்றும் நிலைக்காத எளியதோர் ஆடல். நன்றிது தீதிது என ஒண்ணாத நடனம்.

கழுத்தொடிந்து விழுந்த சுபூ என் கண்ணென நின்றவன். கைகள் ஒடிந்து துடித்தமைந்த ராஷ்டிரபாலன் என் செவிகள். சங்கு என் நாசி. பத்முஷ்டி என் நாக்கு. துடித்து குருதிகொட்டி அமைந்த சுமுஷ்டி என் உடல். ஐந்து துடிப்புகள் அணைந்தன. ஐந்து அமைதிகளின் மேல் அவன் நீலக்கால் நின்றது. சீறி எழுந்து கைகோர்த்தான் என் காமமேயான சுநாமன். தோள்தழுவி இடை வளைத்து பாம்புகள்போல் நெளிந்து பலமுனையில் மல்லிட்டு இறுகி அடங்கி படம் தாழ்த்தி செங்குருதி வாய்வழியச் சரிந்தான். தொடைதட்டிச்சென்றவன் என் குரோதக் குவையென வளர்ந்த நியகுரோதன். அவன் நெஞ்சுடைந்து மண்ணில் முகம் சேர்த்து மடிந்தான். கையிரண்டும் விரித்து விழிகூர்ந்து களம் கொண்டான் என் மோகமென்றான கங்கணன். அவன் நெற்றிப்பொட்டு உடைந்து பின் சரிந்து வான் நோக்கி விழியுறைந்தான்.

வந்தது என் கணம். எழுந்து என் இருதேவியர் விழிநோக்கினேன். அவர் விழிமலர்கள் என் கிளைவிட்டு உதிர்ந்து நெடுந்தொலைவில் கிடந்தன. யாரென்று வினவின ஆஸ்தியின் நீள்விழிகள். எவர் நீ எங்களுக்கு என்றன பிராப்தியின் பெருங்கண்கள். என் அமைச்சும் சுற்றமும் என்னை நோக்குவதைக் கண்டேன். என்னை உதறி எங்கோ நின்றன அவை. இறந்துவிட்டேனா நான்? நடுகல்லாய் நின்றிருக்கிறேனா? என்னை வாழ்த்தும் ஒரு சொல்லும் எழவில்லை. நான் ஆடைகளைந்து அணிகளைந்து காலணி கழற்றி கச்சை முறுக்கி களமிறங்கியபோது கற்பாறைக் கூட்டமெனச் சூழ்ந்து குளிர்ந்து நின்றிருந்தது என் குடி. செல் என்கிறார்களா? சென்றுவிட்டாய் என்கிறார்களா? நில் என்று ஒருகுரலும் எழவில்லை. நினைத்திருப்பேன் என ஒரு விழியும் மின்னவில்லை.

களமிறங்கி கைநீட்டி கால்நிலைகொண்டு கண் ஊன்றி நின்றேன். என் முன் மண் ஊன்றி நின்றது மலர்ப்பாதம். அதன்மேல் அணிகொண்டு அமைந்தது பொற்கழல். கண்மலர்ந்து இதழ் மலர்ந்து கைநீட்டி நின்றது என் கருவறை வாழ்ந்த மகவு. என் உயிரே, என் இறையே, இக்கணத்தில் என்னை ஆட்கொள்ளவென்றா இதுவரை என் உடல்திறந்து வாராதிருந்தாய்? என் குருதியில் குடிகொள்ளும் முளைக்காத விதையா நீ? கண்ணீரில் நோன்புகொண்டு என் குலமகள்கள் காத்திருந்த குழவிமுகம் நீதானா?

கொஞ்ச அழைக்கும் கை. என் கழுத்துசுற்றி குளிரும் கொடி. என் மார்பு நிறையும் அணி. செல்லச்சிறு கால்கள். என் சிரம் சூடும் ஒளிமணிகள். கங்கணம் ஒலிக்க கிண்கிணி சிரிக்க வந்து என்னை தழுவுக இளங்குருத்தே. என் இருளில் எழுக நீலச்சுடர்க் கதிரே. அள்ளி எடுத்து என் ஆவிசேர்த்து அணைத்தேன். ஆயிரம் யுகங்களில் நானறிந்த பிள்ளைக் கலியனைத்தும் வென்றேன். மென்கரம் இறுக்கியது என்னை. தோளில் பதிந்தது செவ்விதழ் முத்தம். செவிகளில் நிறைந்தது மூச்செழும் சத்தம். மூச்சென ஆயிற்று நறுங்குழல் மென்மணம்.

மென்மணம் இறுகிய நெஞ்சுடன் என்னைச்சூழ்ந்த நீலப்பெருக்கில் நீந்தித் திளைத்தேன். நீலமெனச் சுழித்தது ஒரு வேய்ங்குழல் நாதம். குழலொழுகும் வழியில் நெடுந்தூரம் சென்றேன். இவ்வுலகும் இங்குள அனைத்தும் எங்கோ என எஞ்ச நானும் இசையும் நிறைந்த வெளியில் நின்றேன். அங்கே கண்மலர்ந்தன விண்மீன்கள். சிறகெழுந்தன மேகக்குவைகள். ஒளியெழுந்தது. நீலம் திசைவிரித்தது. சுழன்று விழுந்து மண்ணில் அறைபட்டது நெடுந்தொலைவில் எங்கோ என் தசையுடல். அதைச்சூழ்ந்து திகைத்து நின்றன என் குடியினர் சூடிய கண்கள். என் கால்கள் மண் நடந்த தொலைவை எல்லாம் மீளநடந்து கருவறையை அணுகின. கொண்ட மூச்சையெல்லாம் மீண்டும் காற்றுக்கே அளித்தன என் மூக்கும் வாயும். என் நா உரைத்த சொல்லெல்லாம் நெஞ்சுக்குள் மறைந்தன. என் நா அறியாத சொல் ஒன்றை என் இறுதி விழி சொன்னது.

கண்ணா என கைகூப்பினேன். என் மேல் கால்வைத்து நின்றனர் ஆயிரம் இளமைந்தர். ஒருவன் குனிந்து என்னை தாதையே என்றான். இன்னொருவன் குனிந்து என்னை தந்தையே என்றான். பிறிதொருவன் என்னை மாமனே என்றான். என் மீசை பிடித்து இழுத்தனர். என் குழலில் தொங்கி ஆடினர். என் கைவிரல்கள் பற்றி குதித்தபடி கூட வந்தனர். என் கால்கள் பற்றி மரமேறினர். என் தோளமர்ந்து செவிபற்றி உலுக்கினர். என் குருதி என் சுற்றம். என் மடிநிறைக்கும் மைந்தர். விழியொளிர நகைமலர என் மீது ஏறி நடமிட்டனர். அவர்களுடன் கூடி நகைத்து கூத்தாடிக் களித்தது என் நெஞ்சம்.

என் மார்பில் அமர்ந்திருந்தது இளங்குழவி. மடல்பிரியா கைவிரல்கள். மடிப்பமைந்த சிறுதொடைகள். விரல் நெளித்த மலர்ப்பாதம். தொப்புள் முளை எழுந்த சிறு பண்டி. இன்னும் மொழி விரியா இதழ்மலர்கள். அன்னை முகமறிந்த மணிவிழிகள். விழியில் ஒரு சொல் நின்று ஒளிர வாயில் தேன் துளியொன்று திரண்டு அதிர என்னை நோக்கிக் குனிந்தது.

கரியன். குளிரொளிர் விழியன். பனிமலர் மேனியன். என் மார்பின் மேல் தவழ்ந்து முகம் அணைந்தான். குனிந்து என் விழிநோக்கினான். விரிந்த இதழ்ச்சிமிழில் எழுந்தது ஒரு சொல். “மாமா” என அதைக்கேட்டேன். மெய் விதிர்த்து சொல் திகைத்தேன். “மருகா, சிறுமூடா, என் கால்தொட்டு பணிக. உன் சிரம் தொட்டு வாழ்த்துகிறேன்” என்றேன். அவன் இளங்கைகள் என் இருகால்கள் தொட குனிந்து “நீயே நான்” என்றேன். “என்றுமிரு” என வாழ்த்தி அமைந்தேன். அங்கிருந்தேன். பின் இங்கிருந்து அவனைக் கண்டேன்.

என் குடி சூழ்ந்த சபை அங்கு கொடுந்தெய்வம் நீங்கிய குலப்பூசகர் போல் தளர்ந்து விழுவதைக் கண்டேன். விழிநீர் பெய்து விரித்த கைகளுடன் “கண்ணா, கரியவனே, இனி உன் காலடியே அடைக்கலம்!” என அவர்கள் கூவுவதைக் கேட்டேன். என் கொடி பறந்த மதுராபுரி மணிமுகடுகள் புதுக்காற்றில் அசைந்தன. அணிமுரசும் சங்கும் மணிகளும் முழவுகளும் சேர்ந்தெழுந்து ஒலிக்க நகரம் தன்னை தான் வாழ்த்தி குரலெழுப்பியது.

பகுதி பதினொன்று: 1. குவிதல்

எவருமில்லை எவ்விழியும் இல்லை என்று எண்ணி நிறைந்தபின் மூடிய விரல் விரித்து முழுநிலவை வெளியே எடுத்தது வசந்த கால இரவு. ஆயிரம் சுனைகளில் பால்நிலவு எழுந்து ஆம்பலை தழுவியது. விருந்தாவனத்தின் ஒவ்வொரு கல்லும் வெண்ணொளி பட்டு கனிந்தன. உயிர்கொண்டு அதிர்ந்தன. உதிர்ந்து பரவிய இதயங்களாகித் துடித்தன. இலைகளின் கீழும் நிலவொளி அலைக்கும் முழுமை. எங்கும் நிறைந்தது இனியேதுமில்லை என்ற வெறுமை.

வெண்ணிலவு விரிந்த வெளியில் எல்லா இலைகளும் தளிர்களாயின. தேன்சுவைக்கும் இளமைந்தர் நாவுகளாகி நெளிந்தன. உதிர்ந்த சருகுகள் உயிர்கொண்டன. தளிர் நினைவென வந்துதொட்ட தண்காற்றில் எழத்தவித்தன. நிலவொளியை சிறகெனச் சூடிய நுண்ணுயிர்கள் இசைகொண்டு விண்ணில் சுழன்றன. நீரோடைகளில் நிலவோடியது. சிற்றருவிகளில் வளைந்தது. சிறுபாறைகளில் சிதறிச்சிரித்தது. பனித்துளி சிலிர்த்த புல்லிப்பிசிர்களில் பட்டு ஒளிர்ந்தது. கண்ணுக்குள் நிறைந்து கருவிழியில் ததும்பியது. பின் காட்சியென விரிந்து காட்டை நிறைத்தது.

நிலவணிந்த நீலக்கடம்பின் கீழ் நின்றிருக்கிறேன். கண் நோக்கி கைதொட்டு நீ சொன்ன சொல் என்னும் துணை ஒன்றை கொண்டிருக்கிறேன். எனக்காக மலர் கொண்டிருக்கிறது இம்மரம். என் மனமென மணம் பரப்புகிறது. என் இருவிழியென ஆயிரம் இலைநுனிகள் துடிக்கின்றன. இங்கிருக்கிறேன் என்ற சொல்லாக நின்றிருக்கிறது. இதுவொன்றே நான் என்றே உயிர்கொண்டிருக்கிறது. எங்கிருக்கிறாய் நீ? இம்மரமும் மரமணிந்த மலரும் மலர்கொண்ட மணமும் உன் மனம் வந்து சேருமோ? எண்ணுகின்றாயா? என் முகம் உன் நெஞ்சிலுள்ளதா? கோடி சூரியன்கள் கதிர் பரப்பும் உன் வான்வெளியில் என் புல்நுனிப் பனித்துளியும் சுடரலாகுமோ?

நெய்யென உருகி நெருப்பென எரிந்து தழலென ஆடி கரியென எஞ்சுகிறாய். என் மடநெஞ்சே, நெஞ்சுணர்ந்த நீலனே, இங்கு நிற்கும் நான் எத்தனை உடல்கொண்டவள். எத்தனை உளமானவள். என்னையறிகிலாய். என் கண்பூத்து விரிந்த காத்திருப்பையும் நினைகிலாய். நீலக்குளிர் ஓடையில் நிலைக்காது ஒழுகும் நிழல்களில் ஒன்றா நான்? உன் விரிநிலத்து வெளியில் விழுந்த விதையல்லவா? ஐந்நிலத்தில் பாலையைத்தான் அடியாளுக்கு அளித்தாயா? நால்வகை நிலமும் நான் தொட்டுத் திரிந்தனவா? என் விதைகாக்கும் துளிநீரை உன் விண்நீலம் வழங்காதா? அதன் தவம் முதிரும் தருணம் இன்றேனும் வாராதா?

காத்திருக்கிறது காடு. கண்பூத்து நோற்றிருக்கின்றன மரங்கள். மெல்லிதழ் விரித்து பார்த்திருக்கின்றன மலர்கள். உன் காலடிகள் கேட்பதற்கே செவிகொண்டு பூனையானேன். உன் வாசம் அறியும் நாசிக்கென்றே நரியானேன். உன் நிழலசைவுதேரும் விழிகளுக்காக கலைமான் ஆனேன். உன் அதிர்வை அறியும் நாவுக்கென நாகமானேன். உன்னை எண்ணி ஏங்கும் மூச்சுக்கென பிடியானையானேன். உன் காலடியை அறிவதற்கே இலைநுனியின் பனியானேன். உன்னை எண்ணிச் சிலிர்ப்பதற்கென இக்குளிர்ச் சுனையானேன்.

காடெல்லாம் பூத்திருக்கும் மரங்களைக் காண்கிறேன். கடம்பும் கொங்கும் கொன்றையும் மருதமும். பருவம் மறந்தன மரங்கள். நாணமிழந்தன மலர்கள். காத்திருத்தல் என்பதைத்தான் மலரென்றாக்கினானா ககனம் படைத்த கவிஞன்? பூத்திருத்தல் மட்டும்தான் புவியின் இயல்பென்று எண்ணினானா? ஒளிவின்றி விடாய்கொள்ள, ஒன்றையே எண்ணிக் காத்திருக்க, வேறேதும் ஏற்காமல் வாடி நிலம் அணைய மலர்போல அறிந்தவர்கள் மண்ணில் எவருண்டு? மாறா உறுதிகொண்டது மலர். வாழ்வேன் நிறைவேன் அல்லால் வாசமிழந்து நில்லேன் என்று உரைப்பது. ஆயிரம் கோடி சொற்கள் கொண்டது இக்காடு. அதன் மலரனைத்தும் இதழ்கூட்டி உரைப்பது ஒரு சொல்லை.

கண்ணா, கரியவனே, இப்புவியில் முளைத்தெழுந்த அத்தனை மலர்மர நிழல்களும் நீ என்னை நில்லென்று சொல்லி வாராது போன குறியிடங்கள் அல்லவா? இங்கு நின்றிருக்கும் நான் காடெங்கும் பூத்து காத்திருக்கும் கன்னியரில் ஒருத்தி அல்லவா? உன் காலடிகள் ஒலிக்கின்றன காலத்துக்கும் அப்பால். உன் வாசமெழுகிறது விண்விரிவின் சரிவில். உன் சிரிப்பெழுந்து ஒளிர்கின்றன வான்நிறைந்த முகில்கணங்கள். நீயென்றான நினைவு. நீயொன்றே ஆன நெஞ்சம். நீயிலாது ஒழியும் சித்தம். நீ இங்கு காத்திருப்பதுதான் எவரை?

காலடி கேட்டு என் செவி திரும்பியது. கனல் போல கண்ணொளிர பஞ்சுப்பொதி போல பாதமெடுத்து நடக்கிறேன். செந்நாவளைத்துக் கூவி உன்னருகே வருகிறேன். வெண்பட்டு உடலை உன் கால்களில் தேய்க்கிறேன். தூக்கிக்கொள் என்கிறேன். உன் கருந்தோள்களிலே அமர்கிறேன். ஒற்றை ஒரு சொல்லை மொழியாக்கி உன்னிடம் பேசுகிறேன். என்னுடன் வா. உடல்வளைத்து கிளைதாவி இக்காட்டுக்குள் அலைவோம். மலர்ப்பொடியுதிரும் மென்மயிர் பொதி உதறி அணிவோம். நான் ஒளித்துவைத்த ஒவ்வொன்றும் எடுத்து உனக்குக் காட்டுகிறேன். அவை அனைத்துக்கும் பொருள் ஒன்றே என்று உனக்குக் கூறுகிறேன்.

நீ என எழுந்ததை நாசிகொண்டறிந்தேன். குளிர்முனை நீட்டி காலெடுத்து உன்னிடம் வந்தேன். சாமர வால் சுழற்றி செவியிரண்டும் கூர்த்து ‘நீயா?’ என்றேன். ’நானே’ என்றது உன் நறுமணம். உன் கால்தடத்தை முத்தமிட்டேன். கால்தொட்ட கற்களை முத்தமிட்டேன். நீ சென்ற நிலமெல்லாம் முத்தமிட்டேன். பின் கழுத்து சிலிர்த்தெழ கண் ஒளிர்ந்து மின்ன உன் கால்களை முத்தமிட்டேன். உன் பெயர் சொல்லிக் கூவி புதர் கடந்து பாய்ந்தோடினேன். கடுகி உடன் வந்த காற்று நீயல்லவா? நாநீட்டி மூச்சிளைக்க நின்று நான் திரும்புகையில் என் கால்களுக்கு இணைவைத்த காலடியும் உனதல்லவா?

விழி மிரண்டு திரும்பி வளைந்த கழுத்து சிலிர்க்க உன்னசைவை நோக்கினேன். இளமூங்கில் குழைவா நீ? சிறுநாணல் காற்றா நீ? சருகோசையா? சரியும் கிளையோசையா? துடிக்கும் வாலுடன் மெல்லத் திரும்பும் செவிகளுடன் அசைவிழந்து நின்றேன். நிலவு வீழ்த்திய நீல நிழல் நீ. உன்னை அறிந்து உடலதிர்ந்தேன். நிலம் தொடுத்த அம்பென காற்றிலெழுந்தேன். காட்டுமரங்கள் கைவிளையாடும் அம்மானைப் பந்தாகத் துள்ளிச்சென்றேன். நிலவு நிழல் விழுந்த காட்டு நிலம்போன்றிருந்தது என் உடல். நான் துள்ள என்னுடன் காடெனத் துள்ளியது நீ.

புதர்சூழ்ந்த வளைக்குள் இருந்தேன். உன் பாதத்தைக் கேட்டன என் உடற்சுருட்கள். என் உடலுக்குள் செறிந்த கால்கள். இமையா விழிகொண்டு இருளை நோக்கினேன். கதிர்நாவால் காற்றைத் துழாவினேன். கிண்ணம் கவிழ வழியும் தேன் என வெளியே வந்தேன். நெய்தொட்ட அனல் என தலைதூக்கினேன். திரும்பும் கட்செவியால் திசை நோக்கினேன். என் உடல்விம்மி படமாயிற்று. உன் இசைகேட்டு நடமாடினேன்.

கரும்புக்காட்டில் சிரம் பூத்து நின்றிருந்தேன். காற்றிலாது கிளை ஆடும் வேங்கை. கிளையிலாது கீழிறங்கும் நாகம். உன் திசைதெரிந்து துதிக்கை நீட்டினேன். என் உடல் அதிர்ந்து ஒரு சொல்லெழுந்தது. அதை இருள் கேட்டு திருப்பிச் சொன்னது. இருள்போர்த்தி நின்றிருக்கும் உடல்நான். காமக் கனல் மீது படர்ந்திருக்கும் கரி நான். அப்பால் இருளுக்குள் எழுந்தது உன் முகத்தெழுந்த இருநிலவு. உன் முகம் நீண்டு வந்து என் முகம் தொட்டது. இருளுருகி ஒன்றான அம்முத்தத்தின் இருபக்கமும் இரு தனிமையென நின்றிருந்தோம் நாம்.

இமை அதிர்ந்து உதிர்ந்தன இலைநுனித் துளிகள். வட்டஉடல் சிலிர்த்து வளையல்களாயிற்று என் காலடி குளிர்ச்சுனை. இனியவனே, இக்குளிரில் நீ என் மிக அருகே செல்லும் இளவெம்மையை உணர்கிறேன். உன் உடல்மென்மை என் உடல்மயிர்ப்பரப்பை தொட்டதை அறிகிறேன். உன் இதழ்வாசம். உன் இமையசையும் ஒலி. இங்கிருக்கிறாய். எண்ணுமுன்னே வந்துவிட்டாய். என்ன மாயம் இது? கண்தொடுவதை உடலறியாது போகுமோ? உடலறிந்ததை விழியறியாமலாகுமோ? இந்தக் காற்றில் கரைந்துளாயா? இக்குளிரே நீதானா? என்னவனே, வெறும் எண்ணமென்றே அருகணையும் கண்கட்டு கற்றுளாயா?

அறிவாயா? நானென விரிந்தது இவ்வனம். நீ வந்த பாதை நான். நீ வைத்த அடிகள் என் நெற்றி வகிட்டில். உன் கால் தொட்ட புற்கள் என் கண்மயிர்ப்பீலிகள். உன் குழல் அலைத்த காற்று என் மூச்சு. உன்மேல் தெளித்த பனியோ என் விழித்துளிகள். கண்ணா, நீ விட்ட சுவடுகள் என் உந்திக் கதுப்பில். உன் குரலை அறிந்து குளிர்ந்தவை என் முலைமேடுகளில் எழுந்த நீலக்கடம்புகள். நீ நின்று சிரித்த இடம் என் உச்சிக்குவடு.

