Venmurasu II

02-மழைப்பாடல்

ஜெயமோகன்



Mazhaippadal describes the stories of Ambikai and Ambalikai, their sons Dhritarashtran and Pandu, and then traces the rise of Gandhari and Kunti. The plot sweeps across Asthinapuri, the North-Western kingdom of Gandhara and the Yadava lands. Mazhaippadal is as much a story of the conflict between the adversarial communities and tribes of ancient India as the one between the women of Asthinapuri - which ultimately develops into the great Bharata war.!

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 1 ]

அலகிலா நடனம் மட்டுமே இருந்தது, நடனமிடுபவன் அந்நடனமாகவே இருந்தான். முன்பின்நிகழற்ற முதற்பெருங் காலமோ அவன் கையில் சிறு மணிமோதிரமாகக் கிடந்தது.

அசைவென்பது அவன் கரங்களாக, அதிர்வென்பது அவன் கால்களாக, திசையென்பது அவன் சடைமுடிக்கற்றைகளாக, ஒளியென்பது அவன் விழிகளாக, இருளென்பது அவன் கழுத்துநாகமாக இருந்தது. அவனென்பதை அவனே அறிந்திருந்தான். ஆடுகையில் அவனில்லை என்பதையும் அவனறிந்திருந்தான்.

ஆடலின் முதல்முழுமைக் கணங்களில் ஒன்றில் அவன் இடக்கரமும் வலக்கரமும் ஒரு மாத்திரையளவுக்கு முரண்பட்டன. அவன் இடக்கரம் காட்டியதை இடக்கால் தொடர்ந்தது. இடக்கால் அறிந்ததை இடக்கண் கண்டது. கண்ணறிந்ததை கருத்து உணர்ந்தது. கருத்து கொண்டதை கனிவும் ஏற்றது.

அவன் இடப்பக்கம் நெகிழ்ந்து அங்கொரு முலை முளைத்தது. அதில் தேம்பாலூறி நிறைந்தது. இடக்கண் நீண்டு அதில் கருணை சுரந்தது. அது அணிநீலநிறத்து அன்னையாகியது. செந்தழல்நிறமும் மணிநீல வண்ணமும் கலந்த முடிவிலா ஆடலாக இருந்தது இதுவதுவற்றது.

ஆடலுக்குள் அவன் அகம் அசைவற்ற யோகத்தில் இருந்தது. அந்த நிகழ்விலியில் அவன் நீலமாக நிறைந்திருந்தான். அங்கே செம்பொன்னிற உதயப்பேரொளியாக அவள் எழுந்தாள். அவள் புன்னகையில் அவன் தவம் கலைந்தது. அவன் அவளை தானாகக் கண்டான். அவள் தன்னை அவனாகக் காணவைத்தான். அவர்கள் நின்றாடுவதற்கும் வென்றாடுவதற்கும் தோற்றமைவதற்கும் தோற்றலேவெற்றியென அறிந்து நகைப்பதற்கும் முடிவற்ற மேடைகளைச் சமைத்தது அவர்களின் கனவு.

அக்கனவுகளெல்லாம் அவன் கை உடுக்கையின் நாதமாக எழுந்து அவனைச்சுற்றி விரிந்தன. காலமென்ற ஒன்றும், அது நிகழும் களமென ஒன்றும், அது கலைந்தடுக்கிக்கொள்ளும் விண்ணென ஒன்றும், விண் சுருளும் வெளியென ஒன்றும், வெளி ஒடுங்கும் அளியென ஒன்றும், அளியறியும் அம்மை என ஒன்றும் அங்கே உருவாகி வந்தன.

அம்மை தன் அழகிய கைகளால் அவனை பின்னாலிருந்து தழுவி அவன் செவிகளில் அவன் விரும்பும் சொல்லைச் சொல்லி அவனை எழுப்பினாள். சிரித்தோடிய அவளை அவன் நகைத்துக்கொண்டு விரட்டிச்சென்றான். ‘ஆடலும் ஆக்கலும் அமைதலும் ஆகட்டும். என்னுடன் ஆடி வெல்ல முடியுமா?’ என்றாள் அன்னை. ‘ஆம்’ என்றான் தாதை.

மேருவின் ஒளிமுனையில் அவர்கள் அமர்ந்தனர். உமை தன் வலது கையை விரித்தாள். ஒளிரும் செங்கையில் மலைகள் எழுந்தன. கடல்கள் அலைத்தன. பசுங்காடுகள் பெருகி மலர்ந்தன. உயிர்வெளி உருவாகிப் பெருகியது. அக்கையை அவள் மேருமலை மீது விரித்து ஒரு தாயக்கட்டம் செய்தாள்.

இறைவன் தன் வலக்கையை நீட்டி விண்ணகத்தில் உருண்ட சூரியனையும் இந்திரன் முதலிய தேவர்களையும் பற்றி அந்த தாயக்கட்டத்தில் கருக்களாக்கினான்.

அன்னை தன் நான்கு கைவிரல்களால் நான்கு தாயக்கட்டைகளைச் செய்தாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் அக்கட்டைகளை சிரித்தபடி உருட்டி அவள் ஆடத்தொடங்கினாள்.

மடமையெனும் பாவனையால் பெண்மை ஆடுகிறது. அதன்முன் சரணடையும் பாவனையால் ஆண்மை ஆடுகிறது. வெல்லா வீழா பெருவிளையாடல். அதன் வண்ணங்கள் வாழ்க!

சமந்த பஞ்சகம் என்னும் குருஷேத்ரத்தின் தென்மேற்கு மூலையில் இருந்த கொற்றவையின் சிற்றாலயத்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏழு சூதர்களில் முதல்வர் தன் கிணைப்பறையை மீட்டி பாடிமுடித்ததும் அங்கிருந்த பிறர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அதை ஏற்றனர்.

இரண்டாவது சூதர் தன்னுடைய மெல்லிய கரங்களால் தன் முழவை மீட்டி பாடத் தொடங்கினார்.

சூதரே, மாகதரே, ஆடுபவர்கள் எவரும் அறிவதில்லை, பகடைகளும் ஆடுகின்றன என்பதை. தங்கள் நான்கு முகங்களால் நான்கு வண்ணங்களால் அவை முடிவின்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும். முடிவின்மையில் அவை எங்கும் செல்லமுடியும். எவற்றையும் அடையமுடியும்.

அன்றொரு காலத்தில் ஆடலின் வேகத்தில் கிருதம் என்னும் பகடை தெறித்தோடியது. ஒளிரும் ஒரு சிவந்த விண்மீனாக அது பெருவெளியில் பாய்ந்து விண்ணகப் பாற்கடலில் விழுந்தது. அதன் அலைகள் எழுந்து அவ்வெண்ணிறப்பரப்பில் கால அகால விகாலமென சுருண்டிருந்த ஆதிசேடனை அறைந்தன. அவன் அசைவில் அறிதுயில் கொண்டிருந்த விஷ்ணு கண் விழித்தெழுந்தார். அவரது சினம்ததும்பிய கணம் பூமி எனும் தாயக்களத்தில் ஒரு மனிதனாகப் பிறந்தது.

சூதரே மாகதரே, அவன் பெயர் பரசுராமன். இப்புவியில் ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகை அன்னைக்கும் மைந்தனாகப் பிறந்தான். அளவுமீறும் அமுதம் விஷமானதுபோல அறம் காக்கும் ஷத்ரியவீரமே மறமாக ஆன காலம் அது. தேர்கள் உருளும் பாதையில் ஆயிரம் சிற்றுயிர்கள் மாள்கின்றன. சூதரே, அனைத்து தேர்களுக்கும் மேல் ஓடிச்செல்கிறது காலத்தின் பெருந்தேர்.

தன் பெருந்தவத்தால் சிவனிடமிருந்து பெற்ற மழுவுடன் தந்தையின் வேள்விக்கு விறகுவெட்ட வனம்புகுந்த பரசுராமன் பறவைகளின் குரல்கேட்டு வழி தேர்ந்து சென்றுகொண்டிருந்தபோது நாரதர் ஒரு குயிலாக வந்து கூவி அவனை வழிதவறச்செய்தார்.

மும்முறை வழிதவறிய பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.

அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து 'பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என' அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்.... மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.

சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று' என்றது கண்ணீர்த்துளி.

‘அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும். இன்று இம்மண்ணில் நின்று உங்களுக்கொரு வாக்களிக்கிறேன். உங்கள் வஞ்சத்தை நான் தீர்ப்பேன். இங்குள்ள ஒவ்வொரு துளியையும் நான் விண்ணகம் அனுப்புவேன். அதற்கு என் பெருந்தவமே துணையாகுக’ என்று பரசுராமன் வஞ்சினம் உரைத்தான். ஆம் ஆம் ஆம் என ஐந்து பருப்பொருட்களும் குரல் எழுப்பி அதை ஆதரித்தன.

குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது.

அவன் சென்ற திசைகளில் எல்லாம் நதிகள் சிவந்து குருதிவரிகளாக மாறின. அவன் காலடிபட்ட நிலங்களெல்லாம் குருதி ஊறி கொன்றையும் மருதமும் முல்லையும் செண்பகமும் செந்நிற மலர்களைப் பூத்தன.

பரசுராமன் தன் குருதி சொட்டும் மழுவுடன் சூரியநகரியை ஆண்ட மூலகன் என்னும் அரசனைக்கொல்லச் சென்றான். அவன் தன் ஷத்ரியத்தன்மையை முற்றிலும் கைவிட்டு தன் அன்னையருக்கு மைந்தனாக மட்டும் ஆனான். அவன் அன்னையர் அவனைச்சூழ்ந்து அணைத்துக்கொண்டனர். பரசுராமனின் மழு அவர்களை மும்முறை சுற்றிவந்து வணங்கி மீண்டது. நாரிவசன் என்றழைக்கப்பட்ட அம்மன்னனில் இருந்து ஷத்ரியகுலம் மீண்டும் முளைத்தெழுந்தது. அன்னையரின் கைகளாலேயே அரசு காக்கப்படுமென அவ்வம்சம் அறிந்திருந்தது.

பரசுராமன் ஷத்ரியர்களைக் கொன்று வென்ற கிழக்குத் திசையை அத்துவரியனுக்கும், வடக்கை உதகாதனுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டனுக்கும் அதற்கு அப்பால் உள்ள நிலத்தை சதசியர்களுக்கும் அளித்தான். பின்பு பெருகிப்புரண்டு சென்ற சரஸ்வதி நதியில் இறங்கி தன் மழுவின் குருதியை கழுவிக்கொண்டான்.

பரசுராமன் தன் பணிமுடித்து வந்து நின்ற இந்த இடம் அன்று ஐந்து குளங்கள் கொண்டதாக இருந்தமையால் பஞ்சசரஸ் என்று அழைக்கப்பட்டது. போரில் இறங்கியபின்னர் தன் வில்லை கீழிறக்காத அவன் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்யவில்லை. ஆகவே நீர்க்கடன்களைச் செய்வதற்காக முதல் குளத்தில் இறங்கி தன் கைகளைக் கழுவினான்.

அக்கணமே அந்த நீர்நிலை கொந்தளித்து அலையெழுந்து குருதித்தேக்கமாக மாறியது. திகைத்தபின் அவன் அடுத்த நீர்நிலையில் தன் கைகளைக் கழுவினான். அதுவும் குருதியாகி நிறைந்தது. ஐந்து குளங்களும் குருதிக்கொப்பளிப்புகளாக ஆனதைக் கண்டு அவன் செயலிழந்து நின்றான்.

கண்ணீருடன் தன் தந்தையையும் மூதாதையரையும் ஏறிட்டு நோக்கி பரசுராமன் கூவினான். ‘எந்தையரே, இக்குளங்கள் எவை? இங்கே நான் செய்யவேண்டியதென்ன?’

இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’

இடியோசையை நோக்கி பரசுராமன் கேட்டான் ‘நான் அறத்தையல்லவா நிலைநாட்டினேன்? ஆற்றாத ஆயிரம்கோடி விழித்துளிகளை விண்ணேற்றியவன் அல்லவா நான்?’ மெய்யிலி சொன்னது. ‘ஆம், ஆனால் எதன்பொருட்டென்றாலும் கொலை பாவமேயாகும்.’

திகைத்து சற்று நேரம் நின்றபின் இரு கைகளையும் விரித்து ‘ஆம் மூதாதையரே, அதை நானும் என் அகத்தில் உணர்ந்தேன். இந்தக் குருதியெல்லாம் என் நெஞ்சிலிருந்து வழிந்ததே. என்னைப் பொறுத்தருளுங்கள். விண்ணகங்களில் நீங்கள் பசித்திருக்கச் செய்துவிட்டேன். அணையாத விடாயை உங்களுக்கு அளித்துவிட்டேன்’ என்றான்.

’மைந்தனே, தன்னையறிந்தவனுக்கு பாவமில்லை என்கின்றன வேதங்கள். அந்த ஐந்து குருதிச்சுனைகளின் அருகே அமர்வாயாக. அங்கே நீ செய்யும் ஊழ்கத்தில் நீ உன்னை அறிந்து மீள்வாய்’ என்றனர் நீத்தார்.

சூதரே மாகதரே, இந்த சமந்த பஞ்சகத்தின் அருகே கிருத யுகத்தில் பரசுராமர் அமர்ந்து தவம்செய்தார். உடலுருகி உளமுருகி கனவுருகி காரிருள் உருகி கடுவெளியுருகி எஞ்சியபோது அவர் தன்னை அறிந்துகொண்டார்.

அப்புன்னகையுடன் அவர் விழிதிறந்தபோது இந்த ஐந்து குளங்களும் தெளிந்த குளிர்நீர் நிறைந்திருக்கக் கண்டார். எழுந்து அந்தக் குளங்களின் அருகே நின்று வான் நோக்கிக் கேட்டார். ‘எந்தையரே, இந்த நீர்ப்பலியை நீங்கள் பெறலாகுமா?’ வானிலிருந்து அவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள். ‘ஆம் மைந்தா, அவை உன் கண்ணீரால் நிறைந்துள்ளன. அவை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.’

பரசுராமரின் கண்ணீரான இந்தக் குளங்களை வாழ்த்துவோம். மாமனிதர்களின் கண்ணீரில்தான் மனிதகுலம் காலம்தோறும் நீராடுகிறதென்பதை அறிக. ஓம் ஓம் ஓம்!

இரண்டாவது சூதர் பாடிமுடிப்பதற்குள் மூன்றாவது சூதர் வெறியெழுந்து தன் துடிப்பறையை மீட்டி பாடத்தொடங்கினார்.

சூதரே கேளுங்கள். மாகதரே கேளுங்கள். செவிகள் கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். சிந்தை கொண்டவர்கள் அனைவரும் கேளுங்கள். இதோ இன்னொரு கதை.

விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான். ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே புகுந்தான். ஏழுவண்ணப்புரவிகள் இழுத்த பொற்தேரில் பன்னிரு கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழுவுடனும் செந்நிறம் வெண்ணிறம் பொன்னிறம் நீலநிறம் என நான்கு தாமரைகளுடனும் எழுந்தருளிய சூரியதேவனின் ரதசக்கரத்தில் முட்டினான்.

திசைதவறிய சூரியரதம் ஏழுவண்ணத்தலைகள் கொண்ட உச்சைசிரவஸால் இழுக்கப்பட்ட செந்நிறத்தேரில் விண்ணில் ஊர்ந்த இந்திரனின் பாதைக்குக் குறுக்காகச் சென்றது. சூரியனின் சாரதியான அருணன் விலகு விலகு என கூவிக் கையசைத்தபடி முழுவேகத்தில் விண்ணகப்பாதையில் விரைந்தான். இந்திர சாரதியான மாதலி ’விலகு, இது என் தலைவனின் பாதை’ என்று கூவினான். அவர்கள் மாறி மாறி போட்ட அறைகூவலால் விண்ணகங்கள் இடியொலி செய்தன.

விண்ணில் இரு பெரும் ரதங்களும் முகத்தோடு முகம் முட்டி திகைத்து நின்றன. சினம்கொண்ட சூரியன் தன் அங்குசத்தை இந்திரன் மேல் எறிந்தான். இந்திரனின் வஜ்ராயுதம் அதைத் தடுத்தது. அந்த ஓசையில் கோளங்கள் அதிர்ந்து தடம்மாறின. விண்மீன்கள் நடுங்கி அதிர்ந்தன. ஆயிரம்கோடி உலகங்களில் இடியோசையுடன் பெரும்புயல் எழுந்தது.

‘இது என் பாதை விலகு, இல்லையேல் உன்னை அழிப்பேன்’ என இருவரும் அறைகூவினர். அக்குரல்கேட்டு திசைத்தெய்வங்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர். யமனும் வருணனும் வாயுவும் அவர்களுடன் போரில் இணைந்துகொண்டனர். தேவர்களனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் அப்போரில் படைதிரண்டனர்.

விண்வெளி புழுதியால் நிறைய, படைக்கலங்களின் ஒளி கோடானுகோடி மின்னல்களாக நெளிந்துபரவ, அவை மோதும் இடியோசை திசைகளை நிறைக்க அப்பெரும்போர் நிகழ்ந்தது. முடிவில்லா ஆற்றல் கொண்ட தேவர்களின் போரில் காலம் ஒரு பாறையாக மாறி சான்றாக அமர்ந்திருந்தது.

விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும் மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.

சூரியனின் வெண்கால் சக்கரத்தில் இருந்து யமனின் கருங்கால் சக்கரத்தை நோக்கித் தெறிக்கையில் மேருவின் சிகரமுனையில் மோதி அவன் சரிந்து வானில் இருந்து உதிரலானான். வானம்கிழிபடும் பேரொலியுடன் அலறியபடி கோடியோஜனை தொலைவுள்ள செஞ்சுடராக எரிந்தபடி அவன் மண்ணில் வந்துவிழுந்தான்.

அவன் விழுந்ததைக் கண்டனர் விண்ணகத்தின் மாவீரர்கள். இனி நம் ஆடல் அந்த மண்ணில் என்று சூரியன் சொன்னான். ஆம் என்றான் இந்திரன், ஆம் ஆம் என்றனர் பிறதேவர்கள். ஆம் ஆம் ஆம் என பேரொலியுடன் எதிரொலித்தன திசைகள்.

துடியோசை உச்சவிரைவு கொள்ள கைகளும் கால்களும் வெறியில் துடித்தெழ சூதர் எழுந்து நடனமிட்டார். ‘இனி மண்ணில் நிகழும் பெரும்போர். அலகிலா ஆற்றல்களின் தேர்விளையாடல். ஐந்து பெருங்குளங்களும் ஐந்துமுறை மீண்டும் குருதியால் நிறையும். செங்குருதி! உடல்களுக்குள் எரியும் நெருப்பு! காமமும் குரோதமும் மோகமும் சுழிக்கும் பெருநதி! விண்ணகத்தின் விசைகள் அனைத்தையும் தன்னுள் கரைத்திருக்கும் வானோரின் அமுதம்!'

சூதரின் குரல் எழுந்தது. ‘காலமே, வெளியே, அழிவின்மையே குருதியாகி வருக! அறமே, கனவே, மகத்தான எண்ணங்களே குருதியாகி வருக! தெய்வங்களே தேவர்களே பாதாளநாகங்களே குருதியாகி வருக!'

இடிக்கின்றது கீழ்த்திசை! வெள்ளியென மின்னி அதிர்கின்றது மேல்திசை! மழை மழை என குளிர்கின்றது தென்திசை! மண்பூத்து மணக்கின்றது வடதிசை! வருகிறது உதிரமழை! ஆம், உதிரமழை!

சன்னதம் விலகி அவர் பின்னால் சாய்ந்து விழுந்ததைப் பார்த்தபடி ஆறு சூதர்களும் அந்த ஐந்து குளங்களின் கரையில் அமைதியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர்.

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 2 ]

கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிருக்கையில்தான் பீஷ்மர் தெற்கிலிருந்து கிழக்குநோக்கி எழுந்த பருவமழையின் பேருருவை நேரில் கண்டார். சிந்துவின் நீர்ப்பெருக்கினூடாக ஒரு வணிகப்படகில் அவர் கூர்ஜரம் நோக்கி வருகையில் நதி வெய்யநீராக கொதித்து ஆவியெழுந்துகொண்டிருந்தது. சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட பொதிப்படகுகளின் அறைகளுக்குள் சில கணங்கள் கூட இருக்கமுடியவில்லை. வெளியே வந்து தெற்கிலிருந்து அலையலையாக வீசிக்கொண்டிருந்த காற்றை வாங்கிக்கொண்டு பாய்மரக்கயிற்றைப் பற்றிக்கொண்டு நிற்கையில் மட்டுமே உடலில் வியர்வை கொட்டுவது நின்றது.

சிந்து சமநிலத்தை அடைந்தபோது அதில் வேகமும் அலைகளும் அடங்கின. முறுகித்திரும்பிய பாய்களில் பின்னத்திப்பாய் எதிர்க்காற்றை வாங்கிச் சுழற்றி முன்னத்திப்பாய்க்கு அனுப்ப காற்றை எதிர்த்து மிகமெல்ல அவை நகர்ந்தன. தொலைதூரத்துக் கரையின் நகர்வைக்கொண்டுதான் படகின் ஓட்டத்தையே அறியமுடிந்தது. படகோட்டிகள் நீரோட்டத்தின் சுழிப்பில் படகுகள் நிலையிழந்து சுழலும்போது மட்டும் துடுப்புகளால் மெல்ல உந்தி அப்பால் செலுத்தினர். சுக்கான் பிடித்திருந்தவன்கூட அதன் நுனியைப்பிடித்து ஒரு ஆப்பில் கட்டிவிட்டு தளர்ந்து அமரத்தில் அமர்ந்துவிட்டான். பீஷ்மர் பாய்க்கயிறுகள் நடுவே ஒரு தோலை நீட்டிக்கட்டி அந்தத் தூளிமேல் படுத்துக்கொண்டார். அங்கே பாயின் நிழலிருந்தமையால் வெயில் விழவில்லை.

பகல்கள் தழலுருவான சூரியனால் எரிக்கப்பட்டன. அந்தியில் செம்மை பரவியபோது ஆவியெழுந்த நீர்வெளியே ஒற்றைப்பெரும் தழலாகத் தோன்றியது. மேகங்களில்லாத வானில் சூரியன் அணைந்தபின்னரும் நெடுநேரம் ஒளியிருந்தது. இருள் பரவியபின்பு நதிக்குள் கரையிலிருந்து வந்து சுழன்ற காற்றில் வெந்த தழைவாசனையும் உலரும் சேற்றின் வாசனையும் நிறைந்திருந்தது. பகலில் காலையிலும் மாலையிலும் மட்டும்தான் பறவைகளை நீர்மேல் காணமுடிந்தது. இரவில் மேலும் அதிகமான பறவைகள் இருண்ட வானத்தின் பின்னணியில் சிறகடித்தன.

இரவை பீஷ்மர் விரும்பினார். விண்மீன்களை ஒருபோதும் அவ்வளவு அருகே அவ்வளவு செறிவாக அவர் பார்த்ததில்லை. விண்மீன்கள் ரிஷிகள் என்று புராணங்கள் சொல்வதுண்டு. மண்ணில் வாழும் மானுடரைவிட பலமடங்கு ரிஷிகள் விண்ணில் நிறைந்திருக்கிறார்கள். மண்ணிலிருந்து விண்ணேறியவர்கள். விண்ணுக்கு ரிஷிகளை விளைவிக்கும் வயல்தான் பூமி. மாறாத கருணைகொண்ட ஆர்த்ரை. குன்றா வளம் கொண்ட ஊஷரை. முளைத்துத் தீராத ரிஷிகளைக் கருக்கொண்ட தரித்ரி. அவர்களுக்கான அமுது ஊறும் பிருத்வி. சதகோடி மதலைகளால் மாமங்கலையான புவனை.

கூர்ஜரத்தை நெருங்கியபோது கடற்காற்று வரத்தொடங்கியது. சிற்றாறுகளின் நீரை மலைக்கங்கை நீர் சந்திப்பதுபோல. கடற்காற்றை தனியாகத் தொட்டு அள்ளமுடியுமென்று தோன்றியது. இன்னும் குளிராக அடர்த்தியாக உப்புவீச்சம் கொண்டதாக அது இருந்தது. பகலில் வெங்காற்றை அவ்வப்போது விலக்கி கனத்த கடற்காற்று சற்றுநேரம் வீசும்போது உடம்பு குளிர்கொண்டு சிலிர்த்தது. பின்பு மீண்டும் கரைக்காற்று வீசும்போது வெம்மையில் சருமம் விரிந்து வியர்வை வழிகையில் கடற்காற்றின் உப்பு தெரிந்தது. மேலும் மேலும் கடற்காற்று வரத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் கடலே தெற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி காற்றாகப் பெருகிச்செல்வதுபோலத் தோன்றியது.

படகோட்டியான விகூணிகன் "மழைக்காலம் நெருங்குகிறது வீரரே" என்றான். "காற்றில் நீர்த்துளியே இல்லையே" என்றார் பீஷ்மர். "இப்போது நீர்த்துளிகள் இருக்காது. இன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும். இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறது. நாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான். மூச்சு ஏறிக்கொண்டே செல்லும். குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும். கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும். நதியிலோ கடலிலோ படகுகளை இறக்கமுடியாது. பறவைகள் வடக்குநோக்கிச் சென்றுவிடும்."

பீஷ்மர் புன்னகையுடன் "பேற்றுநோவு இல்லையா?" என்றார். "ஆம் வீரரே, அதுவேதான். கடல் இருகைகளையும் அறைவதையும் புரண்டு நெளிந்து ஓலமிடுவதையும் காணமுடியும்..." அவன் சிரித்துக்கொண்டு "ஆனால் அதற்கு இன்னும் நாட்களிருக்கின்றன. இது சிராவணமாதத்தின் முதல்வாரம். நான்காம்வாரத்தில்தான் மழைதொடங்கும்."

கூர்ஜரத்தில் சிந்து கடலை சந்தித்தது. எதிரே நதிநீரின் நீலத்திரைச்சீலைக்குள் மதயானைகள் புகுந்துகொண்டு மத்தகம் முட்டி ஓலமிட்டு வருவதுபோல அலைகள் பொங்கி வந்தன. படகின் விளிம்பில் அவை ஓங்கி ஓங்கி அறைந்தன. மாலைமங்கியபோது அலைகள் மேலும் அதிகரித்து படகுகளை ஊசலில் தூக்கி மேலே கொண்டுசென்று கீழிறக்கி விளையாடின. படகுக்குள் இருந்த பொருட்கள் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பாய்ந்தோடி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒலியெழுப்பின.

படகுகளை ஓரமாகக் கொண்டுசென்று அங்கிருந்த அலையாத்திக் காடுகளின் மரங்களில் பெரிய வடத்தால் கட்டிவிட்டு படகோட்டிகள் காத்திருந்தனர். "இந்தக் கடல்வேலியேற்றம் இல்லையேல் நாம் கடலுக்குள் செல்லமுடியாது" என்றான். ஊர்ணன் என்னும் படகோட்டி. "ஏன்?" என்று பீஷ்மர் கேட்டார். "இவ்வளவு நீரும் மீண்டும் கடலுக்குள் போகவேண்டுமே. அவற்றில் ஏறி நாம் கடலுக்குள் சென்றுவிடமுடியும்."

இரவில் படகுகளை ஒன்றுடன்ஒன்று சேர்த்துக்கட்டி ஒரு பெரிய படலமாக ஆக்கினார்கள். மிதக்கும் கம்பளம்போல படகுகள் நீரில் வளைந்தாடின. வணிகர்கள் தோலால் ஆன படுக்கைகளுடன் கரையிறங்கி அங்கே நீரில் வேரூன்றி நின்றிருந்த மரங்களுக்குள் புகுந்து மரங்கள் நடுவே தூளிகளைக் கட்டிக்கொண்டு படுத்தார்கள். தீச்சட்டிகளில் கனலிட்டு அவற்றில் தேவதாரு அரக்கைக் கொட்டி புகைஎழுப்பி காட்டுக்குள் மண்டியிருந்த கொசுக்களை விரட்டிவிட்டு அப்புகைக்குள்ளேயே துயின்றனர். புகையை காற்று அள்ளி விலக்கிய சிலகணங்களுக்குள்ளேயே கொசுக்கள் மகுடி ஒலி போல ரீங்கரித்தபடி வந்து சூழ்ந்துகொண்டன.

விடிகாலையில் வெள்ளி கீழே கிளம்பியதுமே அனைவரும் சென்று படகுகளில் ஏறிக்கொண்டனர். இருவர் நீருக்குள் துடுப்புகளை கயிற்றில் கட்டி மிதக்கவிட்டு நீரோட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். நீர் கடலில் இருந்து ஆற்றுக்குள் சென்றுகொண்டிருந்தது. பின்பு அசைவிழந்து நின்றது. மெல்ல துடுப்பு கடலைநோக்கிச் செல்ல ஆரம்பித்ததும் ஒருவன் ஒரு சங்கை எடுத்து ஊதினான். அனைவரும் பெருங்கூச்சலெழுப்பியபடி படகுகளை அவிழ்த்து துடுப்புகளால் உந்தி நீரோட்டத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் நீரோட்டத்தை அடைவதற்குள்ளாகவே கடலை நோக்கிச்செல்லும் வேகம் அதிகரித்திருந்தது.

கடல் பள்ளத்தில் இருப்பதாகவும் மொத்த நதியும் அருவியென அதைநோக்கிச் செல்வதாகவும் தோன்றியது. ஊர்ணன் "விடியற்காலை இரண்டுநாழிகைநேரம் மட்டும்தான் கடலுக்குள் செல்வதற்குரியது வீரரே. நீரோட்டம் நம்மை அள்ளித்தூக்கி மானஸுரா தீவுக்குக் கொண்டுசென்றுவிடும். அங்கேதான் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகமான தேவபாலபுரம் உள்ளது" என்றான்.

"பயணிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார் பீஷ்மர். "தேவபாலபுரத்தின் நான்குபக்கமும் கடல்துறைகள்தான். வடக்குப்பக்கம் சிந்துகொண்டு சென்று கொட்டும் மணல்மேடுகள் இருப்பதனால் அங்கே படகுகள் மட்டும்தான் செல்லமுடியும். தெற்கே கடல் மிக ஆழமானது. தீவிலிருந்து நீட்டி நிற்கும் பாறைகளுக்கு மேலே மரமேடைகளை அமைத்து கப்பல்துறை அமைத்திருக்கிறார்கள். யவனநாட்டிலிருந்தும் சோனகநாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் வரும் நாவாய்கள் அங்கே வந்து பொருள்கொண்டு பொருள்பெற்றுச் செல்கின்றன. வடக்கே ஆரியவர்த்தத்தில் இருக்கும் பொன்னிலும் மணியிலும் பெரும்பகுதி இந்தத் துறைமுகம் வழியாக வருவதுதான். பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகமான தென்மதுரை மட்டுமே இதைவிடப்பெரியது" என்றான் ஊர்ணன்.

மாபெரும் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே செல்வதுபோலிருந்தது கடலுக்குள் நுழைவது. தென்கிழக்கே மேகத்திரைக்கு அப்பால் கருவறைக்குள் அமர்ந்த செம்மேனியனாகிய சிவனைப் போல சூரியன் கோயில்கொண்டிருந்தான். செம்பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக்கொண்டிருந்தது. பீஷ்மர் முதல்முறையாக அன்றுதான் கடலைப்பார்த்தார். தென் திசையையே தடுத்துக் கட்டப்பட்ட பெரும் நீலக்கோட்டைபோலத் தெரிந்தது நீர்தான் என்று உணர்ந்துகொள்ள அரைநாழிகை ஆகியது. அதை அவரது அறிவு உணர்ந்தபின்னும் ஆன்மா உணரவில்லை. அந்த நீர் வானில் எழுந்து நிற்பதாக பின்னர் தோன்றியது. அது எக்கணமும் உடைந்து பொழியத்தொடங்கிவிடும் என தலையுச்சி பதைப்படைந்தபடியே இருந்தது.

அலைகளில் ஏறிக்கொண்ட படகுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக குதிரைக்குட்டிகள் போல எம்பிக் குதித்தபடி சுருக்கப்பட்ட பாய்களுடன் மானஸுரா நோக்கிச் சென்றன. கடலில் ஒரு நாவாய் போல ஆடிக்கொண்டிருந்த தீவின்மீது மரக்கூட்டங்கள் நடுவே மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகை முகடுகள் தெரிந்தன. கூர்ஜர அரசின் சங்குமுத்திரை கொண்ட பகவாக்கொடி தழலென நெளிந்துகொண்டிருந்தது. படகுகள் நெருங்கியபோது தீவு அசைந்தாடியபடி அருகே வந்தது. அதன் படகுத்துறை ஒரு கை போல நீண்டுவந்து படகுகளைப் பற்றிக்கொள்வதாகத் தோன்றியது. இரு துறைமேடைகளையும் தேனீக்கள் கூட்டை மொய்ப்பது போல படகுகள் கவ்விக்கொண்டன. கரையிலிருந்து சுமையிறக்கும் வினைவலர் படகுகளை நோக்கி ஓடிவந்தனர்.

மறுபக்கம் கடல்நாவாய்களுக்கான மூன்று பெருந்துறைகள் இருந்தன. அங்கே கடலுக்குள் நீண்டிருந்த பாறைகளின்மீது கற்களையும் மரங்களையும் அடுக்கி நீட்டி துறைமேடைகளைச் செய்திருந்தனர். நாவாய்களுக்குள்ளிருந்தே பொதிகளை எடுத்து கனத்த சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் ஏற்றி வெளியே கொண்டுவந்து பண்டகசாலைகளுக்குக் கொண்டுசென்றனர். நூறுபாய்கள் கொண்ட சோனகமரக்கலங்கள் முந்நூறு பாய்கள் கொண்ட யவனமரக்கலங்கள் நடுவே ஆயிரம்பாய்கள் கொண்ட பீதர் மரக்கலங்கள் இமயத்தின் பனிமலைமுகடுகள் போல நின்றன.

தேவபாலபுரத்தில் பயணிகள் தங்கும் கட்டடங்களில் ஒன்றில் பீஷ்மர் தங்கினார். செங்கற்களால் கட்டப்பட்டு மரப்பலகைகளால் கூரையிடப்பட்ட உயரமற்ற கட்டடத்தின் முன்னால் பெரிய பாறைகளாக நிலம் கடலுக்குள் நீட்டி நின்றது. பாறைகள்மேல் கடல் நுரையெழ அறைந்தபடியே இருக்க நீர்த்துளிகள் சிதறி காற்றிலேறி வீடுகளின் சுவர்களில் பட்டு வியர்வையாக மாறி சிற்றோடைகளாக வழிந்து பாறைகளில் சொட்டி மீண்டும் கடலுக்குள் சென்றன. அறைக்குள் இருக்கையிலும் கடலுக்குள் இருந்துகொண்டிருக்கும் உணர்வு இருந்தது. பயணம் முடிவடையாததுபோலத் தோன்றச்செய்தது.

சிபி நாட்டின் பாலையிலும், மூலத்தானநகரி முதல் தேவபாலபுரம் வரை படகுகளிலும், வணிகர்களுக்கு பாதுகாவலராகப் பணியாற்றி அவர் ஈட்டிய நாணயங்கள் அந்த எளியவாழ்க்கைக்குப் போதுமானவையாக இருந்தன. காலையில் தன் ஆயுதப்பயிற்சியை கடலோரப்பாறைகளில் முடித்துவிட்டு அவர் துறைமுகத்துக்குச் சென்றார். அங்கே கன்னங்கரிய காப்பிரிகளும், செந்நிறமான யவனர்களும், வெண்ணிறமான சோனகர்களும், மஞ்சள் நிறமான பீதர்களும் கூடி வெவ்வேறு மொழிகளில் பேசிய இரைச்சல் எந்நேரமும் கேட்டுக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் எண் கற்றவர்களுக்கு எப்போதும் அலுவல்கள் இருந்தன.

பீஷ்மர் பகலில் பண்டகசாலைகளில் பணியாற்றி மாலையில் ஊதியம்பெற்று மீள்வதை விரும்பினார். அங்கே வரும் அனைவரிடமும் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு உரையாடினார். யவனதேசத்தின் ரதங்களைப்பற்றியும் காப்பிரிநாட்டின் பொற்சுரங்கங்களைப்பற்றியும் பீதர்தேசத்தின் மஞ்சள்மண் கலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டார்.

அழகிய மணிக்கண்கள் கொண்ட தமிழர்கள் பாரதவர்ஷத்தின் கிழக்கே வங்கத்துத் துறைமுகத்தில் இருந்து தென்முனையின் கொற்கை வழியாக அங்கே வந்திருந்தனர். அவர்களறியாத கடல்நகரிகளே இருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் தென்னகவிரிவைப்பற்றி அவர்கள் சொன்ன ஒவ்வொன்றும் பீஷ்மரை கிளர்ச்சிகொள்ளச் செய்தது. நீர்பெருகியோடும் நர்மதை, கிருஷ்ணை, கோதை, பெண்ணை, காவிரி. வெயில் விரிந்த பெருநிலங்கள். தமிழ்மண்ணின் மூவேந்தர் நாடுகள். அங்கே மண்பூசிய மரக்கூரைகளும் கனத்த மண்சுவர்களும் கொண்ட பெருநகரங்கள். தென்மூதூர் மதுரை. முத்துவிளையும் கொற்கை. தந்தம் விளையும் வஞ்சி. நெல்விளையும் புகார்.

தென்மதுரை என்று பிறந்தது என்றறிந்தவர் தென்னாடுடைய சிவன் மட்டுமே என்று கன்னன் பெருஞ்சித்திரன் என்ற பெருவணிகன் சொன்னான். பஃறுளி ஆறும் பன்மலையடுக்கக் குமரிக்கோடும் கொண்ட தென்னகப் பெருவளநாட்டின் திலகமான அந்நகரம் கடலருகே அமைந்தது. கடல்நீர் நகருள் புகுவதைத் தடுக்க கட்டி எழுப்பப்பட்ட பெருமதில்நிரையால் மதில்நிரை என்றும் மதுரை என்றும் அழைக்கப்பட்டது. கடலாமையோடுகளால் கூரையிடப்பட்டு கடற்சிப்பி சுட்டு எடுத்த வெண்சுண்ணத்தாலான வீடுகளும் கொண்ட அது சந்திரபுரி என்று பாவலரால் பாடப்பட்டது. மீன்கொடிபறக்கும் ஆயிரம் மாளிகைகளால் சூழப்பட்ட அதன்மேல் எந்நேரமும் கடல்துமிகள் மழையெனப்பெய்து வெயிலை மறைத்தன. அருகே குமரிக்கோட்டின் உச்சியில் ஒற்றைக்கால் ஊன்றி நின்ற குமரியன்னையின் குளிர்நோக்கும் மழையெனப் பெய்துகொண்டிருந்தது என்றான் பெருஞ்சித்திரன்.

செம்மயிர்த் தலையும் பாம்பின் வாலும்கொண்ட தெய்வம் அமர்ந்திருந்த அமரம் கொண்ட பீதர்களின் மரக்கலங்கள் அத்தனை மரக்கலங்களையும் உள்ளடக்கிக்கொள்ளும் கடல்நகரங்கள்போல நின்றாடின. முக்கூர் சூலமேந்திய கடல்தெய்வம் ஆடையின்றி நின்றிருந்த முனம்பு கொண்ட யவன மரக்கலங்கள் கடல் ஓங்கில்கள் போல கருநிறமாகப் பளபளத்தன. கடற்பறவைகளுக்கு நிகராக நீரில் பறக்கக்கூடியவை அவை என்றனர் வணிகர்கள்.

தழல்நிறம்கொண்ட யவனர்கள் நீலத்தாமரைபோன்ற பளிங்குப் புட்டிகளில் கொண்டுவந்த இன்கடும்தேறல் பொன்னுக்குநிகரான விலைகொண்டிருந்தது. எப்போதும் துருவனையே நோக்கும் துருவமுள்ளுக்கு நூறுமடங்கு பொன் விலைசொன்னார்கள். தெற்கே தந்தங்களும், மிளகும், முத்தும், தோகையும், சந்தனமும் வாங்கி வந்தவர்கள் தேவபாலத்தில் தேவதாருவின் அரக்கும் சந்தனமும் அகிலும் வெல்லக்கட்டிகளும் வாங்கிக்கொண்டு பொன் கொடுத்தனர். சோனகர்கள் சிந்துவழியாக வந்த கோதுமையையும் உலர்ந்த பழங்களையும், தோலையும் வாங்கிக்கொண்டனர். வெண்களிமண் பாத்திரங்களும் பட்டுத்துணிகளும் கொண்டுவந்த பீதர் நிலத்து நாவாய்கள் விற்கப்பட்ட எதையும் வாங்கிக்கொண்டன.

செல்வங்கள் தெருவெங்கும் குவிந்துகிடந்தன. செல்வத்துள் பெருஞ்செல்வம் மானுடர் தோள்தழுவி அமர்ந்திருக்கும் கணங்களே என்று காட்டின தெருக்கள். ஈச்சங்கள் விற்கும் அங்காடிகளில் மழைநீரும் மலைநீரும் செம்மண்நீரும் ஒன்றாகக் கலக்கும் நதிப்பெருக்குபோல அனைத்து மனிதர்களும் நிரைந்து அமர்ந்து அருந்தினர். சிரித்தும் பூசலிட்டும் மகிழ்ந்தனர். தாழ்ந்த கூரையிடப்பட்ட பரத்தையர்தெருக்களில் ஆடும் கால்களுடன் தோள்பிணைந்து காப்பிரிகளும் யவனர்களும் நடந்தனர்.

வேம்புமரங்களால் மூடப்பட்டிருந்தது தேவபாலம். அவை கடும்கோடையிலும் தீவை குளிரவைத்திருந்தன. அவற்றின் பழுத்தஇலைகளால் தீவின் அனைத்துத் தெருக்களும் பொற்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தன. பீஷ்மர் வந்தபோது வேம்புக்கூட்டங்கள் காய்த்து பசுங்குலைகள் கனத்து கிளைதாழ்ந்து காற்றிலாடின. அவரது வசிப்பிடத்தின் கூரையிலும் தரையிலும் காற்றில் வேம்பின் காய்கள் உதிரத்தொடங்கின.

ஒருநாளிரவில் அவர் ஓர் இனிய நினைவு நெஞ்சில் மீண்டதுபோல வேம்பின் பழத்தின் நறுமணத்தை உணர்ந்தார். அந்த மணம் சிலநாட்களாகவே தீவில் இருந்தாலும் அப்போதுதான் அவர் சிந்தனையை அடைந்தது. மறுநாள் எழுந்து வேம்புமரங்களை அண்ணாந்து நோக்கி நடந்தபோது கிளிகள் பறந்து உண்டுகொண்டிருந்த வேப்பம் பழங்களைக் கண்டார். கீழே உதிர்ந்துகிடந்த பொன்னிறப்பழங்களை எடுத்து பார்த்தார். வாயில் போட்டு கசப்பே இனிப்பான அதன் மாயத்தை அறிந்தார்.

சிலநாட்களில் வேப்பங்காய்களெல்லாமே பொன்மணிக்கொத்துகளாக மாறின. தலைக்குமேல் நூறு விழவுகள் கூடியதுபோல கிளிகளின் ஓசை நிறைந்தது. சிலநாட்களில் நடப்பதும் அமர்வதும் வேப்பம்பழங்களின் மீதுதான் என்றானது. பண்டகசாலையின் பொதிகளின்மேல், நாவாய்களின் கூரைகளில், படகுப்பரப்புகளில் எங்கும் வேப்பம்பழங்களின் சாறு பரவி மணத்தது. உணவிலும் குடிநீரிலும் அந்த வாசனை எப்போதுமிருந்தது. "இந்த வேம்பின் சாறும் அதன்பின் வரும் மழையும்தான் இத்தனை மக்கள் வந்துசெல்லும் இந்தத்தீவில் எந்த நோயுமில்லாமல் காக்கின்றன" என்று தீவின் வைத்தியரான கூர்மர் சொன்னார்.

வேம்புமணம் விலகத் தொடங்கும்போது மழைவரும் என்பது கணக்கு. பீஷ்மர் ஒவ்வொருநாளும் மழையை எதிர்பார்த்திருந்தார். ஒவ்வொருநாளும் காற்றில் நீராவி நிறைந்தபடியே வந்தது. மதியத்தில் வெயில் எரிந்து நின்றிருக்கையில் வேம்பின் நிழலில் அமர்ந்திருந்தபோதும் உடலில் வியர்வை வழிந்தது. நீரும் மோரும் பழச்சாறும் எவ்வளவு குடித்தாலும் தாகம் தீரவில்லை. நள்ளிரவிலும்கூட படுக்கைநனைந்து குளிரும்படி வியர்வை வழிந்தது. காற்றில் நிறைந்திருந்த நீராவியால் சிலசமயம் மூச்சுத்திணறுவதுபோலிருந்தது. அந்தக் கனத்த காற்றை உள்ளிழுத்தபோது நெஞ்சில் எடை ஏறியது.

நள்ளிரவில் உறுமல் போன்ற ஒலிகேட்டு பீஷ்மர் எழுந்து வந்து வெளியே பார்த்தார். அவரது இல்லத்தின் முன்னால் விரிந்திருந்த கடல் அலைகளின்றி அசைவிழந்து கிடந்தது. கடற்பாறைகள் நீருடனான விளையாட்டை நிறுத்திவிட்டு எதிர்நோக்கி சிலைத்திருந்தன. இருண்ட வானை இருண்ட கடல் தொடும் தொடுவான் கோடு தெரிந்தது. வானில் ஒளியாலான ஒரு வேர் படர்ந்திறங்கியது. பாறைகள் உருள்வதுபோல வானம் அதிர்ந்தது. மறுபக்கம் இன்னொரு ஒளிவிழுது மண்ணிலிறங்கியது. கரியயானைக்கூட்டம் சேர்ந்து ஒலியெழுப்பியதுபோல ஒலித்தது. இரு குழுக்களாக மேகங்கள் பிரிந்து மாறி மாறி ஒளியாலும் ஒலியாலும் போட்டிபோடுவதுபோலிருந்தது.

பீஷ்மர் அந்த விளையாட்டை நோக்கி நின்றிருந்தார். கடலில் இருந்து எழுந்துவந்த காற்றின் கீற்று ஒன்று அவரை மோதி அவர் குழலைத் தள்ளிப் பறக்கவிட்டுப் பின்னால் சென்றது. சற்றுநேரம் கழித்து இன்னொரு காற்றுக்குழவி. பின் மீண்டும் ஒன்று. பிறகு குளிர்ந்த காற்று பேரொலியுடன் வந்து அவரை சற்று நிலையழியச் செய்து பாய்ந்துசென்று வேப்ப மரங்களின் கிளைகளைக் கோதி பின்னுக்குத்தள்ளி கடந்துசென்றது. மின்னல் கண்களை ஒளியால் அழித்தபடி அதிர்ந்து அணைய இருபக்கமும் பேரொலியுடன் இடி ஒலித்தது. பல்லாயிரம் குட்டிக்குதிரைகள் பாய்ந்துசெல்வதுபோல பெரிய நீர்த்துளிகள் நீரிலும் கடற்பாறையிலும் மண்ணிலும் வீடுகளிலும் மரங்களிலும் அறைந்து சென்றன. ஆவேசமாகக் குரலெழுப்பியபடி வந்து மழை அனைத்தையும் மூடிக்கொண்டது.

மழையில் குளிர்ந்து நடுங்கியவராக பீஷ்மர் அந்த பாறைமுனையில் நின்றிருந்தார், மழைக்குள் மின்னல்வெட்டியபோது பலகோடிப் பளிங்குவேர்களின் பின்னலைக் கண்டார். சிலிர்த்துக்கொண்ட பளிங்குரோமப் பரப்பைக் கண்டார். நெளியும் நீர்த்திரையின் ஓரம் தீப்பற்றிக்கொண்டதுபோல எழுந்தணைந்தன மின்னல்கள். இடியோசையை மழைப்படலம் பொத்திக்கொண்டதனால் ஒலி நனைந்த பெருமுழவுபோல ஒலித்தது.

அவர் அறைக்குள் வந்து ஆடையை மாற்றியபின் படுக்கையில் படுத்துக்கொண்டு நீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தார். இங்கிருந்து செல்கிறது பாரதவர்ஷத்தையே உயிரால் மூடும் அன்னையின் கருணை. கடலன்னையின் புதல்வியான வர்ஷை. அள்ளிவழங்கும் விருஷ்டி. பேதங்களற்ற மஹதி. இந்திரனின் மகளாகிய தயை.

பழைய இல்லத்தின் கூரை சொட்டத்தொடங்கியது. அறையின் மண்தரைமுழுக்க நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவர்மேலும் துளிகள் விழுந்தன. நீர் எத்தனை இனியதென்றறிய கோடைமழை போல் பிறிதொன்றில்லை.

மறுநாள் விடியவேயில்லை. துறைமுகமே அடங்கி அன்னைக்கோழியின் சிறகுக்குள் குஞ்சுகள் போல மழைக்குள் அமர்ந்திருந்தது. கூரைவிளிம்புகளில் இருந்து பளிங்குத்தூண்கள் போல பட்டுத்திரைபோல மழை தொங்கிக்கிடந்தது. வேம்பின் இலைத்தழைப்புகள் எழுந்து அழுந்திக் குமுறிக்கொந்தளித்தன. மழையே பகலாகி மழையே இரவாகி மறுநாளும் மழையே விடிந்தது. மழையன்றி ஏதுமிருக்கவில்லை.

மூன்றாம்நாள் மழை மெல்ல இடைவெளிவிட்டது. கரியகூரையாக இறுகியிருந்த வானில் கீழ்ச்சரிவில் ஒரு வாசல்திறந்து தளிர்வெளிச்சம் கீழே விழுந்து கடலை ஒளிபெறச்செய்தது. ஆனால் தெற்குச்சரிவிலிருந்து இருண்டமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டியபடி மேலேறிக்கொண்டிருந்தன. அந்தக்கரும்பரப்பில் மின்னல்கீற்றுகள் துடிதுடித்து அணைந்தன. அவ்வொளியில் வடிவம்பெற்ற கருமேகங்கள் மீண்டும் கருமைவெளியாக ஆயின.

மதிய உணவை உண்டபின் வாயில்திண்ணையில் அமர்ந்து வானைநோக்கிக் கொண்டிருந்த பீஷ்மரை நோக்கி வந்து வணங்கி நின்றான் அஸ்தினபுரியின் ஒற்றனாகிய சுகர்ணன். பீஷ்மர் அவனை என்ன என்பதுபோலப் பார்த்தார். "பேரரசி சத்யவதியின் ஆணை" என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். "வரும் நிறைநிலவுநாளுக்குள் தாங்கள் அங்கே இருந்தால் நன்று என்று எண்ணுகிறார்."

"ஏன்?" என்றார் பீஷ்மர். அவருக்கு என்ன என்று உடனே புரிந்துவிட்டது. "இளவரசர் திருதராஷ்டிரருக்குப் பதினெட்டு வயது நிறைவடைந்தபின் வரும் முதல் நிறைநிலவு அது" என்றான் சுகர்ணன். பீஷ்மர் தலையசைத்தார். "பேரரசி அஞ்சுகிறார்கள். திருதராஷ்டிரர் இளவரசுப்பட்டம் கொள்ள ஷத்ரியர்களின் எதிர்ப்பிருக்கிறது. நம் குடிமக்களும் எதிர்க்கக்கூடும்." சற்று இடைவெளிவிட்டு "அத்துடன்..." என்றான்.

பீஷ்மர் ஏறிட்டுப்பார்த்தார். "நிமித்திகரும் கணிகரும் சூதரும் மூன்றுவகையில் ஒன்றையே சொல்கிறார்கள்" என்றான் சுகர்ணன். "அஸ்தினபுரிக்கு மேற்கு வானில் ஒரு எரிவிண்மீன் செந்நிறக் குங்குமத்தீற்றல்போல விழுந்தது என்றும், அது துவாபரன் என்னும் வானகப்பகடை என்றும் நிமித்திகர் சொன்னார்கள். கணிகர் பன்னிரு ராசிசக்கரத்தில் அனைத்து தேவர்களும் இடம்பெயர்ந்து ஒருவரோடொருவர் சினப்பதாகச் சொன்னார்கள்."

"சூதர்கள்?" என்றார் பீஷ்மர். "அவர்கள் ஒரு பெருமழையைப்பற்றிப் பாடினார்கள். மேற்கே இடி இடிக்கிறது. மின்னல்கள் வெட்டுகின்றன. மழை நெருங்கி வருகிறது என்றனர். ஆனால் அது உதிர மழை. கொழுத்த குருதி வானிலிருந்து செவ்விழுதுகளாக இறங்கும். கூரைவிளிம்புகளில் இருந்து செஞ்சரடுகளாக பொழியும். செந்நிறப்பட்டாடைகள் போல செங்குருதி அஸ்தினபுரியின் தெருக்களில் வழியும். கங்கையும் யமுனையும் செவ்வலைகள் எழுந்து கரைமுட்டி ஒழுகும் என்கிறார்கள்."

பீஷ்மர் எழுந்து "நான் கிளம்புகிறேன்" என்றார். "செய்திப்புறாவை அனுப்பு" என்று சொன்னபின் நேராக கடலைநோக்கிச் சென்று பாறை நுனியில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றார். மேலே தெற்கத்தியக் கருஞ்சுவர் ஒன்றாகி இணைந்து இடைவெளியை மூடியது. அந்தியென இருண்டது. மேகச்சுவரில் மின்னல்கள் நடனமிட்டன. பின்பு மழை கடலெழுந்து வருவதுபோல வந்து பீஷ்மரை மூழ்கடித்து கடந்துசென்றது.

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம்

[ 3 ]

கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல் பறவை போல வாய்திறந்து மழைக்காகக் காத்திருப்பதுபோல உணர்ந்தார். சுற்றிலும் கோடையைத் தாண்டிவந்த காடு வாடிச்சோர்ந்து சூழ்ந்திருந்தது. பெரும்பாலான செடிகளும் மரங்களும் கீழ்இலைகளை உதிர்த்து எஞ்சிய இலைகள் நீர்வற்றி தொய்ய நின்றிருந்தன.

இலைத்தழைப்பு குறைந்தமையால் குறுங்காடு வெறுமை கொண்டதுபோல ஒளியை உள்ளே விட்டு நின்றது, இரட்டைக் குழந்தைகளுக்கு முலையூட்டியமையால் கண்வெளுத்து பசலைபடர்ந்த தாயைப்போல. தரையெங்கும் எறும்புகள் விதவிதமான வெண்புல்லரிசிகளுடன் நிரைவகுத்துச் சென்றுகொண்டிருந்தன. அடிமரங்களில் செம்புற்றுக் கிளைகளை விரித்தேறியிருந்தன சிதல்கள். அப்பால் ஏதோ பறவை ஊப் ஊப் என ஏங்கியது.

இந்நகரம் ஏன் எனக்குள் மதலையை நோக்கும் அன்னையின் கனிவை நிறைக்கிறது? இதோ என் முன் விரிந்து நிற்கும் இது என்ன? கற்கோட்டைக்குள், மண்வீடுகளில், தசைமனிதர் செறிந்த குவை. பிறந்தும் இறந்தும், நினைத்தும் மறந்தும், சிரித்தும் வெறுத்தும் இருந்து மறையும் எளிய வாழ்க்கைகள். சிற்றெறும்புப் புற்றுகளென மானுடர் இரவுபகல் தேடிச்சேர்த்தவற்றாலான வளை. புராணங்களின் பெயர்க்கடலில் ஒரு சொல். தெய்வங்கள் குனிந்துநோக்கும் மானுடச் சிறுபுரி.

இப்புவியில் எத்தனையோ நகரங்கள். வண்ண ஒளிவிடும் காலக்குமிழிகள். வரலாறு விரல்தொட்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இட்டு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் திறப்பில் நாகங்கள் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம்.

தூயதென எந்நகராவது மண்ணிலுண்டா என்ன? நகரங்களை அழகுறச்செய்வதே அவற்றில் நுரைக்கும் கீழ்மைகள் தானோ? அதனால்தான் அத்தனை நகரங்களும் இரவில் உயிர்த்துடிப்பு கொள்கின்றனவா? ஒருவரை இன்னொருவர் மறைக்க எதையும் எவரும் செய்யலாகும் ஒரு சிறுவெளியன்றி நகரங்கள் வேறென்ன?

ஆனால் இது இல்லையேல் நான் இல்லை. இந்த நகர் வடிவில் நான் என் அகத்தை விரித்துக்கொள்கிறேன். இது என் களம். எங்குசென்றாலும் என் நகரை சுமந்து செல்கிறேன். இதை ஒருநாளும் நான் இறக்கி வைக்கப்போவதில்லை. தலைக்குமேல் பறவைக்குரல்களைச் சூடி நிற்கும் முதுமரம்போல இந்நகரை நான் ஏந்தியிருக்கிறேன். ஆம். இது என் நகரம்.

நீண்டதாடியும் குழல்கற்றைகளுமாக வெயிலில் கருகிய உடலுடன் புழுதிபடிந்த பாதங்களுடன் அஸ்தினபுரியின் கோட்டைக்கு முன் வந்து நின்ற பீஷ்மரை காவலர்கள் அடையாளம் காணவில்லை. அவரிடம் "வீரரே தாங்கள்..." என பேசத்தொடங்கிய வீரன் அவரது கண்களைக் கண்டதும் தயங்கி "...தாங்கள்" என்றபின் கண்கள் உயிர்கொண்டு வணங்கி "பிதாமகரே அஸ்தினபுரிக்கு நல்வரவு" என்றான்.

அவன் ஓடிச்சென்று "பிதாமகர்!" என்று கூவியதுமே கோட்டைக்குமேல் அவரது மீன்கொடி ஏறத்தொடங்கியது. கோட்டை புத்துயிர்பெற்றதுபோல ஒலிகள் கலைந்து எழுந்தன. உள்ளிருந்து இரட்டைக்குதிரை பூட்டப்பட்ட ஒரு குறுந்தேர் அவரை நோக்கி வந்தது.

வணக்கங்களை ஏற்று, ஒவ்வொரு வீரனிடமும் தனித்தனியாக சிலசொற்கள் சொல்லி நலம் உசாவி, பீஷ்மர் ரதத்தில் ஏறிக்கொண்டார். நகரம் முழுக்க கோடைகாலத்தில் ரதங்கள் கிளப்பிய புழுதி படிந்திருந்தது. மரங்களின் இலைத் தகடுகளில், மாளிகைக் கூரைகளில் சுவர்களின் விளிம்புகளில் எங்கும். அனைத்து மரங்களும் இலைகள் உதிர்த்திருக்க புங்கம் மட்டும் தழைத்து தளிர்த்து இலையொளிர நின்றது. மாதவிப்பந்தல்களில் வெண்ணிற விண்மீன்கள் என மலர்கள் செறிந்திருந்தன.

பீஷ்மரின் படைச்சாலையில் அவர் வரும் செய்தி ஏற்கனவே சென்று சேர்ந்து ஹரிசேனன் தலைமையில் மாணவர்கள் முற்றத்திலேயே நின்றிருந்தனர். அவர் இறங்கியதும் ஹரிசேனன் வந்து பணிந்தான். "நான் நீராடவேண்டும்" என்று பீஷ்மர் சுருக்கமாகச் சொன்னார். "உடனே அரண்மனைக்குச் சென்று பேரரசியை சந்திக்கவேண்டும்."

ஹரிசேனன் ஆணைகளை விடுத்தபடி முன்னால் ஓடினான். அவர் கிளம்பியபோதிருந்தபடியே இருந்தது அறை. ஆனால் அனைத்துப்பொருட்களும் ஒவ்வொருநாளும் துடைத்து சுத்தம்செய்யப்பட்டிருந்தன. பீஷ்மர் தனக்குப்பிடித்த குத்துவாளை எடுத்து அதன் பளபளப்பில் தன் முகத்தைப்பார்த்தார். அவரை அவராலேயே அடையாளம் காணமுடியவில்லை. சென்ற பதினேழு வருடங்களில் எத்தனைமுறை தன்னை ஆடியில் பார்த்துக்கொண்டோம் என எண்ணிக்கொண்டார்.

அவர் குளித்து புத்தாடையணிந்து நீர்சொட்டும் குழலும் தாடியுமாக ரதத்தில் ஏறிக்கொண்டபின் ஹரிசேனனைப்பார்த்து அவனையும் ஏறிக்கொள்ள சைகை காட்டினார். ரதம் உருளத்தொடங்கியதும் அவர் எதிர்பார்த்திருந்ததை அவன் சொல்லத் தொடங்கினான். அவனைப்பாராமல் நகரை நோக்கி அமர்ந்தபடி அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

பீஷ்மர் கிளம்பிச்சென்றபின் நடந்ததை அவன் விவரித்தான். அவர் கங்காமுகத்துக்கும் அங்கிருந்து பிரியதர்சினிக் கரைக்கும் சென்றதை அஸ்தினபுரியின் மக்கள் அறிந்திருந்தனர். அதன்பின்னர் அவரை ஒற்றர்கள் மட்டுமே தொடர்ந்தனர். அவர் சப்தசிந்துவைக் கடந்து மூலத்தானநகரிக்குச் சென்றதும் அங்கிருந்து சிபிநாட்டை அடைந்ததும் எல்லாம் அவர் அங்கிருந்து கிளம்பியபின்னரே தெரியவந்தது. பின்னர் மீண்டும் அவர் மறைந்து விட்டார். அவர் தேவபாலபுரத்திலிருக்கும் செய்தி கடைசியாக வந்தது. அதை அறிந்ததுமே பேரரசி உடனே வரச்சொல்லி செய்தி அனுப்பிவிட்டார்.

"பேரரசி இரண்டு ஆண்டுகளாகவே தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றான் ஹரிசேனன். "அரண்மனையில் என்ன நிகழ்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அரண்மனைக்குள் பெண்களுக்குள் மோதல்களும் கசப்புகளும் இருப்பதாக அரண்மனைச்சூதர்கள் வழியாக வெளியே பேச்சு கிளம்பியிருக்கிறது. பேரரசி அதனால் கவலைகொண்டிருக்கிறார்கள்." பீஷ்மர் "அது நான் ஊகித்ததே" என்றார்.

"இரு இளவரசர்களுமே இருவகையில் குறைபாடுள்ளவர்கள். மூத்த இளவரசர் பார்வையற்றவர். அந்தப்பார்வையின்மை மெதுவாக அவரது அன்னையாகிய காசிநாட்டின் மூத்த இளவரசியிடமும் குடியேறிவிட்டது என்று ஒரு சூதர் பாடுவதைக் கேட்டேன்" என்றான் ஹரிசேனன்.

பீஷ்மர் புன்னகைசெய்து "நெருக்கமானவர்களின் குறைபாடுகள் நம்மையும் மாற்றியமைக்கின்றன. அவர்களை நேசித்து அவர்களையே எப்போதும் எண்ணி அவர்களுடன் வாழ்வதன் வழியாக நாம் அவர்களை பிரதிபலிக்கத் தொடங்குகிறோம்" என்றார்.

"மூத்த அரசியார் மைந்தனைப்பற்றிய எந்த முறையீட்டையும் ஏற்றுக்கொள்வதில்லை. முறையிடுபவர்களை அவர் வெறுக்கிறார். சினந்து தண்டிக்கிறார்" என்றான் ஹரிசேனன். "அதற்கேற்ப மூத்த இளவரசர் மூர்க்கமே இயல்பாகக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னை தானறியாமல் எள்ளிநகையாடுவதாக நினைக்கிறார். தன்னை அனைவரும் ஏமாற்றுவதாக கற்பனை செய்துகொள்கிறார். ஆகவே அருகிருப்பவர்கள் அனைவரையும் வதைக்கிறார். எந்நேரமும் வசைபாடுவதும் அருகே சென்றால் அடிப்பதும்தான் அவரது இயல்பாக இருக்கிறது."

ஹரிசேனன் சொன்னான் "அவரது உடலைக் கண்டு அரண்மனையில் அனைவரும் அஞ்சுகிறார்கள். குன்றுபோலிருக்கிறார். தங்களுக்கு நிகரான உருவம். தங்களை விட மும்மடங்கு எடை. அவரது கைகளால் ஒரேயொரு அடி வாங்கியவர்கள்கூட எலும்பு முறிந்து உயிர்விட்டிருக்கிறார்கள். பெண்களை அவர் அடிப்பதில்லை என்பதனால் இப்போது பெண்கள் மட்டுமே அவர் அருகே செல்கிறார்கள்."

பீஷ்மர் தலையை அசைத்தார். "இளையவர் அன்னையின் விளையாட்டுப்பாவையாக இருக்கிறார். அந்தப்புரம் விட்டு அவர் இன்னும் வெளிவரவில்லை. அங்கேயே அன்னை அவருக்கு தோட்டமும் குளமும் ஊஞ்சலும் அமைத்திருக்கிறார். அன்னையுடனும் அவர் சேடியருடனும் பகலெல்லாம் அரண்மனைக்குள் இருந்து விளையாடுகிறார். இரவில் வெய்யோனொளி மறைந்தபின்னர் வெளியே வந்து அன்னையுடன் உபவனங்களுக்குச் செல்கிறார். பெண்களைப்போல மலர்கொய்தும் நாணலால் மீன்களைப் பிடித்தும் மரக்கிளைகளில் ஆடியும் விளையாடுகிறார்."

"அவரது உடல் பாளைக்குருத்து போலிருக்கிறது. வெளிறி வெண்ணிறமாக. அவருக்குள் குருதியும் வெண்ணிறமாகவே ஓடுகிறது என்கிறார்கள் ஊரார். அவர் உடலில் வெயிலொளி பட்டால் புண்ணாகிவிடுகிறது. அவரது கண்கள் பட்டுப்புழுக் கூடுகளைப்போல மஞ்சளாக இருக்கின்றன. அவரால் இருளில்தான் நன்கு பார்க்கமுடிகிறது. அரண்மனைச் சாளரங்களை சற்றே திறந்தால்கூட அவர் கண்ணீர்விட்டு கண்களை மூடிக்கொள்கிறார். அவரது அன்னையுடன் மட்டுமே இரவும் பகலும் பேசிமகிழ்கிறார்" ஹரிசேனன் தொடர்ந்தான்.

பீஷ்மர் வெளியே சென்றுகொண்டிருந்த மாளிகைகளை நோக்கியபடி சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்பு "அவர்களின் கல்வி?" என்றார். ஹரிசேனன் "மூத்தவர் கதாயுதத்தால் பயிற்சி செய்வார். ஆனால் அவர் அருகே எவரும் செல்வதில்லை. அவரது தோள்வல்லமை அரக்கர்களைவிட பலமடங்கு. அரண்மனையின் கற்தூணை ஒருமுறை அடித்து உடைத்துவிட்டார்" ஹரிசேனன் குரல் தாழ்ந்தது. "அவர் உணவுண்ணும்போதும் பயிற்சி செய்யும்போதும் நெருப்பு போலிருக்கிறார் குருநாதரே. அவரால் நிறுத்திக்கொள்ளமுடியாது. ஒவ்வொரு கணமும் வெறி ஏறி ஏறி வரும். அருகே நிற்பவர்கள் அனைவரும் அஞ்சி விலகிவிடுவார்கள். அவரது அன்னைமட்டுமே அவரை கட்டுப்படுத்தி திருப்பமுடியும்."

பீஷ்மரைப் பார்த்துவிட்டு ஹரிசேனன் தொடர்ந்தான் "மூத்தவருக்கு ஆசிரியர்கள் எவரும் கல்வி கற்பிக்க முன்வரவில்லை. அவருக்கு கற்பிப்பதெப்படி என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் அவர்களிடம் கேட்கும் வினாக்கள் ஏதும் அவர்களால் பதிலிறுக்கத் தக்கவையாக இல்லை. பதில் வராதபோது அவர் பொறுமையிழக்கிறார். இறுதியாக அவருக்கு எழுத்தறிவித்த பிராமணரான சந்திரசர்மரை அருகே இருந்த ஊஞ்சலை சங்கிலியுடன் பிடுங்கி எடுத்து அறைந்தார். அவர் சற்று விலகியிருந்தமையால் உயிர்தப்பினார். மூத்தவருக்கு அதன்பின் அரசி மட்டும்தான் எண்ணும் எழுத்தும் கற்பிக்கிறார். அவருக்கு அவற்றைக் கற்பிக்கும் விதமென்ன என்று அரசிக்கு மட்டுமே தெரிகிறது."

"இளையவர்?" என்றார் பீஷ்மர். "இளையவருக்கும் கல்வியில் ஈடுபாடில்லை. அவரது அன்னை அவரை கல்விகற்க அனுமதிப்பதுமில்லை. அவர்களே எண்ணும் எழுத்தும் சொல்லித்தந்திருக்கிறார்கள். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவர் தன் அன்னையுடன் விளையாடுகிறார். கல்வி கற்பிக்கச்செல்லும் பிராமணர்கள் நாளெல்லாம் காத்திருப்பார்கள். அன்னை வந்து அவர்களை திரும்பிச்செல்லும்படி சொல்வார்." பீஷ்மர் ஏதோ நினைத்துக்கொண்டு பெரிதாகப் புன்னகை செய்தார். பின்பு "பேரரசி ஏதும் செய்வதில்லையா?" என்றார்.

"பேரரசிக்கும் இரு இளவரசர்களுக்கும் தொடர்பே இல்லை. அன்னையர் இருவரும் அவர்களை தங்கள் சிறகுகளுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய இளவரசருக்கு பேரரசி ஏழுவயதில் ஆயுதப்பயிற்சிக்கு ஒருங்கு செய்தார். விக்ரமசேனர் என்னும் குரு அதற்கு பணிக்கப்பட்டார். முதல்நாளிலேயே கூரற்ற சுரிகை முனையால் தன் முழங்கையைக் கிழித்துக்கொண்டார். குருதி நிலைக்கவேயில்லை. அன்றிரவு கடும் காய்ச்சலும் வலிப்பும் வந்துவிட்டது. பன்னிருநாட்கள் மருத்துவர்கள் முயன்றுதான் அவரை மீட்டனர். தன் குழந்தையை பேரரசி கொல்லமுயல்கிறார்கள் என்று சிறிய அரசி குற்றம்சாட்டினார். ஏழுநாட்கள் உணவு அருந்தாமல் நோன்பெடுத்தார். பேரரசியே வந்து பிழைபொறுக்கும்படிச் சொன்னபின்னரே இறங்கிவந்தார்."

பீஷ்மர் பெருமூச்சுடன் "அவர்களிருவருக்கும் எதிலாவது ஈடுபாடோ தேர்ச்சியோ இருக்கிறதா?" என்றார். ஹரிசேனன் "மூத்தவருக்கு அன்னையின் கொடையாக வந்தது இசைப்பற்று. அவர் விழித்திருக்கும் நேரமெல்லாம் அருகே சூதர்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவரே யாழை சிறப்பாக வாசிப்பார். இசையில் முழுமையாகவே மூழ்கி அவர் அமர்ந்திருப்பதைக் கண்டால் கந்தர்வர் என்றே தோன்றும்" என்றான்.

"இளையவருக்கு அவரது அன்னை சித்திரமெழுதக் கற்பித்திருக்கிறார்" ஹரிசேனன் சொன்னான். "அந்தப்புரமெங்கும் திரைகளில் வண்ணங்களை நிறைத்து வைத்திருக்கிறார்." பீஷ்மர் சிரித்து "அவன் பார்க்கமுடியாத நிறங்களை..." என்றார். "ஆம் குருநாதரே, அவரது வாழ்க்கையின் நிறங்களெல்லாம் அந்தத் திரையில் விரிபவைதான்" என்றான்.

ரதம் அரண்மனை முகப்பில் சென்று நின்றது. பீஷ்மர் இறங்கி நின்றதும் நினைத்துக்கொண்டு "அந்த சூதப்பெண்ணின் குழந்தை?" என்றார். "அவர் பெரும்பாலும் பேரரசியின் அந்தரங்கப் பணியாள் போலவே இருக்கிறார். சூதர்களின் ஞானமெல்லாம் அவருக்கு கற்பிக்கப்பட்டது. அதன்பின் பேரரசியே அவருக்கு ஆட்சிக்கலையும் நெறிநூல்களும் நிதியாள்கையும் கற்பித்தார்கள். இன்று அஸ்தினபுரியின் உண்மையான ஆட்சியாளரே அவர்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள்."

பீஷ்மர் மெல்ல தலையசைத்துவிட்டு நடந்தார். அரண்மனை முகப்பில் காத்து நின்றிருந்த அமைச்சர் பலபத்ரர் ஓடிவந்து வணங்கி "பிதாமகரை வணங்குகிறேன்... தங்கள் பாதங்களின் ஆசி இவ்வரண்மனையை இன்று நிறைவுகொள்ளச் செய்கிறது" என்றார். "பேரரசியை நான் சந்திக்கவேண்டும்" என்று பீஷ்மர் சொன்னார். "தாங்கள் மாலைவருவதாக பேரரசி சொன்னார்கள். தற்போது ஓய்வெடுக்கிறார்கள்" என்றார் பலபத்ரர். "நான் பேரரசியின் முதற்சேடியிடம் தங்கள் வருகையைத் தெரிவிக்கிறேன்." பீஷ்மர் தலையசைத்துவிட்டு முகமண்டபம் சென்று அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

பலபத்ரர் உள்ளே ஓடிச்சென்றுவிட்டு திரும்பிவந்து "பிதாமகரே, தாங்கள் அனுமதித்தால் சிற்றமைச்சரான விதுரர் தங்களை சந்திக்க விரும்புகிறார்" என்றார். வரச்சொல்லும்படி பீஷ்மர் கையை அசைத்ததும் விதுரன் உள்ளே வந்தான். வாசலிலேயே நின்று இருகைகளையும் தலைமேல் தூக்கி "பிதாமகருக்கு எளியவனின் முழுதுடல் வணக்கம். தங்கள் ஆசியால் என் ஞானம் பொலியட்டும்" என்றான்.

அவனைக் கண்டதும் பீஷ்மர் திகைத்தவர்போல எழுந்துவிட்டார். கிருஷ்ணதுவைபாயன வியாசனே இளம் வடிவுகொண்டதுபோல அவன் நின்றான். கண்கள் தெளிந்து அகன்று ஞானமும் குழந்தைத்தன்மையும் ஒன்றுகலந்தவையாகத் தெரிந்தன. காராமணிப்பயறு போன்ற பளபளக்கும் கரிய நிறம். கூரிய நாசியும் சிறிய உதடுகளும் கொண்ட நீள்வட்ட முகம். மெலிந்த தோள்களில் புரண்ட சுரிகுழல். மெல்லியதாடி கருங்குருவி இறகுபோல மென்மையாக பிசிறிட்டு நின்றது. புன்னகையில் ஒளிவிட்ட சீரான உப்புப்பரல் பற்கள். அவரை அறியாமல் இரு கைகளும் நீண்டன.

விதுரன் அருகே வந்து அவர் கால்களைப் பணிந்தான். அவர் அவன் இரு தோள்களையும் பற்றித் தூக்கி தன்னுடன் அணைத்துக்கொண்டு "நான் உன் பெரியதந்தை. அந்நிலையில் இந்த ஒரே வணக்கத்திலேயே என் முழு ஆசியையும் உனக்களித்துவிட்டேன். இனி எப்போதும் நீ என்னை பணிந்து வணங்கலாகாது" என்றார். "நீ என் தமையனின் இளவடிவம். நான் என் நெஞ்சில் வணங்கும் கண்கள் உன்னுடையவை. என்னை நீ வணங்குகையில் என் அகம் கூசுகிறது." விதுரன் புன்னகையுடன் "அவ்வாறே ஆகட்டும் பிதாமகரே" என்றான்.

பலபத்ரரிடம் செல்லும்படி கையசைத்துவிட்டு விதுரனை அருகே அமரச்செய்தார் பீஷ்மர். "இளையவனே, அஸ்தினபுரியின் நிலை என்ன?" என்றார். விதுரன் "நிதியும் நியதியும் சிறப்பாகவே நிகழ்கின்றன பிதாமகரே" என்றான். "அரசுநிலை மேலும் இக்கட்டுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது." பீஷ்மர் அவனைக் கூர்ந்து நோக்கி "நீ என்ன புரிந்துகொண்டாய், அதைச்சொல்" என்றார்.

"பிதாமகரே, தாங்களறியாதது அல்ல. என் புரிதலை நான் சொல்வது தங்களிடமிருந்து கற்க வேண்டுமென்பதற்காகவே" என்றான் விதுரன். "பாரதவர்ஷத்தில் அரசுகள் அமைந்த வரலாறு புராணங்கள் வழியாகவே நமக்கு அறியக்கிடைக்கிறது. இமயம் முதல் குமரிவரை காமரூபம் முதல் காந்தாரம் வரை விரிந்திருக்கும் ஜம்புத்வீபத்தில் ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்காலம் முதல் மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்கின்றன புராணங்கள். அக்குலங்கள் ஒன்றுடன் ஒன்று போர்புரிந்து கொன்றழித்தபடி பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்தன. பாரதவர்ஷம் வாழவேண்டுமென எண்ணிய ரிஷிகளால் ஷத்ரியகுலம் உருவாக்கப்பட்டது. அவர்கள் குலங்களைத் தொகுத்து அரசுகளாக ஆக்கினார்கள்."

விதுரன் சொன்னான். சுக்ரசம்ஹிதையின்படி கிருதயுகத்தில் பாரத வர்ஷத்தில் ஒருலட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரம் குலங்கள் இருந்தன. அக்குலங்களில் ஷத்ரியர்களை உருவாக்கிக்கொண்ட வலிமையான குலங்கள் பிறகுலங்களை வென்று தங்களுக்குள் இணைத்துக்கொண்டன. அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் அக்குலங்களில் இருந்து ஏழாயிரம் அரசுகள் உருவாகிவந்தன. அவற்றிலிருந்து ஆயிரத்து எட்டு ஷத்ரிய அரசுகள் உருவாயின. அவற்றிலிருந்து இன்றுள்ள அரசுகள் உருவாகி வந்திருக்கின்றன" என்றான் விதுரன்.

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு குலவரலாறு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுருதி உருவாகி அன்றிருக்கும் வல்லமைவாய்ந்த அரசர்களை ஷத்ரியர்கள் என அடையாளப்படுத்துகிறது. அந்த சுருதியை அந்த ஷத்ரியர்கள் மாற்றக்கூடாத நெறிநூலாக நினைக்கிறார்கள். வேறு அரசர்கள் உருவாகி வருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒன்றுகூடி அவ்வரசை அவர்கள் அழிக்கிறார்கள். அந்த ஜனபதத்தை தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

ஷத்ரியர்கள் இல்லாமல் பாரதவர்ஷம் என்னும் இந்த விராட ஜனபதம் வாழமுடியாது. குலங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி நிலைநாட்ட ஷத்ரியர்களின் வாள்வல்லமையால்தான் முடியும். பாரதவர்ஷத்தின் வளர்ச்சி ரிஷிகளின் சொல்வல்லமையை வாள் வல்லமையால் நிலைநாட்டிய ஷத்ரியர்களினால்தான். அவர்களின்றி வேள்வியும் ஞானமும் இல்லை. வேளாண்மையும் வணிகமும் இல்லை. நீதியும் உடைமையும் இல்லை. அவர்களின் குருதியால் முளைத்ததே பாரதவர்ஷத்தின் தர்மங்களனைத்தும்.

ஷத்ரியர்கள் கருக்குழவியை மூடியிருக்கும் கருவறைபோன்றவர்கள். ஊட்டி வளர்த்து பாதுகாப்பவர்கள். ஆனால் கருமுதிர்ந்ததும் அதைப்பிளந்துகொண்டுதான் குழந்தை வெளிவரமுடியும். பிதாமகரே, பாரதவர்ஷம் பலமுறை புதுப்பிறவி எடுத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது ஷத்ரியர்களை அழித்தபின்னர்தான் வெளிவந்துள்ளது. கடைசியாக பரசுராமர் பாரதவர்ஷத்தை இருபத்தொருமுறை சுற்றிவந்து ஷத்ரியகுலத்தை அழித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அவ்வாறு அழித்த பாவத்தைக் கழுவும்பொருட்டு சமந்தபஞ்சகத்தில் ஐந்து குளங்களை அமைத்தார். இன்று அக்குளங்களில் மூழ்கி தங்கள் பாவங்களைக் கரைக்க மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

பரசுராமர் ஷத்ரியகுலத்தை அழித்தது காட்டைமூடி ஓங்கி நின்றிருக்கும் முதுமரங்களை காட்டுத்தீ அழிப்பதற்கு நிகரானதுதான். அம்மரங்களின் நிழலில் குறுகி உயிரற்றிருக்கும் பல்லாயிரம் சிறிய மரங்கள் புதுவேகம் கொண்டு வான் நோக்கி எழும். காடு தன்னை புதுப்பித்துக்கொண்டு பொலிவுபெறும். பரசுராமர் ஷத்ரியகுலத்தை கருவறுத்தபின்னர்தான் எஞ்சிய மூலகன் என்னும் மன்னனின் குலமரபில் இன்றுள்ள ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்களும் பாரதவர்ஷத்தில் உருவானார்கள் என்கின்றன புராணங்கள். அவர்கள் இதுவரை தங்கள் அறத்தாலும் கருணையாலும் இம்மண்ணை வாழவைத்தார்கள் என்று விதுரன் சொன்னான். "இன்று இன்னொரு வனநெருப்பு வரவேண்டிய காலம் வந்துள்ளது."

பீஷ்மர் புன்னகையுடன் "உன் பேரரசியிடமிருந்து பாடங்களை முழுமையாகவே கற்றிருக்கிறாய்" என்றார். "ஆம், பாரதவர்ஷத்தில் இந்த உண்மையை முதலில் உணர்ந்தவர் அஸ்தினபுரியின் பேரரசி சத்யவதிதான். அவரது அனைத்துத் திட்டங்களும் கனவுகளும் இந்த அடித்தளத்தின் மீது அமைந்தவையே. பெரும் போர் ஒன்று வரவிருக்கிறது. அதில் பழைய ஷத்ரியகுலங்கள் ஆற்றல் குன்றும். சிறிய குலங்கள் அழியும். அந்த இடத்தில் புத்தம்புதிய அரசுகள் உருவாகிவரும். பாரதம் புதியபொலிவுடன் வளர்ந்தெழும்" என்றான் விதுரன். "அந்த வனநெருப்பை மீறி வளர்ந்தெழும் வல்லமை கொண்டதாக தன் குலம் இருக்கவேண்டுமென பேரரசி விரும்புகிறார்கள்."

"இளையவனே, அந்த வனநெருப்புக்குப் பின்னர் பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் அரசுகள் என்னவாக இருக்கும்?" விதுரன் "இன்று எதைச் சொல்லமுடியும் பிதாமகரே? ஒவ்வொரு விதைக்குள்ளும் வாழவேண்டுமென்ற இச்சை நிறைந்துள்ளது. வாழ்வெனும் சமரில் அவை தங்கள் வழியை கண்டுகொள்கின்றன" என்றான். "சப்தசிந்துவின் ஷத்ரியர்களை இந்திரன் அழிந்தபின்னர் கங்கையின் பதினாறு மகாஜனபதங்கள் உருவாகிவந்தன. பரசுராமருக்குப்பின் ஐம்பத்தாறு ஷத்ரியகுலங்கள் இன்றுள்ளன. வரவிருக்கும் போருக்குப்பின் அவற்றில் ஏழு மட்டுமே எஞ்சுமென எண்ணுகிறேன். அவையும் புண்பட்ட சிம்மங்கள் போல இறந்துகொண்டிருக்கும்."

விதுரன் சொன்னான் "இன்று நாம் எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் நிலத்தையும் நதிகளையும் வைத்து வேளாண்மையை கணிக்கமுடியும். ஜனபதங்களின் செறிவை வைத்து படைபலத்தை கணிக்கமுடியும். துறைகளையும் சாலைகளையும் கொண்டு வணிகத்தை கணிக்கமுடியும். அப்படி நோக்கினால் புதிய பேரரசாக மகதம் எழுந்துவரக்கூடும். அடுத்த சிலநூற்றாண்டுகளுக்கு மகதம் உத்தர பாரதவர்ஷத்தை முழுக்க ஒருகுடைக்கீழ் ஆளலாம்."

பீஷ்மர் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் அவன் விழிகள் வியாசரின் விழிகளைப் போலிருப்பதை உணர்ந்தது ஏன் என அப்போது தெரிந்தது. அவை காலத்தைத் தாண்டி பார்க்கும் வல்லமை கொண்டவை.

"பாரதவர்ஷத்தின் மாபெரும் பழங்குடிகளில் இருந்துகூட பேரரசுகள் உருவாகலாம். இன்று இருபத்துநான்கு குலங்களாகப் பிரிந்திருக்கும் மூரா மக்கள் இணைந்தால் அவர்களிடமிருந்து பாரதத்தையே அணைத்து ஆளும் பேரரசு ஒன்று பிறக்கலாம்" என்றான் விதுரன். "விந்தியனுக்குத் தெற்கே வேசரத்தில் இன்று சிற்றரசுகளாக ஷத்ரியர்களுக்கு அஞ்சிவாழும் சதகர்ணிகள் ஆற்றல்கொண்டு எழக்கூடும். கலிங்கமும் பேரரசாக வளரக்கூடும். தமிழ்நிலத்தில் முடியுடை மூவேந்தர்கள் சிற்றரசுகளை அழித்து முற்றதிகாரம் பெறக்கூடும்."

"இந்தக் காட்டுத்தீ நலம்பயக்குமென்பதே என் கணிப்பு" என்று விதுரன் தொடர்ந்தான். "இன்றுள்ள ஷத்ரியகுலங்கள் சென்றகாலத்தின் இறுகிய நெறிகளால் கட்டுண்டவர்கள். நெடுநாள் குலவரலாறுமூலம் பெற்ற அணைக்கமுடியாத அகந்தை கொண்டவர்கள். ஆலமரத்தில் இட்ட இரும்புப்பட்டை போல இவர்கள் பாரதவர்ஷத்தை இறுக்குகிறார்கள். இவர்களின் அழிவில் உருவாகிவரும் புதிய ஷத்ரியகுலங்கள் தங்கள் ஞானத்தாலும் தோள்வல்லமையாலும் ஒற்றுமையின் விவேகத்தாலும் தாங்களே நிலங்களை வென்றவர்களாக இருப்பார்கள். ஆகவே பாரதவர்ஷம் கோரும் புதுக்குணங்களைக் கொண்டிருப்பார்கள்."

"அத்துடன் இந்தச் சிறுசிறு ஷத்ரியகுலங்கள் அழிந்தபின் எழும் புதுஷத்ரியகுலங்கள் பேரரசுகளையே உருவாக்கும். இமயத்துக்கு அப்பால் பீதர்நிலத்தில் அவ்வாறு பெருநிலம் தழுவிய அரசுகள் உள்ளன என்கிறார்கள் பயணிகள். அவர்களின் படைகள் பற்பல லட்சம் வீரர்களைக் கொண்டவை. அத்தனைபெரிய படை இருந்தால் அதன் பின் போரே நிகழாது. சிறுகுலங்களும் சிற்றரசுகளும் செய்யும் முடிவிலா சிறுபூசல்களால்தான் பாரதவர்ஷம் அழிகிறது. அப்பூசல்கள் அனைத்தும் முற்றிலும் நின்றுபோகும். செல்வம் மேருவென அப்பேரரசுகளின் களஞ்சியங்களில் குவியும். அதைக்கொண்டு அவர்கள் நதிகளைத் தடம்மாற்றுவார்கள். ஏரிகளை அமைப்பார்கள். புதிய சாலைகளையும் துறைகளையும் கட்டுவார்கள். ஆலயங்களை எழுப்பி ஏராளமான புதிய ஜனபதங்களை நிறுவுவார்கள். பாரதம் பொலியும்."

"ஆகவே ஒரு பெரும்போரை நிகழ்த்தும் விருப்புடன் இருக்கிறாய்" என்றார் பீஷ்மர். "காட்டுநெருப்பு எழாவிட்டால் பற்றவைக்கலாமென நினைக்கிறாய்?" விதுரன் "இல்லை பிதாமகரே, அந்நெருப்பில் இக்குலம் அழியாமல் வாழ்வதெப்படி என்று மட்டும் சிந்திக்கிறேன்" என்றான்.

பீஷ்மர் "இளையவனே, நீ சொல்வதெல்லாம் உண்மை. நானே எண்ணியவைதான் அவை. என் எண்ணத்தை உறுதிசெய்துகொள்ளவே பதினேழுவருடங்கள் பாரதவர்ஷத்தின் விளிம்புகளிலும் எல்லைகளிலும் பயணம் செய்தேன். திரேதாயுகம் முடிந்து புதியயுகம் ஒன்று பிறந்து வருவதை நான் என் கண்களால் கண்டேன். அதன் மொழி செல்வம். அதன் அறம் வணிகம். அதன் இலக்கு போகம். இங்கே ஷத்ரியர்கள் அதை அறியாமல் தங்கள் குலச்சண்டைகளுக்கு குடிகளை பலிகொடுத்து சேற்றில் முதலைகளைப்போல மாறிமாறி கடித்துத்தின்றபடி திளைக்கிறார்கள். அதுவும் உண்மை."

விதுரன் தோளில் கைவைத்து பீஷ்மர் சொன்னார் "ஆனால் இவர்களெல்லாம் என் மைந்தர்கள், என் குலத்தோன்றல்கள். இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நீ சொன்ன உண்மையை உணர்ந்த நாள் முதல் என் வாழ்க்கையின் நோன்பென நான் கொண்டிருப்பது ஒன்றே. போரைத்தவிர்த்தல். அதன்பொருட்டு நெறிகளையும் மீறுவேன். அதன்பலிபீடத்தில் கள்ளமற்ற சிலரை பலிகொடுக்கவேண்டுமென்றால் அதையும் செய்வேன். வரப்போகும் பேரழிவை தடுத்தேயாக வேண்டுமென்பதையே ஒவ்வொரு செயலிலும் எண்ணிக்கொள்கிறேன்."

"மாமனிதர்களின் கனவு அது" என்றான் விதுரன். "விராடவடிவம் கொண்ட வரலாற்று வெள்ளத்துக்குக் குறுக்காக தங்களையே அணைகளாக அமைத்துக்கொள்கிறார்கள். அதன் வழியாக அவர்களும் பேருருவம் கொள்கிறார்கள்."

பலபத்ரர் மெல்ல உள்ளே வந்து வணங்கி "பேரரசி எழுந்தருளிவிட்டார்" என்றார். பீஷ்மர் புன்னகையுடன் "உன் ஞானம் பாரதவர்ஷத்துக்குமேல் மழையெனப் பொழியும் மைந்தனே. அதன் சில துளிகள் இக்குலத்துக்கும் கிடைக்கட்டும்" என்றபின் வெளியே நடந்தார்.

பகுதி ஒன்று  : வேழாம்பல் தவம்

[ 4 ]

சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.

வணங்கியபடி "அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்" என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி "முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்" என்றாள்.

"நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள் அன்னையே" என்றார் பீஷ்மர். "தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்." சத்யவதி பெருமூச்சுவிட்டு "நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது" என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.

பீஷ்மர் "மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்" என்றார். சத்யவதி அவர் கண்களை நோக்கி "நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்" என்றாள்.

பீஷ்மர் மெல்ல தலையசைத்தார். "அதில் பிழையில்லை அன்னையே" என்றார். "இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்" என்றாள் சத்யவதி.

பீஷ்மர் "அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்" என்றார்.

சத்யவதியின் முகம் மலர்ந்தது. "ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது" என்றாள். "அவனைப் பார்த்தாயல்லவா? கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்... இல்லையா?" பீஷ்மர் சிரித்தபடி "யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்" என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.

பின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் "தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்" என்றாள். "மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்டது. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்."

பீஷ்மர் "அன்னையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை."

"ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்" என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். "தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன்! பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்."

சத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. "கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது" என்றாள். "நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்." பீஷ்மர் "அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்" என்றார். "அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்."

சத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் "பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும் சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்" என்றாள்.

"வரட்டும், சந்திப்போம்" என்றார் பீஷ்மர். "நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்" சத்யவதி சொன்னாள். "நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்." அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.

பீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி "நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது" என்றாள். பீஷ்மர் "விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது" என்றார். "சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்."

சத்யவதி கையை வீசி "சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை" என்றாள். "அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்."

பீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். "நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு." பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி "காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்" என்றாள். பீஷ்மர் திகைத்து "காந்தாரத்திலா?" என்றார். சத்யவதி "ஆம், வெகுதொலைவுதான்" என்றாள்.

"அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்..." பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து "தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை."

பீஷ்மர் தொடர்ந்தார் "ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்?"

"அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன? பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா? காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்."

அவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. "அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்" என்றாள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். "சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியும். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்."

"ஆம்" என்றார் பீஷ்மர். "அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது." சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து "தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு!"

"அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை" என்றார் பீஷ்மர். "ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது" என்றாள் சத்யவதி. "அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை."

"ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது" என்றார் பீஷ்மர். "அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை." பீஷ்மர் தாடியை நீவியபடி "ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை..."

அவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். "முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்... அவன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே!"

"அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது? ஆணையிடுங்கள்" என்றார் பீஷ்மர். "சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி" என்றாள் சத்யவதி.

"ஆணை அன்னையே" என்றார் பீஷ்மர். "தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்" என்று எழுந்து தலைவணங்கினார். "தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது."

"நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே" என்றார் பீஷ்மர். "நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது." சத்யவதி "அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்."

"அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்?" என்றார் பீஷ்மர். "வெறும் அரியணைத் திட்டமல்ல இது." சத்யவதி "இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்" என்றாள்.

அவள் கண்கள் மின்னுவதை பீஷ்மர் கவனித்தார். "ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்... இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்."

அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.

பீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.

பகுதி இரண்டு : கானல்வெள்ளி

[ 1 ]

விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும் கற்றெழுத்தர்கள் விடுக்கும் முனகல் ஒலிகளும் விதுரனின் சொற்களும் மட்டும் ஒலித்தன.

பத்ராவதியின் கரையில் நான்கு மீன்பிடிக்குலங்களுக்கு மட்டுமே படகோட்டவும் மீன்பிடிக்கவும் ஒப்பாணை. பிறர் படகுகளை விடவேண்டுமென்றால் அரச ஒப்புதல் பெறவேண்டும் என்று ஓர் அரசாணை. அரக்குக் கொள்முதல் செய்யும் அதிகாரிகள் எப்போதும் தங்களிடம் கொள்முதல்செய்யப்பட்ட அரக்கின் ஒரு துளியை சான்றாக வைத்திருக்க வேண்டும் என்று இன்னொரு அரசாணை. சேதிநாட்டில் இளவரசி பிறந்தமைக்கு பேரரசி வாழ்த்து தெரிவிக்கிறார் என்று ஒரு திருமுகம். கங்கநாட்டில் நிகழவிருக்கும் நீர்த்திருவிழாவுக்கு பேரரசி பரிசும் பட்டுக்கொடியும் கொடுத்தனுப்புவதாக இன்னொரு திருமுகம்.

ஒவ்வொருநாளும் நெடுநேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த எளிய மேலாண்மைச்செயல்பாடுகளை ஏன் செய்கிறோம் என விதுரன் அப்போதும் வியந்துகொண்டான். அவற்றில் கொள்கைமுடிவுகள் இல்லை. அரசியலாடல்கள் இல்லை. அறிதலும் அறைதலும் இல்லை. அவை ஒவ்வொன்றும் பிறிதுபோன்றவை. அறிவோ ஆற்றலோ அல்ல பிறழாத கவனம் மட்டுமே அவற்றுக்குத் தேவை. அவற்றை அவன் செய்யவேண்டியதுமில்லை. ஆனால் அவன் ஒவ்வொருநாளும் காலையில் அங்கே வந்து அமர்ந்துகொண்டிருந்தான்.

கானுலாவச் சென்றிருந்தபோது ஒருமுறை காட்டுயானை ஒன்றைக் கண்டான். வெண்தந்தம் நீண்டெழுந்த மதகளிறு அது. வேங்கைமரத்தை வேருடன் சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்டது. இளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கை நுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருந்தது. விதுரன் அதைக்கண்டு புன்னகைசெய்தான். அதனால் அந்த வீண்செயலை நிறுத்தமுடியாதென்று எண்ணினான். நிறுத்த எண்ணும்தோறும் அவ்வெண்ணத்தின் விசையே அச்செயலை அழுத்தம் மிக்கதாக ஆக்கிவிடும்.

திருதராஷ்டிரனின் சூத ஏவலனான விப்ரன் வந்து பணிந்து நின்றான். அவனைக் கண்டதும் விதுரன் நிமிர்ந்து புருவங்களாலேயே என்ன என்றான். திருதராஷ்டிரன் அழைக்கிறான் என்று விப்ரன் உதட்டசைவால் பதில் சொன்னான். விதுரன் எழுதவேண்டியவற்றை முழுமையாகச் சொல்லி முடித்து சால்வையைப் போட்டபடி எழுந்துகொண்டான். "எஞ்சியவற்றை நான் மதியம் சொல்கிறேன்... இவை உடனடியாக அனுப்பப்படட்டும்" என்ற பின்பு இடைநாழி வழியாகச் சென்றான்.

அவன் பின்னால் வந்த விப்ரன் "சினந்திருக்கிறார்" என்றான். விதுரன் தலையை அசைத்தான். "நேற்று பிதாமகர் இங்கே வந்துசென்றதை அறிந்திருக்கிறார். அவர் தன்னை வந்து சந்திக்காமல் சென்றதைப்பற்றித்தான் கடும்சினம் கொண்டிருக்கிறார்" என்றான் விப்ரன். "இளையவரிடம் உடனே தன்னை வந்து பார்க்கும்படி ஆணையனுப்பினார். அவரை அவரது அன்னை அனுமதிக்கவில்லை. அது சினத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது." விதுரன் அதற்கும் மெல்ல தலையை மட்டும் அசைத்தான்.

புஷ்பகோஷ்டம் என்று அழைக்கப்பட்ட அரண்மனையின் வலப்பக்க நீட்சியில் திருதராஷ்டிரனின் தங்குமிடம். அவனுக்கென்று சேவகர்களும் காவலர்களும் தனியாக இருந்தனர். மைய அரண்மனையில் இருந்து அப்பகுதிக்குச் செல்ல நீண்ட இடைநாழி அமைக்கப்பட்டிருந்தது. விதுரன் செல்லும்போதே விப்ரனிடம் அவனுக்கான ஆணைகளைச் சொன்னான். உடனே பீஷ்மபிதாமகரிடம் சென்று அவர் இளவரசர்களை எப்போது சந்திக்கவிருக்கிறார் என்று கேட்டுவரவேண்டும். பேரரசி பீஷ்மரை இளவரசர்கள் சந்திப்பதை விரும்புகிறாரா என்று கேட்காமல் புரிந்துவரவேண்டும்.

புஷ்பகோஷ்டத்தில் நுழைந்ததும் விதுரன் உள்ளே யாழின் ஒலி கேட்பதை உணர்ந்தான். அவனது முகம் எளிதாயிற்று. உள்ளே மேகராகம் ஒலித்துக்கொண்டிருந்தது. சிலகணங்கள் நின்றுவிட்டு விதுரன் மெல்ல உள்ளே நுழைந்தான்.

இசைமண்டபம் கலிங்கத்துச் சிற்பியால் அமைக்கப்பட்டது. மரத்தாலான வட்டவடிவமான கூடம். அனைத்துப்பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய பொய்ச்சாளரங்கள். அவை எதிரொலிகளை மட்டும் உண்டு கரைத்தழித்தன. அந்த மண்டபத்தில் இருந்து நேரடியாக வெளியே திறக்கும் சாளரமோ வாயிலோ இல்லை. காற்று வருவதற்கான வழி வளைவாக அமைக்கப்பட்டிருந்தது. அங்கே வெளியோசை ஏதும் கேட்பதில்லை.

அறைக்கான ஒளி நடுவே இருந்த வட்டவடிவமான கூரைத்திறப்பு வழியாக உள்ளே பெய்தது. அது பொழியும் இடத்தில் இருந்த வட்டத்தடாகத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன. அதன் ஒருபக்கம் இசைகேட்பவர்களுக்கான பீடங்கள் அமைந்திருந்தன. தடாகத்தின் மறுகரையில் சூதர்கள் அமரும் மேடை. நீரலைகள் வழியாகச் செல்லும்போது இசை இனிமைகொள்கிறது என்றனர் கலிங்கச் சிற்பிகள். குடைவான உட்கூரைகொண்ட அவ்வறையின் எப்பகுதியில் நின்று மெல்ல முணுமுணுத்தாலும் எந்த மூலையிலும் தெளிவாகவே கேட்கும். ஆனால் உள்ளே வரும் வழியிலும் செல்லும் வழியிலும் நின்று பேசினாலும் கால்களால் தட்டினாலும் மிகமெல்லிய ஒலியே எழும். அதற்கும் மேலாக அங்கே மரவுரியாலான கனத்த கால்மெத்தை போடப்பட்டிருந்தது.

விதுரன் மரவுரியாலான இருக்கையில் ஓசையில்லாமல் அமர்ந்துகொண்டான். மூன்று சூதர்கள் குழல்களையும் ஒருவர் பேரியாழையும் வாசித்துக்கொண்டிருந்தனர். மேகராகம் என அதை அறிந்திருந்தாலும் விதுரன் அதன் வண்ணங்களையும் சிறகுகளையும் அறிந்திருக்கவில்லை. சில கணங்களுக்குள் அது மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும் எளிய பறவை என ஒலிக்கத் தொடங்கியது. அவன் உடலை மிக மெல்ல அசைத்து அமர்ந்தான்.

திருதராஷ்டிரன் தன் தலையை ஒருபக்கமாகச் சரித்து ஓடில்லாத முட்டைபோன்று மெல்லிய தோல் ததும்பிய விழிகளை தூக்கியபடி கேட்டுக்கொண்டிருந்தான். அவையிலிருந்த நான்கு ஏவலர்களும் இசையில் ஆழ்ந்து ஓவியங்கள் போல நின்றனர். இசை இவர்களை என்னதான் செய்கிறது என விதுரன் எண்ணிக்கொண்டான். இசை என்பது என்ன? சீரமைக்கப்பட்ட ஒலிகள். அந்த ஒழுங்கை அறிந்தவர்கள் அவற்றை எழுச்சியாக வீழ்ச்சியாக பொழிவாக சுழற்சியாக பொங்கலாக அமைதலாக எண்ணிக்கொள்கிறார்கள். பறவையைக் கண்டு பறத்தலை அடைவதுபோல அது செல்லுமிடமெல்லாம் அகம் செல்லப்பெறுகிறார்கள்.

வாலுடன் விளையாடும் வானரம். ஆனால் தன் வாலன்றி தன்னை அறிந்து விளையாட வேறேதுள்ளது? என் நூலறிவு என் வால். இந்த இசை இவர்களின் வால். இல்லை. இது அவர்கள் அடைவதை அறியவே முடியாத என்னுடைய கற்பனை. அது என்ன என்று அவர்களே அறிவார்கள். அந்தச் சூதர்களுக்கும் அரியணை அமர்ந்த மன்னனுக்கும் நடுவே அவர்கள் பரிமாறிக்கொள்ளும் ஏதோ ஒன்று உள்ளது. நாக்கின் நெளிவு மொழியாகி சிந்தையாகி கண்ணீராகி சிரிப்பாகி நிறைவதுபோலத்தான் அதிரும் கம்பிகளில் நெருடிச்செல்லும் விரல்களும். அறையமுடியாத ஓர் ஆடல்.

இசை ஓய்ந்தது. சூதர்கள் யாழையும் குழல்களையும் ஓசையில்லாமல் வைத்துவிட்டு கைகூப்பி வணங்கினர். அந்தச் சூதர்களில் புல்லாங்குழலிசைத்த ஒருவர் விழியிழந்தவர் என்பதை விதுரன் கண்டான். தலைசரிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரன் யாழ் எஞ்சிய மீட்டலையும் அளித்து ஒய்ந்ததும் மலைப்பாம்புகளைப்போன்ற தன் பெரிய கைகளைத் தூக்கி வணங்கினான். புலித்தோல்ஆசனத்தில் சாய்ந்து கிடந்த பெரிய கரிய உடலைத்தூக்கி நிமிர்ந்து அமர்ந்தான். பெருங்காற்றில் புடைக்கும் பாய்மரங்கள் போல தோள்கள் இறுகி விம்மி அசைய கைகளை விரித்து "மேகத்தைக் காட்டிவிட்டீர்கள் சூதர்களே" என்றான்.

சூதர்குழுவின் தலைவர் "எங்கள் நல்லூழ் அது அரசே" என்றார். சூதர்கள் மலர்ந்த முகத்துடன் புன்னகைசெய்தனர். "இடதுமூலை புல்லாங்குழலை இசைத்தவர் யார்? அவரது இசை எனக்கு மிக இனியதாக இருந்தது" என்று திருதராஷ்டிரன் சொன்னான். விழியிழந்த சூதர் எழுந்து வணங்கி "அரசே, அதை வாசித்தவன் நான். என்பெயர் அவலிப்தன்" என்றார்.

அவரது பெயரைக் கேட்டதும் திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து "நீர் பார்வையற்றவரா?" என்றான். "ஆம் அரசே." திருதராஷ்டிரனின் இரு கைகளும் விரிந்தவாறு அசையாமல் நின்றன. பின்பு "அருகே வாரும்" என்றான்.

அவலிப்தன் அருகே சென்றதும் திருதராஷ்டிரன் அவரை நோக்கி கைநீட்டினான். அவலிப்தனை இட்டுச்சென்ற சூதர் அவரை திருதராஷ்டிரனின் கைகளுக்கு அருகே தள்ளினார். திருதராஷ்டிரனின் கனத்த கைகள் தன் தோளில் விழுந்தபோது அவலிப்தன் தடுமாறினார். திருதராஷ்டிரன் அவரது தோள்களையும் முகத்தையும் தலையையும் தன் கைகளால் வருடினான். "விதுரா" என்றான். "அரசே" என விதுரன் அருகே சென்றான். "மூடா, நீ வந்ததை உன் நாற்றம் மூலமே அறிந்தேன்... இவருக்கு நூறு பொற்கழஞ்சுகளைக் கொடு..." என்றான்.

"ஆணை" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "அவலிப்தரே, நீர் மணம்புரிந்தவரா?" என்றான். அவலிப்தன் "இல்லை அரசே" என்றார். திருதராஷ்டிரன் "விதுரா, நம் அரண்மனையின் அழகிய சூதப்பெண் ஒருத்தியை இவருக்குக் கொடுக்க நான் ஆணையிடுகிறேன்" என்றான். விதுரன் பணிந்து, "ஆணை" என்றான். "அந்தப்பெண்ணுக்கு நான் ஆயிரம் பொன்னை சீதனமாக அளிப்பேன். அவள் விரும்பும் ஊரில் ஓர் இல்லமும் நூறுபசுக்களும் அளிக்கப்படும் என்று சொல். அதை விரும்பும் பெண்களில் ஒருத்தியைத் தேர்வுசெய்!" விதுரன் "அவ்வண்ணமே" என்றான்.

அவலிப்தன் தன் குழிவிழுந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிய கைகூப்பி நின்றார். விதுரன் அவரை இளவரசரின் காலில் விழச்செய்யும்படி இன்னொரு சூதரிடம் கைகாட்டினான். அவர் தோளைத்தொட்டு அழுத்தியதும் அவலிப்தன் அப்படியே குனிந்து திருதராஷ்டிரன் கால்களைத் தொட்டு வணங்கினார். அவரது கண்ணீர் தரையில் சொட்டியது. திருதராஷ்டிரன் அவரைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான். பெரிய தேக்குமரத்தில் பொந்தில் முளைத்த சிறிய மரம்போலத் தெரிந்தார் அவலிப்தன் அப்போது. தன் கட்டுகளனைத்தையும் இழந்து அவலிப்தன் உடல்குலுங்க அழத்தொடங்கினார்.

விதுரன் அவரை விலக்கிக் கொள்ளுமாறு கையைக் காட்ட சூதர்கள் அவரை இழுத்து விலக்கிச்சென்றனர். "சூதர்களே சிறந்த இசை. உங்கள் அனைவருக்கும் ஐம்பது பொன் கொடுக்க ஆணையிடுகிறேன். அரண்மனை அதிதிக்கூடத்தில் நீங்கள் மேலும் ஒரு மாதம் தங்கி என்னை இசையால் நிறைக்கவேண்டும்" என்றான். "ஆணை அரசே" என்றார் முதிய சூதர். "விதுரா" என்றான் திருதராஷ்டிரன். "ஆணை நிறைவேற்றப்படும் அரசே" என்றான் விதுரன்.

அவர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அவலிப்தன் அழுதபடி தன் நினைவில்லாதவராக நடந்தார். அவரை இரு சூதர்கள் ஏந்திச்சென்றனர். அவர் செல்வதைப் பார்த்து சற்று புன்னகைத்தபின் விதுரன் திருதராஷ்டிரன் முன்னால் அமர்ந்துகொண்டான்.

திருதராஷ்டிரன் இசையை தன்னுள் மீட்டியபடி ஆசனத்தில் அமர்ந்திருந்தான். பேச்சைத் தொடங்குவதற்காக விதுரன் "இரவுக்குரிய இசை அண்ணா..." என்றான். "ஆம், ஆனால் நான் அந்த வேறுபாட்டுக்கு வெளியே இருக்கிறேன்" என்றான் திருதராஷ்டிரன். "மழை வரவேண்டுமென்று தோன்றியது. இரவில் வெப்பம் அதிகம். நான் நன்றாகத் துயிலவில்லை. காலையில் எழுந்ததுமே மழைக்காலத்தை நினைவுகூர்ந்தேன். ஆகவேதான் மேகராகம் இசைக்கச்சொன்னேன். அவர்கள் இசைத்துக்கேட்டபோது புதுமழையின் குளிரை என் உடலில் உணர்ந்தேன்."

விதுரன் "ஆம், மேகராகம் மழையைத்தான் நினைவூட்டுகிறது" என்றான். "மழைக்கால ராகம். ஆனால் மழைகொட்டும்போது அதைப்பாடினால் தோலுறையால் போர்த்திக்கொள்வதுபோல வெம்மையாக இருக்கும்." திருதராஷ்டிரன் தலையை அசைத்தான். பின் சினந்தெழுந்து "நான் உன்னை அழைத்து இரண்டு நாழிகை ஆகிறது... உன் வேலையை முடித்துவிட்டு நீ வரவேண்டுமென நான் சொல்லவில்லை..." என்று உரத்தகுரலில் சொன்னான்.

"அரசே, நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள் என்று தெரியும். ஆகவே உரிய விசாரணைகளை முடித்துவிட்டு வரலாமென நினைத்தேன்" என்றான் விதுரன். அரசே என்ற விளியே அவனை சமன் செய்துவிடுமென அவன் அறிந்திருந்தான். "பீஷ்மப் பிதாமகரை எப்போது தாங்கள் சந்திப்பது என்றும் பேரரசி அப்போது உடனிருக்கலாமா கூடாதா என்றும் விசாரித்துவர ஆளனுப்பினேன். ஆகவேதான் தாமதம்."

திருதராஷ்டிரன் தோள் தசைகள் அதிர இரு கைகளையும் சேர்த்து பேரொலியுடன் அறைந்தான். "ஏன்? நான் உன்னிடம் சொன்னேனா அவரை நான் பார்க்கவேண்டும் என்று? நான் இந்நாட்டு மன்னன். என்னை அவர் பார்க்கவேண்டும். அதைத்தான் நான் சொன்னேன்."

"ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். மன்னரின் விருப்பம் இது, அவர் வந்து சந்திக்கவேண்டும் என்று." திருதராஷ்டிரனின் கைகள் காமம்கொண்ட வேழங்கள் துதிக்கை பிணைப்பதுபோல இணைந்தன. "அவர் என்னை மதிக்கவில்லை என்றால் நானும் அவரை மதிக்கவில்லை. எனக்கு எவருடைய ஆசியும் தேவை இல்லை. அதை அவரிடம் சொன்னாயா?" என்றான்.

விதுரன் "அரசே, ஒருபோதும் அரசர் இவற்றை நேரடியாக சொல்லக்கூடாது. சொல்வது பிழை என்றல்ல. மாண்புக்குரியதல்ல என்று சொல்கிறேன். அவ்வுணர்ச்சியை நுட்பமான குறிப்புகள் வழியாக நீங்கள் காட்டலாம்."

திருதராஷ்டிரன் "எப்படி?" என்றான். விதுரன் "குறைந்த சொற்களில் பேசலாம். அல்லது ஒன்றுமே பேசாமலிருக்கலாம். அவர் புரிந்துகொள்வார்." திருதராஷ்டிரன் ஆமோதித்து தலையசைத்தான். "அவர் என்னை எப்போது சந்திக்கிறார்? என்ன சொல்லி அனுப்பியிருக்கிறார்?"

விதுரன் "இன்னும் தூதன் வரவில்லை. வந்துவிடுவான்..." திருதராஷ்டிரன் தலையை அசைத்து "விப்ரன் எங்கே? அடேய்!" என்றான். "அவனைத்தான் பீஷ்மரைச் சந்திக்க அனுப்பியிருக்கிறேன்....நான் தங்களை இட்டுச்செல்கிறேன்" என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் கைநீட்ட அதை விதுரன் பற்றிக்கொண்டான். எழுந்து நின்றபோது விதுரனின் தலை திருதராஷ்டிரனின் நெஞ்சுக்குழி அளவுக்கே உயரமிருந்தது. திருதராஷ்டிரனின் கைகளை தன் தோளில் தாங்க விதுரனால் முடியவில்லை. ‘தூண், படிகள்’ என செல்லும் வழியை மெல்லச் சொல்லியபடியே விதுரன் நடந்தான். திருதராஷ்டிரன் "இந்த அறைக்குள் நான் சிறையிடப்பட்டிருந்தாலும் எனக்கு அனைத்துச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன விதுரா" என்றான்.

திருதராஷ்டிரன் அன்னசாலைக்குச் சென்று முகம்கழுவிவிட்டு உணவுண்ண அமர்ந்தான். நிலத்திலிட்ட சித்திரப்பலகையில் அமர்ந்து பசுவின் குளம்புகள் போல கால்கள் கொண்ட அன்னப்பலகையை தன் முன் வைத்துக்கொண்டான். அவன் வருவதை அறிந்து அன்னத்துடன் சேவகர்கள் கூடி நின்றனர். "நீயும் உண்கிறாயா?" என்றான் திருதராஷ்டிரன். "இல்லை அரசே, நான் பகலில் உண்பதில்லை" என்றான் விதுரன்.

"எப்போதிலிருந்து?" என்றான் திருதராஷ்டிரன். "சென்ற முழுநிலவுமுதல்....பகலில் உணவு அருந்தாமலிருந்தால் உடல் இலகுவாகிறது." திருதராஷ்டிரன் "ஏன் உன்னை வதைத்துக்கொள்கிறாய் மூடா....ஏற்கனவே உன் உடல் இறகுபோலிருக்கிறது" என்றான். "நன்றாக உண்ணவேண்டும். கனத்த உடலிருந்தால் உள்ளமும் உறுதியாக இருக்கும்." விதுரன் புன்னகைசெய்தான்.

சேவகர்களுக்கு அவன் சைகை செய்ததும் அவர்கள் கோதுமை அப்பங்களை அவன் அன்னப்பலகைமேல் இருந்த மூங்கில்கூடையில் அடுக்கினார்கள். ஒவ்வொன்றும் விதுரன் இருக்கைப் பலகை அளவுக்கே பெரியவை. ஆனால் அவை திருதராஷ்டிரன் கைகளுக்குச் சிறியவையாகத் தெரிந்தன. அவன் அவற்றை இரண்டாகக் கிழித்து இரண்டுவாயில் உண்டான். பருப்பையும் மாமிசத்தையும் சேர்த்து சமைக்கப்பட்டிருந்த கூட்டை அவற்றுடன் இணைத்துக்கொண்டான்.

சேடியான ஊர்ணை வேகமாக வந்து "மூத்த அரசி அம்பிகை" என்று வருகை அறிவித்தாள். திருதராஷ்டிரன் தலைதூக்காமலேயே "வருக" என்றான். ஊர்ணைக்குப்பின் அம்பிகை முன்னால் வெண்சங்கமும் பின்பக்கம் கவரியுமாக இரு சேடிகள் வர வெள்ளை ஆடையில் நடந்துவந்தாள். திருதராஷ்டிரன் தலையை சரித்து ஆட்டியபடி "அப்பம்" என உறுமினான். அவன் முன்னாலிருந்த கூடையில் அப்பங்களில்லாததை உணர்ந்த சேவகர்கள் மீண்டும் அப்பங்களை அள்ளி அடுக்கினார்கள்.

விதுரன் எழுந்து வணங்கி "அரசியை வணங்குகிறேன்" என்றான். அம்பிகை சேடியரை கையசைவால் செல்லும்படிப் பணித்துவிட்டு திருதராஷ்டிரன் முன்னால் அமர்ந்தாள். அருகே இருந்த கூடையில் இருந்து அப்பங்களை எடுத்து அவன் முன் வைத்துவிட்டு செம்மொழியில் "இன்றுதான் நான் பீஷ்மர் வந்துசென்ற செய்தியைக் கேள்விப்பட்டேன்" என்றாள்.

"செல்லவில்லை அரசி, ஆயுதசாலையில் இருக்கிறார்" என்றான் விதுரன். "மீண்டும் வருவார்." அம்பிகை "வந்தாகவேண்டும்...நான் காலையில் திருதராஷ்டிரனிடம் சொன்னேன். நீ இந்தநாட்டின் மன்னன் ஆகப்போகிறவன். அவர் பிதாமகராக இருக்கலாம், ஆனால் குடிகள் எவரும் மன்னனுக்கு பணிந்தாகவேண்டும். அவர் உன்னை வந்து சந்தித்துச்செல்லவேண்டிய கடமை கொண்டவர் என்று" என்றாள்.

"அவரை வந்து சந்திக்கச்சொல்லி ஆணை சென்றிருக்கிறது அன்னையே" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "பால்!" என உரக்கக் கூவினான். அம்பிகை "பால் எங்கே? என்ன செய்கிறீர்கள்?" என்றாள். சேவகர்கள் மூவர் பால்குடங்களுடன் வந்தனர். திருதராஷ்டிரன் அவற்றில் ஒன்றை வாங்கி வாயில் வைத்து யானை துதிக்கையால் நீர் உறிஞ்சும் ஒலியில் குடித்தான்.

"வருவாரா?" என்று அம்பிகை கேட்டாள். "வருவாரென்றே நினைக்கிறேன்" என்றான் விதுரன். "நேற்று பேரரசியிடம் அவர் பேசியதென்ன என்று தெரியுமா?" என்று அம்பிகை கேட்டாள். "நீ பேரரசியின் அணுக்கத்தினன். அவள் ஆணையிடாத எதையும் சொல்லப்போவதில்லை. ஆனாலும் கேட்கிறேன்..."

அம்பிகையின் கண்களில் வந்த கூர்மையை விதுரன் கவனித்தான். "நீ எந்தப்பக்கம் இருக்கிறாய் என்று அறிவதற்காகவே இதைக் கேட்கிறேன்" என்றாள் அவள். அவ்வுணர்ச்சியை அவள் மறைக்காததனாலேயே அது ஒருவகை பேதைத்தனம் கொண்டிருப்பதை உணர்ந்து விதுரன் உள்ளூர புன்னகைசெய்துகொண்டான்.

"இதில் மந்தணமென ஏதுமில்லை அரசி. பேரரசி விரும்பாத எதையும் நான் சொல்லப்போவதில்லை" என்றான் விதுரன். "பீஷ்மபிதாமகரிடம் பேரரசி பெரிய இளவரசரின் மணம்கொள்ளலைப் பற்றித்தான் விவாதித்திருக்கிறார். அரசருக்குப் பதினெட்டு வயதாகிறது. மணநிகழ்வும் முடிநிகழ்வும் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் நிகழ்ந்தாகவேண்டும். அதுதான் பேசப்பட்டது."

அம்பிகை "அவள் எண்ணத்தில் என்ன திட்டமிருக்கிறது என்று தெரியுமா?" என்றாள். திருதராஷ்டிரன் "எவராக இருந்தாலும் முதன்மை ஷத்ரியக் குலமாக இருக்கவேண்டும். பார்வையற்றவன் என்பதனால் நான் ஒருபோதும் இழிகுலத்தில் மணம்புரியப்போவதில்லை...." என்றான். "விதுரா, மூடா, உன் பேரரசியிடம் சொல். அப்படி ஒரு எண்ணத்துடன் என்னை நெருங்குவதை அவமதிப்பாகவே கொள்வேன்."

"இல்லை அரசே....அவர்களின் சிந்தையில் இருப்பது காந்தாரம்" என்றான் விதுரன். அம்பிகை "காந்தாரமா? அது மலைவேடர்களின் நாடல்லவா? குலமில்லாதவர்கள். ஷத்ரியர்களால் ஒதுக்கப்பட்டவர்கள்...அவர்களிடம் மணம் கொண்டால் நம்மை காசிநாட்டில் எள்ளி நகையாடுவார்கள்" என்றாள். திருதராஷ்டிரன் பெருங்குரலில் உறுமினான்.

"அரசே, அரசி சொல்லும் காந்தாரத்தின் கதையெல்லாம் பழையபுராணம். இன்று அதுவல்ல நிலைமை. அஸ்தினபுரியின் மொத்தக் கருவூலத்தைவிடப் பெரியது அவர்களின் அன்றாட நிதிக்குவை என்கிறார்கள். உத்தரபதத்தில் இருக்கிறது அவர்களின் தேசம். பீதர்கள் சோனகநாட்டுக்கும் யவனத்துக்கும் கொண்டு செல்லும் பட்டுக்கும் சுவடிப்புல்லுக்கும் அவர்கள் பெறும் சுங்கத்தால் அவர்களிடம் செல்வம் வெள்ளம்போல பெருகிச்சேர்கிறது. அவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் சின்னஞ்சிறு நாடு..." என்றான்.

அம்பிகை "இருந்தாலும்..." எனத் தொடங்க இடைமறித்து "பேரரசி காந்தாரத்தை மண உறவுக்குள் கொண்டுவர நினைப்பதில் பெரிய திட்டங்கள் உள்ளன அரசி. அந்த மண உறவு நிகழ்ந்தால் நாம் பாரதவர்ஷத்தின் பெரும் ஆற்றலாக உருவெடுப்போம். கங்கைக்கரை ஷத்ரியர்கள் அனைவரையும் அடக்கி நமக்கு கப்பம் கட்டவைப்போம்" என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் "அப்பம்!" என் உறுமிவிட்டு "ஆம் அதைச்செய்தாகவேண்டும்... நான் பார்வையற்றவன் என்று அயோத்திநாட்டரசன் எள்ளினான் என்று சொன்னார்கள். அவனை என் காலடியில் வீழ்த்தவேண்டும்" என்றான்.

"இன்றையச் சூழலில் நம்மை காந்தாரம் ஏற்பதுதான் அரிது" என்றான் விதுரன். "அதற்கான திட்டங்களையே பிதாமகரும் பேரரசியும் பேசினர்." அம்பிகை "என்ன திட்டங்கள்?" என்றாள். "அவர்களிடம் பேச பிதாமகரே நேரில் காந்தாரம் செல்லவிருக்கிறார். காந்தாரத்துக்கும் அஸ்தினபுரிக்கும் இடையேயான நட்பு எப்படி இருநாடுகளையும் பேரரசுகளாக ஆக்கும் என்பதை விளக்கப் போகிறார். நம் அரசர் விழியிழந்தவரென்றாலும் எல்லையற்ற தோள்வல்லமை கொண்டவர் என்பதை சொல்லவிருக்கிறார்."

"அதை அவர் சொல்லியாகவேண்டும்..." என்றான் திருதராஷ்டிரன்.  "பார்தவர்ஷத்தின் எந்த மல்லனும் என்னுடன் சமரிட வரலாம்." விதுரன் புன்னகைத்தபடி "உங்களை வெல்ல இன்று இங்கே எவருமில்லை அரசே. சிபிநாட்டின் பால்ஹிகருக்கு நிகரானவர் நீங்கள். அவரை எவரும் வென்றதேயில்லை" என்றான்.

அம்பிகை "என் மைந்தன் அரசாளவேண்டும். அடுத்த முழுநிலவுநாளில் அவன் ஹஸ்தியின் அரியணையில் அமர்ந்தாகவேண்டும்" என்றாள். "ஒவ்வொருநாளும் நான் எண்ணிக்கொண்டிருப்பது அதைத்தான். சென்ற பதினெட்டாண்டுகளாக நான் அதற்காகக் காத்திருக்கிறேன்."

"அதில் என்ன ஐயம்?" என்றான் விதுரன். "உடற்குறையிருப்பவன் அரசாளக்கூடாதென்று சில வைதிகர் சொல்கிறார்களே?" என்றாள் அம்பிகை. "அப்படி ஒரு சொல் பிரஹஸ்பதியின் ஸ்மிருதியில் உள்ளது அரசி. ஆனால் சிறந்த அமைச்சர்களைக் கொண்ட மன்னன் நூறு விழிகளைக் கொண்டவன் என்றும் அதே நெறிநூல்கள்தான் சொல்கின்றன. அவ்வாறு நம் அரசருக்கு பார்வையில்லை என்று சொல்லும் எந்த வைதிகனிடமும் நாம் ஒன்றைத்தான் சொல்லப்போகிறோம். நான் நம் அரசரின் அமைச்சன், அவரது குருதியும் கூட. நூலிலோ வழக்கிலோ நம்பிக்கையிலோ நானறியாத ஏதேனும் ஆட்சிமுறையோ முதுநெறியோ அறமோ இருக்கிறதென அவர் நிறுவட்டும்... அப்படி நிறுவவில்லை என்றால் நம் அரசர் ஆயிரம் விழிகள் கொண்டவர் என அவர்கள் ஏற்றாகவேண்டும். அந்த அறைகூவலை ஏற்கும் எவரும் இன்று பாரதவர்ஷத்தில் இல்லை."

அம்பிகை "அதைத்தான் நானும் நம்பியிருக்கிறேன்" என்றாள். "ஆனாலும் என்னை கவலை அரித்துக்கொண்டிருக்கிறது... என்னைச்சூழ்ந்து ஏதோ வஞ்சம் நிகழ்ந்துகொண்டிருப்பதாக தோன்றிக்கொண்டே இருக்கிறது" என்றாள்.

அன்னசாலை வாயிலில் விப்ரன் வந்து நின்றான். "என்ன?" என்றான் விதுரன். விப்ரன் தயங்கினான். "சொல், என்ன?" என்றான் திருதராஷ்டிரன். "அரசச்செய்தி என்றால் அரசியும் அரசரும் கேட்கலாமே" என்றான் விதுரன். விப்ரன் "நான் பிதாமகரைப் பார்த்தேன்... அவரிடம் அரசர் சந்திக்கவிரும்புவதைச் சொன்னேன்" என்றபின் மீண்டும் தயங்கினான். "எப்போது சந்திக்க வருகிறார்?" என்று அம்பிகை கேட்டாள்.

விப்ரன் "அவர் நம் அரசரை நாளைக்காலை புலரிவேளையில் அவரது ஆயுதசாலையில் சென்று சந்திக்கும்படி சொன்னார்" என்றான். சிலகணங்கள் அது திருதராஷ்டிரனுக்கு புரியவில்லை. புரிந்ததும் தன் இரு கைகளையும் பாறைகள் உடையும் ஒலியுடன் ஓங்கி அறைந்துகொண்டு எழுந்துவிட்டான். "என்ன சொன்னார்? சொல்...இப்போதே சொல்...என்ன சொன்னார்?"

விதுரன் "அவரை தாங்கள் சென்று சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார் அரசே" என்றான். "விதுரா, நம் தளபதிகளிடம் சொல். இப்போதே அவரை சிறையிட்டுக் கொண்டுவந்து என் முன் நிறுத்தும்படி சொல்" என்று பெருங்குரலில் கூச்சலிட்டபடி திருதராஷ்டிரன் கைகளை விரித்தான். வானை நோக்கி அவற்றைத் தூக்கியபடி "அவர் என் காலடியில் வந்து விழவேண்டும்... இன்றே" என்றான்.

விதுரன் "அரசே, முறையென ஒன்றுள்ளது" என்றான். "அவர் உங்கள் பிதாமகர். இந்தநாட்டு மக்களின் நெஞ்சில் தந்தையுருவாக வாழ்பவர். அவரைச் சிறையிடும்படி நீங்கள் சொன்னால் தளபதிகளும் தயங்குவார்கள். வைதிகர்கள் ஏற்கமாட்டார்கள். அனைத்தையும் விட மக்கள் ஏற்கமாட்டார்கள். தாங்களோ இன்னும் முடிசூடவில்லை. முடிசூட மக்கள் எதிர்ப்பையும் வெல்லவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். இன்று நீங்கள் எவரையும் பகைகொள்ள முடியாது. எந்த நெறியையும் மீறமுடியாது."

"அப்படியென்றால் என்ன செய்யலாம்? என் ஆணை தூக்கிவீசப்படுகிறது. விழியற்றவன் என என்னை ஏளனம் செய்திருக்கிறார் பிதாமகர். அவரை விட்டுவிடவா சொல்கிறாய்?" என்றான் திருதராஷ்டிரன். அவன் விழிகள் தனியாக உயிர்கொண்டவை போல துள்ளி ஆடின. விதுரனை நோக்கி குனிந்து "சொல்...நீ என்ன வழி வைத்திருக்கிறாய்?" என்று கூவினான்.

"அரசே, அவரை நீங்கள் தண்டிக்கத்தான் வேண்டும்... அதற்குரிய சிறந்த வழியும் உள்ளது. அவரை நீங்கள் துவந்தயுத்தத்துக்கு அழையுங்கள்" என்றான் விதுரன். "அது வீரர்களின் வழி. எப்பாவமும் அதில் கலக்காது. நாட்டாரும் முனிவரும் வைதிகரும் அதை மறுக்கமுடியாது."

அம்பிகை "அவர் தனுர்வேத ஞானி..." என்று இடைமறித்துப் பதறினாள். "ஆம்... ஆனால் தங்கள் மைந்தர் இந்நாட்டு அரசர். அரசர் எவரொருவரை போர்செய்ய அழைத்தாலும் போர்முறையையும் போர்க்கருவியையும் அவரே முடிவு செய்யலாம். நம் அரசர் மல்யுத்தத்தை தேர்ந்தெடுக்கட்டும்" என்று விதுரன் சொன்னான். திருதராஷ்டிரன் இருகைகளையும் தட்டியபடி "ஆம்... அது சரியான வழி... என்னுடன் அவர் மல்யுத்தம் செய்யட்டும். அவரை கசக்கி ஒடித்துவிடுகிறேன்" என்றான்.

"ஆனால்" என தொடங்கிய அம்பிகையை இடைமறித்து விதுரன் "இது ஒன்றே வழி அரசி. பீஷ்மரையே நம் அரசர் வென்றுவிட்டாரென்றால் அதன்பின் இந்நகரில் அவரை அவமதிக்க எவரும் துணியமாட்டார்கள். மர்க்கடஹஸ்தி மார்க்கம் என்று இதைச் சொல்வார்கள் நெறிநூல்களில். குரங்குகளிலும் யானைகளிலும் எது வலிமை மிக்கதோ அது இயல்பாகவே அரசனாகிவிடுகிறது. அதை எவரும் அரசனாக ஆக்கவேண்டியதில்லை. அதை ஏற்காதவர்கள் அதனுடன் போரிட்டுக் கொல்ல முயலலாம். முடியாவிட்டால் உயிர்விடலாம்..." என்றான். திருதராஷ்டிரனிடம் "அரசே, மர்க்கடஹஸ்தி நியாயப்படி எது முன்னர் வல்லமை மிக்கதாக இருக்கிறதோ அதை வெல்வதே அரசனாக ஆகும் வழி. நீங்கள் பீஷ்மரை வென்றுவிட்டால் உங்களை இம்மக்கள் அரசனாக ஏற்றாகிவிட்டதென்றே பொருள்" என்றான்.

"ஆம்... அதுதான் வழி... டேய் விப்ரா" என்றான் திருதராஷ்டிரன். "அரசே" என்று விப்ரன் பணிந்தான். "உடனே பீஷ்மருக்கு துவந்தயுத்தத்துக்கான அறைகூவலை முறைப்படி அனுப்பு... என்னுடன் அவர் மல்யுத்தம் செய்யவேண்டுமென்று சொல்!" என்ற பின் திருதராஷ்டிரன் திரும்பி "மல்யுத்தத்தின் விதியை அறிவாயல்லவா விதுரா? தோல்வி என்றால் அது இறப்பு மட்டுமே" என்றான். "ஆம், அதுவே முறை" என்றான் விதுரன்.

"ஆனால்..." என அம்பிகை பேசவர "அரசி, பாரதவர்ஷத்தின் பெருந்தோள்களுக்குரியவர் நம் அரசர். அரைநாழிகை நேரத்தில் மற்போர் முடிந்துவிடும். பீஷ்மர் மாள்வார். அனைத்து இக்கட்டுகளும் எளிதாக முடிவுக்கு வரும்" என்றான் விதுரன்.

பகுதி இரண்டு : கானல்வெள்ளி

[ 2 ]

அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது. அந்தக்காடு நோக்கித் திறக்கும் பெருவாயில் பெரும்பாலும் மூடப்படுவதில்லை. அவ்வழியாக எவரும் நகருக்குள் நுழையமுடியாது.

யானைகளை மாலையில் அந்தக்காட்டுக்குள் திறந்துவிட்டு காலையில் திரும்பி வந்ததும் கொட்டிலில் கட்டுவார்கள். நகர்க்காவலுக்கும் பிறபணிகளுக்குமான ஆயிரம் யானைகளில் எழுநூறுயானைகள் அங்குதான் வாழ்ந்தன. பெரிய மரத்தூண்கள்மேல் கூரையிடப்பட்ட உயரமான கொட்டில் ஒவ்வொரு யானைக்கும் ஓர் அறை என கோட்டையை ஒட்டியே ஒரு காததூரம் நீண்டு சென்று பின்பு இன்னொரு கோட்டைபோல மடிந்து சுற்றிவந்து நடுவே மரங்கள் அடர்ந்த சோலையொன்றை வளைத்திருந்தது. அச்சோலைமுழுக்க மரங்களில் கட்டப்பட்ட யானைகள் உடலை ஊசலாட்டி காதுகளை வீசி நின்றன. சோலைக்கு நடுவே பாகன்கள் தங்கும் குடில்களும் அவைகளுக்கு சமையல்செய்யும் கொட்டகைகளும் இருந்தன.

சோலைநடுவே இருந்த பெரிய முற்றம் யானைகளைப் படுக்கவைத்து மருத்துவம் பார்ப்பதற்கும் யானைக்கன்றுகளுக்கு பயிற்சிகொடுப்பதற்கும் உரியது. அதன் நடுவே களப்பயிற்சிக்குரிய செந்நிறமான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்தது. ஹரிசேனன் முன்னரே வந்து அந்தக்களத்தை சோதனையிட்டான். களத்தின் தென்மேற்குமூலையில் கதாயுதத்தின் இறைவனாகிய அனுமனை சிறுகல்மேடையில் நிறுவியிருந்தனர். அதன்முன் ஒரு வைதிகர் அமர்ந்து மலரணி செய்துகொண்டிருந்தார். அதனருகே மரமேடையில் சிறுமுரசுடன் சூதன் அமர்ந்திருக்க அவனருகே கொம்புடன் அவன் மகனைப்போன்ற இளம் சூதன் அமர்ந்திருந்தான்.

காலையின் காற்று மரங்களை சலசலக்கச்செய்தபடி தலைமீது ஓடிக்கொண்டிருந்தது. காலை இளவெயில் முற்றத்தின் சிவந்த மண்பரப்பில் பரவியிருக்க அதில்கிடந்த சிறுகற்களின் நிழல்கள் மேற்குநோக்கி நீண்டு கறைகள்போலத் தெரிந்தன. தூரத்தில் மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகள் அனைத்தும் அவர்களை நோக்கித் திரும்பி நின்றிருந்தன. சில யானைகள் துதிக்கைநுனியை நீட்டி மோப்பம் பிடித்தன. இரு யானைகள் பெருவயிறதிரும் மென்முழக்கமாக தங்களுக்குள் ஏதோ விசாரித்துக்கொண்டன. யானைகளில் ஒன்று உரக்க ஏதோ சொல்ல அனைத்து யானைகளும் அசைந்து கொட்டில் வாயிலை நோக்கின.

அங்கே சத்ரபடத்தைத் தூக்கியபடி ஒரு சேவகன் முன்னால் வர, கதாயுதத்துடன் இன்னொரு சேவகன் பின்தொடர பீஷ்மர் வந்துகொண்டிருந்தார். பெரும்பாலான யானைகள் அவரை அறிந்திருந்தன. தலைமூத்த யானையான உபாலன் துதிக்கையை நெற்றிக்குத் தூக்கி பெருங்குரலில் சின்னம் விளித்து அவரை வரவேற்றது. தொடர்ந்து பிறயானைகளும் குரலெழுப்பின.

பீஷ்மர் உள்ளே வந்து நேராக அனுமனின் ஆலயத்துக்குச் சென்று வணங்கிவிட்டு உபாலனின் அருகே சென்றார். அது துதிக்கையை நீட்டி அவர் தோளைத் தொட்டு வளைத்துக்கொண்டது. வேங்கைப்பூமலர்ந்த அதன் துதிக்கை முகப்பில் கையை சுருட்டி குத்தினார். நீண்ட படகுபோன்ற வெண்தந்தங்களில் ஏறி அமர்ந்து கொண்டபோது உபாலன் அவரை மேலே தூக்கி அசைத்து விளையாடியது. மற்ற யானைகள் ஆங்காங்கே காதுகளை வீசியபடி அசைந்தும் துதிக்கை சுழற்றியும் அவ்விளையாட்டைக் கண்டு மகிழ்ந்தன.

வெளியே சங்கு ஒலித்தது. சத்ரமும் சாமரமும் துணைவர விதுரனால் கைப்பிடித்து அழைக்கப்பட்டு திருதராஷ்டிரன் வந்துகொண்டிருந்தான். புதிய இடத்துக்கு வருவதன் தயக்கம் அவன் கால்களில் இருந்தது. விதுரன் அவனை நேராக அனுமன் கோயில்முன்னால் கொண்டுசென்று நிறுத்தினான். திருதராஷ்டிரன் கைகூப்பி வணங்கியபின் அப்பகுதியை மோப்பம்பிடிப்பவன் போல் மூக்கைத் தூக்கி தலையை ஆட்டிப்பார்த்தான். விதுரன் மெல்ல "பீஷ்ம பிதாமகர் வந்திருக்கிறார்" என்றான். ‘ம்ம்’ என திருதராஷ்டிரன் முனகிக்கொண்டான். "அவரை நீங்கள் முறைப்படி வணங்கி ஆசிபெறவேண்டும்" என்றான் விதுரன். "நானா?" என்று திருதராஷ்டிரன் கோணலாக கைகளைத் தூக்கினான்.

"அரசே, இங்கே சூதர்களும் பிறரும் இருக்கிறார்கள். இங்கு நிகழவிருப்பவை அனைத்தும் புராணமாக ஆகக்கூடியவை. இன்று நீங்கள் அனைத்தையும் முறைப்படிதான் செய்தாகவேண்டும். அப்போதுதான் நீங்கள் பீஷ்மரைக் கொல்வதை இந்த நாட்டு மக்கள் ஒப்புக்கொள்வார்கள்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையை அசைத்தபடி ‘ம்ம்’ என மீண்டும் முனகிக்கொண்டான்.

கிணைப்பறைகளும் துடிப்பறைகளும் கைவீணைகளும் ஏந்திய ஏழு சூதர்களுடன் பேசியபடி பலாஹாஸ்வ முனிவர் வந்தார். திருதராஷ்டிரனை குனிந்துநோக்கக்கூடிய உயரமும் அவனுடைய தொடைகள் அளவுக்கு பெரிய கைகளும் கொண்டிருந்தார். "பலாஹாஸ்வ முனிவர்" என்றான் விதுரன். "பாரதவர்ஷத்தில் இதுவரை பிறந்தவர்களிலேயே பெரிய உடல்கொண்டவர் அவர் என்கிறார்கள். மாருதியின் மைந்தர்" என்று விதுரன் மெல்லியகுரலில் சொன்னான். "மற்போரின் முதற்குருவே இன்று அவர்தான். இந்தப்போரை அவர் நடுவராக இருந்து நிகழ்த்தவேண்டுமென்று பீஷ்மர் கோரியிருக்கிறார்."

"ஆம், முனிவர் இருப்பதும் நன்று" என்றான் திருதராஷ்டிரன். "பீஷ்மரை நான் கொல்லும்போது அது முற்றிலும் முறைப்படி நிகழ்கிறது என்று அவர் சான்றுரைக்கவேண்டுமல்லவா?" பெரிய பற்களைக் காட்டி மயில் அகவுவதுபோல சிரித்து "பலாஹாஸ்வர் என்று இங்கே வந்தார்?" என்றான். விதுரன் "நேற்று. ஒரு நிமித்தம்போல அவர் வந்திருந்தார்... அவர் பொதுவாக நகரங்களுக்குள் நுழைவதேயில்லை" என்றான்.

பலாஹாஸ்வர் சூதர்களிடம் மகிழ்ச்சியாக சிரித்துப்பேசிக்கொண்டு வந்தார். புலித்தோலாலான இடையாடை மட்டுமே அணிந்திருந்தார். அவரது செந்நிறப் பெருந்தோள்கள் குன்றுபோல விரிந்து எழுந்திருந்தன. தோளிலிருந்து புஜம் வழியாக இறங்கிய பெரிய குருதிக்குழாயே சிறிய நீலசர்ப்பம்போலிருந்தது. மயிரற்ற மார்பு இரு பாளங்களாக பரவியிருந்தது. வைக்கோல் போன்ற நீளமற்ற குழலும் அடர்த்தியற்ற சுருண்ட செந்நிறத் தாடியும் கொண்ட அவரது கண்கள் நீலப்பளிங்குமணிகள் போலிருந்தன.

பலாஹாஸ்வர் கைகளைத்தட்டியபடி "மற்போருக்கான வீரர்கள் வந்துவிட்டார்களா? சூதர்களே வலது மூலைக்குச் சென்று அமருங்கள். முரசு இடது மூலையில் அமையட்டும்..." என்று உரக்கச் சொன்னார். அந்தச்சூழ்நிலையை நினைத்து மகிழ்ந்து "நான் துறவுபூண்டபின் பார்க்கப்போகும் முதல் மற்போர் இது. நல்ல மற்போரில் தெய்வங்கள் இறங்கிவந்து மோதும் என்று சொல்வார்கள். அந்தக்காலத்தில் என்னுடலில் தெய்வங்கள் வந்திருக்கின்றன..." என்றார்.

பீஷ்மர் அருகே வந்து "மாமுனிவரை சிரம்பணிகிறேன்" என்று சொல்லி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். "புகழுடன் இரு..." என பலாஹாஸ்வர் வாழ்த்தினார். "உன் மைந்தனே உன்னை சமருக்கு அறைகூவினான் என்று சொன்னான் சூதன். மிகச்சிறந்த விஷயம் அது. அதைத்தான் ஒவ்வொரு யானையும் செய்கிறது. எங்கே அவன்?"

திருதராஷ்டிரனை பின்னாலிருந்து மெல்ல உந்திவிட்டபடி விதுரன் "அரசே அவரது பாதங்களைத் தொட்டு வணங்குங்கள். அதன்பின் பீஷ்மரின் பாதங்களையும் வணங்குங்கள்" என்றான். தயங்கிய காலடிகளுடன் வந்த திருதராஷ்டிரனைப் பார்த்த பலாஹாஸ்வர் "ஆகா, மேருமலைபோல இருக்கிறானே..." என்றார். திருதராஷ்டிரன் குனிந்து அவர் கால்களைத் தொட்டபோது "நிறைவுடன் இரு" என வாழ்த்தியபின் "தேவவிரதா, இவனைப்பார்க்கையில் நான் பால்ஹிகரை நினைவுறுகிறேன். அவர் செந்நிறம் கொண்டவர். இவன் கருநிறம். அவ்வளவுதான் வேறுபாடு. பால்ஹிகரும் நானும் விளையாட்டுப்போர் புரிந்திருக்கிறோம்" என்றார்.

"கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார் பீஷ்மர். பலாஹாஸ்வர் "அப்போது எனக்கு இவனுடைய இதே வயதுதான். புஷ்கலாவதியிலும் புருஷபுரத்திலும் எனக்கு நிகரான மற்போர் வீரர்கள் எவருமில்லை என்று சொன்னார்கள். சப்தசிந்துவுக்குக் கிழக்கே உள்ளவர்கள் எங்கள் அளவுக்கு பெரிய உடல்கள் கொண்டவர்கள் அல்ல. ஆகவே அதை நானும் நம்பினேன். அப்போதுதான் ஒரு சூதன் பால்ஹிகரைப்பற்றிச் சொன்னான். நான் அன்றைய இளமைவேகத்தில் உடனே சிபிநாட்டுக்கு கிளம்பிச்சென்றேன். நான் சென்றபோது பால்ஹிகர் அரண்மனையில் இல்லை. அவர் மலைகளில் வேட்டையாடி வாழ்ந்துகொண்டிருந்தார். நான் அவரைத்தேடி மலைக்குச் சென்றேன்" என்றார்.

பலாஹாஸ்வர் உரக்கச்சிரித்து "அவரை நேரில் கண்டதுமே சற்று அஞ்சிவிட்டேன். என் அளவுக்கு பெரிய ஒருவரை நான் பார்ப்பது அதுவே முதல்முறை. இருந்தாலும் அவரை மற்போருக்கு அழைத்தேன். அவர் இருவர்போருக்கு வரப்போவதில்லை என்றும் அவர் போரை அஞ்சித் தவிர்த்த கோழை என நான் தாராளமாக சூதர்களிடம் சொல்லிக்கொள்ளலாமென்றும் சொன்னார். அப்படியென்றால் விளையாட்டுச் சண்டைக்கு வாருங்கள் என்றேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்'."

"அவரை அச்சுறுத்துவதற்காக நான் அருகே கிடந்த பெரும்பாறை ஒன்றைத்தூக்கி வீசினேன். அவர் தன் வலக்காலால் அதை உதைத்து உருட்டினார். நாங்கள் இரண்டுநாட்கள் இடைவிடாது மற்போரிட்டோம். இறுதியில் நாங்களிருவரும் இணையானவர்கள் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம்..." என்றவர் நினைத்துக்கொண்டு "இது விளையாட்டுப்போர் அல்லவா?" என்றார்.

திருதராஷ்டிரன் "இல்லை முனிவரே. இது அறைகூவல்" என்றான். "நீங்கள் தந்தை-மகன் அல்லவா?" என்றார் பலாஹாஸ்வர். "ஆம்" என்று திருதராஷ்டிரன் சொன்னான். "இல்லை, நான் இதை ஏற்கப்போவதில்லை. தந்தை மைந்தனிடையே போருக்கு நூல்நெறி அனுமதிக்கவில்லை" என்று பலாஹாஸ்வர் சொன்னார்.

விதுரன் "மாமுனிவரே, நான் எளிய சூதன். இடையீடுக்கு என்னை பொறுத்தருள்க. அதற்கு விதி இருக்கிறது..." என்றான். பலாஹாஸ்வர் சினத்துடன் "எந்த ஸ்மிருதி அது? நானறியாத அந்த ஸ்மிருதி எது?" என்று கூவினார். விதுரன் "விவாதசந்த்ரம் என்ற ஸ்மிருதி இருக்கிறது... அதில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றான்.

பலாஹாஸ்வர் கண்களைச் சுருக்கி "யார் எழுதிய ஸ்மிருதி அது?" என்றார். "லஹிமாதேவி என்ற முனிகுமாரி எழுதியது. தொன்மையான நூல். அதை சுக்ரரும் பிரஹஸ்பதியும் அங்கீகரித்திருக்கிறார்கள்" என்றான் விதுரன். "பெண்ணா? ஒரு பெண்ணா அப்படி எழுதினாள்?" என்று பலாஹாஸ்வர் வியந்தார். விதுரன் பணிவான புன்னகையுடன் "ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகார ஆசை அதிகம்..." என்றான்.

"ஆம்...ஆம் உண்மை" என்று சொல்லி பலாஹாஸ்வர் சிரித்தார். விதுரன் "விவாதசந்த்ரம் நீதிகளில் முதல் நீதி மிருகநீதி என்றுதான் சொல்கிறது... மிருகங்கள் எல்லாமே இப்படித்தான் செய்கின்றன" என்றான்.

பலாஹாஸ்வர் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு "சூதரே, மண்ணிலுள்ள எல்லா நீதிகளும் மிருகங்களிடமிருந்தே வந்துள்ளன. வலிமை, குலவளர்ச்சி இரண்டை மட்டுமே அவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மானுடநீதி என்பது அதிலிருந்து முன்னகர்ந்து உருவானதல்லவா? ஸ்மிருதிகளில் எது கடைசியானதோ அதுவே ஆதாரமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுருதிகளின் நோக்கத்துக்கு மாறாகவோ இறைவனின் கருணைக்கு மாறாகவோ ஸ்மிருதிகள் அமையும் காலம் வருமென்றால் அவற்றை உடனடியாக எரித்துவிடவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது."

"ஆம். ஆனால் இங்கே இயற்கைநியதி மட்டுமே செயல்பட்டாகவேண்டிய சூழல் உள்ளது" என்றான் விதுரன். "எங்கள் மன்னர் அதையே விழைகிறார்." திருதராஷ்டிரன் உரத்தகுரலில் "ஆம்" என்றான். பலாஹாஸ்வர் "எனில் அவ்வண்ணமே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு தன் கைகளை தட்டிக்கொண்டு பீஷ்மரை நோக்கி "மற்போர் தொடங்கலாமல்லவா?" என்றார். பீஷ்மர் "தங்கள் ஆணை" என்றார்.

திருதராஷ்டிரனை பின்னால் தொட்டு "பீஷ்ம பிதாமகரை வணங்குங்கள் அரசே" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "பிதாமகரே உங்களை வணங்குகிறேன்" என்று சொல்லி முன்னால் சென்று பீஷ்மரின் முன் குனிந்தான். அவன் தோள்களைத் தொட்டு அவர் "சீர்களும் நிறைவுகளும் உன்னைத் தேடிவருக!" என வாழ்த்தினார்.

பீஷ்மர் கையைக் காட்டியதும் முதுசூதன் எழுந்து அறிவிப்பைக் கூவினான். "சந்திரகுலத்தின் தலைநகரான அஸ்தினபுரியின் புகழ் அழியாதெழுக! அதன் பிதாமகர் பீஷ்மரும் அரசர் திருதராஷ்டிரரும் வாழ்க! இதனால் அறிவிப்பது என்னவென்றால் இங்கே இப்போது ஒரு மல்யுத்தம் நிகழப்போகிறது... எந்த விதிகளும் இதில் இல்லை. வென்றவர் தோற்றவரை அவர் சம்மதிக்கும்வரை அடித்து மண்ணில் சாய்க்கவேண்டும், அவ்வளவுதான். இந்தப் போருக்கு ஜஹ்னு ரிஷியின் பேரனும் சிந்துத்வீப மன்னனின் மகனுமாகிய பலாஹாஸ்வ ரிஷி நடுவராக இருப்பார்..."

பலாஹாஸ்வரிடம் சூதன் ஒரு சங்கைக் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அதை மும்முறை ஊதியதும் சூதர்கள் கொம்புகளை ஊதினர். முரசுகள் அதிர்ந்தன. போரை அறிந்திருந்த முதிய யானைகள் கிளர்ச்சி கொண்டு பிளிறின.

பீஷ்மர் அனுமனை மீண்டும் வணங்கிவிட்டு களம் நடுவே சென்று நின்றார். அவர் இடையில் புலித்தோல் முழுக்கச்சை மட்டும் அணிந்திருந்தார். திருதராஷ்டிரன் தன் மேலாடையையும் பதக்கங்களையும் அணிகளையும் கழற்றி விதுரனிடம் அளித்துவிட்டு கச்சையை இன்னொருமுறை இறுக்கிக்கொண்டு மெல்ல களம்நடுவே சென்றான்.

முரசுகளும் கொம்புகளும் அவிந்தன. அனைத்து விழிகளும் இருவரையும் நோக்கி நிலைத்து நின்றன. திருதராஷ்டிரன் பீஷ்மரின் உயரமிருந்தான். அவரைவிட மும்மடங்கு பெரிய உடல்கொண்டிருந்தான். அவனுடைய கழுத்தெலும்புகள் எடைதூக்கும் இரும்புக்காவடி போல இருபக்கமும் கனத்த கைகளைத் தாங்கியிருந்தன. பேருடல் காரணமாக அவன் தலை சிறியதாக இருந்தது.

பலாஹாஸ்வர் இன்னொரு முறை சங்கை ஊதியதும் இருவரும் குனிந்துகொண்டனர். திருதராஷ்டிரன் தன் பெரிய கைகளை நீட்டியபடி மெல்ல பக்கவாட்டில் நடந்தான். பின்பு அவற்றை படீரென ஒன்றோடொன்று அறைந்துகொண்டான். தோள்களிலும் தொடையிலும் அகன்ற கைப்பத்திகளால் அறைந்து வெடிப்பொலி கிளப்பினான். காற்றில் தாடி பறக்க நாரில் கட்டப்பட்ட கூந்தல் முதுகில் நீண்டு கிடக்க பீஷ்மர் அவனைப் பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றார்.

அவர் நிற்குமிடத்தை வாசனையாலேயே திருதராஷ்டிரன் சரியாக உணர்ந்துகொண்டான். அவரைப்பிடிப்பதற்காக அவன் கைகள் நீராளிக்கைகள் போல காற்றில் நெளிந்தன. எதிர்பாராத கணத்தில் அவன் யானைகளே வெருண்டு பின்னடைந்த பெருங்குரலை எழுப்பியபடி பாய்ந்து பீஷ்மரைப்பிடித்துக்கொண்டான். அவரை தன் மார்பின் கரிய விரிவு நோக்கி அழுத்தமுயன்றான். பலாஹாஸ்வர் "மிகச்சரியான பிடி" என தொடையில் தட்டிக்கொண்டார்.

ஆனால் பீஷ்மர் அவனுடைய இரு கட்டைவிரல்களையும் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் கையை மீட்க முயல அழகிய நடனம்போன்ற அசைவால் அந்த விரல்களை வளைத்துக்கொண்டு பீஷ்மரின் உடல் நெளிந்தது. திருதராஷ்டிரனின் கைகள் துடித்து தசைகள் புடைத்தன. பீஷ்மர் தன் முழங்காலை தூக்கி அவன் விலாவின் கடைசிக் குருத்தெலும்பின் முனையில் ஓங்கி மிதிக்க திருதராஷ்டிரன் முனகியபடி பின்னால் சரிந்தான். அக்கணத்தில் பீஷ்மரின் இடக்கால் அவன் இருகால்கள் நடுவே சென்றது. நிலைதடுமாறிய திருதராஷ்டிரனைத் தூக்கி சுழற்றி நிலத்தில் அறைந்தார் பீஷ்மர். திருதராஷ்டிரன் மண்ணில் விழுந்தபோது நிலம் அதிர்வதை அங்கிருந்தவர்கள் கால்களில் உணரமுடிந்தது.

சிரித்துக்கூச்சலிட்டபடி பலாஹாஸ்வர் எழுந்து நின்றுவிட்டார். தொடைகளில் ஓங்கித்தட்டியபடி அவரே மற்போரிடுவதுபோல குதித்தார். ஆங்காரமாக மார்பை ஓங்கி ஓங்கி அறைந்தபடி எழுந்த திருதராஷ்டிரன் தலையை தாழ்த்தியபடி பன்றிபோல பாய்ந்துவந்தான். பீஷ்மர் மிக இலகுவாக விலகிக்கொண்டு அவன் கையின் மணிக்கட்டில் அழுந்தப்பற்றி தீச்சுவாலை போல வளைந்து அக்கையை அவன் முதுகுக்குக்கீழே மடித்து மேலே அவன் தலைநோக்கி தூக்கிக் கொண்டார்.

கை இறுகியபோது அதை விடுவிக்கமுடியாமல் மறுகையால் தன் தொடையை ஓங்கி ஓங்கி அறைந்தபடி திருதராஷ்டிரன் பீஷ்மரைத் தூக்கிச் சுழன்றான். அவரை உதிர்க்கமுடியாதென உணர்ந்ததும் அவரை மண்ணில் அடிப்பதற்காக அவருடன் சேர்ந்து அப்பக்கமாகச் சரிந்து மண்ணில் விழுந்தான். பீஷ்மர் அதற்குள் எளிதாக விலகிக் கொள்ள திருதராஷ்டிரன் உடல் மீண்டும் மண்ணை அறைந்தது.

கையை நிலத்தில் அறைந்தபடி பாய்ந்தெழுந்த திருதராஷ்டிரன் இருகைகளையும் மேலேதூக்கி ஓலமிட்டபடி பீஷ்மரை நோக்கி வந்தான். அவர் அசையாமல் நின்று அவனைப்பார்த்தார். அவனுடைய கைகள் துழாவி அவரது இடத்தை காற்றசைவால் ஊகித்துக்கொண்டதும் அவன் தன் இருகைகளையும் சேர்த்து அறைந்தான். மீண்டும் மீண்டும் வெறியுடன் தன் மார்பையே ஓங்கி அறைந்தபடி அவரை நோக்கிப் பாய்ந்துவந்து அவர் கைகளைப்பிடித்தான்.

பீஷ்மர் தன் இரு கைகளாலும் அவன் அக்குளில் ஓங்கி அறைந்தார். அவன் வலியுடன் பின்னகர்ந்ததும் முழங்காலைத் தூக்கி அவனுடைய நெஞ்சுக்குழியில் மிதித்தார். அவன் குனிந்ததும் இருகைகளாலும் அவன் காதுகளுக்குப் பின்னாலுள்ள குழியில் குத்தினார். திருதராஷ்டிரன் தள்ளாடினான். பீஷ்மர் அவன் பிடரியில் ஓங்கி அறைந்து வீழ்த்தினார். அவன் புறங்கழுத்தில் தன் காலைத்தூக்கி வைத்தார்.

"கொல்!" என்று பலாஹாஸ்வர் சொன்னார். பீஷ்மர் பேசாமல் பார்த்து நின்றார். "கொல்லுங்கள்...கொல்லுங்கள்!" என்று திருதராஷ்டிரன் கூவி நிலத்தை கையால் அறைந்தான். தன் முகத்தை மண்ணில் உருட்டிக்கொண்டான். "கொல் பீஷ்மா, அதுதான் மற்போரின் விதி. அந்த விதி இல்லையேல் பலமுள்ளவர்கள் மாறிமாறிப் போரிட்டு காயமடைவார்கள். நாட்டில் பலமற்றவர்களே எஞ்சுவார்கள். ஆகவே போர் தொடங்கினால் ஒருவரின் இறப்பில்தான் முடிந்தாகவேண்டும்" என்றார் பலாஹாஸ்வர்.

பீஷ்மர் தன் காலை எடுத்துவிட்டு குனிந்து "முழு ஆயுளுடன் இரு மகனே" என்றபின் திரும்பி அனுமன் ஆலயத்தை நோக்கிச் சென்று குனிந்து வணங்கிவிட்டு வெளியேறினார். கீழே கிடந்த திருதராஷ்டிரன் கையை ஊன்றி எழுந்தான். அவன் தலை உணர்வெழுச்சியால் ஆடிக்கொண்டிருந்தது. தாடையை இறுகக் கடித்தபோது கழுத்தில் ரத்தக்குழாய்கள் புடைத்து அசைந்தன. அவன் இருகைகளாலும் மண்ணை ஓங்கி ஓங்கி அறைந்தபடி ஓலமிடத் தொடங்கினான்.

விதுரன் "விதிகள் என ஏதும் இல்லை என்று முன்னரே சொல்லிவிட்டோம் முனிவரே" என்றான். "ஆம்" என்றார் பலாஹாஸ்வர்.  "முட்டாள். இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன். உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே." விதுரன் மிகமெல்ல "அதை அவர் இந்தப்போர் வழியாகவே அறியமுடியும் முனிவரே" என்றான். "உன் திட்டமா இது?" என்றார் பலாஹாஸ்வர்.

திருதராஷ்டிரன் அலறியபடி எழுந்து மார்பில் ஓங்கி அறைந்து வானைநோக்கிக் கூவியபோது நிணத்துண்டுகள் போன்ற அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தொண்டை புடைத்து தெறித்து நின்றது. தன் அலறலை தானே கேட்டதுபோல அவன் திகைத்து நின்றான். பின்பு ஓடிச்சென்று இருகைகளைக் கொண்டு துழாவினான். அனுமன்கோயிலின் கூரையாக வைக்கப்பட்டிருந்த பெரிய கற்பாளத்தை எடுத்தான்.

அதைக்கொண்டு அவன் தன்னை அறைவதற்குள் பலாஹாஸ்வர் சென்று அவன் கையைப் பிடித்து அந்தக் கற்பலகையை ஒருகையால் பிடுங்கி மண்ணில் வீசினார். அவன் கூச்சலிட்டபடி திமிறியபோது மலையிறங்கும் காட்டாறு போன்ற தன் செந்நிறக் கரங்களால் அவனை இறுகப்பிடித்து தன் உடலுடன் அழுத்தி அசைவை நிறுத்தினார். "மகனே இதை அறிவின் கணமாகக் கொள். நீ அறிந்தேயிராத சிலவற்றை இன்று கற்றிருப்பாய்" என்றார்.

திருதராஷ்டிரன் விம்மியபடி அவர் தோளில் முகம் புதைத்துக்கொண்டான். "திருதராஷ்டிரா, யானைக்கு நிகரான வல்லமை மண்ணில் இல்லை. ஆனால் அதன் நெற்றிக்குழியில் நம் வெறுங்கையால் அறைந்து அதைக்கொல்லமுடியும். மனித உடலும் மனமும் எத்தனை ஆற்றல்கொண்டதானாலும் மிகமிக நொய்மையான சில இடங்கள் அவற்றில் உண்டு. நொய்ந்த இடங்களை வல்லமைமிக்க இடங்களைக் கொண்டு காத்துக்கொள்பவனே உடலையும் மனதையும் வெல்லமுடியும்" என்றார் பலாஹாஸ்வர்.

திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் விலகி "விதுரா என்னை என் அன்னையிடம் கூட்டிக்கொண்டு செல்!" என்றான். தன் கைகளை நீட்டி நின்ற அவனை நெருங்கிய விதுரன் "அரசே இதோ நான்" என்று சொல்லி பற்றிக்கொண்டான். முரசும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின.

பகுதி இரண்டு : கானல்வெள்ளி

[ 3 ]

அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. "விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்?" என்றாள்.

"அரசி, பீஷ்மர் அரசரை  இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை..." எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் "நிறுத்து" என்றாள். "நீ செய்ததெல்லாம் எனக்கு நன்றாகவே தெரிகிறது" என்றாள். அவளுக்கு அகக்கொந்தளிப்பில் மூச்சிரைத்தது. "நீ உன் தமையனை இறப்பின் தருணம் வரை கொண்டு சென்றிருக்கிறாய்."

விதுரன் "அரசி, உங்கள் மைந்தர்மேல் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். எனக்கு எப்போதும் அவர்தான் பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அந்நம்பிக்கையை இப்போதுகூட நான் இழக்கவில்லை" என்றான். விதுரன் எளிதாக தன்னைக் கடந்துசென்றுவிட்டதை உணர்ந்த அம்பிகை கண்களைத் திருப்பி "ஆதுரசாலைக்கு தகவல் சொல்லிவிட்டேன்... வா" என்று மகன் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள். விதுரன் பின்னால் சென்றபோது திரும்பாமலேயே "நீ வரவேண்டியதில்லை" என்றாள்.

விதுரன் கர்மசாலைக்குச் சென்று அங்கேயே உணவுண்டுவிட்டு கடிதங்களை எழுதச்சொல்லிக்கொண்டிருக்கும்போது அம்பாலிகையின் சேடியான சாரிகை வந்து வணங்கினாள். அவளை அனுப்பிவிட்டு வேலைகளை முடித்துவிட்டு விதுரன் சித்ரகோஷ்டம் என்று அழைக்கப்பட்ட இடப்பக்க நீட்சியை நோக்கிச் சென்றான். அரண்மனை முகப்பிலேயே சாரிகை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். "அரசி தங்களைச் சந்திப்பதைப்பற்றி மூன்றுமுறை கேட்டுவிட்டார்கள்" என்றாள். விதுரன் தலையசைத்தான்.

சித்ரகோஷ்டத்தில் சுவர்கள் முழுக்க வண்ண ஓவியங்கள் இடைவெளியில்லாமல் நிறைந்திருந்தன. மேலே உட்கூரையிலும் சித்திரங்கள். தூண்களிலும் சாளரங்களிலும் ஓவியத் திரைச்சீலைகள் தொங்கின. உள்ளே ஒளிவராமலிருக்கும்பொருட்டு சாளரங்கள் அனைத்தும் வெளியே திரையிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. அவையும் வண்ண ஓவியங்களாலானதாக இருந்தன. வெளியே இருந்து வந்த காற்றில் திரைகள் நெளிய ஒரு பெரிய பூந்தோட்ட்டம் நடுவே செல்வதுபோன்ற உணர்வெழுந்தது. ஒவ்வொருமுறையும் அந்த அறைக்குள் நுழையும்போது சிலகணங்கள் மிதமிஞ்சிய வண்ணங்களின் அசைவால் கண்கள் நிலையழியும் அனுபவம் விதுரனுக்கு உருவாவதுண்டு.

சாரிகை உள்ளே சென்று அவன் வருகையை அறிவித்தாள். அம்பாலிகையே வெளியே வந்தாள். "வணங்குகிறேன் அரசி" என்றான் விதுரன். அவள் அவனைப்பார்த்து ஆர்வமாக "திருதராஷ்டிரனுக்கு பெரிய காயம் என்றார்களே உண்மையா?" என்றாள். விதுரன் புன்னகைத்தான். அவள் நெற்றியின் ஓரம் முடியிழை நரைத்திருந்தாலும், முகத்தில் சிறு சுருக்கங்கள் விழத்தொடங்கியிருந்தாலும் அரசிக்குரிய எந்த இங்கிதங்களையும் சொற்கட்டுப்பாடுகளையும் அவள் கற்றுக்கொள்ளவேயில்லை. அம்பாலிகை பரபரப்புடன் "எல்லாவற்றையும் என் சேடி ரம்யை வந்து சொன்னாள். நான் உடனே சாரிகையை அனுப்பி உன்னை வரவழைத்தேன்..." என்றாள்.

அம்பாலிகை அமர்ந்துகொண்டு அவனுக்கு பீடத்தைக் காட்டினாள். விதுரன் "பெரிய காயம் இல்லை அரசி. நாளையே எழுந்துவிடுவார். அவரது உடலுக்கு காயங்களேதும் பெரிதல்ல" என்றான். அம்பாலிகை முகம் வாடி "அவனால் எழவே முடியாது என்றார்களே" என்றாள். விதுரன் புன்னகை செய்தான். "சரி, நான் உன்னிடம் ஒரு விளக்கம் கேட்கிறேன். ஒருவன் அவனுடைய குடிமக்களாலேயே தோற்கடிக்கப்பட்டானென்றால் அவன் மன்னனாக முடியுமா?"

விதுரன் மிகக் கவனமாக சொற்களைத் தேர்வுசெய்து "முடியாது அரசி. அவனைத் தோற்கடித்தவனே மன்னனாக முடியும்" என்றான். அம்பாலிகை அதைப்புரிந்துகொள்ளவில்லை. "ஆம்...அதைத்தான் ரம்யையும் சாரிகையும்கூடச் சொன்னார்கள். அவன் அரசனாக முடியாது. அப்படியென்றால் பாண்டு அரசனாகலாமே..." என்றாள்.

விதுரன் அதே புன்னகையுடன் "நிச்சயமாக ஆகமுடியும் அரசி. ஆனால் அதன்பின் திருதராஷ்டிரர் அவரை போருக்கு அழைத்தால் அவர் அதைச் சந்திக்கவும் வேண்டுமே" என்றான். அம்பாலிகை புரியாமல் விரிந்த விழிகளுடன் பார்த்தாள். "மன்னனை வெல்பவன் அரசனாக முடியும் அரசி. அப்படி அரசனானவன் எப்போதும் எவருடனும் போருக்கு சித்தமாகவும் இருந்தாகவேண்டும்."

"அப்படி ரம்யை சொல்லவில்லையே" என்றாள் அம்பாலிகை. தலையைச் சரித்து சிந்தனைசெய்து, சற்றுநேரம் கழித்து ஒன்றும் பிடிகிடைக்காமல் திரும்பி "சரி, நீயே சொல். பாண்டு அரசனாவதற்கு என்ன வழி?" என்றாள். "அவர் அரசராக விரும்புகிறாரா என்ன?" என்றான் விதுரன். "அவனுக்கு ஒன்றும் தெரியாது. விளையாட்டுப்பிள்ளை. எனக்கு அவன் மன்னனாகவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ரம்யை சொல்கிறாள் நாட்டுமக்கள் அனைவரும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று..." அம்பாலிகை அவன் கைகளைத் தொட்டு "பாண்டு அரசனாவதற்கான வழியை நீதான் சொல்லவேண்டும் விதுரா" என்றாள்.

"அரசி, விவாதசந்திரத்தின் விதிப்படி இன்று இவ்வரசுக்கு பீஷ்மரே உண்மையான மன்னர். அவர் முடிவெடுத்தால் இவ்வரசை சிறிய அரசருக்கு அளிக்கலாம்" என்றான். "ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டாரே. அவருக்கு அப்போதிலிருந்தே அம்பிகையைத்தானே பிடிக்கும்" என்றாள் அம்பாலிகை. விதுரன் அதற்கும் புன்னகைசெய்தான்.

"என் மகன் எப்படியாவது அரசனாகவேண்டும்... நான் அவளை என் அன்னையைப்போல நினைத்தேன். அவள் என்னை அவளுடைய சேடியைப்போல நடத்தினாள். என் மகனை அவனுடைய மைந்தனுக்கு சேவகன் என்று நினைக்கிறாள். அதை நான் ஒருநாளும் ஏற்கமுடியாது..." என்றாள் அம்பாலிகை.

"அரசனாவதற்கான காரணமாக அது இருக்கமுடியுமா அரசி?" என்றான் விதுரன். "ஏன்?" என்று சீற்றத்துடன் அம்பாலிகை கேட்டாள். "குடும்பப்பூசலா அரசியலைத் தீர்மானிப்பது?" அதை அம்பாலிகை புரிந்துகொள்ளாமல் "அவள் என்னை அவமரியாதை செய்தாள்... உனக்குத்தெரியாது. அவளுடைய குழந்தைதான் முதலில் பிறந்தது. அதற்கு விழியில்லை என்று தெரிந்ததுமே அவளுடைய விஷம் முழுக்க என் மீது திரும்பிவிட்டது. அவள் என் குழந்தை அரசனாகிவிடும் என்று நினைத்து என்னை அவமதித்தாள்."

அவள் குரல் தாழ்ந்தது. அவனிடம் "நாகசூதர்களைக் கொண்டு எனக்கு அவள் சொல்லேவல் செய்தாள். என்னிடம் அதை சேடியர் சொன்னார்கள். அதனால்தான் பாண்டுவின் குருதியெல்லாம் வெளுத்துவிட்டது. இப்போதுகூட அவள் என் மகனைக் கொல்ல எதைவேண்டுமென்றாலும் செய்வாள். அவனுக்கு அச்சமூட்டும் கனவுகள் வருகின்றன. ஆகவேதான் நான் அவனை அரண்மனைக்கு வெளியே விடுவதேயில்லை."

விதுரன் பொறுமையிழந்து மெல்ல அசைந்தான். அம்பாலிகை "அவன் மன்னனாக வேண்டும். நான் பேரரசியாக ஆகவேண்டும். அதன்பிறகு நான் அவளிடம் சென்று சொல்வேன். நீ என் மூத்தவள். நீ இருக்க நான் அரசியாக மாட்டேன். என் மைந்தனின் அன்னையாக நீயே இரு. நீயே தேவயானி அணிந்த மணிமுடியை வைத்துக்கொள். ஆனால் அதை நான் கொடுத்தேன் என்பதை சூதர்கள் பாடவேண்டும் என்பேன். அப்போது அவள் முகம் எப்படி மாறும் என்பதை நான் பார்க்கவேண்டும்" என்றாள்.

விதுரன் சலிப்பை வெளிப்படையாகவே காட்டி "சிறிய இளவரசர் எங்கிருக்கிறார் அரசி?" என்றான். "துயில்கொள்கிறான். நேற்று அவனும் நான்கு சேடிகளுமாக ரம்யவனம் சென்று விளையாடினார்கள். வானம் வெளுத்தபின்னர்தான் அவன் வந்தான்" என்றாள் அம்பாலிகை. "விதுரா, அவன் உடல்நிலை தேறுவதற்கு காமரூபத்தில் ஏதோ வேர் இருக்கிறதாமே? ஒரு மருத்துவர் அதற்கு ஆயிரம் பொன் கேட்கிறார்."

விதுரன் "நான் பேரரசியை சந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது அரசி" என்றான். "ஆம், அரசப்பணி அல்லவா? என் மகன் மன்னனாக ஆனபின்னரும் நீதான் நாடாளவேண்டும்..." என்றாள் அம்பாலிகை. "அது என் கடமை" என்று விதுரன் சொன்னான். அவன் எழுந்தபோது கூடவே எழுந்தபடி "நீ பீஷ்மரிடம் பேசு... பாண்டுவை அரசனாக்குவதே முறையானது என்று சொல். இன்றுவரை பாரதவர்ஷத்தில் எங்கும் விழியிழந்தவன் அரசனாக ஆனதில்லை என்று ரம்யையும் சாரிகையும் சொல்கிறார்கள்" என்றாள் அம்பாலிகை.

வெளியே வந்தபின் விதுரன் திடீரென்று நின்று சிரித்துவிட்டான். மீண்டும் அவன் கர்மசாலைக்குச் சென்றபோது அமைச்சர்கள் லிகிதரும் தீர்க்கவியோமரும் அவனுக்காகக் காத்திருந்தனர். களஞ்சியக் காப்பாளரான லிகிதர் களஞ்சியத்திற்கு வந்திருக்கும் நிதியின் அளவையும் வரித்தொகுப்பாளரான சோமர் வரிகள் கொள்ளப்படும் அளவையும் அவனிடம் குறிப்புகளாக அளித்தனர்.

நீளமான தாளியோலைகளில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை முழுமையாக அவன் வாசித்தான். சிறிய தகவல்களைக்கூட இருமுறை வாசித்து நினைவில் நிறுத்திக்கொண்டபின் சுவடிகளை கட்டி பீடத்தில் வைத்தான். பெருமூச்சுடன் அவர்களே பேச்சைத் தொடங்கட்டும் என்று காத்திருந்தான்.

"மேலும் குறைந்துவருகிறது" என்று சோமர் சொன்னார். "இதை பேரரசியிடம் முன்னரே குறிப்புணர்த்தியிருந்தேன்." விதுரன் "சோமரே, சுங்கம் தொடர்ச்சியாகக் குறைவதை புரிந்துகொள்ளமுடிகிறது. கங்கைக் கரைமுழுக்க வேறு வலுவான அரசுகள் உருவாகியுள்ளன. அங்கு பெரிய படகுத்துறைகளும் சந்தைகளும் பிறந்துவிட்டன. அஸ்தினபுரிக்கு வரும் வணிகர்கள் குறைகிறார்கள். நம் வரிச்செல்வம் பங்கிடப்படுகிறது... ஆனால் வேளாண்வரிகள் எப்படி குறையமுடியும்? ஆயர்களின் வரிகளும் தொடர்ந்து வீழ்கின்றன."

"புதியஜனபதங்களை தொடர்ச்சியாக உருவாக்காத எந்த அரசிலும் வரிச்செல்வத்தில் வீழ்ச்சி இருக்கும் என்று பொருள்நூல்கள் சொல்கின்றன" என்று சோமர் சொன்னார். "அரசுகள் உருவாகும்போது வரி காட்டில் துளிகள் திரண்டு நதியாகி ஏரியை அடைவதுபோலக் களஞ்சியத்தை வந்தடைகிறது. அந்த வரிச்செல்வத்தைக்கொண்டு அரசுகள் மேலும் தங்களை வலுவாக்கிக் கொள்கின்றன. அரசு வலுவடையும்போது மக்கள் மேலும் மேலும் அந்நாட்டில் குடியேறுகிறார்கள். ஜனபதங்கள் பெருகுகின்றன. வரிச்செல்வம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும்."

சோமர் "ஆனால் சூதரே, அதன் உச்சம் என ஒரு புள்ளி உண்டு. அங்கே இருபக்கமும் துலாக்கோல் சமநிலையை அடைகிறது. ஜனபதங்கள் மேலும் விரிவடைய முடியாத முழுமையை அடைந்துவிடுகின்றன. ஆகவே வரிச்செல்வம் நிலையான அளவை அடைகிறது. மறுபக்கம் ஓர் அரசு நிலையானதாக அமைந்து, மன்னன் புகழ்பெற்றுவிட்டால் அவனைத்தேடி வைதிகர்களும் சூதர்களும் இரவலர்களும் வந்துகொண்டிருப்பார்கள். அவன் செய்யவேண்டிய அறப்பணிகள் அதிகமாகிக்கொண்டே செல்லும். ஒருகட்டத்தில் வரிச்செல்வமும் அரசச்செலவும் நிகராகிவிடும். புதிய ஜனபதங்களை உருவாக்க களஞ்சியத்தில் மிகைச்செல்வம் இருப்பதில்லை" என்றார்.

சோமர் தொடர்ந்தார் "நிலையான அரசு சீரான பொருள் வளர்ச்சியை உருவாக்குகிறது. வரிச்செல்வத்தை கொடுத்தபின்னரும் மக்களிடம் செல்வம் எஞ்சுகிறது. செல்வம் வழியாக கலைகளும் கல்வியும் வளர்கின்றன. குலங்கள் வளர்கின்றன. விழாக்களும் கொண்டாட்டங்களும் உருவாகின்றன. மக்கள் செலவிடும் செல்வம் அதிகரிக்கிறது. மேலும் மேலும் செல்வத்துக்கான தேவை அவர்களிடம் உருவாகிறது. அந்தத் தேவைக்கு ஏற்ப நிலங்களும் கன்றுகளும் பொருள் தராமலாகின்றன. மக்களிடமும் செலவு வளர வருகை நிலைக்கும் நிலை. ஏறக்குறைய பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரியநாடுகளிலும் இன்றிருக்கும் இக்கட்டு இதுதான்."

"அதன் உச்சகட்ட இக்கட்டு அஸ்தினபுரிக்கு இருக்கிறது இல்லையா?" என்றான் விதுரன். "ஆம், ஏனென்றால் நாம் உச்சத்தில் இருக்கும் தேசம்..." என்றார் லிகிதர். விதுரன் "இதற்கு என்ன வழி சோமரே?" என்றான். "அமைச்சரே, குரங்குகள் காட்டில் கனியும்காயும் போதாமலானால் ஊனுண்ணத் தொடங்கிவிடும். அதை மர்க்கடகதி என்று பொருளின் வழியறிந்த ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்."

விதுரன் அவரைப் பார்த்தான். "போர் மட்டுமே இந்த இக்கட்டில் இருந்து நாடுகளை மீட்கமுடியும்" என்றார் சோமர் உறுதியாக. "அதை நான் பலமுறை பேரரசியிடம் சொன்னேன். அவரும் அவ்வெண்ணம் கொண்டிருக்கிறார்."

"அதாவது, நம்மைவிட வலுவற்ற நாடுகளை தாக்கி அழிப்பது. அவர்களின் செல்வங்களை கொள்ளையடிப்பது. அவர்களின் வரிச்செல்வத்தை கப்பம் என்ற பேரில் பிடுங்கிக்கொள்வது இல்லையா?" என்றான் விதுரன்.

சோமர் புன்னகைசெய்து "ஊனுண்ணும்போது நாம் செய்வது அதைத்தானே?" என்றார். "இன்னொரு உயிர் தனக்காகவும் தன் குட்டிகளுக்காகவும் தன் உடலை வளர்த்து வைத்திருக்கிறது. அதைப்பிடித்து கிழித்து உண்கிறோம் அல்லவா? அது ஷத்ரியர்களின் நெறியாகவே சொல்லப்பட்டிருக்கிறது."

"ஆனால்" என விதுரன் தொடங்கியதும் சோமர் "அரசே போர் என்பது ஷத்ரியர்களின் குலஅறம். அரசுகளின் வாழ்நெறி. வெட்டுவதற்காகவே வாட்கள் செய்யப்படுகின்றன" என்றார். "இந்த இக்கட்டு அஸ்தினபுரிக்கு மூன்றுமுறை வந்துள்ளது. மாமன்னர் புரூரவஸ் கங்கையின் கரையில் இந்நகரை அமைத்தார். அன்று இது சந்திரபுரி என்று அழைக்கப்பட்டது. சந்திரபுரியின் ஆட்சியில் அன்று பதினெட்டு ஆயர் கிராமங்கள் மட்டுமே இருந்தன. ஆயர்களின் செல்வம் வந்துகொண்டிருந்தது. அதைக்கொண்டு நகரம் வளர்ந்தது. இங்கிருந்து கங்கை வழியாக நெய் வங்கம் வரை கொண்டுசெல்லப்பட்டது. அச்செல்வத்தைக்கொண்டு காடுகளை அழித்து வேளாண்நிலங்களை புரூரவஸின் மைந்தர் ஆயுஷ் உருவாக்கினார். அந்நிலத்தில் குடியேறிய மக்கள் வேளாண் தொழில்செய்து வரிச்செல்வத்தை உருவாக்கினர். கங்கைவழியாக நாம் தானியங்களையும் பழங்களையும் விற்கத்தொடங்கினோம். நகுஷ மன்னரின் காலகட்டம் ஓர் உச்சம்."

"அதன்பின் மீண்டும் பொருள்சரிவு தொடங்கியது. புரு சக்ரவர்த்தியின் ஆட்சியில் அதை புதிய சந்தைகளை அமைத்து ஒருதலைமுறைக்காலம் எதிர்கொண்டனர். துஷ்யந்தரின் காலகட்டத்தில் அஸ்தினபுரம் வளர்ச்சியற்று தேங்கி நின்றது. அதை மீட்டவர் பாரதவர்ஷத்தின் முதல் சக்கரவர்த்தியான பரதர். சந்திரபுரியில் இருந்த முழுச்செல்வத்தையும் அவர் படைகளும் ஆயுதங்களுமாக ஆக்கினார். அவரதுபடைகள் உத்தர பாரதவர்ஷத்தில் அன்றிருந்த நூற்றிப்பதினெட்டு ஷத்ரிய அரசர்களையும் வென்று கப்பம் கொண்டன. ஐம்பத்தாறு ஷத்ரிய அரசுகளாக மன்னர்களை வகுத்தவரும் அவரே. அந்தக் கப்பம் மேலும் ஐந்து தலைமுறைக்காலம் இந்நகரைக் காத்தது."

"அடுத்த இக்கட்டுநிலை பிருகத்ஷத்ரன் காலகட்டத்தில் உருவானது. அதிலிருந்து நம்மை மீட்டவர் மாமன்னர் ஹஸ்தி. அவர்தான் படைகொண்டு சென்று பதினெட்டு நாடுகளை வென்று கங்கைக்கரையில் இருந்த அனைத்துச் சந்தைகளையும் நம் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். வங்கம் வரை நாம் சுங்கம் கொள்ளத் தொடங்கினோம். குருவின் ஆட்சிக்காலம் வரை நம் கொடி பறந்துகொண்டுதான் இருந்தது. பின்னர் தொடர்ந்து சிறிய ஏற்றமும் இறக்கங்களும் இருந்தன. இப்போதுதான் தொடர்ச்சியான வீழ்ச்சி தெரிகிறது. இப்படியே சென்றால் இன்னொருதலைமுறைக்குள் அஸ்தினபுரி அடிமைப்பட்டுவிடும்."

லிகிதர் "பெரும்படையெடுப்புகள் சில நடந்தாகவேண்டும் அமைச்சரே... அதைத்தவிர பிறிதொரு வழி தெரியவில்லை" என்றார். விதுரன் புன்னகையுடன் "லிகிதரே, இதிலுள்ள இக்கட்டு என்னவென்றால் போர் என்பது யானைச்சண்டை போல. ஒரு யானை தோற்றோடும். ஆனால் வென்றயானைக்கும் அதேயளவுக்கு புண்ணிருக்கும். வென்றயானை மறுநாளே உயிர்துறக்கவும் கூடும். ஒரு போரை நிகழ்த்த அஸ்தினபுரியும் தன் செல்வத்தை அழிக்கவேண்டியிருக்கும். ஏராளமான வீரர்களை இழக்கவேண்டியிருக்கும்" என்றான்.

"ஆம், அதுவும் நலம்செய்யும். அமைச்சரே, போரிடும் நாடுகள் மட்டுமே உயிர்த்துடிப்புடன் உள்ளன என்பதை கவனியுங்கள். போர் வழியாக நம் படைகளில் ஒரு பகுதியை நாம் இழக்கிறோம். உடனடியாக நோக்கினால் அது இழப்பே. ஒருநாட்டில் உழைப்பவர்களைவிட வீரர்கள் மிகுந்துவிடக்கூடாது. முதியவீரர்கள் எந்த ஒரு தேசத்துக்கும் சுமை. காட்டில் இளம் மிருகங்கள் மட்டுமே இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் காடுதான் வாழும் பசுமை."

விதுரன் புன்னகை செய்தான். சோமர் "போருக்காக நம் கொல்லர்களும் தச்சர்களும் உழைப்பார்கள். நம் வயல்களில் புத்தெழுச்சி நிகழும். போரில் நாம் இழக்கும் செல்வத்தை மிகச்சில நாட்களிலேயே திரும்ப ஈட்டிவிடலாம். ஒருபோர் மேலும் இருபதாண்டுகாலம் வரிச்செல்வத்தை தொடர்ச்சியாக வளரச்செய்யும். சூதரே, தேசங்கள் மரங்களைப்போல. வளர்ச்சி நின்ற கணம் அவை இறக்கத்தொடங்குகின்றன."

"நாம் உடனடியாக வாளெடுக்கவேண்டும் என்கிறீர்கள்" என்று விதுரன் சிரித்தான். "நாம் மட்டுமல்ல இன்றுள்ள அனைத்து ஷத்ரியர்களும் அந்நிலையில் இருக்கிறார்கள். நாம் போரிடவில்லை என்றால் அவர்கள் நம்மிடம் போரிடுவார்கள்" என்றார் லிகிதர். "ஏன் வணிகம் மூலம் வரிச்செல்வத்தை அதிகரிக்கமுடியாதா என்ன?" என்றான் விதுரன். "சூதரே, போரில்லாமல் வணிகம் நிகழும் காலம் என்றாவது இருந்திருக்கிறதா? நாம் இன்றுசெய்யும் வணிகம் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் செய்த போர்களினால் உருவானது. நாம் சிந்துவையோ கங்கையையோ முழுமையாகக் கைப்பற்றாமல் எதிர்காலத்தில் வணிகமே செய்யமுடியாது" என்றார் லிகிதர்.

சோமர் "பேரரசி காந்தாரத்தின் மணவுறவை நாடுவதும் இதனாலேயே..." என்று சொன்னார். "கங்கைக்கரையின் அனைத்து அரசுகளையும் நமக்குக் கப்பம் கட்டக்கூடியவையாக ஆக்கி வங்கம் வரை கங்கையை நாமே ஆட்சிசெய்யலாமென நினைக்கிறார்கள். அது நிகழ்ந்தால் நாம் கடல்வணிகத்தில் நுழையமுடியும். கடல்வணிகத்தின் செல்வம் வரத்தொடங்கினால் நாம் இமயமலை அடிவாரத்திலும் விதர்ப்பத்திலும் உள்ள அனைத்துக் காடுகளையும் ஜனபதங்களாக ஆக்கமுடியும். அடுத்த பத்தாண்டுகாலத்தில் ஆரியவர்த்தம் முழுவதையும் ஆட்சி செய்வோம். சீனத்தில் இருக்கும் பெருநிலம் கொண்ட பேரரசுகளைப்போல நாமும் ஆவோம்."

விதுரன் "நான் சூதன் சோமரே, உங்களைப்போல ஷத்ரியர் அல்ல. லிகிதரைப்போல வைசியரும் அல்ல. நான் போரை ஏட்டில் நிகழ்த்துவதை கற்றிருக்கிறேன். வாளும் குருதியும் சந்திக்கும் போர் என்பது என்னை அச்சுறுத்துகிறது. போரல்லாத வழிகளை முழுமையாகப் பரிசீலிக்கவேண்டுமென்றே என் நெஞ்சு எண்ணுகிறது" என்றான்.

"சூதரே, இந்நகரை நீங்கள் பாருங்கள். இது பொன்னகரம், கலைநிலையம், காவியவேதி, வேதபுரி, அறபூமி என்றெல்லாம் புகழப்படுகிறது. ஆனால் ஒரு வீரனின் கண்ணில் இது என்ன? இது ஒரு மாபெரும் ஆயுதக்குவியல். இரண்டாயிரம் யானைகளாலும் இருபதாயிரம் வீரர்களாலும் அவர்களின் ஆயுதங்களாலும் காக்கப்படும் ஒரு பெரும் கோட்டை, அவ்வளவுதான். ஆயுதங்கள் அமைதியைக் கொண்டுவருமென்பது ஒரு பெரும்பொய். ஒரு வாள் வார்க்கப்பட்டால் அது உயிரை எடுத்தே தீரும். பாரதவர்ஷத்தில் இன்றிருக்கும் ஆயுதங்களெல்லாம் பலகாலமாகக் காத்திருக்கின்றன. அவை உறைவிட்டு வெளியே வந்தேயாகவேண்டும்."

விதுரன் சிரித்து "எதற்கு?" என்றான். லிகிதர் சிரித்து "புதிய ஆயுதங்களை உருவாக்க. புதியகொல்லர்களும் புதிய தச்சர்களும் உருவாகவேண்டாமா என்ன?" என்றார். சோமர் சிரித்துக்கொண்டு "மனிதர்களுக்கு இறப்புண்டு. இல்லையேல் பூமியே முதுமையால் நிறைந்துவிடும். நாடுகளும் இறந்தாகவேண்டும். ஆகவே போர் வேண்டும்" என்றார்.

விதுரன் "அமைச்சரே, போரில்லாமல் அரசுகளில்லை என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அஸ்தினபுரி உறுதியாக வெல்லும் எனத் தெரியாத ஒரு போரை ஒருபோதும் நான் அனுமதிக்கப்போவதில்லை" என்றான்.

"அப்படியென்றால் காந்தாரத்தை நம்முடன் நிறுத்துவோம். இன்றிருக்கும் களஞ்சியத்துடன் தொடர்ந்த படையெடுப்புகளை நிகழ்த்த நம்மால் முடியாது. காந்தாரத்தின் நிதி நம் கைகளுக்கு வருமென்றால் நம்மால் கங்கையை வெல்லமுடியும்" என்றார் சோமர். "அஸ்தினபுரி போர் குறித்துவிட்டது சூதரே. அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி நம் களஞ்சியத்தை நிறைப்பது என்று மட்டுமே இனி நீர் எண்ணவேண்டும்" லிகிதர் சொன்னார். விதுரன் சிந்தனையுடன் தலையை அசைத்தான்.

நூல் இரண்டு : கானல்வெள்ளி

[ 4 ]

விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும்.

பரத்வாஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். அவன் ஒருபோதும் கண்டிராத தந்தையின் மனம் அதிலிருந்தது. அதன் ஒவ்வொரு சொல்லும் கனிந்த முத்தங்களாக இருந்தன. மெல்லிய குழவியின் உடலைத் தீண்டும் கைகளின் குழைவுடன் மொழியை ஆண்டிருந்தார் வியாசர். அந்நூலைத் தொடும் கணமே அவன் சுகமுனிவனாக ஆகமுடிந்தது.

அன்றைய வாசிப்பில் எஞ்சும் ஒரு கவிச்சொல்லுடன் காலைச்சூரியனின் பொன்னொளியைப் பார்ப்பதே வாழ்க்கையின் பேரின்பம் என்று விதுரன் உணர்வான். அது அன்றைய தியானமந்திரம். அன்று அவனை வழிகாட்டிச்செல்லும் புள். அன்றைய குரு. அன்று காலை எந்தச்சொல் உள்ளே சென்று அங்கிருந்த பொன்வலையில் சிக்கி தானும் பொன்னாகியதென்று சூரியனைப் பார்க்கும்போதுதான் அவனால் சொல்லமுடியும். இளவெயில் எழுந்ததும் அவன் மஞ்சத்தறையில் இருந்து உப்பரிகைக்குச் சென்றபோது ‘ரதிவிஹாரி’ என்ற சொல்லைக் கண்டான். புவியிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்துவிடக்கூடியதுபோன்ற துல்லியத்துடன் அதை அறிந்தான்.

காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி...

காமத்துடன் விளையாட எவருக்கேனும் முடியுமா என்ன? அது நோயுடன் விளையாடுவது போன்றது. அவ்விளையாட்டில் நோய் மட்டுமே வெல்லமுடியும். ஆனால் எப்போதேனும் எவரேனும் காமத்தை உள்ளும் புறமும் அறியமுடிந்தால் அவன் விளையாடமுடியும்.

இனியதொரு பரவசத்தில் விதுரன் நடுங்கினான். அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை.

அதை அறியும் மனிதப்பிறப்பு ஒன்று மண்ணில் நிகழமுடியுமா என்ன? வியாசரால் முடியவில்லை. கால்நகம் முதல் தலைமுடிநுனி வரை கவிதையால் நிறைந்தவராக இருந்தாலும் அவரால் அதைத்தாளமுடியவில்லை. சூரியனை நோக்கிச்சென்று சிறகு பொசுங்கிய பறவை அவர். அவரால் அடையமுடிந்தது அந்தச்சொல்லை மட்டும்தான். ரதிவிஹாரி. ஆம், அப்படி ஒருவன் மண்ணில் நிகழவேமுடியாது. முடிந்தால் அவன் மனிதனாக இருக்கவும் முடியாது. ஆனால் அவனை ஒரு கனவாக சொல்லில் தேக்கி வைத்துக்கொள்ளலாம். கல்லில் தேக்கிவைக்கப்பட்ட கடவுள்களைப்போல.

சூரியனின் பொன்னொளி மாய்ந்ததும் விதுரன் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே சென்றான். காரியசாலைக்கா ஆதுரசாலைக்கா என்று ஒரு கணம் சிந்தித்தபின்பு கோட்டைக்குச் செல்லும்படி ஆணையிட்டான். ரதம் நகரத்தெருக்களில் ஓடத்தொடங்கியதும் வழக்கம்போல அவன் சொற்கள் மறைந்து கண்கள் மட்டுமாக ஆனான். காலையிலேயே நகர்மீது வெயில் தழலற்ற நெருப்பு போல எழுந்து நின்றிருந்தது. மேகமே இல்லாத வானில் பறவைகளும் கண்ணுக்குப் படவில்லை.

முதல் ஆயுதகோபுரத்தைக் கண்டதும்தான் முந்தையநாள் லிகிதரும் சோமரும் சொன்ன வரிகள் நினைவில் எழுந்தன. ஆயுதகோபுரத்துக்குக் கீழே காவல் வீரர்கள் ஒரு ஆய்ச்சியை நிறுத்தி அவள் கொண்டுவந்த தயிரை பேரம்பேசி வாங்கிக்கொண்டிருந்தனர். அது சொற்களாலான ஒரு காமவிளையாட்டு என்றும் தோன்றியது. அவள் அவர்கள் யோசித்து யோசித்துச் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணீரென்று பதில் சொன்னாள். கண்களை வெட்டினாள். கழுத்தை நொடித்தாள். உறவுசொல்லி அழைத்து கேலி பேசினாள். ஆனால் கூடவே தயிரை விற்பதிலும் குறியாக இருந்தாள்.

ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கியதும் வீரர்கள் அவளைச் செல்லும்படி கண்களைக் காட்டினர். அவள் விதுரனைக்கண்டும் எந்தக் கூச்சமும் இல்லாமல் நீளவிழியின் நுனியால் நோக்கியபடி சுமையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு நடந்தாள்.

காவலர்களின் பதற்றம் மிக்க வணக்கங்களை ஏற்றுக்கொண்டு விதுரன் உள்ளே சென்று காவல்கோபுரத்தில் ஏறினான். கோபுரக்காவல்தலைவன் ருத்ரன் விதுரன் பின்னால் வந்தான். தலையில் சுமையை சமன்செய்தபடி பணம்பெற்றுக்கொண்டிருந்த ஆய்ச்சி அவன் யார் என புருவம் தூக்கி வினவுவதையும் உதட்டைச்சுழித்து பழிப்புக்காட்டுவதையும் எதிரே இருந்த கேடயத்தின் பிரதிபலிப்பில் விதுரன் பார்த்தான்.

பகடைக்களத்தின் அமைப்புள்ள அஸ்தினபுரியின் சாலைமுனைகளில் இருபத்துநான்கு காவல்கோபுரங்கள் இருந்தன. கல்லால் ஆன அடித்தளம் மீது சுதையாலான கட்டடம் அமைக்கப்பட்டு அதன்மேல் பன்னிரு அடுக்குகள் கொண்ட கோபுரம் எழுப்பப்பட்டிருந்தது. கோபுரத்தின் மீது ஏறிச்செல்ல குறுகலான படிகள் சென்று சேர்ந்த கடைசித்தட்டில் எட்டுபேர் நிற்பதற்கான இடமும் பெருமுரசும் இருந்தன. அங்கிருந்த வீரர்கள் விதுரனை வணங்கினர்.

அந்தக்காவல்கோபுரத்தின் மீதிருந்து அதைச்சுற்றி இருந்த நான்கு காவல்கோபுரங்களைப் பார்க்கமுடிந்தது. தொலைவில் கரியதிரைபோல விரிந்த கோட்டை மீதிருந்த ஒரு காவல்கோபுரம் தெரிந்தது. அனைத்துக் காவல்கோபுரங்களிலும் வெண்ணிறமான கொடிகள் பறந்துகொண்டிருந்தன. எச்சரிக்கைக் கொடிகள், அறிவிப்புமுரசுகள், கொம்புகள், இரவில் எரியம்புகளை எய்யும் இரண்டாளுயரமான இரும்புவிற்கள்.... ஒலிக்காக காதுகளை விடைத்துக்கொண்டு துயிலும் ஓநாய் போலிருந்தது அஸ்தினபுரி என விதுரன் நினைத்துக்கொண்டான்.

காவலர்களிடம் தலையசைத்துவிட்டு விதுரன் இறங்கி சாலை வழியாக கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டையின் கிழக்கிலிருந்த முகவாயில்தான் நகரிலேயே உயரமான இடம். கோட்டைக்குமேல் இருபத்துநான்கு அடுக்குகளாக எழுந்த மாபெரும் மரக்கோபுரத்தின் உச்சியில் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி பறந்தது. அதன் உச்சி அடுக்கில் இருந்த எச்சரிக்கை பெருமுரசு அது நிறுவப்பட்டபின் ஒலித்ததேயில்லை என்று சூதர்கள் பாடுவதுண்டு.

கோட்டைக்குமேல் படிகளில் ஏறிச்சென்றான் விதுரன். ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்கள் பகடையாடியபடியும் அமர்ந்தும் படுத்தும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவன் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கீழிருந்து எழுந்த எச்சரிக்கைக் குரல்களை பொருட்படுத்துமளவுக்கு அவர்கள் கவனத்துடனும் இருக்கவில்லை. பெரும்பாலான வீரர்கள் தாடிநரைத்தவர்கள் என்பதை விதுரன் அப்போதுதான் கவனித்தான். சோமரின் சொற்கள் நினைவில் எழுந்தன.

அவனுடன் வந்த கோட்டைத் தலைவனான வஜ்ரபாகுவிடம் "ஏன் அனைத்து வீரர்களும் மூத்தவர்களாக இருக்கிறார்கள்?" என்றான். வஜ்ரபாகு பணிவுடன் "அவர்கள் நெடுநாட்களாக இங்கிருக்கிறார்கள் அமைச்சரே. அவர்களுக்கு இந்தப்பணி மிக நன்றாகத் தெரியும். ஆகவே எந்த இடுக்கண்களும் இல்லாமல் பணி சீராக நிகழ்கிறது" என்றான். விதுரன் தலையை அசைத்துக்கொண்டான். சிலர் அப்போதே மது அருந்தியிருப்பதாக அவனுக்குப் பட்டது. ஆனால் அதை அவனே நேரடியாக கவனிக்கக் கூடாதென நினைத்துக்கொண்டான்.

கோட்டை உச்சியில் படையறிவிப்புமுரசும் நெருப்பறிவிப்புக்கான தட்டுமணியும் தூசடைந்திருந்தன. ஒருமூலையில் வாட்களும் அம்புகளும் விற்களும் துருவேறிக் குவிந்துகிடந்தன. அப்போதுதான் காவல்மாடங்களிலும் கோட்டையின் உள்ளறைகளிலும் எங்கும் கண்படுமிடமெல்லாம் குவிந்திருக்கும் துருவேறிய படைக்கலன்களை விதுரன் நினைவுகூர்ந்தான். இதுநாள்வரை இதெல்லாம் கருத்துக்கு வந்ததேயில்லை.

அங்கிருந்து பெரிய வரைபடமென அஸ்தினபுரியை முழுமையாகவே நோக்கமுடிந்தது. காலைவெயில் ஏறத்தொடங்கியிருந்த அவ்வேளையில் நகரின் அனைத்துத் தெருக்களிலும் மக்கள் ஒழுகிக்கொண்டிருந்தனர். அவர்களின் தலைப்பாகைகள் அவர்களை சிறிய பலவண்ணப் பூச்சிகளின் கூட்டமாகக் காட்டின. நடுவே வண்டுகள் போல கன்னங்கரிய யானைகள். கொடிகள் பறக்கும் தேர்கள் அவற்றின் நிழல்தேர் உடன்வர கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு சென்றன.

சதுரவடிவில் அமைந்த நகரத்தில் இருந்து நான்கு பக்கமும் கிளைகள் நீண்டு பகடைச்சதுரங்கக் களத்தின் வடிவத்தை அடைந்திருந்தது நகரம். மையச்சதுரத்தில் அரசவீதிகளும் வைதிகர்களின் வீதிகளும் பெருவணிகர்வீதிகளும் இருந்தன. அதைச்சுற்றி மண்ணாலான உள்கோட்டை நான்கு காவல் முகடுகளுடன் நின்றது. மாமன்னர் ஹஸ்தி கட்டிய கோட்டை அது. அவ்வீதிகளின் நடுவில் இருந்த அரண்மனையைச் சுற்றி மரத்தாலான கோட்டை இருந்தது. எப்போதுமே மூடப்படாத வாயிலும் அதன் உச்சியில் காஞ்சனம் என்னும் கண்டாமணியுமாக அது காவல்கொண்டிருந்தது.

வடக்காக நீண்டுசென்ற கிளைமுழுக்க படைவீரர்களின் இல்லங்கள். அந்த ரதசாலை யானைக்கொட்டடியை அடைந்து அதன் வழியாக வடக்குக் கோட்டைவாசலை அடைந்தது. அங்கே அடர்ந்த காடு மண்டிய புராணகங்கை என்னும் பெரும் பள்ளம். வடக்கே நகர்மூலையில் இருந்த காடு யானைகளுக்கும் குதிரைகளுக்கும் மேய்ச்சலுக்குரியது. அவை நீர் அருந்துவதற்கான மூன்று குளங்கள் அங்கிருந்தன. அங்கிருந்து யானைகளின் பிளிறல் ஒலிகள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தன.

தெற்கே விஸ்வகர்ம குலத்தவரின் இல்லங்கள் செறிந்த மகாரதச் சாலை சென்று தெற்குக்கோட்டையின் பெருவாயிலை அடைந்தது. அவர்களின் இல்லங்களே பணிச்சாலைகளாகவும் இருந்தன. பொன், வெண்கலம், மரம், இரும்பு, சுதை என்னும் ஐவகைப்பொருட்களில் கலைவடிக்கும் ஐந்து விஸ்வகர்மக் குலங்களுக்கும் தனித்தனியாக தெருக்கள் இருந்தன. நடுவே மகாசிற்பியான விஸ்வகரின் உயரமான மாளிகை வெண்ணிறமான குவைமாடத்துடன் தெரிந்தது. ஒவ்வொரு விஸ்வகர்மக் குருகுலமும் தனக்குரிய கொடிகளை இல்லங்களுக்குமேல் பறக்கவிட்டிருந்தன. பலநூறு உலோகங்கள் ஒன்றாக ஒலிக்கும் இரைச்சல் அங்கிருந்து எழுந்தது.

தெற்குக் கோட்டையை ஒட்டி இருபக்கமும் பிரிந்த நிலத்தில் ரதங்களைப் பூட்டி ஓட்டிப்பார்க்கும் பெருமுற்றங்களும் குதிரைகளைப் பழக்கும் உபமுற்றங்களும் இருந்தன. ரதங்கள் ஓடும் ஒலியும் புழுதியும் அங்கிருந்து எழுந்தன. காலையிலேயே ரதங்களைப் பார்க்கச்சென்றிருந்த வீரர்களும் பெருங்குடிகளும் அதனுடன் இணைந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர். கொற்றவையின் ஆலயம் அம்முற்றங்களுக்கு அப்பால் கோட்டையின் அருகே இருந்தது.

மேற்குக்கிளை முழுக்க வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும் குழுமிய இல்லங்கள். மேற்குக்கோட்டை வாயிலுக்கு அடியில் இருந்த கல்லால் ஆன திறப்பு வழியாக நீர் சுழிக்கும் வாய்க்கால் ஒன்று உள்ளே வந்து வரிசையாக இருபக்கமும் கிடந்த பெரிய குளங்களை நிறைத்தது. அந்தக்குளங்களின் கரைகளில் அமைந்த தெருக்களில் வரிசையாக அமைந்த வேளாண்மக்களின் புல்வேய்ந்த பெரிய வீடுகளும் தொழுவங்களும் நீரில் பிரதிபலித்து நெளிந்தன. கோடையின் உச்சத்தில் குளங்கள் பாதிக்குமேல் வற்றி சுற்றிலும் செந்நிறச் சேற்றுப்படலம் வெடித்துப்பரவி தெரிந்தன.

கிழக்கே செல்லும் சாலை முழுக்கவே வணிகர்களிடமிருந்தது. இருபக்கமும் விரிந்து சென்ற அனைத்துத் தெருக்களும் கடைவீதிகள். அந்நேரத்தில் காலையில் விற்கப்படும் பொருட்களுக்கான நெரிசல் அங்கிருந்தது. பொதிகளை ஏற்றிய மாட்டுவண்டிகளும் அத்திரிகளும் மக்களை முட்டி வழி பிளந்து சென்றன. வணிகர்கள் தங்கள் பொருட்களுக்காகக் கட்டியிருந்த பலவண்ணக் கொடிகளால் அனைத்துத் தெருக்களும் கொன்றையும் அரளியும் செண்பகமும் வேங்கையும் பூத்து அடர்ந்த காடுபோலத் தோற்றமளித்தன. தேனீக்கூடு போல அப்பகுதி இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது.

கிழக்குக் கோட்டையின் வலப்பக்கம் அரண்மனைக்குரிய நந்தவனம் பெரிய மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே பூமரங்களும் கனிமரங்களும் செறிந்த பசுமை நுரையெழுந்த கோப்பை போல நிறைந்து வழிந்தது. மறுபக்கம் முக்கண்ணன் ஆலயமும் விண்ணளந்தோன் ஆலயமும் அன்னபூரணியின் ஆலயமும் நிரையாக அமைந்திருந்தன. கவிழ்ந்த தாமரைமுகடுகள் கொண்ட மரக்கட்டடங்கள் அவை. சிவனுக்கு செந்நிறமும் விஷ்ணுவுக்கு பொன்னிறமும் அன்னைக்கு பச்சைநிறமும் கொண்ட முகடுகள். இரண்டாம் கால பூசனைக்காக மணியோசை எழுந்துகொண்டிருந்தது அங்கே.

விதுரன் கோட்டைமீதிருந்த பாதை வழியாகச் சென்றான். கோட்டைமேல் நூற்றுக்கணக்கான கைவிடுபடைகள் நிரைவகுத்து நின்றன. அவனைப்போல இரண்டு ஆள் நீளமும் இடுப்பளவுக்கு பருமனுமுள்ள விற்களில் யானைத்தோல்பட்டைகளால் ஆன நாணில் நூற்றுக்கணக்கான அம்புகள் யானைகளால் முறுக்கப்படும் சகடை வடங்களைக்கொண்டு ஏற்றி இறுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரேசமயம் தொடுக்கும் விசையில் பிணைக்கப்பட்ட கயிற்றின் மேல் புறாக்கள் அமர்ந்து கிணைத்தோலில் வருடும் ஒலியை எழுப்பின.

"கோட்டைக்குமேல் இப்போது எத்தனை பொறிவிற்கள் உள்ளன?" என்றான் விதுரன். வஜ்ரபாகு "கிழக்குக் கோட்டையில் மட்டும் நாநூறு பொறிவிற்கள்... மேற்கிலும் தெற்கிலும் நூறு. வடக்கே பத்து" என்றான். "ஒரு வில்லில் எத்தனை அம்புகள்?" வஜ்ரபாகு "முந்நூறு" என்றான். "பன்னிரண்டாயிரம் அம்புகளை நாம் ஒரு நொடியில் எறியமுடியும் அல்லவா?" வஜ்ரபாகு "ஆம் அமைச்சரே. அடுத்த அரைநாழிகையில் அடுத்த பன்னிரண்டாயிரம் அம்புகளை ஏற்றவும் முடியும்" என்றான். "கையால் எய்யப்படும் அம்புகளை விட மும்மடங்கு தொலைவுக்குச் செல்லக்கூடியவை இவை...இருமடங்கு நீளமும் கொண்டவை. யானைமத்தகங்களையே இவை துளைக்கும்."

கோட்டைக்குக் கீழே மரத்தாலான மேடைகளில் மேலும் இருமடங்கு பெரிய இயந்திரவிற்கள் இருந்தன. அவற்றை வளைப்பதற்கான வடங்கள் செக்குபோன்ற சகடைகளில் சுற்றப்பட்டு நின்றன. ஒவ்வொரு சகடைக்கு அருகிலும் ஒரு யானை நின்றது. "அவை எரியம்புகளுக்கானவை" என்றான் வஜ்ரபாகு. "அந்தக் கற்தொட்டிகள் எரிநெய் நிறைப்பதற்கானவை." "எரிநெய் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது?"

"போர்க்களஞ்சியத்தில் ஐந்தாயிரம் தொட்டிகள் எரிநெய் எப்போதுமிருக்கவேண்டுமென்பது விதி" என்றான் வஜ்ரபாகு. "மீன்நெய்யா அவை?" என்று விதுரன் கேட்டான். "மீன்நெய்யும் ஊன்நெய்யும் சரிவரக் கலந்தவை. எரியத்தொடங்கினால் எவ்வளவு விரைவாக வானில் சென்றாலும் அணைவதில்லை" வஜ்ரபாகு சொன்னான். "நெய்ச்சட்டிகளை நேரடியாகவே ஏவும் முக்தயந்திரங்கள் நூறு இங்கே உள்ளன. மரத்தாலான சட்டிகளில் எரிநெய் நிறைத்து அவற்றை வானில் எறிந்து மறுபக்கமிருக்கும் குறுங்காட்டில் பரப்புவோம். எரியம்புகளும் சென்று விழும்போது காடே பற்றிக்கொள்ளும்."

மறுபக்க வாயில் வழியாக விதுரன் கீழே இறங்கினான். கைவிடுபடைகள் முழுக்க புறாக்களின் எச்சம் பரவியிருந்தது. "இவற்றை தூய்மை செய்வதில்லையா?" என்றான். "தூய்மைசெய்வது சற்று கடினமான பணி அமைச்சரே. கைத்தவறுதலாக அம்புகள் எய்யப்பட்டால் உயிர்ப்பலி நிகழும். மறுபக்கம் கிழக்கு ரதசாலை. அங்கே எந்நேரமும் சாரிசாரியாக மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றான் வஜ்ரபாகு. "இரவில் செய்யலாமே" என்று விதுரன் கேட்டான். வஜ்ரபாகு ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று ஆள் உயரமான கனத்த மூங்கிலால் ஆன விற்கள் குவிக்கப்பட்டிருந்தன. "இவற்றை யார் எய்வது?" என்று விதுரன் கேட்டான். "இவை சங்கதனுக்கள். இருவர் பிடித்துக்கொள்ள மூவர் நாணேற்ற ஒருவர் அம்பைச்செலுத்துவார்..." விதுரன் "நம்மிடம் விஷ அம்புகள் உண்டா?" என்றான். "மூவகை விஷங்கள் உள்ளன. ஜீவம் அஜீவம் ரசாயனம் என அவை சொல்லப்படுகின்றன. ஜீவம் நாகரசத்தில் இருந்தும் தேள்விஷத்தில் இருந்தும் சிலவகை மீன்களில் இருந்தும் எடுக்கப்படுகிறது. அவை பெரிய குடுவைகளில் மூடப்பட்டு தெற்குத்திசை குளத்தின் நீராழத்தில் போடப்பட்டுள்ளன. அவற்றை எப்போதும் குளிராக வைத்திருக்கவேண்டும்" என்றான் வஜ்ரபாகு.

'அஜீவ விஷங்கள் எண்வகைத் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை இங்கேயே ரசநிலையங்களில் புதைக்கப்பட்டுள்ளன. ரசாயனங்கள் பன்னிருவகை. அவை களஞ்சியத்தில் உள்ளன. அவற்றைக் கையாளும் நூறு விடகாரிகளின் குடும்பங்கள் இங்கே உள்ளன. நாகரசம் எடுப்பதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான நாகங்களை வளர்க்கிறார்கள்."

பெரிய மரமேடைகளில் தவம்செய்யும் அரக்கர்களைப்போல அமர்ந்திருந்த கைவிடுபடைகள் வழியாக விதுரன் நடந்தான். ‘கொலை கொலை கொலை’ என அவை தங்களுக்குள் சொல்லிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. கோட்டைக்கு முன்னாலிருந்த முற்றத்துக்கு அப்பால் இரண்டடுக்கு மாளிகையாக ஆயுதசாலை இருந்தது. அதைத் திறக்கச்சொல்லி உள்ளே சென்றான்.

புழுதிபடிந்த பெருங்கூடம் நிறைய வாள்களும் வேல்களும் அடுக்கப்பட்டிருந்தன. துருப்பிடிக்காமலிருக்கும்பொருட்டு அவற்றின்மேல் பூசப்பட்டிருந்த ஊன்நெய் உறைந்து அழுகி சடலங்கள் அழுகிக்கொண்டிருப்பது போன்ற தீயநாற்றத்தை எழுப்பியது. "இவற்றை சாணைதீட்டவே ஒரு மாதத்துக்கும் மேலாக ஆகிவிடும் போலிருக்கிறதே" என்றான் விதுரன். "இல்லை அமைச்சரே, ஆயுதங்களை சாணைதீட்டுவதைப்போல வீரர்களை உவகைகொள்ளச் செய்யும் பிறிதொன்றில்லை. ஒரேநாளில் அவர்கள் இவையனைத்தையும் கூராக்கிவிடுவார்கள்."

விதுரன் கோட்டை வாயிலை நோக்கி நின்ற காவல்கோபுரத்தில் ஏறி அதன் விளிம்பில் நின்று அந்த கொலைக்கருவிகளை நோக்கினான். பல்லாயிரம்பேரைக் கொல்லும் வல்லமை கொண்டவை. பல்லாயிரம் நிகழாக்கொலைகள் தங்கள் கணம் காத்துக் கனிந்திருக்கின்றன. வெயிலில் அவற்றின் கூர்நுனிகள் நீர்த்துளிகள் போல மின்னிக்கொண்டிருந்தன. சில கணங்களில் அந்த ஒளியைத்தவிர அங்கே எதுவுமில்லை என்று தோன்றியது.

மீண்டும் தன் ரதத்தில் விதுரன் ஏறிக்கொண்டபோது வஜ்ரபாகு "அமைச்சரே, நான் வினவுவது பிழை எனில் பொறுத்தருளவேண்டும்" என்றான். "போர் வருகிறதென நான் நம்பலாமா?"

விதுரன் "போர் வந்துதானே ஆகவேண்டும்? இத்தனை ஆயுதங்களுக்கும் உரிய தேவதைகள் வானிலிருந்து வேண்டிக்கொள்வது அதைத்தானே?" என்றான். "ஆம், உண்மை" என்றான் வஜ்ரபாகு. "அத்துடன் இத்தனை ஆயுதங்கள்மேலும் படிந்திருக்கும் தூசியையும் களிம்பையும் நாம் நீக்கவேண்டுமல்லவா?" என்று சிரித்தபின் விதுரன் ரதம் நகர கைகாட்டினான்.

விதுரன் புஷ்பகோஷ்டத்துக்குச் சென்றபோது அங்கே வாசலிலேயே அம்பிகையின் ஏவலன் விப்ரன் நின்றிருந்தான். அவனை நோக்கி ஓடிவந்து, "அரசி பத்துமுறைக்கும் மேல் தங்களை அழைத்துவரச்சொன்னார்... நான் தங்களைத் தேடினேன். தங்களைத் தேடுவது பேரரசிக்குத் தெரியக்கூடாதென்பதனால் நான் வெளியே எவரிடமும் சொல்லவும் முடியவில்லை" என்றான். "ஏன்?" என்று விதுரன் கேட்டான். விப்ரன் "சினம்தான்...காரணத்தை நான் அறியேன்" என்றான்.

விதுரன் அரண்மனை முகமண்டபத்துக்குள் சென்றதும் அவன் வருகையை உப்பரிகையிலிருந்து பார்த்துவிட்டிருந்த அம்பிகை மூச்சிரைக்க இறங்கி வந்தாள். "நீ எங்கே சென்றாய்? அம்பாலிகையைப் பார்க்கத்தானே?" என்றாள். விதுரன் "இல்லை அரசி.... நான் கோட்டைக்காவலைப் பார்க்கச்சென்றிருந்தேன்" என்றான். "இல்லை. நீ பொய் சொல்கிறாய்...நீ அம்பாலிகையைப் பார்த்தாய்." விதுரன் "நான் பார்த்தது உண்மை, அது நேற்றுமாலை" என்றான்.

அம்பிகை சினத்துடன் "அவளை நீ ஏன் பார்க்கவேண்டும்? அப்படியென்றால் நீ அவளுக்கா உதவிசெய்கிறாய்?" என்றாள். "அரசி, நான் பேரரசியிடம் பணியாற்றுகிறேன். நான் எவருக்கும் ஆதரவானவனோ எதிரானவனோ அல்ல" என்றான் விதுரன்.

"இந்தப் பொய்ப்பேச்செல்லாம் என்னிடம் தேவையில்லை. நீ ஆதரிப்பது அவள் மைந்தனையா என் மைந்தனையா? யாரை அரசனாக எண்ணுகிறாய்?" என்று அம்பிகை உரக்கக் கேட்டாள். விதுரன் திடமாக "அரசி, இப்போது அஸ்தினபுரி பேரரசி சத்யவதியால் ஆளப்படுகிறது. முடிவெடுக்க வேண்டியவர் அவர். நான் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவன்" என்றான்.

அவன் உறுதி அவளைத் தணியச்செய்தது. "உனக்கு செய்தி தெரியுமா? காந்தார நாட்டுக்கு பீஷ்மர் செல்லப்போவதில்லையாம். பலபத்ரரைத்தான் அனுப்புகிறாராம். அதாவது காந்தாரத்து இளவரசியை என் மைந்தனுக்கு மணமுடிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. பேரரசி சொன்னதனால் செய்கிறார்" என்றாள். "இந்த நாட்டின் எதிர்காலம் காந்தாரத்துடன் உள்ள மண உறவில் உள்ளது. அதற்காக பீஷ்மர் செல்லாவிட்டால் என்ன பொருள் அதற்கு?"

"அச்செய்தியை நான் இப்போதுதான் அறிகிறேன் அரசி... நான் அதைப்பற்றி அவரிடம் பேசுகிறேன்" என்றான் விதுரன். "அரசர் ஆதுரசாலை விட்டு வந்துவிட்டாரா?" அம்பிகை "வந்துவிட்டான். இசைச்சாலையில் இருக்கிறான்" என்றாள். விதுரன் நடந்தபோது பின்னால் வந்தபடி "பீஷ்மர் செல்லவில்லை என்றால் நானே செல்வேன். சௌபாலனான சகுனியிடம் நானே பேசுவேன்... இல்லை நானே ஓலைகொடுத்தனுப்புவேன்" என்றாள்.

"அந்தப்புரச்சேடிகள் சொல்லும் ஆலோசனைகளின்படி நாடாளமுடியாது அரசி" என்றான் விதுரன். "சகுனியும் அதை அறிந்திருப்பார். தாங்கள் இன்று இவ்வரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தங்கள் சொல்லுக்கு அரசுமதிப்பு என ஏதுமில்லை."

அம்பிகை அவன் தோளைப்பிடித்து நிறுத்தி "என் எல்லை என்ன என்று எனக்குத்தெரியும். என் வல்லமை என்ன என்றும் தெரியும்... என் வலிமையென்ன என்றால் இந்நாட்டின் மூத்த இளவரசரின் அன்னை என்பதுதான். நான் சொன்னால் அவன் கேட்பான் என்பது அனைவருக்கும் தெரியும். சகுனியிடம் நான் என் தூதனை அனுப்புகிறேன். அவனிடம் நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். அஸ்தினபுரியின் அரசை என் மகன் முழுமையாகக் கைப்பற்ற சகுனி தன் படைகளை அளிப்பானென்றால் அவன் தங்கையை மணம்கொண்டு அவன்நாட்டின் சமந்தநாடாக அஸ்தினபுரியை அறிவித்து திருதராஷ்டிரன் ஆட்சி செய்வான்."

விதுரன் திகைத்து நின்றுவிட்டான். "அரசி, இது அநீதி. அஸ்தினபுரி ஒருபோதும் கப்பம் கட்டியதில்லை. புரூரவஸின் காலம் முதல் இது பிறரை ஆளும் நகராகவே இருந்திருக்கிறது" என்றான். "அதைப்பற்றி நான் கவலைகொள்ளவில்லை. இந்நாடு என் மைந்தனுக்குரியது. அதை எக்காரணம்கொண்டும் நான் இழக்கப்போவதில்லை. சமந்தநாடாக கப்பம் கட்டினால் என்ன? அவன் மணக்கும் அரசியின் தம்பிக்குத்தானே அந்தக் கப்பம் செல்கிறது? அஸ்தினபுரியை காப்பதற்கான ஊதியம் அது என்று கொண்டால்போதும்."

அவளுடைய முகத்தைப்பார்த்தபோது விதுரனுக்கு அச்சமாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் என்ன ஆகிறது என்று எண்ணிக்கொண்டான். அதை அறிந்தவள்போல அம்பிகை "என் வாழ்க்கையில் நான் அடைந்த ஒரே நலம் என் மைந்தன் மட்டுமே. அவன் அரியணை ஏறினானென்றால் என் வாழ்க்கைக்கு ஏதேனும் பொருள் உண்டு என்று கொள்வேன். இல்லையேல் நான் பாலையில் வழிதவறி உலர்ந்த ஒரு ஆறுதான்... அவனுக்கு விழியில்லை. அவனால் பிறர் உதவியின்றி ஆளமுடியாது. ஆனால் காந்தார இளவரசியின் வயிற்றில் ஒருகுழந்தை பிறந்து அவன் மாவீரனாக வந்தால் அவன் அஸ்தினபுரியை மீண்டும் பேரரசாக ஆக்கமுடியும்..."

"அனைத்தையும் சிந்தித்துவிட்டீர்கள் அரசி. ஆனால் ஒன்றை விட்டுவிட்டீர்கள். பீஷ்மரின் இச்சைப்படி அன்றி இங்கு ஏதும் நிகழாது" என்றான் விதுரன். "அதையும் சிந்தித்துவிட்டேன். காந்தாரம் படைகொண்டுவரட்டும். என் மைந்தனின் ஆதரவுப்படைகளும் இணைந்துகொள்ளும். பீஷ்மரையும் சத்யவதியையும் சிறையில் தள்ளிவிட்டு என் மகன் அரசேற்கட்டும்."

விதுரன் புன்னகை செய்துவிட்டான். அம்பிகை "உன் புன்னகைக்கு என்னபொருள் என்று எனக்குத்தெரிகிறது. அரசை இழந்துவிட்டு அரண்மனையில் வாழ்வதைவிட என் மைந்தன் போரில் இறப்பதையே நான் விரும்புவேன்" என்றாள்.

"இறப்பைப்பற்றிப் பேசுமளவுக்கு இங்கே என்ன நிகழ்ந்துவிட்டது? பீஷ்மபிதாமகரிடம் நான் தங்கள் விருப்பைத் தெரிவிக்கிறேன். நானறிந்தவரை அவர் உங்கள் மைந்தர் காந்தார இளவரசியை வென்று அரசாள்வதையே இன்றுவரை விரும்புகிறார்" என்றான் விதுரன்.

"அப்படியென்றால அதை அவரே செய்யும்படி நீயே சென்று சொல்" என்றாள் அம்பிகை. "நான் நேற்றே காந்தார இளவரசியைப்பற்றி விசாரித்தேன். அனைத்துத் தகுதிகளும் கொண்டவள். வாளும் வேலும் யானையும் குதிரையும் கற்றவள். என்னைப்போல அந்தப்புரப்பெண் அல்ல. நாடாளும் கலையறிந்தவள். அவள் வந்தபின் சத்யவதி இன்றுபோல ஆதிக்கம் செலுத்த முடியாது. என் மைந்தனுக்கு அவளும் இவ்வரியணையும் வேண்டும்..."

"நான் அரசரிடம் சில சொற்கள் பேசலாமென்று வந்தேன்" விதுரன் சொன்னான். "ஆதுரசாலைக்கு கூட்டிச்செல்லச் சொல்கிறேன். அவனிடம் என் திட்டங்களைச் சொல்லிவிட்டேன்" என்றாள் அம்பிகை.

நூல் இரண்டு : கானல்வெள்ளி

[ 5 ]

அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான்.

"அரசே, தங்கள் உடல்நலம் பற்றி..." என விதுரன் தொடங்கியதும் "நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்" என்றான் திருதராஷ்டிரன்.

"இல்லை அரசே... நான்" என விதுரன் மீண்டும் தொடங்க திருதராஷ்டிரன் கையைத்தூக்கி "சற்று தாமதமாகுமென்றாலும் என்னாலும் உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் விதுரா. நான் நேற்று என் அன்னை சொன்னபோது நம்பவில்லை. ஆனால் இன்றுபகல் முழுக்க சிந்தனைசெய்தபோது மெதுவாக என் மனம் திறந்தது. சூதனை அழைத்து பீஷ்மபிதாமகரின் பழைய போர்களைப் பற்றிக் கேட்டேன். அவர் பால்ஹிகரிடம் போரிட்டிருக்கிறார். பலாஹாஸ்வரிடம்கூட போரிட்டிருக்கிறார். வலிமை இருந்தாலும் எந்தப் போர்ப்பயிற்சியும் இல்லாத என்னை அவரால் எளிதில் வெல்லமுடியும் என்று உனக்குத் தெரியாமலிருக்காது."

"ஆம் தெரியும்" என்று விதுரன் சொன்னான். "ஆனால் இந்தப்போரை நான் வேறு ஒரு திட்டத்துடன்தான் அணுகினேன்" என்றான். "அரசே, பீஷ்ம பிதாமகர் சென்ற பதினெட்டு வருடங்களாக இந்நகரில் இல்லை. அவரை இன்றுள்ள தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள். அவருக்கு இந்நகர் மீதுள்ள உரிமை என்ன என்று எவருக்கும் தெரியாது. இன்றுகூட அவருக்கென ஒரு கொடி இல்லை. கங்கர்களின் மீன்கொடியே அவருக்கும் இருக்கிறது. அஸ்தினபுரியுடன் அவருக்கு இன்று எந்த உறவும் இல்லை."

"ஆம்" என்றான் திருதராஷ்டிரன். "அரசே, இன்று உங்களுக்கு முடிசூட்டி ஆதரிக்கவேண்டியவர் அவர். அவர் சொன்னால் இந்நகரம் அதை ஏற்கவேண்டும். இதற்குள் அவர் உங்களைப் போரில் வென்ற கதை அஸ்தினபுரியில் பாடப்பட்டிருக்கும். உங்களைப்போரில் வென்றவர் விவாதசந்திரத்தின் விதிப்படி இந்நகரின் அரசனேயாவார். இம்மணிமுடியை எவருக்கு அளிக்கவும் அவர் உரிமை பெற்றவர்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையசைத்தான்.

"அவரோ நாடாளமாட்டேன் என சூளுரைத்தவர். ஆகவே அவர் அளிப்பதே அரசாட்சி. இனி அவரை நாம் நம் பக்கம் இழுத்தாலே போதும். பாண்டுவோ பிறரோ எந்த நெறிநூலையும் இனி உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்ட முடியாது. பீஷ்மர் உங்களுக்கு அரசை அளிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் பீஷ்மரிடம் போர் புரிந்தாகவேண்டும். அதுதான் நூல்நெறி" விதுரன் தொடர்ந்தான்.

"ஆனால் அவர் பாண்டுவுக்கு அரசை அளித்தால் நான் என்ன செய்யமுடியும்?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் "அவர் மூத்தவர் நீங்களிருக்க ஒருபோதும் இளையவருக்கு அரசளிக்கமாட்டார். அவர் இந்நாட்டின் பிதாமகர். அவருக்கு அந்த இடம் அவர் இக்குலநெறிகளை மீறமாட்டார் என்பதனால்தான் அளிக்கப்பட்டிருக்கிறது" என்றான்.

திருதராஷ்டிரன் ஐயத்துடன் தலையை அசைத்து "என்னால் இதையெல்லாம் புரிந்துகொள்ளமுடியவில்லை. இவற்றையெல்லாம் கேட்கையில் என் தலை பாறைபோல கனக்கிறது" என்றான். "நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை அரசே. நான் உங்களுக்காகப் பேசுகிறேன்" என்றான் விதுரன். "பீஷ்மபிதாமகரின் ஆசியுடன் தாங்கள் அரியணை ஏறவேண்டும். காந்தார இளவரசியையும் அடையவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன்."

திருதராஷ்டிரன் தலையை அசைத்தான். "விதுரா உண்மையில் என் நெஞ்சிலிருந்து பிற அனைத்தும் விலகிவிட்டன. பிதாமகர் என்னைத் தூக்கி அறைந்த அதிர்ச்சி மட்டும்தான் என் உடலிலும் நெஞ்சிலும் உள்ளது. அப்படியென்றால் என் உடலின் ஆற்றலுக்கெல்லாம் என்ன பொருள்? எல்லாம் ஒரு தோற்றம்தானா? என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா? என் உடலில் ஒரு குழந்தை அடித்தாலே உடைந்துவிடும் நரம்புமையங்கள் உள்ளன என்றால் நான் வளர்த்து வைத்துள்ள இந்த மாமிசமெல்லாம் எதற்காக?"

தலையைச் சரித்து ஆட்டிக்கொண்டே பேசிய திருதராஷ்டிரன் திடீரென வெறி எழுந்து பேரொலியுடன் தன் மார்பை அறைந்தான். விதுரன் திடுக்கிட்டு பின்னகர்ந்தான். திருதராஷ்டிரன் தன் கைகளால் தன் மார்பையும் தலையையும் மாறி மாறி அறைந்துகொள்ளத் தொடங்கினான். சிறுவனாக இருந்த காலம் முதலே அது அவன் வழக்கம். தன் உடலை தானே தொட்டுக்கொள்வதும் அறைந்துகொள்வதும். வருடத்தொடங்கினாலும் அறையத்தொடங்கினாலும் அவனே நிறுத்திக்கொண்டால்தான். தன்னத்தானே தொடுவதன் மூலம் தானிருப்பதை அவன் உணர்வதாகத் தோன்றும்.

எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் அந்தக்காட்சி விதுரனை தொடைநடுங்கச் செய்தது. தன் கரிய பெருங்கைகளால் தன்னையே வெடிப்பொலியுடன் அறைந்து கொண்டிருக்கும் பேருருவத்தைப் பார்த்தபடி அவன் பின்னடைந்து சுவரில் ஒட்டி நின்றான்.

களைப்புடன் திருதராஷ்டிரன் தலையை முன்னால் சரித்து இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான். அவனிடம் தன்னிரக்கம் ஊறி கணம் கணமாகப் பெருகியது. "நான் சாகவிரும்புகிறேன் விதுரா... நான் இன்றுவரை உயிர்வாழ்ந்தமைக்குக் காரணம் ஒன்றுதான், என் வலிமைமீதான நம்பிக்கை. நான் உண்பதைக் கண்டு அத்தனைபேரும் திகைக்கிறீர்கள் என்று எனக்குத்தெரியும். என் தோள்களையும் கைகளையும் கண்டு என்னருகே வரவே அஞ்சுகிறீர்கள் என்றும் அறிவேன். அந்தத் தன்னுணர்ச்சிதான் நான். இப்பிறவியில் நான் வேறொன்றும் அல்ல. என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் ஒரு பேராற்றல் என்றுதான் எண்ணிக்கொள்வேன். அந்த ஆற்றல் ஒரு மாயை என்றால் நான் வெறும் மாமிச மலைதானே? உணவை மலமாக ஆக்குவது மட்டும்தானே இந்த உடலின் வேலை? நான் சாகவிரும்புகிறேன்."

அவனுடைய சதைக்கண்கள் தத்தளித்து உருண்டன. அவற்றிலிருந்து சேற்றுக்குழியில் நீர் ஊறி வடிவதுபோல கண்ணீர் வடிந்தது. "என்னைக் கொன்றுவிடச் சொல்... ஒரு ஏவலனைக்கொண்டு என் கழுத்தை வெட்டச்சொல். நான் வாழவிரும்பவில்லை. புழுவாக நெளிந்துகொண்டு இங்கே இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் பிதாமகர் கொல்லாமல் விட்டார்? கொன்றிருந்தால் நான் அந்தக் களத்திலேயே இறந்திருப்பேன். என்னுடையவை என நான் கொண்டிருந்த அனைத்து அகங்காரத்தையும் இழந்து இப்படி தூக்கி வீசப்பட்ட அழுகிய பொருள்போல கிடக்கமாட்டேன்... இல்லை கண்ணில்லை என்பதனால் கொல்லவும் தகுதியற்ற இழிபிறவி என என்னை நினைத்தாரா?"

மீண்டும் வெறிகொண்டு தன் இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அறைந்து கொண்டு பற்களைக் கடித்தான் திருதராஷ்டிரன். யானை தேங்காய் ஓட்டை மெல்வது போன்ற அந்த மெல்லிய ஒலி விதுரனை கூசச்செய்தது. "ஆனால் நான் சாவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. துவந்தயுத்தமே தேவையில்லை. மீண்டும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் செல்கிறேன். அவரைக் கொல்லமுயல்கிறேன். அவர் என்னைக் கொல்வார். அது அவருக்கும் பாவமல்ல. எனக்கும் எளிய சாவு... விதுரா, நான் விரும்புவது எல்லாம் ஆயுதத்தால் வரும் ஒரு சாவை மட்டும்தான். குருடனாக நோயில் சாகாமல் நான் களத்தில் சாகவேண்டும்..."

"அரசே, இந்தச் சிந்தனைகள் உகந்தவை அல்ல" என்றான் விதுரன். "உகந்ததோ இழிந்ததோ நானறியேன். இச்சிந்தனையைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை இப்போது. இரவும் பகலும் இதையே கற்பனைசெய்கிறேன். என் வாழ்க்கை இழிந்தது என்றாகிவிட்டது. என் சாவு வீரனுக்குரியதாக இருந்தால் போதும்." அவன் இரு கைகளையும் விரித்து 'ஆ' என அடிபட்ட மிருகம்போல வீரிட்டான்.

அவனுடைய கரிய உடலில் இருந்து புற்றிலிருந்து ராஜநாகங்கள் எழுவதுபோல கைகால்கள் நெளிந்தன. தலையைச் சுழற்றியபடி தசைக்கூட்டங்கள் அதிர அவன் ஓலமிட்டான். விதுரன் திகைப்புடன் பார்த்துநின்றான். பார்வையின்மை மட்டும்தானா அந்த மூர்க்கத்தைக் கிளப்புகிறது? அப்படியென்றால் மனிதனை மனிதக்கட்டுக்குள் வைத்திருப்பவை விழிகள்தானா?

அம்பிகை உள்ளே வந்து "என்ன ஆயிற்று? கூச்சலிடுகிறான் என்று விப்ரன் சொன்னானே" என்றாள். திருதராஷ்டிரன் எதிர்பாராத கடும் சினத்துடன் அவளை நோக்கித் திரும்பி "வெளியே போ பேயே... நீதான் என் வாழ்க்கையை அழித்தாய். உன்னுடைய இருட்டையெல்லாம் என் மேல் ஏற்றிவைத்தாய்" என்று கூச்சலிட்டான். "நான் உன்னுள் தேங்கிய இருட்டு. உன்னுடைய தமோகுணமெல்லாம் என் உடம்பாகியது... உன் ஆசைகளையும் பொறாமைகளையும் காழ்ப்புகளையும் என்மேல் சுமத்திவிட்டாய். போ வெளியே போ! உன் குரல் கேட்டால் உன்னை அப்படியே நெரித்துக்கொன்றுவிடுவேன்."

அம்பிகை குரோதம் கொண்ட முகத்துடன் முன்னால் வந்தாள். "கொல்... கொல்பார்க்கலாம். உன் கையால் நான் சாவேன் என்றால் அதுதான் என் முக்தி... மூடா, உன் மூர்க்கத்தனத்துக்கு எல்லை வகுக்கத்தான் தெய்வங்கள் உனக்கு கண்ணைக் கொடுக்கவில்லை. நீ என்னை வெறுப்பதைவிட நான் உன்னை வெறுக்கிறேன். கோட்டைக்கோபுரம் போல வளர்ந்தும் கிழவரிடம்போய் அடிவாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்... வெட்கமில்லாத பிறவி... மிருகம்" என்றாள்.

வெறியுடன் எழுந்த திருதராஷ்டிரன் தன் இருகைகளையும் படீரென்று அறைந்துகொண்டான். தள்ளாடி முன்னகர்ந்து குறுக்கே வந்த தூணில் முட்டி அதை ஓங்கி அறைந்தான். அது கட்டிடத்துடன் சேர்ந்து அதிர்ந்து சுண்ணம் உதிர்ந்தது. ‘ஆஆஆஆ’ என தாக்கவரும் யானை போல ஓசையிட்டு தலையை ஆட்டினான். விதுரன் நடுநடுங்கி மிகவும் பின்னால் நகர்ந்துவிட்டான். ஆனால் அம்பிகை அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். "இதோ இங்கே நிற்கிறேன்... வா! வந்து அறைந்து என்னைக் கொல்... ராட்சதனைப் பெற்ற பாதாளப்பிறவி நான். எனக்குரிய சாவுதான் அது" என்று கழுத்துத் தசைகள் அதிர தலையைச் சற்று முன்னால் நீட்டியபடி சொன்னாள்.

மேலும் இரண்டு காலடி எடுத்துவைத்தபின் திருதராஷ்டிரன் நின்று தன் தலையை இருகைகளாலும் ஓங்கி அறைந்தான். திரும்பி கீழே கிடந்த மரத்தாலான கனத்த பீடத்தைத் தூக்கி தன்னை அறைந்துகொள்ளப்போனான். விதுரன் அலறினான். அம்பிகை விதுரனை திகைக்கவைத்த அஞ்சாமையுடன் முன்னால் சென்று திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டாள். "தார்த்தா, வேண்டாம். வேண்டாம் மகனே" என்றாள். "வேண்டாம் நில்" என்றாள்.

திருதராஷ்டிரன் கனத்த பீடத்தை தரை உடையும்படி வீசிவிட்டு பின்னால் நகர்ந்து அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான். அவள் அவனருகே விழுந்து அவன் முழங்கால்களைப் பற்றிக்கொண்டு "வேண்டாம் மகனே. எல்லாம் நான் செய்த பிழை. எனக்குள் என்ன இருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. நான் தேடுவதென்ன, எது கிடைத்தால் என் அகம் நிறையும், எதுவுமே தெரியவில்லை. இருபதாண்டுகாலமாக உள்ளூர எரிந்துகொண்டிருக்கிறேன். அந்தத் தீதான் உன் கண்களைக் கருக்கிவிட்டது" என்று அழுதாள்.

அவன் தலையை கைகளால் அணைத்து அவன் தோள்களில் முகம் சாய்த்து அவள் அழுதாள். "உன்னை அரசனாக்க வேண்டுமென்று நான் விரும்புவது அதற்காகத்தான். உன்னை அனாதையாக இன்னொருவர் தயவுக்கு விட்டுவிட்டு நான் இறந்தேன் என்றால் சொர்க்கத்திலும் எனக்கு அமைதி இருக்காது. உன்னை இந்நாட்டுக்கு அரசனாக ஆக்குவதுதான் நான் உனக்குச் செய்யும் பிழையீடு."

திருதராஷ்டிரனின் கனத்த கரம் மலைப்பாம்பு போல நீண்டு வந்து அவள் தலையை வளைத்தது. அவள் கன்னங்களையும் தோள்களையும் கழுத்தையும் கைகளையும் அவன் கைகள் மெதுவாக வருடின. குயவனின் கைகள் களிமண்ணை அறிவதுபோல அவளை அறிந்தான். அவனுடைய வருடல்களை இருபதாண்டுகளாக நன்கறிந்திருந்த அவள் தன் உடலை அவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். அவன் கைகள் அவளை பதற்றத்துடன் தீராத தவிப்புடன் தடவிச்சென்றன. அவள் அவன் தோளில் முகம் வைத்து கண்களை மூடிக்கொண்டாள். கண்ணுடன் அவன் உலகுக்குள் புகமுடியாதென்பதுபோல. அவர்கள் விதுரன் இருப்பதை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தனர்.

விதுரன் அந்தக்காட்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். தன் அன்னையை அதைப்போல தான் தொட்டு எவ்வளவு நாளாகிறது என்று எண்ணிக்கொண்டான். அம்பிகை அடையும் இந்தப்பேரின்பத்தை முலையூட்டும் நாட்களில் மட்டுமே பிற அன்னையர் அறிந்திருப்பார்கள். தீராத கைக்குழந்தையாக அவனை மடியிலிட்டு வளர்க்க அவளுடைய அகம் ஏங்கியிருக்கும். அந்த ஏக்கமே அவனை விழியிழந்தவனாக ஆக்கி அவளுக்குப் பரிசளித்திருக்கும். உறவுகளை உருவாக்கித்தந்து மனிதர்களுடன் விளையாடும் பிரஜாபதி யார்?

அம்பிகை கண்விழித்து விதுரன் நிற்பதைப்பார்த்து வெட்கி புன்னகை செய்தாள். எழுந்துகொண்டு திருதராஷ்டிரனிடம் "எழுந்திரு... அரசர்கள் தரையில் அமரக்கூடாது" என்றாள். திருதராஷ்டிரன் ஒரு கையை தரையில் ஊன்றி எழுந்தான். அம்பிகை விதுரனிடம் "இவன் புஜங்களைப்பிடிக்கையில் எனக்கு அச்சமாக இருக்கிறது. என் இரு கைகளைக் கொண்டும்கூட பிடிக்க முடியவில்லை" என்றாள். அவள் பேச்சு வழியாக சற்று முன் சென்ற உன்னதத்தை தனக்குள் மறைத்துக்கொள்ள விழைகிறாள் என்று விதுரன் நினைத்துக்கொண்டான்.

"நான் உங்கள்மேல் சினம்கொண்டிருக்கக் கூடாது அன்னையே" என்றான் திருதராஷ்டிரன். "ஆனால் நான் எவரிடம் சினம் கொள்வதென்றும் தெரியவில்லை... என் உடலும் நீங்களும் மட்டுமே இருக்கிறீர்கள் எனக்கு" என்றான். தலையை ஆட்டியபடி "என் உடல் கோட்டை போலிருக்கிறது. இதற்குள் நான் சிறையுண்டிருக்கிறேன்... நினைவறிந்த நாள்முதல் இதன் மூடிய சுவர்களை அறைந்துகொண்டிருக்கிறேன்..."

"ஹஸ்தி ஆண்ட இந்நகரம் இருக்கிறது உனக்கு... நீ அதன் மன்னன்" என்றாள் அம்பிகை. "ஆம், அன்னையே. எனக்காக அல்ல. உங்களுக்காக. உங்களை பேரரசி ஆக்குவதற்காக நான் இந்நகரை கைப்பற்றுவேன். அதற்காக பிதாமகனையோ மூதன்னையையோ எவரைக்கொல்லவும் அஞ்சமாட்டேன்" என்றான் திருதராஷ்டிரன். அவள் கைகளைப்பிடித்து ஆட்டியபடி "உங்களுக்காக இந்த உலகை அழிப்பேன்... உலகையே அழிப்பேன்" என்றான்.

விதுரன் "அரசி, நான் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. பீஷ்ம பிதாமகரை காணவேண்டும். தங்கள் விருப்பத்தையும் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்" என்றான். அம்பிகை திருதராஷ்டிரனிடம் "ஓய்வெடு தார்த்தா. உன் உடல் களைத்திருக்கிறது" என்று சொல்லி அவனை மஞ்சம் நோக்கி இட்டுச்சென்றாள். அவள் விடை தராததனால் விதுரன் வெளியே சென்று காத்திருந்தான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்தாள். விப்ரன் யாழேந்திய இரு சூதர்களுடன் உள்ளே சென்றான்.

"துயில்கிறான்" என்று அம்பிகை சொன்னாள். "நான் மிகவும் அஞ்சிவிட்டேன்" என்றான் விதுரன். "நீயும் அவனும் பதினெட்டு வருடங்களாக சேர்ந்திருக்கிறீர்கள். அவன் இதுவரை ஒருமுறையேனும் உன்மீது சினம் கொண்டிருக்கிறானா?" என்றாள் அம்பிகை. விதுரன் சிந்தித்ததுமே வியந்து "இல்லை அரசி" என்றான்.

"எனக்கு நிகராக உன்மீதும் அவன் பேரன்பு கொண்டிருக்கிறான். நான் நேற்று உன்னைப்பற்றி சினத்துடன் பேசியபோது தரையை ஓங்கி அறைந்தான். பேசாதே, என் தம்பி நான் சாகவேண்டுமென விரும்பினால் நான் சாவையே தேர்ந்தெடுப்பேன் என்று கூவினான்" என்றாள் அம்பிகை.

விதுரன் வேறு திசையை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான். "என் மைந்தனின் மனம் கடல்போன்றது. அவனிடம் சிறுமை வாழாது. அதை நான் நன்றாக அறிவேன்" என்றாள் அம்பிகை. அவள் குரல் சற்று இறங்கியது. "என்னுடைய தீயூழ் அவனுக்கு அன்னையானேன். என்னுடைய அனைத்து சிறுமைகளையும் பதினெட்டாண்டுகளாக அவன் தாங்கி வருகிறான்." அவளால் பேசமுடியவில்லை.

விதுரன் "சற்றுமுன் நீங்களிருவரும் இருந்த நிலையைக் கண்டேன் அன்னையே. கன்றை நக்கும் பசுபோல அரசர் உங்களை அறிந்துகொண்டிருந்தார். நீங்கள் ஏழுபிறவியின் நல்லூழை அடைந்தவர் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். அன்னையே நீங்கள் இழந்தவை அனைத்தும் அவர் வடிவில் வரவில்லையா? பத்து ஆண்மகன்களின் ஆற்றல். நூறு ஆண்மகன்களின் அன்பு... விழியிழந்தவரின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன?" என்றான்.

அம்பிகை உதடுகளை கடித்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு "நீ பீஷ்மரிடம் சென்று என்ன சொல்லப்போகிறாய்?" என்றாள். விதுரன் பேசாமல் நின்றான். "அவரிடம் பேசிப்பார். அவர் ஒப்புக்கொண்டாரென்றால் அனைவருக்கும் நல்லது. இல்லையேல் நான் என் வழியில் செல்வேன்" என்றாள். ஆசியளித்துவிட்டு அம்பிகை திரும்பி நடக்க விதுரன் அவளை சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான்.

விதுரன் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். களஞ்சியத்தில் பணிகள் மிகுந்திருப்பதை எண்ணிக்கொண்டான். அத்தனை பணிகள் இல்லாமல் அவனால் நிறைவாக இருக்க முடிவதில்லை. ஆனால் பணிகளை அவன் விரும்பவுமில்லை. ஊற்றில் தேங்கும் நீரை அள்ளி இறைப்பதுபோலத்தான். பணிகள் வழியாக எஞ்சிய ஆற்றலை இறைத்து முடிக்கவில்லை என்றால் மறுநாள் காலை உடலும் உள்ளமும் சுமையாகிவிடுகின்றன. குதிரைகள் அதற்காகத்தான் ஓடுகின்றன. பீஷ்மர் அதற்காகத்தான் ஆயுதங்களைப் பயில்கிறார்.

அரண்மனைக்கோட்டை முகப்பை அடைந்தபோதுதான் விதுரன் எங்கும் ஒரு பரபரப்பை உணர்ந்தான். உற்சாகமான குரல்களுடன் வீரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வண்டிகளில் விதவிதமான ஆயுதங்களும் பொருட்களும் முன்னும்பின்னும் சென்றன. எதிர்ப்பட்ட அனைத்து வீரர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியும் வேகமும் தெரிந்தன. ரதத்தை மெல்ல ஓட்டச்சொல்லிவிட்டு பார்த்தபடியே சென்றான். உருக்கி ஊற்றப்பட்ட உலோகம்போல வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அதில் நிழல்கள் துரத்திவர மக்கள் விரைந்துகொண்டிருந்தனர்.

நாற்சந்தியில் சூதப்பாடகன் பாடிக்கொண்டிருந்தான் "வருகிறது பெரும்போர்! பாரதத்தை வெல்ல அஸ்தினபுரி என்னும் புலி குகைவிட்டெழுகிறது. வில்நாண்கள் இறுகட்டும். இறுகட்டும் உள்ளங்கள். அம்புநுனிகள் மின்னட்டும். மின்னட்டும் விழிமுனைகள்!" சிலகணங்கள் திகைத்தபின் விதுரன் அனைத்தையும் புரிந்துகொண்டான். அங்கே சூதனைச் சூழ்ந்திருந்த குடிமக்களின் பற்களும் கண்களும் ஒளியுடன் தெரிந்தன.

"இது கோடை. எரிகிறது நிலம். பதறிப்பதுங்குகின்றன பறவைகள். அனல் பொழிந்து திசைகளை மூடுகிறது. ஆனால் தெற்குவானில் மின்னல்கள் எழுகின்றன. துயிலெழப்போகும் சிம்மம் போல வானம் மெல்ல முழங்குகிறது" சூதன் குரல் எழுந்தது. "வரப்போகிறது மழை! விண்ணின் கங்கைகள் மண்ணிறங்கப் போகின்றன. பெருவெள்ளம் கோடிசர்ப்பங்களாக படமெடுத்து தெருக்களை நிறைக்கும். கோட்டைக்கதவுகளை உடைக்கும். அரண்மனை முகடுகளை மூழ்கடிக்கும். அரியணைகளைத் தூக்கி வீசும்!"

"மாகதன் அஞ்சி வாயிலை மூடுகின்றான். பாஞ்சாலன் அறைக்குள் பதுங்கிக்கொண்டான். மாளவன் கப்பத்தை இப்போதே எடுத்துவைத்துவிட்டான். அங்கன் தன் மகளை அலங்கரிக்கிறான். வங்கன் பயந்து ஓடிவிட்டான்." கூச்சல்கள், சிரிப்புகள். நாணயங்களை அள்ளி சூதனின் பெட்டியில் போட்டு குதூகலித்தனர். "பார்தவர்ஷம் அஞ்சிய குழந்தை அன்னையை காத்திருப்பது போல அமர்ந்திருக்கிறது இதோ!"

விதுரன் ரதத்தை ஓட்டினான். புழுதி பறந்த தெருக்களில் வெயில்காய்ந்த சுவர்ப்பரப்புகளிலிருந்து அனல் வந்து நிறைந்திருந்தது. குதிரைகளில் வந்த நான்கு படைவீரர்கள் சந்தையை ஒட்டி நின்றுகொண்டிருந்த குடிகாரர்களிடம் "கிளம்புங்கள்... நாற்சந்திகளில் கூடி நிற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்... ரதங்களுக்கு வழிவிடுங்கள்" என்று கூவினார்கள். எவரையும் தீண்டாமல் சாட்டையைச் சுழற்றியபடி குதூகலித்துச் சிரித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றனர்.

மனித ஆயுதங்கள். அவற்றுக்குப் பொருள்வருவதே போரில் மட்டும்தான். போரில் இறப்பதே அவற்றுக்கான முழுமை. விதுரன் சிரித்தபடியே நகரினூடாக கருவூலம் நோக்கிச் சென்றான்.

நூல் இரண்டு : கானல்வெள்ளி

[ 6 ]

மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை அவன் கண்டடையும் தருணம். அவன் ஈடுபடும் முதல் அரசியல் மதிவினை. அவனைவிட வல்லமைவாய்ந்த இருவர் அதை ஆடுகிறார்கள். அதில் அவன் ஈடுபடாமலிருக்க முடியாது. அதிலிருந்து தன் சிந்தனையை விலக்கவே அவனால் முடியாது. ஒருவேளை அவன் வாழ்க்கையில் பிறகு உளவேகத்துடன் நினைவுகூரும் நாட்களாக இவை இருக்கலாம்.

பின்மதியத்தில் நகரமெங்கும் மெல்லிய நீராவிபோல ஏதோ நிறைந்து மூச்சுத்திணறச்செய்தது. மதில்சுவர்களில் அமர்ந்திருந்த காகங்கள் தாகத்தால் தவிப்பவை போல செந்நிறமான உள்நாக்குகளைக் காட்டி அலகுதிறந்து பதைக்கும் அடித்தாடையுடன் அமர்ந்திருந்தன. பசுக்களின் கண்களில் நீர்வழிந்த தடங்கள் ஆழமாகப் பதிந்திருந்தன. மொத்த நகரமும் மழைக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கணமே மழை பெய்யும் என்பது போன்ற இறுக்கம் ஒவ்வொருநாளும் நீடித்து ஒருசிலதுளிகள் வானிலிருந்து சொட்டுவதில் முடிந்தது.

ரதம்சென்ற வழியெல்லாம் பீஷ்மரிடம் பேசவேண்டிய சொற்களை எண்ணியவாறே விதுரன் சென்றான். காந்தாரத்துக்கு மணம்பேச அவரே செல்லவில்லை என்பது உண்மையானசெய்தி என்பதை அவன் முந்தையநாளே உறுதிப்படுத்தியிருந்தான். அப்படியென்றால் காந்தாரத்துடனான மண உறவு அவருக்கு உடன்பாடானதல்ல என்றுதான் பொருள். அவரது மனநிலையை அவனால் கணிக்கமுடிந்தது. ஆனால் அதை அவர் எப்படி செயலாக ஆக்கப்போகிறார் என்றுதான் புரியவில்லை. அவரை அவன் தெரிந்திருந்தான், அறிந்திருக்கவில்லை. பதினெட்டாண்டுகளாக ஒவ்வொருநாளும் கேட்டறிந்து கொண்டிருந்த மனிதர். ஒரு புராணக் கதைமாந்தர்போல.

பீஷ்மரின் ஆயுதசாலையில் ஹரிசேனன் அவனை வரவேற்றான். "நான் பிதாமகரைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்றான். ஹரிசேனன் "பொறுங்கள் அமைச்சரே. அமருங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். பீஷ்மரிடம் சொல்லிவிட்டு திரும்பிவந்து அவர் படைக்கலப் பயிற்சியில் இருப்பதாகவும் உபசாலையில் காத்திருக்கும்படி ஆணையிட்டதாகவும் சொன்னான். உள்ளே ஆயுதங்கள் மோதும் உலோகஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

பீஷ்மரின் உபசாலை மிக எளிமையாக இருந்தது. எந்த நேர்த்தியும் இல்லாத மரப்பொருட்கள். அழகற்ற பணிக்கருவிகள். மூலையில் மடங்கிப்போன வாட்கள். பீஷ்மர் ஒரு துறவியின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார் என நினைத்துக்கொண்டான். எந்த மனிதனுக்கும் ஒரு போகம் உண்டு. செல்வத்தில், பெண்ணில், கலையில், அதிகாரத்தில், அகங்காரத்தில். இந்த மனிதரின் போகம் எது? அவையெதிலுமே அவருக்கு ஈடுபாடிருப்பதுபோலத் தெரியவில்லை. அவர் தனிமைசூழ்ந்தவர் என்றார்கள். காட்டில் வேட்டையாடுகையில் மிகவும் மகிழ்வுடன் இருப்பார் என்றார்கள். அப்படியென்றால் அவர் தன்னை தானே அருந்துபவர்.

அந்த எண்ணம் வந்ததும் விதுரன் மலர்ந்தான். ஆம், அதுதான். அதைத்தவிர வேறில்லை. அதுதான் அவரை அலையவைக்கிறது. விதவிதமான வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. அவருடைய பகற்கனவுகளில் அவர் எண்ணற்ற வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார். போகியாக, குடிகாரனாக, துறவியாக, வேளிராக, ஆயனாக, வணிகனாக வாழ்கிறார். தன் அகக்கற்பனைகளால் தன்னை முழுமையாக நிறைத்துக்கொள்கிறார். அவர் அஸ்தினபுரியின் பிதாமகர் அல்ல. அது அவரது ஓடுதான். உள்ளே அவர் ஒரு மனிதத் திரள்.

பீஷ்மர் அரசசூழ்ச்சியை அறிந்தவரல்ல என்றுதான் சூதர்கள் சொன்னார்கள். நேரடியான உள்ளம் கொண்டவர் என்றும் முறைமைப் பேச்சுக்களையும் முகத்துதிகளையும் விரும்பாதவர் என்றும் சொன்னார்கள். அவருடன் பேசிய முதல்நாளிலேயே அவருக்கு மனிதர்களைப்பற்றி தெரிந்துகொள்ள புதியதாக ஏதுமில்லை என்று அவன் மதிப்பிட்டிருந்தான். அவரை எளிய காங்கேயன் என்று எண்ணுவது பிழை.

உடம்பில் வியர்வை வழிய சால்வையால் துடைத்தபடி பீஷ்மர் வந்தார். அப்பால் அவரது சீடர்கள் கலையும் பேச்சொலி கேட்டது. விதுரன் அவரை வணங்கி முகமன் சொன்னான் "தங்களை சந்திக்கும் பேறு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது."

பீஷ்மர் பீடத்தில் அமர்ந்தபடி "உன் வருகையை எதிர்நோக்கி இருந்தேன்" என்றார். புன்னகையுடன் "நீ விளையாடும் முதல் அரசியலாடல் இது. உன்னால் எங்கும் அமரமுடியாது. நீ அம்பாலிகையையும் அம்பிகையையும் சந்தித்திருப்பாய். ஆனால் பேரரசியை சந்தித்திருக்கமாட்டாய். ஏனென்றால் இதை நீயே முடிக்க விரும்புகிறாய்."

விதுரன் புன்னகைத்து "பிதாமகர் இதை ஊகித்தது எனக்கும் வியப்பளிக்கவில்லை" என்றான். "அதை விட நேரடியாக என்னிடம் சொன்னது இன்னும் எதிர்பார்த்ததுதான்." பீஷ்மர் சிரித்தார். "பிதாமகரே, நான் தங்களிடம் என் தமையனின் தூதனாக வந்திருக்கிறேன். அவர் காந்தார நாட்டு இளவரசியை மணப்பதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்" என்றான்.

பீஷ்மர் புன்னகை செய்தார். விதுரன் "தங்களைப்போலவே நானும் நேரடியாகவே பேச விரும்புகிறேன் பிதாமகரே. தாங்கள் காந்தாரநாட்டுக்கு செல்லப்போவதில்லை என்றும் பலபத்ரரை அனுப்பவிருக்கிறீர்கள் என்றும் அவருக்கு செய்தி சென்றிருக்கிறது" என்றான்.

"அதில் மந்தணம் ஏதுமில்லை. பலபத்ரர் நாளைக்காலை காந்தாரநாட்டுக்குச் செல்கிறார்" என்றார் பீஷ்மர். விதுரன் "அது அரசமுறையே" என்றான். "ஆனால் தாங்கள் நேரடியாகச் சென்று காந்தார மன்னரிடம் பேசவில்லை என்றால் தூது பலிக்காது என்பதை அனைவரும் அறிவர்" என்றபின் "பேரரசிக்கு அதை எவரும் சொல்லவேண்டியதே இல்லை" என்றான்.

"அன்னை அதை அறியட்டும் என்றுதான் நான் பலபத்ரரை அனுப்புகிறேன்" என்றார் பீஷ்மர். "இந்த மணம் நிகழ்வதை நான் விரும்பவில்லை."

"இருநாடுகளுக்குமே நல்லது இந்த மண உறவு" என்று விதுரன் சொன்னான். "தாங்கள் அறிந்திருப்பீர்கள். சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அஸ்தினபுரியின் வரிச்செல்வத்தில் வளர்ச்சி இல்லை. இருபத்தைந்தாண்டுகளாக சீராக வீழ்ச்சி தென்படுகிறது. நாடு ஒரு பொருள்துறை அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்."

பீஷ்மர் "அதை நான் நேற்று பேரரசி பேசும்போதே உய்த்தறிந்தேன். கங்கைக்கரை நாடுகள் மேல் படைகொண்டுசென்று வெல்ல திட்டமிடுகிறார் அவர். கங்கைக்கரையின் அனைத்துச் சந்தைகளையும் துறைகளையும் கைப்பற்ற நினைக்கிறார்" என்றார். "ஆம், அது ஒன்றே வழி" என்றான் விதுரன்.

பீஷ்மர் "நீயும் உன் அமைச்சர்குழுவும்தான் அவருக்கு இந்த எண்ணத்தை அளித்திருப்பீர்கள் என நான் உணர்ந்தேன். பெண்களின் இயல்பு எதிலும் தன் தனியுணர்ச்சிகளையும் கலந்துகொள்வது... அதையே பேரரசியும் செய்கிறார். இப்படையெடுப்பில் தன் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்" என்றார். "அதை நான் அனுமதிக்கமுடியாது. பாரதவர்ஷத்தில் போரைக்கொண்டுவர நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்."

"பிதாமகரே, நீங்கள் பேரரசியை வெறுமொரு பெண்ணாக நினைக்கிறீர்களா என்ன?" என்றான் விதுரன். பீஷ்மர் "ஒருபோதும் இல்லை. ஆனால் பெண்ணாக நினைக்கிறேன். ஆண்களைவிட இருமடங்கு சிறப்பாக பெண்களால் அதிகாரத்தைக் கையாளமுடியும். மும்மடங்கு கூர்மையாக அரசியல் மதிவினைகளில் ஈடுபட முடியும். நான்குமடங்கு கவனத்துடன் பொருளியலை நடத்தமுடியும்... அதற்கு வாழும் உதாரணம் நம் பேரரசி" என்றார்.

"ஆனால் ஆட்சியாளனுக்கு இவற்றில் எந்தத்திறனும் இல்லாமலிருக்கலாம். ஒன்றுமட்டும் அவசியம் தேவை. அதை பெருந்தன்மை என்று சொல்லலாம். சிறியவற்றுக்கு அப்பால் நின்றுகொண்டிருத்தல். அதேசமயம் சிறியவர்களை பொறுத்தருளவும் சிறியவர்களை விரும்பவும் மனம் கொண்டிருத்தல். வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே" என்றார் பீஷ்மர்.

தன் கருத்துக்களாலேயே முன்னெடுக்கப்பட்டு பீஷ்மர் சொன்னார் "பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா? என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை..."

அவர் சிலகணங்கள் சாளரம் வழியாக நோக்கியபடி தாடியை நீவினார். "...அதிலும் தன்னை தனிமைப்படுத்தப்பட்டவளாக எண்ணும் பெண் மிக ஆபத்தான ஆட்சியாளர். அவள் எவரையும் நம்புவதில்லை. தன்னையும் தன் குலத்தையும் நிலைநாட்ட அவள் எதையும் செய்வாள்."

"அன்னையைத் தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள் பிதாமகரே" என்றான் விதுரன். "ஆனால் அவரது கனவுகள் அவரையும் அவரது குலத்தையும் நிலைநிறுத்துவதற்கானவை மட்டும் அல்ல. பாரதவர்ஷம் பற்றிய கனவு ஒன்று அவர் நெஞ்சில் உள்ளது." பீஷ்மர் "ஆம் அதை நான் அறிவேன். அதற்காகவே நான் அவரது கருவியாக இருக்கிறேன். ஆனால் அதன்பொருட்டு இங்கே ஒரு குருதிநதி ஓடுவதற்கு நான் துணைநிற்க முடியாது."

"தங்கள் எண்ணம் என்ன?" என்று விதுரன் கேட்டான். "பேரரசி என்னிடம் சொல்லிவரக்கூடிய அவரது கனவுக்கு இயைந்த ஒரு மண உறவு. பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் ஏதேனும் ஒரு புதிய அரசகுலத்தில் பெண்ணெடுப்போம். இன்னும் ஷத்ரியநிலையை அடையாத சூத்திர அரசகுலங்கள் பல உள்ளன. கூர்ஜரம், சூரசேனம், மாத்ரம்... சூத்திர அரசகுலங்கள் எழுந்து வரவேண்டுமென்றுதானே அரசி விரும்புகிறார்கள். ஏன் மகதத்திடமே நாம் மணம்பேசமுடியும். நீ சொன்னாயே மகதம் வல்லமை மிக்க அரசாக வரும் என்று. உன் பேரன்னை மகதத்தை அழிக்க நினைக்கிறார். நான் மகதத்துடன் ஒரு மணவுறவின்வழியாக அவர்களை வெல்ல நினைக்கிறேன்."

"ஆனால் நம் அரசர் விழியிழந்தவர்" என்றான் விதுரன். பீஷ்மர் "ஷத்ரியத் தகுதி பெறாத அரசர்களுக்கு நம்முடன் ஒரு மணவுறவு என்பது பெரிய வாய்ப்பு. ஆகவே மன்னருக்கு விழியில்லை என்பதை அவர்கள் பெரிதுபடுத்தப்போவதில்லை. உண்மைதான், மகதம் எளிதாக ஒப்புக்கொள்ளாது. ஆனால் நாம் ஏன் முயன்றுபார்க்கக் கூடாது?" என்றார். பீஷ்மர் முடிவெடுத்துவிட்டார் என்பதை விதுரன் புரிந்துகொண்டான். இவரை வெல்லமுடிந்தால் தன் மதிசூழ்கையின் முதல்பெரும் வெற்றியாக அது அமையும் என்று தோன்றியது.

"பிதாமகரே, தங்கள் எண்ணத்தை முழுமையாகவே ஏற்கிறேன். தங்கள் கருணையும் பெருநோக்கும் என்னை மகிழ்விக்கின்றன. ஆனால் சென்ற பதினெட்டாண்டுகளில் இங்கே நிகழ்ந்தவை தங்கள் அறிதலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஷத்ரிய அரசுகளுக்கிடையே பூசல் எப்போதும் இருப்பதுதான். அவையெல்லாம் எளிய குலச்சண்டைகள், ஆணவமோதல்கள். அவர்களால் பாரதவர்ஷம் எப்போதும் குருதியில் நனைந்தபடியும் இருக்கிறது. ஆனால் சென்ற பதினைந்தாண்டுகாலத்தில் வங்கம் வழியாக வரும் பெருநாவாய்கள் வழியாக விரிவான வணிகம் உருவாகி வருகிறது. மாமிசத்துக்குப் போரிடும் செந்நாய்க்கூட்டம் போல ஷத்ரியகுலம் அச்செல்வத்துக்காக சண்டையிடுகிறது. சென்ற ஐந்துவருடங்களில் ஷத்ரியர்கள் நடுவே இருபத்தெட்டு போர்க்ள் நடந்திருக்கின்றன. சென்ற மாதம்கூட வங்கத்தின் படகுகளை மகதம் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறது. மகதம் மீது வங்கமும் கலிங்கமும் இணைந்து போர்தொடுக்கக்கூடுமென பேசிக்கொண்டிருக்கிறார்கள்" விதுரன் சொன்னான்.

"இச்சூழலில் நாம் எந்த நாட்டுடன் மண உறவுகொண்டாலும் அந்தநாட்டின் அனைத்து எதிரிகளையும் நாமும் பெறுவோம். அந்த மணவுறவால் நாம் பெறும் செல்வத்தையும் நட்பையும் விட போரும் பகையும்தான் அதிகம்" என்று விதுரன் தொடர்ந்தான். "அத்துடன் உருவாகிவரும் சூத்திர அரசுகளுடன் நாம் மணவுறவு கொண்டோமென்றால் நாம் இங்கு ஒரு சூத்திரமன்னர்களின் கூட்டை உருவாக்கமுனைகிறோம் என்றே ஷத்ரியர் புரிந்துகொள்வார்கள். நமக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெல்ல நம்மிடம் நிதிவல்லமை இன்றில்லை."

பீஷ்மர் சொல் என்பதுபோல தாடியை நீவியபடி பார்த்தார். "அத்துடன் நாம் ஏதேனும் வழியில் செல்வத்தைப் பெருக்கியாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். வேள்நிலங்களையும் ஆய்நிலங்களையும் நாம் இனிமேல் பெருக்க முடியாது. நாம் வணிக எல்லைகளை மட்டுமே பெருக்க முடியும். அதற்கு நம்மிடம் இன்னும் வல்லமை வாய்ந்த நாவாய்கள் தேவை. நம்முடைய படைபலமும் பெருகியாகவேண்டும்."

அவரைக் கூர்ந்து நோக்கியபடி விதுரன் சொன்னான் "அனைத்துக்கும் உரிய தீர்வு காந்தாரத்தின் மணவுறவில் உள்ளது. நம் படைபலமும் நிதிபலமும் பெருகும். கங்கை வணிகத்தை அதைக்கொண்டு விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும். நமக்கும் காந்தாரத்துக்கும் உறவு உருவானால் நம்மை ஷத்ரியர்கள் அஞ்சுவார்கள். போரைத் தவிர்ப்பதற்கான வழி என்பது அதுவே." சிறிய இடைவெளி விட்டு விதுரன் "பேரரசி சொல்வதுபோல நாம் படையெடுக்க வேண்டியதில்லை. நம்முடைய படைபலம் உருவாக்கும் அச்சமே போதும். நாம் மகதத்தையும் வங்கத்தையும் பணியச்செய்து நமக்குரிய உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம்" என்றான்.

"நீ ஒரு சிறந்த மதியூகி" என்று பீஷ்மர் புன்னகை செய்தார். "நீ என்ன சொன்னாலும் ஏற்கலாகாது என முடிவெடுத்திருந்த என்னையே மறுசிந்தனைக்குக் கொண்டுசென்றுவிட்டாய்!" முன்னால் நகர்ந்து அவன் தோளில் கையை வைத்தார். "ஆனால் நீ சொல்வதை நான் ஏற்கமுடியாது. இரு காரணங்கள். ஒன்று உள்ளூர நீயும் உன்னுடைய பேரரசியைப்போல போருக்கான விழைவுடன் இருக்கிறாய். நீ இன்று படைக்கலங்களை பார்வையிட்டு அனைத்தையும் சித்தமாக்கி வைக்க ஆணையிட்டாய் என்று எனக்குச் செய்தி வந்தது."

விதுரன் பேச முற்பட பீஷ்மர் கையமர்த்தி தொடர்ந்தார் "வணிகத்தை மேம்படுத்த நான் வேறுவழி வைத்திருக்கிறேன். போரே இல்லாமல் நாம் வளரும் வழி. இந்த கங்கைவழியில்தான் இத்தனை அரசுகள் உருவாகியிருக்கின்றன. காரணம் இந்நிலம் நீர்வளம் மிக்கது. தென்கிழக்கே மகதமும் வங்கமும் தெற்கே கலிங்கமும் நம்மைவிட வலிமைகொண்டு வருவது அதனால்தான். ஆனால் மேற்கே சப்தசிந்துவுக்கு அப்பால் வறண்ட பாலைநிலம். அதேசமயம் கங்கையை விடப்பெரிய சிந்துவின் பெருக்கு இருக்கிறது. அதன் எல்லையில் தேவபாலத் துறைமுகம் இருக்கிறது. அங்கே வங்கத்துக்கும் கலிங்கத்துக்கும் வரும் உலகவணிகர்கள் அனைவரும் வந்து கூடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நீர்வழியை நிறைக்கும் அளவுக்கு கூர்ஜரத்திடம் பொருள்வளம் இல்லை."

பீஷ்மர் தொடர்ந்தார் "நான் நேரில்சென்று அனைத்தையும் பார்த்துவிட்டு வருகிறேன். நாம் கூர்ஜரத்துடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்வோம். நமக்கு வரும் செல்வத்தில் நாலில் ஒருபங்கை கூர்ஜரத்துக்கு நீர்வழிக்கான வரியாகக் கொடுப்போம். நம்முடைய வணிகம் பலமடங்கு பெருகும்... சிந்துவின் கைவழிகள் இங்கிருந்து அருகேதான் என்பது நமக்கிருக்கும் பெரும் வாய்ப்பு. அதை நாம் பயன்படுத்திக்கொள்வோம்."

விதுரன் பெருமூச்சுவிட்டான். புன்னகையுடன் "இதை உன் தோல்வி என எண்ணாதே இளையவனே, இது ஒரு அரசியல் நிலை. அவ்வளவுதான். நான் உன்னளவுக்கு கூரிய அரசியல் மதியூகிகளை சந்தித்ததில்லை" என்றார் பீஷ்மர்.

விதுரன் "பிதாமகரே, இறுதித் தோல்வி தங்களுக்கே. உங்களால் இறுதிப்பெரும்போரை ஒத்திவைக்கத்தான் முடியும். நிறுத்தமுடியாது. ஒருவேளை சிறிய போர்கள் நிகழ்ந்தால் அந்தப்பெரும்போர் நிகழாமல் போகலாம்" என்றான். அவரது கண்களை நோக்கி விதுரன் சொன்னான் "அஸ்தினபுரி பிறநாடுகளை வென்று பேரரசாக ஆகுமென்றால் அந்தப் பெரும்போர் நிகழாது தடுக்கமுடியும்... அது ஒன்றே நம் முன் இருக்கும் வாய்ப்பு."

"இளையவனே, நான் முதியவன். எல்லா முதியவர்களும் தங்கள் வாழ்நாள்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். நான் இறந்தபின் அந்தப் பெரும்போர் நிகழுமென்றால் அது இறையாற்றலின் ஆணை. என் கண்முன் அது நிகழ நான் அனுமதிக்க மாட்டேன். எந்தப் போரையும் நான் ஏற்கமாட்டேன்" என்றார் பீஷ்மர். அவரது கண்கள் அந்தரங்கமான வலி ஒன்றைக் காட்டுவன போலச் சுருங்கின. "போரைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே நான் ஒவ்வொரு கணமும் வருந்தும் அநீதி ஒன்றைச் செய்தேன்."

அவர் காசிநாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வந்ததைப்பற்றிச் சொல்கிறார் என்று விதுரன் புரிந்துகொண்டான். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வணங்கிவிட்டு "நான் கிளம்புகிறேன் பிதாமகரே. தங்கள் சித்தம் மாறாதென அறிவேன். ஆனால் இன்றிரவு என் சொற்களை நீங்கள் இன்னொருமுறை சிந்திக்கவேண்டுமென்று கோருகிறேன்" என்றான்.

கைதூக்கி ஆசியளித்து பீஷ்மர் எழுந்தார். அவன் நடந்தபோது அவனுடைய தோள்களில் கையை வைத்தபடி அவரும் கூடவே வந்தார். எத்தனை உயரமான மனிதர் என்று விதுரன் உள்ளூர வியந்துகொண்டான். அதை அவர் உணர்ந்து புன்னகைசெய்து "என் கங்கர் குலத்தில் அனைவருமே உயரமானவர்கள்தான் இளையவனே" என்றார். "கங்கர்கள் இந்தத் தலைமுறையில் தங்கள் உயரத்தை இழந்துவிட்டார்கள்" என்றான் விதுரன்.

"அது ஏன் என நினைக்கிறாய்?" என்றார் பீஷ்மர். "அவர்கள் முன்பு இமயத்தை அண்ணாந்து நோக்கி வாழ்ந்தனர். இப்போது கீழே உள்ள சந்தைகளை நோக்கி வாழ்கிறார்கள்" என்றான் விதுரன். பீஷ்மர் "ஆம், சரியாகவே சொன்னாய்" என்று சொல்லி சிரித்தார்.

அவர்கள் முன்வாயிலுக்கு வந்தபோது திருதராஷ்டிரனின் ரதம் வந்து நிற்பதையும் அதிலிருந்து விப்ரன் இறங்கி திருதராஷ்டிரனை கைப்பிடித்து வெளியே இறக்குவதையும் கண்டான். உடனே பீஷ்மரை அங்கிருந்து விலக்கிவிட்டு திருதராஷ்டிரனை திருப்பியனுப்ப முயல்வதைப்பற்றிய எண்ணம் வந்ததுமே அது முடியாதது என்பதும் விதுரனுக்குத் தெரிந்தது. சந்திப்பு நிகழும்போது அதை எப்படி வழிநடத்துவது என்று அவன் சிந்தனை சென்றது.

பீஷ்மர் வாயிலருகே சென்று அசையாமல் நின்றார். மென்காற்றில் அவரது தாடியும் குழலும் பறந்துகொண்டிருந்தன. அசையாமல் நிற்கையில்தான் அவரது உடல் முழுமை கொள்கிறது என விதுரன் நினைத்துக்கொண்டான். அசைவில்லாது நிமிர்ந்து நிற்பதற்கென்றே பிரம்மன் படைத்த உடல் அது என்பதுபோல. திருதராஷ்டிரன் இறங்கி இரு கனத்த கைகளையும் ஆட்டிக்கொண்டு, முகவாயை சற்று முன்னால் நீட்டியபடி முன்னால் வந்தான்.

விப்ரன் "பிதாமகர்" என்று மெல்லச் சொன்னான். "எட்டடி அப்பால், படிகளில்." விதுரன் திருதராஷ்டிரனை நோக்கிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் சந்திப்பதை இயல்பாக நின்று எதிர்கொள்வதே மேல் என்று அடுத்தகணம் முடிவெடுத்தான். பீஷ்மர் கூர்ந்த பார்வையுடன் ஒரு சொல்கூட பேசாமல் நின்றார்.

திருதராஷ்டிரன் இரு கைகளையும் தன் தலைக்குமேல் தூக்கினான். "பிதாமகரே, ஞானமில்லாத குருடன். ஒன்றுமறியாதவன். நான் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க" என்றபடி அப்படியே முன்னால் சரிந்து கையூன்றி விழுந்தான். தன் சிறிய தலையால் தரையை மீண்டும் மீண்டும் முட்டியபடி "ஞானமற்ற குருடன் பிதாமகரே... எளியவன்... எனக்கு அறிவை புகட்டுங்கள். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பாதங்களே என் தெய்வங்கள்" என்றான்.

பீஷ்மர் தன் கையைத் தூக்கி ஏதோ சொல்லப்போனார். அந்தக் கை நடுங்கவே திரும்ப தொடையுடன் ஒட்டி வைத்துக்கொண்டார். அவரது உதடுகளில் சொற்கள் ததும்புவதை விதுரன் உணர்ந்தான். "எழுந்திரு குழந்தை" என்றபோது அவருடைய தொண்டை அடைத்திருந்தது. "எழுந்திரு" என்று மீண்டும் உரக்கச் சொன்னார். அவரது நெஞ்சு விம்முவதை விதுரன் கண்டான்.

திருதராஷ்டிரன் எழுந்து நெற்றியில் படிந்த மண்ணுடன் கைகூப்பி செங்கனல் துண்டுகள் போன்ற கண்களில் இருந்து நீர் வழிய கைகூப்பி நின்றான். பீஷ்மர் மெதுவாக அவனருகே சென்று அவன் தோளைத் தழுவி தன்னுடன் இறுக்கிக் கொண்டார். "மூடா, எளியவன் என்று என் முன் வந்து எப்படிச் சொல்வாய் நீ?" என்றார். "நீ அஸ்தினபுரியின் பேரரசன். உன் பாதங்களில் பாரதவர்ஷம் வந்து பணியும். என் வில்மேல் ஆணை" என்றார்.

"தங்கள் அருள் மட்டும் எனக்குப்போதும் குருநாதரே. இந்நாள் முழுக்க வேறெதையும் நான் எண்ணவில்லை" என்றான் திருதராஷ்டிரன். "நான் என்றும் உன்னுடன் இருப்பேன். என் வாழ்வின் இறுதிக்கணம் வரை" என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரன் தலை ஆடிக்கொண்டிருந்தது. அவன் கழுத்தில் தசைகள் இழுபட்டு இழுபட்டு அசைய தாடையை கோணலாக கடித்திருந்தான்.

"என் ஆயுதசாலைக்குள் வா" என்றார் பீஷ்மர். "நானறிந்த அனைத்தையும் நீயும் கற்பாய். பாரதவர்ஷத்தில் எவரும் உன்னெதிரே நின்று கதாயுதமெடுக்கமாட்டார்கள்." அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தி அவன் அருகே அவரும் அமர்ந்துகொண்டார். அவனுடைய தோள்களைத் தழுவிய அவரது கைகள் வருடி இறங்கின. "உன்னுடன் மற்போர் புரியும்போது எண்ணிக்கொண்டேன், உன்னை குழந்தையெனத் தூக்கி கையிலிட்டு விளையாடாத குறையெல்லாம் தீர்கிறது என்று... மக்கள் மெய்தீண்டல் பேரின்பம் என்கின்றனர் ரிஷிகள். அதை நேற்று அறிந்தேன்."

"நானும் நேற்று அதையே உணர்ந்தேன் குருநாதரே... தந்தையின் கையால் தண்டித்து வளர்க்கப்படாதவன் நான். அந்தக்குறை நேற்று தீர்ந்தது என்று. உங்கள் கைகளின் தொடுகையை என் உடல் இன்னும் அப்படியே நினைவுகூர்கிறது." அவன் முகம் மலர்ந்தது. "கங்கையின் நீர்ப்பாசி வாசனை உங்கள் வியர்வைக்கு இருக்கிறது. சற்றுமுன்னர்தான் ஆயுதப்பயிற்சியை முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்."

பீஷ்மர் புன்னகையுடன் "வா, இன்றே உன் கல்வியைத் தொடங்குகிறேன்" என்றார். "இன்று ஏழாம் வளர்பிறை. கல்வி தொடங்குவதற்குரிய நாள்." திருதராஷ்டிரன் கைகளை நீட்டியபடி எழுந்தான். பீஷ்மர் அவன் கையைத் தட்டி "கைகளைக் கீழே போடு. கையை நீட்டி நீ நடந்தால் உன் எதிரி தன்னம்பிக்கையை அடைவான். பிறரைப்போலவே இரு. அதுதான் தொடக்கம்" என்றார். "ஆணை" என்றான் திருதராஷ்டிரன்.

"எழுவதற்கு முன் ஒரு கணத்தில் நீ செல்லவேண்டிய திசை என்ன என்பதை முடிவெடு. அங்கிருந்து வரும் வாசனையையும் ஒலிகளையும் கொண்டு அங்கிருப்பது என்ன என்பதை உன்னால் உணரமுடியும். அனைத்துப் பொருட்களும் காற்றில் இருக்கின்றன என்பதை மறவாதே. ஒன்று காற்று அதைநோக்கிச் செல்கிறது அல்லது அதிலிருந்து வருகிறது. காற்றை உணர்ந்தால் நீ அனைத்துப் பொருட்களையும் உணரமுடியும். கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறியமுடியும்."

திருதராஷ்டிரன் எழுந்து நின்று செவிகூர்ந்தான். "தனுர்வேதத்தில் இதை பிரதிருஷ்டி என்கிறார்கள். மெய்யை கண்ணாக்குதல். ஏனென்றால் போரில் வீரனுக்கு கண் உதவாது." பீஷ்மர் தொடர்ந்தார் "இக்குருகுலத்தின் நியதிகளில் ஒன்று, ஒருமுறைக்குமேல் எதுவுமே சொல்லப்படாது என்பதுதான். அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது. அனைத்தும் செயலாகவே நிகழவேண்டும்."

"நான் எதையுமே கற்றதில்லை குருநாதரே" என்று திருதராஷ்டிரன் சொன்னான். "ஆசிரியர்கள் கற்றுத்தரும் எதுவும் எனக்குப் புரியவில்லை. நான் கேட்கும் வினாக்களுக்கு அவர்கள் பதில்சொல்வதுமில்லை." பீஷ்மர் "ஆம், அது அவர்களின் பிழையல்ல. நான் நாளைமுதல் ஒரு முதுசூதரை உன்னிடம் அனுப்புகிறேன். அவர் பெயர் தீர்க்கசியாமர். அவரது ஒவ்வொரு சொல்லும் உனக்குப் புரியும்" என்றார்.

மேலாடையை எடுத்துச் சுழற்றி தன் கண்களைச் சுற்றி கட்டிக்கொண்டார் பீஷ்மர். "உனக்கு நான் கற்பிக்கையில் கண்களில்லாமலேயே கற்பிக்கிறேன். அது நம்மிடையே இன்னும் அணுக்கமான புரிதலை உருவாக்கும்."

விதுரன் மெல்ல "பிதாமகரே, நான் கிளம்புகிறேன்" என்றான். பீஷ்மர் "அவ்வண்ணம் ஆகுக" என்று சொன்னபின்பு திருதராஷ்டிரனிடம் "மனித உடலின் மிக வலிமையற்ற இடம் எதுவென்றால் உடலின் முழு எடையையும் தாங்கும் கணுக்கால்தான். கவனி" என்றார்.

விதுரன் "பிதாமகரே, பேரரசியை நான் இன்றிரவு சந்திப்பேன். தாங்கள் காந்தாரத்துக்குச் செல்லும் செய்தியை அறிவிக்கிறேன்" என்றான். பீஷ்மர் கவனித்து ஆனால் இயல்பாகச் சொல்வதுபோல "ஆம், அறிவித்துவிடு" என்றார். திருதராஷ்டிரனிடம் "ஆகவே ஒருபோதும் நம் கணுக்கால் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் திறந்திருக்கலாகாது" என்றார்.

வெளியே சென்று தன் ரதத்தில் ஏறி மாலை மயங்கிவிட்டிருந்த நகரத்தெரு வழியாகச் செல்லும்போது விதுரன் புன்னகை புரிந்துகொண்டிருந்தான். அந்திபூசைக்காக நகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்க நகரமே நகைப்பது போலிருந்தது.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 1 ]

பீஷ்மர் பலபத்ரரை மட்டும் துணைக்கழைத்துக்கொண்டு தனியாகத்தான் காந்தாரத்துக்குச் சென்றார். அரசமுறையாக செல்வதாக இருந்தால் கூர்ஜரம், சௌவீர நாடுகளிடம் அரசஉத்தரவு வாங்கவேண்டும். அதற்குள் செய்தி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிவிடும். பீஷ்மருக்கு தூதின் வெற்றியைப்பற்றிய ஐயம் இருந்தது. காந்தாரத்திலும் பிற வடக்கு நாடுகளிலும் உடலூனமுற்றவர்கள் அரசனாக நெறிமுறைகள் ஒப்புக்கொள்வதில்லை. அஸ்தினபுரியில் திருதராஷ்டிரனை அரசனாக்க அது தடையில்லை என்று நிறுவுவதற்கான நூல்களையும் அவற்றின் வரிகளையும் விதுரனிடமிருந்து தெரிந்துகொண்டு சுவடிகளில் பிரதியும் எடுத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவராலேயே அதை முழுமையாக நம்பமுடியவில்லை.

பயணம் முழுக்க பீஷ்மர் ஒருசொல்கூட பேசாமல் மாறிவந்த நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சப்தசிந்துவின் நீர்பெருகிச்சுழித்த ஆறுகளையும் அவற்றைச்சூழ்ந்து கிடந்த அறுவடை முடிந்த சேற்று வயல்களையும் எருமைகள் நிழல்களாகச் சூழ்ந்த சிற்றூர்களையும் அவர்கள் தாண்டிச்சென்றனர். மூலத்தானநகரியிலிருந்து சிபிநாட்டுப்பாதையில் சென்று மேலும் தென்மேற்காகத் திரும்பினர். மண்ணின் நீர்வளம் முழுமையாகவே மறைந்தது.

கிராமங்கள் ஆங்காங்கே தெரிய பிற இடங்களில் புல்பரவிய செந்நிறமான வீண்நிலம் விரிந்திருந்தது. கழுதைகளும் வண்டிகளும் செல்லும் வணிகப்பாதையில் ஒரு யோஜனை தூரத்துக்கு ஒருமுறை குடிநீர்த் தொட்டிகளும் குதிரைகள் நீரரருந்தும் சிறிய குளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை நடத்தும் குடும்பமும் அருகே வாழ்ந்தது. அவ்வழிச்செல்பவர்கள் அனைவரும் அவர்கள் வைத்திருந்த குடத்தில் ஒரு செம்புநாணயத்தைப் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமென விதியிருந்தது.

பீஷ்மரும் பலபத்ரரும் அங்கே புல்லரிசிக்கூழ் அருந்திக்கொண்டிருந்தபோது மெலிந்து வளைந்த ஒருவன் அவர்களை நோக்கி வந்து "வணங்குகிறேன் வீரரே. நான் இப்பகுதியில் புகழ்பெற்ற வித்யுதத்தன் என்னும் பிராமணன். என்னை அனைவரும் இப்பகுதியின் வழிகளையும் ஊர்களையும் உள்ளங்கைபோல அறிந்தவன் என்று சொல்கிறார்கள்" என்றான்.

பீஷ்மர் சிரித்து "உங்கள் உள்ளங்கையில் இரு பெரும் ரேகைகளும் சேர்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள் பிராமணரே" என்றார். வித்யுதத்தன் திகைத்து "சேர்கிறது" என்றபின் தன் கையைப்பார்த்து "சேரவில்லை" என்றான். பீஷ்மர் புன்னகையுடன் "இதைப்போலத்தான் வழிகளையும் அறிந்திருக்கிறீர், இல்லையா?" என்றார்.

வித்யுதத்தன் வணங்கி "வீரரே, நீங்கள் நூலறிந்த ஷத்ரியர் என நினைக்கிறேன். எனக்கு நூலறிவு இல்லை. என்னை பிராமணன் என்று என் அன்னை ஓரளவுக்கு உறுதியாகச் சொன்னதனால் நான் அதை நம்புகிறேன். ஆனால் எனக்கு நெருப்புரிமையும் சொல்லுரிமையும் இல்லை. இங்கு வருபவர்களை நலம் வாழ்த்தி வாழ்கிறேன். இது கோடைகாலத்தின் முடிவு. இனிமேல் வணிகர்கள் வரமாட்டார்கள். தாங்கள் எனக்கு அளிக்கும் நாணயங்களைக்கொண்டு நானும் என் குடும்பமும் அடுத்த சிலமாதங்களைக் கழிப்போம்" என்றான்.

"சரி வாரும்" என்றபடி பீஷ்மர் எழுந்து தன் குதிரையை அவிழ்த்தார். அது உடலைச் சிலிர்த்து பெருமூச்சுவிட்டபடி அவர்மேல் தன் நீளமுகத்தைத் தேய்த்தது. பீஷ்மர் தன் குதிரையில் ஏறிக்கொண்டார். "நாங்கள் செல்லவேண்டிய ஊர் காந்தாரநகரி" என்றார் பீஷ்மர். "ஆம், இம்மலைகளுக்கு அப்பால் காந்தாரநகரி மட்டுமே உள்ளது. அதற்கப்பால் நிஷாதர்கள் வாழும் பெருமணல்நிலம். அங்கே உயிர்களே இல்லை" என்று வித்யுதத்தன் சொன்னான்.

"இங்கிருந்து ஒரு இயற்கையான பாதை உள்ளது. கிருதயுகத்தில் மண்வெடித்து உருவானது அது. அதன் வழியாகச் சென்றால் இருபதுயோஜனைத் தொலைவை குறைத்துக்கொள்ளமுடியும். வணிகர்கள் அதன் வழியாகச் செல்லமுடியாது. நீங்கள் பொதிகள் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் செல்லலாம்" என்றான் வித்யுதத்தன். "நான் அவ்வழியைக் காட்டுகிறேன்."

"அந்தக்குதிரைமேல் ஏறிக்கொள்" என்று பீஷ்மர் பலபத்ரரின் குதிரையைக் காட்டினார். வித்யுதத்தன் "நான் மிருகங்களை அஞ்சுபவன். அவற்றுக்கு பிராமணர்களும் பிறரும் ஒன்றுதான். அறிவற்றவை" என்றபடி ஏறிக்கொண்டான். அதிக எடை ஏறியதை விரும்பாத குதிரை பர்ர் என்று ஒலியெழுப்பி குஞ்சிமயிரை குலைத்துக் கொண்டது. "செல்வோம்" என்றான் வித்யுதத்தன் .

"இந்த வீண்நிலத்தைத் தாண்டினால் வறண்ட மலைநிலம் வரும். அதற்கப்பால் பாழி. அதன் வழியாக நேராகச் செல்லவேண்டியதுதான்." பீஷ்மர் "நீரும் வந்து வழிகாட்டமுடியுமா?" என்றார். வித்யுதத்தன் பதறி "நானா? நான் எப்படி? எனக்கு இங்கே குடும்பம் இருக்கிறது. அத்துடன் மலைநிலம் முழுக்க லாஷ்கரர் வாழ்கிறார்கள். அவர்கள் நூறுதலைமுறைக்காலமாக ஆறலைக்கள்வர்களாக வாழ்பவர்கள். ஏனென்றால் மலையில் எலி வேட்டைதவிர வேறு தொழிலே இல்லை. முதலில் மனிதர்களைக் கொல்வார்கள். அதன்பின்னர்தான் அவர்களிடம் கொள்ளையடிக்கமுடியுமா முடியாதா என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள்."

பீஷ்மர் புன்னகை செய்து "என்னை நீர் நம்பலாம்" என்றார். "நம்புகிறேன். ஆனால் அதைவிட நான் என்னையும் என் அறிவையும் நம்புவதல்லவா மேல்? உங்களை எனக்கு சற்றுமுன்னர்தான் தெரியும். என்னை நான் பிறந்தது முதலே தெரியும்" என்றான் வித்யுதத்தன். பீஷ்மர் சிரித்தார்.

கூழாங்கற்கள் நிறைந்த சாலையில் குதிரைக்குளம்புகள் அம்புகளைத் தீட்டுவதுபோல ஒலித்தன. அந்நிலத்தில் நிறைந்திருந்த அமைதியில் தொலைதூரத்தில் அவ்வோசை மறுபிறப்பு கொண்டு திரும்பி வந்தது.

தொடுவான் வரை விரிந்து காய்ந்த புல் மண்டிக்கிடந்த வீண்நிலத்திற்கு அப்பால் சுட்டசெங்கற்களாலான ஒரு கைவிடப்பட்ட ஊர் தெரிந்தது. பீஷ்மர் குதிரையை நிறுத்தி "அது என்ன? பெரிய ஊர் போலிருக்கிறதே. கைவிடப்பட்டிருக்கிறது... யாருடைய ஊர் அது?" என்றார்.

"அது இறந்தவர்களின் நகரம்" என்றான் வித்யுதத்தன். "மிருதஜனநகரம் என்று சொல்வார்கள். அங்கே சுயபுத்தி உடைய எவரும் செல்வதில்லை."

பீஷ்மர் குதிரையைத் திருப்பி "அதைப்பார்த்துவிட்டுச் செல்வோமே" என்றார். வித்யுதத்தன் அச்சத்துடன் "அதையா? நான் சொல்வதைக் கேளுங்கள். அங்கு எவரும் செல்வதில்லை. அங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள்" என்றான். குதிரையின் கடிவாளத்தைப்பற்ற முயன்றபடி "அங்கே செல்வது தற்கொலைபோல... சொல்வதைக்கேளுங்கள்!"என்றான்.

"இறந்தவர்களுடன் உரையாடுவது நல்லது அல்லவா?" என்று பீஷ்மர் குதிரையைத் தட்டியபடிச் சொன்னார். பின்னால் பலபத்ரரின் குதிரையும் பெருநடையில் வந்தது. "அப்படியென்றால் என்னை இறக்கிவிட்டுவிடுங்கள். நான் இங்கேயே நின்று கொள்கிறேன். என்குழந்தைகளுக்கு வேறு தந்தை இல்லை... பிராமணப்பெண்கள் மறுமணம் புரிய ஊரார் அனுமதிக்கமாட்டார்கள்" என்று வித்யுதத்தன் கூவியபடியே வந்தான். பீஷ்மர் "அஞ்சவேண்டாம் பிராமணரே உங்களுக்கு உரிய உதகக்கிரியைகளைச் செய்யாமல் நாங்கள் செல்லப்போவதில்லை" என்றார்.

அந்த இடத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மக்கள் கிளம்பிச்சென்றிருக்கவேண்டுமென்று தோன்றியது. ஐந்து நிவர்த்தன நீளமும் அதேயளவு அகலமும் கொண்ட நகரம் அது. முதலில் பெரிய கோட்டை ஒன்று நகரைச் சூழ்ந்திருந்தது. அது சுட்டசெங்கற்களால் கட்டப்பட்டு மேலே மண்ணாலான கட்டுமானம் கொண்டதாக இருந்திருக்கலாம். மண்கோட்டை கரைந்தபின் செங்கல் அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது. ஐந்தடி அகலம் கொண்ட அடித்தளம் அந்தக்கோட்டை எப்படியும் பதினைந்தடி உயரம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

கோட்டைக்குள் அரண்மனைக்கோட்டை தனியாக இருந்தது. அரண்மனையின் அடித்தளம் பன்னிரண்டடி உயரத்தில் மண்கொட்டி மேடாக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்த நகரத்தின் வீடுகள் முழுக்க சுட்ட செங்கற்களால் அடித்தளமும் முதற்தளமும் அமைக்கப்பட்டு மேலே மரத்தாலான எடுப்புகள் கொண்டவையாக இருந்திருக்கலாமென்று தோன்றியது. அவை முழுக்க எரிந்தழிந்து மழையில் கரைந்து மறைந்திருக்க சுட்ட அடித்தளங்களும் பாதி இடிந்த அடிச்சுவர்களும் மட்டும் எஞ்சியிருந்தன. அவை செந்நிறச் சதுரங்களாக மாபெரும் வேள்வி ஒன்று நடந்தபின் கைவிடப்பட்ட எரிகுளங்கள் போலிருந்தன.

பீஷ்மர் குனிந்து அச்செங்கற்களை தொட்டுப்பார்த்தார். மிகஉறுதியான கற்கள் அவை என்று தெரிந்தது. தரைமுழுக்க உடைந்த மண்பானைகளின் ஓடுகள் கால்களில் நொறுங்கின. கச்சிதமாக நூல்வைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் நேரான தெருக்களின் இருமருங்கிலும் இருந்தன. அரண்மனைக் கோட்டைக்குள் இருந்த கட்டடங்களின் அடித்தளங்கள் நான்கடி அகலம் கொண்டிருந்தன. அப்படியென்றால் அவை மூன்றடுக்காவது கொண்டிருக்கவேண்டும். செங்கல்லால் ஆன படிகள் இடிந்து கிடந்தன.

"இங்கு போர் அல்லது பெருவெள்ளம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார் பீஷ்மர். "இந்நகரத்தை ஆண்டவர்கள் எங்கு சென்றார்கள்?" வித்யுதத்தன் "தெரியவில்லை வீரரே" என்றான். "உள்ளங்கைபோல அனைத்தையும் அறிந்தவர் நீர். நூறாண்டுகால வரலாறு தெரியாது என்கிறீர்?" என்று பீஷ்மர் புன்னகை செய்தார்.

"நூறாண்டுகாலமா? வீரரே, இந்த இடம் திரேதாயுகத்துக்கும் முன்னரே இப்படியே இருக்கிறது. இங்கே சில பழங்குடிப் பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரம் வருடகாலம் பழைய பாடல்களையும் குலவரலாற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயிரம் வருடம் பழைமையான பாடல்களிலேயே இந்த இடம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கைவிடப்பட்டு கிடக்கும் இறந்தவர்களின் நகரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது."

பீஷ்மர் வியப்புடன் வித்யுதத்தனைப் பார்த்தார். அவன் பொய்சொல்கிறான் என்று தோன்றவில்லை. அச்சமும் பதற்றமுமாக அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பதறும் குரலில் ‘இங்கே பொன்னும் வெள்ளியும் கிடைப்பதாக சிலர் சொன்னார்கள். ஆனால் இங்கே வந்து அவற்றைத் தோண்டிப்பார்த்தவர்கள் அனைவருமே பித்தர்களாக ஆகிவிட்டனர். அவர்கள் எதைக்கண்டு அஞ்சினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சித்தம் கலங்கி பேச்சிழந்து அலைந்தார்கள். ஊரில் முதியவர் ஒருவர் இப்போதும் பித்தனாக இருக்கிறார்."

மெதுவாக அந்த இடத்தின் தொன்மையை பீஷ்மர் உணரத்தொடங்கினார். அங்கே ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. சதுரமான மையச்சதுக்கத்தில் கற்தூண் ஒன்று நீளமான நிழலுடன் நின்றிருந்தது. வீடுகளில் எல்லாம் களஞ்சியங்களும் நீர்நிறைத்துவைக்கும் தொட்டிகளும் இருந்தன. அனைத்துக் கட்டடங்களுடனும் ஒட்டியதுபோல சிறியகிணறுகள். அன்று ஆறு மேலும் அருகே ஓடியிருக்கலாம். நீர்வழிந்தோடுவதற்கான ஓடைகள் செங்கல்லால் அமைக்கப்பட்டு நகர்முழுக்க வளைந்துசென்றன. பின்காலைநேரத்து வெயில் இடிபாடுகள் மேல் பரவி நிழல்களைச் சரித்திருக்க யுகயுகமாக எதையோ சொல்லமுயல்வது போலிருந்தது அந்த இடம்.

பீஷ்மர் சுற்றி நடந்துசென்றார். காய்ந்த முட்செடிகளிலிருந்து விதைகள் அவரது காலில் ஒட்டிக்கொண்டன. அவர் நடந்த ஒலி அப்பகுதியில் நிறைந்திருந்த அமைதியில் ஒலித்தது. நீள்சதுர வடிவமான பெரிய குளம் ஒன்றைக் கண்டு நின்றார். அதற்கு நீர்வருவதற்கான பாதை அப்பால் தெரிந்தது. அப்போதும் அதில் முக்கால்பங்கு நீர் நிறைந்திருந்தது. இரவில் அங்கே ஓநாய்கள் வந்து நீர் அருந்துகின்றன என்பதை நீர்விளிம்பின் காலடித்தடங்கள் காட்டின.

வெளிக்கோட்டைக்கு அப்பால் விரிந்து கிடந்த காய்ந்தபுல் பரவிய நிலத்தில் காற்று அலையலையாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை ஒன்று செல்வதை பீஷ்மர் கண்டார். "இங்கே யார் வருகிறார்கள்?" என்றார். "புதைகுழிகளைத் தோண்டித் திருடுபவர்கள்... ஆனால் அவர்கள் அதிகநாள் வாழ்வதில்லை. இங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் திருடவந்தவர்களை விடுவதில்லை" என்று வித்யுதத்தன் சொன்னான்.

பீஷ்மர் அந்தப்பாதை வழியாகச் சென்றார். "வீரரே, அப்பகுதி இந்நகரின் இடுகாடு... நான் இங்கேயே நின்றுகொள்கிறேன்" என்றான் வித்யுதத்தன். "இடுகாட்டுக்குச் சென்றால் பிராமணன் குளித்தாகவேண்டும் அல்லவா!" ஆனால் பலபத்ரரும் பீஷ்மர் பின்னால் சென்றபோது "நான் எப்படி இங்கே தனியாக நிற்பது?" என்றபடி அவனும் பின்னால் வந்தான். "எதையும் தொடாதீர் வீரரே..." என்று கூவினான்.

அந்தப் புல்நிலத்தில் ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு மண் வெளியேறிக்கிடந்தது. பீஷ்மர் ஒருகுழிக்குள் சென்று குனிந்து நோக்கினார். பெரிய தாழி ஒன்று உள்ளே தெரிந்தது. விளிம்புவட்டம் குயவனின் சக்கரம் இல்லாமல் கையால் செய்யப்பட்டதுபோல் ஒழுங்கற்று இருந்த கனமான தாழி. அது திறந்திருந்தது. "திருடர்கள்" என்று வித்யுதத்தன் சொன்னான். பீஷ்மர் உள்ளே பார்த்தபோது ஒரு மண்டைஓடும் சில எலும்புகளும் அடியில் கிடப்பதைக் கண்டார்.

பீஷ்மர் குனிந்தபோது வித்யுதத்தன் "வீரரே வேண்டாம்" என்றான். பீஷ்மர் உள்ளே கையைவிட்டு அந்த எலும்புகளில் ஒன்றை எடுத்துப்பார்த்தார். மிகத்தொன்மையான எலும்பு அது. உயிர்த்தன்மையை இழந்து எடையற்ற சுண்ணாம்பு மட்டுமாக ஆகியிருந்தது. அழுத்தியபோது எளிதாக உடைந்தது. உள்ளே கைவிட்டு அங்கிருந்த சிறிய பொருட்களை வெளியே எடுத்துப்பார்த்தார். களிமண்ணாலான சிறிய சிலைகள். முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் தலையுறை அணிந்த மனிதர்கள். நின்றுகொண்டிருக்கும் இரு மாடுகள். ஒரு சிறிய நாய்.

"பொன்னும் வெள்ளியும் இருந்திருக்கும். அவற்றை திருடிச்சென்றிருப்பார்கள்" என்றான் வித்யுதத்தன். "ஆனால் அவர்கள் வாழப்போவதில்லை. இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மூதாதையின் ஆத்மாவும் அவர்களுடன் சென்றிருக்கும்." பீஷ்மர் அவற்றை மீண்டும் உள்ளே போட்டுவிட்டு "இந்த நகரைப்பற்றி ஏதேனும் தெரிந்த எவரையாவது சந்திக்கமுடியுமா?" என்றார். "வீரரே நான் உறுதியாகச் சொல்கிறேன், இங்கே இந்த ஊரைப்பற்றியோ இதேபோன்று இப்பகுதியில் இருக்கும் பதினெட்டு நகரங்களைப்பற்றியோ ஒரு வரியேனும் அறிந்த எவரும் இங்கில்லை" என்றான் வித்யுதத்தன்.

"எப்படி ஒரு வரலாறு முழுமையாகவே அழியமுடியும்?" என்றார் பீஷ்மர். "வீரரே இங்கே வாழும் மக்களெல்லாம் ஆயிரம் வருடங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வந்து குடியேறியவர்கள். நாங்கள் வரும்போதே இங்கே வாழ்ந்தவர்கள் இந்த இடங்களை விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்" என்றான் வித்யுதத்தன். "நீங்கள் இப்பகுதியிலேயே தங்கி வருடக்கணக்காக ஆராய்ந்தால்கூட இதைவிட அதிகமாக ஏதும் தெரிந்துகொள்ளமுடியாது."

மீண்டும் குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது வித்யுதத்தன் மூன்றுமுறை கைகளைத் தட்டினான். "என்ன செய்கிறீர்?" என்றார் பீஷ்மர். "இங்குவந்தால் இப்படிச் செய்யவேண்டும். நம் கைகளை மும்முறை தட்டி நாம் எதையும் கொண்டுசெல்லவில்லை என்று இங்கே தாழிகளில் துயிலும் மூதாதையருக்குச் செய்தி சொல்லவேண்டும்." பீஷ்மர் புன்னகையுடன் தாடியை தடவிக்கொண்டார்.

மதியம் தாண்டியபின்புதான் அவரால் சிந்தனையில் இருந்து வெளிவர முடிந்தது. "இதுதான் சப்தசிந்துவிலும் கங்கையிலும் வாழும் அனைவருடைய மூதாதையரும் வாழ்ந்த இடம் என நினைக்கிறேன்" என்றார். "சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது."

பலபத்ரர் "ஆம், என் பாட்டியும் அவ்வாறு கதைகள் சொல்லியிருக்கிறாள். மூத்துச் சுருங்கிய மூதாதையர் உணவுண்ணுவதையும் நிறுத்திவிடுவார்கள். தவழும் குழந்தைகள் போல ஆகி பாவைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப்பாவைகளுடன் அவர்களை மண்ணுக்குள் வைப்பார்கள்" என்றார்.

பீஷ்மர் "அவ்வழக்கம் இன்றும் தட்சிணபாரதத்தில் இருக்கிறது. திருவிடத்திலும் அப்பால் தமிழ்நிலத்திலும் இன்றுகூட சீருடன் மறைந்த மூதாதையரை தாழிகளில்தான் வைக்கிறார்கள் என்று பயணிகள் சொல்கிறார்கள். இங்கும் அங்கும் மட்டுமே தாழிகள் கிடைக்கின்றன" என்றார்.

பலபத்ரர் "நாம் கற்கும் ஒவ்வொரு தொல்புராணமும் மேலும் தொன்மையான சிலபுராணங்களை ஆதாரமாகக் கொண்டது என்று சொல்லும். நம்முடைய புராணங்களுக்கு தொடக்கம்தான் என்ன என்று ஒருமுறை என் ஆசிரியரிடம் கேட்டேன். நம் சம்ஸ்கிருதிகள் எல்லாம் சிதல்புற்றுக்களைப்போல முளைத்தெழுந்தவை என்று அவர் சொன்னார். ஓரிடத்தில் ஒன்று அழிந்தால் இன்னொரு இடத்தில் இன்னொன்று முளைக்கும். வளர்பவை உண்டு தேய்பவை உண்டு. அவற்றை உருவாக்கும் சிதல்கள் மண்ணுக்கு அடியில் எங்கோ வாழ்கின்றன. ஒவ்வொரு புற்றும் கடலில் எழும் சிறு குமிழிபோலத்தான் என்றார்." சிரித்தபடி "அஸ்தினாபுரி ஒரு குமிழி. மாளவமும் வேசரமும் குமிழிகள். அப்பால் திருவிடமும் தமிழகமும் குமிழிகள்" என்றார்.

பீஷ்மர் சிரித்து "பெரிய குமிழி சிறியவற்றை இழுத்து மேலும் பெரிய குமிழியாக ஆகும் தன்மை கொண்டிருக்கிறது" என்றார். பலபத்ரரும் உரக்கச் சிரித்தார். எதிரே பாதை வற்றிப்போன நதிபோன்ற ஒரு பள்ளத்துக்குள் நுழைந்தது. வித்யுதத்தன் "இதுதான் நான் சொன்ன பாதை. இது இருபது யோஜனை தூரமுள்ளது. மறுபக்கம் பெரிய வறண்டநிலம் வரும். வறண்டமலைகள் நடுவே ஒரேபாதைதான் இருக்கும். வழிதவற வாய்ப்பே இல்லை" என்றான். "நான் உங்களை அந்த எல்லைவரை கொண்டு விடும்போது நீங்கள் எனக்கு வணக்கப்பணம் மட்டும் அளித்தால்போதும்."

சிவந்த மண்ணும் சரளைக்கற்களும் குவிந்துகிடந்த பாதையில் குதிரைகள் பெருநடையிட்டுச் சென்றன. "இந்த எல்லைக்கு அப்பால் காந்தாரம் இருக்கிறது என்பது நம்பிக்கை. ஆனால் இங்கே எல்லைகள் என ஏதும் இல்லை. ஏனென்றால் சுங்கம் இல்லை" என்றான் வித்யுதத்தன்.

பலபத்ரர் புன்னகைசெய்து "பொருளியல்தரிசனம் ஒன்றைச் சொல்லிவிட்டீர் வித்யுதத்தரே. எல்லை இல்லாததனால் சுங்கம் இல்லை என்றுதான் நான் சொல்லியிருப்பேன்" என்றார். வித்யுதத்தன் வணங்கி "கல்வியறிவில்லை என்றாலும் நான் சிறப்பாகப் பேசுவேன் என்று என் ஊரில் சொல்கிறார்கள்" என்றான்.

"காந்தாரத்தை இப்போது ஆளும் அரசனைப்பற்றி வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று பீஷ்மர் கேட்டார். "வீரரே, விஷ்ணுவில் இருந்து பிரம்மா பிறந்தார். பிரம்மாவிலிருந்து சந்திரன். சந்திரனில் இருந்து புதன். புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்று நீண்டு வந்த வம்சத்தில் வந்தவர் துருவசு. துருவசுவின் மைந்தர் வர்க்கன். வர்க்கனின் மைந்தர் கோபானு. அவரது குலவரிசை திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன் என்று நீள்கிறது. வரூதனின் மைந்தரான காண்டீரன் காந்தாரன் என்னும் மாமன்னரைப் பெற்றார்" என்றான் வித்யுதத்தன்.

"காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்" என்று வித்யுதத்தன் தொடர்ந்தான்.

"இது புதிய புராணமாக இருக்கிறதே. தமிழ்மன்னர்கள் இங்கிருந்தா சென்றார்கள்?" என்றார் பலபத்ரர். பீஷ்மர் "அது அக்னிபுராணத்தில் உள்ள செய்திதான்" என்றார். பலபத்ரர் வியந்து நெடுநேரம் சொல்மறந்துவிட்டார். பின்பு "இந்தத் தொல்நிலத்தின் வரலாற்றை என்றாவது எவராவது எழுதிவிடமுடியுமா என்ன?" என்றார். "நீர் சொன்னதுதான் உவமை. குமிழிகளைக்கொண்டு இதன் வரலாற்றை எழுதமுடியாது. அடியில் வாழும் அழிவற்ற சிதல்களைப்பற்றி எழுதவேண்டும்..."

பலபத்ரர் பெருமூச்சுவிட்டார். அதன் பின் அவர்கள் பேசவில்லை. அந்தப் பாதை சுருள் சுருளாகச் சென்றுகொண்டே இருந்தது. மாலையில் ஓர் ஓடைக்கரையை அடைந்தனர். அங்கே அவர்கள் இளைப்பாறினர். பீஷ்மர் அங்கிருந்த புதர்களுக்குள் சென்று நாணலைப் பிய்த்து வீசி நான்கு முயல்களை வேட்டையாடிக் கொண்டுவந்தார். கற்களை உரசித் தீ உண்டுபண்ணி அவற்றைச் சுட்டு உணவருந்தியபின் அங்கேயே இரவு துயின்றனர். மறுநாள் காலை வெயில் விரியத்தொடங்கியபோது அந்தப்பாதையின் மறுமுனை வந்தது.

"வீரரே, இதோ இதற்கு அப்பால்தான் காந்தாரத்தின் பாலைநிலம் தொடங்குகிறது" என்றான் வித்யுதத்தன். "என்னை அனுப்பினீர்கள் என்றால் நான் நடந்தே சென்று சேர்ந்துவிடுவேன். எனக்கு நல்லூழ் இருந்தால் வழியில் கழுதைமேல் செல்லும் வணிகர்களைப் பார்ப்பேன்." வித்யுதத்தன் மேலும் பணம் கேட்டு கெஞ்சும் மனநிலையை உருவாக்கிக் கொண்டு "இத்தனை கடினமான பயணத்தை நான் என் வறுமையால் மட்டுமல்ல தங்கள் நலன் கருதியும்தான் செய்கிறேன்" என்றான்.

ஆனால் பலபத்ரர் அளித்த ஐந்து பொற்காசுகளைக் கண்டதும் அவனுடைய வாயும் கண்களும் நிலைத்துவிட்டன. நிமிர்ந்து "தேவா, இது பொன் அல்லவா? பொன்னேதானா?" என்றான். "ஆம், பொன்தான்..." என்றார் பலபத்ரர். "எனக்கா... நான் வேறு ஏதாவது கடினமான பணிகள் செய்யவேண்டுமா?" கண்களில் தந்திரத்துடன் "உளவுப்பணிகளைக்கூட நான் செய்வேன்" என்றான். பீஷ்மர் புன்னகையுடன் "நீர் இதுவரை செய்த பணிக்காகத்தான் இந்தப் பணம். சென்று வாரும்" என்றார்.

பலபத்ரர் "செல்லும் வழியில் எவரிடமும் பொன் இருப்பதைப்பற்றிச் சொல்லாதீர். யவன வணிகர்கள் தந்த பொன் என்று மட்டும் ஊரில் சொல்லும்" என்றார். பீஷ்மர் குதிரையை காலால் தட்ட அது கால்தூக்கிக் கனைத்தபின் பாய்ந்து சரிந்த நிலத்தில் ஓடியது. அதன் கால்பட்டு சிதறிய உருளைக்கற்களும் கூடவே ஓடின. பலபத்ரர் தன் குதிரையைத் தட்டி அந்தச் செந்நிறமான தூசுப்பரப்புக்குள் நுழைந்தார்.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 2 ]

சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் விரிந்துகிடந்தன. எத்திசைச் செல்வது என்று அவன் திகைத்து சிலகணங்கள் நின்றபின் மேற்குத்திசைநோக்கி காலடி எடுத்துவைத்தபோது அவனுடைய இளமைநண்பனும் சாலைத்தோழனுமாகிய ரணசிம்மன் குதிரையில் தன்னைநோக்கி வருவதைக் கண்டான்.

ரணசிம்மன் "இளவரசே, பதினைந்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு சூளுரை விடுத்தேன். என் வாழ்வும் சாவும் தங்களுடனேயே. நானும் வருகிறேன்" என்றான். "ரணசிம்மா, நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இப்போது ஒன்றுமில்லை. நான் இளவரசனுமில்லை" என்றான் துர்வசு. ரணசிம்மன் "இளவரசே, தங்களை நான் இளவரசன் என்பது இந்நிலம் இன்னும் மாமன்னர் யயாதிக்குரியது என்பதனால்தான். இதன் எல்லையை நாம் தாண்டியதுமே நான் உங்களை அரசே என்றுதான் அழைக்கப்போகிறேன். நிலத்தால் மன்னர்கள் உருவாவதில்லை. மன்னர்களுக்கு நிலம் வந்துசேர்கிறது. உங்கள் படைத்தலைவனாக நான் இந்த வாளை தங்கள் சேவைக்கெனத் தாழ்த்துகிறேன்" என்றான்.

அவர்களிருவரும் தனியாக கோட்டைமுன்னிருந்து நகர் நீங்கினார்கள். அவர்கள் செல்லும் செய்தி பரவி நகர எல்லையை அவர்கள் கடப்பதற்குள் ஆயிரம் வீரர்கள் தங்கள் வேல்களுடனும் வாள்களுடனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நாட்டு எல்லைக்குள் நுழையும்போதும் அந்நாட்டு மன்னன் படைகளுடன் வந்து எதிர்கொண்டான். அவன் நாடுவழியாக கடந்துசெல்வதற்கு மட்டும் அனுமதியளித்தான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும் பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அவர்கள் அதன் வாயிலில் அஞ்சி நின்றனர்.

துர்வசு 'என் தந்தையின் தீச்சொல்லையே நிலமாக ஆக்கி தெய்வங்கள் என் முன் அளித்திருக்கின்றன போலும்’ என்று எண்ணி திகைத்து நின்றான். அவனுடன் வந்த நிமித்திகர்களில் ஒருவனை அழைத்து அந்நிலம் எது என்று கணித்துச் சொல்லச் சொன்னான். நிமித்திகன் அன்றிரவு விண்மீன்களைத் தேர்ந்து அவ்விண்மீன்களை கூழாங்கற்களாக பன்னிரு நிலைத்திகிரிக்களத்தில் அமைத்துக் கணித்து அவ்விடத்தின் வரலாற்றைச் சொன்னான்.

ஆயிரம் கல்பங்களுக்கு முன்னர் விண்ணகத்தில் பிரஜாபதியான அத்ரி சஹஸ்ரம் என்னும் மாபெரும் வேள்வி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு திசைகளை செங்கற்களாக அடுக்கி எரிகுளம் அமைத்து மேகங்களை சமித்தாக்கி இடியையும் மின்னலையும் அரணிக்கட்டைகளாக்கி கடைந்தார். மூன்று எரிகுளங்களில் அக்னிக்கு ஸ்வாகாதேவியில் பிறந்த மகள்களான தட்சிணம் கார்ஹபத்யம் ஆஹவனீயம் என்னும் மூன்று இளநெருப்புகளையும் குடியேறச்செய்தார். ஆனால் அக்னியின் மூன்று மைந்தர்களான பாவகன் பவமானன் சூசி ஆகியோர் விளையாட்டாக வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரையும் துரத்தி வந்தனர். அவர்கள் மூன்று நெருப்புமங்கையரையும் அணைந்துபோகச் செய்தனர்.

அத்ரி மும்முறை வியானன் என்னும் வாயுபுத்திரனின் உதவியுடன் முந்நெருப்புகளையும் கடைந்து பற்றவைத்தார். மும்முறையும் விளையாடிவர்கள் அவற்றை அணைத்தனர். சினம் கொண்ட அத்ரி "என் வேள்வியைத் தடைசெய்த பாவம் உங்களைச் சேரட்டும். மூன்று வாயுக்களும் மூன்று நெருப்புகளையும் மாறிமாறிச்சுமந்தபடி ஆயிரம் கல்பம் மண்ணில் அலைவீர்களாக!" என்று தீச்சொல்லிட்டார். அவ்வாறாக மூன்று காற்றுகளும் மூன்று நெருப்புகளுடன் மண்ணில் வந்தன. அவை வீசுவதற்காக அவை கண்டடைந்த இடம் இந்த மலை முதல் மேற்கே ஆயிரம் யோஜனை தூரம் வரை ஆகும்.

வாயுவின் தலைநகரம் கந்தவதி என்றழைக்கப்படுகிறது. விண்ணகத்தில் முடிவில்லாத ஒளியால் ஆன மாமேருவில் ஒன்பது நகரங்கள் உள்ளன. பிரம்மனுக்குரிய மனோவதி நடுவிலிருக்கிறது. கிழக்கே இந்திரனின் அமராவதி அமைந்துள்ளது. தென்கிழக்கில் அக்னி அரசாளும் தேஜோவதி. தெற்கே யமன் அமைத்துள்ள சம்யமனி, தென்மேற்கில் நிர்யதியின் கிருஷ்ணாஞ்சனம், மேற்கே வருணனின் சிரத்தாவதி, வடக்கே குபேரனின் மஹோதயம், வடகிழக்கில் ஈஸானனின் யசோவதி ஆகியவை உள்ளன. வடமேற்கே வாயுவின் கந்தவதி அமைந்துள்ளது.

விண்ணிலிருந்து இறங்கிய காற்றின்மைந்தர்கள் மண்ணில் அவர்களுக்கென அமைத்துக்கொண்ட இடம் இது. இதன் பெயரும் கந்தபுரம். இங்கிருந்த மலைகளை குடைந்தும் அரித்தும் அவர்கள் தங்களுக்குரிய வழிகளையும் குகைகளையும் அமைத்துக்கொண்டனர். பலன், அதிபலன், சண்டன் மூவரும் எரிவடிவங்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்தபடி இங்கிருந்து மேற்கே பாய்ந்தோடுகிறார்கள். அங்கிருந்து திரும்பவும் இங்கு வந்துசேர்கிறார்கள். மேற்கே செல்லச்செல்ல அவர்களின் வேகமும் வெம்மையும் அதிகரிக்கிறது.

பலன் பாறைகளை உடைக்கும் வல்லமை கொண்டவன். அதிபலன் பாறைகளைத் தூக்கி வீசும் பேராற்றலின் வடிவம். சண்டன் அனைத்தையும் தன் ஆயிரம் கைகளில் அள்ளி வீசி தாண்டவமாடுபவன். அரசே, நீரனைத்தையும் உண்ணும் பாவகனும் உயிர்களனைத்தையும் அழிக்கும் பவமானனும் அனைத்தையும் தூய்மைசெய்யும் சூசியும் அவர்களுடன் இணையும்போது அந்த மண்ணில் எவர் வாழமுடியும்?

நிமித்திகர் சொன்னதைக்கேட்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அமர்ந்திருக்க துர்வசு சொன்னான். "நிமித்திகரே, நானும் அந்த மூன்று நெருப்புகளையும் மூன்று காற்றுகளையும் போல தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். எத்தனை அழிக்கும்தன்மை கொண்டவர்களென்றாலும் அவ்வறுவரும் தெய்வ வடிவங்களும் கூட. அவர்கள் நம்மிடம் கருணை கொள்வார்கள். என்னுடன் வரவிரும்புபவர்கள் வரலாம்."

ஆயிரம்பேரில் ஒருவர் கூட அஞ்சிப்பின்னடையவில்லை. அனைவரும் அந்த மண்ணுக்குள் நுழைந்தனர். வானகப்பிரஜாபதிகள் வேள்வி முடித்து சென்ற எரிகுளம் போல வெந்து சிவந்து கருகிக் கிடந்தது அந்நிலம். அதிலிருந்து பாதாளநாகங்களின் விஷமூச்சு போல அனல் வீசியது. தெய்வ வல்லமைகளை நோக்கி கைகளைக் கூப்பியபடி துர்வசு முன்னால் சென்றான். பின்னால் அவனது படைகள் வணங்கியபடி தொடர்ந்துசென்றன.

அவர்கள் வருவதை வானில் உலவிய அனல்காற்றுகள் கண்டன. பாவகனைத் தோளிலேற்றியபடி பலன் அவர்களை நோக்கி வந்தான். செம்புரவிகள் பிடரிபறக்கப் பறந்துவருவதுபோல செம்மண்புழுதிமேகமாக அவர்கள் வருவதை துர்வசு கண்டான். கண்களைமூடியபடி அசையாமல் நின்றான். ஒரு அடிகூட அவன் பின்னெடுத்து வைக்கவில்லை. அவர்களைச் சுற்றி தீத்தழல்கள்போல புழுதிக்காற்று வெறிகொண்டு சுழன்றாடியது. கோடிநரிகளின் ஊளைபோல அது ஒலித்தது.

துர்வசுவின் அசைவில்லாத பக்தியைக் கண்டு பாவகன் புன்னகையுடன் கடந்துசென்றான். செம்புழுதி அடங்கியபோது அவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் போல கூப்பியகரங்களுடன் அந்த வீண்நிலத்தில் நின்றிருந்தனர். ‘பக்தனை தண்டிக்கும் தேவன் என எவருமில்லை... நாம் முன்னே செல்வோம்’ என்று அவர்கள் மேலும் சென்றனர். அதைக்கண்டு அதிபலன் மேல் ஏறிய பவமானன் பறந்துவந்தான்.

வானையும் மண்ணையும் இணைக்கும் மாபெரும் தூண் போல தொலைவில் அவர்கள் வருவதை துர்வசு கண்டான். பாலைநிலத்து மண் முழுக்க அந்தச் சுழலால் மேலே தூக்கப்பட்டு வான்மேகங்களுடன் இணைந்து சுருண்டது. பெரும்பாறைகள் கூட அதிலெழுந்து ஆயிரம் யோஜனை உயரத்தில் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அதிபலன் மேலேறிய பவமானன் அவர்களனைவரையும் நிலத்திலிருந்து தன் துதிக்கையால் தூக்கி வானுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் சுழன்று சுழன்று மேலே சென்றுகொண்டிருந்தபோதும் கும்பிட்ட கைகளை விலக்கவில்லை.

அவர்கள் மேல் கனிந்த அதிபலன் அவர்களை கீழிறக்கினான். அவர்களைச்சூழ்ந்து பெரும்பாறைகள் மழைபோல விழுந்து மண்ணை அறைந்தன. அவர்களுடன் விழுந்த மண்ணால் அந்த இடம் ஒரு குன்றாகியது. அக்குன்றின்மேல் அவர்கள் நின்றிருந்தனர். அந்தக்குன்று இன்றும் பவமானனுக்குரிய ஆலயமாக வழிபடப்படுகிறது.

கடைசியாக சண்டன் சூசியை தன் தோளில் ஏற்றியபடி ஆயிரம் கைகளையும் மண்ணில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி வந்தான். அந்த அதிர்வில் மலையுச்சிப்பாறைகள் பிளிறலுடன் பிளந்து சரிந்தன. பூமி வெடித்து உள்ளிருந்து நீர்வடிவில் நெருப்பு வெளிவந்தது. மலைகளின் உச்சிகளெல்லாம் தீப்பற்றிக்கொண்டன. அவர்களைச் சுற்றி சிறுவண்டுகளை இதழ்களுக்குள் பொதிந்திருக்கும் செந்தாமரைபோல நெருப்பின் பெருந்தழல்கள் ஆடின. அந்த வெளிச்சம் வானில் நின்றிருந்த நிலவின்மீது பட்டு நிலவும் செந்நிறமாகியது. மண்ணில் நிலவொளி விழுந்த இடங்களிலெல்லாம் மனிதர்கள் வெம்மையை உணர்ந்தனர்.

சண்டனும் அவர்களுக்குக் கனிந்தான். மூன்று காற்றுகளும் அவர்கள் முன் மூன்று மிருகங்களாக வந்து நின்றன. பலன் கழுதை வடிவிலும் அதிபலன் ஒட்டகத்தின் வடிவிலும் சண்டன் குதிரை வடிவிலும் வந்தார்கள். மூன்று நெருப்புகளும் ஸாமி, பிலு, கரிர் என்னும் மூன்று மரங்களாக வந்து காட்சியளித்தன. அவர்களிடம் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று அத்தெய்வங்கள் கேட்டன. ‘தந்தையரே நாங்கள் இங்கே வாழவேண்டும்’ என்று அவர்கள் கோரினர்.

‘இது எங்கள் விளையாட்டரங்கு. ஆனால் நீங்களும் இங்கே வாழ வழிசெய்கிறோம்’ என்று தெய்வங்கள் அருளின. அவர்களுக்கு தெய்வங்கள் இருண்டுகுளிர்ந்த குகைகளைக் காட்டின. அவற்றுக்குள் தெளிந்த நீர் சுனைகளாக ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு கழுதைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் வசப்பட்டன. ஸாமியும் பிலுவும் கரிரும் அவர்களுக்கு நிழலையும் உணவையும் அளித்தன. அவர்கள் அங்கே வாழத்தொடங்கினர். அவர்கள் அமைத்த நகரம் கந்தபுரம் எனப்பட்டது. கந்தபுரத்தால் ஆளப்படும் நாட்டை மக்கள் காந்தாரம் என்றனர்.

பீஷ்மரும் பலபத்ரரும் நாடோடியான சூதர்கள் பாடிய கதையைக் கேட்டபடி அந்த பாலைப்பொழிலில் அமர்ந்திருந்தனர். சிபிநாட்டைக் கடந்து காந்தாரத்து விரிநிலத்தின் நுழைவாயிலிலேயே அவர்கள் பீதர்களின் வணிகர்குழுவுடன் சேர்ந்து கொண்டனர். தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்த அவர்களை பீத வணிகர்கள் கொடிகளை அசைத்துக்காட்டி நிறுத்தினர். நெடுந்தொலைவில் செம்புழுதி கிளம்ப பாலைநிலக்காற்று போல அவர்கள் வருவதைக் கண்டபோது பீஷ்மர் முதலில் அது ஒரு படை என்றுதான் நினைத்தார். கொடிகளைக் கண்டதும்தான் வணிகர்குழு என்று தெளிந்தார்.

பீதர்களுடன் பயணம் செய்த சூதர்கள் அவர்கள் பேசியதை மொழிமீட்சி செய்து சொன்னார்கள். பாலையில் தனியாகச் செல்வது சாவையும் உடனழைத்துச்செல்வது என்றான் பீதவணிகர்களின் தலைவன். நூறு ஒட்டகங்களும் நூறு குதிரைகளும் ஆயிரம் படைவீரர்களும் கொண்ட அவர்களின் குழுவில் உணவும் நீரும் படைக்கலன்களும் திசைகாட்டிக்கருவியும் இருந்தன. மூன்று நிமித்திகர்களுடன் இசைக்கருவிகள் ஏந்திய எட்டு சூதர்களும் இருந்தனர். தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி பீதர்தலைவன் சொன்னான்.

பிருஷதர் என்னும் முதுசூதர் சூதர்களை தலைமை வகித்து கொண்டுசென்றார். அவர்கள் ஒருமுறை காந்தாரம் வழியாக மேற்கே பயணம்செய்து மீள்வதற்கு ஏழுவருடங்களாகும் என்றார் பிருஷதர். அதன் பின் ஏழுவருடங்கள் எங்கும் செல்லாமல் சொந்த ஊரிலேயே வாழுமளவுக்கு செல்வம் ஈட்டமுடியும். பீதவணிகர்களும் சோனக வணிகர்களும் சூதர்களுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்கள் என்றார். "மொழி மாற்றம் செய்வதற்கு அவ்வளவு செல்வமா?" என்றார் பீஷ்மர். "நாங்கள் மரக்கலங்களை காற்று கொண்டு செல்வதுபோல இந்த வணிகர்குழுவை பாலையில் கொண்டுசெல்கிறோம். நீங்களே அறிவீர்கள்" என்றார் பிருஷதர்.

அது எவ்வளவு உண்மை என்று பீஷ்மர் தெரிந்துகொண்டார். ஒவ்வொரு நிலத்தைப்பற்றியும் சூதர்கள் அறிந்திருந்தனர். அங்குள்ள சோலைகள் மலைகள் கணவாய்கள் மரங்கள் அனைத்தும் அவர்களின் சொற்களினூடாக எழுந்து வந்தன. பயணம் உருவாக்கிய அனைத்துச் சோர்வையும் இரவில் அவர்கள் பாடியபாடல்கள் களைந்து ஆன்மாவை குளித்தெழச்செய்தன. ஒருநாளுக்கு பத்து யோஜனை வீதம் இருபது நாட்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. அதற்குள் சூதர்பாடல்கள் இல்லாமல் இரவு துயிலமுடியாது என்ற நிலை பீஷ்மருக்கு வந்தது.

பாலைநிலம் ஆன்மாவின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சி வானுக்கனுப்பிவிடுகிறது என்று அவருக்குத் தோன்றியது. மொழியிலும் கனவுகளிலும்கூட பசுமை இல்லாமலாகிவிடுகிறது. கண்களை மூடினாலும் வெறுமை. கற்பனையில்கூட முன்பு கண்டு வாழ்ந்திருந்த பசும்நிலங்களை மீட்கமுடியவில்லை. அந்நிலமெங்கும் ஏக்கமே நிறைந்திருந்தது. நீருக்கான ஏக்கம். பசுமைக்கான ஏக்கம். ஏக்கம் மட்டுமேயான ஏக்கம். அது நெஞ்சுக்குள் வறண்டகாற்றாக அலைந்து அனைத்தையும் உண்டது. பாலைவன மக்கள் ஏன் சாதாரணமான பேச்சுகளுக்குக் கூட நெகிழ்ந்து கண்ணீர்விடுகிறார்கள் என்று அவருக்குப் புரிந்தது. அத்தனை ஈரமானவர்கள் ஏன் அடுத்தகணமே சோதரன் கழுத்தை அறுக்க வாளெடுக்கிறார்கள் என்றும்.

அந்த வெறுமையை வாழ்வால் நிறைத்தவை சூதர்களின் பாடல்களே. அவை இரவின் தனிமையில் வானில் மந்திரவெளியில் இருந்து பசுமையையும் நீரலைகளையும் வண்ணங்களையும் கொண்டுவந்து ஆன்மாவில் நிறைத்தன. பாலைவனப்பயணம் முழுமையாக தொலைந்துவிட்டிருக்கிறோம் என்ற அச்சத்தை நெஞ்சின் ஆழத்தில் கரையாமல் நிறுத்திவைப்பது. சூதர்களின் பாடல்கள் சென்றுசேரவிருக்கும் பசுநிலத்தை கையெட்டும் அருகே கொண்டுவந்து நிறுத்தின. பாலைவனப்பயணம் மண்ணில் வேறு மனிதர்களே இல்லை என்ற பிரமையை ஆழநிலைநாட்டுவது. சூதர்களின் பாடல்கள் வழியே வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களுமான பல்லாயிரம்பேர் வந்து தோளோடு தோள்முட்டி அமர்ந்துகொண்டார்கள்.

சூதர்களின் பாட்டில் வந்த அனல் அமர்ந்து ஊரும் கொடுங்காற்றுகளை மூன்றுமுறை பீஷ்மர் கண்டார். நிமித்திகன் அவன் கையிலிருந்த கழியில் கட்டப்படிருந்த நீண்ட துணி பறக்க ஆரம்பித்ததுமே கையசைத்து அனைவரையும் நிறுத்தினான். கொடியை தரையில் நிறுத்தி அது பறப்பதை கூர்ந்து கவனித்தான். மாறிமாறி திசைகாட்டிய கொடி ஒரு கட்டத்தில் பாம்பின் நாவுபோல அதிர்ந்து ஒரே திசைநோக்கி பறக்கத் தொடங்கியது. குனிந்து அவன் நிலத்தைப்பார்த்தான். மண்ணில் மணல்பருக்கைகள் எறும்புகள் முட்டிமோதிச்செல்வதுபோல ஓடிக்கொண்டிருந்தன.

அவர்கள் உடனடியாகத் திரும்பி பக்கத்திலிருந்த மலையை அடைந்து அதைச் சுற்றிக்கொண்டு சென்று அங்கிருந்த பெரிய மலைமடிப்புகளிலும் குகைகளிலும் பதுங்கிக் கொண்டார்கள். பெருமழை வரப்போவதுபோல வானம் மங்கலடைந்து மண் கருமைகொண்டது. கழியிலிருந்து கொடி அறுபட்டு பறந்தது. உடைகள் சிறகுகளாக எழுந்து தூக்கிக்கொண்டு செல்ல விரும்புபவை போல படபடத்தன. சூழ இருந்த அனைத்துப் பாறைகளும் உயிர்கொண்டவை போல ஓலமிடத்தொடங்கின. பீஷ்மர் அம்மலைகள் மேல் மழைபோல மணல் வந்து மோதுவதைக் கண்டார். கடலெழுந்து வரும் இரைச்சலுடன் புயல் அனைத்தையும் அறைந்தபடி சூழ்ந்துகொண்டது.

நெடுநேரம் இருக்கிறேன் என்னும் உணர்வன்றி ஏதுமற்றவராக இருந்தபின் பீஷ்மர் அந்தப்புயல் இறங்கும் ஒலியை உணர்ந்தார். மாபெரும் பட்டுத்துணி இழுபட்டுச் செல்வதுபோல மணற்புயல் அவர்களைத் தாண்டிச்செல்வதைக் காணமுடிந்தது. சற்று நேரம் கழித்து அவர்கள் பாறைமறைவிலிருந்து வந்தபோது ஏதும் நிகழாததுபோல இருந்தது பாலை. ஆனால் வானம் அந்திச்சிவப்புடன் இருக்க மழைமூட்டம்போல இருள் மட்டும் எஞ்சியிருந்தது. "புழுதி இறங்குவதற்கு ஒருநாளாகும். அதுவரை வெயில் இருக்காது" என்று பிருஷதர் சொன்னார்.

பீஷ்மர் இருபதாவது நாள் பீதர்களுடன் காந்தார நகரத்துக்குள் நுழைந்தார். தாரநாகமென்று அழைக்கப்பட்ட ஆற்றைக் கடந்து செல்லும் பாதைக்கு அப்பாலிருந்தது அந்நகரம். அதை ஆறு என்றே சொல்லமுடியவில்லை. பாலைவெளி மெல்லச்சரிந்து மென்மணற்பரப்பாக ஆகி நெடுந்தூரம் சென்றபின்புதான் நீரொழுக்கு வந்தது. கங்கையின் மிகச்சிறிய ஓடை அளவுக்கே நீர் சென்றது. ஆனால் முற்றிலும் ஓசையே இல்லாமல் ஆழ்ந்த நீலநிறத்தில் கிடந்தது அது. துயிலும்ஆறு என்று தோன்றியது.

பிருஷதர் அதன் பெயர் தாரநாகம் என்றார். நாகத்தின் அமைதி கொண்டது அது. இரவில் விண்மீன்களை பிரதிபலிப்பது. அதன் நீர் வெம்மைகொண்டிருந்தது. அந்நீரை அப்படியே அள்ளிக்குடிக்கவோ உடலில் விட்டுக்கொள்ளவோகூடாது என்றனர் வணிகர். அதை மண்கலங்களில் அள்ளி நதிக்கரைச் சோலைகளில் சிறிதுநேரம் வைத்திருந்தால் குளிர்ந்து அருள் புரியத்தொடங்கிவிடும்.

நீலமாக நீர் பெருகிச்சென்றாலும் எந்த மிருகமும் அதில் வாய்வைத்து அருந்தவில்லை. "இரவில் பாலைநிலம் குளிர்ந்து விரைத்துவிடும். அப்போது மெல்லிய வெம்மைகொண்ட நதிநீர் அமுதுபோலிருக்கும். பாலையின் உயிர்களனைத்தும் நீரை அள்ளிக்குடிக்கும். நீரில் இறங்கித் திளைக்கும்" என்றார் பிருஷதர். "ஆகவே இந்நதிக்கு உஷ்ணவாகினி என்றும் கவிஞர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்."

ஆற்றைக் கடந்து மேலேறியதுமே தெரிந்த காந்தாரநகரத்தின் கோட்டை புதியது என்பதை பீஷ்மர் தொலைவிலிருந்தே கண்டார். அதன் பலபகுதிகள் கட்டி முடிக்கப்படவேயில்லை. அங்கே புழுதி எழ நூற்றுக்கணக்கானவர்கள் வினையாற்றிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. சாரங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் சிலந்தி வலைபோலத் தெரிந்தன. அவற்றில் வடங்களால் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான குதிரைகளால் இழுக்கப்பட்டு தூக்கி ஏற்றப்பட்ட பாறைகள் சிலந்திகள் போல எழுந்துசெல்வது தெரிந்தது.

மிகுந்த கனவுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நகரம் என்று அதைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டார். பழையநகரம் மிகச்சிறியது. மூன்று சிறிய குன்றுகளுக்கு நடுவே இருந்த பள்ளத்தாக்கு அது. அங்கே இருந்த இயற்கையான நீர்நிலையால் அங்கே குடியிருப்பு உருவாகியிருக்கலாம். அதைச்சுற்றி வளர்ந்த பழையநகரையும் அதைச்சுற்றியிருந்த குன்றுகளையும் உள்ளடக்கி கோட்டை கட்டப்பட்டிருந்தது. குன்றுகளின் செங்குத்தான சரிவுகளை மதில்சுவருடன் இணைத்துக்கொள்ள முயன்றிருந்தனர் சிற்பிகள். குன்றுகளின் உச்சியில் காவல் மாடங்கள் அமைத்திருந்தனர்.

"துர்வசு வம்சத்தவரன வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், காண்டீரன், காந்தாரன் என்னும் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம் இது. இன்று இதை மாமன்னர் சுபலர் ஆள்கிறார். அவருக்கு மூன்று மைந்தர்கள். அசலர், சகுனி, விருஷகர். பட்டத்து இளவரசர் அசலர்தான் என்றாலும் மூவரிலும் வீரரும் அறிஞருமான சகுனியே இந்நகரை உருவாக்கி வருகிறார். இன்று காந்தாரத்தை ஆள்வது இளவரசர் சகுனிதான்" என்றார் பிருஷதர்.

"அவனுடைய பேராசை இந்தக்கோட்டையைப் பார்த்தாலே தெரிகிறது" என்று தாடியைத் தடவியபடி பீஷ்மர் சொன்னார். "நகரின் தேவை என்ன, அதன் வாய்ப்புகள் என்ன எதைப்பற்றியும் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பாரதவர்ஷத்தின் பெரியகோட்டை ஒன்றை கட்டிவிடவேண்டுமென ஆசைப்படுகிறான்." பிருஷதர் "ஆம், இளவரசர் சகுனி ஆசைமிகுந்தவர் என்கிறார்கள்" என்றார்.

"இந்தப்பெரும்பாலையே மாபெரும் கோட்டை. இதன் நடுவே இவ்வளவு பெரிய கோட்டைக்கான தேவையே இல்லை. எதிரிகள் வருவதை எத்திசையிலும் நூறு யோஜனைக்கு அப்பாலேயே அறிந்துவிடமுடியும். அவர்களை பாலையிலேயே சென்று தாக்கமுடியும். அவர்கள் பாலைப்பயணத்தில் களைத்திருக்கையில் அனைத்து ஆயுதங்களுடனும் வளங்களுடனும் சென்று தாக்கி வெல்லமுடியும்... இது பாதுகாப்புக்கான கோட்டையே அல்ல. சகுனியின் அகந்தைதான் கல்லாக மாறி கோட்டையாக எழுந்து நிற்கிறது" பீஷ்மர் சொன்னார். "இந்தப்பாலையில் இக்கோட்டையைக் கட்டுவது கடினம். கட்டியபின் நிலைநிறுத்துவது அதைவிடக்கடினம்."

"உண்மை" என்றார் பிருஷதர். "மன்னர் சுபலனுக்குக்கூட இந்தப் பெரும்கோட்டையைக் கட்டுவதில் உடன்பாடில்லை என்றார்கள். இதைக்கட்டுவதற்காக சகுனி பெரும் செல்வத்தை வீணடித்துவிட்டார் என்று அவர் சினம் கொண்டிருப்பதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள். கோட்டைக்குள்ளேயே பெரும்பகுதி பாலையாகவே உள்ளது. அங்கெல்லாம் மக்கள் வாழவேண்டுமென்றால் நீர் தேவை. இப்போது கோட்டைக்கட்டுமானத்துக்காக வந்திருக்கும் அடிமைகளுக்குக் கூட தாரநாகத்தின் நீர் போதவில்லை."

"சகுனி என்ன சொல்கிறான்?" என்றார் பீஷ்மர். "அப்பால் பள்ளத்தில் ஓடும் ஆரியகௌசிகா ஆற்றை இப்பகுதிக்கு திருப்பப்போவதாகச் சொல்கிறார்." பீஷ்மர் சிரித்து "அதற்கு பதில் காந்தாரபுரியை அப்பகுதிக்கு கொண்டுசெல்லலாமே!" என்றார்.

பிருஷதர் "காந்தாரத்தின் பெரிய நகரம் வடக்கே குஃபாவதிக்கரையில் இருக்கும் புருஷபுரமும் அப்பாலிருக்கும் தக்‌ஷசிலையும்தான். அவை உத்தரபதத்தின் அருகே உள்ளன. அங்கிருந்துதான் காந்தாரத்தின் செல்வம் வருகிறது. ஆனால் இது புராணகாலத்து மன்னராகிய துர்வசு அமைத்த தொல்நகரம். இதைக்கொண்டுதான் இம்மன்னர்கள் காந்தாரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இதுதான் தலைநகரம் என்பதில் சகுனி உறுதியுடன் இருக்கிறார்" என்றார்.

"எதிரிகள் இல்லையென்றாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆவல் கொண்டவர் சகுனி" என்று பிருஷதர் சிரித்தார். பீஷ்மரும் சேர்ந்து சிரித்தார்.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 3 ]

பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான்.

ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். ஆனால் அவை நெடுங்காலம் முன்னரே வேட்டைக்காரர்களால் முற்றிலும் விலக்கப்பட்டிருந்தன. அக்குகைகளில் கடும்விஷம் கொண்ட நெடுநாகங்கள் வாழ்கின்றன என்று அறிந்திருந்தனர். என்றோ ஒருநாள் அம்மலையில் ஒளி தெரியும்போது மட்டும்தான் தென்றிசை நாகர்களில் எவரோ அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.

பீதாசலத்துக்குச் செல்லலாம் என்று அவனிடம் சென்ற மாதம் அவனைப் பார்க்கவந்த நிமித்திகன்தான் சொன்னான். பன்னிருகட்ட வினாக்களத்தில் அவனுடைய கோள்களின் நிலையையும் திரிபையும் கண்டு கணித்த நிமித்திகன் சிந்தனையில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு "அரசே, தங்கள் வாழ்க்கை புதிய திக்கொன்று நோக்கி எழவிருக்கிறது. பெருமழையை தென்வானம் அதிர்ந்து அறிவிப்பதுபோல கோள்கள் எதையோ சொல்கின்றன. அது எது என அறியும் ஞானம் எனக்கில்லை. முக்காலமும் உணர்ந்த எவரோ அவற்றை சொல்லக்கூடும்" என்றான்.

சகுனி அவனிடம் "அப்படி எவர் இங்குள்ளனர்?" என்றான். "நானறியேன். ஆனால் அவ்வண்ணம் நீங்கள் அறியவேண்டுமென்பது ஊழின்விதி என்றால் அவர் தங்களைத்தேடி வரக்கூடும்" என்றான் நிமித்திகன். "நாகசூதர்களும் வேதமுனிவர்களும் மட்டுமே காலமும்மடிப்பை விரிக்கத் தெரிந்தவர்கள் என நான் அறிவேன்" என்று சொல்லி தலைவணங்கினான்.

நாகசூதர்கள் வரும்போது தன்னிடம் தெரிவிக்கும்படி சகுனி ஆணையிட்டிருந்தான். பீதாசலத்தில் இரவில் மின்மினி ஊர்வதுபோலச் சென்ற முதல் ஒளியைக் கண்டதும் ஒற்றர் வந்து சொன்னார்கள். தன் குதிரையில் தன்னந்தனியாக பீதாசல மலையை ஏறிக்கடந்து குகைகளின் முன்னால் வந்து நின்ற சகுனி "நாகசூதரே, நான் காந்தாரத்து இளவரசனாகிய சௌபாலன் என்னும் சகுனிதேவன். தங்கள் அருள்தேடி வந்தவன்" என்றான். அந்த ஒலி தேன்கூடு போல இருந்த அந்தக்குகைகளுக்குள் எதிரொலி செய்தது. மந்திரத்தைச் சொல்லும் தவச்செல்வரைப்போல அவனுடைய குரலை மலை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டது.

சற்று நேரம் கழித்து அவனுக்கு மிக அருகே ஒரு குடைவுப்பாதை வழியாக உயரமற்ற கரிய மனிதன் கருஞ்சடைக்கற்றைகள் தோளில் விரிந்திருக்க நாகபடமுனைகொண்ட யோகதண்டும் புலித்தோலாடையும் நெற்றியில் வரையப்பட்ட செந்நிற மூன்றாம் கண்ணுமாக வந்து நின்றான். சகுனி அவனை மண்ணில் முழந்தாள்பட விழுந்து வணங்கினான். அவன் செந்நிற விழிகளால் சகுனியை கூர்ந்து நோக்கி "வருக!" என்றான். அக்குரல் இசைக்கருவி ஒன்றின் மீட்டல் போலிருந்தது.

நாகசூதன் அவனுடைய குடைவுக்குகையின் வாயிலில் புழுதியில் சகுனியை அமரச்செய்தான். தன் யோகதண்டை மடியில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து அவன் கண்களைக் கூர்ந்து நோக்கினான். "நீ அறியவேண்டியது என்ன?" என்றான். "பெருவெள்ளம் என்னை அள்ளுகிறதென்று உணர்கிறேன். அது என்னை கொண்டுசெல்லும் திசை எது?" என்றான் சகுனி.

நாகசூதன் "அதை அறிபவன் பெருவெளியின் அனைத்து விசைகளையும் அறிபவனாகிறான். அவன் முதற்பெரும் நாகமேயாவான்" என்றான். "நான் பெருவெளியை அறியவிழையவில்லை. நான் அறியவிழைவது என்னைப்பற்றி" என்றான் சகுனி. "இப்பெருவெள்ளத்தின் விசையை வெல்வேனா வீழ்வேனா?"

"இளவரசே அறிதல் ஆவதல்ல. உணர்தலின் முனையொன்றை நாம் இருவரும் சென்று தொடமுடியும்" என்றபின் தன் நாகபட யோகதண்டை மடியில் வைத்து திருப்பிக்கொண்டு அதையே நோக்கியிருந்தான். மெதுவாக அவன் விழிகள் விரிந்தன. கண்கள் இமைப்பை இழந்து ஒளிகொண்டன. அவை நாகவிழிகளாக மாறுவதாக சகுனி எண்ணினான்.

நாகசூதன் சொன்னது ஒரு கதை. "இளவரசே, முன்பொருகாலத்தில் தட்சிணவனத்தில் மாபெரும் பள்ளம் ஒன்றிருந்தது. பத்து யானைகள் படுக்கும் அளவுக்கே ஆழம் கொண்டிருந்த அந்தப்பள்ளம் ரக்தகிரி என்னும் மலையின் உச்சியில் இருந்தது. அதற்கு ரக்தாக்ஷம் என்று பெயர்" என அவன் தொடங்கினான்.

பிடிமானமற்ற பாறைகள் சூழ செங்குத்தான கிணறுபோல பதினைந்து வாரை ஆழத்தில் இருந்த அந்தக்குழிக்குள் விழுந்த எவரும் திரும்ப மேலேறி வரமுடியாது. மனிதர்களை சோதிப்பதற்காக கந்தர்வர்கள் உருவாக்கிய பொறி அது என்று கதைகள் சொல்லின. கந்தர்வர்கள் மேலே இருந்த கமலம் என்னும் பாறையின் உச்சியில் அமர்ந்தபடி உள்ளே நிகழ்வனவற்றை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஒருநாள் மலையில் வேட்டைக்குச் சென்ற தசபாலன் என்னும் மன்னனும் பத்து துணைவர்களும் அக்குழியை நோக்கி இழுக்கும் ஒரு நீரோடையில் நீர் அருந்த முயன்றபோது வழுக்கி அதனுள் சென்று விழுந்தனர். வீழ்ச்சியின் அதிர்ச்சியை கடந்தபின் அவர்கள் எங்கு வந்திருக்கிறார்கள் என்று மதிப்பிட்டுக் கொண்டனர். அங்கே சாதாரணமாக மனிதர்கள் எவரும் வருவதில்லை. வேட்டைக்காக எவரேனும் வந்தாலொழிய எவருடைய உதவியையும் பெறமுடியாது. மேலிருந்து உதவி வராமல் எவரும் மேலேறிச்சென்று தப்புவதும் இயல்வதல்ல. அவ்வண்ணம் அங்கே ஒரு குழி இருப்பதும் எவரும் அறியாதது.

அவ்வாறு எவரேனும் ஏறிவந்து அவர்கள் அக்குழிக்குள் இருப்பதை அறிந்து உதவுவது வரை அங்கேயே காத்திருப்பதன்றி வேறு வழி இல்லை. அக்குழிக்குள் ஓடிய சிற்றோடை அவர்கள் உண்ண நீரை அளித்தது. அதுவன்றி அதற்குள் உணவு என ஏதுமிருக்கவில்லை. அங்கே முடிந்தவரை அதிகநாட்கள் உயிர்வாழ்வதே தப்புவதற்கான ஒரே வழி என அவர்கள் உணர்ந்தனர். தசபாலன் தன் அமைச்சனாகிய ஸ்மிருதன் என்பவனிடம் அங்கே உயிர்வாழ்வதற்காக என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டான். கற்றறிந்தவனாகிய ஸ்மிருதன் அனைத்தையும் சிந்தித்து ஒரு வழியைச் சொன்னான்.

ஸ்மிருதன் வகுத்த முறைமையை தசபாலனின் சேனாதிபதியான ராஜஸன் அங்கே செயலாக்கினான். அதன்படி அங்கிருந்த பத்துபேரில் ஐவரை சிறைப்பிடித்து கைகால்களைக் கட்டி வைத்துக்கொண்டனர். எஞ்சிய ஐவரில் இருவர் இரவும் பகலும் முறைவைத்து கீழிருந்து கற்களைப் பொறுக்கி மேலே தெரியும்படி வீசி தொடர்ச்சியாக குரலெழுப்பியபடி இருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அதை வேட்டைக்கு வருபவர்கள் காண்பது வரை அச்செயல் தொடரவேண்டும்.

அதுவரை அவர்களுக்கான உணவு அங்கேயே விளையவேண்டும். அங்கே வளரக்கூடியதாக இருந்தது மானுட உடல் மட்டுமே. அதை வளர்ப்பது மட்டுமே உணவுக்கான வழியாகும் என்றான் ஸ்மிருதன். எனவே கைகால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும் சேவகர்களின் தொடை, புட்டம், தோள், மார்பு போன்ற உறுப்புகளில் இருந்து பதினொருவரும் உண்பதற்குரிய இறைச்சியை வெட்டி எடுத்து அதை அவர்கள் பகிர்ந்து உண்ணலாம் என்றான் ஸ்மிருதன்.

ஊனுக்காக சேவகர்களைக் கொன்றால் அவ்வுடல் ஒருநாளிலேயே அழுகி உண்ணத்தகாததாக ஆகிவிடும் என்று சரகவிதிகளைக் கற்ற அமைச்சனான ஸ்மிருதன் அறிந்திருந்தான். ஆகவே அவர்கள் இறக்காதபடி மிகச் செம்மையாக சஸ்த்ர முறைப்படி அவர்களின் உடல்தசை வெட்டி எடுக்கப்பட்டபின் அவர்களின் தலைமயிராலேயே காயத்துக்கு தையல் போடப்பட்டது. அந்த ஊனை அவர்களும் பிறரும் உண்டனர். ஒருவனின் உடலை அவர்கள் மூன்றுநாட்களுக்குரிய உணவாகக் கொண்டனர். ஆகவே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒருவனின் உடல் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்குள் முந்தைய காயங்கள் ஆறிவிட்டிருந்தன.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பெருவலியால் துடித்த சேவகர்களின் வாய்கள் அவர்களின் ஆடைகளாலேயே இறுகக் கட்டப்பட்டிருந்தன. முதற்சிலநாட்கள் அவர்கள் தப்பவிரும்பி திமிறிக்கொண்டிருந்தனர். கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்தது. பின்னர் அந்த வலிக்குப் பழகி அதிர்ந்து நடுங்கிய உடல்களுடன் விழித்த கண்களுடன் அசைவில்லாமல் வானைநோக்கிப் படுத்திருந்தனர்.

இவ்வாறு ஆறுமாதகாலம் அவர்கள் அதற்குள் வாழ்ந்தனர். அதற்குள் அந்தச்சேவகர்களில் ஒருவன் முழுமையாகவே இறந்துபோயிருந்தான். பிற ஒன்பதுபேரும் மெலிந்து களைத்து அரைப்பிணங்களாக இருந்தபோதும் அங்கே வேட்டைக்கு வந்தவர்களால் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மேலும் பல ஆண்டுகாலம் நலமாக வாழ்ந்தனர்.

சகுனியை நோக்கி நாகசூதன் சொன்னான் "அரசே, எங்கள் கதைகளும் நாகங்களே. அவை விரைவாக வெளிப்பட்டு நெளிந்தோடி வளைக்குள் மறைந்துவிடுகின்றன. அவற்றை நீங்கள் காணமுடியாது, ஆனால் அவை வளை வாயிலில் விழிகளை நட்டு உங்களை இமையாது நோக்கியிருக்கும்."

சகுனி "நான் எதை அறியவேண்டும் இக்கதையிலிருந்து?" என்றான். "எங்கள் கதைகளில் நீதிகளே இல்லை" என்று நாகசூதன் சொன்னான். "ஆனால் இக்கதையை நான் சொல்லும்போது நீங்கள் கண்டதென்ன?" சகுனி "உமது மடியிலிருந்த யோகதண்டம் நாகவிழிளுடன் என்னை நோக்கியது. கதைமுடிவில் அது நாகமாக ஆகி நெளிந்தது."

நாகசூதன் புன்னகையுடன் "நீங்கள் திசைபிறழாது இலக்கை அடையும் அம்பு, சௌபாலரே" என்றான். சகுனி அவன் மேலும் சொல்வான் என்று காத்திருந்தான். நாகசூதன் எழுந்ததும் "அந்த இலக்கு என்ன என்று சொல்லமுடியுமா?" என்றான். நாகசூதன் புன்னகைமட்டும் புரிந்தான்.

சகுனி மீண்டும் கீழே வந்துகொண்டிருந்தபோது அக்கதையை அன்றி வேறெதையுமே எண்ணமுடியாமல் தன் அகம் ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். நாட்கள் செல்லச்செல்ல அக்கதை அவன் நெஞ்சில் மேலும்மேலும் வல்லமை கொண்டபடியே சென்றது. நாகத்தின் கண்கள் ஒளியுடன் தெரிந்தன. பின்பு மலையே மறைந்து நாகத்தின் கண்கள் மட்டுமே தெரிந்தன.

பதினெட்டு நாட்களுக்குப்பின்பு தெற்குப்பகுதி சிற்றூர் ஒன்றின் ஆட்சியாளனாகிய பிரமோதன் என்பவன் சகுனியின் விசாரணைக்கு வந்தான். அந்த ஆட்சியாளன் சுங்கத்தில் ஒருபகுதியை தனக்கென எடுத்துக்கொண்டு அதைக்கொண்டு மந்தணநிதி சேர்த்திருந்தான். அவன் ஆயுதங்களை வாங்கி படை ஒன்றை அமைக்க எண்ணுவதாக ஒற்றுச்செய்தி வந்தது. அச்செய்தியை அளித்தவன் பிரமோதனின் அமைச்சனாகிய சுதர்மன்.

பிரமோதன் கைவிலங்குகளுடன் சகுனியின் அவைக்கு முன் வந்து நின்றான். அச்சமற்ற விழிகளுடன் நின்ற பிரமோதனை சகுனி கூர்ந்து நோக்கினான். "நீ செய்தவற்றை எவ்வாறு நியாயப்படுத்துவாய்?" என்றான்.

"நான் ஷத்ரியன்... நாடாள்வதும் மண்கொள்வதும் எனக்கான அறமே. மண்ணாளும் கனவை இழந்தால் என்னால் வாழமுடியாது" என்றான் பிரமோதன். சகுனி அவனிடம் "என்னுடன் போர்புரி. நீ வென்றால் உன் நாட்டை உனக்களிக்கிறேன்" என்றான்.

வாளேந்தி களமிறங்கிய சகுனி பிரமோதனை வெட்டி வீழ்த்தினான். அந்த அமைச்சனுக்கு பத்தாயிரம் பொன்னளித்து அவைநடுவே பாராட்டினான். அவனை கூர்ஜர எல்லையில் சுங்கம் கொள்ளும் துறையதிபனாக அனுப்பினான். ஆனால் செல்லும் வழியிலேயே அவனை இன்னொரு ஒற்றனைக்கொண்டு அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.

அவனருகே இருந்த அசலனும் விருஷகனும் அந்தத்தீர்ப்பைக் கண்டு வியப்பதை சகுனி கண்டான். அம்முடிவை அவன் எச்சிந்தனையும் இல்லாமல் கண்ணிமை நேரத்தில்தான் எடுத்திருந்தான். அதைப்பற்றியே அவனும் எண்ணிக்கொண்டிருந்தான். அகநிலையழிந்து தன்னைத் தொடர்ந்து வந்த சோதரர்களிடம் "தன்னை ஷத்ரியன் என உணர்ந்திருந்த பிரமோதன் தன் குடிகளுக்கு நல்லரசனாகவே ஆண்டிருப்பான். அவனை நான் சிறையிட்டாலோ கொன்றாலோ அம்மக்களின் நன்மதிப்பை இழந்தவனாவேன். ஷத்ரியமுறைப்படி அவனை நான் போரில் கொன்றால் அம்மக்கள் அதை இயல்பானதென்றே கொள்வார்கள்" என்றான்.

அவர்கள் நெஞ்சில் ஓடுவதை உணர்ந்து "அந்த அமைச்சன் பிரமோதனுக்குக் கட்டுப்பட்டவன். தன் அறத்தை மறந்து அவன் நம்மிடம் தன் அரசனை காட்டிக்கொடுத்தான். அத்தகையோரை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். பிறர் அவனைப்போல நம்மிடம் செய்திகளைச் சொல்ல அது உதவும். ஆனால் அவன் நமக்கும் வஞ்சகம் செய்யக்கூடும்" என்றகணமே புற்றுள் நோக்கியிருக்கும் பாம்பின் விழிகளை அவன் கண்முன் கண்டான். நாகசூதனின் கதையைச் சொல்லி "உடன்பிறந்தவர்களே, இந்த வினாவுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் அக்குழியில் இருந்து வெளிவந்ததும் என்ன செய்வீர்கள்?" என்றான்.

"அந்தச் சேவகர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்தபின் எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு நன்றி சொல்வோம்" என்றான் மூத்தவனாகிய அசலன். "அக்கணமே எஞ்சிய சேவகர்களைக் கொன்றுவிட ஆணையிடுவேன்" என்றான் விருஷகன். "ஏனென்றால் அவர்களுக்கு அரசு நிகழும் முறைமை ஒன்று தெரிந்துவிட்டது. ஒருபோதும் எளியகுடிகள் அதை அறியக்கூடாது. அறிந்தவன் அரசுக்குப் பணியமாட்டான்."

சகுனி "மூத்தவரே, நீங்கள் இந்த அரசை கருணையுடன் ஆட்சி செய்யமுடியும். ஆனால் தம்பியர் இன்றி ஆண்டால் நீங்கள் ஒரு வருடத்துக்குள் முடியை இழப்பீர்கள்" என்றான். "தம்பி, நீ என்றும் மூத்தவருடன் இரு. உனது வாளும் மதியும் அவரைச் சூழ்ந்து காக்கவேண்டும்." விருஷகன் தமையனை வணங்கினான்.

அன்றுமாலை தன் தமக்கையும் காந்தாரியுமான வசுமதியிடம் அவன் அன்று நிகழ்ந்ததைச் சொன்னான். "இந்தச்சிறு அரசுக்கு அவர்கள் இருவரும் இணைந்தால் நல்லாட்சியை அளிக்கமுடியும்" என்றான். "ஆயிரமாண்டுகளுக்கு முன் இந்த மண்ணுக்கு வந்த துர்வசு மன்னர் இங்குவாழ்ந்த பழங்குடிகளிடம் பெண்கொண்டு உருவாக்கிய குலம் நம்முடையது. நம்மில் இரு குருதிகள் ஓடுகின்றன. சந்திரகுலத்து துர்வசுவின் குருதியும் பசுமைகாணா மலைகளில் வேட்டையாடி வாழ்ந்த பஷுத்துரர்களின் குருதியும் இணைந்தவர்கள் நாம். அவையிரண்டும் என் இரு உடன்பிறப்புகளிடமும் உள்ளன."

"தம்பி, நீ என்ன முடிவை எடுத்திருப்பாய்?" என்றாள் வசுமதி. சகுனி புன்னகைசெய்து "அவர்களை விடுதலைசெய்து அவர்கள் விரும்பும் சிற்றரசையோ படைப்பிரிவையோ அமைச்சையோ அளிப்பேன்" என்றான். "ஆனால் அவர்கள் செய்வதையும் சொல்வதையும் ஒற்றர்கள் வழியாக அறிந்துகொண்டிருப்பேன். தன் ஊனை தானே உண்டு சுவையறிந்தவன் அறியும் ஞானமென்ன என்பதை நான் அவன் வழியாக அறியமுடியும். அவன் திறக்கும் வாயில்கள் எனக்கு உதவக்கூடும்."

"அந்த ஞானத்தை அறிந்து முன்சென்ற ஒருவனைமட்டும் என்னுடன் வைத்துக்கொள்வேன். பிறரை கொன்றுவிட ஆணையிடுவேன்" என்று சகுனி தொடர்ந்தான். "அவர்கள் ஒருபோதும் சமநிலை கொண்டவர்களாக இருக்கப்போவதில்லை."

அவள் புன்னகை செய்தாள். "நீ பிறர் பாராதவற்றை பார்ப்பவன்" என்றாள். "தமக்கையே, என்னுள் உறக்கமில்லாத இரு நாகவிழிகளை உணர்கிறேன். அவை என்னை வழிநடத்தும்" என்று சகுனி சொன்னான். "என் இடம் இதுவல்ல. என் பணி இங்கும் அல்ல. நாகசூதனின் ஆரூடம் அதுவே."

அவள் சிரித்து "இளமையிலேயே உன் விழிகள் கிழக்கு நோக்கித் திரும்பி இருக்கின்றன என நான் அறிவேன்" என்றாள். "ஆம், சந்திரகுலத்தில் இருந்து அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்ட துர்வசுவின் குருதி என்னுள் முதிர்வடைந்துவிட்டதுபோலும். அது திரும்பிச்செல்ல விழைகிறது. விட்டுவிட்டு வந்த அனைத்தையும் வெற்றி கொள்ளத்துடிக்கிறது" என்று அவனும் சிரித்தான்.

பின்னர் சகுனியும் வசுமதியும் இரு குதிரைகளில் மலையேறிச் சென்று பாறை விளிம்பில் நின்றார்கள். வசுமதியும் அவனைப்போலவே குதிரையில் நீண்ட பாலைவெளிப்பாதையில் விரைவதை விரும்புபவள். அவனுடன் குதிரையை விரையவைக்க அவளால் மட்டுமே முடியுமென அவன் இளமையிலேயே அறிந்திருந்தான். பகல்களும் இரவுகளும் சென்றாலும் அவள் களைப்படைவதுமில்லை. மலையுச்சியில் நின்று கண் எல்லை வரை விரிந்துகிடந்த பாலைநிலத்தில் மாலைச்சூரியன் சிவந்து அணைவதை பார்த்துக்கொண்டிருக்கும் கணங்களில் சகுனி எப்போதும் போல அவனுள் இருந்து அவன் நன்கறிந்த இன்னொருவன் எழுந்து பேருருவம் கொண்டு நிற்பதை உணர்ந்தான்.

"இந்த மண்மீது குதிரையில் விரைகையில் இதைத் தழுவிக்கொள்வதாகவே உணர்கிறேன். மைந்தனைத் தழுவித்தழுவி நிறைவுகொள்ளாத அன்னைபோலத்தான் நானும்" என்றாள் காந்தாரி. சகுனி முகத்தில் படர்ந்த செவ்வொளியுடன் "என் அகம் இந்த விரிநிலத்தை சிறு கொட்டில் என்றே உணர்கிறது" என்றான். "என் கனவுகளிலெல்லாம் நான் சிற்றறைக்குள் அடைபட்டவனாகவே உணர்கிறேன். கதவு சற்றே திறந்திருப்பதையும் காண்கிறேன்." கண்முன் விரிந்துகிடந்த நிலத்துக்கு அப்பால் தொடுவான் கோட்டின் ஒளியை நோக்கி சகுனி பெருமூச்சுவிட்டான். "நான் அடையவேண்டியவை எல்லாம் அங்கே இருக்கின்றன. என் நிலம்...தென்குமரி முனைவரை செல்லும் பாரதவர்ஷம்."

அவனுடைய கனவை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். அவளைவிட ஓராண்டு சிறியவனாகிய அவன் இளமையில் அவளுடன் அந்தப்புரத்திலேயே வளர்ந்தவன். எங்கும் எவரிடமும் சொல்லெண்ணிப் பேசுபவன் அவளிடம் மட்டுமே அகத்தை பொழிந்துகொண்டிருப்பான். அவனுடைய சொற்களை மெல்லிய புன்னகை ஒளியுறச்செய்த விழிகளுடன் அவள் கேட்டுக்கொண்டிருப்பாள். அவன் ஐயங்களைவிட அச்சங்களைவிட கனவுகளையே அவள் அதிகமும் அறிந்திருந்தாள். அக்கனவுகளே அவனாக அவள் எண்ணினாள். கொட்டில் வாயிலில் நின்று பொறுமையிழந்து கால்களை மண்ணில் தட்டி காதுகளைக் கூர்ந்து நாசிதூக்கி வாசனை பிடிக்கும் இளம்குதிரை.

பத்தாண்டுகளுக்கும் மேலாக சகுனி பாரதவர்ஷத்தின் அனைத்து அரசுகளைப்பற்றியும் உளவுச்செய்திகளை தொகுத்து ஆராய்ந்தான். மகதமே கங்கைக்கரையில் வளர்ந்து வரும் அரசு என்று அவன் அறிந்தான். மகதத்தின் கங்கைத்துறைகளில் நதி மிக ஆழமானது. அங்கே பெருங்கலங்கள் கடலில் இருந்து வரமுடியும். அங்கு உருவாகிவந்திருக்கும் துறைகள் வழியாக அங்கே செல்வம் குவிந்துகொண்டிருக்கிறது என்றனர் சூதர். ‘காராமணிகளும் கோதுமையும் செம்பயறும் கலந்து பரவியதுபோல மக்கள் நெரிசலிடும் மகதத்தின் துறைமுகங்களில் பொன் அறுவடையாகிறது.’

"இன்று வணிகத்தில் நிகழும் பெரும் மாறுதல் என்பது இதுதான் தமக்கையே! பீதர்கலங்கள் நம்மைவிட பற்பல மடங்கு பெரியவை. பெருங்கலங்கள் அணுகும் துறைகளே இனிமேல் பொருள்வல்லமை பெறும். பொருள்வல்லமையே படைவல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துகொண்டிருக்கிறது. கலிங்கமும் கூர்ஜரமும் பெருநாவாய்களைக் கொண்ட நாடுகளாக ஆகும். ஆனால் அவை பிறநாடுகளில் இருந்தே பொருள் கொள்ள முடியும். மகதமோ கங்கைக்கரை விளைநிலங்களையும் இமயத்து மலைநிலங்களையும் கங்கையின் நாவாய்த்துறைகளையும் ஒருங்கே கொண்ட நாடு."

மகதத்தை அனைத்து ஷத்ரியர்களும் இணைந்து அழிக்கமுயல்வார்கள் என்று சகுனி எண்ணினான். எங்கோ சொற்களும் படைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. ஷத்ரியர்கள் மகதத்தை அஞ்சுவது அது தொன்மையான ஷத்ரிய நாடு என்பதனால்தான். குலமும் செல்வமும் இணைந்தால் அதன் வல்லமை எல்லையற்றது. அது பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளும். பிற ஷத்ரியகுலங்கள் அதன் கீழ் அடங்கி வாழ நேரும்.

"ஷத்ரியர்கள் புயலை கோட்டைகட்டி தடுக்கமுயல்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வல்லமை அதிகம். போர்புரியும் ஆற்றலும் அதிகம். அவர்களால் மகதத்தை அழித்துவிடமுடியும். அவ்விடத்தில் இன்னொரு புதியநாடு எழுவதைத் தடுக்க முடியாது" என்றான். "மகதம் இன்று வலுவான ஒரு துணைக்காக ஏங்கி நிற்கிறது. நாம் மகதத்துடன் கைகோர்த்துக்கொண்டால் பாரதவர்ஷத்தை மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அள்ளிப்பற்றிவிடமுடியும்."

புரு வம்சத்து உபரிசரவசுவின் குலத்தில் வந்த விருஹத்ரதனின் மைந்தனான மகத இளவரசன் பிருகத்ரதன் வல்லமைகொண்டவன் என்று சூதர்கள் சொன்னார்கள். அவனுடைய ஆட்சியில் மகதம் மேலும் விரிவடையும் என்றனர் அமைச்சர்கள். சகுனி தன் தந்தை சுபலரிடம் மகத இளவரசனுக்கு காந்தாரியை மணமுடித்துக் கொடுக்கலாமென்று சொன்னான்.

அரசவையில் அதை சகுனி சொன்னபோது "மைந்தா, நாம் இன்னமும் ஷத்ரியர்களால் அரசகுலமாக மதிக்கப்படவில்லை. ஆகவே நம் இளவரசிக்கு சுயம்வரம் அமைக்க நம்மால் முடியாது. தகுதியான ஷத்ரியகுலமொன்றில் அவளை மணமுடித்தனுப்புவதே நாம் செய்யக்கூடுவது. ஆனால் அவர்கள் நம்மிடம் வந்து மணம் பேசவேண்டும் என்பதே முறையாகும்" என்றார் சுபலர்.

"தந்தையே, நம்முடைய வல்லமை என்ன என்பது இன்னும் ஷத்ரியர்களுக்குத் தெரியாது. நம் உறவின் மூலம் அவர்கள் அடைவதென்ன என்றும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதை நாம் அவர்களுக்குத் தெரிவிப்போம். அதன்பின் அவர்கள் முடிவெடுக்கட்டும்" என்று சகுனி சொன்னான். "அவர்களிடம் ஒரே ஒரு அரசியல் சூழ்வினைஞன் இருந்தால்கூட அவர்களுக்கு நாம் அளிப்பதென்ன என்று புரியும்."

சகுனியின் ஆணைப்படி பரிசுகளுடன் நாற்பதுபேர்கொண்ட தூதர்குழு அமைச்சர் சுகதர் தலைமையில் மகதத்துக்குச் சென்றது. அவர்கள் சப்தசிந்துவைக் கடந்து கங்கை வழியாக மகதத்துக்குச் சென்றனர்.

காப்பிரிநாட்டுப் பொன்னையும் சீனத்துப்பட்டுக்களையும் கொண்டுசென்ற அந்தத் தூதுவர்களை மகதமன்னன் விருஹத்ரதன் வரவேற்று தன் அவையில் அமரச்செய்தார். அவர்களுக்கு உயர்ந்த பரிசுகளையும் அளித்தார். பதினைந்துநாள் அங்கே விருந்துகளில் பங்கெடுத்துக்கொண்டபின்னர் ஒருநாள் விருஹத்ரதனிடம் சுகதர் அரண்மனை மந்திரசாலையில் தனியாகப் பேசினார். விருஹத்ரதனுடன் அவரது அமைச்சர் தேவபாலர் மட்டும் இருந்தார். காந்தாரத்தின் வல்லமைகளை விளக்கிய சுகதர் சகுனியின் உள்ளக்கிடக்கையை மகதமன்னனுக்குத் தெரிவித்தார். விருஹத்ரதனின் கண்கள் மாறுபடுவதைக் கண்டதுமே என்ன சொல்லப்போகிறார் என்று சுகதர் உணர்ந்துகொண்டார்.

ஆனால் விருஹத்ரதன் பேசுவதற்குள் தேவபாலர் புன்னகையுடன் "அரசரின் பதிலை காந்தார மன்னருக்கு முறையாகத் தெரிவிக்கிறோம் சுகதரே" என்றார். விருஹத்ரதன் புன்னகை புரிந்தார். சுகதர் அங்கிருந்து கிளம்பும்போது விருஹத்ரதன் அவரிடம் பொன்னாலான ஒரு பேழையை அளித்து அது காந்தார மன்னனுக்கு அவருடைய பரிசு என்று தெரிவித்தார்.

சுகதர் நிலைகொள்ளாத நெஞ்சுடன்தான் அந்தப்பேழையை காந்தாரத்துக்குக் கொண்டுவந்தார். அதை மகதனின் பரிசு என்று சொல்லி காந்தார மன்னன் சுபலரிடம் கொடுத்தபோதும் அவர் ஐயம் கொண்டிருந்தார். அது ஒரு தொடக்கம் என அவரது கனவுகள் அவரை எச்சரித்தபடியே இருந்தன.

அன்று அவையில் சகுனி இருக்கவில்லை. அவன் தன் படைகளுடன் வடஎல்லையில் பயணம் செய்துகொண்டிருந்தான். சுகதர் மன்னரிடம் "அரசே, மகத அரசரின் எண்ணம் சாதகமானது என நான் எண்ணவில்லை. அவரது அமைச்சர் தேவபாலர் கண்களில் விஷத்தைப்பார்த்தேன்" என்றார். "இப்பேழையை நாம் இளவரசர் வந்தபின்னர் திறப்பதே நல்லது."

சுபலர் உரக்கச்சிரித்து "அமைச்சரே, இந்தப் பொற்பேழையில் வேறு என்ன இருக்குமென எண்ணுகிறீர்கள்? நாம் அளித்த நவமணிக்குவையைக் கண்டு மகதன் நாணியிருப்பான். ஆகவேதான் பொற்பேழையில் மணஓலையை வைத்து அனுப்பியிருக்கிறான்" என்று சொன்னபடி அவை நடுவே அதைத் திறந்தார்.

அதற்குள் தோல்விளிம்புகள் நைந்த பழைய குதிரைச்சவுக்கு ஒன்று இருந்து. சிலகணங்கள் சுபலருக்கு ஏதும் புரியவில்லை. பேழையை திரும்பத்திரும்ப நோக்கியபின் "அமைச்சரே இது என்ன?" என்றார். மூத்த இளவரசனாகிய அசலன் "குதிரைச் சவுக்கு என நினைக்கிறேன்" என்றான்.

இளையவனாகிய விருஷகன் சினத்துடன் எழுந்து "அமைச்சரே அதை அரசரிடமிருந்து வாங்கும்... இக்கணமே அதை எரித்து அழித்துவிடும்..." என்று கூவினான். "இச்செய்தியை சகுனிதேவருக்கு எவரும் தெரிவிக்கவேண்டியதில்லை. இது இங்கேயே மறைந்துவிடவேண்டும்" என்றான்.

ஆனால் மறுநாள் மாலையே சகுனியிடம் ஒற்றர்கள் அனைத்தையும் சொல்லெண்ணிச் சொன்னார்கள். காந்தாரத்தின் வட எல்லைத்தலைநகரான புருஷபுரியில் அரண்மனை மந்திரசாலையில் படுத்திருந்த சகுனி தலைகுனிந்து அதைக் கேட்டபின் ஒற்றனிடம் அவன் போகலாம் என தலையசைத்துவிட்டு எழுந்து சாளரம் வழியாக நெடுந்தொலையில் தெரிந்த உத்தரபதத்தின் மலைக்கணவாயை பார்த்துக்கொண்டு நின்றான்.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 4 ]

காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல மூடித்திறந்து தலைசரித்து குக் குக் என்றது. சுஃப்ரை என்னும் அந்தப் புறா முதன்மையான செய்தி இல்லையேல் வராது என்றறிந்த சகுனி எழுந்து அதை அருகே வரவழைக்கும் குறியொலியை எழுப்பி, அதைப் பிடித்து அதன் கால்களில் மெல்லிய தவளைத்தோல் சுருளில் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தான்.

பீஷ்மரின் தூதையும் அதன் நோக்கத்தையும் அவன் தம்பி விருஷகன் எழுதியிருந்தான். சகுனி அந்தத் தோல்சுருளை முதலில் இருந்து இறுதி வரி வரைக்கும் இறுதியிலிருந்து முதல்வரி வரைக்கும் மும்முறை வாசித்துவிட்டு தன்னருகே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் போட்டான். தன் உடலெங்கும் அப்யங்கத்துக்காக மருத்துவர் பூசியிருந்த மலைப்பாம்பின் நெய்யுடன் குளிக்கச்சென்றான்.

அதிகந்தப்புல் போட்டு கொதிக்கச்செய்த நீரில் அவனை சேவகர் நீராட்டுகையில் அவன் உடலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி இருந்தான். மானிறைச்சியும் பாலும் உண்டபின் கூந்தலை குதிரைவால் வலையால் மூடிக்கட்டி மான்தோல் அந்தரீயமும் பட்டுச்சால்வையும் அணிந்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். ஒற்றைச்சொல்லில் ‘காந்தாரநகரிக்கு’ என்றபின் விரைந்தான்.

அவனைத் தொடர்ந்து சென்ற அவனுடைய களத்தோழனான சுஜலன் சகுனி நிலையழிந்திருப்பதை உணர்ந்துகொண்டான். புரவியில் நிமிர்ந்து அமர்ந்து கண்களில் தொடுவானின் ஒளியுடன் அவன் சென்றுகொண்டிருந்தான். பாலைப்பொழில்களில் ஓய்வெடுக்க கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கையில்கூட அவன் தாடை இறுகி இறுகி மீள்வதை சுஜலன் கவனித்தான்.

ஆறுநாட்களுக்கு முன்புதான் மகதத்தில் இருந்து குதிரைச்சவுக்கு வந்தசெய்தி புருஷபுரியின் தசவிருட்சத்துக்கு வந்து சேர்ந்தது. அதை தூதன் சகுனியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சுஜலன் சற்று அப்பால் நின்று கவனித்துக்கொண்டிருந்தான். தூதன் சென்றதும் அருகே சென்று சகுனியின் சொற்களை எதிர்பார்த்து நின்றான். சகுனி தூதனிடம் என்ன செய்தியென சுஜலனிடமும் சொல்லும்படி சொல்லிவிட்டு குடிலுக்குள் சென்றுவிட்டான்.

அச்செய்தியைக் கேட்டதுமே சுஜலனுக்கு அச்சம்தான் எழுந்தது. அவனுக்கு மகதத்தின் வல்லமையைப்பற்றிய புரிதலோ காந்தாரத்துடனான ஒப்பீடோ இருக்கவில்லை. ஆனால் அச்சம் கருமேகம் போல அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது. அது ஏன் என்றும் தெரியவில்லை. சகுனியையே கவனித்துக்கொண்டிருந்தான். அன்று முதல் சகுனியிடம் இறுக்கமான அமைதி பரவியிருந்தது. அவன் உடலின் எடை பலமடங்கு அதிகரித்திருப்பதுபோல, அவன் சருமம் காய்ச்சலால் தகித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

காந்தாரபுரியை நெருங்க ஒரு பகல் எஞ்சியிருக்கும் தொலைவில் அவர்கள் காலகம் என்னும் சிறு பாலைப்பொழிலில் தங்கினார்கள். சகுனி அங்கே மல்லாந்து படுத்திருந்தபோது அவனுக்குமேல் நிழல்விரித்து நின்றிருந்த ஸாமி மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பருந்து ஒன்றைப் பார்த்தான். பொருளாக மாறாத சொல்லோட்டங்களாக தன் உள்ளத்தை உணர்ந்தவனாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுஜலன் வந்து புரவிகள் ஒருங்கிவிட்டன என்று சொன்னதும் எழுந்து தன் சால்வையை இழுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு வில்லை எடுத்தான். மேலிருந்து எழுந்த பருந்து சிறகடித்தபடி ஒளிர்ந்துகொண்டிருந்த வானில் ஏறிச்சுழன்றது.

ஏதோ எண்ணத்தில் அதை நோக்கிக்கொண்டிருந்த சகுனி தன் வில்லை வளைத்து நாணில் அம்பேற்றி அதைக் குறிவைத்து எய்தான். வானில் நிலையழிந்து சிறகடித்த பருந்து கீழிறங்கி மேலும் சிறகடித்து பின் காற்றால் அள்ளப்பட்டு கிழக்காகக் கொண்டுசெல்லப்பட்டு வான் வளைவில் சரிந்து மறைந்தது. அக்கணம் வரை அவனில் இருந்த அனைத்து அமைதியின்மைகளும் மறைய சகுனி புன்னகை செய்தான். சால்வையை சரிசெய்தபடி சென்று புரவியில் ஏறிக்கொண்டு அதன் விலாவை கால்களால் தட்டி விசையுறச்செய்து புழுதிக்கடலாகக் கிடந்த பாலைநிலம் வழியாக பாய்ந்து சென்றான்.

புறப்பட்டு நான்கு நாட்களுக்குப்பின் சகுனி காந்தாரநகரியை அடைந்தான். கோட்டை வாயிலில் அவனை எதிர்கொண்ட அமைச்சர் சத்யவிரதர் அவனருகே வந்து பணிந்து அவன் சொல் காத்து நின்றார். அவன் விழிகளால் வினவியதும் பீஷ்மரின் தூது வந்ததைச் சொன்னார். "விழியிழந்தவருக்கு மணக்கொடை கேட்டு வந்ததை மாமன்னர் ஓர் அவமதிப்பாகவே எண்ணுகிறார். உடனடியாக பீஷ்மரை திரும்பும்படி சொல்ல ஆணையிட்டார். மூத்த இளவரசரும் சினம் கொண்டிருக்கிறார். இளையவர்தான் அவர்களிருவரையும் தடுத்து தங்கள் ஆணைக்குப்பின் முடிவெடுக்கலாமெனச் சொன்னார்" என்றார்.

சகுனி "அந்தச் சவுக்கு எங்குள்ளது?" என்றான். அந்த வினாவினால் முதலில் திகைப்புடன் நோக்கிய சத்யவிரதர் மெல்ல "அதை அழித்துவிடும்படி மன்னர் சொன்னார்" என்றார். சகுனியின் கண்களில் ஏதும் தெரியாததனால் "அதை உடனே நம் வீரர்கள் அழித்துவிட்டனர்" என்று மேலும் தணிந்த குரலில் சொல்லி "அதை தங்களுக்கு அறிவிக்கலாகாது என ஆணை" என்றார்.

சகுனி கைகாட்டி "அது எரிக்கப்பட்ட இடத்தை எனக்குக் காட்டும்" என்றான். "இதோ விசாரித்துச் சொல்கிறேன்" என்று சத்யவிரதர் சொல்லி "தாங்கள் அரண்மனையில் இளைப்பாறுகையில்..." என்று இழுத்தார். சகுனி "நான் முதலில் பார்க்கவிரும்புவது அதைத்தான்' என்றான்.

சத்யவிரதர் திரும்பி குதிரையில் பாய்ந்துசென்றார். சகுனி அரண்மனையை அடையும்போது அவர் மீண்டும் அவனை அணுகி "இளவரசே, அரண்மனையின் குப்பைகளை எரிக்கும் குழி தென்கிழக்கு மூலையில் அடுமடைகளுக்கு அப்பால் உள்ளது. அங்கே தேடிப்பார்க்க நான்கு வீரர்கள்..." என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சகுனி புரவியைத் திருப்பிவிட்டான். ஒருவரை ஒருவர் விழிகளால் சந்தித்தபின் அவனுக்குப்பின்னால் சத்யவிரதரும் சுஜலனும் சென்றனர்.

அரண்மனையின் ஏழு அடுமடைகள் வரிசையாக அங்கே இருந்தன. உயரமான மரக்கூரை போடப்பட்ட கட்டடங்களுக்குமேல் செங்கல்லால் ஆன புகைகுழாய்கள் கசிந்துகொண்டிருந்தன. மதிய உணவுமுடிந்த நேரமாதலால் மடைவலர் துயின்றுகொண்டிருக்க அப்பகுதியே அமைதியாக இருந்தது. மையச்சாலைக்கு பின்னாலிருந்து சென்ற பாதை பின்பக்கம் உள்கோட்டைச் சுவரின் அருகே விரிந்திருந்த எரிகுழிக்குச் சென்றது.

எரிகுழியில் காலைநேரக்குப்பைகள் அனலாகக் குமுறி தழலின்றி எரிந்துகொண்டிருந்தன. அங்கே காற்று குவிந்து வீசும்படி கோட்டைவாயிலும் சுவர்களும் அமைக்கப்பட்டிருந்தமையால் புகையும் கரிச்சுருள்களும் மேலெழுந்து தென்கிழக்குத்திசையில் பறந்து அப்பால்சென்றன. காற்று வலுத்து வீசியபோது புகை அடங்கி வெங்காற்றில் கரித்திவலைகள் எழுந்து சுழன்றுசென்றன. மெல்லிய குரலில் "எரித்து எட்டுநாட்களாகின்றன இளவரசே" என்றார் சத்யவிரதர்.

குதிரையை நிறுத்தி இறங்கியபடி "அதில் ஒரு கழியைவிட்டு தேடச்சொல்லுங்கள்" என்று சகுனி ஆணையிட்டான். "அதன்மேல் மேலும் பல மடங்கு குப்பைகள் போடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன இளவரசே" என்று சொன்ன சத்யவிரதர் சகுனியின் விழிகளைப்பார்த்தபின் தலைவணங்கி நான்குசேவகர்களை வரவழைத்து அந்தக்குழியை துழாவச்சொன்னார்.

எரிந்து அடங்கி சாம்பலடுக்குகளாகவும் கரிவடிவுகளாகவும் எஞ்சிய இலைச்சருகுகளையும் தொன்னைகளையும் கழிகள் கிண்டியும் துழாவியும் புரட்டியபோது இறந்த கருநாகம்போல அதில் அந்த சவுக்கு சிக்கிக்கொண்டதை நம்பமுடியாதவராகப் பார்த்தபடி சத்யவிரதர் சகுனியிடமிருந்து சற்று பின்னடைந்து நின்றார். "அதை எடு" என்று சகுனி சொன்னான்.

சேவகன் "இளவரசே, இதை தழலாடிய நெருப்பில் நானேதான் வீசினேன். இது தழலுக்குள் கிடந்து எரிந்து நெளிவதை கண்டபின்னர்தான் நான் விலகிச்சென்றேன்..." என்றான். சகுனி சைகையால் அவனைத் தடுத்து அதை எடுக்கும்படி சொன்னான். கரையில் எடுத்துப்போடப்பட்ட சவுக்கு மேல் குடத்தில் நீர் கொண்டுவந்து விட்டபோது சாம்பல்பூச்சு கரைய அது கருமையாக பளபளத்தது.

சகுனி குதிகால்களில் அமர்ந்து குனிந்து அதைப்பார்த்தான். பின்பு மெல்ல கையால் அதைத் தொட்டான். அவன் விரல்கள் அதன் தோல்பட்டையில் நீவிச்சென்றன. அது தோல்தானா என்று சத்தியவிரதர் பார்த்தார். தோல்போலத்தான் தெரிந்தது. ஆனால் அந்த வெம்மை அதை ஒன்றுமே செய்யவில்லை. சற்று புதுப்பித்திருந்தது என்றுகூட பட்டது.

சகுனி அதை கையில் எடுத்து இலேசாகச் சுழற்றினான். அவனை நக்க விரும்புவதுபோல அதன் நுனி வளைந்து அவன் கையை அடைந்தது. அதைப்பற்றி சாட்டையைச் சுற்றி சுருட்டி எடுத்துக்கொண்டு திரும்பி தன் குதிரையில் ஏறிக்கொண்டான். குதிரை குளம்படிகள் கட்டடச்சுவர்களில் எதிரொலித்துப் பின்னால் தொடர அவன் விரைந்தான்.

அவன் பின்னால்சென்ற சுஜலன் சகுனி ஒரு சொல் கூட சொல்லாமல் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி தன் மாளிகைக்குள் சென்றதைப் பார்த்து சற்றுநேரம் நின்றுவிட்டு சத்யவிரதரிடம் "இங்கே எப்போதும் அமைச்சகத்தில் இருந்து எவரேனும் காத்து நிற்கட்டும் சத்யவிரதரே. எந்தத் தகவலென்றாலும் எனக்குத் தெரிவியுங்கள்" என்றான்.

அந்தியில் வெளிவந்த சகுனி வெண்பட்டாடையும் மணிக்குண்டலங்களும் வைரஆரமும் அணிந்திருந்தான். அவனுக்காகக் காத்திருந்த ரதத்தில் ஏறி பந்தங்களின் ஒளியில் தீப்பிடித்த புதர்க்காடு போலத் தெரிந்த காந்தாரநகரியின் சாலை வழியாகச் சென்றான். இருள் மறைந்ததுமே காந்தாரத்தின் விரிநிலமெங்கும் வானில்இருந்து குளிர் இறங்கத்தொடங்கும் என்பதனால் நகரம் வேகமாக ஒலியடங்கிக்கொண்டிருந்தது. வணிகக்கூடாரங்களின் மேல் காற்று அலையடித்துக்கொண்டிருந்தது.

செதுக்கப்பபட்ட சேற்றுப்பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்ட உள்கோட்டைவாயிலுக்கு அப்பால் அரண்மனை மாளிகைகளின் தொகை சாளரங்கள் அனைத்தும் தீபங்கள் ஒளிர சிறியதோர் நகரம்போல அத்திசையை மறைத்துப் பரவியிருந்தது. வடக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த அரண்மனைப்பகுதியிலிருந்து யானைகளும் கழுதைகளும் பணிமுடிந்து திரும்பும் ஒலி கேட்டது.

அரண்மனை முற்றத்தில் ரதம் நின்றதும் முறைப்படி முகமன் சொல்லி சகுனியை எதிர்கொண்ட சத்யவிரதர். "மாமன்னர் மந்திரசாலையில் இருக்கிறார் இளவரசே. பீஷ்மரையும் அவரது அமைச்சரையும் தாங்கள் இன்றிரவு சந்திக்கவிருக்கிறீர்கள். அதற்குள் தங்களுடனான மந்திராலோசனை நிகழவேண்டுமென்று இளையவர் சொன்னார்" என்றார். சகுனி தலையசைத்து நடந்தான்.

"இன்னும் ஒருநாழிகையில் தட்சிண மண்டபத்திற்கு பீஷ்மர் வருவார்... அவருக்கு செய்திசென்றிருக்கிறது" என்று சத்யவிரதர் அவனைத் தொடர்ந்து வந்தபடி சொன்னார். "இன்றே ஒரு முடிவை அவர் எதிர்பார்ப்பார் என்று தெரிகிறது."

மந்திரசாலையில் சுபலர் முன்னதாகவே வந்து பீடத்தில் அமர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் சிறிது மது அருந்தியிருந்ததை அவரது வாயின் கோணலைக் கண்டதுமே சகுனி ஊகித்தான். அசலன் தந்தையின் அருகே கைகளைக் கட்டியபடி நிற்க வாயிலில் விருஷகன் சகுனிக்காகக் காத்து நின்றிருந்தான். சகுனி உள்ளே வந்ததும் விருஷகன் சைகை காட்ட கதவு மூடப்பட்டது. "மூத்தவரே, தங்கள் வருகைக்குப்பின் முறையான ஆலோசனைகள் நிகழுமென பீஷ்மரிடம் சொல்லியிருந்தோம். இன்றிரவே அவருக்கு நாம் முடிவைச் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால் நீண்ட ஆலோசனையே அவமதிப்பாக கொள்ளப்படலாம்" என்றான்.

சகுனி சென்று தந்தையையும் தமையனையும் வணங்கி பீடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் பேசத்தொடங்குவதற்குள்ளேயே சுபலர் உரக்க "நீ என்ன சொல்லப்போகிறாய் என எனக்குத் தெரியாது. என் எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன். இப்படி ஒரு மணத்தூது வந்ததே எனக்கும் என் குலத்துக்கும் அவமதிப்பு. விழியிழந்தவனுக்கு வேறு ஷத்ரியகுலங்கள் பெண்ணளிக்கப் போவதில்லை என்பதனால்தான் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்..." என்றார்.

விருஷகன் "தந்தையே, அது உண்மை. ஆனால் அஸ்தினபுரிக்கு அப்படி முற்றிலும் பெண் கிடைக்காமலும் போய்விடாது. பாரதவர்ஷத்தில் சிறிய அரசுகள் பல உள்ளன. கூர்ஜரத்தருகே புதியதாக உருவாகிவந்திருக்கும் யாதவ அரசுகளும் தெற்கே வேசரத்தில் தண்டக அரசுகளும் உள்ளன" என்றான். "அவர்கள் தகுந்த காரணத்துடன் மட்டும்தான் நம்மிடம் வந்திருக்கிறார்கள்..."

பொறுமையிழந்த அசலன் "தம்பி, இந்த சூழ்ச்சிகளை எல்லாம் நாம் ஏன் பேசவேண்டும்? நம் இளவரசியை நாம் ஒருபோதும் விழியிழந்த ஒருவனுக்கு அளிக்கப்போவதில்லை" என்றான். "விழியிழந்தவனுக்கு மனைவியாவதென்பதை குரூபிகூட விரும்பமாட்டாள். பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் ஒருத்தியான என் தங்கை அதை எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது..."

"மூத்தவரே, அரசகுல மணம் என்பது எப்போதும் அரசியல்நிகழ்வு மட்டுமே" என்று விருஷகன் சொன்னான். "இந்த மணம் நம் அரசுக்கு எவ்வகையில் நலம்செய்யும் என்று மட்டுமே நான் எண்ணுகிறேன். இதை மறுத்துவிட்டு நாம் எங்குசென்று இளவரசிக்கு மணமகனைத் தேடப்போகிறோம்? இன்று முளைவிட்டுக்கொண்டிருக்கும் ஏதேனும் சிற்றரசக்குலங்கள் நம் செல்வத்தையும் படைபலத்தையும் கண்டு நம்முடன் மணவுறவுக்கு வரக்கூடும். நம்மருகே அரியணை இட்டு அமரத் தகுதியற்றவர்களை நாம் பட்டத்து யானையை அனுப்பி வரவேற்க வேண்டியிருக்கும்."

"ஆம், ஆனால் விழியிழந்த ஒருவனை..." என்று அசலன் தொடங்குவதற்குள்ளாகவே விருஷகன் உரக்க "மீண்டும் மீண்டும் அதைச் சொல்லாதீர் மூத்தவரே. விழியில்லை என்பதல்ல இங்கே வினா. அவரால் நாடாளமுடியுமா, நாடாள அங்கே நெறிநூல் அனுமதி உண்டா என்பது மட்டும்தான்." அவனுடைய வேகத்தை சகுனி பொருள் ஏதும் வெளித்துலங்காத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

விருஷகன் "நான் அதைப்பற்றி பலபத்ரரிடம் விரிவாகவே பேசினேன். நூல்நெறிகளில் விழியிழந்தோன் அரசனாக முடியாதென்று எங்கும் சொல்லப்படவில்லை. அஸ்தினபுரியின் இளவரசன் பெருவீரன் என்கிறார்கள். அவனுடைய அமைச்சனாகப் பணியாற்றப்போகும் அவனுடைய தம்பியாகிய ஒரு சூதன் அஸ்தினபுரியின் மாபெரும் அரசியல் அறிஞன் என்று சூதர்குலமே கொண்டாடுகிறது. ஐயமே தேவையில்லை தந்தையே, இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அஸ்தினபுரியே ஆரியவர்த்தத்தை ஆளும்."

தந்தையின் தயங்கிய விழிகளைப் பார்த்துவிட்டு விருஷகன் தொடர்ந்தான். "தந்தையே தாங்கள் தயங்குவது ஏனென்று நான் நன்கறிவேன். நம்மை ஷத்ரியர் எள்ளி நகையாடுவர் என்று எண்ணுகிறீர்கள். ஆம், எள்ளிநகையாடுவர். ஏனென்றால் அவர்கள் எப்போதும் அதையே செய்துகொண்டிருக்கிறார்கள். துர்வசு அடைந்த அவமதிப்பின் சுமை நம் மீது என்றும் இருந்துகொண்டிருக்கிறது. சிந்துக்கரையின் மீனவமன்னர்களிடமோ இமயச்சரிவின் வேடர்மன்னர்களிடமோ நாம் மண உறவுகொண்டால் மட்டும் அந்த இளிவரல் இல்லாமலாகிவிடுமா என்ன?"

"ஆம் அது உண்மை" என சுபலர் பெருமூச்சுவிட்டார். "ஆனால் அஸ்தினபுரியிடம் நாம் மணம்கொண்டால் நம்மை அந்த ஷத்ரியர் அஞ்சுவார்கள். அந்த இளிவரல் அவர்களின் அவைக்களத்தில் இருந்து வெளிவராது" என்று விருஷகன் சொன்னான். "அவமதிப்புக்கு பதில் என்றும் அச்சமேயாகும்."

சுபலர் சகுனியிடம் "நீ என்ன நினைக்கிறாய்?" என்றார். "நான் பீஷ்மரிடம் பேசியபின்னரே அதைப்பற்றிச் சொல்லமுடியும். என் எண்ணங்கள் இன்னும் முழுமைகொள்ளவில்லை" என்று சகுனி சொன்னான். சுபலர் "அவரை இங்கு இரவுணவுக்கு வரச்சொல்லியிருக்கிறேன். அவருக்காக காந்தாரத்தின் அஹிபீனா கலந்த மது கொண்டு வரச்சொன்னேன்" என்றார். சகுனி தலையசைத்தான்.

பீஷ்மர் வந்து தட்சிண மண்டபத்தில் காத்திருப்பதை சத்யவிரதர் வந்து சொன்னதும் சுபலர் எழுந்து "நல்ல மது அவரை மகிழ்விக்கும்" என்று சொல்லி நடந்தார். அசலனும் அவர் பின்னால் நடக்க விருஷகன் பின்னால் தங்கி சகுனி அருகே நின்றான். சகுனி எழுந்ததும் மெல்லியகுரலில் "பீஷ்மரை நான் மூன்றுமுறை சந்தித்து உரையாடினேன் மூத்தவரே. அவர் பெரிய அரசியல் சூழ்ச்சியாளர் அல்ல. மலைக்கங்கர்களின் எளிமை அவரிடம் உள்ளது..." என்றபின் சற்று தயங்கினான்.

"சொல்" என்றான் சகுனி. "அவரிடம் நாம் எண்ணமுடியாத ஒன்றுள்ளது... அவர் நம்மை அவருடைய சிந்தனைகளை நோக்கி வலுவாக ஈர்க்கிறார். அவர் குறைவாகவே பேசுகிறார். ஆனால் அவரது சொற்களை நம்முள் ஆழமாகவே விதைத்துச்செல்கிறார். அது ஏன் என்று நான் பலவாறாக எண்ணிப்பார்த்தேன். நேற்றுதான் எனக்கு ஒரு விடை கிடைத்தது."

சகுனி சொல் என்பதுபோலப் பார்த்தான். "அவர் நம்மை அவரது மைந்தர்களாக உணரச்செய்கிறார். அவரது அமைச்சர் அஸ்தினபுரியில் அவரை படைவீரர்களும் பிதாமகரே என்றுதான் அழைக்கிறார்கள் என்றார்" என்ற விருஷகன் சற்றே சிரித்து "அவரது தந்தையேகூட அவரை அப்படித்தான் உணர்ந்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்" என்றான்.

சகுனி புன்னகைசெய்யவில்லை. அவன் நடந்தபோது "அவரைப்பார்க்கையில் தன்னை வீரனென்று எண்ணும் ஒவ்வொருவரும் தான் தேடும் தந்தைவடிவம் அவரே என்று உணர்வார்கள்" என்று சொன்னபடி விருஷகன் பின்னால் வந்தான். "அவர் வரும்போது நானும் ஒரு மூத்தவரைப்போல விழியிழந்த மைந்தனுக்காக வந்திருக்கிறார், அவரது சொற்களை நான் தாயக்கட்டைகளைப்போல உருட்டி விளையாடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நான் அவரைப்போல எண்ணத் தொடங்கினேன்."

தட்சிண மண்டபத்தை அடைந்ததும் சகுனி மெல்லியகுரலில் "இளையவனே, மகதனின் அந்த குதிரைச்சவுக்கு என் அறையில்தான் உள்ளது" என்றான். விருஷகன் திகைத்து நின்றபின் "மூத்தவரே" என ஏதோ சொல்லத்தொடங்க சகுனி "அது அவ்வளவு எளிதாக அழியாது" என்றபின் உள்ளே சென்றான். சிலகணங்கள் என்ன செய்வதென்றறியாமல் நின்றபின் விருஷகனும் தொடர்ந்தான்.

மண்டபத்துள் நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் முகமன் சொல்லி வணங்கிவிட்டு சகுனி அமர்ந்துகொண்டான். காந்தாரத்தினர் உயரமானவர்கள் என்றாலும் அவரது உயரம் கொண்ட எவரையும் அவன் கண்டதில்லை.  வெண்மைகலந்து விரிந்த அவரது தாடியும் எளிய தோல்பட்டையால் கட்டப்பட்ட கூந்தலும் செவ்வெண்ணிறமும் யவன மூக்கும் அவரை கங்கைக்கரை ஷத்ரியர்களிடமிருந்து விலக்கிக் காட்டின.

சுபலரும் அசலனும் வந்ததுமே மதுக்கிண்ணங்களை கையில் எடுத்திருந்தனர். பீஷ்மர் மதுவை அருந்தும் பாவனையே காட்டுகிறார் என்பதைக்கூட அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. தன்னை நோக்கிய பீஷ்மரின் விழிகளை சகுனியின் விழிகள் எதிர்கொண்டன. பேச்சுவார்த்தைகளின்போது எச்சரிக்கைக்காக கண்களில் சலிப்புற்று உள்வாங்கிய பாவனை ஒன்றை அணிந்துகொள்வதை பயின்றிருந்த சகுனி அவரது கண்களில் தன்னை கூர்ந்தறியும் முயற்சியே இல்லை என்பதைக் கண்டான். அது அவனை குழப்பியது. அவரது அந்தநோக்கு ஒரு தேர்ந்த பயிற்சியின் விளைவோ என்று அவன் எண்ணினான். வழக்கமான முகமன்களையும் துதிகளையும் சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் அவரது விழிகளையே சந்தித்து அதை கூர்ந்துகொண்டிருந்தான்.

பின்பு அவன் அவரைப் புரிந்துகொண்டான். தன் பெருவல்லமையை அறிந்தமையால் எதிரியின் வலிமையை எடைபோடாமலிருக்கும் மல்லனைப்போன்றவர் அவர் என்று நினைத்துக்கொண்டான். ஆகவே பீஷ்மர் அவனிடம் நேரடியாக "சுபலரும் அசலரும் தங்கள் சொல்லையே முதன்மையாக எண்ணுகிறார்கள் சகுனிதேவரே. ஆகவே நானும் உங்கள் சொல்லை எதிர்நோக்குகிறேன்" என்றபோது அவன் வியப்புறவில்லை. மெல்லிய புன்னகையுடன் "நான் எளியவன்... என் தந்தை என்மேல் அன்புகொண்டிருக்கிறார்" என்று மட்டும் சொன்னான்.

பீஷ்மர் "தாங்கள் அறியாத எதையும் நான் சொல்லப்போவதில்லை இளவரசே. அஸ்தினபுரி இன்று பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் தலையாயது. அதனாலேயே நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். எங்கள் மன்னன் விழியிழந்தவன். நானோ முதியவன். தாங்கள் வல்லவர். எங்களுக்கு படையும் செல்வமும் உறவும் கொண்ட காந்தாரம் போன்ற நாட்டின் மணம் பெரும் நன்மை பயக்கும். அதேபோன்று காந்தாரத்துக்கும் அஸ்தினபுரி வலிமைசேர்க்கும்" என்றார்.

சகுனி மெல்ல அசைந்தான். அவனையறியாமலேயே வெளிப்பட்ட அவ்வசைவின் மூலம் அவன் அகம் பீஷ்மருக்குத் தெரிந்தது என்பதை உடனே அவன் உணர்ந்துகொண்டான். விழியிழந்த மன்னன், முதிய தளபதி, நீ வல்லவன் என்னும் மூன்று சொற்சேர்க்கைகளையும் அவன் அகம் இணைத்து அறிந்துகொண்டது என அவர் அறிந்ததை அவன் உணர்ந்தான்.

அவன் கேட்டவற்றிலேயே மிகநுணுக்கமான அரசியல் சூழ்மொழி அது. அச்சொற்களை அவர் திறமையாக அருகருகே அமைத்தாரா என்ற எண்ணம் எழுந்தது. எளிய மலைக்கங்கரால் அவ்வாறு மொழியை கையாள முடியுமா என்ன? ஒருவேளை அவரது இயல்பான மொழியே அவ்வாறானதாக இருக்கலாம். வாழ்நாளில் முதல்முறையாக சகுனி ஒரு மனிதரை அஞ்சினான்.

பீஷ்மர் அவனை நேரடியாக நோக்கி "நாங்கள் மகதத்தை அஞ்சுகிறோம் என்பது அனைவருமறிந்ததே. பழமையான ஷத்ரிய நாடான மகதம் கங்கையின் அனைத்துப்படகுகளிலும் சுங்கம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. மகதத்தை வெல்லாமல் நாங்கள் கங்கைக்கரை வணிகத்தை தொடரமுடியாது. காந்தாரத்தின் உதவியுடன் மகதத்தை வென்றால் அது காந்தாரத்தின் வணிகத்துக்கும் உகந்ததே" என்றார்.

அவர் சூழ்ந்து சொல்லாற்றவில்லை, இயல்பாகவே வந்து சேர்ந்த சொற்களையே சொல்கிறார் என்றும், ஆனால் விருஷகன் சொன்னது போல அவனை அவர் தன் சொற்களை நோக்கி கொண்டுசென்றுவிட்டார் என்றும் சகுனி அறிந்தான்.

"திருதராஷ்டிரனைப்பற்றி இளவரசிக்கு தயக்கமிருக்கக்கூடும்" என்று பீஷ்மர் சொன்னார். "அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் பாரதவர்ஷத்தின் மாபெரும் சக்கரவர்த்தியாவான் என்று அவளிடம் சொல்லுங்கள். மாமனின் வில்லும் அவள் அளிக்கும் மணிமுடியும் ஐம்பத்தைந்து ஷத்ரியர்களையும் அந்த மைந்தன் முன் அடிபணியச்செய்யமுடியும்." மீண்டும் ஓர் அழகிய சொல்லிணைவு. மாமனின் வில்லை முதலில் வைத்த கூர்மை. சகுனி புன்னகைசெய்தான்.

அவனுடைய புன்னகையைக் கண்டதும் விருஷகன் மேலும் விரிந்த புன்னகையுடன் "ஆம், அஸ்தினபுரியில் மூத்தவரின் வில் நிலைகொண்டால் பாரதமே அதை மையம் கொள்ளும்" என்றான். சுபலர் அசலனை நோக்கினார். அசலன் "தம்பி கூறும் முடிவையே இந்நாள்வரை இங்கே மேற்கொண்டிருக்கிறோம்" என்றான்.

சுபலர் தெளிவடைந்தவராக உடலை நெகிழச்செய்து பீடத்தின் கீழிருந்த காலை நன்றாக நீட்டியபடி "ஆம், அவன் அனைத்தையும் சூழ்பவன்" என்றார். "அவன் முடிவு காந்தாரத்தின் கொள்கை."

"இனியமது" என்றார் பீஷ்மர். "அதன் வாசனை இளமையை மீட்டுக்கொண்டுவருகிறது." அரசியல்பேச்சை அவர் இயல்பாகவும் அழகாகவும் முடித்துவிட்டார் என்பதை சகுனி உணர்ந்தான். மேற்கொண்டு பேசாமல் அம்முடிவை உறுதிசெய்ய விழைகிறார்.

சுபலர் சிரித்தபடி "ஆம், இளமையில் நாமறிந்த அனைத்துக் கன்னியரும் ஒன்றாகத்திரண்டு நம் முன் வந்துவிடுகிறார்கள்" என்றார். கையசைத்து அங்கே சுவர் அருகே நின்றிருந்த காதும்நாவுமற்ற சேவகனிடம் மதுவைப் பரிமாறும்படி சொன்னார். பீஷ்மர் கோப்பை நிறைய மதுவை வாங்கிக்கொண்டு சிரித்தபடி "அஹிபீனத்தில் கந்தர்வர்கள் வாழ்கிறார்கள்" என்றார்.

அனைத்து முகங்களிலும் புன்னகைகள் தெரிவதை சகுனி கண்டான். விருஷகன் "தமக்கையிடம் அந்தத் தயக்கமேதும் இல்லை பிதாமகரே. நான் தங்கள் தூதை அவளிடம் சொன்னேன். அவள் ஓவியம் வரைந்துகொண்டிருந்தாள். இளவரசருக்கு விழியில்லை என்றதும் அரசரின் விருப்பமே காந்தார அரசின் ஆணை என்று மலர்ந்த முகத்துடன் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்" என்றான். சுபலர் "ஆம், அவள் முற்றிலும் அரசமகள்" என்றார்.

சகுனி மெல்ல இருக்கையில் முன்னகர்ந்து "தம்பி, அவள் வரைந்த அந்த ஓவியம் என்ன?" என்றான். "மலைகள் என நினைக்கிறேன். வண்ணம்தீட்டத் தொடங்கியிருந்தாள். தெளிவாக இல்லை." சகுனி "அந்த ஓவியத்தை அவள் முழுமைசெய்யவில்லையா?" என்றான். "இல்லை மூத்தவரே, அதை திரையிட்டு மூடிவிட்டாள்" என்றான் விருஷகன்.

சகுனி எழுந்து வணங்கி "அஸ்தினபுரியின் பிதாமகரே தங்கள் அடிபணிந்து விடைகொள்கிறேன். தங்கள் தூது காந்தாரத்துக்கு வந்த பெரும் வாய்ப்பு என்றே எண்ணுகிறேன். காந்தாரத்தை தங்கள் வருகைமூலம் கௌரவித்திருக்கிறீர்கள். ஆனால் என் தமக்கையின் உள்ளம் ஏற்காத எதையும் இந்நாடு செய்யாது" என்றான். விருஷகன் "மூத்தவரே தமக்கை..." என்று சொல்லவந்ததை கையமர்த்தி "நான் அவள் உள்ளத்தை அறிந்துகொண்டேன்" என்று சொன்னபின்பு பீஷ்மரை வணங்கிவிட்டு வெளியேறினான்.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 5 ]

பீஷ்மரை சந்தித்து இரவில் திரும்பியபின் சகுனி துயிலவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் நின்றபடி இரவையே நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது. வடக்கே நெடுந்தொலைவில் தனித்த ஓநாய் ஒன்று அடிவயிற்றை எக்கி எழுப்பிய ஊளை மெலிதாகக் கேட்டு மறைந்தது. அந்த ஓநாயை மிக அருகே, கண்ணுக்குக் கண் நெருங்கி, பார்ப்பதுபோல சகுனி உணர்ந்தான். அது தன்னையும் அறிந்துகொள்ளும் என்று தோன்றியது.

அதற்கு பலநாட்களாக பசி இருக்கிறது என்று அந்த ஊளையிலிருந்தே அறிந்துகொண்டான். சிறிய பூச்சிகளையும் முள்ளிலைகளின் பனித்துளிகளையும் நக்கி உண்டு அது வீண்நிலம் முழுக்க அலைந்து திரிகிறது. ஒருமுறை வயிறு நிறையும் ஓர் உணவு அதை மேலும் ஒருமாதம் வாழச்செய்யும். ஒவ்வொரு பொருக்கிலும் பிளவிலுமாக கால்வைத்து செங்குத்தான மலைப்பாறையும் ஏறும் பஷுத்துரனைப்போன்ற அது ஒவ்வொரு உணவாக தன் வாழ்க்கையின் நிறைவுநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மகதத்தின் ஓநாய் இந்நேரம் என்ன செய்துகொண்டிருக்கும் என அவன் நினைத்துக்கொண்டான். அதன் கண்முன் பசுமைததும்பும் புதர்வெளிக்குள் முயல்களும் எலிகளும் புதர்பறவைகளும் வாழ்கின்றன. மான்களும் பன்றிகளும் குட்டிகளை போட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன் வாழ்க்கையின் அறைகூவல் உணவு அல்ல. இன்னொரு ஓநாய்தான். தன் எல்லைகளை பாதுகாத்துக்கொள்வதற்கே அதன் கூர்நாசியும் விரிசெவிகளும் ஒளிர்விழிகளும் எந்நேரமும் கருத்துகொண்டிருக்கின்றன. உணவின் பச்சை ஊன்குருதியை சுவைத்து காந்தாரத்து ஓநாய் அடையும் உவகையை அது அடையவேண்டுமென்றால் இன்னொரு ஓநாயை கடித்துக்கிழித்தாகவேண்டும்.

பாலைநிலத்தில் அப்போது காற்றே அடிக்கவில்லை. அரண்மனைச்சாளரத்தின் திரைகளும் நெய்ச்சுடர்களும் வெளியே மரங்களின் இலைகளும் அசைவிழந்து நின்றிருந்தன. ஆகவே மிகத்தொலைவில் அந்த ஓநாயின் ஊளை மீண்டும் துல்லியமாகக் கேட்டது. இருளில் மெல்லிய செந்தீற்றலாக கிழிபட்டு மறையும் விண்மீன்கோடு போல. மீண்டும் அந்த ஒலி. இம்முறை அது கேட்டதா, செவிமயக்கா என்றே ஐயமாக இருந்தது.

அவனுக்கு அந்த ஓநாயைப்பார்க்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அது எதையோ சொல்லவிருப்பதாக, மிகநெருக்கமாக தன் வாழ்க்கையுடன் அதற்கு தொடர்பிருப்பதாகத் தோன்றியது. அது ஒரு பாவனையே என அவன் அறிந்திருந்தாலும் அத்தகைய பாவனைகள் வழியாக வெளிப்படும் ஆன்மாவின் உட்குறிப்புகள் முக்கியமானவை என்று அறிந்திருந்தான். சால்வையை எடுத்து தோளிலிட்டபடி வெளியேவந்து அரண்மனை முகப்பில் நின்றதும் சேவகன் ஓடிவந்து வணங்கினான். குதிரை என அவன் ஒற்றைச்சொல்லில் ஆணையிட்டான்.

குதிரையுடன் அவனுடைய வேட்டைத்துணைவன் சூனிகனும் வந்து நின்றான். அவனுடன் வேட்டைநாயான ஜரதன் வந்து நின்று சகுனியை நோக்கி வாலாட்டியது. சகுனி குதிரைமேல் ஏறிக்கொண்டதும் சூனிகனும் குதிரையில் ஏறிக்கொள்ள இருவரும் ஊன்நெய்யிட்ட வழிவிளக்குகளின் செவ்வொளி சிந்திக்கிடந்த சாலைகள் வழியாக இருண்டுகிடந்த மாளிகைச்சுவர்களில் குளம்படிகள் எதிரொலிக்க நகரைக் கடந்துசென்றனர். வடக்குவாயில் வழியாக வெளியே சென்று விண்மீனொளியில் துலங்கிவந்த வெறும்நிலத்தைப் பார்த்து சிலகணங்கள் நின்றபின் சகுனி குதிரையைத் தூண்டி முன்னால் பாய்ந்தோடினான். சூனிகனும் பின்னால் சென்றான். ஜரதன் வாலைச்சுழற்றியபடி ஆர்வத்துடன் தாவித்தாவி கூடவே ஓடியது.

நிழல்குவைகளாக புதர்கள் பரவிக்கிடக்க பாழ்நிலத்தின் எல்லையில் தொடுவானம் கவிந்திருந்தது. கண் எட்டும் தொலைவுக்கு அப்பாலிருந்து சாம்பல்நிறமான தரைக்கம்பளம் போல அதை அவர்களுக்கு முன்னால் வடதிசை விரித்துக்கொண்டே சென்றது. ஓநாயின் குரல்கேட்டதாக தான் கணித்த இடத்தை அடைந்ததும் சகுனி சுற்றிலும் பார்த்தான். அருகே இருந்த மண்மேட்டைக் கண்டு அதன்மேல் குதிரையில் ஏறிச்சென்றான். அங்கே இறங்கி குனிந்து மண்ணைப்பார்த்தபோது ஓநாயின் சிறுநீர்த்தடத்தையும் காலடிச்சுவடுகளையும் கண்டான். ஜரதன் வந்து அருகே நின்றது. சகுனி சுட்டிக்காட்டியதும் அது மோப்பம்பிடித்து மெல்லக்குரைத்து தான் அறிந்துவிட்டதைச் சொன்னது.

சூனிகன் மெல்லிய உதட்டொலி எழுப்பியதும் ஜரதன் மோப்பம்பிடித்தபடி முன்னேறிச்சென்றது. அதன்பின்னே குதிரைகள் பெருநடையில் சென்றன. இருளுக்குள் சென்ற பாம்பொன்றைக் கண்டு ஜரதன் நின்று செவியை பின்னுக்குத்தள்ளி குரைத்தது. சூனிகன் அதனிடம் முன்னால்செல்ல ஆணையிட்டபோது மேலும் முன்னால் ஓடியது. இரவெல்லாம் அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர்.

கீழ்வானில் விடிவெள்ளி தெரியத்தொடங்கியபோது நெடுந்தூரத்தில் ஓநாய் சென்றுகொண்டிருப்பதை ஜரதன் கண்டுகொண்டது. திரும்பி வாலை ஆட்டியபடி சகுனியைப்பார்த்துக் குரைத்தது. சகுனி நிற்கும்படி ஆணையிட்டான். அப்பால் அந்த ஓநாய் நின்று அவர்களைப் பார்த்தது. வானின் வெளிறிய ஒளியின் பின்னணியில் அதன் புல்தோகைபோன்ற வாலையும் மயிர்சிலிர்த்த கழுத்தையும் மெல்லிய கால்களையும் கூம்பிய முகத்தையும் நிழலுருவாகக் காணமுடிந்தது.

அவர்களை சிலகணங்கள் நோக்கியபின் ஓநாய் உறுமிய ஒலியை ஜரதன் மட்டுமே கேட்டது. அது உறுமியபடியே பின்னடைந்து குதிரைகளுக்குப்பின்னால் சென்று நின்று தலையைத் தாழ்த்தி கால்கள் வழியாக கூர்ந்து நோக்கியது. அதன் வால் கால்கள் நடுவே படிந்து ஆடியது. ஓநாய் மீண்டும் ஓடத் தொடங்கியதும் சகுனி அதைத் தொடர்ந்துசென்றால்போதும், துரத்தவேண்டாம் என ஆணையிட்டான். ஓநாய் மேடேறி மறைந்தது. ஜரதனின் மோப்பத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டு அவர்கள் துரத்திச் சென்றனர்.

கிழக்கே வானம் விளிம்பு திறந்து செவ்வொளியை நிலம் மீது பரவவிட்டபோது அவர்கள் ஒரு மேட்டின் மேல் நின்றிருந்தனர். காலையொளியில் பாலைமண் மிகமென்மையான பொன்னிறப்பட்டுபோல அலைபடிந்து விரிந்திருந்தது. மிகத்தொலைவில் செந்நிற மண்ணில் ஒரு செந்நிறப் பூச்சி செல்வதுபோல ஓநாய் சென்றுகொண்டிருந்தது. சகுனி திரும்பி சூனிகனைப்பார்த்தான். சூனிகன் "இன்னும் ஒருநாழிகையில் வெயில் வந்துவிடும். அது வெயிலில் செல்லாது. அங்கே ஏதேனும் புதரைக் கண்டிருக்கும்" என்றான்.

அவர்கள் புழுதியாகக் குவிந்துக்கிடந்த மண்சரிவில் குதிரையில் இறங்கி அந்தக் கால்தடத்தைத் தொடர்ந்து சென்றனர். காற்றே இல்லாத மண்பரப்பில் ஒரு ஊசித்தையல் கோடுபோல அந்தக் கால்தடம் சென்றது. வெயில் ஏறத்தொடங்கியதும் சகுனி ஒரு பாலைப்பொழிலைக் கண்டான். சூனிகன் அது ஜலவனம் என்ற சோலை என்றான். முற்றிலும் சரளமரங்கள் மட்டும் செறிந்த சோலைக்குள் அவர்கள் நுழைந்தனர். சூனிகன் "இந்தச்சோலைக்குள் எங்கோ அது இருக்கும். இதற்கு அப்பால் அது செல்ல வாய்ப்பில்லை" என்றான்.

ஆயிரக்கணக்கான சிறிய பசுங்கோபுரங்கள் போல அடர்திருந்த சரளமரங்களுக்கு நடுவே அவற்றின் மட்கியசருகுகளின் மெத்தை மேல் குதிரைகள் மெல்ல நடந்தன. ஜரதன் முன்னால்சென்று நின்று காதுகளை மடித்து முனகியபடி மெல்ல பின்னகர்ந்தது. சூனிகன் கையைக் காட்டியபின் குதிரையிலிருந்து இறங்கி ஓசையில்லாமல் நடந்து முன்னால் சென்று எட்டிப்பார்த்தான். சரிந்திறங்கிய செம்மண்குழியின் அடியில் தேங்கியிருந்த கலங்கிய சிறிதளவு நீரை ஓநாய் குடித்துக்கொண்டிருந்தது.

சகுனி குதிரையிலிருந்து இறங்கி அதைப்பார்த்தபோது தாடை மயிரில் சொட்டிய நீருடன் அது நிமிர்ந்து அவனைப்பார்த்தது. அதன் பெரிய காதுகள் முடியுடன் முன்னால் குவிந்தன. அது முனகியதும் ஜரதன் வாலைத்தாழ்த்தியபடி குதிரைகளுக்குப் பின்னால் சென்றது. அங்கே நின்றபடி முனகி அழுதது.

சற்றுநேரம் அவர்கள் ஓநாயைப் பார்த்தபடி நின்றனர். அது தன் பழுத்த கண்களால் அவர்களைப் பார்த்தது. பின்பு கழுத்தில் அமர்ந்த ஏதோ பூச்சியை உதறும்பொருட்டு ஒருமுறை தலையைத் திருப்பிக்கொண்டது. நீர்த்துளிகள் அதன் விலாமயிரில் சொட்டி துளித்து நின்றன. குனிந்து நீரை மீண்டும் குடிக்கத்தொடங்கியது. நீரில் கூழாங்கற்கள் விழுவது போல அது ஒலித்தது. அருந்தியதும் ஓநாய் குழியைச்சூழ்ந்திருந்த மெல்லிய சேற்றில் பாதங்கள் பதிய, குலைவாலைத் தாழ்த்தியபடி மேலேறி அப்பால் மறைந்தது.

"அது இரவுவரை இங்கிருந்து செல்லாது" என்று சூனிகன் சொன்னான். "இரவில் இங்கே நீர் அருந்தவரும் உயிர்களை அது பிடிக்கமுடியாதா?" என்றான் சகுனி. "நீர் அருந்தும் மிருகங்கள் அனைத்துமே பெரியவை. அவற்றை தனித்த ஓநாய் நெருங்கமுடியாது. அது எலிகளையும் உடும்புகளையும்தான் பிடிக்கமுடியும்." சகுனி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு "நாம் இங்கே ஓய்வெடுப்போம். இன்றிரவு அது என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்" என்றான்.

"இன்னும் ஓரிரவுக்குள் அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் ஓடமுடியாது" என்றான் சூனிகன். "அதன் பின்னங்கால்கள் ஒன்றோடொன்று பின்னுகின்றன. வயிறு நன்றாகவே மேலேறி ஒட்டிவிட்டது. இப்போதே அதனால் ஓடமுடியவில்லை." சகுனி உதடுகளை இறுக்கியபடி "பார்ப்போம்" என்றான். குதிரைகளைக் கீழிறக்கி நீர் அருந்தவைத்துவிட்டு அவர்கள் சரளமரங்களின் அடியில் தோல்விரித்து படுத்துக்கொண்டனர்.

சகுனி சிறிதுநேரம் துயின்றிருப்பான். பாலையில் குதிரையில் சுஜலன் வரும் ஒலிகேட்டு விழித்துக்கொண்டான். பாலையொளி நீர்த்திரைபோல அலையடிக்க அதில் ஓவியமாக எழுதப்பட்டதுபோல சுஜலனின் குதிரையின் அசைவு தெரிந்தது. வானிலிருந்து ஒரு பெரிய நீர்த்துளி துளித்து திரண்டு சொட்டுவது போல குதிரை அணுகியது. சகுனி எழுந்து அமர்ந்து தன் எரியும் விழிகளை மூடித்திறந்தான். தோல்பையில் இருந்து குடிநீரை எடுத்து வாயை நனைத்து விழுங்கியபின்பு இருதுளிகளை கண்கள் மீதும் விட்டுக்கொண்டான்.

சுஜலன் இறங்கி வணங்கி நின்றான். என்ன என்பதுபோல சகுனி பார்த்தான். "பீஷ்மரும் பலபத்ரரும் இன்று மாலை கிளம்பிச் செல்கிறார்கள்" என்றான் சுஜலன். சகுனி "இன்றா?" என்றான். "ஆம், தூது முடிந்துவிட்டது என்று பீஷ்மபிதாமகர் சொன்னார்." சில கணங்கள் சிந்தித்தபின் "அவர் சினத்துடன் இருந்தாரா?" என்றான் சகுனி. "அவர் வழக்கம்போலத்தான் இருந்தார்" என்றான் சுஜலன்.

சகுனி அவனைக்கூர்ந்து நோக்கி "இன்றுகாலை அவர் என்ன செய்தார்?" என்றான். "வழக்கம்போல ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார்" என்றான் சுஜலன். "எங்கே?" என்று சகுனி கேட்டான். "நம்முடைய ஆயுதசாலையில். நம் இளவரசர் விருஷகருக்கும் மற்ற தளபதிகளுக்கும் பயிற்சியளித்தார். இளவரசர் கோரியதற்கேற்ப அபூர்வமான ஆறு அம்புகளை அவருக்கு தனியாக கற்றுக்கொடுத்தார்."

சகுனி சுஜலனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் யார், என்ன சொல்கிறான் என்று புரியாது பார்ப்பதுபோல. பின்பு தன் குதிரையை நோக்கிச் சென்றபடி "அவர் செல்வதற்குள் நான் அங்கே இருக்கவேண்டும். அவரை நான் வணங்கி விடைகொடுக்கவேண்டும்" என்றான். சுஜலன் "ஆம், அதுவே முறை. விருஷகர் என்னிடம் அதை தங்களிடம் சொல்லி தங்களை அழைத்துவரும்படி சொல்லித்தான் அனுப்பினார். அவர் அஸ்தினபுரிக்கு மட்டும் பிதாமகரல்ல. நம் வீரர்கள் அனைவருமே அவரை தந்தையாகவே எண்ணுகிறார்கள்."

சகுனி குதிரையில் ஏறியபின் திரும்பி சூனிகனிடம் "நீ இங்கேயே இரு. அந்த ஓநாயை பின்தொடர்ந்து செல். அது வாழ்கிறதா என நான் அறியவேண்டும்" என்றான். சூனிகன் "ஆணை" என்றதும் குதிரைகள் பாலையின் மேல் வெண்ணிற நெருப்பாக நின்றுகொண்டிருந்த வெயிலுக்குள் பாய்ந்துசென்றன. செல்லும் வழியெங்கும் சகுனி ஒரு சொல்கூட பேசாமல் அமர்ந்திருந்தான்.

அரண்மனை முகப்பில் அவனைக்காத்து விருஷகன் நின்றிருந்தான். சகுனி இறங்கியதும் அருகே வந்து "காலைப்பயிற்சி முடிந்ததுமே பிதாமகர் கிளம்புவதாகச் சொன்னார். நான் உடனே தங்களுக்குச் செய்தியனுப்பினேன். தாங்கள் வேட்டைக்குச் சென்றிருப்பதை அறிந்தேன். ஆகவேதான் சுஜலனையே அனுப்பினேன்" என்றான். சகுனி பேசாமல் உள்ளே சென்றான். விருஷகன் பின்னால் வந்தபடி "பிதாமகரைத் தவிர்ப்பதற்காகவே நீங்கள் வேட்டைக்குச் சென்றீர்கள் என்று எனக்குத்தெரியும். ஆகவே அனேகமாக திரும்பவரமாட்டீர்கள் என்று என்ணினேன்" என்றான்.

"ஏன் நான் அவரைத் தவிர்க்கவேண்டும்?" என்று சகுனி கேட்டான். "ஏன் நீங்கள் நேற்றிரவு உங்கள் முடிவை சொன்னதுமே கிளம்பிவிட்டீர்கள்? அதனால்தான்" என்றான் விருஷகன். சகுனி கண்களைச் சுருக்கி நோக்கி "ஏன்?" என்றான். விருஷகன் "உங்கள் எண்ணத்தை அவர் மாற்றிவிடுவாரென அஞ்சினீர்கள்" என்றான். சகுனி கண்களை திருப்பிக்கொண்டான். "ஆனால் நீங்கள் எழுந்து சென்றபின் பிதாமகர் ஒருசொல் கூட அதைப்பற்றிப் பேசவில்லை. காந்தாரத்தின் கோட்டைக்கு ஆன செலவுகளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். சில ஆலோசனைகளைச் சொன்னார்."

"என்ன ஆலோசனை?" என்று அக்கறையில்லாமல் கேட்பதுபோல பாவனைசெய்தபடி சகுனி தன் மேலாடையைக் கழற்றி ஏவலனிடம் கொடுத்தான். "புருஷபுரியில் இருந்து காந்தாரநகரி வரை ஓர் இரவு பயணம்செய்யும் தொலைவுக்கு ஒரு சிறுகோட்டை வீதம் கட்டி அவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிய நிலைப்படை ஒன்றை நிறுத்திவைக்கலாம் என்றார். புருஷபுரத்தில் இருந்தோ காந்தாரத்தில் இருந்தோ ஒரு படை கிளம்பினால் அது முதல்கோட்டையை அடைந்ததும் அங்கே ஓய்வெடுக்க அங்குள்ள படை அடுத்த இலக்குக்குச் செல்லலாம். அப்படி செல்லமுடிந்தால் நாட்டின் எப்பகுதிக்கும் தேவையானபோது பயணக்களைப்பு அடையாத ஒரு படை சென்றுசேரமுடியும். வணிகர்களுக்கும் பெரும் பாதுகாப்பு என்றார்."

அதை அப்படியே விட்டுவிடுபவன்போல சகுனி "நீயே பிதாமகர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாய்" என்றான். "அவர் என் ஆசிரியர். ஆனால் பிதாமகர் என்று சொல்லும்போதுதான் நான் நிறைவடைகிறேன்" என்றான் விருஷகன். சகுனி புன்னகையுடன் திரும்பி "நான் அவரை கொன்றுவரச்சொன்னால் என்ன செய்வாய்?" என்றான். "அவருக்கு எதிராக என் ஆயுதம் எழாது. அது என் கழுத்துக்கே செல்லும்" என்றான் விருஷகன். அவன் கண்கள் அச்சமில்லாமல் சகுனியை நோக்கின. சகுனி புன்னகையுடன் திரும்பிக்கொண்டான்.

காந்தார அரசகுலத்தின் குலதெய்வக் கோயிலில் பீஷ்மருக்காக ஒரு சிறப்புவழிபாடு மன்னர் சுபலரால் ஒருக்கப்பட்டிருந்தது. அது விருஷகனின் எண்ணம் என அதைக்கேட்டதுமே சகுனி புரிந்துகொண்டான். குளித்து அரச ஆடையணிந்து அவன் ஆலயவளாகத்துக்கு வந்தான். கற்களால் ஆன மூன்று சிறிய கோயில்கள் உயரமற்ற மதில்வளைவால் சூழப்பட்டு சாலமரங்களால் ஆன சிறிய காட்டுக்குள் இருந்தன. சகுனி செல்லும்போது அங்கே விருஷகன் இருந்தான். வந்து வணங்கி "அரசரும் மூத்தவரும் வந்துகொண்டிருக்கிறார்கள் அண்ணா" என்றான்.

நிமித்திகன் அறிவித்ததும் அசலன் வெண்புரவியில் வந்து இறங்கினான். தொடர்ந்து வெண்குடைத் தேரில் சுபலர் வந்தார். மங்கலவாத்தியங்களை முழக்கியபடி சூதர்கள் சென்று அரசனை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். காந்தாரத்தின் குலதெய்வக்கோயில்களில் மட்டும் வைதிகர் பூசனைகள் செய்வதில்லை. லாஷ்கரகுலத்து முதுபூசகர்கள் எழுவர் ஓநாய்த்தோலாடை அணிந்து தலையில் செம்பருந்தின் இறகுகளால் ஆன முடியணிந்து நின்றிருந்தனர். ஏழு லாஷ்கர பாடகர்கள் கையில் கழுதைத்தோலில் செய்யப்பட்ட பறைகளுடன் அமர்ந்திருந்தனர். அரசர் உள்ளே நுழைந்ததும் பறைகள் முழங்கின. பூசகர்கள் சென்று வாழ்த்தொலி செய்து நீர் தெளித்து வரவேற்று உள்ளே போடப்பட்டிருந்த கல்லாலான ஆசனங்களில் அமரச்செய்தனர்.

லாஷ்கரர்களின் வழக்கப்படி பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த காட்டுஆடுகள் தறிகளில் கட்டப்பட்டிருந்தன. ஒரு ஆடு கயிற்றை இழுத்து நான்குகால்களையும் விசையுடன் உந்தி நின்றிருந்தது. அப்படியே சுழன்று மறுபக்கச் சுவரில் முட்டி அது திரும்பி வந்தது. மாலையின் சாயும் ஒளி வேகமாக மங்கிக்கொண்டிருக்க வானில் எஞ்சியிருந்த உதிரிமேகப்பிசிறுகள் சிவந்துகொண்டிருந்தன. ஒரு லாஷ்கரப்பூசகர் மூன்றுகோயில்களிலும் சுளுந்துகளை ஏற்றி வைத்தார். காற்றில் அனைத்துத் தழல்களும் வடக்கு நோக்கி வீசின.

தூதன் வந்து பீஷ்மர் வந்துகொண்டிருப்பதை அறிவித்தான். சற்றுநேரத்தில் பீஷ்மரும் பலபத்ரரும் ரதத்தில் வந்திறங்கினர். பீஷ்மர் குளித்த ஈரம் சொட்டும் தாடியும் குழலுமாக நனைந்த சுண்ணக்கல்பாறை போன்ற உடலுடன் இருந்தார். விருஷகன் அவர் அருகே சென்று அவர் பாதங்களை வணங்கி "பிதாமகரே எங்கள் குலதெய்வங்களும் தங்களை அறிந்திருக்கவேண்டும்" என்றான். அவர் சிரித்தபடி "ஆம், நாம் ஒரே குலம்" என்றார்.

சுலபரும் அசலனும் பீஷ்மரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். சகுனி சென்று தலைவணங்கினான். "நேற்று நீங்கள் வேட்டைக்குச் சென்றதாக விருஷகன் சொன்னான். என்னை அழைத்திருக்கலாமே" என்றார் பீஷ்மர். சகுனி "நான் நினைத்திருக்காமல் கிளம்பினேன்" என்றான். "நான் இத்தகைய வீண்நிலத்தில் வேட்டையாடியதேயில்லை" என்றார் பீஷ்மர். சுபலர் வந்து அவரை வணங்கி அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தினார்.

"எங்கள் குருதிப்பூசனையில் பெண்டிர் கலந்துகொள்வதுண்டு" என்று சுபலர் சொன்னார். "கங்கைக்கரை ஷத்ரியர்களிடம் அவ்வழக்கமில்லை என்று அறிந்தேன்." பீஷ்மர் சிரித்தபடி "பூர்வஆரியவர்த்தம் முழுக்கவே அவ்வழக்கம் முன்பு இருந்தது சுபலரே. இன்றும் சப்தசிந்துவின் இளவரசிகள் போருக்கும் வேள்விக்கும் தலைமை வகிக்கிறார்கள். எங்கள் கங்கர்குலங்களிலும் அவ்வழக்கமே" என்றார்.

அரசியர் வரும் முரசொலி எழுந்தது. சத்ரமும் சாமரமும் கொண்ட திறந்த ரதத்தில் காந்தாரிகளான பட்டத்து அரசி சுகர்ணையும் இளவரசி வசுமதியும் வந்திறங்கினர். பூசகர்களும் சூதர்களும் சென்று மங்கல இசையும் வாழ்த்துக்களுமாக அவர்களை அழைத்து கொண்டுசென்று பீடங்களில் அமரவைத்தனர். காந்தார வழக்கப்படி மன்னனும் இளவரசர்களும் அவர்களை வரவேற்றபோது பீஷ்மரும் இணைந்துகொண்டார்.

மூன்று ஆலயங்களில் முதல் ஆலயத்தில் கழுதையுடலும் சிறகுகளும் கொண்ட காற்றுத்தெய்வமான பலன் மீது அனலாகப் பறக்கும் சிகையும் செம்பருந்துச் சிறகும் கொண்ட அக்னிதேவனாகிய பாவகன் அமர்ந்திருந்தான். அவர்களுக்கு இருபக்கமும் அவர்களின் துணைவிகளான மருவும் இருணையும் அமர்ந்திருந்தனர். இரண்டாம் ஆலயத்தில் பறக்கும் ஒட்டக உடலுடன் அதிபலன் நின்றிருக்க அவன் மேல் பவமானன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் ஃபூர்ணியும் காமலையும் அமர்ந்திருந்தனர். மூன்றாம் ஆலயத்தில் குதிரைவடிவமான சண்டன் மீது சூசிதேவன் அமர்ந்திருக்க கிலையும் ஆரண்யையும் உடன் அமர்ந்திருந்தனர்.

விருஷகன் பீஷ்மரிடம் "இது எங்கள் குலதெய்வம் பிதாமகரே" என்றபின் "ஊர்ணரே சொல்லும்" என்றான். ஊர்ணர் என்னும் சூதர் வணங்கி "இந்த காந்தாரநிலமே இந்த ஆறு தெய்வங்களுக்கும் உரியவை என்பது புராணம். அத்ரி முனிவரின் சாபத்தால் வாயுதேவனின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரும் மூன்று கொடுங்காற்றுகளாக மாறி அக்னியின் புதல்வர்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லத் தொடங்கினார்.

ஆறு தேவமைந்தர்களும் நூறு யுகங்களாக முன்னும்பின்னும் ஓடிக்கொண்டிருந்தபோது இங்குள்ள ஒரு மண்துகள் கூட பூமியில் அமரமுடியவில்லை. அவை மேகங்களாக மாறி காற்றிலேயே திரைகளாக நெளிந்துகொண்டிருந்தன. அந்த மண்துகள்கள் மனம் வருந்தி தங்கள் அன்னையாகிய பூமாதேவியிடம் மன்றாடின. "அன்னையே உன் மதலைகளாகிய எங்கள் பேரின்பம் என்பது அன்னையின் மடியில் அமர்வதேயாகும். ஆகவேதான் எங்கு எவ்வாறு விலகினாலும் நாங்கள் உன்னிடமே வந்தமைகிறோம். இங்கு மட்டும் யுகயுகங்களாக நாங்கள் உன் தொடுகையையே அறியாதவர்களாக இருக்கிறோம்" என்றனர்.

பூமாதேவி இந்திரனிடம் கோரிக்கை வைத்தாள். இந்திரன் அவளுக்கு அருளி வானில் தன் ஒளிமிக்க வில்லை நாட்டினான். இடிகளை மண்மீது பொழிந்தான். அவன் கருணை பூமாதேவியில் ஆறு பெண்களாகப் பிறந்தது. அவர்கள் மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பூமியின்மேல் ஆறு பாலைநிலங்களாக விரிந்தனர். அவர்களைக் கண்டு காதல்கொண்ட ஆறுதேவர்களும் வேகமிழந்தனர். அந்த ஆறு பெண்களையும் அவர்கள் மணம்புரிந்துகொண்டனர். அவ்வாறாக காந்தாரநிலம் உருவாகிவந்தது.

அந்த ஆறு பாலைநிலப்பெண்களும் ஆறுதேவர்களுடன் கூடும் ஆறு பருவங்களில் மட்டும் காந்தார மண்ணில் அனல்காற்றுகள் வீசுவதில்லை. அந்த ஆறு இடைவெளிகளில்தான் இங்கே மழைபொழிகிறது. பயிர்கள் வாழ்கின்றன. உயிர்கள் தழைக்கின்றன. லாஷ்கரர் அந்த ஆறு அன்னையரை மட்டுமே வணங்குகிறார்கள். ஷத்ரியர் மூன்று அனல்களையும் மூன்று காற்றுகளையும் சேர்த்து வணங்குகிறார்கள்.

லாஷ்கர பூசகர்கள் மூன்று தெய்வங்களின் கோயில் முகப்பிலும் இருந்த முற்றத்தில் வெவ்வேறு நிறம்கொண்ட பன்னிரு கூழாங்கற்களை பரப்பி களம் அமைத்தனர். அவற்றின் நடுவே பலிபீடங்கள் அமைக்கப்பட்டன. பூசகர்கள் கைகாட்டியதும் பறைகள் பேரோசையுடன் உறுமின. ஒரு காட்டுஆட்டை இழுத்துவந்து முதற்கோயில் முன் நிறுத்தி அதற்குப் பூசையிட்டனர். அதன் நெற்றியில் நீர்தெளிக்கப்பட்டதும் அது தலையை அசைத்தது. பூசகர் தன் சிறிய கத்தியால் அதன் கழுத்தின் குருதிக்குழாயை வெட்டினார். ஒருவர் அதன் உதறி அதிர்ந்த கால்களைப் பற்றிக்கொள்ள இன்னொருவர் கொடிகளின் சிவந்த தளிர்முனைகள் போல பீரிட்ட குருதியை மண்கலத்தில் பிடித்துக்கொண்டார்.

மூன்று காட்டுஆடுகளும் கழுத்து அறுக்கப்பட்டு குருதி கலங்களில் நிறைக்கப்பட்டது. பறைகள் உறுமி முழங்க அக்குருதியை தெய்வங்கள் மேல் ஊற்றினர். அம்மிருகங்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு அங்கே இருந்து இதயத்தை பிரித்தெடுத்தனர். பூசகர் தன் வாளால் அந்த இதயங்களை போழ்ந்து விரித்து உள்ளே கோதுமை அப்பங்களை வைத்து அவற்றை ஈச்சைஓலையை முடைந்து செய்யப்பட்ட தாலங்களில் வைத்து தெய்வங்களுக்குப் படைத்தார். நீரோ மலரோ தூபமோ தீபமோ படைக்கப்படவில்லை. மணியோசையும் மந்திரங்களும் ஏதுமில்லை. முதுபூசகர் தெய்வங்கள் முன் அமர்ந்து பலி ஏற்கும்படி சைகைகள் செய்தார். பின்னர் வாயில் கையை வைத்து ஓநாய்கள்போலவும் கழுதைகள் போலவும் குதிரைகள் போலவும் ஒட்டகங்கள் போலவும் ஒலி எழுப்பினர் பூசகர்கள். பறையடித்தவர்கள் முன்னும்பின்னும் பாய்ந்து நடனமிட்டு வெறிக்குரல் எழுப்பினர்.

பூசை முடிந்து பறைகள் அமைதியானபோது அங்கே ஒரு வேட்டைநிகழ்ச்சி நடந்து முடிந்த உணர்வுதான் எஞ்சியிருந்தது. பூசகர்கள் குருதிக்குடங்களில் எஞ்சியிருந்த குருதியை ஒரு கலத்திலாக்கி முதலில் அரசரிடம் கொண்டு சென்றனர். கோதுமை அப்பத்தை அந்தக்குருதியில் முக்கி அவருக்கு அளித்தனர். சுபலர் அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு தலைமேல் வைத்துவிட்டு உண்டார். அதன் பின் அரசி சுகர்ணைக்கும் பட்டத்து இளவரசன் அசலனுக்கும் அளித்தனர். அடுத்து கலம் பீஷ்மர் முன் வந்தது. சகுனி அவரது கண்களை கவனித்தான். அதில் சிறுவனுக்குரிய ஆர்வம் மட்டுமே தெரிந்தது. மீசையை நீவியபடி அவர் குருதி தோய்ந்த அப்பத்தை உண்டார்.

சுகர்ணை பீஷ்மரிடம் "மூத்தவரே, தங்கள் வருகை இந்நகருக்கு அருளாக அமையவேண்டும். இவள் என் புதல்வி காந்தாரியான வசுமதி. இவளுக்கு தங்கள் வாழ்த்துச்சொல்லை நாடுகிறேன்" என்றாள். பீஷ்மரின் கண்களிலேயே தன் முழு கவனத்தையும் சகுனி நிலைநிறுத்தியிருந்தான். அவர் அவனுடைய பார்வையையோ அல்லது வேறு எவருடைய பார்வையையுமோ பொருட்டாக எண்ணவில்லை என்று தெரிந்தமையால் அவன் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை.

காந்தாரி குனிந்து பீஷ்மரின் கால்களைத் தொட்டு வணங்கினாள். பீஷ்மர் முகம் மலர்ந்து "வெண்தாமரை போலிருக்கிறாள் தேவி" என்றார். "உன் உள்ளம் உகக்கும் துணைவன் அமையட்டும். உன் மைந்தன் பாரதவர்ஷத்தை ஆளட்டும்" என்றார். சகுனி பந்த வெளிச்சத்தை அரசர் மறைத்ததனால் உருவான இருளுக்கு நகர்ந்துகொண்டான். காந்தாரி "தங்கள் அருள்" என்று சொல்லி வணங்கினாள்.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 6 ]

சேவகன் தலைவணங்கி கதவைத்திறந்ததும் அரண்மனை மந்திரசாலைக்குள் சகுனி நுழைந்தபோது சுபலர் பீடத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருப்பதையும் எதிரே அசலன் மோவாயை கையில் தாங்கி அமர்ந்திருப்பதையும் கண்டான். சுகதர் நின்றபடி சுவடிகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தார். சுபலர் அலையும் விழிகளுடன் கால்களை மாற்றி மாற்றி அமைப்பதைக் கண்டதுமே அவர் எதிலும் கருத்தூன்றாமல் இருக்கிறார் என்பதை சகுனி புரிந்துகொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் சுகதர் தலைவணங்கினார். அசலன் "நீ இன்று வேட்டைக்குச் சென்றிருக்கக்கூடாது" என்று கடுமையாகத் தொடங்கினான்.

சகுனி ஒன்றும் சொல்லாமல் பீடத்தில் அமர்ந்தான். "என்ன இருந்தாலும் அவர் அஸ்தினபுரியின் பிதாமகர். நினைத்திருந்தால் இந்த பாரதவர்ஷத்தையே வெற்றிகொள்ளக்கூடிய மாவீரர். அவரை உதாசீனம் செய்து நீ சென்றாய். நல்லவேளையாக சுஜலனால் உன்னை கண்டுபிடிக்கமுடிந்தது." சகுனி அதைக் கேட்டதாகவே காட்டவில்லை. "அவரது தூது மறுக்கப்பட்டதை அவரிடம் நேரடியாக நீ சொல்லியிருக்கக் கூடாது என்று சுகதர் சொல்கிறார். அரசமுறைப்படி நாம் அமைச்சர் வழியாக அவரது அமைச்சரிடம் அதைத் தெரிவித்திருக்கவேண்டும்" என்று அசலன் மீண்டும் சொன்னான்.

சுகதர் அவர் உள்ளே நுழையவேண்டிய தருணம் அது என்று புரிந்துகொண்டார். "இளவரசே, தூது மறுக்கப்படுதல் என்பது சற்று சங்கடமான நிலை. அதை நேரடியாக உருவாக்கினால் அத்தருணத்தில் சொல்லப்படும் சிலசொற்கள் உடனடியாக எதிர்வினைகளைக் கொண்டுவரலாம். உணர்ச்சிமிக்க சொற்பரிமாற்றம் நிகழலாம்" என்றார். "பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை."

"ஆம்" என்றார் சுபலர். "என் ஆசிரியர் என்னிடம் சொன்ன முதல்சொல்லே அதுதான். நாக்கை அடக்காத அரசன் நாடாளமாட்டான் என்றார் அவர்" என்றார். சுகதர் "ஆன்மா குடியிருக்கும் வீட்டின் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை என்று நாக்கை சுக்ர ஸ்மிருதி வகுக்கிறது. நாக்கு நம் நலன்களைப் பேணத்தெரியாத பேதை." சுபலர் ஏப்பம் விட்டபடி "உண்மை" என்றார். சுகதர் "ஆகவேதான் எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும் உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்கவேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன."

"ஏன் ஓலைகள் வழியாக தெரிவிக்கக்கூடாதா?" என்றான் அசலன். "இல்லை இளவரசே, ஓலை எத்தனை மிதமாக எழுதப்பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதனாலேயே ஓர் உறுதியைக் கொண்டிருக்கிறது. அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது. வாசிப்பவரின் மனமே அந்தச் சொற்களுக்கு பொருள் அளிக்கிறது, எழுதுபவரின் மனம் அல்ல. மிகமென்மையான ஒரு சொற்றொடரை ஒருவர் வன்குரலில் வாசித்துக்காட்டி அறைகூவலாக ஒலிக்கச்செய்ய முடியும்" சுகதர் சொன்னார். "ஆகவே அமைச்சுமுறை அறிந்த அமைச்சனோ தூதனோ செல்வதே முறை. கேட்பவரின் முகத்தையும் சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியைச் சொல்லவேண்டும். கேட்பவர் உருவாக்கும் எதிர்வினைகளுக்கேற்ப தணிந்தும் நயந்தும் தேவையென்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்யவேண்டும். அதன்பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்துவதற்காக அவர் அரச ஓலையை அளிக்கலாம்."

சகுனி அசைந்து அமர்ந்து சால்வையை எடுத்து மடிமீது போட்டுக்கொண்டான். பின்பு "பீஷ்மர் எதையும் நேரடியாகச் சொல்வதை விரும்புபவர் என்று தோன்றியதே" என்றான். "ஆம், அதை நான் முதல்நாளிலேயே கணித்தேன் இளவரசே. அவருக்கு சொல்தெரிதலே தேவையில்லை. அனைத்துச் சொற்களும் அவருடைய நெஞ்சிலிருந்து நேரடியாகவே வருகின்றன. ஆனால் அதற்குக் காரணம் அவர் உள்ளும் புறமும் ஒன்றேயானவர் என்பதுதான். நாம் அப்படி அல்ல" என்றார் சுகதர். "நாம் நம் அச்சங்களையும் ஐயங்களையும் மறைத்துக்கொண்டுதான் பேசுகிறோம். நாம் சொல்எண்ணாமல் பேசுவது பிழை."

சுபலர் உரக்கச் சிரித்து "அப்படியா சொல்கிறீர் அமைச்சரே? இவன் தன்னுள்ளே கொண்டிருந்த அச்சமும் ஐயமும் என்ன, சொல்லுங்கள்" என்றார். சுகதர் "இளவரசே, தாங்கள் பீஷ்மரை அஞ்சுகிறீர்கள்" என்றார். "அதுதான் முதன்மையான காரணம்." அசலன் "ஆகா" என்றபடி தொடையைத் தட்டினான். சகுனி "சொல்லும்" என்றான். "தாங்கள் தங்களுக்கு நிகரான அரசியல்சூழ்ச்சியாளரை இதுவரை கண்டடையாதவர். அந்த தன்னம்பிக்கை கொண்டவர். தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் பொருள் இல்லாமலாக்கும் ஒருவரைக் கண்டதும் நிலைகுலைந்துவிட்டீர்கள். அவரது சொல்லில் இருந்து விழியிழந்த அரசன், முதியதளபதி என்னும் இரு சொல்லாட்சிகளை தொட்டு எடுத்தீர்கள். உடனே அவர் சொல்லாத ஒன்றையும் தொட்டீர்கள். உங்களைவெல்லும் அரசியல்சூழ்ச்சியாளர் அவர். ஆகவேதான் பின்னடைந்தீர்கள்."

"அப்படியென்றால் நான் என் தமக்கையைப்பற்றிச் சொன்னது பொய் என்கிறீரா?" என்றான் சகுனி. "இல்லை இளவரசே. ஒரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரேயொரு காரணம்தான் இருந்தாகவேண்டுமென்பதுண்டா என்ன? இளவரசி காந்தாரிக்கு இம்மணத்தில் உவப்பில்லை என நீங்கள் உணர்ந்தீர்கள். உங்களால் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால் அதற்கு முன்னரே உங்கள் அகம் நிலையழிந்து ஆயிரம் விரல்களால் தேடத்தொடங்கியிருந்தது. அப்படி ஒரு தேடல் இருந்தமையால்தான் காந்தாரிக்கு மணத்தில் உவப்பில்லை என்பதை உடனே நுண்ணிதாக உணர்ந்துகொண்டீர்கள். மணமறுப்பையும் அறிவித்தீர்கள்."

சுபலர் உரக்கச்சிரித்து "ஆகா..." என்றபின் சுவரோரமாக நின்ற சேவகனைநோக்கி கைகாட்டினார். சேவகன் அசையவும் சகுனி தேவையில்லை என்று அவனுக்கு சைகை காட்டிவிட்டு "சுகதரே, நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்" என்றான். "நான் நேற்றுமுதல் நிலைகொள்ளாமல் இருந்துகொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இதுவே. என் முடிவு உறுதியானது. ஆனால் அது சரியானது என்று முழுமையாகத் தோன்றவுமில்லை" என்றான்.

"தாங்கள் அப்படி நேரடியாக பீஷ்மரிடம் சொன்னபோது அவர் சொல்மீறுவார், அவரது அகம் நிலையழியும் என அகத்தே எதிர்பார்த்தீர்கள். அது நிகழவில்லை. பீஷ்மரின் முகத்தில் எந்த உணர்ச்சிமாறுபாட்டையும் தாங்கள் காணவில்லை. ஆகவேதான் உடனடியாக தலைவணங்கி அங்கிருந்து விலகிச்சென்றீர்கள். அதை எண்ணியே இரவெல்லாம் துயிலற்றிருந்தீர்கள். வேட்டைக்குச் சென்றதும் அதனாலேயே, பீஷ்மரைத் தவிர்ப்பதற்காக அல்ல" என்றார் சுகதர். "தாங்கள் சுஜலனிடம் என்ன வினவினீர்கள் என்று கேட்டறிந்தேன். பீஷ்மர் எந்த மனவேறுபாடுமின்றி அரசுக்கு படைசூழ்தலில் ஆலோசனை வழங்கினார் என்றும் இளையவரை மாணவராக ஏற்று மந்திரச்சரங்கள் சிலவற்றை சொல்லிக்கொடுத்தார் என்றும் கேள்விப்பட்டதும் திரும்பிவிட்டீர்கள்."

"சுகதரே நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியானதே" என்றான் சகுனி. "ஆனால் நான் உய்த்தறிந்த ஒன்றை நீங்கள் தொடவில்லை. பீஷ்மர் அரசியல்சூழ்மதியாளர் அல்ல. அவரை அனுப்பிய மாபெரும் அரசியல்சூழ்மதி ஒன்று அஸ்தினபுரியில் இருக்கிறது. பீஷ்மர் இங்கே சொன்னவை அவர் உள்ளத்தில் இருந்து எழுந்த சொற்கள்தான். ஆனால் இந்தச் சூழ்மதியை அவருள் விதைத்தவர்கள் அங்கே இருக்கிறார்கள்."

அசலன் "நீ அவர்களை அஞ்சுகிறாயா?" என்றான். "அஞ்சவில்லை. ஆழம்தெரியவில்லையே என எண்ணினேன்" என்றான் சகுனி. சுகதர் "ஆம், சத்யவதியைப்பற்றி நான் அறிந்திருக்கிறேன்" என்றார்.

மந்தணஅவைச் சேவகன் வந்து வணங்கி விருஷகன் வந்திருப்பதைச் சொன்னான். சுகதர் "இளவரசர் பீஷ்மரின் மாணவராகவே ஆகிவிட்டார். பாரதவர்ஷம் முழுக்க அத்தனை நாடுகளிலும் பீஷ்மருக்கு உளம்சேர் மைந்தர்கள் உள்ளனர் என்று சூதர்கள் சொல்வார்கள். இங்கும் ஒருவர் அமைந்துவிட்டார்" என்றார். விருஷகன் உள்ளே வந்து தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். சுபலர் "பீஷ்மர் எப்போது கிளம்புகிறார்?" என்றார். "இன்னும் இருநாழிகையில். தாங்களும் தமையனாரும் அரசகோலத்தில் கோட்டைவரை வந்து வழியனுப்பவேண்டும். பட்டத்துயானையும் அரசபரியும் அமைச்சும் அங்கே செல்லவேண்டுமென அமைத்திருக்கிறேன். வைதிகரும், சூதரும் வருவார்கள்."

"இன்றுவரை நாம் எவருக்கும் இத்தகைய வழியனுப்புதலை அளித்ததில்லை" என்றான் அசலன். "இதற்குமுன் நம் அரசுக்கு சக்ரவர்த்திகள் வந்ததுமில்லை" என்று விருஷகன் உரத்த குரலில் பதில் சொன்னான். சகுனி "பிதாமகர் உன்னிடம் என்ன சொன்னார்?" என்றான். "எதைப்பற்றி?" சகுனி மிகக் கவனமாக "காந்தாரத்தின் வரவேற்புபற்றி?" என்றான். விருஷகன் "மூத்தவரே நீங்கள் உங்கள் செய்கைகளால் அவர் வருந்துகிறாரா என்று கேட்கிறீர்கள் அல்லவா?" என்று நேரடியாகக் கேட்டான். சகுனி புன்னகைசெய்து "நீயும் உன் குருநாதரின் பேச்சுமுறைகளைக் கற்றுக்கொள்கிறாயா?" என்றான்.

"மூத்தவரே, பிதாமகர் தூது நிறைவேறாமை குறித்து மனம் வருந்துவதாகச் சொன்னார். உண்மையில் அவர் வருந்துவதை நானும் உணர்ந்தேன். அவர் வருந்துவது அரசுக்காக அல்ல, தன் மைந்தன் திருதராஷ்டிரனுக்காக என்று அறிந்தபோது விழியிழந்த அந்த இளவரசன்மேல் எனக்குள் பொறாமையே எழுந்தது" என்றான் விருஷகன்.

"சற்றுமுன் காந்தாரியைக் கண்டு ஆசியளித்துவிட்டு அவர் ரதமேறியபோது நானும் சென்றேன். என்னிடம் இளவரசி பேரழகி என்றார். அவளுடைய நீலக்கண்களும் தூயவெண்ணிறமும் பாரதவர்ஷத்தின் தெற்கிலும் கிழக்கிலும் அரியவை என்றார். அப்படிப்பட்ட அழகியை விழியிழந்தவனுக்கு மணம்செய்து வைப்பது பிழையென உணர்வதாக அவர் சொல்லப்போகிறார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் நெடுமூச்சு விட்டு, அவளை என் குலம் இழப்பதை எண்ணும்போது துயரமே எழுகிறது என்றார்" விருஷகன் சொன்னான்.

"என் மைந்தன் கையிலிருந்து விலையில்லா மணி ஒன்று தவறிச்செல்கிறது என்று அவர் சொன்னபோது என் மனம் மலர்ந்தது. ஆம், மூத்தவரே அவருள் இருந்து ஓர் அரசியலறிஞனோ விவேகியோ ஞானியோ வெளிப்படுவதைவிட கனிந்த முதுதந்தை ஒருவர் வெளிப்படும் தருணங்களையே நான் விரும்புகிறேன்" விருஷகனின் மலர்வை சுபலர் புன்னகையுடன் கவனித்து சுகதரை நோக்கி விழியசைத்தார்.

சகுனி பேச்சை மாற்ற விரும்பினான். "சுகதரே வேறு என்னென்ன ஓலைகள் வந்துள்ளன?" என்றான். சுகதர் பேசுவதற்குள் "நாம் சற்று மதுவருந்தி உணவுண்டபின் ஓலைகளை கேட்கலாமென நினைக்கிறேன்... பூசனையில் அவ்வளவுநேரம் நின்றது களைப்பை அளிக்கிறது" என்றார் சுபலர். சகுனி "முதன்மையான ஓலைகளை முடித்துவிடுவோம்" என்றதும் சுபலர் "ஆம் அதைத்தான் நானும் சொல்லவந்தேன்" என்றார். அசலன் தந்தையை நோக்கி புன்னகை புரிந்தான்.

"இளவரசே, நம்முடன் மணஉறவை விழையும் எட்டு மன்னர்களின் ஓலைகள் வந்துள்ளன" என்று சுகதர் ஓலைகளை எடுத்தார். விருஷகன் "மகதன் மணம் மறுத்த செய்தியை அதற்குள் ஒற்றர்கள் வழி அறிந்துவிட்டார்கள்" என்றான். "அது இயல்புதானே?" என்றான் அசலன். "லோமசன், கேகயன், சகலன் மூவரும்தான் சற்றேனும் மரபுள்ள மன்னர்கள். பிறர் சென்ற நூறாண்டுகளில் உருவாகிவந்த சிறு மன்னர் குலங்கள்" என்றார் சுகதர்.

சுபலர் "லோமசனுக்கும் கேகயனுக்கும் வயதாகிவிட்டதே..." என்றார். "லோமசனுடன் நானே இணைந்து சுயம்வரமொன்றுக்குச் சென்றிருக்கிறேன்." அசலன் "ஆம், ஆனால் இளவரசர்களாக இருப்பவர்கள் வெறும் வேடர்களும் படகோட்டிகளும். ஆயிரம் படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டால் தங்களை அரசர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்..." என்றான். "ரோருகனையும் பாடலனையும் அரசர்களாக எப்படி எண்ணமுடியும்? நம் மூதாதை காலத்தில் அவர்கள் நம்மிடம் படகோட்டிகளாக இருந்தார்கள்."

சுகதர் "அரசே, நம் முன் உள்ளவை இரண்டு வழிகள். நம்மிடம் உறவை நாடும் ஏதேனும் ஒரு சிறிய ஷத்ரிய அரசுக்கு மகற்கொடை நிகழ்த்துதல். அந்நாடு இங்கே சிந்துவின் கரையில் இருக்குமென்றால் நம்மை ஆதரிக்கும் ஒரு ஷத்ரியகுலத்தின் பின்புலம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அவ்வுறவில் எப்போதும் ஒரு சிறு முரண்பாடு இருந்துகொண்டிருக்கும். அவர்கள் நம்முடைய செல்வத்தைக் கண்டு நம்மை நாடிவருகிறார்கள். சொல்லப்போனால் தங்கள் குலத்தைப்பற்றிய பெருமிதத்தை நமக்கு விலைக்கு விற்கிறார்கள் அவர்கள். அந்த இழிவுணர்ச்சி அவர்களை எப்போதும் அமைதியிழக்கச் செய்யும். ஆகவே நம்மை சிறுமைப்படுத்த முயல்வார்கள்."

சுகதர் தொடர்ந்து சொன்னார் "அவர்களுக்குள் நம் நாட்டை வென்று உத்தரபதம் மீதான ஆதிக்கத்தை அடையவேண்டுமென்ற நோக்கம் இருக்குமென்றால் அது பெரிய மோதலாக மாறவும்கூடும்... பொதுவாக ஷத்ரியர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள். தங்களைவிடக் குறைந்தவர்களுடன் அவர்கள் மண உறவுகொள்வதே ஆதிக்கத்துக்காகத்தான். உத்தரபதம் என்னும் பொன்மழைமேகம் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களையும் கவர்கிறது."

விருஷகன் "ஆனால் அவர்களில் எவரும் இங்கே ஆட்சிசெய்ய முடியாது. இந்தப் பாலைநிலம் நம்மால் மட்டுமே ஆளப்படக்கூடியது" என்றான். "ஆம், ஆனால் நம் அரசையே அவர்கள் கைப்பற்றிக்கொண்டால்? இளவரசியின் மைந்தனை இங்கே அரசனாக ஆக்கமுடிந்தால்?" என்றார் சுகதர். "ஷத்ரியர் அதையே திட்டமிடுவார்கள்." சுபலர் "ஆம், நானும் அவர்களில் பலருடன் மது அருந்தியிருக்கிறேன். எப்போதும் அதிகாரம் பற்றியே பேச்சு. வேட்டைக்குச் செல்லும்போதுகூட ஒருவரை இன்னொருவர் வெல்வதையே பேசிக்கொண்டிருப்பார்கள்" என்றார்.

"நம் இரண்டாவது வாய்ப்பு சிறிய அரசர்கள். அவர்களிடம் குலம் இல்லை. ஆனால் அவர்களை குடித்தலைவர்கள் என்னும் நிலையில் இருந்து தனி அரசர்களாக ஆக்கிய அந்தக் காரணம் அவர்களுடன் இருக்கிறது. நதிப்பாதையோ மலைக்கணவாயோ சந்தைகளோ விளைநிலங்களோ ஏதோ ஒன்று. அது நம் கட்டுப்பாட்டுக்கு வரும். நாம் அளிக்கும் மகற்கொடையால் மகிழ்ந்து நம்மிடம் பணிந்து நன்றியுடன் இருப்பார்கள். இளவரசி விரும்பும் இளையவனை நாம் தெரிவு செய்யவும் முடியும்."

"நாம் இதை ஏன் உடனே விவாதிக்கவேண்டும்? ஓலைகளைத் தொகுத்து ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து முடிவெடுப்போமே" என்றார் சுபலர். "இன்னும் ஒருநாழிகையில் பீஷ்மர் கிளம்புகிறார்." அசலன் "ஆம், இது உடனடியாக முடிவுசெய்யப்படவேண்டியதல்ல" என்றான். சுகதர் "அரசே, இதை உடனே முடிவுசெய்ய வலுவான காரணம் ஒன்றுள்ளது. ஆகவேதான் ஓலைகளை உடனே கொண்டுவந்தேன்" என்றார். "இன்று மாலை உஷ்ணபதத்தில் இருந்து என் ஒற்றன் ஒரு செய்தியைக் கொண்டுவந்தான். மகதத்தில் இருந்து தூதர்கள் இருவர் நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் நாளை இங்கு வந்து சேரக்கூடும்."

சகுனி "என்ன செய்தி?" என்றான். சுகதர் "மகத மன்னன் விருஹத்ரதர் தன் இளவரசர் பிருகத்ரதனுக்கு காசிமன்னர் பீமதேவர் வங்க மன்னன் மகளை மணந்து பெற்ற இரு மகள்களை மணம்புரிந்து வைக்க முடிவெடுத்திருக்கிறார். அணிகை, அன்னதை என்னும் அவ்விரு இளவரசிகளும் இரட்டையர். அஸ்தினபுரிக்கு பீஷ்மபிதாமகர் தூக்கி வந்த அவர்களின் தமக்கையரைவிட அழகில் சிறந்தவர்கள். காசிமன்னன் மணக்கொடைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறான். மகதமும் காசியும் வரும் ஆவணிமாதத்தில் மணமங்கலத்தை நிகழ்த்தவிருக்கின்றன" என்றார்.

"நம்மை அழைக்கிறானா?" என்றார் சுபலர். "அரசே, மணக்கொடை நிகழ்வதற்கு மூன்றுமாதம் முன்னரே மன்னர்களுக்கு அழைப்பனுப்புவது முறை. அதன்படி நமக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்" என்றார் சுகதர். சுபலர் சினத்தால் உரத்த குரலில் "நம்மை அவமதித்தபின்பு இப்படி ஓர் அழைப்பை அனுப்புவான் என எண்ணவே இல்லை" என்றார்.

அசலன் "காசியை ஏன் மகதன் தேர்ந்தெடுத்தான் அமைச்சரே?" என்றான். "கங்கைக்கரையின் முழுமையான ஆதிக்கத்தை மகதம் விரும்புகிறது. கங்கைக்கரைத் துறைகளைக் கொண்டிருக்கும் நகரத்தையே அவர்கள் விழைவார்கள்" என்று சுகதர் சொன்னார். "அத்துடன் அவர்கள் அஸ்தினபுரியை அஞ்சுவதும் தெரிகிறது. அஸ்தினபுரிமீது தீராப்பகை கொண்டுள்ள காசிநாட்டை மண உறவுக்குத் தெரிவுசெய்தது அதற்காகவே" என்றான் விருஷகன்.

சகுனி மெல்லிய குரலில் "நமக்குத் தூதாக வருபவர் யார்?" என்றான். சுகதர் "அதைத்தான் நான் சொல்லவந்தேன் அரசே. நம்மிடம் அனுப்பப்பட்டிருப்பவர் உக்ரர் என்னும் சூதர்" என்றார்.

மந்தணஅவை அமைதியாகியது. சுகதர் சகுனியைப் பார்த்தபடி பேசாமல் நின்றார். சிலகணங்களுக்குப்பின் சுபலர் தன் கனத்த உடலுடன் அசைந்தபோது பீடம் முனகியது. "சூதரா?" என்றார். அசலனை ஒருமுறை நோக்கிவிட்டு "அவர் ஒருவேளை அமைச்சராக இருக்கலாமோ?" என்றார். "இல்லை, அவர் ஒரு பாடகர் மட்டுமே" என்றார் சுகதர்.

அசலன் "ஷத்ரியர்களோ பிராமணர்களோதானே அனுப்பப்படவேண்டும்?" என்றான். விருஷகன் கடும் சினத்துடன் "தந்தையே இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? அந்தச் சவுக்கை அனுப்பியதற்கு நிகர்தான் இது. தேரோட்டும் சூதனை அனுப்பி நம்மை இழிவுபடுத்தியிருக்கிறான் மகதன். பந்தல் அமைக்கும் சிற்பியையும் சமையல் செய்யும் சூதனையும் அழைப்பதற்குத்தான் சூதர்கள் செல்வார்கள்."

சகுனி "குடித்தலைவர்களை அழைக்கவும் சூதர்கள்தான் செல்வார்கள்" என்றான். அவன் எந்த உணர்ச்சியுடன் சொல்கிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. விருஷகன் "இதையும் நாம் விட்டுவிட்டால் இங்கே நாம் அரசுடன் இருப்பதற்கே பொருள் இல்லை" என்றான். "நாம் என்ன செய்யமுடியும் இளவரசே?" என்றார் சுகதர். "படைகொண்டுசெல்வோம்..." சுகதர் "அவ்வளவுதொலைவுக்கு நம்முடைய படைகள் செல்லமுடியாது. அந்த எல்லைவரை நமக்கு படைத்துணை அளிக்கும் நாடே இல்லை. பன்னிரண்டு நாடுகளை கடந்து நாம் செல்லவேண்டும்..." என்றார்.

"அப்படியென்றால் நாம் என்னதான் செய்வது? இந்த அவமதிப்பைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருந்தால் அச்செய்தியை அவன் எப்படியேனும் அந்த மணநிகழ்வில் அனைத்து ஷத்ரியர்களும் அறியும்படி செய்வான். சொல்லப்போனால் அனைவரும் இப்போது நம்முடைய எதிர்வினை என்ன என்று அறியவே காத்திருக்கிறார்கள்" என்றான் விருஷகன்.

"நாம் நம் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து ஓர் ஓலை அனுப்பினால் என்ன?" என்றான் அசலன். சுபலர் "ஆம், அதைச்செய்யலாம்" என்றபின் சகுனியைப் பார்த்தார். சகுனி பேசாமல் சரிந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு "அந்தக் கடிதத்தை நாம் ஒரு சூதரிடம் வேண்டுமென்றால் கொடுத்தனுப்பலாம்" என்றார். சகுனி அதற்கும் பேசாமலிருந்ததைக் கண்டு அவர் பிறரைப்பார்த்தார். பின்பு தன் கைகளை மார்பின் மேல் கட்டிக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.

சகுனி சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து இருந்தான். அங்கிருக்கும் அனைவரும் தன்னை கவனிப்பதை அவன் அறியவில்லை போலிருந்தது. பின்பு நிமிர்ந்து "சுகதரே நாம் பால்குடித்து விலகிய ஒரு குதிரைக்குட்டியை அனுப்புகிறோம்" என்றான். சுகதர் சிலகணங்கள் திகைத்தபின் முகம் மலர்ந்து "ஆம், அதுவே சிறந்த பதில்... மிகச்சிறந்த பதில்" என்றார். விருஷகன் "அதற்கு என்ன பொருள் அமைச்சரே?" என்றான்.

"இளவரசே, அவர்கள் நமக்கனுப்பிய குதிரைச்சவுக்கு இங்கே உள்ளது. நாம் குதிரைக்குட்டியை அனுப்பினால் அதன்பொருள் ஒன்றே. அக்குதிரை வளர்ந்து சேணம் மாட்டப்படுவதற்குள் நாம் அங்கே படையுடன் வருவோம் என்கிறோம். தைரியமிருந்தால் அக்குதிரைக்குட்டியை கொல்லாமல் கொட்டடியில் வைத்து வளர்த்துக்கொண்டு காத்திரு என்று அறைகூவுகிறோம். மணநிகழ்வில் வந்துசேரும் அக்குதிரைக்குட்டியை மகதன் மறைக்கமுடியாது. அறைகூவலை ஏற்றேயாகவேண்டும். அறைகூவல் அத்தனை வெளிப்படையாக இருக்கையில் மகதத்தின் எதிரிகள் பலர் நம்முடன் சேர வழியிருக்கிறது."

"ஆனால் உடனடியாக ஒருபோர் தவிர்க்கப்படுகிறது" என்றார் சுபலர். "அது நல்லதுதான்....நாம் நம்மை மேலும் வலிமைப்படுத்திக்கொள்வோம்." சுகதர் "நாம் நம் நிதிவல்லமையால் இங்கேயே பெரும்படையைத் திரட்டமுடியும். சோனகர்களின் படைகளைக்கூட திரட்டிக்கொள்ளமுடியும். அடுத்த நான்காண்டுகளுக்குள் நாம் சென்று அந்தக்குதிரையைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். அதை இங்கே கொண்டுவந்து ஒரு அஸ்வவேள்வியைச் செய்தோமென்றால் நம் குலத்தைப்பற்றி மகதன் எழுப்பிய வினாவுக்கும் பதில் அமைந்துவிடும்."

"அந்தப் புரவியின் சேணத்தில் மகதனைக் கட்டி இழுத்துவருவோம்" என்றான் சகுனி. அப்போது மந்திரசாலையில் இருந்து அரண்மனைக்குள் செல்லும் அறையின் கதவு மெல்ல அசைந்தது. சகுனி "உள்ளே வருக இளவரசி" என்றான். சுகதர் "தாங்கள் அங்கே கேட்டுக்கொண்டிருப்பதை முன்னரே அறிவோம் இளவரசி. தங்கள் சொல் இங்கே வரவேற்கப்படுகிறது" என்றார். "நான் மந்திரசாலையில் வந்து பேச விழையவில்லை அமைச்சரே. அது அரசுரையாக ஆகிவிடும். நான் இங்கிருந்தே சொல்கிறேன்" என்று காந்தாரி மெல்லிய குரலில் சொன்னாள். சகுனி "அவ்வண்ணமே" என்றான்.

"தம்பி, நம்மை பாரதவர்ஷமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னாய். அந்த மேடையில் நாம் முன்வைக்கவேண்டியது நம்முடைய சினத்தைத்தானா?" என்றாள் காந்தாரி. "நம்மை பிறர் சினம் கொள்ளச்செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?"

சகுனி திகைத்தவன் போல உடலை முன்னகர்த்தி "ஆம் அக்கா. ஆனால்..." என்றான். "தம்பி, அந்த மேடையில் நம்முடைய நிமிர்வும் கனிவும் நட்பும் முன்வைக்கப்படட்டும். நம் அரண்மனையின் மிகச்சிறந்த சூதர்குழுவும் தாசியர்குழுவும் அவர்களுக்கு மணப்பரிசிலாக அனுப்பப்படட்டும். அவர்கள் ஒருபோதும் கண்டிராத காப்பிரிநாட்டு நவமணிகளும் யவனப்பொன்னும் பீதர்களின் பட்டும் அளிக்கப்படட்டும். பாரதவர்ஷமே அவற்றைக் கண்டு வியக்கவேண்டும்."

"ஆணை" என்றான் சகுனி. "தம்பி, அங்கிருக்கும் ஷத்ரியர் நாம் நட்பையே நாடுபவர்கள் என்று உணரட்டும். நாளை நாம் பாரதவர்ஷத்தை வெல்ல படைகொண்டுசென்றால் நம்முடன் வந்து சேர ஷத்ரியர்கள் அங்கே இருக்கவேண்டும். அவர்களில் எவர் நம்முடன் இணைவார்கள் என இன்று சொல்லமுடியாது." காந்தாரி மெல்லிய திடமான குரலில் "ஒருவேளை நாளை நாம் அஸ்தினபுரியிடமே போர்புரிய நேரிடலாம். அப்போது மகதம் நம்முடன் சேரவும்கூடும்" என்றாள்.

"ஆம். உண்மை இளவரசி. இதைவிடச்சிறந்த அரசுரை இங்கே நிகழப்போவதில்லை" என்றார் சுகதர். "அமைச்சரே, அத்துடன் என்னை மணம்புரிய மறுத்தார் என்பதற்காக ஒருவர் மேல் நான் பகை கொள்வது என் பெண்மையை சிறுமைசெய்கிறது. அவர் நலம்பெற்று நன்மக்களுடன் நீடூழி வாழவேண்டுமென்று வாழ்த்தவே என் மனம் எழுகிறது" என்று காந்தாரி சொன்னாள். "அவ்வண்ணமே செய்வோம்" என்றார் சுபலர்.

சகுனி எழுந்து கதவை நோக்கி ஓரடி எடுத்து வைத்து "அக்கா, தங்களை நான் நினைவறிந்த நாள் முதலே அறிவேன். ஆனால் என் அன்பு தங்களை தமக்கையாக மட்டுமே காட்டிவிட்டது. நீங்கள் சக்கரவர்த்தினி. மாமன்னர்களின் மணிமுடிகள் வந்து வணங்கவேண்டிய பாதங்கள் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அனைத்து மக்களுக்கும் அமுதூட்டும் பாற்கடலை நெஞ்சிலேந்தியவர்... அப்பதவியைத் தவிர ஏதும் உங்களுக்கு இழிவே" என்றான்.

சகுனியின் குரலில் அந்த உணர்ச்சியை ஒருபோதும் அவர்கள் எவரும் கண்டிருக்கவில்லை. "சிறுமன்னன் ஒருவனுக்கு துணைவியாகி நீங்கள் செல்வதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை அக்கா. நீங்கள் அஸ்தினபுரியை ஆளவேண்டும். நான் வாளுடன் உங்கள் அருகே நிற்கிறேன். பாரதவர்ஷத்தை வென்று உங்கள் பாதங்களில் போடுகிறேன். அருள்புரியவேண்டும்" என்றான்.

"நான் உன் கனவுகளை எப்போதும் பகிர்ந்துவந்திருக்கிறேன் தம்பி" என்றாள் காந்தாரி. சகுனி கைகூப்பினான். விருஷகன் பரபரப்புடன் "அப்படியென்றால் நாம் பீஷ்மரிடம் தெரிவித்துவிடலாமல்லவா? அஸ்தினபுரியுடன் நாம் மண உறவு கொள்கிறோம் என்று அரசமுறையாக அறிவிக்கவேண்டுமல்லவா?" என்றான். "உன் விருப்பம் நிறைவேறுக தம்பி" என்றாள் காந்தாரி.

சுபலர் "மகளே, அஸ்தினபுரியின் இளவரசன் விழியிழந்தவன் என்பது..." என்று தொடங்கவும் காந்தாரி இடைமறித்து "அனைத்து ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான் தந்தையே" என்றாள். அசலன் "தம்பி, அறிவிப்பை வெளியிடலாமா? விருஷகனே நேரில் சென்று பீஷ்மரிடம் சொல்லட்டும். அறிவிப்புடன் சத்யவிரதரை தொடர்ந்து அனுப்புவோம்" என்றார். "ஆம்... அதுவே முறை" என்றான் சகுனி.

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 7 ]

மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செம்பருந்தின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள் இரு சிறகுமுளைக்காத குஞ்சுகள் அன்னை கொண்டுவரும் உணவுக்காக ஏங்கி கூண்டிலிருந்து எம்பி எம்பி மெல்லிய ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. கீழே மலைமடம்பு ஒன்றுக்குள் கண்மூடி இளங்காற்றேற்றுப் படுத்திருந்த விருஹத்ரதன் அந்த மெல்லிய ஒலியைக்கேட்டு தன் வழிகாட்டியான வேடனிடம் "அது என்ன ஒலி?" என்று கேட்டான்.

வேடன் செவிகூர்ந்தபின் "அது செம்பருந்துக்குஞ்சுகளின் ஒலி. அவை தாயை எதிர்பார்த்திருக்கின்றன. ஆனால் இயல்பாக அவை ஒலியே எழுப்புவதில்லை. செம்பருந்து சக்ரவர்த்திகளைப்போல அமைதியானது. அந்தத் தாய்ப்பறவை அனேகமாக எங்கோ இறந்திருக்கும். பசியில்தான் இவை ஒலியெழுப்புகின்றன" என்றான். அந்தக்குஞ்சுகளை உடனே பார்க்கவேண்டுமென விருஹத்ரதன் ஆசைகொண்டான். "அரசே, செம்பருந்து எப்போதும் அணுகமுடியாத பாறைநுனியிலேயே கூடுகட்டும். அங்கே செல்வது மனிதனால் முடியாதது" என்று வேடன் சொன்னான்.

முடிவெடுத்தபின் பின்வாங்காதவனாகிய விருஹத்ரதன் வேடனைத் தூண்டி பாறைவிளிம்புக்குச் செல்லவைத்து செம்பருந்தின் கூட்டை கண்டுபிடித்தான். கீழே ஒரு காதம் ஆழத்தில் பச்சைவிரிப்பு போல காடு தெரிய மேகங்கள் உரசியதனால் கருமையில் ஈரம் வழிய நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின் விளிம்புத் துருத்தலில் அந்தக்கூடு இருந்தது. "அரசே, அக்குஞ்சுகளுக்கு எதிரிகள் இல்லை. அவற்றின் அன்னை வராததனால் அவை பசித்து இறக்குமே ஒழிய அவற்றை எவ்வுயிரும் தீண்ட முடியாது" என்றான் வேடன்.

விருஹத்ரதன் பட்டுநூல் முறுக்கிச் செய்த கயிற்றை மேலே நின்றிருந்த பாறை நுனியில் கட்டிவிட்டு அதைப்பற்றியபடி அந்த வழுக்கும் ஈரம் வழியாக இறங்கினான். இருமுறை அவன் கால்கள் வழுக்கினாலும் அவன் கீழே விரிந்த பாதாளத்தைப்பார்க்காமல் அந்தக்கூட்டையே நோக்கியபடிச் சென்றதனால் அவனால் அங்கே சென்று சேரமுடிந்தது. அந்தக்கூட்டுக்குள் இருந்த  ஒரு குஞ்சு இறந்திருந்தது. மற்ற இரு குஞ்சுகளும் இறக்கும் நிலையில் இருந்தன.

விருஹத்ரதன் அக்குஞ்சுகளை தன் ஆடையில் கட்டிக்கொண்டு மேலேறினான். அவற்றுக்கு பாறையில் ஒட்டியிருந்த புழுக்களைப் பிடித்து கசக்கி ஊட்டியபோது அவை பசியடங்கி அவன் உடலின் வெம்மைக்குள் ஒண்டிக்கொண்டன. அவன் அக்குஞ்சுகளை தன்னுடன் தன் தலைநகரமான ராஜகிருகத்தின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். சுபட்சன், சுகோணன் என்னும் அந்த இரு செம்பருந்துகளும் அரண்மனை மருத்துவர்களாலும் சேவகர்களாலும் பேணப்பட்டு அரசகுமாரர்களைப்போல வளர்ந்தன. அவற்றுக்கு காட்டுக்குள் வேட்டையாடவும், நெடுந்தூரத் தூதுசெல்லவும் அரண்மனையிலும் கோட்டைவளாகத்திலும் பறந்து வேவுபார்க்கவும் பயிற்றுவிக்கப்பட்டது. அவை குதிரையிலும் ரதங்களிலும் அமர்ந்து பயணம்செய்யவும் கற்றிருந்தன.

விருஹத்ரதன் வேட்டைக்குச் செல்லும்போது தோளிலும் முழங்கையிலும் அணிந்த தோலுறைக்கு மேல் அவற்றில் ஒன்று அமர்ந்திருக்கும். இன்னொன்று தளபதி ஒருவனின் தோளில் இருக்கும். காட்டை அடைந்ததும் அவற்றுக்கு மன்னன் ஆணையிடுவான். அவை காட்டுக்குமேல் பறந்து வேவுபார்த்துத் திரும்பி வந்து வேட்டைமிருகங்கள் இருக்குமிடத்தை கூவியறிவிக்கும். அவற்றுக்குக் கீழே மன்னனின் வேட்டைக்குழு குதிரைகளில் பாய்ந்துசென்று வேட்டையாடும். சுபட்சனும் சுகோணனும் போர்களில் மன்னனை பாதுகாத்தன. நெடும்பயணங்களில் அவனை வழிநடத்தின.

இருபறவைகளையும் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பெருநகரங்களுக்கும் ஒற்றர்கள் வழியாக அனுப்பி அங்கே சென்று மீள்வதற்கான பயிற்சியை மகதத்தின் பறவைநிபுணர்கள் அளித்திருந்தனர். அவற்றின் அலகுகளின் நுனியிலும் காலின் பின்விரலிலும் கூரிய இரும்புமுனைகள் மாட்டப்பட்டிருந்தமையால் வானில் அவற்றைத் தடுக்கும் பறவைகள் எவையும் இருக்கவில்லை. இணையற்ற வல்லமை அளிக்கும் நிமிர்வே பிற பறவைகளை அவற்றை அஞ்சி ஓடச்செய்தது. எப்போதேனும் அறியாது எதிர்க்கவந்த கழுகுகளோ வல்லூறுகளோ அக்கணமே உடல்கிழிபட்டு வானில் சுழன்றிறங்க அவற்றை வானிலேயே சுழன்றுவந்து கால்களால் கவ்விப்பிடித்துக் கொண்டு சென்று மரக்கிளை உச்சியில் அமர்ந்து கிழித்துண்டன சுபட்சனும் சுகோணனும்.

சுகோணனின் முதல் பெரும்பயணம் அஸ்தினபுரியில் இருந்து ராஜகிருகத்துக்கு ஒற்றன் காளன் அனுப்பியசெய்தியுடன் பறந்ததுதான். பன்னிருநாட்களாக அஸ்தினபுரியின் வடபகுதியில் இருந்த புராணகங்கை காட்டில் வேட்டையாடியபின் இரவில் அரண்மனையை ஒட்டிய மரக்கிளையில் சேக்கேறியது சுகோணன். ஒவ்வொருநாளும் அது அங்கிருப்பதை காளன் உறுதிசெய்துகொண்டான். பீஷ்மரும் சத்தியவதியும் உரையாடியதை காளன் கண்டான். மறுநாள் மாலைக்குள் அவ்வுரையாடலின் சாரம் அரண்மனையின் சூதப்பணியாளர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பரவியது. பீஷ்மர் வியாசரைக்காணச் சென்றிருக்கிறார் என்ற தகவலை அறிந்ததும் காளன் அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்துக்காத்திருந்தான். பீஷ்மர் வந்ததுமே ரதங்களைப்பூட்ட ஆணையிட்டதும் அவர் சுயம்வரத்துக்காக காசிக்குச் செல்லவிருக்கிறார் என்ற ஒற்றுசெய்தியை அவன் மந்தண எழுத்தில் எழுதிக்கொண்டான்.

மந்தணச்செய்தி எழுதப்பட்ட தோல்சுருள் உடலின் தூவிகளுக்குள் சுற்றிக்கட்டப்பட்டு வழியனுப்பப்பட்ட சுகோணன் நள்ளிரவில் சிறகுவிரித்துக் கிளம்பியது. அதிகாலையில் அது கீழே கங்கையின் படித்துறை ஒன்றில் புதுக்குருதியை அறிந்துகொண்டது. ஏழுமுறை வானில் சிறகுவிரித்து வட்டமிட்டபின் மெல்ல காற்றின் படிக்கட்டுகளில் வழுக்கி இறங்கி அருகே இருந்த பாறை விளிம்பில் அமர்ந்து கவனித்தது. வெண்பசு ஒன்று முக்காலும் உண்ணப்பட்ட நிலையில் படித்துறையில் கிடப்பதைக் கண்டது. பசுவின் தோல்சிதர்களும் தசைத்துணுக்குகளும் அங்கே பரவிக்கிடந்தன. அதன் உண்ணப்படாத தலையின் கொம்புகளும் சரிந்திருக்க வாய் திறந்து மஞ்சள்படிந்த சப்பைப் பற்கள் தெரிந்தன. நீலம்பரவிய நாக்கு ஒருபக்கமாகச் சரிந்து வெளியே கிடந்தது. அதன் கண்கள் விழித்திருந்தாலும் உயிரற்றிருந்தன.

அந்தப்பகுதியைச் சுற்றி பாறை மேலும் மரங்களிலும் முடியற்ற கழுத்துகளை உடலுக்குள் இழுத்துக்கொண்டு பாம்பு போன்ற தலையுடன் கழுகுகள் அமர்ந்திருப்பதையும் புதர்களுக்குள் கழுதைப்புலிகள் பொறுமையில்லாமல் நாக்கை நீட்டியபடி எழுந்தும் அமர்ந்தும் கால்களால் மண்ணைப்பிராண்டியும் காத்திருப்பதையும் கண்டது. அதன்பிறகுதான் பாறைகளுக்கு நடுவே பசுவை நோக்கியபடி செம்பிடரித்தலை காற்றில் பறக்க பெரிய கிழச்சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டது.

சிங்கம் கால்களை நீட்டி அதன்மேல் தலையை வைத்து அடிக்கடி காதுகளை அசைத்து மொய்க்கும் பூச்சிகளை விரட்டியபடி படுத்திருந்தது. மெல்ல அதன் கண்ணிமைகள் கீழிறங்கி தலை படியத்தொடங்குகையில் விழித்துக்கொண்டு மெல்ல உறுமியபடி தலையைக் குடைந்தது. நாக்கால் தன் கால்களையும் பாதங்களையும் நக்கிக்கொண்டது. அப்படியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி முதுகை மண்ணில் புரட்டிக்கொண்டது. மீண்டும் எழுந்து முன்னங்கால்களை நீட்டி முதுகை நிலம்நோக்கி வளைத்து நிமிர்ந்தபின் வாயை அகலத்திறந்து கொட்டாவி விட்டது. ஆர்வமில்லாமல் எழுந்து வந்து பசுவைச் சுற்றியபின் ஆங்காங்கே முகர்ந்தும் மெல்லக்கடித்தும் சுவைத்தபின் மீண்டும் சென்று படுத்துக்கொண்டது.

சுகோணன் அதைப்பார்த்துக்கொண்டு காத்திருந்தது. சிங்கம் அவ்வுணவை இழக்க விரும்பவில்லை என்பதை அது புரிந்துகொண்டது. ஆனால் அது துயிலாமலிருக்கவும் முடியாது. தொடர்ச்சியாக அது அப்பசுவைத் தின்றுகொண்டிருந்தது என்பது சிங்கத்தின் நடையின் தொய்விலிருந்தே தெரிந்தது. சுகோணன் சிங்கம் மீண்டும் சென்று இன்னொரு இடத்தில் படுத்துக்கொண்டு கால்களை நீட்டுவதையும் மீண்டும் கொட்டாவி விடுவதையும் கண்டது. மெல்ல அதன் தலை தரையில் படிந்து வயிறு சீராக ஏறியிறங்கத் தொடங்குவதைக் கண்டபின் சிறகுகளை விரித்து ஓசையில்லாமல் காற்றில் இழிந்து மண்ணில் இறங்கி நகங்கள் விரிந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்தும் சிறகை விரித்து எம்பியும் பசுவின் அருகே வந்தது.

சுகோணன் பசுவின் குடலைக்கடித்து இழுத்து வெட்டிக்கொண்டிருந்தபோது கழுதைப்புலிகள் எக்காள ஒலியெழுப்பி குதித்தன. ஒரு கழுகு பெரிய சிறகுகள் படபடக்க அருகே வந்தமர்ந்தது. இன்னொருகழுகு அதனருகே வந்தமர அக்கழுகு சீறி அதை விரட்டியது. அவ்வொலிகேட்டு சிங்கம் விழித்துக்கொண்டு கர்ஜனை செய்தது. அதன் பெரிய வாய்க்குள் குருதிபடிந்த பற்கள் வெளுத்துத் தெரிந்தன. சிங்கம் பிடரியை சிலுப்பிக்கொண்டு எழுந்து பாய்ந்து வருவதற்குள் கழுகுகள் வானில் எம்பிவிட்டன. கழுதைப்புலிகள் புதர்களுக்குள் மறைந்தன.

சுகோணன் பெரிய துண்டாக வெட்டி எடுத்த குடல்ஊனுடன் எழுவதற்குள் சிங்கம் அருகே வந்துவிட்டது. அது கைநீட்டி அறைந்ததை சிறகடித்து விலகித் தவிர்த்த சுகோணனின் வாயிலிருந்து ஊன்துண்டு கீழே விழுந்தது. கடும் சினத்துடன் சிறகடித்தபடி முன்னால் பாய்ந்த சுகோணன் சிங்கத்தின் வலப்பக்கத்து விழியை தன் இரும்புமுனையுள்ள அலகால் கொத்தியது. கண்ணுக்குள் சென்ற அலகை அது இழுத்தெடுத்தபோது தசை அறுபட சிங்கம் வலியுடன் உறுமியபடி காலை ஓங்கி மண்ணில் அறைந்துகொண்டு சுழன்றது. சுகோணன் அந்த ஊன்துண்டைக் கவ்வி எடுத்துக்கொண்டு சிறகடித்து வானிலேறிக்கொண்டது.

சுகோணன் வந்துசேர்ந்த மறுநாள் சுபட்சன் அஸ்தினபுரிக்குச் சென்றது. பீஷ்மர் இரண்டு இளவரசிகளுடன் வந்த செய்தியை மகதத்துக்குக் கொண்டு மீண்டது. அம்பை நகர்நீங்கிய செய்தியை மீண்டும் சுகோணன் கொண்டுசென்றது. அதன்பின் அவை இரண்டும் நூற்றுக்கணக்கான முறை அஸ்தினபுரிக்கும் ராஜகிருகத்துக்கும் பறந்தன. பீஷ்மர் காந்தாரத்துக்குச் செல்லவிருக்கும் செய்தியுடன் சென்ற சுகோணன் ராஜகிருகத்தின் அரண்மனை முகடில் சென்று இறங்கிய அன்றுதான் அங்கே காந்தாரத்தின் அமைச்சரான சுகதர் ராஜகிருகத்தில் இருந்து தூது மறுக்கப்பட்டு மனச்சோர்வுடன் கிளம்பிச்சென்றார்.

சுகதர் வந்ததும் மீண்டதும் மகத இளவரசனான பிருகத்ரதனுக்குத் தெரியாது. அவன் அப்போது கங்கை வழியாக படகில் வங்கம் சென்று கடலை அடைந்து கடல்வழியாக கலிங்கம் செல்வதற்காக கலம் காத்து இருந்தான். கலிங்கத்தின் பாலூர் துறைமுகத்தில் இருந்து கடல்வழியாக வேசரத்துக்கும் சோழநாட்டுக்கும் சென்று மீளவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். மகதத்தில் இருந்து அவன் கிளம்பியநாள்முதல் ஒவ்வொரு நதியும் கலங்களும் துறைகளும் பெரிதானபடியே வருவதைத்தான் கண்டான். கங்கையின் நடுவே செல்லும் நூறு பாய்கொண்ட மரக்கலங்கள் அவன் அரண்மனை வளாகத்தைவிடப் பெரிதாக இருந்தன. கங்கையின் இருகரைகளும் முழுமையாகவே மறைய முற்றிலும் நீராலான பரப்பில் அவன் கலம் சென்றுகொண்டிருந்தது.

கங்கை சென்று சேர்ந்த கடல்முனையில் இருந்த தாம்ரலிப்தி துறைமுகம் ராஜகிருகத்தைவிட இருமடங்கு பெரியது. நூறு மரக்கலங்கள் ஒரேசமயம் கரைதொடும்படி அமைக்கப்பட்டிருந்த தாம்ரலிப்தியின் துறைகளில் வயலோரமரத்தை அணுகும் கொக்குக்கூட்டம் போல யவன வேசர பீதர்நாட்டு நாவாய்கள் பாய்மடக்கி அணைந்திருந்தன. துறைமுகத்தருகே பெரிய கடலைநோக்கி சிறிய கடல் வந்து சேர்வதுபோலத் தெரிந்த கங்கைக் கழிமுகத்தில் ஆற்றுக்குள் தடிகளை நாட்டி எழுப்பப்பட்டிருந்த மரக்கட்டடங்களில் ஒன்றில் அவன் வணிகனின் வேடத்தில் தங்கியிருந்தான். அவனுடன் அவனுடைய துணைவனான கஜன் வேலையாள் வேடத்தில் இருந்தான். அவர்கள் வந்த கலம் பொருட்களை இறக்கியபின் பாலூர்துறைக்கான பொருட்களை ஏற்றும்பொருட்டு துறைமுகத்தில் காத்து நின்றிருந்தது.

தாம்ரலிப்திக்கு வந்துசேர்ந்த அன்றே பிருகத்ரதன் அனுப்பிய வெண்புறாவான ஷீரை ராஜகிருகத்தில் இருந்து அவனது பிரியத்துக்குரிய அமைச்சர் பௌரவனின் செய்தியுடன் திரும்பி வந்தது. அதில் சுகதரின் தூது பற்றி சொல்லப்பட்டிருந்ததை வாசித்ததும் பிருகத்ரதன் திகைப்புடன் தன் துணைவனிடம் அந்த ஓலையைக் கொடுத்தான். நான்குநாட்கள் முன்னர் படகில் வரும்போதுதான் அவர்கள் காந்தாரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கஜன் "இளவரசே, இங்குள்ள எந்த ஷத்ரியகுலத்துடன் நாம் மண உறவுகொண்டாலும் நாம் அஸ்தினபுரியிடமிருந்து காக்கப்படப் போவதில்லை. அதற்கு வல்லமை உடைய ஒரே அரசு காந்தாரம்தான்" என்றான்.

இருபக்கங்களிலும் அலையடித்த நீர்வெளியைப் பார்த்துக்கொண்டு படகின் முனம்பில் நின்றிருந்த பிருகத்ரதன் சொல் என்பதுபோல தலையசைத்தான். "நாம் உண்மையில் ஒரு மிகச்சிறிய அரசு அரசே. கங்கைக்கரை ஷத்ரியர்கள் உலகம் செல்லும் திசையை அறியாமல் வயதுவந்தபின்னும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளைப் போலிருக்கிறார்கள். வங்கமும் கலிங்கமும் கடல்வணிகத்தால் செழிக்கின்றன. அவர்களின் கருவூலங்கள் மழைக்கால ஏரிகள் போல வீங்கிக்கொண்டிருக்கின்றன. நாம் வேடர்களிடமும் ஆயர்களிடமும் வரி கொண்டும் படகுகளில் சுங்கக்கொடி கட்டியும் நாணயங்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். தங்களை இந்தப்பயணத்துக்கு நான் அழைத்துச்செல்வதே தாங்கள் இன்றைய சூழலை உணரவேண்டுமென்பதற்காகத்தான்" என்றான்.

"அதை இந்த நாவாயைப் பார்த்ததுமே உணர்ந்துகொண்டேன். நம் துறையில் அணையும் நூறு படகுகள் இந்த ஒரு கலத்துக்கு நிகர்" என்றான் பிருகத்ரதன். "ஆம் அரசே, இனி நாவாய்களே மன்னனின் வல்லமையை வகுக்கப்போகின்றன. நதிகளும் வயல்களும் அல்ல, கடலே இனி பொன்விளையும் வெளி" பிருகத்ரதனின் விழிகளை நோக்கி கஜன் சொன்னான். "நமக்குத்தேவை பெருநாவாய்கள். அவற்றை நாமே கட்டவேண்டும், அல்லது விலைகொடுத்துப் பெறவேண்டும். மகதத்திடம் விற்கும்பொருட்கள் குவிந்துள்ளன. நாவாய்களை நாம் அடைந்தால் மிகவிரைவில் நமது கருவூலத்தை நோக்கியும் செல்வத்தின் மடைகள் திறக்கும்."

"ஆனால் இத்தகைய பெருநாவாய்களை நாம் எப்படி வாங்கமுடியும்?" என்று பிருகத்ரதன் வினவினான். "அதற்கான செல்வத்தை நாம் கண்டடையவேண்டும். அதற்கு நாம் வல்லமை கொள்ளவேண்டும். அத்தகைய வல்லமையை நாம் பெறுவதற்குரிய வழிகள் இரண்டே. ஒன்று நாம் காந்தாரத்துடன் மணஉறவில் இறங்கவேண்டும். காந்தாரம் வடக்கே உத்தரபதத்தை முழுக்க ஆட்சி செய்கிறது. அந்த வணிகப்பாதை பொன்வெள்ளம் பெருகும் ஆறுபோன்றது. காந்தாரத்திடமிருக்கும் செல்வத்தில் ஒருபகுதி போதும் நாம் நூறுநாவாய்களை வாங்கி இந்த கங்கையை நிறைக்க முடியும்."

திகைத்து நின்றிருந்த பிருகத்ரதனை நோக்கி கஜன் சொன்னான் "காந்தார இளவரசிக்கு அவர்கள் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வசுமதி என்ற பேருள்ள அவள் அழகி என்றனர் சூதர். நாம் கவனம்கொள்ளவேண்டியவன் அவள் தம்பி சகுனி. மூன்று இளவரசர்கள் இருந்தும் அவனையே சௌபாலன் என்கின்றனர் மக்கள். அவன் இளையவன் ஆதலால் காந்தார முடியுரிமை அற்றவன். ஆனால் மண்ணாளும் கனவுகொண்ட ஷத்ரியன் அவன். புதுநிலங்களை நோக்கி அவன் கனவு விரியும். அவனுடைய கண்கள் கங்கைக்கரைமேல் படிந்துவிட்டன என்கிறார்கள். அவனைவிட சிறந்த அரசத்துணைவன் உங்களுக்கு அமையப்போவதில்லை."

பிருகத்ரதன் அந்த எண்ணத்தையே நெஞ்சில் மீட்டிக்கொண்டிருந்தான். ஏழ்நிலை மாடங்கள் செறிந்த தாம்ரலிப்தியின் நதிக்கரை அவனைநோக்கி லட்சம் நாவாய்களை உள்ளடக்கிய நாவாய் போல எழுந்து நெருங்கி வரக்கண்டதும் சொல்லிழந்து படகின் கயிற்றைப்பற்றியபடி விழிவிரிந்து நின்றான். தன் நாவாய் அந்தப்பெருந்துறையில் ஒரு வேப்பிலைச்சருகு போல மிதந்து நெருங்கியபோது அவன் சிறுமையுடன் திரும்பி கஜனிடம் "இதென்ன மயன் பணித்த துறைநகரா?" என்றான்.

"அரசே, காந்தார மரச்சிற்பிகளைத்தான் நாம் பாரதவர்ஷம் முழுக்கவே கொண்டுசென்று அரண்மனைகளை கட்டிக்கொண்டிருக்கிறோம்" என்றான் கஜன். பெருமரம் விழுந்து அலையெழுந்த சிறுகுளம்போல அதிர்ந்த மனத்துடன் பிருகத்ரதன் கஜனின் தோளைப்பற்றிக்கொண்டான். "தோழனே, நான் இந்நகரை வெல்ல வேண்டும். இந்நகரம் எனக்கு வேண்டும். இந்நகரின் அத்தனை மாளிகை முகடுகளிலும் மகதத்தின் கொடி பறக்கவேண்டும்" என்றான். "அரசே, அது முடியாதது அல்ல. கலிங்கத்தையே மகதம் வெல்லும் நாள் வரும்" என்றான் கஜன்.

கஜன் ஷீரை கொண்டு வந்த செய்தியை வாசித்தபின் "இதில் வியப்படைய ஏதுமில்லை அரசே" என்றான். "ஒரு ஷத்ரியமனம் இப்படித்தான் செயல்படும். தங்கள் தந்தை மட்டுமல்ல, ஆரியவர்த்தத்தின் ஷத்ரியர் அனைவருமே இந்த வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்." பிருகத்ரதன் "குதிரைச்சவுக்கை அனுப்பும் எண்ணம் என் தந்தையின் நெஞ்சில் பிறந்தது அல்ல. அது தேவபாலரின் செய்கை" என்றான். "யார் செய்ததாக இருந்தாலும் மிகப்பெரிய தீங்கு நிகழ்ந்துவிட்டது. பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே ஆற்றலும் கனவும் மிக்க அரசகுமரன் ஒருவனை நாம் அவமதித்துவிட்டோம். அவன் அதை அறைகூவலாக மட்டுமே எடுத்துக்கொள்வான்."

பிருகத்ரதன் "என் தந்தை இதற்குள் இச்செய்தியை சூதர்களைக்கொண்டு அனைத்து ஷத்ரியர்களிடமும் கொண்டு சேர்த்திருப்பார். ஒரு கோட்டையைக் கைப்பற்றிய மகிழ்வுடன் அந்தப்புரத்தில் அமர்ந்து யவனமதுவை அருந்திக்கொண்டிருப்பார். சூதர்கள் சூழ்ந்து அவர் வரலாற்றை உருவாக்கிவிட்டார் என்று பாடுவார்கள்." கஜன் சிரித்து "என்ன ஐயம்? ஷத்ரியர்கள் அனைவரும் ஒன்றே. சென்ற ஈராயிரமாண்டுகாலமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது ஷத்ரியர் என்ற சொல்லை மட்டுமே. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு தலைமுறைகள் வழியாக அடைந்த செல்வமென்பது ஷத்ரியர் என்னும் அடையாளம்தான். அதைத்தான் எண்ணி எண்ணி மகிழ்வார்கள். அதன்பொருட்டே போர்புரிந்து மடிவார்கள்" என்றான்.

பிருகத்ரதன் பெருமூச்சுடன் "இனி ஒன்றும் செய்வதற்கில்லை" என்றான். "இளவரசே, எப்போதும் வழி ஒன்று எஞ்சியிருக்கும்" என்றான் கஜன். "நம்முடைய ஒற்றன் பாகுலன் காந்தார நகரியில் இருக்கிறான். அங்கிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுகோணன் செய்திகொண்டு வருகிறது. அது தற்போது ராஜகிருகத்தில் உள்ளது. உடனே நாம் ராஜகிருகம் செல்வோம். காந்தாரநாட்டு இளவரசர் சகுனிக்கு தங்கள் அரசமுத்திரையுடன் தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்புவோம். அச்செய்தி சகுனியின் கையில் கிடைக்குமென்றால் நாம் அவரை வென்றெடுக்கமுடியும்."

"சவுக்கைக் கண்டபின்னரும் நம்மை சகுனி ஏற்பானா?" என்றான் பிருகத்ரதன். கஜன் "சகுனி நெடுநாட்கள் திட்டமிடாமல் நம்மை நோக்கி இந்தத் தூதை அனுப்பியிருக்கமாட்டார். அவர் உங்களையும் மகதத்தையும் நன்கறிந்திருப்பார். உங்கள் தந்தை செய்த  சிறுமையால் அவரது அந்தப் பெரும் திட்டம் சிதறுவதை அவர் விரும்ப மாட்டார். நானறிந்தவரை இங்குள்ள ஷத்ரியர்களைப்போல அரசியலுக்குமேல் அகந்தையை ஏற்றி வைத்திருப்பவரல்ல அவர்" என்றான். "சுகதர் கிளம்பிச்சென்று நான்கு நாட்களாகின்றன. நாம் சென்றுசேர மேலும் எட்டுநாட்களாகும். சுகதர் கொண்டுசெல்லும் சவுக்கைக் கண்டு சகுனி அடுத்தமுடிவுகளை எடுப்பதற்குள் நம் தூது அவர் கையில் கிடைத்தாகவேண்டும்."

"ஆனால் நாம் இன்னும்கூட நம் அரசரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்" என்று பிருகத்ரதன் சொன்னான். "ஆனால் அவரும் நாமும் ஷத்ரியர்களின் முறைமைக்கு அடங்கியவர்கள். நாம் ராஜகிருகத்தில் இருந்து உடனே காந்தாரம் நோக்கிச் செல்வோம். நாம் செல்வதற்குள் அங்கே காந்தாரிக்கு சகுனி ஒரு சுயம்வரம் ஒருங்குசெய்யவேண்டும். நாம் சென்று அந்த சுயம்வரத்தில் பங்கெடுத்து அரசியை மணப்போம். அவளை நாம் மகதத்துக்குக் கூட்டிவருவதை அரசரோ ஷத்ரியகுலமோ தடுக்கமுடியாது."

கலத்தை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு சிறியபடகில் கஜனும் பிருகத்ரதனும் கங்கைக்கரை வழியாக ராஜகிருகத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த அன்றே சுகோணன் சகுனிக்கான செய்தியுடன் வானில் எழுந்தது. சுதுத்ரியின் கரையை பீஷ்மரும் பலபத்ரரும் படகில் கடந்துகொண்டிருந்தபோது சுகோணன் வானில் அவர்களைத் தாண்டிச்சென்றது. சிபிநாட்டுக்குச் சென்றபின் அதன் வேகம் மட்டுப்பட்டது. இரவில் அதனால் பறக்கமுடியாது. பகலில் வேகக்காற்றுகள் இல்லாமலிருக்கையில் மட்டும் அது பறந்தது. எட்டு நாட்களுக்குப்பின் பீஷ்மர் தங்கியிருந்த சோலைக்குமேல் அது இளைப்பாறியது. பின்னர் பீஷ்மர் சென்ற பீதர்களின் வணிகக்குழு அதைத் தாண்டிச்சென்றது.

மேலும் இருபது நாட்களுக்குப்பின் மெலிந்து எடையிழந்த சுகோணன் காந்தாரத்தை அடைந்தது. வானையும் மண்ணையும் இணைத்த அனல்வெளியில் தகிக்கும் சிறகுகளுடன் பறந்த அது கீழே தெரிந்த காலிகவனத்தின் பசுமையைக் கண்டு சிறகு தாழ்த்தி இறங்கியது. வானில் சுழன்றபடி கீழே நோக்கியபோது சோலைநடுவே இருந்த கலங்கிய சிறு ஊற்றைக் கண்டது. அதனருகே அசைந்த எலியொன்றை பாய்ந்து கவ்விக்கொண்டு சிறகடித்து எழுந்து சோலையிலேயே உயரமான ஸாமி மரத்தின் சிறுகிளையில் அமர்ந்து அந்த எலியை உண்டபின் கழுத்தை இறகுக்குள் தாழ்த்திக்கொண்டு இமைகளை மேலேற்றி துயிலத் தொடங்கியது.

துயிலின் நடுவே காற்றுக்கேற்ப இருமுறை மெல்ல அசைந்து சிறகுகளை மீண்டும் அடுக்கி அமர்ந்தபோது கீழே துயின்றுகொண்டிருப்பவனை சுகோணன் நோக்கியது. ஆனால் அவனை அது பொருட்படுத்தவில்லை. அவன் எழுந்த அசைவை கண்ணுக்குள் உணர்ந்து அது விழித்துக்கொண்டு சிறகுகளை நீவிச்சீராக்கியபின் கிளையை உந்தி வானிலெழுந்து வெண்சுடராக நிறைந்திருந்த காற்றில் சுழன்றேறத்தொடங்கியபோதுதான் அதன் விலாவை அம்பு தாக்கியது. அந்த விசையில் காற்றில் தள்ளப்பட்டாலும் சுகோணன் மேலும் சிறகடித்துப் பறக்க முயன்றது. வானில் வீசிய காற்றுடன் அந்தச்சிறகசைவு அதற்கு முற்றிலும் பழக்கமில்லாதபடி முரண்பட பக்கவாட்டில் சரிந்தபடியே சென்றது. அதன் ஒற்றைக்கண்ணுக்கு கீழே வெந்துவிரிந்த பாலைநிற மண்வெளி வேகமாக ஓடிச்சென்றது.

மண்குன்று ஒன்று அதைநோக்கி வந்தது. அதற்கப்பாலிருந்த மென் மணலில் விழுந்த சுகோணன் தன் நகங்கள் பதிய மணலை அள்ளி அள்ளி நடந்து சிறகடித்து மேலும் எழுந்தது. முழுவிசையாலும் சிறகுகளை வீசி காற்றில் எழமுயன்றது. ஒரு சிறகு மட்டுமே முழுமையாக அசைவதை உணர்ந்தாலும் அதன் வேகம் குறையவில்லை. வானில் சிறிது எழுந்தபின் அதன் தலையும் அலகும் முன்னால் சரிந்தன. அலகு புழுதியில் ஆழப்பதிய அது மீண்டும் விழுந்தது. சிலகணங்களுக்குப்பின் சிறகுகள் புழுதியில் அளைய எம்பி எம்பி மேலும் எழுந்து சற்று தள்ளி விழுந்தது. விழுந்து எழுந்து விழுந்தபடியே சென்று பின் கொதித்துக்கொண்டிருந்த மண்ணில் புதைந்து இருமுறை அதிர்ந்தது. அதன் விழிகள் மூடிக்கொண்டன. கடைசியாக ஒளியுடன் விரிந்துகிடந்த மேகமற்ற வானை அது நோக்கியது. அதன் அகத்தில் பச்சைவிரிந்து கிடக்கும் கங்கைக்கரை காடுகள் ஓசையில்லாமல் ஒழுகிச்சென்றன.

மறுநாள் பகல் முழுக்க சுகோணனின் உடல் அந்த பாலையிலேயே கிடந்தது. அதன் மேல் வானத்தில் சுபட்சன் பீஷ்மரின் தூது தோற்றுவிட்ட செய்தியுடன் பறந்து மகதம் நோக்கிச் சென்றது. அன்றிரவு விண்மீன்களின் வெளிச்சம் மட்டும் பரவிய பாலைநிலத்தில் மெல்லிய காற்றால் மண்பரவி மூடப்பட்டிருந்த சுகோணனின் உடலை நாசிகன் என்னும் ஓநாய் கண்டெடுத்தது. ஏழுநாட்களுக்கும் மேலாக உணவில்லாமல் சிதல்களையும் சிறிய வண்டுகளையும் நக்கி உண்டு பாலையில் அலைந்து கொண்டிருந்த நாசிகன் அந்த மாமிசத்தின் வாசனையை தொலைவிலேயே அறிந்துகொண்டது. அதன் தொங்கி ஆடிய நாக்கிலிருந்து எச்சில் வழிந்தது. முன்னங்கால்களால் மண்ணை மிதித்து எம்பி வயிறு ஒட்டியதனால் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட பின்னங்கால்களை சேர்த்து தூக்கி வைத்து நாசிகன் ஓடிவந்தது. வரும்போதே உள்ளம்தாளாமல் முனகல் ஒலியை எழுப்பியது.

உணவருகே வந்ததும் நாசிகன் திகைத்து சிலகணங்கள் நின்றது. அதைச்சூழ்ந்திருந்த இரவின் இருளுக்குள் காற்று ஓடும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நிலத்தில் மணல்கள் மெல்ல இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. நாசிகன் மூக்கை நன்றாகத் தாழ்த்தி இரையை கூர்ந்து நோக்கியது. இரை அசையவில்லை என்று உணர்ந்த பின் மெதுவாக அணுகி மூக்கை நீட்டியபடி உறுமியது. முன்னங்கால்களால் மணலை வேகமாக அள்ளி பின்னால் வீசியது. அதன்பின் மெதுவாக உடல்தாழ்த்தி மணலில் வயிற்றைப் படியவைத்து படுத்துக்கொண்டது. உணவை அடைந்த உத்வேகத்தில் அது பசியை முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.

பின்பு மெதுவாக மேலும் முன்னகர்ந்து சுகோணனின் உடலை அது மூக்கால் தொட்டது. உறுமியபடி வாலைச்சுழற்றி பாய்ந்து கவ்வி எடுத்துக்கொண்டு ஓடி சற்று தள்ளி நின்று திரும்பி நோக்கியபோது மணல்மேட்டின் உச்சியில் ஒருநாயும் இருவேட்டைக்காரர்களும் நிற்பதைக் கண்டது. மேலும் ஓடி ஓர் இடத்தில் இரையை போட்டபின் உறுமியது. நாய் அஞ்சி பின்னடைந்தது. வேட்டைக்காரர்கள் தன்னை தொடரவில்லை என்று உணர்ந்ததும் நாசிகன் அவர்கள் மேல் கண்களை நாட்டியபடி இரையை கீழே போட்டு அதன் இறகுகளைப் பிய்த்து வீசியது. உலர்ந்த மாமிசத்தை நீண்ட கோரைப்பற்களால் கிழித்து உறுமியபடி குதறி உண்ணத்தொடங்கியது.

அப்பால் மணல் மேட்டில் அமர்ந்திருந்த சகுனி ஓநாய் தன் இரையை உண்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நெடுநாட்கள் பசி இருந்தாலும் அதுகொண்டிருக்கும் எச்சரிக்கையை கவனித்தான். ஒவ்வொரு கவ்வலுக்குப் பின்னரும் அது நான்குபக்கமும் கவனித்தது. அவர்களை நோக்கி மின்னும் கண்களுடன் மெல்ல உறுமியது. உலர்ந்து தோல்போல ஆகிவிட்டிருந்த இறைச்சியை அது கவ்வி கிழித்து மெல்லும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் மணலில் அப்படியே அமர்ந்துகொண்டு வில்லை தன் மடியில் வைத்தபடி அதைக் கவனித்தான். சூனிகன் "அது ஒரு செம்பருந்து" என்றான். "வழிதவறி வந்து பாலையில் இறந்திருக்கிறது."

சகுனியின் மனம் நிறைவுடன் இருந்தது. பீஷ்மர் அஸ்தினபுரிக்குக் கிளம்பிச்சென்றதும் அவனும் கிளம்பி அந்த ஓநாயைத்தேடி வந்திருந்தான். சூனிகன் அவனை எதிர்கொண்டு ஓநாய் இரையைக் கண்டுபிடித்த இடத்துக்கு அழைத்துவந்திருதான். "எப்போதாவதுதான் செம்பருந்துகள் வழிதவறுகின்றன" என்றான் சூனிகன். சிரித்தபடி சகுனி "பாலை வானம் நோக்கித் திறந்திருக்கும் ஒரு வஞ்சக்குழி...யானைகள்கூட அதில் விழுந்துவிடும்" என்றான்.

ஓநாய் இரையைக் கவ்வி இன்னும் சற்று தள்ளி கொண்டுசென்று போட்டு உண்ணத் தொடங்கியது. அதன் வால் மண்ணில் கீரிப்பிள்ளைபோல புரண்டு விளையாடியது. காதுகள் சிறு நாகபடங்கள் போலத் திரும்பிக்கொண்டே இருந்தன. "அந்தப்பறவையை ஓர் அம்பு வீழ்த்தியிருக்கிறது" என்றான் சூனிகன். "அவ்விறகுகளுக்குள் அம்பு ஒன்று தொங்குகிறது. ஆம் அது அம்புதான், கால் அல்ல."

சகுனி வியப்புடன் எழுந்துவிட்டான். அதைக்கண்டு ஓநாயும் எழுந்தது. அவன் அமர்ந்ததும் அது எஞ்சிய உடலைத் தின்னத்தொடங்கியது. அவன் அது உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். நெருப்பு எரிவதைப் பார்ப்பதுபோலிருந்தது. பசிக்கு நிகராக பிரம்மத்தைக் காட்டும் வல்லமை இப்பூமியில் வேறேது என எண்ணிக்கொண்டான். பாலைநிலத்தில் வாழாதவர் எப்படி பசியை அறிந்திருக்கமுடியும்? பாலைநிலம் பருவடிவம் கொண்ட பசி. அதில் வாழ்பவர்கள் பசியாலானவர்கள். பசியே கண்கள். பசியே வாயும் நாசியும். பசியே கைகால்கள். பசியே உடல்.

நான் ஒரு பெரும்பசி என சகுனி நினைத்துக்கொண்டான். பசிவெறியுடன் உண்ட உணவுகளெல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வெண்ணமே கடும்பசியை எழுப்பியது. எழுந்துசென்று அந்த ஓநாயுடன் சேர்ந்து சீறிச்சண்டையிட்டு அதன் உணவை பிடுங்கிப் பங்கிட்டு உண்ணவேண்டுமென்று தோன்றியது.

கிழக்குவானில் ஒளிபரவியபோது ஓநாய் சுகோணனின் கால்களையும் நன்றாக மென்று தின்றுவிட்டிருந்தது. கூரிய நகங்களுடன் அதன் இருகால்களை மட்டும் அது நறுக்கி மண்ணில் துப்பியது. அப்பகுதியை நன்றாக முகர்ந்து எஞ்சிய துணுக்குகள் ஏதுமில்லையே என்று பார்த்தது. காற்றால் அள்ளப்பட்டு மணலில் பரவிக்கிடந்த இறகுகள் கூழாங்கற்களில் சிக்கி தூவிகுலைந்து அதிர்ந்தன. நீரோட்டத்தில் சென்று படிந்தவைபோல ஒரு பள்ளத்தில் குவிந்துகிடந்தன. ஓநாய் இறகுகளில் இருந்து எதையோ எடுத்துப் பார்ப்பதை சகுனி கண்டான்.

ஒருகணத்தில் தன் வில்லை எடுத்து சரமேற்றி எய்தான். அம்பு சென்று ஓநாயின் அருகே விழுந்தது. வாயில் அந்த தோல்சுருளைக் கவ்விய ஓநாய் அதை விரைந்து மென்று விழுங்கியது. அவன் அருகே வருவதற்குள் அதை உண்டு முடித்து நாவைச்சுழற்றி நக்கியபடி பின்கால்களில் அமர்ந்து வெண்பற்கள் தெரிய தீ எரியும் ஒலியில் சீறியது. சகுனி கையில் வில்லும் அம்புமாக அதை நோக்கிச் சென்றான். அது பின்னகர்ந்தபின் திரும்பி வாலைச்சுழற்றியபடி ஓடி மேடேறி அவனைப் பார்த்தது. அவன் ஓடிவிலகும் ஓநாயை நோக்கியபடி நின்றபோது ஆழ்கிணற்றுநீர் காற்றில் அசைவதுபோல தன் அகத்தில் ஒரு சஞ்சலத்தை அறிந்தான்.

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 1 ]

அமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர்.

ஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். அப்பாறைகளுக்குள் இயற்கையாக உருவானவையும் பின்னர் வீடுகளாகச் செப்பனிடப்பட்டவையுமான குகைகளில் நூற்றியிருபது குடும்பங்கள் வாழ்ந்தன. லாஷ்கரர்களின் தொன்மையான பூசகர்குலம் அங்கே வாழ்ந்தது. அதன் தலைமையில் இருந்த ஏழுகுலமூத்தாரும் காலையிலேயே எழுந்து தங்கள் மரபுமுறைப்படி செம்பருந்தின் இறகுபொருத்திய தலையணியும் ஓநாய்த்தோலால் ஆன மேலாடையும் அணிந்து கைகளில் அவர்களின் குலச்சின்னமான ஓநாய்முகம் பொறிக்கப்பட்ட தடிகளுடன் கல்பீடங்களில் அமர்ந்திருந்தனர். சூதர்கள் அவர்களைக் கண்டதும் தங்கள் கைத்தாளங்களையும் சங்குகளையும் முழக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் முறைப்படி இடக்கையைத் தூக்கி வாழ்த்தினர்.

அரசர் கொடுத்தனுப்பிய பரிசுகளை சூதர்கள் குலமூத்தார் முன் வைத்தனர். நெல், கோதுமை, கொள், தினை, கம்பு, கேழ்வரகு, துவரை, மொச்சை, இறுங்கு என்னும் ஒன்பதுவகை தானியங்களும் அத்தி, திராட்சை, ஈச்சை என்னும் மூன்றுவகை உலர்கனிகளும் பட்டு, சந்தனம், தந்தம் ஆகிய மூவகை அழகுப்பொருட்களும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் அடங்கிய பரிசுக்குவையை அவர்களுக்குப் படைத்து வணங்கி காந்தார இளவரசி வசுமதிக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் திருதராஷ்டிரனுக்கும் மணமுடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அறிவித்தனர்.

அச்செய்தியை அவர்கள் சொன்னதுமே ஏழு குலமூத்தாரும் தென்மேற்குமூலையை நோக்கினர். முதல்மூத்தார் அங்கே மிக உச்சியில் பறந்துகொண்டிருந்த செம்பருந்தைக் கண்டு முகம் மலர்ந்து ‘சக்ரவர்த்தியைப் பெறுவாள்’ என நற்குறி சொன்னார். சூதர்கள் முகம் மலர்ந்தனர். மாமங்கலநாளுக்கான சடங்குகளை குலமூத்தார் நடத்தியளிக்கவேண்டுமென்ற மன்னனின் கோரிக்கையை சூதர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். குலமூத்தார் எழுந்து பரிசுப்பொருட்களைத் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டபோது அக்குலப்பெண்டிர் குலவையிட்டனர்.

அன்றுமாலையே ஏழுகுலமூத்தாரும் கழுதைகளில் ஏறி காந்தாரபுரத்துக்குச் சென்றார்கள். அவர்களின் பெண்கள் கைகளில் சிறுவில்லும் அம்புகளும் தோளில் பையில் குடிநீரும் ஈசல்சேர்த்து வறுத்துப் பொடித்து உருட்டிய மாவுருண்டைகளுமாக பாலைநிலத்தின் எட்டுத்திசைநோக்கி பயணமானார்கள். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்தது. கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்களில் எவரும் தாலிப்பனை தரையில் நிற்பதைக் கண்டதில்லை. மங்கலத்தாலி சுருட்டுவதற்கு கொண்டுவரப்படும் தாலிப்பனையோலைகளை மட்டுமே கண்டிருந்தனர். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.

குலத்தின் மூத்தஅன்னை சூர்ணை தாலிப்பனையை எப்படித்தேடுவதென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாள். தாலிப்பனை பாலைவனத்தின் இயல்பான மரம் அல்ல. அதற்கு நீர் தேவை என்பதனால் நீரோடைகளின் அருகேதான் அது நிற்கும். ஆனால் நீர்நிலைகளின் விளிம்புகளில் அது நிற்பதுமில்லை. குன்றுகளில் ஏறி நின்று நோக்கினால் பாலைமண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டங்களை மேலே பசுமைக்கோடுகளாக பார்க்கமுடியும். அந்தக்கோடுகள் இலைப்பனைகளும் புதர்ப்பனைகளும் ஈச்சைகளும் கொண்டவை. அவற்றில் இருந்து மிக விலகி தனியாக தன்னைச்சுற்றி ஒரு வெட்டவெளி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நிற்பது தாலிப்பனையாக இருக்கும்.

லாஷ்கரப்பெண்கள் இருபத்திரண்டு வழிகளில் பதினெட்டு நாட்கள் பாலைநிலத்தில் தாலிப்பனையைத் தேடிச்சென்றார்கள். அதிகாலை முதல் வெயில் எரியும் பின்காலை வரையும் வெயில்தாழும் முன்மாலை முதல் செவ்வந்தி வரையும் அவர்கள் தேடினர். செல்லும்வழியில் வேட்டையாடி உண்டும் தோல்குடுவையில் ஊற்றுநீர் நிறைத்தும் பயணத்தை விரிவாக்கிக் கொண்டனர். சோலைகளின் மரங்களின் மேல் இரவும் மதியமும் உறங்கினர்.

ஏழாம்நாள் கிரணை என்ற பெண் முதல் தாலிப்பனையைக் கண்டடைந்தாள். பெருந்தவத்தில் விரிசடையையே ஆடையாகக் கொண்டு நிற்கும் மூதன்னை போல அது நின்றிருந்தது. அதன் தவத்தை அஞ்சியவைபோல அத்தனை மரங்களும் விலகி நின்றிருக்க அதைச்சுற்றிய வெறும்நில வட்டத்தில் சிறிய புதர்கள்கூட முளைத்திருக்கவில்லை. காற்று கடந்துசென்றபோது அது குட்டிபோட்டு குகைக்குள் படுத்திருக்கும் தாய்ப்பன்றி போல உறுமியது.

மேலும் எட்டு தாலிப்பனைகளை அவர்கள் கண்டடைந்தனர். எவையுமே பூத்திருக்கவில்லை. அன்றிரவு அவர்களின் ஊரிலிருந்து எழுந்த எரியம்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவியது. திரும்புவதா வேண்டாமா என்று அவர்கள் தலைவியிடம் விசாரித்தனர். அன்னையர் ஊரில்கூடி சூர்ணையிடம் பெண்களைத் திரும்பிவரும்படிச் சொல்லலாமா என்று கேட்டனர். 'பெண்களே, காந்தாரிக்கு மணம்முடியுமென ஆறு பாலையன்னைகளும் விதித்திருந்தால் எங்கோ அவளுக்கான தாலிப்பனை பூத்திருக்கும். பூக்கவேயில்லை என்றால் அவள் மணமுடிப்பதை அன்னையர் விரும்பவில்லை என்றுதான் பொருள்’

மேலும் தேடும்படி எரியம்பு ஆணையிட்டது. பெண்கள் விரியும் வலையென இருபத்திரண்டு கோணங்களில் மேலும் பரவிச்சென்றனர். பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.

அவகாரை அதை நோக்கியபடி எந்த எண்ணமும் அற்ற சித்தத்துடன் நின்றிருந்தாள். நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது. அவள் நிலையழிந்தவளாக அதைச்சுற்றிச் சுற்றி நடந்தாள். ஆனால் அதை நெருங்க அவளால் முடியவில்லை. பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவளுடைய சரடுகள் அறுபட மண்ணில் விழுந்து விசும்பி அழத்தொடங்கினாள்.

இரவில் அவள் எய்த எரியம்பைக் கண்டு மறுநாள் காலையில் அங்கே இருபக்கங்களில் இருந்த பெண்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த மரத்தில் ஏறி கிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊரை அடைந்தபோது மற்றபெண்களும் திரும்பிவிட்டிருந்தனர். அவர்களை அன்னையர் ஊர்முகப்பில் குருதிசுழற்றி வரவேற்று உள்ளே கொண்டுசென்றனர். மூதன்னை சூர்ணையின் முன் அந்த ஓலையையும் மலரையும் வைத்தபோது சுருக்கங்கள் அடர்ந்த முகம் காற்றுபட்ட சிலந்தி வலைபோல விரிய புன்னகைசெய்து தன் வற்றிப்பழுத்த கரங்களை அவற்றின்மீது வைத்து அருளுரைத்தாள்.

ஓலையும் மலரும் லாஷ்கரப் பெண்களால் காந்தாரபுரிக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. முன்னால் ஏழுபெண்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடிச் சென்றனர். பின்னால் ஏழுபெண்கள் தலைமேல் ஏற்றிய பனையோலைப்பெட்டிகளில் ஓநாயின்தோல், செம்பருந்தின் இறகு, உப்பிட்டு உலர்த்திய முயலிறைச்சி, கழுதையின் வால்மயிர் பின்னிச்செய்த காலுறைகள் போன்ற பரிசுப்பொருட்களைச் சுமந்துகொண்டு சென்றனர்.

அவர்கள் காந்தாரநகரியை அடைந்ததும் நகரிலிருந்து மங்கலைகளான நூற்றியெட்டு பெண்களும் நூற்றியெட்டு தாசிகளும் சூதர்கள் இசைமுழங்க வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். முன்னரே வந்திருந்த ஏழுகுலமூதாதையரும் அங்கே அரண்மனைக்கு கிழக்காக இருந்த பெரிய முற்றத்தில் மூங்கில்நட்டு அதில் மஞ்சள்நிறமான மங்கலக்கொடியை ஏற்றியிருந்தனர். அதன்கீழே நடப்பட்ட வெற்றிலைக்கொடி தளிர்விட்டெழுந்து மூங்கிலில் சுற்றிப்படர்ந்து ஏறத்தொடங்கியிருந்தது. பந்தலைச்சுற்றி ஈச்சையிலைகளை முடைந்துசெய்த தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட மாபெரும் பந்தல் எழுந்துகொண்டிருந்தது.

தாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில் வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர். அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவே இருந்த சிறியபீடத்தில் தாலிப்பனையோலை வைக்கப்பட்டது. குலமங்கலைகளும் பொதுமங்கலைகளும் மஞ்சள்தானியங்களையும் மலரிதழ்களையும் அதன்மேல் போட்டு வணங்கினர்.

பந்தல் மங்கலம் முடிந்த செய்தியை நிமித்திகர் சென்று அரசருக்குச் சொன்னார்கள். மஞ்சள் ஆடையும் மங்கலஅணிகளும் அணிந்து செங்கழுகின் இறகு பொருத்திய மணிமுடியுடன் சுபலர் பந்தலுக்கு வந்தார். அவருக்கு வலப்பக்கம் அசலனும் பின்னால் சகுனிதேவனும் விருஷகனும் வந்தனர். இடப்பக்கம் சுகதர் வந்தார். பந்தலில் பணிகளை நடத்திக்கொண்டிருந்த சத்யவிரதர் ஓடிச்சென்று மன்னரை வணங்கி பந்தலுக்குள் அழைத்துச்சென்றார்.

பந்தலின் நடுவே அமைந்திருந்த மங்கலமேடைக்கு வலப்பக்கம் மணமேடையும் இடப்பக்கம் அரசர்களுக்கான பீடங்களும் இருந்தன. பந்தலுக்கு முன்னால் வேள்விக்கூடம் தனியாக இருந்தது. சுபல மன்னர் வந்து அமர்வதற்கு முன் பீடங்களை வைதிகர் நிறைக்கல நீர் தெளித்து தூய்மைசெய்தனர். அவர் அமர்ந்ததும் அவர்மேல் நீரையும் மலர்களையும் தூவி வாழ்த்திய பின்னர் அவர்கள் பந்தலைவிட்டு வெளியேறினர்.

குலமூத்தார் வந்து வணங்கி மன்னரிடம் மங்கலத்தாலி செய்வதற்கான அனுமதியைக் கோரினர். அரசர் அளித்த அனுமதியை நிமித்திகன் மும்முறை முறைச்சொற்களில் கூவ குலமூத்தார் தங்கள் தண்டுகளைத் தூக்கி அதை ஆமோதித்தனர். ஒருவர் அந்த இளையபனையில் இருந்து மெல்லிய பொன்னிறமான ஓலைத்துண்டு ஒன்றை வெட்டினார். அதில் எழுத்தாணியால் காந்தாரகுலத்தின் சின்னமான ஈச்சை இலையையும் அஸ்தினபுரியின் சின்னமான அமுதகலசத்தையும் வரைந்தார். அதன்மேல் மஞ்சள்கலந்த மெழுகு பூசப்பட்டது. அதை இறுக்கமான சுருளாகச் சுருட்டி மஞ்சள்நூலால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டினார். அதன் இரு முனைகளிலும் மெழுகைக்கொண்டு நன்றாக அடைத்தார். அதை மூன்றுபுரிகள் கொண்ட மஞ்சள் சரடில் கட்டினார்.

அந்நேரம் முழுக்க மங்கலவாத்தியங்களும் குரவைஒலிகளும் எழுந்துகொண்டிருந்தன. கட்டிமுடித்த தாலிக்காப்பை ஒரு சிறிய தட்டில் பரப்பிய மஞ்சள்அரிசி மீது வைத்து பொன்னும் மலரும் துணைசேர்த்து இருவகை மங்கலைகளிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் தொட்டு வாழ்த்தியபின் வந்த தாலி அரசரின் முன் நீட்டப்பட்டது. சுபலரும் மைந்தர்களும் அதைத் தொட்டு வணங்கியதும் அது கொண்டுசெல்லப்பட்டு முன்னால் நின்ற மங்கலக் கொடித்தூணில் கட்டப்பட்டது.

அவ்வாறு மேலும் பத்து தாலிகள் செய்யப்பட்டன. அவை கொடித்தூணில் கட்டப்பட்டதும் இருவகை மங்கலைகள் குடத்தில் இருந்த நீரை பொற்கரண்டியால் தொட்டு வெற்றிலைச்செடிக்கு விட்டனர். குலமூத்தார் கைகாட்ட கொம்புகளும் பெருமுழவுகளும் எழுந்ததும் சடங்கு முடிந்தது. அரசர் முதலில் வெளியேறினார். தொடர்ந்து குலமூத்தார் ஒவ்வொருவராக வெளியேறினர். பந்தல் ஒழிந்ததும் சூதர்கள் மேடைமுன் ஈச்சைப்பாயில் வந்தமர்ந்து கிணைகளையும் ஒற்றைநாண் யாழ்களையும் மீட்டி அங்கே வந்திருந்த தேவர்கள் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி அவர்கள் திரும்பச்செல்லும்படிக் கோரி பாடத்தொடங்கினர்.

அருகே இருந்த அரண்மனையின் உப்பரிகையில் மான்கண் சாளரம் வழியாக அதை காந்தாரியான வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே அவளுடைய தங்கைகளும் வெவ்வேறு சாளரத்துளைகள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தனர். சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை ஆகிய பத்து தங்கைகளும் சுபலரின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். கடைசித்தங்கையான தசார்ணைக்கு பதிநான்கு வயதாகியிருந்தது. அவள் மட்டும் சாளரம் வழியாக வெளியே பார்க்காமல் அந்தப்புரத்தின் ஒவ்வொரு தூணாகத் தொட்டு எண்ணிக்கொண்டு ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஒற்றைக்காலில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணிக்கை ஓட்டத்தில் தவறிக்கொண்டிருந்தது.

அவள் நின்று குழம்பி மீண்டும் முதல் தூணைத் தொட்டதைக்கண்டு அவளுடைய மூத்தவளான சம்படை சிரித்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தபடி தன் காலை ஆட்டினாள். அவள் அணிந்திருந்த பெரிய பட்டு மலராடையின் கீழ்ப்பகுதி அலையடித்தது. தசார்ணை அக்காவிடம் ‘போ’ என தலையை அசைத்துவிட்டு தன் மலராடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு மீண்டும் ஒற்றைக்காலில் குதித்து ஓடினாள். ஒரு தூணைத் தொடப்போகும்போது அவளுடைய கால் நிலத்தில் ஊன்றிவிட்டது. அவள் திரும்பி சம்படையைப்பார்க்க சம்படை வாய்பொத்திச் சிரித்தாள்.

‘அக்கா’ என்றபடி தசார்ணை ஓடிவந்து வசுமதியின் சேலைநுனியைப் பிடித்தாள். "என்னடி?" என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை "என்னடி விளையாட்டு? போ, பீடத்தில் போய் அமர்ந்திரு" என்று அதட்டினாள். சிறிய செவ்விதழ்களை பிதுக்கியபடி நீலக்கண்களில் கண்ணீர் ததும்ப தசார்ணை பின்னால் காலெடுத்துவைத்தாள்.

வசுமதி சிரித்தபடி "வாடி இங்கே, என் கண்ணல்லவா நீ" என்றபடி எட்டி தசார்ணையின் மெல்லிய கைகளைப்பிடித்து அருகே இழுத்து அணைத்துக்கொண்டாள். "என்னடி? அக்காவிடம் சொல்..." என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி "அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்" என்றாள். "ஏய் என்னடி சிரிப்பு? அடி வாங்கப்போகிறாய்" என்று சம்படையை நோக்கிச் சொல்லி கண்களாலேயே சிரித்தாள் வசுமதி. சம்படை மீண்டும் வாய்பொத்திச் சிரித்தபடி வளைந்தாள். "சொல்லிவிட்டேன், இனிமேல் சிரிக்கமாட்டாள்" என்று வசுமதி சொன்னாள்.

"நான் ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு நூறுமுறை அந்தப்புரத்துத் தூண்களை எண்ணுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் அவள் சிரித்தாள்" என்றாள் தசார்ணை. "சரி நீ நூறுமுறை எண்ணவேண்டாம். ஐம்பதுமுறை எண்ணினால்போதும்" என்றாள் வசுமதி. சரி என்று தலையாட்டியபின் காதுகளைத் தாண்டி வந்து விழுந்த குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி தசார்ணை மீண்டும் தன் மலராடையை இடுப்பில் செருகிக்கொண்டாள்.

சத்யவிரதை காந்தாரியின் அருகே வந்து அமர்ந்துகொண்டு "அஸ்தினபுரி காந்தாரபுரியைவிட பெரிய நகரம் என்றார்களே அக்கா, உண்மையா?" என்றாள். சத்யசேனை "பெரியதாக இருந்தால் என்ன? நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய்? நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்" என்றாள். காந்தாரி "நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய்?" என்று சத்யசேனையிடம் கேட்டாள். "என் அம்மா தந்த நகைகள்தான்... உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன" என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி "நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு?" என்றாள்.

சத்யசேனை "அவை என் நகைகள்..." என்று சொல்லவந்ததுமே காந்தாரி என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டாள். சத்யவிரதை புன்னகைசெய்து "நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல, எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம்" என்றாள். காந்தாரி சிரித்தபடி "இல்லை சத்யை, நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல" என்றாள்.

"நீங்கள் எவற்றைத் துறக்கப்போகிறீர்கள் அக்கா?" என்றாள் சத்யவிரதை. "இந்த நகரத்தை, என் சுற்றத்தை, என் இளமைக்காலத்தை" என்று காந்தாரி சிரித்துக்கொண்டே சொன்னாள். ஆனால் மற்றபெண்களின் கண்கள் மாறுபட்டன. சத்யவிரதை "நீங்கள் காந்தாரத்துடன் அஸ்தினபுரியையும் அடையத்தானே போகிறீர்கள் அக்கா" என்றாள். "ஆம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்" என்றாள் காந்தாரி. "ஆனால் சற்றுமுன் என் தாலி எழுதப்படுவதைக் கண்டபோது அது உண்மை அல்ல என்று தோன்றியது. நான் காய்த்து கனியான இந்த மரத்தில் இருந்து உதிர்கிறேன். அங்கே நான் முளைக்கலாம். ஆனால் இனி இது என் இடமல்ல. இவர் எவரும் என் உறவினரும் அல்லர்."

அவர்கள் பேசாமல் நோக்கியிருந்தனர். தசார்ணையை சம்படை துரத்திப்பிடிக்க இருவரும் கூவிச்சிரித்தனர். தசார்ணை உதறிவிட்டு ஓட சம்படை சிரித்துக்கொண்டே துரத்தினாள். "இனி சில மாதங்கள் கழித்து நான் இங்கு வந்தாலும் இங்கு பிறத்தியாகவே எண்ணப்படுவேன்" என்று காந்தாரி சொன்னாள். "அது அந்த ஓலை எழுதப்படும் வரை எனக்குத் தோன்றவில்லை. அந்த எழுத்துக்களைப் பார்த்தபோது இன்னொருமுறை என் தலையில் எழுதப்படுவதாக உணர்ந்தேன்."

சத்யவிரதை காந்தாரியின் கைகளைப்பற்றியபடி "ஆம் அக்கா, நானும் அவ்வாறே உணர்ந்தேன்" என்றாள். "என் மனம் படபடத்ததில் எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல இருந்தது. அந்த ஓசைகள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தன" என்றாள். காந்தாரி அவள் கையைப்பற்றியபடி "அச்சம் தேவையில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கைதான் எங்கும். ஷத்ரியப்பெண்ணுக்கு ஷத்ரியர்களைப் பெறுவதைத்தவிர வேறு வாழ்க்கை இல்லை" என்றாள்.

சுதேஷ்ணை சிரித்தபடி "நேற்று என் சூதச்சேடியிடம் நம் பதினொருவரையும் அஸ்தினபுரியின் இளவரசர் மணக்கப்போவதைச் சொன்னேன். திகைத்துப்போய் பதினோரு பேரையுமா என்றாள். பாவம் மிகவும் இளையவள்" என்றாள். "அது எங்குமுள்ள வழக்கம்தானே? ஒருகுடும்பத்து அரசகுமாரிகளை ஒரே மன்னருக்குத்தான் அளிப்பார்கள். முடியுரிமைப்போர் நிகழலாகாது என்பதற்காக" என்று சத்யவிரதை சொன்னாள்.

"இல்லை, அவள் சொன்னாள்..." என்று சொல்லவந்த சுதேஷ்ணையை "போதும்" என்று சொல்லி சத்யவிரதை நிறுத்தினாள். காந்தாரி சிரிப்புடன் "சொல்லடி" என்றாள். சுதேஷ்ணை "இல்லை அக்கா" என்றாள். "தாழ்வில்லை, சொல். நாம் இன்னும் மங்கலநாண் அணியவில்லை" என்றாள் காந்தாரி. சுதேஷ்ணை கசப்பான சிரிப்புடன் "அவர்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டாம். கண்ணில்லாதவன் தோளில்தான் பத்து அம்பறாத்தூணி தொங்கும் என்று."

சொல்லிமுடித்தபோதுதான் அப்பழமொழியின் இழிந்த உட்பொருளை சுதேஷ்ணை உணர்ந்தாள். நாக்கைக் கடித்தபடி காந்தாரியைப் பார்த்தாள். காந்தாரி புன்னகை மாறாமல் "அவளிடம் சொல், மலைக்கழுகுகள் மரங்களில் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று" என்றாள்.

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 2 ]

அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன.

பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமைச்சர்களான பலபத்ரரும் தீர்க்கவியோமரும் லிகிதரும் வந்தனர். அவர்களுக்கு நடுவே திருதராஷ்டிரனின் பொன்முகடுள்ள வெண்குடைரதம் வந்தது. அவற்றைச்சூழ்ந்து இருநூறு குதிரைவீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் வந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பால் அடியமைக்கப்பட்ட தோல்காலணிகளும் மெல்லிய பருத்தி ஆடைகளும் அணிந்திருந்தனர். பாலையை அறிந்த வேடர்கள் எழுவரும் சூதர்கள் எழுவரும் முன்னால் சென்ற குதிரைகளில் கொடிகளுடன் அவர்களை வழிநடத்திச்சென்றனர்.

மாத்ரநாட்டுக்கும் கூர்ஜரத்துக்கும் சிபிநாட்டுக்கும் தூதனுப்பி அவர்களின் நாடுகள் வழியாகச் செல்ல அனுமதிபெற்று சிந்துவின் ஏழு இளையநதிகளையும் கடந்து அவர்கள் காந்தாரத்தை அடைய இரண்டு மாதமாகியது. பெண்கள் இருந்தமையால் அவர்கள் காலையிலும் மாலையிலும் மட்டும் பயணம்செய்தனர். மதியமும் இரவும் சோலைகளிலும் குகைகளிலும் சூதர்களின் பாடல்களைக் கேட்டபடி ஓய்வெடுத்தனர்.

அதற்குள் முறைப்படி பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் காந்தாரியை திருதராஷ்டிரன் மணம்கொள்ளப்போகும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் அனுப்பிய மணவாழ்த்துத் தூதுக்கள் அஸ்தினபுரியை வந்தடைந்துகொண்டிருந்தன. கங்கைக்கரை ஷத்ரியர்களான அங்கனும் வங்கனும் சௌபனும் காசியில் பீமதேவனின் அரண்மனையில் மகதமன்னன் விருஹத்ரதன் தலைமையில் கூடி ஆலோசனை செய்த தகவல் சத்யவதியை ஒற்றர்கள் வழியாக வந்தடைந்தது.

விதுரன் திருதராஷ்டிரனின் ரதத்தில்தான் பெரும்பாலும் பயணம் செய்தான். தேர்த்தட்டில் அமராது நின்றுகொண்டே வந்த திருதராஷ்டிரன் நிலையழிந்து திரும்பித்திரும்பி செவிகூர்ந்து உதடுகளை மென்று கொண்டிருந்தான். பெரிய கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு தோள்களை இறுக்கி நெகிழ்த்தான். எடைமிகுந்த அவன் உடல் ரதம் அசைந்தபோது ரதத்தூணில் முட்டியது. ஒருகையால் தூணைப்பிடித்தபடி மோவாயை தூக்கி, உதடுகளை இறுக்கினான். அவன் விழிக்குழிகள் அதிர்ந்து துள்ளிக்கொண்டே இருந்தன.

அரண்மனை விட்டு கிளம்பியதுமே அவன் படகில் ஏற்றப்பட்ட யானைபோல மாறிவிட்டதை விதுரன் கவனித்திருந்தான். திருதராஷ்டிரனின் உலகம் ஒலிகளால் ஆனது. நெடுநாள் உளம்கூர்ந்தும் உய்த்தும் ஒவ்வொரு நுண்ஒலியையும் அவன் பொருள்கொண்டு நெஞ்சில் அடுக்கி ஓர் உலகைச் சமைத்திருந்தான். அஸ்தினபுரியைக் கடந்ததும் அவனறியா நிலத்தின் பொருள்சூடா ஒலிகள் அவனை சித்தமழியச்செய்துவிட்டன என்று தோன்றியது. அவன் சருமம் முரசின் தோல்போல அதிர்ந்துகொண்டிருந்தது. சருமத்தாலேயே கேட்பவன் போல சிறிய ஒலிக்கெல்லாம் அதிர்ந்தான். ஒவ்வொரு ஒலியையும் ’விதுரா மூடா, அது என்ன? என்ன அது?’ என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் காந்தாரத்தின் பெரும்பாலைக்குள் நுழைந்ததும் அந்தப்பெருநிலம் முழுக்க நிறைந்துகிடந்த அமைதி அவன் உடலிலும் வந்து படிவதாகத் தோன்றியது. இருகைகளையும் மார்பின்மேல் கட்டியபடி ரதத்தட்டில் நின்று செவிகளாலேயே அவ்விரிவை அறிந்துகொண்டிருந்தான். காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை. அவனும் அதில் முழுமையாக தன்னை இழந்திருந்தான்.

அஸ்தினபுரியின் மணமங்கலக்குழு முந்தையநாள் நள்ளிரவில் தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததுமே அவர்களின் வருகையை அறிவிக்கும் கொடி காந்தாரநகரியின் கோட்டை முகப்பில் ஏறியது. பெருமுரசம் அவர்களை வரவேற்கும் முகமாக மும்முறை முழங்கியது. நகரமெங்கும் ஒருமாதகாலமாக மெல்லமெல்லத் திரண்டு வந்துகொண்டிருந்த மணநாள் கொண்டாட்டத்துக்கான விழைவு உச்சம் அடைந்தது. அனைத்து தெருக்களிலும் களிகொண்ட மக்கள் திரண்டனர். இல்லமுகப்புகளெல்லாம் தோரணங்களாலும் கொடிகளாலும் வண்ணக்கோலங்களாலும் அணிகொண்டன.

அவர்கள் தாரநாகத்தின் கிழக்குக் கரையில் இருந்த பவித்ரம் என்னும் சோலையில் வந்து சேர்ந்தனர். அந்தச் சோலை அரச விருந்தினர்களுக்காகவே பேணப்பட்டது. அங்கே அவர்களை எதிர்கொள்ள சத்யவிரதர் தலைமையில் காந்தாரத்தின் அமைச்சும் ஏவலரும் காத்திருந்தனர். பாலைவனப்பாதையில் மங்கலஅணி வருவதை தூதர் வந்து சொன்னதும் சத்யவிரதர் முன்னால் சென்று அதை எதிர்கொண்டார். முகமனும் வாழ்த்தும் சொல்லி அழைத்துச்சென்றார்.

வண்டிகள் அங்கே நுகம்தாழ்த்தின. ரதங்கள் கொடியிறக்கின. ஸாமியும் பிலுவும் செறிந்த பவித்ரத்துக்குள் மூன்று ஊற்றுமுகங்களில் ஒன்றில் மிருகங்களும் இன்னொன்றில் அரசகுலமும் இன்னொன்றில் பிறரும் நீர் அருந்தினர். காந்தார வீரர்கள் சமைத்த ஊனுணவை உண்டு மரங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த ஈச்சைப்பந்தல்களில் அரசகுலத்தவர் தங்கினர். வீரர்கள் மரங்களுக்குக் கீழே கோரைப்புல் பாய்களை விரித்துப் படுத்துக்கொண்டனர்.

பவித்ரத்தில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரன் அமைதியற்றவனாக "இது எந்த இடம்? காந்தாரநகரியா? ஏன் ஓசைகளே இல்லை?" என்று கேட்டான். "விதுரா, மூடா, எங்கே போனாய்?" என்று கூச்சலிட்டான். விதுரன் அவன் அருகே வந்து "அரசே, நாம் காந்தாரநகரிக்குள் நுழையவில்லை. இது நகருக்கு வெளியே உள்ள பாலைப்பொழில். இங்கே இரவுதங்கிவிட்டு நாளைக்காலையில்தான் நகர்நுழைகிறோம்" என்றான்.

திருதராஷ்டிரன் "இங்கே யார் இருக்கிறார்கள்? யாருடைய குரல்கள் அவை?" என்றான். "அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே" என்றான் விதுரன். "ஏன் இத்தனை சத்தம்?" "அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்." "என்ன ஓசை அது, வண்டிகளா?" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் "அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா?" என்றான்.

திருதராஷ்டிரன் "ஆம்...ஆம்" என்றான். "நான் அணியலங்காரங்கள் செய்யவேண்டுமே? என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே?" "அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு... நான் நீராடவேண்டும்... நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா?" என்றான். விதுரன் "அரசே, இது நள்ளிரவு. தாங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நாளை முழுக்க தங்களுக்கு இளைப்பாற நேரமிருக்காது" என்றான்.

திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி "நான் இன்றிரவு துயிலமுடியுமெனத் தோன்றவில்லை விதுரா..." என்றான். "என் வாழ்க்கையில் இதுபோல ஒருநாள் வந்ததில்லை. இனி ஒன்றை நான் அறியவும் மாட்டேன் என்று நினைக்கிறேன்." இருகைகளையும் தொழுவதுபோல மார்பில்  அழுத்தி தலையை கோணலாக ஆட்டியபடி அவன் சொன்னான் "என் வாழ்க்கை முழுவதும் நான் மகிழ்வுடன் எதையும் எதிர்பார்த்ததில்லை விதுரா. மிக இளம்வயதுகூட எனக்கு நினைவிருக்கிறது. என் வாயருகே வரும் உணவுதான் நான் அறிந்த வெளியுலகம். அது விலகிச்சென்றுவிடும் என்ற அச்சம்தான் என் இளமையை ஆட்டிவைத்த ஒரே உணர்ச்சி. ஆகவே உணவு என்னருகே வந்ததுமே நான் இரு கைகளாலும் அதை அள்ளிப்பற்றிக்கொள்வேன்."

விதுரன் "அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள்" என்றான். "ஆம்... ஆனால் என் அகம் கலைந்துவிட்டது. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆம், உணவு கிடைக்காமலாகிவிடும் என்னும் பேரச்சம். விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்" திருதராஷ்டிரன் சொன்னான்.

"அதில் வியப்புற ஏதுமில்லை அரசே" என்றான் விதுரன். "அனைத்து மனிதர்களுக்குள்ளும் அவர்களின் இளமையில் வந்துசேரும் சில அச்சங்களும் ஐயங்களும் இறுதிவரை தொடர்கின்றன." திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் "ஆம்... நான் பெருநில மன்னன். தொல்குடி ஷத்ரியன். பேரறிஞனான தம்பியைக் கொண்டவன். ஆனாலும் நான் விழியிழந்தவன். என் உணவை நானே தேடிக்கொள்ளமுடியாது. இந்த உலகம் எனக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டால் நான் ஓரிருநாளில் இறப்பேன். தனியாக இருக்கையில் எண்ணிக்கொள்வேன், இந்த உலகில் இதுவரை எத்தனை கோடி விழியிழந்தவர்கள் உலகத்தால் கைவிடப்பட்டு பசித்து இறந்திருப்பார்கள் என்று..." என்றான்.

தன் நெகிழ்வை விலக்கும்பொருட்டு திருதராஷ்டிரன் சிரித்தான். "தத்துவமாகச் சொல்லப்போனால் உனக்கெல்லாம் பிரம்மம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த உலகம். எங்கும் சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ ஒலிகளாக உணரவும் முடிகிறது. ஆனால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி நானறிந்ததெல்லாமே நானே கற்பனை செய்துகொண்டது மட்டும்தான்." மேலும் உரக்கச் சிரித்தபடி "உயர்ந்த சிந்தனை, இல்லையா?" என்றான்.

விதுரன் "நீங்களும் சிந்திக்கமுடியும் அரசே" என்றான். "ஆனால் அதன்பின் இசைகேட்க பொறுமையற்றவராக ஆகிவிடுவீர்கள்" என்று சிரித்தான். திருதராஷ்டிரனும் சிரித்து தன் தொடையில் அடித்து "ஆம், உண்மை. நீ இசைகேட்பதை நான் கேட்டிருக்கிறேன். உன் உடல் பீடத்தில் அசைந்துகொண்டே இருக்கும்." விதுரன் சிரித்தபடி "அதை உணர்ந்துதான் நீங்கள் என்னை நெடுநேரம் இசை முன் அமரச்செய்கிறீர்கள் என்றும் நானறிவேன்" என்றான். திருதராஷ்டிரன் வெடித்துச்சிரித்து தலையாட்டினான்.

"படுத்துக்கொள்ளுங்கள்" என்றான் விதுரன். "துயில் வராமலிருக்காது. வரவில்லை என்றாலும் உடல் ஓய்வுகொள்ளுமல்லவா?" திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். "நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன?" என்றான். தலையை கைகளால் தட்டியபின் "ஆம்... விதுரா, இதோ இன்றுதான் நான் மகிழ்வுடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அச்சமும் ஐயமும் பதற்றமும் கொண்ட எதிர்பார்ப்புகளையே அறிந்திருக்கிறேன். இது இனிய அனுபவமாக இருக்கிறது. நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது" என்றான்.

"ஆம், இனிய உணர்வுதான்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "நீ அதை அறியவே போவதில்லை மூடா. நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும். இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்" என்றான். விதுரன் சிரித்து "என்னை தங்களைவிட சிறப்பாக எவர் அறியமுடியும்?" என்றான். "ஆம் அரசே, உண்மைதான். மானுட உணர்வுகள் எதையும் என்னால் நேரடியாக சுவைக்கவே முடியவில்லை. அவையெல்லாம் எனக்குள் அறிவாக உருமாறியே வந்து சேர்கின்றன. அறிதலின் இன்பமாக மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கிறேன்."

"ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. அவை வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்."

"அது எப்படி?" என்று கேட்ட திருதராஷ்டிரன் உடனே புரிந்துகொண்டு "இசையில் நிகழ்வதுபோலவா?" என்றான். "ஆம்" என்றான் விதுரன். "எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும்? உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் புன்னகைசெய்து "அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்" என்றான்.

மறுநாள் அதிகாலை முதல்சாமத்தின் முதல்நாழிகை சிறந்த நேரம் என்று கணிகன் சொன்னான். மணக்குழு இரண்டாம்சாமத்தின் முதல் நாழிகையில் நகர்நுழையலாம் என்று காந்தாரநகரியில் இருந்து அமைச்சர் செய்தி அனுப்பியிருந்தார். அதிகாலையில் அவர்கள் அச்சோலையிலிருந்து கிளம்பினார்கள். இரவிலேயே ரதங்களும் வண்டிகளும் தூய்மைசெய்யப்பட்டு கொடிகளாலும் திரைச்சீலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்டிகளின் வளைவுக்கூரைகளில் புதுவண்ணம் பூசப்பட்டிருந்தது. பெண்கள் இருளிலேயே நீராடி புத்தாடைகளும் நகைகளும் மங்கலச்சின்னங்களும் அணிந்திருந்தனர். தீட்டிக் கூர் ஒளிரச்செய்த ஆயுதங்களும் தூய உடைகளும் அணிந்த வீரர்கள் இலைகளால் நன்றாகத் துடைத்து உருவிவிடப்பட்டு பளபளத்த சருமம் கொண்ட குதிரைகள் மேல் அமர்ந்துகொண்டனர்.

பீஷ்மரும் அமைச்சர்களும் ஆடையணிகளுடன் ரதங்களுக்குச் சென்றனர். திருதராஷ்டிரன் இரவில் துயிலாமல் படுக்கையில் புரண்டபடியே இருந்தான். பின் முன்விடியலில் எழுந்து அமர்ந்துகொண்டு பெருமூச்சுகள் விட்டான். சேவகனை அழைத்து விதுரனை எழுப்பும்படி ஆணையிட்டான். விதுரன் குளித்து ஆடைமாற்றி வரும்போது திருதராஷ்டிரனை சேவகர்கள் நறுமணநீரில் குளிக்கவைத்து மஞ்சள்பட்டாடை அணிவித்து நகைகளைப் பூட்டிக்கொண்டிருந்தனர்.

சிரமணி முதல் நகவளை வரை நூற்றெட்டு வகை பொன்மணிகள் பூண்டு இறையேறிய விழாவேழம் போலத் தெரிந்த திருதராஷ்டிரனை விதுரன் சற்றுத்தள்ளி நின்று பார்த்தான். தோள்வளைகள், கங்கணங்கள், கழுத்து மணியாரங்கள், முத்தாரங்கள், செவிசுடரும் வைரக்குண்டலங்கள், இடைவளைத்த பொற்கச்சையும் இடையாரம் தொடையாரம் கழலணியும் கறங்கணியும்... மனித உடலை அவை என்ன செய்கின்றன? பாறையை பூமரமாக்குகின்றன. தசையுடலை ஒளியுடலாக்குகின்றன. மானுடனை தேவனாக்குகின்றன. யானைமருப்பின் மலர்வரியை, மயில்தோகையின் நீர்விழிகளை, புலித்தோலின் தழல்நெளிவை மானுடனுக்கு அளிக்க மறுத்த பிரம்மனை நோக்கி அவன் சொல்லும் விடைபோலும் அவ்வணிகள்.

விதுரன் சேவகனை அழைத்து கண்ணேறுபடாமலிருப்பதற்காகக் கட்டும் கழுதைவால் முடியால் ஆன காப்பு ஒன்றை கொண்டுவரச்சொல்லி அவனே திருதராஷ்டிரனின் கைகளில் கட்டி விட்டான். அவனுடைய கல்லெழுந்த தோள்களை தன் மென்விரல்களால் தொட்டபோது எப்போதும்போல அவன் இருமுறை அழுத்தினான். இந்த விழியிழந்த மனிதனின் கைகளைத் தொடும்போது நானறியும் துணையை, என் அகமறியும் தந்தையை நானன்றி அவனும் அறியமாட்டான். என் அகமும் புறமும் செறிந்து என்னை ஆயிரம் திசைகள்நோக்கி அலைக்கழிக்கும் பல்லாயிரம் விழிகளெல்லாம் இவனுக்கென்றே எழுந்தன போலும்.

"என் மோதிரங்கள் எங்கே?" என்றான் திருதராஷ்டிரன். "அரசே மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன" என்று சேவகன் சொன்னான். "மூடா, என் கோமேதக மோதிரம் கலிங்கத்திலிருந்து வந்தது... அதைக்கொண்டு வா..." என்றான் திருதராஷ்டிரன். "விதுரா, மூடா, எங்கே போனாய்? இந்த மூடர்கள் என் மணிமாலைகளை கொண்டுவராமலேயே விட்டுவிட்டார்கள்..."

விதுரன் "அரசே, இப்போதே மணிமாலைகள் சற்று அதிகமாக தங்கள் கழுத்தில் கிடக்கின்றன" என்றான். திருதராஷ்டிரன் கைகளால் மணிமாலைகளைத் தொட்டு வருடி எண்ணத் தொடங்கினான். சேவகன் வந்து "அரசே, பிதாமகர் ரதத்தில் ஏறிவிட்டார்" என்றான். "என்னுடைய கங்கணங்களில் வைரம் இருக்கிறதா?" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் "அரசே, அனைத்தும் வைரக்கங்கணங்கள்தான்... கிளம்புங்கள்" என்றான். "விதுரா, நீ என்னுடைய ரதத்திலேயே ஏறிக்கொள்" என்றான் திருதராஷ்டிரன். "நகர் நுழைகையில் நீங்கள் மட்டுமே ரதத்தில் இருக்கவேண்டும் அரசே" என்றான் விதுரன். "அதுவரை நீ என்னுடன் இரு... நீ பார்த்தவற்றை எனக்குச் சொல்" என்றான் திருதராஷ்டிரன்.

இருள்விலகாத நேரத்தில் குளிரில் மயிர்சிலிர்த்த குதிரைகள் இளவெம்மையுடன் ஓடிக்கொண்டிருந்த தாரநாகத்தைக் கடந்து மறுபக்கம் ஏறின. ரதங்களும் வண்டிகளும் கூட நீரில் இறங்கி மணலில் சகடங்கள் கரகரவென ஒலியெழுப்ப ஆரங்கள் நீரை அளைய மறுபக்கம் சென்றன. "ஆழமற்ற ஆறு... மிகக்குறைவாகவே நீர் ஓடுகிறது. ஆகவே நீர் வெம்மையுடன் இருக்கிறது" என்றான் விதுரன். "விண்மீன்கள் தெரிகின்றனவா?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். "ஆம் அரசே, நீரில் நிறைய விண்மீன்கள்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனநதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்" என்று சொல்லி தலையை ஆட்டினான்.

மணல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்றதுமே விதுரன் தொலைவில் தெரிந்த காந்தாரநகரியின் கோட்டையைப்பார்த்தான். காலையொளி செம்மைகொள்ளத்தொடங்கியிருந்தது. சோலையிலிருந்து பறவைகள் காந்தாரநகரி நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டதுபோல முதல்பார்வைக்குத் தோன்றியது. அப்பகுதியின் மணல்பாறைகளின் நிறம் அது என்று விதுரன் அறிந்திருந்தான். அவ்வளவு தொலைவிலேயே அந்தப்பாறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியவை என்பது தெரிந்தது. கோட்டைக்குச் செல்லும் பாதை கற்பாளங்கள் பதிக்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் ரதசக்கரங்கள் ஓசையிட்டு அதிர்ந்தபடி ஓடின.

கோட்டையின் வடக்கு எல்லையில் புழுதிக்குள் வினைவலர் வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. அங்கே கோட்டை இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும் விதுரன் புன்னகைசெய்தான். அங்கே யானைகளே இல்லை என்பதுதான் கோட்டைகட்டுவதை அவ்வளவு கடினமான பணியாக ஆக்குகிறது என்று தெரிந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்டால் அது எளிதில் அழியாது. கோட்டையை அழிக்கும் மழையும் மரங்களும் அங்கே இல்லை. கோட்டையை வெல்வதற்கு எதிரிகளும் இல்லைதான் என்று எண்ணி மீண்டும் புன்னகைசெய்துகொண்டான்.

"மிகப்பெரிய கோட்டையா?" என்றான் திருதராஷ்டிரன். "நம் கோட்டையைவிடப்பெரியதா?" விதுரன் "நம் கோட்டை தொன்மையானது" என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் "அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன?" என்றான். அந்த நகைச்சுவையை அவனே ரசித்து தலையாட்டி நகைத்தான். கோட்டை மெதுவாக விதுரன் பார்வை முன் வளர்ந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் காவல்மாடங்களில் பறந்த கொடிகளின் ஈச்ச இலை இலச்சினை தெரிந்தது.

"நான் நேற்றிரவு நினைத்துக்கொண்டேன், நீ அனைத்து மனிதருக்கும் இளமைக்கால அச்சங்களும் ஐயங்களும் நீடிக்கும் என்றாய். உன் இளமைக்கால அச்சம் என்ன?" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். "நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்" என்றான் திருதராஷ்டிரன். "என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்." சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் "அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு? நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே?" என்றான்.

விதுரன் "தங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை அரசே" என்றான். "என் அச்சத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் வியாசரின் மைந்தன். நியோகமுறைப்படி மாமன்னர் பாண்டுவின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது."

"ஆம் அது உண்மை" என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. "உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது." அவன் முகம் கவனம் கொள்வதுபோல மெல்லக் குனிந்தது. "நம் அரண்மனையில் எவரேனும் என்றேனும் உன்னை அவமதித்திருக்கிறார்களா?" விதுரன் திருதராஷ்டிரனின் கைகளைப்பற்றி "இல்லை அரசே. நீங்கள் கொள்ளும் சினத்துக்கு தேவையே இல்லை" என்றான்.  திருதராஷ்டிரன் தன் கைகளை ஒன்றோடொன்று ஓங்கி அறைந்துகொண்டு "எதுவும் என்னிடம் வந்துசேரும். சற்று தாமதமானாலும் வந்துசேரும்... நீ மறைக்கவேண்டியதில்லை" என்றான்.

காந்தாரநகரியின் கோட்டைமேல் பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடுத்துக்கொண்டு அவை இடியொலி போல நகரமெங்கும் ஒலித்தன. நூற்றுக்கணக்கான யானைகள் சேர்ந்து பிளிறியதுபோல கொம்புகள் எழுந்தன. "மிகப்பெரிய கோட்டைவாயில்" என்று விதுரன் தன்னையறியாமலேயே சொல்லிவிட்டான். திருதராஷ்டிரன் தலையசைத்தான். "நகரின் மாளிகைமுகடுகள் தெரிகின்றன" என்றான் விதுரன்.

"நீ என்ன நினைக்கிறாய்?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் அவன் கேட்பது புரியாமல் "எதைப்பற்றி?" என்றான். "இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி?" விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் "பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா?" விதுரன் "நான் என்ன சொல்வேன் என உங்களுக்குத்தெரியும் அரசே" என்றான்.

"ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது."

திருதராஷ்டிரன் தன் தலையை இடக்கையால் வருடினான். "நான் மிருககுலத்தில் பிறந்திருந்தால் பிறந்த நாளிலேயே இறந்திருப்பேன். அரசனாகியபடியால் மட்டும்தான் உயிர் வாழ்கிறேன். விதுரா, இங்கே உணவை உருவாக்குபவனின் பார்வையில் நான் வாழ்வதே ஓர் அநீதிதான். இந்தப் பெரிய உடல் முற்றிலும் அநீதியால் உருவானதுதான். அதை உணர்ந்த கணம் மேலும் வெறியுடன் அள்ளி உண்ணத் தொடங்கினேன். அந்த நீதியுணர்வை என்னிடமிருந்து நானே விலக்கிக்கொள்ளும் காலம் வரைக்கும்தான் நான் உயிர்வாழமுடியும். ஆகவே உணவு வேண்டும் என்று கேட்டேன். உடைகள் நகைகள் வேண்டுமென்று கேட்டேன். அரசும் அதிகாரமும் தேவை என்று நினைக்கிறேன். மனைவிகள் குழந்தைகள் பேரக்குழந்தைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். செல்வம் போகம் புகழ் என எல்லா உலகின்பங்களும் எனக்குத்தேவை... ஆம் ஒன்றைக்கூட விடமாட்டேன். ஒன்றைக்கூட!"

அனைத்துப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு திருதராஷ்டிரன் சொன்னான் "எனக்கு இப்படி ஒரு பேரரசின் அரசிதான் தேவை. அவள் பாரதவர்ஷத்திலேயே பேரழகியாகத்தான் இருக்கவேண்டும். அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும். நான் முழுமையாக உயிர்வாழ்வது ஒன்றுதான் என்னை இப்படி உருவாக்கிய தெய்வங்களுக்கு நான் அளிக்கும் விடை." திருதராஷ்டிரனின் முகத்தைப்பார்த்தபடி விதுரன் சொன்னான், "அரசே, ஷாத்ரம் என்னும் குணத்தின் மிகச்சரியான இலக்கணத்தையே நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் முற்றிலும் ஷத்ரியர்."

நூல் இரண்டு – மழைப்பாடல் – 20

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 3 ]

கோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ,

இரண்டு இளவரசர்களும் முழுதணிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து

மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில்

வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை உருத்திரவிழிக்காய், மஞ்சள் பட்டு, மலைத்தேன்,

மஞ்சள்மலர், ஏடு, ஆயுதம், பொன், நெய்தீபம், மண் ஆகிய பத்து மங்கலப்பொருட்கள்

பரப்பிய தாலங்களுடன் வந்தனர். அவர்கள் இருபக்கமும் குடையும் கவரியும் ஏந்திய

சேவகர்கள் வர பின்னால் அமைச்சர்கள் வந்தனர். சூதர்கள் இடப்பக்கமும் வைதிகர்

வலப்பக்கமும் வந்தனர். சூதர்களின் இசையும் வேதமுழக்கமும் இசைந்து மீட்டின.

தொடர்ந்து பாவட்டங்களும் கொடித்தோரணங்களும் நிலைத்தோரணங்களும் ஏந்திய

சேவகர்களின் வரிசைகள் வந்தன.

சகுனியை முதல்பார்வையிலேயே விதுரன் அறிந்துகொண்டான். மெலிந்த சிறிய வெண்சுண்ண

நிற உடலில் நாய்க்குட்டியின் அடிவயிறுபோல மெல்லிய செந்நிறப்புள்ளிகள்

நிறைந்திருந்தன. பிங்கலநிறமான தலைமுடி பருந்தின் இறகுகள் போல தோளில்

விழுந்திருந்தது. செந்நிறம்பூசப்பட்ட மெல்லிய தாடி புகைச்சுருள் போல சற்று

ஒட்டிய கன்னங்களை நிறைத்திருக்க மிகமெல்லிய செவ்வுதடுகள் வாள்கீறிய புண்

எனத்தெரிந்தன. மெலிந்த ஒடுங்கிய மூக்கு. பெரிய குரல்வளை கொண்ட கழுத்து. இறுகிய

தோள்கள் சற்று முன்னால் வந்து கூனல்போன்ற தோற்றதை அளித்தன. தொடர்ந்த

வில்பயிற்சியால் இறுகிய தசைகளில் நரம்புகள் ஊமத்தைப்பூவிதழின் நீலரேகைகள்

போலப்பரவியிருந்தன.

அவன் கண்களை தற்செயலாகச் சந்தித்தபோதுதான் அவன் தானறியாமல் தன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பதை விதுரன் உணர்ந்தான். ஓநாய்களுக்குரிய பழுப்புக்

கண்கள். அவற்றில் சலிப்பும் விலகலும் கலந்த பாவனை இருந்தது. விதுரனின்

கண்களைச் சந்தித்தும்கூட அவை எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் இயல்பாக

விலகிக்கொண்டன. அவன் திரும்பியபின் விதுரனும் திரும்பிக்கொண்டான். ஆனால்

அவனுக்கு தன்னை மிக நன்றாகத் தெரியும் என்றும் எப்போதும் தன்னை

கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விதுரன் உணர்ந்தான்.

சகுனி முன்னால் வந்து பீஷ்மரை வணங்கினான். பீஷ்மர் அவன் தலையில் கைவைத்து

ஆசியளித்தார். அவர் கண்களால் ஆணையிட்டதும் விதுரன் திருதராஷ்டிரனை தோள்தொட்டு

மெல்ல முன்னால் தள்ள அவன் தடுமாறி வந்து நின்றான். அவனுடைய தோற்றம்

அனைத்துவிழிகளிலும் தழலில் நீர்த்துளி விழுந்ததுபோன்ற மிகமெல்லிய அசைவொன்றை

உருவாக்கியதை விதுரன் கண்டான். நீரோடையில் தடைபட்டு பின் மீள அந்த அசைவின்

தடம் ஒழுகிச்செல்வதுபோல சூதரின் இசையிலும் வேதநாதத்திலும் வந்த

கணநேரத்தடுமாற்றம் ஊர்வலத்தின் இறுதி வரை பரவிச் செல்வதைக் காணமுடிந்தது.

திருதராஷ்டிரன் தலையை கோணலாகச் சரித்து முன்னால் வந்த ஒலிகளுக்குச்

செவிகூர்ந்தவனாக உதடுகளை இறுக்கியபடி நின்றான். சகுனி கண்களை அசைக்க விருஷகன்

முன்னால் வந்து அந்த மங்கலத்தாலத்தை திருதராஷ்டிரனிடம் நீட்டினான்.

திருதராஷ்டிரனின் கைகளைத் தொட்டு அதை வாங்கச்செய்தான் விதுரன். ஆனாலும்

திருதராஷ்டிரன் சரியாகப்பிடிக்காமல் தட்டு மெல்லச்சரிய அதை விதுரன்

பிடித்துக்கொண்டான். சகுனி திருதராஷ்டிரனை நோக்காமல் தன் கையிலிருந்த தட்டை

பீஷ்மரிடம் நீட்டினான். அந்த அவமதிப்பை உணர்ந்தகணத்தை பீஷ்மரின் உடலெங்கும்

உணரமுடிந்தது. ஆனால் அவர் கைநீட்டி அதைப் பெற்றுக்கொண்டார்.

விருஷகன் குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களில் சேவகர் பொற்குடத்தில் அளித்த

நறுமணநன்னீரை மும்முறை இலைத்தொன்னையால் அள்ளி விட்டான். வெண்பட்டால் கால்களைத்

துடைத்து வெண்மலர்களையும் மஞ்சள் அரிசியையும் பொற்துளிகளையும் அள்ளிப் போட்டு

பூசனை செய்தான். காந்தாரபுரியின் இலச்சினை அடங்கிய மணிமோதிரத்தை சுகதர்

பொற்தட்டில் வைத்து நீட்டினார். திருதராஷ்டிரன் தன் கையை நீட்டியபோது

அனைவருக்குமே தெரிந்தது, அந்த மோதிரம் அவனது சிறுவிரலுக்குக் கூடப் போதாது

என்று. அவன் பெரிய உடல் கொண்டவன் என்பதனாலேயே அதை அவர்கள் பெரிதாகச்

செய்திருந்தாலும் அவ்வளவு பேருருவை அவர்கள் உய்த்திருக்கவில்லை.

மோதிரத்தை எடுத்த விருஷகன் சகுனியை நோக்கினான், பீஷ்மர் “அதை பிறகு

போட்டுக்கொள்ளலாம் விருஷகா. தர்ப்பைமோதிரம் அனைத்தையும் விடப் புனிதமானது”

என்றார். ஒரு வைதிகர் தன் தட்டில் இருந்த தர்ப்பையை மோதிரமாகச் சுருட்டி

அளிக்க அதை திருதராஷ்டிரனின் விரலில் விருஷகன் அணிவித்தான். அவனது

கைகளைப்பற்றிக்கொண்டு அவன் “அஸ்தினபுரியின் மைந்தரே காந்தாரநாட்டுக்கு வருக”

என்று மும்முறை சொன்னான். மங்கலஇசை செவிகளை மூடியது. வைதிகர் வேதம் ஓதியபடி

நிறைகலத்து நன்னீரை வெற்றிலையால் அள்ளி அவன்மீது தெளித்தனர்.

திருதராஷ்டிரன் நகர்நுழைந்தபோது கோட்டைமேலிருந்து மலர்கள் அவன் மேல் பொழிந்தன.

அவன் அந்தமலர்கள் படும்போதெல்லாம் உடல்சிலிர்த்து அம்மலர்கள் வந்த திசைகளை

நோக்கி தன்னை அறியாமலேயே திரும்பமுயன்றான். அவனுடைய அணிகள்மேல் தங்கிய மலர்களை

கைகளால் தட்டிக்கொண்டான். “அரசே, அவை மலர்கள்” என்று விதுரன் மெதுவாக அவன்

காதில் சொன்னான். “தெரிகிறது” என்றான் திருதராஷ்டிரன். பற்களைக் கடித்தபடி

“ஏன் இத்தனை ஓசை? என் செவிகள் அதிர்கின்றன” என்றான். விதுரன் “அரசே, அது

மாமங்கலஓசை…” என்றான். “இது எந்த இடம்?” “கோட்டைவாசல்… நாம் உள்ளே

சென்றுகொண்டிருக்கிறோம்.” “ரதங்களைக் கொண்டுவரச்சொல்!” விதுரன் திடமாக “அரசே,

நாம் ஊர்கோலம் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமக்கள் தங்களைக் காணவேண்டுமல்லவா?”

அதைச் சொல்லியிருக்கக் கூடாதென்று விதுரன் என்ணிக்கொண்டான். திருதராஷ்டிரன்

உடல் மேலும் கோணலடைந்தது. தோள்கள் முன்குறுகின. அவன் தரையில்

பரப்பப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தில் கால்தடுக்கத் தொடங்கினான். அவன்

விழப்போக பிடித்துக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று விதுரன் அஞ்சினான். அவர்கள்

நகரத்தின் அரசவீதியில் செல்லும்போது விதுரன் மெல்லமெல்ல வாழ்த்தொலிகள்

அவிந்துகொண்டிருப்பதை கவனித்தான். ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மட்டுமே

வாழ்த்தொலிகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் நகர் மக்கள் முற்றிலுமாகவே வாழ்த்தொலி எழுப்புவதை

நிறுத்திவிட்டு திருதராஷ்டிரனையே நோக்கிக் கொண்டிருந்தனர். மக்கள்

நிறுத்திவிட்டதை உணர்ந்த சுகதர் கைகாட்ட நூற்றுவர் தலைவர்கள் தங்கள்

வீரர்களிடம் கைகாட்ட அவர்கள் மேலும் மேலும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர்.

ஆனால் மெதுவாக அதுவும் நின்றுவிட்டது. அவர்கள் வெறுமே வாத்தியங்களின் ஒலி

மட்டும் துணைவர நடந்துகொண்டிருந்தனர்.

சகுனி விதுரனின் அருகே வந்து விழிகளால் சந்தித்து உதடுகள் மட்டும் அசைய

“அமைச்சரே, தாங்கள்தான் அஸ்தினபுரியின் சூதமைந்தர் விதுரன் என நினைக்கிறேன்”

என்றான். “ஆம்” என்றான் விதுரன். சகுனி “எங்கள் குலவழக்கப்படி தாங்கள் அந்த

சிறியகோட்டைவாயில் முன்னால் நின்றுவிடவேண்டும். அதுதான் பழைய காந்தாரத்தின்

கோட்டைவாயில். அதற்குமேல் தங்களை இங்குள்ள லாஷ்கரக்குலமூதாதையர் வந்து

எதிரேற்று முன்னால் கொண்டுசெல்வார்கள். அதன்பின்னர்தான் இந்தப் பாலைநிலம்

தங்களை ஏற்கிறது என்று பொருள்” என்றான். அவன் பார்வையில் அதே சலிப்புற்ற

பாவனை. அது சகுனி பயின்று கண்களுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் திரை என்று

விதுரன் அறிந்தான்.

விதுரன் பீஷ்மரிடம் அதைச் சொன்னான். அவர் தலையசைத்தார். அந்த உள்கோட்டையை

கோட்டை என்றே சொல்லமுடியாதென்று விதுரன் நினைத்துக்கொண்டான். செங்குத்தாக

ஆளுயரமான கற்களை நாட்டி வைத்திருந்தனர். அதன் வாயில்போன்ற அமைப்பில் நான்கு

ஆள் உயரமுள்ள இரு பெரிய மரத்தூண்கள் நின்றன. இரண்டுபேர் கைசுற்றிப்

பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியவை. அவை நெடுநாட்களாக அங்கே காற்றிலும்

வெயிலிலும் நின்றிருப்பதை அவற்றின் மேலே இருந்த பொருக்கு காட்டியது.

அது செம்மைசெய்யப்படாத மரம் என்ற எண்ணம் முதலில் வந்தது. மேலும்

நெருங்கியபோதுதான் அது நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் செறிந்தது என்று

புரிந்தது. பாலைவனத்தின் அனைத்து உயிர்களும் அதில் இருந்தன. அடித்தளம் முழுக்க

நாகங்கள். மேலே ஓநாய்களும் ஒட்டகங்களும் கழுதைகளும் காட்டுஆடுகளும். உச்சியில்

சிறகு விரித்து கீழே நோக்கிய செம்பருந்து. அது லாஷ்கரர்களின் குலத்தூண் என்று

விதுரன் புரிந்துகொண்டான். வேசரத்தின் தண்டகப் பழங்குடிகள் தங்கள்

ஊர்முகப்புகளில் அவ்வாறு எல்லைத்தூண்களை அமைப்பதுண்டு என்று சூதர்கள்

பாடிக்கேட்டிருந்தான்.

அந்தத் தூண்களுக்கு அப்பால் விரிந்த பெருங்களமுற்றத்தில் செம்பருந்தின்

இறகுகள் செருகப்பட்ட ஓநாய்த்தோல் தலையணிகளும் மரத்தாலான கவசங்களும் அணிந்து

கைகளில் தங்கள் அதிகார தண்டங்களுடன் ஏழு லாஷ்கர மூதாதையர் நின்றிருந்தனர்.

அம்பு, வேல் போன்ற ஆயுதங்கள் ஏந்தி அவர்களின் குலத்தைச்சேர்ந்த நூறு இளைஞர்கள்

பின்னால் நின்றனர். முற்றத்துப்பின்னால் பிறைவடிவில் காந்தாரத்தின்

மூன்றடுக்கு அரண்மனை நூற்றுக்கணக்கான சாளரங்களுடனும், உப்பரிகைகளுடனும்,

வலப்பக்கம் அந்தப்புரமும் இடப்பக்கம் அமைச்சகமும் இணைந்திருக்க இரு

சிறகுகளையும் விரித்து தலையை நீட்டிய செம்பருந்து போல நின்றிருந்தது.

அவர்கள் எழுவரும் திருதராஷ்டிரனை உற்றுப்பார்ப்பதைக் கண்டதுமே திருதராஷ்டிரன்

விழியிழந்தவன் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிகிறார்கள் என்று விதுரன்

தெரிந்துகொண்டான். மிருகங்களைப்போல உணர்வுகள் அவ்வப்போது உடலசைவுகளிலேயே தெரிய

அவர்கள் திருதராஷ்டிரனை நோக்கினர். ஒருவர் சற்று குனிந்து வேட்டைமிருகத்தைப்

பார்ப்பதைப்போல கவனித்தார். இருவர் பின்னடைந்து விலகிச்செல்ல முயல்பவர்

போலிருந்தனர். மூவர் ஏதும் புரியாமல் பார்ப்பதுபோலத் தெரிந்தனர். ஒருவர் இரு

கைகளையும் விரித்து மற்போருக்கு இறங்கப்போகிறவர் போலிருந்தார்.

பிறகு ஒரேகணத்தில் எழுவரும் மாறிமாறி தங்கள் மொழியில் உரக்கப்பேசிக்கொள்ளத்

தொடங்கினர். பேச்சையே தங்கள் உடலால் நிகழ்த்துபவர்கள்போல கைகளையும் தலையையும்

ஆட்டி வாயைத்திறந்து விழிகளை உருட்டி பேசினர். மூத்தவர் உரக்க குரல்கொடுத்து

தன் தண்டத்தைத் தூக்க அவர்கள் அப்படியே பேச்சு அறுபட்டு அமைதியாயினர். அவர்

அறிவிப்பதுபோல ஏதோ சொன்னார். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி

ஒலியெழுப்பி அதை ஆமோதித்தனர். அவர் திரும்பி வேகமாக நடந்து விலக அவரை பிறரும்

தொடர்ந்தனர்.

சுற்றிலும் கூடியிருந்த காந்தாரமக்கள் அனைவரும் திகைத்துப்போயிருப்பதை விதுரன்

கண்டான். சகுனி சுகதரிடம் அவர்களிடம் சென்று பேசும்படி மெல்லிய குரலில் சொல்ல

அவரும் விருஷகனும் அவர்களைநோக்கி ஓடினார்கள். பீஷ்மர் சகுனியிடம் “நீங்கள்

முன்னரே அவர்களிடம் திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்று

சொல்லியிருக்கவேண்டும்” என்றார். சகுனி “அது இங்கு வழக்கமில்லை” என்று

சொன்னதும் விதுரன் திரும்பி அவனைப் பார்த்தான். அவர்கள் விழிகள்

சந்தித்துக்கொண்டன.

அங்கேயே அவர்கள் காத்து நின்றனர். மூச்சொலிகளும் கனைப்புகளும் ஆயுதங்களும்

நகைகளும் குலுங்கும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. பெண்கள்

நிற்கமுடியாமல் கால்களை மாற்றிக்கொண்டு இடை ஒசிய பெருமூச்சுவிட்டு ஆடைநுனியால்

உடல்வியர்வையைத் துடைத்தனர். திருதராஷ்டிரன் “விதுரா, மூடா… என்ன நடக்கிறது

இங்கே?” என்றான். “சில சடங்குகள்…” என்றான் விதுரன். “ஏன் ஓசையே இல்லை?” “அது

இங்குள்ள வழக்கம் அரசே.”

நேரம் செல்லச்செல்ல நின்றவர்கள் அனைவருமே பொறுமையிழந்தனர். திருதராஷ்டிரன்

“ஏன் தாமதம்? என்ன நடக்கிறது?” என்றான். “ஒன்றுமில்லை அரசே” என்றான் விதுரன்.

“மகள்கொடைக்கு ஏதேனும் தடையா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “இல்லையே”

என்று விதுரன் சொன்னதுமே புரிந்துகொண்டு “யார்? யார் தடைசொல்கிறார்கள்?

இப்போதே அவர்களை அழிக்கிறேன்” என்று இருகைகளையும் அறைந்துகொண்டு

திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். “அரசே, அமைதியாக இருங்கள்… இது மக்கள்முன்னிலை”

என்று விதுரன் சொன்னான்.

விருஷகன் ஓடிவந்தான். பீஷ்மரிடம் “பிதாமகரே, பொறுத்தருளவேண்டும். ஆதிகுல

மூத்தவர்கள் அவர்கள். அவர்களுக்குரியது இந்நகரம். அவர்கள் ஆணையில்லாமல்

இந்நகரை நாங்கள் ஆளமுடியாது” என்றான். பீஷ்மர் “என்ன சொல்கிறார்கள்?” என்றார்.

“இளவரசியை விழியிழந்தவருக்கு மணம்புரிந்துகொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை.

விழியிழந்தவர்களை பாலையை ஆளும் செம்பருந்தும் ஓநாயும் நாகங்களும் ஏற்பதில்லை

என்கிறார்கள். அனல்காற்றுகள் அவருக்கு ஆசியளிக்கா என்கிறார்கள்.”

திருதராஷ்டிரன் அதைக்கேட்டு “யார்? யார் அதைச் சொல்கிறார்கள்?” என்று கூவியபடி

அத்திசை நோக்கித் திரும்பினான். “அரசே, அமைதி. நான் அனைத்தையும்

விளக்குகிறேன்” என்றான் விதுரன்.

பீஷ்மர் பொறுமையை இழப்பது அவரது கண்களில் தெரிந்தது. “என்னதான்

சொல்கிறார்கள்?” என்றபோது அவர் குரலிலும் அதுவே வெளிப்பட்டது. அதற்குள்

அனைத்து லாஷ்கரர்களும் கூட்டமாக பின்வாங்கி விலகிச்செல்வதை விதுரன் கண்டான்.

ஆயுதங்களைத் தூக்கி ஆட்டி ஆர்ப்பரித்தபடி அவர்கள் உள்ளே ஓடினார்கள்.

அவர்களுடன் அங்கே கூடிநின்ற மக்களும் ஓடுவது தெரிந்தது. “விதுரா, மூடா, என்ன

ஓசை அது? அது போர்க்கூச்சல்… ஆம் போர்க்கூச்சல்தான் அது” என்றான்

திருதராஷ்டிரன். ”மகள்கொடை மறுக்கிறார்களா? யார்? எங்கே நிற்கிறார்கள்?

அதைமட்டும் சொல்!”

சுகதர் ஓடிவந்தார். சகுனியின் காதில் அவர் ஏதோ சொல்ல சகுனி தலையை ஆட்டியபிறகு

பீஷ்மரிடம் சொல்லும்படி கண்களைக் காட்டினான். சுகதர் பீஷ்மரிடம் சென்று

“பிதாமகரே, இங்குள்ள சடங்குகளை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள எட்டு

பழங்குடிக்குலங்களை ஒட்டுமொத்தமாக லாஷ்கரர் என்று அழைக்கிறோம். லாஷ்கர்

என்றால் வலிமையான தசைகொண்டவர்கள் என்று பொருள். அவர்கள் மொழியில் லாஷ்கரர்

என்றால் படைவீரகள். இந்தக்காந்தார நிலமே அவர்களுக்குரியது. இங்கு வந்து

அவர்களின் பெண்களை மணந்த ஆயிரம் ஷத்ரியர்களிடமிருந்துதான் காந்தார

அரசகுடும்பமும் ஷத்ரியகுலமும் உருவாகியது. இன்றும் இங்குள்ள குடிகளில்

பெரும்பாலானவர்கள் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியர்கள்கூட லாஷ்கர குலமூதாதையருக்குக்

கட்டுப்பட்டவர்கள்.”

“என்ன சொல்கிறார்கள்?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டார் பீஷ்மர். “காந்தார

மரபுப்படி இங்குள்ள அனைத்துப் பெண்களும் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியப்பெண்களும்

இளவரசிகளும் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதுதான் இங்குள்ள நம்பிக்கை.

மகற்கொடை நடத்தவேண்டியவர்களே அவர்கள்தான்.” பீஷ்மர் கோபத்துடன் ஏதோ சொல்ல

வருவதற்குள் சுகதர் வணங்கி “அவர்கள் விழியிழந்தவருக்கு மகள்கொடை

மறுக்கிறார்கள். இளவரசியரை தங்கள் தொல்லூருக்குக் கொண்டுசெல்லவிருக்கிறார்கள்.”

திருதராஷ்டிரன் அதைக்கேட்டதும் சினத்துடன் திரும்பி “யார்? யார்

மறுக்கிறார்கள்?” என்றான். பீஷ்மர் கண்களைக் காட்ட விதுரன் “அரசே, அதுவும் ஒரு

சடங்கு… தாங்கள் வாருங்கள்” என அவனை கைப்பிடித்து விலக்கி கொண்டுசென்றான்.

“என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது?” என்று விதுரனின் தோளைப்பற்றி உலுக்கினான்.

“நான் சொல்கிறேன் அரசே… பொறுங்கள்” என்றான் விதுரன்.

தூண்கோட்டைக்கு அப்பால் லாஷ்கரர்கள் அந்தப்புரத்தில் இருந்து

பெருங்களமுற்றத்தை நோக்கி பெரிய சக்கரங்கள் கொண்ட மூன்று கூண்டுவண்டிகைளை

கையாலேயே இழுத்துவருவதை விதுரன் கண்டான். அவை பிற வண்டிகளை விட இருமடங்கு

பெரியவையாக இருந்தன. லாஷ்கரர் இளவரசியரை அவற்றுக்குள் வைத்திருக்கிறார்கள்

என்று நன்றாகவே தெரிந்தது. களமுற்றத்துக்கு அப்பால் அரண்மனையில் இருந்து

அவ்வண்டிகளைத் தொடர்ந்து ஓடிவந்த ஆயுதமேந்திய அரண்மனைக் காவலர்கள்

பின்னாலிருந்து வந்த ஆணைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக மெதுவாக நின்றுவிட

வண்டிகள் சகடங்கள் தரையில் பரப்பப்பட்ட கற்பரப்பில் சடசடவென ஓசையிட்டு

முன்னால் வந்தன.

ஆயுதங்களை மேலே தூக்கி கூச்சலிட்டபடி லாஷ்கரர்கள் அந்த வண்டிகளைச் சுற்றி

எம்பி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தபடி அவற்றின் நுகங்களைத் தூக்கி

ஒட்டகங்களைக் கொண்டுவந்து பூட்டினர். மூங்கில்கழிகள் மேல் கூட்டப்பட்ட

வைக்கோல்போர் போன்ற ஒட்டகங்கள் கடிவாளம் இழுபட பாதாளநாகம்போல கழுத்தை வளைத்து

தொங்கிய வாய் திறந்து கனைத்தன. அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த

தோல்வடங்களில் நுகங்கள் பிணைக்கப்பட்டன. லாஷ்கரர்கள் அவற்றைச்சுற்றி விற்களும்

வேல்களும் வாள்களும் இரும்புக்குமிழ்வைத்த பெரிய உழலைத்தடிகளுமாக

சூழ்ந்துகொண்டு பற்கள் தெரிய கண்கள் பிதுங்க கூச்சலிட்டனர். ஒட்டகங்கள்

ஒலிகேட்டு திகைத்து வாலை அடித்துக்கொண்டு ஒலியெழுப்பின. அவை கால்மாற்றிக்கொள்ள

வண்டிகளும் திகைத்து கிளம்ப முற்பட்டு தயங்கி நிலையழிவதுபோலத் தோன்றியது.

குலமூதாதையர் அத்திரிகளில் ஏறிக்கொண்டனர்.

பீஷ்மர் உரக்க “இவர்களை இப்போதே விரட்டி இளவரசியரைக் கொண்டுசெல்ல என்னால்

முடியும்” என்றார். சுகதர் “ஆம், தங்கள் வில்லுக்கு நிகரில்லை என பாரதவர்ஷமே

அறியும்… ஆனால் இங்குள்ள மக்கள் அதை காந்தார அரசின் தோல்வியென்றே கொள்வார்கள்.

இந்த மணவுறவின் அனைத்து நோக்கங்களும் அழியும் பிதாமகரே” என்றார். “என்ன

செய்யவேண்டும்…அதைமட்டும் சொல்லும்” என்றார் பீஷ்மர். சகுனி “அவர்களிடம்

மீண்டும் பேசிப்பார்க்கிறேன்…” என்றான்.

விதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே, இதுதான் நடக்கிறது. இங்குள்ள பழங்குடிகள்

தங்களுக்கு மகற்கொடை மறுக்கிறார்கள். தாங்கள் விழியிழந்த அமங்கலர் என்று

குற்றம்சாட்டுகிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் இருகைகளையும் இறுகப்பிணைத்து

தோளிலும் கழுத்திலும் நரம்புகள் புடைத்தெழ யானைபோல மெல்ல உறுமினான். “நாம்

திரும்பிச்செல்வதே நல்லதென்று நினைக்கிறேன் அரசே. இங்கே ஏராளமான லாஷ்கர

வீரர்கள் ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். நம்மால் அவர்களை வெல்லமுடியாது. நமக்கு

இவ்வாய்ப்பு தவறிவிட்டது என்றே கொள்வோம்.”

திருதராஷ்டிரன் மேலும் உரக்க உறுமினான். அவன் தோளில் தசைகளை நரம்புகள்

மந்தரமலையை வாசுகி உருட்டியது போல அசைக்கத் தொடங்கின. “என்ன நடக்கிறது?”

என்றான். விதுரன் “அரசே, நம் எதிரே மூன்று கூண்டுவண்டிகள் வருகின்றன. அவற்றில்

அவர்கள் இளவரசியரை சிறைப்பிடித்து கொண்டுசெல்கிறார்கள்” என்றான்.

திருதராஷ்டிரன் தணிந்த குரலில் “எங்கே கொண்டுசெல்கிறார்கள்?” என்றான். “தங்கள்

ஊருக்கு. இங்கிருந்து சென்றுவிட்டால் அவர்களிடமிருந்து இளவரசியரை நாம்

மீட்கமுடியாது.”

திருதராஷ்டிரன் தன் இருபெரும் கரங்களையும் பேரோசையுடன் அறைந்துகொண்டான்.

அவனுடைய போர்க்கூச்சல் கேட்டு அனைவரும் பதறிவிலக தன்னருகே நின்றவர்களை

இருகைகளாலும் தூக்கி பக்கங்களில் வீசியபடி திருதராஷ்டிரன் முன்னால் பாய்ந்து

சென்றான். அவனுடைய காதுகளும் சருமமும் நாசியும் பார்வைகொண்டன. அங்கிருந்த

ஒவ்வொரு பொருளும் அசைவும் அவனுக்குத் தெரிந்தது. அவன் காலடிகள் உறுதியுடன்

மண்ணை அறைந்தன.

அவன் தன்னெதிரே வந்த லாஷ்கர வீரர்களை வெறுங்கையால் அறைந்தே வீழ்த்தினான். மதகு

திறந்து பீரிடும் நீர்வேகத்தால் அள்ளி வீசப்பட்டவர்கள் போல அவர்கள் வானில்

கால்சுழல எழுந்து தெறித்தனர். அவன் கால்களுக்குக் கீழே விழுந்தவர்கள்

மிதிபட்டு அலறி நெளிந்தனர். அறைபட்டவர்கள் அனைவரும் அக்கணமே கழுத்து முறிந்து

சிலகணங்கள் உடல் வலிப்புற்று உயிர்துறந்தனர். வெயிலில் வீசப்பட்ட

புழுக்குவைபோல அங்கே மனித உடல்கள் நெளிவதை காந்தாரமக்களும் வீரர்களும் கைகள்

துவள விழிகள் வெறிக்க வாய் உலர நோக்கினர். புல்வெளியில் மலைப்பாறை உருண்ட

தடம்போல திருதராஷ்டிரன் சென்ற வழி தெரிந்தது.

திருதராஷ்டிரன் எதிரே வந்து முட்டிய முதல் ஒட்டகத்தை ஒரே அறையில் சுருண்டு

விழச்செய்தான். அது கீழே விழுந்து கழுத்தையும் கால்களையும் அசைத்தபடி

துடித்தது. அந்த வண்டியை நுகத்தைத் தூக்கி அப்படியே சரித்து உள்ளிருந்த

பெண்களை பின்பக்கம் வழியாகக் கொட்டிவிட்டு வண்டியையே கைகளால் தூக்கிச் சுழற்றி

அவனை அணுகியவர்களை அறைந்து தெறிக்கச்செய்தபின் வீசி எறிந்தான். லாஷ்கரர் அவன்

மேல் எறிந்த வேல்களும் எய்த அம்புகளும் அவனுடைய பெரிய உடலில் பட்டுத்

தெறித்தன. சில அவன் தசைகளில் தைத்து நின்று ஆடின. அவன் வாள்களை கைகளாலேயே

பற்றி வீசி எறிந்தான். உடலெங்கும் குருதி வழிய வாய் திறந்து வெண் பற்களின்

அடிப்பகுதி தெரிய வெறிகூவியபடி அவன் போரிட்டான். லாஷ்கரர் கையில் வேல்நுனிகள்

புயல்பட்ட புதர்முட்கள் என ஆடின.

அதற்குள் லாஷ்கரர் சிலர் கடைசி வண்டியை அப்படியே பின்னால் இழுத்துச்சென்று

அருகே இருந்த அரண்மனை முகப்பு நோக்கிச் சென்றனர். அதனுள்ளிருந்து காந்தாரியை

அவர்கள் இறக்கி தூக்கிக்கொண்டு சென்று உள்ளே புகுந்து கதவுகளை மூடிக்கொண்டனர்.

கதவு இழுபட்டு கூச்சலிட்டு பெரு விசையுடன் மூடும் ஒலியைக் கேட்ட

திருதராஷ்டிரன் தன் வழியில் வந்த ஓர் அத்திரியையும் இரு கழுதைகளையும் அவை

அடிவெண்மை தெரிய மண்ணில் விழுந்து அலறி கால் துடிக்கும்படி தூக்கி வீசியபடி

எஞ்சிய லாஷ்கரர்களை அறைந்து வீழ்த்திக்கொண்டு அக்கதவை நோக்கிச் சென்றான்.

அந்தப் பெருங்கதவை கால்களால் பேரொலியுடன் ஓங்கி மிதித்தான். அது பிளந்து நெளிய

கைகளால் அதை அறைந்து சிம்புகளாக பிய்த்துத் தெறிக்கவிட்டான்.

உள்ளே நுழைந்து இருகைகளாலும் மார்பில் ஓங்கி அறைந்தபடி போர்க்கூச்சல்

விடுத்தான். வேல்களும் வாள்களுமாக அவனை நோக்கிச்சென்ற முதல் இரு வீரர்கள்

அறைபட்டு விழ இருவர் தூக்கிச் சுவரில் வீசப்பட்டதும் அந்த மண்டபத்தின்

மூலையில் நின்றிருந்த காந்தாரி கைகூப்பியபடி “அரசே, நான் காந்தார இளவரசி

வசுமதி. உங்கள் மணமகள்” என்றாள். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்து மண்டபத்தின்

மரக்கூரையை அதிரச்செய்து வெறிக்குரல் எழுப்பியபடி சென்று அவளை ஒரேகையால்

சிறுகுழந்தை போலத்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவனைப்பார்த்ததும் வெளியே நிறைந்திருந்த பல்லாயிரம் விழிகள் அறிந்த

மொழியனைத்தையும் மறந்து சித்திரமலர்களாயின. தலையைச் சுழற்றியபடி ஒரு கையைத்

தூக்கியபடி தோளில் காந்தாரியுடன் வெளியே வந்த திருதராஷ்டிரன் நிமிர்ந்து அந்த

களமுற்றத்தில் நின்றான். அவனைச்சுற்றி மண்ணில் நெருப்பெழுந்த புதர்கள் என

உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. களத்தில் வண்டிகளின் மரச்சிம்புகளும் தெறித்த

ஆயுதங்களும் சிதறிக்கிடந்தன. இடக்கையால் குருதி வழிந்துகொண்டிருந்த விரிந்த

மார்பிலும் பெருந்தொடையிலும் ஓங்கி அறைந்து மதகரி என அவன் பிளிறினான்.

போர்நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிறிதும் அசையாமல் அத்திரிகள் மீது அமர்ந்து

அதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழு குலமூதாதையரும் அந்த ஒலிகேட்டு முகம்

மலர்ந்தனர். மூத்தவர் தன் தண்டை மேலே தூக்கினார். பிறர் கூச்சலிட்டபடி தங்கள்

தண்டுகளை மேலேதூக்க மொத்தநகரமே உச்சக் களிவெறி கொண்ட பெருங்கூச்சலாக வெடித்து

எழுந்தது.

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 4 ]

திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர்.

களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரனின் உடலில் இருந்த பன்னிரண்டு அம்புகளையும் பிடுங்கி எடுத்தனர் ஆதுரப்பணியாளர். சந்தனத்தைலத்தையும்,வேப்பெண்ணையையும் சற்றே கொதிக்கச்செய்து அதில் படிகாரம்சேர்த்து வற்றவைத்து அந்தக்கலவையில் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்துச்செய்யப்பட்ட லேபனத்தை காயங்கள்மேல் வைத்து அதன்மேல் சிறியவெப்பத்தில் இளக்கப்பட்ட பன்றிக்கொழுப்பைப் பூசி அது உறைவதற்குள் பன்றிக்குடலில் எடுத்த மெல்லிய சவ்வை வைத்து அழுத்தினர். அது அப்படியே காயங்கள் மேல் கவ்வி ஒட்டிக்கொண்டது. புண்களின் வலியையே அறியாதவனாக தலையை ஆட்டியபடி தனக்குள் மகிழ்ந்து திருதராஷ்டிரன் அமர்ந்திருந்தான்.

அவனுடைய கரியபேருடலை அவள் திரை வழியாகப் பார்த்தாள். தோலுக்குள் தசைகள் இருளுக்குள் பாதாள நாகங்கள் அசைவதுபோலத் தெரிந்தன. ஓருடலுக்குள் பத்துமனிதர்கள் வாழ்வதுபோல. தலையை சுழற்றிக்கொண்டும் பெரிய பற்கள் தெரிய வாயை அசைத்துக்கொண்டும் இருந்த அரக்கவடிவினனைப் பார்த்தபோது அவளுக்குள் என்ன உணர்வுகள் எழுகின்றன என்றே அவளால் உணரமுடியவில்லை. அச்சம்தான் முதலில். அவள் கால்களின் நடுக்கம் அப்போதும் நிற்கவில்லை. விரல்நுனிகள் குளிர்ந்திருந்தன. உடலெங்கும் வியர்வை உப்பாக மாறத்தொடங்கியிருந்தது. வியர்வை உலர்வதுபோல அச்சமும் மறைந்தபோது ஒருவகை பதற்றம் மட்டும் எஞ்சியது. அந்தப்பதற்றம் ஏன் என்று எண்ணியபோது அந்தப் பேருருவம் அளிக்கும் ஒவ்வாமைதான் காரணம் என்று புரிந்துகொண்டாள்.

அவள் எண்ணியிருந்த ஆணுடலே அல்ல அது. அவளுக்குள் சூதர்பாடல்களும் தோழியர்களின் பேச்சுக்களும் கொண்டுவந்து நிறைத்த ஆண்மகன் மெல்லிய உடலும் சிவந்த நிறமும், பிங்கலநிறமான பருந்துச்சிறகுக்குழலும் சிவந்த சாயமிட்ட தாடிக்குள் அழகிய வெண்பல் சிரிப்பும், குறும்பு திகழும் கண்களும், கனிந்த மென்குரலும் கொண்ட இளைஞன். வெண்குதிரையில் விரிநிலத்தில் பருந்தெனப் பாய்பவன். கோடைமழைவானில் மின்னலெனச் சுழலும் ஒண்வாளை ஏந்தியவன். உச்சிமரத்துத் தனிமலர்களை காம்புமட்டும் அறுபட இதழ்குலையாது அம்பெய்து வீழ்த்தும் வில்லவன். எதிரே அமர்ந்திருந்த அரக்கனின் கைகளோ வேங்கையின் அடிமரம்போலிருந்தன. புடைத்தவேர்கள் போல நரம்புகள் ஓட அவை இணைசேரும் மலைப்பாம்புகள் என அசைந்தன. அவன் கண்கள் திறந்தகுங்குமச்சிமிழ் போலத் தெரிந்தன. அவள் திணறும் மூச்சுடன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

குலமூத்தார் அவளை திருதராஷ்டிரனுக்கு கையளிப்பதாக அறிவித்ததை அவள் கேட்டாள். தன் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடியதை, உள்ளங்கால் அதிர்ந்ததை அறிந்ததும் இன்னொன்றை உணர்ந்தாள். அவளுக்காக அவன் வெறும்கைகளால் கதவைப்பிளந்து உள்ளேவந்த அக்காட்சியை அவள் ஆன்மா ஒருபோதும் மறக்கப்போவதில்லை. அவளுடைய ஆழத்தில் வாழ்ந்த ஷத்ரியப்பெண் புளகம்கொண்ட தருணம். ஷத்ரியப்பெண்ணுக்கு வீரன் அளிக்கத்தக்க மாபெரும் பரிசு அது. இன்னொரு ஆணை இப்போது அவள் ஏற்கவேண்டுமென்றால், அவன் அவளுடைய பகற்கனவுகளில் வாழும் அந்தப் பேரழகன் என்றாலும் கூட, இந்த அரக்கனிடம் மற்போரிட்டு வென்றுவரும்படிதான் அவளால் சொல்லமுடியும்.

அவள் மீண்டும் திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய உடலை காலில் இருந்து தலைவரை கூர்ந்தாள். என்ன ஒரு முழுமை என்று அப்போதுதான் அவளுடைய பெண்ணுடல் கண்டுகொண்டது. ஒவ்வொரு தசையும் அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தன. கால்விரல்நகங்கள் ஒவ்வொன்றிலும் தாரநாகத்தின் தேய்ந்து உருண்டு பளபளப்பான வெண்கல்லின் ஒளிமிக்க பார்வை இருப்பதுபோலப் பட்டது. கருங்கல்லால் செதுக்கப்பட்டதுபோன்ற கணுக்கால்கள். உழலைத்தடியென இறுகிய கெண்டைக்கால். நின்றசையும் குதிரையின் தசைகளைக் காட்டிய பெருந்தொடைகள். எட்டு பாளங்களாக இறுகிய வயிறு. மயிரே இல்லாமல் எருமைத்தோல் என கருமையாகப் பளபளத்த அகன்ற மார்பு. சுருண்ட கரிய தலைமயிர்.

அவள் அப்போதுதான் அவனுடைய விரல்கள் அசைந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். என்ன செய்கிறான்? அவன் காற்றில் தாளமிட்டுக்கொண்டிருக்கிறான் என்று கண்டுகொண்டாள். சிலகணங்களுக்குள் அவன் உடலே அவனுள் ஓடும் இசைக்கேற்ப மெல்ல அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள். பாடுகிறானா? உதடுகள் அசையவில்லை. ஆனால் முகம் கனவில் மூழ்கி இருந்தது. இசை கேட்கிறான்! தன்னுள் இருந்து எடுத்த இசையை. அல்லது காற்று அவன் ஆன்மாவுக்கு நேரடியாக அளித்த இசையை.

அவனைச்சுற்றி பல்லாயிரம்பேர் பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். பெருமுரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இலைத்தாளங்களும் ஓசையிட்டன. அங்கிருந்த விழிகளெல்லாமே அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அவன் அவர்களிடமிருந்து மிக விலகி இளங்காற்றில் தன்னைத்தானே மீட்டிக்கொண்டிருக்கும் கருங்குளிர்ச்சுனை என இசையாடிக்கொண்டிருந்தான். பாலைவனக் காற்றில் கைவிரித்து நடமிடும் ஒற்றை ஈச்சை மரம் போல. மௌனமாக பொழிந்து உருமாறிக்கொண்டே இருக்கும் பாலை மணற்குன்றுபோல.

அவளுக்கு அவனருகே செல்லவேண்டும் போலிருந்தது. அவன் உடல் ஒரு மாபெரும் யாழைப்போல இசையால் நிறைந்திருக்குமென்று தோன்றியது. அந்த கனத்த கைவிரல்களைப் பற்றிக்கொண்டால்போதும், அதைக் கேட்கமுடியும். அது என்ன இசை? அன்றுவரை அவள் கேட்காத இசை. அவள் உடல் புல்லரித்து கண்கள் கலங்கின. அப்போது அவளறிந்தாள், அவள் அவன் மனைவியாகிவிட்டிருப்பதை. இனி வாழ்நாளெல்லாம் அவள் வேறெதுவுமல்ல என்பதை.

திரைக்குள் வந்த சேடியர் அவள் உடைகளை சீர்படுத்தி குங்குமமும் மங்கலங்களும் அணிவித்தனர். சங்கொலி அறிவிக்க, திரைவிலக்கி அவள் வந்தபோது கூட்டம் கைகளை வீசி அணியணியாகக் கண்கள் மின்ன வாழ்த்தொலி எழுப்பியது. களமுற்றத்திலேயே இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு கையளித்தனர் ஏழுகுலமூதாதையர். அவன் வந்து அவள் முன் நின்றபோது அவளால் ஏறிட்டுநோக்கவே முடியவில்லை. அவனுடைய மின்னும் கால்நகங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய பெரிய கைகளுக்குள் அவளுடைய சிறிய கைகளை பிடித்து வைத்து அதை வண்ணம் தோய்த்த பனையோலையால் கட்டினார் குலமூத்தார். அவளுடைய வெண்ணிறக் கை அவனுடைய கரிய கைக்குள் யானை மருப்பில் வெண்தந்தம்போலத் தெரிந்தது. அவனுடைய உள்ளங்கை கல்போன்றிருந்தாலும் உயிர்துடிப்பு கொண்டிருந்தது.

குலமூத்தார் நன்மணம் அறிவிக்க, கூடி நின்ற லாஷ்கரர்கள் கூச்சலிட்டபடி தங்கள் ஆயுதங்களை வானோக்கி வீசினர். வாழ்த்தொலிகளும் முரசொலிகளும் சேர்ந்து காந்தாரநகரியே பெருமுரசு போல வானைநோக்கி உறுமியது. ஏழுமூதாதையரும் அந்த மணநிகழ்வுக்கு அனுமதி அளித்த செய்தியை அவர்களின் நிமித்திகன் கூவியறிவித்ததும் அரண்மனை முரசு இமிழத்தொடங்கியது. அரண்மனைக்குள் மங்கலக்குறுமுரசும் கொம்புகளும் ஓசையிட்டன. வைதிகர் நிறைக்கலம் ஏந்தி நீர்தெளித்து வேதமோதி வழியொருக்க, சூதர் இசைமுழக்க, குடையும் கவரியும் செங்கோலும் துணைவர, மணிமுடி சூடி முழுதணிக்கோலத்தில் சுபலரும் அவர் துணைவியான சுகர்ணையும் களமுற்றத்துக்கு வந்தனர். அங்கிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர்.

சுபலரின் வலப்பக்கம் மைந்தர்களான அசலனும் விருஷகனும் சகுனியும் நிற்க இடப்பக்கம் பட்டத்தரசி சுகர்ணையும் விருஷ்டி, சுதமை, சித்ரை, பத்மை என்னும் நான்கு மனைவியரும் நின்றனர். பின்னால் அமைச்சர்கள் நின்றனர். நிமித்திகர் கோலைத்தூக்கியதும் அமைதி எழுந்தது. அவர் மாமன்னர் சுபலர் தன் பிற பத்து மகள்களையும் அஸ்தினபுரியின் அரசனாகிய திருதராஷ்டிரனுக்கு அளிக்கவிருப்பதாக அறிவித்ததும் மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

சுகதரும் சத்யவிரதரும் வந்து அழைக்க பீஷ்மரும் திருதராஷ்டிரனும் விதுரனும் முன்னால் சென்றனர். அஸ்தினபுரியின் அரண்மனைப்பெண்களும் அணிப்பரத்தையரும் பின்னால் தொடர்ந்தனர். சேவகர்களும் பரத்தையரும் அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவந்திருந்த மங்கலப்பொருட்களை காந்தாரமன்னனுக்கு வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்டு சுபலர் முதலில் காந்தாரியான வசுமதியை தர்ப்பையணிந்த விரல்களால் பொற்கிண்ணத்து நீரை ஊற்றி திருதராஷ்டிரனுக்கு கன்னிக்கொடை அளித்தார். அதன்பின் சுபலர் சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை என்னும் பத்து மகள்களையும் திருதராஷ்டிரனுக்கு அளித்தார்.

அங்கிருந்தே அரசகுலத்தவர் ஏழு ரதங்களில் லாஷ்கரர்களுடன் கிளம்பி ஆரியகௌசிகை ஆற்றங்கரைக்குச் சென்றனர். காந்தாரி ரதத்தில் இருந்தபடி திரையின் இடைவெளிவழியாக வெளியே ஓடிய பாலைநிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆரியகௌசிகை ஆற்றின் சரிவு மிக ஆழமானது. ஆனால் உள்ளே நீர் குறைவாகவே ஓடியது. பாம்புச்சட்டைபோல கரிய நீர் வெயிலில் அலைமின்னிக் கிடந்தது. அதன்கரையில் நின்றிருந்த தொன்மையான வேங்கை மரத்தின் அடியில் இருந்தது மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்ட லாஷ்கரர்களின் ஆறுதேவதைகளின் ஆலயம்.

நெடுங்காலம் அந்த ஆலயம் இயற்கையான கற்பாறையை செதுக்கி உருவாக்கப்பட்ட பீடத்தின்மேல் நிறுவப்பட்ட ஆறு கற்களாகவே இருந்தது. சுபலரின் காலகட்டத்தில்தான் அந்தப்பாறையை உள்ளடக்கி மரத்தாலான கூரைகொண்ட சிறியகட்டடம் எழுப்பப்பட்டது. பாலை மண்ணின் நிறங்களான சாம்பல், செங்காவி, மஞ்சள், தவிட்டு நிறம், வெண்மை, கருமை ஆகியவற்றால் ஆனவையாக இருந்தன அந்தக் கற்கள். நெடுங்காலம் முன்பு ஏதோ மூதாதையர் கைகளால் செதுக்கப்பட்ட ஒழுங்கற்ற வடிவம் கொண்ட குத்துக்கற்கள்மேல் கண்கள் மட்டும் செவ்வண்ணத்தால் வரையப்பட்டிருந்தன.

லாஷ்கரப் பூசகர் ஆறு அன்னையருக்கும் குருதிபூசை செய்தனர். திருதராஷ்டிரனும் இளவரசியரும் குருதியுணவை உண்டபின் பன்னிருமுறை அன்னையரைச் சுற்றிவந்து வணங்கினர். பூசனை முடிந்தபின் லாஷ்கரப்பூசகர்கள் மேற்குநோக்கி கண்களைத் திருப்பியபடி அசையாமல் காத்துநின்றனர். ஒருநாழிகை நேரம் அவர்கள் அசையாமல் நிற்க பிறரும் நின்றனர். விதுரன் அவர்கள் காற்றுக்காக காத்துநிற்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

ஒன்றும் நிகழவில்லை. ஆனால் ஒருபூசகர் மெல்லியகுரலில் ஏதோ சொன்னார். மற்றவர்களும் ஆமோதித்தனர். நெடுந்தொலைவில் சருகுகள் மிதிபடும் ஒலி போல ஏதோ கேட்டது. காற்று மூங்கில்துளைகள் வழியாகச் செல்லும் ஒலி போல மெல்லிய ஓசை கேட்டதா இல்லையா என மயக்களித்துக் கடந்துசென்றது. பின்னர் வானில் ஒளி குறையத்தொடங்கியது. அதற்கேற்ப நிலம் மங்கலடைந்து இருண்டது. மேலும் மேலும் ஒளி சிவந்தபடியே வந்தது. காய்ந்து வற்றி முறுகும் தேன்பாகு போல. சற்றுநேரத்தில் செம்பழுப்புநிறப் படிகம் வழியாகப் பார்ப்பதுபோல பாலை இருண்ட ஒளிகொண்டது. உறையத்தொடங்கும் குருதி போல சிவந்து சிவந்து இருளாகியது.

மேற்குவானில் ஒரு சிவந்த திரை எழுவதை காந்தாரி கண்டாள். மிகவேகமாக அது வானில் தூக்கப்பட்டது. மெல்லொளிபரவிய வானை அது மூடியபடியே வந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான அலைமுனைகள் திரண்டு வருவதை அதன்பின் கண்டாள். எழுந்து தலைக்குமேல் அவை தெரிந்த கணத்தை அவள் சரிவர உணர்வதற்குள் புழுதிப்புயல் அவர்கள் மேல் மூடி மறுபக்கம் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தது. மூச்சுவிடுவதற்காக முகத்தை துணியால் மூடியபடி அவர்கள் குனிந்து நின்றிருந்தனர். அலையலையாக புழுதி அவர்களை அறைந்தது. கூரிருள் சூழ்ந்த மௌனத்துக்குள் புயலின் ஒங்காரம் மட்டும் நிறைந்திருந்தது.

புயலில் நிற்பது ஒருவகை ஊழ்கம் என்று காந்தாரி பலமுறை உணர்ந்திருந்தாள். புயலையல்லாமல் வேறெதையுமே நினையாமல் காலம் அணைந்து கருத்தணைந்து நின்றுகொண்டிருக்கும் நிலை அது. ஆனால் முதல்முறையாக சிலகணங்களுக்குள் அவள் திருதராஷ்டிரனை நினைத்தாள். அவனுக்குப்பழக்கமில்லாத புயல் அவனை அச்சுறுத்துமோ என்ற எண்ணம் வந்ததும் அவள் மெல்ல கைகளை நீட்டி அவன் இடக்கையைப் பிடித்துக்கொண்டாள்.

துயில் விழிப்பதுபோல அவள் மீண்டு வந்தபோது அவளைச்சுற்றி முழுமையாகவே இருட்டு நிறைந்திருந்தது. இருளுக்குள் ஒரு ரீங்காரம் போல வெகுதொலைவில் புயல் கடந்துசெல்லும் ஒலி கேட்டது. மெல்ல மேலைவானில் திரை நகர்ந்து ஒரு இடைவெளி உருவாகியது. புன்னகை மலர்ந்து விரிநகையாவதுபோல அது விலகியது, அவர்களைச் சுற்றி மங்கிய ஒளி பரவியது.

அவர்களனைவரும் செம்மண்சிலைகள் போல நின்றிருந்தனர். அவள் திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய பெரிய தோள்களில் இருந்து மெல்லியபுழுதி வழிந்துகொண்டிருந்தது. அவள் அப்போதுதான் மறுபக்கம் விதுரன் அவனுடைய வலக்கையைப் பற்றியிருப்பதைக் கண்டு தன் கையை விட்டாள். அதற்குள் விதுரன் அவள் கண்களைச் சந்தித்து புன்னகை புரிந்தான்.

விதுரன் திருதராஷ்டிரனிடம் "அரசே தங்கள் உடலைத் தூய்மையாக்குகிறேன்" என்றபின் ஆடையால் திருதராஷ்டிரனின் தோள்களையும் மார்பையும் தட்டத் தொடங்கினான். காந்தாரி தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு முழுக்கவனத்தையும் அவன் மேலேயே வைத்திருந்தாள். குலப்பூசகர் குனிந்து அன்னையின் முற்றத்தில் கிடந்த கற்களை எண்ணினர். நூற்றியொரு கற்கள் இருந்தன. குலமூத்தார் லாஷ்கர மொழியில் ஏதோ சொல்ல மற்ற லாஷ்கரர் உரக்கச் சிரித்தனர்.

"என்ன சொல்கிறார்கள்?" என்று விதுரன் மெல்லிய குரலில் சத்யவிரதரிடம் கேட்டான். "முற்றத்தில் புயல்கொண்டுபோடும் கற்களை எண்ணி பிறக்கப்போகும் குழந்தைகளை கணிப்பது வழக்கம். நூற்றியொரு கற்கள் விழுந்திருக்கின்றன" என்றார் சத்யவிரதர். விதுரன் புன்னகைசெய்தான். அந்தச்செய்தி காந்தார சேவகர்கள் மற்றும் சேடிகள் வழியாகப் பரவுவதையும் இளவரசிகள் அனைவரும் நாணுவதையும் புன்னகை செய்வதையும் கவனித்தான்.

"விதுரா, மூடா... ஒன்றை கவனித்தாயா?" என்றான் திருதராஷ்டிரன். "இத்தனை பெரிய புயல் மந்திரஸ்தாயியில்தான் ஒலிக்கிறது." விதுரன் "நான் அதை கவனிக்கவில்லை" என்றான். திருதராஷ்டிரன் "நான் அதை மட்டுமே உணர்ந்தேன். மிகப்பிரம்மாண்டமான ஒரு குழல்வாத்தியத்தை மிகமிக மெல்ல வாசிப்பதுபோலிருக்கிறது அதன் நாதம்... புயலோசை ஒருவகையில் செவ்வழிப்பண்ணை ஒத்திருக்கிறது" என்றான். மேலே பேசமுடியாமல் கைகளைத் தூக்கினான். "என்னால் சொல்லமுடியவில்லை. விதுரா, முன்பொருநாள் வைதிகரான பாடகர் ஒருவர் திருவிடத்தில் இருந்து வந்தாரல்லவா? அவர் ஒரு சாமவேத நாதத்தைப் பாடிக்காட்டினாரே!"

"ஆம்" என்றான் விதுரன். "அவர் பெயர் சுதாமர். பவமானன் என்னும் நெருப்பின் மைந்தனை ரிஷி சத்யன் பாடியது." "அதன் வரிகளைச் சொல்" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் சிறிது சிந்தித்துவிட்டு அவ்வரிகளைப் பாடினான்.

பேரோசையிடும் நதியலை போல

குரலெழுப்பியபடி உனது வல்லமைகள்

எழுந்து வருகின்றன!

ஒளிவிடும் கூரம்புகள்

போலப் பொங்கி வருக!

சூரியனுக்கு உறவினனே,

விண்ணகத்தில் நீ பெருகும்போது

உன் பொழிவில் திளைப்பவர்களின்

மும்மொழிகள் வானோக்கி எழுகின்றன!

அன்புக்குரிய மது நிறைந்த பவமானனை

ஒளிவிடும் கற்களால் வழிபடுவோம்!

இனியவனே, கவிஞனே,

இறைவனின் இடத்தை சென்றடைபவனே,

இந்தப் புனிதவேள்வியிலே பொழிக!

மகிழ்வளிப்பவனே,

பாலொளிக்கதிர்களாக பெருகுக!

இந்திரனின் வயிற்றில் சென்று நிறைக!

"ஆம்..." என்றான் திருதராஷ்டிரன். கைகளை மேலே தூக்கி ஒலியெழாச் சொற்களின் உந்தலை உடலால் வெளிப்படுத்தி "அவ்வரிகளை இன்றுதான் உணர்ந்தேன். இப்போது வந்தவன் பவமானன். சூரியமைந்தன். அவனைக்கண்டு மண் எழுப்பும் மும்மொழி வானோக்கி எழும் நாதத்தைக் கேட்டேன். காயத்ரி சந்தம்....உதடுகளில் எழாமல் காதை அடையாமல் கருத்தில் நிறையும் சந்தம் அது. மந்திரஸ்தாயி. ஆம்...மண்ணிலுள்ள அனைத்து கற்களும் வைரங்களாக மாறி அவனை வணங்கின. கோடானுகோடி கூரம்புகளின் ஒளியுடன் பாலின் வெண்மையுடன் அவன் பெருகி வானை நிறைத்தான்."

காந்தாரி அவன் முகத்தையே விழிமலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் பீஷ்மர் கைகாட்ட பலபத்ரர் வந்து "அரசே, சோலைக்குச் செல்லலாமென பிதாமகர் ஆணையிட்டார்" என்றார். விதுரன் கைகளைப் பிடிக்க திருதராஷ்டிரன் நடந்தான். அவனுக்குள் அந்தவேதவரிகள் இசைக்கப்படுவதை அவன் முகம் காட்டியது. கனவில் மிதந்து செல்பவன் போல அவன் நடப்பதைக் கண்டு நின்றபின் அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். விதுரன் காந்தாரியை நோக்கி புன்னகை செய்துவிட்டுச்சென்றான்.

பகுதி ஐந்து : முதல்மழை

[ 1 ]

காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள் கையில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் காப்புச்சரடை மூன்று மங்கலையன்னையர் சேர்ந்து அவிழ்த்தனர். சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர்.

அவள் மீண்டும் நீராடி அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவரப்பட்டு அவளுக்கு மணக்கொடையாக அளிக்கப்பட்ட கலிங்கத்துப் பட்டாடையை அணிந்துகொண்டாள். மூதன்னையர் எழுவர் அவள் கன்னத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவையைப் பூசி அவள் நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்தினர். முதியவள் அவளிடம் "இன்றுமுதல் நீ அஸ்தினபுரியின் மருமகளானாய். நீ வாழ்க! உன் உதரத்திரை விலக்கி இவ்வுலகுக்கு வரும் அரசகுமாரர்கள் வாழ்க. உன் நாடு பொலிக!" என்றாள்.

ஏழுநாட்கள் இரவும்பகலும் சடங்குகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் அச்சடங்குகளே அன்றாடச் செயல்களாக ஆகி அவள் அதிலேயே வருடக்கணக்காக வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றத் தொடங்கியது. காந்தாரநகரியின் இருவேறு உலகங்களிலும் மாறிமாறிச் சென்றுகொண்டிருந்தாள். லாஷ்கரர்குலத்துச் சடங்குகள் முடிந்ததும் வைதிகச்சடங்குகள் தொடங்கின. அவைமுடிந்ததும் மீண்டும் லாஷ்கர குலத்துச் சடங்குகள்.

அரண்மனைமுகப்பில் கட்டப்பட்ட பந்தலில் மணமேடையில் அமர்ந்து ஐந்து பருப்பொருட்களின் அடையாளமாக வைக்கப்பட்ட பிடிமண், மண்ணகல், நீர்க்குடம், ஊதுகொம்பு, வெண்திரை ஆகியவற்றை சான்றாக நிறுத்தி திருதராஷ்டிரன் அவள் கழுத்தில் ஓலைத்தாலியைக் கட்டினான். மங்கலநீரால் அவள் கால்களை நீராட்டி மஞ்சள் தொட்டுவைத்து அந்தக்காலைத் தூக்கி தன் இடது தொடையில் வைத்துக்கொண்டு தன் உடலின் இடப்பகுதியாக அவளை ஏற்றுக்கொண்டான். அவள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிப்பனை பூவில் கட்டியமாலையை அவனுக்குப் போட அவன் தன் கழுத்துமாலையை அவளுக்குப்போட்டான். மும்முறை மாலை மாற்றியபின் அவன் அவளுக்கு மலர்களால் பொதியப்பட்ட புத்தாடையை அளிக்க அவள் அவனுக்கு தாம்பூலம் சுருட்டிக்கொடுத்தாள். அவன் அவளுடைய கைகளைப்பற்றிக்கொண்டு ஏழு காலடிகள் வைத்து நடந்தபோது அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் குலமூத்தார் பெற்றோர் ஆசிரியர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றனர்.

மறுநாள் எதிரே இருந்த வேள்விச்சாலையில் வைதிக மணம். மூன்று எரிகுளங்களில் எரிந்த முத்திசை நெருப்பை சான்றாக்கி அவன் அவளை அறத்துணைவியாக்கினான். முதலில் இறைவேட்டல் சடங்கில் அவனுடைய குலதெய்வத்தை அவளும் அவள்குலதெய்வங்களை அவனும் ஏற்றுக்கொண்டு வணங்கினர். பின்னர் குலமங்கலச்சடங்கில் திருதராஷ்டிரனின் பிதாமகராகிய பீஷ்மரும் அவள் தந்தையும் தாம்பூலங்களும் மங்கலங்களும் கைமாறிக்கொண்டனர். இருவருடைய குலமுறைமையை நிமித்திகர் கூவி அவைக்கு அறிவித்தனர். இளங்கொம்பு நாட்டல் சடங்கு தொடர்ந்தது. அவனும் அவளும் சேர்ந்து ஆலமரக்கொம்பு ஒன்றை நட்டு அதற்கு நீரூற்றினர். அவர்களின் குலம்போல அது அம்மண்ணில் தழைக்குமென்றனர் வைதிகர்.

திருதராஷ்டிரன் கையில் வேள்விக்கங்கணத்தை வைதிகர் கட்டினர். அவர்கள் இருவரும் இணைந்து மூதாதையருக்கு அரிசியும் நீரும் அளித்து வணங்கினர். திருதராஷ்டிரன் தன் மாணவநோன்பை கைவிடுவதாக உறுதிமொழி சொன்னான். அவனிடம் காந்தார நாட்டு இளவரசியை அவன் மணந்துகொள்கிறானா என்று வைதிகர் கேட்க அவன் ஆம் என்றபின் சுபலர் அவளை அவனுக்கு நீர் ஊற்றிக் கையளித்தார். வேதமந்திரங்கள் சூழ அவள் கைபற்றி ஏழடி நடந்து நன்மக்கள் பேறுக்கென முன்னோரை வாழ்த்தினான். வைதிகர் மண்ணகலில் வேள்விநெருப்பைக் கொளுத்திக் கொடுக்க காந்தாரி அண்ணாந்து வடமீனை நோக்கியபடி அஸ்தினபுரியின் வாசலென போடப்பட்டிருந்த கருங்கல்லை மிதித்து கையில் தீபத்துடன் கிழக்குநோக்கி மூன்றடி எடுத்துவைத்து அவன் இல்லம்புகுந்தாள். மங்கல நாதம் முழங்க அவளை அவன் மனைவி என வேதங்கள் ஏற்றுக்கொண்டன.

மறுநாள் அவள் கையின் காப்புச்சரடுகள் அவிழ்க்கப்பட்டபோது அவள் காந்தாரநகரியில் ஊன்றிவிரிந்த தன் வேர்கள் விடுபடும் உணர்வை அடைந்தாள். அவன் மணக்கொடையாக அளித்த பட்டு அவனுடைய கைகளாகவே அவளைத் தழுவியது. மங்கலப்பெண்கள் வழிநடத்த மஞ்சத்துக்குச் சென்று அவனுக்காக அங்கே காத்திருந்தபோது தன் மேலாடைக்குள் இருந்து அந்த சிறிய தாலிச்சுருளை எடுத்து பார்த்துக்கொண்டாள். அத்தனை சடங்குகளும் பாற்கடலைக் கடைவதுபோலத் திரட்டி எடுத்த அமுதத்துளி அது என்று தோன்றியது.

மூன்று சூதப்பெண்கள் உள்ளே வந்து அவள்முன் அமர்ந்தனர். ஒருத்தி யாழும் இன்னொருத்தி குறுமுழவும் மூன்றாம் பெண் சோழிகள் அடங்கிய தோல்பையும் வைத்திருந்தார்கள். மூத்த சூதப்பெண் "அரசி, நாள்மங்கலம் நோக்கி இன்றைய தேவனை எழச்செய்ய நாங்கள் வந்திருக்கிறோம்" என்றாள். காந்தாரி பெருமூச்சுடன் தலையசைத்தாள். சூதப்பெண் தரையில் பன்னிரு களங்களை வரைந்து எண்களை எழுதியபின் தோல்பையில் இருந்து பன்னிரு சோழிகளை எடுத்துப்பரப்பினாள். கணிதத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றாக நீக்கி கடைசியில் இளஞ்சிவப்பான ஒரு சோழியை தொட்டு நின்றாள்.

"அரசி, ஆதித்யர்கள் பன்னிருவர். விஷ்ணு, சுக்ரன், ஆர்யமான், தாதா, த்வாஷ்டன், பிருஷன், விவஸ்வான், சவிதன், மித்ரன், வருணன், அம்ஸு, பகன் என அவர்கள் இப்பூமியை தங்கள் ஒளிமிக்க விழிகளால் விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாள் கடைசி ஆதித்யனான பகனுக்குரியது. பகனுடைய கதையை சொல்கிறேன். அவன் வாழ்க" என்றாள் சூதப்பெண்.

பன்னிரண்டாவது ஆதித்யனான பகன் காசியபகுலத்தில் உதித்தவன். அளவிலாத ஆற்றல் கொண்டவன். ஆகவே அளவில்லாத விடாய் கொண்டவன். அவனுடைய கண்கள் கோடிச் சூரியன்களைப்போல அனலெழுந்தவை. அவை விண்ணகநெருப்பையெல்லாம் உறிஞ்சி உண்டன. விண்ணகப் பாற்கடலை ஒளியவரும் இருளவரும் சேர்ந்து கடைந்து அழிவின்மை எனும் அமுதத்தை எடுத்தபோது தணியாத பெருவிடாயுடன் அக்கலத்தை நோக்கிய பகன் ஆதித்யர்களின் இயல்புக்கேற்ப நோக்கையே உடலாகக் கொண்டு நோக்கும்பொருளை எட்டமுடிபவனாதலால் பிறர் தொடுமுன்னரே அமுதத்தைத் தொட்டு உண்டான். அன்னை ஏந்திவந்த அமுதத்தில் பெரும்பகுதி அவன் ஆகமாகியது.

தேவர்கள் உடைமுடைந்து கதறினர். மாலும் அயனும் சென்று அரனை வணங்கி கோரினர். முக்கண்ணனின் சினம் ருத்ரன் என்னும் செந்தழலாக விண்ணகங்களை மூடி எழுந்தது. ருத்ரனின் கோடித்தழல் கிரணங்கள் அம்புகளாக எழுந்து வெளியெங்கும் பரவின. பேரொளி சிற்றொளியை கருகச்செய்ய பகன் விழியிழந்து கருங்கோளமாகி தன்னை தான் மட்டுமே அறிய வெளியில் தனித்தலையத்தொடங்கினான்.

விழியிழந்தவன் வாழும் இருளில் பகன் விண்ணகவெளியில் நூறாயிரம் கல்பகாலம் சுழன்றலைந்தான். அவனுடைய துணைவி ஸித்தி அவனை ஒளிவிரலால் தீண்டி இடிக்குரலால் ஓச்சி வழிநடத்திச் சென்றாள். அவன் வலிமைகுன்றக்குன்ற அவளுடைய காதல் பெருகியது. அக்காதலே அவளை ஒளிபெறச்செய்தது. அவள் அவனுடைய நெற்றியில் ஒரு தண்ணொளி சிந்தும் கண்ணாகச் சென்று அமர்ந்தாள். அவ்வொளியில் பார்வையைப் பெற்ற பகன் முன்னிலும் மகிழ்வுகொண்டவனானான்.

தன்னால் விழிபறிக்கப்பட்ட பகன் எப்படி விழிகொண்டவனானான் என்று ருத்ரன் வியந்து நோக்கினான். அவன் ஸித்தியின் பெருந்தவ நெருப்பைக் கண்டறிந்தான். அந்தக் காதலுக்கு தலைவணங்கி மீண்டும் பகனுக்கு அவன் விழிகளை அளித்தான். ஆனால் இம்முறை அவ்விழிகளில் விடாயென ஏதும் இருக்கவில்லை. அவை மலர்களைத் தழுவி ஒளியை அளிக்கும் அதிகாலைச் சூரியனைப்போல குளிர்ந்து கனிந்திருந்தன.

சூதப்பெண் பாடிமுடித்தாள் "ஆதித்யர்களின் மகளாகிய பூமாதேவி வாழ்க! அவளில் மலர்களாக விரிந்திருக்கும் காந்தாரமும் அஸ்தினபுரியும் வாழ்க. ஆம் அவ்வாறே ஆகுக!" காந்தாரி வணங்கி அவர்களுக்கு பொன்நாணயங்களைப் பரிசளித்து வழியனுப்பி வைத்தாள். தீபச்சுடர் அசையும் இரவில் சூதப்பெண்களின் சொற்களை எண்ணிக்கொண்டு அவள் அமர்ந்திருக்கையில் கனத்தகாலடிகளுடன் திருதராஷ்டிரன் வரும் ஓசை அம்மாளிகையின் இதய ஒலியென கேட்டது.

இருபாங்கர்களால் அழைத்துவரப்பட்ட திருதராஷ்டிரன் கதவைத் திறந்து உள்ளே அனுப்பப்பட்டான். அவனுடைய உயரத்துக்கும் உடலளவுக்கும் மிகச்சிறியதாக இருந்த அறைவாயில் அவனை உள்ளே அனுப்பிவிட்டு மூடிக்கொள்ள குனிந்து அவன் வந்தது பிதுங்கி உள்ளே நுழைவதுபோலத் தோன்றியதும் காந்தாரி புன்னகைசெய்தாள். எழுந்து அவனைப்பார்த்து நின்றாள். அவன் உள்ளே வந்து நிமிர்ந்து தலையைச் சுழற்றி கைகளை ஒன்றுடனொன்று சேர்த்துக்கொண்டான். முகத்தைச் சுளித்து தாடையை முன்னால் நீட்டினான்.

அவனுடைய மாறுபட்ட உடலசைவுகளின் காரணம் அவளுக்குப்புரிந்தது. அவன் ஒலிகளைக் கேட்க காதுகளைத் திருப்புகிறான். பெரும்பாலும் முன்னால் ஒலிக்கும் குரல்களைக் கேட்க காதுகளை முன்னால் கொண்டுவருவதற்காகவே முகத்தை பக்கவாட்டில் திருப்பிக்கொள்கிறான். அவனுடைய பெரிய கரங்களை தொங்கவிடுவது கனமாக இருப்பதனால் இரு உள்ளங்கைகளையும் கோர்த்துக்கொள்கிறான். வாசனைகளுக்காக மூக்கை கூர்ப்படுத்தும் அசைவே நாசியைத் தூக்கி முகத்தை சுளிக்கச்செய்கிறது. அவள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே நின்றாள். முதலில் பார்த்தபோது அவனை பிறரிடமிருந்து விலக்கி விசித்திரமான விலங்குபோலத் தோன்றச்செய்த ஒவ்வொன்றும் அவனுடைய விருப்பூட்டும் தனித்தன்மைகளாக மாறிக்கொண்டே செல்வதை அவள் அறிந்தாள்.

அவன் சில அடிகள் முன்னால் நகர்ந்தபின் அவளை உணர்ந்துகொண்டான். உடனே பின்னால் நகர்ந்து மரச்சுவரில் ஒலியுடன் முட்டிக்கொண்டு அசைவில்லாமல் நின்றான். காந்தாரி மெல்ல வளையல்களும் அணிகளும் ஒலிக்க ஆடை மடிப்புகள் விரிந்தொசிந்து ஒலிக்க சென்று அவனை அணுகி எந்தத் தயக்கமும் இன்றி அவன் கைகளைத் தொட்டாள். "அரசே, நான் வசுமதி" என்றாள். அவன் உடல் துள்ளி அதிர கைகளைப் பின்னாலிழுத்துக்கொண்டான். மேலும் பின்னகர்பவன்போல சுவரில் முதுகை உரசினான். அவன் தாடை அசைய கழுத்துத்தசைகள் அதிர்ந்தன.

"அரசே, நான் தங்கள் அறத்துணைவி. தங்களை அடைந்ததனால் இப்புவியிலேயே நல்லூழ் கொண்டவளாக உணர்பவள்" என்றாள். திருதராஷ்டிரன் தன் வலக்கையை காற்றில் நீட்ட அவள் அதைப்பற்றி தன் கன்னங்களில் வைத்தாள். அஞ்சி அஞ்சி தலைநீட்டி முகர்ந்து நோக்கும் மலைப்பாம்பு போலிருந்தது அவன் கை. அதன் நாக்கு போல அதில் சுட்டுவிரல் துடித்தது. அவள் காதுமடலை மெல்லப்பிடித்து அங்கே ஆடிய குழையைப்பற்றி நெருடி பின் வருடிக்கொண்டு கீழிறங்கி அதன் கீழ்மடலில் தொங்கிய குழையைத் தொட்டான். அவள் அவன் இன்னொருகையை எடுத்து தன் தோளில் வைத்துக்கொண்டாள். இருகைகளின் எடையையும் தாளமுடியாமல் இடைவளைந்தாள்.

அவன் உதடுகளைக் குவித்து தலையை இல்லை இல்லை என்பதுபோல ஆட்டியபடி அவள் காதையும் கன்னத்தையும் தொட்டு வருடினான். அவள் தோள்களை வருடி கரத்தோளுக்கு வந்த கைகள் ஒருகணம் நிலைத்தன. அவனில் நிகழ்வதை அறிந்தவளென அவள் தன் இருகைகளாலும் அவனை அணைத்து அவன் மார்பில் தன்னை சாய்த்துக்கொண்டாள். அவன் குறுங்கோல் பட்ட பெருமுழவு போல உறுமியபடி, அவளை அள்ளி இறுக அணைத்தான். பாறைகள் பறக்கும் பாலைப்புயலால் அவள் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டாள்.

அவள் அவனை மஞ்சத்தில் அமர்த்தினாள். திருதராஷ்டிரன் அவளிடம் "நான் எதன்பொருட்டும் உன்னை விடமாட்டேன் என்று நினைத்தேன். நீ என்னை மறுத்தாலும் தூக்கிச் சென்றுவிடவேண்டும் என்று நினைத்தேன்" என்றான். "நான் உங்களை மறுக்கவில்லையே" என்று காந்தாரி சொன்னாள். "மறுத்தாலும் நான் விடமாட்டேன்... எதையும் நான் விடமுடியாது" என்றான் அவன். "நீங்கள் எதையும் விடவேண்டியதில்லை... அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவள் சொன்னாள். அவன் நடுங்கும் கைகளால் தன் தலையைத் தடவிக்கொண்டான். அந்தக்கரங்களை எங்கே வைப்பது என்பது போல காற்றில் துழாவியபின் தன் தொடையில் வைத்துக்கொண்டான்.

"ஏன் பதற்றமுறுகிறீர்கள்?" என்றாள். "உன் வாசனை...உன் வாசனை" என்று அவன் தலையைத் திருப்பிக்கொண்டு சொன்னான். அவள் மெல்ல நகைத்தபடி "உங்கள் வாசனைகூடத்தான்..." என்றாள். "என்ன?" என்றான். "எப்போதாவது பாலையில் மழைபெய்யும்போது சுண்ணாம்புக்கல் பாறைகள் எழுப்பும் வாசனை" என்றாள். அவன் "என் மேல் சுண்ணம் பூசினர்" என்றான். "அதுவல்ல. இது வியர்வையின் வாசனை" என்றாள். "வியர்வை வரக்கூடாதென்றுதான் சுண்ணம்" என்றான். அவள் அவன் தோளில் தன் முகத்தை வைத்து "வியர்வை வந்தால்தானே இவ்வாசனை வரும்?" என்றாள்.

அவன் கைகள் அவள் கன்னங்களையும் கழுத்தையும் தொட்டபின் உடனே விலகிக்கொண்டன. "ஏன்?" என்றாள். "மிகமென்மையாக இருக்கிறாய். அச்சமாக இருக்கிறது" என்றான். "ஏன்?" என்றாள். "என் கைகள் கடினமானவை... நான் பெரிய பாறைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்வேன்." காந்தாரி மென்மையாகச் சிரித்தபடி "மென்மையானவற்றையும் பயிலவேண்டும் அல்லவா?" என்றாள். அவன் புரியாமல் "ஆம்" என்றபின் வாயை நாவால் தடவியபடி "நீர்" என்று கேட்டான்.

அவள் அவனுக்கு பொற்குவளையில் அளித்த தண்ணீரைக் குடித்ததும் அவன் சற்று நிலைக்கு வருவதுபோலத் தோன்றியது. அவன் அவளை நோக்கித் திரும்பி "நீ நடந்து செல்லும் அசைவையே நான் முகர்ந்தறிய முடிகிறது" என்றான். "நீ என்னென்ன நறுமணங்கள் அணிந்திருக்கிறாய் என்று என்னால் சொல்லமுடியும்... ஆனால் அதை எல்லாம் ஒன்றாக ஆக்குகிறது உன் வாசனை." அவன் கைகளை நீட்ட அவள் அக்கைகளுக்குள் அமர்ந்தாள். "நீ இசை கேட்பாயா?" என்று திருதராஷ்டிரன் கேட்டான்.

"கேட்பேன்" என்றாள். "நான் இதுவரை வாழ்ந்ததே இசையால்தான். இசையால்தான் நான் வானையும் மண்ணையும் வெயிலையும் மழையையும் அறிந்திருக்கிறேன்..." என்றான் திருதராஷ்டிரன். "எப்போதும் நான் இசையை என்னுள் ஓடவிட்டுக்கொண்டே இருப்பேன். சூதர்கள் ஒருநாள் முழுக்க பாடிய இசையை அப்படியே என் நினைவில் இருந்து திரும்ப மீட்டு ஆண்டு முழுக்க கேட்பேன். ஒருமுறை களிந்த மலைக்குச் சென்றேன். அதென்ன நீரோசை என்றேன். அதுதான் அம்மலையின் ஓசை என்றார்கள். அதில் ஓடும் நீரோடைகளின் ஓசை அது... அதைப்போலத்தான் நானும்..."

காந்தாரி "ஆம் நான் கவனித்தேன்" என்றாள். "மகற்கோள் முடிந்தபின்னர்கூட களத்தில் அமர்ந்து அகத்தே இசையைத்தான் மீட்டிக்கொண்டிருந்தீர்கள்." திருதராஷ்டிரன் வியப்புடன் "அப்படியா?" என்றான். "நீ என்னை பார்த்துக்கொண்டிருந்தாயா?" அவள் நகைத்து "பார்த்துக்கொண்டே இருந்தேன்... இசைநிறைந்த யாழ் என அமர்ந்திருந்தீர்கள்." திருதராஷ்டிரன் "இருக்கும். நான் எப்போது இசைக்குள் செல்வேன் என எனக்கே தெரியவில்லை" என்றான். பின்பு முகம்மலர "என்னிடம் விதுரன் சொன்னான். நான் இசையால் ஆசியளிக்கப்பட்டிருக்கிறேன் என்று. விழியுள்ள எவரும் என்னைப்போல ஆழ்ந்து இசைகேட்கமுடியாதாம்." காந்தாரி "ஆம் அது உண்மை" என்றாள்.

அவன் மார்பில் தலைசேர்த்து அவள் மெல்லச் சொன்னாள் "நான் என்ன எண்ணினேன் தெரியுமா?" திருதராஷ்டிரன் "என்ன?" என்றான். "உங்கள் விரல்நுனியைத் தொட்டால் உங்களுக்குள் ஓடும் இசையை நானும் கேட்கமுடியும் என்று." திருதராஷ்டிரன் சிரித்து "அதெப்படி கேட்கமுடியும்? அது என் நெஞ்சுக்குள் ஓடுகிறது அல்லவா?" என்றான். "ஏன் நான் உங்கள் நெஞ்சுக்குள் இல்லையா"’ என்று அவள் அவனுடைய இறுகிய நெஞ்சை தன் மெல்லிய கையை முட்டியைச் சுருட்டி அடித்துக்கொண்டு கேட்டாள்.

"தெரியவில்லையே" என்றான் திருதராஷ்டிரன். "உங்கள் நெஞ்சுக்குள் இருப்பவர்கள் யார்?" என்றாள் அவள். "அப்படியென்றால்?" என்றான் திருதராஷ்டிரன். "நீங்கள் யாரை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?" திருதராஷ்டிரன் "அன்னையை....அவர்களை நினைக்காமல் என்னால் இருக்கவே முடியாது" என்றான். காந்தாரி "அதன்பின்?" என்றாள். அவன் "அதன்பின் விதுரனை....சிலசமயம் அவனைப்பற்றி எனக்குக் கவலையாகவும் இருக்கும்" என்றான். அவன் முகத்தை நோக்கியவளாக "ஏன்?" என்றாள். "அவன் பேரறிஞன். என் நாட்டை உண்மையில் அவன்தான் ஆளப்போகிறான்....அவன் சூதனானதனால் ஒருவேளை ஷத்ரியர்களாலோ பிராமணர்களாலோ அவனுக்கு அவமானங்கள் வரக்கூடும்" என்றான் திருதராஷ்டிரன்.

அவள் அவன் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் முகம் கனிந்தது. "அவன் கைகள் மிக மெல்லியவை. சிறுவனின் கைகள் போல. அவன் உண்பதுமில்லை உடற்பயிற்சி செய்வதுமில்லை. நூல்களை மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறான்." திருதராஷ்டிரன் மார்பை கையால் வருடியபடி காந்தாரி கேட்டாள் "இனிமேல் உங்கள் நெஞ்சில் எனக்கான இடம் என்ன?" திருதராஷ்டிரன் "இனிமேலா?" என்றபின் "அன்னைக்கும் விதுரனுக்கும் அடுத்த இடம்... எப்போதும்" என்றான்.

அவள் சட்டென்று உருவான மனநெகிழ்வுடன் அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் கைகளும் உடலும் அந்த இறுக்கத்தில் அறுபடப்போகிறவை என இறுகித்தெறித்தன. "இச்சொற்களுக்காகவே நான் உங்களை எவ்வளவு விரும்புகிறேன் என அறிவீர்களா? நீங்கள் எந்நிலையிலும் விதுரனை நெஞ்சிலிருந்து இறக்கமாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்...ஆனால் அதை என்னிடம் சொல்வீர்கள் என்றுதான் நான் நினைக்கவில்லை." அவன் முகத்துடன் முகம் சேர்த்தபடி "ஆனால் உங்களால் வேறு எப்படி இருக்க முடியும்? விழிகளை அறியாதவரென்பதனாலேயே நீங்கள் பொய்மையையும் அறியவில்லை" என்றாள்.

அவள் அணைப்பால் அவன் உடல் மாறத்தொடங்கியது. அவளை அவன் அள்ளி தன் உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் கரும்பாறை அயலது மாணை என அவனுடலில் படர்ந்தாள். உடல்கள் தங்கள் மேல் பீடம் கொண்டிருக்கும் உள்ளங்களை உதறிவிட்டு சேணம் கழற்றப்பட்ட புரவிகள் போல விரிநிலத்தில் பாய்ந்தோடியும் கழுத்துகளை உரசி அறைந்துகொண்டும் கால் பறக்க துள்ளிக்குதித்தும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளும் தருணம்.

அவள் விழிப்புகொண்டதும் திடுக்கிட்டவள் போல அவனை பற்றிக்கொண்டாள். "நான் அதைக் கேட்டேன்" என்றாள். "என்ன?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். "அந்த இசையை... உங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்த இசையை..." திருதராஷ்டிரன் நகைத்துக்கொண்டு கைகளைத் தூக்கி தலைக்குமேல் வைத்துக்கொண்டான். அவனுடைய கனத்த தோள்தசைகளில் அவள் முகம் சேர்த்தாள். "உண்மை... நான் அந்த இசையைக் கேட்டேன். அறையின் சுவர்களும் கூரையுமெல்லாம் நீர்பிம்பங்கள் போல நெளிந்தன. அதை நான் கேட்டேன் என்று உணர்ந்தபோதே அவ்விசை மறைந்தது."

"இப்போது கேட்கிறாயா?" என்றான் திருதராஷ்டிரன் சிரித்துக்கொண்டு. "இப்போதும் நான் இசையுடன்தான் இருக்கிறேன்." அவள் அவன் உடலில் தன் உடலை ஒட்டிக்கொண்டாள். மெல்ல நடுங்கும் தன் உடலால் அவனுள் ஓடும் குருதியின் ஓசையைத்தான் கேட்டாள். "இல்லை...ஆனால் நான் அப்போது கேட்டேன்" என்றாள். "அது உன் உளமயக்கு... ஒருவரின் அக இசையை இன்னொருவர் கேட்கவேமுடியாது. ஆகவேதான் மனிதர்களுக்கு செவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன."

"இல்லை நான் கேட்டேன்" என்று அவள் சிறுமிக்குரிய பிடிவாதத்துடன் சொன்னாள். "நான் கேட்டேன்...ஐயமே இல்லை....அலைகளின் ராகம்...அலைகளைக் கேட்டேன்" என்றபின் அந்தப் பண்ணை மெல்ல ரீங்கரித்தாள். திருதராஷ்டிரன் சற்று அதிர்ந்து, அவளைத் தூக்கி அவள் முகத்தை தன் கைகளால் வருடினான். "ஆம், அலைகள். அலைப்பண்... இந்தளம் என்னும் தென்னகப்பண் அது." திகைத்து அவளை அவன் இறுகப்பற்றினான் "ஆம் அதேதான்...அதை நீ எப்படிக் கேட்டாய்? இது தமிழ்நிலத்திலும் திருவிடத்திலும் மட்டுமே உள்ள பண்ணிசை அல்லவா?" என்றான். "நானே இதை ஒரேஒருமுறைதான் கேட்டேன். தென்பாண்டிநாட்டுப் பாணர் ஒருவர் என் அவைக்கு வந்தார்."

காந்தாரி "நான் கேட்டதில்லை... சற்றுமுன்பு இதை உங்களிடமிருந்து அறிந்தேன்" என்றாள். "அந்த இசைகூட குரலாக ஒலிக்கவில்லை. தேனீக்கள் வெவ்வேறு வகையில் அதிர்வதுபோல அது எழுந்தது." திருதராஷ்டிரன் வியந்து கைகளை மேலே தூக்கினான். ஏதோ சொல்லவந்தவன் போல கைகளை அசைத்தபின் "எப்படி இது நிகழலாகும்?" என்றான். "அந்த யாழை அவர்கள் மருதயாழ் என்கிறார்கள். அது தேனீ முரலும் ஒலியைத்தான் எழுப்பும். அதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்." முகம் மலர்ந்து அவள் தோளைப்பிடித்து அசைத்து "அதை நீ கேட்டிருக்கிறாய்...என் அகத்தில் ஒலித்த இசையை கேட்டுவிட்டாய்..."

காந்தாரி "ஆம்....நான் அதைக்கேட்டபோது உணர்ந்தேன். அதற்கு முன் நான் இசையையே கேட்டதில்லை என்று..." திருதராஷ்டிரன் பரபரப்புடன் "ஆம், உண்மை. இங்கே வடக்கு பாரதவர்ஷத்தில் நாம் உண்மையில் இசையையே கேட்டதில்லை என நானும் உணர்ந்தேன். என் அவைக்கு எப்போதாவதுதான் தென்றிசை பாணர் வருகிறார்கள். இத்தனை தொலைவுக்கு அவர்களைக் கொண்டுவர முடிவதில்லை. அவர்களின் பண்முறை மிகமிக விரிவானது. அது குழலையும் யாழையும் அடிப்படையாகக் கொண்டது. ஆதன் அழிசி என்ற பாணர் என் அவையில் மருதப்பண்கள் பதினெட்டையும் ஒருநாளுக்கு ஓர் இசை முறையில் வாசித்துக்காட்டினார். அந்தப்பதினெட்டுநாளும் நான் ஆதவனின் நாடாகிய தென்னகத்தில் வாழ்ந்தேன். கடலையும் மலைகளையும் அறிந்தேன்."

திருதராஷ்டிரன் உரத்த குரலில் சொன்னான் "தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம் முதலிய பதினெட்டுப் பண்கள். அவற்றில் ஆரியகுச்சரியும் கௌசிகமும் மட்டுமே வடக்கில் அறியப்பட்டவை. ஆறாவது பண்ணான இந்தளம் பேரழகு கொண்டது. பின்மதியத்துக்கான பண். அது பெண்பால் பண் என்றார் பாணர். அதைப்பாடியபோது அலையலையாக வெயிலையும் காற்றையும் அறிந்தேன். அத்துடன்..."

வெட்கிச் சிவந்த முகத்துடன் திருதராஷ்டிரன் குரலைத் தாழ்த்தினான். "நான் அலைகளாக அறிந்தவை என்னை அன்று கிளர்ச்சியுறச்செய்தன. இன்றுதான் அந்த அலைகளெல்லாம் பெண்ணுடல்கள் என்பதை அறிந்தேன்" என்றான். "இந்தளம் முடிவில்லாத பெண்ணுடல் வளைவுகள்...பெண்ணின் வாசனை. பெண்ணின் மூச்சொலி....பெண்ணின் மெல்லிய பேச்சொலிகள்..." காந்தாரி "போதும்" என்று அவன் வாயை தன் கைகளால் பொத்திக்கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

திருதராஷ்டிரன் "அந்தப் பாணர் என் அவையில் எட்டுமாதங்கள் இருந்தார். அந்தப் பதினெட்டு பண்களையும் என் சூதர்களுக்குக் கற்பித்தார். ஆனால் அவரைப்போல என் பாணர்களால் பாடமுடியவில்லை" என்றான் பெருமூச்சுடன். "ஆனால் எனக்கு அவர்கள் பாடுவது முக்கியமல்ல. என் அகத்தில் உறையும் இசையை அவர்கள் தொட்டு எழுப்பிவிட்டாலே போதும்." அவன் தன்னுள் மூழ்கி மலர்ந்த முகத்துடன் மல்லாந்துகொண்டான்.

காந்தாரி எழுந்து தன் ஆடையை அணிந்தபடி சாளரம் வழியாகத் தெரிந்த விண்மீன்களைப் பார்த்தாள். அந்தச் சயன அறை காந்தாரநகரியிலேயே உயரமான மாளிகையின் ஏழாவது அடுக்கில் இருந்தது. நகரின் மாளிகை முகடுகள் கீழே செல்ல, கோட்டைக்கு அப்பால் நெடுந்தொலைவு வரை விரிந்த பாலைநிலம் மேலே கவிந்த விண்மீன் கூரையுடன் தெரிந்தது. அப்பால் ஒரு செவ்விண்மீன் இக்கணம் இக்கணம் இக்கணம் இக்கணம் என அதிர்ந்துகொண்டிருந்தது.

"அங்கே தென்னகத்தில் வெண்மருது என்னும் மரம் இருக்கிறது. சேற்றுவயல்களின் அருகிலும் நீர்நிலைக்கரைகளிலும் மட்டுமே அது வளரும். வெள்ளி நிறமான பட்டைகொண்டது. சுண்ணப்பாறையைச்செதுக்கி எழுப்பியதுபோன்ற மாபெரும் அடிமரம் கொண்டது. அதன் அடியில்தான் அங்கே நாகதெய்வங்களை நிறுவி வணங்குகிறார்கள். நாகர்களின் மரம் அது என்று பாணர் சொன்னார். கொத்துக்கொத்தாக அது பூக்கும். பூக்களின் மகரந்தம் மென்மையான பிசினுடன் இருக்கும். நீரில் மிதந்து அது பரவும்போது அங்குள்ள வயல்சூழ்ந்த ஊர்களெல்லாமே மருதவாசனையுடன் இருக்கும்...." என்றான் திருதராஷ்டிரன்.

தனக்குள் என அவன் பேசிக்கொண்டான். "நான் அம்மலரை அறிந்ததில்லை. ஆனால் சற்றுமுன் அந்த வாசனையை முகர்ந்தேன். அதுதான்... உறுதியாகச் சொல்வேன். மெல்லிய அரக்குமணம். விட்டுப்போகாமல் உடலிலும் உள்ளத்திலும் நிறையும் பெண்மையின் மணம்...அதுதான் மருதம்." அவன் மெல்ல புரண்டபோது மஞ்சம் ஓசையிட்டது. "மருதத்தின் வாசனையும் இந்தளத்தின் பண்ணும் ஒன்றாக என்னுள் கலந்தன... அதைத்தான் நான் இசையாக கேட்டுக்கொண்டிருந்தேன்."

பாலைமின்னலில் விழியிழப்பதைப்பற்றி காந்தாரி நினைவுகூர்ந்தாள். பாலையில் பிறந்து இறக்கும் பல்லாயிரங்கள் பாலையைப் பாப்பதேயில்லை. பகலொளி விழிகளை மூடு மூடு என்கிறது. இரவொளி பாலையைச் சுருட்டி அருகே கொண்டு வருகிறது. இரவின் முழுமின்னலில் பாலையைப் பார்ப்பவனே அதன் பேருருவைக் காண்கிறான். அக்கணமே அவன் விழிகளை அது எடுத்துக்கொள்கிறது. எஞ்சிய வாழ்நாளெல்லாம் அந்த மின்கணத்தில் அவன் வாழ்வான்.

சகஸ்ரரேணுவில் அவ்வாறு விழியிழந்தவன் ஒருவன் இருந்தான் என்று கூட்டிவந்தனர். தெய்வங்களுக்குரிய முகமும் புன்னகையும் கொண்டிருந்த அவன் காலத்துக்கு அப்பால் இடத்துக்கு அப்பால் இருப்புக்கும் அப்பால் இருந்துகொண்டிருந்தான். ‘அது!’ என்றான். அரசரும் அமைச்சரும் கேட்ட வினாவுக்குப் பதிலாக ‘அது!’ என்று மேலும் பேருவகையுடன் சொன்னான். கைகளை விரித்து பேரெழுச்சியின் மெய்ப்பாடுகளுடன் ‘அது...மட்டும்தான்’ என்றான். இரு கைகளை விரித்து எம்பி கண்ணீருடன் ‘அதுவே ஆம்!’ என்றான்.

திரும்பி கட்டிலில் மல்லாந்து தன் இசையை தானே மாந்திக்கிடக்கும் பேருருவினனை நோக்கியபோது அவனும் அதுவெனும் சொல்லாக அங்கே இருப்பதாக தோன்றியது.

அவள் கண்களை மூடிக்கொண்டாள். அந்த இசையை நினைவுகூர முயன்றாள். மரக்கட்டடத்தின் சுவர்கள் வழியாக ஒலிகள் வந்துகொண்டிருப்பதை அப்போதுதான் அவள் அறிந்தாள். எங்கோ எவரோ ஏதோ சொன்னார்கள். யாரோ பதிலிறுத்தார்கள். ஒருவன் நகைத்தான். காலடிகள் கடந்து சென்றன, திரும்பி வந்தன. வேல் ஒன்று முட்டியது. வாள்பிடிகள் தொடைகளில் தட்டின. பாத்திரங்கள் மெல்லிய உலோக ஓசையுடன் தரையைத் தொட்டன. சாளரக்கதவுகள் ஒலியெழுப்பி அசைந்தன. அந்த அரண்மனை பேசிக்கொண்டிருந்தது.

நெடுநேரம் கழித்து அவள் எழுந்து சென்று கண்களை மூடிக்கொண்டே சாளரமுனையில் நின்றாள். காற்று மரக்கிளைகளை உலைக்கும் ஒலி. மாளிகைமுகடுகளில் கொடிகள் படபடக்கும் ஒலி. பாலை மணல் அசையும் ஒலி. மணல்சரிவுகள் மெல்ல வழியும் ஒலி. மிகமிக அப்பால் ஒரு ஓநாயின் ஊளை. இன்னொரு ஓநாயின் பதில் ஊளை. விண்மீன்கள் மின்னும் ஒலி. அவள் திடுக்கிட்டாள். ஆம், அதுவேதான். உடல் நடுங்க கைகளால் கன்னங்களைப் பற்றியபடி அவள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டு அவள் கண்விழித்தாள். அவளருகே அப்போது பாலையின் வெங்காற்றில் நீர்மணமாக ஏறிவந்த சக்‌ஷுஸ் என்னும் தேவதையை உணர்ந்தாள். அவள் காதிலாடிய சுரிகுழலை மெல்ல அசைத்து சக்‌ஷுஸ் கேட்டாள். "தோழி ஏன் தனிமை?" காந்தாரி திகைத்து "யார் நீ?" என்றாள். நகைத்தபடி சக்‌ஷுஸ் "நான் விழிகளின் தேவதை. கங்கையின் தோழியாக மாலியவானின் மடியில் பிறந்து கேதுமாலத்தில் ஓடி அவளுடன் இணைகிறேன். ஒருநாள் என் கரைக்கு வா. அன்று நான் என்னை உனக்குக் காட்டுவேன்."

காந்தாரி நெடுமூச்சிட்டு நின்றதைக்கண்டு அவள் குழலைத் தூக்கி அசைத்து "என்ன துயர் தோழி?" என்றாள் சக்‌ஷுஸ். காந்தாரி நெடுமூச்செறிந்து "அறியேன். இவ்வேளையில் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட தனியளாக உணர்கிறேன்" என்றாள்.

சக்‌ஷுஸ் நகைத்து "ஆம், மணநாளிரவில் அனைத்துப்பெண்களும் அவ்வண்ணமே உணர்கிறார்கள்" என்றாள். காந்தாரி திகைத்து நோக்க "மணநாளிரவில் துயிலாத பெண் அரிய ஒன்றை இழந்தவள். துயில்பவள் இழப்பதற்கென அரியவை ஏதுமில்லா பேதை" என்றாள் சக்‌ஷுஸ். "நான் இழந்தவற்றைவிடப் பெரியதொன்றை கண்டேன்" என்றாள் காந்தாரி. "ஆம், அதையும் அனைத்துப்பெண்களும் காண்கிறார்கள். கண்டகணமே இழக்கிறார்கள்" என்று சக்‌ஷுஸ் நகைத்தாள்.

"நான் செல்லமுடியாதா அங்கு? அதை மீண்டும் தொடமுடியாதா?" சக்‌ஷுஸ் நகைத்தபடி அறைக்குள் சுற்றிப்பறந்து திரைச்சீலைகளை அசையச்செய்து பீடத்திலிருந்த சுடரை அலைபாயவைத்துத் திரும்பிவந்தாள். "சொல் தேவி" என்றாள் காந்தாரி. "ஒருகணத்தின் இனிமை ஒரு பிறவிக்குப் போதாதா என்ன?" என்றாள் சக்‌ஷுஸ். "இல்லை...எனக்குப் போதாது. நான் அக்கணத்திலேயே வாழவிழைகிறேன்."

சக்‌ஷுஸ் சிரித்து "பகன் கதையைச் சொன்னார்களே, ஸித்தி என்னவானாள் என்றறிவாயா?" என்றாள். காந்தாரி தலையசைத்தாள். "வான்சரிவில் ஒளிர்ந்து செல்லும் வெண்ணிற ஆதித்யனாகிய பகனின் உடலில் ஒரு கரிய புள்ளியாக அவளிருக்கிறாள். தன்விழியை அவனொளியாக்கி அவனில் முழுதமைந்தாள்." காந்தாரி அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். "விடை" என்று சொல்லி அவள் மேலாடையைப் பறக்கவைத்து சக்‌ஷுஸ் எழ காந்தாரி "இரு" என்றாள்.

தன் மேலாடையைக் கிழித்து மடித்து தன் விழிகளை மூடிக்கட்டிக்கொண்டாள். "இதுதானே அவ்வழி?" என்றாள். "ஆம், அவன் இசையை நீயும் இனி கேட்பாய்" என்றபடி அவள் கன்னத்தைத் தொட்டபின் தொலைவில் நின்ற மரத்தின் இலைகளைக் குலைத்து அப்பால் கோட்டைக்கொடிகளிரண்டை அசைத்து முரசுத்தோலை மெல்ல விம்மச்செய்து சக்‌ஷுஸ் பறந்துசென்றாள்.

பகுதி ஐந்து : முதல்மழை

[ 2 ]

இளஞ்சிவப்புத்திரைகள் போடப்பட்ட பன்னிரண்டு சாளரங்களைக் கொண்டதும் மெல்லிய மரப்பட்டைகளாலும் கழுதைத்தோலாலும் கூரையிடப்பட்டதும் பன்னிரு சக்கரங்கள் கொண்டதும் நான்கு குதிரைகளால் இழுக்கப்பட்டதுமான கூண்டுவண்டியில் பத்து இளவரசிகளுடன் காந்தாரி அஸ்தினபுரிக்குப் பயணமானாள். இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு அவ்வண்ணமே வளர்ந்து முழுமைபெற்ற எட்டு மூங்கில்விற்களின் மேல் அந்த வண்டியின் உடல் அமைக்கப்பட்டிருந்தமையால் சாலையில் சக்கரங்கள் அறிந்த அதிர்வுகள் வண்டியை அடையவில்லை. வண்டியின் மேல் அஸ்தினபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது.

வண்டியைச்சுற்றி காவல்வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் சென்றனர். முன்பக்கம் பீஷ்மரின் ரதமும் திருதராஷ்டிரனின் ரதமும் செல்ல பின்னால் விதுரனின் ரதமும் அமைச்சர்களின் ரதங்களும் சென்றன. கடைசியாக பிறவண்டிகளும் காவலர் அணிகளும் வந்தன. காந்தாரநகரியில் இருந்து தந்தையிடமும் அன்னையரிடமும் உடன்பிறந்தவர்களிடமும் வாழ்த்து கொண்டு விடைபெற்றுக் கிளம்பும்போது சத்யவிரதையும் சத்யசேனையும் தலைகுனிந்து குளிர்ந்தவர்களாக இருந்தனர். சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி ஆகியோர் அழுதுகொண்டிருக்க விளையாடிக்கொண்டிருந்த சுபையும் சம்படையும் அதைக்கண்டு தாங்களும் அழத்தொடங்கினர். தசார்ணை அவளுடைய பொற்பூவாடையைப் பற்றி சுற்றிச் சுற்றி அப்படியே அமர்ந்து அது குடையாக அமைவதை ரசித்துக்கொண்டிருந்தாள். காந்தாரி மட்டும் புன்னகையுடன் அமைதியாக விடைபெற்றாள்.

அவள் தன் கண்களைக் கட்டிக்கொண்ட செய்தியை அதற்குள் காந்தாரபுரியே அறிந்திருந்தது. மங்கல இரவுக்குப்பின் காலையில் அவள் கண்களில் துணிக்கட்டுடன் வெளியே சென்றபோது அவளைக்கண்ட முதியசேடி திகைத்து "அரசி" என்றாள். "என்னை வழிநடத்து... நான் சற்று கால்பழகும்வரை" என்றாள் காந்தாரி. அந்தப்புரத்தில் சத்யசேனை அவளை அணுகி அவள் கண்களில் கட்டைப் பார்த்து நெஞ்சில் கைவைத்து நின்று "அக்கா" என்றாள். "நான் இனி இந்த விழிக்கட்டை அவிழ்க்கவே போவதில்லை" என்று காந்தாரி சொன்னாள். "அக்கா" என்றபடி அவள் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டாள்.

முதலில் அவள் அன்னை சுகர்ணை அதை அவளுடைய மனக்கசப்பின் விளைவென்றே புரிந்துகொண்டாள். ஆனால் அவள் புன்னகையுடன் "நான் அவருடன் அவர் வாழும் உலகில் வாழ விரும்புகிறேன். பிறர் உலகில் எனக்கு ஏதும் தேவையில்லை" என்று சொன்னபோது அந்த உணர்ச்சிகளை அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணும் உடனே புரிந்துகொண்டனர். அச்செய்தி மதியத்துக்குள் நகரம் முழுக்க பரவியபோது அனைத்து நகர்ப்பெண்களும் அதை உணர்ந்துகொண்டனர்.

அஸ்தினபுரிக்குக் கிளம்பும் நாளில் அரண்மனை முகப்பில் காந்தாரி வணங்கி வண்டியில் ஏறும்போது சுபலர் கண்ணீருடன் "வசுமதி" என்றார். அவரால் ஏதும் பேசமுடியவில்லை. அசலனும் விருஷகனும்கூட கலங்கிய முகங்களுடன் நின்றனர். சுகர்ணை "நான் சொல்வதற்கொன்றும் இல்லை மகளே. நீ அனைத்தும் அறிந்தவள்" என்று சொன்னாள். காந்தாரி கடைசியாக சகுனியிடம் "தம்பி" என்றபின் வண்டிக்குள் ஏறிக்கொண்டாள். அதன் சகடங்கள் ஒருமுறை சுழன்றதும் அரண்மனைச்சேவகரும் சேடியரும் அறியாமல் ஓரடி முன்னாலெடுத்து வைத்து மனம் விம்ம நின்றனர்.

வண்டி கோட்டைவாயிலை நெருங்கியபோது குதிரையில் சகுனி பின்னால் வந்தான். வண்டியுடன் இணையாக வந்தபடி "அக்கா, சிலநாட்களில் நானும் அஸ்தினபுரிக்கு வருவேன்" என்றான். காந்தாரி புன்னகை செய்தாள். "இனிமேல்தான் என் கடமைகள் தொடங்குகின்றன அக்கா. நான் சொன்ன சொற்கள் வெறும் மனஎழுச்சியின் விளைவல்ல. பாரதவர்ஷமே உன் பாதங்களில் விழவேண்டும்" என்றான். அவள் மீண்டும் புன்னகைசெய்தாள். நான் வெல்லவேண்டிய அனைத்தையும் வென்றுவிட்டேன் என நினைத்துக்கொண்டாள். அதை எந்த ஆணிடமும் சொல்லிப்புரியவைக்கவும் இயலாதென்று தோன்றியது.

நகரை விட்டு நீங்கும்போது இளவரசிகள் சாளரங்கள் வழியாக விலகிச்சென்றுகொண்டிருந்த அரண்மனையையும் அரசவீதியையும் கோட்டைமுகப்பையும் எட்டிப்பார்த்து கண்ணீர்விட்டு விசும்பினர். தாரநாகத்தின் மணலில் வண்டி இறங்கியபோது தசார்ணை "அக்கா, இதுவா தாரநாகம்? இதுவா அக்கா?" என்றாள். சத்யசேனை அவள் கையை அடித்து "பேசாமலிருடீ" என்றாள். தசார்ணை மிகமெல்ல சம்படையிடம் "இதுதான் தெரியுமா?" என்றாள். சம்படையின் கண்களில் இருந்து கண்மை வழிந்து கன்னங்களில் பரவியிருந்தது. "அக்கா உன் கன்னங்களில் மை" என்றாள் தசார்ணை. சம்படை தன் மேலாடையால் கன்னங்களைத் துடைத்துக்கொண்டாள்.

தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததும் பாலைநிலம் முழுமையாகவே அவர்களை சூழ்ந்துகொண்டது. தசார்ணை சாளரம் வழியாகப் பார்த்து "ஒரே மணல்... சிவப்பாக இருக்கிறது..." என்றாள். "ஆனால் தொலைவில் நீர் இருக்கிறது" என்றாள் தசார்ணை. அழுகையை மறந்து சம்படை எட்டிப்பார்த்து "அதெல்லாம் கானல்... என் குருபத்னி சொன்னார்" என்றாள். "கானல் என்றால்? அதைக்குடிக்கமுடியாதா?" என்றாள் தசார்ணை. சம்படை "அது வெறும் தோற்றம்..." என்றாள். "ஏன் குடிக்கமுடியாது?" என்று தசார்ணை மீண்டும் கேட்டாள். "குடிக்கமுடியாது அவ்வளவுதான்" என்றாள் சம்படை. "விலங்குகள் குடிக்குமா?" என்றாள் தசார்ணை. "யாருமே குடிக்கமுடியாது" என்றாள் சம்படை. தசார்ணை ஐயத்துடன் சுதேஷ்ணையிடம் "அக்கா, குடிக்கமுடியாதா?" என்றாள். சுதேஷ்ணை "சும்மா இருக்கப்போகிறாயா அடிவேண்டுமா?" என்றாள்.

தசார்ணை மெல்ல "குடிக்கமுடியாத தண்ணீரை எதற்காக பிரம்மா படைத்தார்?" என்றாள். காந்தாரி அதைக்கேட்டு புன்னகை புரிந்து கையை நீட்டினாள். சத்யவிரதை தசார்ணையை அவளை நோக்கி உந்த அருகே வந்த சிறுமியின் தலையைத் தொட்டு "வறண்டநிலத்தில் திருஷை என்று ஒரு தெய்வம் வாழ்கிறது குழந்தை. அவள்தான் தாகத்தின் இறைவி. அவளுடைய வாகனம்தான் மரீசி. நீலமயிலின் வடிவில் இருக்கும் மரீசியின் மீது ஏறித்தான் திருஷை பாலைவனத்தில் உலவுவாள். மரீசியைத்தான் நாம் கானல்நீராகப் பார்க்கிறோம்." தசார்ணை விரிந்த விழிகளுடன் தலையை ஆட்டினாள்.

"உடலற்றவளின் விடாயை நீரின்மைதானே தீர்க்கமுடியும்? என்னடி?" என்றாள் காந்தாரி. சத்யவிரதை "ஆம் அக்கா" என்றாள். "ஆனால் நான் கானலைத்தான் விரும்புவேன். நீரழகு விடாய் முடிவதுவரைதான். கானலோ இறப்புக்கணம் வரை கொண்டு செல்லும் பேரழகு கொண்டது" காந்தாரி சொல்லி மீண்டும் புன்னகைசெய்தாள். கண்களைக் கட்டிக்கொண்டதுமே அவள் புன்னகையில் தெய்வங்களின் சாயல் வந்துவிட்டதென சத்யசேனை எண்ணினாள்.

மான்தோலின் ரோம வாசனையும் வெயிலில் வெம்மைகொண்ட பதப்படுத்திய கூரைத்தோலின் வாசனையும் கொண்ட அந்த வண்டி அவளிடம் மெதுவாகப் பேசத்தொட்ங்கியது. கூண்டுக்கு அப்பால் அமரத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டிகளின் மெல்லிய உரையாடலை அவள் கேட்டாள். சக்கரங்களில் ஒன்று மேலும் எளிதாகச் சுழல்வதை அறிந்தாள். வலப்பக்கச் சக்கரத்தின் குடத்தில் அடித்துக்கொள்ளும் அச்சின் உரசலை, கீழே அழுந்தி அழுந்தி மீளும் விற்களின் விம்மல் ஒலியை, நான்குபுரவிகளின் குளம்படிகளை, மூச்சொலிகளை, வால்சுழலும் ஒலியை அறிந்தாள். சிறிதுநேரத்தில் அந்த வண்டியை தன் உடலைப்போல உணர்ந்தாள். அவ்வுடலால் பாலையை அறிந்தாள். அங்கிருந்தவர்களில் அவள் மட்டுமே பாலையில் சென்றுகொண்டிருந்தாள்.

வெயில் ஏறியதும் அவர்கள் ஒரு சோலையில் ஓய்வெடுத்தனர். பாலையூருணியில் இருந்து நீர்கொண்டுவந்து மரவுரியை நனைத்து முகத்தையும் உடலையும் துடைத்தபின் குளிர் நீரருந்தி பாலைமரங்களுக்குக் கீழே விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் படுத்துக்கொண்டனர். நெடுமூச்சுடன் புரண்டு படுத்துக்கொண்டிருந்த இளவரசிகள் விரைவிலேயே இயல்பாகவே துயில்கொண்ட மெல்லிய ஒலிகளை காந்தாரி புன்னகையுடன் கவனித்துக்கொண்டிருந்தாள். காலாட்டியபடி மரத்தின்மேலிருந்த கிளைகளை விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த தசார்ணை அவ்விரலை அப்படியே வைத்தபடி துயின்றிருந்தாள். அவள் மனம் துயிலை நாடவில்லை. அதில் பரபரப்பும் இல்லை. இறுக நீர் நிறைத்து மூடப்பட்ட தோல்பை போல அவள் அகத்தை உணர்ந்தாள். தளும்பாமல் சிந்தாமல் ஏங்காமல் தன் இருப்பை மட்டுமே உணர்ந்தவாறு அவளுடன் அது இருந்தது.

வெயிலில் வெந்த மணலின் மணம் ஏறி ஏறி வந்தது. அதுவரை காதுகளிலும் கன்னங்களிலும் பட்ட வெக்கையை அப்போது மூக்குக்குள் உணரமுடிந்தது. மாலை வெயில் முறுகியபின் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தூங்கி எழுந்த இளவரசியர் ஊர்நீங்கும் ஏக்கத்தை இழந்து புதுநிலம் காணும் ஆர்வம் கொண்டிருப்பதை காந்தாரி கவனித்தாள். அவர்கள் கிளர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஆடைகளை திருத்திக்கொண்டனர். முகத்தைக் கழுவி திலகமும் கண்மையும் அணிந்தபடி ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டி நன்றாக உள்ளதா என்று வினவிக்கொண்டனர். சிறிய சிரிப்பொலிகளும் ஒருவரை ஒருவர் கடிந்துகொள்ளும் மென்குரல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தசார்ணை உரக்க "அவள் மட்டும் ஏன் சிவப்பு வளையல்கள் அணிகிறாள்?" என்று கேட்க சத்யவிரதை ரகசியமாக அவளை அதட்டி அடக்கும் ஒலி கேட்டது. "அப்படியானால் எனக்கு?" என தசார்ணை மெல்லக்கேட்டாள்.

மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டபோது இளவரசிகள் உவகைத்ததும்பலுடன் இருந்தனர். சாளரங்களின் அருகே அமர்ந்துகொள்வதற்காக முண்டியடித்தனர். சாளரத் திரைச்சீலைகளை நன்றாக விலக்கி வெளியே பார்த்தனர். தசார்ணை முழந்தாளிட்டு அமர்ந்து வெளியே பார்த்து "மரங்களே இல்லை" என்றாள். "பாலையில் எப்படியடி மரம் இருக்கும்?" என்றாள் சம்படை. "சத்தம்போடாமல் வாருங்கள்" என்று சத்யசேனை அவர்களை நோக்கி முகம் சுளித்தாள்.

"இந்த வண்டி படகுபோலச் செல்கிறதே" என்று சம்படை குரலைத்தாழ்த்திச் சொல்ல சுதேஷ்ணை "இதற்கு அடியில் வில் இருக்கிறதல்லவா? அதுதான் எல்லா அசைவுகளையும் வாங்கிக்கொள்கிறது" என்றாள். தசார்ணை உற்சாகமாக "அந்த வில்லிலே நாணே இல்லை" என்றாள். "நான் பார்த்தேன்...அந்த விற்களை போர் வந்தால் எடுத்து நாணேற்றுவார்கள்" என்று சம்படையின் கையைப்பிடித்து உலுக்கினாள் சத்யசேனை. "அவை மூங்கில்கள்...கங்கைக்கரையில் அவை ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன என்கிறார்கள்." சுதேஷ்ணை "அவற்றை வெட்டித்தான் குழல் செய்கிறார்கள்...இனிய இசையை வாசிக்கிறார்கள்" என்றாள்.

பாலைவனத்தைச் சூழ்ந்து மேகமற்ற வானம் செந்நிறமாக கவிந்தது. பின்பு இருண்டு கருந்திரைக்கு அப்பாலிருந்து விண்மீன்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவந்து பரப்பியது. வெம்மைநிறைந்த காற்று மெல்லமெல்லக் குளிர்ந்து உடலை நடுக்குறச்செய்யும்படி வீசியது. இளவரசியர் மரவுரிப்போர்வைகளை போர்த்திக்கொண்டனர். விண்மீன்கள் பெருகியபடியே வந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யசேனை "எவ்வளவு விண்மீன்கள்" என்றாள். நன்றாக நிலம் இருண்டபோது மிக அருகே விண்மீன்களாலான பந்தலாக வானம் தெரிய அனைவரும் விண்மீன்களை நோக்கினர். "பொன்னாலான நகைக்குண்டு போலத் தெரிகிறது ஒவ்வொன்றும்" என்றாள் சத்யவிரதை. சுதேஷ்ணை "கையெட்டினால் பறித்து விடும் கனிகள்" என்றாள்.

சூதப்பெண்கள் மூவர் வண்டிக்குள் ஏறினர். மூத்தவள் வணங்கி "அரசியரை பணிகிறேன். இரவுநேரக் கதைப்பாடலுக்காக வந்திருக்கிறோம்" என்றாள். காந்தாரி புன்னகையுடன் "அமர்க!" என்றாள். அவள் தன் கையில் இருந்த சுவடிகளை ஏழாகப் பகுத்து கலைத்து மீண்டும் ஏழாகப் பகுத்தாள். அதில் ஏழாவது சுவடியை எடுத்தாள். புன்னகையுடன் "சதி அனசூயையின் கதை வந்துள்ளது அரசி" என்றாள். "சொல்க!" என்று காந்தாரி ஆணையிட்டாள். சூதப்பெண்கள் தங்கள் கையில் இருந்த உலோகத்தாலான தாளக்கருவியை சிறிய ஆணியால் மெல்ல மீட்டியபடி பாடத்தொடங்கினர்.

அத்ரி, பிருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், அங்கீரஸர் என்னும் ஏழு வான்முனிவர்களையும் வாழ்த்துவோம். அவர்களில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் புகழைப் பாடுவோம். அவரது அறத்துணைவி அனசூயையின் மங்கா பெரும் கற்பைப் போற்றுவோம். அரசியரே, அனசூயை என்றால் பொறாமையே அற்றவள் என்று பொருள். பெண் தன்னை நினைக்கும் காலம் வரை பொறாமையை வெல்லமுடிவதில்லை. தன்னைக் கடந்து தாயாக ஆகும்போது மட்டுமே அவள் பொறாமையைக் கடந்துசெல்கிறாள். அவளையே கற்பரசி என்கின்றன நூல்கள்.

விஷ்ணுவில் இருந்து பிரம்மன். பிரம்மனில் இருந்து சுயம்புமனு பிறந்தார். சுயம்புமனுவுக்கு அவரது துணைவியான சரரூபையில் உத்தானபாதன், பிரியவிரதன், ஆஹுதி, தேவாஹுதி, பிரசூதி என்னும் ஐந்து குழந்தைகள் பிறந்தன. அவர்களில் அழகுமிக்கவளான தேவாஹுதியை கர்த்தம பிரஜாபதி மணம் புரிந்தார். தேவாஹுதிக்கு கர்த்தம பிரஜாபதியில் கலை, அனசூயை என்னும் இரண்டு பெண்கள் பிறந்தனர். கலையை மரீசியும், அனசூயையை அத்ரியும் மணந்துகொண்டனர்.

அரசியரே, கலையுடன் இணைந்தது பொறாமை என்றறிக. பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.

அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

"மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!" என்று சூதப்பெண் பாடிமுடித்தாள். காந்தாரி அவளுக்கு பரிசில் அளித்து அனுப்பி வைத்தாள். அரசிகள் கதையால் அமைதிகொண்டுவிட்டதை அவள் கவனித்தாள். கதை என எது சொல்லப்பட்டாலும் உடனே தூங்கத் தொடங்கிவிடும் தசார்ணையும் சம்படையும் சத்யசேனையின் மடியிலும் சத்யவிரதையின் மடியிலும் கிடந்து மெல்லிய குறட்டை விட்டனர்.

சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கிளம்புவதாகவும் இரவெல்லாம் பயணம் செய்யவிருப்பதாகவும் படைத்தலைவன் வந்து காந்தாரியிடம் சொன்னான். "நாளையும் மறுநாளும் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று கணிகர் சொல்கிறார்கள் அரசி. பகலில் பயணம்செய்யமுடியாது. நாம் நாளைக்காலைக்குள் ஸ்ரீகுண்டம் என்னும் சோலைக்குச் சென்று சேர்ந்தாகவேண்டும்."

அவர்கள் வண்டிக்குள்ளேயே படுத்துக்கொண்டனர். வண்டியின் ஆட்டம் தொட்டில் போலத் தோன்றியது. காந்தாரி தூங்காமல் செவ்விதழ் இமை மூடிய கண்களுக்குள் நெளிந்து நெளிந்து சென்றுகொண்டிருந்த ஒரு செந்நிற நூலையே பார்த்துக்கொண்டிருந்தாள். வண்டிக்குள் இருந்த சிறிய நெய்விளக்கை சத்யசேனை ஊதி அணைத்ததை மூடிய கண்களுக்குள் ஒளி அவிவதாக உணர்ந்தாள். காற்று மணலை அள்ளி கூரைமேல் கொட்டும் மெல்லிய ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வண்டி மெல்லிய மணலில் சகடங்கள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தது.

"அக்கா" என்று சத்யவிரதை அழைத்தாள். "என்ன?" என்றாள் காந்தாரி. "நீங்கள் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறீர்கள்... உங்கள் பேச்சும் சிரிப்பும் எல்லாம் வேறுயாரோ போலிருக்கின்றன" என்றாள். காந்தாரி புன்னகை புரிந்தாள். "நீங்கள் ஏன் கண்களைக் கட்டிக்கொள்ளவேண்டும்?" என்றாள் சத்யவிரதை. "எனக்கு இருபது விழிகள் இருக்கின்றன..." என்று காந்தாரி சொன்னாள். "ஒவ்வொரு விழியும் ஒவ்வொரு பருவத்தைச் சேர்ந்தவை... உலகையே அறியாத பேதையின் விழிகள்கூட நான்கு உள்ளன."

"ஒரு கணவனுக்காக நாம் ஏன் வாழவேண்டும் அக்கா?" என்றாள் சத்யவிரதை. "நிஷாதர்களின் பெண்கள் அப்படியல்ல என்றார்கள் சூதர்கள். அவர்கள் அனைத்தையும் தங்களுக்காகவே செய்கிறார்கள். அவர்கள் வாழும் வாழ்க்கைதான் பொருள் உடையது" என்றாள். காந்தாரி புன்னகைத்தபடி "தெரியவில்லையடி...நான் எனக்கு எது மகிழ்வளிக்கிறதோ அதைச் செய்தேன். என்னிடமிருந்த அனைத்தையும் உதறாமல் நான் அவருடைய உலகுக்குள் நுழையமுடியாதென்று தோன்றியது. அதற்குமேல் ஒன்றுமே நான் சிந்திக்கவில்லை" என்றாள்.

"நீங்கள் என்னை என்ன சொன்னாலும் சரி, இதை பேதைத்தனம் என்றுமட்டும்தான் என்னால் சொல்லமுடியும்" என்றாள் சத்யவிரதை. "இருக்கலாம். ஆனால் பித்தியாகவும் பேதையாகவும் இருப்பதில் பேரின்பம் ஒன்று இருக்கிறது" என்றாள் காந்தாரி. இன்சிரிப்புடன் "நான் அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று அந்த சூதப்பெண் பாடியபோது எனக்கு விடை கிடைத்தது. தாய்மை என்பதும் பேதைத்தனம்தானே? அந்தப்பேதைத்தனத்தை அடையும்போதுதானே பெண்ணுக்கு இன்பமும் ஆற்றலும் முழுமையும் எல்லாமே கிடைக்கின்றன?"

"அதுவும் இதுவும் ஒன்றா?" என்றாள் சத்யவிரதை சலிப்புடன். "ஒன்றுதானடி. நான் மனைவியானேனா அன்னையானேனா என்று என்னாலேயே அறியமுடியவில்லை" என்றாள் காந்தாரி. சத்யவிரதை இறங்கியகுரலில் "வேண்டாம் அக்கா" என்றாள். "தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்....வேண்டாம். நீங்கள் இந்தக் கண்கட்டுடன் அஸ்தினபுரிக்குச் சென்றால் இதையே ஒரு பெரிய புராணமாக சூதர்கள் ஆக்கிவிடுவார்கள். விரும்பினாலும்கூட உங்களால் கண்களை திறக்கமுடியாது..."

காந்தாரி "நான் இப்போதிருக்கும் இந்த நிலையில் இருந்து ஒருபோதும் விழித்தெழவில்லை என்றால் அதைவிட ஏதும் எனக்குத் தேவையில்லையடி" என்றாள். சத்யவிரதை அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் திரும்பப்படுத்துக்கொண்டாள்.

அந்த உரையாடலை மற்ற தங்கையரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் விட்ட பெருமூச்சுகள் இருளில் ஒலிப்பதை காந்தாரி கேட்டாள். அதன்பின் அஸ்தினபுரியை அடையும் வரை அவர்கள் அதைப்பற்றி ஏதும் பேசவில்லை.

சிறிதுநேரத்தில் காந்தாரி தூங்கிவிட்டாள். ஆனால் வண்டியின் அசைவும் ஓசையும் நீடித்தன. அவள் வண்டியில் இருந்தபடியே தொலைவில் தெரிந்த ஒரு மரத்தைப்பார்த்தாள். வண்டியில் அவளைத்தவிர எவருமில்லை. அவள் இறங்கி அந்த மரத்தை நோக்கி ஓடினாள்.

செல்லச்செல்ல அந்த மரம் தொலைவிலிருப்பதாகத் தோன்றியது. நெடுநேரம் கழித்து அதை நெருங்கினாள். அது தாலிப்பனை. அதன் பூ செம்மஞ்சளாக விரிந்து காற்றில் உலைந்தாடியது. அவளருகே அந்த சூதப்பெண் நின்றிருந்தாள். "இவ்வளவு பெரிய பூவா?" என்று காந்தாரி கேட்டாள். சூதப்பெண் சிரித்துக்கொண்டு "இந்த மலர் ஒரு நுண்வடிவக் காடு" என்றாள். காந்தாரி "ஏன் அது தனித்தே நிற்கிறது?" என்றாள். "காட்டை கருவிலேந்திய மரம் தனித்துத்தானே நிற்கமுடியும்?" என்றாள் சூதப்பெண்.

பகுதி ஐந்து : முதல்மழை

[ 3 ]

புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான்.

"தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை" என்றார் சனகர். "நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்" என்றார் சனந்தர். சனாதனர் "படைப்பவனைவிட மேலான படைப்பு பொருளற்றது. தோற்கடிக்கப்படுவதை என் அகம் விழையவுமில்லை" என்றார். சனத்குமாரர் "படைப்பவன் பிறபடைப்பாளிகளுடன் ஒத்துப்போகமுடியாது. நான் என் தமையன்களுடன் முரண்கொள்ளமாட்டேன்" என்றார்.

சினம்கொண்டு எழுந்த முதல்தாதையின் நெரிந்த புருவங்களுக்கு அடியில் எரிந்த விழிகளிலிருந்து நெருப்புருவாக குழந்தை ஒன்று பிறந்தது. அதன் கைகால்கள் அனலாறுகளாக விண்ணில் ஓடின. அதன் தலைமுடி தழலாட்டமாக திசைகளில் பரவியது. அதன் விழிகள் ஆதித்யர்களாக சுடர்விட்டன. திசைகள் இடிபட பெருங்குரலில் அழுத அந்த மைந்தனைக் கண்டு பிரம்மனே அஞ்சி பின்னடைந்தான். அதன் தழலெரிவை விண்ணகமும் தாங்காதென்று எண்ணியதும் அவன் ‘இம்மகவு இரண்டாக ஆகக் கடவது’ என்றான்.

அந்த அனல்மகவு ஆண் பெண் என இரண்டாகப்பிரிந்தது. பிரிந்த இரு குழவிகளில் ஒன்று கீழ்த்திசையையும் இன்னொன்று மேல்திசையையும் முற்றாக நிறைத்திருந்தது. வானகமே எரிவெளியாக இருந்ததைக் கண்டு பிரம்மன் அந்த ஆண்மகவை பதினொரு சிறுமகவுகளாகப் பிரித்தான். பதினொரு தழல்மைந்தர்களும் செங்கதிர் விரியும் உடலும் கருங்கதிரென அலையும் குழல்களும் கொண்டிருந்தனர். அவர்கள் பதினொரு ருத்ரர்கள் என்று பிரம்மனால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பருவுலகுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் மன்யூ பருப்பொருளுக்குள் எரியும் அனலானான். மனு மானுடத்துக்குள் கனலும் உயிரானான். மகினசன் அறிவிலும் மகான் ஞானத்திலும் எரிந்தனர். சிவன் யோகத்தின் கனல். ருதுத்வஜன் தாவரங்களில் தளிராக எழுபவன். உக்ரரேதஸ் விலங்குகளின் விந்துவின் வெம்மை. பவன் வேர்களின் வெப்பம். காமன் வசந்தத்தின் தழல். வாமதேவன் மரணத்தின் தீ. திருதவிருதன் அழிவின்மையின் எரி.

பிரிந்தெழுந்த அனல்மகளில் இருந்து பதினொரு ருத்ரைகள் உருவானார்கள். தீகை, விருத்தி, உசனை, உமை, நியுதை, சர்ப்பிஸ், இளை, அம்பிகை, இராவதி, சுதை, தீக்‌ஷை என்னும் அவர்கள் ருத்ரர்களின் துணைவிகளாயினர். பதினொரு ருத்ரர்களும் பருவெளியின் பதினொரு மூலைகளிலும் நின்றெரியும் தழல்களாயினர். வான்வெளியை முழுமையாகக் காணும் கண்கள் கொண்டவர்கள் மட்டுமே அவர்களனைவரையும் ஒரேசமயம் காணமுடியும்.

பாலைநிலத்துப் பாறை ஒன்றில் அமர்ந்து யோகத்தில் தன் அகக்குகைக்குள் ஆகாயத்தை எழுப்பிய மாமுனிவரான பிரகஸ்பதி பதினொரு ருத்ரர்களையும் அவர்களின் ருத்ரைகளுடன் கண்டார். பெருந்தழலை அறிந்த அவரது அகம் அமர்ந்திருந்த மானுட உடல் வெம்மைகொண்டு எரிந்து பொசுங்கியது. சாம்பல்குவையாக அவர் கிடந்தார். ஆயிரமாண்டுகாலம் அந்தச்சாம்பல் அங்கே கிடந்தது. பின்பு அங்கே பெய்த மழையால் அச்சாம்பல் கரைந்தோடி ஒரு சிறிய தடாகத்தை அடைந்தது.

அந்தத் தடாகத்தின் கரையோரமாக அவரது தலையின் நெற்றியோட்டின் மணி ஒரு விதையாக பதிந்து முளைத்தெழுந்தது. பிரகஸ்பதி மீண்டும் மானுட உடலைப்பெற்று நடந்து மறைந்தார். அச்சுனையின் கரைகளில் அவரது சாம்பல்துளிகள் நூற்றியெட்டு மரங்களாக முளைத்தெழுந்தன. அவை ருத்ராக்‌ஷ மரங்களாக மாறி அச்சுனையை சூழ்ந்து நின்றிருந்தன. அந்தச்சோலை ருத்ராணிருத்ரம் என்று அழைக்கப்பட்டது. அஷ்டவக்ரமாமுனிவர் அங்கே வந்து தவம் செய்தபோது அங்கே சுனைக்கரையில் நிறுவிய சிவக்குறி பயணிகளால் வணங்கப்பட்டது.

சமநிலத்தில் ருத்ராக்‌ஷமரங்கள் நிற்கும் ஒரே இடம் என்று அந்தச்சோலை அறியப்பட்டது. அங்கே ஒரே ஒரு மரம் ஒற்றைமுகமுள்ள சிவரூபமான ருத்ராக்‌ஷமணிகளைக் காய்த்தது. அம்மையப்பனின் வடிவமான இரட்டைமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் விளையும் மூன்று மரங்கள் அங்கே நின்றன. அக்னிவடிவமான மூன்றுமுக ருத்ராக்‌ஷங்களும் பிரம்மவடிவான நான்முக ருத்ராக்‌ஷங்களும் காலாக்னியின் வடிவமான ஐந்துமுக ருத்ராக்‌ஷங்களும் அறுமுகனின் ருத்ராக்‌ஷங்களும் ஏழுமுகம்கொண்ட காமதேவ ருத்ராக்‌ஷங்களும் எட்டுமுகம்கொண்ட கணபதிக்குரிய ருத்ராக்‌ஷங்களும் ஒன்பதுமுகம் கொண்ட பைரவனுக்குரிய ருத்ராக்‌ஷங்களும் அங்கே விளைந்தன.

பெரும்பாலை நிலத்தைத் தாண்டி அஸ்தினபுரியின் மணக்குழு ருத்ராணிருத்ரத்தை அடைந்ததும் பலபத்ரர் வந்து காந்தாரி இருந்த வண்டியை அணுகி வணங்கினார். "அரசி, இந்தச் சோலையில் பாலைநிலத்தின் வெம்மையின் அதிபர்களான பதினொரு ருத்ரர்களும் குடிகொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. இங்கே அவர்களுக்கு பலிகொடுத்து வணங்கி நாம் முன்னே செல்லலாம்" என்றார். காந்தாரி "அவ்வாறே ஆகுக" என்றபின் தன் தங்கையருடன் இறங்கினாள்.

சிறிய இலைகளும் கனத்த அடிமரங்களும் கொண்ட ருத்ராக்‌ஷமரங்களின் வேர்கள் பாறைகளைக் கவ்வி உடைத்து மண்ணைத்துளைத்து நின்றிருந்த சோலைக்கு நடுவே வெண்மணல் குழிக்குள் சற்றே நீர் ஊறித்தேங்கிய சுனை கிடந்தது. ருத்ராக்‌ஷமரங்கள் இலைகளைப் பெரும்பாலும் உதிர்த்து வெற்றுக்கிளைகளை விரித்து நின்றன. கிளைநுனிகளில் மட்டுமே சற்றேனும் பசுமை இருந்தது. பலபத்ரர் "இவ்வருடம் கோடை சற்று கடுமை" என்று சொன்னார்.

விதுரன் "இங்கே மழை பெய்வதில்லையா?" என்றான். "பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவே உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது" என்றபின் அங்கே வண்டிகளில் இருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்த பணியாளிடம் "இங்கே மழைபெய்து எவ்வளவு காலமாகிறது?" என்றார். விழித்த வெண்விழிகளுடன் அவன் திகைத்து நோக்க பலபத்ரர் மீண்டும் கேட்டார்.

அவன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திவிட்டு "நெடுங்காலம்..." என்றபின் "என் மனைவியை நான் மணம்செய்துகொண்டதற்கு முந்தையவருடம் மழை இருந்தது. என் மகனுக்கு ஏழு வயதாகிறது" என்றான். பலபத்ரர் புன்னகையுடன் அவனை போகும்படி சைகை காட்டிவிட்டு "பார்த்தீர்களல்லவா? எட்டுவருடங்களுக்கும் மேலாக இங்கே மழை இல்லை" என்றார். விதுரன் திகைப்புடன் அந்த மரங்களை நோக்கியபின் "அப்படியென்றால் இந்தச்சுனைநீர் எங்கிருந்து வருகிறது?" என்றான்.

"வடக்கே உயர்ந்திருக்கும் இமயத்தின் தொடர்ச்சியான பாறை இந்த மணல்வெளிக்கு அடியில் சரிந்து கூர்ஜரக் கடற்கரை நோக்கிச் செல்கிறது. அந்தப்பாறையின் பரப்பில் எங்கோ பெரிய விரிசல் ஒன்று இருக்கலாம். மலைநீர் அதன் வழியாக ஊறிவரக்கூடும். மண்ணுக்குள் நரம்புகள் போல கண்காணாநதிகள் ஓடுகின்றன. அவற்றைப்பற்றி நீர்நூல்கள் விரிவாகவே பேசுகின்றன" என்றார் வழிகாட்டியான சூதப்பாடகர். "இமயத்தின் அடிவாரத்தில் மழை பெய்யும்போது இச்சுனை நிறையும் என நினைக்கிறேன். அந்த நீரை நம்பித்தான் இந்த மரங்கள் வாழ்கின்றன."

சுனைக்கு வடக்காக கிழக்குநோக்கிய நிலையில் நீளமான கல்பீடத்தின் குழிகளில் பதினொரு ருத்ரர்களும் சிவந்த நீள்கற்களாக பதிட்டை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் ருத்ரைகள் நீலநிறக்கற்களாக அவர்களுக்குக் கீழே கிடைமட்டமாக பதிக்கப்பட்டிருந்தனர். ருத்ரர்களுக்கு மேல் பெரிய வெண்ணிறக் கல்லால் ஆன சிவக்குறி இருந்தது. சோலை முழுக்க சருகுகள் உதிர்ந்து காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்டு மரத்தடிகளிலும் பாறைக்குவைகளிலும் குவிந்துகிடந்தன. அவற்றின் மேல் மெல்லிய மணல் பொழியும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

அங்கேயே தங்கியிருந்த பூசகராகிய முதியசூதர் பித்து நிறைந்த கண்களும் சடைமுடிக்கற்றைகளும் மண்படிந்த உடலும் கொண்டிருந்தார். அவர் பீஷ்மரையோ பிறரையோ வணங்காமல் காய்ந்த புல்வரம்பு போலிருந்த புருவங்களுக்குக் கீழே வெந்த செங்கல் போன்றிருந்த கண்களால் ஏறிட்டுப்பார்த்து "மகாருத்ரர்கள் தங்கும் இடம் இது. அவர்கள் அனலுருவானவர்கள். காய்சினத்து தாதையர். கானகத்தை ஆள்பவர்கள்" என்றார். அவருடைய நகங்கள் காகங்களின் அலகுகள் போல கருமையாக நீண்டிருந்தன. பலபத்ரர் "பூசனைநிகழட்டும் சூதரே" என்றார்.

முதுசூதர் ருத்ரபீடங்கள் மேல் பரவியிருந்த சருகுகளையும் மண்ணையும் அள்ளி அகற்றி தூய்மை செய்தார். சுனைநீரை அள்ளிவந்து கல்நிலைகளைக் கழுவினார். வண்டிக்குள் இருந்த மரப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உலர்ந்த துளசி இலைகளையும் ஈச்சைப்பழங்களையும் படைத்தார். "குருதிபலி வழக்கம் உண்டு" என்று முதுசூதர் பலபத்ரரிடம் சொன்னார். பலபத்ரர் பீஷ்மரை நோக்க "இப்போது நம்மிடம் குருதி இல்லை" என்று பீஷ்மர் சொன்னார்.

பலபத்ரர் "ஆம்... இப்போது மலரும் பழங்களும் போதும்... மீண்டும் வரும்போது ருத்ரர்களுக்கு குருதியளிப்போம்" என்றார். முதியசூதர் ஏதோ சொல்ல வந்தபின் சடைக்கற்றைகள் அசைய தலையை அசைத்து "அவ்வாறே ஆகுக" என்றார். கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையில் உள்ள ஸ்ரீருத்ரமந்திரத்தைச் சொன்னார். அதன் இருபகுதிகளான நமகம் மற்றும் சமகத்தை அவர் தன் ஓநாய்க்குரலில் சொல்லி முடித்ததும் பீஷ்மரும் விதுரரும் பிறரும் தங்கள் ஆயுதங்களை ருத்ரர்கள் முன் வைத்து வணங்கினர்.

திருதராஷ்டிரன் ஒரு வீரன் தோளைப்பற்றியபடி வந்து ருத்ரர்கள் முன் விழுந்து வணங்கினான். சம்படையின் தோளைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கி சூதர் அளித்த துளசி இதழை வாங்கி தன் தலையில் சூடிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள். அவளுக்குப்பின்னால் நின்றிருந்த சத்யசேனை மேலும் பின்னால்நகர அவள் மேல் தன் உடல் படக்கூடாதென்பதற்காக காவலன் விலகி மேலும் பின்னால் பாய்ந்தான். அவனுக்குப்பின்னால் நின்றிருந்த காவலன் அதே கணம் பீஷ்மர் செல்வதற்காக தன் வேலைத் தாழ்த்த அதன் கூரிய நுனி வீரனின் தோளைக் கிழித்தது. அவன் கைகளால் பொத்திக்கொள்ள விரலிடுக்கை மீறி குருதி ஊறியது.

பலபத்ரர் புருவம் தூக்கி "என்ன?" என்றார். அவன் "இல்லை" என்று சொல்லி பின்னகர்ந்து மற்ற வீரர்களுக்கு இடையே சென்றான். இன்னொரு வீரன் தலைப்பாகையைக் கிழித்து அவன் காயத்தைக் கட்ட அவன் தன் கையை விரித்துத் தொங்கவிட்டபோது விரலில் இருந்து மூன்று குருதிச்சொட்டுகள் உதிர்ந்து மணலில் விழுந்தன. காய்ந்த மணல் அவற்றை உடனடியாக உறிஞ்சி செம்புள்ளிகளாக ஆக்கிக்கொண்டது.

அனைவரும் மீண்டும் வண்டிகளிலும் ரதங்களிலும் ஏறிக்கொண்டனர். முதல் குதிரை அருகே கொடியுடன் நின்ற காவலன் திரும்பி பலபத்ரரைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும் தன் சங்கத்தை ஊதிக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான். கடைசியில் நின்ற காவலனும் சங்கை ஊதியதும் புரவிகள் கடிவாளம் இழுபட்டு கால்களைத் தூக்கி வைத்தன. வண்டிகளின் சக்கரங்கள் கூழாங்கற்களை அரைத்தபடி அசைந்து முன்னகர்ந்தன.

அவர்கள் சென்ற தடம் செம்புழுதியில் நீண்டு கிடந்தது. ஓசைகள் திசைவிளிம்பில் மறைந்தன. சோலைக்குள் சருகுகளின் அசைவாக ஒரு காற்று நுழைந்தது. முதுசூதர் மணலில் குனிந்து கூர்ந்து நோக்கி மூன்றுதுளி குருதி விழுந்த இடத்தைக் கண்டடைந்தார். அந்த இடத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். குருதி உலர்ந்து கருகி கரும்புள்ளிகளாக இருந்தது. ஒரு சருகை எடுத்து அந்த மணலை மெல்ல அள்ளினார். அதை கொண்டுசென்று ருத்ரர்களின் முன்னால் வைத்தார். அதை தன் கைகளால் தொட்டு ஒவ்வொரு ருத்ரரின் மீதும் வைத்தார்.

ருத்ரர்களின் முன் அமர்ந்துகொண்டு தன் தலையை ஆட்டியபடி அவர் அக்கற்களை நோக்கிக்கொண்டிருந்தார். கற்களில் கண்விழித்தெழுந்த ருத்ரர்கள் அவரை நோக்கினர். தொலைதூரப்புயல் எழுந்து வருவதுபோல அவரிலிருந்து வேதமந்திரம் வெளிப்பட்டது.

‘ஊதப்பட்ட அனல்போல் ஒளிர்பவர்களே

இருமடங்கு மும்மடங்கு என

வீசுந்தோறும் பெருகுபவர்களே

புழுதிபடியா பொற்தேர்கொண்டவர்களே

மருத்துக்களே

செல்வங்களுடனும் ஆற்றல்களுடனும் எழுக!

குருதிபொழியும் ருத்ரர்களின் மைந்தர்களே

அனைத்தையும் அடக்கிய விண்ணகத்தால்

ஆளப்படுபவர்களே

மகத்தானவர்களே மருத்துக்களே வருக!

அன்னை பிருஷ்னியால்

மானுடர்களுக்காக கருவுறப்பட்டவர்களே

விரைந்து வருக!

வடமேற்கே வான்விளிம்பின் ஒளியாலான வில்வட்டத்தில் சிவந்த அலைகள் எழுவதுபோல ருத்ரர்களின் மைந்தர்களான மருத்துக்கள் தோன்றினர். செம்பிடரி பறக்கும் ஆயிரத்தெட்டு பொன்னிறப்புரவிகளின் வடிவில் அவர்கள் பறந்து வந்தனர். அவர்களின் ஓசைகேட்டு அடிமரங்கள் நடுங்கின. செம்புழுதிக்கடல் பெருகிவந்து திசைகளை முழுமையாக மூடிக்கொண்டது. மலையடுக்குகள் பாறைகள் மணல்சரிவுகள் மரங்கள் இலைகள் என அனைத்தும் செம்புழுதிப்பரப்புள் புதைந்தழிந்தன. விழிதிறந்தாலும் மூடினாலும் செந்நிறமன்றி ஏதும் தெரியவில்லை.

வானில் நெடுந்தொலைவில் இடி ஒலித்தது. தூசுக்குள் அந்த ஓசை நீருக்குள் என ஒலித்தது. மின்னல் வெட்டிய ஒளி பட்டுத்திரைக்கு அப்பால் என தெரிந்து மறைந்தது. இடியோசை யானை வயிற்றுக்குள் உறுமலோசை போல ஒலித்து நீண்டு நெடுந்தொலைவில் நுனி நெளிந்து அடங்கியது. முதுசூதர் செம்புழுதியால் மூடப்பட்டவராக அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் சற்று அப்பால் சிறு அம்பு ஒன்று மண்ணைத் தைத்த ஒலியைக் கேட்டார். இன்னொரு அம்பு எனஅருகே விழுந்தது நீர்த்துளி. இன்னுமொரு இன்னுமொரு அம்பு என நீர்த்துளிகள். நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.

அவர் தன் இடத்தோளில் கூழாங்கல் விழுந்ததுபோல பெரிய மழைத்துளி அறைந்தது உணர்ந்து திரும்பி நோக்கியபோது கொழுத்த குருதிபோல செம்புழுதியில் கரைந்து அது வழிந்தது கண்டார். இன்னொரு துளி அவர் முகத்தில் விழுந்தது. சடசடவென நீர்த்துளிகள் விழுந்து பரவ மரங்களில் இலைகளில் இருந்து செங்குருதி சொட்டியது. அடிமரங்களில் ரத்தம் அலையலையாக வழிந்திறங்கியது. பாறைகள் செந்நிற ரத்தம் பரவி ஊன்துண்டுகள் போலத் தெரிந்தன.

ருத்ரர்களின் மீது குருதிமழை பொழிந்தது. கல்மழுங்கிய தலைகளில் விழுந்த செம்புனல் சிறிய மலர்கள் போல மலர்ந்து மலர்ந்து தெறித்து மறைய கல்லுடல் வளைவில் செவ்வலைகள் இறங்கின. பீடத்தில் செந்நிணம்போல அதிர்ந்து சுழித்து வளைந்தோடி விளிம்பிலிருந்து செவ்விழுதாகக் கொட்டியது நீர். முதுசூதர் எழுந்து சோலைவிட்டு வெளியே வந்து அங்கிருந்த பாறைமேலேறி பார்த்தார். நான்குதிசைகளையும் மூடி குருதிமழை பொழிந்து கொண்டிருந்தது.

பதினொரு ருத்ரர்களும் மருத்துக்கள் மீது ஏறி செஞ்சடைகளில் இருந்து குருதித்துளிகள் தெறிக்க பறந்துவந்து அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை அடைந்தனர். நள்ளிரவில் காவல்மாறியபின் புதிய காவலர்கள் வந்து வேல்களை தங்கள் கால்களுக்கு நடுவே நட்டு அமர்ந்திருந்த நேரம் அது. தாளமுடியாத புழுக்கத்தால் அவர்கள் தங்கள் தோலாடைகளைக் கழற்றி அப்பால் வீசியிருந்தனர். அவர்களைச் சுற்றி வென்னீர்க்குளம் போல அசைவே இல்லாமல் காற்று தேங்கி நின்றது. உடலை அசைத்தும் மூச்சை ஊதியும் விசிறிகளாலும் ஆடைகளாலும் வீசியும் அவர்கள் அக்காற்றை அசைக்க முயன்றனர். இருண்ட காற்று கோட்டைச்சுவர் போல திடம்கொண்டிருந்தது.

வியர்வை வழிய காவல்மாடத்தில் நின்றிருந்த வீரன் புரவிப்படை ஒன்று வரும் ஒலியை கேட்டான். அப்பால் தெரிந்த குறுங்காட்டுக்குள் மரங்கள் அசைவதைக் கண்டு எழுந்து நின்று பார்த்தான். மரங்களை அசைத்துக்குலைத்தபடி இரைச்சலுடன் கோட்டைமேல் மோதி மேலெழுந்து சுழித்து மறுபக்கம் பொழிந்தது காற்று. "காற்றா?" என்று வாய் வழிய தூங்கிக்கொண்டிருந்த வீரன் கேட்டான். "ஆம்..." என்றான் முதல்வீரன்.

"காற்று இப்படி காட்டாறு போல வருமா என்ன?" என்று அவன் கேட்டான். மறுபக்கம் சென்ற காற்றில் மரங்கள் இலைளை திருப்பிக்கொண்டு ஓலமிட்டன. நூற்றுக்கணக்கான சாளரங்கள் அறைபட்டு ஓசையிட்டன. முதல் வீரன் தன் தோள்களிலும் மார்பிலும் நீர்த்துளிகள் அழுகியபழங்கள் போல வீசப்பட்டதை உணர்ந்தான். கையைவைத்து திகைத்து எடுத்துப் பார்த்தான். "ரத்தம்" என்றான்.

இரண்டாவது வீரன் "ரத்தமா? முதல்மழை... வானின் புழுதிகலந்திருக்கிறது" என்றபடி எழுந்தான். அதற்குள் அவர்கள் அந்த மழையில் முழுமையாகவே நனைந்திருந்தார்கள். அறைக்குள் பேசிக்கொண்டிருந்த வீரர்கள் அணைந்த எண்ணைக்குடுவை விளக்கை பற்றவைத்தனர். ஈரம் சொட்ட உள்ளே வந்த வீரனைக் கண்டு அரைத்தூக்கத்தில் விழித்த ஒருவன் அலறியபடி எழுந்து சுவரோடு ஒட்டிக்கொண்டான். உள்ளே வந்தவனின் உடல் செங்குருதியால் மூடப்பட்டிருந்தது.

"செந்நிற மழை" என்றான் காவலன். அனைவரும் வெளியே முண்டியடித்தனர். கோட்டைக்குமேலிருந்தும் கீழிருந்தும் பலர் "மழையா..? மழையா பெய்தது?" என்று கேட்டுக்கொண்டிருந்தனர். யாரோ "சேற்றுமழை!" என்றனர். "செங்குருதி போல..." "இதுவரை இதைப்போல பெய்ததே இல்லை." "முன்னொருகாலத்தில் தவளைமழை பெய்ததாக என் தாத்தா சொன்னார்." "சென்றமுறை பனிக்கட்டி மழை பெய்தது." குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நனைந்தவர்கள் உள்ளே சென்று தங்கள் உடல்களை தாங்களே பார்த்துக்கொண்டனர்.

"போர்க்களத்தில் இருந்து வருவதைப்போலிருக்கிறான்" என்று ஒருவன் சொன்னான். "பிறந்த குழந்தைகூட இப்படித்தான் இருக்கும்" என்றான் இன்னொருவன். காவலர்கள் வெளியே சென்று பார்த்தனர். மொத்தக்காற்றும் ஏதும் நிகழாதது போல அசைவற்று இருளை ஏந்தி நின்றிருந்தது. வானில் நிறைந்திருந்த விண்மீன்கள் முற்றிலும் மறைந்திருந்தன.

அவர்கள் உள்ளே சென்று மீன்நெய் விட்ட அறுமுனைப் பந்தங்களைக் கொளுத்தி வெளியே கொண்டுவந்தார்கள். அந்த ஒளியில் கோட்டைக்குமேலும் கீழும் இருந்த நூற்றுக்கணக்கான கைவிடுபடைக்கலங்களின் அம்புநுனிகளில் குருதி துளித்துச் சொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.

பகுதி ஐந்து : முதல்மழை

[ 4 ]

அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. "வா" என்றாள். சியாமை உள்ளே வந்தாள்.

"வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது" என்றாள் சத்யவதி. "நான் வெயில் தகிக்கும் பெரும்பாலை ஒன்றில் நின்றிருப்பதுபோல கனவுகண்டேன்." சியாமை "படுத்துக்கொள்ளுங்கள் அரசி... நான் விசிறுகிறேன்" என்றபடி அருகே இருந்த மயிலிறகு விசிறியை எடுத்துக்கொண்டாள்.

சத்யவதி படுத்துக்கொண்டாள். கீழே காவல்வீரர்கள் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடைபழகும் ஒலியும் அவ்வப்போது அவர்களின் ஆயுதங்களின் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. சியாமை மெல்ல விசிறிய காற்று அவ்வளவு குளுமையாக இருந்தமைக்கு உடல் நன்றாக வியர்த்திருந்ததுதான் காரணம் என்று சத்யவதி உணர்ந்தாள். உள்ளே சென்ற நீர் குடல்களை குளிரச்செய்தது. நன்றாக உடலை விரித்துக்கொண்டபடி பெருமூச்சு விட்டாள்.

இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில்வரும் காலத்தை அவள் கடந்திருந்தாள். கண்களை மூடியிருக்கையில் இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. கண்களைத் திறக்காமலேயே "அவர்கள் நேற்று அதிகாலையிலேயே சுதுத்ரியைக் கடந்துவிட்டார்கள்" என்றாள். "ஆம்... இரவெல்லாம் பயணம் செய்கிறார்கள். அனேகமாக இன்றுமாலையில் திரஸத்வதியையும் கடந்துவந்திருப்பார்கள்."

"எல்லையைத் தாண்டியதுமே தூதுப்புறாவை அனுப்பும்படி பலபத்ரரிடம் சொல்லியிருந்தேன். இந்நேரம் வந்திருக்கவேண்டுமே" என்றாள் சத்யவதி. சியாமை புன்னகைசெய்தபடி "பயணத்தின் தாமதங்கள் எப்போதும் இருப்பவை அல்லவா?" என்று பொதுவாகச் சொன்னாள். "ஆம்...எல்லாம் சிறப்பாகவே முடிந்தன என்று செய்திவந்தபோது எனக்கு நிறைவே எழவில்லை. இன்னும் சற்று பதற்றம்தான் ஏற்பட்டது. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்" என்றாள் சத்யவதி.

"விதுரர் வந்து உங்களிடம் பேசும்வரை அந்தப்பதற்றம் நீடிக்கும் பேரரசி" என்றாள் சியாமை. சத்யவதி "ஆம் அது உண்மை. அனைத்துக்குள்ளும் அறியமுடியாத ஒன்று பொதிந்திருக்கிறது என்ற அச்சமே என்னைப்போன்ற அரசியல் மதியூகிகளின் நரகம். அவன் வந்து அனைத்தையும் தெளிவாக்கும் வரை நான் விதவிதமாக வெறும் கையால் கம்பளம் பின்னிக்கொண்டிருப்பேன்."

"இந்த வெம்மை... ஏன் இத்தனைநாள் மழை தாமதமாகிறது....மண் மழையை அறிந்து நூறுநாட்கள் கடந்துவிட்டன" என்று சொல்லி சத்யவதி மெல்லப்புரண்டாள். "நூறாண்டுகால வரலாற்றில் இதுவே மழை இத்தனை தாமதிக்கும் வருடம் என்று வானூலாளர் சொன்னார்கள்" என்றாள் சியாமை. "காற்று மாலைமுதலே அசைவை இழந்துள்ளது. கொடிகள் அசைந்து இருநாழிகைகளாகின்றன" சத்யவதி பெருமூச்செறிந்தாள்.

சடசடவென ஏதோ முறியும் ஒலி கேட்டது. மரக்கிளை முறிந்துவிழுகிறது என்று முதலில் சத்யவதி நினைத்தாள். மரங்களின் இலைகள் வழியாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாகத் தாவிவருவதுபோன்ற மனச்சித்திரம் எழுந்து உடனே என்ன அசட்டுக்கற்பனை என்ற மறு எண்ணமும் எழுந்தது. அதற்குள் கனத்த நீர்த்துளிகள் சாளரக்கதவுகளை அறைந்தன. திறந்திருந்த சாளரம் வழியாக புற்சரங்கள் போல பாய்ந்துவந்து தரையில் சிதறின. அவற்றை ஏற்றிவந்த காற்று சாளரக்கதவுகளை ஓங்கி அறைந்து, தீபச்சுடர்களை அணைத்து, மறுபக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்றது. அரண்மனையின் அனைத்து கதவுகளும் படபடவென அடித்துக்கொண்டன.

"மழையா?" என்று சொன்னபடி சத்யவதி எழுந்துகொண்டாள். "ஆம் பேரரசி, மழைதான்" என்றாள் சியாமை. "அதுதான் இத்தனை வெந்நீர்மையா?" குளிர்ந்த காற்று நீர்ச்சிதர்களுடன் அறைக்குள் சுழன்றடித்தது. சியாமை எழுந்து சென்று சாளரக்கதவுகளை மூடினாள். கதவுகளை அவளால் இழுக்கமுடியவில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு வெறியாட்டெழுந்த தெய்வதம் குடியேறியதுபோலிருந்தது. அப்பால் மரங்களின் கிளைகள் மிரண்ட புரவிகளென எழுந்து கொப்பளித்தன. ஒரு சாளரக்கதவு கையை மீறி திறந்து அவளை பின்னுக்குத் தள்ளியது. அதன் வழியாகவந்த நீர்த்துளிகள் கூழாங்கற்கள் போல எதிர்ச்சுவரை அறைந்தன.

"விட்டுவிடு" என்று சத்யவதி சொன்னாள். "அறை நனையட்டும்...நான் வேறு மஞ்சத்துக்குச் சென்றுவிடுகிறேன்." சியாமை பின்னகர்ந்து வந்து அமர்ந்துகொண்டாள். சிலகணங்களில் சாளரம் வழியாக மழை நீர்நிறை ஏரியின் மதகுதிறந்தது போல பொழியலாயிற்று. மரத்தாலான தரையில் நீர் பெருகி வெளியே படிகளில் வழிந்தது. சத்யவதியின் ஆடைகள் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டன. கூந்தல் கன்னத்தில் ஒட்டிப்பரவ அவள் விரலால் கோதி பின்னால் செருகிக்கொண்டாள்.

இடியோசைக்குப்பின் மின்னல் அதிர்ந்து மரங்கள் ஒளியுடன் அதிர்ந்து மறைந்தன. அடுத்த இடியோசைக்குப்பின் சாளரங்கள் மின்னி அணைவதைக் கண்டாள். அடுத்த இடியோசைக்குப்பின் அறையின் அனைத்து உலோகவளைவுகளிலும் செவ்வொளி மின்னும் விழிகள் திறந்ததைக் கண்டாள். பிறிதொரு இடியோசை அணைந்தகணத்தில் மேகக்குவியல்களில் இந்திர வஜ்ரம் எழுந்ததைக் கண்டாள்.

"அப்படியென்றால் அவள் உள்ளே நுழைந்ததும் மழைபெய்திருக்கிறது" என்றாள் சத்யவதி. "ஆம் பேரரசி, அரசி மழையுடன் வருகிறார்கள். அனேகமாக அவர்கள் நேற்றுமாலையே திரஸத்வதியை கடந்திருப்பார்கள்" என்றாள் சியாமை. "மழைபெய்தால் அதில் மலைவெள்ளம் இறங்கும். வானம் மூட்டமாக இருந்திருக்கும், பீஷ்மர் உடனே நதியைக் கடக்க முடிவெடுத்திருப்பார்."

சத்யவதி புன்னகையுடன் "திரஸத்வதிக்கு இப்பால் நம்முடைய எல்லை. யோசித்துப்பார், அவள் நதியைக் கடந்து மண்ணில் கால் வைத்ததும் பெருமழை கொட்டத் தொடங்கியிருக்கிறது." சியாமை சிரித்தபடி "சூதர்களுக்கு நாமே கதைகளை உருவாக்கிக் கொடுத்துவிடலாம்" என்றாள்.

இரவு மழையாலானதாக இருந்தது. மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.

விடியற்காலையில் மழை சற்றே ஓய்ந்தது. சத்யவதி கீழே சென்று வெந்நீரில் நீராடி வெள்ளை ஆடைகளும் ஒரே ஒரு வைர ஆரமும் அணிந்து சபாமண்டபத்துக்கு வந்தாள். அரண்மனையில் சாளரத்தை ஒட்டிய பகுதிகளெல்லாம் நனைந்திருக்க அவற்றை சேவகர்கள் மரவுரிகளால் துடைத்துக் கொண்டிருந்தனர். வடக்கு வாயிலில் இருந்து யானைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவை மழையை விரும்பி எழுப்பும் குரல் என நினைத்ததும் சத்யவதி புன்னகை புரிந்துகொண்டாள். உள் அங்கண முற்றத்தில் மரக்கூரையின் விளிம்பிலிருந்து நீர் கசிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

சபாமண்டபத்திற்குச் செல்லும் நீண்ட இடைநாழியின் பக்கவாட்டுத் திறப்புக்கு அப்பால் தெரிந்த அரண்மனைத் தோட்டத்தின் அனைத்து மரங்களும் புதியதாகப் பிறந்துவந்தவை போலிருந்தன. நேற்றுவரை புழுதிபடிந்து சோர்ந்திருந்த மரங்கள் எப்படி ஒரே இரவில் புத்துயிர் கொள்ளமுடியும்? அவை காத்திருந்த கணம் போலும் அது. அதற்காக அவை தங்கள் உயிரனைத்தையும் இலைகளில் தேக்கியிருந்திருக்கவேண்டும்.

சபாமண்டபத்தில் அவளுக்காக அமைச்சர்கள் காத்திருந்தனர். கவரியும் மங்கலத்தாலமும் ஏந்திய சேவகர்களின் நடுவே நடந்து அவள் உள்ளே சென்றபோது அமைச்சர்கள் எழுந்து வாழ்த்தொலித்தனர். அவள் அமர்ந்ததும் அமைச்சர்களின் முகங்களை கவனித்தாள்.  மழை அவர்களனைவரையும் மகிழ்வித்திருப்பதாகப் பட்டது.

காலை விடியத்தொடங்கியிருந்தாலும் வானம் இருண்டிருந்தமையால் இருள் இருந்தது. மண்டபத்தில் அடுக்குநெய்விளக்குகளில் சுடர்கள் எரிந்தன. அது அந்திவேளை என்ற பிரமையை அகத்துக்கு அளித்துக்கொண்டே இருந்தன அவை.

அவள் அரியணையில் அமர்ந்தபின்னும் வெளியே தெரிந்த ஒளிமங்கலையே பார்த்துக்கொண்டிருந்தாள். கருமேகக்குவியல் மெதுவாக மிக அப்பால் எங்கோ ஓசையிட்டது. அதைக்கேட்டு வடக்குவாயில் யானைகள் இரண்டு சின்னம் விளித்தன. மண்ணில் காலூன்றிய கருமேகங்கள்.

"மழை தொடங்கிவிட்டது பேரரசி" என்றார் எல்லைக்காவலர் தலைவரான விப்ரர். வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும் யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் அங்கிருந்தனர். தளகர்த்தர்களான சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் இருந்தனர். உக்ரசேனர் பீஷ்மருடன் சென்றிருந்தார். சத்யவதி "செய்தி வந்ததா?" என்றாள்.

"மழையில் செய்திப்புறாக்கள் தாமதமாகும்...அனேகமாக சற்றுநேரத்தில் வந்துவிடும். ஆனால் நேற்றே அவர்கள் நம் எல்லை நதியைக் கடந்திருப்பார்கள்" என்றார் விப்ரர். "திரஸத்வதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதா?" என்று சத்யவதி கேட்டாள். "இந்த மழை இன்னும் நான்குநாட்களில் இமயத்தைச் சென்று முட்டும். அதன்பின்னர்தான் திரஸத்வதி பெருகிவரும்" என்றார் விப்ரர்.

"வருவது நம் தேசத்தின் அரசி" என்றாள் சத்யவதி. "ஆகவே மழையாக இருந்தாலும் வெள்ளமாக இருந்தாலும் நம் நகரமக்கள் அனைவரும் வாயிலில் திரண்டாகவேண்டும். அனைத்து மங்கலமுரசுகளும் ஒலிக்கவேண்டும். வேதியரும் சூதரும் வாழ்த்தவேண்டும்." வைராடர் "நூறு யானைகள் தலைமையில் பட்டத்துயானையே சென்று அவர்களை வரவேற்க ஆணையிட்டிருக்கிறேன் பேரரசி. யானைகளுக்கான அணியலங்காரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன" என்றார். சோமர் "சூதர்களுக்கும் வைதிகர்களுக்கும் ஆணைகள் சென்றுவிட்டன" என்றார்.

அவள் மனக்குறிப்பை உணர்ந்ததுபோல விப்ரர் "நல்லநிமித்தம் பேரரசி... மழையுடன் நகர்நுழைகிறார்கள்" என்றார். உக்ரசேனர் "இம்முறை மழை மூன்றுமாதம் காக்கவைத்துவிட்டது" என்றார். சத்யவதி அவரைப்பார்த்ததும் "நகரே விடாய்கொண்டிருந்தது" என்றார். விப்ரர் "நகரெங்கும் புதிய அரசியைப்பற்றியே பேச்சு நிகழ்கிறது. நம் அரசருக்காக தன் கண்களையும் இருட்டாக்கிக்கொண்டார் என்றும் புராணநாயகியரான சாவித்ரியையும் அனசூயையையும் நிகர்த்தவர் என்றும் சொல்கிறார்கள்" என்றார். உக்ரசேனர் "ஆம், நகர்மக்கள் அதைப்பற்றி பெருமிதம்கொண்டு கண்ணீருடன் கைகூப்புகிறார்கள்" என்றார்.

சத்யவதி "அரச ஊழியர்கள் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் உக்ரசேனரே?" என்றாள். "அரச ஊழியர்களில் பலவகையினர் உண்டு பேரரசி. ஒற்றர்கள் போன்றவர்கள் பலநாடுகளையும் அரசியலின் பல முகங்களையும் கண்டவர்கள். அவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. காந்தார அரசியின் செயல் ஒரு சிறந்த அரசிக்குரியதல்ல என்றும் உணர்ச்சிமேலீட்டில் முடிவுகளை எடுப்பவர் அவர் என்பதைக் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள். அரசருக்கு விழியில்லை என்றிருக்கையில் அரசி அவருக்கும் விழியாக இருப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும் என்கிறார்கள்."

"ஆம் அப்படியும் சிந்திக்கலாம்தான்" என்றாள் சத்யவதி. உக்ரசேனர் "அது காந்தார இளவரசி அங்குள்ள முறைப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்று என்கிறார்கள். அங்கே இளவரசியருக்கும் பிறருக்கும் வேறுபாடில்லை. அவர்கள் குதிரைகளில் பெருநிலவிரிவுகளில் அலைபவர்கள். ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். அரசாள்வதற்கான சிறப்புப் பயிற்சி ஏதும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதில்லை..." என்றார். உக்ரசேனர் தணிந்த குரலில் "அதனால் தாழ்வில்லை. நாம் இங்கே பேரரசியின் தலைமையில் அப்பயிற்சியை அளித்துவிடமுடியும்...ஆனால் விழிகளை மூடிக்கொண்டசெயல் அதற்கும் தடையாக அமைந்துவிட்டிருக்கிறது."

விப்ரர் "ஆம், அது உண்மை" என்றார். "ஆனால் விழியின்மையால் என்ன ஆகப்போகிறது? இவ்வரசை நடத்தப்போவது விதுரர். அவருக்கு பல்லாயிரம் விழிகள். காந்தார இளவரசியை நம் அரசியாக ஏற்பதில் இங்கே பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் தயக்கமிருந்தது. அவர் முறையான ஷத்ரியகுடியில் பிறந்தவரல்ல என்று பலரும் பேசிக்கேட்டேன்."

விப்ரர் தொடர்ந்தார் "பேரரசியாரின் கவனத்துக்கு வந்திருக்கும். ஒரு யானை குட்டி போட்டாலே கவிதை புனைந்து பாடத்தொடங்கிவிடும் நம் சூதர்கள் காந்தார இளவரசியை நம் மன்னர் மணக்கவிருக்கும் செய்தி பரவிய பின்னரும்கூட ஒரு பாடலேனும் புனையவில்லை. ஆனால் அரசி தன் விழிகளை கட்டிக்கொண்டது அனைத்தையும் மாற்றிவிட்டது. இன்று அவர் இந்நகரத்தின் காவலன்னையாகவே மக்களால் எண்ணப்படுகிறார். சூதர்பாடல்கள் பால்கலம் பொங்குவதுபோல இந்நகரை மூடி எழுகின்றன... இப்போது இந்த மழையும் இணைந்துகொண்டிருக்கிறது."

"ஆம், மக்களின் ஏற்பே முக்கியமானது" என்று சத்யவதி சொன்னாள். "நான் இவ்வரியணையில் அமர்ந்து இருபதாண்டுகளாகின்றன. இன்றுவரை என்னை இந்நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை." விப்ரர் "இல்லை பேரரசி..." என சொல்லத் தொடங்க "ஆம், அதை நானறிவேன். என் உடலில் இருந்து மச்சர்களின் வாசனை விலகவில்லை. காந்தாரியின் லாஷ்கரப் பாலைநில வாசத்தை இந்த மழையே கழுவிவிடும்" என்றாள் சத்யவதி.

உக்ரசேனர் பேச்சை மாற்றும்பொருட்டு "பேரரசி, நாம் அனைத்து ஷத்ரியர்களுக்கும் மணநிறைவுச்செய்தியை அனுப்பவேண்டும்..." என்றார். "ஆம், அதுதான் திருதராஷ்டிரன் முடிச்சூடப்போகும் செய்தியாகவும் அமையும்" என்றாள் சத்யவதி. "விப்ரரே, ஓலைகளை எழுத ஆணையிடும். ஐம்பத்தைந்து மன்னர்களுக்கு மட்டுமல்ல, ஆரியவர்த்தத்திற்கு அப்பாலுள்ள நிஷாதமன்னர்கள் கிராதமன்னர்கள் அனைவருக்கும் செய்தி செல்லவேண்டும்" என்றாள்.

வானத்தின் இடியதிர்வுகள் நெருங்கி வந்தன. மின்னல்கள் சபாமண்டபத்தையே ஒளிகொண்டு துடிக்கச் செய்தன. சிலகணங்களில் மழை அரண்மனைவளாகம் மீது பாய்ந்தேறியது. பளிங்குச் சரங்களாக பெருகிக்கொட்டத் தொடங்கின மழைத்தாரைகள். அங்கணமுற்றம் குளமாக நிறைந்து மடைகளருகே சுழித்தது. மழையின் பேரோசையால் மூடப்பட்ட அறைகளுக்குள் இருளும் நீராவியும் நிறைந்து மூச்சுத்திணறச்செய்தன. வீரர்களும் சேடிகளும் சேவகர்களும் எங்கேனும் நின்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் ஓலைகளை வாசித்துச்சொல்ல மழையைப் பார்த்தபடி சத்யவதி ஆணைகளைப் பிறப்பித்தாள்.