கண்ணா, நீ அங்கு நின்றாய். இரு கைவிரித்து நீ ஓடிச்சென்றாய். இதழ் சிரிக்கும். இரு விழி சிரிக்கும். முகம் சிரிக்கும். மூக்குநகை சிரிக்கும். கை சிரிக்கக் கண்டுளாயா? தோள் சிரிக்க துவளும் இடை சிரிக்க முலைசிரிக்க மென்தொடை சிரிக்க முல்லை நகம் சிரிக்க கால்சிரிக்கக் கண்டுளாயா? வெள்ளிதழ் மலர்ந்து விண்ணில் விழுந்தது பாரிஜாதம். நீல மேகமொன்று அதை அள்ளி எடுத்து தன் நெஞ்சில் அணிந்தது.

உன் தோளில் முலைசேர்த்தேன். இருகைகளால் சேர்த்தணைத்தேன். கழுத்து வளைவில் கன்னம் சேர்த்தேன். இடைபொருந்த இரண்டற்றேன். முன் நெற்றிவகிட்டில் உன் மூச்சை உணர்ந்தேன். இடைசுற்றியது உன் இடக் கரம். பின்கழுத்து மயிரளைந்தது உன் வலக்கரம். நீள்குழல்பற்றித் தூக்க நிலாநிறைந்த கலமாயிற்று என் முகம். நீலவானம் கவிந்த அலைகடல் அமைதிகொண்டது. குளிர்ந்து பனியாகி வெளித்தது. இதழ்தொட்டதென்ன, இறவாமையென்ற ஒன்றா? இனி மீண்டும் பிறவாமை என்பதேதானா? இதழ்கவ்வும் இதழறியும் மென்மை இதழ்மென்மையாகுமா? என் நாவறியும் சொல் எவர் சொல்லென்று சொல்லலாகுமா?

பாம்புண்ணும் பாம்பாகி பருத்து நெளிவேனா? ஒளியுண்ணும் விழி என்று உள்நிறைவேனா? இன்று ஒன்றுக்குள் ஒன்று என்று சுருண்டு அமைவேனா? எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது. என்ன இது இக்கணமும் என்னுடன் ஏன் இருக்கவேண்டும் காலம்? நானென்று எனைக்காட்டும் மாயம்? நானில்லை என்றால் எங்குவிழும் இம்முத்தம்? என் உளமறியாவிடில் எவ்வண்ணமிருப்பான் இவன்? நானில்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்பு? முத்தமொரு கணம். முத்தமொரு யுகம். முத்தமொரு வெளி. முத்தமொரு காலப்பெரும்பெருக்கு. முத்தமென்பது நான். முத்தமென்பது அவன். முத்தமென்பது பிறிதொன்றிலாமை.

என்னுடல் என்றே அவனுடல் அறிந்தேன். என்னைத் தழுவும் என்னுடல் உணர்ந்தேன். முத்தம் பொழியும் முத்தப்பெருநிலம். முத்தம் பறக்கும் முத்தப்பெரும்புயல். மூடிய இதழ்களில் மூக்குவளைவினில் கன்னக்குவையில் கழுத்துப் புதைவினில் செவியிதழ் மடல்களில் செம்பிறைக்கீற்றினில் தத்தி நடந்தது முத்தச்சிறுகால். புல்வெளி மீது புரவிக் குளம்புகள். பாலைமண் அறியும் பனிமணித் துளிகள். மழைவிழும் மலரிதழ். தவளை தாவிய தளிரிலை. அலைஎழும் கடல்முனை. ஆழி நுரைதவழ் மணல்கரை. மூச்சை உண்கிறது மூச்சு. என் மொழியில் ஒலிப்பது அவன் காற்று!

எத்தனை இனிது இன்னொரு வியர்வையை என் உடல் கொள்வது. இன்னொரு குளிரை என் அகம் அறிவது. இவனை இங்கே நான் படைத்து உண்கிறேன். இவ்வாழி கடைந்து என் அமுதைக் கொள்கிறேன். இவனிலிருந்தே நான் உதித்தெழுகிறேன். இவன் அலைகளில் நான் ஒளிநிறைக்கிறேன். நானில்லை என்றால் இவனென்ன ஆவான்? நான் சொல்லாவிட்டால் யாரிவனை அறிவார்?

செந்தழல் நீர்கொண்டதுபோல் சீறும் மூச்செறிந்தேன். செவ்விழி தூக்கி அவன் முகம் நோக்கினேன். அவனேயாயினும் அவனுக்கான தாபத்தை அறிந்திடலாகுமா? "போதும்" என்று அவன் மார்பில் கைவைத்து தள்ளினேன். என் தலைச்சரம் அவன் மணிச்சரத்தில் பின்னி அருகிழுத்தது. "நானிழுக்கவில்லை. உன் அணியிழுக்கிறது என்னை" என நகைத்தான். சினந்து என் கூந்தலை சுற்றி இழுத்து பின் வீசி "நாணிலாத நகை எதற்கு? நான் உனைப்போல் நெறியிலாதவளல்லேன்" என்றேன்.

என் காதருகே குனிந்து "நம்மிருவர் நெறியும் நாமியற்றுவதல்லவா? இந்தக் காடறிந்த காமம். இங்குள காற்றறிந்த தாபம்" என்றான். "வீண் சொல்லிடாமல் விலகு. நான் என் இல்லம் சேரும் நேரம்" என்றேன். பின் அவன் விழி நோக்கி நெஞ்சு அதிர்ந்தேன். குலைவாழை என தலைதாழ்த்தி "விடு என்னை. நான் வீடு திரும்புகிறேன்" என்றேன். "உன் வீடு இதுதான். அங்குளது நீ விட்டுவந்த கூடு" என்றான்.

இவன் என் சொல்லை அள்ளிச் சூடும் கள்வனென்று எண்ணி அவனைத் தள்ளி திரும்பினேன். அங்கே மலர்மரம் ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணன் நிற்கக் கண்டேன். அவனருகே நின்று குலவும் என்னையும் கண்டுகொண்டேன். "யாரது? என் விழிகள் காணும் மாயமா இது?" என்று சீறி திரும்பினேன். "இது உன் மொழியறிந்த கண்ணன். அது உன் விழியறிந்த கண்ணன். அப்பால் நீ வாசம்கொண்ட கண்ணன். உன் மூச்சும் மெய்யும் செவியும் சிந்தையும் அறிந்த கண்ணன்கள் அவர்கள். அக்கண்ணன்கள் அறிந்த ராதைகள்" என்றான்.

"சீ, விலகு. பெண்ணென்றால் உனக்கு வெறும் பேதைகள் மட்டும்தானா? கைச்சரடில் ஆடும் களிப்பாவைகள் அல்லவா?" என்றேன். நெஞ்சில் கரம் வைத்து நெருப்பென உயிர்ப்பெறிந்து நோக்கினேன். ஆடிப்பாவைக்கூட்டமென ஆயர்மகன் பெருகக் கண்டேன். என் நெஞ்சத்தோழிகள் லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அங்கு நிற்கும் ராதையர் என்று அறிந்தேன். நான்கொண்ட நாணம் நுனியளவும் இல்லாமல் கண்ணன் தோள்தழுவி காமத்திலாடி நின்றனர் அவர்கள்.

அப்பால் என் விருப்பத்தோழிகள் மந்தலியும் மணிகுண்டலையும் மாதலியும் சந்திரலலிதையும் மாதவியும் மதானலசையும் சசிகலையும் சுமத்யையும் கமலையும் காமலதிகையும் மாதுரியும் சந்திரிகையும் அவனுடன் கூடிக்களித்தல் கண்டேன். வெண்விழியில் கருவிழிபோல் கண்ணன் அவர்கள்மேல் ஆடிக்களித்தான். நீரோடை நீந்திச் சிறகடிக்கும் நீலமணி மீன்கொத்தி. நீரலைகளில் ஆடும் நீலக்குவளை. "என்ன இது? என் அகம் எரிகிறதே" என்றேன். "இங்கே நெறியில்லையா? நூலோர் முறையில்லையா? பெண்ணுக்கு ஆண் என்னும் பெற்றியில்லையா?" என்றேன் கண்ணீர் வழிய குரல் அழிய. "நான் இங்கு நிற்கின்றேன். நாணிலாத சழக்கா, அக்கோபியருடன் ஆட எப்படி மனம் கொண்டாய்?" கண்ணன் "அவர்களில் நிறைந்து ஆடியதும் நீயல்லவா?" என்றான். என்ன சொல் எடுத்தாலும் என் அகம் நோக்கி பதில் சொன்னான்.

என் கண்தொட்ட இடமெல்லாம் கன்னியர் களித்தாடினர். என் உயிர்த்தோழிகள் லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் வாசந்தியும் அவன் இதழ்கொண்டு இதழ்கொடுத்து நின்றனர். என் நிலைத்தோழிகள் கஸ்தூரியும் சிந்தூரையும் கௌமுதியும் மதிரையும் அவன் உடல்சுற்றி கொடியாகி படர்ந்திருந்தனர். என் மலர்கொத்துத் தோழியர் அனங்கமஞ்சரியும் ரூபமஞ்சரியும் ரதிமஞ்சரியும் லவங்கமஞ்சரியும் ராஸமஞ்சரியும் ராகமஞ்சரியும் காட்டுச்சுனைபோல நீலம் சூடியிருந்தனர். கோபியர் சூடிய கண்ணன். அவன் கொள்ளக் குறையா பெண்கள்.

என் ஆடை பற்றி இழுத்த மலர்க்கிளையை கடிந்து உதறினேன். காலடி சிதற கருங்குழல் பறக்க பாய்ந்தோடினேன். மலைச்சரிவில் மகிழம் பூத்த சதுப்பில் மலையோடைப்பெருக்கில் மான்போல தாவிச்சென்றேன். மூச்சிரைக்க உடல் அனல் பறக்க முழந்தாளிட்டு அமர்ந்தேன். அங்கே சிறுமேட்டில் குற்றிலை விரித்து நின்றிருந்தது நீலக்கடம்பு. அதன் கீழே சென்றமர்ந்து கண்மூடி குருதியோடும் குமிழிகளை நோக்கி இருந்தேன். கண்ணன் சொன்ன குறியிடம் அதுவே என்றறிந்தேன். அவ்வண்ணமென்றால் நான் சென்றுவந்த தொலைவெல்லாம் ஏது?

அஞ்சி கால்சமைந்து நின்றேன். பின்னர் காட்டை வகுந்து விரைந்தோடினேன். மீண்டும் வந்தடைந்த இடம் அந்த நீலக்கடம்பு. அங்கே கண்ணீர் முலைநனைக்க கால்கள் தளர்ந்து விழுந்தேன். "கண்ணா, நீயறியாததா? நான் சுழலும் இவ்வட்டத்தின் மறுபக்கம் நீ சுழல்வதை நானுமறியாததா?" என்றேன். எண்ணி எண்ணி ஏங்கும் கண்டிதை நான். என்னை பித்தியாக்கி நகைக்கும் கல்மனத்தான் நீ. "எத்தனை பெண்கொண்டால் நிறையும் ஓர் ஆண்மனம்? நீசா, வெற்றுச்சொல் விடுக்கும் பரத்தா, சொல்! எத்தனை உடல் விழுந்தால் அணையும் உன் கனல்?"

என் உள் நின்று எழுந்தது அவன் குரல் "ஒற்றை மனம் கொண்ட ஒருகோடி உடல்." தலையை கையால் அறைந்து "சீ!" என்று கூவி எழுந்தேன். "கோடி உடலேறி ஆடும் ஒரு காதல்." என் குழல் பற்றி இழுத்து "மூடு உன் வாயை" என்றேன். "ஆடிப்பாவையென எனைச்சூழும் ஓர் அகம்." பற்களைக் கடித்து கைநகம் கொண்டு கைகுத்தி இறுக்கி நின்றேன். பின் உடல் தளர்ந்து அமர்ந்தேன்.

அழுதழுது அகம் கரைந்து அம்மரத்தடியில் எஞ்சினேன். இனியில்லை நான் என்று விழித்தேன். இன்றென்பது ஏதென்று திகைத்தேன். இலைகள் ஒளிகொண்ட வேளை. நீர்நிலைகளில் கதிர்முளைத்த காலை. இரவெல்லாம் பொங்கி நுரைவழிந்திருந்தது என் கலம். அதனுள் கைதொடக்காத்திருந்தது என் அழியா அமுதம்.

பகுதி பதினொன்று: 2. குலைதல்

நாணமற்றது மருதம். நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது. ஆலென்றும் அரசென்றும் குலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை இழிவு நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல். எத்தனை மடமை உண்ட நீரெல்லாம் உடல் நிறைந்தோட கிளை பரப்பி நிற்றல். அளி அளி என்று விரிந்த இலைகள். இன்னும் இன்னும் என எழுந்த செந்தளிர்கள். சிரிக்கும் நீரோடைகள் சொல்லிச் செல்வது அதன் கைமீறலை. காட்டுச்சுனைகளின் ஆழம் அறிவது அதன் கால் மீறலை.

நீர்க்கரையில் நின்று நீராடல் நோக்கி தவம் செய்யும் நெறியிலிக்கு எதற்கு திரண்ட பேருடல்? திமிறும் மற்புயங்கள்? குறும்பு தெறிக்கும் விழிமுனைகள்? குற்றிலைநுனிகளென்று திரும்புவதே போதாதா? நீர்க்கரை விளிம்புகளில் வெண்முனைகள் புன்னகைக்கும் வேர்த்திரள்கள் போதாதா? இருளுக்குள் ஒளிவீசும் வெள்ளிஉடல் எதற்கு? நிலமேறி வேர்கொண்ட நதிமீனா நீர்மருதம்? நீராழம் கரந்திருக்கும் நிழல்களையும் காண்பதுவா?

மருதத்தின் உடலெங்கும் ஓடி மலராகிறது மதம். மலரிதழ்களில் ஊறி மணமாகிறது. வெம்மை எழும் குருதி மணம். விதைக்காளை கொண்ட மணம். கொம்பரக்கின் கொழுத்த மணம். கொட்டும் தேனீக் கொடுக்கின் மணம். மழைத்துளி சிலிர்த்த மயிர்தொகை என மலர்க்கொத்துகள். வண்ணமும் வடிவமும் வாசமொன்றேயான உயிர்ப்பொதிகள். இளங்காற்றில் இலைகள் மேல் சொரிகிறது மருதமழை. ஓடைகளில் வழிகிறது. நீர்விளிம்புப் புற்களில் செறிகிறது. சுனைகளில் அலைவடிவாகிறது. யமுனையின் ஆடையாகிறது.

சேற்றுக்கரைகளில் கரை வருடும் அலைகளில் அலைவளையும் பெருக்கில் சுழிப்பில் பரவுகிறது மருதம். சுருள்கிறது மருதப்பாய். நெளிகிறது மருதப்பட்டு. அலைக்கிறது மருதச்சிறகு. மருத மணம் சூழ மதம் கொள்கிறது காடு. காமம் கொண்ட காளையென மெய் சிலிர்த்து விழி சிவந்து மூச்சொலித்து திமிரெழுகிறது. முன்காலால் மண்உதைத்து முகம் தாழ்த்தி உறுமுகிறது. காமப்பூம்பொடி சுமந்து பாடிச் சுழல்கின்றன கருவண்டுகள். காமத்தேன் கொண்டு கூடணைகின்றன தேனீக்கள். காடெழுந்த காமம். கட்டவிழ்ந்த காமம். கோதலர்ந்த காமம். கோடிவிழிகொண்ட காமம்.

இளங்காலையில் யமுனையில் நீராடுகையில் என் இடைசுற்றி வளைத்தது மருதமலர்ப்படலம். சீ என்று கைநீட்டி கலைத்தேன். சிரித்து விலகி மீண்டும் குவிந்து தேடிவந்தது. “நாணிலாதாய். நெறியிலாதாய். நீரொன்றன்றி வேறொன்றும் அறியாய். உன் மணம்சூடுதல் போல் மங்கையருக்கு இழிவொன்றில்லை. விலகு” என்றேன். நீராடும் என்னைச் சூழ்ந்து நீர்வளையமாகி அலையடித்தது. மூழ்கி குளிக்கையில் என் கூந்தலெங்கும் ஒட்டியது. உதறி முடிகையில் என் தோள்களில் படர்ந்தது. மார்பில் கட்டிய என் ஆடைக்குள் புகுந்தது. முலையிடுக்கில் தொடைப்பரப்பில் பற்றியிருந்தது. எழுந்து கரைவந்து என் உடல் துவட்டி ஆடைமாற்றுகையில் என் உடலெங்கும் மணமாகி உடன்வந்தது.

மருதம்தழுவிய என் மணம் கண்டு சூழ்ந்தன சிறுமணி வண்டுகள். என் வாசம் அறிந்து தலைதூக்கி வாய்திறந்து அழைத்தன கன்னிப்பசுக்கள். வண்டின் சிறகென ஒரு யாழிசை என் வாயிலும் எழுகின்றதா? நான் சென்றமர்ந்த இருளுக்குள் எழுவது செவ்வழி அமைந்த குழலிசைதானா? என் உடலெங்கும் சூழ்ந்த வாசம். என் எண்ணங்களை அணைத்த வாசம். உன் செவ்விதழ் எழுந்த வாசம். உன் தோளிடுக்கில் நான் முகர்ந்த வாசம். எங்கிருக்கிறேன் என்றறியேன். என்னசெய்கிறேன் என்றறியேன். விலகு, இங்கும் வந்து என்னை இழிவுசெய்யாதே. உன் மாயச்சொல்லுக்கு மயங்கமாட்டேன். உன் நாணிலா நகைக்கு விழியளிக்க மாட்டேன்.

“என்னடி இது? எவரிடம் பேசுகிறாய்?” என்றாள் என் நல்லகத்தாள். “எவரைக் கண்டாய்? எதைக்கேட்டாய்?” நான் கேட்டது வரதியை. சுரிகுழல் ஆட செந்நிற ஆடை பறக்க சிறுகாலெடுத்துவைத்து ஓடிவரும் சிறுமி. விழிமலர்ந்தவள். செவ்விதழ்களில் சிரிப்பெழுந்தவள். அவளைத் தொடர்ந்து மரங்களிலும் புதர்களிலும் மறைந்துவரும் கள்வன் யார்? வேறெவன்? பெண்ணென்று பெயரிட்டு எது நின்றாலும் புல்லாங்குழல் கொண்டு பின் தொடரும் புன்மொழியன். கயவன், கள்வன், கரியன், கருமணிவண்ணன். ஏனிப்படிச் சிரிக்கிறாள்? கள்ளச்சிறுக்கி. ஒரு கள்வனைக் கரந்த கண்களுக்கேது நாணம்? அவள் கால்களுக்கேது தயக்கம்?

விலகு. விலகிச்செல். நான் சினந்தமைந்த விப்ரலப்தை. என் விரல்களில் பின்னுவது சினம். என் கண்களில் கனிவது சினம். என் முகத்தில் எரிவதும் மூச்சில் அழல்வதும் முலைகளில் அசைவதும் மொழியில் சுழல்வதும் சினம். “ஏன் சினம்?” என்று வந்தவள் வேலவதி. செங்குழலும் வெண்மேலாடையும் கொண்டவள். நான் உன் தோழி. உன் தனிமையைச் சூழ வந்தவள். குழல்தொட்டால் வளையும் யாழ்தொட்டால் துள்ளும் சின்னஞ்சிறுமி. அருகணைக தோழி. அமர்க. அவன் செய்த பிழையாவும் எண்ணி எண்ணிச் சொல்கிறேன். காதல் மனம் கொண்டு களியாடும் கள்வன். அவன் பொருளில்லா சொல்லும் அருளில்லா நோக்கும் வெறுத்தேன். பொன்கொண்டு வரினும் பூகொண்டு வரினும் இனி அவன் புன்மொழிகேட்க ஒப்பேன்.

என்ன இது உன் கன்னத்திலமைந்த சந்தனம்? இதோ அவன் மார்பணிந்த மலர்ப்பொடி. கைகளில் வளையல் உடைந்த கீறல். கண்மை கரைந்த கீற்று. எழுந்து விலகு. நீ என்னிடமும் அவனை மறைத்தாய். என் விழிமுன் நடித்தாய். உன்னை நானறியேன். உன் மாயங்களும் அறிந்திலேன். உன்னுள் உறைபவனை நானறிவேன். அவன் உறையும் உள்ளங்களையும் நன்கறிவேன். விலகுங்கள். இவ்விருளில் இப்பகலில் எனக்கெதற்கு ராகங்கள். என் செவி நிறைப்பதெல்லாம் இல்லத்து ஓசைகள். நீர்க்குடம் நிறைகிறது. தொழுவில் ஆநிரை அழைக்கிறது. அடுப்பில் அன்னம் பொங்குகிறது. அருகே பால்குடம் புளிக்கிறது. நான் இங்கிருக்கிறேன். இனியொருநாளும் இவ்வாயில் திறக்கமாட்டேன்.

எங்குளாய் நீ குழலே? ஏனிப்படி சுழன்று சூழ்கிறாய்? எங்கிருந்து எழுகிறது இவ்வூற்று? என்னை பஞ்சுத்துகளெனப் பறக்கவைக்கும் காற்று? என்னசெய்வேன்? என்னைச்சிறைவைக்கும் தளையொன்று இங்கிருக்கலாகாதா? எங்குசெல்லவிருக்கிறேன்? என் இனம் தந்த நாணமும் குலம் தந்த முறைகளும் உதறிச் செல்வேனா? அவன் முன் அனைத்தும் அழிந்து அறிவிலிபோல் கலுழ்வேனா? அதன்பின் எஞ்சுவதென்ன என்னுள்? என் நெஞ்சே, என் மட நெஞ்சே, களிகொண்ட சிறுவன் கால்கொண்ட பந்தே. புயல்காற்றில் பொத்திக்கொள் உன் சுடரை. பெருமழையில் காத்துக்கொள் உன் கை உப்பை. ஏனென்று சொல்வதறியேன். நானென்று அவனுக்களிக்க இவ்வாணவம் ஒன்றன்றி ஏதுமில்லை என்னிடம் என்றறிவேன்.

எவரறிவார் கிளைவிட்டு மலருதிரும் கணம்? எவரறிவார் சுமைமீறி அச்சிறும் சகடத்தின் தருணம்? எழுந்தோடி வாயில்படி கடந்து எல்லைகள் தாண்டி கானடைந்தேன். நதிக்கரை மருதத்தின் நிழல்சென்று நின்றேன். அதன் வெள்ளித் தோள்மேல் என் தோள் சாய்த்து நின்றேன். காற்றில் கலைந்தது யமுனை சூடிய இளவெயிலாடை. பாய்கள் இமைக்க படகுகள் விழித்தன. நீலம் கரைந்து நீர்ப்பரப்பு அலைந்தது.

சிரித்தொலித்து என்னைச் சூழ்ந்தனர் தோழியர். லலிதை என் தோள்பற்றி கன்னத்தில் கன்னம் சேர்த்தாள். அவள் அணிந்த குங்குமத்தை என் நெற்றியிட்டாள். “என்னடி இது கோபம்? ஆயர்குலக் கள்வன் அனைவருக்கும் உரியவன் அல்லவா?” சீறி அவளைத் தள்ளி “இல்லை. அனைவருக்கும் உரியனென்றால் அவன்வெறும் பரத்தன். கண்ணன் என்றால் அவன் கன்னி ஒருத்திக்கே உரியன்” என்றேன்.

லசிகை என் கைகளைப்பற்றி “அத்தனை மலருக்கும் ஒருநிலவென்று அமைந்தவன் அவனல்லவா?” என்றாள். “விலகு. நீலவானை உண்டாலும் நிறையாத மலருண்டு கானகத்தில்” என்றேன். கோபியர் என்னைச் சூழ்ந்து நகைத்தனர். “காதலில் கசந்துவிட்டாய். உன்னை ஊடலில் கனியவைக்கிறான் கண்ணன்” என்றாள் விசாகை. “போடி” என அவளை அறைந்தேன். சிரித்து விலகி “குளிர்ச்சுனை நீரை சூடாக்கி அருந்தும் சுவையும் அவனறிவான்” என்றாள்.

அவர்களைப் பிடித்துத் தள்ளினேன். கண்ணீர் கனத்த குரலில் கூவினேன் “பரத்தையரா நீங்கள்? பெண்ணென்று இருந்தால் பேணும் நெறியென்று வேண்டாமோ?” ரங்கதேவி நகைத்து “உண்ணும் உணவும் உடுக்கும் உடையும் எண்ணும் சொற்களும் எல்லாம் அவனென்றால் நேரும் நெறிகளும் மீறும் முறைகளும் அவனன்றி வேறென்ன?” சுசித்ரை என் குழல்பற்றி இழுத்தாள். “கட்டவிழ்த்து செல்லும் கன்று மட்டுமே அன்னையின் அமுதை முற்றறிகிறது தோழி” அவள் கைதட்டி விலகி காலெடுத்து வைத்து காட்டுக்குள் சென்றேன்.

காட்டுக்குள் என் பின்னே காலடி ஓசை கேட்டேன். கண்ணன் அதுவென்று அப்போதே கருத்துற்றேன். என்ன சொல் வரினும் என் முகம் திரும்பாதென்று உறுதிகொண்டேன். பின்நடந்து வந்தான். மெல்ல மூச்சின் ஒலியானான். இன்மணம் என எழுந்தான். என் குழல்பற்றி இழுத்தான். நான் சீறித்திரும்புகையில் சிறுபுதராய் அங்கு நின்றான். கைதட்டி விலக்கி நான் கடிது நடக்கையில் கைபற்றி இழுத்தான். “விடு என்னை வீணா” என்றேன். திரும்பி அவனை ஒரு தாழைமரமாகக் கண்டேன். “உன் ஆடலெல்லாம் நானறிவேன். அதற்கினி மயங்கமாட்டேன். நெஞ்சில் நிறையிருந்தால் வந்து என் நேர்நின்று பேசு” என்றேன். “வந்தேன்” என்று நீலம் என மலர்ந்து நின்றிருந்தான்.

பொய்யன். பொய்யால் இப்புவியை நிறைத்து மெய்யாகி தான் எஞ்சும் புல்லன். அவனை கண்கொண்டு கண்டதுமே கனலாகி உடலெரிய நின்றேன். “ஏனிந்த கோபம்?” என்று என் முகம் தொடவந்தான். கைதட்டி விலக்கி காலெடுத்து விலகி “என் மெய்தொடலாகாது உன் கை” என்றேன். “உன் சினமென்ன என்று சற்றும் அறிகிலேன். உன் மனம் நிறைந்த மலர்கொள்ள வந்தேன்” என்றான். “நீ சொன்ன குறியிடத்தில் நேற்றெலாம் இருந்தேன். என் கண்முன்னே சென்று கன்னியரை கவர்ந்தாய். அவர் பொன்மேனி சூடி போகத்திலாடினாய்” என்றேன். “பொய்யில் நிறைந்த சழக்கன் நீ. போதும். இனி உன் பெயரும் எனக்கு நஞ்சு” என்று கூவி கண்ணீர் துடைத்தேன்.

“ஆகாதென்று வந்தால் இத்தனை அணியெதற்கு கொண்டாய்?” என்றான். குனிந்து என் கைவளையும் கால்சிலம்பும் இடையணியும் முலையணியும் கண்டு திகைத்தேன். நாணிலாது பூத்தவள் நானல்லவா? இங்கே வீணில் வந்து விழியுதிர்ப்பது என் நாடகமா? “உள்ளமறிந்ததை என் உடலறியவில்லை” என்றேன். “மலரணிவது தருவடைந்த அருள் அல்லவா?” என்றான். “சீ, இந்நகையல்ல நான். என் நெஞ்சில் நிறைந்த பகையொன்றே நான்” என்று மேகலையை இழுத்து உடைத்தேன். என் மணியாரம் பிடுங்கி வீசினேன். நெற்றிச்சுட்டியும் நெளிவளைகளும் கழற்றி எறிந்தேன். குனிந்து என் கால்சிலம்பை இழுத்தேன்.

என் தோளளவு குனிந்து “நீ சூடிய அணி களைவாய். உன் உடலெங்கும் பூத்த அணியெல்லாம் எப்படி களைவாய்?” என்றான். “இவ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எனக்காக நீ பூண்ட அணியல்லவா? நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழி மணிகொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா?” நிமிர்ந்து நெஞ்சில் கரம் வைத்து ஏங்கி நின்றேன். “ஆம், இவ்வுடலே உனக்காக நான் சூடிய அணி. என் உள்ளத்தைச் சூடி உதிர்த்திட்டுச் சென்றவன் நீ” என்றேன். “ஏனிந்த சினம்? உன் விழிகண்டு கொண்ட சினம் இது. நான் சொல்லும் மொழிகேட்ட பின்னர் அதை கொள்ளலாகாதா?” என்றான்.

“கண்ணா, நீ அறியாத கன்னி மனம் உண்டா? என்னை விடுத்து நீ சென்ற இடமேது? இத்தனை பெண்களில் ஏனிப்படி மலர்கின்றாய்? உன்னைக் காத்து நான் செய்யும் தவமெல்லாம் வீணா? என் கண்ணீர் காணாமல் காகம்தான் காண்கிறாயா?” அவன் மென்நகை கண்டு மேலும் அழுதேன். “பெண்ணென்று என்னை உணரும் பெருநிலையை நீயே களைந்தால் என்னிடம் நீ கொள்வதென்ன? சுனை நீரை சேறாக்கி உண்பதுதான் உன் சுவையா?”

கண்ணன் முகம் என் கண்முன் மாறக்கண்டேன். காய் சிவந்து கனியாவதுபோல் அவன் கண் கனிந்து ஒளிகொண்டது. என் கைபற்றி அழைத்தான். கொடிவிலக்கி செடிவிலக்கி யமுனைக் கரையருகே என்னை நிறுத்தினன். “நதி ஒன்று. அள்ளி உண்ணும் கைகளோ கோடி கோடி. அவரவர் கையளவே அள்ளுவது விதியாகும்” என்றான். “நோக்கு, இந்நீலப்பெருக்கு என்றும் அழியாது. இன்றிருப்பாய், நாளை என்னுடன் இருப்பாய். அன்றும் நானிருப்பேன். ஆயிரம் கோடி ராதையர் அங்கிருப்பார்” என்றான். குனிந்து நீலநீர்ப்பரப்பை நோக்கி விழிசமைந்தேன்.

ஆயிரம் கண்ணன்கள். என் விழியே, என் நெஞ்சே, என் முதிரா மொழியே, நான் காண பெருகிச்செல்லும் கண்ணனெனும் பெருவெள்ளம். மனையாளின் கைபற்றி தலை நிமிர்ந்த கண்ணன். அவள் பெற்ற மைந்தரைத் தோள்சுமந்து வழிசெல்லும் கண்ணன். குடிலமைத்து அதில் அவளை குடியமர்த்தும் கண்ணன். அவள் அளித்த புல்லுணவை சுவைத்துண்டு முகம் மலரும் கண்ணன். அவள் உண்ண தன் உணவு குறைத்து உளம் நிறைந்தெழும் கண்ணன். தானுண்டு எழுந்தபின் அவள் உண்டாளா என்று வந்து நோக்கும் கண்ணன். குளித்து ஈரக்குழல்கொண்டு வரும் கண்ணன். அவள் முந்தானை நுனிகொண்டு முகம் துடைத்து சிரிக்கும் கண்ணன். அவள் இல்லா இல்லத்தில் அவள் நினைவால் தனித்திருந்து புன்னகைக்கும் கண்ணன். அவள் அணிந்த ஆடையொன்றை அணைத்துறங்கும் கண்ணன்.

மனையாளின் பசிபோக்க சுமைதூக்கும் கண்ணன். தன் மைந்தர் குடிவாழ தசைபுடைத்து தோணியோட்டும் கண்ணன். கல்லுடைக்கும் கழனியுழும் வில்லெடுத்து வேட்டைசெல்லும் கண்ணன். கைமுற்றி தோலாகி கால்முற்றி விறகாகி உருமாறும் கண்ணன். தன்பசியை எண்ணாமல் தோள் மெலிந்த கண்ணன். களங்களில் இருந்தும் கடலில் இருந்தும் கடுவழி விரிந்த தொலைவினில் இருந்தும் கண்ணும் இதழும் சிரிக்க மீண்டுவரும் கண்ணன். அவளை அள்ளி அணைத்து நானுளேன் என்னும் கண்ணன். அவள் துயர்களில் தோள்சேர்த்தணைக்கும் கண்ணன். ஒருபோதும் தனிமையை அவளுக்கு அளிக்காத கண்ணன்.

காலமெல்லாம் அவள் கைபிடித்துத் துணையாகும் கண்ணன். அவள் முதிர்ந்து மெய்மெலிந்து நோயுற்று நோயுற்று பாய்சேர அருகமையும் கண்ணன். அவள் உண்ண சமைத்தளிக்கும் கண்ணன். தோள்பற்றி அமர்த்தி கைகுவித்து ஊட்டி வாய்துடைத்து படுக்கவைக்கும் கண்ணன். அவள் கால்பற்றி விடைசெய்து கண்விழித்து அருகிருக்கும் கண்ணன். அவள் மடிசாய்ந்து விழிமூட முகம் மீது விழிஉதிர்க்கும் கண்ணன். அவள் சிதையருகே நின்றெரியும் கண்ணன். சிந்தையெல்லாம் அவள் நினைவாய் எஞ்சியிருக்கும் கண்ணன். அவள் நினைவை உச்சரித்து தான் மறையும் கண்ணன்.

கண்ணீருடன் மடிந்து மண்சேர்ந்து கதறினேன். “கண்ணா, உன் காலடி பணிந்தேன். கருமணிவண்ணா, இப்புவியில் நீ ஆடுவதெல்லாம் அறிந்தவளல்ல நான்.” நெஞ்சடைத்த சொல்லுடன் நிலத்தில் முகம் சேர்த்து விழுந்தேன். என்னை அள்ளி எடுத்து மடிசேர்த்தான். அருகில் நின்ற மலரிதழ் நீரை என் விழியிதழில் தெளித்தான். இமையதிர்ந்து கண் மலர்ந்தேன். இனியமுகம் கண்டேன். அவன் கைபற்றி என் முலைக்குவை சேர்த்தேன். “என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன்” என்றேன். ஏதும் சொல்லின்றி விம்மி அழலானேன்.

பகுதி பதினொன்று: 3. குமிழ்தல்

இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச் சுருண்டன. வளை வாயிலில் விழிவைத்துக் காத்திருந்த விஷநாகம் நான். பகலிறங்கி இரவெழுந்ததும் சொல்பிறந்த நாவென எழுந்தேன். வில்தொடுத்த அம்பென விரைந்தேன்.

நாகவிஷம் நாகத்தைத் தீண்டுமோ? தழல்வெம்மையில் தழல் துடித்தாடுமோ? நாகமே அதன் படமென்றாயிற்று. உட்கரந்த கால்களின் விரைவை உடல் கொளாது தவித்தது. தன்னை தான் சொடுக்கி தன் வழியை அறைகிறது. ஓடுவதும் துடிப்பதும் ஒன்றென ஆகிறது. செல்லும் வழியை விட செல்தொலைவு மிகுகிறது. வால்தவிக்க உடல் தவிக்க வாயெழுந்த நா தவிக்க விரைகிறது. நீர்மை ஓர் உடலான விரைவு. நின்றாடும் எரிதல் ஓர் உடலான நெளிவு. துடிப்பதும் நெளிவதும் துவள்வதும் சுருள்வதுமேயான சிறுவாழ்க்கை. பகல்தோறும் விஷமூறும் தவம். இருளிலெழும் எரிதழல் படம்.

நிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு.

நீலக்கடம்பின் அடியில் நின்றிருக்கிறேன். நீள்விழி விரித்து காடெங்கும் தேடுகிறேன். என்னைச் சூழ்ந்து புன்னகைக்கிறது காடு. என் நெஞ்சமைந்த நீலனைக் கரந்த காடு. நீலமென அவன் விழிகளை. குளிர்சோலையென அவன் ஆடையை. இளமூங்கிலென அவன் தோள்களை. வானமைந்த சுனைகளென அவன் முகத்தை. அவற்றில் விழுந்தொளிரும் நிலவென அவன் புன்னகையை. காற்றென அவன் காலடியை. தாழைமணமென அவன் உடலை. அருவிப் பொழிவென அவன் குரலை. எத்தனை நேரம் வைத்திருப்பாய்? என் கண் கனியும் கணமெழும்போது கைநீட்டி எனக்களிப்பாய் கன்னங் கருமுத்தை.

என்னென்பேன்? எச்சொல்லால் என்குரைப்பேன்? இப்பகலெங்கும் அவன் நினைவெண்ணி நினைவெண்ணி நானடைந்த பெருவதையை? ஆயிரம் உளிகள் செதுக்கும் கற்பாறையில் உருப்பெறாத சிலை நான். ஆயிரமாயிரம் பறவைகள் கொத்தியுண்ணும் விதைச்சதுப்பு நான். ஆயிரம் கோடி மீன்கள் கொத்திச்சூழும் மதுரக் கலம் நான். நெஞ்சறைந்து உடைத்தேன். என் குழல்பறித்து இழுத்தேன். பல் கடித்து இறுகினேன். நாக்குருதி சுவைத்தேன். அமராதவள். எங்கும் நில்லாதவள். எதையும் எண்ணாதவள். எப்போதும் நடக்கின்றவள். எங்கும் செல்லாதவள்.

சுவர் கடந்துசெல்பவள்போல் முட்டிக்கொண்டேன். நிலப்பரப்பில் நீந்துபவள் போல் நெளிந்துருண்டேன். எரிதழலை அணைப்பவள் போல் நீர்குடித்தேன். என் உடைநனைத்த குளிருடன் தழலறிந்தேன். சினம் கொண்ட நாகங்கள் சீறிப்பின்னும் என் இருகைகள். விம்மித் தலைசுழற்றும் புயல்மரங்கள் என் தோளிணைகள். தனித்த மலைச்சிகரம் முகில்மூடி குளிர்ந்திருக்கும் என் சிரம். எத்தனைமுறைதான் எண்ணுவது காலத்தை? எண்ண எண்ணக் கூடும் காலத்தின் கணக்கென்ன?

எங்கிருக்கிறான்? இத்தனை நேரம் என்ன செய்கிறான்? பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா? கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்கும் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி? விஞ்சுவதேது அவன் முகமன்றி? கனலன் கன்னங் கரியோன் அனலன் ஆழிருள் வண்ணன். கண்ணன் என் இரு கண்நிறை கள்வன். எண்ணிலும் சொல்லிலும் என்னுள் நிறைந்தோன்! கண்ணன் கண்ணன் கண்ணன் என்னிரு கண்ணன் கண்ணன் கண்ணன் என்றானவன்!

என் கண்பொத்தின அவன் கைகள். குழலறிந்தது அவன் மூச்சை. பின்கழுத்துப் பிசிறுகள் அறிந்தன அவன் மார்பணியை. என்னை வளைக்கும் கைகளே, இக்கணம் என்னை கொன்று மீளுங்கள். என்னை வென்றுசெல்லுங்கள். நீவந்து சேர்ந்தபின் நானென்று எஞ்சமாட்டேன். தீயென்று ஆனபின்னே நெய்யென்று எஞ்சமாட்டேன். திரும்பி தலைதூக்கி அவன் விழிநோக்கினேன். இருவிண்மீன் என் விழிக்குளத்தில் விழக்கண்டேன். “காத்திருந்தாயா?” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே?” என்றேன். “ஆம், ஒருகணமே உள்ளது எப்போதுமென” என்றான்.

என்னகுரல்! யாழ்குடத்தின் நுண்முழக்கம். பெருமுரசின் உட்கார்வை. வரிப்புலியின் குகையுறுமல். என்னையாளும் குரல். என் உள்ளுருக்கும் அனல். “உனைநாடி வந்தேன்” என்றான். “எப்போது? இங்கல்லவா இருந்தாய்?” என்றேன். என் குழல் அள்ளி முகர்ந்தான். தோளில் முகம் பூத்தான். இடைவளைத்து உந்திவிரல் சுழித்த விரல்பற்றி “வேண்டாம்” என்றேன். “வேண்டுமென்ற சொல்லன்றி வேறு சொல் அறிவாயா?” என்றான்.

என் தோளணைத்து திருப்பி “மலைமுகடில் மலர்ந்திருக்கிறது குறிஞ்சி. மழைமேகம் அதை மூடியிருக்கிறது” என்றான். “இங்கு குறிஞ்சியன்றி வேறுமலரேதும் உள்ளதா?” என்றேன். “மழைதழுவா பொழுதெதையும் இம்மலைச்சாரல் கண்டதில்லை.” என் வீணைக்குடம் அள்ளி தன் இடைசேர்த்து “ஆம்” என்றான். “மடப்பிடி தழுவி மான் செல்லும் நேரம். மதகளிறு எழுப்பும் முழவொலி பரவிய இளமழைச்சாரல்.” நெடுமூச்செறிந்து அவன் கைகளில் தளர்ந்தேன். “ஆம் ஆம்” என்றேன்.

“குறிஞ்சியின் குளிரில் இதழிடும் மலர்களில் இனியது எது?” என்றான். “அறியேன்” என வெம்மூச்செறிந்தேன். “அழைக்கும் மலர். மடல் விரிந்து மணக்கும் மலர்” என்றான். “அறியேன்” என்றேன். அவன் என் காதுகளில் இதழ்சேர்த்து “அறிவாய்” என்றான். அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.

விருந்தாவன மலைச்சாரல். வறனுறல் அறியா வான் திகழ் சோலை. வீயும் ஞாழலும் விரிந்த காந்தளும் வேங்கையும் சாந்தும் விரிகிளை கோங்கும் காடென்றான கார்திகழ் குறிஞ்சி. தண்குறிஞ்சி. பசுங்குறிஞ்சி. செவ்வேலோன் குடிகொண்ட மலைக்குறிஞ்சி. என் உடலில் எழுந்தது குறிஞ்சி மணம். விதை கீறி முளை எழும் மணம். மண் விலக்கி தளிர் எழும் மணம். விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.