சத்யவதி இடைநாழி வழியாக சென்றபோது சியாமை எதிரே வந்து பணிந்தாள். சத்யவதி நோக்கியதும் "புறா வந்துவிட்டது. அவர்கள் நேற்று நள்ளிரவில் திரஸத்வதியைக் கடந்திருக்கிறார்கள்" என்றாள். சத்யவதி "அப்படியென்றால் இன்று மாலையே அவர்கள் நகர்நுழைவார்கள். அந்தியில் நல்லநேரமிருக்கிறதா என்று நிமித்திகரிடம் கேட்டு சொல்லச்சொல்" என்றாள். "நானே கேட்டுவிட்டேன். இன்றைய அந்தி மிகமிக புனிதமானது என்றார்கள். அனசூயாதேவிக்குரியது." சத்யவதி புன்னகையுடன் தலையசைத்தாள்.

சத்யவதியின் பாதங்கள் பலகைத்தரையில் பதிந்த இடங்களில் அவளுடைய சந்தனப்பாதுகையின் வடிவம் நீர்த்தடமாகப் படிந்து சென்றது. அவள் திரும்பி அந்தப்பாதத்தடம் மெல்ல நீர்த்துளிகள் பரவி மறைவதைப் பார்த்தாள். மழை தன்னை சிறுமியாக்கிவிட்டது என நினைத்துக்கொண்டாள். கற்ற கவிதைகளெல்லாம் நினைவிலூறுகின்றன. நீரில் மட்டுமே அவள் அடையும் விடுதலை. அப்போது யமுனையின் நீர்வெளிமேல் மழை வானைத்தொட எழுந்த நிறமில்லா நாணல்காடுபோல நிற்பதை அவள் கண்ணுக்குள் காணமுடிந்தது.

சியாமை மெல்ல "சிறிய அரசிக்கு உடல்நலமில்லை" என்றாள். "ஏன்?" என்று கவனமில்லாதவள்போல சத்யவதி கேட்டாள். "கடுமையான தலைவலியும் உடல்வெம்மையும் இருக்கிறது என்று அவர்களுடைய சேடி வந்து சொன்னாள். ஆதுரசாலையில் இருந்து இரண்டு வைத்தியர்கள் சென்று லேபனமும் ரஸக்கலவையும் கொடுத்திருக்கிறார்கள்." சத்யவதி "உம்" என்று மட்டும் சொன்னாள். "அந்தச் சேடியையோ வைத்தியர்களையோ கூப்பிட்டு விசாரிக்கலாம்" என்று சியாமை சொன்னதுமே சத்யவதி திரும்பிப்பாராமல் "வேண்டாம்" என கைகாட்டினாள்.

மழை பகலெல்லாம் இடைவெளியே இல்லாமல் பொழிந்தது. பிற்பகலில் மெதுவாகக் குறைந்து இடியோசைகளும் மின்னல்களுமாக எஞ்சியது. கூரைகளும் இலைநுனிகளும் மட்டும் சொட்டிக்கொண்டிருந்தன. காற்றுடன் வீசிய மழையாதலால் பெரும்பாலான சுவர்களும் நனைந்து அரண்மனையே நீருக்குள் இருப்பதுபோல குளிர்ந்துவிட்டிருந்தது. சுவர்களின் வெண்சுண்ணப்பூச்சுகள் நீரில் ஊறி இளநீலவண்ணம் கொண்டன.

சத்யவதி மதிய உணவுக்குப்பின் கீழே இருந்த இரண்டாவது மஞ்சஅறையில் சிறிது துயின்றாள். சியாமை வந்து அவள் கட்டிலருகே நின்று மெல்ல "பேரரசி" என்று சொன்னதும் கண்விழித்தாள். சிவந்த விழிகளால் சியாமையையே பார்த்தாள். "ரதங்கள் இன்னும் ஒருநாழிகையில் கோட்டைவாயிலை அணுகும் பேரரசி" என்றாள் சியாமை.

சத்யவதி எழுந்து விரைவாகச் சென்று நீராடி அந்நிகழ்வுக்கென்றே சியாமை எடுத்துவைத்த பொன்னூல் பின்னல்கள் கொண்ட கலிங்கத்துப் பட்டாடையைச் சுற்றி அரசிக்குரிய அனைத்து அணிகலன்களையும் அணிந்துகொண்டாள். சியாமை அவளை அணிவிக்கையில் அவள் அவ்வாறு விரும்பி அணிகொண்டு நெடுநாளாயிற்று என எண்ணிக்கொண்டாள்.

அந்தப்புரத்தின் முற்றத்துக்கு அவள் வந்தபோது ரதம் காத்து நின்றது. அதன் தேன்மெழுகுப் பாய்க்கூரை நன்றாக முன்னாலிழுத்து விடப்பட்டிருந்தது. மழைமுற்றிலும் நின்றிருந்தாலும் வானம் முழுமையாகவே இருண்டு காற்றில் நீர்த்துளிகள் பறந்துகொண்டிருந்தன. சத்யவதி "அம்பிகை எங்கே?" என்றாள். "அரசி ஒருநாழிகைக்கு முன்னதாகவே கோட்டைவாயிலுக்குச் சென்றுவிட்டார்கள் பேரரசி" என்றாள் சியாமை. சியாமையும் ஏறிக்கொண்டதும் ரத ஓட்டி கடிவாளங்களைச் சுண்ட சற்று அதிர்ந்து ரதம் முன்னகர்ந்தது. முன்னும் பின்னும் அவளுடைய அணியாளர்கள் ஏறிய ரதங்கள் கிளம்பிச்சென்றன.

நகரம் முழுக்க மக்கள் தலையில் ஓலையாலோ பாளையாலோ தோலாலோ ஆன குடைகளை அணிந்தபடி நிறைந்திருந்தனர். ரதத்தின் மேலிருந்து பார்க்கையில் நகரமெங்கும் பளபளக்கும் தோல்கொண்ட பசுக்களும் எருமைகளும் முட்டி மோதுவதாகத் தோன்றியது. கடைத்தெருவில் பெரிய ஓலைக்குடைகளை விரித்து அதன்கீழே மரத்தட்டுகளில் பொருட்களைப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் சுண்ணம், புனுகு, கஸ்தூரி, சந்தனம் போன்ற அணிப்பொருட்கள். விளக்கேற்றுவதற்கான நெய்ப்பொருட்கள். மக்களின் குரல்கள் மழைமூடிய வானத்துக்குக் கீழே பெரிய கூடத்துக்குள் ஒலிப்பவைபோல கேட்டன. அவர்களது ஆடைகளின் வண்ணங்கள் மேலும் அடர்ந்து தெரிந்தன.

வானம் இடியாலும் மின்னலாலும் அதிர்ந்தபடியே இருந்தது. மின்னல்கணங்களில் தொலைதூரத்தின் கோட்டைமீதிருந்த காவல்மாடங்கள் தெரிந்தன. முரசுகளை எல்லாம் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்தட்டிகளால் மழைச்சாரல் படாமல் மூடிவைத்திருந்தனர். கருக்கிருட்டில் படைக்கலங்களின் உலோகமுனைகள் மேலும் ஒளிகொண்டிருந்தன. ரதவீதியின் கல்பாவப்பட்ட பரப்பின் இடுக்குகளில் சிவப்புநிறமாக மழைநீர் தேங்கி ஒளியை பிரதிபலித்து சதுரக்கட்டங்கள் கொண்ட மின்னும் சிலந்திவலைபோலத் தெரிந்தது.

கோட்டைமுகப்பில் குடைவிளிம்புகள் ஒன்றுடனொன்று மோத மக்கள் கூடி நிறைந்திருந்தனர். கரிய மழைநீர் சேர்ந்த ஏரி போலிருந்தது கோட்டைமுற்றம். ரதத்துக்காக முன்னால்சென்ற காவல்வீரர்கள் கூச்சலிட்டு மக்களை விலக்கவேண்டியிருந்தது. கோட்டைக்குமேல் வீரர்கள் கவச உடைகளுடன் பறவைக்கூட்டம்போலச் செறிந்து தெரிந்தனர். சத்யவதியின் ரதம் கோட்டைவாசலை அடைந்ததும் அவளை வரவேற்று குறுமுழவு முழங்க கொம்பு பிளிறலோசை எழுப்பியது. அவள் இறங்கி வெள்ளை ஆடையை கொண்டைமேல் சரிசெய்துகொண்டாள். அவளைச்சுற்றி வாழ்த்தொலிகள் எழுந்தன.

முன் ரதத்தில் இருந்து கட்டியங்காரன் இறங்கி கொம்பு தூக்கி ஊதியபடி அவள் வருகையை அறிவித்து முன் செல்ல பின்னால் வந்த ரதத்தில் இருந்து இறங்கிய வீரர்கள் கவரியும் குடையுமாக அவளைத் தொடர்ந்து வந்தனர். அவளுடைய நறுஞ்சுண்ணத்தையும் நீரையும் கொண்டு இடப்பக்கம் சியாமை வந்தாள். வலப்பக்கம் அணிமங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்துடன் மூன்று சேடிகள் வந்தனர். வாழ்த்தொலிகள் பட்டுத்திரைச்சீலைகள்போலத் தொங்குவதாகவும் அவற்றை விலக்கி விலக்கி முன்னேறிச்செல்வதாகவும் அவளுக்குத் தோன்றியது.

ரதங்கள் ஓடி வழவழப்பான பாதைக்கற்களில் ஈரம் படிந்து அவை நீர்விட்டெழுந்த எருமையுடல் போல மின்னிக்கொண்டிருந்தன. கோட்டைவாயிலுக்கு வெளியே நகரத்தின் முகப்பில் சிறிய மணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பாயை மூங்கில்கள் மேல் பரப்பி எழுப்பப்பட்ட பந்தலில் அரசியர் அமர்வதற்காக பீடங்கள் வெண்பட்டு மூடி காத்திருந்தன. பெரிய ஏழடுக்கு நெய்விளக்கு அங்கே செவ்வரளி பூத்ததுபோல நின்றது. முன்னரே வந்த அம்பிகை அங்கே வெண்பட்டாடையும் அணிகலன்களுமாக நின்றிருந்தாள். அருகே அம்பிகையின் சேடியான ஊர்ணை நின்றாள்.

பந்தலில் சத்யவதி ஏறியதும் அம்பிகை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்றாள். அவள் முகத்தைப் பார்த்தபோது சத்யவதி சற்று அகக்கலக்கத்தை அடைந்தாள். வெற்றியின் நிறைவை இன்னும் சற்று மறைத்துக்கொள்ளலாகாதா இவள் என எண்ணினாள். அதைப்போல எதிரிகளை உருவாக்குவது பிறிதொன்றில்லை. ஆனால் அது அம்பிகை அவளுடைய வாழ்க்கையில் கண்ட முதல் வெற்றியாக இருக்கலாம் என்றும் தோன்றியது.

மூன்று குதிரைகள் பின்கால்களில் சேறு சிதறித் தெறிக்க கோட்டையை நோக்கி வந்தன. அவற்றில் இருந்த வீரர்கள் கைகளால் சைகைசெய்தபடியே வந்தனர். மணக்குழு வந்துவிட்டது என்பது அதன்பொருள் என்று உணர்ந்த கூட்டம் வாழ்த்தொலிகளை கூவத்தொடங்கியது. அம்பிகை நிலையழிந்து பந்தலின் கால் ஒன்றைப் பற்றிக்கொண்டாள். அக்கணம் வானில் ஒரு பெருநதியின் மதகுகளைத் திறந்துவிட்டதுபோல செங்குத்தாக மழை வீழத் தொடங்கியது. சிலகணங்களுக்குள் அப்பகுதியில் மழைத்தாரைகள் அன்றி ஏதும் தெரியவில்லை.

மழைத்திரைக்குள் ஆடும் நிழல்களைப்போல மணக்குழுவின் வண்டிகள் தெரிந்தன. முன்னால் வந்த காவல்வீரர்களின் குதிரைகள் மழைக்காக முகத்தை நன்றாகக் கீழே தாழ்த்தியிருந்தன. ஒவ்வொரு வரிசையாகவே மழையைக் கிழித்துத் தோன்றமுடிந்தது. மழை அறைந்து தெறித்துக்கொண்டிருந்த மரக்கூரையுடன் பீஷ்மரின் ரதம் வந்தது. தொடர்ந்து விதுரனின் ரதம். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது எவருடைய கொடி என்பதைக் காணமுடிந்தது.

கோட்டைக்குமேல் பாய்மூடிகளை எடுத்து பெருமுரசுகளை ஒலித்தனர். ஆனால் மழை ஈரத்தில் தொய்ந்த முரசின் தோல்வட்டங்கள் எழுப்பிய ஒலி நீர்ப்பரப்பில் கையால் அறைவதுபோலக் கேட்டது. கோட்டைமேல் ஏறிய பீஷ்மர், திருதராஷ்டிரன், விதுரன் மற்றும் அமைச்சர்களின் கொடிகள் கம்பங்களில் ஒட்டிக்கொண்டன. காந்தாரத்தின் கொடி ஏறியபோது மக்கள் அதை உணரவேயில்லை. எவரோ ஆணையிட மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அந்த ஒலி மழைக்குள் நெடுந்தொலைவில் என ஒலித்தது.

உச்சஒலியில் முழங்கிய மழை அங்கிருந்தே மேலும் உச்சத்துக்குச் சென்றது. மழைத்தாரைகள் வெண்தழல் என வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த கூரையுடன் அரசியரின் கூண்டுவண்டி வந்து நின்றது. பேரோசையுடன் வீசிய காற்று எதிர்த்திசை நோக்கிச் சென்று ஏதோ எண்ணிக்கொண்டு சுழன்று திரும்பிவந்து சத்யவதி அம்பிகை சேடிகள் அனைவரின் ஆடைகளையும் அள்ளிப்பறக்கச் செய்து பந்தலை அப்படியே தூக்கி பின்பக்கம் சரித்தது. அவர்கள்மேல் மழை அருவிபோல இறங்கியது.

சேடியர் குடைகளை நோக்கி ஓடமுயல சத்யவதி அவர்களை சைகையால் தடுத்தாள். அவளும் அம்பிகையும் கொந்தளித்த சேற்றுப்பரப்பில் ஆடையை முழங்கால்மேல் தூக்கியபடி கால்வைத்துத் தாவி நடந்து அரசியரின் கூண்டு வண்டியை அடைந்தனர். அதன் குதிரைகள் நீர் வழிந்த தசைகளை உதறி சிலிர்த்துக்கொண்டு, பிடரிமயிர்கள் ஒட்டிக்கிடக்க அடிவயிற்றில் நீர்த்தாரைகள் சொட்டி சரமாக வடிய நின்றிருந்தன.

பலபத்ரர் கை காட்ட நனைந்துகொண்டே சென்ற சேடி ஒருத்தி வண்டியின் பின்பக்க வாயிலைத் திறந்தாள். செவ்வண்ணத் திரைச்சீலை விலகி வெண்ணிறமான கால் வெளியே வருவதை சத்யவதி கண்டாள். கருப்பையில் இருந்து குழவி எழுவதைப்போல! அரசியரின் வெண்கால்கள் நனைந்த செம்பட்டுத் திரை திறந்து வந்தன. செவ்விதழில் வெண்பற்களெழுந்த இளநகை என.

நீலப்பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு காந்தாரி இறங்கி கைகளைக் கூப்பியபடி நின்றாள். சத்யவதி ஒரு கணம் அவளைக் கண்டதும் மறுகணம் நீரலை அவளை அறைந்துமூடியது. மீண்டும் காற்றில் மழைச்சரடுகள் விலக அவள் தெரிந்து மீண்டும் மறைந்தாள். அவளைத் தொடர்ந்து பத்து இளவரசிகளும் மழைக்குள் கைகூப்பி நின்றனர். அவர்களின் ஆடைகள் நனைந்து உடலோடு ஒட்ட கூந்தல் கன்னங்களில் வழிய அணிமுழுக்காட்டியது பெருமழை.

சத்யவதி சியாமையிடம் "அவர்கள் அரண்மனையில் விளக்குடன் நுழையட்டும்... இப்போது அவர்களின் கைகளில் மலர்களைக் கொடு. மலரும் சுடரும் ஒன்றே" என்றாள். சியாமையும் ஊர்ணையும் ஒடிச்சென்று மலர்களை இளவரசியர் கைகளில் அளித்தனர். காந்தாரியின் கைகளுக்கு மலரை சத்யசேனை வாங்கி அளித்தாள். சம்படை தசார்ணைக்கு மலரை வாங்கிக்கொடுத்தாள்.

சத்யவதி முன்னால் சென்று "காந்தாரநாட்டு இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக வரவேற்கிறேன்" என்றாள். காந்தாரி தலைவணங்கி தன்கையில் இருந்த செந்நிற மலருடன் சத்யவதியின் கையைப்பற்றிக்கொண்டு காலெடுத்துவைத்தாள். மழைச்சாட்டைகளால் அறைபட்டு சேற்றுவெளி துடித்துக்கொண்டிருந்த ஹஸ்தியின் மண்ணில் அவளுடைய கால்கள் பதிந்து கோட்டைக்குள் நுழைந்தன.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 1 ]

மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. பதினைந்துநாட்களுக்கும் மேலாக பெய்துகொண்டிருந்த மழையால் அகழியில் சிவந்த மழைநீர் நிறைந்து இலைகள் சொட்டும் துளிகளாலும் சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அகழிக்குமேல் போடப்பட்டிருந்த ஒற்றைமரம் வழியாக குந்திபோஜனின் அறப்புதல்வி பிருதையின் சேடியான அனகை வயதான மருத்துவச்சியை அந்தி இருளில் கொட்டும் மழைத்திரைக்குள் அழைத்துவந்துகொண்டிருந்தாள்.

கௌந்தவனத்தின் வலப்பக்கமாக ஓடி மலையிடுக்குவழியாகச் செல்லும் பெருங்குடிப்பாதையிலிருந்து பிரியும் கால்வழிகளின் முடிவில் ஏராளமான சிறிய ஆயர்குடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைச்சேர்ந்த சுருதை என்ற கிழ மருத்துவச்சியை அனகை ஒரேஒருமுறைதான் கண்டிருந்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது சேடியான சூதப்பெண் ஒருத்திக்காக அவளைக் கூட்டிவந்திருந்தனர். அவள் இடைநாழிவழியாக தோலாடை அணிந்து, கையில் விளக்குடன் குனிந்து நடந்து செல்லும் காட்சியை கதவிடுக்குவழியாக அரைக்கணநேரம்தான் அனகை அப்போது பார்த்தாள். ஆனால் அவளுடைய ஊரின் பெயர் சாலவனம் என்பது அப்போது அவள் நினைவில்பதிந்திருந்தது என்பதை தேவை ஏற்பட்டபோது அது நினைவில் வந்தபோதுதான் அவள் அறிந்தாள்.

சாலவனம் மந்தைகள் நடந்து உருவாக்கிய காட்டுப்பாதையின் இறுதியில் இருந்தது. மதியம் சென்றால் அந்த இடையர்குடியில் எவருமிருக்கமாட்டார்கள் என்று அனகை அறிந்திருந்தாள். பதினைந்துநாட்களாக சரடறாமல் பொழிந்துகொண்டிருந்த மழை அன்றுகாலையில்தான் சற்று ஓய்ந்திருந்தது. மேயாமல் அடைந்திருந்த பசுக்களை காட்டுக்குள் கொண்டுசென்றே ஆகவேண்டும். அவள் வரும்போதே உள்காடுகளில்கூட மாடுகளின் கழுத்துமணி ஓசையைக் கேட்டாள்.

வானில் மேகக்கூட்டங்கள் பட்டி திறந்து வெளியேறும் ஆநிரைகளென ஒன்றை ஒன்று முட்டித்தள்ளிக்கொண்டு வடகிழக்காக நகர்ந்துகொண்டிருந்தபோதிலும் ஆங்காங்கே அவற்றில் விழுந்திருந்த இடைவெளிகள் வழியாக ஒளி கசிந்து காற்றில் பரவியிருந்தது. ஈரமான இலைப்பரப்புகள் ஒளியுடன் மென்காற்றில் அசைந்தன. மழைநீர் ஓடிய மணல்தடம் முறுக்கி விரித்த சேலைபோலத் தெரிந்த பாதை வழியாக அவள் பனையோலையாலான குடைமறையால் தன்னை மறைத்துக்கொண்டு நடந்தாள்.

சாலவனம் என்பது ஓங்கிய பெரிய மரங்கள் சூழ்ந்த ஒரு சோலைக்கு அப்பாலிருந்த ஐம்பது புல்வேய்ந்த குடில்கள்தான் என்பது அனகைக்கு ஆறுதலளித்தது. அந்த ஊரிலிருந்து எவரும் வெளியுலகைக் கண்டிருக்கப்போவதில்லை. அவளைக் கண்டாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஊரைச்சுற்றி உயரமில்லாத புங்கமரங்களை நட்டு அவற்றை இணைத்து மூங்கிலால் வேலிபோட்டிருந்தார்கள். ஊருக்குள் நுழைவதற்கான பாதையை ஒரு பெரிய மூங்கில் தடுத்திருந்தது. அவள் அங்கே நின்று உள்ளே எட்டிப்பார்த்தாள்.

சுரைக்காய்க்கொடி படர்ந்த கூரைகொண்ட புற்குடில்களில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. வட்டமாக அமைந்திருந்த குடில்களுக்கு நடுவே இருந்த முற்றத்தின் மையத்தில் நின்ற பெரிய அரசமரத்தடியில் கல்லாலான மேடையும் அருகே இருந்த பெரிய மரத்தொட்டிகளும் அமைதியில் மூழ்கிக்கிடந்தன. நூற்றுக்கணக்கான கட்டுத்தறிகள் அறையப்பட்டு அவற்றைச்சுற்றி மாடுகள் சுற்றிநடந்த வட்டத்தடங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கலந்து பரவியிருந்த முற்றத்தில் உடைந்த வண்டிச்சக்கரங்களும் நுகங்களும் ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.

உள்ளே செல்வதா, அழைப்பதா என்று அவள் தயங்கிக் கொண்டிருந்தபோது அவளை நோக்கி ஒரு கிழவி குனிந்தபடி வறுமுலைகள் ஊசலாட வந்தாள். நரைத்த பெரிய கூந்தலை கொண்டையாக முடிந்து காதுகளில் மரத்தாலான குழைகள் அணிந்திருந்தாள். கழுத்தில் செந்நிறக் கற்களாலான மாலை. இடையில் ஆட்டுத்தோல் பின்னிய குறுகிய ஆடை. மூங்கிலுக்கு அப்பால் நின்றுகொண்டு கண்களுக்குமேல் கையை வைத்து அவளை நோக்கி "நீ யார்?" என்று கேட்டாள்.

அனகை "நான்..." என தயக்கமாகத் தொடங்குவதற்குள் "மருத்துவச்சியைத் தேடிவந்தாயா?" என்றாள். அனகை "ஆம்" என்றாள். "யாருக்காக?" என்றாள் கிழவி. "என் தோழிக்காக" என்றபோது அனகை தன் குரல் தடுக்குவதை உணர்ந்தாள். கிழவி தலையை ஆட்டினாள். "வேறு எதற்காக இங்கே தேடிவரப்போகிறாய்? வாசலில் இருந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டாலே தெரிகிறதே..." என தனக்குத்தானே முனகிக்கொண்டு "எங்கே இருக்கிறாள் அவள்?" என்றாள் கிழவி.

"இங்கிருந்து நான்குகாதம் தொலைவில்..." என அனகை சொல்வதற்குள் கிழவி "இந்தமழையில் அத்தனைதூரம் என்னால் வரமுடியாது. அவளை இங்கே கொண்டுவாருங்கள்" என்றபின் திரும்பிவிட்டாள். அனகை பதறி மூங்கிலைப்பிடித்தபடி "அய்யோ...இருங்கள்...நான் சொல்கிறேன்" என்றாள். "அவர்கள் இங்கெல்லாம் வரமுடியாது..."

கிழவியின் கண்கள் மாறுபட்டன. "அவர்கள் என்றால்?" என்றபடி மேலும் அருகே வந்தாள். அவளுடைய உடற்தோலில் இருந்து முடியுள்ள மிருகங்கள் படுக்குமிடத்தில் எழும் மட்கிய வாடை வந்தது. "யாரவள்? அரசகுலமா?" அனகை தலையை அசைத்தாள். கிழவி "அரசகுலமென்றால் இக்கட்டுகளும் அதிகம்... நாளை என்னை அரசன் கூட்டிக்கொண்டுசென்று கழுவில் ஏற்றிவிடுவான்" என்றாள்.

அனகை கைகூப்பி "என் தலைவி அரசிளங்குமரி... தங்களை எப்படியாவது அழைத்துவருகிறேன் என்று சொல்லி தேடிவந்தேன். வந்து உதவவேண்டும்" என்றாள். "இந்தமழையில் நான் அவ்வளவு தொலைவு வருவதென்றால்..." என கிழவி தொடங்கியதுமே "அதற்கு என்ன தேவையோ அதை இளவரசி அளிப்பார்கள்" என்றாள் அனகை. கிழவியின் கருகிய உதடுகள் புன்னகையில் மெல்ல வளைந்தன. "இரு, நான் சென்று என்னுடைய பெட்டியை எடுத்துவருகிறேன்" என்று திரும்பி ஊருக்குள் சென்றாள்.

கிழவி மான்தோலால் ஆன ஒரு சால்வையை எடுத்து தன்மேல் போர்த்தி, கையில் சிறிய மரப்பெட்டியுடன் வந்து மூங்கிலில் காய்வதற்காக மாட்டியிருந்த பனையோலையாலான குடைமறையை எடுத்து மடித்து தோளில் மாட்டிக்கொண்டு "போவோம்" என்றாள். அனகை அவளை பின் தொடர்ந்தாள். அந்த ஊரில் கிழவியைத்தவிர வேறு எவரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு பெரிய கருவண்டு ரீங்கரித்தபடி மூங்கிலில் முட்டிக்கொண்டிருந்த ஒலியன்றி அமைதி நிறைந்திருந்தது.

கிழவி தொங்கிய தாடையைச் சுழற்றி இரண்டு பற்கள் மட்டுமே இருந்த வாயை மென்றபடி கூர்ந்த கண்களுடன் வேகமாக நடந்தாள். பசுவைப்போல கூனியபடி அவள் நடந்தபோது அனகை கூடவே ஓடவேண்டியிருந்தது. மையப்பாதைக்கு வந்ததும் "இந்தவழியாக சிறு வணிகர்கள் சிலர் வருவது வழக்கம்... நாம் காட்டுப்பாதையிலேயே செல்வோம்" என்று சொல்லி அவளே புதர்களுக்குள் சிவந்த மாணைக்கொடி போல மறைந்துகிடந்த ஒற்றையடிப்பாதைக்குள் நுழைந்தாள்.

காட்டுக்குள் சென்றதும் கிழவி சற்று நிதானமடைந்தாள். அனகையைப் பார்க்காமலேயே "இளவரசியின் பெயர் என்ன?" என்று கேட்டாள். "பிருதை..." என்று மெல்லியகுரலில் சொன்னாள் அனகை. "அவளா... குந்திபோஜர் தெற்கே மதுவனத்து விருஷ்ணிகளின் குலத்தில் இருந்து மகள்கொடை கொண்டு வந்த பெண், இல்லையா?" அனகை தலையை அசைத்தாள். "இளவரசி குந்தி... அவளை நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். அவளுக்கென்ன?"

அனகை மெல்லியகுரலில் "நாட்கள் பிந்திவிட்டன" என்றாள். "ஆண் யார்?" என்றாள் கிழவி. அனகை ஒன்றும் சொல்லவில்லை. கிழவி திரும்பி மோவாயை முன்னால் நீட்டி உள்நோக்கி மடிந்து குவிந்திருந்த வாயால் புன்னகை செய்தாள். "யாதவப்பெண்களுக்கு எவ்வகை உறவும் ஒப்பளிக்கப்பட்டுள்ளதே" என்றாள். அனகை "இளவரசி இக்கருவை அஞ்சுகிறார்கள்" என்றாள்.

"ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் ஐம்புலன்களும் மயங்கும். அந்த லீலையால்தான் எங்கள் பிழைப்பு செல்கிறது" என உதடுகள் வாய்க்குழிக்குள் சென்று துடிக்க கிழவி சிரித்தாள். "வா...இன்னும் சற்று நேரத்தில் மழை வரும். அதன்பின் இக்காட்டில் நடக்கமுடியாது." அனகை கிழவியின் உடலில் ஏறியபடியே வந்த விரைவைக் கண்டாள். அவளுக்கு கிழவியுடன் அந்தக்காட்டில் தனியாகச் செல்வதே அச்சமூட்டுவதாக இருந்தது.

காட்டுக்குள் நீராவி நிறைந்திருந்தது. களைப்பில் குளிர்ந்தெழுந்த வியர்வை காதோரத்திலும் முதுகிலும் வழிந்தது. காட்டுப்பசுமை அவள் மேல் ஈரமான பச்சைப் போர்வைகளை மேலும் மேலும் போர்த்தியடுக்கி மூடியது போல மூச்சுத்திணறலை அளித்தது. நனைந்த புதர்களுக்குள் பறவைகள் ஒலிஎழுப்பியபடி எழுந்து எழுந்து அமர்ந்தன. பிறகு மெல்லிய குளிர்காற்று வீசி வியர்வையை பனி போல உணரச்செய்தது. இலைகளெல்லாம் மடிந்து பின் நிமிர்ந்து காற்றில் படபடத்தன. தொலைவில் இலைகளில் நீர் பொழியும் ஒலி கேட்டது. சற்று நேரத்தில் மழை இறங்கத் தொடங்கியது.

கிழவி தன் தோளில் மடித்துப் போட்டிருந்த குடைமறையை விரித்து தலையில் அணிந்துகொண்டு பெட்டியை அனகையிடம் அளித்தாள். "இதை வைத்துக்கொள்... கீழே போட்டுவிடாதே. மரங்களில் முட்டவும்கூடாது" என்றபின் இருகைகளாலும் புதர்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். அனகை தன் குடைமறையை தலைமேல் போட்டுக்கொண்டு பெட்டியை மார்பில் சேர்த்து வைத்துக்கொண்டு நடந்தாள்.

மரங்களின் அடர்ந்த இலைக்கூரைக்குமேல் மழை ஓலமிட்டது. அடிமரங்கள் வழியாக நீர் வழிந்திறங்கியபோது அவை ஊர்ந்து செல்லும் பாம்புகளின் உடல்போலத் தோன்றின. நாகங்களாலான காடு வழியாக சென்றுகொண்டிருந்தாள். புதர்களுக்கு அடியில் கனத்த நாகங்கள் ஓடுவதுபோல மழைநீரோடைகள் சலசலத்தோடின. நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் காடெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. புதர்களுக்கு அப்பால் இருள்கருமைக்குள் நிற்கும் யானைத் தந்தங்கள் என அவ்வருவிகளைக் கண்டாள். கால்கள் நீரில் விரைத்து நீலநரம்புகள் தெரியத்தொடங்கின. அவளுக்கு ஒரு மங்கலான தன்னுணர்வு உருவானது, அவளை ஒரு நாகம் பார்த்துக்கொண்டிருப்பதுபோல. ஓசையில்லாமல் புதர்கள் வழியாகப் பின்தொடர்வதுபோல.

மழை நல்லதுதான் என அனகை எண்ணிக்கொண்டாள். மழையின் திரை அவர்களை முழுமையாகவே மூடி கண்ணுக்குத்தெரியாத மாயாவிகளாக ஆக்கியது. கௌந்தவனத்தின் அகழிக்கரையை அடைந்தபோதுதான் அவளுக்கு மனம் படபடக்கத் தொடங்கியது. தவநிலையின் முகப்பில் ரதங்கள் செல்லக்கூடிய பெரிய மரப்பாலம் உண்டு. பின்பக்கம் ஒற்றைமரம் ஒன்று அகழிக்குக் குறுக்காக விழுந்து கிடப்பதை ஆறுமாதங்களுக்கு முன்பு பிருதைதான் கண்டுபிடித்தாள். அதை சரியாக உருட்டிப்போட்டு ஒரு பாலமாக ஆக்கியவள் அவள்தான். அதன் வழியாகவே அவள் தவநிலையில் இருந்து காட்டுக்குள் சென்று வந்தாள்.

கிழவி "இதன் வழியாகவா?" என்று தயங்கினாள். "நான் பிடித்துக்கொள்கிறேன்" என்றாள் அனகை. கிழவி ஒன்றும் சொல்லாமல் வேகமாக நடந்து மறுபக்கம் சென்றுவிட்டாள். கையில் பெட்டியுடன் அனகைதான் சற்று தடுமாறினாள். அப்பால் கௌந்தவனத்தின் மரங்களெல்லாம் மழைநீராடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மான்கூட்டங்கள் மழையில் உடலைக் குறுக்கி பெரிய பலாசமரத்தின் அடியில் கூடிநின்றிருந்தன. காலடியோசை கேட்டு அவை திரும்பி காதுகளை விடைத்து பெரிய கண்களால் பார்த்தன. அனகையை அடையாளம் கண்டுகொண்டதும் நாலைந்து மான்கள் ஆர்வமிழந்து உடலை நடுக்கி காதுகளை அடித்துக்கொண்டபடி விலகி நின்றன.

அவர்கள் கடந்துசென்றபோது பின்பக்கம் மான்கள் மருண்டு ஓசையிட்டபடி கலைவதை அனகை கவனித்தாள். "என்ன?" என்றாள் கிழவி. அனகை தலையசைத்தாள். "காட்டுப்பூனையாக இருக்கும்" என்று கிழவி சொன்னாள். "அவை மழையில் பொதுவாக வெளியே வருவதில்லை. ஆனால் இப்படி நாட்கணக்கில் மழைபெய்தால் என்ன செய்யமுடியும்? பட்டினி கிடக்கமுடியாதல்லவா?"

தவநிலையின் குடில்கள் அனைத்தும் இருண்டு கிடந்தன. பிருதை இருந்த குடில் வாயிலில் மட்டும் மரவுரியாலான கனத்த திரை தொங்கியது. வாசலில் காலடியோசை கேட்டதும் உள்ளிருந்து பிருதை எட்டிப்பார்த்தாள். அனகை "கூட்டிவந்துவிட்டேன் இளவரசி" என்றாள். பிருதை அகல்விளக்கைக் கொளுத்தி கையில் எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். வெளியே இருந்து வந்த பாவனையில் பார்க்கையில் பிருதையை முற்றிலும் புதியவளாகக் காணமுடிந்தது. வெளிறிய சிறியமுகத்தின் இருபக்கமும் கூந்தல் கலைந்து நின்றிருந்தது. வீங்கியதுபோன்றிருந்த முகத்தில் மெல்லிய சிறிய பருக்கள். கண்ணிமைகள் கனத்து சற்று சிவந்திருந்தன.

கிழவி வாசலில் நின்று தன் தோலாடைகள் இரண்டையும் களைந்தாள். அவளுடைய வற்றிச்சுருங்கி வளைந்த உடலை ஆடையின்றிப்பார்த்தபோது எழுந்து நிற்கும் பல்லி எனத்தெரிந்தாள். பிருதை சற்றே சுருங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஆடைகளை நன்றாக உதறி கூரைக்குக் கீழே தொங்கவிட்டபின் கிழவி "எனக்கு ஈரமில்லாத ஓர் ஆடை வேண்டும்" என்றாள்.

"இதோ" என்று அனகை தன் ஆடையின் ஈரத்தைப் பிழிந்துகொண்டு உள்ளே சென்று ஒரு மரவுரியாடையைக் கொண்டுவந்து தந்தாள். கிழவி அதை அணிந்துகொண்டு பிருதையை நோக்கி "இவள்தான் இளவரசியா?" என்று கேட்டபின் உதடுகள் கோண சிரித்தாள். பிருதை கிழவியை வெறுப்பது அவள் புருவச்சுளிப்பில் இருந்தே தெரிந்தது. "அரசிக்குரிய அழகுடன் இருக்கிறாள். அரசிகளுக்குரிய ரகசியங்களும் கொண்டிருக்கிறாள்" என்று சொல்லி கிழவி மாடுகள் இருமுவதுபோலச் சிரித்தாள். "வா, உன்னை சோதனையிடுகிறேன்."

பிருதை கண்களில் கூர்மையுடன் "உன் பெயரென்ன?" என்றாள். "சாலவனத்தின் யாதவர்களின் மருத்துவச்சி நான். என்பெயர் சுருதை" என்றாள் கிழவி. "உன்னை நான் அரண்மனையில் பார்த்திருக்கிறேன்.... உன்னை குந்தியாக தத்தெடுத்துக் கொண்டுவந்தபோது. அப்போது நீ சிறுமி..."

பிருதை "என்னிடம் பேசும்போது இன்னும் சற்று சொற்களை எண்ணிப்பேசவேண்டும் நீ" என்றாள். "இளவரசிக்குரிய மதிப்பு உன் சொற்களில் தெரிந்தாகவேண்டும்." கிழவி கண்களில் நகைப்புடன் "என்னிடம் ரகசியங்கள் இல்லை... ரகசியங்கள் இருப்பது உன்னிடம்" என்றாள். பிருதை தணிந்த குரலில் "ஆம், என் ரகசியத்தை நீ அறிந்துகொண்டுவிட்டாய். அதுவே நீயும் உன் குலமும் ஆபத்தில் இருப்பதற்கான காரணம். நீ உயிர்வாழ்வதைப்பற்றி இனிமேல் நான்தான் முடிவெடுக்கவேண்டும்" என்றாள்.

கிழவி திகைத்துப்போனவளாக தாடை விழுந்து குகைபோலத்திறந்த வாயுடன் பார்த்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு "ஆணை இளவரசி" என்றாள். கைகளை மெல்லக் கூப்பி "நாங்கள் எளிய இடையர்கள்" என்றாள். "அந்நினைப்பை எப்போதும் நெஞ்சில் வைத்துக்கொள்" என்றாள் பிருதை திரும்பி உள்ளே சென்றபடி. கைகளை மாட்டின் கால்கள் போல முன்பக்கம் வீசி வைத்து கிழவி பின்னால் சென்றாள்.

புலித்தோலிட்ட மஞ்சத்தில் பிருதை அமர்ந்துகொண்டாள். "எனக்கு விலக்கு ஆகி மூன்றுமாதங்களாகின்றன. அது கருவா என்று நீ பார்த்துச் சொல்லவேண்டும்" என்றாள். கிழவி "ஆணை" என்றபின் பிருதையின் இடக்கையைப் பிடித்து நாடியில் தன் நான்கு விரல்களையும் வைத்தாள். "கண்களைக் காட்டுங்கள் இளவரசி... இமைகளை மூடவேண்டாம்" என்றாள். அவள் கண்களுக்குள் உற்று நோக்கியபடி வாயைமெல்வதுபோல அசைத்துக்கொண்டு நாடியைக் கணித்தாள். பெருமூச்சுடன் கையை விட்டுவிட்டு "கரு என்றுதான் எண்ணுகிறேன்" என்றாள். "ஆனால் சோதனையிட்டுத்தான் உறுதியாகச் சொல்லமுடியும்."

அனகை படபடப்புடன் பிருதையைப் பார்த்தாள். அவளிடம் பெரிய முகமாற்றம் ஏதும் தெரியவில்லை. உதடுகள் மட்டும் இறுகி கன்னங்களில் குழிவிழுந்திருந்தது. கிழவி "கொதிக்கவைத்த வெந்நீர் தேவை" என்றாள். அனகை உள்ளே சென்று பின்பக்கம் உபசாலையில் விறகடுப்பின்மீது சிவந்து அனல்விட்டுக்கொண்டிருந்த செம்புப்பாத்திரத்தில் இருந்து நீரை அள்ளிக் கொண்டுவந்தாள். கிழவி தன் பெட்டியைத் தூக்கி அருகே வைத்து அதைத்திறந்து உள்ளிருந்து சிறிய உலோகப்புட்டிகளை எடுத்துப்பரப்பினாள். படிகக்கல்லால் ஆன பலவகைக் கத்திகளும் தங்கத்தாலான சிறிய ஊசிகளும் குதிரைவால் முடிச்சுருள்களும் பச்சிலைமருந்துகள் கலந்த படிகாரக்கட்டியும் அதனுள் இருந்தன. அனகை நிற்பதைக் கண்டு வெளியே செல்லும்படி கிழவி சைகை காட்டினாள்.

கிழவி திரும்ப அழைத்தபோது அனகை உள்ளே சென்றாள். கிழவி கைகளைக் கழுவியபடி "கருதான்" என்றாள். அனகை கால்கள் தளர்ந்து மெல்ல பின்னால் நகர்ந்து தூணைப்பற்றிக்கொண்டாள். அதை அவளும் கிட்டத்தட்ட உறுதியாகவே அறிந்திருந்தாள் என்றாலும் அதுவரைக்கும் அவ்வெண்ணத்தை சொற்களாக மாற்றாமல் இருந்தாள். காதில் அச்சொற்கள் விழுந்ததும் உடல்பதறி கால்கள் தள்ளாடத் தொடங்கின. ஓரக்கண்ணால் பிருதையைப் பார்த்தாள். சற்று சரிந்த இமைகளுடன் அவள் ஏதோ எண்ணத்தில் மூழ்கி அமர்ந்திருந்தாள். கிழவி "கரு தொண்ணூறுநாள் தாண்டியிருக்கிறது" என்றாள்.

"என்னசெய்வது இளவரசி?" என்று தொண்டை அடைத்து கிசுகிசுப்பாக மாறிய குரலில் அனகை கேட்டாள். "நாம் பேசாமல் திரும்பி அரண்மனைக்கே சென்றுவிடுவோம். எனக்கு இங்கே மிகவும் அச்சமாக இருக்கிறது... இங்கே..." அவளை பேசாமலிருக்க கைகாட்டியபின் பிருதை "இந்தக்கருவை அழித்துவிடமுடியுமா?" என்றாள். கிழவி "அழிப்பதுண்டு...ஆனால் அது சாஸ்திரவிதிப்படி பெரிய பாவம்" என்றாள். பிருதை "ஆம்....ஆனால் போரிலும் வேட்டையிலும் கொலைசெய்கிறோமே" என்றாள். கிழவி பணிந்து "தாங்கள் ஆணையிட்டால் செய்கிறேன்...ஆனால்..."

பிருதை தன் விழிகளைத் தூக்கி கிழவியைப் பார்த்தாள். "அரசகுலத்தில் நான் இதைச்செய்தேன் என வெளியே தெரிந்தால் என் உயிருக்கும் ஆபத்து நிகழலாம்" என்றாள் கிழவி. பிருதை கண்களைத் திருப்பி "நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொள்" என்றாள். கிழவி பதற்றத்தில் "நூறு..." என தொடங்கி உடனே புரிந்துகொண்டு "...ஆம் இளவரசி... அவ்வண்ணமே செய்கிறேன். என்னிடம் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. கரு இன்னும்கூட மிக இளமையான நிலையிலேயே உள்ளது. என்னிடம் உயர்ந்த சிட்டுக்குருவி இறகாலான பஞ்சு உள்ளது. அதில் இந்த நாக ரசாயனத்தை வைத்து..." என்று ஆரம்பித்தாள். "செய்!" என்று பிருதை சுருக்கமாக ஆணையிட்டாள்.

"படுத்துக்கொள்ளுங்கள் இளவரசி" என்றாள் கிழவி. அனகை தன் அதிரும் மார்பைப் பற்றிக்கொண்டு பற்களைக் கிட்டித்தபடி நின்றாள். கீழே விழுந்துவிடுவோமா என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. கிழவி தன் கைகளை நீரால் மீண்டும் கழுவிக்கொண்டாள். பெட்டிக்குள் இருந்து நீளமான மெல்லிய வெண்கலக்கம்பி ஒன்றை எடுத்து அதை சிறு வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த இளஞ்செந்நிறமான திரவத்தில் முக்கிய துணிச்சுருளால் துடைத்தாள்.

"இளவரசி... இது சற்றே வலிமிக்கது. தாங்கள் விரும்பினால் அஹிபீனாவின் புகையை அளிக்கிறேன். அது வலியை முழுமையாகவே இல்லாமலாக்கிவிடும்" என்றாள் கிழவி. பிருதை "இல்லை... நான் வலிக்கு அஞ்சவில்லை" என்றாள். "அத்துடன் நான் இந்த வலியை அடையவும் வேண்டும். அதுதான் முறை" என்றாள். கிழவி தயங்கி "மிகவும் வலிக்கும்..." என்றாள். "வலிக்கட்டும்" என்றாள் பிருதை. கிழவி அனகையிடம் "நீ இளவரசியின் இரு கைகளையும் தோள்களையும் மஞ்சத்துடன் சேர்த்துப் பற்றிக்கொள்ளவேண்டும். வலியில் அவர்கள் தன்னையறியாமல் கையை வைத்து தட்டிவிட்டால் ஆபத்து."

"தேவையில்லை" என்றாள் பிருதை. கிழவி இமைக்காமல் சிலகணங்கள் பார்த்துவிட்டு "பொறுத்தருளவேண்டும் அரசியே, நாங்கள் அஹிபீனா அளித்தபிறகும்கூட கைகால்களை இறுக்கமாகக் கட்டியபின்னரே இதைச்செய்வது வழக்கம்" என்றாள். "அஞ்சவேண்டியதில்லை...செய்!" என்று பிருதை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். அங்கிருந்து விலகிச்சென்றால்போதும் என்று அனகை எண்ணினாள். தொண்டை வறண்டு வாய் தோலால் ஆனதுபோலத் தோன்றியது.

கிழவி சிறிய வெண்கலப்புட்டியைத் திறந்தாள். அதற்குள் நீலநிறமான நாகரசாயனம் இருந்தது. இன்னொரு மரச்சம்புடத்திலிருந்து மெல்லிய சுருளாக இருந்த சாம்பல்நிறமான சிட்டுக்குருவியின் இறகுச்சுருளை எடுத்து அதை அந்தப் புட்டியில் இருந்த ரசாயனத்தில் நனைத்தாள். சாதாரணமாக உதறிக்கொண்டிருக்கும் கிழவியின் மெலிந்துசுருங்கிய கைகள் அப்போது நடுங்கவில்லை என்பதை அனகை கவனித்தாள். அதைச்செய்யும்போது கிழவியின் அனைத்துப் புலன்களும் சித்தமும் ஒன்றுகுவிகின்றன என்றும் அப்போதுதான் அவள் தன்னுடைய உச்சநிலையில் இருக்கிறாள் என்றும் தோன்றியது.

கிழவி அந்தச் சுருளை கம்பியின் நுனியில் வைத்து கவனமாகச் சுருட்டினாள். அது ஒரு சிறு எரியம்பு போல ஆகியது. அதன் நுனி ஓவியத்தூரிகைபோல கூர்ந்திருந்தது. அந்த நுனியில் மேலும் நாகரசாயனத்தைத் தொட்டாள். அதை முகத்தருகே கொண்டுவந்து கவனித்தாள். அப்போது அவள்முகத்தில் ஒரு தியானபாவனை கூடியது. உதடுகள் உள்ளே மடிந்து மெல்ல அதிர வாய் சேற்றுக்குழிபோலத் தெரிந்தது. வளைந்த நாசி நுனி மேலுதட்டுக்குமேல் நிழலை வீழ்த்தியது. அவள் கண்களில் தெரிவது ஒரு வெறுப்பு என அனகை எண்ணிக்கொண்டாள். யாரிடம்? ஆனால் யாரிடமென்று இல்லாமல் விரியும் வெறுப்புக்குத்தான் அத்தனை அழுத்தம் இருக்கமுடியும்.

கிழவியின் வாய் புன்னகை போல் கோணலாகியது. கம்பியை கையிலெடுத்துக்கொண்டு அவள் முன்னால் நகர்ந்தாள். தன் முழங்காலை மெத்தென ஊன்றுவதற்காக மஞ்சத்துக்குக் கீழே கிடந்த பழைய மரவுரியை இடதுகையால் அவள் இழுத்தபோது அதற்குள் இருந்து சுருள் மூங்கில் புரியவிழ்ந்தது போல மிகப்பெரிய பாம்பு ஒன்று சீறி எழுந்து தலைசொடுக்கி அவள் கன்னத்தைத் தீண்டியது. அவள் திடுக்கிட்டு கம்பியை உதறி கன்னத்தைப்பற்றியபடி அலறிக்கொண்டு பின்னால் சரிந்தாள். பாம்பு நிழல்நெளிந்தோடும் வேகத்தில் அவளுடைய கால்கள் மேலேறி வளைந்தோடி அறையின் மூலையிலிருந்த மரப்பெட்டியை அணுகி அதன் இடுக்கில் தலை வைத்து வால் நெளிய உடலை சுருட்டி உள்ளே இழுத்து பதுங்கிக்கொண்டது.

பிருதை மஞ்சத்தில் எழுந்தமர்ந்து உடைகளை சீர்திருத்திக்கொண்டு பாம்பைப்பார்த்தாள். நாகம் இரண்டரை வாரை நீளமிருந்தது. கருமையான பசுஞ்சாணியின் நிறம். அதன் பத்தியில் மஞ்சள்நிறமான வரிகள் பத்தி விரிவதற்கு ஏற்ப அசைந்தன. பத்தியின் அடிப்பகுதி வெண்பழுப்பு கூழாங்கல்மணிகளை நெருக்கமாகக் கோர்த்ததுபோல திரிசூல வடிவத்துடன் நெளிந்தது. குட்டியானையின் துதிக்கையளவுக்கு கனமிருந்தது அது.

பிருதை அப்போதும் நிதானமிழக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபின் பாம்பின் மீதிருந்த விழிகளை விலக்காமலேயே மெல்ல கையை நீட்டி அறைமூலையில் இருந்த கழியைக் கையிலெடுத்தபடி எழுந்தாள். அவளுடைய அசைவைக் கண்டு அதற்கேற்ப தலையை அசைத்துப்பார்த்துக்கொண்டிருந்த நாகம் சிவந்த நாக்கு பறக்க தலையை தரையில் வைத்தது. அதன் மணிக்கண்களில் சுடரொளி மின்னுவதுபோலிருந்தது.

பிருதை ஓரடி எடுத்துவைத்ததும் சட்டென்று அவள் இடுப்பளவு உயரத்துக்கு எழுந்து பத்தியை விரித்து உடல் வீங்கி புடைத்து சீறியது நாகம். அனல்கதி செந்நாக்கு துடிக்க தலையை அசையாமல் நிறுத்தி அவளைப் பார்த்தது. கழியின் நுனி சற்றே அசைந்தபோது அவ்வசைவை அந்த நாகத்தின் தலையும் பிரதிபலித்தது. அதன்பின்பக்கம் கரிய உடலின் சுருள்கள் வெவ்வேறு திசையிலான அசைவுகளின் குவியலாகத் தெரிந்தன. இருண்ட ஒரு நீர்ச்சுனையின் சுழிப்புபோல.

"ராஜநாகம்" என்று பிருதை சொன்னாள். "இங்கே உள்ளது அல்ல. இங்கே இவ்வளவு மயில்கள் இருக்கின்றன. இது அங்கே காட்டிலிருந்து வந்திருக்கிறது..." அனகை கிசுகிசுப்பான குரலில் "எப்படி?" என்றாள். "நீ வரும்போது உன் பின்னால் வந்திருக்கிறது..." அனகை மெதுவாக பின்னால்நகர்ந்தாள். பிருதை கழியை நாகத்தின் முன்னால் தரையில் நாலைந்துமுறை தட்டினாள். நாகம் தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டு சட்டென்று ஒருமுறை நிலத்தைக் கொத்தியது. அந்த தட் ஒலியை அனகை தன் நெஞ்சுக்குள் கேட்டாள்.

பிருதை கழியை பின்னால் இழுத்துக்கொண்டு "அது நம்மை ஒன்றும் செய்யவிரும்பவில்லை" என்றாள். நாகம் மெல்ல பத்தியைச் சுருக்கி தரையில் தலையை அசையாமல் வைத்துக்கொண்டு உடலை மட்டும் சுருள்களாகச் சுழற்றி இழுத்துக்கொண்டது. நெளியும் வால் மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து வெளிவந்ததும் எய்யப்பட்ட அம்புபோல சீறி கதவுவழியாக வெளியே பாய்ந்தது. வெளியே முற்றத்தில் பரவியிருந்த சேற்றில் சிதறிக்கிடந்த அறைவெளிச்சத்தைக் கலைத்தபடி வளைந்து ஓடி இருளுக்குள் மறைந்தது. அது சென்ற தடம் சேற்றில் சிறிய அலைவடிவம்போலத் தெரிந்தது.

கீழே கிழவி மல்லாந்து நெளிந்துகொண்டிருந்தாள். வாயைத்திறந்து நாக்கு வெளியே நீள கையை வேகமாக அசைத்தபடி ஏதோ சொல்லமுயன்றாள். அவளுடைய வலதுகாலும் வலது தோளும் வலிப்புவந்தவைபோல அசைந்தன. பிருதை குனிந்து கிழவியின் முகத்தைப்பார்த்தாள். "முகத்திலேயே கொத்திவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை" என்றாள். கிழவியின் கழுத்தில் தசைநார்கள் அதிர்ந்தன. வாய் ஒருபக்கமாகக் கோணி இழுத்துக்கொள்ள எச்சில் நுரை கன்னம் வழியாக வழிந்தது. குருதிக்குழாய்கள் நீலநிறமாக உடலெங்கும் புடைத்தெழத் தொடங்கியிருந்தன.

பிருதை அவள் கையைப்பிடித்துக்கொண்டாள். "அந்தக் குழந்தை...அதற்கு நாகம் துணை" என்றாள் கிழவி. அவள் கண்கள் புறாமுட்டைகள் போல வெண்மையாக பிதுங்கி நின்றன. "நாகவிஷத்தை நான் எடுத்தபோது அந்தக் குழந்தை சிரித்தது... நான் அதைக்கேட்டேன்..." அவள் கைகள் பிருதையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டன. நீரில் நீந்துபவள் போல வலதுகாலை இருமுறை அடித்து மார்பை மேலேதூக்கினாள். பின்பு கைப்பிடி தளர கண்கள் மேலே செருகிக்கொண்டன. மார்பும் மெதுவாகக் கீழிறங்கி முதுகு நிலத்தில் படிந்தது.

பிருதை எழுந்து "வீரர்களைக் கூப்பிட்டு இவளை அகற்று... உடனே நீயே மதுராவுக்குச் சென்று என் மூத்தவரை வரச்சொல்!" என்று ஆணையிட்டாள். அவளிடம் மேலும் தற்சமன் கைகூடியிருப்பதைப்போல அனகை எண்ணிக்கொண்டாள்.

பகுதி ஆறு: தூரத்துச் சூரியன்

[ 2 ]

தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப்பகுதியின் யாதவர்குலத்தலைவராக இருந்த சூரசேனரின் கடைசிமைந்தனாகிய வாசுதேவன் இளமையிலேயே தங்கை பிருதையிடம்தான் நெருக்கமானவனாக இருந்தான். அவன் பிறக்கும்போதே அவன் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. நீண்ட நரைத்த தாடியும் வெண்ணிறமான தலைப்பாகையும் தோள்களில் போடப்பட்ட கனத்த கம்பிளிச்சால்வையும் காதுகளில் குலத்தலைமையின் அடையாளமான பொற்குண்டலங்களும் கொண்ட முதியவரைத்தான் அவன் தந்தையாக அறிந்திருந்தான். அவர் அவனிடம் பெரும்பாலும் பேசியதேயில்லை. அவர் பொதுவாக எவரிடமும் பேசுவதேயில்லை. யாதவர்கள் இளமையிலேயே சொல்லவிதலையும் விழைவவிதலையும் பழகி தங்கள் இயல்பாகக் கொண்டிருந்தனர்.

தசபதத்தின் தலைவராக இருந்த ஹேகயவம்சத்து ஹ்ருதீகர் மறைந்தபோது சூரசேனருக்கு பதினாறு வயது. அவர்களின் கிராமமான மதுவனம் தசபதத்தின் வடக்கு எல்லையில் இருந்தது. தசபதத்திலேயே அதுதான் பெரிய ஊர். பெரிய பிலக்‌ஷ மரங்களாலான வேலிக்குள் வட்டமாக அமைந்த இருநூறு இல்லங்களும் நடுவே அரசமரத்தடியில் ஊர்மன்றும் கொண்ட இடையர்கிராமமான மதுவனத்தின் நடுவே கனத்தமரங்களால் அடித்தளமிடப்பட்டு மரச்சுவர்கள்மேல் மரப்பட்டைக்கூரையிடப்பட்ட ஊர்த்தலைவரின் மாளிகை இருந்தது. முன்பொருகாலத்தில் கோசலமன்னரான சத்ருக்னன் வந்து தங்கிய மாளிகை அது என புகழ்பெற்றிருந்தது.

யாதவர்களில் முதன்மைக்குலமான விருஷ்ணிகளில் பிறந்த ஹ்ருதீகரின் மைந்தரான சூரசேனரை தசபதத்தின் நூற்றியாறு யாதவக்கிராமங்களில் வாழ்ந்த எட்டு குடிகள் இணைந்த அவையில் குடிச்சபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு அக்குடிகளில் இளமையானதான லவண குலத்தைச்சேர்ந்த மரீஷையை மணம்புரிந்து வைத்தனர்.

லவணர்கள் பத்து தலைமுறைக்கு முன்புவரை தசபதத்துக்கு அப்பாலிருந்த சிலாமுகம் என்னும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் யாதவர்களுக்கும் தலைமுறைதலைமுறையாக போர் நடந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது. லவணர்கள் காட்டை நன்கறிந்திருந்தார்கள். அவர்களின் விற்கள் திறம்கொண்டவையாகவும் அவர்களின் உள்ளம் இரக்கமற்றதாகவும் இருந்தது. அவர்களின் தலைவனாகிய மதூகன் யாதவர்களை விரும்பாதவனாக இருந்தான்.

சூரசேனரின் மூதாதையான கிருதவீரியனின் காலகட்டத்தில் அன்று யமுனைப்பகுதியை ஆட்சி செய்திருந்த கோசலநாட்டின் இக்‌ஷுவாகு வம்சத்து அரசர்களில் இளையவனும் பெரும்புகழ்ராமனின் இளவலுமாகிய சத்ருக்னனிடம் சென்று முறையிட்டனர். அவன் படையுடன் வந்து தசபதத்தை அடைந்தான். அவனுடைய படைகள் மலைஏறிச்சென்று லவணர்களை வென்றன. மதூகனை சத்ருக்னன் கொன்றான். மதூகனின் மகனாகிய மாஹன் தசபதத்தின் யாதவர்களுடன் ஒத்துச்செல்லவும் அங்கிருந்த ஏழு குடிகளுடன் எட்டாவதாக இணைந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டான்.

லவணகுலம் அவ்வாறாக அடிக்காட்டுக்கு இடம்பெயர்ந்தது. வேட்டையை விட்டுவிட்டு மேய்ச்சலுக்கு வந்தது. ஆனால் யாதவர்கள் லவணர்களை தங்களுக்கு நிகரானவர்களாக நினைக்கவில்லை. லவணர்கள் அப்போதும் வேட்டைக்காரர்களின் மனநிலையையும் வாழ்க்கையையுமே கொண்டிருந்தனர். காட்டுவேடர்களின் வழக்கப்படி அவர்கள் வருடத்தில் ஒருமுறை சித்திரைமுழுநிலவின் குலதெய்வபூசைநாளில் மட்டுமே நீராடினர். நீராடாமலிருப்பது காடுகளுக்குள் பிற விலங்குகளின் மோப்பத்துக்குச் சிக்காமல் உலவுவதற்குரிய வழிமுறையாக அவர்களால் நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த வழக்கம். அவர்கள் பிறர் தொட்ட உணவை உண்ணுவதோ பிறரை தங்கள் இல்லத்துக்கு அழைப்பதோ இல்லை. ஆகவே பிறரும் அவர்களை அப்படியே நடத்தினர்.

அவர்கள் தங்களுக்குள் மட்டும் லாவணம் என்னும் மொழியில் பேசிக்கொண்டனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் யாதவர்கள் பேசிய யாதகி மொழியை கற்றுக்கொள்ளவேயில்லை. குலத்தலைவர்கள் மட்டும் பொதுச்சபைகளில் மழலையில் யாதகி மொழியைப் பேசினார்கள். அவர்களின் மொழியே அவர்களை நகைப்புக்குள்ளானவர்களாக ஆக்கியிருந்தது. காட்டைவென்ற லவணர்களால் மொழியை வெல்லமுடியவில்லை. மொழியால் ஆன சமநிலத்தில் அவர்கள் அன்னியர்களாகவே இருந்தனர்.

யாதவர்களின் வழக்கப்படி குலத்தலைவராக அமர்பவர் எட்டு யாதவகுலங்களில் ஒன்றிலிருந்து மணம்கொள்ளவேண்டும். ஹ்ருதீகர் சிரு குடியில் இருந்தும் வைரி குடியில் இருந்தும் இரு மகளிரை மணம்புரிந்துகொண்டிருந்தார். அவர்களில் சிரு குடியைச் சேர்ந்த சம்பைக்கு தேவவாஹன் கதாதனன் என்னும் இருமைந்தர்கள் பிறந்தனர். வைரி குடியைச் சேர்ந்த பத்மைக்கு கிருதபர்வன் சூரசேனன் என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யாதவர்களின் வழக்கப்படி இளமையிலேயே தேவவாஹனும் கதாதனனும் கிருதபர்வனும் தந்தையின் மந்தையைப்பிரித்து தங்கள் பங்குகளைப் பெற்றுக்கொண்டு புதிய மேய்ச்சல்நிலங்களை நோக்கிச்சென்றனர். அவர்கள் கங்கைக்கரையிலும் இமயத்தின் அடிவாரத்திலும் புதிய யாதவநிலங்களை அமைத்துக்கொண்டனர். சூரசேனர் தந்தையின் எஞ்சிய மந்தைகளுக்கு உரிமையாளராக தசபதத்திலேயே இருந்தார்.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார். ஹ்ருதீகரின் இரண்டாவது மனைவியும் சூரசேனரின் அன்னையுமான வைரிகுடியைச் சேர்ந்த பத்மை அதைக்கேட்டு கடும்சினமடைந்து கண்ணீருடன் கைதூக்கி அவச்சொல்லிட்டவளாக சபையில் இருந்து வெளியேறினாள். என் மைந்தனுக்கு பச்சைஊன் உண்ணும் குடியில் பெண்கொள்வதை விட நான் உயிர்விடுவேன் என்று சொல்லி இல்லத்தில் தன் அறைக்குள் சென்று கதவைமூடிக்கொண்டாள்.

பதினாறு வயதான சூரசேனர் கதவைத் தட்டி "நான் ஹ்ருதீகரின் மைந்தன் அன்னையே. நான் எனக்கென எதையும் செய்துகொள்ளமுடியாது. எந்தையின் ஆணையை மட்டுமே நான் நிறைவேற்றமுடியும். சபையில் வந்தமர்ந்திருக்கும் குண்டலதாரிகளான மூதாதையர் அனைவரும் என் தந்தைவடிவமேயாவர்" என்றார். "என் அன்னையாகிய நீ ஹ்ருதீகரின் துணைவி. அவரது ஆணையை நீயும் ஏற்றுக்கொள்ளவேண்டியவளே" என்றார். பத்மை உள்ளே பதில் சொல்லாமல் அழுதுகொண்டிருந்தாள். "நான் இந்தக் கதவுக்கு முன் உன் காலடியில் என அமர்ந்துகொள்கிறேன். நீ வாயில் திறந்தால் என் தந்தையின் மைந்தனாக வாழ்கிறேன். வாயில் திறக்கவில்லை என்றால் உள்ளே நீயும் வெளியே நானுமாக உயிர்துறந்து தந்தையை அடைவோம்" என்று சொல்லி சூரசேனர் வாயிலிலேயே அமர்ந்துகொண்டார்.

அன்னை வாயிலைத் திறக்கவேயில்லை. மைந்தன் கதவைவிட்டு நீங்கவுமில்லை. அந்த ஊண்துயில்நீப்பு நோன்பை சாளரங்கள் வழியாக நோக்கியபடி சூரசேனரின் விருஷ்ணிகுலத்து யாதவர்கள் முழுக்க அங்கேயே நின்றிருந்தனர். நான்காம் நாள் அன்னை உள்ளிருந்து மெல்ல "சூரசேனா சூரசேனா" என அழைத்தாள். மைந்தனின் ஒலி கேட்கவில்லை என்பதை உய்த்து மெல்ல கதவைச் சற்றே திறந்து நோக்கினாள். மயங்கி கதவில் சாய்ந்துகிடந்த மைந்தனைக் கண்டு அலறியபடி அள்ளி அணைத்துக்கொண்டாள். "நீ நினைப்பதே ஆகட்டும்....நீயன்றி நான் வேறுலகை அறியேன்" என்று அவள் கூவியழுதாள்.

அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார். மரீஷை அவரைவிட மூன்றுவயது குறைந்தவள். ஆனால் அவள் அவரைவிட ஓரடி உயரம் கொண்டவளாகவும் இருமடங்கு எடைகொண்டவளாகவும் இருந்தாள். கன்னங்கரிய நிறமும் நதிநுரைபோல சுருண்டகூந்தலும் பெரிய பற்களும் கொண்டவளாக இருந்தாள். குடிச்சபையில் லவணர்களின் தலைவனாகிய கலன் தன் மூத்தமகளை சூரசேனருக்கு அறத்துணைவியாக அளிக்கவிருப்பதாகச் சொன்னபோதுதான் தந்தையின் பின்னால் இடையில் அணிந்த ஆட்டுத்தோல் ஆடையை முலைகளுக்குமேல் தூக்கி தோளில் முடிச்சுபோட்டு தலையில் சிவந்த காட்டுமலர் சூடி கழுத்தில் செந்நிறமான கல்மாலை அணிந்து நின்றிருந்த மரீஷையை சூரசேனர் கண்டார்.  இருளுக்குள் கிடக்கும் வெள்ளிக்காசுகள் போல அவள் கண்வெள்ளைகள் தெரிந்தன.

அவளைக் கண்டதுமே குடிச்சபையில் ஓர் அமைதி பரவியது. குடிமூத்தாரான காளிகர் தயங்கியபடி சூரசேனரிடம் மணம் கொள்ள அவருக்குத் தடையில்லை அல்லவா என்று கேட்டபோது "இல்லை, குடிமுறையே என் வழி" என்று அவர் சொன்னார். யாதவமுறைப்படி சூரசேனர் ஏழு கன்றுள்ள வெண்பசுக்களை மரீஷையின் தந்தையான கலனுக்கு கையளித்து அவர் மகளை கன்னிக்கொடையாகப் பெற்றுக்கொண்டார். அவள் கழுத்தில் விருஷ்ணிகுலத்தின் இலச்சினையான அக்னிவர்ண கருடனின் சின்னத்தைப் பொறித்த மங்கலத்தாலியை சூரசேனர் கட்டினார். மணமகள் அப்போது வழக்கப்படி நாணித்தலைகுனியாமல் திகைத்த வெண்விழிகளுடன் அனைவரையும் மாறிமாறி நோக்கியபடி நின்றிருந்தாள்.

மரீஷை விரல் தொட்ட அனைத்து பால்குடங்களும் திரிந்தன என்றாள் பத்மை. அவள் நடந்தபோது மரத்தாலான இல்லம் அதிர்ந்தது என்றனர் முதுபெண்டிர். அவளுக்கு நீராடும் வழக்கமோ பற்களைத் தீட்டும் முறையோ இல்லை என்றனர் ஆயர்மகளிர். அவளுக்கு யாதகி மொழியே தெரியவில்லை என்று சூரசேனர் கண்டுகொண்டார். செம்மொழியிலோ ஒருசொல்லும் அவளறிந்திருக்கவில்லை. அவளிடம் அவர் பேசிய சொற்களெல்லாம் பாறைமேல் மழை என வழிந்தோடின. செவியிழந்த பசுவை மேய்ப்பதுபோன்றது அவளுடனான காதலென அவர் அறிந்தார். அவர் அவளைப்பற்றி எவரிடமும் ஒரு குறைச்சொல்லும் சொல்லவில்லை. அவளிடம் பேசுவதற்கு கண்களாலும் கைகளாலும் ஒரு மொழியை அவரே உருவாக்கிக் கொண்டார்.

ஆனால் அவளை அவரது உடல் அறிந்திருந்தது. அவளுடைய உடலின் திடத்தையும் ஆற்றலையும் அவருடைய உடல் வழிபட்டது. காலம் செல்லச்செல்ல அவளுடைய நிறமும் வாசனையும் ஒலிகளும் அவருக்குள் பெரும் மனக்கிளர்ச்சியை நிறைத்தன. அந்த ஈர்ப்பை அவரே அஞ்சினார். அன்னையும் பிற விருஷ்ணிகுலத்தவரும் அதை அறிந்துகொள்ளலாகாது என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது கண்களைக் கண்டதுமே மூதன்னையர்கூட அதைத் துல்லியமாக அறிந்துகொண்டனர். அவர் அவர்களின் கண்களைச் சந்திக்காமலிருக்கையில் அவரது உடலின் அசைவுகள் வழியாகவே அறிந்துகொண்டனர்.

அதை அறிந்ததுமே பத்மை உரத்தகுரலில் வேறு எதையோ குறிப்பிட்டு கூச்சலிடுவாள். கண்ணீர் மல்கி மனக்குறைகளைச் சொல்லி அழுவாள். தன்னையே எண்ணி வருந்தி தன் நெஞ்சிலேயே அறைந்துகொள்வாள். சூரசேனர் அப்போது தலைகுனிந்து வெளியேறி தொழுவங்களுக்கோ பட்டிக்கோ ஊர்மன்றுக்கோ சென்றுவிடுவார். அவரைச் சந்திக்கும் விருஷ்ணிகுலத்துப் பெண்களெல்லாம் அவளைப்பற்றி இழித்துரைத்தனர். அந்த இழிவுரைகள் நாள்செல்லச்செல்ல மிகுந்தபடியே வந்தன. அதை உணர்ந்தபோதுதான் அவருக்கு அவள்மேலிருந்த பெருங்காதலை அறியாத எந்தப்பெண்ணும் அக்குடியில் இல்லை என அவர் புரிந்துகொண்டார்.

அவளுக்கும் அது தெரிந்திருந்தது. அவருடன் இருக்கையில் அவள் எப்போதும் மெல்லியகுரலில் பெரிய உடலில் இறுகிய கரிய தசைகள் அதிர சிரித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு என்னவேண்டும் என்று அவர் எப்போது கேட்டாலும் அவரது மார்பில் தன் சுட்டுவிரலை ஊன்றி அவள் வாய்பொத்திச் சிரிப்பாள். 'நீ அழகாக இருக்கிறாய்’ என்று அவளுடைய மொழியில் சொல்வதெப்படி என்று அவர் கற்றுக்கொண்டார். ஆனால் அச்சொற்கள் அவளுக்கு எந்தப் பொருளையும் அளிக்கவில்லை. பின்னர் நீ வலிமையானவள் என்று சொல்லத்தொடங்கினார். அதுவும் அவளுக்கு உவப்பளிக்கவில்லை. அவளிடம் ஒருமுறை நான் உன் குழந்தை என்று சொன்னார். அவள் பெருங்காதலுடன் அவரை தன் பெரிய மார்புக்குவைகளுக்குள் அணைத்து இறுக்கிக்கொண்டு லாவணமொழியில் எதையோ பாடுவதுபோலச் சொன்னாள்.

தன்காதலே மரீஷையை பிறரது வெறுப்புக்குள்ளாக்குகிறது என்றறிந்தபின்னர் சூரசேனர் காட்டிலேயே தங்கத் தொடங்கினார். மாதத்தில் இரண்டுமுறை மட்டும் மதுவனத்துக்கு வந்து அவளுடன் இருப்பார். அப்போதுகூட அவளை எருமை சேற்றுக்குழியில் விழுந்துவிட்டது என்றோ பசுவின் கால் ஒடிந்துவிட்டது என்றோ ஏதேனும் சொல்லி அருகே இருக்கும் காட்டுக்குக் கூட்டிச்சென்றுவிடுவார். அங்கே மரத்தின்மேல் கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தில்தான் அவளுடன் குலவினார். அவள் அவரிடம் எந்த மனக்குறையையும் சொல்லவில்லை. அவருடனிருக்கும்போதெல்லாம் அவளுடைய உடல் வழியாகவே அகம் தன்னை வந்தடைகிறது என அவர் அறிந்தார்.

மரீஷை விருஷ்ணிகளின் குடியில் தன்னந்தனியாக வாழ்ந்தாள். சிலநாட்களிலேயே அவளுடைய இணையற்ற புயவல்லமையை பத்மை கண்டுகொண்டாள். அவள் கறந்தால் அனைத்துப்பசுக்களும் இருமடங்கு பால்கொடுத்தன. அவளால் ஒருநாளில் முந்நூறுபசுக்களுக்கு பால்கறக்க முடிந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருகணம்கூட நிலைக்காமல் மத்துச்சக்கரத்தைச் சுழற்றமுடிந்தது. அத்தனை வேலைகளையும் முடித்தபின் அவள் புறந்திண்ணையில் அருகே நின்றிருந்த மூத்த சாலமரத்தை அண்ணாந்து நோக்கி அதன் கிளைகளிலும் இலைகளிலும் ஆடும் அணில்களை கவனித்தபடி கனவுநிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பாள். அப்போது சிலசமயம் மெல்லிய குரலில் லாவணமொழியில் எதையோ பாடிக்கொள்வாள்.

அவள் அழுவதையோ முகம்சுளிப்பதையோ ஆயர்மகளிர் கண்டதேயில்லை. அவள் முகத்தின் பெரியபற்கள் அவளுக்கு எப்போதும் புன்னகை நிறைந்த முகத்தை அளித்தன. சிறிய மூக்கும் கொழுத்துருண்ட கன்னங்களும் குழந்தைத்தன்மையைக் காட்டின. அவள்மேல் கனிவுகொண்ட ஆயர்மகளிரும் சிலர் இருந்தனர். அவர்களின் கன்றுகள் திமிறிக்கொண்டு செல்லும்போதோ எருமைகள் எழாமல் அடம்பிடிக்கும்போதோ மரீஷையைத்தான் அவர்கள் அழைக்கவந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு அவளுடைய ஆற்றல்மிக்க உடல்மேல் வியப்பிருந்தது.

ஆனால் கண்மூடும் நாள்வரை பத்மை தன் மருகியை வெறுத்தாள். அவளை முகம்சுளிக்காமல் ஒருகணமேனும் பார்க்கவில்லை. கசப்புஇல்லாத ஒரு சொல்லையேனும் அவளிடம் சொல்லவில்லை. அவள் மணமுடித்துவந்த முதல்வருடமே முதல்குழந்தையைப் பெற்றாள். அவளைப்போலவே கனத்த பெரிய கரிய உடலுள்ள ஆண்குழந்தையை பத்மை தொட்டுப்பார்க்கவேயில்லை. ஆகவே பிற யாதவமகளிரும் அக்குழந்தையைத் தொடவில்லை. வசு அன்னையின் இடையிலேயே வளர்ந்தான். அடுத்தகுழந்தையை மரீஷை பெற்றபோது வசுவை சூரசேனர் காட்டுக்குக் கொண்டுசென்று அங்கே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

மரீஷை தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தாள். தேவபாகன், தேவசிரவஸ், ஆனகன், சிருஞ்சயன், காகானீகன், சியாமகன், வத்ஸன், காவுகன் என அனைத்துக்குழந்தைகளும் மரீஷையைப்போலவே கன்னங்கரியவையாக, ஆற்றல்மிக்கவையாக இருந்தன. விருஷ்ணிகுலத்து யாதவர்கள் அனைவருமே வெண்ணிறமானவர்கள். காராம்பசுக்குட்டிகளைப் போன்ற குழந்தைகளைக் காண விருஷ்ணிகுலப்பெண்கள் திரண்டு வந்தனர். வாயில் கைவைத்து விழித்த கண்களுடன் குழந்தைகளை நோக்கி நின்றபின் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டனர். ஒருவரும் குழந்தைகளை கையால் தொட்டு எடுக்க குனியவில்லை.

முதல்மூன்று குழந்தைகளுக்கும் விருஷ்ணிகளின் குலவழக்கப்படி செம்மொழிப்பெயர்கள் வைக்கப்பட்டனர். அதன்பின் பத்மை அக்குழந்தைகளுக்கு அவர்களின் நிறத்தையே பெயராக வைத்தாள். ஒருகுழந்தைகூட அவள் மடியில் ஒருமுறையும் அமரவில்லை. பெயர்சூட்டுவிழாவின்போதுகூட அவை அன்னையின் மடியிலேயே அமர்ந்திருந்தன. பெயரிட்ட மறுநாளே அவை தந்தையுடன் காட்டுக்குச் சென்றன. மரீஷை அதன்பின் மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றாள். கரிணி, சிக்ஷை, சியாமை என்னும் மூவரும் அன்னையைப்போலவே கன்னங்கரிய நிறம்கொண்டவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நாமகரணம் முடிந்ததுமே அன்னையின் லவணகுலத்துக்கு அனுப்பப்பட்டனர்.

பதின்மூன்றாவது குழந்தையாக வாசுதேவன் பிறந்தபோது பத்மை முதுமையடைந்திருந்தாள். மருகி கருவுற்றபோது அவள் அக்கருவையே வெறுத்தாள். பன்னிரு குழந்தைகளுக்குப் பின்னரும் மரீஷை எந்த மாறுதலுமில்லாமல் லவணர்குலத்திலிருந்து தோல்கூடையில் சீர்ப்பொருட்களை சுமந்து, தயங்கியகாலடிகளுடன் இல்லத்தில் நுழைந்தபோதிருந்ததைப் போலவே இருந்தாள். அவள் வயிறு கருமையாக வீங்கி மெருகு கொண்டபோது "இன்னொரு எருமைக்குட்டி உள்ளே வாழ்கிறது..." என்று பத்மை சொன்னாள். "விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் குருதிக்கு தொடர்ச்சியில்லை என விதி எண்ணுகிறது போலும்" என்றாள்.

ஆகவே மகவுபிறந்த செய்தியை வயற்றாட்டி வந்து சொன்னபோது புறவாயிலில் கன்றுக்குட்டிக்கு கழுத்துநார் பின்னிக்கொண்டு அமர்ந்திருந்த அவள் எழுந்துகூட பார்க்க முனையவில்லை. "சரி, அதற்கென்ன? என் முத்திரைமோதிரத்தை அளிக்கிறேன். அதை நீரிலும் பாலிலும் தொட்டு நீயே அதன் உதடுகளில் வைத்துவிடு" என்று வயற்றாட்டியிடம் சொன்னாள். "பிராட்டி, குழந்தை செந்நிறமாக இருக்கிறது" என்று வயற்றாட்டி சொன்னபோது விளங்காதவள்போல ஏறிட்டு தன் முதிய விழிகளால் பார்த்தாள். அதன்பின் தீப்பிடித்துக்கொண்டவள் போல எழுந்து ஈற்றறை நோக்கி ஓடினாள்.

உள்ளே மூங்கில்கட்டிலில் தோல்மெத்தைமேல் மரீஷை கிடந்தாள். அவள் ஓடிவந்து குழந்தைமேல் இருந்த மரீஷையின் கரிய கையைத் தட்டி அகற்றிவிட்டு குனிந்து குழந்தையை நோக்கினாள். தாமரையிதழ்போலிருந்தது அது. "குளிப்பாட்டுங்கள்... குளிப்பாட்டி என்னிடம் அளியுங்கள்" என்று பத்மை பதறியகுரலில் கூவினாள். "இதோ விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகருக்கு கொடித்தோன்றல் பிறந்திருக்கிறது."

வயற்றாட்டிகளில் ஒருத்தி "வழக்கத்துக்கு மாறாக குழந்தை மிகச்சிறியதாக இருக்கிறது பிராட்டி. அத்துடன் போதிய அளவு துடிப்புடனும் இல்லை. அன்னையின் உடலும் குளிர்ந்து வருகிறது" என்றாள். "குழந்தை வாழவேண்டும்... அதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம்" என்று பத்மை சொன்னாள். அதற்குள் மயக்கத்தில் குருதி வழியக் கிடந்த மரீஷை லாவண மொழியில் ஏதோ முனகியபடி புரண்டுபடுத்தாள். அவள் உடல் அதிரத்தொடங்கியது. கைகால்கள் இருபக்கமும் விரிய எருமைபோல அவள் உறுமல் ஒலியை எழுப்பினாள்.

"மீண்டும் வலி வந்திருக்கிறது பிராட்டி" என்றாள் வயற்றாட்டி. பத்மை "அந்தக்குழந்தையை என்னிடம் கொடு... நீங்கள் அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாள். வயற்றாட்டி தோலாடையில் பொதிந்து கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையை மார்போடணைத்து அவள் கண்ணீர்விட்டாள். சற்று நேரத்தில் வயற்றாட்டி வந்து இன்னொரு பெண்குழந்தையும் பிறந்திருக்கிறது என்றாள். "குழந்தை என்ன நிறம்?" என்றுதான் பத்மை கேட்டாள். "இதே நிறம்தான் பிராட்டியே...நல்ல செந்நிறம்." பத்மை கண்ணீர் வழிய மார்போடணைத்த குழந்தையுடன் மீண்டும் ஈற்றறை நோக்கி ஓடினாள்.

இருகுழந்தைகளும் பத்மையின் நெஞ்சிலேயே வளர்ந்தன. பாலூட்டும் நேரம் தவிர அவற்றைத் தீண்டுவதற்கு மரீஷை அனுமதிக்கப்படவேயில்லை. அவள் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்ய பத்மை இரவும் பகலும் குழந்தைகளுடன் இருந்தாள். மூத்தவனாகிய வாசுதேவனும் தங்கை பிருதையும் பாட்டியையே அன்னை என்று அழைத்தனர். எப்போதேனும் வந்துசெல்லும் தந்தையை அவர்கள் அறியவேயில்லை. தந்தையுடன் காட்டில் வாழ்ந்த தமையன்களையும் லவணர்களின் ஊரில் வாழ்ந்த தமக்கையரையும் ஓரிருமுறைக்குமேல் அவர்கள் கண்டிருக்கவுமில்லை. அவர்கள் அறிந்த உலகம் பாட்டியால் சமைக்கப்பட்டிருந்தது. அதில் கருமையைப்பற்றிய கடும் வெறுப்பு நிறைந்திருந்தது.

வாசுதேவன் இளமையிலேயே அன்னையை வெறுத்தான். அவள் தூய்மையற்ற மிருகம் என்றும் அவளருகே செல்வதும் தீண்டுவதும் இழிவானவை என்றும் நினைவறிந்த நாள்முதலே எண்ணத்தொடங்கினான். அவன் தனித்து நிற்கும்போது சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே வரும் அன்னை அவனை அள்ளி அணைத்துக்கொண்டால் அவன் திமிறி கைகால்களை உதறி கதறியழுவான். அவள் கொண்டுவந்துகொடுக்கும் உணவுப்பண்டங்களை அவள் முன்னாலேயே வீசி எறிவான். அவள் தன்னை தொட்டுவிட்டால் ஓடிச்சென்று பாட்டியிடம் அதைச் சொல்வான். அவள் உடனே அவனைக் குளிப்பாட்டி மாற்றுடை அணிவிப்பாள்.

தன் நிழலாக கூடவே வந்துகொண்டிருக்கும் பிருதையிடம் "அவள் கரியவள். அசுரர்களின் குலத்தில் உதித்தவள்" என்று வாசுதேவன் சொன்னான். "அசுரர்கள் மனிதர்களைக் கொன்று ஊனை உண்பவர்கள். ஆகவேதான் அவர்களின் பற்கள் பெரியதாக இருக்கின்றன. அவர்களின் வாயில் குருதிநாற்றம் வீசுகிறது. அவர்கள் இருட்டில் நம்மை பார்ப்பார்கள். அவர்களின் கண்கள் இருளில் வெண்மையாக ஒளிவிடுபவை." இரவில் கொடுங்கனவுகண்டு பிருதை எழுந்து அலறி அழுவாள். பாட்டி அவளை அணைத்து தன் மரவுரிப்போர்வைக்குள் இழுத்துக்கொள்வாள்.

வாசுதேவனுக்கு மூன்றுவயதிருக்கையில் பத்மை மறைந்தாள். மழை பெய்துகொண்டிருக்கையில் தொழுவத்தில் கட்டை அவிழ்த்துவிட்டு ஓடிய காராம்பசுவைப் பிடிப்பதற்காக அவள் வெளியே சென்றாள். கன்னங்கரிய நிறமும் வெள்ளிக்கண்களும் கொண்ட அந்தப்பசு கரியநிற அகிடுகள் கொண்டதாகையால் அதன் பால் பூசைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்பட்டு தனியாக தொழுவத்தில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. ஒளிக்குக் கூசும் தன்மை கொண்ட அதன் வெள்ளிக்கண்களில் மின்னல் ஒளி பட்டபோது அது மிரண்டு சுழன்று கால்களை நிலத்தில் ஊன்றி முழு எடையையும் கொண்டு இழுத்து கயிற்றை அவிழ்த்துக்கொண்டு மழைத்தாரைகளுக்குள் பாய்ந்தது. மழைநீர் முதுகில் பட்டதும் திகைத்து சருமம் சிலிர்த்து அசையாமல் தலைதாழ்த்தி நின்றது.

குளம்படிச் சத்தம்கேட்டு புறந்திண்ணையில் வாசுதேவனையும் பிருதையையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த பத்மை அவர்களை இறக்கிவிட்டு இறங்கி ஓடிச்சென்று சேற்றில் இழுபட்ட அறுந்த கயிற்றைப் பற்றி இழுத்தாள். இழுபட்ட தலையை பக்கவாட்டில் தாழ்த்தி மூச்சு சீறி முன்னங்காலால் தரைச்சேற்றை கிளறியபடி கண்களை உருட்டிப்பார்த்தது. பத்மை கீழே கிடந்த தார்க்கோலை எடுப்பதற்காகக் குனிந்ததும் அது பாய்ந்து அவள் விலாவைமுட்டி தூக்கி வீசியது. வாசுதேவன் அலறியபடி உள்ளே ஓடினான். வீட்டில் ஏவலர்கள் எவரும் இருக்கவில்லை. அவன் அறைகள்தோறும் ஓடியபோது தன்னையறியாமலேயே ‘அம்மா அம்மா’ என அலறிக்கொண்டிருந்தான்.

அவன்குரல் கேட்டு மத்துசுழற்றிக்கொண்டிருந்த மரீஷை அனைத்தையும் உணர்ந்துகொண்டு வெளியே ஓடினாள். மழையில் குனிந்து மூச்சுசீறி மிரண்டு நின்ற பசுவை அணுகி அதை கையாலேயே ஓங்கி அறைந்து கொம்புகளைப்பிடித்து வளைத்து துரத்திவிட்டு கீழே கிடந்த பத்மையை அணுகினாள். மீண்டும் முட்டுவதற்காகக் குனிந்த பசுவைநோக்கி வலக்கையை வீசியபடி கால்கள் சேற்றில் குழைந்து இழுபட மண்ணில் தவழ்ந்த பத்மை மருகியை நோக்கி கைநீட்டி தன்னை மீட்கும்படி ஓசையில்லாமல் மன்றாடினாள்.

பத்மையை சிறுகுழந்தைபோல மென்மையாக இருகைகளிலும் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தாள் மரீஷை. அவளை உள்ளறையில் தோல்மெத்தையில் மெல்லப் படுக்கச்செய்தபின் மழையில் ஓடி மருத்துவச்சியை அழைத்துவந்தாள். வெளியே காயங்களேதும் இல்லை என்றாலும் பத்மையின் விலா எலும்புகள் ஒடிந்துவிட்டன என்றாள் அவள். சூரசேனருக்குச் செய்தியனுப்புவதே செய்யக்கூடியது என்றாள்.

மூச்சுவாங்கிக்கொண்டிருந்த பத்மை தன் உடைகளை மாற்றும்படி சொன்னாள். மருத்துவச்சியும் மரீஷையும் சேர்ந்து உடைகளை மாற்றி உலர்ந்தவற்றை அணிவித்தனர். பத்மையின் மூச்சுத்திணறல் ஏறியது. அவள் கண்கள் குழந்தைகளைத் தேடின. மரீஷை குழந்தைகளை அழைத்துச்சென்று அருகே நிறுத்தினாள். பத்மையின் வலக்கை செயலிழந்திருந்தது. இடக்கையால் இருகுழந்தைகளையும் வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டபோது இடக்கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது.

பத்மை தன் தொண்டையைத் தொட்டு குடிக்க நீர் கேட்டாள். மரீஷை உள்ளே ஓடி இளஞ்சூடான பாலை மூங்கில்குவளையில் எடுத்துவந்தாள். அதை பத்மையின் அருகே கொண்டுவந்து வாயருகே நீட்டியபோது பத்மையின் கண்களுக்குள் கூரிய கத்தி திரும்புவதுபோல வெறுப்பின் ஒளியை வாசுதேவன் கண்டான். பத்மை அந்தக்குவளையை வாங்கி ஊட்டும்படி மருத்துவச்சியிடம் சைகைகாட்டினாள். மரீஷை குவளயை மருத்துவச்சியிடம் கொடுத்தாள். அதை வாங்கி மருத்துவச்சி மெதுவாக ஊட்ட இரண்டு வாய்குடித்து மூன்றாம் வாயை வழியவிட்டு பத்மை இறந்துபோனாள்.

அன்று இரவு வீட்டு அறைகளெல்லாம் யாதவகுலத்து மகளிர் நிறைந்திருக்க முற்றத்தில் போடப்பட்ட ஓலைப்பந்தலுக்குள் முதியவர்கள் கூடி நிற்க நீப்புச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பிருதையை கொல்லைப்பக்கம் சாம்பல்குழி அருகே அழைத்துக்கொண்டுசென்று வாசுதேவன் சொன்னான் "நாம் பாட்டிக்காக அழக்கூடாது. அவள் தீயவள். ஆகவேதான் அவளை காராம்பசு முட்டிக்கொன்றது." பிருதை பெரிய விழிகளை விழித்து அவனைப்பார்த்தாள். "நீ அழவேகூடாது" என்றான் வாசுதேவன். சரி என்று அவள் தலையாட்டினாள்.

அவர்கள் வீடுமுழுக்க நிறைந்திருந்த கால்களினூடாக கைகளைப்பற்றிக்கொண்டு நடந்தனர். முற்றத்தில் பீடத்தில் தனியாக நரைத்த தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சூரசேனரை சுவர் மறைவிலிருந்து வாசுதேவன் பார்த்துக்கொண்டே நின்றான். அவரிடம் துயரமேயில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அது பாட்டியைப்பற்றிய அவனுடைய எண்ணம் பிழையல்ல என்று உறுதிப்படுத்தியது. அருகே சென்று ஏதோ சொன்ன அன்னையை நோக்கி அவர் புன்னகைபுரிவதை வாசுதேவன் கண்டான். அன்னையை அவர் நேரடியாக நோக்குவதை அப்போதுதான் அவன் காண்கிறான். அக்கணமே அவரும் நல்லவரல்ல என்ற எண்ணத்தை அடைந்தான்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 3 ]

யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வாசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.

மந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.

வாசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வாசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வாசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.

அவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.

பசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.

மாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.

இரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.

விடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மாவும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.

பட்டிக்கு வந்த அன்றே வாசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.

அவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.

அன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊரில் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.

வாசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வாசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.

விடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வாசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.

அவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். "நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது" என்று வாசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் "தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்?" என்றாள். "நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்னால் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்" என்றான் வாசுதேவன்.

பிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று "அவனிடம் கிளம்பச்சொல்" என்று மனைவியிடம் ஆணையிட்டார். வாசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது "நான் போகமாட்டேன்" என்றான். "முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி..." என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வாசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.

சற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் "நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்" என்றார். "நான் வரப்போவதில்லை..." என்றான் வாசுதேவன். "ஏன்?" என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. "நான் மாடுமேய்க்க விரும்பவில்லை" என்றான் வாசுதேவன். "ஏன்? அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது" என்றார் சூரசேனர்.

"நான் அதைச் செய்யவிரும்பவில்லை" என்றான் வாசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் "அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்?" என்றார். "நான் படிக்கிறேன்" என்றான் வாசுதேவன். "படித்து?" என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். "அரண்மனை ஊழியனாக ஆகிறேன்." சூரசேனர் தாடை இறுக "எந்த அரண்மனையில்?" என்றார். "மதுராவில்" என்று வாசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.

பின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. "இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்" என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வாசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி "நான் இடையனாக மாட்டேன்... என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்" என்றான்.

தலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று "அண்ணா இறங்கி வா" என்று அழைத்தாள்.

அவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். "நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்" என்றான் வாசுதேவன். "மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்." பிருதை "நான் எங்கே செல்வது?" என்றாள். வாசுதேவன் சற்று சிந்தித்தபின் "நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்" என்றான்.

ஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.

சூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் "சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா? இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்" என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் "இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்" என்றார். குந்திபோஜன் "விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது" என பதில் சொன்னான்.

அன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து "போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்" என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் "இது ஆணை அல்லவா?" என்றான். "ஆணை ஆணை ஆணை" என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.

ஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந்தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.

குந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.

அதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.

சூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.

யமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வாக்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். "அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்" என்றனர் மூத்தோர்.

பிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வாசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வாசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் "அன்னையே, இந்த மன்றுக்கு வருக" என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.

மலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் "அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்" என்றார்.

பிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி "குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்" என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து "மகளே பிருதை!" என்றார்.

முதியவர் "அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்... தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்" என்றார். "ஆம் தெரியும்" என்று பிருதை தலையசைத்தாள். "நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்" என்று மீண்டும் சொன்னாள்.

குந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி "என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்" என்றான். "அன்னையே, என் குலத்துக்கு வருக....உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக" என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.

அங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.

மேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் "என்ன செய்துவிட்டாய்! எதை இழந்துவிட்டாய்! அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்" என்றார். "அவள் இறந்திருந்தால்?" என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். "அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்... ஆம் அவள் இறந்துவிட்டாள்."

மன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் "இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்" என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக!’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.

அங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்திகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.

மன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.

தன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் "நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை" என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.

திடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி "மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்" என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி "ஆணை அன்னையே" என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.

தன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் "விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்" என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து "நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்" என நற்சொல்லிட்டார்.

அந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். "என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்" என்றார்.

பிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வாசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வாசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் "நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்..."

சற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் "கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்..." அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வாசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 4 ]

இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின.

ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று யாதவபுராணங்கள் வகுத்தன. அத்ரி பிரஜாபதிக்கும் அனசூயைக்கும் சந்திரன், துர்வாசர், தத்தாத்ரேயர் என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தன. சந்திரனிலிருந்து புதன் பிறந்தான். புதனிலிருந்து புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி என்று குலமுறை தொடர்ந்தது.

யயாதிக்கு தேவயானியில் யது என்றும் துர்வசு என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். யயாதி சுக்கிர முனிவரின் சாபத்தால் முதுமையை அடைந்தபோது தன் மைந்தர்களிடம் அம்முதுமையை ஏற்றுக்கொள்ளும்படி கோரினான். பிற மைந்தர் தயங்கியபோது யயாதியின் இரண்டாவது மனைவியும் அசுரகுலத்தோன்றலுமான சர்மிஷ்டையின் மைந்தன் புரு முதுமையை ஏற்றுக்கொண்டான்.

தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு நாடு மறுக்கப்பட்ட துர்வசு வடதிசையில் காந்தார நாட்டைநோக்கிச் சென்றான். யது தனக்குரிய நிலம்தேடி தன் படைகளுடன் தென்றிசை நோக்கி வந்தான். அஸ்தினபுரியின் கங்கையைக் கடந்து, மச்சர்கள் ஆண்ட யமுனையைக் கடந்து, மாலவத்தையும், கிகடர்களின் தேவபுரியையும் தாண்டி தென்மேற்காகச் சென்றான். ஒவ்வொருநாட்டிலும் அந்நாட்டுப்படைகள் வந்து அவனை எதிர்கொண்டு உணவும் நீரும் அளித்து அவர்களின் நிலத்தில் தங்காமல் கடந்துபோகச் செய்தன. இறுதியாக நிஷாதர்களின் நாட்டில் தோலூறிய கழிவுநீர் ஓடிய சர்மாவதி நதியை அடைந்தான். நிஷாதர்கள் அவர்களை மூன்றுநாட்களுக்குள் நாட்டைக்கடந்துபோகும்படி ஆணையிட்டனர்.

யதுவும் அவன் படையினரும் மேலும் சென்று மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்தனர். அங்கே யது கடந்துசென்ற காற்றில் ‘ஆம்’ என்ற ஒலியைக் கேட்டான். அங்கேயே தங்கும்படி படைகளுக்கு ஆணையிட்டான். அவனுடன் வந்த ஆயிரம் வீரர்கள் பர்ணஸாவின் வெற்று மணற்பரப்பில் ஊற்று தோண்டி நீர் அருந்திவிட்டு அங்கே ஒரு சிறிய பிலுமரச்சோலையில் ஓய்வெடுத்தனர். யதுவின் அமைச்சரான லோமரூஹர் நிமித்தங்களைக் கணித்து மேற்கொண்டு பயணம்செய்யலாமா என நோக்கினார்.

அச்சோலையில் இருந்து எந்தப்பறவையும் மேலும் தென்மேற்காகப் பயணம் செய்யவில்லை என்பதையும் தென்மேற்கிலிருந்து எப்பறவையும் சோலைக்கு வரவுமில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். எலும்புதின்னும் கருஞ்சிறகுப் பருந்தான ஊர்த்துவபக்‌ஷன் தொலைவில் வானில் சுற்றிக்கொண்டிருந்தது. "இளவரசே, இந்நிலத்துக்கு அப்பால் வெறும்பாலை. அங்கே பறவைகள்கூட வாழமுடியாது. அது ஊர்த்துவபக்‌ஷனுக்கு மட்டுமே உணவூட்டும்" என்ற லோமரூஹர் "இங்கு நீரே இல்லை. செடிகளேதும் இங்கு வளர்வதுமில்லை. ஆகவேதான் இங்கு ஜனபதங்கள் உருவாகவில்லை. நாம் மேலும் தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்வதே சரியாக இருக்கும்" என்றார்.

அவரது சொல்லைக் கேட்ட யது "அமைச்சரே, தாங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தச் சிற்றாறை நான் அடைந்தபோதே நான் விரும்பும் மண்ணுக்கு வந்துவிட்டேன் என்ற உணர்வை அடைந்தேன். இங்கேயே நான்குநாழிகை நேரம் நான் காத்திருக்கப்போகிறேன். நான் வழிபடும் பூமியன்னை என்னை வழிகாட்டி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலும் தென்மேற்காகச் சென்று பாலையில் ஊர்த்துவபக்‌ஷனுக்கு உணவாக ஆவதையே நாடுவேன்" என்றான். அரசனின் ஆணையை அமைச்சர் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு "அவ்வண்ணமே ஆகுக அரசே. தங்களுடன் நாங்கள் ஆயிரம்பேரும் பாலைபுகுவதற்கு சித்தமாக உள்ளோம்" என்றார்.

அவர்கள் அங்கே நான்கு நாழிகை நேரம் காத்திருந்தனர். வெயில் அனலாகி பின்பு அடங்கத் தொடங்கியது. விண்மீன்கள் செந்நிற வானிலேயே தெளிவாக முளைத்து வந்து அதிர்ந்தன. மாலையானதும் அந்த பாலைப்பொழிலில் குறுமொழிபேசும் சிறுபறவைகள் வந்து சேர்ந்தன. அவர்கள் தோண்டிய ஊற்று நீரில் நீராடிய சிறிய தவிட்டுக்குருவி ஒன்று தன் குலத்தையே அழைத்துவந்தது. அவற்றைக் கண்டு பிற பறவைகள் தங்கள் குலங்களைக் கூவி அழைத்து அங்கே வந்துசேர்ந்தன. ஆற்றங்கரையில் பறவைகளின் சிறகுகள் நிறைந்திருப்பதை யது பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் பறவைக்குரல் கேட்டு அங்கு நீர் இருப்பதை அறிந்த காட்டுப்பசு ஒன்று கனத்த காலடிகளுடன் அங்கே வந்தது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை உதறியபடி அந்த வெண்பசு ஆற்றுக்குள் இறங்கி ஊற்றுநீரை அருந்தியது. அனைத்துப்பறவைகளும் பசுவை சுற்றிப்பறந்தும் அதன் முதுகில் அமர்ந்தும் குரலெழுப்பின. யது எழுந்து கண்ணீருடன் கைகூப்பி அந்தப் பசுவை வணங்கினான். "அன்னையே, தங்கள் ஆணை. இந்த நிலத்தில் நான் என் அரசை அமைப்பேன்" என்றான்.

அவ்வாறு அங்கே முதல் யாதவ அரசு அமைந்தது. யதுவின் படையினர் அந்தப்பசுவை போகவிட்டு காத்திருந்தனர். மறுநாள் அது இருபது காட்டுப்பசுக்களுடன் அங்கே வந்தது. மூன்றாம்நாள் ஐம்பது பசுக்கள் அங்கே நீருண்ண வந்தன. யது அந்தப்பசுக்களை உரிமைகொண்டான். அவற்றைச் சோலைகளில் மேயவிட்டு பேணி வளர்த்தனர் அவன் படையினர். மெல்ல அவை பெருகின. ஆயிரம் பல்லாயிரமாக ஆயின. அவர்கள் அங்கே பாலைநிலப்பெண்டிரை மணந்து மைந்தரைப்பெற்று நூறு கணங்களாக ஆனார்கள். அந்த நூறு கணங்களும் பதினெட்டு ஜனபதங்களாக விரிந்தன. பதினெட்டு ஜனபதங்களும் இணைந்து யாதவகுலமாக மாறியது.

யதுவுக்கு சஹஸ்ரஜித், குரோஷ்டன், நளன், ரிபு என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். சஹஸ்ரஜித்துக்கு சதஜித் என்னும் மைந்தன் பிறந்தான். சதஜித்துக்கு மகாபயன், வேணுஹயன், ஹேகயன் என்ற மூன்று மைந்தர்கள் பிறந்தனர். ஹேகயன் ஏகவீரன் என்ற பேரில் பெரும்புகழ்பெற்றான். ஹேகயனின் வம்சம் பாரதத்தில் அரசகுலமாக புகழ்பெற்றது. ஹேகய வம்சத்தில் கார்த்தவீரியன் பிறந்தான். கார்த்தவீரியனின் வல்லமையால் புதியநிலங்களில் பரவி யதுவம்சம் வடக்கே யமுனையிலும் கங்கையிலும் நிறைந்தது. அவர்களனைவரும் யாதவர்கள் என்றழைக்கப்பட்டனர்.

ஹேகயப் பெருங்குலம் ஐந்து ஜனபதங்களாகப் பிரிந்தது. விதிஹோத்ரர்கள், ஷார்யதர்கள், போஜர்கள், அவந்தியர், துண்டிகேரர்கள் என்னும் ஐந்து குலங்களும் ஐந்து அரசுகளாயின. அவர்களில் போஜர்கள் மார்த்திகாவதியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்தார்கள். கார்த்தவீரியனுக்கு ஜயதுவஜன், சூரசேனன், விருஷபன், மது, ஊர்ஜிதன் என ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மதுவுக்கு விருஷ்ணி என்னும் மைந்தன் பிறந்தான். விருஷ்ணியின் மைந்தர்கள் விருஷ்ணிகுலமாக வளர்ந்தனர்.

விருஷ்ணிக்கு சுமித்ரன், யுதாஜித், வசு, சார்வபௌமன் என்னும் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். விருஷ்ணிகுலம் யுதாஜித்தில் இருந்து வளர்ந்து நிலைகொண்டது. ஸினி, சத்யகன், சாத்யகி, ஜயன், குணி, அனமித்ரன், பிருஸ்னி, சித்ரரதன், விடூரதன், சூரன், ஸினி, போஜன் என விருஷ்ணிகுலம் வளர்ந்தது. அவர்கள் யமுனைக்கரைகளெங்கும் பரவி நூற்றுக்கணக்கான ஜனபதங்களை அமைத்தனர். அங்கே கன்றுகள் பெருகப்பெருக ஆயர்குலமும் பெருகியது. நீர்நிறைந்த ஏரி கரைகளை முட்டுவதுபோல அவர்கள் தங்கள் நாடுகளின் நான்கு எல்லைகளிலும் அழுந்தினர். மடைஉடைத்து பெருகும் நீர் வழிகண்டடைவதைப்போல அவர்கள் சிறிய குழுக்களாக தங்கள் ஆநிரைகளுடன் கிளம்பிச்சென்று புதிய நிலங்களைக் கண்டடைந்தனர்.

யமுனைக்கரையில் இருந்த தசபதம் காட்டுக்குள் சென்று நுழைந்து மறுபக்கம் செல்லும் பத்து கால்நடைப் பாதைகளின் தொகையாக இருந்தது. அங்கே வருடம்முழுக்க புல்லிருந்தாலும் ஆநிரைகளை புலிகளும் சிம்மங்களும் கவர்ந்துசெல்வதும் அதிகம். ஆகவே மழைபெய்யத் தொடங்கிய காலமுதலே அது மனிதர்வாழாத காடாகவே இருந்தது. கார்த்தவீரியனின் காலகட்டத்தில்தான் அங்கே எட்டு காவல்நிலைகள் உருவாக்கப்பட்டு நிலையான வில்வேட்டைக்குழு ஒன்று அமர்த்தப்பட்டு ஊனுண்ணிகள் தடுக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கே சிறிதுசிறிதாக யாதவர்கள் குடியேறினர்.

தசபதம் உருவான தகவலறிந்து கன்றுகாலிகளை ஓட்டியபடி தோள்களில் குழந்தைகளுடன், காளைகளின் மேல் கூடைக்குடில்களுடன் கிழக்கே இருந்து அவர்கள் வந்தபடியே இருந்தனர். காடுகளில் வட்டவடிவமாக குடில்களை அமைத்து சுற்றிலும் மரம்நட்டு வேலியிட்டு நடுவே தங்கள் கன்றுகாலிகளைக் கட்டி அவர்கள் தங்கள் ஊர்களை அமைத்தனர். அவ்வாறு நூறு இடையர்கிராமங்கள் உருவானதும் அப்பகுதி தசபதம் என்றழைக்கப்பட்டது. அதன் தலைவராக விருஷ்ணிகளின் குலத்தைச்சேர்ந்த ஹ்ருதீகர் நூறு கிராமங்களின் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்த பிருஸ்னிக்கு சித்ரரதன், ஸ்வபல்கன் என்னும் இரு மைந்தர்கள் இருந்தனர். சித்ரரதனின் மைந்தன் விடூரதன். விடூரதனின் குருதிவரியில்தான் ஹ்ருதீகரும் சூரசேனரும் வாசுதேவனும் பிறந்தனர். விடூரதனின் தம்பியான குங்கிரனின் குருதிவரி வஹ்னி, புலோமன், கபோதரோமன், தும்புரு, துந்துபி, தரித்ரன், வசு, நாகுகன், ஆகுகன் என வளர்ந்தது. ஆகுகனுக்கு தேவகன், உக்ரசேனன் என இரு மைந்தர்கள் பிறந்தனர். உக்ரசேனன் யமுனைக்கரையில் இருந்த யாதவர்களின் தலைமையிடமான மதுபுரத்தை ஆண்டான்.

ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான படகுகளில் நெய்ப்பானைகள் வந்துசேருமிடமாக இருந்த மதுபுரம் விரைவிலேயே ஒரு நகரமாக ஆகியது. நெய்கொள்வதற்காக பல்லாயிரம் வண்டிகள் மதுபுரத்துக்கு வரத்தொடங்கின. ஆக்னேயபதங்கள் என்றழைக்கப்பட்ட எட்டு வண்டிச்சாலைகள் அங்கே வந்துசேர்ந்தன. பாரதவர்ஷத்தின் பன்னிரண்டு நாடுகள் நெய்க்காக மதுபுரத்தை நம்பியிருந்தன. நெய் யமுனைவழியாக கங்கைக்குச்சென்று நாவாய்கள் வழியாக மகதத்துக்கும் வங்கத்துக்கும்கூடச் சென்றது.

நெய்ச்சந்தையாக இருந்த மதுபுரத்தை யமுனைவழியாக படகுகளில் வந்து தாக்கிக் கொள்ளையடித்துவந்த லவணர்களை கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு வம்சத்து மன்னனான சத்ருக்னன் தோற்கடித்து துரத்தி அங்கே ஓர் அரண்மனையையும் சிறிய மண்கோட்டையையும் நிறுவி சுங்கம்பெறுவதற்காக கோசல அரசகுலத்தைச்சேர்ந்த ஓர் இளவரசனை அதிகாரியாக அமைத்தார். படையும் காவலும் மதுபுரத்தை விரைவிலேயே வளரச்செய்தன. ஹேகயமன்னரின் ஆட்சிக்காலத்தில் கோசலத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு மதுபுரம் தனி அரசாகியது.

விருஷ்ணிகுலத்தைச்சேர்ந்த விடூரதன் மதுபுரத்தை ஆண்டதாக குலக்கதைகள் பாடின. விடூரதனின் மைந்தனான சூரசேனன் அந்நகரை தலைமையாக்கி ஆண்ட சுற்றுநிலம் சூரசேனம் என்றழைக்கப்பட்டது. ஆனால் விடூரதனின் தம்பியான குங்கிரன் சூரசேனனின் மைந்தனான ஸினியை மதுபுரத்தில் இருந்து துரத்திவிட்டு நகரைக் கைப்பற்றிக்கொண்டான். ஸினி தன் மைந்தனான போஜனுடன் வடக்கே சென்று மார்த்திகாவதி என்ற ஊரை அமைத்துக்கொண்டான். போஜனின் குருதிவரியில் வந்த குந்திபோஜனால் ஆளப்பட்டுவந்த மார்த்திகாவதி முந்நூறு வீடுகளும் சிறிய அரண்மனையும் கொண்ட சிறியநகரமாக வளர்ந்து தனியரசாக நீடித்தது.

குங்கிரனுக்குப்பின் வஹ்னியும் அவன் மைந்தர்களும் சூரசேனநாட்டையும் மதுபுரத்தையும் ஆண்டனர். ஹேகயனால் கட்டப்பட்ட மதுபுரத்தின் மண்கோட்டையை ஆகுகன் கல்கோட்டையாக எடுத்துக்கட்டி கலிங்கத்திலிருந்து காவல்படைகளையும் கொண்டுவந்து நிறுத்தினான். ஆக்னேயபதங்களின் வண்டிகளும் யமுனையின் படகுகளும் கொண்டுவந்து குவித்த சுங்கத்தால் மதுபுரம் நெய்கொட்டப்படும் வேள்வித்தீ என வளர்ந்தது.

தங்கள் மூதாதையரை துரத்தியடித்த மதுபுரத்தின் மன்னன் மீது போஜர்களும் விருஷ்ணிகளும் ஆறாச்சினம் கொண்டிருந்தனர். மதுபுரத்தின் மன்னனை நூற்றியெட்டு யாதவர்குலங்களும் தங்களவனல்ல என நிராகரித்தன. யாதவர்களின் பெருங்கூடல்விழவுகள் எதற்கும் மதுபுரத்து மன்னன் அழைக்கப்படவில்லை. யாதவர்கள் அனைவரும் மதுபுரத்தின் படைவல்லமையை அஞ்சினர். மதுபுரத்து மன்னன் உக்ரசேனன் போஜர்களின் மார்த்திகாவதியை வென்று தன் அரசை விரிவுபடுத்தும் வேட்கைகொண்டிருந்தான். வல்லூறை அஞ்சும் காக்கைகள் போல அனைத்து யாதவர்குடிகளும் சிற்றரசுகளும் ஒன்றாகி மதுபுரத்தைச் சூழ்ந்து நின்றதனால் அவன் காத்திருந்தான்.

மதுபுரத்தின் சுங்கச்செல்வத்தைப்பற்றி மகதனும் அங்கனும் வங்கனும் பொறாமைகொண்டிருந்தனர். மூன்றுமுறை மகதம் ஆக்னேயபதங்களைக் கைப்பற்ற முயன்றது. தன்னிடமிருந்த செல்வத்தைக்கொண்டு கலிங்கத்தில் இருந்து படைகளைக்கொண்டுவந்து ஆக்னேயபதம் முழுக்க நூற்றுக்கணக்கான காவல்சாவடிகளை அமைத்தான் உக்ரசேனன். ஒருகட்டத்தில் சுங்கச்செல்வத்தில் பெரும்பகுதி படைகளுக்கான ஊதியமாகவே செலவழிந்துகொண்டிருந்தது. மகதம் படைகொண்டுவருமென்றால் அதைத் தடுக்க தன் கருவூலத்தை முழுக்கச் செலவிட்டு படைதிரட்டவேண்டுமென உக்ரசேனன் அஞ்சினான்.

குடிகளே மன்னனின் முதற்பெரும் செல்வம் என்று அவன் உணரத்தொடங்கினான். யாதவக்குடிகளை நல்லெண்ணம் மூலம் தன்னை ஏற்கும்படிச் செய்யமுடியுமா என்று அவன் திட்டமிட்டான். அவனுடைய தூதர்கள் யாதவர்களின் ஜனபதங்கள்தோறும் சென்று மதுபுரத்தின் தலைமையை அவர்கள் ஏற்கும்படி செய்வதற்காக முயன்றனர். அவர்களுக்கு அரசகாவலும் ஆட்சியுரிமைகளும் அளிக்கப்படும் என்றும் அவர்களின் ஜனபதமுறைகளை மதுபுரம் முழுமையாக ஏற்கும் என்றும் தூதர்கள் சொன்னார்கள்.

மதுபுரத்தின் முயற்சிகளுக்கு முதற்பெரும் எதிரியாக இருந்தவர் தசபதத்தின் தலைவரான விருஷ்ணிகுலத்து சூரசேனர். ஹ்ருதீகரின் மைந்தரான அவரை அனைத்துயாதவக்குடிகளும் ஏற்றுக்கொண்டன. சூரசேனரின் நட்புக்காக பதினெட்டுமுறை தூதர்களை அனுப்பினார் உக்ரசேனர். ஒவ்வொருமுறையும் மரியாதையான ஒற்றை மறுப்புச்சொல்லை மட்டுமே பதிலாகப் பெற்று அவர்கள் மீண்டனர். தன்னுடைய அச்சுறுத்தலால்தான் மார்த்திகாவதியின் குந்திபோஜன் சூரசேனரின் மகளான பிருதையை மகளேற்பு செய்ய முயல்கிறான் என்று உக்ரசேனர் அறிந்திருந்தார்.

ஒற்றர்கள் வழியாக குந்திபோஜன் பிருதையை மகளேற்பு செய்து மார்த்திகாவதிக்குக் கொண்டுசென்றுவிட்டான் என்ற செய்தியை அறிந்து உக்ரசேனர் தன் அமைச்சர்களுடன் மதியூழ்ந்தார். மார்திகாவதியின் குந்திபோஜனின் அரசு இன்று யாதவர்களின் நூற்றெட்டு ஜனபதங்களின் பின்புலவல்லமையைப் பெற்றுவிட்டது என்று பேரமைச்சரான கிருதர் சொன்னார். அதை படைகொண்டு வெல்வது யாதவர்களின் முழு எதிர்ப்பையும் அடைவதாகவே முடியும். மார்த்திகாவதியை மதுபுரத்தின் நட்புநாடாக ஆக்கமுடியுமா என்பதே இனி எண்ணவேண்டியதாகும் என்றார்.

அதற்கான வழிகளை பலதிசைகளில் மதுபுரத்தின் மதியூகிகள் சூழ்ந்துகொண்டிருக்கையில்தான் சூரசேனரின் ஓலையுடன் வசு தன் கடையிளவல் வாசுதேவனின் கையைப் பற்றிக்கொண்டு மதுபுரத்தை வந்தடைந்தான். சிறுபடகில் வந்த அவர்கள் மதுபுரத்தின் பெரிய படகுத்துறையில் இறங்கினர். பெரும் வெண்கலத்தாழிகளை ஏற்றிக்கொண்ட சிறுபடகுகள் நத்தைகள் போல மெல்ல ஊர்ந்து அணைந்துகொண்டிருந்த மதுபுரத்தின் படித்துறையில் யாதவர்களின் அனைத்துக்குடிகளும் வந்திறங்கியபடியிருந்தனர். அனைவரின் கொடிகளும் அங்கே பறந்துகொண்டிருந்தன.

தமையனின் கையைப்பற்றிக்கொண்டு விழித்த கண்களுடன் வாசுதேவன் மதுபுரத்தின் தெருக்களில் நடந்தான். மக்கள் வழக்கில் அது மதுராபுரி என்றும் மதுரா என்றும் அழைக்கப்படுவதைக் கேட்டான். ஊரெங்கும் வெயிலில் உருகும் நெய்யும் நாள்பட்டு மட்கிய நெய்யும் கலந்த வாசனையே நிறைந்திருந்தது. வசு அங்கே பெரிய வெண்கலக் கலன்களில் நிறைக்கப்பட்ட நெய்யைக் கண்டதும் பல்லைக் கடித்தபடி "எளிதில் கொளுத்தமுடியும் நகரம்" என்று சொன்னான். அதன்பின் வாசுதேவன் அந்நகரை இன்னமும் எரியேற்றப்படாத வேள்விக்குளமாக மட்டுமே பார்த்தான்.

மதுபுரத்தின் நடுவே செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெரிய அரண்மனை இருந்தது. உள்கோட்டைவாயிலில் காவலுக்கு நின்றிருந்த கலிங்கவீரர்கள் வசுவின் கையில் இருந்த ஓலையின் இலச்சினையை யாதவகுலத்தைச்சேர்ந்த மூத்த வீரனிடம் அளித்து சரிபார்த்தபின் உள்ளே அனுப்பினார்கள். ஒளிவிடும் வேல்முனைகளும் ஆமையோட்டுக் கவசங்களும் அணிந்த அவ்வீரர்களை கூரிய அலகுகள் கொண்ட கழுகுகளாக வாசுதேவன் எண்ணிக்கொண்டான். அந்நகரம் செத்துக்கிடக்கும் யானை என்று தோன்றியது.

சூரசேனரின் ஓலையைக் கண்டதுமே உக்ரசேனர் மகிழ்ந்து தன் அமைச்சரான கிருதரை வரவழைத்தார். "ஆம் அரசே, மதுபுரத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம் தொடங்கியிருக்கிறது. யாதவகுலத்துடன் நம் உறவுகள் வலுப்பெறவிருக்கின்றன. அத்துடன் மார்த்திகாவதியும் நம் அண்மைக்கு வரப்போகிறது" என்றார் கிருதர். உக்ரசேனர் வசுவை தன் அவைக்கு வரவழைத்தார்.

ஓர் இளவரசனுக்குரிய அரசமரியாதையுடன் மதுபுரத்து சபாமண்டபத்துக்குள் நுழைந்த வசு அங்கே இருந்த அமைச்சர்களும் தளகர்த்தர்களும் தன்னை எழுந்து நின்று குலமுறைகிளத்தி வாழ்த்தியதைக் கண்டு திகைத்தான். அவனுக்கு அரசமுறைமைகளும் அதற்கான சொற்களும் தெரியவில்லை. வனத்தில்வாழும் யாதவர்களுக்குரிய முறையில் இடத்தோள்கச்சாக தோலாடை உடுத்தி காதில் மரக்குழைகள் அணிந்திருந்தான். அங்கே ஆடையின்றி நிற்பதுபோல உணர்ந்த அவன் ஓரிரு சொற்கள் சொல்வதற்குள் திணறி கண்ணீர்மல்கினான்.

வாசுதேவனை அங்கேயே விட்டுவிட்டு வசு திரும்பிச்சென்றான். அவனுக்கு விலைமதிப்புமிக்க பொன்னணிகளையும் பட்டாடைகளையும் பரிசாக அளித்து அரசமுறைப்படி வழியனுப்பியது மதுபுரம். வாசுதேவனை தன் மைந்தன் கம்சனின் துணைவனாக அரண்மனையில் தங்கச்செய்தான் உக்ரசேனன். அவனுக்கு செம்மொழியும் அரசுநூலும் பொருள்நூலும் கற்பிக்க ஆணையிட்டான்.

அரண்மனை உள்ளறைக்கு சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்ட வாசுதேவன் தன்னைவிட இரண்டடி உயரமான தன்னைவிட இருமடங்கு எடைகொண்ட சிறுவனாகிய கம்சனை முதல்முறையாகப் பார்த்தான். அவனுக்கும் தனக்கும் ஒரே வயது என்று சொல்லப்பட்டிருந்த வாசுதேவன் அவன் உருவத்தைப்பார்த்து வியந்து நின்றுவிட்டான். சிரித்தபடி வந்த கம்சன் வாசுதேவனை ஆரத்தழுவிக்கொண்டான். "இந்த அரண்மனையில் உனக்கு எது தேவை என்று சொல்...அனைத்தும் உன்னுடையதே" என்று சொன்னான். அக்கணம் முதல் வாசுதேவனின் உயிர்நண்பனாக ஆனான்.

கம்சனுடன் சேர்ந்து மதுராபுரியில் வளர்ந்தான் வாசுதேவன். கம்சன் ஆயுதவித்தையைக் கற்றபோது அவன் நூல்களைக் கற்றான். "நான் நூல்களைக் கற்கவேண்டியதில்லை....எனக்கான ஞானம் முழுக்க என் மைத்துனன் உள்ளத்தில் இருக்கிறது" என்று கம்சன் சொல்வான். வாசுதேவனின் தோற்றம் மாறியது. பட்டாடைகளும் பொற்குண்டலங்களும் மணியாரமும் அணிந்தான். சந்தன மிதியடியுடன் நடந்தான். அரண்மனையின் உணவில் அவன் மேனி தளிர்ப்பொலிவு கொண்டது. அவனுடைய பேச்சுமொழியும் பாவனையும் முழுமையாக மாறின.

மதுராபுரிக்கு வந்தபின் அவன் ஓரிருமுறை மட்டுமே மதுவனத்துக்குச் சென்றான். அவனை அவன் தமையன்கள் முற்றிலும் அன்னியனாகவே எண்ணினார்கள். அவனை முதலில் கண்டதும் வசு மரியாதையுடன் எழுந்து நின்றான். அதன்பின்னர்தான் அவன் தன் இளவலென்று அவன் அகம் உணர்ந்தது. ஆனாலும் அவன் தமையன்கள் எவரும் அவன்முன்னால் ஒலிஎழுப்பிப் பேசவில்லை. அவன் கண்களை அவர்களின் கண்கள் தொட்டுக்கொள்ளவேயில்லை. சூரசேனர் அவனை ஒருகணம்தான் நோக்கினார். "நீ உன் வழியை அடைந்துவிட்டாய். உனக்கு நன்மை நிகழட்டும்" என்று மட்டும் சொன்னார்.

அவன் அன்னை மட்டும்தான் எந்த மாற்றமும் இல்லாதவளாக இருந்தாள். அவளுடைய சுருண்டதலைமயிர் நரைத்து பால்நுரைபோலிருந்தது. முகத்தில் சுருக்கங்கள் பரவியிருந்தன. ஆயினும் அவள் ஆற்றல்கொண்ட தோள்களுடன் இல்லத்தின் அனைத்துப்பணிகளையும் செய்பவளாக இருந்தாள். வெண்ணிற ஒளிகொண்ட அவளுடைய சிரிப்பு அப்படியே இருந்தது. அவனைக் கண்டதும் சிரித்தபடி ஓடிவந்து அவன் தோள்களையும் தலையையும் தொட்டாள். அவன் மதுராபுரியில் என்னசெய்கிறான் என்று அவள் ஒருமுறைகூட கேட்கவில்லை. மதுவனத்தில் அவனுக்கு தேவையானவற்றை செய்துகொடுப்பதில்தான் அவளுடைய ஆர்வமிருந்தது.

மார்த்திகாவதியில் பிருதையுடன் வாசுதேவன் எப்போதும் தொடர்பில் இருந்தான். அவளைக்காண்பதற்காக இரண்டுமாதங்களுக்கொருமுறை அவன் மார்த்திகாவதிக்குச் சென்றான். அவனுடைய முயற்சியால் மதுராபுரிக்கும் மார்த்திகாவதிக்கும் நல்லுறவு உருவானது. இரு மன்னர்களும் காளிந்தியின் கரையில் இருந்த ஷீரவனம் என்னும் சோலையில் சந்தித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அதன்படி மார்த்திகாவதியும் மதுராபுரியும் ஒன்றையொன்று தாக்குவதில்லை என்று முடிவெடுத்து எல்லையை வகுத்துக்கொண்டனர். ஒருவருக்கொருவர் படைத்துணையும் நிதித்துணையும் அளிப்பதாக முடிவுகொண்டனர்.

நெடுநாட்களாக மதுராபுரி எதிர்கொண்டுவந்த அனைத்து அரசியல் இக்கட்டுகளும் வாசுதேவனால் முடிவுக்கு வந்தன. யாதவர்குலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம்பேர்கொண்ட படை ஒன்று மதுராவில் அமைந்தது. மதுராபுரியின் மன்னனான உக்ரசேனர் மறைந்தபின்பு கம்சன் மன்னனானான். பேரமைச்சர் கிருதர் மறைந்தபின்னர் கம்சனுக்கு வாசுதேவன் அமைச்சனானான். அவன் சொல்லில்தான் யாதவகுலத்தின் முதன்மை அரசு சுழல்கிறது என்று சூதர்கள் பாடினர்.

மழைபெய்துகொண்டிருந்த இரவொன்றில் படகில் மார்த்திகாவதியில் இருந்து கிளம்பி யமுனையின் பெருவெள்ளத்தில் சுழித்தும் சுழன்றும் விரைந்து படித்துறையை அடைந்த பிருதையின் அணுக்கத்தோழியான அனகை தன் முத்திரைமோதிரத்தைக் காட்டி காவலைத் தாண்டி அரண்மனைக்கு வந்து வாசுதேவனின் மாளிகையை அடைந்தாள். வாசுதேவன் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டிருந்தான். சேவகன் சொன்னதைக்கேட்டு அவன் சால்வையை எடுத்துப்போட்டபடி வெளியே வந்தபோது மழைசொட்டும் உடலுடன் நடுங்கிக்கொண்டு நின்றிருந்த அனகையைக் கண்டான்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 5 ]

இருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வாசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான். மழைத்தூறல் இருந்த பின்னிரவு கனத்த கரடித்தோல்போல நகரை மூடியிருந்தது. யமுனையிலிருந்து வெம்மையான ஆவி எழுந்து நகரில் உலவிக்கொண்டிருந்தது.

யமுனைப் படித்துறையில் பால்தாழிகளுடன் படகுகள் இல்லை. கருக்கிருட்டிலேயே அவை ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். நீரில் ஒளிதோன்றுகையில் யமுனைப்பரப்பெங்கும் கனத்த தாழிக்கு இருபக்கமும் பாய்கள் எழுந்து காலையொளியில் சுடரும் படகுகள் தட்டாரப்பூச்சிகள் போல நீர்ப்பரப்பையே நிறைத்து வந்துகொண்டிருக்கும். கரையெங்கும் தாழிவண்டிகள் வந்து உலோக ஒலிகளுடன் மொய்க்கும். அதன்பின் எதிர்த்திசைப்பயணம் மிகக்கடினம்.

கிழக்கே சூரியன் தோன்றும்நேரத்தில் வாசுதேவன் மார்த்திகாவதியின் புறத்தே இருந்த காட்டுப்பகுதியை அடைந்துவிட்டான். அதிகாலைக்காற்றைத் திரட்டி மலராத தாமரை இதழ்கள் போல ஒன்றுக்குள் ஒன்று என திரும்பியிருந்த பாய்களுக்குள் அனுப்பிய படகு அந்த விசையில் மூக்குநுனியை நன்றாகத் தூக்கி வளைந்து வளைந்து வந்துகொண்டிருந்த கரிய அலைகளில் புரவிபோல பாய்ந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து பாய்ந்து விரைந்தது. இருளில் முரசுத்தோலில் கோல்படும் இடம் தெரிவதுபோல யமுனையின் நீர்த்தடம் தெரிய இருபக்கமும் காடும் ஊர்களும் இருளடர்ந்து நின்றன.

கௌந்தவனம் மார்த்திகாவதியை நெருங்குவதற்கு முன்னரே யமுனைக்கரையை வந்தடையும் ஒரு மண்சாலையின் மறுநுனியில் இருந்தது. அந்தசாலைமுனையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மரப்படகுத்துறையில் அனகை விட்டு வந்திருந்த வெண்குதிரை மேய்ந்துவிட்டு வந்து சேணத்தை மாட்டியிருந்த மரத்தடியில் மூன்றுகாலில் தூங்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. இரண்டுபடகுகள் நீரில் ஆடியபடி ஒன்றையொன்று தோள்களால் முட்டி விளையாடி நின்றன. பாய்மரங்களை சுருக்கிக்கொண்ட வாசுதேவனின் படகு படித்துறையை நெருங்கியதும் ஒரு படகோட்டி எழுந்து கைகளை ஆட்டி துறையின் ஆழத்தை சைகையால் தெரிவித்தான்.

வாசுதேவனின் படகு கலத்துறையின் மூங்கில்சுருள்களை மோதி விலகி மீண்டும் மோதி அமைதிகொண்டது. படகோட்டி கரையில் குதித்து படகிலிருந்து வீசப்பட்ட கயிற்றைப்பற்றி கரையில் இருந்த தறியில் சுற்றிக்கட்டினான். வாசுதேவன் படகிலிருந்து இறங்கி நேராக குதிரையை நோக்கிச் சென்றான். அனகை படகுக்காரர்களால் தூக்கிவிடப்பட்டு கரையேறுவதற்குள் வாசுதேவனே குதிரைக்கு அருகே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சேணத்தை எடுத்து குதிரைமேல் கட்டத் தொடங்கிவிட்டான். சேணம் மழையில் நனைந்து குளிர்ந்து ஊறியிருந்தது. அனகை வாசுதேவனின் முகத்தைப் பார்த்தபடி குதிரையின் பட்டைகளை வயிற்றுக்கு அடியில் கட்டி இழுத்து இறுக்கினாள். குதிரை ஆர்வமாகத் திரும்பி வாசுதேவனைப் பார்த்து அவனுடைய தோளை நீண்ட கனத்த நாக்கை நீட்டி நக்கியது.

வாசுதேவன் குதிரையின் நீண்டு ஒடுங்கிய மூக்கை தன் கைகளால் வருடியும் அதன் மூக்குத்துளைகளை அழுத்தி மூடித் திறந்தும் அதனுடன் கொஞ்சினான். அனகை பின்பக்கம் ஏறி அமர்ந்ததும் வாசுதேவனும் சேணத்தை மிதித்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். அவன் கால்களால் அணைத்ததும் குதிரை பெருநடையில் செல்லத் தொடங்கியது. வாசுதேவன் அதுவரை அவனுள் இருந்த இறுக்கம் மெல்லத்தளர்வதுபோல பெருமூச்சுவிட்டான்.

மழைக்காலத்தில் மழைநீர் வழியும் ஓடையாகவும் ஆகிவிடும் அந்தப்பாதை மண் அரித்து வேர்ப்பின்னல்களாக மாறியிருந்தது. குதிரை சிறுசெவி கூர்ந்தும் நாகமெனச்சீறி முகர்ந்தும் வேர்களின் இடைவெளிகளில் காலைத்தூக்கி வைத்து விரைவு குறையாது சென்றுகொண்டிருந்தது. இருபக்கத்திலிருந்தும் பாதைமேல் நீண்டு கூரையென மூடியிருந்த இலைத்தழைப்புக்களிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே அவர்கள் முழுமையாக நனைந்துவிட்டிருந்தனர்.

கௌந்தவனத்தில் முகவாயில் காவல் மண்டபத்தில் எட்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் வாசுதேவனை நன்றாக அறிந்தவர்கள். அதிகாலையில் அவர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரியைப் போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருந்தனர். ஒருவன் சிறிய விறகடுப்பில் காய்ச்சிய பாலை இருவர் மரக்குவளைகளில் அருந்திக்கொண்டிருந்தனர். வாசுதேவனை அப்போது எதிர்பாராமையால் முதலிரு காவலர்களும் திகைத்து எழுந்து நிற்க மரவுரிக்கு அடியில் அவர்கள் சிற்றாடை மட்டுமே அணிந்திருப்பது தெரிந்தது. ஒருவன் அப்பால் ஆலம்விழுதால் பல்தேய்த்துக்கொண்டிருந்த தலைவனை நோக்கி ஓடினான். தலைவன் விழுதை வீசிவிட்டு ஓடிவந்தான். வாசுதேவன் அவர்களிடம் கையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

கௌந்தவனத்தில் பன்னிரண்டு குடில்கள் இருந்தன. மையமாக இருந்த பெரியகுடிலில்தான் துர்வாசர் தவத்தின்போது தங்கியிருந்தார். அவரது மாணவர்களுக்காக கட்டப்பட்ட மூன்று குடில்கள் வலப்பக்கம் இருளுக்குள் நின்றன. அரசகுலத்தவர்களுக்கான நான்கு குடில்கள் பின்பக்கமிருந்தன. சேவகர்கள் தங்கும் குடில்கள் சற்று அப்பால் ஒரு தொகையாக அமைந்திருந்தன. அனகை குதிரையிலிருந்து இறங்கி நேராக பிருதையின் குடிலுக்குச் சென்றாள்.

அனகை கதவைத் தட்டுவதற்கு முன்னரே பிருதை திறந்தாள். அவள் குதிரைக்குளம்படிகளைக் கேட்டிருந்தாள். அனகையிடம் பிருதை அவள் செல்லலாம் என மெல்ல தலையசைத்து ஆணையிட்டாள். அனகை தலைவணங்கி விலகி குடிலின் பின்பக்கம் சென்றாள். ஈர உடைகளை உதறியபடி வாசுதேவன் குடிலுக்குள் நுழைந்தான். பிருதை அவனுக்கு உலர்ந்த மரவுரியாடையை எடுத்துவந்து பீடத்தில் வைத்தாள். அவன் ஆடையை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே பீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் பற்றிக்கொண்டான்.

பிருதை அவனருகே ஒரு சிறிய பீடத்தில் அமர்ந்து தன் கைகளை மடியில் குவித்துக்கொண்டு அவனையே பார்த்தாள். அவன் அவளை ஏறிட்டுப்பார்க்காமல் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தான். அவன் பேசுவான் என எதிர்பார்த்திருந்த பிருதை பின்னர் மெல்ல தன் உடலை அசைத்து சற்றுக் குனிந்து "அந்த ராஜநாகம் வந்தது எனக்கான விடையை அளித்தது மூத்தவரே" என்றாள். "வரவிருக்கும் மைந்தன் பெருவல்லமைகொண்ட ஒருவனாக இருக்கலாம். அவனால் யாதவகுலமே பெருமை அடையலாம்."

வாசுதேவன் சினத்துடன் தலைதிருப்பி "கருவிலுள்ளது மைந்தன் என நீ எப்படி அறிந்தாய்?" எனக் கேட்டான். "நான் அறிவேன்" என பிருதை பதில் சொன்னாள். "எனக்கு சென்ற சிலநாட்களாக வந்துகொண்டிருக்கும் கனவுகளும் நடந்த நிகழ்வுகளும் நன்றாகவே இயைந்துபோயின." என்ன கனவுகள் என்பதுபோல வாசுதேவன் பார்த்தான். "இக்கரு என்னுள் நுழைந்ததுமுதல் நான் நாகங்களையே கனவில் கண்டுகொண்டிருக்கிறேன்."

வாசுதேவன் அவள் கண்களைக்கண்டதும் சற்றே அகக்கசப்பு கொண்டான். அவளிடம் எப்போதுமிருக்கும் அறிவும் சமநிலையும் அழிந்து கருவுற்றிருக்கும் அத்தனை பெண்களிலும் கூடும் பேதைமை திகழ்ந்தது என அவன் எண்ணினான். வெளுத்த கண்களையும் உதடுகளையும் பார்த்துவிட்டு அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். "இந்தக்காட்டிலிருக்கையில் நாகங்கள் கனவில் வருவது இயல்பே" என்றான் வாசுதேவன். "அத்துடன் யாதவகுலத்தில் கருவுறும் அனைத்துப்பெண்களும் நாகங்களையே கனவில் காண்கிறார்கள்."

பிருதை "நான் நாகங்களை அஞ்சினேன். ஆனால் அவனைக்காக்க அரசநாகமே வந்தது" என்றாள். வாசுதேவன் சினத்துடன் "பிருதை, என்னை உனக்குத்தெரியும். நான் அறிவையே கருவியாகக் கொண்ட அரசியல் சூழ்மதியாளன். இந்தச் சிறு நிகழ்வை என்னால் விளங்கிக்கொள்ளமுடியாதா என்ன? கருவை அழிக்க இங்கே மருத்துவச்சிகள் நீர்க்கவைத்த நாகவிஷத்தைத்தான் கையாள்கிறார்கள். அந்த மருத்துவச்சியின் பெட்டியில் நாகவிஷம் இருந்தது. இந்தப்பெண் அதை அசைத்து எடுத்துக்கொண்டுவந்தபோது அது கசிந்து வாசனை கிளம்பியிருக்கலாம். ராஜநாகம் பிற பாம்புகளை மட்டுமே உண்ணக்கூடியது. அந்த நாகவிஷத்தின் வாசனையால் கவரப்பட்டு அந்நாகத்தை உண்பதற்காக ராஜநாகம் பின்னால் வந்திருக்கிறது. அந்தப்பெட்டிக்குள் இருந்த நாகவிஷத்தை அது அணுகும்போது கிழவி மரவுரியை கையால் எடுத்தாள். கொத்திவிட்டது... போதுமா?" என்றான் வாசுதேவன்.

பிருதை "இல்லை" என ஏதோ சொல்லவந்தாள். "சற்று பேசாமலிருக்கிறாயா?" என்று உரத்தகுரலில் வாசுதேவன் சொன்னான். பிருதை தலைகுனிந்து நெற்றிப்பொட்டை தன் விரல்களால் அழுத்தியபடி அமர்ந்திருந்தாள். சிலகணங்கள் அவளுடைய தலையின் வெண்ணிறமான வகிடையே நோக்கியிருந்தபின் அவள் தோளில் கையை வைத்தான். "சரி, வருந்தாதே. நான் வேண்டியதைச் செய்கிறேன்" என்றான். அவள் தன் முகத்தையும் மூக்கையும் மேலாடையால் அழுத்தித் துடைத்தாள். சிவந்து கனத்த இமைகளுடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.

"நான் இந்தக்குழந்தையை அழிக்க எண்ணினேன்" என்றாள் பிருதை. "ஏன் அவ்வாறு எண்ணினேன் என்று என்னைக்கேட்டுக்கொள்கிறேன்... என்னால் விடையளிக்க இயலவில்லை." வாசுதேவன் அவள் தானே அதைச் சொல்லிக்கொள்கிறாள் என்று உணர்ந்தான். "நான் யாதவப்பெண். நம்குலத்தில் விரும்பிய ஆணை நாடி கருவுறும் உரிமை பெண்டிருக்குண்டு... நான் கருவுற்றிருக்கும் செய்தியை மார்த்திகாவதியின் அரசருக்குச் சொன்னால் அவர் என்னை அழைத்து பேறுகாலப்பூசனைகள்தான் செய்யவேண்டும். ஆயர்குலத்து மூதாதையர் அதையே ஆணையிடுவார்கள்."

அவள் அலைபாயும் விழிகளுடன் வாசுதேவனை நோக்கினாள். "ஆனால் இக்கரு இது எனக்குள் வந்த நாள்முதல் பாம்புகளின் நெளிவுமட்டும்தான் என் கனவில் வந்துகொண்டிருந்தது. இது ஏதோ தீங்கைக் கொண்டுவருமென எண்ணினேன்... ஆனால் ராஜநாகமே வந்து அதைக் காத்தபோதுதான் அது எளியதோர் மகவல்ல என்று உறுதிகொண்டேன்."

வாசுதேவன் "மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருக்காதே..." என்றான். "அப்படியென்றால் ஏன் அது என்னை தீண்டவில்லை? என் கால்கள்தான் அருகே இருந்தன" என்றாள் பிருதை. "என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் சொல்கிறாயா?" என்று வாசுதேவன் கோபமாக சொன்னபடி எழுந்தான்.

"மூத்தவரே நான் இக்கருவை எப்படி அடைந்தேன் என்று நீங்கள் இன்னமும் வினவவில்லை" என்றாள் பிருதை. "சிலவற்றை தமையனாக நான் கேட்டுக்கொள்ளமுடியாது அல்லவா?" என அவளை நோக்காமலேயே வாசுதேவன் பதில் சொன்னான். "தாங்கள் அறிந்தாகவேண்டிய செய்திதான்..." என்றாள் குந்தி. வாசுதேவன் அவளை ஏறிட்டு நோக்கி "இது ஏதோ முனிவரின் கரு என நீ சொல்லப்போவதில்லை என நம்புகிறேன்" என்றான். பிருதை அவன் கண்களைச் சந்தித்தாள். அக்கணத்தில் அவன் நன்கறிந்த களித்தோழியாக மாறி "இல்லை" என புன்னகைசெய்தாள்.

"மூத்தவரே, இரண்டாண்டுகளுக்கு முன்பு மாமுனிவரான துர்வாசர் மார்த்திகாவதிக்கு வந்தார். இங்குள்ள வனத்தில் தவம்செய்ய விரும்புவதாகச் சொன்னார். பொதுவாக முனிவர்கள் ஷத்ரியர்களல்லாத மன்னர்களை நாடி வருவதில்லை. முனிவரைக்கண்டதும் என் தந்தையான குந்திபோஜர் பேருவகை அடைந்தார். முனிவருக்கான அனைத்தும் ஒருக்கப்படவேண்டுமென ஆணையிட்டார். முனிவர் இங்குவந்து தங்கிச்சென்ற செய்தியை வரும்காலங்களில் சூதர்கள் பாடவேண்டுமென்பது அவரது விருப்பம். முனிவர் தங்கும்பொருட்டு கௌந்தவனம் என்ற இந்தச் சோலை ஒருக்கப்பட்டது. இங்கே குடில்கள் அமைந்தன" என்றாள் பிருதை.

அரண்மனைக்கு வந்த முதிர்ந்த முனிவரை நானும் என் தாயும் எதிர்கொண்டு அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவர் அரண்மனையில் தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நீராட்டறையில் அவர் சுவடி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க நான் அவரது முதியபாதங்களை படிகாரமிட்ட வெந்நீரால் ஒற்றிக்கொண்டிருந்தேன். முனிவர் என்னிடத்தில் உடனடியாக ஏடும் எழுத்தாணியும் வேண்டும் என்றார். அப்போது இடைநாழி வழியாக என் சேடி சத்யை சென்றுகொண்டிருந்தாள். நான் அவளுடைய முதுகை உற்று நோக்கி நெஞ்சுக்குள் ஆணையிட்டேன். அவள் திரும்பி என்னைப்பார்த்து என்னருகே வந்து ‘அழைத்தீர்களா இளவரசி?’ என்றாள். ஏடும் சுவடியும் எடுத்துவர நான் சொன்னேன்.

முனிவர் வியந்து "அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?" என்று கேட்டார். நான் "தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.

முனிவர் வியப்புடன் "பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை" என்றார்.

"ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்" என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். "அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்" என்றார் துர்வாசர்.

மறுநாள் கௌந்தவனத்துக்குக் கிளம்பும்போது என்னையும் உடனழைத்துக்கொள்ள அவர் என் தந்தையிடம் கேட்டார். தந்தை அதை பெருமகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். நானும் அரண்மனை அறைகளை வெறுக்கத் தொடங்கிய வயது அது. காட்டின் ஒலிகளுக்காகவும் வாசனைக்காகவும் என் புலன்கள் ஏங்கின. துர்வாசருடன் நான் இங்கே வந்தேன். அவரும் அவரது மாணவர்களும் செய்த தவத்துக்கு நானும் என் சேடியரும் அனைத்துப் பணிவிடைகளையும் செய்தோம். அவருக்கு நான் சுவடிகளை வாசித்துக்காட்டினேன். புதியசுவடிகளை எழுதினேன். அவர் சொன்னவற்றை எல்லாம் சீராகக் குறித்துவைத்தேன். இங்கே அவரது இனிய மாணவியாக இருந்தேன்.

ஓரிருமாதங்களுக்குப்பின் நான் துர்வாசரின் பெயர்த்தியைப்போல ஆனேன். அவரைக் கடிந்துகொள்ளவும் கேலிசெய்யவும் உரிமை பெற்றேன். கடும்சினத்துக்கு புகழ்பெற்றிருந்த மாமுனிவர் அவர்மேல் பிறர் சுமத்திய அந்த ஆளுமையையே பலதலைமுறைகளாக தானும் கொண்டிருந்தார். அதனுள் வாழ்ந்து பழகியிருந்தார். அவரது மாணவர்கள் எவரும் அவருக்கு நேர்முன் நிற்பதோ அவர் விழிகளைப் பார்ப்பதோ அவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் அளிப்பதோ வழக்கமில்லை. மாமன்னர்கள்கூட அவர் முன்னால் முதுகை நிமிர்த்தாமல் நிற்பார்கள் என்றார்கள். என்னிடம் அவர் அந்த கடினமான ஓட்டைத் துறந்து வெளியே வந்து விளையாடினார். நானும் அவரும் காட்டுக்குள் மான்களைத் துரத்தினோம். தர்ப்பைகளால் மலர்களை அடித்து வீழ்த்தினோம். அனைத்து விளையாட்டுகளிலும் நான் அவரை வென்றேன். அவரது சடைகளைப் பிடித்து இழுக்கவோ தாடியில் மலர்களைக் கட்டித்தொங்கவிடவோ நான் தயங்கியதில்லை.

நான்குமாதங்களுக்கு முன்பு துர்வாசர் தன் தவத்தை முடித்துக்கொண்டு இமயத்துக்கு கிளம்பிச்சென்றார். அவர் விடைபெறும் நாளில் நான் அவரைப் பணிந்து வணங்கினேன். என்னை வாழ்த்தி நெற்றியில் கையை வைத்த அவரிடம் "குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். புன்னகையுடன் "ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்" என்றார்.

நான் கண்களில் சிரிப்புடன் "குறிதவறிய மலர்களிடம் கேட்டால் தெரியும் உங்கள் தவவல்லமை" என்றேன். "நீ சிறுமி. உன்னால் அதை நம்பமுடியாது. அதை நானே காட்டுகிறேன் வா" என்று என்னை காட்டுக்குள் கூட்டிச்சென்றார். என்னை முன்பே செல்லவிட்டு அவர் பின்னால் வந்தார். அவர் என்னிடம் "நீ என்னை நம்பவில்லை அல்லவா?" என்று கேட்டார். அதைக் கேட்டபின்னர்தான் அவர் என்னிடம் பேசவில்லை என்பதை நான் உணர்ந்து திகைத்தேன். அவர் சிரித்துக்கொண்டு "ஒரு சிறுமியிடமன்றி வேறெவரிடம் நான் உல்லாசமாக இருக்கமுடியும்? முனிவனாக இருப்பினும் மகளைப்பெறாவிட்டாலும் நானும் ஒரு தாதன் அல்லவா?" என்றார்.

நான் திகைத்து "குருவே, நீங்கள் எப்படி என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்றேன். "இப்போது நீ பேசுவதுபோல" என்றார். அப்போதுதான் அவரிடம் நான் உதடுகளால் பேசவில்லை என்று உணர்ந்தேன். உள்ளம் நடுங்கி "குருவே வேண்டாம். எனக்கு அச்சமாக இருக்கிறது" என்றேன். "சரி இந்தப் பசுவைப்பார். அது அச்சம்கொள்கிறதா என்ன?" என்றார். அந்தப்பசு "எதற்கு அச்சம்கொள்ளவேண்டும்? நான் ஏற்கனவே என் குழந்தையிடம் இப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னது. பசு என்னிடம் பேசுவதை உணர்ந்த கணமே நான் அஞ்சி திரும்பி ஓடி என் குடிலை அடைந்துவிட்டேன்.

உரக்கச்சிரித்தபடி முனிவர் என் பின்னால் வந்தார். "நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்" என்றார். "குருவே, எனக்கு அச்சமாக இருக்கிறது... எனக்கு இந்த விளையாட்டு தேவையில்லை. என்னை என் அரண்மனைக்கே அனுப்பிவிடுங்கள்" என்றேன். துர்வாசர் சிரித்துக்கொண்டு "சரி, நான் வென்றேன் என்று சொல்லி மூன்றுமுறை தண்டம்போடு" என்றார். நான் கண்ணீருடன் செவிகளைப் பற்றிக்கொண்டு ‘தண்டம் தண்டம் தண்டம்’ என குனிந்தெழுந்தேன். முனிவர் கைகளைத் தட்டியபடி சிரித்து துள்ளிக்குதித்து என்னைச்சுற்றிவந்து "வெற்றி...துர்வாசரால் மார்த்திகாவதியின் இளவரசி முறியடிக்கப்பட்டாள். சூதர்களே பாடுங்கள். கவிகளே எழுதுங்கள்" என்றார்.

அன்றுமாலை அவரது மாணவர்கள் கிளம்பும்போது அவர் தன் அறைக்குள் என்னை தனியாக அழைத்தார். அப்போது அவர் நானறிந்த இனிய முதுதாதை முகத்தை அகற்றி மீண்டும் முனிவருக்குரிய முகத்தை அணிந்திருந்தார். "பெண்ணே, நீ செய்த பணிவிடைகளால் முதியவனாகிய நான் மீண்டும் இளமையை அடைந்திருக்கிறேன். உனக்கு என் வாழ்த்துக்கள். என்பரிசாக நான் உன் உதவிகொண்டு அறிந்த ஞானத்தில் ஒரு துளியை உனக்களிக்கிறேன்" என்றார்.

முனிவர் எனக்கு ஒரு மந்திரத்தை செவியில் ஓதினார். அதை மும்முறை சொல்லி அகத்தில் நிறுத்திக்கொள்ளும்படி சொன்னார். " இளவரசியே, இந்த மந்திரம் மூலம் நீ விண்ணகப் பேராற்றல்களுடன் நேரடியாகவே உரையாடலாம். நீ இன்று ஒரு சிற்றரசின் இளவரசி. உன் கணவனுடன் கூடும்போது இந்த மந்திரத்தைச் சொல். விண்ணகதேவன் ஒருவனை வரவழைத்து அவனுடைய ஆற்றலை உன் கணவனின் விந்துவில் நிறையச்செய். அந்த தேவனின் மைந்தனே உன் கருவில் எழுவான். உன் மைந்தர்களால் நீ பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணையில அமர்வாய். என்றும் இந்ததேசம் மறவாத மாதரசியாக நினைவுறப்படுவாய்" என்றார்.

பிருதையின் முகத்தைப்பார்த்தபடி வாசுதேவன் திகைத்து அமர்ந்திருந்தான். ஏதோ சொல்லவிழைபவனைப்போல உடலை அசைத்தபின் தலையை காலையொளி நிறைந்த சாளரம்நோக்கி திருப்பிக்கொண்டான். அவனை நோக்கி மெல்லிய குரலில் "மூத்தவரே, என் கருவிலிருப்பது சூரியனின் மைந்தன்" என்று பிருதை சொன்னாள்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 6 ]

வாசுதேவன் குந்தியை தன்னுடன் அழைத்துச்செல்வதைப்பற்றி ஓர் ஓலையை எழுதி கௌந்தவனத்தின் காவலனிடம் குந்திபோஜனுக்கு கொடுத்தனுப்பிவிட்டு அவளை ரதத்தில் அழைத்துவந்து யமுனையில் நின்ற படகில் ஏற்றிக்கொண்டு மதுராபுரிக்குப் பயணமானான். படகு பாய்விரிப்பது வரை அவன் நிலைகொள்ளாதவனாக படகின் கிண்ணகத்திலேயே பாய்க்கயிறுகளைப் பற்றியபடி நடந்துகொண்டிருந்தான்.

படகுக்காரன் கயிற்றை இழுத்து முடிச்சை அவிழ்த்ததும் புகைப்படலம் மேலேறுவதைப்போல வெண்ணிறப்பாய்கள் விம்மி ஏறுவதைக் கண்ட அவன் மனமும் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு விடுதலைபெற்றது. காற்றில் துடித்து விம்மி விரிந்து கருவுற்ற பசுக்களைப்போல ஆன பாய்களையே முகம் மலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபின் படகின் உள்ளறைக்குச் சென்று அங்கே புலித்தோல் மஞ்சத்தில் களைப்புடன் படுத்திருந்த பிருதையின் அருகே அமர்ந்தான்.

பிருதை ரதத்திலும் பின்னர் படகிலும் நாலைந்துமுறை வாயுமிழ்ந்திருந்தமையால் சோர்ந்திருந்தாள். வாசுதேவன் அவளிடம் "பிருதை, நான் என்றுமே பெண்ணுடல் கொண்ட வாசுதேவன் என்றே உன்னை எண்ணிவந்திருக்கிறேன். நீ செய்யவிருந்த பிழையை நானே செய்ததாக உணர்ந்தமையால்தான் என்னால் அதைத் தாளமுடியவில்லை" என்றான். "நான் உங்களை அழைத்ததும் அதனால்தான் மூத்தவரே" என்றாள் பிருதை. "யாதவர்களுக்குக் கன்றும் மைந்தரும் செல்வங்கள். அவற்றை அழிக்க நெறிகள் ஒப்புவதில்லை. பசுக்களும் பெண்டிரும் கருவுறுதலை தெய்வங்களின் ஆடலென்றே நாம் கருதுகிறோம்."

"நான் அஞ்சிவிட்டேன்" என்றாள் பிருதை. "எதை?" என்றான் வாசுதேவன். அவள் சிலகணங்கள் விழிவிலக்கி அமர்ந்திருந்தபின் திரும்பி "நான் அஞ்சியது என் தந்தையின் உளச்சோர்வைக்குறித்தே" என்றாள். வாசுதேவன் "ஆம், நானும் அதையே எண்ணினேன். குந்திபோஜரின் நிலையறிந்தபின் நாம் இச்செய்தியை அவருக்கறிவிப்போம்" என்றான்.

பிருதை தலையசைத்தாள். "நாம் மதுராபுரிக்குச் செல்லவில்லை" என்றான் வாசுதேவன். "அங்கே உன்னை வைத்திருந்தால் அது செய்தியாக மாறும். ஆரியவர்த்தமே அறிந்துகொள்ளும்." பிருதை தலையை அசைத்தாள். "நாம் உத்தரமதுராபுரிக்குச் செல்கிறோம். அங்கே தேவாபரின் அரண்மனையில் நீ இருக்கலாம்." அரைக்கணத்துக்கும் குறைவாக வாசுதேவனின் கண்களை பிருதையின் கண்கள் வந்து சந்தித்துச் சென்றன. அவள் முகத்தைத் திருப்பி சாளரம் வழியாகத் தெரிந்த யமுனையின் ஒளிமிக்க நீரைப்பார்த்தபடி "அங்கே கன்னிமாடம் இருக்கிறதா என்ன?" என்றாள்.

அவள் உய்த்தறிந்துவிட்டதை உணர்ந்த வாசுதேவன் "ஆம்" என்றான். பின்பு மெல்லிய குரலில் "தேவாபரின் மகள் தேவகியை நான் அறிவேன்" என்றான். பிருதை தன் மெல்லிய கைவிரல்களால் மேலாடைநுனியை சுழற்றிக்கொண்டிருப்பதை வாசுதேவன் உணர்ந்தான். அவள் என்ன கேட்கப்போகிறாள் என அவன் உள்ளம் வியந்தகணத்தில் அவள் இயல்பான பாவனையில் "அழகியா?" என்றாள்.

வாசுதேவன் தனக்குள் புன்னகைசெய்தபடி "அவளும் என்னிடம் உன்னைப்பற்றி இப்படித்தான் கேட்டாள்" என்றான். பிருதையின் விழிகள் வந்து அவனைத் தொட்டு மீண்டன. "உன்னைவிட அழகி என்று நான் அவளிடம் சொன்னேன்." பிருதையின் இதழ்கள் அகல்சுடர் எழுந்தமர்வதுபோல புன்னகையில் சற்று விரிந்து உடனே மீண்டன. காற்றில் பறந்த கூந்தலை ஒதுக்கியபடி மேலும் இயல்பான குரலில் "அவள் ஏன் கன்னிமாடத்தில் இருக்கிறாள்?" என்றாள். "அவளது பிறவிநூலில் பன்னிரு கட்டங்களில் ஒன்றில் அரவுக்குறை இருப்பதாக நிமித்திகர் சொன்னார்களாம்" என்றான் அவன். "அங்கே நீ எவரும் அறியாமல் இருக்கலாம்."

"எவருமறியாமல் என்றால்?" என்று பிருதை அவன் கண்களைப்பார்த்துக் கேட்டாள். "குழந்தையை அனைவரும் அறிந்தாகவேண்டுமே." வாசுதேவன் அவளைத் தவிர்த்து "ஆம், ஆனால் நாம் என்னசெய்வது. குந்திபோஜரையும் அவர் அமைச்சர்களையும் எப்படி சமன்செய்து அனைத்தையும் வெளிப்படுத்துவது என்று சிந்திக்கவேண்டும். அதற்குச் சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம்..." என்றான்.

பிருதை "மூத்தவரே, நம்முடைய யாதவகுலம் ஷத்ரியர்களைப்போலவோ வேளாண்குலங்களைப்போலவோ தந்தைவழி குலமுறைமை கொண்டதல்ல. இங்கே பெண்களே குலத்தொடர்ச்சியை உருவாக்குகிறார்கள். ஆகவேதான் குந்திபோஜர் என்னை தத்தெடுத்திருக்கிறார். என் வயிற்றில் பிறக்கும் குழந்தை குந்திபோஜரின் போஜர்குலத்தைச் சேர்ந்த யாதவன் என்றுதான் நம் குலநெறிகள் வகுக்கும்" என்றாள். "அன்னைக்கும் நீருக்கும் விதிகள் இல்லை என்று நம் குலத்தில் பழமொழி உண்டல்லவா?"

"ஆம்..." என்றான் வாசுதேவன். "ஆனால் யாதவர்கள் அனைவருமே ஷத்ரியர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். யாதவகுலங்கள் ஷத்ரியக்குருதியை விழைகின்றன. யாதவப்பெண்கள் எங்கும் எவரிடமும் கருவுற நெறிகள் ஒப்புதலளிக்கின்றன. ஷத்ரியர்களோ பெண்ணின் கருவறையை நாட்டின் கருவூலத்தைவிட பெரிய காவலுடன் பேணுபவர்கள்..." பெருமூச்சுடன் "குந்திபோஜர் உன்னை மகள்கொடை பெற்றதே அதற்காகத்தான்" என்றான்.

"ஆம்... ஆனால் நான் எப்போதும் யாதவப்பெண்தான்... ஷத்ரியன் என்னை மணந்தால் அவன் யாதவமுறைப்படி என் குழந்தையுடன் என்னை மணக்கட்டும். என் குழந்தைக்கு அவனுடைய குலத்தின் பெயரை அளிக்கட்டும். இல்லையேல் என் மகன் போஜனாக வளரட்டும்..." என்றாள் பிருதை. "என் மகன் யாதவகுலத்தின் வெற்றிவீரன். அதை நான் ஒவ்வொரு கணமும் மேலும்மேலும் உறுதியாகவே உணர்கிறேன்."

அதன்பின் வாசுதேவன் ஒன்றும் சொல்லவில்லை. உத்தரமதுராபுரியின் படித்துறையை அவர்கள் அடைந்தபோது வாசுதேவன் முன்னரே விரைவுப் படகுவீரனிடம் செய்தியனுப்பியிருந்தபடி மூடுதிரையிட்ட கூண்டுவண்டி வந்து கரையில் காத்திருந்தது. பிருதை இறங்கி உறை உருவப்பட்ட வாளென ஒருகணம் இளவெயிலில் மின்னி உடனே அந்த வண்டிக்குள் நுழைந்துகொண்டாள். அனகையும் பின்னால் ஏறிக்கொண்டாள்.

வாசுதேவன் வண்டிக்குப்பின்னால் குதிரையில் வந்தான். வண்டி வடக்குப்பக்கமாகத் திரும்பி யமுனையின் கரையிலேயே சென்ற பெரிய அரசபாதையில் ஓடி கன்னிமாடம் இருந்த சாயாதலம் என்ற சோலையை அடைந்தது. அடர்ந்த வேங்கையும் கொன்றையும் கொங்கும் மருதமும் நிறைந்த சோலை சுற்றிலும் உயர்ந்த மூங்கில்வேலிகளால் காக்கப்பட்டிருந்தது. கன்னிமாடத்துக்குள் அரண்மனைப்பெண்களும் சேடிகளுமன்றி எவரும் அனுமதிக்கப்படவில்லை.

முதற்காவல்முனையிலேயே வாசுதேவன் நின்றுவிட்டான். திரைச்சீலையை அணுகி உள்ளே இருந்த பிருதையிடம் "நான் தேவகியிடம் அனைத்தையும் சொல்லியிருக்கிறேன். அவளிடம் என் தூதுப்புறாக்கள் ஒவ்வொரு நாளும் வந்துசேரும். நீ இங்கிருப்பதை நான் குந்திபோஜருக்கோ நம் குலத்துக்கோ சொல்லப்போவதில்லை" என்று சொல்லிவிட்டு விலகினான்.

பிருதை வண்டி உள்ளே செல்வதை ஓசைகள் வழியாகவே அறிந்தாள். வண்டி கன்னிமாடத்தின் முற்றத்தை சென்றடைந்ததும் உள்ளிருந்து முதியசேடி தொடர வந்த மெல்லிய சிறியபெண்தான் தேவகி என்று திரைவிலக்கி இறங்கும்போதே பிருதை புரிந்துகொண்டாள். தேவகி புன்னகையுடன் வந்து "மார்த்திகாவதியின் இளவரசியை வாழ்த்துகிறேன். இந்த கன்னிமாடம் தங்களால் மகிழ்கிறது" என முறைப்படி முகமன் சொன்னாள். அவளுக்குப்பின்னால் வந்த சேடியிடம் இருந்து மங்கலப்பொருட்கள் கொண்ட தட்டை வாங்கி பிருதை முன் நீட்டினாள். பிருதை அதைத் தொட்டுவிட்டு "உத்தரமதுராவின் இளவரசிக்கு வணக்கம். தங்கள் அன்பினால் உள்ளம் மகிழ்கிறேன்" என்றாள்.

தேவகியின் கண்களைச் சந்தித்ததுமே பிருதை அவளை விரும்பினாள். அக்கண்கள் நாய்க்குட்டிகளின் கண்கள் போல தூய அன்புமட்டுமே கொண்டவையாக இருந்தன. இந்தப்பெண் எந்த அரசையும் தலைமை தாங்கக்கூடியவளல்ல, எந்த அரசியல்சூழ்ச்சியையும் அறிந்துகொள்ளக்கூடியவளுமல்ல என்று பிருதை புரிந்துகொண்டாள். மதுராபுரியின் அமைச்சராக இருக்கப்போகும் வாசுதேவனுக்கு உகந்த துணைவிதான் அவள். அவனுடைய எளிய பிள்ளைகளை பெற்றுத்தரப்போகிறவள். வாசுதேவனைப்போன்ற மதியூகி எப்படி இத்தனை தூயமனம் கொண்ட பெண்ணைத் தெரிவுசெய்தான் என அவள் அகம் வியந்தது. அடுத்தகணமே அதுவல்லவா இயல்பு என்ற எண்ணமும் எழுந்தது.

கன்னிநோன்புக்காக தேவகி வெண்ணிற ஆடைகள் அணிந்து அணிகளேதுமில்லாமல் இருந்தாள். நீண்ட வெண்ணிறமுகத்தின் இருபக்கமும் கருங்குழல்கள் சுருண்டு தொங்கின. வெண்பளிங்காலானவைபோன்ற கன்னங்களிலும் மெல்லியகழுத்திலும் தோள்களிலும் நீலநரம்புகளும் தாமரைக்கொடிகள் போன்ற கைகளும் சிறிய குமிழ்முலைகளும் உள்ளடங்கிய வயிறும் கொண்ட தேவகியின் அகலமான உதடுகளுக்குள் இருந்து மேல்வரிசைப்பல்லின் கீழ்நுனி முத்துச்சரம்போல எப்போதும் தெரிந்துகொண்டிருந்தது. அது அவள் எப்போதும் புன்னகையுடன் இருப்பது போலத் தோன்றச்செய்தது.

முதல்நாளிலேயே அவர்களுக்குள் நல்லுறவு அமைந்தது. தேவகி பிருதையை வியந்த கண்களுடன் பார்த்தாள். வால்சுழற்றி கூடவே வரும் நாய்க்குழவியின் பாவனைகள் தன்னிடம் பேசும்போது அவளிடமிருந்ததை பிருதை கண்டாள். பேதையான தங்கையைப்பெற்ற தமக்கையின் பாவனையை ஒரேநாளிலேயே பிருதை அடைந்தாள். தாய்மையும் நிமிர்வும்கொண்ட தமக்கையிடம் எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொள்ளும் தங்கையாக தேவகி தன்னை அமைத்துக்கொண்டாள்.

மூன்றாம்நாள் கன்னிமாடத்தை ஒட்டியிருந்த கொடிமண்டபத்தில் பிருதையுடன் தனித்திருக்கையில் தேவகி அவள் வாசுதேவனை முதன்முதலாக மதுராபுரியில் விண்ணவர்கோன் விழவு நிகழ்ச்சியில் கண்டதைப்பற்றியும் அவன் அவளுக்கு ஒரு மலர்மாலையை பாங்கனிடம் கொடுத்தனுப்பியதைப்பற்றியும் சொன்னாள். அதன்பின் இயல்பாக பிருதை எப்படி கருவுற்றாள் என்று கேட்டாள். அது வாசுதேவன் சொல்லி அவள் கேட்பது என்பதை பிருதை புரிந்துகொண்டாள்.

"நான் குந்திபோஜருக்கு மகளாக அரண்மனைக்கு வந்தேன். அங்கே எனக்கு பொன்னும் மணியும் பட்டும் பல்லக்கும் இருந்தன. அரண்மனையும் சேவகரும் இருந்தனர். ஆனால் நான் சிறைப்பட்டிருப்பதை விரைவிலேயே அறிந்துகொண்டேன். எங்குசென்றாலும் என்முன் மங்கலச்சின்னங்களை ஏந்திய சேடிகளும் கோலேந்திய நிமித்திகனும் செல்லவேண்டும். பின்பக்கம் கவரியுடன் தாசியர் வரவேண்டும். அறிவிப்பில்லாமல் நான் எங்கும் செல்லமுடியாது. அரசமுறைமைகொண்ட சொற்களை மட்டுமே சொல்லவேண்டும். நான் சற்றும் விரும்பாதவர்களிடமெல்லாம் முகமனும் முகப்புகழ்ச்சியும் சொல்லவேண்டும்" என்றாள் பிருதை.

சில நாட்களிலேயே நான் சலித்து களைத்துப்போய்விட்டேன். எனக்கு உவப்பாக இருந்தது அங்கே எனக்களிக்கப்பட்ட கல்விதான். எனக்கு செம்மொழியும் கணிதமும் கற்பிக்கப்பட்டன. அவற்றில் நான் தேறியதும் அரசுநூல்களும் பொருள்நூல்களும் அறநூல்களும் கற்பிக்கப்பட்டன. அரசுநூல் என்னை ஆட்கொண்டது. சென்றகாலங்களில் பேரரசர்கள் செய்த அரசியல்சூழ்ச்சிகளைப்பற்றிய புராணங்களை நான் பேரார்வத்துடன் கற்று அவற்றையே எண்ணிக்கொண்டு அரண்மனையில் உலவினேன். மாவீரனை மணந்து மைந்தர்களைப் பெறுவதைப்பற்றியும், யாதவக்குருதி பாரதவர்ஷத்தை ஆள்வதைப்பற்றியும் கனவுகள் கண்டேன்.

அந்நாளில்தான் முதல்முறையாக உத்தரவனத்தில் கானூணுக்காகச் சென்றோம். காட்டுக்குள் நுழைந்ததுமே காற்றில் ஆடைகள் பறந்துவிலகுவதுபோல என்னிலிருந்து மார்த்திகாவதியின் அரசி மறைந்துபோவதையும் கட்டுகளற்ற ஆயர்குலச்சிறுமி வெளியே வருவதையும் கண்டேன். காட்டுக்குள் சேடியரை விலக்கி நானே உலவினேன். மரங்களில் இருந்து மரங்களுக்குத் தாவினேன். உச்சிப்பாறை ஏறி நின்று சுற்றிலும் விரிந்த ஒளிமிக்க பசுமையைக் கண்டேன். என் மூத்தவரும் நானும் மதுவனத்தில் அலைந்து திரிந்து அறிந்த அனைத்தையும் நினைவுகூர்ந்தேன். தேனீக்களின் முரளலைக்கொண்டு எங்கே குகையிருக்கிறதென அறிந்தேன். காதில் மோதும் நீராவியைக்கொண்டு நீர்நிலையிருக்கும் திசையை உணர்ந்தேன். தரையின் நகத்தடங்களைக்கொண்டு சிறுத்தைகள் எத்திசையில் உள்ளன என்று கணித்தேன். காட்டில்தான் நான் பிருதையாக இருந்தேன்.

மீண்டும் அரண்மனைக்குச் சென்றபோது குந்தியாக மாறினேன். அதன்பின்னர் என்னால் காட்டை விலக்கவே முடியவில்லை. இளவரசியர் காட்டுக்குசெல்ல ஒரு வழி உள்ளதை கண்டடைந்தேன். மார்த்திகாவதியின் போஜர்களுக்குரிய காட்டுதெய்வங்களை நூல்களிலிருந்தும் சூதர்களிடமிருந்தும் அறிந்தேன். அத்தெய்வங்கள் என் கனவில் வந்து பலியும் பூசனையும் கேட்பதாக என் தந்தையிடம் சொன்னேன். கான்பூசனைக்காக செல்லும்போது என் தளைகளைக் களைந்து பிருதையாக மாறினேன். பிருதைக்கு மன்னர்குல நெறிகள் இல்லை. அவளை எந்நேரமும் கண்காணிக்கும் விழிகள் இல்லை. குளியலறைக்குள் மட்டுமே கன்னியர் அறியும் விடுதலை ஒன்று உண்டு. அதை நானறிந்தது காட்டில்தான்.

துர்வாசர் எனக்கு அந்த மந்திரத்தை அளித்தபோது நான் குந்தியாக இருந்தேன். ஆனால் மறுநாள் அனகையுடன் காட்டுக்குள் சென்றபோது பிருதையாக மாறினேன். இளைய காட்டுமிருகமாக என்னை உணர்ந்து சிரித்துக்கூவியபடி இலைகள் நடுவே ஓடி பாறைகளில் தாவி ஏறி முகடில் நின்றபோது துர்வாசரின் மந்திரத்தை நினைவுகூர்ந்தேன். அப்போது அது முதியவரின் வெற்றுக்கற்பனையாகத் தோன்றியது. அரசும் மைந்தரும் அரியணையும் புகழும் எல்லாம் கேலிக்குரியனவாகத் தெரிந்தன.

அனகையிடம் "இதோ என்னிடம் ஒரு மந்திரமுள்ளது....இதைச்சொன்னால் எனக்கு தேவர்கள் மைந்தர்களாகப் பிறப்பார்கள் தெரியுமா?" என்று சொன்னேன். "நான் சூரியனை ஒருமைந்தனாகப் பிறக்கவைப்பேன். அதன்பின்னர் கனிகளை பழுக்கவைக்கும் பொறுப்பு அவனுக்குரியது. வாயுவை இன்னொருமைந்தனாக்குவேன். அவன் என் தேர்களை இழுப்பான். அக்னியை மைந்தனாக்கி சமையலுக்கு நிறுத்துவேன்" என்றேன். அனகை "இந்திரனை என்னசெய்வீர்கள் இளவரசி?" என்றாள். நான் உரக்கச்சிரித்துக்கொண்டு "இந்திரனை விடவே மாட்டேன். என் மஞ்சத்தின் காலில் கட்டிப்போட்டு சேவைசெய்யவைப்பேன்" என்றேன். இருவரும் உரக்கச் சிரித்தோம்.

நான் அப்போது என்னுடைய செம்புரவி அங்கே திகைத்து விழித்தபடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். எதையோ கண்டு அஞ்சியதுபோல அதன் தோல் அதிர்ந்துகொண்டிருந்தது. கழுத்தைத் திருப்பி மெல்லக் கனைத்தபடி அது எங்களைப்பார்த்தது. தன் உடலை மரங்களில் தேய்த்துக்கொண்டு கால்களால் மண்ணை அறைந்தது. "அதோ என் குதிரை....காட்டின் தழல் அது" என்று கூவியபடி ஓடிப்போய் அதன்மேல் ஏறிக்கொண்டேன். அதன் மீது கடிவாளமோ சேணமோ இல்லை. "இளவரசி அது கட்டற்றதாக இருக்கிறது" என்று அனகை கூவினாள். நான் "நானும் கட்டற்றவளே" என்றேன். "நான் காட்டரசி. இந்தக்காட்டின் விதிகளே எனக்கும். பெண் வேங்கை. பிடியானை. மடமான். அன்னப்பேடை" என்று கூவியபடி புரவியைத் தட்டினேன்.

கட்டற்ற புரவிமீது அதன் பிடரிக்கூந்தலைப் பற்றி பயணம்செய்வது எனக்கு முன்னரும் வழக்கம்தான். எங்கள் ஆயர்குடியில் அது அனைவருமறிந்த வித்தை. ஆனால் அந்தப் பெண்குதிரை அன்று ரஜஸ்வலையாக இருந்தது. ஆகவே சிலகணங்களிலேயே அதனுள்ளிருந்து அதன் விண்ணகதெய்வங்களின் விரைவு வெளிவந்தது. கால்கள் பெருமுரசுக்கோல்கள் போல மண்ணை அறைய, வால் தீக்கதிரின் நுனி என சுழல, கழுத்தை வடதிசை நாரை போல நீட்டி அது பாய்ந்தோடியது. நான் அதை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்த முயன்றேன். அது மரங்களை பாம்புபோல வளைந்து கடந்து, சிற்றாறுகளையும் பள்ளங்களையும் குருவிகளைப்போல தாண்டி, பாறைகளில் குளம்புகள் அதிர ஓடி, முன்னால் சென்றுகொண்டே இருந்தது.

மூன்றுநாழிகை நேரம் சற்றும் விரைவு குறையாமல் ஓடியது புரவி. நான் களைத்து அதன்மேல் இறுகப்பற்றியபடி கண்மூடி ஒண்டியிருந்தேன். யமுனையின் வெள்ளத்தில் செல்லும் மரக்கட்டையைப் பற்றிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். பின்னர் புரவி கனைத்தபடி சுழன்று நின்றபோது கண்விழித்தேன். என் முன்னால் புரவியளவே உயரம்கொண்ட கரிய இளைஞன் ஒருவனைக் கண்டேன். அவன் அதன் காதுகளை இறுகப்பிடித்து கழுத்தை வளைத்து மரத்தோடு சேர்த்து அழுத்தி நிறுத்திவிட்டதை அறிந்தேன்.

அவன் என்னிடம் "புரவியில் சேணமில்லாமல் ஏறுவதற்கு நீ என்ன வேடர்குலத்துப்பெண்ணா? அரசியின் காதணிகளுடன் இருக்கிறாய்?" என்றான். அவனுடைய உயரத்தையும் கரிய நிறத்தையும் ஒளிமிக்க கண்களையும்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் பார்வையை உணர்ந்ததும் வேறுபக்கம் திரும்பி "இறங்கிக்கொள்...என் புரவியின் சேணத்தை இதற்கு அணிவிக்கிறேன்" என்றான். நான் இறங்கி அவனுடன் சென்றேன்.  அவன் என் குதிரையின் காதுகளைப் பிடித்து அதை இழுத்துக்கொண்டு வந்தான்.

அந்தக் காட்டுக்குள் இருந்த சிறிய குகைக்குள் அவன் தன் உடைமைகளை வைத்திருந்தான். அந்தக் குகையிருந்த பாறைக்கு முன்னால் நீலநீர் தேங்கிய பெரிய தடாகம் இருந்தது. அதைச்சுற்றியிருந்த காட்டிலிருந்து வேங்கைமரங்கள் நீரைநோக்கிக் குனிந்து தங்கள் ஆடும் நிழல்களை கிளைநுனிகளால் வருடிக்கொண்டிருந்தன. அவன் குகைக்குள் வைத்திருந்த பொன்னாலான பிடிகொண்ட உடைவாளிலிருந்து அவன் அரசகுலத்தவன் என்று அறிந்துகொண்டேன்.

என்னை குகைமுன் அமரச்செய்துவிட்டு அங்கே நின்றிருந்த தன் வெண்குதிரையின் சேணத்தைக் கழற்றி என்னுடைய குதிரைக்கு அணிவித்தான். "நீங்கள் எப்படி ஊர்திரும்புவீர்கள்?" என்று நான் கேட்டேன்."மரப்பட்டைகளால் சேணம் செய்ய எனக்குத்தெரியும். மதியம் தாண்டிவிட்டது. இருட்டுக்குள் நீ உன் இல்லத்துக்குச் செல்" என்று அவன் சொன்னான்.

நான் தாகத்துடனிருப்பதைக் கண்டு அவன் "இரு, உனக்கு நீரள்ளி வருகிறேன்" என தன் குதிரையின் விலாவில் தொங்கிய வெண்ணிறமான மரக்குடுவையுடன் தடாகத்தை நோக்கி படிகளில் இறங்கிச்சென்றான். வேங்கையின் நடையை அழகுறச்செய்வது அதன் பின்னங்கால்களும் முன்னங்கால்களும் ஒன்றுடனொன்று தொடர்பேயற்றவை போல இயங்குவதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அவன் இறங்கியபோது கால்களுக்கும் இடைமுடிச்சுக்கு மேலிருக்கும் உடலுக்கும் தொடர்பேயில்லாததனால்தான் அது வேங்கையின் நடையாகத் தெரிந்தது என்று உணர்ந்தேன்.

அப்போது என் குதிரை அவனுடைய வெண்குதிரையுடன் கழுத்துபிணைத்து முகமுரசி பெருமூச்சுவிடுவதைக் கண்டேன். தாழைமடலவிழ்வதுபோலவோ இளம்பாகு புளித்ததுபோலவோ ஒரு மனமயக்கும் வாசனை எழுந்தது. அது நாகப்பாம்புகளின் முட்டைகள் விரியும் மணம் என பின்னர் அறிந்துகொண்டேன். நான் என்னை வெறும் பெண்ணாக அறிந்தேன். உடனே ஒரு எண்ணம் எழுந்தது. அது குந்தி என்ற இளவரசியின் எண்ணம் அல்ல. பெண் மழைபோன்றவள், அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்து மண்ணை காடாக்கவேண்டியவள் என்று இளமையிலேயே கற்பிக்கப்பட்ட யாதவப்பெண்ணின் எண்ணம்.

நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.

அது என்னுள் நிறைந்தபோது நான் எங்கிருக்கிறேன் என்பதையே மறந்தேன். என்னுடைய அகத்தின் ஒவ்வொரு துளியும் ஒளியால் நிறைந்தது. என் உடலே படிகத்தாலானதுபோல ஒளிகொண்டது. காற்றில் பறக்கும் பஞ்சுவிதை போல எடையற்றவளாக, சுடர்கொண்டவளாக உணர்ந்தேன். அவனுடைய அசையும் முதுகையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவன் திரும்பி என்னை நோக்கினான். என் சொற்களனைத்தையும் அவன் கேட்டான். அவனுடைய விழிகள் விரிவதை அவ்வளவு தொலைவிலும் கண்டேன். அவன் என்னை நோக்கி காற்றில்பறக்கும் திரைச்சீலையின் ஓவியம்போல ஓசையின்றி மிதந்துவந்தான்.

இளையவளே, இது என் உளத்தோற்றமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அந்த இடமெங்கும் பேரொளி நிறைவதைக் கண்டேன். இலைகளின் பரப்புகளெல்லாம் ஆடித்துண்டுகளாயின. அடிமரங்களெல்லாம் பளிங்காயின. நிலம் நீர்ப்பரப்பு போல மின்னியது. பாறைகள் உயிருள்ள தசைகளென அதிர்ந்தன. அந்தத் தடாகம் ஒரு வேள்விக்குளம்போல செவ்வொளி கொண்டதாகியது. அந்த ஒளி ஏறி ஏறி வந்து கண்களை கூசச்செய்தது. செஞ்சூரியன் தன் கதிர்களுடன் மண்ணில் விழுந்தது போல அந்தத் தடாகம் அங்கே ஒளிகொண்டு திகழ்ந்தது.

அதன் நடுவிலிருந்து வருவதுபோல அவன் என்னை நோக்கி வந்தான். நெருங்க நெருங்க அவனுடைய உடல் வைரக்கல்போல ஒளிகொண்டிருப்பதைக் கண்டேன். ஆயிரம்கரங்கள் போல அவனுடலில் இருந்து ஒளிக்கதிர்கள் நான்குபக்கமும் எழுந்தன. அவனுடலின் விளிம்புகள் செம்பிழம்பாக தகதகக்க, நடுவே அவன் கரிய உடல் நீலப்பரப்பாகத் தெரிந்தது. விழிகளை விரித்து நோக்கினேன். வானில் சூரியன் தென்படவில்லை. வெளியெங்கும் ஒருபோதும் கண்டிராத தூயபச்சைக்கதிர் மட்டும் நிறைந்திருந்தது. தொலைதூரத்து மலையடுக்குகளும் மேகக்குவைகளும் அனைத்தும் ஒளிவிடும் மணிப்பசுமை கொண்டிருந்தன.

அக்கணம் நான் எனக்குள் தாளவியலாத அச்சத்தை அடைந்தேன். என்னசெய்துவிட்டேன், என்னசெய்துவிட்டேன் என என் அகம் அரற்றியது. "தேவா, திரும்பிச்செல்லுங்கள். உங்கள் தவப்பயணத்தை எளியவளாகிய நான் என் விளையாட்டுத்தனத்தால் கலைத்துவிட்டேன். என்னைப்பொறுத்தருள்க. தங்கள் ஒளிமணித்தேருக்குத் திரும்பியருள்க" என்று கைகூப்பினேன். அவன் புன்னகைக்கும் உடலுடன் "நீ அழைத்ததன்பொருட்டே வந்தேன். காதலைத் தேடிவராத ஆண்மகன் எங்குள்ளான்?" என்றான்.

"நான் எளியவள். தங்கள் ஒளியை என்னால் தாளமுடியவில்லை" என்றேன். "விண்ணகத்தில் விரையும் பெருங்கோள்களில் எல்லாம் என் ஒளியே படைப்பாக ஆகிறது. மண்ணில் நெளியும் சிறுபுழுக்களை ஊடுருவி கருவுறச்செய்வதும் நானே. என் ஆற்றல் அளவிறந்தது என்றாலும் எந்தச் சிறுமலரும் என் முன் தலைகுனிவதில்லை. புன்னைகைக்கும் வண்ணங்கள் காட்டி என்னை அள்ளி அள்ளி உண்ணவே அவை எழுகின்றன" என்றான். என் கண்களுக்குள் அவன் ஒளி புகுந்ததும் நான் இமயத்துப் பனிக்கட்டி என ஒளியுடன் உருகலானேன். பிருதை விழிமலர்ந்து, குரல் தழைந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 7 ]

உத்தரமதுராபுரியின் கொடிமண்டபத்தில் அமர்ந்து தேவகி பிருதை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தயங்கிய சொற்களால் சொல்லத்தொடங்கிய பிருதை அச்சொற்கள் வழியாகவே அந்த வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினாள். பின்னர் அந்த வாழ்க்கைக்குள் இறங்கி அதில் அங்கிருந்தாள். அவை அவளுடைய சொற்களென்பதனாலேயே அவளுக்கு மிக அண்மையனவாக இருந்தன. வாழ்க்கையைவிட பொருள் கொண்டவையாக இருந்தன. அவளால் சொற்களை நிறுத்தவே முடியவில்லை.

அவை வாழ்க்கை அல்ல என்று தேவகி அறிந்திருந்தாள். அவை சொற்கள். சொற்களென்பவை மூதாதையரின் மூச்சுக்காற்றாக மனிதர்களைச் சூழ்ந்திருப்பவை. நூல்களில் வாழ்பவை. பிருதை சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் அவள் வாழ்ந்தவை எவை, அடைந்தவை எவை என அவளாலேயே சொல்லிவிடமுடியுமா என தேவகி ஐயுற்றாள். ஆனால் வாழும் அக்கணங்கள் தவிர அனைத்துமே சொல்லாகவல்லவா எஞ்சுகின்றன! கடந்தவையும் பதிந்தவையும் சொற்கள் மட்டுமே. அவ்வகையில் வாழ்க்கை என ஒன்று உண்டா என்ன! மின்னலை அக்கணம் கைப்பற்ற எவர் விழிகளால் இயலும்?

பிருதை சொன்னாள் "ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்."

நான் விழித்துக்கொண்டபோது என்னருகே அந்தக் கரிய இளைஞன் மயக்கில் கிடப்பதைக் கண்டேன். எங்கள் புரவிகள் அப்பால் களைத்து தனித்து நின்றிருந்தன. ஆடையின்றி இருப்பதை அறிந்ததுமே நான் வானத்தை உணர்ந்து வெட்கினேன். என் ஆடையை அணிந்துகொண்டு அவனைத் திரும்பிப்பாராமல் என் புரவியில் ஏறிக்கொண்டேன். அது என்னை காட்டுவழியாகச் சுமந்து சென்றது.

என் குதிரை கால்களை உதைத்து மெல்லக் கனைத்து கிளம்பும்போது திரும்பி இறுதியாக அவனைப் பார்த்தேன். வேள்வியில் எரிந்து சுடரானபின்னர் கரியாக எஞ்சிய விறகுபோலக் கிடந்தான். எளிய உடல். மானுட உடல். பிறப்பெனும் கசடுகொண்ட உடல். இறப்பெனும் இருள் நிறைந்த உடல். சிறுமதிப்புன்மையால் நான் நானென எண்ணும் சிற்றுடல். சிறுமையால் என் உடல் உலுக்கிக் கொண்டது. குதிரையின் தோளில் முகம்புதைத்தபோது கண்களை மீறி கண்ணீர் வழியத் தொடங்கியது. குதிரை சென்றவழியெங்கும் என் கண்ணீர் சொட்டியது.

அரண்மனைக்கு நான் நள்ளிரவில் திரும்பிவந்தேன். அவ்வாறு நான் பிந்துவது வழக்கமென்பதனால் எவரிடமும் சொல்லாவிட்டாலும் அனகை அஞ்சிக்கொண்டிருந்தாள். "இனி இப்படிச் செல்லாதீர்கள் இளவரசி" என என் கைகளைப்பற்றிக்கொண்டு அழுதாள். அன்றிரவு நான் துயிலவில்லை. மஞ்சத்தில் படுத்து இருளைப்பார்த்தபடி அந்த நிகழ்வையே மீளமீள எண்ணிக்கொண்டிருந்தேன். என்ன நிகழ்ந்ததென்று என் அளவையறிவைக் கொண்டு உய்த்தறிய முயன்றேன். துர்வாசரின் மந்திரத்தால் நான் அவனை மயக்கி என்னருகே கொண்டுவந்துவிட்டேன். அதைவிட நான் என்னையே மயக்கி ஒரு கனவாக அதை ஆக்கிக்கொண்டேன்.

ஆம் அதுதான் நிகழ்ந்தது, வேறொன்றுமில்லை. அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். நான் அரசுநூல் பயின்றவள். மதிசூழ்கை கற்றவள். நான் அனைத்தையும் இம்மண்ணில், இத்தருணத்தில் வைத்து புரிந்துகொண்டாகவேண்டும். மறுநாள் நிமித்திகர்களையும் கணிகர்களையும் அழைத்து முந்தையநாளின் விண்நிகழ்வுகளைப் பற்றிக் கேட்டேன். சூரியனின் பசுங்கதிர் வெளிப்படுவது மிக இயல்பான ஓர் நிகழ்வு என்று அவர்கள் சொன்னார்கள். சூரியவட்டம் வான்விளிம்பில் மறையத்தொடங்குகையில் நீர்நிலைகளின் அருகிலோ மலைகளின் விளிம்புகளிலோ சற்று நேரத்துக்கு ஒளி முற்றிலும் பச்சைநிறமாக வெளிப்படக்கூடும் என்று வரைபடங்களுடன் விளக்கினர். என்னுள் வாழ்ந்த மதியூகி வென்றாள்.

ஆனால் முதல்மாதம் என் குருதிநாள் தவறியபோது என்னுள் அச்சம் எழுந்தது. நான் கற்றவையெல்லாம் என்னுள் இருந்து ஒழுகிச்செல்ல அச்சமும் தனிமையும் குழப்பங்களும் கொண்ட எளிய பெண்ணாக ஆனேன். அனைத்துப் பெண்களையும் போல அது ஏதோ உடற்பிறழ்வு என்று எண்ணிக்கொண்டேன். ஒவ்வொருநாளும் அதன் வருகைக்காகக் காத்திருந்தேன். ஒவ்வொரு இரவும் ஏமாற்றம் தாளாமல் தனிமையில் கண்ணீர் உகுத்தேன். என் துயருக்குக் காரணமான அந்த வயிற்றை வெறுத்தேன். என் உடலில் இருக்கும் நானல்லாத ஒன்று என என் வயிற்றை எண்ணினேன். என் வேண்டுதல்களைக் கேளாத தெய்வம்.

என்னை ஒரு பெரிய குருதிஅட்டை கவ்விக்கொண்டு உறிஞ்சி வளர்வதுபோல வயிறு வளர்வதை உணர்ந்தேன். அனைத்து பேதைப்பெண்களையும்போல அதைக் கலைப்பதற்கு என்னென்ன செய்யமுடியுமென நானே சிந்தித்தேன். எங்கோ எவரோ சொல்லிக் கேட்டவற்றை எல்லாம் நினைவில்கொண்டுவந்து செய்துபார்த்தேன். புளிக்கீரையையும் அத்திப்பழங்களையும் கலந்து உண்டேன். படிகாரத்துண்டை விழுங்கினேன். கொம்பரக்கையும் அதிமதுரத்தையும் கலந்து மூன்றுநாட்கள் குடித்தேன்.

ஒவ்வொன்றுக்குப்பின்னும் என் வெறுப்பு கூடியே வந்தது. என் வயிற்றில் வாளைப்பாய்ச்சவேண்டும் என்றும் கதையின் முகப்பால் அறையவேண்டும் என்றும் எண்ணினேன். என் வயிறு தரையில் அறையும்படி அரண்மனை முகடிலிருந்து கீழே பாய்வதைப்பற்றி பகற்கனவுகள் கண்டு அந்தத்துயரில் நானே மனம்கலங்கி அழுவேன். ஒவ்வொன்றின் மேலும் வெறுப்புகொண்டேன். ஒவ்வொருவரையும் கசந்தேன்.

மேலும் ஒருமாதமாகியபோது என்னுள் அச்சம் இருண்ட கனத்த உலோகம் போல உருண்டு எப்போதும் நிற்பதை உணர்ந்தேன். அது கருவேதான். அதை என்னால் அழிக்கவே முடியாது. அந்தப் பேய்த்தெய்வம் தன் பீடத்தைக் கண்டடைந்துவிட்டது. என்னுள் என்னை உண்டு அது வளரும். என்னைப்பிளந்து வெளிவந்து குருதி வழிய கிளம்பி தன் பலிகளை நோக்கிச்செல்லும். அதன் முதற்பலியாக என்னை அது ஏற்றுக்கொண்டுவிட்டது. நான் அதன் அடிமை மட்டுமே. நான் எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணங்களேகூட அந்த தெய்வத்தால் உருவாக்கப்படுபவைதான்.

இன்று எண்ணிப்பார்க்கையில் வியப்பு நிறைகிறது. இந்நாட்களில் ஒருமுறையேனும் நான் என் காமத்தைப்பற்றி குற்றவுணர்வடையவில்லை. அந்த இக்கட்டுக்கு என் கட்டற்ற விழைவே காரணமென்று ஒருகணம்கூட எண்ணவில்லை. என் எண்ணங்கள் அனைத்தும் அந்நிலைக்கு நானல்லாத பிறகாரணங்களைக் கண்டடைவதிலேயே இருந்தன. அதற்காக என்னை கைவிடப்பட்ட அபலை என்று கற்பனைசெய்துகொண்டேன். என் குலத்தால் கைவிடப்பட்டவள். வந்த இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாதவள். அன்னையும் தந்தையும் குலமும் அரசும் அற்ற தனியள்.

அந்த எண்ணத்தைப் பெருக்கிப்பெருக்கி தன்னிலை கரைந்து கண்ணீர் விடுவதே என் நாட்களை எடுத்துக்கொண்டது. அங்கே நான் எவ்வளவு தனித்திருக்கிறேன் என்பதை நானே உணரும்போது திகைத்து சொல்லிழந்துபோனேன். நானறிந்த அதை அங்கே ஒருவர் கூட அறியவில்லை. நான் நினைவறிந்த நாள்முதல் என் தமையனை மட்டுமே என் அகத்துள் அனுமதித்தவள். அக்கணம் என்னுள் நிறைந்திருந்ததோ அவருடன் ஒருதுளியேனும் பகிரமுடியாத பெருங்கடல்.

மூன்றாம் மாதமாகியபோது எனக்கு வயிற்றுப்புரட்டலும் தலைசுழற்சியும் உருவானது. மூன்றுநாட்கள் என்னைக் கூர்ந்து கவனித்துவிட்டு அனகை மெதுவாக அதைப்பற்றிக் கேட்டுவிட்டாள். சினம்கொண்டு அவளை அறைந்து கூச்சலிட்டேன். அவள் என்னை அவமதிப்பதாகச் சொல்லி அவளை சாட்டையடிக்காக அனுப்புவேன் என கூவினேன். அதன்பின் அதற்காக வருந்தி கண்ணீர்விட்டு என் மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டேன்.

அனகை வந்து என்னருகே அமர்ந்து "இளவரசி, தாங்கள் வருந்துவதில் பொருளே இல்லை. இது கருவா என மருத்துவச்சியைக்கொண்டு ஆய்ந்தறிவோம். கருவாக இருந்தால்தான் என்ன? நம் ஆயர்குடிகள் அன்னைவழிக் குலமுறை கொண்டவை. நமக்குகந்த ஆணிடம் கருவுற நமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. நம் குலம் கருவை மூதாதையர் மண்ணிறங்கும் வழி என்றே எண்ணும். இங்கே இந்த அரண்மனையில் அது இழிவாக இருக்கலாம். இந்த அரண்மனை வாழ்வை உதறிவிட்டு நம் ஆயர்குடிக்குத் திரும்புவோம். உங்கள் குலம் உங்களை இருகரங்களையும் நீட்டி எதிர்கொள்ளும்" என்றாள்.

மிக எளிய உண்மை அது. நானே நன்கறிந்தது. ஆனால் அரசியல் மதியூகியான எனக்கு எளிய சேடி அதைச் சொல்லவேண்டியிருந்தது. அவள் சொல்லத்தொடங்கியதுமே நான் அனைத்தையும் கடந்து தெளிவடைந்தவளானேன். அவள் கைகளைப் பற்றிக்கொண்டு "ஆம் அனகை. நீ சொல்வது உண்மை. நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்?" என்றேன்.

குந்திபோஜரின் அரண்மனையில் இருந்து மீண்டும் துர்வாசரின் அறச்சாலைக்கு வந்தேன். துர்வாசர் சில தவமுறைமைகளைக் கற்றுத்தந்திருப்பதாகவும் அவற்றைச் செய்யவேண்டுமென்றும் அன்னையிடம் சொன்னோம். அனகை சிறந்த மருத்துவச்சிகளுக்காக தேடத் தொடங்கினாள். நான் என் எண்ணங்களுடன் மழையோசை நிறைந்த பகல்களையும் இரவுகளையும் என் குடிலிலேயே கழித்தேன். நான் அலைந்து திரிவதை குதிரைகளில் பயணம்செய்வதை விரும்புபவள். ஆனால் முழுநாளும் படுத்தே கிடக்கத்தான் என் உடல் சொன்னது.

என்னுள் நாகங்களின் உடலசைவுகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது போல உணர்ந்தேன். என் உடலையே ஒரு பெரும் நாகக்குகையாக எண்ணினேன். என் நரம்புகளும் தசைநார்களும் அனைத்தும் நாகங்கள். என் வயிறு அரசநாகம் சுருண்டுகிடக்கும் மூங்கில்கூடை. கண்களை மூடினால் உருளியில் எண்ணை சுழல்வதுபோல அசையும் கருநாகத்தின் உடலைக் கண்டேன். தேன் என அதன் வழிதல். வேர் என அதன் அடர்தல். புகை என அதன் சூழ்தல். மணல் என அதன் பொழிதல். திசைதிசையென அதன் இருள்சூழ்தல்.

நாள்தோறும் அந்த அச்சம் வலுத்தது. நான் பெறவிருப்பது ஒரு நாகத்தையா. வீங்கிப்பெருக்கும் படமும் மணிவிழியும் அனல்நாவும் கொண்டு என் முன் எழுந்து நிற்கும் ராஜநாகத்தை கனவில் கண்டேன். நீயா நீயா என்று வினவிக்கொண்டேன். அது புன்னகைப்பதுபோல, ஒற்றைச்சொல்லை என்னை நோக்கி ஊதிப் பறக்கவிடுவதுபோல. நீ என் அடிமை என்கிறதா? நான் வாழும் தோலுறை நீ, உன்னை கழற்றிப்போட்டுவிட்டு நான் செல்வேன் என்கிறதா?

எவ்வளவு பெருவியப்பு? ஏன் நாம் இந்த விந்தையை உணர்வதேயில்லை? நம்மைச்சுற்றி வாழும் அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கிறோம். நூல்களில் எழுதிப்பயின்று தொகுத்துக்கொண்டே இருக்கிறோம். நம் கண்முன் வந்துகொண்டே இருக்கும் இந்த உயிரினம் என்ன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா? கால்களற்றது, ஆனால் கால்களுள்ள அனைத்தையும் விட வேகமானது. காதுகளற்றது, ஆனால் காதுகள் கேட்காததையும் கேட்பது. பறக்கும் நாக்குகள் கொண்டது. ஆனால் பேசாதது. புவியிலேயே கொடிய படைக்கலனைக் கொண்ருந்தாலும் துயிலே அற்றது. உயிர்களனைத்தும் அஞ்சும் வல்லமை கொண்டதென்றாலும் குரலற்றது. இது உண்மையில் என்ன? எந்த இயற்கைப்பேராற்றலின் மண்வடிவம்?

அஞ்சிக்குளிர்ந்து எழுந்தமர்ந்தேன். இல்லை, என் வழியாக அது இப்புவியில் வரக்கூடாதென்று முடிவெடுத்தேன். மருத்துவச்சியைத் தேடி அனகை சென்றிருந்தாள். நான் என் குடிலுக்குள் இருளில் காத்திருந்தேன். மழை வலுத்து கொட்டி கூரையை அறைந்தது. வானம் என்னிடம் ஏதோ சொல்ல விழைவதைப்போல. யாரிவன்? சூரியனின் மைந்தனா? சூரியன் ஏன் மண்ணில் பிறக்கவேண்டும்? விண்ணில் அது விரையும் ஒளிமிக்க பாதையில் நாகங்கள் உண்டா என்ன? என்னுள் இருப்பது என்ன ஒளிர்கோளமா? சூரியமகவா? சுருண்டு கிடக்கும் இருள்நாகமா? சிந்தனையின் தேர்ச்சக்கரம் சேற்றில் சிக்கி நிற்க தலையில் அறைந்துகொண்டு கண்ணீர் விட்டேன்.

அப்போதுதான் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. மழை குறைந்திருந்தது. அந்தத் தட்டல் ஒலியை நான் அச்சமூட்டும் ஒரு காட்சியாக அரைக்கணத்தில் என்னுள் கண்டுவிட்டேன். இடுப்பளவுக்கு படம் தூக்கிய ராஜநாகம் தன் முகத்தைக்கொண்டு என் கதவைமுட்டிக்கொண்டிருந்தது. மயிர்சிலிர்த்து ஒருகணம் செயலற்றுவிட்டேன். நாகத்தின் முன் சிலைத்து மீசை அசையாமல் நின்று தன் இறுதிக்கணத்தை அறியும் எலியைப்போல.

பின்னர் காலடியோசை கேட்டது. சாளரம் வழியாக எட்டிப்பார்த்தேன். அது அனகை. கதவைத்திறந்தபோது அந்த மருத்துவச்சி அவளுடன் வந்திருந்தாள். அனகையிடம் இருந்து வந்த வாசனையை நான் எங்கோ அறிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் என் எண்ணங்களால் அதை தொட்டெடுக்க இயலவில்லை. எங்கே அந்த வாசனையை அறிந்தேன் என என் நினைவுகளைத் துழாவிக்கொண்டே இருந்தேன். தமையனும் நானும் உபவனங்களில் அலைந்தபோது அந்தியில் மட்கிக்கிடந்த மரம் ஒன்றை அசைத்தோம். அப்போது உள்ளிருந்து மின்மினிக்கூட்டங்கள் அனல்பொறிகள் என எழுந்தன. அப்போதா? பாறையிடுக்கில் புழுதிக்குவையில் சற்றுமுன்னர் பெற்றிட்ட குட்டிகளுடன் தன் கருச்சரத்தை மென்று தின்றுகொண்டிருந்த செந்நாய் ஒன்றைப்பார்த்தேனே, அப்போதா?

அந்த மருத்துவச்சி என் கருவை உறுதிசெய்தாள். அதைக் கலைத்துவிடலாமா என்று அவள் கேட்டாள். அவளுடைய கண்கள் உயிரற்றிருந்தன. ஒரு சொல்கூட எஞ்சியிராத கண்கள். மண்டையோடுகளில் எஞ்சியிருக்கும் பார்வை அவளுடையது. அந்தத் தீங்கியல்புதான் அவளை நான் நம்பச்செய்தது. அவளால் முடியுமென்று எண்ணவைத்தது. ஆம், செய் என ஆணையிட்டேன். படுத்துக்கொள்ளச் சொன்னாள். நான் மல்லாந்து படுத்துக்கொண்டபோது எனக்குள் ஓர் அசைவை உணர்ந்தேன். ஒருநாகம் சுருள்விரிவதுபோல.

அவள் வெண்கலக்கம்பியை எடுத்து அதை ரசாயனத்தால் சுத்தம்செய்தாள். சிட்டுக்குருவிச்சிறகுகளால் ஆன பஞ்சை ஒரு வெண்கலப்புட்டியில் இருந்த நாகரசத்தைக்கொண்டு துடைத்தாள். அந்த நாகவிஷத்தின் வாசனையை பலமுறை நானறிந்திருக்கிறேன். ஆயர்களுக்கு முதலில் கற்பிக்கப்படுவதே பாம்பின் வாசனையை அறியும் வித்தைதான். அந்த வாசனையா அனகையும் அவளும் வந்தபோது எழுந்தது? அல்ல, அதுவேறு. அந்த வாசனையை நான் நன்கறிவேன், ஆனால் என் நினைவு அதை மீட்டு எடுக்க இயலாமல் வெறும்வெளியில் துழாவிச்சலித்தது.

அப்போதுதான் அந்த ராஜநாகம் மரவுரிக்குள் இருந்து பீரிட்டு அவளைத் தீண்டியது. அதைக் கண்ட அக்கணம் நான் அறிந்தது அதன் வாசனையைத்தான் என்று உணர்ந்தேன். அது அவர்களுடன் வந்து அவர்களுக்குப்பின்னால் மறைந்து நின்றிருந்திருக்கிறது. அதே கணம் அந்த வாசனையை எங்கே அறிந்தேன் என்றும் உணர்ந்தேன். நான் சூரியனைப்புணர்ந்த அக்கணங்களில். அது அவ்வுறவின் வாசனை.

நாகம் சென்றபின் வீரர்களை அழைத்து கிழவியை காட்டுக்குள் சென்று புதைத்துவிடும்படி ஆணையிட்டேன். அக்குடிலில் இரவுதங்க முடியாதென்று அனகை நடுங்கிக்கொண்டே சொன்னாள். ஆனால் என் உள்ளம் நிறைவடைந்திருந்தது. நான் தேடியவினாக்களுக்கெல்லாம் விடைகிடைத்தது என்று உணர்ந்தேன்.

சொல்லிமுடித்தபின்னரும் அச்சொற்களில் இருந்து மீளாதவள் போல பிருதை விழித்த கண்களுடன் படுத்துக்கிடந்தாள். சிலகணங்களுக்குப்பின்னர்தான் தேவகி அவளில் இருந்த அந்த வேறுபாட்டை உணர்ந்தாள். அவள் இமைக்கவேயில்லை. விழிகள் மணிகளென திரண்டு சிலைத்திருக்க அசையாமல் கொடிமண்டபத்து மஞ்சத்தில் அவள் கிடந்தாள்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 8 ]

பிருதை சைத்ரமாதம் விஷுவராசியில் குழந்தையைப் பெற்றாள். தேவகியின் கன்னிமாடத்தில் அவள் கருமுதிர்ந்து குழந்தைக்கு அன்னையானசெய்தி அரண்மனை மந்தணமாகவே இருந்தது. வசுதேவனின் கோரிக்கையை ஏற்று பிருதைக்கு கருநோக்கு மருத்துவம் செய்ய நான்கு மருத்துவச்சிகளை தேவகன் அனுப்பிவைத்தான். அந்நான்குபேரும் வந்த சில நாட்களிலேயே தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பின்னர் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர்கள் ஊர் திரும்பவில்லை என்று ஊரார் சொன்னதை ஒற்றர்கள் வந்து சொன்னபோது வசுதேவன் ஐயம்கொண்டான். அடுத்து வந்த மருத்துவச்சி வந்த அன்றே இரவில் தன் ஆடைகளை தோல்மூட்டையாகக்கட்டி எடுத்துக்கொண்டு கிளம்பியபோது ஒற்றர்கள் அவளைப் பிடித்து வசுதேவனிடம் கொண்டுவந்தனர்.

அந்த மருத்துவச்சி அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்களில் தெரிந்த அச்சம் வசுதேவனை குழப்பியது. அவளிடம் "அன்னையே, நீ அஞ்சவேண்டியதில்லை. நீ இளவரசியை விட்டுச்செல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்வாயாக" என்றான். அவள் கைகூப்பி "அந்தக்கரு விஷம் கொண்டது. அது மருத்துவச்சிக்கு உயிராபத்தை விளைவிக்கும்" என்றாள். "ஏன்? அதன் இலக்கணங்களைச் சொல்" என்றான் வசுதேவன்.

மருத்துவச்சி மீண்டும் கைகூப்பியபடி சொன்னாள். "அமைச்சரே, நான் இங்கே வரும் வழியிலேயே தீக்குறிகளைக் கண்டேன். என் இல்லம்விட்டு வெளியே வருகையில் காகம் ஒன்று கரைந்து என்னை விலக்கியது. மூன்று வௌவால்கள் பகலில் என் பாதையின் குறுக்கே பறந்து சென்றன. கன்னிமாடத்தில் நான் நுழைந்தபோது ஒருசேடி கொதிக்கும் நீரை தன் காலில் ஊற்றிக்கொண்டு கதறினாள். நான் கன்னிமாடத்துக்குள் நுழைந்த கணமே என்னை எவரோ பார்க்கும் உணர்வை அடைந்தேன். இமையாத வல்லமைகொண்ட விழிகள் அவை. இளவரசியின் அறைக்குள் செல்வதற்கு முன்னரே நான் அந்த வாசனையை அடையாளம் கண்டேன்."

மருத்துவச்சி சொன்னாள். கருவின் வாசனை என்று பொதுவாக பிறர் சொன்னாலும் மருத்துவச்சிகளுக்கு அந்த வாசனையின் வேறுபாடுகள் தெரியும். குருதியின் உப்புவீச்சம் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் கருவின் இயல்புக்கேற்ப வெவ்வேறு வாசனைகள் கலந்திருக்கும். புதிய பறவைமுட்டைகளின் வெண்கருவின் வாசனையும், மூன்றாம்நாள் காயத்தின் சீழ்வாசனையும் கலந்திருந்தால் அது இயல்பான கரு என்போம். புளித்த பசும்பாலின் வாசனை வருமென்றால் அன்னையின் உடலில் பித்தம் ஏறியிருக்கிறதென்று பொருள். மட்கிய தோலின் வாசனை வருமென்றால் அன்னையில் வாதம் ஏறியிருக்கிறது. அழுகிய இறைச்சியின் மெல்லிய வாசனை வருமென்றால் அவளில் கபம் ஏறியிருக்கிறது.

ஆனால் நானறிந்த வாசனையே வேறு. அது என்ன வாசனை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அச்சத்தில் நிலையழிந்து போயிருந்தேன். வந்த கணம் முதல் அக்கன்னிமாடத்தின் அனைத்து அறைகளையும் சுற்றிச்சுற்றிவந்து நுணுகிப்பார்த்தேன். அவ்வாசனை அவள் அறையில் மட்டுமே நிறைந்திருந்தது. அந்த வாசனையை நான் நன்கறிந்திருந்தேன். ஆனால் அதை என்னிடமே சொல்ல என் அகம் அஞ்சியது.

இளவரசியின் கைகளைப்பற்றி ஆய்வெடுத்தேன். அவள் நாடி ரதசாலைப்புரவி போல சீரான நடையில் சென்றது. அவள் குருதி வசந்தகால நீரோடைகள் போல இனிய ஒலிகளுடன் ஒலித்தது. திரைச்சீலைகளுடன் விளையாடும் தென்றல் போல மூச்சு அவள் நுரையீரலில் ஆடியது. அவளுடைய வயிற்றில் ஆகவனீய நெருப்பு போல சீராக பொசி எரிந்தது. அவள் சித்தத்தில் மழைத்துளிகள் சொட்டும் தாளத்தில் காலம் நிகழ்ந்தது. அவளுடைய இதயத்தில் உயிர் கருவறைச்சுடர் போல அசையாமல் ஒளிவிட்டது.

அப்படியென்றால் தாமரைமொட்டுக்குள் இருக்கும் வாசனை அவள் வாயில் வரவேண்டும். அவள் கண்கள் செவ்வரி ஓடும் கங்கையின் சாளக்கிராமம் போலிருக்கவேண்டும். அவளுடைய உள்ளங்கைகள் அல்லிபோல வெளுத்திருக்கவேண்டும். அவள் கழுத்து பனம்பாளைபோல மென்மையான வரிகளுடன் இருக்கவேண்டும். அவள் வயிறு பீதர்களின் அழகிய வெண்களிமண் பானைபோல சீரான உருண்டையாக இருக்கவேண்டும். அவள் கனவில் நீரோடைகளும் மேகங்களும் மலர்களும் வரவேண்டும்.

ஆனால் அவையனைத்துமே நேர் மாறாக இருந்தன. அவள் கண்களின் வெண்பரப்பில் செண்பகம் போல நீலவரிகள் ஓடின. அவளுடைய உள்ளங்கைகள் ஊமத்தை மலரிதழ்கள் போல ஊதாநிறம் கலந்த செவ்வெண்ணிறம் கொண்டிருந்தன. அவள் கழுத்தில் செம்புக்கலங்களில் களிம்புத்தீற்றல் போல பச்சை படர்ந்திருந்தது. அவள் வயிறு கணம்தோறும் உருமாறிக்கொண்டிருந்தது. விளையாடும் முயல்களுக்குமேல் பட்டுத்துணியைப்போட்டு மூடியது போல அது அசைந்தது. நான் அவள் வாயை முகர்ந்தபோது அங்கு நான் வந்ததுமுதலே அறிந்த அந்த வாசனையை உணர்ந்தேன். அவள் கருவறை வாயிலிலும் அவ்வாசனையே திகழும்.

நான் துயிலவேயில்லை. எண்ணங்களை ஓட்டி அங்கே நானறிந்தவை என்ன என்று ஆராய்ந்தேன். ஒரு கணத்தில் என் உடல் அதிர எழுந்து அமர்ந்துவிட்டேன். அவ்வறையில் அவளுடன் நானிருக்கையில் என்னை எவரோ கூர்ந்து நோக்கியபடி உடனிருக்கும் உணர்வை என் உடலும் சித்தமும் அறிந்தது. என்னை அந்த தேவன் நோக்கிக்கொண்டிருந்தான். என் ஒவ்வொரு அசைவையும் அவன் கணக்கிட்டுக்கொண்டிருந்தான்.

மெல்ல எழுந்து மீண்டும் இளவரசியின் அறைக்குள் சென்றேன். இளவரசியின் அறைக்கு வெளியே ஏவலுக்கிருந்த சேடி துயின்று சரிந்திருந்தாள். அறைக்குள் மஞ்சத்தில் கிடந்த இளவரசியின் துயிலின் ஓசை கேட்டது. அமைச்சரே, துயிலோசையிலே கருவின் இலக்கணம் உள்ளது. சத்வகர்ப்பம் கொண்டவர்கள் பசுபோலவும் மூங்கில்காற்று போலவும் மூச்சுவிடுவார்கள். ரஜோகர்ப்பம் கொண்டவர்கள் குதிரை போலவும் நீரோடுவது போலவும் மூச்சொலிப்பார்கள். தமோ கர்ப்பம் கொண்டவர்கள் யானைபோலவும் காட்டுத் தீ எரிவதுபோலவும் ஒலிப்பார்கள். ஆனால் இளவரசியின் மூச்சு நாகத்தின் சீறல் என ஒலித்தது.

நான் அந்த அறைக்குள் சென்றபோது அங்கே இன்னொருவர் இருப்பதை என் உடல்சருமத்தால் கண்டேன். இரு கணங்களுக்குப்பின்னரே என் கண்கள் அதைக் கண்டன. அறைமூலையில் என் இடையளவுக்கு பத்தி தூக்கி ஒரு ராஜநாகம் நின்றிருந்தது. அதன் கண்களில் அறையில் எரிந்த சுடர் சிறுதுளியாகத் தெரிந்தது. நான் அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டேன். கைகளைக் கூப்பியபடி காலெடுத்து பின்னால் வைத்து மெதுவாக வெளியே வந்து என் அறைக்கு ஓடிச்சென்று என் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அமைச்சரே, இளவரசியின் கருவில் இருந்த வாசனையும் நாகங்களின் வாசனையே. நாகமுட்டைகள் விரியும்போது வரும் வாசனை அது. புதுமழை பெய்த பாலைமண்ணின் வாசனையும் எண்ணையில் வேகும் அப்பத்தின் வாசனையும் கலந்திருக்கும். அவள் கருவில் இருப்பது நாகங்களின் அரசனான குழந்தை. அவனைக் காக்கவே ராஜநாகம் அவ்வறைக்குள் குடியிருக்கிறது. அவள் கருவை எடுக்கையில் சற்றேனும் பிழை நிகழ்ந்தால் மருத்துவச்சி உயிர்துறப்பாள் என்றாள் மருத்துவச்சி.

"அன்னையின் உயிருக்கு இடுக்கண் உண்டா?" என்றான் வசுதேவன். மருத்துவச்சி தயங்கியபின் "இவ்வகை கருக்களை நான் நூலிலேயே கற்றிருக்கிறேன். குழந்தை வாழும், அன்னையை மீட்கவே முடியாது. அவளது உயிரை உண்டுதான் அது வெளியே வரும்" என்றாள் மருத்துவச்சி. வசுதேவன் அவளுக்குப் பரிசில் கொடுத்து அச்செய்தியை அரசமந்தணமாகவே காக்கவேண்டுமென்று ஆணையிட்டு அனுப்பினான்.

மருத்துவர் கூற்றின்படி வசுதேவன் தன் தூதனை அனுப்பி கங்கையின் கரையில் வாழ்ந்த நாகர்குடிகளில் இருந்து முதுநாகினியை வரவழைத்து அவளிடம் பிருதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். ஆறுமாதக் கருவுடன் அவளை மறுமுறை பார்த்தபோது வசுதேவன் திகைத்துவிட்டான். அவள் உடலெங்கும் பச்சைபடர்ந்து தொன்மையான செப்புச்சிலை போலிருந்தாள். வசுதேவன் அவளருகே சென்று "பிருதை, நீ நலமாக இருக்கிறாயா?" என்றான். "ஆம்..." என அவள் சொன்னாள். "நான் நாகங்களுடன் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது...எப்போதாவதுதான் இந்த அரண்மனைக் கன்னிமாடத்தில் நானிருப்பதை உணர்கிறேன்" என்றாள்.

அவளுடைய பேச்சும் புன்னகையும் எல்லாம் பித்திகளுடையது போலிருக்கின்றன என்று தேவகி சொன்னாள். பொருளாக மாறாத சொற்களையே அவள் பேசினாள். விண்ணில் பறக்கும் நீர்களைப் பற்றியும் மண்ணுக்கு அடியில் எரியும் நெருப்பைப்பற்றியும் நாகங்கள் புல்நுனிகளாக நெளியும் பெரும்புல்வெளிகளைப்பற்றியும் சொன்னாள். அவள் சொல்வனவற்றை நாகினி மட்டுமே புரிந்துகொண்டாள். நாகினியும் அவளும் ஒருவரை ஒருவர் கண்ணுடன்கண் நோக்கியபடி பகலெல்லாம் அமர்ந்திருப்பதைக் கண்டு தான் திகைத்ததாக தேவகி சொன்னாள்.

"அவள் உடல் நீலமாகிவிட்டது. நகங்கள் நீலத்துத்தம்போல ஒளிவிடுகின்றன" என்றாள் தேவகி. "அவளுடைய குருதியில் நீலம் கலந்திருப்பதாக சேடிகள் சொல்கிறார்கள். துவைத்து காயப்போடப்பட்ட அவளுடைய மேலாடை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்தபோது உள்ளே மூன்று நாகப்பிஞ்சுகள் சுருண்டு கிடப்பதைக் கண்டு சேடிகள் அலறினர்." வசுதேவனின் கைகளைப்பற்றிக்கொண்டு அவள் சொன்னாள் "தமக்கை இந்தக் கருவை ஈன்று உயிர்தரிப்பாளென நான் நினைக்கவில்லை."

கொடிமண்டபத்தில் அவளுடன் இருந்த வசுதேவன் பெருமூச்சுவிட்டான். "ஆம் நானும் அவ்வண்ணமே அஞ்சுகிறேன். ஆனால் நாகினி அவளை உயிருடன் மீட்டு எனக்களிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாள்" என்றான். "அவளே இவள் உயிருடன் சென்றுவிடுவாளென நான் அஞ்சுகிறேன். அவளுடைய நீலமணி விழிகளை என்னால் ஏறிட்டு நோக்கவே இயலவில்லை. அவள் மானுடப்பெண்தானா என்றே நான் அஞ்சுகிறேன்."

கரு முதிரமுதிர பிருதை தன் குழந்தையைப்பற்றியே பேசத்தொடங்கினாள். நீலமோடிய விழிகளை விழித்து நீலம்பரவிய உதடுகள் துடிக்க அவள் அவன் சூரியனின் மைந்தன் என்றாள். நான் அல்லி. சூரியனைக் கண்டதும் நான் மலர்ந்தேன். அவன் என் புல்லிவட்டத்தில் வந்து அமர்ந்துகொண்டான். இளஞ்சூரியனின் வெம்மையை நான் அறிகிறேன். இந்த பாரதவர்ஷத்தின் அதிபனை நான் கருவுற்றிருக்கிறேன். முத்து கருக்கொண்ட சிப்பியின் வலியை நான் அறிகிறேன். அனலை துப்பப்போகும் எரிமலை என நான் புகைந்து விம்மிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் சொன்னாள்.

பத்துமாதம் தாண்டியும் கரு வெளியே வரவில்லை. "அது ராஜஸகுணம் நிறைந்த தேவபீஜம். வளர்ச்சி முழுமையடைந்த பின்னரே கண்விழிக்கும்" என்று நாகினி சொன்னாள். தேவகி நாகினியிடம் கவலையுடன் "இன்னொரு மருத்துவரை அழைத்து கேட்கலாமா?" என்றாள். "தேவையில்லை. இந்தக்குழந்தை பன்னிரண்டு மாதங்கள் கருவில் இருக்கும். வரும் சித்திரை மாதம் விஷுவ ராசியில் இவன் கருவுற்று முந்நூற்றி அறுபத்தாறுநாட்கள் முழுமையடையும். அன்றே இவன் பிறப்பான்" என்றாள் நாகினி.

நாகபுராணங்களின்படி அனைத்து தேவர்களுக்கும் நாகங்கள் பிறந்தன. வருணனுக்கு கருணைகொண்ட நீர்ப்பாம்புகளும், அக்னிக்கு எரிதழல்போன்ற கோதுமைநாகங்களும், இந்திரனுக்கு பல்கிப்பெருகும் கருநாகங்களும், வாயுவுக்கு வல்லமைகொண்ட மலைப்பாம்புகளும் பிறந்தன. யமனுக்கு காத்துக்கிடக்கும் கட்டு விரியன்கள் பிறந்தன. விருஷ்டி தேவிக்கு பச்சைப்பாம்புகள் பிறந்தன. பூமாதேவிக்கு மண்ணுள்ளிப்பாம்புகள் பிறந்தன. விண்ணகதேவர்களின் அரசனான சூரியனுக்குப் பிறந்தது ராஜநாகம்.

சூரியன் பிறதேவர்களின் ஆற்றல்களை எல்லாம் தனக்கென எடுத்துக்கொள்பவன். வருணனின் கடல்களை அவன் உண்கிறான். அக்னியின் வெந்நெருப்பை தன் தழல்களாக்கிக் கொள்கிறான். இந்திரனின் மேகங்களை தன் சாமரங்களாகக் கொண்டிருக்கிறான். வாயுவின் ஆற்றலை தன் விளையாட்டுக்கருவியாக கையாள்கிறான். பூமியில் தன் கருவைப் பொழிந்து வளர்க்கிறான். சூரியனின் மைந்தனான ராஜநாகமும் தனக்கு எந்த ஆற்றல் தேவையோ அந்தப் பாம்பைப் பிடித்து உண்கிறது. ஆகவே அதை நாகசூரியன் என்று வழிபடுகின்றனர் நாகர்கள் என்றாள் நாகினி.

பிறக்கவிருக்கும் சூரியனின் மைந்தனுக்காக நாகங்களின் அரசன் காவலிருக்கிறான். என்றும் சூரியமைந்தனின் பின்னால் நாகங்களின் காவல் இருந்துகொண்டே இருக்கும். அவன் கண்களில் கூர்மையாகவும் அவன் கைகளில் விரைவாகவும் அவன் நாவில் விஷமாகவும் அவை திகழும். போர்களில் அவன் இடக்கையில் வில்லாகவும் வலக்கையில் அம்பாகவும் அவை இருக்கும். நாகபாசன் என்றே அவன் அழைக்கப்படுவான் என்று நாகினி குறியுரைசெய்தாள்.

அவள் சொன்னதைப்போலவே பன்னிரண்டுமாதங்கள் நிறைந்தபின் சித்திரை மாதம் வளர்பிறை முதல்நாள் மகம் விண்ணொளிநாளில் அதிகாலை முதல்கதிர் எழும் நேரத்தில் பிருதை மைந்தனைப்பெற்றாள். முந்தையநாள் மாலையே பிருதைக்கு கருவலி கண்டது. அவள் தன் வயிற்றுக்குள் நெருப்புத்தழல்கள் கொந்தளிப்பதாக உணர்ந்தாள். வேல்கள் தன் தசைகளைக் கிழிப்பதையும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி உரசிக்கொள்வதையும் அறிந்தாள். வலி தாளாமல் அவள் கைகளால் மஞ்சத்தை அறைந்துகொண்டு கழுத்துநரம்புகள் புடைக்க வீரிட்டலறினாள். அவளுடைய கண்ணீர் தோள்களிலும் முலைகளிலும் சொட்டியது.

இரவெல்லாம் அவளுடைய அலறல் கன்னிமாடத்தை நிறைத்திருந்தது. அவள் இறப்பது உறுதி என எண்ணிய அரண்மனை மகளிர் அதை இறப்பின் ஓலமென்றே எண்ணினர். ஆகவே அவள் அழுகை நின்றபோது அவள் இறந்துவிட்டாளென எண்ணி வாய்பொத்தி கண்ணீர் விட்டனர். குழந்தையின் அழுகையும் ஒலிக்கவில்லை. தேவகி அழுதபடி ஈற்றறைக்கு வெளியே நிலத்தில் அமர்ந்துவிட்டாள்.

முதுநாகினி மட்டுமே ஈற்றறைக்குள் இருந்தாள். கரியநிறமும் சுருள்குழலும் கொண்ட குழந்தை இரண்டு முழநீளமிருந்தது. அதை நாகினியே கையில் எடுத்து பிருதைக்குக் காட்டினாள். வலியால் சித்தமழிந்து கிடந்த பிருதை மயக்கு நிறைந்த விழிகளால் குழந்தையை நோக்கி மெல்லிய குரலில் "ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறான்?" என்று மட்டும் கேட்டாள். அவள்மேல் குளிர்ந்த நீல நீரலைகள் பரவிச்செல்வதாக உணர்ந்தாள். அதில் மூழ்கி மூழ்கி தன்னை இழந்தாள்.

குழந்தை அழவில்லை. ஆனால் நெய்யில் எரியும் தழல்போல உயிர்த்துடிப்புடன் நெளிந்தது. தன் சிவந்த சிறிய கைகளை இறுகப்பற்றி ஆட்டிக்கொண்டு கருவிழிகளை விழித்து உதடுகளைக் குவித்து அவளைப்பார்த்தது. நாகினி அந்தக் குழந்தையை கீழே தாழ்த்தியபோது தரையில் அவளுடைய இடையளவு உயரத்துக்கு பத்தி விரித்து நின்றிருந்த ராஜநாகம் தெரிந்தது என்றும் அவள் குழந்தையை அதற்குக் காட்டினாள் என்றும் ஒளிந்து நோக்கிய தாதி சொன்னாள். நாகம் மும்முறை நிலத்தைக் கொத்தி ஆணையிட்டபின் திரும்பி எண்ணை ஓடை போல வழிந்து மறைந்தது என்றாள்.

தன் முலையுண்டுகொண்டிருந்த குழந்தையை பிருதை உணரவேயில்லை. அவள் ஈன்றதன் சோர்வில் மூன்றுநாட்கள் துயின்றபடியே இருந்தாள். அவள் உடலில் இருந்த நீலத்தை முழுக்க குழந்தை உறிஞ்சி உண்டது என்றனர் சேடிகள். அவன் முலையுண்ணும்தோறும் பிருதை வெளுத்து உயிர்க்குருதியின் நிறத்தை அடைந்தாள். நாகினி அவளுடைய விழுத்துணிகளை கொண்டுசென்று நாகதிசையில் எரித்துவிடவேண்டுமென ஆணையிட்டிருந்தாள். அந்தத் துணிகளுடன் எரிக்கச்சென்ற சேடியர் புதர்களின் அடியில் நீரோடைகள் ஓடிவரும் ஒலியைக் கேட்டனர். துணிகள் எரியும்போது புதர்களின் அடியிலும் இலைகளிலும் மரங்கள்மேலும் நீரோடைகளிலும் அனைத்து குலங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாம்புகள் தலைதூக்கி அவ்வெரிதலை நோக்கியிருக்கக் கண்டதாகச் சொன்னார்கள்.

குழந்தை பிறந்த செய்தியை வசுதேவனுக்கு தூதர்கள் அறிவித்தனர். வசுதேவன் அஷ்டவிருட்சம் என்னும் கிராமத்தில் இருந்த சதானீகர் என்ற மூத்த நிமித்திகரை தூதர்களை அனுப்பி வரவழைத்தான். அரண்மனைக்கு வந்த சதானீகரை தன் அறைக்குள் அமரச்செய்து கதவை மூடிவிட்டு குழந்தை பிறந்த வேளையையும் குழந்தையின் உடலில் இருந்து எடுத்த மூன்று இழை முடியையும் நிமித்திகரிடம் அளித்தான். பல்லாயிரம் பிறக்குநிமித்தங்களைக் கண்டு சலித்த முதியவிழிகளுடன் வேளை குறிக்கப்பட்ட ஓலையை நோக்கிய சதானீகர் திடுக்கிட்டு எழுந்தார்.

"இந்த வேளையா? இதுவேதானா?" என்றார். "ஆம்... இதுதான்" என்றான் வசுதேவன். சதானீகர் திகைப்புடன் அந்த ஓலையை மீண்டும் மீண்டும் பார்த்தார். பிறகு நடுங்கும் கைகளுடன் அந்த முடிச்சுருளை எடுத்து தன் கண்ணருகே கொண்டுசென்று நோக்கினார். அதை தன் நெஞ்சுடன் சேர்த்துவைத்து கண்களை மூடி நடுங்கும் உதடுகளும் அதிரும் இமைகளுமாக சிலகணங்கள் அமர்ந்திருந்தார். விழித்து பரவசத்துடன் எழுந்துகொண்டு அகவிரைவு கூடிய சொற்களில் சொன்னார்.

”அமைச்சரே, இவன் கதிரவன்மைந்தன். பரிதிதெய்வம் சித்திரை விஷுவராசியில் அதிஉச்சத்தில் இருக்கும்போது மிகச்சரியாக புலரிக்கணத்தில் பிறந்திருக்கிறான்... இப்படி ஒரு பிறப்பு அரிதிலும் அரிதென்று நிமித்திகநூல் சொல்கிறது. நூல்வகுத்தபடி நோக்கினால் இவனை சூரியனின் நேர்மைந்தன் என்றே சொல்லவேண்டும்... கதிரோன்ஒளி இவனிடம் இருக்கும்... வெய்யோன்மறம் இவன் தோள்களில் இருக்கும்... இவன் மாமனிதன்... வரலாறே இவனைப்பற்றி பேசும்.. யாதவரே, மானுடகுலங்கள் பிறந்து பிறந்து அழியும்...பேரரசுகள் துகள்களாக தூசாகி மறையும். நாம் காணும் இந்த மலைகள்கூட ஒருவேளை கரைந்து காற்றாகலாம்...இவன் புகழ் அழியாமல் நிற்கும்...தலைமுறை தலைமுறையாகப் பிறந்துவரும் இந்த மண்ணின் குடிகளெல்லாம் இவனை அறிந்திருப்பார்கள். இவனையறியாதோர் இனி பாரதவர்ஷத்தில் வாழப்போவதில்லை."

வசுதேவன் அதைக்கேட்டு திகைப்பையும் பின்பு ஆழ்ந்த அச்சத்தையும்தான் அடைந்தான். "சதானீகரே, தாங்கள் சொல்வது மிகையாக உள்ளது. இவன் பிறந்திருப்பது எளிய யாதவகுலத்தில். எங்கள் குலமோ இன்று மல்லிடும் மதயானைகள் நடுவே வாழும் மான்கூட்டம் போல அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது" என்றான்.

சதானீகர் "அமைச்சரே, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள். நிமித்திக நூல்களின்படி சூரியன் புஷ்கரத்தீவுக்கு நடுவே வானத்தில் ஏழுவண்ணமுள்ள ஒளியாலான குதிரைகள் இழுக்க ரதமோட்டிச் செல்கிறான். அப்போது இந்த பூமியின் மூன்றில் ஒருபங்கை அவன் ஒளியால் நிறைக்கிறான். மூன்றில் ஒருபங்கில் அந்தியும் காலையும் நிகழ்கிறது. மூன்றில் ஒருபங்கு இருளில் இருக்கிறது. இந்த மூன்று பங்கும் ஒருபோதும் சமமாக இருப்பதில்லை..." என்றார்.

தன் கையிலிருந்த வெண்சுண்ணக்கட்டியால் தரையில் கோடிழுத்து சதானீகர் விளக்கினார் "உத்தராயணத்தில் வடக்குப்பகுதியில் பகல் அதிகம். தட்சிணாயணத்தில் தெற்குப்பகுதியில் பகல் அதிகம். நடுவே விஷுவராசியில் சூரியன் வரும்போது மட்டும்தான் இவை மூன்றும் சரிசமமாக இருக்கின்றன... கணக்குப்படி பார்த்தால் அந்தச் சமநிலை அரைக்கால் கணம்தான் நீடிக்கும். நிகழ்ந்ததுமே அச்சமநிலை தவற ஆரம்பித்துவிடும். கதிரோன் தன் நிலைகோட்டில் இருந்து விலகிவிடுவான்... அந்தச் சரியான கணத்தில் இவன் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது..."

கைகளை விரித்து கண்கள் வியப்பில் உறைந்திருக்க உரத்தகுரலில் சதானீகர் கூவினார் "இது அற்புதம்... நினைக்கமுடியாத அற்புதம்... இவன் சூரியனின் நெஞ்சுக்குரிய மைந்தன்... ஐயமே இல்லை."

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 9 ]

மதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். "இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்" என்றான் தூதன். "அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை."

உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி ரதத்தில் கம்சனின் மாளிகையான தருணவனத்துக்குச் சென்றான். அடர்ந்த மரங்களுக்கு நடுவே செவ்வண்ணக் கற்களால் கட்டப்பட்ட மரப்பட்டைக்கூரைகொண்ட மாளிகை கலிங்க யவன வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. மாளிகை வாயிலிலேயே கம்சன் வசுதேவனை எதிர்கொண்டான். கொழுத்த பெரிய கரங்களை விரித்தபடி ஓடிவந்து அவனை எதிர்கொண்டான். அவன் கைகளைப்பற்றியபடி ‘வருக’ என்று அழைத்துச்சென்றான்.

தன் மதிசூழறையில் கதவுகளை மூடிவிட்டு வசுதேவனை சாய்வு மஞ்சத்தில் அமர்த்தி எதிரே அமர்ந்துகொண்டான் கம்சன். "வசுதேவரே...தாங்கள் இதற்குள் அறிந்திருப்பீர்கள்" என்று நேரடியாகவே தொடங்கினான். "சென்ற சிலநாட்களாகவே தந்தையின் உடல்நிலை சீர்கெட்டு வருகிறது. நேற்று அவர் குருதி உமிழ்ந்திருக்கிறார். அவரது மூச்சுப்பைகளுக்குள் குருதி இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்" என்றான். பரபரப்புடன் தன் தொடைகளைத் தட்டியபடி "அவருக்கு முதுமைவந்துவிட்டது. சென்ற சில ஆண்டுகளாகவே அவரால் நடமாடவும் முடியவில்லை" என்றான்.

உக்ரசேனர் நோயுற்றிருப்பதை வசுதேவன் அறிந்திருந்தான். முந்தையநாள் மதியம்கூட அரண்மனைக்குச் சென்று நோயின் செய்திகளை மருத்துவர்கள் குறித்து அளித்த ஓலைகளை வாசித்து தன் ஆணைகளுடன் ஓலைநாயகத்திடம் அளித்து அரண்மனை ஓலைக்காப்புகளில் வைக்கச்சொல்லிவிட்டு வந்திருந்தான். ஆனால் மாலையானதும் பிருதை ஈற்றுநோவு கொண்டிருப்பதை புறா வழியாக அறிந்தான். இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணி அக்கவலையிலேயே மூழ்கியிருந்தான். புறாக்கள் அவன் அரண்மனைக்கும் உத்தரமதுராவுக்கும் பறந்துகொண்டிருந்தன. குழந்தைபிறந்த செய்தி விடியலில் வந்ததுமே நிமித்திகரை கூட்டிவரச்சொல்லி பிறப்புநிமித்தங்களைக் கேட்டறிந்தான். அதன்பின்னரே குளிக்கச்சென்றான்.

கம்சன் "நான் அரண்மனையில் இருந்தேன். நேற்று மாலையிலேயே எனக்கு செய்திவந்துவிட்டது. அரண்மனையில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் பிறகு உணர்ந்துகொண்டேன். அரசனின் இறுதிக்காலத்தில் அமைச்சனின் பணிகள் மிகுந்துவிடுகின்றன என்று. நீங்கள் இரவெல்லாம் புறாக்களை அனுப்பிக்கொண்டிருந்ததையும் துயிலாமல் அறைக்குள் உலவிக்கொண்டிருந்ததையும் என் ஒற்றன் சொன்னான். ஆவன அனைத்தையும் செய்துவிட்டீர்கள் என நான் அமைதிகொண்டேன்" என்றான். "நான் அரசு ஏற்கும் நாள் நெருங்கிவிட்டதென்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். தந்தை இன்று மதியத்தைத் தாண்டுவது கடினம்."

"ஆம் அதை நான் நேற்றே அறிந்தேன்" என்றான் வசுதேவன். கம்சன் தன் தொடைகளைத் தட்டியபடி "நேற்று என் ஒற்றர்கள் இன்னொரு செய்தியையும் அளித்தனர். நேற்றிரவெல்லாம் உத்தரமதுராவின் அரண்மனையில் இருந்து புறாக்கள் சென்றுகொண்டே இருந்திருக்கின்றன. நள்ளிரவுக்குமேல் பத்துமுறை புரவிகளும் ரதங்களும் அரண்மனைக்கு வந்திருக்கின்றன. அங்கே என்ன நடக்கிறது?" என்றான். வசுதேவன் இமைக்காத விழிகளுடன் அவன் சொல்லப்போவதைக் காத்துநின்றான்.

கம்சன் "வசுதேவரே, எனக்கும் என் சிறியதந்தைக்கும் நல்லுறவில்லை என நீங்கள் அறிவீர்கள். தேவகர் என்னை கல்வியறிவற்ற மூடன் என்றும் முரடன் என்றும் எண்ணுகிறார். தன் சபையில் பலமுறை அதைச் சொல்லியிருக்கிறார் என்றும் நானறிவேன். அவர் சென்ற முப்பதாண்டுகளாக உத்தரமதுராபுரியை ஆட்சி செய்துவருகிறார். மதுராபுரியின் அரசை ஆள என்னை விட அவருக்கே ஆற்றல் உள்ளது என்ற எண்ணமும் கொண்டிருக்கிறார்" என்றான். "என் தந்தையின் மறைவுக்குப்பின் மதுராபுரியை வென்று யாதவ அரசைக் கைப்பற்ற அவர் முயலப்போகிறாரா என்ற ஐயம் எனக்கிருக்கிறது."

"அவர் அப்படி எண்ணக்கூடுமென நான் நினைக்கவில்லை. மதுராபுரியின் இளவரசராக நீங்கள் மாமன்னர் உக்ரசேனராலேயே பட்டம்கட்டப்பட்டிருக்கிறீர்கள். அந்த பட்டம்சூட்டுவிழாவிலும் கூட தேவகர் கலந்துகொண்டிருக்கிறார்" என்று வசுதேவன் சொன்னான். ஆனால் கம்சன் சொல்லும்போதே தேவகருக்கு அந்த எண்ணம் இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

"நீங்கள் என் சிறியதந்தையின் அறவுணர்ச்சியை நம்புகிறீர்கள் அமைச்சரே. நான் அவரது இரு தம்பியருடைய அதிகார விருப்பை ஐயுறுகிறேன். உபதேவனும் சுதேவனும் இந்தச்சின்னஞ்சிறிய உத்தரமதுராபுரியின் ஆட்சிக்குள் அடங்குபவர்கள் அல்ல. அவர்களுக்கு இன்றிருப்பது ஆக்னேயபதத்தின் சாலைகளில் ஒன்றின்மீதான ஆட்சியுரிமை மட்டுமே. தேவகர் மதுராபுரியை கைப்பற்றினாரென்றால் அவர்கள் சிற்றரசர்களாக எழமுடியும்."

"ஆம், அந்த வாய்ப்பும் உள்ளது" என்றான் வசுதேவன். "நான் சொல்கிறேன்... தேவகரின் திட்டங்கள் என்னவென்று நான் சொல்கிறேன்" என கைகளை விரித்துக்கூவினான் கம்சன். "வசுதேவரே, நாம் தொன்மையான யாதவர் குடி. நமக்கிருப்பது தாய்முறை மரபுரிமை. இங்கே அரசு என்பது உண்மையில் பெண்களுக்குரியது. ஹேகய மன்னரின் காலகட்டம் வரை அவ்வழக்கமே இருந்தது. பெண்ணின் காவலனாக பெண்ணின் மூத்த தமையன் நடைமுறை ஆட்சியை நடத்துவான். கார்த்தவீரியர் காலகட்டத்தில் அவர் ஆட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். தன்னை ஷத்ரிய மன்னராக அறிவித்துக்கொண்டார். அதன்பின் மதுராபுரி மட்டும் தன்னை ஷத்ரிய அரசாக அறிவித்துக்கொண்டு ஷத்ரிய முறையை கடைப்பிடிக்கிறது. மார்த்திகாவதியில் இன்னமும்கூட பெண்முறை அரசுரிமைதான். ஆகவேதான் அவர்கள் பெண்ணை தத்தெடுத்தார்கள்."

அச்செய்திகள் அனேகமாக முந்தையநாள் இரவில்தான் கம்சனின் மனதுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் என வசுதேவன் உய்த்துக்கொண்டான். அது யாரால் செய்யப்பட்டதென்றும் அவனுக்குத் தெரிந்தது. பெருமூச்சுடன் "இதெல்லாம் நானறிந்தவையே" என்றான். "ஆம் அதை நானும் அறிவேன். ஒரு தெளிவுக்காக சொல்லிக்கொள்கிறேன்" என்றான் கம்சன். "இன்னமும் கூட யாதவர்குடிகளில் சடங்குகளுக்கு அன்னையரையே அரசிகளாக முன்னிறுத்துகிறார்கள். அவர்களின் வழியையே மரபுரிமைக்கு கணக்கிடுகிறார்கள்."

"ஆம்" என்றபோது அவனை அறியாமலேயே வசுதேவன் குரலில் சலிப்பைக் காட்டிவிட்டான். கம்சன் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. எழுச்சியுடன் உரத்த குரலில் "நன்றாக சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே. என் தந்தைக்கு ஒரு தமக்கை இருந்தாள். அவள் பெயர் காளிகை. அவளுக்குத்தான் யாதவ முறைப்படி இவ்வரசுக்கு உரிமை. அவள் இளமையிலேயே மறைந்தபோது அவள் மைந்தன் அஜனுக்கு என் தங்கை ரஜதகீர்த்தியை மணம் புரிந்துகொடுத்தார் என் தந்தை...ஏன் தெரியுமல்லவா?"

வசுதேவன் தலையை அசைத்தான். கம்சனின் மனம் ஓடும் வழி அவனுக்குத் தெளிவாகிவிட்டது. "ஏனென்றால் என் தந்தை அறிந்திருந்தார். இவ்வரசு உண்மையில் அவரது மருகனான அஜனுக்குரியது. அஜன் அரசைக்கோரி யாதவர்களை திரட்டமுடியும். ஆகவேதான் அவனுக்கு என் தங்கையை மணம் முடித்துக்கொடுத்தார்."

கம்சன் சொன்னான் "அஜன் சிறுவயதிலிருந்தே என் சிறியதந்தையின் வளர்ப்பில் உத்தரமதுராபுரியில் வாழ்கிறான். இளமையிலேயே அவனை நான் வெறுத்தேன். அவனுடைய கோழைத்தனம் எனக்குப்பிடிக்கவில்லை. வாழைபோல வெளுத்து குளிர்ந்த அவன் உடல் எனக்கு குமட்டலை உருவாக்கியது. அவனை இளவயதில் ஓடும்ரதத்தில் இருந்து நான் கீழே தள்ளிவிட்டேன். தேர்ச்சக்கரத்தில் விழுந்து அவன் இறப்பான் என எண்ணினேன். ஆனால் கால் முறிந்ததுடன் தப்பிவிட்டான். ஊனமுற்ற அவனை என் சிறிய தந்தை அழைத்துக்கொண்டு சென்றார். அவனுக்கு என் மேல் வெறுப்பு இருக்கும். இந்த அரசு முறைப்படி அவனுக்குரியது என்று அவனிடம் சொல்லப்பட்டிருக்கும்…ஐயமே இல்லை."

"ஆனால் சென்ற ஏழு தலைமுறைக்கும் மேலாக மதுராபுரியின் முறைமைகள் எல்லாமே ஷத்ரியர்களுக்குரியவை. தந்தைமுறையில்தான் இங்கே அரசுரிமை கைமாறுகிறது" என்று வசுதேவன் சலிப்புடன் சொன்னான். கம்சனின் உடலசைவுகளை அவன் உள்ளம் முதல்முறையாக அகவிலக்குடன் பார்த்தது. கொழுத்த பெரிய உடல். தசையுருளை போன்று அசையும் கைகள். ஒவ்வொரு எண்ணம் உருவாகும்போதும் எழுந்தும் அமர்ந்தும், தொடைகளை வேகமாக ஆட்டியும், ஏளனத்துடன் வாயைக்கோணலாக்கி சிரித்தும், உதட்டோரங்களில் எச்சில் நுரைக்க அவன் பேசும் முறை.

"ஆம், ஆனால் இதுவரை மதுராபுரி யாதவர்களை நம்பி இல்லை. சுங்கச்செல்வத்தையும் கலிங்கப்படைகளையும் நம்பி இருந்தது. மகதத்துக்கு நாம் அளிக்கும் கப்பமே நம்மை நிலைநிறுத்திவந்தது. இதுவரை மதுராபுரிக்குள் உரிமைக்கான பூசலும் எழுந்ததில்லை. இன்று அப்படி அல்ல. இன்று நாம் யாதவகுலங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்களின் விருப்பு நம் அரசியலை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம்." கம்சன் மீண்டும் தொடையைத் தட்டியபடி உரக்கக் கூவினான். "யாதவமுறைப்படி இவ்வரசு எவருடையது? காளிகைக்கும் அஜனுக்கும் உரியது. அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி என் சிறியதந்தை அரசைக்கோரினால் நான் என்ன செய்யமுடியும்?"

வசுதேவன் பேசுவதற்குள் கம்சன் தொடர்ந்தான். "என் சிறியதந்தைக்கு ஏழு மகள்கள். தேவகி, சிருததேவி, சாந்திதேவி, உபதேவி, ஸ்ரீதேவி, தேவரக்ஷிதை, சகதேவி என்னும் ஏழு பெண்களையும் சப்தகன்னியர் என்று சூதர்கள் பாடிப்பாடி பாரதவர்ஷம் எங்கும் புகழ்பரப்பியிருக்கிறார்கள். தேவகியை மகதத்தின் பிருகத்ரதனுக்கு மனைவியாகக் கொடுக்க தேவகர் தூதனுப்பியிருக்கிறார். அந்தச் செய்தியை ஒற்றர்கள் கொண்டுவந்தனர். பிறபெண்களை வங்கனுக்கும் அங்கனுக்கும் கோசலனுக்கும் கேகயனுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஏதேனும் இரண்டு மணம் நிகழ்ந்தால்கூட தேவகரின் அரசியல் விருப்பங்களை எவராலும் கட்டுப்படுத்த இயலாது."

கம்சன் அந்தச்செய்திகளால் கவலைகொண்டிருப்பதாக அப்போது வசுதேவனுக்குத் தோன்றவில்லை. அச்செய்திகளை தன்னால் தொகுத்துப் புரிந்துகொண்டு முன்வைக்கமுடிவதைப்பற்றிய அக எழுச்சியே அவனிடமிருந்தது. சொல்வது வழியாக அவன் அவ்வெண்ணங்களை மேலும் தெளிவாக்கிக் கொள்கிறான் என்று பட்டது. அத்துடன் அத்தகைய ஓர் இக்கட்டு அவனுள் தெளிவில்லாத ஒரு உவகையை நிறைப்பதாகவும் தோன்றியது.

இக்கட்டுகள் மனிதர்களின் அறியாத ஆற்றல்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவ்வாற்றல்களை தங்களில் தாங்களே உணரும்போது அவர்கள் களிப்படைகிறார்கள். ஆகவேதான் மனிதர்கள் வீரச்செயல்களில் இறங்குகிறார்கள். இடுக்கண்களை விரும்புகிறார்கள். கம்சனின் உள்ளம் இந்த இக்கட்டில் அவனுடைய சூழ்ச்சித்திறனை கண்டுகொண்டிருக்கிறது. ஆனால் அதுமட்டும் அல்ல. அவனில் தெரிவது வேறொன்று.

"அத்துடன் இன்னொரு செய்தியும் உள்ளது" என்று கம்சன் சொன்னான். "தேவகர் தன் தம்பி சுதேவனுக்கு உங்கள் தங்கை பிருதையை மணமகளாகக் கோரியிருக்கிறார். குந்திபோஜனுக்கு தூது அனுப்பப்பட்டிருக்கிறது." கம்சனின் சிறிய கண்கள் ஒளியுடன் இடுங்கின. "அதை உடனடியாக என் ஒற்றர்கள் என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள்." பிருதை என்ற சொல் காதில் விழுந்ததும் தன் உடலில் உருவான மிகச்சிறிய அசைவை அது நிகழ்ந்ததுமே உணர்ந்தான் வசுதேவன்.

அதைவெல்ல உருவாக்கிக் கொண்ட சலிப்புடன் "இளவரசே, இவையனைத்துமே பழைய செய்திகள். இவற்றை நான் நன்கறிவேன். மகள்களைப் பெற்ற அரசன் அவர்களுக்கு மணமகன் தேடுவதும் சரி இளவரசியர் இருக்கும் செய்தியறிந்து மகள்கொடைகேட்டு செய்தியனுப்புவதும் சரி ஒவ்வொருநாளும் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவை" என்றான். "நாம் ஐயங்களை உருவாக்கிக்கொண்டால் நம்மைச்சுற்றி வெறும் சதிகளை மட்டுமே காண்போம். அரசன் தேவையற்ற ஐயங்களை உருவாக்கலாகாது. அரசன் நம்பவேண்டும், அமைச்சன் ஐயப்படவேண்டும், அதுவே அரசமுறை என்கிறது சுக்ரதர்மம்."

"நான் மூடன் அல்ல" என்றான் கம்சன். உரத்தகுரலில் "நான் அறிவேன்...இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை நான் நன்றாகவே அறிவேன். தேவகரின் எண்ணம் இதுதான். அவர் குந்திபோஜரின் உறவையும் பிற யாதவர்களின் ஆதரவையும் நாடுகிறார். அவற்றைக்கொண்டு மதுராபுரியைக் கைப்பற்ற எண்ணுகிறார். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை" என்றான்.

அப்போது கம்சனின் விழிகளைப்பார்த்தபோது தன் நெஞ்சுக்குள் ஓர் அசைவை உணர்ந்தான் வசுதேவன். ஆலமரத்தை விதையாகக் காண்பதுபோல ஏதோ அங்கே தெரிந்தது. ஒரு பித்தின் விதையா அது? ஆம். அதுதான். ஆனால் மதுராபுரியின் அரசர்கள் அந்த ஐயத்தையே மஞ்சமாகக் கொண்டுதான் துயிலமுடியும். பன்னிரு தலைமுறைகளுக்கு முன்பு குங்குரர் தன் தமையன் விடூரதனை துரோகத்தால் அகற்றி அந்நகரைக் கைப்பற்றியதுதான் அவர்களில் எந்தக்குழந்தையும் அறியும் முதல் செய்தி. அதிலிருந்து அவர்களுக்கு விடுதலையே இருப்பதில்லை.

உக்ரசேனர் ஒவ்வொருநாளும் தேவகரை அஞ்சிக்கொண்டிருந்தார் என வசுதேவன் அறிந்திருந்தான். உத்தரமதுராபுரியைச் சுற்றி மாபெரும் உளவுவலை ஒன்றை அவர் அமைத்திருந்தார். அது அளித்த செய்திகளைத்தான் கம்சன் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மதியூழ்கை அறியாதவனுக்கு உளவுச்செய்திகளால் எப்பயனும் இல்லை. அவனுடைய அச்சங்களையும் ஐயங்களையும் அவை வளர்க்கும். அவனை மேலும் தனித்தவனாகவும் சமநிலையிழந்தவனாகவும் ஆற்றலற்றவனாகவும் ஆக்கும்.

"ஒரே வழிதான் உள்ளது" என்று கம்சன் சொன்னான். "நான் நேற்றே இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். தந்தையின் உடல்நிலை இழியும்தோறும் என் திட்டங்கள் தெளிவடைந்தபடியே வந்தன." வசுதேவன் "சொல்லுங்கள்" என்றான். கம்சன் "வசுதேவரே, மார்த்திகாவதியின் இளவரசியான பிருதை உங்கள் தங்கை. அவளை நான் மணம் செய்துகொண்டால் அனைத்தும் சீரடைந்துவிடும்" என்றான்.

பிறிதொரு தருணத்தில் என்றால் அவன் வந்துகொண்டிருக்கும் வழியை வசுதேவன் எளிதில் உய்த்துணர்ந்திருப்பான். அப்போது இருந்த அகக்குழைவில் பிருதை உத்தரமதுராபுரியில் இருப்பதை கம்சன் அறிந்துவிட்டானா என்ற துணுக்குறலையே அவன் அடைந்தான். உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமலிருப்பதற்காக தன்முன் பேசிக்கொண்டிருப்பவனின் முகத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வையை ஊன்றிக்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்வது வசுதேவனின் வழக்கம். விழிகளை கம்சனின் இடக்கன்னத்தில் இருந்த கரிய மச்சத்தைவிட்டு விலக்காமல் தலையை அசைத்தான்.

"சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே... எல்லாமே முறைப்பட்டுவிடும். மார்த்திகாவதியின் பகைமை அகலும். விருஷ்ணிகளின் நூற்றெட்டுகுலங்களும் என்னை ஆதரிக்கும். விருஷ்ணிகளும் போஜர்களும் என்னை அரசனாக ஏற்பார்களென்றால் நான் எதற்காக அஞ்சவேண்டும்? சிறியதந்தையும் அவரது மூன்று மைந்தர்களும் என்னைத்தான் அஞ்சவேண்டும்..." அவன் கண்களில் மீண்டும் அந்த அனல் வந்து சென்றது. "அஞ்சியாகவேண்டுமே" என்று சொல்லி நகைத்தான்.

வசுதேவன் தன் சொற்களை அகத்தில் ஓடிய எண்ணங்களின் சிடுக்கில் இருந்து மெல்ல மீட்டு திரட்டிக்கொண்டான். மெல்ல கனைத்தபடி "ஆனால் நாம் மிஞ்சிச்செல்லவேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது இளவரசே" என்றான். "உங்கள் சிறியதந்தையார் என்ன நினைக்கிறார் என்று நாம் இன்னும் அறியவில்லை. நமது ஐயத்தால் நாம் அவரை எதிரியாக்கிக் கொள்ளவேண்டியதில்லை. பொறுத்திருப்போம்..."

"பொறுத்திருந்தால் என் அரசை நான் இழப்பேன். நான் இன்று மாலைக்குள் மார்த்திகாவதியின் முடிவை அறிந்தாகவேண்டும். ஆகவேதான் நான் அதிகாலையிலேயே என் தூதனை மார்த்திகாவதிக்கு அனுப்பிவிட்டேன். அவன் இந்நேரம் குந்திபோஜனை சந்தித்திருப்பான்" என்றான் கம்சன். "உங்களிடம் ஒரு சொல் கேட்கவேண்டுமென எண்ணினேன். ஆனால் நீங்கள் பிற பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள். மேலும் நீங்கள் இவ்வெண்ணத்தைக் கேட்டு உவகையை அடைவீர்கள் என்றும் நானறிவேன்" என்றான்.

வசுதேவன் சில கணங்கள் சிந்தித்துவிட்டு முடிவெடுத்து மெல்லியகுரலில் "இளவரசே, நான் தங்களிடம் சிலவற்றைச் சொல்லவேண்டும். தந்தை உடல்நலமில்லாமல் இருக்கையில் தங்கள் வரை அச்செய்தி வரவேண்டியதில்லை என எண்ணினேன்" என்றான். கம்சன் உரக்க "என்னிடம் எதையும் நீங்கள் மறைக்கவேண்டியதில்லை வசுதேவரே" என்றான்.

"பிருதை இங்குதான் இருக்கிறாள்" என்றான் வசுதேவன். "இங்கு என்றால்?" என கம்சன் திகைப்புடன் கேட்டான். "உத்தர மதுராபுரியில்." சிலகணங்கள் இமையாமல் இருந்த கம்சன் பாய்ந்து எழுந்து "என்ன சொல்கிறீர்கள்? உத்தர மதுராபுரியிலா? அப்படியென்றால் தேவகர் மார்த்திகாவதியின் இளவரசியை சிறையெடுத்துக்கொண்டுவந்துவிட்டார் இல்லையா? தன் தம்பிக்கு அவளை மணமுடிக்கவிருக்கிறார். யாதவர்களின் பின்துணையை அடைந்து விட்டார். அடுத்ததாக அவர் என் நாட்டைக்கோரப்போகிறார்... வசுதேவரே, இனிமேலும் நாம் வெறுமே இருக்கமுடியாது" என்று கூவினான். "இப்போதே நம் படைகள் கிளம்பட்டும்..."

"மீண்டும் மிஞ்சிச் செல்கிறீர்கள் இளவரசே. பிருதை அங்கே இருப்பது தேவகருக்குத் தெரியாது" என்று வசுதேவன் சொன்னான். "அவளை நான் தேவகரின் முதல்மகளின் கன்னிமாடத்தில் சேர்த்திருக்கிறேன்." கம்சனின் உய்த்துணரும் திறனின் எல்லை தாண்டிவிட்டது என்று வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் சற்றே திறந்த வாயுடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வசுதேவன் விளக்கினான். கம்சன் மெல்ல காற்று பட்ட புதர்போல அசைவு கொண்டு தலையை அசைத்து "நான் ஒன்றுமட்டும் கேட்க விழைகிறேன் வசுதேவரே.... தேவகிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?" என்றான். "தாங்கள் உய்த்துணர்ந்ததுதான் இளவரசே" என்றான் வசுதேவன். கம்சன் அப்போதும் அதை உள்வாங்கிக்கொள்ளவில்லை. வசுதேவன் "இளவரசே, நான் தேவகரின் மகளை மணக்க விழைகிறேன். அவளும் அவ்வண்ணமே எண்ணுகிறாள். அந்த மணம் நிகழ்வது நம் அரசுக்கு மிகவும் நல்லது" என்றான்.

"எப்படி?" என்றான் கம்சன் தலையை சற்றே சரித்து. வசுதேவன் "இளவரசே, அவளை அங்கனுக்கோ கலிங்கனுக்கோ மகதனுக்கோ மணக்கொடை அளிக்கும் அவரது திட்டம் நிகழாதுபோகும். நான் தங்கள் அரசின் அமைச்சனாதலால் அவர் நமக்கு கட்டுப்பட்டாகவேண்டும். தங்கள் அரசின் அமைச்சனான நான் அவளை மணந்தபின்னர் அவள் இளையவர்களை மணக்க ஷத்ரியர்களும் எண்ண மாட்டார்கள்" என்றான்.

கம்சன் முகம் மலர்ந்தது. "ஆம். சிறந்த திட்டம். வசுதேவரே நீங்கள் என் தங்கையை மணக்கவேண்டும். நான் உங்களுடன் இருப்பேன். மதுராபுரியின் அனைத்துப்படைகளும் செல்வமும் உங்களைத் துணைக்கும்" என்றான். சிரித்தபடி தன் தொடையை அறைந்து "அத்துடன் என் தங்கையை நீங்கள் மணப்பதுபோல உங்கள் தங்கையை நானும் மணந்துகொள்வது நம்மிடையே ஆழ்ந்த உறவை உருவாக்கும்...அதன்பின் மதுராபுரியை எவரும் நெருங்கமுடியாது."

"ஆனால் என் தங்கை பிருதைக்கு ஒரு மைந்தன் இருக்கிறான்" என்றான் வசுதேவன். கம்சன் உரத்த குரலில் "ஆம், அது சிறந்த செய்தி அல்லவா? யாதவர்களுக்கு மகவுடன் கூடிய பசுவைப்போல மங்கலமானது ஏதுள்ளது? அவனை நான் என் குருதியாக அறிவிக்கிறேன். அவன் என் மைந்தனாக இந்நாட்டை ஆளட்டும்" என்றான்.

வசுதேவன் "இளவரசே நம் குலத்தில் பெண்களின் முடிவே இறுதியானது. நான் பிருதையிடம் அவள் விருப்பமென்ன என்று வினவுகிறேன்" என்றான். "ஆம், அவளிடம் என் சிறப்புகளைச் சொல்லுங்கள். நான் அவளை மதுராபுரியின் அரசியாக்குவேன் என்றும் அவள் புதல்வன் இந்நகரை ஆள்வான் என்றும் சொல்லுங்கள். அத்துடன் உங்கள் நண்பனும் மைத்துனனும் நானே என்று சொல்லுங்கள். அவளால் மறுக்கவியலாது."

வசுதேவன் "ஆம், நானும் அவ்வண்னமே எண்ணுகிறேன்" என்று சொல்லிவிட்டு எழுந்தான். அவனை வாயில் வரை வந்து வழியனுப்பிய கம்சன் "வசுதேவரே, பிருதை அங்கே உத்தரமதுராபுரியில் இருப்பது நல்லதல்ல. அவர்கள் எந்நேரமும் அறியக்கூடும். அவர்கள் அவள் மதிப்பை அறிவார்கள்" என்றான். "இன்று யாதவக்குடிகளிலேயே விலைமதிப்புள்ள பொருள் என்றால் அவள்தான்…"

"ஆம். நான் அவளிடம் பேசுகிறேன்" என்று சொல்லி வசுதேவன் கிளம்பினான். கம்சன் மேலும் சில அடி நடந்து வசுதேவனின் தோளைப்பற்றிக்கொண்டான். "நீங்கள் என்னுடன் இருக்கையில் எனக்கு அச்சமே இல்லை வசுதேவரே..." என்றான். அவன் கண்கள் இடுங்க மீண்டும் அந்த ஒளி வந்தது. "நாம் அந்த நாய்களுக்கு ஷத்ரிய வல்லமை என்றால் என்ன என்று கற்பிப்போம்..."

காலில் சிக்கியது கயிறல்ல பாம்புதான் என்று அறியும் கணம் போல வசுதேவனின் சித்தம் சிலிர்த்தது. கம்சனுக்குள் கொப்பளித்துக்கொண்டிருப்பது உவகைதான் என்று அவன் உணர்ந்தான். கொலைக்காகவும் வதைக்காகவும் அவன் உள்ளம் ஏங்குகிறது!

எத்தனை ஆழத்து உணர்ச்சி அது. அது எழுகையில் மற்ற அனைத்து மானுட உணர்வுகளும் மிகமிக அற்பமானவையாக ஆகிவிடுகின்றன. அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட எவரும் அதை முழுமையாக வென்றுவிடமுடியாது. குலஅறம் அரசஅறம் பேரறம் என்றெல்லாம் அதை கட்டிப்போடலாம். மதவேழத்துக்குச் சங்கிலியிடுவதுபோல. ஆனால் மீறும்போதே வேழம் தன்னை உணர்கிறது, முற்றிலும் வேழமாகிறது. "ஆம் இளவரசே" என்றபடி வசுதேவன் படியிறங்கினான்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 10 ]

அரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார்.

வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். "மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்..." என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். "சொல்லுங்கள்" என்றான் வசுதேவன்.

"இளவரசர் அவசரமுடிவுகளுக்குச் செல்கிறார் அமைச்சரே. மன்னர் உடனடியாக உயிர்துறக்கும் நிலை இல்லை. அவருக்கு இளைப்புநோய் இருக்கிறது. நேற்று அது சற்றே கூடுதலாக ஆகி நுரையீரல் வழியாக குருதி வந்திருக்கிறது. அதை நஸ்யங்கள் வழியாக இன்று கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். பொதுவாக மூச்சுநோய்கள் எவரையும் உடனே கொல்வதில்லை. அவை வதைக்கும், படுக்கவைக்கும், ஆனால் உயிரை பாதிப்பதில்லை."

அதை தான் எதிர்பார்த்திருந்ததை வசுதேவன் உணர்ந்தான். தன் உடலசைவுகளில் உள்ளத்தில் ஓடிய அமைதியின்மை தெரியாமலிருக்க இரு கைகளின் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து அழுத்திக்கொண்டு எதிரே நின்ற பிரபாகரரின் முகத்தையே நோக்கினான்.

"இறந்துவிடுவாரா என்று இளவரசர் நேற்று ஏழெட்டுமுறை கேட்டார். இன்றுகாலை இறந்துவிட்டாரா என்று கேட்டு தூதன் வந்தான். சற்று முன் இறந்ததுமே செய்தியை அறிவிக்கும்படிச் சொல்லி தூதன் வந்திருக்கிறான்" என்றார் பிரபாகரர். "கேலிக்குரியதாகத் தோன்றுகிறது அனைத்தும்...இங்கே எல்லா சேவகர்களும் இதையெல்லாம் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்."

"அது இளவரசரின் பதற்றத்தையே காட்டுகிறது" என்றான் வசுதேவன். "இல்லை அமைச்சரே. அதே வினாவுடன் அமைச்சர் கிருதசோமரின் தூதர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார் பிரபாகரர். "நீங்கள் கிருதசோமரின் சொற்களுக்கு கட்டுப்பட்டவரல்ல. அதை அவருக்குச் சொல்லுங்கள்" என்றான் வசுதேவன். பிரபாகரர் "அதை நான் அவரிடம் சொல்லமுடியாது அமைச்சரே. கிருதசோமர் இப்போது இளவரசரின் அருகிலேயே இருந்துகொண்டிருக்கிறார்" என்றார்.

"மன்னரின் உடல்நிலையை நாழிகைக்கு ஒருமுறை எனக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லிவிட்டு வசுதேவன் கிளம்பியபோது பிரபாகரர் பின்னால் வந்தார். "சொல்லுங்கள்" என்றான் வசுதேவன். "எனக்கு ஐயமாக இருக்கிறது" என்றார் அவர். "என்ன ஐயம்?" என்று கேட்டபோது தன் முதுகில் ஏதோ ஊர்வதுபோல ஓர் நரம்பசைவை வசுதேவன் உணர்ந்தான். "இல்லை... நீங்கள் அரசரிடம் சொல்லுங்கள் அமைச்சரே..." என்று பிரபாகரர் சொல்லி கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

"என்ன?" என்றான் வசுதேவன். "இளவரசர் காட்டும் இந்த அவசரம் அவப்பெயரை உருவாக்கிவிடும்...அவரிடம் சொல்லுங்கள்." வசுதேவன் "சொல்கிறேன்... நீங்கள் உங்கள் கடமையை முறைப்படிச் செய்யுங்கள்" என்றான். கடமையை என்ற சொல்லில் அவன் கொடுத்த அழுத்தத்தை பிரபாகரர் புரிந்துகொண்டதை அவரது இமைச்சுருக்கம் காட்டியது.

திரும்பும் வழியில் வசுதேவன் கிருதசோமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். மறைந்த பேரமைச்சர் கிருதரின் மைந்தர். அவரது முன்னோர்கள் குங்குரரின் காலம் முதலே மதுராபுரியின் பேரமைச்சர்கள். கிருதரின் மூதாதையான சோமகர்தான் குங்குரருக்கு தன் தமையன் விடூரதன் குலத்தை வீழ்த்தி மதுராபுரியின் அரசுரிமையை கைப்பற்றும் வழிகளைக் கற்பித்தவர். யாதவகுலத்தில் எதிர்ப்பை வெல்ல மகதத்துக்கு பெருந்தொகையை கப்பமாகக் கொடுக்கவும் கலிங்கத்து படைகளை ஊதியத்துக்கு அழைத்துவரவும் அவரே வழிகாட்டினார். அன்றுமுதல் மதுராபுரி அவர்களின் ஆணைக்குள்தான் இருந்தது.

உக்ரசேனரின் அவைக்கு வந்த வசுதேவன் அரசு நூல்களை கிருதரிடம்தான் கற்றுக்கொண்டான். அவனுடன் இணைமாணாக்கனாகவே கிருதரின் மைந்தன் கிருதசோமன் இருந்தான். கம்சனின் அன்பைப்பெற்று வசுதேவன் வளர்ந்தபோது அதை கிருதர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவரது மறைவுக்குப்பின் வசுதேவன் பேரமைச்சனாக ஆகவேண்டுமென கம்சன் சொல்ல உக்ரசேனர் அதை ஏற்றுக்கொண்டபோது கிருதசோமன் சினம் கொண்டான். மதுராபுரிக்கு முதல்முறையாக பிராமணரல்லாத ஒருவர் அமைச்சரானதை அவையின் பிராமணர்கள் அனைவருமே உள்ளூர விரும்பவில்லை என்பதை வசுதேவன் அறிந்திருந்தான். அந்த வெறுப்பும் அச்சமும் நாள்செல்லச்செல்ல கிருதசோமனிடம் முனைகொள்வதையும் கண்டான்.

உக்ரசேனர் நோயில் விழுந்ததும் கம்சனின் உள்ளத்தை ஐயங்களால் நிறைத்து அந்த வழியினூடாக உள்ளே சென்று நிலைகொள்ள கிருதசோமனால் முடிந்திருக்கிறது. அது அவனது முயற்சி மட்டும் அல்ல. அவையின் பிராமணர்கள் அனைவருமே ஏதேனும் வகையில் அதனுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். அவையில் வசுதேவன் பேரமைச்சனாக இருந்தாலும் கருவூலமும் கோட்டைக்காவலும் சுங்கமும் சாலைச்சாவடிகளும் அரண்மனையாட்சியும் கிருதரின் குலத்தைச்சேர்ந்த பிராமணர்களிடமே இருந்தது. அரச சபையில் வசுதேவன் எப்போதும் தனிமைப்படுத்தப்பட்டவனாகவே இருந்தான். மென்மையான இனிய முகமன்களுக்கும் முறைமைச்சொற்களுக்கும் அடியில் பட்டில்பொதிந்த உடைவாள் போல பிறிதொன்று இருந்துகொண்டே இருந்தது.

வசுதேவன் தன் மாளிகைக்கு வந்ததுமே சேவகனிடம் "நான் உடனடியாக உத்தரமதுராபுரிக்குச் செல்லவேண்டும், ரதங்களைப் பூட்டுக" என்று ஆணையிட்டான். தன் அறைக்குள் சென்று ஓலையில் அன்றைய நிகழ்வுகளை எழுதி புறாவின் கால்களில் கட்டி பிருதைக்கு அனுப்பிவிட்டு கீழே வந்தான். அவன் சேவகன் "தங்கள் காலையுணவு" என்று சொன்னதும் அங்கேயே நின்றபடி அவன் தந்த தேனையும் அப்பத்தையும் பழங்களையும் உண்டான். அப்போது வாசலில் வந்து தலைவணங்கிய சேவகன் மார்த்திகாவதியில் இருந்து தூதன் வந்திருப்பதைச் சொன்னான்.

மார்த்திகாவதியில் இருந்து தூதனாக வந்திருந்தவர் துணைஅமைச்சர் ரிஷபர் என்பதைக் கண்டதுமே வசுதேவன் எச்சரிக்கை கொண்டான். அவரை அவன் தலைவணங்குவதை காணாமலிருக்கும்பொருட்டு இருசேவகர்களையும் வெளியே அனுப்பிவிட்டு அவரை வணங்கி முகமன் சொன்னான். அவர் அவனுக்கு ஆசியளித்துவிட்டு "இங்கே பேசலாமா?" என்றார். வசுதேவன் ஆம் என தலையை அசைத்தான்.

"மாமன்னர் குந்திபோஜர் உடனடியாக மார்த்திகாவதியின் இளவரசி குந்தியை அவரது அரண்மனையில் கொண்டுசேர்க்கும்படி ஆணையிட்டிருக்கிறார்" என்றார். வசுதேவன் கண்களுக்குள் நிகழ்ந்த சிறிய அசைவை அக்கணமே வென்று "அவ்வண்ணமே செய்கிறேன்" என்றான். "பிருதை..." என அவன் தொடங்குவதற்குள் ரிஷபர் "அவர் மதுவனத்தில் இல்லை என எனக்குத்தெரியும்" என்றார்.

"ஆம் உத்தமரே, அவள் இப்போது உத்தரமதுராபுரியில் தேவகரின் மகள் தேவகியின் கன்னிமாடத்தில் இருக்கிறாள்" என்றான் வசுதேவன். அது உண்மை என ரிஷபர் உடனே புரிந்துகொள்வார் என்றும் உண்மையுடன் பொய்யை அவன் எப்படிக் கலக்கப்போகிறான் என்பதையே அவர் ஆராய்வாரென்றும் அவன் உணர்ந்தான். "நான் தேவகியிடம் அணுக்கமான உறவுடன் இருக்கிறேன் ரிஷபரே, அவள் பெறும் குழந்தையை பிருதை பேணவேண்டுமென்பதற்காகவே அவளை கன்னிமாடத்துக்குக் கொண்டுவந்தேன்."

சொன்னதுமே ரிஷபர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார் என வசுதேவன் உணர்ந்தான். அவர் அறிந்த செய்திகளுடன் அது சரியாகவே இணைந்துகொண்டுவிட்டது. "சேய் நலமாக உள்ளதல்லவா?" என்ற வினா அவரில் இருந்து எழுந்ததுமே அவர் அங்கே மருத்துவச்சிகள் வந்துசென்றதை அறிந்திருக்கிறார் என்று அவன் அறிந்தான். "ஆம் நலம்" என்று பதில்சொன்னான்.

"அஸ்தினபுரியில் இருந்து ஒரு தூதுவந்திருக்கிறது" என்று ரிஷபர் சொன்னார். அவன் கண்களை பார்த்தபடி "பிருதையை பெண்கேட்டிருக்கிறார்கள்." வசுதேவன் அச்சொற்களை ஒவ்வொன்றாக தன்னுள்ளே மீண்டும் சொல்லிக்கொண்டபின் "யாருக்காக?" என்றான். "அஸ்தினபுரியின் மருமகளாக பிருதையை அளிக்க நாம் ஒப்புக்கொள்கிறோமா என்று மட்டும்தான் கேட்டிருந்தார்கள்" என்றார் ரிஷபர். "அங்குள்ள நிலைமையை வைத்துப்பார்த்தால் அவர்கள் விசித்திரவீரியரின் மைந்தரும் அவர்களின் பேரமைச்சருமான விதுரருக்காகவே நம் பெண்ணைக் கேட்கிறார்கள் என்று எண்ணுகிறேன்."

"குந்திபோஜர் என்ன நினைக்கிறார்?" என்றான் வசுதேவன். "அவர் மகிழ்ச்சியில் திளைக்கிறார். மார்த்திகாவதியின் நலனுக்கு இதைவிடச்சிறந்த வாய்ப்பென ஏதும் வரப்போவதில்லை என எண்ணுகிறார்" என்றார் ரிஷபர். வசுதேவன் "ஆனால் விதுரர் சூதகுலத்தவர் அல்லவா?" என்றான்.

"ஆம். ஆனால் ஷத்ரியர்களின் கண்ணில் நாம் இன்னும் சூத்திரர்கள்தான்" என்றார் ரிஷபர். "நாம் விதுரரின் உதவியுடன் மார்த்திகாவதியை ஒரு வலுவான அரசாக நிலைநாட்டுவோமென்றால் அடுத்த தலைமுறை எவருடைய உதவியுமில்லாமல் ஷத்ரிய பதவியை அடையும். யார் மண்ணைவென்று அதை வைத்துக்கொள்ளவும் வல்லமைகொண்டிருக்கிறானோ அவனே ஷத்ரியன் என்பதே நியதி." அவர் அதைச் சொன்னபாவனையிலேயே அனைத்தையும் இயக்குவது அவரது திட்டங்களே என்று வசுதேவன் உணர்ந்துகொண்டான்.

"குந்திபோஜர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்" என்றார் ரிஷபர். "யாதவர்கள் இன்று பலகுலங்களாகப் பிரிந்து பல அரசுகளாக சிதறிக்கிடப்பதனால்தான் பாரதவர்ஷத்தில் அவர்களுக்கான இடம் உருவாகாமல் இருக்கிறது. அவர்களை ஒருங்கிணைப்பவர் எவரோ அவர் ஐம்பத்தாறு ஷத்ரியமன்னர்களும் ஒதுக்கிவிடமுடியாத வல்லமைகொண்ட ஷத்ரியசக்தியாக எழுவது உறுதி..."

"ஆம்" என்று வசுதேவன் சொன்னான். "ஆனால் அதிலுள்ள இக்கட்டு என்னவென்றால் அப்படி ஒரு புதிய ஷத்ரிய சக்தி எழுவதை ஷத்ரியமன்னர்கள் விரும்புவதில்லை. அதை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும்தான் முயல்வார்கள். அதில் பிழையும் இல்லை. அதுதான் அவர்களுக்குரிய அறம். அதை மீறி எழவேண்டியதே புதிய ஷத்ரிய சக்தியின் அறம். இந்தப்போட்டியை தகுதியுடையது மட்டும் எழுந்துவருவதற்கான ஒரு தேர்வாக வைத்துள்ளது விதி என்று கொள்வதே விவேகமாகும்" என்று ரிஷபர்சொன்னார்.

அவரது கண்களையே வசுதேவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு யாதவ சிற்றரசின் அமைச்சராக இருக்கும் பிராமணனுக்கு என்ன திட்டம் இருக்கமுடியும்? அதை உடனே உய்த்தறிந்து புன்னகையுடன் ரிஷபர் சொன்னார் "நான் பிராமணன். ஷத்ரியர்களின் மோதலும் வெற்றியும் எனக்குரிய களமல்ல. ஆனால் நான் எவருக்காக பணிபுரிகிறேனோ அவர்களுக்காக என் அறிவையும் விவேகத்தையும் முற்றிலுமாகச் செயல்படுத்துவது என் கடமை... அதையே செய்கிறேன்." அவரது புன்னகை விரிந்தது "ஆம், அதன் வழியாக நான் வளர்வேன். என் குலம் வல்லமை பெறும். அதுவும் என் அறமேயாகும்."

வசுதேவன் "அவ்வாறே ஆகுக" என்று வாழ்த்தினான். ரிஷபர் சற்று குனிந்து அவனை நோக்கி "ஒருபோதும் மதுராபுரியை இப்போதிருக்கும் எல்லைகளுக்கு அப்பால் வளர்வதற்கு ஷத்ரியர்கள் விடப்போவதில்லை. அதை உக்ரசேனர் அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் விருஷ்ணிகளையும் போஜர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றார். அவரால் அது முடியவில்லை என்றாலும் மோதல் இல்லாமல் இருக்க முடிந்தது. ஆனால் இனி மதுராபுரியை ஆளப்போகும் மன்னன் மூடன். அவனால் அந்தச் சமநிலையை ஒருபோதும் பேணமுடியாது" என்றார்.

அச்சொற்களை கேளாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டான் வசுதேவன் . ரிஷபர் "மார்த்திகாவதி அஸ்தினபுரியின் பின்பலத்தை அடையுமென்றால் மதுராபுரியை ஒரேநாளில் வென்றுவிடமுடியும்...." என்றபோது அவர் குரல் தாழ்ந்தது. "மதுராபுரியில் மார்த்திகாவதியுடன் குருதியுறவுள்ள ஒரு விருஷ்ணிகுலத்தவர் ஆட்சி செய்யமுடியும் என்றால் யாதவர்களின் வல்லமைகொண்ட முக்குலங்களும் ஒன்றாகிவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் நாம் நமது நிலங்களை எவர் துணையும் இல்லாமல் ஆட்சிசெய்ய முடியும்."

மெல்லிய குரலில் ரிஷபர் தொடர்ந்தார் "ஒருதலைமுறைக்காலம் நாம் எவருக்கும் கப்பம் கட்டாமலிருந்தால் நம்முடைய படைபலமும் செல்வமும் பெருகும்....யாதவமன்னன் ஒருவன் அதற்கடுத்த தலைமுறையில் ஒரு ராஜசூய வேள்வியும் ஒரு அஸ்வமேதவேள்வியும் செய்வானென்றால் பாரதவர்ஷத்தின் அத்தனை ஷத்ரியர்களும் அவனை ஏற்றுக்கொண்டாகவேண்டும்... யார் கண்டார்கள், பெருநியதிகள் ஆணையிடுமென்றால் யாதவர்குலத்துச் சக்கரவர்த்தி ஒருவர் இந்த பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளவும் முடியும்....ஓம் அவ்வாறே ஆகுக ."

ஓடைநீரில் குருதித்துளி கோடாக நீள்வது போல அந்த நீளமான சொற்றொடர்களுக்குள் ஓடிச்சென்ற உட்குறிப்பை வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடியது. மூச்சு கோசங்களுக்குள் அசையாமல் நின்றது. அவன் அதை அழுத்தி வெளிவிடவேண்டியிருந்தது. ஆனால் கண்களை அசைக்காமல் வைத்திருந்தான்.

"அரசுகளும் மன்னர்களும் எப்போதும் விதியால் முடிவெடுக்கப்படுகின்றன யாதவரே. ஆனால் விதி அதை ஒருபோதும் எவர் மடியிலும் கொண்டுசென்று போடுவதில்லை தாவினால் கையெட்டும் தொலைவிலேயே நிற்கச்செய்கிறது. தானிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து தாவாதவர்கள் அதை அடைவதேயில்லை" என்று ரிஷபர் பொதுவாகச் போலச் சொன்னார்.

இயல்பாக வசுதேவன் சிந்தைக்குள் கிருதசோமனின் முகம் மின்னிச்சென்றது. அமைச்சுத்திறனில் அந்தணரை ஒருபோதும் விஞ்சிவிடமுடியாது என்ற எண்ணம் எழுந்தது. ரிஷபர் அங்கே வரும்போது அவர் சொல்லவேண்டிய சொற்களை உருவாக்கிக்கொண்டிருக்கவில்லை. அவனுடைய முகத்தை நோக்கி அக்கணங்களில் அச்சொற்களை சமைத்துக்கொள்கிறார். ஆனால் அவை எங்கே தொடங்கவேண்டுமோ அங்கே தொடங்கின. எங்கே முடியவேண்டுமோ அங்கே முடிந்தன. நேரடியாக முகத்திலறையவில்லை, சுற்றி வளைக்கவுமில்லை. ஆனால் ஆயிரம் பட்டுத்துணிகளுக்கு அப்பால் அவன் அகத்தில் மறைந்துகிடக்கும் வாளை அவர் தொட்டுப்பார்த்துவிட்டார். அவன் பெருமூச்சுவிட்டான்.

"நல்லது உத்தமரே. நான் இன்றே பிருதையை மார்த்திகாவதிக்கு அனுப்புகிறேன்" என்றான் வசுதேவன். "தேவகியை நீங்கள் மணம்கொள்வதும் உகந்ததே" என்று புன்னகையுடன் ரிஷபர் சொன்னார். "ஏனென்றால் உத்தரமதுராவுக்கும் இங்கே ஆட்சியுரிமையில் ஒரு குரல் உள்ளது. உக்ரசேனரின் தங்கைமகன் அஜன் அங்கேதான் இருக்கிறான். உக்ரசேனரின் மகள் ரஜதகீர்த்தியை அவன் மணம்கொண்டிருக்கிறான். தேவகருடைய ஒத்துழைப்பும் நமக்குத்தேவை." வசுதேவன் அவர் கண்களைச் சந்திப்பதை விலக்கி "ஆம்..." என்றான்.

ரிஷபர் வணங்கி வெளியேறினார். வாயில் திறந்ததும் எளிய சூதனைப்போல அவனை வணங்கினார். அவனும் சூதர்களுக்குரிய பரிசிலை அவருக்கு அளித்து வழியனுப்பினான். அவன் தன் உடல் பதறிக்கொண்டே இருப்பதையும் சொற்களனைத்தும் புற்றிலிருந்து எழுந்த ஈசல்கூட்டம் போல சுழன்றுகொண்டே இருப்பதையும் உணர்ந்தான். நிலைகொள்ளாமல் தன் அரண்மனைக்குள் அங்குமிங்கும் நடந்தான். மதுராபுரியின் அரசு. ஏன் கூடாது? இது இன்றும் சூரசேனம் என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்றின் வளையம் திரும்பி வருகிறதா என்ன? வரலாறு ஒரு வனமிருகம். அது பழகிய பாதைகளை விட்டு விலகாது. ஆனால்...

சேவகன் வணங்கி "தேர் ஒருங்கிவிட்டது" என்றான். தலையை அசைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் வசுதேவன். ஆட்டுமஞ்சத்தில் அமர்ந்துகொண்டு காலால் அதை மெல்ல ஆட்டியபடி வெளியே தெரிந்த மரங்களின் இலையசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஆம். சூரசேனம், சூரசேனம் மீண்டு எழுமென்றால் அது நிகழலாம். ‘அது’. அவனுடைய எளிய உடலால் அந்த எழுச்சியைத் தாளமுடியவில்லை. ‘அது..’ வேண்டாம். வேண்டாம். இப்போதே எண்ணவேண்டுமென்பதில்லை...ஆனால்...

வசுதேவன் எழுந்து சேவகனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கலிங்கம் வழியாக வரும் யவனமது எப்போதும் அவன் மாளிகையில் இருக்கும் என்றாலும் அவன் அதை பெரும்பாலும் அருந்துவதில்லை. அதன் வாசனை அழுகிய பூக்களுடையதுபோலத் தோன்றியது. கண்களைமூடிக்கொண்டு அதை முகர்ந்தால் அவனுடைய அகக்கண்ணில் புழுக்களின் நெளிவு தெரியும். ஏதேனும் நிகழ்வுகளால் அகம் கலைந்து இரவில் நெடுநேரம் துயில் வராதிருக்கையில் மட்டும் அவன் அதை அருந்துவான்.

சேவகன் தேன்கலந்த பொன்னிற மதுவை வெள்ளிக்கோப்பையில் கொண்டுவந்தான். அதை ஒரே மிடறாகக் குடித்துவிட்டு சால்வையால் உதடுகளை துடைத்துக்கொண்டான். இருமுறை குமட்டியபோது போதாதென்று தோன்றியது. இன்னொரு முறை கொண்டுவரச்சொல்லி குடித்துவிட்டு ஆட்டுகட்டிலிலேயே அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். ஆம், சிலதருணங்களில் வரலாறு என்பது வெறும் வாய்ப்புகளின் விளையாட்டு. வெறும் வாய்ப்புகள். அதை அளிப்பவை மனிதர்களை பகடைகளாக ஆடவைக்கும் விண்கோள்கள்.

விடூரதன் பெண்களில் ஈடுபட்டிருந்தார். அந்தப்புரத்திலேயே வாழ்ந்தார். மகதத்துக்கான கப்பத்தை ஒவ்வொருமுறையும் தம்பி குங்குரர்தான் முத்திரையிட்டு அனுப்பினார். மகத மன்னனின் அரண்மனைக் கொலுவிழவுக்குச் சென்றிருந்தபோது மகதமன்னன் குங்குரரை ‘மதுராபுரியின் அரசரே’ என்று சபையில் அழைத்தான். அது வரலாற்றின் வாய்ப்பு. வெறும் வாய்ப்பு அது. ‘ஆம், சக்கரவர்த்தி’ என்றார் குங்குரர். வரும் வழியிலேயே விடூரதன் குலம் அரசை இழப்பது முடிவுசெய்யப்பட்டுவிட்டது.  அக்குலம் யமுனைக்கரை காடுகளில் மாடுமேய்த்து அலையும் விதியும்... வாய்ப்புகள் வந்து நிற்கின்றன. ஆனால்...

பளிங்குமீது நீராவி வியர்ப்பதுபோல அவன் சிந்தைகள் ஈரமாகி குளிர்ந்து திரண்டு தயங்கி வழியத்தொடங்கின. அதுவரை நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணித் திரட்டத் தொடங்கினான். ஒன்று அவன் கையில் நின்றபோது நூறு நழுவி வழிந்தன. சரி ஏதாவது ஆகட்டும் என ஆட்டுகட்டிலிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

அவன் ஒரு கொந்தளிக்கும் கரிய நதி வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அவனுடைய படகு மிகச்சிறியதாக ஒரு மரக்கோப்பை அளவுக்கே இருந்தது. அதை அலைகள் தூக்கி வீசிப்பிடித்து விளையாடின. கன்னங்கரிய அலைகள். பளபளக்கும் நீர்ப்பரப்பு. அது நீரல்ல என்று அவன் அறிந்தான். அவை நாகங்களின் உடல்கள். லட்சக்கணக்கான நாகங்கள் அங்கே நதிபோல பின்னி நெளிந்து ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் பத்திகள்தான் அலைகளாக எழுந்துகொண்டிருந்தன. அவற்றின் நாநுனிகள் செந்நிறத்துமிகளாகத் தெறித்தன. அவன் அச்சத்துடன் படகின் விளிம்பைப்பற்றிக்கொண்டான். துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டான்.

கரையில் ஓர் ஆலமரம் தெரிந்தது. அதன் கீழே அவன் அன்னை நின்றுகொண்டிருந்தாள். அவள் கைநீட்டி அவனை அழைத்தாள். அவளருகே சென்று விட அவன் விரும்பினான். ஆனால் அலைகள் அவனை விலக்கி விலக்கிக் கொண்டு சென்றன. அவனுக்கு தாகமெடுத்தது. ஆனல் நதியில் நீரே இல்லை. நாகங்கள். நாகங்களைக் குடிக்கமுடியுமா என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். நாகங்களாலான நதியா? இதென்ன, மண்ணுலகா வானுலகா பாதாளமா? இல்லை இது கனவு. நான் கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன். வெறும்கனவு... கனவென்றால் நான் இப்போது விழித்துக்கொள்ளமுடியும். நீர் அருந்த முடியும். ஆனால் என் அன்னை மறைந்துவிடுவாள். தாகம்...

தாகம் என்ற சொல்லுடன் வசுதேவன் விழித்துக்கொண்டான். ஆட்டுகட்டிலில் அவன் கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தான். உடல் வியர்வையில் நனைந்திருந்தது. எழுந்து சென்று மண்குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்தான். அது யவன மதுவின் இயல்பு. அதை எப்போதெல்லாம் அருந்தினானோ அப்போதெல்லாம் தாகம் தாகம் என்று அவன் அகம் தவித்திருக்கிறது. மீண்டும் ஆட்டுகட்டிலில் அமர்ந்தபோதுதான் என்ன செய்கிறோம் என்ற எண்ணம் வந்தது. உடனே திகைத்து எழுந்து நின்றுவிட்டான்.

சால்வையை அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடிச்சென்று ரதத்தில் ஏறிக்கொண்டான். சாரதியிடம் உத்தரமதுராவுக்குச் செல்ல ஆணையிட்டபின் இருக்கையில் தலையைப்பற்றியபடி அமர்ந்துவிட்டான். தலையின் இருபக்கமும் வலித்தது. இருமுறை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டன். நான் ஒரு எளிய யாதவன். நூல்களைக் கற்றால் மதியூகி ஆகிவிடலாமென எண்ணிக்கொண்ட மூடன். நான் மதியூகி அல்ல. மதியூகியின் அகம் இக்கட்டுகளை உவக்கிறது. இதோ என் களம் என எம்புகிறது. மேலும் மேலும் இக்கட்டுகளுக்காக ஏங்குகிறது. நான் நூல்களில் அனைத்தையும் கற்றவன். உண்மையான இக்கட்டுகளில் என் அகம் திகைத்துவிடுகிறது.

ரதம் கன்னிமாடத்துக்கான சாலையில் ஓடத்தொடங்கியதும் வசுதேவன் அமர்ந்திருக்கமுடியாமல் எழுந்து நின்றுவிட்டான். ஏதோ உள்ளுணர்வால் அவனுக்கு எங்கோ பிழை நிகழ்ந்திருப்பதை அறியமுடிந்தது. பிழை நிகழுமென அறிந்தேதான் மதுவை அருந்தி நேரத்தை கடத்தினேனா என்று கேட்டுக்கொண்டதும் தலையை மீண்டும் அறைந்துகொண்டான். ஒன்றுமில்லை, எல்லாம் என் வீண்சிந்தைகள். ஒன்றும் நிகழ்ந்திருக்காது... ஆனால் ...

கன்னிமாடத்தை அணுகியதுமே அவனுடைய அகம் நீர்பட்ட பால்நுரைபோல அடங்கியது. தன்னைப்பழித்த உள்ளத்துடன் ரதத்தை விட்டு இறங்கி காவலர்கள் முன்பு நின்றான். காவலர்தலைவனிடம் உள்ளே சென்று தேவகியை அவன் பார்க்க விழைவதாகச் சொன்னான். காவலர்தலைவன் முகத்தில் இருந்த ஐயத்தை அவன் தெளிவாகவே கண்டுகொண்டான். "இங்கே யாராவது வந்தார்களா?" என்று அவன் கேட்டான்.

காவலர்தலைவன் தயக்கத்துடன் "ஆம் அமைச்சரே. சற்றுமுன்புதான் தங்கள் ஆணையை தாங்கிவந்த மதுராபுரியின் காவலர் மார்த்திகாவதியின் இளவரசியை அழைத்துச்சென்றார்கள்" என்றான். "மதுராபுரியின் காவலர்களா?" என்று வசுதேவன் கேட்டான். "ஆம், துணைப்படைத்தலைவர் சுபூதரே நேரில் வந்திருந்தார்." வசுதேவன் தன் கால்கள் தளர்வதை உணர்ந்தான். அவனுக்கு அந்த உள்ளுணர்வை அளித்தது எது என அப்போதுதான் புரிந்தது. அரண்மனை முகப்பில் சேற்றுப்பரப்பில் பெரிய வண்டி ஒன்று வந்து சென்ற சக்கரத்தடம் தெரிந்தது. அந்தத் தடம் மதுராபுரியில் இருந்தே பாதையில் இருந்துகொண்டிருந்தது.

[இப்பகுதிக்கான ஓவியம் விரைவில் வலையேற்றப்படும்]

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 11 ]

கூண்டுவண்டியில் ஏறியதும் பிருதை வேறுபாட்டை உணர்ந்தாள். கண்ணாலோ கருத்தாலோ அல்ல, உடலால். குழந்தையை மடிமீது அமர்த்திக்கொண்டபோது அவள் உடல் மெல்லச் சிலிர்த்தது. அது தன் வயிற்றுக்குள் வந்த கணம் முதல் ஒவ்வொரு அசைவையும் வயிற்றின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கையாகவே உடல் அறிந்துகொண்டிருந்தது. அந்த உணர்வு இப்போது கைகளுக்கும் மடிக்கும் வந்துவிட்டது. உடல் அனைத்தையும் கவனிப்பதாக அனைத்துக்கும் அப்பால் சென்று அறிவதாக ஆகிவிட்டிருந்தது.

அவள் அவ்வுணர்வுகளை தன் சிந்தையால் அளைந்தாள். அது அனைத்து அன்னையருக்கும் எழும் சாதாரணமான அச்சவுணர்வுதானா? அனைத்து அரசுசூழ் கல்வியையும் அரசபதவியையும் உதறி அவளுக்குள் இருந்து அன்னை என்னும் தூயமிருகம் வெளிவந்து நாசியையும் செவிகளையும் கண்களையும் மட்டும் தீட்டிக்கொள்கிறதா? சில கணங்களுக்குள்ளேயே அந்த அச்சம் விலகக்கூடியதாக இல்லை என்று அவளுக்குத் தெரிந்தது. திடமான பொருளாக அவள் எண்ணங்கள் மேல் அது அமர்ந்திருந்தது.

அவள் சென்ற வண்டிக்குப்பின்னால் தளகர்த்தரின் ரதம் வந்துகொண்டிருந்தது. அதற்குப்பின்னால் எட்டு வீரர்களும் முன்னால் நான்கு வீரர்களும் வாட்களும் விற்களுமாகச் சென்றனர். வசுதேவன் அழைத்துவரச்சொன்னதாகச் சொல்லி அவனுடைய இலச்சினை கொண்ட ஓலையைக் காட்டி தேவகி சொன்னபோது அவள் அவனே வந்துவிட்டதாகவே எண்ணினாள். கீழிறங்கி வந்து குழந்தையுடன் கன்னிமாடத்து முற்றத்துக்கு வந்தபோதுதான் அவனுக்குப்பதில் தளகர்த்தர் சுபூதர் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

சுபூதர் தலைவணங்கி "மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன். தங்களை உடனடியாக மதுராபுரிக்குக் கொண்டுசெல்லும்படி பேரமைச்சரின் ஆணை" என்றார். "அவர் என்னிடம் சொல்லவில்லையே" என்று பிருதை கேட்டாள். "அவர் அரசருடன் இருக்கிறார். தங்களை மதுராபுரியின் படித்துறைக்கே நேரடியாகக் கொண்டுசெல்லும்படிச் சொன்னார். அங்கிருந்து நேராக மார்த்திகாவதிக்கு படகில் அனுப்பி வைக்கும்படி ஆணை. துறையில் பேரமைச்சர் இருப்பார்." அது அவள் கிளம்பும்போது வந்த புறாச்செய்தியுடன் ஒத்துப்போயிற்று. அவள் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

வண்டிக்குள் இருந்த சேடி "குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி" என்றாள். "இல்லை... குழந்தையின் உடல் சற்று குளிர்ந்திருக்கிறது" என்று பிருதை சொன்னாள். அதைமூடியிருந்த மான்தோல் போர்வையை விலக்கி உள்ளே நோக்கினாள். வேசரத்தின் கரியவைரம் போலிருந்தது குழந்தை. கருமுத்துக்கள் கரியவைரங்கள் மேல் என்றுமே அவள் பெரும் காதல்கொண்டிருந்தாள். கூர்முனைகள் கைகளை அறுத்துவிடுமோ என்பதுபோல. ஒளி அனைத்தையும் தன்னுள் வாங்கிக்கொள்வதுபோல. ஆனால் ஒளியில்லாத இடத்தில் கருவைரம் தன்னுள் இருந்து ஒளியை வெளியே எடுக்கும். கருமை ஒளியாக ஆவதன் விந்தை.

யார் இவன்? பிறந்த பத்து நாட்களுக்குள் அவன் ஒரு புராணக்கதை போல ஆகிவிட்டான். அவனைப்பார்க்க கன்னிமாடத்தின் அனைத்துப் பெண்களும் வந்துகொண்டிருந்தனர். மறைந்திருந்து கண்கள் மலர நோக்கியபின் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றனர். தேவகி சொன்னாள் "என்றோ ஒருநாள் நானும் இப்படி கருஞ்சுடர் போல ஒரு மைந்தனைப் பெற்றெடுப்பேன் அக்கா. என் வயிறு அதைச் சொல்கிறது." சிரித்தபடி அவள் தலைமுடியைத் தொட்டு "அவ்வண்ணமே ஆகுக!" என்று பிருதை வாழ்த்தினாள்.

சேடி கூண்டுக்குள் தலையைச் சாய்த்து கண்மூடியதும் பிருதை கூண்டின் மூங்கில்சுவரை தன் சுட்டுவிரலால் கிழித்து துளை வழியாக வெளியே நோக்கினாள். சுபூதர் நிலைகொள்ளாமல் ரதத்தில் இருப்பதையும் இருபக்கங்களையும் நோக்கிக்கொண்டிருப்பதையும் கண்டாள். கவலையும் எரிச்சலுமாக அவர் கைகளை வீசி ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்களில் ஒருவன் குறைவதை கவனித்தாள். அவன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தவன் என்றும் உணர்ந்தாள். அத்துடன் அவளுக்கு அனைத்தும் உறுதியாகியது.

மதுராபுரியின் இளவரசனைப்பற்றி அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். அவனைப்பற்றிய அச்சமே மார்த்திகாவதியின் அன்றாட அரசியல் பேசுபொருளாக இருந்தது. அவனுடைய விருப்பங்களின் எல்லை என்ன என்பதை அறியாத யாதவர்கள் இல்லை. வசுதேவன் அவனைப்பற்றி அறிந்துகொண்டிருந்ததை விடவும் பிருதை அறிந்துகொண்டிருந்தாள். அல்லது வசுதேவனையே அவள் அவனைவிட நன்றாக அறிந்திருந்தாள்.

ஒருமுறை மார்த்திகாவதியில் யமுனைக்கரையில் உரையாடிக்கொண்டிருந்தபோது வசுதேவன் கம்சனைப்பற்றிச் சொல்லிச் சிரித்தான். பீஷ்மர் வனம்புகுந்த காலம் அது. பீஷ்மர் திரும்பப்போவதில்லை, அவர் துறவியாகிவிட்டார், முன்னரே நைஷ்டிகபிரம்மசாரியாக இருந்தார் என்கிறார்கள், இப்போது நாம் ஒரு படையுடன் கிளம்பிச்சென்றால் ஒரேநாளில் அஸ்தினபுரியை பிடித்துவிடலாம் என்று கம்சன் சொன்னான். யமுனைவழியாக கங்கையை அடைந்து கரையிறங்கி அஸ்தினபுரியை கைப்பற்றுவதற்கான வழிமுறையை அவன் மண்ணில் வரைந்து காட்டினான். புன்னகையுடன் வசுதேவன் கேட்டான், அந்த எண்ணம் ஏன் அஸ்தினபுரியை அஞ்சிக்கொண்டிருக்கும் பெரிய ஷத்ரிய அரசான மகதத்துக்குத் தோன்றவில்லை? அவர்களின் எல்லையோ அஸ்தினபுரிக்கு மிக அருகிலும் இருக்கிறதே?

அதற்கு கம்சன் மீசையை நீவியபடி பெரிய எண்ணங்கள் பேரரசர்களுக்கு மட்டுமே தோன்றும் என்று நீர் கற்றதில்லையா வசுதேவரே என்றான் என்று சொல்லி வசுதேவன் சிரித்தான். ’நீங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று பிருதை புன்னகையுடன் கேட்டாள். ‘உங்கள் கரங்கள் அஸ்தினபுரியைத் தீண்டினால் மகதன் எச்சரிக்கையாகிவிடுவான். நாம் முதலில் மகதத்தைத் தாக்குவோம் என்று சொன்னேன். உடனே மகதத்தைத் தாக்குவதற்கு எத்தனை படகுகள்தேவை என்று கணக்கிடத் தொடங்கிவிட்டான்’ என்று சொல்லி வசுதேவன் மீண்டும் சிரித்தான்.

‘மூத்தவரே நீங்கள் அந்த மூடனின் அமைச்சனாக இருக்க என்ன காரணம்?’ என்று பிருதை அவனைப்பாராமல் அலைகளை நோக்கி கண்களைத் திருப்பியபடி கேட்டாள். ‘இதென்ன வினா? மதுராபுரியின் இளவரசர் அவர். யாதவர்களின் பெரிய அரசே இன்று அதுதான்’ என்று அவன் பதில் சொன்னான். அந்தப்பதிலை உடனடியாக அவன் சொன்னபோதே அவள் அவன் உள்ளத்தை அறிந்துகொண்டாள். அந்தப்பதிலை அவன் கேட்கப்படாத பல வினாக்களுக்காக முன்னரே உள்ளூரச் சொல்லிக்கொண்டிருந்தான் என்று.

வெளியே நோக்கியபடியே வந்த பிருதை யமுனையைக் கண்டாள். மரக்கூட்டங்களுக்கு அப்பால் அதன் நீர்ப்பரப்பு பளபளத்துக்கொண்டிருந்தது. மழைக்காலத்துக்குரிய ஈரப்பாசி படிந்த கூரையுடன் கூடிய நான்கு சிறிய கட்டிடங்கள் கொண்ட ஒரு படித்துறையைப் பார்த்தாள். அதில் ஏழெட்டு சிறிய படகுகள் கட்டுத்தறிகளில் துள்ளவிரும்பும் கன்றுக்குட்டிகள் போல கயிற்றை இழுத்துக்கொண்டு நின்றிருந்தன.

"வண்டியை நிறுத்தச் சொல். நான் என் மைந்தனுக்கு ஆடையை மாற்றவேண்டும்" என்று பிருதை சேடியிடம் ஆணையிட்டாள். சேடியின் கண்களைச் சந்தித்தபோது அவள் சேடி மட்டும் அல்ல என்று புரிந்தது. "குழந்தையை என்னிடம் கொடுங்கள் இளவரசி, நான் ஆடையை மாற்றித்தருகிறேன்" என்றாள் அவள். பிருதை "நான் குழந்தையை இன்னொருவரிடம் அளிப்பதில்லை. கருவறை விஷம் நீங்காத குழந்தை இது"’ என்றாள். இருவர் விழிகளும் இன்னொரு முறை தொட்டுக்கொண்டபின் சேடி திரையை விலக்கி கைகாட்டினாள். வண்டி இழுதடி சக்கரங்களில் உரசி ஒலிக்க குதிரைக்குளம்புகள் மண்ணில் மிதிபட்டுத் தாளமிட சக்கரங்களின் முனகலுடன் நின்று குதிரை சற்று பின்னகர்ந்ததனால் அதிர்ந்தது.

குழந்தையை அணைத்துக்கொண்டு பிருதை இறங்கிக்கொண்டாள். கூடவே சேடியும் வந்தாள். சேடியின் விழிகள் மிகவிரைவாக சுபூதரை சந்தித்து மீள்வதை பிருதை கண்டாள். சாலையின் இருபக்கமும் உயரமில்லாத கொன்றையும் மஞ்சணத்தியும் செறிந்திருந்தன. மழைக்காலத்துக்குரிய இலைத்தழைப்பு பசுந்திரைபோல மூடியிருந்தது. அவள் சாலையின் ஓரத்திற்குச் சென்று அங்கிருந்த பெரிய மருதமரத்தின் மறுபக்கம் சென்றாள். சேடியும் துணைக்கு வந்தாள். பிருதை திரும்பி "நீ அப்பக்கமாக விலகி நில்... நான்..." என தொடங்குவதற்குள் அவள் "நானும் உடனிருப்பது தளகர்த்தரின் ஆணை இளவரசி" என்றாள். மிகநுணுக்கமாக அவள் கண்களில் ஒரு கடுமை வந்துசென்றது.

"ஏன்?" என்று பிருதை கேட்டாள். அவள் ஓரக்கண்கள் அப்பகுதியை கண்காணித்துக்கொண்டிருந்தன. "இங்கே நாகங்கள் அதிகம். நான் தங்களைக் காவல்காக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவள்." பிருதை "ஆனால் என்னுடைய மறைவுச்செயல் இது" என்றாள். "நான் இங்கே இலைகளுக்கு அப்பால் நின்றுகொள்வேன் இளவரசி" என்றாள் சேடி. பேசியபடியே நடந்து விலகி வந்த பிருதை அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அது மறைவாக இல்லை என்பதுபோல பாவனைகாட்டி மேலும் சென்றாள். "மிக விலகிச் செல்லவேண்டியதில்லை இளவரசி" என்று சொல்லிக்கொண்டு இலைகளை வளைத்து ஒடித்தபடி சேடியும் பின்னால் வந்தாள்.

"இந்த இடமே திறந்து கிடக்கிறதே" என்று சொல்லிக்கொண்டு பிருதை மேலும் முன்னகர்ந்தாள். இலைகள் முழுமையாகவே அவர்களை சாலையில் நின்றவர்களிடமிருந்து மறைத்தன. குதிரைகளின் செருக்கடிப்பும் காதடிப்பும் குளம்புமிதியும் கேட்டன. கூடவே மெல்லிய முனகல்களாக அவர்கள் பேசிக்கொள்வதும் வண்டிச்சக்கரங்கள் அசைந்து முனகுவதும் ஒலித்தது. சுபூதர் உரக்க கனைத்தபோது சேடி "இளவரசி இந்த இடம் சரியானது" என தேவைக்குமேல் உரக்க பதில் சொன்னாள். பிருதை மேலும் சற்று முன்னகர்ந்து "இந்தப் பள்ளத்தில் சேறு இருக்காதல்லவா?" என்றாள். "இல்லை, இங்கே நீர் தங்குவதில்லை. யமுனை மிக அருகே உள்ளது" என்றாள் சேடி.

சேடி கால்களை முட்செடி ஒன்றின் மேல் தூக்கிவைத்து ஒரு கொடியை விலக்கி வந்த கணத்தில் இடக்கையால் குழந்தையை மார்போடணைத்தபடி வலக்கையால் தன் ஆடைக்குள் இருந்த சிறிய குறுவாளை எடுத்து ஒரேவீச்சில் சேடியின் கழுத்துக் குழாயை துண்டித்தாள் பிருதை. சேடி சிறுதுளைக் குடுவையில் நீர் புகும் ஒலியை எழுப்பியபடி கைகளால் கழுத்தைப்பற்றிக்கொண்டு பக்கவாட்டில் சரிந்து விழுந்து கைகால்களை உதறிக்கொள்ளத்தொடங்கினாள். மண்ணில் அவளுடைய கைகால்கள் உரசி ஒலிக்கும் ஒலி மட்டும் கேட்டது.

கழுத்தின் வெட்டிலிருந்து எழுந்த குருதி செம்மண்ணில் நிறமில்லாததுபோல ஊறி வற்றியது. அவள் கண்களின் கருவிழிகள் மேலேறி பாம்புமுட்டைகள் போல செவ்வரி ஓடிய வெண்ணிறத்தில் விழிகள் தெரிந்தன. கடைசியாக அவள் வலதுகால் மட்டும் மண்ணை மிதித்து மிதித்து உரசி ஓய முறுகப்பற்றப்பட்டிருந்த கைவிரல்கள் பிடியை நெகிழச்செய்தபடி பக்கவாட்டில் தளர்ந்து சரிந்தன. குழந்தையை கீழே வைத்துவிட்டு பிருதை அவளைத் தூக்கி மருதமரத்தின் வேர்ப்புடைப்புக்குள் மரப்பட்டையின் மடிப்புகளுக்குள் நிற்கச்செய்தாள். அவள் உடல் தொய்ந்தாலும் மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டது. பிருதை குழந்தையை எடுத்துக்கொண்டு புதர்கள் வழியாக ஓடத்தொடங்கினாள்.

அவள் படித்துறைக்கு ஓடிவந்து சேர்ந்தாள். அங்கிருந்தவை அனைத்துமே சிறிய மீன்பிடிப்படகுகள். அதிகாலையில் மீன்பிடித்துவிட்டு வந்த செம்படவர்கள் அவற்றை கட்டிவிட்டுச் சென்றிருந்தனர். படகுகளிலும் கரையில் பூட்டப்பட்ட கதவுகளுடன் இருந்த கட்டடங்களிலும் எவரும் இருக்கவில்லை. பிருதை மூச்சிரைக்க அப்பகுதியை சுற்றிப்பார்த்தாள். எவரும் கண்ணுக்குப்படவில்லை. தன் கத்தியால் கட்டுக்கயிறுகளை வெட்டி படகுகள் அனைத்தையும் நீரோட்டத்தில் விட்டுவிட்டு ஒரு படகில் ஏறிக்கொண்டாள். மான்தோல் போர்வையை நன்றாக விரித்து அதில் குழந்தையை படுக்கவைத்துவிட்டு அமரத்தில் அமர்ந்து துடுப்பால் ஒரே உந்தலில் படகை நீரோட்டத்துக்கு நடுவே கொண்டுசென்றாள்.

அவள் அவிழ்த்துவிட்ட படகுகள் நீரில் பலதிசைகளிலாகப் பிரிந்து அலைபாய்ந்தும் சுழித்தும் சென்றுகொண்டிருந்தன. அவள் கரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். கரையில் முதல் வீரனின் தலை தெரிந்ததும் மறுபக்கமாக நீரில் இறங்கிக்கொண்டாள். படகைக் கையால் பற்றியபடி நீந்தத் தொடங்கினாள். நீரின் விசை அவள் எண்ணியதைவிட அதிகமாக இருந்தது. அவளுடைய அரச உடைகள் கால்களில் சிக்கி நீந்துவதைத் தடை செய்தன. ஆயினும் படகிற்கு மறுபக்கம் அவ்வப்போது தலையைத் தூக்கி மூச்சுவிட்டபடி கால்களால் நீரை உதைத்தும் வலக்கையால் துழாவியும் முன்னகர்ந்தாள்.

யமுனையின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மறுகரையில் சுபூதரின் தலைமையில் அவருடைய காவலர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தன் சங்கை உரக்க முழக்கிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அப்பால் மெலிதாக இன்னொரு சங்கொலி கேட்டது. அதைத்தொடர்ந்து மிகமெலிதாக இன்னொரு சங்கொலி எழுந்தது. விரைவான பாய்மரப்படகுகளில் அவர்கள் சற்றுநேரத்தில் யமுனையில் இறங்கிவிடுவார்கள் என்று அவள் உணர்ந்தாள். யமுனையின் கரையோரங்களில் தேடுவதற்கும் அதுவே எளியவழி. நீர் வழியாக அவள் தப்ப முடியாது.

அவள் கட்டறுத்துவிட்ட படகுகளில் இரு படகுகள் நீரில் மிதந்துசென்றன. மூன்று படகுகள் கரையை அணுகிக்கொண்டிருந்தன. அங்கே யமுனையின் வளைவு காரணமாக நீரோட்டம் நேராக வளைவை ஒட்டியிருந்த வெவ்வேறுபடித்துறைகளைத்தான் சென்று முட்டிக்கொண்டிருந்தது. அவள் இருமுறை தலைதூக்கி அந்த படித்துறைகளைப் பார்த்தாள். பின்பு படகின் மீதான பிடியை விட்டுவிட்டு நீரில் மூழ்கி நீந்தி விலகினாள்.

பிருதை தலைதூக்கியபோது குழந்தையுடன் அந்தப்படகு அலைகளில் மெல்ல தாவியும் அழுந்தியும் விலகிச்சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். திரும்பிப்பாய்ந்து அந்தப்படகைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணினாள். அவ்வெண்ணத்தை வெல்ல உடனே மீண்டும் மூழ்கி நீந்தி அப்பால் எழுந்தாள். படகு நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தது. அவள் நினைத்தால்கூட அதைப்பிடிக்க முடியாது. நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் அவள் மீண்டும் நீருக்குள் மூழ்கினாள். மழைக்காலமாதலால் நீரில் மண்மணம் நிறைந்திருந்தது. சருகுகளும் சுள்ளிகளும் பொன்னிறமாக ஒளிவிட்டபடி ஓசையின்றிச் சுழன்று சென்றன. மீண்டும் எழுந்து நோக்கியபோது மறுகரை மிக விலகிச் சென்றிருப்பதை காணமுடிந்தது. அங்கிருந்து அவள் தலையை அவர்கள் காண முடியாது.

அவள் நீந்திச் சென்று மறுகரையை அடைந்தாள். கிளைகளை நீருக்குள் முக்கி இலைகளால் நீரோட்டத்தை வருடியபடி வேங்கை மரங்கள் நின்றன. அவள் தாழ்ந்த கிளை ஒன்றைப்பற்றி மூச்சை சமன்செய்துகொண்டபின் இலைகளுக்குள் புகுந்து கரையை அடைந்தாள். தன் ஆடையைப் பிழிந்து திரும்ப அணிந்தபின்பு புதர்கள் வழியாகவே சென்றாள். யமுனையின் அப்பகுதி கைவிடப்பட்ட குறுங்காடாக கிடந்தது. ஆநிரைகள் செல்லும் பாதை ஈரமான சேற்றுத்தடமாகத் தெரிந்தது. இருபக்கமும் விரிந்த புல்பரப்புகளில் இருந்து கடந்துசென்ற நத்தைகளின் ஒளிவிடும் வண்ணத்தடங்கள் சிறிய வானவிற்கள் போல கிடந்தன.

பிருதை இருபக்கமும் கண்களைப் பரப்பியபடி மெதுவாக நடந்தாள். ஆயர்களின் பேச்சொலிகள் மிக அப்பால் எங்கோ கேட்டுக்கொண்டிருந்தன. காகக்கூட்டங்களைச் சுமந்தபடி ஏழெட்டு பசுக்கள் அவளைக் கடந்துசென்றன. அவற்றில் ஒன்று அவளை நோக்கி தலையை அசைத்து ’ம்பே’ என கத்தியது. மற்றபசுக்களும் திரும்பிநோக்கி கத்தின. தொலைவில் எங்கோ ஒரு மெல்லிய நாய்க்குரைப்பு கேட்டது. பசுக்களின் கத்தலைக் கேட்டு நாய் அங்கே வரக்கூடுமென அவள் நினைத்தாள். ஆனால் நாய் அங்கிருந்தே விசாரித்துவிட்டு முனகியபடி அமைதியானது.

அவள் தொலைவில் ஒரு சிறிய மரக்கூரையிட்ட கட்டடத்தைக் கண்டாள். அதன்மேல் மதுராபுரியின் கருட இலச்சினைக்கொடி பறந்துகொண்டிருந்தது. அவள் இலைகளின் மறைவில் அசையாமல் நின்றாள். அந்தக்கட்டடத்துக்குள் பேச்சொலிகள் கேட்டன. அது மதுராபுரியின் சுங்கச்சாவடி என்று தெரிந்தது. அதற்கப்பால் ஆயர்களின் காலடிப்பாதை சரிந்து ஆற்றில் இறங்கும் படித்துறை இருக்கலாம். அவள் அப்பகுதியைக் கூர்ந்து நோக்கியபோது புதர்களுக்கு அப்பால் குதிரை ஒன்றின் தலை அசைவதைக் கண்டாள். நெருங்கி அருகே சென்றபோது அது சேணம் போடப்பட்ட செங்குதிரை என்று தெரிந்தது.

பிருதை அருகே சென்று குதிரையின் கழுத்தைத் தொட்டாள். அதன் நாசிகளில் கையைவைத்து அழுத்தி மூடித் திறந்தாள். குதிரை நட்புடன் தன் கருநீலம் பரவிய நாக்கை நீட்டி அவளை நக்குவதற்கு முனைந்தது. கண்களை உருட்டி நீள்மூச்செறிந்தபடி குஞ்சிமயிரைச் சிலிர்த்தது. அவள் அதை மரத்தில் இருந்து அவிழ்த்து மெல்ல நடக்கச்செய்து அழைத்துச்சென்றாள். காட்டுக்குள் விலகிச்சென்றதும் கால்வளையத்தை மிதித்து தாவி அதன்மேல் ஏறிக்கொண்டு அதை பெரும்பாய்ச்சலாக ஓடச்செய்தாள். நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த குதிரை சிறிய காதுகளைத் தூக்கியபடி கனத்தகுளம்படியோசை காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலிக்க விரைந்தோடியது.

குதிரையின் உடலில் இருந்து உப்புவீச்சம் கொண்ட வியர்வை எழத்தொடங்கிய நேரத்தில் அவள் மார்த்திகாவதியின் முதல் சுங்கச்சாவடியை சென்றடைந்தாள். அவளைக்கண்டதுமே அங்கிருந்த வீரர்கள் ஓடிவந்தனர். குதிரையை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக பாய்மரப்படகு ஒன்றை சித்தமாக்கும்படி ஆணையிட்டாள். அவள் ஆடைகள் அதற்குள் உலர்ந்துவிட்டன. சாவடியில் இருந்து ஒரு தூதனை மதுராபுரிக்கு அனுப்பி வசுதேவனிடம் குழந்தை படகில் படித்துறைக்குச் சென்று சேர்ந்திருக்கும் என்றும் அதை அங்கே விசாரித்து உடனே மீட்டுக்கொள்ளும்படியும் தெரிவிக்கச் சொன்னாள்.

அன்றுமாலையே அவள் மார்த்திகாவதிக்குச் சென்று சேர்ந்தாள். அவளுடைய படகு படித்துறையை அணுகும்போது அவளுக்காக அமைச்சர் சந்திரசன்மர் காத்திருந்தார். அவளிடம் என்ன ஆயிற்று என எதையும் வினவுவதற்கு முன்னரே அரசர் அவளைப் பார்க்கவிழைவதாகச் சொன்னார். "நான் அந்தப்புரம் சென்றுவிட்டு மன்னரை அவரது மந்திரசாலையில் சந்திக்கிறேன்" என்று பிருதை சொன்னாள்.

சந்திரசன்மர் "அரசர் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார். அஸ்தினபுரியின் தூது என்பது நமக்கு அளிக்கப்படும் பெரிய வாய்ப்பு. மதுராபுரியின் மன்னர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்றார்கள். அதன்பின் அந்த அறிவிலி பதவி ஏற்கவிருக்கிறான். அவனிடமிருந்து நாம் தப்புவதற்கான வழி அஸ்தினபுரியை இறுகப்பற்றிக்கொள்வது மட்டுமே" என்றார்.

பிருதை தலையை அசைத்தாள். அவளுக்கான ரதம் வந்து நின்றது. சந்திரசன்மர் அவளிடம் "நான் ரிஷபரை நேரில் சென்று வசுதேவரைப் பார்க்கும்படி அனுப்பியது இதனால்தான். அவர் இன்னும் வந்துசேரவில்லை. வசுதேவரின் புறாஓலை வந்தது. அவரே தங்களை அழைத்துக்கொண்டு இன்று மாலைக்குள் வந்துசேர்வதாகச் சொல்லியிருந்தார்" என்றார். பிருதை "நான் விரிவாக மந்திரசாலையில் அனைத்தையும் விளக்குகிறேன்" என்றபின் ரதத்தில் ஏறிக்கொண்டாள்.

அவள் அந்தப்புரத்தில் நுழைந்து தன்னுடைய மஞ்சத்தறை நோக்கிச் செல்லும்போது சேடி சுஷமை அவள் பின்னால் வந்து "இளவரசி, தங்களுக்காக அரசி காத்திருக்கிறார். தங்கள் வருகைபற்றிய புறாச்செய்தி வந்ததை அமைச்சர் அரசியிடம் சொன்னார்" என்றாள். "வருகிறேன்" என்று சொன்னபடி அவள் மஞ்சத்தறையைத் திறந்தாள். அவள் விட்டுசென்ற அதே வடிவில் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது மஞ்சம். அவள் சாளரத்துக்கு வெளியே இருந்த மரப்பட்டைக்கூண்டை நோக்கிச் சென்றாள். சிவந்த பாதங்களும் நகங்கள் போன்ற அலகும்கொண்ட வெண்புறா அதற்குள் அமர்ந்திருந்தது.

பிருதை தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். அந்தப்புறாவைப் பற்றி அதன் கால்களில் இருந்த செய்தியை நோக்க அவள் அகம் துணியவில்லை. கால்கள் வலுவிழப்பதுபோல தொண்டை வறண்டு விடாய் எரிவதுபோல கண்களில் பார்வை அலையடித்து ஒளியிழப்பதுபோலத் தோன்றியது. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். தன் ஆடையை இழுத்துச் சரிசெய்து, கூந்தலை கைகளால் நீவி பின்னால் கொண்டுசென்று செருகிக்கொண்டாள். அச்செயல் அவள் அகத்தையும் சீராக்கியது. சாளரத்தின் வழியாக கையை நீட்டி அந்தப் புறாவைப் பற்றி அதன் இறகுகளுக்குள் மெல்லிய கம்பியால் கட்டப்பட்டிருந்த ஓலைச்சுருளை எடுத்தாள்.

அவள் ஏன் அத்தனை பதறினாள் என்பதை அதை வாசித்தபோது உணர்ந்துகொண்டாள். ஏனெனில் புலன்களுக்கு அப்பால் ஆன்மா அதை முன்னரே உணர்ந்துவிட்டிருந்தது. யமுனையின் படித்துறையில் குழந்தை ஏதும் வந்துசேரவில்லை என்றும் தேடிக்கொண்டிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். பெருமூச்சுடன் அவள் மஞ்சத்தில் அமர்ந்துகொண்டாள். அப்போது ஓர் எண்ணம் எழுந்தது. அதுதான் அந்நிகழ்வுகளின் இயல்பான உச்சம். அதைச் சென்றடைவதற்காகவே அதற்கு முன்னால் நிகழ்ந்தவை அனைத்தும் நிரைவகுத்தன. அந்த ஒருநாளில் அவள் மொத்த வாழ்க்கையும் இரண்டாகப் பகுக்கப்பட்டுவிட்டது.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 12 ]

தன் அந்தப்புரத்தின் நீராட்டறையில் பிருதை நீராடிக்கொண்டிருக்கையிலேயே அரசி தேவவதி வந்து அந்தப்புரத்து முகப்பறையில் காத்திருந்தாள். பிருதை சேடியரால் வெந்நீராட்டப்பட்டு அகிற்புகையிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டையிட்டு இளஞ்செந்நிறப்பட்டு உடுத்தி கழுத்தில் செம்மணியாரமும் காதுகளில் செம்மணித்துளிக்குழைகளும் செவ்வண்ணக் கற்களால் ஆன தலைச்சரமும் அணிந்து வருவது வரை அவள் அங்கேயே கைகளால் தன் மேலாடையைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தாள்.

பிருதை உள்ளே வருவதற்குள்ளேயே தேவவதி காத்திருப்பதை அறிந்திருந்தாள். நிமிர்ந்த தலையுடன் பிருதை அறைக்குள் நுழைந்தபோது தேவவதி எழுந்து நின்றுவிட்டாள். ஒருகணம் தன் மார்பை நோக்கிச்சரிந்த அவள் பார்வையை பிருதை கண்டாள். தேவவதியின் உதடுகள் ஒரு சொல்லுக்காகப் பிரிந்த மெல்லிய ஒலியைக்கூட கேட்கமுடியுமெனத் தோன்றியது. அக்கணம் வரை இல்லாதிருந்த எடையை தன் எண்ணங்கள் மேல் பிருதை உணர்ந்தாள். ஆனால் அரைக்கணத்தில் அதை விலக்கி திடமான விழிகளுடன் அரசியை நோக்கினாள்.

பிருதையின் கண்களைச் சந்தித்ததும் அரசி முகத்தை செயற்கையாக மலரச்செய்தபடி "உன் வருகைக்காக அரண்மனையே காத்திருக்கிறது" என்றாள். "ஆம், நான் அறிந்தேன்" என்று பிருதை சொன்னாள். அவள் அடுத்து வசுதேவனைப்பற்றி வினவப்போகிறாள் என்று நினைத்தாள். தேவவதி "உன் தமையன்..." எனத் தொடங்கியதுமே இயல்பாக "அவர் நாளை வருவார். அங்கிருந்து நான் சற்று விரைவாகப் புறப்படும்படி ஆயிற்று" என்று பிருதை சொன்னாள்.

அத்துடன் தேவவதியின் வினாக்கள் முடிந்தன என்பது அவளுடைய திணறலில் இருந்து தெரிந்தது. பிருதை அவளுடைய கைகளில் கசங்கிய மேலாடைநுனியை நோக்கினாள். அவள் மேலாடையை கீழே விட்டாள். அச்செயல்வழியாகவே அவள் பிருதைமுன் எளியவளாக ஆனதை அறிந்து சினம் கொண்டாலும் தேவவதியால் மேலே ஏதும் சிந்திக்கமுடியவில்லை.

"நான் விரைவாக அரசரை சந்திக்கவேண்டும் அன்னையே" என்றாள் பிருதை. விரிந்த புன்னகையுடன் "நான் தங்கள் அந்தப்புரத்துக்கு வந்து சந்திக்கிறேன்... தங்களிடம் பேசவேண்டியவை ஏராளமாகவே உள்ளன" என்றாள். அரசியும் புன்னகைசெய்தாள். அந்தப்புன்னகை பிருதையை சக்ரவர்த்தினியாகவும் தன்னை எளிய யாதவப்பெண்ணாகவும் ஆக்கும் விந்தையை எண்ணியபடி தேவவதி பெருமூச்சுவிட்டாள்.

முந்தையநாள் மழைபெய்த ஈரம் விரிந்த அரண்மனைமுற்றத்தில் ரதசக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று ஒன்றையொன்று வெட்டிக்கிடந்தன. தெற்கு வானில் கருமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டி மேலெழும்பிக்கொண்டிருக்க மழைக்காலத்து பசுமையின் ஒளியுடன் மரங்களின் இலைகள் காற்றிலாடின. அரண்மனையைச் சுற்றி ஒடிய நீர்ப்பாதைகளுக்குள் தவளைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

மந்திரசாலையில் மழைக்கால இருள் நிறைந்திருக்க நெய்விளக்குகள் எரிந்தன. செம்பட்டு விரித்த பீடத்தில் தன் கனத்த உடல்மேல் வெண்சால்வையைப் போர்த்தியபடி குந்திபோஜன் அவளுக்காகக் காத்திருந்தார். சந்திரசன்மரும் ரிஷபரும் அருகே இருந்தனர். அவர்கள் அவருக்கு ஓலைகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். அவர் அவற்றை கருத்தூன்றாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவள் காலடி கேட்டு கண்களைத் திருப்பினார்.

பிருதை உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் அத்தனை விழிகளும் தன் உடலையே பார்க்கின்றன என உடல்வழியாகவே பிருதை உணர்ந்தாள். குந்திபோஜன் அவளை நோக்கி புன்னகைத்தபடி முகமன்களைச் சொன்னபோது அவள் மற்ற இருவரின் நோக்குகளையே தன் உடலில் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் பீடத்தில் அமர்ந்துகொண்டதும் சந்திரசன்மர் "இளவரசி களைத்திருப்பீர்கள்... நீண்ட பயணம். இன்னல்கள்கொண்ட பயணம்" என்றார். பிருதை இருக்கட்டும் என கையை அசைத்தபின் குந்திபோஜனைப்பார்த்தாள்.

"மகளே, நீ அனைத்தையும் அறிந்திருப்பாய் அல்லவா?" என்றார் குந்திபோஜன். "அஸ்தினபுரியில் இருந்து தூது வந்தது. பலபத்ரர் என்னும் அவர்களின் அமைச்சரே நேரில் வந்தார். அதுவே நமக்கு பெரும் மதிப்பு. அஸ்தினபுரியின் மருமகளாக உன்னை அனுப்பமுடியுமா என்று கேட்டார். அக்கணமே அது என் குலத்துக்கு பீஷ்மபிதாமகர் அளிக்கும் வாழ்த்து என்று சொல்லிவிட்டேன். இன்னொரு எண்ணமே என் நெஞ்சில் எழவில்லை."

பிருதை பேசாமல் தலையசைத்தாள். "ஆனால் நம் குடியில் பெண்களின் விருப்பமே முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்த ஒருநாளுக்குள் எனக்கு வேறு ஐயங்கள் வந்தன. ஆறு மாதங்களுக்கும் மேலாக நீ இங்கே இல்லை. நீ உன் தமையனுடன் மதுவனத்தில் இருப்பதாக எண்ணியிருந்தோம். அங்கும் இல்லை என்ற செய்தி வந்தபோது சற்று அகமயக்கம் ஏற்பட்டது. நீ அங்கே உனக்குரிய ஆண்மகனைக் கண்டிருக்கலாமோ என்று..." என்றார் குந்திபோஜன்.

பிருதை "அரசகுலத்துப்பெண்ணின் மணம் என்பது ஓர் அரசியல்நிகழ்வே என நன்றாகவே அறிவேன் தந்தையே" என்றாள். குந்திபோஜன் முகம் மலர்ந்து "ஆம், அதை நான் நன்கறிவேன்... ஆனாலும் எனக்கு சற்று ஐயமிருந்தது. அஸ்தினபுரி நம்மிடம் எதை எதிர்நோக்குகிறது என்று அறியேன். எதுவாக இருப்பினும் அது நமக்கு உகந்ததே. அஸ்தினபுரி மாவீரர் பீஷ்மரால் காக்கப்படும் பேரரசு... நமக்கு அதைவிடப்பாதுகாப்பு வேறென்ன உண்டு. யானைமீதேறி வனம்புகுவதல்லவா அது?" என்றார்.

"ஆம், ஆனால் நாம் யானைசெல்லும் வழியில்தான் செல்லமுடியும்" என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். "யானை எங்கும் குனிந்துகொள்ளாது. நாம்தான் வழியெங்கும் வளைந்து நெளியவேண்டும்" என்றாள். "செய்வோமே... ஒருதலைமுறைக்காலம் அப்படிச் செல்வோம்... நம்முடைய அரசு மார்த்திகாவதியில் வேரூன்றட்டும். மூன்று பெரும் யாதவர்குலங்களையும் ஒன்றாக்குவோம். அதன்பின் நம் வழித்தோன்றல்கள் தங்கள் வழிகளைக் கண்டடையட்டும்" என்று குந்திபோஜன் சொன்னார்.

பிருதை மெல்ல தன் உடலை அசைத்தாள். அவள் புதிய ஒன்றுக்குச் செல்லவிருக்கிறாள் என்பதற்கான குறி அது என்றுணர்ந்த குந்திபோஜன் கூர்ந்து முன்னால் சரிந்து தன் கைகளை கன்னங்களில் வைத்துக்கொண்டார். "நம்மிடம் அஸ்தினபுரியின் மணத்தூது வந்திருப்பதை மதுராபுரியின் மன்னர் அறிவாரா?" என்றாள். "மதுராபுரியில் இருந்து கிளம்புவதற்கு முன்பு வரை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..." என்று அதற்கு ரிஷபர் பதில் சொன்னார்.

"அப்படியென்றால் ஏன் என்னைச் சிறையெடுக்க அவர் முயன்றார்?" என்றாள் பிருதை. அச்செய்தியை அறிந்திருந்தாலும் அந்தக்கோணத்தில் சிந்திக்காமல் இருந்த குந்திபோஜன் தன் முகவாயை கையால் வருடியபடி அமைச்சர்களைப் பார்த்தார். "அவருக்குத் தெரியும்" என்று பிருதை சொன்னாள். "என் தமையனிடம் அவர் என்னை மணம்கொள்வதைப்பற்றி பேசினார். அப்போது அவருக்கு அஸ்தினபுரியின் தூதைப்பற்றித் தெரியாது. ஆனால் அங்கிருந்து என் தமையன் கிளம்பியதுமே அவருக்கு உளவுசென்றிருக்கிறது. நான் மார்த்திகாவதிக்குத் திரும்பினால் என்னை அடையமுடியாதென்று அவர் எண்ணியிருக்கலாம்."

"ஆம், அதுதான் நடந்திருக்கிறது" என்றார் ரிஷபர். "இங்கே பலபத்ரர் வந்தது எளிதில் மறைக்கக்கூடிய செய்தி அல்ல. இங்கே மதுராபுரிக்கு ஒற்றர்கள் இருப்பதும் இயல்பானதே." பிருதை கண்களைச் சரித்தபடி சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் "அரசே, மதுராபுரியின் இளவரசரின் எண்ணம் மிகவெளிப்படையானது. இந்த அரசையும் நம் குலத்தையும் உண்டு அனலாக்கிக் கொள்ளும் பசி கொண்டிருக்கிறார் கம்சர். அவரை நாம் வெல்வதுதான் இத்தருணத்தில் நமக்கிருக்கும் முதன்மையான அறைகூவல்."

"அஸ்தினபுரியுடன் நாம் மணவுறவு கொள்ளப்போகும் செய்தியே அவனை அஞ்சச்செய்யுமென நினைக்கிறேன்" என்றார் குந்திபோஜன். "அப்படியென்றால் என்னைச் சிறையெடுக்க அவர் முனைந்திருக்கமாட்டார். அஸ்தினபுரியின் சினத்தை எதிர்கொள்ள அவர் துணிவுகொண்டிருக்கிறார். அது மகதம் அளிக்கும் துணிவாக இருக்கலாம்..." என்றாள் பிருதை. "அரசே, இன்றுமாலைக்குள் நம்மை நோக்கி மதுராபுரியின் படைகள் வரக்கூடும்."

குந்திபோஜன் திகைத்து இரு அமைச்சர்களையும் பார்த்தார். "அதெப்படி?" என ரிஷபர் தொடங்கியதும் பிருதை "அவ்வகையான எந்தக் கேள்விகளையும் கம்சரைப்பற்றி எழுப்பிக்கொள்ள முடியாது. அவருக்கு அமைச்சர்கள் இருக்கிறார்களா, அவ்வமைச்சர்கள் சொல்வதை அவர் கேட்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை... நான் அவரிடமிருந்து தப்பிவந்தது அவருக்கு பெரும் அவமதிப்பாகவே இருக்கும். அஸ்தினபுரியுடன் நாம் உறவுகொள்வதற்குள் நம்மைத் தாக்கிவெல்வது குறித்தே அவரது எண்ணம் எழும்" என்றாள்.

அவளே வழிமுறையையும் சொல்லட்டும் என அவர்கள் காத்திருந்தனர். பிருதை "ரிஷபரே இப்போது மதுராபுரியில் படைநகர்வு நிகழ்கிறதா என உங்கள் ஒற்றர்கள் மூலம் நாமறிந்தாகவேண்டும்..." என்றாள். "உடனே அறிவதென்றால்..." என ரிஷபர் இழுத்தார். "படைநகர்வை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். நம் ஒற்றர்கள் அங்கிருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்தியனுப்பி..." என அவர் சொல்லத்தொடங்க பிருதை கையமர்த்தி "யமுனையில் விரைவாகச் செல்லும் படகில் இருவரை அனுப்பி இரண்டு செய்திகளைக் கண்டு உறுதிசெய்யும்படிச் சொல்லுங்கள்" என்றாள்.

ரிஷபர் தலையசைத்தார். "படைநீக்கம் இருக்குமென்றால் மதுராபுரி தன் கலத்துறையை மேலும் அதிகப் படைகளை அனுப்பி வலிமைப்படுத்தும். உத்தரமதுராபுரிக்கும் மதுராபுரிக்கும் நடுவே உள்ள பகுதியில் ஒரு புதியபடைப்பிரிவைக் கொண்டுவந்து நிறுத்தும்" என்று பிருதை சொன்னாள். "அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளே கம்சரின் நோக்கத்தை அறிவித்துவிடும்." சந்திரசன்மர் எழுந்து "நான் இன்னும் இரண்டே நாழிகையில் உங்களுக்குச் செய்தியை அறிவிக்கிறேன் இளவரசி" என்றார்.

பிருதை "அரசே, உடனே நீங்கள் எனக்கு சுயம்வரம் நிகழவிருப்பதை அறிவியுங்கள். செய்தி விரைவிலேயே மதுராபுரிக்கும் செல்லட்டும்" என்றாள். சற்று தயக்கத்துடன் உடலை அசைத்தபின் "இளவரசி, விதுரர் சூதர்குலத்தவர். அவர்கள் நம் சுயம்வரத்தில் கலந்துகொள்வதை மூதாதையர் ஏற்கமாட்டார்கள்" என்றார் ரிஷபர். "யாதவர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் மட்டுமே அனுமதி இருக்கும்."

"ஆம், அதை நாமறிவதுபோலவே கம்சரும் அறிவார். ஆகவே அவர் சுயம்வரத்தில் கலந்துகொண்டு என்னை அடைவதைப்பற்றி எண்ணுவார். அவர் படைகொண்டுவருவதைத் தடுக்க வேறு வழியில்லை" என்றாள் பிருதை. "ஆனால்..." என குந்திபோஜன் தொடங்கியதுமே "சுயம்வரத்தில் விதுரர் கலந்துகொள்ளமுடியாதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கலந்துகொள்ளலாம். அவர் ஷத்ரியர். அவர் தன் வில்வல்லமையால் என்னைக் கவர்ந்துகொண்டு சென்று தன் தம்பியின் மைந்தனுக்கு மணமுடிக்கட்டும். அதை குலமூதாதையர் மறுக்கமுடியாது" என்றாள் பிருதை. "ஆம், அது முறைதான்" என்று ரிஷபர் சொன்னார்.

"சுயம்வரத்துக்கு பதினெட்டு யாதவர்குலங்களின் மூதாதையரும் ஒப்புதல் அளித்தாகவேண்டும். அனைத்து யாதவர்குடிகளுக்கும் ஷத்ரிய அரசுகளுக்கும் ஓலை செல்லவேண்டும்" என்றார் ரிஷபர். பிருதை "நாம் அஸ்தினபுரியின் மணவுறவை ஏற்றபின்னரும் சுயம்வரம் ஏன் என்பதை அவர்களுக்கு விளக்கியாகவேண்டும் அதற்கு தாங்களே நேரில்செல்வதே முறையாக இருக்கும்..." என்றாள். ரிஷபர் "ஆணை இளவரசி" என்றார்.

சபைவிட்டெழும்போது குந்திபோஜன் மீண்டும் எதையோ வினவப்போகும் முகத்துடன் அவளை நோக்கினார். அவளுடைய நேர்கொண்ட பார்வையைக் கண்டபின் பார்வையைத் திருப்பிக்கொண்டார். பிருதை நடந்தபடி "தமையனார் மதுராபுரியில் எந்நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது புறாக்கள் ஏதும் இன்னமும் இடைமறிக்கப்பட்டிருக்காதென்றே எண்ணுகிறேன்..." என்றாள். "உன் உள்ளம் எனக்கு விளங்குகிறது பிருதை. ஆனால் மதுராபுரியின் இளவரசன் காட்டெருமைக்கு நிகரானவன் என்கிறார்கள். அவனுடைய சினத்துடன் நீ விளையாடுகிறாய்" என்றார். பிருதை புன்னகைசெய்தாள்.

பிருதை தன் அறைக்குச்சென்று புறாக்கள் செய்திகொண்டு வந்துள்ளனவா என்று பார்த்தாள். கூண்டில் புறா ஏதும் இல்லை. அவள் சாளரம் வழியாக மழைகனத்து நின்றிருந்த சாம்பல்நிற வானத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். மேகங்கள் மெதுவாக நகர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டன. வெளியே பரவியிருந்த வெளிச்சம் அடங்கிக்கொண்டே சென்றது. சற்று நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது.

மழைக்குள்ளேயே வெண்புறா பறந்துவந்து கூண்டில் அமர்ந்துகொண்டு சிறகுகளை கலைத்து கழுத்தைச் சிலிர்த்து ஈரத்தை உதறியது. அவள் ஓடிச்சென்று அதைப்பற்றி அதன் உடலில் இருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். எங்கும் குழந்தை என எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், கம்சருக்குத்தெரியாமல் தேடவேண்டியிருப்பதனால் தனிப்பட்ட ஒற்றர்களை மட்டுமே அதற்காக அனுப்பியிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். அவள் பெருமூச்சுடன் சென்று தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.

சற்றுநேரத்திலேயே அவளைக்காண சந்திரசன்மர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அவள் முகப்பறைக்கு வந்ததும் சந்திரசன்மர் பரபரப்புடன் எழுந்து "தாங்கள் உய்த்துணர்ந்ததே சரி இளவரசி. கம்சன் படைநீக்கம் செய்கிறானென்பது உறுதி. எல்லைகள் அனைத்திலும் காவல் உறுதியாக்கப்பட்டுள்ளது" என்றார். பிருதை தலையசைத்தாள். "நாம் நம் படைகளை யமுனைக்கரைமுழுக்க நிறுத்தும்படிச் சொல்லிவிட்டேன்."

"தேவையில்லை" என்றாள் பிருதை. "நாம் அவரது படைநீக்கத்தை அறிந்துவிட்டோமென அவர் உணரலாகாது. இங்கே சுயம்வரம் ஒன்று நிகழவிருக்கிறது. அதற்கான அனைத்து விழவுக்களியாட்டங்களும் நிகழட்டும். அரண்மனை முகப்பில் விழவுக்கொடி ஏறட்டும். மங்கலத் தூதுவர் எல்லா நாடுகளுக்கும் முறைப்படி கிளம்பட்டும்!" சந்திரசேனர் அவளுடைய அகம் நிகழும் வழிகளை அறியாதவராக சிலகணங்கள் நோக்கிவிட்டு பின்பு "அவ்வண்ணமே" என்று தலைவணங்கினார்.

சிறிது நேரத்திலேயே அரண்மனையின் முகப்பில் முரசுமேடையில் இருந்த விழவுமுரசு இடியோசைபோல ஒலிக்கத்தொடங்கியது. மார்த்திகாவதியே அதைக்கேட்டு ஓசையடங்கி அமைதிகொள்வதை தன் அந்தப்புரத்தில் இருந்தபடி பிருதை அறிந்தாள். சற்றுநேரத்தில் முரசொலி மட்டுமே ஒலித்தது. ஆங்காங்கே கோல்காரர்கள் அரச அறிவிப்பைக் கூவுவது மெல்லிய ஓசைகளாகக் கேட்டது. சிறிது நேரத்தில் மார்த்திகாவதி நகரமே சுழற்புயல் தாக்கியதுபோல ஓசையிடத் தொடங்கியது.

இளமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தாலும் மார்த்திகாவதியின் விழவுக்களியாட்டம் கூடியபடியே வந்தது. மாலையானதும் மழையோசைக்கு நிகராக தெருக்களில் மக்களின் ஓசைகளும் எழுந்தன. பிருதை உப்பரிகைக்குச் சென்று பார்த்தாள். தொலைவில் நகரத்துச் சாலைகளிலெல்லாம் மக்கள் தென்பட்டனர். பனையோலை குடைமறைகளும் தலைக்குடைகளும் அணிந்தபடி கூச்சலிட்டு பேசிக்கொண்டு முட்டிமோதிச் சென்றனர். பெரியகுடைகளுக்குக் கீழே வணிகர்கள் கடை விரித்திருந்தனர்.

மக்கள் கொண்டாட விரும்புகிறார்கள் என பிருதை நினைத்துக்கொண்டாள். அவர்களின் நிகழ்வுகளற்ற வாழ்க்கையில் விழாக்கள் மட்டுமே பொருளுள்ளவையாகின்றன. ஆனால் மக்களில் ஒருவராக தன்னை உணராதவரை விழாவின் இன்பம் இல்லை. அரசகுலத்தவர்கள் அறியாத கொண்டாட்டம் அது. வெற்றிதோல்விகள் இல்லாத வாழ்க்கையின் இன்பத்தை எப்போதைக்குமாக இழந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.

அந்தியில் அனகை வந்துசேர்ந்தாள். உத்தரமதுராபுரியில் இருந்து அவள் யமுனைவழியாக சிறு படகில் தானே துடுப்பிட்டு வந்திருந்தாள். மழையில் அவள் உடல் நனைந்து உடைகள் ஒட்டியிருந்தன. நடுங்கியபடி அவள் வந்து நின்றதும் பிருதை "உடை மாற்றிவா" என்று சொன்னாள். "ஆணை இளவரசி" என்றாள் அனகை. பிருதை தன் மஞ்சத்தில் படுத்தபடி ஓலை ஒன்றை எழுதத் தொடங்கினாள்.

உடைமாற்றி சூடான பானம் அருந்தி அனகை திரும்பிவந்தாள். மஞ்சத்தில் படுத்திருந்த பிருதை எழுந்து அமர்ந்தாள். "நீ உடனே மதுராபுரிக்குச் செல்லவேண்டும். என் முத்திரை மோதிரத்தை அளிக்கிறேன்" என்றாள். அனகை தலை தாழ்த்தினாள். "கம்சரை நீ நேரில் சந்திக்கவேண்டும். அவரிடம் என்னுடைய தூதைச் சொல்" என்றபடி ஓலையை நீட்டினாள். "அவர் சுயம்வரத்தில் பங்குகொள்ளவேண்டுமென நான் விழைகிறேன் என்று சொல்!"

சிறுமணியில் தெரியும் நிழலாட்டம் போல அனகையின் விழிகளில் மெல்லிய அசைவு ஒன்று உருவாகி மறைந்தது. "என்னிடம் அஸ்தினபுரியின் மணத்தூது என்றுதான் சொல்லப்பட்டது. நான் மதுராபுரியின் படைகளிடமிருந்து தப்பி வந்தது அதை எண்ணித்தான். சூதனான அமைச்சனுக்கு மனைவியாவேன் என்று இங்குவந்தபின்னரே அறிந்தேன்" என்றாள் பிருதை. அவள் சொல்வதை அனகை முழுமையாகவே புரிந்துகொண்டாள். அவள் விழிகள் அசைவற்றிருந்தன.

"நீ இன்றே கிளம்பலாம். இன்றிரவே மதுராபுரியில் உன் தூது சென்று சேருமெனில் நன்று" என்று பிருதை சொன்னாள். "ஆணை" என்று அனகை தலைதாழ்த்தினாள். பிருதை அவள் போகலாமென கையை அசைத்துவிட்டு மஞ்சத்தில் மீண்டும் படுத்துக்கொண்டாள். அனகை தலைவணங்கி வெளியேறினாள். வெளியே மழை பேரோசையுடன் வந்து மாளிகையை அறைந்து மூடிக்கொண்டது.

மழையின் ஓசை அந்தப்புரத்தின் அறைகளிலெல்லாம் நிறைந்திருந்தது. மரச்சுவர்களிலும் மரவுரித்திரைகளிலும் நீர்த்துருவல்கள் படர்ந்திருந்தன. வெறிகொண்ட நாயின் குரைப்பு போல மெல்லத் தணிந்து உறுமலாகியும் நினைத்துக்கொண்டு மீண்டும் எழுந்தும் மழை ஒலித்துக்கொண்டே இருந்தது. சேடி வந்து இரவுணவு பற்றிக் கேட்டாள். பழங்களும் பாலும் மட்டும் கொண்டுவரச்சொல்லி உண்டுவிட்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சேடி சாளரங்களை மூடப்போனபோது தேவையில்லை என்று கையை ஆட்டி தடுத்து அவளை விலக்கினாள்.

மழை மெல்ல ஓய்ந்து வானம் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்பு பலநூறு கைகளின் ஒழுங்கில்லாத தாளமாக மழைத்துளிகள் சொட்டும் ஒலி கேட்கத்தொடங்கியது. சுழன்றடித்த காற்று இலைகளில் எஞ்சிய மழைத்துளிகளை விசிறி முடித்தபின்னர் கூரைத்துளிகள் மண்ணில் விழும் மெல்லியதாளம் மட்டும் எஞ்சியிருந்தது. அந்தப்புரத்தில் சேடிகளின் மெல்லிய பேச்சொலிகளும் மரத்தரையில் கால்கள் செல்லும் ஓசையும் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன.

பிருதை எழுந்து அறைக்கதவை உள்ளே மூடித் தாழிட்டாள். பெருமூச்சுடன் அகல்விளக்கை ஊதி அணைத்தாள். சாளரத்தின் அருகே சென்று நின்று முலைக்கச்சை அவிழ்த்தாள். முலைகள் சீழ் ஏறிய இரு கட்டிகள் போல நீலநரம்போடி கனத்து வெம்மைகொண்டிருந்தன. முலைநுனி கட்டியின் முனை போலத் திரண்டு கருமைகொண்டு நின்றது. அவள் கைகளால் முலைகளை மெல்லத் தொட்டாள். வலியுடன் பற்களை இறுகக்கடித்தபடி பாலை பீய்ச்சி வெளியே விட்டாள்.

சாளரத்துக்கு வெளியே மழை கூரைநுனியில் இருந்து கனத்த துளிகளாகச் சொட்டிக்கொண்டிருந்தது. இருளின் கருமைக்குள் அவளுடைய பால் சிறிய வெண்ணிற ஊசிகளாக பீரிட்டுச் சென்று மறைந்தது. முலைகளின் அடியில் அடிபட்ட வீக்கம்போல சூடாக இறுகிக் கனத்திருந்த தசை நெகிழ்ந்து மென்மையாகியது. மேலே புடைத்து கிளைவிட்டிருந்த நரம்பு மீது நீவிக்கொண்டாள். முலைக்கண்களில் இருந்து வெண்நீலநிறமாக பால் கசிந்தது. கள்ளிச்செடியின் தண்டு ஒடிந்ததுபோல. இரு கைகளையும் தூக்கினாள். அதுவரை கைகளை அசைத்தபோது முலையில் இருந்து கைகளை நோக்கி வந்து இறுக்கியிருந்த தசைச்சரடு ஒன்று தளர்ந்துவிட்டதை உணர்ந்தாள்.

பெருமூச்சுடன் திரும்பியபோது இருட்டுக்குள் இருந்து எவரோ பார்க்கும் உணர்வு எற்பட்டது. திரும்பி இருளைப்பார்த்தாள். பசைபோன்ற இருட்டு. யானைபோன்ற இருட்டு. அவளுடைய முலைப்பாலை சுவைத்தபின் அவளை அது நோக்கி நின்றது. அவள் நடுங்கும் கைகளால் சாளரத்தைப் பிடித்துக்கொண்டாள். கைகள்மேல் தலைசாய்த்து அழத்தொடங்கினாள்.

பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்

[ 13 ]

மார்த்திகாவதிக்கு வடக்கே இருந்த பித்ருதீரம் என்னும் காட்டுக்குள் அரசர்களுக்குரிய மயானம் இருந்தது. அங்கே அஷ்டாம்பையரின் சிறிய ஆலயம் ஒன்றிருந்தது. செங்கல்லால் இடுப்பளவு உயரத்தில் கட்டப்பட்ட கருவறைக்குள் ருத்ரசர்ச்சிகை, ருத்ரசண்டி, நடேஸ்வரி, மகாலட்சுமி, சித்தசாமுண்டிகை, சித்தயோகேஸ்வரி, பைரவி, ரூபவித்யை என்னும் எட்டு அன்னையரும் சிவந்த கல்வடிவங்களாக அமர்ந்திருந்தனர்.

அங்கே பன்னிரு கைகளுடன் நாசிகூர்ந்து செவி குவிந்த நாய்முகத்துடன் அமர்ந்திருந்த செந்நிற அன்னையின் பெயர் பைரவி. விரிந்த பெருங்கரங்களில் வாள், வில், உடுக்கை, கண்டாமணி, கட்டாரி, கதை, உழலைத்தடி, வஜ்ராயுதம், திரிசூலம், பாசம், அங்குசம் ஏந்தி அருட்கரம் கொண்டு நின்றிருந்த அன்னை அவளுக்குரிய முதற்சாமத்தின் ஏழாவது நொடியில் கண்விழித்தெழுந்தாள். கருவறை விட்டு ஒளிரும் கண்கள் கொண்ட நாய்வடிவில் வெளியே வந்து மழைசொட்டிக்கொண்டிருந்த நகரம் வழியாக நடந்து சென்றாள்.

அவளைக் கண்ட நகரத்து நாய்களெல்லாம் காதுகளை மடித்து தலைதாழ்த்தி வணங்கி முனகியபடி பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டு வாலை கால்களுக்கிடையே செருகி நுனியை மெல்ல ஆட்டின. அன்னை கடந்துசென்ற வழியில் தனக்குள் பேசிக்கொண்டிருந்த பித்தன் ஈரமண்ணில் காலடிச்சுவடு விழாமல் சென்ற பெண்நாயைக் கண்டு வியந்து புன்னகையுடன் கைகளை ஆட்டி ஏதோ சொன்னான். கூரைசொட்டும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்த நகரில் அன்னை குளிர்காற்று போல அலைந்து திரிந்தாள். அவளுடைய நாசி வாசனைகளுக்காகக் கூர்ந்திருந்தது.

இருளில் மின்னிய செவ்விழிகளாக சென்றுகொண்டிருந்த அன்னை பசுங்குருதியின் நறுமணத்தை அறிந்தாள். வாலைத் தூக்கியபடி மெல்லக்காலெடுத்துவைத்து அவள் அரண்மனைவளாகத்துள் நுழைந்து அந்தப்புரத்து வாசலுக்குக் கீழே வந்தாள். ஈரநிலத்தில் குருதிசொட்டிக்கிடந்ததை முகர்ந்தாள். அது குருதியல்ல முலைப்பாலென்று அறிந்ததும் மகிழ்வுடன் வாலைச்சுழற்றியபடி முன்னங்கால்களை அகற்றிவைத்து காதுகளைக் குவித்து செங்கரண்டிநாவை நீட்டி அந்தப் பாலை மண்ணிலிருந்து நக்கிக் குடித்தாள். மகிழ்ந்து எம்பி எம்பிக்குதித்தபடி அங்கேயே சுற்றிவந்த அன்னை நாக்கால் மோவாயை நக்கியபடி இருளில் அரண்மனைமுகடின் நீர் சொட்டும் மண்ணில் வாலை நீட்டி குவைந்து அமர்ந்திருந்தாள்.

மேலே சாளரத்தருகே வந்து நின்று மெல்லிய ஒலியில் அழுதுகொண்டிருந்த குந்தியை அன்னை தலைதூக்கி நோக்கிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது எதிர்பார்ப்புடன் அவள் எழுந்து நாக்கை நீட்டி வாய் ஓரங்களை நக்கிக்கொண்டாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். துயிலில்லாமல் அவள் அறைக்குள் நடந்துகொண்டிருப்பதையும் மஞ்சத்தில் புரள்வதையும் பீடத்தில் அமர்ந்து நெடுமூச்செறிவதையும் அவள் அறிந்தாள். மீண்டும் குந்தி சாளரத்தருகே வந்து தன் கொதிக்கும் முலைகளைப் பிடித்து வெண்ணிறமான கண்ணீராக பாலை இருளில் பீய்ச்சியபோது கீழே திறந்த வாயுடன் நின்றிருந்த அன்னை எம்பி காற்றில் குதித்து தன் வாயாலேயே அத்துளிகளை கவ்வி உண்டாள்.

இரவெல்லாம் குந்தி தன் முலைகளைப் பிழிந்துகொண்டிருந்தாள். அவ்வளவு பாலும் எங்கிருந்து வருகின்றது என்று வியந்தாள். உடலுக்குள் உள்ள தசைகள் அனைத்தும் உருகி வருவது போலத் தோன்றியது. அதன் வெம்மை அவள் விரல்களைச் சுட்டது போல பிழிந்தபின் கைகளை உதறிக்கொண்டாள். தன்முன் திரண்டு நின்றிருந்த இருள் குளிர்ந்த ஈரநாக்கால் அந்தப் பாலை நக்கி உண்டு சப்புகொட்டும் ஒலியை அவள் கேட்டாள்.

பிரம்ம முகூர்த்தத்தில் மீண்டும் சாளரத்தருகே வந்த குந்தி இருகைகளாலும் தன் முலைகளை இறுகப்பற்றிக்கொண்டாள், அவற்றைப் பிய்த்து தசைத்துண்டுகளாகக் கசக்கி வெளியே வீசிவிடவேண்டுமென விழைபவள் போல. தலையால் சாளரப்பலகையை ஓங்கி அறைந்தபடி அவள் விம்மி அழுதாள். முலைக்குள் நரம்புகளுக்குள் புகுந்துகொண்டு நாகங்கள் நெளியும் வலி எழுந்தது. ஆனால் அவள் அவற்றை அழுத்திப்பிழிந்தபோது மெல்லக்கசிந்தனவே ஒழிய பால் எஞ்சியிருக்கவில்லை. அவள் இருகைகளாலும் தன் வலது முலையைப் பற்றி அழுத்திக்கசக்கிப் பிழிந்தாள். அவற்றில் இருந்து புதியகுருதி ஊறி கீழே சொட்டியது.

இருமுலைகளில் இருந்தும் சொட்டிய செங்குருதியை அன்னை நக்கி உண்டாள். ‘ஆம்!’ என அவள் முனகியது இருளுக்குள் ஒலித்தது. நாக்கால் வாயை நன்கு துடைத்தபின் வாலைத் தூக்கி காதுகளை விடைத்த அன்னை பாய்ந்தோடத் தொடங்கினாள். மார்த்திகாவதியை விட்டு விலகி யமுனைக்கரையை அடைந்து இருள் மூடிக்கிடந்த நதிக்கரைக் குறுங்காடுகள் வழியாக அவள் நான்குகால் பாய்ச்சலில் ஓடினாள்.

காற்றில் உலைந்த மரக்கிளைகளையும், கரைச்சேற்றில் பதிந்து சருகுகள் உதிர்ந்து மூடி நின்றிருந்த பழைய படகுகளையும், கரைகளில் சுருட்டிப்போடப்பட்டிருந்த நாணல் முறுக்கிச்செய்யபப்ட்ட வலைகளையும், காட்டுநாய்களின் காலடிச்சுவடுகள் பதிந்த சேற்றுப்பரப்புகளையும், மழைநீர் ஓடி அரித்த ஓடைகளையும், இரவுமழையால் கழுவப்பட்டு பாதங்களைக் காத்துக்கிடந்த ஒற்றையடிப்பாதைகளையும் தாண்டி காலடிகள் மண்ணில் பதியாமல் அவள் சென்றுகொண்டிருந்தாள்.

உத்தரமதுராபுரியின் படித்துறைகளில் பால்பானைகள் ஏற்றப்பட்ட சிறுபடகுகள் துறைசேரத் தொடங்கிவிட்டிருந்தன. சிலந்தி வலை போன்று விரிந்து இருளுக்குள் அசைந்த வெண்ணிறப் பாய்களுடன் பெரிய படகுகள் யமுனையில் சென்றன. படகுத்துறைகளில் வண்டிகளின் நுகத்தைத் தூக்கி காளைகளைக் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அருகே குறுங்காடு வழியாக இலையடர்வு ஒலிக்க பாய்ந்துசென்ற அன்னையைக் கண்டனர்.

மதுராபுரியின் பெருந்துறைக்கு முன்னரே இருந்த மீன்பிடிப்படகுகளின் சிறுதுறையில் மென்மரம் குடைந்துசெய்த படகுகள் நீரில் ஆடிக்கொண்டிருந்தன. ஒன்றாகக் கட்டப்பட்ட துடுப்புகள் கரையில் கிடந்தன. அங்கே ஈச்சஓலையால் அமைக்கப்பட்ட சிறியகுடிலுக்குள் படகுக்காவலனான செம்படவன் எழுந்து யமுனையில் இருந்து வந்த ஈரக்காற்றை ஏற்றபடி முழங்கால் மடித்து அமர்ந்திருந்தான். படகுத்துறைக்கு வந்த செந்நிறமான புதிய நாயை அவன் வியப்புடன் பார்த்தான்.

விடைத்த காதுகளுடன் அது தரையை முகர்ந்தபடிச் சென்று படகுத்துறையின் மண்சரிவில் இறங்கியது. அங்கே நதிநீரில் சென்று எவராலோ பிடித்து தறியில் கட்டப்பட்டு அலைகளில் ஆடி பிற படகுகளை முட்டிக்கொண்டிருந்த சிறிய படகை அடைந்து கரையில் இருந்து தாவி அதில் ஏறிக்கொண்டது. கரைநாய்கள் அவ்வாறு செய்வதில்லை என்று அறிந்த செம்படவன் எழுந்து வெளியே வந்து அதைப் பார்த்தான்.

நாய் படகின் உள்பகுதியை கூரியநாசி வைத்து பல இடங்களில் முகர்ந்தது. மெல்லிய துருத்தியொலிபோல அது மோப்பம்பிடிக்கும் மூச்சைக் கேட்கமுடிந்தது. பின்பு மீண்டும் பாய்ந்து கரைக்குவந்து கரையை முகர்ந்தபடியே மெல்ல நடந்து அவனருகே வந்தது. செம்படவன் கொட்டாவி விட்டபடி திரும்பும்போது கடந்துசென்ற நாயின் விழிகளைக் கண்டு அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டான். அவை செங்கனல்துளிகள் போலிருந்தன.

நாய் முகர்ந்தபடியே ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்று மறைந்தபின் தான் கண்டது உண்மையா பிரமையா என எண்ணி அவன் தலையைச் சொறிந்தான். உள்ளே சென்று தன் முண்டாசுத்துணியை எடுத்தபோதுதான் தான் கவனித்த ஒன்றை அவன் சிந்தை உள்வாங்கிக்கொண்டது. ஓடிவந்து வெளியே பார்த்தான். நாய் சென்ற செம்மண்பாதையில் அதன்பாதத்தடங்களே இருக்கவில்லை.

அன்னை பைரவி அன்று மாலைக்குள் மதுராபுரிக்கு வடகிழக்கே இருந்த காலவனம் என்னும் சிற்றூரைச் சென்றடைந்தாள். ஊருக்கு வெளியே இருந்த வராஹியன்னையின் ஆலயத்தில் காலைபூசனைக்காக வந்த பூசகர் அவளைக் கண்டு திகைத்து கண்களுக்குமேல் கையை வைத்து கூர்ந்து நோக்கினார். கருக்கிருட்டில் ஊருக்குள் புகுந்த அன்னை வேளிர்களின் பெருந்தெருவில் புகுந்து சூதர்களின் இடுங்கலான தெருக்கள் வழியாக ஓடி அங்கே வேப்பமரத்தடியில் இருந்த சிறிய புற்குடிலின் வாயிலை அடைந்து நின்றாள். முற்றத்தை முகர்ந்தபடி குடிலைச் சுற்றிவந்தாள்.

அதிகாலையில் குடிலின் படலைத் திறந்து சூதமகளான ராதை வெளியே வந்தாள். கருக்கிருட்டுக்குள் குரலெழுப்பும் காகங்கள் அமைதியாக இருப்பதையும் இலைகளில் காற்று ஓடும் ஒலியும் கூரைநுனியில் இருந்து இரவுமழையின் எஞ்சிய துளிகள் தயங்கித் தயங்கிச் சொட்டும் ஒலியும் மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டபடி அவள் முற்றத்துக்கு வந்தபோது அங்கே சின்னஞ்சிறு செந்நிற நாய்க்குட்டி ஒன்று நின்றிருப்பதைக் கண்டாள். முகம்பூத்து அதை கையிலெடுத்துக்கொண்டாள்.

இளவெம்மை பரவிய வெளிறிய அடிவயிற்றையும் வாழைப்பூவின் மலர்சீப்பு என குவிந்த நால்விரல்கால்களையும் காட்டி நெளிந்தது நாய்க்குட்டி. பூசணக்காளான் போன்ற மெல்லிய மயிர்பரவிய சருமம் குளிரில் சிலிர்த்திருக்க தாமரையிதழ்போன்ற சிறிய மடிந்த காதுகளை ஆட்டி ஒற்றைச்சிறுவிரல் போன்ற வாலைச்சுழற்றி சிறிய செந்நாவை நீட்டி அவளை நக்குவதற்காக எம்பியது. அவள் பற்கள் தெரிய கண்கள் மின்னச் சிரித்தபடி அதைத் தூக்கி தன் மூக்கால் முலைக்காம்புபோன்ற அதன் மூக்கைத் தொட்டாள். அது நாக்கு நீட்டி அவள் உதட்டை நக்கியது.

நாய்க்குட்டியுடன் உள்ளே சென்ற ராதை கீழே ஈச்சம்பாயில் படுத்திருந்த தன் கணவன் அதிரதனின் அருகே அமர்ந்து நாய்க்குட்டியை அவன் காதருகே விட்டாள். அது அவன் காதுமடலை அன்னைமுலையென சப்பியபோது அவன் பாய்ந்து எழுந்தான். நாய்க்குட்டி பின்னால் சரிந்து தரையில் விழுந்து எழுந்து வாலைச்சுழற்றியபடி அவன் ஆடையைக் கவ்வி நான்கு கால்களையும் ஊன்றி அதை இழுத்தது. வாய்விட்டுச் சிரித்த ராதையை நோக்கி "எங்கே கிடைத்தது இது?" என்றான் அதிரதன். "தேடிவந்தது...காலையில் வாசலைத் திறந்தால் இது நின்றுகொண்டிருந்தது" என்று அவள் சொன்னாள்.

அதிரதன் அதை கையில் எடுத்து அடி நோக்கி "பெட்டை" என்றான். "புதரில் இதன் தாய் குட்டிபோட்டிருக்கும்... மழையில் நனையாத இடம்நோக்கி நம் வீட்டுக்கு வந்திருக்கிறது."  ராதை அதை வாங்கி "நம் குழந்தையின் தோழி இவள்... இன்றுவரை நம்மைத்தேடி ஒரு நாய் வந்ததே இல்லை" என்றாள். அருகே மரவுரியில் துயின்றுகொண்டிருந்த குழந்தையின் போர்வையை மெல்ல விலக்கி அவனருகே நாயை விட்டாள். நாய் குழந்தையை முகர்ந்தபின் அவன் மேல் ஏறி அப்பக்கம் மல்லாந்து விழுந்து புரண்டு எழுந்து நான்கு கால்களையும் பரப்பி நின்று துளிச்சிறுநீர் கழித்தபின் மீண்டும் அவன்மேல் ஏறி புரண்டு இப்பக்கம் விழுந்து ராதையை நோக்கி வந்தது.

விழித்துக்கொண்ட குழந்தை அழத்தொடங்கியது. கால்களை வேகமாக மிதித்து முட்டி பிடித்த சிறிய கரங்களை வீசி சிறிய செவ்வாயைத் திறந்து நாகணவாய் போல அகவியது. ராதை குழந்தையை கையில் எடுத்து மார்போடணைத்துக்கொண்டாள். அன்னையின் கைபட்டதும் குழந்தை உதடுகளை செம்மொட்டு எனக் குவித்து முகமும் கழுத்தும் தோள்களும் சிவக்க நடுங்கிக்கொண்டே வீரிடத் தொடங்கியது.

அதிரதன் "இப்போதுகூட பிந்திவிடவில்லை ராதை" என்று தணிந்தகுரலில் சொன்னான். "இதை நம்மால் வளர்க்கமுடியாது. நாம் ஒரு கைக்குழந்தையைப் பார்த்ததேயில்லை. இதற்கு என்ன உணவளிப்பதென்றுகூட உனக்குத்தெரியாது." ராதை உதடுகளை அழுத்தி அகம் மின்னிய கண்களுடன் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள். "வளர்க்கமுடியவில்லை என்றால் நான் சாகிறேன்..." என்றாள்.

"நீ சாகமாட்டாய், குழந்தை செத்துவிடும்" என்று அதிரதன் கடுமையாகச் சொன்னான். "சாகாது... இது யமுனை என் கைகளில் கொண்டுவந்து தந்த குழந்தை... நான் அன்று யமுனையன்னையை என்ன கேட்டேன் தெரியுமா?" அவள் தன் வயிற்றில் கையை வைத்தாள். "இது மூடப்பட்ட வாயில்... ஆனால் ஒழிந்த அறை அல்ல. உள்ளே என் குழந்தைகள் கதவை முட்டி முட்டிக் கூச்சலிடுவதை நான் கேட்கிறேன். என் உதரத்தைத் திறந்துவிடு. இல்லையேல் என் குழந்தைகளுடன் நான் உன்னில் மூழ்கி மறைகிறேன். என் உடலை உனது ஆழத்து மீன்கள் உண்ணட்டும். அவற்றின் ஆயிரம் விழிகளாக மாறி உன்னில் நீராடும் குழந்தைகளைப் பார்த்து நிற்கிறேன். உதடுகளைக் குவித்து அவற்றின் கால்களில் முத்தமிடுகிறேன் என்று சொன்னேன்."

"கைகளைக் கூப்பியபடி மூழ்கியபோது என் தலைக்குமேல் அந்தப் படகின் அடிப்பக்கம் கருமையாக நெருங்கி வந்ததைக் கண்டேன். மேலே எழுந்ததும் நான் கேட்டது இவனுடைய அழுகையை. இளமழையில் நனைந்து வாழைப்பூங்குருத்தின் நிறத்தில் கைகளை ஆட்டி அழுதுகொண்டிருந்தான். அன்னை எனக்களித்த கொடை என எண்ணி அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு கரையேறி ஓடிவந்தேன்..." என்றாள் ராதை.

அவள் மீண்டும் மீண்டும் சொன்னதுதான். அவன் விழிகளை விரித்து அவளையே நோக்கினான். அவனறிந்த ராதை அல்ல அவள். அவனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாதவள். அவள் பேசும் அந்த மொழியை அவன் கேட்டதேயில்லை.

அவள் தன் கச்சைத் திறந்து கருநிற இளமுலைகளை வெளியே எடுத்தாள். காராமணி போன்ற அவள் சிறிய முலைக்கண்கள் உள்ளே குழிந்திருந்தன. விரல்களால் அவற்றை வருடி வெளியே எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள். அது துளை தேடும் நீரின் விரைவுடன் வாய்நோக்கி முழு உடலையும் குவித்து கவ்விக்கொண்டது. கைகளை ஆட்டியபடி மெல்லிய ஒலியுடன் அது முலையை சப்பியது.

"அதை ஏமாற்றாதே..." என்று அதிரதன் எரிச்சலுடன் சொன்னான். "என் நெஞ்சு நிறைய பால் உள்ளது. வரும்... எனக்குத்தெரியும்" என்று ராதை தலையை பிடிவாதமாக சரித்துக்கொண்டு சொன்னாள்.

"இரு நான் எஞ்சியிருக்கும் பாலை எடுக்கிறேன்" என்றபடி அதிரதன் எழுந்தான். அவன் ஆடையைக் கவ்வியிருந்த நாய்க்குட்டி அவனுடலில் இருந்து தொங்கியபடி சரிந்து கீழே விழுந்து புரண்டு எழுந்து அவன்பின்னால் கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடியபடி நடந்தது.

"இனிமேல் இரு மடங்கு பால்தேவை" என்றபடி அதிரதன் அடுப்பின்மேல் கனலில் இருந்த மண்கலயத்தில் இருந்து பாலை வெண்கலக் கிண்ணத்தில் எடுத்தான். அதை மெல்லச்சுழற்றி ஆறச்செய்தான். நாய்க்குட்டி அவன் கால்களில் தன் முன்னங்கால்களைத் தூக்கி வைத்து ஏறி மேலே நோக்கி ’அழ்! அழ்!’ என குரைத்தது. அவன் குனிந்து அதன் கண்களைப்பார்த்தான். விலங்குக் குழந்தையின் கண்களுக்குள் அத்தனை பெரும் கருணை எப்படித் தேங்கமுடியுமென எண்ணியபோது அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. கிண்ணத்தை அதன் முன் வைத்தான்.

"குழந்தைக்குக் கொண்டுவந்த பால் அது" என பல்லைக்கடித்தபடி ஈரக்கண்களுடன் ராதை கூவினாள். "ஆம். ஆனால் இதுவும் குழந்தைதான்... இன்னும் சற்று வேகமான குழந்தை" என்றபின் குனிந்து நாய்க்குட்டியின் மெல்லியசிறுகழுத்தை அதிரதன் வருடினான். அது முன்னங்கால்களைப் பரப்பி வைத்து ளக் ளக் ளக் என வேகமாக பாலைக்குடித்தது. அதிரதன் இன்னொரு கிண்ணத்தில் பாலை எடுத்து அதைச் சுழற்றி ஆறச்செய்தபடி ராதை அருகே வைத்தான். அறைமூலையில் இருந்த மூங்கில்பெட்டியில் இருந்து வெண்ணிறமான துணி ஒன்றை எடுத்து திரியாக சுருட்டினான்.

வாயின் ஓரம் நுரை பரவ முலையைச் சப்பிக்கொண்டிருந்த குழந்தை முகத்தைத் திருப்பியபடி உடலே சிவந்து ஒரு பெரிய குருதித்துளிபோல மாறி வீரிட்டலறியது. கால்களையும் கைகளையும் உதைத்துக்கொண்டு அழுது அவ்வழுகையின் உக்கிரத்தில் ஓசையை இழந்து உடல் உலுக்கிக் கொள்ள அதற்கு மெல்லிய வலிப்பு வந்தது. "அய்யோ!" என ராதை அலறினாள்.