ஒவ்வொன்றாய்த் தொட்டு என் உடலறிந்தன அவன் கரங்கள். கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு. என் உடல் எங்கும் திகழ்ந்த கரமறிந்த என்னை நானறிந்தேன். என் உடலறியும் கையறிந்து அவனை அறிந்தேன். பாலை மணல் குவைகளில் பறந்தமையும் காற்று. பனிவளைவுகளில் குழைந்திழியும் அருவிக்குளிர். புதைத்த நிதி தேடி சலிக்கும் பித்தெழுந்த வணிகன். என்றோ மறந்ததெல்லாம் நினைவுகூரும் புலவன். சொல்தேடித் தவிக்கும் கவிஞன். சொல்தேடி அலையும் புதுப்பொருள்.

அதிகாலைப் பாற்குடம்போல் நுரையெழுந்தது என் உள்ளம். அதற்குள் அமுதாகி மிதந்தது என் கனவு. மழைதழுவி முளைத்தெழுந்த மண்ணானேன். என் கோட்டையெல்லாம் மெழுகாகி உருகக் கண்டேன். செல்லம் சிணுங்கிச் சலித்தது கைவளையல். கண்புதைத்து ஒளிந்தது முலையிடுக்கு முத்தாரம். அங்கிங்கென ஆடித்தவித்தது பதக்கம். தொட்டுத்தொட்டு குதித்தாடியது குழை. எட்டி நோக்கி ஏங்கியது நெற்றிச்சுட்டி. குழைந்து படிந்து குளிர்மூடியது மேகலை. நாணிலாது நகைத்து நின்றது என் கால் நின்று சிலம்பும் பிச்சி.

குயவன் சக்கரக் களிமண் என்ன குழைந்தது என் இடமுலை. தாலத்தில் உருகும் வெண்ணையென கரைந்தது. இளந்தளிர் எழுந்தது. செந்தாமரை மொட்டில் திகைத்தது கருவண்டு. சிறகுக்குவை விட்டெழுந்தது செங்குருவி. அலகு பெரும்புயல் கொண்டு புடைத்தது படகுப்பாய். கடலோசை கொண்டது வெண்சங்கு. கனிந்து திரண்டது தேன்துளி. மலைமுடிமேல் வந்தமர்ந்தான் முகிலாளும் அரசன். கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.

கோட்டைமேல் பறந்தன கொடிகள். போர்முரசம் அறைந்தது. சாலையெங்கும் புரவிக்குளம்புகள் பதிந்தோடின. ஒளிகொண்டன மணிமாடக் குவைகள். மத்தகங்கள் முட்ட விரிசலிட்டது பெருங்கதவம். ஒலித்தெழும் சங்கொலியைக் கேட்டேன். ரதங்கள் புழுதியெழ பாயும் பாதையெனக் கிடந்தேன். ஆயிரம் குரல்களில் ஆரவாரித்தேன். ஆயிரம் கைகளில் அலையடித்தேன். என் சிம்மாசனம் ஒழிந்திருந்தது. செங்கோல் காத்திருந்தது.

எங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை. அள்ளி என் ஆடைசுற்றி அவன் கைவிலக்கி அகன்றேன். “ஏன்?” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய்? இதுவன்றி பிறிதேது?” என்றான். என் இதழ் தேடி முகம் குனித்தான். “தீதென்றும் நன்றென்றும் ஏதுமில்லை இங்கே. கோதகன்ற காமம் ஒன்றே வாழும் இக்குளிர்சோலை.”

நீரையெல்லாம் நெருப்பாக்கும் வித்தையை நான் எங்கு கற்றேன்? நானென்ற புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா? உன் குலமறிந்தேன். குணமறிந்தேன் அல்லேன். இங்கினி ஒருகணமும் நில்லேன்” என்றேன். விழிதூக்கி கண்டேன் அவன் தோளணிந்த என் குங்குமம். அவன் விரிந்த மார்பணிந்த என் முலைத்தொய்யில். அவன் ஆரம் அணிந்த என் குழல் மலர்.

அக்கணமே அறிந்தேன் அவ்வரங்கில் நான் ஆடும் அடவுகளை. நெஞ்சூறும் தேனை நஞ்சாக்கி நாநிறைக்கும் தலைவி. சேணம் சுமக்காத இளம் காட்டுப்புரவி. ஆணை ஊசலாக்கி ஆடும் கன்னி. அவன் நின்றெரியும் வெளிச்சத்தில் தானொளிரும் காளி. பைரவியும் பூர்வியும் இசைமீட்ட நின்றாடும் தேவி. கண்சிவந்த கலகாந்தரிதை. கண்விழித்து எழுந்து கைதொட உறைந்த கற்சிலை. ஒரு சொல் பட்டு எரிந்து மறு சொல்பட்டு அணைந்த காட்டுத்தீ.

“கண்நோக்கியோர் கால்பற்றி ஏறமுடியாத கருவேழமே காமம்” என்று நகைத்து கைநீட்டினான். “அஞ்சுபவர் அமரமுடியாத புரவி. குளிர் நோக்கியோர் குதிக்க முடியாத ஆறு.” அவன் விழி தவிர்த்து உடல்சுருக்கிக் கூவினேன் “உன் சொல்கேட்க இனியெனக்குச் செவியில்லை. செல்க. நானடைந்த இழிவை என் கைசுட்டு கழுவிக்கொள்வேன்.” “மென்மயிர் சிறகசைத்து பறக்கத் துடிக்கிறது சிறுகுஞ்சு. வெளியே சுழன்றடிக்கிறது காற்றின் பேரலைக்களம். அலகு புதைத்து உறங்குவதற்கல்ல சிறகடைந்தது அது. வானமே அதன் வெற்றியின் வெளி.”

சினமெழுந்து சீறித்திரும்பி என் கைபற்றிய சுள்ளி எடுத்து அவன் மேல் எறிந்தேன். “சொல்லாதே. உன் சொல்லெல்லாம் நஞ்சு. என்னை சிறுத்து கடுகாக்கி சிதறி அழிக்கும் வஞ்சம்” என்றேன். குனிந்து கற்களையும் புற்களையும் அள்ளி வீசினேன். “இனி உன் கை தொட்டால் என் கழுத்தறுத்து மடிவேன். என்னருகே வாராதே. ஒரு சொல்லும் பேசாதே. இன்றே இக்கணமே என்னை மறந்துவிடு. இனி என்னை எண்ணினால் அக்கணமே அங்கே எரிவேன்” என்றேன்.

என் அருகணைந்து நிலத்தமர்ந்தான். இரு கைநீட்டி என் ஆடை நுனிபற்றினான். “விழிநோக்கிச் சொல், வருத்துகிறேன் என்று. அக்கணமே அகல்வேன், மற்று இங்கு மீளமாட்டேன்” என்றான். “செல். இக்கணமே செல். இப்புவியில் உனைப்போல் நான் வெறுக்கும் எவருமில்லை. மண்ணில் தவழும் சிறு புழு நான். மிதித்தழித்து கடந்துசெல்லும் களிற்றுக்கால் நீ. உண்டு கழிக்கும் இலையாக மாட்டேன். மலர்ந்த மரத்தடியில் மட்குதலையே விழைவேன்” என்றேன்.

“சொல்லும் சொல்லெல்லாம் சென்றுவிழும் இடமேதென்று அறிவாயா? கருத்தமையாச் சொற்கள் கைவிடப்பட்ட குழந்தைகள். நீ கரக்கும் கள்ளம் நோக்கி உரைக்காதே. உன் உள்ளம் நோக்கிச் சொல்” என்றான் கயவன். “என் உளம் தொட்டு இதுவரை நான் நின்ற நிலம் தொட்டு நான்வந்த குலம் தொட்டு எனையாளும் இறைதொட்டுச் சொல்கின்றேன். நீயன்றி இப்புவியில் நான் துறக்க ஏதுமில்லை. என் எண்ணத்தில் முளைத்தெழுந்த நோய் நீ. என் உடலிலே கிளைவிட்ட களை நீ” என்றேன்.

அவனோ நின்று சிரித்து “உன் விழி சொல்லும் சொல்லை இதழ்சொல்லவில்லை. இதழ்சொல்லும் சொல்லை உடல் சொல்லவில்லை. என் முன் ஒரு ராதை நின்று ஒன்றைச் சுட்டவில்லை” என்றான். “செல்லென்று சொல்லி சினக்கின்றன உன் இதழ்கள். நில்லென்று சொல்லி தடுக்கின்றன உன் கரங்கள். சொல் தோழி, நான் உன் இதழுக்கும் கரங்களுக்கும் ஒன்றான இறைவன் அல்லவா?”

“இனியென்ன சொல்வேன்? எத்தனை சொல்லெடுத்து குருதி பலி கொடுத்தாலும் என் அகம் அமர்ந்த நீலி அடங்கமாட்டாள். என் முலை பிளந்து குலையெடுத்து கடித்துண்டு குடல்மாலை சூடி உன் நெஞ்சேறி நின்றாடினால்தான் குளிர்வாள்” என்றேன். “அவள் கொன்றுண்ணவென்றே ஓர் உடல் கொண்டு வந்தேன். அதுகொள்க” என்றான். மழைவந்து அறைந்த மரம்போல என்மேல் கண்ணீர் அலைவந்து மூடியது. ஆயிரம் இமை அதிர்ந்து கண்ணீர் வழிந்தது. ஆயிரம் சிமிழ்ததும்பி அழுகை துடித்தது. தோள்குலுங்க இடை துவள கால் பதைக்க கண்பொத்தி விசும்பினேன்.

கண்ணன் என் காலடியில் அமர்ந்து நெற்றி நிலம்படப் பணிந்தான். “ஆலமுண்ட காலனின் விரிசடை முடித்தலை. அன்னையே இது நீ நின்றாடும் பீடம்” என்றான். அம்புபட்ட பன்றியென ஆகமெல்லாம் முள்ளெழுந்து உறுமித்திரும்பினேன். என் காலெழுந்து அவன் தலைமேல் நின்றது. இரு கைதொட்டு அதைப்பற்றினான். செவ்வான் ஏந்திய சிறகுகளாயின அவை.

கைவிரல்தொட்டு என் காற்சிலம்பை நகைக்க வைத்தான். என் விரல்மீட்டி வீணை எழச்செய்தான். பஞ்சுக் குழம்பிட்ட பாதம் எடுத்து தன் நெஞ்சின் மேல் சூடிக்கொண்டான். அவன் இதயம் மீது நின்றேன். மறுகாலால் புவியெல்லாம் அதன் துடிப்பைக் கேட்டேன். மூன்று சுருளாக அவன் விரிந்த பாற்கடலின் அலை அறிந்தேன். அறிதுயிலில் அவன்மேல் விரிந்தேன். என் தலைமீது விண்மீன் திரளெழுந்து இமைத்தன. திசை ஐந்தும் என்னைச் சூழ்ந்து மலர்தூவின.

ஒற்றை உலுக்கில் அத்தனைமலரும் உதிர்க்கும் மரமென்றானேன். அவன்மேல் மலர்மழை என விழுந்தேன். என் முகமும் தோள்களும் முலைகளும் உந்தியும் கைகளும் கண்ணீரும் அவன்மேல் பொழிந்தன. ஒற்றைச் சொல்லை உதட்டில் ஏந்தி அவனை ஒற்றி எடுத்தேன். கருமணிக்குள் செம்மை ஓடச்செய்தேன். நீலவானில் விடியல் எழுந்தது. நான் அவன் மடியில் இருந்தேன். விழிக்குள் அமிழ்ந்து ஒளிரும் நகை சூடி கேட்டான் “இன்னும் சினமா?” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது? எவரை?”

பகுதி பதினொன்று: 4. அழிதல்

காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து 'கண்ணா! கண்ணா!' என்றது. துயில் மலர்ந்து எழுந்தமர்ந்ததும் துடித்தெழுந்து ஆடைதேடின கைகள். அதுவரையில் யமுனையில் ஓர் இளமீனெனத் திளைத்திருந்தேன். ஆடைகொண்டு உடல்மூட அசைந்தால் அகல்வானோ சிறுநீலன் என்று அமைந்திருந்தேன். சிறகதிர, சிறு வாலதிர, கூர்முள் அலகதிர, எழுந்தமர்ந்து அதையேதான் சொன்னான். பொன்மேல் எழுந்த நீலம். புதுமலர் போன்ற நீலம்.

எத்தனை அழகியது பறவையெனும் வாழ்வு. வாடாமலர். வானில் பறக்கும் மலர். வாயுள்ள மலர். விழியுள்ள மலர். உன்பெயர்சொல்லி அழைக்கும் உவகை அறிந்த மலர். நீ என்றே நடிக்கும் நீலச்சிறுமலர். கைநீட்டி “வா” என்றேன். கருமணிக் கண்ணுருட்டி தலைசரித்தது. “கண்ணா வா!” என்றேன். எழுந்தமர்ந்து பின் சிறகடித்து என்னருகே வந்தது. அதன் சிறகசைத்த காற்றும் சிற்றுகிர் கொத்தும் என் மேல் பதிந்தன. முலையுண்ணும் குழந்தையின் முளைநகங்கள். மூச்சுக் காற்றிலாடும் இறகுப்பிசிர்கள். கண்ணென்றான நீர்த்துளிகள். “கண்ணா” என்றது. குனிந்து அதன் விழிநோக்கி “நீயுமா?” என்றேன். ஆம் என்று சிறகசைத்து எழுந்தது. அறைக்காற்றில் மிதந்தேறிச் சென்றது.

ஆடைதிருத்தி கூந்தல் சுழற்றி எழுந்தேன். ஆநிரைகள் என் அசைவறிந்து குரலெழுப்பின. அகத்தளத்தில் மாமி சொல்லும் வசைகேட்டேன். அவள் மகளுரைத்த விடை கேட்டேன். நானிருக்கும் இம்முனையின் நடுவழியில் அவை இறகுதிர்ந்து உதிரக்கண்டேன். என்னை அவர் விழிகள் காணாது. என்னைக் காண இவர் விழி போதாது. குடம் எடுத்து வெளிவந்தேன். குளிரெழுந்த இளங்காலை ஒளியில் கூந்தல் பூத்தேன். என்ன இது, எங்கும் நிறைந்திருக்கும் இசைதான் இப்புவியா? குயிலிசை கேட்டு கூவக்கற்றனவா கூரையேறிய சேவல்கள்? கிளிக்குரல் கேட்டு பாடினவா கிளைததும்ப நின்றாடும் காகங்கள்?

செல்லும் வழியெல்லாம் செவி நிறைந்தது புள்ளிசை வெள்ளம். பொன்சாந்தால் விழி எழுதிய மைனாக்கள். பொன் துளியை அலகாக்கிய ஆலாக்கள். பொற்குச்சப் பாகையணிந்த கொண்டைக் குருவிகள். காட்டுக்கோழிகள், குக்குறுவான்கள். ஒன்றுடன் ஒன்று நிரப்பி ஒன்றேயென ஒழுகும் பேரிசை. மரம்கொத்தி போடும் தாளத்தில் நின்றன. மஞ்சள்வெயிலில் கட்டற்று வழிந்தன. பொன்னுருகி வழியும் காலை. என் புலனுருகி ஓடும் காலை. எண்ணங்கள் சிறகடையும் காலை. என்னை இறைவியாக்கும் இளங்காலை.

யமுனைக்கரையில் இருந்தேன். என் காலடி கேட்டு புதருக்குள் எழுந்தது கனல்மணிக் கண்கொண்ட செம்போத்து. வாழைப்பூ மலரான வண்ணம். அப்பால் கிளைநுனியில் ஆடியது கிள்ளை ஒன்று. பச்சை இலைபோன்ற இறகடித்து சுழன்றமைந்தது. நீரில் தவழ்ந்தன வெண்சங்குக் கணமென வாத்துக்கூட்டம். செங்காலில் நின்ற கொக்குகள். செவ்வலகு சொடுக்கும் நாரைகள். நீர்ச்சதுப்பின் அருகமர்ந்தேன். நீட்டியகாலில் முத்தமிட்டன வெள்ளித்தளிர்கள். பொன்வெளியே, பொற்கதிரே, வானம் விளைந்த மணிவயலே! என்னுள்ளம் பொங்கும் எழிற்கணமே. விண்ணறிந்த பறவைகளே. எச்சொல்லால் எத்தனை நீள்மூச்சால் என்னை நான் முன்வைப்பேன்?

இன்றொருநாள் நிகழுமென இத்தனைநாள் எண்ணவில்லை. இன்றுநான் வாழ்வேன் என எக்குறியும் சொல்லவில்லை. இளந்ததளிர்மேல் விழுந்த இடிமழை இந்நாள். நிறைந்த சிமிழ்மீது பொழியும் பேரருவி. என்முன் விழி விரிந்த மலர்களே. என்னைச்சூழ்ந்த கிளைக்கைகளே. கிளைநிறைத்து பரிதவிக்கும் இலைநாவுகளே. எத்தனை கண்கள் கொண்டால் இந்நாளில் மலர்வேன்? எத்தனை கைகள் கொண்டால் என் நெஞ்சை நடிப்பேன்? எத்தனை நாவெழுந்தால் என் நெஞ்சை உனக்குரைப்பேன்? இனியவனே, எத்தனை கால்கள் கொண்டால் எழுந்தாடி இப்புவி நிறைப்பேன்? இந்நாள் இந்நாள் என்று முதற்சொல்லில் மயங்கியது சித்தம். இனியொருநாள் இல்லையென்று எண்ணி ஏங்கியது உள்ளம்.

இன்னொரு பகலை கடந்தேன். இன்னொரு வாழ்வை நடித்தேன். சென்றதொரு யுகத்தில் இருந்தேன். சேர்ந்த ஏதுமின்றி மீண்டேன். எனைச்சூழ்ந்து பறவைக்குலம் கூவியது. “ஏனிங்கிருக்கிறாய்? இன்னும் எவ்வண்ணம் இருக்கிறாய்?” அதிர்ந்ததிர்ந்து அசையும் விரல்களை சேர்த்துக்கொண்டேன். ஆடும் கால்களை குறுக்கிக்கொண்டேன். என் சிறுவீட்டுத் திண்ணையில் உடல்ஒடுக்கி அமர்ந்தேன். சிவந்தெழுந்து தழலாடி சோர்ந்தணைந்த பகலை கணமென்று, கணத்துளியென்று எண்ணி இருந்தேன். என் முற்றத்துமேட்டில் அலையடித்துக் கடந்துசென்றது செம்பருந்தின் நிழல். என் முகப்பு மாமரத்தில் கூவி நெஞ்சழிந்தது சேவல்குயில். அருகே கண்புதைத்து மயங்கியது குரலற்ற பேடைக்குயில்.

அந்தி எழுந்தது. என் கைபட்டுச் சிதறி அறைபரந்தது குங்குமம். செங்குருதி வழுக்கி என் கால் சிவந்தது. கைவிரல் நுனி சிவந்தது. தொட்ட முகம் சிவந்தது. இருவிழி சிவந்தன. அள்ளி முகம் கழுவி ஆடிமுன் நின்றேன். மாலைப்பொன்வெயில் என் முகம் மீது விழுந்ததோ என்று ஐயுற்றேன். வெளியே கரும்பட்டு சரிந்தது. முல்லையும் மந்தாரையும் அல்லியும் கூவிளமும் கலந்தெழுந்த காற்று அறைநிறைத்தது. கொடித்துணிகள் பதைத்தலைந்தன. கிளர்ந்தெழுந்த சேவலின் கொண்டைப்பூவென ஏற்றிவைத்த அகல்சுடர் எழுந்தெழுந்து துடித்தது. வெளியே கூடணைய விழையாத தனிக்காகம் இருளில் கரைந்து திளைத்தது. எழுந்து நின்றது ஒரு பெயர். எண்ணத்தில் கொழுந்தாடியது. என் உடலெங்கும் பற்றி எரிந்தது. விரல்நுனிகளில் நகமென நின்றது கனல்.

முன்நிலவு எழுந்த இரவில் மலைச்சரிவில் பூத்த மலர்க்கடம்பின் கீழ் நின்றிருந்தேன். இன்றுநான் உன்னை என் இருகையில் சேர்க்கும் ஸ்வாதீனஃபர்த்ருகை. என் செவிசூழ்கின்றது மாலஸ்ரீ. இளங்காற்றில் சுழல்கிறது ஜைதஸ்ரீ. குழல் ஆளும் குளிர்காற்றில் என்னை உதறி எழுந்தன நான் கொண்ட எண்ணங்கள். நிலவாளும் ஒளிவெளியில் பூஞ்சிறகு கொண்டு பறந்தன. விண்மீன்களைச் சூடிய இரவு. முடிவிலி அணிந்த கரும்புடவை முந்தானை. வசந்தகால இரவு. வண்ணங்கள் கரைந்தழிந்த இரவு. நீலக்கடம்பு இரவில் பூத்ததா? தாமரைமலர்கள் இதழவிழ்ந்தனவா? அங்கே மண்ணிலிருந்து விண்நோக்கி எழுந்ததா எரிவிண்மீன்?

இசைவென்ற வெளியில் எழுந்தான் என் கண்ணன். திசைதோறும் தெரிந்தான். நீரில் நிலவொளி போல் ஓசையின்றி நடந்தான். என்னருகே வந்து என் கண்நோக்கி நின்றான். இமைதாழ்த்தி நின்றேன். என் உடல்கொண்டு பார்த்தேன். “இன்று உன் வானத்தில் நூறு நிலவு” என்றான். என்னுள் நகைத்து பின் விழிதூக்கினேன். வெண்தாமரைக்குளம் என வானம் பூத்திருக்கக் கண்டேன். “என்ன இது மாயம்?” என்று சிணுங்கினேன். “உன் மனமறியாத மாயமா?” என்றான். உளம்பொங்கி உடலழிந்தேன். என் விழி துளித்து வழியக்கண்டேன். இதழ்கடித்து என்னை வென்றேன். ஏதும் உரைக்காமல் வீணே நின்றேன்.

மெல்ல வந்து என் தோள்தொட்டான். மீட்டும் கரத்தால் என் இடை வளைத்தான். மெய்ப்பெழுந்து மென்மை அழிந்தது என் உடல். கைக்குழியில் எரிந்தது ஈரக்கனல். கண்நோக்கி குரல் கனிந்தான். “விண்நோக்கி நின்றாய். வேறெதுவும் வேண்டாய். உன் கலம் நிறைந்தபின்னர் என்னில் ஏதும் எஞ்சாது ராதை.” ஈர விழிதூக்கி இதழ்வெதும்பி கேட்டேன் “எத்தனை நீண்ட தவம். ஏனென்னை இத்தனை வதைத்தாய்?” சிரித்து “விதைசெய்யும் தவம் அல்லவா வண்ணமலர்?” என்றான். இளம்பல்காட்டி நகைத்து “உன் சொல்லுக்குமேல் என் சிந்தை செல்லாது. இனி நீ சொல்லவும் வேண்டாம்” என்றேன். “உன் பாதத் தடங்களில் பூத்தமலர்கள் என் சொற்கள்” என்றான்.

உண்மையைச் சொல், நீ சொல்லும்போது மட்டும் என் பெயருக்கு சிறகு முளைப்பதேன்? நீ நோக்கும் இடத்தில் என் தோல்சிலிர்ப்பதேன்? உன் விழி தொட்ட இடத்தை என் விரல் சென்று தொடும் விந்தைதான் என்ன? உடலே ஒரு விழியாக உனைப்பார்க்கிறேன். நான் காணாத அழகெல்லாம் கொண்டிருக்கிறாய். உடலே ஒரு நாவாக தித்திக்கிறேன். குறையாத தேனாக என் முன் நிற்கிறாய். வென்று வென்று சலிப்பதில்லையா உனக்கு? வேறுபணி ஏதும் நீ கொண்டிருக்கவில்லையா? மண்ணில் விளையாடும் மழையை நீ கண்டதில்லையா?

என்னவென்று ஆட்டிவைக்கிறாய்? என் நெஞ்சிருந்து நீ நடிக்கிறாய். உன் முன் நின்றுருகும் உடலைமட்டும் அறிந்திருக்கிறாய். கைதழுவும் மெல்லுடலில் காதல் கொண்டாய். உன் கண் தொடாத இருளில் நீந்துகின்றாய். 'ம்ம்ம்' என்று சொல்லி விலகினேன். “ஏன்?” என்று சொல்லி அணுகினாய். என்னென்றுரைப்பேன்! என் உடல் பிளந்து பலவாகி உனைச்சூழும் வண்ணம். இரு நாகங்கள் சீறி உன் தோள்வளைத்தன. வெண்களிறொன்று துதிகொண்டு உன் இடை வளைத்தது. நுனிக்காலில் நின்று உன்மேல் படர்ந்தேன். கொழுகண்ட கொடியறியும் முழுமை இது.

இன்றுகாலை கூட்டுச்சுவர் உடைத்து வான் கண்டது செவ்விதழ் பட்டாம்பூச்சி. வண்ணச் சிறகசைத்துச் சொல்லும் ஒரு சொல் வானிலேற்றி நிறுத்தும் வகை அறிந்தது. குருதிக்கீற்றென காற்றில் அலைந்தது. குங்குமத்தீற்றென ஒளியில் வழிந்தது. எங்கிருந்தோ எழுந்த காற்று எண்திசை நிறைந்தது. இரவின் குளிர் கலந்த காற்று. யமுனையின் நீர் சுமர்ந்த காற்று. நெஞ்சுக்குள் நிலத்தின் வெம்மைகரந்த காற்று. எத்திசையில் எழுந்தாலும் இனியவனை நோக்கியே தள்ளிச்சென்றது. அவன் தோளிலும் இடையிலும் தாளிலும் முடியிலும் சுழன்றது. செஞ்சிறகிணையை அள்ளி அலைக்கழித்தது.

அடிமரக் கொடியென நரம்பெழுந்த புயங்களில் மெல்ல அமர்ந்தது. அவன் கைநீட்ட அஞ்சி எழுந்து சுழன்றது. அறியாத விசையால் நீலப்பாறைத் தோளில் பதிந்தது. அவன் மென்மயிர்க் கன்னத்தில் பட்டு அதிர்ந்தது. அங்கு தன் சிறகுத்தடம் விட்டு எழுந்தது. அசையாத ஆடிப்பாவை கண்டு திகைத்தது. அவன் மூக்கில் கழுத்தில் செவியில் என அமர்ந்தமர்ந்து எழுந்து. ஆறாமல் தவித்தது. பின் தன்னைப்போல் தவிக்கும் தன் ஆடிப்பாவை ஒன்றைக்கண்டு அதிலமர்ந்தது. குங்குமம் அணிந்தது குங்குமம். எரி சிதையேறிய எரியுடல். அங்கே தேனருந்தி தேனாகி சிறகு பூட்டியது.

மலர்கனத்து வளைந்த மரக்கொம்பில் இரு மணிப்புறாக்கள். அஞ்சி அலகுபுதைத்தவை. அணித்தூவல் குவைகள். அவன் கை நீட்டக்கண்டு அதிர்ந்து எழுந்தமைந்தன. மெல்ல நகைத்து கைநீட்டி “அஞ்சாதே” என்றான். அருகணைய அருகணைய விலகி அகலத்தை மெல்லக்குறைத்து அவை நின்றன. ஒன்றை ஒன்று நோக்கி வெட்கின. எங்கோ நோக்குபவை போல் நடித்தன. விழிநோக்காமலேயே அவன் விரல் கண்டவை. செவ்வலகு எழுந்தவை. நெஞ்சில் இறகு புடைத்து பெருத்தவை. நெருங்கு என்று குரலும் அஞ்சி நீங்கிச்செல்லும் கால்களும் கொண்டவை.

“அச்சமென்றால் அவ்வண்ணமே ஆகுக” என்று விலகினான். தோகை விரித்த மடமயிலை நாடினான். நீள்கழுத்து சொடுக்கி அவனை நோக்கியது. நீலக்கூந்தல் சுழற்றி அவன் முகம் மறைத்தது. கூந்தலருவியின் கீழ் நின்றான். பீலிக்குளிர் அருவி. பெய்யும் விழியருவி. சாமரமாயிற்று. சரிந்து அவனை மூடும் மென்மழையாயிற்று. பூமரமென காற்றிலாடியது. பொழிந்து அவனை கொண்டது.

அஞ்சி அடிவைத்து அவன் தோளில் அமர்ந்தன வெண்புறாக்கள். கருநீல மேனியை தொட்டுத் தொட்டுச் சிவந்தன கருங்கூர் அலகுகள். தோளமர்ந்த மென்மைகளை கைகளில் அள்ளினான். கண்சுழித்து உருட்டி சிறகடக்கி விரல்வெம்மையில் ஒடுங்கின. அவன் முழங்கை மடக்கில் மணிக்கட்டில் மடியில் சென்று அமர்ந்தன. அச்சம் துடிக்கும் ஒலி கொண்டவை. குருதி ஓடும் சுதி கொண்டவை. காற்றெழுந்தமைந்த களிப்பந்துகள். அவன் இதழ்கள் தொட்டதும் விழி கூர்ந்தன. அவன் மூச்சின் வெம்மையில் இறகு சிலிர்த்தன. அவன் கன்னக்கதுப்பில் அலகு தீட்டின. “அய்யோ” என எழுந்து சிறகடித்தன. அவன் நீட்டிய கைகளை நோக்கி நகைத்தன.

மீண்டும் ஆவல் கொண்டு வந்தமர்ந்தன. நாணி இறகுக்குள் அலகு புதைத்தன. ஒன்றோடொன்று ஊடி விலகின. ஒன்றுடன் ஒன்று ஒண்டி அமர்ந்தன. அவன் பாதத்தில் பதிந்தன. தொடைகளில் நடந்தன. தசை வயிற்றில் புதைந்தன. மார்பில் உலாவின. கழுத்தில் அமைந்தன. உதடுகளில் அலகு சேர்த்தன. அஞ்சி விழியிமைகளை அலகுதொட்டு நோக்கின. நெற்றியில் சிறகமைத்தன. அவன் நகைத்து கைநீட்ட நாணி எழுந்து பறந்தன. அவன் எண்ணி எண்ணாது நடிக்கையில் வந்தமர்ந்து ஒண்டின.

மென்பனித் தூவல் கொண்டது அன்னம். அலைகளிலாடி அலையென்றானது. நீர்த்துளி வழுக்கும் பளிங்குப் பரப்பு. வெண்நிலா ஒழுகும் தண்பனிப் பாளம். விரல் தொட உருகி வழிந்தது. சிறகமைந்து அங்கே அமைந்தது. பின் கையுதறி விலகி நீரில் மறைந்தது. மெல்ல எழுந்தது. இறகு விரித்து அமைத்தது. அருகணைந்து நின்றது.

“நிலவுத் திரியிட்ட ஆலயம். நீ அதன் தேவி” என்றான். என் இருகைபற்றி அழைத்துசென்று மலைச்சுனை அருகே நிறுத்தினான். “பதினாறு பணிவிடைகள் உனக்கு. பருவம் தோறும் ஒரு பெருவிழா. பகல் ஐந்து பூசை. இரவில் நீ என்னவள்” என்றான். “என்ன இது? நான் எளியோள். ஆயர்மகள்” என்றேன். “ஆலய முகப்பில் கைகுவிக்கிறேன். அகிலும் சாந்தும் அணியும் மலரும் கொண்டு வருகிறேன். அன்றலர்ந்த மலர்கொண்டு பூசெய்கிறேன். அடியவன் பணிவதே இறைவடிவென்றாகும்” என்றான். “அய்யோ, நான் என்ன செய்வேன்” என நகைத்து முகம் மூடினேன்.

“என்ன இவ்வணிகள்? பொன்னும் மணியும் பெண்களுக்குரியவை. தேரிறங்கி மண்ணில் வந்த தெய்வங்கள் தீண்டலாமா?” என்றான். என் குழல்சுற்றிய மணிச்சரத்தை மலர்தொடுத்த நார் விலக்குவதுபோல் எடுத்தான். காதணிந்த குழைகளை மடல்தொட்டு கழற்றினான். மூக்கிலாடிய புல்லாக்கை மெல்லத் திருகி எடுத்தான். கழுத்தணிந்த ஆரங்களை கைதொட்டு நீக்கினான். முலைதவழ்ந்த முத்தாரம் முத்தமிட்டு நீக்கினான். மேகலை அகற்றிய மெல்விரல் தீண்டி பொன்புனல் சுனையொன்று புதுச்சுழி கண்டது.

“பூமி ஒரு மொட்டாக இருக்கையில் உனக்காக முகிழ்த்து இத்தனைநாள் தவம்செய்தது இம்மலைப்பாறை” என்றான். என்னை தோள்தொட்டு அதில் அமர்த்தினான். உன் பின்னழகு அமைய இப்பள்ளத்தைச் செதுக்கின பல்லாயிரம் ஆண்டுப் பெருமழைகள்.” தாமரை இலைபறித்து சுனைநீர் அள்ளி வந்தான். “இலைகொண்ட நீரால் மலர்கழுவுதல். தன்னில் மலராத தாமரையை ஒருநாளும் கண்டிராது இம்மலைச்சுனை” என்றான்.

குளிர்நீர் கொண்டுவந்து என் கால்கழுவினான். “என் நெஞ்சில் நடந்த பாதங்கள். மலர் உதிர்ந்து மலைப்பாறை வடுவான மாயத்தை யாரறிவார்?” என்றான். என் குதிகாலை தொட்டு வருடினான். பாத வளைவில் விரலோட்டினான். விரல்களை சேர்த்தணைத்தான். சிணுங்கிய சிலம்பை மெல்லத் தட்டி கழற்றி வீசினான். என் இருகையைக் கழுவினான். சிவந்த சிறுவிரல்களை ஒவ்வொன்றாய் அழுத்தினான். “சிறு செங்குருவிகள் கொண்ட பொன்னலகுகள்” என்றான். விரலொன்றுக்கு நூறுமுத்தம் ஈந்தான். விதிர்ந்து நின்ற சுட்டுவிரலை வெம்மை எழுந்த தன் வாய்க்குள் வைத்தான்.

நாகம் தீண்டிய செவ்விரல் போன்றவை நீலம் பரவிய ஊமத்தைப்பூக்கள். அவற்றின் நச்சுக்குவளைக்குள் தேங்கிய மழைநீர் கொண்டுவந்து தந்தான். “உன்மத்த மலர்நீர். உன் பித்துக்கு இதுவே அமுது” என்றான். நான் அருந்திய மிச்சத்தை தானருந்தினான். என் இதழ் நின்ற தனித்துளியை நாவால் எடுத்தான். என் இடைபற்றி சுனைக்கரை கொண்டு சென்றான். “அதிகாலை ஆலயத்தின் அணிகொள்ளா அன்னைசிலை நீ” என்றான். “அய்யோ” என நான் அள்ளிப்பற்றும் முன்னே ஆடை பற்றி இழுத்தான். நழுவத்தான் காத்திருந்தனவா நானணிந்த உடையெல்லாம்? நின்று அதிரத்தான் எழுந்தனவா நிமிர்முலையும் பின்னழகும்? நிலவொளி அணிந்து நிமிர்ந்து அங்கு நின்றேன். அவன் நீர்விரிந்த நிலவள்ளி என்னை குளிராட்டினான்.

“மென்சந்தனம், மலைவிளைந்த செம்பஞ்சு” என்று சொல்லி சுனைக்கரையின் செஞ்சேறு அள்ளி என் முலைபூசினான். செம்மண் விழுதெடுத்து இடைபூசினான் “மதகளிறின் மத்தகம் அணிந்த கொன்றை. உன் இளமுலை கொண்ட தொய்யில்” என்றான். என் உடல் மண்ணில் ஒளித்தது. கோடி விதைகள் கண்விழித்து முளைவிட்டெழுந்தன. சாந்து உலர்ந்து வெடிக்கும் வெம்மை. செம்பஞ்சை வெல்லும் செம்மை. என் மேல் எழுந்த காட்டில் மலர்ந்த கோடி மலர்கள். கூவி சிறகடித்தன குழல்கொண்ட பறவைகள்.

தாமரைக்கொடி பிழுது நூலெடுத்து என் தோள்சார்த்தினான். அதை இரு முலைநடுவே நிறுத்தி வைத்தான். நீரோடும் பாறை வழி. நெளிந்தோடும் நாக உடல். “எனை எண்ணி ஏங்குகையில் எழுந்த முலை நெரிக்கவேண்டும் இப்புரிநூல்” என்றான். செண்பக மலர்ப்பொடி அள்ளி என் உடல்பூசினான். பாரிஜாதம் அள்ளி என் குழல்சூட்டினான். “எரிதழலுடலோன் சூடிய எருக்கே உன் பித்துக்கிசைந்த பூசைமலர்” என்றான். கொன்றை மலர்கொண்டு மஞ்சள் பரல் தூவினான். மருதமலர் கொளுத்தி மணத்தூபம் காட்டினான். வாழைமடல் எடுத்து காந்தள் இதழ் வைத்து அகலேற்றினான். மின்மினி கொண்டு சுடர் கூட்டினான்.

பணிவிடைகள் கொண்டு தெய்வப் படிவமானேன். உள்நின்று எரிந்து தேவியானேன். விழிசுடர்ந்து கை அருளி நின்றேன். “உன் பலிபீடத்தில் நான் அமுதம்” என்று தன் தலையெடுத்து என் தாளிணையில் வைத்தான். “என் இதழ் சுவைக்கும் தாம்பூலம் உனக்கு” என்றான். இவ்வுலகும் அவ்வுலகும் எவ்வுலகும் அறியாமல் இதழோடு இதழ்கரந்து சுவையொன்று தந்தான். என் செவியில் எனை விண்ணேற்றும் மந்திரமொன்று உரைத்தான். “ராதை” அச்சொல் மட்டும் அப்பொழுதை ஆண்டது.

பகுதி பதினொன்று: 4. அழிதல் [தொடர்ச்சி]

உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத் தோலாக புவிப்பரப்பு ஓசையிட பெருநடையில் எழுந்தது பெண்புரவி. பொற்கொன்றைப் பூக்குலைமேல் அமர்ந்தது நீலமயில். மலையிழிந்த பெருநதி பேரொலி எழுப்பி கரம்நூறு பரப்பி கொப்பும் கிளையும் குமிழியும் மலரும் சேறும் நுரையுமாய் அலைபுரண்டு கடல் சேர்ந்தது. மண்செம்மை கடல்நீலத்தில் கலந்தது. துள்ளி முடிவில் சேர்ந்தன மீன்கணங்கள். நாற்புறமும் எல்லை திறக்க நின்று தவித்தது நீங்காத பெருந்தனிமை.

உடல் கவ்வி உண்ணும் உதிரச்சுவை கண்ட மிருகம். உகிரெழுந்த கைகளால் அள்ளிப்பற்றி ஊன்சுவை வாயால் கவ்விமென்று குருதி குடிக்கிறது. தன்னை உண்ணும் வாயை பின் திரும்பி நோக்கி பிரமித்தது மடமான். ஒருநூறு வாயில்களை ஓங்கி உடைத்து உட்புகுந்து சுழன்றது காற்று. உள்ளே படபடத்து கிழிந்து பறக்கின்றன திரைகள். எங்கெங்கோ ஒலித்துச்சரிகின்றன உலோகப்பொருட்கள். மூடித்திறந்து மோதி அறைகின்றன சாளரங்கள். அடுமனையின் இருளில் சினந்தெழுந்து நின்றது செஞ்சுடர். கரும்புகை சூடிய நீள்தழல். நெற்றிக்கண். கண்நடுக்கண். கண்கரந்த கண்.

இரண்டு பெரும்பசிகள். அன்னத்தைக் கண்டடைந்த அன்ன உருவங்கள். அன்னத்தினூடே ஆழத்தை அறிகிறது அன்னம். வலப்பக்கம் இரையைக் கிழித்துண்டு உறுமியது பொற்பிடரிச் சிம்மம். மென் தசையை கடித்தது. எலும்பு அடுக்குகளை விலக்கியது. குருதி ஊற்றுகளில் முகம் நனைத்தது. உள்ளறைகளில் நா நுழைத்தது. எரிந்த நெருப்பை சுவைத்தது. உடல் விலக்கி மறுபக்கம் சென்று திகைத்தது. அங்கே எழுந்த இருள்நிறைந்த பாதையில் கால்தயங்கி நடந்தது. இருளில் அதன் உறுமல் எதிரொலித்தது. எரிவிழிகள் மின்னி மின்னிச்சென்றன. மின்னும் ஒராயிரம் கோடி விண்மீன்களில் கலந்தமைந்தன.

இடப்பக்கம் மகவை நக்கிநக்கி துவட்டியது அன்னைப்பசு. அகிடில் அமுதம் கனக்கும் பசு. ஐந்து காம்புகளில் வெண்குருதி கசிந்த பசு. நாவின் நீரலை. நாவின் தழல்கதிர். அன்பெழுந்த சொல்லெல்லாம் அவிந்தமைந்த வெந்நாக்கு. நவிலாத நாக்கு. நக்கி உரையாடும் நாக்கு. புன்மயிர்தலையை பிடரிச்சரிவை கருமென் மூக்கை கால்களை கைகளை இடையை வயிற்றை எங்கும் தொட்டுத் தவழ்ந்தது எச்சில். நனைந்து நடுங்கியது கன்று. மயிர் சிலிர்த்து பெருத்தது. மீண்டும் கருக்குழி சென்றதுபோல் உணர்ந்தது. இமைசரிந்து செவிநிலைத்து இங்கில்லை நான் என்பதுபோல் நின்றது. தேடித்தேடி அலைந்தது ஈரத்தொடுகை. எங்குளது எங்குளது என்று தவித்து இங்குளது என்றறிந்தது. இதுவாகி என் முன் உளது. நான் சுமந்த கரு. என்னை உண்டு எழுந்த உரு. நானிது நானிது என்று நெளிந்தது நாடியதைக் கண்டறிந்த நாக்கு.

நடுவே விழித்து திகைத்துக்கிடக்கும் இவள் யார்? விண்ணுதித்த போதே தானுதித்த மண்ணா? கோடிமுறை மழை கொட்டியும் அனலடங்கி அமையாதவள். விண்ணின் ஒரு விதையும் தீண்டாதவள். எதைத் திகைத்து நோக்குகிறாள்? யாரிது என்கிறாளா? இவையென்ன என்று மலைக்கிறாளா? உண்பதும் உண்ணப்படுவதுமாய் நடிக்கும் இதுவறிந்த எதுவும் தானறிந்ததில்லை என்று அறிந்து விரிந்திருக்கிறாளா?