அதிரதன் குழந்தையை வாங்கி தன் மடியில் போட்டு அதன் வாயில் தன் கனத்த சுட்டுவிரலால் தட்டினான். கைகளை ஆட்டியபடி வாயை நீட்டி அந்த விரலை குழந்தை கவ்வ முயன்றது. அவன் கிண்ணத்தில் இருந்த பாலில் திரியைப்போட்டு நனைத்து குழந்தையின் வாயில் வைத்தான். குழந்தை இருமுறை சப்பிவிட்டு மேலும் வாயால் தாவ அவன் அதை எடுத்து பாலில் நனைத்து மீண்டும் வைத்தான். அவன் திரியை எடுத்தபோது குழந்தை முழு உடலாலும் தவித்தது. அதைக்கண்டு ராதை கண்களை மூடிக்கொண்டு அழுதாள். அவளுடைய இமைப்பீலிகளை நனைத்தபடி கரிய கன்னங்களில் நீர் வழிந்தது.

நாய்க்குட்டி கிண்ணத்தை நக்கியபடியே ஓசையெழ தள்ளிக்கொண்டு சென்று சுவரில் முட்டியபின் அதன் மேல் ஏறமுயன்று கிண்ணம் உருளும் ஒலியுடன் மல்லாந்து விழுந்தது. எடைதாளாமல் வயிறு கீழிறங்கி நிலம்தொட முதுகு வளைய கால்களைப் பரப்பி வைத்து தள்ளாடி நடந்து வந்து ராதை அருகே நின்று சிறுநீர் கழித்தது. அதன் மீசைமயிர்களிலும் அடித்தாடையிலும் பால் கெட்டியான துளிகளாக துளித்து நின்றது. தன் பால்துளி விழிகளால் அது ராதையையும் அதிரதனையும் மாறிமாறிப்பார்த்து ராதையின் மடியைத் தேர்ந்தெடுத்து அவளை அணுகி அவள் தொடைமேல் காலெடுத்து வைத்து ‘மங் மங்’ என்று ஒலி எழுப்பியது.

அவள் கண்ணீருடன் அதை நோக்கிச் சிரித்தாள். அதை நடுங்கும் கைகளால் அள்ளி எடுத்தபோது அது இருமடங்கு எடைகொண்டிருப்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டு ’’திருட்டுத் தீனிக்காரி’’ என்றபடி அதை தூக்கி தன் மடிக்குழியில் வைத்துக்கொண்டாள். தூங்குவதற்கான பள்ளத்தை உருவாக்கும்பொருட்டு அவள் மடியில் மூக்கைவைத்து நிமிண்டி சுற்றிவந்து பின்னங்கால்களை மடித்து அமர்ந்துகொண்டு அண்ணாந்து அவளை நோக்கியது நாய்க்குட்டி. பின்னர் வாய்திறந்து கொட்டாவி விட்டபடி நீட்டிய முன்னங்கால்களில் தன் அடித்தாடையை வைத்து பயறுவிதைமீது சவ்வுத்தோல் படிவதுபோல இமைகள் சொக்கி மூட கண்மூடியது. தன்னுள் நிறைந்த அவியை ஏற்று அன்னை பைரவி ஏப்பமிட்டாள்.

தன் முலைகளுக்குள் ஒரு மெல்லிய உளைச்சலை ராதை உணர்ந்தாள். சிறிய பூச்சி ஒன்று முலைகளுக்குள் ஓடுவதுபோலத் தோன்றியது. முலைநுனிகள் கூச்சமெடுத்தன. முலைக்கச்சு குளிர்ந்தது. அனிச்சையாகத் தொட்டுநோக்கிய அவள் முலையிலிருந்து பால் வழிவதை உணர்ந்தாள். நம்பமுடியாமல் அதை கையால் தொட்டு முகத்தருகே தூக்கிப்பார்த்தாள். இளநீலவெண்மையுடன் நீர்த்த பால். முகர்ந்தபோது அதில் அவளுடைய வாயின் எச்சிலின் வாசனை இருப்பதை அறிந்தாள். அவளுடைய முலைப்பால்தானா, இல்லை நாயின் வாயிலிருந்து விழுந்ததா? கச்சை விலக்கி முலைகளை நோக்கினாள். இருமுலைக்கண்களும் நாகப்பழங்கள் போல கருமையாகப் புடைத்து நின்றிருக்க அவற்றிலிருந்து பால் ஊறிக்கசிந்து வழிந்துகொண்டிருந்தது.

"இங்கே பாருங்கள்... பால்... என்னுடைய பால்!" என அவள் தொண்டை அடைக்கச் சொன்னாள். "என்ன?" என்று திரும்பிய அதிரதன் அவள் முலைக்கண்களைப் பார்த்து திகைத்து வாய் திறந்தான். "என் பால்... இவனுக்கான பால்" என்று சொன்ன ராதை பாய்ந்து குழந்தையைப்பிடுங்கி மார்போடணைத்துக்கொண்டாள். குழந்தையின் வாயில் தன் இடமுலைக் காம்பை வைத்தாள். அதன் மெல்லிய உதடுகளில் அத்தனை இறுக்கமிருக்குமென்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவளுடைய வலது முலைக்காம்பிலிருந்து மூன்று சிறிய வெண்ணிறநூல்களாக பால் பீய்ச்சி வளைந்து மடியில் சொட்டியது. முலைகீழ் வளைவில் வழிந்து துளித்து உதிர்ந்தன வெண்துளிகள்.

குழந்தையின் வாய் நிறைந்து ஓர இதழ்கள் வழியாக பால் காதுகளை நோக்கிச் சொட்டியது. செங்குருத்து போன்ற கால்கட்டைவிரல்களை நெளித்தும் பாதங்கள் சுருங்கிவளையும்படிக் குவித்தும் முட்டிபிடித்த கைகளால் தன் விலாவை அடித்துக்கொண்டும் பிள்ளையின் உடலே பரவசத்துடன் பாலை ஏற்றுக்கொண்டிருந்தது. அதன் கண்கள் இளநீல இமைமயிர்கள் கண்ணீர் உலர்ந்த கன்னங்களில் படிந்திருக்க மூடியிருந்தன. அவள் குனிந்து அதன் முகத்தை நோக்கினாள். அவள் கண்ணீர் குழந்தையின் மேல் மழைத்துளிகள் போல உதிர்ந்தது. விம்மல்களை அடக்கமுடியாமல் அவள் தோள்கள் அதிர்ந்தபோது முலைகளும் குழந்தையும் அசைந்தன. அதிரதன் உதடுகளை இறுக்கியபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.

காலையில் மிகவும் பிந்திதான் குந்தி எழுந்தாள். எப்போது துயின்றோம் என அவளால் நினைவுகூர முடியவில்லை. ஆனால் கருக்கிருட்டை நோக்கியபடி நின்றது நினைவிருந்தது. மூடிய கதவை நோக்கியபின் அவள் சாளரத்தருகே சென்று நின்று தன் கச்சை விலக்கி முலைகளை கைகளால் தொட்டாள். அவை வெம்மையுடன் இல்லை என்பதை உணர்ந்தாள். கைகளால் முலைக்குவைகளை வருடியபோது அவை பால்நிறைந்து இறுகி கனத்திருக்கவில்லை என்று தெரிந்தது. முலைக்காம்பின் கரியவட்டத்தை அழுத்தினாள். முலைகளின் கீழ்வளைவையும் மேல்சரிவையும் அழுத்தினாள். ஒருதுளி பால்கூடக் கசியவில்லை. அவள் முலைகள் கன்னிமுலைகளென இறுக்கம் கொண்டிருந்தன.

பகுதி எட்டு : பால்வழி

[ 1 ]

அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து சற்றுநேரம் பெய்து இலைகளை ஒளிகொள்ளச்செய்து கூரைகளைச் சொட்டச்செய்து ஓய்ந்தன. ஆனால் இரண்டுமாதகாலம் தொடர்ந்து பெய்த மழையின் ஈரத்தை வைத்திருந்த காற்றில் எப்போதுமே மெல்லிய நீர்த்துகள்கள் பறந்துகொண்டிருந்தன. துருக்கறை ஊறிய வெள்ளைத்துணிபோலத் தெரிந்த கலங்கிய வானுக்குப்பின்னால் வெப்பமே இல்லாத சூரியன் நகர்ந்தான்.

பாண்டுவை அன்றுகாலை முதலே அம்பாலிகை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தாள். அவன் எப்போதும் பின்மதியம் தாண்டியபின்னரே துயிலெழுவான். அவனுடைய மஞ்சத்தறை வெளியே இருந்து ஒளிவராமல் கரவுப்பாதைகள் வழியாக காற்றுமட்டும் மெல்ல வீசும்படி அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பகலிரவுகள் இல்லை. வெளியே பகலின் வீச்சு அணையத்தொடங்கியபின்னரே அவனை முதுசேடியர் வெள்ளித்தாலத்தில் நறுமணநீருடன் எழுப்புவார்கள். அவனை மிக மெல்ல பலமுறை அழைத்து எழுப்பவேண்டுமென்றும் காலடியோசையோ பிற ஓசைகளோ அவன் துயிலை அதிரச்செய்யலாகாதென்றும் அனைவரும் அறிந்திருந்தனர்.

அவ்வறையின் தரையிலும் சுவர்களிலும் கனமான பஞ்சுமெத்தைகள் தைக்கப்பட்டிருந்தன. முதுசேடியரின் குரலை பாண்டு தன் கனவின் ஆழத்தில் எங்கோ கேட்பான். அடர்வண்ணங்களாலான ஓவியத்திரைபோலப் பூத்துநிற்கும் இமயமலையடிவாரத்துக் காடுகளிலோ நதிக்கரைகளிலோ பொழில்களிலோ அவன் தன் அன்னையுடன் இருந்துகொண்டிருப்பான். அக்குரலைக் கேட்டு தன் விழிப்புக்கு மிதந்தெழுவான். பின் அதை தன் அறையென உணர்ந்து எழுந்துகொள்வான். துயில் எழும்போது அவனுடைய வெளிறிய மெல்லிய உடல் குதிரைப்படை கடந்துசெல்லும் மரப்பாலம் போல அதிர்ந்துகொண்டிருக்கும். நடுங்கும் கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள கழுத்தின் கனத்த குரல்வளை ஏறியிறங்க கண்கள் மேலே செருகி வெண்விழிகள் தெரியும். மஞ்சள்நிறமான பற்களால் செவ்விய உதடுகளைக் கவ்வியிருப்பான். முட்டிபிடித்த கைகளுக்குள் விரல்கள் வெள்ளைப்பரப்பில் புதைந்திருக்கும்.

முதுசேடியர் அவன் மார்பை தடவியும் கைகால்களை வருடியும் அவன் உடலை சீராக்குவர். அவன் உடல் மெல்ல அதிர்விழந்து படுக்கையில் தொய்ந்ததும் அவன் வாயோரங்களில் வழியும் எச்சிலை துணியால் துடைப்பர். அவன் எழுந்து வெந்நீரில் தன் முகத்தை கழுவிக்கொள்வான். பின்பு சேடியர் உதவ படுக்கையில் இருந்து எழுந்து நிற்பான். இளமையில் ஒருமுறை அவனை அம்பாலிகை உலுக்கி எழுப்பியபோது அவன் அதிர்ந்து அலறி விழித்துக்கொண்டு நடுங்கி வலிப்புவந்து மூர்ச்சையானான். மூச்சு நின்று கண்கள் செருகி வாய்கவ்விக்கொண்டு அதிர்ந்து நின்ற உடம்பு மெல்ல நீலமாகியது. ஓடிவந்த அரண்மனை மருத்துவர் கிலர் அருகே இருந்த தீபச்சுடரை எடுத்து அவன் கால்களில் வைத்துச் சுட்டார். அவன் உடல் துடித்தபோது கைகால்கள் நெகிழ்ந்து மூச்சு சீறிக்கிளம்பியது. அதன் பின் அவன் நினைவுக்கு வர மேலும் இரண்டுநாட்களாயின.

அவன் உடலின் நரம்புகள் மிகமிக மெல்லியவை என்றார் கிலர். அவை சிறு அதிர்ச்சியைக்கூட தாளாதவை. விரல்நுனியில் நீர்த்துளியைக் கொண்டுசெல்வதுபோல அவன் உடலுக்குள் உயிரை பேணியாகவேண்டும் என்றார். அதன்பின் அவன் உரத்த ஒலிகளைக் கேட்டதேயில்லை. விழுந்ததில்லை, கால்தடுக்கியதில்லை, நிலைதடுமாறியதில்லை. அவன் சினம்கொள்ளும்படியோ துயர் அடையும்படியோ எதுவும் நிகழ்ந்ததில்லை.

பாண்டுவின் குதிகால்கள் நிலத்தை அறிந்ததில்லை. குதிரைபோல அவன் முன்விரல்களால் நடந்தான். ஆகவே காலில் இரும்புச்சுருள் கட்டப்பட்டது போல எம்பி எம்பி நடப்பதே அவன் இயல்பு. அவனுடைய வலத்தோள் இடத்தோளைவிட தூக்கப்பட்டிருக்கும். மெலிந்த வெண்முகத்தில் நாசியும் உதடுகளும்கூட வலப்பக்கமாக கோணலாக வளைந்திருக்க வலக்கண் சற்றே கீழிறங்கியிருக்கும். தன்னை வரைந்திருக்கும் திரைச்சீலையை இடப்பக்கமாக கீழே பிடித்து இழுத்திருக்கிறார்கள் என அவன் சொல்வான். எப்போதும் ஓர் ஏளனபாவனை அவன் முகத்திலும் சிரிப்பிலும் இருந்தது. நான் நினைப்பதை என் உடல் சரிவர நடிப்பதில்லை என்பதை கண்டுகொண்டேன். ஆகவே என் உடல் நடிப்பதை நான் எண்ணத் தொடங்கினேன் என அவன் சொல்வான்.

அன்றுகாலை அம்பாலிகையே வந்து அவனை எழுப்பினாள். அவளுடைய குரல்கேட்டதுமே அவன் கண்களை விழித்து புன்னகையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவன் உதடுகளை வெந்நீர்த்துணியால் துடைத்தபோதும் அப்பார்வை மங்கலான ஒளிகொண்ட விளக்குபோல அப்படியே இருந்தது. பின்பு அவன் "நீங்களா அன்னையே?" என்றான். "எழுந்திரு...இன்று நாம் மார்த்திகாவதிக்குக் கிளம்புகிறோம்" என்றாள் அம்பாலிகை. "பகலிலா?" என ஆவலுடன் கேட்டபடி பாண்டு எழுந்தான். "பகல் ஒளியில் நீ செல்லமுடியுமா? நாம் மாலையில்தான் கிளம்புகிறோம்" என்றாள் அம்பாலிகை.

முகம் கூம்ப "இப்போது மழைக்காலம்...வெயிலே இல்லையே" என்றான் பாண்டு. அம்பாலிகை "ஆம், ஆனால் மழைமேகங்கள் ஒழிந்துகொண்டிருக்கின்றன. நினைத்திருக்காமல் வான்திரை விலகி ஒளி வந்தால் என்ன செய்வது?" என்றாள். "மாலையில்தானே? இப்போதென்ன விரைவு?" என்றபடி பாண்டு மீண்டும் படுக்கப்போனான். அம்பாலிகை அவன் கைகளைப்பற்றியபடி "அறிவிலி போலப் பேசாதே. நீ அரசன். அரசனுக்குரிய ஆடையலங்காரங்களுடன் நீ செல்லவேண்டும். நீ இங்கிருந்து செல்வதை இந்நகரத்து மக்கள் அனைவரும் பார்த்து உன்னை வழியனுப்பி வைக்கப்போகிறார்கள்..." என்றாள்.

"இன்று அவர்களுக்கு அகம்நிறைந்து சிரிப்பதற்கு ஒரு நாடகம் நிகழவிருக்கிறது" என்றபடி பாண்டு எழுந்தான். "அன்னையே, நான் ஒருவகையில் நல்லூழ் கொண்டவன். உலகமே என்னை நோக்கிச் சிரித்தாலும்கூட நான் நோக்கிச் சிரிப்பதற்காக உங்களை எனக்களித்திருக்கிறது இயற்கை" என்றான். "போதும், எனக்கு உன் பேச்சுகளே புரிவதில்லை. உன்னை நன்னீராட்டவும், ஆடையணிகள் அணிவிக்கவும் மருத்துவரும் சேடியரும் நின்றிருக்கிறார்கள்" என்றாள்.

பாண்டு "நீரா? அது எப்படி இருக்கும்?" என்றான். பாண்டுவை மூன்றுமாதங்களுக்கு ஒருமுறைதான் சேடியரும் மருத்துவரும் சேர்ந்து மூலிகை நீராட்டுவார்கள். மற்றநாட்களில் நறுமணநீர் நனைத்த துணியால் அவன் உடலை மெல்லத்துடைப்பது மட்டுமே. அதையும் ஆதுரசாலையில் மருத்துவர்களே செய்வார்கள். அவனுடைய நரம்புகளின் மேல் கையின் அழுத்தம் படிந்துவிடலாகாது என்பதை மருத்துவர் கடுமையான எச்சரிக்கையாக மீளமீளச் சொல்லியிருந்தனர்.

மெத்தைமேல் முன்விரல்களை ஊன்றி எம்பி எம்பி நடந்து சென்று வாயிலைத் திறந்த பாண்டு "வெளியே ஒளியிருக்கிறதா?" என்றான். "ஆம்..." என்று அம்பாலிகை சொன்னாள். "ஆகவேதான் காலையிலேயே அனைத்து திரைச்சுருள்களையும் கீழிறக்க ஆணையிட்டேன்." பாண்டு "அன்னையே, என் விழிகளும் உடலும் ஒளிக்காக ஏங்குகின்றன" என்றான். "மெல்லிய ஒளி என்றால் ஏன் நான் அதை எதிர்கொள்ளக் கூடாது?" அம்பாலிகை சினத்துடன் "உனக்கே தெரியும் வெய்யோனொளி பட்டால் உன் தோல் வெந்து சிவந்துவிடுகிறது. உன் விழிகள் பார்வையை இழந்துவிடுகின்றன. சிறுவனாக இருக்கையில் ஒருமுறை வெளியே சென்றுவிட்டாய். உன் பார்வை மீள பதினைந்து நாட்களாயின. உன் தோலில் அப்போது பட்ட கொப்புளங்களின் தடம் இப்போதுமிருக்கிறது" என்றாள்.

பாண்டு பெருமூச்சுடன் "காட்டில் வளரும் காளான்களைப்போல ஒரு வாழ்க்கை" என்றான். திரும்பி "எங்கே ஆதுரசாலைப் பணியாளர்கள்? அவர்கள் இன்று ஒரு அரிய மூலிகை வேரை கழுவவேண்டும் அல்லவா?" என்றான். அம்பாலிகை "நீ எனக்கு என்றும் அரியவனே. என் உயிரை வாழச்செய்யும் சஞ்சீவி" என்றாள். "ஆம், நான் வாழ்வதன் நோக்கமே உங்களை வாழச்செய்வதுதான்" என்றான் பாண்டு. அம்பாலிகையின் முகம் கூம்பக்கண்டு அருகே வந்து அவள் முகவாயைத் தொட்டு முகத்தைத் தூக்கி "என்ன இது? என் நல்லூழ் அது என்றல்லவா சொன்னேன்?" என்றான்.

"இல்லை...நீ சொல்வதைத்தான் இங்கே அனைவரும் சொல்கிறார்கள் என நானறிவேன்" என கண்களில் நீர் நிறைய அம்பாலிகை சொன்னாள். "மாயநீர் யானத்தில் என் இறைவர் வந்தபோது நான் அவரிடம் வல்லமையும் அழகும்கொண்ட மைந்தனுக்காக கோரவில்லை. என் அறியாமையால் எனக்கொரு விளையாட்டுப்பாவையையே கோரினேன். ஆகவேதான் நீ வந்தாய். அனைத்தும் என் பிழை என்கிறார்கள். உன்னைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு விம்முகிறது. உண்மையிலேயே என் பிழையின் விளைவைத்தான் நீ சுமக்கிறாயா என்ன? நான் இப்பெரும்பாவத்துக்கு எப்படி கழுவாய் ஆற்றுவேன்?"

"பதிலுக்கு நீங்கள் எனக்கொரு அழகிய விளையாட்டுப்பாவையாகவே இருக்கிறீர்களல்லவா? அதுவே கழுவாய்தான்..." என்று சிரித்த பாண்டு அவள் கன்னங்களைத் துடைத்து "என்ன இது? இந்த வினாவுக்கு நான் இதுவரை ஆயிரம் வெவ்வேறு பதில்களைச் சொல்லிவிட்டேனே. எவையுமே நினைவில்லை போல. அவற்றை குறித்துவைத்து ஒரு அழகிய குறுங்காவியமாக ஆக்கியிருக்கலாமென்று தோன்றுகிறதே" என்றான். புன்னகையுடன் "எல்லாமே அர்த்தமற்ற உளறல்கள்" என்றாள். "ஆம், அவையெல்லாம் கவிதைகள்" என்றான் பாண்டு.

பாண்டுவை ஆதுரசாலையின் நீராட்டறையில் வைத்தியர்கள் எதிர்கொண்டழைத்துச்சென்றனர். முதலில் அவன் உடலில் மருத்துவத்தைலம் போடப்பட்டது. அவன் கால்விரல்களிலும் கைவிரல்களிலும் சிலதுளிகள் தைலம் விடப்பட்டு மெல்ல சுட்டு விரலால் நீவப்பட்டது. அதன் பின் கால்களிலும் கைகளிலும் தைலத்தை நீவி மெல்ல உடலெங்கும் பரப்பி இறுதியில் உச்சந்தலைக் குழிவில் தைலத்தைத் தேய்த்தனர். மூலிகைகள் கொதிக்கவிடப்பட்ட வெய்யநீராவி அவன் மேல் படச்செய்யப்பட்டது. அவன் உடல் வியர்த்து சூடான பின்னர் அவன் வெந்நீர் தொட்டிக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.

சூடான நீர் அவன் கால்களில் சிறிது விடப்பட்டது. பின்னர் தொடைகளிலும் கைகளிலும் விடப்பட்டு மெல்லமெல்ல உடல் முழுக்க நனைக்கப்பட்டபின் அவன் தலையில் வெந்நீரை விட்டனர். உடல்நனைந்தபின் அவனை வெந்நீர்த்தொட்டிக்குள் அமரச்செய்தனர். கடற்பஞ்சால் அவன் உடலை மெதுவாக வருடி தேய்த்து குளிப்பாட்டினர். அவர்கள் உதடுகளைக் கடித்தபடி மிகுந்த எச்சரிக்கையுடன் தன் உடலை கையாள்வதைக் கண்டு பாண்டு "நீங்கள் ஏதாவது பேசலாம் அருணரே. நான் குரல்கேட்டால் உடைந்துவிடமாட்டேன்" என்றான்.

மருத்துவரான அருணர் "ஆம்...அரசே" என்றார். ஆனால் அவர்களின் கண்கள் மேலும் எச்சரிக்கை கொண்டன. "நான் உண்மையிலேயே எக்கணமும் இறக்கக்கூடியவனா?" என்று பாண்டு கேட்டான். "அரசே உங்கள் பிறவிநூல் அவ்வண்ணம் சொல்லவில்லை" என்றார் அருணர். "உங்கள் மருத்துவநூல் என்ன சொல்கிறது?" என்று பாண்டு கேட்டான். "தங்கள் உடலின் நரம்புகள் மென்மையானவை. அவ்வளவுதான். தங்களுக்கு நோய்களென எவையும் இல்லை." பாண்டு உரக்கச்சிரித்து "அருணரே, நோய் என்றால் என்ன?" என்றான். அருணர் "மாறுபட்ட உடல்நிலை. வருத்தும் உடல்நிலை. உயிரிழப்புக்கான காரணம்" என்றார். "வரையறைகளை மனப்பாடம் செய்திருக்கிறீர்... எனக்கு நீங்கள் சொன்ன மூன்றுமே உள்ளதே" என்றான் பாண்டு.

நீர் துவட்டப்பட்டபின் அவனை அமரச்செய்து அகிற்புகையால் அவன் கூந்தலை ஆற்றினர். அவன் உடலெங்கும் நறுமணத்தைலங்கள் பூசப்பட்டன. சேடியரால் அழைத்துச்செல்லப்பட்ட அவன் பெரிய ஆடிமுன் அமரச்செய்யப்பட்டான். சேடியர் அவனுக்கு ஆடைகளை அணிவித்தனர். பாண்டு மிக மென்மையான கலிங்கத்துப் பட்டாடைகளை அணிந்து அவற்றின்மேல் பட்டுநூல்களை கட்டிக்கொண்டான். "இவை பொன்னூல் வேலைப்பாடுகளா?" என்று கேட்டான். "அரசே, தங்கள் உடைகள் எடைகொண்டவையாக அமையலாகாதென்பதனால் இவை பொன்னிற நூல்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன" என்றாள் விஜயை என்னும் சேடி.

பாண்டு சிரித்துக்கொண்டு "இளவரசுக்கான மணிமுடியும் தக்கையால் செய்யப்பட்டிருக்குமா?" என்றான். "ஒன்று செய்யலாம், ஒரு ஏவலன் எந்நேரமும் என் பின்னால் நின்று என் மணிமுடியை எந்நேரமும் தூக்கிப்பிடிக்கும்படி சொல்லலாம்." உரக்கச் சிரித்து பாண்டு "அந்தச் சேவகனுக்கு பீஷ்மர் என்று பெயரிடலாம். பொருத்தமாக அமையும்" என்றான். விஜயை மெல்ல "இந்தப்பேச்சுக்கள் எவ்வண்ணமாயினும் அவர் செவிகளை அடையலாம் இளவரசே" என்றாள். "அடையட்டுமே... அவர் என்னை என்ன செய்வார்? எனக்கு உவக்காத எதையும் என்னிடம் எவரும் சொல்லமுடியாது. அவற்றை என் அன்னை கொலைமுயற்சிகள் என்றே பொருள்கொள்வாள்."

"நான் வியப்பது ஒன்றைத்தான்" என்றாள் விஜயை. அவன் கூந்தலை சிறியபட்டுச்சரடுகளால் சடைத்திரிகள் போலக் கட்டி அவன் தோளில் பரப்பியபடி "நான் இளவயதில் தங்கள் தந்தை விசித்திரவீரிய மாமன்னரை கண்டிருக்கிறேன். அவரைப்போலவே நீங்கள் இருக்கிறீர்கள்..." என்றாள். பாண்டு "தோற்றமா?" என்றான். "இல்லை...தோற்றமில்லை. அவரது உடல் வேறு... ஆனால் சிரிப்பு பேச்சு எல்லாமே அவரைப்போலத்தான்." பாண்டு "விந்து வழியாக அல்லாமல் குலம் தொடரமுடியும் என்று முனிவர்கள் வகுத்தது வீணாகுமா என்ன? தந்தையின் நோயும் நொடிப்பும் அவ்வண்ணமே என்னை வந்தடைந்தன" என்றான்.

விஜயை "நன்றும் தீதும் நாம் செய்யும் வினைப்பயன் மட்டுமே" என்றாள். "ஆம்... எளிதில் கடந்துசெல்ல அப்படியொரு ஒற்றை விடை இல்லையேல் வாழ்வே வினாக்களால் நிறைந்து மூடிவிடும்" என்றபின் பாண்டு "விசித்திரவீரியர், அதற்கு முன் தேவாபி. அதற்கு முன்?" என்றான். விஜயை பதில் சொல்லவில்லை. "சொல், விஜயை, அதற்கு முன்பு யார்?" விஜயை "கண்வ முனிவருக்கு ஆரியவதி என்னும் பெண்ணில் பாண்டன் என்னும் மகன் பிறந்தான். அவன் வெண்ணிறமாக இருந்தான்" என்றாள்.

"அவனை கண்வர் காட்டிலேயே விட்டுவிட்டார் இல்லையா?" என்றான் பாண்டு. "ஆம், அவனால் வேதவேள்விகளைச் செய்யமுடியாதென்று அவர் எண்ணினார். அவனை காட்டில் ஒரு வாழைமரத்தடியில் விட்டுவிட்டு கண்வரும் ஆரியவதியும் திரும்பிவிட்டனர். அவனை வெண்முயல்கள் முலையூட்டி வளர்த்தன." பாண்டு புன்னகையுடன் "அவன் முயல்களின் தலைவனாக ஆனான், இல்லையா?" என்றான்.

விஜயை "அவன் வளர்ந்து காட்டின் இருளிலேயே வாழ்ந்தான். அவன் ஒளியை அறிந்ததே இல்லை. அங்கே அவன் வாழ்ந்துகொண்டிருந்தபோது அக்காட்டில் தேன் எடுக்கவந்து வழிதவறிய மலைப்பெண்ணான ஸித்தி என்பவளைக் காப்பாற்றினான். அவளை அவன் மணந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றான். அக்குழந்தைகளில் இருந்து உருவானது பாண்டகர் என்னும் குலம். அவர்கள் இன்னும் இமயமலைச்சாரலில் வாழ்கிறார்கள். வேர்கள் போல வெண்ணிறம் கொண்ட அவர்கள் மலைக்குகைகளின் இருளில் வாழ்பவர்கள். இரவில் காட்டுக்குள் அலைந்து வேட்டையாடுபவர்கள். மின்மினி ஒன்றை கையில் விளக்காகக் கொண்டு வேட்டையாடுபவர்கள்" என்றாள்.

பாண்டு "எதற்கும் ஒரு புராணமிருக்கிறது இங்கே" என்றபடி எழுந்துகொண்டான். விஜயை சொன்னாள் "கண்வர் ஆயிரம் வருடம் தவம்செய்தபின் சொர்கத்துக்குச் சென்றபோது அவரது மகள் சகுந்தலையின் வழிவந்த பரதகுலத்து மைந்தர்களும் மேனகையில் அவருக்குப்பிறந்த இந்தீவரப்பிரபை வழியாக வந்த மைந்தர்களும் அவரது மைந்தன் மேதாதிதியும் அவன் வழி மைந்தர்களும் அவரைக் கைப்பிடித்து அழைத்துச்சென்றனர். வழியில் இருண்ட குகைப்பாதை ஒன்று வந்தது. மைந்தர்கள் விழியொளி இல்லாது திகைத்து நின்றுவிட்டனர்."

விஜயை "அப்போது வெண்ணிற உடல்கொண்ட ஆயிரம் மைந்தர்கள் வந்து அவர் கைகளைப்பற்றி இருண்ட பாதையில் அழைத்துச்சென்றனர். நீங்கள் யார் என அவர் கேட்டார். உங்கள் மைந்தன் பாண்டனின் குலத்தவர் என அவர்கள் பதிலிறுத்தனர். கண்வர் குகையைக் கடந்து இந்திரநீலம் என்னும் ஒளிமிக்க பாலம் வழியாக தவத்தாருக்குரிய தனிஉலகைச் சென்றடைந்தார்" என்றாள். பாண்டு புன்னகையுடன் அவளை சிலகணங்கள் நோக்கியபின் எழுந்துகொண்டான்.

அம்பாலிகை ஓடிவந்து "அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்.... இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்றாள். அவள் வெண்பட்டு ஆடையும் வெண்மணியாரங்களும் அணிந்திருந்தாள். "அரசி, இன்னும் நேரமிருக்கிறது. மாலையில்தான் நாம் கிளம்புகிறோம்" என்றாள் விஜயை. "மாலை ஆவதற்கு இன்னும் அதிகநேரமில்லை... பீஷ்மபிதாமகரின் ரதம் அலங்கரிக்கப்படுகிறது" என்றாள் அம்பாலிகை. "நகரமே அலங்கரிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? நான் உப்பரிகையில் நின்று பார்த்தேன். எதுவுமே கண்ணுக்குப்படவில்லை."

"அது வழக்கமில்லை அரசி... நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை. யாதவர்களின் சுயம்வரத்துக்கு இளவரசர் செல்கிறார், அவ்வளவுதானே?" என்றாள் விஜயை. "அவள் மகன் மணம்கொண்டு வந்தபோது மட்டும் பெருமுரசம் முழங்கியது. நகரம் முழுக்க அணிகொண்டு நின்றது" என்று அம்பாலிகை முகம் சுருக்கிச் சொன்னாள். "அரசி, அது மணம்கொண்டு திரும்பும்போது... நாமும் இளவரசியுடன் வருகையில் அனைத்தும் நிகழும்" என்றாள் விஜயை. "ஒன்றும் குறைவுபடக்கூடாது....என்ன குறை இருந்தாலும் நானே சென்று பேரரசியிடம் கேட்பேன்" என்று அம்பாலிகை சொன்னாள்.

பேரரசியின் சேடியான சியாமை வந்து "பேரரசி எழுந்தருளவிருக்கிறார்" என்றாள். பாண்டு "ஏன், ஆணையிட்டால் நானே சென்றிருப்பேனே" என்றான். "நீ ஏன் செல்லவேண்டும்? நீ மணம் கொள்ளச்செல்லும்போது உன் பாட்டியாக அவர்கள் வந்து வாழ்த்துவதல்லவா முறை?" என்றாள் அம்பாலிகை. விஜயை "இளவரசே, நான் இந்த அறையை ஒழுங்குசெய்கிறேன். பேரரசி நுழையும்போது வாழ்த்தும் மங்கல இசையும் முழங்கவேண்டும்" என்றாள்.

குடையும் கவரியும் மங்கலத்தாலமுமாக சேடியர் சூழ சத்யவதி அரண்மனைக்குள் வந்தாள். பாண்டு எழுந்துசென்று அவள் பாதங்களைப் பணிந்து முகமன் சொல்லி வரவேற்றான். சத்யவதி அவன் தலைமேல் கைவைத்து "நிறைமணம் கொண்டு திரும்புக" என்று வாழ்த்தினாள். தன் கரங்களால் அவன் நெற்றியில் மஞ்சள்திலகமிட்டு "நீ திரும்பும்போது இந்நகரமே உன்னை வாழ்த்துவதற்காக கோட்டைவாயிலில் நிற்கும்" என்றாள்.

அரண்மனை வளாகத்தில் இருந்த ஏழு அன்னையர் கோயிலிலும், கணபதி, விஷ்ணு, சிவன் ஆலயங்களிலும் பூசனைகள் செய்து வணங்கியபின்னர் மணக்குழு கிளம்பிச்சென்றது. பீஷ்மரின் ரதமும் விதுரனின் ரதமும் முன்னால்செல்ல பாண்டு இருந்த கூண்டுவண்டி தொடர்ந்து சென்றது. காவல்வீரர்களும் கொடியேந்தியவர்களும் சூதர்களும் அணிவகுத்துச் சென்றனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க அவர்கள் சென்று மறைந்ததை அரண்மனை முற்றத்தில் நின்றபடி சத்யவதி பார்த்தாள். அம்பாலிகை கண்ணில் ஊறிய நீரைத் துடைத்தபடி தலைகுனிந்து தன் சேடி சாரிகையுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தாள்.

களைத்த நடையுடன் அரண்மனைக்குள் செல்லும்போது சத்யவதி சியாமையிடம் "மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?" என்றாள். "சிறிய இளவரசர் மணம்கொள்வதற்குத் தகுதியானவரல்ல என்று சொல்லவில்லை" என்றாள் சியாமை. "அவருடைய நரம்புகள் மிகமெல்லியவை என்று மட்டுமே சொன்னார்கள். அவரால் அதிர்ச்சிகளையும் நிலைகுலைவுகளையும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் மணம்கொண்டபின்னர் படிப்படியாக நாளடைவில் காமத்தை அறிந்தாரென்றால் ஆபத்தில்லை."

சத்யவதி "அது உண்மை அல்ல" என்றாள். "மருத்துவர்கள் உள்ளத்தைப் பார்க்கவில்லை, உடலை மட்டுமே பார்க்கிறார்கள். காமம் தனக்கு உயிராபத்தை வரச்செய்யுமென பாண்டுவுக்குத் தெரியும். ஆகவே அது அவனுள் மேலும் பலமடங்கு வளர்ந்திருக்கிறது. அவனால் பிற சாதாரணமனிதர்களைப்போலக்கூட காமத்தை எதிர்கொள்ளமுடியாது. அவன் அகமும் ஆகமும் அதிரும் அனுபவமாகவே அது இருக்கும்."

சியாமை பதில் சொல்லாமல் பார்த்தாள். "அவனைத் தடுக்கும்தோறும் மேலும் அது வலுப்பெறும். விலக்கும்தோறும் விரைவுகொள்ளும். விலகும்தோறும் வல்லமை பெறும் ஈர்ப்பே காமம்" என்று சொன்ன சத்யவதி "அவனுள் அந்த விசை வளர்வதைக் கண்டேன்" என்றாள்.

"இளவரசர் இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது" என்றாள் சியாமை. "ஆம், அது அவனுடைய பாவனை. நுண்ணிய அறிவுடையவர்கள் காமத்தை வெட்குகிறார்கள். அதை மறைக்க ஏளனமென்னும் திரையை போட்டுக்கொள்கிறார்கள்" சத்யவதி சொன்னாள். "கூரிய வாளை நோக்கி வானிலிருந்து விழுபவனின் பெருங்களி கொண்ட முகம் அவனிடமிருந்தது."

பகுதி எட்டு : பால்வழி

[ 2 ]

பாண்டு அதுவரை கங்கையை கண்டதில்லை. அரண்மனையைச் சுற்றியிருந்த பூங்காக்களுக்கு வெளியே அவன் செல்வதே அதுதான் முதல்முறை. அஸ்தினபுரியின் அரண்மனையில் ஆடையணிகள் பூணும்போதுகூட அவனிடம் பயணத்துக்கான பரபரப்பு ஏதும் இருக்கவில்லை. பயணம் என்று எதையும் அவன் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவனால் எதையும் எதிர்பார்க்கவும் முடியவில்லை. எப்போதுமிருக்கும் இயல்பான தன்பகடியுடனும் சிரிப்புடனும் தன்னை ஒருக்கி அமைக்கும் சேடிகளுடன் ஒத்துழைத்தான். அரண்மனை முகப்புக்கு வந்து அன்னையிடமும் பேரரசியிடமும் ஆசிபெற்று கூண்டு வண்டியில் ஏறப்போன கணம் தான் செல்லவிருக்கும் தொலைவு அவன் நினைவை வந்து முட்டியது. பிரமித்துப் போய் வைத்த காலுடன் சில கணங்கள் நின்றுவிட்டான்.

கூண்டு வண்டிக்குள் அவன் அமர்வதற்காக பஞ்சு செறிந்த புலித்தோல் மெத்தைகளுக்கு தலையணைகளும் திண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சாய்ந்துகொண்டபோது அவன் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. தன் அன்னையும் சுற்றமும் எப்போதும் அஞ்சிக் கொண்டிருக்கும் நரம்பதிர்ச்சி நிகழ்ந்துவிடுமோ என்று அவன் எண்ணிக்கொண்டான். ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். மூச்சை மெதுவாக இழுத்து விட்டு தன்னை ஆற்றிக்கொண்டபோது கல்விழுந்த குளம் அமைதியாவது போல அவன் உடல் மெதுவாக நிலைமீண்டது. காதுகளின் வெம்மை அடங்கத் தொடங்கியது.

மார்த்திகாவதி யமுனைக்கரையில் இருக்கிறது என்பதை அவன் வரைபடத்தில் பார்த்திருந்தான். அந்த வரைபடத்தையே தன்னுடன் எடுத்து வந்திருந்தான். அவனுடைய பொருட்கள் போடப்பட்ட சிறிய தந்தப்பேழையில் அந்த துணிச்சுருள் இருந்தது. தன் பின்னால் வண்டியில் ஏறிக் கொண்ட அணுக்கச் சேவகனிடம் பெட்டியில் இருந்து அந்த வரைபடத்தை தரச் சொல்லி வாங்கி விரித்து வண்டிக்குள் இருந்த சிறிய சீனத்து நெய்விளக்கின் ஒளியில் பார்த்தான். கங்கை வழியாகச் சென்று யமுனைச் சந்திப்பை அடைய வேண்டும். அங்கிருந்து யமுனையின் எதிர்நீரோட்டம் வழியாக மதுராபுரியைக் கடந்து உத்தரமதுராபுரியை பின்னிட்டு சென்றால் வரும் மார்த்திகாவதி. யமுனைக்கரையில் இருக்கும் மூன்று பெருந்துறைகளில் ஒன்று.

கங்கை யமுனை... இரு பெயர்கள் நிலையறிந்த நாள் முதலாக கேட்டு வளர்ந்தவை. நீர் பெருகி ஓடும் நதியை அவன் பார்த்ததே இல்லை. சிறுவயதில் நீராட்டறையில் அவன் பெருங்கலத்து நீரை அள்ளி தரையில் ஊற்றி அது வழிந்தோடுவது கண்டு "நதி... நதி ஓடுகிறது" என்று கூச்சலிடுவான். அன்னை சிரித்தபடி "நதிக்கு ஐந்து தங்கைகள்..." என்று ஐந்து விரல்களால் அதை வழித்து பிரித்து விடுவாள். அவன் அன்னையின் ஆடைநுனியைப் பிடித்தபடி "அன்னையே நதி இதைவிடப் பெரிதா?" என்று கேட்பான். "மிகப் பெரியது" என்று அவள் சொல்வாள். "எவ்வளவு பெரியது?" என்று அவன் கேட்பான். "இவ்வளவு பெரியது" என்று அவள் சொல்வாள். கைகளை மேலும் விரிக்க எம்புபவள் போல சற்றே துள்ளி "இவ்வளவு பெரியது!!" என்று கூறுவாள். அவன் அவள் கால்களைப் பற்றிக்கொண்டு உடல் நடுங்குவான். அவன் உதடுகள் நீலநிறமாகி கழுத்திலும் தோளிலும் தசைகள் அதிரத்தொடங்கும்.

அன்னை கங்கைச் சமவெளியில் பிறந்தவள் என்பதை மிகத்தாமதமாகவே அறிந்தான். காசிநாடு அஸ்தினபுரியின் முதலெதிரியான மகதத்துடன் சேர்ந்து கொண்டிருந்ததை சேடியர் சொல்லி அறிந்தான். அவன் அன்னை காசிநாட்டைப் பற்றியோ கங்கையைப் பற்றியோ ஒரு சொல்கூட சொன்னதில்லை. கங்கை என்ற சொல்லே வருவதில்லை. வளர்ந்த பிறகு அவன் அதை எண்ணி வியந்திருக்கிறான். அவளால் அத்தனை நாவடக்கம் கொள்ளமுடியுமென்பதை அவளை அறிந்த எவருமே நம்பமுடியாது. வேறெவ்வகையிலும் அவளிடம் அடக்கமென்பது வெளிப்படவுமில்லை.

அவனுடைய அன்னையை விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத நடுவயதுப் பெண் என்றுதான் பாண்டு புரிந்து கொண்டிருந்தான். அல்லது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டுவதை பிடிவாதமாக மறுத்துவிட்டவள் அவள். படிகளில் அவளால் பாய்ந்துதான் ஏறமுடியும். தனியாக நடக்கும்போது தனக்குள் பேசியபடி மெல்ல துள்ளிக்குதித்துக் கொள்வாள். விதவிதமான கூழாங்கற்களும் விதைகளும் சேகரிக்கப்பட்டிருக்கும் மரப்பேழைகளை தினமும் திறந்து போட்டு அவற்றை எண்ணி திரும்ப வைப்பாள். அவற்றை வேறு எவரேனும் தொட்டுவிட்டால் அழுது கூச்சலிட்டு அவற்றையே அள்ளி வீசி அந்தப்புரத்தையே பதற அடித்து விடுவாள். கையில் கிடைத்த எதையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்வாள்.

அவளிடம் பல மரப்பாவைகள் இருந்தன. குதிரைகள், யானைகள், பல்லக்குகள், ஒட்டகங்கள். பீதர் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெண்களிமண் பாவைகளும் வைத்திருந்தாள். விரலளவு சிறிய தந்தச்சிலைகளை ஒரு தனி பெட்டியில் போட்டு வைத்திருந்தாள். சிறுவயதில் அவளுடைய பாவைப்பெட்டிகள் பாண்டுவுக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிப்பவையாக இருந்தன. அவற்றை அவள் எடுத்ததுமே அவன் உடலதிர்வு தாளாமல் கைகளை மார்பின் மீது வைத்துக் கொள்வான். ஒவ்வொரு பாவையும் இளமை முதல் அவள் நன்கு அறிந்தவை. அனைத்துக்கும் பெயர் உண்டு. ஜம்பு, ஜாபாலி, பீதன், பீதமுகன், அஸ்வன், கஜன், கஜபாலன், அஸ்வபாலன், சீதன், சீதசேனன் என்று அவள் நினைவிலிருந்தே அப்பெயர்களைச் சொல்வாள். காலையில் பாவைப்பேழையை திறந்தால் இரவு வரை இருவரும் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். விளையாட்டின் நடுவேதான் சேடி அவனுக்கு உணவை ஊட்டுவாள்.

வளர வளர அவன் அப்பாவைகளில் இருந்து விலகிச் செல்லலானான். அவனுடைய விருப்பம் அனைத்தும் ஓவியங்கள் மீது திரும்பியது. அவன் அந்த ஓவியங்களனைத்தும் அவளுடைய பாவைகளின் வடிவங்களே என உணர்ந்ததெல்லாம் மிகவும் பிந்தித்தான். ஆனால் அவள் தொடர்ந்து அந்தப் பாவைகளுடன் இருந்தாள். அவன் இளைஞனாக ஆனபின்பு தன் அறைக்குள் பாவைகளுடன் உரையாடியபடி விளையாடிக் கொண்டிருக்கும் அன்னையை மறைந்திருந்து பார்த்து வியந்தான். பிற அன்னையர் அப்படி பாவையாடுவதுண்டா என்று சேடியிடம் வினவியபோது அவள் "நமது அரசி ஒரு பெரிய குழந்தை இளவரசே" என்று சொன்னாள்.

ஒருமுறை வெளியே மழை பெய்து தேங்கிய நீரில் சூரிய ஒளி பரவ அதன் பிரதியலைகள் அரண்மனைச் சுவரில் அசைவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஏதோ பாடியாடி படிகளில் துள்ளிஏறி இடையின் மடிப்பாடையை பறக்கவிட்டுக்கொண்டு உள்ளே வந்த அன்னை "ஆ, கங்கை!" என்றாள். சொன்னதுமே குன்றிச் சிறுத்து தன்னுள் ஒடுங்கிக் கொண்டாள். "கங்கையா?" என்று பாண்டு கேட்டான். அவள் தலையை அசைத்துக் கொண்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவள் பின்னால் சென்று அவள் தோளைப்பற்றித் திருப்பி "கங்கையா அன்னையே? கங்கையில் இப்படியா அலைகள் அடிக்கும்?" என்று கேட்டான். அப்போது அவள் கண்களில் ஒரு மெல்லிய பாவனை வந்து சென்றது. அவன் அகம் அதைக்கண்டு நடுங்க பிடியை விட்டுவிட்டு பின்னால் விலகிக் கொண்டான். அதன்பின் அவன் அன்று முழுக்க அவளை எதிர்கொள்ள முடியவில்லை. அவளைப்பற்றி சிந்தித்தபோதே நெருப்பைக்கண்டு அஞ்சும் மிருகங்கள் போல நெஞ்சு பின்னடைந்தது.

பிறகு மிக இயல்பாக அவனுள் அந்த விழி வெளிப்பாட்டின் பொருள் தெளிவடைந்தது. அந்தப்புரத்தில் வாழ்ந்த ஸரணி என்ற பூனை இறப்பதை அவன் இளவயதில் பார்த்திருந்தான். குழந்தைப்பருவம் முதல் அவன் அறிந்திருந்த பூனை அது. அரண்மனை முழுக்க அது பெற்ற குட்டிகள்தான் வளர்ந்து நிறைந்திருந்தன. ஸரணி மீண்டும் கருவுற்றிருப்பதாக சேடி சொல்லியிருந்தாள். முந்தைய நாள் இரவு முழுக்க அழுகைக் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. மஞ்சத்தில் அன்னையை அணைத்துக்கொண்டு கிடந்த அவன் முனகலாக "அது என்ன ஓசை?" என்று கேட்டான். "பூனை குட்டி போடப் போகிறது" என்றாள் அன்னை. "பூனையா?" என்றான். "ஆம் ஸரணி. நாளை காலை அது குட்டியுடன் இருக்கும்." அவன் துயிலில் மீண்டும் மூழ்கும் போதும் ஸரணியின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

காலையில் எழுந்ததுமே அவன் எண்ணத்தில் முதலில் முகிழ்த்தது பூனைதான். "அன்னையே, ஸரணி குட்டி ஈன்று விட்டதா?" என்று அவன் கேட்டான். அன்னை "தெரியவில்லை" என்று புரண்டு படுத்துக்கொண்டாள். பாண்டு எழுந்து அந்தப்புரத்தின் சேடியர் அறைக்குச் சென்றான். அதன் பின்பக்கம் மரத்தாலான படியின்கீழ் ஸரணி கிடந்தது. அதைச் சுற்றி ஏழெட்டு சேடியர் சூழ்ந்து நின்றனர். அவன் ஓடிச்சென்று அவர்களின் கால்களின் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தான். ஸரணி பக்கவாட்டில் படிந்து கிடந்திருந்தது. அதன் வால்நுனி மட்டும் மெல்ல நெளிந்து சுழித்தது.

பாண்டு முதுசேடியின் ஆடையைப் பற்றியபடி "நம்ரை, குட்டிகள் எங்கே?" என்று கேட்டான். "குட்டிகள் வெளிவரவில்லை" என்று அவள் சொன்னாள். "ஏன்?" "குட்டிகளை வெளியே விட அதனால் முடியவில்லை" என்றாள் நம்ரை. "ஏன் முடியவில்லை?" என்றான் திகைப்புடன். நம்ரை "குட்டிகள் உள்ளே இருந்து அவையே வழிகண்டு பிடித்து வரவேண்டுமல்லவா? வழியை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்" என்றாள்.

அவன் பூனையின் வயிற்றையே பார்த்தான். அதில் அசைவுகள் இல்லை. வெளியேறும் வழி தெரியாத குட்டிகள் அதற்குள் கிடக்கின்றன என்று எண்ணிக் கொண்டான். "அவை என்ன செய்கின்றன?" என்று கேட்டான். "இரவெல்லாம் அவை வெளியேறும் வழியை தேடிக் கொண்டிருந்தன. அதனால்தான் ஸரணி அழுதது. இப்போது அவை உள்ளேயே மூச்சுத்திணறி இறந்துவிட்டன. ஸரணியும் இறந்து கொண்டிருக்கிறது."

அவள் அருகே கால்மடித்து அமர்ந்து ஸரணியின் முகத்தைப் பார்த்தான். இறந்து கொண்டிருக்கிறது. இறப்பு! கதைகளில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்பது. ஆனால் அவன் அதுவரை அதைப் பார்த்ததில்லை. அது எப்படி இருக்கும்? ஸரணி விண்ணுக்குப் போகப்போகிறது. அதன் தெய்வமான மார்ஜாரன் வந்து அதை விண்ணுக்குக் கொண்டு செல்லப் போகிறான்! அதன் மீசை மட்டும் அசைந்து கொண்டிருந்தது. சிறிய ஈ ஒன்று அந்த மீசையில் அமர முயன்று சுழன்று சுழன்று பறந்தது. அவன் அதன் அசையாத இமைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸரணி எழப்போவது போல அசைந்தது. நான்கு கால்களையும் தரையிலேயே அசைத்தபோது பக்கவாட்டில் பாயும் பூனையைப்பார்ப்பதுபோலத் தோன்றியது. அது வாலை நெளித்தபடி தலையைத் தூக்கியது. கண்களைத் திறந்து பார்த்தது. மிக மெல்ல மியாவ் என்ற ஒலியை எழுப்பியபின் மீண்டும் விழுந்தது. வால் ஒருமுறை சுழன்று தரையை வருடியபின் அசைவிழந்தது. "அதன் ஆன்மா சென்றுவிட்டது" என்று ஒரு முதுசேடி சொன்னாள். "பூனையை மேற்குத் திசையில்தான் அடக்கம் செய்ய வேண்டும்" என ஒரு குரல் கேட்டது.

அவன் அந்த கடைசிப்பார்வையை மிக அருகே சந்தித்தான். அப்பார்வை ஒரு பருப்பொருள் போல எப்போது வேண்டுமானாலும் தொட்டெடுக்கத் தக்கதாக அவனுள் இருந்தது. அதை அவனால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் வளர வளர அதுவும் வளர்ந்தது. அவனறிந்தவை முழுக்க அந்தப் பார்வையில் சென்று படிந்தன. அதன்பின் எத்தனையோ பெண் விழிகளில் அவன் அதன் சாயலைப் பார்த்திருக்கிறான். ஆனால் அன்றுதான் அன்னையின் கண்களில் அந்தப் பார்வையை முழுமையாகப் பார்த்தான். அந்த எண்ணம் வந்த கணம் அவன் படுத்திருந்த மஞ்சத்திலிருந்து எழுந்துவிட்டான். வாலிபனாக வளர்ந்தபின் முதல் முறையாக அவனுக்கு அன்றுதான் வலிப்பு வந்தது.

அன்னை கங்கையைப் பற்றியும் காசியைப் பற்றியும் பேசியதேயில்லை. பலமுறை அவன் அவளிடம் காசியைப் பற்றி வினவியதுண்டு. அவள் ஒவ்வொருமுறையும் விழிகளை திருப்பிக் கொள்வாள். தன் பாவைகளை எடுத்துக் கொள்வாள். அல்லது ஓவியத் திரைகளை நோக்கித் திரும்பிக் கொள்வாள். அன்று அந்த வலிப்பு விலகியபின் அவன் எழுந்து சென்று அவளுடைய பாவைகளைப் பார்த்தான். பெரிய மரப் பெட்டிக்குள் பல சிறிய பேழைகளிலாக அவற்றை அவள் வைத்திருந்தாள். அவன் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான். மிகப் பழகிய பாவைகள்தான். ஆனால் ஒவ்வொன்றும் அவனைப் பார்ப்பது போல உணர்ந்தான். ஒவ்வொரு பார்வையிலும் ஸரணியின் பார்வையின் சாயல் இருந்தது.

அவர்கள் நகர்நீங்கியபோது இளமழை பெய்துகொண்டிருந்தது. மூடுவண்டியின் சகடங்கள் அசைந்தபோதுதான் அவன் பயணம் தொடங்கி விட்டதை அறிந்தான். வெளியே காவலர்களின் ஆணைகளும் விதவிதமான ரதசக்கரங்கள் மண்ணை உரசி ஒலிக்கும் இரைச்சலும் கேட்டன. சேவகன் "இளவரசே மக்கள் நீங்கள் நகர்நீங்குவதைக்காண விரும்பலாம்" என்றான். "என்ன செய்யவேண்டும்?" என்று பாண்டு கேட்டான். "வெளியே தங்களுக்கான ரதம் வருகிறது. இப்போது இளமழை பெய்து கொண்டிருக்கிறது. வெயிலும் இல்லை" என்று சேவகன் தணிந்த குரலில் சொன்னான்.

"நான் ஒருவேளை மணம் முடிக்காமல் திரும்பினேன் என்றால்?" என்றான் பாண்டு. "இல்லை மார்த்திகாவதியில் இருந்து திடமாகவே செய்தி வந்துள்ளது" என்றான் சேவகன். "ஆனால் நடக்கவிருப்பது ஒரு தன்னேற்புமணம். அங்கு எதுவும் நிகழலாம். நான் ஏளனத்துக்குரியவனாக இந்த நகரில் மீண்டும் நுழைய விரும்பவில்லை. மணம் கொண்டு திரும்புவேன் என்றால் திறந்த ரதத்தில் மணியாரமும் முடியும் சூடி மலர்மாலையை ஏற்றபடி நுழைகிறேன்" என்றான். சேவகன் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. பாண்டு புன்னகை செய்தபடி "அதனால்தான் பீஷ்ம பிதாமகர் நான் ரதத்தில் நிற்க வேண்டும் என்று கூறவில்லை. இளமழை பொழிவது அவருக்குத் தெரியாதா என்ன?" என்றான்.

வெளியே மக்களின் வாழ்த்தொலிகள் கேட்டன. பிறகு கோட்டை வாயிலின் பெருமுரசமும் கொம்புகளும் ஒலித்தன அவ்வொலிகள் அகன்று செல்ல அதன் வழியாகவே நகரம் விலகிச் செல்வதை பாண்டு உணர்ந்தான். "இங்கிருந்து கங்கை நெடுந்தொலைவா?" என்றான். சேவகன் பணிந்த குரலில் "நெடுந்தொலைவு அல்ல இளவரசே. நாம் இரண்டரை நாழிகைக்குள் கங்கையைச் சென்றடைவோம்" என்றான். "நான் இதுவரை கங்கையைப் பார்த்ததில்லை" என்றான் பாண்டு.

சேவகன் "நாம் செல்லும்போது கங்கை முற்றிலும் இருண்டிருக்கும். நாம் மார்த்திகாவதியை அடையும்போது ஒளி எழுவதற்கும் வாய்ப்பில்லை" என்றான். பாண்டு "இருளில் ஆயினும் நான் கங்கையின் மீதிருக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானது" என்றான். கங்கை என்னும் சொல் அத்தனை புதியதாக ஒலித்ததை உணர்ந்தான். அது தாய்வழியாக தனக்கு மிக அண்மையது என நினைத்துக்கொண்டான்.

'அது என் அன்னையின் ஆழத்தில் ஓடும் பாதாள நதி' என்று தன் நெஞ்சு உரைப்பதைக் கேட்டு அவன் புன்னகை செய்தான். ரதம் ஓடும் நேரம் முழுக்க அவன் விதவிதமான கங்கைகளை தன்னுள் பார்த்தபடி இருந்தான். வண்ணங்களின் பெருக்கான கங்கை. வெண்ணிற ஒளி ஓடும் கங்கை. பசும் நிழல்கள் கொந்தளிக்கும் கங்கை. நீலம் அலையடிக்கும் கங்கை. பின்பு அவையனைத்துமே ஓவியக் கங்கைகள் என்று அவனே உணர்ந்து மீண்டும் புன்னகை செய்தான்.

வெளியே பெய்து கொண்டிருந்த மழை வண்டியின் பிரம்புக்கூடை போன்ற முகடில் பயிறுமணிகளை உதிர்ப்பது போன்ற ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. பாதை சேறாகியிருக்க வேண்டும்; சக்கரங்கள் சேற்றில் சிக்கி அளைந்து செல்லும் ஒலி கேட்டது. சாரதி குதிரைகளை கடிந்துகொள்ளும் ஓசைகள், இழுப்பதன் விசையில் மூச்சு சீறும் குதிரைகளின் மெல்லிய கனைப்புகள். சட்டென்று உறுதியான சாலை வந்ததும் விரைவுகொள்ளும் சகடத்தின் உவகை.

கங்கை வந்து கொண்டிருக்கிறது என்னும் எண்ணம் அறைக்குள் ஏற்றப்பட்ட அகல்சுடர் போல அவனுள் ஒளிவிட்டு நின்றது. அனைத்தும் மீண்டும் மீண்டும் அதனிடமே சென்று சேர்ந்துகொண்டிருந்தன. மீண்டும் அவன் வியப்புடன் எண்ணிக் கொண்டான், அவன் கங்கைக்குச் செல்கிறான் என்பது அன்னைக்குத் தெரியும் என்பது அவளுடைய பேச்சில் குரலில் விழியசைவில் எங்குமே வெளிப்படவில்லையே என்று. அன்னையால் எதையுமே மறைக்க முடியாதென்பதை அவன் அறிந்திருந்தான். இந்த ஒன்றை மட்டும் அவள் எப்படி தன்னுள் அழுத்திக் கொள்கிறாள்?

பாண்டு வண்டியின் சாளரத்திரைகளை விலக்கி வெளியே பார்த்தான். இருபக்கமும் குறுங்காடுகளில் இருள் படர்ந்திருந்தது. மழை இருளுக்குள் கொட்டிக் கொண்டிருந்த ஒலி கேட்டது. சாலையோரத்து இலைப்பரப்புகள் பளபளத்து அசைந்தன. நீர் வழியும் மரங்களின் அடிப்பட்டைகள் சர்ப்பங்கள் நெளிவது போல பிரமை கூட்டின. அவன் பார்த்துக்கொண்டே வந்தான். மெதுவாக இருள் மட்டுமே தெரியத் தொடங்கியது. பாதையறிந்த குதிரைகள் என்பதனால் இருளிலேயே அவை சென்றன. அவற்றின் விழிப்புலன்களை குழப்பக்கூடாது என்பதனால் வண்டிகள் எதிலும் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றப்படவில்லை. இருளுக்குள் ஓடும் சிறிய ஆறு போல மணக்குழு சென்றது.

வண்டிகள் சரிந்து செல்லத் தொடங்கியபோதுதான் கங்கை நெருங்குவதை பாண்டு உணர்ந்துகொண்டான். தடைக்கட்டைகள் பின்சகடங்களில் உரசும் ஒலிகளும் குதிரைகள் குளம்புகளை ஊன்றி ஊன்றி எடுத்து வைக்கும் ஒலியும் கேட்டன. சாலை சரிந்து வண்டி முன்பக்கம் அமிழ்ந்ததும் பின்னாலிருந்த சிறிய பெட்டிகள் இரண்டு முன்னோக்கி ஓடின. தொங்கவிடப்பட்டிருந்த சிறிய சீன விளக்கு சரிந்தாடியது. "கங்கையா?" என்று பாண்டு சேவகனிடம் கேட்டான். "ஆம் அரசே, நாம் படித்துறையை நெருங்குகிறோம்" என்றான் சேவகன்.

பாண்டு சாளரம் வழியாக அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினை கொண்ட வளைவைப் பார்த்தான். அப்பால் படித்துறையின் விளக்குகள் மழைத்திரையின் வழியாகத்தெரிந்தன. மழையில் அவ்வெளிச்சம் கரைந்து வழிவதுபோலத் தோன்றியது. படித்துறையில் இருந்து குதிரை வீரர்கள் மழைக்குள் விரைந்து அவர்களை நோக்கி வந்தனர். முதலில் சென்ற காவல் வீரர்களை அவர்கள் சந்தித்ததும் மெல்லிய குரலில் உரையாடல்கள் ஒலித்தன. ரதங்களும் வண்டிகளும் விலகி கங்கைக்கரையில் இருந்த பெரிய களமுற்றம் நோக்கிச் சென்றன. அங்கே மரப்பட்டைக் கூரையிடப்பட்ட லாயங்களில் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. ஓசை கேட்டு அவை தொடைச் சதைகளை அசைத்து தோலைச் சிலிர்த்தபடி திரும்பிப் பார்த்தன. அவற்றின் மின்னும் விழிகளையும் அசைவில்குலையும் பிடரி மயிரையும்கூட காணமுடிந்தது.

சேவகன் கீழே இறங்கியபின் "இளவரசே தாங்கள் இறங்கலாம்" என்றான். பாண்டு வெளியே அவன் இழுத்துப்போட்ட மரப் பெட்டியில் கால் வைத்து இறங்கினான். ஒரு சேவகன் அவனுக்கு மேல் பெரிய ஓலைக்குடை ஒன்றை பிடித்துக் கொண்டான். திரையசைவது போல இருளுக்குள் மழை அசைவதை விளக்குகளின் ஒளியில் காணமுடிந்தது. "நாம் சுங்க அதிகாரியின் மாளிகைக்குச் செல்வோம் இளவரசே... படகுகள் பாய் எழுப்பிய பின்னர் துறைக்குச் சென்றால் போதும் என்பது பிதாமகரின் ஆணை" என்றான் சேவகன்.

சேற்றில் சந்தன மிதியடிகளை எச்சரிக்கையாகத் தூக்கி வைத்து பாண்டு நடந்தான். சுங்க அதிகாரியின் மாளிகை முகப்பில் சுளுந்துப் பந்தங்கள் எரிந்தன. உள்ளறையில் நெய்தீபங்கள் எரிந்த ஒளி செந்நிறச் சதுரங்களாகத் தெரிந்தது. பந்தங்களின் சிவந்த வெளிச்சம் முற்றத்தின் ஈரத்தில் விழுந்து அலையடித்துக் கொண்டிருந்தது. முற்றத்தில் நின்ற பாண்டு அப்பால் மரத்தடியில் தெரிந்த இரு சிறு ஒளிகளைப் பார்த்தான். "அவை என்ன? கோயில்களா?" என்றான். சேவகன் "ஆம் அரசே. அவை அம்பையன்னைக்கும் அவளுடைய அணுக்கச் சேவகனாகிய சித்த மூர்த்திக்கும் கட்டப்பட்ட கோயில்கள்" என்றான். பாண்டு "ஆம், கதைகளைக் கேட்டிருக்கிறேன்" என்றான்.

சேவகன் "அம்பை அன்னையை இங்கே படகில் இறக்கிவிட்ட குகன் அவள் கொற்றவையாகி திரும்பி வருவது வரை இங்கேயே காத்திருந்தான் என்றும் அன்னை அவனை தன் வலக்காலால் நெற்றிப் பொட்டில் தீண்டி ஞானமளித்து சித்தனாக ஆக்கினாள் என்றும் கதைகள் சொல்கின்றன. இந்தப் பாதையின் வலப்பக்கம் உள்ள காடு இன்று அம்பாவனம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே அம்பையன்னை எரிபீடம் ஏறிய இடத்தில் அவளுடைய ஆலயம் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை நூற்றியெட்டு பத்தினிப் பெண்கள் நோன்பிருந்து அங்கே சென்று குருதிபலி கொடுத்து வழிபடுகிறார்கள்."

சுங்கபதியின் மாளிகையில் பீஷ்மரும் விதுரனும் பாண்டுவும் பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சுங்கபதி பீஷ்மரிடம் அங்குள்ள சுங்கக் கணக்குகள் பற்றிய செய்திகளை விளக்கிச் சொல்லத் தொடங்கினான். விதுரன் அருகே நின்று அரையிருளில் மின்னும் கண்களுடன் கேட்டான். சேவகர்கள் காய்ச்சிய பாலை அவர்களுக்கு அளித்தனர். விதுரன் "இரவில் நதிமீது குளிர் இருக்கும் அமைச்சரே. தோலாடைகளும் மரவுரியாடைகளும் தேவைப்படும்" என்றான். பலபத்ரர் "அனைத்துக்கும் முன்னரே இங்கு ஆணைகள் அளித்திருந்தேன்" என்றார்.

பாண்டு எழுந்து தூணருகே சென்று மழை வழியாகப் பார்த்தான். மரங்களுக்கு அப்பால் நரைத்த இருளாக கங்கை ஓடுவது தெரிந்தது. கங்கை என்ற சொல்லே குளிராக, எடைமிக்கதாக நெஞ்சை அறைந்தது. கூர்ந்து பார்க்கும்தோறும் காட்சி தெளிந்து வர, கங்கையின் அலைகளையும் அதன் விரிவுக்கு அப்பால் பாய்விரித்துச் செல்லும் படகுகளையும் அவன் பார்த்தான். கரையோரமாக நின்ற படகுகள் எழுந்தமர்ந்து கொண்டிருக்க அலைகள் அவற்றின் விலாக்களை அறைந்தன. சேறு படிந்த கரைகளில் அலை நாக்குகள் மென்மையாக பரவி மீண்டுகொண்டிருந்தன. இரு படகுகளுக்கு நடுவே ஒரு பெரிய மீன் துள்ளி நீர்த்திவலைகள் தெறிக்க விழுந்து மூழ்கியது. "மீன்!" என்றான் பாண்டு.

"எங்கே?" என்று விதுரன் கேட்டான். "கங்கையில் மீன்கள் அதிகம் இல்லையா?" என்று பாண்டு கேட்டான். "உங்களுக்கு கங்கை தெரிகிறதா என்ன?" என்று கேட்டபடி விதுரன் வந்து அவன் அருகே நின்றான். கண்களை விரித்து நோக்கியபின் "எனக்கு இருளலைகள் மட்டுமே தெரிகின்றன" என்றான். பாண்டு புன்னகையுடன் "என் விழிகள் இருளில்தான் மேலும் கூர்மை கொள்கின்றன" என்றான். விதுரன் "ஆம். உங்கள் வரம் அது" என்றான். "வரமா?" என்றான் பாண்டு சிரித்தபடி. "ஆம், வரமேதான். பிறரால் பார்க்க முடியாதவற்றைப் பார்ப்பது வரம் அல்லவா?"

"எதற்கும் ஒரு விளக்கம் உன்னிடம் இருப்பதனால்தான் உன்னை அரசுசூழ்தலில் திறமுள்ளவன் என்கிறார்கள்" என்றான் பாண்டு. "சிறந்த அரசுசூழ்மதியாளர் அனைத்தையும் விளக்குவார்கள். விளக்க முடியவில்லை என்றால் ஏன் விளக்க முடியவில்லை என்று விளக்கத் தொடங்கி விடுவார்கள்" என்று சொல்லி விதுரன் நகைத்தான். பாண்டு அப்பால் தெரிந்த அம்பையன்னையின் சிற்றாலயத்தைப் பார்த்தான் "அம்பையன்னை!" என்றான். விதுரன் "ஆம்" என்றான்.

"நீ அன்னையின் திருவுருவச்சிலையைப் பார்த்திருக்கிறாயா?" என்றான் பாண்டு. "அது அழகிய சிலையல்ல. சாதாரணமான ஏதோ சிற்பி செதுக்கியது. வராகியன்னை மேல் கொற்றவை அமர்ந்திருக்கும் கோலம். செங்காந்தள் மலர் சூட்டி வழிபடுகிறார்கள்" என்றான் விதுரன்.  "யார்?" என்று பாண்டு கேட்டான். "நம் வீரர்கள்தான்." பாண்டு சிலகணங்கள் இருளை நோக்கியபின் "பீஷ்ம பிதாமகர் முன் அவர்கள் வழிபடுவார்களா?" என்றான். "ஏன் வழிபட்டாலென்ன?" என்றபின் விதுரன் நகைத்தபடி "அண்ணா, அதற்கருகே ஒரு வெற்றிடம் இருக்கிறது. அங்கே பீஷ்மருக்கும் ஓர் ஆலயம் எழுப்பவே இவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றான். பாண்டு சிரித்தான்.

விதுரன் சிரிப்பு மேலும் விரிந்த முகத்துடன் "நான் வேண்டுமென்றால் ஒரு அரிய மெய்ஞானத்தைப் பகிர்கிறேன். பிரம்மம் என்பது மண்ணுக்குள் இருக்கும் ஒரு பெரிய கிழங்குபோல. அதை நாம் காண்பது அது முளைத்தெழும் ஆயிரமாயிரம் தெய்வங்கள் வழியாகத்தான்" என்றான். பாண்டு நகைத்தான். விதுரன் "நீதியே தெய்வம். அநீதி இன்னொரு தெய்வம். கொல்பவன் தெய்வம். கொல்லப்படுபவன் இணையான தெய்வம்... தன் பரப்பில் அங்குமிங்கும் சென்றுகொண்டிருக்கும் இந்த எளியமைந்தர்களைப்பற்றி கங்கை என்ன நினைப்பாள்? வேறென்ன... சிரித்துக்கொள்வாள்" என்றான்.

பகுதி எட்டு : பால்வழி

[ 3 ]

படகுகள் ஒருங்கிவிட்டன என்று தலைமைக்குகன் வந்து பணிந்து சொன்னான். பீஷ்மர் அந்தப் படித்துறையில் இறங்கியது முதல் கற்சிலை போலவே இருந்தார். குகன் சொன்னதைக்கேட்டு அவரில் உயிர் தன் இருப்பை உணர்ந்தது. மெல்லிய தலையசைவுடன் எழுந்து தலையை மிகக்குனித்து நிலைக்கதவைக் கடந்து முற்றத்தில் இறங்கி நடந்து சென்றார்.

அவர் அம்பையின் ஆலயத்தை அரைக்கணமேனும் பார்க்கிறாரா என்று பாண்டு கவனித்தான். அவரது உடலில் எந்த அசைவும் தெரியவில்லை. அவ்வெண்ணத்தை உணர்ந்தவன் போல விதுரன் "அந்த அளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்கிறாரென்றால் அவரது அகத்தின் புண் எத்தனை ஆழமானதாக இருக்கவேண்டும்" என்றான். பாண்டு "ஆம்" என்றான். "யானைகளின் ரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? வைத்தியர்கள் சிறு கோடரியால் வெட்டி முழங்கை வரை உள்ளே விட்டு மருந்திடுவார்கள். தசையாலான சிறு குகைகள் போலிருக்கும் அவை" என்றான் விதுரன். பாண்டு பல்லைக்கடித்துக்கொண்டான்.

மழை நின்று இலைத்துளிகள் காற்று வீசும்போது உரத்து மீண்டும் சீர்கொண்டன. தவளைகளின் ஓலம் மீண்டும் எழுந்து அப்பகுதியைச் சூழ்ந்திருந்தது. கங்கையின் அந்தச் சதுப்புக் கரையில் கோடிக்கணக்கான தவளைகள் இருக்கக்கூடும் என்று பாண்டு நினைத்தான். அவை ஒரு பேரரசாக இருக்கலாம். பிறபகுதிகளின் தவளைகளால் அஞ்சப்படும் அரசு. அவர்களின் சூதர்களால் பாடப்படும் வல்லமை. ஏன் பாடவேண்டும்? அவையே பாடிக்கொள்கின்றனவே என்று நினைத்ததும் அவன் புன்னகை புரிந்தான்.

விதுரன் திரும்பிப்பார்த்தான். "எத்தனை சூதர்கள்!" என்றான் பாண்டு. விதுரன் புன்னகை புரிந்து "அவை வேதம் பாடுகின்றன என்று மூதாதை ரிஷிகள் சொல்லிவிட்டனர். அவை பாடுவது மழைப்பாடலை" என்றான். "ரிஷி மைத்ராவருணி வசிட்டன் வேதங்களில் தவளைகளை மண்ணின் முதல் வைதிகர்கள் என்று சொல்கிறார்." பாண்டு "ஆம், மழையைப்பற்றி அவை பாடாமல் வேறு எவர் பாடமுடியும்? வருணனையும் இந்திரனையும் அன்னைநதிகளையும் அவை அறியாமல் வேறு எவர் அறியமுடியும்?" என்றான். "இப்போது நான் விரும்புவதென்ன தெரியுமா? ஒரு தவளையின் கண்ணைப் பார்ப்பதைத்தான்."

"தவளையின் கண்கள் இரவில் மனிதர்களுடன் உரையாடக்கூடியவை" என்று விதுரன் சொன்னான். அவர்கள் முற்றத்தில் இறங்கி நடந்தபோது மெல்லிய பளபளப்புடன் ஒரு சர்ப்பம் குறுக்காகக் கடந்து சென்றது. பந்த ஒளி தேங்கிக் கிடந்த சேற்று நீரை மெல்லத் தொட்டு அலையெழுப்பியபின் அது ஒதுங்கி வளைந்து சென்றது. "ஒரே சொல்" என்று பாண்டு சொன்னான். "மழைமழைமழை" விதுரன் புன்னகைசெய்து "வேதம் என்பது ஒரு சொல் முளைத்த வனம் என்பார்கள்" என்றான்.

அவர்கள் படகுத்துறையை அடைந்தனர். படித்துறையை ஒட்டி நின்ற பெரும்படகின் விலா அசைவதை படகுத்துறையின் மரச்சட்டத்தின் நிலையுடன் ஒப்பிட்டால்மட்டுமே விழிகள் அறிந்தன. பொறுமையிழந்த புரவி போல கால்மாற்றிக்கொண்டு அவை நிற்கின்றன என பாண்டு நினைத்துக்கொண்டான். சாய்க்கப்பட்ட பலகை வழியாக இரு வீரர்களால் பற்றப்பட்டு பாண்டு படகில் ஏறிக்கொண்டான்.

படகு அலைகளில் ஊசலாடுவதை அதன் பரப்பில் நின்றபின் தலையால் தெளிவாக உணரமுடிந்தது. அதன் பாய்களின் கயிறுகளை இழுத்து கொடிமரத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். பாய்க்கயிறுகள் பாண்டுவின் கையளவே பெரிதாக கற்பாறையின் சொரசொரப்புடன் இருந்தன. உள்ளறைக்குள் நெய் விளக்குகள் எரிய சிவந்த ஒளியில் புலித்தோல் இருக்கைகள் கனல் போலத் தெரிந்தன.

"காற்றே இல்லை" என்றான் பாண்டு. "மழை நின்றிருக்கிறது அல்லவா? மீண்டும் மழையுடன் காற்றும் வரும்" என்றான் விதுரன். "தாங்கள் உள்ளே இளைப்பாறலாமே!" பாண்டு "இல்லை, நான் இங்கேயே நின்று கொள்கிறேன்" என்றான். "நாளை மார்த்திகாவதியில் தங்களுக்கு அலுவல்கள் உள்ளன" என்று விதுரன் சொன்னான். "நான் கங்கையை பார்க்க விரும்புகிறேன்" விதுரனின் வெண்விழிகளைப் பார்த்து பாண்டு சொன்னான். "இது என் அன்னையின் அகம்."

விதுரன் சில கணங்கள் கழித்து "ஆம்" என்றான். "விதுரா, ஒருமுறையாவது என் அன்னையர் இந்த நதிக்கரைக்கு வந்திருக்கிறார்களா?" என்றான். "இல்லை. நான் அதைப்பற்றி கேட்டிருக்கிறேன். அவர்கள் கங்கைக்கரைக்கு வந்ததேயில்லை. கங்கை என்னும் சொல்லைச் சொன்னதுமில்லை" விதுரன் புன்னகையுடன் "அம்பை என்ற சொல்லையும்தான்" என்றான்.

"ஆண்களால் அத்தனை முழுமையாக ஒரு சொல்லை விழுங்கிவிடமுடியுமா என்ன?" என்றான் பாண்டு. விதுரன் சிரித்து "ஆண்களுக்கு அத்தனை பெரிய அடிகள் கிடைப்பதில்லையோ என்னவோ" என்றபின் "தங்கள் அன்னை எனக்கு ஆயிரம் ஆணைகள் அளித்து அனுப்பியிருக்கிறார்கள் அரசே" என்றான். பாண்டு "அனைத்தையும் என்னிடம் சொல்லிக்கொண்டே இரு. நான் என் அன்னையின் இருப்பை உணர்ந்துகொண்டே இருப்பேன்" என்றான். "ஆனால் இன்று கங்கையை நான் காண்பேன்... எவர் சொன்னாலும் சரி."

"ஒன்றுமே தெரியாது. இன்று கருநிலவு பத்தாம் நாள். வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கிறது. பாண்டு "நான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்" என்றான். "மழை பெய்யாமலிருக்கட்டும்" என்றபின் விதுரன் அறைக்குள் நுழைந்தான். அவனால் அனைத்து நுண்ணிய உணர்வுகளையும் உடனே வந்து தொட்டுவிடமுடிகிறது. ஆனால் மிக எளிதாக ஓர் அறையை மூடி இன்னொன்றைத் திறப்பவன் போல எளிய அலுவல்களுக்குள்ளும் புகுந்துகொள்கிறான். பிறர் கேட்க இளவரசே என்கிறான். தனியாக அண்ணா என்கிறான். அதற்கேற்ப அவன் தன்னை முற்றாக பகுத்துக்கொள்கிறான். பகுபடாத ஒரு அகம் அவனுக்குள் இருக்கும். எங்கோ. அதை உணரமுடியுமா?

குகர்கள் ஒரே சமயம் ஐம்பது கழிகளால் படித்துறையின் மரச்சட்ட விளிம்பை உந்தித் தள்ளினார்கள். 'அன்னை கங்கையே! விண்ணின் கங்கையே! அன்னை கங்கையே! பெருகு கங்கையே! அன்னை கங்கையே! அலைக்கும் கங்கையே அன்னை கங்கையே! வாழ்க கங்கையே! அவர்கள் கூச்சலால் இழுக்கப்பட்டது போல படகு மிக மெதுவாக அசைந்து அலைகளில் ஏறி அமர்ந்து மீண்டும் ஏறியமர்ந்து விலகிச் சென்றது. படித்துறை அசைந்தாடி விலக படகின்மீது பாய்மர உச்சியில் அமர்ந்திருந்த ஏதோ பறவை திடுக்கிட்டு எழுந்து கூவியபடி சிறகடித்து கரை நோக்கிச் சென்றது.

குகர்கள் ஒவ்வொரு பாய்க்கயிறாக அவிழ்க்கத் தொடங்கினர் காற்று வீசாததனால் அவிழ்க்கப்பட்ட பாய்கள் கொடிமரத்தைப் பற்றிக்கொண்டு உயிரற்று தொங்கின. அவர்கள் மாறிமாறி கங்கா கங்கா என்று செவியதிர கூவியபடி கயிற்றை இழுத்து பாய்களை விரித்துக் கட்டினர். ஏழு பாய்கள் விலக்கப்பட்டும் கூட கங்கையின் இயல்பான ஒழுக்கிலேயே படகு அசைந்து சென்று கொண்டிருந்தது. அதன் விலாவில் அலைகளின் ஒலி குதிரை நீரருந்துவதுபோலக் கேட்டது.

படகின் அமரத்தில் இருந்த காமதேனுவின் சிலையருகே நின்றவன் சுக்கானைப் பிடித்து திருப்ப துடுப்பு போடுபவர்கள் 'அன்னை கங்கை!. அலைகள் கங்கை!' என்று மாறி மாறிக் கூவியபடி துடுப்புகளை உந்தினர். படகு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்பியபோது ஏழு பாய்களும் உயிர் கொண்டன. காற்று வீசுவதை உணர முடியவில்லை ஆனால் பாய்களில் காற்று புகுந்து அவை புடைப்பு கொண்டன. படகு புத்தூக்கம் பெற்று எழுந்து கரும்பாறைகளில் இளம்புரவி என நீரலைகளில் தாவி ஏறியது.

பாண்டு கயிற்றைப் பற்றிக்கொண்டு கங்கையை நோக்கியபடி நின்றான். வானத்தின் மேற்கு மூலையில் மேகக் குவியலுக்குள் மெல்லிய ஒளிக்கசிவு தெரிந்தது. பிறைநிலவு இலைகளுக்குள் வெண்பழம் போல உள்ளே இருந்தது. அதை நோக்கி மிதக்கும் மலைபோல ஒரு கருமேகம் சென்று கொண்டிருந்தது. கங்கைக்கரை மரக்கூட்டங்கள் யானைக் கூட்டங்கள் போலத் தெரிந்தன. குங்குமத் தீற்றல்கள் போலத் தெரிந்த விளக்கொளிகள் விலகி விலகிச் செல்ல நீரலைகளின் ஒலி மட்டும் அவனைச் சூழ்ந்தது.

பாண்டு படகின் விலாவருகே மூங்கிலைப்பற்றியபடி நின்றுகொண்டான். நடக்கும் யானையின் கால்கள் உரசிக்கொள்வது போல மிகமெல்லிய நீரொலி ஒன்று படகின் விலாவுக்கு அப்பால் கேட்டுக்கொண்டிருந்தது. படகுடன் கங்கை மிகத்தனியாக ஏதோ சொல்வதுபோல. படகுக்குப்பின்னால் பிளவுண்டு விலகிய நீர் பளபளத்து விரிந்து இரு பெரிய அலைகளாகி பின்னால் வந்த படகுகளைத் தாக்கி பின் அமிழ்த்தி கடந்து சென்றது.

கங்கையை அப்போது அவன் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் என பாண்டு நினைத்தான். வேறெவரும் அப்போது அதைப்பார்க்கவில்லை. அவர்களின் பல்லாயிரம் கண்கள் கண்ட கங்கையை அவன் கண்டதேயில்லை. இந்த கங்கை அவனுக்காக மட்டும் பகீரதன் சொல்லுக்கிணங்கி விண்ணிலிருந்து இறங்கி செஞ்சடையன் அனல்கடந்து ஒழுகி இதுவரை வந்திருக்கிறாள். ஆம், இது கங்கை. பல்லாயிரம் நாவாய்களை பாவைகளாக்கி விளையாடிக்கொண்டிருப்பவள். பல்லாயிரம்கோடி வயதானபின்னரும் விளையாட்டு விலகாதவள். பேதை கன்னி அன்னை மூதன்னை.

குகர்கள் தங்கள் துடுப்புகளுடன் பீடங்களில் அமர்ந்து கொண்டனர். "அரசே தாங்கள் துயிலவில்லையா?" என்று மூத்த குகன் கேட்டான். "இல்லை" என்று பாண்டு பதில் சொன்னான். "விடியும்வரை படகு இப்படியேதான் செல்லும் இருளில் ஒன்றும் தெரியாது" என்றான் அவன். பாண்டு அதற்கு பதில் கூறவில்லை. அவன் தயங்கி "நாங்கள் பாடிக்கொண்டே ஓட்டுவோம்" என்றான். பாடும்படி பாண்டு கையை அசைத்தான்.

மூத்த குகன் கைகளைத்தட்டி தாளத்தை தொடங்கி வைத்தான். மற்ற குகர்கள் தொடைகளிலும் மரப்பலகைகளிலும் தாளமிட்டனர். தாளம் மட்டும் தொடர்ந்து ஒலித்தது. அந்தத் தாளமும் துடுப்புகளின் அசைவும் சரியாக இணையும் வரை அவர்கள் தாளமிட்டனர். தாளம் வழியாக தங்கள் தனிச்சிந்தைகளை தனியிருப்புகளை தனியுடல்களை இழந்து அவர்கள் ஒன்றாவது தெரிந்தது. தாளம் இருண்ட சுழியாக ஆகி சுழன்று சுழன்று ஒரு ஆழ்ந்த புள்ளியாக அதனுள்ளிருந்து ஒரு குகனின் கனத்த குரல் எழுந்தது.

'அன்னையே என்ன நினைக்கிறாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்? ஜனகன் மகளே, பூமியின் வடிவே, பொன்றாபெரும்பொறையே என்ன நினைத்தாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்?'

தந்தைசொல் காக்க அரசுதுறந்து தவக்கோலம் பூண்டு கங்கைக் கரையில் வந்து நின்றான் ரகுகுல ராமன். அவன் தோளில் வில் நாகபடம் என எழுந்து நின்றது. இடப்பக்கம் மரவுரியாடை புனைந்து நிலவு போல குளிரொளி படர்ந்த கண்களுடன் ஜானகி நின்றிருந்தாள். வலப்பக்கம் வில்லேந்திய வலக்கையும் அம்பு ஏந்திய இடக்கையுமாக அனலென எரியும் விழிகளுடன் நின்றிருந்தான் இளையோன். வெய்யோன் ஒளி அவன் மேனியின் விரிசோதியில் மறைந்தது. கங்கையோ என கருநிறத்தண்ணலின் குளிர்மெய் கண்டு திகைத்தன நீர்ப்பறவைகள்.

'அன்னையே சொல் எதற்காக நீ புன்னகை செய்தாய்? உன் செவ்வடி மலர்களை என் குளிர்ந்த மெல்விரல்கள் தொடும் போது எதற்காக நீ புன்னகை செய்தாய்?'

கங்கைக்கரையில் ஆயிரம் நாவாய்களின் தலைவனாகிய பெருவேடன் குகன் கார்குலாம் நிறத்தானின் கால்தொட்டுச்செல்லும் கங்கையின் கைவிரல்களைக் கண்டான். முளைவிட்டெழும் பனைபோல இருகைகளை தலைமேல் கூப்பி கண்களில் இன்பநீர் வார அவனருகே சென்று வணங்கினான். ‘எந்தையர் செய்தவத்தாலும் என்னூழ் கனிந்ததாலும் இந்நிலம் ஏகினாய் அண்ணலே... இங்கு என் படகுகளாகி நிற்கும் ஆயிரம் மரங்களில் அமுதக்கனி விளைந்த அந்த மரம் ஏதென்று உரைப்பாய்’ என்றான்.

விண்புனல் பொழி விழியன் தண்ணொளி நகைசெய்து ‘ஊழ்வினையால் இங்கெய்தினோம் துணைவனே. எவ்வூழும் நல்லூழே என உன்னைக் கண்டதும் அறிந்தேன். உன் மரங்களில் எது எளியதோ அதை எனக்கென ஒருக்குக’ என்றான். பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும் நின்ற இடம் நோக்கி தன் கைதொட்ட முதல் படகை இழுத்துவந்து நிறுத்தினான். ‘அறத்தின் மூர்த்தியே என் படகில் உன் சேவடி தீண்டுவதாக. என் குலமெல்லாம் உன் ஆசியே பொலிவதாக என்றான்.

'சொல் அன்னையே நீ சிரித்தது எதற்காக? உன் செவ்வண்ணச் சிற்றடி எழுந்து படகில் ஊன்றியபோது மெல்ல பறந்த கருங்குழல் சுரிகளை கையால் ஒதுக்கி நீ கண்மலர்ந்தது எதற்காக?’

கல்தொடுத்தன்ன போலும் கழலினான் காடாளும் குகன் தன் பெரிய துடுப்பை எய்து படகை நீரில் இறக்கினான். அன்னையே என்று என்னையழைத்து உந்தி முன்னகர்த்தினான். படகுக்கு மேல் எழுந்தது பாய்ச்சிறகு ‘என்றுமழியா இவ்வொழுக்கு போல காலகாலங்கள் கடந்தோடட்டும் ஐயனே உன் புகழ்’ என்றான். எறிதிரை இதழ் விரித்து மலரென ஒளிவிட்ட நதிமீது தும்பியென பறந்து மொய்த்துச்சென்றது படகு.

'அன்னையே சொல்லமாட்டாயா? உன் துயர்முறுவல் எதற்காக? உன் தோள்களில் என் சிற்றலை முத்துக்களை சிதறியாடுகின்றேன். உடல் சிலிர்த்து உன் தலைவனருகே நகர்கிறாய். சொல், உன் துயரமுறுவல் எதற்காக?'

நீரலைகளில் எழுந்தமர்ந்தது படகு. மழையெழும் மாமலையென கரிய குகனின் உடலில் வியர்வை வழிந்தது. ‘உன் பெயர் சொல்லி வியர்வை சிந்தினேன்... உன் பெயர் சொல்லி விழிநீர் சிந்துவேன். என் ஐயனே உன் பெயர் சொல்லி செந்நீரும் நான் சிந்த வேண்டும்’ என்றான் பிச்சராம் அன்ன பேச்சினான்.

'சொல்லுக தாயே, இந்த மென்னகை எதற்காக? எழுந்த பல்லாயிரம் மீன் விழிகளால் சூழ்ந்து உன்னைப் பார்த்து பிரமிக்கின்றேன். உன் மென்னகை எதற்காக?'

மறுகரை சேர்ந்த படகு விரைவழிந்து பாய் மடித்து விலா காட்டியது. கரை தொட்ட அம்பியின் கயிறை இழுத்து சேற்று விளிம்பில் ஏற்றி நிறுத்தினான் ஏவலன். இராமனின் கால் சேற்றில் படாமலிருக்க கரையோரத்து மரமொன்றை இழுத்துப் போட்டான் குகன். வில்லை தோளிலிட்டு தம்பிக்கு வழிகாட்டி சீதைக்கு கரம்காட்டி ராமன் மறுகரை சென்றான. குகனை அருகணைத்து முன்பு உளெம் ஒரு நால்வேம், இனி நாம் ஐவர்கள் உளரானோம் என நெஞ்சுறத் தழுவிச்சொல்லி நெடுமரம் நிறைகானுள் நுழைந்தான் அறமென மண்நிகழ்ந்தான்.

'உலகீன்றவளே ஏன் நகைத்தாய்? பெண்ணுடலை கணவனும் நானும் மட்டுமே காண்கிறோம். பெண் உள்ளத்தை காண்பவளோ நான் மட்டுமே. சொல்லுக தேவி நீ நகைத்தது எதற்காக?'

உன் பாதங்கள் தொட்டுச் செல்லும் பூமி அதையறியும். உன் மேனி வருடிச் செல்லும் காற்றும் அதையறியும். அன்னையே உன்மேல் ஒளி பொழிந்து விரியும் வானும் அதையறியும்.

நானுமறிவேன் பொற்பரசியே, நீ அனல் கொண்ட சொல்லெறிந்து நிலம் பிளந்து மறைகிற் எரிவாயின் தழல் தணிக்க போதாது விண்பிளந்து நான் மண்நிறைக்கும் நீரெல்லாம். அலையடித்து அலையடித்து தவிப்பதன்றி நான் என் செய்வேன் தாயே?

நடுங்கும் குரலில் குகன் பாடியதும் அனைவரும் கைகளைத் தட்டியபடி ஒத்த குரலில் சேர்ந்து பாடினர். 'அன்னையின் அலையெல்லாம் ஆதியன்னை கதையல்லவா? அன்னையவள் ஒளியெல்லலாம் சீதையின் துயரல்லவா?'

பாண்டு தன் உடல அதிர்வதையும் பற்கள் கிட்டித்துக் கொள்வதையும் அறிந்தான். கைகளை பாய்க்கயிற்றில் கோர்த்துக் கொண்டான். விழுந்துவிடக்கூடாது என்று தன் உடலுக்கு தன் முழுத் தன்னுணர்வாலும் ஆணையிட்டான. காலே, கையே, இடையே, நெஞ்சே, என்னோடு நில்லுங்கள். என்னை விட்டுவிடாதீர்கள். என்னை உதறிவிடாதீர்கள் என் எண்ணங்களே. என்னை வீசி விடாதீர்கள் என் ஆழங்களே...

'கங்கை, கங்கா கங்கா! கங்கையின் பெயரே சீதா சீதா சீதா !

சீதா சீதா சீதா! அன்னை சீதையின் பெயரே கங்கா கங்கா கங்கா!

பெண்ணறிந்தவை எல்லாம் தானறிந்தவளே கங்கா! மண்ணறிந்தவை எல்லாம் தானறிந்தவளே கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!

வேகமான கைத்தட்டல்களுடன் அவர்கள் பாடிக் கொண்டிருந்தனர் அமர்ந்து கொண்டே மிக விரைவான நடனத்தை ஆடிச் சுழன்றனர். காற்றில் உலைந்தாடும் நாணல்கள் போல. ஒற்றைக்குரலாக. அக்குரல் அவர்களுடையதல்ல. மிகமிகத் தொன்மையானது. ஆம், தவளைக்குரல். ஏன் அதை வேதமென்றான் மைத்ராவருணி வசிட்டன் என்று அப்போது புரிந்தது. அவை கோடிமனங்களின் ஒற்றைக்குரல். அவையே வேதமாக முடியும். தனித்தொலிப்பது ஒருபோதும் விண்ணகப்பேராற்றல்களைச் சென்றடைவதில்லை.

கண்ணீரின் ஒளியே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா! துயரத்தின் குளிரே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!. தனிமையின் விரிவே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா கங்கா! சொல்லாத மொழியே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா!

குகர்களின் உடல்நிரை இருண்டு வருவதை பாண்டு முதலில் உணர்ந்தான். அவர்களுக்குப் பின்னால் கங்கை மேலும் மேலும் ஒளி கொண்டது. நதியின் ஆழத்திலிருந்து அந்த ஒளி பரவி வந்து அலைகளில் ததும்பியது. அலைகள் ஆழத்தை மறைக்கவில்லை. மென் காற்றால் சிலிர்க்கும் செம்பட்டுபோல. பீலித்தொடுகையிலேயே அதிரும் சருமபரப்புபோல கங்கையின் அடித்தட்டு தெரிந்தது.

பகுதி எட்டு : பால்வழி

[ 4 ]

அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான். அப்பால் பீஷ்ம பிதாமகர் படுத்திருந்த புலித்தோல் மஞ்சம் அங்கே ஒரு மனிதர் படுத்திருந்த சுவடே இல்லாமல் தென்பட்டது. பீஷ்மர் இரவில் மல்லாந்து கற்சிலைபோல அசைவில்லாது துயில்பவர் என்பதை விதுரன் அறிந்திருந்தான். ஆயினும் அவனுக்கு அந்த மஞ்சம் வியப்பை அளித்தது

விதுரன் எழுந்து வெளியே பார்த்தான். வெளியே படகின் அமரமுனை அருகே யமுனையை நோக்கியபடி வெண்ணிழல் போல பீஷ்மர் நின்றிருந்தார். விதுரன் வெளிவந்ததும் அவனுக்காகவே காத்து நிற்பதுபோல நின்றிருந்த ருத்ரனை அறைவாயிலில் கண்டான். ருத்ரன் தணிந்த குரலில் "இளவரசருக்கு உடல்நிலை குன்றியுள்ளது" என்றான். விதுரன் அசையாத இமைகளுடன் பார்த்தான். "உடல்வெம்மை ஏறியிருக்கிறது. தசைகளின் அதிர்வும் கூடியிருக்கிறாது" என்றான் ருத்ரன்.

விதுரன் "சுயநினைவு உள்ளதா?" என்றான். "இல்லை" என்றான் ருத்ரன். "என்ன நடந்தது?" என்று விதுரன் கேட்டான். "நேற்றிரவு குளிர்காற்றில் கங்கையைப் பார்த்தபடி நெடுநேரம் நின்றிருக்கிறார். இரவில் அவர் உடல் நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறது. பின்னர் மயங்கி விழுந்திருக்கிறார். பாடிக்கொண்டிருந்த சூதர்கள் அவரை தூக்கியபோது அவரே எழுந்து உள்ளே வந்து படுத்திருக்கிறார்."

விதுரன் "நீ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்றான். ருத்ரன் பேசாமல் நின்றான். “துயில்வதல்ல உன் பணி" என்றபின் விதுரன் திரும்பி நடந்தான். படகின் இரண்டாவது அறையின் வாயில் சற்று மூடியிருந்தது. உள்ளே சாளரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருள் நிறைந்திருக்க வெளியே படகின் கூடத்தில் எரிந்த நெய்விளக்கின் ஒளிக்கீற்று கதவின் இடைவெளி வழியாக உள்ளே விழுந்திருந்தது. மஞ்சத்தில் பாண்டு மரவுரிப் போர்வையால் உடலை மூடிப் படுத்திருப்பதைக் கண்டு விதுரன் கதவை நன்றாகத் திறந்து உள்ளே ஒளி பரவச் செய்தபின் படுக்கையை நெருங்கினான்.

பாண்டுவின் உடலின் வெம்மை ஆடைகளிலும் படிந்திருந்தது. காற்றில் அதிரும் பாய்கயிறு போல அவன் முழங்கைகள் விதிர்த்துக் கொண்டிருந்தன. விதுரன் அவன் கைகளைப் பற்றி தன் கைக்குள் வைத்து அழுத்திக்கொண்டான். அவன் கைக்குள் பாண்டுவின் குளிர்ந்த மெல்லிய கரங்கள் துடித்தன. சில கணங்களில் பாண்டுவின் இதயத்தை தன் கைகளில் உணர முடியும் என்று விதுரனுக்குத் தோன்றியது.

விதுரன் எழப்போகும்போது பாண்டு மெல்லிய குரலில் "தம்பி" என்றான். விதுரன் "சொல்லுங்கள் அண்ணா" என்றான். "நான் நேற்று என் அன்னையை பார்த்தேன்" என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்வதை புரிந்து கொள்ளாதவனாக மிகப் பொதுவான ஓர் ஒலியை பதிலுக்கு அளித்தான். "என் அன்னையை" என்றான் பாண்டு. "காசி நாட்டு இளவரசி அம்பாலிகை.... அஸ்தினபுரத்தின் அரசி..."

அவன் திணறும் ஒலி கேட்டு விதுரன் அவன் கைகளை மீண்டும் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான். கைகள் அடிபட்டுத் துடிக்கும் நாகம்போல அதிர்ந்தன. "வேண்டாம் அண்ணா. நீங்கள் துயிலுங்கள்" என்றான் விதுரன். "நில்... போகாதே" என்று பாண்டு அவனை பற்றிக்கொண்டான். "என்ன வியப்பு! இல்லை எவ்வளவு மூடத்தனம்!. அவள் என் அருகிலேயே இதுவரை இருந்திருக்கிறாள்... நான் அவள் உள்ளும் புறமும் நன்கறிந்திருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு மடமை!"

விதுரன் "ஆம்" என்றான். "நாம் பெண்களைப் பார்ப்பதேயில்லை தம்பி. அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம். அவர்களின் அழகைப்பற்றிய காவியங்களால் மூடி வைத்திருக்கின்றோம்." பாண்டுவின் குரலும் அக்குரலைச் சுமந்து வந்த மூச்சும் அதிர்ந்தன.

விதுரன் பாண்டுவின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயன்றான். அன்னையிடமிருந்து பிரிந்து அவ்வளவு தொலைவுக்கு பாண்டு பயணம் செய்ததே இல்லை. அதுதான் அந்த அகக்கொந்தளிப்பிற்கான காரணம் என்று அவனுக்குத் தோன்றியது. "நாம் இங்கே இரண்டு நாட்கள் மட்டும்தான் தங்கவிருக்கிறோம் அண்ணா... உடனே அஸ்தினபுரத்திற்குத் திரும்பவிருக்கிறோம்" என்றான்.

பாண்டு அச்சொற்களைப் புரிந்து கொள்ளாமல் "சீதையை ஆதிகவி ராமாயணத்தால் மூடி வைத்துவிட்டார். பட்டாலும் நகையாலும் மூடிவைப்பது போல" என்றான். "ஆம்" என்றான் விதுரன். மெல்ல பாண்டுவின் கைகளை படுக்கையில் வைத்தபடி "நீங்கள் இன்னும் சற்று நேரம் துயிலலாம். அடுத்த படகில் உங்கள் வைத்தியர் இருக்கிறார். அவரிடம் நஸ்யம் வாங்கித் தருகிறேன்...” என்றான்.

"எனக்கு ஒன்றுமில்லை... இரு" என்று பாண்டு மீண்டும் அவன் கையைப் பிடித்துக் கொண்டான். ‘ஆனாலும் பெண்கள் ஏன் நகைகளையும் காவியங்களையும் விரும்புகிறார்கள்? அவர்களும் இந்தத் திரைகளையும் மறைகளையும் விரும்புகிறார்களா என்ன? பாவம். மண்ணுள்ளிப் பாம்புகள் போல மறைவிடத்திலிருந்து மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். அவர்களை நாம் பார்ப்பது அப்படி ஓடி ஒளியும் பதற்றங்களின் வழியாகத்தான். நான் நேற்று எதைப் பார்த்தேன் தெரியுமா?"

பாண்டு கண்களைத் திறந்து மூச்சிரைக்க விதுரனைப் பார்த்தான். "பாதாள கங்கையை! மாபெரும் பளிங்குவெளி போல அது ஓடியது.... பாதாள கங்கையை ஆண்கள் பார்க்கக்கூடாது தம்பி. அது ஆண்மகனை கோழையாக்கிவிடும். மொத்த ஆண்குலத்துக்காகவும் அவன் வெட்கிச் சுருங்கி விடுவான். அவன் பேடியாகிவிடுவான். அவனுடைய லிங்கம் சுருங்கி உள்ளே சென்றுவிடும். அவனுக்கு முலை முளைக்கும். அவன் தனக்காகவும் தன் மூதாதையருக்காகவும் வெட்குவான். தன் நகரத்துக்காகவும் அதன் கோட்டைகளுக்காகவும் அதன் அரண்மனைகளுக்காகவும் கூசுவான். தன் அறநூல்களையும் தன் தெய்வங்களையும் அருவருப்பான்."

பாண்டுவின் உடல் அதிர்ந்து எழுந்தது. ஹக் ஹக் ஹக் என்ற ஒலி அவன் தொண்டையிலிருந்து வந்தது. குடத்தில் நீர் நிறைவதுபோல ஒலித்து பிறகு துளையிலிருந்து காற்றுக்குமிழிகள் வெடிப்பது போல மாறியது. விதுரன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். ருத்ரன் மருத்துவர் கூர்மருடன் நின்று கொண்டிருந்தான். "துயில வைத்துவிடுங்கள்" என்று விதுரன் மெல்லச் சொன்னான். "அவர் உள்ளம் கொந்தளித்திருக்கிறது."

கூர்மர் உள்ளே செல்ல ருத்ரன் விளக்கை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றான். வெளியே நின்றபடி விளக்கொளியில் பாண்டுவின் உடலைப் பார்த்த விதுரன் சற்று பின்னடைந்தான். பசும் நரம்புகளால் வரிந்து கட்டப்பட்ட வெண் தசைகளால் ஆன சிறிய உடல் வளைந்து முறுகி நின்றிருக்க கைகால்கள் நான்கு பக்கமும் கோணலாகி விரிந்து இழுத்து இழுத்து அசைந்து கொண்டிருந்தன. சிவந்த உதடுகளைக் கடித்த மஞ்சள் நிறமான பற்கள் தெரிந்தன. வாயின் இருபக்கமும் எச்சில் நுரைத்து வழிந்தது.

கூர்மர் தன் பெட்டியை தரையில் வைத்து விரைந்து திறந்து அதிலிருந்து கடற்பஞ்சை எடுத்தார். அதில் சிறிய வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த வெண்ணிற மாவுப் பொடியைப் பரப்பி கசக்கி பாண்டுவின் நாசியில் வைத்தார். அவன் மூச்சை ஓங்கி ஓங்கி இழுத்துக் கொண்டிருந்தான். குரல்வளை புடைத்த கழுத்தில் வடங்கள் போல நரம்புகள் பிணைந்து அசைந்தன. செருகியிருந்த விழிகள் அதிர்ந்து அதிர்ந்து மெதுவாக அசைவிழந்தன. இருபக்கமும் இறுக்கமாக விரிந்திருந்த கைகளின் விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன.

அவன் இடக்கையை எடுத்து நாடி பார்த்த கூர்மர் "அகக்கொந்தளிப்புதான். நரம்புகளில் கரும்புரவிகளின் குளம்படிச்சத்தம்" என்றார். "வெப்பு இருக்கிறதல்லவா?" "ஆம்.. ஆனால் அதனால் மூச்சிலும் இதயத்திலும் எந்த பாதிப்பும் இல்லை" என்றார் கூர்மர். "துயில் அவரை அமைதிப்படுத்தும் என்று நினைக்கிறேன்." விதுரன் ஒன்றும் கூறாமல் பாண்டுவையே பார்த்துக் கொண்டிருந்தான். மூச்சு சீரடைந்திருந்தது. இறுகி நின்ற நீல நரம்புகள் ஒவ்வொன்றாக கட்டுவிட்டு நெகிழத் தொடங்கியிருந்தன.

வெளியே வரும்போது அவன் பாண்டு சொன்ன சொற்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அந்த உதிரிவரிகளை இணைக்கும் அனுபவம் எதுவாக இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். ஒரே நீரில் வாழும் மீன்களைப் போல அனைத்து மானுடரும் ஒரே பொருள்வெளியில் வாழ்கிறார்கள். ஆகவேதான் ஒருவர் சொல்வது இன்னொருவருக்குப் புரிகிறது. எவரோ சிலர் நீர் வெளி விட்டு துள்ளி காற்றில் எம்பிவிடுகிறார்கள். மூச்சு கிடைக்காமல் தத்தளிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள்தான் எதையாவது புதியதாக பார்க்க முடிகிறது. அவர்களில் ஆயிரம் பல்லாயிரம் பேரில் ஒருவரே அவற்றை திரும்பி பிறர் மொழியில் கூற முடிகிறது.

பீஷ்மர் நின்றிருப்பதை விதுரன் பின்னாலிருந்து பார்த்தான். அசையாமல் நிற்பதைத்தான் அவர் தன்னுடைய கங்கர் குல மூதாதையரிடமிருந்து அஸ்தினபுரிக்குக் கொண்டு வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டான். அதன்வழியாக அவர் தொன்மையான மரங்களை நினைவில் எழுப்புகிறார். அவரை அனைவருமே பிதாமகர் என்பது அதனால்தான். அவரிடம் சென்று பாண்டுவின் உடல்நிலை பற்றிச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். உடனே அவருக்கு அது தெரியும் என்று உணர்ந்தான். அவரது அசைவின்மையே அதனால்தான்.

விதுரன் உள்ளிருந்து வெளியே வந்த வைத்தியர் கூர்மரிடம், "நீங்கள் இளவரசரின் அருகிலிருந்து விலக வேண்டாம் கூர்மரே... இளவரசர் இன்று மாலை எப்படியாவது எழுந்தமர வேண்டும். அவர் அவைக்கு வரும்போது தானாகவே நடந்து வர வேண்டும். அதை நீங்கள் பொறுப்பேற்றுச் செய்யுங்கள்" என்றான். "அவரால் வரமுடியும். அவர் உள்ளம் அதற்கு ஒப்பினால் போதும்" என்றார் கூர்மர். "அவர் விழிக்கட்டும் நான் வந்து அவரிடம் பேசுகிறேன்" என்று விதுரன் சொன்னான்.

மார்த்திகாவதி தொலைவில் தெரியத் தொடங்கியது. யமுனையின் கருநீல நீரலைக்கு அப்பால் கரையோரமாக கால்களை ஊன்றி நீர் அருந்தும் கரியநிறமான மிருகம் போல அது தோன்றியது. அதன் கால்கள் நீருக்குள் இறங்கி நின்றிருந்தன. அருகே இருந்த காவல் கோபுரத்தில் மார்த்திகாவதியின் சிம்மக்கொடி பறந்தது. சுங்கமாளிகை முன்பு நின்றிருந்த ரதங்களில் கொடிகள் யமுனையிலிருந்து ஏறிச்சென்ற காற்றில் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு தேரின் பித்தளைக்கூரை வளைவு ஒளியில் பொன்னிற மின்னலாக ஒளிவிட்டு அணைந்தது.

வானம் அதன் உள்வெளிச்சத்தாலேயே நன்றாகத் துலங்கியது. கருமேகங்கள் தென்திசையை மூடியிருந்த போதிலும் வடகிழக்கு வெளுத்துத் திறந்து மென்ஒளியைப் பொழிந்தது. படகு நகரை நெருங்க நெருங்க வானும் நதிநீரும் வெளுத்தபடியே வந்தன. நீர்ப்பரப்பு முழுக்க வெண்பறவைகள் தங்கள் பிம்பங்களுடன் சேர்ந்து சிறகடித்துச் சுழன்றன. கரையில் தெரிந்த மரக்கூட்டங்களில் இலைத்தழைப்புகள் காற்றில் எழுந்தாடுவதும் பறவைகள் சிறகடித்தெழுந்து சுற்றிப் பறந்து அமைவதும் வண்ணமும் வடிவமும் கொண்டு வந்தன.

மார்த்திகாவதியின் படித்துறையில் ஐம்பது பெரிய அரசபடகுகள் நின்றிருந்தன. அவற்றில் பெரியது ஏர் முத்திரை கொண்ட கொடி பறந்த மாத்ரபுரியின் படகு என்பதை விதுரன் கவனித்தான். பலபத்ரர் வந்து அவனருகே நின்றார். விதுரன் திரும்பி அவரைப் பார்த்ததும் அவன் எண்ணங்களை அறிந்தவர்போல "மாத்ர நாட்டில் இருந்து சல்லியர் வந்திருக்கிறார்..." என்றார். "ஆம்" என்றான் விதுரன்.

"அவர் வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வந்தது வியப்புறச் செய்யவும் இல்லை" என்று பலபத்ரர் சொன்னார். "ஷத்ரியர்களுக்கு யாதவர்களை அரசர்களாக ஏற்றுக் கொள்ள தயக்கம் இருக்கிறது. ஆனால் யாதவர்களின் படைபலமும் பொருள்பலமும் அனைவருக்கும் தேவையாகவும் உள்ளது" என்றார். விதுரன் "அஸ்தினபுரியின் இளவரசர் சுயம்வரத்துக்கு வந்ததைப்பற்றி பிறரும் இதையே சொல்வார்கள் பலபத்ரரே" என்றான். "ஆம். அதுவும் உண்மையல்லவா?" என்றார் பலபத்ரர். "நாம் இங்கே மணம் கொள்ள வந்ததே இவர்களின் குலங்கள் நமக்குத் தேவை என்பதற்காகத்தானே?"

விதுரன் "பிதாமகர் செய்வதெல்லாமே ஒருபெரும் போருக்கான அணிதிரட்டல். ஆனால் போரைத் தவிர்ப்பது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்" என்றான். "அமைச்சரே, போரைத் தவிர்க்கும் வழி என்பது வலிமையுடன் இருப்பதே என்று அரசுநூல்கள் வகுக்கின்றன." என்றார் பலபத்ரர். விதுரன் சிரித்தபடி "ஆம். ஆனால் இன்றுவரை ஒருங்கிணைக்கப்பட்ட படை வல்லமை போருக்கு வழிவகுக்காமல் இருந்ததே இல்லை. படைக்கலம் என்று ஒன்று உலையில் வார்க்கப்பட்டால் அது என்றோ எவரையோ கொன்றே தீரும்" என்றான். பலபத்ரர் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவர் பீஷ்மருக்கு அப்பால் சிந்திக்கமுடியாதவர் என விதுரன் எண்ணிக்கொண்டான்.

மார்த்திகாவதியின் காவல்மாடத்தில் பெருமுரசம் முழங்கியது. கொம்பொலிகள் சேர்ந்து பிளிறின. படித்துறையெங்கும் அமர்ந்திருந்த வெண்புறாக்களும் நீர் நாரைகளும் காகங்களும் அவ்வொலியில் எழுந்து காற்றில் சிறகடித்தன. படித்துறையில் நின்ற இருபடகுகளுக்கு நடுவே அஸ்தினபுரியின் படகு நிற்பதற்காக இடத்தைக் காட்டியபடி மார்த்திகாவதியின் வீரர்கள் கொடிகளை ஆட்டினர். அஸ்தினபுரியின் படகை எதிர்கொள்ள துறைக்காவலனே துறைமுனைக்கு வந்து ஆணைகளைக் கூவினான்.

அஸ்தினபுரியின் முதல் படகு சென்று நின்றதும் மார்த்திகாவதியின் காவல் மாடம் மீது அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி ஏறியது. அரசபடகு கரையடைந்ததும் அருகிலிருந்த சுங்கமாளிகையின் முற்றத்தில் நின்றிருந்த மார்த்திகாவதியின் அமைச்சர் ரிஷபரும் சிற்றமைச்சர்களும் மார்த்திகாவதியின் சிம்மக்கொடியுடன் அவர்களை நோக்கி வந்தனர். அவர்களுடன் மங்கலத்தாலங்கள் ஏந்திய தாசிகளும் மங்கல இசையை எழுப்பியபடி வந்தனர்.

பீஷ்மர் முதலில் இறங்கியதும் ரிஷபர் "மார்த்திகாவதி பீஷ்ம பிதாமகரின் வருகையால் புனிதமடைந்தது" என்று வாழ்த்து கூறி தலைவணங்கினார். அவரது இருபக்கமும் நின்ற சிற்றமைச்சர்களும் தளகர்த்தர்களும் வணங்கினர். தாசிகள் மங்கலத்தாலங்களை பீஷ்மர்முன் நீட்ட அவர் அவற்றைத் தொட்டு அவ்வரவேற்பை ஏற்றபிறகு, "சுயம்வரத்துக்கு வந்திருக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் சற்று ஓய்வெடுக்கிறார். அவர் இளைப்பாற மாளிகை ஒருக்கமாக உள்ளதல்லவா?" என்றார்.

ரிஷபரின் கண்கள் தன்னை வந்து தொட்டு திகைத்து மீள்வதைக் கண்டதுமே விதுரன் அனைத்தையும் புரிந்து கொண்டான். அவன் நெஞ்சு படபடத்தது. அதை வெல்ல தலையை நிமிர்த்தி ரிஷபரின் விழிகளை நேருக்குநேர் சந்தித்து "அஸ்தினபுரியின் இரண்டாவது இளவரசர் பாண்டு இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகையளித்துள்ளார். பயணத்தில் சற்று களைத்திருக்கிறார்" என்றான்.

ரிஷபரின் கண்களில் மீண்டும் ஒரு திகைப்பு வந்து சென்றது. உடனே அவர் தன்னை மீட்டுக்கொண்டு "அஸ்தினபுரியின் இளவரசரின் வருகையால் மார்த்திகாவதி பெருமையடைகிறது" என்றார். அச்சொற்களுக்கு அடியில் அவரது எண்ணங்கள் விரைந்தோடி அனைத்தையும் புரிந்துகொண்டன என்பது அவர் முகம் மலர்வதிலிருந்து தெரிந்தது. "அஸ்தினபுரியின் அமைச்சரை மார்த்திகாவதி வரவேற்கிறது" என்று அவர் தலைவணங்கினார். ஒருகணம் உலைவாய் போல தன்மேல் வெம்மை ஒன்று வீசி மறைவதை விதுரன் உணர்ந்தான். ஆனால் அவன் முகமும் விழிகளும் மலர்ந்திருந்தன.

படகில் இருந்து பொருட்கள் ஒவ்வொன்றாக இறக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருந்த பலபத்ரரிடம் விதுரன் "பலபத்ரரே, இளவரசர் மாளிகைக்கு ஒரு மூடிய பல்லக்கிலேயே செல்லட்டும். இங்குள்ள ஏவலர், காவலர் எவரும் அவரைப் பார்க்கலாகாது" என்றான். பலபத்ரர் "ஆம்" என்றார். "பல்லக்கை படகினுள் கொண்டு செல்லச் சொல்கிறேன்" என்று சொல்லி "இன்னும் அவர் நலம்பெறவில்லை..." என்றார். அப்போது மிகமுக்கியமான ஒன்றை விதுரனிடம் விவாதிக்கும் பாவனை அவரில் கூடியது. விதுரன் அதைக்கண்டு எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.

திரையிடப்பட்ட பல்லக்கு ஒன்று படகுக்குச் சென்றது. அதை பலபத்ரர் பலத்த கையசைவுகளுடனும் உரத்த குரலுடனும் வழிநடத்தி படகுக்குள் ஏற்றினார். மொத்த படித்துறையும் அதைக்கண்டு வியந்து விழிகளனைத்தும் அத்திசைநோக்கித் திரும்புவதை விதுரன் கவனித்தான். பிழை செய்துவிட்டேன் என்று ஒருகணம் எண்ணியதுமே அதை எப்படி கையாள்வது என்ற எண்ணமும் அவனுள் வந்தது. பலபத்ரர் வெளியே ஓடிவந்து ஒரு வீரனை அதட்டினார். திரும்ப உள்ளே ஓடிச்சென்றார். மீண்டும் வெளியே வந்தார்.

விதுரன் தனக்காகக் காத்திருந்த ரதத்தை நோக்கிச் சென்றான். பீஷ்மர் அங்கே அவனுக்காகக் காத்திருந்தார். அவரது விழிகளைக் கண்டதுமே அவன் அவர் கேட்கவிருப்பதை உய்த்துணர்ந்து "மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் வந்திருக்கிறார்" என்றான். பீஷ்மர் சிலகணங்கள் அவன் கண்களைப்பார்த்தபின் "ம்" என்றார். "செய்திகளை நான் மாலைக்குள் வந்து அறிவிக்கிறேன்" என்றான் விதுரன். பீஷ்மர் தன் ரதத்தில் ஏறிக்கொண்டார். அவர் அதுவரை இருந்த மனநிலையில் இல்லை என விதுரன் உணர்ந்தான். அவரது அகச்சமன் குலைந்துவிட்டிருந்தது.

விதுரன் ரதத்தில் ஏறிக்கொண்டான். அக்கணம் வரை அவனுள் இருந்து அவனை இயக்கிய ஒரு தேவன் விலகிச்செல்வதுபோல உணர்ந்தான். கைகால்கள் எடையேறியபடியே வந்தன. உடலை இரும்புக்கவசம் போல அறிந்தான். அத்தனை பெரிய ஏக்கத்தை ஏன் தன் அகம் அறிகிறதென அவனுக்குப்புரியவில்லை. ஆனால் அது பெருகிக்கொண்டே சென்றது.

பகுதி எட்டு : பால்வழி

[ 5 ]

மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். "உம்" என்றான். "சல்லியரை மார்த்திகாவதியின் இளவரசி முன்னரே அறிவாள் என்கிறார்கள்" என்றான் மித்ரன்.

அச்செய்தியைத்தான் எதிர்பார்த்திருந்தேனா என்று அதைக்கேட்டு அதிர்ந்த அவனிடம் அவனே கேட்டுக்கொண்டான். அந்த அகநகர்வை கண்கள் வெளிக்காட்டாமல் "அச்செய்தியை யார் சொல்கிறார்கள்?" என்றான் விதுரன். "அது முழுக்க முழுக்க மாத்ர நாட்டிலிருந்து பரவும் செய்தி" என்று மித்ரன் சொன்னான். "அவர்களுடன் வந்த வீரர்கள் சொல்கிறார்கள். உண்மையில் சல்லியர் வந்ததும் மார்த்திகாவதியே குழப்பமடைந்துவிட்டது. அவரை அவர்கள் எண்ணியிருக்கவில்லை. அவர் ஏன் வந்திருக்கிறார் என்றுகூட ரிஷபர் கேட்டிருக்கிறார்..."

"உம்" என்றான் விதுரன். "மார்த்திகாவதியின் மக்களைப்பொறுத்தவரை சல்லியரைத்தவிர இன்னொருவரை குந்திதேவி ஏற்கவே மாட்டாள் என நினைக்கிறார்கள். மாத்ரநாட்டுடன் மணவுறவு உறுதியாகிவிட்டதென்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சல்லியரைப் பார்க்க அவரது அரண்மனைக்கு முன் மார்த்திகாவதியின் மக்கள் கூடி நிற்கிறார்கள். அவரது வில்திறனையும் அழகையும் ஆண்மையையும் புகழ்ந்து பாடும் சூதர்கள் முன் பெருங்கூட்டம் கூடுகிறது. அத்துடன்..." விதுரன் சொல் என ஏறிட்டுநோக்கியதும் "நம் இளவரசர் வருவார் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அஸ்தினபுரியில் இருந்து உண்மையில்..."

விதுரன் விழி தூக்கியதும் ஒற்றன் மித்ரன் தலைவணங்கி பின்னகர்ந்தான். அவனை சிறுதலையசைப்பால் அனுப்பிவிட்டு விதுரன் கைகளால் பீடத்தின் விளிம்பில் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தான். அடுத்த ஒற்றன் சம்பிரதீபன் வந்து வணங்கியதைக் கண்டு ஏறிட்டுப் பார்த்தான். மதுராபுரியில் இருந்து வந்த சம்பிரதீபன் "மதுராபுரி இளவரசர் கம்சர் இன்று மதியம் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்" என்றான்.

விதுரன் அவன் மேலே சொல்லட்டும் என்று அவனைப்பாராமல் காத்திருந்தான். "மதுராபுரியின் இளவரசர் குந்திதேவியை மணக்கவேண்டும் என இங்குள்ள மூத்த யாதவர்கள் விரும்புகிறார்கள். யாதவகுலம் ஒருங்கிணைய அதுவே வழி என எண்ணுகிறார்கள். கம்சருக்கு மார்த்திகாவதியிலிருந்து தூது சென்றிருப்பதாக அரண்மனையில் ஒரு செய்தி உலவுகிறது."

விதுரன் "யாருடைய தூது?" என்றான். "மார்த்திகாவதியின் இளவரசியின் தூது என்று கூறுகிறார்கள்" என்றான் சம்பிரதீபன். "அப்படியா?" என கேட்ட கணமே தன்னை அறியாமல் விதுரன் புன்னகை செய்துவிட்டான். "ஆம் அமைச்சரே. மார்த்திகாவதியில் இருந்து இளவரசி பிருதையின் அந்தரங்கத் தோழியே மதுராபுரிக்குத் தூதுசென்று கம்சரிடம் பேசியதாகவும் அதனாலேயே அவர் விலைமதிப்புள்ள மணிகளும் மங்கலப்பொருட்களுமாக கிளம்பி வருவதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் மணம்கொள்ளல் முன்னரே முடிந்துவிட்டதென்றும், இது ஒரு பாவனையே என்றும்கூட யாதவர் பேசிக்கொள்கிறார்கள்."

"அவர்களுக்கு சல்லியர் வந்திருப்பது தெரியாதா என்ன?" என்றான் விதுரன். "சல்லியர் வந்தது நேற்றுமாலை. இன்றுகாலை நாம் வந்திருக்கிறோம். நாமனைவரையும் ஏற்புகொள்ளச் செய்வதற்காகவே மணநிகழவை தன்னேற்பு முறையாக அமைக்க குந்திபோஜர் முடிவுசெய்திருக்கிறார் என்கிறார்கள்." சம்பிரதீபன் தணிந்த குரலில் "நம் இளவரசர் நோயுற்றவர் என அனைவரும் அறிவர். வேடிக்கையாகத்தான் அனைவரும் நம்மைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்" என்றான்.

விதுரன் தலையசைத்ததும் அவன் வணங்கி விலகினான். உளவுச்செய்திகளை விதுரன் எப்போதும் தன் உய்த்துணர்தல்கள் சரியா என ஒப்புநோக்கவே கேட்பது வழக்கம். ஒவ்வொரு உளவுச்செய்திக்குப்பின்னரும் அவன் நிறைவுகொள்வதுண்டு. ஆகவேதான் ஒற்றர்கூற்றுகளை எப்போதும் ஆர்வத்துடன் கேட்கமுன்வருவான். ஆனால் முதல்முறையாக அவை சோர்வை அளித்தன. அவன் எண்ணியவற்றையே அவை சொன்னதனால்தான் அந்தச் சோர்வு வருகிறது என்பதையும் அவன் கவனித்தான்.

இளமழை மீண்டும் தொடங்கியது. வாசல் வழியாக வீசிய சாரல் சிறிய மரவுரிச் சதுரம் போல மண்டபத்தில் கல்தரையில் ஈரத்தைப்படியச் செய்தது. இலைகளில் மழை பெய்யும் ஒலிக்குப்பிறகு கூரை விளிம்புகளிலிருந்து நீர் சொட்டும் ஒலி தொடங்கியது. அதுவரை மூடிய வானம் அறைக்குள் பரவவிட்டிருந்த இருளை மழைநீரின் பளிங்குப் பிரதிபலிப்பு சற்றே அகற்றியது போலத் தோன்றியது.

விதுரன் எழுந்து சென்று முற்றத்தில் நின்ற அலங்காரப் பல்லக்கையும் தேர்களையும் பார்த்துக் கொண்டு நின்றான். அவற்றின் கூரை வளைவுகளில் நீர்த் துளிகள் எண்ணெய் கொதிப்பது போல தெறித்துக் கொண்டிருந்தன. மேலும் வீச்சுடன் பெய்யப்போவது போல வீசிய குளிர்காற்றில் மழை அப்படியே எழுந்து பேருருவத் திரைச்சீலை போல நெளிந்தாடி பின்னர் வடக்குநோக்கி பறந்து விலகிச் சென்றது.

ஈரமான வானில் காகங்கள் கரைந்தபடி சிறகடித்து எழுந்து சுற்றிவந்தன. நீர்த்துளிகள் தொடர்ச்சியான மெல்லிய தாளத்துடன் சொட்டிக்கொண்டே இருந்தன. அவற்றைப் பார்த்து நின்றிருந்தபோது விதுரன், ரிஷபரின் பார்வையை நினைவுகூர்ந்தான். மார்த்திகாவதியின் அரசனுக்கும் இளவரசிக்கும் அஸ்தினபுரியின் மண உறவு ஒப்புதல்தான் என்று ரிஷபர் வந்து சொன்ன தூதின் பொருள் என்ன? அகத்துள் நிலைகொண்டிருந்த அதை தீண்டத்தயங்கித்தான் தன் எண்ணங்கள் சுற்றிவந்துகொண்டிருந்தன என்று உணர்ந்தான். அதைத் தொட்டதும் அதிர்ந்து அவை விலகிச் சிறகடித்துக்கலைந்தன.

"தேவாம்சம் தோன்றுகிறது இந்தக் குறிமுகத்தில்" என்று பிருதையின் பிறவிக்குறிப்பை கண்ணெதிரே நோக்கி வாசித்த நிமித்திகர் சொன்னதை விதுரன் நினைவுகூர்ந்தான். மீண்டும் அதைநோக்கியபின் "ராசிகள் பொய்ப்பதில்லை. இவள் தேவமாதாக்களில் ஒருத்தி" என்றார். பீஷ்மர் இருகைகளையும் மடியில் ஊன்றி தன் முகத்தை அதில் வைத்துக்கொண்டார். அவரது உடற்குறிப்பை உணர்ந்து அதை மட்டும் மேலே விவரிக்கும்படி சொன்னான்.

கங்கைக்கரை அரசகுலங்களைச் சேர்ந்த நூற்றிப்பதினாறு இளவரசியரின் பிறவிக்குறிப்புகள் ஓலைச்சுருள்களாக நிமித்திகர் முன் கிடந்தன. அவர் தலையசைத்ததும் அவரது மாணவன் அவற்றை அள்ளி சீராக அடுக்கி சந்தனப்பேழையில் வைத்தான். அவர் உதடுகளை இறுக்கியபடி அந்த ஓலையை கூர்ந்து வாசித்தார். ஓலைகளை அடுக்கியபின் சந்தனப்பேழையை பலபத்ரர் வாங்கிக்கொண்டார். நிமித்திகர் அருகே நின்றிருந்த முதுசூதரை நோக்கி "சூதரே பன்னிரண்டில் ஆறு வருகிறது" என்றார். "கார்த்திகேயன் அல்லவா?’"என்றார் அவர்.

"நூற்றெட்டில் ஏழு?" என்றார் நிமித்திகர். முதுசூதர் கைவிரல்களை எண்ணிவிட்டு "ஸித்தி" என்றார். நிமித்திகர் முகம் மலர்ந்து "ஆம், அவள்தான்" என்றார். சூதர் தன் உலோக தாளவாத்தியத்தை கையில் எடுத்து உதடுகளை நாவால் ஈரமாக்கிக்கொண்டார். "பாடுக!" என்று பீஷ்மர் கையசைத்தார். சூதர் மெல்லிய குரலில் சுருதியை மீட்டிப்பற்றியபின் பாடத்தொடங்கினார்.

'சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.

பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.

தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.

"என் விழிநீரே அச்சுடரை அணைத்தது" என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். "உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்" என்றாள் வராங்கி.

கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். "என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை" என்றான் வஜ்ராங்கன். "என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்" என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.

வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.

தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். "இறப்பின்மை வேண்டும் எனக்கு" என்றான் தாரகன். "அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை" என்றான் பிரம்மன். "அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்" என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.

சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.

அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.

ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.

ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.

சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.

சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.

கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.

தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.

தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!

போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.

அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’

பீஷ்மர் முதிய சூதரை சிலகணங்கள் அசையா விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தபின்பு திரும்பி விதுரனிடம் "ஆம், அவள்தான்" என்றார். விதுரன் பலபத்ரரை நோக்க அவர் தலையை அசைத்தார். நிமித்திகர் "ஆறு பெருவீரர்களும் மண்ணை நோக்கி எழுந்துவிட்டனர் அரசே" என்று சொல்லி தலைவணங்கினார்.

தன் அறையின் மஞ்சத்தில் வந்து படுத்துக்கொண்டு மரப்பலகைகளால் போடப்பட்ட கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன். சுயம்வரத்தில் சூதர்களுக்கு இடமில்லை. ஷத்ரியர்கள் வந்திருக்கும் ஒரு சுயம்வரத்தில் சூதர்கள் எழக்கூட அனுமதியில்லை. ஆனால் யாதவ இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சூத்திரர்கள். மார்த்திகாவதியின் அரசுகூட சூத்திர அரசுதான். சூதர்கள் சூத்திரர்களை மணம்கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்...

அறுந்து அறுந்து ஓடும் எண்ணங்களின் ஒழுங்கின்மையை தாளமுடியாதவனாக விதுரன் எழுந்து அமர்ந்தான். அமர்ந்தபோதும் அகவினா அறுபடாமையால் எழுந்து அறைக்குள் நடந்தான். அந்த அரண்மனையின் வெவ்வேறு அறைகள் வழியாக தலைகுனிந்தபடி நடந்தான். சாளரங்கள் வழியாக பிசிறுத்தூறல் பரவியிருந்த வெளிக்காற்றை பொருளற்றுப் பார்த்து பின் ஏதோ எண்ணம் சிந்தனையில் தடுக்க விழித்தெழுந்தான். தன் சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்.

வாசலில் நின்றிருந்த காவலனிடம் "நான் நதிக்கரை ஆலயங்களை பார்த்து வரலாமென்று எண்ணுகிறேன். பிதாமகர் என்னைத் தேடினாரென்றால் நானிருக்குமிடத்தைச் சொல்" என்றபின் இறங்கி நடந்தான். மழையின் நீர் முழுக்க மண்ணில் ஒரு சொட்டு எஞ்சாமல் வழிந்தோடியிருக்க, மென்மணல் கதுப்புகள் விரிந்தும் ஒடுங்கியும் முறுகியும் பரவியிருந்தன. புல்நுனிகளில் எஞ்சிய நீர்மணிகள் இளங்காற்றில் அதிர்ந்து உதிர்ந்தன. நீர்மணிகள் ஒளிவிட ஒரு சிலந்திவலை காற்றில் விம்மியதிர்ந்து கொண்டிருந்தது.

யமுனையின் அந்தப்பகுதிக் கரையில் அரசமாளிகைகள் இருந்தமையால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வப்போது கடந்து சென்ற ஏவலர்கள் அவனுக்கு தலைவணங்கினர். மாளிகை முகப்புகளை காவல் காத்த வீரர்கள் வேல் தாழ்த்தினர். யமுனையின் மீது மழையீரம் பளபளக்கும் கரிய கூரை வளைவுகளுடன் வெண்ணிறப்பாய்களில் ஒளி நிறைந்திருக்க படகுகள் நகர்ந்து சென்றன. ஈரத்தை உதறிய கொடிகள் படபடக்கத் தொடங்கியிருந்தன.

விதுரன் கரையோரமாகவே சென்ற சிறிய வண்டிப்பாதை வழியாகச் சென்றான். மழை நீரோடைகள் யமுனையை நோக்கி இறங்கிச் சென்ற இடங்களில் மரத்தாலான சிறிய பாலங்கள் இருந்தன. குறுங்காடுகளில் மழைக்கு ஒண்டியிருந்த பறவைகள் இலைத்தழைப்புகளுக்குள் இருந்து எழுந்து கூச்சலிட்டுப் பறந்தன. அவற்றின் ஓசையால், இலைகளின் கோடிச்சிறகடிப்பால் குறுங்காடு விண்ணில் எழும் துடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. மார்த்திகாவதியின் கோட்டையின் தென்பகுதி சிறுவாயிலில் பத்து காவலர்கள் நின்றிருந்தனர். அவன் வெளியேறியபோது தலைவணங்கினர்.

யானையை ஏற்றி மெல்ல நகரும் சிறுபடகுபோல விதுரன் தன்னை அறிந்தான். நெஞ்சின் சுமை. எண்ணங்களின் சுமை. எண்ணங்களா? என்ன எண்ணங்கள்? வெறும் சொற்கள். கண்ணில் படும் ஒவ்வொன்றையும் உடனடியாக சொல்லாக மாற்றிக் கொள்கிறது அகம். அந்தச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கின்றன. திரண்டு எடையாக மாறுகின்றன. அவ்வளவுதான். அந்த மனச்சுமையை அவன் முன்பு ஒருபோதும் அறிந்ததில்லை. அதை அவன் உண்மையில் விரும்புகிறானோ என்று ஐயப்பட்டான். உயரமான உப்பரிகையிலிருந்து கால் நழுவி விழப்போகும் கணம் அப்படியே நீண்டு நாழிகைகளாக விரிவது போல.

மார்த்திகாவதியின் ஒலிகள் விலகி நெடுந்தொலைவுக்குச் செல்வது வரை விதுரன் நடந்து கொண்டிருந்தான். மேகங்கள் வானில் விரிசல் விட்டன. கோட்டை வாயில் திறப்பது போல அகன்று உள்ளிருந்து ஒளி பெய்து யமுனை பளபளக்கத் தொடங்கியது. அலையின் வளைவுகளில் சருமத்தின் மெருகு. வெண்பறவைகளில் காலையொளி பட்ட மந்தார மலர்களின் மிளிர்வு. கண்படலம் கிழிபட்டு விலகியது போல ஒவ்வொன்றும் துலங்கி மிக அருகே என தெரிந்தன. வெண் சிறகுகளின் ஒவ்வொரு இறகையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு அலையின் உள்ளலையையும் விழிதொட முடிந்தது.

யமுனையைப் பார்த்தபடி, சால்வை மென்சிறகாக பறக்க, குழல்கள் எழுந்தலைய விதுரன் அங்கேயே நின்றிருந்தான். காற்று வீசியபோது அவன் மீது கிளை விரித்து நின்றிருந்த சாலமரம் மழைத்துளிகளை உதிர்த்தது. கலைந்த சிறு பழங்கள் போல அவனைச் சுற்றி சேற்றுப் பரப்பில் அவை விழுந்து ஒலித்தன. ஒருகணம் அவனுக்கு யமுனையில் குதித்து மூழ்கி மறையவேண்டுமென்ற எண்ணம் வந்தது. அவனை அழுத்தியிருந்த எடை அனைத்தும் அப்போது விலகிச்செல்லும். ஆம், அவன் யமுனையைப் பார்க்கவந்ததே அதற்காகத்தான். அதற்காக அல்ல, அந்த எண்ணத்தை கொஞ்சிக்கொள்ள.

யமுனைக்குள் தொலைவில் மங்கல இசை கேட்டது. அவன் கூர்ந்து நோக்கியபோது செம்மஞ்சள் நிறமான பாய்களை விரித்தபடி ஒரு அரசபடகு வருவதைக் கண்டான். அதைச் சூழந்து ஏழு படகுகள் வந்தன. அவற்றில் மதுராபுரியின் கருடக்கொடி பறப்பதைக் கண்டான். ஒலி வலுத்து படகுகள் அண்மையில் வந்தபோது அரசபடகின் முகப்பில் அணிகளும் பட்டும் ஒளிவிட ஒரு பொன்வண்டுபோல அமர்ந்திருப்பவனை காணமுடிந்தது. கம்சனைப் பற்றி அவன் அறிந்திருந்தான். அத்தனை தொலைவிலேயே அவன் கொழுத்த உயரமான மனிதன் என்பது தெரிந்தது. எண்ணைக்கலம் கொண்டுசெல்லும் படகிலிருந்து சிதறி நீரில் ஏழ்வண்ணம் கொண்டு பரவும் துளிகள் போல அப்படகிலிருந்து இசை எழுந்து காற்றில் பரவியது.

செந்நிறமும் பொன்னிறமும் சுடரும் மீன்கூட்டம் போல மதுராபுரியின் படகுகள் கடந்து சென்றன. அவை சென்ற தடம் யமுனை நீரில் அலைகளாக எஞ்சி பின் அழிந்தது. அதைக்கண்டு நின்று பின்பு தன்னுணர்வு கொண்டபோது தன் அகத்தின் எடை முற்றிலுமாக அகன்றிருப்பதை விதுரன் உணர்ந்தான். அந்த விந்தையை தன் வினாக்களால் சற்று தூரம் துரத்தியபின்னர் சலித்து திரும்பிக் கொண்டான்.

யமுனையின் கரை வழியாகத் திரும்பும்போது தன் நடையில் ஒரு விரைவு கலந்திருப்பதை அவனே உணர்ந்து புன்னகையுடன் நின்று பின்பு காலெடுத்து வைத்தான். யமுனையின் நீர்ப்பரப்பில் வெயில் அணைந்தபடியே வந்தது. மறுகரையின் காடுகள் நிறமிழந்து கருமை பூண்டன. நீரின் நீலத்தை கருமையாக்கிக்கொண்டே இருந்தது வானம். அவனைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் இலைகளின் மீது பல்லாயிரம் பறவைகளின் ஒலிகள் சேர்ந்து ஒலித்தன.

அவன் மீண்டும் மார்த்திகாவதியின் எல்லைக்குள் நுழைந்தபோது பாதையின் வெண்தடம் மட்டும் தெரியும்படியாக இருட்டிவிட்டிருந்தது. கண்களை இடுக்கி பார்வைகூர்ந்து நடக்க வேண்டியிருந்தது. இருபக்கமும் புல்நுனிகளில் இருந்து மின்மினிகள் சுடர்த்துளிகளாக எழுந்து சுழன்றன. தவளைகளின் கூட்டமான பேரொலி எழுந்தது. தவளைகள் அனைத்தும் யமுனையை நோக்கி அமர்ந்து தங்கள் வேதபாடல்களை இசைப்பதாக அவன் நினைத்துக்கொண்டான்.

மார்த்திகாவதியின் கோட்டை வாயிலை அடைந்தபோது உள்ளே எங்கோ மணியோசைகள் கேட்டன. வாயிற்காவலர் வேல் தாழ்த்தி அவனை உள்ளே விட்டனர். நுழைந்ததும் இருள் பரவிய சோலைக்கு அப்பால் மரங்களை நிழல்நாகங்களாக நெளியவைத்தபடி செவ்விளக்கொளிகள் தெரிவதைக் கண்டான். அங்குதான் ஏதோ சிற்றாலயத்தில் பூசனை நடந்து கொண்டிருந்தது. நீரோடை ஒன்றின்மேல் வளைந்துநின்ற மரப்பாலத்தின் மீது சென்ற சிறிய பாதையில் ஏறி சோலைக்குள் நுழைந்தான்.

சோலை நடுவே ஒரு சிறிய ஆலயம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு தெரிந்தது. சுடரொளியில் பட்டு ஆடைகளின் அசைவைக் கண்டான். அவன் நடை வேகமிழந்தது. அங்கே நின்ற பெரிய மரத்தின் அடியில் நின்று கொண்டான். மரத்தாலான கூரை கொண்ட கருவறை மட்டுமேயான சிறிய கொற்றவையின் ஆலயம் அது என்று தெரிந்தது. அதன் கருவறையில் இருபக்கமும் நடப்பபட்ட நெய்ப்பந்தங்களின் செந்தழல்கள் கருங்கூந்தல் சுழற்றி நடனமிட்டன. கருவறைக்குள் நெய்விளக்குகளின் ஒளியில் கொற்றவை செம்பட்டாடையின் அலைகள் சூழ ஒளிரும் வேலின் பரப்பில் தழல்களின் பிம்பங்கள் நெளிந்தாட மின்னும் வெள்ளி விழிகளுடன் நின்றிருந்தாள்.

ஆலயத்தின் சிறுமுற்றத்தில் மூன்று சேடியர் கைகளில் கூடைகளுடன் நின்றிருந்தனர். தரையில் பூசனைக்காக கொண்டுவரப்பட்ட நீர்க்குடங்களும் மலர்க்குடலைகளும் இருந்தன. நான்கு காவல் வீரர்கள் பந்த ஒளி மின்னிய வேல்களுடன் சற்று விலகி நின்றிருந்தனர். அப்பால் ஒரு பந்தம் எரிந்த ஒளிப்பரப்புக்குள் இறக்கிவைக்கப்பட்ட பல்லக்கு செம்பட்டுத்திரைகள் தழலாக ஆட நின்றிருந்தது.

அங்கே வந்திருப்பது யார் என்று கோட்டை வாயிலில் முதல் மணியோசை கேட்டபோதே தன் அகம் உணர்ந்துவிட்டதை அப்போது விதுரன் அறிந்தான். எந்த வினாவுக்குள்ளும் அடங்காத அந்த விந்தையை பிறிதொருவர் கூறியிருந்தால் மடமை என்று அவன் நகைத்திருப்பான். ஆனால் அங்கே அப்போது ஐம்புலன்களையும் பொருளற்றதாக ஆக்கும் பெரும்புலன் ஒன்றாக அவன் அகமும் ஆகமும் ஆகியிருந்தன.

மெல்லிய காலடிகள் மலர் பதிந்து மலர் பதிந்து மீள்கின்றன. செம்பட்டு ஆடையின் பொன்னூல் மலரிதழ்கள் அலைவிரிந்து அலைவிரிந்து ஒயில்கின்றன. மேகலை மணிகள் குலுங்கிக் குலுங்கி ஒலிக்கின்றன. செம்மணி வளையல்கள் எழுந்து இணைந்து எழுந்து இணைந்து இமிழ்கின்றன. தாமரையிதழென அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை உலைந்து உலைந்து ஒளிர்கிறது. நாகமணிக்கண்கள் எனக் கோர்த்த முத்துக்களின் ஆரம் துவண்டு துவண்டு அசைகிறது. கன்னம் தொட்டுக் கன்னம் தொட்டு முத்தமிடுகிறது அணிக்குழை. இந்த முகம், இந்த விழிகள், இவ்விதழ், இந்நாசி, இந்நறுநுதல், இங்கே நான் என இவையன்றி ஏதுமில்லா பேருலகம். தன்னைத்தான் நோக்கி வியந்து நிற்கும் பெருங்கணமென காலம்.

அவள் வந்து வலப்பக்கத்து நெய்ப்பந்தத்தின் அருகே அதன் செந்நிற ஒளியில் தானுமொரு செந்தழல் போல நின்றாள். அப்பால் இருளில் நின்ற அவன் விழிகளுக்காகவே அப்போது படைக்கப்பட்டிருந்தாள்.

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்

[ 1 ]

மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது.

கூரையை தாங்கி நின்ற கனத்த மரங்களாலான தூண்களில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுப் பாவட்டாக்கள் இளங்காற்றில் யானை மத்தகங்கள் போல அசைந்தன. இருபக்கமும் கட்டப்பட்டிருந்த துணிச்சாமரங்கள் யானையின் காதுகளாக வீசின. ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் நின்று சாமரங்களை சரடால் இழுத்துக்கொண்டிருந்த சேவகர்கள் யானைகளை கட்டுப்படுத்திய பாகர்கள் போலிருந்தனர். தொடர்ந்து பெய்த மழையினால் மண் குளிர்ந்திருந்ததனால் உள்ளே அந்தச் சிறிய காற்றே கூதல் போல குளிரைப் பரப்பியது.

நீள்வட்ட வடிவில் பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் முதல் எல்லையில் இருந்து தொடர்ச்சியாக யாதவர்கள் அமர்ந்திருந்தனர். தங்கள் குலங்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கழுத்தில் கல்மணி ஆரங்கள் அணிந்து தோலாடைகள் மேல் பளபளக்கும் குத்துவாள்களுடன் அமர்ந்திருந்த அவர்கள் மனக்கிளர்ச்சியுற்றவர்களாக அருகே இருந்தவர்களிடம் பேசியபடியும், உடலை அசைத்தபடியும், அவ்வப்போது சிரித்தபடியும் தெரிந்தனர். அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்த சேவகர்கள் அவ்வப்போது நறுமணப்பாக்கை அளித்தனர்.

யாதவர் வரிசையின் முடிவில் கம்சன் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த விதத்தை பிற அனைவருமே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர். இரு தொடைகளையும் நன்றாக விரித்து பீடத்தின் இருபக்கங்களிலும் தன் கனத்த கைகளை ஊன்றி சிவந்த விழிகளால் அவையை பார்த்துக் கொண்டிருந்தான். சதைமடிந்த கழுத்தில் அவன் அணிந்திருந்த மணிமாலைகளும் சரப்பொளி ஆரங்களும் பதக்கமாலைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சதை திரண்ட மார்பை நிறைத்து உருண்ட வயிற்றின் மீது அமர்ந்திருந்தன. சபையை சுற்றிவந்த அவன் விழிகள் மறு எல்லையில் அவனுக்கு நேர் முன்னால் இருந்த சல்லியனைப் பார்த்ததும் விலகிக் கொண்டன. மீண்டும் சபையைச் சுற்றி சல்லியனை வந்தடைந்தன.

ஷத்ரியர்களின் வரிசையின் இறுதி எல்லையில் அமர்ந்திருந்த சல்லியன் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டிருந்தான். ஒரு கையால் தன் கூரிய மீசையை வருடியபடி அவையில் எவரையும் பார்க்காமல் தொலைவில் ஆடிய பட்டுப்பாவட்டாவை நோக்கி பார்வையை நாட்டியிருந்தான். ஆனால் அவனுடைய மொத்த அகப்பார்வையும் கம்சனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று விதுரன் உணர்ந்தான்.

சபையில் ஷத்ரியர் வரிசையில் நாலாவதாக பாண்டு அமர்ந்திருந்தான். இரு கைகளையும் மார்புடன் சேர்த்து கட்டியபடி தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவன் தென்பட்டான். அவ்வப்போது வாயை இறுக்கி பெருமூச்சுவிட்டு மெல்ல அசைந்தான். அவையில் இருந்த எவரும் அவனை முன்னர் பார்த்திருக்கவில்லை. அவன் நுழைந்ததும் அவை முழுக்க ஓர் அசைவு பரவிச் சென்றது. அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அத்தனை பேரும் அடைந்த வியப்பே ஒரு மெல்லிய ஒலியாக மாறி எழுந்தது. உடனே அவர்கள் இயல்பு நிலை மீண்டு அசைய அவ்வசைவு இன்னொரு அலையாக பரவிச் சென்றது.

பாண்டு விதுரனின் கையைப் பற்றியபடி வெண்பனி போன்ற தலைமுடி காதுகளில் சரிய குனிந்து தரையை நோக்கியபடி நடந்தான். அவ்வறையில் பரவியிருந்த ஒளி அவள் கண்களை மறைத்தது. தரையின் மரப்பலகைகள் எழுந்து தெரிவது போல அவனுக்குத் தோன்றியது. பலமுறை காலை தவறாக எடுத்துவைத்து தடுமாறினான். விதுரன் அவன் தோளைத் தொட்டபடி "இளவரசே, சமநிலம்தான். நிமிர்ந்து செல்லுங்கள். பலபத்ரர் நிற்பதற்கு முன்னாலுள்ள இருக்கையில் அமருங்கள்" என்றான். "பலபத்ரர் எங்கே?" என்றான் பாண்டு. "நான் சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்" என்று விதுரன் மிகமெல்லிய ஒலியில் கூறினான்.

பலபத்ரர் பாண்டுவைக் கண்டதும் சபை நடுவே இறங்கி பதறியபடி மார்புச்சதைகள் குலுங்க ஓடிவந்து அவனை கைப்பிடித்து அழைத்துச்சென்று பீடத்தில் அமரச் செய்தார். விதுரனின் முழுக்குருதியும் முகத்தில் பாய்ந்தேறி காது மடல்களும் இமைகளும் வெம்மை கொண்டன. விதுரனை நேக்கிய பலபத்ரர் அவனுடைய கடும் சினத்தை புரிந்து கொண்டாரென்றாலும் அவர் செய்தது என்ன என்பதை உணரவில்லை. "அமைச்சரே, அரசரின் மருத்துவரை இருக்கைக்குப் பின்னாலேயே நிற்கும்படிச் சொன்னேன்" என்று பதற்றத்துடன் சொன்னார்.

விதுரன் மூச்சை இழுத்து சீராக விட்டு தன்னுடைய சினத்தை ஆற்றிக் கொண்டான். பலபத்ரர் குனிந்து பாண்டுவிடம் "இளவரசே, என்ன தேவை என்றாலும் வலது பக்கம் திரும்பிப் பாருங்கள். அந்தத் தூணருகே நான் நின்றிருப்பேன்" என்றார். பாண்டு நிமிர்ந்து இளநகையுடன் விதுரனைப் பார்த்தான். அவனுடைய இமைகள் கொக்கிறகுகள் போல இருந்தன. கீழே விழிகள் குருதிச் சிவப்புக்குள் இரு சிவந்த பாம்பு முட்டைகள் போல அசைந்தன.

விதுரன் பலபத்ரரிடம் "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான். "இல்லை அமைச்சரே, இளவரசர் நேற்றே உடல்நலமில்லாமல்..." என்று பலபத்ரர் ஆரம்பித்தார். அவரது உடல் பதற்றத்தில் வியர்த்திருந்தது. விதுரன் அவரது பழுத்த முதிய விழிகளையும் வியர்வை பரவிய மோவாயையும் பார்த்தான். தன்னுள் ஊறிய வெறுப்பை பல்லைக் கடித்து அடக்கியபடி "நான் இளவரசரின் அருகிலேயே இருப்பேன் அமைச்சரே. நீங்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள்" என்றான்.

பலபத்ரர் பாண்டுவைப் பார்த்துவிட்டு "இளவரசருக்குத் தேவையான தலையணைகளை... " என்று தொடங்கவும் விதுரன் பட்டைக் கிழிக்கும் குறுவாள் போன்ற குரலில் "கிழட்டு மூடா, இக்கணம் நீ வெளியே செல்லாவிட்டால் நாளை கழுவில் ஏற்றப்படுவாய்" என்றான். பலபத்ரர் அச்சத்தில் உறைந்து திறந்த வாயுடன் அப்படியே நின்றார் "ம்" என்றான் விதுரன். பலபத்ரர் எலிபோல பதறி ஓடி எதிர்வாயில்வழியாக வெளியேறினார்.

விதுரன் "இயல்பாகச் சாய்ந்து கொள்ளுங்கள் இளவரசே... எவர் விழிகளையும் பார்க்க வேண்டாம்" என்றான். பாண்டு "அவர் பீஷ்மரின் தோழர். நீ அவரை அப்படி நடத்தியிருக்கக் கூடாது" என்றான். "சொல்லித் தெரிய வேண்டிய இடத்தில் அமைச்சன் இருக்கலாகாது" என்றான் விதுரன். "விதுரா, அவர்..." என்று பாண்டு சொல்லத் தொடங்க "அது முடிந்துவிட்டது. நான் என் முடிவுகளை விவாதிப்பதில்லை" என்றான் விதுரன்.

"எது வேண்டுமானாலும் செய். நான் சொன்னதை நீ எந்தக் காலத்தில் கேட்டிருக்கிறாய்?" என்றான் பாண்டு. விதுரன் தலைதூக்கி ஷத்ரியர் விழிகளைப் பார்த்தான். எவரும் நேரடியாக விழிதிருப்பி பாண்டுவை பார்க்கவில்லை. ஆனால் அவர்களின் கண்கள் சுழன்று சுழன்று வந்து பாண்டுவையே தொட்டு மீண்டன. கம்சன் ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பாண்டுவைப் பார்த்தான். இகழ்ச்சியுடன் வாய் சற்றே திறந்திருந்தது. அப்போது குந்திபோஜனின் நிமித்திகன் உள்ளே வர அந்தத் திறந்தவாயுடனேயே பார்வையை அப்பக்கமாக திருப்பிக்கொண்டான். பிறகு அவன் பாண்டுவை பார்க்கவேயில்லை. சல்லியன் பாண்டுவை பார்த்தானா என்பதையே விதுரனால் கவனிக்க முடியவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க மாட்டான் என்று விதுரன் அறிந்திருந்தான்.

"அவன்தான் சல்லியனா?" என்று பாண்டு கேட்டான். விதுரன் ''ஆம்" என்றான். "அழகன்!" என்றான் பாண்டு. விதுரன் பதில் கூறவில்லை. "அவனுக்குத்தான் குந்தி மாலையிடப் போகிறாள்." விதுரன் பேசாமல் நின்றான். "அப்படி அவள் நினைத்தால் அதுவே சிறந்த முடிவாக இருக்கும்" என்றான் பாண்டு. அவன் தன்னைச் சீண்டுவதற்காகவே அப்படிச் சொல்கிறான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

காலையில் பாண்டுவின் சேவகன் வந்து அவன் படுக்கைவிட்டு எழ மறுப்பதாகச் சொன்னபோது விதுரன் திகைத்து "இன்னுமா எழவில்லை?" என்றான். "அவர் உடல்நிலை நலமாக உள்ளதல்லவா?" சேவகன் "உடலுக்கு ஒன்றுமில்லை" என்றான். விதுரன் பார்த்தான். "அவருக்கு தங்களிடம் ஏதாவது பேசுவதற்கு இருக்கலாம்" என்றான் சேவகன். விதுரன் எழுந்து சால்வையைச் சுற்றியபடி நடந்து பாண்டுவின் படுக்கையறைக்குச் சென்றான்.

மஞ்சத்தில் பாண்டு ஒருக்களித்து சாளரத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். சாளரத்தின் திறந்த வாயில் வழியாக அப்பால் நின்றிருந்த சந்தன மரம் காற்றிலாடுவது தெரிந்து கொண்டிருந்தது. விதுரன் உள்ளே வந்ததை அவன் காலடியோசையால் உணர்ந்ததை தோள் குறுகல் காட்டியது. "இளவரசே என்ன இது? தாங்கள் அணியும் ஆடையும் ஏற்க வேண்டுமல்லவா?" என்று இயல்பாகத் தொடங்கினான் விதுரன்.

கலங்கிய விழிகளுடன் திரும்பி "நான் உன்னிடம் நேற்று காலை என்ன சொன்னேன்?" என்று பாண்டு கேட்டான். "நேற்றா? காலையில் உங்களுக்கு உடல்வெப்பம் இருந்தது." பாண்டு "ஆம் அதை நானும் அறிவேன். ஆனால் என் வெம்மையில் என் அறைக்கு வந்த உன்னிடம் நான் ஏதோ சொன்னேன். அது என்ன?" என்றான். விதுரன் "அதை நான் சரிவர நினைவுகூரவில்லை இளவரசே" என்றான்.

"தம்பி நீ ஒன்றை நினைவுகூரவில்லை என்று சொன்னால் அது நினைவுகூர விரும்பவில்லை என்றே பொருள்படும்" என்றான் பாண்டு. "ஆம். அவ்வாறுதான்" என்று விதுரன் சொன்னான். "நான் சொன்னவை என்ன என்று எனக்குத் தெரியும். சரியான சொற்களில் சொன்னேனா என்றுதான் உன்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள விரும்பினேன்" என்றான் பாண்டு.

‘‘நாம் அதை பிறகு பேசுவோம். தாங்கள் மணநிகழ்வுக்குக் கிளம்பவேண்டும்" என்றான் விதுரன். "தம்பி இது இரண்டாவது சுயம்வரம்" என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்ல வருவது அதுதான் என நன்கறிந்திருந்தபோதிலும் உள்ளம் பதறுவதை உணர்ந்தான். பாண்டு "இதேபோல கங்கையில் படகில் சென்று பிதாமகர் என் அன்னையரை கவர்ந்து வந்தார்" என்றான். "ஆம். அது அனைவரும் அறிந்த கதை" என்று விதுரன் கூறினான். "தம்பி நீ பேரறிஞன். மாபெரும் மதியூகி. உலகில் அனைவரையுமே உன்னால் வெல்ல முடியும். ஆனால் பேரறிஞர்களும் மதியூகிகளும் தோற்கும் ஓர் இடம் உண்டு."

விதுரன் "நான் விவாதிக்க விரும்பவில்லை. காசி நாட்டு இளவரசியரை பிதாமகர் பீஷ்மர் கவர்ந்து வந்தது சரியானதென்றே நான் இன்றும் நினைக்கிறேன். அது அஸ்தினபுரியை காத்தது. அதற்காக அஸ்தினபுரி மீது அம்பாதேவியின் தீச்சொல் விழுந்தது என்கிறார்கள். ஆனால் அவ்வண்ணம் நோக்கினால் தீச்சொல்விழாத தேசம் என்ற ஒன்று இப்புவியில் இருக்க இயலாது" என்றான்.

கசப்பை உச்சமாக வெளிப்படுத்தும் சிரிப்பு ஒன்றை பாண்டு அடைந்திருந்தான் என்று விதுரன் அறிவான். பாண்டு சிரித்து "நான் ஒரு அரசியல் மதியூகியாக பிறக்காமலிருக்க முற்பிறவியில் தவம் செய்திருக்கிறேன்" என்றான். "இளவரசே, தாங்கள் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்துதான் இத்தனை தொலைவு வந்திருக்கிறோம். அது நம் பிதாமகரின் ஆணை" என்று விதுரன் சொன்னான்.

"பிதாமகர் எடுக்கும் இரண்டாவது பெரும் பிழைமுடிவு இது. அன்று கங்கையை சிறை கொண்டு வந்தார். இப்போது யமுனையை சிறை கொண்டு செல்ல வந்திருக்கிறார்" பாண்டு சொன்னான். "என் தந்தை பிதாமகர் செய்த பிழையின் விஷத்தை அன்று உண்டார். இன்று எனக்காக அதை கிண்ணத்தில் ஊற்றுகிறார்" பல்லைக்கடித்து "உயிருடனும் உணர்வுடனும் சதுரங்கக் காயாக இருக்க இயலாது" என்றான்.

விதுரன் "உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க இயலாது இளவரசே... நான் இந்த ஆட்டத்தை ஒருங்கமைக்கவில்லை. இதை பிதாமகர் ஏன் முன்னெடுக்கிறார் என்றும் அறியேன். ஆனால் இது எப்படி முடியும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றான். பாண்டு ஏறிட்டுப்பார்த்தான். "இம்முறை பிதாமகரின் கரங்களை படைகள் மீறிச் செல்லவிருக்கின்றன." பாண்டுவின் பார்வை கூர்மைகொண்டது.

பாண்டுவின் பார்வையை நோக்கியபடி விதுரன் கூறினான் "அஸ்தினபுரிக்கு மருகியாக மகளைத்தர இயலுமா என்று கேட்டு பலபத்ரரின் தூது வந்தபோது குந்திபோஜன் வேறு எந்த முடிவை எடுத்திருக்க இயலும்? பீஷ்மர் காசிநாட்டு இளவரசியை கவர்ந்து சென்ற கதையை பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவர். மார்த்திகாவதியின் இளவரசி மாபெரும் மதியூகி என்று புகழ்பெற்றிருக்கிறாள். அவளுக்கும் என்ன நிகழும் என்று தெரியும். ஆகவேதான் இந்த சுயம்வர நாடகத்தை முன்வைத்திருக்கிறார்கள்."

பாண்டு சில கணங்கள் விதுரனின் விழிகளை நோக்கியபின் "யார் அவன்?" என்றான். "மாத்ர நாட்டு இளவரசர் சல்லியன்" என்றான் விதுரன். பாண்டு புன்னகையுடன் "அவர் வந்திருக்கிறாரா என்ன? அவரைப்பற்றி சேடியர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றான். விதுரன் "ஆம். அழகர் என்றும் வீரர் என்றும் புகழ் பெற்றிருக்கிறார். அவரை மார்த்திகாவதியின் இளவரசிக்கு முன்னரே தெரியும் என்றும் சொன்னார்கள்" என்றான்.

பாண்டு சிரித்தபடி எழுந்தான். "ஆம் அதுவே இந்த நாடகத்தின் மிகச்சிறந்த முடிவாக இருக்க முடியும். அழகிய மதியூகியான இளவரசி. அழகிய வீரனாகிய இளவரசனுக்கே மனைவியாக வேண்டும். காட்டில் ஒரு மான் தன் இணையைத் தேடிக்கொள்வது போல இயல்பாக அது நிகழவேண்டும." "ஆம் இளவரசே, இது நம் பிதாமகரின் ஆணை... நாம் அதன் பொருட்டு வந்திருக்கிறோம். இந்த நாடகத்தை நாமும் சிறப்புற ஆடிவிட்டு மீள்வோம்."

பாண்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி "பெரிய எடையொன்றை உடலில் இருந்து இறக்கி விட்டது போலிருக்கிறது விதுரா... காலையில் என்னை நான் செயலற்ற பாவையாக, பிறர் விரலசைவுக்கு ஆடும் இழிமகனாக உணர்ந்தேன். இப்போது இந்த விளையாட்டு என் வாழ்வின் சுவைமிக்க நிகழ்வுகளில் ஒன்று என்று தோன்றுகிறது" என்றான். "நான் இன்று ஒரு பார்வையாளன் மட்டுமே, இல்லையா?" உரக்கச்சிரித்து "மஞ்சளரிசியையும் மலரையும் ஓங்கித்தூவ என் கைகளுக்கு விசையிருக்குமென நினைக்கிறேன்."

அவை காத்திருந்தது. எத்தனை சுயம்வரங்கள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் பாரதவர்ஷத்தின் அரசியல் விளையாட்டு மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் சதுரங்கத்தின் ஒரு புதிர்நிலைகள். விதுரன் அப்பால் அமர்ந்திருக்கும் பீஷ்மரை ஒரு கணம் நோக்கி மீண்டான். பாண்டு தலையை மேலே தூக்கினான். விதுரன் குனிந்தான். "இந்த நாடகத்தில் தலைவன் சல்லியன் என்றால் நான் விதூஷகன். என் முன்னால் அமர்ந்திருக்கும் இவன் யார்?" என்றான்.

"இளவரசே இவர் மதுராபுரியின் இளவரசர். பெயர் கம்சன்" என்றான் விதுரன். "இவன் ஐயமே இல்லாதவனாக இருக்கிறானே..." விதுரன் மெல்ல நகைத்து "அவனும் ஐயமேயின்றி அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டிருக்கிறான்." பாண்டு சிரித்தபடி "விதுரா, இந்த அவையில் அத்தனை பேரின் ஐயமும் அப்படி நீக்கப்பட்டிருக்குமா என்ன?" என்றான். விதுரன் புன்னகை செய்தான். அவர்கள் சிரிப்பதை அவையே திரும்பிப் பார்த்தது. பாண்டு உள்ளே நுழைந்தபோது பலபத்ரரின் மூடத்தனத்தால் உருவான ஏளனம் அவர்களின் இயல்பான சிரிப்பால் சற்று விலகிவிட்டிருப்பதை விதுரன் கண்டான்.

மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க முழுதணிக்கோலத்தில் வெண்குடையும் கவரியும் சூடி வந்த குந்திபோஜனும் அரசி தேவவதியும் வணங்கியபடி அவைநுழைந்து சிம்மாசனத்தில் அமர்ந்தனர். குந்திபோஜனின் விழிகள் முதலிலேயே பீஷ்மரை தேடிக் கண்டு கொண்டன. உடனே அவர் உடலில் பணிவைக்காட்டும் ஓர் அசைவு நிகழ்ந்தது. அதைக் கண்டதும் சல்லியன் இயல்பாகத் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். உடனே பாண்டுவை நோக்கிய பின் அரைக்கணத்தில் திரும்பிக் கொண்டான்.

குந்திபோஜனின் அரியணைக்குப் பின்னால் வீரன் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்தபடி நின்றான். இருபக்கமும் தாசிகள் கவரி வீசினர். அவருடைய அமைச்சர் ரிஷபர் கையில் செங்கோலை ஏந்தி அவர் முன்வந்து அருகே நின்றார். ஆனால் குந்திபோஜன் தன் உடல்குறுகல் வழியாகவே அவையனைத்தையும் பொருளற்றவையாக ஆக்கிவிட்டிருந்தார். ஆனால் அங்கு அமர்ந்திருந்தவர்களில் சல்லியனைத்தவிர பிறர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சல்லியனின் கைகளில் தோளில் தொடைகளில் எங்கும் ஏளனம் வழிந்தது.

விதுரன் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். அவர் அப்பால் குலமூதாதையர் அமர்ந்திருந்த வரிசையின் முகப்பில் தன் பீடத்தில் நிமிர்ந்த முதுகுடன் இறுக்கமான கழுத்துடன் அசையாத பார்வையுடன் அமர்ந்திருந்தார். கோயிலில் அமர்ந்திருக்கும் சிலைபோல. விதுரன் அந்தப் புதுச்சூழலில் அவரைப் பார்க்கும் போது அவருடைய அந்த நிமிர்வு மிக வேறுபட்டுத்தெரிவதாக எண்ணிக்கொண்டான். எதிரே பெருகிவரும் நதியொன்றுக்கு நெஞ்சு கொடுத்து நிற்பது போல.

குந்திபோஜனின் அரச நிமித்திகன் மேடை ஏறி தன் கோலைத்தூக்கி அங்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று சுயம்வர அறிவிப்பை அளித்தான். மங்கல இசையும் வேதியரின் மறைமுழக்கமும் சூழ குந்திபோஜன் எழுந்து சபையை வணங்கியபின் கையில் செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். வெளியே அரசப் பெருமுரசு ஒலித்தது. கம்சன் தன் பெரிய தொடைகளை கைகளால் வருடியபடி பெருமூச்சு விட்டான். அவன் பார்வை சல்லியனைத் தொட்டு மீண்டதும் கை மீசையை நீவி பின்னால் ஒதுக்கியது.

நிமித்திகன் பழைய கொம்புவாத்தியம் போல தடையின்றி ஒலித்த குரலில் அறிவித்தான். "சந்திரக்குலத்தோன்றல் யதுவின் குருதிவழிவந்த யாதவ குலத்து நூற்றெட்டு பெருங்குடிகளில் முதன்மையானதான விருஷ்ணி குலத்தின் தலைவர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் தலைவரும் போஜர் குலத்துச் செம்மலுமான குந்திபோஜரின் அறப்புதல்வியுமான குந்திதேவி என்னும் பிருதைதேவியாரின் திருமணத் தன்னேற்பு பெருமங்கலம் இங்கு இந்த அவையில் நிகழவிருக்கிறது. ஆநிரைகளின் முறைமைபோல மூதன்னையை முறைவழியாகக் கொண்டது யாதவப் பெருங்குலம். இங்கே பெண்ணே குருதித் தோன்றல். கருப்பையே குலத்தின் ஊற்று. ஆகவே இளவரசியின் தேர்வும் முடிவும்தான் முடிவானது. அதற்கு அப்பால் மூத்தோர் சொல்லோ தெய்வ ஆணையோகூட செல்ல முடியாதென்றறிக!"

நிமித்திகன் தொடர்ந்தான் "இளவரசி பிருதை அரசுசூழ்தலை முறைப்படி ஏழு நல்லாசிரியர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தவர். மார்த்திகாவதியில் தங்கித் தவமியற்றிய முதுபெரும் முனிவர் துர்வாசரின் அணுக்கமாணவியாக அமர்ந்து அறமும் பொருளும் மெய்யறிவும் ஊழ்கமும் கற்றவர். ஐவகைப் படைக்கலங்களையும் இருகைகளாலும் ஆற்றும் வல்லமை கொண்டவர். இந்த மார்த்திகாவதி நகரும் அரசும் இளவரசி குந்திக்கு உரியவை என்றறிக!"

நிமித்திகன் கைதூக்கியதும் சூதர்கள் மங்கலவாத்தியங்களை ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் "மார்த்திகாவதியின் இளவரசி மன்று சூழ்கிறார்" என்று அறிவித்தான். அவையின் சூழ்வட்டத்திலும் வெளியே களமுற்றத்திலும் கூடிநின்ற குடிமக்கள் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். பெருமுரசும் கொம்பும் சங்கும் சல்லரியும் மணியும் மங்கலச் சிலம்பும் ஒலித்தன. முதலில் நிறைகுடம் ஏந்தி வேதம் பாடி நீர் தெளித்த முதுவைதிகர் எழுவர் வந்தனர். மலரும் தீபமும் மஞ்சளும் பொன்னும் மங்கலப்பட்டும் தானியங்களும் நிறைகுடமும் என்று சப்தமங்கலங்களை ஏந்திய அரண்மனை மகளிர் தொடர்ந்து வந்தனர்.

மங்கல வாத்தியங்களை இசைத்தபடி சூதர்கள் அவர்களுக்குப்பின்னால் வர குந்திதேவி இருபக்கமும் இருசேடியர் அணுக்கத்தாலமும் மங்கத்தாலமும் ஏந்தி வர பின்னால் வந்த சேடி வெண்குடை பிடித்திருக்க கவரி வீசிய சேடியர் மருங்குசூழ உள்ளே வந்தாள்.

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்

[ 2 ]

அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் பார்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள்.

குந்திபோஜன் எழுந்து வணங்கி "அவையினரே, உங்கள் வருகையால் அனைவரும் இந்தச் சிறிய யாதவநாட்டை சிறப்பித்திருக்கிறீர்கள். இங்கே என் அறப்புதல்வி பிருதையின் மணத்தன்னேற்பு நிகழ்வை குலமுறைப்படி நடத்தும்படி எனது போஜர் குலத்தின் மூத்தாரை கோருகிறேன்" என்றார். அவையில் இருந்த மூன்று யாதவ முதியவர்கள் எழுந்து வணங்கினார்கள். போஜன் வணங்கி நிற்க ரிஷபரும் மூன்று துணையமைச்சர்களும் சென்று அவர்களை வணங்கி அவைமுகப்புக்கு இட்டு வந்தனர்.

மூன்று யாதவர்களும் வெண்ணிறப் பருத்தியாடை உடுத்து கழுத்தில் குன்றிமணிமாலைகளும் மஞ்சாடிமாலைகளும் அணிந்திருந்தனர். இடையில் மூன்று சுற்றாக சணல் கயிற்றைச்சுற்றிக்கட்டி தங்கள் குலக்குறியான வளைதடியை கையில் ஏந்தியிருந்தனர். அவர்கள் வந்து அவையை மும்முறை பணிந்து வணங்கினர். அவர்களில் இளையவர் "அவையினரே, ஆநிரை காத்தல் என்பது மானுடர்க்கு கானுறை மாயோன் வகுத்த முதற்பெருந்தொழில். அத்தொழில்செய்யும் ஆயர்களே மண்பயனுறச்செய்யும் முதற்குடிகள். எங்கள் குலத்துதித்த இளவரசியின் மணநிகழ்வு தொன்மையான ஆயர்முறைப்படியே ஆகவேண்டுமென விழைகிறோம்" என்றார்

இரண்டாமவர் "வீரர்களே முன்பெல்லாம் ஏறுதழுவி பெண்கொள்ளும் வழக்கமே இங்கிருந்தது. ஆயர்களும் வில்லெடுக்கத் தொடங்கியபின்னர் அவ்வழக்கம் அரசர்களுக்குரியதாக கொள்ளப்படுவதில்லை. ஆயினும் கன்று ஏற்புச் சடங்குகள் வழியாகவே ஆயர்குலத்து மணம்கோடல் நிகழவேண்டுமென்பதனால் மூன்று போட்டி நிகழ்வுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மூன்றில் ஒன்றை வெல்பவரே இவ்வரங்கில் இளவரசியின் மாலைகொள்ளத் தகுதியுள்ளவர் என்று கொள்வோம்" என்றார்.

மூன்றாமவர் "நிகழ்வுகளை எங்கள் மாணவர்கள் இங்கே விளக்கியுரைப்பார்கள்" என்றார். அதன்பின் வெண்குன்றுபோன்ற உடலும், கூரிய இரும்புமுனைகள் பதிக்கப்பட்ட கொம்புகளும் கொண்ட பெரும் எருது ஒன்று மூக்குவளையத்தில் கட்டப்பட்ட கயிற்றால் வழிநடத்தப்பட்டு அவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் கொழுத்த திமில் இடப்பக்கமாகச் சரிந்து அசைந்தது. கழுத்துக்குக் கீழே தசைமடிப்புகள் அலையலையாக வளைந்து தரை தொடும்படி தொங்கிக்கிடந்தன. எலும்பே தெரியாமல் இறுகிய தசை மூடி மெழுகியிருந்த அதன் உடல் நதிநீர்ப்பரப்பு போல ஆங்காங்கே சிலிர்த்தது. கனத்த குளம்புகள் கல்தரையை உரசும் ஒலி அவை முழுக்க ஒலித்தது. அது நடந்த எடையால் அவைமுற்றம் அதிர்ந்தது.

எருது கொம்பு தாழ்த்தி தரையை முகர்ந்தபின் மூச்சு சீற தலைதூக்கி அவையை நோக்கியது. தசைச்சுருள்கள் மடிந்து சூழ்ந்த அதன் முகத்தில் சேற்றில் பாதி புதைந்த கருங்கல்சில்லு போல விழிகள் ஈரம் மின்ன தெரிந்தன. தேன்கூடு போன்ற மூக்குக்கருமைக்கு அடியே கனத்த தாடையின் நீட்டி நின்ற முள்முடிகளில் வாய்நீர்க்கோழையின் துளிகள் திரண்டு மணியாகி நின்றன. முன்னங்காலைத் தூக்கி ஊன்றி அது உடல் எடையை மாற்றிக்கொண்டது. கண்களின் ஈரத்தைச் சுற்றிப்பறந்த சிறு பூச்சிகளை உதற தலையைக் குலுக்கியது. வாழைப்பூநிற நாக்கை நீட்டி தன் விலாவை தானே நக்கிக்கொண்டது.

மூத்தாரின் மாணவன் சபைஏறி "வீரர்களே, இந்த எருது ஒவ்வொருவர் பீடத்துக்கு அருகிலும் வரும். இருக்கை விட்டெழாமலேயே இதன் கழுத்தில் கட்டுக்கயிறைச் சுற்றிக்கட்டுவதே போட்டியாகும். ஒருமுறை மட்டுமே முயலவேண்டும். கட்டமுடியாதவர்கள் அவைவிட்டு வெளியேறவேண்டும். எவரும் ஆயுதங்களெதையும் பயன்படுத்தலாகாது" என்றான். சேவகர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கட்டுக்கயிற்றைக் தாலத்தில் கொண்டுவந்து நீட்டினர்.

பாண்டு புன்னகையுடன் "முதலில் எருது எங்குள்ளது என நீ எனக்குச் சொல்லவேண்டும் விதுரா" என்றான். விதுரன் "இளவரசே, நாம் அதைக் கட்டும்படி ஆகாது. மதுராபுரியின் இளவரசரே கட்டிவிடுவார். நாம் அடுத்த போட்டியையே சந்திக்கவிருக்கிறோம்" என்றான். பாண்டு நகைத்தபடி "ஆம், அவன் என்ன இருந்தாலும் யாதவன்" என்றான். எருதின் மூக்குவளையம் அகற்றப்பட்டது. ஒருவன் அதை பின்னாலிருந்து ஊக்க அது அமர்ந்திருந்தவர்களின் முன் பக்கம் வழியாக திமில் குலுங்க, விலாத்தசை அதிர நடந்தது.

முதல் யாதவ இளைஞன் கனத்த கரிய உடல் கொண்டிருந்தான். தோலாடையை மார்பின்மேல் போட்டு கல்மணிமாலையும் மரக்குழையும் அணிந்திருந்தான். கூர்ந்த கண்களுடன் கயிற்றை எடுத்து எருதின் கழுத்தை நோக்கிக் கொண்டுசென்றான். எருது அவனை திரும்பிநோக்கியதாகவே தெரியவில்லை. ஆனால் அவன் உடலை முன்னால் சரித்து எருதை அணுகியதும் தலையை பக்கவாட்டில் சாய்த்து ஈ ஒன்றை ஓட்டுவது போல மிக எளிதாக கொம்பைத் திருப்பி தலையைத் தூக்கியது. அதன் கொம்பு அவன் விலாவைக்குத்தி விலாவெலும்புக்குள் சென்று சிக்கிக்கொள்ள அதன் தூக்கிய தலையுடன் அவனும் அலறியபடி மேலே எழுந்தான்.

கைகால்களை இழுத்து உதறியபடி அடைத்த குரலில் அலறிக்கொண்டு சமநிலை தவறி அதன் திமிலைப்பற்றிக்கொள்ள கை பதறித் துழாவினான். கையின் பிடி வழுக்க காளையின் முகத்தில் தன் வயிறு உரசிச்சரிய அவன் துடித்த கைகால்களுடன் அதன் முன் விழுந்தான். கீழே கிடந்து அதிர்ந்த அவன் உடலில் இருந்து அதன் உயர்ந்த கொம்பு வரை அவன் குடல் மஞ்சள்கொழுப்பு படிந்த செந்நிற சகதிக்குழாயாக இழுபட்டு அவன் துடிப்பில் அசைந்து வழுக்கி நழுவிச்சரிந்து அவன் மேலேயே விழுந்தது. அவனைச்சுற்றி குருதி கொப்பளித்து கல்தரையில் வழிய அவன் வயிறு செந்நிறமாகத் திறந்து உள்ளே குடல்கள் கொதிக்கும் செங்கூழ் என கொப்பளிப்பது தெரிந்தது.

அவை சிலைவிழிகளுடன் அக்காட்சியை நோக்கி அமர்ந்திருக்க கம்சன் புன்னகையுடன் தன் தொடையில் அடித்துக்கொண்டான். சல்லியன் அரைக்கணம் கம்சனை நோக்கியபின் திரும்பினான். யாதவனின் இருகால்களும் குருதியில் வழுக்கி வழுக்கி இழுபட்டன. தலை பின்னகர்ந்து வாய் திறந்து, நாக்கு பதைபதைக்க, சேற்றுக்குழியின் குமிழிகள் உடையும் ஒலியுடன் துடித்தான். எருது அவனை குனிந்துகூட பாராமல் அவனைத் தாண்டி காலெடுத்துவைத்து அடுத்த யாதவன் முன் வந்து நின்றது.

அவன் உள்ளம்பதற அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் தாடை இறுகியசைவது தெரிந்தது. சேவகன் பின்னால் தட்ட எருது அடுத்த யாதவன் முன்னால் வந்தது. மூன்று யாதவர்கள் அஞ்சி அமர்ந்திருக்க நான்காமவன் கயிற்றை எடுத்தான். எருதின் உடல் சிலிர்த்தது. அது உலைத்துருத்தி என மூச்சிரைத்தது. அவன் எருதின் கொம்பை நோக்கியபடி ஒரு கையால் கயிற்றை நீட்டினான். மறுகையால் அது கொம்பைச்சரிக்குமென்றால் பிடிக்க ஒருங்கினான். ஆனால் அசையாமல் நின்ற எருது ஒருகணத்தில் முழுமையாகத் திரும்பி அவன் நெஞ்சில் தன் தலையால் நேருக்கு நேராக ஓங்கி முட்டியது.

யாதவன் அலறி பீடத்துடன் பின்னால் விழ அவன் சேவகன் அவனைப்பிடிக்க முன்னகர்ந்தான். அச்சேவகனை குத்தித் தூக்கி தன்பின்னால் சரித்தபின் நாகமெனச் சீறியபடி திமிலசையக் குனிந்து உடைந்த விலாவை கையால்பொத்தியபடி எழுந்து விலகமுயன்ற யாதவனை தன் வேல்நுனிக்கொம்புகளால் குத்தியது எருது. அவன் அலறியபடி உடல் அதிர்ந்து ஒருகையால் தரையை ஓங்கி அறைந்தான். எருது கொலைக்காகப் பழக்கப்பட்டது என விதுரன் உணர்ந்தான். அது வெறியுடன் அவனைக் குத்தி தூக்கிப்போட்டது. அவன் உடலுக்குள் புகுந்த கொம்பை ஆட்டித் துழாவியது. நிமிர்ந்தபோது அதன் வெண்ணிற பெருமுகம் முற்றிலும் செந்நிறமாக மாற கொம்புநுனிகளில் இருந்து நிணம் வழுக்கி முகத்திலும் கழுத்திலும் விழுந்து கீழே சொட்டியது. சீறியபடி அது தலையை அசைத்தது.

கொழுவிய குருதித்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும் முகத்துடன் மேலும் அது நடந்தபோது எந்த யாதவனும் கைநீட்டவில்லை. கம்சன் மீசையை இடக்கையால் நீவியபடி புன்னகையுடன் அது தன்னை நோக்கி வருவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவையே அவனைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவன் அறிந்திருந்தான். கீழே நெளிந்த உடல்கள் அமைதியடைந்தன. அவற்றை அரண்மனைச் சேவகரும் அந்த யாதவர்களின் அணுக்கத்தோழர்களும் சேர்ந்து எடுத்து விலக்கினர்.

கம்சனுக்கு முன்னால் இருந்த யாதவன் கைநீட்டுவது போல சற்று அசைய எருது மூச்சு சீறி தோலைச் சிலிர்த்தது. அவன் அசைவிழந்து மூச்சடக்கிக் கொண்டான். சேவகன் தட்ட எருது கம்சனின் முன்னால் வந்து நின்றது. அது வரும்போதே அவன் தன் சால்வையை விலக்கி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு சிறிய விழிகளால் கூர்ந்து நோக்கிக் காத்திருந்தான். எருது அவனருகே வந்தபோது அவன் அந்தக்கயிற்றை தன் சேவகனிடம் கொடுத்து விட்டான்.

எருது அவன் முன் நின்று முன்னங்காலை மெல்ல தரையில்தட்டி குனிந்து கொம்பை ஆட்டியது. அதன்மேல் குருதி சிறிய குமிழிகளாகவும் கட்டிகளாகவும் மாறி வழிந்த நிலையில் உறையத்தொடங்கியிருந்தது. கம்சன் அதை ஒரு கணம் நோக்கினான். பின்பு நினைத்திருக்காத கணத்தில் அதன் கழுத்தில் ஓங்கி கையால் வெட்டினான். அந்த ஓசையில் அவை திகைத்தது. அடிபட்ட எருது திரும்புவதற்குள் அவன் அதன் வலக்கொம்பை தன் இடக்கையால் பற்றி முழுவல்லமையுடன் இழுத்து வளைத்து வலக்கையால் மீண்டும் அதன் காதுக்குப்பின்பக்கம் ஓங்கி அறைந்தான்.

எருது நிலைகுலைந்தாலும் கொம்பை விடுவித்து அவனை குத்தித்தூக்க முயன்றது. கம்சன் தன் கழுத்துநரம்புகளும் தோள்தசைகளும் தெறிக்க, தாடை இறுகி கடிபட, முழு வல்லமையாலும் அதன் கொம்பை வளைத்து அதன் தலையை நிலம்நோக்கிச் சரித்தான். அது கால்களை முன்னால் நீட்டி வைத்து எழ முயல அவன் தன் இடக்காலால் அதன் கால்களைத் தட்டினான். எருது நிலையழிந்து சரிந்து விழுந்தது. அதன் தலையை தன் இடக்கையால் வளைத்து மடியோடு சேர்த்து இறுக்கியபடி அதன் கழுத்தில் ஓங்கி அறைந்தான் கம்சன். ஒரே இடத்தில் ஐந்துமுறை அவன் அறைந்ததும் எருதின் வாய் திறந்து கனத்த நாக்கு வெளியே வந்தது.

கொம்பைப்பிடித்த கையை விடாமல் எருதின் தலையை உடலுடன் அழுத்திப்பிடித்து வலக்காலால் அதன் முன்காலை அழுத்தி மிதித்து அதன் அடிக்கழுத்தை அடித்துக்கொண்டே இருந்தான். அதன் உடல் அதிர்ந்து அதிர்ந்து அடங்கி கால்கள் மண்ணை உதைத்து ஓய்வது வரை. அவன் அதை அறைந்ததுமே ஏதோ சொல்ல எழுந்த இளையவரை மூத்தவர் கையசைத்து அடக்கினார். எருதின் வாயிலிருந்து கொழுத்த குருதி வழியத்தொடங்கியது. அதன் உடல் முற்றிலும் அசைவிழந்து விழிகள் மேலேறி வெண்ணிறச் சிப்பிகளாகத் தெரிந்தன.

கம்சன் அந்தக்குருதியைத் தொட்டு தன் மீசையில் தடவி நீவியபின் கையை நீட்ட சேவகன் கட்டுக்கயிற்றைக் கொடுத்தான். அதை எருதின் கழுத்தில் கட்டியபின் அதை காலால் உதைத்துத் தள்ளினான். அதன்குருதியிலேயே வழுக்கி அது அசைந்துவிலகியது. தொங்கிய நீள்நாக்கு அவ்வசைவில் ஆடியது.

"கம்சரே, எந்த யாதவனும் எருதைக் கொல்வதில்லை" என்றார் இளைய குலமூத்தவர் உரக்க. "எங்கள் கண்முன் நம் குலச்சின்னத்தை அவமதித்திருக்கிறீர்கள்." கம்சன் கோணலான உதடுகளுடன் சிரித்து "தன்னைக்கொல்லவரும் பசுவையும் கொல்லலாமென்பது விதி" என்றான். "ஆனால்..." என அவர் தொடங்கியதும் மூத்தவர் கையமர்த்தி தன் மாணவனிடம் தலையசைத்தார்.

அவன் முன்னால் வந்து வணங்கி அடுத்த போட்டியை அறிவித்தான். சிவந்த நிறமான பசு ஒன்று அவைமுன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. "அவையோரே, இப்பசுவின் கழுத்தில் உள்ள வளையத்தை உடைக்காமல் கழற்றி எடுப்பவர் வென்றார். பிறர் அவை நீங்கலாம். அதற்குரிய நேரம் ஒரு மூச்சு" என்றான் மாணவன். பசு சேவகனால் முதல் ஷத்ரிய மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் திகைப்புடன் அந்த இரும்பு வளையத்தைப்பார்த்தான். திரும்பி தன் சேவகனைப்பார்த்தபின் வளையத்தைத் தூக்கி கொம்புவழியாக கழற்ற முயன்றான். கொம்புக்கு மிகக்கீழே இருந்தது அது.

அடுத்த ஷத்ரியன் அந்த வளையத்தை தன் புஜங்களால் வளைத்து கொம்பை நோக்கி இழுக்கமுயன்றான். அவன் தோற்றதுமே பிற அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அந்தவளையம் பசுவின் கொம்புகள் வழியாக வரவே முடியாதென்று. திகைப்புடன் சிலர் தொட்டுப்பார்த்து விலகினார்கள். சிலர் கையையே நீட்டவில்லை. பாண்டு விதுரனைப் பார்த்தான். விதுரன் "அதை சல்லியர் செய்துவிடுவார்" என்றான். பாண்டு "எப்படி?" என்றான். விதுரன் "தெரியவில்லை. ஆனால் செய்துவிடமுடியும் என சல்லியர் நினைப்பதை முகத்தில் காண்கிறேன்" என்றான்.

சல்லியன் முன் பசு கழுத்து வளையத்துடன் வந்து நின்று தலையை ஆட்டியது. அவனையே அவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. சல்லியன் அந்த வளையத்தை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் அதன் இருபக்கமும் தன் கையை வைத்து அழுத்தி நீள்வட்டமாக்கினான். பசுவின் கழுத்தெலும்பு இறுகும்படி வளையத்தை நீட்டியபின் அதன் நீள்முனையை ஒரு கையால் பற்றி பசுவின் மூக்கை இன்னொரு கையால் பிடித்தான். அதன் வாய்நீரைத் தொட்டு அதன் மூக்குஎலும்பில் நன்றாகப்பூசினான். அவன் என்னசெய்யப்போகிறான் என்று ஷத்ரியர் திகைக்க யாதவகுலமூத்தார் புன்னகை புரிந்தனர்.

சல்லியன் பசுவின் மூக்கையும் தாடையையும் சேர்த்துப்பற்றி ஒரே வீச்சில் அழுத்திப் பின்னால் உந்தி தாடையை கழுத்தோடு முடிந்தவரை ஒட்டி அதே கணம் வளையத்தின் நீள்நுனியை முன்னால் இழுத்து அதற்குள் பசுவின் மூக்கையும் தாடையையும் அழுத்திச்செலுத்தி மேலே தூக்கினான். பசுவின் எச்சில்பரவிய முகஎலும்பு வழியாக இரும்புவளையம் வழுக்கி மேலேறியதும் கொம்பு வழியாக அதை உருவி மேலே தூக்கி எடுத்து அவைக்குக் காட்டினான். பசு வலியுடன் கழுத்தை உதறி காதுகளை அடித்துக்கொண்டது. ஒருகணம் திகைத்தபின் அவை ஆரவாரமிட்டது.

குலமூத்தார் "யாதவர்களில் ஷத்ரியர்களைத் தேடினோம். ஷத்ரியர்களில் யாதவர்களைத் தேடினோம். இனி ஷத்ரியர்களில் அறிஞனைத் தேடுவோம்" என்றார். அவர் கையசைத்ததும் நான்கு பேர் உள்ளே ஓடினர். பின்வாயிலில் இருந்து ஒரு பெரிய இரும்புக்கூண்டு சக்கரங்கள் கொண்ட வண்டிமேல் வைக்கப்பட்டு சேவகர்களால் தள்ளிக் கொண்டுவரப்பட்டது. அதற்குள் ஒரு புலி நிலைகொள்ளாமல் இரும்பு உரசும் ஒலியில் உறுமியபடி வாலைச் சுழற்றிச் சுற்றிவந்தது. வண்டி நின்றதும் சமநிலையிழந்து அமர்ந்து மீண்டும் எழுந்தது. அவையைக் கண்டு அஞ்சி பதுங்கி வாய் திறந்து செந்நாக்கையும் வெண்பற்களையும் காட்டி உறுமியது.

மாணவன் "அவையோரே, இந்த அவைக்குக் கொண்டுவரப்படும் ஏழு இளங்கன்றுகளில் ஒன்றை நீங்கள் இக்கூண்டுக்குள் அனுப்பலாம். ஏழு மூச்சு நேரம் கன்று கூண்டினுள் இருக்கவேண்டும். அதை இப்பசித்தபுலி கொல்லும் என்றால் அதை உள்ளே அனுப்பியவரும் அக்கணமே தன் வாளை தானே பாய்ச்சி உயிர்துறக்கவேண்டும். கன்றை தேர்வுசெய்யாதோர் விலகிக்கொள்ளலாம்" என்றான். விதுரன் "இது என்ன போட்டி?" என்றான். "அந்தப்புலி பசியுடனிருப்பதை வாயைப்பார்த்தாலே அறியமுடிகிறது."

பாண்டு அந்தப் புலியின் கண்களை உற்று நோக்கினான். "மிகவும் அஞ்சியிருக்கிறது" என்றான். பின்பு தலைதூக்கி பின்னால் நின்றிருந்த விதுரனிடம் "அதை நான் தெரிவுசெய்கிறேன்" என்றான். விதுரன் "நீங்கள்..." என்றதும் அவன் சிரித்தபடி "என் அன்னையின் பாவைப்பேழையில் புலிகளும் கன்றுகளும் ஒன்றாகவே இருக்கும்" என்றான். அவன் கண்களை நோக்கியபின் விதுரன் "ஆம் இளவரசே, அஸ்தினபுரி ஒருபோதும் தோற்றுப் பின்மாறலாகாது" என்றான்.

மறுபக்கம் வெண்ணிறமும் கருநிறமும் செந்நிறமும் கொண்ட ஏழு இளம்பசுக்கன்றுகள் சேவகர்களால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. கன்றுகளைக் கண்டதும் பதுங்கியிருந்த புலி எழுந்து கம்பியருகே வந்து பார்த்தது. மெல்லிய மலரிதழ்போல நெளிந்த விளிம்புகள் கொண்ட நாக்கை நீட்டி கடைவாயை நக்கியபடி முரசுத்தோலை கோலால் நீவியதுபோன்ற ஒலியில் முனகியது. வாலைத்தூக்கியபடி பரபரப்புடன் கூண்டுக்குள் சுற்றி வந்தது. சபையில் இருந்த அனைத்து ஷத்ரியர்களும் திகைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.

பாண்டு மெல்ல எழுந்து கையசைத்து சேவகனை அழைத்தான். அவற்றில் முற்றிலும் வெண்ணிறமாக நின்ற இளம்கன்று ஒன்றைச் சுட்டி அதை இழுத்துவரச்சொன்னான். அவையெங்கும் வியப்பு உடலசைவின் ஒலியாக வெளிப்பட்டது. கம்சன் முனகியபடி முன்சரிந்து அமர்ந்தான். கன்றை இழுத்துவந்த சேவகனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. பாண்டு எழுந்து சென்று கூண்டின் கதவை மெல்லத்திறந்து கன்றை உள்ளே விடும்படிச் சொன்னான். ஒரு கணம் தயங்கியபின் சேவகன் கன்றைத் தூக்கி கூண்டுக்குள் விட்டான்.

கன்று எதையும் உணராமல் கூண்டுக்குள் நின்றது. கம்பிகளில் உடலை உரசியபடி அது நடந்தபோது புலி பதுங்கிப் பின்னகர்ந்தது. கன்று புலியை ஆர்வத்துடன் பார்த்தபின் புல்லை மெல்வதுபோல தலையை அசைத்தபடி ’ம்பேய்’ என குரலெழுப்பியது. புலி உறுமியபடி உடலை நன்றாகச் சுருட்டி கூண்டின் மூலையில் பதுங்கி அமர்ந்து மீசை சிலிர்க்க வாயை முழுமையாகத் திறந்து ஓசையின்றி தன் வெண்பற்களைக் காட்டியது. கன்று திரும்பி வெளியே நின்ற தன் தோழர்களைப்பார்த்தபின் வாலைத்தூக்கி சிறுநீர் கழித்தது.

புலி கன்றை ஒன்றும் செய்யப்போவதில்லை என்று அவை உணர்ந்ததும் அனைவரும் மெல்ல இருக்கைகளில் சாய்ந்தமர்ந்தனர். சேவகன் கூண்டைத்திறந்து கன்றை வெளியே இழுத்தான். அது வெளியே வரத்தயங்கியதுபோல அசையாமல் சிலகணங்கள் நின்றபின் எம்பிக்குதித்து வெளிவந்தது. கூண்டு மூடப்பட்டதும் புலி மெல்ல எழுந்து வந்து கூண்டுக்கம்பிகள் வழியாக வெளியே நோக்கியது. கண்களை மூடிமூடித் திறந்தபின் வாய் திறந்து உறுமியபடி திரும்பவும் சுற்றிவரத்தொடங்கியது.

விதுரன் "அது ஒரு பூனை. பகலில் அதன் கண்கள் கூசுகின்றன. ஆகவேதான் வெண்ணிறக் கன்றை அனுப்பினீர்கள்" என்றான். பாண்டு சிரித்தபடி "ஆம், எனக்கே கண்கள் கூசிக்கொண்டிருக்கின்றன" என்றபடி பட்டுத்துணியால் கண்களைத் துடைத்துக்கொண்டான். விதுரன் புலியை மீண்டும் பார்த்தான். அதன் கண்களிலிருந்து வழிந்த நீரில் பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்களை மூடிமூடித் திறந்தபடி அது சுற்றிவந்தது. விதுரன் "ஆம், அடர்கானகத்துப்புலி. இத்தனை ஒளியை அது அறிந்திருக்காது" என்றான்.

குலமூத்தார் எழுந்து "அவையினரே, இன்று இளவரசியின் தன்னேற்பு மணநிகழ்வில் மூவர் மட்டுமே பங்கேற்கவியலும்" என்றார். சேவகர் மூன்று இருக்கைகளைக் கொண்டு வந்து அவைநடுவே சிம்மாசனத்துக்கு எதிராகப் போட்டனர். "மதுராபுரியின் இளவரசரும் மாத்ரநாட்டு இளவரசரும் அஸ்தினபுரியின் இளையமன்னரும் அப்பீடங்களில் அமரவேண்டுமென கோருகிறோம்" என்றார் குலமூத்தார். அமைச்சர் மூவர் வந்து மூவரையும் அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தனர்.

"மார்த்திகாவதியின் இளவரசி தன் மணமகனை ஏற்க எழுந்தருள்கிறார்" என்று நிமித்திகன் அறிவித்ததும் மங்கல இசை முழங்கத்தொடங்கியது. இரு சேடியர் ஒரு பெரிய தாலத்தில் இருந்த செந்தாமரைமலர்களால் ஆன மாலையை குந்தியின் கையில் கொடுத்தனர். இருபக்கமும் சேடியர் வர குந்தி கையில் மலர்மாலையுடன் மெல்ல நடந்து வந்தாள். பொற்குடக்கழுத்துபோன்ற அவள் இடைக்குக் கீழே கால்கள் பட்டாடையை அலையிளகச்செய்து அசைந்தன. மேகலையின் பதக்கவரிசைகள் ஒளியுடன் பிரிந்து இயைந்து நெளிந்தன. பொன்னோசையும் மணியோசையும் பட்டோசையும் அவ்வொளியின் ஓசையென எழுந்தன.

அவளிடம் ஓர் ஆண்மைச்சாயலிருந்ததை விதுரன் அறிந்தான். திரண்ட தோள்களிலும் இறுகிய கைகளிலும் வலுவான கழுத்திலும் அது தெரிந்தது. நடந்தபோது அவள் தோள்கள் குழையவில்லை. கையில்தூக்கிய மலர்மாலை அசையவுமில்லை. நெருங்கி வரும்தோறும் அவள் என்னசெய்யப்போகிறாளென விதுரன் உணர்ந்துகொண்டான். அவனுடைய ஒரு கால் மட்டும் மெதுவாக நடுங்கிக்கொண்டிருந்தது. பாண்டு அவளைப்பார்த்தபின் திரும்பி சல்லியனைப் பார்த்தான்.

மூவரையும் நெருங்கிவந்த குந்தி தன் கையிலிருந்த தாமரை மாலையை பாண்டுவின் கழுத்தில் போட்டாள். அவள் நெருங்கியபோது சல்லியனை நோக்கி அனிச்சையாகத் திரும்பியிருந்த பாண்டு ஒரு கணம் கழித்தே என்ன நிகழ்கிறதென உணர்ந்தான். இரு கைகளாலும் மாலையைப் பற்றியபடி அவன் செயலிழந்து அமர்ந்திருக்க அவையெங்கும் வியப்பொலியும் பின்பு விதவிதமான பேச்சொலிகள் கலந்த இரைச்சலும் எழுந்தது.

கம்சன் சிலகணங்கள் என்ன நிகழ்ந்ததென்றே உணராதவன் போல அவையையும் குந்தியையும் மாறி மாறி நோக்கினான். குந்தி மாலையை அணிவித்தபின் பாண்டுவை வணங்கிவிட்டு அவையை வணங்கத் திரும்பியபோது கம்சன் தன் தொடையை ஓங்கி அறைந்தபடி பாய்ந்து எழுந்தான். "என்ன இது? என்ன நடக்கிறது இங்கே?" என்று உடைந்த குரலில் உரக்கக் கூவினான். அவன் உடலுக்கு அக்குரல் மென்மையானதாக இருந்தது. "இது சதி! நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்" என்றான். பதற்றமாக சுற்றி நோக்கியபடி "எங்கே என் படைகள்... இதோ இவளை நான் சிறையெடுத்துச்செல்லப்போகிறேன்... ஆம்!" என்றான்.

சல்லியன் திடமான உரத்த குரலில் "ஷத்ரியர் அவையில் அது நடக்காது கம்சரே. இளவரசி எதை விரும்புகிறாரோ அதுவே இங்கு விதி" என்றான். குந்திபோஜனும் தளபதிகளும் வாட்களை உருவினர். கம்சன் "இவளை கொண்டுபோகமுடியாவிட்டால் கொன்றுவிட்டுச் செல்கிறேன்" என்றபடி தன் வாளை உருவி அதே விரைவில் குந்தியை வெட்ட முயன்றான். ஆனால் அக்கணமே சல்லியன் அவன் வாள்கரத்தை வலக்கையால் பிடித்து இடக்கரத்தால் அவன் தோளை அழுத்தி அவனை செயலற்று நிற்கச்செய்தான். கம்சன் இடக்கையால் தன் கட்டாரியை உருவி சல்லியனை குத்தப்போக சல்லியன் கம்சனை தூக்கிச் சுழற்றி தரையில் அறைந்தான்.

வாள் உலோகச் சிலும்பலுடன் தெறித்துவிலக பேருடல் மண்ணில் அறைந்து அதிர்வொலியெழுப்ப கம்சன் மல்லாந்து விழுந்தான். புரண்டு எழுந்து நின்றபோது அவன் ஆடைகள் கலைந்து தரை நோக்கி நழுவின. காளையின் குருதி செங்கருமையாகப் படிந்த மார்புடனும் முகத்துடனும் வெறியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு மூச்சிரைத்தான். அதற்குள் அவனைச்சுற்றி குந்திபோஜனின் தளபதிகள் வாட்களுடன் கூடினர். "மறுமுறை எழமுடியாது போகலாம் கம்சரே" என்று சல்லியன் மென் சிரிப்புடன் சொன்னான்.

கம்சன் பற்களைக் கடித்து உறுமியபோது அவன் ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவையை சுற்றிநோக்கிய அவன் அவனைநோக்கிச் சிரித்த கண்களையும் பற்களையும்தான் கண்டான். தன் மேலாடையைக்கூட எடுக்காமல் அவையை விட்டு வெளியே ஓடினான். சல்லியன் "இளவரசியின் விருப்பப்படி மணநிகழ்வு முழுமைகொள்ளட்டும் குந்திபோஜரே" என்றான். அவையிலிருந்த யாதவரும் ஷத்ரியரும் 'ஆம் ஆம்' என்றனர்.

குந்திபோஜன் சூதர்களை நோக்கித் திரும்ப அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். வெளியே அரண்மனையின் அறிவிப்பு மணி ஒலிக்கத் தொடங்கியது. அதைக்கேட்டு கோட்டைமீதும் காவல்மாடங்களிலும் இருந்த பெருமுரசுகள் ஒலிக்கத்தொடங்கின. நகரமெங்கும் மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி இலைகள்மேல் மழைபோல எழுந்தது. குந்திபோஜன் "அஸ்தினபுரியின் இளையமன்னரை மணமண்டபத்துக்கு அழைக்கிறோம்" என்றார்.

விதுரன் பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். அவை இறந்துகொண்டிருக்கும் பாம்பின் உடல்போல குளிர்ந்து அதிர்ந்து நெளிந்தன. "இளவரசே எதையும் எண்ணாதீர்கள். நீங்கள் மணமேடை ஏறியாகவேண்டும்... விழுந்துவிடக்கூடாது" என்று விதுரன் பாண்டுவின் காதில் சொன்னான். நடுங்கி அதிர்ந்த உதடுகளும் ஆடிக்கொண்டிருக்கும் தலையுமாக பாண்டு "ஆம்... ஆம்" என்றான்.

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்

[ 3 ]

மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள். அவளுடைய நெற்றிப்பொட்டு மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க சுட்டுவிரலால் அதை அழுத்தியிருந்தாள். வெளியே மெல்லிய காலடியோசையுடன் அனகை நெருங்கிவந்து கதவை விரலால் சுண்டினாள். ‘ம்’ என்றாள் பிருதை. அனகை உள்ளே வந்து வணங்கி கதவைத் தாழிட்டாள்.

பிருதை ஏறிட்டுப்பார்த்தாள். "மாத்ரநாட்டு இளவரசர் சற்றுமுன் கிளம்பிச்சென்றுவிட்டார்" என்றாள் அனகை. குந்தி கண்களைத் திருப்பிக்கொண்டு சுவரை நோக்கினாள். "நகர்மக்கள் திரண்டு அவருக்குப்பின்னால் சென்றனர். படகுத்துறையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி வழியனுப்பினர்." பிருதை மேலே சொல்லும்படி சைகை காட்ட "கம்சர் புரவியிலேயே மதுராபுரிக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள். அவரைத்தொடர்ந்து அவரது படைவீரர்களும் சென்றிருக்கிறார்கள். பிறர் இப்போதுதான் படகுகளில் கிளம்புகிறார்கள்" என்றாள் அனகை.

பிருதை "நான் வசுதேவரைச் சந்திக்கவிழைகிறேன்" என்றாள். "அவரும் கம்சருடன் சென்றுவிட்டாரா என்ன?" அனகை "அவர் இங்குதான் இருக்கிறார் இளவரசி. நம் அரசரிடமும் அஸ்தினபுரியின் பிதாமகரிடமும் உரையாடிக்கொண்டிருக்கிறார்" என்றாள். பிருதை "அவரிடம் நான் சந்திக்க விழைவதைச் சொல்" என்றாள். அனகை தலைவணங்கி திரும்பும்போது சற்றே ஒலிமாறுபட்ட குரலில் பிருதை "அனகை" என்றாள்.

அனகை நின்றாள். "அஸ்தினபுரியின் அமைச்சர் என்று அந்த இளைஞரைத்தான் சொல்கிறார்களா?" என்றாள் குந்தி. "ஆம், அவர் மறைந்த மாமன்னர் விசித்திரவீரியரின் அறப்புதல்வர் என்றும் வியாசமுனிவரின் நேர்மைந்தர் என்றும் சொல்கிறார்கள்... அவருக்கு அரசருக்கிணையான அதிகாரமிருக்கிறது." பிருதை தலையை அசைத்தாள். அனகை அவள் ஏதாவது கேட்பாளென்பதுபோல நின்றாள். குந்தி அவள் செல்லலாம் என்று கையை அசைத்தபின் அவள் பின்னால் வந்து "நில்" என்றாள்.

அனகை திரும்பி நோக்கினாள். "வசுதேவர் என்னை வந்து சந்திப்பது செய்தியாக ஆகலாம். இங்கே மதுராபுரியின் ஒற்றர்கள் உண்டு... நான் அரண்மனைக்குச் செல்கிறேன். அவரும் அரண்மனைக்கு வரட்டும். அரண்மனை இடைநாழியில் நான் அவரை தற்செயலாகச் சந்தித்து சில சொற்கள் பேசுகிறேன்." அனகை வியப்புடன் "இடைநாழியிலா?" என்றாள். "ஆம், இடைநாழியில் பேசுவது மந்தணமல்ல. அதை அனைத்து ஒற்றர்களும் கண்டு மதுராபுரிக்குத் தெரிவிக்கட்டும்" என்றாள்.

அனகை சென்றபின் பிருதை மீண்டும் தன் நெற்றியை அழுத்திக்கொண்டாள். உடலில் குருதி ஓடும் ஒலியைக் கேட்பவள் போல அமர்ந்திருந்தாள். நாகம் ஏறிய மரத்தின் பறவைகள் போல எண்ணங்கள் எதையோ கண்டு அஞ்சி அமரமறுத்து கலைந்து கலைந்து சிறகடித்துக்கொண்டிருந்தன. சிலகணங்களுக்குப்பின் அவளால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து அறைக்குள் உலவத் தொடங்கினாள்.

மழை மெதுவாக ஓய்ந்து துளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அரண்மனை முழுக்க நெய்விளக்குகளை ஏற்றத் தொடங்கினார்கள். நெய்த்திரி விளக்கை ஏந்திய சேடிகள் இருளில் நடந்து விளக்குகளை ஏற்றி ஏற்றிச் செல்வது மின்மினிகள் அலைவது போலத் தெரிந்தது. மின்மினி சென்று தொட்ட பாவைவிளக்குகள் சுடர்கொள்ள அந்த கீழ்ஒளியில் பெண்பாவைகளின் முகங்களில் நாணப்புன்னகை மலர்ந்தது. அவர்களின் அணிக்கொண்டையின் நிழல்கள் எழுந்து கூரையைத் தொட்டு மடிந்தன.

சற்று நேரத்தில் அனகை மீண்டும் வந்தாள். "வசுதேவரைக் கண்டேன் இளவரசி. தாங்கள் சற்றுநேரம் கழித்து இடைநாழியில் நடந்தால் அவர் உங்களைக் கண்டு எதிரே வருவார்" என்றாள். குந்தி எழுந்து சேடியை அழைத்தாள். அவள் கொண்டுவந்த நறுமண வெந்நீர் பாத்திரத்தில் முகம் கழுவி கூந்தல் திருத்தி உடைகளையும் அணிகளையும் சரிசெய்துகொண்டாள். "நான் அரண்மனைக்குக் கிளம்பவேண்டும்... அரசரை சந்திக்கவிருக்கிறேன்" என அவள் சொன்னதும் சேடி தலைவணங்கி உள்ளே சென்றாள்.

முதற்சேடி முன்னால் சென்று அந்தி பரவிய அந்தப்புர முற்றத்தில் இறங்கி வலம்புரிச்சங்கை ஊதி அவள் கிளம்புவதை அறிவித்தாள். மங்கலத்தாலமும் சாமரமும் ஏந்திய சேடியர் இருபக்கமும் வர பிருதை அந்தப்புர முற்றத்துக்கு அப்பால் இருந்த இடைநாழியில் ஏறி மறுபக்கம் இருந்த அரண்மனை நோக்கிச் சென்றாள். இடைநாழி எங்கும் நெய்விளக்குகள் ஆடிப்புலங்களில் சுடர்பெருக்கி நின்றிருந்தன. தரை மழையீரத்தில் அந்த செவ்வொளியை ஏற்று பளபளத்தது.

எதிரே வசுதேவன் செம்பட்டுச்சால்வையைப் போர்த்தியபடி வருவதைக்கண்டு நடைவிரைவைக் குறைத்தாள். அனகை விரைவைக் குறைக்காமல் முன்னால் நடக்க பிறசேடியர் அக்குறிப்பை உணர்ந்து அவளை முந்திச்சென்றனர். அவளும் வசுதேவனும் அருகணைந்து முகம் நோக்கி நின்றனர்.

வசுதேவன் முறைப்படி பணிந்து "மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன்" என்றான். குந்தி வணங்குவதுபோன்ற அசைவைக் காட்டியபடி "என் மைந்தனைப்பற்றிய செய்தி ஏதாவது கிடைத்ததா?" என்றாள். "இல்லை பிருதை. என் படைவீரர்கள் யமுனைக்கரையின் அனைத்து படகுத்துறைகளிலும் மீனவர் இல்லங்களிலும் விசாரித்துவிட்டனர். குழந்தை படகுடன் நீரில் மூழ்கியிருக்கவே வாய்ப்பு" என்றான்

பிருதையின் கழுத்தின் தசைகள் இழுபட்டு பின் தளர்ந்தன. பார்வையை பக்கவாட்டில் திருப்பி உதடுகளை இறுகக் கடித்து "அவன் இறக்கமுடியாது" என்றாள். வசுதேவன் "...இதென்ன பேச்சு?" என்று தொடங்க "அவன் சூரியனின் மைந்தன். சூரியநாகம் அவனுக்குக் காவல். அவன் இறக்கமாட்டான்" என்றாள். "என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா உனக்கு? அரசுசூழ்தல் பயின்ற நீ பேசும் பேச்சுதானா இது?" என்றான் வசுதேவன்.

"நான் அதை உறுதியாக அறிவேன்" என்றாள் குந்தி. "நான் நேற்று ஒரு கனவு கண்டேன். நான் ஆடியில் என்னைப்பார்க்கிறேன். என் ஆடிப்பாவை அந்த மைந்தனுக்கு முலையூட்டுகிறது. அது என் முலைப்பால். ஆனால் இப்பால் நான் திகைத்து நின்றுகொண்டிருந்தேன்.... கனாநூலின் கணிதப்படி அது அக்குழந்தையை எனக்கு நிகரான எவளோ ஏற்று முலையூட்டி வளர்க்கிறாள் என்பதற்கான சான்று. ஆம், அவன் இருக்கிறான்."

"ஆனால் இன்று நீ அச்செய்தியை வெளியே சொல்லமுடியாது" என்றான் வசுதேவன். "நம் யாதவர்குலத்தில் அது மிக இயல்பான ஒன்று. உனக்கு மைந்தனிருப்பதை நான் கம்சரிடம் சொன்னேன். அதையே மங்கலக்குறியாக அவர் எண்ணினார். ஆனால் ஷத்ரியர்களின் மரபு அதுவல்ல. அவர்கள் மணம்புரிகையில் மகளிர் கன்னியராக இருந்தாகவேண்டுமென்ற நெறிகொண்டிருக்கிறார்கள். அவர்களின் நூல்களும் முறைகளும் நம்பிக்கைகளும் அதை வலியுறுத்துகின்றன."

"ஆம்" என்றாள் பிருதை. "நான் என் கணவரிடம் அனைத்தையும் சொல்லலாமென்றிருக்கிறேன்." வசுதேவன் சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு "அவரை நீ நன்கறிந்தபின் சொல்வதே முறை. சிலநாட்களாகட்டும். அவர் அதை ஏற்பாரென்பதை நீ உறுதிப்படுத்திக்கொள்..." பிருதை உறுதியான குரலில் "நான் எதையும் மறைக்கப்போவதில்லை. நான் யாதவப்பெண் என்பதை அறிந்துதான் அஸ்தினபுரி மணம்கொள்ள வந்துள்ளது. அன்னையரை முதன்மையாகக் கொண்ட நம் முறைமைகளை அவர்களும் நன்கறிவார்கள். எனக்குப்பிறந்த மைந்தனை நான் ஒளித்து வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவனைப்பெற்றதை நான் பிழையென எண்ணவில்லை. என்றென்றும் நான் பெருமை கொள்ளப்போகும் என் மைந்தன் அவன்" என்றாள்.

"ஆம், ஒளித்துவைக்கப்படும் ஒன்று நம்மைத் தளையிடுகிறது" என்றான் வசுதேவன். "ஆனால் எப்போது எப்படி அதைச் சொல்லவேண்டுமென நீதான் முடிவெடுக்கவேண்டும். அதை நீ அறிவாய்." அவன் கண்களில் மெல்லிய ஒரு சுருக்கம் நிகழ்ந்தது. "அஸ்தினபுரியின் அரசி என்பது நீ எடுத்துக்கொண்ட சுமை." பிருதை அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கி "ஆம், அது மார்த்திகாவதிக்கும் யாதவகுலத்துக்கும் நன்மை பயக்கும் என நான் எண்ணுகிறேன்" என்றாள்.

சினத்தை அடக்கமுடியாதவனாக வசுதேவன் "ஆம்,அஸ்தினபுரிக்கு ஏவல் பணிசெய்ய யாதவர்கள் செல்லமுடியும் அல்லவா?" என்றான். "அண்ணா, கம்சர் எவரையும் வாழவைப்பவரல்ல. யாதவர்களுக்கு அவர் பேரழிவையே உருவாக்குவார்" என்றாள். "ஏன், அவர் தலைமையில்..." என வசுதேவன் பேசத்தொடங்க "...நான் விவாதிக்கவில்லை அண்ணா. கம்சரால் எவரையும் தலைமைதாங்கி முன்நடத்த முடியாது" என்றாள். "சிலர் அழிக்கவே மண்ணில் பிறக்கிறார்கள், இறுதியில் அழிவார்கள்."

வசுதேவன் திகைத்துப்போய் பார்த்தான். "என்னைச் சிறையெடுக்க அவர் முடிவெடுத்தபோதே அதை உணர்ந்துகொண்டேன். அது சற்றும் சிந்தியாமலெடுக்கப்பட்ட அவசர முடிவு. அப்படி சிறையெடுத்துக்கொண்டுசென்று அந்தப்புரத்தில் சேர்க்கப்படக்கூடிய எளிய பெண்ணா நான் என்பதை அவர் ஒரே ஒரு சூதரை கூப்பிட்டுக் கேட்டிருந்தாலே அறிந்திருக்கலாம். நான் யாதவகுலத்தவள், அந்தப்புரத்தில் ஒடுங்கிய ஷத்ரியப்பெண் அல்ல. ஒருபோதும் என் ஆணவம் அழிவதை ஏற்கமாட்டேன் என அவர் உணரவில்லை. அவரால் மனிதர்களை கணிக்கமுடியாது."

"அத்துடன் அவரால் சிறப்பாக அரசாளவும் இயலாது" என்றாள் குந்தி. "என்னைச் சிறையெடுக்க அவர் ஒரு எளிய துணைத்தளபதியை அனுப்பினார். என் உடலை ஆராய்ந்து என்னிடமுள்ள ஆயுதத்தை பறித்துக்கொள்ளவேண்டும் என அவனுக்குத் தோன்றவில்லை. என் ஆணைகளை மீறும் துணிவும் வரவில்லை. ஏனென்றால் அவனால் என்னை ஏறிட்டுப்பார்க்கவே முடியவில்லை. ஒருவரைச் சிறையிட எப்போதும் அவருக்கு நிகரான ஒருவரையே அனுப்பவேண்டும் என்பது அரசுசூழ்தலின் விதி..." குந்தி புன்னகைசெய்து "அவர் அரசறிந்தவர் என்றால் ஓர் அமைச்சரை அனுப்பியிருப்பார்" புன்னகை மேலும் விரிய "சூழ்மதியாளர் என்றால் உங்களை அனுப்பியிருப்பார்" என்றாள்.

"ஆம்" என்றான் வசுதேவன். "என்னை அனுப்பியிருந்தால் நான் அதைச் செய்திருப்பேன். வேறு வழியே எனக்கிருந்திருக்காது." அவன் பெருமூச்சுடன் "ஆயினும் அவர் யாதவர். நம் குலம். அரசர்கள் அவர்களின் மதியால் ஆள்வதில்லை." பிருதை இடைமறித்து "பிறரது கூர்மதியை பெற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவரல்ல கம்சர்" என்றாள். வசுதேவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். "அண்ணா அவரிடமிருந்து விலகிவிடுங்கள். மதுவனத்துக்கே திரும்பிச்செல்லுங்கள். கம்சர் மதுராபுரியை அழிப்பார் என எனக்கு ஐயமே இல்லை. அவரிடமிருந்து மார்த்திகாவதியை காக்கவே நான் அஸ்தினபுரியின் இளையஅரசருக்கு மாலையிட்டேன்."

"நீ சல்லியரை மணப்பாய் என நான் நினைத்தேன்" என்றான் வசுதேவன். அதுவரை அவன் கண்களை நோக்கிப்பேசிய குந்தி பார்வையை விலக்கி "அதனால் எப்பயனும் இல்லை. மாத்ரபுரி மார்த்திகாவதியைவிடச் சிறிய அரசு" என்றாள். வசுதேவன் அக்கணத்தில் அனைத்தையும் உறுதிசெய்துகொண்டவனாக "ஆனால் அவர்..." எனத் தொடங்கியதும் நாகம் தலைதிருப்புவதுபோலத் திரும்பி சீறும் குரலில் "நான் எதனாலும் எவருடைய உடைமையும் ஆவதில்லை" என்று குந்தி சொன்னாள்.

வசுதேவன் மேலும் பேசுவதற்காக வாயெடுத்தான். "என் மைந்தனைத் தேடுவதை நிறுத்தவேண்டியதில்லை" என்றபின் குந்தி முன்னால் நடந்து சென்றாள். அவளுடைய கூந்தல் நெளிவதை மேலாடை உலைந்து ஆடுவதைப் பார்த்துநின்றபோது வசுதேவன் அவள் சொல்லாத ஒன்றையும் உணர்ந்துகொண்டான். அரசுசூழ்வதில் அவன் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என அவள் எண்ணுகிறாள். அவனிடம் அவள் எதையுமே கேட்கவில்லை, ஆணைகளையும் அறிவுரைகளையும் மட்டுமே சொல்கிறாள்.

சினம் கொண்டு அவன் அங்கே நின்றிருப்பதை திரும்பிப்பாராமலேயே பிருதை உணர்ந்தாள். நடக்கநடக்க அவள் அகம் கசப்பில் நிறைந்தது. சேடி அவள் வருகையை அறிவித்ததும் மந்திரசாலையில் இருந்து குந்திபோஜன் எழுந்து வாசலுக்கு வந்து "வருக இளவரசி... உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம்" என்றார். மந்திரசாலையில் ரிஷபரும் தேவவதியும் இருந்தார்கள். தேவவதியின் விழிகள் பிருதையின் விழிகளை நொடிநேரம் தொட்டு மீண்டன. பிருதை அவளைப்பாராமல் புன்னகை புரிந்தாள்.

பிருதை அமர்ந்ததும் குந்திபோஜன் "நம் குலமூதாதையரும் குடிகளும் குழம்பியிருக்கிறார்கள் பிருதை" என நேரடியாகவே தொடங்கினார். பிருதை "நமக்கு வேறுவழியில்லை தந்தையே" என்றாள். "நம்மால் மதுராபுரியின் அசட்டு அரக்கனை வேறெவ்வகையிலும் எதிர்கொள்ளமுடியாது" அவர்கள் எண்ணத்தில் ஓடுவதை உணர்ந்தவளாக "மாத்ரநாட்டு இளவரசர் எவ்வகையிலும் நமக்கு உதவமுடியாது. இன்று சுயம்வரத்தில் இருந்து அவர் மதுராபுரியின் பகைமையைப் பெற்று மீண்டிருக்கிறார்."

குந்திபோஜன் பெருமூச்சுடன் "ஆம்" என்றார். "அவர் எதனால் அவ்வாறு எதிர்பாராதபடி கிளம்பி வந்தாரென்று எனக்குப்புரியவில்லை." தேவவதியின் கண்கள் மீண்டும் குந்தியின் கண்களை தொட்டுச்சென்றன. "தேள்கடித்த குரங்கு என்று சொல்வார்கள். அந்நிலையில் இருக்கிறார் மதுராபுரியின் இளவரசர்... அவரது தந்தை எக்கணமும் உயிர்விடலாம். அவர் அரசரானால் நாம் நம் படைக்கலங்களைத் தாழ்த்தவே நேரமிருக்காது."

"நம்மை அவர் நெருங்கமாட்டார்" என்று குந்தி சொன்னாள். "பீஷ்மரின் தலைமைத்திறனும் அஸ்தினபுரியின் படைத்திறனும் அவருக்குத் தெரியவில்லை என்றாலும் அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கும்." குந்திபோஜன் உரக்கச்சிரித்து "ஆம், நாம் அவர்களின் ஒரு படைப்பிரிவைக்கூட இங்கே நிறுத்திக்கொள்ள முடியும்" என்றார். தேவவதி மெல்ல அசைந்த உடையோசை கேட்டது. "அதற்காக நம் இளவரசி இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்கவேண்டியதில்லை" என்றாள். "அஸ்தினபுரியின் இளவரசரால் எழுந்து நடக்கவே முடியவில்லை."

இருவர் விழிகளும் சந்தித்துக்கொள்ள முதல்முறையாக தேவவதியின் கண்களில் ஒரு புன்னகை இருப்பதை பிருதை கண்டாள். எப்போதும் அங்கே இருக்கும் திகைப்பு மறைந்திருந்தது. அச்சொற்களை அவள் பலநூறுமுறை தனக்குள் சொல்லிக்கொண்டிருப்பாள் என நினைத்ததும் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்து மெல்ல தன்னை விரித்து பரப்பி அமைதியாக்கிக்கொண்டபின் தேவவதியின் கண்களை நோக்கி "ஆம், அரசி. அவர் நோயுற்றிருக்கிறார். அங்கே மூத்தவரும் பார்வையற்றவர். அரசாட்சியை முழுக்க விதுரதேவர்தான் நடத்துவதாகச் சொன்னார்கள்" என்றபின் புன்னகைத்தாள்.

தீச்சுட்ட புழு போல தேவவதியின் அகம் அதிர்ந்து சுருண்டுகொள்வதை கண்நகர்வு வழியாகவே அறிந்து குந்தி மேலும் விரிந்த புன்னகையுடன் "அமைச்சர் விதுரர் அனைத்து வல்லமைகளும் கொண்டவர் என்கிறார்கள். அஸ்தினபுரியில் அவரையே அனைவரும் மன்னராக எண்ணுகிறார்கள்." தேவவதி பதற்றத்துடன் தன் மேலாடை நுனியை எடுத்து விரல்களில் சுழற்றத்தொடங்கினாள். ஆனால் விரல்கள் நடுநடுங்க விட்டுவிட்டாள்.

குந்திபோஜன் "ஆம் இளவரசி, நான் விதுரரிடம் உரையாடினேன். அவர் அறியாத ஏதுமில்லை. அரசு சூழ்தலில் நீ இனி எதையாவது கற்கவேண்டுமென்றால் அதை அவரிடமே கற்கமுடியும்" என்றார். "நீ அவரைச் சந்தித்ததில்லை அல்லவா?" என்று அவர் கேட்டதும் பிருதை புன்னகையுடன் "பார்த்தேன்" என்று மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பி தேவவதியை நோக்கி உதடுகள் விரிய புன்னகை செய்தாள். "எங்கே?" என்றார் குந்திபோஜன். "நம் உபவனத்தின் கொற்றவை ஆலயத்தில் வாள்வணக்க பூசனைக்குச் சென்றிருந்தபோது" என்றாள். மீண்டும் தேவவதியை நோக்கியபோது தன் உடலிலும் கண்களிலும் நாணச்சிவப்பு படர்ந்திருக்கச் செய்தாள்.

தேவவதி அமர்ந்திருக்க முடியாமல் எழுந்துவிட்டாள். அவள் எழுந்ததைக் கண்டதும் குந்திபோஜன் "என்ன?" என்றார். "நான் அந்தப்புரம் செல்லவேண்டியிருக்கிறது. சுயம்வரத்துக்கு வந்த பெண்களுக்காக ஒரு பூசனை நிகழவிருப்பதாக என் சேடி சொல்லியிருந்தாள்" என பதறும் குரலில் சொன்னபடி தேவவதி குந்தியைப் பாராமலேயே "வருகிறேன்" என்று சொன்னபின் ஆடைகள் சரசரக்க வெளியேறினாள். குந்திபோஜன் சிரித்து "அரசு சூழ்தலின் கதைகளைக் கேட்டாலே அவள் பதற்றம் கொள்கிறாள். எளிய யாதவப்பெண்" என்றார்.

"அரசே, நானல்லவா எளிய யாதவப்பெண்?" என்றாள் பிருதை. "நீங்கள் பேரரசி.... நீங்கள் நேற்று எடுத்த முடிவை எண்ணி நான் இன்னும்கூட வியந்துகொண்டிருக்கிறேன்" என்றார் ரிஷபர். அவர்கள் இருவரின் விழிகளைக் கண்டதும் அங்கே அவளுக்கும் தேவவதிக்கும் நடுவே நிகழ்ந்தவை அனைத்துமே அவர்கள் உணராதவை என்ற எண்ணம் வந்து பிருதை புன்னகை செய்தாள். "நாம் கம்சரிடம் இனி செய்யவேண்டியதென்ன?" என்று குந்திபோஜன் கேட்டார்.

பிருதை "தாங்கள் அவருக்கு ஒரு தூதனுப்பவேண்டும்..." என்றாள். "ரிஷபரே செல்வது முறை. அவரிடம் நான் இம்முடிவை எடுத்ததில் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அஸ்தினபுரி மார்த்திகாவதியை விழுங்கிவிடுமென அஞ்சுவதாகவும் தெரிவியுங்கள். மார்த்திகாவதிக்கு கம்சரே காவலாக என்றுமிருக்கவேண்டும் என்றும், யாதவப்பெருங்குலங்களின் தலைவர் அவரே என்றும் சொல்லுங்கள்."

ரிஷபர் புன்னகை செய்தார். "அவர் செய்யக்கூடியது ஒன்றுதான் தந்தையே. இப்போது தன்னை அஸ்தினபுரியின் எதிரி என அவர் நினைத்துக்கொண்டுவிட்டார். ஆகவே மகதத்துக்குத் தூதனுப்புவார். மகதமும் அஸ்தினபுரியும் புரியப்போகும் பெரும்போரில் மகதத்தை ஆதரிப்பதைப் பற்றி எண்ணிக்கொள்வார்." குந்திபோஜன் "நம் தூதை அவர் நம்புவாரா?" என்றார். "நம்ப மாட்டார். ஆனால் நாம் நம்பிவிட்டதாக நினைப்பார். நாம் அப்படி நம்பிக்கொண்டிருக்கட்டும் என நினைத்து சிலகாலம் நம்மை விட்டுவிடுவார். நாம் நமது எல்லைகளையும் துறைகளையும் அஸ்தினபுரியின் படைகளைக்கொண்டு பலப்படுத்திக்கொள்ள காலஇடை கிடைக்கும்."

"ஆம்" என்று குந்திபோஜன் பெருமூச்சு விட்டார். "ஏன் இந்தப்போர்கள் என்றே புரியவில்லை. இதையெல்லாம் சிந்தனைசெய்தால் ஏன் யாதவர்கள் அரசுகளாக ஆகவேண்டும் என்றும் தோன்றுகிறது... கன்றுமேய்த்து குழலூதி காட்டில் வாழ்பவர்கள் வில்லும்வாளுமாக ஏன் நகரங்களைக் காக்கவேண்டும்?" பிருதை எழுந்தபடி "நம் சந்ததிகளுக்காக" என்றாள். ரிஷபர் "ஆம் அரசே, இப்படித்தான் அனைத்து அரசுகளும் உருவாகியிருக்கின்றன. விதைகள் வெடிக்காமல் செடிகள் முளைப்பதில்லை" என்றார்.

குந்தி மீண்டும் தன் அறைக்கு வந்தபோது இரவுக்கான ஒலிகள் எழுந்திருந்தன. அப்பால் மார்த்திகாவதியின் உயரமற்ற கோட்டைமீது காவல்முரசு மெல்ல அதிர்ந்தடங்கியது. அவள் உள்ளும் புறமும் களைத்திருந்தாள். அவளுக்காக சேடியர் காத்து நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே பிருதை புரிந்துகொண்டு அனகையிடம் "அஸ்தினபுரியின் அரசருக்கு உடல்நலமில்லை என்றார்கள்" என்றாள். "உடல்நிலை தேறியிருக்கிறது என்று செய்தி வந்தது" என்று அனகை சொன்னாள். அவள் கண்களை ஒரு கணம் நோக்கியபின் குந்தி தலையசைத்தாள்.

தைலமிட்ட நறுநீரில் நீராடி செம்பட்டாடை உடுத்து, கால்நகங்களில் அணிவளையங்கள் முதல் தலைவகிடில் பொன்மலர்ச்சுட்டி வரை நூற்றெட்டு நகைகள் அணிந்து பிருதை மங்கலத் தோற்றம் கொண்டாள். தன் வெண்கால்களில் செம்பஞ்சுக்குழம்பு பூசும் முதுசேடியரை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல நோக்கியபடி அமர்ந்திருந்தாள். தொய்யில் எழுதிய தோள்களும் செந்தாமரைக்கோலமிட்ட கைவெண்மைகளும் பொன்பொடி பூசப்பட்ட கன்னங்களும் உடலெங்கும் மின்னும் மணிகளுமாக தன்னை ஆடியில் பார்த்தபோது ஓர் ஓவியத்துக்குள் அவள் புகுந்துகொண்டதுபோலத் தோன்றியது.

அனகை அவள் கூந்தலில் பட்டுநூலை சுற்றிக்கட்டியபடி "யாதவர்களின் மணநிகழ்வுக்கு அத்தனை ஷத்ரியர்கள் ஏன் வந்தனர் என்று தெரிகிறது இளவரசி" என முகமன் சொன்னாள். பிருதை "இந்த ஆடிப்பாவையில் என்ன குறை இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தேன்" என்றாள். அனகை திடுக்கிட்டு "என்ன குறை?" என்றாள். பிருதை "இதோ உதடுகளின் இருபக்கமும் உள்ள இந்த மெல்லிய சுருக்கம்... அது முன்பு எனக்கு இருக்கவில்லை." அனகை ஒன்றும் சொல்லவில்லை. "அது எனக்கு ஒரு அழுத்தமான ஐயம்கொண்ட முகத்தை அளிக்கிறது" என்றாள் பிருதை.

பெருமூச்சுடன் திரும்பியபடி "பெண்ணுடல் மீது ஆண்கள் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். அப்படியென்றால் எதற்காக இத்தனை அணிகள்?" என்றாள் பிருதை. "அவர்கள் பெண்ணுடலை குறையுடையதாக எண்ணுகிறார்கள். அணிகளால் அந்தக் குறையை நிறைத்துக் கொள்கிறார்கள்" என்ற அனகை சிரித்தபடி "அந்தக்குறை தெய்வங்கள் உருவாக்குவது. அதை மனிதர்களின் பொருட்களைக்கொண்டு நிரப்ப முயல்கையில்தான் முடிவில்லா அணிகளும் ஆடைகளும் கவிதைகளும் கலைகளும் உருவாகின்றன" என்றாள். பிருதை இன்னொரு முறை ஆடியில் பார்த்தபின் "நான் சொல்லப்போகிறேன்" என்றாள்.

"இளவரசி" என்று அனகை அவள் முன்னால் வந்தாள். "நான் என் மைந்தனைப்பற்றி சொல்லவிருக்கிறேன் அனகை" என்றாள் குந்தி. "இளவரசி, ஷத்ரியர் மரபுகள்..." என அனகை தொடங்கியதுமே "யாதவப்பெண்களை பிறப்பிலேயே அன்னை என்று குலமூதாதையர் வணங்குகிறார்கள். என் குலவழக்கத்தை நான் ஏன் மறைக்கவேண்டும்?" என்றாள் குந்தி. அனகை "அரசர் அதை எவ்வாறு ஏற்பார்?" என்றாள். "அவர் ஏற்றாகவேண்டும்..." என்று குந்தி சொன்னாள்.

அனகையின் கண்களுக்குள் நெய்விளக்குகளின் செவ்வொளி தெரிந்தது. "பாண்டுரர்கள் ஆண்மையற்றவர்கள் என்று வைத்தியநூல்கள் சொல்கின்றன. அதை இதற்குள் மார்த்திகாவதியின் நகரமே அறிந்திருக்கும். ஆகவேதான் பீஷ்மபிதாமகர் தன் மைந்தனுக்கு உடல்நலமில்லை என்றபோதும் மணமங்கல இரவை இன்றே வைத்துக்கொள்ளவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார்" என்றாள் பிருதை.

அனகை "ஆம் இளவரசி, இளைய மன்னரைப்பற்றி சேடிகளும் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்" என்றாள். "நானே அவருக்கு மாலையிட்டிருக்கிறேன். எனவே நான் அவரது ஆண்மையின்மையை ஒருபோதும் வெளியே சொல்லமாட்டேன் என பீஷ்மபிதாமகர் நினைக்கிறார். இங்கேயே மணமங்கல இரவு முடிந்து மறுநாள் நான் நிறைநீராடினால் அச்செய்தியே இளையஅரசரின் ஆண்மைக்கான சான்றாக ஆகிவிடும் அல்லவா?" பிருதை புன்னகையுடன் "நான் அதைத்தான் செய்யவிருக்கிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் என் மைந்தனை ஏற்றுக்கொள்ளட்டும்" என்றாள்.

"அதற்கு..." என அனகை தொடங்கியதுமே "இளையமன்னர் அதை ஏற்கவில்லை என்றால் அவருக்கு ஆண்மையில்லை என்று கூறி நான் வெளியே வந்துவிடுவேன்" என்று குந்தி சொன்னாள். அனகை "ஆணை" என்றாள். "அஸ்தினபுரிக்கு நான் சென்றபின் என் மைந்தனைத் தேடிக் கண்டடைந்து அவனை தன் அறப்புதல்வனாக இளையமன்னர் ஏற்கவேண்டும்... அதை அவர்கள் செய்வார்கள். வேறு வழியே அவர்களுக்கில்லை" என்றாள் குந்தி.

அனகை "ஆணை" என்றபின் தலைவணங்கி வெளியே சென்றாள். வெளியே நின்ற முதுசேடி உள்ளே வந்து "தாங்கள் சற்று நறும்பால் அருந்துகிறீர்களா இளவரசி?" என்றாள்.

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்

[ 4 ]

பிருதை அறைக்குள் நுழைந்தபோது பாண்டு மஞ்சத்தில் படுத்திருப்பதைத்தான் பார்த்தாள். கதவை பின்னிருந்து அனகை மெல்ல இழுத்துச்சாத்தியபோது எழுந்த ஓசையில் அவன் தலையைத் தூக்கிப்பார்த்தான். உடனே நான்குநாகங்கள் நெளிவதுபோல அவனுடலில் கைகால்கள் இழுத்துக்கொண்டதைக் கண்டு குந்தி அருகே சென்றாள். அவன் கடைவாயில் வாய்நீர் நுரைத்து வழிய கண்கள் மேலேறி சிப்பிவெண்மை தெரிய தொண்டையில் பசுநரம்பு புடைத்து அசைந்தது. அவனுக்கு நரம்புப்பின்னல் நோய் என பிருதை அறிந்திருந்தாள். வெளியே சென்று வைத்தியர்களை அழைப்பதா என ஒரு கணம் சிந்தனைசெய்தபின் வேண்டாம் என முடிவெடுத்து அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.

நீரில் அமிழ்பவனைப்போல பாண்டு அசைவின்மை கொண்டு மஞ்சத்தில் படிந்தான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். இரு வெண்புருவங்களுக்குக் கீழே பால்கொப்புளங்கள்போல இமைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. கண்ணீர் இருபக்கமும் வழிந்து காதுகளில் சொட்டிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறு செவ்வுதடுகள். பால்நுரைத்துண்ட கைக்குழந்தையின் மேலுதடுபோன்ற மெல்லிய வெண்மயிர்பரவல்.

அவள் அகம் திகைத்து நெஞ்சில் கைவைத்து எழுந்துவிட்டாள். சாளரம் வழியாக வெளியே அசைந்துகொண்டிருந்த மரத்தின் இலைகளைப் பார்த்தாள். ஆனால் பொறிக்கப்பட்ட ஓவியம்போல அவ்வுதடுகளே அவள் கண்ணுக்குள் நின்றன. திரும்பி அவற்றைப் பார்த்தாள். நெஞ்சின் அதிர்வை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள். பால்நுரை. அதை முதலில் கண்டு அடைந்த பெரும் மனக்கிளர்ச்சி. அதை மீண்டும் அடைந்து கண்கள் கசிய தொண்டை அடைக்க அவள் கால்தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டாள்.

அவன் விழியிதழ்கள் அதிர்ந்து பின் பிரிந்தன. நீர்படிந்த வெண்பீலிகள் கொண்ட செவ்விழிகள் முயல்களின் கண்களைப் போலிருந்தன. அவளை அடையாளம் கண்டதும் அவன் திகைத்து ஒரு கையை ஊன்றி எழமுயன்றான். அவள் புன்னகையுடன் "வேண்டாம்" என்றாள். "நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். ஓய்வெடுங்கள்" என்று மெல்லியகுரலில் சொன்னாள். அக்குரலிலும் புன்னகையிலும் இருந்த தாய்மை அவன் முகத்தில் உடனே எதிரொளித்தது. அவன் கண்கள் கனிந்தன. "எனக்கு மூச்சுத்திணறுகிறது" என்று அவன் சொன்னான்.

தாய்மையை ஏற்று அதற்குள் முழுமையாக ஒடுங்கிக்கொள்வதற்கான பயிற்சியை அவன் முழுமையாகப் பெற்றிருக்கிறான் என்று பிருதை எண்ணிக்கொண்டாள். "சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருங்கள்... அது ஓர் அதிர்ச்சி மட்டுமே" என்றாள். "என் மருத்துவனை அழைக்கமுடியுமா? அவனுடைய நஸ்யம் என்னை ஆறுதல்படுத்தும்." குந்தி திடமான குரலில் "அது அகிபீனாவாக இருக்கும். அதை உட்கொள்ளவேண்டாம். அது நரம்புகளை மேலும் வலிவிழக்கவே செய்யும்" என்றாள்.

"நான்..." என அவன் தொடங்கியதும் "வேண்டாம்" என்று பிருதை உறுதியாகச் சொன்னாள். அவன் தலையை ஆட்டியபின் கண்களை மூடிக்கொண்டான். அவள் அவனருகே சென்று குனிந்து "உங்களுடைய நோய் உள்ளத்தில்தான். ஆகவே உடலை எண்ணவேண்டாம். உள்ளத்தை ஒருங்கமையுங்கள்... இங்கே அறைக்குள் என்ன நிகழ்கிறதென்பதை சிந்தையில் விரித்துக்கொண்டே இருங்கள். நரம்புகள் நெகிழ்வதை உணர்வீர்கள்."

பாண்டு "ஆம்" என்றான். தலையை மெல்ல அசைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனுடைய நெற்றியிலும் கழுத்திலும் நீலநரம்புகள் புடைத்திருந்தன. "நீ இங்கே வருவாய் என்றார்கள். அப்போதே..." என்றான். மஞ்சள்நிறமான பற்களால் சிவந்த உதடுகளைக் கவ்வியபடி "என்னால் தாளமுடியவில்லை" என்றான். இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து ‘ம்ம் ம்ம்’ என்றான். மெல்ல மெல்ல அமைதிகொண்டான். கண்களைத் திறந்து "என்னால் தாளமுடியவில்லை" என்றான். சிறிய விசும்பல் ஒன்று அவனிடமிருந்து வெளிவந்தது. அவன் உதடுகளைக் கடித்து அடக்கமுயன்றான். மழை அறையும் சாளரங்கள் போல உதடுகள் துடித்தன. பின்பு அவன் விம்மல்களும் மூச்சொலிகளும் கேவல்களுமாக அழத்தொடங்கினான்.

அவன் அழுதுமுடிப்பது வரை அவள் அவனையே நோக்கியபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நீள்மூச்சுக்களுடன் அழுது அடங்கி கண்மூடியபடி படுத்திருந்தான். இறுகி அதிர்ந்த நரம்புகள் தளர்ந்து அவிழ்ந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. கைகளால் கண்களைத் துடைத்தபின் கண்களைத் திறந்து அவளைப்பார்த்தான். பற்கள் தெரிய சிரித்து "நீ வெறுக்கும் நாடகத்தில் ஓர் அங்கம் முடிந்துவிட்டது" என்றான். "திறனிலியின் துயரம் போல அருவருப்பளிப்பது ஏதுமில்லை... எனக்கும்தான்" என்றான்.

"அது ஆண்களின் மனநிலை" என்றாள் பிருதை. "தன் கையில் மிகமிகத் திறனற்ற ஓர் உயிரை ஏந்தும்போதுதான் பெண்ணின் அகம் கனிவும் முழுமையும் கொள்கிறது." அவன் அவள் கண்களைச் சந்தித்தான். அவள் அவன் மோவாயைச் சுட்டி "நான் என்ன நினைத்தேன் தெரியுமா?" என்றாள். புன்னகையுடன் "பால்நுரை படிந்த கைக்குழந்தையின் உதடுகள் என" என்றாள். பாண்டு சிரித்துக்கொண்டு "அப்படி அதைக் கடந்துசெல்ல உன்னால் முடிந்தால் நீ நல்லூழ் கொண்டவள்" என்றான்.

"கடந்துசெல்வது அல்ல..." என்றாள் பிருதை. "இத்தருணத்தில் நானறிந்த உண்மை இது." பாண்டு "நான் நேரடியாகவே கேட்கிறேனே, என் கழுத்தில் நீ ஏன் உன் மணமாலையைப் போட்டாய்? அந்த மாலை அஸ்தினபுரியின் செல்வத்துக்காகவும் படைக்கலன்களுக்காகவும்தானே?" பிருதை அவன் கண்களை நோக்கி "ஆம்" என்றாள். "நான் மார்த்திகாவதியின் இளவரசியாக மட்டுமே என்னை உணர்பவள்." பாண்டு சற்று கோணலாகச் சிரித்து "உண்மையை நேரடியாகச் சொன்னது மகிழ்வளிக்கிறது" என்றான்.

பிருதை "மகிழ்வளிக்கிறதா?" என கூர்ந்து நோக்கி கேட்டாள். பாண்டு "இல்லை... அதுதான் உண்மை. நீ சொல்வதுதான் உண்மை என்று எனக்குத்தெரியும். வேறென்ன சொல்லியிருந்தாலும் அது என்னை ஏமாற்றுவதென்றும் அறிவேன். ஆயினும் என்னை உனக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்லவேண்டுமென என் அகம் விரும்பியது." அவன் உடனே அந்த தற்சிறுமையுணர்வை வென்று சிரித்தான். "சரிதான், அது என் பிழை அல்ல. மனிதர்களை அத்தனை சிறியவர்களாகப் படைத்த பிரம்மனின் பிழை அது."

பிருதை புன்னகை செய்து "ஆனால் நான் இங்கே உள்ளே நுழைந்து உங்களை நோக்கியபின் உங்களை விரும்புகிறேன்" என்றாள். "என் ஆற்றலின்மையையா?" என்றான் பாண்டு. "அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை" என்று பிருதை சொன்னாள். "என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்று பாண்டு கேட்டான். "நீங்கள் உங்கள் அன்னை வைத்து விளையாடும் ஒரு பளிங்குப்பாவை" என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். "அதை உங்கள் அளவில் எதிர்ப்பதற்காக ஓர் அங்கதத்தை சொல்லிலும் பாவனையிலும் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்."

சிரித்தபடி "அவ்வளவுதான்... என்னைப்பற்றி இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை" என்றான் பாண்டு. "ஆகா, எனக்கே அனைத்து எடையும் விலகி இறகுபோல ஆகிவிட்ட உணர்வு ஏற்படுகிறது. இரண்டுவரிகளில் முழுமையாக வகுத்துவிடக்கூடிய ஓரு வாழ்க்கைக்கு நிகராக வேறேது இருக்கமுடியும்?" பிருதையும் சிரித்துக்கொண்டு "இரண்டுவரிக்குமேல் தேவைப்படும் வாழ்க்கை என ஏதும் மண்ணில் உண்டா என்ன?" என்றாள். "உண்டு" என்று பாண்டு சிரித்தான். "உனக்கு இன்னும் ஒரு சொல் தேவைப்படும் என நினைக்கிறேன்" கண்களில் குறும்புடன் "அந்த இரண்டுவரிக்குப்பின் ஆனால் என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம்."

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாண்டுவின் முக்கியமான இயல்பொன்றை பிருதை உணர்ந்தாள். எந்தத் தடையும் இல்லாமல் பளிங்குமலை உடைந்து சரிவதுபோல சிரிக்க அவனால் முடியும். அச்சிரிப்பை எதிரில் இருப்பவரிடமும் அவனால் உருவாக்க முடியும். அவள் அப்படிச் சிரித்தது சிறுமியாக இருக்கும்போதுதான் என எண்ணிக்கொண்டாள். "நீ ஒரு சூழ்மதியாளர் என்றார்கள். அதனுடனும் ஆனால் சேரும் என்று சற்றுமுன் தெரிந்துகொண்டேன்" என்றபின் அவன் மீண்டும் சிரித்தான்.

"நான் உங்களுக்கு மாலையிட்டபோது என்ன நினைத்தீர்கள்?” என அவள் பேச்சை மாற்றினாள். பாண்டு "நான் சொல்வதைக்கேட்டு நீ வியப்புறமாட்டாய் என அறிவேன்" என்றான். "நீ என் கழுத்தில் மாலையிட்டபோது அது எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உன் காலடிகள் ஒவ்வொருவரையாக தாண்டி வர வர நீ என்னை நோக்கி வந்து என் கழுத்தில் மாலையிடுவதை நான் முழுமையாகவே கற்பனைசெய்துவிட்டிருந்தேன்."

"ஆம், அதில் வியப்புற ஏதுமில்லை" என்றாள் குந்தி. "ஏன்...? நான் அழகற்றவன், ஆண்மையும் அற்றவன்" என்றான் பாண்டு. "உடலைச்சார்ந்தா உள்ளம் இயங்குகிறது?" என்று பிருதை சொன்னாள். பாண்டு துள்ளி எழுந்து மஞ்சத்தில் கால்மடித்து அமர்ந்துகொண்டான். "முற்றிலும் உண்மை... இந்த நொய்ந்த வெள்ளுடல் நானல்ல. இது எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் இதுவல்ல. நான் உள்ளே வேறு... வேறு யார்யாரோ..."

"யார்?"என்றாள் பிருதை. "எப்படிச் சொல்வேன்?" என பாண்டு கணநேரம் திகைத்தான். துள்ளி எழுந்து நின்று உளவிரைவால் கைகளை விரித்தான். "நானென்பது ஆறுபேர். ஆறு பாண்டுக்கள். ஒருவன் அளவில்லாத கொடையும் பெருந்தன்மையும் கொண்டவன். எச்சிறுமைக்கும் அப்பால் தலைதூக்கி நிற்கும் ஆண்மகன். அவனாக நான் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இன்னொருவன் அறமே உருவானவன். ஒவ்வொன்றிலும் என்றுமுள நெறியைத்தேடி அவ்வண்ணம் வாழ்பவன். அவனாகவும் நான் ஆயிரம் முறை வாழ்ந்திருக்கிறேன்."

"இன்னும் நால்வர்..." என்றான் பாண்டு. அன்னையிடம் தன் வீரவிளையாட்டுக்களைச் சொல்லும் சிறுவன் போல சற்றே மோவாயைத் தூக்கி திக்கித் திணறிய சொற்களுடன் "மூன்றாமவன் நிகரற்ற உடலாற்றல் கொண்டவன். மரங்களை நாற்றுக்களைப்போலப் பிடுங்குபவன். பாறைகளை வெறும் கைகளால் உடைப்பவன். கட்டற்ற காட்டுமனிதன். சூதும் சூழ்தலும் அறியாதவன். நான்காமவன்..." அவன் முகம் சிவந்தது. பிருதை புன்னகைசெய்தாள்.

"நான்காமவன் இந்திரனுக்கு நிகரான காமம் கொண்டவன். என்றுமிறங்காததது அவன் கொடி. இந்த பாரதவர்ஷமெங்கும் அலைந்து அவன் மகளிரை அடைகிறான். காந்தாரத்தில் காமரூபத்தில் இமயத்தில் தெற்கே பாண்டியத்தில்... பலவகையான பேரழகியர். மஞ்சள்வண்ணத்தவர். செம்பொன்னிறத்தவர். மாந்தளிர் நிறத்தவர். நாகப்பழத்தின் நிறத்தவர்... அவனுக்கு காமம் நிறைவடைவதேயில்லை."

பிருதை வாய்பொத்திச் சிரித்தபோது அவள் முகமும் கழுத்தும் சிவந்தன. "என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றான் பாண்டு. "இயல்பான கனவுகள்தானே என்றுதான்" என்றாள் பிருதை. "ஆம், அவை இயல்பானவை. ஆனால் அவையும் எனக்குப் போதவில்லை. பெரும்புரவியறிஞனாக ஆகவேண்டும். மண்ணிலுள்ள அனைத்துப்புரவிகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். முக்காலத்தையும் அறியும் நூலறிஞனாக ஆகி பாரதவர்ஷத்தின் ஒவ்வொருவருக்கும் சென்றதும் வருவதும் பார்த்துக்குறிக்கவேண்டும் என நினைப்பேன்..."

"ஆறுமுகம்" என்று பிருதை சிரித்தாள். "ஆம், என் இறைவடிவம் ஆறுமுகவேலனேதான். அஸ்தினபுரியில் என் அரண்மனைக்குள் எனக்காக சுப்ரமணியனின் சிறிய ஆலயமொன்றை அமைத்திருக்கிறேன்." பிருதை "சுப்ரமணியனுக்கு தேவியர் இருவர்" என்றாள். "ஆம், அதுவும்தான்" என்றான் பாண்டு. "காட்டுமகள் ஒருத்தி, அரசமகள் ஒருத்தி." பிருதை சிரித்துக்கொண்டு "இதையெல்லாம் உங்கள் அன்னையிடம் சொல்வீர்களா என்ன?" என்றாள். பாண்டு விழிகளைத் தாழ்த்தி "இல்லை... இவை எனக்குள் மட்டுமே இருப்பவை. நான் இப்போது எப்படி இத்தனை எளிதாக உன்னிடம் சொன்னேன் என்றே தெரியவில்லை" என்றான்.

அவள் "சொல்வதற்காகத்தானே துணைவி?" என்றாள். "சொல்லாவிட்டாலும் நீ எனக்குள் உள்ள அனைத்தையும் அறியத்தான் போகிறாய். உன்னைப்போன்றவர்களை எதிர்கொள்ள ஒரே வழிதான். அப்படியே மண்ணில் குப்புற விழுந்து சரணடைவது... பிருதை, அஸ்தினபுரியில் இருவர்தான் உன்னெதிரே நிற்கமுடியும். பிதாமகர் பீஷ்மர் விண்ணளந்த பெருமானுக்கு முன் நிற்கக்கூடியவர். அவரை நீ ஒருபோதும் முற்றறியவோ முந்திச்செல்லவோ இயலாது. ஆகவே உன் சதுரங்கக் களத்தில் உனக்கு எதிரே அமரக்கூடியவன் என் தம்பி விதுரன் மட்டுமே."

பிருதை இயல்பாக கூந்தலை ஒதுக்கியபடி "அஸ்தினபுரியின் அரசரே அவர்தான் என்கிறார்கள்" என்றாள். "ஆம், அவன் பாரதவர்ஷத்தையே ஆளும் திறன்கொண்டவன். பார்ப்பதற்கு வியாசரைப்போலவே இருக்கிறான் என்கிறார்கள். ஆகவே பேரரசிக்கும் பிதாமகருக்கும் அவன் மேல் பெரும் பற்று உள்ளது... இங்கே வந்தபின்னர்தான் சுயம்வர மண்டபத்தில் யாதவர்களும் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால் விதுரனையும் அமரச்செய்திருக்கலாம்."

"உங்கள் தமையரின் துணைவி பேரழகி என்றார்கள்" என அப்பேச்சை வெட்டி திருப்பிக்கொண்டு சென்றாள் பிருதை. "ஆம்... பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் அவளும் ஒருத்தி என்கிறார்கள். வெண்பளிங்கு நிறம் கொண்டவள். அவள் கண்கள் மீன்கொத்தியின் குஞ்சுகள் போல மின்னும் நீலநிறம் கொண்டவை என்கிறார்கள்" என்றான் பாண்டு. ‘விழியிழந்தவருக்கு பேரழகி ஒருத்தி மனைவியாக வருவதில் ஒரு அழகிய நீதி உள்ளதென்று எனக்குப்படுகிறது."

"என்ன?" என்றாள் பிருதை. அவள் தன்னுள் சொற்களை தெரிவுசெய்யத்தொடங்கினாள். "அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன. கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும்."

அவன் நிறுத்திக்கொண்டு "என்ன சொல்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்குத் தோன்றியது. ஆழ்கடல்களைப்போல. தூய்மையான ஏதோ ஒன்று..." அவன் உளஎழுச்சியுடன் "அப்படித்தான் காந்தாரநாட்டு இளவரசியைப்பற்றி சொல்லிக்கொள்கிறார்கள். தூயவள், மிகமிகத் தூயவள் என்று. அவளுடைய கன்னிமையின் வல்லமையால்தான் அவள் காலடிகள் நகரில் பதிந்த அன்று வானமே பேரருவியெனக் கொட்டியது என்கிறார்கள் சூதர்கள்."

"நாம் ஒருமுறை மதுவனத்துக்குச் செல்லவேண்டும்" என்று பிருதை சொன்னாள். "இங்கே திருமணத்துக்கு என் தந்தை சூரசேனர் வரவில்லை. நாம் அங்கே சென்று அவரைப் பார்ப்பதே முறை." பாண்டு அவள் பேச்சை அப்படியே திருப்பிக்கொண்டுசெல்வதை உணர்ந்து சிலகணங்கள் திகைத்தபின் "ஆம், செல்வோமே. அதற்கென்ன?" என்றான். "நான் ஓர் இளவரசி அல்ல. யாதவப்பெண். காடுகளில் ஆநிரை மேய்த்துக்கொண்டிருந்தவள். அதை அங்குசென்றால்தான் நீங்கள் அறியமுடியும்" என்றாள் பிருதை சிரித்தபடி. "நானும் ஆநிரைகள் மேய்ப்பதென்றாலும் செய்கிறேன்" என்று அவன் சொன்னான்.

"எங்கள் நெறிகளும் முறைமைகளும் வேறு" என்று குந்தி சொன்னாள். "ஷத்ரியப்பெண்களைப்போல நாங்கள் அந்தப்புரத்து கூண்டுப்பறவைகளல்ல. ஆண்களின் கைப்பாவைகளுமல்ல." பாண்டு இடைபுகுந்து "ஆம், அறிவேன். காந்தாரத்திலும் அப்படித்தான் என்றார்கள். காந்தார இளவரசியின் விளையாட்டே புரவியில் பாலைநிலத்தில் நெடுந்தூரப்பயணங்கள் செய்வதுதான் என்றனர்."

அவனுடைய சொற்களால் எங்கோ சீண்டப்பட்டு பிருதை "நான் சொல்லவருவது ஒன்றுள்ளது" என்றாள். அவன் முகம் எச்சரிக்கை கொள்ள கண்கள் விரிந்தன. அதைக்கண்டபோதுதான் அச்சொற்றொடர் பிழையானது என அவள் அறிந்தாள். அவள் பேச்சை ஏன் யாதவர்களின் குலமுறைக்குள் கொண்டுசெல்கிறாள் என்ற எச்சரிக்கையை அவன் அடைந்துவிட்டான். "என்ன சொல்லவிருக்கிறாய்?" என்று பாண்டு கேட்டதுமே அவனுடைய அகம் செல்லும் வழிகளனைத்தும் அவளுக்குத்தெரிந்தன.மின்னல் சிடுக்கென கணத்தில் கோடிக்கிளைகளை அது விரித்துவிட்டிருந்தது.

பிருதை பாண்டுவின் கண்களை நோக்கி "என் புதல்வியே மார்த்திகாவதியை ஆளும் உரிமை கொண்டவள். புதல்வி இல்லையேல் புதல்வன்" என்றாள். பாண்டு ஐயம் விலகாமல் "ஆம்" என்றான். "எந்தநிலையிலும் மார்த்திகாவதி அஸ்தினபுரியின் கிளைநாடாக இருக்காது. அதன் மீது அஸ்தினபுரி எந்த ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது" என்றாள் பிருதை. பாண்டுவின் உடல் முறுக்கமிழப்பதை காணமுடிந்தது. புன்னகையுடன் "அஸ்தினபுரி என்றுமே ஆதிக்கம் செலுத்த விழையும் நாடல்ல" என்றான்.

ஏன் பின்வாங்கினோமென்று குந்தி வியந்துகொண்டாள். சொல்லியிருக்கவேண்டிய தருணம், அவள் கூட்டிச்சேர்த்த சொல்முனை அது. அங்குசெல்லும் பாதையை திறந்தும் விட்டாள். அடுத்தகணம் பாண்டு கேட்ட வினா அவள் எண்ணியவற்றை உறுதிசெய்தது. "சல்லியரின் மாத்ரநாட்டிலும் இந்த முறைமைகள் உண்டா என்ன?" அவள் தன் கண்களை அவன் கண்களுடன் நேரடியாக நிலைக்கச்செய்து "மாத்ரர்கள் ஷத்ரியர்கள் அல்லவா? அங்கே மூத்த மைந்தனல்லவா முறைமன்னன்?" என்றாள். பாண்டு கண்களை விலக்கி "ஆம், ஆனால் ஒவ்வொரு ஷத்ரியகுடியும் ஒவ்வொரு பழங்குலத்திலிருந்து வந்தது" என்றான்.

ஏன் பின்வாங்கினாளென அவள் அப்போது உணர்ந்தாள். அவன் அக்கணத்தில் எண்ணிய சித்திரம் அவளை வெறும் பெண்ணாக நிறுத்தியது. அதை அவள் ஏற்க சித்தமாகவில்லை. "காந்தாரர்கள் பஷுத்துரர்களின் குருதிவழி கொண்டவர்கள். லாஷ்கரர்கள் என்னும் ஏழுபெருங்குலக்குழுதான் அவர்களை இன்றும் ஆள்கிறது. ஆயினும் அவர்களின் கற்பொழுக்கநெறிகள் ஷத்ரியர்களைப்போலவே உள்ளன" என்றான் பாண்டு. இன்னொரு அலை வந்து அவள் எண்ணியவற்றை அடித்து மேலும் விலக்கிக் கொண்டு சென்றதைப்போல உணர்ந்தாள்.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 1 ]

அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன.

மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் துழாவி நடந்தனர். நீர்ப்பாம்புகள் போல நெளிந்தனர். நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயின்றனர். மழைக்குள்ளேயே வணிகமும் தொழில்களும் நிகழ்ந்தன. மழைக்குள்ளேயே அவிப்புகையும் அடுபுகையும் எழுந்து நீர்ச்சரடுகளுக்குள் ஊடுருவிப் பரவின. வாழ்வின் ஓசைகள் வான்நீரில் பட்டுப் பரவின.

நகரின் அனைத்துப்பறைகளிலும் தோற்பரப்புகள் நெகிழ்ந்து தழைய, அனைத்து செய்தியொலிகளும் வெண்கலமணிகளாலேயே நிகழ்ந்தன. இருளுக்குள் வானம் ஒளியுடன் வெடித்து துடித்துக்கொண்டிருந்தது. விடிந்தபின் விடைகொண்ட ராத்ரிதேவியின் மெல்லிய மேலாடையே நீண்டு பகலாகிக்கிடந்தது. சூரியன் தோன்றியதையே கண்கள் மறந்தன. திண்ணைகளில் தோலாடைகளைப் போர்த்தியபடி அமர்ந்து பழம்பாடல்களை பாடக்கேட்டனர் நகர்மக்கள். காவலர்கள் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்மறைக்குள் பதுங்கி ஒடுங்கி அமர்ந்து இரவும் பகலும் கண்ணயரக் கற்றுக்கொண்டனர்.

வடக்குவாயில் காவல்மாடத்தின் மீது இரவில் மழைத்தாரைகளுக்கு அடியில் பெரிய தவளைபோல பாயுடன் ஒடுங்கி அமர்ந்திருந்த காவலன் காட்டுக்குள் யானைக்கூட்டம் ஒன்று கிளைகளை விலக்கி மரங்களைப் பெயர்த்து பாறைகளை உருட்டி வருவதாக கனவுகண்டான். யானைக்கூட்டம் மத்தகங்களால் கோட்டைமதிலை முட்டித்திறக்க முயல்வதைக் கண்டு திகைத்துக்கூச்சலிட்டுக்கொண்டு அவன் விழித்து எழுந்தபோது வடக்குவாயிலுக்கு அப்பால் இருட்டுக்குள் இலைகளின் அடிப்பக்கத்தில் நீரின் ஒளி தெரிவதுபோல உணர்ந்தான். கூச்சலிட்டபடி காவல்மாடத்துக்குள் ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த இணைக்காவலர்களை எழுப்பினான்.

அவர்கள் எழுந்து வந்து பந்தங்களைக் கொளுத்தி அவற்றுக்குப்பின்னால் இரும்புக் குழியாடிகளை நிறுத்தி ஒளிகுவித்து வீசி காட்டை நோக்கினர். வடபுலத்தின் அடர்காட்டுக்குள் செந்நிறமான மழைநீர் சுழித்துவந்து தேங்கிக்கொண்டே இருந்தது. மரங்களின் அடித்தூர்கள் நீருக்குள் காலூன்றி நின்றிருக்க நீர் எழுந்துகொண்டே இருந்தது. சிறுபுதர்களுக்குள் வாழும் முயல்களும் எலிகளும் நீரில் அலைகளெழுப்பியபடி நீந்திச்சென்று புதர்க்கிளைகளில் தொற்றி ஏறிக்கொள்வதைக் காணமுடிந்தது.

"நீரா?" என்றான் கிருதன் என்னும் காவலன். "ஆம்... மழைநீர்!" என்றான் காகன் என்னும் தலைமைக்காவலன். "நதிபோல இருக்கிறதே" என்றான் கிருதன். முதியவனாகிய காகன் "இது முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்த பள்ளம். கங்கை திசைமாறியபின் காடாகியிருக்கிறது. ஆகவேதான் இதற்கு புராணகங்கை என்று பெயர்" என்றான். நீர் ஏறிக்கொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். நூற்றுக்கணக்கான முயல்களும் எலிகளும் பாம்புகளும் கீரிகளும் நீரில் நீந்தி மரங்களில் தொற்றிக்கொண்ட ஓசை மரங்கள் சொட்டும் ஒலியுடன் இணைந்து ஒலித்தது.

காகன் "உடனடியாக எவரேனும் சென்று அமைச்சரிடம் தெரிவியுங்கள்" என்றான். கிருதன் தன் குடைமறையை தலையிலிட்டுக்கொண்டு வேல்கழியை ஊன்றியபடி மழையால் அறைபட்ட சேறு கொந்தளித்துக்கொண்டிருந்த சாலை வழியாக ஓடினான். வடபுலத்துச் சோலைகளில் யானைகள் மழையில் நனைந்து கருங்குவைகளாக அசையாமல் நின்றுகொண்டிருந்தன. அவை அசையாமல் நிற்பதனாலேயே யானைத்தன்மையை இழந்துவிட்டிருந்தன. யானையென அறிந்திருந்தது அந்த உடலூசலைத்தான் என்று கிருதன் எண்ணிக்கொண்டான். அசையாத யானை என்பது பனிக்கட்டியாக ஆன நீர். அது நீரே அல்ல. அப்படியென்றால் யானை ஒவ்வொரு கணமும் மழை மழை என்றுதான் அசைகிறதா?

அவன் அமைச்சர் விப்ரரின் மாளிகையை அடைந்தான். மழைத்தாரைக்கு அப்பால் நெய்த்தீபங்களின் செவ்வொளிவிழிகளுடன் மாளிகையும் குளிரில் விரைத்து ஒடுங்கியிருந்தது. செய்தியைக்கேட்டதும் தலைமைக்காவலனான கலன் விப்ரரை எழுப்பலாமா வேண்டாமா என குழம்பினான். கிருதன் சொல்வதென்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராணகங்கையில் நீர் வருகிறதென்றால் என்ன பொருள்? நகரின் அனைத்துத் தெருக்களும்தான் நீரால் நிறைந்து ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கம்மியர் தெருவில் குதிரைகள் நீந்திச்செல்லுமளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

"முன்னர் அங்கே நீ மழைநீரை பார்த்ததில்லையா?" என்றான். கிருதன் "அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது" என்றான். "நதியா?" என்றான் கலன். "இன்னும் அது ஓடத்தொடங்கவில்லை" என்றான் கிருதன். தலையை கையால் சுரண்டியபடி சற்று சிந்தித்தபின் "வா நானே பார்க்கிறேன்" என்று சொல்லி கலன் தன் உடைவாளை எடுத்தணிந்துகொண்டு குடைமறையை அணிந்து குதிரையில் ஏறிக்கொண்டான். கிருதன் பின்னால் ஓடிவந்தான்.

நீர் சுழித்தோடிய தெருக்கள் வழியாக விரைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றான். அதை நெருங்க நெருங்க அவனுக்குள் உள்ளுணர்வின் எச்சரிக்கை எழத்தொடங்கியது. குதிரை அந்த உள்ளுணர்வின் பருவடிவென கால்தயங்கி நின்று முகவாயை தூக்கியது. அவன் அதன் விலாவில் குதிமுட்களைக் குத்தி முன்செலுத்தினான். வடக்குவாயில் பெருங்கதவு மூடியிருந்தது. அதன் கனத்த தாழ்மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக பூட்டப்பட்டிருந்தன. தாழ்களின் இரும்புப்பட்டைகளும் குமிழ்களும் இருளுக்குள் பந்த ஒளியை அணையப்போகும் அனல்போல பிரதிபலித்தன. சிலகணங்கள் கழித்தே கலன் அவன் கண்டதென்ன என உணர்ந்தான். மூடியகதவின் பொருத்துக்கள், இடுக்குகள் வழியாக வாள்கள் போல நீர்ப்பட்டைகள் உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தன.

கலன் குதிரையைத்திருப்பி நீர்ச்சுழிப்புகளை பாய்ந்துகடந்து அமைச்சரின் மாளிகையை அடைந்து இறங்கி உள்ளே ஓடி அவரது துயிலறை வாயிற்கதவைத் தட்டினான். அவர் நெகிழும் உடையுடன் வந்து பதறி "என்ன? என்ன?" என்றார். "வெள்ளம்! புராணகங்கை நகருக்குள் நுழையவிருக்கிறது" என்றான் கலன். அச்சொற்களைக் கேட்டதுமே முழு உயிர் கொண்டு மஞ்சத்தில் உடன் துயின்ற கணிகையிடம் உடனடியாக அவள் குடிக்குத்திரும்பச் சொல்லிவிட்டு மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்தணிந்தவாறே வெளியே விரைந்தார். செல்லும்போதே ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

அவர் வடக்குவாயிலை அணுகுவதற்குள்ளேயே அரண்மனையின் தெற்கு மூலையில் பெரிய மரத்தூண்களுக்குமேல் தொங்கிய தசகர்ணம் என்னும் பெரிய கண்டாமணி முழங்கத்தொடங்கியது. இரட்டை ஒலிகளாக அதன் முழக்கம் எழுந்ததுமே நீரொலிக்குள் மானுடக்குரலொலிகள் எழுந்து ஓங்க அஸ்தினபுரி துயிலெழுந்தது. அது வெள்ளம் நெருப்பு ஆகியவற்றை மட்டுமே சுட்டும் மணியோசை என அனைவரும் அறிந்திருந்தனர்.

சிறிய இல்லங்களில் வாழ்ந்தவர்கள் பதறியும் கூவியும் திகைத்துநின்றும் மீண்டும் பரபரப்பு கொண்டும் தங்கள் உடைமைகளை அள்ளி மூட்டைகளிலும் மரப்பெட்டிகளிலும் சேர்த்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கியபடி முதியோரைப் பற்றியபடி அருகிருந்த உயரமான மாடமாளிகைகளுக்கோ காவல்மாடங்களுக்கோ சென்றனர். ஆலயமுகடுகள் கோட்டைவீட்டு நிலைகள் எங்கும் அவர்கள் ஏறிக்கொண்டனர். ஏறமுடியாத முதியவர்களை கைப்பிடித்து தூக்கினர். பொருட்களை நனையாத உயரங்களில் அடுக்கினர். ஆண்கள் முழங்கால் மூழ்கும் நீரில் ஓடிச்சென்று கன்றுகளை கட்டவிழ்த்து விட்டனர்.

நகர் முழுக்க குதிரைகளில் விரைந்த அரசவீரர்கள் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லும்படி கூவி ஆணையிட்டனர். எங்கு செல்வதென்றறியாமல் தெருக்களில் முட்டிமோதியவர்களை வழிகாட்டியும் அதட்டியும் கைகளைப்பற்றி இழுத்தும் ஆற்றுப்படுத்தினர். ‘எந்தப் பசுவும் கட்டுக்குள் இருக்கலாகாது... வணிகர்களின் கழுதைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவேண்டும்’ என்று ஆணையிட்டபடி காவலர் தலைவர்கள் குதிரைகளில் கடந்துசென்றனர்.

கோட்டையின் மேற்கு மூலையில் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரம் அவர்கள் அறிந்த நாள்முதல் பயனற்றே கிடந்தது. மரத்தாலான அந்தக்கட்டடத்தின் முகப்பில் வருணன் கௌரி, வருணானி, சர்ஷணி என்னும் துணைவியருடன் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. மேற்குத்திசை அதிபனாகிய வருணனின் சிறிய ஆலயம் அதற்கு அப்பால் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தது. கனத்த மரங்களால் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரத்தின் பன்னிரண்டு அடுக்குகளிலும் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட சிறுபடகுகளும் மூங்கில் முடைந்து களிமண்ணும் தேன்மெழுகும் பூசப்பட்டுச் செய்யப்பட்ட பரிசல்களும் அடுக்கப்பட்டிருந்தன. படைவீரர்கள் ஜலமந்திரத்தில் ஏறி படகுகளையும் பரிசல்களையும் சித்தமாக்கினர்.

விப்ரர் வடக்குக் கோட்டைவாயிலை அடைந்து காவல்பீடம் மீது ஏறிக்கொண்டு பார்த்தார். கதவின் இடைவெளிகள் வழியாக பீரிட்ட நீர் நெடுந்தூரத்துக்கு வீசியடித்தது. அவர் சிலகணங்கள் திகைத்து நின்றபின் கதவைத்திறக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையைப் பெற்ற காவலர்தலைவன் ஒருசில கணங்கள் திகைத்தான். பின்பு தலைவணங்கி தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஒலித்தான். காவலர்கள் ஓடி வாயிலைத்திறக்கும் நான்கு யானைகளை கொட்டிலில் இருந்து அழைத்து வந்தனர்.

முழங்கால் மடிப்பு வரை புதைந்த சேற்றில் மெல்ல அசைந்து வந்த யானைகள் தாழ்களைத் திறக்கும் சங்கிலிகளை துதிக்கைகளால் பற்றிக்கொண்டு அடுத்த ஆணைக்காகக் காத்து நின்றன. காவலன் மீண்டும் சங்கு ஊதியதும் கோட்டைமேலிருந்த பெரிய கண்டாமணி மும்முறை ஒலித்தது. யானைகள் சங்கிலிகளை இழுக்க மேலே இருந்த பெரிய இரும்புச்சக்கரங்கள் உருண்டு கீழே தாழ்மரங்கள் மெல்ல எழுந்து விலகின. அவை விலக விலக கதவுகள் அதிர்ந்து இரு கதவுகள் நடுவே உள்ள பொருத்து பெரியதாகி அதனூடாக கிடைமட்டமாக ஒரு அருவி விழுவதுபோல நீர் பீரிட்டுப்பாய்ந்து தெறித்துவிழுந்தது.

முதல் இரு தாழ்மரங்கள் விலகியதும் ஆயிரம் யானைகளால் உந்தப்பட்டதுபோல கதவு அதிர்ந்து இறுகியது. இரண்டாவது இரு தாழ்மரங்கள் பாதி விலகுவதற்குள்ளாகவே பெரும் உறுமலுடன் கோட்டைக்கதவு திறந்து பக்கவாட்டில் கோட்டைச்சுவரில் மோத வெள்ளம் வெடித்து எழுவதுபோல உள்ளே வந்தது. கோட்டைச்சுவரில் ஒரு பெரிய துதிக்கை முளைத்தது போல வெள்ளப்பெருக்கு நீண்டு யானைகளை தூக்கிச்சுழற்றி எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்றது.

பெருகிய நீர் உள்ளே விரிந்திருந்த களமுற்றத்தில் விரிந்ததும் விரைவழிந்து நாற்புறமும் பரவியது. கோட்டைவாயில் வழியாக அவர் அதுவரை கண்டிராத ஒரு புதிய நதி நகருக்குள் புகுவதை விப்ரர் பார்த்துக்கொண்டிருந்தார். நீரில் வந்த மரங்களும் புதர்களும் சுழித்து கட்டடங்களில் முட்டித் தயங்கின. கைவிடுபடைக்கலங்களின் பெருமேடைகளில் தங்கின. பெரிய மரங்கள் சில கோட்டைவாயிலில் முட்டி நின்று நீரின் அழுத்தத்தை வாங்கி நீரைப் பிரித்தன. பின் மெல்லமெல்ல திசைமாறி சரிந்து உள்ளே வந்து நீர்விரைவில் கலந்து சென்றன.

நீரில் புரண்டுசென்ற நான்குயானைகளும் மூழ்கி எழுந்து துதிக்கையை நீருக்குமேல் தூக்கியபடி நீந்தி மறுபக்கம் தங்கள் கொட்டில் நோக்கிச் சென்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட யானைகள் பெருகிவந்த நீரில் நீந்தியபடி மேடான இடம் நோக்கிச் செல்ல யானைகளின் தலைவியான காலகீர்த்தி துதிக்கை தூக்கி பிளிறி யானைமகவுகள் நலமாக இருக்கின்றனவா என்று வினவியது. அனைத்து அன்னை யானைகளும் பதிலுக்குப் பிளிறி அவை நலமே என்று அறிவித்தன. யானைக்கொட்டிலை பாதி நிறைத்த நீர் மேலும் சற்று உயர்ந்தது. மகாமுற்றத்திலிருந்து பிரியும் அனைத்துச்சாலைகளையும் கிளையாறுகளாக ஆக்கியபடி நீர் நகரை நிறைத்தது.

நீர் தங்கள் இல்லங்களின் உப்பரிகை விளிம்புகளில் வந்து மெல்லிய நாக்கால் நக்கி ஒலிப்பதை அரையிருளில் நகர்மக்கள் கண்டனர். நீரில் மிதந்துவந்த எதையும் தொடவேண்டாமென்றும் நீர் விளிம்புக்குச் செல்லவேண்டாமென்றும் அவர்கள் மைந்தர்களை எச்சரித்தனர். கழிகளால் நீரில் மிதந்துவந்து கரைக்கழிகளைப் பற்றி தொற்றி ஏறமுயன்ற பாம்புகளை அவர்கள் தள்ளி மீண்டும் நீரிலேயே விட்டார்கள்.

தெற்குக் கோட்டைவாயில் வழியாக நீர் பெருகி வெளியே சென்றது. நீரில் வந்த மரங்களும் புதர்களும் நகரால் அரித்துநிறுத்தப்பட, வெறும் நீர் அலையலையாக வெளியே சென்று அங்கே ஓடிய புராணகங்கையின் மறுபக்கப் பள்ளம் வழியாகச் சென்று அப்பால் விரிந்த காட்டுக்குள் புகுந்தது. மழை விடியற்காலையிலேயே நின்றுவிட்டது. மெல்லிய காலையொளியில் நகரம் முழுக்க நிறைந்திருந்த செந்நிறமான நீரைக் கண்டு குழந்தைகள் உவகை கொண்டு குதித்தன. நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றின. நீரின் ஒளியால் நகரம் மேலும் துலக்கமுற்றது.

நகர்த்தெருக்களில் படகுகள் ஓடுவதை முதியவர்கள் திகைத்து வாய்மேல் கைகளை வைத்து நோக்கினர். படகுகளிலும் பரிசல்களிலும் படைவீரர்கள் ‘யாவரும் நலமா? உணவு தேவைப்படுபவர்கள் யார்? தனித்துச்சிக்கிக்கொண்டவர்கள் உளரா?’ என்று கூவியபடியே சென்றனர். உப்பரிகையில் நின்றபடி கீழே சுழித்தோடிய வெள்ளத்தைப்பார்த்த குழந்தைகள் நான்கு யானைகள் அந்த நீரில் மகிழ்வுடன் நீந்தித்திளைத்துச் செல்வதைக் கண்டு கூவி ஆர்த்து துள்ளிக்குதித்தனர்.

மதியம் மழை முழுமையாகவே நின்றுவிட்டது. காற்றில் நீர்ப்பிசிறுகள் மட்டும் பறந்துகொண்டிருந்தன. நகர்த்தெருக்களில் ஓடிய நீரின் ஒளியலைகள் கட்டடங்களின் சுவர்களில் ததும்பின. அஸ்தினபுரிக்கு அயலான மலைச்சேற்றின் வாசனை நீரிலிருந்து எழுந்தது. மாலைக்குள் நீர் பாதியாகக் குறைந்தது. இரவெல்லாம் நீர் குறைந்தபடியே இருந்தது. குழந்தைகள் கண் துயில பெரியவர்கள் அச்சமும் மனக்கிளர்ச்சியுமாக பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.

மறுநாள் காலை விடிந்தபோது தெருக்களில் கணுக்காலளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளை வீடுகளில் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி தங்கள் இல்லங்கள் சரியாமலிருக்கின்றனவா என்று பார்க்கச்சென்றனர். அஸ்தினபுரியின் இல்லங்களெல்லாமே ஆழமாக மரங்களை நட்டு அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டவையாதலால் ஓரிரு வீடுகளே சரிந்திருந்தன. இல்லங்களுக்குள் எல்லாம் நீர் சுழித்தோடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். ‘இல்லங்களுக்குள் நுழையாதீர். பாம்புகளும் தேள்களும் குடிகொண்டிருக்கலாம்’ என எச்சரித்தபடி காவலர்கள் குதிரைகளில் சென்றனர்.

மறுநாள் முற்றிலுமாகவே நீர் நின்றுவிட்டது. மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருந்தது. தோலுரிக்கப்பட்ட ஊன் போன்ற கதுப்பு. நீரில் ஊறிய பட்டுபோன்ற சுழிப்பு. மக்கள் தங்கள் இல்லங்களுக்குச்சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அரச ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்திறங்கினர். அவர்கள் வீடுகளுக்குள் சென்று சாளரத்து அழிகளிலும் தாழ்களிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிச் சீறச்செய்து அவை பாய்ந்தோடும்போது அங்கே ஓலையாலான கூடைகளைக் காட்டி பிடித்து பெரிய கூடைகளிலாக்கிக் கொண்டனர். அவர்கள் சுமந்துசென்ற கூடைகளின் இடுக்குகள் வழியாக வழிந்த பாம்புகள் ஓட்டைக்கலங்களில் இருந்து கரிய திரவம் வழிவதுபோலத் தோன்றின.

பிடிபட்ட பாம்புகளை தலையில் சுமந்து வண்டிகளில் ஏற்றி மீண்டும் வடபுலக்காட்டுக்குள்ளேயே கொண்டுசென்று விட்டனர். கூடைகளில் இருந்து அவை நான்குபக்கமும் பாய்ந்திறங்கி இலைத்தழைப்புக்குள் மறைந்தன. நகருக்குள் புகுந்த எலிகளை பானைப்பொறிகளை வைத்து பிடித்தனர். வீடுகளுக்குள் எல்லாம் செங்களி போல சேறு படர்ந்திருந்தது. அவற்றை பலகைகளால் தள்ளிச் சேர்த்து அள்ளி வெளியே கொட்டினர். சேற்றுப்பரப்புகளில் சிறிய குமிழிகள் வெடித்த துளைகளுக்குள் சிறு பூச்சிகள் அதற்குள்ளாகவே வாழத்தொடங்கியிருந்தன. சேற்றுக்கதுப்பில் பூச்சிகள் ஓடிய வரிகள் விழுந்திருந்தன. யானைச்சருமம் போல சேற்றில் நீர் ஊறி ஓடிய வரிகள் தெரிந்தன.

நகரம் தன்னை தூய்மைசெய்துகொள்ள பத்துநாட்களாகியது. அதன்பின் மழை பெய்யவில்லை. வானம் முழுமையாகவே வெளுத்து வெள்வெயில் நகர்மீது பரவிப்பொழிய நெடுநாட்களாக ஒளியைக் காணாத முதியவர்களின் கண்கள் கலங்கி நீர்வழிந்தது. இரண்டுநாட்களிலேயே எஞ்சிய சேற்றையெல்லாம் மென்மணல்போல ஆக்கியது வான்வெம்மை. நாலைந்துநாட்களுக்குள் மழை பெய்ததெல்லாம் தொலைதூர நினைவாக மாறும்படியாக வெயில் எழுந்து நின்றது. நகரின் அனைத்து நீரோடைகளிலும் சுழித்தோடிய தெள்நீரில் மழைநீரின் குளுமையும் சேற்றுச்சுவையும் எஞ்சியிருந்தன.

காட்டுக்குள் இருந்து வெண்சுண்ணமண்ணை அள்ளி ஒற்றைமாட்டுவண்டியில் சுமையேற்றிய காடவர்கள் நகருக்குள் தெருத்தெருவாக வந்து கூவி விற்றனர். தேன்மெழுகையும் கொம்பரக்கையும் விற்கும் களியரும் தெருக்கள் தோறும் அத்திரிகளையும் கழுதைகளையும் சுமைகளுடன் ஓட்டியபடி கூவியலைந்தனர். நகர்மக்கள் கூரையிடுக்குகளை களிமண்ணையும் தேன்மெழுகையும் கலந்து அடைத்தனர். வெண்மண்ணையும் அரக்கையும் மெழுகையும் கலந்து தங்கள் இல்லச்சுவர்களில் பூசி புதுவண்ணமேற்றினர். நீலக்கல்லையும் செந்நிறக்கல்லையும் அரைத்து எடுத்த சாயங்களுடன் மெழுகை உருக்கிச்சேர்த்த கலவையைப் பூசி தூண்களையும் கதவுகளையும் வண்ணம்கொள்ளச்செய்தனர். வசந்தம் பூத்த காடு போல் நகரம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தது.

அரண்மனையை புதுப்பிக்க கலிங்கச் சிற்பியர் வந்து சேர்ந்தனர். அவர்கள் மாடக்குவைகளை வெண்ணிறமேற்றி மேகக்கூட்டங்கள் போலாக்கினர். செந்நிற மரப்பலகைகளில் மெழுகேற்றி மெருகூட்டினர். சுவர்களில் புதுச்சுண்ணம் சேர்த்தனர். புதிய திரைச்சீலைகளையும் பாவட்டாக்களையும் பட்டத்தூண்களையும் பதாகைகளையும் கட்டினர். அப்போது பணித்ததுபோல அரண்மனை வளாகம் எழில் கொண்டு எழுந்தது. பழையன கழிந்து புதியவை எழுந்து அஸ்தினபுரி மலர்ந்தது.

அரசகுலத்தின் இரு இளவரசர்களுக்கும் மணவினை முடிந்து தேவியர் நகர்புகுந்துவிட்டனர். மழைக்காலம் முடிந்துவிட்டதனால் மூத்தவருக்கு பட்டம் சூட்டும் விழவு நிகழுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரச அறிவிப்பு எத்தினத்திலும் வெளியாகுமென்று சந்தைகளிலும் மன்றுகளிலும் திண்ணைகளிலும் பின்கட்டுகளிலும் பேச்சு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் பாரதவர்ஷத்தின் தொலைதூரத்து அரசர்களும் நகர்புகுவார்கள் என நிமித்திகர் கூறினர். அதற்கேற்ப அஸ்தினபுரியின் அனைத்துக் கட்டடங்களையும் பழுதுபார்க்கும்பணி இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.

காந்தாரத்தில் இருந்து இளவரசர் சகுனி தன் தமக்கை அரியணையமரும் விழவைக் கொண்டாடுவதற்காக பரிசில்களுடன் வருவதாக அரண்மனைச்செய்தி நகருக்குள் பரவியது. ‘காந்தாரம் செல்வக்கருவூலம்... அவர் கொண்டுவரும் செல்வத்தால் நம் களஞ்சியங்கள் நிறையப்போகின்றன’ என்றனர் மூத்தார். ஒவ்வொருநாளும் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆயிரம் யானைகளில் செல்வம் வருவதாக முதலில் சொன்னார்கள். அவை யானைகள் அல்ல ஒட்டகவண்டிகள் என்று பின்னர் செய்தி வந்தது. ஆயிரமா, யார் சொன்னது, ஐந்தாயிரம் வண்டிகள் என்று சொன்ன சூதனை திகைத்து நோக்கி வாய்திறந்து நின்றனர் நகர்மக்கள்.

சகுனி எல்லைபுகுந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் நகர்மக்கள் கிளர்ச்சிகொண்டனர். மறுநாள் அவர் நகர் நுழையக்கூடுமென்று வணிகர்கள் சொன்னார்கள். கணிகர் நாள் நோக்கி மறுநாள் கதிர் எழுவதற்கு முன்னும் அந்தி சாய்ந்தபின்னும் மட்டுமே நற்தருணம் உள்ளது என்றனர். அந்தியில் செல்வம் உள்ளே வருவதற்கு நூல் முறை இல்லை என்பதனால் சகுனி அதிகாலையில்தான் நகர்நுழையக்கூடுமென்றனர். ஒவ்வொரு நாழிகைக்கும் ஒரு செய்தி என வந்துகொண்டிருந்தது. மன்றுகள் முழுக்க அதைப்பற்றி மட்டுமே பேசப்பட்டது.

கருக்கிருட்டிலேயே கிழக்குக்கோட்டைவாயிலுக்கு முன்னால் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. குதிரைகளில் ஏறிய படைவீரர்கள் ‘பாதையை மறிக்காதீர். பாதையின் எல்லைக்கற்களுக்கு அப்பால் மட்டுமே நில்லுங்கள்!’ என்று கூவியபடி மீண்டும் மீண்டும் சாலைகளில் குளம்படி ஓசை சிதற விரைந்துகொண்டிருந்தார்கள். முரசுமேடைகளிலும் காவல்மாடங்களிலும் மன்றுத்தூண்களிலும் மாளிகைமுகடுகளிலும் பந்தங்கள் செவ்வொளி அலைய ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் பந்த ஒளிகள் ஆயிரம் செவ்விழிகளாகத் திறந்து இமைத்துக்கொண்டிருந்தன.

மூடிய கோட்டைக்கதவுக்குப் பின்னால் திரண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் கிளர்ச்சியுற்ற குரலில் பேசிக்கொண்டும் கூவிக்கொண்டும் காத்திருந்தனர். கோட்டைக்கதவின் பொருத்துக்களின் இடைவெளிகள் வழியாக மறுபக்கம் எரிந்த பந்தங்களின் செவ்வொளிக்கற்றைகள் பீரிட்டு வந்து குருதிதோய்ந்த வாள்கள் போல இருளில் நீட்டி நின்றன. பெருமுரசங்களின் அருகே கோல்காரர்கள் காத்து நின்றனர். ‘விதுரர்! விதுரர்!’ என ஒரு குரல் ஒலித்தது. விதுரனின் ரதம் அப்பால் வருவதை அங்கே எழுந்த வாழ்த்தொலிகள் காட்டின. மக்கள் விதுரனை வாழ்த்தி கூவினர்.

விதுரன் வந்து கோட்டையின் மூடிய வாயிலுக்கு முன் ரதத்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டான். அமைச்சர்கள் விப்ரரும் லிகிதரும் சோமரும் படைத்தலைவர்கள் உக்ரசேனரும் சத்ருஞ்சயரும் வியாஹ்ரதத்தரும் தங்கள் ரதங்களில் வந்து இறங்கி விதுரனின் இருபக்கமும் நின்றுகொண்டனர். அவர்களின் ரதங்கள் அப்பால் கொடிகள் மென்காற்றில் அலைய வரிசையாக அணிவகுத்து நின்றன. படைவீரர்கள் கைகாட்ட வாழ்த்தொலிகள் அமைந்தன. கொடிகளும் சுடர்களும் காற்றில் படபடக்கும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி நிலவியது. குதிரை ஒன்று பர்ர் என செருக்கடித்தது.

கோட்டைமேல் ஒரு விளக்கு சுழன்றது. விப்ரர் கையைக் காட்டினார். அவர் முன் ஆணைகாத்து நின்ற காவலர்தலைவன் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து ஊத வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். கோட்டைவாயிலைத்திறக்கும் நான்கு யானைகள் பாகன்களால் கொண்டுசெல்லப்பட்டன. அவை தலையை ஆட்டி, துதிக்கை துழாவி முன்னால்சென்றன. பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னால் அஸ்தினபுரியின் கோட்டைவாயில் திறக்கப்படுவதில்லை, சகுனிக்காக விதிகள் தளர்த்தப்படுகின்றன என ஒரு முதியவர் சொன்னார். பிறர் வியப்புடன் தலையசைத்தனர்.

யானைகள் கனத்த சங்கிலிகளை இழுத்ததும் மேலே இருந்த இரும்புச்சக்கரங்கள் உலோக ஓலத்துடன் சுழன்றன. கதவை மூடியிருந்த பெருந்தாழ்மரங்கள் மெல்ல விலகின. அஞ்சிய உதடுகளில் சொல் பிறப்பதுபோல கதவுகள் விலகி இடைவெளியிட்டன. இரும்புக்கீல்கள் பேரொலி எழுப்ப கதவு விரியத்திறந்தது. அப்பாலிருந்து காட்டுத்தீ பெருகி நகருக்குள் இறங்குவதுபோல பல்லாயிரம் நெய்ப்பந்தங்களின் ஒளி உள்ளே நுழைந்தது. பந்தங்களை ஏந்திய குதிரை வீரர்கள் சூழ்ந்துவர பெரிய வண்டிகளும் ரதங்களும் வந்தபடியே இருந்தன.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 2 ]

சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும் அணிந்தவையாக, செம்மணிக்குடை பிடித்த காவலன் மேலே அமர்ந்திருக்க, சங்கிலி குலுங்கும் ஒலியுடன் காலெடுத்துவைத்து வந்தன. ஒவ்வொன்றிலும் பொன்னணிசெய்த பெரிய பித்தளைப்பேழைகள் இருந்தன. அதன்பின் முந்நூறு ஒட்டகங்கள் அரிக்குஞ்சலங்கள் அணிந்த கழுத்துக்களுடன், கடிவாளம் இழுபட தலைதாழ்த்தியும், பந்தங்களைக் கண்டு அஞ்சி தலை தூக்கியும் கழுத்துக்கள் விதவிதமாக வளைய இரும்படிக்கூடம் போல குளம்புகளைத் தூக்கி வைத்து கனத்த தோல்பொதிகளுடன் வந்தன.

அதன்பின் குதிரைகள் இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் இருநிரைகளாக வந்தன. ஒவ்வொன்றும் தோற்கூரையிடப்பட்டு காந்தாரத்தின் கொடிபறக்க, கனத்த சகடங்கள் மண்ணின் செம்புழுதியை அரைக்க, குடத்தில் உரசும் அச்சுக்கொழு ஒலிஎழுப்ப வந்தன. அதன்பின் மாடுகள் குனிந்து விசைகூட்டி இழுத்த ஆயிரத்தெட்டு பொதிவண்டிகள் பின்பக்கம் வீரர்களால் தள்ளப்பட்டு உள்ளே நுழைந்தன. ஒவ்வொன்றிலும் விலைமதிப்புள்ள செல்வங்கள் இருப்பது வெளித்தெரியும்படி வெண்கலத்தாலும் தோலாலும் அணிசெய்யப்பட்டு காந்தாரக் கருவூலத்தின் ஓநாய் முத்திரை கொண்ட கொடி பறந்தது.

பல்லாயிரம் பந்தங்களின் தழல்கள் குழைந்தாட நெருப்பாறு இறங்கியதுபோல சகுனியின் படை உள்ளே நுழைந்தபோதே நகர்மக்கள் திகைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். யானைகளுக்குப்பின் வந்த ஒட்டகவரிசை முடியும்போது விடிந்துவிட்டது. அதன்பின் குதிரைவண்டிகள் உள்ளே நுழையத்தொடங்கின. காலைவெயிலில் வண்டிக்குடைகளில் இருந்த பித்தளைப்பட்டைகள் பொற்சுடர்விட்டன. ஓடித்தேய்ந்த சக்கரப்பட்டைகள் வாள்நுனியென ஒளிர்ந்தன. குதிரைகளின் வியர்த்த உடல்களில் இருந்து எழுந்த உப்புத்தழை வாசனை அப்பகுதியை நிறைத்தது.

அது முடியவிருக்கையில் மீண்டும் மாட்டுவண்டிவரிசைகள் வந்தபோது நகர்மக்கள் மெல்ல உடல் தொய்ந்து ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து நின்றனர். பலர் அமர்ந்துகொண்டனர். ஒருவரிடமிருந்தும் ஓசையேதுமெழவில்லை. தொடக்கத்தில் அஸ்தினபுரியின் சமந்த நாட்டின் செல்வத்தை தன்னெழுச்சியுடன் பார்த்த நகர்மக்கள் பின்னர் காந்தாரத்தின் செல்வ வளத்தின் முன் அஸ்தினபுரி ஒரு சிற்றரசே என்று எண்ணத்தலைப்பட்டனர். அவர்களின் கண்முன் சென்றுகொண்டிருந்த பெருஞ்செல்வம் எந்த ஒரு கங்கைக்கரை நாட்டிலுமுள்ள கருவூலத்தையும்விடப்பெரியது.

மாட்டுவண்டிகளின் நிரைமுடிந்தபோது அத்திரிகளின் நிரை தொடங்கியது. லிகிதர் பொறுமை இழந்து "இது திட்டமிட்ட விளையாட்டு" என்றார். விதுரன் வெறுமே திரும்பிநோக்கினான். லிகிதர் "எண்ணிப்பாருங்கள் அமைச்சரே, இதுவரை காணிக்கைப்பொருட்களை முன்னால் அனுப்பி அரசர்கள் பின்னால் வரும் வழக்கம் உண்டா?" என்றார். விதுரன் புன்னகைசெய்தான். "இந்தச்செல்வத்தை முழுக்க நாம் நின்று பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறார் சகுனி. எத்தனை ஆணவம்! என்ன ஒரு சிறுமை!" விதுரன் "இதில் என்ன சிறுமை உள்ளது? செல்வத்தை நகர்மக்களுக்குக் காட்டுவதன் வழியாக அவர் இந்நாட்டைக் கைப்பற்றுவதை உணர்த்த முனைகிறார். இதைவிடச்சிறந்த மதிசூழ் செய்கையை என்னால் உய்த்துணர இயலவில்லை" என்றான்.

"நாட்டைக்கைப்பற்றுவதா?" என்றார் லிகிதர். "இத்தனை பெருஞ்செல்வத்துடன் வருபவர் எளிதில் திரும்பிச்செல்வாரா என்ன?" என்றான் விதுரன். லிகிதர் திகைப்புடன் தன் முன் கலங்கலான நீரோடும் நதிபோல சென்றுகொண்டிருந்த பொதியேந்திய அத்திரிகளின் நிரையை திறந்த வாயுடன் நோக்கினார். "அஸ்தினபுரியின் களஞ்சியம் இச்செல்வத்தைச் சேர்த்தால் இருமடங்காகிவிடும்!" என்றார். "ஆம், இச்செய்தி இன்று மாலைக்குள் அனைத்து ஷத்ரியர்களுக்கும் சென்றுசேரும். அவர்கள் இதை அஸ்தினபுரியின் போர்முழக்கமாக மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். பாரதவர்ஷத்தில் போர் தொடங்கிவிட்டது லிகிதரே!"

வியாஹ்ரதத்தர் அருகே வந்து "அமைச்சரே, போர் அறைகூவலுக்கு நிகராகவல்லவா இருக்கிறது?" என்றபடி தன் பெரிய மீசையை நீவினார். "ஆம்... போர்தான்" என்றான் விதுரன் நகைத்தபடி. "உமது வாள்களின் துரு இந்த பொன்னின் ஒளியால் அகலவேண்டும்!" வியாஹ்ரதத்தர் உரக்கச்சிரித்தார்.

காலைவெயில் நிமிர்ந்து மேலெழுவதுவரை அத்திரிகள் சென்றன. அதன்பின்னர்தான் காந்தாரத்தின் கொடியுடன் முதன்மைக் கொடிவீரனின் ரதம் வருவது தெரிந்தது. விதுரன் "எத்தனை ரதங்கள்?" என்றான். "ஆயிரத்தெட்டு என்றார்கள்" என்றார் லிகிதர்.

முதல் நூறு ரதங்களில் மங்கலத்தாசிகள் முழுதணிக்கோலத்தில் பொற்தாலங்கள் ஏந்தி நின்றிருந்தனர். தொடர்ந்த நூறு ரதங்களில் சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளை மீட்டியபடி நின்றிருந்தனர். அடுத்த நூறு ரதங்களில் மன்றுசூழ்நர் அமர்ந்திருந்தனர். அதன்பின்னர்தான் அரசகுலத்தவர் வரும் மாடத்தேர்கள் வந்தன. காந்தாரத்தின் ஈச்ச இலை இலச்சினைகொண்ட கொடி பறக்கும் மும்மாடப் பெருந்தேர் கோட்டைவாயிலை நிறைப்பதுபோல உள்ளே நுழைந்தது கரியபெருநாகம் மணியுமிழ்வதுபோலத் தோன்றியது. பொன்னொளி விரிந்த மாடக்குவைகளுக்குக் கீழே செம்பட்டுப் பாவட்டாக்கள் காற்றில் நெளிய அது வானில் சென்ற பேருருவ தெய்வம் ஒன்றின் காதிலிருந்து உதிர்ந்த குண்டலம் போலிருந்தது.

பன்னிரு குதிரைகளால் இழுக்கப்பட்ட மாடத்தேர் நின்றதும் அதற்குப்பின்னால் வந்த தேர்களையும் வண்டிகளையும் நிற்கச்சொல்லி கொடிகள் ஆட்டப்பட்டன. பல்லாயிரம் வண்டிகளும் புரவிகளும் நிற்கும் ஓசை கேட்டுக்கொண்டே விலகிச்சென்றது. விப்ரர் கையைக் காட்டியதும் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைமேலிருந்த பெருமுரசுகள் முழங்கத்தொடங்கின. அவ்வொலி கேட்டு நகர் முழுக்க இருந்த பலநூறு முரசுகள் ஒலியெழுப்பின. சகுனியை வரவேற்கும் முகமாக அரண்மனைக்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி இனிய ஓசையை எழுப்பத்தொடங்கியது.

தேர்வாயிலைத் திறந்து சகுனி வெளியே இறங்கினான். மார்பில் பொற்கவசமும், தோள்களில் தோளணிகளும், கைகளில் வைரங்கள் ஒளிவிட்ட கங்கணங்களும், தலையில் செங்கழுகின் சிறகு சூட்டப்பட்ட மணிமுடியும், காதுகளில் அனல்துளிகளென ஒளிசிந்திய மணிக்குண்டலங்களும், கழுத்தில் துவண்ட செம்மணியாரமும், செவ்வைரப்பதக்கமாலையும் அணிந்து இளஞ்செந்நிறப்பட்டாடை உடுத்தி வந்த அவனைக்கண்டதும் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் வாழ்த்தொலி எழுப்பினர். அவன்மேல் மலர்களும் மஞ்சளரிசியும் அலையலையாக எழுந்து வளைந்து பொழிந்தன.

விதுரன் வணங்கியபடி முன்னால் சென்று சகுனியை எதிர்கொண்டான். இருபக்கமும் அமைச்சர்களும் தளபதிகளும் சென்றனர். விதுரன் தன் அருகே வந்த சேவகனின் தாலத்தில் இருந்து பசும்பால் நுரையுடன் நிறைந்த பொற்குடத்தை எடுத்து சகுனியிடம் நீட்டி "அஸ்தினபுரியின் அமுதகலசம் தங்களை ஏற்று மகிழ்கிறது இளவரசே" என்றான். சகுனி உணர்ச்சியற்ற கண்களுடன் உதடுகள் மட்டும் விரிந்து புன்னகையாக மாற "காந்தாரம் சிறப்பிக்கப்பட்டது" என்று சொல்லி அதைப் பெற்றுக்கொண்டான்.

"பேரரசியாரும் பிதாமகரும் இன்று மாலை தங்களை அவைமண்டபத்தில் சந்திப்பார்கள்" என்றான் விதுரன். சகுனி தலைவணங்கி "நல்வாய்ப்பு" என்றான். விதுரன் "அஸ்தினபுரியின் அமைச்சர்களனைவரும் இங்குள்ளனர்" என்றான். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் வந்து சகுனிக்கு வாழ்த்தும் முகமனும் சொல்லித் தலைவணங்கினர். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் சகுனியை அணுகி தங்கள் வாள்களை சற்றே உருவி தலைதாழ்த்தி வணங்கினர்.

சகுனி அவர்களனைவருக்கும் முகமனும் வணக்கமும் சொல்லித் தலைவணங்கினான். "இளவரசரே, தங்களை அழைத்துச்செல்ல முறைப்படி அரசரதம் வந்துள்ளது. அதில் ஏறி நகர்வலம் வந்து அரண்மனைபுகுதல் முறை" என்றான் விதுரன். திரும்பி விதுரன் சுட்டிக்காட்டிய அமைச்சர்களுக்கான ரதத்தை நோக்கிய சகுனி மெல்லிய சலிப்பு எப்போதும் தேங்கிக்கிடந்த விழிகளுடன் "இவ்வகை ரதத்திலா இங்கு அரசர்கள் நகருலாவுகின்றனர்?" என்றான். விப்ரர் "அரச ரதம் வேறு" என்றார். சகுனி "காந்தார நாட்டில் மன்னர்கள் அணிரதத்தில் ஏறியே நகருலா செல்வார்கள். அவர்களை அரசகுலத்தோர் மட்டுமே வந்து எதிரீடு செய்து அழைத்துச் செல்வார்கள்" என்றான்.

விதுரன் தலைவணங்கி "இங்குள்ள இளவரசர்கள் இருவரும் சற்றே உடற்குறை கொண்டவர்களென தாங்களறிவீர்கள்" என்றான். "ஆம், ஆனால் பிதாமகர் பீஷ்மர் இன்னும் முதுமையை அடையவில்லை" என்ற சகுனி "நான் என் அணிரதத்திலேயே நகர் நுழைகிறேன்" என்றான். "தங்கள் ஆணை அதுவென்றால் ஆகுக!" என்றான் விதுரன். வியாஹ்ரதத்தரிடம் சகுனி "படைத்தலைவரே நீர் இங்கே நின்று தொடர்ந்து வரும் என் படைகளை நான்காகப்பிரித்து நகரெங்கும் தங்கவையுங்கள். கருவூல அதிகாரி யார்?" என்றான்.

வியாஹ்ரதத்தர் விதுரனை அரைக்கண்ணால் பார்த்தபின் "ஆணை இளவரசே" என்றார். லிகிதர் "கருவூலம் என் காப்பு" என்றார். "இங்கே வந்துள்ள செல்வத்துடன் எங்கள் கருவூலநாதர் சுருதவர்மரும் வந்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப்பொருட்களையும் கருவூலக்கணக்குக்குக் கொண்டுசெல்லுங்கள். நாளை மறுநாள் எனக்கு அனைத்துக் கணக்குகளும் ஓலையில் வந்துசேர்ந்தாகவேண்டும்" என்றான் சகுனி. "ஆம், ஆணை" என்று லிகிதர் தலைவணங்கினார்.

"இங்கே ஒட்டகங்களுக்காக தனியதிகாரிகள் எவரேனும் உள்ளனரா?" என்று சகுனி கேட்டான். "இல்லை. யானைக்கொட்டிலுக்கு அதிபராக வைராடர் இருக்கிறார்." சகுனி தன் தாடியை வருடியபடி "வைராடரே, ஒட்டகங்கள் ஒருபோதும் மழையில் நனையலாகாது. ஈரத்தில் படுக்கக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறைக்குமேல் நீர் அருந்தலாகாது. என் ஒட்டகக்காப்பாளர் பிரசீதர் வந்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுங்கள்" என்றபின் விதுரனிடம் "செல்வோம்" என்றான்.

சகுனியின் ரதத்தைத் தொடர்ந்து அவனுடைய அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்தனர். அவர்கள் கோட்டை முகப்பிலேயே நின்றுவிட சகுனியும் மங்கலப்படைகளும் அஸ்தினபுரியின் அரசவீதிகள் வழியாக அணியூர்வலம் செய்தனர். உப்பரிகைகளில் கூடி நின்ற நகர்ப்பெண்கள் மஞ்சளரிசியும் மலரும் தூவி அவர்களை வாழ்த்தி கூவினர். அரண்மனை வாயிலில் அஸ்தினபுரியின் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் வைதிகரும் கூடி நின்று அவனை வரவேற்றனர். வைதிகர் நிறைகுடநீர் தெளித்து அவனை வாழ்த்த பரத்தையர் மஞ்சள்நீரால் அவன் பாதங்களைக் கழுவி மலர்தூவி அரண்மனைக்குள் ஆற்றுப்படுத்திச் சென்றனர்.

சகுனி தன் மாளிகைக்குள் சென்றதும் விதுரன் தன் ரதத்தில் மீண்டும் கோட்டைமுகப்புக்குச் சென்றான். ஒரு காவல்மாடத்திலேறி நோக்கியபோது சகுனியின் பெரும்படை புதுமழைவெள்ளம் போல பெருகிவந்து பல கிளைகளாகப்பிரிந்து நகரை நிறைத்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. வடக்கு திசையில் இருந்த கருவூலக்கட்டடங்களுக்கு முன்னால் பெருமுற்றத்தில் சகுனியுடன் வந்த யானைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் பொதிவண்டிகளும் ஒன்றையொன்று முட்டி நெரித்துக்கொண்டு நின்றன.

விதுரன் கீழிறங்கி கோட்டைமுகப்புக்குச் சென்றான். சகுனியின் படைகள் அப்போதும் உள்ளே நுழைந்துகொண்டே இருந்தன. கோட்டைமீது ஏறி மறுபக்கம் நோக்கியபோது படைகளின் கடைநுனி தெரியவில்லை. சிந்தனையுடன் அவன் இறங்கி கீழே வந்தபோது சத்ருஞ்சயர் அவனை நோக்கி புரவியில் வந்தார். "அமைச்சரே, நகரமே நிறைந்து அசைவிழந்து விட்டது. அனைத்து தெருக்களிலும் படைகளும் வண்டிகளும் நெரித்து நிற்கின்றன" என்றார். "நமது வீரர்கள் செயலற்றுவிட்டனர். எவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை."

விதுரன் புன்னகைசெய்து "ஆம், கண்டேன்" என்றான். "நான் சோமரையும் உக்ரசேனரையும் வரச்சொன்னேன். மூவரும் பேசி என்ன செய்யலாமென முடிவெடுக்கப்போகிறோம். இப்போதைய திட்டமென்னவென்றால்..." எனத் தொடங்கிய சத்ருஞ்சயரை மறித்த விதுரன் "படைத்தலைவரே, இப்போது நீங்கள் என்ன செய்தாலும் அது தீங்காகவே முடியும். எத்தனை நுண்மதியாளன் திட்டம் வகுத்து செயல்பட்டாலும் மேலும் பெரிய இக்கட்டுகளே நிகழும்" என்றான்.

சத்ருஞ்சயர் திகைத்த விழிகளுடன் நோக்கினார். "இந்நகரம் நூற்றுக்கணக்கான தெருக்களையும் தெருக்களுக்கிடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளையும் கொண்டது. வந்து கொண்டிருப்பது ஆயிரக்கணக்கான வண்டிகள். எந்த மேதையாலும் இவை இணையும் பல லட்சம் நிகழ்தகவுகளை கணக்கிட்டுவிடமுடியாது. அவன் ஆயிரம் தகவுகளை கணக்கிட்டால் பல்லாயிரம் தகவுகள் கைவிட்டுப்போகும்."

"அப்படியென்றால் என்ன செய்வது?" என்றார் சத்ருஞ்சயர். "மழைவெள்ளம் எப்படி நகரை நிறைக்கிறது? அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மைசெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி"

சத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். "நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்" என்றான் விதுரன் சிரித்தபடி. "அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்." "நான் இப்போது என்ன செய்வது?" என்றார் சத்ருஞ்சயர். "செல்வங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அனைவருக்கும் உணவும் நீரும் கிடைக்கவேண்டும். அதைமட்டும் செய்யுங்கள்!"

விதுரன் தன் மாளிகையை அடைந்து நீராடி உணவருந்தி ஒய்வெடுக்கும் முன் தன் சேவகனிடம் அனைத்து செய்திகளையும் குறித்துக்கொள்ளும்படியும் எழுப்பவேண்டாமென்றும் சொன்னான். அவன் எண்ணியதுபோலவே கண்விழித்ததும் பேரரசியும் அம்பிகையும் அம்பாலிகையும் அவனை அழைத்திருந்தனர். அவன் ஆடைமாற்றிக்கொண்டு பேரரசி சத்யவதியின் அரண்மனையை அடைந்தான். சியாமை அவனுக்காக வாயிலிலேயே காத்திருந்தாள். "பேரரசி இருநாழிகை நேரமாக உங்களுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சரே" என்றாள்.

"ஆம், அறிவேன்" என்றான் விதுரன். "மேலும் இருவர் காத்திருக்கிறார்கள்" என்றபோது அவன் உதடுகள் விரிந்தன. சியாமையும் புன்னகைசெய்தாள். "ஒரு சந்திப்புக்கு முன் சிலநாழிகைநேரம் காத்திருப்பது நன்று. நம்முள் பெருகி எழும் சொற்களை நாமே சுருட்டி அழுத்தி ஓரிரு சொற்றொடர்களாக ஆக்கிக்கொள்வோம். சொல்லவிழைவதை தெளிவாகச் சொல்லவும் செய்வோம்." சியாமை நகைத்தபடி "அனைவரிடமும் விளையாடுகிறீர்கள்" என்றாள். "சதுரங்கக் காய்கள் அல்லாத மானுடரை நீங்கள் சந்திப்பதே இல்லையா அமைச்சரே?"

சத்யவதி விதுரனைக் கண்டதும் எழுந்துவந்தாள். "என்ன, கூப்பிட்டனுப்பினால் இவ்வளவு நேரமா?" என்றாள். பேரரசிக்குரிய தோரணையை அவள் அவனிடம் காட்டுவதில்லை. "உனக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டு சியாமையை மீண்டும் அனுப்பினேன்." விதுரன் "உடல்நிலை குலையவேண்டுமென காந்தாரர் நினைத்திருப்பார்" என்றான். "இன்று காலை ஒரு பேரருவியின் கீழ் நான்குநாழிகை நேரம் நின்றிருந்தேன்." சத்யவதி சிரித்தபடி "ஆம், சொன்னார்கள். ஆணவப்பெருமழை" என்றாள். "ஆணவம் அரசகுணம் அல்லவா?" என்றான் விதுரன். சத்யவதி சிரித்தபடி "வர வர உன் சொற்களை நீ சென்றபின்னர்தான் நான் புரிந்துகொள்கிறேன்" என்றாள்.

சத்யவதி அமர்ந்ததும் விதுரன் அவளருகே அமர்ந்துகொண்டு "மலர்ந்திருக்கிறீர்கள் பேரரசியே" என்றான். "ஆம், என் வாழ்நாளில் நான் இதைப்போல உவகையுடன் இருந்த நாட்கள் குறைவே. அனைத்தும் நான் எண்ணியபடியே முடியப்போகின்றன" என்றாள். "ஆம், நானும் அவ்வண்ணமே நினைக்கிறேன்" என்றான் விதுரன். சத்யவதி "நீ உன் பொருளற்ற ஐயங்களை என் மீது சுமத்தி இந்த உவகையை பறிக்கவேண்டியதில்லை... சற்றே வாய்மூடு" என அதட்டினாள். விதுரன் நகைத்தபடி "நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை பேரரசியே" என்றான்.

"இன்றுமாலை நான் சகுனியை சந்திக்கவிருக்கிறேன்" என்றாள் சத்யவதி. "அவன் என்னிடம் நேரடியாகவே திருதராஷ்டிரனின் முடிசூட்டுவிழா குறித்துப்பேசுவான் என நினைக்கிறேன்." விதுரன் "ஆம், அதுதான் நிகழும்" என்றான். "அதில் நமக்கு எந்தத் தடையும் இல்லை. நீ கூறியபடி அனைத்து நூல்களையும் விரிவாக ஆராய்ந்து சொல்லும் நிமித்திகர்களை அமைத்துவிட்டேன். விழியிழந்தவன் மன்னனாக ஆவதற்கு நெறிகளின் தடை என ஏதுமில்லை. அமைச்சும் சுற்றமும் மன்னனின் கண்கள் என்கின்றது பிரகஸ்பதிநீதி. என் மைந்தனுக்கு நீயும் சகுனியும் இரு விழிகள். வேறென்ன?"

"மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது" என்றான் விதுரன். "அதற்கென்ன? எந்த முடிசூடலுக்கும் நால்வகை வருணமும் ஐவகை நிலமும் ஆணையிடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்போதுமுள்ளதுதானே?" என்று சத்யவதி கேட்டாள். "ஆம்." "ஏன் தயங்குகிறாய்? நீ எதையாவது எதிர்பார்க்கிறாயா?" "இல்லை பேரரசியே... அனைத்தும் சிறப்புற முடியுமென்றே நினைக்கிறேன்." "அச்சொல்லிலேயே ஒரு இடைவெளி உள்ளதே..."  "பேரரசியே நான் அமைச்சன். அனைத்துத் திசைகளையும் ஐயத்துடன் நோக்கக் கடன்பட்டவன்."

"நீ முதலில் உன்னை ஐயத்துடன் நோக்கு..." என்று சத்யவதி பொய்ச்சினத்துடன் சொன்னாள். "நான் உன்னை வரவழைத்தது இதற்காகத்தான். திருதராஷ்டிரனின் மணிமுடிசூடல் பற்றி சகுனி கேட்டால் இந்த இளவேனில் காலத்திலேயே அதை நிகழ்த்திவிடலாமென நான் வாக்களிப்பதாக உள்ளேன். இதை நீயே பீஷ்மரிடமும் திருதராஷ்டிரனிடமும் சொல்லிவிடு. அனேகமாக இன்றே திருதராஷ்டிரனின் முடிசூட்டுநாள் முடிவாகிவிடுமென எண்ணுகிறேன்." "ஆம் பேரரசியே அதுவே முறை" என்றான் விதுரன்.

அவன் வெளியே வந்தபோது சியாமை பின்னால் வந்தாள். "அடுத்த சந்திப்பு இளையபிராட்டியா?" என்றாள். "ஆம் வேறெங்கு?" என்றான் விதுரன். "என்ன முறை அது? உங்கள் கணிப்புகள் எனக்கு விளங்கவில்லை அமைச்சரே" என்றாள் சியாமை சிரித்தபடி. "இன்று பேரரசி என்னிடம் பேசும்போது நான் இளைய அரசியைப் பற்றி ஏதேனும் சொல்கிறேனா என்று அகம்கூர்ந்தபடியே இருந்தார். அப்படியென்றால் அவருள் ஒரு முள்போல ஓர் ஐயம் இருக்கிறது."

"முள்தான்... ஆனால் பூமுள்" என்றாள் சியாமை சிரித்துக்கொண்டு. "அமைச்சரே, சிறிய அரசி அம்பாலிகை என்னதான் செய்துவிடமுடியும்? இன்னும் தன் படுக்கையறையில் பாவையை வைத்துக்கொண்டு விளையாடுபவள்." விதுரன் "ஆம், ஆனால் அவள் அன்னை. அன்னையரிடம் கூடும் பேராசையைக் கண்டு பிரம்மனே திகைத்துவிடுவான். பேராசையால் அவர்கள் கொள்ளும் மதிநுட்பமும் குரூரமும் அளவிறந்தவை." சியாமையின் கண்களில் திகைப்பு வந்தது. "பூமுள்ளாயினும் கண்ணில் குத்துமென்றால் ஆபத்து அல்லவா?" என்றபின் விதுரன் படியிறங்கினான்.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 3 ]

விதுரன் அம்பாலிகையின் மாளிகைமுற்றத்தை அடைந்தபோது அவனுக்காக சாரிகை காத்து நின்றிருந்தாள். அவளை நோக்கி ஓடிவந்து "சிறிய அரசியார் சினம் கொண்டு உங்கள் மாளிகைக்கே கிளம்பிவிட்டார்கள் அமைச்சரே. நான் அது பீடன்று என்று அவர் கைகளைப்பற்றி அமைதிப்படுத்தினேன்" என்றாள். "வந்திருக்கலாமே, ஏழை அமைச்சனுக்கு அது பெரிய கௌரவமாக அமைந்திருக்குமல்லவா?" என்றான் விதுரன். அவள் திகைத்தபின் "ஆனால்..." என்று சொல்லவந்து அதன்பின்னரே விதுரன் நகையாடியிருக்கிறான் என்று புரிந்துகொண்டு புன்னகை செய்தாள்.

மாளிகைக்குள் முகமண்டபத்தில் பீடத்தில் விதுரனை அமரச்செய்துவிட்டு சாரிகை உள்ளே ஓடினாள். உள்ளே உரத்தகுரலில் அம்பாலிகை "அவனை நான் சந்திக்கப்போவதில்லை என்று சொல். உடனடியாக அவன் இங்கிருந்து கிளம்பியாகவேண்டுமென்று சொல்" என்று சொல்வது கேட்டது. "அப்படியென்றால் நான் கிளம்புகிறேன் சிறிய அரசி..." என விதுரன் எழுந்ததுமே அம்பாலிகை பாய்ந்து வெளியே வந்து "நீ யாருடைய பணியாள் என்று எனக்குத்தெரியும்... நான் அழைத்தபோது நீ ஏன் தவிர்த்தாய் என்றும் புரிந்துகொண்டேன்" என்று முகம் சிவக்க கூவினாள்.

"அரசி, நான் இந்த நாட்டை ஆளும் பேரரசியின் பணியாள். வேறு எவருடைய பணியாளும் அல்ல" என்றான் விதுரன். "பேரரசியே இன்று அவளுடைய பணியாளாக இருக்கிறாள் என நானறிவேன். எனக்கு இந்த அஸ்தினபுரியில் எவருமில்லை. அன்புக்கோ ஆதரவுக்கோ எந்தக்குரலும் இல்லை" மூச்சிரைக்க அம்பாலிகை பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தாள். தன் தலையை கைகளில் ஏந்தியபடி "ஆனால் எனக்கு என் தெய்வங்களின் துணை உண்டு. இக்கணம் வரை என் தெய்வங்கள் என் முறையீட்டை கேளாமலிருந்ததில்லை. என்னை தன் சேடியாக ஆக்கவேண்டுமென அவள் எண்ணினாள். என் வேண்டுகோளைக் கேட்ட தெய்வங்கள் அவள் மகனை விழியிழந்த மூர்க்கனாக்கின. இன்று அந்த அரக்கனை அரசனாக்க எண்ணுகிறாள். என் தெய்வங்கள் ஒருபோதும் அதை அனுமதிக்காது" என்றாள்.

விதுரன் எந்த உணர்ச்சியும் தெரியாத முகத்துடன் "அரசி, முறைப்படி அவர் இந்நாட்டுக்கு மன்னர். முறைமை மீறப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மக்களும் சான்றோரும் ஏற்றுக்கொள்ளாத அரசுகள் நீடிப்பதுமில்லை" என்றான். "மக்களும் சான்றோரும் தொல்நெறிக்கும் நூல்நெறிக்கும் கட்டுப்பட்டவர்கள். விழியிழந்தவர் அரசாள எந்த நெறி ஒப்புகிறது?" என்றாள் அம்பாலிகை. "ஒப்பும் நெறிகள் பல உள்ளன. அவற்றை கண்டறிந்தபின்னரே மூத்த இளவரசரை மன்னராக்கும் முடிவை பேரரசியும் பிதாமகரும் எடுத்திருக்கிறார்கள்."

"அது பொய்நெறி... அந்த நெறிகளும் நூல்களும் சமைக்கப்பட்டவை... நானறிவேன்... என்ன நடக்கிறதென நான் நன்றாகவே அறிவேன்" என அம்பாலிகை உடைந்த குரலில் கூவினாள். "அரச ஓலை ஒன்றை வாசித்தறியமுடியாதவன் எப்படி நாடாளமுடியும்? எந்த நூல் அதை ஒப்பும்?" என்றாள். "அரசி, வெயிலில் நிற்கமுடியாதவர் மட்டும் நாடாளலாமா?" என்றான் விதுரன். சினத்துடன் பாய்ந்தெழுந்த அம்பாலிகை "அவன் ஏன் வெயிலில் நிற்கவேண்டும்? வெண்கொற்றக்குடைக்கீழ் நிற்கட்டும்... அவனுக்குக் கவரி வீச பாரதத்தின் முடிமன்னர்கள் வந்து நிற்பார்கள்" என்றாள்.

விதுரன் "தங்கள் சினம் எனக்குப்புரியவில்லை அரசி" என்றான். "எதனால் மூத்தமன்னரின் முடிசூட்டை நீங்கள் விரும்பவில்லை... தங்கள் மைந்தர் மன்னராகவேண்டுமென்பதற்காகவா? இங்கே எவர் முடிசூடினாலும் தங்கள் மைந்தர் அரசநிலையில்தானே இருப்பார்?" அம்பாலிகை கண்களில் நீர்ப்படலத்துடன் சினத்தில் நெளிந்த உதடுகளுடன் "அந்த வீண்சொற்களை நான் இனிமேலும் நம்பப்போவதில்லை. அவன் முடிசூடினால் அந்த முடி இருக்கப்போவது அவள் மடியில். விழியிழந்தவனை முன்வைத்து அவள் இந்த நாட்டின் பேரரசியாகவிருக்கிறாள். அவள் காலடியில் என் மகன் இரந்து நிற்பதை நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்" என்றாள்.

"அரசி, உங்கள் அச்சங்கள் என்ன?" என்று அவள் கண்களைக் கூர்ந்து நோக்கி விதுரன் கேட்டான். அவள் கண்கள் திடுக்கிட்டு அதிர்ந்தன. "அச்சமா?" என்றாள். "ஆம் நீங்கள் அஞ்சுவது எதை? எதன்பொருட்டு நீங்கள் துயில்நீக்குகிறீர்கள்?" அம்பாலிகை "எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் நூல்முறைக்காக மட்டுமே பேசுகிறேன்" என்றாள். ஆனால் ஒருகணத்தில் அவள் நெஞ்சு விம்ம குரல் உடைந்தது. "என் மகனுக்கு எவருமில்லை. அவன் வலிமையற்றவன். அவன்..." உதடுகளை அழுத்தி கண்களை மூடி அவள் அவ்வெண்ணத்தை அடக்கமுயன்றாள். அதைமீறி அது வெளிவந்தது. "அவனுக்கு ஆண்மையும் இல்லை."

அச்சொற்களை அவளே கேட்டு அஞ்சியதுபோல திகைத்து அவனை நோக்கினாள். அவள் உதடுகள் மெல்லப்பிரிந்த ஒலி அவனுக்குக் கேட்டது. அந்தச்சொற்களை எப்படிக் கடந்துசெல்வது என அவளுக்குத்தெரியவில்லை. அக்கணமே உடைந்து அழத்தொடங்கினாள். "என் பிழைதான். என் பெரும்பிழைதான் அனைத்துமே... அவனை நான்தான் வெண்பளிங்கு பாண்டுரனாகப் பெற்றேன். என் பேதமையே என் உதரத்தில் கருக்கொண்டது. நானேதான் என் புதல்வனுக்கு எதிரி" என தலையை அறைந்துகொண்டு அழுதாள்.

ஒரு சொல்கூட பேசாமல் விதுரன் அவளை நோக்கி அமர்ந்திருந்தான். அழுகை பெண்களை சமநிலைக்குக் கொண்டுவரும் என்றும், அழும்போது அவர்களை ஆறுதல்படுத்தமுயல்வது தீயை நெய்யால் அணைக்கமுயல்வது என்றும் அவன் அறிந்திருந்தான். அவர்கள் மீண்டபின் மழைவிடிந்த வானென மனம் இருக்கையில் ஒவ்வொரு சொல்லும் வீரியம் கொண்ட விதைகளாகுமென்றும் அவன் கணித்திருந்தான். வலுத்த கேவல்களால் உடலதிர, தொண்டையும் கன்னங்களும் இழுபட்டுத் துடிக்க, அம்பாலிகை அழுதாள். மேலாடையால் கண்ணீரை துடைத்துக்கொண்டே இருந்தாள். ஈரமரங்களை உலுக்கும் மழைக்காற்று போல விம்மல்கள் அவள் அழுகையை உதறச்செய்தன.

அம்பாலிகை பெருமூச்சுடன் அவனைப்பார்த்தாள். "ஆம், என் மைந்தன் ஆற்றலற்றவன். தன்னைப்பார்த்துக்கொள்ள இயலாதவன். விழியிழந்தவனுக்காவது உடல்வல்லமை என ஒன்றிருக்கிறது. சின்னாட்களில் அவனுக்கு மைந்தர்கள் பிறப்பார்கள். பதினொரு மனைவியரை அந்தப்புரத்தில் நிறைத்து வைத்திருக்கிறான். அவன் புதல்வர்கள் நாளை இந்நாட்டை நிறைப்பார்கள். அவளுடைய ஆணவமும் அலட்சியமும் அவர்களில் பேருருவம் கொண்டிருக்கும்... ஆம் அது உறுதி... அதை இப்போதே காண்கிறேன். அப்படியென்றால் என் மைந்தன் என்ன ஆவான்? முதுமையில் இழிவுண்டு கைவிடப்பட்டு தனித்து இறப்பானா என்ன?"

உதட்டை இறுக்கியபடி கண்கள் விரிய அவள் சொன்னாள். "ஒருபோதும் அதற்கு நான் ஒப்பமாட்டேன். என் அகத்தின் கடைத்துளி எஞ்சும்வரை என் மைந்தனுக்குரிய இடத்தை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கவே நான் போரிடுவேன். அதற்காக எப்பழியை ஏற்றாலும் சரி. எவரால் வெறுக்கப்பட்டாலும் சரி. என் அறம் அதுவே... ஆம்..." அவள் கண்களில் பித்தின் ஒளி குடியேறியபோது அவள் இன்னொருத்தியாக உருமாறினாள்.

"நான் என் தமக்கையின் கைபற்றி இந்நகரில் நுழைந்தவள். அவளை என் அன்னையின் இடத்தில் அமைத்திருந்தவள். ஆனால் அவள் உதரத்தில் கருநுழைந்ததுமே அறிந்தேன், அவள் என் அன்னை அல்ல என்று. அவள் அக்கருவுக்கு மட்டுமே அன்னை என்று. அக்கருவுக்கு உணவு தேவையென்றால் என்னைக் கொன்று உண்ணவும் அவள் தயங்கமாட்டாளெனறு ஒருநாள் உணர்ந்தபோதுதான் நான் என்னையும் கண்டடைந்தேன். நானும் எவருடைய தங்கையுமல்ல. நான் என் மைந்தனின் அன்னை மட்டுமே. வேறு எவரும் அல்ல, அன்னை. என் மைந்தனுக்குத் தேவை என்றால் என் அனைத்து தெய்வங்கள் முகத்திலும் காறியுமிழத் தயங்க மாட்டேன்."

அதை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் என்று விதுரன் எண்ணினான். அழுதபோதே அவள் உணர்ச்சிகள் கீழிறங்கத் தொடங்கிவிட்டன. சொற்கள் வழியாக அவற்றை உந்தி உந்தி மீண்டும் வானில் நிறுத்த முயல்கிறாள். அந்த உணர்ச்சிகளின் உச்சியில் அவள் தன்னுள் அறியும் தன் ஆற்றலை விரும்புகிறாள். அந்த நிலையில் தன்னை வகுத்து நிலைநிறுத்திக்கொள்ள விழைகிறாள். அதற்காகச் சொற்களை சுற்றிச்சுற்றி அடுக்கிக்கொள்கிறாள். ஆனால் திறனற்ற சொற்களைத்தான் அவளால் சொல்லமுடிகிறது. இத்தருணத்தில் எத்தனையோ அன்னையர் சொல்லிச் சொல்லி ஆற்றுக்கு அடியில் கிடக்கும் உருளைக்கல் போல மழுங்கி விட்ட சொற்களை.

இவள் சற்று காவியம் கற்றிருக்கலாம் என விதுரன் எண்ணிக்கொண்டான். காவியம் இந்தப் பொய்யுணர்ச்சிகளை மெய்யாகக் காட்டும் சொற்களை அளிக்கும். நம்மைநாமே உச்சங்களில் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளமுடியும். இப்படி பேதையென உருண்டு கீழிறங்கவேண்டியதில்லை. இல்லை, இவை பொய்யுணர்ச்சிகளல்ல. இவை மெய்யே. ஆனால் அரைமெய். அரைமெய் என்பது அரைப்பொய். அரைப்பொய் என்பது பொய்யை விட வல்லமை மிக்கது. பொய் கால்களற்ற மிருகம். அரைப்பொய் மெய் என்னும் நூறுகைகால்கள் கொண்ட கொலைமிருகம்.

அவள் மறைப்பது ஒன்றைத்தான். அவளைச்சூழ்ந்திருக்கும் அனைத்துவிழிகளிலும் அவளை அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கும் விதத்தை அறிந்துகொண்டிருக்கிறாள். அரசமகள் என்றாலும் ஆற்றலும் அறிவும் இல்லாத பேதை. இளமையில் அவளில் அழகை விளைவித்த அந்தப்பேதமை முதுமையை நெருங்கும்தோறும் இளிவரலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இளமையில் தன் பேதமையில் மகிழ்ந்து நகைத்த சுற்றவிழிகளெல்லாம் எக்கணத்தில் இளிநகையை காட்டத் தொடங்கின என அவள் அகம் திகைக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் இழிச்சித்திரத்தை அவ்விழிகளில் கண்டு கூச்சம் கொள்கிறது. பேதைநாடகத்தை மீளமீள ஆடி மேலும் அன்பைக் கோருகிறது. அன்புக்குப்பதில் மேலும் இளிவரலே வரக்கண்டு ஒரு கட்டத்தில் சினந்து சீறித் தலைதூக்குகிறது.

இவளுக்கு இன்று தேவை ஒரு மணிமுடி, ஒரு செங்கோல். ஒருவேளை அலகிலா ஊழ்நடனம் அவற்றை இவள் கையில் அளிக்குமென்றால் பாரதவர்ஷம் கண்டவர்களிலேயே மிகக்கொடூரமான ஆட்சியாளராக இருப்பாள். இவள் தன்னைப்பற்றி பிறர்கொள்ள விழையும் சித்திரத்தைச் சமைப்பதற்காக குருதியை ஓடவைப்பாள். தோன்றித் தோன்றி தானே அழியும் அச்சித்திரத்தை கற்சிற்பமாக ஆக்க இவள் எத்தனை குருதியை ஓடவிடவேண்டியிருக்கும். பாரதவர்ஷம் அதற்குப் போதுமானதாக இருக்குமா என்ன?

அவன் அமைதியைக் கண்டு அம்பாலிகை தன்னை மெல்ல திரட்டித் தொகுத்துக்கொண்டாள். "என் மைந்தனைப்பற்றி அந்தப்புரத்தில் இளிநகைகளை அவள் பரவவிடுகிறாள் என்று நான் அறிவேன். என் உளவுச்சேடி வந்து சொன்னாள், சூதப்பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று" என்றாள். விதுரன் அவள் நெஞ்சோடும் முறையை உணர்ந்தவன்போல "அவருடைய துணைவி அவரில் மகிழ்ந்திருக்கிறாள் என்றார்கள்" என்றான். ஆனால் அதைப்பற்றிக்கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக அகத்தின் நுண்ணிய பகுதி ஒன்று தீண்டப்பட்டு அவள் சினந்தெழுந்தாள். "ஆம் மகிழ்ந்திருக்கிறாள். கன்றுமேய்த்து காட்டில் அலைந்த யாதவப்பெண் ஷத்ரியர்களின் மணிமுடியைச் சூடி மாளிகைக்கு வந்திருக்கிறாளல்லவா?" என்றாள்.

விதுரன் பெருமூச்சுவிட்டான். தன்னுள் நிறைவை அறியாத பெண்மனம் பிற எதிலும் நிறைவைக் காண்பதில்லை. "என் மைந்தனின் திறனின்மையை உலகுக்குச் சொல்லும் பெருமுரசமே அவள்தான். ஓங்கி உலகாளும் ஹஸ்தியின் குலம் எப்படி யாதவப்பெண்ணை மணமுடிக்கச் சென்றது? விழியிழந்தவனுக்குக் கூட காந்தாரப்பேரரசி வந்திருக்கிறாளே? அதோ அங்கே கங்கைவெள்ளம் நகர்புகுந்ததுபோல அவள் நாட்டிலிருந்து பெண்செல்வம் வந்து நிறைந்திருக்கிறது என்கிறார்கள். நகரத்தெருக்களே கருவூலங்களாகிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டனர் என்கிறார்கள்.‘ என் மைந்தனுக்கு குந்திபோஜன் எட்டு மாட்டு வண்டிகளில் பெண்செல்வம் அனுப்பினான் என்பதை அந்தச்சூதன் சேர்த்துக்கொள்ளாமலா இருப்பான்?"

அம்பாலிகையின் கொந்தளிப்புக்கான தொடக்கமென்ன என்று முன்னரே அறிந்திருந்தாலும் அச்சொற்கள் வழியாக அதைக்கேட்டபோது விதுரனால் புன்னகைசெய்யாமலிருக்க இயலவில்லை. "அது செல்வமா, அஸ்தினபுரிமீது வைக்கப்படும் காந்தாரத்தின் கொலைவாளா என நான் இன்னும் தெளிவடையவில்லை அரசி" என்றான். "ஆம், அதைத்தான் நான் சொல்லவருகிறேன். இந்த அஸ்தினபுரியை இனி ஆளப்போவது யார்? அந்தப்பாலைவனத்து ஓநாய் அல்லவா? அவன் முன் என் மைந்தன் உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்கவேண்டுமா?"

"அரசி நான் உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். இந்த இளவேனிற்காலத்திலேயே மூத்த இளவரசருக்கு மணிமுடிசூட்ட பேரரசி எண்ணியிருக்கிறார்கள். இன்று மாலை அவைச்சந்திப்பில் அச்சொல்லை சகுனிக்கு அளிக்கவுமிருக்கிறார்கள். அம்முடிவை தாங்கள் மாற்றமுடியாது. அதை மனமுவந்து ஏற்கையில் தங்கள் புதல்வருக்கான கொடியும் பீடமும் உறுதியாக இருக்கும். வீண் எதிர்ப்பில் அவைக்கசப்பை ஈட்டினீர்களென்றால் தங்கள் புதல்வருக்குத் தீங்கிழைத்தவராவீர்கள்."

"விழியிழந்தவன் அரசனாக என்ன நெறியென நானும் விசாரித்தறிந்தேன் விதுரா" என்றாள் அம்பாலிகை. "சுற்றமும் அமைச்சும் அதை முழுதேற்கவேண்டும். திருதராஷ்டிரனின் முதற்சுற்றம் என் மைந்தனே. அவன் ஏற்கவில்லை என்றால் முடிசூட முடியாது. அமைச்சிலும் சிலரது குரலை நான் அவையில் எழுப்ப இயலும்." விதுரன் அதை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. "அரசி, தங்களால் இதைக் கையாளமுடியாது. அரசுசூழ்தலை அந்தப்புரத்துச் சேடிப்பெண்களின் அறிவுரையைக்கொண்டு செய்ய இயலாது."

"நான் செய்யவேண்டியதென்ன என்று நன்கறிவேன்" என்றாள் அம்பாலிகை. "என் மைந்தன் ஒப்புகை இன்றி விழியிழந்தவன் அரசனாகவே முடியாதென்றே நூல்கள் சொல்கின்றன. நீ மன்றில் முன்வைக்கவிருக்கும் மூன்றுநூல்களிலுமே அந்நெறி சொல்லப்பட்டுள்ளது." விதுரன் பெருமூச்சுடன் "இதுவே தங்கள் எண்ணமென்றால் இதைவெல்ல என்ன செய்யவேண்டுமென்பதையே நான் சிந்திப்பேன் அரசி" என்றான்.

"நான் இதை வீணாக உன்னிடம் கூறவில்லை. இதை நீ பேரரசியிடம் சொல். இன்று காந்தாரனுக்கு வாக்கு என ஏதும் அளிக்கவேண்டாமென்று தடுத்துவிடு!" விதுரன் அவள் முகத்தை நோக்கி "தடுத்துவிட்டு?" என்றான். "என் மைந்தனை இந்த நாட்டின் முழுமணிமுடிக்கும் உரிமையாளனாக ஆக்கமுடியாதென்று நானுமறிவேன். அவள் அதை ஏற்கமாட்டாள்" அவள் அகம் செல்லும் திசையை விதுரன் உய்த்தறிந்தான். "உத்தர அஸ்தினபுரிக்கு பாண்டு மன்னனாகட்டும்" என்றாள் அம்பாலிகை. விதுரன் சொல்ல வாயெடுப்பதற்குள் "அனைத்து அரசுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. இப்போது பாஞ்சாலம் அப்படி இரு நாடுகளாகத்தான் உள்ளது" என்றாள்.

"அனைத்தையும் எண்ணியிருக்கிறீர்கள்" என்றான் விதுரன் சிரித்தபடி. "ஆம், நான் இதையன்றி வேறெதையும் எண்ணுவதில்லை. பேரரசியிடமும் பிதாமகரிடமும் சொல். என் மைந்தனுக்கான மண் இல்லாமல் நான் அமைய மாட்டேன் என. என் மைந்தனை பிறிதொருவரை அண்டி வாழ்பவனாக ஆக்கிவிட்டு மண்மறையப்போவதுமில்லை என்று சொல்!" விதுரன் தலைவணங்கியபடி எழுந்தான். அம்பாலிகை எழுந்தபடி "நான் உனக்கு திருதராஷ்டிரன் மீதிருக்கும் பேரன்பை நன்கறிந்தவள். நீ ஒருபோதும் அவனுக்கு மாறான ஒன்றைச் செய்யமாட்டாய். ஆனால் நீ வியாசமாமுனிவரின் குருதி. அறமறிந்தவன். இவனும் உன் தமையனே. இவனை நீ கைவிடமாட்டாய் என்றறிந்தே உன்னிடம் சொன்னேன். உன் இரு தமையன்களும் முழுநிறைவுடன் வாழ இது ஒன்றே வழி" என்றாள்.

"அவ்வண்ணமே ஆகுக" என்று வணங்கி விதுரன் வெளியே வந்தான். தாழ்வாரத்தில் நடக்கும்போது அவனுள் புன்னகை விரிந்தது. எத்தனை அச்சங்கள். மானுட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம்தானோ? பிறன் என்னும் அச்சம். தன்னைப்பற்றிய பேரச்சம். கொலையும் அச்சத்தாலேயே. அஞ்சுவதற்கேதுமில்லை என்றால் இவர்களின் உலகமே வெறுமைகொண்டு கிடக்கும்போலும். எளியமனிதர்கள். எளியமனிதர்கள். மிகமிக எளிய மனிதர்கள். காலக்களியில் நெளியும் சிறுபுழுக்கள்.

ஏன் அச்சொற்களைச் சொல்லிக்கொள்கிறேன்? அச்சொற்கள் என்னுடையவை அல்ல. அவை நான் காவியத்திலிருந்து அடைந்தவை. அவற்றைச் சொல்லிச் சொல்லி நான் எதைக் கடந்துசெல்கிறேன்? வெறுப்பை. ஆம். இம்மனிதர்கள் மீது நான் அடையும் ஏளனத்தை. கபம் முற்றி பசுமைகொள்வதுபோல ஏளனம் இறுகி வெறுப்பாகிறது. என் மூச்சுக்கோளங்களை நிறைக்கிறது. ஒவ்வொருநாளும் நான் வாசிக்கும் காவியம் அவ்வெறுப்பைக் கழுவும் குளியல். ஆனால் நாளெல்லாம் என்மேல் படிந்துகொண்டே இருக்கிறது இது!

எவருக்கேனும் அது இயல்வதாகுமா என்ன? மானுடரின் காமகுரோதமோகங்களில் நீந்தியபடியே அவர்களை விரும்ப? அவர்களின் சிறுமைகளை புன்மைகளை தீமைகளைக் கண்டும் அவர்களிடம் மனம் கனிய? துளியேனும் தன்மீது ஒட்டாமல் இக்கீழ்மைகளில் திளைக்க. ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன? மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர்? சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா? அரதியில் விரதியில் நின்றிருக்கும் தன் மைந்தனைக் கண்ட தந்தை மனம் கொண்ட ஏக்கம்தானா அது?

ஆம், நான் என் பணியை செய்யத்தான் வேண்டும் என மாளிகை முகப்பில் நின்றபடி விதுரன் எண்ணினான். திரும்பி அம்பிகையின் மாளிகை நோக்கி நடந்தான். வாயிற்காவலர் வணங்கி அவனை வழியனுப்பினர். மாளிகையின் அவைக்கூடத்தில் அம்பிகை இருந்தாள். அவள்முன் இரண்டு ஓலைநாயகங்கள் அவள் கூற்றை எழுதிக்கொண்டிருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களை அனுப்பிவிட்டு அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டதும் மேலாடையை இயல்பாக இழுத்துப்போட்டபடி "என்ன சொல்கிறாள்?" என்றாள் அம்பிகை.

"தங்கள் ஒற்றர்கள் சொல்வதைத்தான்" என்றான் விதுரன். "அவள் எண்ணம் நடக்காது. அவளிடம் சொல், ஒருபோதும் இந்நாட்டை கூறுபோட பிதாமகர் பீஷ்மர் ஒப்பமாட்டார். என் மைந்தனுக்குரிய இந்நிலத்தைப் பிரிக்க நானும் முன்வரமாட்டேன்." விதுரன் "பிதாமகரின் நெஞ்சம் எனக்குத்தெரியும்" என்றான். அம்பிகை "என்ன?" என்றாள். "நாட்டைக் கூறிடவேண்டியதில்லை. ஆனால் சிறிய இளவரசர் இந்நாட்டின் தொலைதூரப்பகுதி ஒன்றை தன்னாட்சி புரியலாமே. மகதத்தின் தெற்கு அப்படித்தானே ஆளப்படுகிறது?"

அம்பிகை அவனைக்கூர்ந்து நோக்கி "அதைத்தான் விவாதித்துக்கொண்டிருந்தீர்களா?" என்றாள். விதுரன் "இல்லை, இது என் எண்ணம்" என்றான். "சிறிய அரசி ஐயமும் சினமும் கொண்டிருக்கிறார்கள். அரசி, அவர்கள் இயல்பாகவே தன் மைந்தனின் தமையனை நம்பவேண்டும். மூத்ததமையனின் அகவிரிவை நம்பாதவர் என எவருமில்லை. ஆனால் அவர்கள் நம்பவில்லை. நம்பாதபோது இந்நகரில் அவர்கள் இருக்க இயலாது. நம்பிக்கையின்மை மேலும் மேலும் கசப்புகளையே உருவாக்கும். அக்கசப்பு வளர்வது நாட்டுக்கு நலம்பயக்காது."

"அந்தக்கசப்பு இருக்கையில் அவள் கையில் நாட்டை அளிப்பது இன்னும் தீங்கானது" என்றாள் அம்பிகை. "அவள் மைந்தனுக்கு என் மைந்தன் நிலமளிக்கவேண்டுமென்றால் அதற்கான வரையறை என்ன? இளையவன் என்றென்றும் மூத்தவனுக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டும். அந்நிலம் ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அயலாக கருதப்படலாகாது. அவள் உள்ளத்தில் அத்தனை ஐயமும் வஞ்சமும் இருக்கையில் அந்நிலத்தை எப்படி அளிக்கமுடியும்? அது நம் கையே நாகப்பாம்பாக ஆகி நம்மைக் கொத்தவருவதாக ஆகுமல்லவா?"

"அனைத்துச் சொற்களும் உங்கள் இருவரிடமும் முன்னரே ஒருங்கியிருக்கின்றன அரசி" என்றான் விதுரன். "இச்சொற்களை பலநூறுமுறை ஒருவருக்கொருவர் அகத்தே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் போலும்" அம்பிகை முகம் சிவந்து "அவளிடம் எனக்கென்ன பேச்சு?" என்றாள். விதுரன் சிலகணங்கள் அவளை கூர்ந்து நோக்கியபின் "இந்தப் போராட்டமனைத்தும் மிக எளிய ஐயங்களின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அரசி. தாங்கள் தங்கள் தங்கையிடம் ஒருமுறை லதாமண்டபத்திலமர்ந்து உரையாடினாலென்ன?" என்றான்.

"அவளிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. என் மைந்தன் விழியிழந்தவன் என்று கேட்டதும் அவள் முகம் மலர்ந்ததை நானே கண்டேன். அக்கணம் என் அகத்தில் நான் சுமந்திருந்த என் தங்கை இறந்தாள். இன்றிருப்பவள் பேராசை கொண்ட ஒரு இணையரசி" என்றாள் அம்பிகை. விதுரன் அந்தக்கணத்தை அகத்தில் நிகழ்த்திக்கொண்டபோது அவன் உள்ளம் சற்று நடுங்கியது. "அது உங்கள் விழிமயக்காக இருக்கும்" என்றான், மெல்லிய குரலில்.

"இல்லை... நான் அந்த ஒரு கணத்தை ஓராண்டாக, ஒரு வாழ்க்கையாக இன்று என் அகக்கண்முன் காண்கிறேன். என் கரு முதிரத்தொடங்கியபோதே அவள் என்னிடமிருந்து விலகிச்சென்றாள். சேடிகளிடம் மீண்டும் மீண்டும் என் உதரத்தில் வாழும் குழந்தைதான் நாடாளுமா என்றும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த உரிமையும் இல்லையா என்றும் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருமுறை என்னிடமே என் வயிற்றுக்குழந்தை இறந்துவிட்டால் அவள் வயிற்றில் வாழும் குழந்தைதானே அரசனாவான் என்று கேட்டாள். அவள் பேதை என நான் அறிந்திருந்தாலும் அவ்வினா என் உடலையும் உள்ளத்தையும் துடிக்கச்செய்ததை இப்போதும் உணர்கிறேன். அவளுக்குள் அன்றே திரண்டு வருவதென்ன என்று உணர்ந்துகொண்டேன்."

மூச்சிரைக்க அம்பிகை சொன்னாள் " என் மகன் பிறந்ததும் என் ஈற்றறைக்குள் அவள் சேடியை தொடர்ந்து வந்தாள். நன்னீராட்டப்பட்ட மைந்தன் அருகே மென்துகில் மூடிக்கிடந்தான். அவள் முகத்தை நான் நன்றாகவே நினைவுறுகிறேன். அதிலிருந்தது உவகை அல்ல. நிலைகொள்ளாத தன்மை. என் படுக்கையருகே குனிந்து மைந்தனை நோக்கியவள் முகத்தில் முதற்கணம் திகைப்பு. சேடி மைந்தனுக்கு விழியில்லை என்று சொன்னதும் அதில் வந்த நிறைவை மிக அருகே கண்டு பாதாளப் பேருலகையே கண்டவள் போல நான் நெஞ்சுநடுங்கி உடல்விரைத்துப்போனேன்."

விதுரன் மெல்ல அசைந்தான். அம்பிகை அவனை நோக்கித் திரும்பி "அவளால் அவ்வுணர்ச்சிகளை மறைக்கமுடியவில்லை. மருத்துவர்களால் விழிகளை மீட்க முடியாதா என்று கேட்டாள். என் சொற்களனைத்தும் நெஞ்சுக்குள் கனக்க அவள் கண்களையே நோக்கிக்கிடந்தேன். சேடி அது முடியாதென்றதும் அவள் குழந்தையை மீண்டும் நோக்கி பெரிய குழந்தை என்றாள். என்னை நோக்கியபோது எங்கள் விழிகள் மிக ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அதை நான் இன்றும் அச்சத்துடனேயே உணர்கிறேன். என் மடியில் வளர்ந்த குழந்தை அவள். என் இடையில் அமர்ந்து உலகைக் கண்டவள். ஆனால் முதன்முதலாக அவள் ஆழத்தை என் ஆழம் அறிந்துகொண்டது."

"என் குழந்தையை தொட்டுக்கூட பாராமல் அவள் திரும்பிச்சென்றாள். அவளுடைய மாளிகையை அடைந்ததும் உரக்கநகைத்தபடி சேடியரை கட்டிப்பிடித்தாள் என்று அறிந்தேன். என் குழந்தைக்கு விழியில்லை என்பதை அவள் நாட்கணக்கில் கொண்டாடினாள் என்று சேடியர் வந்து சொல்லிக்கொண்டே இருந்தனர். அதன்பின் அவளுக்கு அச்சம் வந்தது. அவள் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் விழியில்லாமலாகிவிடுமோ என. ஆதுரசாலையின் அனைத்து மருத்துவர்களையும் அழைத்துப் பார்த்தாள். நிமித்திகர்களும் கணிகர்களும் அவள் அந்தப்புரத்துக்கு நாள்தோறும் சென்றுகொண்டிருந்தனர்."

அம்பிகை தொடர்ந்தாள் "பின்னர் அவளுடைய அச்சம் திசைமாறியது. அவள் குழந்தைக்கும் விழியில்லாமலாகும்பொருட்டு நான் தீச்செய்வினை செய்துவிட்டதாக எண்ணத் தொடங்கினாள். அவ்வெண்ணம் அவளுக்குள் பிறந்ததுமே அவளைச்சூழ்ந்திருந்த சேடியர் அதை சொல்லூதி வளர்த்தனர். அவளைத்தேடி வினையழிப்பாளர்களும் வெறியாட்டாளர்களும் வரத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அங்கே பூசனைகளும் களமெழுதியாடல்களும் நடந்துகொண்டிருந்தன. பின்னர் அவளுக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை வெளிவந்ததுமே அவள் கையை ஊன்றி எழுந்து அதற்கு விழிகள் உள்ளனவா என்றுதான் கேட்டாளாம். ஆம் அரசி என்று சொன்னதுமே அப்படியென்றால் இவன் மன்னனாவானா என்று மருத்துவச்சியிடம் கேட்டாள்."

"நான் முறைப்படி குழந்தையை பார்ப்பதற்காகச் சென்றேன்" என்றாள் அம்பிகை. "ஆனால் என் விழிகள் குழந்தைமேல் படலாகாது என அவள் அதை துகிலுடன் சுருட்டி தன் மார்போடு அணைத்துக்கொண்டு சுவரைநோக்கித் திரும்பிக்கொண்டாள். நான் அம்பாலிகை என்ன இது, குழந்தையைக் காட்டு என்று கேட்டேன். குழந்தைக்கு உடல்நலமில்லை என்று திரும்பத்திரும்ப முணுமுணுத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தாள். பின்னர் தேம்பி அழத்தொடங்கினாள். அவள் உடலில் சிறிய வலிப்பு வந்தது. நீங்கள் சென்றுவிடுங்கள் அரசி என்றனர் மருத்துவச்சிகள். நான் திரும்பிவிட்டேன். அதன்பின் அக்குழந்தையை நான் காணவே அவள் ஒப்பவில்லை."

"நாட்கள் செல்லச்செல்ல குழந்தையின் குறைகள் தெரியத்தொடங்கின. அது பனிவிழுது போல தூவெண்ணிறமாக இருந்தது. பெரும்பாலும் அசைவற்றிருந்தது. மருத்துவர் அதை நோக்கிவிட்டு அதன் இயல்புகளைச் சொன்னதுமே அவள் அது அவ்வாறிருக்க நான்தான் காரணம் என்று கூவத்தொடங்கிவிட்டாள். நான் செய்த தீச்செய்வினையால்தான் குழந்தையின் குருதிமுழுக்க ஒழுகிச்சென்றுவிட்டது என்றாள். அக்குழந்தையிடமிருந்து என் தீச்செய்வினைமூலம் எடுக்கப்பட்ட குருதி என் குழந்தையின் உடலில் ஓடுவதனால்தான் அவன் இருமடங்கு பெரிதாக இருக்கிறான் என்று சொன்னாள். இன்றுகூட அவள் அப்படித்தான் எண்ணுகிறாள்."

"ஆம்" என்றான் விதுரன். "ஆயினும்கூட நீங்கள் இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளமுடியும் என்றால் அனைத்தையும் சீர்செய்துவிடலாம். ஒரே அரண்மனையின் இருபகுதிகளில் வாழும் நீங்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து முகம்நோக்கிப்பேசி பதினெட்டாண்டுகளாகின்றன என்றால் விந்தை அல்லவா?" அம்பிகை "ஆம், ஆனால் என் வாழ்க்கைமுழுக்க நான் வாழும் அரண்மனையின் பிற பகுதிகளை அறியாதவளாகவே இருந்திருக்கிறேன்" என்றாள். "அவளை நான் சந்தித்தாலும் என்னிடம் சொல்வதற்கு ஏதுமிருக்காது. அவளுடைய இருண்ட நெஞ்சை நான் சொல்லும் எச்சொல்லும் துலக்காது."

"இருள் இருபக்கமும்தான்" என்றான் விதுரன். "தாங்கள் மட்டும் தங்கள் தங்கையை அஞ்சவில்லையா என்ன?" அம்பிகை திகைத்து அவனை நோக்கினாள். "நான் இளமை முதலே இங்கு வருபவன் அரசி. தாங்களோ தங்கள் அணுக்கத்தோழிகள் மூவரில் ஒருவரோ உண்டு நோக்காத எவ்வுணவையும் தமையன் உண்பதில்லை. காந்தாரத்துப் பயணத்திலும்கூட அச்சேடியர் இருவர் வந்திருந்தனர்."

"ஆம், அவன் அரசன். அது தேவைதான்" என்றாள் அம்பிகை உரக்க. "அது யாரை நோக்கிய அச்சம்?" என்றான் விதுரன். "ஆம், அவளைநோக்கிய அச்சம்தான். இதோ என் மைந்தன் அரசுக்கட்டில் ஏறவிருக்கையில் அவள் என்ன செய்கிறாள்? இத்தனை வன்மமும் சினமும் கொண்டவள் இதுநாள்வரை அவனைக்கொல்ல முயன்றிருக்கமாட்டாள் என்கிறாயா?" விதுரன் பெருமூச்சுடன் தலையை அசைத்தான்.

"நீ அவளிடம் சொல், அவளுடைய திட்டங்களேதும் நடக்கப்போவதில்லை என. அதற்காகவே உன்னை வரவழைத்தேன்" என்றாள் அம்பிகை. "அவள் ஒப்புவாளென்றால் இம்மணிமுடிசூட்டுநிகழ்வு முறையாக நிகழும். அதற்குப்பின் அவள் மைந்தன் இளவரசனாக இருப்பான். ஒப்பவில்லை என்றாலும் மணிமுடி சூடப்படும்... பார்த்தாயல்லவா? இன்று இந்நகரம் காந்தாரத்தின் படைகளாலும் செல்வத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. அந்த மணிமுடிசூட்டுக்குப்பின் அவளும் மைந்தனும் சிறையில் இருப்பார்கள்."

அவள் விழிகளை விதுரன் சற்று திகைப்புடன் நோக்கினான். எந்தத் தீமையை நோக்கியும் இமைக்காமல் செல்லும் ஆற்றல்கொண்ட கண்கள். அன்னையின் கண்கள். விதுரன் எழுந்து தலைவணங்கி "ஆணை" என்றபின் வெளியே நடந்தான்.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 4 ]

அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர் அமரவேண்டிய பீடம் மீது மரவுரியையும் சகுனி அமர வேண்டிய பீடம் மீது செம்பட்டையும் விரித்தான். உபபீடங்களில் என்னென்ன பொருட்கள் இருக்கவேண்டுமென துணைவர்களுக்கு ஆணையிட்டான்.

அது இளவேனிற்காலத் தொடக்கமாதலால் காற்று தென்மேற்கிலிருந்து வீசி வடகிழக்குச் சாளரம் வழியாக வெளியேறும். அதற்கேற்ப நெய்விளக்குகளை அமைத்தான். ஒவ்வொருவர் முகத்திலும் ஓளிவிழும்படியும் அதேசமயம் அனல் வெம்மை எவர் அருகிலும் இல்லாதபடியும் அவை உள்ளனவா என அங்கே நின்று சரிபார்த்துக்கொண்டான். சாளரக்கதவுகள் காற்றிலாடாமலிருக்கவும் அறைக்கதவுகள் ஓசையில்லாமல் திறந்துமூடவும் செய்தான். அறைக்குள் மேலே தொங்கிய மயிற்தோகைக்கற்றை விசிறிகள் ஓசையில்லாமலும் தீபச்சுடர்களை அசைக்காமலும் காற்றை அசைக்கும்படிச் செய்தான்.

உள்ளே வந்த விதுரனைக் கண்டு குந்தளன் வணங்கினான். "அமைப்பு முடிந்துவிட்டதா?" என்றான் விதுரன் "ஆம், அமைச்சரே" என்றான் குந்தளன். விதுரன் சுற்றிலும் நோக்கிவிட்டு "மேலுமிரு பீடங்கள் இருக்கட்டும். சிம்மக்கைப்பிடி கொண்டவை. அமைச்சர்கள் அமர ஐந்து வெண்பீடங்களும் அமையட்டும்" என்றான். குந்தளன் கண்கள் ஒருகணம் விரித்து "ஆணை" என்றான். விதுரன் "ஒளியும் காற்றும் அதற்கெனவே அமையட்டும்" என்றான். குந்தளன் தலைவணங்கினான்.

விதுரன் தன் மாளிகைக்குச் சென்று சபைக்கான ஆடை அணிந்து கொண்டான். தன் ஏவலனிடம் மாளிகைக் கருவூலத்தில் இருந்த பழைய ஆமாடப்பெட்டி ஒன்றை எடுத்துவரச்சொல்லி அதைத் திறந்தான். அதற்குள் இளமையில் அவனுக்கு சத்யவதி பரிசாக அளித்த தென்பாண்டி முத்துச்சரமும் பன்னிரு வைரங்கள் பதிக்கப்பட்ட அணிமுடியும் இருந்தன. அவற்றை அவன் அணிவதில்லை என்பதனால் கொண்டு வந்த சேவகன் வியப்புடன் நோக்கி நின்றான். விதுரன் எழுந்து ஆடி நோக்கி அவற்றை அணிந்துகொண்டான். ஆடியில் தெரிந்த தன் பாவையை நோக்கி புன்னகைசெய்தான்.

மீண்டும் அவன் மந்தணஅவைக்கு வந்தபோது அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அது மூடப்பட்டிருந்தது. அவன் சத்யவதியின் அந்தப்புரத்து அறைவாயிலில் நின்ற சியாமையிடம் "சகுனிதேவரை வரச்சொல்லி தூதனை அனுப்பலாமல்லவா?" என்றான். சியாமை "ஆம், பேரரசி ஒருங்கிவிட்டார்கள். சுவடிகளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்" என்றாள். அவள் கண்களில் விதுரனின் அணிமுடி வியப்பை உருவாக்கி உடனே அணைந்ததை அவன் கண்டான்.

விதுரன் வெளியேவந்து அரசமண்டபத்தை அடைந்தான். அங்கே விப்ரர் ஓலைநாயகங்கள் நடுவே அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து அருகே வந்து "அமைச்சரே... எங்கும் ஒழுங்கின்மையின் உச்சம். என்னசெய்வதென்று எவருக்கும் தெரியவில்லை. உள்ளே வந்த படைகள் இங்கே அமர இடமில்லாதிருக்கையில் புதிய படைகள் உள்ளே வந்து அழுத்திக்கொண்டே இருக்கின்றன. வந்தவர்களில் பெரும்பகுதியினர் யானைக்கொட்டில்களையும் வடக்குவெளியையும் நிறைத்தபின் அத்திசை வாயில்வழியாக புராணகங்கைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள்" என்றார்.

"ஒழுங்கின்மை அல்ல அது. அந்த ஒழுங்கை நாம் இன்னமும் வகுத்து அறியவில்லை, அவ்வளவுதான்" என்றான் விதுரன். "விப்ரரே தாங்களே நேரில் சென்று சகுனிதேவரை அவைக்கு அழைத்து வாருங்கள். அவையிலும் தாங்களிருக்க வேண்டும்." விப்ரர் திகைத்து "நான் இங்கே..." எனத் தொடங்கியபின் "அவ்வண்ணமே ஆகட்டும்" என்றார். அவர் கிளம்பிச்சென்றதும் விதுரன் தூதர்களிடம் அமைச்சர்களும் தளபதிகளும் அவை புகும்படிச் செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் சத்யவதியின் மாளிகை வாயிலில் சென்று காத்திருந்தான்.

சகுனியின் சிறிய அணித்தேர் மாளிகை முகப்புக்குள் புகுந்தபோது அரண்மனையின் பெருமுரசம் கொம்புகளும் குழல்களும் துணைவர முழங்கி அவனை வரவேற்றது. வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி படைக்கலம் தாழ்த்தினர். சகுனி இறங்கி தன் மேலாடையைச் சுற்றிக்கொண்டு மாளிகையின் அமுதகலச முகப்பை ஏறிட்டு நோக்கினான். அதன் முகடில் சத்யவதியின் ஆமை இலச்சினை கொண்ட கொடி பறந்துகொண்டிருப்பதைப் பார்த்தான். விதுரன் அருகே சென்று தலைவணங்கி "காந்தாரநாட்டு இளவரசருக்கு பேரரசி சத்யவதியின் மாளிகைக்கு நல்வரவு" என்றான்.

சகுனி அவன் தலையின் அணிமுடியைத்தான் முதலில் நோக்கினான். அவன் கண்களில் ஏதும் தெரியவில்லை என்றாலும் கைகள் சால்வையை மீண்டும் இழுத்துப்போட்டன. "விசித்திரவீரியரின் மைந்தருக்கு என் வணக்கம்" என்று அவன் சொன்னான். விதுரன் "அவை மண்டபத்துக்கு தாங்கள் வரவேண்டும். பேரரசியும் பிதாமகரும் இன்னும் சற்று நேரத்தில் அவைபுகுவார்கள்" என்றான். சகுனி தலையை அசைத்தபடி படி ஏறி உள்ளே வந்தான்.

அவை மண்டபத்திற்குள் சகுனியை இட்டுச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரச்செய்தபின் அருகே தனக்கான பீடத்தில் விதுரன் அமர்ந்துகொண்டான். அந்தப்பீடத்திலும் செம்பட்டு விரிக்கப்பட்டிருப்பதை சகுனி அரைக்கண்ணால் பார்த்தபின் "அமைச்சரே தங்கள் படைக்கல ஆசிரியர் எவர்?" என்றான். "இங்கே எங்கள் பேரரசியின் அவையில் கண்டலர், இந்துபிரபர் என்னும் இரு படைக்கல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இரு இளவரசர்களுக்கும் கைப்பிடித்து முதற் படைக்கலம் கற்பித்தவர்கள். நானும் அவர்களிடம்தான் பயின்றேன்" என்றான் விதுரன்.

"அஸ்திரவித்தை பயின்றிருக்கிறீரா?" என்று சகுனி கேட்டான். "ஆம். நான் எனக்கான மெல்லிய வில் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன். தோள்களை வளர்த்துக்கொள்ளாமலேயே நெடுந்தூரம் அம்புகளைச் செலுத்தும் கலையை நூல்களிலிருந்து கற்றேன்" சகுனி தலையை அசைத்தான். கதவருகே குந்தளன் வந்து தலைவணங்கினான். விதுரன் எழுந்து "பிதாமகர் பீஷ்மர்" என்றான். பீஷ்மரின் பெயரைச் சொன்னதுமே சகுனியின் முகத்தில் அவனை மீறி ஒரு மலர்வு எழுவதை விதுரன் அறிந்தான். இருவரும் எழுந்து நின்றனர்.

பீஷ்மர் தோள்களில் படர்ந்த நரைத்த தலைமுடியும் இன்னமும் ஈரமுலராத வெண்தாடியுமாக உள்ளே வந்தார். மரவுரியாடை மட்டும் அணிந்திருந்தார். சகுனியும் விதுரனும் வணங்கியபோது புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தியபின் அமர்ந்துகொண்டார். சகுனியிடம் "காந்தாரத்தின் கருவூலமே நகர்புகுந்தது என்றார்கள் சூதர்கள்" என்று சிரித்தபடியே சொன்னார். "இது கருவூலம் அல்ல. ஆனால் பிதாமகர் ஆணையிட்டால் கருவூலத்தையே இங்கு கொண்டுவரச் சித்தமாக உள்ளேன்" என்றான் சகுனி. பீஷ்மர் சிரித்தபடி "கருவூலங்கள் நாட்டின் நெஞ்சங்கள். அவை இணைவது ஒரு மணமுடிப்பு போல" என்றார்.

சியாமை உள்ளே வந்து தலைவணங்கினாள். பீஷ்மர் எழுந்து நின்றார். சத்யவதி உள்ளே வந்ததும் பீஷ்மர் தலைவணங்கினார். சத்யவதி அவரை வாழ்த்திவிட்டு தன்னை வணங்கிய சகுனியிடம் "மிக இளையவராக இருக்கிறீர்கள் சௌபாலரே" என்றாள். சகுனி புன்னகையுடன் "ஆம், என்னை பெரும்பாலும் வயதில் மூத்தவன் என்றே எண்ணுகிறார்கள்" என்றான். "அது தங்கள் புகழ் பாரதவர்ஷம் முழுதும் பரவியிருப்பதனால்" என்றான் விதுரன்.

அவர்கள் அமர்ந்துகொண்டார்கள். சகுனி முறைப்படி பேரரசியை வணங்கி "காந்தாரநாடும் எங்கள் தொல்குலமும் பேரரசியின் அருளைப்பெறுவதனால் பெருமைகொண்டிருக்கின்றன. என் தந்தை சுபலரும் என் தமையன் அசலரும் தங்கள் மணிமுடிகளை தங்கள் பாதம் நோக்கி தாழ்த்துகிறார்கள். தங்கள் அருளுக்காக அவர்கள் இந்த எளிய பரிசை அளித்திருக்கிறார்கள்" என்றபடி ஒரு தங்கப்பேழையை சத்யவதியின் முன்னாலிருந்த பீடத்தில் வைத்தான்.

சத்யவதி "காந்தாரம் எங்கள் உடலில் புதிய குருதியை பாய்ச்சியிருக்கிறது சௌபாலரே. தங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் ஹஸ்தியின் குடிக்கு அளித்த பெரும்பரிசு அவரது மகள்தான். அவள் காலடி பட்ட கணம் முதல் இந்நகரின் விடாய் தீர்ந்தது. அச்சங்கள் அகன்றன. அவளைவிட பெரிய பரிசை எந்நாளும் எவரும் இனி எங்களுக்கு அளிக்கவியலாது" என்றாள். அது முகமன் அல்ல என அவள் குரலின் நெகிழ்வு காட்டியது. முதல்முறையாக சகுனியின் முகம் அதன் உறைந்த பாவனையில் இருந்து இளகி நெகிழ்ந்தது. "ஆம், என் தமக்கை எங்கள் குலத்தின் மாசிலா மாணிக்கம்" என்றான்.

"அவள் பாதங்களை இங்குள்ள நிமித்திகர் நோக்கினர். அளவில்லா தாய்மை கொண்டவள் என்றார்கள். பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் சக்ரவர்த்தினியின் பாதங்கள் அவை என்றார்கள். அதைவிட நற்சொல்லை இம்முதியவளிடம் எவர் சொல்லிவிடமுடியும்?" சத்யவதி சொன்னாள். தன் கைகளை நீட்டி அந்த பொற்பேழையைத் தொட்டு "நான் உவகை கொள்கிறேன்" என்றாள். விதுரன் அதை எடுத்து திறந்தான். அதற்குள் இருந்தது குதிரையின் பல் என்று முதற்கணம் தோன்றியது. மறுகணம் அது ஒரு வைரம் என தெளிந்தான்.

அறையொளியை உண்டு அது சுடர்விடத்தொடங்கியது. அதன் பட்டைகளும் உள்பட்டைகளும் நெய்விளக்குகளின் செவ்வொளியை வாங்கி மின்னத்தொடங்கின. குருதி படிந்த வெண்பல் போல. "இதை எங்கள் நாட்டில் அஸ்வதந்தம் என்கிறார்கள். நாங்கள் அடைந்தவற்றிலேயே மதிப்புமிக்க வைரம் இதுவே. நெடுந்தொலைவில் பெரும்பாலைநிலங்களுக்கு அப்பாலிருக்கும் அபிசீனம் என்னும் காப்பிரிநாட்டிலிருந்து நாங்கள் பெற்ற செல்வம் இது. வல்லமை மிக்க குதிரைகளின் உடைமையாளராக இதை அணிபவர்களை ஆக்கும் வல்லமை இதற்குண்டு என நிமித்திகர் சொல்கிறார்கள்" என்றான் சகுனி.

"ஆம். நாம் வல்லமைபெற்றுவிட்டோம்" என்று விதுரன் சொன்னாள். பீஷ்மர் அந்த உரையாடலை தன் தாடியை நீவியபடி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சகுனி "நம் வல்லமைகள் அனைத்தையும் மன்னரின் தோள்களாக ஆக்கவேண்டிய காலம் வந்துவிட்டது பேரரசி. காந்தாரம் அதற்காகக் காத்திருக்கிறது" என்றான். மிக எளிதாக அவன் பேசவேண்டிய புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்த விதுரன் பீஷ்மரின் கண்களை ஒருகணம் நோக்கி மீண்டான்.

சத்யவதி "ஆம். இனி எதையும் நாம் சிந்திக்கவேண்டியதில்லை. அஸ்தினபுரியின் அரியணை என் சிறுமைந்தனுக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறது" என்றாள். "அனைவரும் விரும்பும் வண்ணம் அனைத்தையும் செய்துவிடலாம் சௌபாலரே. நீங்கள் இங்கே இருந்து அவற்றை நடத்தியருளவேண்டும்." சகுனி புன்னகையுடன் "ஆம் பேரரசி, அது என் கடமை. நான் காந்தாரபுரி நீங்குகையில் அஸ்தினபுரியின் அரியணையில் என் தமக்கை அமர்ந்தபின்னரே மீண்டுவருவேன் என வஞ்சினம் கூறித்தான் கிளம்பினேன்."