விண் படலம் கிழித்து மண்ணில் அறைந்தது எரிவிண்மீன். எங்கோ இடியோசை நகைத்தது. மின்னல் வெட்டி வெட்டி அதிர்ந்தது. கண்ணுக்குள் மெல்லத்திரும்பியது ஒரு வலிக்கொப்புளம். அதன் வண்ணஒளிச்சுவர் விம்மி விம்மி அதிர்ந்தது. மின்னல்களின் மௌனம். மின்னல்களின் பிடிவாதம். கருவறைக்குள் தலையெழுந்தது குழவி. நிணநீரில் நீந்தியது. நெஞ்சை கைதொட்டு நான் என்றது. மூடிய அறைவாயை முட்டித் தவித்தது. கைகளால் கால்களால் தோள்களால் மோதிக் கொப்பளித்தது. உருண்டெழும் வலிக்குமிழிகள். சுழன்று மோதும் கொப்புளங்கள். சினம் கொண்டு சிரமெடுத்து முட்டி இருள்வாயில் திரைகிழித்தது. குருதிச்சுனை கரை கடந்தது. நழுவி வழிந்தோடி வெளிவந்து விண் அறிந்தது. மூச்சுத் தவித்து திளைத்தது. முதற்சொல் எடுத்து அழுதது.

மந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன். எரிவிழி இறைவனை காலடி சேர்த்தேன். அனலெழு குழலை அலையென விரித்தேன். துடியெழு தாளம். கடுந்துடிதாளம். தததக தத்திமி தததக தத்திமி தாளத்தின் நாதம். அடிமுதல் முடிவரை வெடிபடு தாளம். காளி காளி காளி கங்காளி. நீலனை உண்டு நிறைவுறும் நீலி. வெறியொடு பேய்க்கணம் சூழ்ந்து நின்றாட, வெளியினில் வெறுமையில் களிகொடு பூதம் பாட, இருள்படு முழுமையில் எழுக கங்காளி!

கானகப் பசும் இருளில் கரந்த சிற்றாலயக் கதவு திறந்து அலறி எழுந்தது அன்னைப்பெருந்தெய்வம். காடெங்கும் பறவைகள் கலைந்து வானேறின. கிளை விதிர்த்து சிலைத்தன மரங்கள். பின் சுழன்றடித்த காற்றில் வெறிநடமிட்டமைந்தன. பீடமேறி நின்று பெருங்குரல் கொடுத்தாள் தேவி. பலிக்குருதி அள்ளி தழலுடல் நனைத்தாள். நீர் விழுந்தணைந்த எரிதழல் போல நின்ற இடத்தில் குறுகி மறைந்தாள். வெண்புகையென எழுந்தாள். வெட்கி வளைந்தாடினாள். இளங்காற்றில் இல்லை எனக் கரைந்தழிந்தாள்.

தன் உந்தி மலர்ந்த தாமரையில் உறைபவனைத் தொட்டான் பாற்கடலோன். “எழுக காலம்!” என்றான். நான்முகமும் திகைக்க “ஆணை” என்றான். தன் நாவிலுறையும் இறைவியிடம் சொன்னான் “எழுக சொல்!” அவள் தன் கைதிகழ்ந்த வீணையிடம் சொன்னாள் “எழுக நாதம்!” அது தன் குடத்தில் உறைந்த இருளிடம் சொன்னது “எழுக இன்மை!” இன்மை எழுந்த இனிமை. இனிமை மலர்ந்த நாதம். நாதமாகிய சொல். “ராதை” ஆம் என்னிடம் சொன்னது காலம். நான் இருக்கிறேன் என்றது. “ம்?” என்றேன். ஆயிரம்பல்லாயிரம் கோடி இதழ்கள் விரிந்து என்னைச்சூழ்ந்தன என்னை ஆக்கிய எல்லாம்.

“குளிர்பெய்யும் இரவு” என்றான் கண்ணன். “ஆம்” என்றேன். “உன் மேல் மலர்பெய்திருக்கிறது அது” என்றான். ஆம் என்ற சொல்லன்றி ஏதுமற்ற மொழிகொண்டிருந்தேன். என் மேல் விழுந்த மலர் ஒவ்வொன்றாக தன் இதழால் கவ்வி எடுத்தான். மழைத்துளிகள் மெல்லச் சொட்டி மண் நெளிந்தது. நிலா நிறைந்த வானை நோக்கிக் கிடந்தேன். ஒவ்வொரு இலைநுனியிலும் இறங்கி அமர்ந்திருந்தது ஒரு துளி நிலவு. கனவில் மிதந்து கலைந்துகொண்டிருந்தன முகில்கள். வடிவிலா வடிவங்கள். ஒருபொருளும் திரளாத ஒளிமிக்க சொற்கள். இன்னும் ஏனிருக்கிறது இப்பிரபஞ்சம்?

அங்கே ஒரு அலையறியாக் கடல். அதன் கரையிலொரு வெண்தாழை மரம். விரிசடையன் தலையணிந்த வெண்பிறைபோல் அதிலொரு மலரிதழ். வழியும் நறுமணம். உதிக்காத ஓயாத இளஞ்சூரியன். நிலவுப்பரப்பே விண்ணானதா? வெண்பனி உறைந்தொரு பெண்ணுடலானதா? அங்கே இருந்தேன். நானன்றி எவருமிலா நிறைத்தனிமையில். என்னுடன் நானுமில்லா எளிமையில். ஒரு காலடியும் இல்லாத மணல். ஒருபறவையும் இல்லா வானம். ஒருமீனும் துள்ளாத நீராழம். ஒருவருமே அறியாத என் இடம்.

திடுக்கிட்டு விழித்தேன். “எங்கிருந்தாய்?” என்றான். “நானொருத்தி மட்டும் நின்றிருக்கும் ஓர் இடம்” என்றேன். “நானும் வரமுடியாததா?” என்றான். “ஆம், நீயும் அறியமுடியாதது” என்றேன். புன்னகையுடன் “உன் தனிமைக்கு நூறு பூக்கள். அங்கு நீ அறிந்த முழுமைக்கு நூறு நிலவுகள். அங்கு இப்போது எஞ்சும் வெறுமைக்கு நூறு கதிரவன்கள்” என்றான். நாணி விழிதாழ்த்தி நகையொன்று இதழ்சூடி உடல்பூத்தேன். நுனிவிழியால் அவனை நோக்கி “எப்போதும் சிறிது எஞ்சுவேன். உன் லீலைக்கு மலராக மீண்டு வருவேன்” என்றேன். அவன் நகைப்பைக் கண்டு நானும் நகைத்தேன்.

என் நெஞ்சமைந்த நினைவெல்லாம் நீள்மூச்சில் பறக்கவைத்தேன். ஆடை எடுத்து அரைசுற்றி அமர்ந்தேன். என் குழலெங்கும் சருகும் புல்லும் செறிந்திருந்தன. முல்லைமலர்கள் போல் சிதறிக்கிடந்தன என் சங்குவளைத் துண்டுகள். அணியாக மலராக ஆடையாக அங்கெல்லாம் சிதறிக்கிடந்தேன். எழுந்து ஒவ்வொன்றாய் திரட்டி என்னை உருவாக்கினேன். “என்ன செய்தாய்? என் கால்சிலம்பொன்றைக் காணேன். என்னவென்று சொல்வேன் என் அகத்தார் வினாவுக்கு?” என்று சிணுங்கினேன். “பார் மணியாரம் அறுந்துவிட்டது. மேகலை ஒரு முத்திழந்திருக்கிறது.”

புல்லில் படுத்து தலையடியில் கைவைத்தான். புன்னகைத்து என்னிடம் “அணியெல்லாம் சூடி ஆடைமறைத்து நீ மீண்டு செல்லும் இடம் ஏது?” என்றான். பொய்ச்சினம் பொலிந்து “ஏன்? எனக்கென்ன வீடில்லையா? குடியும் குலமும் இல்லையா?” என்றேன். “அவ்வுலகில் உனக்குள்ளதெல்லாம் அத்தனை முதன்மையா சொல்?” என்றான். “ஆம், இவ்விரவில் இங்கேயே வாழ்ந்துவிடலாகுமா? விண்ணளக்கும் புள்ளும் மண்அமையும் இரைகொள்ள” என்றேன். “ஆம், அங்கிருந்து வந்தால்தான் இந்தக் காட்டில் நிலவொழுகும்” என்றான்.

“எழுந்து வா கரியவனே, என் மணிகளை தேடித்தா” என்று கொஞ்சி திரும்பினேன். அவன் முழுதுடல் கண்டு நாணி முகம் திருப்பி “என்ன இது? நாணென்று ஒன்றில்லையோ?” என்று ஆடை ஒன்றை எடுத்து அவன் இடைமேல் போட்டேன். அதைப்பற்றித் திரும்பி எழுந்தான். அவன் காலடிகள் என்னை அணுகும் ஒலிகேட்டு விதிர்த்தேன். அவ்வடியோசை ஒன்றிலேயே அவனடைந்த மாற்றம் உணர்ந்தேன். என் குழல்பற்றி இழுத்து “என்ன நாணம்?” என்றான்.

“நாணமா?” எனத் திரும்பி நகைத்து வாய் மூடினேன். “ஏன்?” என்று பொய்ச்சினம் கொண்டான். அவன் இடையணிந்த உடைசுட்டி “எப்போது பெண்ணானாய்?” என்றேன். என் இடையாடை தொட்டு “நீ ஆணாக ஆன பொழுதில்” என்றான். குனிந்து என் ஆடை நோக்கி “அய்யய்யோ” என்றேன். “அது என் தலைப்பாகை” என்றான். என் அருகே வந்து இடைசுற்றி “அதில் சூடிய மயில்பீலி உள்ளே இருக்கிறது. கண் விழித்து காத்திருக்கிறது” என்றான். “விலகு” என அவனைத் தள்ளினேன்.

“பெண்ணென்ன ஆணென்ன, ஒன்றுகொள்ளும் ஓராயிரம் பாவனைகள் அல்லவா?” என்றான். “ஒன்று இன்னொன்றால் நிறைவடைகிறது. ஒன்றாகி தன்னை உணர்கிறது.” ஆம், தேடுவது ஆண், அடைவது பெண். திமிறுவது ஆண், திகழ்வது பெண். குவிவது ஆண், அகல்வது பெண். “ஆடையிலா உள்ளது ஆண்மையும் பெண்மையும்?” என்று என் செவியில் சொன்னான்.”ஆகத்திலும் இல்லை. அகத்திலும் இல்லை. ஆழத்தில் உள்ளது அந்த பாவனை.”

நான் அவன் தோள்வளைத்து “சொல்லிச் சொல்லியே கொல்லும் கலை தெரிந்தவன் நீ” என்றேன். “சொல்லெனும் கிளையில் வந்தமரும் கிள்ளை அல்லவா பெண்?” என்றான். “சீ” என அவன் கன்னத்தில் அறைந்தேன். “கண்ணனென்றால் வாய்ச்சொல்லில் மன்னன் என்றே தோழியர் சொல்கின்றனர்” என்றேன். “கண்ணன் வெறும் களிப்பாவை. கன்னியர் ஆடும் அம்மானை” என்றான். நகைத்து என் உந்திக்குழியில் முகம்புதைத்துக்கொண்டான்.

கண்ணன் என்ற கன்னி. உண்ண இனிக்கும் கனி. மதவேழ மருப்பில் எழுந்தது மலர்க்கிளை. நீலக்கடம்பில் மலர்ந்தது கொடிமுல்லை. என் உலகை நான் ஆண்டேன். என் புவிமேல் வானமானேன். கோடிக்கால்களால் நடந்தேன். கோடிக்கரங்களால் அணைத்தேன். அப்புரவியில் அடிவான் வரை சென்றேன். பாயும் அலைகளில் பாய்புடைத்தெழுந்தது படகு. கருங்கல் மண்டபத்தை அள்ளி நொறுக்கியது பசுமரத்து விழுது. பெய்தொழிந்த பெருமழைக்குள் இடியொலிக்க மின்னிக் கிழிந்தது இரவு.

விண்ணில் சுரந்து மண்ணில் நிறைந்தது எரி. மண்ணிலிருந்து விண்பொழியும் மாழை. நீரில் சுடர்ந்த நெருப்பு. நெருப்பில் நெளிந்த நீர். இரண்டானவன். இரண்டானவள். இரண்டழிந்து ஒன்றானது. என்றுமிருந்தது. குளம்பொலிக்க நடந்தது முன்னுடலில் திமிலெழுந்த எருது. பின்னுடலில் முலைகனத்த பசு. பாலூறும் சுகம் அறிந்தது எருது. திமிலசையும் திமிரறிந்தது பசு. நீலப்பசு. பொன்னிறக்காளை. இங்கிருக்கிறான் பெண்ணன். அவனை ஆளும் ஆடவி. ராதன் முயங்கிய கண்ணை. இருபெரும் குறைகள். இரண்டழிந்த நிறைகள். மார்பான திரு. இடம் எடுத்த பாதி. சொல் வாழும் நா. தெய்வம் அறிந்த முழுமை. எரிகுளம் நிறைய எழுந்தது தென்சுடர்.

இல்லாதிருந்தது

இருந்தது விண்ணில்

அதிதியின் முலைமேல்

தட்சனின் குறிமேல்

அவனே அக்கினி

எங்கள் குலமுதல்வன்

முன்முதல்நாளில்

அவனிருந்தான்

காளையும் பசுவுமாய்.

வேய்மரக் காட்டில் காற்று கடந்தது. வேதக்குரல் எழுந்து சூழ்ந்தது. காளைநடையிட்டு வந்தது கனிந்த முலைப்பசு. குனிந்து நீலத்தடாகத்தில் தன்னை நோக்கியது. நீர் விட்டெழுந்தது பசுமுகம் கொண்ட ஏறு. காமம் கொண்டு தன் நிழல் மேல் கவிந்தது காளைப்பசு. தன்னைத்தான் புணர்ந்தது பசுக்காளை.

இங்கு மீண்டேன். இனியிவன் விழிநோக்க மாட்டேன் என்றுணர்ந்தேன். என்னவென்றாக்கிவிட்டான் என்னை. எஞ்சுவதேது என்னில்? முத்து அகன்ற சிப்பியின் முழுமுதல் வெறுமை. குளிர் இரவின் புறாவைப்போல் குறுகிக்கொண்டேன். விழி வழிய மொழியழிய முழங்காலில் முகம்புதைத்து அமர்ந்தேன். என் விசும்பல் ஒலிகேட்டு எழுந்து பார்த்தான். என்னைத் தொடலாகாது என்ற இதமறிந்திருந்தான். அங்கெல்லாம் பரந்த என் அணிபொறுக்கிச் சேர்த்தான். கொடியை நூலாக்கி என் மணியாரம் கோத்தமைத்தான். ஒற்றைச்சிலம்பை கண்டெடுத்து மற்றைச்சிலம்பை ஒருங்கமைத்தான்.

என் முன்வந்து அமர்ந்து இருகாலைப் பற்றி அதை அணிவித்தான். இருகால் பற்றிக்குலுக்கி “இருந்த இடத்திலேயே இத்தனை தொலைவு ஓடலாமோ?” என்றான். பால்குடத்தின் பனிநுரைபோல என் இதழ்மீறியது இளநகை. “நகைத்துவிட்டாய். இனி விழிநீர் பொருந்தாது. இதோ உன் மார்பணிந்த முத்தாரம். உன் இடையணிந்த மேகலை” என்றான். என் உடலில் அணிவித்து “எழில் மீண்டு விட்டாய். இனி ஏதும் குறையில்லை” என்றான். “என் மேகலையின் மணி எங்கே?” என்றேன். “அது இனிமேல் மீளாது” என நகைத்தான் “அழுகைவேண்டாம். இன்னொரு மணிமுத்தை நான் கொண்டு தருவேன்”என்றான்.

முள்ளடுக்கி சீப்பாக்கி என் கூந்தல் கோதி இழையாக்கினான். மூவிழை எடுத்து பின்னி முடிந்தான். பூவிதழ் சேர்த்து குச்சம் வைத்தான். “வந்ததை விட புதியவளானாய். சென்றதுமே நீ மீண்டு வரலாகும்” என நகைத்தான். அவன் தோளில் அடித்தேன். “எஞ்சியுள்ளது இரவு. இன்னும் மலரவில்லை பாரிஜாதம்” என்றான். எழுந்து “இப்பசும்புல்வெளியில் எத்தனை மலர்மரங்கள். எத்தனை சுனைவிழிகள்” என்றான். கைநீட்டி “என்னை எழுப்பு” என்றேன்.

நீலக்கடம்பின் நிழல் நின்று நோக்கினேன். நிறைநிலவு நின்றிருந்த வானின் கீழ் நிலமே மலரென்று விரிந்திருந்தது விருந்தாவனம். அதன்மேல் வழிந்தோடியது இளந்தென்றல். அதன் விரல்கள் தொடாத மலரில்லை. கால்பட்டு கலையாத சுனையில்லை. உடல்கொண்டதனாலேயே ஓரிடத்திலமையும் விதிகொண்டிருக்கிறேன். விரிந்து எழுந்து இந்த விருந்தாவனத்தை நிறைக்கலாகுமா? உடைந்து சிதறி இந்த உலகெங்கும் ஒளிரமுடியுமா?

தன் வேய்குழல் எடுத்து அவன் இதழ்சேர்த்தான். இசையெழுந்து ஏழுவண்ணங்களாகியது. ஒளியாகி வழிந்தது. நிலவிலெழுமா வண்ணங்கள்? இரவிலெழுமா பறவைக்குலங்கள்? அப்பால் ஒரு செண்பகத்தின் பின்னிருந்து லலிதை எழுந்து வந்தாள். அவளுக்கு அப்பால் விசாகையும் சுசித்ரையும் வந்தனர். சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் வந்தனர். கண்ணுக்குத்தெரியாத நீர்ப்பெருக்கில் ஒழுகிவரும் மலர்க்குவைகள் என வந்து சூழ்ந்தனர் கோபியர். குழலாடி நிலவாடி குளிராடி நின்றனர். நீலமலர் ஒன்று அல்லிக்குளம் நடுவே பொலிந்தது. விருந்தாவனத்தில் நிறைந்தது ராஸலீலை.

பகுதி பன்னிரண்டு: 1. முடி

இடையில் மஞ்சள்பட்டு சுற்றி இருகாலிலும் சலங்கை கட்டி தலையில் செந்நிறப்பாகை சூடி தார்தொடுத்த பாரிஜாதம் அணிந்து குறுமுழவை மீட்டும் கரங்களுடன் மங்கலச்சூதன் மன்றில் வந்து நின்றான். முழவொலி கேட்டு முன்றிலெங்கும் பரந்த மக்கள் வந்து சூழ்ந்தனர். ஒருவரை ஒருவர் ஒலியமையச் சொல்லிக் கூவினர். அமைதி எழுந்ததும் சூதன் அவைவணங்கி கைதூக்கினான். “வான்புரக்கும் தெய்வங்கள் வாழ்க! வளம் நிறைக்கும் மூதன்னையர் வாழ்க! காவல் தேவர்கள் நம்மைச் சூழ்க! காடும் கழனியும் செழிக்கட்டும். ஆநிரைகள் பெருகட்டும். அரசன் கோல் திகழட்டும்!” என வாழ்த்தினான்.

“ஆயரே, அழியா நெறி வாழும் யாதவரே, மாமதுரை நகரில் மங்கலம் எழுந்ததை அறிந்திருப்பீர். கம்சனின் கோட்டைமேல் கருடக்கொடி எழுந்தது. நகர்த்தெருவெங்கும் நறுமணம் நிறைந்தது. இன்நறுங்கள் மணம். கன்னியர் மலர்மணம். கற்பரசியர் கால்பொடி மணம். கற்றவர் சொல்மணம். கார்முகில்நீங்கி வானெழுந்தது வெண்ணிலவு. கரிப்புகை அகன்று கொழுந்தாடியது வேள்விநெருப்பு. பணிலப் பெருங்குரல் எழுந்தது. பழிநீங்கி மீண்டது மதுரை.”

சூதன் சொன்ன சொல் கேட்டு நின்றனர் மக்கள். கம்சன் நெஞ்சை உடைத்து எழுந்தான் கார்வண்ணன். செங்குருதி வழியும் நீலத்திருமேனியுடன் கைவிரித்து “இந்நகரும் முடியும் இமிழ்முரசும் கோலும் நான் கொள்கின்றேன். எதிர்ப்பவர் எவரெனினும் என் முன் எழுக!” என்றான். தன்னைச்சூழ்ந்து ததும்பும் அலைக்கைகளையே கண்டான். வாழ்த்தொலிகள் எழுந்து விண்உடைக்கக் கேட்டான்.

கண்ணீருடன் கைநீட்டி அக்ரூரர் அருகே வந்தார். அவன் நீலமேனி தழுவ வந்தவர் நிலம் நோக்கிk குனிந்து தாள்தொட்டு தலையில் வைத்தார். “கண்ணனுக்கே அடைக்கலம் கன்றோட்டும் இக்குலங்கள்” என்றார். “அவ்வாறே ஆகுக” என்றனர் பன்னிருகுலத்தோர். 'ஆம் ஆம் ஆம்' என ஒலித்தது அரண்மனைப் பெருமுரசு. அதன் ஒலியை எதிரொலித்தன அணிவாயில் முரசங்கள்.