பீஷ்மர் சற்று அசைந்தபோது அவரது நெடிய உடலைத் தாங்கிய பீடம் மெல்லிய ஒலியை எழுப்பியது. சகுனி அவரைத் திரும்பி நோக்க அவர் ஏதும் சொல்லவில்லை. சத்யவதி "நல்ல சொற்களைச் சொன்னீர்கள் சௌபாலரே. மணிமுடி சூட்டப்பட்ட பின்னர்தான் உங்களுக்கு பணிகள் தொடங்கப்போகின்றன. அஸ்தினபுரிக்கு இன்று நிலைப்படையே இல்லை. எட்டு காவல்மையங்களிலாக நிலைகொண்டிருக்கும் சிறிய காவல்படை மட்டுமே உள்ளது. நீங்கள் இருந்து எங்கள் படைகளை ஒருங்கமைக்கவேண்டும்" என்றாள்.

விதுரன் எழுந்து தலைவணங்கி "இளவரசர்கள் வந்திருக்கிறார்கள்" என்றான். சத்யவதி "இளவரசர்களா? மந்தணஅவைக்கு அவர்களை வரும்படி நான் சொல்லவில்லையே" என்றாள். "ஆம், ஆனால் இளைய இளவரசர் இன்னும்கூட காந்தாரரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை. அவ்வறிமுகத்தை மூத்த இளவரசர் செய்விப்பதே முறையாகும். இங்கே பேரரசியின் முன்னால் அது நிகழலாமே என எண்ணினேன்." சத்யவதியின் கண்களில் ஒரு சிறிய ஒளி தெரிந்து அணைந்தது. அவள் புன்னகையுடன் "அவ்வாறே ஆகுக" என்றாள்.

விதுரன் கதவைத்திறந்தபோது வியாஹ்ரதத்தர் துணையுடன் திருதராஷ்டிரன் வாசலில் நின்றிருந்தான். "அரசே, இந்த மந்தணஅவைக்கு தாங்கள் வருவது உவகையளிக்கிறது" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "மந்தண அவையா? என்னிடம் நீ அழைப்பதாகத்தானே தளபதி சொன்னார்?" என்றான். "ஆம், நான் இங்கே அழைத்துவரச்சொன்னேன்... வாருங்கள்" என்றான் விதுரன். அவனை விதுரனே கைப்பிடித்து அரிமுகம் துலங்கிய பீடத்தில் அமரச்செய்தான். வியாஹ்ரதத்தர் தலைவணங்கியபோது விதுரன் "அமருங்கள் படைத்தலைவரே" என்றான். அன்றுவரை மந்தண அவைக்குள் அமர்ந்திராத வியாஹ்ரதத்தர் திகைத்தபின் தலை வணங்கி அமர்ந்துகொண்டார்.

திருதராஷ்டிரன் உடலெங்கும் அணிகள் பூண்டு முகபடாமணிந்த பட்டத்து யானை போலிருந்தான். தன் செம்பட்டுச் சால்வையை தரையில் இருந்து இழுத்து மடிமீது போட்டுக்கொண்டு பெரிய கைகளை மடிமீது வைத்துக்கொண்டான். "பேரரசிக்கும் பிதாமகருக்கும் காந்தாரருக்கும் தலைவணங்குகிறேன். தங்களுடன் அவையமர்வது என்னை பெருமைப்படுத்துகிறது" என்றான். சத்யவதி "உன்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் தார்த்தா" என்றாள்.

விதுரன் எழுந்து வாயிலைத் திறந்தபோது தீர்க்கவியோமருடன் பாண்டு நின்றுகொண்டிருந்தான். "இளையமன்னருக்கு மந்தண அவைக்கு நல்வரவு சொல்கிறேன்" என்றான் விதுரன். "இங்கே வருவதாக என்னிடம் சொல்லப்படவில்லை. நான் அவைக்குரிய ஆடைகள் அணியவில்லை" என்றான் பாண்டு. "ஆம், ஆனால் இது மந்தண அவை. இங்கே உடைநெறிகளேதுமில்லை. வருக" என விதுரன் அவனை உள்ளே அழைத்து அமரச்சொன்னான். தீர்க்கவியோமரிடம் "அமைச்சர்களும் தளகர்த்தர்களும் வந்துவிட்டார்களென்றால் அனைவரும் மன்றமரலாமே" என்றான்.

சிறு திகைப்புடன் தீர்க்கவியோமர் தலைவணங்கினார். அவரும் விப்ரரும் லிகிதரும் சோமரும் வைராடரும் சத்ருஞ்சயரும் உக்ரசேனரும் உள்ளே வந்து பீடங்களில் அமர்ந்துகொண்டனர். சகுனி அவர்கள் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் ஏற்று தலைதாழ்த்தினான். பீஷ்மர் அசையாமல் அனைத்தையும் பார்த்தபடி சுடர்கள் அசையும் விழிகளுடன் அமர்ந்திருந்தார்.

"அரசே, தங்கள் இளையவருக்கு காந்தாரரை தாங்கள்தான் அறிமுகம் செய்துவைக்கவேண்டும்" என்றான் விதுரன். "நானா...? ஆம்" என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்தான். "பாண்டு... எங்கே இருக்கிறாய்?" பாண்டு எழுந்து திருதராஷ்டிரன் அருகே சென்று அவன் கையைப்பற்றி "மூத்தவரே இங்கே" என்றான். "சௌபாலரே இவன் என் தம்பி. என் குருதி. இந்நாட்டின் இளையமன்னன்" என்றான் திருதராஷ்டிரன். பாண்டுவின் வலக்கையைப் பற்றி அதை இழுத்து சகுனியை நோக்கி நீட்டி "அவன் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இனி எனக்கு மட்டுமல்ல இவனுக்கும் தாங்கள்தான் காவல்" என்றான்.

சகுனி பாண்டுவின் கைகளைப்பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரன் "தம்பி, அவர் கைகளைப்பற்றிக்கொள். இந்நாடும் நம் வாழ்வும் இனி இவர் கைகளில் திகழ்வதாக" என்றான். பாண்டு "ஆம் மூத்தவரே, தங்கள் ஆணை, தங்கள் அருள்" என்றான். சகுனி புன்னகையுடன் "அஸ்தினபுரியின் இளையமன்னருக்கு காந்தாரத்தின் வாழ்த்துக்கள். மாமன்னர் சுபலருக்காகவும் மன்னர் அசலருக்காகவும் என் முடி தங்களைப் பணிகிறது" என்றபின் மேலும் விரிந்தபுன்னகையுடன் "விசித்திரவீரியரின் இறுதிமைந்தர் இருக்கையில் தங்கள் இருவருக்கும் தெய்வங்களின் துணைகூடத் தேவையில்லை அரசே" என்றான்.

சத்யவதி சிரித்தபடி "ஆம் உண்மை... இவர்களை எண்ணி நான் அடையும் கவலை எல்லாம் இவனை நோக்குகையில் நீங்குகிறது. இவனுடைய மதியாலும் அறத்தாலும் இந்நாடு வாழும்" என்றாள். விதுரன், "நற்சொற்களால் என்னை வாழ்த்துகிறீர்கள் காந்தாரரே. நான் என்றும் என் தமையன்களின் ஏவலன்" என்றான். சத்யவதி "ஆம், ராகவ ராமனின் இளைய தம்பியர் அவ்வண்ணமே இருந்தனர் என்கிறது புராணம்" என்றாள். அவர்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர்.

திருதராஷ்டிரன் சற்று நிலைகொள்ளாதவனாக இருந்தான். "விதுரா, மூடா எங்கிருக்கிறாய்? என் அருகே வந்து நிற்கவேண்டுமென எத்தனைமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்?" என கீழுதட்டை நீட்டி தலையைத் திருப்பிச் சொன்னான். "அரசே, நான் தங்களருகேதான் அமர்ந்திருக்கிறேன்" என்றான் விதுரன். சத்யவதி புன்னகையுடன் "நான் பேசவந்தது அப்படியே நிற்கிறது. அஸ்தினபுரியின் அரியணை காத்திருப்பதைப்பற்றிச் சொன்னேன்" என்றாள். "ஆம், மூத்த இளவரசர் முடிசூடும் நாளை நாம் இப்போதே முடிவுசெய்துவிடுவதே நன்று" என்றான் சகுனி.

விதுரன் "இளையவரின் கருத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாமே" என்றான். பாண்டு புன்னகையுடன் "என் கருத்தா? முதல்முறையாக அது கேட்கப்படுகிறது இல்லையா?" என்றான். மேலும் சிரிப்பு விரிய "பேரரசியே, பிதாமகரே, என்னுடைய கருத்தென்பது எப்போதும் என் தம்பியின் கருத்தேயாகும். அவன் சொல்லும் சொற்களும் சொல்லவிருக்கும் சொற்களும் என்னுடையவை" என்றான். சத்யவதி சிரித்தபடி "தெளிவாகச் சிந்திக்கிறாய் பாண்டு" என்றாள்.

"இளவரசே, இந்தநாட்டின் இளையமன்னர் நீங்கள். இளையவரின் கடமையையும் உரிமையையும் இரண்டாகவே நம் நூல்கள் பகுத்துவைத்திருக்கின்றன. மூத்தவரின் மணிமுடியைக் காத்து நிற்பதும் அவரது எண்ணங்களுக்கு கட்டுண்டிருப்பதும் குலமுறைப்படி தங்கள் கடமை. ஆனால் இந்நாட்டின் நேர்பாதி நிலம் தங்களுக்கு உரிமை. மூத்தவர்மீது நீங்கள் மனவேறுபாடுகொண்டீர்களென்றால் எப்போதுவேண்டுமென்றாலும் உங்கள் நிலத்தை நீங்கள் அவரிடம் கோரிப்பெறமுடியும். தன்னாட்சி புரியவும் முடியும். அதற்காக தமையனிடம் போர்புரிவதற்கும் ஷத்ரியமுறை ஒப்புக்கொள்கிறது."

பாண்டு நகைத்தபடி "பாதி நிலமா? ஒன்றுசெய்யலாம் தம்பி. நிலத்தை பகலில் தமையன் ஆளட்டும். இரவில் நான் ஆள்கிறேன்...எனக்கு இரவில்தான் கண்கள் தெளிவாக உள்ளன" என்றான். சத்யவதி "இதென்ன விளையாட்டு? நாம் மணிமுடிசூடுவதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்" என்றாள். "ஆம்... விதுரா மூடா, என்ன விளையாடுகிறாய்? ஒரே அடியில் உன் மண்டையை உடைத்துவிடுவேன்" என்றான் திருதராஷ்டிரன்.

"அனைத்தும் விளையாட்டுதானே?" என்றான் விதுரன். "இளவரசே, உங்களுக்குரிய பாதிநிலத்துக்கும் மூத்தவர் மன்னராவதை நீங்கள் ஏற்கிறீர்களா?’ பாண்டு நகைத்து "இந்த பாரதவர்ஷத்துக்கே அவர் மன்னராகவேண்டும் என்று நினைக்கிறேன்" என்றான். "அவ்வண்ணம் நீங்கள் எண்ணினீர்களென்றால் உங்கள் நிலத்தை மூத்தவருக்கு முறைப்படி விருப்பக்கொடையாகக் கொடுக்கலாமே" என்றான் விதுரன்.

அவன் எங்கு வந்திருக்கிறான் என்பதை அப்போதுதான் சத்யவதியும் அமைச்சர்களும் புரிந்துகொண்டனர். "நீ என்ன பேசுகிறாயென்று தெரிகிறதா? தெய்வத்தைக் கிள்ளி தெய்வத்துக்கே படைப்பதுபோல அவரது நாட்டை நான் அவருக்கே கொடையளிக்கவேண்டுமா? இதென்ன மூடத்தனம்?" என்றான் பாண்டு. "ஆம்... ஆனால் இது ஒரு விளையாட்டு. ஆடத்தொடங்கிவிட்டோம். ஆடிமுடிப்போமே. இளவரசே, நீங்கள் உங்கள் தமையனிடம் பரிசில்பெற்றுக்கொண்டு இந்த நாட்டில் உங்களுக்குரிய பாதியை உங்கள் தமையனுக்கு நீரளித்துக் கொடுக்கிறீர்கள்..."

விதுரன் அந்த அஸ்வதந்த வைரத்தை எடுத்தான். "காந்தாரத்தின் கருவூலத்துக்கு நிகரான வைரம் இது. பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரானது. அஸ்தினபுரியின் கருவூலத்தை இது சற்றுமுன்னர்தான் வந்தடைந்தது. இதை விலையாக அளித்து உங்களிடமிருந்து மூத்த இளவரசர் தங்கள் பங்கான நாட்டை பெற்றுக்கொள்கிறார். மண்ணுக்கு மணி விலையாகுமென நூல்கள் சொல்கின்றன" என்றான். "அரசே, எழுந்து நில்லுங்கள்"

"என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை..." என முனகியபடி திருதராஷ்டிரன் எழுந்து நின்றான். "என் தம்பியிடமிருந்து நான் ஏன் நிலத்தைப் பெறவேண்டும்? ஓங்கி ஓர் அறைவிட்டால் அவனே நிலத்தை எனக்குக் கொடுக்கப்போகிறான்... விதுரா, நீ பேரரசியையும் பிதாமகரையும் விளையாட்டில் சேர்த்திருக்கிறாயா?" விதுரன் "கைநீட்டுங்கள் அரசே" என்றான். திருதராஷ்டிரன் கைநீட்ட அந்த தங்கப்பேழையை அவன் கைகளில் கொடுத்தான். "இதை தங்கள் தம்பிக்கு அளியுங்கள்"

பாண்டு எழுந்து நின்று இருகைகளாலும் அதைப்பெற்றுக்கொண்டான். "சொல்லுங்கள் அரசே, விலைமதிப்பற்ற இந்த வைரத்தை அளித்து உன் மண்ணை நான் விலையாகப் பெற்றுக்கொள்கிறேன்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அதை தெளிவில்லாமல் முணுமுணுத்தான். "இளவரசே கைநீட்டுங்கள்" என்றான் விதுரன். பாண்டு கைநீட்ட அங்கிருந்த குவளைநீரை எடுத்து அவன் இடக்கையில் அளித்தான். விதுரன் "என் நிலத்தை இம்மணிக்கு ஈடாக என் தமையனுக்குக் கையளிக்கிறேன் என்று சொல்லி நீரூற்றுங்கள்" என்றான்.

பாண்டு நீரை ஊற்றியபடி தெளிவான குரலில் "என் தமையனின் பாதங்களில் என் பங்கு நிலத்தை இம்மணிக்கு ஈடாக வைக்கிறேன். அவர் நாடும் மங்கலங்களும் பொலியட்டும். அவர் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். அவரது குலங்கள் பெருகட்டும். அவர் விரும்பியதனைத்தையும் அடைந்து நிறைவுறட்டும்" என்றான்.

திருதராஷ்டிரன் "இதென்ன நாடகம். அவன் ஒன்றும் தெரியாத மடையன். அவனை அழைத்துவந்து..." என்று முனகியபடி சொன்னான். பாண்டு கைகூப்பியபடி குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு "தங்கள் பாதங்களில் நான் அடைக்கலம் மூத்தவரே" என்றான்.

"எழுந்திரு... டேய் எழுந்திரு... இதென்ன, உனக்கு இனிமேல்தானா நான் வாழ்த்துச் சொல்லவேண்டும்? விதுரா மூடா...நீ இப்போது என் கையருகே வந்தாயென்றால் உன் இறுதிக்கணம் அது" என்று திருதராஷ்டிரன் திரும்பிப்பார்த்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டு "எங்கே நிற்கிறாய்?" என்றான்.

விதுரன் "அரசே அமர்ந்துகொள்ளுங்கள்... பேரரசி முடிசூட்டுநாளை அறிவிக்கவிருக்கிறார்கள்" என்றான். "நீ முதலில் என் கையருகே வா... உன்னை ஒரு அடியாவது அடிக்காமல் நான் அமையமாட்டேன்." விதுரன் விலகி நின்று சிரிக்க சத்யவதியும் சிரித்து தன் வாயை கையால் மறைத்துக்கொண்டாள்.

சகுனி "ஆக, இனி எந்தத் தடையுமில்லை. பேரரசி நாளை அறிவித்துவிடலாம்" என்றான். சத்யவதி பீஷ்மரிடம் "தேவவிரதா, நீ என்ன நினைக்கிறாய்?" என்றாள். "ஆம் அறிவித்துவிடவேண்டியதுதான்..." என்றார் பீஷ்மர்.

சத்யவதி "அமைச்சர்களே வரும் இளவேனில் முடிவுக்குள் நிமித்திகர்களிடம் நாள்குறிக்கச் சொல்லுங்கள்" என்றாள். "அஸ்தினபுரியின் அரியணையில் என் சிறுமைந்தன் திருதராஷ்டிரன் அமரவேண்டுமென நான் ஆணையிடுகிறேன்!" அமைச்சர்கள் ஒரே குரலில் "அவ்வண்ணமே ஆகுக" என முழங்கினர். பீஷ்மரும் சகுனியும் பாண்டுவும் கைகூப்பி தலைவணங்கினார்கள்.

விதுரன் திருதராஷ்டிரன் அருகே நெருங்கி "அரசே எழுந்து பேரரசியின் கால்களைப் பணியுங்கள்" என்றான். "எங்கே?" என்றான் திருதராஷ்டிரன். "உங்கள் முன்னால்" திருதராஷ்டிரன் எழுந்து தன் பெரிய கருங்கைகளை நீட்டியபடி முன்னால் வர சத்யவதி எழுந்து அவனைப்பற்றிக்கொண்டாள். அவன் குனிந்து அவள் பாதங்களைத் தொட அவள் கண்விளிம்பில் கண்ணீருடன் அவனை தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டாள். அவன் மார்புக்குவையில் அவள் முகம் அழுந்தியது. "நீ அனைத்துச் செல்வங்களையும் வெற்றியையும் சிறப்பையும் அடைந்து நிறைவாழ்வு வாழவேண்டும் மகனே" என அவள் சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டாள். கண்களை மூடி இமைப்பீலிகளை விழிநீர் நனைக்க அவன் மார்பில் முகம் சேர்த்தாள்.

திருதராஷ்டிரன் தன் பெரிய விரல்களால் அவள் முகத்தைத் தொட்டான். அவள் தலையையும் தோள்களையும் கழுத்தையும் வருடினான். அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அவன் சதைக்கோள விழிகள் நீருடன் ததும்பின. உதடுகள் நெளிந்தன.

விதுரன் "அரசே, பிதாமகர் கால்களையும் பணியுங்கள்" என்று அவன் கைகளைப்பற்றி திருப்பினான். திருதராஷ்டிரன் பீஷ்மரின் கால்களை பணியப்போக அவர் அதற்கு முன்னரே அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். ஒரு சொல்கூட இல்லாமல் நடுங்கும் கைகளின் அணைப்பாலேயே அவனை வாழ்த்தினார்.

விதுரன் "லிகிதரே, முதலில் நிமித்திகர் நாள்குறிக்கட்டும். கணிகர் தருணம்குறிக்கட்டும். நாள்முடிவானதும் பாரதவர்ஷமெங்கும் செய்தி செல்லட்டும். வியாஹ்ரதத்தர் பெரிய அரசியிடமும் சோமர் சிறிய அரசியிடமும் நேரில்சென்று செய்தியை அறிவியுங்கள்" என்றான். அவர்கள் தலைவணங்கி "ஆணை" என்றார்கள்.

அவர்கள் வெளியேறியதும் விதுரன் தலைவணங்கினான். "பேரரசியும் காந்தாரரும் பிதாமகரும் மேலும் உரையாடலாம். அரசரை நான் அந்தப்புரம் சேர்க்கிறேன்" என்றான். "ஆம்... அவன் மிகவும் கிளர்ச்சியுற்றிருக்கிறான்" என்றாள் சத்யவதி.

திருதராஷ்டிரனை வெளியே கைப்பிடித்து அழைத்து வந்தான் விதுரன். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவன் விம்மிக்கொண்டிருந்தான். "வியாஹ்ரதத்தரே, அரசரை அவர் அன்னையிடம் சேருங்கள்" என்று விதுரன் ஆணையிட்டான். அவர் வந்து திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டார். திருதராஷ்டிரன் தலையை வான்நோக்கி சற்றே தூக்கி கண்ணீர் வழியும் முகத்துடன் நடந்து சென்றான்.

பாண்டு விப்ரருடன் வெளியே வந்தான். கதவு மூடுவதை திரும்பிப்பார்த்தபின் விதுரனை நோக்கி புன்னகைசெய்து "ஒவ்வொரு சொல்லிலும் நீ ஒளிவிடுகிறாய் தம்பி... அனைத்தையும் கொண்டுசென்று சேர்த்துவிட்டாய்" என்றான்.

"என் கடமை" என்றான் விதுரன். பாண்டு "இந்த வைரத்தை வைத்து நான் என்னசெய்யப்போகிறேன்? எனக்கு பாவைகளை வைத்து விளையாடுவதில் இனி ஆர்வமில்லை. இந்த வைரத்தை உனக்கு அளிக்கிறேன்" என்று அதை நீட்டினான். "மூத்தவரே" என விதுரன் ஏதோ சொல்லவர அதைத் தடுத்து "விலைமதிப்பற்ற ஒன்றை உனக்களிக்கவேண்டுமென நினைத்தேன். நான் உன் மீது கொண்டுள்ள பேரன்புக்கு அடையாளமாக என்றும் திகழும் ஒன்றை... இது அவ்வாறு அமையட்டும்" என்றான் பாண்டு.

விதுரன் வைரத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். "மூத்தவரே தங்கள் அன்புக்கு நிகராக நான் எதையும் எண்ணுபவன் அல்ல" என்றபின் பெருமூச்சுடன் தலைவணங்கினான். "மீண்டும் சந்திப்போம் தம்பி. அந்தப்புரத்தில் அரியதோர் நாடகம் நிகழவிருக்கிறது. இன்றிரவு ஒன்பது சுவைகளுக்கும் குறையிருக்காது" என்று சிரித்தபின் பாண்டு நடந்துசென்றான்.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 5 ]

பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு காலைச்செவ்வொளி விரிந்த மங்கலவேளையில் நெற்றிப்பட்டமும் மணிப்படாமும் சத்ரமும் வெண்சாமரமும் அணிசேர்க்க பூத்த மலைமேல் கதிரவன் முளைத்ததுபோல பொன்னிற அம்பாரியுடன் அசைந்து அசைந்து வந்த முதுபெருங்கரிமேல் ஏறிவந்த தலைமை நிமித்திகன் அந்தத் திருமுகத்தை வாசித்து அறிவித்தான்.

அந்தச்செய்தி முன்னரே மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களனைவரும் இன்று நாளை என அச்செய்தி முறையறிவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தனர். அரண்மனை முகடில் காஞ்சனம் இன்னொலி எழுப்ப அணிவேழம் நடைகொண்டபோதே ஊரெங்கும் செய்தி பரவிவிட்டது. மன்றுக்கு நடுவே யானை வந்து நின்றபோது அதைச்சுற்றி தோள்கள் நெரித்து தலைகள் அடர்ந்திருந்தன. தலைவேழம் நடுவே நிற்க பெருமுரசேந்திய யானையும் கொம்பூதிகள் அமர்ந்த யானையும் இருபக்கமும் நின்றன. பொற்கவசமணிந்த துதிக்கையும் முகபடாமணிந்த மத்தகமும் மணிப்பூக்கள் செறிந்த முறச்செவிகளும் அசைய அவை மலர்மரங்களென ஆடிநின்றன.

நிமித்திகன் செம்பட்டுத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் செம்பட்டு மேலாடையும் சரப்பொளி ஆரமும் அணிந்திருந்தான். இடையாடைக்குமேல் புலித்தோலைச் சுற்றி வெண்கலக்குறடுகள் அணிந்து கோபுரம் விட்டிறங்கிய யட்சன் போலிருந்தான். பெருமுரசம் கோல்பட்டு அதிர்ந்தபோது மன்றில் நிறைந்திருந்த பேச்சொலிகளெல்லாம் அவிந்தன. யானை தன் துதிக்கையால் மண்ணைத் துழாவி விட்ட மண்பறக்கும் நெடுமூச்சின் ஒலி நெடுந்தொலைவுவரை கேட்டது. நிமித்திகன் யானைமேல் எழுந்து நின்று தன் பொற்கோலைத் தூக்கினான்.

உரத்த மணிக்குரலில் "விண்ணாளும் முழுமுதல்வனிலிருந்து உதித்தவன் பிரம்மன். பிரம்மனின் மைந்தர் முதல்மூதாதை அத்ரி. அத்ரியிலிருந்து பிறந்தவர் சந்திரன். சந்திரகுலத்தில் உதித்தவர் புதன். புதனின் மைந்தன் புரூரவஸ் வழிவந்த சந்திரகுலத்து பெருமன்னர்நிரை என்றும் அழியாதிருப்பதாக! விண்ணும் மண்ணும் நீரும் நெருப்பும் கோள்களும் ஆதித்யர்களும் வாழும் காலம்வரை அவர்கள் புகழ் வளர்வதாக! ஆம், அவ்வாறே ஆகுக!" என்றான். கூட்டம் கைகளைத் தூக்கி ‘ஆம் ஆம் ஆம்!’ என வாழ்த்தொலித்தது.

நிமித்திகன் "ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என விரியும் ஆயிரமிதழ் தாமரை இப்பெருங்குலம். அஸ்தினபுரியை நிறுவிய மாமன்னர் ஹஸ்தியின் மைந்தனோ அஜமீடன். அவன் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழோ அணையா விண்ணகப் பெருநெருப்பேயாகும். இன்று இந்நாட்டை ஆளும் குருவம்சத்தின் பெருமைக்கு பாரதவர்ஷத்தின் பெருமை ஒன்றே நிகராகும்" என்றான். ‘ஆம் ஆம் ஆம்’ என கூட்டம் பேரொலி எழுப்பியது.

"குருகுலத்தில் உதித்தவன் ஜஹ்னு. அவன் மைந்தனோ சுரதன். விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன், பிரதீபன், சந்தனு என்னும் சக்ரவர்த்திகள் அவியிட்டு வளர்த்த வேள்வித்தீ இந்நகரம். இது என்றும் வாழ்க!" ‘ஆம் ஆம் ஆம்' என்றனர் மக்கள். "சந்தனுவின் குலத்தை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் பொன்றாப்பெரும்புகழை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் மைந்தர்களான திருதராஷ்டிர மன்னரையும் இளையவர் பாண்டுவையும் வாழ்த்துவோம்! நம் வழித்தோன்றல்கள் என்றும் அவ்வாழ்த்தை தங்கள் நாவுக்கணியாக அணிவார்களாக! நம் மொழிகள் அவர்கள் புகழ்பாடி தொடங்குவதாக! நம் தெய்வங்கள் அவர்களை வாழ்த்தி அவி பெறுவதாக!" ‘ஆம் ஆம் ஆம்' என ஒலித்தது கூட்டம்.

"அஸ்தினபுரியின் மைந்தர்களே, மாமன்னர் ஹஸ்தியின் குழந்தைகளே, நாம் நல்லூழ் கொண்டவர்களானோம். இதோ ஹஸ்தியின் அரியணை பெருமைகொள்ளவிருக்கிறது. பாரதவர்ஷத்தை ஆளும் அஸ்தினபுரியின் ஆட்சியை விசித்திரவீரிய மன்னரின் தலைமைந்தரும் காசிநாட்டு இளவரசி அம்பிகைதேவியின் மைந்தருமான திருதராஷ்டிரன் இந்திரன் கையில் மின்னல்படை என சூடப்போகிறார். அவரது நல்லாட்சியில் இந்நகரம் பொலியப்போகிறது. நம் குலங்கள் செல்வமும் வெற்றியும் புகழும் கொண்டு மகிழவிருக்கின்றன. ஆம் அவ்வாறே ஆகுக!"

கூட்டம் வாழ்த்தொலி எழுப்ப பெருமுரசங்களும் கொம்பும் முழங்கி அணைந்தன. "குடிகளே குலங்களே கேளுங்கள்! வரும் சைத்ரமாதம் வளர்பிறை எட்டாம் நாள் காலை முதற்கதிர் மண்தொடும் முதல் மங்கலநாழிகையில் பேரரசி வாழ்த்துரைகூற இளையவர் செங்கோலெடுத்தளிக்க பிதாமகர் மணிமுடியெடுத்துச் சூட்ட ஐம்பத்தைந்து ஷத்ரியப்பெருங்குடி மன்னர்களும் சூழ்ந்து அரிசியிட்டு வாழ்த்த திருதராஷ்டிரர் அஸ்தினபுரியின் அரியணை அமர்வார். ஹஸ்தியின் மணிமுடி அவர் தலையில் கைலாயத்தில் எழும் இளஞ்சூரியன் என அமையும். கீழ்த்திசை செங்கதிர் சூடியதுபோல அவர் கையில் குருவின் செங்கோல் நிறையும். இந்நகரம் பொலியும். இந்நாடு சிறக்கும். பாரதவர்ஷம் ஒளிபெறும். ஆம் அவ்வாறே ஆகுக!"

கூட்டம் வாழ்த்தொலி எழுப்பும் கணம் ஓங்கிய குரல் ஒன்று "நிறுத்துங்கள்!" என்று கூவியது. ஆங்காங்கே எழுந்த வாழ்த்தொலிகள் தயங்கி மறைந்தன. தன் யோகதண்டை தரையில் ஓங்கி ஊன்றி அதன் கணுக்கள் மேல் கால்வைத்து ஏறி கூட்டத்தின் மேலெழுந்த சார்வாகன் ஒருவன் வலக்கையைத் தூக்கி உரக்க "நிமித்திகரே, இதை மக்களுக்கு அறிவிக்கிறீரா இல்லை ஆணையிடுகிறீரா?" என்றான். நிமித்திகன் திகைத்து கீழே புரவிகளில் நின்ற காவலர்தலைவனைப் பார்த்தபின் "இது பேரரசியின் அறிவிப்பு" என்றான்.

"இந்த முடிவை எடுக்க பேரரசி கூட்டிய மன்றுகள் என்னென்ன? எந்த குலமூத்தாரையும் குடித்தலைவர்களையும் அவர் சந்தித்தார்?" என்றான் சார்வாகன். அவனுடைய சடைமுடி தோளில் திரிகளாகத் தொங்கியது. தாடியும் சடைத்திரிகளாக மார்பில் விழுந்து கிடந்தது. பெருச்சாளித்தோல் கோவணம் அணிந்து உடலெங்கும் வெண்சாம்பல் பூசியிருந்தான். சிவமூலிப்புகையால் பழுத்த கண்கள் கங்குகள் போல எரிந்தன. "மன்னனை மக்களுக்கு அறிவிக்கிறீர்கள் நிமித்திகரே. இங்குள்ள இருகால் மாக்கள் அதைக்கேட்டு கை தூக்கி கூவுகிறார்கள்."

"சார்வாகரே, இது அரசாணை. நான் இதை அறிவிக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். நீங்கள் உங்கள் எண்ணங்களை அமைச்சரிடம் தெரிவிக்கலாம்" என்றான் நிமித்திகன். "அமைச்சர் எங்கிருக்கிறார்? விழியிழந்தவனுக்கு யாழ் வாசித்துக்காட்டுகிறாரா என்ன?" காவலர்தலைவன் "வாயை மூடு நீசனே. அரசநிந்தனையை நான் சற்றும் பொறுக்கமாட்டேன்" என்றபடி வேலுடன் முன்னால் பாய்ந்தான்.

"இங்கே இவர் செய்தது மக்கள் நிந்தனை. அதை நானும் பொறுக்கமுடியாது!" என்றான் சார்வாகன். காவலர்தலைவன் "மூடு வாயை" என்று கூவியபடி வேலைத்தூக்கினான். ஆனால் கூட்டத்தைக் கடந்து அவனால் சார்வாகனை எட்டமுடியவில்லை. "அஹ்ஹஹ்ஹா! மூடா, இதோ நான் ஏறி நிற்பது என் யோகதண்டு. நான் இதைவிட்டிறங்கினால் இந்தப்பெருங்கூட்டத்தில் ஒருவன். உன் ஒற்றை ஈட்டி இக்கூட்டத்தை என்ன செய்யும்?"

"இவர்கள் அரசகுடிகள்... அஸ்தினபுரியின் மக்கள்" என்றான் காவலர்தலைவன். "அப்படியென்றால் நீ கண்ட அரசநிந்தனையை அவர்கள் ஏன் காணவில்லை?" என்றான் சார்வாகன். காவலர்தலைவன் பொறுமை இழந்து தன் குதிரைமேல் பாய்ந்தேறி அதை குதிமுள்ளால் உதைத்தான். குதிரை முன்காலைத் தூக்கி கூட்டம் மீது பாயத்தொடங்கியபோது கூட்டத்துக்கு அப்பால் சோமரின் குரல் கேட்டது "சிருங்கா நில்... நான் பேசுகிறேன் அவரிடம்."

கூட்டம் வழிவிட சோமர் தன் புரவியைச் செலுத்தி யானையருகே வந்தார். புரவிமேல் அமர்ந்தவாறே "சார்வாகமுனிவருக்கு தலைவணங்குகிறேன். இந்நகர மக்கள் தங்கள் நகர்நுழைவால் வாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்" என்றார். "நீர் அமைச்சர் சோமர் என நினைக்கிறேன்" என்றான் சார்வாகன். "ஆம்... தங்கள் அருளாசியை நாடுகிறேன்." "என் ஆசி அதை நாடும் அனைவருக்கும் உரியதுதான். அமைச்சரே, இங்கே அறிவிக்கப்பட்ட இச்சொற்கள் எந்த முறைப்படி எடுக்கப்பட்டன?"

"சார்வாகரே, இவை பேரமைச்சர் யக்ஞசர்மரின் சொற்கள். பேரரசியின் ஆணைப்படி முன்வைக்கப்பட்டவை. அமைச்சர் விதுரர் தலைமையில் முதன்மை நெறியாளர் கூடி எடுத்த முடிவுகள் இவை." "மன்றுசூழப்பட்டதா? அதுதான் கேள்வி... மன்றுசூழப்பட்டதா?" என்று சார்வாகன் கேட்டான். "இல்லை" என்றார் சோமர். "ஏனென்றால் விசித்திரவீரியரின் முதல்மைந்தர் திருதராஷ்டிரன் அரியணை ஏற்பதென்பது நூலும் முறையும் வகுத்த மரபேயாகும். மரபு மீறப்படும்போது மட்டுமே முறைப்படி முன்னரே மன்றுசூழப்பட்டிருக்கவேண்டும்."

"இங்கு மரபு மீறப்பட்டிருக்கிறது" என்றான் சார்வாகன். "விழியிழந்தவன் எப்படி அரசாளமுடியும்? இவ்வரியணையில் அல்ல பாரதவர்ஷத்தின் எந்த அரியணையிலாவது எப்போதாவது விழியிழந்தவன் அமர்ந்த வரலாறுண்டா?" சோமர் "இல்லை. ஆனால் அதற்கும் நம் முன்னோர் வகுத்த நூல்கள் நெறி காட்டுகின்றன. சுக்ரரின் அரசநீதியும் பிரஹஸ்பதியின் ஷாத்ரஸ்மிருதியும் லகிமாதேவியின் விவாதசந்த்ரமும் விழியிழந்தவன் மன்னனாகலாமென்கின்றன. மன்னனுக்கு அமைச்சே விழிகள் சுற்றமே செவிகள் படைகளே தோள்கள் என்கின்றன அவை. நம் மன்னர் சுற்றமும் அமைச்சும் படைகளும் கொண்டவர். அதுவே போதுமானது" என்றார்.

"அமைச்சரே, சொல்லை எத்திசைக்கும் திருப்பமுடியும். நான் அதைக் கேட்கவில்லை. இது இயல்பான அரசேற்பு அல்ல. இங்கே ஒரு முறைமீறல் உள்ளது. அதை மக்கள் மன்று ஏற்றாகவேண்டும். நூல்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் சரி அதை இக்குலமும் குடியும் ஏற்றாகவேண்டும். அது நிகழ்ந்திருக்கிறதா?" சோமர் திகைத்து "அனைத்தும் முறைப்படி நிகழ்ந்துள்ளன" என்றார். "மக்கள் மன்று ஏற்காத மன்னன் இந்த பாரதவர்ஷத்தை ஆண்டதில்லை. நீங்கள் விழியுடையவர்கள் மீது விழியிலாத ஒருவனை சுமத்துகிறீர்கள்."

"சார்வாகரே, விழியிழந்தவன் அரசனாகக்கூடாதெனச் சொல்லும் ஒரு நூலை நீங்கள் இங்கே சுட்டிக்காட்டலாம்" என்றார் சோமர். "நான் உன்னுடன் நூல்விவாதம் செய்ய வருவேனென எண்ணினாயா? மூடா, நூறுஆயிரம் நூல்களை எரித்தெடுத்த நீறைத்தான் இதோ என் உடலெங்கும் பூசியிருக்கிறேன் நான். விழியிழந்தவனும் மனிதனே. அவனும் வாழ்வதற்கு உரிமை கொண்டவனே. உண்ணவும் உடுக்கவும் மகிழவும் மைந்தரைப் பிறப்பிக்கவும் அவனுக்கும் இயற்கையின் ஆணை உள்ளது. ஆனால் இங்குள்ளோர் அனைவரும் விழியுடன் இருக்கையில் விழியிழந்த ஒருவன் மன்னனாகக் கூடாது. அது ஒருபோதும் நலம் பயக்காது."

சார்வாகன் தொடர்ந்தான் "ஏனென்றால் அவன் சித்தத்தில் எப்போதும் வாழ்வது அவனுக்கும் பிறருக்கும் இருக்கும் வேறுபாடாகவே இருக்கும். அந்த இடைவெளியை நிறைக்கவே அவன் அனைத்தையும் செய்வான். மக்கள் நலம்நாட அவனுக்கு நேரமிருக்காது. ஒருபோதும் அவன் தன் மக்களை நம்பமாட்டான். அவர்கள் தன்னை ஏற்கவில்லை என்றே எண்ணுவான். ஆகவே அவர்களை கண்காணிப்பான். அமைச்சரே, ஐயம் கொண்டவன் ஐயத்துக்குரியவற்றை மட்டுமே காண்பான். ஆகவே அவன் காலப்போக்கில் மக்களை வெறுப்பான். தன்னை நிலைநிறுத்த மக்களை வதைப்பான்..."

"ஆட்சியாளன் என்றும் மக்களில் ஒருவனாகவே இருந்தாகவேண்டும்" என்றான் சார்வாகன். "தேவர்களுக்கு தேவனும் அசுரருக்கு அசுரனுமே அரசர்களாக முடியும். மூடர்நாட்டில் மூடனே நல்ல ஆட்சியாளன். மூடர்களை வழிநடத்தும் அறிவாளன் பேரழிவையே உருவாக்குவான். அறிஞர்களை வழிநடத்தும் மூடன் உருவாக்கும் அழிவும் அதுவும் நிகரே. ஆம், விழியுடையவர்களை விழியிழந்தோன் ஆளமுடியாது. நடப்பவர்களை முடமானவன் வழிநடத்தமுடியாது. அது தீங்கு."

அங்கிருந்த மொத்தக்கூட்டமும் திகைத்து நிற்பதை சோமர் கண்டார். "சார்வாகரே, உங்கள் அறமுரைத்தலை முடித்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். இங்கு நீர் சொன்ன சொற்களை நான் அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்" என்றார். சார்வாகன் "தெரிவித்தல் உங்களுக்கு நல்லது. எனக்கு நாடில்லை. வேந்தும் கொடியும் இல்லை. என்னை படைகளும் கோட்டையும் காப்பதில்லை. என் கப்பரையில் உங்கள் நாணயங்கள் விழுவதுமில்லை. இந்த நகரம் அழிந்து இங்கொரு வெண்ணீற்று மலை எஞ்சுமென்றால் அதில் ஒரு கை அள்ளி என் உடலில் பூசி மகிழ்ந்து நடனமிடுவேன். ஏனென்றால் ஆக்கமும் அழிவும் மகிழ்வே. வாழ்தலும் இறப்பும் மகிழ்வே. உண்டலும் குடித்தலும் உவத்தலும் ஓய்தலும் என ஓடும் வாழ்வின் ஒவ்வொரு துளியும் அமுதே. நெடுநீர்வழிப்படும் புணையெனப்போகும் இவ்வாழ்வில் பெரியோரென்றும் சிறியோரென்றும் எவருமில்லை. ஆதலால் யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்றான்.

வாழ்த்தொலிகளில்லாமல் பனிக்கட்டி உருகுவதுபோல அந்தக்கூட்டம் கரைவதை சோமர் பார்த்தார். அவர் கைகாட்ட பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. வீரர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி அஸ்தினபுரிக்கும் குருகுலத்துக்கும் பேரரசிக்கும் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரனுக்கும் வாழ்த்தொலி கூவினர். சோமர் நகர் வழியாக குதிரையில் செல்லும்போது படைவீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்புவதைக் கேட்டுக்கொண்டே சென்றார். எப்படி அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவியது என்று வியந்துகொண்டார்.

அரசுசூழ் மன்றில் விதுரன் இல்லை. அவன் திருதராஷ்டிரனின் அவையிலிருப்பதாகச் சொன்னார்கள். சோமர் அரண்மனையின் வலப்பக்க நீட்சியாகிய புஷ்பகோஷ்டம் நோக்கிச் சென்றார். செல்லும்போதே விதுரனிடம் சொல்லவேண்டிய சொற்களைத் திரட்டிக்கொண்டு நடந்தார். திருதராஷ்டிரனின் இசைக்கூடத்தில் யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. சோமர் மிக மெல்ல நடந்தார். குறடுகளைக் கழற்றிவிட்டு மரவுரிமெத்தை விரிக்கப்பட்டிருந்த தரையில் ஓசையில்லாமல் நடந்து உள்ளே சென்றார். இசைக்கூடத்தின் நடுவே இருந்த தடாகத்தில் சூரிய ஒளி விழுந்து அதன் ஒளியலை மரக்கூரையில் நடமிட்டுக்கொண்டிருந்தது. பெரிய பீடத்தில் திருதராஷ்டிரன் தன் இரு கைகளையும் மார்பின்மீது கட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்து இசைகேட்டுக்கொண்டிருந்தான்.

அவனருகே இன்னொரு பீடத்தில் விதுரன் அமர்ந்திருந்தான். இசைமேடையில் இளைய சேடிப்பெண் ஒருத்தி யாழ்மீட்டிக்கொண்டிருந்தாள். அவள் சூதப்பெண் போலத் தெரியவில்லை. அரண்மனையில் சேவையாற்றும் வைசியப்பெண் என்று அவள் ஆடைகள் காட்டின. முலைகள் மேல் தொய்ந்துகிடந்த பொன்மணியாரமும், வலக்கொண்டையாகக் கட்டப்பட்டிருந்த கூந்தலில் பொன்னாலான தாமரைமலரும் காதுகளில் அலரிமலர் வடிவில் பொற்தோடுகளும் அணிந்திருந்தாள். நீலப்பட்டாடை அணிந்து கால்களை மடித்து அமர்ந்து மெல்லிய சிவந்த விரல்களால் யாழ்நரம்புகளை வருடிக்கொண்டிருந்தாள்.

சோமர் அமர்ந்துகொண்டார். அவள் காந்தாரத்தில் இருந்து அரசியருடன் வந்த வைசியப்பெண் என்று அவருக்குத்தெரிந்தது. அவள் திரும்பத்திரும்ப ஒரே இசையைத்தான் மீட்டுகிறாள் என்று தோன்றியதும் அவர் சலிப்புடன் மெல்ல அசைந்தார். விதுரனின் விழிகள் வந்து அவர் விழிகளைத் தொட்டுச்சென்றன. அவள் மெல்லிய குரலில் யாழுடன் இணைந்து பாடத்தொடங்கினாள். காந்தாரத்தின் அபப்பிரம்ஸ மொழி. அது தெரிந்த சொற்களை புதியவகையில் உச்சரிப்பதுபோலக் கேட்டது. அவ்விசையில் பாலைவன வண்டுகளின் ரீங்காரமும் பாலைநிலத்துப்பாறைகளில் மணல்பொழியும் ஒலியும் ஓநாயின் மெல்லிய முனகலும் எல்லாம் கலந்திருப்பதுபோலத் தோன்றியது. சோமர் மீண்டும் நெளிந்தமர்ந்து கொட்டாவி விட்டார்.

இசை நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. இதை எதற்காக ரசிக்கிறார்கள் என சோமர் எண்ணினார். ஒரு பெரிய வெண்கலப்பாத்திரத்தில் மழைத்துளிகள் விழுவதுபோன்ற ஓசை. அதை அமர்ந்து ரசிப்பதென்றால் ஒருவகை குழந்தைத்தனம்தான் அது. ஆனால் விழியிழந்த அரசனால் வேறென்ன செய்யமுடியும்? அவனது கரியபேருடலில் அந்த இசை குளத்துநீரில் காற்று அலையெழுப்புவதுபோல எதிர்வினையை உருவாக்கிக்கொண்டிருந்தது. இந்த மனிதன் இனி இந்நகரின் அரசன். இவன் என்ன எண்ணுகிறான் என்றே எவரும் அறியமுடியாது. இறுக மூடப்பட்ட ஒரு கற்சுவர்சிறைக்குள் வாழ்பவன். அவனுக்கு இம்மக்களும் நெடுந்தூரக்குரல்கள் மட்டும்தானே?

அவருக்கு உடல் சிலிர்த்தது. சார்வாகன் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக எண்ணத்தில் விரிந்தன. அவன் அஸ்தினபுரியின் அரசனானால் அவனுக்கும் மக்களுக்குமான உறவென்ன? ஆம், விதுரன்தான் நாடாளப்போகிறான். பீஷ்மர் இருக்கிறார். ஆனால் அவனுடைய இருண்ட உலகில் எவரேனும் மந்தணப்பாதைகள் வழியாகப்புகுந்துவிட்டால்? அவன் விதுரனை விலக்கிவிட்டால் என்ன நிகழும்? முதுமையில் செவிகேளாமலாகும் யானை கொலைவெறிகொள்ளும் என்று மதங்கநூல் சொல்லும். பாகனை புரிந்துகொள்ளமுடியாதென்பதனாலேயே அது கொல்லத் தொடங்கிவிடும்.

எண்ணங்களை அவரால் விலக்க முடியவில்லை. எண்ணங்கள் அவருக்குள் முன்னரே உறைந்திருந்த ஐயங்களை தொட்டுத்தொட்டு மீட்டன. விதுரன் இங்கே இனி நீடிக்கமுடியாது. விழியிழந்தவனின் இருண்ட உலகுக்குள் நுழைய ஒரே வாயில்தான். அவன் அரசியான காந்தாரி. அவள் தம்பி அந்த வாயில் வழியாக அவனுள் நுழையமுடியும். ஆம், அரசாளப்போவது விதுரன் அல்ல. திருதராஷ்டிரன் அல்ல. சகுனிதான். அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பின் உள்ளடக்கம் அதுவே. கோட்டைப்புறத்து மயானத்தில் சாம்பல்பூசி சிவமூலிப்புகை இழுத்து ஒடுங்கிக்கிடக்கும் சார்வாகன் அறிந்த உண்மை நாற்பத்தைந்தாண்டுகாலம் மதிசூழ்கை கற்ற அவர் எண்ணத்தை அடையவில்லை.

இசை நின்றது. திருதராஷ்டிரன் பெருமூச்சுகள் விட்டபடி தலையை அசைத்தான். அந்த வைசியப்பெண் எழுந்து திருதராஷ்டிரனை வணங்கினாள். "பிரகதி,.. நீ இங்கேயே இரு... இந்த இசை என் செவிகளில் இருந்து எப்போது மறைகிறதோ உடனே நீ மீண்டும் இதை இசைக்கவேண்டும்" என்றான் திருதராஷ்டிரன். "என்ன ஒரு மகத்தான இசை... காற்றும் நெருப்பும் சேர்ந்து நடனமிடும் இசை... பாலைவனங்களில் மட்டும் பிறக்கும் இசை..." திரும்பி கைகளை நீட்டியபடி "விதுரா!" என்றான். "அரசே" என்றான் விதுரன்.

"நான் முடிசூடியதுமே ஒரு பெரும் இசைச்சபை கூடவேண்டும். தென்னகத்தில் இருந்து அனைத்துப் பண்களையும் பாடும் பாணர்களை வரவழைக்கவேண்டும். காந்தாரத்திலும் அதற்கப்பால் பெரும்பாலைநிலத்திலும் இருந்து இசைவாணர்களை வரவழைக்கவேண்டும். இருசாராரும் இங்கே என் அவையில் இருந்து பாடவேண்டும். இரு பாடல்முறைகளும் ஒன்றாகவேண்டும். பெருமழைநிலத்தின் இசையும் அனல்மண்ணின் இசையும் ஒன்றாகட்டும். அது சிவசக்தி லயம்போலிருக்கும்... ஆம். அதுதான் நான் உடனே செய்யவேண்டியது... இது என் ஆணை. குறித்துக்கொள்!"

"ஆணை" என்றான் விதுரன். "பிரகதி, உனக்கு நான் எந்தப் பரிசும் அளிக்கப்போவதில்லை. நீ இங்கே எப்போதுமிருக்கவேண்டும்" என்றான் திருதராஷ்டிரன். பிரகதி வணங்கி பின்னகர்ந்து யாழை எடுத்துக்கொண்டாள். "விதுரா, மூடா, இன்னும் எத்தனை நாளிருக்கிறது மணிமுடிசூட்டு நாளுக்கு?" விதுரன் "அரசே, இன்னும் நாற்பது நாட்களிருக்கின்றன" என்றான். "ஏன் அத்தனை தாமதம்? அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டதல்லவா?" "ஆம், அரசே. முடிசூட்டுவிழாவுக்கு அனைத்து ஷத்ரியகுலங்களும் வந்தாகவேண்டுமல்லவா?" "அவர்களை விரைந்து வரச்சொல்லலாமே!" விதுரன் ஒன்றும் சொல்லவில்லை.

"விதுரா, நான் கலிங்கத்திலிருந்து எனக்கான பட்டுத்துணிகளை கொண்டு வரச்சொல்லியிருந்தேனே?" என்றான் திருதராஷ்டிரன். "அரசே, அதற்காக ஒரு சிற்றமைச்சரே சென்றிருக்கிறார். தங்களுக்காக பீதர்களின் உயர்தரத்துப் பட்டாடைகளைக் கொண்டுவரச்சொல்லி தேவபாலத்துக்கும் ஆளனுப்பியிருக்கிறேன். திருவிடத்தில் இருந்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் வருகின்றன." திருதராஷ்டிரன் நிறைவின்மையுடன் தலையை அசைத்து "விரைவாக வரச்சொன்னாயா? அவர்கள் வந்துசேர தாமதமாகிக்கொண்டே இருக்கும். தாமதித்துவந்தபின் காரணங்கள் சொல்பவர்களை கசையாலடிக்கத் தயங்கமாட்டேன் என்று சொல்!" என்றான்.

"நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான் விதுரன். "நகைகள் வந்ததும் என்னை கூட்டிச்சென்று காட்டு... எங்கே வியாஹ்ரதத்தர்?" விதுரன் "அவர் மதியம் வரை அலுவலில் இருப்பார். பின்மாலையில் உங்களை வந்து சந்திப்பார். தற்போது தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்" என்றான். அவன் கைகாட்ட ஓரமாக நின்ற அணுக்கச்சேவகன் திருதராஷ்டிரனின் கைகளைப் பற்றிக்கொண்டான். தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்தபடி திருதராஷ்டிரன் உள்ளே சென்றான்.

விதுரன் திரும்பி மெல்ல "மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை, அல்லவா?" என்றான். "ஆம்... ஆனால்..." என சோமர் தொடங்க "நான் இங்கிருந்தே கேட்டேன். மக்களின் வாழ்த்தொலிகள் அலையலையாக எழுந்தமரும். படைவீரர்களின் ஒலிகள் சீரான படைநகர்வின் ஒலி போலக்கேட்டன" என்றான். "ஒரு சார்வாகர் பெருமன்று முன் எழுந்து நின்றுவிட்டார் அமைச்சரே" என்றார் சோமர்.

"பேரமைச்சர் யக்ஞசர்மர் தன் உதவியாளர்களுடன் சார்வாகர் தங்கியிருக்கும் சுடுகாட்டுக்கே நேரில் சென்று பணிந்து காணிக்கை வைத்து அவரையும் முடிசூட்டுவிழவுக்கு அழைக்கவேண்டும். பேரமைச்சரே சென்ற செய்தியை நாட்டுமக்கள் அனைவரும் அறியவும் வேண்டும்" என்றான் விதுரன். சோமர் திகைப்புடன் நோக்க விதுரன் புன்னகையுடன் "மன்றில் அவரது அவச்சொல் ஒலிக்கட்டும். மன்றில் முழுதணிக்கோலத்தில் மூத்தவர் வந்தமர்கையில் அச்சொற்களை அவர் சொன்னாரென்றால் அதுவே குடித்தலைவர்களும் குலமூத்தாரும் மன்னரை ஏற்பதற்கு தூண்டுதலாகும்" என்றான்.

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 6 ]

விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். "அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்" என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு "ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்" என்றான். "சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா?" என்றாள் சத்யவதி. "அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது தெரிகிறது" என்றான் விதுரன்.

"உண்மையில் நான் மெல்ல அந்தப்படைகளை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன் விதுரா" என்றாள் சத்யவதி. "அவர்கள் நம்மைவிட எவ்வகையிலோ கூரியவர்கள் என்று தோன்றுகிறது. நடையிலா கண்களிலா தெரியவில்லை, ஒரு காந்தாரப்படைவீரனைக் கண்டால் அவன் நம் வீரர் இருவருக்கு நிகரென்று தோன்றுகிறது." விதுரன் "பேரரசி எண்ணுவது முற்றிலும் உண்மை. ஆயிரம் காதம் கடந்து இங்குவந்திருக்கும் காந்தார வீரன் வீடோ குடியோ உறவோ சுற்றமோ இல்லாதவன். தன் வாளை நம்பி இங்கு வந்தவன். நம் வீரர்கள் இனிய இல்லங்களில் மனைவியும் புதல்வர்களும் கொண்டவர்கள். தந்தையர் தனயர், ஏன் பாட்டன்களும் இருக்கிறார்கள். நாம் வைத்திருக்கும் துருவேறிய படைக்கலங்களைப்போன்றவர்கள் நம் வீரர்கள். அவர்களோ ஒவ்வொருநாளும் கூர்தீட்டப்பட்டவர்கள்."

"உண்மையில் இந்நகரம் இன்று நம் ஆணையில் இருக்கிறதா?" என்றாள் சத்யவதி. "இன்று இருக்கிறது" என்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன் "நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா? அஸ்தினபுரியை குழந்தையைக்கொண்டுசென்று ஓநாய்முன்போடுவதுபோல விட்டுவிட்டேனா? தெரியவில்லை" என்றாள். அவளுடைய கண்களுக்குக் கீழே தசைவளையம் தொங்கியது. முகமே சுருங்கி நெளிந்த கரும்பட்டால் ஆனதுபோலத் தோன்றியது.

"பேரரசியார் இந்த இக்கட்டை நன்கு தேர்ந்தபின்னர்தானே எடுத்தீர்கள்?" என்றான் விதுரன். "ஆம், அனைத்தையும் சிந்தனை செய்தேன். சூதரும் ஒற்றரும் அளித்த அனைத்துச்செய்திகளையும் நுண்ணிதின் ஆராய்ந்தேன். ஆனால் அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன்" என்றாள் சத்யவதி. "ஒருவனைப்பற்றி எந்த இறுதிமுடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டுவிடுகின்றன." அவள் தலையை அசைத்தாள். "நான் சகுனியைப்பற்றி அனைத்தும் அறிவேன் என நினைத்தேன். அவனை நேரில் கண்டதும் என் கணிப்புகளை எண்ணி திகைத்தேன்."

"நேரில் கண்டதும் எதை அறிந்தீர்கள்?" என்றான் விதுரன் சற்றே வியப்புடன். "அறிந்தது எந்த புதுச்செய்தியையும் அல்ல. அவனை நேரில் கண்டு அறிந்தவை இரண்டுதான். தன்னை முற்றிலும் இறுக்கிக்கொண்டிருக்கும் அரசியலாளன் அவன். ஆனால் காந்தாரியைப்பற்றி பேசும்போது அவன் உள்ளம் நெகிழ்கிறது. தேவவிரதனை அவன் விரும்புகிறான். ஆனால் அவை எவ்வகையிலும் முக்கியமான அறிதல்களல்ல. நானறிந்தது அறிதல் அல்ல. உணர்தல். அவனருகே நிற்கையில் என் அகம் தெளிவாகவே அச்சத்தை உணர்கிறது. அவன் இந்நகரின் அழிவுக்கு வழிவகுப்பான் என எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது."

விதுரனை நோக்கி சத்யவதி சொன்னாள் "ஆகவேதான் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கலாகாது என்கிறார்கள் அரசுசூழ்தல் அறிஞர்கள். பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது. நம் தர்க்கம்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறது. அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது. உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்கமுடிகிறது."

"பேரரசி சற்று மிகைப்படுத்திக்கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன்" என்றான் விதுரன். "இருக்கலாம் விதுரா. நான் பெண் என உணரும் தருணங்கள் இவை" என்று சத்யவதி பெருமூச்சு விட்டாள். "அனைத்திலும் வரப்போகும் புயலின் உறுமலை என் செவிகள் கேட்கின்றன போலும்." அவள் வலிந்து புன்னகை புரிந்தாள். "உன் மூதன்னையை ஒரு பேதையாகக் காண்பது உன்னுள் உவகையை நிறைக்குமே..." விதுரன் புன்னகை புரிந்தபடி "சிறப்பாக உய்த்தறிகிறீர்கள்" என்றான்.

சத்யவதி வாய்விட்டுச்சிரித்தபோது அவள் இளமையில் சந்தனுவை பித்துகொள்ளவைத்த பேரழகி என்பதை விதுரன் எண்ணிக்கொண்டான். காற்றில் சாம்பலுக்குள் இருந்து கனல் சுடர்வதுபோல அவள் முதுமைக்குள் இருந்து அப்பேரழகு வெளிவந்தது என எண்ணிக்கொண்டான். மூதன்னையிடம்கூட எஞ்சும் பெண்ணழகை தவறவிடாத தன் ஆண்விழிகளை எண்ணியும் வியந்துகொண்டான். அதேகணம் அவன் எண்ணம் ஓடுவதை உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கை கொண்டன. "என்ன பார்க்கிறாய்?" என்றாள். "அன்னைய, நீங்கள் அழியா அழகுகொண்டவர்" என்றான் விதுரன் .

அரசைத் துறந்து முதுமையைத் துறந்து அஸ்தினபுரியையும் அத்தனை ஆண்டுகளையும் துறந்து யமுனைக்கரை இளம்பெண்ணாக நின்று முகம் சிவந்து கண்வெட்கி "என்ன சொல்கிறாய் மூடா?" என்றாள் சத்யவதி. "ஆம் அன்னையே. உங்கள் சிரிப்புக்கு நிகரான பேரழகு இங்கு எந்தப்பெண்ணிடமும் வெளிப்படவில்லை." அனலென சிவந்த கன்னங்களுடன் அவள் சிரித்துக்கொண்டு "எத்தனை பெண்களைப் பார்த்தாய் நீ?" எனறாள். "ஏராளமாக" என்றான் விதுரன். சத்யவதி "அதுசரி, ஆண்மகனாகிவிட்டாய். தேவவிரதனிடம் சொல்லவேண்டியதுதான்" என்றாள். "அன்னையே நான் கண்ட பெண்களெல்லாம் காவியங்களில்தான். உங்கள் மைந்தரின் சொற்கள் வழியாக."

சத்யவதி சிரித்து "அவன் உன்னைப்பார்த்தால் மகிழ்வான். அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ" என்றாள். "நீ வந்ததனால்தான் நான் சற்றே கவலை மறந்தேன். என் முகம் மலர்ந்தாலே அதை அழகென நீ சொல்கிறாய் என்றால் நான் எப்போதும் துயருற்றிருக்கிறேன் என்றல்லவா பொருள்?" என்றாள் சத்யவதி. மேலும் அழகை புகழச்சொல்லிக் கோரும் பெண்மையின் மாயத்தை உணர்ந்த விதுரன் தனக்குள் புன்னகைத்தபடி "அன்னையே, நீங்கள் அசைவுகளில் அழகி. புன்னகையில் பேரழகி. பற்கள் தெரிய நகைக்கையில் தெய்வங்களின் அழகு உங்களில் நிகழ்கிறது" என்றான்.

"போதும்… யாராவது இதைக்கேட்டால் என்னை பித்தி என்று நினைப்பார்கள். பெயரனிடம் அழகைப்பற்றி அணிச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றாள் சத்யவதி. விதுரன் "ஏன் கேட்டாலென்ன? மூவுலகையும் ஆளும் அன்னை பார்வதியே பராசரரின் தேவிஸ்தவத்தை கேட்டு மகிழ்ந்திருக்கிறாள் அல்லவா?" என்றான். சத்யவதி "நீ என்ன என்னைப்பற்றி காவியமெழுதவிருக்கிறாயா?" என்றாள். "ஆம். அன்னையே நான் காவியமெழுதுவேன் என்றால் அது உங்களைப்பற்றி மட்டும்தான். அதற்கு மாத்ருசரணம் என்று பெயரிடுவேன். உங்கள் பாதங்களில் இருந்து தொடங்குவேன்."

"போதும்..." என்றாள் சத்யவதி பெருமூச்சுடன். அவள் முந்தைய எண்ணங்களுக்கு மீண்டாலும் முகத்தின் அந்த மலர்ச்சி நீடித்தது. "அந்தப்புரத்தில் என்றும் வாழப்போகும் ஒரு கசப்பு முளைத்துவிட்டது விதுரா. அதைப்பற்றிச் சொல்லத்தான் நான் உன்னை அழைத்தேன்." விதுரன் தலையசைத்தான். "நீயே உய்த்தறிந்திருப்பாய். காந்தாரிக்கும் குந்திக்கும் இடையேதான்." விதுரன் "அது நிகழுமென நான் முன்னரே எண்ணினேன்" என்றான். "ஏன்?" என்றாள் சத்யவதி. விதுரன் "குந்திபோஜனின் மகள் இயல்பால் ஷத்ரியமகள். வணங்காதவர். வெல்பவர். ஆள்பவர்" என்றான்.

"ஆம், அவள் கையில் நிறைகுடமும் சுடர்அகலும் கொண்டு வண்டியில் இருந்து என் மாளிகைமுற்றத்தில் இறங்கும்போது நான் அவளைக் கண்டேன். அக்கணமே இவள் சக்ரவர்த்தினி அல்லவா என எண்ணிக்கொண்டேன். பெரும்பிழை செய்துவிட்டோம் என்ற எண்ணமே எழுந்தது. நேரில்காணாமல் எடுத்த இன்னொரு பிழைமுடிவு. அவள் இந்த அந்தப்புரத்தில் திருதராஷ்டிரனின் பதினொரு ஷத்ரிய அரசிகளின் சேடியாக ஒருபோதும் ஒடுங்க மாட்டாள்." விதுரன் "ஆம், ஆனால் தானிருக்கும் இடமும் தன்னிடமும் தெரிந்தவர் குந்திதேவி. எங்கே பிழை நிகழுமென்றால் காந்தாரத்தின் அரசிக்கு விழியில்லை. அவர் தங்கையருக்கும் விழியிருக்க வாய்ப்பில்லை. அவர்களால் குந்திதேவியைக்  காணமுடியாது. வைசியகுலத்தவளாகவே அவரை நடத்துவார்கள்."

"அதுதான் நடந்தது" என்றாள் சத்யவதி. "குந்தி புதுமணப்பெண்ணாக வந்திறங்கி புத்தில்லம் புகுந்தபோது அவளை முறைப்படி எதிரேற்று கொண்டுசெல்ல கையில் நிறைவிளக்கும் மலருமாக அவளுடைய மூத்தவள் வந்திருக்கவேண்டும். அவள் விழிமூடியவள். ஆனால் அவளுடைய பத்து தங்கையரில் எவரும் வரவில்லை. வண்டிகள் வரும் ஒலி கேட்டதும்கூட எவரும் வரவில்லை என்று கண்டு நான் சியாமையிடம் முதல் மூன்று இளவரசிகளும் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டு அனுப்பினேன். ஆனால் கடைசி மூன்று பெண்களும்தான் வந்தனர். அவர்களும் கைகளில் எதையும் வைத்திருக்கவில்லை."

"அந்தக் கடைசிப்பெண் தசார்ணை மிகச்சிறுமி. ரதங்கள் வந்து நின்றபோது அவள் வேறெதையோ பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அணிமங்கலத்துடன் இல்லம்புகுந்த குந்தியை எதிர்கொள்ள இரட்டையாக அமங்கல முறைகாட்டி நின்றனர் அவ்விளவரசியர். நான் என் முகத்தில் எதையும் காட்டவில்லை. அவளை எதிர்கொண்டழைத்து மாளிகைக்குள் கொண்டுசென்று மங்கலத்தாலம் காட்டி, மஞ்சள்நீர் தெளித்து, மலர்சூட்டி இல்லத்துக்குள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவள் மிகக்கூரியவள். என்ன நிகழ்ந்ததென அக்கணமே அவள் உணர்ந்துகொண்டாளென அவள் கண்களில் நான் கண்டேன்" சத்யவதி சொன்னாள்.

"அவள் அந்த அவமதிப்புக்கு எதிர்வினையாற்றுவாள் என நான் எண்ணினேன்" என்றாள் சத்யவதி. "இல்லம் சேர்ந்தபின் நீராடி ஆடைமாற்றி மூன்று மூதன்னையரின் பதிட்டைகளில் வழிபட்டு மலர்கொண்டபின் அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அவளுடன் வந்த சேடியை நான் வரச்சொன்னேன். அவளிடம் மூத்தவளைச் சென்று நோக்கி வணங்கிமீளும்படி குந்தியிடம் சொல்லச் சொன்னேன். மூத்தவள் விழிமறைத்தவளாதலால் அதுவே முறையாகுமென விளக்கும்படி கோரினேன். என் ஆணையை குந்தி மீறமாட்டாளென நானறிவேன்" சத்யவதி தொடர்ந்தாள்.

"சத்யசேனையின் சேடியை வரவழைத்து அவர்கள் குந்தியை வரவேற்க வராமலிருந்தமை பெரும் பிழை என்று கண்டித்தேன்" என்றாள் சத்யவதி. "ஆனால் சூத்திரப்பெண்களுக்கு அப்படி வரவேற்பளிக்கும் முறை காந்தாரத்தில் இல்லை என்று அவள் எனக்கு பதில் சொல்லியனுப்பினாள்." விதுரன் கண்களில் சினம் தோன்றியது. "அத்தகைய பதிலை தாங்கள் பொறுத்துக்கொண்டிருக்கக்கூடாது அன்னையே" என்றான். சத்யவதி "நான் எதையும் பெரிதாக்க எண்ணவில்லை. ஏனென்றால் பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும். அனைத்தும் எளிதாக கடந்துசெல்லட்டும் என்றே முயன்றேன்" என்றாள்.

"அத்துடன் திருமண வேளை என்பது மிகநுட்பமான அகநாடகங்களின் களம் விதுரா. ஒருவருக்கொருவர் முற்றிலும் அயலான குடும்பங்கள் இணைகின்றன. ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஒருவரை ஒருவர் கண்காணிப்பவர்கள். மதிக்கப்படுகிறோமா என்ற ஐயம். அவமதிக்கப்படுவோம் என்னும் அச்சம். தாங்கள் தங்களைப்பற்றி எண்ணியிருப்பவற்றை பிறர் ஏற்கிறார்களா என்னும் பதற்றம். சிறு சொல்லும் பெரும் அகக்கொந்தளிப்பாக ஆகிவிடும். எளிய செயல்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாத உட்பொருட்களை அளித்துவிடும். மணக்காலத்தில் குடும்பங்கள் கொள்ளும் சிறு கசப்புகூட பெருகிப்பெருகி அவ்வுறவுகளை முற்றாகவே அழித்துவிடும்."

"ஆகவே காந்தார இளவரசி அஸ்தினபுரியின் பேரரசிக்கு அவமதிப்பான பதிலை அளிக்க ஒத்துக்கொண்டீர்கள்" என்று விதுரன் சினம் அடங்காமல் சொன்னான். "அவள் சிறுமி. அவள் சொன்னதும் சரியே. காந்தாரத்தின் நடைமுறைகளை நாம் அறியோம் அல்லவா? அவளிடம் யாதவர்கள் ஷத்ரியர்களல்ல சூத்திரர்களே என்று எவரேனும் சொல்லியிருக்கலாம். அனைத்தையும் மெல்ல பின்னர் பேசி சீர்செய்துகொள்ளலாமென எண்ணினேன்." விதுரன் "என்ன நிகழ்ந்தது?" என்றான்.

"நான் சொல்வதை குந்தி ஒருபோதும் மீறமாட்டாளென அவளைக் கண்ட முதற்கணமே அறிந்துகொண்டேன். ஆனால் நான் சொன்னதைக்கொண்டே அவள் பழிதீர்ப்பாளென எண்ணவில்லை" என்றாள் சத்யவதி. விதுரன் புன்னகை செய்தான். "சிரிக்காதே. ஒவ்வொன்றும் என்னை பதறச்செய்கிறது" என்றாள் சத்யவதி. "அவள் தன்னை பேரரசி என அலங்கரித்துக்கொண்டாள். அம்பாலிகையின் சேடியரை அழைத்து தனக்கு சாமரமும் மங்கலத்தாலமும் எடுக்கச்செய்தாள். குந்திபோஜன் அவளுக்களித்த விலைமதிப்புள்ள மணிகளையும் மலர்களையும் மங்கலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு அணிச்சேடியர் துணைவர காந்தாரியை காணச்சென்றாள். புஷ்பகோஷ்டத்தின் அந்தப்புரத்துக்குள் சென்று காந்தாரியைக் கண்டு முறைப்படி தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி வணங்கினாள். தங்கையரையும் முறையாக வணங்கி மலர்கொடுத்தாள்."

விதுரன் பெருமூச்சுடன் "ஆம், அவர்கள் அதையே செய்வார்களென நானும் எதிர்பார்த்தேன்" என்றான். "அச்செயல் அவர்களை நெருப்பென எரியச்செய்துவிட்டது. சத்யசேனை குந்தி திரும்பியதும் அவள் கொண்டுசென்ற பரிசில்களை அள்ளி வீசி அவள் நாடகமாடுகிறாளென கூவியதாக சேடியர் சொன்னார்கள்" சத்யவதி பெருமூச்சு விட்டாள். "அதைக்கேட்டபோது நான் குந்திமீதுதான் கடும்சினம் கொண்டேன். அரண்மனைமுகப்புக்கு மங்கலஏற்புக்கு அவர்கள் வராததைக் கொண்டே அவர்களை அவள் எடைபோட்டுவிட்டாள். அவர்களின் சிறுமையை வதைப்பதற்குரிய மிகச்சிறந்த முறை அவர்கள் முன் பேரரசியின் நிமிர்வுடனும் பெருந்தன்மையுடனும் இருப்பதே என்று கண்டுகொண்டாள்."

"அது அவர்களின் இயல்பாக இருக்கலாம்" என்றான் விதுரன். "ஆம், அவள் இயல்புதான் அது. அவள் யானைபோன்றவள். அவளால் தலைகுனிய முடியாது. பதுங்கவும் ஒடுங்கவும் முடியாது. ஆனால் அவளுக்கு தன் ஒளி தெரியும். நோயுற்ற விழிகள் அதைக்கண்டு கூசித்தவிக்குமென தெரியும். அந்த வதையை அவர்களுக்கு அளிக்கவேண்டுமென்றே அவள் சென்றாள்" என்றாள் சத்யவதி. "இனி நிகழவிருப்பது இதுதான். அவள் தன் நிமிர்வாலும் ஒளியாலும் அவர்களை வதைத்துக்கொண்டே இருப்பாள். அவர்கள் அந்த வலியாலேயே புழுவாக ஆவார்கள். அவளுடைய ஒவ்வொரு பெருந்தன்மையாலும் மேலும் மேலும் சிறுமையும் கீழ்மையும் கொள்வார்கள்."

"அவர்களை அப்படி ஆக்குவது எது?" என்று விதுரன் கேட்டான். "அவர்களின் நகரம் பாரதவர்ஷத்தின் மேற்கெல்லை. அங்கே கங்கைக்கரையின் எண்ணங்களும் நடைமுறைகளும் சென்றுசேர்ந்திருக்க வாய்ப்பில்லை" என்றாள் சத்யவதி. "இல்லை, பேரரசி. அதுவல்ல. அவர்கள் இங்கு வந்திறங்கியபோது நான் அவர்களைப் பார்த்தேன். அச்சமும் ஆவலும் கொண்ட எளிய பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குள் அந்தக் கசப்பை நிறைப்பது எது?" சத்யவதி அவன் சொல்லப்போவதென்ன என்பதைப்போல பார்த்தாள். "அவர்களில் எவருக்கேனும் இசை தெரியுமா?" என்றான் விதுரன். சத்யவதி புரிந்துகொண்டு விழிவிரிய மெல்ல உதடுகளைப்பிரித்தாள்.

"அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது பேரரசி. அவரது இசைக்குள் அவர்கள் செல்லவேண்டும் மூத்த அரசியைப்போல. அல்லது தங்கள் இசையால் அவரிடம் உரையாடவேண்டும்." சத்யவதி "திரும்பத்திரும்ப இதுவே நிகழ்கிறது" என்றாள். விதுரன் "அத்துடன் அந்த வைசியப்பெண் பிரகதி, அவள் உமிக்குள் வைத்த நெருப்புத்துளி போல ஒவ்வொரு கணமும் இவ்வரசிகளின் ஆன்மாவை எரித்துக்கொண்டிருப்பாள்"   என்றான். தன்னையறியாமலேயே சத்யவதி தலையை மெல்ல தட்டிக்கொண்டாள். "ஆம்... அதை நன்றாகவே உணர்கிறேன். அந்த உணர்வுகளெல்லாம் எனக்கு நெடுந்தொலைவாக ஆகிவிட்டன. ஆயினும் தெளிவாகவே தெரிகின்றன." சத்யவதி பெருமூச்சு விட்டாள். "எளியபெண்கள். பாவம். இனி இப்பிறவியில் அவர்களுக்கு காதல் இல்லை. உவகை இல்லை. நிறைவளிக்கும் துயில்கூட இல்லை."

விதுரன் "தாங்கள் இதில் கவலைகொள்ள ஏதுமில்லை பேரரசி" என்றான். "தாங்கள் இருவரை நம்பலாம். குந்திதேவி ஒருபோதும் அவரது எல்லையில் இருந்து நிகழ்வுகள் மீறிச்செல்ல விட்டுவிடமாட்டார்கள். தன் மாண்பை எந்நிலையிலும் இழக்கமாட்டார்கள். ஆகவே விரும்பத்தகாதது என ஏதும் எந்நிலையிலும் நிகழாது. காந்தாரிதேவி இவர்கள் உழலும் இவ்வுலகிலேயே இல்லை." சத்யவதி "நீ உன் தமையனிடம் பேசலாகாதா? அந்த வைசியப்பெண்ணை இசைக்கூடத்தில் இருந்து விலக்கினாலே பெரும்பாலும் அனைத்தும் சரியாகிவிடும்" என்றாள். "இல்லை அன்னையே, அதைச்செய்ய எவராலும் இயலாது" என்றான் விதுரன்.

பெருமூச்சுடன் "நீ வந்து சொன்ன சொற்களை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாய். ஆனால் அச்சொற்களே ஒரு பெரும் அமைதியை அளிக்கின்றன. விந்தைதான்" என்றாள் சத்யவதி. "சிலசமயம் அப்படி ஒரு முழு கையறுநிலை அமைதியை நோக்கிக் கொண்டுசெல்லும்போலும்." விதுரன் "அன்னையே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்றான். "நான் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதேனும் ஒன்று பிழையாக நிகழுமென்றால் அப்பிழையை பெரிதாக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து கசப்புகளும் இங்கே திரண்டுவிட்டிருக்கின்றன என்றுமட்டும் உணர்கிறேன்" என்றாள்.

விதுரன் எழுந்து "நான் வருகிறேன் பேரரசி, என் ஆணைகளுக்காக அங்கே பலர் காத்திருக்கிறார்கள்" என்றான். "ஷத்ரிய மன்னர்களுக்கு அழைப்புகள் சென்றுவிட்டனவா?" "ஆம், அனைவருக்கும் முறைப்படி அழைப்பு சென்றுள்ளது. மகதத்தை அழைக்க பலபத்ரரே சென்றிருக்கிறார்." சத்யவதி பார்வையைத் திருப்பியபடி "காசிக்கு?" என்றாள். "காசிக்கு கங்கர்குலத்தைச் சேர்ந்த படைத்தலைவர் சத்யவிரதனை அனுப்பியிருக்கிறேன்" என்றான் விதுரன். சத்யவதி அனிச்சையாகத் திரும்பியபோது விதுரன் புன்னகைசெய்தான். "ஒவ்வொன்றும் முறையாக நிகழ்கிறது பேரரசி. மணப்பந்தல் அமைக்க கலிங்கச்சிற்பிகள் நகருக்கு வந்துவிட்டார்கள். விருந்தினர் தங்குவதற்காக நூறு பாடிவீடுகளை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது."

"சரி, நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் இரவுக்குள் என்னிடம் தெரிவிக்கச்சொல்" என்றாள் சத்யவதி. விதுரன் தலைவணங்கி வெளியே வந்தான். அத்தனை சொற்களில் இருந்தும் சிந்தனையை விடுவித்துக்கொண்டு மீண்டும் செய்யவேண்டிய பணிகளை நோக்கிச் செலுத்த முயன்றான். ஓலைநாயகங்களுக்கு செய்திசொல்லுதல். யானைக்கொட்டில்களுக்கும் குதிரைநிரைகளுக்கும் பொறுப்பாளர்களை அமைத்தல். கங்கைக்கரை படகுத்துறையை செப்பனிடுதல். வடக்கே புராணகங்கைக்குள் குடியேறிய காந்தாரவீரர்களின் குடியிருப்புகளை ஒழுங்குசெய்தல்... அனைத்துக்கும் தொடர்பற்ற இன்னொரு உலகம் இங்கே. உணர்ச்சிகளால் ஆனது. புறமும் அகமும். ஆணும் பெண்ணும். எது பொருளற்றது? எது சிறுமையானது?

அந்தப்புரத்தின் பெருமுற்றத்தில் செம்பட்டுத்திரைச்சீலைகள் அலைபாய அணிப்பல்லக்கு வந்து நிற்பதை விதுரன் கண்டான். மூங்கில்கால்களில் பல்லக்கு நிலத்திலமர்ந்ததும் நிமித்திகன் கையில் வெள்ளிக்கோலுடன் முன்னால் வந்து இடையில் இருந்த சங்கை எடுத்து முழங்கினான். அந்தப்புரத்துக்குள் இருந்து ஐந்து சேடிகள் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். பல்லக்கின் உள்ளிருந்து திரைச்சீலையை விலக்கி குந்தி வெளியே வந்தாள். சிலம்பணிந்த மென்பாதங்கள் இரு பொன்னிற முயல்கள் போல மரவுரி மெத்தை மேல் வந்தன. இளஞ்சிவப்பு பட்டாடையின் பொன்னூல் பின்னல் விளிம்பு அலைநுரையென நெளிந்து உலைந்தாடியது. நடையில் ஆடிய கைவளைகள் எங்கோ குலுங்கின. கண்முன் மேகலை நலுங்கி குலைந்து பிரிந்து இணைந்து அதன் தொங்கும் முத்துக்கள் துள்ளித் துவண்டு துவண்டு ...

அவள் அருகே வந்ததை அறிந்ததும் விதுரன் தலைவணங்கி "சிறிய அரசியை வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களை காணும் பேறுபெற்றேன்" என்றான். கூந்தலை மூடிய மெல்லிய கலிங்கத்துணியை இழுத்து விட்டபடி இருகன்னங்களிலும் குழிகள் தெளிய புன்னகைசெய்து "என் பேறு அது" என்றாள் குந்தி. காதோரத்தில் கருங்குருவி இறகு போல வளைந்து நின்ற குழல்புரி ஆடியது. பீலி கனத்த இமைகள் செம்மலரிதழ்களென இறங்கின. விதுரன் மீண்டும் தலை வணங்கினான். சிலம்புகள் கொஞ்சிக் கொஞ்சி விலகிச்சென்றன. வளையல்கள் சிரித்துச் சிரித்துச் சென்றன. அணிகளுக்கு இத்தனை ஓசை உண்டா என்ன?

அவள் அப்பால் வாசலுக்குள் மறைந்தபின்னரும் அங்கேயே நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. சென்றது ஒரு விழிமயக்கா? அவளிடமிருந்து ஒன்று அங்கேயே பிரிந்து நின்றுவிட்டதா என்ன? அது அவளிடமிருந்து எழுந்த வாசனை என்று எண்ணினான். குளியல்பொடியும் கூந்தல்தைலமும் புதுமலரும் அகிலும் செம்பஞ்சுக்குழம்பும் கலந்த வாசனை. ஆனால் அவற்றைக் கலந்து அவளைச் செய்துவிடமுடியாது. அவளுடைய புன்னகையையும் அதில் சேர்க்கவேண்டும். கண்கள் மின்ன கன்னங்கள் குழிய செவ்விதழ்கள் விரிந்து வாயின் இருபக்கங்களும் மடிய மலரும் ஒளியை.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 1 ]

அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள். "முடிசூட்டுவிழாவுக்கான அனைத்தும் முடிவடைந்துவிட்டன அரசி" என்றாள் அனகை. "ஷத்ரியர் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஷத்ரிய மன்னர்கள் ஐம்பத்தைந்துபேருக்கும் அமைச்சரோ தளபதியோ நேரில் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள். பிறமன்னர்களில் வேசரத்துக்கும் உத்கலத்துக்கும் கூர்ஜரத்துக்கும் காமரூபத்துக்கும் ஷத்ரியர்கள் சென்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மங்கலதாசியரும் சேடியரும் சென்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள்."

குந்தி தலையசைத்தாள். "மதுவனத்துக்கும் மார்த்திகாவதிக்கும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்" என்று அனகை சொன்னாள். குந்தி எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டவில்லை. "அதை பேரரசியே ஆணையிட்டார்கள் என்று அறிந்தேன். இரு இடங்களுக்கும் அரசகுலப்பெண் ஒருத்தியும் பேரரசியின் பரிசுடன் செல்லவேண்டுமென்று பேரரசியே சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றித்தான் அமைச்சர்கள் பேசிக்கொண்டனர். அது மார்த்திகாவதிக்கும் மதுவனத்துக்கும் பெரிய சிறப்பு என்று சொல்லிக்கொண்டார்கள். பேரரசியின் மச்சநாட்டுக்கும் பிதாமகரின் கங்கநாட்டுக்கும் மட்டுமே குருதியுறவை காட்டும்படியாக அரசகுலப்பெண்டிர் செல்வது வழக்கமாம்."

"என் தந்தை வரமாட்டார் என்றே நினைக்கிறேன்" என்றாள் குந்தி. "மதுராபுரிக்கு அழைப்புடன் சென்றது யார்?" அனகை தயங்கி "சூதர்குழுதான் சென்றிருக்கிறது." குந்தி புன்னகைசெய்து "கம்சரும் வரப்போவதில்லை. தன் அமைச்சர்களில் ஒருவரை அனுப்பிவைப்பார். அவருக்கு வேறுவழியில்லை, இப்போதே மகதத்தின் பாதங்களை பணிந்திருப்பார்" என்றாள். "ஆம் அரசி. அதையும் பேசிக்கொண்டார்கள் என்று நம் சேடிப்பெண் சொன்னாள். கம்சர் நேரில் கிளம்பிச்சென்று மகதமன்னர் பிருஹத்ரதனை சந்தித்திருக்கிறார்." குந்தி அதற்கும் புன்னகை செய்தாள்.

தன் அணிகளைத் திருத்தி கூந்தலிழையை சரிசெய்து இறுதியாக ஒருமுறை ஆடியில் நோக்கியபின் அவள் திரும்பினாள். "இளவரசர் என்ன செய்கிறார்?" என்றாள். "அவர் சற்றுமுன்னர்தான் துயிலெழுந்திருக்கவேண்டும். ஆதுரசாலையில் இருந்து மருத்துவர் சற்றுமுன்னர்தான் நீராட்டறைக்குச் சென்றார்" என்று அனகை சொன்னாள். குந்தி மீண்டுமொருமுறை ஆடியில் நோக்கி ஆடையின் மடிப்புகளை சரிசெய்துகொண்டு "காந்தாரத்து அரசிகளின் செய்தி என்ன?" என்றாள். அனகை தயங்கினாள். குந்தி ஏறிட்டு நோக்க "அங்கே நான் நான்கு சூதப்பெண்களை கையூட்டு அளித்து வென்றெடுத்து தொடர்பிலிருந்தேன். காந்தார இளவரசர் வந்ததுமே அங்கிருந்த அனைத்து சூதப்பெண்களையும் விலக்கிவிட்டார். அங்கு உள்ளும் புறமும் இன்று காந்தாரத்து மகளிரே இருக்கிறார்கள்" என்றாள்.

"அங்கே நமது உளவுச்சேடிகள் இருந்தாகவேண்டும். காந்தாரத்து மகளிரில் எவரை வெல்லமுடியுமென்று பார்" என்றாள் குந்தி. "அவர்களின் மொழிதெரிந்தவர் என எவரும் நம்மிடமில்லை. பிழையாக எவரையேனும் அணுகிவிட்டால் இவ்வரண்மனையில் நமக்கிருக்கும் உளவுவலையை முழுக்க நாமே வெளிக்காட்டியதாகவும் ஆகும்" என்றாள் அனகை. "அந்த இளைய அரசி மிகவும் குழந்தை. அவளுடைய சேடிகளில் எவரையேனும் அணுகலாமா என எண்ணியிருக்கிறேன்" என்ற அனகையை கைகாட்டித் தடுத்து "அது கூடாது. அவள் இளையவளென்பதனாலேயே அவளுக்கு ஏதும் தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். அவளுடைய சேடிகளும் வலுவானவர்களாக இருப்பார்கள். எங்கே அவர்கள் தங்களை மிக வலுவானவர்களாக உணர்கிறார்களோ அங்குதான் காட்சிப்பிழை இருக்கும். நாம் நுழைவதற்கான பழுதும் இருக்கும்" என்றாள் குந்தி.

சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு "நாம் காந்தார இளவரசியரின் அந்தப்புரத்துக்குள் நுழைவது எளிதல்ல. காந்தார இளவரசர் கூரியவர். ஆனால் அவரால் ஏதும் செய்யமுடியாத பெரும்விரிசலொன்று அவர்களிடம் உள்ளது" என்றாள். அனகையின் விழிகளை நோக்கி "அந்த வைசியப்பெண் பிரகதி. இங்கு காந்தாரிக்குப்பின் அரசரிடம் ஆதிக்கமுள்ள பெண்ணாக இருக்கப்போவது அவள்தான். அவள் வயிற்றில் பிறக்கப்போகும் குழந்தைகளும் இவ்வரசில் வல்லமையுடன் இருக்கும். அவளை வென்றெடுப்பது எளிது. ஏனென்றால் அவள் காந்தார அரசியரால் வெறுக்கப்படுகிறாள். அவளை அவர்கள் கொல்லவும்கூடும் என அவளிடம் ஐயத்தை உருவாக்கலாம். அவளை நாம் பாதுகாப்போமென வாக்களிக்கலாம். அவள் நம்மிடம் அணுக்கமாக இருப்பாள். அரசரிடமோ அவரது அந்தப்புரத்திலோ அவளறியாத எதுவும் எஞ்சுவதற்கு வாய்ப்பில்லை" என்றாள் குந்தி.

"அதை காந்தார இளவரசர் உய்த்துணர மாட்டாரா?" என்று அனகை கேட்டாள். "உய்த்துக்கொள்வார். ஆனால் அவரால் அவளை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அவளுக்கு ஏதும் தெரியாமலிருக்க முயல்வார். ஆனால் அவரால் ஒரு பெண் ஆணிடமிருந்து எந்த அளவுக்கு நுட்பமாக உளவறியமுடியுமென்று ஒருபோதும் கணித்துக்கொள்ள முடியாது" என்றாள் குந்தி. அனகையை நோக்கி மீண்டும் புன்னகைசெய்து விட்டு அறையைத் திறந்து வெளியே சென்றாள். வெளியே அவளுடைய அகம்படிச் சேடியர் காத்து நின்றனர். சாமரமும் தாலமும் தொடர அவள் இடைநாழியில் நடந்து பாண்டுவின் மாளிகைக்குச் சென்றாள்.

பாண்டுவின் மாளிகையின் சிறுகூடத்தில் அவன் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்க பீதர் இனத்து வைத்தியர் அவன் கால்களுக்கு அவர்களின் முறைப்படி சூசிமர்த்த மருத்துவம் செய்துகொண்டிருந்தார். முனைமழுங்கிய ஊசியால் அவன் உள்ளங்கால்களின் வெண்பரப்பில் பல இடங்களில் அழுத்தி அழுத்தி குத்தினார். நிமித்தச்சேடி அவள் வருகையை அறிவித்ததும் பாண்டு கையசைத்து வரும்படி சொல்லிவிட்டு புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான். அவள் உள்ளே நுழைந்ததும் மேலும் மலர்ந்த புன்னகையுடன் "அஸ்தினபுரியின் இளையஅரசிக்கு நல்வரவு" என்றான். அவள் "இளையமன்னரை வாழ்த்துகிறேன்’"என்று சொல்லி தலைவணங்க அவள் கண்களில் ஊசியின் கூர் எனத் தெரிந்த நகைப்பை உணர்ந்து பாண்டு உரக்கச் சிரித்தான்.

குந்தி அமர்ந்துகொண்டாள். தொங்கிய நீள்மீசையும் காக்கைச்சிறகுபோன்ற கருங்குழலும் பழுத்தஆலிலைநிற முகமும் கொண்ட பீதர்இனத்து வைத்தியரை நோக்கிவிட்டு "இதனால் ஏதேனும் பயன் உள்ளதா?" என்றாள். பாண்டு "இதனால்தான் நான் இதுவரை உயிர்வாழ்கிறேன் என்கிறார்கள். ஆகவே எதையும் நிறுத்துவதற்கு எனக்கோ அன்னைக்கோ துணிவில்லை" என்றான். குந்தி "இத்தனை சிக்கலானதாகவா நரம்புகள் இருக்கும்?" என்றாள். "பிருதை, எதையும் அறிவதற்கு இருவழிமுறைகள் உள்ளன. சிக்கலாக்கி அறிவது ஒன்று. எளியதாக்கி அறிவது பிறிதொன்று. சிக்கலாக்கி அறிபவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும் மதிசூழ்பவர் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். எளிமையாக்கி அணுகக்கூடியவர்களை ஞானி என்கிறார்கள். அல்லது போகி என்கிறார்கள்."

"நீங்கள் போகியா என்ன?" என்றாள் குந்தி. "என்ன ஐயம்? எனக்குள் இருந்து இவ்வுலகையே துய்த்துக்கொண்டிருக்கும் போகி ஒருகணம் கூட ஓய்வதில்லை" என்றான் பாண்டு. பீதமருத்துவர் அவன் கால்களை மெத்தைமேல் வைத்து மேல்பாதங்களை விரலால் அழுத்தினார். "உன்னை இங்குவந்த நாள்முதல் முழுதணிக்கோலத்தில் மட்டுமே பார்க்கிறேன்.காலைமுதல் இரவில் துயிலறைக்கு வருவது வரை. ஒவ்வொரு கணமும் அரசியாகவே இருந்தாகவேண்டுமா என்ன?" குந்தி "ஆம், நான் அரசியாகத் தெரிந்தால் மட்டுமே இங்கு அரசியாக இருக்கமுடியும்" என்றாள். பாண்டு உரக்க நகைத்து "ஆகா என்ன ஒரு அழகிய வியூகம்...வாழ்க!" என்றான்.

பீதமருத்துவர் எழுந்து தலைவணங்கினார். பாண்டு அவரை சைகையால் அனுப்பிவிட்டு "மருத்துவம் எனக்குப்பிடித்திருக்கிறது. இன்னொரு மனிதனின் கரம் என்மீது படும்போது என்னை மானுடகுலமே அன்புடன் தீண்டுவதாக உணர்கிறேன். நான் வாழவேண்டுமென அது விழைவதை அந்தத் தொடுகை வழியாக உணர்கிறேன்" என்றவன் சட்டென்று சிரித்து "நீ என்ன எண்ணுகிறாய் என்று தெரிகிறது. எத்தனை பாவனைகள் வழியாக வாழவேண்டியிருக்கிறது என்றுதானே? ஆம், பாவனைகள்தான்" என்றான். மீண்டும் சிரித்து "என் பேச்சும் இயல்பும் என் தந்தை விசித்திரவீரியரைப்போலவே இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேவாபியைப்போல இருக்கிறார் என்று அவரிடம் சொல்லியிருப்பார்கள். மருத்துவர்களை குருவின் குலம் ஏமாற்றுவதேயில்லை."

"முடிசூட்டுவிழாவுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன" என்றாள் குந்தி. "என் தந்தைக்கு சமந்தநாட்டுக்கான அழைப்பை பேரரசி அனுப்பியிருக்கிறார். அதற்காக நான் பேரரசிக்கு நன்றி சொல்லவேண்டும்." பாண்டு "மார்த்திகாவதி அஸ்தினபுரியின் சமந்தநாடுதானே? ஏன்?" என்றான். குந்தி புன்னகையுடன் "ஷத்ரியர்களுக்கு இன்னொரு ஷத்ரியகுலம் ஆளும் நாடு மட்டுமே சமந்தநாடாக இருக்கமுடியும். பிற பெண்களை அவர்கள் மணக்கலாம். அதை அவ்வாறு சொல்வதில்லை. சமந்தநாடு அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டவேண்டியதில்லை. அனைத்து அரசச் சடங்குகளிலும் அஸ்தினபுரியின் மன்னருக்கு நிகரான பீடத்திலமர்ந்து கலந்துகொள்ளலாம். மன்னரின் உடைவாளை ஏந்தவும் செங்கோலை வாங்கிக்கொள்ளவும் உரிமை உண்டு. முக்கியமாக சமந்தநாட்டை எவரேனும் தாக்குவதென்பது அஸ்தினபுரியைத் தாக்குவதற்கு நிகரேயாகும்."

"ஆகவே நீ வந்த பணி முடிந்துவிட்டது" என்றான் பாண்டு. அவன் கண்களுக்குள் நிகழ்ந்ததை ஊசிமுனையால் தொட்டு எடுப்பதுபோல தன் விழிகளால் குந்தி அறிந்துகொண்டாள். "ஆம், நான் எண்ணிவந்த பணி ஏறத்தாழ முடிந்துவிட்டது" என்றாள். "மார்த்திகாவதி சமந்தநாடென்பதனால் காந்தாரத்து இளவரசரின் கரமும் அதைத் தீண்டமுடியாது. இருபதாண்டுகாலம் கப்பம் கட்டாமலிருந்தால் மார்த்திகாவதி வல்லமைபெறும். யாதவகுலங்களை ஒருங்கிணைக்கும். முடிந்தால் தனிக்கொடியைக்கூட பறக்கவிட்டுப்பார்க்கலாம், இல்லையா?" குந்தி "ஆம், அதுவும் அரசர்கள் கொண்டிருக்கவேண்டிய கனவுதானே?" என்றாள்.

அவளிடம் அவன் எதிர்பார்க்கும் பதிலை அவளறிந்திருந்தாள். எலியை தட்டித்தட்டி மகிழும் பூனைபோல தான் அவன் அகத்துடன் விளையாடுவதாக நினைத்துக்கொண்டதுமே அவள் கனிந்தாள். "ஆனால் நான் எண்ணிவந்த கடமைகளெல்லாம் நெடுந்தொலைவில் எங்கோ பொருளிழந்துகிடக்கின்றன. நான் இங்கு மட்டுமே வாழ்வதாக உணர்கிறேன்" என்றாள். அவள் சொல்லப்போவதை உணர்ந்தவனாக அவன் முகம் மலர்ந்தான். "நான் இங்கே உங்கள் துணைவி. உங்கள் நலனன்றி வேறேதும் என் நினைப்பில் இப்போது இல்லை" என்று அச்சொற்களை சரியாக அவள் சொன்னாள். அவன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். "நான் மனைவி,வேறொன்றும் அல்ல என ஒரு பெண் உணரும்போது வரும் ஆற்றலை உணர்கிறேன்" என்றாள்.

"பலமில்லாத கணவனின் மனைவி மேலும் ஆற்றல்கொண்டவளாகிறாள்" என்று பாண்டு அவள் விழிகளை நோக்கிச் சொன்னான். குந்தி "ஆம். மேலும் அன்புகொண்டவளாகிறாள். அன்பு அவளை ஆற்றல் மிக்கவளாக்குகிறது" என்றாள். அவன் உணர்ச்சிமிகுந்து நடுங்கும் கைகளால் அவள் கைகளைப் பிடித்து தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டான். குந்தி எழுந்து அவன் அருகே பீடத்தில் அமர்ந்து அவனை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டாள். அவன் அவள் மார்பில் முகம்புதைத்துக்கொள்ள அவனை இறுக அணைத்து குனிந்து அவன் காதில் "என்ன எப்போதும் ஒரு அமைதியின்மை?" என்றாள். "தெரியவில்லை, ஆனால் அப்படித்தான் இருக்கிறேன்" என்றான் பாண்டு. "நான் இருக்கிறேன் அல்லவா?" என்றாள் குந்தி. "ஆம்..." என அவன் பெருமூச்சு விட்டான்.

அனைத்து நரம்புகளும் முடிச்சுகள் அவிழ்ந்து தளர அவன் உடல் தொய்ந்து அவள் மார்பில் படிந்தது. அவனுடைய வெம்மூச்சு அவள் முலைக்குவையில் பட்டது. அவள் அவன் குழல்களை கைகளால் வருடினாள். அவன் காதுமடல்களை வருடி குண்டலங்களைப் பற்றி மெல்லச்சுழற்றினாள். அவன் முகத்தைத் தூக்கி நெற்றியிலும் கன்னங்களிலும் தன் வெம்மையான உதடுகளால் முத்தமிட்டு "அஞ்சக்கூடாது, என்ன?" என்றாள். "ஆம்" என அவன் முனகிக்கொண்டான். "என்னையும் என் கணவனையும் என் சுற்றத்தையும் நாட்டையும் பேணிக்கொள்ள என்னால் முடியும். எனக்குத் துணையோ படைக்கலங்களோ தேவையில்லை" என்று குந்தி சொன்னாள். "ஆம் அதையும் அறிவேன். நீ கொற்றவை. எனக்காக அன்னபூரணியாக தோற்றமளிக்கிறாய்."

அவன் முகம் சொல்லவரும் சொற்கள் முட்டிநிற்பது போல தவிக்கத்தொடங்கியது. அவள் அத்தனை நாட்களுக்குள் மீண்டும் மீண்டும் கண்ட மெய்ப்பாடு அது. அவன் தாழ்ந்தகுரலில் "பிருதை எனக்கென எவருமில்லை... எனக்கு நீ மட்டும்தான்" என்றான். அவன் இயல்புக்கு அந்த மழுங்கிய வெற்றுச்சொற்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றின. எனவே வேறுசொற்களுக்காக தேடி "நீ எனக்குரியவளாக மட்டும் இருக்கவேண்டும்... உன் நெஞ்சில் நானன்றி..." என்று மேலும் சொன்னபின் அச்சொற்கள் இன்னமும் எளியவையாக இருக்கக்கண்டு திகைத்து சொல்லிழந்து நின்றபின் உடைந்து விம்மியழுதபடி சரிந்து அவள் மடியில் முகம்புதைத்துக்கொண்டான்.

அவள் அவன் தலையை வருடிக்கொண்டு பேசாமலிருந்தாள். நரம்புகள் தளர்ந்த நிலையின் இயல்பான வெளிப்பாடு அவ்வழுகை என அறிந்திருந்தாள். அழுதுமுடித்தபின் அவன் மெல்ல தன்னிலை திரும்பி தனக்குரிய ஏளனப் புன்னகையை சூடிக்கொள்வான் என அவளுக்குத்தெரியும். அவன் உடல் விம்மல்களால் விதிர்ந்தது. சிறுவனுக்குரிய மெல்லிய தோள்களும் செம்மச்சங்கள் பரவிய சுண்ணநிறக் கழுத்தும் அதிர்ந்துகொண்டிருந்தன. நீலநரம்புகள் பின்கழுத்திலும் தோள்களிலும் புடைத்துத் தெரிந்தன. பின்பு அவன் சட்டென்று எழுந்து புன்னகை செய்து "இது ஆதுரசாலை என்பதையே மறந்துவிட்டேன்" என்றான்.

"என் சேடிகள் வெளியே நிற்கிறார்கள்... எவரும் இங்கு வரப்போவதில்லை" என்றாள் குந்தி. "தங்களுக்கு நேரமாகிறது. ஆடையணிகள் பூண அரைநாழிகையாவது ஆகும் அல்லவா?" பாண்டு "நான் உணவருந்திவிட்டேன்" என்றான். "ஆம். அறிவேன். இன்று முதல் அரசவிருந்தினர் வரப்போகிறார்கள். சிலரையாவது தாங்கள் அவைநின்று வரவேற்கவேண்டும். அது மரபு" என்றாள். "அதற்கொன்றும் இல்லை. ஆனால் அரச உடைகள் அணியவேண்டுமே. அதை எண்ணினால்தான் கசப்பாக உள்ளது" என்றான் பாண்டு.

"அவ்வுடைகளும் முடியும் அணியாமலும் நீங்கள் அரசர்தான்" என்றாள். "ஆனால் உடையும் தோற்றமும் ஒரு மொழியைப்பேசுகின்றன. நீங்கள் சொல்லவிழைவதை பிறபொருளின்றி மொழிமயக்கின்றி அவை தெரிவிக்கின்றன. அதன்பின் நீங்கள் குறைவாகவே பேசினால் போதும்." பாண்டு "அரச உடை என இவற்றை முடிவுசெய்தவர் யார்? மனிதர்கள் எங்கும் எடையற்ற எளிய உடைகளைத்தான் அணிகிறார்கள். இவற்றை உலோகக்கம்பிகளைப்பின்னி எடையேற்றி வைத்திருக்கிறார்கள். அணிந்தால் ஆயிரம் இடங்களில் குத்துகிறது. முட்புதருக்குள் ஒளிந்திருப்பது போலிருக்கிறது. அத்துடன் அந்த மணிமுடி. அதன் எடை என் நெற்றியை அழுத்தி வெட்டுகிறது. அரைநாழிகை நேரத்திலேயே வலி தொடங்கிவிடும். மாலையில் கழற்றும்போது நெற்றியில் வாள்வெட்டு போல சிவந்து வளைந்த வடு. என்னை அது மண்ணைநோக்கி அழுத்திக்கொண்டிருப்பதுபோல. அதற்குப் பெயர் அணிகலன். ஆனால் மோர் விற்கும் இடைச்சியின் தலையிலுள்ள செம்புக்கலத்துக்கும் அதற்கும் என்ன வேறுபாடு?" என்றான்.

"மிகச்சரியாக அரசுப்பொறுப்பென்றால் என்ன என்று புரிந்துகொண்டிருக்கிறீர்கள்" என்றாள் குந்தி. "கிளம்புங்கள். நானே உதவுகிறேன். உடையணிந்து கிளம்புவதற்கு இன்னும் அதிகநேரமில்லை" என்று அவன் கையைப்பற்றித் தூக்கி எழுப்பி கூட்டிச்சென்றாள். அவன் விருப்பமில்லாத குழந்தைபோல "என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு சற்றும் பிடிக்கவில்லை... அசட்டுத்தனம்: என்றான். :அந்த உடைபோலத்தான் மொழியும். வெற்றுப்பளபளப்பு. கேட்பவனுக்கு ஒளி. சொல்பவனுக்கு முள்...:

குந்தி "சிலசமயம் நேரடியாகவே காவியத்தை பேசத்தொடங்கிவிடுகிறீர்கள்" என்று சிரித்தாள். "பேசவேண்டாமா என்ன? நான் யார்? சந்திரகுலத்து பாண்டு. குருவம்சத்தவன். ஹஸ்தியின் குருதி. நாங்களெல்லாம் மண்ணில் பிறந்து விழுவதில்லை. கருவறையிலிருந்து காவியங்களின் மீதுதான் பிறந்து விழுகிறோம். சாவதில்லை, காவியமொழிக்குள் புகுந்துவிடுகிறோம்." உரக்கச்சிரித்து "அதன்பின் காவியகர்த்தனும் உரையாசிரியர்களும் எங்களை ஆதுரசாலையின் மருத்துவர்கள் போல மிதித்து அழுத்தி பிசைந்து பிழிந்து வளைத்து ஒடித்து வதைக்கிறார்கள்" என்றான்.

அவன் சிரித்துநகையாடியபடியே உடைகளை அணிந்துகொண்டான். "யாதவகுலத்தில் இருந்து காவியத்தை நோக்கி வந்திருக்கிறாய். காவியம் எத்தனை இரக்கமற்றது என்று இனிமேல்தான் அறியப்போகிறாய்" என்றான். குந்தி சிரித்தபடி "நேற்று முன்தினம் சூதர்கள் வந்து திருதராஷ்டிரமன்னரின் முடிசூட்டுவிழாவைப்பற்றி பாடினார்கள். அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பில் இருக்கும் கைவிடுபடைகளைப்போல ஒரு காவியம் நெடுங்காலமாகவே நாணேற்றப்பட்டு அம்புதொடுக்கப்பட்டு காத்திருக்கிறது என நினைத்துக்கொண்டேன்" என்றாள். தன் கலிங்கப்பட்டு மேலாடையை சுற்றிக்கொண்டே "ஆடை என்பது மறைப்பதற்காக என்று அறிவேன். அதில் இந்த பொற்கம்பி வேலைப்பாடுகள் எதை மறைப்பதற்காக?" என்றான். குந்தி "சற்றுநேரம் காவியத்தை விட்டு இறங்கி இளைப்பாறலாமே" என்றாள்.

அவர்கள் வெளியே வந்து சபைமண்டபத்தை அடைந்தபோது அம்பாலிகை எவ்வித அறிவிப்புமில்லாமல் உள்ளே வந்தாள். "எங்கே செல்கிறாய்? கழற்று அதை... அனைத்து அணிகளையும் கழற்று... நீ எங்கும் செல்லக்கூடாது. இது என் ஆணை" என்றாள். அவளுக்கு மூச்சிரைத்தது. விரைந்து வந்தமையால் உடைகள் கலைந்திருந்தன. "இளையஅரசர் இன்று முதல் விருந்தினர்களை எதிரேற்கவேண்டுமென்பது பேரரசியின் ஆணை அரசி" என்றாள் குந்தி. "அவன் எங்கும் செல்லப்போவதில்லை. இது என் ஆணை. பேரரசி வேண்டுமென்றால் எங்கள் இருவரையும் சிறையிடட்டும்" என்றாள் அம்பாலிகை. ஒரு பீடத்தில் விழுவதுபோல அமர்ந்தபடி "நீ செல்லக்கூடாதென்று சொன்னேன். அமர்ந்துகொள்" என்றாள்.

அமர்ந்தபடி பாண்டு "என்ன நிகழ்ந்தது? அதைச் சொல்லுங்கள்" என்றான். "நான் தொடக்கம் முதலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் கீழிறங்கும்தோறும் மேலும் கீழிறக்குகிறார்கள். சிறுமைசெய்ய ஒவ்வொரு வழியாக கண்டுபிடிக்கிறார்கள். அதற்கென்றே அந்த ஓநாய் பாலைவனத்திலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கிறது," அம்பாலிகை கையை அசைத்து "நான் அவைமன்றில் எழுந்து நின்று கேட்கப்போகிறேன். குலமூத்தாரே இதுதான் நியதியா என. விழியிழந்தவன் அரசனாக அவனுக்கு கைக்கோலாக இந்நாடு இருக்கப்போகிறதா என..."

பதறிய குரலில் அம்பாலிகை கூவினாள் "முட்டாள்கள். அவர்களுக்கு இன்னுமா புரியவில்லை? இந்த நாட்டை அவர்கள் காந்தாரத்து ஓநாயின் பசிக்கு எறிந்துகொடுக்கிறார்கள். அனைத்தும் அவர்கள் போடும் நாடகம். அவளை இந்நாட்டு பேதைமக்கள் வழிபடவேண்டுமென்பதற்காகவே கண்களை நீலத்துணியால் கட்டிக்கொண்டு வேடம்போடுகிறாள். அவளுடைய பத்து தங்கைகளிடம் இரவுபகலாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குத்தெரியாத எந்த வஞ்சமும் இல்லை. என்னையும் என் மைந்தனையும் சிறுமைசெய்து மக்கள் முன் நிறுத்தவிரும்புகிறாள். அதன்பின் எங்களை மக்கள் அரசகுலத்தவரென்றே எண்ணப்போவதில்லை என்று திட்டமிடுகிறாள்."

"என்ன நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் அன்னையே" என்றான் பாண்டு. அம்பாலிகை "பேரரசியிடமிருந்து பேரமைச்சருக்கு ஆணை சென்றிருக்கிறது. முடிசூட்டு விழாமங்கலம் எவ்வகையில் நிகழவேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. என் சேடி அதை எனக்குக் கொண்டுவந்து காட்டினாள். விழியிழந்தவன் மன்னனாக அரியணை அமர்வானாம். அவனருகே அவன் உடைவாள் தாங்கி நிற்கவேண்டியவன் என் மைந்தன். அருகே அவன் தேவியாக காந்தாரி அமர்வாளாம். அருகே இவள் அகம்படி நிற்கவேண்டும். நான் அவளருகே நிற்கவேண்டும்... அவளுடைய பட்டுமேலாடையைத் தாங்கிக்கொண்டு... இதெல்லாமே அவளுடைய திட்டம்தான். நன்றாகவே தெரிகிறது."

"அது மரபுதானே? தம்பியர் உடைவாள் தாங்குவது எங்குமுள்ளது அல்லவா?" என்றாள் குந்தி. "நீ அதையே பெரிய பரிசாகக் கொள்வாய் என எனக்குத்தெரியும். கன்றுமேய்த்து காட்டில் வாழும் இடைச்சிக்கு அஸ்தினபுரியின் அரசியின் ஆடைநுனியைத் தாங்குவதென்பது மாபெரும் நல்லூழ்தான். நான் காசிநாட்டரசனின் மகள். ஷத்ரியப்பெண். என்னால் சேடிவேடமிட்டு அவைநிற்க முடியாது" என்றாள் அம்பாலிகை. "பாண்டு, இது என் ஆணை, நீயும் போகப்போவதில்லை." பாண்டு "மன்னிக்கவேண்டும் அன்னையே. என் அண்ணனின் உடைவாள் தாங்குவதைவிட எனக்கென்ன பேறு இருக்கமுடியும்?" என்றான்.

"சீ, மூடா. அந்த சூதமைந்தன் உன்னை ஏமாற்றி விலையில்லா கல் ஒன்றைக்கொடுத்து நாட்டைப்பறித்தான். பற்களைக் காட்டியபடி அதை என்னிடம் வந்து சொன்னவன் நீ. உனக்கு நாணமோ தன்முனைப்போ இல்லாமலிருக்கலாம். ஆனால் நீ ஒரு ஷத்ரியப்பெண்ணின் மைந்தன். அதை மறக்காதே...." குந்தி "அரசி, தாங்கள் சொல்வது உண்மைதான். தம்பியர் அரியணைதாங்குவது என்பது எங்குமுள்ள வழக்கம். ஆனால் அதை எனக்கும் உங்களுக்கும் விரிவாக்கி இளையமன்னருக்கும் உங்களுக்கும் எனக்கும் இங்குள்ள இடமென்ன என்பதை மன்றிலுள்ள அனைவருக்கும் காட்டநினைக்கிறார்கள் மூத்தஅரசி. ஆனால் நாம் எதிர்ப்போமென்றால் மேலும் சிறியவர்களாகவே ஆவோம். எதிர்த்தபின் பணிவதைப்போல முழுமையான தோல்வி பிறிதில்லை" என்றாள்.

"வேறு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்?" என கலங்கிய விழிகளைத் தூக்கி அம்பாலிகை கேட்டாள். "எப்போதும் நான் செய்வதைத்தான். நமது இடத்தை நாமே முடிவுசெய்வோம். தலைநிமிர்ந்து பேரன்புடன் அப்பணியைச் செய்வோம். அவர் இளையமன்னரின் தமையன். அவரது துணைவி எனக்கு தமக்கை போன்றவள். மூத்தஅரசியோ உங்கள் தமக்கை. பணிவிடை செய்வதில் குறைவேதும் இல்லை. முகம் மலர்ந்து அதைச்செய்வோமென்றால் நம் பெருமையே ஓங்கும்" என்றாள் குந்தி. சீறி எழுந்து "என்னால் முடியாது" என்றாள் அம்பாலிகை . குந்தி திடமான குரலில் "நாம் அதைத்தான் செய்யப்போகிறோம்" என்றாள்.

"நீயா அதை என்னிடம் சொல்கிறாய்?" என்றாள் அம்பாலிகை கடும் சினத்தால் சிவந்த முகமும் கலங்கியகண்களும் மூச்சில் உலைந்த உடலுமாக. "ஆம். இங்கு செய்யவேண்டுவதென்ன என்பதை நானேதான் சொல்வேன். நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும்" என்று தாழ்ந்த குரலில் குந்தி சொன்னாள். "சீ நீ ஒரு யாதவப்பெண்..." என அம்பாலிகை குரலெழுப்ப "நான் சொல்வதுதான் நடக்கும். உங்களை இங்கே சிறைவைத்துவிட்டு அதைச்செய்யவும் என்னால் முடியும்" என்றாள் குந்தி. திகைத்துப்போய் உதடுகள் மெல்லப்பிரிய அம்பாலிகை பார்த்தாள்.

"அன்னையே நான் பிருதையின் சொற்களுக்கு மட்டுமே உடன்படுவதாக இருக்கிறேன்" என்றான் பாண்டு. இருவரையும் மாறிமாறிப்பார்த்த அம்பாலிகை அப்படியே மீண்டும் பீடத்தில் அமர்ந்து இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள். அவளுடைய மெல்லிய தோள்கள் குலுங்குவதையும் நீளவிரல்களின் இடைவெளிவழியாக கண்ணீர் கசிவதையும் சொல்லின்றி குந்தி நோக்கி நின்றாள். அவளுடைய அழுகை பாண்டுவின் அழுகையை ஒத்திருப்பதாக அவளுக்குப் பட்டது.

அம்பாலிகையின் அழுகை தணிந்து விம்மல்களாக ஆனபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். அவள் தோளைத்தொட்டு "இதையெல்லாம் என்னிடம் விட்டுவிடுங்கள் அரசி. தங்களால் இதை ஆடமுடியாது. நான் உங்கள் மைந்தனின் துணைவி. உங்கள் குலம்வாழவேண்டுமென விழைபவள். உங்கள் நன்மதிப்பையும் உங்கள் மைந்தனின் முடிச்சிறப்பையும் ஒருபோதும் தாழவிடமாட்டேன் என நம்புங்கள்" என்றாள். "ஆம், என்னால் முடியவில்லை. என்னால் இதையெல்லாம் கையாளவே இயலவில்லை" என்று முகத்தை மேலாடையால் துடைத்தபடி அம்பாலிகை சொன்னாள். "என்னால் முடியும். இவ்விளையாட்டை நான் எப்போதுமே ஆடிக்கொண்டிருக்கிறேன்" என்றாள் குந்தி.

"ஆம் அதை உன்னைக் கண்டதுமே நானும் உணர்ந்தேன்" என்றாள் அம்பாலிகை . நிமிந்து குந்தியின் கைகளைப்பற்றிக்கொண்டு "இவ்வரண்மனையில் நானும் என் மகனும் தனித்துவிடப்பட்டிருக்கிறோம் பிருதை. எங்களுக்கு எவர் துணையுமில்லை. நாங்கள் உன்னிடம் அடைக்கலமாகியிருக்கிறோம்" என்றாள். "நான் உங்களவள்" என்று சொல்லி அம்பாலிகையின் கலைந்த கூந்தலிழைகளை கையால் நீவி காதுக்குப்பின் ஒதுக்கினாள் குந்தி. "அந்தப்ப்புரத்துக்குச் செல்லுங்கள் அரசி. தங்கள் மிகச்சிறந்த அரச உடையில் முழுதணிக்கோலத்தில் சபைக்கு வாருங்கள்" என்றாள்.

அம்பாலிகை முகம் மலர்ந்து "நான் மங்கலமணிகளை அணியலாமா? கணவனை இழந்தவர்களுக்கு அவ்வுரிமை உண்டா?" என்றாள். "நீங்கள் அனைத்து மணிகளையும் அணியலாம் அரசி. கைம்மைநோன்பு உங்களுக்கில்லை. ஷத்ரிய மரபின்படி மைந்தரைக்கொண்ட அன்னை மாமங்கலையேதான்" என்றாள் குந்தி. "என்னிடம் நீலவைரங்கள் மட்டுமே கொண்ட ஓர் ஆரம் உள்ளது. அதை இன்று அணியப்போகிறேன். அதற்குப்பொருத்தமாக நீலமணித்தலையணிகளும் உள்ளன." குந்தி "அணியலாம்... நான் என் சேடி அனகையை அனுப்புகிறேன். அவள் அணிசெய்வதை முறையாகக் கற்றவள்" என்றாள்.

பிருதை "அனகை" என்று அழைக்க அனகை வந்து வணங்கினாள். "அரசியை அழைத்துச்சென்று அணிசெய். இன்னும் ஒருநாழிகைக்குள் அரசியை சபைமண்டபத்துக்குக் கொண்டுவா" என்றாள் குந்தி. அனகை தலைவணங்கினாள். "ஒருநாழிகை என்றால் நேரமே இல்லையே" என்றபடி அம்பாலிகை எழுந்துகொண்டாள். குந்தி அரைக்கண்ணால் நோக்கியபோது பாண்டு புன்னகைசெய்வதைக் கண்டாள். அனகை "தங்களுக்காக சபையினர் காத்திருக்கிறார்கள் அரசி" என்று குந்தியிடம் சொன்னாள்.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 2 ]

முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன் நின்றுசுடர அந்த ஒளியில் அதன் தோல்பரப்பு உயிருள்ளதுபோலத் தெரிந்தது. கீழே மகாமுற்றத்தின் அனைத்து ஒலிகளையும் அது உள்வாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின் வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான்.

கீழே மகாமுற்றத்தில் மாலைமுதலே அனைத்துச்செயல்களும் விரைவுகொண்டிருந்தன. பெரிய எண்ணைப்பந்தங்கள் அமைக்கப்பட்ட தூண்கள் அருகே எண்ணைக்காப்பாளர்கள் நின்றிருந்தனர். குழியாடிகள் பிரதிபலித்த வெளிச்சங்கள் மகாமுற்றத்தின் மண்பரப்பில் செங்குருதிவட்டங்கள் போல விழுந்துகிடந்தன. அதைக் கடந்துசென்ற சேவகர்கள் நெருப்பென எரிந்து அணைந்தனர். அதன்முன் பறந்த சிறுபூச்சிகள் கனல்துளிகள் போலச் சுழன்றுகொண்டிருந்தன. வந்து நின்ற பல்லக்குகளின் வெண்கலப்பூண்களிலும் கூரைக்குவையின் வளைவுகளிலும் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னியது.

குளம்போசையும் சகடஓசையும் எழ குதிரைகள் இழுத்த ரதங்கள் வந்து நின்றன. செவ்வொளி மின்னிய படைக்கலங்களுடன் வீரர்கள் ரதங்களை நோக்கி ஓடினர். ரதங்களில் வந்தவர்கள் விரைந்து நடந்து மண்டபத்துக்குள் செல்ல ரதங்களை சாரதிகள் கடிவாளம்பற்றி திருப்பிக்கொண்டுசென்று இருண்ட மறுமூலையில் வரிசையாக நிறுத்தினர். இருளுக்குள் காற்றில் ரதங்களின் கொடிகள் பறவைகள் சிறகடிப்பதுபோல பறந்தன. மேலும் மேலும் ரதங்கள் வந்தபடியிருந்தன. பல்லக்குகள் வந்தன, கிளம்பிச்சென்றன, மீண்டும் வந்தன. கச்சன் மேலிருந்து அவற்றை விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே முரசு மெல்ல விம்மிக்கொண்டிருந்ததை அவன் மட்டுமே கேட்டான்.

இரவின் குளிர் ஏறி வந்தபோது அவன் நெய்விளக்குகளின் அருகே நெருங்கி நின்றுகொண்டான். காற்றில் அதன் பொறிகள் எழுந்து பறந்து வடதிசை நோக்கிச் சென்றன. எண்ணைக்குடுவையுடன் வந்த சேவகர்கள் மீண்டும் எண்ணை நிறைத்துச்சென்றார்கள். "எப்போது கோல்விழும்?" என்று ஒருவன் கச்சனிடம் கேட்டான். "தெரியவில்லை. ஆணை வரவேண்டும்" என்றான் கச்சன். "அதைவிட அந்த முரசிடமே கேட்கலாம்" என்றான் எண்ணையை அகப்பையால் அள்ளி விளக்கில் விட்ட துருமன். எண்ணை சொட்டாமல் கலத்தைத் தூக்கியபடி அவர்கள் இருவரும் படியிறங்கினர்.

கீழே அவர்களைப்போல நூறு பணியாளர்கள் விளக்குகளுக்கு எண்ணைவிடும் பணியில் இருந்தனர். அவர்களில் ஒருவன் அவனை நோக்கி "மண்டபத்துக்குள் சக்கரன் இருக்கிறானா துருமா?" என்றான். "இல்லையே, நான் அவனை மடியில் அல்லவா கட்டி வைத்திருந்தேன். எங்கே விழுந்தானென்றே தெரியவில்லை" என்றான் துருமன். எண்ணை அண்டாவை ஒரு சிறிய மரவண்டியில் வைத்து மெதுவாகத் தள்ளியபடி அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்தனர். செல்லும் வழியில் திரிகருகத் தொடங்கியிருந்த விளக்குகளை நோக்கி எண்ணை ஊற்றியபடியே சென்றார்கள்.

விரிந்த மகாமண்டபம் நீள்வட்ட வடிவில் ஆயிரம் மரத்தூண்கள் மேல் குவைவடிவக் கூரையுடன் அமைந்திருந்தது. வானம்போல உயரத்தில் வளைந்திருந்த வெண்சுண்ணம்பூசப்பட்ட கூரையில் இருந்து அலங்காரப்பாவட்டாக்கள் பூத்த கொன்றை வேங்கை மரங்கள் போல தொங்கி மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஆயிரம் தூண்களிலும் குழியாடியின் முன் ஏழுதிரிகளில் சுடர்கள் அசையாமல் நின்ற நெய்விளக்குகள் அமைந்திருந்தன. ஆடிப்பாவைகளுடன் இணைந்து அவை பெரிய மலர்க்கொத்துக்கள் பூத்த அரளிச்செடிகள் போலத் தோன்றின. தேன்மெழுகும் கொம்பரக்கும் வெண்களிமண்ணுடன் கலந்து அரைத்துப்பூசப்பட்டு பளபளத்த மண்டபத்தின் விரிந்த மரத்தரையில் விளக்குகளின் ஒளி நீரில் என பிரதிபலித்தது.

நூற்றுக்கணக்கான சேவகர்கள் மண்டபத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். ஒளியை உள்ளனுப்பும் தாமரைச்சாளரங்களுக்கு வெளியே வெயிலை குளிர்வித்தனுப்பும் வெட்டிவேர்த்தட்டிகள் கட்டப்பட்டன. காற்றை மட்டும் அனுப்பும் மான்விழிச் சாளரங்கள் பெரிய பெட்டி ஒன்றுக்குள் திறந்தன. அந்தப்பெட்டிக்குள் ஈரமான நறுமணவேர்களைப் போட்டு மூடிக்கொண்டிருந்தனர். மண்டபத்தின் பன்னிரு காவல்மாடங்களிலும் ஒளிரும் வேல்களுடன் ஆமையோட்டுக் கவசம் அணிந்த வீரர்களை காவல் நிறுத்தி கட்டளைகளை போட்டுக்கொண்டிருந்தார் விப்ரர்.

உள்ளிருந்து வந்த ஜம்புகன் "துருமா, உன்னை நூற்றுக்குடையோர் தேடினார்" என்றபடி பெரியமலர்க்கூடையைச் சுமந்து சென்றான். அதிலிருந்து நீர் சொட்டிக்கொண்டு சென்றது. "அதென்ன வேட்டையாடிய பன்றியா? சிறுநீர் விட்டுக்கொண்டு செல்கிறது?" என்றான் துருமன். ஜம்புகன் திடுக்கிட்டு "உனக்கு நாவிலே சனி" என்றபடி சென்றான். "அவன் அடிபட்டுச் சாகும்போது நீயும்தான் அருகே சாவாய்" என்றான் கூடையின் இன்னொரு முனையைப்பற்றியவன். "ஆனால் அவனிருந்தால் வேலை சுமுகமாக நடக்கிறது" என்று ஜம்புகன் சொன்னான்.

அவர்கள் மலர்மூட்டையைக் கொண்டுசென்று மண்டபத்தின் முகப்பில் இறக்கி பிரித்தனர். அதற்குள் யானைத்துதிக்கை கனத்துக்கு தாமரைமலர்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய மலர்மாலைகள் இருந்தன. "இதென்ன யானைவடமா?" என்றான் ஜம்புகன். "பார்த்தாயா, உனக்கும் நாக்கிலே சனி" என்றான் துணைவன். இருளுக்கு அப்பால் இருள்குவைகள் அசைவது தெரிந்தது. ஜம்புகன் நோக்கியபோது அந்தரத்தில் கந்தர்வர்கள் போல இருவர் இருளில் நீந்தி வருவதைக் கண்டான். அவர்கள் மேல் பட்ட முரசுமேடையின் செவ்வொளி அவர்களை குளிர்கால நிலவின் செம்மையுடன் ஒளிரச்செய்தது. அவர்களுக்குக் கீழே அலையடித்து வந்த யானை உடல்களை அவன் அதன்பின்னரே கண்டான்.

"விடியப்போகிறது. யானைகளை கொண்டுவந்துவிட்டார்கள்" என்றான் துணைவன். யானைகள் அப்போதுதான் குளித்துவிட்டு மேற்குத்தடாகங்களில் இருந்து வந்திருந்தன. அவற்றின் அடிப்பகுதியில் தோலில் வழிந்த நீர் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. இருண்ட நதியொன்று பெருகி வருவதுபோல மேலும் மேலும் யானைகள் வந்தபடியே இருந்தன. முதல்யானைகளை மகாமுற்றத்தின் இருபக்கமும் வரிசையாக ஆணையிட்டு நிறுத்தினர். அடுத்துவந்த யானைகள் அவையே புரிந்துகொண்டு அணிவகுத்தன. சிறுகுழந்தைகள் போல அவை தங்கள் இடங்களுக்காக முந்தி இடம் பிடித்ததும் சரியாக நின்றபின் ஆடியபடி ஓரக்கண்ணால் அருகே நின்ற யானைகளை நோக்கின. ஒரு யானை பாங் என ஓசையெழுப்பியது. அதன் பாகன் அதன் காதில் கையால் தட்டினான்.

பெரிய மரவண்டிகளில் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளைக் கொண்டுவந்து யானைகளுக்கு முன்னால் வைத்து திறந்தனர். அவற்றிலிருந்து கனத்த முகபடாம்களை யானையைக்கொண்டே எடுக்கச்செய்து மத்தகத்தில் வைத்தனர். யானைகள் துதிக்கையால் முகபடாம்களை பற்றிக்கொள்ள அவற்றின் சரடுகளை யானைக்காதுகளிலும் கழுத்துப்பட்டைகளிலும் சேர்த்துக்கட்டினர். யானைகளால் தூக்கப்பட்டு சுருளவிழ்ந்து மேலேறிய முகபடாம்கள் பொன்னிறப்பெருநாகம் படமெடுத்தது போல பிரமையெழுப்பின. முகபடாமில் இருந்த பொன்னிறப் பொய்விழிகளால் யானைகளின் தெய்வவிழிகள் மகாமுற்றத்தை வெறித்து நோக்க அவற்றின் குழந்தைவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கி துதிக்கையை நீட்டி மூச்சு சீறிக்கொண்டன.

யானைகளே தங்கள் அணிகளைத் தூக்கி பாகர்களுக்களித்தன. பாகர்கள் நின்று அவற்றைக் கட்டுவதற்கு தந்தங்களையும் கால்களையும் தூக்கிக் காட்டின. யானை உடலின் வெம்மையால் ஆவியெழ அப்பகுதி செடிகளுக்கு நடுவே நிற்கும் உணர்வை எழுப்பியது. ஜம்புகன் சிறிய மூங்கிலேணிகளை தூண்கள் மேல் சாய்த்து அதிலேறி தூண்களில் தொற்றி மேலேறிச்சென்றான். உத்தரத்தில் அமர்ந்தபடி தாமரைமாலையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட கயிறை அவன் துணைவன் வீசியெறிய பிடித்துக்கொண்டான். அந்தச்சரடைப் பிடித்து இழுத்து தாமரை மாலையை மேலே தூக்கினான். மலர்த்தூண் போல அது கூரையிலிருந்து தொங்கியது. அதன் கீழே பெரிய மலர்க்கொத்து கனத்து ஆடியது.

"வண்டுகள் விருந்தினரை கடிக்காமலிருந்தால்போதும்" என்றான் ஜம்புகன். "உன் சனிவாயை மூடமாட்டாயா?" என்றான் துணைவன். ஜம்புகன் அங்கிருந்து நோக்கியபோது நூற்றுக்கணக்கான மலர்த்தூண்கள் மண்டபத்தின் முகப்பு முழுக்க மேலேறியிருப்பதைக் கண்டான். "காலையில் இப்பகுதியே பூத்த வனம் போலிருக்கும்" என்றான். "காலையில் நம்மை இப்பகுதியில் நிற்கவிடுவார்களா என்ன?" என்றான் துணைவன். யானைகளின் முகபடாம்கள் செவ்வொளியில் சுடர்ந்தன. யானைகள் ஆடியபோது பொன்னிற அசைவுகளாலான மெல்லிய நடனம் ஒன்று அங்கே நிறைந்தது.

மண்டபத்தின் உள்ளிருந்தே பெரிய கனத்த மரவுரிச்சுருளை விரித்துக்கொண்டு வந்தனர் எழுவர். ‘விலகு விலகு’ என ஓசையிட்டபடி அவர்கள் அதை விரித்துக்கொண்டே சென்றார்கள். ஜம்புகன் "காலகன் அண்ணா, எத்தனைபேர் படுக்கப்போகிறீர்கள்?" என்றான். மரவுரியைத் தள்ளிச்சென்றவன் மேலே நோக்கி "நீ என்ன அங்கே காய்பறிக்கிறாயா? இறங்கு" என்றான். "கைமறதியாக மலர்மாலையைப் பிடித்து இறங்கிவிடப்போகிறான்" என்றான் இன்னொருவன்.

அந்த மரவுரிப்பாதையை அவர்கள் மகாமுற்றத்தின் முகப்புவரை கொண்டுசென்று நிறுத்தினர். "ஆளும் மண்ணில் மன்னர்களின் கால்கள் படக்கூடாதென்று நெறி" என்றான் காலகன். "நீ இப்படி இன்னொரு சொல் பேசினால் கழுதான்" என்றான் துணைவன். "நீங்களெல்லாம் ஒரே கூட்டம். நாக்காலேயே சாகப்போகிறவர்கள்" என்றான். "நாங்கள் ஒரேமூங்கில் மதுவை பகிர்ந்துண்பவர்கள்" என்றான் காலகன். "ஜம்புகனும் நானும் ஒரே ஊர் தெரியுமல்லவா?" "விடியத்தொடங்கிவிட்டது" என்று துணைவன் கிழக்கில் எழுந்த மெல்லிய சிவப்புத்தீற்றலை நோக்கியபடி சொன்னான்.

அதைக் கேட்டதுபோல அரண்மனையின் கோட்டைமுகப்பில் காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. காலகன் கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்டான். அவர்களைத் தாண்டிச்சென்ற நூற்றுவர் தலைவன் "இன்னுமா இதைச்செய்கிறீர்கள் மூடர்களே? அங்கே ஆளில்லாமல் கன்னன் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறான். ஓடுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். "ஆளில்லாமல் கூச்சலிட அவனுக்கென்ன பைத்தியமா?" என்றபடி காலகன் உள்ளே சென்றான்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து விரிந்த மண்டபத்தரையில் ஈச்சையோலைப்பாய்களை விரித்துக்கொண்டிருந்தனர். அனைத்துத் தூண்களிலும் மலர்மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர் சிலர். பாய்களுக்குமேல் கனத்த மரவுரிக்கம்பளங்கள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது கம்பிளிக்கம்பளங்கள் பரப்பப்பட்டன. மண்டபத்தின் சாளரங்கள் ஒளிபெற்றன. அப்பால் தொங்கிய வெட்டிவேர்த்தட்டிகளின் வழியாக வரிவரியாக வந்த மெல்லிய ஒளி உள்ளே நீண்டு சரிந்து சதுரமாகக் கிடந்தது. "கம்பளங்கள் மேல் கால்கள் படக்கூடாது!" என்று நூற்றுவர்தலைவன் ஒருவன் ஆணையிட்டான்.

"எத்தனைபேர் இங்கே அமரமுடியும்?" என்று ஒரு கரிய இளைஞன் காலகனிடம் கேட்டான். "வசதியாகவா வசதிக்குறைவாகவா?" என்றான் காலகன். அவன் வெண்ணிற விழிகள் திகைத்து உருள விழித்தான். "யார் அமர்ந்தால் உனக்கென்ன?" என்றான் காலகன். "நீ புதியவனா?" அவன் "ஆம், பணியில் சேர்ந்து எட்டுமாதமே ஆகிறது" என்றான். "இன்னும் எட்டுமாதத்தில் நீ வாயாடியாகவோ மௌனியாகவோ ஆகிவிடுவாய். உன் பேரென்ன?" "பரிகன்" "பரிகனாக இருந்தால் சேவகனாக இருக்காதே. சேவகனாக இருந்தால் பரிகனாக இருக்கமுடியாது." அவன் மீண்டும் விழித்தான்.

வெளியே ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. விரிந்த முகவாயிலுக்கு அப்பால் அசையும் மனித உருவங்களின் நிழலாட்டம் மண்டபத்தின் உள்ளே நிறைந்திருந்தது. மணியோசைகள். குதிரைகளின் குளம்போசைகள். கட்டளைகள். விடியும்தோறும் ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. பரிகன் மெல்ல நடந்து வெளியே வந்து நோக்கினான். கண்ணைச் சுருங்கவைக்காத காலையிளவெயிலில் மகாமுற்றம் வண்ணங்கள் நிறைந்து ததும்பியது. மலர்வடங்கள், முகபடாம்கள், கொடிகள், பாவட்டாக்கள், சுட்டிகள்... பிரமித்துப்போய் அவன் பார்த்தபடியே நின்றான்.

இருபக்கமும் கரிய கோட்டையாக, பொன்னிறநடனமாக நீண்டிருந்த யானைவரிசைக்கு அப்பால் நூற்றெட்டு பெரிய மலர்மாலைகள் தொங்கிய முகப்பில் ஏழெட்டுபேர் ஓடிவந்ததை பரிகன் கண்டான். அவர்களின் உடையும் தோற்றமும் அவனுடைய குலத்தைச்சேர்ந்த ஆயர்கள் என்று தோற்றமளித்தன. புழுதிபடிந்த உடையும் பதற்றமான முகங்களுமாக அவர்கள் அந்த அலங்கார முற்றத்தை நோக்கி திகைத்து செயலிழந்து நின்றனர். காவலர்தலைவன் அவர்களை நோக்கி ஓடிச்சென்று "நில்லுங்கள்... யார் உங்களை இங்கே அனுமதித்தது? யார் நீங்கள்?” என்றான்.

பரிகன் முற்றத்தைக் கடந்து யானைகளின் நூற்றுக்கணக்கான துதிக்கை நெளிவுகள் வழியாக ஓடி அவர்களை அடைந்தான். அவர்கள் பேசும் மொழி காவலர் தலைவனுக்குப் புரியவில்லை என்று தோன்றியது. அவர்கள் அனைவரும் ஒரே சமயம் பதற்றமாக கைகளை வீசி முகத்தை விதவிதமாகச் சுழித்து மிகவிரைவாகப் பேசினார்கள். "யார்? யார் நீங்கள்?" என்றான் காவலர்தலைவன். "இறையோரே, அவர்கள் எங்கள் ஊரைச்சேர்ந்தவர்கள். ஆயர்மக்கள்" என்றான் பரிகன். "என்ன சொல்கிறார்கள்?" என்று காவலர்தலைவன் கேட்டான்.

அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே காலத்தில் கலைந்த குரல்கலவையாக பேசத்தொடங்கினர். பரிகன் மூத்தவரிடம் "மூத்தாரே நீங்கள் மட்டும் பேசுங்கள். நீங்கள் மட்டும் பேசுங்கள். மூத்தார் பேசட்டும் மற்றவர்கள் அமைதியாக இருங்கள்" என்று கூவினான். அவர்கள் ஒவ்வொருவராக நிறுத்திக்கொள்ள மூத்தவர் இருகைகளையும் விரித்து "புவிநடுக்கம்!" என்றார். நடுங்கும் கைகளை நீட்டி முகச்சுருக்கங்கள் சிலந்திவலை காற்றிலாடுவதுபோல சுருங்கி விரிய "அங்கே... அங்கே எங்களூரில் புவிநடுக்கம் வந்திருக்கிறது... மலைகள் சரிந்தன... மண்பிளந்து நதி திசைமாறி..." என்று சொல்லமுடியாமல் திணறினார்.

பரிகன் சொல்லத்தொடங்குவதற்குள்ளாகவே காவலர்தலைவன் "புரிந்துவிட்டது. இவர்களை இப்படியே அமைச்சர் விதுரரிடம் அழைத்துச்செல்" என்றான். "இது மங்கலநிகழ்வுக்கான இடம். இங்கே இச்செய்தி ஒலிக்கலாகாது." பரிகன் "ஆம்" என்றான். "சாதாரணமாக அமைச்சரை பார்க்கப்போவதுபோலச் செல். எவரும் ஏதென்று கேட்கலாகாது. அதற்காகவே உன்னை அனுப்புகிறேன்" என்றான். "புரிகிறது இறையோரே" என்றான் பரிகன்.

அவன் அவர்களிடம் "மூத்தாரே, வருக. அமைச்சரைச் சென்று பார்த்து நிகழ்ந்ததைச் சொல்வோம்" என்றான். அவர்கள் மீண்டும் ஒரேசமயம் பேசத்தொடங்கினர். கலைந்த பறவைகள் போல பேசியபடி அவனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தனர். "புவி பிளந்துவிட்டது. உலகம் அழியப்போகிறது..." என்றான் ஒருவன். "பூமியின் வாய்க்குள் தீ இருக்கிறது. தீதான் பூமாதேவியின் நாக்கு" என்றான் இன்னொருவன். "புகை வந்ததை நான் கண்டேன். மலையுச்சியில் இருந்த பாறை அசைந்து யானைபோல கீழிறங்கி ஓடிவந்தது. வந்த வழியிலிருந்த அனைத்துப்பாறைகளையும் அது உடைத்து உருட்டியது. பாறைகள் மழைவெள்ளம்போல காட்டுக்குள் புகுந்தன."

அவர்களின் கன்றுகள் நூற்றுக்கணக்கில் பாறைகள் விழுந்து இறந்திருந்தன. புவிபிளந்த இடத்திலிருந்த காடே அழிந்துவிட்டிருந்தது. புவிபிளந்த தடம் பெரிய மீன்வாய் போல திறந்திருக்கிறது; அதற்குள் நெருப்பு கொதித்து ஆவியெழுகிறது என்றார்கள். "கந்தக வாடை!" என்று கிழவர் சொன்னார். "கந்தகச்சுனைகள் அங்கே மலைகளுக்கு அப்பால் உள்ளன. அவற்றில் இருந்து வரும் அதே வாடை."

அவர்கள் கூவியபடியே வந்தனர். உள்ளே கொந்தளித்த எண்ணங்களால் உடல் நிலைகொள்ளாதவர்களாக எம்பி எம்பி குதித்தபடியும் கைகளில் இருந்த வளைதடிகளை சுழற்றியபடியும் வந்தனர். அச்சத்தை விடவும் கிளர்ச்சிதான் அவர்களிடமிருந்தது என்று பரிகன் நினைத்தான். விதுரனின் மாளிகை முற்றத்தில் நின்ற காவலனிடம் அவர்களை அமைச்சரைப்பார்க்கும்படி மகாமண்டபத்துக் காவலர்தலைவன் அனுப்பியதாகச் சொல்லி உள்ளே அழைத்துச்சென்றான்.

விதுரன் இரவு துயிலவில்லை என்றார் மாளிகை ஸ்தானிகர். அவன் காலைநீராடிக்கொண்டிருப்பதாகவும் காத்திருக்கும்படியும் சொன்னார். விதுரனுக்காக அந்தக்கூடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓலைநாயகங்களும் ஸ்தானிகர்களும் ஸ்ரீகாரியக்காரர்களும் அதிகாரிகளும் நின்றிருந்தனர். அனைவருமே தங்கள் அலுவல்களின் அவசரத்துடன் வாயிலையே எட்டி நோக்கிக்கொண்டிருந்தனர். அனைவரும் நீராடி புத்தாடையும் நகைகளும் படைக்கலங்களும் அணிந்திருந்தனர். அனைவர் கண்களிலும் இரவு துயிலாத சிவப்பும் தசைத்தொய்வும் இருந்தன.

கதவு திறந்து வெளியே வந்த விதுரன் முதலில் அவர்களைத்தான் நோக்கினான். கைசுட்டி அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றபின் கதவை மூடினான். அவனுடன் சோமரும் உள்ளே நுழைந்தார். அவர்கள் விதுரன் கேட்பதற்குள்ளாகவே சொல்லத்தொடங்கினர். சிலசொற்களிலேயே அவர்கள் சொல்வதென்ன என்று விதுரன் புரிந்துகொண்டான். அவர்கள் சொல்லச்சொல்ல செவிகூர்ந்து கேட்பதுபோல அவன் தலையசைத்தாலும் அவன் அடுத்து செய்யவேண்டியவற்றைத்தான் சிந்திக்கிறான் என பரிகன் உணர்ந்தான்.

அவர்களை அமைதிப்படுத்திவிட்டு விலகி வந்து சோமரிடம் "இமயத்தின் அடிவாரத்தில் புவியதிர்வும் பிளப்பும் இயல்பாக நிகழ்வனதான். இவர்களின் ஊரில் இப்போதுதான் நிகழ்கின்றன போலும்" என்றான். "ஆனால் இச்செய்தியுடன் இவர்கள் வந்த வேளை..." எனத் தொடங்கிய சோமரை கையமர்த்தி "ஆம், இவர்களை விழவு முடிவதுவரை எவரும் பார்க்கலாகாது. சிறைவைத்தலும் நன்றே. இவர்கள் வந்தபோது மண்டபமுகப்பில் இருந்த காவலர்கள் அனைவரையும் விழாமுடிவுவரை சிறைவைத்துவிடுங்கள். ஒரு சொல்கூட எங்கும் ஒலிக்கலாகாது" என்றான்.

"ஆம்" என்று சோமர் தலைவணங்கினார். விதுரன் வெளியே வந்து அங்கே அவனுக்காகக் காத்து நின்றவர்களை இருவர் இருவராக வரச்சொல்லி ஓரிரு வரிகளில் அவர்களின் தரப்பைக் கேட்டு ஆணைகளும் பரிந்துரைகளும் அளித்தபின் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். "மகாமண்டபத்துக்கு" என்று அவன் ஆணையிட்டதும் குதிரை நகரச்சாலை வழியாக விரைந்தோடத் தொடங்கியது.

மகாமண்டபத்தின் முற்றத்தை அவன் அடைந்து இறங்கி அலங்காரங்களை நோக்கினான். விப்ரர் அவனிடம் வந்து "முறையறிவிப்பு அளிக்கப்படலாமே. அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன" என்றார். அவன் நான்குபக்கமும் நோக்கியபின் தலையை அசைத்தான். விப்ரர் தனக்குப்பின்னால் நின்ற காவலர்தலைவனிடம் மெல்ல ஆணையைச் சொன்னார். அவன் திரும்பி முரசுக்கோபுரத்தை நோக்கி கையை அசைத்தான்.

மேடைமேல் நின்றிருந்த கச்சன் தன் முரசுக்கோல்களைக் கையிலெடுத்தான். அவற்றின் மரஉருளை முனைகளைச் சுழற்றி தோல்பரப்பில் அறைந்தான். அக்கணம் வரை முரசுக்குள் தேங்கி சுழன்றுகொண்டிருந்த ஒலியனைத்தும் பெருமுழக்கமாக மாறி எழுந்து காற்றை மோதின.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 3 ]

இரண்டு அடுக்குகளாக இருப்பது திருதராஷ்டிரனின் உலகம். அவனருகே அவன் உளம்சேர்க்கும் ஒலிகளின் ஓர் உலகம். அதற்கு அடியில் அத்தருணமாக விளையாத ஒலிகளின் இன்னொரு பேருலகம். அவன் அகமும் இரண்டாகப்பிரிந்திருப்பதை அறிந்திருந்தான். அறிந்த எண்ணங்களாலான அகத்துக்கு அடியில் அறியாதவையும் வற்றி அந்த ஆழத்து உள்ளத்தில்தான் சென்று தேங்குகிறது. அங்கிருந்து தனிமையிலும் கனவுகளிலும் அவை ஊறி மேலே வருகின்றன. இசைகேட்கும்போது அவ்விசையின் அடித்தளமாக ஒலித்துக்கொண்டிருக்கும் தூரத்தை அவன் ஆழத்து அகம் எண்ணிப்பற்றிக்கொண்டிருக்கிறது. இசையோடும் முதல் அகத்தின் இடைவெளிகளில் அதைப்படரவிடுகிறது.

“என் உலகம் தெய்வத்தையும் பீடத்தையும் போல இரண்டாக இருக்கிறது விதுரா” என அவன் ஒருமுறை சொன்னான. “மானுடர் அனைவருக்கும் அப்படித்தான் அரசே” என்றான் விதுரன். “அது எப்படி? நான் இங்கிருந்து அசையமுடியாது. உங்களுக்கு விழிகளிருக்கின்றன. நீங்கள் ஏன் முழுதுலகையும் பார்க்கலாகாது?” விதுரன் அவன் கைகளைத் தொட்டு “ஏனென்றால் பார்க்கும் கருவி நம் அகம். அது இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது அரசே” என்றான். சிலகணங்கள் திகைத்தபின் திருதராஷ்டிரன் தலையசைத்தான்.

முடிசூட்டுவிழவுக்கான நாள் குறிக்கப்பட்டபின்னர் தன் இரு உலகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து எல்லையழிந்துவிட்டன என்பதை அவன் அறிந்தான். உளமறியும் ஒலிகளில் எவை அண்மையவை எவை சேய்மையவை என அவனால் அறியமுடியவில்லை. அறைக்குள் ஒலிக்கும் இசையுடனும் குரல்களுடனும் நகரத்தின் பேரோசை பரவிக்கலந்துவிட்டிருந்தது. கனத்த சங்கிலிகள் ஒலிக்க அவன் அறைக்குள் யானைகள் நடந்தன. ரதசக்கரங்கள் தலைக்குமேல் கடகடத்தோடிச் சென்றன. திரைச்சீலை படபடக்கும் ஒலியுடன் கலந்தது தீப்பந்தங்களின் சுடரோசை. பெருமுரசம் அவன் கையெட்டும் தொலைவிலிருந்து முழங்கியது.

நிலைகுலைந்தவனாக அவன் “விதுரா மூடா, என்ன ஒலி அது...? மூடா என்னருகே வா!” என்று கூவிக்கொண்டிருந்தான். விதுரன் “அரசே இன்னும் சிலநாட்கள் அஸ்தினபுரியே விழவுக்கோலத்திலிருக்கும். ஒலிகளை என்னாலேயே அறிந்துவிடமுடியாது. அனைத்தும் விழாக்களியாட்ட ஒலியே என எண்ணிக்கொள்ளுங்கள்” என்றான். “என் அறைக்குள் எப்படி படைகள் நுழைந்தன? ஏன் படைவீரர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள்? அவர்கள் கையில் மணிபோல ஓசையிடுவது என்ன?” விதுரன் “அரசே, அதை நான் காணமுடியாது... அது நெடுந்தொலைவில் நிகழ்கிறது” என்றான். திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “பெண்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சேடிகள் இப்படிச் சிரிக்கலாகாது” என்றான்.

விதுரன் மறுநாளே ஒரு சூதச்சிறுவனுடன் வந்தான். “அரசே, கவல்கணத்தைச் சேர்ந்த இவன்பெயர் சஞ்சயன். நம் குதிரைக்கொட்டிலில் பிறந்து வளர்ந்தவன். இவன் தந்தை புகழ்பெற்ற பாடகனாக இருந்தவர். இங்கே நம் சேடி ஒருத்தியை கருவுறச்செய்துவிட்டு அகன்றவர் மீளவில்லை. அவளும் மகப்பேறிலேயே மாண்டாள். இவன் முறைப்படி மொழிக்கல்வியும் வேதப்பயிற்சியும் பெற்றவன். தேர்க்கலையும் பயில்கிறான். இவனுடைய ஆசிரியரான சுமந்தர் அவரது மாணவர்களில் இவனே பேரறிஞன் என்று சொல்கிறார். இவன் இனிமேல் இரவும்பகலும் தாங்கள் விரும்பும் நேரம் முழுக்க தங்களுடன் இருப்பான்” என்றான்.

“எனக்கு எவர் உதவியும் தேவையில்லை. அந்தச்சிறுவனை இப்போதே போகச்சொல். அருகே நின்றால் அவனை நான் அறைந்தே கொன்றுவிடுவேன்” என்று திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். தன் இருகைகளையும் ஓங்கி அறைந்து “சிறுவன் கையைப்பற்றிக்கொண்டு நான் நடக்கவேண்டும் என்கிறாயா? நான் அஸ்தினபுரியின் அரசன். நீ என் அமைச்சன் என்றால் என்னருகே நில். உனக்கென்ன வேலை?” என்றான். “அரசே, சிறுவர்களின் கண்களைப்போல கூரியவை வேறில்லை. அவர்களின் செவிகள் கேட்பதை பிறர் கேட்பதுமில்லை” என்றான். “நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. நீ வளர்ந்துவிட்டாய். விழியிழந்தவன் அருகே நிற்பதை அவமதிப்பாக எண்ணுகிறாய்” என்றான் திருதராஷ்டிரன்.

சஞ்சயன் தன் இனிய குரலில் “அரசே, தாங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று சொல்லி கைகூப்பியபடி அருகே சென்றான். “அருகே வராதே. ஒரே அடியில் உன் தலை சிதறிவிடும்!” என்று திருதராஷ்டிரன் கூவினான். “தங்களிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன். கொல்லவேண்டுமென விரும்பினால் அதைச்செய்யுங்கள்” என்றபடி சஞ்சயன் திருதராஷ்டிரனின் அருகே வந்து குனிந்து அவனது பாதங்களைத் தொட்டான். திருதராஷ்டிரன் திகைத்தவன் போல சிலகணங்கள் இருந்துவிட்டு “நீள்வாழ்வுடன் இரு!” என வாழ்த்தினான்.

சஞ்சயனின் தோள்களைத்தொட்டு வருடி மேலே சென்று அவன் காதுகளையும் குழலையும் கன்னங்களையும் மூக்கையும் தொட்டபின் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “நீ இன்னமும் சிறுவன். விழியிழந்தவன் அருகே வாழ்ந்தால் உன் உடல் வற்றும். அறிவும் உணர்வும் வளர்ச்சியடையாது. ஆகவே நீ இங்கிருக்கவேண்டியதில்லை” என்றான். இருகைகளையும் விரித்தபடி திருதராஷ்டிரன் சொன்னான் “அவன் என் தம்பி. என்னருகே அவன் இருந்தால் அவன் குறுகமாட்டான். நான் வளர்வேன்.”

“அரசே, எந்நிலையிலும் வளர்ச்சிநிலைக்காத ஒருவனைத்தேடித்தான் இத்தனைநாள் நானும் காத்திருந்தேன். தன்முன் வரும் அனைத்தையும் அறிவாக மாற்றிக்கொள்ளும் ஒருவனை இதோ கொண்டுவந்துள்ளேன். இவன் என்னுடைய சிறுவடிவம். உங்கள் ஒலிகளின் உலகம் இவனுக்கு புதிய அறிவின் வழிகளையே திறந்துகாட்டும். தாங்கள் விழியில்லாமல் வளர்ந்தது போல் இவன் அன்பிலாது வளர்ந்திருக்கிறான். தங்கள் பேரன்பு இவனை வான்மழைபோலத் தழைக்கச்செய்யும்” என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் புன்னகையுடன் மீண்டும் சஞ்சயன் தோள்களைத் தொட்டான். “உன் பெயர் சஞ்சயன் அல்லவா?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “நல்லவெற்றிகளை அடைபவன் என்று பொருள். உண்மையான வெற்றி எதுவோ அதை நீ அடைவாய்” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினான். “அங்கே யானையின் ஒலிகள் கேட்கின்றன. யானைகள் இங்கே எங்கு வந்தன?” சஞ்சயன் “அரசே, யானைகள் தொலைவில் அரண்மனை முற்றத்தில்தான் நிற்கின்றன. நீங்கள் உங்களுக்குள் யானையின் ஆற்றலை உணரும்போது அவற்றின் ஒலிகளைக் கேட்கிறீர்கள்” என்றான். திருதராஷ்டிரன் “ஆம். அதுவே உண்மை...” என்று முகம் மலர்ந்தான்.

மங்கலச்சேவகர் திருதராஷ்டிரனை அணிசெய்து முடித்தபின் மெல்ல “அரசே அணிகள் முடிந்துவிட்டன” என்றார்கள். “யார், யார் அதைச் சொன்னது? மூடா, நான் அந்த நீலமணிவைரத்தை என் தோள்களில் கட்டச்சொன்னேன்...” என்றான் திருதராஷ்டிரன். “அதை அப்போதே கட்டிவிட்டோம் அரசே” என்றான் சேவகன். திருதராஷ்டிரன் தன் கைகளால் துழாவி அந்த வைரத்தைத் தொட்டபின் “என் செவ்வைரம் எங்கே? அதை என் கையில் கட்டச்சொன்னேனே?” என்றான். “அரசே அனைத்து அணிகளையும் முறைப்படி பூட்டிவிட்டோம்” என்ற சேவகன் “வெளியே அனைவரும் காத்திருக்கிறார்கள். முடிசூட்டு விழவுக்கான மங்கலத்தருணம் அணுகிக்கொண்டிருக்கிறது” என்றான். திருதராஷ்டிரன் சினத்துடன் “நான் அணிகளை முழுமைசெய்யவேண்டாமா? முதலில் என் பதக்கமாலையை எடு” என்றான்.

சேவகர்களில் ஒருவன் மெல்ல வெளியே சென்று காத்துநின்றிருந்த சஞ்சயனை நோக்கி கைகாட்டி முடிந்துவிட்டது என்றான். சஞ்சயன் உள்ளே வந்து “அரசே, நாம் கிளம்புவோம். அங்கே பாரதவர்ஷமே தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றான். “இதோ சற்று நேரம், என் அணிகளை முடித்துவிடுகிறேன்” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அருகே வந்து அவன் கைகளைத் தொட்டு “அரசே, இசை அதன் உச்சத்தை அடைவதுபோல தங்கள் அணிவரிசை முடிவடைந்துவிட்டது. இனிமேல் ஒரு சுவரம் சேர்ந்தாலும் அது அபசுதியே ஆகும். ஆகவேதான் நான் உள்ளே வந்தேன்” என்றான். திருதராஷ்டிரன் மலர்ந்து “உண்மையாகவா?” என்றான். “அரசே வேங்கைமரம் பூத்ததுபோலிருக்கிறீர்கள்” என்றான் சஞ்சயன்.

“மூடா மூடா” என்று திருதராஷ்டிரன் நகைத்தான். “இதற்குள் அரசனுக்கு முகத்துதி செய்வதெப்படி என்று கற்றுக்கொண்டிருக்கிறாய்...” அவன் தோள்களைப்பற்றியபடி எழுந்து “தேவியர் அணிமங்கலம் முடிந்துவிட்டதா?” என்றான். “அனைத்தும் முடிந்துவிட்டது. அனைவரும் அணியறைக்குச் சென்று தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.” “ஆம் ஒலிகள் கேட்கின்றன. நான் இப்போது சபை நடுவிலா இருக்கிறேன்?” “அரசே சபை நெடுந்தொலைவில் இருக்கிறது. தங்கள் உள்ளம் அங்கு சென்றுவிட்டது.” “பல்லக்குகளின் மணிகள் ஒலிக்கின்றன. பாவட்டாக்கள் சிறகோசை எழுப்புகின்றன.” “ஆம் அரசே அவை அங்கே மண்டபத்தில். நாம் இங்கு அரண்மனை அணிக்கூடத்தில்தான் இன்னமும் இருக்கிறோம்.”

அவர்கள் வெளியே வந்தபோது சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “அஸ்தினபுரியின் இளவரசர் வாழ்க! ஹஸ்தியின் அரியணை வாழ்க! குருகுலம் வாழ்க! சந்திரமரபு வாழ்க!” திருதராஷ்டிரன் “அவர்கள் ஏன் இளவரசர் என்கிறார்கள்?” என்றான். “அரசே இன்னும் தாங்கள் அரியணையில் ஏறவில்லை.” திருதராஷ்டிரன் சஞ்சயனின் தோள்களைப்பற்றியபடி நடந்தான். சஞ்சயன் அவனுக்கு அதற்குள் நன்கு பழகியிருந்தபடி தன்னியல்பாக காட்சிகளை சொல்லிக்கொண்டு வந்தான். “அரண்மனை மங்கலத்தோற்றம் கொண்டிருக்கிறது. மலர்மாலைகள் தெரியாத இடமே இல்லை. மலர்தேடும் வண்டுகள் சுற்றிலும் பறக்கின்றன. தூண்களும் கதவுகளும் செவ்வரக்கு மீது எழுதப்பட்ட அணிக்கோலங்களால் பொலிவுகொண்டிருக்கிறன. அரசே தங்களை எதிரேற்றுக் கொண்டு செல்ல சோமர் வந்திருக்கிறார்.”

“விதுரன் எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “அவர் இங்கில்லை. அவரது பணிகள் இப்போது உச்சம் கொண்டிருக்கும்.” “சோமர் மட்டுமா வந்திருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன். “ஆம் அரசே, பிற அனைவரும் அங்கிருந்தாகவேண்டும். ஐம்பத்தைந்து ஷத்ரியர்களும் வந்திருக்கிறார்கள். சான்றோரும் குடிமூத்தாரும் வைதிகரும் வந்திருக்கிறார்கள். ஏற்புமுறையில் சிறுபிழைகூட நிகழலாகாது” என்றான் சஞ்சயன். “ஆம் சிறுபிழை நிகழ்ந்தாலும் அதற்குரிய தண்டனையை நான் வழங்குவேன்” என்றான் திருதராஷ்டிரன் .

சோமர் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மகாமண்டபம் செல்வதற்காக தனியான பாதை ஒன்று ஒருங்கியிருக்கிறது. அதன்வழியாகச் சென்று மண்டபத்தின் அணியறைக்குள் நுழையலாம். அங்கிருந்து குடையும் கவரியும் மங்கலமும் அகம்படியுமாக அவைநுழையலாம்” என்றார். திருதராஷ்டிரன் அவரை நோக்கி கையசைத்துவிட்டு தலையை ஒலிகளுக்காக சற்றே சாய்த்துக்கொண்டு நடந்தான். சஞ்சயன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு அங்கே தெரியும் காட்சியை சொல்லிக்கொண்டே சென்றான். “மரவுரி விரிக்கப்பட்ட பாதை. தலைகுனியவேண்டியதில்லை, வாயில்கள் உயரமானவை. இருபக்கமும் நெய்விளக்குகளின் சுடர்கள் அசைகின்றன. பாவட்டாக்களும் பட்டுத்தூண்களும் காற்றிலாடுகின்றன. வேல் ஏந்திய வீரர்கள் அவற்றின் மறைவில் நின்றுகொண்டிருக்கிறார்கள்...”

“சோமா மூடா” என்றான் திருதராஷ்டிரன். “அங்கே அவையில் என்னருகே பிரகதியும் இருக்கவேண்டும்.” சோமர் “அரசே அவர் வைசியப்பெண். அவருக்கு அதற்கான நூல்நெறி ஒப்புகை இருக்காதென எண்ணுகிறேன்” என்றார். “அப்படியென்றால் அவள் எங்கிருப்பாள்?” “அரசகுலப் பெண்டிர் அமர்வதற்கான சபை வலப்பக்க நீட்சியில் உள்ளது. இடப்பக்க நீட்சியில் அரண்மனைப்பெண்டிர் அமர்வார்கள். அங்கே அவர்களும் இருப்பார்கள்.” திருதராஷ்டிரன் “அங்கே அவளை முதன்மையாகக் கொண்டு அமரச்செய். அவள் தலையில் ஒரு வைர அணி இருந்தாகவேண்டும். அவள் என் விருப்புக்குரியவள் என அவையில் அனைவரும் அறிந்தாகவேண்டும்.” சோமர் தலைவணங்கி “ஆணை” என்றார்.

அவையின் ஒலிகளால் தன் அகத்தின் இரு அடுக்குகளும் நிறைவதை திருதராஷ்டிரன் உணர்ந்தான். காற்றுவீசும்போது கவரிகள் குழைந்தாடும் ஒலி. சாளரத்திரைச்சீலைகள் படபடக்கும் ஒலி. நூற்றுக்கணக்கான தொண்டைச்செருமல்களையும் தும்மல்களையும் தனித்தனியாகக் கேட்டான். ஷத்ரியர்கள் தங்கள் அமைச்சர்களிடமும் ஏவலர்களிடமும் மெல்லியகுரலில் பேசுவதை அவர்களின் அணிகள் ஒலிப்பதை வாளுறைகள் இடையில் முட்டுவதை கங்கணங்கள் இருக்கையின் கைகளில் அமைவதை. மண்டபத்தின் முரசுக்கோபுரத்தில் இருந்த பெருமுரசின் தோல்பரப்பில் பட்ட காற்று விம்மியது. யானைகளின் காதசைவின் காற்றொலிகள். கால்களைத் தூக்கிவைத்து சங்கிலிகளை ஆட்டுகின்றன அவை. ரதசக்கரங்களின் குடங்களில் ஆரங்கள் உரசிச்செல்கின்றன.

நான்கு கோட்டைவாயில் முற்றங்களிலும் கூடிநின்ற பல்லாயிரம் மக்கள் வெயிலில் வழியும் வியர்வையுடன் கிளர்ச்சிகொண்டு பேசியதை முழுக்க கேட்கமுடியுமென்று எண்ணினான். பல்லாயிரம் வாள்கள் கவசங்களில் உரசிக்கொள்கின்றன. பல்லாயிரம் வாய்கள் தாம்பூலச்சாற்றை உமிழ்கின்றன. பல்லாயிரம் கால்கள் மண்ணை மிதிக்கின்றன. பெண்களின் சிரிப்புகள். குழந்தைகளின் சில்லோசைகள். எங்கிருக்கிறேன் நான்! நான் எங்கிருக்கிறேன்? “சஞ்சயா மூடா, நான் எங்கிருக்கிறேன்?” “அரசே நீங்கள் இன்னும் அணியறையை அடையவில்லை. முடிசூட்டுவேளை அணுகிவருகிறது.”

விப்ரர் வந்து வணங்கி “அரசே தாங்கள் அணியறைக்குள் இவ்வாசனத்தில் அமருங்கள். வெளியே வைதிகர் ஹஸ்திமன்னரின் அரியணைக்கு பூசனைசெய்கிறார்கள்” என்றார். “என்ன பூசை?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, நேற்று நம் தொல்குடி மூத்தார் அதற்கு உயிர்ப்பலி கொடுத்து பூசனை செய்தனர். அப்போது அதிலிருந்த நகர்த்தெய்வங்களை விலக்கி கானகத்தெய்வங்களைக் குடியமர்த்தினர். இப்போது அரியணையை தூய்மைசெய்து மீண்டும் நகர்த்தெய்வங்களை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.” “அதை முன்னரே செய்யவேண்டியதுதானே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே காலைமுதல் தொடர்ந்து பூசனைச்சடங்குகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.”

ஒரு வீரன் வந்து பணிய, சோமர் “அரசே நான் உடனே சென்றாகவேண்டியிருக்கிறது” என்று பணிந்துவிட்டு விலகிச்சென்றார். “சஞ்சயா என்ன நடக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் அரங்குக்குள் சாளர இடைவெளி வழியாக எட்டிப்பார்த்து “அரங்கு நிறைந்திருக்கிறது அரசே. நீள்வட்ட வடிவமான விரிந்த கூடம். அதன் வலப்பக்கம் ஷத்ரிய மன்னர்களும் இடப்பக்கம் பிறகுறுநிலமன்னர்களும் பட்டுவிரிப்பிட்ட பீடங்களில் அரைச்சந்திர வடிவில் அமர்ந்திருக்கின்றனர். மகதத்தில் இருந்தும் காசிநாட்டில் இருந்தும் அரசப்பிரதிநிதிகளாக இளவரசர்கள்தான் வந்திருக்கின்றனர். பிறமன்னர்களில் தொலைதூரத்து காமரூபத்தில் இருந்தும் வேசர திருவிட தமிழ்நிலங்களில் இருந்தும் மன்னர்கள் அரசகுடிப்பிறந்த தூதுவர்களை அனுப்பியிருக்கின்றனர்” என்றான்.

“அனைத்து மன்னர்களும் தங்கள் அணித்தோற்றத்தில் இருக்கிறார்கள். சபையின் அப்பகுதியெங்கும் காலைவானம் பொன்னுருகி வழிந்துகிடப்பதுபோலத் தோன்றுகிறது. அதில் பல்லாயிரம் விண்மீன்கள் என வைரங்கள் ஒளிவிடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பீடங்கள் அமைந்திருக்கின்றன. எவருக்கும் தங்கள் பீடம் சரியானபடி இருக்கிறதென்ற எண்ணமிருப்பதாக முகங்கள் காட்டவில்லை. ஒவ்வொரு மன்னனுக்குப் பின்னாலும் அகம்படி செய்யும் சேவகன் ஒருவனும் அமைச்சர் ஒருவரும் நின்றிருக்கின்றனர். அவர்களின் தலைக்குமேல் தொங்கவிடப்பட்ட வெண்கவரித்தொகைகளை செம்பட்டுக்கயிறுகள் இழுபட்டு அசைத்துக்கொண்டிருக்கின்றன. அவை அவர்களை அடுமனையில் இறக்கிவைக்கப்பட்ட பாத்திரங்கள்போல வீசிக்குளிர்விக்கின்றன.”

திருதராஷ்டிரன் சிரித்தபடி “மூடா, உன் இளமைத்துடுக்கை காட்டாதே. எதைக் காண்கிறாயோ அதைச் சொல்” என்றான். “என் இளைய கண்களால் மட்டும்தானே நான் பார்க்கமுடியும்?” என்றான் சஞ்சயன். “மக்கள் இருக்கிறார்களா? மக்கள் எவ்வகைப்பட்டவர்கள்?” என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் “அரங்கின் முகப்பில் வலப்பக்கம் கம்பளங்களில் நூற்றெட்டு வைதிககுலங்களின் முதுவைதிகரும் அருகே உதவிக்கு ஒரு மாணவருடன் அமர்ந்திருக்கின்றனர். இடப்பக்கம் அஸ்தினபுரியின் நூற்றெட்டு பெருங்குடித்தலைவர்களும் தங்கள் குலச்சின்னங்களைச் சூடிய தலையணிகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் அவரவர் வருணப்பகுப்புக்கு ஏற்ப பிரிந்து அமர்ந்திருக்க அவர்கள் முன்னால் நறுஞ்சுண்ணமும் தாம்பூலமும் மங்கலமலர்களும் மஞ்சளரிசியும் பரப்பப்பட்ட தாலங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஊடே சேவகர்கள் நடமாடுவதற்கான பாதை நெளிந்து நெளிந்து செல்கிறது. தேன்தட்டில் தேனீக்கள் போல சேவகர் இன்னீரும் தாம்பூலமும் கொண்டு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.”

“அவர்கள் என்ன உண்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கெதற்கு? பிதாமகர் என்ன செய்கிறார்?”என்றான் திருதராஷ்டிரன். “அவர் வலப்பக்கம் மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்திருக்கிறார். கைகளை மார்பின்மீது கட்டி அரியணைமேடையையே நோக்குகிறார். அவர் அருகே காந்தார இளவரசரான சௌபாலர் அமர்ந்திருக்கிறார். அவர் இருக்குமிடத்தையே மறந்தவர் போல சிம்மாசனத்தை மட்டும் நோக்கிக் கொண்டிருக்கிறார்...” என்றான் சஞ்சயன். “சிம்மாசனமா?” என்றான் திருதராஷ்டிரன் முகம் விரிய. “ஆம் அரசே. மண்டபத்தின் மேற்குமுனையில் கிழக்குநோக்கியதாக அரியணைபீடம் அமைக்கப்பட்டு அதன்மீது கருவூலக்காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஹஸ்தியின் சிம்மாசனம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நகரின் ஒவ்வொருவரும் அதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். முடிசூட்டுச்சடங்கின்போது மட்டுமே அதை வெளியே எடுக்கிறார்கள். விசித்திரவீரிய மன்னர் முடிசூடியபோது முதியவர் சிலர் அதைப்பார்த்திருக்கலாம்.”

கிளர்ச்சியுடன் எழுந்தபடி “பெரியதா?” என்றான் திருதராஷ்டிரன். “மிகப்பெரியது. தங்கள் உடலுக்கேகூட அது பெரியதாக இருக்கலாம். சிறிய இளவரசர் என்றால் படிபோட்டு ஏறிப்போய்த்தான் அமரமுடியும்” என்றான் சஞ்சயன். “பொன்னாலானது. பழைமையானபொன். இப்போதுள்ள பொன்னைவிடவும் மஞ்சள்நிறமாக இருக்கிறது. அதன் சிற்பவேலைகளெல்லாம் மழுங்கிப்போயிருக்கின்றன. அதன் சிம்மங்களின் விழிகளிலும் வாயிலும் செவ்வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரன் பொறுமையிழந்து தலையை அசைத்தபடி “இளவரசியர் எங்கே?” என்றான். “அவர்கள் அணியறையின் மறுபகுதியில் இருக்கிறார்கள் அரசே. ஓசைகள் கேட்கின்றன.”

“ஆம்... நகைகளும் ஆடைகளும் ஒலிக்கின்றன. எனக்கு மிக அருகே ஒலிப்பவை கேட்கவில்லை. தொலைவிலுள்ளவை செவிகளை அறைகின்றன...” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும் அமர்ந்தபடி. “பேரரசி என்ன செய்கிறார்?” சஞ்சயன் “அவர் வெளியேதான் அரியணைமேடை அருகே அமர்ந்திருக்கிறார். விதுரர் அவர் அருகே நின்றுகொண்டிருக்கிறார்” என்றான். “அவர்கள் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் முகம் மாறியது. “தீவிரமாகவா? எங்கே?” என்றான். சஞ்சயன் மீண்டும் எட்டிப்பார்த்து “வெளியே” என்றான். திருதராஷ்டிரன் சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “இன்னுமா பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். “ஆம் அரசே” என்றான் சஞ்சயன்.

“அவர்கள் முகம் எப்படி இருக்கிறது?” என்றான் திருதராஷ்டிரன். “இயல்பாகத்தான் இருக்கிறது.” “அவர்கள் கண்களில் சிரிப்பு இருக்கிறதா?” என்று திருதராஷ்டிரன் மீண்டும் கேட்டான். “இல்லை அரசே, இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் தன் கைகளை பிணைத்துக்கொண்டு “ஏதோ பெரும் இக்கட்டு எழுந்துள்ளது” என்றான். “அவர்கள் ஒருபோதும் பொதுஇடத்தில் அப்படி பேசிக்கொள்ளமாட்டார்கள். புன்னகையின்றிப் பேசுகிறார்கள் என்றாலே அது இக்கட்டானது என்றுதான் பொருள்.” சஞ்சயன் மீண்டும் நோக்கி “ஆனால் பிதாமகரும் சௌபாலரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதும் பேசுவதுபோலத் தெரியவில்லை” என்றான். “அவர்கள் வரை இன்னும் அந்த இக்கட்டு சென்றுசேரவில்லை...” என்றபின் எழுந்து நின்று “சகுனி அமைதியாகவா இருக்கிறார்?” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆம் அரசே” என்றான் சஞ்சயன். “அப்படியென்றால் அது என் முடிசூட்டுவிழாவுக்கான இக்கட்டுதான். அவர்கள் அதை சகுனியிடமிருந்து மறைக்கிறார்கள்” என்றான் திருதராஷ்டிரன். தலையை ஆட்டியபடி கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி “நீ அதை அறியமுடியாது. அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஒருவேளை அமைச்சர்கள்கூட அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான். மீண்டும் அமர்ந்துகொண்டான். “சஞ்சயா, அங்கே வைதிகர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார். குடிமூத்தாரும் குலத்தலைவர்களும் என்ன செய்கிறார்கள் என்று சொல்!”

“அரசே அவர்கள் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் முடிசூட்டுவிழாவை எதிர்நோக்கியிருப்பதாகவே படுகிறது.” திருதராஷ்டிரன் “இல்லை, அது விழித்தோற்றம். அவர்களின் மூத்ததலைவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்றான். “அரசே மூத்த தலைவர்கள் சிலர் அவர்களின் இருப்பிடங்களில் இல்லை. வைதிகர்களிலும் முதியவர்கள் இல்லை.” திருதராஷ்டிரன் எழுந்துநின்று தன் கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். “அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஆம், அதுதான் நடக்கிறது!” என்றான்.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 4 ]

விதுரன் சத்யவதியிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதுமே சகுனி என்ன நடக்கிறதென்பதை உய்த்தறிந்து கொண்டான். தன்னருகே அமர்ந்திருக்கும் பீஷ்மரும் அதை உணர்ந்துகொண்டுவிட்டார் என்பதை அவன் அறிந்தான். ஆனால் முகத்திலும் உடலிலும் எந்த மாறுதலையும் காட்டாதவனாக அமர்ந்திருந்தான். விதுரன் மெல்ல வந்து பீஷ்மரிடம் "பிதாமகரே, தாங்கள் சற்று அகத்தளத்துக்கு வரவேண்டும்" என்றான். பீஷ்மர் மலர்ந்த முகத்துடன் எழுந்து சகுனியிடம் "பொறுத்தருள்க" என்று சொல்லி உள்ளே சென்றார்.

அவரது முழுமையான இயல்புத்தன்மை சகுனிக்கு வியப்பளிக்கவில்லை. ஆனால் பீஷ்மரின் பதற்றம் அவனையும் பதற்றத்துக்குள்ளாக்கியது. பீஷ்மரில் முதல்முறையாக நிலைகொள்ளாமையைக் காண்கிறோம் என நினைத்துக்கொண்டான். ஆம், இது முடிசூட்டுவிழாவுக்கான எதிர்ப்பேதான். வேறேதும் பீஷ்மரை கவலைகொள்ளச்செய்யப்போவதில்லை. ஆனால் யார்? இங்கிருக்கும் ஷத்ரிய அரசர்களா? வைதிகர்களா? குலக்குழுவினரா? இங்கே அத்தனை அதிகாரம் கொண்டவர்கள் யார்? அவன் தன் சிறிய விழிகளால் அவையை சுற்றி நோக்கினான். உண்மையில் இங்கே என்ன நிகழ்கிறது? முற்றிலும் வெளியே அயலவனாக அமர்ந்திருக்கிறேனா என்ன?

ஆம், இது மக்களின் எதிர்ப்பேதான் என சகுனி எண்ணிக்கொண்டான். மூத்தகுடிகளுக்கான முன்வரிசையிலும் வைதிகர் வரிசையிலும் பல இருக்கைகளில் எவருமில்லை. அதை எப்படி முன்னரே அவன் கவனிக்காமலிருந்தான் என வியந்துகொண்டான். அவர்களின் எதிர்ப்பு என்ன? அரசன் விழியிழந்தவன் என்பதா? ஆனால் அது முன்னரே அறிந்ததுதான். முற்றிலும் நெறிவிளக்கமும் நூல்விளக்கமும் அளிக்கப்பட்டதுதான். அப்படியென்றால் புதியது என்ன?

எவ்வளவு நேரம்! என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது? அமைச்சர்கள் மட்டுமே அவையில் இருக்கிறார்கள். ஷத்ரியர்களிடம் மெல்ல அச்செய்தி ஒரு இளங்காற்றுபோல கடந்துசெல்வதை சகுனி கண்டான். அனைவர் முகங்களும் சிரிப்பழிந்து பேச்சொலிகள் அணைந்தன. அக்கணமே அவர்கள் முகங்களில் இருந்து செய்தி அரங்கிலிருந்த குடிகள் அனைவரையும் அடைந்தது. குளிர்போல, நிழல்போல அச்செய்தி உருவாக்கிய அமைதி கூட்டத்தின்மேல் பரவிச்செல்வதை சகுனி கண்டான். சற்றுநேரத்தில் மகாமண்டபமே சித்திரம்போலச் சமைந்து அமர்ந்திருந்தது.

எங்கோ ஓரத்தில் கைபட்ட முரசுத்தோற்பரப்பு அதிர்வதுபோல ஒரு மெல்லிய பேச்சொலி கேட்டது. அதனுடன் பேச்சொலிகள் இணைந்து இணைந்து முழக்கமாயின. அம்முழக்கம் எழுந்தோறும் அதில் தங்கள் குரல்மறையுமென்றெண்ணி ஒவ்வொருவரும் பேசத்தொடங்க அது வலுத்து வலுத்து வந்து செவிகளை நிறைத்தது. கூடத்தின் குவைமாடக்குழிவில் அந்த இரைச்சல் மோதி கீழே பொழிந்தது. அங்கிருந்து பார்க்கையில் அசையும் உதடுகளால் மின்னும் விழிகளால் அலையடிக்கும் கைகளால் ஆனதாக இருந்தது கூட்டம்.

முதியவரான பேரமைச்சர் யக்ஞசர்மர் குனிந்து தள்ளாடி தன்னை நோக்கி வருவதை சகுனி கண்டான். அவரைநோக்கியபடி எவ்வுணர்ச்சியும் வெளித்தெரியாமல் அமர்ந்திருந்தான். யக்ஞசர்மர் அவனருகே வந்து "காந்தார இளவரசர் சௌபாலரை வணங்குகிறேன். உடனடி உரையாடல் ஒன்றுக்காக தங்களை பீஷ்மபிதாமகர் அழைக்கிறார்" என்றார். அவர் சகுனியை அணுகும்போதே அனைத்துக்கண்களும் அவர்மேல் பதிந்து அவை அமைதிகொண்டிருந்தது. சகுனி எழுந்ததும் அவையிலிருந்து பேச்சொலி முழங்கி எழுந்தது. சகுனி தன் மேலாடையை மெல்ல சுழற்றி தோளிலிட்டபடி உள்ளே நடந்தான்.

அணியறையை ஒட்டி இருந்த சிறிய மந்தண அறையில் பேரரசி சத்யவதியும் பீஷ்மரும் அமர்ந்திருந்தனர். அருகே விதுரன் நின்றிருந்தான். உள்ளே நுழைந்ததுமே அங்கு நிகழ்ந்த உரையாடலை ஒவ்வொருசொல்லையும் கேட்டவன் போல சகுனி உணர்ந்தான். அவர்கள் சொல்லப்போவதை முன்னரே அறிந்திருந்தான் என்று தோன்றியது. "சௌபாலரே அமருங்கள்" என்றார் பீஷ்மர். சகுனி அமர்ந்துகொண்டதும் சத்யவதி பீஷ்மரை ஏறிட்டு நோக்கினாள். பீஷ்மர் "சௌபாலர் காந்தாரநாட்டுக்காக என்னை மன்னித்தாகவேண்டிய இடத்தில் இப்போது இருக்கிறார்" என்றார். எத்தனை சரியான சொல்லாட்சி என அப்போதுகூட சகுனி ஒருகணம் வியந்துகொண்டான்.

"பிதாமகரின் நீதியுணர்ச்சியை நம்பி வாழ்பவர்களில் நானும் ஒருவன்" என்றான் சகுனி. அந்தச் சொற்றொடர் அத்தனை சரியானதல்ல என்று தோன்றியது. 'அறம்' என்று சொல்லியிருக்கவேண்டும். சிந்திக்காமல் சிந்தனையின் கடைசித்துளியை பேசமுடியுமென்றால்தான் நான் அரசியலாளன். பீஷ்மர் "இன்றுகாலை புதியதோர் இக்கட்டு தோன்றியிருக்கிறது. அஸ்தினபுரியின் வடபுலத்து ஜனபதம் ஒன்றில் புவியதிர்வு நிகழ்ந்துள்ளது. அங்கிருந்து வந்த ஆயர்கள் சிலர் அதைகாலையில் ஊர்மன்றில் நின்று கூவியறிவித்திருக்கிறார்கள்."

அவர் மேலே சொல்வதற்குள்ளாகவே சகுனி அனைத்தையும் புரிந்துகொண்டான். மூச்சுசீறி நெஞ்சு எழுந்தமர "குலத்தலைவர்களைக் கொண்டு இந்த நாடகத்தை நடத்துவது யார்?" என்று கூவியபடி அவன் எழுந்தான். "அஸ்தினபுரி காந்தாரத்துக்கு பெண்கேட்டு வருவதற்குள்ளாகவே இந்நாடகம் முடிவாகிவிட்டதா என்ன?" அது உண்மையில்லை என அவனறிந்திருந்தான். ஆனால் அந்த நிலைப்பாடே அவனுக்கு அப்போது உரிய சினத்தை உருவாக்குவதாக இருந்தது. அச்சினம் உருவானதுமே அது அவ்வெண்ணத்தை உறுதியாக நிலைநாட்டியது. அடுத்த சொற்றொடர் அவன் நாவில் எழுவதற்குள் அவன் அகம் அதையே நம்பிவிட்டது "அஸ்தினபுரியின் பேரரசியும் அவரது சிறு அமைச்சனும் அரசியல்சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என நான் அறிவேன். ஆனால் இது சூழ்ச்சி அல்ல, நயவஞ்சகம்"

"சௌபாலரே, தாங்கள் சொற்களை சிதறவிடவேண்டியதில்லை" என்று சத்யவதி சொன்னாள். "இந்நிலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனிதவல்லமையால் ஆவதனைத்தையும் செய்து முடித்துவிட்டிருந்தோம். இது இறைவிளையாட்டு" சகுனி கையை ஆட்டி அவளைத் தடுத்தான். "இறைவிளையாட்டல்ல இது. இது மானுடக்கீழ்மை இந்நகருக்கு என் தமக்கை மங்கலநாண்சூடி வரும்போது ஒரு வாக்குறுதியளிக்கப்பட்டது. பிதாமகர் பீஷ்மர் அளித்த வாக்கு அது. என் தமக்கை இங்கே மணிமுடிசூடி தேவயானி அமர்ந்த சிம்மாசனத்தில் அமர்வாள் என்று. அந்த வாக்குறுதி எங்கே? அதற்கு மட்டும்தான் நான் விடைதேடுகிறேன்."

"சௌபாலரே, அந்த வாக்குறுதி இப்போதும் அப்படியே உள்ளது. அதை நிறைவேற்றமுடியாததனால் நான் உயிர்துறக்கவேண்டுமென்றால் அதைச்செய்கிறேன்" என்றார் பீஷ்மர். "அப்படியென்றால் அதைச் செய்யுங்கள். வாருங்கள். வெளியே கூடியிருக்கும் ஷத்ரிய மன்னர்கள் நடுவே வந்து நில்லுங்கள். உங்கள் குடிகளின் முன்னால் நின்று சொல்லுங்கள் உங்கள் வாக்கு வீணாக விரும்பவில்லை என்பதனால் நீங்கள் உங்கள் கழுத்தைவெட்டிக்கொள்வதாக. அதைக்கேட்டபின்னரும் உங்கள் குடிகள் ஒப்பவில்லை என்றால் அதை நானும் ஏற்கிறேன்."

"காந்தார இளவரசே, தாங்கள் பிழையாகப் புரிதுகொண்டுவிட்டீர்கள். இது அதிகாரப்போர் அல்ல. வைதிகர்களுக்கும் குலமூதாதையருக்கும் இப்புவியதிர்ச்சி என்பது இறையாணை. அதை அவர்கள் ஒருபோதும் மீறமாட்டார்கள். பிதாமகர் அல்ல, இங்குள்ள அரசகுலத்தவர் அனைவரும் சொன்னாலும் சரி" என்றான் விதுரன். "இன்றுகாலையிலேயே என்னிடம் ஆயர்கள் வந்துவிட்டனர். அவர்களனைவரையும் நான் சிறையிட்டேன். ஆனால் அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவிவிட்டிருந்தது. காலையில் வைதிகரும் குலமூதாதையரும் மன்றுகூடி இறுதி முடிவுசெய்தபின்னர்தான் என்னிடம் வந்தனர்."

யக்ஞசர்மர் "இளவரசே, அஸ்தினபுரியின் வரலாற்றில் இது புதியதுமல்ல. முன்பு தேவாபி மணிமுடிசூடுவதற்கு எதிராக இதேபோன்ற குரல் எழுந்துள்ளது" என்றார். "விழியிழந்தவன் மன்னனானால் நாடு அழியும் என்ற ஐயம் முன்னரே இருந்தது. மரபு அளித்த அச்சம் அது. அதை பிறநாட்டு ஒற்றர்களும் வளர்த்திருக்கலாம். அதை இந்நிகழ்வும் உறுதிசெய்திருக்கிறது..."

"புவியதிர்வு ஒரு காரணம். அவர்களுக்கல்ல, உங்களுக்காகவேகூட இருக்கலாம்" என்றான் சகுனி. "இளவரசே, இங்குள்ள வேளிர்களுக்கும் ஆயர்களுக்கும் மண் என்பவள் அன்னை. எல்லையில்லா பொறை கொண்டவள். அவளை பிரித்வி என்றும் தரித்ரி என்றும் சூதர்கள் துதிக்கிறார்கள். வேளாண்குடிகளுக்கு பூமி என்றால் என்ன பொருள் என நீங்கள் புரிந்துகொள்ளமுடியாது. புவிபிளப்பதென்பது அவர்களின் தெய்வம் வந்து நின்று வாய்திறப்பதுபோன்றதே" என்றான் விதுரன்.

சகுனி பொறுமையிழந்து கையமர்த்தினான். "இந்த மக்களா இங்கே அனைத்தையும் முடிவெடுப்பது? இங்கே குலமுறைகள் இல்லையா? முனிவர்கள் இல்லையா?" என்றான். "சௌபாலரே இங்குள்ள அரசு நூற்றெட்டு ஜனபதங்களின் தலைவர்களால் தேர்வுசெய்யப்படுவதாகவே இருந்தது" என்று யக்ஞசர்மர் சொன்னார். "மாமன்னர் யயாதியின் காலம் வரை ஒவ்வொரு வருடமும் மன்னர் குடிகளால் தேர்வுசெய்யப்பட்டுவந்தார். யயாதியின் செங்கோல்மீதான நம்பிக்கையே அவ்வழக்கத்தை அகற்றியது. ஆயினும் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பத்தாம் உதயத்தன்று குடித்தலைவர்கள் தங்கள் கோல்களுடன் கூடி மன்னரை வாழ்த்தி அவரை அரியணையமர்த்தும் சடங்கு நீடிக்கிறது. அவர்கள் மறுத்தார்களென்றால் இங்கே அரசமைய முடியாது."

"அவர்களை வெல்லும் படைபலத்துடன்தான் நான் இங்குவந்திருக்கிறேன்" என்று சகுனி கூவினான். "எதிர்க்குரல்களைக் கழுவேற்றிவிட்டு அரியணையில் என் தமக்கையை அமைக்கிறேன்..." பீஷ்மர் தணிந்த குரலில் "சௌபாலரே, அது நானிருக்கும் வரை நிகழாது. என் கையில் வில்லிருக்கும்வரை பேரரசியின் சொல்லே இங்கு அரசாளும்" என்றார். சகுனி திகைத்தபின் மேலும் உரத்த குரலில் "அப்படியென்றால் போர் நிகழட்டும். போரில் முடிவெடுப்போம், இந்த மண் எவருக்கென. ஒன்று இம்மண்ணை என் தமக்கைக்கென வென்றெடுக்கிறேன். இல்லை நானும் என் வீரர்களும் இங்கு மடிகிறோம்..." என்றான்.

"சௌபாலரே, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். வெளியே ஷத்ரிய மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நம் நிலத்தை வெல்லவிழைபவர்கள்தான். இங்கொரு அரியணைப்பூசலிருப்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. என் குடிமக்கள் அரியணையை விலக்குகிறார்கள் என அவர்கள் அறிந்துகொள்ளவும் நான் வாய்ப்பளிக்க மாட்டேன்" என்றாள் சத்யவதி. "நாம் எடுக்கும் முடிவு எதுவானாலும் இந்த அறைக்குள்தான்."

"முடிவு ஒன்றே... என் தமக்கை அரியணை ஏறவேண்டும். அவள் இந்த நாட்டுக்குள் கால்வைத்தது சக்ரவர்த்தினியாக. விழியிழந்த இளவரசனுக்கு பணிவிடைசெய்யும் தாதியாக அல்ல" என்றான் சகுனி. "நான் அரசுமுறையை கற்றது ஷத்ரியர்களிடம். மீனவப்பெண்கள் எனக்கு அதை கற்றுத்தரவேண்டியதில்லை" என்று அவன் சொல்லிமுடிப்பதற்குள் பீஷ்மர் அவனை ஓங்கி அறைந்தார். அவன் அந்த அறையின் விசையில் நிலத்தில் மல்லாந்துவிழ அந்த ஒலி அனைவரையும் திடுக்கிடச்செய்தது. "தேவவிரதா!" என கூவியபடி சத்யவதி எழுந்துவிட்டாள்.

சகுனி சினத்துடன் தன் வாளை உருவியபடி பாய்ந்தெழ பீஷ்மர் அந்த வாள்வீச்சை மிக இயல்பாக தவிர்த்து அவனை மீண்டும் அறைந்தார். வாள் உலோக ஒலியுடன் தெறிக்க அவன் சுவரில் மோதிச் சரிந்து அமர்ந்தபின் வலதுகண்ணையும் கன்னத்தையும் பொத்தியபடி தடுமாறி எழுந்தான். பீஷ்மர் "என் முன் எவரும் பேரரசியை இழிவுபடுத்த நான் அனுமதிப்பதில்லை. இதோ நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய். அதை எதிர்க்கிறாய் என்றால் என்னுடன் தனிப்போருக்கு வா" என்றார். "பிதாமகரே, உங்கள் சொல்லை தாதைவாக்கென நம்பியதா என் பிழை?" என்று கன்னத்தைப்பொத்தியபடி உடைந்த குரலில் சகுனி கூவினான்.

பீஷ்மர் ஒருகணம் திகைத்தபின் முன்னால் சென்று அவனை அள்ளிப்பற்றி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார். "மகனே, உன் அன்பின் வேகம் எனக்குத்தெரிகிறது. அத்தகைய உணர்ச்சிகளை என்னளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் இங்கில்லை. என் மூத்தமைந்தன் அரசேற்கமுடியாதென்று கேட்டபோது என் நெஞ்சில் எழுந்த அனல் உன் அனலைவிட அதிகம்... ஆனால் இன்று வேறுவழியில்லை. அஸ்தினபுரியின் நலனுக்காக நாம் நம் உணர்வுகளனைத்தையும் துறக்கவேண்டியிருக்கிறது. இது இறைவிளையாட்டு" என்றார். சகுனி அவரது விரிந்த மார்பின் வெம்மையை தன் உடலில் உணர்ந்தான். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை அறிந்தான். அவர் தொட்டதும் இறுக்கமாக எதிர்கொண்ட அவன் உடல் மெல்ல நெகிழ்ந்து அவரது பிடியில் அமைந்தது.

"நான் என் தமக்கையின் மணிமுடியைக் காணாமல் நாடு திரும்புவதில்லை என்று சூளுரைத்து வந்தவன் பிதாமகரே" என்று சகுனி தலைகுனிந்து சொன்னான். அச்சொற்களை அவனே கேட்டதும் அகமுருகி கண்ணீர் விட்டான். அதை மறைக்க இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டான். கைகளை மீறி கண்ணீர் வழிந்தது. நானா அழுகிறேன் என அவன் அகம் ஒன்று வியந்தது. ஆம், நானேதான் என அவன் அகம் ஒன்று திகைத்தது. அவன் தோள்கள் குறுகி மெல்ல அசைந்தன. அழுகையை அடக்கி மீளப்போகும்போது நீலத்துணியால் விழிகள் மூடிய காந்தாரியின் முகத்தை அவன் கண்டான். மீண்டும் ஒருவிம்மலுடன் கண்ணீர் பெருகியது.

"அந்த வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும் மகனே. இங்கே நீ பதினெட்டு வருடம் காத்திரு. வெறும் பதினெட்டே வருடங்கள். உன் தமக்கையின் வயிற்றில்பிறந்த மைந்தன் முடிசூடியதும் நீ நாடு திரும்பலாம். இது என் வாக்கு" என்றார் பீஷ்மர். சகுனி தன் அகத்தை இறுக்கும்பொருட்டு உடலை இறுக்கிக்கொண்டான். அது அவன் கண்ணீரை நிறுத்தியது. சால்வையால் முகத்தைத் துடைத்தபின் தலைகுனிந்து அசையாமல் நின்றான். "சௌபாலரே, இந்த நாட்டில் என் மைந்தனின் வாக்கு என்பது ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவது. அது அஸ்தினபுரியின் தெய்வங்களின் வாக்குறுதி" என்றாள் சத்யவதி.

"காந்தார இளவரசே, மூத்த இளவரசரின் அரசு எங்கும் செல்லவில்லை. அது கடனாக இளையவருக்கு அளிக்கப்படுகிறது. பதினெட்டாண்டுகாலத்துக்கு மட்டும். மூத்தவரின் முதல்மகன் அதற்கு இயல்பாகவே உரிமையாளனாகிறான். அவனுடைய அன்னையாக பேரரசியின் சிம்மாசனத்தில் தங்கள் தமக்கை அமர்வார்" என்றான் விதுரன். "தாங்கள் இங்கு வந்தது தங்கள் தமக்கையை அரியணை அமர்த்துவதற்காக மட்டும் அல்ல. அவரை பாரதவர்ஷத்தின் பேரரசியாக ஆக்குவதற்காக அல்லவா? களம்நின்று போர்புரிய என் இரு தமையன்களாலும் இயலாது. உங்கள் தமக்கை வயிற்றில் பிறக்கும் பெருவீரனை உங்கள் கரங்களில் அளிக்கிறோம். அவனை நீங்கள் பயிற்றுவித்து உங்களுடையவனாக ஆக்குங்கள். உங்கள் இலக்குகளை அவனுக்குப் புகட்டுங்கள். இந்த நாட்டின் படைகளையும் கருவூலத்தையும் நீங்கள் கனவுகாணும் பெரும்போருக்காக ஆயத்தப்படுத்துங்கள். பதினெட்டாண்டுகளில் அஸ்வமேதத்துக்கான குதிரை என இந்நாடு உங்கள் முன் வந்து நிற்கும்..."

"ஆம், இளவரசே. நிமித்திகரின் வாக்கும் அதுவே. பாரதவர்ஷத்தை வெற்றிகொள்ளும் சக்ரவர்த்தி பிறக்கவிருப்பது உங்கள் தமக்கையின் கருவில்தான்" என்றார் யக்ஞசர்மர். "இப்போது நிகழ்வனவற்றுக்கெல்லாம் அவனுக்காகவே இவ்வரியணை காத்திருக்கிறது என்றே பொருள். இளவரசர் பாண்டு அதிலமர்ந்து ஆளமுடியாது. இப்போது அவரை அரியணையில் அமர்த்துவது நம் முன் கூடியிருக்கும் இந்தக்கூட்டத்தை நிறைவுசெய்வதற்காக மட்டுமே. ஹஸ்தியின் அரியணையிலமரும் ஆற்றல் அவருக்கில்லை என்பதை நாடே அறியும்."

சகுனி பற்களை இறுகக் கடித்துக்கொண்டு குனிந்தே நின்றான். அவனுடைய ஒரு கால் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. பொருளற்ற உதிரிக்காட்சிகள் அவன் அகம் வழியாகக் கடந்துசென்றன. முதுநாகனின் இமையாவிழிகள். நெளியும் கரிய சவுக்கின் நாக்கு. அனல்காற்றுகள் கடந்துசெல்லும் செம்பாலை. மென்மணல் வெளி. பொருளறியா இரட்டை வரி போல அதில் பதிந்து செல்லும் பசித்த ஓநாயின் பாதத்தடம். அதன் அனலெரியும் விழிகள். பசியேயான வாய்க்குள் தழலெனத் தவிக்கும் நாக்கு.

சகுனி பெருமூச்சுவிட்டான். குருதி கலங்கிச்சிவந்த ஒற்றைவிழியுடன் ஏறிட்டு நோக்கி "பிதாமகரே, நான் வாங்கிய முதல் தண்டனை உங்கள் கைகளால் என்பது எனக்குப் பெருமையே" என்றான். "இந்த அருளுக்கு பதிலாக நான் செய்யவிருப்பது ஒன்றே. உங்களுக்குப்பின் நான் வாழ்வேன் என்றால் ஒவ்வொரு முறை மூதாதையருக்கு நீர்ப்பலி கொடுக்கையிலும் தந்தையென உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்வேன்." பீஷ்மர் கைநீட்டி அவன் தலையைத் தொட்டு "ஆம், இனி என் மைந்தர்கள் என நான் சொல்லும் ஒவ்வொருமுறையும் அதில் உன் பெயருமிருக்கும்" என்றார்.

சகுனி தலைநிமிராமல் அப்படியே சிலகணங்கள் நின்றான். அங்கிருந்து ஓடி மீண்டும் காய்ந்து அனல்பரவி திசைதொட்டுக் கிடக்கும் வெம்பாலையை அடைந்துவிடவேண்டுமென அவன் அகம் எழுந்தது. ஏதோ சொல்லவருவதுபோல மனம் முட்டியதும் அது ஒரு சொல்லல்ல என்று உணர்ந்து ஒரு கணம் தவித்தபின் குனிந்து தரையில் கிடந்த தன் வாளை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

பீஷ்மர் தளர்ந்து தன் பீடத்தில் தலைகுனிந்து அமர்ந்தார். சத்யவதி விதுரனைப் பார்த்தபின்னர் "தேவவிரதா, இத்தருணத்தில் நாங்களனைவரும் உன்னை நம்பியிருக்கிறோம்" என்றாள். பீஷ்மர் தலையை அசைத்தபடி "இல்லை... இனிமேலும் இப்படி வீணனாக விதியின் முன் தருக்கி நிற்க என்னால் இயலாது. கங்கையின் திசை மாற்ற கங்கைமீன் முயல்வதுபோன்ற அறிவின்மை இது என எப்போதும் அறிவேன். ஆயினும் ஒவ்வொரு தருணத்திலும் என் மேல் பிறர் சுமத்தும் பொறுப்பை ஏற்று அதையே செய்யமுயல்கிறேன்."

"தேவவிரதா, ஒரு ஷத்ரியனின் கடமையை நீ என்றுமே செய்துகொண்டிருக்கிறாய். அதை எண்ணி வருந்துவதற்கேதுமில்லை. மரணமும் மரணத்துக்கப்பாலுள்ள பேரிழப்புகளும்கூட ஷத்ரியனின் பொறுப்புகளே" என்றாள் சத்யவதி. "உன்னை பிறர் இயக்கவில்லை. உன்னுள் உறையும் ஷாத்ரகுணமே இயக்குகிறது. அது இல்லையேல் நீ இல்லை.''

"ஆம், பிறரல்ல, நானே முழுமுதல் குற்றவாளி" என்றார் பீஷ்மர். "என் ஆணவம். நானே முடிவெடுக்கவேண்டும் என ஒருவர் சொல்லும்போதே நான் என்னை முடிவெடுப்பவனாக நிறுத்திக்கொள்கிறேன். நான் காப்பவன் என்றும் வழிகாட்டுபவன் என்றும் என்னை கருதிக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பெருவல்லமைகள் என்னை கூழாங்கல்லாகத் தூக்கிவிளையாடுகின்றன. அதன்பின்னரும் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி இந்த கீழ்வேடத்தை நான் அணியப்போவதில்லை."’

சத்யவதி "தேவவிரதா, இனிமேல்தான் நாம் மிகப்பெரிய பணியைச் செய்யவேண்டியிருக்கிறது. நாம் திருதராஷ்டிரனிடம் இச்செய்தியைச் சொல்லவேண்டும்" என்றாள். "உன் சொல்லுக்கு மட்டுமே அவன் கட்டுப்படுவான்." பீஷ்மர் தலையை அசைத்து "இல்லை பேரரசி, அருள்கூர்ந்து என்னை நீங்கள் அதற்காக செலுத்தலாகாது. நான் அதைசெய்யப்போவதில்லை" என்றார். "அவனை என் மார்புறத்தழுவி அவன் கூந்தல் வாசத்தை உணர்ந்து, நாவில் ஆன்மா வந்தமர நான் சொன்ன வாக்கு அது."

"தேவவிரதா, இத்தருணத்தில் இதைச்செய்ய உன்னைத்தவிர எவராலும் இயலாது. திருதராஷ்டிரன் எப்படி இருக்கிறான் என்பதை நான் அறிந்துகொண்டுதான் இருந்தேன். ஒவ்வொரு கணமும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். மணிமுடி சூடவே பிறந்தவன் போலிருந்தான். அவனிடம் இதைச் சொல்வது என்பது..." என்றாள். பீஷ்மர் இடைமறித்து "பழங்குலக் கதைகளில் பெற்ற மைந்தன் நெஞ்சில் வாள்பாய்ச்சி பலிகொடுக்கச் சொல்லி கோரிய காட்டுதெய்வங்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது அன்னையே. நீங்கள் அதை என்னிடம் கோரலாகாது" என்றார்.

"இன்று நம் முன் வேறு வழி என்ன இருக்கிறது? தேவவிரதா, இந்த நாட்டுக்காக உன் வாழ்வனைத்தையும் இழந்தவன் நீ. பழிசுமந்தவன். புறக்கணிக்கப்பட்டவன். இது நீ நீரூற்றி வளர்த்த மரம். உன் கண்ணெதிரே இது சாய்வதை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறாயா?" "ஆம். அதுவே இறையாணை எனில் அவ்வண்ணமே நிகழட்டும். இதை நான் செய்யப்போவதில்லை. என் காலடியோசை கேட்டதும் நான் அவனை மணிமுடி சூட அழைத்துச்செல்லவிருப்பதாக எண்ணி அவன் புன்னகையுடன் எழுவான். அந்த முகத்தை நோக்கி நான் இதைச் சொல்வேன் என்றால்..."

"நீ செய்தாகவேண்டும்... இது என்..." என உரத்த குரலில் சத்யவதி சொல்ல அதே கணத்தில் பீஷ்மர் எழுந்து தன் வாளை உருவினார். சத்யவதி திகைத்து வாய்திறந்து நிற்க விதுரன் "பிதாமகரே, நான் செய்கிறேன்" என்றான். பீஷ்மர் உருவிய வாளுடன் திகைத்து நோக்கினார். "நான் தமையனிடம் சொல்கிறேன் பிதாமகரே... என்னிடம் விட்டுவிடுங்கள்" என்று விதுரன் மீண்டும் சொன்னான்.

"நீ அதை அவனிடம் சொல்லும்போது பிதாமகர் என்ன சொன்னார் என்றுதான் அவன் கேட்பான். அதற்கு நீ என்ன பதில் சொன்னாலும் அவன் நெஞ்சில் நான் இறப்பேன். அதற்கு முன் நான் இறந்துவிட்டிருந்தாலொழிய அந்தச் சாவிலிருந்து நான் தப்பவியலாது" என்றார் பீஷ்மர். "பிதாமகரே, அவ்வண்ணம் நிகழாமல் அதை முடிப்பேன். என் சொல்மேல் ஆணை" என்றான் விதுரன். "என் முன்னால் நின்று தாங்கள் இறப்பைப்பற்றிச் சொல்லலாமா? தந்தைப்பழி ஏற்றபின் நாங்கள் இங்கே உயிர்வாழ்வோமா?" என்றபோது அவன் குரல் உடைந்தது.

அவனை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் பீஷ்மர் மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டார். விதுரன் கண்களை துடைத்தபின் "பேரரசி, தாங்களும் பிதாமகரும் அவைமண்டபம் செல்லுங்கள். மணிமுடிசூட்டும் நிகழ்வுகள் நடக்கட்டும்" என்றான்.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 5 ]

விதுரன் வெளியே சென்றபோது யக்ஞசர்மர் அவன் பின்னால் வந்தார். "சூதரே, நீங்கள் ஆடவிருப்பது ஆபத்தான விளையாட்டு" என்றார். "அரசரை நான் ஒருமாதமாக ஒவ்வொருநாளும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் இருக்கும் நிலை காதல்கொண்டவன்போல. பித்தேறியவன் போல. மதம் கொண்டபின் யானை எவர் சொல்லையும் கேட்பதில்லை..."

விதுரன் தலையசைத்து "ஆம், நான் அறிவேன். யானை மதமிளகுவது. குரூரம் கொண்டது. அக்குரூரத்தை எளிய விளையாட்டாகச் செய்யும் வல்லமையும் கொண்டது. ஆனால் விலங்குகளில் யானைக்குநிகராக வழிபடப்படுவது வேறில்லை அமைச்சரே" என்றான்.

யக்ஞசர்மர் "தாங்கள் முதலில் பேசவேண்டியது காந்தார இளவரசியிடம். அவரால் மூத்தவரிடம் உரையாடமுடியலாம்" என்றார். "இல்லை, நான் அதைப்பற்றி முதலில் பேசவிருப்பது என் தமையனிடம்தான். வேறு எவரையும்விட இப்புவியில் எனக்கு அண்மையானவர் அவரே" என்றான் விதுரன். யக்ஞசர்மர் திகைத்து நோக்கி நிற்க புன்னகைசெய்தபின் அவன் அணியறையின் மறுபக்கத்துக்குச் சென்றான்.

வெளியே மகாமண்டபத்தில் வைதிகர் வேதமோதும் ஒலி கேட்கத்தொடங்கியது. அவையின் ஓசைகள் மெல்லமெல்ல அடங்கி அனைவரும் வேதமந்திரங்களை கேட்கத் தொடங்கியதை உணரமுடிந்தது. இன்னமும்கூட என்ன இக்கட்டு என்பது அவையினருக்குப் புரிந்திருக்காது, அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் அது முடிந்துவிடாதென அவர்கள் அறிவார்கள். சகுனி உள்ளே வந்ததுமே அவர்களுக்கு இக்கட்டு எங்குள்ளது என புரிந்திருக்கும். அவர்களை இப்போது பார்த்தால் ஒவ்வொரு விழியிலும் எரியும் ஆவலைக் காணமுடியும்.

விதுரன் கசப்பான புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். சாமானியர் தங்களுக்கே பேரழிவைக் கொண்டுவருவதானாலும்கூட தீவிரமாக ஏதாவது நிகழவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளியது, மீளமீள ஒன்றே நிகழ்வது, சலிப்பையே மாறாஉணர்வாகக் கொண்டு முன்னகர்வது. அவர்கள் வரலாறற்றவர்கள். அதை அவர்கள் அறிவார்கள். ஆகவே அவர்களின் அகம் கூவுகிறது, இடியட்டும், நொறுங்கட்டும், பற்றி எரியட்டும், புழுதியாகட்டும், குருதிஓடட்டும்... அது அவர்களின் இல்லங்களாக இருக்கலாம். அவர்களின் கனவுகளாக இருக்கலாம். அவர்களின் உடற்குருதியாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று நிகழவேண்டும். மகத்தானதாக. பயங்கரமானதாக. வரலாற்றில் நீடிப்பதாக... அந்தத்தருணத்தில் அவர்கள் இருந்தாகவேண்டும், அவ்வளவுதான்.

சாமானியர்களின் உள்ளிருந்து இயக்கும் அந்தக் கொடுந்தெய்வம்தான் வரலாற்றை சமைத்துக்கொண்டிருக்கிறதா என்ன? வாளுடன் களம்புகும் ஷத்ரியனும் நூலுடன் எழும் அறிஞனும் யாழுடன் அமரும் சூதனும் அந்தச் சாமானியனுக்கான நாடகமேடையின் வெற்றுநடிகர்கள் மட்டும்தானா? இங்கே நிகழ்வதெல்லாம் யாருமற்றவனின் அகத்தை நிறைத்திருக்கும் அந்தக் கொலைப்பெருந்தெய்வத்துக்கான பலிச்சடங்குகளா என்ன?

அளவைநெறியற்ற எண்ணங்கள். இத்தருணத்தில் ஒருவனை வல்லமையற்றவனாக, குழப்பங்கள் மிக்கவனாக ஆக்குவதே அவைதான். இங்கே ஒன்றைமட்டும் நோக்குபவனே வெல்கிறான். அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான். மிதித்து ஏறிச்செல்லும் அடுத்த படியை மட்டுமே பார்ப்பவன்தான் மலையுச்சியை அடைகிறான். சிகரங்களை நோக்குபவனின் திகைப்பு அவனுக்கில்லை. அவனை சிகரங்கள் புன்னகையுடன் குனிந்துநோக்கி தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கின்றன.

அறைக்குள் திருதராஷ்டிரன் நிலையழிந்து அமர்ந்திருப்பதை விதுரன் கண்டான். அவனுக்கு நிலைமை புரிந்துவிட்டதென்று உணர்ந்துகொண்டான். அவன் கண்களைக் காட்டியதும் சஞ்சயன் தலைவணங்கி வெளியே சென்று வாயிலுக்கு அப்பால் நின்றுகொண்டான். அவனுடைய அந்த அகக்கூர்மையை அத்தருணத்திலும் விதுரன் வியந்துகொண்டான். இளமையிலேயே அனைத்தையும் நோக்கக்கூடியவனாக இருக்கிறான். அதனாலேயே தன் காலடியில் உள்ள படியை தவறவிடுகிறானா என்ன? அவனுக்கு தொலைதூரநோக்குகள் மட்டுமே வசப்படுமா? காலதூரங்களைத் தாண்டி நோக்கக்கூடியவனாக, அண்மைச்சூழலை அறியாத அயலவனாகவே அவன் எப்போதுமிருப்பான் போலும்!

அவ்வாறு விலகியலைந்த எண்ணங்கள் அத்தருணத்தின் தீவிரத்தை தவிர்ப்பதற்காக தன் அகம்போடும் நாடகங்கள் என விதுரன் எண்ணினான். ஓர் உச்சதருணத்தில் எப்போதும் அகம் சிறியவற்றில் சிதறிப்பரவுகிறது. ஆனால் அந்த அகநாடகங்களினூடாக அது உண்மையிலேயே தன்னை சமநிலையில் மீட்டு வைத்துக்கொண்டது. உணர்வுகளை வென்று, உடலை அமைதியாக்கி, முகத்தை இயல்பாக்கி அவனைக் கொண்டுசென்றது. "அரசே, மன்னியுங்கள், அலுவல்கள் ஏராளம்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அவனை நோக்கி செவி கூர்ந்து "நீ என்னிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. என்ன நிகழ்கிறது? யார் என் மணிமுடிசூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தது?" என்றான்.

விதுரன் அவன் அருகே அமர்ந்துகொண்டு "அரசே, இன்றுகாலை வடபுலத்திலிருந்து ஆயர்குலத்து குடிமூத்தார் சிலர் இங்கே வந்திருந்தார்கள். அவர்களின் நிலத்தில் புவிபிளந்து அனலெழுந்திருக்கிறது" என்றான். திருதராஷ்டிரன் கூர்ந்து செவியை முன்னால் நீட்டி "அதனாலென்ன?" என்றான். தீய செய்தியை முறித்து முறித்துக் கொடுப்பதன் வழியாக அதன் நேரடியான விசையை பெரிதும் குறைத்துவிடமுடியுமென விதுரன் கற்றிருந்தான். உடைந்த செய்தித்துண்டுகளை கற்பனையால் கோக்கமுயல்வதன் வழியாகவே எதிர்த்தரப்பு தன் சினத்தை இழந்து சமநிலை நோக்கி வரத்தொடங்கியிருக்கும்.

"அவர்கள் ஆயர்கள். ஆயர்களுக்கும் வேளிர்களுக்கும் நிலம் இறைவடிவேயாகும்" என்றான் விதுரன். "ஆம், அறிவேன்" என்றான் திருதராஷ்டிரன். "அரசே, நிலம்பிளப்பதென்பதை மாபெரும் அமங்கலமாகவே அவர்கள் எண்ணுகிறார்கள்." திருதராஷ்டிரன் சொல்லின்றி மூச்செழுந்து நெஞ்சு விரிந்தமைய கேட்டிருந்தான். "முடிசூட்டுவிழாவன்று இத்தகைய அமங்கலம் நிகழ்ந்ததை அவர்கள் பெருங்குறையாக எண்ணுகிறார்கள்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?" என்றான். "ஆம் அரசே, வந்திருக்கிறார்கள்." திருதராஷ்டிரன் தலையைச் சுழற்றி கீழ்த்தாடையை நீட்டி பெரிய பற்களைக் கடித்தபடி "எப்போது?" என்றான்.

"காலையிலேயே வந்துவிட்டார்கள். அவர்களை நான் உடனே சிறையிட்டு அச்செய்தி எவரையும் எட்டாமல் பார்த்துக்கொண்டேன்" என்றான் விதுரன். "அப்படியென்றால் என்ன நிகழ்கிறது?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். "ஆனால் அவர்கள் இங்கு வருவதற்குள்ளேயே தங்கள் குலக்குழுவினரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முடிசூட்டுவிழவுக்கென சிலநாட்கள் முன்னரே இங்கு வந்து தங்கியிருந்திருக்கிறார்கள்."

விதுரன் எதிர்பார்த்ததுபோலவே திருதராஷ்டிரன் அச்செய்தித்துண்டுகளை மெதுவாக இணைத்து இணைத்து முழுமைசெய்துகொண்டான். அவ்வாறு முழுதாகப்புரிந்துகொண்டதுமே அவன் பதற்றம் விலகி அகம் எளிதாகியது. அது அவன் உடலசைவுகளில் தெரிந்தது. பெரிய கைகளை மடிமீது கோத்துக்கொண்டு "ஆகவே என் முடிசூடலை எதிர்க்கிறார்கள், இல்லையா?" என்றான்.

"ஆம் அரசே, அவர்கள் தங்களை ஏற்கவியலாதென்று சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கோல்களை உங்கள் முன் தாழ்த்தி வணங்கினாலொழிய தாங்கள் முடிசூடமுடியாது." திருதராஷ்டிரன் பற்களைக் கடித்தபடி "விதுரா, அவர்களில் ஒருவன் மட்டும் கோல்தாழ்த்தவில்லை என்றால் என்ன செய்யவேண்டுமென்கிறது நூல்நெறி?" என்றான். "அவன் குலத்தை தாங்கள் வெல்லவேண்டும். அவனைக் கொன்று அக்கோலை பிறிதொருவனிடம் அளிக்கவேண்டும்."

தன் கைகளை படீரென ஓங்கியறைந்துகொண்டு திருதராஷ்டிரன் எழுந்தான். "என்னை எதிர்க்கும் அனைவரையும் நான் கொல்கிறேன். அது நூல்நெறிதானே?" என்றான். விதுரன் அவன் முகத்தில் தெரிந்த வெறியை அச்சத்துடன் நோக்கி அவனையறியாமலேயே சற்று பின்னகர்ந்தான். "அனைவரையும் கொல்கிறேன். அந்தக்குலங்களை கருவறுக்கிறேன். குருதிமீது நடந்துசென்று அரியணையில் அமர்கிறேன். அது ஷத்ரியர்களின் வழியல்ல என்றால் நான் அவுணன், அரக்கன், அவ்வளவுதானே? ஆகிறேன்..." என்றான் திருதராஷ்டிரன்.

"அரசே, தங்களை எதிர்ப்பவர்கள் அனைத்து ஜனபதங்களும்தான். அவர்கள் அனைவரையும் தாங்கள் அழிக்கமுடியாது. ஏனென்றால் நமது படைகளே அவர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன. மேலும் அவர்களுடன் சேர்ந்து வைதிகர்களும் தங்களை எதிர்க்கிறார்கள்" என்றான் விதுரன். "அவர்கள் சிறிய இளவரசரை அரியணை அமர்த்தும்படி சொல்கிறார்கள்."

திருதராஷ்டிரன் திகைத்து பின் எழுந்துவிட்டான். "அவனையா? என் அரியணையிலா?" பின்பு உரக்கச்சிரித்து "அந்த மூடனையா? அவன் கையில் நாட்டையா கொடுக்க நினைக்கிறார்கள்? விலைமதிப்புள்ள விளையாட்டுப்பாவையைக்கூட அவனை நம்பி கொடுக்கமுடியாது." விதுரன் "ஆம் அரசே, அவர் விழியுடையவர் என்கிறார்கள். தங்களைப்போல அமங்கலர் அல்ல என்கிறார்கள். ஆகவே அவரை தெய்வங்கள் ஏற்கும். நிலமகள் ஒப்புவாள் என்கிறார்கள்" என்றான்.

திருதராஷ்டிரன் பாம்புசீறுவதுபோல மூச்சுவிட்டான். "இதற்குப்பின்னால் சூழ்ச்சி ஏதும் உள்ளதா?" என்றான். "இல்லை அரசே, அவ்வண்ணம் தோன்றவில்லை. சூழ்ச்சியால் எவரும் நிலப்பிளவை உருவாக்கிவிடமுடியாதல்லவா?" விதுரன் சொன்னான். "விதுரா, எனக்கு ஏதும் புரியவில்லை. நான் என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்? காந்தாரத்துப்படைகளைக்கொண்டு அஸ்தினபுரியை கைப்பற்றலாமா?"

விதுரன் "அரசே இந்நகரை மட்டும் கைப்பற்றி நாம் என்ன செய்யப்போகிறோம்? அயல்நாட்டுப்படைகளைக்கொண்டு நகரைக் கைப்பற்றினால் நம் மக்கள் நம்மை புறக்கணித்து நம் எதிரிகளிடம் சேர்ந்துகொள்வார்களல்லவா?" என்றான். "நம் எதிரிகள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள் அரசே. வெளியே தங்கள் முடிசூட்டுவிழாவுக்கு வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் குருதியைக்குடிக்க நினைக்கும் ஓநாய்கள். காந்தார இளவரசியை தாங்கள் அடைந்ததை எண்ணி துயில்நீத்தவர்கள். நம் அரசு சற்றேனும் வலுவிழக்குமெனில் நாம் அவர்களுக்கு இரையாவோம். ஒரு ஜனபதத்தின் அழிவைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாதென்பதே உண்மை."

திருதராஷ்டிரனின் சிந்தையின் வழிகளெல்லாம் அடைபட்டன. அவன் தலையைச் சுழற்றினான். தன் தொடைமேல் கைகளை அடித்துக்கொண்டான். பற்களைக் கடித்துக்கொண்டு உறுமினான். எண்ணியிருக்காமல் பெருங்குரலில் "பிதாமகர் என்ன சொல்கிறார்? அவரை இங்கே வரச்சொல்" என்று கூவினான். உரக்க "நான் அவரை இப்போதே பார்க்கவேண்டும்" என்றான். விதுரன் "அரசே, பொறுங்கள்" என்றான்.

கைகளைத்தூக்கியபடி திருதராஷ்டிரன் "அவரை வரச்சொல்... உடனே வரச்சொல்" என்றான். "அரசே, பிதாமகருக்கு இந்த இக்கட்டு இன்னும் தெரியாது. அவரும் பேரரசியும் அவையில் இருக்கிறார்கள். இன்னமும்கூட அங்கிருக்கும் அயல்நாட்டரசர்களுக்கும் பிறருக்கும் ஏதும் தெரியாது. தெரியாமலிருப்பதே நமக்கு நல்லது" என்றான் விதுரன்.

"பிதாமகர் வந்து எனக்கு பதில் சொல்லட்டும். இந்த அரசு என்னுடையதென்று சொன்னவர் அவர். என்னை பாரதவர்ஷத்தின் தலைவனாக்குகிறேன் என்று அவர் என்னிடம் சொன்னார்..." என்று திருதராஷ்டிரன் கூவினான். விதுரன் "அரசே, இன்னும்கூட எதுவும் நம் பிடியிலிருந்து விலகவில்லை. குடித்தலைவர்கள் இளையமன்னரை மணிமுடியேற்கவேண்டுமென்று சொல்கிறார்கள். அவரிடம் அவர்கள் சென்று அரியணை அமரும்படி கோரியிருக்கிறார்கள்" என்றான்.

"அவன் என்ன சொன்னான்?" என்று திருதராஷ்டிரன் தாடையை முன்னால் நீட்டி பற்களைக் கடித்தபடி கேட்டான். "முடிவெடுக்கவேண்டியவர் தாங்கள் என்றார் இளையவர். தங்களிடம் கோரும்படி சொன்னார்." திருதராஷ்டிரன் தன் கைகளை மேலே தூக்கினான். புதிய எண்ணமொன்று அகத்தில் எழும்போது அவன் காட்டும் அசைவு அது என விதுரன் அறிவான். "அவன் மறுக்கவில்லை இல்லையா? நான் என் தமையனுக்கு அளித்துவிட்ட நாடு இது என்று அவன் சொல்லவில்லை இல்லையா?"

"அரசே, கடமை வந்து அழைக்கும்போது எந்த ஷத்ரியரும் அவ்வகைப் பேச்சுக்களை பேசமாட்டார். அரசகுலமென்பது நாட்டை ஆள்வதற்காகவே. நாடென்பது மக்கள். மக்களுக்கு எது நலம் பயக்குமோ அதைச்செய்யவே ஷத்ரியன் கடன்பட்டிருக்கிறான். அவர் தங்களுக்கு அளித்தது குலமுறை அவருக்களித்த மண்ணுரிமையை. இன்று மக்கள்மன்று அவருக்களிக்கும் மண்ணுரிமை வேறு. அது முழுமையானது. அதை ஏற்கவும் மறுக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதை ஏற்று அம்மக்களை காப்பதே ஷத்ரியனின் கடமையாகும்" என்று விதுரன் சொன்னான்.

"அப்படியென்றால் அவன் மண்மீது ஆசைகொண்டிருக்கிறான். இந்த மணிமுடியை விரும்புகிறான்..." என்றான் திருதராஷ்டிரன். "சொல், அதுதானே உண்மை?" விதுரன் பேச்சை மாற்றி "ஆனால் அவர் உங்கள்மீது பேரன்பு கொண்டவர். உங்களை மீறி எதையும் அவர் செய்யவிரும்பவில்லை. ஆகவே அவர் ஒருபோதும் இந்நாட்டை ஆளப்போவதில்லை" என்றான். "ஆகவேதான் நான் ஒரு வழியை சிந்தித்தேன். அதை தங்களிடம் சொல்லவே இங்கே வந்தேன்."

திருதராஷ்டிரன் தலையசைத்தான். "இளவரசர் பாண்டுவிடம் தங்களை வந்து சந்தித்து ஆசிபெறும்படிச் சொல்கிறேன். தாங்கள் அவர் நாடாள்வதற்கான ஒப்புதலை வழங்குவீர்கள் என்று அவர் எண்ணுவார். அதற்காகவே வந்து தங்கள் தாள்பணிவார். தாங்கள் அந்த ஒப்புதலை அளிக்கவேண்டியதில்லை. தாங்கள் ஒப்பாமல் ஆட்சியில் அமர்வதில்லை என்று அவர் முன்னரே சொல்லிவிட்டமையால் அவருக்கு வேறுவழியில்லை."

திருதராஷ்டிரனின் தோள்கள் தசைதளர்ந்து தொய்ந்தன. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து தன் கைகளை மடித்து அதன்மேல் தலையை வைத்துக்கொண்டான். "அவர் இங்கே வரும்போது நீங்கள் உங்கள் எண்ணத்தை அவரிடம் தெரிவியுங்கள்." திருதராஷ்டிரன் நிமிர்ந்து உருளும் செஞ்சதைவிழிகளால் பார்த்தான். "அவருக்கு உங்கள் ஒப்புதல் இல்லை என்றும் நீங்களே அரியணை அமரவிருப்பதாகவும் சொல்லுங்கள். அத்துடன் அவருக்கு அஸ்தினபுரியின் குடித்தலைவர்கள் அளித்த மண்ணுரிமையையும் உங்களுக்கே அளித்துவிடும்படி கோருங்கள். அது ஒன்றே இப்போது நம் முன் உள்ள வழி."

திருதராஷ்டிரன் அதை புரிந்துகொள்ளாதவன் போல தலையை அசைத்தான். "அரசே, இளவரசர் அஸ்தினபுரியின் குடிகள் அளித்த மண்ணுரிமையையும் தங்களுக்கே அளித்துவிட்டால் குடித்தலைவர்களுக்கு வேறுவழியே இல்லை. அவர்கள் உங்களை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அரியணையை அப்படியே விட்டுவைக்கலாம். தாங்கள் இரு வேள்விகள் செய்து இப்பழியை நீக்கியபின் மீண்டும் அரியணை ஏறமுடியும்" என்றான் விதுரன்.

திருதராஷ்டிரன் தலைகுனிந்து அமர்ந்திருக்க விதுரன் எழுந்து வெளியே சென்றான். வாயிலைத் திறந்து வெளியே நின்றிருந்த சஞ்சயனிடம் "இளவரசர் பாண்டுவை அரசர் அழைக்கிறார் என்று சொல்லி அழைத்துவா" என்று ஆணையிட்டான். திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தான். கருங்கல்லில் வடித்த சிலைபோல அவன் அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். அவன் நகைகளில் மின்னிய நவமணிகள் அவன் உடலெங்கும் விழிகள் முளைத்து ஒளிவிடுவதைப்போலத் தோன்றின.

அப்பால் வேதநாதம் எழுந்துகொண்டிருந்தது. அக்னியை, இந்திரனை, வருணனை, சோமனை, மருத்துக்களை அசுவினிதேவர்களை அழைத்து அவையிலமரச் செய்கிறார்கள். மண்ணில் மானுடராடும் சிறுவிளையாட்டுக்கு தெய்வங்களின் ஒப்புதல். அவை சிறுவிளையாட்டுகளென அவர்கள் அறிந்திருப்பதனால்தான் தெய்வங்களை அழைக்கிறார்கள்.

‘மரத்தில் கூட்டில் குஞ்சுகளை வைத்தபின்

உவகையுடன் அதைச்சுற்றி பறக்கும் இணைப்பறவைகளைப்போல

எங்களைக் காப்பவர்களே, அசுவினிதேவர்களே,

உங்களை வாழ்த்துகிறேன்’

விதுரன் நிலைகொள்ளாமல் மறுபக்க வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான். காலம் தேங்கி அசைவிழந்து நிற்க அதில் எண்ணங்கள் வட்டவட்டமான அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டிருந்தன.

‘இந்திரனே எங்கள் அவியை எப்போது ஏற்றுக்கொள்வாய்?

எந்த வேள்வியால் நீ மானிடரை உனக்கு ஒப்பாகச்செய்வாய்?’

விண்ணகத் தெய்வங்கள் குனிந்து நோக்கி புன்னகைக்கின்றன போலும். எளியவனாக இருப்பது எத்தனை பாதுகாப்பானது. அருளுக்குப் பாத்திரமாக இருப்பதற்கான பெருவாய்ப்பு அல்லவா அது!

பாண்டுவும் சஞ்சயனும் வருவதை விதுரன் கண்டான். பாண்டு அருகே நெருங்கி "தமையனார் என்னை அழைத்ததாகச் சொன்னான்" என்றான். "இளவரசே, தாங்கள் மூத்தவரை வணங்கி அருள் பெறவேண்டும்" என்றான் விதுரன். "ஏன்? அவர் முடிசூடியபின்னர்தானே அந்நிகழ்வு?" "ஆம், அது அஸ்தினபுரியின் அரசருக்கு நீங்கள் தலைவணங்குவது. இது தங்கள் தமையனை வணங்குவது. இன்னும் சற்று நேரத்தில் அவர் மன்னராகிவிடுவார். பிறகெப்போதும் உங்கள் தமையன் அல்ல." பாண்டு புன்னகை செய்தபடி "ஆம், அதன்பின் அவரது உணவு அமுதமாகவும் ஆடை பீதாம்பரமாகவும் ஆகிவிடுமென சூதர்கள் பாடினர்" என்றான்.

"வாருங்கள்" என விதுரன் உள்ளே சென்றான். பாண்டு அவனுடன் வந்தான். அவனுடைய காலடியோசையைக் கேட்ட திருதராஷ்டிரனின் உடலில் கல் விழுந்த குளமென அலைகளெழுந்தன. "இளையவனா?" என்றான். "ஆம் மூத்தவரே, தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்" என்றான் பாண்டு. "இளையவரே, அருகே சென்று அவர் பாதங்களைப் பணியுங்கள்" என்றான் விதுரன். "அவர் தங்களிடம் சொல்லவேண்டிய சில உள்ளது. அவற்றையும் கேளுங்கள்."

பாண்டு முன்னால் சென்று மண்டியிட்டு திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டான். திருதராஷ்டிரனின் பெரிய கைகள் இருபக்கமும் செயலிழந்தவை போலத் தொங்கின. பின்பு அவன் பாண்டுவை இருகைகளாலும் அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். தலையைத் திருப்பியபடி "விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்" என்றான்.

பாண்டு திகைத்து திரும்பி விதுரனை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுக்க விதுரன் "அரசே, தங்கள் பெருங்கருணை என்றும் அவருடனிருக்கட்டும்" என்றான். தன் பரந்த பெரிய கைகளை பாண்டுவின் தலைமேல் வைத்து திருதராஷ்டிரன் சொன்னான் "நான் அஸ்தினபுரியின் அரசாட்சியை, ஹஸ்தியின் அரியணையை, குருவின் செங்கோலை உனக்கு அளிக்கிறேன். உன் புகழ்விளங்குவதாக. உன் குலம் நீள்வதாக. நீ விழைவதெல்லாம் கைகூடுவதாக. ஓம் ஓம் ஓம்!"

திகைத்து நின்ற பாண்டுவிடம் "இளவரசே, மூத்தவரை வணங்கி ஆம் என்று மும்முறை சொல்லுங்கள்" என்றான் விதுரன். பாண்டு "மூத்தவரே தங்கள் ஆணை"என்று சொன்னான். அவனை எழுந்துகொள்ளும்படி விதுரன் கண்களைக்காட்டினான். திருதராஷ்டிரன் "விதுரா மூடா, என் முடிவை நிமித்திகனைக்கொண்டு அவையில் கூவியறிவிக்கச் சொல். மாமன்னன் ஹஸ்தியின் கொடிவழிவந்தவன், விசித்திரவீரியரின் தலைமைந்தன் ஒருபோதும் கீழ்மைகொள்ளமாட்டான் என்று சொல்" என்றான்.

இருக்கையில் கையூன்றி எழுந்து திருதராஷ்டிரன் "இளையோன் அரசணிக்கோலம் பூண்டு அரியணைமேடை ஏறட்டும். வலப்பக்கத்தில் பிதாமகரின் அருகே என் பீடத்தை அமைக்கச்சொல்" என்றான். "ஆம் அரசே. தங்கள் ஆணை" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "சஞ்சயா, என் ஆடைகள் கலைந்திருக்கலாம். அவற்றைச் சீர்ப்படுத்து" என்றான். "ஆணை அரசே" என சஞ்சயன் அருகே வந்தான்.

திகைப்புடன் நின்ற பாண்டுவை கையசைவால் வெளியே கொண்டுசென்றான் விதுரன். பாண்டு "என்ன இது இளையவனே? என்ன நடக்கிறது?" என்றான். அக்கணம் வரை நெஞ்சில் ததும்பிய கண்ணீரெல்லாம் பொங்கி விதுரனின் கண்களை அடைந்தன. இமைகளைக்கொண்டு அவற்றைத் தடுத்து தொண்டையை அடைக்கும் உணர்வெழுச்சியை சிறிய செருமலால் வென்று நனைந்த குரலில் அவன் சொன்னான். "அரசே, கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்."

அவையில் வேள்வியின் இறுதி மந்திரங்கள் ஒலிக்கத்தொடங்கின.

இனிய பாடல்களைப் பாடுங்கள்

வாழ்த்துக்களை எங்கும் நிறையுங்கள்

துடுப்புகள் துழாவும் கலங்களை கட்டுங்கள்

உழுபடைகளை செப்பனிடுங்கள்!

தோழர்களே! மூதாதையும் வேள்விக்குரியவனுமாகிய

விண்நெருப்பை எழுப்புங்கள்!

ஏர்களை இணையுங்கள்,

நுகங்களைப் பூட்டுங்கள்,

உழுதமண்ணில் விதைகளை வீசுங்கள்!

எங்கள் பாடலால்

நூறுமேனி பொலியட்டும்!

விளைந்த கதிர்மணிகளை நோக்கி

எங்கள் அரிவாள்கள் செல்லட்டும்!

பாண்டு அந்த வேண்டுகோளை தன்னுள் நிறைத்து இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி வணங்கினான்.

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 6 ]

வேதநாதம் மீண்டும் எழுவதைக் கேட்டதுமே குந்தி இக்கட்டு சீர்செய்யப்பட்டுவிட்டது என்று உணர்ந்தாள். அனகை வாயிலுக்கு அருகே வந்து நின்றபோது அவள் கண்களை குந்தியின் கண்கள் தொட்டன. அவள் சொல்லவருவதை குந்தி உணர்ந்துகொண்டாள். சத்யவதியும் பீஷ்மரும் சகுனியும் மீண்டும் அவைக்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரியணையின் கால்களுக்கும் மணிமுடிக்கும் செங்கோலுக்கும் பூசைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவள் பெருமூச்சுவிட்டாள். சிலகணங்கள் தன்னுள் எழுந்து அமைந்த எண்ணங்களை அப்போது அவளே திரும்பிப்பார்க்க நாணினாள். காம விருப்பை வெல்லும் மனிதர்கள் நிகழலாம், அதிகார விருப்பை வெல்ல தெய்வங்களாலும் ஆவதில்லை.

அவள் புன்னகை செய்துகொண்டாள். மிகச்சில கணங்கள்தான். அதற்குள் என்னென்ன கற்பனைகள். ஒரு பேரரசு உருவாகி, சிறந்தோங்கி, வீழ்ச்சியடைந்து மறைந்தது. மண்ணில் உருவாகிமறையும் உண்மையான பேரரசுகள்கூட அவ்வண்ணம் எங்கோ எவரோ கொள்ளும் கணநேர கண்மயக்குகளாக இருக்குமா? மானுடருக்கு கோடி கல்பங்கள் பிரம்மனின் ஒருநாள் என்று புராணங்கள் சொல்கின்றன. கோடிபிரம்மன்கள் விஷ்ணுவின் ஒரு கணம். விஷ்ணுவோ பிரம்மத்தில் ஓயாது வீசும் அலைகளில் ஒன்று. காலம் என எதைவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது மனம்?

தங்கைகள் சூழ அமர்ந்திருந்த காந்தாரி மெல்லியகுரலில் "யாதவ அரசி எங்கே?" என்றாள். குந்தி அருகே சென்று வணங்கி "அருகே இருக்கிறேன் அரசி" என்றாள். "வெளியே மகாமண்டபத்தில் அவள் இருக்கிறாளா என்று பார்த்து வா. எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்" என்றாள் காந்தாரி. குந்தி புன்னகைசெய்தாள். ஒருசேடியிடம் சொல்லியனுப்பவேண்டிய வேலை. ஆனால் அதை சேடியிடம் சொல்ல காந்தாரி வெட்குகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. சத்யசேனையும் சத்யவிரதையும் அவளை திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும் அவர்களின் உடல்கள் அவளை பார்த்துக்கொண்டிருந்தன. குந்தி திரும்பியபோது சத்யவிரதை தன் கைகளைத் தாழ்த்த வளையல்கள் சரியும் ஒலி ஒரு மெல்லிய சிரிப்பைப்போல ஒலித்தது.

அந்த ஒலி அவளை அமைதியிழக்கச் செய்தது. ஒவ்வொருமுறையும் அவள் தலைக்குப்பின் அந்த வளையல் ஓசை கேட்கிறது. அது வேண்டுமென்றே எழுப்பப்படுவதல்ல. அவள் பார்வைமுன் இருக்கையில் அவர்களிடம் கூடும் இறுக்கம் அவள் திரும்பியதும் விலகும்போது ஏற்படும் உடலசைவின் ஒலி அது. ஆனால் அது திட்டவட்டமாக ஒன்றைச் சொல்கிறது. சிரிப்பைவிடக் கூரியது. சிரிப்புக்குப்பின் இருக்கும் எண்ணம் அவர்கள் அறிந்து எழுவது. ஆகவே எல்லைக்குட்பட்டது. இது உடலை இயக்கும் ஆன்மாவின் நேரடி ஒலி.

"ஆணை அரசி" என்று சொல்லி வாயிலை நோக்கிச் சென்ற குந்தி காலடிகளை சீராக எடுத்துவைத்தாள். அகம் நிலையழியும் கணத்தில் அளவான அமைதியான காலடிகளுடன் நடப்பது உடலைச் சீராக்கி அதனூடாக அகத்தையும் நிலைகொள்ளச்செய்கிறது. முகத்தை புன்னகைபோல விரித்துக்கொண்டால் உண்மையிலேயே அகத்திலும் சிறு புன்னகை பரவுகிறது.

அவள் புன்னகை புரிந்தாள். காந்தாரிக்கும் அவள் தங்கைகளுக்கும் அங்கே சற்று முன் வரை என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதே தெரியவில்லை. ஆனால் அதில் வியப்பதற்கேதுமில்லை. அவர்கள் எக்காலத்திலும் எந்த அரசியலையும் அறிந்தவர்களல்ல. விழிதிறந்திருந்தால் காந்தாரி ஓரிரு ஒலிகளிலேயே அனைத்தையும் உணர்ந்துகொண்டிருப்பாள். ஆனால் அவள் இப்போது அவளுடைய அகத்தின் ஒலிகளையன்றி எதையும் கேட்பதில்லை.

புறவிழிகள் மூடும்போது எப்படி அகமும் மூடிவிடுகிறது என்பது பெருவியப்புதான். காந்தாரி ஒவ்வொருநாளும் அவளுடைய இளையவர்களைப்போல மாறிக்கொண்டிருந்தாள். அவர்களின் சொற்களை அவள் பேசினாள். அவர்களின் ஐயங்களும் அமைதியின்மைகளும் துயரங்களும்தான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இல்லை, அவை இன்னும் தீவிரமடைந்திருக்கும். விழிகளை மூடிக்கொள்வதுபோல அகத்தைக் கூர்மையாக்குவது பிறிதொன்றில்லை. அவள் அகத்தில் அனைத்தும் புறவுலகின் அளவைகளில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும். கரிய பெருநாகங்கள் நெளியும் ஒரு தலைகீழ் உலகம் போலிருக்கும் அவள் உள்ளம்.

குந்தி அணியறைக்கு அப்பால் நீண்டுகிடந்த இடைநாழியைப் பார்த்தாள். அங்கே சேடிகள் எவரேனும் தெரிந்தால் மகாமண்டபத்துக்குச் சென்று அந்த வைசியப்பெண் அங்கிருக்கிறாளா என்று பார்க்கச் சொல்லலாம் என நினைத்தாள். ஆனால் இடைநாழியில் பிறர் நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்டு ஒளிரச்செய்யப்பட்ட தோதகத்திப் பலகைகளினாலான செந்நிறத் தரை நீரோடை போல பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மூடி நின்ற தூண்களை எதிரொளித்தபடி நீண்டு கிடந்தது,

குந்தி தயங்கிபடி நடந்தாள். தன் நடையும் மாறிவிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது. செய்யும் வேலைகள் எண்ணங்களை வடிவமைக்கின்றன. எண்ணங்கள் உடலசைவுகளை, மொழியை, முகத்தை மாற்றியமைக்கின்றன. புறத்தோற்றம் பிறரிடம் அதற்குரிய எதிர்வினைகளை உருவாக்குகிறது. அந்த எதிர்வினைகள் மீண்டும் நம்மை அதேபோல மாற்றியமைக்கின்றன. சேடியின் பணியை பத்துநாட்களுக்குச் செய்தால் அகமும் புறமும் சேடியுடையதாகிவிடும்.

குந்தி மகாமண்டபத்தின் உள்ளே நுழையும் சிறுவாயிலில் நின்றாள். அங்கு நின்றபடி அவையை எட்டிப்பார்க்கமுடியும். ஆனால் ஒருபோதும் மறைந்துநின்று பார்க்கலாகாது என அவள் தனக்கே ஆணையிட்டுக்கொண்டாள். ஒரு பேரரசி செய்யாத எதையும் எந்நிலையிலும் செய்யலாகாது. அந்த ஆணையை மூன்றுமாதங்களுக்கு முன் பாண்டுவின் மனைவியாக அவள் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோதே தனக்கு விடுத்துக்கொண்டிருந்தாள். காலையில் மெல்லிய ஒளியில் அவளுடைய ரதம் கோட்டையைத்தாண்டி உள்ளே வந்தபோது மண்ணில்பரவிய மேகக்குவைகள் போல அஸ்தினபுரியின் மாடமுகடுகளின் திரளைத்தான் கண்டாள். அவற்றில் படபடத்த கொடிகளை, காற்றில் எழுந்து அமர்ந்த புறாக்களை, அப்பால் ஒரு சிறிய நகை போலத் தெரிந்த காஞ்சனத்தை...

பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருக்க வாழ்த்தொலிகள் செவிகளை நிறைக்க அவள் அஸ்தினபுரியின் மண்ணில் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் மறுகணமே அவளுக்குத் தெரிந்தது அவை படைவீரர்களின் குரல்கள் என. அங்கே மிகக்குறைவான மக்களே வந்திருந்தனர். அவர்களும் அங்காடிகளில் இருந்து வந்து எட்டிப்பார்த்தவர்கள். இசைப்பதற்கு அரண்மனைச்சூதர்கள் அன்றி எவருமிருக்கவில்லை. நீர் அள்ளி வீசப்பட்டதுபோல உடலெங்கும் குளிர்வியர்வையை உணர்ந்தவள் உடனே தன்னைத் திரட்டிக்கொண்டாள். நிமிர்ந்த தலையுடன் மலர்ந்த விழிகளுடன் நடந்து தனக்காகக் காத்திருந்த அணித்தேரில் ஏறிக்கொண்டாள்.

அஸ்தினபுரியின் வீதிகளில் ரதம் செல்லும்போது எங்கும் அவள் மேல் மலர்களும் மங்கலஅரிசியும் பொழியவில்லை. ஆனால் நகரமே திரண்டு தன்னை வாழ்த்துவதை ஏற்பவள் போல அவள் அணித்தேரில் அமர்ந்திருந்தாள். ஆம், நான் ஆயர்மகள். இந்நகரம் ஒரு பசு. இதை என் தாழியில் கறந்து நிறைப்பதற்காக வந்தவள் என சொல்லிக்கொண்டபோது அவள் உதடுகளில் புன்னகை நிறைந்தது.

நிமிர்ந்த தலையுடன் சீரான காலடிகளுடன் குந்தி நடந்து மகாமண்டபத்துக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த குரல்கார்வை ஒருகணம் அறுபட்டது. அனைத்து உடல்கள் வழியாகவும் அசைவு ஒன்று நிகழந்தது. மறுகணம் குரலற்ற முழக்கம் பொங்கி மேலெழுந்தது. அவள் அப்பார்வைகள் மேல் என நடந்து சென்று மேடையின் வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யவதியை அணுகினாள். சத்யவதியின் கண்களில் எழுந்த திகைப்பைக் கண்டாலும் அதை அறியாதவள் போல அவளிடம் குனிந்து "காந்தாரத்து அரசி மேடைக்கு தனித்து வருவதா அல்லது தங்கைகளுடனா?" என்று கேட்டாள்.

அவள் கேட்டது பொருளற்ற வினா என அக்கணமே சத்யவதி உணர்ந்துகொண்டாள். அவைக்கு வருவதற்காகவே அவள் அவ்வினாவை கொண்டுவந்தாள் என்றும் அவையை ஒளிந்துநின்று நோக்குவதைத் தவிர்க்கிறாள் என்றும் அவள் முகத்தை நோக்கியதும் அறிந்தாள். அவளிடம் மெல்லிய புன்னகை விரிந்தது. "நான் சியாமையை அனுப்புகிறேன்" என்று அவள் சொன்னாள். "ஆணை பேரரசி" என தலைவணங்கியபின் குந்தி சீரான நடையில் உள்ளே சென்றாள். செல்லும் வழியிலேயே வலக்கண்ணால் இடதுபக்கம் அரண்மனைப்பெண்டிர் அமரும் பகுதியில் முகப்பிலிடப்பட்ட பீடத்தில் தலையில் வைரச்சுட்டியும் மார்பில் முத்தாரமும் காதுகளில் பொற்குழைகளுமாக பிரகதி அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

விழிகளை வலப்பக்கம் திருப்பியபோது அவள் பார்வையில் அரியணைமேடை பட்டது. ஹஸ்தியின் அரியணை முற்றிலும் பொற்தகடுகளால் மூடப்பட்டிருந்தது. அதன் சிம்மவிழிகளும் வாயும் செவ்வைரங்களால் ஒளிகொண்டிருந்தன. அதன்மேல் இணைசெங்கழுகுகள் இருபக்கமும் வாய்திறந்து நோக்க நடுவே அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினை பொறிக்கப்பட்டு நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகே அதைவிடச் சற்று சிறிய அரசியின் அரியணை. அதன் இருபக்கமும் பெண்சிம்மங்கள் வாய்மூடி விழிவைரங்கள் ஒளிவிட அமர்ந்திருந்தன. மேலே இணைமயில்களுக்கு நடுவே அஸ்தினபுரியின் இலச்சினை மணியொளிவிட்டது.

இரு சிம்மாசனங்களுக்கும் முன்னால் செம்பட்டு விரிக்கப்பட்ட பீடங்களில் மணிமுடிகள் வைக்கப்பட்டு அவற்றுக்கு வைதிகர் பூசனைசெய்துகொண்டிருந்தனர். அரசியின் மணிமுடி எட்டு இலட்சுமிகள் பொறிக்கப்பட்ட எட்டு இதழ்கள் கொண்ட தாமரை வடிவில் இருந்தது. அதன் வைரங்கள் இருபக்கமும் எரிந்த நெய்விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. அள்ளி கையிலெடுக்கப்பட்ட விண்மீன்கூட்டம் போல என குந்தி நினைத்துக்கொண்டாள்.

குந்தி சில கணங்களுக்குள் அப்பகுதியை கடந்துசென்றுவிட்டாள். அந்த மணிமுடியை அவள் ஒருகணமே நோக்கினாள். ஆனால் அதன் ஒவ்வொரு வளைவும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு ஒளிக்கல்லும் அவளுடைய அகக்கண்ணில் தெளிவாகத் தெரிந்தன. நெஞ்சுக்குள் இரும்புருளை ஒன்று அமர்ந்துகொண்டதுபோல, அதன் எடை கால்களை அழுத்துவதுபோல குந்தி சற்று தளர்ந்தாள். பெருமூச்சுவிட்டு அந்த எடையை தன்னுள் கரைத்துக்கொள்ள முயன்றாள்.

தேவயானி சூடிய மணிமுடி. அதைப்பற்றிய கதைகளை அவள் இளமையிலேயே கேட்டிருந்தாள். மன்வந்தரங்களின் தலைவனான பிரியவிரதனின் மகள் ஊர்ஜஸ்வதியின் கருவில் உதித்தவள் பேரரசி தேவயானி. அசுரகுருவான சுக்ரரின் மகள். யயாதி அவளை மணந்து அஸ்தினபுரியின் பட்டத்தரசியாக்கினான். பிறிதொருவர் சூடிய மணிமுடியை தான் அணிவதில்லை என்று தேவயானி ஆணையிட்டாள். யயாதியின் வேள்வித்தீயில் மயன் எழுந்தருளினான். என் அரசிக்குகந்த மணிமுடி ஒன்றைத் தருக என யயாதி கோரினான்.

யயாதியின் வேள்வியை பொருள்வேள்வியாக மயன் முன்னின்று நடத்தினான். வேள்விமுதிர்ந்தபோது எரிதழல் தாமரையாக மலர எட்டு இலட்சுமிகள் தோன்றினர். அனைத்தையும் அமைத்த ஆதிலட்சுமி. மக்கள்செல்வமாகப் பொலியும் சந்தானலட்சுமி. கலையறிவாகிய வித்யாலட்சுமி. பொன்னருள்செய் தனலட்சுமி. அமுதமாகிவரும் தான்யலட்சுமி. ஆற்றலாகி எழும் கஜலட்சுமி. அறமாகி நிற்கும் வீரலட்சுமி. வெற்றியின் முழுமையான விஜயலட்சுமி. எட்டு பொற்தாமரைகளையும் ஒன்றாக்கி மயன் மணிமுடி செய்தான். மார்கழிமாதம் முழுநிலவுநாளில் மகம் நட்சத்திரத்தில் தேவயானி அந்த மணிமுடியைச்சூடி அரியணையமர்ந்தாள். பாரதவர்ஷத்தில் அவளுக்கிணையான சக்ரவர்த்தினி வந்ததில்லை என்றன சூதர்பாடல்கள்.

காந்தாரியை வணங்கி "பிரகதி அரண்மனைப்பெண்டிருக்குரிய நிரையில் அமர்ந்திருக்கிறாள்" என்றாள் குந்தி. காந்தாரியின் முகத்தில் வந்த ஆறுதலை, அவளைச்சூழ்ந்திருந்த தங்கையரின் தலைகள் திரும்பியபோது உருவான மெல்லிய நகைமணியொலியைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் புன்னகை எழுந்தது. "ஆனால் அவளை முன்நிரையில் அமரச்செய்திருக்கிறார்கள். அவள் நெற்றியில் வைரச்சுட்டியும் கழுத்தில் பாண்டியமுத்தாரமும் அணிசெய்கின்றன" என்றாள்.

காந்தாரியால் தன் முகத்தின் இறுக்கத்தை மறைக்கமுடியவில்லை. வெண்பளிங்குக் கன்னங்களும் கழுத்தும் குருதியூறிச் சிவக்க மூச்செழுந்து மார்பகம் அசைய அவள் அறியாமலேயே தங்கையரை நோக்கித் திரும்பினாள். அவர்களின் கண்களைப் பார்க்கும் ஆவலை குந்தி வென்றாள். கண்களை சற்றும் திருப்பாமல் வணங்கி விலகி நின்றபோது சம்படையின் கண்களைச் சந்தித்தாள். சம்படை அவளை நோக்கி நாணத்துடன் சிரித்தபோது கன்னங்களில் குழிகள் விழ சிறுவெண்பற்கள் தெரிந்தன. தசார்ணை சம்படையையும் குந்தியையும் மாறி மாறி ஐயத்துடன் பார்த்துவிட்டு அவள் தொடையைத் தொட்டாள்.

குந்தி தசார்ணையை நோக்கி புன்னகை செய்தாள். அவள் சற்றுத்தயங்கியபின் வாயைப்பொத்தி உடலை வளைத்து புன்னகைசெய்தபின் பார்வையை திருப்பிக்கொண்டாள். ஆனால் அவள் உடல் நெளிந்தே இருந்தது. குந்தி புன்னகையுடன் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டாள். சம்படை குந்தியை விரலால் சுட்டி தசார்ணையிடம் ஏதோ சொல்ல அவள் சம்படையின் தொடையில் மெல்லக் கிள்ளினாள். குந்தி நோக்கியபோது சம்படை நன்றாக வாய்விரித்து கண்கள் ஒளிர சிரித்தாள். முகம் நாணத்தில் சிவக்க சற்று சிரித்தபின் தசார்ணை தலைகுனிந்துகொண்டாள்.

சியாமை நிமிர்ந்த தலையுடன் உள்ளே வந்தாள். காந்தாரியை அணுகி திடமான குரலில் "மூத்த அரசியை வணங்குகிறேன். பேரரசியின் ஆணையைச் சொல்லவந்த தூதுப்பெண் நான்" என்றாள். காந்தாரி எழுந்துகொண்டு "அவைக்கு அழைக்கிறார்கள், கிளம்புங்கள்" என தன் தங்கையரிடம் சொன்னாள். "சத்யசேனை, இவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று சொன்னாயல்லவா?" சத்யசேனை "ஆம் அரசி" என்றபின் குந்தியை நோக்கி "எங்கே யாதவ இளவரசி? அவள்தானே அரசிக்கு அகம்படி செய்பவள்?" என்றாள்.

சியாமை ஒருகணம் திகைத்து அவர்களை மாறிமாறி நோக்கியபின் "அரசி, அழைப்புக்காக நான் வரவில்லை. நான் பேரரசியின் செய்தி ஒன்றைச் சொல்வதற்காகவே வந்தேன்" என்றாள். காந்தாரி அப்போதுதான் அவள் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து மாறிமாறி பேசிக்கொண்டிருந்த தங்கையரை கைகளால் நிறுத்தி "சொல்" என்றாள். "அரசி, நேற்றுமதியம் நம் எல்லைப்பகுதியில் ஒரு புவியதிர்வு நிகழ்ந்திருக்கிறது. அஸ்தினபுரியின் மக்களுக்கு அது மிகமிகத் தீய குறி. முன்னரே இங்கு விழியிழந்த மன்னர் நாடாள்வது நெறிமீறல் என்னும் எண்ணம் இருந்தது. இந்த தீக்குறியைக் கண்டபின் அனைத்து குடித்தலைவர்களும் குலமூத்தாரும் வைதிகரும் மூத்தஇளவரசர் திருதராஷ்டிரர் அரசுப்பட்டமேற்கலாகாது என்று கூறிவிட்டனர். அவர்கள் கோல் தாழ்த்தி ஏற்காமல் அஸ்தினபுரியின் அரியணையில் எவரும் அமரவியலாது."

குந்தி தன் நெஞ்சின் ஓசைக்கு மேல் அச்சொற்களை நெடுந்தொலைவில் என்பதுபோலக் கேட்டாள். சியாமையின் உதடுகளை விட்டு விலகி அவள் பார்வை காந்தாரியின் முகத்தில் பதிந்தது. அதைச் செய்யலாகாது என அவளுள் இருந்த அரசியல்மதி ஆணையிட்டாலும் அவளால் பார்க்காமலிருக்க முடியவில்லை. காந்தாரியின் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும் கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதையும் அவள் கண்டாள்.

"ஆகவே என்ன செய்யலாமென்று பேரரசியும் பிதாமகரும் மூத்தவரிடமே கேட்டார்கள். தன் தம்பி அரசாளட்டும் என அவர் ஆணையிட்டார். அதன்படி இன்று அஸ்தினபுரியின் அரியணையில் அமரவிருப்பவர் இளையவரான பாண்டுதான்" என்றாள் சியாமை. சத்யசேனை அதை புரிந்துகொள்ளாதவள் போல "யார் நீ? என்ன சொல்கிறாய்?" என்றாள். "நான் சியாமை. பேரரசியின் அணுக்கத்தோழி" என்றாள் சியாமை. "நான் சொல்வது பேரரசியின் சொற்களை."

"சீ, விலகி நின்று பேசு. தாசிகள் வந்து ஆணையிடும்படி காந்தாரக்குலம் இழிந்துவிடவில்லை" என்றாள் சத்யசேனை. சியாமை "நான் என் கடமையைச் செய்கிறேன்" என்றாள். சத்யசேனை "நாங்கள் எவருடைய ஆணைக்கும் கட்டுப்பட்டவர்களல்ல. எங்கள் தமையன் இங்கே வரட்டும். அவர் சொல்லட்டும்" என்று உடைந்த குரலில் கூச்சலிட்டாள். பட்டாடைகள் வைரங்கள் அனைத்துக்கும் உள்ளிருந்து அவளுள் வாழ்ந்த பாலைவனப் பெண் எழுந்து வருவதைக் கண்டு குந்தி தன்னுள் புன்னகை செய்தாள்.

சத்யவிரதையும் உரக்க "எங்கள் தமையனை இங்கே வரச்சொல்லுங்கள்... அவர் சொல்லாமல் நாங்கள் எதையும் ஏற்கமாட்டோம்" என்று கூவினாள். "சத்யவிரதை" என ஏதோ சொல்லவந்த காந்தாரியின் கைகளைப்பற்றி "மூத்தவளே, நீங்கள் இப்போது ஏதும் சொல்லலாகாது. இது வஞ்சகம். இந்த நயவஞ்சகத்தை நாம் ஏற்கலாகாது" என்று சத்யசேனை சொன்னாள். சத்யவிரதை தன்னை மறந்தவள் போல "எங்கே எங்கள் தமையன்? அழையுங்கள் அவரை" என்று கூவிக்கொண்டிருந்தாள். அந்தப்பதற்றம் பிறரையும் ஆட்கொள்ள சுதேஷ்ணையும் சம்ஹிதையும் தேஸ்ரவையும் கூட கைகளை நீட்டி கூவினர். சம்படையும் தசார்ணையும் திகைத்து அவர்களை மாறிமாறிப்பார்த்தனர். சம்படை தசார்ணையின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

சியாமை "என் தூதைச் சொல்லிவிட்டேன் அரசியரே. தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன்" என்று தலைவணங்கினாள். சியாமையை ஏன் சத்யவதி முதன்மைச்சேடியாகக் கொண்டிருக்கிறாளென்று குந்தி அப்போது உணர்ந்தாள். அரசியரின் கொந்தளிப்பு அவளை தொடவேயில்லை. நாடகத்தில் முன்னரே எழுதிப்பயிலப்பட்டவற்றை நடிப்பவள் போல அமைதியாகப் பேசி வணங்கி அவள் விலகிச் சென்றாள்.

ஆங்காரத்துடன் பற்களை நெரித்தபடி சத்யசேனை குந்தியை நோக்கித் திரும்பினாள். "இதெல்லாம் உன் சூழ்ச்சி அல்லவா? யாதவப்பெண்ணுக்கு மணிமுடி தேடிவரும் என நினைக்கிறாயா? பார்ப்போம்" என்று கூவினாள். சத்யவிரதை நான்கடி முன்னால் வந்து கைகளை நீட்டி "நீ அமைதியாக இருப்பதைக் கண்டபோதே எண்ணினேன், இதில் ஏதோ வஞ்சகம் உண்டு என்று... உன் சூழ்ச்சி எங்களிடம் நடக்காது. எங்கள் தமையன் இதோ வருகிறார்" என்றாள். சத்யசேனை "இந்த அஸ்தினபுரியே எங்கள் படைகளிடம் இருக்கிறது. என் தமக்கையை அவமதித்த உன்னை கழுவிலேற்றாமல் ஓயமாட்டேன்" என்றாள்.

நாகம் போல அவர்கள் விழிகளை இமையாது உற்று நோக்கியபடி குந்தி அசையாமல் அமர்ந்திருந்தாள். ஒருசெய்தியைக் கேட்டதும் அதன் முழுப்பின்னணியையும் தெரிந்துகொள்ள அவர்கள் முற்படவில்லை. அக்கணமே எளிய உணர்ச்சிகளை பொழிகிறார்கள். சகுனி ஒப்பாத ஒன்றை பேரரசி ஆணையாக அறிவிக்கமாட்டாள். அரசியலோ அரசநடத்தையோ முறைமைகளோ பயிலாத எளிய பாலைவனப் பழங்குடிப்பெண்கள் அவர்கள். அவள் மீண்டும் தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள். ஒருபோதும் அவர்கள் தனக்கு எதிரிகளாக அமையப்போவதில்லை. மாறாக அவர்களுடைய எளிய காழ்ப்பு தன்னை மேலும்மேலும் வல்லமைகொள்ளச் செய்யும். தன்வெற்றிகளை மேலும் உவகையுடைவையாக ஆக்கும்.

காந்தாரி தன் தங்கைகளை கைநீட்டி அமைதிப்படுத்த முயன்றபடியே இருந்தாள். ஆனால் சினத்தால் கட்டற்றவர்களாக ஆகிவிட்டிருந்த அவர்களை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தசார்ணை சத்யசேனையின் ஆடையைப்பற்ற அவள் தசார்ணையை ஓங்கி அறைந்து "விலகிப் போ" என்று அதட்டினாள். அடிவாங்கிய தசார்ணை திகைத்த பெரியவிழிகளால் நோக்கியபடி பின்னடைந்தாள். அவற்றில் நீர் ஊறி கன்னத்தில் வழியத்தொடங்கியது. கண்களைக் கசக்கியபடி வாய் திறந்து நாக்கு தெரிய அவள் வீரிட்டழுதாள்.

அறைக்குள் சகுனி நுழைந்ததும் அனைத்துப்பெண்களும் கணத்தில் ஓசையடங்கினர். சகுனியின் கண் ஒரே கணத்தில் குந்தியை வந்து தொட்டுச்சென்றது. அவள் அவன் உள்ளே வரும் ஒலி கேட்டதுமே அக்கணத்தை எதிர்நோக்கியிருந்தாள். அவன் கண்களைச் சந்தித்ததுமே அவள் மென்மையாக புன்னகைசெய்தாள். பெருந்தன்மையுடன், மன்னிக்கும் தோரணையுடன், அவனைப்புரிந்துகொண்ட பாவனையுடன். அந்தப்புன்னகை அவனை பற்றி எரியச்செய்யும் என குந்தி அறிந்திருந்தாள்.

அதற்கேற்ப சகுனி கடும் சினத்துடன் பற்களைக் கடித்து மிகமெல்லிய குரலில் "என்ன ஓசை இங்கே? என்ன செய்கிறீர்கள்?" என்றான். அவன் சினத்தை அறிந்திருந்த சத்யசேனையும் சத்யவிரதையும் மெல்லப்பின்னடைந்தனர். காந்தாரி "இளையவனே, சற்றுமுன் ஒரு தூது வந்தது" என்றாள். "அது உண்மை மூத்தவளே. அஸ்தினபுரியின் அரசை நாம் சிலகாலத்துக்கு விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கிறது" என்றான். "சிலகாலத்துக்கா?" என்றாள் காந்தாரி. "ஆம், நமக்கு வேறுவழியே இல்லை. இந்தநாட்டுமக்கள் மூத்தஇளவரசரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை மீறி நாம் ஏதும் செய்யமுடியாது."

"நம் படைகள் என்ன செய்கின்றன?’ என்றாள் காந்தாரி. "மூத்தவளே, படைபலத்தைக்கொண்டு இந்நகரை மட்டும் கைப்பற்றலாம். அதைக்கொண்டு என்ன செய்வது? மேலும் பீஷ்மபிதாமகரை எதிர்க்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஆற்றலும் படைக்கலனும் இருந்தாலும் அவரை எதிர்க்க என்னால் முடியாது. அவர் எனக்கும் பிதாமகர்" என்றான். அவர்கள் திகைத்து அவனை நோக்கியபடி நின்றனர். யாரோ கைகளைத் தாழ்த்த வளையல்கள் ஒலியெழுப்பின. "இன்னும் பதினெட்டாண்டுகாலம் தமக்கையே. நான் இங்குதான் இருப்பேன். உங்கள் மைந்தனை அரியணை ஏற்றி அவன் பாரதவர்ஷத்தை வெல்வதைக் கண்டபின்னர்தான் காந்தாரத்துக்குச் செல்வேன்."

சியாமை உள்ளே வந்து பணிந்தபின் அமைதியாக நின்றாள். "தமக்கையே, நாம் நமக்குரிய அரசை அவர்களிடம் சிலகாலம் கொடுத்து வைக்கப்போகிறோம், அவ்வளவுதான்" என்றபின் சகுனி வணங்கி திரும்பிச்சென்றான். அவன் முதுகை நோக்கிக்கொண்டு குந்தி அமர்ந்திருந்தாள். அவன் திரும்பமாட்டான் என அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவன் அவளைத்தான் எண்ணிக்கொண்டிருப்பான் என்றும் உணர்ந்தாள்.

சியாமை வந்து குந்தியை வணங்கி "அஸ்தினபுரியின் அரசி, தாங்கள் அரியணைமேடைக்கு வரவேண்டும் என்று பேரரசி தெரிவித்தார்" என்றாள். ஒருகணம் சியாமையின் கண்களில் வஞ்சம் வந்து சென்றதை குந்தி கண்டாள். "தங்கள் இளைய அரசி சத்யசேனை தங்களுக்கு அகம்படி செய்யவேண்டும் என்றும் பேரரசி ஆணையிட்டார்." குந்தி சத்யசேனையின் மூச்சொலியைக் கேட்டாள். காந்தார இளவரசியரின் உடல்களில் இருந்து நகைகள் ஒலித்தன. அவள் திரும்பிப்பார்க்கவில்லை. தன் கண்ணுக்குள் எஞ்சியிருந்த தேவயானியின் மணிமுடியில் கருத்தை நிறுத்தினாள்.

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 1 ]

மணப்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி அவள் அமரத்திலேயே நின்றிருந்தாள். இருளுக்குள் அப்படகுகளின் விளக்குகளின் செவ்வொளிப்பொட்டுகள் மெல்ல நகர்ந்து சென்றன. கடந்துசெல்லும் படகுகளில் இருந்து துடுப்புபோடும் குகர்களின் பாடல்கள் வலுப்பெற்றுவந்து தேய்ந்து மறைந்தன.

கலைந்த தாமரையிதழ் அடுக்குகளைப்போலத் தெரிந்த படகின் பாய்கள் காற்றை உண்டு திசைதிருப்பி முன்பக்கம் வளைந்து புடைத்திருந்த பாய்மேல் செலுத்த அலைகளில் எழுந்து அமர்ந்து படகு சென்றுகொண்டிருந்தது. படகின் அறைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்ட பீதர்களின் தூக்குவிளக்கு காற்றிலாடி ஒளியை அலைகள் மேல் வீசிக்கொண்டிருக்க அவள் கங்கையையே நோக்கிக்கொண்டிருந்தாள். நினைவறிந்த நாள்முதல் அவள் கற்றுவந்த பேராறு. யமுனையின் தமக்கை. பிருத்விதேவியின் முதல்மகள். இமயத்தின் தங்கை. முக்கண்முதல்வனின் தோழி.

அது அவ்வளவு அகன்றிருக்குமென அவள் எண்ணியிருக்கவில்லை. இருபக்கமும் கரைகளே தெரியாமல் நீர் வேலிகட்டியிருந்தது. அவர்கள் சென்ற பெரும் படகுவரிசையை கழற்காய் ஆடும் சிறுமியின் உள்ளங்கை என நீர்வெளி எடுத்தாடிக்கொண்டிருந்தது. ஒருகணம் கங்கை பூமியைப்போல இன்னொரு பரப்பு என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அந்தப்படகுகள் அங்கே மனிதன் கட்டிவைத்திருக்கும் கட்டடங்கள். கலைந்து கலைந்து உருமாறிக்கொண்டே இருக்கும் நகரம்.

மழைத்தூறல் விழுந்தபோது அவளை உள்ளே வந்து படுக்கும்படி அனகை சொன்னாள். அவள் உள்ளே சென்று மான்தோல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். அன்னையின் தொடைகளின் மேல் படுத்திருக்கும் குழந்தைபோல அசைவதாக உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்த பதற்றங்களை அழித்து துயிலச்செய்தது. அனகை அவள் தோளைத் தொட்டு "அரசி, விழித்தெழுங்கள். அஸ்தினபுரி வந்துவிட்டது" என்றாள். அவள் எழுந்து ஒருகணம் புரியாமல் "எங்கே?" என்றாள். "படகுகள் அஸ்தினபுரியின் துறையை நெருங்குகின்றன அரசி" என்றாள் அனகை.

அவள் எழுந்து வெளியே நோக்கியபோது மழைச்சரங்கள் சாளரங்களுக்கு அப்பால் இறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். படகின் கூரை பேரொலி எழுப்பிக்கொண்டிருந்தது. "அங்கிருந்தே மழை. தென்மேற்குக் காற்று வீசியடிக்கிறது. ஆகவேதான் மிக விரைவாகவே வந்துவிட்டோம்" என்றாள் அனகை. குந்தி எழுந்து அந்த அறைக்குள்ளேயே தன்னை ஒருக்கிக்கொண்டாள். வெளியே மழைத்திரைக்கு அப்பால் குகர்கள் நின்றிருந்தனர். எவரும் துடுப்பிடவில்லை. சுக்கானைமட்டும் நால்வர் பற்றியிருந்தனர். அனைத்துப்பாய்களும் முன் திசை நோக்கி புடைத்து வளைந்திருக்க வானில் வழுக்கிச்செல்லும் பறவைபோல சென்றுகொண்டிருந்தது படகு.

அஸ்தினபுரியின் படகுத்துறையில் இறங்கும்போதும் மழை சரம் முறியாமல் பொழிந்துகொண்டிருந்தது. மரங்களும் நீர்ப்பரப்பும் வானின் அறைபட்டு ஓலமிட்டன. குடைமறைகளுடன் வீரர்கள் காத்து நின்றனர். அவள் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் கால்வைத்தபோது அனகை "தங்கள் பாதங்கள் அஸ்தினபுரியை வளம்கொழிக்கச் செய்யட்டும் அரசி" என வாழ்த்தினாள். அவள் சேற்றிலிறங்கி குடைமறைக்குள் ஒடுங்கியபடி குறுகி நடந்து மூடிய ரதத்துக்குள் ஏறிக்கொண்டாள்.

அரியணை அமர்ந்து மணிமுடிசூடியபோது அவள்மீது ஒன்பது பொற்குடங்களிலாக கங்கையின் நீரை ஊற்றி திருமுழுக்காட்டினர். நறுமணவேர்களும் மலர்களுமிட்டு இரவெல்லாம் வைக்கப்பட்டிருந்த நீர் குளிர்ந்து கனத்திருந்தது. நீரில் நனைந்த பட்டாடை உடலில் ஒட்டியிருக்க தலையில் மணிமுடியுடன் தர்ப்பைப்புல் சுற்றிய விரல்களால் ஒன்பது மணிகளும் ஒன்பது தானியங்களும் ஒன்பது மலர்களும் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தில் இருந்து கைப்பிடிகளாக அள்ளி எடுத்து முது வைதிகர்களுக்கு அளித்து கங்கைநீரால் கைகழுவினாள்.

கங்கை நீரால் பன்னிரு அன்னையரின் சிலைகளுக்கு திருமுழுக்காட்டி பூசனை செய்தாள். கங்கை நீர் நிறைந்த பொற்குடத்தை இடையில் ஏந்தி மும்முறை அரியணையைச் சுற்றிவந்தாள். அரண்மனையின் மலர்வனத்தின் தென்மேற்கு மூலையில் நடப்பட்ட பேராலமரத்தின் கிளைக்கு கங்கை நீரை ஊற்றினாள். அஸ்தினபுரிக்கு வடக்கே இருந்த புராணகங்கை என்னும் காட்டில் ஓடிய சிற்றோடைக்குச் சென்று அதன் கரைகளில் நிறுவப்பட்டிருந்த பதினெட்டு கானிறைவியருக்கு கொடையளித்து வணங்கினாள். அன்றுமுழுக்க அவளுடன் அனைத்துச்சடங்குகளிலும் கங்கை இருந்துகொண்டே இருந்தது.

முடிசூட்டுவிழவின் சடங்குகள் பகலில் தொடங்கி இரவெல்லாம் நீடித்தன. நகர்மக்களுக்கான பெருவிருந்துகள் நகரின் இருபது இடங்களில் நடந்தன. அங்கெல்லாம் சென்று அவள் முதல் அன்னத்தை தன் கைகளால் பரிமாறினாள். குடித்தலைவர்களும் குலமூத்தாரும் அளித்த பரிசில்களைப் பெற்றுக்கொண்டாள். வைதிகர்களுக்கும் புலவர்களுக்கும் சிற்பிகளுக்கும் கணிகர்களுக்கும் நிமித்திகர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரிசுகளை வழங்கினாள். நகரமெங்கும் முரசுகளும் கொம்புகளும் குரலோசையும் முழங்கிக்கொண்டே இருந்தன. துயில்கலைந்த யானைகள் ஊடாக சின்னம் விளித்தன.

சோர்ந்து அவள் தன் அந்தப்புரத்து அறைக்குச் சென்றபோதே முதுசேடி கிருதை வந்து கங்கைபூசனைக்கு அவளை சித்தமாகும்படிச் சொன்னாள். விடியலின் முதற்கதிர் கங்கையைத் தொடும்போது செய்யவேண்டிய பூசனை என்பதனால் குந்தி அப்போதே குளித்து உடைமாற்றிக்கொண்டு அரண்மனை முகப்புக்கு வந்தாள். அவளுக்கான ரதங்கள் அங்கே காத்துநின்றன. அனகை அவளுடன் ஏறிக்கொண்டாள். ரதங்கள் ஓடத்தொடங்கியதுமே அவள் சாய்ந்து அமர்ந்து தூங்கிவிட்டாள்.

குந்தியையும் துயில் அழுத்தியது. அவள் முந்தைய இரவும் துயின்றிருக்கவில்லை. ஆனால் ரதம் நகர்ப்பகுதிக்குள் நுழைந்ததுமே அவள் அகம் பரபரப்படைந்து துயில் விலகிச்சென்றது. அவள் மூடிய ரதத்தின் சாளரம் வழியாக நகரைப்பார்த்துக்கொண்டே சென்றாள். நகரத்தெருக்கள் முழுக்க மக்கள் நிறைந்து முட்டிமோதிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்கள். விழவுக்காலம் அவர்களுக்கு அளிப்பது இரவைத்தான் என குந்தி எண்ணிக்கொண்டாள். அவர்கள் வெளியே வரமுடியாத பின்னிரவுகள் இப்போது திறந்துகிடக்கின்றன. அவர்கள் உரக்கப்பேசியபடியும் சிரித்தபடியும் கூட்டம்கூட்டமாக கொண்டாடிக்கொண்டிருப்பது அந்த விடுதலையைத்தான்.

நகரெங்கும் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. காவல்மாடங்களின் நான்குபக்கமும் பெரிய மீன்நெய் குடுவைகளில் அழலெரியவைத்திருந்தனர். காட்டுநெருப்பு போல அவை வானில் எழுந்து எரிந்து அப்பகுதியையே செவ்வொளியால் அலையடிக்கச்செய்தன. குதிரைகளில் படைவீரர்கள் பாய்ந்துசென்றனர். அரண்மனை ரதம் செல்வதைக்கூட எவரும் கவனிக்காதபடி களிவெறி அவர்களை நிறைத்திருந்தது. அங்காடிக்குள் பெரும் சிரிப்பொலிகள் கேட்டன. அங்கே மதுக்கடைகள்முன் நகரின் ஆடவரில் பாதிப்பேர் நின்றிருப்பார்கள் என குந்தி எண்ணிக்கொண்டாள்.

கங்கையை நோக்கி ரதங்கள் இறங்கியபோது விடியல்வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. மரங்களின் இலைகளின் பளபளப்பை புதர்பறவைகள் ஊடுருவிச்செல்லும் காட்டின் சிலிர்ப்பை தலைக்குமேல் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் குரல்பெருக்கை அன்று புதியதாகப்பிறந்தவள் போல கேட்டுக்கொண்டிருந்தாள். இதுதான் மகிழ்ச்சி போலும் என எண்ணிக்கொண்டாள். இளமையில் அவள் துள்ளிக்குதித்ததுண்டு. நெடுநேரம் பொங்கிச் சிரித்ததுண்டு. எங்கிருக்கிறோமென்ற உணர்வே இன்றி மிதந்தலைந்ததுண்டு. பகற்கனவுகளில் மூழ்கிக்கிடந்ததுண்டு. அவையனைத்தும் படகை விட்டு விலகிச்செல்லும் ஊர் போல மென்மையாக சீராக மறைந்துகொண்டே இருந்தன. அதன் பின் மகிழ்ச்சி என்றால் அல்லல்கள் விடுபடும் உணர்வு. சலிப்பு மறையும் நேரம். அல்லது வெற்றியின் முதற்கணம்.

மகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள் இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல். கழுவிய பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு மட்டுமே இருப்பாக. ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள். அனைத்தும் பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க காலம் அதன்முன் அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.

மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல.

என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறோமென அவளே உணரும் வரை உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்த குந்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். அவ்வசைவில் விழித்துக்கொண்ட அனகை "எங்கிருக்கிறோம் அரசி?" என்றாள். "கங்கை வரவிருக்கிறது" என்றாள் குந்தி. அனகை தன் முகத்தை முந்தானையால் துடைத்தபடி "நான் துயின்று மூன்றுநாட்களாகின்றன" என்றாள். "இப்போதுகூட துயில் என்று சொல்லமுடியாது. என்னென்னவோ கனவுகள். நான் படகில் சென்றுகொண்டிருக்கிறேன். படகு ஒரு பசுவின் முதுகின் மேல் இருக்கிறது. மிகப்பெரிய பசு... யானைகளைப்போல நூறுமடங்குபெரியது"

"ஆம், கங்கையை ஒரு பசுவாக யாதவர்கள் சொல்வதுண்டு" என்றாள் குந்தி. "அப்படியா?" என்றபின் அனகை "பின்பக்கம் வரும் ரதங்களில்தான் காந்தார இளவரசியர் வருகிறார்கள். அவர்கள் துயின்றிருக்கவே முடியாது" என்றாள். குந்தி நோக்கியதும் சிரித்தபடி "நேற்று தங்கள் ஆடைநுனிபற்றி அகம்படி செய்தபோது இளையகாந்தாரியின் முகத்தைப் பார்த்தேன். அனல் எரிந்தது" என்றாள் அனகை. குந்தி கடுமையாக "இந்த எண்ணங்கள் உன் நெஞ்சில் இருந்தால் எங்கோ எப்படியோ அது வெளிப்பட்டுவிடும். அவர்களை அவமதிக்கும் ஒருசெயலையும் நீயோ நம்மவர் எவருமோ செய்ய நான் ஒப்பமாட்டேன்" என்றாள். அனகை அஞ்சி "ஆணை" என்றாள்.

"அரசகுலத்தவர் வெற்றிதோல்விகளால் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. குலத்தாலும் குணத்தாலும் ஆனவர்கள். என் தமக்கை என்றும் அஸ்தினபுரியின் பேரரசிக்கு அடுத்த இடத்திலேயே இருப்பார். அவர் தங்கையரும் அந்நிலையிலேயே இருப்பார்கள்" என்று சொன்னபின் குந்தி தலையைத் திருப்பிக்கொண்டாள். தன் அகம் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டாள். ஆம், சற்றுமுன் மகிழ்ச்சியாக இருந்தேன். அதன் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டிருக்கிறது. அனைத்தும் கலைந்துவிட்டிருக்கிறது. எண்ணங்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்றன. உணர்ச்சிகளின் வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன.

கங்கை தெரியத்தொடங்கியதும் அவளுக்குள் மெல்லிய அச்சம்தான் எழுந்தது. விரும்பத்தகாத ஒன்று நிகழ்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு போல. என் வாழ்க்கையின் முதன்மையானவை என நான் நினைக்கவேண்டிய நாட்கள் இவை. எளிய யாதவப்பெண்ணுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி வந்து தலையிலமர்ந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் மாமன்னர்கள் கூடி அளித்த செங்கோல் கைவந்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றி ஒரு கணம்தான். அதன்பின் மெல்லமெல்ல அந்தச் சிகரத்திலிருந்து அவள் இறங்கிக்கொண்டுதான் இருந்தாள். கடைசியில் இந்தவிடிகாலையின் மோனம். அது முடிந்துவிட்டது. அனைத்தும் உலகியல்வாழ்க்கையின் அன்றாடச்செயல்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

அந்தப்பிரக்ஞை மட்டும் அல்ல இது. இந்த அமைதியின்மைக்குக் காரணம் அதுமட்டும் அல்ல. நான் என்னுள் அறியும் இன்னொன்று. எந்த அளவைகளுக்குள்ளும் நிற்காத ஒரு மெல்லுணர்வு. வரவிருப்பதை முன்னரே உணர்ந்துகொள்ளும் அகம். இவ்வுலகைச்சேர்ந்த எந்த இன்பத்திலும் அகம் முழுமையை அறியாது என்று மீளமீள நூல்கள் சொல்கின்றன. அந்தக்கணத்தில் அகம் ஆழத்தில் நிறைவின்மையை அறிந்து தயங்கும் என்கின்றன. ஆனால் அது மட்டும் அல்ல.

முற்றிலும் சிடுக்காகிப்போன நூல்வேலைப்பாட்டை அப்படியே சுருட்டி ஒதுக்கி வைப்பதுபோல அவ்வெண்ணங்களை அவள் முழுதாக விலக்கிக் கொண்டாள். பெருமூச்சுடன் கங்கையில் சரிந்து இறங்கும் சாலையை நோக்கினாள். இருபக்கமும் மரங்களின் நிமிர்வும் கனமும் கூடிக்கூடி வந்தன. பெரும்கற்கோபுரங்களென மருதமரங்கள். சடைதொங்கும் ஆலமரங்கள். கருங்கால் வேங்கை. வண்டிச்சகடங்களின் ஒலி மாறுபட்டது. சக்கரங்களை உரசும் தடைக்கட்டைகளின் ஓசை. குதிரைகளின் குளம்புகள் தயங்கும் ஒலி. அவற்றின் பெருமூச்சொலி.

கங்கை தெரிந்தது. ஆனால் சிலகணங்கள் அது கங்கை என அவளால் அறியமுடியவில்லை. மரங்களுக்கு அப்பால் நீலவானம் இறங்கியிருப்பதாகவே எண்ணினாள். அதன் ஒளியில் மரங்களின் இலைவிளிம்புகள் கூர்மைகொண்டன. அது நதியென உணரச்செய்தது அங்கிருந்து வந்த நீரை ஏந்திய குளிர்காற்றுதான். அந்த எண்ணம் வந்ததுமே கரைப்பாசிகளின் சேற்றின் வாசனையையும் உணர்ந்துகொண்டாள்.

ரதங்களும் வண்டிகளும் நின்றன. அரண்மனைச்சேடியர் நால்வர் வந்து குந்தியின் ரதத்தை அணுகி பின்பக்கம் படிப்பெட்டியை எடுத்துப்போட்டு "அரசிக்கு வணக்கம்" என்றனர். அவள் இறங்கி கூந்தலை சீர் செய்து காற்றிலாடிய மேலாடையை இழுத்துச் சுற்றியபடி கங்கையைப் பார்த்தாள். கரைவிளிம்புக்கு அப்பால் நீண்ட மணற்சரிவின் முடிவில் நுரைக்குமிழிகளாலான அலைநுனிகள் வளைந்து வளைந்து நெளிந்துகொண்டிருந்தன. நெடுந்தொலைவுக்கு அப்பால் நாலைந்து பெரிய வணிகப்படகுகள் விரிந்த சிறகுகளுடன் சென்றன. கரைமுழுக்க காகங்கள் கூட்டமாக எழுந்து அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. நீரில் ஒரு சிறிய கரும்படகு அலைகளில் எழுந்தாடியபடி நின்றது.

அவள் வந்திறங்கிய படித்துறை அல்ல அது என்று தெரிந்தது. அந்தக்கரையை ஒட்டி அடர்ந்த காடு நீண்டு சென்றது. அந்தச்சாலை படித்துறை எதையும் சென்று சேரவில்லை. அதிகமாக எவரும் வராத சாலை என்பதும் சிலநாட்களுக்கு முன்னர்தான் அது சீரமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. பெருங்கரைக்குமேல் புதர்களை வெட்டி ஒருக்கிய செம்மண்ணாலான ரதமுற்றத்தில் இருபது ரதங்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். வேலேந்திய காவலர்கள் தொலைவில் காவலுக்கு நிற்க வெண்ணிறத்தலைப்பாகை அணிந்த சேவகர்கள் வண்டிகளிலிருந்து இறக்கிய பொருட்களுடன் கங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

தொலைவில் பேரரசியின் ஆமைக்கொடி பறக்கும் முதன்மை ரதம் நின்றது. சத்யவதி அதிலிருந்து இறங்கி கங்கைக்கரையோரமாக கட்டப்பட்டிருந்த தழைப்பந்தலில் போடப்பட்ட பீடத்தில் சென்று அமர்ந்தாள். அருகே சியாமை நின்றிருக்க காவலர்களும் அமைச்சர்களும் சூழ்ந்திருந்தனர். அவளைத் தொடர்ந்து வந்த இரு ரதங்களில் இருந்து காந்தாரியும் தங்கையரும் இறங்கி அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு தழைப்பந்தலை நோக்கி சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்டனர்.

சேடிப்பெண் "தங்களுக்கான பந்தல் ஒருங்கியிருக்கிறது அரசி" என்றாள். அனகை அவள் பெட்டியுடன் பின்னால் வந்தாள். குந்தி அப்பகுதியில் கங்கையின் ஆலயமேதும் இருக்கிறதா என்று நோக்கினாள். மணல்கரையை ஒட்டி இடைநிறைத்த புதர்களுடன் பெருமரம் செறிந்த காடுதான் பச்சைக்கோட்டைச்சுவரென நீண்டு சென்றது. அவள் தனக்கான தழைப்பந்தல் நோக்கிச் செல்கையில் சியாமை வந்து வணங்கி "அரசி, தங்களை பேரரசி அழைக்கிறார்" என்றாள்.

குந்தி சத்யவதியின் பந்தலை அணுகி "பேரரசியை வணங்குகிறேன்" என்று தலைவணங்கி நின்றாள். அவளிடம் தன்னருகே இருந்த பீடத்தில் அமரும்படி சத்யவதி கைகாட்டினாள். அமர்ந்ததும் "களைத்திருக்கிறாய்..." என்றாள் சத்யவதி. குந்தி "என் கடமைகள் இவை" என்றாள். சத்யவதியின் புன்னகை பெரிதாகியது. "எப்போதுமே அரசியைப்போலப் பேசுகிறாய். அரசியைப்போலவே இருக்கிறாய்... இதை எங்கே கற்றாய்?" என்றாள். குந்தி மெல்ல தலைதாழ்த்தி "அஸ்தினபுரியின் மாண்பு எப்போதும் என் நெஞ்சில் உள்ளது" என்றாள். "நீ நேற்று அரியணையில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்தேன். தேவயானியின் அரியணை அதற்குரியவளை அதுவே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிடுகிறது என நினைத்தேன்" என்றாள் சத்யவதி. "தங்கள் நற்சொல் அது" என்றாள் குந்தி.

சத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. "ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்." குந்தி ஒன்றும் சொல்லவில்லை. "நன்னாளில் நான் தீதென ஏதும் சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் கைவருக! மகிழ்வும் நீடிக்குமாறாகுக! என்று வாழ்த்தவே விரும்புகிறேன்" என்றாள் சத்யவதி.

கீழே மணல்கரையில் வைதிகர்கள் இறங்கிச்செல்வதை குந்தி கண்டாள். அங்கே அவர்கள் அமர்ந்துகொள்வதற்காக தர்ப்பைப்புல் விரிக்கப்பட்டது. சூதர்கள் இடப்பக்கம் சற்று அப்பால் நின்றுகொண்டனர். சேடிகள் கரையிறக்கத்தில் கூடி நின்றனர். வைதிகர் செங்கற்களை அடுக்கி வேள்விக்கான எரிகுளம் அமைக்கத்தொடங்கினர். இரு சேவகர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் மூங்கிலை அங்கே மண்ணில் நாட்ட அருகே கங்கையின் மீன் இலச்சினைக்கொடியை இருவர் நட்டனர்.

"நான் உன்னிடம் ஒரு செய்தியைச் சொல்லவே அழைத்தேன்" என்றாள் சத்யவதி. "நேற்று முடிசூட்டலுக்குப்பின் ஷத்ரியர் அவையில் இந்தப்பேச்சு எழுந்திருக்கிறது. நீ யாதவப்பெண். பாண்டு முடிசூடப்போவதில்லை என்பதனால்தான் உன்னை மணமகளாக்க தேவவிரதன் முடிவெடுத்தான். ஷத்ரியர்களும் அதை ஏற்றனர்." குந்திக்கு அவள் சொல்லப்போவதென்ன என்று புரிந்தது. அவள் தலையசைத்தாள்.

"யாதவர் குலத்தில் பெண்களுக்குரிய மணமுறைகள் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொள்பவை அல்ல. ஷத்ரியர்கள் பெண்ணின் கருத்தூய்மையை முதன்மையாகக் கருதுபவர்கள். ஆகவே அஸ்தினபுரியை ஆளும் மன்னனின் துணைவியாக ஒரு ஷத்ரியப்பெண் இருந்தாகவேண்டும் என்று ஷத்ரியர்கள் சினத்தில் கூவியிருக்கிறார்கள். முடிவில் அவர்கள் ஒருங்கிணைந்து பாண்டுவுக்கு ஒரு ஷத்ரிய மனைவியை மணம்புரிந்து வைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். தேவவிரதன் அதை ஏற்றிருக்கிறான்" என்றாள் சத்யவதி.

குந்தி தலையசைத்தாள். "ஆனால் நீயே மூத்தவள். ஆகவே அவனுக்கு மகள்கொடையளிக்க ஷத்ரியர் எவரும் முன்வரவுமில்லை. அப்போது மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை தேவவிரதன் ஏற்றுக்கொண்டான். இச்சடங்குகள் முடிந்தபின்னர் மாத்ரநாட்டுக்குச் சென்று மாத்ரியை பாண்டுவுக்கு துணைவியாகப் பெறுவதாக தேவவிரதன் ஷத்ரியர்களுக்கு உறுதியளித்திருக்கிறான்" என்றாள் சத்யவதி.

குந்தி தன் விழிகளில் எதுவும் தெரியாதபடி அகத்தை வைத்துக்கொண்டாள். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தவை அப்படியே நீடித்தன. சத்யவதி அவள் முகத்தை நோக்கியபின் "நீ அகத்தை மறைப்பதில் தேர்ந்தவள்" என புன்னகை செய்தாள். "உன் எண்ணங்களை நான் அறிவேன். நீ விழைந்தது மார்த்திகாவதியின் வெற்றியும் உன் யாதவக்குலங்களின் வளர்ச்சியும். அவற்றை நீ அடையமுடியும். தேவயானியின் அரியணையில் நீ அமர்ந்து முடிசூடவும் முடிந்திருக்கிறது. நீ விழைந்ததற்கும் அப்பால் வென்றிருக்கிறாய்."

குந்தி "ஆனால் இனி நான் அந்த அரியணையில் அமரமுடியாது அல்லவா?" என்றாள். "பாண்டுவின் மூத்த துணைவியாக நீயே இருப்பாய். ஆகவே நீயே பட்டத்தரசி. பாண்டு மீண்டும் ஒருமுறை அந்த அரியணையில் அமர்ந்து முடிசூடும் நிகழ்ச்சி நடந்தால்தான் அரியணையில் மாத்ரி முடிசூடி அமர்வாள். அவன் இருபெரும் வேள்விகளில் எதையாவது ஆற்றினால் மட்டுமே அவ்வாறு முடிசூடும் விழா நிகழும். அது நிகழ வாய்ப்பில்லை" என்றாள் சத்யவதி. "நீ தோற்கடிக்கப்படவில்லை குந்தி. உன் வெற்றி ஷத்ரியர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் இதைவிடவும் பெரிய கட்டுகளை உடைத்தபடிதான் இவ்வரியணையில் இத்தனைநாள் அமர்ந்திருக்கிறேன்."

குந்தி புன்னகைசெய்தாள். "நான் நினைத்தவை நினைத்தவாறு கைகூடும் என்ற எதிர்பார்ப்பையே இழந்துவிட்டேன்" என்று சத்யவதி சொன்னாள். "இக்கட்டுகள் இன்றி இந்நகரம் முன்னகருமென்றால் அதுவே போதும் என எண்ணத் தொடங்கிவிட்டேன். பெருகிவந்த அனைத்து இடுக்கண்களும் விலகி இவ்வண்ணம் இவையனைத்தும் முடிந்ததைவிட எனக்கு நிறைவூட்டுவது பிறிதொன்றில்லை."

சியாமை வந்து அப்பால் நின்று தலைவணங்கினாள். சத்யவதி எழுந்தபடி "கங்கைவணக்கம் என்பது அஸ்தினபுரியில் அரியணையமரும் அரசியர் மட்டும் செய்யும் ஒரு சடங்கு. அவர்களின் அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் கங்கையே சான்றளிப்பதற்காக இது நடத்தப்படுகிறது" என்றாள். குந்தி அவளையறியாமல் கங்கைக்கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சடங்குகளை நோக்கினாள். அனகை வந்து வணங்கி "அரசி, தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும்" என்றாள்.

தன் பந்தலுக்குள் சென்று குந்தி மரவுரியாடையை அணிந்துகொண்டாள். கொண்டையாக கட்டப்பட்டிருந்த கூந்தலைப்பிரித்து திறந்த தோள்களில் பரப்பிக்கொண்டாள். அனகை "கங்கைக்கரைக்குச் சென்று மணலை அள்ளி தங்கள் கற்பின் வல்லமையால் அதை ஒரு சிறு குடமாக ஆக்கி நீர் முகர்ந்து கரையில் கங்கையாக நிறுவப்பட்டுள்ள உருளைக்கல்லை மும்முறை முழுக்காட்டவேண்டுமாம்" என்றாள். அவள் விழிகளை குந்தியின் விழிகள் ஒருமுறை தொட்டுச்சென்றன. புன்னகையுடன் "இதற்கு முன்னர் தேவியர் அதைச்செய்திருக்கிறார்களா?" என்றாள். "பேரரசி?"

"ஆம்" என்றாள் அனகை. "அப்போது பேரரசிக்கும் ஒரு கரியகுழந்தை இருந்தது" என்றாள் குந்தி. எழுந்த புன்னகையை அனகை அடக்கிக்கொண்டாள். அவர்கள் இருவரும் வெளியே வந்தபோது சேடியர் கைகளில் தாலங்களுடன் காத்து நின்றனர். குந்தி கையில் பெரிய தாலத்தில் மலர்களும் கனிகளும் மஞ்சளரிசியும் நெய்விட்ட அகல்விளக்குமாக சரிவிறங்கி பூசனை நிகழுமிடத்துக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் சேடியர் குரவை ஒலியெழுப்பினர்.

அவள் வேள்விச்சுடர் அருகே சென்று நின்றாள். முதுவைதிகர் "அரசி, சுடரை வணங்குங்கள். இதிலிருந்து அந்த அகல்விளக்கை ஏற்றிக்கொள்ளுங்கள்" என்றார். குந்தி குனிந்து சுடரை வணங்கி அவிச்சாம்பலை நெற்றியிலணிந்தபின் அகல்திரியை ஏற்றிக்கொண்டாள். உடலால் காற்றை மறைத்து சுடர் அணையாமல் மெல்ல கங்கையை நோக்கிச் சென்றாள். அவளுடன் வந்த முதியசேடிப்பெண் அவள் செய்யவேண்டியதென்ன என்று மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

இடைவரை நீரில் இறங்கி நின்று தாலத்தை நீரில்மிதக்கவிட்டு கங்கையை மும்முறை வணங்கி அதிலிருந்த மலரையும் கனிகளையும் நீரில் விட்டாள். அங்கே நீர் மெல்லச்சுழன்றுகொண்டிருந்தது. அகல்விளக்கு சுடருடன் மும்முறை நீரில் சுற்றிவந்தபின் விலகிச்செல்ல கரையில் நின்றவர்கள் "கங்கையன்னையே வாழ்க! அழிவற்ற பெருக்கே வாழ்க! பகீரதன் புதல்வியே வாழ்க! முக்கண்ணன் தோழியே வாழ்க!" என்று வாழ்த்துரை கூவினர்.

மேலும் முன்னால் சென்று மார்பளவு நீரில் நின்றாள் குந்தி. கால்களில் மிதிபட்ட மண்ணை உணர்ந்ததுமே அவ்விடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஏன் அத்தனை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என அவளுக்குப் புரிந்தது. நீரில் மூழ்கி அந்த மண்ணைப்பார்த்தாள். மணல்போலவே தெரிந்தாலும் அது அரக்கைப்போல உறுதியான பசையாக இருந்தது. மேலே எழுந்து மூச்சு வாங்கும்போது அதன் ஒருபகுதியை கால்களால் மிதித்து பிரித்தபின் மீண்டும் மூழ்கி அந்த மண்ணை தன் இருகைகளாலும் அழுந்தப்பற்றி பிய்த்து உருட்டி எடுத்துக்கொண்டாள்.

கைநிறைய அந்த மண்ணுடன் அவள் கரைநோக்கி வந்தபோது வாழ்த்தொலிகள் மேலும் உரத்தன. அவள் கரையில் கால்மடித்து அமர்ந்து அதை கையிலேயே வைத்து சிறிய கலம்போலச் செய்தாள். மணலால் ஆன கலம் போலவே தோன்றியது அது. அந்தக்கலத்தைக் கையிலேந்தி அவள் எழுந்தபோது குரவையொலிகளும் வாழ்த்தொலிகளும் சூதர்களின் இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து முழங்கின. கங்கையின் நீரை அதில் அள்ளி எடுத்து வந்தாள். வேள்விக்களத்தின் தென்மேற்கு மூலையில் கங்கையாக நிறுவப்பட்டிருந்த வெண்ணிறமான உருளைக்கல்மேல் அந்த நீரைப் பொழிந்து முழுக்காட்டினாள்.

மும்முறை முழுக்காட்டியதும் கலம் சற்று நெகிழத்தொடங்கியிருந்தது. அவள் அதைத் திரும்பக்கொண்டுசென்று நீரில் விட்டாள். அவள் திரும்பி வந்து அமர்ந்ததும் காந்தாரியும் பத்து தங்கைகளும் அவளுடன் வந்து அமர்ந்துகொண்டனர். கங்கைக்கு மலரும் தீபமும் காட்டி பூசனைசெய்தனர். அவர்கள் வணங்கி எழுந்ததும் வைதிகர் வேள்விச்சாம்பலையும் எரிகுளத்துக் கற்களையும் கொண்டுசென்று கங்கையில் ஒழுக்கினர்.

வைதிகர் கங்கையில் மூழ்கி எழுந்து வேதகோஷத்துடன் கங்கை நீரை பொற்குடங்களில் அள்ளி தலையில் ஏற்றிக்கொண்டு கரைநோக்கிச் சென்றதும் முதியசேடி "அரசியர் நீராடி வருக" என்றாள். குந்தி தனியாக கங்கை நோக்கிச் சென்றாள். சத்யசேனையின் கரம்பற்றி காந்தாரி நடந்தாள். சத்யவிரதையும் சுஸ்ரவையும் இரு சிறுமிகளையும் கைப்பிடித்துக்கொண்டு நீரில் இறங்கினர்.

மும்முறை நீரில் மூழ்கி எழுந்து தோளில் ஒட்டிய கூந்தலை பின்னால் தள்ளி சுழற்றிக் கட்டிக்கொண்டாள் குந்தி. சத்யசேனை மெல்லியகுரலில் "யாதவப்பெண்ணின் கற்புக்கும் சான்றுரைக்கிறது கங்கை!" என்றாள். குந்தி தலைதிருப்பி அவள் கண்களை நோக்கி "தேவயானியின் மணிமுடியை அவமதித்து இன்னொரு சொல்லைச் சொல்ல நான் எவரையும் அனுமதிக்கப்போவதில்லை. எவராக இருந்தாலும் மறுகணமே அந்நாவை வெட்டவே ஆணையிடுவேன்" என்றாள். காந்தாரி திகைத்து சத்யசேனையின் தோளைப்பற்றிக்கொண்டாள். காந்தார இளவரசிகளின் விழித்த பார்வைகளை முற்றிலும் தவிர்த்து நீரை அளைந்து மணல்மேல் ஏறி குந்தி கரைநோக்கிச் சென்றாள்.

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 2 ]

கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது.

தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் கேட்டாள். அவள் "அங்குதான் மாமன்னர் சித்ராங்கதருக்கு நீர்க்கொடையும் பலிக்கொடையும் அளிக்கிறார்கள். சித்ராங்கதர் கந்தர்வனாக மாறி அங்கே கோயில்கொண்டிருக்கிறார்" என்றாள். சித்ராங்கதனின் கதையை குந்தி முன்னரே அறிந்திருந்தாள். அவள் புன்னகை செய்வதைக் கண்ட ருத்ரை "மாமன்னர் சித்ராங்கதனை வழிபட்டால் மனக்குழப்பங்கள் அகலும் என்று கணிகர்கள் சொல்கிறார்கள்" என்றாள். "இக்கட்டுகளில் முடிவெடுக்க முடியாதபடி நாம் இருக்கையில் அங்கே செல்லவேண்டும்."

"அங்கு செல்வதா வேண்டாமா என்பதையும் ஓர் இக்கட்டாகக் கொள்ளலாமா?" என்றாள் குந்தி. ருத்ரையால் அந்தவகையான நகைச்சொற்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. "தாங்கள் அஸ்தினபுரியின் முடியைச் சூடியிருப்பதனால் அங்கு சென்று மலர்க்கடன் செலுத்தவேண்டும் என்று பேரரசி சொன்னார்கள்" என்றாள். "காந்தாரத்து அரசியும் இன்னும் அங்கே செல்லவில்லை. மாத்ரநாட்டரசியாரும் செல்லவில்லை. அதைப்பற்றி சிலநாட்களாகவே பேரரசி சொல்லிக்கொண்டிருந்தார்கள்."

சித்ராங்கதனைப்பற்றியோ விசித்திரவீரியனைப்பற்றியோ சத்யவதி பேசுவதேயில்லை என்பதை குந்தி மனம்குறித்திருந்தாள். ஒரேஒருமுறை அவள் விசித்திரவீரியனைப்பற்றி பேசமுனைந்தபோது "அவன் அமரன். அவனை நான் கனவுகளிலும் காண்பதில்லை. அவனுடைய எந்த எச்சமும் மண்ணில் இல்லை என்பதற்கு அதுவே சான்று" என்று சொல்லி சத்யவதி பேச்சை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

முன்னால் சென்ற பேரரசியின் அணிரதத்தின் கொடி சக்கரத்தின் அசைவுகளில் ஆடியும் அதிர்ந்தும் சென்றது. மண்சாலை சென்ற பெருமழைக்காலத்தில் முழுமையாகவே அரிக்கப்பட்டு ஓடைகள் ஊடறுக்க மேடுபள்ளமாக இருந்தது. பேரரசியின் பயணம் அறிவிக்கப்பட்டதும் மண்ணை அள்ளிப்போட்டு விரைவாகச் செப்பனிட்டிருந்தனர். ரதங்கள் அலைகளில் ஓடங்கள் போலச் சென்றன. சகடஒலி பாதையை நிறைத்திருந்தது.

பின்பக்கம் மாத்ரியின் ரதமும் அதற்கும் அப்பால் காந்தார இளவரசியரின் நான்கு ரதங்களும் அதற்கும் அப்பால் படைக்கலமேந்திய காவலர்களின் குதிரைகளும் வந்தன. சாலையிலிருந்து எழுந்த செந்நிறமான தூசு மேகம்போல சுருண்டு எழுந்து குவைகளாக மாறி பின்காலை வெயிலில் சுடர்ந்துகொண்டிருக்க சகடங்களில் இருந்து தெறித்த சிறிய பரல்கற்கள் ஒளியுடன் அனல்துளிகள் போலப் பறந்தன.

காலையில் தட்சிணவனத்துக்குக் கிளம்புவதைப்பற்றி அவள் பாண்டுவிடம் சொன்னபோது அவன் "நான் அங்கே செல்லவேண்டுமென விரும்பத்தொடங்கி பதினைந்து வருடங்களாகின்றன. ஆனால் செல்லும் துணிச்சல் எனக்கு வரவில்லை" என்றான். "ஏன்?" என்று அவள் கேட்டாள். "அங்கே ஒரு நீலத்தடாகம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு குஹ்யமானசம் என்று பெயர். அதில் பார்த்தால் நாம் யார் என அது காட்டிவிடும். நான் யார் என அது காட்டிவிட்டால் அதன்பின் நான் எப்படி வாழமுடியும்?" என்றான். உரக்கச்சிரித்து "விதவிதமான வண்ணச்சித்திரங்களை என்மேல் வரைந்துகாட்டி நான் நான் என்று நடித்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் பாண்டு.

"இந்தவகையான அலங்காரப்பேச்சுக்கள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றன" என்றாள் குந்தி. "ஆம், இதுவும் என் வேடம்தான். என் மொழியின் வண்ணங்கள்" என்றபின் சிரித்து "இச்சிரிப்பு இன்னொரு வேடம்" என்றான். குந்தி "எனக்கு நேரமில்லை. வெண்ணிற ஆடை அணியவேண்டும் என்றாள் சியாமை. வெண்ணிறக் கற்கள் கொண்ட அணிகளை எடுத்துவைக்கச் சொல்லியிருந்தேன்" என்றபடி எழுந்துகொண்டாள்.

"இளையவள் அணிகொண்டுவிட்டாளா?" என்று பாண்டு கேட்டான். அவள் கண்களில் வந்த மாறுதலைக் கண்டு "பார்த்தாயா, உன் கண்கள் ஒருகணம் எரிந்தணைந்தன. இதைத்தான் நான் எப்போதும் சொல்லிவருகிறேன்" என்றான். குந்தி புன்னகை செய்து "அந்தக்கனல் எப்படியும் சற்று இருக்கும். சிலநாட்களில் அதுவும் அணைந்துவிடும்" என்றாள். திரும்பி தன் அணியறைக்குச் செல்லும்போது அதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டாள். ஏன் மாத்ரியின் பெயர் சொல்லப்பட்டதுமே ஒவ்வொரு முறையும் கோல்கண்ட சர்ப்பம் போல அகம் சீறி எழுகிறது?

கங்கைவணக்கம் முடிந்து மீண்ட அன்றுமாலை அவள் பாண்டுவிடம் இயல்பாக பீஷ்மர் மாத்ரநாட்டுக்குச் செல்லவிருப்பதைப் பற்றிச் சொன்னாள். லதாமண்டபத்தில் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்த அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். "மாத்ரநாட்டுக்கா? எதற்குச்செல்கிறார்?" என்றான் பாண்டு. "ஷத்ரியர்கள் எதிர்க்கிறார்கள். ஒரு சூத்திரப்பெண் தேவயானியின் மணிமுடியைச்சூடி அரியணை அமரக்கூடாதென்கிறார்கள்" என்றாள் குந்தி.

பாண்டு எதையும் உய்த்துணராமல் திரும்பி "ஏன் பேரரசி மச்சகுலத்துப் பெண்தானே?" என்றான். "இல்லையே. சூதர்கதைகளின்படி அவர் சேதிநாட்டரசர் உபரிசிரவஸுக்கு அத்ரிகை என்னும் அப்சரப்பெண்ணின் வயிற்றில் பிறந்தவர். மச்சர்குலத்தில் வளர்ந்தவர், அவ்வளவுதான்." குந்தி புன்னகையுடன் "இந்த அரண்மனையிலேயே வேறுவகையான வரலாறுகள் மெல்லமெல்ல இல்லாமலாக்கப்பட்டுவிட்டன" என்றாள்.

பாண்டு உரக்கச்சிரித்து "சரி உன்னைப்பற்றியும் சூதர்களிடம் கதைகள் புனைய ஆணையிடுகிறேன். நீ நாகங்களின் அரசனான பூர்ணாங்கதனுக்கு ருக்மி என்னும் யட்சப்பெண்ணில் பிறந்தவள். பிரம்மனின் சாபத்தால் அந்த யட்சி ஒரு மானாக காட்டில் துள்ளிக்கொண்டிருந்தபோது அவ்வழிச்சென்ற நாகராஜனை தவறுதலாக மிதித்துவிட்டாள். சினம் கொண்ட பூர்ணாங்கதன் என்னும் நாகம் அவளைக் கொத்தியபோது அந்த விஷம் விந்துவாக மாறி மான் கருவுற்று நீ பிறந்தாய்!" என்றான். மேலும் சிரித்து "அடடா, நாபோனபோக்கில் வந்த கதை. ஆனால் சொல்லிப்பார்க்கையில் அழகாகத்தான் இருக்கிறது" என்றான். "மானின் மிரட்சியும் நாகத்தின் சீற்றமும் கலந்த அழகி நீ என சூதர்கள் கவிதைபாடலாமே!"

"விளையாட்டு இருக்கட்டும். நான் சொல்லவந்தது அதுவல்ல. அஸ்தினபுரியின் அரியணையில் ஒரு யாதவப்பெண் அமரக்கூடாது என்கிறார்கள் ஷத்ரியர்கள்" என்றாள் குந்தி. "அரியணை அமர்வது அரசன் அல்லவா?" என்றான் பாண்டு வரைந்தபடி. "ஆம், ஆனால் பெரும்பாலான ஷத்ரியர்களின் அகத்தில் இப்போதும் பெண்முறை மரபின் மனநிலைகளே நீடிக்கின்றன" என்றாள் குந்தி. பாண்டு திரும்பி வண்ணம் சொட்டி நின்ற தூரிகையுடன் "அதற்கு என்ன செய்யவேண்டும் என்கிறார்கள்?" என்றான்.

"அரியணையில் அமர்வதற்கு அஸ்தினபுரிக்கு ஒரு ஷத்ரியஅரசி வரவேண்டும் என்கிறார்கள்" என்றாள் குந்தி. பாண்டு சிரித்தபடி திரும்பிக்கொண்டு "வரட்டுமே... நான் ஏழெட்டு ஷத்ரிய இளவரசிகளை குதிரையில் சென்று தூக்கிவரும் திட்டத்துடன் இருக்கிறேன்" என்றான். "விளையாட்டல்ல. ஷத்ரியர்கள் பீஷ்மபிதாமகரிடம் அதை வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் ஒப்புக்கொண்டாராம்."

பாண்டு திரும்பிப்பார்த்தான். "ஆனால் ஷத்ரியர்கள் எவரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து தன் தங்கை மாத்ரியை அளிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். பீஷ்மபிதாமகர் அதை ஏற்றிருக்கிறார். அவர் நாளை மாத்ரநாட்டுக்குக் கிளம்பிச்செல்கிறார்" என்றாள் குந்தி. பாண்டு தூரிகையை வைத்துவிட்டு வந்து மண்டபத்தில் அமர்ந்துகொண்டான். துணியில் கைகளைத் துடைத்தபோது அவை நடுங்குவதை குந்தி கண்டாள்.

பாண்டு வெளுத்த உதடுகள் நடுங்க "பிதாமகரை எவரேனும் வற்புறுத்தமுடியுமென எண்ணுகிறாயா?" என்றான். குந்தி பதில் சொல்லவில்லை. "இது அவரது திட்டம். ஷத்ரியர்கள் அவரது சதுரங்கக் காய்கள் மட்டுமே. அஸ்தினபுரியின் அரியணைக்கு ஷத்ரியர்களின் பின்துணை தேவை என நினைக்கிறார்... அல்லது..." குந்தி புன்னகையுடன் "...பேரரசி சத்யவதியின் எண்ணத்தை முறியடிக்கிறார். யாதவர்கள் மச்சர்கள் கங்கர்கள் என சூத்திரர்களின் ஒரு கூட்டாக அஸ்தினபுரி தோற்றமளிக்கலாகாது என எண்ணுகிறார்."

"ஆம், ஷத்ரியர்களிலிருந்து ஓர் அரசி வந்து அஸ்தினபுரியின் அரியணையிலமர்ந்தால் பேரரசியின் எண்ணங்கள் நடக்காது" என்றாள் குந்தி. "அத்துடன் அவர் மாத்ரநாட்டை கம்சனிடமிருந்து காக்கவும் நினைக்கிறார். இந்த மணம் மாத்ரநாட்டுக்கு அஸ்தினபுரியின் படைகளின் துணையை உறுதிசெய்கிறது" என்று குந்தி சொன்னாள். பாண்டுவின் உடல் மெல்ல அசைந்தது. அந்த அசைவை வேறெதையும் விட நுட்பமாக அவள் அறிந்துகொண்டாள். அவன் அகம் செல்லுமிடமென்ன என்று உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கையுடன் மங்கலடைந்தன.

பாண்டு "சல்லியருக்கு வேறு எண்ணங்களுமிருக்கலாம்" என்றான். "என்ன எண்ணங்கள்?" என்றாள் குந்தி. "இங்கே தன் தங்கையை அனுப்ப." குந்தி அதே குரலில் "அதனாலென்ன?" என்றாள். "உனக்கு எதிராக" என்று பாண்டு எழுந்து மீண்டும் தூரிகையை எடுத்தபடி சொன்னான். அந்த அசைவு அவன் கண்களையும் முகத்தையும் மறைக்கத்தான் என குந்தி அறிந்தாள். சில கணங்களுக்குப்பின் "எனக்கு எதிராக அவர் ஏன் செயல்படவேண்டும்?" என்றாள். "அவர் சுயம்வரத்துக்கு வந்திருந்தாரல்லவா?" குந்தி உதட்டை பற்களால் கடித்து "ஆம், ஆனால் அங்கே ஷத்ரியர்களும் யாதவர்களும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர்" என்றாள்.

"ஆம், ஆனால் அவருக்கு ஏதோ கசப்பு இருக்குமென்று தோன்றியது" என்றபடி பாண்டு வரையத்தொடங்கினான். அவன் வரையவில்லை, வரைவதுபோல நடிக்கிறான் என்பது தூரிகையின் நுனியால் தெரிந்தது. குந்தி "கசப்பு இருந்தால் ஏன் அவர் தன் தங்கையை இங்கே அனுப்பவேண்டும்?" என்றாள். பாண்டு சினத்துடன் தூரிகையை வீசி விட்டு திரும்பி "நான் இதை ஏற்கப்போவதில்லை. நான் பிதாமகரிடம் சென்று சொல்லப்போகிறேன். இனிமேலும் இந்த கீழ்நாடகங்களை என்னால் நடிக்கவியலாது" என்றான்.

"அதனால் எந்தப்பயனும் இல்லை. பிதாமகரும் பேரரசியும் சேர்ந்து எடுத்த முடிவு. சல்லியருக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது" என்றாள் குந்தி. "அந்தமுடிவை அவர்கள் மாற்றிக்கொள்ளமுடியாது. அஸ்தினபுரியின் அரசுக்கான முடிவு இது. நீங்கள் அரசர் அவ்வளவுதான்." "நான் இறந்துவிட்டால்...? இந்த அரண்மனை முற்றத்தில் கழுத்தைவெட்டிக்கொண்டு விழுந்தால்?" என்றான் பாண்டு. அவன் கண்களில் நீர் மெல்லிய படலமாக மின்னியது. நடுங்கும் விரல்களால் தன் மேலாடையைப் பற்றிக்கொண்டான்.

"அதைச்செய்யலாம்" என்றாள் குந்தி. "அதைவிட ஒன்று செய்யலாம், உங்கள் உடல்நிலையைப் பற்றி அவையில் சொல்லலாம். அதுவும் இறப்புக்கு நிகர்தான்." கால்தளர்ந்து பாண்டு அமர்ந்துகொண்டான். "நான் என்ன செய்வேன்? ஒரு கூண்டுமிருகத்துக்குரிய வாழ்க்கைகூட எனக்கில்லையா என்ன?" அவன் கண்ணிமைகளில் கண்ணீர் துளித்து நின்றது. "குந்தி, எனக்கு நீதான் காவல். நீ பிதாமகரிடம் சென்று சொல். நான்..." அவன் உதட்டை இறுக்கிக்கொண்டான். பின்பு தன் குளிர்ந்த கைகளால் அவள் கைகளைப்பற்றியபடி "நான் உனக்கு ஒரு மைந்தனைப்போல மட்டுமே என்று சொல்" என்றான்.

"அது இந்த அரண்மனையில் அனைவருக்கும் தெரியும். சுயம்வரத்துக்கு வரும்போதே பிதாமகருக்குத் தெரியும்" என்றாள் குந்தி. "நீ சென்று சொல். நான் ஒப்புக்கொள்ளமுடியாதென்று சொல். நான் உயிர்வாழமாட்டேன் என்று சொல். என்னை இந்த இழிவிலிருந்து தப்பவை. நீ கைவிட்டால் எனக்கு வேறுவழியே இல்லை" என்று பாண்டு அவள் கைகளை அசைத்தான். குந்தி "நான் நன்கு சிந்தித்தபின்புதான் இந்த முடிவை எடுத்தேன்" என்றாள். "நீங்கள் மாத்ரியை மணம்புரிவதே நல்லது."

"விளையாடாதே... நீ அறியாதது அல்ல" என்றான் பாண்டு. குந்தி "ஆம் எனக்கு உங்கள் உடலைப்பற்றி நன்றாகத் தெரியும். உள்ளத்தைப்பற்றியும் தெரியும்" என்றாள். "அதனால்தான் சொல்கிறேன். அவள் உங்களுக்குத் தேவை." அவன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டுப்பார்த்தான். "நான் உங்கள் தோழி அல்ல. என்னை நீங்கள் வணங்குகிறீர்கள். உங்கள் அன்னையைவிட மேலான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். முதல்நாள் இரவிலேயே அது நிகழ்ந்துவிட்டது." பாண்டு தலையசைத்தான்.

"அவள் உங்கள் விளையாட்டுத் தோழியாக இருக்கக்கூடும்" என்றாள் குந்தி. "காமத்துணைவியாகவும் இருக்கலாம்." பாண்டு திகைத்து எழுந்துவிட்டான். "அதெப்படி?" என்றான். "என் உடல்..." என அவன் சொல்லத்தொடங்கியதும் "உங்கள் உடலைப்பற்றி நானறிவேன்" என்றாள் குந்தி. "நீங்கள் கனவில் இருக்கையில் உடல் காமம் கொள்வதைக் கண்டிருக்கிறேன்." பதறும் கைகளை சேர்த்துக்கொண்டு பாண்டு அவளைப் பார்த்தான். "என்னை வதைக்காதே... தயவுசெய்து."

"ஆம், நான் கண்டிருக்கிறேன். நான் உங்கள் கனவுகளைக்கூடச் சொல்லிவிடமுடியும்." பாண்டு வாய்திறந்து ஒருகணம் திகைத்தபின் தீப்பிடித்ததுபோல சிவந்த முகத்துடன் "வாயைமூடு..." என்று கூவினான். திரும்பி அருகே கிடந்த தன் வாளை எடுத்துக்கொண்டு "கொன்றுவிடுவேன்... உன் கழுத்தை அறுத்துவிடுவேன்" என்றான். அவன் கையில் அந்த வாள் நடுங்கியது. பின்பு அதைத் திருப்பி "என் கழுத்தை அறுப்பேன்..." என்றான்.

"தேவையில்லை... அதைத்தான் சொல்லவந்தேன்" என்றாள் குந்தி. "நீங்கள் மாத்ரியை மணந்தால்போதும். உங்கள் காமத்தை நனவிலும் அடையமுடியும். அவளைப்பற்றிக் கேட்டேன். மிக இளையவள். விளையாட்டன்றி ஏதுமறியாத பேதை..." பாண்டு திரும்பிக்கொண்டான். "மாத்ரி நிலவின்மகள். முழுநிலவில் மலர்ந்த அல்லிபோல வெண்ணிறமான பேரழகு கொண்டவள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்." பாண்டு உடலின் எடை கூடுவதுபோல தளர்ந்து மீண்டும் அமர்ந்துகொண்டான்.

குறுகிய தோள்களுடன் குனிந்து அமர்ந்திருக்கும் அவன் தலையை தன் கைகளால் வருடி "நான் உங்கள் நலனுக்காகவே சொல்கிறேன். தீது ஏதும் வராது" என்றாள் குந்தி. அவன் உடல் மேலும் இறுகியது. "அவளை களித்தோழியாகப் பெற்றால் நீங்கள் விடுதலைகொள்ள முடியும்" என்றாள் குந்தி. பாண்டு அழுதபடி அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். "எனக்கு அச்சமாக இருக்கிறது. இறந்துவிடுவேனோ என்று தோன்றுகிறது..." என்று அவன் சொற்கள் அவள் ஆடைக்குள் கசங்கி ஒலித்தன. "நான் சாகவிரும்பவில்லை பிருதை. நான் எந்த இன்பத்தையும் அடையவில்லை. எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை. ஆனாலும் நான் சாகவிரும்பவில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. நான் அஞ்சுவது சாவைத்தான்... நான் வாழ விரும்புகிறேன்... நான் சாகவிரும்பவில்லை."

அவள் அவன் குழல்களை கையால் வருடியபடி "ஒன்றும் ஆகாது. நான் இருக்கிறேன்" என்றாள். "அவள் வரட்டும். அவள் உங்களுக்கு வாழ்வைத்தான் அளிப்பாள்" என்றாள். அவன் மெல்ல விம்மிச் சோர்ந்து அமைந்தான். அவள் அவன் முகத்தை கையிலேந்தி "என்ன அச்சம் அப்படி?" என்றாள். சிவந்த உதடுகளில் சிரிப்புடன் பாண்டு கண்களைத் திருப்பிக்கொண்டு "நான் இறந்துபோனால் உனக்கு வேறு சதுரங்கக்காய் இல்லை அல்லவா"’ என்றான். குந்தி புன்னகைசெய்து "அதுதான் அச்சமா?" என்றாள்.

குந்தி அவன் கண்களுக்குள் நோக்கி "நான் வந்தபின் உங்கள் இயல்பே மாறிவிட்டது. உங்கள் விளையாட்டுத்தனம் முற்றிலும் அகன்று வெற்றுச்சிரிப்பு ஒன்று எப்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதை பிதாமகர் கண்டிருப்பார். ஆகவேதான் மாத்ரிதேவியை உங்களுக்காகத் தேடுகிறார்" என்றாள். பாண்டு ஏறிட்டு நோக்கினான். "உங்கள் உயிராற்றல் இருப்பது அந்த விளையாட்டில்தான். விளையாடாதபோதுதான் நீங்கள் இறப்பைநோக்கிச் செல்கிறீர்கள். ஆகவேதான் பிதாமகர் உங்களுக்கு ஓர் விளையாட்டுத்தோழியை தேடுகிறார். அதுசரியான முடிவே என்று நானும் எண்ணுகிறேன்."

"உனக்குப் பொறாமை இல்லையா என்ன?" என்றான் பாண்டு. குந்தி "நானே ஆயிரம் முறை அதை கேட்டுக்கொண்டுவிட்டேன். இல்லை" என்றாள் குந்தி. "அவ்வாறு இருக்க வழியே இல்லையே" என்று அவன் புன்னகை செய்தான். "இல்லை... உண்மையிலேயே அவ்வுணர்ச்சி ஏதும் இல்லை" என்று அவள் சொன்னாள். "அவள் வரட்டும். அவளைக் கண்டபின் உனக்கு பொறாமை வரும்..." குந்தி "வராவிட்டால்?" என்றாள். "வராவிட்டால் நான் உன்னை வெறுக்கத் தொடங்கிவிடுவேன். உனக்கு என் மேல் அன்பில்லை என்றுதான் பொருள்" என்றான் பாண்டு சிரித்துக்கொண்டே.

பீஷ்மர் மாத்ரநாட்டிலிருந்து கன்னிக்கொடையாக மாத்ரியைப்பெற்று வரும்சேதி வந்தபோது அவள் தனக்குள் உற்று நோக்கிக்கொண்டாள். அகம் அமைதியாகவே இருந்தது. எதையும் அது இழக்கவில்லையா என்ன என வினவிக்கொண்டாள். ஐம்புலன்களும் அற்றுப்போன யானை போல அது நின்றிருக்கக் கண்டாள். அதிகாலையில் அஸ்தினபுரியின் பெருமுரசம் ஒலித்ததும் அரண்மனை முழுக்க பரபரப்பு உருவாகியது. அனகை அவள் அறைக்குள் வந்து "அரசி, மாத்ரநாட்டு அரசி நகர்நுழைகிறார்கள்" என்றாள். குந்தி தன் ஆடைகளை மீண்டும் திருத்திக்கொள்ள அனகை உதவினாள்.

"சிறியஅரசி அணிகொண்டுவிட்டார்களா?" என்றாள் குந்தி. "ஆம், அவர்கள் முன்னதாகவே அரண்மனைமுகப்புக்குச் சென்று விட்டார்கள்" என்றபின் மெல்லிய குரலில் "இரவிலிருந்தே அங்கே நின்றிருக்கிறார்கள் என்று சேடிகள் பகடி செய்கிறார்கள்" என்றாள். குந்தி புன்னகையுடன் "ஆம், மைந்தனுக்கு அரசு வந்துள்ளது. அரசியும் வந்தாக வேண்டுமல்லவா?" என்றாள். அவள் எந்தப்பொருளில் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அனகை "அவர்கள் சற்று நிலையழிந்துதான் போயிருக்கிறார்கள் அரசி. நேற்று முன்தினம் மூத்தஅரசியின் அணுக்கச்சேடியை அழைத்து கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்" என்றாள்.

"எதற்கு?" என்றாள் குந்தி. "வெறுமனே அழைத்திருக்கிறார்கள். அவள் வந்ததும் ஏன் தாமதமாக வந்தாய் என வசைபாடத் தொடங்கிவிட்டார்களாம்" என்றாள் அனகை. "மூத்த அரசி மறுமொழி அளிக்கவில்லையா?" என்றாள் குந்தி புன்னகையுடன். "மூத்த அரசி உடனே இளைய அரசியின் அணுக்கச்சேடியை வரச்சொல்லி ஆணையிட்டிருக்கிறார். செல்லவேண்டாமென இளைய அரசி தடுத்துவிட்டாராம்." குந்தி "இந்த விளையாட்டு அந்தப்புரத்துக்கு வெளியே வரலாகாது என்று அவர்களிடம் சொல். வந்தால் அதற்குரிய தண்டனையை அவர்கள் அடையவேண்டியிருக்கும்."

அஸ்தினபுரியின் மக்களின் வாழ்த்தொலி உரக்க ஒலிக்கத்தொடங்கியது. இடைநாழியில் நடக்கும்போது குந்தி "அந்த ஒலி அவளுக்காகவா?" என்றாள். "ஆம், மாத்ரநாட்டரசி ஷத்ரியப்பெண்ணல்லவா?" என்றாள் அனகை. "ஆம், பாவம் அஸ்தினபுரியின் மக்கள். ஷத்ரியகுலத்துக்கு தலைவணங்கும் நல்வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது" என்று குந்தி சொன்னாள்.

அரண்மனைமுற்றத்தில் வைதிகரும் சூதரும் தாசியரும் சேடிகளும் சூழ பேரரசி சத்யவதியும் அம்பாலிகையும் அருகருகே நின்றிருப்பதை குந்தி கண்டாள். அம்பாலிகை சத்யவதியிடம் புன்னகையும் சிரிப்பும் பணிவான உடல்மொழியுமாக பேசிக்கொண்டிருந்தாள். குந்தி புன்னகையுடன் அருகே வந்தபோது சத்யவதியின் விழிகள் வந்து அவள் விழிகளைத் தொட்டு புன்னகையை பகிர்ந்துகொண்டு மீண்டன. அம்பாலிகை "ஏன் தாமதம்? நான் உன்னை அழைத்துவரச்சொல்லி மூன்று சேடிகளை அனுப்பினேனே?" என்றாள். குந்தி "நான் முழுதணிக்கோலம் கொள்ளவேண்டுமல்லவா? வருவது அஸ்தினபுரியின் அரசி" என்றாள்.

அவள் நகையாடுகிறாளா என்ற சிறிய ஐயம் அம்பாலிகை கண்களில் வந்துசென்றது. அவள் திரும்பி சத்யவதியைப் பார்த்தாள். அங்கும் சிறிய நகையாடல் இருப்பதாகத் தோன்றியது. மேற்கொண்டு சொற்களும் அவளுக்குச் சிக்கவில்லை. ஆகவே கடுமையாக "அவர்கள் எந்நேரமும் இங்கே வந்துவிடுவார்கள்" என்றாள். காலையொளி முற்றத்தில் நீண்டுகிடந்தது. காலைவிடிந்ததுமே வேனிற்காலத்தின் வெம்மை உருவாகி ஆடைநனையும்படி வியர்வை எழுந்தது. திரைச்சீலைகளை அசைத்த காற்று அவ்வப்போது புல்கிக் குளிரச்செய்தது.

காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. பெருமுரசுகளும் வாழ்த்துக்களும் அருகே ஒலித்தன. மாத்ரநாட்டு அணித்தேர் கலப்பைச்சின்னம் கொண்ட மஞ்சள்நிறமான கொடி படபடக்க உள்கோட்டை வாயிலுக்குள் நுழைந்தது. அதன் சகடங்கள் கல்தரையில் ஏறியதும் ஒலி மாறுபட்டது. குதிரைக் குளம்புகள் கிணைப்பறைபோலத் தாளமிட்டன. ரதத்தின் மேல்தட்டில் கைகளைக்கூப்பியபடி மாத்ரி நின்றிருந்தாள். அவள்மீது மணிக்குடையின் முத்துத் தொங்கல்கள் குலுங்கின.

சேடிகள் வாழ்த்தொலி எழுப்பினர். வலப்பக்கம் நின்றிருந்த வைதிகர்குழு முன்னால் சென்று நிறைகுடத்து நீரை வேதமுழக்கத்துடன் தெளித்து மாத்ரியை வரவேற்க இடப்புறம் நின்றிருந்த சூதர்கள் மங்கல இசை எழுப்பினர். அணிப்பரத்தையர் எழுவர் முன்னால் சென்று சாமரம் காட்டி மாத்ரியை வரவேற்க அவர்களுக்குப்பின்னால் சத்யவதியும் குந்தியும் அம்பாலிகையும் சென்று அவளை எதிர்கொண்டனர். மங்கலத்தாலத்தில் இருந்த குங்குமத்தையும் மலரையும் எடுத்து மாத்ரியிடம் கொடுத்து சத்யவதி "மாத்ரநாட்டரசியை அஸ்தினபுரி வணங்கி எதிரேற்கிறது" என்றாள். "கோட்டைக்காவல் தெய்வங்களும் நகர்க்காவல் தெய்வங்களும் குலதெய்வங்களும் முதல்முழுத்தெய்வங்களும் அருள்க!"

குரவையொலிகள் சூழ அம்பாலிகையும் குந்தியும் மலரும் குங்குமமும் கொடுத்து மாத்ரியை வரவேற்றனர். மாத்ரி வலக்கையில் சுடர் அகலும் இடையில் பொற்குடத்தில் நிறைநீருமாக அரண்மனைப்படிகளில் ஏறுவதை குந்தி நோக்கி நின்றாள். குளிர் வந்து உடலைத் தாக்குவதுபோல ஓர் அகநடுக்கம் அவளில் நிகழ்ந்து உடல் அதிர்ந்தது. கணநேரத்துக்குப்பின் அந்த உணர்வுகளை முகத்திலிருந்து முற்றிலும் விலக்கி மலர்ச்சியை முகத்தசைகளில் நிலைநாட்டிக்கொண்டாள். உதட்டை விரித்து புன்னகையை நடித்தால் சிலகணங்களில் கண்களும் மனமும்கூட அப்புன்னகையை சூடிக்கொள்ளுமென அவள் கற்றிருந்தாள்.

தட்சிணவனத்தின் குன்றுமுகத்தில் ரதங்கள் ஒவ்வொன்றாக நின்றன. தடைக்கோல்கள் உரச சகடங்கள் ஒலியெழுப்பின. குதிரைகள் குளம்புகளை மிதித்து சற்றே திரும்பி கழுத்தைத் தூக்கி ஓசையுடன் செருக்கடித்தன. ரதமோட்டிய சூதர்களின் குரல்கள் எழுந்தன. முகப்பு ரதத்தில் இருந்து சத்யவதி இறங்கி நிற்க சேடியர் குடையும் சாமரமும் பிடித்தார்கள். தாலச்சேடியும் தாம்பூலச்சேடியும் இருபக்கமும் நின்றனர். குந்தி இறங்கிக்கொண்டாள். அப்பால் கலப்பைக்கொடி பறந்த ரதத்தில் இருந்து மாத்ரி இறங்கினாள்.

மந்தாரைமலர் போலிருந்தாள் மாத்ரி. தொட்டால் கைத்தடம் பதியுமோ எனத்தோன்றச்செய்யும் வெண்தோல். பெரிய கரிய விழிகள். மணிச்சரடுகளால் கட்டப்பட்டு கரிய நுரை போல சுருண்டு நிற்கும் கூந்தல். உருண்டமுகத்தில் சிவந்த மணிகள் போல சிறிய பருக்கள். சிறிய மூக்கு, சிறிய குமிழ் உதடுகள், நீளமற்ற கழுத்து, சற்றே கொழுத்த உயரமற்ற உடல். அவளைப் பார்க்கலாகாது என குந்தி அவள் வந்தகணம் முதல் எண்ணிக்கொண்டாலும் ஒவ்வொருமுறையும் அவளை நோக்கியே தன் பார்வை செல்வதையும் அறிந்திருந்தாள்.

குந்தி சத்யவதியை நோக்கிச் சென்றாள். சத்யவதி புன்னகை செய்து "இங்கே நான் வருடத்துக்கு ஒருமுறை நீர்க்கடனன்று மட்டுமே வருவேன். ஆனால் மக்கள் அடிக்கடி வருகிறார்கள்" என்றாள். குந்தி புன்னகை செய்தாள். அவ்வுரையாடலை சத்யவதி விரும்பினால் நீட்டிக்கட்டும் என எண்ணியவள்போல. மாத்ரியும் சேடிகளும் அருகே வந்தனர். அவளுக்குப் பின்னால் காந்தாரியும் தங்கையரும் வந்தனர். மாத்ரி புதுமணப்பெண்ணுக்குரிய திகைத்த கண்களுடன் அனைவருக்கும் பொதுவான புன்னகை ஒன்றை சூடியிருந்தாள். சத்யசேனையின் கண்கள் தன் முகத்தில் தொட்டுச் செல்வதை குந்தி உணர்ந்தாலும் ஒரு கணம்கூட திரும்பவில்லை.

சியாமை "சற்றே குன்றேறிச்செல்லவேண்டும் அரசி. காலைவெயில் முதிர்வதற்குள் சென்று மீள்வதே உகந்தது" என்றாள். சத்யவதி சற்றுத் தயங்கியபின்னர் "ஸ்தானகர் இருக்கிறாரா?" என்றாள். சியாமை "குடிலில் இருக்கிறார்" என்றபின் திரும்பி குந்தியிடம் "ஸ்தானகர் விசித்திரவீரியரின் அணுக்கச்சேவகராக இருந்த அமைச்சர். மாமன்னர் நிறைவடைந்தபின்னர் இங்கேயே குடிலமைத்துத் தங்கிவிட்டார். சடையும் தாடியும் கொண்டு இங்கிருக்கிறார். இருபதாண்டுகாலமாக ஒருசொல்லும் பேசியதில்லை" என்றாள். "முதலில் அவரை வணங்கிவிட்டு மேலே செல்வது பேரரசியின் வழக்கம்."

ஸ்தானகரின் குடில் பெரிய ஆலமரத்தடியில் இருந்தது. மரக்கிளையிலிருந்து கீழே சரிந்த குருவிக்கூடு போன்ற சிறிய ஈச்சையோலைக் குவியல். அதை நோக்கி நடக்கும்போது மாத்ரி மெல்ல குந்தியின் அருகே வந்து அவள் தோளுடன் தன் தோள் உரச நடந்தாள். குந்தி திரும்பி நோக்கி புன்னகைசெய்ய அவளும் புன்னகைசெய்தாள். அப்பால் தசார்ணை சம்படையிடம் ஏதோ கேட்க அவள் தாழ்ந்தகுரலில் பதில் சொல்வது கேட்டது. சத்யவிரதை திரும்பி தசார்ணையிடம் பேசாமல் வரும்படி சைகை காட்டினாள்.

குடிலுக்குள் எவருமில்லை என்று குந்தி எண்ணினாள். இடையளவுக்கே உயரமிருந்த அதன் மேற்கூரையின் ஓலை கருகி காற்றில் கிழிபட்டு பறந்துகொண்டிருந்தது. சியாமை அவர்களிடம் நிற்கும்படி கைகாட்டியபோதுதான் உள்ளே ஸ்தானகர் இருப்பது தெரிந்தது. அவர்கள் நின்றுகொள்ள சத்யவதி மட்டும் குனிந்து கைகளைக்கூப்பியபடி உள்ளே சென்றாள். சிலகணங்கள் கழித்து சத்யவதி வெளியே வர சியாமை "குந்திதேசத்தரசி, தாங்கள் முனிவரை வணங்கலாம்" என மெல்லியகுரலில் சொன்னாள். "முனிவரா அக்கா?" என பின்னால் சம்படையின் மெல்லியகுரல் கேட்டது.

குந்தி வணங்கிய கைகளுடன் உள்ளே சென்றாள். மிகச்சிறிய இடத்தில் மூங்கில்தட்டியாலான சுவரை ஒட்டி ஸ்தானகர் அமர்ந்திருந்தார். சடைத்திரிகளாக தாடியும் குழலும் மார்பிலும் தோளிலும் விழுந்துகிடந்தன. கைகளை மடியில் மலர்முகமாக வைத்திருந்தார். அவள் உள்ளே நுழைந்தபோது அவரது கண்கள் அவளை நோக்கித் திரும்பவில்லை. அவர் எங்கே பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் முதற்கணத்து வியப்பு கடந்துசென்றதுமே அவள் இன்னதென்றறியாத அச்சத்தை அடைந்தாள். உடல்குளிர்வதுபோலவும் உள்ளங்கால்கள் வெம்மைகொள்வதுபோலவும் தோன்றியது. அவரது பாதங்களைத் தொட்டு வணங்கவேண்டுமென எண்ணினாள். ஆனால் வணங்காமல் மெல்ல பின்னகர்ந்துகொண்டாள்.

வெளியே வந்தபோது அவள் உடல் பதறிக்கொண்டிருந்தாலும் மூச்சடைக்கும் சிற்றறைவிட்டு வெளிவந்ததுபோல புறக்காற்று ஆறுதலளித்தது. அரசியரனைவரும் வணங்கிவிட்டு வெளியே வந்தபின்னர் அவர்கள் மேலே ஏறத்தொடங்கினர். ஒற்றைப்பாறையால் ஆன குன்றின்மேல் யானைவிலாவிலிட்ட இரும்புச்சங்கிலி போல கல்லில் வெட்டப்பட்ட படிகளாலான பாதை வளைந்து சென்றது. வானம் மேகமில்லாமல் ஒளிகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த காட்டின் பறவை ஒலிகளும் மரங்களின் வழியாக காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டுக்கொண்டிருந்தன.

பாதி வழி ஏறியதும் மாத்ரி மூச்சிரைக்க நின்றுவிட்டாள். அவளுடைய கழுத்திலும் கன்னங்களிலும் வியர்வை பளபளப்பதைக் கண்டு குந்தி கண்களைத் திருப்பிக்கொண்டாள். அனகை அருகே வந்து "மேலே செல்வோம் அரசி... பேரரசி முன்னால் சென்றுவிட்டார்கள்" என்றாள். குந்தி "ஏன் அரசிகள் அம்பிகையும் அம்பாலிகையும் வரவில்லை?" என்றாள். "அவர்கள் வந்ததேயில்லை" என்றாள் அனகை. குந்தி திரும்பி நோக்கிவிட்டு தலையசைத்தாள்.

"குஹ்யமானசம் என்பது நம் மனதின் ஆழம் என்கிறார்கள் அரசி. நாம் நம் உண்மையான எதிரியை அங்கே கண்டுகொள்ளலாம் என்கிறார்கள்." குந்தி புன்னகைத்து "நாம் யாரென்று அறியலாமென்றல்லவா சூதர்கள் பாடுகிறார்கள்?" என்றாள். அனகை சிரித்து "இரண்டும் ஒன்றுதானே?" என்றாள். காற்று வீசியபோது உடல்குளிர்ந்து குந்தி சிலிர்த்துக்கொண்டாள். மாத்ரி அருகே வந்து "இன்னும் உயரம் உண்டா அக்கா?" என்றாள். குந்தி பேசாமல் பார்வையை திருப்பிக்கொள்ள அனகை "அருகேதான், வந்துவிட்டோம்" என்றாள்.

இவளை நான் வெறுக்கவில்லை, ஆனால் இவள் உடல் என் அகத்தை எரியச்செய்கிறது என குந்தி எண்ணிக்கொண்டாள். அதை நான் மிக எளிதாக என் அளவையறிவால் அறுத்துக்கூறிட்டு அறியமுடியும். ஆனால் அதிலிருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கிறேன். மாத்ரி அரண்மனைக்குள் வந்து ஒருநாள்தான் ஆகியிருக்கிறது. இன்னும் சிலநாட்களில் இவள் என் முன் சிறுத்து சிறிய கூழாங்கல்லாக ஆகிவிடுவாள். ஒருமாதத்தில் ஒருமுறைகூட இவளைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை. ஆனால்...

குன்றின் உச்சி திகைக்கவைக்கும் அமைதிகொண்டிருந்தது. பேசிக்கொண்டுவந்த தசார்ணையும் சம்படையும்கூட சொல்லிழந்து திகைத்தவிழிகளால் பார்த்தனர். அங்கே காற்று வீசவில்லை. அதற்குக்காரணம் செங்குத்தான பாறைகளால் அது சூழப்பட்டிருந்ததுதான் என்று தெரிந்தது. நடுவே வட்டவடிவமான நீலநிறக்குளம் தெரிந்தது. வானின் துண்டுபோல. அல்லது வானை அள்ளி வைத்திருக்கும் ஆடிபோல. அது நீரா அல்லது கண்ணாடியா என்று குந்தி எண்ணினாள். அசைவேயற்ற நீரை அவள் முதல்முறையாக அப்போதுதான் பார்த்தாள்.

சத்யவதி நீர் அருகே மண்டியிட்டு தன் முகத்தைப் பார்ப்பதை குந்தி கண்டாள். நீர்நிலைக்கு அப்பால் தொலைவில் பாறைவளைவின் கிழக்கு எல்லையில் சிவந்த கல்லால் செதுக்கப்பட்ட சித்ராங்கதனின் சிலை உயரமான கல்பீடத்தில் நின்றிருந்தது. கந்தர்வனா அவனால் கொல்லப்பட்ட அரசனா அந்தச் சிலை? இருவரும் ஒன்றாகிவிட்டார்கள். கொன்றவனும் கொல்லப்பட்டவனும். ஆடிப்பிம்பத்துடன் ஒன்றுதல்போல முற்றெதிரியுடன் கலந்துவிடுதல்தான் முழுமையா என்ன?

சத்யவதி பெருமூச்சுடன் எழுந்து சென்று கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்ந்தாள். சேடியர் அவள்முன் பூசைத்தாலங்களை எடுத்துப்பரப்பினார்கள். அனகை "விரும்பினால் குஹ்யமானசத்தில் முகம் பார்க்கலாம் அரசி" என்றாள். "எளியோர் அதைப் பார்க்கலாகாது என்று விலக்கு உள்ளது. பெரும்பாலும் எவரும் நோக்குவதுமில்லை." குந்தி "என்னால் அதைப்பார்க்காமல் மீளமுடியாது" என்றாள். "ஆம், அறிவேன்" என்றாள் அனகை.

கல்லா என நீலநீர் உறைந்துநின்ற குளப்பரப்பை நோக்கிச் சென்றாள். முழந்தாளிட்டு நீரில் தன் முகத்தை நோக்கினாள். தன்முகம் ஏன் அத்தனை களைத்திருக்கிறது, ஏன் அத்தனை ஐயம் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டாள். பறந்த குழலை ஒதுக்கிவிட்டு தன் கண்களைப் பார்த்தபோது அவ்விழிகள் தன்விழிகளல்ல, பிறிதொருத்தியின் விழிகளெனக் கண்டு அகம் நடுங்கினாள். நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அவள் கூர்ந்து நோக்கினாள். அது காந்தாரியின் முகம். அவளுடைய பகை ததும்பும் பார்வை. அவள் ஒருமுறை கூட பார்த்திராத விழிகள்.

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 3 ]

மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து "இங்கா? நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்" என்றாள். "குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்" என்றாள் அனகை. "இங்கா?" என்றபடி மாத்ரி தோழியை நோக்கினாள். சுதமை "அணிசெய்துவிட்டுச் செல்லுங்கள் அரசி" என்றாள். அனகை "குந்திதேவி தங்களை அணிசெய்யவே வந்திருக்கிறார்கள்" என்றாள்.

மாத்ரி பதில்சொல்லும் முன்னரே சுதமை "குந்திதேவியைப் பணிந்து மாத்ரிதேவி வரவேற்கிறார்கள்" என்று சொன்னாள். சற்றுமுன்னர்தான் மாத்ரி குந்தி தன்னிடம் இயல்பாகப் பழகவில்லை என்றும் நெருங்கமுயன்றபோதெல்லாம் விலகிச்செல்கிறாளென்றும் சொல்லியிருந்தாள். அவள் தன் பெரியவிழிகளைத் தூக்கி சுதமையை நோக்கினாள். "அரசி, அவர்களின் நெஞ்சில் எழுந்த ஏதேனும் ஐயம் விலகியிருக்கும். அவர்கள் தேடிய வினாவுக்கு விடைகிடைத்திருக்கும்" என்றாள் சுதமை.

குந்தி உள்ளே வந்ததும் மாத்ரி எழுந்து வணங்கினாள். குந்தி "யாதவநாட்டில் ஒரு வழக்கமுண்டு. சபத்னியை மூத்தவள்தான் மணியறைக்கு அனுப்பவேண்டும்" என்றாள். அவளுடைய மலர்ந்த முகத்தைநோக்கியபோது மாத்ரிக்கு எந்த ஐயமும் எழவில்லை. எவ்வளவு அழகி என்ற எண்ணம்தான் எழுந்தது. தங்கத்துடன் செம்புகலக்கும்போதுதான் அழகும் உறுதியும் உருவாகிறது. பெண்மையில் சற்றேனும் ஆண்மை கலக்காவிடில் அது வெறும் குழைவாக மாறிவிடுகிறது. அவளுடைய நிமிர்வு, ஆழம் மிக்க குரல், திடமான மூக்கு, செறிந்த உதடுகள், கன்னங்களில் விழும் புன்னகைக்குழிகள், வெண்பற்கள்... தேவயானி இப்படித்தான் இருந்திருப்பாள்.

குந்தி கண்காட்டியதும் அனகையும் சுதமையும் வெளியேறினார்கள். "அமர்ந்துகொள், நான் அணிசெய்கிறேன்" என்றாள் குந்தி. "இல்லை அரசி, நான்... தாங்கள்... என்னை..." என மாத்ரி தடுமாறினாள். "அமர்ந்துகொள்ளச் சொன்னேன்" என்று சொல்லி குந்தி அவள் தோளைப்பற்றி அமரச்செய்தாள். "நான் தங்களைப்பார்க்கும் வரை அஞ்சிக்கொண்டிருந்தேன் அரசி. தங்களை அரண்மனை முற்றத்தில் கண்டதுமே தங்களை என் அன்னைவடிவமாகவே கொண்டேன். ஒருபோதும் தாங்கள் எனக்கோ பிறருக்கோ துன்பமிழைக்கமாட்டீர்கள் என்று உறுதியடைந்தேன்" என்று சொல்லும்போது மாத்ரியின் குரல் இடறியது. முகம் சிவந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.

"நான் உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். சிறுமி என்று சொன்னார்கள். ஆனால் இத்தனை சிறியபெண் என நினைக்கவில்லை" என்றாள் குந்தி. "நீ என்னை அரங்கிலும்கூட அக்கா என்றே அழைக்கவேண்டும்." "ஆணை" என மாத்ரி புன்னகைசெய்தாள். "புன்னகை செய்யும்போது பேரழகியாக இருக்கிறாய். புன்னகைமட்டும் செய்துகொண்டிரு... வேறெதையும் எண்ணாதே" என்று குந்தி சொல்லி அவள் அணிகளை சரிநோக்கத் தொடங்கினாள்.

"நான் எப்போதுமே எதைப்பற்றியும் எண்ணியதில்லை" என்றாள் மாத்ரி. "என் தமையன்தான் மாத்ரநாட்டின் பகைவர்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார். என்னைவைத்து ஒரு வலுவான ஷத்ரியநாட்டின் உதவியை அடைந்துவிடலாமென அவர் சொல்வார்." குந்தி "ஆம், அது நல்ல திட்டம்தான். அடைந்தும் விட்டார்" என்றாள். "ஆனால் நானறிந்த தமையனல்ல இப்போதிருப்பவர். அவர் எப்போதும் உவகை நிறைந்தவர். காடுகளில் வேட்டையாடி அலையவும் இசைகேட்டு இரவெல்லாம் விழித்திருக்கவும் விரும்புபவர். இப்போது அவரது இயல்பே மாறிவிட்டது."

"அரசச்சுமைகள் அல்லவா?" என்றாள் குந்தி. "அல்ல அக்கா, அவருடைய உள்ளத்தில் வேறேதோ குடியேறிவிட்டது. எனக்கு சொல்லத்தெரியவில்லை. மிகமிக அரிய சில நிகழ்வுகள் மனித வாழ்க்கையில் நிகழுமென கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறதே. ராகவ ராமனின் வாழ்க்கையில் அவர் கானகமேகவேண்டுமென தந்தையின் ஆணை வந்தது போல... இல்லை, சீதையை இலங்கைமன்னன் தூக்கிக்கொண்டுசென்றதுபோல. அந்த நிகழ்ச்சியின் விளைவுகளில் இருந்து அவர்களால் வெளியேறவே முடியாதல்லவா? அவர்கள் முழுமையாகவே மாறிவிடுவார்களல்லவா? அதைப்போல.."

"சல்லியர் எவ்வண்ணம் மாறினார்?" என்றாள் குந்தி. மாத்ரி தன் பேச்சு எங்கு கொண்டுவந்துவிட்டது என்பதை உணர்ந்தவளாகத் திகைத்து "தாங்கள் சினம்கொள்ளவில்லை என்றால் சொல்கிறேன். தங்களை மணம்கொள்ள மார்த்திகாவதிக்கு வந்தபோது தமையனார் பூத்தமரம்போலிருந்தார். திரும்பிவந்தவர் இன்னொருவர். அதன்பின் பழைய தமையனார் மீளவே இல்லை. கசப்பும் சினமும் கொண்ட இருண்ட தெய்வம் ஒன்று அவரில் ஏறிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது" என்றாள் மாத்ரி.

"அது மெல்லிய ஏமாற்றம்தான்" என்றாள் குந்தி. "நாம் அரசியர். நமக்கென எண்ணங்களோ விழைவுகளோ இல்லை. நம் அரசுகளின் விளையாடலில் வெறும் காய்கள்," மாத்ரி பெருமூச்சுடன் "ஆம், உண்மைதான் அக்கா. என்னை அஸ்தினபுரிக்கு அனுப்புவதாக என் தமையன் முடிவெடுத்திருப்பதை பீஷ்மபிதாமகர் மாத்ரபுரிக்கு வந்தபின்னர்தான் நான் அறிந்தேன்" என்றாள். "ஆம், அதை நான் உணரந்தேன். ஆனால் அது நம் கடமையை மீறிச்செல்ல ஒருபோதும் வழிவகுக்கலாகாது" என்றாள் குந்தி. அந்த வழக்கமான சொற்றொடரினூடாக அந்த இக்கட்டான இடத்தைவிட்டு பேச்சை வெளிக்கொண்டுவந்ததை உணர்ந்தபின் "உன் சேடி அழகுணர்வுள்ளவள். நகைகளை கோத்தமைத்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது" என்றாள்.

"சுதமையும் நானும் சேர்ந்தே வளர்ந்தோம்" என்றாள் மாத்ரி. "சுதமையின் அன்னை கிரீஷ்மை என் அன்னையின் சேடியாக இருந்தாள்.". "சேடிப்பெண்களுடன் எங்கும் செல்லமுடிகிறது என்பதே அரசியருக்கு இருக்கும் ஒரே இனிய வாய்ப்பு" என்று குந்தி புன்னகை செய்தாள். "அக்கா, என்னை எதற்காக இங்கே கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. எதற்காக என்றாலும் நான் என்றும் உங்கள் தங்கை. உங்கள் அடிமை என்றுவேண்டுமானாலும் கொள்ளுங்கள். என் நலன் என் விருப்பு என ஏதும் இல்லை. நான் என்றும் உங்கள் கைகளுக்குள் இருக்கவே விழைகிறேன். என் மேல் ஒருநாளும் நீங்கள் ஐயமோ விலக்கமோ கொள்ளலாகாது" என்றாள் மாத்ரி.

குந்தி அவளைத் தழுவிக்கொண்டு "உன் மீது நான் ஏன் மனவிலக்கம் கொள்ளவேண்டும்?" என்றாள். "நீ அரசியலாடலில் ஒரு எளிய காய் என நான் நன்கறிவேன். ஆகவேதான் சொன்னேன், உன் விளையாட்டுலகுக்கு வெளியே வராதே என்று." குந்தி மலர்மாலையை மாத்ரியின் கூந்தலில் சூட்டினாள். மாத்ரி ஆடியைப்பார்த்து அதை சரிசெய்துகொண்டாள். அவள் எதையோ கேட்கப்போவதை அந்த அமைதியிலிருந்து, உடலில் உருவான மெல்லிய சமநிலையின்மையிலிருந்து உய்த்துக்கொண்டாலும் குந்தி அதை அவள் சொல்வதற்காகக் காத்திருந்தாள்.

மாத்ரி "அக்கா" என்றாள். "சொல்" என்றாள் குந்தி. "நம் அரசரின் உடல்நிலைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" குந்தி புன்னகையை இதழ்களுக்குள் நிறுத்திக்கொண்டாள். மாத்ரி அந்த வினாவை கேட்கும் விதங்களை தொட்டுத்தொட்டுச்சென்று வந்தடைந்தது அந்த நேரடிச் சொற்றொடர். "அவரது உடல்நிலையைப்பற்றி உன்னிடம் என்ன சொன்னார்கள்?" என்றாள் குந்தி. "அவர் பிறவிநோய் கொண்டவர். அவரது குருதி வெண்ணிறமானது, ஆகவே..." என்றாள் மாத்ரி. "சொல்" என்றாள் குந்தி. "ஆண்களின் விந்து வெண்விழியின் நிறம்கொண்டது. அவரது விழி குருதிநிறமானது" என்று மாத்ரி சொல்லி ஏறிட்டுப்பார்த்தாள்.

"பிறவிக்குறைகளைப்பற்றி மருத்துவர்கள் முழுதறிந்தவர்களல்ல" என்று குந்தி சொன்னாள். "அரசருக்கு உடலில் தோல் வெண்ணிறமானது. யானைகளிலும் பன்றிகளிலும் அவ்வாறு வெண்ணிறமானவை பிறப்பதுண்டு. அது குறைபாடுதான். அவரது குருதி நலமாகவே உள்ளது." மாத்ரி மேலும் எதையோ கேட்க எண்ணுவதை அவள் உடலில் பரவிய தத்தளிப்பு காட்டியது. நீர்நிறைந்த தோல்குடம் தளும்புவதுபோல என குந்தி நினைத்துக்கொண்டாள்.

"அவரது நரம்புகள் சிடுக்குவிழுந்தவை என்பதே அவரது உண்மையான குறைபாடு. அது அவரது பிறவியால் வந்ததல்ல. அவரது அன்னை அவரை அவ்வாறு வளர்த்தார். அவரால் ஒளியை நேருக்குநேர் பார்க்க இயலாது. அவரது தோல் நேரடி வெயிலை தாங்காது. அவரது அன்னை அகமுதிர்வற்ற பேதை. அவரை தனக்கான விளையாட்டுப்பாவையாக ஆக்கிக்கொண்டார். புறவுலகைக் காட்டவில்லை. மானுடக்குழந்தைகள் விழுந்தும் எழுந்தும் கற்றுக்கொள்ளும் எதையுமே கற்றுக்கொள்ள விடவில்லை. அதுதான் அவரது நரம்புகளை நொய்மையாக்கியிருக்கிறது. அவற்றை மருத்துவர் சீர்செய்ய இயலாது. நாம் அவற்றை வலுப்படுத்துவோம்."

மாத்ரி வாய்நீரை விழுங்கும் ஒலி கேட்டது. "சொல்" என்றாள் குந்தி. "இல்லை" என அவள் தயங்கினாள். "நீ கேட்கவிருப்பதை நான் அறிவேன்" என்றாள் குந்தி. "ஆம் அக்கா. அவர் உங்கள் படுக்கையில் ஆண்மகனாக இருந்திருக்கிறாரா?" என்றாள் மாத்ரி. மீண்டும் ஒரு நேரடியான வினா. மதியூகிகளிடம் பேசிப்பேசி நேரடி வினாக்களை எதிர்கொள்ளும் வல்லமையை இழந்துவிட்டேனா என்ன என்று குந்தி வியந்துகொண்டாள்.

"இல்லை" என்றாள் குந்தி. மாத்ரி நிமிர்ந்து நோக்கினாள். "அதற்குக் காரணம் நானே. என்னை அவர் துணைவியாக எண்ண இயலவில்லை. நான் அவரை முதலில் காணும்போது அவரது நரம்புகள் அதிர்ந்து முடிச்சிட்டுக்கொண்டன. நான் அவரை அன்னையின் இடத்திலிருந்து ஆற்றுப்படுத்தினேன். அதன்பின் நாங்கள் ஆணும்பெண்ணுமாக உணரவில்லை. என் உடல் அவரை என் மைந்தனாகவே எண்ணுகிறது." மாத்ரியால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என கண்கள் காட்டின. "ஆனால் அவர் உடலால் பெண்ணுடன் இருக்கமுடியும். அதை நான் அறிவேன்."

மாத்ரி மூச்சை இழுத்துவிட்டாள். "அவ்வாறு ஒருமுறை இருந்துவிட்டாரென்றால் அவரைக் கட்டியிருக்கும் நரம்புகளின் முடிச்சுகளெல்லாம் தளரும். அவர் விடுதலை பெறுவார். அதை நீ நிகழ்த்துவாயென நான் எண்ணுகிறேன்" என்றாள் குந்தி. "எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை அக்கா" என்றாள் மாத்ரி. "விளங்கிக்கொள்ள ஏதுமில்லை. நீ அவருக்கிணையான விளையாட்டுப்பெண். அவ்வாறே அவருடன் இரு" என்றாள் குந்தி.

மாத்ரி மெல்லிய விசும்பல் ஓசையுடன் முகம் பொத்திக்கொண்டாள். "என்ன இது? நீ ஒரு ஷத்ரியப்பெண். அஸ்தினபுரியின் அரசி" என்று அவள் தலையைத் தொட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டாள் குந்தி. "எனக்கு அச்சமாக இருக்கிறது... என் அகம் நடுங்கிக்கொண்டே இருக்கிறது." குந்தி "அது நீ கேட்ட கதைகளின் விளைவு. அவரை அணுக்கமாகக் கண்டதுமே உன் அச்சம் மறைந்துவிடும்" என்றாள்.

கதவருகே அனகை வந்து நின்றாள். குந்தி ஏறிட்டதும் "சிறியஅரசியின் சேடி சாரிகை வந்திருக்கிறாள்" என்றாள் அனகை. "ஏன்?" என குந்தி புருவங்கள் சுருங்க வினவினாள். "இன்று மணியறைபுகும்நாள் என சிறிய அரசி சற்றுமுன்னர்தான் அறிந்திருக்கிறார்கள். உடனே ஆதுரசாலைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார்களாம். மருத்துவர் அருணர் அரசர் இன்னும் ஒருமண்டலகாலம் மணவறை புகுதல் நன்றல்ல, ஒரு மண்டலகாலம் பூர்ணலேபன நீராட்டுக்குப்பின் செய்வதே முறை என்றாராம். அரசரை ஆதுரசாலைக்குச் செல்ல சிறியஅரசி ஆணையிட்டிருக்கிறார்கள்" என்றாள் அனகை.

"அரசர் இப்போது எங்கிருக்கிறார்?" என்றாள் குந்தி. "இன்னும் ஆதுரசாலைக்குச் செல்லவில்லை" என்றாள் அனகை. "அவரிடம் இன்று மணியறைபுகுதல் நிகழும் என நான் சொன்னதாகச் சொல். அருணர் இக்கணமே ஆதுரசாலைக்குத் திரும்பிவிடவேண்டுமென்றும், நான் அழைக்காமல் ஆதுரசாலைவிட்டு வெளியே வரலாகாது என்றும், எவரையும் சந்திக்கலாகாதென்றும் சொல்!" என்றாள் குந்தி. அனகை தலைவணங்கினாள். "மீறப்படும் எந்த ஆணையும் கழுவேற்றத்தண்டனை நோக்கிக் கொண்டுசெல்லும் என்றும் அருணரிடம் சொல். நான் மீறல்களை விரும்பமாட்டேன்."

"ஆணை" என்று அனகை வணங்கி பின்னகர்ந்தாள். மாத்ரி குந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு "அக்கா, உங்களால் உண்மையிலேயே ஒருவரை கழுவேற்ற ஆணையிட முடியுமா?" என்றாள். குந்தி புன்னகைசெய்து "உயிர்விடச் சித்தமாக இருக்கும் எவராலும் கொல்லவும் முடியும்" என்றாள். "அக்கா நீங்கள்தான் உண்மையான ஷத்ரியப்பெண். அஸ்தினபுரியின் பேரரசி. நீங்கள் யாதவப்பெண், தேவயானியின் அரியணையில் நீங்கள் அமரக்கூடாது என்று ஷத்ரியர்கள் சொன்னார்கள் என்று நினைக்கும்போது சிரிப்பு வருகிறது" என்றாள்.

"குலம் குணத்தால் வருவது என்றே நூல்கள் சொல்கின்றன" என்றாள் குந்தி. "ஆனால் குணம் தன்னை ஐயம்திரிபற நிறுவியாகவேண்டும். அவ்வாறு முன்னர் நிறுவப்பட்ட குணங்களால் ஆனவையே இன்றைய குலங்கள்." மாத்ரி அதைப்புரிந்துகொள்ளாமல் தலையசைத்தாள். பின்பு "அரசரின் அன்னை தங்கள் ஆணையைக்கேட்டால் என்ன செய்வார்?" என்றாள். குந்தி "என் ஆணையை பேரரசியும் பிதாமகருமன்றி எவரும் மீறமாட்டார்கள்" என்றாள்.

மாத்ரியை குந்தியே மணியறைக்கு அழைத்துக்கொண்டுசென்றாள். மாத்ரி கையில் பொற்தாலத்தில் மங்கலப்பொருட்கள் வைத்திருந்தாள். அவளுடைய கைகளின் நடுக்கத்தில் தாலம் அசைந்தது. மாத்ரி "என் கால்கள் அச்சத்தால் நடுங்குகின்றன" என்றாள். அவளுடைய வெண்ணிறமான வட்டமுகமும் குறுகிய கழுத்தும் திறந்த வெண்பளிங்குத் தோள்களும் வியர்வையால் மூடப்பட்டிருந்தன. அவளுடைய வியர்வைக்கு வாடிய பாதிரிமலரின் வாசனை இருந்தது. "அச்சமும் இந்தத் தருணத்தின் அழகுதான் என்பார்கள்" என்றாள் குந்தி.

அனகை எதிரே வந்து வணங்கினாள். குந்தி அவளை நோக்கியபின் மாத்ரியை மணியறையின் வாயில்முன் கொண்டு சென்று நிறுத்தி "அனைத்து இன்பங்களும் நிகழ்க! குலம் வாழும் மைந்தர்களைப்பெறுக! தெய்வங்களனைத்தும் துணையாகுக!" என வாழ்த்தி தாலத்தில் இருந்த மலர் ஒன்றை எடுத்து அவளுடைய தலையில் சூட்டி உள்ளே அனுப்பினாள். மாத்ரி ஓரடி எடுத்துவைத்து அறியாமலேயே ஒரடி பின்னால் நகர அவள் தோளைப்பிடித்து உந்தி உள்ளே செலுத்திவிட்டு கதவை பின்பக்கம் இழுத்து மூடினாள்.

அவள் திரும்பி நடந்தபோது அனகை பின்னால் வந்தாள். "என்ன சொல்கிறார்கள்?" என்றாள் குந்தி . "தங்கள் ஆணைகளைச் சொன்னதுமே சொல்லிழந்து திகைத்து அமர்ந்துவிட்டார்கள். நான் திரும்பியதும் என் பின்னால் எழுந்துவந்து உரத்தகுரலில் நீங்கள் அவர் மைந்தனை கொல்லப்போகிறீர்கள் என்று கூவினார். பின்னர் தலையில் அறைந்து அழுதபடி உள்ளே ஓடினார்கள்." குந்தி ஒன்றும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் நடந்தாள்.

தன் அறைக்குள் சென்று மஞ்சத்தில் சாய்ந்துகொண்டாள். அனகை வந்து அருகே தரையில் அமர்ந்தாள். "பேரரசியிடம் சொன்னாயா?" என்றாள். "ஆம், ஆனால் பேரரசி மெல்ல அனைத்திலும் ஈடுபாட்டை இழந்துவருவதாகத் தெரிகிறது" என்றாள் அனகை. "முதுமை" என்றாள் குந்தி. "அனைத்தையும் நீங்களே பார்த்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறார்கள்" என்றாள் அனகை. "ஆம் அதுவும் இயல்புதானே?"

குந்தி கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் சுழன்ற செந்நிற ஒளிப்பொட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். "மார்த்திகாவதியின் உளவுச்செய்திகள் நான்கு வந்தன. சிறப்பாக ஏதுமில்லை. கம்சன் மகதத்திற்குச் சென்றுவிட்டார். மகதத்தின் அணிப்பதாகைகளில் ஒன்றை சூடிக்கொள்ளும் உரிமையை மகதம் அளிக்கும் என்று சொன்னார்கள்." குந்தி புன்னகையுடன் கண்களை மூடியபடியே "ஆம், அவ்வளவுதான் அளிப்பார்கள். ஒருபோதும் மகற்கொடை செய்யமாட்டார்கள்" என்றாள்.

"அஸ்தினபுரியின் இரண்டு படைப்பிரிவுகளை மார்த்திகாவதிக்கு அருகே ஊஷரபதத்தில் நிறுத்தும்படி விதுரரின் ஆணை பிறந்திருக்கிறது. குந்திபோஜர் மகிழ்ந்து செய்தியனுப்பியிருக்கிறார்" என்றாள் அனகை. "மார்த்திகாவதி இனிமேல் கப்பமும் கட்டவேண்டியதில்லை. இன்னும் இருபத்தெட்டு நாட்களில் யாதவர்களின் காளிந்திபோஜனப் பெருவிழா. அனைத்து குலங்களும் கூடவிருக்கின்றன. குந்திபோஜர் விருஷ்ணிகுலத்தவரும் தன் தலைமையை ஏற்கவேண்டுமென கோரவிருக்கிறார்."

"அவர்கள் இணைந்துகொண்டால் கம்சருடன் போருக்குச் செல்வாரா உன் அரசர்?" என்று கண்களை மூடியபடியே குந்தி கேட்டாள். அனகை "அப்படி திட்டமிடுவதே சிறந்தது அல்லவா? அதுவே அவரை தலைமையைநோக்கிக் கொண்டுசெல்லும்" என்றாள். "அனகை, தலைமையை ஏற்கும் தகுதி இயல்பிலேயே வரவேண்டும். குந்திபோஜருக்கு இப்போது ஐம்பது வயது. இதுவரை அவர் ஏற்காத தலைமையை இனிமேலா ஏற்கவிருக்கிறார்?" என்றாள் குந்தி. புரண்டு படுத்து கண்களைத்திறந்து சிரித்தபடி "ஆனால் அனைத்துக்கோழைகளுக்கும் பேரரசுக்கனவுகள் இருக்கின்றன" என்றாள்.

"அவர் விதுரரின் உதவியைத்தான் பெரிதும் நாடியிருக்கிறார்" என்றாள் அனகை. "தினமும் ஒரு செய்தி விதுரருக்கு வந்துசேர்கிறது." குந்தியின் முகத்தில் புன்னகை மறைந்து உள்ளே ஏதோ எண்ணங்கள் எழுவது தெரிந்தது. "இன்னொரு செய்தியும் செவியில் விழுந்தது" என்றாள் அனகை. குந்தி வெற்றுவிழிகளைத் திருப்பி பார்த்தாள். "உத்தரமதுராபுரியின் தேவகருக்கு சூத மனைவியில் பிறந்த சுருதை என்னும் மகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இளவரசியருக்குரிய கல்வியை அவளுக்கு அவர் அளித்திருக்கிறார். தேவகியின் தங்கையாக அரண்மனையில்தான் வாழ்கிறாள்."

குந்தி தன் விழிகள் நிலையழிவதை உணர்ந்து அவற்றை அடக்கி அனகையின் முகத்தில் நிலைக்கச்செய்தாள். "அது எவருடைய திட்டம்?" என்றாள். "பிதாமகர் பீஷ்மரிடம் குந்திபோஜர் தெரிவித்திருக்கிறார். பிதாமகருக்கும் அதில் ஒப்புதல்தான்." குந்தி சிலகணங்கள் நோக்கியபடி இருந்தபின் "விதுரருக்கு?" என்றாள். "அவர் பிதாமகரைக் கடந்து ஏதும் எண்ணுபவரல்ல என்கிறார்கள்." குந்தியின் விழிகள் மீண்டும் காற்றுபட்ட கதிர்போல அலைபாய்ந்ததைக் கண்டு அனகை வியந்தாள். "அவளை நான் கண்டிருக்கிறேனா?" என்றாள் குந்தி. "வாய்ப்பிருக்கிறது அரசி. அவளும் தேவகியுடன் கன்னிமாடத்தில் இருந்திருக்கிறாள்."

குந்தி எழுந்து அமர்ந்து "அவள் மாந்தளிர் நிறமுள்ள மெல்லிய பெண். தேவகியைவிட ஒருவயது மூத்தவள்" என்றாள். "ஆம், நன்றாகவே நினைவுகூர்கிறேன். அவள்தான் எனக்கு ஒவ்வொருநாளும் மருத்துவச்சியை அழைத்துவந்தாள். அவள் பெயரை அப்போது நான் நினைவில் நிறுத்தவில்லை" என்றபடி கண்களை மூடிக்கொண்டாள். "சுருதை... ஆம் அவள்தான்." அனகை மெல்லிய புன்னகையை வாய்க்குள் நிறுத்தி "அழகியா?" என்றாள். குந்தி திடுக்கிட்டு கண்விழித்து திரும்பிநோக்கியபோது அனகை இயல்பாக "அரசகுலத்தவள் போலிருக்கிறாள் என்று சொன்னார்கள்" என்றாள்.

"ஆம், அழகிதான். அரசகுலத்துத் தோற்றம் கொண்டவள்தான்" என்று குந்தி சொன்னாள். பெருமூச்சுடன் "இந்தப் பகடையில் எப்பக்கம் எண்கள் விழுகின்றன என எவராலும் சொல்லிவிடமுடியாது" என்றாள். "ஆம் அரசி, தேவகரையும் அஸ்தினபுரியின்பக்கம் இழுத்துக்கொள்வது தன் வெற்றியின் அடுத்த படி என குந்திபோஜர் எண்ணுகிறார். முன்னரே தங்கள் தமையன் தேவகியை மணக்கவிருக்கிறார் என்று குந்திபோஜர் அறிந்திருக்கிறார்."

சுதமை வாயிலைத் தட்டி "அரசி!" என மூச்சடைக்க மெல்லியகுரலில் கூவியபோது குந்தி எழுந்துகொண்டாள். அதுவரை அவள் சொற்கள் வழியாக தள்ளித்தள்ளிவிட்டுக்கொண்டிருந்த அச்சம் எழுந்து கருஞ்சுவராக கண்முன் நின்றது. "என்ன?" என்றாள் அனகை. "அரசர்..." குந்தி மேலாடையை அணிந்துகொண்டு "என்னுடன் வா...வந்தபடியே சொல்" என்றாள்.

"அரசி, இளைய அரசி மணியறையில் அரசருடன் மஞ்சத்தில் இருந்திருக்கிறார். அவர் காமமும் கொண்டிருக்கிறார். அதன்பின்..." குந்தி "அவருக்கு இப்போது தன்னினைவிருக்கிறதா?" என்றாள். "இல்லை... இளைய அரசி அழுதுகொண்டிருக்கிறார்" குந்தி "அனகை, உடனே ஆதுரசாலைக்குச் சென்று அருணரையும் பிற மருத்துவர்களையும் அழைத்துவா" என்றாள். அனகை தலைவணங்கி ஓடினாள்.

குந்தி மணியறைக்குள் நுழைந்தபோது காலடியோசைகேட்டு அதிர்ந்து திரும்பிய மாத்ரி ஓடிவந்து அவளை பற்றிக்கொண்டாள். ஆடைகளை பிழையாகச் சுற்றியிருந்தாள். கண்ணீர் குந்தியின் தோள்களில் விழுந்தது. "அக்கா அக்கா" என்ற சொல்லுக்குமேல் மாத்ரியால் பேசமுடியவில்லை. அப்பால் மஞ்சத்தில் விழிகள் மூடி உயிரற்ற உடலென வெளுத்துப்போய் பாண்டு கிடந்தான். கைவிரல்கள் இறுகப்பற்றப்பட்டிருக்க பாதங்கள் வெளிநோக்கி இழுபட்டு வளைந்து உள்ளங்கால் வெண்மைகள் இறுகித் தெரிந்தன. கழுத்திலும் கன்னங்களிலும் நீலநரம்புகள் புடைத்துத் தெரிந்தன.

மாத்ரி மயங்கி குந்தியின் தோள்களைப் பற்றியிருந்த கைகள் தளர்ந்து நழுவ கீழே சரியப்போனாள். அவளைப்பிடித்துக்கொண்டு "சுதமை, இவளை அந்தபுரத்துக்குக் கொண்டு செல். சேடிகள் எதையும் அறியவேண்டாம். ஆதுரசாலைக்கு ஆளனுப்பி மருத்துவச்சிகளை வரச்சொல்" என்றாள் குந்தி. சுதமை மாத்ரியை இருகைகளையும் பற்றிச் சுழற்றி தோளில் தூக்கிக்கொண்டாள்.