களிற்றின் தலைபிளந்து குருதியுண்டு காடேகும் சிம்மம் போல் அரண்மனைக்குள் சென்றான். அவன் அடிவைத்த வழியில் ஆயிரம் சுவடுகள் விழுந்தன. அவற்றில் ஆயிரம் இளங்குழவியர் எழுந்தனர். வேல்நுனி ஒளிகளில் வாள் வளைவொளிகளில் விழிகள் மின்னி அணைந்தன. வெண்பளிங்குத் தரையெங்கும் வெங்குருதி சொட்டியது. அடிகள் தொட்டுப் பரவி அரண்மனையை மூடியது. குருதிமணம் கொண்டது காற்று. குளிர்ந்து அறைதோறும் அலைந்தது. நெய்விளக்கின் சுடர்கள் அதை ஏற்று நடமிட்டன.

வேல்தாழ்த்தி வணங்கி வீரர்கள் நிரைவகுத்தனர். கோல் ஏந்தி முன் நின்றனர் படைத்தலைவர்கள். “என் அன்னை தவமிருக்கும் அறை சுட்டுக” என்றான். அக்ரூரர் “தாங்கள் நீராடி நல்லுடை மாற்றி செல்லலாமே” என்றார். “என் அன்னை விரும்பும் அணித்தோற்றம் இதுவே” என்றான். காவலர் வழிகாட்ட கற்குகைப் பாதையில் நடந்தான். கற்சுவர் அறைகள் தோறும் அவன் காலடியோசை பெருகி நிறைந்தது.

வெளியே நடந்ததெல்லாம் வசுதேவர் அறிந்திருந்தார். தேவகியை அறிவிக்க அவர் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று. அவள் இருந்த உலகத்தில் கண்ணன் வளரவில்லை. மூவைந்து வருடங்களாய் அவன் முலைப்பால் மறக்கவில்லை. “உன்மைந்தன் வென்றான்” என்றார். “என் மைந்தன் எப்போதும் எனை வென்றவன்” என்று விழிபூத்து நகைத்தாள். கொஞ்சி நிறையாமல் கைவிட்டு இறக்காமல் மரப்பாவை ஒன்றை மார்போடணைத்திருந்தாள். நகைத்து “கள்வன். கரியோன். என் குருதியெல்லாம் உண்டாலும் விடாய் அணையாத கனலோன்” என்று அதை அடித்தாள்.

பேயுருக்கொண்டிருந்தாள் அன்னை. பித்தெழுந்த விழிகள் நீர்த்துளிகள் என தெறித்தன. அறியாத காற்றால் அலைக்கழிக்கப்பட்ட கொடிபோலிருந்தாள். திரைவிலக்கி கற்சுவர்கள் திசைகளென்றாயின. அவள் பறந்தலைய வானம். பார்த்தமர மலர்க்காடு. பசியடங்கா கைக்குழந்தை. பால்சுரக்கும் முலையிணைகள். துயரென ஒன்றிலாத தீராப்பெருங்களிப்பு. “என் கண்ணன் என் மைந்தன்” என முத்தமிட்டு முத்தமிட்டுத் தேய்ந்தது சிறுமரப்பாவை. பதினைந்தாண்டாக உருமாறாப் பைதல்.

அன்னை அன்னை என அழுது ஆடைநனைத்தது. அருகில் இல்லாதபோது கூவி அழுதது. இன்னும் அன்பென்று நோய்கொண்டது. இரு என்னுடன் என்று உடல்நலிந்தது. என்னாகும் என்று ஏங்குகையில் எழுந்து நகைத்தது. புன்னகையும் சிரிப்பும் புதுச்சொல் எழுந்த இதழுமாய் மாயம் காட்டியது. கவிந்தது, தவழ்ந்தது. ஒளிந்து தேடவைத்தது. காணாமல் தவிக்கவைத்தது. சிரித்து மீண்டுவந்தது. கணம்கூட ஒழியாமல் அவள் காலத்தை நிறைத்திருந்தது. அவள் உடலுருக்கி உண்டது. உளம் எடுத்து விளையாடியது.

பகலிரவுகள் சென்று பருவங்களாகி காலமென கற்சிறை நிரப்ப அம்முகமே அவருக்கும் மகவாகியது. அவரைக் கண்டதும் அதன் விழிகளில் இளநகை எழுந்தது. இதழ்களில் சொல்லாச் சிறுசொல் அரும்பி நின்றது. எடுஎன்னை என கைநீட்டியது. ஏன் இங்கில்லை என உதடுகோட்டியது. மெல்ல கையில் எடுக்கையில் மேனிசிலிrப்பதை உணர்ந்தார். நெஞ்சில் அணைக்கையில் நெருப்பெழுந்தது உள்ளே. ஏழு முகங்கள் சூழ நின்றன. எங்களையும் எங்களையும் என ஏங்கின.

காலடி ஓசைகேட்டு கற்படிகளுக்குக் கீழே நின்றார் வசுதேவர். அக்ரூரர் ஓடி அருகணைந்து “வாருங்கள் வசுதேவரே. வந்துவிட்டான் உங்கள் மைந்தன்” என்றார். “இத்தனை நாள் இருளிலேயே வாழ்ந்துவிட்டேன். ஒளிகொள்ளும் விரிவு என் விழிகளுக்கு வரவில்லை” என்றார் வசுதேவர். “இறையருளால் என் மைந்தன் கரியோன். என் கண்களுக்கு உகந்தோன்” என நகைத்தார்.

அக்ரூரர் “அன்னை எங்கே? அவள் மீண்டும் பிறந்தெழும் நாள் இன்று” என்றார். நெடுமூச்செறிந்து வசுதேவர் ”அவள் இன்னும் மைந்தனை இழக்கவில்லை. ஆகவே இம்மைந்தனை அடையப்போவதும் இல்லை” என்றார். “இழப்பதின் துயரில்லாமல் அவளை இருத்திய தெய்வம் கருணைகொண்டது” என்றார் அக்ரூரர்.

காலடியோசை கேட்க கைகொண்டு விழிபொத்தி நோக்கினார். கண்ணீர் திரைவழியே கண்ணன் வரக்கண்டார். நீலம் திரண்ட நெடுந்தோள்கள். வேறேதும் காணாமல் விழி மலைத்து நின்றார். அருகணைந்து அவர் காலடி தொட்டான். “அருள்க தந்தையே” என்றான். “அருளெல்லாம் உனது” என்றார். எழுந்து அவர் தோள் நிகராய் தோள்விரித்து நின்றான். இருகரமும் நடுங்க இதழ்கள் அதிர ஏனென்றும் என்னென்றும் உணராமல் நின்றார். பின் நீலப்புயம் பற்றி நெஞ்சோடு இறுக்கிக் கொண்டார். விழிநீர் பெருக விம்மியழுது கால்சோர்ந்து அவன் தாள்சேர்ந்து விழுந்தார்.

தன்னை அள்ளித் தாங்கிய புயங்களின் வல்லமையை அறிந்தகணமே தந்தையென்றானார். அக்கரங்கள் மேல் கரம் வைத்து “எளியவன் நான். எந்தையே உன் கால்தொடும் தகைமையும் அற்றவன்” என்று நாத்தளர்ந்து நடுங்கும் கைகுவித்தார். “அறிவைக் கடைந்து ஆணவ நுரை எழுப்பி தருக்கினேன். வெறும் குமிழி கண்டு கூத்தாடினேன். செந்நீரை கண்ணீராக்கி அறிந்தேன் சிறியவன் நான் என்று. கல்சூழ்ந்த இருளில் கடுந்தவம் புரிந்து என்னை மீட்டேன். கரியவனே, என் குலமூதாதையர் முகமே, இனி உனக்கே அடைக்கலம்” என்றார்.

நெடுமூச்செறிந்து விலகி தன் நெஞ்சை நோக்கி திகைத்தார். அங்கே செறிந்திருந்த செங்குருதி நோக்கி “கண்ணா, இது என்ன ஆடல்?” என்றார். “எந்நாளும் மறையாது இக்குருதித்தடம்” என்றான் கண்ணன். “எந்தையே, அக்குருதியில் அகம் தொட்டவர் நீங்கள். அவன் அமர்ந்த அரியணையில் ஒருகணமேனும் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றான். வசுதேவர் தலைகுனிந்து “ஆம், உன் விழிநோக்கும் வல்லமை எனக்கில்லை” என்றார்.

இருண்ட குகைவழியில் எழுந்த ஒலியை நோக்கினாள் அன்னை. கல்கனிந்து ஈன்றதுபோல் கரியவன் வரக்கண்டாள். செங்குருதிமூடிய சிற்றுடல். ஈன்ற திருநாளில் அவள் இருகையில் ஏந்திய குழவி. ஒரு கணம் திகைத்தாள். உடலதிர நின்றாள். கையிரண்டும் விரித்து கதறி ஓடிவந்தாள். முழந்தாள் மடிந்து அவன் முன்னே விழுந்தாள். நிலம் தொடும் முன்னே நீட்டிய கையால் பற்றிக்கொண்டான். தேரோடிய பாம்பென தீபட்ட உடலென அவன் கையில் நெளிந்தாள். உள்மூச்சு வெளியேறும் உயிரெனத் துடித்தாள்.

அவள் இருவிழிநடுவே தொட்டான். இடச்செவியில் “அம்மா” என்றான். இமையதிர்ந்து விழித்தெழுந்து இதழ்மலர்ந்து நகைத்தாள். அக்கணம் பிறந்தவளாய் உணர்ந்தாள். அழிந்த வருடங்களை மீளப்பெற்றாள். அன்னையென கன்னியென சிறுமியென குழவியென ஆகி அவன் கையிரண்டில் தவழ்ந்தாள். “என் தேவா!” என்றாள். அவன் அவள் கன்னத்தில் முகம் வைத்து “என்னடி தேவகி?” என்றான். முகம்சிவந்து சிரிப்பெழுந்து மூச்சடைத்தாள். அவன் செவிபற்றிச் சினந்தாள். “அன்னைபெயர் சொல்கிறாயா? அடிவாங்கி அழுவாய் நீ” என்றாள். அவன் நகைத்து அவள் கைபற்றி தன் முகத்தில் அறைந்தான். “அன்னை அடியேற்றபின் நான் அடைவதற்கேது வேறு?”என்றான்.

அரண்மனை ஒளி கொண்டது. அரியணை அணிகொண்டது. பணிலக்குரல் பொங்கி ஒலிக்க பெருமுரசம் அறைகூவியது. பன்னிரு குலத்தாரும் மூத்தாரும் படைநான்கின் தலைவர்களும் வந்து அவைசூழ்ந்தனர். தேவகரும் மைந்தர்களும் போஜரும் பிறரும் சபை அமர்ந்தனர். மதுவனத்தின் சூரசேனரும் விருந்தாவனத்தின் நந்தகோபரும் மைந்தருடன் மகளிர் சூழ மன்றமைந்தனர்.

வெண்ணிறத்தான் அருகே விரிநீலன் நின்றிருந்தான். அங்கிருந்த மகளிர் அவையை நோக்கவில்லை. அவன் உடலைக் கண்டவர்கள் தாங்கள் உள்ளதை உணரவில்லை. கன்றென்றும் காளையென்றும் கண்மயக்கு காட்டி அங்கே நின்றான். களிறோ கருமுகிலோ என அழிந்தது கன்னியர் நெஞ்சம். “கண்ணன் கண்ணன்” என்று இதழ்கள் சுருங்கி மலர்ந்தன. கண்நிறைந்தான் கரியோன் என கருத்தழிந்தனர். நூறு வண்ணத்துப்பூச்சிகள் சென்றமரும் ஒற்றை மலர். மலையடுக்கே இதழ்களென மலர்ந்த இமயம். மது பெருகும் காளிந்தி.

அக்ரூரர் எழுந்து அனைவரையும் வணங்கி “யாதவரே, ஆபுரக்கும் மாதவரே, அனைவரையும் வணங்குகிறேன். மாமதுரை நகரின் மணிமுடி இன்று சீர்கொண்டது. அதன் செங்கோல் நேர்கொண்டது. மகளிர்முறைப்படி அது தேவகரின் மகளுக்கே உரிமை. அன்னை தேவகி இன்று அரியணை அமர்வார். மணிமுடி சூடி மதுரைக்கு அரசியாவார். அரசிக்குத் துணையாக அரசர் கோல்கொள்வார்” என்று அறிவித்தார்.

மங்கல இசை எழுந்தது. மஞ்சளரிசியுடன் மலர் மழை பொழிந்தது. முரசும் முழவும் குழலும் குரவையும் எங்கும் நிறைந்தன. பொன்பட்டாடையும் ஒளிமணிநகைகளும் புதுமலர் மாலையும் புன்னகைஒளியும் அணிந்தவளாக அன்னை நடந்துவந்தாள். அவள் இருபுறமும் மங்கலத் தாலமும் மலர்நிறை கடகமும் புதுப்பாற்குடமும் பூமலர்க்கொம்பும் ஏந்திய தோழியர் சூழ்ந்தனர். ஆயர்குலத்தின் மூதன்னையர் அவளை எதிர்கொண்டனர். அணிக்கை பற்றி அரியணை அமர்த்தினர். பூமரக்கொம்பை இடக்கை ஏந்தி புதுப்பால் கலத்தை மடியிலமர்த்தி அன்னை அமர்ந்தாள். கன்றுசூழும் கழியே செங்கோலாக அன்னை அருகே அரசர் அமர்ந்தார்.

மாமதுரை மணிமுடியை தேவகி அணிந்தாள். மைந்தர் இருவர் இடவலம் நின்றனர். இதுபோல் இன்னொருவிழவு எழுமோ இந்நகரில் என்றனர் மூத்தோர். பொன்னும் மணியும் காணிக்கையாக்கி அன்னையைப் பணிந்து அடிதொழுது ஏத்தினர். நால்வகை குடிகளும் நகர்வாழ் வணிகரும் நால்வகை படைகளும் நதிக்கரை சேர்ப்பரும் வரிக்கொடை அளித்து வணங்கிச்சென்றனர்.

ஆயரே யாதவரே, சொல்லறிந்தோன் சூதன் மொழிகேளீர். மாமதுரை முகடுகளில் மணிக்கொடிகள் எழக்கண்டேன். முரசொலியில் யமுனை நதியலைகள் ஆடக்கண்டேன். நகரெங்கும் நிறைந்த நடுக்கத்தையும் நான்கண்டேன். கண்களெல்லாம் பதறி கருத்தழிந்து அலைந்தன. கால்கள் தளர்ந்து கற்படிகளில் வழுக்கின. கொத்தள அறைகளுக்குள் குளிர் இறுகிப் பரந்தது. சொல்லாத மொழிஒன்று நாவெல்லாம் நின்றது. சுவர்க்கோழி ஒலி போல பகலொளியில் பறந்தது.

அன்னை அறைசேர்ந்தபின்னர் மன்னர் அவையமர்ந்தார். முதலாணை கேட்க முகங்கள் கூர்ந்தன. வசுதேவர் வாய் திறப்பதற்குள் கைகூப்பி எழுந்த கண்ணன் உரைத்தான் ”தந்தையே, பாவங்களை நீர் கழுவும். பழிகளை செங்குருதி ஒன்றே கழுவும். புதுக்குருதி கழுவட்டும் இந்நகரின் புன்மை எல்லாம்.” பேயெழக் கண்டவர்போல் பதைத்தழிந்தன அவர் விழிகள்.

வசுதேவர் “மைந்தா, போரில் வெல்வதும் களத்தில் வீழ்வதும் காலத்தின் ஆடல். பகைமுடித்தபின் பழிகொள்வது கருணை அல்ல” என்றார். “வாள் என்றால் கூர் என்றே பொருள் தந்தையே. கருணையுள்ள அறம் என ஒன்றில்லை” என்றான் கன்ணன். “என்றும் நிகழும் அரியணைப் போர். கொடி எடுத்து களம்செல்வோர் குருதி கொடுக்கும் கடன்கொண்டோரே. குடியென்று அம்முடிக்கீழ் அமைபவர் கண்ணீர் துளிகொடுப்பதும் முறையே. ஆனால் குழந்தைகளைப் பலிகொள்ளும் குலம் ஏதும் இப்புவியில் எந்நாளும் வாழலாகாது.”

அவை முழங்கி அதிர கண்ணன் சொன்னான் “குழவியர் குருதியில் கைதொட்ட எவரும் கழுவேறாது இங்கு எஞ்சலாகாது. இதுவே நீதியென இப்புவி அறியட்டும்!” கடுங்குளிர் எழுந்ததுபோல் கால்நடுங்கி அமைந்திருந்தது அவை. கைகூப்பி எழுந்து “நீ அறியா நெறியில்லை கண்ணா. நான் அறிந்த நூல் கொண்டு சொல்கின்றேன்” என்றார் அக்ரூரர். “அரசன் சொல் நிற்பது அடிதொழுவார் கடனல்லவா? தன் பணிசெய்வோன் பழியேற்றல் முறையாகுமா?”

செங்கனல் துளிகளென சுடரெழுந்த அவன் விழிகண்டனர் அவையோர். சிம்மம் நடந்து சபைநடுவே நின்றது “தன் அகம் அமர்ந்த அரசனை அறியாத மானுடன் எவனும் இல்லை. அவன் வலக்கையின் வாளும் இடக்கையின் மலரும் கண்டு அழுது நகைக்கிறது அறியாச் சிறுமகவு. அவன் கூர்வாளின் முனைகண்டு திகைக்கிறது தீயோர் கனவு. மண்ணாளும் வேந்தரெல்ல்லாம் மானுடம் ஆளும் அவனுக்கு அடிமைகளே.”

“அறமெனும் இறைவன். அழிவற்றவன். ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன். தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன். நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக! நன்றும் தீதும் முயங்கும். வெற்றியும் தோல்வியும் மயங்கும். நூல்களும் சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை அறம்.” கரும்புயலின் செம்மையம் போல சுழித்தது கண்ணன் இதழ். “கொல்லாதது அறமல்ல. பழி வெல்லாதது தெய்வமும் அல்ல.”

நாத்தளர நெஞ்சலைய “இல்லை, என் இதழால் அதைச் சொல்ல இயலாது” என்றார் வசுதேவர். “அவ்வாறெனில் இக்கணமே கோல்துறந்து களமிறங்கி என் முன் நில்லுங்கள். உங்கள் நெஞ்சுபிளந்த குருதிபூசி அவ்வரியணை அமர்ந்து நான் ஆணையிடுகிறேன்” என்றான் கண்ணன். எஞ்சிய சிறு சொல்லும் உதிர்ந்தழிய அவை அமர்ந்தோர் அனைவரும் எழுந்தனர். கைகள் கூப்பி நெஞ்சமர்ந்தன. கண்கள் ஒளிரும் ஒற்றைச் சொல்லென்றாயின.

மென்மலர் வைரமென்றானது கண்டு மேனி அதிர்ந்தார் வாசுதேவர். விழியென ஒளிர்ந்தன வான்கதிர் இரண்டு. முகமென்றானது ஊழிநெருப்பு. கண்ணனென அங்கே நின்றது காலமென வந்த ஒன்று. இருமுனையும் மின்னும் கூர்வாள். யுகமழித்து யுகம் படைக்கும் யோகம். உதிர நதியிலெழும் பெருங்கலம். ஒருநாளும் அணையாத நீதியின் பெருவஞ்சம்.

கைகூப்பி கண்ணீர் வழிய “அடியேன் ஏதும் அறிந்திலேன். இவ்வரியணை உனது. ஆணையிடுக” என்றார் வசுதேவர். “இக்கணமே, வெஞ்சினம் கொண்டு எழட்டும் வேல்கள்!” என்றான் கண்ணன். இரும்பிலமைந்த முட்புதர்போல் நகரெங்கும் எழுந்தன ஆயிரம் கழுமுனைகள். ஆயிரம் வஞ்சம் கொண்ட விழிகள் அவற்றில் ஒளிர்ந்தன. நெளியாது நீட்டி நின்றன உதிரச்சுவை தேடும் நாவுகள். திசைசுருட்டி எழுந்து தெருவெங்கும் மூடிச் சூழ்ந்தது பெரும்புயல். அது சென்ற நகரெங்கும் முள் தோறும் அமர்ந்து துடித்தன சருகுகள். கொழுங்குருதி வழிந்தோடி செழும்புழுதி சேறாயிற்று.

ஆயரே, யாதவரே, நகரெங்கும் நிறைந்திருந்த செங்குருதிச் சிறகுள்ள ஆயிரம் பறவைகள் அன்றே அகன்று சென்றன என்றனர் சூதர். நான் கண்டு அஞ்சிய பறவைகள். அணையாக்கனல் விழிகள். அலைபாயும் சிறகுகள். ஒருபோதும் கூடணையாதவை. ஒற்றைச்சொல்லை கூவிச்சூழ்பவை. மதலைச்சிறுசொல். மாயாப்பழிச்சொல்.