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 4 ]

அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள்!" என்று தெறித்து காலடியில் விழப்போகின்றவை போல கண்கள் பிதுங்க அலறினாள். சத்யவதி திகைத்து கதவைத் திறந்தபோது அப்படியே அவள் கால்களில் விழுந்து பாதங்களைப்பற்றிக்கொண்டு அம்பாலிகை கதறினாள். "என் மைந்தனைக் கொன்றுவிட்டாள் பேரரசி. யாதவப்பேய் என் மைந்தன் உயிரைக்குடித்துவிட்டது. நான் இனி ஒரு கணம் உயிர்வாழமாட்டேன்... இந்த அரண்மனையைக் கொளுத்தி அந்நெருப்பில் நானும் எரிவேன்."

"என்ன ஆயிற்று?" என்று பின்னால் ஓடிவந்த சாரிகையிடம் சத்யவதி கேட்டாள். "அரசர் நோயுற்றிருக்கிறார். ஆதுரசாலையில் இருந்து மருத்துவர்கள் சென்றிருக்கிறார்கள்" என்றாள் சாரிகை. "இல்லை, அவன் வாழமாட்டான். அவன் இறந்துவிடுவான். நான் அறிவேன். அவன் இறந்துவிடுவான்!" என்று அம்பாலிகை அலறினாள். வெறிகூடி மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி சரிந்து பக்கவாட்டில் விழுந்து உடலை இறுக்கிக்கொண்டாள். அவளுடலில் மெல்லிய வலிப்பு வந்தது.

சத்யவதி "அரசியை என் அறைக்குள் கொண்டுசென்று பூட்டு" என்று சியாமையிடம் சொன்னாள். "மருத்துவரிடம் சொல்லி அவளுக்கு அகிபீனா புகையூட்டச் சொல்" என்று ஆணையிட்டபடியே இடைநாழி வழியாக விரைந்தாள். தன் அகவிரைவை உடல் அடையவில்லை என மூச்சிரைத்தபடி உணர்ந்து நின்றுகொண்டு சுவரைப்பற்றிக்கொண்டாள். அம்பாலிகையைத் தூக்கி அறைக்குள் போட்டு பூட்டிவிட்டு சியாமை பின்னால் ஓடிவந்து சத்யவதியைப் பிடித்துக்கொண்டாள்.

பாண்டுவின் அறைக்குள் மருத்துவர் அருணர் நாடிநோக்கிக் கொண்டிருந்தார். சத்யவதியைக் கண்டதும் எழுந்து "அகிபீனா அளித்திருக்கிறேன் பேரரசி. சற்று நேரத்தில் நரம்புகள் விடுபட்டு துயிலில் ஆழ்ந்துவிடுவார். உயிருக்கு இனிமேல் இக்கட்டு ஏதுமில்லை" என்றார். சத்யவதி பாண்டு அருகே அமர்ந்து அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள். மறுபக்கம் தரையில் அமர்ந்திருந்த குந்தி பாண்டுவின் இன்னொரு கையை தன் கைகளுக்குள் வைத்திருந்தாள். பாண்டுவின் கை ஈரமான நீர்ப்பாம்புபோல குளிர்ந்து உயிரசைவுடன் இருந்தது. தசைகளுக்குள் நரம்புகளின் அதிர்வை உணரமுடிந்தது.

"நான் அரசியை எச்சரித்தேன் பேரரசி..." என அருணர் சொல்லத்தொடங்கியதும் சத்யவதி "அரசி சொல்லுக்கு அப்பால் இங்கு ஆணை வேறு இல்லை" என்றாள். அருணர் திகைத்தபின் அரைக்கணம் குந்தியைப் பார்த்துவிட்டு தலைவணங்கினார். சற்றுநேரம் கழித்து முனகியபடி பாண்டு திரும்பிப்படுத்தான். அவன் கடைவாயில் வழிந்த எச்சிலை குந்தி மெதுவாகத் துடைத்தாள். சத்யவதி எழுந்துகொண்டு "நாளை நிமித்திகரை வரச்சொல்" என சியாமையிடம் சொன்னாள்.

முதுநிமித்திகர் கபிலரும் அவரது மூன்றுமாணவர்களும் மறுநாள் மாலை அரண்மனைக்கு வந்தனர். பாண்டு மதியத்திலேயே துயிலெழுந்துவிட்டதாக சேடி வந்து தெரிவித்தாள். அவனருகே அம்பாலிகை கண்ணீருடன் அமர்ந்திருப்பதாகவும் அவனை தன் அந்தப்புரத்துக்கே கொண்டுசெல்லப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் சொன்னாள். "எழுந்ததும் அவனை என்னை வந்து பார்க்கச்சொல்" என சத்யவதி ஆணையிட்டாள். "குந்தியும் மாத்ரியும் வரவேண்டும்."

மாலையில் பாண்டு நீராடி வெண்ணிற ஆடை அணிந்து சத்யவதியின் அரண்மனைக்கு வந்தான். அவனுடன் அம்பாலிகையும் வந்தாள். அம்பாலிகை இரவெல்லாம் அழுதமையால் வீங்கிக் கனத்த இமைகளுடன் வெளிறிய கன்னங்களுடன் சிவந்த மூக்குடன் இருந்தாள். நெற்றியருகே கலைந்த குழல்கற்றைகளில் வெண்ணிறமுடிகள் கலந்திருந்தன. செம்மை படர்ந்த கண்களில் கண்ணீர் எஞ்சியிருப்பது போலத் தெரிந்தது. பாண்டு வந்தபோது கபிலர் சத்யவதியின் முன் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து தலைவணங்கினார்.

தூவிமஞ்சத்தில் சாய்ந்திருந்த சத்யவதி "கபிலர் நிமித்தநூலை பரத்வாஜமுனிவரிடமிருந்து கற்றவர். அவர் அறியாத ஏதுமில்லை" என்றாள். பாண்டு அவரை தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். அவனருகே அம்பாலிகை நின்றுகொண்டாள். மைந்தனின் உடலை தொட்டுக்கொண்டிருக்க அவள் விழைவது தெரிந்தது. ஆனால் அவள் அருகே நிற்பதை பாண்டு விரும்பவில்லை என்று அவன் உடலசைவுகள் காட்டின. அவள் அவன் சால்வையை தன் கைகளால் மெல்லத் தொட்டாள். பின் அதன் நுனியை கையிலெடுத்துக்கொண்டாள். பாண்டு சால்வையை இயல்பாகப் பற்றுவதுபோல பிடித்து தன் உடலில் சுற்றிக்கொண்டான். அம்பாலிகை கையை அவனைத் தொடும்பொருட்டு அனிச்சையாக நீட்டி பின் சாளரத்தின் கதவைப்பற்றிக்கொள்வதை சத்யவதி கண்டாள்.

குந்தியும் மாத்ரியும் சேர்ந்தே வந்தனர். அறையைக் கண்டதும் அனைத்தையும் அறிந்துகொண்ட குந்தி சத்யவதியையும் அம்பாலிகையையும் வணங்கிவிட்டு தரையில் அமர்ந்துகொண்டு மாத்ரியிடம் அமரும்படிச் சொன்னாள். அம்பாலிகை நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து திகைத்த மாத்ரி ஆறுதல்கொண்டவள் போல அருகே அமர்ந்துகொண்டாள். அம்பாலிகை அவர்கள் இருவரையும் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் மாறிமாறி நோக்கியபின் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

மாத்ரி அந்த வெறுப்பால் வருத்தம் கொள்வதை சத்யவதி கண்டாள். அவளுடைய பெரிய விழிகளில் நீர் நிறைந்தது. அவள் அண்ணாந்து அம்பாலிகையையே நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் மாத்ரியை நோக்கிய அம்பாலிகை வாயை கடுமை தெரிய இறுக்கியபடி தலையைத் திருப்பினாள். மாத்ரி கண்ணீர் சொட்ட தலையைக்குனிந்து குந்தியின் தோள்களுக்கு அப்பால் பதுங்கிக்கொண்டாள்.

மாத்ரியைக் காண சத்யவதியின் நெஞ்சில் மெல்லிய வலி எழுந்தது. இருபதாண்டுகளுக்கு முன் அம்பாலிகை அப்படித்தான் இருந்தாள் என்று எண்ணிக்கொண்டாள். இன்று நரைகலந்த குழலும் ஆழ்ந்த வரிகளோடிய முகமும் மெலிந்த உடலுமாக நிற்கும் அவளை அந்த அழகியபேதைப்பெண்ணாக எண்ணிக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் இருபதாண்டுகாலத்தில் இந்த வெண்ணிறமான கொழுத்த சுருள்முடிச்சிறுமி இதேபோல இன்னதென்றிலாத ஆங்காரமும் கசப்புமாக இப்படி வெறுமையைப்பற்றிக்கொண்டு நிற்பாளா என்ன?

நிமித்திகர் தன் சிறுசந்தனப்பெட்டியில் இருந்து வெண்சுண்ணக்கட்டியை எடுத்து தன் முன்னால் போடப்பட்ட பீடத்தில் பன்னிரு திகிரிக்களத்தை வரைந்தார். அதன் முனைகளில் மூன்று வண்ணங்கள் கொண்ட சிறிய கல்மணிகளை வைத்து அதை நோக்கியபடி சிலைத்து அமர்ந்திருந்தார். கனவிலிருப்பவர் போல அக்கற்களை இடம்மாற்றிக்கொண்டே இருந்தவர் எழுந்து வடமேற்கு மூலையை நோக்கிச் சென்றார். அவரது அசைவில் நிழலாடக்கண்டு அங்கிருந்த பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த மயிற்பீலிக்கற்றையில் இருந்து ஒரு பெரியபல்லி தாவிக்குதித்தது.

சத்யவதி கூர்ந்து நோக்கினாள். அது இணைப்பல்லி. விழுந்த அதிர்விலும் இரு பல்லிகளும் பிரியவில்லை. ஒன்றுடன் ஒன்று ஒட்டியவையாக இரட்டைத்தலைகொண்டவைபோல அமர்ந்திருந்தன. பின்னர் எட்டுகால்கொண்ட ஒரே உடலென ஓடி பீடத்துக்கு அடியில் சென்று மறைந்தன. பல்லிகள் விழுந்த இடத்தில் அறுந்துக்கிடந்த ஒற்றைவால்நுனி ஒன்று நெளிந்து நெளிந்து துடித்துக்கொண்டிருந்தது. கபிலர் குனிந்து அதை நோக்கியபின் திரும்பி வந்து தன் நிமித்தக்களத்தை நோக்கத் தொடங்கினார்.

நெளிந்துகொண்டிருந்த வால்நுனியையே மாத்ரி நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கியது. குந்தியின் உடலுடன் மேலும் ஒட்டிக்கொண்டு அவள் தோள்களை இறுகப்பிடித்துக்கொண்டாள். குந்தி நிமித்திகரின் முகத்தையே நோக்கினாள். கபிலர் கண்களைத் திறந்து "பேரரசி, அரசருக்கு இப்பிறவியில் காமத்தின் இன்பம் இல்லை" என்றார். அம்பாலிகையின் கையின் வளையல்கள் ஒலித்தன. சத்யவதியும் குந்தியும் அதை நோக்கியபின் பார்வையைத் திருப்பிக்கொண்டனர். "அதன் காரணத்தை விளக்குங்கள் நிமித்திகரே" என்றாள் அம்பாலிகை.

"பேரரசி, ஊடும்பாவுமாக செயல்களும் விளைவுகளும் பின்னிநெய்துள்ள இவ்வாழ்க்கை வலையை சம்சாரம் என்றனர் மூத்தோர். இதில் ஒவ்வொருசெயலுக்கும் முன்னால் முடிவிலி வரை காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் முடிவிலி வரை விளைவுகளும் உள்ளன" என்றார் கபிலர். "நாம் நனவில் அறிவது சிறிது. கனவிலறிவது மேலும் சற்று. சுஷுப்தியிலும் துரியத்திலும் அறிவது இன்னும் சற்று. அறிவதெல்லாம் அறியமுடியாமையின் திவலைகளை மட்டுமே." சத்யவதி தலையசைத்தாள்.

கபிலர் தன் மாணவர்களில் ஒருவனை திகிரிக்களத்தின் முன்னால் அமரச்செய்தார். "சுகுணா, உன்னில் இருந்து ஒழுகிச்செல்வன எதையும் தடுக்காதே" என்றார். அவன் நெற்றிப்பொட்டைக் கூர்ந்து நோக்கியபடி அவர் அமர்ந்திருக்க அவன் அவர் விழிகளை நோக்கி மடியில் வைத்த கைகளுடன் மலர்முறைப்படி அமர்ந்திருந்தான். அவன் கண்கள் மெல்ல மூடின. கழுத்தின் நரம்புகள் சற்று அசைந்தன. கபிலரின் பிற இரு மாணவர்களும் சற்று அப்பால் கைகளை மடியில் வைத்து ஊழ்கத்திற்கு அமர்வதுபோல அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

சீடனாகிய சுகுணன் பெருமூச்சுவிட்டு "ஓம்" என்றான். கபிலர் "யாருடைய வரவென நான் அறியலாமா?" என்றார். "என் பெயர் கிந்தமன். காசியபகுலத்தில் குஞ்சரர் என்னும் முனிவருக்கு அப்சரகன்னியில் பிறந்தவன்" சீடனின் வாயிலிருந்து நடுவயதான ஒருவரின் குரல் எழுந்ததைக் கண்டு மாத்ரி திகைத்து மூச்சை இழுத்தாள். "தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என அறியலாமா?" என்றார் கபிலர். சுகுணன் "நான் இங்கு அழைக்கப்பட்டேன். இங்கே விழுந்துள்ள விதியின் முடிச்சொன்றை நான் அவிழ்க்கவேண்டுமென விதியே ஆணையிட்டது" என்றான்.

"தங்கள் சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் முனிவரே" என்றார் கபிலர். சுகுணன் "சந்திரகுலத்தில் விசித்திரவீரிய மன்னரின் மைந்தனாகப்பிறந்த இம்மன்னர் பாண்டு எனக்கு பெரும் தீங்கொன்றை இழைத்தார்" என்றான். பாண்டு திகைப்புடன் எழுந்துகொண்டான். "முதிரா இளமையில் கூதிர்காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலுள்ள பிங்கலவனம் என்னும் குறுங்காட்டில் அஸ்தினபுரியின் இளவரசரான பாண்டு தன்னுடைய இருபது வேட்டைத்துணைவர்களுடன் யானைமீதமர்ந்து வேட்டைக்குச் சென்றிருந்தார்" என்று சுகுணன் சொன்னதும் பாண்டு அச்சம் குடியேறிய கண்களுடன் அமர்ந்துகொண்டான்.

"அந்த வேட்டையில் பாண்டுவால் ஓடும் செந்நாய்களையோ துள்ளும் மான்களையோ பதுங்கும் முயல்களையோ வேட்டையாடமுடியவில்லை. அவரது விழிகளுக்கு கூர்மையில்லை. அவரது அம்புகள் விழிகளைத் தொடரவும் முடியவில்லை. தன்னால் வேட்டையாடமுடியாதென்று அவர் உணர்ந்தார். ஒருவேட்டைமிருகமாவது கையிலில்லாமல் கானகத்திலிருந்து திரும்பக்கூடாதென அவர் எண்ணியபோது பசும்புதர்களுக்கு அப்பால் இரண்டு மான்கள் நிற்பதைக் கண்டு வில்குலைத்தார்."

"அப்போது வேட்டைத்துணைவனான குங்குரன் என்ற முதியவன் அரசே, அவை இணைமான்கள், அவற்றைக் கொல்ல வேட்டைத்தெய்வங்களின் ஒப்புதலில்லை என்றான். மிகவும் இளையவராகிய பாண்டு சினத்துடன் திரும்பி அதை நான் அறிவேன், ஆனால் இன்று ஒருவேட்டையேனும் இல்லாமல் திரும்புவதைவிட இந்தப்பாவத்தைச் செய்யவே விரும்புகிறேன் என்று கூவியபடி தன் வில்லை நாணேற்றி தொடர்ச்சியாக ஐந்து அம்புகளால் அந்த மான்களை வீழ்த்தினார்."

சுகுணன் சொன்னான் "அந்த மான்கள் அம்புபட்டு அலறிவிழுந்தபோது அவற்றின் குரல் மானுடக்குரல் போலவே இருக்கிறது என்று பாண்டு நினைத்தார். வேட்டைத்துணைவர்களும் அவ்வண்ணமே நினைத்தனர். உண்மையில் அது மானுடனாகிய நானும் என் துணைவியாகிய கௌசிகையும்தான்." பாண்டு நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு வெளுத்த உதடுகளுடன் அமர்ந்திருந்தான். சாளரத்திரைச்சீலைகள் காற்றில் பறந்து அமைந்தன.

"முற்பிறவியில் நான் தித்திரன் என்னும் முனிவனாக இருந்தேன். ஐந்துவயதிலேயே ஞானம்தேடி கானகம் சென்று கடுந்தவம் செய்து உடல்துறந்து விண்ணகமேகினேன். ஏழு பிரம்ம உலகங்களை என் தவத்தால் கடந்து நான் விண்ணளந்தோன் வாழும் வைகுண்டத்தின் பொற்கதவம் முன் நின்றேன். அங்கே காவல்நின்றிருந்த ஜயனும் விஜயனும் என்னை அதிலிருந்த சின்னஞ்சிறு துளைவழியாக உள்ளே செல்லும்படி ஆணையிட்டனர். நான் உடலைச்சுருக்கி நுண்வடிவம் கொண்டு உள்ளே நுழைந்தேன். என் இடதுகையின் கட்டைவிரல் மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நின்றுவிட்டது."

”திகைத்து நின்ற என்னை நோக்கி ஜயவிஜயர் முனிவரே உங்கள் ஆழத்தின் அடித்தட்டில் முளைக்காத விதை ஏதோ ஒன்று உள்ளது. அனைத்தும் முளைத்துக் காய்த்துக் கனிந்தவர்களுக்கன்றி வைகுண்டத்தில் இடமில்லை என்றனர். நான் என் அகத்தை கூர்ந்து நோக்கியபோது என்னுள் கடுகை பல்லாயிரத்தில் ஒன்றாகப் பகுத்தது போல சின்னஞ்சிறு காமவிழைவு எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதை நிறைக்காமல் என்னால் உள்ளே நுழையமுடியாதென்று உணர்ந்தேன். முனிவரே இங்கே ஒருகணமென்பது மண்ணில் ஏழு பிறவியாகும். சென்று வாழ்ந்து நிறைந்து மீள்க என்றனர் ஜயவிஜயர்."

"நான் காட்டில் நீத்த உடல் மட்கி மறைந்த மண்மீது அமர்ந்து தவம்செய்த குஞ்சரர் என்னும் முனிவரின் சித்தத்தில் குடியேறி அவர் விந்துவில் ஊறி பாத்திவப் பிந்துவாக ஆனேன். காமம் எழுந்து விழிதிறந்த குஞ்சரர் அந்தவனத்தில் மலருண்ண வந்த சதானிகை என்னும் அப்சரகன்னி ஒருத்தியைக் கண்டார். அவளை நான் அவருடலில் இருந்து அழைத்தேன். அவ்வழைப்பைக்கேட்டு அவள் அருகே வந்தாள். அவளுடன் அவர் இணைந்தபோது நான் என் உருவை மீண்டும் அடைந்தேன். கிந்தமன் என்ற மகனாகப் பிறந்து அவரது தழைக்குடிலில் வளர்ந்தேன்."

"என் முதிராஇளமையில் ஒருநாள் தந்தை சொற்படி ஊழ்கத்தில் இருக்கையில் வைகுண்டவாயில் முன்னால் ஒரு எளிய கற்பாறையாகக் கிடந்த தித்திரனை நான் கண்டேன். நான் யாரென்று உணர்ந்தேன். என் இடக்கையின் கட்டைவிரலை என் தவத்தால் அழகிய இளம்பெண்ணாக ஆக்கிக்கொண்டேன். அவளுக்கு கௌசிகை என்று பெயரிட்டு என் துணைவியாக்கினேன். அவளுடன் காமத்தை முழுதறியத் தலைப்பட்டேன். ஒருபிறவியிலேயே எழுபிறப்பின் இன்பத்தையும் அறிந்து கனிய எண்ணினேன்."

"என் இனிய துணைவி கௌசிகையும் நானும் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்னும் நால்வகை உயிர்களாகவும் வடிவெடுத்து காமத்தை அறிந்துகொண்டிருந்தோம். மானாக அந்த அழகிய பிங்கலவனத்தில் துள்ளிக்குதித்தும், தழுவியும் ஊடியும், சுனைநீர் அருந்தியும், நறும்புல்தளிர்களை உண்டும் மகிழ்ந்தோம். இணைசேர்ந்து முழுமையை அறிந்துகொண்டிருந்த கணத்தில் பாண்டுவின் அம்புபட்டு எங்கள் காமத்தவம் கலைந்தது. உடலும் உள்ளமும் பிரிந்து நாங்கள் விழுந்தோம். எங்கள் உடல்களை பாண்டுவின் வேட்டைக்குழு எடுத்துச்செல்வதை அந்தக் காட்டின் காற்றுவெளியில் நின்றபடி திகைத்து நோக்கிக்கொண்டிருந்தோம்."

பாண்டு எழுந்து கைகளை வீசி "நான் ஓர் அரசனுக்குரிய செயலையே செய்தேன்! வேட்டையும் போரும் அரசனுக்குப் பாவமல்ல" என்று சிதறிய குரலில் கூவினான். சீற்றத்துடன் அவனைநோக்கித் திரும்பிய சுகுணன் "ஆம், அது நெறி. ஆனால் அந்நெறிதான் இணைசேர்ந்திருக்கும் உயிர்களையும் துயிலில் இருக்கும் உயிர்களையும் கொல்லலாகாது என்று விலக்குகிறது. புணரும் உயிரின் விந்துவில் வாழும் உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை. கனவில் எழும் மூதாதையரைக் கலைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை" என்றான். அந்தச்சீற்றத்தைக் கண்டு பாண்டு முகம் சிவக்க கண்கள் நீர் நிறைய அப்படியே அமர்ந்துவிட்டான்.

"காமமும் கனவும் அனைத்துயிருக்கும் உரிமைப்பட்டவை. காமத்திலும் கனவிலும் உயிர்களின் அகம் பெருகுகிறது. அப்போது ஓர் உடலை அழிப்பவன் இரு அகங்களை அழிக்கிறான். அவன் அந்த இரண்டாவது அகத்திற்கான பொறுப்பை ஏற்றே ஆகவேண்டும். நீ பிழைசெய்துவிட்டாய். ஆகவே என் சாபத்தை நீ அடைந்தேயாகவேண்டும்." பாண்டுவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது. அவன் உதடுகளை அழுத்தியபடி கைகூப்பினான்.

வளையலோசை கேட்டு குந்தி நிமிர்ந்து அம்பாலிகையைக் கண்டாள். அவள் கண்களில் தெரிவதென்ன என்று அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அறியாத விண்ணாழத்தில் இருந்து மண்ணுக்குவந்த தெய்வம் போல அவள் தோன்றினாள். நகைக்கிறாளா அழுகிறாளா என்று அறியமுடியாதபடி முகம் விரிந்திருக்க உதடுகள் இறுக்கமாக ஒட்டியிருந்தன.

"அன்று அந்தக் காற்றுவெளியில் நின்றபடி நான் தீச்சொல்லிட்டேன். நீ ஒருநாளும் காமத்தை அறியமாட்டாய் என்றேன். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்துகொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னைப்போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியையும் நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர்துறப்பாய்."

பாண்டு கைகூப்பியபடி "நான் அச்செயலைச் செய்யும்போதே அதன் விளைவையும் அறிந்திருந்தேன் என இன்று உணர்கிறேன் முனிவரே. அது நோயுற்ற குழந்தையின் வன்மம். இயலாத உடலில் கூடும் குரூரம். என் அகம் மீறிச்செல்ல விழைந்துகொண்டிருந்த வயது அது. என் உடலின் எல்லைகளை என் அகத்தின் எல்லைகளை நான் கற்பனையால் கடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த விசையால் அறத்தின் எல்லைகளையும் கடந்துசென்றிருக்கிறேன். கடந்துசெல்லும்போது மட்டுமே நான் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் வலிமையிருக்கிறது என்று அறிந்தேன்."

தலையை தன் கைகளில் சேர்த்து முகம் குனித்து தளர்ந்த குரலில் பாண்டு தொடர்ந்தான் "அந்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். இணைசேர்ந்து நின்ற மான்களை நான் ஏன் கொன்றேன்? வேட்டைக்காக மட்டும் அல்ல. அது மட்டும் அல்ல. அவை நின்றிருந்த இன்பநிலைதான் அதற்குக் காரணம். ஆம், அதுதான். அவற்றைக்கொல்ல நான் எண்ணிய கணம் எது? அவற்றில் அந்த ஆண்மான் உடலின்பத்தில் திளைத்து தன் பெரிய பீலிகள் கொண்ட இமைகளைத் தாழ்த்தி கண்மூடியது. அதைக்கண்ட கணமே நான் என் அம்புகளை எடுத்துவிட்டேன்."

"அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பதைப்போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம்செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழிவாங்குகிறான்."

"அம்புகள் தசையில் சென்று குத்திநிற்பதை, அந்தத் தசைகள் அதிர்ந்து துடிப்பதை, குருதி மெல்லத்தயங்கி ஊறிக்கசிவதை, அம்பின்விசையில் நிலைதடுமாறி அவை எட்டுகால்களும் மாறிமாறி ஊன்ற சரிந்து மண்ணில் விழுவதை அவற்றின் இளமையான வால்களும் விரிந்த காதுகளும் துடிப்பதை நீள்கழுத்துக்கள் மண்ணில் எழுந்து விழுந்து அறைபடுவதை ஓடுவதைப்போல குளம்புகள் காற்றில் துழாவுவதை இத்தனைநாளுக்குப்பின்னும் கனவு என துல்லியமாக நினைவுறுகிறேன்."

"அப்போதும் அவற்றின் உடல் இணைந்திருந்தது" என்றான் பாண்டு. "ஆம், அதை நான் மறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை நினைவுகூரும்போதும் என் உடலை அதிரச்செய்வது அதுதான். அவை இணைந்தே இறந்தன. நான் நேற்று மாத்ரியுடன் இருக்கையில் என் அகம் முழுக்க நிறைந்திருந்த காட்சியும் அதுவே. நினைவிழந்து சரிவதற்கு முன் நான் இறுதியாக எண்ணியது அதைப்பற்றித்தான்."

சத்யவதி "தவசீலரே, வரமருளவேண்டும். பாவங்களனைத்தும் பொறுத்தருளப்படும் பேருலகைச் சேர்ந்தவர் நீங்கள். தங்கள் சினம் தணியவேண்டும். என் குழந்தைக்கு தங்கள் அருளாசி வேண்டும்" என்று கைகூப்பினாள். "பேரரசி, அக்கணத்துக்கு அப்பால் நான் சினமேதும் கொள்ளவில்லை. அக்கணமெனும் மாயையை கடந்ததுமே வாழ்வும் மரணமும் ஒன்றே என்றறிந்துவிட்டேன். ஆனால் பிழையும் தண்டனையும் ஒரு நிறையின் இரு தட்டுகள். அவை என்றும் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அவற்றை மீற தெய்வங்களாலும் ஆகாது" என்றான் சுகுணன்.

சுகுணன் "நேற்றைத் திருத்த எவராலும் இயலாது என்பது வாழ்வின் பெருவிதி. அதை அறிபவர் கூட நாளையைத் திருத்த இக்கணத்தால் முடியும் என்ற பெருவிந்தையை அறிவதில்லை" என்று தொடர்ந்தான். "உங்கள் சிறுமைந்தனுக்கு என் அருளாசிகளை அளிக்கிறேன். அவன் மைந்தரால் பொலிவான். இழந்த காமத்தின் பேரின்பத்தை பலநூறுமடங்காக பிள்ளையின்பத்தால் நிறைப்பான். போர்முதல்வனும் அறச்செல்வனும் ஞானத்தவத்தவனும் சென்றடையும் முழுமையின் உலகையும் இறுதியில் சென்றடைவான். அவனுடன் காமநிறைவடையாத பெண் எவளோ அவள் அவனை அவ்வுலகுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்வாள். தன் பொற்கரங்களால் அவனுடைய அனைத்து வாயில்களையும் அவளே திறந்துகொடுப்பாள். ஆம், அவ்வாறே ஆகுக!"

அவனை அமரச்செய்திருந்த விசை அறுபட்டதுபோல கைகளை பின்னால் ஊன்றி சுகுணன் சரிந்தான். மல்லாந்து விழுந்து இரு கைகளையும் மெல்ல அறைந்துகொண்டான். பின்பு மெல்ல பெருமூச்சுகளுடன் கண்விழித்தான். "சுகுணா... சுகுணா... என் குரலைக் கேட்கிறாயா?" என்றார் கபிலர். "ஆம், குருநாதரே" என்றான் சுகுணன். "எழுந்திரு" என்றார் கபிலர். சுகுணன் எழுந்து அமர்ந்து புதிய விழிகளைப் பெற்றவன் போல அவையை நோக்கினான்.

அம்பாலிகையின் வளையல்கள் ஒலித்தன. "நிமித்திகரே, இங்கே சொல்லப்பட்டதை வைத்து நோக்கினால் காமத்தில் ஈடுபடாதவரை என் மைந்தன் உயிருக்கு ஆபத்தில்லை அல்லவா?" என்றாள். குந்தி நிமிர்ந்து அம்பாலிகையின் முகத்தை நோக்கினாள். யார்முகம் இது என அவள் அகம் மீண்டும் துணுக்குற்றது. கபிலர் "ஆம், அவ்வாறும் சொல்லலாம்" என்றார். "ஆம், அதுதான் முனிவர் சொன்னதன் பொருள். அவன் இனிமேல் வாழ்நாள் முழுக்க காமத்தை துறப்பான். முழுவாழ்வையும் இம்மண்ணில் சிறப்புற நிறைவும் செய்வான்" என்றாள் அம்பாலிகை.

சத்யவதி பெருமூச்சுடன் "ஆம், விதி அதுவென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்" என்றாள். அம்பாலிகை குந்தியையோ மாத்ரியையோ நோக்காமல் "அந்த நெறியை கடைப்பிடிக்கவேண்டியவர்கள் அரசியர். தங்கள் மங்கலங்கள் அழியாமல் காக்கும்பொறுப்பு அவர்களுக்குரியது" என்றாள். குந்தி எவரும் காணாமல் தன் இடக்கையால் மாத்ரியின் கைவிரல்களைப்பற்றி அழுத்தினாள். சத்யவதி மீண்டும் உரக்கப் பெருமூச்சுவிட்டாள்.

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 5 ]

சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். "பிரம்மமுகூர்த்தம்" என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி "தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி?" என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை "யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்" என்றாள்.

அரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை நிலத்திலும் கூரையிலும் வீழ்த்தியிருந்தன. சாளரத்திரைச்சீலைகள் காற்றில் படபடக்கும் ஒலி அவை பட்டுச்சேலையுடன் நடந்துவருவதுபோலக் கேட்டது. அவர்களின் காலடியோசை சுவர்களில் எதிரொலித்தது. செஞ்சுடர் பிரதிபலித்து விழிகளாக ஆன படைக்கலன்களைத் தாழ்த்தி வீரர்கள் சத்யவதியை வணங்கினர். அரண்மனைக்குள் எங்கெங்கோ சேவகர்களும் சேடிகளும் மெல்லிய குரலில் பேசும் ஒலி துயிலில் அரண்மனை முனகிக்கொள்வதுபோலக் கேட்டது.

அரண்மனை முற்றம் நோக்கிச் செல்லும் திறந்த இடைகழியை அடைந்ததும் சத்யவதி நின்று வானை நோக்கினாள். கோடைகால மேகமற்ற வானில் விண்மீன்கள் குவிந்துகிடந்தன. நோக்குந்தோறும் இருண்ட இடைவெளிகளில்கூட மெல்லிய விண்மீன் ஒளி தெரியத்தொடங்கியது. எத்தனை ஆயிரம், லட்சம், கோடி. எந்த வடிவும் அற்றவை. யாரோ எதற்கோ அள்ளி அள்ளிப்பரப்பியவை. பெருமூச்சுடன் "யமுனைக்கரைக்குச் சென்று நெடுநாட்களாகின்றன சியாமை" என்றாள் சத்யவதி. "யமுனையின் நீரில் விண்மீன்களைப் பார்த்த நினைவு எழுகிறது."

சியாமை முகம் மலர்ந்து "ஆம், காளிந்தி இருண்டவானம்போலவே கரியவள்" என்றாள். "மேலே தெரிவது ஒரு நதி என்ற எண்ணத்தை என்னால் ஒருபோதும் வெல்லமுடிந்ததில்லை" என்று சத்யவதி சொன்னாள். "நான் வானை நோக்குவதேயில்லை. வானம் நான் இங்கே செய்வதையும் சுமப்பதையும் எல்லாம் வீண்செயலாக ஆக்கிக்காட்டுகிறது. இந்த அரண்மனையை, மணிமுடியை, அணிகளை துறந்து வெளியே இறங்கி ஓடிவிடுவேன் என்று எண்ணச்செய்கிறது."

சியாமை புன்னகை புரிந்தாள். "என்ன புன்னகை?" என்றாள் சத்யவதி. "துறந்துசெல்வது எளிதா என்ன? எளிதாக இருந்தால் பாரதவர்ஷம் ஏன் துறந்துசென்றவர்களின் காலடியில் காலகாலமாக பணிந்துகொண்டிருக்கிறது?" என்று சியாமை சொன்னாள். "ஆம்" என்றாள் சத்யவதி, மீண்டும் வானைநோக்கியபடி.

அரண்மனை முற்றத்தில் நெய்ப்பந்தங்கள் தழலாடின. அலையடித்த ஒளியில் சூதர்கள் தங்கள் வாத்தியங்களுடன் வந்து நின்றுகொண்டிருப்பதையும் ஏழு வைதிகர்கள் நிறைகுடத்துடன் ஒருவரோடொருவர் உரையாடியபடி நிற்பதையும் காணமுடிந்தது. சூதர்களின் வெண்கல இலைத்தாளங்களில் பந்தச்சுடர் செந்நிறமாக அசைந்தது. வளையல்களும் அணிகளும் குலுங்க எதிர்ப்பக்கமிருந்து அணிப்பரத்தையர் கைகளில் தாலங்களுடன் அரண்மனைமுற்றத்துக்கு படியிறங்கினர். சூதர்களில் ஒருவர் ஏதோ சொல்ல பரத்தையர் சதங்கையொலி போல சிரித்தனர். யாரோ ‘பேரரசி’ என எச்சரிக்க பலதலைகள் திரும்பிப்பார்த்தன.

சேடியர் மங்கலத்தாலங்களுடனும் கவரிகளுடனும் வந்து சத்யவதியின் இருபக்கமும் இணைந்துகொண்டனர். படிகளில் இறங்கும்போது சத்யவதி தன் தொடைகளில் கைகளை ஊன்றி மெதுவாகக் காலெடுத்து வைத்தாள். அவளைத் தொட்டு உதவலாமா என தயங்கிய சேடியர் சியாமையைப் பார்த்தபின் விலகிக்கொண்டனர். அரண்மனை முற்றத்தின் கிழக்கு எல்லையில் இருளுக்குள் இரட்டைப்புரவிகள் பூட்டப்பட்ட பயணத்தேர் நின்றுகொண்டிருந்தது. குதிரைகள் துயிலை விடாமல் பிடரிமயிர் சரிய தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. தேரின் பித்தளைக்குமிழ்களில் பந்தவெளிச்சம் அகல்சுடரெனத் தெரிந்தது.

முற்றத்தில் அஸ்தினபுரியின் அனைத்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றிருந்தனர். உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் தங்கள் முழுக் கவச உடையுடன் இடையில் வாளுடன் நின்றிருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் தங்கள் துணைவர்களுடன் நிரையாக நின்றிருந்தனர். பலபத்ரர் மெல்லியகுரலில் ஆணைகளை விடுத்தபடி அனைத்தையும் ஒருங்குசெய்துகொண்டிருந்தார்.

சத்யவதி சியாமையிடம் "மூத்தவளிடம் சொன்னாயல்லவா?" என்றாள். "ஆம் சொன்னேன். அரண்மனை முற்றத்துக்கு வரவேண்டிய முறை அவருக்கு உண்டு என்றும் சொன்னேன்" என்றாள் சியாமை. சத்யவதி பேசாமல் பார்த்தாள். "என் மைந்தனின் மணிமுடி அது. அதை முறைமீறி ஒருநாள் சூடிய பிழைக்காக இறைவன் அளிக்கும் தண்டனையை அவன் அறிகிறான். அதற்கு நான் ஏன் வரவேண்டும், வந்தால் என் தீச்சொல்லையே அவன் மேலும் பெறுவான் என்றார்கள். அருகே காந்தாரத்தின் அரசியர் பதினொருவரும் இருந்தனர்."

சத்யவதி மெல்ல புன்னகைசெய்து "மாமிக்கும் மருகியருக்கும் அவ்வளவு ஒற்றுமை. புறப்பகையைப்போல ஒருமையைக் கொண்டுவரும் ஆற்றல் வேறில்லை" என்றாள். சியாமை புன்னகை செய்தாள். "கன்னிமனங்கள் தாயாகும்போது எவ்வாறு திரிபுகொள்கின்றன என்று சொல்ல எந்த ரிஷியாலும் இதுவரை முடிந்ததில்லை" என்றாள் சியாமை. சத்யவதி புன்னகைசெய்து "கிருஷ்ணனை இங்கே வந்து இவர்களை மீண்டும் சந்திக்கச்சொல்லவேண்டும்" என்றாள்.

"இளையஅரசி மூன்றுநாட்களாக அழுதுகொண்டிருக்கிறார்கள். எந்தச் சொற்களும் அவரை ஆற்றவில்லை. அரசர் அன்னையை தேற்றிச் சொன்ன சொற்களை எல்லாம் மேலும் துயரம்கொள்ளவே அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்" என்றாள் சியாமை. சத்யவதி பெருமூச்சுவிட்டு தலையை மட்டும் அசைத்தாள். "நேற்றிரவு அவர்களுக்கு உடல்வெப்பு கண்டுவிட்டது. மருத்துவர் வந்து மருந்து கொடுத்து துயில்கொள்ளச்செய்திருக்கிறார். அரசர் நாடுநீங்குவதையே அவர்கள் அறியப்போவதில்லை" என்றாள் சியாமை.

மீண்டும் தலைதூக்கி விண்மீன் விதானத்தைக் கண்டாள். நூற்றாண்டுகளாக யுகங்களாக மனிதகுலம் அந்தப் பெருவிரிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் அடியில்தான் அனைத்துச் சிறுமைகளையும் நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறது.

நிமித்திகர் நாளும்கோளும் தெரிந்துசொன்ன செய்தி அன்றே அம்பிகைக்குச் சென்றுவிட்டது என்று சியாமை வந்துசொன்னாள். "அவனுக்கு மண்ணையும் பெண்ணையும் அருகே வைத்துப்பார்க்கவே விதி. ஆள்வதற்கல்ல" என்று சொல்லி அம்பிகை நகைத்தாள் என்றாள். சத்யவதி முகம் சுளித்து "ஷத்ரியப்பெண்ணின் குரலா அது?" என்றாள். "எதை ஷத்ரியகுலத்து குணம் என்கிறீர்கள் பேரரசி? மண்மீதான தீராப்பெருவிருப்பு அன்றி அவர்களிடம் வேறென்ன உள்ளது?" என்றாள் சியாமை. "மண்ணில் உழுதும் மேய்த்தும் வேட்டும் வாழ்பவர்களில் சிலருக்கு மண் தங்கள் முழுதுடைமை என்னும் எண்ணம் வருகிறது. அவ்வண்ணம் முறைமீறி எழுந்து ஆட்கொண்ட சிலரையே நாம் ஷத்ரியர் என்கிறோம்."

அச்செய்தியைக் கேட்டபடி அன்று சத்யவதி கண்களை மூடிக்கொண்டு அகச்சொற்களை கோர்க்கமுயன்றபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். "அரசரின் நோய்நிலைக்காக மன்றமர்ந்த கொற்றவைக்கு கடன்தீர்க்கிறார்கள் என்று அங்குள்ள உளவுச்சேடி சொன்னாள்" என்றாள் சியாமை. சத்யவதி திடுக்கிட்டு எழுந்து "எதற்காக?" என்றாள். "அரசருக்கு காமம் விலக்கப்பட்டிருக்கிறதல்லவா? அப்படியென்றால் காந்தாரநாட்டு அரசியர் பெற்றெடுக்கும் மைந்தருக்கு அஸ்தினபுரியில் ஒப்பும் இணையும் இல்லை என்று எண்ணுகிறார்கள்." வெறுப்புடன் முகம் சுளித்தபடி "அவள் முகத்தையே நான் பார்க்கவிரும்பவில்லை, சியாமை. இங்கு காலெடுத்துவைத்த அந்தக் காசிநாட்டு இளவரசியையே நினைத்திருக்க விரும்புகிறேன்" என்றாள்.

மன்றமர்ந்த கொற்றவைக்கு ஏழு உயிர்ப்பலிகொடுத்து விழவுசூழ்வதை சத்யவதிக்கு முறைப்படி அறிவித்தார்கள். திருதராஷ்டிர மன்னரின் உடல்நிலையின் பொருட்டு அதைச்செய்வதாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் அரண்மனை எங்கும் அது எதற்காக என்று தெரிந்திருந்தது. அலுவல் நோக்க தன் அந்தப்புரத்தறைக்கு வந்த குந்தியிடம் சத்யவதி "அவ்விழவு எதற்கென்று அறிவாயா?" என்றாள். குந்தி நிமிர்ந்து நோக்கி "ஆம்" என்றாள். "பாண்டுவிற்கு மைந்தர் பிறக்கப்போவதில்லை என்பதற்காக" என்று சத்யவதி குந்தியை கூர்ந்து நோக்கியபடி சொன்னாள்.

தன் கையில் இருந்த ஓலையை அதற்குரிய தந்தப்பேழைக்குள் வைத்து அடுத்த ஓலையை எடுத்தபடி குந்தி "ஆம், வெற்றிக்காக கொற்றவையை வழிபடுவது ஷத்ரியர் வழக்கமல்லவா?" என்றாள். சத்யவதி அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். நீண்ட விழிகள் ஓலையில் ஓடின. உதடுகளில் அவள் வாசித்த சொற்கள் ஓசையின்றி நிகழ்ந்தன. அவள் முடிவெடுத்தபோது இதழ்கள் நீண்டு பொன்னிறக் கன்னங்களில் சிறிய குழிகள் விழுந்தன. ஆணையை இன்னொரு ஓலையில் ஒரு சில சொற்களில் குறித்தாள். சத்யவதி புன்னகையுடன் பெருமூச்சு விட்டாள். "பிருதை" என்றாள்.

அவள் அப்படி அழைப்பது அதிகம் நிகழ்வதல்ல என்பதனால் குந்தி நிமிர்ந்து நோக்கினாள். "அரசியல் மதிசூழ்கை என்பது கருவறைக்குள் நம் அறிவை நிறுவி அதற்கு நாம் பூசனையும் பலியும் செய்துகொண்டிருப்பதுதான். அந்தத் தெய்வம் அகந்தை என்னும் கரிய மிருகத்தின்மேல் அமர்ந்திருக்கிறது" என்றாள். குந்தி தலையை அசைத்தாள். "தனித்திருந்து அழுவதற்கு சிலதுளி விழிநீரை எப்போதும் எஞ்சவைத்துக்கொள். எப்போதேனும் பேதையாகவும் அபலையாகவும் இரு." குந்தி தலைகுனிந்து கொண்டாள்.

அரண்மனையின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் நள்ளிரவில் கொற்றவைக்கு பூசனைநிகழ்வதற்கு சற்றுமுன்னர்தான் சத்யவதி முடிவெடுத்து கிளம்பிச்சென்றாள். பீஷ்மர் தேவகனை சந்திக்க உத்தரமதுராபுரிக்குச் சென்றிருந்தார். அவள் வருவாளென அம்பிகை எண்ணியிருக்கவில்லை. தொலைவிலேயே அவள் ரதத்தைப் பார்த்துவிட்ட சத்யசேனையும் சத்யவிரதையும் ஆலயமுகப்பில் நின்றிருந்த அம்பிகையிடம் சென்று சொல்ல அவள் திகைத்தபின் முன்னால் வந்து நின்றாள். ரதத்தில் இருந்து சியாமையின் தோள்களைப் பற்றியபடி சத்யவதி இறங்கியபோது அம்பிகையும் நான்கு அரசிகளும் வந்து வணங்கி முகமன் சொன்னார்கள். சம்படையின் கையைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கியபோது சத்யவதி அவள் வகிடில் கைவைத்து "பேரன்னையாகுக!" என்று வாழ்த்தினாள்.

அப்பகுதியெங்கும் எண்ணைப்பந்தங்கள் கொழுந்தாடிக்கொண்டிருந்தன. பலியாகக் கொண்டு வரப்பட்டிருந்த கோலாடும், வெள்ளாடும், காளைக்கன்றும், எருமைக்கன்றும், மானும், பன்றியும், குதிரைக்குட்டியும் ஆலயத்தின் வலப்பக்கத்தில் கோட்டைச்சுவர் ஓரமாகக் கட்டப்பட்டிருந்தன. பலிபூசனை செய்யும் வைராகர்கள் செம்பட்டு சுற்றி நெற்றியில் செஞ்சாந்துத் திலகமணிந்து பலிப்பொருட்களை ஒருக்கிக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் திருதராஷ்டிரன் ரதத்தில் வந்திறங்கி விதுரனின் கைகளைப்பற்றியபடி ஆலயமுகப்புக்கு வந்தான்.

திருதராஷ்டிரன் தன்னைப் பணிந்தபோது அவன் உடலை நிமிர்ந்து நோக்கிய சத்யவதி ஒருகணம் திகைத்தாள். தன்னைச்சூழ்ந்திருக்கும் உலகம் தன்னை மிகச்சிறியதாக ஆக்கி வளர்ந்து பேருருவம் கொண்டதுபோலத் தோன்றியது. ஒவ்வொன்றும் தெளிவிழந்து விளங்கமுடியாதனவாக மாறிக்கொண்டிருப்பது போல. முற்றிலும் வேறுலகம். வேறு மக்கள். அஸ்தினபுரியில் பீஷ்மரையும் சியாமையையும் தவிர எவரையும் உண்மையில் அவளறிந்திருக்கவில்லை என்று எண்ணிக்கொண்டாள். அந்த அச்சம்தான் முதுமையா என மறுகணம் புன்னகைசெய்தாள்.

பூசனை தொடங்கியதும் சத்யவதி மேலும் சோர்வடைந்தாள். உரக்க ஒலித்த முழவுகளின் சீரான தாளம் அவள் வயிற்றில் அதிர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது. சற்றுநேரத்தில் உடற்தசைகளே முரசுத்தோல் என அதிரத்தொடங்கின. அருகே கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளைப் பார்த்தாள். அவற்றின் கண்களில் பந்த ஒளி தெரிந்தது. மான் கால்மடக்கி படுத்திருக்க பசுக்கன்றும் குதிரைக்கன்றும் புல்கட்டில் இருந்து பசுந்தாள்களை உருவி தலையை ஆட்டி மென்றுகொண்டிருந்தன. அவற்றின் குருதியைக் காணும் வல்லமை தனக்கில்லை என்று சத்யவதி எண்ணினாள். எந்தக்குருதியையும் அவளால் பார்க்கமுடியாது. விந்துவாகி வெளுத்து கருவறையில் குடியேறி மைந்தர்களாக மாறி உலகை நிறைப்பதன்றி வேறெந்த இலக்கும் குருதிக்கு இருக்கலாகாது. ஆம்.

அவள் சியாமையை நோக்கி கையைத் தூக்கியபோது பெரிய ரதம் அசைந்து வருவதைக் கண்டாள். அதன் அச்சுக்குடத்தில் ஆணி உரசும் ஒலியும் சகடங்கள் கல்மீது ஏறியமரும் ஒலியும் கேட்டன. சத்யவிரதை அம்பிகையின் தோளில் கையை வைத்தாள். அம்பிகை முன்னரே நிலையழிந்து நின்றிருந்தவள் திடுக்கிட்டு "என்ன?" என்றாள். "அரசர்" என்றாள் சத்யவிரதை. காந்தாரி யார் என்று கேட்க சத்யசேனை குனிந்து அவள் காதில் சொன்னாள்.

ரதத்தில் இருந்து பாண்டுவும் பின்னால் குந்தியும் மாத்ரியும் இறங்கினர். அவர்களுக்கு அழைப்பு இருக்கவில்லை என்பதை சத்யவதி அறிந்திருந்தாள். அவர்களுடன் அம்பாலிகை இருக்கிறாளா என்று மட்டும் அவள் பார்த்தாள். இல்லை என்றதும் அமைதிகொண்டு குந்தியின் முகத்தையே நோக்கினாள். அவர்கள் நடந்து வருவதை காந்தார அரசிகள் திகைத்த முகத்துடன் நோக்கி நின்றனர். தீப்பந்தங்களின் ஒளியில் குந்தியின் அணிகள் ஒளிவிட்டன. விதுரன் குனிந்து திருதராஷ்டிரன் காதுகளில் அவர்களின் வருகையைச் சொன்னான்.

பாண்டு வந்ததுமே சத்யவதியை அணுகி வணங்கினான். பின்னர் திரும்பி அம்பிகையை அணுகி குனிந்து வணங்கினான். அவள் தடுமாற்றத்துடன் சத்யசேனையை நோக்கியபின் நடுங்கும் கைகளைத் தூக்கி "நீண்ட ஆயுளுடன் இரு" என வாழ்த்தினாள். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி வணங்கி "மூத்தவரே தங்கள் அருளை நாடுகிறேன்" என்றான். திருதராஷ்டிரன் "மூடா, நான் உன்னை நெடுநேரமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்... நீ அரண்மனையில் என்னதான் செய்கிறாய்? இசைகேட்க அழைத்தால்கூட வருவதேயில்லை" என்றான்.

பாண்டு சிலகணங்கள் தயங்கியபின் "மூத்தவரே நான் என் துணைவியருடன் கானகவாழ்க்கைக்குச் செல்வதாக முடிவெடுத்திருக்கிறேன்" என்றான் பாண்டு. "நல்ல முடிவு... இங்கே இருப்பதைவிட உன் உடல்நலம் மேம்படும். பௌர்ணமிக்குள் திரும்பிவிடுவாயல்லவா?" என்றான் திருதராஷ்டிரன். "இல்லை மூத்தவரே, நான் திரும்புவதாக இல்லை." திருதராஷ்டிரன் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து தூக்கிய கைகளுடன் அசையாமல் இருந்தான். விதுரன் பாண்டுவை தன் ஒரு கையால் விலக்கி நிறுத்திவிட்டு "அரசே, அவர் வனம்புகுதலைப்பற்றிச் சொல்கிறார்" என்றான்.

"சீ, மூடா" என்று கூவியபடி திருதராஷ்டிரன் கைகளை வீசி பாண்டுவை அறைந்தான். பாண்டு முன்னரே விலக்கப்பட்டிருந்தமையால் அடி காற்றில் சுழன்றது. விதுரன் திருதராஷ்டிரன் கைகளைப்பற்றியபடி "மூத்தவரே, அவரது மருத்துவர்களும் நிமித்திகர்களும் இட்ட ஆணை அது. அவர் மீறலாகாது" என்றான். "என்ன ஆணை? அதைப்போட்ட நிமித்திகனை என்னிடம் கொண்டுவா. மூத்தவன் நானிருக்க என் இளவல் எப்படி வனம்புகமுடியும்?" என்று தன் கைகளை ஓங்கித்தட்டியபடி திருதராஷ்டிரன் கூவினான்.

"அரசே, அவரது நலனைமட்டுமே நாம் பார்க்கவேண்டும்" என்றான் விதுரன். "அவனுக்கு என்ன குறை இங்கே? அரசும் அழகிய இரு மனைவியரும் இருக்கிறார்கள். ஆட்சித்துணைக்கு நீ இருக்கிறாய். வேறென்ன வேண்டும்? அவன் உடலுக்கு ஒன்றுமில்லை. கண்களும் பார்வையும் இருக்கிறது. மருத்துவர்களும் நிமித்திகர்களும் பசப்புகிறார்கள். என்னருகே கொண்டுவா அவர்களை. யார் சொன்னது இதை என்று கேட்கிறேன்."

"மூத்தவரே, இங்கே அரசை நான் பார்த்துக்கொள்கிறேன். அவர் தனக்கு உகந்த அழகிய காட்டுவாழ்க்கையை வாழட்டுமே" என்றான் விதுரன். "வாழட்டும்... ஆனால் அரசைத்துறந்து அவன் எங்கும் செல்ல நான் ஒப்பமாட்டேன். அவன் என் தம்பி. அவனுக்குரிய நாடு இது..." விதுரன் தணிந்து "அரசே, அவர் சிலகாலம் அங்கிருக்கட்டும். அவருடைய உடல்நிலை மேம்பட்டு மைந்தர்களும் பிறந்தபின் நகர் திரும்பட்டும்" என்றான். "எப்போது நகர் திரும்புவான் என்று கேட்டுச்சொல்... இல்லை, வேண்டாம், அவனை என் கையருகே வரச்சொல்."

வரவேண்டாம் என்று விதுரன் கையைக்காட்டினான். "அரசே, அவர் திரும்பிவருவார். திரும்பிவருவாரென உறுதியளிக்கிறார்" என்றான். "எப்போது... எப்போதென்று அவனிடம் சொல்லச்சொல்" என்றான் திருதராஷ்டிரன். விதுரன் "மைந்தர்கள் பிறந்து அவர்களுக்குரிய அரசபட்டங்கள் சூட்டப்படும் நாளில் திரும்புவார்" என்றான். பாண்டு எதையோ சொல்லப்போக விதுரன் அவனை கையசைத்து நிறுத்தி அதைச் சொல்லும்படி சைகை காட்டினான். பாண்டு "ஆம் மூத்தவரே அவ்வண்ணமே வருகிறேன்" என்றான்.

திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி "உன் இரு துணைவியரும் உடனிருப்பார்களா?" என்றான். "ஆம் மூத்தவரே" என்றான் பாண்டு. "உன் முதல் அரசி அனைத்தும் அறிந்தவள்... அவள் எங்கே?" குந்தி முன்னால் வந்து "பணிகிறேன் அரசே" என்றாள். "என் தம்பியை உன்னிடம் ஒப்பளிக்கிறேன். அவனை உன் மைந்தன் என நீ பேணவேண்டும்" என்றான் திருதராஷ்டிரன். "ஆணை" என்றாள் குந்தி. திருதராஷ்டிரன் "எங்கே மாத்ரநாட்டு அரசி?" என்றான். மாத்ரி வந்து வணங்கி "பணிகிறேன் அரசே" என்றாள். "என் தம்பியுடன் வனத்தில் மகிழ்ந்திரு... அவன் தேடும் இளம்துணையாக இரு" என்றான் திருதராஷ்டிரன்.

பாண்டுவை அருகே வரும்படி விதுரன் சைகை காட்டினான். பாண்டு வந்து திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டபோது அவனை இருகைகளாலும் அள்ளித் தழுவிக்கொண்டான் திருதராஷ்டிரன். "நீ இங்கே அரண்மனையில் வாழமுடியாதென்று நான் அறிவேன். இங்கே வண்ணங்கள் இல்லை. காட்டில் நீ மகிழ்ந்து வாழமுடியும். ஆனால் நான் இங்கு தனித்திருக்கிறேன். அதை நீ மறவாமலிருந்தால் போதும்" என்றான். பாண்டுவின் தலையையும் காதுகளையும் கன்னங்களையும் தன் கரிய கனத்த விரல்களால் வருடியபடி "உன்னைத் தொட்ட இந்த உணர்வை என் கைகள் நெடுநாட்கள் வைத்திருக்கும். அதற்குள் நீ வந்துவிடவேண்டும்" என்றான். "ஆணை மூத்தவரே" என்றான் பாண்டு.

சத்யவதி எழுந்து "நான் கிளம்புகிறேன் விதுரா" என்றாள். "பேரரசி, பூசனை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கிவிடும்" என்றான் விதுரன். சத்யவதி "என்னால் குருதியைக் காணமுடியாது" என்றாள். "மகதத்தை வெல்லவேண்டுமென்று துடித்த பேரரசியா பேசுவது?" என்று திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து தன் தொடையில் தட்டினான். "ஆம், ஆனால் அந்தி மிகவிரைவில் கவிந்துவிடும் மைந்தா...நான் இன்று முதியவளாகிவிட்டேன். இந்த கன்றுகளின் அன்னையாக மட்டுமே என்னால் சிந்திக்கமுடிகிறது. இவை கொற்றவைக்குரியவை அல்ல என்றால் பலியை தடுத்திருப்பேன்" என்றபின் "ஆம், நான் போரை நினைத்துக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. இப்போது மென்மையான அமைதியான படுக்கையில் என் இளம் சிறுமைந்தர்களுடன் படுத்திருப்பதை மட்டும்தான் கனவுகாண்கிறேன்" என்றபடி சியாமையை நோக்கி கையை நீட்டினாள் சத்யவதி.

குறுமுழவுகளும் சங்கும் சல்லரியும் ஒலிக்க அரண்மனைக்குள் இருந்து திருதராஷ்டிரன் விதுரனின் கைபற்றி வெளியேவந்தான். வாழ்த்தொலிகள் எழுப்பி வீரர்கள் பணிந்து இருபக்கமும் விலகினர். அவன் வெண்ணிற ஆடையும் தலையில் வெண்பட்டுத் தலைப்பாகையும் அணிந்திருந்தான். விதுரன் கையசைவால் ஏதோ கேட்க காவலர்தலைவன் உள்ளே ஓடினான். திருதராஷ்டிரன் சத்யவதி அருகே வந்து "வணங்குகிறேன் அன்னையே" என்றான். "புகழுடன் இரு" என சத்யவதி வாழ்த்தினாள்.

மீண்டும் சங்குகளும் குறுமுழவுகளும் சல்லரிகளும் ஒலித்தன. அரண்மனை முற்றம் முழுக்க பரபரப்பு பரவியோடுவது தெரிந்தது. கடிவாளம் இழுக்கப்பட குதிரைகள் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது ரதமும் உயிர்கொண்டது. அரண்மனைக்கு அப்பால் இரு நெய்ப்பந்தங்களை ஏந்தி இருவர் முன்னால் வர பின்னால் வெண்கொற்றக்குடை மேலெழுந்து தெரிந்தது. சாமரங்கள் இருபக்கமும் அசைய மங்கலச்சேடியர் சூழ பாண்டு வந்தான். அவனைத் தொடர்ந்து குந்தியும் மாத்ரியும் வந்தனர். பாண்டுவின் வலப்பக்கமாக பேரமைச்சர் யக்ஞசர்மர் முதுமையில் தளர்ந்த உடல் கன்றுபோல கூனியிருக்க மெதுவாக நடந்துவந்தார்.

பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அணிகலன்களைத் துறந்து மரவுரியாடை அணிந்திருந்தனர். ஒருகணம் அவர்களைப் பார்த்த சத்யவதி தன் அகத்தில் கூரிய வலியை உணர்ந்தவளாக பார்வையைத் திருப்பிக்கொண்டாள். வாழ்த்தொலிகள் முற்றத்தை நிறைத்து எழுந்தபோதிலும் அவர்களின் மரவுரிக்கோலம் மெல்ல அம்முழக்கத்தை கரைந்தழியச்செய்தது. திருதராஷ்டிரன் "வந்துவிட்டானா?" என்றான். விதுரன் "ஆம் அரசே" என்றான்.

பாண்டு வந்து முற்றத்தில் நின்றான். இருகைகளையும் கூப்பியபடி அங்கே நின்ற அனைவரையும் நோக்கியபின் "பெரியவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்" என்றான். "ஆன்றோரே, என் இளமைக்காலத் தீச்செயல் ஒன்றினால் என் மீது முனிவரின் தீச்சொல் ஒன்று விழுந்துவிட்டது என்று அறிந்துகொண்டேன். நான் செய்தவையும் அதற்கு ஈடாக நான் அடைந்தவையும் அனைவரும் அறிந்திருக்கவேண்டியவை என்று எண்ணுகிறேன். ஆகவே அவற்றை சூதர் பாடவேண்டுமென்று கோருகிறேன்" என்றான். சூதர்கள் ‘ஆம் ஆம் ஆம்’ என்று சொல்லி தலைவணங்கினர்.

"என் மீதான பழியின் கறை என் குலம் மீதோ என் மூதாதையரின் இந்நகர் மீதோ விழலாகாதென்று எண்ணியே நான் வனம்புக முடிவெடுத்தேன். விசித்திரவீரிய மாமன்னரின் அருளும் மாமுனிவர் கிருஷ்ணதுவைபாயனரின் கருணையும் என்னைக் காக்குமென உறுதிகொள்கிறேன். நமது வனங்கள் இனியவை. அங்கே கருணையை கனிகளாக நிறைத்துக்கொண்டிருக்கும் மரங்கள் நிறைந்துள்ளன. அருளே குளிர்ந்து ஓடும் ஓடைகள் உள்ளன. நான் அவற்றில் பசியாறுவேன். குளிர்ந்த மலைச்சாரலில் பிடியானையின் காலடியில் நின்றிருக்கும் குட்டிபோல வாழ்வேன்."

"சான்றோரே, இங்கு நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன். இறப்பை, அவமதிப்பை, தனிமையை. இங்கே என்னைச்சுற்றியிருந்த உறவுகளில் முள்ளில் சிக்கும் வௌவால் என என் சிறகுகளை கிழித்துக்கொண்டிருந்தேன். கானகம் என்னை விடுதலை செய்யும் என்று எண்ணுகிறேன். அனைத்தையும் துறப்பதென்பது என்ன என்று இப்போது அறிந்தேன். அது கைகளையும் நெஞ்சையும் வெறுமையாக்கி வைத்திருப்பது. வானுக்கும் மண்ணுக்கும் தெய்வங்களுக்கும் மானுடர்க்கும் எனக்களிப்பதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. அனைத்தையும் நான் பெறமுடியும். மீண்டும் மீண்டும் புதியவாழ்க்கைகளை அடையமுடியும்."

"என்னை வாழ்த்துங்கள் சான்றோரே. நானும் என் துணைவியரும் அனைத்து நலன்களையும் அடையவேண்டும் என்று நற்சொல்கூறுங்கள்" என்று பாண்டு சொன்னான். அந்தமுற்றத்தில் நின்றிருந்த சேவகரும் படைவீரர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். தளகர்த்தர்களும் அமைச்சர்களும் தலைகுனிந்து கண்ணீரை அடக்கிக்கொண்டனர். திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து தலையைச் சரித்து கண்ணீர் மார்பின் மீது கொட்ட நின்றிருந்தான்.

கண்ணீர் விடமுடியவில்லை என்பதை சத்யவதி உணர்ந்தாள். நெஞ்சுக்குள் நிறைந்திருந்தவை ஏன் கண்ணீராக மாறி கண்களை அடையவில்லை. இனி இவனை நான் பார்க்கவேபோவதில்லை என நன்கறிவேன். அவன் செல்வதாகச் சொன்னதுமே அதை உணர்ந்துவிட்டேன். ஆம், இந்த மெலிந்த வெண்ணிறத்தோள்கள், இந்தக் கைகள், இந்தச் செவ்விழிகள், இந்தச் சிறு செவ்வுதடுகள், நான் கைகளில் ஏந்திய இச்சிறு உடல், இதை நான் இனி காணவே போவதில்லை. அவ்வெண்ணம் எங்கோ தீக்குழம்பாக உருகி உருகி வழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவள் வெறித்த விழிகளுடன் அசையாமல் நோக்கி நின்றிருந்தாள்.

பாண்டு ஒவ்வொருவரிடமாக விடைபெற்றான். படைத்தலைவர்கள் உதடுகளை இறுக்கியபடி உடைவாள்களை கைகளால் பற்றிக்கொண்டு தலைவணங்கி அவனுக்கு விடையளித்தனர். மூத்த பிராமண அமைச்சர்கள் அவன் தலைமேல் கைவைத்து வேதமந்திரம் சொல்லி கண்ணீருடன் விடைகொடுத்தனர். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி கால்களைத் தொட்டு வணங்கினான். திருதராஷ்டிரன் பெருங்குரலில் விம்மியபடி விதுரன் தோள்களைப் பற்றிக்கொண்டான். "அரசே, தங்கள் இளையவரை வாழ்த்துங்கள்" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தன் கைகளை பாண்டுவின் தலையில் வெறுமே வைத்தான்.

தன்முன் பாண்டு பணிந்தபோது சத்யவதி "நிறைவுடன் வாழ்க!" என்று வாழ்த்தினாள். நெஞ்சு எடைமிகுந்து உடலை அழுத்துவதுபோலத் தோன்றியது. சியாமை அவளை தோளைப்பிடித்து நிறுத்திக்கொண்டாள். குந்தியும் மாத்ரியும் அவளை வணங்கியபோதும் அரசமுறைச் சொற்களில் வாழ்த்தி விடைகொடுத்தாள். அவர்கள் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டனர். அவர்களின் கால்கள் முற்றத்தை மிதித்துச்செல்வதை மரப்படிகளில் அவர்கள் காலெடுத்துவைத்து ஏறுவதை அவர்கள் அமர்ந்ததும் ரதம் சற்றே அசைவதை குதிரைகள் கழுத்தை குலுக்கிக்கொள்வதை அவள் வேறு எதையோ என நோக்கிநின்றாள்.

காஞ்சனம் ஒலித்ததும் பெருமுரசும் சேர்ந்து அதிர்ந்தது. சூதர்களின் மங்கல இசையும் தாசியரின் வாழ்த்துப்பாடல்களும் எழுந்தன. வைதிகர்கள் வேதநாதம் எழுப்பி நிறைகுடத்து நீரைத்தெளித்து பாண்டுவை வாழ்த்தினர். ரதம் அசைந்து முன்னால் சென்றபோது பாண்டு குனிந்து தலையை நீட்டி அரண்மனையை ஏறிட்டு நோக்கினான். அவ்விழிகளைக் கண்டதும் பழுத்த கட்டி உடைந்து சலம் பீரிடுவதுபோல சத்யவதியின் நெஞ்சிலிருந்த அனைத்துக்கண்ணீரும் பொங்கி வெளியே வந்தது. அவள் அழுதபடி சியாமையின் உடலில் சாய்ந்துகொண்டாள்.

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 1 ]

அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை தங்கள் துதிக்கைகளில் சுருட்டி எடுத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தலையை ஆட்டியபடி மகிழ்வுடன் சென்றுகொண்டிருந்தன. பகல்வெம்மையைத் தாளாமல் அவை அள்ளிக்குவித்த செம்மண் அவற்றின் அகன்ற முதுகிலும் மத்தகத்திலும் பரவியிருந்தது. கைகளில் கோல்களுடன் பாகர்கள் ஆணைகளைப் பிறப்பித்தபடி அவற்றின் வெண்தந்தங்களைப்பற்றியபடி நடந்தனர்.

வடமேற்கு எல்லையில் கோட்டைமதிலை ஒட்டி யானைகளை நீராட்டுவதற்கென்று உருவாக்கப்பட்ட சிறிய ஏரியில் நீர் நன்றாகக் கீழிறங்கி ஓரங்களில் அரக்குநிறமான சேற்றுப்படுகை வெடித்துப்பரவியிருந்தது. முன்னரே நீருக்குள் இறங்கி நின்றிருந்த ஏழெட்டுயானைகள் துதிக்கையால் நீரை அள்ளி விலாவிலும் முதுகிலும் வெண்ணிற ஒளிச்சிதறல்களாக பாய்ச்சிக்கொண்டிருந்தன. நீருக்குள் மூழ்கியபடி துதிக்கையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு வந்த ஒரு யானை அவற்றின் அருகே வந்து எழுந்தபோது பிற யானைகள் திகைத்தவைபோல வழிவிட்டன. சேற்றின்மீது படுத்துப்புரண்டுகொண்டிருந்த இருகுட்டியானைகளில் ஒன்று எழுந்து துதிக்கையை நீட்டியபடி மூழ்கிவந்த இளம் யானையை நோக்கி ஆவலாகச் சென்றது. சேற்றில் கால்களைப் பரப்பி வைத்து முதுகைப்புரட்டிக்கொண்டிருந்த இன்னொரு யானை எழுந்து அமர்ந்து அதை நோக்கியது.

சாலையில் சென்ற யானைகள் சேற்றைக்கண்டதும் தயங்கிநிற்க முன்னால்சென்ற பிடியானை துதிக்கையால் சேற்றை மெல்லத்தொட்டு ஆராய்ந்தபின் கால்களை மெல்லத்தூக்கி வைத்து நடந்து நீரை நோக்கிச்சென்றது. நீந்தி வந்த இளம் யானை துதிக்கையை நீட்டியபடி அவற்றை நோக்கி வந்தது. பின்னால் சென்ற யானை பக்கவாட்டில் நகர்ந்து துதிக்கையை நீட்ட பாகன் அதை கோலால் மெல்லத் தட்டி முன்னால் செலுத்தினான். பாகர்களின் குரல்கள் மிகமெல்ல கேட்டன. பெரிய பிடியானையின் உறுமல் உலோக ஒலிபோலக் கேட்டது. அல்லது மேகங்களுக்குள் புதைந்து ஒலிக்கும் இடியோசைபோல.

சிவை பெருமூச்சுடன் நகரத்தெருக்களைப் பார்த்தாள். அவள் விதுரனைக் கருவுற்றிருக்கும்போது அந்த மாளிகை கட்டப்பட்டு அவள் அங்கே குடிவந்தாள். அவளுக்குரிய சேடிகளும் காவலர்களும் உடன் வந்தனர். அன்று அது அவளை உவகையால் நிலையழியச்செய்வதாக இருந்தது. அவளுக்குரிய அரண்மனை. அவள் ஏவலுக்குச் சேடிப்பெண்கள். தன் அணுக்கச்சேடியாக கிருபைதான் வேண்டும் என்று சொல்லியிருந்தாள். வலக்காலெடுத்து அரண்மனைக்குள் நுழைந்தபோது அவளுடன் கிருபை தாலம் ஏந்தி உள்ளே வந்தாள். விரிந்த அரண்மனைக்கூடத்தில் நின்று அண்ணாந்து பார்த்தபின் "மிகப்பெரியது இல்லையா?" என்று சிவை கேட்டாள். "ஆம் அரசி" என்று கிருபை பதில் சொன்னாள். மீண்டும் நோக்கிவிட்டு "ஆனால் மற்ற இரு அரண்மனைக்கூடங்களும் இதைவிடப் பெரியவை" என்றாள் சிவை. கிருபை "ஆம் அரசி" என்றாள்.

அந்தப்பணிவை அப்போதுதான் சிவை கவனித்தாள். ஒருகணம் அதை மறுக்க நாவெழுந்தாலும் அடக்கிக்கொண்டு "நீ அனைத்துப்பொருட்களையும் சீர்ப்படுத்தி வை. என் படுக்கையறையின் அருகே உள்ள சிற்றறையில் நீ தங்கிக்கொள்" என ஆணையிட்டாள். கிருபை தலைவணங்கி "ஆணை" என்றாள். அவளுக்கு கிருபையின் விழிகளைப்பார்க்கவேண்டும் போலத் தோன்றியது. அங்கே நீராழத்துக்குள் கிடக்கும் ஒளிவிடும் வாள்போல ஓர் ஏளனம் கிடக்குமா என்ன? அந்த ஐயத்தாலேயே அவளால் அக்கண்களைப் பார்க்கும் துணிவைக் கொள்ளமுடியவில்லை.

அவள் வாழ்க்கையின் ஒளிமிக்க நாட்கள் அவை. அவள் வயிற்றில் ஞானவடிவான கரு வளர்கிறதென்றனர் நிமித்திகர். ஒவ்வொருநாளும் அவள் சேடிகள் சூழ மையகோட்டம் சென்று சத்யவதியை சந்தித்தாள். அவள் விரும்பியவை அனைத்தும் கிடைத்தன. எந்நேரமும் மருத்துவச்சிகள் நால்வர் உடனிருந்தனர். தன்னுள் வளரும் குழந்தையை கண்ணுக்குள் பல்லாயிரம் வடிவங்களில் அவள் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருந்தாள். பலநூறு வாழ்க்கைகளை அவனுக்களித்துக்கொண்டிருந்தாள். ஒரு பகற்கனவிலிருந்து இன்னொன்றுக்குள் நுழைவதையே வாழ்க்கையாக அறிந்தாள்.

ஒருநாள் இரவின் குளிர்ந்த இருளுக்குள் விழித்துக்கொண்டபோது அவள் கண்ட கனவை நினைவுகூர்ந்து வியர்வை வழிந்த உடல்குளிர்ந்து சிலிர்க்க பெருமூச்சுவிட்டாள். அதில் அம்பிகையும் அம்பாலிகையும் பெற்ற இரு குழந்தைகளும் இறந்தே பிறந்தன. சத்யவதி அவள் பெற்ற அழகிய மகவை காணவந்தாள். கையில் ஒரு சிறிய மணிமுடி இருந்தது. அதை அவள் குழந்தையின் புன்தலையில் சூட்டினாள். அரண்மனைச்சேடியர் குரவையிட்டனர். சூதர்கள் மங்கலப்பண் இசைக்க வெளியே நகர்மக்களின் வாழ்த்தொலிகள் எழுந்தன.

பெருமூச்சுடன் அவள் கண்களை மீண்டும் மூடிக்கொண்டு உள்ளே சுழித்துப்பறந்த செங்குருதியின் ஒளியை நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் அரைத்துயிலில் ஆழ்ந்தபோது இருளில் ஒளிவிடும் வாள்களுடன் மூவர் வருவதைக்கண்டாள். அம்பிகை முன்னால் வர பின்னால் அம்பாலிகை. இருவர் விழிகளும் நீர் நிறைந்து குரோதத்தால் வெறித்திருந்தன. அவள் குழந்தை சந்தனத் தொட்டிலில் கைகளை ஆட்டியபடி புன்னகைசெய்துகொண்டிருந்தது.

பின்னால் வந்த சேடி இந்தக்குழந்தைதான் என்பதுபோல சுட்டிக்காட்டினாள். அம்பிகையும் அம்பாலிகையும் வாள்களைத் தூக்கி குழந்தையை வெட்டினார்கள். வாளின் ஒளிமின்னலை அவள் கண்டாள். ஆனால் அவளால் அசையவோ ஒலியெழுப்பவோ முடியவில்லை. அவள் உடல் குளிர்ந்த பாறையாலானதுபோல உள்ளத்தை அறியாததாக இருந்தது. அவள் கண்முன் குழந்தை துண்டுகளாக வெட்டுப்பட்டது. குருதி வழிய அது கைகால்களை ஆட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் எழுந்தமர்ந்து மூச்சிரைத்தபடி நெஞ்சை அள்ளிப்பற்றிக்கொண்டாள். விடாய் நெஞ்சையும் தொண்டையையும் உடலனைத்தையும் எரியச்செய்தது.

அவளுடைய குரல் கேட்டு கிருபை கைவிளக்குடன் சிறுவாயிலைத் திறந்து உள்ளே வந்தாள். அவள் கண்களைக் கண்டதும் சிவை அச்சத்துடன் நினைவுகூர்ந்தாள், அம்பிகை அம்பாலிகைக்குப்பின்னால் நின்றிருந்த அந்தச்சேடி கிருபைதான். "அரசி, என்ன ஆயிற்று?" என்றாள் கிருபை. "நீர்... நீர் வேண்டும்" என்று சிவை சொன்னாள். "இதோ" என கிருபை நீர்க்குடுவையை எடுக்க "நீ வெளியே போ... சரபையை வரச்சொல்..." என்று மூச்சடைக்க சிவை கூவினாள். "அரசி..." என கிருபை ஏதோ சொல்லவர "போ... போகச்சொன்னேன்" என்று சிவை கூச்சலிட்டாள்.

விதுரன் பிறப்பதற்குள்ளாகவே கிருபையை சிவை திரும்பவும் மடைப்பள்ளிக்கே அனுப்பிவிட்டாள். அவளை திரும்பச்செல்லும்படி ஆணையிட்ட அன்று அவளுக்குள் நிலையின்மையும் இனிய உவகையும் கலந்த உணர்வே இருந்தது. கிருபை வந்து தன் அறைவாயிலில் கண்ணீருடன் நிற்பாள் என்றும் தன்னை அரண்மனையிலேயே வைத்துக்கொள்ளும்படி மன்றாடுவாள் என்றும் பகற்கனவாக விரித்துக்கொண்டாள். "நீ என் குழந்தையை வெறுக்கிறாய்..." என்று அவளிடம் சிவை சொன்னாள். "உன் இடம் இந்த அரண்மனை அல்ல. நீ மடைப்பள்ளியில் அனலில் வேகவேண்டும். அதுதான் உனக்கான வாழ்க்கை."

கிருபை வந்து அவள் காலில் விழுந்து பாதங்களில் கண்ணீர்த்துளிகள் வெம்மையுடன் உதிர மன்றாடினாள். "அரசி, என்னை மீண்டும் அங்கே அனுப்பாதீர்கள்... நான் தங்கள் அடிமை. தங்கள் கருணையில் வாழ்பவள்." அப்போது அவளும் அகம் உருகிக் கண்ணீர் விட்டாள். குனிந்து கிருபையை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு "நீ எப்படி என் குழந்தையை வெறுக்கலாம்? நீயும் நானும் சேர்ந்து எவ்வளவுமுறை நீர்விளையாடினோம்? எவ்வளவுமுறை அடிவாங்கினோம்?" என்றாள். கிருபை கண்ணீருடன் கைகூப்பினாள். "நீ செய்தவற்றை எல்லாம் நான் பொறுக்கிறேன். நீ என்னுடன் இரு" என அவள் ஆணையிட்டாள்.

ஆனால் கிருபை அமைதியாக தன் மான்தோல் மூட்டையுடன் மடைப்பள்ளிக்கே சென்றுவிட்டாள் என்று சேடியர் சொன்னார்கள். கடும்சினத்துடன் மூச்சிரைக்க எழுந்து சாளரத்தைப்பற்றிக்கொண்ட சிவை அவளை அப்படி அனுப்பியது பிழை என எண்ணிக்கொண்டாள். அவளை குதிரைலாயத்துக்கு அனுப்பியிருக்கவேண்டும். அல்லது ஐந்து சவுக்கடித்தண்டனையை அளித்திருக்கவேண்டும். அவள் கதறி அழுவதை உப்பரிகைமேலிருந்து பார்த்திருக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே எப்போது அத்தனை கீழ்மை கொண்டோம் என அவளே எண்ணிக்கொண்டாள். உடனே எழுந்த தன்னிரக்கத்தால் மனம் கரைந்து கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள்.

அப்போதெல்லாம் அவள் ஒவ்வொருநாளும் அழுதுகொண்டிருந்தாள். வயிறு கனத்துவரும்தோறும் அவளுடைய தனிமையும் தன்னிரக்கமும் பெருகிப் பெருகி வந்தன. அவள் குழந்தைப்பேற்றுக்குப்பின் இறந்துவிடுவாளென்பதில் ஐயமே இருக்கவில்லை. அவர்களுக்குத்தேவை என் குழந்தை. வியாசனின் மைந்தன், விசித்திரவீரியனின் அறப்புதல்வன், எதிர்காலத்து அறிஞன். அவனைப்பெற்றதும் பருப்பை எடுத்துவிட்டு தோலை வீசுவதுபோல அவளை வீசிவிடுவார்கள். எவருமே காணாமல் தெற்கே கோட்டைக்கு அப்பாலிருக்கும் சூதர்களின் சிறிய மயானத்தில் அவள் உடலை எரிப்பார்கள். அவளை அனைவரும் அக்கணமே மறந்துவிடுவார்கள். அவள்குழந்தையிடம்கூட அவளைப்பற்றிச் சொல்லமாட்டார்கள். அவள்பெயர் கூட வரலாற்றில் எஞ்சாது. ஒரு சூதப்பெண், அவ்வளவுதான். வழிவழியாக சூதர்பாடல்களிலும் காவியங்களிலும் அவள் மைந்தன் இருப்பான், அவளிருக்கமாட்டாள். ஒரு எளிய சூதப்பெண். பெயரற்றவள்.

அந்த எல்லையை அடைந்ததும் அவளை உடைத்தபடி அழுகை எழுந்துவரும். உடல் உலுக்க, முலைகள் நனைய அவள் அழுதுகொண்டிருப்பாள். முதியசேடி அவள் அருகே நின்று ஐயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்களனைவருமே சூதப்பெண்கள். அவளை அரசியாக நடத்துவதா என்பதில் அவர்களுக்கு ஐயங்கள் இருந்தன. அவர்களின் அனைத்து அரசமரியாதைகளும் வெறும் நடிப்பாக மாறின. அதை ஒவ்வொரு சொல்லிலும் அசைவிலும் சிவை உணர்ந்துகொண்டிருந்தாள். அது அவளை மேலும் மேலும் சினம்கொண்டவளாக, வசைபாடுபவளாக ஆக்கியது. அதன்மூலம் அவர்கள் அவளை மேலும் மேலும் வெறுத்தார்கள்.

"என்ன பார்க்கிறாய்? எங்கே என் கஷாயம்?" என்று அழுகையை நிறுத்தி கண்ணீரைத்துடைத்தபடி சிவை கூவினாள். "இதோ அரசி" என்றாள் முதியசேடி. "அதைச்செய்யாமல் இங்கே நின்று என்ன பார்க்கிறாய்? பிணமே, உன்னை நூறு கசையடிக்கு அனுப்பிவிடுவேன். போ. உடனே கஷாயத்துடன் வரவில்லை என்றால் நீ இன்றே அழிந்தாய்" என சிவை கூவினாள். முதியசேடி "மன்னிக்கவேண்டும் அரசி" என தலைவணங்கிவிட்டு விலகிச்சென்றாள். அரைநாழிகை முன்புதான் அவள் கஷாயம் அருந்தியிருந்தாள். செல்லும்போது முதியசேடி அதைச் சொல்லி தன்னை மௌனமாக சபிப்பாள் என சிவை அறிந்திருந்தாள். அவ்வெண்ணம் மேலும் சினம் கொள்ளச்செய்தது.

அம்பிகையின் குழந்தை பிறந்த செய்தி வந்ததும் அவள் முதலில் அடைந்தது திகில்தான். "விழிகளே இல்லையா?" என்று கேட்டாள். "ஆம் அரசி" என்றாள் சேடி. "விழிகள் இல்லை என்றால்?" என்று மீண்டும் கேட்டாள். "இரு சிவந்த சதைக்குழிகள் மட்டும்தான் அரசி." அவளால் அதை கற்பனையில் விரிக்கமுடியவில்லை. ஆனால் அன்றிரவு கனவில் அதைக் கண்டாள். அவளுக்குப்பிறந்த குழந்தையை வயற்றாட்டி எடுத்து நீட்டி "ஆண்குழந்தை அரசி" என்றாள். அவள் பார்த்தபோது அக்குழந்தையின் கண்கள் இருந்த இடத்தில் இரு பெரிய புண்கள் சீழும்குருதியும் வழியவிட்டுக் கொண்டிருந்தன.

அலறியபடி விழித்துக்கொண்டு எழுந்து ஓடப்போனவளை சேடியர் இருவர் பற்றிக்கொண்டார்கள். அவள் அவர்களை உதறி கைகளை வீசி பெருங்குரலில் அழுதுகொண்டிருந்தாள். "என் குழந்தையின் கண்களைத் தின்றுவிட்டார்கள்!" என்று கூவினாள். தன் வயிற்றில் கையால் ஓங்கி அறைந்தாள். அவர்கள் அந்தக் கைகளைப்பற்றிக்கொண்டபோது அவை எவ்வளவு ஆற்றல்கொண்டவை என்று திகைத்தனர். அவள் உடல் விரைத்து இறுகி அதிர்ந்தது. மயங்கிச் சரிந்தவளை அகிபீனா புகைகொடுத்து அரைமயக்கநிலையிலேயே நாலைந்துநாள் வைத்திருந்தனர்.

அம்பிகையின் குழந்தை விழியிழந்து பிறந்தது அரண்மனையின் சமநிலையையே அழித்தது. அம்பிகை வெறிகொண்டவள் போல கைகளை முட்டி சுருட்டி ஆட்டியபடி கூவிக்கொண்டிருந்தாள். இளையவள் தன் குழந்தை விழியில்லாமல் பிறப்பதற்காக நாகசூதர்களை அழைத்துவந்து தீச்செய்கை செய்துவிட்டாள் என்றாள். "அவளுக்குப்பிறக்கும் குழந்தை அரசாள விடமாட்டேன்...அதைநான் கொல்வேன்..." என்று கூவினாள். குழந்தையைப் பார்க்கவந்த சத்யவதியிடம் "என் குழந்தையை குருடாக்கியவள் அவள். அவள் குருதியுடன் வா. அதன் பின் என் குழந்தையைத் தொடு...போ" என்று கூவியபடி குழந்தையை மார்போடு அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

நாட்கணக்கில் அம்பிகையின் மனக்கொந்தளிப்பு நீடித்தது. அவள் குழந்தையை கைகளால் தள்ளி விலக்கி வெறுப்புடன் "இது குழந்தை அல்ல, இது பேய்... பாதாளநாகத்தின் மனிதவடிவம்... இது இருட்டின் குழந்தை" என்று கூவினாள். இருமுறை குழந்தையைத் தூக்கி மரத்தரை ஓசையெழுப்ப வீசினாள். அதன்பின் சற்று நேரம் கழித்து அலறியபடி அதை எடுத்து மார்போடணைத்துக்கொண்டு "என் குழந்தை... என் குழந்தை... என் தெய்வம்" என்று கூச்சலிட்டு கதறியழுதாள். இரவில் குழந்தையை அள்ளி மார்போடணைத்துக்கொண்டு அரண்மனையில் இருந்து கிளம்பிச்சென்றாள். "நான் காட்டுக்குச் செல்கிறேன். இங்கே என் குழந்தையைக் கொன்றுவிடுவார்கள்" என்று அழுதாள்.

அவளைச்சூழ்ந்து மருத்துவர்களும் சேடிகளும் எப்போதுமிருந்தனர். "தொடர்ந்து முலைப்பால் கொடுக்கட்டும் பேரரசி. அதுவே அவர்களை நிலைகொள்ளச் செய்யும்" என்றார் முதுமருத்துவரான அனாரண்யர். நாள் செல்லச்செல்ல அவள் மெல்ல அடங்கினாள். குழந்தையை மார்போடணைத்துக்கொண்டு நாள்முழுக்க கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். அதை எவரும் தீண்ட அவள் ஒப்பவில்லை. பின்னர் அதைத்தவிர வேறு உலகமே இல்லாதவளானாள்.

அம்பிகையின் குழந்தை விழியில்லாமல் பிறந்தது அம்பாலிகையை அச்சம்கொள்ளச்செய்தது. அவள் பால்போல வெளிறிவிட்டாள் என்றனர் சேடிகள். அவள் குருதியெல்லாம் வற்றிப்போனதுபோலத் தோன்றியது. அவள் ஆடியை நோக்கியபடி "என் குருதியை அவள் குடிக்கிறாள்... அவளுடைய தீவினைஞர் என் குருதியைக் குடிக்கிறார்கள்" என்று கூவினாள். கண்ணீருடன் கைகளை விரித்து "தெய்வங்களே என்னைக் காப்பாற்றுங்கள்... என் குழந்தையைக் கொல்கிறார்கள்!" என்று அலறினாள்.

சேடியரும் மருத்துவச்சிகளும் அவளைச்சூழ்ந்து எந்நேரமும் இருந்தனர். தன் வயிற்றைத்தொட்டு "என் குழந்தை இறந்துவிட்டது... அசைவே இல்லை... ஆம், அவள் என்குழந்தையைக் கொன்றுவிட்டாள்" என்று கூவினாள். நெடுநேரம் அவள் தன் வயிற்றை மாறி மாறித் தொட்டுப்பார்ப்பாள். அசைவு நிகழும்போது மேலும் அச்சம் கொண்டு "என் குழந்தை உள்ளே மூச்சுத்திணறுகிறது... அது வெளியே வரத்துடிக்கிறது. என் வயிற்றைக்கிழித்து அதைவெளியே எடுங்கள்" என அழுதாள்.

அவள்குழந்தை அசைவில்லாத வெண்பாவையாகப் பிறந்த செய்தியை சேடி வந்து சிவையிடம் சொன்னாள். அவள் உள்ளூர அச்செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம் அவ்வாறுதான் நிகழும். மூன்று குழந்தைகளுமே இயல்பாகப் பிறந்தவை அல்ல. அவை பிறப்பதை தெய்வங்கள் விரும்புவதில்லை. தன் குழந்தை வாய்பேசாததாகவே இருக்கமுடியும் என்று அவள் கற்பனைசெய்துகொண்டாள். ஏன் அப்படித்தோன்றியது என அவள் பலமுறை பின்னர் எண்ணிப்பார்த்ததுண்டு. ஆனால் அது ஊமைக்குழந்தை என்பதை நாள்செல்லச்செல்ல உறுதிசெய்துகொண்டாள்.

வாளேந்திய ஷத்ரியரின் நகரில் வாயற்ற சூதன். அவன் வெறும் ஏவலன். ஏவலன்கூட அல்ல. கற்றவை எதையும் சொல்லமுடியாதவன். ஞானியென்றாலும் இளிவரலுக்குரிய பேதை. அவனை சேவகர்களும் இழித்துப்பேசுகிறார்கள். அவனை அடிக்கிறார்கள். அவன் அனைவருக்கும் ஏவல்செய்கிறான். குதிரைக்கொட்டிலில் சாணி உருட்டுகிறான். குதிரைத்தோலை நீவுகிறான். சவுக்குகள் அவன் முதுகில் பறந்துபதிகின்றன. விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டு அவள் கண்ணீர் விட்டாள். ஒருநாள் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிச்சென்றாள். அவளை இடைநாழியிலேயே மடக்கிப்பிடித்து கொண்டுவந்தார்கள். "என்னை விடுங்கள். என் குழந்தையை அடிமையாக்கமாட்டேன்" என்று அவள் கூவினாள். "அவன் ஊமை அல்ல... அவன் ஞானி!" என்று அலறி அழுதாள்.

கரிய சிறுகுழந்தையை வயற்றாட்டி காட்டியபோது அதற்கு என்ன குறை என்றுதான் அவள் எண்ணினாள். "எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். "அழகிய குழந்தை. நலமாக இருக்கிறது" என்றாள் வயற்றாட்டி. "அழுகிறதா?" என்றாள் சிவை. "ஆம் அரசி, அழுகை இருக்கிறது... நலமான குழந்தை." அவளால் நம்பமுடியவில்லை. அவளருகே மான்தோல்மெத்தையில் அதைப் படுக்கச்செய்தபோது குனிந்து அதன் மாவுபடிந்த மெல்லிய உடலை, மொட்டுக்குள் சுருண்டிருக்கும் அல்லிவட்டம் போன்ற கைகளை, காற்றை உதைத்த மெல்லிய கால்களை தொட்டுத் தொட்டுப்பார்த்தாள். ஆம், முழுமையான குழந்தை. நலமான குழந்தை.

அதன்பின் அந்தப்பெருங்கனவு எழுந்துவந்தது. அஸ்தினபுரியின் இளவரசனா இவன்? இந்த மாநகரை ஆளப்போகிறானா? ஏன் முடியாது? அவனை ரிஷிகள் முன்னிலையில் வைதிகமுறைப்படி ஹிரண்யகர்ப்பம் செய்து ஷத்ரியனாக்கினால் போதும். அவன் அஸ்தினபுரிக்கு தலைமைகொள்ளமுடியும். மணிமுடியும் செங்கோலும் சத்ரமும் சாமரமுமாக அவன் அரியணை அமரமுடியும். யார் இவன்? அஸ்தினபுரியின் அரசனா? பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தியா? அவன் மெல்லிய பாதங்களை கண்ணில் ஒற்றியபடி சிவை கண்ணீர்விட்டாள்.

சத்யவதி ஈற்றறைக்கு வந்து குழந்தையைப் பார்த்தாள். அவள் முகம் மலர்ந்தது. குனிந்து குழந்தையை அவள் எடுத்தபோது அவள் கழுத்திலாடிய முத்தாரம் குழந்தையின் சுருட்டப்பட்ட சிறிய கைகளுக்குள் சிக்கிக்கொண்டது. மலர்ந்த முகத்தில் அழகிய சிறுபற்கள் விரிய சத்யவதி உரக்கச்சிரித்தாள். "நகைவேண்டுமா உனக்கு? அஸ்தினபுரியின் கருவூலத்தையே எடுத்துக்கொள்" என்று சொல்லி அவன் சிறிய மெல்லிய வயிற்றில் முத்தமிட்டாள். அதைக்கேட்டு சிவை மனம் மலர்ந்து கண்ணீர்விட்டாள். "நீ எனக்கு ஒரு செல்வத்தை அளித்திருக்கிறாய் சிவை... உனக்கு நான் தலைவணங்கி நன்றி சொல்கிறேன்" என்று சத்யவதி சொன்னபோது அவள் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.

ஏழாம்நாள் முதல் காலையிலேயே குழந்தையை சத்யவதியின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். பால்குடிப்பதற்காக மட்டுமே அவன் சிவையிடம் வந்தான். பின்னர் பால்கொடுக்கவும் அங்கேயே சேடிகளை அமைத்துக்கொண்டனர். அவனை அவள் இரவில் மட்டுமே பார்க்கமுடியும் என்று ஆகியது. தூக்கத்தில் இருகைகளையும் சுருட்டி வாய்மேல் வைத்து சுருண்டிருக்கும் குழந்தையை பட்டுத்துணிச்சுருளில் வைத்து அவளருகே கொண்டுவந்து வைப்பார்கள்.

அவள் அவன் பாதங்களை வருடியபடி சிறிய செவிகளையும் கிள்ளிவைத்ததுபோன்ற மூக்கையும் மூடிய இமைகளையும் பார்ப்பாள். கைகளை விலக்கி உதடுகள் கூம்புவதை பார்த்துச் சிரிப்பாள். ஆம், அவன் சக்ரவர்த்தி. அவன் அவளுடைய கைகளுக்குள் அடங்குபவன் அல்ல. அவள் எளியவள். ஆனால் சக்ரவர்த்தியைப் பெற்ற அன்னை. ஆம், அவள் பெயரை இனி எவரும் மறக்கமுடியாது. சிவேயன் என்ற பெயர் என்றும் அவனுக்கிருக்கும்.

அவனுக்கு விதுரன் என்று பெயர்சூட்டும்படி கானகத்திலிருந்து பீஷ்மர் செய்தியனுப்பியிருந்தார். நாமகரணச்சடங்கு நடந்தபோது சத்யவதி அவனை தன் முகத்தோடணைத்து "விதுரா விதுரா விதுரா" என்று மும்முறை அழைத்தாள். விதுரன் என்றால் திறன்கொண்டவன் என்று பொருள் என்றார் முதுநிமித்திகர். அவள் தனக்குள் விதுரன் விதுரன் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு சொல் அத்தனை தித்திக்கமுடியுமா என்று எண்ணிக்கொண்டாள். அச்சொல் இனிமேல் தன் ஆன்மாவின் பெயராக ஒலிக்கும் என உணர்ந்தாள்.

அவனுடைய பிறவிநூலை கணிகர் கணித்துச் சொன்னார்கள். அவனுக்குரிய திசை தெற்கு, அவனுடைய தேவன் யமன். அவனுடைய நிறம் நீலம். நிமித்திகர் அவன் அறவுலகை ஆளும் தருமனின் அருள்வடிவமாக மண்ணில் பிறந்தவன் என்றனர். "இந்த மண்ணில் இவனால் அறம் நிலைக்கட்டும்" என்று சொல்லி சத்யவதி அவன் பாதங்கள் இரண்டையும் தூக்கி தன் நெற்றியில் சூடிக்கொண்டாள்.

நான்குமாதம் கழித்து பீஷ்மர் காட்டிலிருந்து திரும்பிவந்தபின்னர்தான் சூரியதரிசனச் சடங்கு குறிக்கப்பட்டது. அதற்கான நாள்குறிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு கணமும் அவள் அகம் விரைவுகொண்டபடியே இருந்தது. ஆம், அந்த நாளில் அனைத்தும் முடிவாகிவிடும். உடற்குறை உள்ள முதலிரு குழந்தைகளும் அரியணை ஏறமுடியாதென்பது வெளிப்படை. சத்யவதி தன் குருதியை அன்றி பிறிதொரு குழந்தையை அரியணை ஏற்றமாட்டாள். அச்சடங்கே அதை அறிவிக்கத்தானா? மூவேதமறிந்த முதுவைதிகர்களும் நிமித்திகர்களும் அச்சடங்குக்கு வந்தாகவேண்டுமென அவள் ஏன் ஆணையிட்டாள்?

பின்னர் அவள் அச்சமும் பதற்றமும் கொண்டாள். அம்பிகையும் அம்பாலிகையும் இதை அறிந்திருப்பார்களா என்ன? அறியாமலிருக்கமாட்டார்கள். அவர்களின் சேடிகள் நுட்பமானவர்கள். மேலும் என்னதான் இருந்தாலும் அவர்கள் அரசகுலம். அதிகாரத்தின் சுவையறிந்தவர்கள். அது செல்லும் வழியும் அறிந்தவர்கள். அவர்கள் என்ன செய்யமுடியும்? அவர்களால் பேரரசியின் ஆணையை மீறமுடியுமா? பிதாமகர் பீஷ்மர் ஒருபோதும் பேரரசியை மீறிச்செல்லமாட்டார். பிதாமகரின் ஆணை இருக்கையில் நகரம் அவளை மீறிச்செல்லாது. ஆனால் அரசியர் மீறக்கூடும். எழுந்து கூச்சலிட்டு அழக்கூடும். எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் வெளியேறக்கூடும்.

ஆனால் சத்யவதி முடிவெடுத்துவிட்டால் ஏதும் செய்யமுடியாது. சத்யவதி உறுதியான முடிவை எடுக்கக்கூடியவள். அவளுடைய குருதி ஓடும் குழந்தைகளில் விதுரன் மட்டுமே தகுதியானவன். அவளுக்கு வேறுவழியே இல்லை. ஆனால் வைதிகர் எதிர்த்தால்? மூத்தகுடிகள் எதிர்ப்பு தெரிவித்தால்? அவர்கள் குலமுறை நோக்குபவர்கள். மரபை மீறாதவர்கள். ஆனால் அரசவல்லமை எப்போதும் வென்று செல்வது. ஒவ்வொன்றுக்கும் வழி இருக்கும். அதுதான் மச்சகுலத்தவளான சத்யவதியை பேரரசியாக்கி தேவயானியின் மணிமுடியை சூடச்செய்தது.

வைதிகர்கள் என்ன சொல்வார்கள்? ஹிரண்யகர்ப்பம் செய்யவேண்டும். பொன்னாலான பசுவின் வயிற்றில் குழந்தை மீண்டும் பிறக்கவேண்டும். அந்தப்பொன் முழுக்க அவர்களுக்குக் கிடைக்கும். குலமூத்தார் என்ன சொல்லமுடியும்? தெய்வங்களை நிறைவுசெய்ய சில பூசைகள். விதுரன் விசித்திரவீரியனின் குருதி என்று காட்டும் சில சூதர்பாடல்கள். அவ்வளவுதான். மிக எளியதுதான். அதை சத்யவதி அறிந்திருப்பாள். முன்னரே திட்டமிட்டிருப்பாள்.

அவள் முந்தையநாள் இரவே விதுரன் அணியவேண்டிய அணிகளை எடுத்துவைத்துவிட்டாள். பின்னர் இரவெல்லாம் அதை மாற்றிக்கொண்டே இருந்தாள். எதைச்சேர்த்தாலும் நிறைவு வரவில்லை. சேடி "அரசி இத்தனை அணிகளை குழந்தை அணியமுடியாது" என்றாள். "ஏன், என் குழந்தை அணியமுடியாத அணி என ஒன்றுண்டா என்ன?"  என்றாள் சிவை. "அவன் அஸ்தினபுரியின் அரசன். அதை மறக்காதே!" காலையில் குழந்தையை சேடிகள் அணிசெய்தபோது அருகே நின்று அவள் ஆணைகளை விடுத்துக்கொண்டே இருந்தாள்.

அதிகாலையில் குழந்தையுடன் அவள் அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்திற்குச் சென்றபோது கால்கள் மண்ணில்படவில்லை. பாதங்கள் இறகுகளாலானவை போல தரையை வருடிச்சென்றன. அத்தனை அணிகளையும் பட்டாடைகளையும் அவளும் எப்போதும் அணிந்திருக்கவில்லை. சேடிகள் அவளுக்கு மங்கலத்தாலமும் தாம்பூலத்தாலமுமாக அகம்படி செய்ததும் இல்லை. அவளது வருகை அறிவிக்கப்பட்டதில்லை. அவள் வந்தபோது சூதர்களின் இசைக்கருவிகள் முழங்கியதில்லை. வாழ்த்தொலிகள் வரவேற்றதில்லை.

பித்ருமண்டபத்தில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் யக்ஞசேனர் தலைமையில் சடங்குகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அமைச்சர்களான லிகிதரும், சோமரும், தீர்க்கவ்யோமரும், விப்ரரும், வைராடரும் அங்கே இருந்தனர். இருள்விலகாத காலையில் தூண்களில் மாட்டப்பட்ட நெய்விளக்குகள் படபடத்துக்கொண்டிருந்தன அவ்வொளியில் வெண்கலக்குமிழ்களும் பாத்திரங்களும் கண்கள் கொண்டிருந்தன. பலகைத்தரையில் ஐந்துவண்ணங்களில் கோலமிடப்பட்ட களத்தின்மேல் வைக்கப்பட்டிருந்த மலர்களும் நெய்யும் கலந்து எழுப்பிய வாசனை அதிகாலையின் குளிர்ந்த காற்றில் கலந்து வந்தது.

சிவை கையில் விதுரனுடன் மண்டபத்தருகே வந்தாள். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் குழந்தைகளுடன் மேலே நின்றனர். துணைவைதிகர் களத்தில் பட்டுப்பாய்களை விரித்தனர். முதுவைதிகர் "பேரரசியும் அரசிகளும் குழந்தைகளுடன் அமரலாம்" என்றார். அம்பிகையும் அம்பாலிகையும் குழந்தைகளுடன் அமர்ந்துகொண்டனர். சத்யவதி சிவையிடம் திரும்பி மண்டபத்துக்கு வெளியே விரிக்கப்பட்ட பட்டுப்பாயைக் காட்டி அங்கே அமரும்படி மெல்லியகுரலில் சொன்னபின் மண்டபத்தின் மையத்திலிடப்பட்ட தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள். திகைத்தவளாக சிவை நோக்கினாள். துணைவைதிகர் பணிவுடன் "சூத அரசி, தங்கள் இருக்கை" என மீண்டும் சுட்டிக்காட்டினார்.

யானைகள் நீராடிமுடித்து கரையேறின. நீரின் குளுமை அவற்றை உவகையிலாழ்த்தியது என்பது அவற்றின் உடலசைவுகளிலிருந்து தெரிந்தது. அவள் சாளரப்பலகையைப் பற்றியபடி பார்த்துக்கொண்டே இருந்தாள். யானைகளில் இருக்கும் அழியாத குழந்தைத்தன்மை. முன்பொருமுறை மதமேறிய யானை ஒன்று துதிக்கையைத் தூக்கி சின்னம்விளித்தபடி அந்தச்சாலைவழியாக ஓடியது. அதைத்தொடர்ந்து புரவிகளில் வீரர்கள் சென்றனர். யானைப்பாகன்கள் துரட்டிகளும் குத்துக்கோல்களுமாக பின்னால் ஓடினர். அப்போதுகூட அது அச்சமுற்ற குழந்தையென்றே தோன்றியது.

இன்னும் சற்று நேரத்தில் புரவிப்படை ஒன்று மேற்குவாயில் காவலை மாற்றிக்கொள்வதற்காகச் செல்லும். அதன்பின் இரவில்தான் அடுத்த காலாள்படை காவல்மாற்றம். அந்தச்சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சிகள் மாறுவதேயில்லை. இருபதாண்டுகாலமாக அவள் ஒவ்வொருநாளும் அங்குதான் அமர்ந்திருக்கிறாள். காலையிலிருந்து மாலைவரை. அவள் வாழ்க்கையில் மாற்றமே இல்லை. காலையிலும் மாலையிலும் அரண்மனையில் நிகழும் இரு ஆலயபூசனைகளுக்கு அவள் சென்றாகவேண்டும். அதன்பின் அவளுக்குக் கடமைகளே இல்லை. அவளுடைய எண்ணங்கள் அன்றி துணையும் இல்லை.

ஒரு சிறுயானை சங்கிலியை புழுதியில் போட்டுவிட்டு ஓடியது. பாகன் அதை அதட்டினான். அது அவசியம் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா என்று தயங்கியது. அவன் கோலைத் தூக்கியதும் வந்து சங்கிலியை துதிக்கை நுனியால் பலமுறை சுழற்றிப்பிடித்து எடுத்துக்கொண்டது. சங்கிலிகளைச் சுமந்தபடி முதிய யானைகள் மெதுவாகக் காலடி எடுத்துவைத்தன. அந்த ஒலியை சற்று செவிகூர்ந்தால் கேட்கமுடியுமென்று நினைத்தாள்.

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 2 ]

முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள்.

பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை

எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும்

ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள். பெரும்பாலான நேரம் உப்பரிகையில் சாளரம்வழியாக

வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பாள். வடக்குவாயில்கோட்டையும் யானைக்கொட்டிலும்

வடமேற்குமூலை குளமும் அதையொட்டிய அரசபாதையும் அரண்மனையின் வடக்குமுற்றமும்

அங்கிருந்து தெரியும். இருபதுவருடங்களாக அவள் அதைமட்டும்தான் பார்த்துக்கொண்டே

இருக்கிறாள் என்பது சேடியர் அனைவருக்கும் தெரியும்.

அவளுக்கு அஸ்தினபுரியின் அரசச்சடங்குகள் எதிலும் இடமில்லை.

அனைத்துவிழாக்களிலும் சூதர்கள் அமரும் பகுதியில் அவளுக்கென தனியானபீடம் ஒன்று

போடப்பட்டிருக்கும். தன் தலைமீது போடப்பட்ட மெல்லிய பட்டாடையை பெரும்பகுதி

முகத்தை மறைக்கும்படி இழுத்துவிட்டுக்கொண்டு அசையாமல் அமர்ந்திருப்பாள். அவள்

செய்யவேண்டியவை அனைத்தும் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆடிப்பாவைபோல ஓசையே

இல்லாமல் அவற்றைச்செய்துவிட்டு மீள்வாள். அம்பிகையும் அம்பாலிகையும் அவளிடம்

முகம் நோக்கிப்பேசுவதேயில்லை. அரசமுறைப்படியென்றாலும்கூட அவளிடம் ஓரிரு

சொற்கள் பேசுபவள் சத்யவதி மட்டும்தான்.

அவள் ஓசையில்லாமல் ஆகும்தோறும் அனைவரும் அவளைவிட்டு மேலும்

விலகிச்சென்றார்கள். மெல்லமெல்ல அவள் அவர்கள் அனைவரின் கண்களில் இருந்தும்

மறைந்துபோனாள். ஒரு சுவரோவியம்போல ஆனாள். திரைச்சீலை ஓவியம்கூட அல்ல. அது

அசையும், நடனமிடும். சுவரோவியம் ஒற்றை பாவனையுடன் நிலைத்தவிழிகளுடன்

அசைவின்மையின் முடிவிலியில் இருப்பது. அணுக்கச்சேடிகளான இரு முதியபெண்கள்

மட்டும் அவளுக்கான சேவைகளைச் செய்தனர்.

விதுரனின் உள்ளத்திலும் அவளுக்கு இடமில்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

நினைவறிந்தநாள் முதல் அவன் பேரரசியின் மடியில்தான் வளர்ந்தான். அவள்

அரண்மனையில்தான் பெரும்பாலும் இருந்தான். அவன் பேசத்தொடங்கியபோதே சிவை பேச்சை

இழக்கத் தொடங்கிவிட்டிருந்தாள். அவன் அவளிடம் விளையாடியதில்லை, அவள் குரலே

அவன் உள்ளத்தில் இருக்கவில்லை. அன்னைக்குரிய மதிப்பையும் வணக்கத்தையும்

எப்போதும் செலுத்துபவனாக விதுரன் இருந்தான், அன்னை என்னும் சுவரோவியத்தை.

கிரிஜை “பிதாமகரின் ரதம் கோட்டைக்குள் நுழைந்துவிட்டது அரசி” என்றாள்.

சிவையின் பார்வையை அரைக்கணம் நோக்கிவிட்டு “கிழக்குக் கோட்டைவாயிலில் முரசம்

முழங்குகிறது” என்றாள். சிவை தலையை அசைத்தாள். “அமைச்சர் அரண்மனையில்

பேரரசியுடன் இருக்கிறார்” என்றாள் கிரிஜை. பின்பு தலைவணங்கி பின்னகர்ந்தாள்.

சிவை மீண்டும் வெளியே நோக்கத் தொடங்கினாள். ஒரு ரதம் வடக்குரதவீதியின் வழியாக

செம்புழுதியை சுருளெழுப்பியபடி சென்றது. குதிரைகளின் கால்கள் முரசுத்தோலை

அறையும் கோல்கள் போல செம்மண்ணை அறைந்து சென்றன.

சற்றுநேரம் கழித்து கிரிஜை வந்து வணங்கி “அரண்மனையிலிருந்து செய்தி வந்துள்ளது

அரசி. தாங்கள் உத்தரமதுராபுரியின் இளவரசியை வரவேற்கச் செல்லவேண்டும் என்று”

என்றாள். சிவை எழுந்து தன் கூந்தலில் இருந்து சரிந்த ஆடையை

சீரமைத்துக்கொண்டாள். நிழல் செல்வதுபோல நடந்து சென்று அவள் தன் நீராட்டறையை

அடைந்தாள். சேடி அவளை விரைவாக நீராட்டினாள். அணியறைக்குச் சென்று பட்டாடையும்

நகைகளும் அணிந்துகொண்டாள். அது கோயில்சிலையை அணிசெய்வதுபோல என்று சேடி

எப்போதும் உணர்வதுண்டு. அவள் அசையாமல் அமர்ந்திருப்பாள். எந்த ஆடையும் அணியும்

அவள் கண்களிலும் உடலிலும் உயிரசைவை உருவாக்குவதில்லை.

சிவை அரண்மனை முகப்பிற்குச் சென்றபோது அங்கு எவரும் இல்லை. கிரிஜை “சேடியர்

வருவார்கள். செய்தி சென்றிருக்கும் அரசி” என்றாள். சிவை தலையசைத்தபின்னர்

பெரிய மரத்தூணில் சாய்ந்தபடி நின்றாள். அதில் சுற்றப்பட்டிருந்த

அலங்காரப்பட்டு காற்றில் அசைந்து உரசி ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது.

முற்றத்தில் மதியவெயில் கண்களைக் கூசச்செய்தபடி விரிந்துகிடக்க

அரண்மனைக்கூரையின் விளிம்பின் நிழல் வளைந்து வளைந்து தெரிந்தது. சிவை அசையா

விழிகளுடன் ஒளிர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பக்க மாளிகைச்சுவரை நோக்கிக்கொண்டு

நின்றாள்.

உள்ளிருந்து ஏழெட்டு சேடிகளும் இரு அணிப்பரத்தையரும் பேசியபடியே வந்தனர்.

பரத்தையர் கைகளில் மங்கலத்தாலங்களும் சேடியர் கைகளில் அகல்விளக்குகளும்

மலர்த்தாலங்களும் நிறைகுடமும் இருந்தன. அவர்களில் ஒருத்தி தூணருகே சிவை

நிற்பதைக்கண்டதும் மெல்லியகுரலில் அதட்ட பிறர் பேச்சை தாழ்த்தினர். அப்போதும்

ஒருசிலர் சிரித்துக்கொண்டிருந்தனர். மீண்டும் அதட்டல் ஒலி கேட்டது. அவர்கள்

படியிறங்கி வந்து முற்றத்தில் கூரைநிழலுக்கு அடியில் நின்றுகொண்டனர்.

தொலைவில் பெருமுரச ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாழ்த்தொலிகள் மெல்லியதாக

ஒலித்தன, பெரும்பாலும் படைவீரர்களின் குரல்கள். வெயிலில் அவ்வொலிகள்

வண்ணமிழந்தவை போலத் தோன்றின. முற்றத்தின் கருங்கல்தரையில் இருந்து எழுந்த

வெம்மை அனைவரையும் சோர்வுறச்செய்தது. வியர்வை முகத்திலும் கழுத்திலும் வழிய,

முகம் சுளித்து கண்களைச் சுருக்கியபடி, கால்களை மாற்றிக்கொண்டும் இடையை

வளைத்தும் பெண்கள் நின்றனர்.

அப்பால் அரண்மனை இடைநாழியில் “பேரரசி சத்யவதி வருகை” என நிமித்தச்சேடி

அறிவித்தாள். மங்கலத்தாசிகளும் சேடிகளும் திகைத்து திரும்பிப்பார்த்தனர்.

“பேரரசியா?” என்று ஒரு பெண் கேட்டாள். “ஆம்… பேரரசி!” என பல குரல்கள் ஒலித்தன.

பெண்கள் ஆடைகளையும் கூந்தலையும் சீர்செய்துகொண்டனர். கைகளில் இருந்த தாலங்களை

சரியாக ஏந்தினர். இடைநாழியில் பேரரசியின் செங்கோலுடன் முதற்சேடி தோன்றினாள்.

அதன்பின் சாமரங்களும் மங்கலத்தாலங்களும் ஏந்திய சேடியர் சூழ பேரரசி சத்யவதி

தளர்ந்தநடையுடன் வந்தாள். அவளுக்குப்பின்னால் உயர்ந்த கொண்டையுடன்

கரியபேருடலுடன் சியாமை வந்தாள்.

சத்யவதி வந்து கால்களை மெல்ல படிகளில் எடுத்துவைத்து இறங்கி முற்றத்தில்

நின்றாள். “முற்றத்தில் கல் சுடுகிறது பேரரசி” என ஒரு சேடி சொன்னபோது

தாழ்வில்லை என்று அவள் கையை மெல்ல வீசி அறிவித்தாள். அதன்பின்

திரும்பிப்பார்த்தபோதுதான் சுவரை ஒட்டி நின்றிருந்த சிவையைக் கண்டாள். “நீயா?”

என்றாள் சத்யவதி. “உன்னைத்தான் வரும்போதே தேடினேன். உன் மருகியின்

நகர்நுழைவல்லவா? முன்னால் வந்து நில்!” சிவை ஒன்றும் சொல்லாமல் மெல்ல சில

அடிகள் முன்னால் நகர்ந்து நின்றாள்.

சத்யவதி அவள் கண்களைப் பார்த்தாள். “தேவகனின் மகள். உத்தரமதுராபுரியின் துணை

நமக்குத்தேவை என்பதனால் உன் மைந்தன் எடுத்த முடிவு இது. அறிந்திருப்பாய்”

என்றாள். சிவை கண்களால் ஆம் என்றாள். “அழகிய பெண் என்கிறார்கள். இளவரசிக்குரிய

அனைத்துக்கல்வியும் பெற்றிருக்கிறாள். நம் அரண்மனைக்கு இன்னொரு ஒளிவிளக்காக

இருப்பாள்” என்றாள். சிவை அதற்கும் கண்களாலேயே பதில் சொன்னாள்.

காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. காவலர்களின் நான்கு வெண்குதிரைகள் குளம்புகள்

ஒலிக்க உள்ளே நுழைந்தன. அவற்றில் அமர்ந்திருந்த படைவீரர்களின் வேல்நுனிகள்

வெயிலில் ஒளிவிட்டுத் திரும்பின. அவர்கள் குதிரைகளைத் திருப்பி நிறுத்தி

கல்தரையில் உலோகக் காலணிகள் ஒலிக்க இறங்கி பேரரசிக்கு வேல்தாழ்த்தி வணக்கம்

சொல்லிவிட்டு விலகி நின்றனர். சத்யவதி திரும்பிப்பார்த்து “சூதர்களும்

வைதிகர்களும் எங்கே?” என்றாள். ஒருசேடி விழிகளைத் தாழ்த்தி “அவர்கள்

தேவையில்லை என்று…” என்றாள்.

“யார் சொன்னது?” என்றாள் சத்யவதி. சேடி மீண்டும் தலைதாழ்த்தி “அரண்மனை முழுக்க

அமைச்சர் பலபத்ரரின் பொறுப்பில் உள்ளது” என்றாள். சத்யவதி ஒருகணம் அவளைக்

கூர்ந்து நோக்கிவிட்டு வீரரை நோக்கி கையசைத்தாள். “ரதம் சற்று விரைவுகுறைவாக

அரண்மனைக்குள் நுழையட்டும் என்று சொல்… இங்கிருந்து சங்கொலி எழுவது வரை

காத்திருக்கட்டும்” என்றாள்.

சத்யவதி திரும்பியதும் சியாமை “அரசி” என்றாள். “வைதிகரும் சூதரும் இக்கணமே

இங்கே வரவேண்டும். பலபத்ரரின் அனைத்து அரசுப்பொறுப்புகளையும் அவரது

துணையமைச்சர் மரீசரிடம் ஒப்படைத்துவிட்டு அரச இலச்சினையையும்

கையளிக்கவேண்டுமென்று சொல். மாலையில் அவரை என்னை அரசவையில் வந்து

பார்க்கச்சொல்” என்றாள். சியாமை “ஆணை” என்றபின் விரைந்து மறுமுனை நோக்கி

ஓடினாள்.

சற்று நேரத்தில் மூச்சிரைக்க வைதிகர் எழுவரும் சூதர்கள் எழுவரும் ஓடிவந்தனர்.

வைதிகர் நின்றபின் பொற்குடங்களில் நீரை நிறைக்கத்தொடங்க சூதர்கள் தங்கள்

மங்கலவாத்தியங்களை அவிழ்த்து தோலைமுறுக்கத்தொடங்கினர். சத்யவதி கையசைத்ததும்

மேலே நின்றிருந்த காவலன் தன் சங்கை எடுத்து மும்முறை முழக்கினான். அரண்மனையின்

கோட்டைவாயிலுக்குள் உத்தரமதுராபுரியின் கருடக்கொடியுடன் அணிரதம் உள்ளே

நுழைந்தது. அதைச்சூழ்ந்து வந்த குதிரைவீரர்கள் முன்னால் வந்து இறங்க ஒருவன்

சென்று ரதத்தின் வாயிலைத் திறந்து படிகளை வைத்தான்.

வைதிகரின் வேதநாதமும் சூதர்களின் வாத்தியங்களும் இணைந்து முழங்கின.

ரதத்திலிருந்து சுருதை தன் வலக்காலை எடுத்து வைத்ததும் வைதிகர் முன்னால்

சென்று அவள்மேல் நிறைகுடத்து நீரை வேதமோதித்தெளித்து வரவேற்றனர். சத்யவதி

திரும்பிப் பார்த்துவிட்டு முன்னால் சென்றாள். சிவை அவளைத் தொடர்ந்தாள்.

வெளியே பொழிந்துகொண்டிருந்த உச்சிவெயிலில் கண்கள் கூச சுருதை இறங்கி நின்று

கைகளைக் கூப்பிக்கொண்டாள். சத்யவதி அருகே சென்று மங்கலத்தாலத்தில் இருந்து

குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து “அஸ்தினபுரியில் உன் வரவு

மங்கலத்தை நிறைக்கட்டும்” என்றாள். சிறு செம்மலர் ஒன்றை கூந்தலில் சூட்டி “நீ

நன்மக்களைப் பெற்று இல்லத்தை நிறைப்பாயாக” என்றாள்.

சிவை சுருதையைப் பார்த்தாள். மாநிறமான நீள்முகமும் பெரிய கருவிழிளும் கொண்ட

மெல்லிய பெண். அவள் மேலுதடு சற்று எழுந்து வளைந்திருந்தமையால் ஆவல்கொண்ட

குழந்தையின் முகம் அவளுக்கிருந்தது. காதோர மயிர்ச்சுருள்களின் நிழல்

கன்னத்தில் ஆடியது. காதிலணிந்த மகரக்குழையின் நிழல் கழுத்துவளைவில்

விழுந்துகிடந்தது. சத்யவதி சிவையிடம் திரும்பி கைகாட்ட அவள் முன்னால் சென்று

குங்குமமும் மலரும் அணிவித்து வாழ்த்தினாள். சூதர்களின் இசையும்

வாழ்த்தொலிகளும் குரவையொலியும் சூழ்ந்திருக்க அவளால் அங்கே நிற்கமுடியவில்லை.

மூச்சுத்திணறுவதுபோலத் தோன்றியது.

சுருதை கையில் நிறைகுடமும் விளக்கும் ஏந்தி அரண்மனைக்குள் காலடி

எடுத்துவைத்தாள். அவளை சத்யவதி கைப்பற்றி அரண்மனையின்

முதற்கூடத்திற்கு அழைத்துச்சென்றாள். அங்கே மாக்கோலமிட்ட களத்தில் முக்குவை

அடுப்பு கூட்டப்பட்டிருந்தது. சிறுபொற்குடத்தில் நிரப்பிய பசும்பாலை அதில்

ஏற்றி நெருப்புமூட்டி பொங்கவைத்தாள் சுருதை. அந்தப்பாலை சத்யவதிக்கும்

சிவைக்கும் பகிர்ந்தளித்தாள். அடுப்பை மும்முறை வலம் வந்து வணங்கியபின்

நவதானியங்களை அள்ளி எட்டு திசையிலும் வைத்து வீட்டை ஆளும் முன்னோர்களை

வணங்கினாள்.

ஒவ்வொருசடங்கு முடியும்போதும் சிவை திரும்பி தன் அரண்மனைக்குச்

செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றுக்கும்பின் இன்னொரு சடங்கு

வந்தது. இறுதியில் அவள் சுருதையின் கையைப்பற்றி தன் அரண்மனைக்கு

அழைத்துச்செல்லும் சடங்கு. ‘என் இல்லத்துக்கு வருக! என் மைந்தனின் கருவைச்

சுமந்து என் மூதாதையரை மீட்டுத்தருக. என் இல்லத்தில் உன் காலடிகள் செழுமை

சேர்க்கட்டும். மைந்தரும் கன்றுகளும் தானியங்களும் பட்டும் பொன்னும் என ஐந்து

மங்கலங்களும் என் இல்லத்தை ஒளிபெறச்செய்யட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!’ என்ற

மந்திரத்தை அவள் ஒவ்வொரு சொல்லாகச் சொன்னாள். ஒலியை எதிரொலிக்கும் வெண்கலப்

பானை அவள் என சேடியர் நினைத்தனர்.

சுருதை அரண்மனையின் உள்ளறைக்குச் சென்றபின் சிவை தன் அறைக்குச் சென்றாள்.

ஆடைகளையும் அணிகளையும் விரைந்து கழற்றிவிட்டு மறந்துவைத்த எதையோ தேடுபவள் போல

தன் உப்பரிகைச் சாளரத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டாள். வெளியே வெயில்

மங்கலாகத் தொடங்கியிருந்தது. தழல்போல எரிந்துபரவியிருந்த செம்மண் சாலையில்

நிறம் சற்று அடர்ந்தது. மேகமற்ற வானம் அப்போதும் ஒளிப்பரப்பாகவே தெரிந்தது.

வடமேற்கில் குளத்தின் அலைகளில் வெயிலொளி சாய்ந்துவிழுந்தமையால் அது

தளதளத்துக்கொண்டிருந்தது.

கண்ணெதிரே மெல்ல மாலைவந்து சூழ்வதை சிவை அசையாமல் பார்த்திருந்தாள்.

நிழல்களின் அடர்ந்தி குறைவதை, யானைக்குளத்தின் நீர் இருள்வதை, அப்பால்

வடக்குக்கோட்டை கரியடவரியாக மாறுவதை, மாலைக்காவலுக்கான வீரர்கள் வேல்களுடன்

நிரைவகுத்துச்செல்வதை, புராணகங்கையின் பல்லாயிரம் மரங்களில் இருந்து பறவைகள்

எழுந்து வானில் சிறகடிப்பதை, சாலைகள் வழியாக சிரித்துப்பேசிச்செல்லும்

பெண்களை, கோட்டையை ஒட்டி இருந்த சிற்றாலயங்களில் நெய்விளக்குகள்

சுடர்விடத்தொடங்குவதை, அங்கே எழும் மெல்லிய மணியோசையை, கோட்டைமுகப்பின்

காவல்மாடங்களில் மீன்நெய்ப்பந்தங்கள் செந்நிறப்பதாகையாக விரிவதை, அந்தியை

அறிவிக்கும் பெருமுரசமும் கோட்டைமுகப்பு மணிகளும் ஒலித்தடங்குவதை அவள்

என்றுமென அன்றும் நோக்கியிருந்தாள்.

கிரிஜை வந்து வணங்கி “அமைச்சருக்கு மணியறை அமைக்கும்படி பேரரசி ஆணை” என்றாள்.

சிவை விழிகளை மட்டும் மெல்ல அசைத்தாள். “மணியறை அமைத்துவிட்டோம்.

உத்தரமதுராபுரியின் இளவரசியை சேடியர் அணிசெய்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

பின்னர் “தாங்கள் வந்து அவரைப் பார்த்து அணிசெய்கை நிறைவுற்றதா என்று சொல்லும்

மரபு ஒன்றுண்டு” என்றாள். சிவை அசைவற்ற விழிகளுடன் வெளியே நோக்கி இருக்கக்

கண்டபின் தலைவணங்கி திரும்பிச்சென்றாள்.

அந்திவெயில் சிவந்து பரவிக்கிடந்த சாலைவழியாக ஒரு சிறிய கூண்டுவண்டி சென்றது.

அதனுள்ளிருந்த வணிகப்பெண் திரைச்சீலையைத் தூக்கி வெளியே நோக்கியபடி சென்றாள்.

செந்நிறக்குதிரையின் மீது கையில் வேலுடன் ஒரு காவலதிகாரி விரைந்து

கடந்துசென்றான். சிரித்தபடி இரு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திவந்தனர்.

பின்னால் இரு சிறுமியர் சிரித்துக்கொண்டே ஓடிவந்தனர். அவர்களை ஓடவேண்டாமென

கூவி கையசைத்துக்கொண்டு கையில் ஒருகுழந்தையும் இடையில் ஒரு குழந்தையுமாக ஒரு

பெண் பின்னால் வந்தாள்.

ஒருகணம் திகைத்த சிவையின் சிந்தை பின்னர் தெளிந்து தன் படபடப்பை உணர்ந்து

மெல்ல அமைந்தது. எட்டாண்டுகளுக்கு முன்னர் அவள் தெற்குக்கோட்டை முனையில்

மன்றமர்ந்த கொற்றவையின் ஆலயத்துக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது

ரதத்தில் ஏறுவதற்கு முன்பு கிருபையைக் கண்டாள். அவள் தன்னைப் பார்த்துவிட்டதை

அறிந்த கிருபை ஒருகணம் திகைத்து தயங்கியபின் கூப்பியகரங்களுடன் அருகே வந்தாள்.

கிருபையின் மார்பகங்கள் கனத்து சற்றே தொய்ந்திருக்க, கைகளும் தோள்களும்

தடித்து உருண்டு உடல் பருத்திருந்தது. கழுத்தும் கன்னங்களும் பளபளப்பாக

சதைப்பற்றுகொண்டிருக்க அவளுடைய மாநிறம் செம்மைகொண்டு அவளை மேலும்

அழகியாக்கியிருந்ததாகத் தோன்றியது. எளிய ஆடையை உடலைச்சுற்றிக்கட்டியிருந்தாள்.

கழுத்தில் ஒற்றைக்கல் மட்டும் தொங்கும் வெள்ளிச்சரடு. கைகளில் வங்கநாட்டு

வெண்சங்கு வளையல்கள். முன்தலை மயிர் உதிர்ந்து நெற்றிமேலேறியிருந்ததனால் அவள்

மேலும் அமைதியானவள் போலத் தோன்றினாள்.

நான்கு மைந்தர்கள் அவளைச்சுற்றி ஓடிவிளையாடிக்கொண்டிருந்தனர். அரசரதத்தைக்

கண்டதும் மூத்தவன் கையை அசைத்து பிற மூவரையும் அழைத்து தன்னருகே

நிறுத்திக்கொண்டான். முன்நெற்றி மயிர் குதிரைக்குஞ்சி போலச் சரிந்து கிடந்த

சிறியவனுக்கு ஆறுவயதிருக்கும். கரிய உடலும் கூரிய கண்களும் கொண்டிருந்தான்.

கிருபையின் இடையில் ஒருவயதான பெண்குழந்தை புத்தாடை அணிந்து கழுத்தில்

கல்நகையுடன் வாய்க்குள் இடதுகையின் கட்டைவிரலைப் போட்டுக்கொண்டு

அமர்ந்திருந்து பெரிய வெண்விழிகளால் அவளைக் கூர்ந்து பார்த்தது.

கிருபை அருகே வந்து பணிந்து “அரசிக்கு வணக்கம்” என்றாள். சிவை தலையை மட்டும்

அசைத்தாள். கிருபை பதற்றத்துடன் திரும்பிப்பார்த்து அப்பால் கையில்

குதிரைச்சவுக்குடன் நின்றிருந்த கரிய மனிதனை கைகாட்டி அழைத்து “அரசி” என்று

மெல்லியகுரலில் சொன்னாள். அவன் வணங்கி “தங்கள் அருள்” என்றான். கிருபை “இங்கே

குதிரைப்பந்தியில் இருக்கிறோம் அரசி. இவளுக்கு இன்று ஒருவயது. கொற்றவை தரிசனம்

வேண்டும் என்று கூட்டிவந்தேன்… எனக்கு ஐந்து குழந்தைகள். மூத்தவன் விக்ருதன்…

இவன் சித்ரன். இளையவன் கிருதன். அவன் சுகிர்தன்…” என்றாள். மூச்சிரைக்க

“இவளுக்கு நீலி என்று கொற்றவையின் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். பெண்

பிறந்தால் கொற்றவை பெயரையே வைப்பதாக வேண்டிக்கொண்டிருந்தேன்” என்றாள்.

சிவை தலையை அசைத்துவிட்டு ரதசாரதியிடம் போகலாமென கையசைத்தாள். அவன் சாட்டையால்

குதிரையைத் தொட்டதும் ரதம் அதிர்ந்து முன்னகர்ந்தது. கிரிஜை மிகமெல்ல “அரசி,

குழந்தையை வாழ்த்துங்கள்” என்றாள். சிவை திரும்பி குழந்தையைப்பார்த்துவிட்டு

தன் கழுத்தில் கிடந்த சரப்பொளி மாலையைக் கழற்றி குழந்தையின்

கழுத்தில்போட்டாள். அதன் கால்வரை அது பளபளத்துத் தொங்கியது. கிருபை திகைத்து

வாய்திறந்து நின்றாள். “நீண்ட ஆயுளும் நிறைவாழ்வும் திகழட்டும்” என்று

வாழ்த்திவிட்டு சிவை திரைச்சீலையைப் போட்டாள்.

“அது மிகப்பெரிய பரிசு அரசி… ஒரு பொன் நாணயம் போதும்… வேண்டுமென்றால் ஒரு

மோதிரம்… சரப்பொளிமாலை மிகப்பெரிய பரிசு” என்றாள் கிரிஜை. சிவை பதில்

சொல்லாமல் ஆடிக்கொண்டிருந்த திரைச்சீலையை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பக்கம்

அவர்கள் ஏதோ பேசிக்கொள்ளும் ஒலி கேட்டது. அவன் தன் அலுவல் ரதத்தில்

குடும்பத்தை அழைத்து வந்திருப்பான்போலும். அது அருகே நின்றிருக்க குதிரைகள்

மேய்ந்துகொண்டிருந்தன.

கீழே அந்தப்பெண் குழந்தைகளுடன் கோட்டையை நெருங்கிக்கொண்டிருந்தாள்.

பத்தாண்டுகள் கடந்து கிருபையின் அக்கணத்துப்பார்வை மிக அண்மையில் தெரிந்தது.

அதிலிருந்தது திகைப்பு மட்டும் அல்ல என்று சிவை கண்டாள். ஆழ்ந்த அவமதிப்பு

கொண்டதுபோல ஒரு வலி. ஆம், வலிதான் அது. அந்த சரப்பொளி மாலையை என்ன

செய்திருப்பாள்? ஒருபோதும் தூக்கி வீசியிருக்கமாட்டாள். அதை அவள் கணவன்

ஒப்பமாட்டான். அவளாலேயே முடிந்திராது. ஆனால் அதை திரும்பிப்பார்த்திருக்க

மாட்டாள். அதை தன் பெண்ணுக்கு அணிவித்திருக்கவே மாட்டாள். அது

மிகச்சிலநாட்களிலேயே விற்கப்பட்டுவிடும்.

கிரிஜை வந்து நின்று “அரசி, அமைச்சர் தங்கள் வாழ்த்துபெறுவதற்காக

வந்திருக்கிறார்” என்றாள். சிவை திரும்பிப்பார்த்தாள். அப்பால் விதுரன்

புத்தாடையும் அணிகளும் அணிந்து கொண்டையாகக் கட்டிய கூந்தலில் புதுமலருடன்

நின்றுகொண்டிருந்தான். அவள் அவனையே நோக்கினாள். அவன் விழிகள் அவள் விழிகளை

ஒருகணம் சந்தித்து விலகிக்கொண்டன. “தாங்கள் ஆசியளிக்கவேண்டும் அரசி” என்று

கிரிஜை மீண்டும் சொன்னாள்.

விதுரன் வந்து அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினான். சிவை எழுந்து தன் கைகளை

விரித்து “ஆயுளுடன் இரு… நிறைவுடன் இரு” என்று வழக்கமான சொற்களை வழக்கமான

குரலில் சொல்லி வாழ்த்திவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள். அவன் மீண்டும்

வணங்கிவிட்டு திரும்பிச்சென்றான். அவன் செல்வதை சிலகணங்கள் நோக்கிவிட்டு அவள்

வெளியே இருண்டிருந்த தெருவை பார்க்கத் தொடங்கினாள். வடக்குக்கோட்டை வாயிலுக்கு

அப்பால் ஒளியுடன் ஒரே ஒரு விண்மீன் தெரிந்தது. அது விண்மீனல்ல, ஏதோ கோள்.

இன்னும் சற்றுநேரத்தில் ஒவ்வொரு விண்மீனாக வெளியே வரத்தொடங்கும்.

அவள் நோக்கிக்கொண்டே அமர்ந்திருந்தாள். வானின் இருண்ட நீர்ப்பரப்பில் இருந்து

எழுந்து வருவதுபோல விண்மீன்கள் ஒவ்வொன்றாக தெரியத்தொடங்கின. அங்கே கடுங்குளிர்

இருப்பதுபோல அவை மெல்ல அதிர்ந்தன. காற்று வந்தபோது அதில் வெந்த மண்ணின்

வாசனையும் மரங்களில் இருந்து எழுந்த நீராவியும் இருந்தன. யானைக்கொட்டிலில் ஒரு

யானை சின்னம் விளித்தது. தொலைவில் எங்கோ ஏதோ ஆலயத்தில் மணி

அதிர்ந்துகொண்டிருந்தது. அரண்மனையின் கீழ்த்தளத்தில் ஒரு பூனை மியாவ் என

மெல்லியகுரலில் அழைத்தது. கைக்குழந்தை அழும் ஒலிபோல அது கேட்டது.

அவள் திடுக்கிட்டதுபோல எழுந்தாள். தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும்

கால்கள் தளர்ந்து தரை நழுவப்போவதுபோலிருப்பதையும் உணர்ந்தாள்.

சுவரைப்பற்றிக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்னர் சீறி அழுதபடி இடைநாழியில்

ஓடி அறைகளின் கதவுகள் தோளில் பட்டுத் தெறித்து சுவரில் மோதி ஒலிக்க விரைந்து

உள்ளறைக்குச் சென்று தன் மைந்தனின் மணியறைக்கதவை வெறிபிடித்தவள் போல

தட்டினாள். அவள் வாய் பொருளில்லாத ஏதோ ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தது.

கதவைத்திறந்து விதுரன் எட்டிப்பார்ப்பதற்குள் அவள் பாய்ந்து உள்ளே நுழைந்தாள்.

மஞ்சத்தில் அமர்ந்திருந்த சுருதை திகைத்து எழுந்து மார்பைப்பற்றியபடி

சுவரோரமாகச் சென்று சாய்ந்து நின்றாள். கதவைப்பற்றியபடி விதுரன் நோக்கி

நின்றான். மார்பில் ஓங்கி அறைந்து அலறியழுதபடி சிவை தரையில் அமர்ந்தாள்.

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 3 ]

பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று செய்திவந்தபோதே விதுரனுக்குள் மெல்லிய பதற்றம் பரவியது. அதைவெல்ல தன்னை சுவடிகளுக்குள் செலுத்திக்கொண்டான். ஏமாற்றத்துக்கு தன்னை ஒருக்கிக்கொள்பவன்போல அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக எண்ணங்களைச் செலுத்தினான். சுவடிகளில் வெறும் எண்கள். லிகிதர் எப்போதுமே சுருக்கமான செய்திகளை அளிப்பதில் வல்லவர். அச்செய்திகள் அலையடிக்கும் கங்கைநீரின் குமிழிகள் போல. குமிழிகளை வைத்து கங்கையின் திசையை, விரைவை அறிந்துகொள்ளமுடியும்.

சற்றுநேரம் கழித்துதான் தன் நெஞ்சு அச்செய்திகளில் இல்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். எழுந்துவந்து அலுவல்மண்டபத்தின் இடைநாழியில் நின்றபடி அங்கே நின்றிருந்த பெரிய அரசமரத்தின் இலைகள் காற்றில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். எதை எதிர்பார்க்கிறேன்? ஒரு பெண். அவள் எப்படிப்பட்டவள் என அவன் அறியமுற்படவில்லை. அவளுடைய உருவப்படத்தை சூதர்கள் வழி பெற்றிருக்கக்கூட முடியும். பாடகர்களை வரவழைத்து அவளைப்பற்றி பாடச்சொல்லியிருக்கலாம். ஆனால் அவனுக்கு உண்மையிலேயே ஈடுபாடு எழவில்லை.

குந்திபோஜன் அந்த எண்ணத்தைச் சொன்னதும் அதன் அரசியல் உள்ளடக்கம் மட்டுமே அவன் எண்ணத்தில் எழுந்தது. பிதாமகரிடம் அதைப்பற்றிப் பேசும்படி சொன்னான். பிதாமகர் அவனை அழைத்து "தேவகன் நமக்கு உதவியாக இருப்பான். நாம் ஒருபோதும் யமுனைவழித்தடத்தை விட்டுவிடமுடியாது. கம்சன் இப்போது மகதத்துடன் சேர்ந்துகொண்டுவிட்டான்" என்றார். "ஆம், மார்த்திகாவதியும் உத்தரமதுராபுரியும் நம்முடன் இருந்தால் மகதத்துடன் நாம் சமநிலையில் இருப்போம்" என்றான் விதுரன். அதையே அவன் ஒப்புதலாக எடுத்துக்கொண்டு "நான் குந்திபோஜனுக்கு செய்தியை அனுப்பிவிடுகிறேன்" என்றார் பிதாமகர். அப்போதெல்லாம் அப்பேச்சுக்குள் உள்ளடக்கமாக ஒரு பெண் இருக்கிறாள் என அவன் எண்ணவில்லை.

பீஷ்மர் கிளம்பிச்சென்ற அன்று அவன் உள்ளம் பாண்டுவின் உடல்நிலை குறித்த கவலையில் ஈடுபட்டிருந்தது. மாத்ரநாட்டிலிருந்து வந்ததுமே பிதாமகர் அடுத்த பயணத்துக்கான ஆணைகளை விடுத்துவிட்டார். அஸ்தினபுரியின் தூதுப்படை மார்த்திகாவதிக்குச் சென்று அங்கிருந்து உத்தரமதுராபுரிக்குச் செல்வதாக சோமர் சொன்னார். மாத்ரி அரண்மனை புகுந்த அன்றே விதுரன் மருத்துவர் அருணரை அழைத்து பாண்டுவின் உடல்நிலை குறித்து கேட்டான். அவர் தயங்கி "என்னால் விடை சொல்ல இயலவில்லை அமைச்சரே. அரசரின் உடல்நிலையில் எந்த இக்கட்டும் இல்லை. அவரது உள்ளம் நரம்புகளை அதிரச்செய்கிறது. உள்ளத்தை அறிய மருத்துவத்தால் இயலாது" என்றார்.

மேலும் அவர் ஏதோ சொல்லவருவதை உணர்ந்து விதுரன் பார்வையை விலக்கிக்கொண்டு காத்திருந்தான். "சிறிய அரசியார் அரசரின் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது, மணநிறைவுநாளை ஒருமாதகாலம் கழித்து முடிவுசெய்யலாமென்று சொல்லும்படி என்னிடம் சொல்கிறார்." விதுரன் தலையை அசைத்து "நீர் உம் கடமையைச் செய்யும்" என்று சொல்லி விலகிச்சென்றான். பாண்டுவைச் சென்று பார்க்க எண்ணி பின் தயங்கினான். அந்த நிகழ்ச்சிகளின் ஒழுக்கில் தான் செய்வதற்கேதுமில்லை என்று உணர்ந்தான்.

அவன் நினைத்தவை அனைத்தும் நடந்தன. நிமித்திகர் வந்துசென்ற மறுநாள் அவன் பாண்டுவின் மஞ்சத்தறைக்குள் நுழைந்தபோது அவன் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தான். காலடியோசைகேட்டு திரும்பாமலேயே "நிமித்திகரின் கதையை கேட்டிருப்பாய்" என்றான். "ஆம், அவர்கள் விளங்கிக்கொள்ளமுடியாதவற்றுக்கு புராணக்கதை ஒன்றை உருவாக்கித்தருகிறார்கள். அது தெப்பம்போல. அதைப்பற்றியபடி பெருவெள்ளத்தை நீந்திவிடலாம்" என்றான் விதுரன்.

"ஆம். அது கதைதான். ஆனால் அதில் ஒரு முனை உண்மையில் வேரூன்றியிருக்கிறது" என்றான் பாண்டு. "நான் அந்த இணைமானைக் கொன்றது உண்மை. அப்போது என் உள்ளத்தில் ஓடியவை அனைத்தும் உண்மை. அவற்றை நானன்றி வேறெவரும் அறிந்திருக்கவுமில்லை." விதுரன் புன்னகைசெய்து "புராணத்தில் மட்டுமே இன்றும் வாழும் அந்த கிந்தம முனிவர் ஓர் அறியாப்பிழைக்கு முடிவிலிவரை நீளும் தண்டனையை அளித்தாரா என்ன?" என்றான். சற்று தயங்கி "மேலும் தண்டனை உங்களுக்கு அல்ல. உங்கள் இரு துணைவியருக்கும் சேர்த்து அல்லவா?" என்றான்.

"இல்லை. அவர்களை தண்டித்தது அவரல்ல. நான். நான் மட்டும் அல்ல நீயும் பிதாமகரும் பேரரசியும் இந்த நகரின் அனைத்துக் குடிமக்களும்தான்." விதுரன் "இந்தவகைப்பேச்சுக்களை நான் எண்ணுவதில்லை. இதிலென்ன இருக்கிறது? அரசியலாடல் என்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்கள் நிகழ்கின்றன. பல்லாயிரம் படைவீரர்கள் இறந்துவிழுகிறார்கள். பல்லாயிரம் விதவைகள் இருளறைகளுக்குள் சென்று அடங்குகிறார்கள்" என்றான். பாண்டு "நான் சொல்லியிருக்கிறேனே, நான் இன்னும் ஒரு நல்ல மதியூகி ஆகவில்லை. அரசியலும் கற்கவில்லை" என்றான்.

விதுரன் பேசாமல் நின்றான். "பிதாமகர் உத்தரமதுராபுரிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே என் முடிவை நான் உன்னிடம்தான் முதலில் சொல்லவேண்டியிருக்கிறது" என்றான் பாண்டு. விதுரன் ஏறிட்டுப்பார்த்தான். "நான் வனம்புகுவதாக இருக்கிறேன்." விதுரன் திகைத்து "என்ன முடிவு இது? ஒரு நிமித்திகரின் பேச்சைக்கேட்டா?" என்றான். "ஆம், நிமித்திகர் சொன்னதனால்தான். ஆனால் என் ஆன்மா இதை எண்ணத்தொடங்கி நெடுநாட்களாகின்றன" என்றான் பாண்டு. "இப்போதுதான் தெளிவாக இதை என் சித்தம் அறிகிறது."

தூரிகையை வைத்துவிட்டு அவன் விதுரனை நோக்கினான். "நான் எத்தனைநாள் வாழ்வேன் என்று ஐயம் வந்துவிட்டது. இன்னும் சில வருடங்கள். அதை இந்த அரண்மனையின் முறைமைச்செயல்களிலும் அணிச்சொற்களிலும் அரசியலாடல்களிலும் வீணடிக்க விரும்பவில்லை. என் அகம் கோருவது எதை என்று திரும்பி நின்று கேட்டேன். மகிழ்ச்சியை மட்டுமே என்று அது சொன்னது. செல்வத்தையும் வெற்றியையும் அல்ல. புகழையும் முக்தியையும் கூட அல்ல. மகிழ்ச்சியை மட்டும்தான். தேனீ தேனைமட்டும் தேடுவதுபோல. இங்கிருப்பது ஓவியமலர்களின் காடு. இங்கே நான் அதை ஒருதுளியும் அருந்தமுடியாது."

"அதை குந்தியிடம் சொன்னேன். ஆம் என்று அவளும் ஒப்புக்கொண்டாள். நான் தேடுவதெல்லாம் எங்கிருக்கின்றன என்று அறியேன். ஆனால் உறுதியாக இங்கில்லை. ஆகவே இங்கே நான் செலவிடும் கணங்களெல்லாமே வீணானவைதான். உடனே கிளம்பிவிடலாமென்று முடிவெடுத்தேன்" என்று பாண்டு சொன்னான். "அதை பேரரசிக்குச் சொல்லி ஆணைபெறவேண்டும். அதைவிட மூத்தவரிடம் சொல்லவேண்டும். அவர் என்னைப்பிரிய ஒப்பமாட்டார்."

"ஆம்" என்றான் விதுரன். "அவரால் உங்களை முற்றிலும் பிரிவதைப்பற்றி எண்ணவே முடியாது. அவரது கண்ணற்ற பேரன்பை மீறி நீங்கள் செல்லவும் முடியாது." "ஆனால் நான் இங்கிருந்தால் மட்கி உயிர்துறப்பேன். நீ அதை எனக்காக செவ்வனே முடித்துத்தரவேண்டும்" என்றான் பாண்டு. விதுரன் "நான் முயல்கிறேன்" என்றான். "குந்தியும் மாத்ரியும் என்னுடன் வருகிறார்கள். அவர்கள் வருவது எனக்குச் சுமையே. என் அன்னை நான் எஞ்சிய வாழ்நாளெல்லாம் காமமறுப்புடன் வாழ்வேன் என நிமித்திகருக்கு சூள் சொல்லியிருக்கிறாள்" என்று நகைத்தான்.

"அரசே, இந்த வனம் புகுதலுக்குப்பின் சிறியஅரசியின் சொல் உள்ளது அல்லவா?" என்றான் விதுரன். பாண்டு சிலகணங்கள் பார்வையை சாளரத்தை நோக்கித் திருப்பினான். பின்னர் திரும்பி "உன்னிடம் மறைக்கும் பகுதி ஏதும் என் அகத்தில் இல்லை. அந்தச்சூளுரையை என் அன்னை உரைக்கையில் அவள் கண்களை நான் பார்த்தேன். அங்கே இருந்தது துயரல்ல, களிப்பு. ஆம் களிப்பு... தெய்வங்களும் அறிந்துகொள்ளமுடியாத ஒரு அகநிறைவு..." என்றான். விதுரன் புன்னகைசெய்து "அதை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆனால் நான் வியப்படையவில்லை" என்றான்.

"அக்கணமே முடிவெடுத்தேன், இனி அவள் மடியில் வெண்ணிறப்பளிங்குப்பாவை அல்ல நான் என்று. கிளம்புவதென்று எண்ணிய கணம் அதுதான்." பாண்டு புன்னகைசெய்தான். "அம்முடிவை எடுத்ததும் நேராக அவளிடம்தான் சென்றேன். உறுதியான குரலில் அவள் கண்களை நோக்கியபடி நான் வனம்புகவிருப்பதைச் சொன்னேன். அவள் முதலில் அச்சொற்களை அகத்தே வாங்காமல் எங்கே என்றாள். மீண்டும் சொன்னதும் அலறியபடி என் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அப்போது அவள் விழிகளில் எழுந்த வலியைக் கண்டேன். இறக்கும் மிருகங்களின் கண்களைப்போல. எனக்குள் உறைந்த பலவீனன் நிமிர்ந்து வானம் நோக்கிப் புன்னகைபுரிந்தான்."

விதுரன் "அவர்கள் அதை எதிர்கொள்ளமுடியாது" என்றான். "ஆம், கதறி அழுதாள். நெஞ்சில் அறைந்துகொண்டு மயங்கி விழுந்தாள். தூணில் தலையை முட்டிக்கொண்டாள். ஓடிப்போய் உப்பரிகையிலிருந்து குதிக்கப்போனாள். நான் அவளைப்பிடித்துக்கொண்டேன். அவள் இறுதியாக தன்னையும் அழைத்துக்கொண்டுசெல்லும்படி கோரினாள். வனம்புகுதலில் அதற்கு நெறியில்லை என்று சொன்னேன். அழுகையின் சோர்வால் சற்று அமைதிகொண்டபின் மீண்டும் அழுதாள். அகிபீனா ஒன்றே அவளை ஆறுதல்படுத்துகிறது."

மறுநாள் காலை பாண்டுவும் துணைவியரும் நகர்நீங்கும்போது பந்த ஒளியில் இருந்து சற்றே விலகிநின்று விதுரன் நோக்கினான். முதலில் மாத்ரியும் பின்னர் குந்தியும் ரதத்தில் ஏறிக்கொண்டனர். பாண்டு மீண்டுமொருமுறை அரண்மனையை நோக்கிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டான். திருதராஷ்டிரன் பெருங்குரலில் அழுதபடி சரிய விதுரன் அவன் கனத்த கைகளை தன் தோள்களால் தாங்கிக்கொண்டான்.

பாண்டுவின் தலை மீண்டும் வெளியே வந்து அரண்மனையை நோக்கியதை விதுரன் கண்டான். எண்பதாண்டுகளுக்கு முன்பு இதே அரண்மனைமுற்றத்தில் இருந்து இப்படித்தான் தேவாபி இறங்கிச்சென்றிருப்பான். அரண்மனையை மீண்டும் மீண்டும் நோக்கியபடி. வெளியேற்றப்பட்டவனும் துறப்பவனும் ஆடும் ஒரே நாடகக்காட்சி. இன்னொருமுறையும் இதே அரண்மனை முற்றத்தில் இது நிகழுமா என்ன? பால்ஹிகன் பெருந்தோள்களுடன் கதறியபடி நிலத்தில் அமர்ந்தான் என்றன சூதர்பாடல்கள். அதைப்போலவே திருதராஷ்டிரனும் படிகளில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டு கண்ணீர்விட்டான்.

நீ இப்போது இந்நகரின் அரசபாதைகளை பார்த்துக்கொண்டிருப்பாய். நெய்தீர்ந்து கருகும் பந்தங்களின் ஒளியில் அலையும் தெருக்களை. உனக்கு விடைசொல்ல முழங்கும் பெருமுரசத்தின் தோலென அதிரும் காற்றை. நீ விட்டுச்செல்வது என்ன என்று நீ அறிவாயா? உன் மென்சதைப்பாதங்கள் ஒற்றி ஒற்றிச் சென்ற அரண்மனை முற்றமாக விரிந்துகிடந்தது எதுவென்று?

ஆம், நீ அறிவாய். அதை உன் கண்களுக்கு நீ மறைக்கலாம். உன் நெஞ்சுக்கு நீ ஒளிக்கலாம். உன் ஆன்மாவுக்கே அறிவிக்காமலிருக்கலாம். உன்னைச்சூழ்ந்துள்ள காற்று அதை அறியும். உன் வளையல்கள் அதைச் சொல்லும். நீ சென்றபின் அசையும் திரைச்சீலைகள் அதை நடிக்கும் . நீயும் நானும் இம்மண்ணிலுள்ள அனைவரும் திளைத்து மகிழும் ஒற்றைக்கனவுவெளியில் அது ஓர் அழகிய நீர்க்குமிழி. வண்ணங்கள் பொலிய சுழன்று பறக்கும் ஒரு விழி.

அன்றுமாலைதான் செய்திவந்தது பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று. அவரது படகுகள் கங்கைக்குள் நுழையும்போது பாண்டுவும் மனைவியரும் படகில் கங்கையில் வடக்காகச் சென்றுவிட்டிருந்தனர். மறுநாள் அவர்கள் கங்கபுரிக்கும் அப்பால் குஜவனம் என்னும் இடத்தில் படகை ஒதுக்கி அங்குள்ள புல்வெளியில் இறங்கி விடைபெற்றுச் சென்றனர். கரையில் நின்ற குகர்கள் கண்ணீருடன் கைகூப்பி வாழ்த்தொலித்து அவர்களை வழியனுப்பினர்.

மறுநாள் காலையில்தான் பிதாமகர் கங்கைக்கரையில் வந்திறங்கினார். அவர் வரும் செய்தியை தூதன் சொன்னபோதுதான் விதுரன் முதல்முறையாக அது ஒரு பெண்ணின் வாழ்வு என்பதை சிந்தனையில் ஏற்றிக்கொண்டான். அவள் பெயர் என்ன என்று தன் அகத்தைத் துழாவினான். கிருதை. அல்ல, அப்பெயரைக் கேட்டதும் அதை வேதத்துடன் இணைத்துப் புரிந்துகொண்டது நினைவில் எழுந்தது. ஆம், சுருதை. தேவகனின் மகள்.

கீழே காஞ்சனம் ஒலிக்கக் கேட்டதும் விதுரன் மெல்ல நடந்து உப்பரிகைக்கு வந்து அங்கே நின்றபடி பார்த்தான். வெயில் பரவிய முற்றத்தில் குதிரைக்குளம்படிகள் ஒலித்தன. தங்கள் நீள் நிழல்களின் மேல் குதிரைகள் ஓடிவந்து நின்றன. வேல்முனைகள் பளபளத்துச் சரிந்தன. அங்கே தன் அன்னையும் சத்யவதியும் எதிரேற்கச் சென்று நிற்பதை விதுரன் கண்டான். சூதப்பெண்ணை எதிரேற்க பேரரசி செல்லும் வழக்கம் இல்லை. சூதப்பெண்ணை வேதமங்கலமும் சூதமங்கலமும் ஒலிக்க வரவேற்பதுமில்லை. அது சத்யவதியின் ஆணை என்று எண்ணிக்கொண்டான். அவனுக்கு அவள் அளிக்கும் பரிசு அது.

ரதம் வந்து நின்று உள்ளிருந்து மெல்லிய தோள்கள் கொண்ட மாநிறமான பெண் இறங்கி நிற்பதைக் கண்டான். நீண்டமுகம், பெரிய கண்கள். காதோரம் ஆடிய சுரிகுழல்கள். சிலகணங்களுக்குள் அவனுள்ளம் ஏமாற்றத்தால் சுருங்கிக்கொண்டது. திரும்பி பேரரசியின் அறைக்குள் சென்று ஆமாடப்பெட்டியைத் திறந்து சுவடிகளை எடுத்து வாசிக்கத்தொடங்கினான். சொற்களேதும் பொருளாகவில்லை. ஆனால் பிடிவாதமாக வாசித்துக்கொண்டே இருந்தான்.

சத்யவதி மேலேவந்து அவனைநோக்கி புன்னகை செய்து "நீ இங்கேயா இருக்கிறாய்? இப்போதுதான் உன் துணைவி அரண்மனை புகுந்தாள். அழகி. மாந்தளிர்போல இருக்கிறாள்" என்றாள். அக்கணம் ஏன் தன்னுள் எண்ணையில் நெருப்பு ஏறுவதுபோல சினம் பெருகியது என விதுரன் எண்ணிக்கொண்டான். சத்யவதியின் சிறிய சீர்ம்பல் நகைப்பை, கன்னங்களில் விழுந்த அழகிய சுருக்கத்தை, நரையோடிய கூந்தல்சுருள்களை அனைத்தையும் வெறுத்தான். வாளால் நெஞ்சில் குத்தி இதயத்தைப்பிளப்பதுபோல ஏதேனும் சொல்லவேண்டுமென நாவெழுந்தது.

அவன் தன் முழு சிந்தையாலும் நெஞ்சை வென்றடக்கினான். ஆம், எளியபெண். மிக எளிய சூதப்பெண். அரசி அல்ல. சக்ரவர்த்தினி அல்ல. வாளும்வேலும் நூலும் நெறியும் கற்றவளல்ல. தலைநிமிர்ந்தவள் அல்ல. தோள்விரிந்தவள் அல்ல. கண்களையும் முகத்தையும் சித்தத்தால் ஆட்டிவைக்கும் மதியூகி அல்ல. வெறும் பெண். உன்னுள் உள்ள வெறும் சூதனுக்கு அவளே துணை. அவள்தான் நீ நடக்கும் மண்ணில் தானும் நடப்பவள். ஆம், அவள்தான் உனக்கானவள். அவள் மட்டும்தான்.

அவள் பெயரென்ன? சுருதை! ஆம் சுருதை. அது வெறும்பெயரல்ல. அதன் ஒலி வேறேதோ பெயராகிறது. ஆம். அவன் முகம் மலர்ந்தான். "சுருதை! நல்ல பெயர் அல்லவா?" என்று சத்யவதிகேட்டாள். அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். மிக அருகே அவள் வந்துவிட்டது போல, மிக ஆழத்தில் எதையோ மறுகணமே பார்த்துவிடுவாளென்பதுபோல. "ஆம்" என்றான். "வேதங்களை நினைவுறுத்தும் பெயர்" என்றான். சத்யவதி சிரித்து "இப்படி அவளிடம் காவியம் பேசினாயென்றால் அஞ்சிவிடுவாள். எளியபெண்..." என்றாள். அவன் புன்னகைசெய்தான்.

"நீ உன் அரண்மனைக்குச் செல். அன்னையிடம் ஆசி பெற்று மணியறை புகவேண்டும் அல்லவா?" என்றாள் சத்யவதி. அவன் புன்னகையுடன் ஏடுகளைக் கட்டிவைத்துவிட்டு எழுந்தான். "மணமங்கலம் என்னும்போது உன் முகத்தில் அது தெரியவேண்டும். நீ சாலையில் செல்லும்போதே அதை நகர்மக்கள் காணவேண்டும்" என்று சத்யவதி மேலும் நகையாடினாள். விதுரன் தன் முகத்தை அவள் பார்க்காமல் திருப்பிக்கொண்டான்.

ஆனால் அவன் நேராக தன் மாளிகைக்குச் செல்லவில்லை. அங்கே செல்லவேண்டுமென்றுதான் கிளம்பினான். ஆனால் இடைநாழியிலேயே கால்கள் தயங்கின. திரும்பி கருவூலத்துக்குச் சென்றான். அங்கிருந்து ஆயுதசாலைக்கும் கிழக்கு எல்லைக் காவல்மாடத்துக்கும் சென்றுவிட்டு மீண்டும் அரண்மனைக்கே வந்தான். அவனுக்காக ஒற்றர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் செய்திகேட்டுக்கொண்டிருக்கும்போது அவன் மாளிகையில் இருந்து கிரிஜை அனுப்பிய சேடி வந்து அங்கே மணியறைமங்கலம் ஒருங்கியிருப்பதைச் சொன்னாள்.

விசைமிக்க காற்றை எதிர்த்து நடப்பதுபோல நடந்து அவன் மாளிகையின் படிகளில் ஏறினான். அந்தக்காற்று மேலும் மேலும் குளிரானபடியே சென்றது. மடைதிறந்து பாயும் நீரை எதிர்ப்பவன்போலத்தான் தன் அறைக்கு முன்னால் அவன் நின்றான். அவனுடைய சேவகன் பணிந்து "அமைச்சரே தாங்கள் அணிகொள்ளவேண்டும்" என்றான். அந்தக்குரல் ஒரே கணத்தில் விதுரனை விடுதலைசெய்தது. காற்று அடங்கும்போது பறந்துகொண்டிருக்கும் திரைச்சீலைகளெல்லாம் அமைவதுபோல அவன் அகம் நிலைகொண்டது. "ஆம்" என்றான்.

தன் உடலை சேவகர்களிடம் ஒப்படைத்துக்கொண்டான். அவர்கள் அதை அணிசெய்தனர். கூந்தலை கொண்டையாக்கி மலர்சூட்டினர். வாசனைபூசினர். அதன்பின் கிரிஜையால் அழைத்துச்செல்லப்பட்டு அன்னை முன் நின்றபோது அவனால் அவளை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை. அவளை வணங்கி அருட்சொல் பெற்றுத் திரும்பும்போது ஒரு கோயில்சிலைமுன் நின்று திரும்பியதாகவே உணர்ந்தான். நினைவறிந்த நாள்முதல் அவள் அப்படித்தான் இருந்தாள். இருண்ட கருவறைக்குள் காலாதீதத்தில் அமர்ந்து வெறிக்கும் இரு சிலைவிழிகள்தான் அவள்.

மணியறைக்குள் வந்து நின்ற சுருதை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தாள். அவன் மஞ்சத்திலிருந்து எழுந்து அவளை நெருங்கி "வருக" என்று சொன்னான். அவள் கைகளைக் கூப்பி முறைப்படி வணங்கியபின் நடுங்கும் கால்களை எடுத்துவைத்து அவனை அணுகினாள். அவளுடைய மெலிந்த மாந்தளிர்நிறமான கழுத்தில் ஒரு நரம்பு அதிர்ந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். மிகமெல்லிய உடல். இடை ஒடுங்கியிருப்பதனாலேயே சற்று முன்னால் வளைந்திருந்தாள். மெல்லிய தோள்களில் இருந்து பட்டாடை நழுவியபோது அதை அள்ளிப் பற்றியபடி அவனைப்பார்த்தபின் தலை குனிந்தாள். துலக்கப்பட்ட செம்புச்சிலை போல இருந்தாள்.

"சுருதை என்பதல்லவா உன் பெயர்?" என்றான் விதுரன். அக்கணமே அவன் உள்ளே சிரிப்பு எழுந்தது. மொழியறிந்தநாள்முதல் கவிதை வாசிப்பவன் தன் பெண்ணிடம் கேட்கும் முதல் வினா! கவிதைகளெல்லாம் கோடைகாலத்தில் மழைமேகம் நினைவுக்கு வருவதுபோல எங்கோ நெடுந்தொலைவில், வந்தனவா நிகழ்ந்தனவா குளிர்கனவா என்பதுபோல விலகித்தெரிந்தன. இல்லை, அவை வேறு ஒருபெண்ணுக்கான சொற்கள். கவிதைகளில் வாழ்பவள். நெருப்புபோல எழுந்து நின்றாடுபவள். பந்தங்கள் எரிய கருவறைக்குள் நின்றருளும் பொற்சிலை. இவள் மடைப்பள்ளியின் எளிய செம்புப்பாத்திரம். அச்சொற்கள் இவளுக்குரியனவல்ல.

"நீ யாதவப்பெண்ணா?" என்றான் விதுரன். அது இன்னும் அபத்தமான சொற்றொடராக இருந்தது. அவள் ஆம் என தலையை அசைத்தாள். அதற்குமேல் அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் இந்த அறியாத பெண்? நடுங்கும் கைகளும் வியர்வைபூத்த முகமும் சரிந்த விழிகளுமாக என் முன் நிற்கும் இவள் யார்? இவள் வயிற்றில்தான் என் மைந்தர்கள் பிறப்பார்களா என்ன? காவியங்கள் எனக்குள் சொரிந்து நிறைத்த பெருங்காதலை முழுக்க இவளுக்குத்தான் நான் பரிமாறவேண்டுமா?

இனி என்ன சொல்லவேண்டும்? இத்தருணத்தில் என்ன சொல்வார்கள்? அவளிடம் அன்பாக ஏதேனும் சொல்லவேண்டும். காதலைத் தெரிவிக்கவேண்டும். அவள் அழகை புகழவேண்டும். எந்தப்பெண்ணுக்கும் அதைப்பெறும் உரிமை உண்டு, அதைமறுக்கும் சுதந்திரம் கொண்ட ஆணென எவருமில்லை. ஆனால் அவனறிந்தவை அனைத்தும் காவியச்சொற்கள். வாழைப்பூ போன்ற முகமும் சிறிய உதடுகளுமாக நிற்கும் இந்தப்பெண் காவியநூலுக்குமேல் வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சி. ஒரு சொல்லும் அறியாதவள். ஆனால் காவியம் அவளை அறியும்.

அந்த உவமை அவனை மகிழ்வித்தது. புன்னகையுடன் "அமர்ந்துகொள்" என்றான். அவள் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்துகொண்டாள். "சூதப்பெண்ணாக இருந்தாலும் நீ யாதவமுறைப்படி வளர்ந்திருக்கிறாய். இங்கே ஷத்ரியர்களின் முறைகளை மெதுவாகக் கற்றுக்கொள்" என்றான். அவள் தலையை அசைத்தாள். அவன் சொல்ல எண்ணியது அதுவல்ல. மெல்லிய பட்டாம்பூச்சி போலிருக்கிறாய் என்று சொல்ல நினைத்தான். ஆனால் அவளிடம் அச்சொற்களை சொல்லமுடியாதென்று தோன்றியது. ஆனால் இத்தருணத்தில் வேறு எதைத்தான் பேசுவது? அவன் நெஞ்சு சொற்களுக்காகத் துழாவியது. அவள் கைகளைப்பற்றிக்கொண்டான்.

கதவு இடிபடும் ஒலியைக்கேட்டு திகைத்து அவன் எழுந்தான். முதலில் அவ்வொலி வேறெங்கோ இருந்து கேட்பது போலிருந்தது. பின்னர் விரைந்து சென்று கதவைத்திறந்தான். கதவைத் தள்ளித்திறந்து உள்ளேவந்த அன்னை அஞ்சியவள் போல, அரிய எதையோ இழந்தவள்போல இருகைகளையும் விரித்து அலறி அழுதாள். மார்பை ஓங்கி ஓங்கி அறைந்தபடி கூச்சலிட்டுக்கொண்டு தன் தலையை கையால்பற்றி முழந்தாள் மடிந்து அமர்ந்தாள்.

விதுரன் திகைத்து கதவைப்பற்றிக்கொண்டு நின்றான். அவன் பிடியில் கதவு நடுங்கி ஆடியது. மேலாடையை இழுத்துப்போட்டபடி எழுந்த சுருதை ஒரு கணம் திகைத்தபின் குனிந்து அன்னையை பற்றிக்கொண்டாள். "அன்னையே... அழாதீர்கள்... இதோ நான்... நானிருக்கிறேன்... என்ன வேண்டும்?" என்றாள். அவள் திகைத்தவள்போல சுருதையைப் பார்த்தாள். "நான் நான்..." என்றாள். "நான் உங்கள் மருகி... நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்" என்றாள் சுருதை. அவள் ஆடையைப்பற்றியபடி அன்னை "நீ இங்கேயே இரு... நீ இங்கேயே இரு" என்றாள். பதறும் கண்களால் மாறி மாறிப்பார்த்து "என்னை விட்டுவிடாதே... இங்கேயே இரு" என்றாள்.

சுருதை விதுரனிடம் "நான் அன்னையை தூங்கச்செய்துவிட்டு வருகிறேன்" என்றபின் மெல்ல எழுப்பினாள். வாயிலில் நின்ற கிரிஜையிடம் சைகையில் அவளே பார்த்துக்கொள்வதாகச் சொல்லி அழைத்துச்சென்றாள். கிரிஜை ஒருகணம் அவனை நோக்கிவிட்டுச் சென்றாள். விதுரன் தன் கால்கள் தன்னிச்சையாக ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். மெல்ல நடந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் கழித்து கடும் நீர்விடாயை அறிந்து எழுந்து நீர்க்குடத்தை எடுத்து அப்படியே தூக்கி அருந்தினான்.

மேலும் ஒரு நாழிகை கடந்து சுருதை உள்ளே வந்தாள். அணிகளும் ஆடைகளும் குழலும் கலைந்திருந்தன. அவனிடம் "அன்னை ஏதோ நிலைகுலைந்திருக்கிறார். என்னை மெல்லத்தான் அடையாளம் கண்டுகொண்டார்" என்றாள். "என்ன செய்கிறார்கள்?" என்றான் விதுரன். "துயில்கிறார்கள்" என்று புன்னகைசெய்தபடி அவள் அவனருகே வந்து அமர்ந்தாள். அப்போது நெடுங்காலமாக அறிந்தவள் போல, மிகமிக அண்மையானவள்போலத் தோன்றினாள்.

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 4 ]

அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான் வாசிப்பது வழக்கம். பீடத்திலிருக்கும் சுவடிக்கட்டில் ஏதேனும் ஒன்றை எடுத்து விரித்து அதன் சொற்களுக்குள் நுழைவான். ஒவ்வொரு கவிதைவரியையும் ஐந்துமுறை அகத்தில் சொல்லிக்கொண்டே கடந்துசெல்வான். அன்றைய அல்லல்கள், மறுநாளைய கவலைகள் அனைத்தின்மேலும் அழுத்தமான மணல்போல அச்சொற்கள் படியும்.

பலசமயம் அல்லல்களும் கவலைகளும் ஊடுருவித் திமிறி மேலெழும். ஆனால் திரும்பத்திரும்பச் செய்வது அகத்தை அதற்குப்பழக்கப்படுத்த மிகச்சிறந்த வழி என அவன் கண்டிருந்தான். எதையும் மூன்றாம் முறையாகச் செய்யும்போது மனம் அதை கவனிக்கத் தொடங்குகிறது. நான்காம் முறை இன்னும். ஐந்தாம் முறை அதில் அமைகிறது. அந்த கட்டாயத்திலிருந்து மனம் தப்பவே முடியாது. வெல்லப்பட்ட மனம் போல இனிய சேவகன் வேறில்லை.

அன்றும் பராசரரின் தேவிஸ்தவம். நாட்கணக்காக அதைத்தான் வாசித்துக்கொண்டிருந்தான். எப்போது அதைநோக்கிச் சென்றது அவன் விருப்பம்? அவனிடம் நெடுநாட்களாக இருக்கும் சுவடி அது. சூதரான லோகாக்‌ஷன் அளித்தது. முதலிரு சர்க்கங்களுக்கு அப்பால் வாசிக்காமல் தூக்கி பேழைக்கு அடியில் போட்டது. பின்னர் நூறுமுறையேனும் விரல்கள் அதைத் தொட்டுச்சென்றிருக்கின்றன. ஆனால் ஒருகணம் தயங்கி பின் இன்னொருநாள் என தாண்டிச்சென்றுவிடும் அவை. ஆனால் அன்று அவன் அதை எடுத்தான். அப்போது அவன் கண்ணிலிருந்தது ஒரு வெண்ணிறப்பாதம்!

‘தேவி, உன் விழிகள் ஒளியாலானவை. உன் உதடுகள் இசையாலானவை. உன் மார்புகளோ அமுதத்தாலானவை. ஆனால் அடியவன் உன் பாதங்களையே பேரழகாக எண்ணுகிறேன். தலையை தன் வாசல்படியாகக் கொண்டு மிதித்து உள்நுழைபவை அல்லவா அவை?’ எங்கு வாசித்த வரி அது? எங்கே? தொட்டுத்தொட்டுச் சென்ற விரல் அதை எடுத்தது. அச்சுவடிகளைத் தொட்டதுமே அதை அறிந்துகொண்டான். சுவடிக்கட்டு உயிருள்ள மென்சருமப்பரப்பு என அதிர்ந்துகொண்டிருந்தது.

பராசரரின் தேவிஸ்தவம் அவரது இறுதிக்காலத்தில் இயற்றப்பட்டது என்பார்கள். அதை அவர் இயற்றியிருக்கவே வாய்ப்பில்லை என்றும் அவரது முதிரா இளவயது மாணவர்களில் ஒருவரே இயற்றியிருக்கவேண்டும் என்றும் சொல்லும் சூதர்களையும் அறிஞர்களையும் அவன் கண்டிருந்தான். அது ஒரு ஞானியாலோ அறிஞனாலோ இயற்றப்பட்டதல்ல. வெறும் பித்துமட்டுமேயானது. மொழியெனும் நெய்க்குள் உறையும் அனலைப் பற்றவைத்து பெருநெருப்பாக்கி எழுப்பும் பித்து அது. ‘தேவி, உன் பாதங்களால் மூன்றுபடிகளைக் கடந்து என்னுள் வந்தாய். அவை மும்மூர்த்திகளின் சிரங்கள்!’

பராசரரின் பித்து ஒரு விடுதலைக்களியாட்டம். நினைவறிந்த நாள்முதல் சுமந்திருந்த அனைத்து ஞானத்தையும் கழற்றி காற்றில் வீசிவிட்டு நிர்வாணமாக நடனமிடும் பெருங்களியாடல் அது. அதை அறிந்த எந்த நூல்களைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது. அனைத்து நூல்களையும் கடந்துசெல்லும் ஒரு கணமேனும் வாய்த்தாகவேண்டும். ஒரு கணமேனும் பித்தனாகியிருக்கவேண்டும்.

விதுரன் அந்தச் சுவடிகளை நடுங்கும் கரத்தால் பிரித்து அச்சொற்களை கண்பூத்து வாசித்தான். காலம் ஒரு துளியாக முடிவின்மையின் நுனியில் ஊறிக் கனத்து நிற்கையில் அலகிலா இன்மையெனும் பெருங்கடலின் அலையிலியில் விஷ்ணு ஒரு ஆலிலைமேல் தன் காலின் கட்டைவிரல்நுனியைத் தானே சுவைத்துக்கொண்டு விழிமயங்கி துயின்றிருந்தார். குழந்தைக்குள் எழுந்த பசி கட்டைவிரலை உறிஞ்சிச் சுவைக்கச்செய்தது. தன்னைத் தானருந்துதலின் எல்லையை உணர்ந்த குழந்தை விடாய்கொண்டு கதறியழுதது.

மேல்கீழ்திசையிலா வெளியில் செவியெனெ ஆன்மாவென ஏதுமில்லையென்பதனால் குரலென்றும் ஒலியென்றும் பொருளென்றும் ஏதுமிருக்கவில்லை. அவ்வின்மையின் மையத்திலிருந்து குழந்தை கண்டடைந்த சொல் பிறந்து அதன் செவிகளாலேயே கேட்கப்பட்டது. ‘அம்மா!’ என்றது குழந்தை. அக்குரலெழுந்ததுமே அக்குரலால் திரட்டப்பட்டு அங்கிங்கெங்குமிலாதிருந்த அது ஆன்மாவாகியது. அம்மா என அழைக்கப்பட்டதனால் அது கனிந்து அன்னையாகியது. ’ஆம் மகனே’ என்றது பெருங்கருணை. ‘இவையனைத்தும் நானே. நானன்றி முழுமுதன்மையானதென ஏதுமில்லை.’

சிலிர்த்துக் கண்கலங்கி கண்களைமூடிக்கொண்டான். சொற்களா அவை? சொற்கள் அப்படி நிகழுமா என்ன? மானுடன் உச்சரிப்பவை மானுடன் அறிந்துகொள்பவை அந்த முழுமையைக் கொள்ளுமா என்ன? ஒரு நா அதைச்சொல்லிவிடுமா என்ன? ஒரு மனம் அதைத் திரட்டிவிடுமா என்ன? ‘சர்வகல்விதமேவாஹம்! நான்யதஸ்தி சனாதனம்!’ நுரைக்குமிழ்களில் நிறையும் வானம் போல ஒன்றுநூறாகி நூறு பல்லாயிரமாகிப் பெருகியது அவ்வரி. சர்வகல்விதமேவாஹம்! நானே இவ்வனைத்தும். சர்வகல்விதமேவாஹம்! நானே நானே நானே! சர்வகல்விதமேவாஹம். ஆம் நான் மட்டுமே! ஆம் நான் மட்டுமே! சர்வகல்விதமேவாஹம்! நானன்றி பிறிதில்லை. சர்வகல்விதமேவாஹம்...

ஆப்தமந்திரம் விழிதிறக்கும் கணமென அதை அவன் அறிந்தான். இதுதான் அக்கணம். முடிவிலிச்சுருளாக இருள்வடிவம் கொண்டு கிடந்த அந்தப் பெருநாகம் விரிந்து எழுந்து படம்கொண்டு விழிகொண்டு நாகொண்டு விஷப்பல் கொண்டு இதோ என்னைத் தீண்டிவிட்டிருக்கிறது. என் அகமெல்லாம் அதன் நீலம். என் குருதி என் தசைகள் என் எலும்பு எங்கும் அதன் நீலம். என் எண்ணங்கள் என் கனவுகள் என் ஆன்மாவெங்கும் அதன் இருள்விஷக்கருநீலப்பேரொளிவெள்ளம்! ஆம். இதோ இங்கிருக்கிறேன். இதுவன்றி ஏதுமின்றி.. நீ இருக்கிறாய் நானன்றி வேறின்றி. நீயன்றி வேறில்லாமல் நானிருக்கும் இக்கணமென்ன என்று அறிவாயா? நீ அறியாதது ஏதுமில்லையல்லவா? சர்வகல்விதமேவாஹம். சர்வகல்விதமேவாஹம்.சர்வகல்விதமேவாஹம். நீ மட்டுமே. நீ! நீ! நீ!

அம்மா என்னைப்பார் என்றது குழந்தை. அவள் விழிகள் திரண்டுவந்தன. என் மீது கருணைகொள் தாயே என்றது குழந்தை. அவள் சொற்கள் இனித்து மலர்ந்தன. அன்னையே என்னைத்தீண்டு என்றது குழந்தை. என்னை அள்ளி அணைத்துக்கொள் ஈன்றவளே என்றது. என்னை உன் மென்முலைகள் மீது அணைத்துக்கொள். என்னை உன் செந்நிற உதடுகளால் முத்தமிடு. என்னை உன் மடிச்சூட்டிலமரச்செய்து உச்சியை முகர்ந்துபார். என்னை சிறுகுருத்து நுனியில் உன் மெல்விரலால் தீண்டிச்சிரித்து என்னை ஆணாக்கு. இப்புடவியை நான் என் வலுவானதொடைகளில் இருந்து பிறப்பிக்கிறேன். கோடானுகோடி ஆதித்யர்களை. அவர்களைச் சுற்றிவரும் முடிவிலா கோள்களை. அக்கோள்களில் நிறையும் உயிர்க்குலங்களை. அவ்வுயிர்களின் எண்ணப்பெருவெளிகளை. அப்பெருவெளி குவிந்தறியும் பீடத்திலேறி நிற்கும் உன் பொற்பாதங்களை!

சங்குசக்கரகதாபத்ம சோபிதம்! பராசரரின் சொற்கள் புரவிக்கூட்டமென பாய்ந்தோடின. பதினாறு பெருந்தடக்கைகளில் ஒளிவிடும் படைக்கலன்களுடன் அன்னை தோன்றினாள். ரதி, பூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதா, ஸ்வாதா, ஸ்வாகா, க்‌ஷுதா, நித்ரா, தயா, கதி, துஷ்டி, புஷ்டி, க்‌ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தந்திரி என்னும் இருபத்தொரு சக்திரூபங்கள் விண்ணிலெழுந்தன. அவை இணைந்து ஒன்றாகி அன்னையாகின. நகையொலி எழுப்பிக் குனிந்து அம்மகவை அள்ளி எடுத்து முலைக்குவைமேல் அணைத்துக்கொண்டன.

பராசரரின் சொற்கள் வழியாக துயிலணைவது ஆன்மாவின் அனைத்து கங்குகளுக்கும் மேல் குளிர்நீரைக் கொட்டி அணைப்பது போல. அன்னையின் சேலைநுனியைச் சுழற்றி வாயிலிட்டுக்கொண்டு தூங்கும் குழந்தையின் அடைக்கலம்போல. முதல்நாள் இரவில் சுருதை துயிலத்தொடங்கியபின் விதுரன் மெல்ல எழுந்து வந்து சுவடியைத் தொட்டான். அவள் மெல்ல புரண்டு ‘ம்?’ என்றாள். மெலிந்த மாந்தளிர்த்தோள்கள். சிறிய கருங்கண் முலைகள். மலர்ச்சருகுபோன்ற சிறிய உதடுகள். முத்தமிடுகையில் இணைப்போரை மறுத்துச் சரணடைபவை. "நான் சற்று வாசித்துக்கொள்கிறேன். நெடுநாள் வழக்கம்" என்றான். அவள் தலையசைத்தாள்.

அவன் சிலசொற்களை வாசித்தபின் நிமிர்ந்து நோக்கினான். அவள் தன் நீண்ட கூர்விழிகளால் பார்த்துக்கொண்டே கிடந்தாள். அவன் சுவடிகளை மூடிக்கொண்டான். "என்ன?" என்றான். அவள் இல்லை என தலையசைத்தாள். மேலுமிரு வரிகளை வாசித்தபின் அவன் சுவடிக்கட்டைச் சுருட்டி மூடிக்கொண்டு எழுந்து வந்து அவளருகே மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். "விளக்கொளி உனக்கு கண்களை உறுத்துகிறது போலும்..." என்றபின் அவள் தோளைத் தொட்டு "உறங்கு" என்றான்.

அவள் பெருமூச்சுடன் திரும்பிப் படுத்தாள். அவன் அச்சொற்களையே நினைத்துக்கொண்டிருந்தான். 'தேவி, உன் பாதங்கள் பட்ட மண் பேறுபெற்றது. அதில் மலர்கள் விரிகின்றன. உன் பாதங்கள் படாத மண்ணோ பெரும்பேறு பெற்றது. அதில் கனவுகள் மலர்கின்றன.’ அவன் பெருமூச்சுவிட்ட ஒலிகேட்டு தோள் மெல்ல அசைவதைக் கண்டான். அவளை அழைத்து ஏதாவது சொல்லவேண்டுமென எண்ணினான். ஆனால் அப்போது அவளுக்கான ஒரு சொல்லையும் உள்ளிருந்து எடுக்கமுடியவில்லை.

அவளுடைய நீள்மூச்சு ஒலிக்கத்தொடங்கியபின் அவன் மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து மறுபக்கம் இருந்த சுவடியறைக்குள் சென்றான். அங்கே பெரிய ஆமாடப்பெட்டியைத் திறந்து உள்ளே சுவடிகளுக்கு நடுவே இருந்த சிறு தந்தப்பேழையை எடுத்து அதைத்திறந்தான். அதற்குள் அஸ்வதந்தம் என்னும் அந்த வைரக்கல் இருந்தது. அறையிருளில் அது ஒரு கூழாங்கல்போலத்தான் தெரிந்தது. ஆனால் சற்றுநேரத்தில் திறந்தகதவுக்கு அப்பாலிருந்த நெய்விளக்கின் ஒளியை வாங்கி சுடர்விடத்தொடங்கியது. காமத்தால் சிவந்த விழிகள் போல.

அவன் அதை மீண்டும் மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று சாளரத்தருகே நின்றான். வெளியே நகரத்தெருக்கள் மீன்நெய்ப்பந்தங்கள் எரியும் ஒளியுடன் ஒழிந்துகிடந்தன. அவற்றில் வழிந்தோடுவதென்ன? நினைவுகளின் சரடுகள். காலைமுதல் அங்கே மிதித்துச்சென்ற பாதச்சுவடுகளை காற்று மெல்லமெல்ல வருடி அழித்துக்கொண்டிருந்தது. இன்னும் சற்றுநேரத்தில் பனியில் குளிர்ந்து புத்தம்புதியவைபோல அவை வெயிலில் விழித்தெழும்.

திரும்பியபோது அரையிருளில் அவன் அன்னையின் நிழலுருவைக் கண்டான். அவள் அந்த வடக்குமூலை உப்பரிகையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தலிழைகள் காதருகே சிதறிப்பரந்து நின்றன. கண்கள் இரு சிறு வைரக்கற்கள் போல வெளியே விரிந்த பந்தங்களின் ஒளியை மின்னிக்காட்டிக்கொண்டிருந்தன.

மறுநாள் காலையில் கண்விழித்தெழுந்தபோது விதுரன் புன்னகையுடன் தன் அகம் இருப்பதை உணர்ந்தான். அந்த வைரத்தைப்பற்றிய எண்ணம்தான் என்று அறிந்ததும் எழுந்து கைகளை விரித்துப் பார்த்தபின் தன்னருகே சுருதை இருந்த இடத்தைப்பார்த்தான். அவள் துயின்ற தடம் மெத்தையில் சிறிய குழியாகத் தெரிந்தது. அதை மெல்ல கைகளால் வருடினான். புன்னகையுடன் அந்தக்குழியை நிரப்பிய அவளுடைய பாவனையுடலை கைகளால் வருடினான்.

உணர்வு தீண்ட திரும்பியபோது அவள் வாயிலில் நின்றிருந்தாள். குளித்த ஈரக்கூந்தல் மெல்லிய தோள்மேல் பரவியிருக்க சுரிகுழல்கள் காதோரம் நீர்த்துளி சொட்டி நிற்க பனிபடர்ந்த வாழைப்பூமடல்போன்ற முகத்துடன் விரிந்த விழிகளுடன். விதுரன் புன்னகைசெய்து "நீ இருக்கிறாயா என்று பார்த்தேன்" என்றான். அவள் சட்டென்று விம்மி கைகளில் முகம்பொத்திக்கொண்டாள். அவன் திகைத்தபின் எழுந்து சென்று அவள் தோள்களைக் கைகளால் பற்றி அவள் முகம்மூடிய கைகளை விலக்கி குனிந்து அவள் முகத்தை நோக்கி "என்ன இது?" என்றான்.

அவள் அழுதபடி அவன் மார்பில் முகம்புதைத்துக்கொண்டாள். அவளுடைய மெல்லிய கழுத்து மயிர்சிலிர்த்து அதிர்வதை நோக்கியபடி அவள் பின்தலையையும் நீண்ட கூந்தலையும் வருடியபடி "என்ன இது?" என்று பொருளில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் நிமிர்ந்து கண்களைத் துடைத்து அழுகையால் சற்றே வீங்கிய கீழிமையுடன் "எனக்கும் பீடமிருக்கிறது அல்லவா?" என்றாள். "எங்கே?" என்றான் அவன் படபடப்புடன். "இந்த இடம்போதும்... எனக்கு எப்போதுமே அரண்மனைகளில் மிகச்சிறிய இடம்தான்... அவ்வளவு போதும்."

"என்ன சொல்கிறாய்?" என்றான் விதுரன். "இனிமேல் சொல்லமாட்டேன். ஒருபோதும்" என்றபின் புன்னகைசெய்தாள். அவளுடைய பற்கள் எத்தனை சீரானவை என அவன் நினைத்துக்கொண்டான். "தங்களை எழுப்பவேண்டுமென்று என்னிடம் சொன்னார்கள். தங்கள் அன்றாடப்பணிகள் என்னால் தாமதமாகிவிடும் என்று கிரிஜை சொன்னாள்" என்றாள். விதுரன் பெருமூச்சுவிட்டு "நான் உன்னிடம் என்ன சொல்ல? ஒன்றுமட்டும் சொல்கிறேன். இவ்வாழ்நாளில் ஒருபோதும் உன் நெஞ்சு வருந்தும் எதையும் நான் அறிந்து செய்யமாட்டேன்" என்றான்.

ஒவ்வொருநாளும் அந்த மணியை எண்ணிக்கொண்டு துயின்று எண்ணிக்கொண்டு விழிப்பது வழக்கமாயிற்று. முதலில் இரவில் அதை எடுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அதை நினைப்பதே போதுமென்று மாறியது. அவன் நினைவில் அந்த மணி வளர்ந்து பெருகியது. கண்களைமூடிக்கொண்டு அதைப் பார்த்தபடியே படுத்திருக்க முடியுமென்றாயிற்று. ‘யா தேவி, சர்வபூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா’ தொன்மையான வணக்கம். அனைத்துலகிலும் ஆற்றல்வடிவாக நிறைந்தவளே தேவி!

பாண்டுவும் தேவியரும் காட்டுக்குள் சென்று முனிவர்களைக் கண்டுகொண்டார்கள் என்றும் அங்கே தவக்குடிலமைத்துத் தங்கியிருக்கிறார்கள் என்றும் ஒற்றர்கள் சொன்னார்கள். ஒவ்வொருநாளும் திருதராஷ்டிரன் அவனை அழைத்து "எப்படி இருக்கிறான்? என்ன செய்கிறான்? எப்போது அவன் திரும்புவான்?" என்று கேட்டுக்கொண்டிருந்தான். "அரசே, அவரது கண்களுக்கும் சருமத்துக்கும் இமயமலைச்சாரலின் குளிர்க்காடுகளன்றி வேறெவையும் உகந்தவையல்ல. அங்கே அவர் நிறைவாகவே இருக்கிறார்" என்றான் விதுரன்.

கண்களில் கண்ணீருடன் "அவன் இங்கே அருகே எங்கோ இருக்கிறான் என்றால் என்னால் அவனைச் சந்திக்காமலிருக்கமுடியும் விதுரா... அத்தனை தொலைவுக்கு அப்பால் அவன் இருக்கையில் நான் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்றான் திருதராஷ்டிரன். "அவர் திரும்பி வரும்போது வரட்டும் அரசே... அவரது மகிழ்வையல்லவா நாம் முதன்மையாகக் கருதவேண்டும்?" என்று விதுரன் சொன்னான். "ஆம், நானும் இமயமலைச்சாரலுக்குச் சென்றாலென்ன?" என்றான் திருதராஷ்டிரன். "தங்களால் இமயத்தைப் பார்க்கமுடியாதே!"

திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் "ஆம்" என்றான். தன்னருகே அமர்ந்திருந்த சஞ்சயனின் தோள்களைத் தொட்டு "இவன் சொற்கள் வழியாக நான் அந்த வனத்தைக் காண்கிறேன். அங்கே உயர்ந்த தேவதாருக்களின் அடியில் என் இளையோன் கட்டியிருக்கும் குடிலை. அங்கே விளையாடும் மான்களையும் மயில்களையும்..." விதுரன் சஞ்சயனை நோக்கி புன்னகைசெய்தான். "நான் அனைத்தையும் காண்கிறேன் அமைச்சரே. என் விழிகள் இரண்டு. ஒன்று காவியத்தில்" என்றான் சஞ்சயன்.

மிகவிரைவிலேயே அனைத்தும் தங்கள் பழகிய பாதையைக் கண்டடைந்தன. திருதராஷ்டிரன் இசையிலும் சத்யவதி அமைச்சுப் பணிகளிலும் நகரம் அதன் அன்றாடக் கொண்டாட்டங்களிலும் மூழ்கினர். பீஷ்மர் ஒருநாள் காலையில் வழக்கம்போல அவரது மாணவன் ஹரிசேனனிடம் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார். சுதுத்ரியின் கரையில் எங்கோ அவர் இருப்பதாக ஒற்றர்கள் சொன்னார்கள்.

சகுனி மட்டும்தான் நாண்தளராத வில் போன்றிருந்தான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் தன் உச்சநிலையிலேயே அவனிருப்பதுபோலத் தோன்றியது. அதிகாலையில் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் சென்று காலைமுதிர்வது வரை அவன் வில்வித்தை பயின்றான். மாலையில் தன் படைகளை முழுமையாக நேரில் பார்த்து தளகர்த்தர்களிடம் பேசியபின் மீண்டும் ஆயுதசாலைக்குச் சென்று இரவு கனக்கும்வரை பயின்றான். அவன் சுவடிகளை வாசித்துக்கொண்டும் தனக்குத்தானே பகடையாடியும் இரவெல்லாம் விழித்திருப்பதாகச் சொன்னார்கள் ஒற்றர்கள். "அவர் துயில்வதேயில்லை அமைச்சரே. அங்குள்ள நம் ஒற்றர்கள் அவர் துயில்வதை ஒருமுறைகூடக் கண்டதில்லை."

அஸ்தினபுரியின் கோட்டைமேல் நின்று வடக்கிலும் தெற்கிலும் குறுங்காடுகளை அழித்துக்கொண்டு காந்தாரப்படைகளின் குடியிருப்புகள் நீண்டு விரிந்திருப்பதைக் கண்டபோது விதுரன் பெருமூச்சுவிட்டான். நகரம் முழுமையாகவே சூழப்பட்டுவிட்டது. எக்கணமும் அவ்விருபடைப்பிரிவுகளும் பெருகி இரு வாயில் வழியாகவும் நகருக்குள் நுழைந்துவிடமுடியும். "கலிங்கத்துச் சித்திரவதைமுறை ஒன்று உண்டு பேரரசி. கைகள் பிணைத்து பீடத்திலமர்த்தப்பட்ட குற்றவாளியின் இருகாதுகளிலும் இரு கூரிய ஊசிகளை செலுத்தி குத்தாமல் நிறுத்திவிடுவார்கள். அவன் தலையை சற்றேனும் அசைத்தால் காதுக்குள் ஊசி புகுந்துவிடும். அஸ்தினபுரியின் நிலை அதுதான்." சத்யவதி அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டாள்.

தெற்குவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் காந்தாரர்களின் குடில்கள் செறிந்த குடியிருப்புகளைத் தாண்டிச்சென்ற செம்மண்பாதை நீத்தார்காடு நோக்கிச் சென்றது. அங்கிருந்த பித்ருதீர்த்தம் என்னும் நீள்வட்டக் குளத்தைச்சுற்றி அடர்ந்த சோலையாக இருந்தது அது. அங்கேதான் அரசகுலத்தவர் சிதையேற்றப்பட்டார்கள். அதற்கப்பால் பன்னிரண்டு சிறிய சோலைகளாக அஸ்தினபுரியின் அனைத்துக்குடிகளுக்கும் தனித்தனியாக இடுகாடுகளும் சுடுகாடுகளும் இருந்தன. அஸ்தினபுரியில் வாழ்ந்தவர்களில் விஸ்வகர்மர்கள் மட்டுமே நீத்தாரை மண்ணடக்கம் செய்தனர்.

விதுரன் கோட்டைமேல் நின்று அந்தச்சோலையைப் பார்த்தபின் கீழே இறங்கிவந்தான். அங்கே நின்ற வீரன் அவனை வணங்கியதும் அவனுடைய புரவியைக் கைகாட்டி வாங்கி அதில் ஏறிக்கொண்டான். பெருநடையாக காந்தாரக்குடியிருப்புகளைக் கடந்தான். காந்தாரப்படைகள் அதற்குள் மெல்ல அஸ்தினபுரியின் சோம்பல் வாழ்க்கைக்குள் வந்துவிட்டிருப்பதை விதுரன் கண்டான். அவர்கள் காடுகளில் வேட்டையாடிப்பிடித்த முயல்களையும் உடும்புகளையும் பாம்புகளையும்கூட சுட்டுத் தின்றுகொண்டிருந்தனர். பகலிலேயே ஈச்சங்கள் அருந்திக்கொண்டிருந்தனர். சிலர் மட்டுமே மண்ணில் வேலைசெய்தனர்.

அப்பால் சோலைக்குச் செல்லும்பாதையில் சற்று தூரம் சென்றதுமே விதுரன் அங்கிருந்த ஓசையின்மையை உணர்ந்தான். பறவைகளும் காற்றும் ஓசையிட்டன. நெடுந்தொலைவில் காந்தாரர்களின் முழக்கம் மெல்லக்கேட்டது. ஆயினும் அங்கு ஓசையின்மையே மூடியிருந்தது. மதியவெயிலில் சற்றே வாடிய மரங்களின் இலைகள் காற்றில் சிலுசிலுத்தன. வெயிலுக்காக கிளைகளுக்குள் ஒண்டிக்கொண்ட பறவைகள் அவ்வப்போது கலைந்து எழுந்து வானில் சுழன்று திரும்ப அமைந்தன. ஒரு முயல் மண்சாலைக்குக் குறுக்காகப் பாய்ந்துசென்றது.

அரசர்களின் சுடுகாட்டில் மன்னர்களின் சிதைகளிருந்த இடத்தில் கட்டப்பட்ட சிற்றாலயங்களும் கருங்கல்லால் ஆன பலிபீடங்களும் சருகுகள் மூடி நிழலில் குளிர்ந்துகிடந்தன. சந்தனுவின் பீடம்மீது ஒரு பச்சோந்தி கால்களைப் பரப்பி வாலைவிடைத்துத் தூக்கி விரைந்தோடி நின்று தலையை ஆட்டியபடி நிறம் மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. பிரதீபரின் பீடம்மீது சிதல்புற்றுகளின் செந்நிறமான வேர்ச்சரடுகள் எழுந்து பரவத்தொடங்கியிருந்தன. காற்று கடந்து வந்தபோது சருகுகள் ஓசையுடன் இடம் மாறின.

அப்பால் நிதிவைசியர்களின் சுடுகாடு. அதற்கப்பால் கூலவாணிகர்களின் சுடுகாட்டிலிருந்து புகை எழுந்தது. அங்கே எவரோ நிற்பதைப்போலிருந்தது. விதுரன் குதிரையை மெல்லத்தட்டி மரங்களின் வேர்களைக் கடந்து சென்று அதற்குள் நுழைந்தான். முந்தைய நாள் வைத்த சிதை வெந்து தணிந்து மெல்லிய நீலப்புகையை மட்டும் விட்டுக்கொண்டிருந்தது. அதனருகே ஒருவன் நின்று ஏதோ செய்துகொண்டிருந்தான். சாம்பல் படர்ந்த மெல்லிய முதுகில் சடைக்கற்றைகள் சரிந்துகிடந்தன. பெருச்சாளித்தோலால் ஆன கோவணம் அணிந்திருந்தான்.

அது வெட்டியானல்ல என்று விதுரன் உணர்ந்தான். சற்றே தயங்கினான். புரவியின் ஒலிகேட்டு அவர் திரும்பினார். முகமும் உடம்பும் வெண்நீறால் மூடப்பட்டிருந்தன. தாடியும் சடைவிழுதுகளாக மார்பில் கிடந்தது. "வருக அமைச்சரே" என்றார் அவர் கரியபற்களைக் காட்டிச் சிரித்தபடி. "அஸ்தினபுரியின் மாபெரும் சமையலறைக்கு வருக!" குதிரையில் இருந்து இறங்கி மண்டியிட்டு "வணங்குகிறேன் மாமுனிவரே" என்றான் விதுரன். "நல்லூழுடன் இரு!" என்று அவர் மெலிந்த கரிய கைகளால் வாழ்த்தினார்.

"தாங்கள் சார்வாகர் என நினைக்கிறேன்" என்றான் விதுரன். உடனே உள்ளுணர்வு எழ "தாங்கள் மூத்தவர் மன்னராகக்கூடாது என்றீர்கள் என அறிந்தேன்" என்றான். "ஆம்... நீ என்னை சபைக்கு அழைத்தாய். காணிக்கைப்பொருட்களுடன் யக்ஞசர்மர் என்னைக் காணவந்தார்." உரக்கச்சிரித்து "நான் அவரிடம் சொன்னேன் அப்பொருட்களை அவரது கையில் இருந்து பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று. அவர் வாயில் இருந்து நானே அதை எடுத்துக்கொள்வேன்..." என்றார். மீண்டும் சிரித்து "அதைப்பெறுவதற்கொரு முறைமை உள்ளது. அவர் இந்தச்சிதையில் பிணமாகக் கிடக்கவேண்டும் முதலில்" என்றார்.

"தாங்கள் வந்திருக்கலாம்" என்றான் விதுரன். "சிறுவனே, நீ என்னை ஏன் வரச்சொன்னாய் என்று அறியமுடியாதவனா நான்? திருதராஷ்டிரன் முடிசூட வைதிக பிராமணர்களின் எதிர்ப்பிருக்கக்கூடும் என்று நீ எண்ணினாய். நான் வந்து எதிர்த்தால் என்னை எதிர்ப்பதற்காக அவர்கள் திருதராஷ்டிரனை ஆதரிப்பார்கள் என்று கணக்கிட்டாய்... அல்லவா?" விதுரன் புன்னகையுடன் "ஆம்" என்றான். "உங்கள் வரவே என் வேலையை எளிதாக்கிவிடுமென எண்ணினேன்."

"நான் அந்தக்கணக்குக்காக வராமலிருப்பவன் அல்ல" என்றார் சார்வாகன். "முந்தையநாள் மாலையிலேயே நான் என்ன நிகழுமென்பதை அறிந்துவிட்டேன். இங்கே எலிகள் அஞ்சி வளைக்குள் சென்றன. ஊர்வனவெல்லாம் நிலையழிந்தன. நிலம்பிளக்கப்போவதை உணர்ந்தேன். அதுவே போதுமானதென்று உய்த்துக்கொண்டேன்." சிரித்தபடி அவன் தோளில் கையை வைத்து "சதுரங்கம் ஆர்வமூட்டும் ஆட்டம். அதிலுள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் நாம் தோற்பதை நம்மால் விரும்பமுடியாது என்பதுதான்" என்றார்.

"தோற்க விழைபவனால் ஆடமுடியுமா என்ன?" என்றான் விதுரன். அருகே கல்லில் அமர்ந்தபடி "இளைஞனே, ஆடு. எவரும் உன்னை வெல்லமுடியாதென்பதற்காக அல்ல. உன்னை வெல்லும் தகுதிகொண்டவன் எவன் என்று அறிவதற்காக மட்டும்"  என்றார். விதுரன் தலைவணங்கினான். அவர் குனிந்து அந்த சிதைக்குழியில் இருந்து எதையோ குச்சியால் தோண்டி மேலே எடுத்தார். அது ஒரு பெருச்சாளி. தீயில் வெந்த கிழங்குபோல தோலுரிந்து வெடித்து ஊன் உருகி சொட்டிக்கொண்டிருந்தது அது. "இது இன்று என் உணவு... பாவம் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி இது உணவுண்டது எனக்காகத்தான்."

விதுரன் தன் மனமறுப்பை முகத்தில் காட்டாமலிருக்க முயன்றபடி "நாம் விதியை எப்படி அறியமுடியும்? நம் சிற்றறிவில் குடிகொள்ளும் தெய்வங்களின் ஆணையை செய்துகொண்டிருக்கிறோம்..." என்றான். "அப்படிச் சொல்வது எளிது... அனைவரும் அதையே சொல்கிறார்கள்... அதை நம்பவும் கடைப்பிடிக்கவும் முடிந்தால் நன்று" என்றார் சார்வாகன். "உணவைப் பகிர்ந்துண்ணவேண்டும்... நீ விரும்பமாட்டாய் என நினைக்கிறேன்." விதுரன் "ஆம்" என்றான். "நன்று" என்று சொன்னபின் அவர் அதை சிறிய குச்சியால் உடைத்து வெம்மை ஆறுவதற்காகப் பரப்பினார்.

"நீங்கள் ஏன் நல்லுணவை அருந்தலாகாது?" என்றான் விதுரன். "நல்லுணவென்பது என்ன?" என்றார் சார்வாகன். "உடலுக்கு நலம்பயப்பது, சுவையானது" என்று விதுரன் சொன்னான். "இது என் உடலுக்கு நலம் பயக்கிறது. நான் இதை உண்ணத்தொடங்கி ஐம்பதாண்டுகளாகின்றன. என் வயது எண்பத்தேழு" என்றார் சார்வாகன். "சுவை என்றால் அது வெறும் மனப்பழக்கம்" என்றபடி அதை அவர் உண்ணத்தொடங்கினார். "எதற்காக நீங்கள் இங்கே இப்படி வாழவேண்டும்?" என்றான் விதுரன்.

"இப்படியும் வாழலாமென்பதற்காக" என்று அவர் சிரித்தார். "அங்கே நடந்துகொண்டிருக்கும் நாடகத்தில் நான் இல்லை என்பதற்காக." அவன் அவர் தவிர்க்கிறார் என நினைத்தான். "நானும் அங்குதான் இருந்தேன். உங்கள் நூல்களைக் கற்றேன். உங்கள் நெறிகளைப் பயின்றேன். உங்கள் வழிகளில் நடந்தேன். அப்போது அறிந்தேன், உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்."

"உண்மை என்பது என்ன? எப்போதும் அது இருந்துகொண்டிருக்கிறது. அது பொய்யால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்தப்பொய்யை உருவாக்குவது எது? எது இந்நகரை, இந்த அரசை, இந்த வாழ்க்கையை, இந்த தெய்வங்களை உருவாக்குகிறதோ அதுதான். மானுடன் தனியானவன். ஒவ்வொருநாளும் பேரியற்கைமுன் தன்னந்தனியாக நிற்கக் கடமைப்பட்டவன். அந்தத் தனிமையை அவன் அஞ்சத் தொடங்கியபோதுதான் இவையனைத்தும் உருவாயின" அவர் நகரை சுட்டிக்காட்டினார். நெடுந்தொலைவில் ஒரு வண்டுபோல அது ரீங்கரித்துக்கொண்டிருந்தது.

"நான் அதிலிருந்து விலக விரும்பினேன். இன்னொருமனிதனின் துணையில்லாமல் வாழவேண்டுமென எண்ணி காட்டுக்குச் சென்றேன். ஒவ்வொருநாளும் என் உணவை என் கைகளால் தேடிக்கொண்டேன். வான்கீழே மண்மீது நின்றேன். என்னுள் உறைந்த ஒவ்வொன்றையும் அழித்தேன். இன்னொருவனில்லாமல் என் அகம் நின்றபோதே நானறிந்தேன் எது உண்மை என. அதுவே நானறிந்த முழு உண்மை."

"அதை நான் காமம் என்கிறேன். விருப்பு. இருத்தலுக்கும் இன்பத்துக்குமான விழைவு. அதுவன்றி அனைத்தும் மானுடனின் தனிமையாலும் அச்சத்தாலும் உருவானவை. எவன் திரும்பிநின்று தன் விழைவை கண்ணுடன் கண்கோர்த்து நோக்கும் வல்லமைகொண்டிருக்கிறானோ அவனே உண்மையை நோக்கி முதல் அடி எடுத்துவைக்கிறான். கருணை என்றும் கடவுளென்றும் அன்பென்றும் அறமென்றும் ஆயிரம் சொற்களால் அவன் திரட்டிவைத்திருக்கும் அனைத்தும் உண்மைமேல் கவிந்திருக்கும் மாசு மட்டுமே."

"அழிவற்ற சார்வாக ஞானம் இருமுனைகொண்ட கூர்வாள். அது பிறரது பொய்மையை வெட்டும். தன்னுடைய பொய்மையையும் வெட்டும். அதை ஏந்தி இந்த மக்கள் நடுவே வந்து நிற்கிறேன். என் இலக்கு ஒன்றே. என் மெய்ஞானத்தை இங்கே இயன்றவரை சொல்வது. அதற்காகவே இங்கே இருக்கிறேன். இடுகாடும் காடே" என்றார் சார்வாகன். "அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் விழைவின் மேல் மானுடன் பூசிக்கொள்ளும் மாசுகள்தான். அதைக்களைந்து உண்மையைக் காண்பதே ஞானம். அதுவே மகிழ்வுக்கான வழி. உண்மையின் மகிழ்வே வீடுபேறு எனப்படும்."

விதுரன் பெருமூச்சுடன் "தங்கள் அறவுரை என்னை வழிநடத்தட்டும் உத்தமரே" என வணங்கி எழுந்தான். "உன் விழைவை கண் கூர்ந்து பார்... அஞ்சாதே" என்றார் சார்வாகன். "மானுடனின் மாசுகளனைத்தும் சொற்களென அவனுடன் இருக்கின்றன. சொற்களில் சிக்கிக்கொண்டவன் மீள்வதேயில்லை. அழகிய சொற்கள் அழகியபொய்கள். மகத்தான சொற்கள் மகத்தான பொய்கள். ஞானம் எப்போதும் கரும்பாறைகளைப்போல பெரும்பருவுருவம் கொண்டது. இங்கு இப்போது இதோ என நிற்பது. மானுடமாசுகளோ மேகம் போன்றவை. உருமயங்குபவை. அவை வெண்ணொளியும் பொன்னொளியும் கொள்ளலாம். மலையையே மறைக்கவும் கூடும். ஆனால் மலை என்றும் அங்குதான் இருக்கும்... இளைஞனே, சொற்களை எரித்த நீறை பூசிக்கொள். அதுவே விடுதலை..."

"முயல்கிறேன் சார்வாகரே. மறையின்றி தன் விழைவுகளை நோக்குவது ஒரு பெரும் யோகம் என்று இப்போது தங்கள் சொற்களைக் கேட்கும்போது உணர்கிறேன்." மீண்டும் தலைவணங்கி அவன் புரவியை நோக்கிச் சென்றான்.

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 1 ]

அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான அந்த தெய்வத்தின் பெயர் கலி என்று நிமித்திகர்களும் கணிகர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவு நாளில் மட்டும் அவர்கள் வந்து அதற்கு சாந்திபூசை செய்து மீள்வார்கள். அப்போதுமட்டும் அதைச்சூழ்ந்திருக்கும் புதர்களையும் கொடிகளையும் வெட்டி வெளியாக்கி பலிபீடம் அமைத்து பலிகொடுத்து வணங்குவார்கள். அவர்கள் மீண்ட மறுநாளே கொடிகளை நீட்டி காடு அதை தன்னுள் எடுத்துக்கொள்ளும்.

கலியின் ஆலயத்துக்குச் செல்ல பாதைகள் இல்லை. அதனருகே ஓடிவரும் சிறிய ஓடைவழியாக எட்டு கணிகர்களும் எட்டு நிமித்திகர்களும் கரிய உடையணிந்து தலையில் ஏற்றப்பட்ட பூசைப்பொருள் மூட்டைகளுடன் சென்றனர். கோடையில் நீர் வற்றியிருந்த ஓடை மேலே கவிந்த பச்சைத்தழைகளால் சூழப்பட்டு குகைப்பாதை போலிருந்தது. நீர்த்தடம் உலர்ந்த பாறைகளில் நரி உண்டுபோட்ட எலும்புகள் சிதறியிருக்க முட்புதர்களில் பறவையிறகுகள் சிக்கி காற்றில் அதிர்ந்துகொண்டிருந்தன. காய்ந்து சருகுவெளியாக மாறியிருந்த காட்டுக்குள் காற்று ஓடும் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் காலடியோசை கேட்டு விலகியோடும் உயிர்களின் சலசலப்புடன் காடு எச்சரிக்கைகொண்டு அவர்களை கூர்ந்து நோக்கியது.

கலியின் சிற்றாலயத்தை அடைந்த பதினாறுபேரில் நால்வர் மண்வெட்டிகளும் நால்வர் வெட்டுவாள்களும் வைத்திருந்தனர். அவர்கள் கோயிலை அடைந்த காலடியோசை கேட்டு கோயிலுக்குள் இருந்து ஒரு நரி மெல்ல காலடி எடுத்து வைத்து வெளியேவந்து தன் கூர்மூக்கை மெல்ல நீட்டி பெரிய காதுகளை விடைத்துக்காட்டி உர்ர் என ஒலியெழுப்பியது. அதன் சிப்பிக்கண்கள் அவர்களில் மண்வெட்டி வைத்திருந்தவரை கூர்ந்து நோக்கின. அதற்குப்பின்னால் மேலும் நான்கு நரிகளின் முகங்கள் எழுந்தன. மண்வெட்டி வைத்திருந்த நிமித்திகர் அதைக்கொண்டு தரையை ஓங்கி அறைந்தார். நரி திடுக்கிட்டு பின் பக்கமாக பதுங்கி அமர்ந்துகொண்டு வெண்கோரைப்பற்களைக் காட்டி மேலுதட்டை சுருக்கி கனமாக உறுமியது.

அனைவரும் சேர்ந்து கைகளைத்தூக்கி குரலெழுப்பியபோது நரி பின்னால் திரும்பி தன் மயிர்க்குலைவாலைச் சுழற்றியபடி பாய்ந்தோடியது. அதைத்தொடர்ந்து பிற நரிகளும் ஓடின. அவர்கள் முன்னால்சென்று நரிகளின் மட்கிய மயிர் நாற்றமடித்த கோயிலுக்குள் எட்டிப்பார்த்தனர். எலும்புகளும் இறகுகளும் அலகுகளும் சிதறிக்கிடந்த கோயிலுக்குள் கலியின் சிலை விழித்த கல்பார்வையுடன் அமர்ந்திருந்தது. அவர்களில் தலைமைவகித்த நிமித்திகரான கபிலர் தன் மாணவன் சுகுணனிடம் "வேலையை ஆரம்பியுங்கள்... இரவுக்குள் நாம் மீண்டுசெல்லவேண்டும்" என்று ஆணையிட்டார். சுகுணனும் பிறரும் புதர்களை வெட்டத்தொடங்கினர். இருவர் ஆலயத்தின் உட்புறத்தை தூய்மைசெய்தனர்.

கொண்டு வந்திருந்த நறுமணநீரால் கலிதேவனின் சிலையை தூய்மைசெய்து சந்தனமும் குங்குமமும் பூசி, மலர்மாலைசூட்டி அணிசெய்தனர். உள்ளே அகில்புகையிட்டபின் நறுந்தூபக்கலம் ஏற்றி வைத்தனர். வெளியே இருவர் முக்கல் அடுப்பு கூட்டி அதில் வெண்கலயானத்தை ஏற்றி வஜ்ரதானியம், கோதுமை, அரிசி மூன்றையும் கலந்து நீரிலிட்டுக் கொதிக்கவைத்து வெல்லம் சேர்த்து இன்னடிசில் பொங்கினர். கபிலர் அந்த உணவுப்படையலை கலிமுன் விரித்த வாழையிலையில் வைத்தார். எண்ணிருவரும் கலியின் மந்திரங்களை ஓதியபடி தூபதீப ஆரத்திகள் எடுத்து வணங்கினர்.

அவர்கள் அந்தப் படையலுணவை பகிர்ந்துண்பதை புதர்களுக்கப்பாலிருந்து நரிகள் நோக்கிக்கொண்டிருந்தன. அவற்றின் உடல் அசைவிலாது புதர்ச்சருகுகளுக்குள் கலந்ததுபோலிருக்க செவிகள் மட்டும் மெல்லத்திரும்பிக்கொண்டிருந்தன. கூர்நாசியை முன்னால்நீட்டி நின்ற தலைமைநரியான அகாபிலன் மெல்ல வாலை அசைத்ததும் பிறநரிகள் அருகே ஓரடி எடுத்துவைத்தன. அவர்கள் உண்டு முடித்து கைகளைக் கழுவிக்கொண்டபின் இறுதியாக கலியை வணங்கிவிட்டு திரும்பிச்சென்றனர்.

அகாபிலன் முனகியபடி பாய்ந்து வந்து அவர்கள் வீசிய இலைகளை முகர்ந்து நோக்கி செவிகளைக்கூர்ந்தபடி நீள்நாக்கை நீட்டி நக்கிப்பார்த்தான். பின்பு அப்பகுதியை சந்தேகத்துடன் நோக்கியபடி மெதுவாகக் காலடி எடுத்துவைத்து சுற்றிப்பார்த்தான். திறந்துகிடந்த கோயிலுக்குள் எட்டிப்பாபார்த்துக்கொண்டு சில கணங்கள் அசையாமல் நின்றான். தூபப்புகை மூக்கை உறுத்தவே தன் முன்னங்காலால் முகவாயை நீவிக்கொண்டு திரும்பி தன் தம்பியரை நோக்கினான். மீண்டும் உள்ளே பார்த்து துணியைக்கிழிக்கும் ஒலியுடன் இருமுறை தும்மினான்.

அவனது தம்பியான கிகிகன் அண்ணனின் பின்னால் வந்து நின்று தலையை நன்றாகத் தாழ்த்தி காதைக்குவித்து உற்றுப்பார்த்து முனகினான். அதன்பின்னால் அவனது பிறதம்பியர் வந்து நின்றுகொண்டு மெல்ல முனகினார்கள். அகாபிலன் திரும்பிப்பார்த்தபின் மெதுவாக காலெடுத்துவைத்து உள்ளே சென்று கலியின் சிலையை அணுகி அதன்மேல் பூசப்பட்டிருந்த சந்தனகுங்கும லேபனங்களை மூக்கு நீட்டி முகர்ந்தான். நிம்மதியற்றது போல அந்தச் சிற்றறைக்குள் வாலைச்சுழற்றியபடி சுற்றிவந்தான். அதன் கிழக்கு மூலையில் சற்று சிறுநீர் கழித்தான். பின்பு தம்பியரை உள்ளே அழைத்தான்.

நான்குநரிகளும் உள்ளே சென்று அதன் நான்கு மூலைகளிலும் வரிசையாக சிறுநீர் விட்டன. அகாபிலன் அங்கே தன்னுடைய வாசனைதான் எஞ்சியிருக்கிறது என்று உறுதிசெய்துகொண்டதும் மகிழ்ந்து எம்பி எம்பிக்குதித்து ஒலியெழுப்பினான். கலியின் சிலைமேலும் சிறுநீரைப் பீய்ச்சியதும் மெதுவாக அமைதிகொண்டு வெளியே தலைவைத்து உள்ளே உடலை நீட்டிக்கொண்டு படுத்து காதுகளைக் குவித்து ஒலிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். தம்பியர் ஒருவரோடொருவர் இடத்துக்காக மோதி கிர்ர் என சீற மூத்த தம்பியான கிகிகன் திரும்பி வெண்பற்களைக் காட்டி உரக்கச் சீறி அவர்களை அடக்கினான். அவர்கள் நிறைவின்மையுடன் முனகியபடி தரையில் படுத்துக்கொண்டனர்.

படுத்ததுமே அவர்களின் பகைமை விலக ஒருவரை ஒருவர் கால்களால் சீண்டி விளையாடத்தொடங்கினர். கடைசித்தம்பியான சிருகாலிகன் மல்லாந்து முதுகைத் தரையில் அமைத்து நான்கு கால்களையும் விரித்து ஆட்ட அவனுக்கு மூத்தவனாகிய லோமசன் அவன் அடிவயிற்றை நக்கினான். திடீரென்று சிருகாலிகன் ஆஹ் ஆஹ் ஆஹ் என ஒலியெழுப்பத்தொடங்க இயற்கைவிதிக்கு கட்டுப்பட்டவை போல மற்ற நரிகளும் அதே ஒலியை எழுப்பின. அகாபிலன் திரும்பி அரைக்கண்களைத் திறந்து பார்த்தபின் மீண்டும் கண்களை மூடிக்கொன்டான்.

பகலெல்லாம் ஐந்து நரிகளும் அங்கேயே கண்சொக்கிக் கிடந்தன. நடுநடுவே சிருகாலிகன் எழுந்து நின்று வாலைக்குழைத்து ஆஹ் ஆஹ் ஆஹ் என குரலெழுப்பியபின் மீண்டும் படுத்துக்கொண்டு அண்ணனின் கால்நடுவே கூர்முகத்தைச் செருகிக்கொண்டான். காட்டுக்குள் வெயில் அணைந்துகொண்டே இருந்தது. ஒளிக்குழாய்கள் சரிந்துகொண்டே சென்று சிவந்து பழுத்து பின் மறைந்தன. தெற்கே எங்கிருந்தோ குளிர்ந்த காற்று வந்து தழுவிச்சென்றபோது இலைகள் அசைய மரங்கள் சற்றே ஆறுதல்கொண்டன.

பறவைக்குரல்கள் எழத்தொடங்கின. தலைக்குமேல் ஒரு பெருநகரம் கலைவதுபோல குரல்கள் எழுந்துகொண்டிருக்க அகாபிலன் எழுந்து வாயைத் திறந்து நீள்செந்நாக்கை வளைத்து கொட்டுவாயிட்டான். முன் பின் கால்களை நீட்டி முதுகை நிலம் நோக்கி வளைத்து சோம்பல் முறித்தபின் வெளியே எட்டிப்பார்ந்தன். காட்டுக்குள் இருட்டு தேங்கிக்கொண்டே இருந்தது. ஒரு கீரி சருகுகளை சலசலக்கவைத்தபடி கடந்துசென்றது. சற்று நேரம் கழித்து ஒரு உடும்பு ஓடிவந்து நின்று கால்களில் உடலை தூக்கி முன்னும் பின்னும் ஆட்டி தீ எரியும் ஒலியை எழுப்பி நாக்கை நீட்டியது. சற்றே ஆவலுடன் மூக்கை நீட்டிய அகாபிலன் அது திரும்பியதும் பின்வாங்கினான். ஆர்வத்துடன் பின்னால் வந்த தம்பியர் உடலை ஆட்டி ஆஹ் ஆஹ் ஆஹ் என்றனர்.

பறவைக்குரல்கள் அமைந்தன. கடைசியாக ஓரிரு பறவைகள் மட்டும் வானில் தவித்துக்கூச்சலிட்டு பறந்து கூடு கண்ட பின் காட்டில் அமைதி நிலவியது. அவ்வப்போது சிணுங்கும் பறவைக்குஞ்சுகளை அன்னையர் ஆறுதல்படுத்தும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்று கருநிலவு முழுமைகொள்ளும் நாள். கோடைகாலமாதலால் மேகமற்ற திறந்த வானில் விண்மீன்கள் எழுந்து வரத்தொடங்கின. பழுத்துக்கனத்து ஒளிவிட்டபடி பிதுங்கிவந்த அவை கீழே விழுந்துவிடுமென தோற்றமளித்து அதிர்ந்தன.

சற்றுநேரத்திலேயே வானம் விண்மீன்களால் ஆனதாக மாறியது. அகாபிலன் வெளியே இறங்கி முற்றத்தில் அமர்ந்துகொண்டு கூர்மூக்கை நீட்டி வானை நோக்கினான். அவனது பலாவிதைபோன்ற கண்களில் விண்மீன்களின் ஒளி நிறைந்தது. அவன் வாயைத்திறந்து ஊஊஊஹூஊய்ய் என ஊளையிட்டான். மண்ணில் ஒவ்வொரு உயிர்மேலும் வானம் நிறைக்கும் பெருந்தனிமை நிறைந்த அந்த ஊளையை காட்டில் அப்போது துயிலுணர்ந்த அனைத்து உயிர்களும் கேட்டன. அண்ணனுக்குப்பின்னால் வந்து அமர்ந்த கிகிகனும் தம்பியரும் அந்த ஊளையை ஏற்று எதிரொலித்தனர்.

முற்றிலும் அப்பாற்பட்ட விசை ஒன்றால் இயக்கப்பட்டவனாக அகாபிலனும் தம்பியரும் ஊளையிட்டுக்கொண்டிருந்தனர். ஊளையின் ஒரு கணத்தில் திரும்பிய அகாபிலன் கலியின் திறந்த கண்களைச் சந்தித்தான். திகைத்து எழுந்து நின்றபோது அவன் உடலின் முடிகள் சிலிர்த்தெழுந்து நின்றன. அவனை நோக்கியபின் திரும்பிய தம்பியரும் கலியின் கண்களைச் சந்தித்து அதிர்ந்து சிலிர்த்து நின்றனர். ஓசையே இல்லாமல் இருண்டகாடு அவர்களைச் சூழ்ந்திருந்தது. ஒளிவிடும் விண்மீன்களினாலான முடிவிலி கீழே நோக்கி நின்றது.

தீக்கனலால் அடிபட்டவன்போல உரக்க ஊளையிட்டலறியபடி அகாபிலன் திரும்பிப்பாய்ந்து காட்டுக்குள் ஓடினான். அவனைத்தொடர்ந்து தம்பியரும் ஓடத்தொடங்கினர். அவர்கள் புதர்களை ஊடுருவி பாறைச்சரிவுகளில் தாவியிறங்கி சிறியகாட்டருவி போலச் சென்றவழியில் புதர்க்குவைகளிலும் குகைமடம்புகளிலும் கிடந்த நரிகளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டன. காட்டைவிட்டு பெருவழியை அவை அடைந்தபோது நூற்றியொரு நரிகளாலான ஒரு படையாக இருந்தன. ஊளைகள் நின்றுபோக வாய்சீறிய மூச்சொலி மட்டுமே ஒலிக்க, கால்கள் மண்ணைத் தொடுகின்றனவா என்னும் ஐயமெழும்படியாக அவை ஓடிச்சென்றன,

அஸ்தினபுரியின் மேற்குக் கோட்டை மூடப்பட்டிருந்தது. ஆனால் மேற்குப் பெருங்குளத்திற்கு நீர் செல்லும் கால்வாய் வறண்டு வெடித்த சேற்றுப்பரப்பும் சேறுகலந்த மணல்மேடுகளுமாக திறந்து கிடந்தது. கோட்டைமேல் நின்றிருந்த காவலர்களில் பதின்மர் தலைவனாகிய ஸஷோர்ணன் ஓசை கேட்டு குனிந்து நோக்கியபோது மடையின் வழியாக நீர் பீரிட்டு உள்ளே வருவதுபோல உணர்ந்தான். அது நீரா என அவன் வியந்து நோக்கிக்கொண்டிருக்கையிலேயே உள்ளே பொங்கிவந்த அந்த ஓட்டம் வானில் செல்லும் பெரும்நாரைக்கூட்டம் போல ஒற்றை அசைவாக விரைந்து ஏரிக்குள் நீர்வற்றி உருவான சேற்றுவிளிம்பில் பாய்ந்து சென்றது.

வாயில் பந்தத்தைக் கடித்தபடி கற்படிகள் வழியாகத் தொற்றி இறங்கிய ஸஷோர்ணன் மடைவாயிலில் குனிந்து பந்த ஒளியை வீசி உற்று நோக்கினான். சேற்றுப்பரப்பு உழுதிட்டதுபோல கிளறப்பட்டு நீண்டு கிடந்தது. மாடுகளின் மந்தை ஒன்று ஓடிச்சென்றதுபோல. மாடுகளா? ஆனால் அவன் குளம்படிகளைக் கேட்கவில்லை. பந்தத்தை வீசி குனிந்து அமர்ந்து நோக்கியபோது அந்த மண்கொந்தளிப்பின் விளிம்பில் தனித்த கால்தடங்களைப் பார்த்தான். நாய்களா? இத்தனை நாய்கள் எங்கிருந்து வந்தன? காட்டுநாய்களா? மேலும் குனிந்து கால்தடங்களின் விரல்களின் கூர்மையை கவனித்தான். அவை நரிகள் என அவன் எண்ணியபோது அவனுடைய உடல் குளிர்ந்து புல்லரித்தது.

அப்பால் யானைக்கொட்டிலில் முதியபெண்யானையாகிய காலகீர்த்தி உரக்கச் சின்னம் விளித்து பிற பெண் யானைகளை எச்சரித்தது. குட்டிகளை வைத்திருந்த பெண்யானைகளெல்லாம் பதிலுக்கு ஒலியெழுப்பின. யானைக்கொட்டில் முழுக்க பிளிறல் ஒலிகள் நிறைந்ததும் பாகர்கள் துயிலெழுந்து உரத்த குரலில் அதட்டி என்ன என்று வினவினர். பிற பாகன்களுக்கு குரல் கொடுத்தபடி பந்தங்களைத் தூக்கிச் சுழற்றியபடி யானைக்கொட்டில்களையும் யானைமுற்றங்களையும் சுற்றிவந்து ஆராயத்தொடங்கினர். யானைகள் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருந்தன. பாகர்கள் எல்லா பக்கமும் தீப்பந்த ஒளியை வீசி நோக்கியபின் அவற்றை அமைதிப்படுத்தும்பொருட்டு உரக்கக் கூவினர். மெல்ல அவை அமைதியடைந்தன. காலகீர்த்தி கடைசியாக ஏதோ கேட்க பிற தாய்யானைகள் பதில் சொல்லின.

ஸஷோர்ணன் கையில் பந்தத்துடன் ஏரிக்கு மறுபக்கம் ஏறினான். சாலையின் உறுதியான தரையில் பந்தத்தை வீசிச் சுழற்றி பலமுறை கூர்ந்து பார்த்தபோது நரிகளின் காலடித்தடங்கள் தெரிந்தன. ஆனால் அவன் பார்த்துக்கொண்டே செல்லும்தோறும் அவை சிதறிப்பரவி நகரம் முழுக்கச் சென்றதையே கண்டான். நூறுக்குமேல் நரிகள் இருக்கும். அவை நகருக்குள் ஓசையில்லாமல் பரவி மறைந்துவிட்டன. இதை எவரிடம் சொல்லி நம்ப வைக்கமுடியும்? திகைத்துக்குழம்பியவனாக அவன் அங்கேயே நின்றான். பந்தம் எண்ணையின்றி கருகத் தொடங்கியது.

அதை வீசி குனிந்து நோக்கியபோது அவன் ஒன்றைக் கண்டான். ஒரு நரியின் பாதத்தடம்தான் முன்னால் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் அதுமட்டுமே சென்றது. பிறகாலடிகள் மறைந்துவிட்டிருந்தன. அவன் அந்தக்காலடித்தடத்தை தொடர்ந்து நகர்த்தெருக்கள் வழியாகச் சென்றான். பந்தம் கருகியபோது அதை காவல்மாடம் ஒன்றில் வைத்துவிட்டான். நகரம் பகல்முழுக்க வெயிலில் வெந்த தூசியின் மணத்துடன் இளவெக்கையுடன் இலைகளும் சுடர்களும் அசையும் மெல்லிய ஒலிகளுடன் விரிந்து கிடந்தது. பெரும்பாலான காவல்மாடங்களில் காவலர்கள் சதுரங்கம் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

குழறிச் சிரித்தபடி இரு குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு கடந்துசென்றார்கள். "ஆகா, இவர் இருட்டுக்கு காவல்காக்கிறாரே" என்று ஒருவன் சொல்ல "அவர் தன் பெண்ணைத் தேடிச்செல்கிறார்" என்றான் இன்னொருவன். மற்றவன் கழுதைப்புலிபோல ஒலியெழுப்பிச் சிரித்தான். ஸஷோர்ணன் அந்தப்பாதத் தடத்தை காவல்மாடமொன்றின் வழிவிளக்கின் அடியில் தெளிவாகவே கண்டான். நரியேதான். ஆம். ஆனால் நரி ஏன் நகருக்குள் புகவேண்டும்? காவல்நாய்கள் என்ன ஆயின? அவை ஏன் குரலெழுப்பவில்லை?

அது எந்த இடமென ஸஷோர்ணன் உணர்ந்தான். அரசவிருந்தினருக்கான அரண்மனைகள் இருக்கும் இடம். சுற்றிலும் ஆழ்ந்த இருளுக்குள் கிளைகளை விரித்து நின்றிருந்த மரங்களுக்கு நடுவே மரப்பட்டைக்கூரைகள் கொண்ட எட்டு இரண்டடுக்கு மாளிகைகள் சாளரங்களில் செவ்வொளியுடன் நின்றிருந்தன. மாளிகைகளைச்சுற்றி உயரமில்லாத மதில்சுவர் இருந்தது. அதன் காவல்வாயில் திறந்துகிடக்க காவலன் அமர்ந்துகொண்டே துயிலில் இருந்தான். அங்குதானா அந்த நரி வந்திருக்கிறது? ஸஷோர்ணன் காவலனை எழுப்பலாமா என சிந்தித்தான். ஆனால் அவனிடம் என்ன சொல்வது? நரி வந்திருக்கிறது என்றா? மேற்குக்கோட்டைக் காவலன் எதற்காக அத்தனை தொலைவுக்கு வரவேண்டும்? தன் நூற்றுவர் தலைவனிடம் சொன்னால் போதாதா?

திரும்புவதே சிறந்தது என ஸஷோர்ணன் எண்ணினான். அவ்வெண்ணம் வந்ததுமே அவன் திரும்பப்போவதில்லை என்றும் உணர்ந்தான். இருபதாண்டுகாலமாக அவன் காவல் காத்துவருகிறான். ஒரேபணி, ஒரே வாழ்க்கை. அவன் இன்னொருவனிடம் சொல்லுமளவுக்கு ஏதும் நிகழ்ந்ததேயில்லை. சிலகாலமாக நீடிக்கும் போர்வரப்போகிறது என்ற பரபரப்புதான் அவன் வாழ்க்கையில் அறிந்த ஒரே ஆர்வமூட்டும் செய்தி. ஆனால் அதுவும் அடங்கிக்கொண்டிருக்கிறது. இதை அறியாமல் அவன் போகமுடியாது.

ஸஷோர்ணன் காவல்வாயிலைத் தாண்டி உள்ளே சென்றான். இருளுக்குப் பழகிய கண்களால் தரையை நோக்கியபடி சென்றான். காவல்தூண் ஒன்றிலிருந்த பந்த ஒளியில் மீண்டும் அந்த நரிப்பாதத் தடத்தைக் கண்டான். அது நடுவே உள்ள மாளிகையை நோக்கிச் செல்வதை உறுதிசெய்துகொண்டான். அந்த மாளிகையின் வாயிலும் திறந்துதான் கிடந்தது. காவலர் இருவர் அமர்ந்தபடி வாய்திறந்து துயில்கொண்டிருந்தனர். அது இயல்பான துயில்தானா என்று எண்ணியபோது அவன் பிடரி சிலிர்த்தது. எப்படி அத்தனைபேரும் அப்படி துயிலில் ஆழ முடியும்? ஏதோ இருள்பெருவிசை கடந்துசென்றிருக்கிறது. அதுசெல்லும் வழியெல்லாம் துயிலை குளிரெனப் பரப்பியிருக்கிறது.

அவன் உள்ளே சென்றான். திறந்த சாளரங்களில் திரைச்சீலைகள் நெளிய பந்தச்சுடர்கள் அசைந்தாட கூடம் விரிந்து ஒழிந்து கிடந்தது. அதன் மரத்தாலான தரையில் பந்தங்களின் ஒளி அலையடித்தது. அப்போது மேலே எவரோ மெல்லப்பேசும் ஒலியைக் கேட்டான். முதற்கணம் உடனே அங்கிருந்து விலகிச்செல்லவேண்டுமென்றே நினைத்தான். ஆனால் அவனால் கால்களை முன்னோக்கி வைக்கத்தான் முடிந்தது. மெதுவாக படிகளில் காலெடுத்துவைத்து ஓசையின்றி மேலேறிச்சென்றபோது தொலைவில் வடக்குவாயில் யானைக்கொட்டிலில் பெருங்களிறான உபாலன் குரலெழுப்புவதைக் கேட்டான். மீண்டும் மீண்டும் அது பிளிறியது. ஒலி கூடிக்கூடி வந்தது. அஞ்சியதுபோல வெறிகொண்டதுபோல கட்டறுக்கமுனைவதுபோல.

மேலே நீண்டுகிடந்த இடைநாழியிலும் இரு காவலர் துயின்றுகொண்டிருந்தனர். அப்பால் மஞ்சத்தறையின் கதவு திறந்திருக்க உள்ளே எரிந்த அகல்விளக்கின் செவ்வொளி சதுரவடிவமான செந்நிறப்பட்டுபோல இடைநாழியின் மரத்தரையில் விழுந்துகிடந்தது. அங்கேதான் செல்லவேண்டுமென அவன் எப்படியோ அறிந்திருந்தான். அவன் அந்த வாயிலை நெருங்கியபோது உள்ளே மெல்லிய உரையாடலைக் கேட்டான். சிரிப்பின் ஒலியும் ஒற்றைச்சொற்களில் பேசிக்கொள்வதும் மூச்சொலிகளும் கலந்து கசக்கப்பட்டவை என ஒலித்தன.

அவன் உள்ளே எட்டிப்பார்த்தபோது அங்கே மஞ்சத்துக்கு அருகே போடப்பட்ட இருக்கைகளில் ஒன்றில் சகுனி அமர்ந்திருப்பதை அகல் விளக்கு ஒளியில் கண்டான். அவன் சால்வை மின்னிக்கொண்டிருந்தது. குழல் தோளில் சரிந்திருக்க ஒரு கையால் தாடியை வருடியபடி தன் முன் இருந்த குறுங்கால்பீடத்தில் விரிக்கப்பட்டிருந்த சதுரங்கக் களத்தில் காய்களை வைத்து மறுகையால் பகடையை உருட்டினான். பகடை உருளும் ஒலி அறையை நிறைப்பதுபோலிருந்தது. விழுந்த எண்ணை நோக்கியபின் காயை நகர்த்தியவாறு மெல்லியகுரலில் ஏதோ சொன்னபடி சகுனி பகடையை நீட்டினான்.

மறுபக்கம் இருக்கையில் எவருமில்லை, இருள்தான் என்றே முதலில் தோன்றியது. பின்பு கண்தெளிந்தபோதுதான் அங்கே ஒருவன் கால்நீட்டி அமர்ந்திருப்பதை ஸஷோர்ணன் கண்டான். அவன் கைநீட்டி பகடையை வாங்கி உருட்டியபோதும் அவன் முகம் தெரியவில்லை. எதிரே இருக்கும் இருளே கைநீட்டி வாங்கி பகடையை உருட்டுவதுபோலிருந்தது.

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 2 ]

காலையில் சகுனி அறிந்த முதல்செய்தி முதுபெரும் களிறான உபாலனின் இறப்புதான். காலையில் எழுந்தபோது தன் ஆற்றல் முழுக்க ஒழுகிப்போய் கைகால்கள் களைத்திருப்பதையும் கண்கள் எரிவதையும் அவன் அறிந்தான். இரவெல்லாம் கனவுகள் வழியாகவே சென்றுகொண்டிருந்ததையும் நினைவழிந்து உறங்கவே இல்லை என்பதையும் நினைவுகூர்ந்தபடி எழுந்து நின்றபோது தரை படகுபோல ஆடியது. திரும்பவும் அமர்ந்துகொண்டான். அவனுடைய குரல்கேட்டு சேவகன் ஓடிவந்து பணிந்து நின்றான். "மது" என்று சகுனி சொன்னான்.

சேவகன் கொண்டுவந்த யவனமதுவை சிலமிடறுகள் அருந்தியபின் கண்களை மூடியபடி தலைகுனிந்து காத்திருந்தான். மது குருதியில் கலந்து சிறிய கொப்புளங்களாக கண்களுக்குள் வெடித்து தலையின் நரம்புகளில் மெல்லப்படர்ந்து இதமாக உடலைத் தளரச்செய்தபின்பு எழுந்தான். அவன் காலைக்கடன்களை முடித்து சபைக்கு வந்தபோது அமைச்சர் சித்ரர் வணங்கி நின்றார். புருவத்தாலேயே அவன் என்ன என்று வினவ "நேற்று இங்கே ஒரு அமங்கலநிகழ்வு. நள்ளிரவில் பெருங்களிறான உபாலன் சரிந்துவிட்டது" என்றார் சித்ரர்.

சகுனி அதிலென்ன என்பதுபோலப் பார்த்தான். "அது இறப்புத்தருவாயில்தான் இருந்தது. ஆனால் அது இறந்த விதம் அனைவருக்கும் வியப்பூட்டியிருக்கிறது. அது நள்ளிரவில் பெருங்குரலெடுத்து அலறியபடி தன் கட்டுச்சங்கிலிகளை உடைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறது. பாகர்கள் அதன்பின்னால் அதட்டியபடி துரட்டிகளும் குத்துக்கம்புகளுமாக வந்தனர். தாப்பானைகள் நான்கு சங்கிலிகளுடன் பின்னால் வந்தன. உபாலன் துதிக்கைச் சுழற்றி அலறியபடி வந்து அரண்மனைக்கோட்டைக்கதவை உடைத்து காவலைத்தாண்டி மகா முற்றத்தை அடைந்து வலப்பக்கமாகத் திரும்பி மூத்தமன்னரின் அந்தப்புரத்தருகே சென்று தொடர்ந்து சின்னம் விளித்துக்கொண்டு நின்றது. காவலர் சூழ்ந்து அதை திருப்பிக்கொண்டுவர முயன்றனர். மன்னர் உப்பரிகையில் வந்து என்ன நடக்கிறது என்று கேட்டார். தாப்பானைகள் சங்கிலிகளை வீசி அதை தளைத்து இழுக்கத் தொடங்கியதும் பக்கவாட்டில் சரிந்து நீந்துவதுபோல நாலைந்துமுறை கால்களை அசைத்து துதிக்கையை தூக்கியது. உயிர்விட்டுவிட்டது"

சகுனி சிந்தனையுடன் "வியப்புதான்" என்றான். "வேறு ஏதாவது மாறுபட்ட நிகழ்வு கண்ணில்பட்டதா?" என்றான். "நேற்று நம் அரண்மனை வளைவில் மேற்குவாயில் காவலன் ஒருவன் விழுந்துகிடந்தான். அவன் பெயர் ஸஷோர்ணன். காவல்பதின்மர் தலைவன். அவன் ஏன் இங்கே வந்தான், எப்படி எல்லைகளைத் தாண்டினான் என்று தெரியவில்லை." சகுனி அவரிடம் தலையசைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் காந்தாரத்திலிருந்து வந்த ஓலைகளை வாசித்து பதில்களை ஓலைநாயகங்களுக்குச் சொன்னபின் எழுந்தான்.

ரதத்தில் ஏறிய பின் சற்றுத் தயங்கி நெற்றியை வருடினான். ரதம் வழக்கமாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குத் திரும்பியது. மெல்லியகுரலில் "அரண்மனைக்கு" என்று அவன் சொன்னதும் சாரதி கடிவாளத்தை இழுத்து ஒருகணம் உறுதிசெய்தபின் ரதத்தைத் திருப்பினான். கிழக்கு அரண்மனைமுற்றத்தில் ரதம் நின்றதும் இறங்கி அவன் அந்தப்புரத்தை நோக்கிச்சென்றான். சேடியிடம் தன் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு அந்தப்புரத்தின் கூடத்தில் அமர்ந்துகொண்டான். கோடைகாலத்தின் வெம்மை தொடங்கிவிட்டிருந்தது. அந்த இளம்காலையிலும் வியர்வை ஊறியது. மேலே தொங்குசாமரங்கள் அசைந்தபோதிலும் காற்று அசைவிழந்து நிற்பதாகத் தோன்றியது. சாளரங்களுக்கு வெளியே காலைவெயில் அதற்குள்ளாகவே நன்றாக வெண்ணிறம் கொண்டுவிட்டிருந்தது.

சேடி வெளியே வந்து "அரசஅன்னை அம்பிகை" என அறிவித்தாள். சகுனி எழுந்து நின்று சால்வையை சரிசெய்து கொண்டான். உள்ளிருந்து அம்பிகை வெளியே வந்தபோது தலைவணங்கினான். அம்பிகை சேடிகளை தலையசைவால் அனுப்பிவிட்டு அவன் முன் அமர்ந்துகொண்டாள். சிலநாட்களிலேயே அவள் மிக முதியவளாகிவிட்டாள் என்று சகுனி எண்ணினான். கண்களுக்குக் கீழே தசைகள் திரைச்சீலைச் சுருக்கங்கள் போல வளையங்களாகத் தொங்கின. உதடுகள் உள்ளே அழுந்தி இறுகியிருக்க மூக்கு முன்னால் வளைந்து மேலுதட்டில் நிழலை வீழ்த்தியிருந்தது. தலைமுடி இருபக்கமும் நன்றகாவே நரைத்துப்போயிருந்தது.

அம்பிகை "சற்றுமுன்னர்தான் அரண்மனை மருத்துவச்சி வந்து உங்கள் தமக்கையைப் பார்த்தாள் சௌபாலரே" என்றாள். சகுனி திகைத்து "தமக்கைக்கு என்ன?" என்றான். "அவளுக்கு சிலநாட்களாகவே உடல்நலமில்லை. தீய கனவுகள் வருகின்றன என்கிறாள். அகம் அமைதியிழந்து தவிக்கிறது என்கிறாள். தனியாக அமர்ந்தால் மனம்கரைந்து அழுகிறாள்." சலிப்புடன் கையை அசைத்து "அரசகுலத்தவளுக்கான எந்த நிமிர்வும் இல்லாதவளாக இருக்கிறாள்... பழங்குடிப்பெண்களைப்போல பிதற்றுகிறாள்" என்றாள் அம்பிகை.

சகுனி தன்னுள் நுரைத்தேறிய சினத்தை மெல்ல வென்று "அவள் பழங்குடிப்பெண்ணும்கூடத்தான் அரசி. எங்கள் தொல்தெய்வங்கள் எப்போதும் அவளுடன் இருக்கும். ஆகவே ஒருபோதும் உடற்குறை கொண்ட குழந்தைகள் பிறக்காது" என்றான். அம்பிகை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவள் முகம் வெறுப்பில் சுருங்கியது. "உங்கள் தமக்கையரும் தங்கையரும் பேசுவது எதுவும் எனக்குப் புரியவில்லை சௌபாலரே. அவர்கள் இங்கே இன்னும் சரியாக அரசவாழ்க்கையில் அமைந்துகொள்ளவில்லை..." என்றாள்.

"நான் அவர்களிடம் பேசுகிறேன்" என்றான் சகுனி. "அவர்களுக்குச் சொல்லுங்கள். இது அரசகுலம். வல்லமைகொண்ட அரசன் பல பெண்டிருடன் வாழ்பவன். அரசபீஜம் எவ்வளவு முளைக்கிறதோ அவ்வளவுக்கு இந்நாடு நலம்பெறும். என் மைந்தன் இசைநாட்டமுள்ளவன். இந்தப்பதினொரு அரசிகளுக்கும் யாழிசைக்கும் பாத்திரங்களின் ஓசைக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆகவே அவன் அந்த சூதப்பெண்ணை சற்று அன்புடன் நடத்துகிறான். இவர்கள் இங்கே கிளர்ச்சியுற்ற நரிக்கூட்டம் போல ஊளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்."

நரிகளின் ஊளை என்ற சொல் தன்னை அதிரச்செய்ததை சகுனி உணர்ந்தான். முந்தையநாள் அவன் நரிகளின் கூட்டமொன்று அஸ்தினபுரிக்குள் நுழைவதுபோல கனவு ஒன்று கண்டிருந்தான். அந்நரிகளின் கண்கள் ஒவ்வொன்றையும் அவன் அப்போது நினைவுகூர்ந்தான். எரிவிண்மீன் போல இருளில் ஒளியுடன் விரைபவை. "நான் அவர்களிடம் பேசுகிறேன்" என்று மீண்டும் சொன்னான்.

"நேற்று ஒரு முதுகளிறு இங்கே அந்தப்புர முற்றத்துக்கு வந்து இறந்தது. அதை அவர்களிடம் சொல்லவேண்டியதில்லை. அந்த முதுகளிறு முன்பு பேரரசி ஊர்கோலம் செல்லக்கூடியதாக இருந்தது. முதுமையில் அதை கொட்டிலில் வைத்திருந்தார்கள். இறப்பின்கணத்தில் அந்நினைவில் அது இங்கே வந்திருக்கிறது... அதைச் சொன்னால் அதற்கும் பாலைவனத்து பேய்க்கதைகள் சிலவற்றை கற்பனைசெய்துகொள்வார்கள் உங்கள் உடன்பிறந்தபெண்கள்..."

"சரி" என்றான் சகுனி. "அவர்களிடம் சொல்லுங்கள், இது அரசர்களின் அந்தப்புரம். இங்கு எப்போதும் அதற்குரிய அமைதியும் முறைமையும் நிலவவேண்டும் என்று..." அம்பிகை அவன் செல்லலாம் என்று கையசைத்தாள். சேடி வந்து வணங்கி "இவ்வழி இளவரசே" என்றாள். வணங்கி விடைபெற்று சகுனி திரும்பி சேடியுடன் சென்றான்.

மரத்தூண்கள் அணிவகுத்த நீண்ட இடைநாழி வழியாகச் செல்லும்போது சகுனி அம்பிகையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். காந்தாரி மணமுடித்துவந்தபோது மருகிமேல் அம்பிகை பெரும்பற்று கொண்டவளாக இருந்தாள். நாள் முழுக்க அவளுடன் இருந்தாள். அவள் நலன்களை பேணிக்கொண்டாள். எப்போது அவள் கசப்பூட்டுபவளாக ஆனாள்? திருதராஷ்டிரனுக்கு மணிமுடி இல்லாமலானபோதா? ஆம், அதுதான். ஆனால் அந்த வெறுப்பு முதல் தளிர்விட்டெழுந்த ஒரு தருணம் இருந்தாகவேண்டும். அந்தத் தருணத்தில் ஒருபோதும் செரித்துக்கொள்ளமுடியாத எதையோ அம்பிகை கண்டடைந்திருக்க வேண்டும்.

மிக இயல்பாக அவன் நெஞ்சில் குந்தியின் தோற்றம் வந்துசென்றது. தேவயானியின் மணிமுடியைச் சூடி அவள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது அதற்கெனவே பிறந்தவள் போலிருந்தாள். அருகே அவன் தங்கை சேடியைப்போலவே அகம்படி சேவித்து நின்றிருந்தாள். அவ்வெண்ணத்தை உடனே அவன் தன் நெஞ்சிலிருந்து அழித்துக்கொண்டான். அப்போது குந்தியின் கண்களிலிருந்த கனவை எண்ணிக்கொண்டான். அது அவனை எரியச்செய்தது. ஒருகணத்துக்குப்பின் அவளை நிமிர்ந்து நோக்கவே அவனால் முடியவில்லை. நடுங்கும் கரங்களை அவன் தன் முழங்காலில் ஊன்றி அழுத்திக்கொண்டான்.

அந்தப்புரத்தில் தங்கையர் சகுனிக்காக காத்துநின்றிருந்தனர். சிலமாதங்களுக்குள்ளாகவே அவர்களனைவரும் பொலிவிழந்து வண்ணம் மங்கிய சுவரோவியங்களாக ஆகிவிட்டிருப்பதாக சகுனி எண்ணினான். சத்யசேனையும் சத்யவிரதையும் அவர்களின் விழிகளில் இருந்த இனியபேதைமையும் நகைப்பும் மறைந்து வஞ்சமும் கலக்கமும் கொண்டவர்களாக மாறிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்களுக்குள் இருந்து ஆன்மா கண்குழிகள் வழியாக ஐயத்துடன் எட்டிப்பார்த்தது. சம்படையும் தசார்ணையும் தங்கள் குழந்தைமையை இழந்துவிட்டனர் என்று சகுனி உணர்ந்தான். சிறுமூங்கில்சுருள்கள் மேல் வண்டியின்எடை ஏறியிருப்பதுபோல அவர்களின் அகம் உடல்மேல் வீற்றிருந்தது.

"தமக்கை எங்கே?" என்றான் சகுனி. "அவர்கள் இன்றுகாலையில் சற்று நோயுற்றிருக்கிறார்கள் மூத்தவரே." சகுனி என்ன என்பதுபோலப் பார்த்தான். "வீண்கனவுகள் வருகின்றன என்கிறார்கள்." சகுனி தலையசைத்தபின் தன்னை அறிவிக்கும்படி சத்யசேனையிடம் சொன்னான். அவள் உள்ளே சென்றதும் திரும்பி தசார்ணையிடம் "நலமாக இருக்கிறாயா தசி?" என்றான். அவள் "நலம் மூத்தவரே" என்று தலைவணங்கினாள். சம்படையிடம் "சம்பை... என்ன விலகி நிற்கிறாய்?" என்றான். "நானும் நலமே மூத்தவரே" என்றாள் சம்படை.

சத்யசேனை வெளியே வந்து வணங்கி உள்ளே செல்லலாம் என்று சைகை காட்டினாள். சகுனி உள்ளே நுழைந்தபோது தன் மென்மஞ்சத்தில் காந்தாரி சற்று எழுந்து அமர்ந்திருந்தாள். அவள் முகம் வெளிறி உதடுகளும் மூக்கும் வீங்கியது போலிருந்தன. கனத்த நீலப்பட்டைத்துணி கண்களை மூடியிருக்க குழல்பிசிறுகள் முகத்தைச் சூழ்ந்திருந்தன. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியபடி "அமர்ந்துகொள் இளையவனே" என்றபோது அவள் குரல் மேலெழவில்லை.

சகுனி அமர்ந்துகொண்டு அவளைப்பார்த்தான். அவளிடம் ஏதும் கேட்கவேண்டுமென தோன்றவில்லை. அவன் பேச்சைக்கேட்க அவள் காதைத்திருப்பியிருந்தமையால் முகம் பக்கவாட்டை நோக்கியிருந்தது. விழியிழந்தவர்களுக்குரிய அசைவுகள் அவளில் கூடியிருந்தன. பதற்றமாக இருப்பவள் போல நடுங்கும் கைகளால் தன் மரவுரிப்போர்வையை திருகிக்கொண்டிருந்தாள்.

"நான் உன்னை எதிர்நோக்கியிருந்தேன். வரச்சொல்லலாமா என்று எண்ணினேன். அதற்கும் என் எண்ணங்களைக் குவித்து முடிவெடுக்க இயலாமல் கிடந்தேன்" என்றாள் காந்தாரி. சகுனி "உங்கள் உடம்புக்கு என்ன?" என்றான். "எனக்கு சொல்லத்தெரியவில்லை... கொடுங்கனவுகள். அதனால் தூக்கமிழப்பு. அதன் விளைவான உடல்சோர்வு என்று சொல்லலாம்..." என்றாள் காந்தாரி. "ஆனால் நீங்கள்..." என சகுனி தொடங்கியதுமே அவள் கையை அசைத்து "நீ சொல்லவருவதென்ன என்று நானறிவேன் இளையவனே. அரசி என்ன சொல்லியிருப்பார்களென அறிகிறேன். அதுவல்ல என் நோய்" என்றாள்.

"அரசர் இசையறிந்த ஒரு சூதப்பெண்ணை தன்னருகே எப்போதும் வைத்திருக்கிறார். அவள் அரசிக்குநிகரான ஆணவத்துடன் அரண்மனையில் உலவுகிறாள். சிலநாட்களுக்கு முன்புவரை என்னை அவ்வெண்ணமே எரியச்செய்தது உண்மை. ஒவ்வொருநாளும் நான் அதனால் அமைதியிழந்திருந்தேன். என் தியாகமும் காதலும் வீணடிக்கப்பட்டன என்று எண்ணுவேன். எதற்காக நான் என் உலகைத் துறந்தேனோ அதற்கு எப்பொருளும் இல்லை என்று உணர்வேன். அது என்னை கண்ணீர்விடச்செய்தது... அதெல்லாமே உண்மைதான் இளையவனே... ஆனால் சென்ற சிலநாட்களாக என்னை வாட்டுவது அதல்ல."

சகுனி சொல்லில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். "அந்தச் சூதப்பெண்ணை அவர் என்னைவிட விரும்புகிறார் என்றறிந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிலையழிவுதான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஏன் அப்படி நிகழ்ந்தது என்று இன்று என்னால் நன்றாகவே உணரமுடிகிறது. குழந்தையாக இருந்து கன்னிமைநோக்கி மலரும் பெண் ஓர் ஆணுக்காக காத்திருக்கத் தொடங்குகிறாள். தன் உடல் ஆணுக்கானது என்ற உணர்வை ஒவ்வொருநாளும் அவள் அடைவதே அதற்குக் காரணம். அந்த ஆணைப்பற்றிய பகற்கனவுகளால் அவள் அகம் நிறைகிறது. அதன்பின் அவளுக்குத் தேவையெல்லாம் அந்த ஆணை முழுமையாக, துளியும் மிச்சமில்லாமல் அடைவது மட்டுமே."

"நானும் அவ்வண்ணமே இருந்தேன். என் கைகளுக்குள் இந்த ஆண்மகன் வந்தபோது இவரை முற்றிலும் என்னுடையவராக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது" என்றாள் காந்தாரி. "அவருடைய உடலும் உள்ளமும் என் உடலாகவும் உள்ளமாகவும் மட்டுமே எஞ்சவேண்டும் என்ற மன எழுச்சி அது. அவருடைய அகத்தில் நுழைவதற்கான வழிகளை நான் தேடினேன். அஞ்சியபாம்பு வளைதேடுவதுபோல அன்று முட்டிமோதினேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டேன். அதற்காக நான் கண்டவழிதான் இப்படி கண்களைக் கட்டிக்கொள்ளுதல்..."

காந்தாரியின் முகம் கசப்பான புன்னகையில் சற்றே நெளிந்தது. "ஆம், கண்மூடித்தனம்தான். கண்களை மூடிக்கொள்ளாமல் எதிலும் முழுமையாக இறங்க முடியாது. ஏனெனில் கண்மூடித்தனமாக அல்லாமல் எதையும் முற்றாகத் துறக்கவும் முடியாது. எஞ்சியவற்றைத் துறக்காமல் புதியவற்றில் நுழைவது இயல்வதல்ல... நான் குருட்டுத்தனமாக முன்னால் பாய்ந்தேன். எந்த எச்சமும் இல்லாமல். என் உறவுகள், என் மண், என் நேற்றுகள் எதுவும் இல்லாமல் குதித்தேன். அந்த முழுமையான தாவலைச் செய்யும் பெண் அடையும் பேரின்பத்தையும் நான் அடைந்தேன். முற்றொழிந்த கலம் மீண்டும் நிறையும் இன்பம் அது... அப்படி எத்தனையோ கன்னிகள் முதல்நாளில் தங்களை ஆணிடம் முழுதாக ஒப்படைத்துக்கொள்கிறார்கள்."

அவள் ஒருபோதும் அப்படி தொடர்ந்து பேசுபவளல்ல என்பதை சகுனி அறிந்திருந்தான். கண்கள் கட்டப்பட்டிருப்பதுதான் அந்தக் கட்டற்ற உரையாடலை அவளுக்கு இயல்வதாக ஆக்குகிறது. எதிர்விழிகளைப் பார்க்காததனால் சொற்களும் உணர்ச்சிகளும் தாரை முறியாமல் முற்றிலும் தன்னுள் மூழ்கிச்சென்றுகொண்டே இருக்கிறாள். அவள் எப்போதும் அகத்தே செய்துகொண்டிருப்பதுபோலும் அது. ஆகவேதான் சொற்றொடர்களும் சொல்லிச்சொல்லி அடையும் துல்லியம் கொண்டிருக்கின்றன.

"ஆனால் அந்த உச்சத்தில் நெடுநேரம் நிற்கமுடியாது. அந்த மலைமுடியில் தங்கி வாழ்வதற்கு இடமில்லை. அதுதான் நடைமுறை உண்மை. இளையவனே, ஆண்மனத்தில் ஒரு சிறு பகுதியே காமத்தில் நனையக்கூடியது. மலையில் மண்ணாலான மேற்பகுதி போல. அங்கு மட்டுமே செடிகள் முளைக்கமுடியும். உள்ளிருக்கும் பாறையை ஈரம் ஊடுருவமுடியாது. என் கையில் சிக்கிய ஆண்மகனின் உள்ளத்தில் எனக்குரியதை மட்டும் நான் பெற்றேன். அவன் ஆழத்தை நான் தொடவே முடியாது என்றறிந்தேன். எல்லா பெண்களும் அந்த உள்ளுண்மையை அறியும் ஒரு தருணம் உண்டு. அவளுடைய கைகள் அந்தக்கரும்பாறையைத் தீண்டும்கணம்...அது எனக்கும் வந்தது."

"என் அகமும் புறமும் கசந்த நாட்களை அறிந்தேன். அன்று நான் இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிடவேண்டுமென எண்ணினேன். முதலில் அவ்வெண்ணம் எனக்குக் கூச்சமளித்தது. நான் பெரும்பத்தினி என்று சூதர்களால் பாடப்படுபவள். இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிட்டால் அதே சூதர்களால் பழிக்கப்படுவேன். பின்பு அந்தத்தடையை தாண்டினேன். நான் எனக்குரியதையே செய்யமுடியும், காவியங்களுக்காக வாழமுடியாது என்று சொல்லிக்கொண்டேன். அதன்பின் நானறிந்தேன், இந்தக் கண்கட்டை அவிழ்த்து மீண்டும் ஒளியின் உலகைப்பார்த்தால் திகைத்துச் செயலழிந்து விடுவேன் என்று. எனக்குள் ஓடும் எனக்கேயான அகமொழியின் உலகை இழந்துவிடுவேன் என்று அறிந்தபோது பின்வாங்கினேன்."

"அப்போதுதான் முதற்கனவு வந்தது" என்றாள் காந்தாரி. "முதலில் மலைப்பாம்பு ஒன்று ஒரு யானையை விழுங்குவதைக் கண்டேன். அஞ்சி விழித்துக்கொண்டபின் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது யானை மலைப்பாம்புக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்று. மறுநாள் கனவில் யானை அந்த மலைப்பாம்பை பிளந்துகொண்டு வெளியே வந்ததைக் கண்டேன். குருதி வழிய மலைப்பாம்பு துடித்துக்கொண்டிருப்பதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தத் துடிப்பு என் உடலை கிளர்ச்சிகொள்ளச்செய்தது. அகம் உச்சகட்ட இன்பத்தில் நாள்முழுக்கத் திளைத்தது."

"இளையவனே, இதையும் நீ கண்மூடித்தனமானது எனலாம். நான் அதன்பின் என் கண்கட்டை அவிழ்க்கவே முடியாதென்று அறிந்தேன். ஏனென்றால் நாளெல்லாம் ஒரே கனவு எனக்கு நீடிப்பதற்கான காரணம் இந்தக் கண்கட்டுதான். இதை அவிழ்த்தால் புறஒளியின் எளிய உலகில் சென்றுவிழுவேன். இந்தக் கனவுகள் அனைத்தும் என்னை வதைப்பவை. என் அகத்தை துடிதுடிக்கச் செய்பவை. ஆனால் இவற்றை நான் சுவைக்கவும் செய்கிறேன். தன் குருதியைச் சுவைத்துண்ணும் காட்டுயிர் போல. இந்த இருண்டகுகைக்குள் முடங்கிக்கொண்டு என்னைநானே உண்டுகொண்டிருக்கிறேன்..."

"நோய் அதற்கான மனநிலைகளையும் உருவாக்கிக்கொள்கிறது என்பார்கள் தமக்கையே" என்றான் சகுனி. "மருத்துவர் அதற்காகவே முதல் மருந்துகளை அளிக்கிறார்கள்... உங்கள் கனவுகள்..." என அவன் சொல்ல இடைமறித்த காந்தாரி "அக்கனவுகளை நான் எவரிடமும் சொல்லமுடியாது. ஒரு பெண்ணிடம் கூடச் சொல்லமுடியாதவை அவை. இறப்புக்கு நிகரான கணங்களால் ஆனவை. இளையவனே, பேரின்பம் என்பது எப்போதும் இறப்புக்கு நிகரான கணங்களைத்தான் அளிக்கும்" என்றாள். "என் வாழ்க்கையில் நான் அறிந்த பெரும் உவகை என்பது இந்தக் கனவுகளால் உள்ளூர அரிக்கப்பட்டு சிதிலமாகி நலம்குன்றிச் சோர்வுறும் இவ்வனுபவம் மட்டும்தான்."

"ஆனால்..." எனத் தொடங்கிய சகுனியை மீண்டும் மறித்து "நான் அந்தக்கனவுகளை ஏன் விரும்புகிறேன் என்று இன்றுதான் அறிந்தேன்" என்றாள் காந்தாரி. "நேற்று நள்ளிரவில் நான் என் மைந்தனைக் கண்டேன்." சகுனி திகைப்புடன் "மூத்தவளே" என்றான். காந்தாரி "நள்ளிரவில் ஒரு மதயானையின் குரலைக் கேட்டேன். ஆம், அது எனக்குள் ஒலித்ததுதான் என நான் அறிவேன். அந்த வேழம் துதிக்கையைச் சுழற்றித்தூக்கியபடி சின்னம் விளித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டேன். இருட்டு பெருகி வருவதுபோல. தென்திசைக் கடல்எழுந்து வருவதுபோல. அது என்னை அணுகி என்னை மோதியதை உணர்ந்தேன். நெடுநேரம் கழித்து நினைவு மீண்டபோது முதலில் நான் கண்டது ஒரு மைந்தனின் முகத்தை. பிறந்து சிலகணங்களேயான குழந்தை. பெரிய கரிய உடல்கொண்ட குழந்தை. அவன் தந்தையைப்போல. மறுகணம் எழுந்து அமர்ந்தேன். இதெல்லாம் எதற்கு என்று புரிந்துகொண்டேன். எனக்குள் அவன் நுழைந்திருக்கிறான். என் மைந்தனைத்தான் நான் கண்டிருக்கிறேன்."

பெருமூச்சுடன் சகுனி பின்னால் சரிந்து அமர்ந்தான். "ஆம், நீங்கள் சொல்வதை நானும் நம்புகிறேன் மூத்தவளே" என்றான். "நானும் இந்நாட்களில் முடிவில்லாக் கனவுகளில்தான் மூழ்கிக்கிடந்தேன். என்னை பாலைப்புயலெனச் சுழற்றிக்கொண்டுசெல்லும் கனவுகள்..." காந்தாரி முதல்முறையாக தன்னுள் ஓடிய சொற்களில் இருந்து விடுபட்டு வெளிவந்து அவனை கவனித்தாள். "அவற்றை நானும் தங்களிடம் சொல்லமுடியாது தமக்கையே... கட்டற்றவை. கொடூரமானவை. ஆனால் நேற்று நான் ஒரு கனவு கண்டேன். நான் ஒருவனுடன் பகடையாடினேன். என் எதிரே அவன் அமர்ந்திருந்தான்... கரியவன். பெரிய உடல்கொண்டவன்."

"முதல்முறையாக ஒருவன் என்னை பகடையில் வென்றான்" என்றான் சகுனி. "கனவிலானாலும் நனவிலானாலும் என்னை ஒருவன் வெல்வது முதல்முறையாக நிகழ்கிறது. ஆனால் அது என்னை மகிழ்வில் துள்ளச்செய்தது. அவன் வென்றபின் பகடையை உருட்டிவிட்டு நகைத்தபடி எழுந்தபோது நான் என்னுள் எழுந்த பேருவகை தாளாமல் கண்ணீர் சிந்தினேன்." காந்தாரி அசைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். "ஆம் தமக்கையே, இது அவனுடைய வருகை அறிவிப்புதான். அவனுக்காக இந்த அஸ்தினபுரியும் நானும் காத்திருக்கிறோம். பாரதவர்ஷம் காத்திருக்கிறது. இந்த யுகம் காத்திருக்கிறது."

"ஆம்" என்றாள் காந்தாரி வேகத்துடன் எழுந்தமர்ந்தபடி. "அதை நான் உணர்கிறேன். அவன் வரவிருக்கிறான். மலையிறங்கிவரும் உச்சிப்பாறைபோல. மதம் கொண்ட யானைபோல. அவன் வழியில் எதுவும் நிற்கக்கூடாது. தம்பி, ஆற்றல் என்றால் அது கண்மூடித்தனமானதாகவே இருக்கமுடியும். பற்று என்றாலும் அது கண்ணற்றதாகவே இருக்கமுடியும். நான் என் உடலின் பொருள் என்ன என்று இப்போது அறிகிறேன். என் உயிரின் இலக்கை உணர்கிறேன். இந்தக் கருவை சுமந்து பெற்றெடுப்பது. இவனுக்கு அன்னையாக இருப்பது. வேறேதுமாக இருக்க முழுமையாக மறுத்துவிடுவது. ஆம் அதுதான்."

அவள் மூச்சிரைத்தாள். "ஆகவே நான் முடிவெடுத்துவிட்டேன். நான் இந்தக் கண்கட்டை அவிழ்க்கப்போவதில்லை. இனி இது என் மைந்தனுக்காக. அவன் குரலைத்தவிர வேறெதையும் நான் கேட்கலாகாது. அவனைத்தவிர வேறெதையும் நான் அறியலாகாது. என் உள்ளமும் ஆன்மாவும் இறுதித்துளி வரை அவனுடன் இருக்கவேண்டும். அவன் சொல்லன்றி நெறிகளும் அவன் நலனன்றி முறைமைகளும் எனக்கு வேண்டியதில்லை. ஆம், அவனைத்தவிர எனக்கென ஒளியென ஏதும் வேண்டியதில்லை..." அந்தக் கண்கட்டைத் தொட்டுக்கொண்டு அவள் சொன்னாள் "இது என் மைந்தனுக்காக என் பூர்ணாகுதியின் அடையாளம்."

சகுனி அவளுடைய சிவந்து வியர்த்த முகத்தை சிலகணங்கள் நோக்கியபடி அமர்ந்திருந்தான். மூடிக்கட்டப்பட்ட நாடாவுக்குள் இருந்து கண்ணீர் கசிந்து கன்னத்தில் சொட்டியது. கைவெள்ளைகளில் நகங்கள் குத்தியிறங்கும்படி இறுகப்பிடித்த கைமுட்டியும் நீலநரம்புகள் புடைத்த மணிக்கட்டும் தோள்களும் துடித்தன. பின்பு அவள் பீரிட்டழுதபடி தன் மஞ்சத்தில் சாய்ந்தாள். பின்பக்கம் மருத்துவச்சேடி எட்டிப்பார்த்தாள். சகுனி எழுந்துகொண்டான்.

சகுனி களைத்த காலடிகளுடன் நடந்து வெளியே வந்தான். அவன் தங்கைகள் அங்கே அவனுக்காக நின்றிருந்தனர். சத்யசேனை "தமக்கைக்கு என்ன நோய் மூத்தவரே?" என்றாள். சகுனி "அவள் சற்று மனம் சோர்ந்திருக்கிறாள். நெடுந்தொலைவு நீங்கி வந்ததுதான் காரணம். அவள் உள்ளத்தை சோர்வுறச்செய்யும் எதையும் சொல்லாதீர்கள்" என்றான். "அவர் உள்ளத்தைச் சோர்வுறச்செய்வது அந்த சூதப்பெண்" என்றாள் சத்யசேனை. "அதைப்பற்றி அவளிடம் ஏதும் பேசவேண்டாம். அவள் விரும்புவதை மட்டுமே பேசுங்கள்" என்று சகுனி கூரியகுரலில் சொன்னான். "ஆணை மூத்தவரே" என்றாள் சத்யசேனை.

அவன் முகம் இளகியது. "ஏன் சோர்ந்திருக்கிறீர்கள்? இது விரைவில் கடந்துசெல்லும் காலகட்டம். தமக்கை பெருவீரனைப் பெறுவாள். அவள் மைந்தன் இந்நாட்டின் சக்ரவர்த்தியாவான். அவனுடன் உங்கள் மைந்தர்களும் அணிவகுத்து இந்த பாரதவர்ஷத்தையே வெல்வார்கள்" என்றான். அவர்கள் முகங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவன் கண்டான். அச்சொற்கள் அவனுக்களித்த பொருளை அவர்களுக்குத் தரவில்லை.

சத்யசேனை முறைப்படி தலைவணங்கி "எங்கள் நல்லூழ் அது" என்றாள். சகுனி அந்த முறைமைச்செயலை அப்போது ஓர் அவமதிப்பாகவே கொண்டான். எழுந்த சினத்தை மறைத்து "மகிழ்வுடனிருங்கள்" என்றபின் திரும்பி நடந்தான். அவர்கள் அவனுக்குப்பின்னால் இயல்புநிலைக்குத் திரும்பும் உடலசைவுகளைக் கேட்டான்.

இடைநாழியில் ஓர் மெல்லிய ஆடையசைவைக் கண்டான். அது சம்படை என்று உணர்ந்தபின்னர்தான் அவளை அந்தக்கூட்டத்தில் காணவில்லை என்பதை நினைத்துக்கொண்டான். சம்படை அவனை நோக்கி ஓடிவந்து அவன் கைகளைப்பற்ற கைநீட்டினாள். அவன் கைகளை நீட்டாததனால் அவன் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அவள் கண்கள் களைத்து கருவளையங்களுடன் இருந்தன. உதட்டைச்சுற்றி மெல்லிய சுருக்கங்கள் பரவியிருக்க முதிர்ந்தவளாகியிருந்தாள். அவனுடைய மேலாடையை இழுத்தபடி "மூத்தவரே என்னை அழைத்துச்செல்லுங்கள்... நான் காந்தாரத்தில் ஒரு சேடியாக வாழ்கிறேன்...என்னை அழைத்துச்சென்றுவிடுங்கள் மூத்தவரே" என்றாள்.

"கையை விடு" என்று சகுனி கூரிய குரலில் சொன்னான். "நீ அரசி. இன்னொருமுறை சூத்திரர்களுக்குரிய சொற்களைச் சொன்னால் அக்கணமே உன்னை வெட்டி வீழ்த்துவேன்." அவள் திகைத்து கைகளை விட்டுவிட்டு பின்னகர்ந்து சுவரோடு ஒட்டிக்கொண்டாள். சகுனி அவளைத் திரும்பிப்பார்க்காமல் வெளியேறினான்.

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 3 ]

சகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை ஒன்றை துதிக்கையால் சுமந்தபடி சென்றது. சகுனி ரதத்தில் ஏறியபடி "அந்த யானை எங்கே?" என்று கேட்டான். "இளவரசே?" என்றான் சாரதி. "இன்று காலை இறந்த அந்த யானை?" "இளவரசே, அதை யானைமயானத்துக்கு கொண்டுசென்றிருப்பார்கள். வடக்குக் கோட்டை எல்லைக்கு அப்பால், புராணகங்கையில் அது உள்ளது... காட்டுக்குள்."

'செல்' என சகுனி கைகாட்டினான். சாரதி ரதத்தைத் திருப்பி அரண்மனையின் பக்கவாட்டுச்சாலைக்குச் சென்று அங்கிருந்து வடமேற்கு நோக்கிச் சென்றான். பெருமூச்சுடன் ரதத்தில் அமர்ந்துகொண்ட சகுனி சாலையின் இருபக்கமும் நோக்கியபடியே வந்தான். மேற்கே ஏரி பெரும்பாலும் வற்றி அதைச்சுற்றி சேற்றுப்பரப்பு முதலைத்தோல் என வெடித்திருந்தது. வடக்குக்கோட்டத்தின் உப்பரிகையில் திரைச்சீலைகள் அசைந்தன. அப்பால் யாரோ அமர்ந்திருப்பதை கண்டான். அது ஒரு பெண்மணி என்று பின்னர் உணர்ந்தான்.

அது விதுரனின் அன்னை. அரண்மனையில் சமையல்பணிசெய்த சூதப்பெண். வியாசனின் விந்துவை ஏற்று ஞானியான மைந்தனைப்பெற்றவள். அவளுக்கு மனநிலைப் பிறழ்வு உண்டு என்று அறிந்திருந்தான். வருடக்கணக்காக ஒவ்வொருநாளும் அவள் ஒரே உப்பரிகையில்தான் அமர்ந்திருக்கிறாள். அவள் என்ன பார்க்கிறாள்? அவள் எப்போதைக்குமாக இழந்த புறவுலகையா? அவளுக்கும் தன் தங்கையருக்கும் என்ன வேறுபாடு? அவள் கட்டற்ற வாழ்க்கையை சிறிதுகாலமேனும் அறிந்திருக்கிறாள். அவர்கள் அதை அறிந்ததேயில்லை.

அரண்மனையின் கருவூலத்தில் பொன் இருக்குமென்றால் அதற்கு நிகராக செம்புநாணயங்களை வெளியிடலாமென்று பொருள்நூல் சொல்வதை அவன் அறிந்திருந்தான். அரசகன்னியர் கருவூலத்துப் பொன்னைப்போல. அவர்கள் அங்கே களஞ்சியத்து இருளில் காலாகாலமாக விழியொளிபடாமல் கிடந்தாகவேண்டும். அவர்கள் அங்கிருந்தால்தான் வெளியே அரசு நிகழமுடியும். இத்தனை பேர் வாழ முடியும். ஆனால்...

அவையெல்லாம் வெறும் சொற்கள் என சகுனி மீண்டும் தன்வசையுடன் எண்ணிக்கொண்டான். படியிறங்குமுன் சம்படையிடம் சொன்ன சொற்களை அவனே உறுதிப்படுத்திக்கொள்ள விழைகிறான். அர்த்தமற்றவை அவை. இன்னும் சிலநாட்கள்தான், சம்படையும் சொற்களற்றவளாக ஆகிவிடுவாள். அவளுக்கும் இவ்வாறு ஒரு உப்பரிகை கிடைத்துவிடும்.

வடக்குக்கோட்டையை ஒட்டிய யானைக்கொட்டிலில் அமைதிநிலவியது. யானைகள் அனைத்தும் அந்த மரணத்தை அறிந்து அந்தத் துயரில் மூழ்கி நிற்பதாகத் தோன்றியது. அது வெறும் தன்மயக்கா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. யானைகள் காதாட்டுகின்றன, ஊசலாடுகின்றன, வழக்கம்போலத்தான் தெரிகின்றன.... அதன்பின்னர்தான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான யானைகள் எவையுமே இரையெடுக்கவில்லை என்பதை கண்டான். அவை துதிக்கையை நிலத்தில் வெறுமே துழாவியபடி மெல்ல ஆடிக்கொண்டு நின்றிருந்தன. ஆம், ஒன்றுகூட! அவன் விழிகளை ஓட்டி ஒவ்வொரு துதிக்கையாக, வாயாக பார்த்தான். அத்தனை யானைகளும் துதிக்கைமுன் குவிந்துகிடந்த உணவைத்தொடாமல்தான் நின்றுகொண்டிருந்தன.

சகுனி ரதத்தை நிறுத்தச்சொல்லி யானைகளையே பார்த்தான். யானை என்பது வெறும் மிருகமல்ல என்று தோன்றியது. ஒட்டகமோ கழுதையோ குதிரையோ அல்ல. அது ஒரு கரிய உடல் அல்ல. அது ஓர் ஆளுமை. ஒரு மனம். ஓர் ஆன்மா. அதுமட்டும் அல்ல. அதற்கப்பால். விண்ணகத்தெய்வங்களில் ஏதோ ஒன்று வந்து மண்ணில் யானைகளாக நடித்துக்கொண்டிருக்கிறது. அங்கே நிற்க அவன் அஞ்சினான். "ஓட்டு!" என்றான்.

புராணகங்கைக்குள் புதர்க்காடு முழுக்க பல்லாயிரம் மரக்குடில்கள் முளைத்து அவையெல்லாம் இணைந்து சிறிய ஊர்கள் போல மாறியிருந்தன. அனைத்திலும் காந்தாரப்படைவீரர்கள்தான் தங்கியிருந்தனர். அவர்களின் கழுதைகளும் ஒட்டகங்களும் குறுங்காட்டுக்குள் சிறிய மரங்களின் அடியில் நின்றும் கால்மடித்துக்கிடந்தும் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. அவனுடைய ரதத்தைக் கண்டதும் காந்தார வீரர்கள் எழுந்து நின்று ஆயுதங்களை கையிலெடுத்து வாழ்த்துகூவாமல் மேலே தூக்கினர். அவன் கைகளை மெல்ல தூக்கி அதனை ஏற்றபடி முன்னால் சென்றான்.

புழுதிநிறைந்த சாலை குறுங்காட்டுக்குள் சென்று பின் கிளைபிரிந்தது. சரளைகற்களாலான சிறிய சாலை சென்ற மழையில் அரித்து ஓடைகளால் ஊடுருவப்பட்டுக் கிடந்தது. அதன்மேல் புதிய வண்டித்தடங்கள் சென்றன. சாலையின் மறு எல்லையில் இருந்தது யானைமயானம். அங்கே நிறையபேர் கூடியிருப்பதை காணமுடிந்தது. அவனுடைய ரதம் வருவதைக் கண்டதும் ஏவலர் முன்னால் ஓடிவந்து வணங்கினர்.

ரதம் நின்றதும் சகுனி இறங்கிக்கொண்டான். சால்வையைச் சுற்றியபடி அவன் சென்றபோது எதிரே யானக்கொட்டில் அதிபரான வைராடர் அவனை நோக்கி வந்து வணங்கினார். அவன் பின்னால் வந்தபடி "உபாலன் என்று அந்தப்பெருங்களிறுக்குப்பெயர் இளவரசே. நூறுவயதாகிறது" என்றார். "நூறு வயதா?" என்றான் சகுனி. "ஆம், அதுதான் யானைக்கு நிறைவயது. பொதுவாக யானைகள் எண்பதைத் தாண்டுவதில்லை. இது நூறை நிறைவுசெய்த நாள் இன்று..."

சகுனி வியப்பை வெளிக்காட்டாமல் திரும்பி நோக்கியபின் பார்வையைத் திருப்பிக்கொண்டான். "பீஷ்மபிதாமகரின் அன்புக்குரிய யானை... பிதாமகர் இன்று காட்டில் இருக்கிறார். எரியூட்டுவதற்கு முன் வருவார் என்றார்கள்" என்றார் வைராடர். "இளமையில் அவர்தான் உபாலனின் சோதரன் போலிருந்தார். அவர்கள் இணைந்து காட்டுக்குச்செல்வார்கள். ஆகவே அவர்தான் எரியூட்டவேண்டும்" என்றார்.

"எரியூட்டுவதா?" என்றான் சகுனி. "ஆம் இளவரசே. யானையின் இறப்பு எளிய மிருகமொன்றின் இறப்பல்ல. மண்ணில்பிறக்கும் அனைத்து யானைகளும் காட்டரசர்களே. ஆகவே ஒரு மாமன்னருக்குரிய அனைத்தும் யானைக்குச் செய்தாகவேண்டும். பிறந்த முதல்நாள் அதன் குருதி உறவாக தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் அதற்கு முதலினிமை அளிக்கவேண்டும். அன்றே பிறவிநூல் கணித்து எழுதுவார்கள். ஒன்பதாம்நாள் மாசுநீராட்டு நடக்கும். இருபத்தெட்டாம்நாள் முதலணி அணிவித்து பெயர்சூட்டப்படும். ஒவ்வொரு வருடமும் யானையின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள்" என்றார் வைராடர்.

"யானையின் இறப்பும் அரசனின் இறப்பே" என வைராடர் தொடர்ந்தார். "யானை இறந்ததை முறைப்படி முரசறைந்து அறிவிக்கவேண்டும். சந்தனக்கட்டையிட்டு எரியூட்டவேண்டும். யானையின் தந்தையாகவோ மைந்தனாகவோ தம்பியாகவோ தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் முறைப்படி அனைத்துக்கடன்களையும் ஆற்றவேண்டும். மூன்றாம்நாள் நீர்க்கடனும் நாற்பத்தொன்றாம் நாள் உதகபலியும் செய்யவேண்டும். அன்று நீத்தார்விருந்து நிகழும். அதன்பின் வருடம்தோறும் நீத்தாருக்கான பலிநாளில் அந்த யானைக்காகவும் எள்ளும் நீரும் அளிக்கவேண்டும்."

"யானை எங்கே?" என்றான் சகுனி. "இதோ" என்று வைராடர் சுட்டிக்காட்டினார். சகுனி திகைத்து கண்களை ஓட்டினான். "இதோ இதுதான்..." என வைராடர் கைகாட்ட இருவர் அங்கே ஈச்சைஓலைமட்டைகளால் மூடப்பட்டிருந்த குவியலை விலக்கிக் காட்டினர். சகுனி கண்கள் சுருங்க மெல்ல முனகினான். அங்கே யானையின் வயிறும் முதுகும் மட்டும் வெட்டப்பட்டு பெரிய பாறைபோல வைக்கப்பட்டிருந்தது.

சேவகர் பிற குவியல்களை விலக்கினர். அங்கே கால்கள் தனித்தனியாகவும் துதிக்கையும் மத்தகமும் தனியாகவும் ரம்பத்தால் அறுத்து விலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. யானையின் கால்கள் பெரிய வேங்கைமரத்தடிகளை தோலுடன் வைத்தது போலிருந்தன. "என்ன இது வைராடரே?" என்றான் சகுனி. அவன் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

"இதுவே வழக்கம்..." என்றார் வைராடர். "யானையை முழுதாக தூக்கி இங்கே கொண்டுவரமுடியாது. அத்தனை எடை தாங்கும் வண்டிகளே இங்கில்லை. பிறயானைகளைக்கொண்டு அதைத் தூக்கலாம்.  ஆனால் யானைகள் அதைச்செய்ய முன்வருவதில்லை. அவை நடுங்கிவிடும். இறந்த யானையை கைவிட்டுவிட்டு நெடுந்தூரம் விலகிச்செல்லும் வழக்கம் கொண்டவை அவை. அத்துடன் யானை ஓர் அரசன். வாள்போழ்ந்து எரியூட்டுவதே அதற்கான பீடு."

"ஆகவே ரம்பத்தால் அறுத்து ஏழு துண்டுகளாக ஆக்கி தனித்தனியாக வண்டிகளில் கொண்டுவருவதே வழக்கம்" என்றார் வைராடர். 'மூடுங்கள்' என சகுனி சைகை காட்டினான். குமட்டல் எடுத்து உடலை உலுக்கியபடி திரும்பிக்கொண்டான். "இதற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். மாதங்கர் என்னும் குலம். இங்கே அவர்கள் இருபது குடும்பங்களாக இருக்கிறார்கள்" வைராடர் சொன்னார். "அவர்கள் மட்டுமே யானையை உரிய இடங்களில் ரம்பத்தால் அறுத்து துண்டுகளாக்க முடியும். யானையின் எலும்புகள் மிக வலுவானவை. மூட்டுகளை பிரிக்கவே முடியாது."

அப்பால் சிதைகூட்டுவதற்கான பெரிய சந்தனத்தடிகளை வினைவலர் வண்டிகளில் கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்தனர். நறுமணப்பொருட்களுடன் ஒரு வண்டி வந்து நின்றதும் வினைவலர் அதைநோக்கிச் சென்றனர். மரங்களுக்கு நடுவே சிதைமூட்டுவதற்கான பெரிய குழியை இருபது மாதங்கர்கள் தோண்டிக்கொண்டிருக்க கரையில் மூத்த மாதங்கர் தலைப்பாகையுடன் நின்றிருந்தார். "இது கங்கையின் பழைய பாதை. மண் மென்மையான வண்டல். ஆகையால் எளிதில் தோண்டிவிடமுடியும்" என்றார் வைராடர். அவர்கள் வெட்டிக்குவித்த மண் கருநிறத்தில் இருந்தது.

மாதங்கர்கள் ஏதோ கூச்சலிட முதியமாதங்கர் கைகளைத் தூக்கி வைராடரை அருகே அழைத்தார். "என்ன?" என்றான் சகுனி. "இது கங்கை வழிந்த பகுதி... வண்டலில் மூழ்கிப்போன பலபொருட்கள் கிடைப்பதுண்டு. பெரும்பாலும் தொன்மையான படகுகள். சிலசமயம் உலோகக்கலங்களும் பெட்டகங்களும் கிடைத்துள்ளன" என்றார் வைராடர். சிரித்தபடி "மாமன்னர் பிரதீபரின் காலத்தில் ஒரு பெரிய பெட்டகம் நிறைய பொன்நாணயங்கள் கிடைத்தன என்றார்கள். ஆகவே ஆங்காங்கே பலர் தோண்டிப்பார்ப்பதும் உண்டு..." என்றார்.

குழியை அணுகி அள்ளிக் குவிக்கப்பட்ட ஈரமான வண்டல்மேல் ஏறி விளிம்பை அடைந்து உள்ளே நோக்கினார்கள். புதியமண்ணின் வாசனை மூக்கை நிறைத்தது. மண்புழுக்கள் நெளியும் கரிய மண் சேறாக வழுக்க சகுனி மெல்லக் காலெடுத்து வைத்து அதன்மேல் ஏறினான். "பெட்டகமா?" என்றார் வைராடர். "தெரியவில்லை. உலோகத்தில் மண்வெட்டி பட்டது."

வைராடர் "ஆழமாகச் செல்லுங்கள்" என்றார். அவர்கள் தோண்டிக்கொண்டிருக்க "அமைச்சரே அது இரும்பு... இரும்பாலான கனமான ஏதோ ஒரு பொருள்" என்றார் ஒரு மாதங்கர். "இரும்பா?" என்றார் வைராடர் ஆர்வமிழந்து. "அனேகமாக கங்கையில் சென்ற ஏதேனும் படகின் நங்கூரமாக இருக்கும்... எதுவாக இருந்தாலும் மேலே எடுங்கள்!" மாதங்கர்கள் அந்தப் பொருளின் நான்குபக்கங்களிலும் மண்ணை அள்ளத்தொடங்கினர். மண் விலக விலக அதன் வடிவம் மெல்லத் துலங்கி வந்தது. பெரிய உருளை போலிருந்தது. "அது நங்கூரம்தான் அமைச்சரே. அந்தப் பெரிய உருளைக்கு நீளமான தண்டு இருக்கிறது" என்றார் முதுமாதங்கர்.

கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிலும் ஆழமாக்கி அதை தனித்து எடுத்தனர். கருப்பையை திறந்துகொண்டு ஒரு குழந்தை பிறவிகொள்வதுபோலிருப்பதாக சகுனி எண்ணிக்கொண்டான். அதன் நீளமான தண்டில் கயிறுகளைக் கட்டி மேலே கொண்டுவந்து பத்துபேர் மேலிருந்து இழுத்து தூக்கத்தொடங்கினர். அவர்களின் மூச்சொலிகளும் ஒத்தொலிகளும் எழுந்தன.

அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பெரும் எடை அசைவில்லாமலேயே இருந்தது. மாதங்கர்களின் விசையொலிகள் உரத்து உரத்து எழ, வடங்கள் தெறித்து ஓசையிட, ஏதோ ஒரு கணத்தில் அது அசைந்து மண்ணிலிருந்து விரிசலிட்டு எழுந்தது. கூச்சலுடன் அதைத் தூக்கி புரட்டிப்போட்டனர். சகுனி திகைப்புடன் அமர்ந்து குனிந்து பார்த்தான். முதியமாதங்கர் "நங்கூரமெனத் தோன்றவில்லை. நிறைய சிற்பவேலைப்பாடுகள் உள்ளன" என்றார்.

"டேய் அதன் மண்ணை விலக்குங்கள்" என்றார் மாதங்கர். அவர்கள் அதன் மண்ணை அகற்றத்தொடங்கினர். வைராடர் "நங்கூரத்திலேயே சிற்பவேலைப்பாடுகள் செய்திருப்பார்கள் அன்று. நமக்கென்ன தெரியும்?" என்றார். அதற்குள் சகுனி கண்டுகொண்டான், அது ஒரு மிகப்பெரிய கதாயுதம். அவன் கண்ட எடைமிக்க கதைகளைவிட மும்மடங்கு பெரியது. "கதை போலிருக்கிறது" என்றார் மாதங்கர். "கதையா? இந்த அளவிலா? அந்த மனிதன் என்ன இருபதடி உயரமா இருந்தான்?" என்றார் வைராடர்.

"அமைச்சரே அது கதாயுதமேதான்" என்றான் சகுனி. "அதைத் தூக்கி மேலே வைக்கச் சொல்லுங்கள்!" அவர்கள் அதைத்தூக்கி மேலே போட்டபோது மண்ணை அறைந்த ஒலியே அதன் எடையைக் காட்டியது. "இதென்ன, கந்தர்வர்கள் சுற்றிய கதையா?" என்றார் மாதங்கர். "அனேகமாக இது ஏதோ சிலையின் கையில் இருந்திருக்கிறது. அனுமனின் சிலையாக இருக்கலாம்" என்றார் வைராடர். "அச்சிலை இருபதடி உயரமாவது இருந்திருக்கும்."

குனிந்து அந்த கதாயுதத்தைப் பார்த்த சகுனி "இதன்மேல் எழுத்துக்கள் ஏதேனும் உள்ளனவா என்று பாருங்கள் வைராடரே" என்றான். "இது எங்கிருந்தது, எப்படி இங்கே வந்தது என்று பார்க்கவேண்டும்." வைராடர் ஆணையிட வினைவலர் நீர்கொண்டு அதைக் கழுவினர். அவர்கள் நார்போட்டு தேய்த்து நீரூற்ற அதன் நுண்ணிய சித்திரச்செதுக்குகள் மீதிருந்த கரிய மண் கரைந்து வழிந்தது. "துருப்பிடிக்கவேயில்லை.... பழைமையான உருக்கிரும்பு" என்றார் வைராடர்.

யானைக்குட்டி ஒன்று கால் ஒடுக்கி துதிக்கை நீட்டி கிடப்பதுபோல அது கரிய பளபளப்புடன் கிடந்தது. அதன் செதுக்குவேலைப்பாடுகள் அனைத்துமே யானைச்சித்திரங்கள் என்று சகுனி கண்டான். யானைகளை மணிகளாகக் கொண்ட மாலைபோல. "எழுத்துக்களேதும் இல்லை" என்றார் வைராடர். மாதங்கர் ஒருவர் அருகே வந்து "அமைச்சரே நேரமாகிறது..."என்றார். வைராடர் "ஆம், நமக்கு பணிகள் இருக்கின்றன. பிதாமகர் எங்கிருக்கிறார்?" என்றார்.

"அவர் வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள். இன்னும் மூன்றுநாழிகையில் வந்துவிடுவார். நாம் இன்னும் குழியைத் தோண்டி முடிக்கவில்லை. சிதையடுக்கவே நான்குநாழிகைநேரம் தேவை. இருட்டுவதற்குள் எரியூட்டவேண்டுமென்று நூல்நெறி." வைராடர் "ஆம் பணிகள் நடக்கட்டும்" என்றபின் திரும்பி "தாங்கள் இங்கே இருக்கிறீர்கள் அல்லவா இளவரசே?" என்றார். "இல்லை. என்னால் இதைப்பார்க்க முடியாது" என்றான் சகுனி.

அவன் திரும்பி தன் அரண்மனைக்குச் செல்லத்தான் எண்ணினான். ரதத்தில் ஏறியபின்னரே தன் அகம் நிலையழிந்திருப்பதை உணர்ந்தான். சிலகணங்கள் கண்மூடி நின்றுவிட்டு, "அரண்மனைக்கு... புஷ்பகோஷ்டத்துக்கு" என்றான். காற்று அவன் குழலையும் ஆடையையும் பறக்கச்செய்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு காற்றில் தன் அகத்தின் எடையை கரைக்கமுடியுமா என்று பார்த்தான். ஏன் நான் நிலைகொள்ளாமலிருக்கிறேன்? நான் காத்திருக்கும் ஒன்று நிகழப்போகிறது. நான் விரும்புவதெல்லாம் விரும்பியவண்ணம் நடக்கின்றன. ஆனால்...

ஆனால், நான் கண்ட அந்தச் சதுரங்க ஆட்டக்காரனை நினைவுகூர்ந்தால் அவன் விழிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றன. அவை நரியின் விழிகள். என் எதிரே ஆடிக்கொண்டிருந்தது ஒரு நரி என்ற மனமயக்கே என்னிடம் உள்ளது. ஆடும்போது அது உவகையை அளித்தது. விழித்ததும் அச்சத்தை அளிக்கிறது. அச்சமா? எனக்கா? எதன்மேல்? அரசன் அஞ்சுவது ஒன்றையே, விதியை. அத்தனை அரசுசூழ்நர்களும் ஆடிக்கொண்டிருப்பது விதியுடன் மட்டுமே.

புஷ்பகோஷ்டத்தில் திருதராஷ்டிரனின் சேவகன் வணங்கி அவனை வரவேற்றான். "அரசர் என்ன செய்கிறார்?" என்றான் சகுனி. "சூதரான தீர்க்கசியாமருடன் இருக்கிறார்" என்றான் அவன். சகுனிக்கு அச்சொல்லே கல் ஒன்று நெஞ்சில் விழுந்தது போலிருந்தது. அவன் அங்கே வரும்போது அவரும் வந்திருப்பதில் ஏதோ தொடர்பிருப்பதுபோல. புன்னகையுடன் என்ன இப்படி அஞ்சிக்கொண்டிருக்கிறேன் என எண்ணிக்கொண்டான். தீர்க்கசியாமர் ஒவ்வொருநாளும் அரண்மனைக்கு வந்து திருதராஷ்டிரனுக்கு கல்விபயிற்றி வருபவர்...

சகுனி உள்ளே சென்றபோது தீர்க்கசியாமர் ஏதோ பாடி முடித்திருந்தார். சகுனியின் காலடிகளைக்கொண்டே அவனை உணர்ந்துகொண்ட திருதராஷ்டிரன் புன்னகையுடன் திரும்பி "காந்தாரரே வருக... தங்களைப்பற்றித்தான் நான் காலையிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன்" என்றான். தீர்க்கசியாமர் முகத்தை வான் நோக்கித் திருப்பிவைத்து புன்னகையுடன் எதையோ கேட்பவர் போலிருந்தார். அவர் முகம் மலர்ந்து களிகொண்டிருப்பதைக் கண்டு சகுனி சற்று வியந்துகொண்டான். "தங்கள் கல்வியை குலைக்க விரும்பவில்லை அரசே" என்றான் சகுனி.

"கல்வியா? நான் தீர்க்கசியாமருடன் எப்போதும் விளையாடிக்கொண்டல்லவா இருக்கிறேன்?" என்றான் திருதராஷ்டிரன். "ஆனால் இன்று நானறிந்த அனைத்தும் இவர் சொன்னவைதான். குருநாதரென நான் பணியவேண்டிய காலடிகள் பிதாமகருடையதும் இவருடையதும்தான்." தீர்க்கசியாமர் திருதராஷ்டிரன் சொன்னதையும் கேட்டதாகத் தெரியவில்லை. பேரிசை ஒன்றில் கரைந்து நிற்கும் யட்சன் போல அமர்ந்திருந்தார். அந்த நிலைகொண்ட பெருங்களிப்பு சகுனியை திகைக்கச் செய்தது. எங்கே இருக்கிறார் அவர்?

"தீர்க்கசியாமர் சற்றுமுன் தட்சிணத்து செவ்வழிப்பண்ணை வாசித்தார். வாசிப்பின் வழியாக அங்கே சென்றுவிட்டார். பண்களை சமைத்து மண்ணுக்கு அனுப்பும் முடிவிலிக்கு. அவராகவே இறங்கிவந்தால்தான்" என்றான் திருதராஷ்டிரன் சிரித்துக்கொண்டே. "அருள்பெற்ற மானுடன்" என்றான் சகுனி. "ஆம்... இன்று இந்த அஸ்தினபுரியில் துயரென்பதையே அறியாதவர் இவர் மட்டும்தான்." சகுனி மீண்டும் தீர்க்கசியாமரைப் பார்த்தபின் பார்வையை திருப்பிக்கொண்டான்.

"நேற்று என் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு வந்து நின்று பிளிறியது" என்றான் திருதராஷ்டிரன். "அதற்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. வயதானது. அதை நான் கேட்டதுமில்லை." சகுனி "முதுமையில் மானுடர் நிலையழிவதுபோல யானைகளுக்கும் நிகழும்போலும்" என்றான். "இருக்கலாம்... அது அப்போதே இறந்துவிட்டது என்றார்கள். காலையில் அதன் உடலை அங்கிருந்து வாள்போழ்ந்து கொண்டுசென்றார்கள் என்று அறிந்தேன்."

சகுனி மெல்லிய ஐயமொன்றை அடைந்தான். அதை பொன்னகையை ஊதிப்பொருத்தும் பொற்கொல்லர்கள் போல சொற்களாக ஆக்கினான். "நேற்று தங்களுடன் அந்தச்சூதப்பெண் இருந்தாளா அரசே?" என்றான். திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து "இல்லை... நல்லவேளை. மூத்தஅரசி காந்தாரிதான் இருந்தாள்..." என்றான். சகுனி அதற்குமேல் கேட்கவிரும்பவில்லை. அவன் எண்ணிய ஒன்று உறுதிசெய்யப்பட்டதுபோல அமைதியாக இருந்தான். "காந்தாரத்து அரசியின் சித்தம் நிலையழிந்திருக்கிறது சௌபாலரே. அவள் அச்சமூட்டும் கனவுகளில் வாழ்கிறாள். அங்கே பெருநாகங்களும் யானைகளும் நிறைந்துள்ளன. நேற்று கேட்ட யானையின் பிளிறலைக்கூட அவள் தன் கனவுக்குள் ஒலிப்பதாகவே பொருள்கொண்டாள்" என்றான்.

யானையின் துதிக்கை சீறுவதுபோல பெருமூச்சுவிட்டபடி தீர்க்கசியாமர் அசைந்து அமர்ந்தார். "அலைகள்! முடிவேயற்றவை" என்றபின் குரல்கேட்ட திசைநோக்கி புன்னகைபுரிந்தார். திருதராஷ்டிரன் "குருநாதரே, நேற்றிரவு ஒரு பெருங்களிறு இவ்வரண்மனை முற்றத்தில் அலறியபடி உயிர்துறந்தது... அதன் நிகழ்குறி என்ன என்று சொல்லமுடியுமா?" என்றான். தீர்க்கசியாமர் புன்னகையுடன் திரும்பி "களிறுகளும் நாகங்களும் மட்டுமே நிலத்தின் அதிர்வை முதலில் அறிகின்றன..." என்றார். சகுனி திரும்பிப்பார்த்தான். அதை உணர்ந்ததுபோல திருதராஷ்டிரன் புன்னகையுடன் "அவரது பேச்சு எப்போதும் அப்படித்தான்... அவர் வேறேதோ வழியில்தான் நம்முடன் பேசுவார்" என்றான்.

"குருநாதரே, ஒருகளிறு இறப்பது எதையாவது சுட்டுகிறதா?" என்றான் திருதராஷ்டிரன் மீண்டும். தீர்க்கசியாமர் சிரித்து "பூக்கள் தும்பிகளால் சமன்செய்யப்படுகின்றன" என்றார். ஒரேகணத்தில் சகுனி அவர் சொல்வதைப்புரிந்துகொண்டு அகம் அதிர்ந்தான். மெல்லியகுரலில் "யார் வரவிருக்கிறார்கள்?" என்றான். "யானைவண்டு சிக்கிக்கொண்டால் சிலந்தியே தன் வலையை அறுத்துவிடும்" என்றார் தீர்க்கசியாமர். மீண்டும் தன் யாழை எடுத்து அதன் நரம்புகளைச் சுண்டியபடி முகத்தை வான் நோக்கித் திருப்பி புன்னகைபுரிந்தார்.

சகுனி அவரை மெல்லத் தொட்டு "தீர்க்கசியாமரே, நான் கேட்கும் இறுதி வினா இது... நேரடியாகவே கேட்கிறேன். அவனுடைய வருகையின் முன்னறிவிப்பு என்ன?" என்றான். தீர்க்கசியாமர் திரும்பி "யார் வருகிறார்கள்?" என்றார். "நீங்கள் இப்போது சொன்னீர்களே?" என்றான் சகுனி. "நானா?" சகுனி தன்னை அடக்கிக்கொண்டு "ஆம்" என்றான். "நானா சொன்னேன்?" என்றார் தீர்க்கசியாமர் வியப்புடன். "ஆம்..." என்ற சகுனி தலையை அசைத்து "சரி அதைவிடுங்கள். இப்போது இந்த யாழை மீட்டி எதையாவது பாடுங்கள்" என்றான்.

"இந்த யாழ் இப்போது பாடாமல்தானே இருக்கிறது?" என்றார் தீர்க்கசியாமர். "நீங்கள் அதை வாசியுங்கள்..." சகுனி தன்னுள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு சொன்னான். "நான் வாசிப்பதற்கு இந்த நரம்புகளில் பாடல் இருக்கவேண்டும்... கையை வைத்து அதை எடுப்பேன்..." என்றார் தீர்க்கசியாமர். "ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்." சகுனி தன் பரபரப்பை அடக்கிக்கொண்டான். ஆம், அதைத்தான் அவரது வாய் சொல்கிறது. அதை குலைத்துவிடக்கூடாது. "சொர்க்கத்துக்கு இட்டுச்செல்லும் நாவாய் அது... மீண்டும் ஆலயத்தை அடைந்தபின் மூடிக்கொள்ளும்..." என்றார் தீர்க்கசியாமர்.

அவர் விரல்கள் யாழில் ஓடத்தொடங்கின. "ஆ,.. இது கலிங்கப் பண்!" என்றான் திருதராஷ்டிரன். "நீருக்குள் இருந்து யானை எழுந்து வருவதுபோல வருகிறது குருநாதரே." யாழ் அதிரத்தொடங்கியதும் திருதராஷ்டிரன் கைகளைக்கூப்பியபடி தலையை மேலே தூக்கி பரவசம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். இசை பாறைகள் வழியாக இழியும் மலையருவி போல பொழிந்தபடியே இருந்தது. ஒருநாழிகை கடந்ததும் சகுனி எழுந்துகொண்டான். "நான் வருகிறேன்" என மெல்லச் சொல்லி தலைவணங்கி இறுதியாக தீர்க்கசியாமரை ஒருமுறை நோக்கிவிட்டு வெளியே சென்றான்.

ரதத்தில் ஏறிக்கொண்டு "மாளிகை" என்றான். அகம் 'அபத்தம்... மூடத்தனம்’ என்னும் சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அச்சம் தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறது. இன்னதென்றறியாத அச்சம் தன்னிலையையே அழித்துவிடுகிறது. என்னவானேன் நான்? சகுனி என இருந்தது எதுவோ அது சிதறிவிட்டிருக்கிறது... இந்த அற்பமாயங்களை நோக்கி தன் சிந்தை திரும்பமுடியும் என்று சிலமாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் அவன் சிரித்திருப்பான்.

பீதாசலத்தின் மலைப்பாறைகளுக்கு நடுவே நாகசூதன் சொன்னவற்றை சகுனி நினைவுகூர்ந்தான். பொருளற்ற ஒரு பழங்கதை. ஆனால் ஒவ்வொரு முறை அகம் விழிப்பை இழந்து கனவில் மூழ்கும்போதும் அந்தக்கதை நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. பொருளற்றவைதான் அதிகம் சிந்திக்கச் செய்கின்றன. பொருள் என்பதுதான் என்ன? நாமறிந்தவைதான் பொருள் கொண்டவை. அறியாதவற்றைநோக்கித் திறப்பதெல்லாமே பொருளற்றவையாகத் தெரிகின்றன. திறக்கும் கதவு...

ஒருகணத்தில் அவன் திகைத்தவன்போல ரதமேடையில் எழுந்து நின்றுவிட்டான். தீர்க்கசியாமர் சொன்ன சொற்களுக்கு என்னபொருள்? முன்னரே வந்திருப்பது வரப்போகிறவனின் ஆலயத்தின் கதவு மட்டும் அல்ல. அவனை சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்லும் நாவாயும்கூட. சொர்க்கத்துக்கு. அப்படியென்றால் அவனைக்கொல்லப்போகும் படைக்கலமா அது? அத்தனைபெரிய கதையை ஏந்தும் கரங்கள் இனிமேல் பிறந்துவருமா?

பித்து, வெறும் பித்து என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தலையை ஆட்டினான் சகுனி. அர்த்தமேயற்ற நினைப்புகள். அச்சம்கொண்ட ஆற்றலற்றவர்கள் தேடும் புகலிடங்கள். ஆனால் அவன் சாரதியிடம் "யானைமயானத்துக்குப் போ!" என ஆணையிட்டான். ரதம் திரும்பி வடக்குவாயில் நோக்கிச்செல்லும்போது சலிப்புடனும் குழப்பத்துடனும் ரதபீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டான். வாழ்க்கையில் முதன்மையானது என என்றென்றும் அவன் நினைவுகூரக்கூடிய தருணங்களில் எல்லாம் அவன் அகநிலையழிதலையே உணர்ந்திருக்கிறான். உவகையின் நிறைவை அல்ல. ஒருவேளை அனைவருக்கும் அப்படித்தானா?

வடக்குவாயில்முன்னால் உள்ள யானைக்கொட்டில் நடுவே இருந்த களமுற்றத்தில் வீரர்கள் கூடி எதையோ செய்துகொண்டிருப்பதை ரதம் சற்று கடந்து சென்ற பின்னரே அவன் உணர்ந்தான். ரதத்தை நிறுத்தி அப்பக்கமாகத் திரும்பச் சொன்னான். இறங்கியபோதுதான் அவர்கள் செய்துகொண்டிருப்பதென்ன என்று உணர்ந்தான். அங்கே அனுமனின் ஆலயத்திற்கு முன்னால் இருந்த உயரமான கல்பீடத்தில் அந்த கதாயுதத்தை தூக்கிவைத்து நிறுவிக்கொண்டிருந்தனர்.

அவனைநோக்கிவந்த காவலர்தலைவன் தலை வணங்கி "இங்கே இதை நிறுவலாமென்று பீஷ்மபிதாமகர் சொன்னார் காந்தாரரே. தற்போது இந்த பீடத்தில் அமைக்கிறோம். நாளையே கல்சிற்பிகளைக்கொண்டு முறையான பீடம் அமைக்கப்படும்" என்றான். சகுனி குனிந்து சிறிய ஆலயத்திற்குள் மலையைத் தூக்கியபடி வால் சுழன்றெழ நின்றிருந்த அனுமனின் செந்தூரம்பூசப்பட்ட சிறிய சிலையைப் பார்த்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டான்.

மீண்டும் ரதத்தில் ஏறி "மாளிகைக்குச் செல்!" என ஆணையிட்டுவிட்டு ரதபீடத்தில் அமர்ந்துகொண்டான். ரதம் வடக்குச்சாலையை அணுகும்போது கடைசியாகத் திரும்பி அந்த கதாயுதத்தைப் பார்த்தான். அங்கிருந்து பார்க்கையில் அது குழந்தை விளையாடிவிட்டுச்சென்ற சிறிய விளையாட்டுச்செப்பு போலிருந்தது.

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 4 ]

சதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள். பாண்டுவின் முடிவை குந்தி அவளிடம் சொன்னபோது தலைவணங்கி "அரசரை நாமும் தொடர்வோம்" என்று அவள் சொன்னாலும்கூட கண்களில் தெரிந்த சினத்தை குந்தி கண்டாள். புன்னகையுடன் "இங்கே நாம் கண்களால் சூழப்பட்டிருக்கிறோம்" என்று மட்டும் குந்தி சுருக்கமாகச் சொன்னாள். ஆனால் காட்டுக்குள் வந்த சிலநாட்களிலேயே அவள் அங்கிருந்த வாழ்க்கையை விரும்பவும் அதில் திளைக்கவும் தொடங்கிவிட்டிருந்தாள். அவளுக்குள் இருந்த யாதவப்பெண் வெளிவந்துவிட்டாள் என குந்தி நினைத்துக்கொண்டாள்.

ஆனால் தனக்குள் இருந்து அந்த யாதவப்பெண் வெளிவரவேயில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள். கிளம்பும் வரைதான் காடு மெல்லிய ஆர்வத்தை அளித்தது. கங்கையில் படகை நிறுத்திவிட்டு இறங்கி சேவகர்களுக்கு விடைகொடுத்து காட்டுக்குள் நடக்கத்தொடங்கியதுமே சோர்வும் சலிப்பும்தான் வந்து மூடிக்கொண்டன. திரும்பத்திரும்ப மரங்கள், செடிகள், நீரோடைகள் என காட்டைப்பற்றி சலிப்புடன் எண்ணிக்கொண்டு, இதென்ன மூடத்தனமான எண்ணம் என அவளே வியந்துகொண்டாள்.

எட்டுநாட்கள் பயணத்தில் நாகசதம் என்னும் அடர்காட்டை அடைந்தனர். அங்கே ஓடிய நாகபதம் என்னும் சிற்றாற்றை ஒட்டி பன்னிரண்டு ரிஷிகளின் சிறுகுடில்கள் இருந்தன. அகோரயோகமரபைச்சேர்ந்த அவர்கள் ஆடையணியா நோன்புகொண்டவர்கள். ஒருவேளை உணவுண்டு, மொழி நீத்து, உடற்தூய்மை பேணாது பெருந்தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் குடில்களுக்குமேல் காட்டுக்கொடிகளும் மரங்களின் விழுதுகளும் கவ்விப்படர்ந்து சுழன்று ஏறியிருந்தன. நாகங்கள் ஊர்ந்தேறிச்சென்றன. சருகுக்குவியல்களுக்குள் புதைந்த கிழங்குகள் என மண்மூடிய உடல்களுடன் அமர்ந்திருந்த அவர்களின் தலைவரான துர்விநீதர் தன் முன் பணிந்த பாண்டுவை சிறுசெவ்விழி திறந்து நோக்கி "யாது நீ வேண்டுவது?" என்றார்.

"அய்யனே, உள்ளத்தை நிறைக்கும் பெருந்துயரால் அலைக்கழிக்கப்படுகிறேன். கனிந்தருளல் வேண்டும்" என்றான் பாண்டு. "துயரமென்பது அறியாமையின் விளைவு. அறியாமையை வெல்வது அறிவு. அவ்வறிவே மேலும் அறிவதற்கான தடையாக ஆகி புதிய அறியாமைக்கு காவல் நிற்கிறது. ஆகவே அறிதலென்பது அறிந்தவற்றிலிருந்து விடுபட்டு முன்செல்வதே. ஒவ்வொரு அறிவும் பழைய அறிவுடன் போர்புரிகிறது. புதிய அறிவில் பழைய அறிவு கழித்ததுபோகவே மனிதனை வந்தடைகின்றது. எனவே அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்" துர்விநீதர் சொன்னார்.

"அறிந்தவற்றில் இருந்தும் முழுவிடுதலையை நாடுவதென்றால் இங்கே எம்முடன் இரு" என்றார் துர்விநீதர். "உடலையும் பின் உள்ளத்தையும் பின் ஆன்மாவையும் கட்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இங்கே அறுக்கலாம். எது எஞ்சுகிறதோ அதுவே என்றுமிருப்பதாக ஆகும். மண்ணில் மட்கிய தடியில் வைரம் எஞ்சுவதுபோல. நெருப்பில் எரிந்த சாம்பலில் பொன் மட்டும் புத்தொளியுடன் மிளிர்வதுபோல."

பாண்டு "அய்யனே, நான் என் இல்லாள் இருவருடனும் இங்கு வந்திருக்கிறேன். நாகமுறையின் கடும்விஷப்பாதை எனக்கு உவப்பதல்ல" என்றான். "அவ்வாறென்றால் இவ்வழி செல். அங்கே சைத்ரரதம் என்ற பூங்கா உள்ளது. அது குபேரனுக்குரியதென்பார்கள். எங்களிடம் வரும் ஒவ்வொருவரையும் நாங்கள் அங்கே செல்லச்சொல்வோம். அங்கிருந்து அவன் மீள்வானென்றால்தான் இங்கே இருக்கச்சொல்வோம்" என்று துர்விநீதர் வாழ்த்தினார்.

மேலும் பன்னிருநாட்கள் காட்டுப்பாதையில் பயணம்செய்து இரு மலைகளுக்கு நடுவே சென்ற வழியினூடாக அவர்கள் சைத்ரரதத்தை அடைந்தனர். வெண்ணிறச் சுண்ணப்பாறைகள் வெடித்து சிதறிப்பரவிக்கிடந்த அந்தச் சமவெளியை அவர்கள் காலைவெயில் எழத்தொடங்கியபோதுதான் சென்றடைந்தனர். அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துவந்த நாகசதத்தின் சீடன் வணங்கி விடைபெற்றான். சுண்ணப்பாறைகளுக்குமேல் பசும்செடிக்குவைகள் செறிந்து மேகத்தில் முளைத்து வானில்தொங்குவதுபோலத் தோன்றிய அந்தச் சோலையைக் கண்டு குந்தி "இங்கு தங்குவோம்... இவ்விடமே சிறந்தது" என்றாள்.

வெண்ணிறப்பாறைகள் நடுவே படிகவளையங்களை அடுக்கியதுபோல தெள்ளத்தெளிந்து சென்ற நீரோடையை அள்ளிக்குடித்த பாண்டு "இத்தனை அழகுள்ள ஓடையை கண்டதேயில்லை... ஒளியே நீராக ஓடுவதுபோலிருக்கிறது" என்று மகிழ்ந்து சொன்னான். "இன்னமும் விடியவில்லை என்றாலும் இப்பகுதியின் வெண்பாறைகளே ஒளியை தேக்கிவைத்துள்ளன."

குனிந்து நீரள்ளி அருந்திவிட்டு கையிலொரு கல்லை எடுத்து திரும்பிய மாத்ரி "இந்தக்கல் படிகமென்று தோன்றுகிறது" என்றாள். அதை கையில் வாங்கிய குந்தி திகைத்து திருப்பித்திருப்பி நோக்கினாள். மாத்ரி குனிந்து இன்னொரு கல்லை எடுத்து "இங்குள்ள அனைத்துக்கற்களும் படிகக்கற்கள்தான்" என்றாள். "ஏன் பார்க்கிறாய்? என்ன அது?" என கைநீட்டி வாங்கிய பாண்டு "இது என்ன? வைரமா?" என்றான். "ஆம்" என்றாள் குந்தி.

திகைத்து அதை நீரிலேயே வீசிவிட்டு "வைரமா?" என்றான். மாத்ரி கைநிறைய கற்களை அள்ளி "எல்லா கற்களும் ஒளிவீசுகின்றன" என்றாள். "கீழே போடு... அனைத்தையும் கீழே போடு. ஒரு சிறு கல்லைக்கூட நீ எடுத்துக்கொள்ளலாகாது" என்று பாண்டு கூவினான். "இந்த ஆற்றின் கூழாங்கற்களனைத்துமே வைரங்கள்..." என்றாள் குந்தி. "பெரும் நிலப்பிளவால் உருவான இடம் இது. மண்ணுக்கடியில் துயின்ற வைரங்களனைத்தும் வெளியே வந்துவிட்டன." பாண்டு "நாம் இக்கணமே இங்கிருந்து கிளம்புவோம். இங்கே இனி இருக்கலாகாது...வாருங்கள்" என்று அவர்கள் கைகளைப்பற்றி இழுத்துக்கொண்டு கிளம்பினான்.

பாறைகளில் தொற்றி ஏறி மரங்களைப்பற்றி மேலே சென்று திரும்பிப்பார்த்தனர். "மண்மகளின் புன்னகை போலிருக்கிறது" என்று குந்தி அந்த வைரப்படுகையைப்பார்த்துச் சொன்னாள். "ஆம், நம்மைப்பார்த்து நகைக்கிறாள். அங்கே நாம் வாழமுடியாது. அத்தனை செல்வத்தின் மேல் மானுட மனம் ஒரு கணம்கூட நிறைவை அறியமுடியாது" என்றான் பாண்டு. "அங்கே வந்தவர்கள் அனைவரும் பித்தாகி இறந்திருப்பார்கள்." குந்தி புன்னகைத்து "ஆம், உண்மை. அந்த நதிப்படுகை முழுக்க மண்டையோடுகளையும் எலும்புகளையும் கண்டேன்" என்றாள். பாண்டு திகைப்புடன் சொல்லிழந்து அவளை நோக்கினான்.

எட்டுநாட்களுக்குப்பின் அவர்கள் ஒரு இளம்முனிவரைக் கண்டனர். திரிதன் என்ற பெயருள்ள அவன் சதசிருங்கத்தில் தவம்செய்துவந்த கௌதமமுனிவரின் மூன்றாவது மைந்தன். அவர்களை வழிகாட்டி கந்தமாதன மலைக்கு அழைத்துச்சென்றான். மண்ணைக்குவித்ததுபோல எழுந்த அந்த மலைக்குமேல் வெண்முகில் பட்டுத்தலைப்பாகை போல நின்றுகொண்டிருப்பதை தொலைவிலேயே கண்டார்கள். "விண்ணின் பூதங்களால் காக்கப்படும் மலை அது. அது இடியோசையுடன் நகைக்கும். பெருஞ்சினத்துடன் உறுமி நெருப்புமிழும். அதனருகே எவரும் செல்லமுடியாது. இவ்வழிவரை வரும் சாமானியர் கந்தமாதன மலையின் பேரோசை கேட்டு அஞ்சி நின்றுவிடுவார்கள்" என்றான் திரிதன்.

நெருங்கும்போதுதான் அந்தமலை எவ்வளவு உயரமானது என்று குந்தி கண்டாள். தூபக்குவை போன்ற அதன் உச்சியில் சிவந்த கனல் இருப்பது மேகங்களுக்குள் தெரிந்தது. இளங்காலையின் ஒளியில் வெண்பஞ்சுவளையம்போலத் தெரிந்த மேகக்குவைக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. "அங்கே இருப்பதென்ன என்று எவருக்கும் தெரியாது. அது அக்னிதேவன் விண்வழியாக வந்திறங்கி இளைப்பாறிச்செல்லும் இடம் என்று மூத்தார் சொன்னார்கள்" என்றான் திரிதன்.

வெயிலெழுந்தபோது வெண்முகில்வளையம் செந்நிறத்தால் பொலிந்தது. பின்பு மெல்ல அது எரிந்து இளமஞ்சள் நிறம் கொண்டு பொற்கிரீடம்போல ஒளிவிட்டது. "இங்கே செல்வதற்கு முன்னோர் வகுத்த வழி உள்ளது. ஒரு பாதம் அளவுக்கு வழிதவறினால்கூட பாதாள நெருப்பெரியும் குழிகளைச் சென்றடைவோம். அவை நேரடியாகவே முதலாழமான அதலத்தை நோக்கித் திறப்பவை" என்றான் திரிதன்.

ஊன்குவைகள் அழுகியதுபோன்ற துர்நாற்றம் எழத்தொடங்கியது. குந்தியும் மாத்ரியும் ஆடையால் மூக்கை மூடிக்கொண்டார்கள். "இந்த நாற்றத்தால்தான் இதற்கு கந்தமாதன மலை என்று பெயர். பூமாதேவியின் சீழ் நொதித்துக் கொப்பளிக்கும் புண்கள் பல இங்கே உள்ளன" திரிதன் சொன்னான். "என் பாதங்களைத் தொடர்ந்து வாருங்கள்... வழிதவறவேண்டாம்." இருபக்கமும் குழிகளில் கொதிக்கும் மஞ்சள்குழம்புகள் குமிழியிட்டு வெடித்துச் சிதர் தெறித்தன. வெண்புகையின் அழுகிய நாற்றம் நாசியை எரித்தது.

அன்றுமாலை அவர்கள் கந்தமாதன மலையைத் தாண்டிச்சென்றனர். இருளில் பின்னால் மலை உறுமும் ஒலிகேட்டு குந்தி திரும்பிப்பார்த்தாள். வானில் செந்நெருப்புக் குவை ஒன்று கொப்பளித்தெழுந்து மறைந்தது. மீண்டும் அந்த ஒலி எழுந்தபோது அவர்கள் நடந்து சென்ற பாதை சற்று அதிர்ந்ததுபோலிருந்தது. அவளருகே வலப்பக்கம் இருந்த பெரும்பாறை சற்றே அசைந்து விலகியதாக மனமயக்கு ஏற்பட்டது.

"இதற்கப்பாலிருக்கிறது சதசிருங்கம்.... நான்குவேதங்களில் மூன்றாவதான சாமம் இங்குதான் பிறந்தது என்பார்கள் ரிஷிகள். தவசீலரன்றி பிறரது காலடிகள் படாத மண் இது. நூறு பனிமுடிமலைகள் சூழ்ந்து காக்கும் குளிர்ந்த பெருஞ்சோலை இது. இங்கே இந்திரத்யும்னம் என்னும் பெருநீர்தடாகம் உள்ளது. பூமியன்னையின் அருள்விழி அது என்று வேதவியாசர் பாடியிருக்கிறார். அதைச்சுற்றி அறுநூறு ரிஷிகுலங்கள் வாழ்கின்றன. அதில் ஹம்சகூடம் என்னும் சிறுசோலையில் என் குரு கௌதமர் தன் மாணவர்களுடன் வசிக்கிறார். அங்கே நீங்கள் அவரது மாணவர்களாக அடைக்கலம் கோரலாம்."

"அவர் எங்களுக்கு அடைக்கலம் அளிக்காவிட்டால் என்ன செய்வோம்?" என்றான் பாண்டு. "நீங்கள் சைத்ரரதத்தை கடந்துவந்தீர்களென்பதே உங்களுக்குரிய சான்றாகும்" என்று திரிதன் புன்னகைசெய்தான். "வருக... சதசிருங்கத்தின் கீழே பிறவித்துயர் இல்லை." பாண்டு புன்னகைபுரிந்து "துயர் இல்லாத வாழ்க்கையை எத்தனை அரிதாக வைத்திருக்கின்றனர் தெய்வங்கள்" என்றான். "ஆம் அரசே! ஆனால் அந்தத் தடைகளெல்லாம் எவருக்கும் வெளியே இல்லை" என்றான் திரிதன்.

இரவெல்லாம் மெல்லிய நிலவொளியில் நடந்து அதிகாலையின் மணிவெளிச்சத்தில் அவர்கள் சதசிருங்கத்தை அடைந்தனர். வடக்குவானில் வெண்மேகங்கள் செறிந்திருப்பதாகவே குந்தி முதலில் எண்ணினாள். பின்னர்தான் மேகக்குவைகள் அப்படி சீராக ஒரே வடிவில் அசைவிழந்து நிற்பதன் வியப்பு அவளுக்குள் எழுந்தது. அக்கணமே அவை பனிமலைமுடிகள் என்று கண்டுகொண்டாள். வியந்து நெஞ்சில் கையை வைத்து நின்ற அவள் தோளைப்பிடித்து மாத்ரி "பனிமலைகளா அவை?" என்றாள். "ஆம், நூறுமலைமுடிகள்" என்றாள் குந்தி.

புடைத்த வெண்ணிறப் படகுப்பாய்கள் போல அவை காற்றில் அசைவதாக அவளுக்குப்பட்டது. மலைகளின் மடிப்புகளில் வெண்பனி நெய்போல உருகி வழிந்திறங்கி நின்றது. அடிவாரத்தின் மரங்களின் பசுமை வளைந்து வந்து நீள்வட்டமாக நீலநீர் நிறைந்து அலைநெளியக்கிடந்த இந்திரத்யும்னத்தை அடைந்தன. ஏரியைச்சுற்றியிருந்த மரங்களனைத்துமே மிக உயர்ந்து செங்குத்தான பச்சைக்கோபுரங்கள்போலத் தெரிந்தன. அந்தக்காலைவேளையில் சோலைகளுக்குள் வேதகோஷம் கேட்டுக்கொண்டிருந்தது. வேள்விப்புகைச்சுருள்கள் மெல்லிய மேகப்பிசிறாக எழுந்து பச்சைத்தழைப்புக்குமேல் நீரில் விழுந்த பால்துளிகள் போலப்பிரிந்து கரைந்தன.

ஹம்ஸகூடத்தில் அவர்களுக்கான குடிலை அவர்களே மரப்பட்டைகளாலும் தழைகளாலும் கட்டிக்கொண்டார்கள். கனத்த தேவதாரு மரக்கட்டைகளை அறைந்து நட்டு அவற்றின்மேல் தரையில் இருந்து நான்கடி உயரத்தில் தரைப்பலகைகள் பரப்பி மேலே கூரையிட்டு அமைக்கப்பட்ட குடில் இரு அறைகள் கொண்டதாக இருந்தது. படுப்பதற்காக மரப்பட்டைகளாலான மஞ்சத்தை பாண்டுவே அமைத்தான். அன்று மாலையில் அவர்களின் பணிமுடிந்து குடிலில் குடியேறியபோது அனகை காட்டுப்பெண்ணாக மாறிவிட்டிருந்தாள்.

தனியாக இருக்கும்போது குந்தி அவளிடம் "நான் கொண்டுவரச்சொன்னவற்றை எடு" என்றாள். அனகை தன் தோளில் சுமந்துகொண்டுவந்த ஈச்சைநார்ப்பெட்டிக்குள் குந்தியின் அரசகுலத்து ஆடை ஒன்றும் முத்திரைமோதிரமும் ஓலைகளும் எழுத்தாணிகளும் இருந்தன. ஒரு மரச்சம்புடம் நிறைய பொன்நகைகளும் வைரங்களும் இருந்தன. சிறிய ஓலைக்கூடை ஒன்றுக்குள் சிறிய கிருஷ்ணப்பருந்துக்குஞ்சுகள் இரண்டு இருந்தன. கண்விழிக்காத குஞ்சுகளாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய அவை வளர்ச்சிபெற்றிருந்தன.

கோதுமை போன்ற அலகுகளும் பயறுமணிக் கண்களும் பட்டுநூல்கண்டுபோன்ற மென் சிறகுகளும் கொண்ட அவற்றை கையிலெடுத்த குந்தி "இன்று நமக்கு உறவென எஞ்சியவை இவை" என்றாள். "இவளை பிரணிதை என்றும் இவனை பிரணிதன் என்றும் அழைக்கிறேன். இவர்கள் இங்கே வளரட்டும்" என்றாள். அனகை அவற்றை உள்ளங்கையில் எடுத்து "சிறிய மலர் போலிருக்கின்றன. அஸ்தினபுரியின் நினைவு இவற்றுக்குள் எங்கே இருக்கும்?" என்று கேட்டாள். "இவற்றுக்குள் இருக்காது. வானில் இருக்கும். இவற்றின் சிறகுகள் வானை அறிந்ததும் வழியும் தெரியும்" என்றாள் குந்தி.

எட்டு மாதத்தில் இரு பருந்துகளும் அவர்களின் குடிலைவிட்டுக் கிளம்பிச்சென்று காட்டுக்குள் வேட்டையாடி உண்டு மாலையில் திரும்பிவருவதற்குப் பயின்றன. குடிலின் வெளிக்கூரைக்குக் கீழே அவற்றுக்கான இரு கூடுகளை அனகை செய்திருந்தாள். அவற்றை அவர்கள் எங்கே கண்டெடுத்தார்கள் என்று பாண்டுகேட்டபோது சோலையில் கூடு சிதைந்து கிடந்தன என்று அனகை பதில் சொன்னாள்.

பாண்டு எதையும் சிந்திக்கும்நிலையில் இருக்கவில்லை. அவன் சோலைவாழ்க்கையில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தான். குளிரும் இருளும் விலகாத காலையில் எழுந்து ஏரியின் பனியுருகிய நீரில் குளித்து மரவுரியாடை மாற்றி கௌதமரின் புலர்வேள்விக்குச் செல்வான். வேள்விமுடித்து வந்து இளைப்பாறியதும் வெவ்வேறு குருகுலங்களில் நிகழும் தத்துவக்கல்விக்கும் காவியக்கல்விக்கும் சென்று மதியம் மீள்வான். ஓய்வெடுத்தபின் காட்டுக்குள் சென்று காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து திரும்பிவருவான். மாலையில் மீண்டும் நீராடி மாலைவேள்வி.

இரவில் விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு பனிமலைகளின் குளிர்காற்றில் உடல் சிலிர்க்க அமர்ந்திருக்கையில் அவன் சொன்னான் "நான் ஏன் இத்தனைகாலம் இங்கே வராமலிருந்தேன்? ஏன் வாழ்க்கையை இதுவரை முழுமையாகவே இழந்திருந்தேன்?" அருகே அமர்ந்திருந்த குந்தி மாத்ரியை நோக்கி புன்னகை செய்தாள். "என்னுள் ஒவ்வொரு நரம்பும் மெல்லமெல்ல முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு இயல்பாகின்றன. என் கால்கள் மண்ணில் கனத்து ஊன்றுகின்றன" என்றான். பெருமூச்சுடன் "இப்போது ஒன்றை தெளிவாக உணர்கிறேன் பிருதை, சிகிழ்ச்சையே சிலநேரம் நோயாக ஆகும். நீ நோயாளி என நாள்தோறும் நம்மிடம் சொல்கிறான் மருத்துவன். நம் அகம் அதை நம்பிவிட்டதென்றால் நமக்கு மீட்சியே இல்லை" என்றான்.

அஸ்தினபுரியையே பாண்டு மறந்துவிட்டானென்று தோன்றியது. ஒவ்வொருநாளும் அவன் மாறிக்கொண்டிருந்தான். ஊனுணவும் ஆயுதவித்தையும் அரசமுறைமைகளும் எல்லாம் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் விலகின. வேள்விக்கு ஸமித்தாகச் சேர்த்துவந்த பெரிய பலாசமரக்கட்டையை இரும்புக்கோடரியால் பிளந்தபடி முற்றத்தில் நிற்கும் அவனைக் கண்டபோது அவன் ஒரு நாட்டு மன்னன் என்பதை பொருத்திக்கொள்ள அவளாலும் இயலவில்லை. திரும்பி புன்னகை செய்த பாண்டு வியர்வையை வழித்தபடி "என்ன நினைக்கிறாய்?" என்றான். குந்தி புன்னகையுடன் தலையை அசைத்தாள்.

ஒன்பதாவது மாதம் இரு கிருஷ்ணப்பருந்துகளும் சிறகடித்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றன. மூன்று நாட்கள் பறந்து அஸ்தினபுரியில் அவற்றை அவற்றின் அன்னை முட்டையிட்டு பொரித்த அந்தக்கூடிருந்த கிளையில் சென்றமர்ந்து சிறகடித்துக் குரலெழுப்பின. குந்தியின் உளவுச்சேடியாகிய பிரதமை ஒவ்வொருநாளும் அவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவற்றின் கால்களின் மெல்லிய நூல் வளையத்தைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு அவற்றை ஊன் கொடுத்து அருகே அழைத்துப்பிடித்தாள்.

மூன்று நாட்களுக்குப்பின் செய்தியோலையுடன் பிரணிதை திரும்பிவந்தது. அனகை ஓலையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சோலைமரத்தடியில் அமர்ந்திருந்த குந்தியை அணுகி அதை அளித்தாள். அப்பால் ஓடைக்கரையில் தான் பிடுங்கிவந்திருந்த கிழங்குகளை நீரிலிட்டு பாண்டு கழுவிக்கொண்டிருந்தான். அருகே நின்ற மாத்ரி ஏதோ சொல்ல அவன் சிரித்துக்கொண்டு நீரை அள்ளி அவள்மேல் வீசினான். அவள் கைவீசித் தடுத்து பின் சிரித்தபடி குனிந்து அவன் மேல் நீரை அள்ளித் தெளித்தாள். சிறுவனும் சிறுமியும்போல அவர்கள் கெக்கலித்துச் சிரித்தனர்.

குந்தி எழுந்து ஓலையுடன் விலகிச் சென்று அதை விரித்து வாசித்தாள். பின்னர் திரும்பி வந்து அமர்ந்துகொண்டாள். அவள் முகத்தைக் கண்ட அனகை "நற்செய்தியல்ல என நினைக்கிறேன் அரசி" என்றாள்.

"ஆம்" என்றாள் குந்தி. "காந்தாரத்து அரசி கருவுற்றிருக்கிறாள்." அனகை மெல்ல தலையை அசைத்தாள். "அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் அக்கருவின் நாளும் குறியும் கணித்த கணிகரும் நிமித்திகரும் சொன்னதாக பிரதமை எழுதியிருப்பதுதான் என்னை கவலைகொள்ளச்செய்கிறது" என்றாள். அனகை "மகவு பிறக்கும் நேரத்தை அல்லவா கணிப்பார்கள்?" என்றாள்.

"ஆம், ஆனால் இக்குழந்தை கருவுற்றபோதே சில தீக்குறிகளைக் கண்டிருக்கிறார்கள். காந்தார அரசியின் நாளைத் தேர்ந்த மருத்துவர்கள் அக்குழந்தை கருவறை புகுந்த நேரத்தை கணித்திருக்கிறார்கள். அன்று அஸ்தினபுரியின் முதுபெருங்களிறான உபாலன் கட்டுச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து அந்தப்புரத்து முற்றத்தில் நின்று கூவி அலறியபடி உயிர்விட்டிருக்கிறது. அன்றிரவு நகரெங்கும் நரிகளின் ஊளையொலிகளைக் கேட்டதாக நகர்மக்கள் சொன்னார்களாம். அச்சத்தில் உறைந்த முகத்துடன் மேற்குக்கோட்டைக்காவலன் ஒருவனின் உடலை கண்டெடுத்திருக்கிறார்கள்."

"அரசி, மக்களின் அச்சம் கதைகளாகப் பெருகும். அஸ்தினபுரிக்குள் எப்படி நரிகளின் குரல்கள் எழமுடியும்? அந்த நரிகள் எங்கே சென்றன? யானையின் இறப்பும் காவலன் இறப்பும் உண்மையாக இருக்கலாம். அவற்றை அஞ்சிய மக்கள் கதைகளைப் புனைகிறார்கள்" என்றாள் அனகை. "ஆம், நான் எண்ணுவது மக்களின் அச்சம் ஏன் உருவாகிறது என்றுதான். அன்று அந்தப் பெருங்களிறை சிதையேற்ற குழிதோண்டும்போது பெரும்கதாயுதம் ஒன்று கிடைத்திருக்கிறது. புராணகங்கையின் சதுப்பில் புதைந்து கிடந்தது. அது ஒரு பெரும் அனுமன் சிலையின் கையில் இருந்திருக்கலாமென்கிறார்கள்."

"அதனாலென்ன?" என்றாள் அனகை. "கணிகர்கள் சிலர் அக்குறிகளைக்கொண்டு சிலவற்றை கணித்திருக்கிறார்கள். அவற்றைச் சொல்ல அஞ்சி மறைத்துவிட்டாலும் சூதர்கள் வழியாகவும் வம்பர்கள் வழியாகவும் நகரமே அவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றது" என்றாள் குந்தி. "அக்குழந்தை அஸ்தினபுரிக்கு பேரழிவைக் கொண்டுவரும் என்கிறார்கள்."

அனகை ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.  பிரிந்த அவளது உதடுகள் அப்படியே அசைவிழந்து நின்றுவிட்டன. "புதிய கதைகளும் புதிய அச்சங்களும் பிறந்து வந்துகொண்டே இருக்கின்றன. காந்தாரி நகர்நுழைந்தபோது அஸ்தினபுரியில் ஒரு குருதிமழைபெய்ததாம்" என்றாள் குந்தி. "கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் குருதி துளித்துச் சொட்டியதாம். நகரத்துமாளிகைகள் எல்லாம் போர்க்களத்து குருதிப்பிண்டங்கள் என நின்றனவாம். அவற்றை பலர் கண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்."

அனகை பெருமூச்சு விட்டாள். "அச்சமும் ஐயமும் தன்னைத்தானே முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் வல்லமை கொண்டவை. அந்த அச்சங்களுக்கு அவர்கள் சொல்லும் கதைகளை நானும் நம்பவில்லை. ஆனால் அச்சம் பிறந்திருக்கிறது என்பதை மட்டும் புறக்கணிக்கவே முடியாது. அந்த அச்சத்துக்கான காரணம் எங்கோ இருக்கிறது. அதை நகரின் ஆன்மா அறிந்துகொண்டுவிட்டது. பிரதமையின் எளிய வரிகளிலேயே அந்த அச்சம் இருக்கிறது. அவள் வெறுமனே செய்தியை எழுதவில்லை. எழுதும்போது அவள் அடைந்த அச்சமும் சொற்களில் உள்ளது."

பாண்டு கிழங்குகளை கழுவிமுடித்து நாரால் கட்டி கையில் எடுத்துக்கொண்டு வந்தான். அவனைப்பார்த்துக்கொண்டு உதடுகளை மட்டும் அசைத்து குந்தி கேட்டாள். "அஸ்தினபுரியைக் காக்கும் மன்னன் என் வயிற்றில் பிறந்துவிட்டானோ?" அனகை திரும்பி "அரசி!" என்றாள். "இளமையில் என் பிறவிநூலை பலர் கணித்திருக்கிறார்கள். என் வயிற்றில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி பிறப்பது உறுதி என அனைவருமே சொல்லியிருக்கிறார்கள். என்னை குந்திபோஜர் மகளேற்பு கொண்டதே அதற்காகத்தான்."

அனகை ஒன்றும் சொல்லவில்லை. அவள் சொல்லவிழைந்ததை உணர்ந்தவள்போல குந்தி "விதியின் ஆடலை நாம் அறியமுடியாது. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னகரும் விதத்தைக் காண்கையில் நான் அதையே முன்னுணர்கிறேன். இவையனைத்தும் அவனுக்கான அரியணையை அமைக்கும்பொருட்டே நிகழ்கின்றன. சந்திரகுலத்தின் அரியணையில் சூரியன் அமரவிருக்கிறான்."

அனகையின் கண்களில் அப்போதும் சஞ்சலம் இருந்தது. "தெளிவாக சிந்தித்துப்பார் அனகை. இதோ ஒரு பெரும்தீமை மைந்தனாகப் பிறக்கவிருக்கிறது. அவனே அஸ்தினபுரியின் அரசகுலத்துக்கு மூத்தமைந்தன் என்று குடிகளும் சான்றோரும் எண்ணுகிறார்கள். உண்மையில் மூத்தவன் என்னுடைய சூரியகுமாரன் அல்லவா? பிறக்கவிருக்கும் இருளுக்குப்பதில் அந்த ஒளி அல்லவா இந்நாட்டை ஆளவேண்டும்?" அனகை சொற்களற்ற உதடுகள் மெல்ல அசைந்து பின் நிலைக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.

குந்தி "நான் இன்று மன்னரிடம் பேசவிருக்கிறேன்" என்றாள். அனகை வினாவுடன் நோக்கினாள். "என் வயிற்றில் பிறந்த மைந்தனே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி, ஐயமே இல்லை. நான் எளிய ஷத்ரிய ஒழுக்கநெறிகளுக்காக அஞ்சி அவனை மறைத்துவிட்டேன் என்றால் பாரதவர்ஷத்துக்கும் அவனுக்கும் அநீதி இழைத்தவளாவேன்."

அனகை தயக்கத்துடன் "ஆனால் அரசர்..." என்றாள். "ஆம், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் மணமங்கல இரவில் இருந்த மன்னர் அல்ல இப்போதிருப்பவர். இப்போது அவருக்கு உகந்த களித்தோழி அமைந்துவிட்டாள். அவருக்கு நான் இன்று ஒரு செவிலியன்னை போலத்தான். என்னை முழுதும் உரிமைகொள்ளவேண்டும் என்று அன்று அவர் எண்ணியதுபோல இன்று எண்ணமாட்டார்" என்றாள் குந்தி.

அவள் கண்கள் சற்றே இடுங்கின. "அவ்வாறு அவர் எண்ணுவாரென்றால்கூட அதை நான் இனி கருத்தில்கொள்வதாக இல்லை. விதியும் அதுவிளையாடும் வரலாற்றுக்களமும் மிகப்பெரியவை. எளியமனிதர்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை." அனகை "விளைவுகளுக்கு பொறுப்பேற்பதாக இருந்தால் எதையும் செய்யலாம் அரசி" என்றாள். "ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன். நான் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க அஞ்சித்தான் வாளாவிருந்தேன். இனி அது தேவையில்லை. அவன் பிறந்ததைச் சொல்லவிருக்கிறேன். அஸ்தினபுரியின் முழுப்படைகளையும் அனுப்பி அவனை தேடிக்கொண்டுவரும்படி ஆணையிடுவேன்."

மாத்ரியும் பாண்டுவும் கிழங்குகளுடன் ஏதோ பேசிச்சிரித்தபடி வந்தனர். பாண்டு அருகே வந்து "சிறந்த கிழங்குகள்... நான் இவற்றை நேற்றே கண்டுவைத்திருந்தேன்... செல்வோமா?" என்றான்.

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 5 ]

அன்று கருநிலவு. கோடைகாலமாதலால் வானம் விண்மீன்கள் செறிந்து அவற்றின் எடையால் சற்றுத் தொய்ந்து தொங்குவதுபோல வளைந்து தெரிந்தது. விண்மீன்களின் ஒளியில் அப்பால் நூறுமலைச்சிகரங்கள் நிழல்குவைகளாகத் தெரிந்தன. அங்கிருந்துவந்த பனிக்காற்றில் இந்திரத்யும்னத்தின் கரியநீர்ப்பரப்பு அதில் பிரதிபலித்த விண்மீன்களுடன் மெல்ல அலைபாய்ந்துகொண்டிருந்தது. குடிலின் முன்னால் நின்றிருந்த தேவதாரு மரத்தில் எண்ணைப்பந்தத்தைக் கட்டி அதன் ஒளியில் காட்டுமரப்பட்டைகளால் செய்யப்பட்ட பீடத்தைப்போட்டு குந்தி அமர்ந்திருந்தாள். அனகை குடிலின் திண்ணை அருகே நின்றிருந்தாள்.

குந்தி அனகையை ஏறிட்டுநோக்கி "இளையவளை நான் வரச்சொன்னேன் என்று சொல்" என்றாள். "அவர்கள் இந்நேரம் விழிசொக்கத் தொடங்கியிருப்பார்கள் அரசி" என்றாள் அனகை. "அவளும் வரவேண்டும். இது அவளும் அறிந்தாகவேண்டிய செய்தி" என்றாள் குந்தி. "நாம் இதை முதலில் அரசரிடம் பேசுவோம். அவர் ஒப்புக்கொண்டபின்னர் மெதுவாக சிறிய அரசியிடம் சொல்வோமே" என்று அனகை சொல்ல "அவர் ஒப்புக்கொள்வதைப்பற்றிய பேச்சே இப்போதில்லை. நான் என் குலத்துக்குரிய அறத்தையே இனிமேல் கைக்கொள்ளவிருக்கிறேன். என் மைந்தன் இனிமேலும் எங்கென்று அறியாமல் வாழமுடியாது" என்றாள் குந்தி.

அனகை பெருமூச்சுடன் உள்ளே சென்று சற்று நேரத்தில் மாத்ரியுடன் திரும்பிவந்தாள். "இளையவளே, அந்தப்பீடத்தில் அமர்ந்துகொள். நான் நம் அரசரிடம் முதன்மையான சிலவற்றைப் பேசவிருக்கிறேன். உன் வாழ்க்கையையும் இணைத்துக்கொண்டுள்ள செய்தி அது" என்றாள் குந்தி. மாத்ரி ஏதும் புரியாமல் அனகையை நோக்கியபின் அமர்ந்து கைகளில் முகவாயை தாங்கிக்கொண்டாள்.

வழக்கமாக அந்தி கடந்து இரவு தொடங்கியதுமே வேள்விச்சாலையில் இருந்து திரும்பிவிடும் பாண்டு அன்று நெடுநேரமாகியும் வரவில்லை. அனகை சென்று பார்க்கலாமா என்று கேட்பதற்காக இருமுறை அசைந்தாள். ஆனால் குந்தியிடம் அசைவில்லை என்று கண்டு மீண்டும் அமைந்தாள். மீண்டும் அவள் வாயெடுத்தபோது சோலைக்கு அப்பால் சுளுந்து வெளிச்சம் சுழல்வதைக் கண்டாள். பெருமூச்சுடன் "அரசர் வருகிறார் அரசி" என்றாள்.

இளம்மாணவன் ஒருவன் சுளுந்துவீசி முன்னால்வர பாம்புகளை எச்சரிக்கும் தடியை தரையில் தட்டியபடி பாண்டு பின்னால் வந்தான். அவன் கையில் வேள்விமிச்சத்தையும் சுவடிகளையும் கொண்டுவரும் மூங்கில் கூடை இருந்தது. முற்றத்தில் ஏறியதும் சீடனைத் திரும்பச்சொல்லிவிட்டு அவன் நேராக குந்தியை நோக்கி வந்தான். கூடையை அவளருகே பீடத்தில் வைத்துவிட்டு முன்னாலிருந்த பீடத்தில் அமர்ந்தான். "நான் வெறுக்கும் இந்தப் பாழுடலுக்குள் வாழும் பெருந்துயரம் என்னை பிறந்தநாள்முதல் ஆட்டிவைக்கிறது பிருதை. இங்கு வந்தநாளில் இருந்தே அதை மறந்து வாழத்தொடங்கினேன்... ஆனால் இன்றோடு அந்த நிறைவையும் இழந்துவிட்டேன்" என்றான்.

குந்தி அவனுடைய சினத்தையும் தவிப்பையும் கண்டு வியப்புடன் "என்ன நடந்தது?" என்றாள். "நாளை அதிகாலையில் இங்கிருக்கும் நூற்றெட்டு முனிவர்கள் மாணவர்களுடன் உத்தரமலை ஏறிச்செல்கிறார்கள். பதினெட்டு மலையுச்சிகளுக்கு அப்பால் மலைகளின் மகுடம்போல கைலாய மலை இருக்கிறது. அடுத்த கருநிலவு நாளன்று அவர்கள் அங்கே சென்று சேர்வார்களாம். பதினைந்துநாட்கள் அங்கே தவம்செய்து முழுநிலவில் முக்கண்முதல்வன் உறையும் மலையைக் கண்டு வணங்கிவிட்டுத் திரும்புவார்கள்... நானும் வருகிறேன் என்றேன். என்னையும் சேர்த்துக்கொள்ளும்படி மன்றாடினேன். அந்தப்பயணத்தில் நான் இறந்தாலும் என் ஆன்மா விடுதலை அடையும் என்றேன்."

சொல்லமுடியாமல் குரல் அடைக்க பாண்டு நிறுத்திக்கொண்டான். "ஆனால் மகாகௌதமர் என்னைத் தடுத்துவிட்டார். நான் துறவி அல்ல. இல்லறத்தான். எனக்கு என் பெற்றோரோ துணைவியரோ விடைகொடுத்து வழியனுப்பவேண்டும். அத்துடன் நான் கிளம்பும்போது என் மைந்தன் ஒருவன் எனக்கு எள்ளும் நீரும் மலரும் மந்திரமும் அளித்து வழியனுப்பியும் வைக்கவேண்டும். மைந்தர்கள் அற்றவர்கள் மலை ஏறலாகாது. ஏனென்றால் அவர்கள் தங்கள் மூதாதையரை உணவும்நீருமின்றி உதறிவிட்டு வருகிறார்கள் என்று கௌதமர் சொன்னார்."

குந்தி விழித்த விழிகளில் உணர்ச்சியேதுமில்லாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். "நான் கௌதமரின் கால்களைப் பற்றிக்கொண்டேன். என்னை துறவுபூண அனுமதியுங்கள்... எனக்கு துவராடை அளியுங்கள் என்று அழுதேன். அவர் என்னிடம் பெருநெறி ஒன்றுக்காக தன் இகத்தையும் பரத்தையும் இழக்கத்துணிபவனே நைஷ்டிக பிரம்மசாரி எனப்படுகிறான். நைஷ்டிக பிரம்மசாரிகள் அன்றி பிறர் மைந்தர்களைப் பெற்று தன் முன்னோருக்கான கடனைத் தீர்க்கும் கடமை கொண்டவர்கள்தான். ஆகவேதான் நான் எனக்குரிய மனைவியை கண்டுபிடித்து அவளில் மூன்று மைந்தர்களைப் பெற்றேன். என் மைந்தர்களான ஏகதன், துவிதன், திரிதன் மூவரும் இங்கே இருக்கிறார்கள். நான் மலைமேல் ஏறுவதற்கு முன்னரே அவர்களிடமிருந்து எனக்கான எள்ளையும் நீரையும் பெற்றுக்கொண்டு விடைபெறுவேன் என்று சொன்னார்."

பாண்டு உதடுகளை அழுத்தியபடி சிலகணங்கள் இருந்தான். அவன் முதுகு மூச்சின் விசையால் அசைவதை குந்தி கண்டாள். "நான் அதன்பின் சொல்வதற்கு ஏதுமிருக்கவில்லை. அந்தச் சபையில் வானில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத சிறுபறவை போல கிடந்தேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் என்னை பிறர் மன்னித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். என்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். பிருதை, மனிதர் உணரும் நரகங்களில் அதுவே கீழ்மையானது. விலங்கினங்களில் வல்லமையற்றவை உடனடியாக வலிமையானவற்றால் கொன்று உண்ணப்படுகின்றன. அது மிகமிகக் கருணையானது. மனிதர்கள் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாக்கிக்கொள்கிறார்கள்."

பாண்டு சொன்னான். "பின்னர் எழுந்துவந்தேன். ஒவ்வொரு காலடியிலும் இந்த வீண்உடலை சபித்தேன். இது உண்டு உயிர்க்கும் இவ்வுலகையும், இதைநோக்கி கோடிவிழிகளால் பார்த்துநிற்கும் விண்ணகத்தையும், விண்ணையாளும் தேவர்களையும், தேவர்களை படைத்த தெய்வங்களையும் சபித்தேன். இந்த நோயுற்ற உடலை எனக்கு அளித்துவிட்டு நான் தீர்க்கவே முடியாத பெருங்கடனை என்னிடம் கேட்கும் என்முன்னோரை வெறுத்தேன்" பாண்டு சொன்னான். "அப்படியே திரும்பிச்சென்று ஏரியில் விழுந்தாலென்ன என்று எண்ணினேன். ஆனால் அதற்கான மன உறுதி என்னிடமிருந்தால் நான் இன்றுவரை வாழ்ந்திருக்க மாட்டேனே... நான் வாழ்க்கையை வெறுத்தவனல்ல. வாழ்க்கைமீதான விருப்பு நிறைந்தவன். இந்த மூழ்கும் படகுக்குள் இருந்துகொண்டு நான் தவிக்கிறேன்."

விழிகளில் நீர் பளபளக்க அவன் சொன்னான் "தென்புலத்தோர், தெய்வம், விருந்து, ஒக்கல் என நால்வருக்கும் கடன்பட்டு மனிதன் பிறக்கிறான் என்கிறார்கள். அக்கடன்களை நிறைக்காமல் இப்பிறவிச்சுழலில் இருந்து மீட்பும் இல்லை. நான்கில் முதன்மையானது தென்புலம் ஆளும் மூதாதையருக்கான கடனே. நான் அந்தக்கடனில் இருந்து மீளமுடியாதென்றால் இப்பிறவிக்குதான் என்ன பொருள்? அடுத்தபிறவிக்கு இன்னும்பெரிய கடனைத் திரட்டிவைத்துவிட்டு போவதற்காகத்தான் இப்போது பிறந்திருக்கிறேனா?"

குந்தி பேச வாயெடுப்பதற்குள் அனகை "அரசே, நான் தங்களிடம் பேசவிருந்த செய்திக்கான தருணத்தை தாங்களே உருவாக்கியளித்துள்ளீர்கள்..." என்றாள். "தொல்நூல்கள் வகுத்தபடி நீர், நெருப்பு, காற்று, மண், வான் போல குழந்தையும் இயற்கையின் அழிவில்லாத முதலிருப்புகளில் ஒன்று. ஆகவே மண்ணில் பிறந்துவிட்ட அத்தனை குழந்தைகளையும் மானுடகுலம் முழுமனதுடன் உவந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது எவ்வகையில் எவரால் பெறப்பட்டிருந்தாலும் அது தெய்வங்களால் பேணப்படுவதே. எங்கு பிறந்திருந்தாலும் மூதாதையரால் வாழ்த்தப்படுவதே. ஒரு குழந்தையை விலக்கும் கரம் உறவுகளை மூதாதையரை தெய்வங்களை விலக்குகிறது" என்றாள்.

"அரசே, மைந்தர்கள் என்பவர்கள் தன் குருதியில் தன் மனைவியின் வயிற்றில் பிறந்தவர்கள் மட்டும் அல்ல" என்றாள் அனகை. "மண்ணில் பிறந்த குழந்தைகளில் எதை ஒருவன் இது என் குழந்தை என எண்ணி அகம் கனிந்து தந்தையாகிறானோ அவனுக்கு அது அக்கணமே மைந்தனாகிறது. அவனுடைய மூதாதையர் அக்கணமே சிரிக்கும் விழிகளுடன் நீத்தாருலகை விட்டு வந்து அவனைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர்களின் வாழ்த்துக்கள் அம்மைந்தனை காத்து நிறைகின்றன" அனகை சொன்னாள்.

"அரசே, மைந்தர்கள் பன்னிரு வகை. தன் மனைவியிடம் தனக்குப்பிறந்தவன் ஔரசன் எனப்படுகிறான். தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம் அனுப்பி கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன். இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். தன்னால் மனம்கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன், மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன். உரியமுறையில் காணிக்கைகொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன். இந்த ஆறு மைந்தர்களும் அனைத்துவகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமைகொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை."

"இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர். மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன். தன்மனைவி தன்னைப்பிரிந்துசென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன். நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன். மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன். கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். ஒழுக்கமீறலினால் தனக்கு பிறபெண்களிடம் பிறந்த பாரசரவன். அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்கமறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார்கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர்பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு" என்றாள் அனகை.

"உங்கள் குலத்திலேயே சிறந்த முன்னுதாரணங்கள் உள்ளன அரசே. முன்பு கேகயதேசத்து அரசனாகிய சாரதண்டாயனி என்னும் அரசனுக்கு மைந்தர்கள் பிறக்கவில்லை. ஆகவே அவன் தன் மனைவியிடம் தன் மூதாதையர் நிறைவுற மைந்தர்களைப் பெற்றுத்தரும்படிச் சொன்னான். அவள் ஆன்றோர் வாக்குப்படி இரவில் நான்கு சாலைகள் கூடுமிடத்துக்கு வந்துநின்று அங்கே தன் மனதைக் கவர்ந்த பிராமணப் பயணி ஒருவனைக் கண்டுகொண்டாள். பும்ஸவனம் என்னும் சடங்கில் நெருப்பை அவியளித்து வணங்கி மைந்தன் பிறக்கவேண்டுமென்று கோரியபின் அவனுடன் வாழ்ந்தாள். அவனிடமிருந்து மூன்று மாவீரர்களை மைந்தர்களாக அவள் பெற்றாள். அவ்வண்ணம் அவனை நரகத்திலிருந்தும் அவன் நாட்டை எதிரிகளிடமிருந்தும் காத்தாள்."

"அரசே, நீர் அனைத்து விதைகளையும் மரமாக்குகிறது. மழையாகப்பொழிகிறது. ஓடைகளாகவும் நதிகளாகவும் வருகிறது. ஏரிகளாக நிறைகிறது. அத்துடன் காலுக்கு அடியில் ஊறி நிறைந்திருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த நீராலும் தெரியாத நீராலும் பாலிக்கப்படுவதே இவ்வுலகு. தாய்மையும் அவ்வண்ணம்தான். தாய்மையை அறியாதவன் காமத்தை அறிவதில்லை. காமம் வழியாக தாய்மையை அறிபவரும் எவருமில்லை" என்று அனகை சொன்னாள்.

பாண்டு நடுங்கும் கைகளால் தன் தலையைப் பற்றினான். அவனுள் உருப்பெறாத எண்ணங்களைச் சொற்களாக்க முயல்பவை போல அந்தக்கைகள் தலைக்கும் மார்புக்குமாக அலைபாய்ந்தன. பின்பு அவன் பாய்ந்து எழுந்து "ஆம், அதுதான் உகந்த வழி... அனகை, நீ கற்றவள். சொல்லும் நூலும் நெறியும் முறையும் அறிந்தவள். நீ சொன்னதைப்போல சிறந்தவழி வேறொன்றில்லை..."

தன் தலையை கையால் தட்டிக்கொண்டான். "இந்த நோயுடலை நான் வெறுக்கிறேன் என்னும்போது இதிலிருந்துதான் எனக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்று எண்ணுவதைப்போல பேதைமை வேறென்ன? வேண்டாம்... பிருதை நீ என் மனைவி. நெருப்பையும் மூதாதையரையும் சான்றாக்கி நான் கட்டிய மங்கலநாண் உன் கழுத்தில் இருக்கும்வரை உன் மைந்தன் எனக்கும் என் மூதாதையருக்கும் மைந்தனே" என்றான். "எனக்கு உன்னைப்போல ஆற்றலும் அறிவும் கொண்ட மனைவி அமைந்தது என்னை மூதாதையர் வாழ்த்தியமையால்தான். என்னை அவர்களிடம் கொண்டுசேர்க்கும் மைந்தர்கள் பிறப்பதற்காகத்தான்."

தன் இரு கைகளையும் விரித்து ஆட்டியபடி நெடுந்தொலைவு ஓடிவந்தவனைப்போல மூச்சுஇரைக்க பாண்டு சொன்னான் "போதும்... இதற்குமேல் எதையுமே சிந்திக்க வேண்டியதில்லை. பிருதை நீ இக்கணமே சென்று உன் மனம் விரும்பிய ஒருவருடன் கூடி எனக்கு ஒரு மைந்தனைப் பெற்றுக்கொடு!" அவன் உடனே மலர்ந்து சிரித்தான். "இப்போது சொல்கிறேனே, இவ்வுலகில் நான் எதையாவது விழைகிறேன் என்றால் அது மைந்தனைத்தான். தெய்வங்களும், விண்ணுலகமும், முக்தியும், அரசும், வெற்றியும், புகழும், செல்வமுமெல்லாம் எவருக்கு வேண்டும்? எனக்கு வேண்டியது என் கையை நிறைக்கும் மைந்தன்... ஒவ்வொருநாளும் நான் கனவில் காண்பவன் என் மைந்தனே!"

"அரசே, எனக்கு முன்னரே ஒரு மைந்தன் இருக்கிறான்" என்றாள் குந்தி. மாத்ரி திகைத்து எழுந்து நின்றுவிட்டாள். பாண்டு "என்ன சொல்கிறாய்?" என்றான். "ஆம், அரசே. எங்கள் குலவழக்கப்படி மணமுடிப்பதற்குமுன் மைந்தரைப்பெறுவது பிழையல்ல. நான் எனக்கு துர்வாச முனிவரளித்த அருள்மொழியை இளமையின் துடுக்கு காரணமாக சோதித்துப்பார்த்தேன்" என்றாள் குந்தி.

பாண்டு மெல்ல அமர்ந்துகொண்டு "சொல்" என்றான். அவன் கண்களை நோக்கியபோது குந்தி ஒருகணம் தயங்கினாள். உடனே அந்தத் தயக்கத்தை வென்று, அவனைக் கூர்ந்து நோக்கியபடி சொல்லத்தொடங்கினாள். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அந்தவாழ்க்கையை மீண்டும் வாழ்வதுபோல உணர்ந்தாள். அந்த கணங்களை அவள் சொற்கள் தொட்டுத்தொட்டுச் சேர்த்தன.

அவன் முகம் மாறவில்லை. கண்கள் கதைகேட்கும் சிறுவனுடையதுபோல விரிந்திருந்தன. அவள் சொல்லிமுடித்ததும் அவன் பெருமூச்சுடன் "ஆம், அவன்தான் என் மைந்தன். இளங்கதிரவன். அவனைத்தேடிக்கொண்டுவர அஸ்தினபுரியின் ஒற்றர்படைகள் அனைத்தையும் அனுப்புகிறேன். அவன் வந்ததும் என் மணிமுடியை அவன் காலடியில் வைக்கிறேன்" என்றான்.

அவன் கண்களில் மிகச்சிறிய ஓர் அசைவு வந்துமறைந்ததை குந்தி கண்டாள். "அவன் மாத்ரநாட்டு சல்லியனின் மைந்தன் அல்லவா?" என்றான். குந்தி "அவன் சூரியமைந்தன். மானுடர் எவராக இருந்தாலென்ன?" என்றாள்.

"ஆம், எவராக இருந்தாலென்ன? பிருதை, அவன் வரட்டும். என் முழுப்படைகளையும் அவனைத்தேட அனுப்புகிறேன்... ஆனால் இப்போது எனக்கு ஒரு மைந்தன் வேண்டும். அவனைத் தேடிக்கண்டடைவதுவரை என்னால் காத்திருக்கமுடியாது. என் மைந்தன் கருவறை புகுவதை வயிற்றில் வளர்வதை குருதிவாசனையுடன் பிறந்து ஒளியைப் பார்த்துச் சிரிப்பதை நான் பார்க்கவேண்டும்... நான் எவ்வளவு நாள் வாழ்வேன் என்று தெரியாது. ஆகவே காத்திருக்க எனக்குப்பொறுமை இல்லை" என்றான். "நான் கனவுகாணும் குழந்தைக்கால்களும் குருத்துக்கைகளும் என் மடியை நிறைக்கவேண்டும் பிருதை."

"என்ன சொல்கிறீர்கள்?" என்று பிருதை உரத்த படபடப்பான குரலில் கேட்டாள். "உன் குலநெறியும் முன்னைநூல்நெறியும் ஒப்புகின்றன. உன்னிடம் துர்வாசரின் சொல் உள்ளது. அதைக்கொண்டு எனக்கு உடனே ஒரு மைந்தனைக் கொடு. அஸ்தினபுரியை ஆளப்போகும் என் மைந்தன் மாவீரன் என்றாய். அப்படியென்றால் அவனருகே நின்று அறமுரைக்கும் ஒரு இளையவன் அவனுக்குத்தேவை. என் தம்பி விதுரனைப்போன்ற ஒருவன். அவனைப் பெற்றுக்கொடு!"

அவனால் கால்தரித்து நிற்கமுடியவில்லை. முற்றத்தில் நிலையழிந்து சுற்றிவந்தான். "ஆம், இன்று கருநிலவு நாள். தருமதேவனுக்குரிய இரவு. பிருதை நீ இன்றே உன் முனிவர் சொல்லின் வல்லமையால் தருமதேவனை வரவழை. எனக்கொரு மைந்தனைக் கொடு!" அனகை திகைத்தவளாக குந்தியைப் பார்த்தாள். குந்தி திகைத்து "இல்லை, அரசே என்னை வற்புறுத்தாதீர்கள்... நான் மீண்டும் அவ்வனுபவம் வழியாகச் செல்லவிழையவில்லை" என்றாள்.

"ஏன்? மகத்தான மைந்தன் ஒருவனைப் பெறும் தருணமல்லவா அது?" என்றான் பாண்டு. "ஆம், ஆனால் நான் வெறும் பாத்திரமாக ஆகும் தருணமும் கூட. என் பெண்மை அவமதிப்புக்குள்ளாகிறது... இப்போது தெரிகிறது, ஏன் என் மைந்தனை முதற்கணம் வெறுத்தேன் என. அதிலிருக்கும் அவமதிப்பை என் ஆன்மா ஏற்கமறுக்கிறது. இப்போது தாங்கள் சொன்னபோதும் அதே கூச்சத்தையே அடைந்தேன்" என்றாள் குந்தி.

"பிருதை, நான் உன்னிடம் கேட்கும் அன்பு என்பது ஒரு மைந்தனாக மட்டுமே என்னிடம் வரமுடியும்... என் துணைவியாக வேறெதையும் நீ எனக்கு அளிக்கமுடியாது" என்றான் பாண்டு. குந்தி மாட்டேன் என்பதுபோல தலையை ஆட்டி "அரசே" என ஏதோ சொல்ல வர பாண்டு சட்டென்று குனிந்து அவள் பாதங்களைத் தொட்டான். "கணவனாக நான் ஆணையிடவில்லை பிருதை... வாழ்க்கையில் எதையும் அடையாதவனாக இரக்கிறேன்... இது ஒன்றை எனக்குக்கொடு!" உடைந்து அழுதவளாக குந்தி நிலத்திலமர்ந்து அவன் தலையை தன்மார்பில் அணைத்துக்கொண்டாள்.

பெருமூச்சுகளுடன் பாண்டு முற்றத்தில் பீடத்தில் மரவுரியை விரித்து மல்லாந்து படுத்துக்கொண்டு வானைப்பார்த்திருக்க குந்தி குடிலுக்குள் புகுந்து "நான் கிளம்புகிறேன் அனகை. என்னுடன் வா" என்றாள். "எங்கே தேவி?" என்றாள் அனகை. "தென்திசை நோக்கி... அதுதான் தருமதேவனுக்குரியது..." அவள் குடிலருகே ஓடிய சிற்றோடையில் நீராடி ஆடையை மாற்றி நறுமணவேர்ப்பொடியை கூந்தலில் அணிந்துகொண்டு கிளம்பினாள். மாத்ரி எழுந்து பந்தத்தின் அடியில் நின்று திகைத்த விழிகளுடன் பார்த்தாள். குந்தி படுத்திருந்த பாண்டுவை திரும்பிப்பாராமல் நடந்தாள்.

தென்திசையும் ஏரியைநோக்கித்தான் சென்றது. ஒற்றையடிப்பாதை இருளில் கண் பழகியபோது கருங்கூந்தலில் வகிடுபோலத் தெரியத்தொடங்கியது. அனகை பாம்புகளைத் துரத்த வலுவாக காலடி வைத்து நடந்தாள். தொலைவில் இந்திரத்யும்னம் கரியபளபளப்பாக அசைந்துகொண்டிருந்தது. அதன்மேல் வெண்ணிறமான அன்னங்கள் சில மிதப்பது புள்ளிகளாகத் தெரிந்தது.

குந்தி கைகாட்டி "நீ இங்கேயே நின்றுகொள்" என்றாள். "யார் தேவி?" என்றாள் அனகை. "தெரியவில்லை. யாராக இருந்தாலென்ன? இவ்விரவின் தனிமையில் தென்திசைநோக்கி தனித்திருக்க வந்தவர் தவசீலராகவே இருக்கவேண்டும். அவரை தர்மதேவன் தன் ஊர்தியாகக் கொள்வானென்றே எண்ணுகிறேன்" என்றாள். அனகை பெருமூச்சுடன் அங்கே ஒரு தேவதாருவின் கீழே நின்றுகொண்டாள். குந்தி தயக்கமேயற்றவளாக ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றாள். ஏரியின் நீரொளியில் அவளுடைய நிழல்தோற்றம் தெரிந்தது. அவளுடைய காதோரச் சுரிகுழலின் ஒவ்வொரு முடியையும் பார்க்கமுடியுமெனத் தோன்றியது.

அவள் சென்று மறைந்தபின் அப்பகுதியின் ஒளி குறைவதுபோல அனகை எண்ணினாள். ஒன்றும் நிகழாத கணங்கள் நீண்டு நீண்டு சென்றபோது இரவே நிகழ்ந்து முடியப்போவதுபோலப் பட்டது. பின்னர் அப்பால் பெருமூச்சொலி போல, இலைக்கூட்டம் காற்று வீசுவது போல ஏதோ கேட்டது. ஓர் ஆண்குரல் பேசுவதும் பிருதை பதிலிறுப்பதும் கேட்டதா தானே எண்ணிக்கொண்டதா என்று அனகை திகைத்தாள். மூச்சுவிட முடியாமல் அகம் கல்லாக மாறியிருப்பதுபோலத் தோன்றியது.

யமனுக்கான இரவை நெடுந்தொலைவில் யாரோ வேதமந்திரத்தால் வாழ்த்திக்கொண்டிருந்தனர். அங்கிருந்து செவிகூர்ந்தபோது வேதத்தின் சந்தத்தை மட்டுமே கேட்கமுடிந்தது. அலையலையாக எழுந்து அடங்கிக்கொண்டிருந்த குரல்தொகையில் ஏழுபேர் இருக்கலாமென்று தோன்றியது.

அப்போது அவள் கனத்த மூச்சொலி ஒன்றைக் கேட்டாள். பாம்பு சீறுவதுபோன்ற ஒலி. அது மரங்களின் ஒலியா? பாம்பேதானா? அவளுக்கு அரசநாகத்தைப் பார்த்த நினைவெழுந்து மெய்சிலிர்த்தது. ஓடிவிடலாமென்ற எண்ணம் எழுந்தது. அப்போது செவிகள் அடிபடும் ஒலியைக் கேட்டாள். ஆம், பசுதான். ஆனால் அது எங்கிருக்கிறது. அந்த எண்ணம் வந்தபின் மாட்டின் வாசனையையும் உணர்ந்தாள். மீண்டும் மூச்சொலி. கனத்த குளம்பு ஒன்று மண்ணை மிதிக்கும் ஒலி. மீண்டும் காதுகள் அடிபடும் ஒலி.

அனகை புதருக்கு அப்பால் அது நிற்பதைக் கண்டுவிட்டாள். கருமைக்குள் கருமை என அது நின்றது. அதை அவள் கண்கள் பார்க்கவில்லை, கண்ணாகிநின்ற கருத்தே பார்த்தது என்று தோன்றியது. கழியை முன்னால் நீட்டியபடி அவள் நெருங்கிச்சென்றாள். அங்கே இரு சிறிய மரக்கன்றுகளுக்கு அப்பால் அவள் ஓர் எருமைக்கடாவைக் கண்டாள். ஏரியின் கரியநீர் பளபளப்பதுபோல அதன் புட்டங்களின் வழவழப்பு ஒளிவிட்டது. வாலின் சுழற்சி தெரிந்தது. ஒரு சிறு பறவை பறந்து சுற்றுவதுபோல வால்முடி காற்றில்பறந்தது. கனத்த கொம்புகள் வளைந்து தோளைத் தொட்டிருந்தன.

அனகை ஓசையில்லாமல் கால்களை மெல்ல எடுத்துவைத்து பக்கவாட்டில் நடந்தாள். எருமைக்கடாவின் முகத்தை நன்றாகவே பார்க்கமுடிந்தது. நீலநிறமான வைரம் போல அதன் விழிகள் ஒளிவிடுவதைப் பார்த்தபடி நின்றாள்.

ஏரியின் தென்மேற்குக்கரையில் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து கௌதமரின் மூன்று மைந்தர்களான ஏகதன், துவிதன், திரிதன் ஆகியோர் நண்பர்களுடன் வேதமோதிக்கொண்டிருந்தனர்.

பலிகளனைத்தைக்கொண்டும்

யமனை, பேரரசனை,

விவஸ்வாவின் மைந்தனை,

மானுடரை ஒன்றுதிரட்டுபவனை,

தலைக்குமேல் விரிந்த

மகத்தான உயரங்களில் செல்பவனை,

வழிதேடுபவனை,

வழிகாட்டுபவனை,

வணங்குகிறேன்.

யமன்

நாங்கள் குடியமர ஓரிடத்தை

முதலில் அளித்தான்.

இந்த இனியபுல்வெளி

எங்களிடமிருந்து

ஒருபோதும் விலகாதிருப்பதாக!

மண்ணில்பிறந்தவர்களே

உங்கள் கால்கள்

மறைந்த மூதாதையரைச்

சென்றடையும் வழிகளைத்

தேடிக் கண்டடையட்டும்!

காவியங்களுடன் இணைந்து வளரட்டும்!

நட்பின் தெய்வம் மிதாலி.

அங்கிரஸின் மைந்தர்களுக்கும் யமனுக்கும்,

பிரகஸ்பதிக்கும் ரிக்வானுக்கும் நடுவே

அன்பு வளரட்டும்.

தெய்வங்களை மேலெழுப்புக!

தெய்வங்கள் நம்மை மேலெழுப்பட்டும்!

மகிழட்டும் விண்ணகத்தோர்!

சிலர் வாழ்த்துக்களால்

சிலர் பலிகளினால்!

யமனே வருக!

இந்த தருப்பைப்புல் இருக்கையில் அமர்க!