பழியகன்றது மதுரை. விழி தெளிந்தன வீடுகள். படிகள் தோறும் மலர்கொண்டன தெருக்கள். ஒளி கொண்டு விரிந்தன ஆயர்முகங்கள். சொற்கள் நகைகொண்டன. தெய்வங்கள் குடி மீண்டன. முன்பொருநாள் இந்நகரை முனிந்து அகன்றுசென்றேன். முடிநிகழ்வு நாளில் முழவேந்தி மீண்டுவந்தேன். நகரெலாம் சென்று நாகளைக்க பாடிநின்றேன். கண்ணன் எனச்சொல்லி கரந்து வைத்த கலங்களெல்லாம் வெண்ணை பொங்கி விரிந்த கதை கேட்டேன். கோபன் பெயர் சொன்னால் கொடிகள் உயிர்பெறக் கண்டேன். பொன்னணியில் நீலமணிபோல கண்ணன் திகழும் திருநகர் இம்மாமதுரை.

ஆயரே இதுகேளீர். அன்று நான் கண்டேன் இதனை. அரியணை அமர்ந்தபோது அன்னை முகத்தில் அருளில்லை. இமைகள் தாழ இதழ்கள் இறுக அங்கிருக்கும் எவரையும் அறியாமல் அமர்ந்திருந்தாள். தன் பட்டாடை நுனி மூடி அந்தப் பாவையை வைத்திருந்தாள். கண்ணன் வந்த களிப்பை ஒருநாளிலேயே அவள் இழந்தாள். மரப்பாவையை மார்போடணைத்து இரவுபகல் ஏங்கியிருந்தாள். கண்ணீர் உலராத கன்னம் நோக்கி “என்ன இது? ஏனிந்த பாவை இனி?” என்றார் வசுதேவர். ”ஏழுமக்கள் இவர். என் நெஞ்சின் தழல்கள்” என்றாள். மண்மூடும் பெருமழைபோல் முகம் பொத்தி அழலானாள்.

பகுதி பன்னிரண்டு: 2. முடி

இடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர்! உலகிலேயே பெரிய மலர்!” என்று கூவினாள். “தலைசுழலுமடி... எழமுடியாமல் படுப்பாய். விழவுகாண முடியாமலாவாய்” என்றாள் நீர்க்குடம் தளும்ப நடந்து சென்ற கீர்த்திதை. “பெரிய மலர்...” என்று ராதை துள்ளி கைகளை விரித்துக்  காட்டினாள்.

புன்னகையுடன் கீர்த்திதை உள்ளே சென்றாள். அடுமனையின் மரச்சாளரம் வழியாக அவளறியாமல் எட்டிப் பார்த்தாள். வெண்மணல் விரிந்த முற்றமெங்கும் வண்ண மலர்களென ராதை மலர்ந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். அவள் அமர்ந்து படைத்த மலரெல்லாம் அவ்வண்ண இதழ்களுடன் கண்களிலும் காற்றிலும் எஞ்சியிருந்தன. பால்கலத்தை அடுப்பில் வைத்து பசுங்கீரை கட்டுடன் அமர்ந்தாள்.

அவள் அன்னை அனங்கமஞ்சரி உள்ளறையில் எழுந்தாள். “கீரையை என்னிடம் கொடு. நெய்நெயுக்கும் பணி உள்ளதல்லவா?” என்று வந்தமர்ந்தாள். இல்லச்சுவரில் எழுந்த வண்ணநிழல் கண்டு “வருவது யார்?” என எட்டிப்பார்த்தாள். “என்னடி செய்கிறாள் உன்மகள்? இன்னமும் சிறுமியா இவள்? இவ்வயதில் உன்னை நான் கருவுற்றேன்” என்றாள். “புத்தாடையை பூவாக்குகிறாள்” என்று நகைத்தாள் கீர்த்திதை. கண்சுருக்கி பெயர்மகளை நோக்கி கனிந்து புன்னகைத்து “வெறும் பிச்சி...” என்றாள்.

“ராதையெனப் பெயரிட்டது தாங்கள் அல்லவா?” என்றாள் கீர்த்திதை. “ஆம், என் இல்லத்தில் சுடராக என் தமக்கை என்றுமிருக்க விழைந்தேன். உனக்கு என் அன்னைபெயரிட்டேன். உன் வயிற்றில் அவள் வந்து பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்றாள். “கையில் எடுத்து இவள் கண்களைக் கண்டபோதே நினைத்தேன். இவள் அவளே. என் அரசி. என் குலத்தெழுந்த தெய்வம்.”

கீர்த்திதை பால்வட்டம் அசைவதை நோக்கி நின்றாள். “என்னைக் கொஞ்சியதில்லை என் தமக்கை. என் முகம் கூட அவள் நெஞ்சில் இருக்கவில்லை. எங்கிருந்தோ வந்த குழலிசை கேட்டு ஏங்கி காத்திருந்தாள். கானல் அலைந்த கண்கள் கொண்டிருந்தாள்” என்று அனங்கமஞ்சரி சொல்லிக்கொண்டாள். கீரை ஆய்வதை நிறுத்தி “என் நெஞ்சுள்ள வரையிலும் நினைத்திருப்பேன் அவளது தெய்வம் எழுந்த திருவிழிகளை. இம்மண்ணையும் அவ்விண்ணையும் அள்ளி உண்டாலும் அடங்காத விடாய் கொண்டவை. அலை கொதிக்கும் கடல்விழிகள். அனைத்துமறிந்த பேதைவிழிகள்!” நீள்மூச்சு விட்டு “அவ்விழிகளுடன் இம்மண்ணில் அவள் வாழ்வது எப்படி? அவ்வொளிகொண்டு அவள் காண இங்குள்ளதுதான் என்ன?”

“அவள் தேடியது எதை? கண்டடைந்து நிறைந்தது எதை?” என்றாள் கீர்த்திதை. “மண்ணில் காலூன்றும் மானுடர் அறியாத மந்தணம் அல்லவா அது” என்றாள் அனங்க மஞ்சரி. “ஆயர்குடி எந்நாளும் அதை அறியவே போவதில்லை. அவளை அறிந்தோர் இப்புவியில் எவருமில்லை” என்று சொல்லி “என்னடி இது? கீரை கொய்கையில் கீழே பார்க்கமாட்டீர்களா?” என்றாள். நீலத்துழாய் எடுத்து நீட்டிக்காட்டி “கிருஷ்ணதுளசி. கோவிந்தன் பெயர்சொல்லாமல் கொய்வது பெரும்பாவம்” என்று எழுந்தாள். அகத்தறைக்குள் எரிந்த அகல்சுடர் முன் அதைவைத்து “ஆயர்குலத்து அரசே, அடியோரை காத்தருள்க” என்றாள். பால்கலம் பொங்கக்கண்டு “கண்ணா காக்க!” என்றாள் கீர்த்திதை.

உள்ளே ஓடிவந்த ராதை “பாலாடை பாலாடை!” என்று கூவி துள்ளினாள். “நில்லடி பிச்சி... உனக்குத்தானே?” என்று சொல்லி பாலாடையை மெல்ல கரண்டியால் எடுத்து அதன்மேல் அக்காரப்பாகை ஒருதுளி சொட்டி அவளிடம் அளித்தாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே ஓட “எங்குசெல்கிறாள்?” என்றாள் அனங்கமஞ்சரி. “அங்கே அவளுடன் பேசும் ஒரு பூனை இருக்கிறது” என்றாள் கீர்த்திதை.

பாலாடையுடன் வந்தவளைக் கண்டு பாரிஜாதம் சலிப்புற்ற குரலில் முனகி எழுந்து உடலை வளைத்தது. வால்தூக்கி பின் நீட்டி வாய்திறந்து நாவளைத்து அருகே வந்தது. மீசை நக்கி கால்பதித்து அமர்ந்து “ராதையே?” என்றது. ராதை பாலாடையை அதன்முன் வைத்தாள். எழுந்துவந்து கண்மூடி தலைசரித்து சிறுசெந்நா வளைத்து நக்கத்தொடங்கியது. “பாரிஜாதம்” என்று ராதை அதை அழைத்தாள் ஒருகண்ணைத் திறந்து 'படுத்தாதே' என்றபின் மீண்டும் நக்கியது. ஐயம் கொண்ட காலடிகளுடன் அருகணைந்தன இரு காகங்கள்.

மரங்களுக்கு அப்பால் கொம்போசை எழக்கேட்டு முகவாய் தூக்கி செவிகூர்ந்தாள் ராதை. பின்னர் பாவாடை பறக்க புரிகுழல் அலையடிக்க தாவி ஓடினாள். பர்சானபுரியின் சாலைகளெங்கும் வெண்மணல் விரிக்கப்பட்டிருந்தது. மாவிலைத் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கி அசைய மலரெழுந்த காடுபோலிருந்தது ஊர். புத்தாடை உடுத்து பூச்சூடிய பாகை அணிந்து ஆயர்கள் அங்கிங்காய் கூடி நின்றனர். யமுனைக்கரை மேட்டில் எங்கும் முகங்கள் நிறைந்திருந்தன. நீலக்கடம்பின் கிளை தொற்றி ஏறிய ராதை நிலத்துதிர்ந்த மலர்களுக்கு ஈடுசெய்வதுபோல் அமர்ந்துகொண்டாள். நீர்பெருகி ஓடும் யமுனையை நோக்கி இருந்தாள்.

கருடக்கொடி காற்றில் படபடக்க பாய்மரம் புடைத்தசைய பெரும்படகு ஒன்று கரையணைந்தது. அதன் முகப்பில் நின்றிருந்த வீரன் மணிச்சங்கம் எடுத்து ஊத கரையெங்கும் காற்றெழுந்ததுபோல கிளையசைவு பரந்தது. அதற்கப்பால் ஏழு அணிப்படகுகள் மங்கல மஞ்சள்கொடியும் செந்நிற கருடக்கொடியும் மாந்தளிரென எழுந்த பாய்களுமாக வந்தன. அவற்றில் வீரரும் சூதரும் விறலியரும் பாங்கிகளும் நிறைந்திருந்தனர். யாழும் முழவும் குரவையும் குழலும் முழங்கின. ஏழு பொன்வண்டுகள் இசைமுழக்கி அணைகின்றன என்று எண்ணினாள் ராதை.

கரையில் கூடிய யாதவ மூத்தோர் கன்றுக்கொடி ஏற்றி வாழ்த்துரை எழுப்பினர். குறுமுழவும் சிறுமுரசும் குழல்கொம்பும் மணிச்சங்கும் முழங்கின. “படகு! படகு! படகு!” என ராதை பூக்குலைகள் உதிர கிளை உலுக்கி எம்பி குதித்தாள். “மரம் நின்ற மயிலே இறங்கு கீழே” என்றார் மலர் பெய்து உடல் நனைந்த முதியவர் ஒருவர். கண்சுருக்கம் நெளிய கனிந்த நகைப்புடன் “பர்சானபுரியின் பிச்சியல்லவா நீ?” என்றார்.

புத்தாடை அணிந்து புதுநகை ஒளிர அன்னையும் மூதன்னையும் வருவதை ராதை கண்டாள். “என் அன்னை! இன்றுதான் அவள் புத்தாடை அணிந்திருக்கிறாள்” என்று சொல்லி சிரித்தாள். “எங்கள் பசுக்கள் இன்று அவளை அஞ்சும். அருகணைந்தால் முட்டும்.” ஆயர் இருவர் அவளை நோக்கி நகைத்தனர். “ஆயர்குடியின் பசுக்களும்தான் இன்று அணிகொண்டுள்ளன” என்றார் ஒருவர். “இன்று இக்கரையில் பூக்காத மரம் ஒன்றில்லை” என்றார் இன்னொருவர்.

அருகணைந்த அன்னை ராதையிடம் “இறங்கு கீழே. ஏனைய பெண்களைப்போல் இருந்தாலென்ன நீ?” என்றாள். “பர்சானபுரியின் ராதைக்கு பாதங்கள் மண்ணில் படாது அன்னையே” என்று முதியவர் நகைத்தார். மூதன்னை விழிகளில் நீர் படர்ந்து முகம் கனத்து நிற்பதை ராதை கண்டாள். “மூதன்னையே” என்றாள். அவள் முகம் திருப்பாமை கண்டு இதழ்கோட்டி அழகு காட்டினாள்.

அலைகளில் ஆடும் அரண்மனை போல வந்தது அணிப்பெரும்படகு. பன்னிரு சிறகு கொண்ட பறவை. பதினாறு துடுப்புகளால் நீந்தும் மீன். அதன் முகப்பில் நின்ற வீரன் சங்கொலி எழுப்பியதும் கரையெங்கும் பொங்கி வான் தொட்டன வாழ்த்தொலிகள். படகின் முகப்பில் பாய்களின் நிழலில் காவலர் சூழ நின்றிருந்த கரியோனை ராதை கண்டாள். அவன் கருங்குழலில் சூடிய நீலப்பீலி கண்டாள். நிலையழிந்து கால் தவற அள்ளி கிளைபற்றினாள். அவள்மேல் மலருதிர்த்துக் குலுங்கியது மரம்.

சிறகொடுக்கி விரைவழிந்து சற்றே திரும்பி கரையடுத்தது படகு. அதன் விலாவிரிந்து ஒரு பாதை நீண்டு கரைதொட்டது. வீரர் நால்வர் வந்து அதை துறையில் கட்டினர். நிமித்திகன் முதலில் வந்து நின்றான். தன் இடைச்சங்கு எடுத்து ஒலியெழுப்பினான். “ஆயர்குலத்து அதிபர், மதுராபுரியும் மாநகர் துவாரகையும் ஆளும் மாமன்னர் கிருஷ்ண தேவர் வருகை” என அறிவித்தான். வாழ்த்தொலிகள் நடுவே கருமுகம் விரிய இருகரம் கூப்பி கால்வைத்து வந்தார் கிருஷ்ணர். அவர் குழல் சூடிய பீலியில் எழுந்த நீலவிழியை மட்டுமே ராதை நோக்கியிருந்தாள்.

ஆயர் குடிமூத்தார் அரசரை வணங்கி ஆன்ற முறைசெய்து அழைத்துச்சென்றனர். குடித்தலைவர் இல்லத்தில் கிருஷ்ணர் அமர்ந்திருக்க சாளரமெங்கும் நிறைந்தன சிரிக்கும் பெண்முகங்கள். குடியருகே எழுந்த கொன்றை மீதேறி கூரை இடுக்கின் சிறுதுளை வழியாக ராதை அவரை நோக்கி நின்றாள். பூமஞ்சத்தில் இளைப்பாறி பசும்பால் அருந்தி அமர்ந்தார் அரசர். அருகே கைகட்டி வாய்பொத்தி நின்றனர் குடிகள்.

ஆயர்குல மருத்துவன் ஒருவன் வந்து பணிந்து “அடியேன் மலைமருத்துவன். நிகழ்வது அறிந்த நிமித்திகன். மண்நிறைத்தோடும் யமுனையின் வழிகளை அறிந்தவன். அரசர் கைபற்றி நாடிநோக்க அருளல் வேண்டும்” என்றான். புன்னகை விரிய “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் கிருஷ்ணர். அவரது கரிய கைபற்றி கண்மூடி தியானித்து மருத்துவன் சொன்னான். “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்.”

செவ்வரி ஓடிய கண்களால் நோக்கி “திருமகளும் நிலமகளும் சேர்ந்த மணிமார்பு. திசையெல்லாம் வணங்கும் திருநாமம். யுகமெனும் பசுக்களை வளைகோல் கொண்டு வழிநடத்தும் ஆயன்” என்றான். பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “நாண் தளர்ந்து மூங்கிலானது வில். மரமறிந்து சிறகமைந்தது புள். வினைமுடித்து மீள்கிறது அறவாழி. நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி” என்றான். புன்னகை மேலும் விரிய தன் கையில் அணிந்த மணியாழி உருவி அவன் கையில் கொடுத்தார். “வாழ்க!” என்று சொல்லி அவன் சிரம் தொட்டார்.

“இக்குடியின் தலைவர் இவர். இகம்நீத்த ஸ்ரீதமரின் மைந்தர். எங்கள் குலத்தரசி ராதையின் மருகர்” என்றார் மூதாயர். “இன்று எங்கள் தேவியின் திருநாள். தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு ஃபாத்ரபத மாதம் சுக்லாஷ்டமி நன்னாளில் திருக்கேட்டை நட்சத்திரத்தின் சதுர்பாதத்தில் அதிகாலையில் அன்னை பிறந்தாள். திருமகளே கருப்புகுந்தாள் என்னும் உருவழகு கொண்டிருந்தாள். விண்நிறைந்த ஒளியொன்றால் விழிகள் நிறைந்திருந்தாள். கன்னியாகவே கனிந்தாள். மாலைமலரென உதிர்ந்தாள்.”

திரும்பும் வைரம் என திருவிழிகள் கொண்டன. செவ்விதழில் சொல்லேதும் எழாமல் கிருஷ்ணர் எழுந்தார். “அன்னையின் ஆலயத்துக்கு அரசரை அழைத்துச்செல்லுங்கள்” என்று அமைச்சர் மந்தணம் உரைத்தார். “வருக அரசே. வழி இதுதான்” என்று ஸ்ரீதமரின் மைந்தன் சக்திதரன் வணங்கி அழைத்துச்சென்றான். எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்துசென்றார். ஆயர்குடிகளும் மூத்தோர்கணங்களும் அவரைத் தொடர்ந்தனர்.

யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள் ராதை. கன்னி அன்னை. காதலரின் தெய்வம். ராதையின் களித்தோழி. மரக்கிளை உலுக்கி மலருதிர்ப்பாள். புல்நாரால் பூதொடுத்து அணிவிப்பாள். காட்டுத்தேனும் கனிந்த பழங்களும் கொண்டுவந்து அளிப்பாள். முல்லை அரும்பெடுத்து சோறாக்கி அல்லி இலை கிள்ளி கறியாக்கிப் படைப்பாள். கல்விழி மலராது காட்சி எழாமல் அங்கிருப்பாள் அன்னை. எவரையும் நோக்காத விழிகொண்டவள். ஏதொன்றும் அறியாது நின்றிருப்பவள்.

அன்னையின் ஆலயத்தின் முன் அரசர் நின்றார். காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின. திரும்பி அமைச்சரிடம் இலைநுனிப் பனித்துளி என நின்று தயங்கி உதிர்ந்த சொல்லால் “வேய்குழல்” என்றார். அங்கிருந்தோரெல்லாம் அலைமோதினர். “வேய்குழலா?” என்றார் பேரமைச்சர். “வேய்குழலையா கேட்டார்?” என்றார் சிற்றமைச்சர். “குழலூத ஒரு பாணனையும் கொண்டுவருக” என்றார் தளபதி.

கூட்டத்தில் நின்றிருந்த அனங்கமஞ்சரி “இளவயதில் வேய்குழலூதி இசைநிறைக்க அறிந்திருந்தார்” என்றாள். “யார், நம் அரசரா?” என்று பேரமைச்சர் திகைத்தார். ‘அரசரா?’ என்றார் மேலமைச்சர். முழு ஊரும் ஓடி மூச்சிரைக்க திரும்பி “வேய்குழல்களெல்லாம் ஆநிலைகளில் உள்ளன என்கிறார்கள்...” என்றார் சிற்றமைச்சர். “வேய்குழலொன்று உடனே செய்யமுடியுமா?” என்று பேரமைச்சர் கேட்டார். ராதை “என்னிடம் சிறு வேய்குழல் ஒன்றிருக்கிறது. நீலக்கடம்பின் மேல் ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றாள். “கொண்டு வா... உடனே” என அமைச்சர் பதறினார்.

ராதை ஓடிச்சென்று எடுத்துவந்த வேய்குழலை பணிந்து மன்னரிடம் அளித்தார் அமைச்சர். கைநீட்டி அதை வாங்குகையில் கண்கள் சுருங்கி மீண்டன. கனத்த இமைப்பீலிகள் சரிந்தன. துளைதோறும் தொட்டு கைகள் தேடின. பின் தலைதூக்கி அமைச்சரை நோக்கி கையசைத்தார். “அகலுங்கள். இங்கு எவரும் நிற்கலாகாது. அரசர் விழிதொடும் தொலைவில் ஒரு முகம்கூட நிற்கலாகாது” என்றார் அமைச்சர்.

அனைவரும் வணங்கி அகல அறியாமல் ராதை ஒதுங்கினாள். காலோசை இல்லாமல் கடம்பின் பின் ஒளிந்தாள். தன்னைச் சூழ்ந்து அசைந்து மறையும் கால்களைக் கண்டு தழைக்குள் அமர்ந்திருந்தாள். தனிமை சூழ்ந்ததும் குழலை இதழ்சேர்த்தார் கிருஷ்ணர். விரல்கள் துளைகளில் ஓடின. இதழில் எழுந்த காற்று இசையாகாது வழிந்தோடியது. சிரிப்பை அடக்கி சிறுகைகளால் இதழ்பொத்தி அமர்ந்திருந்தாள் ராதை.

குழல் மொழி கொண்டது. குயில்நாதம் ஒன்று எழுந்தது. 'ராதே' என அது அழைத்தது. காற்றில் கைநீட்டிப் பரிதவித்து ‘ராதே! ராதே! ராதே!’ என மீளமீளக் கூவியது. கண்டடைந்து குதூகலித்து. ‘ராதை! ராதை! ராதை!’ என கொஞ்சியது. கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.

[நீலம் முழுமை]


Venmurasu IV

Neelam is the story of Krishna and Radha. At once romantic and lyrical, it describes Krishna through Radha's eyes and develops the archetypes underlying the Advaita philosophies. Neelam also follows the story of Kamsa, who was slain by Krishna.!