யம தேவனே,

அங்கிரஸ் மற்றும் மூதாதையர்

துணையுடன் பீடம் கொள்க!

முனிவர்கள் இசைக்கும்

இப்பாடல் வரிகள்

உன்னை எங்களிடம் கொணர்க!

யமதேவனே, அறத்தோனே,

இந்தத் தூய பலி

உன்னை மகிழ்விப்பதாக!

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 1 ]

"பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்" என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். "இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்."

அவர் மென்மரத்தாலான குழைகளை காதிலணிந்திருந்தார். கழுத்தில் செந்நிறக்கற்களாலான மாலை. கன்னங்கரிய நிறம்கொண்டவர். முகத்தில் வெண்விழிகள் யானையின் தந்தங்கள் போலத்தெரிந்தன. சுரிகுழல் தோள்களில் விரிந்துகிடக்க மடியில் தன் மகரயாழை வைத்து சக்ரவர்த்திகளுக்குரிய நிமிர்வுடன் அமர்ந்து குந்தியை நோக்கி "காந்தார அரசியில் நிகழப்போகும் பிறப்பின் நிமித்தங்கள் ஆறுதிசைகளில் தீமையைச் சுட்டுகின்றன. மூன்றில் பேரொளியையும் சுட்டுகின்றன அரசி!' என்றார்.

குந்தி திரும்பி அனகையைப் பார்த்தபின் பெருமூச்சுடன் ''அனைத்தையும் சொல்லுங்கள், சூதரே" என்றாள். "நிமித்திகர்கள் அவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலயத்தில் கூடியபோது நானும் அங்கிருந்தேன்" என்றார் யூபாக்ஷர். "அன்று நிகழ்ந்தவற்றை எல்லாம் பாடல்களாக மாற்றி அஸ்தினபுரியின் அவைக்கூடங்களிலெல்லாம் பாடினேன். அரசி, நிமித்திகர் நாளையில் வாழ்பவர்கள். சூதர்கள் நேற்றில் வாழ்கிறோம். நாங்கள் இன்றில் சந்தித்துக்கொள்ளும் தருணங்களில் முக்காலமும் ஒன்றை ஒன்று கண்டுகொள்கின்றன."

குந்தி பெருமூச்சுடன் தன் நிறைவயிற்றை மெல்ல எடைமாற்றி வைத்து உடலை ஒருக்களித்துக் கொண்டாள். பெருமூச்சுவிட்டபோது முலைகளின் எடையை அவளாலேயே உணரமுடிந்தது. அவை எடைகொண்டு கீழிறங்கும்தோறும் தோளிலிருந்து வரும் தசையில் மெல்லிய உளைச்சல் இருந்தது

அஸ்தினபுரியில் இருந்து ஒரு முதுசூதரை அனுப்பிவைக்கும்படி அவள் செய்தி அனுப்பியிருந்தாள். அங்கிருந்த அவளுடைய உளவுப்படையினர் முதுசூதரான யூபாக்‌ஷரை படகில் கங்கையில் ஏற்றி பின் காட்டுப்பாதைவழியாக அழைத்துவந்து சேர்த்தனர். தவக்குடிலில் இளைப்பாறியபின் சூதரை இந்திரத்யும்னத்தின் வடக்குகோடியில் ஹம்ஸகூடத்திற்கு அப்பால் இருந்த சிராவணம் என்னும் சிறிய சோலைக்கு வரச்சொன்னாள். பாண்டு அவர் வந்ததை அறியவில்லை. மாத்ரி அறிந்தால் அதை அவளால் பாண்டுவிடம் சொல்லாமலிருக்க முடியாதென்பதனால் அவளுக்கும் தெரிவிக்கப்படவில்லை. அங்கிருந்த முதிய முனிவர்கள் மலையேறி கைலாயம் சென்றுவிட்டிருந்தனர். இளையவர்கள் எவரும் அரசியலுக்கு சித்தம் அளிப்பவர்களல்ல.

"அஸ்தினபுரியின் அரசி, சென்றபல மாதங்களாக அஸ்தினபுரியில் தீக்குறிகள் தென்படத்தொடங்கின. சென்ற ஆடி அமாவாசைநாளில் நள்ளிரவில் நகருக்குள் நரிகளின் ஊளை கேட்டதாகவும் மென்மணலில் நரிகளின் காலடித்தடங்கள் காணப்பட்டதாகவும் நகர்மக்கள் பேசிக்கொண்டனர். நரிகளின் ஊளை நகருள் கேட்பது ஆநிரைகளுக்குத் தீங்குசெய்யும் என்ற நம்பிக்கை கொண்ட ஆயர்குடித்தலைவர்கள் எழுவர் நிமித்திகர்களை அணுகி குறிகள் தேர்ந்து சொல்லச்சொன்னார்கள்" என்றார் யூபாக்‌ஷர்.

"அன்று மேலும் பல தீங்குகள் நிகழ்ந்திருப்பது தெரியத்தொடங்கியது. நகரின் மூத்தபெருங்களிறான உபாலன் அலறியபடி வந்து அரண்மனை முற்றத்தில் உயிர்துறந்தது. அரண்மனைவளாகத்தில் எல்லைக்காவலர்தலைவர்களில் ஒருவனான ஸஷோர்ணன் இறந்துகிடந்தான். அவன் முகம் பேரச்சத்தில் விரைத்து விரிந்திருந்தது. உதடுகள் பற்களால் கடிக்கப்பட்டு துண்டாகி விழுந்திருந்தன. அன்று உபாலனுக்காகத் தோண்டப்பட்ட சிதைக்குழியில் மும்மடங்கு பெரிய கதாயுதம் ஒன்று கிடைத்தது..." யூபாக்‌ஷர் தொடர்ந்தார்.

"ஒவ்வொன்றையும் இணைத்து ஆராய்ந்த நிமித்திகர் அனைவரும் ஒப்புக்கொண்ட ஒன்றுண்டு, அரசி. அன்றுதான் அக்கரு நிகழ்ந்திருக்கிறது. அந்நாள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கலிசாந்தி பூசை நிகழும் ஆடிமாத அமாவாசை." யூபாக்‌ஷர் சற்று இடைவெளிவிட்டு வெண்விழிகள் ஒளிவிட கூர்ந்துநோக்கி "கலியுகம் தொடங்கிவிட்டது, அரசி" என்றார்.

குந்தி வெறுமனே தலையசைத்தாள். "ஆம், அத்தனை நிமித்திகர்களும் அதையே சொல்கிறார்கள். துவாபரயுகத்தின் முடிவு நெருங்குகிறது. யுகப்பெயர்ச்சி அணுகிவருகிறது. இரு மதவேழங்கள் மத்தகங்களை முட்டிக்கொள்வதுபோல இரு யுகங்களும் மோதப்போகின்றன. கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது" என்றார் யூபாக்‌ஷர்.

யூபாக்‌ஷர் தொடர்ந்தார் "நிமித்திகர்களின் கூற்றுப்படி வரப்போவது கலிதேவனின் மானுடவடிவம். அவன் வருகையை செம்மைசெய்து அவனை இட்டுச்செல்ல துவாபரபுருஷனின் மானுடவடிவம் மண்ணில் முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கிறது. நாமறியாத யாரோ, எங்கோ. ஆனால் முதியயானை இளங்களிறை வழிகாட்டிக் கொண்டுசெல்கிறது. கொடுங்காற்று காட்டுநெருப்பை தோளிலேற்றிக்கொண்டிருக்கிறது..."

பிரஹஸ்பதியின் ஆலயத்துக்கு முன்னால் நிமித்திகர்களின் மூதாதைவடிவமான அஜபாலரின் சிற்றாலயம் இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன் சந்தனு மன்னர் விண்ணேகியநாளில் முக்காலத்தையும் உணர்ந்தமையால் காலாதீத சித்தம் கொண்டிருந்த அஜபாலர் அஸ்தினபுரியின் அழிவை முன்னறிவித்தார் என்கிறார்கள். காஞ்சனம் ஒலித்து அரசரின் விண்ணேகுதலை அறிவித்த அக்கணம் ஒரு வெண்பறவை அரண்மனை முகட்டிலிருந்து பறந்துசென்றதை அவர் பார்த்தாராம். தர்மத்துக்குமேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்றும் வெற்று இச்சை வீரியத்தை அழிக்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது என்றும் அவர் சொன்ன இரு மூலவாக்கியங்களை நிமித்திகர் இன்றும் ஆராய்ந்துவருகிறார்கள். அதன் பொருள் ஒவ்வொருநாளும் தெளிவடைந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

அஜபாலரின் கருவறைமுன் நூற்றெட்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பன்னிருதிகிரிக்களம் அமைத்து நிமித்திகர்குலங்கள் அமர்ந்து நிகழ்முறையும் வருமுறையும் தேர்ந்தனர். மும்முறை மூன்று திசைகளிலிருந்தும் வந்த காற்று அனைத்து அகல்களையும் அணைத்தது. நான்காம்முறை சுடர்கள் அசைவிழந்து கைகூப்பி நின்றன. அது நற்குறி என்றனர் நிமித்திகர். காலத்தின் சதுரங்கக் களத்தில் செந்தழலென ஒளிவிடும் போர்ப்புரவிகள் வந்தமரவிருக்கின்றன என்றார்கள். குருகுலத்தின் பேரறச் செல்வன் கருபீடம் புகவிருக்கிறான் என்றனர்.

ஐந்தாம் முறை உருள்கற்கள் உருட்டப்பட்டபோது அனைத்தும் வெண்ணிறமாக விழுந்தது. காற்றில் மிதந்துவந்த நீலமயிலிறகொன்று களத்தின் மையத்தில் வந்தமர்ந்தது. அக்கணம் அப்பால் எங்கோ ஆழியளந்தபெருமாளின் ஆலயத்தில் சங்கொலியும் எழுந்தது. முதுநிமித்திகர் கைகளைக்கூப்பியபடி கண்களில் விழிநீர் வழிய எழுந்து நின்று 'எந்தையே வருக! இம்மண்ணும் எங்கள் குலங்களும் பெருமைகொள்கின்றன!’ என்று கூவினார். குனிந்து குறிமுறை நோக்கிய அனைத்து நிமித்திகர்களும் கண்ணீருடன் கைகூப்பினர்.

அது ஏன் என்று நான் கேட்டேன். மூத்த நிமித்திகர் அதற்கு பதில் சொன்னார். ஒரு யுகத்தின் முடிவு என்பது ஒரு மனிதனின் முடிவேயாகும். இன்றியமையாத அழிவு அது. வலிமைகள் மறையும். நோய்பெருகும். இந்த மாபெரும் காட்டில் ஒன்று பிறிதொன்றுக்கு உணவாதலே அழியாநெறியுமாகும். அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும் என்றார்.

அங்கிருந்த அனைவருமே ஒரேகுரலில் உடல் விதிர்ப்புற எங்கே என்றுதான் கூவினோம். அதற்கு 'எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்’ என்றார் முதுநிமித்திகர்.

இருகரங்களையும் கூப்பி அவர் கூவினார் 'ஆக்கமும் அழிவும், வாழ்வும் மரணமும், இருப்பும் இன்மையும், நன்றும் தீதும் ஒரு நிறையளவையின் இரு தட்டுக்கள். ஒரு கணத்தின் ஒரு புள்ளியில் மட்டுமே அவை முற்றிலும் நிகராக அசைவிழந்து நிற்கின்றன. அந்த முழுமைக்கணத்தை அறிகையில்தான் மனித அகமும் முழுமைபெறுகிறது. அந்த முழுமைக்கணத்தில் முழுவாழ்க்கையையும் வாழ்பவன் காமகுரோதமோகங்களில் ஆடினாலும் யோகி. செயலாற்றாமலிருந்தாலும் அனைத்தையும் நிகழ்த்துபவன். மானுடன்போல புலன்களுக்குள் ஒடுங்கினாலும் வாலறிவன். அவன் வருவான்.'

ஆகவே அழிவு நல்லது என்றனர் நிமித்திகர். குருதிப்பெருநதியில்தான் அந்த இளநீல ஒளிமலர் விரியுமென்றால் அவ்வண்ணமே எழுக. நிணமலைக்கு அப்பால்தான் அந்த இளஞாயிறு எழுமென்றால் அதுவே நிகழ்க. கருமையும் வெண்மையுமான ஆட்டக்களத்தில் இருக்கும் காய்களனைத்தும் அவனுடைய விரல்களுக்காகக் காத்திருக்கின்றன எனில் அவ்வாறே ஆகுக என்றார். ஆம்! ஆம் ! ஆம்! என அங்கிருந்தவர்களனைவரும் குரலெழுப்பினர். அப்பால் நெய்த்திரிச்சுடர் ஒளியில் அமர்ந்திருந்த அஜபாலர் திகைத்த கல்விழிகளுடன் பார்த்திருந்தார்.

"அந்தச்செய்தி பிதாமகருக்கு சொல்லப்பட்டதா?" என்றாள் குந்தி. "இல்லை அரசி. பிதாமகர் பீஷ்மர் இப்போது சிந்துவின் கரையில் எங்கோ இருப்பதாகச் சொல்கிறார்கள். நகரை ஆள்வது அமைச்சர் விதுரர். அவர் தன் தமையனுக்கு எத்தனை அணுக்கமானவர் என அனைவரும் அறிவர். அவரிடம் சொல்வதெப்படி என்று அஞ்சுகிறார்கள் நிமித்திகர்கள். அனைத்துக்கும் மேலாக அதைச் சொல்வதனால் ஆவதொன்றுமில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்" என்றார் யூபாக்‌ஷர்.

"ஆம்" என்று குந்தி பெருமூச்சுவிட்டாள். "அறிந்துகொண்ட எதையாவது மனிதர்கள் உணர்ந்துகொண்டதாக வரலாறுண்டா என்ன?" யூபாக்‌ஷர் தொடர்ந்தார். "நகரில் தீக்குறிகள் இன்றும் தொடர்கின்றன அரசி. மெல்லமெல்ல நகரின் அனைத்துப்பறவைகளும் விலகிச்சென்றன. நகரமெங்கும் காகங்கள் குடியேறின. புராணகங்கையின் குறுங்காடுகள் மரங்களின் இலைகளைவிட காகங்களின் சிறகுகள் செறிந்து கருமைகொண்டிருக்கின்றன. அஸ்தினபுரியின் வெண்மாடமுகடுகள் காகங்களின் கருமையால் மூடப்பட்டிருக்கின்றன. நகர்மேல் கருமேகம் ஒன்று இறங்கியதுபோலிருக்கிறது. வெய்யோனொளியை முழுக்க காகச்சிறகுகள் குடித்துவிடுவதனால் நகரம் நடுமதியத்திலும் நிழல்கொண்டிருக்கிறது."

அரண்மனையில் அரசி அரசின் தலைமகனை கருவுற்றிருக்கிறாள் என்பது நகர்மக்களை கொண்டாடச்செய்யவேண்டிய செய்தி. ஆனால் அனைவரும் அஞ்சி அமைதிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் படுவதெல்லாம் அவநிகழ்வுகள் மட்டும்தான். அரசி கருவுற்ற செய்தியை நாற்பத்தொருநாட்களுக்குப்பின் மருத்துவர் உறுதிசெய்தனர். அரண்மனை கோட்டைவாயிலில் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை அறிவிக்கும் பொன்னிறக்கொடி மேலேறியது. வைதிகர்களும் சூதர்களும் அக்கருவை வாழ்த்தினர்.

அரண்மனையில் முறைப்படி ஏழுநாட்கள் சூசீகர்ம நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரண்மனை முற்றிலும் தூய்மைசெய்யப்பட்டது. வைதிகர்கள் தூய்மைசெய்யும் வேள்விகளை செய்து அப்புகையால் அனைத்து அறைகளையும் நீராட்டினர். மருத்துவர்கள் நூற்றெட்டுவகை மூலிகைகளை பீலித்தோரணங்களாகக் கட்டி அறைகளின் காற்றை நலமுடையதாக்கினர். வைதாளிகர் வரவழைக்கப்பட்டு மந்திரத்தகடுகள் எழுதி அரண்மனைமூலைகளெங்கும் அமைக்கப்பட்டு கண்ணுக்குத்தெரியாத தீயிருப்புகள் விலக்கப்பட்டன.

விண்ணாளும் வேந்தர்களில் ஒருவன் மண்ணாள வருவதற்கான அழைப்பாக பும்ஸவனச் சடங்கு நிகழ்ந்தபோது அரசியைப்பார்த்து புகழ்ந்துபாடுவதற்காக சூதர்களாகிய நாங்களும் சென்றோம். அரண்மனையின் சடங்குகளைப்பாடுவது அங்கே கிடைக்கும் பரிசுகளுக்காக மட்டும் அல்ல. அரண்மனைச்செய்திகள்தான் நாங்கள் ஊர்மக்களிடமும் பாடவேண்டியவை. எங்களை நகரங்களிலும் கிராமங்களின் அதன்பொருட்டே வரவேற்று அமரச்செய்கிறார்கள். அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கான சூதர்கள் அரண்மனைமுற்றத்தில் அந்தப்புர வாயிலை நோக்கி காத்து நின்றோம்.

அரசி காந்தாரி படிகளிறங்கி வரக்கண்டு நாங்கள் வாழ்த்தொலி மறந்து நின்றுவிட்டோம். இரு தங்கையரும் தோள்பற்ற தளர்ந்த முதியவள்போல அவள் வந்தாள். இலைமூடிய காய்போல வெளுத்துப்போயிருந்தது அவள் உடல். முன்நெற்றி மயிர் உதிர்ந்து வகிடு விலகியிருந்தது. கன்னம் பழைய உடுக்கையின் தோல் போல வீங்கிப் பளபளத்தது. உதடுகள் வெளுத்து வீங்கி வாடிய செந்தாமரை போலிருந்தன. அரசியே, அவள் கருமுதிர்ந்து கடுநோய் கொண்டவள் போலிருந்தாள். அவள் வயிறு அப்போதே இரட்டை காளை வாழும் கருப்பசுவின் வயிறென புடைத்துத் தொங்கியது.

அரசிக்கு ஆறுமாதமாவது கருவளர்ச்சியிருக்கும் என்றனர் விறலியர். எக்காரணத்தாலோ அந்த உண்மை மறைக்கப்படுகிறது என்றனர் இளைய சூதர். ஆனால் முதுசூதர் நால்வர் மூன்றுமாதம் முன்னால் அரசியைக் கண்டிருந்தனர். அப்போது அவள் புதியகுதிரை போல இருந்தாள் என்று அவர்கள் சான்றுரைத்தனர். எவருக்கும் ஏதும் சொல்லத்தெரியவில்லை. சந்தனமணைமேல் விரித்த செம்பட்டில் வந்து அமர்ந்த காந்தாரத்து அரசி தன் இருகைகளையும் இருபக்கமும் ஊன்றி கால்களை மெல்ல மடித்து பக்கவாட்டில் சரிந்து அமர்ந்தாள். இரு கைகளையும் ஊன்றியபடிதான் அவளால் அமரமுடிந்தது. அருகே தன் தங்கையரை அமரச்செய்து அவர்களின் தோள்களில் சாய்ந்தே அவளால் தலைதூக்கமுடிந்தது.

மூன்றாம் மாதம் அஸ்தினபுரியின் நகர்க்காவல்தெய்வங்கள் ஊன்பலி கொடுத்து நிறைவுசெய்யப்பட்டனர். முப்பெரும் கடவுளர்க்கும் முறைப்படி பூசைகள் செய்யப்பட்டன. வெற்றியருள் கொற்றவைக்கும் நிலமங்கைக்கும் பொன்மகளுக்கும் கலைமகளுக்கும் வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் அரண்மனைக்கு பூசகர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருநாளும் அதிகாலையில் பூசைச்சடங்கை அறிவித்து காஞ்சனம் முழங்கிக்கொண்டிருந்தது. காந்தாரத்து அரசி பெருங்காயை சிறுகாம்பு தாங்கியதுபோல கருக்கொண்டிருக்கிறாளென அறிந்திருந்தமையால் நாங்கள் அவளைத்தான் பார்க்க விழைந்தோம்.

கொற்றவை ஆலயத்தருகே அரசரதம் வந்து நிற்க அவள் வெளியே காலடி எடுத்துவைத்தபோது அந்தப்பாதங்களைக் கண்டு விறலியர் மூச்சிழுக்கும் ஒலி கேட்டது. அரசியின் வெண்ணிறப்பாதம் வீங்கி அதில் சிறுவிரல்கள் விரைத்து நிற்க வெண்பசுவின் காம்புகள் புடைத்த அகிடுபோல் இருந்தது அது. அவள் உடலை வெண்பட்டால் மூடி மெல்ல நடக்கச்செய்து ஆலயமுகப்புக்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு அடிவைக்கவும் அவள் மூச்சிரைக்க, உடல் அதிர, தளர்ந்து நின்றுவிடுவதைக் கண்டோம். அவள் கைகளை நான் கண்டேன். அவை நீரில் ஊறியவை போல வீங்கியிருந்தன. ஆலயமுகப்பில் அவள் நிற்பதற்காக தங்கையர் பற்றிக்கொண்டனர். அவள் வயிறு தரையை நோக்கி கனத்துத் தொங்குவதாகத் தோன்றியது. வயிற்றுக்குள் இருப்பது இரும்புக்குழவி என்றும் அது தோல்கிழிந்து மண்ணில்விழப்போகிறதென்றும் நினைத்தேன்.

அரசி, குழந்தைக்கான சடங்குகளை கருபுகும் கணம் முதல் வகுத்துள்ளன நூல்கள். பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறது ‘நான் யார்?’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கரு’ என உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.

ஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.

சீமந்தோன்னயனத்துக்கு பெண்கள் மட்டுமே செல்லமுடியும். என் துணைவி சென்றுவிட்டு மீண்டு என்னிடம் அங்கு கண்டதைச் சொன்னாள். அவள் கண்டது முற்றிலும் புதிய காந்தார அரசியை. அவளுடைய வலிவின்மையும் சோர்வும் முற்றாக விலகி நூறுபேரின் ஆற்றல் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். வயிறுபுடைத்து பெருகி முன்னகர்ந்திருக்க அவள் பின்னால் காலெடுத்துவைத்துவரும் பசுவைப்போலிருந்தாள் என்றாள். அரண்மனைக்கூடத்துக்கு அவள் நடந்துவந்த ஒலி மரத்தரையில் யானைவருவதுபோல அதிர்ந்தது என்றும் அவள் உள்ளே நுழைந்தபோது தூணில் தொங்கிய திரைகளும் மாலைகளும் நடுங்கின என்றும் சொன்னாள்.

அரசி, ஏழாம் மாதம் முடிவில் சூதர்களுக்கு பொருள்கொடை அளிக்கும் நிகழ்வில் நான் மீண்டும் அவளைப்பார்த்தேன். அரண்மனை முகப்பிலிட்ட அணிப்பந்தலில் பொற்சிம்மாசனத்தில் அவள் வந்து அமர்வதை முற்றத்தில் நெடுந்தொலைவில் நின்று கண்டேன். அவள் மும்மடங்கு பெருத்திருந்தாள். பெருத்த வெண்ணிற உடல்மீது சிறிய தலை மலையுச்சிக் கரும்பாறைபோல அமர்ந்திருந்தது. கழுத்து இடைதூர்ந்துவிட்டிருந்தது. முகம்பருத்து கன்னங்கள் உருண்டமையால் மூக்கும் உதடுகளும் சிறியவையாகியிருந்தன. பெருந்தோள்களின் இருபக்கமும் கைகள் வெண்சுண்ணத்தூண்கள்போலிருந்தன.

அவளை அணுகி அவள் பாதத்தருகே குனிந்து என் கிணையைத்தாழ்த்தி வாழ்த்தொலித்து பரிசில் பெற்றுக்கொண்டேன். அவள் தன் வயிற்றை ஒரு மென்பஞ்சுமெத்தையில் தனியாக தூக்கி வைத்திருப்பதைக் கண்டு என் உடல்சிலிர்த்தது. பரிசைப்பெற்று மீண்டபோது என்னால் நடக்கவே முடியவில்லை. விழா முடிந்தபின்னர் பெருமுரசு ஒலித்ததும் அவள் எவர் துணையும் இல்லாமல் கையூன்றி எழுந்தாள். படிகளில் திடமாகக் காலடி எடுத்துவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்துசென்றாள். அரசி, அப்போது அவள் உடலே கண்ணாகி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது. இரும்பாலான உடல்கொண்டவள் போல செல்லும் வழியில் சுவர்களை இடித்துத் துளைத்துச்செல்வாளென்று தோன்றியது.

"தாங்கள் கருவுற்றிருக்கும் செய்தி அஸ்தினபுரிக்கு வந்துசேர்ந்தபோது காந்தாரத்து அரசி தன் அருகே நின்றிருந்த தன் தங்கையிடம் 'நல்லது, வாழ்நாளெல்லாம் நம் மைந்தனுக்கு அகம்படி சேவைசெய்ய ஒருவன் கருக்கொண்டிருக்கிறான் அவன் வாழ்க' என்று சொன்னாள். அதைக்கேட்டு பிற காந்தாரத்து அரசியரும் சேடிப்பெண்களும் நகைத்தனர் என்று சேடியர் அரண்மனையில் பேசிக்கொண்டனர்" யூபாக்‌ஷர் சொன்னார்.

குந்தி பெருமூச்சுவிட்டு "சூதரே, காந்தாரியின் கருநிறைவுநாள் ஆகிவிட்டதல்லவா?" என்றாள். "ஆம் அரசி... நான் அங்கிருக்கையிலேயே பத்துமாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் சென்று கருவைநோக்கி மீள்கிறார்கள். கருமுதிர்ந்துவிட்டதென்றும் ஆனால் மண்ணுக்கு வருவதற்கு அது இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அரண்மனையின் முன் காஞ்சனம் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது."

"நான் அஸ்தினபுரியை விட்டுவந்து ஒருமாதமாகிறது அரசி" என்றார் யூபாக்‌ஷர். "அங்கே மைந்தன் பிறந்திருப்பான் என்றே நினைக்கிறேன்." "இல்லை... பிறந்திருந்தால் மூன்றுநாட்களுக்குள் இங்கே செய்திவந்திருக்கும்" என்றாள் குந்தி. அனகை நீட்டிய பரிசிலை வாங்கி யூபாக்‌ஷருக்கு அளித்து "நலம் திகழ்க! நன்றியுடையேன் சூதரே. இத்தனை தொலைவுக்கு வந்து அனைத்துச்செய்திகளையும் அங்கிருந்து நானே விழியால் பார்ப்பதுபோலச் சொன்னீர்கள்" என்றாள்.

"அரசி, சூதர்கள் விழிகள். உடலின் விழிகள் அருகிருப்பவற்றைக் காட்டுகின்றன. நாங்கள் தொலைவிலிருப்பவற்றைக் காட்டுகிறோம்" என்றார் யூபாக்‌ஷர். "யார் எங்களைக்கொண்டு பார்க்கிறார்கள் என்று நாங்கள் எண்ணுவதில்லை. அதன்மூலம் என்ன நிகழ்கிறது என்று கணிப்பதுமில்லை. எங்களிடம் மந்தணமும் மறைவுப்பேச்சும் இருக்கலாகாது. நாங்கள் சொற்களின் ஊர்திகள் மட்டுமே" என்று பரிசிலை கண்களில் ஒற்றிக்கொண்டு "வெற்றியும் புகழும் கொண்ட நன்மகவு நிகழ்க!" என்று வாழ்த்திவிட்டு பின்பக்கம் காட்டாமல் விலகிச் சென்றார்.

குந்தி நிறைவயிற்றை வலக்கையை ஊன்றி மெல்லத் தூக்கி கால்களை விரித்து எழுந்தபோது கால்களின் நடுவே கருவாசலில் நீரின் எடை அழுத்துவதுபோல உணர்ந்தாள். அனகை கைநீட்ட மெல்லப் பற்றிக்கொண்டு "நான் நீர்கழிக்கச் செல்லவேண்டும்" என்றாள். "ஆம் அரசி" என்று அனகை அவளை அழைத்துச்சென்றாள். செல்லும்போது அவளுக்கு மூச்சுவாங்கியது. "அப்படியென்றால் பதினொரு மாதமாகிறது காந்தாரியின் கருவுக்கு... இன்னும் ஏன் மைந்தன் பிறக்கவில்லை?" என்றாள். அனகை "சில கருக்கள் சற்றுத் தாமதமாகலாம் அரசி" என்றாள். "தீக்குறிகள் உள்ளனவோ அன்றி கதையோ தெரியவில்லை. ஆனால் மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது உண்மை" என்றாள் குந்தி. "ஆம்" என்று அனகை சொன்னாள்.

"நமது மைந்தனுக்கு நாம் பும்ஸவனச் சடங்கை செய்யவில்லை அல்லவா?" என்றாள் குந்தி. "அரசி, நாம் அரசமைந்தனுக்குரிய பும்ஸவனத்தை செய்யவில்லை. ஆகவே குருதிக்கொடையும் மன்றுஅமர்தலும் நிகழவில்லை. அரசர் நம் மைந்தன் வேதஞானம் கொண்ட முனிவராகவேண்டும் என்றே விரும்புகிறார். வைதிகமைந்தனுக்குரிய பும்ஸவனம் தென்னெரி மூட்டி அவியளித்து நிகழ்த்தப்பட்டது" என்றாள் அனகை. "ஆம், அவன் மரவுரியன்றி ஆடையணியலாகாது. அரணிக்கட்டையன்றி படைக்கலம் ஏந்தக்கூடாது. சடைக்கொண்டையன்றி முடிசூடவும் கூடாது என்றார் அரசர்" என்றாள் குந்தி, மூச்சிரைக்க தன் முழங்காலில் கைகளை ஊன்றி நடந்தபடி.

சோலைவழியில் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்த குந்தி மூச்சிரைப்பு அதிகரித்து கழுத்து குழிந்து இழுபட வாயை குவியத்திறந்து நின்றாள். மேலுதட்டில் கொதிகலத்து மூடி போல வியர்வை துளித்தது. "நான் எப்படி இருக்கிறேன்? என் கால்களும் சற்று வீங்கியிருக்கின்றன, பார்த்தாயா?" அனகை புன்னகைத்தபடி "இந்த அளவுக்காவது பாதங்கள் வீங்கவில்லை என்றால் அது கருவுறுதலே அல்ல அரசி... அஞ்சவேண்டியதில்லை. நான் இன்றுவரை இத்தனை இலக்கணம்நிறைந்த கருவைக் கண்டதும் கேட்டதுமில்லை." என்றாள். குந்தி "ஆம், அப்படித்தான் மருத்துவரும் சொன்னார்" என்றாள்.

"என் கனவுகள் என்ன என்று மருத்துவர் கேட்டார்" என்றாள் குந்தி. "என் கனவில் நீலநிறமான மலர்கள் வருகின்றன. குளிர்ந்த மழைமேகங்கள், இளந்தூறலில் சிலிர்த்து அசையும் குளிர்ந்த சிறுகுளங்கள், நீலநிறமாக நீருக்குள் நீந்தும் மீன்கள்..." குந்தி மூச்சிரைத்தாள். "இன்று சற்று அதிகமாகவே மூச்சிரைக்கிறது அனகை" என்றாள். அவள் உடலெங்கும் பூத்த வியர்வை காற்றில் குளிர்ந்தது. முதுகின் வியர்வை ஓடை வழியாக வழிந்து ஆடைக்குள் சென்றது. வியர்வையில் தொடைகள் குளிர்ந்தன. நிற்கமுடியாமல் கால்கள் வலுவிழந்தன. "அப்படியென்றால் பேசவேண்டியதில்லை... குடிலுக்குச் செல்வோம்" என்றாள் அனகை. "பெரிதாக ஒன்றுமில்லை. அதிகநேரம் கதைகேட்டு அமர்ந்துவிட்டேன்... ஆனால் என் நீர்அழுத்தம் நின்றுவிட்டது... வியப்பாக இருக்கிறது."

அனகை "சற்று விரைவாக நடக்கலாமே அரசி" என்றாள். "ஒன்றுமில்லை எனக்கு... இன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன். கருத்தாங்கத் தொடங்கியதுமுதல் நான் முன்னிரவில் இருமுறை விழித்துக்கொள்வதுண்டு. ஆகவே அதிகாலையில் நன்கு துயின்றுவிடுவேன். இன்று காலை விழிப்பு வந்ததும் விடிந்துவிட்டதா என்று பார்த்தேன். வெளியே பறவை ஒலிகள் இல்லை. புரண்டுபடுத்தபோது வயிற்றின் எடையை உணர்ந்தேன். நீரை அழுத்தமாக நிரப்பிய தோல்பைபோல. நீர் உள்ளே குமிழியிட்டு அசைவதுபோல. கண்களைமூடிக்கிடந்தபோது ஆழமான தனிமையுணர்ச்சியை அடைந்தேன்."

"நான் அருகில்தானே படுத்திருந்தேன் அரசி?" என்றாள் அனகை. "ஆம்... தனிமையுணர்ச்சி அல்ல அனகை... இது ஒருவகை வெறுமையுணர்ச்சி. பொருளின்மையுணர்ச்சி என்று இன்னும் சரியாகச் சொல்லலாமோ. ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று அகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஒருகணத்தில் உளமுருகி அழத்தொடங்கினேன். என் செயலில்லாமலேயே அழுதுகொண்டிருந்தேன். அழுது அழுது ஓய்ந்தபோதுதான் முதல்பறவையின் ஒலி கேட்டது. ஒரு சிறுபறவை. அதன் அன்னை ஏதோ சொன்னது. பின்னர் பல பறவைகள் ஒலிக்கத் தொடங்கின" குந்தி மூச்சிரைத்து "என் வயிறு தனியாக அசைவதுபோல இருக்கிறது" என்றாள்.

குந்தி அவளை அறியாமலேயே அமர்ந்துகொள்வதற்கு இடம்தேடுவது போல கையால் துழாவினாள். கையில் பட்ட தூணை மெல்ல பற்றிக்கொண்டு நின்றாள். "ஒவ்வொருநாளும் உடலின் எடை மாறிவிடுகிறது. அதற்கேற்ப கால்கள் பழகுவதற்குள் எடை இன்னொருபக்கமாகச் சென்றுவிடுகிறது..." என்றாள். "இது உங்களுக்கு முதல் கரு அல்லவே" என்றாள் அனகை. "ஆம், ஆனால் நான் அச்சத்தைமட்டுமே முதல்கருவில் அடைந்தேன். இம்முறை விந்தையை மட்டும் அறிகிறேன்..."

கால்களை இழுத்து இழுத்து வைத்து நடந்த அவள் வாய் திறந்து "ஆ!" என்றாள். "என் வயிற்றுக்குள் அவன் உதைப்பது போல உணர்ந்தேன்!" வயிற்றுக்குள் நிறைந்திருந்த திரவத்தில் சிறிதும் பெரிதுமான குமிழிகள் மிதந்து சுழித்தன. ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன. மிகப்பெரிய கொப்புளம் ஒன்று உடைந்ததுபோது குந்தி தன் கால்களுக்கு நடுவே வெம்மையான கசிவை உணர்ந்தாள். "என்னால் முடியவில்லை அனகை" என்றாள்.

"சற்று தொலைவுதான் அரசி... அப்படியே சென்றுவிடலாம். அமர்ந்தால் மீண்டும் எழ நேரமாகிவிடும்" என்றாள் அனகை. "ஆம்... என் கால்களில் நரம்புகள் தெறிக்கின்றன... இன்றுகாலை எழுந்ததுமே மனம் ஒழிந்துகிடப்பதுபோல உணர்ந்தேன். சொற்களெல்லாம் அந்த வெறுமையில் சென்று விழுவதுபோலத் தோன்றியது. மீண்டும் அழுகை வருவதுபோலிருந்தது" என்றாள் குந்தி. அவளை மீறி கண்களில் கண்ணீர் வர விம்மிவிட்டாள்.

"அரசி..." என்றாள் அனகை. "ஒன்றுமில்லை... ஏனோ அழுகை வருகிறது. என் அகம் என் கட்டுக்குள் இல்லை" என்றபடி குந்தி உதடுகளைக் கடித்தாள். கழுத்துச் சதைகள் இறுகின. ஆனால் உதடுகளை மீறி அழுகை வெளியே வந்தது. "ஆ" என்றாள். "என்ன ஆயிற்று அரசி?" என்றாள் அனகை. "கல்லை மிதித்துவிட்டேன். சற்று கால் தடமிழந்தது." பின்பு அவள் நின்று "இல்லை அனகை. நான் எதையும் மிதிக்கவில்லை. என் வலதுகால் நரம்பு இழுபட்டு வலிக்கிறது" என்றாள். "நான் அந்த மரத்தடியில் சற்றே அமர்கிறேன்."

"இருங்கள் அரசி" என்றபடி அனகை ஓடிச்சென்று அங்கே கிடந்த பெரிய சருகுகளை அள்ளி மெத்தைபோலப் பரப்பினாள். அதன்மேல் இலைகளை ஒடித்துப்பரப்பிவிட்டு "அமருங்கள்" என்றாள். குந்தி அனகையின் கைகளைப்பற்றி கால்களை மெல்ல மடித்து அமர்ந்துகொண்டாள். "என் தோளில் ஒரு சுளுக்கு விழுந்தது போலிருக்கிறது" என்றாள். "சுளுக்கு விலாவுக்கு நகர்கிறது அனகை." அனகை பரபரப்புடன் "இங்கேயே சற்றுநேரம் படுத்திருங்கள் அரசி. நான் குடிலுக்குச் சென்று வருகிறேன்..." என்றபடி திரும்பி ஓடினாள். "ஏன்... எனக்கு ஒன்றுமில்லை. ஒரு சுளுக்குதான்..."

அனகை திரும்பிப்பாராமல் குடிலுக்கு ஓடினாள். அங்கே தினையை முற்றத்தில் காயவைத்துக்கொண்டு கிளியோட்டிக்கொண்டிருந்த மாத்ரியிடம் "உடனே சென்று முனிபத்தினிகளையும் மருத்துவச்சிகளையும் சிராவணத்துக்குச் செல்லும் பாதைக்கு வரச்சொல்லுங்கள் இளைய அரசி... அரசி மைந்தனைப் பெறப்போகிறார்" என்றாள். அங்கே அவள் முன்னரே எடுத்துவைத்திருந்த பொருட்கள் கொண்ட மூங்கில்கூடையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஒருகணம் திகைத்து நின்ற மாத்ரியும் மறுபக்கம் ஓடினாள்.

சிராவணத்தை நோக்கி மூச்சிரைக்க ஓடியபோது அனகை தன் அகம் முழுக்க பொருளில்லாத சொற்கள் சிதறி ஓடுவதை உணர்ந்தாள். அவ்வெண்ணங்களை அள்ளிப்பற்றித் தொகுக்க முனைந்த தன்னுணர்வு முதலில் கேட்ட அழுகையைத் தவறவிட்டுவிட்டது. அடுத்த கணம் குளிர்நீர் பட்டதுபோல திகைத்து நின்றாள். பின்பு ஓடிச்சென்று குந்தியின் விரித்த கால்கள் நடுவே குனிந்து பார்த்தாள். இலைகளில் நிணநீரும் குருதியும் வெம்மையுடன் சிந்திப்பரவியிருக்க மூடிய குருத்துக் கைகளுடன் நெளிந்த சிறுகால்களுடன் சிவந்த வாய்திறந்து குழந்தை ஓசையின்றி அசைந்து கொண்டிருந்தது.

அனகை அதை மெல்ல தன் கையில் எடுத்து தலைகீழாகத் தூக்கி அசைத்தாள். சிறுமூக்கைப்பிழிந்து உதறியபோது குழந்தை அழத்தொடங்கியது. அவள் அதன் உடலின் வெண்நிண மாவை மென்பஞ்சால் துடைத்து கருக்கொடியை வெட்டி தொப்புளருகே மடித்து குதிரைவால்முடியால் கட்டித் தூக்கி தாயின் அருகே படுக்கவைத்தாள். கீழிருந்த பனிக்குடத்தை அவள் அகற்றமுற்பட்டபோது மருத்துவச்சிகள் ஓடிவருவதைக் கண்டாள்.

குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு குந்தி விழித்து மயக்கம் படர்ந்த கண்களால் "எங்கே?" என்றாள். "அதோ உங்கள் அருகேதான்" என்றாள் அனகை. குந்தி திடுக்கிட்டு ஒருக்களித்து குழந்தையைப் பார்த்தாள். அதை மெல்ல அள்ளி தன் முலைகளுடன் அணைத்தபின் முலைக்காம்பை கிள்ளி இழுத்து அதன் சிறிய வாய்க்குள் வைத்தாள். அழுதுகொண்டிருந்த குழந்தை முலையைக் கவ்வும் ஒலி மொட்டுகள் வெடித்து மலரும் ஒலி என அனகை எண்ணிக்கொண்டாள்.

சதசிருங்கத்தின் பனிமலைகளுக்குமேல் விண்ணில் நீண்டு ஒளிரும் வாலுடன் ஒரு விண்மீன் தோன்றியது. சிலகணங்களுக்குப்பின் அது வெண்மேகத்தில் மறைந்துகொண்டது. அதை எவருமே காணவில்லை. "அனகை" என்று மெல்லிய குரலில் குந்தி கேட்டாள். "ஷத்ரிய முறைப்படிப் பார்த்தால்கூட இவன்தான் குருகுலத்திற்கு மூத்தவன். அரியணைக்கு உரியவன், இல்லையா?"

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 2 ]

உள்ளே மருத்துவச்சிகள் காந்தாரியை பார்த்துக்கொண்டிருக்கையில்தான் உளவுச்சேடியான சுபலை மெல்ல வந்து கதவருகே நின்றாள். சத்யசேனை திரும்பி அவளைப்பார்த்து ‘இரு’ என்று கை காட்டினாள். அவள் சற்றுநேரம் காத்திருந்துவிட்டு மேலும் அருகே வந்து “அரசி, ஒரு முதன்மைச்செய்தி” என்றாள். “இரு என்று சொன்னேன் அல்லவா?” என்று சத்யசேனை சீறினாள். சுபலை தலைவணங்கி விலகி நின்றாள்.

முதிய மருத்துவச்சியான பிங்கலை வெளியே வர இரு மருத்துவச்சிகள் அவளைத் தொடர்ந்துவந்தனர். சத்யசேனை அருகே சென்று “என்ன கண்டீர்கள் மருத்துவச்சிகளே?” என்றாள். “முன்னர் சொன்னதுதான் அரசி. கரு முதிர்ந்துவிட்டதென்றே தோன்றுகிறது. ஆனால் அது இன்னும் கதிர்க்கனம் கொண்டு நிலம் நோக்கவில்லை.” சத்யசேனை “அதற்கு ஏதும் செய்யமுடியாதா?” என்றாள்.

“அரசி, கருவறையில் வளரும் உயிர் விதையிலிருந்து செடிமுளைப்பதுபோல வானோக்கி எழுகிறது. பத்துமாதம் அதற்கு விண் மட்டுமே உள்ளது, மண் இல்லை. கருமுதிர்ந்து அதற்குள் சித்தம் அமைந்ததுமே அது நான் என்று உணர்கிறது. நான் மண்ணில்வாழவேண்டியவன், மண்ணை உண்டு மண்ணால் உண்ணப்படவேண்டியவன் என்று அறிகிறது. அக்கணமே அதை மண்ணும் அறிந்துகொள்கிறது. கண்ணுக்குத்தெரியாத கைகளால் நிலமங்கை அதை இழுக்கிறாள். அது கீழ்நோக்கித் திரும்பி மண்ணை எதிர்கொள்கிறது. அதில் மானுடர் செய்வதேதும் இல்லை. மண்மகளும் உயிர்களும் கொள்ளும் விளையாட்டு அது” மருத்துவச்சி சொன்னாள்.

“இதை பலர் பலவகையில் சொல்லிவிட்டனர். நீங்கள் புதியதாக ஏதேனும் சொல்கிறீர்களா?” என்றாள் சத்யசேனை. “அரசி, அனைவரும் ஒன்றையே சொன்னால் நீங்கள் மகிழத்தானே வேண்டும்? அது உண்மை என்பது மேன்மேலும் உறுதியாகிறதல்லவா?” என்றாள் மருத்துவச்சி. “வாயைமூடு, நீ எனக்கு கற்றுத்தரவேண்டியதில்லை. அரசியரின் முன் எப்படிப்பேசவேண்டுமென்று கற்றுக்கொள்” என்று சத்யசேனை கூவினாள். “அரசி, நாங்கள் மருத்துவத்தை மட்டுமே கற்றுக்கொள்கிறோம்” என்றாள் பிங்கலை. “மேற்கொண்டு ஒரு சொல் பேசினால் உன் நாவை துண்டிக்க ஆணையிடுவேன்” என்றாள் சத்யசேனை. “அஸ்தினபுரி ஒரு மருத்துவச்சியை இழப்பதென்றால் அவ்வண்ணமே ஆகுக” என்றாள் பிங்கலை.

சத்யவிரதை கைநீட்டி “அக்கா நீ சற்று பேசாமலிரு” என்றபின் “மருத்துவச்சிகளே தமக்கையின் கரு இப்போது பன்னிரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது. இவ்வாறு இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?” என்றாள். “நாங்கள் கண்டதுமில்லை, எங்கள் நூல்கள் இதை அறிந்ததுமில்லை… ஆனால் எங்கள் மருத்துவமறிந்த கைகள் சொல்கின்றன உள்ளே மைந்தர் நலமாக இருக்கிறார். முழுவளர்ச்சி கொண்டிருக்கிறார். தன் நாளுக்காகக் காத்திருக்கிறார். அவர் இன்னும் வெளியேற முடிவெடுக்கவில்லை, அவ்வளவுதான்.” சத்யவிரதை பெருமூச்சுடன் “நீங்கள் செல்லலாம்” என்றாள். “மறுமுறை இந்தக்கிழவிகளைக் கூட்டிவராதே… இவர்களுக்கு அவைமுறைமைகள் ஏதும் தெரியவில்லை” என்றாள் சத்யசேனை.

அவர்கள் சென்றபின் சத்யசேனை திரும்பி சுபலையிடம் “என்ன?” என்றாள். “தங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும்.” “சொல்” என்றபடி சத்யசேனை திரும்பிச்சென்றாள். சுபலை பின்னால் வந்துகொண்டே “சதசிருங்கத்திலிருந்து செய்தி வந்துள்ளது. குந்திதேவிக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்” என்றாள். “நல்லது… எல்லா உயிர்களும்தான் குட்டிபோடுகின்றன. இது ஒருசெய்தியா என்ன?” என்றாள் சத்யசேனை. சத்யவிரதை “பேரரசிக்கு செய்திவந்ததா?” என்றாள். “ஆம், இன்று காலையே பறவைவழியாகச் செய்திவந்தது… காலையில் செய்தியைக் கேட்டதுமே பேரரசி அமைச்சரை வரச்சொன்னார்.”

சத்யசேனை நகைத்து “சரிதான்… சூத்திரப்பெண்ணுக்குப் பிறந்தாலும் பேரரசியின் குருதி அல்லவா?” என்றாள். சத்யவிரதை “பேரரசி எதற்காக அமைச்சரை அழைக்கவேண்டும்?” என்றாள். “தெரியவில்லை அரசி. அவர்கள் காலைமுதல் அவையாடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து அமைச்சர்களும் இப்போது அங்கிருக்கிறார்கள்.” சத்யசேனை சிலகணங்கள் சிந்தித்தபின் “ஒரு யாதவக்குழந்தை பிறந்ததற்கு இத்தனை சிந்தனைகளா?” என்றாள். பின்பு “எப்படியோ போகட்டும். நாம் நம் தமக்கையின் நலனை எண்ணுவோம்” என்றாள். சுபலையிடம் செல்லும்படி சைகை காட்ட அவள் தலைவணங்கி விலகினாள்.

அவர்கள் உள்ளே சென்றார்கள். இரு மருத்துவச்சிகள் இருபக்கமும் இருக்க காந்தாரி பஞ்சுமெத்தைமேல் கண்மூடிக் கிடந்தாள். அதன்மேல் விரிக்கப்பட்ட மான்தோல் விரிப்பில் அவளுடைய பெரிய வெண்ணிறமான கைகள் இரு தனி உடல்கள்போல செயலிழந்து விழுந்துகிடந்தன. அவற்றில் காப்புகளும் இறைச்சரடுகளும் நீர்நிலையோரத்து ஆலயத்தில் நிற்கும் வேண்டுதல்மரத்தின் கிளை என அவற்றை காட்டின. அவள் எத்தனைபெரிதாகிவிட்டாளென்று சத்யசேனை எண்ணிக்கொண்டாள். ஆறாம் மாதம் முடிந்ததும் அவளுக்கு பெரும்பசி தொடங்கியது. ஒவ்வொரு கணமும் உணவு உணவு என்று கூவிக்கொண்டிருந்தாள். அவள் உண்ணுவதைக் கண்டு திகைத்து சத்யசேனை மருத்துவச்சியிடம் “இவ்வளவு உணவையும் தமக்கையால் செரித்துக்கொள்ளமுடியுமா?” என்றாள். “அரசி, உண்ணுவது அவர்களல்ல, கரு” என்றாள் மருத்துவச்சி. சத்யவிரதை கசப்புடன் “வேளைக்கு நூறு அப்பம் உண்ணும் தந்தையின் விந்துவல்லவா அது?” என்றாள். அச்சத்துடன் “சும்மா இருடீ” என்றாள் சத்யசேனை.

அறைக்குள் காந்தாரி அருகே நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “கண்விழித்தார்களா?” என்று சத்யசேனை கேட்டாள். “அவர்கள் இவ்வுலகிலேயே இல்லை அரசி. கனவுகளுக்கும் நிகழ்வனவற்றுக்கும் அவர்களால் வேறுபாடு காணமுடியவில்லை. மதவேழங்கள் உலவும் ஓர் உலகில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.” பெருமூச்சுடன் சத்யசேனை “அவர்களின் உயிர் மீண்டால்போதும் என்று தோன்றுகிறது” என்றாள். சத்யவிரதை “உயிருக்கு இடர் உண்டா?” என்றாள். மருத்துவச்சி தயங்கி “மணியுடை சிப்பிக்கு உயிர் எளிதல்ல என்று எங்கள் நூல்கள் சொல்கின்றன” என்றாள். சத்யசேனை சினத்துடன் “வாயைமூடு…எங்களுக்கு எங்கள் தமக்கைதான் மணி” என்றாள்.

சேடி ஊர்ணை வந்து அம்பிகையின் வரவை அறிவித்தாள். “இப்போது எதற்காக வருகிறார்கள்?” என்றாள் சத்யசேனை எரிச்சலுடன். சத்யவிரதை “குழந்தையைப்பற்றிய எதிர்பார்ப்பு… குழந்தையைப்பற்றி மட்டுமே விசாரிக்கிறார்கள். தமக்கையை அதன்பொருட்டே பார்க்க வருகிறார்கள்” என்றாள். சத்யசேனை ஏதோ சொல்ல வாயெடுக்க அம்பிகை உள்ளே வந்து காந்தார அரசியரின் வணக்கத்தை சிறு தலையசைவால் ஏற்றபின் “எப்படி இருக்கிறாள்?” என்று மருத்துவச்சியிடம் கேட்டாள். “நலமாகத்தான் இருக்கிறார்கள்…” என்றாள் மருத்துவச்சி. “நலம் என்றால்? குழந்தை எப்போது பிறக்கும்? அதைச்சொல்” என்றாள் அம்பிகை. “குழந்தை நலமாக இருக்கிறது மூத்தஅரசி. ஆனால் அது இன்னும் திரும்பவில்லை.”

“திரும்பாவிட்டால் திருப்பமுடியுமா? மருத்துவர்கள் சிலர் கைகளால் அதைச்செய்வார்களல்லவா?” என்றாள் அம்பிகை. “ஆம், ஆனால் தலைதிரும்பாமலேயே வலி வந்துவிட்டால் மட்டுமே அதைச் செய்வோம். வலிவராமல் அதைச்செய்தால் உயிருக்கு ஆபத்து.” “குழந்தையின் உயிருக்கா?” என்றாள் அம்பிகை. மருத்துவச்சி “குழந்தையை மீட்டுவிடலாம்… தாயின் அகத்தில் ரணங்கள் நிகழ்ந்துவிடும். குருதிவழிதல் நிலைக்காமல் உயிர் அகலக்கூடும்” என்றாள்.

அம்பிகை சிலகணங்கள் அமைதியாக நின்றாள். அவள் உதடுகள் இறுகியசைய வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்தன. பின்பு “ஏன் தேர்ந்த மருத்துவரைக்கொண்டு அதைச்செய்யக்கூடாது? குருதி வழிந்தால் அதற்குரிய மருத்துவம் பார்ப்போம்…" என்றாள். "குழந்தை பிறக்கட்டும்… முழுவளர்ச்சியடைந்துள்ளது என்கிறார்கள். இன்றோ நாளையோ அதை வெளியே எடுக்கமுடியுமா?”

சத்யசேனை திகைத்து எழுந்து “என்ன பேசுகிறீர்கள்? எங்கள் தமக்கையைக் கொன்று குழந்தையை எடுக்கவிருக்கிறீர்களா என்ன?” என்றாள். “வரப்போகிறவன் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தி. அவனைப்பெறுவதற்காகவே உங்கள் தமக்கை இந்த நகருக்கு வந்தாள். அவள் அதைச்செய்யட்டும். வாழ்வதும் சாவதும் நம் கையில் இல்லை” என்றாள் அம்பிகை. கைகளை தூக்கி முன்னால் வந்தபடி கழுத்துநரம்புகள் புடைக்க “எங்கள் தமக்கையைத் தொட எவரையும் விடமாட்டோம்” என்றாள் சத்யவிரதை.

“அது உங்கள் கையில் இல்லை. இங்கே அரசும் அரசனும் உள்ளனர்” என்றாள் அம்பிகை. “போர்முனையில் நாளை இந்த மைந்தனுக்காக லட்சம்பேர் உயிர்துறப்பார்கள். அவன் அன்னை அவனுக்காக இப்போது உயிர்துறந்தால் ஒன்றும் குறைந்துவிடாது… ஷத்ரியர்களுக்கு வாழ்க்கையை விட சாவே முழுமையானது… சாவுக்கு அஞ்சுபவர்கள் முடிசூடலாகாது. அரியணையில் அமரவும் கூடாது…” சத்யவிரதை உடைந்த குரலில் “எங்கள் தமக்கையை சாகவிடமாட்டோம்” என்றாள்.

“யாருடைய சாவும் எனக்கொரு பொருட்டில்லை… தெரிகிறதா? இந்த நாட்டுக்கு யார் அரசர் என்பதே எனக்கு முக்கியம். இவள் மட்டுமல்ல நீங்களனைவரும், ஏன் இந்நகரின் அனைத்துப்படைகளும் இறந்தாலும் எனக்கு அது ஒரு செய்தியே அல்ல… நீ ஷத்ரியப்பெண் என்றால் இனிமேல் சாவைப்பற்றிப் பேசாதே" என்றாள் அம்பிகை. "எண்ணிப்பார், நீ என்ன தொழில்செய்கிறாய்? எதை உண்டுபண்ணுகிறாய்? என்ன தெரியும் உனக்கு? எதற்காக உனக்கு அறுசுவை உணவும் ஆடையணிகளும்? எதற்காக உனக்கு மென்பஞ்சுசேக்கையில் துயில்? ஏனென்றால் நீயும் ஒரு படைவீரனைப்போன்றவளே. நீயும் எந்நிலையிலும் சாவை எதிர்கொள்ளவேண்டும்…”

சொல்லிழந்து நின்றிருந்த அவர்களை நோக்கி அம்பிகை சொன்னாள் “அங்கே செய்திவந்திருக்கிறது தெரியுமா? அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்…” சத்யவிரதை “ஆம் கேள்விப்பட்டோம்” என்றாள். “என்ன புரிந்துகொண்டீர்கள்?” அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “என்ன புரியப்போகிறது உங்களுக்கு? காந்தாரத்தின் காட்டுக்குருதிக்கு எங்கே அரசியல் புரியும்? அவள் பெற்ற குழந்தைதான் குருவம்சத்தின் முதற்குழந்தை, தெரிந்துகொள்ளுங்கள். அவனுக்குத்தான் நாளை இவ்வரியணை உரிமையாகப்போகிறது… இதோ இவள் பன்னிரு மாதங்களாக ஊமைப்பாறைபோல கிடக்கிறாள்… இவள் வயிற்றுக்கருவில் இருக்கும் என் குருதியின் மைந்தன் அவளுடைய மைந்தனுக்கு அகம்படி நிற்பான்… தெரியுமா?”

சத்யசேனை சத்யவிரதை இருவரும் திகைத்துப்போய் நின்றார்கள். “இன்றே இவள் குழந்தையை வெளியே எடுத்தாகவேண்டும்… குழந்தை பிறந்து மூன்றுநாட்களாகின்றன என்று அறிவிப்போம்… நான் பேரரசியிடம் பேசுகிறேன். சௌபாலரும் பேசட்டும். பிதாமகர் நமக்களித்த வாக்குறுதியைச் சொல்வோம். குழந்தைக்கான ஜாதகர்மத்தை நாளையே செய்து அஸ்தினபுரியின் இளவரசனாக இவனை அறிவிப்போம். குந்தியின் மைந்தன் பிறந்த நாளுக்கு முன்னரே இவன் பிறந்துவிட்டான் என்று சூதர்களைப்பாடச்செய்வோம்…” அம்பிகை மூச்சுவாங்கினாள். “நமக்கு வேறுவழியில்லை. இப்போது நான் வருந்துவது எனக்காக அல்ல. சௌபாலருக்காக. பதினெட்டாண்டுகள் இங்கே தவம்செய்வேன் என்று அமர்ந்திருக்கிறார்… அவர் இச்செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வார்?”

சத்யசேனை பெருமூச்சு விட்டு “ஆனால் எங்கள் தமக்கையின் உயிருக்கு இடரளிக்கும் எதையும் செய்ய நாங்கள் ஒப்பமாட்டோம். எங்கள் தமையனிடம் தாங்கள் பேசலாம். ஒருபோதும் தமக்கையின் உயிரை அளித்து மைந்தனை மீட்கவேண்டுமென அவரும் சொல்லமாட்டார்” என்றாள். அம்பிகை மெல்ல மனம் தளர்ந்து “ஆம் சௌபாலன் தமக்கையிடம் கொண்டிருக்கும் அன்பை நான் அறிவேன். ஆனால் நாம் என்ன செய்யமுடியும்?” என்றாள். ஒவ்வொரு முறையும் அகஎழுச்சியும் சினமும் கொண்டபின் அவள் மெல்லத் துவண்டு அழுகைநோக்கிச் செல்வது வழக்கம்.

மெல்லிய குரலில் காந்தாரி “அரசி” என்றாள். அவள் விழித்துவிட்டதைக் கண்டு சத்யசேனை “அக்கா” என்றபடி அருகே ஓடினாள். “அரசி, தாங்கள் நினைப்பதே சரியானது. என் மைந்தனை இன்றே வெளியே எடுக்கச்சொல்லுங்கள். அதற்குத் தகுதியான மருத்துவரை வரவழையுங்கள்” என்றாள் காந்தாரி. இரு குழந்தைகள் அவளை கவ்விக்கிடப்பதுபோன்ற அவளுடைய பெரிய முலைகள் அவளுடைய மூச்சில் இருபக்கமும் எழுந்தமைந்தன. சத்யவிரதை அழுகையுடன் “அக்கா வேண்டாம்” என்றாள். அம்பிகை “நீ நன்கு சிந்தித்துச் சொல்கிறாய் என்றால் இன்றே வரவழைக்கிறேன்” என்றாள். “இது என் உறுதி” என்றாள் காந்தாரி.

அன்றுமதியமே முதியமருத்துவரான மச்சர் தன் ஏழு மாணவர்களுடன் அரண்மனைக்கு வந்துசேர்ந்தார். அம்பிகையின் வீரர்கள் அவரை கூண்டுவண்டியில் அழைத்துவந்து மடைப்பள்ளியில் இறக்கினர். அங்கிருந்து அம்பிகையின் சேடியான ஊர்ணையே அவர்களை அழைத்து காந்தாரியின் அரண்மனைக்குள் கொண்டுவந்தாள். அங்கே அம்பிகை அவர்களுக்காக நிலையழிந்து காத்திருந்தாள். அருகே காந்தார இளவரசிகள் பதைபதைப்புடன் நின்றிருந்தனர்.

மச்சர் கன்றுபோல நன்றாக கூன்விழுந்த முதுகு கொண்ட முதியவர். உலர்ந்து நெற்றான முகமும் உள்ளே மடிந்த பற்களற்ற வாயும் ஒளிவிடும் எலிக்கண்களும் கொண்ட கரிய மனிதர். அவரது மாணவர்கள் மருத்துவப்பேழைகளுடன் வந்தனர். பெரிய நீலத் தலைப்பாகைக்கு அடியில் மச்சரின் முகம் மறைந்திருப்பதுபோலத் தெரிந்தது. அவரை வரவேற்று “இன்றே குழந்தை பிறக்கவேண்டும்…. முழு வளர்ச்சியடைந்த குழந்தை என்று சொன்னார்கள். ஆகவே அது பிறந்து ஏழுநாட்களாகின்றன என்று நாங்கள் அறிவிக்கிறோம். இது அரச ஆணை” என்றபடி பின்னால் சென்றாள் அம்பிகை.

“அரசி… மனிதனைத்தான் அரசன் ஆளமுடியும். ஐம்பெரும் பருக்களை அல்ல” என்றார் மச்சர் கரிய பற்களை காட்டி புன்னகைத்தபடி. “நான் அரசியின் கருவை பார்க்கிறேன். அதன் பின் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன்.” அவர் உள்ளே சென்றபோது அம்பிகையும் உள்ளே சென்றாள். “இதுவரை நூறு மருத்துவச்சிகள் பார்த்துவிட்டனர்… அனைவருமே...” என அவள் சொல்ல “அவர்கள் இது என்னவகை கரு என்றார்கள்? பன்னிரு மாதம் தாண்டிய கருவை அவர்கள் எப்போதாவது கண்டிருக்கிறார்களா?” என்றார் மச்சர். “இல்லை… ஆனால்…” என அம்பிகை தொடங்க “அவர்கள் அறியாதவற்றை அறிந்திருப்பதனால்தான் நான் முதன்மை மருத்துவன் எனப்படுகிறேன்” என்றார்.

“நான் கருவெடுக்கச் செல்வதில்லை. அது பெண்களின் மருத்துவம் என்பதனால். ஆனால் இக்கருவுக்கு இப்போதே பன்னிருமாதமாகிறதென்பதனால் மட்டுமே இதைப்பார்க்கவந்தேன்” என்றபடி அவர் காந்தாரியின் மஞ்சத்தருகே பீடத்தில் அமர்ந்தார். அவளுடய கைகளைப்பற்றி நாடியைப்பார்த்தார். கண்களையும் உதடுகளையும் இழுத்து குருதிச்சிவப்பை நோக்கினார். திரும்பி “நாடியை கஜராஜவிராஜித மந்தகதி என்று சொல்லலாம். யானைக்குரிய வல்லமையும் சீர்மையும் கொண்ட மென்னடை. கருவுற்றிருக்கும் பெண்ணில் இப்படியொரு நாடித்துடிப்பைக் கண்டதில்லை. நடைக்குதிரை, நொண்டிக்குதிரை, அஞ்சியகுதிரை என மூன்றே நான் கண்டிருக்கிறேன்... உடலில் குருதி வெளுக்கவுமில்லை" என்றார். அம்பிகை “அதை அனைவருமே சொல்லிவிட்டனர்” என்றாள்.

மச்சர் காந்தாரியின் வயிற்றில் பல இடங்களில் கைகளை வைத்து அழுத்தியும் தடவியும் பார்த்தபின் அவள் வயிற்றில் தன் காதுகளை அழுத்திவைத்து கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு கண்களைத் திறந்து “உள்ளே கரு முழுமையாக வளரவில்லை” என்றார். “வளர்ந்திருக்கிறது என்று…” என அம்பிகை பேசத்தொடங்க “அதை மருத்துவச்சிகள் வயிற்றின் அளவை வைத்தும் கருவின் இதயத்துடிப்பைக் கேட்டும் முடிவு செய்திருப்பார்கள். அதுவல்ல உண்மை. வளர்ந்த கரு நன்றாகவே வாய் சப்பும். கைகளை வாய்க்குக் கொண்டுசெல்லும். உள்ளே இளவரசர் அவற்றைச் செய்யவில்லை” என்றார் மச்சர். அம்பிகை திகைப்புடன் பார்த்தாள்.

“தாங்கள் காணும் கனவுகள் என்னென்ன அரசி?” என்றார் மச்சர் திரும்பி பீடத்தில் அமர்ந்துகொண்டு. “மதம்கொண்ட யானைகள்… யானைகளும் காகங்களும் நரிகளும்” என்றாள் காந்தாரி. “சிலகாகங்கள் பெரும் பாறைகளைக்கூட தூக்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அந்தப்பாறைகள் சிலசமயம் யானைகளாக இருக்கின்றன.” மச்சர் திரும்பிப்பார்த்து “யானைக்கொட்டிலில் இருந்து காற்று வீசுவதனால் அந்தக் கனவுகள் வருகின்றன என்று எண்ணுகிறேன். வெளியே மரங்களெங்கும் காகங்கள் செறிந்துள்ளன” என்றார். சத்யசேனை “யானைக்கொட்டில் இங்கில்லை. அது வடக்கு எல்லையில் உள்ளது” என்றாள்.

மச்சர் “அப்படியென்றால் ஏதாவது யானையைக் கொண்டுவந்து இங்கே கட்டியிருக்கிறீர்களா என்ன?” என்றார். “இல்லை… யானை ஒன்று இங்கே அரண்மனைமுற்றத்தில் இறந்தது. அதன்பின் இங்கே வரும் யானைகளெல்லாமே பெருங்குரலெடுத்து அழுதன. ஆகவே யானைகளை இங்கே கொண்டுவருவதேயில்லை.” மச்சர் கண்களைச் சுருக்கியபடி திரும்பி “இந்த பெரிய ஈக்கள் யானை மதத்தை மொய்ப்பவை… இங்கே யானையின் வாசனை இருக்கிறது” என்றார். சிறிதுநேரம் கண்களை மூடியபடி நாசிகூர்ந்தபின் “ஆம், உண்மை. இங்கே யானைவாசனை இருக்கிறது” என்றவர் ஏதோ எண்ணத்தில் மேலே தூக்கி வீசிய கை அப்படியே நிலைக்க அசைவிழந்து நின்றார்.

பின்னர் திரும்பி “அரசி, உடனடியாக ஒரு முதியபெண்யானையை இங்கே கொண்டுவர ஆணையிடுங்கள்” என்றார். “இங்கென்றால்?” என்றாள் அம்பிகை. “இங்கே சாளரத்துக்கு வெளியே…” என்று மச்சர் கைகாட்டினார். அம்பிகை ஏதோ சொல்லவந்தபின் அடக்கிக்கொண்டு திரும்பி சேடி ஊர்ணையிடம் ஆணையை முணுமுணுத்தாள்.

முதல்மாடச் சாளரம் வழியாக மச்சர் பார்த்துக்கொண்டு நின்றார். சற்றுநேரத்தில் அப்பால் பாகன்கள் மூத்தபிடியானை ஒன்றைக் கொண்டுவருவதைக் காணமுடிந்தது. மூதன்னையாகிய காலகீர்த்தி செவிகளைவீசி மத்தகத்தை ஆட்டியபடி, தரையில் இருந்து ஏதோ கூழாங்கற்களைப் பொறுக்கி துதிக்கையில் சுருட்டியபடி காற்றில் கரியதிரைச்சீலை நெளிவதுபோல வந்தது. அரண்மனைக்கோட்டையை அடைந்ததும் தயங்கி துதிக்கையை தூக்கி நீட்டி மோப்பம் பிடித்தது. அதன் துதிநுனி ஏதோ பேசவிழையும் சிறிய செந்நிற வாய்போல தவித்தது. பின் அது பிளிறியபடி ஓடி அரண்மனை நோக்கி வந்தது. பாகன்கள் பின்னால் வந்து அதை அதட்டியும் குத்துக்கம்பால் அடித்தும் கட்டுப்படுத்தமுயன்றனர்.

காலகீர்த்தி ஓடி அரண்மனைமுற்றத்தை அடைந்து துதிக்கையை காந்தாரியின் அறையை நோக்கி நீட்டியபடி பிளிறியது. தன்னைத் தடுத்த பாகனை துதிக்கையால் மெல்லத் தட்டி தூக்கி வீசிவிட்டு ஓடிவந்து மச்சர் பார்த்துக்கொண்டிருந்த சாளரத்துக்கு வெளியே நின்று துதிக்கையை சுழற்றி மேலே தூக்கி மாடச்சாளரம்நோக்கி நீட்டியபடி செந்நிற வாயைத் திறந்து பிளிறியது. தலையைக் குலுக்கியபடி மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பியது.

“அதைக்கொண்டுசெல்ல ஆணையிடுங்கள் அரசி” என்றார் மச்சர். பின்பு பெருமூச்சுடன் “நான் சொல்வது விந்தையாக இருக்கலாம். ஆனால் மருத்துவநூல்கள் இதைச் சொல்கின்றன. இது மதங்க கர்ப்பம்” என்றார். அம்பிகை விளங்காமல் பார்த்தாள். “யானையின் கருக்காலம் அறுநூற்றைம்பதுநாட்கள். இந்தக்கருவும் அத்தனைநாட்கள் கருவறையில் வளரும். யானைக்கரு என்பதனால்தான் முதிய யானை அதை மோப்பம் கொள்கிறது. துதிக்கைநீட்டி அது கொடுத்த குரல் கருவுற்ற இன்னொரு பிடியானையிடம் அது சொல்லும் செய்தி. மூத்தபிடியானை இந்த யானைக்கருவை பேணவும், நலமாகப் பெற்றெடுக்கச்செய்யவும் விரும்புகிறது” என்றார்.

அப்பால் காலகீர்த்தியை பாகன்கள் பிற யானைகளைக்கொண்டு கட்டி இழுத்து அதட்டி கொண்டுசெல்லும் ஒலி கேட்டது. அதன் குரல்கேட்டு நெடுந்தொலைவில் யானைக்கொட்டில்களில் இளம் பிடியானைகள் ஒலியெழுப்பின. மச்சர் சொன்னார் “யுகங்களுக்கு ஓரிரு முறைதான் அத்தகைய மைந்தர்கள் பிறப்பார்கள் என்பதனால் நூல்கள் அளிக்கும் அறிவையே நாம் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது… பெருவீரனாகிய ஹேஹயகுலத்து கார்த்தவீரியார்ஜுனனும் புலஸ்தியகுலத்து ராவணனும் மதங்ககர்ப்பத்தில் பிறந்தனர் என்கின்றன எங்கள் நூல்கள். ஆயிரம் கைகள் கொண்டவன் கார்த்தவீரியன். பத்துமுகங்கள் கொண்டவன் ராவணன். இந்த மைந்தனும் அவ்வாறே ஆகலாம்.”

அம்பிகை “என்ன பேசுகிறீர்கள் என்று உணர்ந்துள்ளீரா மச்சரே?” என்று சினத்துடன் கூவினாள். “அரசி ஆயிரம்கைகள் பத்துதலைகள் என்றெல்லாம் சொல்லப்படுபவை என்ன? தன் குலங்களனைத்தையும் திரட்டி மாகிஷ்மதியை பேரரசாக்கிய கார்த்தவீரியார்ஜுனன் தன் உடன்பிறந்தவர்களின் ஆயிரம் கைகளையும் அவனுடைய கரங்களுடன் சேர்த்துக்கொண்டான். ராவணன் தன் தம்பியர் தலைகளையும் சேர்த்தே தசமுகன் எனப்பட்டான்” என்ற மச்சர் திரும்பி “இந்த மைந்தனைப்பற்றி நிமித்திகர் சொன்னதென்ன?” என்றார்.

“நூறுகைகள் கொண்டவன்” என்றாள் அம்பிகை தளர்ந்தகுரலில். “சதபாகு… அது ஓர் அணிச்சொல் என்றே எண்ணினேன்.” அவள் அந்தசெய்தியால் அச்சத்தையே அடைந்தாள். மச்சர் “அணிச்சொல்லேதான். ஆனால் அதற்கு பொருள் உள்ளது. நூறு தம்பியரின் கைகளால் சூழப்பட்டவராக இவர் இருப்பார்” என்றார் மச்சர். “ஆகவே வேறு வழியே இல்லை மூத்தஅரசி. இன்னும் எட்டுமாதம் காத்திருந்தே ஆகவேண்டும்…”

“ஆனால்…” என்று சத்யவிரதை தயக்கத்துடன் தொடங்கினாள். மச்சர் “அரசியின் உயிருக்கு எந்த இடருமில்லை. அவர் நலமாக மைந்தனைப்பெற்றெடுப்பார்” என்றார். அம்பிகை பெருமூச்சுடன் “நீங்கள் போகலாம் மச்சரே… உங்களுக்கான காணிக்கையை நான் அனுப்புகிறேன்” என்றாள். மச்சர் தலைவணங்கி தன் சீடர்களை நோக்கி கைகாட்டிவிட்டு நடந்துசென்றார். அவர் செல்வதை நோக்கி சிலகணங்கள் நின்றபின் அம்பிகை திரும்பி “ஆகவே மூத்தவன் அவன்தான்…அந்த யாதவச்சிறுவன்!” என்றாள்.

ஆனால் காந்தாரி அதைக் கேட்கவில்லை. முகம் மலர "நூறு கரங்கள் கொண்டவன்… சதபாகு” என்றாள் . எரிச்சலுடன் “ஆயிரம்கரங்களுடன் பிறந்தாலும் என்ன? அவனுக்கு அரியணையுரிமை இருக்காது” என்றாள் அம்பிகை. “அந்த யாதவப்பெண்ணின் எளியகுழந்தைக்கு நூறுகரங்களுடன் அரியணைக்காவல் நிற்பான் உன் மைந்தன்.” காந்தாரி “அவன் தன் கைகளில் படைக்கலம் ஏந்தட்டும். அவனுக்கான மண்ணை கொன்றும் வென்றும் அடையட்டும்” என்றாள். வெறுப்புடன் முகம் சுழித்தபின் அம்பிகை விரைந்து வெளியே சென்றாள்.

இடைநாழி வழியாக அவள் நடந்தபோது பின்னால் அவளுடைய அணுக்கச்சேடி ஊர்ணை ஓடிவந்தாள். “சொல்” என்று அம்பிகை ஆணையிட “அமைச்சர் விதுரர் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றாள். அம்பிகை ஒருமுறை உறுமிவிட்டு அதேவிரைவுடன் தன் அரண்மனையறைக்குள் நுழைந்தாள். சேடி முன்னால் ஓடி அவள் வருகையை அறிவிக்க அவளுக்காகக் காத்திருந்த விதுரன் எழுந்து நின்றான். “மூத்த அரசியை வணங்குகிறேன். தங்களுக்கு பேரரசி ஒரு செய்தியை அளித்திருக்கிறார்கள்” என்றான்.

பீடத்தில் அமர்ந்தபடி “சொல்” என்றாள் அம்பிகை. “மன்னர் பாண்டுவுக்கு அவரது பட்டத்தரசி குந்தியில் மைந்தன் பிறந்திருக்கிறான். வர்ஷ ருது எட்டாம் நாள், கேட்டை நட்சத்திரம், அபிஜித் முகூர்த்தம், பஞ்சமி திதி, நடுமதியம்… தர்மதேவனின் பரிபூரண அருள் பெற்ற குழந்தை என்று நிமித்திகர் சொல்கிறார்கள்” என்றான். அம்பிகையின் மார்பு மூச்சில் எழுந்து அமைந்தது. “அறிவேன்” என்றாள்.

“இன்றுமுதல் பன்னிரண்டுநாட்களுக்கு குழந்தைபிறந்தமைக்கான ஜாதகர்மங்களைச் செய்யும்படி பேரரசியின் ஆணை. குழந்தையின் நிறைவாழ்வுக்காகவும் வெற்றிக்காகவும் மூன்று பூதயாகங்களைச் செய்யவும் அனைத்து வைதிகர்களுக்கும் பொன்னும் பட்டும் பசுக்களும் அளித்து வாழ்த்துபெறவும் சூதர்களுக்கு பரிசில் அளித்து பாமாலை பெறவும் அரசாணை விடுக்கப்படுகிறது. நகரமக்கள் விழவெடுத்து இளவரசனின் பிறப்பைக் கொண்டாடவேண்டுமென்றும் அனைத்துக்கலைஞருக்கும் பேரரசியின் பரிசுகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று விதுரன் சொன்னான்.

“இது ஒரு யாதவ அரசிக்கு இளவரசன் பிறந்தமைக்குரிய கொண்டாட்டமாகத் தெரியவில்லை” என அம்பிகை கண்களை இடுக்கியபடி சொன்னாள். “பன்னிருநாள் ஜாதகர்மமும் விழவும் பட்டத்து இளவரசர்களுக்குரியது அல்லவா?” விதுரன் “அரசி, யார் நாடாள்வதென்பது பிதாமகரால் முன்னரே முடிவெடுக்கப்பட்டுவிட்டது. இது வேறு நிகழ்ச்சி. குருவம்சத்துக்கு முதல் இளவரசன் பிறந்திருக்கிறான். அந்தப்பிறப்பை அவன் குடிகள் கொண்டாடியே ஆகவேண்டும்” என்றான். “மேலும் அஸ்தினபுரியின் மைந்தர்கள் நெடுநாட்களாக மனம்திறந்து எதையும் கொண்டாடியதில்லை. நோயும் உடற்குறையும் இல்லாத இளவரசன் பிறந்திருப்பதை அறிவித்தாலே இந்நகரம் அதைச்சூழ்ந்து கவ்வியிருக்கும் அவநம்பிக்கைகளில் இருந்தும் அச்சங்களில் இருந்தும் வெளிவரும்” என்றான் விதுரன்.

“மேலும். இளவரசனின் பிறவிநேரத்தை கணித்த நிமித்திகர்கள் அவன் அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்யும் சக்ரவர்த்தி என்கின்றனர்" என்று விதுரன் சொன்னான். “விதுரா, இந்த நாடு என் மைந்தனால் பதினெட்டாண்டுகாலம் கைமாற்றாகக் கொடுக்கப்பட்டது… பதினெட்டு ஆண்டுகாலத்துக்கு மட்டும்” என்று அம்பிகை சொன்னாள். “அரசி, அதை எவரும் மறுக்கவில்லை. மாமன்னர் யயாதிக்கு மைந்தர்கள் பிறந்தபோது நான்கு மைந்தர்களுக்குமே நாடாளும் குறிகள் இருப்பதாக நிமித்திகர் சொன்னார்கள். அவ்வண்ணமே ஆயிற்று. துர்வசு காந்தாரநாட்டை உருவாக்கினார். யது யாதவகுலத்தை பிறப்பித்தார். திருஹ்யூ திவிப்ரநாட்டை அமைத்தார். புரு தந்தையின் நாட்டை ஆண்டார். குந்தியின் மைந்தன் அஸ்தினபுரிக்கு இணையானதோர் நாட்டை அமைத்து ஆளலாமே!”

“ஆளட்டும். ஆனால் சக்ரவர்த்தியாக அவன் ஆகவேண்டுமென்றால் என் மைந்தனின் புதல்வனை வென்றாக வேண்டும்” என்றாள் அம்பிகை பற்களைக் கடித்தபடி. விதுரன் "அது எதிர்காலம். அது நம் கையில் இல்லை அரசி" என்று தலைவணங்கி வெளியேறினான்.

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 3 ]

குந்திக்குள் கரு நிகழ்ந்த செய்தியை பாண்டுவிடம் மாத்ரிதான் முதலில் சொன்னாள். அவன் அப்போது காட்டுக்குள் முயல்களை நாணல் அம்புகளால் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அவள் “மூத்தவளின் கருவுக்குள் மொட்டு அரும்பியிருக்கிறது அரசே” என்றதும் அவன் அம்பு தவறியது. திகைத்தவனாக அவன் திரும்பிப்பார்த்து “என்ன?” என்றான். அவள் சொல்வதற்குள்ளாகவே புரிந்துகொண்டு அம்புகளைப் போட்டு வில்லைத் தாழ்த்திவிட்டு வந்து அரசமரத்தின் வேர்மடிப்பில் அமர்ந்து கைகளில் முகத்தைத் தாங்கிக்கொண்டான்.

“என்ன?” என்றாள் மாத்ரி. “தாங்கள் எதிர்பார்த்திருந்த செய்தி அல்லவா?” பாண்டு “ஆம்” என்றான். “ஆனால் என்னவென்றே தெரியவில்லை. என்னுள் முதலில் எழுந்தது ஒரு துயரம்தான். வெறுமை என்றுகூடச் சொல்லலாம். அல்லது…” அவன் தலையை அசைத்து “நான் என்னவகையான உணர்ச்சிகளால் கொண்டுசெல்லப்படுகிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை. மாத்ரி, எந்த மனிதனும் ஒருசெய்தியைக் கேட்டால் தனக்கு என்ன உணர்ச்சி ஏற்படுமென முன்னரே சொல்லிவிடமுடியாது…” என்றான் பெருமூச்சுடன். “மானுட உணர்ச்சிகள் மானுடனுக்குரியவை அல்ல. மனிதர்களை கருவாக்கி விளையாடும் தெய்வங்களுக்குரியவை.”

பேசப்பேச அவன் விடுதலை கொண்டவனானான். கசந்த புன்னகையுடன் “ஆம், நான் எளியவன். எந்த மனிதனையும் போல சுயநலத்தால் சிறுமைகளால் அச்சங்களால் இயக்கப்படுபவன். அந்த எண்ணமே என்னை நிறைவுகொள்ளச்செய்கிறது” என்றான். "தன்னை கலக்காமல் தன்னைச்சார்ந்தவர்கள் அடையும் நிறைவை ஏற்றுக்கொள்வது எளிதல்ல" என்று உரக்க நகைத்தபடி மீண்டும் வில்லை கையில் எடுத்துக்கொண்டான். "உன் தமக்கை உவகையால் ததும்பிக்கொண்டிருக்கிறாள்போலும்"

மாத்ரி பெருமூச்சுவிட்டு “நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்கள் மகிழ்வதாக எனக்குப்படவில்லை. அவர்களின் ஆழமும் அழுத்தமும் இன்னும் அதிகமாகிவிட்டிருக்கின்றன. மேலும் தனிமைகொண்டவர்களாக மாறிவிட்டார்கள்” என்றாள். அவன் வியப்புடன் திரும்பிப்பார்த்தான். "தமக்கை தன்னுள் ஒரு சமன் கொண்டவர். இந்த மைந்தன் அதை இல்லாமலாக்கிவிட்டான் என்று தோன்றியது." பாண்டு உரக்க நகைத்து "ஆகா, நீயும் என்னைப்போலவே பேசத்தொடங்கிவிட்டாய்" என்றான். மாத்ரி புன்னகைசெய்தாள்.

பின்பு வில்லை தோளில் மாட்டிக்கொண்டு "வா" என்று நடந்தான். "நீ சொன்னவை என் அகத்தை சமன்செய்தன என்று சொல்வதில் எனக்கு நாணமில்லை" என்றான். "நான் எளிய மானுடன் என்று உணரும்தோறும் எனக்குள் எழும் எண்ணம் ஒன்றுண்டு. உன் தமக்கையைப்போன்ற பெரிய உள்ளங்கள் என்னிடம் கருணையோடிருக்கவேண்டும் என்று நான் கோர உரிமைகொள்கிறேன். என்னை அவர்கள் பேணவேண்டுமென எதிர்பார்க்கும் தகுதிபெறுகிறேன்."

குந்தியை நேரில்கண்டதும் பாண்டு அருகே சென்று சிவந்த முகத்துடன் பார்வையைத் தாழ்த்தியபடி “மாத்ரி சொன்னாள்” என்றான். குந்தி “ஆம்…” என்றபின் “உங்கள் குழந்தை” என்றாள். அந்தச்சொல் அவனுடைய ஆழத்தில் இருந்த இருண்ட, அமைதியிழந்த, நீர்ப்பரப்பில் சென்றுவிழுந்ததுபோல உணர்ந்தான். முகத்தைத் தூக்கி அவளைப்பார்த்தான். “ஆம், அவன் என்றென்றும் பாண்டவன் என்றே அழைக்கப்படுவான்” என்றாள் குந்தி. அவன் மெல்ல தன் உதடுகளுக்குள் “பாண்டவன்” என்று சொன்னான். அச்சொல் அத்தனை அயலாக, அத்தனை பொருளற்றதாக ஒலித்தது.

“அவனுக்கு இவ்வுலகம் உங்கள் விழிகள் வழியாகவே தெரியத்தொடங்கும். உங்கள் அடையாளங்கள் வழியாகவே உலகுக்கும் அவன் தெரிவான்” என்றாள் குந்தி. அவன் தன் அகத்துக்குள் அச்சொல் அசையாமல் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தான். “பாண்டவன்…” மெல்ல சிவந்த இதழ்களை விரித்து கண்களை மலரச்செய்து அவன் “அவனுடைய தந்தை நான் என அவன் எண்ணுவானா?” என்றான். அதைக் கேட்கும்போதே அவன் விழிகள் கலங்கி குரல் அடைத்துவிட்டது.

“அரசே, விசித்திரவீரிய மாமன்னரை ஒருநாளேனும் நீங்கள் எண்ணாமலிருந்தது உண்டா?” என்றாள் குந்தி. திகைத்து வாய் திறந்து அவளைப்பார்த்த பாண்டு பின் மூச்சை விட்டு “இல்லை, ஒருநாள் கூட இல்லை. நினைவறிந்த ஒவ்வொருநாளும் நான் அவரை எண்ணிக்கொண்டதுண்டு. என் குறைகளுக்காக அவரை வெறுத்தேன். நான் வாழ்வதற்காக அவரை விரும்பினேன். என் கனவுகளில் அதிகமாக வந்த மனிதர் அவர்தான்” என்றான். குந்தி புன்னகையுடன் “அவ்வண்ணமே உங்களை வெறுக்கவும் விரும்பவும் இவன் இருப்பான். நீங்கள் இவன் கனவுகள் வழியாகவே மீண்டும் மண்ணுக்கு வரமுடியும்” என்றாள்.

விக்கலெடுப்பதுபோன்ற ஒலியுடன் பாண்டு விம்மியழுதான். உடனே அந்த அழுகையை கைகளைக்கொண்டு பொத்திக்கொண்டான். விரலிடுக்குகள் வழியாக வழிந்த நீரை உதறியபடி எழுந்து வெளியே சென்றான். செயலற்றுநின்ற அகத்துடன் முற்றத்தில் சிலகணங்கள் நின்றபின் காட்டுக்குள் ஓடத்தொடங்கினான். நெடுந்தொலைவுக்கு ஓடி ஒரு மலைப்பாறைமேல் ஏறி அமர்ந்துகொண்டான். அந்திவரை அந்த மலையுச்சியில் வானத்தை தன்மேல் வளைத்துச்சூடியவனாக அமர்ந்திருந்தான். பறவைக்குரல்கள், காற்றின் ஓசை, நீரின் ஒலிகள் அனைத்தும் ஒற்றைச் சொல்லாக இருந்தன. பாண்டவன் என்ற சொல்லில் இருந்து அவன் அகம் மீளவே முடியவில்லை. அச்சொல்லன்றி அகத்தில் வேறேதுமில்லை என்று உணர்ந்தான்.

கிழக்கிலிருந்து இரவு எழுந்து வந்து தலைமேல் கவிந்து மேற்கைச் சென்று தொட்டது. விண்மீன்கள் செறிந்த வானம் அவனைச்சூழ்ந்தது. அவன் கையெட்டும் தொலைவில் நின்று அவை மின்னிக்கொண்டிருந்தன. குளிரே காற்றாக மாறி சதசிருங்கத்தின் வெண்ணிறக்குவைகளில் இருந்து இறங்கி வந்து பெருகிக் கடந்துசென்றது. காட்டுக்குள் ஒரு சிம்மக்குரல் கேட்டது. நெடுந்தொலைவில் ஒர் அன்னையானை தன் மைந்தனை அணைத்துக்கொண்டு பிளிறியது.

அவன் திரும்பவில்லை என்றதும் மாத்ரி கவலையுடன் குந்தியிடம் சென்று சொன்னாள். அவள் புன்னகையுடன் “இந்த இரவில் அவர் விண்மீன்களுடன் இருப்பதையே விரும்புவார்” என்றாள். மாத்ரி பெருமூச்சுவிட்டாள். மறுநாள் காலையில் பாண்டு ஈச்சஇலையாலான கூடையில் பெரிய மலைத்தேன் அடைகளைச் சேர்த்து தலையில் சுமந்தபடி மலையிறங்கி வந்தான். அவன் உடலெங்கும் தேன் சொட்டி வழிந்துகொண்டிருந்தது. “எனக்காகவே காத்திருந்ததுபோல இவை மலைக்குகை ஒன்றில் கனிந்திருந்தன” என்றான். “மலைப்பாறைப்பசுவின் அகிடுகள்…. நானே ஏறி எடுத்துக்கொண்டேன்.”

“தேனில் குளித்திருக்கிறீர்கள்” என்றபடி மாத்ரி அந்தப் பொதியை வாங்கிக்கொண்டாள். “ஆம்… நான் தேன் தட்டுக்களை எடுத்ததும் என் உடலே திகட்டி கூசி அதிருமளவுக்கு தேனைப்பிழிந்து பிழிந்து குடித்தேன்…. இந்த பூமியே ஒரு பெரும் தேன் தட்டு என்று தோன்றுகிறது. இதைப்பிழிந்தால் தேன்கடல்களே எழுந்துவரும்.” குந்தி “சூதர்களுக்கே வரிகள் எடுத்துக்கொடுத்துவிடுவீர்கள் என்று தோன்றுகிறதே” என்றாள். பாண்டு சிரித்துக்கொண்டு “இந்தத் தேனை இன்று இந்த மலையடிவாரத்தில் அனைவரும் அருந்தவிருக்கிறார்கள். இது பாண்டுவின் ஆன்மாவின் தேன் என அவர்களிடம் சொல்” என்றான். வட்டுச்சக்கரம் அமைத்து அதில் அந்தத் தேன் தட்டுகளை போட்டுச் சுழற்றி தேனை வடியச்செய்து சுரைக்காய்க் குடுவையில் சேர்த்துக்கொண்டு அவன் முனிவர்களின் குடில்களை நோக்கிச் சென்றான்.

அதன்பின் பாண்டு அந்நினைவன்றி வேறு எண்ணமே அற்றவனானான். அவன் தனியாக ஓடைக்கரையில் நிற்கையில் முகம் மலர்ந்து புன்னகைப்பதை தனக்குள் பேசிக்கொள்வதை அவள் கண்டாள். சிறிய வேர்ப்படிகளில் அவன் தாவி ஏறிச்செல்லும்போது, ஏரியின் நீரில் பாய்ந்து மூழ்கி நீந்தி வெளிவந்து நீரை உமிழ்ந்து சிரிக்கும்போது, இரவில் மல்லாந்து படுத்து வானைநோக்கிக்கொண்டிருக்கும்போது அவனுள் இருந்து வெளிப்படும் கட்டற்ற உவகையை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் அக்கணங்களுக்காகவே பிறவிகொண்டவன் போலிருந்தான். அவ்வுச்சத்திலேயே முழுமையடைந்துவிட்டவனாகத் தெரிந்தான்.

“கந்தர்வர் போலிருக்கிறார்” என்று முற்றிலும் பூத்துவிட்டிருந்த அவனை நோக்கி திரித கௌதமர் சொன்னார். ஏகத கௌதமர் புன்னகை புரிந்து “கந்தர்வர்கள் என்பது ஒரு மானுடபாவனையே. மனிதர்கள் அசுரர்களும் தேவர்களும் ஆகும் கணங்களுண்டு. அகம் பிரம்மாஸ்மி என அறியும் முழுமைத்தருணத்தின் தேன்துளிச்சிதறல்கள் அவை” என்றார். “அவருடைய உலகம் அவருள்ளேயே முழுமை கொண்டுவிட்டிருக்கிறது” என்றார் துவிதீய கௌதமர், “ஆம். தன்னுள் தான் முழுமையாக நிறையும் கணமே மகிழ்ச்சி என்பது. யோகி என்பவன் அந்நிறைவை பின்னர் திரும்பமுடியாதபடி அடைந்தவன். போகத்திலும் யோகம் இயல்வதே. உலகியலிலும் பேரின்பத்தின் கணங்கள் சாத்தியம் ஆகும்” என்றார் ஏகத கௌதமர்.

குந்தியையே பாண்டு மறந்துவிட்டவன் போலிருந்தான். அவளுடைய கரு வளர்வதையும் அவன் அறியவில்லை. அவள் நோய்கொள்வதை தளர்வதை தன்னுள் பெருகும் உயிரின் அசைவை உணர்ந்து பரவசமடைவதை எதையும் அவன் காணவில்லை. காடுகளிலும் மலைக்குகைகளிலும் அவன் அலைந்துகொண்டிருந்தான். அனகையும் மாத்ரியும்தான் அவளை பேணினர். “அரசர் தங்களை ஒரு கணமேனும் எண்ணுவதாகத் தெரியவில்லை அரசி” என்றாள் அனகை. “ஆம்,.. அவர் தன்னையும் எண்ணுவதில்லை” என்றாள் குந்தி.

கரு தன் வயிற்றில் விளைந்துவிட்டதென்று உணர்ந்ததும் அவள் பாண்டுவிடம் பும்ஸவனம் என்னும் சடங்கைச் செய்யவேண்டுமென்று சொன்னாள். “ஆண்குழந்தை பிறப்பதற்காகச் செய்யும் சடங்கு அல்லவா அது?” என்றான் பாண்டு. “ஆம்… எனக்கு ஆண்குழந்தைவேண்டும்” என்றாள் குந்தி. “நாம் பெறப்போகும் மைந்தன் என்ன நாடாளவா போகிறான்? மகளாக இருக்கட்டுமே. நான் கொஞ்சிவளர்ப்பதற்கு மகள்தான் உகந்தவள்” என்றான் பாண்டு. அவள் “மைந்தன்தான் வேண்டும். பும்ஸவனம் செய்தேயாகவேண்டும்” என்றாள். அவன் எதையும் சொல்லிக்கேட்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஒரு கிளியின் குரலைக் கேட்டதும் முகம் மலர்ந்து அப்பக்கமாகத் திரும்பி பின் எழுந்து அதை நோக்கிச் சென்றான்.

கௌதமரிஷியின் மைந்தர்கள் “அரசி, பும்ஸவனம் என்பது மைந்தன் பிறப்பதற்கான சடங்கு அல்ல. அது முழுமைகொண்ட மைந்தன் வேண்டுமென்று கோரும் சடங்கு. அப்படிப்பிறக்கும் மைந்தன் அரசனைப்போலிருப்பான். அவன் அரசனாகவில்லை என்றால் மரவுரி அணிந்து வனம்புகுந்து முனிவனாவான். அதை முழுதெண்ணி முடிவெடுங்கள்” என்றார்கள்.

குந்தி திடமாக “என் மைந்தன் நாடாள்பவன். அதை நான் அறிவேன்” என்றாள். “அங்கே அஸ்தினபுரியில் காந்தாரியின் மைந்தனுக்காக பும்ஸவனச்சடங்கு ஏழுநாட்கள் நடந்தது… இங்கே ஒருநாளேனும் அது நடந்தாகவேண்டும்.” பாண்டு அச்சொற்களுக்கெல்லாம் அப்பால் எங்கோ இருந்தான். கௌதமரின் மைந்தர்கள் புன்னகையுடன் “அவ்வண்ணமே ஆகுக” என்றார்கள்.

பும்ஸவனச் சடங்கு கௌதமரின் மைந்தர்களான ஏகதன், துவிதன், திரிதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. மூவகை வேள்விநெருப்புகள் எரிகுளத்திலேற்றப்பட்டன. விண்பிறப்பதற்கு முன்பிறந்த முதற்கருவை வாழ்த்தும் வேதக்குரல் எழுந்தது.

பொன்னிறக் கருவே முதலில் இருந்தான்

பிறந்ததும் அவனே

அனைத்துக்கும் உரியவனானான்

மண்ணையும் ஒளிர்விண்ணையும்

அவனே தாங்கிக்கொண்டான்

அவனையன்றி யாரை

நாம் அவியளித்து வணங்குவோம்?

ரிஷி ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியைத் துதிக்கும்பாடலுக்குப்பின் கருவடிவான பொன்னிறச்சூரியனாகிய சவிதாவைப் போற்றினர் வைதிகர். அதன்பின் கிருஹ்யசூத்திரங்கள் ஒதப்பட்டு வேள்விமுடிவுற்றது.

தென்னெரியில் நெய் விழுந்து அது சுவைதேடும் நாவாக மாறுவதைக் கண்டிருக்கையில் குந்தி இதோ இதோ என்று எழும் தன் அகமும் அதுவே என்று உணர்ந்தாள். சமித்து ஒன்று வெடித்து சிதறிய எரித்துளிகள் காற்றால் சுழற்றப்பட்டு அவள்மேல் விழுந்து அவள் அணிந்திருந்த மரவுரியைக் கருகச்செய்தன. ‘ஓம்! ஒம்! ஓம்!’ என்று ரிஷிகள் முழங்க அவள் கைகூப்பி கண்ணீர்வழிய உடல்சிலிர்த்து அமர்ந்திருந்தாள். அவியாகக் கொண்டுவரப்பட்டிருந்த வஜ்ரதானியமும் கருமணிப்பயறும் நெய்யுடன் கலந்து அவளுக்கு இறையுணவாக அளிக்கப்பட்டன. அவள் அதை உண்டபோது வேதம் முழங்கியது.

பிரஜாபதியே நீயன்றி எவரும்

இவற்றையெல்லாம் ஆக்கவில்லை.

நாங்கள் உன்னை அழைக்கையில்

எங்கள் அவியேற்று வந்து நின்றருள்க!

எங்களுக்குச் செல்வங்கள் தழைப்பதாக!

ஆம் ஆம் ஆம்!

இனியகனவுகளால் மட்டுமேயான மூன்றுமாதங்களுக்குப்பின் சீமந்தோன்னயனம் காட்டிலேயே நடைபெற்றது. ரிஷி ஏகத கௌதமர் அவளிடம் “அரசி, இச்சடங்கு முதல்மைந்தனுக்காகச் செய்யப்படுவது. அவனுடைய வருகையால் உங்கள் குலம் நிறைவுறுகிறதென்று விண்ணகத் தெய்வங்களுக்குத் தெரிவிக்கும் சடங்கு இது” என்றார். கைமேல் போடப்பட்டிருந்த வெண்பட்டுக்குள் விரல்கள் நடுங்கிக் குளிர்வதை குந்தி உணர்ந்தாள். விரல்களை இணைத்து இறுக்கியபடி “ஆம்” என்றாள்.

பாண்டுவின் பார்வை தன்னில் நிலைத்திருப்பதை அவள் உணர்ந்தாள். ஒருகணம்கூட தன் விழி அப்பக்கமாகத் திரும்பலாகாது என அனைத்து அகவிசைகளையும் கொண்டு தன்னைக் கட்டிக்கொண்டாள். “யாதவ அரசியின் முதல்மைந்தன் மண்நிகழ்வதற்காக விண்ணோர் எழுக!” என்று ஏகத கௌதமர் கூவ பிறர் அச்சொற்களை ஏற்று ஒலித்தனர். அவள் இமைகளை காற்றில் வீசி கண்ணீரை உலரச்செய்துகொண்டிருந்தாள்.

மாத்ரி ஓடிவந்து மைந்தன் பிறப்பைச் சொன்னபோது அவன் சித்ரவனம் என்னும் குறுங்காட்டில் ஒரு பூத்த வேங்கை மரத்தின் அடியில் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் தலைக்குமேல் விரிந்த அந்த மரத்தில் நூற்றுக்கணக்கான தேன் சிட்டுகள் இமைகளென சிறகடித்து நின்று தேனருந்தின. அவன் உடல்மேல் மஞ்சள்நிறமான மலர்கள் பொழிந்து மூடிக்கொண்டிருந்தன. அதைப்பார்த்தபடி நின்ற மாத்ரி பின் மெல்ல அவனை அணுகி அவன் கால்களைப்பற்றி அசைத்து “அரசே” என்றாள். அவன் திகைத்து எழுந்து “யார்?” என்றான். “அரசே இது நான்… மாத்ரி…” அவன் சிவந்த விழிகளுடன் தலையில் மஞ்சள் மலர்கள் அசைய “என்ன?” என்றான்.

“அரசே, தமக்கைக்கு மைந்தன் பிறக்கவிருக்கிறான். வலிவந்துள்ளது. அனகை அங்கே சென்றிருக்கிறாள்.” அவன் திகைத்து எழுந்து “எப்போது?” என்றான். “இன்னும் சற்று நேரத்தில் பிறந்துவிடும்” என்றாள் மாத்ரி. அவன் திரும்பி ஓடத் தொடங்கினான். அவள் அவனுக்குப்பின்னால் ஓடினாள். அவன் மூச்சிரைக்க ஓடி ஓடைகளையும் சாய்ந்த மரங்களையும் தாவிக்கடந்து குடில் முற்றத்தை அடைந்தபோது எதிர்ப்பக்கமிருந்து ஓடிவந்த முனிபத்தினி “அரசே, மைந்தன் பிறந்திருக்கிறான்” என்றாள். அவன் கைகளை சற்று விரித்துக்கொண்டு அப்படியே நின்றபின் கால்கள் தளர்ந்து முற்றத்து மண்ணில் அமர்ந்துவிட்டான். மாத்ரி ஓடிச்சென்று அவனைப்பற்றிக்கொண்டாள்.

வெந்நீராடி மான்தோல் மஞ்சத்தில் படுத்திருந்த குந்தியருகே வந்து மெல்ல அமர்ந்த பாண்டு பித்தன் போலிருந்தன். அவனுடைய செவ்வுதடுகள் மெல்ல எதையோ சொல்வதுபோல அசைந்துகொண்டிருந்தன. கண்கள் சிவந்து கலங்கி இமைமுடிகளில் நீர்த்திவலைகள் தெரிந்தன. “இதோ நம் மைந்தன்” என்று சொல்லி போர்வையை சற்று விலக்கி மைந்தனைக் காட்டினாள் குந்தி. அவன் குனிந்து குழந்தையைப்பார்த்தான். அவன் தலை ஆடிக்கொண்டிருந்தது. நிலைத்த செவ்விழிகளும் அசையும் உதடுகளுமாக அவன் குழந்தையையே நோக்கிக்கொண்டிருந்தான்.

அவளுக்குள் ஒரு அச்சம் எழுந்தது. அவன் அக்குழந்தையை கொல்லப்போகிறான் என்று எண்ணியதும் அவள் கைகள் மெல்ல நீண்டு குழந்தையைப்பற்றி தன்னுடன் அணைத்துக்கொண்டன. அவன் விழிகள் குழந்தையில் இருந்து விலகவில்லை. பித்தனைப்போல அவ்வுதடுகள் சொல்லிய சொல்லை அவள் அறிந்தாள். அவன் பாண்டவன் பாண்டவன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். அதைக்கேட்டதும் அவள் புன்னகையுடன் கைகளை எடுத்தபின் தன்னை எண்ணி வெட்கினாள்.

ஆனால் அந்த அச்சம் ஓர் அன்னையாக இயல்பானதுதான் என்று மறுகணம் அவள் அளவைமனம் எண்ணிக்கொண்டது. குழந்தை பிறந்ததுமே அன்னை நெஞ்சில் முதலில் குடியேறுவது அச்சம்தான். தன்னருகே குழந்தையைக் காணும்போது முதலில் எழும் எண்ணம் அது எத்தனை ஆதரவற்றது, தனித்தது என்ற எண்ணம்தான். அவ்வெண்ணமே அன்னை நெஞ்சை விம்மச்செய்கிறது. முலைகளில் பாலாகிறது.

சதசிருங்கத்தில் ஜாதகர்மங்கள் மிக எளியமுறையில் முனிவர்கள் நடுவிலேயே நிகழ்ந்து முடிந்தன. தொன்மையான வேதவாழ்க்கையின் சடங்குகள் அவை. கரு உருவானநாள் முதலாக பாண்டு தேடி அலைந்து சேர்த்திருந்த எழுபத்திரண்டு அரணிக்கட்டைகளை வேதமுனிவர்களுக்குக் கொடையளித்து வணங்கினான். அவர்களின் துணைவியருக்கு அவனே வேட்டையாடிச்சேர்த்திருந்த நாற்பத்தொரு மான்தோலாடைகளை கொடையளித்தான். வேள்விச்சடங்குகள் பன்னிரண்டுநாட்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.

ஒவ்வொருநாளும் வேள்வியுணவை மட்டுமே உண்டு பாண்டு நோன்பிருந்தான். “அரசே, இங்கே ஒரு தொல்குடியின் அறத்தலைவனுக்குரிய ஜாதகர்மங்கள் நிகழ்கின்றன. உங்கள் இனிய மைந்தன் நாட்டை அடைந்தாலும் இழந்தாலும் தன் குலத்தவரின் தலைவனாக என்றுமிருப்பான்” என்றார் துவிதீய கௌதமர் சிரித்துக்கொண்டு. பாண்டு கைகூப்பி “ஆம், அனைத்தும் இறையருளும் சான்றோர் அருளும் இணைந்து அளித்த கொடை” என்றான். “ஒவ்வொரு குறியும் மங்கலத்தையே சுட்டுகின்றன அரசே. இவ்வண்ணம் இதுவரை நாங்கள் கண்டதில்லை” என்றார் ஏகத கௌதமர். பாண்டு புன்னகைத்த கணமே கண்களில் நீர் பெருக கைவிரல்களால் அழுத்திக்கொண்டான்.

பிறந்த ஐந்தாவதுநாளே குழந்தையை பாண்டு தன் கைகளில் எடுத்துக்கொண்டான். புல்தைலமிட்ட இளவெந்நீரில் அனகை மைந்தனை நீராட்டும்போது அவன் அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அனகை அதை உணர்ந்தபின் அருகே அமர்ந்திருந்த மாத்ரியிடம் "அரசரிடம் அவர் மைந்தனை நீராட்ட விரும்புகிறாரா என்று கேளுங்கள் இளைய அரசி" என்றாள். மாத்ரி திரும்பி புன்னகையுடன் "நீங்கள் நீராட்டுகிறீர்களா?" என்றாள்.

பாண்டு திகைத்து "நானா?" என்றான். புன்னகையுடன் "ஆண்கள் நீராட்டலாமா?" என்றான். ஆனால் அருகே வந்துவிட்டான். அனகை குனிந்தபடி "முலைசுரக்குமென்றால் நீராட்டலாம்" என்றாள். "என் கனவில் நான் இவனுக்கு முலையூட்டினேன்..." என்றான் பாண்டு. அனகை ஈரமான குழந்தையுடன் எழுந்து "அமர்ந்துகொள்ளுங்கள் அரசே... நீங்கள் இவனுடைய முதல் அன்னை" என்றாள். பாண்டு அமர்ந்துகொண்டு கால்களை நீட்டிக்கொண்டான்.

அனகை அவன் கால்கள்மேல் குழந்தையைப் படுக்கச்செய்தாள். சுளைகீறி வெளியே எடுக்கப்பட்ட விதை போல சிவந்திருந்த குழந்தை ஒட்டிய இமைமுடிகளும் சற்றே கன்றிய கன்னங்களும் கருகிய உதடுகளுமாக கைகளை ஆட்டி அழுதது. "அழுகிறான்" என்றான் பாண்டு. "கைகளால் தொடுங்கள்... வருடுங்கள்" என்று அனகை சொன்னாள். அவன் அதன் மெல்லிய வயிற்றையும் தோள்களையும் வருடினான். தன் முலைக்கண்கள் சுரப்பதுபோலவே உணர்ந்தான். குழந்தை அழுகையை நிறுத்தி உதடுகளை சப்புக்கொட்டியது.

"நீரை அள்ளி விடுங்கள் அரசே" என்றாள் அனகை. பாண்டு இளவெந்நீரை அள்ளி விட்டான். மஞ்சளும் வேம்பும் பயிறும் சேர்த்து அரைத்த விழுதைபூசி மைந்தனைக் குளிப்பாட்டினான். மெல்லிய பஞ்சுத்துணியால் துவட்டி சந்தனப்பொடி தூவி கொண்டுசென்று குந்தியின் அருகே படுக்கச்செய்தான். அவள் புன்னகையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் "கைகளால் மட்டுமே குழந்தையை உணரமுடியும் பிருதை..." என்றான்.

ஒவ்வொருநாளும் அவனே குழந்தையை நீராட்டினான். சதசிருங்கத்தில் அது இளங்குளிர்காலம் என்பதனால் காலையில் மைந்தனை தன் கால்கள் மேல் போட்டுக்கொண்டு வெயில் காயவைத்தான். வெயில்பட்ட இளந்தோல் மெல்ல காய்ந்து சிவந்து குழந்தை அழத்தொடங்கியதும் எடுத்து தன் மார்புடன் அணைத்துக்கொண்டு அந்த மெல்லிய தோல்மணத்தை முகர்ந்தான். மண்மணமேற்ற யானை போல முகரும்தோறும் பித்தேறியவனாக மீண்டும் மீண்டும் முகர்ந்தான்.

குந்தியிடம் சென்று "நான் சொன்னது பிழை. முகர்ந்தால் மட்டுமே மைந்தனை அறியமுடியும்" என்றான்.  "இவனிடமிருப்பது என்ன மணம்? குருதி மணக்கிறது. சற்று அனல் கலந்த குருதி. பால்மணம் என்று சிலசமயம் தோன்றுகிறது.... தோல்மீது வெயில்படும்போது இளமூங்கில் குருத்து வாடும் வாசனை. இதெல்லாம் சொற்கள். இது மைந்தனுக்கான வாசனை மட்டுமே. இதை உணர்வது என் நாசி அல்ல. என் ஆன்மா" என்றான்.

"அது கருவின் மணம்" என்று அனகை சிரித்தபடி சொன்னாள். "மைந்தர் உடலில் சற்றுநாள் அது இருக்கும். அனைத்து குட்டிகளிடமும் அந்த வாசனை இருக்கும்." பாண்டு குழந்தையைப் புரட்டி மீண்டும் முகர்ந்தபடி "அது எப்படி மண்ணின் மணம்போலிருக்கிறது? மென்மையான மண்ணா இவன்? விதைகள் உறங்கும் வளமிக்க மண்ணா?" என்றான். மாத்ரி நகைத்தபடி "நீங்கள் முகர்வது மைந்தனுக்குப்பிடித்திருக்கிறது...எத்தனைமுறை புரட்டினாலும் அழுவதில்லை" என்றாள்.

இருபத்தெட்டாவது நாள் நாமகரணத்துக்காக நாள் குறிக்கப்பட்டது. “அஸ்தினபுரியிலிருந்து மைந்தனுக்கான பெயரைப்பற்றிய செய்தி ஏதேனும் வந்ததா?” என்று பாண்டு குந்தியிடம் கேட்டான். அருகே மரவுரித்தொட்டிலில் மெல்லிய மான்தோல் ஆடைமேல் குழந்தை கைகளை சுருட்டிக்கொண்டு அவரை விதை போலச் சுருண்டு துயின்றது. அதை நோக்கிக் குனிந்து மெல்லிய மூச்சொலியுடன் பார்த்தபடி “ஒரு குழந்தைக்கு என்ன பெயர் வைக்க முடியும் பிருதை? ஆயிரம் பெயர்களை எண்ணிக்கொண்டேன். எந்தப்பெயர் வைத்தாலும் குழந்தை பெயருக்கு அப்பால் இருந்துகொண்டிருக்கிறது” என்றான்.

“அனைத்துக் குழந்தைகளும் பெயர்தீண்டாத தூய்மையுடன்தான் பிறக்கின்றன” என்றாள் குந்தி புன்னகைத்தபடி. “மண்ணையும் பொன்னையும் தேனையும் பாலையும் கலந்து அளிக்கும் முதல் உணவை மாசுஅளித்தல் என்றுதான் நூல்கள் சொல்கின்றன. அப்போதே குழந்தை மண்ணுக்கு வந்துவிட்டது. விதையுறையைப் பிளந்து மண்ணை நோக்கி வேரை நீட்டும் விதைபோல என்று அனகை சொன்னாள்.” பாண்டு பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “அஸ்தினபுரியில் இருந்து ஏதும் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் நாம் இங்கே தவமுனிவர் சூழ வாழ்கிறோம். பெயரை அவர்களே சூட்டுவார்கள். அதுவே முறையாகும்” என்றாள். “ஆம், அதுவே நல்லது. அவர்களின் அருளில் இவன் இங்கே வளரட்டும். வாழ்க்கையின் இன்பங்களனைத்தையும் இங்கே அவன் அறிவான்” என்றான் பாண்டு.

குந்தி அவன் விழிகளை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் மைந்தனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆண்விழிகள் அத்தனைதூரம் கனியுமா என்ன? முலைசுரக்கும் முதற்கணத்தில் மட்டும் அன்னையிடம் கூடும் பேரின்பம் அவனிடம் குன்றாது தங்கிவிட்டிருப்பதுபோலிருந்தது. மைந்தனின் தோள்களையும் மார்பையும் மெதுவாகத் தொட்டு குனிந்து கூர்ந்து நோக்கி “தோலில் ஏன் இத்தனை சிவந்த திட்டுகள் உள்ளன? என் கைகளால் அழுத்திப்பற்றிவிட்டதனாலா?” என்றான். "தோல் இன்னும் வளரத்தொடங்கவில்லை. இரண்டுவாரத்தில் அவை அகன்றுவிடும். தோலின் இயல்பான நிறமும் உருவாகத் தொடங்கும்” என்றாள் குந்தி.

“அவனுக்குள் ஓடும் குருதியைக் காணமுடியும் என்று தோன்றுகிறது…” என்றான் பாண்டு. "அவன் கண்கள் இரு பால்துளிகள் போலிருக்கின்றன. அவன் வானத்தை மட்டுமே பார்க்கிறான். மண்ணில் எவரையும் இன்னும் அவன் அகம் அறியவில்லை." குனிந்து அவ்விழிகளைப்பார்த்து " விழிகளில் என்ன ஒரு போதை! விண்ணக அமுதத்தை முழுதுண்டால் மட்டுமே வரும் மயக்கம் இது" என்றான்.

அவள் மிகமெல்ல தன் அகத்தை அசைத்து நகர்த்தி கொண்டுசென்றாள். ஓசையே இல்லாமல் இருளில் ஒன்றைத் திருடிச்செல்பவள் போல. அந்த கவனத்தாலேயே நெஞ்சு படபடத்து மூச்சுவாங்கத் தொடங்கியது. “மிகச்சிறிய விரல்கள்… பூவுக்குள் அல்லிவட்டம்போல…” அவன் அந்த விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தான். பரவசத்தால் கிசுகிசுப்பாக ஆகிய குரலில் “பிடித்துக்கொள்கிறான்… பிடிக்கிறான்... அவனுக்கு நான் யாரென்று தெரிகிறது… ஆம்… என்னை அவனுக்குத்தெரிகிறது” என்றான்.

குந்தி “குழந்தைகளின் கைகள் அப்படித்தான் முட்டி சுருட்டியிருக்கும்” என்றாள். “மெல்லிய நகங்கள்… வியப்புதான். கருவிலேயே குழந்தைகளுக்கு இத்தனை நீளமாக நகம் வளருமென நான் எண்ணியிருக்கவேயில்லை…” என்றான் பாண்டு. உடனே கவலைகொண்டு "அந்நகங்கள் அவன் உள்ளங்கையை கிழித்துவிடுமா என்ன?" என்றான். குந்தி "அவை மெல்லிய தோல் போலத்தான் இருக்கின்றன" என்றாள். பாண்டு "ஆனால் அவன் உடலில் மிகக் கடினமான பகுதி இன்று அதுதான்" என்று சிரித்தான்.

குந்தி உதட்டை நாவால் வருடிக்கொண்டாள். பெருமூச்சுவிட்டாள். தொண்டை வறண்டுபோயிருந்தது. எழுந்து நீர்க்குடுவையை எடுத்து அருந்தவேண்டுமென எண்ணினாள். மெல்லமெல்ல தன் கைகால்களை எளிதாக்கி மூச்சை இழுத்துவிட்டு உடலின் பதற்றத்தை அடங்கச்செய்தாள். வாய்நீரைக்கூட்டி விழுங்கி தொண்டையை ஈரமாக்கிக் கொண்டாள். “கண்ணிமைகள் ஏன் இத்தனை வீங்கியிருக்கின்றன?” என்றான் பாண்டு. “பெரிய இமைகள்… கண்களும் பெரியதா என்ன?” குந்தி “குழந்தைகளின் முகத்தில் கண்கள் அதிகமாக வளர்வதில்லை பிறப்பிலேயே அவை பெரிதாகத்தான் இருக்கும்” என்றாள்.

அவள் வாயெடுத்தபோதுதான் சொல்லவேண்டிய சொற்களை இன்னும் சிந்திக்கவேயில்லை என்பதை உணர்ந்தாள். ஆமை போல தன்னை மீண்டும் உள்ளிழுத்துக்கொண்டாள். எதைச் சொல்லப்போகிறேன்? ஆம், என் மைந்தனைப்பற்றி. அஸ்தினபுரிக்கு மூத்தவன் அவனல்லவா என்று. அவனை தன் மைந்தனாக அறிவிப்பதாக பாண்டு சொன்ன சொல்லைப்பற்றி. ஆனால் எங்கே எச்சொல்லில் இருந்து தொடங்குவது? அவள் ஒருபோதும் அதுபோல தன்னை சொல்லற்றவளாக உணர்ந்ததில்லை. அகத்தின் ஆயிரம் கைகள் துழாவித்துழாவிச் சலித்தன. பின்னர் “என் முதல்மைந்தனின் பெயரென்ன என்றுகூட நான் அறியேன்” என்று சொன்னாள். திடுக்கிட்டு உடலதிர அச்சொற்களை தான் உச்சரிக்கவேயில்லை என்று உணர்ந்தாள்.

பாண்டு “ஆ!” என்றான். அவன் உடல் பதறத்தொடங்கியது. இரு கைகளையும் மஞ்சத்தில் ஊன்றிக்கொண்டபோது அவை துடித்தன. “சிரிக்கிறான்… ஆம். புன்னகை அது… அவன் புன்னகைசெய்தான்.” குந்தி அவன் முகத்தையே பார்த்தாள். வலிப்புவந்தவனைப்போல முகத்தசைகள் ஒருபக்கமாகக் கோணலாக மாறி இழுபட்டன. “ஆம்… புன்னகைத்தான்… இங்கே தெய்வங்கள் வந்து நின்றிருக்கின்றன… நாமறியாத தெய்வங்கள்.” அவன் குரல் கரகரத்து தேய மூங்கில் கிழிபடும் ஒலியில் விசும்பி அழத்தொடங்கினான். உதடுகளை அழுத்தியபடி கண்களை இறுக்கியபடி அழுதான். ”தெய்வங்களே! மூதாதையரே! என்னை வாழ்த்தினீர்கள். என்னை வாழச்செய்தீர்கள்…” என்று அரற்றினான்.

அவள் திரட்டிய சொற்கள் மணலில் நீரென வற்றி மறைந்தன. பெருமூச்சுக்கள் வழியாக தன்னுள் எழுந்த அகஎடையை வெளியேற்ற முயன்றாள்.

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 4 ]

அன்று குழந்தைக்கு நாமகரணச்சடங்கு என்று பாண்டு சொல்லியிருந்ததை விடிகாலையில்தான் குந்தி நினைவுகூர்ந்தாள். நாமகரணத்தை நடத்தும் ஹம்சகட்டத்து ரிஷிகளுக்கு காணிக்கையாக அளிப்பதற்கென்றே அவன் மரவுரியாடைகள் பின்னிக்கொண்டிருந்தான். அரணிக்கட்டைகள் செதுக்கிச்சேர்த்திருந்தான். "அஸ்தினபுரியின் அரசனாக பொன்னும் மணியும் அள்ளி வைதிகர்களுக்கு அளித்திருக்கிறேன். அவற்றை கையால் தொட்ட நினைவே அழிந்துவிட்டது. இவற்றை என் கைகளால் செய்து அளிக்கும் முழுமையை நான் அறிந்ததேயில்லை" என்றான்.

"நாட்கணக்காக இவற்றை செய்திருக்கிறேன். இவற்றை செதுக்கியும் பின்னியும் உருவாக்கும்போது என் அகம் இவற்றைப் பெறுபவர்களுக்காக கனிகிறது. அவர்களின் வாழ்த்துக்களை அது அப்போதே பெற்றுக்கொள்கிறது" என்றான் பாண்டு. "இவற்றைப் பெறுபவர்கள் என் அகம் கனிந்த அன்பைத்தான் அடைகிறார்கள். ஆகவேதான் தன் கைகளால் செய்தவற்றையே கொடுக்கவேண்டும் என்கின்றன ஆரண்யகங்கள்."

குந்தி அவனுடைய பரவசத்தை மனவிலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் நீரில் துடித்து கொப்பளித்தெழுந்து மூழ்கித்திளைக்கும் மீன் போல காலத்தை அறிந்துகொண்டிருந்தான். அவள் பார்க்கும் நேரமெல்லாம் எங்காவது ஓடிக்கொண்டிருந்தான். இந்திரத்யும்னத்தின் கிழக்குக் கரையில் ஜ்வாலாகட்டம் என்னும் படித்துறை அருகே சடங்குக்காக மூங்கில்கழிகளை நாட்டி மேலே நாணல்களால் கூரையிட்டு ஈச்சை ஓலைத்தட்டிகளால் சுவரமைத்து குடில்கட்டப்பட்டது. அதன் நடுவே பச்சைக்களிமண்ணாலும் செங்கற்களாலும் மூன்று எரிகுளங்கள் அமைக்கப்பட்டன. கார்மிகர் அமர்வதற்கான தர்ப்பைப்புல் இருக்கைகள் போடப்பட்டன.

இரவெல்லாம் பந்தம் கொளுத்தி வைத்துக்கொண்டு அங்கே பாண்டு வேலைசெய்துகொண்டிருந்தான். "இரவில் குளிர் இருக்குமல்லவா?" என்றாள் குந்தி "ஆம், நெருப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் பணி முழுமையடைய வேண்டுமல்லவா? பந்தலுக்குள் புதிய மணல் பரப்பவேண்டுமென நினைத்தேன். அதற்குள் நீர் பெருகி ஏரி மேலெழுந்து மணல்மேடுகள் மூழ்கிவிட்டன. மணலை முழுக்க கீழே ஓடையில் இருந்து கொண்டுவந்தேன்" என்றான்.

அதிகாலையில் அவன் உள்ளே வந்து தன் ஆடைகளை எடுப்பதைக்கண்டு மஞ்சத்தில் மைந்தனுடன் படுத்திருந்த குந்தி விழித்துக்கொண்டாள். "விடிந்துவிட்டதா?" என்றாள். "இன்னும் விடியவில்லை. நான் இப்போதே நீராடிவிடலாமென எண்ணுகிறேன். வேள்விக்கான நெய்யையும் சமித்துக்களையும் நீராடாமல் தொடக்கூடாதென்று நெறி" என்றபடி அவன் வெளியே சென்றான். அவள் புரண்டுபடுத்து மைந்தனை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்போதுகூட அவனுக்கு என்ன பெயரிட முடியும் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனுக்கென ஒரு பெயர் இருக்கவியலுமா என்ன என்றே அகம் வியந்துகொண்டது.

அதற்குமேல் துயிலமுடியாமல் அவளும் எழுந்துகொண்டாள். வெளியே அனகை விறகுகளை அள்ளி கொண்டு செல்வதைக் கண்டாள். அவளைக்கண்டதும் அனகை திரும்பி "இன்று நான் தினைப்பாயசம் செய்வதாக இருக்கிறேன் அரசி. அஸ்தினபுரியின் இளவரசரின் பெயர்சூட்டுநாள் இனிப்பின்றிப் போகவேண்டாம்” என்றாள். குந்தி புன்னகைசெய்து "வேள்விக்கு அவியாகாத எதையும் இன்று உண்ணலாகாது அல்லவா?” என்றாள். "ஆம். இதையும் ஒருதுளி தேவர்களுக்கு அளிப்போம்” என்றபின் சிரித்துக்கொண்டு அனகை சென்றாள்.

இந்திரத்யும்னத்தில் நீராடிக்கொண்டிருக்கையில்தான் காலையில் எழுந்ததுமே தன் மனம் அமைதியிழந்திருப்பதை அவள் அறிந்தாள். ஏன் என்று தெரியவில்லை. அமைதியிழக்கும்படி எதைக் கண்டாள்? எதைக் கேட்டாள்? எதை எண்ணிக்கொண்டாள்? இரவின் கனவுகளில் ஏதாவது தெரிந்ததா? குளிர்ந்த நீருக்குள் மூழ்கி நீந்தி தலையைத் தூக்கியபோது அது ஓர் அச்சம் என்று தெரிந்தது. அவள் எதையோ எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கிறாள். ஆம், குழந்தைபிறந்ததுமுதலே அந்த அச்சம் அவளிடம் குடியேறியிருந்தது. ஆனால் அது இன்று வலுக்கொண்டிருக்கிறது.

அவள் திரும்பவந்தபோது குழந்தையை அனகை வெந்நீராடச்செய்து நீரில் ஊறவைத்து மென்மையாக்கப்பட்ட மரவுரியாடை சுற்றி நெற்றியில் செஞ்சாந்து திலகமணியச்செய்து படுக்கவைத்திருந்தாள். வெந்நீராடியமையால் அது உடனே மீண்டும் கண்துயிலத் தொடங்கிவிட்டிருந்தது. அனகை வந்து "நான் வேள்வி முடிவதற்குள் வந்துவிடுகிறேன் அரசி" என்றாள்.

அவள் ஆடைமாற்றிக்கொண்டிருக்கும்போது பாண்டு "பிருதை, இன்று நன்னாள். நம் மைந்தன் வாழ்த்தப்பட்டவன்..." என்று கூவியபடி வந்து நின்று மூச்சிரைத்தான். குந்தி நிமிர்ந்து நோக்கினாள். "உன் குருநாதர் வந்திருக்கிறார். ஆம், துர்வாசமுனிவர்! தற்செயலாக சதசிருங்கம் வந்தவர் நீ இங்கே இருப்பதை அறிந்து வந்திருக்கிறார். வந்தபின்னர்தான் உனக்கு மைந்தன் பிறந்ததை அறிந்தார். மகிழ்வுடன் இன்று குழந்தைக்கு அவரே பெயர்சூட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றான்.

அதுவரை நெஞ்சில் நீர்ப்பாசி போல விலக்க விலக்க மூடிக்கொண்டிருந்த அச்சம் அகல குந்தி புன்னகை செய்தாள். "நீ புன்னகைசெய்யக்கண்டு நெடுநாட்களாகின்றது பிருதை" என்றான் பாண்டு. "நான் காலையில் உன் முகத்தை நோக்கினேன். அதிலிருந்த கவலையைக் கண்டு எனக்கும் அகத்தில் கவலை முளைத்தது. அங்கே சென்றால் வைதிகர்கள் முனிவரைச்சூழ்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். அவரைக் கண்டதுமே அனைத்தையும் மறந்துவிட்டேன்" என்றான்.

குந்தி "நான் இன்னும் ஆடையணிந்து முடிக்கவில்லை" என்றாள். "அங்கே வேள்வி தொடங்கவிருக்கிறது. முதற்பொன்னொளியுடன் சவிதா எழும்போது பெயர் சூட்டப்படவேண்டும்" என்றான் பாண்டு. குந்தி அவள் அச்சடங்குக்காகவே எடுத்து வைத்திருந்த ஒற்றை கல்மாலையை எடுத்து அணிந்துகொண்டிருக்கும்போது மாத்ரி நீராடிவந்தாள். "விரைவாக அணிசெய்துகொள்..." என்றாள் குந்தி. "இதோ உனக்காக ஓர் அணி எடுத்துவைத்திருக்கிறேன்."

மாத்ரி தயங்கி "இது தவச்சாலை... இங்கே..." என தொடங்க "அணியில்லாமல் நீ அவைசெல்லக்கூடாது. என் ஆணை இது" என்றாள் குந்தி உரக்க. மாத்ரி தலையசைத்தாள். குந்தி மென்மையான குரலில் "நீ இன்னும் இளையவள். இங்கே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான் வந்திருக்கிறாய். தவம்புரிவதற்காக அல்ல. உன்னால் அங்கே காந்தாரியர் நடுவே மகிழ்ச்சியாக இருக்கமுடியாதென்பதனாலேயே இங்கே அழைத்துவந்தேன். புரிகிறதா?" என்றாள். அவள் தலையை அசைத்தாள்.

"துர்வாசமுனிவர் வந்திருக்கிறார் என்றார்கள்" என்றாள் மாத்ரி. "ஆம், அவரைப்பார்த்து நெடுநாட்களாகின்றன" என்றபடி குந்தி குழந்தையை மான்தோல்சுருளுடன் கையில் எடுத்துக்கொண்டாள். மாத்ரி புன்னகையுடன் "அவர் அளித்த மந்திரத்தால் விளைந்த கனி அல்லவா?" என்றாள். குந்தி வெறுமனே புன்னகைசெய்தாள்.

வெளிக்காற்றின் குளிரில் குழந்தை விழித்துக்கொண்டு சிணுங்கியது. அவள் அதை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பின்னால் வந்த மாத்ரி "அக்கா அதை என்னிடம் கொடுங்கள்" என்றாள். குந்தி புன்னகையுடன் குழந்தையை அளிக்க அவள் பதறும் கைகளுடன் மூச்சடக்கி வாங்கினாள். வாய்திறந்து சிரித்துக்கொண்டு அதை தன் முலைகள்மேல் அணைத்துக்கொண்டாள். "மார்பின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் அதற்கு" என்றாள் குந்தி. "மார்பின் வெம்மையும் வேண்டும்."

மாத்ரி "எனக்குத்தெரியும். நான் குரங்குகள் குழந்தையை வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன்" என்றாள். அவள் கையில் இருந்து குழந்தை கைகால்களை ஆட்டியது. "நடனமாடுகிறான்" என்றாள் மாத்ரி குனிந்தபடி. குழந்தையின் கைவிரல்களில் அவள் கூந்தல் சிக்கிக்கொண்டது. "ஆ! தலைமுடியைப்பிடித்து இழுக்கிறான்" என்று மாத்ரி சிரித்தபடி கூவினாள்.

வேள்விச்சாலையருகே இந்திரத்யும்னத்தின் கரையோரத்தில் முனிவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவே துர்வாசர் அமர்ந்திருந்ததை தொலைவிலேயே குந்தி கண்டாள். துர்வாசர் அவளைக் கண்டதும் முகம் மலர்ந்து எழுந்து கைகளை நீட்டியபடி "மிகவும் மாறிவிட்டாய் மகளே" என்றார். அந்தச்சொற்கள் அவளை விம்மச்செய்தன. அழுதபடி அவர் பாதங்களில் விழுந்துவிடுவோமென எண்ணினாள். தன்னை அடக்கியபடி "என் மைந்தன்" என்று சொல்லி திரும்பி மாத்ரியின் கைகளில் இருந்து குழந்தையை வாங்கி துர்வாசரிடம் நீட்டினாள்.

துர்வாசரின் அந்த நெகிழ்ச்சியையும் சிரிப்பையும் அவரை அறிந்திருந்த முனிவர்கள் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். "இவனுடைய நாளையும் கோளையும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்றார் துர்வாசர். "மாண்டூக்யர் கோள்நிலை தெரிந்தவர். அஸ்தினபுரிக்கு இவனே சக்ரவர்த்தி என்று சொல்கிறார். தெய்வங்களை வேவுபார்ப்பதில்தான் மானுடருக்கு எத்தனை ஆர்வம்" என்றார்.

மாண்டூக்யர் எழுந்து "முனிவரே, நான் சொல்வது நூலோர் அறிவும் என் ஊழ்கஞானமும் கண்டடைந்தது மட்டும்தான். இன்னமும் நான் அக்குழந்தையைப் பார்க்கவில்லை. அதன் உள்ளங்கைகளைப் பாருங்கள். வலக்கையில் சக்கர ரேகையும் இடக்கையில் சங்கு ரேகையும் இருக்கும்..." குந்தி உடனே மைந்தனை திரும்பிப்பார்த்தாள். அதற்குள் மாத்ரி அதன் கைகளை விரித்துப்பார்த்து "ஆமாம்... சங்கு போலவே இருக்கிறது... அக்கா, இது சக்கரவடிவமேதான்" என்றாள்.

மாண்டூக்யர் "ஆம், அவை இருந்தாகவேண்டும். ஏனென்றால் அறமுதல்வனுக்குரிய உச்சத் தருணத்தில் இம்மைந்தன் பிறந்திருக்கிறான். இவன் தருமனேதான்" என்றார். துர்வாசர் குழந்தையின் கால்களைப் பிடித்து பாதங்களைப் பார்த்தபின் புன்னகைசெய்தார். "குருநாதரே ஏதேனும் தீங்கா?" என்று அச்சத்துடன் குந்தி கேட்டாள். "அவர் சொல்வது உண்மைதான் குழந்தை. இவன் சக்ரவர்த்தியேதான். ஆனால் சக்ரவர்த்திகளின் சுமை சாமானியரைவிட பல்லாயிரம் மடங்கு. அவர்கள் செல்லவேண்டிய தொலைவும் பல்லாயிரம் மடங்குதான்."

குந்தி மெல்லிய குரலில் "கடும்துயர்களை அனுபவிப்பானோ?" என்றாள். "ஆம் என்று சொன்னால் அவன் மண்ணாளவேண்டியதில்லை என்று சொல்வாயா என்ன?" என்றார் துர்வாசர். குந்தி தலைகவிழ்ந்து பேசாமல் நின்றாள். துர்வாசர் புன்னகையுடன் "உன்னை நான் ஒருகணம்கூட மறந்ததில்லை. முதியவயதில் இப்படி ஒரு பெண்குழந்தையால் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பின்பு தெரிந்தது" என்றார். அவள் நிமிர "நீ உலகியலையே அகமாகக் கொண்டவள். மண், பொன், புகழ்... உன் ஆற்றலே அந்த விழைவுதான். நானோ என் இளமையிலேயே அவற்றை முழுமையாகத் துறந்தவன். நான் மறந்தேபோன உலகியல் உன்னில் பேரழகுடன் மலர்ந்து நின்றது. அதனால்தான் உன்னை நான் விரும்பினேன். இப்போதும் அந்த அழகையே பார்க்கிறேன்" என்றார்.

வேள்விக்கான சங்கு ஊதப்பட்டதும் முனிவர்கள் கைகூப்பி வணங்கியபடி வேள்விச்சாலைக்குள் சென்றனர். எரிகுளத்தின் வலப்பக்கம் தர்ப்பைப்புல் விரித்த மரப்பட்டைமேல் குந்தி மடியில் மைந்தனுடன் அமர்ந்துகொண்டாள். அவளருகே பாண்டுவும் அவனுக்கு அப்பால் மாத்ரியும் அமர்ந்தனர். மாண்டூக்யர் வேள்வித்தலைவராக அமர்ந்தார். மூன்று கௌதமர்களும் வேள்வியாற்றுபவர்களாக அமர்ந்தனர்.

அரணிக்கட்டையில் அனலோன் கண்விழித்தெழுந்தான். எரிகுளத்தில் முதல்நெய் அதை வாங்கி சிவந்தெழுந்தது. நாவுகளில் ஓங்காரம் இதழ்விரிக்கத் தொடங்கியது. வேதநாதம் அலைகளாக எழுந்து வேள்விச்சாலையை நிறைத்தது. விடிந்தெழும் காலையை நோக்கி தன் கதிர்களைப் பரப்பியது.

குந்தி மீண்டும் அந்த நிலைகொள்ளாமையை உணர்ந்தாள். தொலைவிலெங்கோ வேதம் ஒலிப்பதுபோலவும் அவள் ஆழ்ந்த மென்மையான மணலுக்குள் புதைந்து புதைந்து சென்றுகொண்டிருப்பதாகவும் தோன்றியது. வேதநாதம் பறவைகளின் அகவல் போலவும் தோற்கருவிகளின் மிழற்றல் போலவும் கிளைகளை காற்று அசைக்கும் ஒலிபோலவும் கேட்டுக்கொண்டிருந்தது. அவள் தன் மடியில் குழந்தை இல்லை என்ற உணர்வை அடைந்து திடுக்கிட்டு விழித்தாள். குழந்தை துயின்றிருந்தது. அதன் மெல்லிய வயிற்றை தன் கைகளால் வருடிக்கொண்டாள்.

மாண்டூக்யர் "மாமுனிவரே, இன்று தாங்கள் வந்தது இறையாற்றலால்தான். மைந்தனுக்கு தாங்களே நற்பெயர் சூட்டவேண்டும்" என்று சொல்லி குந்தியிடம் கைகாட்டினார். துர்வாசரின் மடியில் விரிக்கப்பட்ட தர்ப்பையில் குந்தி தன் மைந்தனை தூக்கிப் படுக்கவைத்தாள். அது விழித்துக்கொண்டு முகம் சிவக்க உதடுகள் கோணலாக அழத்தொடங்கியதும் துர்வாசர் அதன் வாயை மெல்லத்தொட்டு தலையை வருடினார். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு ஒருகணம் திகைத்தது. பின் கைகால்களை ஆட்டியபடி வாயை சப்புகொட்டியது. அதன் கடைவாயில் வழிந்த மெல்லிய எச்சிலை குந்தி சுட்டுவிரலால் துடைத்தாள்.

மங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்தை முனிபத்தினி ஒருத்தி துர்வாசரின் அருகே நீட்டினாள். அவர் அதிலிருந்து ஒரு கைப்பிடி நிறைய வெண்மலரை அள்ளி எடுத்தார். மந்திரத்தை வாய்க்குள் சொன்னபடி ஒவ்வொரு மலராக குழந்தைமீது போட்டார். குந்தி அவளையறியாமலேயே எண்ணினாள். பன்னிரண்டு மலர்கள். அதன்பின் குழந்தையை தன் முகத்தருகே தூக்கி அதன் காதில் அதன் பெயரை மும்முறை சொன்னார். அது செவிகூர்ந்து தன்பெயரைக் கேட்பதுபோலிருந்தது.

"இவன் சக்ரவர்த்திகளுக்குரிய இருபெரும் வேள்விகளைச் செய்பவன் என்கின்றன அனைத்து நிமித்தங்களும். வெற்றியின்றி வேள்வியில்லை. போரின்றி வெற்றியில்லை. இவன் காணப்போகும் அனைத்துப்போர்களிலும் அறத்தில் நிலைத்திருப்பான் என்று இவனுக்கு யுதிஷ்டிரன் என்று பெயரிடுகிறேன்" என்றார். அங்கிருந்த வைதிகர் ‘ஓம் ஓம் ஓம்’ என்று முழங்கினர். "குருகுலத்து முதல்வனாகையால் இவன் குருமுக்யன் என்றும் பாண்டுவின் முதல்மைந்தனாதலால் பாண்டவாக்ரஜன் என்றும் அழைக்கப்படுவான். இப்பாரதத்தை ஆளவிருப்பதனால் இவனை பாரதன் என்று அழைக்கிறேன்." சபைவைதிகர் ‘ஓம் ஓம் ஓம்’ என்று வாழ்த்தினர்.

"ஆனால் இவன் தருமனின் அறப்புதல்வன். மண்ணில் வந்த அறச்செல்வன். ஆகவே தருமன் என்ற பெயரே இவனுக்காக நிலைப்பதாக. மண்ணிலும் விண்ணிலும் இவன் புகழ் விளங்குக!" என்று சொல்லி குழந்தைமேல் மஞ்சள் அரிசியை மும்முறை தூவி வாழ்த்தினார் துர்வாசர். மாண்டூக்யர் "இம்மைந்தனின் அனைத்து பிதாமகர்களும் இவ்வேள்விநெருப்பை காண்பார்களாக! அவர்களனைவருக்கும் இங்கே இவன் பெயர் சொல்லி பொழியப்படும் வேள்வியன்னம் சென்று சேர்வதாக! இவனுடைய வாழும் மூதாதையரெல்லாம் இவன் பெயர் சொல்லி இன்று மகிழ்வுகொண்டாடுவார்களாக!" என்றார்.

“விண்ணவனின் மைந்தன் பிரம்மன். பிரம்மனின் மைந்தன் அத்ரி பிரஜாபதி. அவன் மைந்தன் புதன். புதன் மைந்தன் சந்திரன். சந்திரகுலத்தோன்றலாகிய யுதிஷ்டிரன் பெயர்சொல்லி இங்கே அவியளிக்கிறேன்" என்று ஏகத கௌதமர் சொன்னார். ”சந்திரகுலத்துப் பேரரசர் புரூரவஸ் வாழ்க! அவருக்கு அவிசென்று சேர்வதாக! ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் என்னும் புகழ்மிக்க மாமன்னர்கள் அனைவருக்கும் நீத்தாருலகில் இந்த அவியும் வணக்கங்களும் சென்று சேர்வதாக!"

த்விதீய கௌதமர் "மாமன்னர் ஹஸ்தியின் வழிவந்த திருதராஷ்டிரனின் அவிப்பொருள் இது என்றறிக நீத்தோரே. இந்த நெருப்பு உங்கள் சுவையறியும் நாவுகளாகட்டும்" என்றார். "அஜமீட மன்னரின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோர் இந்த அவியை உண்ணட்டும். அவர்களின் செவிகளில் எங்கள் வணக்கங்கள் சென்று சேரட்டும்." 'ஓம் ஓம் ஓம்' என்று வைதிகர் வாழ்த்தினர்.

திரித கௌதமர் "குருகுலத்து மூத்த யுதிஷ்டிரனின் பெயர் சொல்லி இந்த அவியை நெருப்பிலிடுகிறோம். குருவின் மைந்தர் ஜஹ்னுவும் அவர் கொடிவழிவந்த சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என்னும் மாமன்னர்களும் இந்த அவியை ஏற்றருள்க! மாமன்னர் பிரதீபரும் சந்தனுவும் விசித்திரவீரிய மாமன்னரும் இந்த அவியேற்று மகிழ்ந்து இந்த மைந்தனை வாழ்த்துவார்களாக!"

திரித கௌதமர் தொடர்ந்தார் "விசித்திரவீரிய மாமன்னரின் மைந்தன் பாண்டுவிற்கு இந்த அவி அபூர்வமென்று சென்று உறையட்டும். அவரது குருதித்தந்தை கிருஷ்ணதுவைபாயன மகாவியாசருக்கும் இந்த அவி அபூர்வநிலையில் சென்று காத்திருக்கட்டும்." மிக இயல்பாக அந்த சொற்களுடன் இணைந்துகொண்டு துர்வாசர் சொன்னார் "மகாகௌதம மகரிஷிக்கும் இந்த அவி அபூர்வமென்று சென்று வாழ்வதாக! நீத்தாரும் மூத்தாரும் தந்தையரும் இந்த அவியேற்று எங்களை வாழ்த்துவார்களாக! ஆம் அவ்வாறே ஆகுக!" 'ஓம் ஓம் ஓம்' என வேள்விச்சபை முழங்கியது.

பெயர்சூட்டு நிகழ்ச்சி முடிந்தபின் மைந்தனை பாண்டு மடியில் இட்டுக்கொள்ள அங்கிருந்த ஒவ்வொரு முனிவரும் நிரையாக வந்து மைந்தனை அரியும் மலரும் இட்டு வாழ்த்தினர். அதன்பின் முனிபத்தினிகள் வாழ்த்தினர். கடைசியாக பிரம்மசாரிகள் வாழ்த்தினர். பாண்டுவின் மடியில் மஞ்சளரிசியும் மலரும் குவிந்தன. அவன் முகம் காலையொளிபட்ட மலையுச்சிப்பாறை போலிருந்தது. ஒவ்வொருமுறை வாழ்த்து ஒலிக்கும்போதும் ‘வணங்குகிறேன்’ என்று அவன் அகம் நிறைந்து சொன்னான். குழந்தை மீண்டும் விழித்துக்கொண்டு அழத்தொடங்கியது. இறுதி பிரம்மசாரியும் வாழ்த்தியபின் குந்தி அதை கையில் வாங்கினாள்.

"மலரில் இருந்த எறும்புகள் கடித்திருக்கலாம் அக்கா" என்றாள் மாத்ரி. "குழந்தைக்கு அமுதூட்டுவதென்றால் ஊட்டலாம் அரசி... இனி பரிசிலளித்து வணங்கும் நிகழ்ச்சிதான். அதை மன்னரே செய்யலாம்" என்றார் மாண்டூக்யர். குந்தி மைந்தனுடன் பந்தலுக்கு வெளியே சென்றாள். "ஒரு மயில்பீலி எடுத்து வருகிறேன் அக்கா" என்று மாத்ரி ஓடிச்சென்றாள். அவள் கச்சை அவிழ்த்து மைந்தனின் வாயில் முலைக்காம்பை வைத்தாள். குனிந்து அவன் முகத்தைப் பார்த்தாள். யுதிஷ்டிரன்! யுத்தத்தில் ஸ்திரமானவன். இந்தச்சிறுகைகளால் இவன் செய்யப்போகும் போர்கள் என்னென்ன?

மீண்டும் அந்த அச்சம் வந்து அவள் நெஞ்சிலமர்ந்தது. எதற்காக துர்வாசர் அப்பெயரை சூட்டினார்? அவர் எதை கண்டார்? மாத்ரி மயிற்தோகையுடன் ஓடிவந்து குழந்தையின் உடலை மெல்ல நீவினாள். குழந்தை இருகைகளையும் முட்டிபிடித்து ஆட்டியபடி கட்டைவிரலை நெளித்து கால்களை உதைத்தபடி கண்களை மூடி அமுதுண்டது. யுதிஷ்டிரன்,யுதிஷ்டிரன் என்று அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டாள். எப்போதோ ஒருகணத்தில் அக்குழந்தை யுதிஷ்டிரனாக ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தாள். திகைத்தவளாக கண்களை மூடிக்கொண்டு யுதிஷ்டிரன் என்றாள். சிறிய கைகள் முட்டிபிடித்து ஆடுவதுதான் தெரிந்தது.

முனிபத்தினியாகிய சுஷமை வந்து "அரசி தாங்கள் மட்டும் வரவேண்டும்" என்றாள். வாயில் பால்வழியத் தூங்கிவிட்டிருந்த குழந்தையை முலைக்கண்ணில் இருந்து விலக்கி மாத்ரியிடம் அளித்து "மான்தோலில் படுக்கவை...சற்று துயிலட்டும்" என்றாள் குந்தி. எழுந்து ஆடைதிருத்தி வேள்விச்சாலைக்குள் சென்றாள். "அரசி, அமர்க. வேள்வியன்னத்தை பகிரும் சடங்குமட்டும் எஞ்சியிருக்கிறது" என்றார் மாண்டூக்யர். வேள்வியன்னத்தை ஏழுபங்குகளாக பகுத்து முதல்பங்கை வேள்வியதிபருக்கும் இரண்டாவது பங்கை வேள்வியாற்றியவர்களுக்கும் மூன்று பங்குகளை முனிவர்களுக்கும் இரண்டு பங்குகளை தனக்குமாக அவள் எடுத்துவைத்தாள்.

"அன்னத்தை அளிப்பவர்களே, பூமியே, மழையே, வேள்வித்தீயாக வந்து எங்கள் மூதாதையர் உண்டவற்றின் மிச்சிலான இந்தத் தூய அன்னம் எங்கள் உடலையும் ஆன்மாவையும் நலம்பெறச்செய்வதாக! எங்கள் வழித்தோன்றல்கள் நலம்பெறுவார்களாக!" என்று சொன்னபடி மாண்டூக்யர் கடைசித்துளி நெய்யை அனலில் ஊற்றினார். "தாங்கள் செல்லலாம் அரசி" என்றார் ஏகத கௌதமர்.

குந்தி எழுந்து வேள்விச்சாலைக்கு வெளியே செல்லும்போது மாத்ரி வெளியே நின்று உள்ளே நோக்குவதைக் கண்டாள். "குழந்தை எங்கே?" என்றாள். "இதோ" என மாத்ரி திரும்பி அருகே சிறுதிண்ணையைச் சுட்டிக்காட்டினாள். குந்தி எட்டிப்பார்த்த கணமே அடிவயிற்றில் குளிர்ந்த வாள் பாய்ந்ததுபோல உணர்ந்தாள். குழந்தை மான் தோலில் இருந்து விலகி அப்பால் கிடந்தது.

அதை பாய்ந்து எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதன் வாயை தன் மூக்கருகே கொண்டுவந்து முகர்ந்தாள். அதன் சிறிய உடலை புரட்டிப்புரட்டி பார்த்தாள். "நான் மான்தோலில்தான் படுக்கவைத்தேன் அக்கா... எப்படி புரண்டதென்றே தெரியவில்லை" என்றாள் மாத்ரி. குந்தி குழந்தையின் உடலை கூர்ந்து நோக்கினாள். "என்ன அக்கா?" என்றாள் மாத்ரி அழுகைமுட்ட.

"ஒன்றுமில்லை... எறும்புகள் கடித்திருக்கின்றனவா என்று பார்த்தேன்" என்றாள் குந்தி. "ஒருகணம்கூட இருக்காது அக்கா... நீங்கள் எழப்போகும்போதுதான் நான் உள்ளே நோக்கினேன்" என்றாள் மாத்ரி. "ஒன்றுமில்லை. வெறுமனே பார்க்கிறேன். பயப்படாதே... ஒன்றுமில்லையடி" என்று குந்தி சொன்னாள். மாத்ரி கண்களை ஆடையால் துடைத்தாள்.

குந்தி குழந்தையை அணைத்துக்கொண்டு அந்த வேள்விப்பந்தலை நோக்கினாள். உள்ளே முனிவர்களும் மாணவர்களும் முனிபத்தினிகளும் நின்றிருந்தனர். அவர்களுக்கான அன்னத்தை மரப்பட்டைத் தொன்னைகளில் பெற்றுக்கொண்டவர்கள் மறுபக்கம் வழியாக வெளியேறினர். எங்கும் எதுவும் தென்படவில்லை. அவள் தன் நெஞ்சு முரசறைவதை உணர்ந்தாள். மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

வேள்வியன்னத்துடன் பாண்டு குடிலுக்கு வந்தபோது அவள் மடியில் மைந்தனை வைத்தபடி தன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். "தினைப்பாயசத்தை சிறிய கலங்களிலாக ஆக்கு. நானே கொண்டுசென்று கொடுக்கிறேன். மாத்ரியும் என்னுடன் வரட்டும்" என்றபடி உள்ளே வந்தவன் அவளை நோக்கி "என்ன?" என்றான். அவள் தலையை அசைத்தாள். "என்ன செய்கிறாய்? உடல்நலமில்லையா என்ன?" என்றான் பாண்டு. "இல்லை" என்று அவள் தலையை அசைத்தாள். "உன் முகம் வெளிறியிருக்கிறது. உனக்கு வேள்விப்புகை பிடிக்கவில்லை என்று தெரிகிறது" என்றான் பாண்டு. "படுத்துக்கொள். நான் வர தாமதமாகலாம்."

"நமக்கு இன்னொரு மைந்தன் தேவை" என்று குந்தி சொன்னாள். பாண்டு திகைத்து "என்ன சொல்கிறாய்?" என்றான். குந்தி "ஆம். பெரும்புயல்களைப்போல ஆற்றல்கொண்ட மைந்தன். வெல்லமுடியாத புயங்கள் கொண்டவன். ஒவ்வொரு கணமும் இவனுடன் இருந்து காப்பவன்" என்றாள்.

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 1 ]

காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி "அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது" என்றாள். சுவடிகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்த அம்பிகை "மச்சர் இருக்கிறாரா?" என்றபடி வெளியே ஓடினாள். "நேற்று மாலையிலிருந்தே அவர் இருக்கிறார்" என்றபடி ஊர்ணை பின்னால் விரைந்தாள். "நேற்றுகாலை ஒரு முதிய பிடியானையை அவிழ்த்துவிட்டார். அது பிளிறியபடி நம் அரண்மனை முற்றத்துக்கு வந்து நின்று குரலெழுப்பியது. அரசி மைந்தனைப் பெறவிருக்கிறாள் என்று அந்த யானை சொல்கிறது, மகவை எடுக்க உதவவே அது வந்துள்ளது என்று சொல்லி அனைத்தையும் ஒழுங்குசெய்யத் தொடங்கிவிட்டார்."

அம்பிகைக்குப்பின்னால் மூச்சிரைக்க ஓடியபடி ஊர்ணை "நேற்றே மருந்துகளனைத்தும் ஒருங்கிவிட்டன. சேடியர் பன்னிருவர் அங்கே அனைத்துக்கும் சித்தமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். காந்தாரத்து இளவரசியர் அனைவரும் அங்கிருக்கிறார்கள். காந்தார இளவரசருக்குச் செய்திசொல்ல சேவகன் சென்றிருக்கிறான்" என்றாள். அம்பிகை நின்று "பேரரசிக்கு செய்தி சென்றுவிட்டதா?" என்றாள். "ஆம் அரசி..." என்றாள் ஊர்ணை. "சிறியவளுக்கு?" ஊர்ணை திகைத்து "அதை நான் அறியேன்" என்றாள்.

"வேண்டியதில்லை... அவளுக்கு செய்தி ஏதும் செல்லவேண்டாம்... இது என் ஆணை. காரியகர்த்தரிடம் உடனே சொல்லிவிடு" என்றாள் அம்பிகை. "ஆனால் அவர்களுக்கு உடனே அனைத்தும் தெரிந்துவிடும் அரசி. நம் அரண்மனைச்சேடியரில் எப்படியும் அவர்களுடைய உளவுச்சேடி ஒருத்தி இருப்பாள். அதை நம்மால் தவிர்க்கவே முடியாது." அம்பிகை "ஆம். அதை நானும் அறிவேன். அவள் ஒவ்வொரு கணமும் என்னையே நோக்கிக் கொண்டிருக்கிறாள். தீயகோளின் பார்வைபோல அவளுடைய தீவிழிகளை நான் உணர்கிறேன். ஆனால் நாம் முறையாக தெரிவிக்கக்கூடாது... அதுதான் என் ஆணை" என்றாள்.

ஊர்ணை அதன் பயன் என்ன என்று எண்ணியவள்போல பேசாமலிருந்தாள். "அந்த யாதவக்குழந்தை பிறந்தபோது அவள் முதல்செய்தியை எனக்குச் சொல்லியனுப்பினாள். அவளுடைய முதற்சேடி சாரிகை வந்து என்னிடம் சொன்னாள். அவள் தன் கண்களில் தேக்கியிருந்த இளிவரலை இப்போதும் நான் உணர்கிறேன். நஞ்சுபூசப்பட்டு ஒளிரும் கூரியவாள் அது. அணுக்கச்சேடிகள் தங்கள் அரசிகளின் அனைத்துத் தீங்குகளையும் தாங்களும் அகத்தில் நிறைத்துக் கொள்கிறார்கள்... உடைவாளை உருவி அவளை அங்கேயே வெட்டிவீழ்த்தவே நான் எண்ணினேன்" என்றாள் அம்பிகை.

ஊர்ணை "அவர்கள் முறைகளை பேணவேண்டுமென்றே சொல்லியனுப்பியதாகவும் இருக்கலாமல்லவா?" என்று சொல்ல அம்பிகை சீறித் திரும்பி "என்ன சொல்கிறாய்? அவள் எனக்கு எந்தச்செய்தியையாவது முறையாகத் தெரிவித்திருக்கிறாளா என்ன? ஏன் அந்தப் பாண்டுரன் பிறந்தபோதுகூட எனக்கு செய்தியறிவிப்பு வரவில்லை, தெரியுமல்லவா உனக்கு?" என்றாள். மூச்சு வாங்க "இந்தச்செய்தியை வேண்டுமென்றேதான் அவள் எனக்கு சொல்லியனுப்பினாள். பேரரசி ஜாதகர்மச் சடங்குகளை அறிவித்ததும் தன் கருவூலத்திலிருந்த செல்வமனைத்தையும் அள்ளி வீசி வைதிகர்களையும் சூதர்களையும் நிமித்திகர்களையும் கணிகர்களையும் கொண்டு தன் அவையை நிறைத்தாள். அரசவிழவு பன்னிருநாட்களில் முடிந்தது. அவள் ஒருமாதம் அதை நீட்டித்தாள்" என்றாள்.

மூச்சுவாங்க அம்பிகை நின்றாள். "அந்த யாதவமைந்தனை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என்றும் தர்மதேவனின் நேர்ப்புதல்வன் என்றும் புலவர்களைக்கொண்டு எழுதச்செய்து பரப்பினாள். இந்த அஸ்தினபுரியின் முச்சந்திகள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தப்பாடல்கள் எங்கே எப்படி முளைத்தன என்று நான் நன்றாகவே அறிவேன்." வெறுப்பால் சுளித்த முகத்துடன் வெண்பற்கள் தெரிய சீறி அம்பிகை சொன்னாள் "அத்துடன் பிறக்கவிருக்கும் என் சிறுமைந்தனைப்பற்றி அவள் அனைத்து தீச்சொற்களையும் பரப்பினாள். அவன் கலியின் பிறப்பு என்றும் அவன் கருவுற்றநாள்முதலே அவச்செய்திகள் எழுகின்றன என்றும் இன்று அஸ்தினபுரியிலும் அனைத்து ஜனபதங்களிலும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் வீணர்களான சூதர்கள்..."

திரும்பி நடந்தபடி அம்பிகை சொன்னாள் "என் பெயர்கோள் மைந்தன் பிறக்கட்டும். மும்மடங்கு செல்வத்தை நான் வெளியே எடுக்கிறேன். காந்தாரத்தின் கருவூலத்தைக்கொண்டு நூறு பெருங்காவியங்களை உருவாக்கி பரப்பமுடியும். என் சிறுமைந்தனின் கால்களில் பரதகண்டத்துச் சூதர்குலத்தையே வந்து விழச்செய்கிறேன்!" அவள் எவரிடம் பேசிக்கொண்டு செல்கிறாள் என்று ஊர்ணை வியந்தாள். அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் ஊர்ணை பலநூறுமுறை கேட்டிருந்தாள். சென்ற இரண்டுவருடங்களாக விழித்திருக்கும் நேரமெல்லாம் அம்பிகை அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தாள். எண்ணங்கள் ஓடி ஓடி வண்டித்தடம் போல மொழியில் பதிந்தபின் சொற்கள் அவளை அறியாமலேயே வாயிலிருந்து வந்துகொண்டிருந்தன.

"ஓலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்றாள் அம்பிகை. "என் ஒற்றர்கள் அங்கே சதசிருங்கத்தில் இருக்கிறார்கள். அவளுக்கு மீண்டும் வயிறு நிறைந்திருக்கிறது. கரு ஏழுமாதத்தைக் கடந்துவிட்டிருக்கிறது. அதற்கான கருநிறைவுச்சடங்குகளை அங்கே செய்யவிருக்கிறார்கள். இங்கே இவள் அதையும் விடமாட்டாள். அதற்கும் இங்கே சூதர்களைக் கூப்பிட்டு விழா எடுப்பாள். அந்தக்குழந்தை எந்த தேவனின் மைந்தன் என்று சொல்லத்தொடங்குவார்கள் அந்த வீணர்கள்?" நின்று திரும்பி மெல்லிய பித்து வெறித்த நோக்குடன் அம்பிகை சொன்னாள் "நல்லவேளை இப்போதேனும் இவளுடைய வயிற்றுவாயில் திறந்தது. நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். யாதவப்பெண்ணின் அடுத்த குழந்தையும் பிறந்தபின்னர்தான் இவள் ஈன்றுபோடுவாளோ என்று."

ஊர்ணை பெருமூச்சுடன் "காந்தாரத்து அரசி நலமுடன் இருக்கிறார்கள் அரசி. உடல் வலுவுடனிருக்கிறது. உள்ளமும் தெளிந்திருக்கிறது" என்றாள். "ஆம், அவ்வாறுதான் இருக்கும். வரவிருப்பவன் அஸ்தினபுரியின் பேரரசன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. அவன் கருவுறுவதற்கு முன்னரே அரியணை அவனுக்காகக் காத்திருக்கிறது" என்றாள். பின்பு உரக்கச்சிரித்து "ஒருவகையில் அவனுக்கு முன்னால் இந்த யாதவப்பதர்கள் பிறப்பதுகூட நல்லதுதான். ஒரு பூசல் நிகழட்டும். அவன் இவர்களைப்பிடித்து நகர்மன்றில் கழுவிலேற்றி வைக்கட்டும். சிம்மம் பிறக்கையில் தெய்வங்கள் அதன் இரைகளையும் மண்ணுக்கு அனுப்புகின்றன" என்றாள். அவளுடைய நகைப்பிலும் பித்து கலந்திருந்தது.

அந்தப்புர வாயிலில் சத்யசேனை நின்றிருந்தாள். "அரசிக்கு வணக்கம். தங்களைத்தான் எதிர்நோக்கியிருந்தோம்" என்றாள். "எப்படி இருக்கிறாள்?" என்றாள் அம்பிகை. "நேற்று மாலைமுதலே சிறுசிறு நோவு வந்து செல்லத் தொடங்கியது. அது பொய்நோவு என்றார் மச்சர். இன்றுகாலை முதல் கடுமையான நோவும் நீர்ப்போக்கும் நிகழ்ந்தது. பின்பு நின்றுவிட்டது. இப்போது மெல்லிய அதிர்வுகள் மட்டும்தான். மச்சரும் சீடர்களும் காத்திருக்கிறார்கள்" என்றாள் சத்யசேனை.

மச்சர் வெளியே வந்து "வணங்குகிறேன் அரசி" என்றபின் சத்யசேனையிடம் "உடனடியாக மூத்த யானைமருத்துவர் இருவரை வரச்சொல்லுங்கள்" என்றார். "ஏன் மச்சரே?" என்றாள் அம்பிகை. "எனக்கு இந்தக் கருவின் நெறிகளென்ன என்று இன்னும்கூடத் தெரியவில்லை. அவர்கள் இருவர் உடனிருந்தால் நன்றோ என்று எண்ணுகிறேன்" என்றார் மச்சர். "நான் சொன்ன அனைத்து மருந்துகளும் சித்தமாக உள்ளன அல்லவா?" சத்யசேனை "ஆம் மச்சரே" என்றாள். அவர் திரும்ப உள்ளே சென்றார். சத்யவிரதை வெளியே ஓடினாள்.

"அவள் அலறியழுதாளா?" என்றாள் அம்பிகை. "இல்லை. சிறு முனகல்கூட இல்லை. அவள் உடல் அதிர்வதிலிருந்துதான் கடும் வலி இருப்பதை உணரமுடிகிறது. நோவெடுத்தால் பிடியானைகள் அழுவதில்லை என்று மச்சர் சொன்னார்" என்றாள் சத்யசேனை. அம்பிகை "என்ன உளறல் இது..." என்று கூவியபின் தலையை பற்றியபடி "இந்த மைந்தன் வெளிவருவதற்குள் நான் என் அகத்தை சிதறவிட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். சீராக ஓரிரு எண்ணங்கள் கூட என்னுள் எழுவதில்லை..." என்றாள்.

சியாமை வந்து அம்பிகையை வணங்கி "பேரரசி தன் மஞ்சத்தில் இருக்கிறார். மைந்தன் பிறந்ததும் செய்தியை முறைப்படி அறிவிக்கும்படி சொன்னார். நலம்பெற்று மைந்தன் மண்தீண்டுவதற்காக வாழ்த்தி இந்தப் பரிசிலை அனுப்பினார்" என்றாள். அவள் நீட்டிய தாலத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் என ஏழு மூலமருந்துகள் இருந்தன. அம்பிகை ஒருகணம் உதடுகள் இறுக ஏதோ சொல்லவந்து பின் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தலைவணங்கி "பேரரசியின் வாழ்த்துக்கள் நலம் பயக்குமெனத் தெரிவியுங்கள்" என்றாள்.

சற்றுநேரத்தில் யானைமருத்துவர் சீர்ஷரும் அவரது இளவல் சுதமரும் வந்து வணங்கினர். மச்சர் வெளியே வந்து "வாருங்கள் சீர்ஷரே. வலி நின்று அதிர்வுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கரு உயிர்த்துடிப்புடன் இருக்கிறது. ஆனால் கருவாயிலை அது இன்னும் முட்டவில்லை. ஆகவேதான் தங்களை அழைத்தேன்" என்றார். "மதங்கநூலின்படி யானையின் ஈற்றுநோவு இரண்டுநாட்கள் கூட எடுத்துக்கொள்ளும் மச்சரே" என்றார் சீர்ஷர்.

அவர்கள் உள்ளே சென்றபின் அம்பிகை சோர்ந்து பீடத்தில் அமர்ந்தாள். காந்தாரிகள் அவளைச்சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். "இன்னொருத்தி எங்கே?" என்றாள் அம்பிகை. அந்தக்கூட்டத்தில் சம்படை இருக்கவில்லை. அம்பிகை "சிறியவள்? சம்படைதானே அவள் பெயர்?" என்றாள். சத்யசேனை சற்று தயங்கியபின் "சிலநாட்களாகவே அவள் தனித்து இருக்கத் தொடங்கியிருக்கிறாள் அரசி" என்றாள். "எப்போதும் மேற்குமூலை உப்பரிகையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறாள். உணவு அணிகள் எதிலும் ஈடுபாடில்லை. முன்பு அவளுடைய இளையவள் தசார்ணையுடன் எப்போதும் விளையாடிக்கொண்டிருந்தாள். இப்போது விளையாட அழைத்தால் வெறித்துப்பார்க்கிறாள்."

அம்பிகை கண்களைச் சுருக்கியபடி "அணங்குபீடை அது" என்றாள். "அரண்மனைகள் எல்லாமே தொன்மையானவை. இந்த அரண்மனை மாமன்னர் குருவின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. அன்றுமுதல் எத்தனையோ அரசிகளும் அந்தப்புரப்பெண்டிரும் இங்கே வாழ்நாள் முறிந்து இறந்திருப்பார்கள். அவர்களின் ஆன்மாக்களில் புவர்லோகத்தை அடையாதவை இங்கேதான் வாழ்ந்துகொண்டிருக்கும். ஆகவேதான் இங்கே எந்த மூலையிலும் எப்போதும் இருள் இருக்கலாகாது என்றும் ஒட்டடையும் கரியும் தூசியும் எங்கும் இருக்கக்கூடாதென்றும் சொல்கிறார்கள்."

தசார்ணை அச்சத்துடன் கையைநீட்டி சுஸ்ரவையின் ஆடையைப் பற்றிக்கொண்டாள். "பெண்களை அந்தியில் தனியாக இருக்க விடாதே. அவர்களுடன் எப்போதும் இன்னொருத்தி இருக்கவேண்டும். சேடியே ஆனாலும் சரி. அந்தியையும் இரவையும் விட சோர்ந்த நடுமதியம் இன்னும் இடர்மிக்கது" என்றாள் அம்பிகை. "அணங்கு பற்றிய பெண்களுக்கு வகைவகையான பூசனைகளும் வெறியாட்டுகளும் செய்துபார்த்ததுண்டு. எவரும் மீண்டதில்லை. அங்கே வடக்கு அரண்மனையில் விதுரனின் அன்னை சிவை இப்படித்தான் அணங்குகொண்டு அமர்ந்திருக்கிறாள். இருபதாண்டுகாலமாக."

சத்யசேனை பெருமூச்சுவிட்டாள். "எப்போதும் அணிசெய்துகொள்ளுங்கள். வைரங்கள் அணிந்த பெண்களை அணங்குகள் அண்டுவதில்லை" என்று அம்பிகை சொன்னாள். சத்யசேனை "நாங்கள் அவளிடம் பேசவே முடியவில்லை. அவள் நாங்கள் அறிந்த சம்படையே அல்ல என்று தோன்றுகிறது" என்றாள். "ஆம் அவள் நீங்கள் அறிந்த பெண்ணே அல்ல. அவள் வேறு. அவளுக்கு பூமியைச்சுற்றிச் சூழ்ந்திருக்கும் பெரும்பாழ் கண்ணுக்குத் தெரிந்துவிட்டது."

மதியம் காந்தாரிக்கு மீண்டும் வலி வந்தது. வலி ஏறிஏறிச்சென்று அந்தியில் நின்றுவிட்டது. வலியில் அவள் மஞ்சத்தின் சட்டத்தைப் பற்றிக்கொண்டு உடலை அசைத்து கைகால்களை நெளித்தபோது எழுந்த ஒலிகள் கிளைமுறிவதுபோலவும் பாறைகள் உரசுவதுபோலவும் கேட்டுக்கொண்டிருந்தன. பின்னர் அவளுடைய கனத்த மூச்சொலிகள் கேட்டன. "நீந்தும் யானையின் துதிக்கைமூச்சு போலவே ஒலிக்கிறது" என்றாள் சுஸ்ரவை. சத்யசேனை அவளைநோக்கி "வாயைமூடு" என்று அதட்டினாள்.

மாலை சகுனியின் தூதன் வந்து என்ன நிகழ்கிறது என்று விசாரித்துச்சென்றான். திருதராஷ்டிரனின் அணுக்கச்சேவகனாகிய விப்ரன் வந்து விசாரித்தான். அந்தியில் மீண்டும் வலிதொடங்கியது. நள்ளிரவில் வலி நின்றுவிட்டது. அம்பிகை ஊர்ணை கொண்டுவந்த சிற்றுணவை பீடத்திலமர்ந்தபடியே அருந்தினாள். அவளைச்சுற்றி இளம்காந்தாரிகள் தளர்ந்து அமர்ந்தும் ஒருவர்மீதொருவர் சாய்ந்தும் கண்ணயர்ந்துகொண்டிருந்தனர். நாட்கணக்காக தொடரும் உணர்வுகளின் எழுச்சி வீழ்ச்சியை அவர்களால் தாங்கமுடியவில்லை என்று அம்பிகை எண்ணிக்கொண்டாள். அவளுக்கும் உடலின் அனைத்துத் தசைகளும் வலித்தன. மூட்டுகளில் இறுக்கம் ஏறியிருந்தது.

அவள் அசைவைக்கண்டு கண்விழித்து "தாங்கள் சற்று ஓய்வெடுங்கள் அரசி... நான் வேண்டும்போது வந்து அழைக்கிறேன்" என்றாள் சத்யசேனை. தேவையில்லை என்று அம்பிகை கையை அசைத்தாள். பெருமூச்சுடன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு பீடத்தருகே ஒரு சிறுபீடத்தை இழுத்துப்போட்டு கால்களைத் தூக்கிவைத்து அமர்ந்துகொண்டாள். யானை தனக்கு வலிவந்தபின்னர்தான் சரியான இடத்தைத் தேடிச்செல்லும் என்று அவள் கேட்டிருந்தாள். சரியான இடம் அமைவது வரை அதற்கு வலி நீடிக்குமா என்ன?

அவள் யானைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். யானை குறு வாலைச் சுழற்றி பட் பட் என அறைந்துகொண்டது. தலையறுபட்ட பாம்பு போல வால் துவண்டு சொடுக்கிக்கொண்டது. வாலை நனைத்துக்கொண்டு கோழை ஒழுகியது. கால்களைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது பாறைத்தோல் உரசி ஒலித்தது. அதன் கண்களில் நோவின் ஈரம் வழிந்து தோல்சுருக்கங்களில் பரவி ஊறி கீழிறங்கியது. அவள் கண்விழித்து வாயைத் துடைத்தபடி "என்ன ஒலி அது?" என்றாள். "அக்கா கைகளால் அடித்துக்கொள்கிறாள் அரசி" என்றாள் சத்யவிரதை. அம்பிகை பெருமூச்சுவிட்டபடி "விடியவிருக்கிறதா?" என்றாள். "இரண்டாம்சாமம் ஆகிறது. நாழிகைமணி சற்றுமுன்னர்தான் ஒலித்தது" என்றாள் சத்யவிரதை.

அக்கணம் அவர்களைக் கிழித்துச்செல்வதுபோல ஓரு பேரலறல் உள்ளிருந்து எழுந்தது. ஒரு மனிதத் தொண்டை அவ்வொலியை எழுப்பமுடியாதென்று தோன்றியது. கைகால்கள் நடுங்க எழுந்த அம்பிகை மூட்டுகள் வலுவிழக்க மீண்டும் அமர்ந்துகொண்டாள். சத்யசேனையும் சத்யவிரதையும் ஓடிச்சென்று அறைவாயிலில் நின்றனர். அலறல்கள் அறைச்சுவர்களை விரைக்கச் செய்தன. தலைவிரித்த பேய்கள் போல காற்றில் நின்று சுழன்றாடின. சத்யசேனை "சுஸ்ரவை, நீங்கள் உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள்" என்றாள். "அக்கா!" என சுஸ்ரவை ஏதோ சொல்லவர "இது என் ஆணை!" என்றாள் சத்யசேனை.

சுஸ்ரவை நடுங்கிக்கொண்டு நின்ற தங்கைகளை கைகளால் அணைத்து "வாருங்கள்" என்றாள். அவர்கள் விழித்த சிலைக்கண்களுடன் திறந்து நடுங்கிய உதடுகளுடன் கைகளை மார்பில் கட்டியபடி திரும்பித்திரும்பி நோக்கியபடி சென்றனர். செல்லும்வழியில் தசார்ணை கால்தளர்ந்து விழுந்தாள். சுஸ்ரவை குனிந்து அவளை அள்ளித்தூக்கி முகத்தைப்பார்த்தாள். "மயங்கிவிட்டாள்" என்றாள். "அவளை அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அங்கே அவளை மருத்துவச்சிகளிடம் சேருங்கள்" என்றாள் சத்யசேனை.

செங்குருதி பச்சைவெம்மை வீச்சத்துடன் அலையலையாக வந்து நுரைத்துப் பெருகுவதுபோல கூடத்துக்குள் வந்து நிறைந்த அலறல் ஒலிகளைக் கேட்டபடி அம்பிகை அமர்ந்திருந்தாள். அது என்ன கொடுங்கற்பனை என அவள் அகமே வியந்து கொண்டது. பின்பு எழுந்து மஞ்சத்தறை இடைநாழி வாயிலை அடைந்து "மச்சரே... என்ன ஆயிற்று? மச்சரே?" என்று கூவினாள். மச்சரின் மாணவனாகிய கிலன் ஓடிவந்து "குழந்தை வாயிலுக்கு தலைகொடுக்கத் தொடங்கிவிட்டது. அதன் வலிதான்" என்றான். "ஆனால் ஏன் இத்தனை அலறல்?" என்றாள் அம்பிகை. "மிகப்பெரிய குழந்தை அரசி..." என்றபின் உள்ளே ஓடினான்.

சிலகணங்கள் தயங்கியபின் அம்பிகை உள்ளே சென்றாள். அலறல் நின்றுவிட்டிருக்க உள்ளே மெல்லியபேச்சுக்குரல்கள் கேட்டன. அவள் அஞ்சி திரும்பிவிடலாமா என்று எண்ணினாள். அங்கே நிறைந்திருந்த பச்சைக்குருதி வீச்சத்தை அப்போதுதான் அவள் அகம் உள்வாங்கியது. அதுதான் அந்த கொடுங்கற்பனையைத் தூண்டியது போலும். இடைநாழியைத் தாண்டி மஞ்சத்தறை வாயிலை அடைந்து நடுங்கும் கைகளால் சுவர்களைப் பற்றிக்கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள்.

ஒருகணம் அவளால் எதையுமே புரிந்துகொள்ளமுடியவில்லை. அங்கே அவள் கண்டது ஒன்றுடன் ஒன்று முட்டிமோதும் உடல்களை மட்டுமே. அவள் காந்தாரியை சில மாதங்களாகப் பார்க்கவில்லை. மச்சரும் சீடர்களும் அவளை தங்கள் காவலுக்குள் வைத்திருந்தனர். எவரும் அவளைப்பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. மஞ்சத்தில் கிடந்த உருவத்தை ஒரு பெண்ணென்றே அவளால் எண்ணமுடியவில்லை. இரு தொடைகளும் ஆற்றுக்குள் இறங்கிய வெண்ணிறமான பெருமரத்து வேர்களைப்போல விரிந்திருந்தன. அதற்குமேல் பீதர்களின் மாபெரும் தாழி போல அவள் வயிறு. தொப்புள் கரிய கறைபோல இழுபட்டு விரிந்து பரவியிருந்தது. வயிற்றின் தோல்பரப்பில் நீலநரம்புகளின் வலை. அவள் ஒருபெரிய வெண்ணிற நத்தை போலிருந்தாள்.

கண்களைமூடிக்கொண்டு உடல்நடுங்க நின்றவள் திரும்ப நினைத்தாள். ஆனால் அதைப்பார்க்காமல் திரும்பமுடியாதென்றும் அறிந்திருந்தாள். அப்போதுதான் சாளரத்துக்கு அப்பால் கரியஇலைகளைக்கொண்ட புதர் ஒன்று அடர்ந்து காற்றிலாடுவதைக் கண்டாள். அவை காகங்கள். சாளரங்கள் வழியாக அவை உள்ளே வராமலிருக்க வலைகட்டியிருந்தார்கள். கரியசிறகுகள் அலையலையாக வந்து அதில் மோதிக்கொண்டிருந்தன. அப்பால் நகரமெங்கும் காகங்களின் குரல்களாலான பெருமுழக்கம் எழுந்தது.

மீண்டும் காந்தாரி அலறத்தொடங்கினாள். அம்பிகை காந்தாரியின் பருத்தமுகமும் கழுத்தும் தோள்களும் குருதியெனச் சிவந்திருப்பதைக் கண்டாள். கழுத்தில் வேர்புடைத்த மரம்போல குரல்வளையும் நரம்புகளும் விம்மி எழுந்து அதிர்ந்தன. இன்னும் சிலகணங்களில் அவளுடைய நரம்புகள் உடைந்து குருதி சீறி எழுமென்று அம்பிகை எண்ணினாள். காந்தாரி இருகைகளாலும் மெத்தையை ஓங்கி ஓங்கி அறைந்தாள். அம்பிகை எண்ணங்கள் அழிந்து விழியாலேயே ஒலிகளைக் கேட்பவள் போல நின்றாள். பட்டுகிழிபடும் ஒலி கேட்டது. வெம்மை எழ கொழுத்த நிறமற்ற திரவம் எழுந்து மஞ்சத்துக்குக் கீழே விரிக்கப்பட்டிருந்த தோல்பரப்பில் விழுந்தது.

மச்சரின் மாணவன் ஒருவன் குனிந்து அவள் கைகளை அணுக அவள் அவனை ஓங்கி அறைந்தாள். அவன் தெறித்து சுவரை மோதி விழுந்தான். தட் என அவன் தலை மரச்சுவரில் மோத அவன் சுருண்டு தரையில் விழுந்து ஒருகாலையும் கையையும் உதைத்துக்கொண்டு அடங்கினான். ஏதோ பேசவருபவன்போலிருந்தது அவன் முகம். இன்னொரு சீடன் அவனைநோக்கி ஓட மச்சர் சமநிலை இழக்காமல் "அவனை விட்டு விடு... அவன் இறந்துவிட்டான்... அவள் கைகளருகே செல்லவேண்டியதில்லை" என்றார்.

அப்பால் யானைக்கொட்டிலில் யானைகள் சின்னம் விளிக்கும் ஒலியை அம்பிகை கேட்டாள். அவை அப்படி இணைந்து ஒலியெழுப்பி அவள் கேட்டதேயில்லை. சுவர்களில் தொங்கிய செந்நிறமான கலிங்கப்பட்டுத் திரைச்சீலைகள் நெளிந்தாடின. ஒவ்வொன்றையும் கிழித்துக்கொண்டு ஒரு குழந்தை பிறக்கவிருப்பதுபோல. குளிர்ந்த நிணநீர் பீரிடுவதுபோல காற்று ஒன்று அறைக்குள் வந்து சுழன்றுசென்றது. தென்திசைக்காற்று. அதில் கோடையில் எரிந்த காட்டின் அனல்வாசனையும் சாம்பல்வாசனையும் இருந்தது. அலறியபடியே காந்தாரி வில்லென வளைந்து எழுந்து மீண்டும் மஞ்சத்தில் விழுந்தாள். அவள் உயிர்பிழைக்கமுடியாதென்று அம்பிகை உணர்ந்தாள். அத்தனை வலி அதற்காகவே. அவளைப்பிளந்தபடிதான் அந்தக்கரு வெளியே வரும். அவள் வெறும் விதையுறை மட்டும்தான். அதைக்கிழிக்காமல் அது முளைக்கமுடியாது.

ஒருவேளை அவள் சாகவில்லை என்றால்? அத்தனை பெருவலிக்குப்பின் பெற்ற மைந்தன் அவளுக்கு என்னவாக இருப்பான்? அவன் கையும் காலும் கண்ணும் குழலும் ஒலியும் மணமும் அவளுக்கு எப்படிப் பொருள்படும்? தேனீயின் முன் விரிந்த தேன்கடல் போல என்று சூதர்கள் சொல்வதுண்டு. அம்பிகை அப்போது ஒரு கணம் காந்தாரியிடம் பொறாமை கொண்டாள். இறந்து பிறந்தெழுவதென்பதன் பொருளென்ன என்பதை பெண்ணன்றி பிறர் அறிவதில்லை. ஏழுமுறை ஏழாயிரம் முறை இறந்து இறந்து பிறந்துகொண்டிருக்கிறாள் இவள்... ஒரு மைந்தனுக்காக.

காந்தாரியின் அலறல்கள் வேறெங்கோ இருந்து ஒலிப்பதுபோலத் தோன்றியது. அவை நாழிகைக் கணக்காக ஒலித்ததனால் பாறைகளை அதிரச்செய்து இழியும் அருவியினருகே நிற்பதுபோல அவ்வொலியை சித்தம் முற்றிலும் விலக்கிக் கொண்டது. அறைக்குள் மருத்துவர்கள் மெல்லப்பேசிக்கொள்வதும் அவர்களின் கையிலிருந்த உலோகக்கிண்ணங்களின் ஒலியும் தெளிவாகவே கேட்டன. மீண்டும் வெந்த மணத்துடன் தென்திசைக்காற்று கடந்துவந்து திரைச்சீலைகளை அள்ளிப் பறக்கவைத்தது. அறைக்குள் கட்டப்பட்டிருந்த மூலிகைநிரைகளைச் சுழற்றியது.

காந்தாரியின் குரல் நின்றது. அம்பிகை நோக்கியபோது அவளுடைய தொண்டை புடைத்திருக்க வாய் திறந்து அடிநா தெரிந்தது. அவள் அலறிக்கொண்டுதானிருந்தாள். தன் செவிகள் பட்டுவிட்டனவா என்று அம்பிகை நினைத்தாள். ஆனால் மீண்டும் அறைக்குள் சுழன்று வந்து மருந்துத் தொங்கல்களை அறுத்து வீசி திரைகளைப் பிய்த்து மறுபக்கச் சுவரில் எறிந்த காற்றின் ஒலியை அவள் நன்றாகவே கேட்டாள். அவள் தொண்டையின் குரல்சரடு அறுந்துவிட்டதென்று அவளுக்குத் தெரிந்தது.

கிழிபடும் ஒலி பெரிதாகக் கேட்ட கணத்திலேயே அடுப்பிலிருந்து தூக்கப்பட்ட அண்டா கைதவறிக் கவிழ்ந்தது போல வெந்நிணநீர் தரையில் கொட்டி சிதறிப்பரவியது. அத்தனை பெரிய நீரை எதிர்பாராத மருத்துவர்கள் பின்னடைந்தனர். ஒருவர் அதில் சறுக்கி நிலத்தில் விழுந்தார். மேலுமொரு வெந்நீர்க் கொப்பளிப்பில் நீர்த்த குருதிவெள்ளம் அறையை முற்றிலுமாக நிறைத்தது. அங்கே நின்றவர்கள் அனைவருடைய கால்களிலும் ஓடைநீரின் விளிம்பென குருதியலை வந்து சூடாகத் தீண்டியது.

மச்சர் மெல்லக்காலெடுத்து வைத்து அருகே செல்ல முயல சாளரத்தின் வலையைப் பிய்த்துக்கொண்டு காற்று காட்டருவி வெள்ளம்போல உள்ளே வந்தது. சருகுத்தூள்களும் புகையும் தூசும் நிறைந்த காற்று அனைவரையும் அள்ளி வீசியது. அவள் இடைநாழியில் சென்று சுவரில் மோதிவிழுந்தாள். அவள் மேல் ஒரு சீடன் வந்து விழுந்தான். மச்சர் மறுபக்கம் சுவரில் அறைபட்டு விழுந்து கிடக்க அவர் மேல் சீர்ஷர் விழுந்தார். காற்றுக்குள் நூற்றுக்கணக்கான சிறகசைவுகள் தெரிந்தன. கரிய சிறகுகள். காகங்களின் குரல்கள்.

காற்று அடங்கியபோது அறையெங்கும் தூசும் சருகுக்குப்பைகளும் பரவியிருந்தன. காகங்கள் சென்றுவிட்டிருந்தன. அம்பிகைதான் முதலில் எழுந்தாள். ஓடிச்சென்று அறைக்குள் காந்தாரியை நோக்கினாள். அவள் கால்களுக்கு நடுவே தரையில் விரிக்கப்பட்டிருந்த மான்தோலில் பொழிந்து பரவிக்கிடந்த செந்நிணத்தில் மிகப்பெரிய குழந்தை விழுந்து கிடந்தது. வளர்ச்சியுற்ற இரண்டுவயதான குழந்தையின் அளவிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. "மச்சரை எழுப்புங்கள்... மச்சரை எழுப்புங்கள்" என்று அவள் கூவினாள்.

சீடர்கள் மச்சரை எழுப்பினர். அவர் அவர்களின் கைகளைப்பற்றியபடி தள்ளாடினார். "குழந்தையைப்பாருங்கள்... அவன் நாசி அடைத்திருக்கப்போகிறது" என்று அம்பிகை கூவினாள். சீர்ஷரும் மச்சரும் இரு மாணவர்களுமாக சென்று குனிந்து குழந்தையை தூக்கினார்கள். கனத்த பெரிய கைகளும் கால்களும் மயிரடர்ந்த மிகப்பெரிய தலையுமாக இருந்த குழந்தை இரு கைகளையும் விரித்துக்கொண்டு பெருங்குரலில் அலறி அழுதது. மச்சர் அச்சத்துடன் "அரசி!" என்று காட்டினார். அதன் வாய்க்குள் சிறு வெண்பற்கள் நிறைந்திருந்தன.

குழந்தையின் அழுகை காட்டுக்கழுதைகள் இரவில் எழுப்பும் ஒலி போன்று செவிகளைத் துளைத்தது. "இச்செய்தியை எவரும் அறியக்கூடாது. இது என் ஆணை. செய்தி வெளிவருமென்றால் இங்குள்ள ஒவ்வொருவரும் கழுவிலேற்றப்படுவீர்கள்" என்று அம்பிகை வெறிகொண்டவள்போல கூச்சலிட்டாள். அவிழ்ந்த கூந்தலை சுற்றிக்கட்டியபடி "என் சிறுமைந்தனை என்னிடம் கொடுங்கள்... நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றாள். மச்சர் "அவருக்கு ஒன்றுமில்லை அரசி... மைந்தர் நலமாகவே இருக்கிறார்" என்றார்.

சீர்ஷர் "சற்று விலகியிருங்கள் அரசி... நாங்களே குழந்தையை தூய்மைசெய்கிறோம்" என்றார். அப்போதுதான் வெளியே திகழ்ந்த அமைதியை அம்பிகை கேட்டாள். இலைகள் கூட அசையாத முற்றமைதி. "அரசியைப்பாருங்கள் மச்சரே... அவள் எப்படி இருக்கிறாள்?" என்றாள். மச்சர் அவள் நாடியைப்பற்றியபடி "பேற்றுமயக்கம்தான். நலமாகவே இருக்கிறார்கள்" என்றார்.

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 2 ]

சகுனி வழக்கம்போல காலையில் எழுந்து பீஷ்மரின் ஆயுதசாலையில் பயிற்சிகளை முடித்தபின்னர் திரும்பும் வழியில் "வடக்குவாயிலுக்கு" என்று சொன்னான். ரதமோட்டி அதை மெலிதாகவே கேட்டானென்றாலும் உணர்ந்துகொண்டு கடிவாளத்தை இழுத்து ரதத்தைத் திருப்பிக்கொண்டு சென்றான். அரண்மனைமுகடுகள் கோடைகாலத்தின் வெண்ணிற வானத்தின் பின்னணியில் மெல்லிய ஒளியுடன் தெரிந்தன. காலை நன்கு விடிந்துவிட்டபோதிலும் தெருக்களில் மனிதநடமாட்டம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. நகர்மீது வெயில் கொழுத்த பளிங்குத்திரவம்போல படர்ந்திருக்க அதனுள் நீந்துபவர்கள் போல மக்கள் கால் துழாவி அசைந்து சென்றனர். அஸ்தினபுரியின் மக்கள்மேல் கனத்த எடை ஒன்று வந்தமர்ந்துவிட்டது போலிருந்தது.

முந்தையநாள் காலையில் அவனுக்கு செய்தி வந்தது. தன் அறையில் தனக்குத்தானே சதுரங்கமாடியபடி அவன் அதற்கு முந்தைய இரவுமுதலே விழித்திருந்தான். மறுநாள் காலையிலும் மைந்தன் பிறக்கவில்லை என்று அறிந்ததும் தன் சேவகனை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். மதங்ககர்ப்ப்ம் ஆதலால் மேலும் ஒருநாள் ஆகலாமென்றனர் மருத்துவர்கள். பகலெல்லாம் அவன் அறையிலேயே இருந்தான். அறையிலேயே உணவுண்டான். சதுரங்கம் சலித்தபோது எழுந்து சாளரங்கள் வழியாக கோடையில் வெந்து விரிந்த நகரத்தெருக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் வந்தமர்ந்தான். இரவாகியது. மீண்டுமொருமுறை தூதனை அனுப்பினான். நள்ளிரவுக்குப்பின் மீண்டும் ஒருமுறை சென்றுவந்த தூதன் "நெருங்குகிறது இளவரசே!" என்றான்.

பகலெல்லாம் வெந்தபுழுதியும் சருகுமாக தெற்குக்காட்டிலிருந்து வீசிய வெங்காற்று மாலையில் சற்று அமைதிகொண்டது. அஸ்தினபுரியின் மக்கள் தூசுக்கு கதவுகளை மூடி வீட்டுக்குள்ளேயே இருந்தனர். மாலையில் சாலைகளில் உடைகளின் வண்ணங்கள் தெரியத்தொடங்கின. அந்தி சாய்ந்ததும் மீண்டும் காற்று வீசத்தொடங்கியது. தென்திசைச் சுடுகாடுகளின் சிதையெரியும் புகைமணமா அதில் நிறைந்திருப்பது என சகுனி வியந்துகொண்டான். கோடை பல உயிர்களை பலிகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் காலையில் தென்திசைநோக்கிச் செல்லும் சாலையில் நிரைநிரையாக பாடைகளில் சடலங்கள் சென்றுகொண்டிருந்தன. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்...

கோடையின் உச்சம் என்று உணரத்தக்க அளவில் வெப்பமிருந்தது. தொடர்ந்து ஏறிவந்த வெயில் மண்ணில் எஞ்சிய அனைத்து நீரையும் உறிஞ்சி விண்ணுக்கு அனுப்பிவிட்டது. மேற்குத்திசையின் ஏரிகள் முழுமையாகவே வற்றிச் சேற்றுப்பரப்பாக மாறி பின் உலர்ந்து வெடித்து ஓட்டுவில்லைப்பரப்பாக ஆயின. நகரத்தின் கிணறுகளில் பெரும்பாலானவற்றில் அடிக்கல் தெரிந்தது. அனைத்து மரங்களும் இலைகள் பழுத்து உதிர்ந்திருக்க எஞ்சிய நம்பிக்கையை கிளைநுனிகளில் சில இலைகளாக தக்கவைத்துக்கொண்டு வானோக்கி கைவிரித்து இறைஞ்சி நின்றன. செடிகள் தங்கள் விதைகளை மண்ணில் பரப்பிவிட்டு படிந்து உலர்ந்து மட்கி அழிந்தன.

காற்று வீசிக்கொண்டே இருந்தது. அஸ்தினபுரியெங்கும் செம்புழுதியின் படலத்தை போர்த்திமூடியது அது. காலையில் கண்விழித்து எழுந்தவர்கள் செம்புழுதி மெல்லிய பட்டு போல அனைத்தையும் மூடி அலையலையாக நெளிந்துகிடப்பதைக் கண்டார்கள். புராணகங்கையின் இருபது பெருங்கிணறுகளில் மட்டுமே நீர் இருந்தது. அந்த நீரை பெரிய மரப்பீப்பாய்களில் அள்ளி மாட்டுவண்டிகளில் ஏற்றி தெருக்கள் வழியாக கொண்டுசென்றனர். காளையின் சிறுநீர்த் தடங்கள் போல அவைசென்ற வழி புழுதியில் நீண்டுகிடந்தது. ஏறி ஏறி வந்த வெயிலின் உச்சியில் பெருமரங்களில் சில முற்றிலும் இலையுதிர்ந்து காய்ந்து துடைப்பங்கள் போல மாறி வானை வருடி நின்றன.

"அனலோன் மண்ணிறங்கும் பருவம். அவன் மண்ணைத் தூய்மைசெய்தபின் விண்ணரசன் வானிலெழுவான். அவன் ஒளிவில் கீழ்த்திசையில் வளையும். நீரோன் நகர்மேல் கனிவான்" என்றனர் முதியோர். "அக்கினிநாட்கள் ஐந்து. ஆறாம் நாள் இந்திரனுக்குரியது." ஆனால் அனல்நாட்கள் அவ்வாறே நீண்டன. ஐந்து ஐந்து நாட்களாக மறு மாதம் கடந்தது. இரவிலும் வெப்பம் தாளாமல் யானைகள் குரலெழுப்பிக்கொண்டிருந்தன. மக்கள் திறந்தவெளிகளில் விசிறிகளுடன் இரவுறங்கினர்.

கோடையில் காடு முற்றாக வறண்டது. சிற்றுயிர்களெல்லாம் வளைகளுக்குள்ளும் மரங்களுக்குள்ளும் மாள, காகங்கள் நகர்நோக்கி வந்தன. ஒவ்வொருநாளும் காகங்கள் வந்தபடியே இருந்தன. வந்தவை கரைந்து கரைந்து பிறகாகங்களைக் கொண்டுவந்துசேர்த்தன. அங்காடிகளிலும் அடுமனைப்பின்பக்கங்களிலும் அவை கூடின. பின்னர் யானைக்கொட்டிலிலும் குதிரைக்கூடங்களிலும் வந்து கூச்சலிட்டன. சிறிது சிறிதாக அஸ்தினபுரியைச் சுற்றியிருந்த பெரும் காட்டில் வாழ்ந்த அனைத்துக் காகங்களும் நகரின் மரங்களில் வந்து கூடின. இலையுதிர்ந்த மரங்களில் கரிய இலைகளெழுந்ததுபோல அவை நிறைந்து அமர்ந்திருந்தன.

சகுனி வடக்குக் கோட்டையை அடைந்ததும் ரதத்தில் இருந்து இறங்கி நடந்து யானைக்கொட்டிலுக்கு முன்னால் வந்து நின்றான். புராணகங்கையின் கிணற்றுக்குக் குளிக்கச்செல்லும் யானைகள் கைகளில் சங்கிலிகளுடன் கிளம்பிச்சென்றுகொண்டிருந்தன. அவன் யானைகளையே பார்த்தான். அவற்றின் கண்கள் அவனறிந்த அனைத்துக்கும் அப்பால் இன்னொரு உலகிலிருந்து அவனை வெறித்து நோக்கிச் சென்றன. அவன் அக்கண்களை நோக்கியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். யானைகள் மட்டுமே காணும் அஸ்தினபுரி என ஒன்று உண்டா என்ன?

முந்தையநாள் விடியலில் அவன் முதலில் கேட்டது முதியபெண்யானையின் பேரொலியைத்தான். பின்னர் வடதிசையே பிளிறல் ஒலிகளால் நிறைந்தது. அவன் எழுந்து வந்து வாசலருகே நின்று சேவகனிடம் "என்ன அது?" என்றான். சேவகன் "தெரியவில்லை இளவரசே" என்றான். "புழுதிப்புயல் அடித்துக்கொண்டிருக்கிறது... யானைகள் அஞ்சியிருக்கலாம்." அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே நிலப்பரப்பை ஒரு பெரும்பாயாக சுருட்டி எடுத்துவிடும் வல்லமைகொண்டது போல பெருவேகத்துடன் வெங்காற்று வீசியது. அரண்மனைக்குள் வெவ்வேறு இடங்களில் ஆயுதங்களும் உலோகக் கலங்களும் உருண்டுவிழும் ஒலிகளும் வீரர்கள் கூவும் குரல்களும் கேட்டன. சகுனி பின்னால் சரிந்து சுவரைப்பற்றிக்கொண்டான். மூக்கிலும் கண்களிலும் படிந்த தூசுகளையும் சருகுத்துகள்களையும் சால்வையால் தட்டிவிட்டுக்கொண்டான்.

காற்று சுழன்று வீசிக்கொண்டே இருந்தது. "நீ சென்று அரண்மனையில் என்ன நிகழ்கிறதென்று கேட்டுவா" என்றான் சகுனி. சேவகன் கிளம்பும்போது அரண்மனையிலிருந்து செய்திவந்தது. விரைந்தோடி வந்த சேவகன் "மைந்தன் பிறந்திருக்கிறான். வலுவான வளர்ந்த குழந்தை. கார்த்தவீரியனும் ராவணேஸ்வரனும் கொண்டிருந்த பெருந்தோற்றத்துடன் இருக்கிறான்" என்றான். "என்ன நேரம்?" என்றான் சகுனி "அக்னிசர அஸ்வினி மாதம், கிருஷ்ண நவமி அதிகாலை. பெருநாகங்களுக்குரிய ஆயில்ய நட்சத்திரம்" என்றான் சேவகன். "மைந்தனை எப்போது பார்க்கலாமென்றனர்?" என்று சகுனி கேட்டான். "அரண்மனை வழக்கப்படி தூய்மைச்சடங்குகளும் தெய்வங்களுக்கான பலிகளும் முடிய ஒருநாள் ஆகிவிடும். நாளைகாலை முதற்கதிர் எழுந்து முதற்சாமத்தில் மைந்தனைப் பார்க்கலாம் என்றார் அரசி" என்று சேவகன் சொன்னான்.

நிலைகொள்ளாதவனாக பகல் முழுக்க சகுனி அறைக்குள் அமர்ந்திருந்தான். படைக்கலப்பயிற்சிக்குச் செல்லவில்லை. நீராடவுமில்லை. சாளரம் வழியாக வெளியே நோக்கி நின்றபோது ஏதோ வேறுபாட்டை உணர்ந்தான். அது என்ன என்று சிந்திக்கையிலேயே இயல்பாக அதை சிந்தை சென்று தொட்டது. நகருக்குள் எங்கும் காகங்களே இல்லை. வியப்புடன் அவன் நகரை கூர்ந்து நோக்கினான். வீட்டுக்கூரைகளெங்கும் செம்புழுதி படர்ந்திருந்தது. மரங்களின் இலைகள் மண்ணால் செய்யப்பட்டவை போலிருந்தன. எங்கும் காகங்களே இல்லை. அவை அந்தப் பெரும்புயல்காற்றால் அள்ளிச்செல்லப்பட்டுவிட்டனவா?

மதியம் உணவருந்தாமல் அவன் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மைந்தன் பிறந்திருக்கிறான். இந்தக்கோடையின் அனைத்துத் தீமைகளையும் அவன் மேல் ஏற்றிக்கொள்கிறார்கள் மூடர்களான இந்நாட்டு மக்கள். ஆம் அவன் பெருங்கோடைகள் ஆளும் பாலையின் மைந்தன். அவ்வாறுதான் அவன் வருகை நிகழமுடியும். அவனை அவர்கள் அஞ்சட்டும். அச்சம் பணிவைக் கொண்டுவரும். தாங்கள் அஞ்சாத எவரையும் மக்கள் தலைவனாக ஏற்பதில்லை. அச்சமே மக்களை ஒன்றாக்கும் விசை. அதுவே ஆற்றலாக ஆகிறது. அதுவே படைக்கலனாகிறது. பாரதவர்ஷம் நோக்கி கூரின் ஒளியுடன் எழும் வாள் அது!

நரிகளின் ஊளைகள் கேட்டு அவன் எழுந்துகொண்டான். நரிகளா? அவன் எழுந்து சென்று சாளரம் வழியாக நோக்கினான். மேற்குத்திசையிலிருந்து நரிகளின் ஊளைகள் கேட்டன. அங்கே வறண்டுகிடந்த ஏரிக்குள் மடைவழியாக உள்ளே புகுந்த ஒரு நரிக்கூட்டத்தை அவனால் அரண்மனை உப்பரிகையில் நின்றே காணமுடிந்தது. நரிகளின் குரல் கேட்டதும் நகரமே அஞ்சி ஒலிக்கத் தொடங்கியது. வீரர்கள் வேல்களுடன் ஏரிக்கரையில் கூடி கூச்சலிட்டனர். கற்களைப்பொறுக்கி வீசி அவற்றை விரட்டினர். நூற்றுக்கும் மேற்பட்ட நரிகள் ஏரியின் உலர்ந்த சேற்றில் ஓடி வளைந்து மீண்டும் மறுகரைசேர்ந்தன. அங்கே அவை நின்றும் அமர்ந்தும் மூக்கைத் தூக்கி ஊளையிட்டன.

வறண்ட ஏரிக்குள் நுழைய மடை ஒரு நல்ல வழி. ஏரியின் சதுப்பில் அவை நண்டுகளைத் தேடி வராமலிருந்தால்தான் வியப்பு. ஆனால் இந்த அச்சம் நிறைந்த நகர்மக்களுக்கு இதுவும் ஒரு தீக்குறியாகிவிடும். சூதர்கள் தங்கள் பாடல்களை அப்போதே இயற்றத் தொடங்கிவிட்டிருப்பார்கள் என அவன் கசப்புடன் எண்ணிக்கொண்டான். சற்று நேரத்தில் அரண்மனையில் இருந்து அம்பிகையின் சேவகன் வந்தான். "மைந்தர் நலமாக இருக்கிறார். அரசியும் நலமே. தூய்மைச்சடங்குகள் முறைப்படி நடக்கின்றன." "எப்போது மைந்தனைப் பார்க்கமுடியும்?" என்று சகுனி கேட்டான். "மூன்றுநாட்கள் தூய்மைச்சடங்குகள் முடிந்தபின்னரே மைந்தரை ஆண்களுக்குக் காட்டுவார்கள்" என்றான் சேவகன்.

சகுனி அடுமனைச் சேவகனை அழைத்து "எனக்கு அக்காரஅடிசில் கொண்டுவா" என்றான். "உடனே கொண்டுவருகிறேன் இளவரசே" என்றபின் அவன் விரைந்தோடி இனிப்புணவைக் கொண்டுவந்தான். சகுனி அதை தனிமையில் அமர்ந்து உண்டுவிட்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். நீண்டநாட்களுக்குப்பின் தன்னை மறந்து துயின்றான். கண்விழித்தபோது மாலையொளி சாளரம் வழியாக உள்ளே சரிந்திருப்பதைக் கண்டான். தன் முகம் உறக்கத்திலும் புன்னகையுடன் இருந்ததை, விழித்தபோதும் அப்புன்னகை நீடிப்பதை அவன் வியப்புடன் உணர்ந்தான்.

அவன் எழுவதைக்காத்து சேவகன் நின்றிருந்தான். சகுனி பார்த்ததும் அவன் வணங்கி "சதசிருங்கத்திலிருந்து பறவைச் செய்தி வந்துள்ளது" என்றான். சகுனி ஒரு கணம் தன் நெஞ்சை உணர்ந்தான். பின் கைநீட்டினான். சேவகன் அளித்த தோல்சுருளில் மந்தண எழுத்துக்களில் சுருக்கமாக குந்திக்கு இரண்டாவது ஆண்குழந்தை பிறந்திருக்கும் செய்தி இருந்தது. சுருளை கையில் வைத்துக்கொண்டு சேவகனை செல்லும்படி சைகை காட்டியபின் அவன் சில அடிகள் நடந்தான். பின் மீண்டும் அதை விரித்துப்பார்த்தான். காந்தாரியின் மைந்தன் அதிகாலையில் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்திருந்தான். அன்று பின்மதியம் மகம் நட்சத்திரத்தில் குந்தியின் மைந்தன் பிறந்திருந்தான்.

அனுமன் ஆலயத்துக்கு முன்னால் புதியதாகக் கட்டப்பட்ட கல்மேடையில் அந்தப் பெரிய கதாயுதம் இருந்தது. அவன் அதை அணுகி சுற்றிப்பார்த்தான். அது நன்றாகக் கழுவப்பட்டு கருமை ஒளிவிட அமர்ந்திருந்தது. துதிக்கைநீட்டிய சிறிய யானைமகவு போல. அத்தனைபெரிய கதாயுதத்தை எந்த மனிதனாவது எடுத்துவிடமுடியுமா என்ன? ஒருவேளை எடுப்பதென்றால் அது திருதராஷ்டிரரால் மட்டுமே முடியும். அது ஒரு சிலையின் கையிலிருந்ததுதான். ஆனால் அது மைந்தன் கருக்கொண்ட நாளில் கண்டடையப்பட்டது. அதுதான் தன் மனதில் மைந்தனும் அதுவும் இணைந்துகொள்ளக் காரணம். எத்தனை அளவையறிதல் இருந்தாலும் அந்த எண்ணத்தைக் கடந்துசெல்லமுடியவில்லை. நிமித்திகர்களின் அரைகுறைச் சொற்களை அதற்கேற்ப விரித்துக்கொள்கிறது அகம்.

ஒருவேளை அந்த கதாயுதம் காந்தாரியின் மைந்தனுக்குரியதாக இருக்கலாம். ஆம், அதுதான் உண்மை. அவன் மும்மடங்கு பெரிய குழந்தை என்கிறார்கள். இருபதுமாதம் கருவில் வாழ்ந்திருக்கிறான். மதங்ககர்ப்பம். அதனால்தான் யானைகள் அதை அறிகின்றன. யானைகள். இது யானையின் நகரம். ஹஸ்தியின் நகரம். ஹஸ்தியின் மைந்தன் மதங்ககர்ப்பத்தில் மட்டும்தான் பிறக்கமுடியும். ஹஸ்தி எப்படிப்பிறந்தான்? மதங்க கர்ப்பத்திலா?

எண்ணங்களை அறுத்தபின் அனுமனை வணங்கிவிட்டு சகுனி தேரிலேறிக்கொண்டான். "அரண்மனைக்கு" என்றான். ஆயுதசாலையிலேயே அவன் நீராடிவிட்டிருந்தான். நிழல்களைப் பார்த்தபோது அவனுக்கு உரைக்கப்பட்ட நேரத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அரண்மனை வாயிலில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரனின் அணுக்கச்சேவகனாகிய விப்ரன் அவனுக்காகக் காத்திருந்தான் போல நெருங்கிவந்து வணங்கினான். "மன்னர் அவையிலிருக்கிறாரா?" என்றான் சகுனி. "ஆம், அமைச்சரும் இருக்கிறார்" என்றான் விப்ரன். சகுனி மௌனமாகப் பார்த்தான். "மைந்தன் பிறந்ததிலிருந்து அமைச்சர் சற்று அமைதியிழந்திருக்கிறார்..." என்றான் விப்ரன். சகுனி தலையசைத்தான். "அவர் இந்த நிமித்திகர்களின் பேச்சை நம்புகிறார் என நினைக்கிறேன்" என்று விப்ரன் சொன்னான்.

சகுனி நின்று திரும்பிப்பார்த்தான். "அமைச்சர் அவ்வாறு நிமித்திகர் கூற்றுகளை நம்புபவரல்ல... அளவையறிவையே என்றும் நம்பிவந்திருப்பவர். ஏன் இதை இப்போது நம்புகிறார் என்று எனக்குப்புரியவில்லை" என்றான் விப்ரன். "அதை அவர் மன்னரிடம் பேசிவிட்டாரா?" என்று சகுனி கேட்டான். "இன்னும் பேசவில்லை. ஆனால் அவர் பேரரசியிடம் பேசியதை என் உளவுச்சேடி சொன்னாள்." விப்ரனின் முகத்தை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் "சொல்" என்றான் சகுனி.

"இளவரசே, அரண்மனையின் எந்த ஆண்மகனும் இன்னமும் மைந்தனைப் பார்க்கவில்லை. பெண்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள். பேறெடுத்த மச்சரும் சீர்ஷரும் அவரது சீடர்களும் நேற்றே எங்கோ அனுப்பப்பட்டுவிட்டார்கள். மைந்தன் மிகப்பெரிய உடலுடன் இருப்பதாகவும்..." என்று சொல்லி விப்ரன் சற்று தயங்கினான். பின் "அவருக்கு வாயில் பற்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்" என்றான். சகுனி "அது அத்தனை அரிதா என்ன?" என்றான். "மதங்ககர்ப்பமே மிகமிக அரிதானது. ஆகவே இதில் வியப்பேதுமில்லை... ஆனால் அவ்வாறு பற்களுடன் இருப்பது தீயகுறி என்கிறார்கள். அவர் பிறந்தபோது கொடுங்காற்று வீசியது என்றும் காகங்கள் கூச்சலிட்டன என்றும் நடுமதியத்தில் நரிகள் ஊளையிட்டன என்றும் கதைகள் உருவாகிவிட்டன."

"ஆம், அறிவேன்" என்றான் சகுனி. விப்ரன் "பேரரசி மைந்தனைப்பார்க்கச் செல்லும்போதே அஞ்சிக்கொண்டுதான் சென்றிருக்கிறார்கள். துணைக்கு அவரது அணுக்கச்சேடி சியாமையும் சென்றாள். அவரது காலடியோசை கேட்டதும் குழந்தை திரும்பி அவர்களை நோக்கியது என்கிறார்கள். அவர்கள் அஞ்சி நடுங்கி குழந்தையருகே செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டார்கள். வரும் வழியிலேயே நினைவிழந்து இடைநாழியில் விழுந்துவிட்டார்கள். சியாமையும் சேடியரும் அவர்களை அந்தப்புரம் சேர்த்தார்கள். கண்விழித்த கணம் முதல் கண்ணீர்விட்டுக்கொண்டு தெய்வங்களைத் தொழுதபடி மஞ்சத்தில் கிடக்கிறார்கள்" என்றான்.

"விதுரர் என்ன சொன்னார்?" என்றான் சகுனி. "விதுரர் வந்ததும் அவர் கரங்களைப்பற்றியபடி அக்குழந்தை தன்னை திரும்பிப்பார்த்தது என்று பேரரசி கூவினார். அது தீய குறிகளுடன் வந்திருக்கிறது. அஸ்தினபுரியின் அழிவைக் கொண்டுவந்திருக்கிறது என்று அழுதார். அவர்கள் அருகே அமர்ந்து அமைச்சர் அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் சியாமையை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தார். சியாமை திடமான குரலில் அந்த மைந்தன் கலியின் பிறப்பு, அதில் ஐயமே இல்லை என்றாள். அமைச்சர் நான் நிமித்திகரிடம் சூழ்கிறேன் என்று அதற்கு பதில் சொன்னார்" என்றான் விப்ரன்.

"அவர் பார்த்த நிமித்திகர் எவரென்று தெரியவில்லை. ஆனால் அவர் முடிவுசெய்துவிட்டதாகவே தெரிகிறது" என்றான் விப்ரன். "இன்றுதான் அரசரும் தாங்களும் மைந்தனை பார்க்கவிருக்கிறீர்கள். மைந்தரை அரசரே தொட்டுப் பார்த்துவிட்டபின் அவரிடம் நிமித்திகர் கூற்றுக்களைச் சொல்லலாமென அமைச்சர் திட்டமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்." சகுனியின் எண்ணத்தை உய்த்தறிந்து "அரசர் மைந்தனைப் பார்க்கையில் உடனிருப்பதற்காக தீர்க்கசியாமரையும் விதுரர் வரச்சொல்லியிருக்கிறார்" என்றான்.

இடைநாழியின் மறுபக்கம் இசை கேட்டது. "யாழ் வாசிப்பது யார்? அந்த விழியற்ற சூதரா?" என்றான் சகுனி. "இல்லை அது அந்த வைசியப்பெண் பிரகதி. அவள் எந்நேரமும் அரசருடனேயே இருக்கிறாள்" என்றான் விப்ரன். அவர்கள் இசையரங்குக்குள் நுழைந்தனர். பிரகதி கூந்தலை வலம்சாய்ந்த கொண்டையாகக் கட்டி பெரிய செந்நிற மலர்களைச் சூடியிருந்தாள். செந்நிறமான பட்டாடையை அணிந்து கால்களை மடித்துவைத்து யாழை மீட்டிக்கொண்டிருந்தாள். தலையை இருவேறு கோணங்களில் சரித்துவைத்து திருதராஷ்டிரனும் தீர்க்கசியாமரும் இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பீடத்தில் தன் எண்ணங்களில் தானே ஆழ்ந்தவனாக விதுரன் அமர்ந்திருந்தான். சகுனி வந்ததும் திருதராஷ்டிரனுக்கு தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். அவன் காலடியைக் கேட்டு திருதராஷ்டிரன் அமரும்படி சைகை காட்டிவிட்டு இசையில் அமைந்திருந்தான்.

யாழ் ஓய்ந்ததும் திருதராஷ்டிரன் "காந்தாரரே, உங்கள் மருகன் மண்ணுக்கு இறங்கிவிட்டான். பாரதவர்ஷத்தை வெல்லும்படி உங்களுக்கு தெய்வங்களின் ஆணை வந்துள்ளது" என்றான். சகுனி "ஆம் அரசே, சிம்மம் குகைவிட்டெழுவதுபோல வந்திருக்கிறான் மைந்தன். ஐந்து பூதங்களும் அதற்கு சான்றுரைப்பதைக் கேட்டேன்" என்றான். திருதராஷ்டிரன் தொடைகளில் அறைந்தபடி உரக்கச்சிரித்தான். "அஸ்தினபுரியின்மேல் குருமூதாதையர் கனிந்துகொண்டே இருக்கிறார்கள் காந்தாரரே. அங்கே என் இளையோனுக்கு அதேநாளில் இன்னொரு மைந்தன் பிறந்திருக்கிறான். மைந்தர்களால் இந்த அரண்மனை நிறையட்டும்..." என்றான். விதுரனின் கண்களை சகுனியின் கண்கள் தொட்டு மீண்டன.

மீண்டும் உரக்க நகைத்து "நான் நேற்று மைந்தன் பிறந்த செய்திவந்ததுமே கேட்ட முதல்வினா ஒன்றுதான். மைந்தனுக்கு விழியிருக்கிறதா என்று. விழிமட்டும் போதும் காந்தாரரே, மீதியனைத்தும் உடன்வந்துவிடும். விழியற்றவனுக்கு புறவுலகில்லை. அவனே ஆக்கிக்கொள்ளும் பொய்யுலகு மட்டுமே உள்ளது. அது எத்தனை மகத்தானதாக இருந்தாலும் பொய்யே" என்றான். பிரகதி எழுந்து யாழுடன் தலைவணங்கினாள். திருதராஷ்டிரன் தலையசைத்ததும் வெளியே சென்றாள்.

"எங்கே என் விழிகள்?" என்றான் திருதராஷ்டிரன். "அரசே, சஞ்சயன் தங்களுக்காக வெளியே காத்து நிற்கிறார்" என்றான் விப்ரன். திருதராஷ்டிரன் நகைத்து "அந்தச்சிறுவனை இசைகேட்கச்செய்ய என்னால் முடிந்த அளவுக்கு முயன்றேன். அதைவிட சிம்மத்தை புல்தின்ன வைக்கலாம்" என்றபடி எழுந்தான். "நான் ஆடையணிகள் அணியவேண்டும். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியைக் காணச்செல்லும்போது எளிய ஷத்ரியனாகச் செல்லக்கூடாது" என்றான். மீண்டும் உரக்கநகைத்து "சொல்லவேண்டிய சொற்களைக்கூட யாத்துவிட்டேன் காந்தாரரே.... அஸ்தினபுரியின் சக்ரவர்த்திக்கு விசித்திரவீரியரின் தலைமைந்தனின் வணக்கம்... சரியாக உள்ளதல்லவா? நானும் எளியவனாகிவிடக்கூடாதே?"

அவன் உள்ளம் பொங்கிக்கொண்டிருக்கிறது என்று சகுனி உணர்ந்தான். இப்போது சொல்லப்படும் எந்தச் சொல்லும் அவனை தன் மைந்தனிடமிருந்து விலக்காது என்று எண்ணிக்கொண்டான். தீர்க்கசியாமர் இன்னும் இசையிலிருந்து மீளாதவராக அமர்ந்திருந்தார். சஞ்சயன் உள்ளே வந்து அனைவரையும் வணங்கியபின் திருதராஷ்டிரன் அருகே சென்றான். "சஞ்சயா மூடா, என் கைகளைப் பற்றிக்கொள்..." என்றான் திருதராஷ்டிரன். "இசையைக்கேட்டு மிரண்டோடும் வேடிக்கையான மிருகம் நீ ஒருவன் மட்டுமே" என்றான். சஞ்சயன் "அரசே, அணியறைக்குத்தானே?" என்றான். "நான் சொல்லாமலேயே இவன் என் நெஞ்சை அறிகிறான்" என்றான் திருதராஷ்டிரன்.

அவர்கள் சென்றதும் சகுனி விப்ரனைப் பார்க்க அவன் தலைவணங்கி "நான் மன்னரின் வருகையை அறிவிக்கிறேன்" என்று வெளியே சென்றான். சகுனி விதுரனை நோக்கிக்கொண்டு மீசையை மெல்ல நீவியபடி அமர்ந்திருந்தான். விதுரன் அமைதியிழந்து பலமுறை இருக்கையில் அசைந்தான். பெருமூச்சுவிட்டான். சகுனி "சதசிருங்கத்திலிருந்து செய்திகள் ஏதேனும் வந்தனவா அமைச்சரே?" என்றான். விதுரன் திடுக்கிட்டு சகுனியின் கண்களை நோக்கியபின் "சதசிருங்கத்திலும் உங்கள் ஒற்றர்கள் உள்ளனர் அல்லவா?" என்றான். "ஆம், இளையபாண்டவன் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். நீடித்த ஆயுள் நிகழட்டுமென வாழ்த்தினேன்" என்றான் சகுனி.

"ஆம், பாண்டவர்களுக்கு நீடித்த ஆயுள் உண்டு என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள்" என்றான் விதுரன். "ஆகவே எவர் சதிசெய்தாலும் அவர்களுக்கு எந்தத்தீங்கும் விளையாது." சகுனியின் புன்னகை அணைந்தது. அவன் கண்கள் இடுங்கின. மென்னகையுடன் "காந்தாரத்தின் ஒற்றர்கள் சற்று திறனற்றவர்கள்..." என்றான் விதுரன். சகுனியின் கண்கள் விரிந்தன. அவன் தருவித்த புன்னகையுடன் "திறனற்ற ஒற்றர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளும் உள்ளன" என்றான். அந்தச் சொற்கள் எங்கு சென்று தைக்குமென அறிந்திருந்தான். "திறனற்றவர்கள் நேரடியான சிலவற்றைச் செய்ய தயங்கமாட்டார்கள் அமைச்சரே."

"ஆனால் என்னுடைய திறன்மிக்க ஒற்றர்கள் இப்போது அங்கிருக்கிறார்கள்" என்றான் விதுரன். "அத்துடன் ஒற்றர்களை அறிந்து வழிநடத்தும் தலைமையும் அங்குள்ளது." சிலகணங்களுக்குப்பின் "முறைமீறிய செயல்கள் இருபக்கமும் கூர் கொண்டவை காந்தார இளவரசே. நாம் முறைமீறுவது வழியாக நம் எதிர்தரப்பு முறைமீறுவதற்கு ஒப்புதல் அளிக்கிறோம்." அவன் சொற்களுக்கென்ன பொருள் என்று சகுனி இன்னொரு முறை ஒவ்வொரு சொல்லாக நெஞ்சுக்குள் ஓட்டி சிந்தித்தான். சட்டென்று நெஞ்சை குளிர்வாள் கீறிச்சென்றதுபோல உணர்ந்து நிமிர்ந்து நோக்கினான். விதுரனின் விழிகளில் முதல்முறையாக கடும் குரோதத்தைக் கண்டான்.

சகுனி திகைப்புடன் பார்த்தபின் விழிகளை திருப்பிக்கொண்டான். தானறியாத இன்னொரு ஆழத்தை தொட்டுவிட்டிருப்பதாக உணர்ந்தான். குரோதமா? ஆம் அதுதான். குரோதமேதான். எந்த அநீதியையும் செய்யத்துணியும் குரோதம் அது. யாருக்காக? பெரும் அன்பிலிருந்தே பெரும் குரோதம் பிறக்கமுடியும். யார் மேல்? பாண்டுவின் மைந்தன் மேலா? இல்லை. ஒரு கணத்தில் அவனுள் நூற்றுக்கணக்கான வாயில்கள் திறந்துகொண்டன. அதுவரை கண்ட பலநூறு தருணங்கள் மீண்டும் நினைவில் ஓடின. ஒவ்வொரு தருணத்திலும் அவன் ஆழம் கண்டு பதிவுசெய்த விழிநிகழ்வுகளை மீட்டெடுத்து கோத்துக்கொண்டே சென்று இறுதி எல்லையில் அவன் மலைத்து நின்றான். ஆம், அவனுடைய பாதையில் இறுதிவரை எதிர்வரப்போகும் எதிரி இவன்தான். இவனிருப்பதுவரை அவள் ஒருபோதும் தனியளல்ல...

சகுனி பெருமூச்சு விட்டான். அந்த ஒலியைக்கேட்டு விதுரனும் எளிதானான். தன் விழிகளை சகுனி சந்திக்கலாகாதென்பதுபோல விதுரன் திரும்பாமலேயே அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரன் அரசணிக்கோலத்தில் சஞ்சயனுடன் வந்தான். விப்ரன் உள்ளே வந்து "அரசர் எழுந்தருள அனைத்தும் சித்தமாகியிருக்கின்றன" என்றான். விதுரன் எழுந்து விப்ரனிடம் "தீர்க்கசியாமரையும் அழைத்துக்கொள்... பெருஞ்சூதர் ஒருவர் மாமன்னனின் பிறப்பைப் பார்ப்பது தேவையானது" என்றான். "ஆம், நீங்கள் விழியால் பார்ப்பதைவிட அவர் மொழியால் பார்ப்பதே முதன்மையானது" என்றான் திருதராஷ்டிரன். "அவர் பார்ப்பது காலம் பார்ப்பது அல்லவா?" என்றபின் உரக்கச்சிரித்தான்.

அவர்கள் நடந்து சென்ற வழியெங்கும் இருபக்கமும் சூதர்களும் தாசியரும் அணிநிரை வகுத்து மலர்தூவி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலவாத்தியங்கள் முழங்கின. அரண்மனை முழுக்க மலர்களாலும் தோரணங்களாலும் வண்ணக்கோலத்தாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்ட நித்திலப்பந்தலுக்குக் கீழே பலநாடுகளிலும் இருந்து வந்திருந்த சூதர்களும் வைதிகர்களும் கலைஞர்களும் காத்திருந்தனர். "விப்ரா, மூடா, அங்கே என்ன ஓசை?" என்றான் திருதராஷ்டிரன். "அரசே, மைந்தனைப் பார்த்துவிட்டு திரும்பிவந்து தாங்கள் பந்தலில் அமர்ந்து பரிசில்கள் வழங்கப்போகிறீர்கள்..." விப்ரன் சொன்னான்.

"ஆம் பரிசுகள் வழங்கவேண்டும்... இன்றுவரை பாரதவர்ஷத்திலேயே எவரும் அளிக்காத பெரும் பரிசுகள்... அந்தப்பரிசுகளைப்பற்றி சூதர்கள் பல வருடகாலம் பாடி அலையவேண்டும்... காந்தாரரே, தங்கள் கருவூலத்தின் நான்கு திசைகளையும் திறந்துவிடுங்கள்" என்றான் திருதராஷ்டிரன். சகுனி நகைத்தபடி "ஆம், மேலும் நிறைப்பதற்கு இடம் வேண்டுமல்லவா? மைந்தன் பதினெட்டு அகவையை எட்டும்போது அஸ்தினபுரியே ஒரு மாபெரும் ஒழிந்த கருவூலம் போலிருக்கவேண்டும்" என்றான். தன் கைகளை ஓங்கி அறைந்தபடி திருதராஷ்டிரன் உரக்க நகைத்தான்.

அந்தப்புரவாயிலில் அம்பிகையும் காந்தாரஅரசியரும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் நின்றனர். அம்பிகை வந்து தன் மைந்தனுக்கு நெற்றியில் மஞ்சள்திலகமிட்டு வரவேற்றபோது தாசியரும் சேடியரும் குரவையிட்டனர். அம்பிகை "குருகுலம் வாழ வந்த மைந்தன் உள்ளே உனக்காகக் காத்திருக்கிறான்... செல்" என்றாள். அதுவரை திருதராஷ்டிரனிடமிருந்த சிரிப்பு மறைந்து முகம் அழுவதைப்போல ஆகியது. இடறிய குரலில் "அன்னையே, என்னால் இன்னமும் இதை நம்ப முடியவில்லை. எனக்கு இருவிழிகள் வந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது. என் தெய்வங்கள் என் மேல் அருள்கொண்டிருக்கின்றன.... என் வாழ்க்கையை நிறைவுசெய்துவிட்டனர் மூதாதையர்..." கைகளைத் தூக்கி "இனி எனக்கு ஏதும் தேவையில்லை... இது போதும். இந்த வெற்றுடல் இவ்வுலகில் இத்தனைநாள் உணவை அள்ளி உண்டதற்கான பயன் நிகழ்ந்துவிட்டது..." என்றான்.

"என்ன பேச்சு இது? இன்று அஸ்தினபுரியின் மாமங்கலநாள். இனிய சொல்லே இன்று ஒலிக்கவேண்டும்" என்றாள் அம்பிகை. "செல்க" என்று அவனை மெல்ல தள்ளினாள். கைகளைக் கூப்பியபடி கண்களில் இருந்து கண்ணீர் வழிய தடுமாறும் கால்களுடன் திருதராஷ்டிரன் நடந்தான். அவன் தொண்டையைச் செருமும் ஒலி மட்டும் கேட்டது. சகுனி பெருமூச்சுடன் தன் உடலை எளிதாக்கிக் கொண்டான். அருகே வரும் விதுரனின் முகத்தை திரும்பி நோக்க விழைந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான்.

"வருக தீர்க்கசியாமரே.... நாம் அரசியின் அந்தப்புரத்துக்குள் நுழைகிறோம்" என்றான் விதுரன். "மைந்தரும் அன்னையும் இங்குதான் இருக்கிறார்கள்" என்றான் சஞ்சயன். "ஆம்.... தெரிகிறது. மருத்துவ வாசனையும் கருவாசனையும் வருகிறது" என்று தீர்க்கசியாமர் சிரித்த முகத்துடன் சொன்னார். சஞ்சயன் திருதராஷ்டிரனை உள்ளே அழைத்துச்சென்றான். சகுனி உள்ளே சென்றதும் விதுரன் தீர்க்கசியாமரை உள்ளே கொண்டுசென்றான்.

உள்ளே மஞ்சத்தில் காந்தாரி மார்புவரை பட்டுச்சால்வையால் போர்த்தியபடி கிடந்தாள். அவளுடன் இன்னொருவர் படுத்திருப்பதுபோல இன்னும் வற்றாத பெரிய வயிறு இருந்தது. ஒரே பேற்றில் அவள் வயது முதிர்ந்து பழுத்துவிட்டவள்போலிருந்தாள். கன்னங்கள் கனத்து தொங்க வெளிறிய உதடுகளுடன் செவிகூர்ந்து தலைசரித்து கிடந்தாள். காலடியோசை கேட்டதும் கனத்த கைகளைக் கூப்பியபடி "அரசே வணங்குகிறேன். இதோ அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன்" என்று தன் வலப்பக்கமாக கைகாட்டினாள்.

பொன்னாலான மணித்தொட்டிலில் செம்பட்டுமெத்தை மேல் கிடந்த குழந்தையை விதுரன் திகைப்புடன் பார்த்தான். காலடியோசை கேட்டு குழந்தை திரும்பிப்பார்ப்பது போலிருந்தது. அதன் வாய்க்குள் வெண்கற்கள் போல பல்வரிசை தெரிந்தது. மிகப்பெரிய குழந்தை. மும்மடங்கு பெரிய உடல், பெரிய கைகள். அவன் படபடப்புடன் சற்று பின்னடைந்து தீர்க்கசியாமரை முன்னால் செலுத்தினான். அவர் சுவரை ஒட்டியவர் போல நின்றுகொண்டார். சகுனியும் பெருமூச்சுடன் சற்றே பின்னால் நகர்வதுபோலத் தெரிந்தது.

திருதராஷ்டிரன் தொட்டிலை நோக்கிக் குனிந்து தன் கைகளை நீட்டி துழாவி நடுங்கும் விரல்களினால் குழந்தையைத் தொட்டான். "இறைவா! நீத்தோரே! மூத்தோரே!" என அரற்றியபடி அதன் தலையிலும் கன்னங்களிலும் தோள்களிலும் கைகளால் வருடினான். இரண்டுவயதான கொழுத்த குழந்தையுடையது போலிருந்த அதன் உருண்ட வயிற்றையும் மடிப்புகள் செறிந்த கைகளையும் தொடைகளையும் தன் பெரிய விரல்களினால் தொட்டு நீவினான். குருதிவாசனை கிடைத்த இரு கரிய மிருகங்கள் இரையை முகர்ந்து பார்ப்பதுபோல அவன் கனத்த கரங்கள் மைந்தனை தழுவித் தழுவித் தவித்தன. பெருமூச்சுவிட்டபடியும் முனகியபடியும் தொண்டையைச் செருமியபடியும் அவன் அந்தத் தொடுகையில் முழுமையாகவே ஆழ்ந்து அமர்ந்திருந்தான்.

அப்போது தீர்க்கசியாமர் 'அஹ்' என்னும் ஒலியுடன் விதுரனை விலக்கி முன்னால் சென்றார். குழந்தையை நோக்கி கைகளை நீட்டியபடி "இது... இக்குழந்தை" என்றார். திகைப்புடன் "ஆ! ஆ!" என ஓலமிட்டார். கழுத்திறுகிய கன்றின் ஒலிபோல அது எழுவதாக விதுரன் எண்ணினான். சகுனி "தீர்க்கசியாமரே!" என்றான். "என்னால் இந்தக்குழந்தையைப்பார்க்க முடிகிறது... இதை மட்டும் பார்க்கமுடிகிறது.... ஆம்... தங்கத்தொட்டிலில் செம்பட்டுமெத்தைமேல் படுத்திருக்கும் பெரிய குழந்தை... கருங்கூந்தல்... வாயில்பற்கள்... ஆம், நான் அதைப்பார்க்கிறேன். இல்லை அது என்னைப்பார்க்கிறது!"

வெறிகொண்டவர் போல அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு தீர்க்கசியாமர் வெளியே ஓடினார். கதவின்மேல் சரிந்த விதுரன் "பிடியுங்கள்... பிடியுங்கள் அவரை" என்று கூவினான். ஓலமிட்டபடி ஓடிய தீர்க்கசியாமர் நேராகச்சென்று சுவரில் ஓசையுடன் முட்டி அப்படியே கீழே சுருண்டு விழுந்தார்.

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 3 ]

தீர்க்கசியாமரின் சிதையில் எரியேறக்கண்டபின் விதுரன் அரண்மனைக்குத் திரும்பினான். அரண்மனையில் இருந்து ரதத்தில் எவருமறியாமல் அவரை இல்லத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கும்படி ஆணையிட்டுவிட்டு அவரது உடல்நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லும்படி தூதர்களையும் அனுப்பியிருந்தான். தீர்க்கசியாமருக்கு வயது அதிகம் என்று தெரிந்திருந்தாலும் நூறுவயதுக்குமேல் ஆகியிருந்தது என்று அவரது பெயரர்கள் சொல்லித்தான் அவன் அறிந்தான்.

அவரது மைந்தர்கள் அனைவருமே மறைந்துவிட்டிருந்தனர். முதல்பெயரர் நைஷதருக்கே அறுபது வயதாகியிருந்தது. தீர்க்கசியாமர் தன் மரணம் அவ்வருடம் கோடையில்நிகழும் என்று சொல்லி தன்னை எரியூட்டவேண்டிய இடம், அதன்பின்னான சடங்குகள் அனைத்தையும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார் என்று நைஷதர் சொன்னார். தீர்க்கசியாமர் அவரது தந்தையும் குருவுமான ரிஷபநாதர் அவருக்கு அளித்த தொன்மையான மகரயாழின் அனைத்து நரம்புகளையும் தளர்வுறச்செய்து அவருடைய மார்பின்மேல் வைக்கவேண்டும் என்றும் தன் உடலை முற்றிலும் ஆடையில்லாமலே சிதையேற்றவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

மூன்றுநாட்கள் தன்னினைவில்லாமல் கிடந்தபின் தீர்க்கசியாமர் துயிலிலேயே உயிர்நீத்தார். அதிகாலையில் அந்தச் செய்தி வந்ததும் விதுரன் தூதனை அனுப்பிவிட்டு வாசித்துக்கொண்டிருந்த காவியச் சுவடியை எடுத்து கண்ணில்பட்ட முதல் வரியை வாசித்தான். "நின்றிருந்த இடத்திலிருந்தே மலைச்சாரலெங்கும் பரவியது பூத்த வேங்கை." புன்னகையுடன் மூடிவிட்டு அவ்வரியையே எண்ணிக்கொண்டிருந்தான். பின்பு எழுந்து சால்வையைப் போட்டுக்கொண்டு இடைநாழிவழியாக நடந்துசென்று புஷ்பகோஷ்டத்தை அடைந்தான்.

எதிர்கொண்டழைத்த விப்ரன் தன்னை வணங்கியபோது ஒருகணம் அவன் விழிகள் அதிர்ந்து பின் இணைவதை விதுரன் கண்டான். அவன் அகம் திரிபுபட்டிருக்கிறது என்பதை அவன் முன்னரே அறிந்திருந்தான். அணுக்கத்தொண்டர்கள் தங்கள் ஆண்டைகளின் அகத்தை எதிரொளிக்கிறார்கள் என்பது ஆட்சிநூலின் பாடம். ஆனால் உணர்வெழுச்சியினாலும் கட்டற்றபோக்கினாலும் சிலசமயம் அவர்கள் தங்கள் ஆண்டைகளின் அகம்செல்லும் திசையில் மேலும் விரைந்து பலபடிகள் முன்னால் சென்றுகொண்டிருக்கவும்கூடும். விப்ரனின் அந்த அகவிலக்கம் விதுரனை கவலையுறச்செய்தது. "அரசர் இசையரங்கில் இருக்கிறாரா?" என்றான்.

"இல்லை அமைச்சரே, அவர் தனிமையிலிருக்கிறார்" என்றான் விப்ரன். விதுரன் ஏறிட்டுப்பார்த்தான். தீர்க்கசியாமரின் வீழ்ச்சிக்குப்பின் திருதராஷ்டிரன் இசைகேட்கவில்லை. பெரும்பாலும் தனிமையிலேயே அமர்ந்திருந்தான். அவ்வப்போது பெருமூச்சுவிட்டபடி தன் கைகளை ஒன்றுடனொன்று இணைத்துப்பிசைந்துகொண்டான். முந்தையநாள் விதுரன் புஷ்பகோஷ்டத்துக்கு வந்து திருதராஷ்டிரனை வற்புறுத்தி அழைத்துவந்து இசையரங்கில் அமரச்செய்து பிரகதியிடம் யாழ்மீட்டச்சொன்னான். அதைக்கேட்டு மெல்ல இறுக்கமழிந்து பீடத்தில் கால்நீட்டி அமர்ந்த திருதராஷ்டிரன் ''ஆம் இசையில் மட்டும்தான் எனக்கு இன்பம் இருக்கிறது... நல்லவேளையாக இசை என்னும் ஒன்று எனக்கிருக்கிறது..." என்றான்.

"நேற்று இரவெல்லாம் இசைகேட்டுக்கொண்டிருந்தார். எட்டு சூதர்கள் பாடினர். காலையில் சற்று துயின்றவர் உடனே எழுந்து அமர்ந்துவிட்டார்" என்றான் விப்ரன். விதுரன் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரன் தன் அறைக்குள் மஞ்சத்தில் எதையோ எதிர்பார்த்திருப்பதுபோல உடல்நிமிர்த்தி அமர்ந்திருந்தான். அவனுடைய காலடியோசைகேட்டு அண்டாவின் நீர் தரையின் அதிர்வை அறிவதுபோல அவன் தோல் சிலிர்ப்பதைக் காணமுடிந்தது. அருகே வந்து நின்றபடி "அரசே" என்றான் விதுரன். திருதராஷ்டிரன் "தீர்க்கசியாமர் இன்னும் இருக்கிறாரா?" என்றான்.

விதுரன் "இல்லை" என்றான். "ஆம், இன்றுகாலை நான் ஒரு கனவு கண்டேன்" என்றான் திருதராஷ்டிரன். "நான் ஒரு பெரிய பாறையைத் தொட்டுப்பார்த்தேன். குளிர்ந்தது, வழவழப்பானது. என் விரல்கள் தடவிச்சென்றபோது அது மென்மையாகியபடியே வந்து சருமமாக ஆகியது. சருமம் உயிருடன் அதிர்ந்தது. அதன்பின் அது நீர்ப்பரப்பாகியது. நீரை நான் அள்ளமுயன்றபோது அது குளிர்ந்த காற்று என்று தோன்றியது. கைகளை வீசவீச குளிரைமட்டுமே உணர்ந்தேன்..." விதுரன் திகைத்தவனாக அமர்ந்துகொண்டான். விழியிழந்த ஒருவரின் கனவை அவன் அப்போதுதான் தானும் கண்டான்.

"நான் சென்று அவரை சிதையேற்றவேண்டும் விதுரா" என்றான் திருதராஷ்டிரன். "அது மரபல்ல" என்றான் விதுரன். "தாங்கள் குருகுலத்து மூத்தவர். அவர் சூதர் மட்டுமே." "மரபும் முறைமையும் எங்களுக்கில்லை. நாங்கள் விழியற்றவர்கள். நான் சொர்க்கம்சென்றால் அங்கே என்னை எதிர்கொள்ள என் பிதாமகர்கள் இருக்கமாட்டார்கள். தீர்க்கசியாமர்தான் இருப்பார். ஏனென்றால் அது விழியிழந்தவர்களுக்கான சொர்க்கமாக இருக்கும்" என்றான். பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி அசைத்து மேலும் ஏதோ சொல்லவந்து தயங்கி கைகளைத் தாழ்த்தி "எனக்கு ரதங்களை ஒருங்குசெய்" என்றான்.

தீர்க்கசியாமரின் இல்லம் சூதர்களின் தெருவின் கிழக்கெல்லையில் இருந்தது. அரசகாவலர்கள் சூழ திருதராஷ்டிரனின் ரதம் உள்ளே வந்ததும் குடிகள் அனைவரும் வீட்டுமுன்னால் கூடிவிட்டனர். ஓரிருவர் அவர்களை அறியாமலேயே வாழ்த்துக்களைக் கூவ விதுரன் அவர்களை நோக்கி சினத்துடன் கைகாட்டி தடுத்தான். திருதராஷ்டிரன் இறங்கி கைகளைக் கூப்பியபடி நடக்க சஞ்சயன் ஆடைபற்றி அழைத்துச்சென்றான். திருதராஷ்டிரன் வீட்டுக்குள் காலெடுத்துவைத்ததும் உள்ளே ஒரு விம்மல் ஒலி எழுந்தது. அதைக்கேட்டதும் அவனும் கண்ணீர்விட்டு உதடுகளை இறுக்கிக்கொண்டான். உள்ளே செல்லச்செல்ல அவன் அழுகை வலுத்தது. உள் அங்கணத்தில் தரையிலிட்ட ஈச்சம்பாயில் தீர்க்கசியாமர் வெள்ளை ஆடையுடன் மார்பில் வைக்கப்பட்ட மகரயாழுடன் படுத்திருந்தார். அவர் காதுகளில் வைரக்குண்டலங்களும் கைகளில் கங்கணமும் விரல்களில் மோதிரங்களும் இருந்தன. சஞ்சயன் திருதராஷ்டிரனை கைபிடித்து அழைத்துச்சென்று தீர்க்கசியாமரின் சடலம் முன்பு நிறுத்தினான்.

"அவர் முழுதணிக்கோலத்தில் இருக்கிறார்" என்றான் சஞ்சயன். "வளைந்த உடலே ஒரு கரிய யாழ்போலிருக்கிறது. அவர்கால்களிலிருந்து தலைக்கு நரம்புகளைக் கட்டினால் அதுவே இசைக்குமென தோன்றுகிறது. அவரது கைகளில் நீண்ட நகங்கள். அவரது இரு கைகளிலும் கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவே உள்ள தோல்தசை கிழிக்கப்பட்டிருப்பதனால் கட்டைவிரல்கள் மிக விலகித் தெரிகின்றன..."

"ஆம்... அவரது விரல்கள் அப்படித்தான். உலகியலுக்கும் இசைக்குமான இடைவெளி அது என்று ஒருமுறை சொன்னார்... நான் அவ்விரல்களைத் தொடவிழைகிறேன்" என்றான் திருதராஷ்டிரன். சஞ்சயன் மெல்ல அவனை அமரச்செய்ய திருதராஷ்டிரன் தன் கைகளை நீட்டி தீர்க்கசியாமரின் கைகளைப்பற்றிக்கொண்டு கிழிபட்ட தசையையும் விரல்களையும் தடவிப்பார்த்தான். "நைஷ்டிக சங்கீதக்ஞன் என்று அவரைப்போன்றவர்களைச் சொல்வார்கள் அரசே. மிக இளமையிலேயே கைவிரல்கள் யாழின் நரம்புகளில் நன்றாக விரிந்து பரவவேண்டுமென்பதற்காக அவ்வாறு தசையைக் கிழித்துவிடுவார்கள். கட்டைவிரல் மிக விலகியிருப்பதனால் பெரிய இருபத்துநான்கு தந்தி யாழிலும் அவர்களின் கைகள் விரையமுடியும்..." என்றார் நைஷதர்.

"அவ்வாறு கைகளைக் கிழித்துக்கொண்டு இசைநோன்பு கொண்டவர் பின் தன் வாழ்நாளில் இசையன்றி எப்பணியையும் செய்யமுடியாது. அவர் உணவருந்தக்கூட விரல்கள் வளையாது" என்று சொன்ன நைஷதர் "அவர் காமவிலக்கு நோன்பும் கொண்டிருந்தார்" என்றார். விதுரன் நிமிர்ந்து நோக்கினான். "அவருக்கு முறைப்பெண்ணையே மணம்செய்து வைத்தனர். அவரது இளையோனாகிய பத்ரரிடமிருந்து கருவேற்றுதான் எங்கள் பாட்டி ஏழுமைந்தரைப் பெற்றாள். நான் அவர்களில் மூத்தவராகிய பக்ஷரின் முதல்மைந்தன்."

திருதராஷ்டிரன் கைகள் தீர்க்கசியாமரின் முகத்தை வருடிச்சென்று கண்களை அடைந்தன. கண்களின் மூடிய இமைகளுக்குமேல் இரு வெண்சிப்பிகளில் கரும்பொட்டு இட்ட பொய்விழிகளை வைத்திருந்தனர். "இது என்ன?" என்று திருதராஷ்டிரன் உரக்கக் கூவினான். "இது என்ன? என்ன இது?" சஞ்சயன் மெல்ல "அரசே அவை பொய்விழிகள்" என்றான். நைஷதர் "அரசே, எங்கள் குலவழக்கப்படி விழியிழந்தவர் சிதையேறுகையில் பேய்கள் வந்துவிடும். அதற்காக இவ்வாறு பொய்விழி அமைத்தே..." என பேசுவதற்குள் தன் பெரிய கைகளால் தரையை ஓங்கி அறைந்து திருதராஷ்டிரன் கூவினான் "எடுங்கள் அதை... அதை எடுக்காவிட்டால் இக்கணமே இங்கிருப்பவர்கள் அனைவரையும் கழுவேற்றுவேன்... எடுங்கள்!"

நைஷதரும் இரு மூத்தவர்களும் பாய்ந்து விழிகளை அகற்றினர். "இது என் ஆணை! அவர் விழியில்லாமல்தான் சிதையேறவேண்டும்... பேய்கள் வருமா? ஆம் வரும். நிழலுருவான பேய்கள். குளிர்ந்த கரிய பேய்கள். அவை வரட்டும். வாழ்நாளெல்லாம் எங்களைச் சூழ்ந்து நின்று நகையாடிய அவற்றை இறப்பில் மட்டும் ஏன் தவிர்க்கவேண்டும்? வரட்டும்... அவை வந்து எங்கள் சிதைக்குக் காவல் நிற்கட்டும்.'' திருதராஷ்டிரன் உடைந்த குரலில் கூவினான் "விதுரா, மூடா!" "அரசே" என்றான் விதுரன். "இது என் கட்டளை!" "ஆம் அரசே... அவ்வாறே ஆகட்டும்" என்றான் விதுரன்.

மன்னர்கள் சுடுகாட்டுக்குச் செல்லலாகாதென்பதனால் திருதராஷ்டிரன் அங்கிருந்தே அரண்மனைக்குச் சென்றான். இருகைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு தோள்கள் ஒடுங்க தலைகுனிந்து ரதத்தில் ஏறி அமர்ந்தான். சூதர்தெருவிலிருந்து கிளம்பிய சிதையூர்வலம் மெல்லமெல்லப் பெருகி தெற்குப்பாதையில் படைவரிசை போலச் சென்றது. நூற்றுக்கணக்கான சூதர்கள் கைகளில் யாழ்களும் பறைகளும் துடிகளும் குழல்களும் ஏந்தி இசைத்தபட தீர்க்கசியாமரின் உடலைச் சூழ்த்து சென்றனர். இசையொலியன்றி அழுகையோ பேச்சோ கேட்கவில்லை. அஸ்தினபுரியின் அனைத்துச் சூதர்களும் அங்கு வந்திருப்பதாகத் தோன்றியது. அத்தனை வாத்தியங்களும் இணைந்து ஒற்றை இசைப்பெருக்காக மாறுவதை, அங்கே ஒலித்த காலடியோசைகளும், கருவிகள் முட்டிக்கொள்ளும் ஒலிகளும் எல்லாம் அவ்விசையின் பகுதியாகவே மாறிவிட்டதையும் விதுரன் வியப்புடன் உணர்ந்தான்.

சூதர்களுக்கான மயானத்தில் சந்தனச்சிதையில் தீர்க்கசியாமரின் பன்னிரு பெயரர்களும் அவரது சடலத்தை வைத்தனர். அவரது உடைகளும் அணிகளும் அகற்றப்பட்டன. அவற்றை அவரது காலடியிலேயே வைத்தனர். கார்மிகராக இருந்த முதிய சூதர் அவரது கையிலிருந்த மகரயாழின் நரம்புகளைத் திருகி தளர்த்தினார். ஆழ்ந்த அமைதிக்குள் சிலரது இருமல்கள் ஒலித்தன. அப்பால் மரக்கூட்டங்களில் பறவைகள் எழுப்பிய ஒலிகளும் கிளைகள் காற்றிலாடும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சிதைச்சடங்காக நடந்துகொண்டிருக்க விதுரன் தீர்க்கசியாமரின் யாழையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சிதை எரியத்தொடங்கிய ஒலிகேட்டுத்தான் அவன் தன்னினைவடைந்தான். தீநாக்கு அவ்வளவு பெரிய ஒலியெழுப்புமென அப்போதுதான் அறிந்ததுபோல விழித்துப்பார்த்தான். பட்டுத்துணியை உதறிவிசிறுவதுபோல தழல்கள் ஒலித்தன. நெய்வழிந்த இடங்களை நோக்கி தீ வழிந்தது. தீச்சரடுகள் சிதையை தழுவிப் பரவின. ஒருசூதர் தன் கிணைப்பறையை மீட்டி உரத்தகுரலில் பாடினார். கூடவே பிறரும் தங்கள் வாத்தியங்களுடன் இணைந்துகொண்டனர்.

'புனிதமானது கிணை

புனிதமானது யாழ்

சூதரே மாகதரே

புனிதமானது சொல்!

புனிதமானது விண்

புனிதமானது மண்

சூதரே மாகதரே

புனிதமானது உயிர்!

புனிதமானது பிறப்பு

புனிதமானது இறப்பு

சூதரே மாகதரே

புனிதமானது வாழ்வு!

புனிதமானது இன்பம்

புனிதமானது துன்பம்

புனிதமானது வீடு!

விதுரன் திரும்பி தன் ரதத்தை நோக்கிச் சென்றான். அவைச்சேவகன் அவனை வணங்கினான். மறு எண்ணம் வந்து அவன் வீரனிடமிருந்து கடிவாளத்தைவாங்கிக்கொண்டு குதிரைமேல் ஏறினான். குதிரையை தளர்நடையில் செலுத்தினான். வெவ்வேறு குலங்களுக்குரிய இடுகாடுகளும் சுடுகாடுகளும் இருபக்கமும் வந்துகொண்டே இருக்க செம்மண்பாதைவழியாகச் சென்றான். கடைசியாகக் கேட்டவரி நெஞ்சில் தங்கியிருப்பதை அது மீளமீள ஒலிப்பதிலிருந்து உணர்ந்தான்.

புனிதமானது பசி

புனிதமானது மரணம்

சூதரே மாகதரே

புனிதமானது தனிமை!

ஒவ்வொன்றாக உதிர்ந்து முழுமையான தனிமையை அடைவதற்குப்பெயர் மரணம். அதைக் கொண்டாடத்தான் அத்தனை பெரிய கூட்டம் அங்கே திரண்டிருக்கிறது போலும். புன்னகையுடன் சுடுகாட்டுத் தத்துவம் என எண்ணிக்கொண்டான். அதில் ஈடுபடத் தொடங்கினால் முடிவேயில்லை. அது சென்றுகொண்டே இருக்கும். புரவியை இழுத்து அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டை வாயிலை நோக்கித் திருப்பும்போது பாதையோரத்தில் தன் யோகதண்டுடன் நிற்கும் சார்வாகனைக் கண்டான்.

குதிரையை அவர் அருகே கொண்டுசென்று நிறுத்தி விதுரன் இறங்க முற்படுவதற்குள் அவர் கையால் தடுத்தார். "உன்னுடன் ஞானவிவாதத்துக்காக நான் இங்கே நிற்கவில்லை. ஓர் அறிவுறுத்தலுக்காக மட்டுமே வந்தேன். அஸ்தினபுரியை அழிப்பவன் அந்த மைந்தன். அவனை இன்றே இக்கணமே அஸ்தினபுரிக்கு அப்பால் எங்காவது கொண்டுசெல்லும்படி சொல்! எங்காவது... தென்னகத்துக்கோ, வடக்கே எழுந்த பனிமலைகளுக்கோ மேற்கே விரிந்த பாலைநிலத்துக்கோ. அவன் அஸ்தினபுரியில் இருக்கலாகாது."

"ஆனால்..." என்றான் விதுரன். அவர் சினத்துடன் கையைக் காட்டி "உன்னுடைய உலகியல் தத்துவத்தில் நாளுக்கும் கோளுக்கும் தீக்குறிகளுக்கும் இடமுண்டா?" என்றார். விதுரன் தலையசைத்தான். "என்னுடைய உலகியல் தத்துவத்தில் அவற்றுக்கு இடமுண்டு. அவை மானுடமாகத் திரண்டு நின்றிருக்கும் இந்த உயிர்த்திரளின் பொதுவான அச்சங்களின் வெளிப்பாடு. காந்தாரியின் வயிற்றில் பிறந்திருக்கும் அவன் யாரென ஊழே அறியும். ஆனால் அவனை இம்மக்கள் எக்காலமும் அரசனாக ஏற்கப்போவதில்லை. மக்களால் ஏற்கப்படாத அரசனே மக்களைக் கொல்லும் கொடியவனாக ஆவான். தன்னை வெறுக்கும் மக்கள்மேல் அவனும் வெறுப்படைவான். செங்கோலுக்குப்பதில் வாளை அவன் அவர்கள்மேல் வைப்பான்."

"சார்வாகரே, அனைத்தையும் துறந்தவருக்கு இந்த அரசியலை மட்டும் துறக்கவியலாது போலும்" என்றான் விதுரன். அக்கணத்தின் கசப்பு அதை சொல்லச்செய்தது. இல்லை, அதல்ல, என்னுள் நானறியும் இயலாமையே இச்சீற்றத்தை என்னுள் எழுப்புகிறது. சார்வாகன் சிரித்தார். "மூடா, நான் முற்றும் துறந்தேன் என எவர் சொன்னது? நான் அனைத்தையும் துறந்ததே சார்வாக ஞானத்தை அடைவதற்காகத்தான். அதை இன்னும் துறக்கவில்லை" என தன் யோகதண்டை மேலே தூக்கினார்.

"அறம் பொருள் இன்பம் வீடெனும் நான்கறங்களில் இன்பம் ஒன்றே மெய், பிறமூன்றும் பொய். அவை அரசும் மதமும் மானுடர்மேல் போடும் தளைகள், மானுடனின் இவ்வுலகத்து இன்பத்துக்குத் தடைகள் என்பதே சார்வாக ஞானம் என்று அறிக! இவ்வுலகில் இன்பத்தை அடைவதன்பொருட்டே மானுடர் பிறந்துள்ளனர். உண்ணலின், புணர்தலின், மைந்தரின் இன்பம். அறிதலின் சுவைத்தலின் கடத்தலின் இன்பம். இருத்தலின் மறத்தலின் இறத்தலின் இன்பம். அவ்வின்பத்தை அச்சத்தால் ஐயத்தால் தனிமையால் மானுடர் இழக்கின்றனர். மேலுலகுக்காக, மூதாதையருக்காக, தெய்வங்களுக்காக அதை கைவிடுகின்றனர். அதுதான் மாயாதுக்கம். அவர்களுக்கு அவர்களின் பிறவிநோக்கத்தைக் கற்பித்ததும் மாயாதுக்கத்தை அவர்கள் கடக்கமுடியும்."

"ஆனால் அவர்களை மீறியது உறவால், சமூகத்தால், அரசால் வரும் லோக துக்கம். அதை அவர்கள் அறிதலால் கடக்கமுடியாது. செயலால் மட்டுமே கடக்க முடியும். அவர்களுக்கு செயலைக் கற்பிப்பது என் பணி. தேவையென்றால் வாளுடன் களத்திலேறி நின்று செயலைச் செய்வதும் என் பணியே!" அவர் விழிகள் மேலும் சிரிப்புடன் விரிந்தன. "நான் வாளேந்தினேன் என்றால் உங்கள் பீஷ்மபிதாமகரும் என்னெதிரே நிற்கவியலாது என்று அறிந்துகொள்!"

விதுரன் பேசாமல் நோக்கி நின்றான். "விழியிழந்தவனிடம் உண்மையைச் சொல்வது உன் கடன். அஸ்தினபுரிக்கு அவன் மைந்தனால் அழிவே எஞ்சும்" என்றபின் அவர் யோகதண்டை மும்முறை வான் நோக்கி தூக்கிவிட்டுத் திரும்பிச்சென்றார். விதுரன் அவர் செல்வதையே நோக்கி நின்றிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் புரவியைத் தட்டினான். அது அஸ்தினபுரியை நெருங்கிக்கொண்டிருக்கும்போதே தன்னுள் அனைத்தும் முழுமையாக அடுக்கப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்தான். சென்றபலநாட்களாக அறநூல்களிலும் காவியநூல்களிலும் அவன் தேடியதன் விடை. அதைச்சொல்ல அங்கே வந்து நின்ற சார்வாகன் அவனேதானோ என்று எண்ணிக்கொண்டான்.

அரண்மனைமுகப்பில் இறங்கி நேராக அவன் புஷ்பகோஷ்டத்துக்குத்தான் சென்றான். விப்ரனிடம் "அரசரிடம் என் வருகையை அறிவி" என்றான். அவன் உள்ளே சென்று மீண்டு "அரசர் மஞ்சத்திலிருக்கிறார். ஆயினும் தங்களைச் சந்திக்க விழைகிறார்" என்றான். விதுரன் சால்வையை இழுத்துப் போட்டுக்கொண்டான். அதுவரை கோத்துக்கொண்டுவந்த சொற்களை தனித்தனியான கூற்றுகளாகப் பிரித்தான். மைந்தனின் பிறவிகுறித்து நகரிலிருக்கும் ஐயங்களைச் சொல்வதாக இருந்தால் திருதராஷ்டிரன் உடனே அவற்றை மறுக்கக்கூடும். அதன்பின் அவன் பேசுவதற்கு ஏதுமிருக்காது. மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கினால் திருதராஷ்டிரன் கனிந்து மைந்தனை புகழத்தொடங்கினாலும் பேச்சுமுறிவடையும். தீர்க்கசியாமரின் யாழைப்பற்றிப் பேசவேண்டுமென அவன் முடிவெடுத்தான். யாழினூடாக அவரைப்பற்றி, அவர் கண்டதைப்பற்றி சொல்லிச்சென்று மைந்தனைப்பற்றி பேசத்தொடங்கவேண்டும்.

அவன் உள்ளே நுழைந்து வணங்கியதும் திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் "சிதையேறிவிட்டாரா?" என்றான். "ஆம் அரசே" என்றான் விதுரன். "இசையை மட்டுமே கைகள் அறியவேண்டுமென அவர் எடுத்த முடிவை எண்ணிக்கொண்டேன். பெரும் உறுதிப்பாடொன்றை எடுப்பவன் அக்கணமே வாழ்க்கையில் வென்றுவிட்டான் விதுரா" என்றான் திருதராஷ்டிரன்.

விதுரன் பேச வாயெடுப்பதற்குள் "உனக்கு செய்திவந்திருக்குமே.... சற்று முன்னர்தான் விப்ரன் எனக்குச் சொன்னான். பாண்டுவின் இளையமைந்தன் நலமடைந்து வருகிறான். என் மைந்தன் பிறந்த அதேநாளில் பிறந்தவன். இவன் முன்காலை, ஆயில்யநட்சத்திரம் என்றால் அவன் பின்மதியம், மகம் நட்சத்திரம்..." இருகைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் சிரித்தான். "என் மைந்தனுக்கு விளையாட்டுத்தோழர்கள் பிறந்து வந்தபடியே இருக்கிறார்கள். மைந்தர்களால் என் அரண்மனை பொலியப்போகிறது. குருகுலத்தின் அத்தனை மூதாதையரும் விண்ணகத்தில் நின்று குனிந்து நோக்கி புன்னகை புரியப்போகிறார்கள்!"

விதுரன் "அரசே நான் தங்கள் மைந்தனைப்பற்றிப் பேசுவதற்காக வந்தேன். அவன் பிறப்பின் தீக்குறிகள் நாள்தோறும் பெருகுகின்றன. சற்று முன் சார்வாக முனிவர் ஒருவரைக் கண்டேன். அவர் அவன் இந்நகருக்கு பேரழிவையே கொண்டுவருவான்... ஆகவே அவனை இங்கிருந்து அகற்றவேண்டும் என்றார். நானும் அவ்வண்ணமே கருதுகிறேன்" என்றான்.

திருதராஷ்டிரன் தலை ஆடத்தொடங்கியது. தன் பெரிய கைகளால் தலையை பற்றிக்கொண்டான். சதைக்கோளங்களான கண்கள் தவித்துத் துடித்தன. வாழ்நாளில் முதல்முறையாக உடலின் ஒருபகுதியை வெட்டி முன்னால் வைப்பதுபோல தான் பேசியிருப்பதாக விதுரன் உணர்ந்தான். அப்படிப்பேசுவதே மிகச்சிறந்த வழி என்று அவனுக்குப்பட்டது. "அரசே, மைந்தனின் பிறப்பை நாட்டுமக்கள் கொண்டாடவேண்டும்... அவர்கள் அவனை எண்ணி நாள்தோறும் வளரும் பற்றுகொள்ளவேண்டும். மக்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்" என்றான் விதுரன். "நான் சொல்லவேண்டியது இது. சொல்லிவிட்டேன்."

"ஆம்...  நான் அதை அறிவேன்" என்றான் திருதராஷ்டிரன். "இங்கே தருமன் பிறப்பை மக்கள் எப்படிக் கொண்டாடினர் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்..." அவன் உதடுகள் முன்னால் நீண்டன. தலையைச் சரித்துச் சுழற்றியபடி "நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன் விதுரா. உன்னிடம் கேட்டால் நீ இதையே சொல்லிவிடுவாய் என்று நினைத்து கேட்காமலிருந்தேன். கட்டியை வாளால் அறுப்பதுபோல நீ சொன்னதும் நன்றுதான்" என்றவன் பெருமூச்சுடன் "நான் விசித்திரவீரியரின் மைந்தன். என் தந்தை என்னிடம் அளித்துப்போன இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் மட்டுமே கடன்பட்டவன். எதுமுறையோ அதை மட்டுமே நான் செய்தாக வேண்டும்" என்றான்.

"ஆம் அரசே, இதுநாள்வரை நான் தங்களுக்கு எந்த அறத்தையும் சொல்லவேண்டிய நிலை வந்ததில்லை" என்றான் விதுரன். "தங்கள் ஆன்மாவால் எப்போதும் சரியானதையே உணர்கிறீர்கள்." திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் "...என்னால் சொற்களாக ஆக்க முடியவில்லை விதுரா. எண்ணும்போதே என் நெஞ்சு நடுங்குகிறது. ஆனால் நான் செய்தாகவேண்டும். இந்நாட்டை என் தம்பியின் அறச்செல்வன் ஆள்வதே முறை. என் மைந்தன் இங்கிருக்கவேண்டியதில்லை" என்றான்.

விதுரன் "ஆம் அரசே. அவனை நாம் வடமேற்கே நிஷாதர்களின் நாட்டுக்கு அனுப்புவோம்" என்றான். "அவ்வளவு தொலைவுக்கா?" என்று திருதராஷ்டிரன் கேட்டான். "எவ்வளவு தொலைவோ அவ்வளவு நல்லது. நிஷாதநாடு காந்தாரத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது. அங்கே நூற்றியெட்டு நிஷாதகுடிகள் மலைகளில் ஆட்சிசெய்கிறார்கள். பால்ஹிகரின் சிபிநாட்டில் சைப்யன் ஒரு சிற்றரசை அமைத்திருக்கிறான். அங்கே இவன் வளரட்டும். இவனுக்கு ஆற்றலிருந்தால் கட்டற்ற மூர்க்கர்களான நிஷாதர்களை வென்று அங்கே ஓர் அரசை அமைக்கட்டும்..."

"நாம் சகுனிக்குச் சொன்ன சொல் இருக்கிறது விதுரா" என்றான் திருதராஷ்டிரன். "ஆம் அரசே. ஆனால் குலத்துக்குத் தீங்கானால் ஒருவனை இழப்பது முறையே. நாட்டுக்குத் தீங்கானால் ஒருகுலத்தை இழக்கலாம். பூமிக்குத் தீங்கானால் ஒரு நாட்டை இழக்கலாம். அறத்துக்குத் தீங்கென்றால் தன் சொல்லையே ஒருவன் இழக்கலாம். அதனால் அவன் நரகத்துக்குச் செல்வான். அறம் வாழும்பொருட்டு நரகத்துக்குச் செல்வதும் நம்கடனே." திருதராஷ்டிரன் சிந்தனையுடன் தலையை கைகளால் தடவிக்கொண்டான். விதுரன் அவனைப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தான்.

காலம் அவ்வளவு மெல்ல ஊர்வதை முன்பு உணர்ந்ததில்லை என்று தோன்றியது. ஒரு மூச்சுக்கும் இன்னொன்றுக்கும் நடுவே நெடுந்தொலைவு இருந்தது. கணங்களுக்கு நடுவே மலைச்சிகரங்களின் இடைவெளி இருந்தது. இதோ இதோ. அப்போது தோன்றியது, இன்னொரு குரல் எழாமல் அந்தத் தருணம் கலையாது என. ஒரு காற்று ஒரு குரல் ஒரு வருகை. ஓர் ஒலி. ஓர் அசைவு. ஒருவேளை அது என்ன என்பதுதான் அனைத்தையும் முடிவுசெய்யும். அது விதியின் கைவிரல் நுனி. காலவெளியை பந்தாடும் பிரம்மத்தின் ஓர் எண்ணம்...

ஒரு குயில் வெளியே கூவியது. திடுக்கிட்டவன் போல திருதராஷ்டிரன் திரும்பி வெளியே பார்த்தபின் அவனைப்பார்த்தான். விதுரன் முகம் மலர்ந்தான். முடிவு அவனுக்குத்தெரிந்துவிட்டது. அவன் வாய் திறக்கும்போது வாசல்வழியாக விப்ரன் வந்து வணங்கி "அரசி" என்றான். விப்ரனின் பார்வையைச் சந்தித்ததுமே விதுரன் அது தற்செயலல்ல என்று புரிந்துகொண்டான். திருதராஷ்டிரன் "வரச்சொல்" என்றான். அம்பிகை ஆடைகளும் நகைகளும் ஒலிக்க விரைந்து உள்ளே வந்தாள். வந்தபடியே "இங்கே அரசென்ற ஒன்று உள்ளதா? நெறியறிந்த மூத்தோர் எவரேனும் உள்ளனரா?" என்றாள்.

திருதராஷ்டிரன் "சொல்லுங்கள் அன்னையே" என்றான். "அவள் தன் அந்தப்புரத்தில் அமர்ந்தபடியே இந்நகரில் விஷம்கலக்கிவிட்டாள். நகரமெங்கும் வீணர்கள் பாடித்திரிகிறார்கள், என் பெயரன் கலியின் பிறப்பு என்று. அவனால் இந்நகரம் அழியப்போகிறது என்று. அவளுடைய யாதவக்குழந்தை அறத்தின்புதல்வன், அவனே அரசாளவேண்டும் என்கிறார்கள். ஊன்துண்டுகளைப்போட்டு காட்டுநரிகளையும் காகங்களையும் நகருக்குள் கொண்டுவந்தவள் அவளே என்று என் ஒற்றர்கள் கண்டுசொன்னார்கள். கோடைகாலத்தில் வீசும் புழுதிக்காற்றில் மேலும் புழுதியை அவள் வீரர்களே கிளறிவிட்டனர். நேற்று ஒன்பதுகுடித்தலைவர்கள் சேர்ந்து வந்து பேரரசியைப் பார்த்திருக்கிறார்கள். பேரரசி அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்."

விதுரன் "அரசி, அப்போது நானும் இருந்தேன். அவ்வண்ணம் எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை" என்றான். "ஆனால் அந்தத் திசை நோக்கித்தான் அனைத்தும் செல்கின்றன. மைந்தா, இந்தச்சதியின் பிறப்பிடம் என்ன என்பதை அறிய எனக்கு இன்னொரு கணம் சிந்திக்கவேண்டியதில்லை. இது அவளுடைய திட்டம்தான். நீ பிறந்தபோது உன்னை கொண்டுசென்று காட்டில் வீசிவிடவேண்டுமென்று சொன்னார்கள்... குருகுலமரபில் விழியிழந்தவன் பிறந்ததேயில்லை, இது மூதாதையர் பழிதான் என்றனர் வைதிகர். உன்னுடைய கால்கள் பட்டால் இவ்வரண்மனை அழியும் என்று சொன்னார்கள்."

"யார்?" என்று அடைத்த குரலில் திருதராஷ்டிரன் கேட்டான். அவனுடைய முகத்தில் தசைகள் நெளிந்ததை விதுரன் பார்த்தான். "அனைவரும்... வைதிகர்கள், குலத்தலைவர்கள், சூதர்கள்.... அவர்களைப் பேசவைத்தவள் அவள். அன்று பிதாமகர் பீஷ்மர் இங்கிருந்தார். அவர் சொல்லை மீறி எண்ண எவருக்கும் திறனிருக்கவில்லை. ஆகவே நீ வாழ்ந்தாய். ஆனால் இன்று இதோ..." அம்பிகை மூச்சுவாங்கினாள்.  "என்னென்ன சொற்கள்! நான் அனைத்து நூல்களையும் பார்க்கச் சொன்னேன். வாயில் ஓரிரு பற்களுடன் குழந்தைகள் பிறப்பது மிக இயல்பான நிகழ்வு. அதிகநாள் கருவிலிருந்தமையால் அவன் கூடுதலாக பற்கள் கொண்டிருக்கிறான். ஆகவே அவனை காட்டில் வீசவேண்டுமென்கிறார்கள். அவனை அங்கே நாய்நரிகள் கடித்து இழுத்துக்கொல்லட்டும் என்கிறார்கள்." அவள் கண்களை விரல்களால் அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.

திருதராஷ்டிரன் உதடுகள் நெளிய வெண்பற்கள் தெரிய சீறியகுரலில் "விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன? ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை" என்றான்.

"அரசே" என விதுரன் தொடங்க "அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை" என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. "அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது."

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 4 ]

இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து மைந்தனை பொற்தொட்டிலில் படுக்கவைத்தாள். குழந்தை கைகால்களை ஆட்டியபோது தொட்டிலின் விளிம்புகளில் பட்டு தட் தட் என ஒலித்தது. "என்ன ஒலி அது?" என்று காந்தாரி கேட்டாள். சத்யசேனை சிரித்துக்கொண்டு "தொட்டில் மிகச்சிறியது அக்கா... அவனுடைய கைகால்கள் உள்ளே அடங்கவில்லை" என்றாள்.

காந்தாரி சிரிப்பில் முகம் மலர "அப்படியென்றால் அவனை என்னருகே படுக்கச்செய்" என்றாள். "பொற்தொட்டிலில் படுக்கவேண்டுமென்று மரபு" என்றபடி குழந்தையை சத்யசேனை தூக்கி காந்தாரியின் வலப்பக்கம் படுக்கச்செய்தாள். உடனே காந்தாரியின் முலைகளிலிருந்து பால் பொங்கி கச்சையையும் மேலாடையையும் நனைத்து பட்டுவிரிப்பில் பெருகத் தொடங்கியது. "அக்கா..." என்று சத்யசேனை சற்று திகைப்புடன் சொல்ல காந்தாரி மைந்தனை அணைத்து அவன் வாய்க்குள் தன் முலைக்காம்பை வைத்தாள். காந்தாரியின் மறுமுலையிலிருந்து மூன்று சரடுகளாகப் பீரிட்ட பால் குழந்தையின் உடலில் விழுந்து அவனைமுழுமையாக நனைத்தது.

"மைந்தனை பாலில் நீராட்டி வளர்க்கிறீர்கள் அக்கா" என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து "ஆம்... எனக்கே வியப்பாக இருக்கிறது. பால்குடத்தில் துளைவிழுந்ததுபோல தோன்றும் சிலசமயம். என் குருதியனைத்தும் பாலாக மாறி வெளியே கொட்டுகிறதோ என்று நினைப்பேன். ஆனால் நெஞ்சுக்குள் பொங்கிக்கொண்டிருக்கும் பாலில் ஒரு துளிகூடக் குறையவில்லை என்றும் தோன்றும்" என்றாள். சத்யசேனை விழிகளை விரித்துப்பார்த்துக்கொண்டு நின்றாள். "எனக்கு அச்சமாக இருக்கிறது அக்கா."

"ஏன்?" என்றாள் காந்தாரி. "இப்படி பால் எழுவதை நான் கண்டதேயில்லை..." என்றவள் பின்னால் நகர்ந்து "ஆ"' என்றாள். "என்னடி?" என்றாள் காந்தாரி. சத்யசேனை "மஞ்சத்திலிருந்து பால் தரைக்குச் சொட்டி தேங்கிக்கொண்டிருக்கிறது!" என்றாள். "இது வேழக்கரு. அன்னையானை இப்படித்தான் பால்கொடுக்கும்போலும்" என்று காந்தாரி சொன்னாள். "நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாட்டுக்கு குட்டியானை வாயை எடுத்துவிட்டதென்றால் ஓடைபோல அன்னையின் பால் தரையில் கொட்டும் என்று. அங்கே ஒரு கலம் வைத்து அதைப்பிடித்து உலரச்செய்து மருந்துக்கு எடுத்துக்கொள்வார்களாம்."

அறைமுழுக்க முலைப்பாலின் வாசனை நிறைந்தது. "என்ன ஒரு வாசனை!" என்றாள் சத்யசேனை. "குருதியின் வாசனைதான் இதுவும். அது காய்மணம், இது கனிமணம்..." என்றாள் காந்தாரி. குழந்தையின் தலையை தன் கைகளால் வருடி மெல்ல கீழிறங்கி அவன் தோள்களை கைகளை வயிற்றை கால்களை வருடிச்சென்றாள். அவனது நெளியும் உள்ளங்கால்களைத் தொட்டாள். "மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா?" என்றாள். "அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன?" என்றாள் சத்யசேனை.

சுஸ்ரவை உள்ளே வரும் ஒலி கேட்டது. சத்யசேனை ஒரு மரவுரியை எடுத்து தன் முன் தேங்கிய முலைப்பால்மேல் போட்டு அதை மறைத்தாள். சுஸ்ரவை உள்ளே வந்ததுமே "அக்கா...என்ன வாசனை இங்கே?" என்றாள். பின் திரும்பிப்பார்த்து "ஆ!" என்று மூச்சிழுத்தாள். "என்னடி?" என்றாள் சத்யசேனை. "இங்கேபார்... இது..." என்று சுஸ்ரவை சுட்டிக்காட்டினாள். சத்யசேனை அங்கே சுவரோரமாக முலைப்பால் குளம்போல தேங்கிக்கிடப்பதைக் கண்டாள். "முலைப்பாலா அக்கா?" என்றாள் சுஸ்ரவை. "ஆம், அதை எவரிடமும் போய் சொல்லிக்கொண்டிருக்காதே. அக்காவையும் இவ்வறையையும் நாம் மட்டும் பார்த்தால்போதும்."

காந்தாரி "உலகுக்கே தெரியட்டும்... கண்ணேறெல்லாம் என் மைந்தனுக்கில்லை. நாளை அவன் ஹஸ்தியின் அரியணையில் அமரும்போது பாரதமே பார்த்து வியக்கப்போகிறது. அப்போது கண்ணேறுவிழாதா என்ன?" என்றபடி குழந்தையை முலைமாற்றிக்கொண்டாள். பாலில் நனைந்த குழந்தை அவள் கையில் வழுக்கியது. சத்யசேனை குழந்தையைப்பிடித்து மெல்ல மறுபக்கம் கொண்டுசென்றாள். குழந்தை இடமுலையை உறிஞ்சத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே வலதுமுலை ஊறிப்பீய்ச்சத் தொடங்கியது.

காந்தாரியின் முலை சிவந்த மூக்கு கொண்ட பெரிய வெண்பன்றிக்குட்டி போலிருந்தது. "என் முலைகளைப்பார்க்கிறாளா அவள்?" என்று காந்தாரி சிரித்தாள். சுஸ்ரவை பார்வையை விலக்கிக் கொண்டாள். "நான் இவன் பிறப்பது வரை வயிறுமட்டுமாக இருந்தேன். இப்போதுமுலைகள் மட்டுமாக இருக்கிறேன்" என்று காந்தாரி சொன்னாள். "என் கைகளும் கால்களும் தலையும் வயிறும் எல்லாமே இந்த இரு ஊற்றுகளை உருவாக்குவதற்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது." அவர்கள் இருவருக்குமே அவள் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சுஸ்ரவை "அக்கா, பேரரசியின் சேடி வந்திருக்கிறாள். பேரரசி இன்னும் இரண்டுநாழிகையில் அவைமண்டபத்துக்கு வருவார்கள் என்று சொன்னாள்" என்றாள். காந்தாரி பெருமூச்சுடன் "நான் நீராடி அணிகொள்ளவேண்டும்" என்றாள். "வெளியே நகரம் விழாக்கோலத்திலிருக்கிறதல்லவா? ஒருமுறை ரதத்தில் நகரத்தைச் சுற்றிவந்தால்கூட மக்களின் கொண்டாட்டத்தை நான் செவிகளால் பார்த்துவிடுவேன்" என்றாள். "சென்ற பன்னிருநாட்களாக விழாவுக்கான ஒருக்கங்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன அக்கா. நகர் மன்றுகள் முழுக்க விழவறிவிப்பு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து நாட்டரசர்களுக்கும் செய்தி சென்றிருக்கிறது. அவர்கள் தங்கள் நிகரர்களை அனுப்பியிருக்கிறார்கள்" என்றாள் சத்யசேனை.

"வெளியே புதிய நித்திலப்பந்தலை நேற்று நானும் தங்கைகளும் சென்று பார்த்தோம்" என்று சுஸ்ரவை சொன்னாள். "இன்றுவரை அஸ்தினபுரி கண்டதிலேயே மிகப்பெரிய பந்தல் என்றார்கள். உள்ளே சபைமண்டபத்தில்வைத்து விழாவை நடத்தலாமென்று அமைச்சர் சொன்னாராம். அங்கே இடமிருக்காது என்று நம் மூத்தவர் சொல்லிவிட்டார். ஏன் என்று அதைப்பார்த்தபோதுதான் தெரிந்தது. அதை ஒரு பந்தலென்றே சொல்லமுடியாது. மேலிருப்பது பட்டுவிதானமா மேகங்கள் பரவிய வானமா என்றே ஐயம் வந்தது" என்றாள் சுஸ்ரவை. "ஆரியவர்த்தம் முழுக்க அனைத்துநாடுகளுக்கும் சூதர்களை அனுப்பி செய்தியறிவித்திருக்கிறார்கள். ஆகவே வைதிகர்களும் சூதர்களும் பாடகர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று என் சேடி சொன்னாள். தேனை சிற்றெறும்பு மொய்ப்பதுபோல அஸ்தினபுரியையே அவர்கள் நிறைத்துவிட்டார்களாம்."

மார்பில் கைகளைவைத்து முகமும் உடலும் விம்ம அதை கேட்டுக்கொண்டிருந்தாள் காந்தாரி. அதை ஒவ்வொருநாளும் அனைவர் வாயிலிருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஒவ்வொருவரும் சொல்லச்சொல்ல அது வளர்ந்துகொண்டே இருந்தது. அவளுடைய உணர்ச்சிகள் சொல்பவரையும் தொற்றிக்கொண்டு அச்சொற்களை மேலும் மேலும் விரியச்செய்தன. "அஸ்தினபுரி மதம் கொண்ட யானைபோல சங்கிலிகளுக்குள் திமிறிக்கொண்டிருக்கிறது என்று என் சேடி சொன்னாள் அக்கா" என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து "ஆம்...அது சரியான உவமை" என்றாள்.

"பீஷ்மபிதாமகர் நேற்றிரவுதான் திரும்பிவந்திருக்கிறார் அக்கா" என்றாள் சுஸ்ரவை. "அவர் நள்ளிரவில் நகர்புகுந்திருக்கிறார். காலையில் அவரது கொடி கோட்டைவாயிலில் பறப்பதைக் கண்டுதான் அவர் வந்திருப்பதை அறிந்தார்களாம்." காந்தாரி "ஆம் அவரைத் தேடி ஒற்றர்கள் அனுப்பப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள்" என்றாள். "அவர் நாம் எண்ணியதுபோல கூர்ஜரத்தில் இல்லை. வேசரத்துக்கும் அப்பால் எங்கோ இருந்திருக்கிறார். சூதர்களின் பாடல்வழியாக மைந்தன் பிறந்ததை அறிந்து வந்திருக்கிறார்." காந்தாரி "ஆம், அஸ்தினபுரியின் அரசன் குருகுலத்தின் பிதாமகரால்தான் நாமகரணம் செய்யப்படவேண்டும்" என்றாள்.

"தாங்கள் நீராடி வாருங்கள் அக்கா. அதற்குள் மைந்தனையும் நீராட்டுகிறோம்" என்றாள் சுஸ்ரவை. "இப்போதுதான் நீராடிவந்தான். மீளமீள நீராட்டுவதில் பொருளில்லை. அக்கா அவனை கையிலெடுத்தாலே அவன்மேல் பால்மழைபெய்யத்தொடங்கிவிடும். அவன் அதிலேயே ஊறிவளரட்டும் என்று விண்ணவர் எண்ணுகிறார்கள்" என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்துக்கொண்டு கைநீட்ட சுஸ்ரவை அதைப்பற்றிக்கொண்டாள்.

அவள் நீராடி ஆடையணிகள் பூண்டு மீண்டுவந்தபோது மைந்தனை அணிகள் பூட்டி ஒருக்கியிருந்தனர். பத்து இளம் காந்தாரிகளும் அணிக்கோலத்தில் வந்திருந்தனர். "சம்படை எங்கே?" என்று காந்தாரி கேட்டாள். "இங்கிருக்கிறாள் அக்கா. அவளை அழைத்துவரத்தான் நானே சென்றேன்" என்றாள் சத்யவிரதை. "அவளை என்னருகே வரச்சொல்" என்று காந்தாரி கைநீட்டினாள். சம்படையை சத்யவிரதை சற்று உந்திவிட அவள் காந்தாரியின் அருகே சென்று நின்றாள். சிறிய தலைகொண்ட பெரிய வெண்ணிற மலைப்பாம்பு போலிருந்த காந்தாரியின் கரம் சம்படையை தேடித் துழாவி தலையைத் தொட்டு கழுத்தை வளைத்து அருகே இழுத்துக்கொண்டது.

"ஏன் நீ என்னைப்பார்க்க வருவதே இல்லை?" என்றாள் காந்தாரி. சம்படை ஒன்றும் சொல்லவில்லை. தலைகுனிந்து பேசாமல் நின்றாள். "சொல் குழந்தை, என்ன ஆயிற்று? நீ எவருடனும் பேசுவதுமில்லையாமே? தனியாக இருக்கிறாய் என்றார்கள்." சம்படை தலைநிமிர்ந்து அவர்களை யாரென்று தெரியாதவள்போலப் பார்த்தாள். "சொல் குழந்தை... என் செல்வம் அல்லவா? உனக்கு என்ன ஆயிற்று?" என்றாள் காந்தாரி. அவளை தன் உடலுடன் சேர்த்து கன்னங்களையும் கழுத்தையும் வருடியபடி "மிக மெலிந்துவிட்டாய். கழுத்தெலும்புகளெல்லாம் தெரிகின்றன" என்றாள்.

சம்படை திடுக்கிட்டு "கூப்பிடுகிறார்கள்" என்றாள். "யார்?" என்று காந்தாரி திகைப்புடன் கேட்டாள். "அங்கே, கூப்பிடுகிறார்கள்!" என்ற சம்படை சட்டென்று பற்களை இறுகக் கடித்து முகத்தைச் சுளித்து "பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் நிறுத்தச்சொன்னாலும் அவர்கள் நிறுத்துவதில்லை" என்றாள். சத்யவிரதை மெல்ல கைநீட்டி சம்படையைப் பிடித்து பின்னாலிழுத்து விலக்கிவிட்டு "அவளுக்கு ஏதோ அணங்கு பீடை இருக்கிறது அக்கா. யாரோ அவளிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்" என்றாள். காந்தாரி "அணங்கா?" என்று கேட்டாள். சுஸ்ரவை "ஆம், வைதாளிகரைக் கொண்டுவந்து பார்க்கலாம் என்று அரசி சொல்லியிருக்கிறார்கள்" என்றாள்.

அம்பிகையின் சேடி ஊர்ணை விரைந்து வந்தாள். அவள் புத்தாடை அணிந்து கொண்டையில் முத்தாரம் சுற்றி சரப்பொளியாரம் அணிந்திருந்தாள். அவளுடைய நடையில் ஆரம் குலுங்கி அதிர்ந்தது. "பேரரசி எழுந்தருளிவிட்டார்கள். அரசியாரும் அவையை அடைந்துவிட்டார்" என்றாள். அதற்குள் இன்னொரு சேடி ஓடிவந்து "அவைக்கு மைந்தனையும் அன்னையையும் கொண்டுவரும்படி ஆணை" என்றாள். சத்யசேனை "கிளம்புவோம் அக்கா" என்றாள்.

அவர்களுக்காக அணிப்பரத்தையரும் மங்கலத் தாலமேந்திய சேடியரும் காத்து நின்றனர். கையில் மைந்தனுடன் காந்தாரி வெளியேவந்தபோது சேடியர் குரவையிட்டனர். வாழ்த்தொலிகள் எழுந்து அவர்களைச் சூழ்ந்தன. பரத்தையரும் சேடியரும் முதலில் சென்றனர். தொடர்ந்து வலம்புரிச்சங்கை ஊதியபடி நிமித்தச்சேடி முன்னால் சென்றாள். இருபக்கமும் வெண்சாமரமேந்திய சேடியர் வர, தலைக்குமேல் வெண்முத்துக்குடை மணித்தொங்கல்களுடன் சுழன்றசைய கையில் செம்பட்டுத்துணியில் மைந்தனை ஏந்தியபடி காந்தாரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் காந்தாரிகள் சென்றனர்.

பனிமுடிசூடிய மலைச்சிகரங்களில் ஒன்றின் உச்சியில் இருந்து இன்னொன்றுக்கு காலடியெடுத்துவைத்து நடப்பதைப்போல காந்தாரி உணர்ந்தாள். மானுடத்தலைகள் அலையடிக்கும் திரவப்பரப்பின்மேல் நடப்பதுபோல மறுகணம் தோன்றியது. பின் மேகங்களின் மேல் மைந்தனை அணைத்தபடி சென்றுகொண்டிருந்தாள். கீழே நகரங்கள் மக்கள்... சாம்ராஜ்ஜியங்கள்... வரலாறு... அவள் அகாலப்பெருவெளியில் நின்றிருந்தாள்.

பந்தலில் கூடியிருந்த மனிதத்திரளை அவள் ஒலிவெள்ளமாக உணர்ந்தாள். அங்கிருந்து கங்கைக்கரைவரையில் கங்கையைத்தாண்டி மறுபக்கம் பாரதவர்ஷத்தின் எல்லைவரையில் அதற்கப்பால் கடலின்மேல் மானுடவெள்ளம் நிறைந்திருக்கிறது. வாழ்த்தொலிகளும் வாத்தியஒலிகளும் இணைந்த முழக்கம். பல்லாயிரம் நாவுகளின் பல்லாயிரம் அர்த்தங்களை கரைத்துக்கரைத்து ஒற்றை அர்த்தமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது அது. அதையே மீளமீளக் கூவிக்கொண்டிருந்தது. அதுவேயாகி திசைகளை நிறைத்துச் சூழ்ந்திருந்தது.

அனைத்தும் ஒற்றை ஒரு மானுடனுக்காக. ஒருமானுடன்! மானுடனா? காலவெளிமடிப்புகளில் என்றோ ஒருமுறை மட்டுமே நிகழ்பவன். மானுட உடலில் விதியாக நிகழ்பவன். அவனே விதி. அவனே நியதி. அவனே நெறியும் முறையும் அறமும். அவன் மீறக்கூடாத எல்லையென ஏதுமில்லை. கடலை நிலவென அவன் மானுடத்தை கொந்தளிக்கச் செய்கிறான். அவனுக்காக அவர்கள் இட்டெண்ணி தலைகொடுக்கிறார்கள். குருதிப்பெருக்கை மண்முழுக்க ஓடச்செய்கிறார்கள். மட்கி மண்டையோடுகளாக சிரித்துக்கிடக்கிறார்கள். மானுடமென்னும் ஏரியின் உடைப்பு அவன். ஒட்டுமொத்த மானுடத்துக்காகவும் பிரம்மம் ஆணையிட்ட மீறலை தானேற்று நடத்துபவன்.

எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோமென்றே அவள் அறியவில்லை. யார் பேசுகிறார்கள்? எங்கே ஒலிக்கிறது வேதம்? எங்கே ஒலிக்கின்றன மணிகளும் சங்கும்? எங்கே அதிர்ந்துகொண்டிருக்கிறது பெருமுரசு? "அரசி, மைந்தனை நீட்டுங்கள்." யார்? யாரது? "அரசே, அரசியுடன் சேர்ந்து கைநீட்டுங்கள். உங்கள் கைகளால் மைந்தனை கொடுத்து குருகுலத்தின் பிதாமகர் மைந்தனுக்குப் பெயர் சூட்டுவதற்கு ஒப்புதலளியுங்கள்." அவள் மைந்தனை நீட்டினாள். "பிதாமகரே, இதோ அஸ்தினபுரியின் பேரரசன். தங்கள் அழியாத சொற்களால் அவனை வாழ்த்துங்கள். பாரதவர்ஷம் யுகயுகமாக நினைத்திருக்கப்போகும் பெயரை அவனுக்குச் சூட்டுங்கள்" என்றான் திருதராஷ்டிரன்.

பெயரா? அவனுக்கா? பெயர் நீங்கள் அவனுக்கிடுவது. அவன் விண்ணகவல்லமைகளால் ஏற்கெனவே இடியோசையாக மின்னலோசையாக பல்லாயிரம் முறை அழைக்கப்பட்டிருப்பான் மூடர்களே... பீஷ்மரின் கனத்தகுரலை அவள் கேட்டாள். "விண்முதல்வன் மைந்தனே பிரம்மன். பிரம்மனின் மைந்தனோ அத்ரி. அத்ரி பெற்றவன் சந்திரன். சந்திரனே எங்கள் மூதாதையே எங்கள் வணக்கங்களை ஏற்றருள்க. இதோ சந்திரகுலத்தின் வழித்தோன்றல். இவனை வாழ்த்துக!"

யார் இவனா? மூடர்களே இவனல்ல. இவன் என் மைந்தன். வான்கிழித்து காற்றில் நடந்து என்னுள் புகுந்த கொலைமதயானை. "சந்திரனின் மைந்தன் புதன். புதன் பெற்றெடுத்தவன் எங்கள் முதல்மன்னன் புரூரவஸ். ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என விரியும் எங்கள் மூதாதையர் நிரையே விண்ணில் வந்து நில்லுங்கள். உங்கள் குளிர்ந்த அருள்மொழிகளை எங்கள் மைந்தன்மேல் பொழியுங்கள்!"

"இவன் ஹஸ்தியின் சிம்மாசனத்தை நிறைப்பவன். அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என வளரும் மரபினன். குருவம்சத்து கௌரவன்!" 'கௌரவன் கௌரவன் கௌரவன்' என வானம் அதிர்ந்தது. அவள் ஏமாற்றத்துடன் கைகளை பிணைத்துக்கொண்டாள். அச்சொல்வழியாக குழந்தை அவளுடைய மடியிலிருந்து விலகிச்சென்று விட்டதுபோல, இன்னொன்றாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். "ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனுவின் சிறுமைந்தன் இவன். விசித்திரவீரியனின் பெயரன். அஸ்தினபுரியின் முதல்வன் திருதராஷ்டிரனின் குருதி. இவனை எங்கள் மூதாதையரின் கரங்கள் வானில் குவிந்து வாழ்த்துவதாக!"'

அலைகள் தள்ளித்தள்ளி விலக்கிச் செல்வதுபோல அந்தப் பெயர்களால் அவன் அகன்றுகொண்டிருந்தான். தவிப்புடன் அவள் தன் கைகளை குவித்துக்கொண்டாள். "வீரர்களில் முதல்வனாக இவன் அமைவதாக. நாடும் செல்வமும் புகழும் வீடுபேறும் வீரமொன்றாலே கூடும் என்று சொன்ன நம் மூதாதையர் வாழ்க. அவர்களின் வாக்குப்படி யோதன கலையில் சிறந்தவன் என்று இவனை அழைக்கிறேன். சுயோதனன் புகழ் என்றும் வாழ்வதாக!" மும்முறை அவர் அப்பெயரை கூறினார். "சுயோதனன் சுயோதனன் சுயோதனன்."

வாழ்த்தொலிகள் மணற்புயலென சூழ்ந்து ஐம்புலன்களையும் செயலற்றதாக்கின. அவள் அதனுள் அவளே உருவாக்கிக்கொண்ட மறைவிடத்துக்குள் ஒடுங்கிக்கொண்டாள். என்மகன் என்மகன் என்மகன் என்று அவள் அகம் சொல்லிக்கொண்டே இருந்தது. வேள்விகள் வழியாக, சடங்குகள் வழியாக, பலநூறு வாழ்த்துக்கள் வழியாக, அவள் அச்சொல்லை மட்டும் மந்திரமென சொல்லிக்கொண்டு கடந்து சென்றாள். முனிவர்கள், வைதிகர்கள், குடித்தலைவர்கள், குலமூத்தார், வேற்றுநாட்டு முடிநிகரர்கள், வருகையாளர்கள்.

திருதராஷ்டிரனும் அவளும் முனிவர்களையும் பிதாமகரையும் பேரரசியையும் வணங்கியபின் வெண்குடைக்கீழ் அமர்ந்து பரிசில்களை வழங்கினர். மைந்தனுக்கு அதற்குள் இளம்காந்தாரியர் மும்முறை பசும்பால் அளித்தனர். அவனை பொன் மஞ்சத்தில் படுக்கச்செய்து குடிகளின் வாழ்த்துக்கு வைத்தனர். மக்கள் நிரைவகுத்து வந்து அவனை வாழ்த்தினர். அவனுடைய பாதங்களுக்கு அருகே இருந்த பெரிய தொட்டியில் மலர்கள் குவியக்குவிய சேவகர் எடுத்து விலக்கிக் கொண்டிருந்தனர்.

காந்தாரியின் முலைகள் இறுகி வெண்சுண்ணப்பாறைகளாக ஆயின. முலைகளைத் தாங்கிய நரம்புகள் இழுபட்டுத் தெறிக்க கைகளில் படர்ந்த வலி தோள்களுக்கும் முதுகுக்கும் படர்ந்தது. அழுத்தம் ஏறி ஏறி தன் முலைகள் வெடித்து பாலாகச் சிதறிவிடுமென எண்ணினாள். ஆனால் ஒரு சொட்டு கூட வழியவில்லை. பின்னர் மூச்சுவிடமுடியாமல் நெஞ்சு அடைத்துக்கொண்டது.

சத்யசேனை அவளருகே குனிந்து "அக்கா தாங்கள் சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம். சூதர்களுக்குரிய பரிசில்களை அளிக்கும் நிகழ்ச்சி அதற்குப்பின்னர்தான்" என்றாள். "என் மைந்தன்" என்று காந்தாரி கைநீட்டினாள். "தாங்கள் நடக்கமுடியாது. அறைக்குச்செல்லுங்கள். நான் மைந்தனைக் கொண்டுவருகிறேன்." சத்யசேனை, சத்யவிரதை இருவரும் அவளை மெல்லப்பிடித்து தூக்கினர். குருதி கனத்துறைந்த கால்களை மெல்லத் தூக்கிவைத்து காந்தாரி இடைநாழியை அடைந்தாள்.

சத்யவிரதை "அஸ்தினபுரியே அல்ல இது அக்கா. மொத்த பாரதவர்ஷத்தையே நேரில் பார்ப்பதுபோலிருந்தது. என் எண்ணங்களெல்லாம் உறைந்துவிட்டன. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை" என்றாள். காந்தாரி "சிறிய அரசி வந்திருந்தார்களா?" என்று கேட்டாள். சத்யவிரதை திகைத்து "நான் அதை அறியவில்லை அக்கா" என்றாள். சத்யசேனை "இல்லை அக்கா, அவர்கள் வரவில்லை" என்றாள். காந்தாரி பேசாமல் சென்றாள். சத்யசேனை திரும்பி அங்கே நின்றிருந்த சேடியிடம் "சிறிய அரசி ஏன் வரவில்லை என்று கேட்டுவிட்டு வா" என்றாள்.

"என் பாதங்கள் நன்றாக வீங்கியிருக்கின்றன" என்றாள் காந்தாரி. "என் முலைகள் உடைந்துவிடுமென்று படுகிறது... மைந்தனைக் கொண்டுவாருங்கள்!" "மைந்தனை சுஸ்ரவை கொண்டுவருகிறாள் அக்கா." அறைக்குள் சென்றதும் காந்தாரி தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சுஸ்ரவை மைந்தனைக் கொண்டுசென்று அவளருகே படுக்கவைத்தாள். அவள் கைகளை நீட்டி அவனைத் தொட்டாள். வாசனைமாறிப்போன குட்டியை ஐயத்துடன் முகர்ந்துநோக்கும் மிருகம்போல அவளுடைய கைகள் குழந்தையைத் தொட்டன.

"என் மைந்தனுக்கு அவர்கள் பெயரிட்டனர். குருவம்சத்தின் எளிய மன்னர்களின் வரிசையில் அதையும் சேர்த்து உச்சரித்தனர். இவ்வுலகு என் மைந்தனுக்கு அளிக்கும் முதல் அவமதிப்பு" என்று காந்தாரி பல்லைக்கடித்தபடி சொன்னாள். மைந்தனை எடுத்து தன் மடியில் வைத்து மார்கச்சை அவிழ்ப்பதற்குள் அவள் நெஞ்சின் தசைகள் வெம்மையாக உருகி வழிவதுபோல பால் பீரிடத்தொடங்கியது. மைந்தனின் வாயை அருகே கொண்டுசெல்வதற்குள் அவன் ஆறு சரடுகளாகப் பொழிந்த பாலில் நீராடியிருந்தான்.

"அவன் அழுவதேயில்லை, வியப்புதான்" என்றாள் சுஸ்ரவை பாலை உறிஞ்சும் குழந்தையைப் பார்த்தபடி. "அழுகை என்பது இறைஞ்சுதல். என் மைந்தன் எவரிடமும் எதையும் கேட்பவனல்ல" என்று காந்தாரி சொன்னாள். "அந்தப்பெயர்களையும் அடையாளங்களையும் எல்லாம் பாலால் கழுவிவிட்டீர்கள் அக்கா" என்றாள் சுஸ்ரவை சிரித்துக்கொண்டு. "இவன் எத்தனை வளர்ந்தாலும் இவனுடலில் இருந்து இந்த முலைப்பால் வாசம் விலகாதென்று தோன்றுகிறது."

சேடி வந்து வணங்கினாள். "சொல்" என்றாள் சுஸ்ரவை. "இளைய அரசிக்கு கடும் வெப்புநோய். அரண்மனையின் ஆதுரசாலையில் இருக்கிறார்கள். ஆகவேதான் பெயர்சூட்டுவிழவுக்கு அவர்கள் வரவில்லை" என்றாள் சேடி. சுஸ்ரவை தலையசைத்ததும் அவள் தயங்கி நின்றாள். "என்ன?" என்று சுஸ்ரவை கேட்டாள். "ஒரு முதுநாகினி வந்திருக்கிறாள். அரசியை பார்க்கவேண்டுமென்கிறாள்." "முதுநாகினியா? அவள் எப்படி உள்ளே வந்தாள்? அதுவும் இந்தநாளில்?" என்று சத்யசேனை திகைப்புடன் கேட்டாள். "அவளை எவராலும் தடுக்கமுடியாதென்று சொல்கிறாள்" என்றாள் சேடி.

"அவளை உடனடியாக திரும்பிச்செல்ல சொல். அரசி ஓய்வெடுக்கிறார்கள்" என்றாள் சத்யசேனை. காந்தாரி கைநீட்டி "அவளை வரச்சொல்" என்றாள். "அக்கா..." என சத்யசேனை சொல்லத்தொடங்க "அவள் என் மைந்தனைப்பற்றி எதையோ சொல்லப்போகிறாள்" என்றாள் காந்தாரி. அனுப்பும்படி சத்யசேனை கைகாட்ட சேடி தலைவணங்கி வெளியே சென்றாள். காந்தாரி பெருமூச்சுடன் மைந்தனை இன்னொரு முலைக்கு மாற்றிக்கொண்டாள்.

உள்ளே வந்த முதுநாகினி இமைக்காத பளிங்குவிழிகள் கொண்டிருந்தாள். மலைப்பாளையாலான நாகபட முடியும் தக்கைக்குழைகளும் அணிந்திருந்தாள். "அரசிக்கு என் வணக்கம்" என்றாள். காந்தாரி "நீ என்னை எதற்காக பார்க்க வேண்டும்?" என்றாள். "நாகங்களின் அரசனை வாழ்த்திவிட்டுச்செல்ல வந்தேன்" என்றாள் முதுநாகினி. காந்தாரி சிரித்தபடி "அவன் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அரசனே" என்றாள்.

முதுநாகினி அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னாள். காந்தாரி சைகை செய்ய இளம் காந்தாரியர் வெளியே சென்றனர். முதுநாகினி கதவை மென்மையாக மூடினாள். பின்னர் திரும்பி அவளருகே வந்து தணிந்த குரலில் "அங்கே மலைநாகர்களின் ஊரில் வெறியாட்டெழுந்தது. அதைச் சொல்லவே நான் வந்தேன். பிறந்திருப்பவன் நாகங்களின் காவலன். நாககுலத்தை அழிக்கவிருப்பவர்களின் எதிரி. அவனைக் காப்பது நாகர்களின் கடமை" என்றாள். "அக்னிசர அஸ்வினி மாதம் ஒன்பதாம் கருநிலவில் நாகர்களின் அரசனாகிய வாசுகி பிறந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் உன் மைந்தன் பிறந்திருக்கிறான்."

"நாகர்குலத்தை அழிப்பவன் யார்?" என்றாள் காந்தாரி திகைத்தவளாக. "அவன் இன்னும் பிறக்கவில்லை. அவன் கைவில்லால் எங்கள் குலம் அழியவிருக்கிறது என்று பல நூறாண்டுகளுக்கு முன்னரே வெறியாட்டுமொழிகள் சொல்லத்தொடங்கிவிட்டன. ஏனென்றால் இங்கு நிகழ்பவை அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டன." காந்தாரி "அப்படியென்றால் எதற்கு எதிராக நீங்கள் போரிடுகிறீர்கள்?" என்றாள். "விதிக்கு எதிராக! தெய்வங்களுக்கு எதிராக! பிரம்மத்துக்கு எதிராக!" என அவள் உரக்கக் கூவினாள். "அதுவே எங்கள் விதி. அந்தப் போரின்வழியாகவே நாங்கள் பிறக்கிறோம். பெருகுகிறோம். வாழ்கிறோம். ஆகவே போரிட்டாகவேண்டும்."

காந்தாரி "எனக்குப்புரியவில்லை" என்றாள். "உனக்குப்புரியும்படி சொல்ல என்னாலும் இயலாது. இதோ உன் மடியில் இருக்கும் இம்மைந்தன் அவனுடைய எதிரி என்பதை மட்டும் தெரிந்துகொள். இவனைக் கொல்லப்போகும் மைந்தன் பிறந்து விட்டான்." காந்தாரி அனிச்சையாக தன் மைந்தனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டாள். "ஆம், இவனுடைய எதிரிகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். இவனைக்கொல்லவிருப்பவன் மண்நிகழ்ந்துவிட்டான். அவனுடைய கைகளும் கால்களும் நெஞ்சும் சிரமும் வளர்ந்துவருகின்றன."

"யார் அவன்?" என அடைத்த குரலில் காந்தாரி கேட்டாள். "அதைச் சொல்ல எங்களால் இயலாது. எங்கோ எவனோ ஒருவன். அவன் வருகையிலேயே அடையாளம் காணமுடியும். அவனிடமிருந்து இவனைக் காப்பதே எனக்குரிய பணி." கைகள் நடுங்க மைந்தனை மார்புடன் அணைத்துக்கொண்டு காந்தாரி அமர்ந்திருந்தாள். வெளியே விழவுகொண்ட நகரம் ஓசையிட்டுக்கொண்டிருந்தது.

நாகினி சொன்னாள் "அரசி, முதல்முடிவில்லாது ஓடும் காலவேகத்தின் அலைகள்தோறும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமுதவேளை என ஒரேஒரு கணம் வருகிறது என்பது நாகர்களின் கணிதம். அப்போது ராகுவும் கேதுவும் ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்கிறார்கள். அந்த ஒற்றைக்கணத்தில் ஓர் அன்னை தன் மைந்தனை முதன்முதலாகப்பார்ப்பாள் என்றால் அவ்வன்னையின் விழிகளில் அமுதம் நிறைகிறது. அவளால் பார்க்கப்படும் மைந்தன் உடல் அவ்வமுதத்தால் நீராட்டப்படுகிறது."

அவளுக்கு மட்டுமே கேட்கும்படி நாகினி சொன்னாள் "அரசி, நல்லூழால் நீ இன்னும் உன் மைந்தனைப் பார்க்கவேயில்லை. மண்ணில் வாழ்ந்த அன்னையரில் இத்தனை மாறாநெறிகொண்ட எழுவரே இதுவரை பிறந்துள்ளனர். அவர்களை ஏழுபெரும் பத்தினிகள் என நூல்கள் கொண்டாடுகின்றன. நீ சதி அனசூயையின் அருள் கொண்டவள். உன் விழிகள் பேரன்பின் விளைவான பெருந்தவம் செய்தவை அரசி. இத்தனைநாள் அவை காணமறந்த உலகின் அமுதமெல்லாம் அவற்றில் திரண்டுள்ளன. அவைமட்டுமே இவனைக் காக்கமுடியும்..."

அவள் அருகே வந்து மெல்லியகுரலில் சொன்னாள் "இதோ இன்னும் சற்றுநேரத்தில் அமுதவேளை வரப்போகிறது. அடுத்தசாமத்தின் முதல்மணி ஒலிக்கும் அக்கணம் உன் கண்களைத் திறந்து இவனைப்பார். இவன் உடலில் ஆடைகளிருக்கலாகாது. முழு உடலும் ஒரே கணத்தில் உன்விழிகளுக்குப் படவேண்டும்... உன் விழிதீண்டிய இவனுடலை எந்த படைக்கலமும் தாக்காது. இவன் அமுதில் நீராடி அழிவற்றவனாவான்."

காந்தாரி "நானா?" என்று கேட்டாள். "ஆம், நீ பாரதத்தின் பெருங்கற்பரசிகளில் ஒருத்தி. உன் விழிகளால் மைந்தனைப்பார்க்கும் அக்கணத்தில் உன் பெருந்தவத்தின் பயனை முழுமையாக மைந்தனுக்கு அளித்துவிடுவாய். அதன்பின் உன்னில் அதன் துளியும் எஞ்சாது. விண்ணுலகு ஏகும்போது கூட ஏதுமற்ற எளியவளாக மட்டுமே நீ செல்வாய்." காந்தாரி "என் ஏழுபிறவியின் நற்செயல்களின் பயனையும் மைந்தனுக்கு அளிக்கிறேன்" என்றாள். "ஆம், அவ்வண்ணமே என்ணியபடி உன் விழிகளைத் திறந்து அவனைப்பார்" என்றாள் நாகினி.

காந்தாரி திகைத்தபடி அமர்ந்திருக்க நாகினி ஓசையற்ற காலடிகளுடன் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவின் ஒலி கேட்டதும் காந்தாரி சற்று அதிர்ந்தாள். சிலகணங்கள் அகம் செயலிழந்து அமர்ந்திருந்த பின் திடுக்கிட்டு எழுந்து குழந்தையின் மீதிருந்த ஆடைகளைக் கழற்றினாள். பொன்னூல் நுண்பின்னல்கள் செறிந்த அணியாடைக்கு அடியில் மென்பட்டாடையும் அதற்கடியில் பஞ்சாடையும் இருந்தது. நேரமென்ன ஆயிற்று என்று அவளால் உய்த்தறிய இயலவில்லை. கைகள் பதறியதனால் ஆடைகளின் முடிச்சுகளை கழற்றுவதும் கடினமாக இருந்தது. முலைப்பாலில் ஊறிய ஆடைகளின் சரடுகள் கையில் வழுக்கின.

ஆடையை முழுமையாக விலக்கியபின் குழந்தை வெற்றுடலுடன்தான் இருக்கிறதா என்று அவள் தடவிப்பார்த்தாள். பின்பு பெருமூச்சுடன் கைகளைக்கூப்பிக்கொண்டு காத்திருந்தாள். நிகழ்ந்தவை வெறும் நனவுருக்காட்சியா என்றும் அவளுக்கு ஐயமாக இருந்தது. அக்குரல் கேட்டதா இல்லை அவள் அகம் அதை நடித்ததா? இல்லை. காலம் சென்றுகொண்டிருந்தது. அவள் கையை நீட்டி மீண்டும் மைந்தனைத் தொட்டுப்பார்த்தாள்.

நாழிகை மணியோசை கேட்டதும் அவள் தன் இருகைகளாலும் கண்களைக் கட்டிய பட்டுத்துணியைத் தூக்கி திரும்பி மைந்தனைப்பார்த்தாள். அவன் இடைமேல் அவள் அவிழ்த்திட்ட பட்டாடை காற்றில் பறந்து வந்துவிழுந்திருந்தது. அவள் உடல் விதிர்த்தது. உடனே மீண்டும் பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டாள். தன் கைகளும் கால்களும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். எவ்வெண்ணமும் இல்லாமல் அகம் கரும்பாறைபோல நின்றது. நாழிகைமணி ஓய்ந்தபோது அது இருளாகக் கலைந்து சுழித்து ஓடத்தொடங்கியது. அவள் 'என் மகன்!' என்ற குரலாக தன் அகத்தை உணர்ந்தாள்.

ஆம், என் மகன். என் மகன். அச்சொல்லில் இருந்து அவள் அகத்தால் விடுபடவே முடியவில்லை. பெருக்கெடுத்த நதிபோல அச்சொல் அவளைக் கொண்டுசென்றது. கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் என் மைந்தனை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் கண்கட்டை அவிழ்த்துப்பார்த்தாலென்ன? ஆனால் பார்த்ததன் பலன் அவனிடமிருந்து அகலக்கூடும். ஆனால் அவனை நான் பார்க்கவில்லை. என் மைந்தன். என் மைந்தன். கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் பார்க்கவேயில்லை!

ஆனால் நான் பார்த்தேன். முழுமையாகவே பார்த்தேன். அவனை துல்லியமாக என்னால் மீண்டும் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு தசையையும் ஒவ்வொரு மயிர்க்காலையும் என்னால் பார்க்கமுடிகிறது. இது என்னுள் இருந்து இனி என்றென்றும் அழியாது. என்னுடன் இருந்து இது சிதையில் வெந்து நீறாகும். இதை கண்ணுள் தேக்கியபடிதான் நான் என் முன்னோருலகை அடைவேன்.

இருளில் ஓடி பாறையில் முட்டிக்கொண்டவள் போல அவள் 'ஆ!' என அலறிவிட்டாள். அவள் மைந்தனை முழுமையாகப் பார்க்கவில்லை. அவன் இடையும் தொடைகளும் மறைந்திருந்தன. நெஞ்சு படபடக்க அவள் கைகளால் மார்பைப்பற்றியபடி கண்ணீர்வழிய அமர்ந்திருந்தாள். அவன் தொடைகள்! கையை நீட்டி அவன் தொடைகளைத்தொட்டாள். இன்னொருகையால் தன் தலையை தானே ஓங்கி அறைந்துகொண்டாள். உதடுகள் துடிக்க நெஞ்சு ஏறியமர விம்மியழுதாள்.

கதவு திறந்து சத்யசேனையும் சுஸ்ரவையும் சத்யவிரதையும் உள்ளே வந்தனர். சத்யசேனை "அக்கா...என்ன? என்ன ஆயிற்று?" என்று கூவியபடி ஓடிவந்தாள். "எங்கே? எங்கே பிறர்? அத்தனைபேரையும் அழைத்துக்கொண்டுவாருங்கள். என் மைந்தனுக்கு தம்பியர் வேண்டும். ஒருவர் இருவரல்ல. நூறுபேர் அவனைச்சூழ்ந்திருக்கவேண்டும். அவன் தொடைகளைக் காக்கும் இரு நூறு கைகள் அவனுக்குத்தேவை..." என்று காந்தாரி கூவினாள்.

அவர்கள் திகைத்து நிற்க அவள் கைகளை விரித்தபடி "இவனை எவரும் வெல்லலாகாது. இவன் படைக்கலங்கள் எங்கும் தாழக்கூடாது. ஆகவே இவன் இனி சுயோதனன் அல்ல, துரியோதனன். வெல்வாரற்றவன்..." என்றாள். அவளுடைய முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தபடி தன் மைந்தனை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.

பகுதி பதினேழு : புதிய காடு

[ 1 ]

மருத்துவச்சிகள் கையில் தன் உடலை ஒப்புக்கொடுத்தவளாக குந்தி கண்மூடிக்கிடந்தாள். உடல் தன் வலுவை இழப்பது என்பது ஒரு பெரும் விடுதலை என்று தோன்றத்தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டிருந்தது. உடலெங்கும் நுரைத்தோடி ஐயங்களாக, அலைக்கழிப்புகளாக, வஞ்சங்களாக, சினங்களாக, எதிர்பார்ப்புகளாக, கனவுகளாக குமிழியிட்டுக்கொண்டிருந்தது குருதிதான். குருதி உடலில் இருந்து வழிந்து சென்று வற்றவற்ற உடல் தன் நெருப்பை இழந்து வெளுத்து குளிர்ந்து வாழைமட்டைபோல ஆகியது. வெம்மைக்காக அது ஏங்கியது. இரவில் கணப்பையும் பகலில் வெயிலையும் அவள் விரும்பினாள். தோலில் படும் வெம்மை உள்ளே குருதியில் படரும்போது மெல்ல அவள் தசைகள் தளர்ந்து அதை வாங்கிக்கொண்டன.

சேடியர் அவள் கால்களில் சூடான தைலத்தைத் பூசி மரவுரியால் தேய்த்துக்கொண்டிருந்தனர். கணப்பின் வெம்மை மெல்லிய அலைகளாக வந்து இடப்பக்கத்தை மோதிக்கொண்டிருந்தது. கணப்பின்மேல் வைக்கப்பட்டிருந்த கலத்தில் கொதித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்த தைலத்தின் ஒலியை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒற்றைச் சொற்களை அவ்வப்போது அது சொல்வதுபோலிருந்தது.

அவள் நெடுந்தொலைவில் எங்கோ இருந்தாள். புல்வெளிசூழ்ந்த ஆயர்கிராமத்தில் உயரமற்ற புல்கூரைகள் கொண்ட குடில்களுக்குள் மத்துகள் தயிர்கடையும் ஒலி புறாக்குறுகல் போலக் கேட்டுக்கொண்டிருக்க, முற்றத்தில் மேயும் கோழிகளின் சிறு கொக்கரிப்புகள் சேர்ந்து ஒலிக்க, அவ்வப்போது கன்று எழுப்பும் ஒலி மேலெழுந்து ஒலிக்க, இளவெயில் கலந்த மெல்லிய காற்று மரங்களின் இலைகளை பளபளக்கச்செய்து கடந்து சென்றது. புல்வெளிகளில் இருந்து எழுந்த தழைவாசனை அதிலிருந்தது. காற்றுக்கு எதிர்முகம் கொடுத்த காகம் ஒன்று சிறகடுக்குகள் குலைய மேலெழுந்து வளைந்து சென்றது.

அவள் செந்நிறமான பட்டுப்பாவாடை அணிந்திருந்தாள். அதை இரு கைகளாலும் பற்றி சுழற்றியபடி மெல்ல அமர்ந்தபோது வண்ணம்நிறைந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்திருப்பவள் போல உணர்ந்தாள். மேலே பார்த்தபோது இளமஞ்சள் நிற சிறகுகளை விரித்து ஒரு சிறிய பறவை எழுந்து சென்றது. தன்னையும் ஒரு வண்ணக்குருவியாக உணர்ந்தபடி அவள் அதை நோக்கி கைவீசியபடி ஓடினாள். சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுசெந்நிற நாய் ஒன்று எழுந்து வாலைச்சுழற்றியபடி கூர்நாசியை நீட்டிக்கொண்டு சிரிக்கும் கண்களுடன் ஓடிவந்தது.

கனவுதான் இது என எப்போதோ ஓர் எண்ணம் கடந்துசெல்லும். நாள் முழுக்க அக்கனவு மிகமிக மெதுவாக விரிந்து விரிந்து செல்லும். பின்பு அக்கனவுடன் துயிலில் மூழ்கி விழிக்கையில் தொலைதூரத்தில் அதன் கரைந்த வண்ணம் தெரிவது அகத்துள் ஏக்கத்தை நிறைக்கும். ஆனால் மிக விரைவில் இன்னொரு கனவுக்குள் நுழைந்துவிடமுடியும். நான்குபக்கமும் கதவுகள் கொண்ட குடில்போலிருந்தது அவள் உடல். எந்தக்கதவைத் திறந்தும் கனவுகளுக்குள் இறங்கிவிடமுடியும். இறந்தகாலம் எப்படி கனவாக ஆகமுடியும்? அப்படியென்றால் ஒவ்வொருநாளையும் கனவைநோக்கித்தான் தள்ளிக்கொண்டிருக்கிறோமா? கனவுகளை அவள் அத்தனை திடமாக எப்போதுமே உணர்ந்ததில்லை. கனவுக்கு அப்பால் இன்னும் மெல்லிய மங்கிய புகைச்சித்திரம் போன்ற கனவாகவே அவள் நனவை உணர்ந்தாள். சதசிருங்கம், பாண்டு, மாத்ரி, தருமன்...

நனவைத் தொட்டதுமே அகம் மண்ணுளிப்பாம்புபோல ஆகி கிடந்த இடத்திலேயே தன்னுடலுக்குள் தானே நெளிந்து சென்றபடி கிடப்பதை உணர்ந்தாள். அதை அவளாலேயே பார்க்கமுடிந்தது. இத்தனை நேரம் இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறோமே என்ற திகைப்பு எழுந்தால் அது இன்னொரு மண்ணுளிப்பாம்பாக அருகே நெளியத்தொடங்கியது. எண்ணை ஊறிய உடலுடன் நாவும் கண்களும் செவிகளும் நாசியும் அற்ற வெற்று உடல்மட்டுமேயான நெளிவு. அதைவெல்ல ஒரே வழிதான். உடலை அசைப்பது. உடலுக்கு சித்தத்தைக் கொண்டுசெல்ல முடிந்தால் கையையோ காலையோ உயிர்கொள்ளச்செய்ய முடியும். அந்த அசைவு நீரசைந்து நிழல் கலைவதுபோல அகத்தை அழிக்கும். மெல்ல புரண்டுகொள்ளமுடியும் என்றால் மீண்டும் கனவுகளுக்குள் செல்லமுடியும்.

நாட்கள் சென்றுகொண்டிந்தன. நூற்றுக்கணக்கான துயில்களும் விழிப்புகளுமாக அவள் அவற்றினூடாகச் சென்றுகொண்டிருந்தமையால் அவள் பலமடங்கு நீண்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். பல திசைகளிலும் உடைப்பு கொண்டு பெருகிவழிந்த சித்தத்தால் அவள் பலநூறுமடங்கு வாழ்ந்துகொண்டிருந்தாள். பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.

பாண்டு உள்ளே வந்து "நலம் பெற்றிருக்கிறாளா?" என்று வினவ மருத்துவச் சேடி "குருதியிழப்பு நின்றுவிட்டது அரசே. தசைகள் இன்னும் வலுப்பெறவில்லை. சித்தம் நிலைகொள்ள இன்னும் நாட்களாகும்" என்றாள். "அஹிபீனா கொடுத்திருப்பதனால் உடல் முழு ஓய்வில் இருக்கிறது". பாண்டு தன் தோளில் இருந்த தருமனை அருகே நின்ற அனகையிடம் கொடுத்துவிட்டு அவளருகே குனிந்து மெல்ல "பிருதை... பிருதை" என்று அழைத்தான். அவள் வானத்தின் கீழ்மூலையில் ஒரு மெல்லிய சிவப்பு நிறமான அதிர்வாக அந்தக்குரலைக் கேட்டாள். பின்பு அவள் முன் ஒரு இளமஞ்சள்நிறப் பஞ்சுக்குவைபோல கிடந்து காற்றில் அலைபாய்ந்தது அக்குரல். "பிருதை!"

அவள் குனிந்து அதை தொட்டாள். அவ்வளவு மென்மையாக, இளவெம்மையுடன், ஈரத்துடன் இருந்தது. கண்விழித்து சிவந்த விழிகளால் அவனைப் பார்த்து உலர்ந்த உதடுகளை மெல்லப் பிரித்தாள். நா நுனியால் கீழுதட்டை ஈரப்படுத்தியபின் பெருமூச்சு விட்டாள். "பிருதை, உன்னால் எழுந்தமர முடியுமா?" என்றான். "ம்" என்றபின் அவள் கைகளை நீட்டினாள். சேடி அவளை மெல்லத் தூக்கி அவளுக்குப்பின் ஒரு தலையணையை வைத்தாள். அவள் தலைக்குள் வெடித்தபடி சுழன்றுகொண்டிருந்த வண்ணக்குமிழிகளை பார்த்தபடி சிலகணங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாள்.

அவளை அதிரச்செய்தபடி ஓர் ஐயம் எழுந்தது. கைகள் பதைத்து அசைய கண்விழித்து நெஞ்சைப் பற்றியபடி அவனை நோக்கி சற்றே சரிந்து "இளையவன் நலமா?" என்றாள். "நலமாக இருக்கிறான் பிருதை..." என்றான் பாண்டு. அவள் "ம்?" என மீண்டும் கேட்டாள். "நலமாக இருக்கிறான். சற்றுமுன்னர்கூட நான் சென்று பார்த்தேன்." அவள் அச்சொற்களை தனித்தனியாக பிரித்து உள்வாங்கிக்கொண்டாள். நலமாக. நலம். நலம். மீண்டும் கண்களைத் திறந்தபோது அவள் சித்தம் சிறகு குவித்து வந்து அமர்ந்துவிட்டிருந்தது. கண்களில் மயக்கம் வடிந்து ஒளிஎழுந்தது.

"இன்று காலை பலாஹாஸ்வ முனிவர் கைலாயப்பயணம் முடித்து இறங்கி வந்திருக்கிறார் பிருதை. அவருடன் சென்ற பன்னிருவரில் ஐவரே திரும்பியிருக்கின்றனர். இந்திரத்யும்னத்தின் பீதாகரம் என்னும் மணல்மேட்டிலுள்ள குடிலில் அவர் தங்கியிருக்கிறார்." குந்தி தலையசைத்தாள். "நம் மைந்தனைப் பற்றிக் கேட்டார். அவனுடைய நாமகரணத்தை அவரே நடத்தலாமென்று எண்ணினேன். அவருடைய ஆற்றலில் ஒரு துளியையேனும் அவன் பெறுவானென்றால் நல்லதல்லவா?"

மண்ணுளி தன்னை தானே வழுக்கி நீண்டு தன் உடல்முடிச்சை அவிழ்த்துக்கொண்டது. அவள் கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்துகொண்டாள். "நாளைக் காலை நல்வேளை என்றார் மாண்டூக்யர். நாளை முதற்கதிர்வேளையில் அவர் ஹம்சகூடத்துக்கு வருவார்" பாண்டு சொன்னான். குந்தி தலையசைத்தாள். தருமன் அனகையிடம் இருந்தபடி பாண்டுவை நோக்கி கைநீட்டினான். பாண்டு அவனை திரும்பவும் வாங்கி தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு அவன் கால்களைப் பற்றிக்கொண்டான். அத்தனை உயரத்தில் இருந்தே அனைத்தையும் நோக்கி அவன் பழகிவிட்டான் என்று குந்தி எண்ணிக்கொண்டாள். உயரம் குறைவாக இருக்கையில் தெரியும் உலகம் அவனுக்கு அயலாக இருக்கிறது போலும்.

எட்டு மாதங்களுக்கு முன் சதசிருங்கத்துக்குச் செல்லும் முனிவர்களை பலாஹாஸ்வர் இட்டுவந்திருந்தார். அவருக்காக கௌதமரின் பெருங்குடில் ஒருக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து காலையில் பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அவரை வணங்கச் சென்றபோது அவர் இந்திரத்யும்னத்தின் வெண்ணிறமான கூழாங்கல் பரவிய கரையில் மான்தோலால் ஆன சிற்றாடை மட்டும் கட்டி நின்றிருந்தார். தொலைவிலேயே அவரது தோற்றத்தைக் கண்டு திகைத்த மாத்ரி "அக்கா, இவரென்ன கந்தர்வரா?" என்றாள். குந்தி அவள் கைகளைப்பற்றி அழுத்தி பேசாமலிருக்கும்படி சொன்னாள்.

பலாஹாஸ்வர் செந்நிறமான பெரும்பாறை போலிருந்தார். தான் கண்டதிலேயே பேருடல்கொண்டவரான திருதராஷ்டிரன் அவர் அருகே இளையோன் எனத் தெரிவார் என்று குந்தி எண்ணிக்கொண்டாள். கைகால்களை அசைத்து தன் தசைகளை இறுகியசையச்செய்தபடி அவர் நின்றபோது அவர் தசைகளாலான ஒரு நீர்த்தேக்கம்போல அலையடிப்பதாகத் தோன்றினார். "வெண்ணிறமான யானை ஒன்றை மலைப்பாம்பு சுற்றி இறுக்கிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது" என்றாள் மாத்ரி. குந்தி அந்தக் குழந்தைக்கற்பனையை எண்ணி புன்னகையுடன் திரும்பிப்பார்த்தாள்.

பலாஹாஸ்வரின் சிறிய உருண்ட செந்நிறச் சடைக்கற்றைகள் தோளில் அனல்சுள்ளிகள் போல விழுந்துகிடந்தன. அவருக்கு மீசையும் தாடியும் ஏதுமிருக்கவில்லை. மார்பிலும் தொடைகளிலும் எங்கும் முடியே இல்லை. இறுகிய உடல் தாமிரத்தை உருக்கிச் செய்ததுபோல காலையிளவெயிலில் மின்னியது. புடைத்து எழுந்த மலைத் தோள்கள். நீலநரம்பு எழுந்த பெரும் புயங்கள். இரு இணைப்பாறைகள் போல விரிந்த மார்புகள். அடுக்கிவைக்கப்பட்ட எட்டு செம்பாறைகள் போன்ற வயிறு. அடிமரம்போல நரம்புகள் புடைத்து செறிந்து மண்ணில் ஊன்றிய கால்கள்.

அவர்கள் வணங்கியதும் பலாஹாஸ்வர் "வாழ்க" என்றபின் உரக்க நகைத்து கைகளை வீசியபடி "இந்த சதசிருங்க கௌதம குருகுலம் போல வீணான இடம் ஏதுமில்லை. வந்ததுமே ஒரு மற்பிடிக்கு எவரேனும் உள்ளனரா என்று கேட்டேன். அத்தனைபேரும் குடலைச்சுருட்டிக்கட்டி வாழ்வதனால் காய்ந்த புடலங்காய் போலிருக்கிறார்கள்" என்றார். "நான் எப்போதும் கர்த்தமரின் குருகுலத்தையே விரும்புவேன். அங்கே பத்துப்பன்னிரண்டு சீடர்களை நல்ல மல்லர்கள் என்று சொல்லமுடியும். ஒருநாளைக்கு ஒருவர் வீதம் மலர்த்தியடித்தால் பத்துநாட்கள் மகிழ்வுடன் செல்லும்" என்றார்.

பாண்டு புன்னகையுடன் "தங்களிடம் மற்போர் செய்யவேண்டுமென்றால் மலைவேழங்கள்தான் வரவேண்டும் மாமுனிவரே" என்றான். அவர் அண்ணாந்து வெடித்துச்சிரித்து தன் தொடைகளைத் தட்டினார். "ஆம், நான் மானுடரில் இதுவரை மூவரிடமே நிகர்வல்லமையைக் கண்டிருக்கிறேன். சிபிநாட்டு பால்ஹிகரும் பீஷ்மரும் என்னுடன் கைகோர்த்திருக்கிறார்கள். பரசுராமர் என்னை இறுக அணைத்துக்கொண்டார். அப்போதே அவர் யாரென எனக்குத் தெரிந்தது. அடுத்த தலைமுறையில் நான் உன் தமையனுடன் கைகோர்க்கவேண்டும். பார்ப்போம். சதசிருங்கம் விட்டு இறங்கியதும் நேராக அஸ்தினபுரிக்குத்தான் செல்வதாக இருக்கிறேன்."

"எனக்கு முதல் மைந்தன் பிறந்திருக்கிறான் தவசீலரே. மாதவத்தாரான துர்வாசரால் அவன் யுதிஷ்டிரன் என்று பெயரிடப்பட்டான். நான் அவனை தருமன் என்கிறேன். தங்கள் வாழ்த்துக்கள் அவனை வலுப்படுத்தும்" என்றான் பாண்டு. "என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. நான் வந்து அவனை வாழ்த்துகிறேன்" என்றார் பலாஹாஸ்வர். "இன்று அக்னியைப்பற்றிய வகுப்பொன்றை நிகழ்த்தினேன். அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் நீ வந்தாய்..." பலாஹாஸ்வர் சொன்னார்.

"அக்னியின் இயல்புகளில் முதன்மையானது அது தன்னைத்தானே வெளிப்படுத்த முடியாதென்பதே. அது எதை உண்கிறதோ அதையே தன் ஊர்தியாகவும் உடலாகவும் கொள்கிறது. விண்ணகக்கோள்களில், உலோகங்களில், கல்லில், மண்ணில், மரங்களில் எல்லாம் அக்னி உறைகிறது. அனைத்து உயிர்களின் உடல்களிலும் அக்னியே வசிக்கிறது. இங்குள்ள அனைத்துமே அக்னி எரியும் வேள்விமேடைகள்தான். இங்குள்ள அனைத்தும் அக்னிக்கு அவிகளுமாகும்."

அவரது முகம் அப்போது இன்னொன்றாக மாறிய விந்தையை குந்தி திகைப்புடன் பார்த்தாள். "அன்னத்தில் வசிக்கிறது எரி. அன்னத்தை உண்டு வாழ்கிறது அது. ஆகவே ஒவ்வொரு அன்னமும் பிற அன்னத்தை உண்டு தன்னுள் வாழும் அனலுக்கு அவியாக்குவதற்கே முயல்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் வைஸ்வாநரன் என நெருப்பை வாழ்த்துகிறது வேதம். ஆற்றலே வடிவான ஹிரண்யகர்ப்பன் என்கிறது."

"எரியெழுப்புதலைப்போல உயிர்களுக்கு புனிதமான முதற்கடமை ஏதுமில்லை. ஆகவே மண்ணில் நிகழும் முதற்பெரும்செயல் உண்பதேயாகும்" கைவீசி பலாஹாஸ்வர் சொன்னார். "கண்ணைத்திறந்துபார்! பார்... நம்மைச்சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என. உண்ணுதல்! ஒவ்வொன்றும் பிறிதை உண்டுகொண்டிருக்கிறது! இப்புடவியே ஒரு பெரும் சமையலறை, உணவுக்கூடம்!"

அச்சொற்கள் குந்தியின் முன் அச்சமூட்டும் கரியதெய்வம் என பேருருக்கொண்டு எழுந்து நின்றன. அவள் உடல் சிலிர்க்க மெல்ல மாத்ரியின் தோள்களை பற்றிக்கொண்டாள். பலாஹாஸ்வர் ஓங்கிய குரலில் சொன்னார் "அரசனே, உண்பதைப்போல வேள்வி பிறிதில்லை. அன்னமே பிரம்மம். அதற்கான படையலும் அன்னமேயாகும். அந்தவேள்வியை உன் மைந்தனுக்குக் கற்றுக்கொடு. அவன் உணவை விரும்பட்டும். மண்ணில் குறையாத பேரின்பத்தை அவன் அடைவான். அனைத்து அறங்களையும் ஆற்றி விண்ணில் மூதாதையர் மடியிலும் சென்றமர்வான். ஆம், அவ்வாறே ஆகுக!"

பலாஹாஸ்வர் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். சற்று நேரத்தில் அவரது தலை மிகச்சிறிதாக ஏரிக்குள் மறைந்தது. "இந்த ஏரியின் நீர் பனியுருகி வருவதனால் கடும்குளிர்கொண்டது இதில் நீந்தக்கூடாது என்பார்கள்" என்றாள் மாத்ரி. அச்சத்துடன் பாண்டுவை பற்றிக்கொண்டு, "அவர் நெடுந்தூரம் செல்கிறார். அவரால் மீண்டுவர முடியாதுபோகலாம்" என்றாள். புன்னகையுடன் பாண்டு "அவரால் இந்த ஏரியை ஒரு பட்டுப்பாய் எனச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொள்ளமுடியும். ஒரு வேளைக்கு முந்நூறு அப்பங்களை உண்ணக்கூடியவரைப்பற்றிப் பேசுகிறாய். மதயானையை இரு கொம்புகளையும் பற்றிச் சுழற்றி மத்தகம் தாழச்செய்பவர் அவர்" என்றான்.

மாத்ரியை நோக்கி "அனகையிடம் சென்று மைந்தன் எப்படி இருக்கிறான் என்று பார்" என்றாள் குந்தி. "மாலை பலாஹாஸ்வர் நம் குடிலுக்கு மைந்தனைப்பார்க்க வருவார் என்று சொல்." அவள் தன்னை விலகச்சொல்வதை உணர்ந்த மாத்ரி தலையசைத்தபின் முன்னால் ஓடிச்சென்றாள். குந்தி பெருமூச்சுவிட்டாள்.

பாண்டு "என்ன அச்சம்? அஸ்தினபுரியில் இருந்து விதுரன் அனுப்பிய ஒற்றர்களால் இரவும் பகலும் காக்கப்படுகிறான் உன் மைந்தன்" என்றான். "அவர்கள் ஒற்றர்களல்ல" என்றாள் குந்தி சினத்துடன். "சரி, அவர்கள் தவசீலர்கள். மரவுரி அணிந்து காவல் நிற்கிறார்கள். பிருதை, இவ்வளவுதூரம் நகரை உதறி காட்டுக்குள் வந்தபின்னரும் நீ அரசி என்ற அடையாளத்தை இழக்கவில்லையே. இங்கே உன் மைந்தன் அரசமகனல்ல, எளிய முனிகுமாரன். அவனை யார் என்ன செய்யப்போகிறார்கள்? எதற்கு இந்தக் காவலும் கட்டுப்பாடும்? என் மைந்தனை நான் தனியாக எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றால் புதர்களுக்குள் மறைந்து அமர்ந்து அவர்கள் என்னை கண்காணிக்கிறார்கள். ஒருகணம்கூட அவனுடன் நான் தனித்திருக்க இயலவில்லை."

குந்தி அதற்கு பதில் சொல்லாமல் நடந்தாள். பின்பு "நான் இன்னொரு மைந்தனைப் பெற்றுக்கொள்ளப்போகிறேன் என்று சொன்னேன் அல்லவா?" என்றாள். "அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறு மைந்தர்கள் தேவை. என் இறைவன் சுப்ரமணியனைப்போல ஆறுமுகம்கொண்ட ஒரே மைந்தனாக அவர்களை ஆக்குவேன். இன்னும் ஐந்து மைந்தர்களைப் பெற்றுக்கொடு!" குந்தி அதைக்கேட்காதவள் போல "ஆற்றலே வடிவான மாருதி. பேருடல் கொண்ட பீமாகாரன். மண்ணிலுள்ள அத்தனை அன்னத்தையும் தின்றாலும் அடங்காத பெரும்பசி கொண்ட விருகோதரன். அன்னவேள்வி செய்து பிரம்மத்தைக் காண்பவன். அவனை நான் பெறவேண்டும். அவன் என் மைந்தனுக்குக் காவலனாக நிற்கவேண்டும்" என்றாள்.

"ஆம் அதைத்தான் அன்றுமுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாய்... நான் வேண்டுவதும் அத்தகைய ஒரு மைந்தனைத்தான்" என்றான் பாண்டு. குந்தி அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. குடிலுக்கு வருவதுவரை பாண்டு தான் பெற்றுக்கொள்ளவிரும்பும் மைந்தர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான். சிறுவனைப்போல கைகளை ஆட்டியும், தானே சிரித்தும், அகவிரைவெழுந்து மூச்சுவாங்கியும் பேசினான். இருகைகளையும் விரித்து துள்ளிக்குதித்து "என் மைந்தர்களை பாண்டவர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். அவர்கள் குருவம்சத்தினர் அல்ல. பாண்டு வம்சத்தினர்... கௌரவர்கள் என என் தமையனின் மைந்தர்கள் அழைக்கப்படட்டும்..." என்றான்.

"பாண்டவ குலம்! குலம்! குலம் என்பதுதான் எவ்வளவு அழகான சொல். எத்தனை ஓங்கி ஒலிக்கும் சொல்!" பாண்டு பரவசத்துடன் சொன்னான். "குலம்! அது மனிதனின் அனைத்து தனிமைகளையும் அழித்துவிடுகிறது. மனிதர்களை சேர்த்துக் கட்டி முன்வைக்கிறது. தெய்வங்கள் மனிதனை தனியனாகத்தான் படைத்தன. அவன் தெய்வங்கள்முன் குலமாக மாறி நின்று அறைகூவுகிறான். மனிதனுக்கு இறப்புண்டு. குலம் இறப்பதில்லை. சாவுக்கரசன் குலங்களின் முன் வந்து தலைகவிழ்ந்து நிற்கிறான். ஹஸ்தி இறக்கவில்லை. குரு இறக்கவில்லை. பாண்டுவுக்கும் இறப்பே இல்லை!"

"என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை" என்றான் பாண்டு. "என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன். என் மூதாதையரின் ஊர்தியே நான். அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள். அவர்களை தொட்டறிய தசைஎழுந்த கைகள். பின்பு நினைப்பேன். மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என் மூதாதையரல்லவா என. அவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என..."

"அர்த்தமற்ற எண்ணங்களில் இருக்கும் எழிலும் விசையும் பிறவற்றுக்கில்லை பிருதை. ஒருநாள் காட்டில் தருமனுடன் செல்லும்போது தோன்றியது நான் என்னைத்தான் சுமந்து கொண்டு செல்கிறேன் என்று. இரு பாண்டுகள். கீழே இருப்பது குன்றிக்கொண்டிருப்பவன். மேலே திகழ்பவன் வளர்ந்துகொண்டிருப்பவன். நான் விறகு. கருகியழிகிறேன். அவன் நெருப்பு என்னை உண்டு எழுகிறான். அவன் நானே. நான் அவனுக்குள் என் அனலை முற்றிலுமாகச் செலுத்தியபின் அமைதியாகக் கரியாவேன். அவன் வழியாக இந்த மண்ணில் நிலைத்து வாழ்வேன்."

பாண்டு சொன்னான் "அன்று கண்ணீருடன் மலைச்சரிவில் நின்று என் மூதாதையரை வாழ்த்தினேன். அழிவின்மையின் பெருமுற்றத்தில் நின்று ஏறிட்டு நோக்கினேன். மலைகளே வானமே மண்சரிவே என அழைத்தேன். இதோ நான். இங்கிருக்கிறேன். நான் நான் நான் என என் அகம் கூவியது." புன்னகையுடன் "மனநெகிழ்வை சொற்களாக ஆக்கக் கூடாது என எண்ணுபவள் நான். ஆனால் அப்படி ஆக்கிக்கொள்ளலாம் என்று இப்போது படுகிறது" என்ற குந்தி சிரித்தபடி "சொற்களாக ஆக்கி வெளியேதள்ளிவிட்டால் மேலும் மனநெகிழ்வை தேக்கிவைக்க இடம் கிடைக்கிறது" என்றாள். பாண்டு உரக்கச் சிரித்துவிட்டான்.

அன்றுமாலை வடக்கிலிருந்து குளிர்காற்று வீசத்தொடங்கியது. பாண்டு மைந்தனை தன் வயிற்றின் மென்மையான வெப்பத்தின்மேல் கவிழ்த்துப்போட்டு நட்சத்திரங்களை நோக்கியபடி மல்லாந்து படுத்திருந்தான். "குளிர் கூடி வருகிறது, உள்ளே வருக!" என்றாள் மாத்ரி. "என் அகவெம்மையே என் மைந்தனுக்குப்போதும்" என்று பாண்டு சொன்னான். "எந்நேரமும் கைகளில் இருக்கும் குழந்தைகள் நலம் பெறுவதில்லை அரசே. தங்கள் பேரன்பினால் மைந்தனை உடலாற்றல் அற்றவனாக ஆக்கிவிட்டீர்கள்" என்றாள் அனகை.

"ஆம். அவன் ஆற்றலற்றவன்தான். என் கைகளின் வெம்மையை விட்டு இறங்காததனால் அவனுடைய கைகளும் கால்களும் வலுப்பெறவில்லை. ஆனால் என் பேரன்பு அவனுக்குள் ஊறிநிறைகிறது. என் மைந்தனுக்கு அன்பே முதல் வல்லமையாக இருக்கும். அன்பினாலேயே இவ்வுலகை அவன் வெல்வான்" என்றான் பாண்டு. "பலாஹாஸ்வர் அன்னம் என்று சொன்னதெல்லாம் என் செவியில் அன்பு என்றே விழுந்தது. அன்பே பிரம்மம். அன்பே அதற்கு படையலுமாகும்." மாத்ரி சிரித்துக்கொண்டு "அன்பையே உண்ணப்போகிறானா?" என்றாள். "ஆம், கனியில் இருப்பது மரத்தின் அன்பு. அன்னம் மட்டுமல்ல அது, அன்பும்கூடத்தான். என் மைந்தனுக்கு என்றும் அதுவே உணவாகும்."

எதிர்பாராதபடி காற்று வலுத்தபடியே வந்தது. கீழிருந்து சதசிருங்கம் நோக்கி எழும் காற்று சுழன்று திரும்பியிறங்கியபோது பனிமலைக்குளிருடன் விரைவடைந்திருந்தது. குளிரில் தருமனின் உடல் அதிரத்தொடங்கியது. அவன் பாண்டுவை இறுகப்பற்றியபடி முனகினான். அவன் எச்சில் பாண்டுவின் வயிற்றின் வழி விலா நோக்கி வழிந்தது. சிரித்தபடி அவன் எழுந்து மைந்தனை அனகையின் கைகளில் அளித்தான். "நான் உள்ளே மைந்தன் அருகிலேயே படுத்துக்கொள்கிறேன் அனகை. இரவு முழுக்க மைந்தனைத் தீண்டாமல் என்னால் இருக்கமுடியாது" என்றான்.

நள்ளிரவில் காற்று மரங்களைச் சுழற்றியபடி ஓசையுடன் வீசியது. குடில் மரத்தின் மேலிருப்பதுபோல ஆடியது. "புயலல்லவா அடிக்கிறது!" என்று சொல்லி அனகை கதவின் படலைக் கட்டினாள். "மரங்களெல்லாம் தெற்குநோக்கி வளைந்துள்ளன அரசி. இந்திரத்யும்னத்தின் நீரை காற்று அள்ளி கரைமேல் வீசுகிறது." காற்றின் ஓசையில் ஓர் அழைப்பு இருந்தது. குடிலின் இடைவெளிகள் வழியாக குளிர்பட்டைகள் வாட்களைப்போல அறைக்குள் சுழன்றன. குந்தி தன் மான்தோல் மேலாடையை எடுத்தபடி "நான் வெளியே செல்கிறேன்" என்றாள். அனகை "அரசி!" என்றாள். "இது உக்ரமாருதத்தின் வேளை. என் மைந்தனும் மாருதியின் மைந்தனாக இருப்பான்" என்றபின் அவள் ஏரிநீர் எழுந்து சிதறி பக்கவாட்டில் மழையாக வீசிக்கொண்டிருந்த புயல்வெளிக்குள் இறங்கிச் சென்றாள்.

ஒவ்வொருநாளும் பேராற்றல்கொண்ட மைந்தனைப்பற்றியே குந்தி சொல்லிக் கொண்டிருந்தாள். மலைச்சரிவின் பெரும்பாறைகளை நோக்கி "இப்பாறைகளை தூக்கி விளையாடுவது புயலின் மைந்தனுக்கு ஒரு பொருட்டே அல்ல" என்று ஒருமுறை சொன்னாள். அனகை புன்னகையுடன் "காற்றால் ஆகாதது ஏதுமில்லை அரசி" என்றாள். நாள்தோறும் குந்தி காற்று சுழன்றுவீசும் மலையடிவாரத்தில் சென்று அமர்ந்துகொண்டாள். "இங்கிருந்தால் பெரும்பாறைகளைக் காணமுடிகிறது. அவை அசைவின்மையாலேயே ஆற்றலைக் காட்டுகின்றன. ஆற்றலை மட்டுமே என் விழிகள் பார்க்க விழைகிறேன்" என்றாள்.

"ஆற்றல் இல்லாத இடமுண்டா என்ன?" என்றாள் அனகை. "என் அன்னை என்னிடம் எறும்புகளைப் பார்க்கும்படி சொல்வாள். சிறிய எறும்பு தன்னைவிட மும்மடங்கு பெரிய எறும்பை சுமந்துகொண்டு மரத்தில் ஏறிச்செல்லும். எறும்பின் ஆற்றல் கொண்ட யானை ஏதும் இல்லை என்பாள்." குந்தி புன்னகைத்தாள். "ஒரு பெரிய மலைப்பாம்பைக் கொண்டு வரும்படி நேற்று சேவகனிடம் சொன்னேன். அதன் இறுகும் உடல்வளைவை நான் பார்க்கவேண்டும்."

ஆனால் மைந்தன் ஆறே மாதத்தில் பிறந்தான். அவள் மலைச்சாரலில் வழக்கமான பாறைமேல் அமர்ந்து கீழே காற்று மலையிடுக்கில் பொழிந்து குவிந்திருந்த வெண்ணிறமான மண்ணை அள்ளிச் சுழற்றிக்கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள். மலைபுகைவதுபோலிருந்தது அது. அப்போது தன் முதுகில் கூழாங்கல் விழுந்தது போன்ற ஒரு மெல்லிய அதிர்ச்சியை உணர்ந்தாள். திரும்ப முயன்றபோது தோளில் இருந்து விலாநோக்கி ஒரு சுளுக்கு தெரிந்தது. ஐயத்துடன் எழுந்து நின்றபோது கால்களுக்கு நடுவே ஈரமாக ஒன்று நழுவி விழுந்தது. அவள் குனிந்து நோக்கியபோது பாறையிலும் மண்ணிலுமாக சிதறி விரிந்த குருதியைக் கண்டாள்.

அனகையை அவள் கூவி அழைத்தபோது குரலெழவில்லை. அவள் கையசைப்பதைக்கண்டே அனகை ஓடி அருகே வந்தாள். அதற்குள் அவள் பின்பக்கமாக கை ஊன்றி சரிந்து அமர்ந்துவிட்டாள். அனகை அருகே வந்து பார்த்து "அரசி!" என்று கூவியபடி குனிந்தபோது அவளும் பார்த்தாள். அவளுடைய உள்ளங்கையளவுக்கே இருந்த மிகச்சிறிய குழந்தை குருதிக்கட்டி போல கிடந்து அசைந்தது. பெரியதலை ஒரு செங்குமிழ் போலிருக்க அதற்குக்கீழே கைகளும் கால்களும் உடலும் ஒன்றாக ஒட்டிச்சுருண்டிருந்தன.

"உயிர் இருக்கிறதா? உயிர் இருக்கிறதா?" என்று கையை உந்தி சற்றே எழுந்து அடைத்த குரலில் குந்தி கேட்டாள். "ஆம் அரசி... உயிருடன்தான் இருக்கிறது... ஆனால்..." என்றாள் அனகை. "நீ சென்று மருத்துவச்சிகளை அழைத்துவா... அவன் சாகமாட்டான். அவன் காற்றின் மைந்தன்" என்றாள் குந்தி. அனகை ஒற்றையடிப்பாதை வழியாக ஓடினாள்.

குந்தி உடலை தூக்கி எழுந்து அரையமர்வில் குனிந்து குழந்தையைப் பார்த்தாள். எலிக்குஞ்சின் முன்னங்கால்கள்போன்ற கைகள் தொழுதுகொண்டிருந்தன. மெல்லிய தொடைகளுடன் கால்கள் மடிந்து ஒட்டியிருந்தன. காந்தள் புல்லிகள் போல ஒட்டிக்கொண்டிருக்கும் மிகச்சிறிய விரல்கள். பெரிய இமைகளுக்குள் இரு குமிழிகள் ததும்புவதுபோன்ற அசைவு. சிவந்த புண்போன்ற உதடுகள் கூம்பின, ஓசையின்றி அதிர்ந்தன.

குழந்தை நடுங்குவதை குந்தி கண்டாள். என்னசெய்வதென்றறியாமல் பார்த்தபின் காலாலேயே அதை அருகே கொண்டுவந்து இடக்கையால் எடுத்து வெங்குருதி கொட்டிக்கொண்டிருந்த தன் கருவாயிலிலேயே சேர்த்து வைத்துக்கொண்டாள். தன் உடல் வெம்மையை முழுக்க அதற்கு அளிக்கவிழைபவள்போல கைகளால் அழுத்தியபடி திரும்பி ஒற்றையடிப்பாதையைப் பார்த்தாள். எத்தனைநேரம்! அவர்கள் வருகையில் இறந்து குளிர்ந்திருக்கும் மைந்தனைப் பார்ப்பார்களா? இல்லை, அவன் சாகமாட்டான். அவன் வாயுவின் மைந்தன். ஆனால் காற்று அசைவே இல்லாமலிருந்தது. இலைகளில் கூட சற்றும் அசைவில்லை. காலமும் நிலைத்து நின்றது.

அனகையும் நான்கு மருத்துவச்சிகளும் நிலமதிர ஓடிவந்தனர். அவர்களின் பேச்சொலிகளும் மூச்சொலிகளும் சேர்ந்து கேட்டன. அனகை ஓடிவந்து குழந்தையைத் தூக்க முயல "கைகள் படக்கூடாது... மைந்தனுக்கு தோலே உருவாகவில்லை" என்றாள் முதிய மருத்துவச்சி. வாழையிலைக்குருத்தின் மேல் எண்ணையை பூசி அதைக்கொண்டு குழந்தையை மெல்ல உருட்டி ஏற்றி எடுத்துக்கொண்டாள். அதை கவிழ்த்து அதன் உடலில் இருந்த நிணத்தை வழிந்து சொட்ட விட்டாள். இன்னொரு மருத்துவச்சி வாழையிலைக்குருத்தால் அதன் நாசியைப் பற்றி மெல்ல பிழிந்தாள்.

"இத்தனை சிறிய குழந்தையை நான் கண்டதேயில்லை அரசி... இறையருள் இருக்கவேண்டும். நாம் முயன்றுபார்க்கலாம்" என்றாள் முதுமருத்துவச்சி. "ஆறுமாதமென்பது மிகமிக குறைவு... மைந்தனின் குடல்கள் வளர்ந்திருக்காது. மூச்சுக்கோளங்கள் விரிந்திருக்காது" என்றாள் இன்னொருத்தி. "அவன் வாழ்வான்... அவன் வாயுவின் மைந்தன்" என்று குந்தி உரக்கச் சொன்னாள். "பேசவேண்டாம் அரசி... குருதி பெருகி வெளியேறிக்கொண்டிருக்கிறது" என்றாள் அனகை. குந்தியும் அதை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடலே ஒழுகிச்செல்ல மெல்லமெல்லக் கரைந்துகொண்டிருந்தாள். உடலில் இருந்து வெம்மை விலகிச்செல்ல குளிர் கைவிரல்களில் செவிமடல்களில் மூக்குநுனியில் ஊறி தேங்கி நிறைந்து வழிந்து உடலெங்கும் பரவிக்கொண்டிருந்தது.

அங்கேயே மண்பாத்திரத்தை கல்கூட்டிய அடுப்பில் வைத்து சருகில் தீயிட்டு வெம்மையாக்கிய ஜீவாம்ருதத் தைலத்தில் தொப்புள் வெட்டிக்கட்டிய குழந்தையைப் போட்டார்கள். அப்படியே அதை எடுத்து ஆதுரசாலைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே எண்ணைப்பாத்திரத்தினுள் முகம் மட்டும் வெளியே இருக்கும்படி அவனைப் போட்டுவைத்திருந்தனர். அருகே வெப்பத்தை நிலைநாட்ட ஐந்து நெய்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. கொழுத்த பச்சைநிறத் தைலத்துக்குள் தவளைக்குட்டி போல அவன் கால்களை சற்று விரித்தான். உடல் நடுக்கம் நின்றதும் மெல்ல அசைந்து நீந்தினான்.

மூங்கில் தட்டில் தன்னை ஏற்றிக் குடிலுக்குக் கொண்டுசெல்லும்போது குந்தி கேட்டாள், "என்ன நாள்? அனகை, மைந்தன்பிறந்த நாள்குறி என்ன?" அனகை "அரசி இது அக்னிசர அஸ்வினி. கிருஷ்ணநவமி. பின்மதியம் முதல்நாழிகை, எட்டாம் அங்கம், நாலாம் கணிகை. மகம் நட்சத்திரம் என்று எண்ணுகிறேன்" என்றாள். "ஆம், மகம். மகம்தான். மகம் பிறந்தவன் ஜகத்தை ஆள்வான் என்பார்கள்" என்றபடி குந்தி தன் கண்களை மூடிக்கொண்டாள். அவள் குருதி மூங்கில்தட்டில் இருந்து கீழே சருகில் சொட்டும் ஒலியைக் கேட்டாள்.

மைந்தன் பிறந்த செய்திகேட்டு ஓடிவந்த பாண்டு ஆதுரசாலை அருகே வந்ததும் திகைத்து நின்றான். பின் தருமனை சேடியிடம் கொடுத்துவிட்டு தயங்கும் கால்களுடன் குடிலின் மூங்கிலைப்பற்றியபடி நடந்தான். எண்ணைத்தாலத்தை அணுகி "எங்கே?" என்றான். "இதோ" என்றாள் மருத்துவச்சி. அவன் அங்குமிங்கும் பார்த்துவிட்டு பார்வையை எடுக்கும்போதுதான் குழந்தையைப் பார்த்தான். உடல்நடுங்கி "விண்ணவரே! மூதாதையரே" என்று கூவிவிட்டான். "அரசே...மைந்தன் நலமாகவே இருக்கிறான்... அஞ்சவேண்டாம்" என்றனர் மருத்துவச்சிகள்.

அவர்கள் சொல்வதெதையும் அவன் செவிகள் கேட்கவில்லை. வெளியே ஓடிச்சென்று கைகள் நடுங்க தருமனை அள்ளி அணைத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடி தனித்து அமர்ந்துகொண்டான். இரவு செறிந்தபின்னர் சேடிகள் அவனை அழைத்துவந்தனர். துயிலில் மூழ்கிய தருமனை மஞ்சத்தில் படுக்கச்செய்தபின் அவன் முற்றத்தில் மரப்பட்டை மஞ்சத்தில் சென்று அமர்ந்துகொண்டு வானில் விரிந்த விண்மீன்களையே இரவெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் காலை முதல்நினைவு வந்ததும் குந்தி "மைந்தன் எப்படி இருக்கிறான்?" என்றுதான் கேட்டாள். "இறையருளுக்காக வேண்டிக்கொண்டிருக்கிறோம் அரசி" என்று அனகை சொன்னாள். "அவன் சாகமாட்டான். அவன் வாழ்வான்... அவன் மாருதியின் மைந்தன்" என்று குந்தி சொன்னாள். அச்சொற்களை அவள் இறுகபற்றிக்கொண்டிருக்கிறாள் என அனகை அறிந்திருந்தாள். "அவனுக்கு என்ன உணவு கொடுக்கிறீர்கள்?" "அவனுக்குச் செரிப்பது குரங்கின் பால் மட்டுமே என்றனர் அரசி. ஆகவே காட்டிலிருந்து மகவீன்ற பன்னிரு குரங்குகளை பொறிவைத்துப்பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றின் பாலைத்தான் பஞ்சில் நனைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்."

குந்தி கண்ணீருடன் தன் முலைகள் மேல் கையை வைத்தாள். அவை சற்றே கனத்து திரண்டிருந்தன. "அவனுக்காக ஒரு துளியேனும் என்னுள் ஊறாதா?" என்று கேட்டாள். அனகை "மாதம் நிறையாமல் பிறந்திருக்கிறார் அரசி... ஆகவே முலைப்பால் வருவதற்கு வாய்ப்பே இல்லை" என்றாள். குந்தி பெருமூச்சுடன் "முன்பொருமுறை முலையைப் பிழிந்து இருளுக்குள் விட்டேன். அந்தப்பாலில் ஒரு துளியேனும் இன்று இங்கே வராதா என ஏங்குகிறேன்" என்றபின் கண்களை மூடிக்கொண்டாள்.

சதசிருங்கத்தின் முனிவர்கள் கூடி மைந்தன்பிறந்த நாட்குறி தேர்ந்தனர். சிம்மத்தில் குருவும் துலாத்தில் சூரியனும் மகத்தில் சந்திரனும் சேர்ந்த கணம். மங்கலம் நிறைந்த திரயோதசி திதி. பித்ருகளுக்குரிய முகூர்த்தம். "காலைவரை மிகமிகத் தீய நேரம் அரசி. காலை கடந்து இருள் விடிந்து கதிர் எழுவது போல பொன்னொளிர் தருணம் அமைந்ததும் மைந்தன் மண்நிகழ்ந்திருக்கிறான்" என்றார் மாண்டூக்யர். "அவனுக்கு நிறைவாழ்வுள்ளது என்கின்றன நிமித்தங்கள். அஞ்சவேண்டியதில்லை அரசே." அங்கே தன் மடித்த கால்களுக்கு மேல் விழிகள் மலர்ந்து அமர்ந்திருந்த தருமனை அணைத்துக்கொண்டு பாண்டு பெருமூச்சுவிட்டான்.

பகுதி பதினேழு : புதிய காடு

[ 2 ]

சில நாட்கள் பாண்டு எங்கிருக்கிறோம் என்றறியாதவன் போலிருந்தான். தோளில் விழிமலர்ந்து அமர்ந்திருந்த தருமனுடன் காட்டுக்குள் அலைந்தான். காட்டுமரநிழலில் படுத்துக்கிடக்கும் மைந்தனையும் தந்தையையும் அனகையும் சேடிப்பெண்களும் மீண்டும் மீண்டும் தேடிக்கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

காட்டில் ஒவ்வொரு முறை அவர்கள் காலடியோசை கேட்கும்போதும் பாண்டு திகைத்து உடலதிர்ந்தான். சேடிகளை சிவந்த விழிகளால் நோக்கி மைந்தனை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டான். அவன் ஹம்ஸகூடத்து தவச்சாலையில் உள்ள அனைவரையுமே எதிரிகளாக எண்ணுவதாகத் தோன்றியது. அவர்கள் பெருந்தீங்குடன் தன்னை நோக்கி வருகிறார்கள் என்பதுபோல. விழித்திருந்தால் அவன் அவர்களின் காலடியோசையிலேயே எழுந்து உள்காட்டுக்கு விலகிச்சென்றுவிடுவான்.

இரவு முழுக்க பாண்டு முற்றத்தில் மரப்பட்டை படுக்கையில் மரவுரியைப் போர்த்தியபடி அமர்ந்தே செலவிட்டான். வாயிலைத்திறந்து பார்த்தபோதெல்லாம் அவன் அமர்ந்தே இருப்பதை அனகை காண்பாள். அவனுக்குமேல் ஹம்ஸகூடத்தின் இருண்ட வானம் விண்மீன்கள் செறிந்து விரிந்திருக்கும். காட்டுக்குள் இருந்து எழும் விலங்கொலிகள் காற்றிலேறிச் சூழ்ந்து பறக்கும். விடிந்ததுமே அவன் உள்ளே வந்து தருமன் அருகே நிற்பான். அவள் அவனுக்கு உணவூட்டியதுமே கையில் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் செல்வான்.

அஸ்தினபுரியில் காந்தாரிக்கு மைந்தன் பிறந்திருக்கும் செய்தி ஐந்தாம்நாள் பறவைச்செய்தியாக வந்தது. அச்செய்தியை அனகைதான் முதலில் வாசித்தாள். விடிகாலையின் இருளில் முற்றத்தில் அமர்ந்திருந்த பாண்டுவிடம் சென்று "அரசே... தங்கள் தமையனுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்" என்று ஓலையை நீட்டினாள். பாண்டு அதைவாங்கி வாசித்துவிட்டு ஏதும் விளங்காத பார்வையுடன் திரும்பத்தந்துவிட்டு திரும்பிக்கொண்டான்.

அவள் சிலகணங்கள் நின்றுவிட்டு திரும்பி குடிலுக்குள் சென்று அச்செய்தியை குந்தியிடம் சொன்னாள். குந்தி தலையை மெல்ல அசைத்துவிட்டு "மதங்ககர்ப்பமேதான்... இருபதுமாதம் கருவுக்குள் வாழ்ந்திருக்கிறான்" என்றாள். அப்போது பாண்டு மகிழ்வுடன் கூவியபடி குடிலுக்குள் புகுந்து "பிருதை, என் தமையனுக்கும் மைந்தன் பிறந்திருக்கிறான். இதே நாள் அக்னிசர அஸ்வினி மாதம், கிருஷ்ண நவமி. அதிகாலை ஆயில்ய நட்சத்திரம்" என்று கூவினான். குந்தி "காலையிலா?" என்றாள். "ஆம், அதிகாலையில். என் மைந்தனுக்கு அவன் எட்டு நாழிகை மூத்தவன்."

குந்தி " அது நாகராஜனாகிய வாசுகி பிறந்த நாள்" என்றாள். "ஆம், வலிமையின் நாள். தோல்வியே அறியாத முழுமையின் நாள் அது" என்றான் பாண்டு. "அவன் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தி... அவன் பிறக்கவேண்டிய நேரம் அதுதான்." பாண்டு முழுமையாகவே மாறிவிட்டிருந்தான். அவன் குரலையே ஐந்துநாட்களுக்குப்பின்னர்தான் கேட்கிறோம் என குந்தி எண்ணிக்கொண்டாள்.

அவன் "நான் இங்கே தேன் வைத்திருந்தேன். எங்கே? இன்று முனிவர்களனைவரையும் வணங்கி தேன் கொடுக்கப்போகிறேன்" என்றான். அனகை உள்ளே சென்று தேன் நிறைத்து மெழுகால் மூடி தொங்கவிடப்பட்டிருந்த மூங்கில்களுடன் வந்தாள். அவன் அந்தக்குடுவைகளை வாங்கி தூக்கிப்பார்த்து உரக்கச்சிரித்தபடி "உள்ளே தேனை நிறைத்துக்கொண்டு அமைதியாக இருளில் தவம்செய்தல்... அற்புதமான வாழ்க்கைதான் இவற்றுக்கு. இல்லையா?" என்றான்.

"நலமான பேறா?" என்று குந்தி மெல்லக் கேட்டாள். "செய்தி சுருக்கமாகவே வந்துள்ளது. தூதன் நேரில் வந்தால்தான் முழுமையாக அறியமுடியும். தாயும் மகவும் நலமாக உள்ளனர்" என்று அனகை சொன்னாள். "ஆம்... குழந்தை மற்ற குழந்தைகளைவிட நான்கு மடங்கு பெரியதாக உள்ளது என்கிறது செய்தி. நான்கு மடங்கு என்றால்... என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை... அச்சொற்களை என்னால் காட்சியாக விரிக்க முடியவில்லை" என்று பாண்டு சொன்னான்.

நிலைகொள்ளாமல் குடிலுக்குள் சுற்றிவந்தான். "என் தமையனைப்பார்க்கவேண்டும் போலிருக்கிறது. மகிழ்ச்சியைத் தாளமுடியாமல் அவர் கைகளை அறைந்துகொள்வார். விதுரா மூடா என்று கூச்சலிட்டுக்கொண்டிருப்பார். நான் அருகே சென்றால் கனத்த பெருங்கைகளால் என்னை அணைத்துக்கொள்வார்... மகிழ்ச்சியால் சிரிப்பதும் துயரத்தால் அழுவதும் கோபத்தால் கூவுவதும் அவரில் இயல்பாக நிகழ்ந்துகொண்டிருக்கும். பருவநிலைகளுக்கேற்ப அக்கணமே மாறிக்கொண்டிருக்கும் ஏரி போன்றவர் அவர்."

குந்தி அவனுடைய மலர்ந்த முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் திரும்பியதும் "நம் மைந்தன் எப்படி இருக்கிறான்?" என்றாள். அவள் நெஞ்சை உணர்ந்தவன் போல "நான் கவலையில் என்னை இழந்துவிட்டிருந்தேன் பிருதை... இச்செய்தியால் அனைத்தும் ஒளிபெற்றுவிட்டன. என் இளையமைந்தன் வாழ்கிறானா இல்லையா என்றே இனி நான் எண்ணப்போவதில்லை. என் தமையனுக்கு மாவீரன் மைந்தனாகப் பிறந்திருக்கிறான். அதுபோதும். என் மைந்தனின் உடலையும் சேர்த்து அவனுக்கு மூதாதையர் அளிப்பார்களென்றால் அவ்வாறே ஆகட்டும்..." என்றான்.

குளித்துவிட்டு ஈர உடையுடன் குடிலுக்குள் வந்த மாத்ரியை நோக்கி பாண்டு சொன்னான் "மாத்ரி, இதோ அஸ்தினபுரிக்கு அரசன் பிறந்திருக்கிறான். பாரதவர்ஷமே அவன் காலடியில் பணியும் என்று நிமித்திகர் சொல்கிறார்களாம். என் மைந்தர்கள் இருவரும் அவன் இருபக்கங்களிலும் நின்று அவன் அரியணையை தாங்குவார்கள். அவன் யாகக்குதிரையை தெற்கும் மேற்கும் நடத்திச்செல்வார்கள்... இதோ செய்திவந்திருக்கிறது!" குந்தியின் விழிகளை மாத்ரியின் விழிகள் தொட்டுச்சென்றன.

"அஸ்தினபுரியின் வேந்தனின் பிறப்பை இங்கே நாம் கொண்டாடவேண்டும். அவனுக்காக இங்கே பூதவேள்விகளை செய்யவேண்டும். என் மைந்தனின் ஜாதகர்மங்களுடன் அதையும் சேர்த்தே செய்வோம்" என்றான். முனிவர்கள் அனைவருக்கும் செய்தியறிவித்துவிட்டு வருகிறேன்" என்று பாண்டு வெளியே சென்றான். அங்கே சேடியின் கையில் இருந்து கைநீட்டித் தாவிய தருமனை வாங்கி மார்போடணைத்துக்கொண்டு முத்தமிட்டான். உரக்க நகைத்தபடி தோளிலேற்றிக்கொண்ட மைந்தனுடன் முற்றத்தைக் கடந்து ஓடினான்.

"அப்படி இருக்குமோ மாத்ரி?" என்றாள் குந்தி. மாத்ரி புரியாமல் "என்ன?" என்றாள். "அந்த மைந்தன் என் குழந்தையின் குருதியை எடுத்துக்கொண்டுவிட்டானோ?" மாத்ரி திகைப்புடன் "என்ன சொல்கிறீர்கள்?" என்றாள். "என் அகம் நிலையழிந்து தவிக்கிறது. காந்தாரத்தினர் தீச்செய்வினைகளில் வல்லவர்கள் என்று சொல்லி அறிந்திருக்கிறேன்" என்றாள். மாத்ரி "அக்கா, தங்கள் மனம் இப்படியெல்லாம் செல்லும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை" என்றாள்.

"என் குருதி வழியாக நான் என்னும் ஆணவம் முழுக்க சென்றுவிட்டது. இப்போது வெறும் அச்சங்களும் ஐயங்களும்தான் எஞ்சியிருக்கின்றன. பெருவல்லமைகளின் கருணைக்காகக் காத்து வெறும் சருகு போல இங்கே படுத்திருக்கிறேன்" என்றபடி குந்தி கண்களை மூடிக்கொண்டாள். அவள் கண்களின் முனையில் கண்ணீர் துளிர்த்து வழிந்தது. தொண்டை அசைந்தது. "அங்கே எண்ணைப்பாத்திரத்தில் கிடக்கும் என் மைந்தனை நான் எண்ணிக்கொள்வதேயில்லை. நினைவு சென்று தொட்டாலே என் அகம் அஞ்சி பின்வாங்கிவிடுகிறது."

அஹிபீனா புகையிலேயே அவளை பெரும்பாலும் வைத்திருந்தனர். இருபுதல்வர்களுக்கும் ஜாதகர்மங்கள் நிகழ்ந்தபோது அவள் படுக்கை விட்டு எழமுடியாதவளாகவே கிடந்தாள். ஏழுநாட்கள் சதசிருங்கத்தின் முனிவர்கள் வேள்விகள் ஆற்றினர். வேள்விச்சாம்பலையும் அவிமிச்சத்தையும் தூதனிடம் கொடுத்து அஸ்தினபுரிக்கு அனுப்பினர். அஸ்தினபுரியில் இருந்து ஒற்றனான சுசித்ரன் வந்து காந்தாரமைந்தன் பிறந்ததைப்பற்றிய செய்திகளைச் சொன்னான். அவற்றை மயக்கத்தில் இருந்த குந்தி கேட்கவில்லை.

ஒவ்வொருநாளும் காந்தார மைந்தனின் பிறப்பு பற்றிய கதைகள் அச்சம்தருவனவாக மாறிக்கொண்டே இருந்தன. ஒற்றன் சதசிருங்கம் வந்துசேர்வதற்குள் அவனுக்குள்ளேயே அச்செய்தி மேலும் கருமை கொண்டது. அவன் சொல்லச்சொல்ல அதைக்கேட்டிருந்த மாத்ரி அச்சத்துடன் எழுந்து அனகையின் பின்னால் சென்று நின்றுகொண்டாள். "கார்த்தவீரியார்ஜுனனைப்போல அம்மைந்தன் பன்னிரு கைகளுடன் பிறந்ததாக பாடும் சூதர்கதைகளும் உள்ளன அரசே" என்றான் சுசித்ரன்.

மைந்தனைப்பற்றிய எந்த தீயகதையையும் எவரும் பாடலாகாது என்று சகுனி ஆணையிட்டிருப்பதாக சுசித்ரன் சொன்னான். "முச்சந்திகளிலெல்லாம் காந்தார ஒற்றர்கள் காவல் நிற்கிறார்கள். சூதர்கள் பாடுவதை உளவறிகிறார்கள். பாடும் சூதர்கள் பலர் காணாமலாகிவிட்டனர் என்கிறார்கள். ஆனால் சூதர்களின் வாயை மூடும் வல்லமை காந்தாரத்து வாளுக்கில்லை. சூதர்கள் காற்றுபோல."

"அம்புபட்டு குகைக்குள் ஒடுங்கியிருக்கும் சிம்மம் போலிருக்கிறார் சௌபாலர் என்கிறார்கள் அரசே” என்றான் சுசித்ரன். “தன் காயங்களில் வழியும் குருதியை நக்கும் சிம்மம் அந்தச் சுவையில் ஈடுபட்டுவிடும். அதை நக்கி நக்கி பெரியதாக்கும். அந்த வலியில் அது கர்ஜிக்கும். பின் அவ்வலியையே சுவையென எண்ணும். தன்னையே உண்டபடி அந்தகுகையிருளுக்குள் அது தனித்திருக்கும்.”

“அம்புபட்ட சிம்மம் குரூரமானது என்கிறார்கள். சிம்மம் வேறெந்த மிருகத்தையும்போல கொலையின்பத்துக்கென கொல்லாது. பசிக்குத்தான் கொல்லும். ஆனால் தன்குருதியை உண்டு சுவையறிந்த பின்பு அது கொலைவிளையாடலில் இறங்கும். அஸ்தினபுரியில் இன்று அனைவராலும் அஞ்சப்படுபவராக இருப்பவர் சௌபாலரே. மைந்தன்பிறந்த நாள் முதல் அவர் அங்குதானிருக்கிறார். மைந்தனின் நாமகரணச்சடங்கு இன்றுவரை பாரதவர்ஷம் கண்டவற்றிலேயே மிகப்பெரிதாகக் கொண்டாடப்படுமென்று சொல்கிறார்கள்."

பாண்டு பெருமூச்சுடன் "ஆம். அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது அரசியல். உண்மையில் சதுரங்கத்தில் ஒரு வல்லமைவாய்ந்த காய் வந்திருப்பதைத்தான் கொண்டாடுகிறார்கள். அவர்கள் மைந்தன் பிறந்த மகிழ்வை அறிந்திருக்கமாட்டார்கள். அவனைப் பெற்ற அன்னையாவது அவனை முகம் சேர்த்து கருவறைத்தெய்வங்களின் வாசனையை அறிந்திருப்பாளா என்பது ஐயமே" என்றபின் "இத்தருணத்தில் இச்செய்திகள் எவையும் பிருதை அறியவேண்டியதில்லை" என்றான்.

ஆனால் எங்கோ குந்தி அறிந்துகொண்டிருந்தாள். முன்னிரவில் தன் கனவுகளின் ஆழத்தில் இருந்து உந்தி மேலெழுந்து வந்து இருளில் கண்விழித்து "அனகை அனகை" என்று அழைத்தாள். அனகை அகல் விளக்குடன் வந்து குனிந்ததும் "நீர்" என்றாள். நீரை மார்பில் சிந்தியபடி அருந்தியபின் உடலை உலுக்கிக்கொண்டு "ஒரு கனவு... கொடுங்கனவு" என்றாள். "என்னைப்பிடி. நான் என் மைந்தனை உடனே பார்க்கவேண்டும்."

"அரசி, இந்நேரத்திலா?" என்றாள் அனகை. "ஆம், என்னைப்பிடி. நான் அவனைப்பார்க்காமல் இனி துயில முடியாது" என்று குந்தி எழுந்துவிட்டாள். அனகை அவளை பிடித்துக்கொண்டதும் வலுவிழந்த கால்களில் சற்றுநேரம் நின்றபின் "செல்வோம்" என்றாள். முற்றத்தின் குளிரில் இறங்கியதும் அவளுடைய மெலிந்த உடல் நடுங்கியது. அனகை கனத்த மரவுரியால் அவளைப் போர்த்தினாள். சிறுகுழந்தை போல கால்களை எடுத்துவைத்து நடந்தபடி "என்ன ஒரு கனவு!" என்றாள்.

அனகை ஒன்றும் சொல்லவில்லை. "நான் ஒரு பெரிய அரக்கக் குழந்தையைப் பார்த்தேன். கரியநிறம் கொண்டது. வல்லமை வாய்ந்த கைகால்கள்... மிகப்பெரிய குழந்தை. பிறந்து ஒருமாதமாகியிருக்கும். ஆனால் அது நடந்தது. அதன் வாய்க்குள் வெண்ணிறப்பற்கள் இருந்தன. அதைச்சூழ்ந்து காகங்கள் பறந்துகொண்டிருந்தன." அனகை பிடியை நழுவவிட குந்தி விழப்போனாள். "பிடித்துக்கொள்" என்றாள் குந்தி. "சரி அரசி" என்றாள் அனகை.

"என் மைந்தன் ஒரு சிறிய இலையில் படுத்திருக்கிறான். தரையில் அல்ல. அந்த இலை ஒரு மரத்தில் நின்று ஆடியது. அதில் என் மைந்தன் ஒரு புழு போல ஒட்டி மெல்ல நெளிந்துகொண்டிருந்தான். அந்த அரக்கக் குழந்தை வந்து என் மைந்தனை குனிந்து நோக்கியது. கைகளை நீட்டி தொடப்போனது. மீண்டும் மீண்டும் கைகளை நீட்டிக்கொண்டே இருந்தது. அவனை அது நசுக்கிக் கொல்லப்போகிறது என்று எண்ணி நான் திகைத்தேன். உடனே விழிப்பு கொண்டேன்" என்றாள் குந்தி. "ஆனால் விழித்தபின் ஒன்றை உணர்ந்தேன். என் குழந்தை விழிகளைத் திறந்து அந்த அரக்கக்குழந்தையை அச்சமேயின்றி பார்த்துக்கொண்டிருந்தது."

ஆதுரசாலைக்குள் இரு மருத்துவச்சிகள் இருந்தனர். அவர்கள் குந்தியைக் கண்டதும் எழுந்து வந்து வணங்கினர். "என் மகன் எப்படி இருக்கிறான்?" என்றாள் குந்தி. "கருவறையின் சுஷுப்தியையே இங்கும் உருவாக்கியிருக்கிறோம் அரசி" என்றாள் மருத்துவச்சி. "குரங்குகளின் பாலை திரியில் தொட்டு அளிக்கிறோம். குடல் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. மூச்சுக்கோளங்களும் சற்று விரிந்திருப்பதனால் இப்போது மூச்சுவாங்குவது குறைந்திருக்கிறது."

குந்தி குனிந்து சுடர்கள் சூழ்ந்த எண்ணைக்குள் கிடந்த குழந்தையைப் பார்த்தாள். எண்ணையில் நெருப்பின் செம்மை தெரிய அது கனலில் கிடப்பதுபோலத் தெரிந்தது. அவள் மெல்ல குனிந்து "விருகோதரா" என்றாள். திரும்பி "என் குரல் அவனுக்குக் கேட்குமா?" என்றாள். "ஆம் அரசி... கேட்கும்" என்றாள் மருத்துவச்சி. "விருகோதரா... மாருதி..." என அழைத்தாள் குந்தி. "எழு... எழுந்திரு கண்ணே!"

அவள் கண்கள் கலங்கிவிட்டன. அழுகையை அடக்கிக்கொண்டாள். அனகை அவள் தோள்களைத் தொட்டு "அரசி" என்றாள். "நான் அவனைத் தொடலாமா?" என்றாள் குந்தி. மருத்துவச்சி "தொடலாம் அரசி. ஆனால் தொடுகையை மைந்தன் அறிய வாய்ப்பில்லை" என்றாள். உதடுகளை இறுக்கியபடி குந்தி மெல்ல குனிந்து குழந்தையின் தலையைத் தொட்டாள். குழந்தை திடுக்கிட்டு உடலைச் சுருக்கிக்கொண்டது. அதன் முகம் சற்றே விரிந்தபோது அது புன்னகைபுரிவதுபோலிருந்தது.

"அவன் அறிகிறான்... அவனால் என் கைகளை உணரமுடிகிறது" என்று அடைத்த குரலில் குந்தி சொன்னாள். உவகையால் சிலிர்த்த உடலுடன் "அவன் அறிகிறான். ஐயமே இல்லை" என்றாள். மருத்துவச்சி ஒன்றும் சொல்லவில்லை. "விருகோதரா... மாருதி... எழுந்திரு... உன் தமையன் உனக்காகக் காத்திருக்கிறான். உன் களங்கள் உன்னை எதிர்பார்த்திருக்கின்றன... மாருதி, விருகோதரா..." அவள் அவனுடைய செவியில் சொன்னாள். வௌவாலின் செவிகள் போன்று மிகச்சிறியதாக இருந்தன அவை. அவன் கேட்கிறான் என்ற எண்ணம் அனகைக்கும் வந்தது. அவன் இமைகளுக்குள் கண்கள் அசைந்துகொண்டிருந்தன.

அனகையின் குரல் அலைகளின் அடியிலிருந்து வண்ணக்கரைசலாக எழுந்து ஒன்று திரண்டு வந்து தொடும்படி நின்றது. 'அரசி! அரசி!' குந்தி கையை நீட்டி அதை தொட அது அதிர்ந்து உடைந்தது. குந்தி சிவந்த விழிகளுடன் பார்த்தபோது "அரசி, பலாஹாஸ்வ முனிவரை முறைப்படி வரவேற்கவேண்டும் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார். தங்களால் நிற்கமுடியுமா?" என்றாள்.

குந்தி "நான் நலமாகவே இருக்கிறேன். வெந்நீரில் நீராடினால் மட்டும்போதும்" என்றாள். மாத்ரி "வெந்நீரை நான் எடுத்துவைத்துவிட்டேன் அக்கா" என்றாள். குந்தி கைநீட்ட மாத்ரியும் அனகையும் பற்றிக்கொண்டனர். மாத்ரி "தங்கள் கரங்கள் குளிர்ந்திருக்கின்றன அக்கா" என்றாள். "குருதி என்பது திரவ வடிவ நெருப்பு... அது எஞ்சியிருக்கிறது. அன்னம் அதற்கு விறகு... எழுப்பிவிடலாம்" என்று அப்பால் நின்ற மருத்துவச்சி சொன்னாள்.

ஆதுரசாலையின் வாயிலில் பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் காத்து நின்றனர். குந்தி தன் கால்கள் குளிர்ந்து தளர்ந்திருப்பதை உணர்ந்து மூங்கில் தூணில் சாய்ந்துகொண்டாள். மாத்ரி அவளிடம் விழிகளால் என்ன என்று கேட்டபோது ஏதுமில்லை என்று பதில்சொன்னாள். பாண்டு கைகளில் முனிவரை வாழ்த்துவதற்கான வெண் மந்தார மலருடன் நின்றிருந்தான். ஆதுரசாலை வாயிலில் மருத்துவச்சிகள் நின்றனர். வலப்பக்கம் சற்றுதள்ளி குரங்குகளை அடைத்துப்போட்ட கூண்டு இருந்தது. மூங்கில்களைப்பற்றியபடி அவை கூண்டுக்குள் கால்மடித்து அமர்ந்திருந்தன. அவற்றின் வயிற்றில் ஒட்டிய குட்டிகள் வட்டக் கண்களை இமைத்து இமைத்து சுழற்றியபடி அவர்களை நோக்கின.

மூன்று கௌதமர்களும் மாண்டூக்யரும் தொடர பலாஹாஸ்வர் நடந்துவந்தார். கரடித்தோலால் ஆன மேலாடையை பெரிய உடலுக்குக் குறுக்காக அணிந்திருந்தார். கரியும் நெருப்பும் போலத்தெரிந்தது அவர் உடல். பனிமலைகளில் உலவியதனால் அவரது முகம் உலர்ந்த செம்மண்சேறுபோல சுருக்கங்கள் அடர்ந்திருந்தது. உரத்த குரலில் பேசியபடியே வந்தவர் அவர்களைக் கண்டதும் நின்றார். பின்னர் முகம் மலர்ந்து அங்கே நின்றபடியே தன் கைகளைத் தூக்கி வாழ்த்தினார்.

அவர் அருகே வந்ததும் பாண்டு அவரை கால்தொட்டு வணங்கினான். "அனைத்து நலங்களும் சூழ்க!" என்று அவனை அவர் வாழ்த்தினார். குந்தியையும் மாத்ரியையும் "மைந்தருடன் பொலிக!" என்று வாழ்த்தியபின் "நாம் மைந்தனைப் பார்ப்போமே" என்றார். பாண்டு "மைந்தன் இங்குதான் இருக்கிறான் தவசீலரே" என்றான். "இங்கா? இது ஆதுரசாலை போலிருக்கிறதே?" என்றார் பலாஹாஸ்வர். மாண்டூக்யர் "மைந்தன் ஆறுமாதத்திலேயே பிறந்துவிட்டிருக்கிறான். இன்னும் உடல்வளரவில்லை" என்றார்.

பலாஹாஸ்வர் புருவங்கள் முடிச்சிட அவர்களைப் பார்த்தார். பின்னர் கனத்தகாலடிகளுடன் ஆதுரசாலைக்குள் சென்றார். அங்கிருந்த மருத்துவச்சிகள் அவரைக் கண்டதும் எழுந்து வணங்கி விலகி நின்றனர். "இளவரசர் எங்கே?" என்றார் பலாஹாஸ்வர். முதியமருத்துவச்சி நடுங்கும் கைகளால் ஐந்து நெய்விளக்குகள் நடுவே இருந்த அகன்ற மண்சட்டிக்குள் பச்சைநிறமான தைலத்தில் கிடந்த குழந்தையை சுட்டிக்காட்டினாள். குழந்தையின் தலை மட்டும் தைலத்துக்கு வெளியே ஒரு மெல்லிய துணிச்சுருளால் தூக்கி வைக்கப்பட்டிருந்தது. தைலத்துக்குள் பாதிமிதந்தபடி ஒருக்களித்துக் கிடந்த சிறிய உடல் தைலத்தின் பச்சை மெழுக்கு படிந்து ஒரு களிம்பேறிய செப்புப்பாவை போலிருந்தது.

பலாஹாஸ்வர் குனிந்து குழந்தையைப் பார்த்தார். அவர் பின்னால் வந்து நின்ற குந்தியும் அப்போதுதான் அத்தனை தெளிவாக அதைப்பார்த்தாள். அதற்கு உயிர் இருப்பதுபோலவே தெரியவில்லை. ஆனால் வீங்கியதுபோலத் தெரிந்த கண்ணிமைகளுக்குள் மட்டும் அசைவு துடித்துக்கொண்டிருந்தது. பலாஹாஸ்வர் குழந்தையை அதன் கால்களைப்பிடித்து தூக்கி எடுத்தார். அதன் உடலில் இருந்து எண்ணை சொட்டியது. அது அழவோ அசையவோ இல்லை. அதன் மூடியஇமைகளும் கத்தியால் கிழிக்கப்பட்டது போன்ற உதடுகளும் மட்டும் துடித்தன. அவர் அதை இருமுறை உதறினார்.

"தவசீலரே..." என மாண்டூக்யர் ஏதோ சொல்லவந்தார். "இவனை கருவறையின் சுஷுப்தியிலேயே வைத்திருக்க முயல்கிறார்கள் இவர்கள். மனிதனை வளர்ப்பது கருவறை நீரல்ல, நீருள் வாழும் நெருப்பு. இந்த தைலத்தில் நெருப்பு இல்லை. நெருப்பு இருப்பது இச்சிறிய உடலுக்குள்தான். அந்த வைஸ்வாநரன் கண்விழிக்கட்டும்... இப்புடவியை உண்ணும் ஹிரண்யகர்ப்பனாக அவன் ஆகட்டும்..." என்றபடி அவர் அதை வெளியே கொண்டுவந்து மாலையின் வெயிலில் மண்தரையில் போட்டார். அது கீழே விழுந்த வௌவால்குஞ்சு போல ஓசையில்லாமல் சிவந்த வாயைத் திறந்து திறந்து மூடியது.

குந்தி தன் ஒவ்வொரு தசையையும் இறுக்கிக்கொண்டாள். மாத்ரி "அக்கா!" என்றாள். குழந்தை கரைக்குவந்து மூச்சுவாங்கி மெல்ல துடித்து இறக்கும் மீன்போல வாய்திறந்து தவித்தது. அதன் கைகளும் கால்களும் குழைந்து அசைந்தன. உடல்முழுக்க இறுதித்துடிப்பு போல ஒரு வலிப்பு வந்தது.

மாத்ரி "அக்கா" என்றாள். பின்னர் குழந்தையை நோக்கி ஓடினாள். பலாஹாஸ்வர் "நில்" என்றார். "எவரும் அதைத் தொடவேண்டியதில்லை. அதன் நெருப்பு இப்போதுதான் கண்விழித்தெழுகிறது" என்றார். குழந்தை தன் கால்களை மண்ணில் உரசியது. முட்டியாகப் பிடிக்கப்பட்ட கைகள் விரைத்து நடுங்கின. எண்ணைப்பூச்சு வழிந்தபோது அது நீரில் பிடுங்கி எடுத்த கிழங்கு போல உரிந்த வெண்தோலுடன் தெரிந்தது.

அப்பால் கூண்டிலடைபட்டிருந்த குரங்குகள் எம்பி எம்பிக்குதித்து கூச்சலிட்டன. மூங்கில்கள் வழியாக கைகளை நீட்டி விரல்களை அசைத்தன. பலாஹாஸ்வர் "அவை எதற்காக?" என்றார். "குழந்தையின் உதரத்துக்கு குரங்குகளின் மெல்லிய பால் மட்டுமே செரிக்கும்" என்றாள் மருத்துவச்சி. "அவற்றைத் திறந்துவிடு" என்றார். அவள் தயங்க அவர் "ம்" என உறுமினார். அவள் ஓடிச்சென்று குரங்குகளின் கூண்டுகளை ஒவ்வொன்றாக திறந்துவிட்டாள். குரங்குகள் கூச்சலுடன் குட்டிகளை அணைத்தபடி பாய்ந்து மரங்களில் ஏறிக்கொண்டன. குட்டிகள் அன்னையரின் வயிற்றை இறுக அணைத்துக்கொண்டு வௌவால்கள்போல ஒலியெழுப்பின.

ஒரு பெரிய குரங்கு வயிற்றில் குட்டியுடன் மேலே கிளைவழியாக வந்து குழந்தைக்கு மேலே அமர்ந்துகொண்டது. நுனிக்கிளைக்கு வந்து அதை உடலால் உலுக்கியபடி ஊஹ் ஊஹ் ஊஹ் என ஒலியெழுப்பி துள்ளியது. அவர்களை ஒவ்வொருவராக கூர்ந்து நோக்கியபின் மெல்ல கீழிறங்கி கிளைநுனியில் ஒரு கைபற்றி தொங்கி ஆடியபடி குழந்தையைப் பார்த்தது. அதன் வால் காற்றில் வளைந்து நெளிந்தது. ஓசையே இல்லாமல் மண்ணில் குதித்து அடியில் கவ்வித் தொங்கிய குட்டியுடன் நான்குகால்களில் மெல்ல நடந்து குழந்தையை அணுகி அருகே நின்று மீண்டும் அவர்களை ஐயத்துடன் பார்த்தது.

அதன் குட்டி பிடியை விட்டுவிட்டு இறங்கி அவர்களை நோக்கித் திரும்பி அமர்ந்து கண்களைக் கொட்டியது. அதன் சிறிய செவிகள் ஒலிகூர்ந்து மடிந்து அசைய கைகளால் தொடையைச் சொறிந்தபடி மெல்ல அவர்களை நோக்கி வந்து தயங்கி வாய் திறந்து சிறிய வெண்பற்களைக் காட்டியது. அதன் சிறிய மெல்லிய வால் மண்ணில் நெளிந்து அசைந்தது.

அன்னைக் குரங்கு ஐயத்துடன் மிகமெல்ல முன்காலைத் தூக்கிவைத்து சென்று குழந்தையை அணுகியது. வண்டு முரள்வதுபோல மெல்லிய ஒலியில் குழந்தை அழுவதைக் கேட்டு குந்தி மெய்சிலிர்த்தாள். குரங்கு தன் முன்னங்காலால் குழந்தையைத் தட்டி தள்ளியது. குழந்தை இருகைகளையும் கால்களையும் இறுக்கமாக அசைத்தபடி உடலே சிவந்து பழுக்க மேலும் உரக்க அழுதது. பூனைக்குட்டியின் அழுகை போல அது ஒலித்தது. குரங்கு குழந்தையை மேலும் இருமுறை புரட்டியபின் ஒற்றைக்கையால் தூக்கி தன்னுடலுடன் சேர்த்துக்கொண்டது.

முன்தலைமயிர் துருத்தி நிற்க மென்சாம்பல் நிறமாகச் சிலிர்த்த முடிபரவிய உடலுடன் அவர்களைப் பார்த்து அமர்ந்திருந்த குட்டி மெல்ல தன் சிறிய கால்களை எடுத்து வைத்து மேலும் அருகே வரமுயன்றது. அதன் வால் மனக்கிளர்ச்சியால் மேலெழுந்து நுனி நெளிந்தது. அதற்குள் அதன் தாய் குழந்தையைத் தூக்கியபடி ஓடிச்சென்று அடிமரத்தை தழுவிப்பற்றி தொற்றி மேலேறக்கண்டு விரைந்தோடி தாயின் வாலைத் தானும் பற்றிக்கொண்டு மேலேறிச்சென்றது.

பாண்டு "முனிவரே" என்றான். "குழந்தையின் வாயில் தன் பாலின் வாசனை இருப்பது அதற்குத்தெரியும்" என்றார் பலாஹாஸ்வர். "அது பார்த்துக்கொள்ளும். அன்னை என்பது ஓர் உடலல்ல. உலகுபுரக்கும் கருணைதான். அக்குரங்கைத் தொடர்ந்து ஓசையில்லாமல் செல்லுங்கள்... அது மைந்தனை மண்ணில் விடும்போது எடுத்துவாருங்கள்."

சேவகர்கள் பின்னால் ஓடினார்கள். மரங்களின் அடியில் சத்தம்போடாமல் பரவியபடி அண்ணாந்து பார்த்தனர். மாத்ரி நிற்கமுடியாமல் மெல்ல பின்னகர்ந்து ஆதுரசாலையின் படிகளில் அமர்ந்துகொண்டாள். அவள் அழுதுகொண்டிருப்பதை திரும்பிப்பார்த்தபின் குந்தி நிலைத்த விழிகளுடன் மரங்களை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். "அவை மைந்தனை கீழே விட்டுவிடும். அவனை தங்களால் கொண்டுசெல்லமுடியாதென்று அவற்றுக்குத்தெரியும்" என்றார் பலாஹாஸ்வர்.

ஒருநாழிகைக்குப்பின் குழந்தையுடன் சேவகர்கள் திரும்பிவந்தனர். அவர்களுடன் சென்ற மாண்டூக்யர் "அவை மைந்தனை ஒரு பாறைமேல் விட்டுவிட்டன உத்தமரே" என்றார். "மைந்தனுக்கு எட்டு குரங்குகள் மாறிமாறிப் பாலூட்டியிருக்கின்றன." அவரது கையில் இருந்து உடலெங்கும் எண்ணையில் மண்ணும் தூசியும் படிந்திருந்த குழந்தையை பலாஹாஸ்வர் தன் கையில் வாங்கினார். குழந்தை கைகால்களை உதைத்துக்கொண்டு வாய் திறந்து அழுதது. "அதன் உடலில் அக்னிதேவன் எழுந்துவிட்டான். இனி இந்த உலகையே உண்டாலும் அவன் பசி அடங்கப்போவதில்லை" என்று பலாஹாஸ்வர் உரக்கச்சிரித்தபடி சொன்னார்.

பாண்டு கைகூப்பினான். "அவன் சொல்வதென்ன என்று தெரிகிறதா? தன் கைகால்களால், அழுகையால் அவன் சொல்வது ஒன்றே. நான் வளரவேண்டும். நான் உலகை உண்ணவேண்டும். முடிவிலாது வளர்ந்து மேலெழவேண்டும். அதுவே அன்னத்திற்கு அக்னியின் ஆணை." அவனை தன் முகத்தருகே தூக்கி உரத்தகுரலில் "நீ பெரியவன், பீமாகாரன். ஆகவே உனக்கு நான் பீமசேனன் என்று பெயரிடுகிறேன்" என்றார்.

மாண்டூக்யர் "சந்திரகுலத்துத் தோன்றலும் விசித்திரவீரியனின் பெயரனும் துவிதீய பாண்டவனுமாகிய இவன் இனி பீமசேனன் என்றே அழைக்கப்படுவான்" என்றார். மூன்று கௌதமர்களும் 'ஓம் ஓம் ஓம்' என்று முழங்கினர். மாத்ரி எழுந்து நடுங்கும் கரங்களால் குந்தியின் தோள்களைப் பற்றிக்கொண்டாள். அவள் கைகளின் ஈரத்தை குந்தி உணர்ந்தாள்.

குழந்தையை நீட்டியபடி பலாஹாஸ்வர் சொன்னார் "இவனுக்கு எதைக்கொடுக்கமுடியுமோ அதையெல்லாம் கொடுங்கள். வெயிலிலும் மழையிலும் போடுங்கள். நீரிலும் பாறையில் விட்டுவிடுங்கள். இவனுக்கு இனி இம்மண்ணில் தடைகளேதுமில்லை." மாத்ரி குழந்தையை முன்னால் சென்று வாங்கி தன் முலைகளுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு அவளையறியாமலேயே விம்மி அழுதாள்.

குடிலுக்கு செல்லும்போது குழந்தை கைகால்களை உதைத்து அழுதது. "மீண்டும் பசி எடுத்திருக்கிறது அவனுக்கு" என்றாள் அனகை. "நான் சற்று பசும்பால் கொடுத்துப்பார்க்கலாமா அரசி?" குந்தி "அவனுக்கு எதையும் கொடுக்கலாம் என்று முனிவர் சொன்னாரல்லவா?" என்றாள். மாத்ரி குழந்தையை அவளிடம் தந்தாள். அனகை குழந்தையுடன் ஓடி குடிலுக்குள் சென்றாள்.

"நான் அஞ்சிவிட்டேன் அக்கா" என்றாள் மாத்ரி. "என்னால் அங்கே நிற்கவே முடியவில்லை... குழந்தை இறந்திருந்தால் என்னாலும் வாழ்ந்திருக்கமுடியாது." குந்தி புன்னகையுடன் "அவன் இறக்கமாட்டான். அதை நான் உறுதியாகவே அறிவேன்" என்றாள். "அவன் கருவிலிருந்த நாளெல்லாம் என் அகம் வன்மத்தால் கொதித்துக்கொண்டிருந்தது. என் உக்கிரம் வெளியே நிகழ்ந்திருந்தால் மலைப்பாறைகளை உடைத்து சிதறடித்திருக்கும். மரங்களை பிய்த்து வீசியிருக்கும். ஆகவே அவன் எப்படிப்பிறப்பான் என்பதை அறிய விரும்பினேன். அதை நானன்றி எவரும் அறியலாகாதென்று எண்ணினேன். ஆகவே அவன் பிறந்த சரியான நேரத்தை நான் எவரிடமும் சொல்லவில்லை. பன்னிரு கணிகை நேரம் தாமதித்தே சொன்னேன். அதைக்கொண்டே அவனுடைய பிறவிநூலை கணித்திருக்கிறார்கள்."

பிரமித்துப்பார்த்த மாத்ரியிடம் குந்தி சொன்னாள் "இன்று காலை அஸ்தினபுரியில் இருந்து வந்த நிமித்திகரான சுகுணரிடம் அவனுடைய சரியான பிறவிநேரத்தைச் சொல்லி குறியுரைக்கச் சொன்னேன். சுகுணர் அவன் யார் என்று சொன்னார்" என்றாள் குந்தி. "அவன் குலாந்தகன் என்றார் அவர். அவனுடைய இலக்கினங்கள் தெளிவாக அதைச் சொல்கின்றன. குருகுலத்தின் காலன் அவன். தன் கைகளால் அவன் தன்குலத்துச் சோதரர்களைக் கொல்வான்." மாத்ரி அஞ்சி நின்றுவிட்டாள். "அவன் இருக்கும் வரை கௌரவர் தருமனை வென்று அரியணை அமரமுடியாது" என்று குந்தி சொல்லி மெல்ல புன்னகை செய்தாள்.

பகுதி பதினேழு : புதிய காடு

[ 3 ]

குந்திதான் முதலில் பார்த்தாள். கீழே மலையடிவாரத்தில் சிறிய வெண்ணிறக் காளான் ஒன்று பூத்துநிற்பதுபோல புகை தெரிந்தது. "அது புகைதானே?" என்று அவள் மாத்ரியிடம் கேட்டாள். "புகைபோலத்தெரியவில்லை அக்கா. மலையிலிருந்து கொட்டும் புழுதி காற்றில் எழுவதுபோலிருக்கிறது" என்றாள். குந்தி அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். "இல்லை, அது மெல்ல விரிகிறது. அது தீயேதான்" என்றாள். "தீ என்றால் வாசனை வருமல்லவா?" என்றாள் மாத்ரி. "வாசனை வராத அளவுக்கு அது கீழே இருக்கிறது" என்று குந்தி சொன்னாள்.

மெல்ல புகை மேலெழுந்து நீரில் கரையும் பால்போல பிரிந்தது. வெண்ணிற இறகு போல அதன் பிசிர்கள் காற்றில் எழுந்து விலகிச்சென்றன. "ஆம், நெருப்புதான். கோடையில் காட்டுநெருப்பு எழுமென்று சொன்னார்கள். ஆனால் சதசிருங்கத்தில் இதுவரை பார்த்ததில்லை" என்றாள் மாத்ரி. குந்தி "அங்கே ஓடைக்கரையில் தர்ப்பைப்புல் அடர்ந்திருக்கும். இங்கிருந்து அங்கே சென்றுதான் தர்ப்பை கொண்டுவருகிறார்கள் பிரம்மசாரிகள். கோடையில் அவை காய்ந்து உரசிக்கொள்ளும்போது தீப்பற்றிக்கொள்கின்றன" என்றாள் குந்தி.

"தர்ப்பைக்குள் அக்னிதேவன் குடியிருக்கிறான் என்கிறார்கள்" என்றாள் மாத்ரி. "எல்லா செடிகளிலும் மரங்களிலும் அக்னி குடியிருக்கிறான். இதோ இந்தப் பாறையிலும் கூட" என்றபின் குந்தி எழுந்தாள். "அரசர் எங்கே?" மாத்ரி புன்னகைசெய்து "அவரது தலைக்குமேல் இன்னொரு தலை முளைத்திருக்கிறது. அந்த இரு தலைகளும் உரையாடிக்கொண்டே இருக்கின்றன. நடுவே வேறெவருக்கும் இடமில்லை" என்றாள்.

அப்பால் குடிலில் அனகையின் குரல் கேட்டது. யாரோ சேடியை அவள் கூவி அழைத்துக்கொண்டிருந்தாள். மாத்ரி புன்னகையுடன் "அனகையின் முழுநாளும் ஒரேசெயலுக்கு செலவாகிவிடுகிறது அக்கா" என்றாள். குந்தி புன்னகைசெய்தாள். பீமனுக்கு உணவூட்ட ஆறுபேர் கொண்ட சேடியர்குழு ஒன்றை அஸ்தினபுரியிலிருந்து குந்தி வரவழைத்திருந்தாள். அவனுடைய பெரும்பசி தொடக்கத்தில் அனைவருக்கும் அச்சமூட்டுவதாக இருந்தது. உணவு செரிக்காமல் குடல் இறுகி குழந்தை மாண்டுவிடும் என்று மருத்துவச்சியர் அஞ்சினர். ஆனால் சிலநாட்களுக்குள்ளாகவே தெரிந்துவிட்டது. அவனுடைய வயிற்றில் வடவைத்தீ குடியிருக்கிறது என்று.

அவன் விழித்திருக்கும் நேரமெல்லாம் உணவுண்டபடியே இருந்தான். அவன் உண்ணும் வேகத்துக்கு இரு சேடியர் இருபக்கமும் நின்று மாறி மாறி ஊட்ட வேண்டியிருந்தது. இருவர் இருபக்கமும் நின்று தாலங்களில் உணவை அள்ளிவைக்கவேண்டும். இருவர் அடுமனையில் பணியாற்றவேண்டும். அனகை புன்னகையுடன் "வேள்வித்தீயை கார்மிகர் பேணுவதுபோல தோன்றுகிறது அரசி" என்றாள். உண்மையில் அவள் ஒரு வேள்வியில் இருக்கும் வைதிகனின் தீவிரத்துடன் எப்போதுமிருந்தாள். இரவில் துயிலும்போதும் அவனுக்கு உணவூட்டுவதைப்பற்றியே கனவுகண்டாள். உணவூட்டவில்லையே என்ற அச்சத்துடன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். அவள் எப்போது விழித்துக்கொண்டாலும் சிறிய அசைவிலேயே கண்விழித்து எழும் பீமன் தன் கைகளை தரையில் அறைந்து கால்களை காற்றில் உதைத்து உணவுக்காக குரலெழுப்பி அழுதான்.

முதல் எட்டுநாட்கள் அவனைத்தேடி குரங்குகளே வந்து அமுதூட்டின. அவனை ஈச்சம்பாயில் முற்றத்தில் படுக்கவைத்தபோது அன்னைக் குரங்குகள் கிளைகளின் வழியாக இறங்கி வந்து அவனை அள்ளி எடுத்துக்கொண்டு சென்றபின் காட்டில் எங்காவது விட்டுவிட்டு மரங்களில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து குரலெழுப்பின. வீரர்கள் சென்று அவனைத் தூக்கிவந்தனர். மந்திப்பால் அவன் குடலை விரியச்செய்தது. அவன் தோலின் சுருக்கங்கள் விரிந்தன. அவன் விழிகள் திறந்து ஒளியை பார்க்கத்தொடங்கின.

நாலைந்து நாட்களிலேயே அவனுக்கு மந்திப்பால் போதாமலாகியது. ஆதுரசாலை மருத்துவர்கள் பசும்பால் கொடுக்கத்தொடங்கினர். ஒவ்வொருநாளும் அவன் அருந்தும் பாலின் அளவு இருமடங்காகியது. "அதிகமாக பால் கொடுக்கவேண்டியதில்லை" என்று மருத்துவச்சி சொன்னபோது "அவன் உதரம் நிறைவதுவரை கொடுங்கள். ஒன்றும் ஆகாது" என்று குந்தி சொன்னாள். வெண்சங்கு துளை வழியாக பால் அருந்தியவன் நான்காவதுநாளில் நேரடியாக கிண்ணத்திலிருந்து அருந்தினான். அவன் பாலருந்தும் ஒலி குடத்தில் நீர் விடுவதுபோல ஒலிக்கிறது என்றாள் மாத்ரி.

பத்துநாட்களுக்குள் பாலைக் காய்ச்சி சுண்டவைத்து கொடுக்கத்தொடங்கினர். மருத்துவச்சி "நான் இன்றுவரை இவ்வளவு உணவருந்தும் ஒரு குழந்தையைப் பார்த்ததில்லை. என் மருத்துவ அறிவே பொருளிழந்துபோய்விட்டது" என்றாள். குந்தி அனகையிடம் "இனி அவனுக்கு மருத்துவச்சிகள் தேவையில்லை. அவனுக்கு எந்த உணவையும் முதலில் சற்று கொடுத்துப்பாருங்கள். உணவு செரித்ததென்றால் முழுவயிற்றுக்கும் கொடுங்கள்" என்றாள். அனகை "மைந்தனின் வயிறு நிறைவதாகவே தெரியவில்லை அரசி" என்றாள். "ஆம், அவன் விருகோதரன்..." என்றாள் குந்தி புன்னகையுடன்.

சிலநாட்களில் அனகையே அவன் வயிற்றை புரிந்துகொண்டாள். ஒருமாதத்தில் அவன் தேனும்தினைமாவும் பாலுடன் சேர்த்து செய்த கஞ்சியை அருந்தத் தொடங்கினான். இருபதாவது நாளில் கூழாக்கிய முயலிறைச்சியை உண்டான். பின்னர் மானிறைச்சியை வேகவைத்து அரைத்து ஊட்டத்தொடங்கினர். உணவுக்கேற்ப அவன் எடையும் கூடிக்கூடி வந்தது. ஒவ்வொருநாளும் அவன் மேலும் எடைகொண்டிருப்பதாக அனகை நினைத்தாள். மூன்று மாதங்களுக்குள் அவனை பெண்கள் எவரும் தூக்கமுடியாதென்ற நிலைவந்தது. மேலும் ஒரு மாதம் கடந்த பின் அவனை எவருமே தூக்கமுடியவில்லை.

அவன் தோள்களிலும் தொடைகளிலும் மென்தசைகள் மடிப்புமடிப்பாக திரண்டன. தோல் பளபளப்பான வெண்ணிறம் கொண்டது. கைகால்கள் நீண்டு நகங்கள் உறுதியாகி ஆறு மாதத்தில் அவன் பத்துமடங்கு எடைகொண்டவனாக ஆனான். அவனை நீராட்டுவதற்கு குடிலுக்குப்பின்னால் ஓடிய சிற்றோடைக்கு இருசேடியர் துணையுடன் அனகை கொண்டுசென்றாள். தினமும் மும்முறை நீரோடையில் அவனை இறக்கி படுக்கச்செய்து அவனுடைய மென்மையான தசைமடிப்புகளுக்குள் படிந்திருக்கும் உணவின் மிச்சங்களைக் கழுவினாள். அவனுக்கு நீர் பிடித்திருந்தது. சிலநாட்களுக்குள்ளாகவே அவன் நீரில் தாவமுயன்றான். கைகளால் நீரோட்டத்தை அறைந்தான். மயில் அகவுவதுபோல உவகை ஒலி எழுப்பினான்.

"தன் எடையை அவன் எப்போதும் அறிந்துகொண்டிருக்கிறான். நீரிலிறங்குகையில் அதிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கிறது போலும்" என்றான் பாண்டு. குந்தி பீமனை நீராட்டிக்கொண்டிருந்தாள். கரையில் நின்றிருந்த பாண்டுவின் தோளில் மெலிந்த மார்பும் பெரிய தலையில் மலர்ந்த கருவிழிகளுமாக யுதிஷ்டிரன் அமர்ந்திருந்தான். "நான் மூத்தவனை அதிகமாக தூக்கியலைந்துவிட்டேன் பிருதை. ஆகவேதான் என்னால் தூக்கவே முடியாத மைந்தனை எனக்களித்திருக்கின்றனர் மூதாதையர்" என்றான் பாண்டு. "யானையின் மத்தகத்தை கையால் அறைந்து நிறுத்திய மாமன்னர் ஹஸ்தி இப்படித்தான் இருந்திருப்பார்."

பீமன் நீரில் எம்பி எம்பி விழுந்து 'ஆ ஆ' என குரலெழுப்பினான். "ஆறுமாதக்குழந்தையா இது?" என்றான் பாண்டு. யுதிஷ்டிரனை கீழே இறக்கிவிட்டு அவனும் ஓடையில் இறங்கி பீமனைத் தூக்கினான். "நீரில் மட்டுமே இவனை நான் தூக்கமுடிகிறது..." என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவன் நீர் மேல் குழந்தையை மிதக்கவிட்டு கைகளால் பற்றிக்கொண்டான். "பிருதை, இவன் கைகள் இப்போதே என்கைகளின் பாதியளவுக்கு இருக்கின்றன. முழுமையாக வளரும்போது இவன் எப்படி இருப்பான்? என்னை கைக்குழந்தைபோல தோளில் தூக்கிவைத்துக்கொள்வானா?"

குந்தி புன்னகைசெய்தாள். பாண்டுவின் முகம் மங்கியது. "ஆனால் இவன் வளர்வதைப்பார்க்க நான் இருக்கமாட்டேன்" என்றான். "என்ன பேச்சு இது? சமீபகாலமாக இப்பேச்சு சற்று கூடி வருகிறதே" என்று குந்தி கடிந்துகொண்டாள். "ஆம், அதை நான் உணர்கிறேன். ஏனென்றால் என்னால் இந்த மைந்தர்களை குழவிகளாக மட்டுமே எண்ண முடிகிறது. சற்று வளர்ந்தவர்களாக எண்ண முயன்றால் சேற்றுப்பள்ளத்தை அஞ்சிய யானைபோல என் அகம் திகைத்து பின்னடைந்து நின்றுவிடுகிறது" என்றான்.

குந்தி பேச்சை மாற்றும்பொருட்டு "மைந்தனை கரையேற்றுங்கள்... அவனுக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கிவிட்டது" என்றாள். "மூன்றுமாதத்தில் இவ்வளவு மாமிசம் உண்ணும் குழந்தையைப் பற்றி அறிந்தால் பாரதவர்ஷத்தின் மருத்துவர்கள் அனைவரும் இங்கே வந்துவிடுவார்கள்" என்ற பாண்டு கரையேறி குழந்தையைத் தூக்கினான். "அவனைத் துவட்டவேண்டும்" என்று சொல்லி குந்தி அருகே இருந்த பஞ்சாடையை எடுத்துக்கொண்டாள். அனகை அப்பால் வந்து நின்றாள். அவள் பீமனை உணவூட்ட விரும்புகிறாள் என்று பாண்டு தெரிந்துகொண்டான்.

பாண்டு "தூக்கமுடியுமா என்றுதான் பார்க்கிறேனே" என்று சொல்லி குழந்தையை மூச்சுப்பிடித்து மேலே தூக்கிவிட்டான். உடனே "பிடி பிடி பிருதை. என் இடுப்பு" என்று கூவினான். அவள் பாய்ந்து பீமனை வாங்கிக்கொள்ள பாண்டு இடுப்பைப்பற்றியபடி 'ஆ' என்று அலறிக்கொண்டு நீரிலேயே அமர்ந்தான். குழந்தையின் எடையைத் தாளாமல் குந்தி முன்னால் காலடிவைத்து தடுமாற அவளுடைய ஆடை காலில் சிக்கிக்கொண்டது. அவள் நிலையழிய குழந்தை கையிலிருந்து தரையில் ஓடைக்கரையின் மென்பாறையில் விழுந்தது. அழுதபடி புரண்டு நீரில் சரிய பாண்டு எழுந்து அதைப்பற்றிக்கொண்டான்.

குந்தி திகைப்புடன் அந்த செம்மண்பாறையைப்பார்த்தாள். அது உடைந்து நீரில் விழுந்து செந்நிறமாகக் கரைந்துகொண்டிருந்தது. அச்சத்துடன் "குழந்தை... குழந்தைக்கு அடிபடவில்லையே" என்றான் பாண்டு. குழந்தையை நீருக்குமேல் தூக்கியபடி, குந்தி அந்த உடைந்த பாறையைச் சுட்டிக்காட்டினாள். பாண்டு ஒருகணம் திகைத்தபின் உரக்கச் சிரித்தான். "சரிதான் சூதர்களின் கதைகளில் ஒன்று இதோ பிறந்திருக்கிறது. கருங்கல்பாறையை உடைத்த குழந்தை!" என்றான். அனகை ஓடிவந்து பீமனைப்பற்றிக்கொண்டாள்.

குடில்முன் பாண்டு யுதிஷ்டிரனுடன் மரப்பட்டை மஞ்சத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். தன் அகத்தில் ஓடுவதை அப்படியே தொடர்ந்து மைந்தனிடம் சொல்லிக்கொண்டிருப்பது அவன் வழக்கம். "நான் செய்யும் இந்தக் கூடை உனக்குத்தான். நீ கூடைநிறைய பொன்னை வைத்துக்கொள். ஏனென்றால் நீ அரசன். அதன்பின் கூடை நிறைய மைந்தர்களை வைத்துக்கொள்வாய். வயதானபின்னர் கூடையிலே பூக்களை வைத்துக்கொள்வாய். பூக்களைக்கொண்டு தெய்வங்களை கனியவைப்பாய். தெய்வங்கள் உன்னை நோக்கி புன்னகைசெய்யும்... என்ன பார்க்கிறாய்?" என்று அவன் மொழி ஓடிக்கொண்டே இருக்கும்.

மெலிந்த குழந்தை கால்மடித்து அமர்ந்து கைகளில் இருந்த கனி ஒன்றை வாயில் வைத்து உரசிக்கொண்டிருந்தது. அதன் கண்கள் தந்தை சொல்லும் சொற்களனைத்தையும் வாங்கிக்கொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. "யாகத்தீ வேதமந்திரத்தைக் கேட்கும் என்பார்கள். நீ நான் சொல்வதைக் கேட்கிறாய். இடியோசை சொல்வது யானைக்குப் புரியும் என்பார்கள். உனக்கு நான் சொல்வது புரிகிறது. நீ எனக்குள் இருந்துகொண்டிருக்கிறாய். இன்னும் சிலநாட்கள் கழித்து உனக்குள் நான் இருந்துகொண்டிருப்பேன்" என்றான் பாண்டு. ஈச்சை ஓலையால் ஆன கூடை ஒன்றை முடைந்துகொண்டிருந்த அவன் கைகள் நிலைத்தன. அவன் நிமிர்ந்து மனைவியரை நோக்கி "எங்கிருந்தீர்கள்?" என்றான்.

மாத்ரி ஓடி பாண்டுவின் அருகே சென்று "அங்கே கீழே காட்டுத்தீ எரிகிறது. அக்கா பார்த்தாள். அதன்பின் நானும் பார்த்தேன்" என்றாள். "காட்டுத்தீயா? அது ஓடைக்கரை நெருப்பு... ஓடைச்சதுப்புக்கு அப்பால் அது வராது" என்றான் பாண்டு. "நாம் அங்கே சென்று அதைப்பார்த்தாலென்ன?" என்றாள் மாத்ரி. "காட்டுத்தீயை சென்று பார்ப்பதா? உளறுகிறாயா என்ன?" என்றான் பாண்டு. "நான் காட்டுத்தீயை பார்த்ததே இல்லை... நான் பார்த்தாகவேண்டும்... நீங்கள் வரவில்லை என்றால் நான் தனியாகச் செல்கிறேன்" என்று மாத்ரி சிணுங்கியபடி சொன்னாள்.

"நான் மைந்தனை விட்டுவிட்டு வரமுடியாது" என்றான் பாண்டு. அவள் கண்ணீருடன் "சரி, நானே சென்று பார்க்கிறேன்" என்றாள். பாண்டு குந்தியை நோக்கி சிரித்துவிட்டு "சரி, நான் அழைத்துச்செல்கிறேன். அருகே செல்லமுடியாது. தொலைவில் பாறைமேல் நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிடவேண்டும்" என்றான். "தருமனையும் எடுத்துச்செல்வோமே. தொலைவில்தானே நிற்கப்போகிறோம்?" என்றாள் மாத்ரி. அவன் "சரி கிளம்பு" என்றபடி தருமனை தோளில் எடுத்துக்கொண்டான். "அக்கா நான் காட்டுத்தீயைப்பார்த்துவிட்டு வருகிறேன்" என்று மாத்ரி சிரித்துக்கொண்டே துள்ளினாள். "நான் இதுவரை பார்த்ததே இல்லை."

அவர்கள் சென்றபின் குந்தி குடிலுக்குள் சென்றாள். அங்கே பீமனுக்கு சேடிகள் உணவூட்டிக்கொண்டிருந்தனர். அவன் உண்பதை அவள் அகன்று நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பொறுமையிழந்து கைகளை தரையில் அறைந்தான். கால்களை வேகமாக உதைத்துக்கொண்டான். ஒரு வாய் உணவுக்கும் அடுத்ததற்கும் இடையே உறுமுவதுபோல ஒலியெழுப்பினான். சேடிகளின் கை வாயைநோக்கி நீள்வதற்குள் அவன் வாய் அதை நோக்கிச் சென்றது. அத்தனை பெரும்பசி இருந்தால் உணவு எப்படிப்பட்ட அமுதமாக இருக்கும் என்று அவள் எண்ணிக்கொண்டாள். அவனுக்கு சுவையளிக்காத உணவென்று ஏதும் உலகில் இருக்கமுடியாது.

அவள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது வெளியே மாத்ரியின் குரல் கேட்டது. "அக்கா... அந்தக்காட்டுத்தீ இப்போது நம் காட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஆம், நானே பார்த்தேன். சிவந்த கொடிகள் அசைவதுபோல தழல் ஆடுகிறது" என்று சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். அவள் உவகையும் கிளர்ச்சியும் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. "செந்நிறமா பொன்னிறமா என்று சொல்லமுடியாது அக்கா. காட்டுமரம் பூத்திருப்பதுபோல முதலில் தோன்றியது. நெருப்பேதான்... அது வெடித்து வெடித்து எழும் ஒலியை கேட்க முடிந்தது."

பாண்டு உள்ளே வந்து "காட்டுத்தீ இவ்வழி வருமென்றுதான் நினைக்கிறேன். நாம் இங்கிருந்து விலகி பாறைகளை நோக்கிச் சென்றுவிடுவதே நல்லது" என்றான். "இது பச்சைவனம் அல்லவா?" என்றாள் குந்தி. "ஆம், ஆனால் காட்டுநெருப்பு பச்சைமரத்தையும் உண்ணும்... நான் கௌதமர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்." அவன் தருமனை தூக்கியபடியே சென்றான். "அவனை ஏன் கொண்டுசெல்கிறீர்கள்? அவன் இங்கே நிற்கட்டும்" என்றாள் குந்தி. "இருக்கட்டும்... நான் ஒழிந்த தோள்களுடன் இருக்கையில் மிகவும் தனிமையாக உணர்கிறேன்" என்று சொல்லி சிரித்தபடி அவன் சென்றான்.

சற்றுநேரத்தில் புகையின் வாசனை எழத்தொடங்கியது. அனகை வந்து "நம் தானியங்களை மண்ணுக்கு அடியில் பானைகளில் புதைத்திருப்பதனால் அவை ஒன்றும் ஆகாது அரசி. பிற உடைமைகளை எல்லாம் கொண்டு செல்லவேண்டும்... காற்று இப்பக்கமாக வீசுவதைப்பார்த்தால் காட்டுத்தீ வருவதற்கு வாய்ப்புண்டு" என்றாள். இருசேடியர் சேர்ந்து ஒரு மூங்கில் தட்டில் பீமனைத் தூக்கிக் கொண்டனர். "நீங்கள் செல்லுங்கள் அரசி நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றாள் அனகை.

தருமனுடன் பாண்டு திரும்பிவந்தான். "காட்டுத்தீ தெற்கிலிருந்து வடக்குநோக்கிச் செல்கிறது. மேற்கே இருக்கும் கஜபிருஷ்டம் என்னும் பாறைக்குமேல் ஏறிக்கொள்ளலாம் என்று மாண்டூக்யர் சொல்கிறார். அதைச்சுற்றி வெறும்பாறைகள் மட்டுமே உள்ளன. அங்கே நெருப்பு அணுகமுடியாது... வாருங்கள்!" கஜபிருஷ்ட மலை எட்டு பாறைகள் சூழ நடுவே பின்னால்திரும்பிய யானைபோல கன்னங்கருமையாக வழவழப்பாக நின்றிருந்தது. அதன் மேல் ஏறிச்செல்ல அதிலிருந்து உடைந்து விழுந்த பாறைகளினாலான அடுக்கு இருந்தது.

மூச்சிரைக்க மேலேறும்போதே குந்தி கீழிருந்து காட்டுத்தீ வருவதைப் பார்த்தாள். செக்கச்சிவந்த வில் ஒன்று மண்ணில் கிடப்பதுபோலத் தோன்றியது. வில் அகன்று விரிந்தபடியே அணுகியது. பாண்டு "சிவந்த கொடிகளுடன் ஒரு பெரிய படை அணுகுவதுபோலிருக்கிறது. அர்த்தசந்திர வியூகம்" என்றான். மாண்டூக்யர் "மேலே சென்றுவிடுவோம்" என்றார். அவர்கள் பாறையின் மேல் ஏறிநின்றனர். கீழிருந்து புகை காற்றால் அள்ளிச் சுருட்டப்பட்டு அவர்களை நோக்கி வந்தது. பச்சைத்தழை எரியும் வாசனை அதில் நிறைந்திருந்தது.

அவர்கள் மேலே அமர்ந்துகொண்டு குளிர்வியர்வையுடன் மூச்சுவாங்கியபடி கீழே பார்த்தனர். கீழிருந்து சேடியரும் சேவகரும் பிரம்மசாரிகளும் பொருட்களை மேலே கொண்டுவந்துகொண்டிருந்தனர். குந்தி நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தாள். பொன்னிறமான நரிக்கூட்டம் புதர்களை ஊடுருவி காட்டுக்குள் வளையம் அமைத்துச் செல்வதுபோல. அதன் சிவப்பு மாலையின் ஒளி மங்கும்தோறும் அதிகரித்து வந்தது. கங்குகள் வெடித்துச் சிதறின. பற்றி எரிந்த மரங்கள் நெருப்பையே மலர்களாகவும் இலைகளாகவும் கொண்டு சுடர்விட்டன. பாறைகளைச் சூழ்ந்து நெருப்பு அலையடிக்க கரியதெப்பம் போல அவை மிதந்தன.

புகைக்கு அப்பால் தெரிந்தவை நீர்ப்பிம்பம் போல நெளிந்தன. தழல்கற்றைகள் திரவம்போல அலையடித்தன. நெருப்பின் உறுமல் ஓசை மெல்ல கேட்கத்தொடங்கியது. கணம் கணமாக அது வலுத்துவந்தது. அவ்வொலி காற்றின் ஓலம் போலவோ நீரின் அறைதலோசை போலவோ இருக்கவில்லை. மேகக்குவைகளுக்கு அப்பால் தொலைதூரத்தில் இடியோசை எதிரொலிப்பதுபோல ஒலித்தது.

அருகே நெருங்கியபோதுதான் நெருப்பு வரும் விரைவும் அதன் அளவும் அவளுக்குப்புரிந்தது. முதலில் மிகமெல்ல ஒவ்வொன்றாகப் பற்றி உண்டபடி தொற்றித்தொற்றி ஏறிவருவதுபோலத் தெரிந்த தழல்கள் பெருவெள்ளம் போல பொங்கி மரங்கள் மேல் பொழிந்து அவற்றை அணைத்து உள்ளிழுத்துக்கொண்டு முன்னேறிச்சென்றன. உயரமான தேவதாரு மரங்கள்கூட அந்தப்பெருக்கில் அக்கணமே மூழ்கி மறைந்தன. அந்தக் கொப்பளிப்பில் இருந்து கங்குகள் வெடித்து எரிவிண்மீன்கள் போல வானிலெழுந்து புகையாகி விழுந்தன.

குடில்களை நெருப்பு நெருங்கியபோது மாத்ரி அஞ்சி குந்தியின் கைகளைப்பற்றிக் கொண்டாள். "இவ்வளவு கொடுமையானது என்று நான் எண்ணவில்லை அக்கா" என்றாள். "இங்கே வராது" என்றாள் குந்தி. மாண்டூக்யர் "வராது என்று இப்போது முடிவாகச் சொல்லிவிடமுடியாது அரசி. கீழிருந்து நெருப்பு இங்கே அணுக முடியாது. ஆனால் அத்திசையில் மேலேறிச்சென்று மலைச்சரிவை எரித்துவிட்டதென்றால் அங்கிருந்து தழல் இறங்கி இங்கே வரமுடியும்... நம்மை தழல் அணுக முடியாது. ஆனால் அத்தனை பெரிய வெம்மையை நம்மால் தாளமுடியாது. புகை நம் மூச்சையும் அணைத்துவிடும்" என்றார்.

மாத்ரி குந்தியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. "மலைமேல் நெருப்பு ஏறிச்செல்லமுடியாது என்று எண்ணினேன். ஆனால் இத்தனை பெரிய நெருப்புக்கு நெடுந்தூரம் செல்லும் வல்லமை உண்டு" என்றார் மாண்டூக்யர். நெருப்பு மேலெழுந்தபோது அச்சத்தை அதன் அழகு மறைத்தது. "உருகிய பொன்னின் பெருவெள்ளம்" என்றார் துவிதீய கௌதமர். "அனைத்தும் உண்ணப்படுகின்றன. உண்ணப்பட்டவை அனைத்தும் பொன்னாகின்றன!" என்று திரித கௌதமர் சொன்னார்.

குந்தி அப்போதுதான் அந்த உணர்வை அடைந்தாள். அதுவரை அவள் கண்டு அறிந்த எவற்றுடனெல்லாமோ அதை உவமித்துக்கொண்டிருந்தாள். அது வேறு. அது உடலற்ற பசி ஒன்றின் நாக்கு. உண்ணும்போது மட்டுமே வெளிப்பட்டு பசியடங்கியதும் மறையும் ஒற்றைப்பெருநாக்கு அது. ஆம். அங்கிருந்த அனைத்து விழிகளிலும் நெருப்பு சுடர்விட்டுக்கொண்டிருந்தது. அத்தனைபேருக்குள்ளிருந்தும் அது வெளியே எழுந்து வந்து நோக்கி நிற்பதுபோலத் தெரிந்தது. அவள் குனிந்து பீமனைப்பார்த்தாள். சிறிய கண்களுக்குள் நெருப்பு இரு செம்புள்ளிகளாக தழலிட அவன் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

நெருப்பு அவர்களின் குடிசைகளை ஒரேபாய்ச்சலில் கடந்துசென்றது. இந்திரத்யும்னத்தைச் சுற்றியிருந்த அனைத்து மரங்களும் தழல்களாக எழுந்தன. நீரில் அந்தத் தழல்கள் பிரதிபலிக்க நீரும் நெருப்பாகியது. மேலே அந்திவானம் சிவந்து நெருப்பு முகில்களிலும் பற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. நெருப்பின் அலைகள் மலைச்சரிவில் அறைந்து நுரைத்து எழுவதுபோல மேலேறுவதை குந்தி கண்டாள். "மேலே செல்கிறது. இங்கும் வருமென்றே நினைக்கிறேன்..." என்றான் பாண்டு.

கிழக்குவானில் இடியோசை கேட்டது. முதலில் அது நெருப்பின் ஒலி போலத் தோன்றியது. மீண்டும் ஒலித்தபோது அது இடி என்று தெரிந்தது. மாண்டூக்யர் "ஆம், மழைதான். அது இங்குள்ள இயற்கையின் ஓர் ஆடல். புகை மேலெழுமென்றால் உடனே மழை கனத்துவிடும்" என்றார். மேலே வெண்ணிற நூறு மலைமுடிகளுக்கு அப்பாலிருந்து மேகங்கள் கரும்பாறைகள் ஓசையில்லாமல் நழுவி நழுவி உருண்டு வருவதுபோலத் தெரிந்தன. மேகங்களுக்கு நடுவே அவற்றின் புன்னகை போல மின்னல்கள் வெட்டி மறைந்தன. இடியோசை வலுத்தபடியே வந்தது.

கிழக்கில் இருந்து மழை வருவதை குந்தி கண்டாள். வெண்ணிறமான மேகப்படலம் மலைகளை மூடியபடி இறங்குவதுபோலிருந்தது. மேலும் நெருங்கியபோது வானம் சற்று உருகி கீழிறங்கி மண்ணைத் தொட்டிருப்பதுபோலத் தெரிந்தது. மேலும் நெருங்கியபோது வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலையின் நெளிவு. பின் சரசரவென்று மழைத்துளிகள் நிலத்தை அறைந்து தெறிக்க கரும்பாறையின் வளைந்த முகடுகளில் நீர்த்துளிகள் துள்ளிக்குதித்துச் சிதற மழை அவர்களை குளிர்ந்து மூடியது. அனைவரும் கைகளை உடலுடன் சேர்த்துக்கொண்டு கூச்சலிட்டுச் சிரித்தனர்.

அப்பால் நெருப்பின் அலை மெல்ல அணைந்து புகைஎழுந்தது. மழை புகையையும் அறைந்து மண்ணில் வீழ்த்தியது. நெருப்பில் சிவந்திருந்த நிலம் முழுக்க கருகிய பரப்பாகியது. அங்கே ஓடைகளில் கரிய நீர் சேர்ந்து ஓடத்தொடங்கியது. மழைக்குள்ளும் பெரிய மரங்கள் மட்டும் புகைவிட்டுக்கொண்டு நின்றன. மழை வந்ததுபோலவே நின்றது. மேகக்குவைகள் கரைந்து வானம் வெளிறியது. மேற்கிலிலுந்து ஒளி வானவிதானத்தில் ஊறிப்பரவியது. அப்பால் விண்ணுலகுகளில் எழுந்த ஒளியை வடிகட்டி கசியவைத்த சவ்வுப்பரப்பாக வானம் தோன்றியது.

கிழக்கிலிருந்து வீசியகாற்று மழையில் எஞ்சிய நீர்த்துளிகளை அள்ளிக்கொண்டு சென்றது. சற்று நேரத்திலேயே காதோரம் கூந்தல் காய்ந்து பறக்கத்தொடங்கியதை குந்தி உணர்ந்தாள். காற்று வீச வீச மழையின் நினைவுகள் கூட விலகிச்சென்றன. மேற்கின் கடைசி ஒளியில் கிழக்கே வான்விளிம்பில் ஒரு பெரிய மழைவில் தோன்றியது. மாத்ரி "இந்திரதனுஸ்" என்றாள். அனைவரும் திரும்பி அதை நோக்கினர். முனிவர்கள் கைகூப்பி வேதத்தைக் கூவி இந்திரனைத் துதித்தனர்.

குந்தி மெல்ல பாண்டுவின் தோளைத் தொட்டாள். அவன் தோளில் இருந்த தருமனுடன் திரும்பி புன்னகை செய்தான். "இந்திரனின் மைந்தன் ஒருவன் வேண்டும் எனக்கு" என அவள் மெல்லியகுரலில் சொன்னாள். அருகே சேடியர் கையில் இருந்த பீமனின் தலையை வருடி "இந்தக்காட்டுத்தீயை அவனே கட்டுப்படுத்த முடியும்" என்றாள். பாண்டு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அகஎழுச்சியுடன் புன்னகை செய்தான்.

பகுதி பதினேழு : புதியகாடு

[ 4 ]

சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல்களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை.

குந்தி "முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று நம் கண்முன் இந்திரதனுஸை பார்த்தோம். வழிகாட்டும்படி இந்திரனிடம் கோருவோம்" என்றாள். மாண்டூக்யர் "ஆம், வேதமுதல்வனாகிய அவனே நம் தலைவன். அவனுக்கு இன்றைய அவியை அளிப்போம்" என்றார். பாறைமேல் வேள்விக்களம் அமைத்து எரிகுளத்தில் மலைச்சரிவில் அகழ்ந்தெடுத்த கிழங்குகளையும் கையில் எஞ்சியிருந்த தானியங்களையும் அவியாக்கி விண்ணவர்கோனை அழைத்து வேதமுழக்கம் எழுப்பி வணங்கினர்.

அன்றிரவு அவர்கள் தோலாடைகளைப் போர்த்திக்கொண்டு மலைச்சரிவின் பாறைகளில் உறங்கினர். அதிகாலையில் பீமன் உணவுகேட்டு அழுததைக் கேட்டு முதலில் கண்விழித்த அனகை அவர்களுக்கு சற்று அப்பால் கபிலநிறமான சிறிய மான்கள் இரண்டு மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அவை அவளை திரும்பிப்பார்த்து காதுகளை விடைத்து உடலைச் சிலுப்பின. ஆண்மான் காதுகளை இருமுறை அசைத்தபின் கழுத்தை வளைத்து மெல்ல பர்ர் என்று ஓசை எழுப்பியது.

அனகை மெல்ல குந்தியை அழைத்தாள். 'அரசி' என்ற அவளுடைய குரலைக்கேட்டு மாண்டூக்யரும் விழித்தெழுந்தார். "தேவா!" என்று கூவியபடி கைகூப்பினார். அவரது வியப்பொலி அனைவரையும் எழுப்பியது. அவர்கள் அந்த மான்களை திகைப்புடன் நோக்கினர். அவர்கள் அனைவரும் விழித்தெழுந்து பார்த்தபோதுகூட அவை விலகி ஓடவில்லை. அவற்றுக்கு கொம்புகள் இருக்கவில்லை. காதுகள் கொம்புகளைப்போல நிமிர்ந்திருந்தன. நாய் அளவுக்கே உயரமிருந்தாலும் அவை விரைவாக ஓடக்கூடியவை என்பதை மெலிந்த கால்கள் காட்டின.

"லலிதமிருகங்கள்" என்றார் மாண்டூக்யர். "இவை மேலே மலையிடுக்குகளில் வாழ்பவை. அங்கே வடக்குமலைகளுக்கு நடுவே புஷ்பவதி என்னும் ஆற்றின் கரையில் புஷ்கலம் என்னும் மலர்வனம் ஒன்றுள்ளது என்று என் குருநாதர்களான முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்கான வழியைக் கண்டடைவது மிகக் கடினம். ஏனென்றால் இந்த மலைப்பகுதியில் நிலையான வழி என ஒன்றில்லை. அங்கே கார்காலத்தில் மழை இடைவெளியில்லாமல் பலநாட்கள் தொடர்ந்து பெய்யும். மலைச்சரிவுகள் இடிந்து சரிந்து வரும். காட்டாறுகள் வழிமாறும். புதிய ஓடைகள் ஒவ்வொருமுறையும் பிறக்கும். ஆகவே ஒவ்வொரு மழைக்காலத்துக்குப்பின்னரும் பாதைகள் முழுமையாகவே மாறிவிடும்."

"இவை அங்கிருந்து வந்திருக்கின்றனவா?" என்று பாண்டு கேட்டான். "ஆம். இவை அங்குமட்டுமே வாழக்கூடியவை. அங்கிருந்து ஏன் இங்கே வந்தன என்று தெரியவில்லை"' என்றார் மாண்டூக்யர். "குருநாதரே, இவை நெடுந்தொலைவு நீரின்றி பயணம்செய்யக்கூடியவை அல்ல. ஆகவே இவை மட்டுமே அறிந்த ஒரு குறுக்குப்பாதை இங்கிருந்து புஷ்பவதிக்கு இருக்கவேண்டும்" என்றார் திரிதகௌதமர்.

"நாம் அங்கே செல்வோம்" என்று குந்தி சொன்னாள். "அதுதான் நாம் செல்லவேண்டிய இடம். எனக்கு உறுதியாகத் தெரிகிறது." மாண்டூக்யர் "அது ஒரு மலர்ச்சமவெளி. அங்கே நாம் எப்படி வாழமுடியும் என்று தெரியவில்லை" என்றார். "உத்தமரே, நான் தனியாகவென்றாலும் அங்குதான் செல்லவிருக்கிறேன். இவை வந்ததே என்னை அழைத்துச்செல்வதற்காகத்தான். ஏனென்றால் என் மைந்தன் பிறக்கவிருக்கும் நிலம் அதுவே" என்றாள் குந்தி. அனைவரும் அவளைத் திரும்பி நோக்கினர். மாண்டூக்யர் "ஆம் அவ்வாறே ஆகுக!" என்றபின் "நாம் கிளம்புவோம். இந்த மான்களின் குளம்புத்தடங்கள் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும்" என்றார்.

அவர்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே வெயில் எழுந்தது. மான்கள் துள்ளி புதர்களின் வழியாக ஓடி பாறைகளுக்கு அப்பால் மறைந்தன. அவர்கள் மான்களைத் தொடர்ந்து சென்றனர். "இந்த மான்கள் ஒற்றைக்குளம்பு கொண்டவை. ஆகவே மிக எளிதாக இவற்றின் தடத்தை அடையாளம் காணமுடியும்" என்றார் மாண்டூக்யர். மான்கள் பாறைகளைக் கடந்துசென்ற இடங்களில் அவற்றின் சிறுநீர் வீச்சமே அடையாளமாக இருந்தது.

அன்றுபகல் முழுக்க அவர்கள் மலைச்சரிவில் ஏறிக்கொண்டிருந்தனர். இரவில் மலைப்பாறை ஒன்றின் உச்சியில் தங்கினர். மறுநாள் காலை கண்விழித்தபோது அவர்களுக்கு சற்று மேலே வெண்பனிப்பரப்பு போல பஞ்சுமலர்கள் கொண்டு நின்ற சிறுநாணல்பரப்பில் அந்த இருமான்களும் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டனர். மறுநாள் மாலை அவர்கள் மலையிடுக்கு ஒன்றை அடைந்தனர். அதன் வழியாக மலையருவி ஒன்று வெண்ணிறமாக நுரைத்துக் கொப்பளித்து பேரோசையுடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அதன் நீர்த்துளிகள் புகையென எழுந்து அருகே இருந்த பாறைகளில் படிந்து அவற்றை செந்நிறமான பாசி படிந்தவையாக ஆக்கியிருந்தன. மான்கள் அந்த வழுக்கும்பாறைகளில் துள்ளி ஏறி பாறைகள் வழியாகவே மேலேறி அருவிக்குமேலே மறைந்தன.

"அதுதான் புஷ்பவதி" என்றார் மாண்டூக்யர். "நாம் எளிதில் அந்தப் பாறைகளில் ஏறிவிடமுடியாது. கால் நழுவியதென்றால் பேராழத்துக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்" என்றார். ஒரு பிரம்மசாரி முதலில் பாறைவிரிசல்களில் தொற்றி ஏறிச்சென்று மேலே ஒரு மலைப்பாறையில் இரு கயிறுகளைக் கட்டி இறக்கினான். ஒரு கயிற்றில் சிறிய கம்புகளைக் கட்டி அதை நூலேணியாக்கினர். இன்னொரு கயிற்றைப் பற்றிக்கொண்டு ஒவ்வொருவராக ஏறிச்சென்றனர். மலையருவிக்கு மேலே செங்குத்தாக நின்ற கரியபாறை தெரிந்தது. ஆனால் அதில் ஏறிச்செல்வதற்கான வழி ஒன்று வெடிப்பு போல தெரிந்தது.

"அந்த பாதை இந்த மழைக்காலத்தில் உருவானது" என்றார் மாண்டூக்யர். "அந்தப்பாறை பிளந்து விழுந்து அதிகநாள் ஆகவில்லை. அதன் பிளவுப்பக்கம் இன்னும் நிறம் மாறாமலிருக்கிறது." அவர்கள் அந்தியில் அந்த பெரும்பாறைக்குமேல் ஏறிச்சென்றனர். அங்கே அவர்கள் தங்க இடமிருந்தது. பாறைக்கு அப்பால் வெண்திரைபோல பனிமூடியிருந்தது. அன்று அங்கேயே மலையருவி கொண்டுவந்து ஏற்றியிருந்த காய்ந்த மரங்களைப் பற்றவைத்து நெருப்பிட்டு அதையே வேள்விக்களமாக ஆக்கி அவியளித்து வேதம் ஓதியபின் வேள்விமீதத்தை உண்டனர்.

மறுநாள் காலையில் பீமனுக்கு உணவூட்ட அனகை எழுந்தபோது அவர்களைச் சுற்றி பனித்திரை மூடியிருந்ததைக் கண்டாள். அருகே படுத்திருப்பவர்களைக்கூட காணமுடியாதபடி அது கனத்திருந்தது. அவள் முந்தையநாள் புஷ்பவதியில் போட்டுவைத்திருந்த கயிற்றுவலையை இழுத்து எடுத்து அதில் சிக்கியிருந்த மீன்களை நெருப்பில் சுட்டு அந்தக்கூழை பீமனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தபோது காற்று வீசத்தொடங்கியது. சற்று நேரத்தில் பனித்திரை விலகி கீழிறங்கியது. அவள் தன்முன் பச்சைப்புல்வெளி ஒன்றைக் கண்டாள்.

அவள் குரலைக் கேட்டு அனைவரும் எழுந்து நின்று பார்த்தனர். வியப்பொலிகளுடன் கௌதமர்கள் கீழே இறங்கிச்சென்றனர். பனித்திரை விலக விலக அவர்கள் முன் செந்நிற மலர்கள் பூத்துச்செறிந்த குறும்புதர்கள் விரிந்த பெரும்புல்வெளி ஒன்று தெரிந்தது. காலையொளி எழுந்தபோது அதன் வண்ணங்கள் மேலும் ஒளிகொண்டன. அவர்கள் அதைநோக்கி இறங்கிச்சென்றனர். வழுக்கும் களிமண்ணில் கணுக்கால் வரை புதைந்து நடந்து செல்லச்செல்ல அம்மலர்வெளி பெருகிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

இருபக்கமும் எழுந்த மலைகள் பனிமுடி சூடி வான்மேகங்களை அளைந்து நின்றன. மலைச்சரிவு செந்நிறத்தின் நூறு வண்ணமாறுபாடுகளினாலான துணிக்குவியல்போல இறங்கி வந்து பின்னர் பசுமை கொண்டது. பச்சையின் அலைகள் சரிந்து வந்து கீழே கல் அலைத்து நுரையெழுப்பி ஓடிய ஆற்றைச் சென்றடைந்தன. மலைகளின் இடுக்குகளிலெல்லாம் வெண்ணிறச்சால்வை போல அருவிகள் விழுந்துகொண்டிருந்தன. அவற்றுக்குக் கீழே குளிர்ந்த கரியபாறைகள் சாரலில் சிலிர்த்து அமைதியிலாழ்ந்திருந்தன. நீரின் ஒலியும் புதர்களில் காற்று சீவி ஓடும் ஒலியும் சிறியபறவைகளின் ஒலிகளும் சேர்ந்து அங்கே நிறைந்திருந்த பேரமைதியை உருவாக்கியிருந்தன.

அவர்கள் புல்வெளிவழியாகச் சென்றபோது அப்பால் மலைச்சரிவில் ஓர் இளம் பிரம்மசாரி மான்தோலாடையுடன் தோன்றினான். மலைமொழியில் யார் அவர்கள் என்று கேட்டான். மாண்டூக்யர் அதற்குப்பதில் சொன்னதும் அவன் செம்மொழியில் அவரை வணங்கி தனுர்வேதஞானியான சரத்வானின் தவநிலையத்துக்கு வருக என்று வரவேற்றான். அவர்கள் வியந்து பார்த்து நிற்க அவன் மலையருவி இறங்குவதுபோல சில கணங்களில் இறங்கி அவர்களை அணுகி வணங்கினான். அவனைத் தொடர்ந்து அவனுடைய நீர்ப்பிம்பம் போலவே இன்னொருவனும் இறங்கிவந்தான். "எங்கள் பெயர் கனகன், காஞ்சனன். நாங்கள் அஸ்வினிதேவர்களின் குலத்துதித்த மைத்ரேய முனிவரின் மைந்தர்கள். இங்கே சரத்வ முனிவரிடம் மாணவர்களாக தனுர்வேதம் பயில்கிறோம்" என்றனர். "எங்களுடன் வருக!"

சரத்வானின் தவச்சாலை மலையிடுக்கில் இருந்த நீண்ட பெரிய குகைக்குள் இருந்தது. குகை வாயிலில் ஓர் அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் வலப்பக்கமாகச் சென்ற பாறைபடிக்கட்டுகள் வெண்பளிங்குஉருளைகள் போலிருந்தன. "இந்தப்பாறைகள் முழுக்க சுண்ணத்தாலும் பளிங்காலுமானவை" என்று காஞ்சனன் சொன்னான். "உள்ளே ஊறிவழிந்த நீரால் பல்லாயிரமாண்டுகளாக அரிக்கப்பட்டு இக்குகைகள் உருவாகியிருக்கின்றன. இந்த மலையில் மட்டும் தங்குவதற்கேற்றவை என பன்னிரண்டு பெருங்குகைகள் உள்ளன. விலங்குகள் தங்கும் நூற்றுக்கணக்கான குகைகள் உள்ளன." கனகன் "மலைக்குமேல் ஏழு குகைகளில் மலைத் தெய்வங்களின் ஓவியங்கள் உள்ளன. அவை அணுகுவதற்கரியவை. மலையேறி வரும் பழங்குடிகள் அவற்றை வழிபடுகிறார்கள்" என்றான்.

அவர்கள் சென்ற முதல்குகை மாபெரும் மாளிகைமுகப்பு போலிருந்தது. உள்ளே ஒளிவருவதற்காக வெளியே வெவ்வேறு இடங்களில் சுண்ணப்பலகைகளை தீட்டி ஆடிகளாக்கி சரித்துவைத்திருந்தனர். நீண்ட சட்டங்களாக அந்த ஒளிக்கதிர்கள் குகையை கூறுபோட்டிருந்தன. அந்த ஒளியில் குகையின் உட்பகுதி சிற்பங்கள் நிறைந்த கோயிலொன்றின் உள்மண்டபம் போலத் தெரிந்தது. எந்த மானுட உருவங்களாகவும் மாறாத சிற்பங்கள். மத்தகங்கள், பிடரிகள் புடைத்த தசைகள், போர்வைபோர்த்தி நிற்கும் மக்கள்திரள்கள், உறைந்த அலைகள், திகைத்து நிற்கும் தூண்கள்... அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளமுயன்ற அகம் பிடிகிடைக்காது ஆழத்துக்கு வழுக்கும் கரம் என பரிதவித்தது.

"இது எங்கள் ஆசிரியரின் குகை. இங்குதான் பூசைகளும் வேள்விகளும் வகுப்புகளும் நிகழும். ஆசிரியர் தன் அறையில் இருக்கிறார். அழைத்துவருகிறேன்" என்றான் கனகன். அவன் சென்றபின் ஒவ்வொருவரும் அந்த வெண்சுண்ணச் சிற்பங்களையே விழிதிகைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். தொங்கும் கல்திரைச்சீலைகள். கல்லாடையின் மடிப்புகள். வெண்கல்தழல்கள். தொட எண்ணி தயங்கி உறைந்த கல்விரல் நுனிகள். சிறகுகள் கல்லாகிச் சிக்கிக்கொண்ட பெரும் பறவைகள். மத்தகம் மட்டுமே பிறந்து கல்லில் எஞ்சிவிட்ட யானைகள். திமில் சரிந்த ஒட்டகங்கள்... மேலிருந்து நூற்றுக்கணக்கான கூம்புகள் தொங்கின. "பெரும் வெண்பன்றி ஒன்றின் அடியில் நிற்பதுபோலிருக்கிறது. பல்லாயிரம் அகிடுகள்" என்றான் பாண்டு.

இல்லை. இவை கல்மேகங்கள். கல்புகை. கல்பனி. கல்வெள்ளம்! என்ன மூடத்தனம்? ஏன் அவற்றை உருவங்களாக்கிக் கொள்ளவேண்டும்? அவை ஐம்பெரும்பூதங்களும் தங்களுக்குள் முயங்கி உருவாக்கிக்கொண்டவை. ஆனால் அகம் அறிந்த உருவங்களையே உருவாக்கிக் கொள்கிறது. "அதோ ஒரு யானை..." என்றான் ஒரு பிரம்மசாரி. "அது மாபெரும் பன்றி..." அனைத்து விலங்குகளும் அங்கிருந்தன. ஒவ்வொன்றும் அவற்றின் வேறுவடிவங்களில் ஒளிந்திருந்தன. படைப்புதெய்வத்தால் சிறையிடப்பட்ட வடிவங்களை உதறி விடுதலைகொண்ட ஆன்மாக்கள் கல்லைக் கொண்டாடிக்கொண்டிருந்தன.

"சரத்வான் தனுர்வேதத்தின் முதல்ஞானிகளில் ஒருவர். அவரது தனுர்வேதசர்வஸ்வம்தான் வில்வித்தையின் முதற்பெரும்நூல் என்கிறார்கள். ஆனால் அவர் வில்வித்தையை போர்க்கலையாகக் கற்பிப்பதில்லை. அதை ஞானக்கலையாகவே எண்ணுகிறார்" என்றார் மாண்டூக்யர். "அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன். அவர் ஒரு புராணகதாபாத்திரம் என்றே எண்ணியிருந்தேன். அவர் அணுகமுடியாத மலைகளில் எங்கோ இருக்கிறார் என்பார்கள். தேர்ந்த வில்லாளிகள் அனைவரையும் சரத்வானின் மாணவர் என்னும் வழக்கம் உண்டு... அவரை நேரில் காணமுடியும் என்னும் நம்பிக்கையே எனக்கிருக்கவில்லை."

சரத்வான் கனகனும் காஞ்சனனும் இருபக்கமும் வர வெளியே வந்தபோது அவர்கள் கைகூப்பினர். கரிய உடலில் நெருப்பு சுற்றிக்கொண்டதுபோல புலித்தோல் ஆடை அணிந்து ஒளிவிடும் செந்நிற வைரக்கல்லால் ஆன குண்டலங்கள் அசைய, கரியகுழல் தோளில் புரள, அவர் நாணேற்றிய வில் என நடந்துவந்தார். "மிக இளையவர்..." என்று பின்னால் ஒரு பிரம்மசாரி முணுமுணுத்தான். "முதியவர்தான், ஆனால் முதுமையை வென்றிருக்கிறார்" என இன்னொருவன் சொன்னான். குந்தி அவர் கண்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவை இரு கருவைரங்கள் போலிருந்தன. திரும்புகையில் அவற்றில் வான்நீலம் கலந்து மின்னியதுபோலிருந்தது.

மாண்டூக்யர் முகமன் கூறி வணங்குவதையும் மூன்று கௌதமர்களும் அவரை வணங்கி வாழ்த்துபெறுவதையும் அவள் கனவு என நோக்கிக்கொண்டிருந்தாள். பாண்டுவும் பிற மாணவர்களும் வணங்கினர். பாண்டு அவளை நோக்கி ஏதோ சொன்னான். அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். மாத்ரியின் கைகளைப்பற்றியபடி சென்று அவரை வணங்கினாள். சரத்வான் இரு மைந்தர்களையும் வாழ்த்தினார். சுருக்கமான சொற்களில் அவர்களை வரவேற்று அங்கு தங்கலாமென்று சொன்னார். அவள் அவரது ஆழமான குரலின் கார்வையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கருவைர விழிகள் குரலாக மாறுமென்றால் அப்படித்தான் ஒலிக்கமுடியும்.

அவர்கள் தங்குவதற்கு குகைகள் அளிக்கப்பட்டன. பொருட்களுடன் அவர்கள் குகைகளுக்குள் சென்றபோது மாதிரி "இங்கு தங்குவதா?" என்றாள். குந்தி "ஆம், அரண்மனையில் இருந்து குடிலுக்கு என்றால் குடிலில் இருந்து குகைக்குத்தானே?" என்றாள். வெளியே இருந்த குளிருக்கு மாற்றாக குகை இளம் வெம்மையுடன் இருப்பதை குந்தி கண்டாள். "கோடைகாலத்தில் குகைக்குள் இதமான குளிர் இருக்கும் என்கிறார்கள் அரசி" என்றாள் அனகை. "இங்கே மைந்தனுக்கு ஊனுணவுக்கு குறையே இருக்காது. இங்கே மான்கள் முயல்களைப்போலப் பெருகியிருக்கின்றன."

சேவகர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவைத்தனர். சரத்வான் கொடுத்தனுப்பிய நாணலால் ஆன படுக்கையும் கம்பிளிப்போர்வைகளும் மான்தோல் ஆடைகளும் காஞ்சனனாலும் கனகனாலும் கொண்டுவரப்பட்டன. அவர்கள் பொருட்களை ஒருக்க மெல்ல மெல்ல குகை ஒரு வசிப்பிடமாக ஆகியது. அனகை அமைத்த மஞ்சத்தில் குந்தி அமர்ந்துகொண்டாள். அப்பால் நால்வர் பீமனுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தனர். "அரசி, ஒன்று தெரிகிறது. எப்படி இடைவெளியே இல்லாமல் உணவுண்ணமுடியுமோ அப்படி உணவே உண்ணாமலும் நம் மைந்தனால் இருக்கமுடியும்" என்றாள் அனகை.

அன்று மாலை சரிவுப்பாறை ஒன்றின் விளிம்பில் இளவெயிலில் பாண்டு தருமனுடன் அமர்ந்திருந்தபோது குந்தி சென்று அருகே அமர்ந்தாள். "இந்த நதிக்கு ஏன் புஷ்பவதி என்று பெயர் தெரியுமா? இதன் கரையில் நான்கு புஷ்பவனங்கள் இருக்கின்றன. அதோ தெரியும் அந்த உயரமான பனிமலையை நந்ததேவி என்கிறார்கள். அதைச்சுற்றியிருக்கும் பன்னிரு பனிமலைச்சிகரங்களையும் பன்னிரு ஆதித்யர்களின் பீடங்கள் என்கிறார்கள். அவற்றின்மேல் முழுநிலவுநாட்களில் விண்ணவர் வந்திறங்குவதைக் காணமுடியும் என்று சரத்வான் சொன்னார். அதன் சாரலில் திப்ரஹிமம் என்னும் ஒரு பிரம்மாண்டமான பனியடுக்கு இருக்கிறது. அதன் நுனி உருகித்தான் இந்த ஆறு உருவாகிறது...."

"குளிர்காலத்தில் இந்த ஆறு உறைந்துவிடும் என்கிறார்கள்" என்றான் பாண்டு. "ஆனால் அப்போதுகூட குகைக்களுள் நீர் ஓடிக்கொண்டுதான் இருக்குமாம். ஆகவே இவர்களெல்லாம் இங்கேயே தங்கிவிடுவார்கள். குளிர்காலம் யோகத்திலமர்வதற்கு உரியது என்கிறார்கள். இப்பகுதிமுழுக்க இதேபோல பல மலர்வனங்கள் உள்ளன. மிக அருகே இருப்பது ஹேமகுண்டம். அது வசிஷ்டர் தவம்செய்த இடம். அங்கே அவரது குருமரபைச் சேர்ந்த நூறு முனிவர்கள் இருக்கிறார்கள்." குந்தி அந்தியின் ஒளியில் நந்ததேவியின் பனிமுகடு பொன்னாவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"பொன் மீது ஏன் மானுடனுக்கு இத்தனை பற்று என இப்போது தெரிகிறது. மகத்தானவை எல்லாம் பொன்னிறம் கொண்டவை" என்றான் பாண்டு. "நீயும் பொன்னுடல் கொண்டவள் போலிருக்கிறாய்." குந்தி புன்னகையுடன் "நான் இங்குதான் என் மூன்றாவது மைந்தனைப் பெறவிருக்கிறேன். பரதகுலம் அந்தச் சிகரம் போன்றதென்றால் அது பொன்னாக ஆகும் கணம்தான் அவன். அவன் பெயர் எதுவாக இருந்தாலும் நான் அவனை பாரதன் என்றே அழைப்பேன்" என்றாள். பாண்டு "ஆம், அவன் வில்வித்தையில் நிகரற்றவனாக இருப்பான். கூரிய அம்புகளால் மண்ணில் அனைத்தையும் வெல்வான். விண்ணகத்தையும் அடைவான்" என்றான்.

மழைக்காலம் தொடங்கியபோது அவள் கருவுற்றாள். மழை முதலில் தென்மேற்கிலிருந்து மேகக்கூட்டங்களாக ஏறி வந்தது. ஒன்றையொன்று முட்டி மேலெழுப்பிய கருமேகங்கள் வானை நிறைத்தன. குந்தி அத்தனை அடர்த்தியான மேகங்களை அதற்கு முன்னர் பார்த்ததில்லை. மேகங்கள் இணைந்து ஒற்றைக் கருஞ்சுவராக ஆயின. கருமைக்குள் மின்னல்கள் வெட்டி அதிர்ந்து அணைந்தபோது மேகங்களின் வளைந்த விளிம்புகள் ஒளிவிட்டு மறைந்தன.

அனகை வந்து "அரசி, இங்கே மேகங்களைப் பார்க்கக்கூடாதென்கிறார்கள். மின்னல்கள் பேரொளி கொண்டிருக்கும் என்றும் கண்களைப் பறித்துவிடும் என்றும் சொன்னார்கள்" என்றாள். குந்தி சிலநாட்களாகவே தன்னை முற்றிலும் மறந்தவளாக, பித்துக்கும் பேதைமைக்கும் நடுவே எங்கோ அலைந்துகொண்டிருந்தாள். பெரும்பாலான நேரத்தை அவள் அந்தமலைப்பாறை உச்சியில்தான் கழித்தாள். அங்கிருந்து வடகிழக்கே நந்ததேவியையும் அதன் மேலாடை மடியில் சரிந்து விழுந்ததுபோல வெண்ணிற ஒளிவிட்டுக்கிடந்த திப்ரஹிமத்தையும் பார்க்கமுடிந்தது. தென்கிழக்கில் புஷ்பவதி பசுமைவெளியில் வெள்ளியோடை போல உருகிச் சென்றது. வடமேற்கே பனிமலையடுக்குகள் உறைந்த மேகங்களாக வானில் தங்கியிருந்தன.

"அங்கே மேகங்கள் வருவதை நான்தான் முதலில் பார்த்தேன். கரிய குழந்தை ஒன்று மெல்ல எட்டிப்பார்ப்பது போல மலைக்கு அப்பால் அது எழுந்துவந்தது" என்றாள் குந்தி. "இங்கேதான் மேகங்கள் வரும். அவை இந்திரனின் மைந்தர்கள். இந்திரன் தன் வஜ்ராயுதத்தை அவர்கள் விளையாடுவதற்காகக் கொடுத்துவிடுவான்." அவளிருக்கும் நிலையில் அவளிடம் எதையும் பேசமுடியாதென்று அனகை அறிந்திருந்தாள். "அரசி குகைக்கு வாருங்கள். பெருமழை வரப்போகிறது" என்றாள். குந்தி அவளை காய்ச்சல் படிந்த விழிகளால் நோக்கி "ஆம், பெருமழை... மழைத்திரையை வஜ்ராயுதம் கிழித்துவிளையாடும்" என்றாள்.

ஒரு பெருமின்னலால் விழிகள் எரிந்து அணைந்தன. வானம் வெடித்ததுபோல எழுந்த இடியோசையால் காதுகள் முழுமையாக மறைந்தன. புலன்களற்ற ஒரு கணத்தில் அனகை தானிருப்பதையே அறியவில்லை. பின்பு "அரசி! அரசி!" என்று கூவினாள். அவள் குரலை அவள் காதுகளே கேட்கவில்லை. இன்னொரு சிறுமின்னலைக் கண்டபோதுதான் தன் விழிகள் மறையவில்லை என்பதை உணர்ந்தாள். முன்னால் தாவிச்சென்று குந்தியை பிடித்துக்கொண்டாள். நினைவிழந்துகிடந்த அவளைத் தூக்கி தன் குகைக்குக் கொண்டுவந்தாள்.

மருத்துவர் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னார்கள். அவள் குகைக்கு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பாண்டு ஆணையிட்டான். அனகையும் சேடியரும் அவளை ஒவ்வொரு கணமும் கண்காணித்தனர். குகைக்கு காட்டுமரப்பட்டைகளாலான கதவுகள் போடப்பட்டன. அவள் அந்தக்கதவுகளுக்கு இப்பால் அமர்ந்து வெளியே இளநீலத்திரைச்சீலை போல அசைந்தபடி குன்றாமல் குறையாமல் நின்றிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மழைக்குள் மின்னல்கள் துடித்து துடித்து அதை வெண்நெருப்புத்தழல்களாக ஆக்கி அணைந்தன. இடியோசையில் மழைத்தாரைகள் நடுங்குவதுபோலத் தெரிந்தது.

இரண்டரை மாதம் தொடர்ந்து பெய்த மழைக்குப்பின் புஷ்பவதியின் சரிவு முழுக்க சேறும் சருகுக்குவைகளும் நிறைந்திருந்தன. இளவெயிலில் அவை மட்கி எழுப்பிய ஆவி குகைகளுக்குள் வந்து வீச்சத்துடன் நிறைந்தது. சிலநாட்களில் இளம்புல்தளிர்கள் மேலெழுந்தன. மேலும் சிலநாட்களில் அவை புதர்களாக அடர்ந்து மொட்டுவிட்டன. மென்மையான ஊதாநிறம் கொண்ட மலர்கள் நதிநீரின் ஓரத்திலும் செந்நிறமலர்கள் மலைச்சரிவிலும் செறிந்தன. ஆற்றின் இருகரைகளும் இரண்டு இதழ்களாக மாற புஷ்பவதி நடுவே வெண்ணிறப்புல்லி போல நீண்டு செல்ல அந்நிலமே ஒற்றைப்பெருமலர் போல ஆகியது. செந்நிறத்துக்குள் ஊதாநிறத்தீற்றல்கொண்ட முடிவில்லாத மலர்.

குந்தி அந்நாட்கள் முழுக்க மலர்கள் நடுவேதான் இருந்தாள். மலர்களையன்றி எதையுமே பார்க்காதவையாக அவள் கண்கள் மாறிவிட்டன என்று அனகை நினைத்தாள். அவளிடம் பேசியபோது அவள் விழிகள் தன்னை அடையாளம் காணவில்லை என்று கண்டு அவள் துணுக்குற்றாள். பாண்டுவையும் மைந்தர்களையும்கூட அவள் அடையாளம் காணவில்லை. அவளுடைய பேச்சுக்கள் எல்லாம் முற்றிலும் பொருளிழந்திருந்தன. பொருளற்றவையாக இருந்ததனாலேயே அவை கவிதைகள் போல ஒலித்தன. 'இந்திரவீரியம் மலர்களையே உருவாக்குகிறது. மலர்கள்தான் காடுகளை உருவாக்குகின்றன'. 'வானவில் பூத்திருக்கிறது... ஒவ்வொரு மலருக்கும் ஒரு வானவில்' என்றாள். தனக்குத்தானே பேசிக்கொண்டவளாக மலர்கள் நடுவே இளவெயிலில் படுத்தாள். இரவில் அனகை அவளை மலர்வெளியில் எங்கிருந்தாவது தேடிக்கண்டடைந்து கொண்டுவந்தாள்.

கோடை முதிரத்தொடங்கியபோது மலர்கள் நிறம்மாறின. மெல்ல மலர்வெளி சுருங்கி நீரோட்டத்துக்கு அருகே மட்டும் எஞ்சியது. பின்னர் அந்த இறுதிவண்ணமும் மறைந்தது. புஷ்பவதியின் நீர் பெருகி வந்து கரைதொட்டு ஓட அருவிகளின் ஓசை இரவில் செவிகளை மோதுமளவு உரக்க ஒலித்தது. குந்தியின் வயிறு கனத்து கீழிறங்கியது. அவள் சொற்களை இழந்துகொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அப்பகுதியில் இருந்த வெண்கல்பாறைகளில் ஒன்றுபோல ஆனாள்.

பனிக்காலம் குளிர்ந்த காற்றாக வரத்தொடங்கியது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் வெண்கற்பாறைகள் பனிக்கட்டிகள் போல குளிர்ந்திருந்தன. மதியத்திலும் உடலை புல்லரிக்கவைக்குமளவுக்கு குளிர் காற்றில் கரைந்து வீசியது. கண்கூசவைக்கும் வெயிலிலும் வெப்பமே இருக்கவில்லை. ஒருநாள் காலையில் அனகை குகைவாயிலில் மலைச்சரிவிலிருந்து ஊறிவழிந்த நீர் ஒளிமிக்க பளிங்குத்துளியாக நிற்பதைக் கண்டாள். அதைக் கையிலெடுத்துக்கொண்டுவந்து பிறருக்குக் காட்டினாள். "முதல்பனி" என்று பாண்டு சொன்னான். "இமாலயம் தன் செய்தியை அனுப்பியிருக்கிறது!"

காலையில் கண்விழித்து வெளியே பொறியில் மாட்டியிருக்கும் ஊன்மிருகத்தை எடுப்பதற்காகச் சென்ற அனகை மலைச்சரிவெங்கும் உப்புப்பரல் விரிந்ததுபோல பனி படர்ந்து ஒளிவிட்டுக் கிடப்பதைக் கண்டாள். அவள் ஓடிவந்து சொன்னபோது அனைவரும் கூச்சலிட்டபடி எழுந்து ஓடி வெளியே சென்று பனியைப் பார்த்தனர். வெண்நுரைபோல பார்வைக்குத் தோன்றினாலும் அள்ளுவதற்கு கடினமாக இருந்தது பொருக்குப்பனி. அவர்கள் அதை அள்ளி ஒருவரோடொருவர் வீசிக்கொண்டு கூவிச்சிரித்தனர்.

பாண்டு தன் மைந்தர்களை பனியில் இறக்கி விட்டு பனித்துகளை அள்ளி அவர்கள் மேல் வீசினான். குழந்தைகள் கூசி சிரித்துக்கொண்டு கையை வீசின. கனத்த வயிற்றுடன் குந்தி அவர்களின் விளையாடலை நோக்கி அமர்ந்திருந்தாள். மாத்ரி யுதிஷ்டிரனை தூக்கிக்கொண்டு கீழே பனிவெளியை நோக்கிச் சென்றாள். அவன் கையை நீட்டி பனியை சுட்டிக்காட்டி கால்களை உதைத்து எம்பி எம்பி குதித்தான்.

பாண்டு "இன்னொரு மைந்தனும் வரப்போகிறான் என்பதை என்ணினால் என்னுள்ளும் இதேபோல பனி பெய்கிறது பிருதை" என்றான். "அவன் வருகைக்காக காத்திருக்கிறேன். இங்கே தனிமை இருப்பதனால் காத்திருப்பது பெருந்துன்பமாக இருக்கிறது." குந்தி புன்னகையுடன் "இன்னும் சிலநாட்கள்" என்றாள். "எனக்கு மைந்தர்கள் போதவில்லை. இன்னொரு மைந்தன். அவன் வந்தாலும் போதாது... மேலும் மைந்தர்கள் வேண்டும்... உனக்கு துர்வாசர் அளித்த மந்திரத்தை எத்தனைமுறை பயன்படுத்த முடியும்?"

"ஐந்துமுறை" என்று குந்தி சொன்னாள். "நான் நான்குமுறை அதை உச்சரித்துவிட்டேன்." பாண்டு எழுந்து அவளருகே வந்து அவள் கைகளைப்பற்றிக்கொண்டான். "இன்னொரு மந்திரம் எஞ்சியிருக்கிறது. எனக்கு இன்னொரு மைந்தனைப்பெற்றுக்கொடு!" குந்தி "இல்லை. இன்னொரு மைந்தனை நான் பெறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். மகப்பேறு என்னும் அனுபவத்தின் உச்சத்தை நான் அடைந்துவிட்டேன். இப்போது என்னுள் இருக்கும் மைந்தனைப் பெற்றதும் நான் முழுமையடைந்துவிடுவேன். பிறகு எவருக்கும் என் உதரத்தில் இடமில்லை."

பாண்டு "நான் ஆசைப்பட்டுவிட்டேன் பிருதை... ஒரு மந்திரம் இருக்கையில் அதை ஏன் வீணாக்கவேண்டும்? அது ஒரு மைந்தன் இம்மண்ணில் வருவதற்கான வழி. அதை மூட உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்றான். அவள் நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். அப்பால் மாத்ரி உரக்கக்கூவியபடி ஓட யுதிஷ்டிரன் பனியை அள்ளியபடி துரத்துவது தெரிந்தது. மாத்ரி பனியில் கால்சிக்கி கீழே விழுந்து கூவிச்சிரித்தாள். அவளை நோக்கியபின் பாண்டு "அவள் என்னிடம் அவளுக்கு மைந்தர்கள் இல்லை என்பதைச் சொல்லி வருந்தினாள்" என்றான்.

குந்தி புன்னகையுடன் "அந்த மந்திரத்தை அவளுக்குச் சொல்கிறேன். அவள் தாயாகட்டும்" என்றாள். பாண்டு புன்னகைத்து "ஆம், அதுவே முறை. அவளுடைய வாழ்க்கையில் அப்படியேனும் ஒரு பொருள் பிறக்கட்டும்" என்றான்.

பனிசெறிந்தபடியே வந்தது. வெண்பனிப்போர்வை சென்று உடைந்து பளிங்குவாள்முனையாக மாறி நின்ற எல்லைக்கு அப்பால் கருநீலக் கோடாக புஷ்பவதி சென்றது. பனிப்பொருக்குகள் உடைந்து நீரில் விழுந்து பாறைகளில் முட்டிச்செல்லும் மெல்லிய ஒலியை இரவில் கேட்கமுடிந்தது. மலைச்சரிவில் வழுக்கி ஒன்றை ஒன்று முட்டி இறக்கி கீழே வந்த பனிப்பாறைப் படலங்கள் கீழே பனித்தளம் உருகியபோது உடைந்து பளிங்கொலியுடன் சரிந்து விழுந்து நீரில் மிதந்துசென்றன. குகைக்குள் எந்நேரமும் கணப்பு எரிந்துகொண்டிருந்தது. அந்தச்செவ்வொளி குகைவாயில் வழியாக வெளியே விரிந்த பனிப்படலத்தில் நெருப்புத்தழல்போல விழுந்துகிடந்தது.

நள்ளிரவில் ஒரு அழைப்பை உணர்ந்து குந்தி விழித்துக்கொண்டாள். அழைத்தது யார் என்று எழுந்து அமர்ந்து சுற்றுமுற்றும்பார்த்தாள். அனைவரும் கனத்த கம்பிளிப்போர்வைக்குள் முடங்கி தூங்கிக்கொண்டிருந்தனர். அவள் சிலகணங்கள் கழித்து போர்வையை எடுத்து போர்த்திச் சுற்றிக்கொண்டு வெளியே சென்றாள். கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது.

மறுநாள் முழுநிலவு என்று அவள் நினைவுகூர்ந்தாள். நிலவு மேற்கே அணைந்துவிட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். தன்னை அழைத்தது யார் என்று எண்ணிக்கொண்டாள். நிலவா? புன்னகையுடன் அந்தப்பாறையை அடைந்து அதன் மேல் அமர்ந்து போர்வையை நன்றாகச் சுற்றிக்கொண்டாள். தொடர்ந்து வீசிக்கொண்டிருந்த குளிர்காற்று முழுமையாகவே நின்றுவிட்டிருந்தது. இம்முறை பனிக்காலம் மேலும் நீண்டுவிட்டது என்று சொன்னார்கள். பனி முடிந்துவிட்டதென்று எண்ணிக்கொண்டாள். ஒருவேளை நாளை வெம்மையான சிவந்த சூரியன் எழக்கூடும். பனி உருகக்கூடும்.

கண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள், ஒளியாலான சரிவுகள், ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல, ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள்.

பனிப்பொருக்கு நொறுங்கும் மெல்லிய ஒலியைக் கேட்டு அவள் திரும்பிப்பார்த்தாள். அவளுக்கு நேர்முன்னால் ஒளியே உடலாகத் திரண்டு வருவதுபோல ஒரு சிறிய வெண்ணிறச் சிறுத்தைப்புலி அவளை நோக்கி வந்தது. உடல் சிலிர்க்க அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். அது கனவு என்று ஒருகணம் எண்ணினாள். உண்மை என மறுகணம் தெளிந்தாள். பாதிரிமலரின் பூமுட்கள் போல மெல்லிய வெண்முடி படர்ந்த உடலில் மயிற்பீலி விழிகள் என அசைந்த கரிய புள்ளிகள். உருண்ட முகத்துக்குமேல் இரு வெண்தாழை மடல்கள் போன்ற செவிகள். வெண்ணிற வைரம்போன்ற இரு கண்கள். சிவந்த நாக்கு மலரிதழ்போல வெளிவந்து மூக்கை நக்கி மீண்டது. அதன் சிலிர்த்த மீசையின் வெள்ளிக்கம்பிகளை அவள் மிக அருகே கண்டாள்.

மயங்கிக்கிடந்த குந்தியை காலையில் அனகைதான் கண்டடைந்தாள். அவளை குகைக்குள் கொண்டுவந்து படுக்கச்செய்து சூடான தோலாடையால் உடலைமூடி உள்ளே அனலிட்ட உலோகக்குடுவையை வைத்து வெம்மையூட்டினர். அவள் மலர்ந்த முகத்துடன் புன்னகைக்கும் உதடுகளுடன் இசைகேட்டு தன்னிலையழிந்தவள் போல, தெய்வசன்னிதியில் பித்துகொண்ட பக்தன்போல கிடந்தாள். பாண்டு மருத்துவச்சியை அழைத்து வந்தான். "ஆம், மைந்தன் வரப்போகிறான்" என்றாள் அவள்.

அது ஸ்ரீமுக ஃபால்குன மாதம். உத்தர நட்சத்திரம் என்று பாண்டு எண்ணிக்கொண்டான். குளிர்காலம் வந்தபின்னர் அன்றுதான் முதல்முறையாக சூரியன் கிழக்கு வானில் எழுந்தான். முதலில் மலைச்சிகரங்கள் சூடிய பனிமுடிகள் பொன்னொளி கொண்டன. பின்னர் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவுகளிலும் பரவிய பனி பொற்சுடராக மாறியது. அந்தமலைச்சரிவே ஒரு பொன்னிறப்பாத்திரமாக மின்னுவதை குகைவாயிலில் நின்று பாண்டு கண்டான். தானம் கொள்ள விண்ணை நோக்கி வைக்கப்பட்ட பொற்கலம்.

நடுமதியத்தில் குந்தி மைந்தனை ஈன்றாள். குகை வாயிலில் நின்ற மாண்டூக்யர் அவனிடம் "பூர்வ ஃபால்குனமும் உத்தர ஃபால்குனமும் இணையும் வேளை. மாமனிதர்கள் பிறப்பதற்காகவே காலம் வைத்திருக்கும் வாழ்த்தப்பட்ட கணம்" என்றார். பாண்டு அப்போது வெளியே வியப்பொலிகள் எழுவதைக் கேட்டான். அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது குகைகளில் இருந்த அனைவருமே வந்து பாறைகள் மேல் நின்று கூச்சலிடுவதைக் கண்டனர். உச்சிவானில் திகழ்ந்த சூரியனுக்குக் கீழே அங்கிருந்த பன்னிரு பனிமலைச் சிகரங்களிலும் பன்னிரண்டு சூரியவடிவங்கள் தோன்றியிருந்தன.

பகுதி பதினேழு : புதியகாடு

[ 5 ]

புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை போலத் தெரியும். திறந்து வெளியே வந்தால் ஒவ்வொரு பொருளிலும் வண்ணமாக மட்டுமே வெளிப்படும் ஒளியாலானதாக இருக்கும் இயற்கை.

பனிமலைகளின் வெண்மையை கண்கூசாமல் ஒவ்வொரு அலையும் மடிப்பும் வழிவும் சரிவும் கரவும் தெரிய துல்லியமாகக் காணமுடியும். மலைச்சரிவின் செம்மண்ணும் புல்லெழுந்த வளைவுகளும் கீழே ஓடும் புஷ்பவதியின் உருளைக்கற்கள் சூழ்ந்த நீரும் துல்லியமான வண்ணங்கள் கொண்டு பொலியும் நேரம் அது. விழிகளின் மீதிருந்து மெல்லிய தோல்படலமொன்று உரிந்து சென்றதுபோலிருக்கும். ஒவ்வொரு இலைநுனியையும், மலர்களின் புல்லிப்பிசிர்களையும், பறவை இறகையும், நீர்த்துளியையும் பார்த்துவிடலாமென்று தோன்றும்.

காலை கனத்து மதியத்தை நெருங்கும்தோறும் மலைச்சரிவுகளில் ஒளி குறைந்து வரும். மலைநிழல்கள் மறையும். சிகரங்கள் மேல் முகில்கள் ஒன்றை ஒன்று முட்டியும் தழுவிக்கரைந்தும் செறிந்து சுருங்கி வளைந்து எழுந்தும் வந்து சூழ்ந்துகொண்டு மெதுவாக கரைந்து மடிப்புகளில் வழிந்திறங்கத் தொடங்கும். முதல் இடியோசைக்காக முனிவர்கள் எரியேற்றப்பட்ட வேள்விக்களத்துடன் காத்திருப்பார்கள். வானம் அதிர்ந்ததுமே இந்திரனைத் துதிக்கும் வேதநாதம் எழத்தொடங்கிவிடும். சோமத்தை உண்ட தென்னெருப்பு நாவெழுந்து நடமிடத்தொடங்கும். பின்னர் வானில் அதிரும் இடியோசையையே தாளமாகக் கொண்டு வேதம் முழங்கும்.

ஃபால்குனத்தை இடியின் மாதம் என்றனர் முனிவர்கள். "மலைச்சிகரங்கள் வாள்களைச் சுழற்றி போரிடுவது போலிருக்கிறது!" என்றான் பாண்டு. "அவை உறுமியும் கர்ஜித்தும் மோதிக்கொள்கின்றன. சிலசமயம் நந்ததேவி இடிந்து சரிந்து இறங்கிவருகின்றதோ என்றே தோன்றும். இத்தனை பெரிய மின்னல்களையும் இடியோசையையும் நான் அறிந்ததே இல்லை!" மைந்தர்களுடன் குகை முகப்பில் அமர்ந்துகொண்டு அவன் முன்னால் எழுந்து நின்ற மலைச்சிகரங்களை பார்த்துக்கொண்டிருந்தான். தருமன் இடியோசை கேட்டு அதிர்ந்து தந்தையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு நடுங்க பீமன் ஒவ்வொரு ஓசைக்கும் கைகளைத் தட்டியபடி எம்பிக்குதித்தான்.

இடியோசையை மேகங்களும் மலைச்சிகரங்களும் எதிரொலிக்கும் ஒலி பெரிய சொற்றொடர் போல அலையலையாக நீண்டு சென்றது. "வானம் பேசுவதை இப்போதுதான் கேட்கிறேன் தருமா!" என்றான். "அங்கே முழங்கும் வேதங்களைக் கேட்கிறேன். அந்த சந்தங்களை இடியோசையிலிருந்தே அவர்கள் எடுத்திருக்கிறார்கள். நினைக்கையில் நெஞ்சு விம்முகிறது. என்றோ எவரோ இடியோசையின் ஒலியில் வானுடன் உரையாடியிருக்கிறார்கள்." அவன் தருமனுடன்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் தந்தை சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டிருப்பவை போல விழித்திருந்தன.

அனகை பின்னால் வந்து "மின்னல்களை குழந்தைகள் பார்க்கலாகாது அரசே. இங்கே ஃபால்குனமாத மின்னல்களால் விழியிழந்த பலர் இருக்கிறார்கள்" என்றாள். பாண்டு அவள் குரலால் கனவுகலைந்தவன் போல திகைத்து திரும்பிப்பார்த்து "என்ன?" என்றான். பின்னர் உரக்கச்சிரித்தபடி "அவர்கள் மின்னலின் உடன்பிறந்தவர்கள் அனகை. அவர்களால் மின்னலைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டுவந்துவிடமுடியும்..." என்றான். "அரசே!" என்று அவள் கூவுவதற்குள் அவன் தருமனையும் பீமனையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

மெல்லிய மழைச்சாரல் அலையும் காற்றில் வெண்சாமரப்பீலி போல மலைச்சரிவை வருடிக்கொண்டிருந்தது. அவன் மைந்தர்களுடன் மலைச்சரிவில் ஏறிச்சென்று நீட்டி நின்ற வெண்சுண்ணப்பாறையின் உச்சியில் நின்றான். "இடியால் பேசுபவனே, மின்னல்களால் விளையாடுபவனே, மேகங்களில் வருபவனே, மழையாக மண்ணில் இறங்குபவனே வருக! இதோ உன் மைந்தர்கள்! இதோ!" என்று கைகளை விரித்துக்கூவினான். நாணல்களால் பின்னப்பட்ட தலைக்குடையுடன் பின்னால் வந்த அனகை "அரசே!" என்று கூவினாள்.

பாண்டு தருமனை மழையில் இறக்கி விட்டான். கைகளை வான் நோக்கி விரித்து கூவச்சொன்னான் "இந்திரனே! வெண்மேகங்களின் மேய்ப்பனே! விண்ணகங்களின் அரசனே ! இங்கு வருக!" தருமன் மென்மழையில் நனைந்த உடலை குறுக்கியபடி நின்று கைகளை விரித்தான். பீமன் எம்பி எம்பிக்குதித்தான். தருமன் குளிர்விட்டதும் கைகளை விரித்து உள்ளங்கையில் விழும் சாரலின் ஊசிகளை கைகளை மேலே தூக்கி அசைத்து பிடிக்கமுயன்றான்.

கருமேகப்பரப்பாக இருந்த வானுக்குள் சிறிய மின்னல்கள் அதிர்ந்தபடியே இருந்தன. ஒளியில் மேகங்கள் யானைமத்தகங்களாக, வெண்புரவிப்பிடரிகளாக, தாவும் மான்களாக, அன்னச்சிறகுகளாக, மாளிகைமுகடுகளாக, மலையடுக்குகளாக துலங்கி அணைந்தன. சற்று பெரிய மின்னல் ஒன்றில் அனகை மலைச்சரிவில் மழைநீர் வழியும் செம்மண்பரப்பும், வெண்ணிறப்பாறைகளும், அப்பால் பனிமலைமுகடுகளும் எல்லாம் ஒளியைப்பிரதிபலித்து சுடர்ந்தணைவதைக் கண்டாள். சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் வெண்முரசுகளாக மாறி அதிர்ந்து ஓய்ந்தன.

அவள் அருகே சென்று "அரசே, திரும்பிவிடுவோம்" என்று கூவினாள். "இன்னும் அவன் வரவில்லை. வெண்ணிற யானைமேல் அவன் எழுந்தருளவில்லை" என்றான் பாண்டு. அவள் குனிந்து பீமனின் கைகளைப்பிடிக்கும்போது தரை ஒளியாக மாறி துடித்துடித்து அணைந்தது. அவள் விழிகள் வழியாக நுழைந்த ஒளி சித்தத்தை நிறைத்து ஒளி மட்டுமேயாக சிலகணங்கள் அங்கே நின்றாள். மலைப்பாறைகளை தோல்சவ்வுகளாக மாற்றி உடைத்துவிடுவதுபோல பேரொலியுடன் இடி எழுந்தது. அப்பால் கைலாயம் வரை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் கர்ஜனை புரிந்தன. மாறி மாறி அவை முழக்கமிட்டபடியே இருந்தன. நெடுநேரம் கழித்து அப்பால் மிகமெல்ல ஒரு மலை 'ஓம்' என்றது.

தரைச்சேற்றில் விழுந்திருப்பதை உணர்ந்து அனகை எழுந்து கண்களை கைகளால் கசக்கிக்கொண்டாள். நீருக்குள் ஒளி வருவதுபோல மெல்ல காட்சிகள் துலங்கி எழுந்தன. தருமன் தந்தையைக் கட்டிக்கொண்டு ஒட்டியிருக்க அவனை அணைத்தபடி பாண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தான். அருகே இடையில் கைவைத்து வானைநோக்கி பீமன் நின்றிருந்தான்.

அனகை பீமனை அள்ளிப்பற்றிக்கொண்டாள் "அரசே வாருங்கள்... வந்துவிடுங்கள்" என பாண்டுவை கைப்பிடித்து இழுத்தாள். அவன் கனவில் வருபவன் போல அவளுடன் வந்தான். குகைக்குள் நுழைந்ததும் சிலகணங்களுக்கு அவளுக்கு முழு இருட்டே தெரிந்தது. பின் கணப்பின் செந்நெருப்பு தெளிந்து வர காட்சிகள் பிறந்தன. உள்ளேசென்று மரவுரியாடை கொண்டுவந்து பீமனின் தலையைத் துடைத்தாள். பாண்டு தருமனின் தலையைத் துடைத்தான்.

உள்ளே குந்தி கிடந்த குகைநீட்சியில் இருந்து மாத்ரி ஓடிவந்தாள். "அரசே, மைந்தன் புன்னகைசெய்தான்... சற்று முன் மிகப்பெரிய மின்னல் வந்தபோது அவன் அதை நோக்கி புன்னகைத்ததை நான் கண்டேன்" என்று அக எழுச்சியால் உடைந்த குரலில் கூவினாள். அனகை திகைப்புடன் அவளைப்பார்த்தபின் பாண்டுவைப் பார்த்தாள். பீமன் வெளியே சுட்டிக்காட்டி மழலைக்குரலில் "யானை... வெள்ளை!" என்றான்.

அவனுடைய மொழி அனகைக்கு மட்டுமே விளங்குமென்றாலும் அவன் சொல்வதென்ன என்று அவள் அறியவில்லை. "என்ன? எங்கே?" என்றாள். பீமன் எம்பிக்குதித்து இரு கைகளையும் விரித்து கண்கள் வியப்பில் அகல "யானை! வெள்ளை!" என்றான். தருமன் பாண்டு அவன் தலையைத் துவட்டிக்கொண்டிருந்த மரவுரியை கைகளால் விலக்கி "ஆமாம்... நானும் பார்த்தேன். மிகப்பெரிய யானை... வெள்ளையானை!" என்றான். பாண்டு அப்படியே முழந்தாளிட்டு தருமனையும் பீமனையும் அணைத்துக்கொண்டான்.

ஆறுநாட்கள் ஜாதகர்மங்கள் முடிந்ததும் ஏழாவது நாள் மைந்தனுக்கு நாமகரணம் செய்யவேண்டும் என்று பாண்டு முதற்குருவான சரத்வானை அணுகி பணிந்து வேண்டிக்கொண்டான். தன் மாணவர்களுடன் வித்யாபீடத்தில் அமர்ந்திருந்த சரத்வான் "மைந்தனின் நாளும் பொழுதும் அஸ்வினி தேவர்களின் குலத்தைச்சேர்ந்த மைத்ரேய ரிஷியால் கணிக்கப்பட்டது அரசே. அவன் விண்ணாளும் இந்திரனின் மைந்தன். இந்திரன் ஆதித்யர்கள் சூழ மண்ணிறங்கிய பொழுதில் பிறந்தவன். இந்த புஷ்பவதிக்கரை அவன் பிறந்தமையால் என்றும் புகழ்பெறுவதாக" என்றார்.

மழைச்சாரல் இருந்துகொண்டே இருந்தமையால் வேதவேள்விக்கென ஒதுக்கப்பட்ட வெண்குகைக்குள்ளேயே நாமகரணத்துக்கான அஸ்வமேதாக்னி எழுப்பப்படட்டும் என்று வைதிகர்தலைவரான மைத்ரேயர் சொன்னார். வேள்விப்புகை படிந்த கரி கரியநுரை போல படர்ந்திருந்த கூரைவளைவுகொண்ட குகைக்குள் வேள்விக்களம் அமைக்கப்பட்டது. பாண்டு அங்கே அவன் வேட்டையாடி உருவாக்கிய பதினெட்டு மான்தோல்களை காணிக்கையாகக் கொடுத்து முனிவர்களை வேதவேள்விக்கு வரவேற்று அழைத்துவந்தான். உலர்ந்த தர்ப்பைமீது மான்தோல்களைப் போர்த்தியபடி அமர்ந்த ஹோதாக்கள் அவியளிக்க அஸ்வமேதாக்னி முட்டையை உடைத்து வெளியே வரும் செந்நிறமான குஞ்சு போல எழுந்து மெல்லிய சிறகுகளை விரித்து அசைத்தது.

வேள்வி தொடங்கும் நேரத்தில் பன்னிரு மலைவேடர்கள் கீழே புஷ்பவதியினூடாக மேலேறி அங்கே வந்தடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் மூன்றுமாதம் நோன்பிருந்து ஃபால்குனமாதத்தில் தங்கள் மழைத்தெய்வங்களுக்கு கொடையளிப்பதற்காக மலையேறிச்செல்பவர்கள். முனிவர்கள் அவர்களை வரவேற்று உணவும் நீரும் அளித்தனர். அவர்கள் முனிவர்களுக்காக மரக்குடுவையில் கொண்டுவந்திருந்த பூசைக்குரிய பஞ்சகந்தங்களான பச்சைக்கற்பூரம், குங்கிலியம், கஸ்தூரி, புனுகு, சவ்வாது ஆகியவற்றை அளித்து வணங்கினர்.

கல்மணிமாலையும் இறகுத் தலையணியும் புலித்தோலாடையும் அணிந்த வேட்டுவர்கள் தாமிரநிறம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களின் கண்கள் மிகச்சிறியதாக சுற்றிலும் வெந்து சுருங்கியதுபோன்ற தோலுடன் இருந்தன. அவர்களின் அரசனாகிய தீர்க்கன் உயர்ந்த செங்கழுகின் இறகைச் சூடியிருந்தான். மெல்லிய மான்தோலாடையில் கரியவைரம் போன்ற மைந்தன் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் பன்னிருவரும் எழுந்து மும்முறை தலைவணங்கி வாழ்த்தினர். தலைவன் கொம்புப்பிடி போட்ட தன் குத்துவாளை மைந்தனின் காலடியில் காணிக்கையாக வைத்தான்.

வேள்விமுகப்பில் பாண்டு மைந்தனை மடியில் வைத்தபடி அமர இருபக்கமும் குந்தியும் மாத்ரியும் இரு மூத்தமைந்தர்களையும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டார்கள். நெய்யூட்டி எழுப்பப்பட்ட அஸ்வமேதாக்னி வேதத்தைக் கேட்டு நடமிட்டது. வேள்விச்சாலைக்குள் எரிகுளத்துக்கு அருகே தேவதாரு மரம் நெய்யூற்றப்பட்டு குங்கிலியம்பூசப்பட்டு நின்றது. மைத்ரேயரும் அவரது மாணவர்களும் மைந்தனின் இறைத்தந்தையான இந்திரனை அழைத்து அதில் குடியேறும்படி கோரினர். வேள்வித்தீ எழுந்து எழுந்து தாவியது. அதன் சிதறல் ஒன்று சென்று தொட்டதும் இந்திரன் தேவதாருவில் ஒளிமிக்க சிவந்த சிறகுகளுடன் எழுந்தருளினான். முனிவர்கள் கைகூப்பி 'ஓம் ஓம் ஓம்' என்றனர்.

ஏழு வகை சமித்துக்களாலும் பன்னிரு வகை அன்னங்களாலும் நான்கு வேதங்களாலும் இந்திரனை மகிழ்வித்தார்கள். அந்த நாமகரண விழாவில் தனுர்வேத ஞானியான சரத்வான் மைந்தனை தன் வலத்தொடையில் வைத்து தன் முன் மணி, பொன், ஏடு, மலர், கனி, கூழாங்கல், புல்லிதழ் ஆகிய ஏழையும் வைத்து கண்களை மூடி தியானித்தபின் கைகளை நீட்டி ஒன்றை எடுத்தார்.

தன் கையில் வந்த புல்லிதழை நோக்கியபின் திரும்பி "தேவி, ஆதிபிரஜாபதியான பிருதுவுக்கு மைந்தனாகப்பிறந்தவன் அந்தர்தானன். அவனுடைய மைந்தன் ஹாவிர்த்தானன். ஹாவிர்த்தானனுக்கும் தீக்‌ஷணைக்கும் மைந்தனாக பிராசீனபர்ஹிஸ் பிறந்தான். அவனே விற்கலையின் பிரஜாபதி. பிராசீனபர்ஹிஸ் புலரியின் பொன்னொளிக்கதிரான சுவர்ணையைப் புணர்ந்து பெற்ற பத்து மைந்தர்களான பிரசேதஸ்களிலிருந்து வளர்ந்தது தனுர்வித்தை. அது மெய்மையை அருளி மானுடனை வீடுபேறடையச் செய்யும் என்பதனால் அதை தனுர்வேதம் என்றனர் முன்னோர். அரசி, பிரசேதஸ்கள் விளையாடுவதற்கென்று பிராசீனபர்ஹிஸால் உருவாக்கப்பட்டதே அர்ஜுனப்புல். அவரது பொன்னொளி மண்ணில்பட்ட இடங்களில் பொற்கதிராக அது முளைத்தெழுந்தது. தனுர்வேதத்தின் முதல் ஆயுதம் அதுவே" என்றார்.

"பிரசேதஸின் கரங்களில் வில்லாகவும் அம்பாகவும் ஆன அர்ஜுனப்புல்லை வாழ்த்துவோம். இதோ உன்மைந்தனை எண்ணி நான் எடுத்தது அதுவாக உள்ளது. இவன் வாழ்நாளில் மணிமுடிகள் இவன் பாதங்களில் பணியும். பாரதவர்ஷமே இவன் வெல்வதற்காகக் காத்து தவமிருக்கும். எட்டு திசையிலும் மங்கையர் இவனுடைய மைந்தர்களுக்காக காத்திருப்பார்கள். மாபெரும் குருநாதர்களை அடைந்து ஞானங்களனைத்தையும் கற்பான். மெய்ஞானியொருவனின் அருகமர்ந்து ஞானத்தை கடப்பதெப்படி என்றும் அறிவான்".

"ஆயினும் இறுதிக்கணம் வரை இவன் கையிலும் தோளிலும் அமர்ந்து துணைவரப்போவது இவனுடைய அம்பும் வில்லுமே. அவற்றில்தான் இவன் ஆன்மா அமைந்திருக்கும். இவனை வாழ்க்கையெங்கும் இட்டுச்செல்லப்போகும் அவையே முக்திக்கும் இட்டுச்செல்லும். ஆதிவில்லம்பின் பெயரையே இவனுக்களிக்கிறேன். இவன் இன்றுமுதல் அர்ஜுனன் என்றே அறியப்படுவானாக!" அர்ஜுனப்புல்லை அவன் கையில் வளையலாக அணிவித்து அவன் காதில் அவனுக்கு அவரிட்ட பெயரை அழைத்தார்.

அர்ஜுனன் என்ற பெயர் ஒலித்ததும் முனிவர்கள் 'ஓம் ஓம் ஓம்' என முழங்கினர். "இந்திரமைந்தன் அர்ஜுனன் புகழ் ஓங்குக!" என்று பிரம்மசாரிகள் வாழ்த்தொலி எழுப்பினர். விஷ்ணுவில் தொடங்கி விசித்திரவீரியன் மைந்தன் பாண்டுவரை அவனுடைய வம்சவரிசையைச் சொல்லி அவனை அவன் மூதாதையர் வாழ்த்தட்டும் என்று ஏகத கௌதமர் வாழ்த்தினார். பாரதவர்ஷ மண்ணும் அவனை வாழ்த்தும்படி வேண்டி துவிதீய கௌதமர் வாழ்த்தினார். விண்ணகத்தெய்வங்கள் வாழ்த்தட்டும் என திரித கௌதமர் மலர்கொண்டு வணங்கினார்.

வேள்வியின் ஹோதாக்கள் மாறினர். "அரசே, மைந்தனுக்கு உணவூட்டியபின் தாங்கள் மட்டும் இங்கே திரும்பி வரலாம். கையில் கட்டியிருக்கும் தர்ப்பையை கழற்றவேண்டாம்" என்றார் மைத்ரேயர். குந்தி மைந்தனைத் தூக்கிக்கொண்டு எழுந்தாள். அவனை நோக்கி "அர்ஜுனா அர்ஜுனா" என்றாள். பாண்டு "கரியநிறம்... கரிய மலர்ந்த விழிகள்... இவனை நான் கிருஷ்ணன் என்றே அழைப்பேன்" என்றான். "வேறெந்தப் பெயரையும் நான் சொல்லமாட்டேன். என் கருமணி முத்து அவன். அவ்வளவுதான். அதுமட்டும்தான்" என்று உணர்ச்சியால் நடுங்கும் குரலுடன் சொல்லி அவன் சிவந்த உள்ளங்கால்களில் குனிந்து முத்தமிட்டான்.

"நான் அவனை பார்த்தன் என்றே அழைக்கப்போகிறேன். எனக்கு அவன் பிருதையின் மைந்தன் மட்டும்தான்" என்றாள் மாத்ரி சிரித்துக்கொண்டு. பாண்டு "பார்த்தன்... ஆம் அதுவும் நல்ல பெயர்தான்" என்றான். "அக்கா அவன் பிறப்பதற்குள்ளேயே அவனுக்கு பாரதன் என்று பெயரிட்டுவிட்டார்கள்" என்றாள். அவ்வழியே நெய்யுடன் சென்ற மாண்டூக்யர் சிரித்தபடி "அரசி, அவன் பாரதம் என்னும் அன்னையின் தவப்புதல்வன். காலம்தோறும் அவனுக்கு பெயர்கள் பெருகிக்கொண்டே இருக்கும்" என்றார்.

அவர்கள் வெளியே வந்தபோது மழை நின்றுவிட்டிருந்தது. இலைநுனிகள் குனிந்து குனிந்து ஒளித்துளிகளை சொட்டிக்கொண்டிருக்க தொலைதூரத்து மலைச்சரிவுகளில் எல்லாம் ஈரம் பளபளத்தது. மலையிடுக்குகளில் யானைத்தந்தங்கள் போல நூற்றுக்கணக்கான அருவிகள் முளைத்திருந்தன. கரிய உச்சிப்பாறைகள் வெள்ளி உத்தரீயங்களை அணிந்தவை போல வழியும் ஈரத்தில் மின்னிக்கொண்டிருந்தன.

கனவுகண்டு விழிக்கும் விழியிமைகள் என மிகமெல்ல மேகவாயில் திறந்தது. சூரியனின் மேல்வட்டம் ஒளிவிடும் கூரிய விளிம்புடன் எழுந்து வர அனைத்து ஈரப் பரப்புகளும் ஒளிகொண்டன. கண்கள் கூச பாண்டு பார்வையை தாழ்த்திக்கொண்டான். அருகே நின்றிருந்த செடியின் இலைப்பரப்புகள் ஒவ்வொன்றும் ஒளிகொண்டு மின்னுவதைக் கண்டான். "மீண்டும் மழை வரும் அரசே..." என அனகை அவனை அழைத்தாள். "இளவரசருக்கு உணவூட்டவேண்டிய நேரம் ஆகிவிட்டது."

யானை உறுமுவதுபோல வானம் ஒலித்தது. பெருமுரசொன்றின் தோலில் கையால் வருடியதுபோல எதிரொலி எழுந்தது. மெல்லிய வெண்தூசாக மழை பொழியத்தொடங்கியது. நீர்ச்சிதர்கள் பீமனின் தலையிலும் தோளிலும் மலரிதழின் பூமுள் போல பரவிநின்றன. குந்தியின் கூந்தலிழைப்பிசிறுகளில் சிறிய பளிங்கு மணிகளாக ஆயின. மாத்ரி "அதோ" என்றாள். அவன் "என்ன?" என்று கேட்க அவள் குதித்துக்கொண்டு "அதோ! அதோ!" என்றாள்.

குந்தியும் வியப்பொலி எழுப்பியபோதுதான் அவன் வானைநோக்கினான். வடக்கையும் தெற்கையும் இணைத்தபடி மிகப்பிரம்மாண்டமான வானவில் ஒன்று எழுந்திருந்தது. அவன் அது கனவா என்றே ஐயுற்றான். அத்தனை துல்லியமான பேருருவ வானவில்லை அவன் கற்பனையிலும் கண்டதில்லை. அனகை "பர்ஜன்யபதம் வானவில்லுக்குப் புகழ்பெற்றது என்றார்கள்... இங்கே உள்ள தெளிவான வானம் எங்குமில்லை" என்றாள். தருமனைத் தூக்கி "இந்திரதனுஸ்..." என்று பாண்டு சுட்டிக்காட்டினான். பீமன் அதை வளைக்க முயல்வதுபோல தன் இரு கைகளையும் விரித்துக்  காட்டினான்.

"ஆ!" என்று மாத்ரி கூவினாள். "இங்கே இன்னொன்று... இதோ!"' மறுபக்கம் பனிமலைகளுக்குமேல் இன்னொரு சிறிய வானவில் எழுந்திருந்தது. "அதோ... அங்கே ஒன்று!" என்று அவள் கைகளைக் கொட்டியபடி கூவி துள்ளிக்குதித்தாள். "அக்கா... நிறைய வானவிற்கள்... இதோ!" குந்தி புன்னகையுடன் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்திருக்க வானை நோக்கிக்கொண்டு நின்றாள். மேலும் மேலும் வானவிற்கள் எழுந்தன. எல்லா மலையுச்சிகளுக்குமேலும் வானவிற்கள் நின்றன. அனைத்து மலையருவிகளும் வானவில் ஒன்றை சூடியிருந்தன.

சற்று நேரத்தில் எங்கும் வானவிற்களை மட்டுமே பாண்டு பார்த்தான். புஷ்பவதியின் ஓடைகளிலெல்லாம் வானவிற்கள் நின்றன. ஒவ்வொரு நீர்ச்சரிவிலும் வானவிற்கள் முளைத்தன. பாண்டு "இதோ... இதைப்பார்!" என்றான். அவனருகே நின்றிருந்த செடியின் இலைநுனியில் சொட்டிய துளி வானவில்லை கருக்கொண்டிருந்தது. குகைவிளிம்புகளில் எல்லாம் வானவிற்களை சுமந்த நீர்த்துளிகள் ஊறி ஆடி உதிர்ந்தன. பாண்டு குந்தியின் தலைமுடியில் நின்ற சின்னஞ்சிறுநீர்த்துளிகளில் அணுவடிவ வானவிற்களைப் பார்த்தான்.

மலைச்சரிவேறிய வேட்டுவர்கள் அப்போது மிக உயரத்திற்குச் சென்றிருந்தனர். ஈரம் வழிந்த வெண்பாறைகளின் வெடிப்புகளில் அவர்கள் தங்கள் வலுவான விரல்களைச் செலுத்தி தொற்றி மேலேறினர். உச்சிப்பாறைமேல் எழுந்து நின்ற வேட்டுவர்தலைவனாகிய தீர்க்கன் வானவில்லை இடையில் கைவைத்து நிமிர்ந்து நோக்கினான். அதன் விளிம்புகள் மெல்லக் கரையத்தொடங்கியதும் திரும்பி மேலும் ஏறத்தொடங்கினான்.

அவர்கள் மேலும் எட்டு பெரும்பாறைகளை ஏறிச்சென்றனர். இறுதிப்பாறை வெள்ளையானையின் புடைத்த வயிறுபோல பிடிமானமில்லாமல் நின்றிருந்தது. அவர்களில் ஒருவன் தன் தோளில் இருந்த மூங்கில்கூடையிலிருந்து பெரிய உடும்பை எடுத்து சுழற்றி வீசினான். நான்காவது முறை அது பாறையைப்பற்றிக்கொண்டதும் அதன் வாலில் கட்டப்பட்டு தொங்கிய பட்டுநூலைப் பற்றி மெல்ல மேலேறினான். உடும்பை அடைந்து அங்கே ஒரு பாறை இடுக்கில் மூங்கில்தறியை அறைந்து செலுத்தி அதைப் பற்றிக்கொண்டு நின்றபின் உடும்பை வாலைப்பற்றி மேலே தூக்கி எடுத்து மீண்டும் வீசினான்.

எட்டுமுறை உடும்பை வீசி அவன் உச்சிப்பாறையை அடைந்தபின் பட்டுச்சரடை அங்கே நின்ற மரத்தில் கட்டி கீழே தொங்கவிட்டான். அவர்கள் ஒவ்வொருவராக அதைப் பற்றிக்கொண்டு மேலேறிச்சென்றனர். ஓய்வெடுத்தபின் மீண்டும் மேலேறிச்சென்று தெய்வங்களின் குகைகளை அடைந்தனர். வில் போல வளைந்து சூழ்ந்திருந்த ஒரே சுண்ணப்பாறையில் ஏழு மலைக்குகைகள் கரிய வாய்திறந்து நின்றன.

அவர்கள் அருகே சென்று மண்ணில் விழுந்து தெய்வங்களை வணங்கினர். பின்னர் அவர்களில் ஒருவன் சுளுந்துச்சுள்ளியை எடுத்து அதில் அரக்கைப்பூசினான். சிக்கிமுக்கிக் கல்லை உரசிப் பற்றவைத்ததும் சுளுந்து தழல்விட்டெரியத்தொடங்கியது. அவர்கள் மெல்ல முதல்குகைக்குள் நுழைந்தனர். இருண்ட குகைக்குள் நீரில் விழுந்து மூழ்கும் செந்நிற மலரிதழ்போல சுளுந்தின் ஒளி சென்றது. அவர்களின் காலடியோசையும் மூச்சொலியும் எதிரொலி எழுப்பின.

மேலே செறிந்திருந்த பல்லாயிரம் வௌவால்களின் ஒலிகள் ஒன்றிணைந்து ஒரு மெல்லிய முழக்கமாக ஆகிவிட்டிருந்தன. அண்ணாந்து நோக்கியபோது வேள்விக்குகையின் கரிப்படலம்போலத் தெரிந்தன. சிறகுகள் அசைய கரிய திரவம் போல அப்படலம் நெளிந்தது. பல்லாயிரம் விழிகள் பந்தத்தை ஏற்றி மின்னின. ஒரு வௌவால் நீரில் நீந்தும் ஒலியுடன் அவர்களைக் கடந்துசென்றது. சிக்கிக்கற்களை உரசும் ஒலியுடன் ஓரிரு வௌவால்கள் கீழே ஒலியெழுப்பின.

குகைச்சுவர்களின் வளைந்த சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை அவர்கள் கண்டனர். வெண்கோடுகளாலும் காவிநிறக் கோடுகளாலும் வரையப்பட்ட சிறிய சித்திரங்கள். குனிந்து மேலும் திமிலெழுந்த மாடுகளின் வரிசை. கிளைபின்னி விரிந்த கொம்புகள் கொண்ட மான்கள். அலைகள்போல பிடரிபறக்கப் பாய்ந்தோடும் குதிரைக்கூட்டங்கள். பெரிய கோரைப்பற்கள் வாய்க்கு வெளியே நீண்டு நிற்க வாய் திறந்த புலிகள். பந்த ஒளியில் அச்சித்திரங்கள் திரைச்சீலை போல் அலைபாய்ந்தன.

பாண்டு மீண்டும் வந்து வேள்விபீடத்தில் அமர்ந்துகொண்டான். வேள்விமுடிந்ததும் மைந்தன் பிறந்த வேளையைப்பற்றி சரத்வானின் மாணவர்களாகிய கனகனும் காஞ்சனனும் சேர்ந்து எழுதிய 'ஃபால்குனம்' என்னும் சிறுகாவியத்தை முனிவர்கள் கூடிய அவையில் வாசித்து அவையேற்றினார்கள். குகைநடுவே பெரியதாழைமலர்க்கொத்துபோல நெருப்பு நின்றெரிய அதைச்சுற்றி கூடியிருந்த முனிவர்களின் முகங்களும் செந்தழலென அலையடிக்க அக்காவியத்தை வாசித்தனர்.

கரியகுழந்தை எடுத்த செயலை எண்ணி முடித்த இளங்கரங்களுடன் மண்ணுக்குவந்தது. அப்போது மேகங்களில் இடியென மலையடுக்குகளுக்குள் இருந்து உடலிலிக் குரலெழுந்தது. 'குந்தியே, இவன் வீரத்தாலும் ஞானத்தாலும் சமன்செய்யப்பட்டவனென்று அறிவாயாக. விஷ்ணுவுக்குப்பிரியமான தோழன் இவன். சிவனுடன் வில்பொருதி அவனை மகிழ்விக்கப்போகிறவன். அக்னிக்கு விருந்தளிப்பவன். இருண்டநாகங்களை அழிப்பவன். என்றுமழியாத பெரும்புகழை பெறவிருப்பவன்.' குந்தி கைகூப்பி வணங்கியபோது ஆனந்தக்கண்ணீர் அவள் அணிந்திருந்த மணிமாலையை விட ஒளிமிக்கதாக மார்பில் வழிந்தது.

ஃபால்குனமாதம் புனிதமடைந்தது. அது இனி அவனாலேயே அறியப்படும். ஸ்ரீமுக ஃபால்குன வேளை உத்தரநட்சத்திரம் ஒளிகொண்டது. அவன் வரவுக்காகவே அவ்வேளை யுகங்கள் தோறும் காத்திருந்தது. அவன் பிறந்தபோது தாநா, அரியமா, மித்ரன், வருணன், அம்சன், பகன், இந்திரன், விவஸ்வான், பூஷா, பர்ஜன்யன், த்வஷ்டா, விஷ்ணு என்னும் பன்னிரு ஆதித்யர்களும் தங்கள் பேரொளிக்கதிர்களை விரித்து விண்ணில் தோன்றினார்கள்.

விண்ணகம் தேவர்களால் நிறைந்தது. மைந்தனின் எழில் காண பதினொரு ருத்ரர்களும் செந்நிறமான பெருக்காக கீழ்வானில் எழுந்தனர். அஸ்வினிதேவர்களும் அஷ்டவசுக்களும் எழுந்தன. அப்சரஸ்களும் தேவகன்னியர்களும் ஓளிர்ந்த மேகங்களில் நடனமிட்டனர். விண்ணக முனிவர்கள் வேதநாதமெழுப்பியபடி அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் வீசிய மஞ்சளரிசியும் மலர்களும் ஒளிவிடும் மென்மழையாக விண்ணிலிருந்து மண்ணுக்குப்பொழிந்தன.

தன் மைந்தனின் பிறப்பைக் காண வெண்ணிற ஐராவதத்தின் மேல் இந்திரன் வானில் மிதந்து வந்தான். அவன் வருகையை அறிவிக்க கீழ்வானில் இடியோசை எழுந்தது. மேகங்களுக்குள் அவனுடைய வஜ்ராயுதத்தின் ஒளி சுடர்ந்து அணைந்தது. விண்நடுவே நின்று 'இவன் நானேயாம்' என அவன் சொன்னபோது இடியோசை எதிரொலிக்க மண்ணில் எழுந்த மலைச்சிகரங்கள் அதை ஆதரித்தன. தன் மைந்தனை வாழ்த்த அவன் வைத்துச்சென்ற ஏழுவண்ணமுள்ள இந்திரவில் மேற்குத்திசையில் நின்றிருந்தது. அவ்வொளியில் மண்ணிலுள்ள அனைத்து நீர்த்துளிகளிலும் பலகோடி இந்திரவிற்கள் எழுந்தன.

'இந்திரனின் மைந்தனை வாழ்த்துவோம்! தன்னைக்கடத்தலே ஞானமெனில் நிகரிலா வீரனே முதல்ஞானி என்றறிக. ஞானியரிடம் ஞானியென்றும் வீரரிடம் வீரனென்றும் அறியப்படுபவனே முழுமுதலறிவைத் தீண்டியவனாவான். ஞானத்தையும் வீரத்தையும் இருகைவித்தையாகக் கொண்ட சவ்யசாசியை வணங்குவோம். அவனை மண்ணுக்கு அனுப்பிய பிரம்மம் தன்னையே தான்காணவிரும்பியது போலும். ஓம் ஓம் ஓம்'

அந்தி இருண்டு வந்தது. வானில் மின்னல்கள் ஒளிர்ந்துகொண்டே இருந்தன. இடியோசைகள் குகைகளுக்குள் புகுந்து அவற்றின் அறியப்படாத ஆழங்களுக்குள் சென்று எதிரொலித்தன. மலையுச்சியில் ஏழாவது குகையின் ஆழத்தில் தீர்க்கனும் அவன் குடிகளும் பந்த ஒளியில் ஒரு சிறு செந்நிற ஓவியத்தைக் கண்டனர். வில்லேந்தி நின்ற சிறுவன் ஒருவனுக்குப்பின்னால் பன்னிரு சூரியர்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தனர்.

பகுதி பதினேழு : புதியகாடு

[ 6 ]

மீண்டும் சதசிருங்கத்திற்கு திரும்பும்போது மாத்ரி கருநிறைந்திருந்தாள். குந்தியின் கைககளைப்பிடித்தபடி பீமன் நடந்து வந்தான். மூன்று வயதே ஆகியிருந்தாலும் அவன் குந்தியின் இடையளவுக்கு வளர்ந்திருந்தான். ஏழுமாதத்திலேயே அவன் எழுந்து நடக்கவும் மலைப்பாறைகளில் தொற்றி ஏறவும் தொடங்கியதைக்கண்டு மாண்டூக்யர் "சூதர்களிடம் பிரம்மன் விளையாடுகிறான். அவர்களுக்கு தங்கள் சொல்லினால் பிரம்மனுடன் போட்டியிடுவதாக ஓர் எண்ணம். இத்தகைய ஒருவனை அவர்கள் மக்கள் நம்பும்படி எப்படி பாடப்போகிறார்கள் என்று அவன் மண்ணை நோக்கி புன்னகைசெய்கிறான்" என்றார். பெரிய பாறைக்கற்களைத் தூக்கி மலைச்சரிவில் வீசி எம்பிக்குதித்து கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்த பீமனைநோக்கி குந்தி புன்னகைசெய்தாள்.

ஒவ்வொருநாளும் அவன் வல்லமை ஏறி ஏறி வந்தது. பகலெல்லாம் புஷ்பவதியின் கரையிலும் மலைச்சரிவிலும் மான்களைத் துரத்தியபடி ஓடி அலைந்தான். மலைச்சரிவுப்பாறைகளில் ஏறி உச்சியில் நின்றுகொண்டு அப்பால் தெரிந்த நந்ததேவியையும் பன்னிருதம்பியரையும் பார்த்து நின்றான். மலையிலும் காட்டிலும் அவனுக்கு வகைவகையான உணவுகள் கிடைத்துக்கொண்டிருந்தன. காய்கனிகள், கிழங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள், உச்சிமலைக்குடைவுகளில் கனிந்து தொங்கிய மலைத்தேன்கூடுகள். அவன் வாய்க்குள் நாக்கு எரிகுளத்துத் தழல் போல எப்போதும் சுழன்றாடிக்கொண்டிருந்தது.

சதசிருங்கத்துக்கு திரும்புவதைப்பற்றி குந்திதான் சொன்னாள். "அவனுக்குரிய முடிவில்லாத உணவு அங்குதான் உள்ளது. குளிர்காலத்தில் இங்கே மிருகங்கள் வாழ்வதில்லை" என்றாள். மாண்டூக்யர் அதை ஒப்புக்கொண்டார். "சதசிருங்கம் மீண்டும் முளைத்தெழுந்திருக்கும். காட்டுத்தீ காட்டைஅழிப்பதில்லை. தூய்மைசெய்கிறது" என்றார். வேனிற்காலம் முடிந்து குளிர்காற்று வீசத்தொடங்கியதும் அவர்கள் திரும்பினர். மலையிறங்குவதில் தேர்ந்த பிரம்மசாரிகளுக்கு நிகராகவே பீமனும் சென்றான். அனகை "இளவரசே... சமரா, இளவரசை பார்த்துக்கொள்" என்று கூவினாள். குந்தி புன்னகையுடன் "அவனால் ஆகாதது ஏதுமில்லை அனகை" என்றாள்.

வலத்தோளில் தருமனையும் இடத்தோளில் பார்த்தனையும் சுமந்தபடி முன்னால் சென்ற பாண்டு திரும்பி மூச்சிரைக்க நிறை வயிற்றுடன் தன்னுடன் வந்த மாத்ரியை நோக்கி "பிரம்மனைப்போல இன்னுமிரு தோள்கள் எனக்கிருக்கவேண்டுமென விழைகிறேன். வருபவர்களை எங்கே ஏந்துவதென்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்றான். மாத்ரி முகம் சிவந்து உதடுகளைக் கடித்தபடி "என் மைந்தர்களை பீமன் ஏந்திக்கொள்வான்" என்றாள். "நான் மைந்தர்களைப்பெறுவதே சுமப்பதற்காகத்தான். இன்னும் நூறு பிள்ளைகளைப் பெற்றுக்கொடு. என் நெஞ்சிலும் மடியிலும் இடமுண்டு. கீழே மலையடிவாரத்தில் கனிசுமந்து நின்ற ஒரு தாய்ப்பலாவைப் பார்த்தேன். அதைப்போல மைந்தர்களைச் சுமந்து கனத்து நிற்பதே என் வீடுபேறு" என்றான்.

"அங்கே உங்கள் தமையனார் நூறு மைந்தரைப்பெறப்போகிறார் என்கிறார்கள்" என்றாள் மாத்ரி சிரித்துக்கொண்டு. "ஆம், சொன்னார்கள். காந்தாரத்து அரசி மூன்றாவதும் கருவுற்றிருக்கிறார்களாம். இம்முறை அது பெண் என்கிறார்கள் மருத்துவர்கள்." சிரித்தபடி "எனக்கு மைந்தர்கள் போதவில்லை. ஆனால் பெண்கள் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுகிறது. தமையனார் நல்லூழ் கொண்டவர். கனிசுமந்து கிளை ஒடிவதைப்போல மரம் பிறந்ததற்கு பொருள் வேறென்ன உள்ளது?" என்றான் பாண்டு.

"அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் இருக்கிறதா?" என்று மாத்ரி கேட்டாள். "அன்னையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தனிமையில் வருகிறது. மைந்தர் பிறந்த செய்திகளைக் கேட்டபின்னர் தமையனை அவரது மடிநிறைத்திருக்கும் மைந்தர்களுடன் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. மூத்தவனாகிய சுயோதனன் என் தமையனைப்போலவே பேருடலுடன் இருக்கிறான் என்றார்கள். அவனைமட்டுமாவது ஒருமுறை எடுத்து என் மார்பில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்" பாண்டு சொன்னான்.

"ஆனால் இனி நகர்நுழைவதில்லை என்ற எண்ணத்துடன்தான் நான் அஸ்தினபுரியின் அரண்மனையைத் துறந்தேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே சதசிருங்கத்திற்கு வந்தபின்னர்தான் தொடங்கியது. இங்கு என் மைந்தர்கள் வெறும் பாண்டவர்கள். நான் மகிழும் குழந்தைகள். அங்கே அவர்கள் அரியணைக்குரியவர்கள். அரசியலின் சதுரங்கக் காய்கள். காமகுரோதமோகங்களால் அலைக்கழிக்கப்படும் சருகுகள். நான் ஒருபோதும் இவர்களை அங்கே கொண்டுசெல்லப்போவதில்லை" என்றான்.

மாத்ரி பெருமூச்சுவிட்டாள். அவள் குந்தியின் அகத்தை அணுகியறிந்திருந்தாள். பார்த்தன் பிறந்ததுமே அவள் மாறிவிட்டாள். மைந்தர்களை கருக்கொண்டதும் அவளில் கூடிய தனிமையும் கனவும் ஐயங்களும் துயரும் விலகி அவள் முன்பு அறிந்திருந்த நிமிர்வுகொண்ட அரசமகள் மீண்டுவந்தாள். அவள் குரலில் பேரியாழின் கார்வையும் கண்களில் வாள்நுனியின் ஒளியும் குடியேறின. அவளுடைய ஒவ்வொரு சொல்லும் வெட்டி பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் போல முழுமையும் ஒளியும் கொண்டிருந்தன.

பார்த்தனின் புகழைப்பாடிய அந்த சிறுகாவியத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவள் அகம் பொங்கி கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் திரும்பிப்பார்த்தபோது குந்தி சிலைபோன்ற முகத்துடன் கைகூப்பி அமர்ந்திருப்பதையே கண்டாள். இந்திரனின் மைந்தன்! அது உண்மையாக இருக்குமா என்ன என்று எண்ணிக்கொண்டாள். அது கவிஞர்கள் சொல்லும் அழகுரை அன்றி வேறென்ன? ஆனால் அந்த மைந்தனைப்பார்க்கையில் அவள் நெஞ்சுக்குள் இறுகிப்படர்ந்திருந்த ஒன்று உடைந்தது. அவனை எடுத்து முலைகளுடன் சேர்த்துக்கொண்டால் அவன் வாய்தளும்ப அமுதூட்டமுடியும் என்று தோன்றியது.

ஆயிரம் வான்விற்கள் அவனுக்காக மண்ணிறங்கி வந்தபோது அவள் உறுதிகொண்டாள். அவர்களுக்குத்தான் அது அற்புதமாக இருந்தது, பர்ஜன்யபதத்தில் அது நிகழக்கூடுவதுதான் என்றார்கள். "நிகழ்ந்திருக்கிறதா?" என்றுதான் பாண்டு கேட்டான். அவர்கள் "இது வானவிற்களின் சமவெளி என்றே அழைக்கப்படுகிறது" என்றார்கள். "இதற்குமுன் இத்தனை வானவிற்கள் வந்திருக்கின்றனவா?" என்று பாண்டு மீண்டும் கேட்டான். அவர்கள் புன்னகைசெய்தனர். மாத்ரி அவன் தோள்களைப்பிடித்தாள்.

அவர்கள் சென்றதும் மாத்ரி சினத்துடன் "யாரிடம் வாதிடுகிறீர்கள்?" என்றாள். "இவன் என் மைந்தன். இந்திரனின் அறப்புதல்வன். அவனுக்காக இறங்கிவந்த விண்ணகவிற்களை நாம் பார்த்தோம். அதற்கு நமக்கு யார் சான்றுரைக்கவேண்டும்?" பாண்டு "ஆம், யாரும் சொல்லவேண்டியதில்லை. பாரதவர்ஷமே சொல்லப்போகிறது" என்றான். "வேள்விநெருப்பின் செவ்வொளியில் அவனைப்பார்த்தபோது கருவறைக்குள் அமர்ந்திருக்கும் தெய்வமுகம் என்றே எண்ணினேன் மாத்ரி!"

"அவனை மார்புடன் அணைத்துக்கொள்ளும்போது எனக்கும் முலைகளூறுமென்று தோன்றுகிறது" என்று சொன்னபோது அவள் குரல் தழைந்தது. பொங்கி வந்து கண்களை முட்டிய அழுகையை அடக்குபவள் போல அவள் தலைகுனிந்தாள். பாண்டு அவளை சிலகணங்கள் நோக்கியபின் "நான் பிருதையிடம் உன்னைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு ஒரு மைந்தனைப்பெற்றுக்கொடு" என்றான். அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்துக்கொண்டன. அவன் அவள் தோள்களைத் தொட்டு "விண்ணேறியபின் உன் மைந்தனின் நீரையும் அன்னத்தையும் நான் பெறவேண்டுமல்லவா?" என்றான்.

அவள் முகத்தைப்பொத்தியபடி அழத்தொடங்கினாள். "மாத்ரி" என்று பாண்டு கூப்பிட்டபோது திரும்பிப்பாராமல் ஓடி குகைக்குள் புகுந்துகொண்டு அதன் இருண்ட மூலையொன்றில் அமர்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். அவளை பெயர்சொல்லி அனகையும் குந்தியும் தேடியபோது உடலை மேலும் குறுக்கிக்கொண்டாள்.

குந்தி அவளருகே வந்து அமர்ந்தபோதும் அவள் முகத்தை தூக்கவில்லை. குந்தி அவள் முழங்கால்களில் கையை வைத்தபோது பனிக்கட்டி தொட்டது போல அவள் அதிர்ந்தாள். "இது தெய்வங்களுக்கு பிரியமான செயல் மாத்ரி" என்று குந்தி சொன்னாள். "வேள்விக்களம் நான்குவகை என்பார்கள். மேற்குதிசை நோக்கியது கார்ஹபத்தியம். கிழக்குநோக்கி அமைந்தால் அது ஆகவனீயம். தெற்குநோக்கி என்றால் அது தட்சிணம். உயிர்களின் கருவறை நான்காவது வேள்விக்களம். அது வடக்குநோக்கியது. அங்கே இருக்கும் நெருப்பு வைஸ்வாநரன். அதற்கு அவியாவது மானுடனின் உயிர் என்பார்கள்."

அவள் தோள்களை மெல்லப்பற்றி தன் மடியில் சரித்துக்கொண்டாள் குந்தி. "இச்சொற்களெல்லாம் இன்று உனக்குப் பொருளற்றவையாக இருக்கும். உன்னுள் ஓர் உயிர் குடியேறியதும் அனைத்தும் மும்மடங்கு பொருள்கொண்டவையாக ஆகிவிடும்." அவள் மடியில் முகம் புதைத்தபடி "எனக்குத்தெரியவில்லை அக்கா... ஆனால் இந்த மைந்தர்களுடன் எனது மைந்தன் ஒருவன் விளையாடுவானென்றால் அதைவிட என் வாழ்க்கையை முழுமைப்படுத்தும் பிறிதொன்றில்லை என்று உணர்கிறேன்" என்றாள்.

குந்தி அவள் காதோர மயிர்ச்சுருளை மெல்லச்சுழற்றினாள். "இருளுக்குள் சொல்லவேண்டிய மந்திரம் இது. அதை நான் இருபத்தொரு முறை உனக்குச் சொல்வேன். நீ அதை நூற்றெட்டு முறை உருவிட்டு ஆன்மாவில் ஏற்றிக்கொள். மந்திரம் உன் வயமாயிற்று என்றால் உன்னால் பார்வையிலேயே மானுடரையும் அனைத்து உயிர்களையும் உன்னை நோக்கி இழுக்க முடியும்" என்றாள்.

அன்றிரவு அவள் துயிலாமல் வெளியே மழை பெய்வதை கேட்டுக்கொண்டிருந்தாள். நீரின் ஒலியில் ஒரு தாளமிருப்பதைப்போலத் தோன்றியது. அந்தத் தாளத்தை ஏற்றுக்கொண்டு அப்பால் காற்று பாறைகளில் அறைந்து அலைத்து மேலெழுந்து தழுவிச்சென்றுகொண்டிருந்தது. அவள் அந்தத் தாளத்தில் தன்னுள் மந்திரத்தை ஓடவிட்டாள். உள்ளே கணப்பின் செந்நிறச்சுவாலையின் ஒளி. தழலாடிய விறகு அவ்வப்போது வெடித்தது. ஒரு சொல் பிறப்பதுபோல.

ஒரு சொல்! நெருப்பின் சொல். என்ன சொல்கிறது நெருப்பு? தன்னுடலுக்குள் நெருப்பு புகுந்துகொண்டதை அறிந்தாள். கைகால்கள் வெம்மைகொண்டன. சிறிதுநேரத்தில் வெப்புநோய் என உடல் தகித்தது. போர்வையை வீசிவிட்டு எழுந்தாள். வெளியே நிறைந்திருந்த கனத்த குளிரில் செவிமடல்களும் நாசிமுனையும் இமைகளும்தான் குளிர்ந்தன. உடலின் வெம்மை அப்படியே இருந்தது.

எழுந்து குகைக்கு வெளியே சென்றாள். வெளியே பரந்திருந்த இளம்பனிமூட்டம் தன் உடல்வெம்மையால் உருகிவிடுமென்று எண்ணினாள். பனிப்பொருக்கில் வெறும்கால்களை எடுத்து வைத்தபோது வேறெங்கோ அந்தக்குளிர் சென்றது. குகைக்குள் கணப்புபோல அவளுக்குள் எரிந்தது அந்த வெம்மை. நெருப்பில் வெடிக்கும் சொற்கள். மூச்சு போல, தன்னுணர்வு போல அந்த மந்திரம் அவளுக்குள் இருந்தது. எட்டுவார்த்தைகள். பொருளில்லாத எட்டு உச்சரிப்புகள். அவை நெருப்பாலானவை. அவற்றின்மேல் பொருள் அமரமுடியாது.

வெளியே மென்மழை விரிந்த இருள்வெளியில் விரைவான ஒரு தாளத்தை அவள் கேட்டாள். குளம்படியோசை போல. அவள் கைகளை இறுக்கியபடி நடுங்கும் உதடுகளால் அச்சொற்களை சொல்லிக்கொண்டு மேலும் இறங்கி கீழே சென்றாள். வெண்பனிப்பரப்பில் இரு குதிரைகளின் குளம்புச்சுவடுகளைக் கண்டாள். சிலகணங்கள் நோக்கி நின்றபின் அந்தத் தடம் வழியாக ஓடினாள். அப்பால் இரு வெண்புரவிகள் பிடரி சிலிர்க்க ஒன்றையொன்று முட்டிவிளையாடிக்கொண்டிருந்தன. அணிகளும் தளைகளுமில்லாத காட்டுப்புரவிகள். இரண்டும் உடன்பிறந்த ஆண்புரவிகள்.

அப்போது பிறந்தவைபோலிருந்தன அவை. அரைநிலவொளியில் அவற்றின் வெண்ணிற உடல்கள் மின்னிக்கொண்டிருந்தன. உடல்வெம்மையால் அவற்றின்மேல் பொழிந்த பனியுருகி அவற்றின் துள்ளலில் துளிகளாகச் சிதறிக்கொண்டிருந்தது. கழுத்தை ஒன்றுடன் ஒன்று அறைந்துகொண்டும் முகத்தை உரசிக்கொண்டும் குளம்புகள் பறக்க பாய்ந்து சுழன்றும் பனிச்சரிவில் பிடரிமயிர் பறக்க விரைந்தோடியும் அவை விளையாடின. அவை ஓசையே எழுப்பவில்லை என்பதை மாத்ரி அறிந்தாள். அவை அங்கே நிற்கின்றனவா இல்லை நிலவொளி பனியில் உருவாக்கும் வெண்மை அளிக்கும் விழிமயக்கா என எண்ணிக்கொண்டாள்.

தன்னுள் ஓடும் மந்திரத்தை அவள் உணர்ந்ததும் அவள் ஒரு புரவியை நோக்கி அதை அருகே அழைத்தாள். பின்னால் திரும்பி நின்றிருந்த அதன் உடலில் அவள் பார்வை பட்ட தொடைச்சதை விதிர்த்தது. அது துள்ளுவதை நிறுத்தி அசையாமல் நின்று சிறிய செவிகளை பின்னுக்குத்தள்ளி ஒலிகூர்ந்தது. பின்பு நீண்ட மூச்சொலியுடன் முன்னங்காலால் மண்ணைத் தட்டியது. மீண்டும் மூச்சுவிட்டு பிடரிமயிர்கற்றையை குலைத்தது. கழுத்தைத் திருப்பி அவளை நோக்கியது.

வெண்ணிறமான இமைமயிர் சரிந்து பாதி மறைத்த அதன் விழிகளை அவளால் பார்க்கமுடிந்தது. குதிரை மெல்ல கனைத்தபின் அவளை நோக்கி வந்தது. அதைத் தொடர்ந்து அதன் உடன்பிறந்ததும் வாலைச்சுழற்றியபடி வந்தது. இரு குதிரைகளும் அவளருகே வந்து தலைதாழ்த்தின. முதல்குதிரை மூச்சு சீற பிடரிமயிர் உலைய தலையை ஆட்டியது. அவள் அதன் நீண்ட மெல்லிய முகத்தைத் தொட்டு கைகளால் வருடினாள். அது தலையைச் சரித்து கனத்த நாக்கை நீட்டி அவள் கைகளை நக்கியது. இரண்டாவது குதிரை தலையை நீட்டி நாக்கால் அவளைத் தொடமுயன்றது. அப்போதுதான் அவள் அவர்களைப்பார்த்தாள்.

மறுநாள் காலை அவள் அதை குந்தியிடம் சொன்னபோது அவள் "அவர்கள் அஸ்வினிதேவர்கள்" என்றாள். "நீ அஸ்வினிதேவர்களின் மைந்தர்களைப் பெறுவாய்!" மாத்ரி சோர்வுடனும் நிறைவுடனும் மஞ்சத்தில் படுத்தபடி "நான் அவை என் கனவுக்குள் நிகழ்ந்தவை என்றே எண்ணுகிறேன்" என்றாள். குந்தி "அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள்..." என்றாள். "ஆம், அவர்கள் ஒருவரின் வெண்ணிழல் மற்றவர் என என்னைப் பின்தொடர்ந்துவந்தனர்" என்றாள் மாத்ரி. "அவர்கள் மானுடனின் இருபெரும் ஞானத்தை அறிந்தவர்களாக அமையட்டும். ஒருவன் விண்மீன்களை வாசித்து அறியட்டும். ஒருவன் மிருகங்களின் கண்மீன்களின் பொருளறியட்டும்" என்றாள் குந்தி.

சதசிருங்கத்தை அவர்கள் முன்மதியத்தில்தான் சென்றடைந்தனர். பாறையுச்சியில் நின்று பார்த்தபோது அங்கே ஒரு காட்டுநெருப்பு எரிந்தமைக்கான தடயமே இல்லாமல் பசுமைபொலிந்திருந்தது. நின்றிருந்தவையும் காட்டில் விழுந்திருந்தவையுமான முதுமரங்கள் அனைத்தும் மறைந்துவிட்டிருந்தன. எங்கும் புதுமரங்கள் முளைத்து இடுப்பளவும் தோளளவும் வந்து கிளைகள் விரித்து இலைதழைத்து நிற்க, சூழ்ந்து செறிந்திருந்த பசுமையை உள்வாங்கியபடி இந்திரத்யும்னம் அலையடித்தது. அதில் வெண்ணிறமான அன்னங்கள் ஏரியின் நூறு விழிகள் போல அவ்வப்போது சிறகடித்தபடி மிதந்தன.

"காட்டுநெருப்பால் தூய்மைப்படுத்தப்பட்ட இடம் வேள்விச்சாலை அமைப்பதற்கு ஏற்றது" என்றார் மாண்டூக்யர். "அங்கே சிறந்த காற்று வீசும் என்று மூதாதையர் சொல்வதுண்டு. முன்பும் பலநூறுமுறை சதசிருங்கம் நெருப்பில் நீராடி மீண்டிருக்கிறது" அவர்கள் மலைச்சரிவில் இறங்கி இந்திரத்யும்னத்தின் கரை வழியாக ஹம்ஸகூடம் நோக்கிச் சென்றார்கள்.

ஹம்சகூடத்தில் குடில்களை அமைப்பதற்கான இடங்களை மூன்று கௌதமர்களும் சேர்ந்து தேர்வுசெய்தனர். காற்றுவரும் வழி தேர்ந்து அங்கே உயரமான பாறைமீதேறி நின்று வெண்சுண்ணப்பொடியை விரையும் காற்றில் வீசினர். அது சென்று அமைந்த விதம் நோக்கி வேள்விச்சாலைக்கான இடங்களைக் குறித்தனர். கார்ஹபத்யமும், ஆகவனீயமும், தட்சிணமும் எரியும் மூன்று குடில்களும் மூன்று எரிகுளங்களுமே அமைந்த மையக்குடிலும் அமையும் இடம் வகுக்கப்பட்டதும் அதையொட்டி பிற குடில்களுக்கான இடங்கள் வகுக்கப்பட்டன.

மையக்குடிலுக்கு வலப்பக்கம் மாண்டூக்யரும் மூன்று கௌதமர்களும் தங்கும் குடில்கள் அமைந்தன. இடப்பக்கம் வித்யாசாலை அமைந்தது. இந்திரத்யும்னத்தின் கரையோரமாக முனிவர்களின் குடிலும் அதைச்சுற்றி மாணவர்களின் குடில்களும் கட்டப்பட்டன. அப்பால் தெற்கே பாண்டு தன் குடிலுக்கான இடத்தை வகுத்தான். வட்டமான மையக்குடிலுக்கு சுற்றும் சேவகர்களும் சேடியர்களும் தங்கும் குடில்கள். நடுவே பெரிய முற்றம். அங்கே நாவல் மரமொன்று புதிய இலைகளுடன் எழுந்துவந்திருந்தது. "நாவல்மரம் நன்று. அதில் எப்போதும் பறவைகளிருக்கும்" என்றான் பாண்டு.

குடிலமைக்க இடம் தேடும்போதுதான் மாத்ரி கண்டாள். அங்கே நின்றிருந்த காட்டுமரங்களின் அடித்தூர்கள் மண்ணுக்குள் இருப்பதை. அவற்றிலுருந்து ஒன்றுக்கு நான்காக மரக்கன்றுகள் கைவீசி எழுந்து நின்றன. காற்றுவீசியபோது வெயிலேற்று நின்ற இலைத்தளிர்களிலிருந்து இனிய வாசனை எழுந்தது. "காடு பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை நெருப்பால் நீராடிக்கொள்கிறது" என்றார் மாண்டூக்யர். "யுகத்துக்கு ஒருமுறை மானுடம் குருதியால் நீராடிக்கொள்ளும்."

மாத்ரி பெருமூச்சுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். வயிற்றில் கரு நிகழ்ந்தபின்னர் அவள் போரைப்பற்றிய பேச்சையே அஞ்சினாள். ஆனால் மீண்டும் மீண்டும் அச்சொற்களே காதில் விழுந்துகொண்டிருந்தன. பிறப்பு ஏன் உடனடியாக இறப்பைப்பற்றிய பேச்சை கொண்டுவருகிறது என அவள் வியந்துகொண்டாள். புகழுடன் இறப்பதற்காகவே பிறப்பு நிகழ்கிறதென்பது ஷத்ரியர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மக்களும் ஆயர்களும் அப்படி நினைக்கிறார்களா என்ன?

சதசிருங்கத்துக்கு வந்தபின்னர் பார்த்தன் பிறந்தசெய்தியை குந்தி சிவதன் என்னும் பிரம்மசாரி வழியாக அஸ்தினபுரிக்கு சொல்லியனுப்பினாள். மூன்றுமாதம் கழித்து அவன் திரும்பிவந்து அஸ்தினபுரியின் செய்திகளைச் சொன்னான். முதல் மைந்தனை காந்தாரி துரியோதனன் என்று அழைப்பதனால் அஸ்தினபுரியும் அவ்வாறே அழைக்கிறது என்றான். குந்தி புன்னகையுடன் "காந்தாரத்தில் அவன் அன்னையின் மொழிப்பயிற்சி அவ்வளவுதான். துரியோதனன் என்றால் தீய போர்க்கருவிகள்கொண்டவன் என்றும் பொருளுண்டு... மக்கள் அப்பெயரை விரும்புவார்கள்" என்றாள்.

மாத்ரி அங்கே அமரப்பிடிக்காமல் மெல்ல எழமுயன்றாள். குந்தி திரும்பி நோக்கியதைக்கண்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள். "மூன்று வயதிலேயே அன்னையின் இடையளவுக்கு வளர்ந்திருக்கும் மைந்தன் இப்போதே கதாயுதத்தை கையில் எடுத்து சுழற்ற முயல்கிறான். அவனுக்கு மாமன் சகுனிதான் படைக்கலப்பயிற்சி அளிக்கிறார். மைந்தன் இரவும் பகலும் மாமனுடனேயே இருக்கிறான்" என்றான் சிவதன்.

"காந்தாரி அவனுக்கு இளையவன் ஒருவனைப் பெற்றாள். அவனுக்கு அவளே துச்சாதனன் என்று பெயரிட்டாள். மீறமுடியாத ஆணைகள் கொண்டவன். அவன் தன் தமையனுக்கு நிழலாக எப்போதுமிருக்கிறான். மூன்றாவது குழந்தை பெண்ணாகவே பிறக்குமென்பது மருத்துவர்களின் கூற்று. அதற்கு துச்சளை என்று பெயரிடப்போவதாக அரண்மனையில் சொல்லிக்கொண்டார்கள்" என்றான்.

இளம்காந்தாரிகளனைவருமே இருமுறை குழந்தைபெற்றுவிட்டார்கள் என்றான் சிவதன். நூறுமைந்தர்களால் குருகுலம் பொலியவேண்டுமென காந்தாரி ஆணையிட்டிருப்பதாகவும் அதை அவள் தங்கையர் அனைவரும் ஏற்றுக்கொண்டு மைந்தரைப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அஸ்தினபுரியின் சூதர்கள் பாடியலைந்தனர். "அம்மைந்தர்கள் அனைவரின் பிறப்பும் தீமைநிறைந்த தருணங்களிலேயே நிகழ்ந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள் நகர் மக்கள். எங்கும் அவர்களைப்பற்றிய கதைகள்தான் நிறைந்துள்ளன அரசி!"

"அஸ்தினபுரியின் நகர்மன்றில் ஒரு சூதன் இக்கதையை சொல்லக்கேட்டேன்" என்றான் சிவதன். "பிரம்மனின் மைந்தனாகிய கசியப பிரஜாபதிக்கு முனி என்னும் துணைவியில் பதினாறு மைந்தர்கள் பிறந்தனர். பீமன், உக்ரன், சுபர்ணன், வருணன், திருதன், கோபதி, சுவர்ச்சஸ், சத்யவாக், அர்க்கபர்ணன், பிரருதன், விஸ்ருதன், சித்ரரதன், காலிசிரஸ், பர்ஜன்யன், நாரதன், கலி என்னும் அந்த மைந்தர்களில் இறுதிமைந்தனே கலி. பிறந்த ஒவ்வொரு மைந்தனுக்கும் கசியபபிரஜாபதி ஒரு வரமளித்தார். கடைசி மைந்தனிடம் வரம் என்ன வேண்டும் என்று கேட்டார். அகந்தைமிக்க அவன் எனக்குப் பின் நான் செய்வதேதும் தொடரலாகாது என்றான்."

'அவ்வண்ணமே ஆகுக என்றார்' பிரஜாபதியான தந்தை. 'உன் அகந்தையால் நீ கோரியதை முழுமையாக அடைவாய். நன்மைதருவதேதும் முளைத்து வளர்ந்து தழைக்கும் என்பதே எந்தை பிரம்மனின் நெறி. தீமையோ தன்னைத் தானே உண்ணும். முழுமுதல் தீமையோ தன்னை முழுதுண்டு தானுமழியும். எஞ்சுவதேதும் இன்றி மறைவது அதுவேயாகும். நீ அதுவாகக் கடவாய்' என்றார். 'தங்கள் அருள்' என்றான் மைந்தன். 'யுகங்கள் புரளட்டும். தீமை முதிர்ந்து முற்றழிவுக்கான தருணம் கனியட்டும். நீ இப்புடவியை கையில் எடுத்துக்கொள்வாய். உன் விளையாட்டால் அதை அழித்து உன்னையும் அழித்துக்கொள்வாய்' என்று கசியப பிரஜாபதி சொன்னார்.

"கலிதேவனே துரியோதனனாக பிறந்தான் என்று அந்த சூதர் பாடக்கேட்டேன் அரசி. கலியின் மார்புக்கவசமான கிலம் என்பது துச்சாதனனாகியது. மற்ற உடன்பிறந்தவர்களும் அவர்களின் ஆயுதங்களுமே நூற்றுவராக பிறந்துகொண்டிருக்கிறார்கள் என்றனர் சூதர். துவாபரயுகம் மழைக்காலம்போல சாரலாகி வெளுத்து முடிவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. கலியுகம் மண்ணில் இறங்கிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்" சிவதன் சொன்னான்.

"அவ்வண்ணம் பாடும் சூதர்களை ஒற்றர்கள் தேடிக்கண்டுபிடித்து சிறையெடுத்துக்கொண்டுசெல்கிறார்கள் அரசி. அவர்களை காந்தார இளவரசர் எவருமறியாமல் கொன்றுவிடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொருநாளும் சூதர்கள் பாடும் பாடல்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. இன்று அவற்றை எளிய சுமைவணிகர்களும் கன்றுமேய்க்கும் ஆயர்களும் மேழிபூட்டும் வேளிர்களும் கூட பாடிக்கொண்டிருக்கிறார்கள்" என்றான் சிவதன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மாத்ரி அங்கிருந்து எழுந்து வெளியே சென்று நடுங்கிக்கொண்டிருந்தாள். தொண்டை வறண்டு நெஞ்சு பதைத்துக்கொண்டிருந்தது. அவள் தன் வயிற்றை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். உள்ளே இரு மைந்தர்கள் இருப்பதை மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். குந்தி சொன்னதுபோல அவர்கள் அஸ்வினி தேவர்கள்தானா? தேவமைந்தர்கள் என்றால் அவர்களை எந்தப் படைக்கலமும் கொல்லப்போவதில்லை. தங்கள் விதியை தாங்கள்தான் முடிவெடுக்கப்போகிறார்கள். ஆனால் அது வெறும் சொற்கள் அல்லவா? கருவில் உதித்து யோனியில் பிறந்து மண்ணில் வாழ்பவர்களுக்கெல்லாம் மரணம் என்பது ஒன்றுதானே?

அவள் தனிமையில் அழுதுகொண்டு நின்றாள். அவள் அங்கே வந்தபோதிருந்த சதசிருங்கத்தின் வனம் அங்கில்லை. கனவோ என அது மறைந்துபோய்விட்டது. புத்தம்புதிய காடு உருவாகி கண்முன் இளவெயிலில் அலையடித்துக்கொண்டு நின்றது. அவற்றின் அடியில் சென்றகாடு புதைந்து கிடந்தது. நினைவுகள்போல. புராணங்கள் போல. அது மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டிருந்தது. அவள் நிமிர்ந்து நூறுபனிமலைகளைப் பார்த்தாள். அவை நெருப்பில் அழிவதில்லை. காற்றில் இடம்பெயர்வதில்லை. காலத்தில் கரைவதில்லை. அவற்றின் முடிவற்ற காலத்துக்கு முன் சதசிருங்கத்தின் காடுகள் வெறும் நிழலாட்டங்கள். எண்ண எண்ண நெகிழ்ந்து மார்பில் கண்ணீர் வழிய அவள் அழுதுகொண்டிருந்தாள்.

அவளுடைய அழுகையைக் கண்டதுமே அனகை உய்த்துணர்ந்துகொண்டாள். அவளை அழைத்துச்சென்று குடிலில் மான்தோலில் படுக்கச்செய்தாள். சற்று நேரத்திலேயே மாத்ரிக்கு வலி தோன்றியது. சாளரத்துக்கு அப்பால் எழுந்த கீற்று நிலவை நோக்கியபடி அவள் கண்ணீர்விட்டபடி கிடந்தாள். வேள்விச்சடங்குகள் முடிந்து பிரம்மசாரிகள் கிளம்பும்போது அனகை வெளியே வந்து சங்கொலி எழுப்பினாள். அவர்கள் கைகளைத் தூக்கி 'நீள்வாழ்வு பொலிக' என வாழ்த்தினர். மீண்டும் அவள் வெளியே வந்து சங்கொலி எழுப்பியபோது சிரித்தபடி 'இரட்டை வாழ்நாள் பெறுக' என்று வாழ்த்தினர்.

வெளியே குடில்முற்றத்தில் தன் மைந்தர்களுடன் அமர்ந்திருந்த பாண்டுவை அணுகி அக்கார உருளையை அளித்து புன்னகையுடன் குந்தி சொன்னாள் "அரசே, இதோ உங்களுக்கு இரண்டு மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஐந்து பாண்டவர்களும் உங்கள் தோள்களை நிறைக்கப்போகிறார்கள்." பாண்டு எழுந்து நின்று நிலவையும் நூறுமலைமுடிகளையும் நோக்கி கைகூப்பினான். "'பாவஃபால்குன மாதம். நடுமதியம். அஸ்வினி நட்சத்திரம்" என்றாள் அனகை.

பகுதி பதினேழு : புதியகாடு

[ 7 ]

இருக்குமிடத்தை முழுமையாக நிறைக்க குழந்தைகளால் மட்டும் எப்படி முடிகிறது என்று மாத்ரி வியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஐந்து மைந்தர்களும் இணைந்து சதசிருங்கத்தின் ஹம்ஸகூடத் தவச்சோலையை முற்றிலுமாக நிறைத்துவிட்டனர். அவர்களன்றி அங்கே மானுடரே இல்லை என்று தோன்றியது. முற்றத்திலும் வேள்விச்சாலையிலும் குறுங்காட்டிலும் எங்குசென்றாலும் பாண்டு தன் உடலில் குழந்தைகளை ஏந்தியிருந்தான். அவனை குஞ்சுகளை உடலில் ஏந்திய வெண்சிலந்தி என்றழைத்தனர். மாண்டூக்யர் 'ஜாலிகரே' என்றழைக்கும்போது பாண்டு புன்னகையுடன் 'ஆம் முனிவரே!' என்றான்.

ஈச்சைநாரால் அவன் ஒரு தொட்டில் செய்திருந்தான். அதை முன்னும்பின்னும் தொங்கவிட்டு அவற்றில் நகுலனையும் சகதேவனையும் வைத்துக்கொண்டான். அவனுடலில் இருக்கையில் அவர்கள் பசித்தாலும் அழுவதில்லை என்பதை மாத்ரி கவனித்தாள். இருவரும் ஒன்றுபோலவே இடது கையின் மணிக்கட்டை வளைத்து வாய்க்குள் செலுத்தமுயன்றபடி பெரிய கண்களை உருட்டி உருட்டி திரும்பிப்பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள். பாண்டு தன் இரு தோள்களில் யுதிஷ்டிரனையும் அர்ஜுனனையும் ஏற்றிக்கொண்டான்.

"என்ன இது? நான்குபேரையும் சுமக்கவேண்டுமா?" என்று மாத்ரி கேட்டபோது "ஐவரையும் சுமக்கத்தான் என்ணுகிறேன். இரண்டாவது பாண்டவனைச் சுமக்கவேண்டுமென்றால் நான் யானையாகப் பிறந்திருக்கவேண்டும்" என்றான் பாண்டு. "இது எங்குமில்லாத வழக்கம். ஆண்கள் இப்படி மைந்தர்களைச் சுமப்பதில்லை. இதை சேடியர்கூட கேலி செய்கிறார்கள்" என்றாள் அவள். "ஆம், கேலிதான் செய்கிறார்கள். ஆனால் என்னை நான் பிறந்த நாளில் இருந்தே எதற்கெல்லாமோ கேலிசெய்கிறார்கள். இனி நான் என் மைந்தர்களைச் சுமந்ததற்காக மட்டுமே கேலி செய்யப்படுவேன். நான் தேடிய வீடுபேறு இதுதான்" என்றான் பாண்டு.

உணர்ச்சிகள் விரைவுகொண்டு முகம் சிவக்க அவன் சொன்னான் "தெய்வங்கள் குனிந்து பார்க்கட்டும். யாரிவன் இரவும் பகலும் மைந்தர்களைச் சுமந்தலைபவன் என்று அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள். பிரம்மனிடம் என் தேவனாகிய சுப்ரமணியன் சொல்வான். உன்னுடைய படைப்பின் குறை அவன் உடலை முளைக்காத விதையாக ஆக்கியது. கேள் மூடா, மானுடர் உடலால் வாழ்வதில்லை. மண்ணில்வாழ்வது ஆன்மாதான். அகத்தில் பிள்ளைப்பெரும்பாசத்தை நிறைத்துக்கொண்டவனுக்கு உலகமெங்கும் பிள்ளைகள்தான். மிருகங்களின் குட்டிகள் போதும் அவனுக்கு. பாவைக்குழந்தைகள் போதும். ஏன் உருளைக்கற்கள் இருந்தால்கூட போதும்..." உடனே உணர்வுகள் திசைமாற சிரித்துக்கொண்டு பாண்டு கூவினான் "பிரம்மனின் தலையில் என் இறைவன் மீண்டும் குட்டுவைக்கும் தருணம் அது."

மாத்ரி சிரித்தாள். அவன் சற்று அகநிலையழிந்துபோய்விட்டான் என்று சதசிருங்கத்து முனிவர்கள் சிலர் சொல்வதை அரைக்கணம் அவள் நினைவுகூர்ந்தாள். அவன் வேள்விகளுக்கும் பூசனைகளுக்கும் செல்வது முற்றிலும் நின்றுவிட்டது. நாளும் விடிகாலையில் எழுந்ததுமே மைந்தரைக் குளிப்பாட்டி உணவூட்டி அணிசெய்யத்தொடங்குவான். பின்னர் அவர்களை தன் உடலில் ஏற்றிக்கொள்வான். "தெய்வங்கள் மானுடனில் ஆவேசிப்பதுபோல என் மைந்தர்கள் என்னில் ஏறிக்கொள்கிறார்கள். தெய்வங்களைச் சுமப்பவன் எதற்கு வேள்வி செய்யவேண்டும்? இந்த மண்ணிலேயே அவனுடைய தேவர்கள் இறங்கி வந்தமர்ந்து பசித்து சிறுவாய்திறந்து அவன் கையிலிருந்தே அன்னத்தை ஏற்கையில் விண்ணில் எவருக்கு அவன் அவியளிக்கவேண்டும்?" என்றான்.

அவனுடைய கண்களில் எழுந்த பேருவகையை அவள் திகைப்புடன் நோக்கினாள். "இதோ இதோ என உலகுக்கே காட்டவேண்டும்போலிருக்கிறது என்னுள் எழும் பேரன்பை. இவர்கள் என் மைந்தர்கள். இவர்கள் பாண்டவர்கள். என் உடல், என் அகம், என் ஆன்மா. நானே இவர்கள். இவர்களிருக்கும் வரை நான் அழிவதில்லை. இவர்களின் குருதிமுளைத்தெழும் தலைமுறைகள் தோறும் நான் வாழ்வேன்" அவன் குரல் இடறியது. கண்ணீர் ஊறி விழிகள் மறைந்தன. "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவர்களைப் பார்த்துத் தீரவில்லை. முத்தமிட்டுத் தீரவில்லை. கொஞ்சித்தீரவில்லை. என்னால் செய்யக்கூடுவதொன்றே. இவர்களை என்னுடலாக ஆக்கிக்கொள்ளுதல். இருக்கும் கணம் முழுக்க இவர்களும் நானும் ஒன்றாக இருத்தல்..."

கனிந்த நாகப்பழம் போலிருந்த அர்ஜுனனை தோளிலிருந்து சுழற்றி எடுத்து மார்போடு அணைத்து இறுக்கி வெறிகொண்டு முத்தமிட்டான். மூச்சிரைக்க "இப்படி ஆரத்தழுவுகையில் இந்தப்பாழும் உடல் அல்லவா இவர்களுக்கும் எனக்குமான தடை என்று தோன்றுகிறது. ஆன்மா மட்டுமேயான இருப்பாக நான் இருந்திருந்தால் மேகங்கள் மேகங்களைத் தழுவிக்கரைதல் போல இவர்களை என்னுள் இழுத்துக்கொண்டிருப்பேன்."

அந்தப்பித்தை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. "நீ இதை உணரவில்லையா? பிள்ளையைப் பார்க்கையில் இதோ நான் இதோ நான் என உன் மனம் பொங்கி எழுவதில்லையா?" என்று அவன் கேட்டான். "இல்லை. கருவுற்றிருக்கையில் எனக்குள் வெளியே இருந்து ஏதோ குடியேறியிருக்கிறது என்னும் எண்ணம் முதலில் இருந்தது. பின்பு அது சற்று அசைந்தால்கூட கலைந்துவிடும் என்ற அச்சம் இருந்தது. சுடரை கைகளால் பற்றி கொண்டுசெல்வதுபோல அந்த உயிரை என்னுள் கொண்டுசெல்கிறேன் என்று நினைப்பேன். அது வெறும் உயிர்தான். உடல் அல்ல. ஒரு அந்தரங்க எண்ணம் போல. பகிரமுடியாத ஒரு நினைவு போல. அவ்வளவுதான்" என்றாள் மாத்ரி.

"பின்னர் ஒருநாள் நான் என்னுள் இன்னொரு மனிதர் இருப்பதை உணர்ந்தேன். முதன்முதலாக என்னுள் அசைவை உணர்ந்தபோது. அசைவு நிகழும் கணம் முதலில் நெஞ்சைக்கவ்வியது அச்சம்தான். பின்னர் திகைப்பு. நான் நினைக்காத ஓர் அசைவு. என் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படாத அசைவு அது. அதாவது என்னுள் இன்னொருவரின் எண்ணமும் செயல்படுகிறது. நான் இரண்டாக ஆகிவிட்டேன் என்றறிந்தபோது முதற்கணம் உருவானது ஒவ்வாமைதான். நான் ஆட்கொள்ளப்பட்டிருப்பதுபோல. வெல்லப்பட்டுவிட்டதுபோல. என் உடல் கையகப்படுத்தப்பட்டுவிட்டதுபோல" சொல்லச்சொல்ல அவ்வறிதலை அவளே தெளிவாகக் கண்டாள்.

"அந்த ஒவ்வாமையை நாட்கள் செல்லச்செல்லத்தான் கடந்தேன். என்னுள் இருந்து அசையும் அதுவும் நானே என உணரத்தொடங்கினேன். நான் அதற்காக உண்கிறேன். அதற்காக நானே மூச்சுவிடுகிறேன். என் வழியாக அது நடக்கிறது, பார்க்கிறது, சுவைக்கிறது, மகிழ்கிறது. நான் பெருகியிருப்பதுபோல. மழைக்கால நீர்வந்து ஏரிகள் வீங்குவதுபோல நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன். மரங்களில் கனிகள் நிறைந்து அவை கிளைதொய்வதுபோல நான் நிறைந்துகொண்டிருக்கிறேன். அந்த எண்ணம் பெருகப்பெருக அந்தக் கரு என்னுள் எப்போதும் இருந்துகொண்டிருக்குமென்று எண்ணத்தலைப்பட்டேன்."

"என்னுள் இரு மைந்தர்கள் இருக்கிறாகள் என்று மருத்துவர் சொல்லியிருந்தபோதிலும் ஒருபோதும் என்னால் அப்படி உணரமுடிந்ததில்லை. அவர்களை ஒற்றை உடலாக, ஒரே ஆன்மாவாக, என் உடலின் பெருக்காக மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன்" என்று மாத்ரி சொன்னாள். "முதல் குழந்தை என் உடல்விட்டிறங்கியதும் நான் ஏந்திய மிக அரியதொன்றை இழந்துவிட்டதாக உணர்ந்தேன். இன்னொரு குழந்தை உள்ளே இருக்கிறது என மருத்துவச்சி சொன்னதும் ஒரு கணம் என்னுள் உவகை எழுந்தது. ஆம் அது எனக்கு, அதை நான் வைத்துக்கொள்வேன் என எண்ணிக்கொண்டேன். பின் அந்த மூடத்தனத்தை உணர்ந்து தலையை அசைத்தேன். என்னுள் இருந்து இறங்கி அவர்கள் மண்ணில் கிடப்பதைக் கண்டபோது முதலில் எழுந்தது ஏமாற்றம்தான். நான் வெறும் பீடம். அதிலிருந்த தெய்வங்கள் எழுந்துசென்றுவிட்டன. நான் ஒழிந்துவிட்டேன். கோடைகால ஏரிபோல வற்றிவிட்டேன். மீண்டும் எளிய பெண்ணாக ஆகிவிட்டேன். குனிந்து அக்குழந்தைகளைப் பார்த்தபோது என் ஏக்கம் பெருகியது. மாவுபடிந்து சிவந்து நெளிந்த ஈரமான இரு தசைத்துண்டுகள். வெட்டி வீசப்பட்டவை போல அவை நெளிந்தன."

அவள் முகம் சிவந்து கண்களில் ஈரம்படிந்து கிளர்ச்சிகொண்டிருந்தாள். "முலையூட்டுவதற்காக குழந்தைகளை என்னருகே கிடத்தினர். என் இருமுலைக்கண்களிலும் அவர்களின் சிறிய உதடுகள் கவ்விக்கொண்டன. அவை அத்தனை இறுகப்பற்றுமென நான் எண்ணியிருக்கவில்லை. கண்களைக்கூட திறக்காத இரு சிறு குருதிமொட்டுகள். அவை கவ்வி உறிஞ்சியபோது அவற்றுக்குள் நிறைந்திருந்த விசையை உணர்ந்தேன். என் முழுக்குருதியையும் அவை உறிஞ்சிவிடுமென்று பட்டது. அந்த வல்லமை எது? உயிரின் விழைவு. வைஸ்வாநரன். மண்ணிலுள்ள விதைகளை உடைத்துத் திறந்து விண் நோக்கி எழுப்பும் பேராற்றல் அது என்று படித்திருந்ததை நினைவுகூர்ந்தேன்!"

"அவர்களின் சிறுமென்மயிர்தலையை கையால் வருடியபோது பிரபஞ்சங்களை நிறைத்துள்ள முழுமுதல்முடிவிலியைத் தீண்டியதுபோல ஒருநாள் உணர்ந்தேன். மனம் எழுந்து பொங்க அவர்களைப்பார்த்து கண்பூத்து படுத்திருந்தேன். பால்குடிப்பதையே மறந்து அவர்கள் மெல்லக் கண்ணயர்ந்தபோது சிறிய வாய்களின் ஓரத்தில் நுரைத்து எஞ்சியிருந்த பாலை என் சுட்டுவிரலால் மெல்லத்துடைத்தேன். அப்போது அவை மிகமிக மெல்லியவை என்று பட்டன. நீர்க்குமிழிகள்போல. மலரின் அல்லிகள் போல. என் அன்புக்காக ஏங்கி என் கருணையை நம்பி என்னருகே படுத்திருக்கின்றனர். இவர்களுக்கு நானே காவல். நானே இவர்களைப் பெற்றுப் புரப்பவள். நானின்றி இவர்களில்லை."

"அந்த மனஎழுச்சியில் நானே அந்தப் பேராற்றலாக என்னை உணர்ந்தேன். பிரபஞ்சங்களை அள்ளி முலைகொடுக்கும் முதற்பேரன்னை. யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா என்று எத்தனை முறை பாடியிருப்பேன். அன்று அச்சொற்களை ஆழத்தில் உணர்ந்தேன். என் உடல் சிலிர்த்து நடுங்கியது. என் தலையுச்சி திறந்து வானமாக வெடித்துவிட்டதைப்போல என் கால்கள் முடிவிலியில் துழாவுவதைப்போல எங்குமில்லாமல் எங்குமிருப்பவளாக உணர்ந்தேன். அன்று அவர்களை நோக்கியபடி நெடுநேரம் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தேன்."

பாண்டு பெருமூச்சுவிட்டான். அவன் கண்கள் பொங்குவதை அவள் பார்த்தாள். மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான். பலமுறை பேசமுற்படுபவன் போல தொண்டையை கனைத்தான். பின்பு, "என் உடலை இன்றுதான் நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன். இதில் நான் உணரும் வலிமையின்மை என்பது என்னுள் நிறைந்த பெண்மைதான். இன்னும் சில மைந்தர்கள் இருந்தால் இன்னும் சற்று நான் கனிந்தால் என் உடலில் முலைகள் திறந்துகொள்ளும் என்று தோன்றுகிறது. பெண்ணுக்கு மைந்தர்கள் அளிக்கும் பேரின்பத்தில் சில துளிகளை எனக்கும் அளிப்பது இந்த வெளிறிமெலிந்த எளிய உடல்தான்..." என்றான்

மாத்ரி நகைத்தபடி "ஆனால் அதெல்லாமே பேற்றுகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நரம்புத்தளர்வினால் உருவாகும் எண்ணங்கள்தான் என்று அனகை சொன்னாள். பிறகு ஒருபோதும் அவர்கள் சென்றடைய முடியாத எண்ணங்களெல்லாம் வருமாம். மைந்தர்கள் முலையுண்ணத்தொடங்கிய சிலநாட்களிலேயே அவை மறைந்துவிடும். பின்னர் எஞ்சுவதெல்லாம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அச்சம் மட்டும்தான்" என்றாள். பாண்டுவும் அந்த மனஎழுச்சியிலிருந்து சிரிப்பின் வழியாக இறங்கிவந்தான். "பீமனைப்போன்ற மைந்தனைப்பெற்றால் எதையும் அஞ்சவேண்டியதில்லை. அவனை மட்டும் அஞ்சினால்போதும்."

மாத்ரி உரக்கச்சிரித்தபோது நகுலன் திரும்பிப்பார்த்து கைகளை வீசி எம்பி அவளிடம் வர முயன்றான். கண்களை இடுக்கி வாய் திறந்து அவன் சிரிப்பதைக் கண்டு அவள் சிரித்துக்கொண்டு அவனை நோக்கி கைகொட்டி வாயைக் குவித்து ஒலிஎழுப்பி விளையாடினாள். அவன் கைகளை வீசி கால்களை காற்றில் உதைத்து எம்பி எம்பி குதித்தான். பாண்டுவின் தோளில் இருந்த பார்த்தன் புன்னகையுடன் அதைப்பார்த்துக்கொண்டிருந்தான். "இவன் விழிகள் மட்டுமே கொண்ட மைந்தனாக இருக்கிறான்" என்றாள் மாத்ரி பார்த்தனுடைய கருவிழிகளைப்பார்த்து. "எத்தனை கூரிய விழிகள். இரு கருவைரங்கள் போல... ஒரு குழந்தைக்கு இத்தனை கூரிய விழிகளை நான் கண்டதேயில்லை."

"விழிகளால் அவன் இவ்வுலகை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டிருக்கிறான்" என்றான் பாண்டு. "விண்ணில் பறக்கும் பருந்தின் நிழலை ஒரு குவளை நீரில் கண்டு மேலே விழிதூக்கிப்பார்க்கிறான் என்று சொன்னால் நீ நம்பமாட்டாய்." மாத்ரி சிரித்துக்கொண்டு "சிறந்த சேர்க்கை. ஒருவன் சொல்லாலும் ஒருவன் விழியாலும் ஒருவன் நாக்காலும் உலகை அறிந்துகொண்டிருக்கிறார்கள்" என்றாள். பாண்டு "ஆம், பீமன் அனைத்தையும் தின்பதற்குத்தான் முயல்கிறான்" என்றபடி அப்பால் ஆற்றங்கரையில் கூரிய கழி ஒன்றால் குத்தி மீன்களைப்பிடிக்க முயன்றுகொண்டிருந்த பீமனைப் பார்த்து சொன்னான். "அவன் யார் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவனும் நானே. என் ஆற்றலற்ற உடலில் அடைபட்டு திணறியபடி உலகை உண்ணத்துடித்த விழைவே அவனாகப் பிறந்திருக்கிறது."

மாத்ரி "அவன் இல்லாத இடமே இல்லை" என்றாள். தனித்து அமர்ந்து அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கையில் புற்றின் வாயிலிருந்து எறும்புகள் கிளம்புவதுபோல அவன் அவ்வுடலில் இருந்து நூறு ஆயிரமாக பெருகி அப்பகுதியை நிறைப்பதுபோலத் தோன்றியது. மரங்களில் குடில்களில் புதர்களுக்குள் ஓடைக்கரைகளில் பாறையுச்சிகளில் எங்கும் இருந்துகொண்டிருந்தான். அவன் எங்கும் இருக்கலாம் என்பதனாலேயே எங்கும் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

குழந்தைகள் வருவதற்கு முன் ஒவ்வொருநாளும் சதசிருங்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த ஒலி 'ஆம் ஆம் ஆம்' என்பது. அவர்கள் வந்தபின் 'வேண்டாம்! கூடாது! போகாதே! செய்யாதே'. மாத்ரி அந்நினைப்பாலேயே மலர்ந்து தனிமையில் இருந்து வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். அனகை 'இளவரசே வேண்டாம்' என்ற ஒலியாகவே மாறிவிட்டிருந்தாள். பீமனைப்போன்ற ஒருமைந்தனை வளர்க்கும் செவிலித்தாய் இப்பிரபஞ்சம் எத்தனை எல்லைமீறல்களால் சமைக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் ஒவ்வொரு கணமும் அறிவாள்.

வல்லமை ஒன்றே உடலாகக் கொண்டு வந்த அவனால் செய்யக்கூடாதது என ஏதுமில்லை. பாறைகளை ஒன்றுடனொன்று மோதி உடைக்கலாம். மலைச்சரிவில் பெரும்பாறைகளை உருட்டிவிடலாம். சிறியமரங்களைப் பிடுங்கி வேர்ப்படர்வு மேலே இருக்கும்படி தலைகீழாக நட்டுவைக்கலாம். இருகுதிரைகளின் பிடரியையும் ஒரே சமயம்பிடித்தபடி ஓடவைத்து நடுவே காற்றில் மிதந்து செல்லலாம். காட்டெருமையின் வாலைப்பிடித்து இழுத்து அதனுடன் காட்டுக்குள் ஓடலாம். வேள்விக்கு வைத்திருக்கும் நெய்க்குடத்தை எடுத்து முற்றிலும் குடித்துவிடலாம். மலைப்பாம்பை எடுத்து உடலில் சுற்றிக்கொள்ளலாம். அரசநாகத்தை சுருட்டிக் கையிலெடுத்துக்கொண்டுவந்து வீட்டின் கலத்துக்குள் ஒளித்துவைக்கலாம். துயின்றுகொண்டிருக்கும் சேவகனைத் தூக்கிச்சென்று உச்சிப்பாறை விளிம்பில் படுக்கச்செய்யலாம்.

ஒவ்வொரு முறையும் அனகை திகிலடைந்து மயிர்சிலிர்க்க 'அய்யய்யோ இளவரசே என்ன இது? அய்யோ!' என்று கூவுவாள். கண்ணீர் மல்க 'தெய்வங்களே! தெய்வங்களே' என்று அரற்றியபடி தளர்ந்து மண்ணில் அமர்ந்துகொள்வாள். பின் குளிர்ந்த கண்ணீரை துடைத்தபடி சிரிப்பாள். புயல் நுழைவதுபோல குடிலுக்குள் ஓடிவந்து அனகையை அப்படியேதூக்கி பலமுறை சுழற்றி ஓரமாக அமரச்செய்துவிட்டு கலத்துடன் உணவை எடுத்துக்கொண்டு வெளியே சென்று முற்றத்தில் அமர்ந்து உண்ணத்தொடங்குவான். உண்ட கலத்தைத் தூக்கி குடிலின் கூரைமேல் வீசிவிட்டு கைகளை இலைகளில் துடைத்துவிட்டு மீளும் புயல்போல மறைவான்.

புழுதியும் அழுக்கும் சருகுகளும் படிந்த உடலும் தலைமுடியுமாக அவன் காட்டுமிருகம்போலிருந்தான். புதர்களில் வெறும்கைகளாலும் பற்களாலும் வேட்டையாடினான். இரவில் கையில் பந்தத்துடன் குறுங்காட்டுக்குள் நுழையும் அனகை 'இளவரசே! இளவரசே' என்று கூவி அவனைக் கண்டுபிடித்து கைகூப்பி மன்றாடி அழைத்துவருவாள். ஓடையில் அமரச்செய்து நீராட்டி தலைதுவட்டி தன்னுடன் படுக்கச்செய்வாள். நள்ளிரவில் பசித்ததும் அவன் மெல்ல எழுந்து இருளில் நடந்து காட்டுக்குள் சென்றுவிடுவான். அனிச்சையாக அவள் கைகள் அவனிருந்த இடத்தில் படிந்து திடுக்கிட்டு அதிர கண்விழித்து 'இளவரசே' என்று கூவுவாள். பந்தத்தைக் கொளுத்தியபடி காட்டுக்குள் செல்வாள். பாண்டு புரண்டுபடுக்கும்போது காட்டுக்குள் பந்தச்சுடர் சுழல்வதைக் கண்டு புன்னகை செய்வான்.

நான்கு வயதில் அவன் அனகையின் தோள்கள் அளவுக்கு உயரம் கொண்டவனாகவும் அவளைவிட எடைகொண்டவனாகவும் இருந்தான். அவனுடைய வளர்ச்சியைப்பற்றி எவரும் கருத்து சொல்வதை அனகை விரும்புவதில்லை. குந்தியே சொன்னால்கூட சினந்து முகம் சிவக்க உரத்தகுரலில் "அத்தனை பெரிய உடலா என்ன? மற்றவர்களை விட சற்று வளர்ச்சி அதிகம்... சென்ற மூன்றுமாதங்களாக உணவு மிகவும் குறைந்துவிட்டது. வளர்ச்சியும் இல்லை" என்பாள். உடனே கண்ணேறுகழிக்க மூன்றுவகை காரங்களைக் கலந்து எரியும் அடுப்பில் போடுவாள்.

சேடியரும் சேவகரும் தும்மல்வராமலிருக்க மூக்கை பிடித்துக்கொள்வார்கள். அவள் காரத்தைக் கையிலெடுக்கையிலேயே நீரை அள்ளி கையில் வைத்திருக்கும் சமையற்காரிகள் மூக்கை அதைக்கொண்டு நனைப்பார்கள். அதையும் மீறி தும்முபவர்களை நோக்கி "எரிவிழியால் மைந்தனைப்பார்த்துவிட்டாயா? உன் கண் என்றுதான் நினைத்தேன்... மைந்தன் உணவுண்ண வந்து இரண்டுநாட்களாகின்றன" என்று வசைபாடுவாள். குந்தியே மைந்தனை தீநோக்கிடுவதாக அனகை ஐயம் கொண்டிருந்தமையால் பீமனை குந்தியின் முன் வராமலேயே அவள் பார்த்துக்கொண்டாள்.

மைந்தர்களை முற்றிலுமாக பிறரிடம் அளித்துவிட்டு குந்தி தன் உலகில் தனித்திருந்தாள். அவள் என்னசெய்கிறாளென்பதே மாத்ரிக்குப் புரியவில்லை. தனித்திருந்து சிந்திப்பவற்றை குந்தி மந்தண எழுத்தில் ஓலைகளில் எழுதி சுருட்டி மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து ஒரு மரப்பெட்டிக்குள் பூட்டிவைத்தாள். ஒவ்வொருநாளும் பழைய ஓலைகளை எடுத்து வாசித்து குறிப்புகளை எடுத்தபின் அவற்றை தீயிலிட்டு அழித்தாள். "என்ன செய்கிறீர்கள் அக்கா?" என்று ஒருமுறை அவள் கேட்டபோது குந்தி புன்னகை செய்து "வருங்காலத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்" என்றாள். மாத்ரி திகைப்புடன் மேலே பேசாமல் பார்த்தாள். ஒரு புன்னகையுடன் குந்தி மீண்டும் ஓலைகளில் ஆழ்ந்தாள்.

அஸ்தினபுரியிலிருந்து பறவைச்செய்திகள் வாரம் ஒருமுறை வந்தன. ஒற்றர்கள் மாதம் ஒருமுறை வந்தனர். காந்தார இளவரசியருக்கு மைந்தர்கள் தொடர்ந்து பிறந்துகொண்டே இருக்கும் செய்திகளைத்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் சொன்னார்கள். "அவர்களின் கருவறைகளை அவர்களின் அச்சமும் வஞ்சமும் எடுத்துக்கொண்டுவிட்டன. நான்குபேர் இருமுறை இரட்டையரைப் பெற்றிருக்கிறார்கள்" என்று குந்தி ஒருமுறை மாத்ரியிடம் சொன்னாள். "ஒவ்வொரு குழந்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரதிசெய்தது போலிருக்கிறது என்கிறார்கள்."

குந்தியின் கண்களும் தோற்றமும் முழுமையாகவே மாறின. தன்னைச்சுற்றியிருக்கும் எதையும் அறியாதவளாக ஆனாள். அவள் காடுகளுக்குள் சமித்துகளும் கிழங்குகளும் சேர்ப்பதற்காகச் செல்வதில்லை. வேள்விச்செயல்களுக்கு வந்தமர்வதில்லை. முனிவர்கள் எவரிடமும் உரையாடுவதில்லை. அவர்களுக்குமேல் தலைதூக்கி நிற்கும் பனிமலைமுகடுகளில் ஒன்றாக அவள் ஆனதுபோல மாத்ரி நினைத்தாள். அவர்கள் மத்தியில்தான் இருக்கிறாள், ஒவ்வொரு கணமும் கண்ணில்படுகிறாள். ஆனால் அவர்களுடன் இல்லை. அவர்களனைவருமே அவளை மெல்ல மறக்கவும் தொடங்கிவிட்டனர். பாண்டு குந்தியிடம் பேசியே மாதங்களாயிற்று என்றான். அனகை மட்டுமே அவளிடம் சில சொற்களேனும் பேசிக்கொண்டிருந்தாள்.

பாரதவர்ஷத்தின் அத்தனைநாடுகளிலிருந்தும் அவளுக்கு செய்திகள் வந்தன. மகதத்தைப்பற்றியும் காசியைப்பற்றியும் கலிங்கத்தைப்பற்றியும் அவளிடம் ஒற்றர்கள் செய்திகளைச் சொல்லும்போது இமைகள் அசையாமல் கேட்டுக்கொண்டாள். ஒருசில கூரியசொற்களில் பதில் சொன்னாள். மீறமுடியாத ஆணைகளை பிறப்பித்தாள். காட்டில் மலைப்பாறையில் அமர்ந்து செய்திகளைக் கேட்கும்போது அரண்மனையில் தேவயானியின் சிம்மாசனத்தில் வெண்குடைக்கீழ் மணிமுடிசூடி அமர்ந்திருப்பவள் போலிருந்தாள்.

ஆகவே பாண்டு மாத்ரியிடம் மேலும் நெருங்கினான். அவனுடைய உலகின் அன்றாடச் சிறுநிகழ்வுகளை அவனால் அவளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ளமுடிந்தது. ஒவ்வொருநாளும் அவனுக்குச் சொல்ல ஏராளமாக இருந்தன. கூண்டிலிருந்து தவறிவிழுந்த கிளிக்குஞ்சை மரக்கிளையில் ஏறி மேலே கொண்டுசென்று வைத்ததை. ஏரிமீது மிதந்த மலர் ஒன்றை கரையில் நின்று காட்டுக்கொடியின் கொக்கியை வீசிப் பிடித்து இழுத்துப் பறித்து தருமனுக்குக் கொடுத்ததை, மான்கூட்டத்தின் காலடிகளைத் தொடர்ந்துசென்று காட்டுக்குள் பதுங்கியிருந்த சிம்மத்தைக் கண்டதை...

அன்று அவன் அவளிடம் மூச்சிரைக்க வந்து "நான் இன்று ஒரு பறவைக்கூடைக் கண்டேன்" என்றான். "கைவிடப்பட்ட கூடு அது. பெருமரம் ஒன்றின் மீது மைந்தனுக்காக பறவைக்குஞ்சு ஒன்றை பிடிக்கும்பொருட்டு ஏறினேன். அங்கே அந்த பறவைக்கூட்டைப் பார்த்தேன். அது சிலநாட்களுக்கு முன் ஒரு பறவை குஞ்சுபொரித்து கைவிட்டுச்சென்ற கூடு. அதைநான் உனக்குக் காட்டவேண்டும்..." என்றான்.

உளஎழுச்சியால் அவன் சொற்கள் சிதைந்தன. "அது என்னபறவை என்று உடனே கண்டுகொண்டேன். அது சாதகப்பறவை. இந்தக்காட்டில் அத்தனைபெரிய பறவை அதுதான். நீ அதைப்பார்த்திருப்பாய். அதன் சிறகுகள் பெரிய சாமரம்போலிருக்கும். பறக்கும்போது அந்தச்சிறகுகளின் ஒலி முறத்தைச்சுழற்றுவதுபோல ஒலிக்கும். செம்மஞ்சள் நிறமான கழுத்தும் கரிய சிறகுகளும் கொண்டது. குட்டியானையின் தந்தம்போல நீண்டபெரிய அலகுகளும் குருதித்துளிபோன்ற கண்களும் கொண்டது...." மாத்ரி "ஆம், அதன் குரலை பலமுறை கேட்டிருக்கிறேன். ஒருமுறைதான் பார்த்தேன்" என்றாள்.

"அதன்குரல் வலுவானது. அதர்வவேதம் சாதகப்பறவையின் குரலையே சந்தமாகக் கொண்டுள்ளது என்கிறார்கள் முனிவர்கள்..." என்று பாண்டு அவள் கைகளைப்பிடித்தான். "வா அதை காட்டுகிறேன்." மாத்ரி "இந்த வேளையிலா? மைந்தர்கள் உணவு அருந்தவில்லை" என்றாள். "அவர்கள் இங்கிருக்கட்டும். நாம் சென்று அதைப்பார்த்துவருவோம்... நான் அதை உனக்குக் காட்டியே ஆகவேண்டும்" என்று அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்தான். அவள் அனகையிடம் மைந்தர்களை அளித்துவிட்டு அவனுடன் காட்டுக்குள் சென்றாள்.

குறுங்காட்டுக்கு அப்பால் இந்திரத்யும்னத்தின் நடுவே இருந்த சிறிய மேட்டில் அடர்ந்து ஓங்கிய மரங்கள் இருந்தன. "அதை சாதக த்வீபம் என்றே சொல்கிறார்கள். அங்கே செல்வதற்கு ஏரிக்கு அப்பால் ஒரு பாதை உள்ளது. நாணல்கள் அடர்ந்த பாதை" என்று பாண்டு அவளை அழைத்துச்சென்றான். மதியம் அடங்கி மாலைவெயில் காய்ந்த எண்ணையின் நிறத்தில் முறுகிவந்துகொண்டிருந்தது. "சாதகப்பறவையை கவிஞர்கள் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்கள். பராசரரின் புராணசம்ஹிதையில் இந்திராவதி என்னும் ஆற்றிலிருந்த ஆற்றிடைக்குறையில் வாழ்ந்துவந்த கௌரன் சுப்ரை என்னும் இரு சாதகப்பறவைகளைப்பற்றிய கதை உள்ளது" என்றான்.

"சாதகப்பறவைகள் பெருங்காதல்கொண்டவை. பெண்பறவை மரப்பொந்தில் முட்டைகளைப்போட்டுக்கொண்டு உள்ளேயே அமர்ந்துவிடும். தந்தை தன் வாயிலிருந்து வரும் பசையால் அந்த மரப்பொந்தைமூடும். சிறிய துளைவழியாக உணவை உள்ளே கொண்டு ஊட்டும். குஞ்சுகள் விரிந்து வெளிவந்து பறக்கத்தொடங்குவது வரை அன்னையும் குஞ்சுகளும் தந்தையால் பேணப்படும்" என்றான் பாண்டு. அந்த மரத்தடியை அடைந்து நின்றான். பேச்சினாலும் விரைவினாலும் அவன் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தான். "இந்த மரத்தின்மீதுதான்..." என்றபடி ஏறத்தொடங்கினான்.

மாத்ரி கீழேயே நின்றாள். "மேலே வா... எளிமையாக ஏறிவிடலாம். மரத்தின் பொருக்குகளில் கால்களை வை. கொடியைப்பற்றிக்கொள்" என்று அவன் கையை நீட்டினான். சற்று தயங்கியபின் அவளும் ஏறிக்கொண்டாள். அவன் அவளைப் பிடித்து கிளைக்கவையின் மேலேற்றி அந்தப்பொந்துக்குக் கூட்டிச்சென்றான். சற்று பெரிய பொந்துக்குள் சுட்டிக்காட்டி "பார்த்தாயா, நான் காட்டவிரும்பியது இதைத்தான்" என்றான். அவள் திகைத்து "என்ன அது? முட்டைகளா?" என்றாள். "இல்லை வெள்ளெலும்புகள். இங்கே முட்டையிட்ட அந்த சாதகப்பறவையின் எலும்புகள் அவை. சாதகப்பறவைக்கு மட்டும்தான் இத்தனைபெரிய எலும்புகள் உண்டு."

மாத்ரி உதடுகளை கடித்துக்கொண்டு கூர்ந்து பார்த்தாள். "அந்த தந்தைப்பறவை திரும்பி வந்திருக்காது. காட்டுத்தீயில் அகப்பட்டிருக்கலாம். வேட்டைக்காரனின் அம்பு பட்டிருக்கலாம். அது உணவுகொண்டுவரவில்லை என்றால் அன்னையும் மைந்தர்களும் பசித்து இறப்பதே ஒரே வழி." மாத்ரி "ஆம்... அந்தக்குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியே வந்ததுமே இறந்திருக்கும்" என்றாள். "நன்றாகப்பார். இதோ இரண்டு முட்டையோடுகள் கிடக்கின்றன. இரண்டு முட்டைகள் விரிந்து குஞ்சுகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இங்கே கிடக்கும் எலும்புகளில் குஞ்சுகளின் எலும்புகள் இல்லை."

அவன் சொல்லவருவதென்ன என்று அவளுக்குப் புரியவில்லை. "பராசரரின் புராணசம்ஹிதையில் உள்ள கதையிலும் இதுவேதான் நிகழ்கிறது. அந்த அன்னை தன் மைந்தர்களிடம் தன் உடலை சிறிது சிறிதாக உண்டு சிறகுகளை வளர்த்துக்கொண்டு பறந்துசெல்லும்படி சொல்கிறது. ஐந்து பறவைகளும் அன்னையை எச்சமில்லாமல் உண்டன. சிறகுகள் முளைத்ததும் அவை பறந்துசென்றன. ஒரே ஒருபறவை மட்டும் திரும்பி அன்னையைத் தேடிவந்தது. அன்னையின் அன்பின் நறுமணம் அந்தக்கூடில் எஞ்சியிருப்பதை அறிந்தது" என்றான் பாண்டு.

அவனுடைய பளபளக்கும் கண்களை அவள் பார்த்திருந்தாள். "இங்கே இந்தக் குஞ்சுகள் செய்ததும் அதைத்தான். அவை அன்னையை உணவாகக் கொண்டிருக்கின்றன. அதுதான் உயிரின் விதி. அந்தக்குஞ்சுகளின் உடலில் அன்னை பளபளக்கும் சிறகுகளாகவும் கூரிய விழிகளாகவும் வலிமைவாய்ந்த அலகுகளாகவும் மாறியிருப்பாள். அவள் தன்னை அமுதமாக்கிக்கொண்டாள்." அவன் உடல்நடுங்கிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவளுக்கு பொருள்புரியாத அச்சம் ஒன்று மேலெழுந்தது. அவனை அழைத்துச்சென்றுவிடவேண்டும் என்று நினைத்தாள்.

"மாத்ரி, மனிதர்களுக்கு இறையாற்றல்கள் அளித்திருக்கும் வாய்ப்பு ஒன்றுள்ளது. இறப்பை தேர்ந்தெடுப்பது. இறப்பின் வழியாக அழிவின்மையை அடையமுடியும் என்று அறியாத மானுடரே இங்கில்லை. ஒவ்வொருவரும் அகத்தே காணும் கனவு அதுதான். ஆனால் இந்த எளிய உடலை, இது அளிக்கும் இருப்புணர்வை, இதன் உறவுவலையை விடமுடியாமல் தளைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளியை நோக்கியே ஒவ்வொரு அகமும் திரும்பியிருக்கிறது. கனவுகண்டு ஏங்கியபடி கண்ணீர் விட்டபடி மெதுவாக இருளை நோக்கிச் செல்கிறது. மீளமுடியாத இருள். எல்லையற்ற இருள்வெளி."

அவன் உடல் விதிர்த்தது. "என் நினைவறிந்தநாள் முதல் அந்த இருளை நான் கண்டுகொண்டேன். ஆகவேதான் ஒவ்வொருநாளும் நான் ஒளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒளியை அன்றி இந்த மண்ணில் எதையும் நான் ஒருபொருட்டாக எண்ணியதில்லை." மாத்ரி "விரைவிலேயே இரவு வந்துவிடும் அரசே. மைந்தர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். நாம் கிளம்புவோம்" என்றாள்.

காட்டின் வழியாக அவர்கள் நடக்கும்போது பாண்டு தனக்குள் மிகவிரைவாக உரையாடிக்கொண்டிருப்பவன் போல தோன்றினான். அவன் கைவிரல்நுனிகள் அசைந்தன. முகத்தில் உணர்ச்சிகள் மாறிமாறி நிகழ்ந்தன. அவன் வழிவிலகிச் செல்கிறான் என்று அவளுக்குத் தோன்றியதும் "அரசே, எங்கே செல்கிறீர்கள்?" என்றாள். "அது என்ன நறுமணம்?" என்று பாண்டு கேட்டான். "செண்பகமலர்கள்... அங்கே செண்பகமரங்கள் பூத்திருக்கலாம்" என்று மாத்ரி சொன்னாள். பாண்டு "ஆம்... செண்பகம்... இரவில் வடக்கிலிருந்து காற்று வீசினால் செண்பகம் மணக்கிறது. இங்கே எங்கோ செண்பகக்காடு இருக்கிறது" என்றான்.

வெயிலில் சற்று வாடிய இலைகள் வளைந்து தொய்ந்திருந்தன. பச்சைத்தண்டுகள் களைத்தவை போல குழைந்து காற்றிலாடின. "இங்கேதான்... அணுகும்தோறும் பித்துகொள்ளச்செய்கிறது செண்பகமணம்" என்றான் பாண்டு. வெயில் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. நிழல்களின் அடர்த்தி குறைந்தது. காட்டுக்குள் நீண்டுகிடந்த ஒளிக்குழல்கள் மேலும்மேலும் சரிந்து மஞ்சள்நிறம் கொண்டன. அவை விழுந்து உருவாக்கிய பொன்னிறவட்டங்கள் மங்கலாயின. பறவைக்குரல்கள் ஒலிமாறுபட்டன. அவை கலைந்து உரக்க ஒலிப்பதுபோலத் தோன்றியது.

இலைப்பரப்புகளின் மேல் மஞ்சள் பளபளத்து வழிந்தது. மண் பொன்னிறமாகச் சுடர்விட பொற்துகள்களாக மின்னிய கூழாங்கற்களின் அருகே நிழல்கள் விரல்தொட்டு இழுத்ததுபோன்ற நீண்ட கறைகளாக விழுந்துகிடந்தன. வாகைமரம் ஒன்று சூடி நின்ற நெற்றுகளெல்லாம் பொற்குண்டலங்களாக மாறின. மாத்ரி பதைப்புடன் "அரசே, நாம் திரும்பிவிடுவோம்... நெடுந்தூரம் வந்துவிட்டோம்" என்றாள். பாண்டு "அந்த வாசனை... அதைக் காணாமல் திரும்பினால் நான் பித்துமுதிர்ந்து மீளமுடியாதவனாவேன்" என்றான்.

அது யட்சர்களின் நறுமணமாக இருக்குமோ என்று மாத்ரி ஐயுற்றாள். அவர்கள் நறுமணம் வழியாகவே மனிதர்களைக் கவர்ந்து தங்கள் இடத்துக்கு வரவழைப்பார்கள் என்று அறிந்திருந்தாள். அங்கே சென்றவர்களின் உடலில் கூடி அவர்கள் மானுடக்காமத்தை அறிவார்கள். யட்சர்கள் ஏறிக்கொண்ட உள்ளங்கள் பின்பு மண்ணுலகுக்கு மீள்வதில்லை. "அரசே, நாம் திரும்பி விடுவோம்" என அவள் அச்சத்துடன் சொன்னாள். ஆனால் அவன் அவளை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் முகம் பெருங்களிப்புடன் மலர்ந்திருந்தது. அவள் அவன் கைகளைப்பற்றினாள். அவை வெப்பத்துடன் நடுங்கிக்கொண்டிருந்தன.

காட்டின் தழைப்படர்ப்புக்கு அப்பால் ஒளி தெரிந்தது. அங்கே ஒரு பெரிய நீர்நிலை இருப்பதுபோல. இந்திரத்யும்னத்தின் ஏதோ நீட்சி என்றுதான் அவள் முதலில் எண்ணினாள். பாண்டு புதர்களை விலக்கி விலக்கி நீர்ப்பாசிக்குள் செல்லும் மீன் போல சென்றுகொண்டிருந்தான். புதர்களுக்கு வெளியே வந்தபோது அவள் கண்டது ஒரு மலைச்சரிவை. நீண்டு சரிந்திறங்கி ஆழத்தில் வெள்ளிச்சரிகை போல சென்றுகொண்டிருந்த சிற்றாறொன்றைச் சென்றடைந்த அச்சமவெளி முழுக்க செண்பக மரங்கள் பூத்து நின்றிருந்தன.

குட்டிமானின் செவிபோன்ற இலைகளும் மலைப்பாம்பு போன்ற கிளைகளும் கொண்ட செண்பக மரங்கள் முழுக்க மலர்கள் அடர்ந்திருந்தன. மலர்ந்த விழிகள் போன்ற நீல செண்பக மலர்கள். பொற்சங்கு போன்ற மஞ்சள் செண்பகங்கள். புன்னகைக்கும் சிவந்த செண்பகங்கள். காற்று சுழன்று மேலேறி வந்தபோது குளிர்ந்த நீர் போல மூச்சடைக்கச்செய்யும் செண்பக மணம் அவளைச்சூழ்ந்துகொண்டது. அது நறுமணமா என்றே ஐயமாக இருந்தது.  நாசியும் தொண்டையும் அந்த மணத்தால் கசந்தன. தலைசுழல்வதுபோலிருந்தது. குமட்டலெடுப்பதுபோலிருந்தது.

சற்றுநேரத்தில் அந்த மணத்தில் அங்கே மிதந்துகிடப்பதுபோல உணர்ந்தாள். உள்ளும் புறமும் அந்த மணம்தான் இருந்தது. மரங்களும் செடிகளும் பாறைகளும் தொலைதூரத்து பனிமலைமுகடுகளும் அனைத்தும் அதில் மிதந்து அலைந்தன. எண்ணங்களை செயலிழக்கச்செய்து ஆன்மாவை நிறைத்து விம்மச்செய்தது அது. பாண்டு திரும்பி அவளைப்பார்த்தான். அவன் விழிகளை அவள் புத்தம்புதியனவாக கண்டாள். அவன் அவள் கரங்களைப்பற்றிக்கொண்டான். "இறப்பதென்றால் இங்கே இறக்கவேண்டும்" என்று அவன் சொன்னான்.

அவன் தன்னை இழுத்து அணைத்துக்கொள்வதை அவள் உணர்ந்தாள். தாகமா பதற்றமா என்றறியாத ஒன்று அவளுக்குள் தவித்தது. அவனுடைய நடுங்கும் உதடுகளின் முத்தங்களையும் அவனுடைய உடலின் வெம்மையான அதிர்வையும் அவள் அறிந்தாள். "ஆம், சாவு என்றால் அது இத்தனை நறுமணம்கொண்டதாக இருக்கவேண்டும்" என்று அவன் சொன்னான். அச்சத்துடன் அவனைப் பிடித்து விலக்குவதற்காக அவள் அவன் மார்பைப்பிடித்து உந்தினாள். அது அவன் பிடியை மேலும் இறுக்கியது. "இதுதான்... இந்தக்கணம்தான்" என அவன் பொருளில்லாமல் ஏதோ சொன்னான்.

அக்கணம் அவள் தன்னுள் எழுந்த துடிப்பை உணர்ந்தாள். அவனை அள்ளிப்பற்றி தன்னுள் அடக்கி கரைத்துக்கொள்ளவேண்டும் என்று. அவனை ஐந்து உடல்களாகக் கிழித்து ஐந்து முகங்களாக ஆக்கி ஐந்தையும் தின்று உள்நிறைத்துக்கொள்ளவேண்டும் என்று. திரவவடிவமாக மாறி அந்தச்சமவெளியை நிறைக்கவேண்டும் என்று. மேலே விரிந்த வானையும் வெளியையும் நிரப்பி தான் மட்டுமேயாகி நின்றிருக்கவேண்டும் என்று.

பகுதி பதினெட்டு : மழைவேதம் - 89

[ 1 ]

மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து

விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் “அரசர் எங்கே?”

என்றாள். “இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்” என்றாள் அனகை.

“எங்கே?” எனக் கேட்டபோதே குந்தி வரவிருப்பதை உள்ளாழத்தில் உணர்ந்துவிட்டாள்.

“எங்கே?” என்று மீண்டும் கேட்டாள். “காட்டுக்குள் எதையோ காட்டுவதாகச் சொல்லி

சென்றார்” என்றாள் அனகை. “இவ்வளவுநேரம் அவர் மைந்தர்களை விட்டுச்செல்லும்

வழக்கமே இல்லை. எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.”

குந்தி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “பீமன் எங்கே?” என்றாள். “இளவரசரை

தேடித்தான் நான் காட்டுக்குள் செல்வதாக இருக்கிறேன். அவர் வந்து உணவுண்ணும்

நேரமாகிறது” என்று அனகை சொன்னாள். “உடனே காட்டுக்குள் சென்று அவனை அழைத்துவா”

என்றாள் குந்தி. அனகை “இதோ” என்று ஓட “இரு” என்றாள் குந்தி. ”நீ அவனைத்

தேடிக்கண்டடைய நேரமாகும். அவனே இங்குவரட்டும்” என்றபின் சேவகர்களை அழைத்து

குடில்முற்றத்தில் நெருப்பிடச்சொன்னாள். “பச்சை இலைகளையும் குங்கிலியத்தையும்

போடுங்கள்! புகை வானில் எழவேண்டும்.” அவர்கள் விரைந்து நெருப்பிட்டனர்.

“சங்குகளையும் மணிகளையும் ஒலிக்கச்செய்யுங்கள். இங்கு

நெருப்பெழுந்திருக்கலாமென்று தெரியவேண்டும்.”

சற்றுநேரத்திலேயே எதிரே மரக்கிளையில் இருந்து பீமன் குதித்து அங்கே நெருப்பு

வளர்க்கப்படுவதைக்கண்டு திகைத்து நின்றான். குந்தி அவனைநோக்கி ஓடி “என்னுடன்

வா… அரசரையும் சிறிய அரசியையும் நாம் கண்டுபிடிக்கவேண்டும்” என்றாள். தருமன்

எழுந்து “அன்னையே நானும் வருகிறேன்” என்றான். “நீ இங்கே இரு. காட்டுக்குள்

செல்ல உனக்கு வழி தெரியாது” என்றாள் குந்தி. தருமன் “நான் வருகிறேன்… நான்

அவனுக்கு உதவியாக இருப்பேன்” என்றான். குந்தி தயங்கியபின் வா என

தலையசைத்துவிட்டு காட்டுக்குள் சென்றாள்.

“விருகோதரா, அரசர் எங்குசென்றார் என்று எனக்குத்தெரியாது. காட்டில்

எங்குவேண்டுமானாலும் அவர் இருக்கலாம். எத்தனை விரைவாக அவர்களைக்

கண்டடையமுடியுமோ அத்தனை நன்று” என்றாள் குந்தி. “அன்னையே, நான் அவரது உடலின்

மணத்தை நன்கறிவேன். அவரது பாதத்தடங்களையும் அவர் உடல்தொட்ட இலைகளின்

வாசத்தையும் கொண்டே அவரை நெருங்கிவிடுவேன்” என்றபின் பீமன் முன்னால் ஓடினான்.

ஓநாய் போலவே அவன் மோப்பம் பிடித்துக்கொண்டு ஓடுவதை குந்தி வியப்புடன் கண்டாள்.

அவன் கால்கள் பெரிதாக கனத்திருந்தாலும் குழந்தைத்தனமும் அவற்றிலிருந்தது.

சற்றுதொலைவு ஓடி அங்கே நின்று வருக என்று கைகாட்டியபின் மீண்டும் சென்றான்.

தருமன் எந்த ஒலியும் இல்லாமல் அவளுக்குப்பின்னால் வந்தான்.

இந்திரத்யும்னத்தின் நடுவே இருந்த சாதகத்தீவை நோக்கிச்சென்ற சிறியமேட்டு

வழியில் பீமன் திரும்பியதும் தருமன் “மந்தா, அங்கே செல்வதற்கு முன் அவர்கள்

அங்கிருந்து திரும்பியிருக்கிறார்களா என்று மோப்பம் கொண்டு பார்” என்றான்.

குந்தி திகைப்புடன் திரும்பி தருமனைப்பார்த்தாள். ஐந்துவயதான சிறுவனின்

குரலும் பேச்சும் அல்ல அது. அவளறியாமலேயே அவள் குழந்தைகள் வளர்ந்து

மாறிவிட்டிருந்தனர். பீமன் விலங்குகளின் ஆற்றல்களைக்கொண்ட குழந்தையாக இருக்க

தருமன் குழந்தைப்பருவத்தில் கால் வைக்காமலேயே அதைக் கடந்துவிட்டிருந்தான்.

பீமன் அவர்கள் திரும்பியதைக் கண்டுகொண்டான். மறுபக்கம் திரும்பி

மோப்பம்பிடித்து காட்டுக்குள் புதர்களை ஊடுருவிச்சென்றான்.

இலைத்தழைப்புகளுக்கு அப்பால் அவன் நீரில் தவளை போல எழுந்து கையசைத்துவிட்டு

மீண்டும் மூழ்கிச்சென்றான். குந்தியின் நெஞ்சுக்குள் அச்சம்

வலுப்பெறத்தொடங்கியது. மொத்தையான கல்தூணாக நின்றிருக்கும் பூததெய்வங்கள்

கண்கள் வரையப்பட்டதும் உயிர்கொள்வதுபோல அவளுடைய அச்சம் தெளிவடைந்தது. அவள் நடை

தளரத்தொடங்கியது. பீமன் “அங்கே” என்று கைகாட்டினான். மலைச்சரிவை

நோக்கிச்செல்லும் ஈரமான பாதையில் இரு பாதத்தடங்கள் தெரிந்தன.

தருமன் “மந்தா, நில்” என்று சொன்னான். “நீ அங்கே செல்லலாகாது. அன்னை மட்டும்

சென்று பார்க்கட்டும்.” பீமன் திரும்பி தமையனருகே வந்து நின்றுகொண்டான்.

குந்தி திகைப்புடன் தருமனை திரும்பிப்பார்த்தாள். மலர்ந்த விழிகளுடன் பெரிய

தலையும் மெலிந்த சிறு உடலுமாக இயல்பாக நின்றிருந்த வெண்ணிறமான அந்தச் சிறுவனை

அவள் அதுவரை பார்த்ததே இல்லை என்று தோன்றியது. “அன்னையே, நீங்கள் அங்கே

சென்றதும் குரல்கொடுங்கள். மந்தன் வந்து உங்களுக்கு உதவுவான்.

இந்தப்பாதத்தடங்களை தொடர்ந்து செல்லுங்கள். ஓசை எழுப்பவேண்டியதில்லை.”

குந்தி தலையசைத்தாள். வாழ்நாளில் முதல்முறையாக இன்னொருவரின் கட்டளையை

ஏற்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. தங்கள் சொல்லில் முழுமையான நம்பிக்கை

கொண்டவர்களால் மட்டுமே ஆணையிடமுடியும். இவன் எங்கும் எவரிடமும் ஆணையிடவே

பிறந்தவன் என அவள் எண்ணிக்கொண்டாள். அவனருகே நின்றிருக்கும் இளையவன்

வளர்ந்தபின் அந்த ஆணையை மீறுவதைப்பற்றி மானுடர் எவரும்

எண்ணிக்கூடப்பார்க்கமுடியாது.

அவள் மலைச்சரிவைத் தாண்டியதுமே செண்பகமணம் வந்து சூழ்வதை உணர்ந்தாள். அந்த

மணம் நெடுந்தொலைவிலிருந்தே வந்துகொண்டிருந்தாலும் அகம் அதை

பெற்றுக்கொள்ளவில்லை. அந்த வாசத்தை உணர்ந்ததுமே அவள் அஞ்சிய அனைத்தும்

உறுதியாகிவிட்டதாக உணர்ந்தாள். மெல்லிய குரலில் “மாத்ரி” என்றழைத்தாள். மேலும்

உரக்க “மாத்ரி” என்றாள். மீண்டும் அழைத்தபடி செண்பக மரங்களின் அடியில்

உதிர்ந்து பரவிக்கிடந்த பூக்களின் மேல் நடந்தாள். தலைகிறுகிறுக்கச்செய்தது

அந்த மணம். முதிய மதுபோல. புதிய விந்து போல.

அவள் அவர்களைக் கண்டுவிட்டாள். ஓடிச்சென்று அவர்களை அணுகினாள். “மாத்ரி” என்று

கூவினாள். அவர்கள் பிணைந்த பாம்புகள் போல இறுகி அதிர்வதைக் கண்டாள்.

பாண்டுவின் கால்கள் மண்ணை உதைப்பதுபோல கிளறிக்கொண்டிருந்தன. அவனுடைய

வெண்ணிறமான வெற்றுமுதுகில் தசைகள் வெட்டுண்டவை போல துடித்தன. அவள் அருகே

சென்று நின்று “மாத்ரி” என்று கூவினாள். பாண்டுவின் உடல் விரைத்து அவன் கைகள்

இழுத்துக்கொண்டன. அவள் குனிந்து அவனைப்பிடித்து மெல்ல விலக்கி

புரட்டிப்போட்டாள். அவன் மார்பிலும் கழுத்திலும் நரம்புகள் நீலமாக

இறுகிப்புடைத்திருந்தன. கைகள் முட்டிபிடித்து இறுகியிருக்க பற்களில் நாக்கு

கடிபட்டு பாதி துண்டாகி தொங்கியது. விழிகள் மேலேறி செந்நிறமான படலம் மட்டும்

தெரிந்தது.

குந்தி “அரசே அரசே” என்று கூவியபடி குனிந்து பாண்டுவின் முகத்தை அசைத்தாள்.

அவன் மூக்கில் கைவைத்துப்பார்த்தாள். மூச்சு இருக்கிறதா இல்லையா என அவளால்

அறியமுடியவில்லை. அவளுடைய கைகள் வியர்வையில் குளிர்ந்திருந்தன. அவன் நெஞ்சில்

கை வைத்தாள். இதயம் துடிப்பதுபோலத் தெரிந்தது. உவகையுடன் “அரசே” என்று

கூவியபடி அவனை உலுக்கினாள். மீண்டும் நெஞ்சில் கைவைத்தாள். முதலில் அவளறிந்தது

தன் நாடித்துடிப்பைத்தான் என்று உணர்ந்தாள். தன் மேலாடை நுனியின் மெல்லிய நூலை

அவன் மூக்கருகே பிடித்தாள். அது அசைந்தது. “அரசே அரசே” என்று அவள் அவனை

உலுக்கினாள். மீண்டும் மேலாடை நுனியை வைத்துப்பார்த்தாள். அசையவில்லை.

‘தெய்வங்களே மூதாதையரே’ என்று அவள் நெஞ்சுக்குள் கூவினாள். முதலில் அவள் தன்

விருப்பத்தையே உண்மை என அறிந்தாள். அவ்விருப்பத்தை மீறி உண்மையை அறியப்போகும்

கணம் அஞ்சி பின்னடைந்து மீண்டும் தன் விருப்பத்தைத் தெரிவு செய்தாள். அவன்

நெஞ்சிலும் மார்பிலும் மீண்டும் மீண்டும் கையை வைத்துக்கொண்டிருந்தாள்.

பின்னர் ஒரு கணத்தில் கனத்த பாறை ஒன்று முதுகின்மேல் விழுந்ததுபோல உண்மை அவளை

அடைந்தது. அவன் இறந்துவிட்டிருந்தான்.

அவள் திரும்பி கண்களை மூடிப்படுத்திருந்த மாத்ரியை தொட்டு உலுக்கினாள்.

அவளுடைய கனத்த புயங்களைப்பிடித்து அசைத்து “மாத்ரி மாத்ரி” என்றாள். அவள்

எங்கோ இருந்து “ம்ம் ம்ம்?” என்றாள். “எழுந்திரு… மாத்ரி” அவள் மெல்லக்

கண்திறந்து சிவந்த விழிகளால் நோக்கி “ம்ம்?” என்றாள். “எழுந்துகொள்… அரசர்

இறந்துவிட்டார்.” அவள் மீண்டும் “ம்ம்” என்றாள். அவள் இமைகள் மீண்டும்

தழைந்தன. “மாத்ரி எழுந்துகொள்… அரசர் இறந்துவிட்டார்” என்று அவள் கூவினாள்.

அவளுடைய கன்னங்களில் வேகமாகத் தட்டி அவளை உலுக்கினாள்.

அனைத்தையும் ஒரே கணத்தில் உள்வாங்கிக்கொண்டு மாத்ரி எழுந்தமர்ந்தாள். தன்

ஆடையின்மையைத்தான் முதலில் அவள் உணர்ந்தாள். முலைகளை கைகளால் மறைத்துக்கொண்டு

ஆடைகளுக்காக சுற்றுமுற்றும் பார்த்தாள். குந்தி எழுந்து அப்பால் புல்லில்

கிடந்த அவளுடைய ஆடைகளை எடுத்து அவள்மேல் வீசினாள். அவள் அவற்றை அள்ளி தன்

உடலில் வேகமாகச் சுற்றிக்கொண்டாள். குந்தி “அரசரின் ஆடைகள் எங்கே?” என்றாள்.

மாத்ரி சுட்டிக்காட்டியபோது ஓடிச்சென்று அவற்றை எடுத்து பாண்டுவின் மீது

அவற்றைப் போர்த்தியபின் உரக்க “தருமா, மைந்தா!” என்று கூவினாள்.

பீமன் முதலில் பாய்ந்துவந்தான். அங்கே நிகழ்ந்தது என்ன என்று அவனுக்குப்

புரியவில்லை. “தந்தைக்கு உடல்நலமில்லையா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள்

குந்தி. “அவரை நாம் உடனே குடிலுக்குக் கொண்டுசெல்லவேண்டும்.” பின்னால் வந்த

தருமன் “மந்தா, விலகு” என்று சொல்லி குனிந்து பாண்டுவின் முகத்தருகே தன்

செவியை வைத்தான். “தந்தையார் இறந்துவிட்டார்” என்றான்.

ஒருகணம் அவன்மேல் கடும் வெறுப்பு பொங்கி எழுவதை குந்தி உணர்ந்தாள். மறுகணம்

அச்சம் எழுந்தது. குருதியையும் கண்ணீரையும் வெறும்நீரென எண்ணும் சக்ரவர்த்தி

இவன் என்று எண்ணிக்கொண்டாள். அத்தகைய ஒருவனுக்காகவே அவள் தவமிருந்தாள். ஆனால்

அவன் முன் நிற்கையில் எளிய யாதவப்பெண்ணாக சிறுமையும் அச்சமும் கொண்டாள்.

“அன்னையே, இளையன்னையுடன் தாங்கள் குடிலுக்குச் செல்லுங்கள். செல்லும் வழியில்

அவர்கள் நன்கு உடையணிந்துகொள்ளட்டும். சேவகர்களை உடனே இங்கு அனுப்புங்கள்.”

“அரசரை உடனே குடிலுக்குக் கொண்டுசெல்லவேண்டும்” என்றாள் குந்தி. “அதனால் பயன்

இல்லை. அவர் இப்போதிருக்கும் உடலுடன் அங்கே வரக்கூடாது. சேவகர் வருவதற்குள்

அவரது உடல் தளர்ந்துவிடும்” என்று தருமன் சொன்னான். அரைக்கணம் அவன்

விழிகளைப்பார்த்தபின் அவள் திரும்பிக்கொண்டாள். இனி ஒருபோதும் அவன் விழிகளை

எதிர்கொண்டு பேச தன்னால் இயலாது என்று அவள் அறிந்தாள். “செல்லுங்கள் அன்னையே.

அரசர் விண்ணேகியதை அங்கே முறைப்படி அறிவியுங்கள். அஸ்தினபுரியின் அரசர் பாண்டு

அவரது பெரிய தந்தையார் சித்ராங்கதன் தட்சிணவனத்தில் மறைந்தது போல செண்பக

வனத்தில் மறைந்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.

அவள் தலையசைத்து மாத்ரியை அழைத்துக்கொண்டு நடந்தாள். அவன் சொல்வதென்ன என்று

அவளுக்குப்புரிந்தது. எல்லா சக்ரவர்த்திகளையும்போல அவன் எதிர்காலத்தில்

வாழத்தொடங்கிவிட்டான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சூதர்களின்

புராணமாக அமைத்துக்கொண்டிருக்கிறான். அனைத்துக்கதைகளையும் அவன் தன்

தந்தையிடமிருந்து அறிந்திருக்கலாம். ஐந்து வருடங்களாக இரவும் பகலும் பாண்டு

அவனிடம் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அந்தக்கணத்தில் அந்தமுடிவை இயல்பாக

எப்படி எடுக்கமுடிகிறது? அப்படியென்றால் அவன் சக்ரவர்த்தியாகவே தன் அகத்தை

அடைந்திருக்கிறான்.

சேவகர்கள் பாண்டுவைச் சென்று கண்டபோது பீமன் பாண்டுவின் உடலில் ஆடையை

அணிவித்திருந்தான். தருமன் செண்பகமாலை ஒன்றைத் தொடுத்து அவன் கழுத்தில்

அணிவித்திருந்தான். சேவகர்கள் மூங்கில் தட்டுகட்டி அதில் பாண்டுவைச்

சுமந்துகொண்டுவந்தனர். முன்னால் ஒருவன் சங்கு ஊத பின்னால் எழுவர் வாழ்த்தொலி

எழுப்ப முன்னும்பின்னும் பந்தங்கள் தழலாட பாண்டுவின் சடலம் வந்தது. குந்தி அதை

குடிலின் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஒளிரும் நெருப்பைச்

சிறகுகளாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கால்களுடன் ஒரு பெரிய மிருகம்

காட்டுக்குள் இருந்து வருவதுபோலத் தெரிந்தது.

மாத்ரி உயிரிழந்தது போலிருந்தாள். குடிலுக்கு வந்ததுமே அனகையிடம்

அவளைக்கொண்டுசென்று முகம் துடைத்து குடிப்பதற்கு ஏதேனும் கொடுத்து

கூட்டிவரும்படி குந்தி சொன்னாள். அனகையின் கையில் ஒரு கைக்குழந்தைபோல மாத்ரி

இருந்தாள். திரும்பக்கொண்டுவந்தபோது முற்றத்திலேயே குடில் சுவரில் சாய்ந்து

அமர்ந்துகொண்டாள். குந்தி அவள் கண்களை ஒருமுறை நோக்கியபோது உள்ளம்

அதிர்ந்தாள். அவை பொருளற்ற வெறிப்பு கொண்டிருந்தன.

பீமன் அவளை நோக்கி ஓடிவந்து “அன்னையே, தந்தையைக் கொண்டுவந்துவிட்டோம்.

வைத்தியர்கள் உடனே வந்து மருந்து கொடுக்கட்டும்” என்றான். குந்தி திகைப்புடன்

குனிந்து அவனைப்பார்த்தாள். திரும்பி சேடியர் கைகளில் அமர்ந்து அந்தப்

பந்தங்களை விரிந்த கருவிழிகளுக்குள் செம்புள்ளிகள் அசைய நோக்கிக்கொண்டிருந்த

பார்த்தனைப் பார்த்தாள். அவன் கருங்குழலை உச்சியில் சிறுகுடுமியாகக் கட்டி

அதில் சிவந்த மலர்களைச் சூட்டியிருந்தாள் சேடி. கைகளில் மரத்தாலான சிறிய

குதிரைப்பாவையை வைத்திருந்தான். அப்பால் இரு சேடிகள் இடையில் அமர்ந்து

நகுலனும் சகதேவனும் இடது புறங்கையை வாய்க்குள் போட்டுக்கொண்டு பந்தங்களைப்

பார்த்தனர்.

“மருத்துவர் வந்து தந்தையை எழுப்பியதும் சொல்லுங்கள். அவரை நான்தான்

கண்டுபிடித்தேன்” என்றான் பீமன். “அதற்குள் நான் உணவுண்டு வருகிறேன்.” தருமன்

அவளருகே வந்து “அன்னையே, அஸ்தினபுரிக்கு முறைப்படி செய்தியறிவிக்கவேண்டும்.

மாண்டூக்ய முனிவரிடம் இங்கே அரசருக்குச் செய்யவேண்டியவை அனைத்தையும்

செய்யும்படி சொல்லிவிட்டேன்” என்றான். அவன் விழிகளில் சற்றேனும் ஈரமிருக்கிறதா

என்று அவள் பார்த்தாள். விளக்குகளின் செம்மைதான் அவற்றுக்குள் மின்னியது.

மாண்டூக்யர் தருமனிடம் வந்து “இளவரசே, அஸ்தினபுரியின் மன்னருக்கு முறைப்படி

எரிச்செயல்களைச் செய்ய அதர்வவேதத்தில் பயிற்சிகொண்ட வைதிகர்கள் வேண்டும். கீழே

ஜாதவேதம் என்னும் சோலையில் காஸ்யபர் என்னும் முனிவர் இருக்கிறார்

என்கிறார்கள். அவரை வரவழைக்க பிரம்மசாரி ஒருவரை அனுப்பியிருக்கிறேன்.

மன்னருக்காக அஸ்வமேதாக்னியை எழுப்பவேண்டும். அதற்குரிய ஒன்பதுவகை விறகுகளும்

ஏழுவகை நறுமணப்பொருட்களும் கொண்டுவரவும் சேவகர்களுக்கு ஆணையிட்டிருக்கிறேன்”

என்றார். தருமன் தலையசைத்துவிட்டு குந்தியிடம் “இங்கே பொன்நாணயங்கள் உள்ளன

அல்லவா?” என்றான்.

அவள் அவன் கண்களைப்பார்க்காமல் திரும்பிக்கொண்டாள். அவனுக்கு அவள் அங்கே ஐந்து

இடங்களிலாகப் புதைத்து வைத்துள்ள பொன்னைப்பற்றித் தெரியுமென்பது அவ்வினாவிலேயே

இருந்தது. “ஆம்” என்றாள். “இங்கு சேவைசெய்யும் அனைவருக்கும் அரச சேவைக்குரிய

பொன் பரிசாக வழங்கப்படவேண்டும்” என்று சொல்லிவிட்டு “மந்தா, என்னுடன் வா. நீ

என்னுடன் இருக்கவேண்டும்” என்றான். பீமன் “மூத்தவரே, தந்தையைப் பார்க்கும்

மருத்துவர்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என்றான். தருமன் அவன் முகத்தை ஒருகணம்

நோக்கி பின் முகம் சற்று நெகிழ்ந்து “என்னுடன் வா. நான் சொல்கிறேன்” என்றான்.

தமையனைத் தொடர்ந்து செல்லும் தம்பியை குந்தி பார்த்தாள். பீமனின் தோளுக்குக்

கீழேதான் தருமனின் தலை இருந்தது. தருமன் ஒவ்வொருவரையும் கவனித்து தேவையானபோது

சில சொற்களில் ஆணைகளை இட்டான். பீமன் திரும்பித் திரும்பி அங்கே நிகழ்வதை

பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பசி எழுந்துவிட்டது என்று குந்தி

அறிந்தாள். ஆனால் ஓநாயைப்போலவே ஏதும் உண்ணாமல், நீரும் அருந்தாமல்

நாட்கணக்கில் இருக்கக்கூடியவன் அவன் என் அவள் புஷ்பவதிக்கரையிலேயே

அறிந்திருந்தாள்.

இந்திரத்யும்னத்தின் கரையில் சேற்றுமேடு ஒன்றில் செறிந்திருந்த நாணல்களை

வெட்டி விலக்கி அங்கே சிதைமேடை அமைக்க மாண்டூக்யர் ஆணையிட்டிருந்தார்.

அந்தப்பகுதியைச் சுற்றி பந்தங்கள் எரிய சேவகர்கள் வேலைசெய்துகொண்டிருந்தனர்.

அந்த ஒளி அப்பால் நீர்ப்பரப்பில் பிரதிபலிக்க காட்டுக்குள் நெருப்பெழுவதுபோல

செவ்வலைகள் தெரிந்தன.

குடிலின் முற்றத்தின் நடுவே மூன்றடுக்காக மூங்கில்மேடை அமைத்து அதன்மேல்

பரப்பப்பட்ட ஈச்சை ஓலைப்படுக்கையில் பாண்டு படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவன்

மீது செம்பட்டு போர்த்தப்பட்டு முகம் மட்டும் தெரிந்தது. அந்த மேடையைச் சுற்றி

பன்னிரு நெய்ப்பந்தங்கள் தழல்நெளிய எரிந்தன. மன்னனின் காலருகே விரிக்கப்பட்ட

ஈச்சை ஓலைப்பாய்களில் சேவகர்களும் இரு விலாப்பக்கங்களில் விரிக்கப்பட்ட

பாய்களில் வைதிகர்களும் முனிவர்களும் அமர்ந்தனர். தலையருகே இடப்பக்கம் பாயை

விரித்ததும் அனகை வந்து “அரசியர் வந்து அங்கே அமரவேண்டும்” என்றாள்.

குந்தி மாத்ரியின் கையைப்பற்றி “வா” என்றாள். அவள் பாவைபோல எழுந்து

தலைகுனிந்து நடந்து வந்தாள். அவர்கள் அமர்ந்துகொண்டதும் அனகை இருவருடைய

கூந்தல்களையும் அவிழ்த்து விரித்திட்டாள். அவர்கள் முன் ஒரு அகல்விளக்கை

வைத்து நெய்யூற்றினாள். பாண்டுவின் வலப்பக்கம் தலையருகே அவனுடைய உடைவாள்

வைக்கப்பட்டது. அனகையும் சேடியரும் மூன்று மைந்தர்களையும் கொண்டுவந்தனர்.

பார்த்தனை அனகை குந்தியின் மடியில் வைத்தாள். நகுலனும் சகதேவனும்

தூங்கிவிட்டிருந்தனர். அவர்களை மாத்ரியின் மடியில் வைக்கப்போனபோது அவள்

கைநீட்டி குந்தியிடம் கொடுக்கும்படி சொன்னாள். குந்தி மாத்ரியின்

முகத்தைப்பார்த்தாள். பந்த ஒளியில் அவள்முகம் அலையடித்துக்கொண்டிருந்தது.

இருகுழந்தைகளையும் குந்தி தன் மடியில் படுக்கச்செய்துகொண்டாள்.

குந்தி பார்த்தனை தன் அருகே படுக்கச்செய்ய முயன்றாள். முதுகில் தட்டிக்கொடுத்த

அவள் கரங்களை உதறிவிட்டு அவன் மீண்டும் மீண்டும் எழுந்து அமர்ந்து பாண்டுவின்

உடலையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் என்னதான் பார்க்கிறான், என்ன புரிகிறது

என அவள் வியந்துகொண்டாள். அவன் விழிகள் தந்தையின் முகத்திலிருந்து கணமும்

அசையவில்லை. சேவகர்கள் ஓசையே இல்லாமல் ஒவ்வொருவரையும் அமரச்செய்தனர்.

வசந்தகாலமானதனால் குளிர் இருக்கவில்லை. இருந்தாலும் முதிய வைதிகர் சிலர்

தோலாடையை போர்த்திக்கொண்டனர்.

நகுலனும் சகதேவனும் ஒரேசமயம் சிணுங்கியபடி நெளிந்து கைகால்களை அசைத்தனர். அவள்

மெல்லத்தட்டியபோது இருவரும் ஒரேபோல கைகளை வாய்க்குள் போட்டுக்கொண்டு மீண்டும்

தூங்கினர். இருவர் கனவிலும் ஒரேசமயம் தோன்றுவது எந்த தெய்வம் என அவள்

எண்ணிக்கொண்டாள். அத்தகைய பொருளற்ற சிறிய எண்ணங்கள் வழியாக மனம் அந்தத்

தருணத்தின் அழுத்ததை தாண்டிச்செல்லும் விந்தையையும் உணர்ந்தாள். அது ஒரு

திருப்புமுனை. அதன்பின் ஒவ்வொன்றும் மாறப்போகிறது. அவளுடைய மைந்தர்களும்

அவளும் அனைத்தையும் தன்னந்தனியாக நின்று எதிர்கொள்ளவேண்டும். அவளுடைய கால்கள்

சற்று பதறுமென்றால், உள்ளம் சற்றுச் சோர்வுறுமென்றால், அவள் மைந்தர்கள்

மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்களின் வாழ்க்கைக்குச் சென்றுசேர்வார்கள்.

நினைவறிந்த நாள் முதல் அவள் கற்றுச்சேர்த்தவை பயின்று அடைந்தவை அனைத்தும்

செயலாக மாறவேண்டிய நேரம். மைந்தர்கள் பிறந்ததுமுதல் அவள் ஒவ்வொருநாளும்

அஞ்சிக்கொண்டிருந்த தருணம். ஆனால் அந்தப்புள்ளியைத் தாண்டி முன்செல்ல அவள்

அகம் மறுத்துவிட்டது. ஓடையைத் தாண்டமறுக்கும் புரவி போல கால்களை ஊன்றி நின்று

முகர்ந்து முகர்ந்து பெருமூச்சுவிட்டது.

சலித்துப்போய் அவள் பின்னோக்கித் திரும்பினாள். பாண்டுவுக்கு மாலைசூடிய

மணத்தன்னேற்பு முதல் நினைத்துப்பார்க்க முயன்றாள். தன் உள்ளம்

பின்னோக்கிச்செல்லவும் மறுப்பதை அறிந்தாள். ஒற்றைச்சித்திரங்களாக சில

அகக்கண்ணில் வந்துசென்றன. அவன் படுக்கையில் வாயோர நுரையுடன் படுத்திருந்த

காட்சி. அவனுடைய நீலநரம்புகள் புடைத்த உடலின் அதிர்வு. சிவந்தகண்களில் இருந்து

கண்ணீர் வழிய அவனுடைய துயரம். அவனுடைய நோயும் தனிமையும் மட்டுமே நினைவுக்கு

வருகிறதென்பதை அவள் வியப்புடன் கண்டாள். அவனைப்பற்றிய இனிய நினைவுகளேதும்

அவளுக்குள் இல்லையா என்று எண்ணிக்கொண்டு தன் நினைவறைகளைத் துழாவினாள். அப்போது

அவனுடைய நினைவே அங்கில்லாததுபோல அகம் ஒழிந்துகிடந்தது. மீண்டும் மீண்டும் அது

பிடிவாதமாக நிகழ்காலத்துக்கே வந்தது.

ஒவ்வொரு நினைவோட்டமும் கண்முன் இருக்கும் காட்சிகளின் பொருளில்லாத நுட்பங்களை

நோக்கியே மீண்டும் வந்தடைந்தது. அவனுடைய உடலின்மீது போர்த்தியிருந்த நீண்ட

செம்பட்டை அவள் ஒருவருடம் முன்னர் அஸ்தினபுரியிலிருந்து தருவித்திருந்தாள்.

எதற்கென்று அப்போது அவளே உணரவில்லை. பொன்னூல்சித்திரப்பின்னல் கொண்ட ஒரு

செம்பட்டு தேவை என்று மட்டும் எண்ணினாள். அங்கே எப்போதாவது ஒரு எளிய ஆசனத்தில்

மைந்தருடன் பாண்டு அமரவிருப்பான் என்றால் அந்தப்பட்டை அதன் மேல்

விரித்துக்கொள்லலாம் என்று எண்ணிக்கொண்டாள். அப்போதே தன் அகம் அறிந்திருந்ததா?

பாண்டுவின் முகம் செவ்வொளியில் பாவைபோலவே இருந்தது. அவன் தன் அன்னையின் கையில்

பாவையாக இருந்தான். அந்தப்பாவை உயிர்கொண்டு எழுந்து சற்றே வாழ்ந்து மீண்டும்

பாவையாகிவிட்டது. திரும்பவும் அவன் அன்னையின் கையில் அதைக்கொடுப்பதே முறை.

ஆம், அவள் ஒருகணம்கூட அம்பாலிகையைப்பற்றி எண்ணவில்லை. சதசிருங்கத்துக்கு

வந்தபின் அம்பாலிகையின் செய்திகள் வந்தபடியே இருந்தன. ஒருமுறைகூட பாண்டு

அவற்றுக்கு மறுமொழி அளிக்கவில்லை. முறைமைசார்ந்த மறுமொழியை அவள்தான்

அளித்துக்கொண்டிருந்தாள். பின்னர் அச்செய்திகள் நின்றுவிட்டன. அம்பாலிகை

எப்படி இருக்கிறாள் என்று அவளே கேட்டால் உளவுச்சேடி வழக்கமான ஒற்றைவரியில்

பதிலளித்தாள்.

ஆம், சிறிய அரசி நலம். அவள் தன் அரண்மனை அறைகளை விட்டு வெளியே வருவதேயில்லை.

அரண்மனையில் நாள்தோறும் நிகழும் குலதெய்வபூசனைக்கு மட்டும் விடியற்காலையில்

முகத்தை பட்டால் மூடியபடி வந்து மீள்வாள். மாதம்தோறும் நிகழும் கொற்றவை

பூசனைக்கும் ஒரு சொல்கூட பேசாமல் தலைநிமிராமல் வந்து செல்கிறாள். அவளுக்கு

உடல்நலக்குறைவென ஏதுமில்லை. ஆனால் அவள் எவரிடமும் பேசுவதில்லை என்று அவளுடைய

சேடியர் சொல்கிறார்கள். அவளுடைய அணுக்கச்சேடி சாரிகையிடம் கூட ஒரு சில

சொற்களையே பேசுகிறாள். அதன்பின் குந்தியும் அதைக்கேட்காமலானாள்.

இப்போது தூதுப்பருந்து எங்கோ காட்டில் மரக்கிளையில் சிறகு மடித்துத்

துயின்றுகொண்டிருக்கும். அதன் காலில் அம்பாலிகைக்கான செய்தி இருக்கும்.

நான்குவரிகள். ‘வைகானசமாதம், வசந்தருது, பரணிநாள், பின்மதியத்தில்

அஸ்தினபுரியின் அரசனும் சந்திரகுலத்து விசித்திரவீரிய மன்னரின் மைந்தனும்

திருதராஷ்டிரமன்னரின் தம்பியுமான பாண்டு விண்புகுந்தார்.’ அச்செய்தி அங்கே

எப்படிச் சென்று சேரும். முகங்கள் ஒவ்வொன்றாக வந்துசென்றன. சத்யவதி,

திருதராஷ்டிரன், விதுரன். விதுரனுக்கு மணமாகிவிட்டதென்று செய்திவந்தது.

அதன்பின் அவனுக்கு இருமைந்தர்கள் பிறந்தனர் என்று செய்திவந்தது. அந்தப்பெண்,

அவள் பெயர் சுருதை. மெல்லிய மாநிறமான நீள்முக அழகி. குந்தி உமிக்குவியலுக்குள்

கனலும் நெருப்பென ஒன்றை தன்னுள் உணர்ந்து உடனே தன்னை விலக்கிக் கொண்டாள்.

இன்னும் நான்குநாழிகைக்குப்பின் விடியும். தூதுப்புறா சிறகடித்து எழுந்து

வானில் ஏறும். மீண்டும் அவள் பெருமூச்சுடன் சிதையைப்பார்த்தாள். ஒரு

வெண்சுண்ணப்பாவை. அதற்குமேல் என்ன? அதற்குள் சிறைப்பட்டு விடுதலைக்காக ஏங்கிய

ஒரு ஆன்மா. ஆனால் ஒவ்வொரு ஆன்மாவும் அப்படி அந்தக்கூண்டை பற்றி

உலுக்கியபடிதான் இருக்கிறதா என்ன? வெண்சுண்ணப்பாவை. ஆம். உயிர்நீங்கிய கணமே

அவ்வுடலுடன் நம் அகம் கொள்ளும் விலக்கம்தான் எத்தனை விந்தையானது. என்

மைந்தர்களின் அறத்தந்தை. என் குலத்தின் அடையாளம். ஆனால் அது இல்லை இது. இது

வெறும் வெண்தோல்எலும்புதசைக்கூட்டம். இன்னும் சற்று நேரத்தில்…

பீமன் ஓடிவந்து வந்த வேகத்திலேயே அமர்ந்திருந்த அனகையை தூக்கிச் சுழற்றி

நிறுத்தினான். “அன்னம்… எனக்கு அன்னம் வேண்டும்” என்றான். அனகை குந்தியை நோக்க

கொடு என அவள் கையசைத்தாள். அனகை அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

சற்றுநேரத்தில் அவன் விரைந்து ஓடிவந்து எடை தரையை அதிரச்செய்யும்படி அவளருகே

அமர்ந்து நகுலனின் காலைப்பிடித்து இழுத்து “இவர்களை இறக்கி விடு. ஏன்

துயின்றபடியே இருக்கிறார்கள்?” என்றான். நகுலன் வாய்கோணலாக ஆக

அழத்தொடங்கினான். உடனே சகதேவனும் அழுதான். பீமன் புன்னகைசெய்து “ஒருவரை

கிள்ளினால் இருவரும் அழுவார்கள். நான் பலமுறை பார்த்திருக்கிறேன்” என்றான்.

குந்தி அனகையிடம் குழந்தைகளை உள்ளே கொண்டுசென்று அமுதூட்டி வரும்படி கையசைவால்

ஆணையிட்டாள். குழந்தைகள் சென்றதும் அவள் மடியில் தன் தலையை வைத்து பீமன்

படுத்துக்கொண்டான். கால்களை ஆட்டியபடி “தந்தை சொர்க்கத்துக்குச்

செல்லவிருக்கிறார், தெரியுமா?” என்றான். “யார் சொன்னது?” என்றாள் குந்தி.

“மூத்தவர் சொன்னார். அங்கே விண்மீன்கள் ஒளிவிடக்கூடிய பெரிய பூஞ்சோலைகள்

உண்டு. அங்கே யானைக்காதுகள்போல பெரிய சிறகுகள் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள்

உண்டு…” அவன் எழுந்து அமர்ந்து “அங்கே விழியற்றவர்களே இல்லை.

வெண்ணிறமானவர்களும் இல்லை…” என்றான். “யார் சொன்னார்கள்?” என்று குந்தி

கேட்டாள். “மூத்தவரிடம் தந்தை சொல்லியிருக்கிறார்” என்றான் பீமன். “நான்

வளர்ந்தபின் மலைமேல் ஏறி மேகத்தைப்பிடித்து அதன்மேல் ஏறிக்கொண்டு அங்கே

செல்வேன். அங்கே தந்தை இருப்பார் அவர் தம்பியைப்போல அழகிய கரிய உடலுடன்

இருப்பார். அங்கே அவருக்கு நிறைய மனைவியர் இருப்பார்கள்…”

முதல்முறையாக குந்தியின் உள்ளம் விம்மியது. எழுந்துசென்று பாண்டுவின் தலையை

எடுத்து மார்போடணைத்துக்கொள்ளவேண்டும் என்று பொங்கியது. கண்களில் கண்ணீர்

நிறைந்தபோது தலையைக்குனிந்துகொண்டு அந்தக் கண்ணீரை இமைகளைக்கொண்டே அழித்தாள்.

மூக்குக்குள் நிறைந்த நீரை உறிஞ்சிக்கொண்டாள். சற்று நேரத்தில் நிமிர்ந்து

கண்களைத் திறந்து எஞ்சிய ஈரத்தை உலரச்செய்தாள். பாண்டுவை நோக்கக்கூடாது என

தனக்கு ஆணையிட்டுக்கொண்டாள். இந்தச்சிறு எண்ணங்கள் வழியாக இத்தருணத்தை

கடந்துசெல்வதே முறை. அதுதான் அவள் அகம் கண்டுகொண்ட வழி. எறும்புகள் கவ்வி

இழுத்துச்செல்லும் மண்புழு போல இந்த நேரம். ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொருதிசைக்கு

இழுக்க நெளிந்து துடித்து உயிர்வதைகொண்டு அங்கேயே கிடந்தது. இன்னும் எத்தனை

நேரம்? அவள் கீழ்வானை நோக்கினாள். அங்கே விடிவெள்ளி முளைத்திருக்கவில்லை.

பகுதி பதினெட்டு : மழைவேதம்

[ 2 ]

முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே அதுவரை குடில்முற்றத்தில் இருந்த சோர்ந்த மனநிலை மாறியது. பூர்ணகலாபர் இயற்றிய சந்திரவம்ச மகாகாதையை இரு பிரம்மசாரிகள் அதுவரை மெல்லியகுரலில் ஓதிக்கொண்டிருந்தனர். பன்னிரண்டு படலங்களுக்குப் பின்னர்தான் புரூரவஊர்வசீயம் வந்தது. எட்டு படலங்களாக நீளும் பெரிய கதை. அதன்பின் ஆயுஷ் ஒரு படலத்தில் பாதியிடத்தை நிறைக்க நகுஷோபாக்யானம் மீண்டும் நீண்ட ஆறு படலங்களாக விரிந்தது. பின்னர் துஷ்யந்தனுக்கு பரதன் பிறந்த கதை பன்னிரு படலங்கள். அதன்பின் ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன் என பலமன்னர்கள் பெயர்களாக ஒலித்துச்செல்ல ஹஸ்தியின் கதை நடந்துகொண்டிருந்தபோதுதான் காஸ்யபரின் வருகை அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் கதையில் ஓர் அளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று குந்தி எண்ணிக்கொண்டாள். ஒரே படலத்தில் நான்குபேர் வழக்கமான துதிகளுடன் குலவரிசைக்குறிப்புடன் வந்துசென்றனர். அத்தனைபேருக்கும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தைந்து மன்னர்களையும் வென்று தன் அரியணைக்கீழ் கட்டிப்போட்டான், அவன் வெண்கொற்றக்குடைக்கீழ் புலியும் வெள்ளாடும் ஒன்றாக நீர் அருந்தின, ரிஷிகளும் பிராமணர்களும் பேணப்பட்டனர், தேவர்கள் மகிழ்ந்தமையால் மாதம் மூன்றுமழை பொழிந்து மண்விளைந்தது, மக்கள் அறவழி நின்றமையால் அறநூல்களையே மறந்துவிட்டனர் என்பதுபோன்ற சிறப்பித்தல்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையான ஒரு பெருவீரனையோ அறச்செல்வனையோ கண்டதும் கவிஞனின் மொழி துள்ளத் தொடங்குவதை அந்த சோர்ந்த வாசிப்பிலும் உணரமுடிந்தது. நதி மலைச்சரிவிலிறங்குவதுபோல அங்கே காவிய மொழி ஒளியும் ஓசையும் விரைவும் கொந்தளிப்பும் பெற்றது.

ஹஸ்தியைப்பற்றிய முதல் வரியிலேயே பன்றியை விழுங்கிய மலைப்பாம்புபோன்றவை அவன் கரங்கள் என்ற வரி அந்த மனநிலையிலும் குந்தியை புன்னகைசெய்ய வைத்தது. பழைமையான குலமுறைப்பாடல்களில் இருந்து எடுத்தாளப்பட்ட வரியாக இருக்கலாம். காட்டில் வேடர்கள் சொல்வதுபோன்ற எளிய உவமை. ஹஸ்தியைப்பற்றிய அனைத்து விவரிப்புகளும் அப்படித்தான் இருந்தன. மலையடுக்குகளை மேகம் என்று எண்ணி இந்திரன் மின்னலால் தாக்கியதுபோல அவனை எதிரிகள் தாக்கினர். மலைச்சரிவில் மழைக்கதிர்கள் இறங்குவதுபோல அவன்மேல் எதிரிகளின் அம்புகள் பொழிந்தன. ஒவ்வொரு போரிலும் குருதியில் மூழ்கி குருதியில் எழும் சூரியன் போல அவன் வெற்றியுடன் மீண்டுவந்தான்.

குந்தி தன் அருகே துயின்றுகொண்டிருந்த பீமனின் பெரிய தோள்களை கையால் வருடினாள். ஹஸ்தியின் தோள்களைவிட அவை பெரியவை என்று அப்போதே சூதர்கள் பாடத்தொடங்கிவிட்டிருந்தனர். அந்த குலமுறைக்காதையில் நாளை அவள் மைந்தர்கள் பெறப்போகும் இடமென்னவாக இருக்கும்? அதுவரை வந்த அத்தனை பெயர்களும் அவர்களின் கதைக்கான முன்னுரைக்குறிப்புகளாக மாறிவிடுமா என்ன? அவள் மனக்கிளர்ச்சி தாளாமல் தலைகுனிந்துகொண்டாள். அதை அவளால் காணமுடிவதுபோலிருந்தது. புரூரவஸ், நகுஷன், யயாதி, பரதன், ஹஸ்தி, குரு, பிரதீபன் எவரும் இம்மைந்தர்களுக்கு நிகரல்ல. விசித்திரவீரியனும் பாண்டுவும் அவர்கள் ஏறிவந்த படிக்கட்டுகள் மட்டுமே. அவள் தன்னருகே அமர்ந்திருந்த பார்த்தனை நோக்கினாள். ஒருகணம் கூட அவன் பார்வை தந்தையின் உடலில் இருந்து விலகவில்லை. அவன் உடல் தளரவோ அலுப்பொலிகள் எழவோ இல்லை.

தருமன் வந்து தலைகுனிந்து "அன்னையே, மகாவைதிகர் வந்துவிட்டார். சடங்குகளை முறைப்படி தொடங்குவதற்கு தங்கள் ஆணையை கோருகிறேன்" என்றான். "அவ்வாறே ஆகுக!" என்று குந்தி சொன்னாள். அவன் தலைவணங்கி விலகிச்சென்றான். குந்தி பெருமூச்சுவிட்டபடி அசைந்து அமர்ந்தாள். அனகை வந்து அவர்களை நோக்கிக் குனிந்து "அரசி, தாங்களும் இளையஅரசியும் எரிசெயலுக்கான ஆடைகள் அணியவேண்டுமென்று காஸ்யபரின் ஆணை" என்றாள். பாண்டுவின் உடலை எட்டு சேவகர்கள் அதை வைத்திருந்த மூங்கில்மேடையுடன் சேர்த்து எடுத்துக்கொண்டுசென்றார்கள். குந்தி மாத்ரியிடம் "வா" என்றாள். மாத்ரி எழுந்து தலைகுனிந்து நடந்தாள். குந்தி "மைந்தர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை நீராட்டி உணவூட்டி எரிசெயலுக்கு கொண்டுவாருங்கள்" என்றாள்.

குடிலுக்குள் நுழைந்ததும் மாத்ரி "அக்கா" என மெல்லிய குரலில் அழைத்தாள். குந்தியை அக்குரல் காரணமின்றி நடுங்கச்செய்தது. "நான் மணக்கோலம்பூண்டு எரிசெயலுக்குச் செல்ல வேண்டும்" என்றாள். குந்தியின் உடல் சிலிர்த்தது. பின்னால் நின்றிருந்த சேடியர் உடல்களிலும் ஓர் அசைவெழுந்து அணிகளும் உடைகளும் ஒலித்தன. குந்தி தன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்தியபடி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். கண்களால் அவளை விலக்கி "நான் அவருடன் செல்வதே முறை. முன்பு நிமித்திகர் உடலில் வந்த கிந்தமர் சொன்ன வரிகளை இப்போது புரிந்துகொள்கிறேன். அவருடன் சென்று அவர் விண்நுழையும் வாயில்களை நான்தான் திறந்துகொடுக்கவேண்டும்" என்றாள் மாத்ரி.

"அவருடன் அரியணை அமர்ந்தவள் நான். அரசமுறைப்படி சிதையேறவேண்டியவளும் நானே" என்று குந்தி சொன்னாள். "அரசர் எங்கு சென்றாலும் தொடர்ந்து செல்லவேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அவர் கைகளைப்பற்றியவள் நான்." ஆனால் மாத்ரி திடமான குரலில் "நீங்கள் இல்லையேல் நமது மைந்தர்கள் உரிய முறையில் வளரமுடியாது அக்கா. வரப்போகும் நாட்களில் அவர்களுக்குரிய அனைத்தையும் நீங்கள்தான் பெற்றுத்தரவேண்டும். அரசரும் நானும் ஆற்றவேண்டியவற்றையும் சேர்த்து ஆற்றும் வல்லமை உங்களுக்கு உண்டு. என்னுடைய மைந்தர்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்கள் என்றும் தங்கள் தமையன்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். அன்னையில்லாததை அவர்கள் ஒருகணமும் உணரப்போவதுமில்லை" என்றாள்.

தன்னுடைய சொற்களனைத்தும் மாத்ரியிடம் வீணாகிவிடும் என்று குந்தி உணர்ந்தாள். "வேண்டாம் தங்கையே. அரசருடன் அரசியர் சிதையேறவேண்டுமென்று எந்த நெறிநூலும் வகுத்துரைக்கவில்லை. அது போரில் இறந்த அரசர்களின் மனைவியரின் வழக்கம் மட்டும்தான். நான் காஸ்யபரிடமே கேட்டுச்சொல்கிறேன்" என்று சொல்லி அனகையை நோக்கித்திரும்பினாள். மாத்ரி "அதை நானும் அறிவேன் அக்கா. நான் நூல்நெறி கருதி இம்முடிவை எடுக்கவில்லை" என்றாள். "உனக்கு பெருந்தோள்கொண்டவனாகிய தமையன் இருக்கிறான். இரு அழகிய மைந்தர்கள் இருக்கிறார்கள். நீ உன் விழிகளால் அவர்களின் வெற்றியையும் புகழையும் பார்க்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்..." என்றாள் குந்தி.

"நான் என் முடிவை எடுத்துவிட்டேன் அக்கா. இவ்வுலகிலிருந்து செல்லும் ஒவ்வொருவரும் முடிக்கப்படாதவையும் அடையப்படாதவையுமான பல்லாயிரம் முனைகளை அப்படியே விட்டுவிட்டு அறுத்துக்கொண்டுதான் செல்கிறார்கள். எவர் சென்றாலும் வாழ்க்கை மாறிவிடுவதுமில்லை." குந்தி அவளுடைய முகத்தையே நோக்கினாள். அவள் அதுவரை அறிந்த மாத்ரி அல்ல அங்கிருப்பது என்று தோன்றியது. உடலென்னும் உறைக்குள் மனிதர்கள் மெல்லமெல்ல மாறிவிடுவதை அவள் கண்டிருக்கிறாள். அப்போது அறியாத தெய்வமொன்று சன்னதம் கொண்டு வந்து நிற்பதைக் கண்டதுபோலிருந்தது.

அதை உணர்ந்ததுமே அவள் எடுத்திருக்கும் முடிவை முன்னோக்கிச்சென்று கண்முன் நிகழ்வாகக் கண்டுவிட்டது அவள் அகம். உடல் அதிர "இல்லை, நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. என் ஒப்புதல் ஒருபோதும் இதற்கில்லை" என்று கூவினாள். "அக்கா, உங்கள் ஒப்புதலின்றி நான் சிதையேறமுடியாது. ஆனால் நான் மேலும் உயிர்வாழமாட்டேன் என்று மட்டும் உணருங்கள்" என்றாள் மாத்ரி. அவள் குரல் உணர்ச்சியேதுமில்லாமல் ஓர் அறிவிப்புபோலவே ஒலித்தது.

"நீ சொல்வதென்ன என்று உணர்ந்துகொள் தங்கையே. நீ எனக்கு வாழ்க்கை முழுவதும் தீராத பெரும்பழியையும் துயரத்தையும் அளித்துவிட்டுச் செல்கிறாய்..." என்று சொன்னதுமே குந்தி அக்கணம் வரை தடுத்துவைத்திருந்த உணர்வுகளை மீறவிட்டாள். அவள் கைகளைப்பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு "மாத்ரி, நீ அரண்மனைக்கு வந்த நாட்களில் ஒருமுறை என் கைகளைப்பற்றிக்கொண்டு என்னிடம் அடைக்கலம் புகுவதாகச் சொன்னாய். அன்றுமுதல் இக்கணம் வரை நீ எனக்கு சபத்னி அல்ல, மகள். உன்னை நான் எப்படி அதற்கு அனுப்புவேன்? அதன்பின் நான் எப்படி வாழ்வேன்?" என்றபோது மேலும் பேசமுடியாமல் கண்ணீர் வழிந்தது. அவளை அப்படியே இழுத்து தன் உடலுடன் சேர்த்து இறுக அணைத்தாள். உடல்நடுங்க கைகள் பதற அவளை நெரித்தே கொன்றுவிடுவதுபோல இறுக்கி "மாட்டேன்... நீ என்னைவிட்டுச்செல்ல நான் ஒப்பமாட்டேன்" என்றாள்.

"அக்கா, நான் சொல்வதைக்கேளுங்கள்... நான் உங்களிடம் மட்டும் பேசவேண்டும்" என்றாள் மாத்ரி மூச்சடைக்க. குந்தி அவளை விட்டுவிட்டு விலகி அப்படியே பின்னகர்ந்து மஞ்சத்தில் அமர்ந்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். வெம்மையான கண்ணீர் தன் கைவிரல்களை மீறி வழிவதை அறிந்தாள். நெடுநாளைக்குப்பின் தன் கண்ணீரை தானே அறிவதை அவள் அகம் உணர்ந்தது. அந்தத் துயரிலும் அவளை அவளே கண்காணித்துக்கொண்டிருப்பதை அறிந்தபோது அவள் கண்ணீர் குறைந்தது. தன் மேலாடையால் முகத்தைத் துடைத்தாள்.

சேடியர் விலகியதும் மாத்ரி தரையில் அமர்ந்து அவளுடைய மடியில் தன் கைகளை வைத்து ஏறிட்டுப்பார்த்தாள். "அக்கா, அரசருடன் நான் சென்றேயாகவேண்டும். எனக்கு வேறுவழியே இல்லை" என்றாள். தெளிந்த விழிகளுடன் தடுமாறாத குரலில் "அவர் தன் காமத்தை முழுமைசெய்யவில்லை. நான் செல்லாமல் அவர் சென்றால் அவருக்கு நீத்தாருலகு இல்லை. வாழ்வுக்கும் மரணத்துக்கும் நடுவே இருக்கும் வெளியில் ஊழிக்காலம் வரை அவர் தவிக்கவேண்டும். அதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? இது என் கடமை..." என்றாள்.

குந்தி தன் நடுங்கும் கரங்களால் மார்பைப் பற்றிக்கொண்டு பொருளில்லாமல் பார்த்தாள். "நான் அவருடன் எரிந்த மறுகணமே அவரை என்னுடன் இணைய முடியாமல் தடுத்த இந்த இரு வீண்உடல்களையும் துறந்துவிடுவோம். அதன்பின் எங்களுக்குத் தடைகள் இல்லை. எங்களை வாழ்த்துங்கள் அக்கா." குந்தி தன் கைகளை அவள் தலைமேல் வைத்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க விம்மலுடன் ஏதோ சொல்லவந்தாள். "வாழ்த்துங்கள்" என்றாள் மாத்ரி. கம்மிய குரலில் "எனக்காகக் காத்திரு, நானும் வந்துவிடுகிறேன்" என்றாள் குந்தி. பின்னர் குனிந்து மாத்ரியை அள்ளி அணைத்துக்கொண்டாள்.

குந்தி நீராடி ஆடைகள் அணிந்து வந்தபோது குடில்முற்றத்தில் அனகையின் இடையில் புத்தாடை அணிந்த பார்த்தன் அமர்ந்திருந்தான். "இளவரசர் துயிலவேயில்லை அரசி. உணவும் உண்ண மறுத்துவிட்டார்" என்றாள் அனகை. அவனுடைய கரிய விழிகளை குந்தி நோக்கினாள். அவன் என்ன அறிகிறான்? அந்தச்சிறு உடலுக்குள் இந்திரன் வந்து அமர்ந்து எளிய மானுடரை நோக்கிக்கொண்டிருக்கிறானா என்ன? "மூத்தவர்கள் இருவரும் இந்திரத்யும்னத்திலேயே நீராடிவிடுவார்கள் என்றனர்" என்றாள் அனகை.

இருசேடியர் நடுவே மாத்ரி வருவதைக் கண்டதும் குந்தியின் நெஞ்சு அதிர்ந்து அந்த ஒலி காதில் கேட்பதுபோலிருந்தது. அவளால் ஒரு கணத்துக்குமேல் பார்க்கமுடியவில்லை. மாத்ரி மணப்பெண்போல பொன்னூல்பின்னல்களும் தொங்கல்களும் கொண்ட செம்பட்டாடை அணிந்து முழுதணிக்கோலத்தில் இருந்தாள். "நேரமாகிறதே" என்றபடி ஊடுவழியினூடாக குடில்முற்றத்துக்கு வந்த துவிதீய கௌதமர் அவளைக் கண்டதும் கண்கள் திகைத்து மாறிமாறிப்பார்த்தார். குந்தி அவரிடம் "செல்வோம்" என்றபின் "நாங்கள் வருவதை காஸ்யபருக்கு அறிவியுங்கள்" என்றாள்.

அவள் சொல்வதைப்புரிந்துகொண்ட துவிதீய கௌதமர் "ஆம் அரசி" என்றபின் திரும்பி பாதையின் வழியாக ஓடினார். நகுலனையும் சகதேவனையும் இரு சேடியர் கொண்டுவந்தனர். தூக்கத்தில் இருந்து எழுப்பி குளிப்பாட்டப்பட்டு அமுதூட்டப்பட்டமையால் இருவரும் துறுதுறுப்பாக கால்களை ஆட்டி புறங்கைகளை வாயால் சப்பமுயன்றபடி நான்குபக்கமும் எரிந்த பந்தங்களை திரும்பித் திரும்பி பார்த்தனர். மாத்ரி மைந்தர்களை திரும்பியே பார்க்கவில்லை. அவளை அடையாளம் கண்டுகொண்ட நகுலன் 'ங்கா!' என ஒலியெழுப்பினான். உடனே சகதேவனும் 'ங்கா!' என்றான். இருவரும் கால்களை சேடியர் விலாவில் உதைத்து கைகளை ஆட்டி குதிக்கத் தொடங்கினர்.

ஒற்றையடிப்பாதை வழியாக காஸ்யபரின் இரு மாணவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மூச்சுவாங்க முற்றத்துக்கு வந்து நின்று மாத்ரியைப் பார்த்தனர். "அரசி... சடங்குகள்" என்று ஒருவன் நாக்குழறிச் சொன்னான். "சொல்" என்றாள் குந்தி. "மங்கல இசையும் மலரும் தீபமும் தேவை" என்றான் அவன் தலைகுனிந்து. சேடி ஒருத்தி முன்னால் வந்து "சொல்லுங்கள் வைதிகரே" என்றாள். அவர்கள் இருவரும் மாத்ரியைப் பார்ப்பதைத் தவிர்த்தனர். "தசமங்கலங்களும் தேவை" என்று இன்னொருவன் மெல்லியகுரலில் சொன்னான்.

சற்றுநேரத்தில் காஸ்யபரின் வேறு இரு மாணவர்கள் வந்தனர். சேவகர்கள் அவர்களின் ஆணைக்கேற்ப முன்னும்பின்னும் ஓடினர். கருக்கிருட்டு திரைபோல சூழ்ந்திருக்க பந்த ஒளிக்கு அப்பால் உலகமே இல்லை என்று தோன்றியது. "கிளம்பலாம் அரசி" என்றான் ஒருவன். குந்தி தலையசைத்தாள். அங்கே நின்றிருந்த அத்தனை பேரும் மெல்லிய பெருமூச்சுடன் தங்கள் உடல்களை அசைத்த ஒலி கேட்டது. அதைக்கேட்ட நகுலன் 'ங்கா!' என உரக்கக் கூவி குதிரையில் விரைபவன் போல கால்களை அசைக்க சகதேவனும் அதையே செய்தான். மாத்ரியின் உடைகளின் ஒளி குழந்தைகளை கவர்கிறது என்று குந்தி எண்ணிக்கொண்டாள்.

ஐந்து சேவகர்கள் பந்தங்களை ஏந்தியபடி வழிகாட்டிச் செல்ல மூன்று பிரம்மசாரிகள் நிறைகுடத்து நீரை தர்ப்பையால் தொட்டு தெளித்து வேதத்தை ஓதியபடி முதலில் சென்றனர். சங்கும் கொம்பும் முழவும் கிணையும் குழலும் யாழும் இசைத்தபடி பிரம்மசாரிகள் அறுவர் தொடர்ந்து சென்றனர். தாலங்களில் பொன், வெள்ளி, மணி, பட்டு, விளக்கு, அரிசி, கனி, மலர், தாம்பூலம், திலகம் என்னும் பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் முன்பக்கம் கொண்டுசென்றனர்.

மாத்ரிக்குப்பின் கவரி ஏந்திய சேடிகள் செல்ல குந்தியும் பார்த்தனை ஏந்திய அனகையும் பின்னால் நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் சேடியர் நகுலனையும் சகதேவனையும் கொண்டுவந்தனர். அந்த ஊர்வலம் சதசிருங்கத்தின் முனிவர்குடில்களைக் கடந்து இந்திரத்யும்னத்தின் ஓரமாகச் சென்றது. தொலைவிலேயே பந்தங்களின் செவ்வொளியில் சிதைகூட்டப்பட்டிருந்த இடத்தை குந்தி கண்டாள். அருகே சென்றபோது அங்கே வேள்வி நடந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது.

ஆழமான குழியில் சந்தனம்,தேவதாரு ஆகிய வாசமரங்களும், அரசு, ஆல், வன்னி ஆகிய நிழல்மரங்களும் பலா, மா, அத்தி ஆகிய பழமரங்களும் செண்பகத்தின் மலர்மரமும் விறகாக அடுக்கப்பட்ட சிதை இடையளவு பெரிய மேடையாக இருந்தது. அதன்மேல் பாண்டுவின் உடல் படுக்கவைக்கப்பட்டிருந்தது. அவன் பொன்னூல் பின்னிய செம்பட்டாலான அரச ஆடை அணிந்திருந்தான். தலையில் பொன்னிறச்செண்பக மலர்களால் செய்யபபட்ட மணிமுடியும் வலக்கையில் மலர்க்கிளையால் ஆன செங்கோலும் வைத்திருந்தான். அவன் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருந்தன.

சிதைக்கு வலப்பக்கம் ஏரியின் நீர்க்கரையில் எரிகுளம் அமைக்கப்பட்டு நான்கு பக்கமும் காஸ்யபர் தலைமையில் வைதிகர் அமர்ந்து மறைநெருப்பை எழுப்பி வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். மன்னர்களை விண்ணகம் சேர்க்கும் அஸ்வமேதாக்னி சேவல்கொண்டை போல சிறிதாக எழுந்து சேவல் வாலென விரிந்து படபடத்துக்கொண்டிருந்தது. அதர்வவேத மந்திரம் குட்டிக்குதிரைகளின் கனைப்பொலி போல எழுந்து நெருப்புடன் சேர்ந்து நடமிட்டது.

மாத்ரியை மாண்டூக்யர் வந்து அழைத்துச்சென்று தர்ப்பைப்புல் விரிப்பில் எரிமுன் அமரச்செய்தார். அவளுடைய இருபக்கங்களிலும் பீமனும் தருமனும் அமர்ந்தனர். பின் பக்கம் குந்தி நகுலனையும் சகதேவனையும் தன் மடியில் வைத்துக்கொண்டாள். அனகையின் அருகே பார்த்தன் அமர்ந்தான். வேள்வித்தீயில் அவர்கள் ஒவ்வொருவரும் மும்முறை நெய்யூற்றி மந்திரங்களைச் சொன்னார்கள். நெய்யை உண்டு எழுந்த அஸ்வமேதாக்னி அவர்களின் தலைக்குமேல் எழுந்து காற்றில் சிதறிப்பரந்து இருளில் மறைந்துகொண்டிருந்தது.

"சந்திரவம்சத்து அரசனே, உன்னை வணங்குகிறோம். புரூரவஸின் குருதி நீ. யயாதியின் உயிர் நீ. ஹஸ்தியின் அரியணையில் நீ அமர்ந்தாய். குருவின் மணிமுடியை நீ சூடினாய். விசித்திரவீரியன் உனது கையின் நீரால் விண்ணகமேகினான். உன்னுடைய மனைவியரும் மைந்தர்களுமாகிய நாங்கள் இதோ உன்னை விண்ணகமேற்றுகிறோம். மங்காப் புகழுடையவனே! பாண்டுவே, உன் ஆன்மா நிறைவுறுவதாக! இதோ உனக்குப்பிரியமான அனைத்தும் உன்னுடன் வருகின்றன. உன் வாழ்த்துக்களை மட்டும் இப்புவியில் உன் மைந்தருக்கும் குடிமக்களுக்கும் விட்டுச்செல்!"

"ஒளிமிக்கவனே, உன் நினைவுகள் மண்ணில் என்றும் வாழும். உன் சொற்கள் வீரியமிக்க விதைகளாக முளைக்கும். உனது வம்சம் அருகுபோல வேரோடி ஆல்போலத் தழைத்தெழும். உனது புகழ்பாடும் சூதர்கள் ஆதிசேடனின் நாவை பெறுவார்கள். பாரதவர்ஷத்தைச் சூழ்ந்து கடல் போல அவர்கள் ஓயாது முழங்குவார்கள். உனது ஆன்மா நிறைவடைவதாக!"

"விடுதலைபெற்றவனே, உன்னை விண்ணகத்தில் உன் மூதாதையர் மகிழ்வுடன் வந்து எதிர்கொள்ளட்டும். உன் தந்தை விசித்திரவீரியனின் மடியில் சென்று அமர்ந்துகொள். உன் தாதன் சந்தனுவை அணைத்துக்கொள். உன் பெருந்தாதை பிரதீபனை மகிழ்வுறச்செய். அன்புடையவனே, உன் மூதாதையர் எல்லாம் உன்னை தழுவித்தழுவி மகிழட்டும். அறச்செல்வனே, உன் வருகையால் தேவர்கள் மகிழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!"

"மூத்தமைந்தன் எரியூட்டுவது மரபு. அரசகுலப்பெண்டிர் அன்றி பிறர் மயானமேக நூல்நெறியில்லை" என்றார் காஸ்யபர். அனகையும் சேடியரும் மைந்தர்களை சேவகர்களிடம் அளித்துவிட்டு விலகிச்சென்றனர். காஸ்யபர் தருமனின் கைகளில் தர்ப்பையால் பவித்ரம் அணிவித்தார். "இளவரசே, சிதையில் ஐந்து உணவுகளையும் அஸ்வமேதாக்னிக்கு அளித்து வணங்குங்கள்" என்றார். சிதையை மூன்று முறை சுற்றிவந்து பொன்னாலான நாணயங்களையும் நெய்யையும் எள்ளையும் தயிரையும் அரிசியையும் மும்முறை அள்ளி சிதையின் காலடியில் வைத்து தருமன் வணங்கினான். மலர் அள்ளியிட்டு வணங்கியபின் கைகூப்பி நின்றான். பீமன் அதைச் செய்தபின் தருமன் அருகே வந்து தமையனின் இடையில் தொங்கிய கச்சைநுனியைப் பற்றியபடி நின்றுகொண்டான். குந்தி வணங்கியபின் மூன்று குழந்தைகளையும் வணங்கச்செய்தனர்.

மாத்ரி எழுந்ததும் தருமன் "சேவகர்களே, தம்பியரை அழைத்துச்செல்லுங்கள்" என்றான். ஒவ்வொருவரும் அந்த எண்ணம் அவர்களுக்கு வராததைப்பற்றித்தான் அக்கணம் எண்ணினார்கள். சேவகன் ஒருவன் நகுலனையும் சகதேவனையும் மாத்ரியிடம் கொண்டுசென்று காட்டினான். அவள் இருகுழந்தைகளையும் புன்னகையுடன் நோக்கியபின் ஒரேசமயம் வாங்கி மார்புடன் அணைத்துக்கொண்டாள். இருவர் கன்னங்களிலும் முத்தமிட்டபின் திரும்பக்கொடுத்தவள் மெல்லிய விம்மல் ஓசையுடன் மீண்டும் இன்னொருமுறை வாங்கி இறுக அணைத்து முத்தமிட்டு கொடுத்து கொண்டுசெல்லும்படி கையசைத்தாள்.

சேவகர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பீமனை அழைத்துக்கொண்டு சென்றபோது அவன் திரும்பித்திரும்பிப் பார்த்து ஏதோ கேட்டபடியே சென்றான். மாத்ரி சுற்றிவந்து வணங்கியபோது அங்கிருந்த அனைவரும் கைகள் கூப்பி வேள்விமேடையில் எரியும் அஸ்வமேதாக்னியையே நோக்கிக்கொண்டிருந்தனர். காஸ்யபரின் மாணவர்கள் அதற்கு நெய்யூற்றிக்கொண்டிருந்தனர். "அக்னியே, உனக்கு ஐந்துவகை உணவுகளை அளிக்கிறோம். இந்தப் பொன் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் கனவு. இந்த நெய் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் குருதி. இந்த எள் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் கண்ணீர். இந்தத் தயிர் உனக்கு உணவாகட்டும். இது எங்கள் விந்து. இந்த அரிசி உனக்கு உணவாகட்டும். இது எங்கள் அன்னம்."

மாத்ரி சுற்றிவந்து மலரிட்டு வணங்கி கைகளைக்கூப்பியபடி விலகி நின்றாள். பாண்டுவின் உடல் மென்மையான பட்டை விறகுகளால் மூடப்பட்டது. அதன்மேல் நெய் முழுக்காட்டப்பட்டது. காஸ்யபரின் ஆணைப்படி தருமன் வந்து வணங்கி ஒரு புதுமண்கலத்தில் அள்ளப்பட்ட அஸ்வமேதாக்னியை வாங்கிக்கொண்டான். காஸ்யபர் அவனை கைபிடித்து அழைத்துச்சென்றார். தீக்கலத்தில் இருந்து முதல் கரண்டியை அள்ளி பாண்டுவின் நெஞ்சில் வைத்தான். நெய்யில் பற்றிக்கொண்ட நெருப்பு சிவந்து பின் நீலநிறம் கொண்டு காற்றிலெழுந்தது. பாண்டுவின் வயிற்றிலும் காலடியிலும் நெருப்பு வைத்தபின் தருமன் விலகி கைகுவித்து நின்றான்.

"ஏழு வேள்விநெருப்புகளே, கேளுங்கள். மூலாதார நெருப்பே, காமத்தை விட்டு விடு. ஓம் அவ்வாறே ஆகுக! சுவாதிஷ்டானத்தில் இருந்து பசி அகன்றுசெல்லட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! மணிபூரகம் பிராணனை மறக்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! அநாகதம் உணர்வுகளை விட்டுவிடட்டும். ஓம் அவ்வாறே ஆகுக! ஆக்ஞையே, எண்ணங்களை அழித்துக்கொள். ஓம் அவ்வாறே ஆகுக! சகஸ்ரமே, இருத்தலுணர்வை விட்டு மேலெழுந்துசெல். ஓம் அவ்வாறே ஆகுக!" காஸ்யபரும் சீடர்களும் சிதையில் நெய்யை ஊற்றியபடி சொன்ன மந்திர ஓசை எங்கோ தொலைதூரத்துக் காற்றொலி என ஒலித்துக்கொண்டிருந்தது.

குந்தி தன் நெஞ்சுக்குள் மூச்சு செறிந்திருப்பதாக உணர்ந்தாள். எத்தனை நெடுமூச்சுகள் விட்டாலும் அதை அவளால் கரைக்கமுடியவில்லை. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்றும் அங்கே நிகழ்பவற்றை எல்லாம் கனவென மறந்துவிடவேண்டும் என்றும் விரும்பினாள். அவள் பார்வை மாத்ரியைத் தீண்டி துடித்து விலகியது. மாத்ரி ஏற்கெனவே ஒரு தெய்வச்சிலையாக ஆகிவிட்டிருந்தாள். மீண்டும் விழிகளைத் திருப்பி அவள் தருமனைப் பார்த்தாள். அவன் கண்கள் சிதையையே பார்த்துக்கொண்டிருந்தன.

அந்தவிழிகளில் இருந்த துயரையும் தனிமையையும் எந்த விழிகளிலும் அவள் கண்டதில்லை. இனி வாழ்நாளில் எப்போதும் அவன் அந்தத் தனிமையிலிருந்து மீளப்போவதில்லை என்று அப்போது அவள் அறிந்தாள். அங்கிருக்கும் அனைவரிலும் பாண்டு ஒரு பழைய நினைவாக மட்டுமே எஞ்சுவான். அவளுக்குள்ளும் அப்படித்தான். வரலாற்றில் அவனுடைய இடமே அதுதான். தருமனுக்கு மட்டும்தான் அவன் ஒவ்வொருநாளும் துணையிருக்கும் உணர்வு. வாழ்நாளெல்லாம் கூடவரும் துயரம். ஓடிச்சென்று அவனை அள்ளி மார்போடணைக்கவேண்டும் என்று அவளுக்குள் பொங்கிவந்தது. ஆனால் அவளால் அந்தப் பெருந்துயரை தீண்டக்கூட முடியாதென்று பட்டது. ஒருவேளை மண்ணில் எவரும் அதை முழுமையாக அறியவும் முடியாது.

"அக்னியே, இங்கு வருக. இந்த உடலை மண்ணுக்கு சமைத்து அளிப்பாயாக. இந்த ஆன்மாவை விண்ணுக்கு எடுத்துச்செல்வாயாக. விண்ணில் ஆற்றலாகவும் மண்ணில் வெப்பமாகவும் நீரில் ஒளியாகவும் உயிர்களில் பசியாகவும் நிறைந்திருப்பவன் நீ. உன்னுடைய குடிமக்கள் நாங்கள். எங்கள் புனிதமான அவி இந்தப் பேரரசன். இவனை ஏற்றுக்கொள்வாயாக. ஓம் அவ்வாறே ஆகுக!"

தீயின் தழல்கள் எழுந்து ஓசையிட்டு படபடத்தன. கீழே அடுக்கப்பட்டிருந்த விறகுகள் செந்நிறப்பளிங்குகள் போல மாறி சுடர்ந்தன. தீயின் ஒலி அத்தனை அச்சமூட்டுவதாக இருக்குமென்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள். அவள் உடலை அதிரச்செய்தபடி சங்குகளும் கொம்புகளும் பறைகளும் முழவுகளும் சேர்ந்து ஒலித்தன. "எரிபுகும் பத்தினியை வணங்குவோம்! சதி அன்னை வாழ்க!" என்னும் வாழ்த்தொலிகள் அவளைச்சூழ்ந்து எழுந்தன. மாத்ரி திடமான காலடிகளுடன் கைகூப்பி நடந்து சென்று நெருப்பை அணுகி இயல்பாக உள்ளே நுழைந்தாள்.

பகுதி பதினெட்டு : மழைவேதம்

[ 3 ]

கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் "நீர் மிகவும் மேலே வந்துவிட்டது" என்றான். "ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்... அங்கே இமயத்தின் பனிமுடிகள் உருகிக்கொண்டிருக்கின்றன" என்று அவர் சொன்னார். புன்னகைசெய்தபடி "நேற்று ஒரு சூதன் பாடினான். கைலாயநாதனாகிய பெருமான்கூட வெம்மைதாளாமல் தன் சடைமுடிக்கற்றைகளை அவிழ்த்துப்போட்டு ஆற்றிக்கொள்கிறான் என்று" என்றார்.

வைதிகர் சடங்குக்கான பொருட்களை எடுத்து வைப்பதைப் பார்த்துக்கொண்டு விதுரன் தன் அணியாடைகளைக் கழற்றி ஒற்றையாடையை அணிந்துகொண்டான். அவனுடைய அணுக்கச்சேவகன் ஆடைகளையும் அணிகளையும் வாங்கி தேரிலேயே வைத்தான். நதிக்கரைச்சோலைகளில் பறவைகள் பெருங்கூச்சலுடன் பூசலிட்டுக்கொண்டிருந்தன. அவன் திரும்பிப்பார்ப்பதைக் கண்டு "அவை இப்போதெல்லாம் ஆற்றின் மேல் பறப்பதேயில்லை. சோலைக்குள்ளேயே அவற்றுக்கான உணவு கிடைத்துவிடுகிறது. கரையானைத் தின்றே உயிர்வாழ்கின்றன" என்றார் அவர்.

"கோடை நான்குமாதங்களுக்கும்மேல் நீண்டுவிட்டது. மழையின் சாயல்களே விண்ணில் இல்லை" என்றான் விதுரன். "ஆம். இது ஆறாண்டு அல்லவா? இறையருளை நாடவேண்டியதுதான். கங்கை பெருகிவரும்வரை மனிதருக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் மண்ணில் புழுவும் பூச்சியும் வாழவேண்டும்" என்று சொல்லி பெரிய தாலத்தில் எள்ளையும் அரிசியையும் நெய்யையும் மலரையும் காய்களையும் கனிகளையும் எடுத்து வைத்தார் வைதிகர்.

நூற்றியிருபதாண்டுகளுக்கொருமுறை ஆரியவர்த்தத்தில் பஞ்சம் வரும் என்பது நிமித்திகர் கணக்கு. ஆறாண்டுகளுக்கொருமுறை கோடை எல்லைமீறும். ஆறின் மடங்குகளில் அது பெருகிச்செல்லும் என்பார்கள். ஆறாண்டுகளுக்கு முன்பு கோடை வளர்ந்து நீண்டு சென்று பெருமழையில் முடிந்ததையும் புராணகங்கை பெருகிவந்து நகரை மூழ்கடித்ததையும் விதுரன் எண்ணிக்கொண்டான்.

"மீண்டும் அந்தப் பெருமழையும் வெள்ளமும் வரக்கூடுமா?" என்று கேட்டான். வைதிகர் சிரித்து "பிந்திய மழை சேர்ந்துபெய்யும் என்பது கணக்கு. ஆனால் அந்த மழை இங்குதான் பெய்யவேண்டுமென்பதில்லை. எப்போதும் இப்பக்கமாக வரும் மழை முன்பொருமுறை ஆறாண்டுக்கோடையில் கூர்ஜரத்தைத் தாண்டி வடமேற்காகச்சென்று வடகாந்தாரத்தையும் பால்ஹிகநாட்டையும் முழுக்காட்டியது. பாலைவனமே மழையால் அழிந்தது என்றார்கள்" என்றார். மெல்ல தனக்குத்தானே சிரித்தபடி "பாவம் ஒட்டகங்கள். அவற்றுக்கு சளி பிடித்திருக்கும்" என்றார். மூப்பு காரணமாக எதையுமே எளியவேடிக்கையாக எடுத்துக்கொண்டு தனக்குள்ளேயே மகிழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்று விதுரன் எண்ணினான்.

விதுரன் காலையில் இருந்தே சோர்வை உணர்ந்துகொண்டிருந்தான். அஸ்தினபுரி கோடைவெம்மையில் எரியத்தொடங்கி நான்குமாதங்களாகின்றன. இரவு முதிர்வது வரை மேற்கிலிருந்து வெங்காற்று வீசிக்கொண்டிருக்கும். நள்ளிரவுக்குப்பின்னர்தான் புராணகங்கையில் இருந்து மெல்லிய குளிர்காற்று வரத்தொடங்கும். அதிகாலையில் கண்விழிக்கும்போதே வெப்பம் ஏறி உடல் வியர்வையில் நனைந்திருக்கும். எழுந்ததுமே காவியச்சுவடியை நோக்கி கை நீட்டும் வழக்கம்கொண்டிருந்த அவன் அரண்மனையின் பின்கட்டில் இருந்த சிறுகுளத்தில் நீராடி வந்துதான் ஏட்டுப்பீடத்தின் முன் அமர்வான். ஓரிரு செய்யுட்களை வாசிப்பதற்குள்ளாகவே சாளரம் வழியாக வெண்ணெருப்பு போல வெயில் பீரிட்டு வந்து அறைக்குள் நிற்கத் தொடங்கிவிடும். காகங்கள் வாய்திறந்து பதைக்கும் நாக்குகளுடன் மரங்களுக்குள் சென்று அமர்ந்துவிடும்.

அஸ்தினபுரியில் இலைகள் அசைந்தே நெடுநாட்களாகிவிட்டன என்று சுருதை சொன்னாள். "மதுராபுரியில் இப்படியொரு வெப்பத்தை நான் அறிந்ததேயில்லை" என்றாள். "மதுராபுரி ஆற்றங்கரையில் உள்ளது. யமுனையில் நீர்வற்றுவதில்லை. கோடைகாலத்தில் பனியுருகிய நீருடன் அது குளிர்ப்பெருக்காக வருகிறது" என்று சொல்லி சுவடிகளை மூடிக்கட்டியபடி விதுரன் எழுந்து "நான் அரண்மனைக்குக் கிளம்புகிறேன்" என்றான். சுருதை சற்றே முகம் வாடி "தாங்கள் இங்கே இருப்பதேயில்லை. மைந்தர்களை தொட்டே பலநாட்களாகின்றன" என்றாள்.

விதுரன் "சிலதருணங்களில் யானையை பாகன் சுமப்பான் என்று ஒரு பழமொழி உண்டு" என்றான். அஸ்தினபுரியின் அரசுச்சுமையை முழுக்கவே அவன்தான் ஏற்றிருந்தான். பீஷ்ம பிதாமகர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. பேரரசிக்கு ஆட்சியைப்பற்றிய நினைவுகளே மறைந்துவிட்டன. யமுனைக்கரையின் எளிய மீனவ மூதாட்டியாக அமர்ந்திருந்தாள். திருதராஷ்டிரனுக்கு இசையன்றி ஈடுபாடில்லை. சகுனி தன் மருகர்களை பயிற்றுவிப்பதன்றி ஏதுமறியாமல் இருந்தான்.

"கங்கை தன் வழியை தானே கண்டுகொள்கிறது. அதை எவரும் ஆட்சிசெய்வதில்லை" என்று சுருதை சொன்னாள். அவன் புன்னகைசெய்தபடி "குடும்பத்தலைவிகளுக்குத் தேவையான வரிகளை எல்லாம் மதுராபுரியிலிருந்தே கற்றுவந்திருக்கிறாய்" என்றான். அவள் சிரித்தாள். அவன் "மைந்தர்கள் எங்கே?" என்றான். "இரவு அவர்கள் நெடுநேரம் துயில்வதில்லை. ஆகவே விடிந்தபின் எழுவதுமில்லை" என்றாள் சுருதை.

மைந்தர்கள் பிறந்ததிலிருந்து சுருதை அரண்மனையின் மேற்கே இருந்த அறையில்தான் துயின்றாள். அங்கே உயரமற்ற மஞ்சத்தில் சுபோத்யன் கருக்குழந்தைபோல சிற்றாடையுடன் சுருண்டு துயின்றுகொண்டிருந்தான். அவனுடைய மெல்லிய உடலில் விலாவெலும்புகள் வரிவரியாகத் தெரிந்தன. விளையாடத்தொடங்கும் குழந்தை விரைவாக தன் மழலைக்கொழுப்பை இழக்கத் தொடங்குகிறது. சிறுபண்டி வற்றுகிறது. புறங்கைகளில் நரம்புகள் தெரியத்தொடங்குகின்றன. கழுத்தெலும்புகள் எழுகின்றன. பற்கள் விழுந்து முளைக்கும்போது கன்னக்கதுப்பு மாறுகிறது. கண்முன் குழந்தை மைந்தனாக ஆகும் மாற்றம். முதல்குழந்தையின் அந்த மாற்றம் பெற்றோருக்கு ஒரு இழப்புணர்வையே உருவாக்குகிறது.

சுசரிதனுக்கு ஒருவயதாகவில்லை. அவன் இருகைகளையும் விரித்து கால்களை அகற்றி மல்லாந்து படுத்திருந்தான். சந்தனக்குழம்பில் குமிழி போல சிறிய அழகிய பண்டியில் தொப்புள் தெரிந்தது. உள்ளங்கால் மலரிதழின் வெண்மையுடன் இருக்க விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தன. வாயிலிருந்து எச்சில் வழிந்த தடம் உலர்ந்திருந்தது. விதுரன் குழந்தையின் காலின் அடியில் மெல்ல வருடி வயிற்றில் முத்தமிட்டான். சுசரிதன் துயிலிலேயே புன்னகை செய்து உடலைக் குறுக்கியபின் திரும்பிப்படுத்தான். சுபோத்யனின் தலைமுடியை மெல்ல வருடியபின் விதுரன் கண்களால் மனைவியிடம் விடைபெற்று வெளியே நடந்தான்.

"காலை தொடங்குவதற்குள்ளாகவே நாளின் நீளத்தை உணரத்தொடங்கிவிடுகிறோம்" என்றார் வைதிகர். விதுரனின் களைப்பைக் கண்டு புன்னகைசெய்தபடி "நான் இதுவரை பன்னிரண்டு ஆறாண்டுக்கோடைகளைக் கண்டுவிட்டேன். என் வயதைவைத்துப்பார்த்தால் வரப்போகும் நூற்றியிருபதாண்டுப்பஞ்சத்தைக் காணாமல் சென்றுவிடுவேன்" என்றார். விதுரன் கைகளை சோம்பலுடன் வீசியபடி "வெப்பம் காரணமாக இரவில் துயில்நீப்பதனால் விழிகள் சோர்ந்திருக்கின்றன" என்றான். புராணகங்கைக்குள் இருக்கும் கோடைகால மாளிகையில் தங்கலாம். அங்குதான் திருதராஷ்டிரன் இரவுறங்குகிறான். அங்கே மண்ணுக்குள் நீரோடுவதனால் குளிர் இருக்கிறது. மரங்களும் செறிந்திருக்கின்றன. ஆனால் அவன் தன் மாளிகையில் இரவு இருந்தாகவேண்டும் என்று எண்ணினான்.

மூன்றுமாதங்களுக்கு முன்னர்தான் அவன் அன்னை சிவை மறைந்தாள். மிக எளிய இறப்பு, பறவைகள் இறப்பதைப்போல. அதிகாலையில் எப்போதும் அவளுடைய வடக்கு உப்பரிகையில் உடலைச்சுருட்டி அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவளை சுருதையும் அவனும் கண்டுவந்தார்கள். சுருதை சென்று அவளைத் தொட்டு எழுப்பி நீராட்டறைக்குக் கொண்டுசெல்வாள். ஆடையணிகள் அணிந்தபின் அவள் அரசியருக்குரிய காலைபூசனைகளுக்காக மங்கலத்தாசியரும் தாம்பூலச்சேடியரும் சூதரும் சூழ சென்று வருவாள். அன்று வழக்கம்போல சுருதை சென்று அவளைத் தொட்டதுமே தெரிந்துவிட்டது. அவள் விழிகள் திறந்து வெளியே நோக்குபவைபோலத்தான் இருந்தன.

விசித்திரவீரியனின் பார்ஷவி என்னும் நிலையில் அவளுக்குரிய சடங்குகள் அரண்மனையிலும் பின்னர் கங்கையிலும் முறைப்படி நடந்தன. அவள் இறப்பு எவருக்கும் எந்தத் துயரையும் அளிக்கவில்லை. சுருதை மட்டுமே அவளுக்காக கண்ணீர் விட்டாள். சத்யவதி "அவளுக்கு இறப்பைத்தவிர வேறு விடுதலை இல்லை" என்று மட்டும் சொல்லி பெருமூச்சுடன் "சோமரே, அனைத்தும் முறைப்படி நடக்கட்டும். வைதிகர்களுக்கும் சூதர்களுக்கும் பரிசுகள் குறையாமல் வழங்குங்கள். குடிகள் மூன்றுநாட்கள் துயராடட்டும். அரண்மனையில் ஏழுநாட்கள் கொடிகள் இறங்கியிருக்கட்டும்" என்றாள்.

அது ஒரு சூதகுலத்து பார்ஷவிக்கு ஒருபோதும் அளிக்கப்படாத மதிப்பு. ஆனால் அதை சத்யவதி சொல்லிக் கேட்டபோது விதுரன் கூசினான். தன் பார்வையை மஞ்சத்தில் உறைந்துகிடந்த சடலத்தை நோக்கித் திருப்பிக்கொண்டான். மெலிந்து ஒடுங்கிய முகம். கன்னங்களும் கண்களும் குழிந்திருந்தமையால் அவள் மூக்கு பெரியதாகப்புடைத்துத் தெரிந்தது. கூந்தல் பாதிநரைத்து உமிச்சாம்பல் போல காதுகளை மூடியிருந்தது. இருகைகளும் மார்பின் மேல் கோத்து வைக்கப்பட்டிருந்தன. மெலிந்திருந்தமையால் விரலில் மூங்கில்போல முட்டுகள் பெரியதாகத் தெரிந்தன.

கங்கை நீரில் இறங்கி நின்று வைதிகர் நீர்ச்சடங்குகளைச் செய்துகொண்டிருந்தபோது அவன் அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவளுக்கு கங்கையில் நீர்க்கடன் அளிக்கையில் மட்டும்தான் அவளைப்பற்றி எண்ணிக்கொள்கிறோம் என்று நினைத்தான். அவனை ஈன்ற அன்னை. ஆனால் ஒருகட்டத்திலும் அந்த அன்பை அவன் அவள்மேல் அறிந்ததில்லை. அது பிழை என உணர்ந்து அதற்காக அவன் முயன்றதுண்டு. அவள் மறைந்தபின் அவளைப்பற்றி நெகிழ்வுடனும் குற்றவுணர்ச்சியுடனும் எண்ணமுயன்றதுண்டு. ஆனாலும் அவள் எவரோவாகவே இருந்தாள். நெருங்காத ஒருவரை நேசிக்கமுடியாத மானுடமனத்தின் எல்லையைப்பற்றி எண்ணிக்கொண்டான். ஒரு தொழுவத்தில் கட்டப்பட்டதனால் மட்டும் ஒன்றையொன்று நேசிக்கும் பசுக்கள் போன்றவர்கள்தானா மனிதர்களும்?

அவளை நினைக்குபோதெல்லாம் அந்த வடக்கு உப்பரிகையில் அவள் சுருண்டு அமர்ந்திருக்கும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அவள் ஏங்கிக்கொண்டிருப்பது வெளியே செல்லத்தான் என முதலில் அவன் நினைத்தான். நினைத்த இடங்களுக்குச் செல்லும் வாழ்க்கை கொண்டிருந்த எளிய சூதப்பெண் அவள். அரசியின் முறைமைகளை தளைகளாக அணிந்துகொண்டவள். அவளை ஒவ்வொருநாளும் அவள் விரும்பும் வெளியிடங்களுக்குக் கொண்டுசெல்லும்படி அவன் சேடியருக்கு ஆணையிட்டான். ஆனால் அவள் வெளியே செல்லவிரும்பவில்லை. அவள் செல்லும் வழக்கமான வழிகளை விட்டு சற்று விலகினால்கூட பதறி உடல்நடுங்கினாள். அவள் ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருந்த வடக்குச்சாலைக்குச் சென்றபோதுகூட அதை அவளால் அடையாளம் காணமுடியவில்லை.

நீர்க்கடன் முடிந்து வைதிகருக்கு காணிக்கை கொடுத்து வணங்கி அவன் மீண்டும் தேரிலேறிக்கொண்டான். இன்னும் சில நீர்க்கடன்கள். அதன்பின் மாதம்தோறும் நினைவுகூர்வதுகூட இல்லாமலாகிவிடும். வருடந்தோறும் கொடுக்கும் நீர்க்கடனும் மெல்லமெல்ல கடமையாக மாறி பொருளிழந்துவிடும். அவனை எவரும் சிவேயன் என அழைக்கப்போவதில்லை. சுருதையின் சொற்களில் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகாலம் அவள் வாழலாம். மைந்தர்கள் அச்சொற்களாக அவளை நினைவுகூரலாம்.

அவன் கருவூலச்சுவடிகளை முழுமையாக வாசித்து ஆணைகளை சுருக்கமாக ஓலைநாயகங்களுக்குச் சொல்லிவிட்டு பேரரசியின் அரண்மனைக்குச் சென்றான். ஒவ்வொருநாளும் முன்மதியத்தில் அவன் அவளை சந்திக்கும் நேரம் அமைந்திருந்தது. சத்யவதியின் அரண்மனைக்கு முன்னால் ஒரு பல்லக்கு நின்றிருந்தது. நிமித்திகர்களோ கணிகர்களோதான் என அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். அவர்களைத்தவிர எவரையுமே சத்யவதி சந்திக்காமலாகி பல்லாண்டுகளாகிவிட்டன. தன் சிறுமைந்தர்களின் பிறவிநூல்களை அவள் மீண்டும் மீண்டும் கணித்துக்கொண்டிருந்தாள். "அவருடைய ஆமாடப்பெட்டிக்குள் ஆயிரம் பிறவிநூல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மைந்தனுக்கும் இருபது வெவ்வேறு பிறவிநூல்கள் உள்ளன. அவற்றைப் பார்த்தால் பிரம்மனே திகைத்து தான் படைத்தவர்கள் மொத்தம் எத்தனை என்று மறந்துவிடுவார்" என்று சியாமை ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னாள்.

மீண்டும் மீண்டும் அவள் எளிய நம்பிக்கைகளை நாடிக்கொண்டிருக்கிறாள் என்று விதுரன் அறிந்தான். நிமித்திகர் சொல்லும் சிறிய அவப்பயன் கூட அவளை பதறச்செய்தது. உடனே இன்னொரு நிமித்திகரை வரச்சொல்லி இன்னொருமுறை பிறவிப்பயன் கேட்கத் தொடங்குவாள். விதுரன் நிமித்திகர்கள் அனைவரிடமும் உறுதியான ஆணைகளை பிறப்பித்தான். அனைத்து நிமித்தங்களும் நலன்பயப்பதாகவே சொல்லப்படவேண்டும் என்று. முதல்நிலை நிமித்திகர் அவளைப்பார்ப்பதையே தவிர்க்கத் தொடங்கினர். ஆகவே எளிய நாடோடி நிமித்திகர்களை பொய்யான புகழுடன் அவனே அவளிடம் அனுப்பிக்கொண்டிருந்தான். அதற்குப்பயனிருந்தது. நாள்செல்லச்செல்ல அவள் முகம் தெளிந்து வந்தது. அவள் நிறைவும் உவகையும் கொண்டவளாக ஆனாள்.

"தெரியுமா? வேசரதேசத்து நிமித்திகரே சொல்லிவிட்டார். என் சிறுமைந்தர்கள் ரகுகுலத்து ராமனின் தம்பியர் போல இணைந்து அஸ்தினபுரியை ஆள்வார்கள் என்கிறார். அவர்தான் பாரதவர்ஷத்திலேயே பெரிய நிமித்திகராம். அவர்தான் மகதத்தில் பிருகத்ரதனின் மைந்தன் ஜராசந்தனே ஆட்சியமைப்பான் என்று கணித்துச் சொன்னவராம். அப்படியே நடந்ததா இல்லையா? இதோபார் அஸ்தினபுரியை பாரதவர்ஷத்தின் தலைநகரமாக அவர்கள் மாற்றுவார்கள் என்று எழுதியே கொடுத்திருக்கிறார்" என்று சொல்லி பரபரப்பாக சுவடிகளை எடுத்து விரித்துக்காட்டும் அவளுடைய மலர்ந்த முகத்தைப்பார்க்கையில் விதுரன் உள்ளூர ஒரு திகைப்பையே உணர்ந்தான். அவள் கற்றவை வென்றவை அனைத்தையும் இழந்து பேதைமையையே அழகாக அணிந்த வெறும் அன்னை என அவன் முன் நின்றிருப்பாள். அத்தனை படிகளும் பீடங்களும் இப்படி ஒரு எளிய மூதன்னையாக ஆகி பிறரால் பரிவுடனும் இளநகையுடனும் குனிந்து நோக்கப்படுவதற்காகத்தான் என்றால் படைப்பை நடத்தும் அது மனிதர்களைக்கொண்டு ஒரு கேலிநாடகத்தைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறதா என்ன?

உள்ளே நிமித்திகர் ராசிக்களத்தில் சோழிகளைப் பரப்பிவைத்து பயன்நோக்கிக்கொண்டிருந்தார். விதுரன் அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டான். சத்யவதி "சற்றுமுன்னர்தான் விசாலர் என் முதல் சிறுமைந்தனைப்பற்றிய பயனைச் சொன்னார். துரியோதனனைச் சுற்றி பரமபுருஷனின் சங்கும் சக்கரமும் காவல் நிற்கிறதாம். அவனுக்கு எதிரிகளே இல்லையாம்" என்றாள். "இப்போது அவரிடம் இந்தக்கோடையைப்பற்றி பார்க்கச் சொல்லியிருக்கிறேன். இரவிலும் வெம்மை தாளவில்லை. ஆறாண்டுக்கோடை என்றாலும் நான் இந்த அளவுக்குப் பார்த்ததில்லை. மழை வரும் நாளை கணித்து சொல்லச்சொன்னேன்." சென்ற சில ஆண்டுகளாகத்தான் அவள் காலநிலை பற்றி குறைகளைச் சொல்லத் தொடங்கியிருந்தாள். வெயிலையும் குளிரையும் அவள் அறியத்தொடங்குவதே இப்போதுதான்.

நிமித்திகர் நிமிர்ந்து "பேரரசி, மழை இன்னும் கடலில் கருக்கொள்ளவில்லை" என்றார். "மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் ஓர் உயிரின் வேண்டுதலுக்கிணங்கவே விழுகிறது என்கின்றன நூல்கள். நாம் வேண்டிக்கொள்ளாமல் மழை வருவதில்லை. மண்ணிலுள்ள மானுடரும் மிருகங்களும் பூச்சிகளும் புழுக்களும் செடிகொடிகளும் கல்லும் மண்ணும் மழைக்காக வேண்டிக்கொள்ளவேண்டும்." சத்யவதி "ஆம், அதை நானும் அறிவேன்" என்றாள். "மழைவேள்வி ஒன்றை செய்யவேண்டும். நாம் தாகம் கொண்டிருக்கிறோம் என்றும் வெம்மை கொண்டிருக்கிறோம் என்றும் வருணனுக்கும் இந்திரனுக்கும் சொல்லவேண்டும்."

"மழைவேள்விக்கு ஆவன செய் விதுரா... உடனே, அடுத்த நன்னாளிலேயே" என்றாள் சத்யவதி. விதுரன் தலை வணங்கினான். "அதிராத்ர அக்னிசாயனத்துக்குரிய வைதிகர்களை வரச்சொல். தவளைகளை நமக்காக விண்ணை நோக்கி இறைஞ்சவைக்கும் வேள்வி அது. கங்கைக்கரையின் கோடானுகோடி தவளைகளின் நாவில் வேதம் எழும்போது விண்ணோர் இரங்கியாகவேண்டும்" என்றாள். நிமித்திகர் "ஒவ்வொரு கொடுவேனிலும் மேலும் அதிகமான தவளைமுட்டைகளை விரியச்செய்கின்றன. தவளைகளை மேலும்மேலும் பெருகச் செய்கின்றன. தவளைக்குரல் எழும் நாட்டிடம் வருணனும் இந்திரனும் கனிவுடனிருக்கிறார்கள்" என்றார்.

நிமித்திகர்கள் சென்றபின்னர் விதுரன் முந்தையநாளின் நிகழ்ச்சிகளையும் அரசாணைகளையும் சுருக்கமாகச் சொன்னான். அது வேள்விமந்திரம் சொல்வதுபோல ஒரு சடங்குதான் என்று அவனுக்குத்தோன்றும். அவள் விழிகள் எதையுமே உள்வாங்குவதில்லை. அவன் சொல்லிமுடித்ததும் அவள் மிக எளிய வினாக்களைக் கேட்பாள். அவன் அதற்கு ஒற்றைவரி விடைகளைச் சொல்வான். அவள் நிறைவடைந்து விடுவாள். "தேவவிரதனைப்பற்றி ஏதாவது தெரிந்ததா?" என்று அவள் கேட்டாள். விதுரன் "இல்லை அன்னையே. அவர் இம்முறை திருவிடத்துக்கும் அப்பால் தமிழ்நிலத்துக்குச் சென்றிருக்கக்கூடும்" என்றான்.

சத்யவதி பெருமூச்சுவிட்டு "அவனுக்கு ஓர் உடலும் ஒரு வாழ்க்கையும் போதவில்லை" என்றபின் புன்னகைத்து "ஓர் உடலிலும் ஒரு வாழ்க்கையிலும் எஞ்சியவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் நான் இருக்கிறேன்" என்றாள். அவளிடம் பேசப்படும் அனைத்தும் அவளுக்கு தன் முதுமையைத்தான் நினைவூட்டுகிறது என்று அவன் எண்ணிக்கொண்டான். அவள் முகம் மலரவேண்டுமென்றால் இனிய இறந்தகால நினைவொன்று மீண்டுவரவேண்டும். எதிர்காலத்தில் அவள் அஞ்சுவதற்கும் ஐயம்கொள்வதற்குமானவை மட்டுமே இருந்தன.

விதுரன் மீண்டும் அமைச்சுமாளிகைக்குச் சென்று சற்று ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தில் படுத்தபோது உளவுச்சேவகன் வந்து வாசலில் நின்றான். முதன்மையான செய்தி ஏதும் இல்லாமல் அவன் ஓய்வுநேரத்தில் வருவதில்லை என்று அறிந்திருந்த விதுரன் முதல்கணம் எண்ணியது பீஷ்மபிதாமகரின் இறப்பைப் பற்றித்தான். "என்ன?" என்று அவன் கேட்டதும் சேவகன் பறவைகொண்டுவந்த ஓலையை நீட்டியபடி "மாமன்னர் பாண்டு" என்றான்.

தலைமேல் அடிவிழுந்தது போல அரைக்கணம் செயலற்றுவிட்டு பின் உடல் பதற எழுந்து அந்த ஒலையை வாங்கி வாசித்தான். முதல்முறை சொற்கள் பொருளாக மாறவில்லை. மூன்றாம் முறை அஞ்சிய பறவை மீண்டும் கிளையில் அமர்வதுபோல அவன் அகம் அச்சொற்களில் அமைந்தது. மீண்டும் மீண்டும் அவ்வரிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.

"மூன்று பருந்துகள் தொடர்ந்து செய்தியைக் கொண்டுவந்தன. ஒரே செய்தியின் மூன்று பிரதிகள்" என்றான் சேவகன். விதுரன் தன் சால்வையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு "அமைச்சர்களை வரச்சொல்" என்றான். கண்களை மூடி நெற்றிப்பொட்டை அழுத்தியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தான். இந்தத் தருணத்துக்கு அப்பால் இனி என்ன நிகழும் என்று எண்ணாமலிருப்பதே இதைக் கையாள்வதற்கான சிறந்த வழி. ஆம், அதைத்தான் செய்யவேண்டும். இப்போது செய்யவேண்டியவற்றை மட்டுமே யோசிக்கவேண்டும். ஆனால் எண்ணம் முன்னோக்கித்தான் பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. நடக்கவிருப்பவை, நடக்கக்கூடுபவை. எதிர்காலம். எதிர்காலம் என ஒன்று உண்டா என்ன? நம் பதற்றங்களைத்தான் எதிர்காலம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமா?

சோமரும் லிகிதரும் விப்ரரும் வந்தனர். பேரமைச்சர் யக்ஞசர்மர் நடமாடமுடியாதவராக படுக்கையில் இருந்தார். அவரது மூத்தமைந்தர் சௌனகர் இளைய அமைச்சராக சேர்ந்திருந்தார். "சோமரே, தாங்களே நேரில்சென்று பேரரசியிடம் செய்தியை அறிவியுங்கள். லிகிதரே தாங்கள் மூத்த அரசியிடம் செய்தியைச் சொல்லுங்கள். நான் தமையனாருக்கு அறிவிக்கிறேன். விப்ரர் சகுனியிடம் செய்தியறிவிக்கவேண்டும். சௌனகர் வைதிகருக்கும் படைகளுக்கும் நகர்மக்களுக்கும் அறிவிக்கட்டும்" என்றான் விதுரன். அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

"படைத்தலைவர்கள் நகரை எட்டு பகுதிகளாகப் பிரிக்கவேண்டும். எட்டுப்பகுதிகளும் தனித்தனியாக படைகளால் காக்கப்படட்டும். மக்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடி நெரிசல் எழாமல் அது தடுக்கும். அனைத்து ஒருக்கங்களும் முடிந்தபின்னர்தான் செய்தி முறையாக முரசறையப்படவேண்டும். பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் பேரரசியின் செய்தி இன்றிரவே தூதர்கள் வழியாக அனுப்பப்படவேண்டும். அவற்றில் கடைபிடிக்கப்படும் முறைமைகள் வழுவாதிருக்கவேண்டும். அதற்கு தீர்க்கவியோமரும் வைராடரும் பொறுப்பேற்றுக்கொள்ளட்டும்."

சௌனகர் "இளையஅரசியிடம் யார் தெரிவிப்பது?" என்றார். விதுரன் அவரை பொருள்நிகழாத விழிகளால் சிலகணங்கள் நோக்கிவிட்டு நீர்ப்பிம்பம் போல கலைந்து, "எவர் சென்று சொன்னாலும் என்ன நிகழுமென்று சொல்லமுடியாது அமைச்சரே. என்னால் எம்முடிவையும் எடுக்கமுடியவில்லை. இச்செய்தியை தமையனார் எப்படி எதிர்கொள்வாரென்றே என்னால் உய்த்துணர முடியவில்லை. அவரை அணுகி இச்செய்தியைச் சொல்ல என்னால் மட்டுமே முடியும் என்பதனால்தான் நானே செல்கிறேன்" என்றான்.

சௌனகர் "இளையபிராட்டியாரிடம் செய்தியைச் சொல்ல உகந்தவர் பேரரசிதான்" என்றார். அதைக்கேட்டதுமே விதுரன் வியப்புடன் அதைவிடச்சிறந்த வழி இருக்கமுடியாதென்று உணர்ந்தான். யக்ஞசர்மரை அறுபதாண்டுகாலம் பேரமைச்சராக நீடிக்கச்செய்த நடைமுறைவிவேகம் மைந்தரிலும் நீடிக்கிறது என எண்ணிக்கொண்டான். சௌனகரின் இளமைநிறைந்த விழிகளை நோக்கி "ஆம், அமைச்சரே. அதுவே ஒரே வழி. பேரரசி முதலில் செய்தியை அறிந்துகொள்ளட்டும். அவர்கள் சற்று மீண்டதும் அவர்களே சென்று இளையஅரசியிடம் செய்தியைச் சொல்லட்டும்" என்றான்.

அவர்கள் கிளம்பியபின்னரும் அவன் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரனைக் கண்டு அச்செய்தியைச் சொல்வது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கியதுமே அகம் திகைத்து விலகி வேறு சிறிய நிகழ்ச்சிகளை நோக்கிச் சென்றது. அங்கே இந்நேரம் பாண்டுவின் சிதைமேல் நெருப்பு ஏறியிருக்கும். அவனுடைய கூன் விழுந்த வெண்ணிறமான சிறிய உடல் அவன் கண்முன் எழுந்ததும் துயரம் அலைவெள்ளம்போல எழுந்து அறைந்து அகத்தின் அனைத்து இடங்களையும் நடுங்கச்செய்தது. உடனே எண்ணங்களை விலக்கிக் கொண்டான். குந்தி இந்நேரம் அணிகளையும் மங்கலங்களையும் களைந்திருப்பாள். ஒருவேளை எரியேறியிருப்பாள். மீண்டும் ஓர் அதிர்வுடன் எண்ணத்தை விலக்கிக்கொண்டான்.

அமர்ந்திருக்கும் தோறும் எண்ணங்கள் திசைகெட்டு பாய்கின்றன. கால் எடுத்துவைத்து விரைந்து நடப்பது ஒன்றே அவற்றை சீராக்கி முன்னோக்கி மட்டுமே செலுத்த முடியும். நடக்கும்போது கால்களின் தாளம் எப்படியோ சித்தத்துக்கும் வந்துவிடுகிறது. அவன் இடைநாழி வழியாகச் சென்றான். சொற்களை ஒழுங்குசெய்யவேண்டும். மிகச்சரியான சொற்களில் சொல்லவேண்டும். எப்படி சொல்லப்படமுடியுமோ அப்படி. ஆனால் அதைத்தான் திரும்பத்திரும்ப எண்ண முடிந்ததே ஒழிய ஒரு சொல்லைக்கூட எடுத்துவைக்க முடியவில்லை.

புஷ்பகோஷ்டத்தை தாண்டிவிட்டிருப்பதை உணர்ந்தான். மீண்டும் திரும்பநடந்தான். துரியோதனனின் பிறப்பை ஒட்டி திருதராஷ்டிரனுக்கும் அவனுக்கும் இடையே ஒரு விலகல் நிகழ்ந்தது. திருதராஷ்டிரன் முன்னாலிருந்து எழுந்துசென்ற அவன் எட்டுநாட்கள் புஷ்பகோஷ்டம் பக்கமே செல்லவில்லை. அதன்பின் விப்ரன் வந்து "உடனே வந்து சந்திக்கும்படி மூத்தவரின் ஆணை" என்றான். ஒருகணம் விதுரன் அஞ்சினான். பின்னர் அதுவும் நல்லதற்கே என்று தோன்றியது. முதல்நாள் அவன் கசப்புடன் திருதராஷ்டிரன் அரண்மனைக்குச் செல்லாமலிருந்தான். மறுநாள் அந்தக் கசப்பு மேலும் வளர்ந்தது. அடுத்தநாள் அக்கசப்பை அவனால் நினைவுகூரத்தான் முடிந்தது. மேலுமொருநாள் தாண்டியபோது அது பழையநினைவாக ஆகிவிட்டிருந்தது.

ஆனால் மூன்றுநாட்களின் விலகலைக் கடந்து மீண்டும் தமையன் முன் சென்று நிற்க அவனுடைய ஆணவம் தயங்கியது. நாளை நாளை என அது ஒத்திப்போட்டது. நாட்கள் செல்லச்செல்ல அந்த நாட்களின் இடைவெளியே அதை அரியசெயலாக ஆக்கியது. எட்டுநாட்களுக்குப்பின் அவன் தமையனை அத்தனைநாள் சந்திக்காமலிருந்தது மிகப்பெரிய நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது. அதற்கான விளக்கத்தை அவனால் உருவாக்கிக்கொள்ளமுடியவில்லை. மீண்டும் அவனை சந்திக்கவே முடியாதென்று தோன்றியது. இருபத்தைந்தாண்டுகாலமாக அம்பிகையும் அம்பாலிகையும் அப்படித்தான் ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்களாக ஆகியிருப்பார்கள் என நினைத்துக்கொண்டான்.

திருதராஷ்டிரனின் அழைப்பு ஒரு வலுவான உடனடிக்காரணமாக அமைந்தது. அது அனைத்து இக்கட்டுகளையும் முடித்துவிட்டது. அவன் புஷ்பகோஷ்டத்துக்குச் சென்று தமையன் முன் நின்றான். அவர் வசைபாடினாலும் அடித்தாலும் அமைதியாகப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் திருதராஷ்டிரன் அவனைக் கேட்டதும் இரு கைகளை விரித்து "இளையவனே" என்றான். விதுரன் உடைந்து அழுதபடி அந்த விரிந்த கைகளுக்குள் தன்னை ஒப்புக்கொடுத்தான். அவனைத் தன் மார்புடன் அணைத்தபடி திருதராஷ்டிரன் "தம்பி, நீ கற்றவன், ஞானி. நான் விழியிழந்த பேதை. என் உணர்ச்சிகளை நீ அறியவேண்டாமா? என் அறிவின்மைகளை நீ மன்னிக்கவேண்டாமா?" என்றான். "மூத்தவரே, உங்கள் பாதங்களில் ஆயிரம் முறை விழுந்து ஒவ்வொரு சொல்லுக்கும் மன்னிப்பு கோருகிறேன். மானுட உணர்ச்சிகளை அறியாத வெற்று நூலறிஞன் நான்" என்று அவன் உடைந்து அழுதான்.

புஷ்பகோஷ்டத்தின் வாயிலை அடைந்தபோது விதுரன் தன்னுள் சொல்வதற்கென ஒரு சொல்கூட இல்லை என்பதை உணர்ந்தான். மறுகணமே ஒரு இறப்பைச் சொல்ல எதற்கு அத்தனை நுண்சொற்கள் என்று தோன்றியது. இறப்பு மிகமிக இயல்பாக நிகழ்கிறது. மண்ணில் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளுக்கும் அளவையறிதல்களுக்கும் அப்பால் அது உள்ளது. அதைச்சொல்லும் எச்சொல்லும் சிறுத்துப்பொருளிழந்தே நிற்கும். அல்லது அதைச்சொல்லும் எச்சொல்லையும் அதுவே பெரும்பொருள் கொண்டதாக ஆக்கிவிடும். எப்படி அது நிகழ்கிறதோ அப்படி அது தெரிவிக்கப்படுவதே முறையானது.

அவன் வாயிலில் நின்ற அணுக்கச்சேவகனாகிய விப்ரனிடம் உள்ளே சென்று தமையனிடம் அவரது இளையவரின் இறப்பைத் தெரிவிக்கச் சொன்னான். ''ஆடி மாதம், பரணிநாள், பின்மதியத்தில். நரம்புகளில் ஏற்பட்ட நோயால் உயிர்பிரிந்திருக்கிறது."  விப்ரன் தலைதாழ்த்திவிட்டு உள்ளே சென்றான். அவனிடம் சிறு வியப்புக்கு அப்பால் எந்தத் தயக்கமும் இல்லை என்பதை விதுரன் கண்டான். ஏனென்றால் அவன் சொல்லும் செய்திக்கும் அவனுக்கும் உறவில்லை. அதுவரை தான் உணர்ந்த கொந்தளிப்புக்கான காரணம் தான் பாண்டுவின் தம்பி என்பதுதான். சாவு என்பது ஒன்றே. தன் சாவு, தன்னைச்சார்ந்தவர்களின் சாவு. பிறசாவுகளெல்லாமே வெறும் செய்திகள் மட்டுமே.

அவன் அங்கே நிற்கவே விழைந்தான். ஆனால் அவனையறியாமலேயே விப்ரனைத் தொடர்ந்துசென்றான். உள்ளே திருதராஷ்டிரன் ஒரு பீடத்தில் அமர்ந்து மடியில் ஒரு மகரயாழை வைத்துக்கொண்டு மெல்ல தட்டிக்கொண்டிருந்தான். முகத்தில் யாழில் மட்டுமே குவிந்த சித்தத்தின் கூர்மை தெரிந்தது. விப்ரனின் காலடியைக் கேட்டதும் முகம் தூக்கி "விப்ரா மூடா? சஞ்சயன் எங்கே? அவனை வரச்சொல்" என்றான். விப்ரன் "அரசே, பெரிய செய்தி ஒன்றைச் சொல்லும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்" என்றான். "என்ன செய்தி" என்று கேட்ட திருதராஷ்டிரன் முகம் மாறி "பிதாமகர் நலமல்லவா?" என்றான்.

விப்ரன் "அவர் நலம் அரசே. இச்செய்தி தங்கள் இளையவரைப் பற்றியது. மனிதர்களுக்கெல்லாம் உரிய இறுதியை அரசர்களுக்குரிய முறையில் அவர் அடைந்தார்" என்றான் விப்ரன். விதுரன் அச்சொற்களைக் கேட்டு திகைத்தான். மிகமிகச் சரியான சொற்கள். அவன் சொல்லவில்லை அதை, இறப்பு அச்சொற்களை அதுவே உருவாக்கிக்கொண்டிருக்கிறது. திருதராஷ்டிரன் தன் இருகைகளையும் மேலே தூக்கி "எப்போது?" என்றான். "ஆடி மாதம், பரணிநாள், பின்மதியத்தில். நரம்புச்சிக்கலால் இறப்பு நிகழ்ந்தது." திருதராஷ்டிரன் "விதுரன் எங்கே?" என்றான். விதுரன் "அரசே, இங்கிருக்கிறேன்" என்றான்.

மறுகணம் இரு கைகளையும் தூக்கியபடி பேரலறலுடன் திருதராஷ்டிரன் அவனை நோக்கி ஓடிவந்தான். "தம்பி, என் இளையவன் நம்மைவிட்டுச் சென்றுவிட்டான்! அவன் உடலைக்கூட நாம் பார்க்கமுடியாது" என்று கூவியபடி வந்து ஒரு பீடத்தில் முட்டிக்கொண்டான். அடுத்தகணம் சினத்துடன் அந்தப்பீடத்தைத் தூக்கி பேரொலியுடன் வீசினான். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்தான். தூணின் மீதிருந்த உத்தரங்களுடன் அரண்மனைக் கட்டடத்தின் மேல்தட்டே குலுங்கி அதிர்ந்தது. "பாண்டு! என் தம்பி! பாண்டு" என்று கூவியபடி அவன் வெறிகொண்டு இருகைகளாலும் தன் மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். கண்ணீர் வழிய விம்மியபடி அறைந்தபடியே இருந்தான். 'பாண்டு! பாண்டு! பாண்டு!' என்ற ஒற்றைச்சொல்லாக அவன் சித்தம் திகைத்துவிட்டது என்று பட்டது.

விதுரன் அந்தக் காட்சியை நோக்கியபடி அசைவில்லாமல் நின்றான். விப்ரன் விலகிச்சென்று கதவோரம் நின்றான். திருதராஷ்டிரன் தீ பட்ட யானைபோல அலறியபடி பெரிய கரங்களைச் சுழற்றி சுற்றிவந்தான். கைகளுக்குப்பட்ட சுவரிலும் தூணிலும் ஓங்கி அறைந்தான். கால்களில் முட்டியவற்றை எடுத்து வீசினான். மார்பிலும் தலையிலும் அவற்றை உடைத்து திறக்கமுயல்பவன் போல ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு கூவினான். அந்த பயங்கரக் காட்சிதான் மிக இயல்பான துயரம் என்று விதுரன் எண்ணிக்கொண்டான். செய்யவேண்டியது அதுதான். அப்படி அழமுயன்றால் துயரங்களை எளிதில் கடந்துவிடலாம்.

அவன் தன்னை அழைப்பான் என்று சற்றுநேரம் விதுரன் காத்திருந்தான். பின்பு தெரிந்தது அந்தத் துயரில் வேறு எவருக்கும் இடமில்லை என்று. அதைப்பார்த்துக்கொண்டு கைகளைக் கட்டியபடி நின்றிருந்தவன் தன் மார்பு கண்ணீரால் நனைந்திருப்பதை உணர்ந்தான். அந்தக் கொந்தளிப்பை தன் அகமும் அதே உச்சத்தில் நடித்துக்கொண்டிருப்பதை அறிந்தான். அதன் வழியாக அவனும் மெல்லமெல்ல அகம் ஒழிந்து விடுபட்டுக்கொண்டிருந்தான்.

திருதராஷ்டிரன் தன் தலையில் கையை வைத்தபடி அப்படியே பின்னால் சாய்ந்து தரையில் அமர்ந்து அழுதான். விதுரன் திரும்பி விப்ரனை நோக்கி கைகாட்டிவிட்டு அருகே சென்று திருதராஷ்டிரன் தோள்களைப் பற்றி "அரசே வருக!" என்று அழைத்தான். திருதராஷ்டிரன் குழந்தைபோல அந்த அழைப்புக்கு இணங்கி அழுதுகொண்டே வந்தான். அவனை அருகிலிருந்த ஓய்வறைக்கு இட்டுச்சென்று மஞ்சத்தில் படுக்கச்செய்தான். தன் பெரிய உடலை குறுக்கிக்கொண்டு கருக்குழந்தைபோல கைகளை தொழுவதுபோல் மார்பின் மீது வைத்தபடி திருதராஷ்டிரன் ஒருக்களித்து படுத்தான். "பாண்டு... என் தம்பி! பாண்டு" என்று அடைத்த குரலில் அரற்றிக்கொண்டிருந்தான்.

வெண்கலதீச்சட்டியுடன் விப்ரன் அறைக்குள் வந்தான். அகிபீனாவின் மணத்தை விதுரன் உணர்ந்தான். தலையசைத்துவிட்டு மெல்ல வெளியே நடந்தான். அகிபீனா என்ன செய்கிறது? சித்தத்தை அழிக்கிறது. விழிக்கும்போது அந்தத் துயர் அங்குதான் இருக்கும். ஆனால் அது அந்த நதியின் அலைகளில் ஒழுகி சற்று அப்பால் தள்ளிச்சென்றிருக்கும். அப்பால்சென்றதுமே அது சிறியதாக ஆகிவிடுகிறது. அயலாக ஆகிவிடுகிறது.

சேவகன் வந்து பணிந்து இன்னொரு ஓலையை நீட்டினான். அதில் இன்னும் சற்று விரிவாக பாண்டுவின் எரியேறல் சடங்குகளைப்பற்றி சொல்லப்பட்டிருந்தது. மாத்ரி சிதையேறியதை வாசித்ததும் அவன் அவள் முகத்தை நினைவில் தேடினான். சற்று பருத்த வெண்ணிறமான பெண். நுரைபோலச் சுருண்ட கூந்தல். அதற்கப்பால் முகமென ஏதும் தெளிவாக எழவில்லை. ஓரிரு சடங்குகளுக்கு அப்பால் அவளை அவன் நேரில் பார்த்ததேயில்லை. இன்னும் சிலநாட்களில் அப்படி ஒரு பெயர் மட்டும் அரசகுலத்து வரலாற்றில் இருக்கும். அவள் முகம் அவளுடைய மைந்தர்களுக்கும் நினைவிலிருக்காது. மறைவது இத்தனை எளிதா என்ன? இப்படி மறைவதுதான் சரியானதா?

இறப்பின் கணத்தில் உருவாகும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இறப்பை எளிதாக்கிக் கொள்வதற்காகத்தான். பெரிய உணவை சிறு துண்டுகளாக ஆக்கிக்கொள்வதுபோல அந்தப்பேரனுபவத்தை கூறு போட்டுக்கொள்வதற்காகத்தான். அதற்குமேல் அவற்றுக்குப் பொருளே இல்லை. அவை சிந்தனைகளே அல்ல. வெறும் எண்ண அலைகள். அவன் தன் அமைச்சகத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டதும் ஓலைநாயகங்கள் மன்னர்களுக்கு அனுப்பவேண்டிய ஓலைகளைக் கொண்டு வந்து காட்டினார்கள். அவற்றை வாசிக்கக் கேட்டு ஒப்புதலளித்து அனுப்பினான். மொழியாக ஆகும்தோறும் அனுபவம் அயலாகிச் சென்று கையாள எளிதாவதை உணர்ந்தான். ஒன்றேபோன்ற சொற்கள் அதை மேலும் நுட்பமாகச் செய்தன. 'அஸ்தினபுரியின் அரசரும் குருகுலத் தோன்றலும் சந்திரமரபின் மணியும் விசித்திரவீரிய மாமன்னரின் அறப்புதல்வருமான மாமன்னர் பாண்டு...'

சோமர் வந்து அவனை மெல்ல வணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டார். அவர் சொல்வதற்காக அவன் காத்திருந்தான். "பேரரசி செய்தியை முழுமையாகக் கூட கேட்கவில்லை" என்றார் சோமர். "அலறி நெஞ்சை அறைந்தபடி மயங்கி விழுந்துவிட்டார். அவரது அணுக்கச்சேடி சரியானநேரத்தில் பிடித்துக்கொள்ளவில்லை என்றால் வலுவான காயம்பட்டிருக்கும்." விதுரன் பெருமூச்சுவிட்டான். அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்திருந்த சோமர் அதை அவன் சொல்லாததனால் அவரே தொடர்ந்தார். "பேரரசியா அது என்று திகைத்துவிட்டேன். எப்போதும் அவர் உணர்ச்சிகளை வெளிக்காட்டியதில்லை. பேரரசர் சந்தனு மறைந்தபோதும் சரி, தன் இரு மைந்தர்களும் மறைந்தபோதும் சரி, ஒரு துளி விழிநீர் சிந்தியதில்லை."

விதுரன் தலையசைத்துவிட்டு பேசாமலிருந்தான். "மானுட உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அத்ரிகை என்னும் அப்சரஸின் வயிற்றில் உதித்தமையால் அவருக்கு நமது துயர்களும் கவலைகளும் அச்சங்களும் அறவே இல்லை என்கிறார்கள். இன்று அவரைப் பார்த்திருந்தால் எளிய வேளாண்குடி மூதன்னை என்றே எண்ணியிருப்பார்கள். அவர் மீதான அச்சமும் மதிப்பும் விலக அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பார்கள்" சோமர் சொன்னார். பின் குரலைத் தாழ்த்தி "இளைய அரசிக்கு இதுவரை செய்தி அறிவிக்கப்படவில்லை. பேரரசியால் அது இயலாது" என்றார்.

"மூத்தஅரசிக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதா?" என்றான் விதுரன். "ஆம், லிகிதர் சென்று காந்தாரத்து இளையஅரசி சத்யசேனையிடம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். அவர்களே மூத்த அரசிக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்கள்." விதுரன் பெருமூச்சுடன் எழுந்து சால்வையைச் சுற்றிக்கொண்டான். "இளைய அரசியிடம் தாங்களே சொல்லலாமென்று தோன்றுகிறது அமைச்சரே" என்றார் சோமர். "யார் அறிவித்தாலும் ஒன்றுதான் சோமரே. அரசமுறைமைக்காகவே நானே செல்கிறேன். அவரது அணுக்கச்சேடி சாரிகையிடம் சொல்லலாம் என்றுதான் படுகிறது" என்றபின் வெளியே நடந்தான்.

அம்பாலிகையின் அரண்மனைப்பகுதிக்கு அவன் வந்து ஆறுவருடங்கள் தாண்டிவிட்டன என்று உணர்ந்தான். பாண்டுசென்றபின் அரண்மனையின் இடப்பக்க நீட்சியான சித்திரகோஷ்டம் முழுமையாகவே கைவிடப்பட்டிருந்தது. பணியாட்களால் அது தூய்மையாக பேணப்படுவது தெரிந்தது. ஆனால் அனைத்து ஓவியச்சீலைகளும் மங்கலாகி நிறமிழந்திருந்தன. சுவர்ச்சித்திரங்கள் சாளரச்சீலைகள் அனைத்துமே பழையதாக இருந்தன. ஆனால் அது மட்டுமல்ல, அங்கே அதைவிட மையமான ஏதோ ஓர் இன்மை திகழ்ந்தது. அது மானுடர் வாழுமிடம் போலத் தெரியவில்லை.

அம்பாலிகையை தான் கண்டு ஆறுவருடங்களுக்குமேல் ஆகிறது என்று எண்ணிக்கொண்டான். பாண்டு சென்ற அன்று அச்செய்தியை அறிந்து அலறி மூர்சையாகி விழுந்த அவளை ஆதுரசாலைக்கு அனுப்ப அவனே வந்திருந்தான். அதன்பின் அவள் தன் அரண்மனையைவிட்டு எங்கும் தென்படவில்லை. அரண்மனையின் அன்றாட குலதெய்வப்பூசனைகளுக்கும் மாதம்தோறும் நிகழும் கொற்றவை வழிபாட்டுக்கும் பிறசடங்குகள் எதற்கும் அவள் வரவில்லை. அவள் வராதது முதலில் சிலநாட்கள் ஒரு செய்தியாக இருந்தது. பின் அது ஒரு வழக்கமாக ஆகியது. பின்னர் அவள் முழுமையாகவே மறக்கப்பட்டாள்.

சித்திரகோஷ்ட வாயிலில் சாரிகை அவனைக்கண்டதும் அருகே வந்தாள். அவளை சற்றுநேரம் கழித்துதான் விதுரன் அடையாளம் கண்டான். மெலிந்து ஒடுங்கிய முகமும் வைக்கோல்சாம்பல் பூத்ததுபோல நரைத்த தலைமுடியும் மங்கலாகிய விழிகளுமாக அவள் நோயுற்று இறக்கப்போகிறவள் போலிருந்தாள். "அமைச்சருக்கு வணக்கம்" என மிகத் தாழ்ந்த குரலில் சொன்னாள். குரலை மேலெழுப்பவே அவளுடைய உயிரால் இயலவில்லை என்பதுபோல. அவளிடம் செய்தியைச் சொல்லியனுப்பவியலாது என்று விதுரன் எண்ணினான். "இளையஅரசி நலமாக இருக்கிறார்கள் அல்லவா?"

சாரிகை "ஆம் அமைச்சரே" என்றாள். "சித்திரசாலையில் இருக்கிறார்களா?" என்றான். அக்கேள்வியின் பொருளின்மையை அவனே உணர்ந்திருந்தான். "அவர்கள் சித்திரசாலைக்குச் செல்வதேயில்லை" என்று சாரிகை சொன்னாள். "வலப்பக்க அறையில் தன் பாவைகளுடன் இருக்கிறார்கள்." விதுரன் அவளை நோக்கி "பாவைகளுடனா?" என்றான். "ஆம். அவர்கள் மீண்டும் சிலவருடங்களாக பாவைகளுடன்தான் விளையாடுகிறார்கள். பாவைகளுடன் மட்டுமே பேசுகிறார்கள்."

விதுரன் உள்ளே சென்றபோது தன் உள்ளத்தை எடைமிக்க ஒன்றாக உணர்ந்தான். சாரிகை அவனை பக்கத்து அறைக்கு இட்டுச்சென்றாள். அறைக்கதவு சற்றே திறந்திருந்தது. அவன் தயங்கி நின்றான். சாரிகை "அழைக்கவா?" என்றாள். அவன் வேண்டாம் என்று சொன்னபின்னர் "ஆதுரசாலைக்குச் சென்று வைத்தியரை வரச்சொல். அகிபீனாவுடன் வரவேண்டும் என்று சொல்" என்றான். சாரிகை விளங்கிக் கொண்டதை அவள் விழிகள் காட்டின. தலைவணங்கி அவள் விலகிச்சென்றாள்.

விதுரன் கதவை மிகமெல்லத் திறந்து உள்ளே நோக்கினான். மறுபக்க சாளரத்தின் ஒளியில் அறைக்குள் நிலத்தில் அமர்ந்து அம்பாலிகை ஏதோ செய்வதைக் கண்டான். அவள் முன் பெரிய மரப்பெட்டி திறந்திருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட பலவகையான பாவைகள் அவளைச்சுற்றி கிடந்தன. அவள் ஒரு பாவையின் மீது கம்பி ஒன்றால் மெல்லச் சுரண்டிக்கொண்டிருந்தாள். முழுமனமும் அதில் கூர்ந்திருந்தமையால் உதடுகள் கூம்பியிருந்தன.

அவளும் சாரிகை போலவே முதுமையும் சோர்வும் கொண்டிருந்தாள். நரைத்த வறுங்கூந்தல் தோளில் சரிந்து கிடந்தது. உடல் சிறுமி அளவுக்கு மெலிந்து ஒடுங்கியிருந்தது. கன்னங்களில் எலும்புகள் புடைத்து கண்கள் குழிவிழுந்து வாயைச்சுற்றி சுருக்கங்கள் அடர்ந்து அவள் ஆண்டுகளை பலமடங்கு விரைவாகக் கடந்து சென்றுவிட்டவள் போலிருந்தாள். மெல்லியகுரலில் தனக்குத்தானே என ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

அவன் திரும்பிவிடலாமென்று எண்ணி மெல்ல காலடி எடுத்து வைத்தபோது கதவில் தோள்கள் முட்டி ஒலிக்க "அம்பாலிகை! இளையவளே!" என்று கூவியபடி, அவிழ்ந்த கூந்தலும், கண்ணீர் வழியும் முகமும், கலைந்து பறந்த ஆடையுமாக அம்பிகை உள்ளே ஓடிவந்தாள். அவன் நிற்பதை அவள் காணவில்லை என்பதுபோல கூடத்தில் நின்று நான்குபக்கமும் நோக்கித் திகைத்தபின் அறைக்குள் அம்பாலிகை இருப்பதைப் பார்த்து "அம்பாலிகை! இளையவளே!" என்று இரு கைகளையும் விரித்து கூவியபடி அவனைக் கடந்து உள்ளே புகுந்தாள்.

திகைத்து எழுந்த அம்பாலிகையை பாய்ந்து அள்ளி தன் நெஞ்சோடு இறுகச்சேர்த்துக்கொண்டு உடைந்த குரலில் "நம் மைந்தன் இறந்துவிட்டான் இளையவளே. பாண்டு மறைந்துவிட்டான்..." என்று கூவினாள். "நான் இருக்கிறேன். இளையவளே, உன்னுடன் நான் இருக்கிறேன்..." விதுரன் கதவை மெதுவாக மூடிவிட்டு விலகிச்சென்று வெளியேறினான். அமைச்சகம் நெடுந்தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. அத்தனை தொலைவுக்கு தன்னால் நடக்கமுடியுமா என்று அஞ்சியவன் போல தூண் ஒன்றைப்பற்றியபடி அவன் நின்றுவிட்டான்.

அன்று அந்தியில் அவனை அம்பிகை அழைப்பதாக சாரிகை வந்து சொன்னாள். அவன் அவளுடன் அம்பாலிகையின் சித்திரகோஷ்டத்துக்குச் சென்றான். அம்பாலிகையின் மஞ்சஅறைக்கே செல்லும்படி சாரிகை சொன்னாள். உள்ளே மஞ்சத்தில் அம்பாலிகை வெறித்த விழிகளுடன் மார்பில் கைகளைக்கோத்துக்கொண்டு படுத்திருந்தாள். கண்ணீர் ஊறி காதுகளை நோக்கிச் சொட்டிக்கொண்டிருந்தது. அருகே அனைத்து வண்ணங்களையும் இழந்தவள் போல அம்பிகை அமர்ந்திருந்தாள்.

"விதுரா, நாளை விடிவதற்கு முன் நானும் என் தங்கையும் இந்நகர் நீங்கிச் செல்கிறோம். நாங்கள் திரும்பப்போவதில்லை. எங்கள் வனம்புகுதலுக்குரிய அனைத்தையும் ஒருங்குசெய்" என்றாள் அம்பிகை. விதுரன் ஏதோ சொல்ல வாயெடுத்தாலும் சொற்களைக் கண்டடையவில்லை. "இந்த நகருக்கு இருபத்தாறாண்டுகளுக்கு முன்னர் வந்தபோது நான் இவளுக்கு அன்னையாக இருந்தேன். இவள் கையில் புதிய வெண்மலருடன் குழந்தைபோல இந்நகருக்குள் நுழைந்தாள்" என்றாள் அம்பிகை. உதடுகள் துடிக்க கழுத்தில் தசைகள் அசைய தன் குரலின் இடறலை கட்டுப்படுத்திக்கொண்டாள். "அதன்பின் எங்களுக்குள் ஏதேதோ பேய்கள் புகுந்து கொண்டன. என்னென்னவோ ஆட்டங்களை ஆடினோம். எல்லாம் வெறும் கனவு..."

அம்பாலிகையின் மெலிந்த கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அம்பிகை சொன்னாள். "இப்போது எல்லாம் விலகிவிட்டன. இதோ இப்போது எஞ்சுவதுதான் உண்மை. இவளுக்கு நானும் எனக்கு இவளும் மட்டுமே இருக்கிறோம். மீதியெல்லாம் வெறும் மாயை." அம்பாலிகை எழுந்து தன் தமக்கையின் மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் தலையை வருடியபடி அம்பிகை சொன்னாள் "போதுமடி... எங்கோ ஒரு காட்டில் நாமிருவரும் காசியில் வாழ்ந்த அந்த நாட்களை மீண்டும் வாழ முயல்வோம். அங்கேயே எவருமறியாமல் மடிவோம்..."

பகுதி பதினெட்டு : மழைவேதம்

[ 4  ]

ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு, துடுப்பை துழாவினர். துடுப்புபட்டு நீர் நெளியும் ஒலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. படகின் அமரத்தில் விதுரன் நின்றிருந்தான். கொடிமரத்தில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மெல்ல பறந்துகொண்டிருந்தது.

விதுரன் அலைகளே இல்லாத, காற்றசைவே இல்லாத கங்கையை முதல்முறையாகப் பார்த்தான். அதன் இருவிளிம்புகளும் கரைமேட்டில் ஏறி நீருக்குள் காடு தலைகீழாகத் தெரிந்தது. கோடைவெயிலில் கருகிய கூரைகளைக்கொண்ட கரையோரத்து கிராமங்கள் ஒவ்வொன்றாக பின்னகர்ந்து மறைந்துகொண்டிருந்தன. மதியம் கடந்ததும் இருபக்கமும் அடர்ந்த காடு மட்டும் வந்தது. கொன்றைகளும் புங்கமும் பூத்த காடு.

சேவகனை அழைத்து விதுரன் "அரசியருக்கு உணவோ நீரோ தேவையா என்று கேள்" என்றான். சேவகன் "அவர்கள் எதையும் விரும்பவில்லை" என்று சொன்னான். விதுரன் தலையசைத்தான். அவன் அவர்களை நேராகத் திரும்பிப் பார்ப்பதை தவிர்த்தான். சால்வை காற்றில் பறந்தபோது அதை இழுத்துக்கொள்வதுபோல திரும்பி படகறைக்குள் பார்த்தான். அம்பாலிகை அம்பிகையின் தோள்களில் சாய்ந்து துயிலில் இருந்தாள். அம்பிகை கைகளைக் கட்டியபடி கங்கைநீரை பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சத்யவதி தூணைப்பற்றிக்கொண்டு தொலைவில் நகரும் காடுகளில் விழிநட்டு அமர்ந்திருந்தாள்.

அரசியர் வனம்புகும் செய்தியை சோமரிடமே சொல்லி பேரரசிக்குத் தெரிவிக்கச் செய்தான் விதுரன். அவளுக்கு அச்செய்தி பெரிதாகத் தெரியாது என்றே அவன் எண்ணினான். ஆனால் சோமர் திரும்பி வந்து "அமைச்சரே, பேரரசி அவரும் அவர்களுடன் வனம்புகுவதாகச் சொல்கிறார். ஆவன செய்யும்படி ஆணையிட்டிருக்கிறார்" என்றார். விதுரன் திகைத்து "பேரரசி உங்களிடம் என்ன சொன்னார்?" என்று மீண்டும் கேட்டான். "அரசியருடன் நானும் செல்வேன். மீண்டும் திரும்பமாட்டேன். விதுரனிடம் சொல்லி அனைத்தையும் ஒருக்கும்படி சொல் என்றார்" என்று சோமர் சொன்னார்.

அச்செய்தியை சிறிதுசிறிதாகப் பிரித்தே அவனால் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது. முதல் சிலநாழிகைநேரத்து பதற்றத்துக்குப் பின்னர் அவனால் அம்பிகையும் அம்பாலிகையும் எடுத்த முடிவை விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் சத்யவதியின் உள்ளம் அவனுக்கு நெடுந்தொலைவில் இருந்தது. அவளைச் சென்று பார்த்து அதைப்பற்றிப்பேச அவன் துணியவில்லை. அச்செய்தி வந்துசேர்ந்த உணர்ச்சிகளற்ற விதமே சொன்னது அது மாற்றமில்லாதது என்று.

அவன் மீண்டும் மீண்டும் சிந்தித்துவிட்டு உணவுக்காக தன் மாளிகைக்குச் சென்றபோது சுருதையிடமே கேட்டான். "பேரரசி அம்முடிவை ஏன் எடுத்தார்கள் என்று உனக்குப்புரிகிறதா?" அவள் "இல்லை. ஆனால் அப்படி விளங்கிக்கொள்ளும்படியான ஒரு முடிவு அது என்று தோன்றவில்லை. அம்முடிவு ஒருகணத்தில் அவருக்குள் தோன்றியிருக்கவேண்டும்" என்றாள். "ஆனால் அதை மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி" என்று பெருமூச்சுடன் சேர்த்துக்கொண்டாள்.

அவனை சத்யவதி கூப்பிட்டனுப்புவது வரை அவனால் சென்று பார்க்க முடியவில்லை. அவன் அவள் அறைக்குள் சென்று நின்றதும் அவள் புன்னகையுடன் நிமிர்ந்து "வா... உன்னிடம் எனக்கு சொல்வதற்கேதும் இல்லை. இந்த சுவடிப்பெட்டி உனக்குரியது. இதில் இதுவரையிலான அரசுநிகழ்வின் அனைத்து ஆவணங்களும் உள்ளன. இதை உன்னிடம் கையளித்துவிட்டால் என்னிடம் எஞ்சுவதேதும் இல்லை" என்றாள். அவளுடைய முகம் அத்தனை தெளிவுடன் இருந்து அவன் பார்த்ததேயில்லை என்று உணர்ந்தான். ஆனால் மேலும் பலமடங்கு முதுமையையும் அடைந்திருந்தாள். முகத்தின் அனைத்துத் தசைகளும் எலும்பின் பிடிவிட்டு தளர்ந்து தொங்கியிருக்க கனிந்தவள்போல, மறுகணமே கரைந்துவிடுபவள் போல தோன்றினாள்.

அவன் அதுவரை கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் கன்னங்களில் வழிய "அன்னையே, எதனால் இந்த முடிவு?" என்றான். "கனி மண்ணை நோக்கி விழும் முடிவை எப்போது எடுக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத்தெரிகிறது அவ்வளவுதான்" என்றாள். "அன்னையே நாங்கள் ஏதேனும் பிழை செய்துள்ளோமா?" என்றான் விதுரன். "இதென்ன வீண் வினா? நீயா இதைக்கேட்பது? இத்தனை காவியம் படித்தும் இம்மனநிலையை உன்னால் உணரமுடியவில்லையா என்ன?"

அவன் கண்ணீரைக் கண்டு நெகிழ்ந்து புன்னகைசெய்தாள் சத்யவதி. அவன் அவளிடம் கண்டதிலேயே மிக அழகிய புன்னகை அது. அவளாக அவன் நினைவில் இனி எஞ்சப்போவது அதுதான் என அக்கணம் உணர்ந்தான். "நீ என் குழந்தை. நீ பிழை செய்தால் அதை நான் சொல்லமாட்டேனா? இது இயல்பான ஒரு முடிவு. நான் மிகுந்த நிறைவுடன் இங்கிருந்து விடைபெறுகிறேன். வருந்தாதே" என்றாள். "இத்தனை எளிதாக இந்த முடிவை என்னால் எடுக்கமுடியும் என்று நேற்றிரவுகூட நான் எண்ணவில்லை."

"அன்னையே, நீங்கள் சொன்னவை.." என விதுரன் தொடங்கியதும் அவள் கைகாட்டி "நான் இதுவரை சொன்ன எந்தச்சொல்லுக்கும் இனி நான் பொறுப்பல்ல. நான் கண்டகனவுகள் கொண்ட இலக்குகள் அதற்காக வகுத்த திட்டங்கள் அனைத்தும் இன்று சற்றுமுன் இறந்த இன்னொருத்தியுடையவை. நான் வேறு" என்றாள். அவன் தலையசைத்தான். அவள் எழுந்து அவன் தோளை மெல்லத் தொட்டு அழகிய பல்வரிசை மின்ன மீண்டும் புன்னகைத்து "அனைத்தையும் அறுத்து விலகிக்கொள்வதில் உள்ள விடுதலையை நீயும் என்றோ உணர்வாய் விதுரா. அன்று என்னை நினைத்துக்கொள்" என்றாள்.

அவர்கள் விடைபெற்றுச்செல்லும் செய்தியை அன்றிரவே அரண்மனையில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கச் செய்தான் விதுரன். திருதராஷ்டிரன் அகிபீனா புகையில் மயங்கிக்கிடப்பதாக சோமர் சொன்னார். "அவர் உறங்கட்டும். அவரால் இக்கணத்தை தாளமுடியாது" என்று விதுரன் சொன்னான். "நகர்மக்களுக்கு நாளை அவர்கள் சென்றபின்னர் முறைப்படி அறிவிப்போம்" என்றான். இரவெல்லாம் அரண்மனை எரியும் விளக்குகளுடன் துயிலிழந்து மெல்லிய ஒலிகளுடன் இயங்கிக்கொண்டிருந்தது. காலையில் காஞ்சனம் முழங்கியதும் அந்தப்புர முற்றத்தில் இரண்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட மூடுவண்டி வந்து நின்றது.

எந்த முறைமைச்சடங்குகளும் இருக்கலாகாது என்று சத்யவதி சொல்லியிருந்தாள். சூதர்களும் வைதிகர்களும் சேடிகளும் பரத்தையரும் எவரும் வரவழைக்கப்படவில்லை. முற்றத்தில் எவரும் கூடவேண்டியதில்லை என்றும் சத்யவதி ஆணையிட்டிருந்தாள். இருப்பினும் முற்றத்தில் தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் வலப்பக்கம் நின்றிருந்தனர். லிகிதரும், சோமரும், தீர்க்கவ்யோமரும், விப்ரரும், வைராடரும் மறுபக்கம் நின்றனர். பந்தங்களின் ஒளியில் அரண்மனையின் தூண் நிழல்கள் வளைந்தாடிக்கொண்டிருந்தன. தழலின் ஒலி மட்டுமே கேட்கும் அமைதி நிலவியது. குதிரை ஒன்று மணிகுலுங்க கால்களை மாற்றிக்கொண்டு செருக்கடித்தது.

உள்ளிருந்து அம்பாலிகையின் கையைப்பற்றி அம்பிகை வெளியே வந்தபோது ஓர் அசைவு அனைவரிலும் நிகழ்ந்தது. அவர்கள் எவரையுமே திரும்பிப்பாராமல் விரைந்து சென்று வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சத்யவதி எவரிடமும் விடைபெறாமல் முழங்கால்களில் கையூன்றி மெல்ல அரண்மனைப் படிகளில் இறங்கி பின்னர் நின்று திரும்பி அங்கே நின்ற சியாமையைப் பார்த்தாள். அம்பாலிகையின் சேடி சாரிகையும் அம்பிகையின் சேடி ஊர்ணையும் அழுதபடி தூணில் மறைந்து நின்றனர். ஆனால் சியாமை அழவில்லை. அவள் முகத்தில் துயரமும் இல்லை. தலைநடுவே உயர்ந்து நின்ற கொண்டையுடன் கரியமுகத்தில் விரிந்த வெண்விழிகளுடன் அசையாமல் நின்றாள்.

"யமுனைக்கரைக்குச் செல் சியாமை" என்றாள் சத்யவதி. "நாமிருவரும் சிறுமிகளாக அங்கிருந்து வந்தோம். இன்னும் உன் அகத்தில் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன். அதன் கரையில் உனக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை இருக்கிறது. இங்கே என்னுடன் இருந்த நாட்களை மறந்துவிடு. யமுனையில் உன்னுடன் நீந்திய அந்தச் சிறுமியாகிய மச்சகந்தியை மட்டும் நினைவில் வைத்துக்கொள்" என்றாள். சத்யவதி அழகிய வெண்ணிறப் பற்கள் தெரிய புன்னகைசெய்தபோது சியாமையும் புன்னகைத்தாள்.

தங்களுடன் எவரும் வரக்கூடாதென்று சத்யவதி ஆணையிட்டிருந்தாள். சேவகர்கள் கங்கைக்கரையில் நின்றுவிட்டனர். விதுரனும் படகுக்காரர்களும் மட்டும் படகில் இருந்தனர். வண்டி கிளம்பும்போது அவர்கள் மூவருமே அரண்மனையை பார்க்கவில்லை. நகரம் பின்னிட்டபோதும் திரும்பிப்பார்க்கவில்லை. படகு நகரும்போது அவர்கள் எதிர்க்கரையைத்தான் பார்த்தனர்.

"இதுதான்" என்று சத்யவதி சொன்னாள். அம்பிகையும் அம்பாலிகையும் எழுந்துகொண்டனர். "விதுரா, படகுகளை அந்த கொன்றைமரச் சோலையருகே நிறுத்தச் சொல்! அதுதான் நாங்கள் இறங்கவேண்டிய இடம்." அக்கணம் அம்முடிவை அவள் எடுத்திருக்கிறாள் என அறிந்தான் விதுரன். திரும்பி குகர்களிடம் கையசைத்தான். படகு கரையொதுங்கியது. குகர்களில் இருவர் நீரில் குதித்து நீந்திச்சென்று கரையோரத்து நீர்மருத மரத்தின் வேரில் தொற்றி ஏறிக்கொண்டபின் தங்கள் இடையில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை இருபக்கமும் இழுத்து படகை மரத்துடன் சேர்த்துக்கட்டினர். கனத்த வேர்களுடன் ஒட்டிக்கொண்டு படகு நின்றதும் சத்யவதி அம்பிகையிடம் "இறங்குவோம்" என்றாள்.

அணிந்திருந்த மரவுரியாடை அன்றி ஏதும் அவர்களிடமிருக்கவில்லை. சத்யவதி வேர்ப்புடைப்பில் கால்வைத்து இறங்கி நின்று அம்பிகைக்காக கைநீட்டினாள். அம்பிகையும் அவளுமாக அம்பாலிகையை கைப்பற்றி இறக்கினர். வேரில் கால்கள் வழுக்கி அம்பாலிகை தடுமாறியபோது இருவரும் பற்றிக்கொண்டனர். மூவரும் அவர்களை திரும்பிப்பார்க்காமல் ஒரு சொல்லும் சொல்லாமல் புதர்கள் மண்டிய கங்கைக்கரைச் சோலைக்குள் புகுந்து மறைந்தனர்.

அவர்களின் தோற்றம் மறைந்து காலடியோசைகளும் கரைவது வரை காத்திருந்தபின் விதுரன் திரும்பலாம் என்று கைகாட்டினான். குகர்கள் படகை உந்தி நீரோட்டத்திற்குக் கொண்டு சென்று துடுப்பிட்டு சமன் செய்தனர். இலைதழைத்த கிளைகளின் நிழல்கள் பரவிய கரையோரமாகவே படகு சென்றது.. விதுரன் பெருமூச்சுடன் சென்று அமரத்தில் அமர்ந்து கொண்டு நீரையே பார்த்தான். கங்கைநீர் சற்று கருமை கொண்டது போலத் தோன்றியது. அண்ணாந்து வானைப்பார்த்தான். மேகமற்றிருந்தாலும் வானில் சூரிய ஒளி இருக்கவில்லை.

சற்று நேரம் கழித்துத்தான் விதுரன் தவளை ஒலியைக் கேட்டான். அது தவளை ஒலிதானா என்று ஐயத்துடன் எழுந்தான். உடுக்கின் தோலை சுட்டுவிரலால் சுண்டுவதுபோன்ற ஒலி. மெல்லிய குரலில் எங்கோ தவளைகள் தங்கள் மந்திரத்தைச் சொல்லத் தொடங்கின. மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! மழை! கோடிகோடி மானுடக்குரல்கள் இணைந்தாலும் விண்ணளவுக்கு எழமுடியாத வேதநாதம். மாபெரும் அக்னிஹோத்ரம். மழை! மழை! மழை! மழை!

மழை பெய்யட்டும். வெந்த மண் குளிரட்டும். காய்ந்த பாறைகள் சிலிர்த்துக்கொள்ளட்டும். வெடித்த ஏரிகளில் வானமிறங்கி நிறையட்டும். கருகிய ஊற்று முகங்களில் கனிவு எழட்டும். இருள் நிறைந்த கிணறுகளுக்குள் மெல்ல ஒளி ஊறி நிறையட்டும். கோடையின் அனைத்து எச்சங்களையும் பெருக்கிச் சுழற்றிக் கொண்டு செல்லட்டும் மழை. மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கை கொள்ளட்டும். ஏனென்றால் இங்கு உயிர்கள் வாழ்ந்தாகவேண்டும். அவை வாழாமல் விண்ணில் தெய்வங்களுக்கும் வாழ்வில்லை.

படகு செல்லச்செல்ல மேலும் இருட்டிக்கொண்டே வந்தது. கங்கை கருமையாக அலையின்றி பளபளத்தது. தவளைகளின் ஒலிகள் வலுத்தன. மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருந்தன. மழை! மழை! மழை! மழை! பல்லாயிரம் கனத்த குரல்கள். மழை! மழை! மழை! மழை! பல லட்சம் அதிரும் தொண்டைகள். ஒற்றைப்பேரொலியாக வானைநோக்கி இறைஞ்சியது தவளை வேதம். ரிஷி மைத்ராவர்ணி வசிஷ்டனின் சொற்களை தன்னுள் கேட்டுக்கொண்டிருந்தான் விதுரன்.

ஆண்டுமுழுக்க தவம்செய்த தவளைகள்

நெறிமுழுமைசெய்த வைதிகர்களென

மழைத்தேவனுக்கு பிடித்தமான

குரலை எழுப்புகின்றன

காய்ந்த தோல் என வறண்ட ஏரியின்

சேற்றில் உறங்கிய தவளைகள் மேல்

விண்ணக ஒளி பொழிந்ததும்

கன்றுடன் மகிழும் பசுக்கூட்டம்போல

அவை மகிழ்ந்து கூவுகின்றன

மழைக்காலம் தோன்றியதும்

தாகத்தால் தவித்து நீரைநாடும் தவளைகள்மேல்

மழையின் இறைவன்

அருளைப்பொழிகிறான்

மகிழ்ந்து எழுந்த ஒரு தவளை

தந்தையைக் கண்ட மைந்தன் போல

இன்னொரு தவளையைநோக்கித் தாவுகிறது

மழையைக் கொண்டாடும் இருதவளைகள்

ஒன்றையொன்று வாழ்த்துகின்றன

மழையில் ஆடிய ஒருதவளை

முன்னோக்கிப் பாய்கிறது

பச்சைநிறத்தவளை ஒன்றும்

புள்ளிகள் கொண்ட இன்னொன்றும்

தங்கள் பாடல்களை கோத்துக்கொள்கின்றன

தவளைகளே!

உங்களில் ஒருவன் இதோ

குருவிடம் கற்கும் மாணவனைப்போல

இன்னொருவனின் குரலை பின்பற்றுகிறான்.

நீங்கள் நீரில் பாய்ந்து திளைத்து

அசைவுகளால் பேசிக்கொள்ளும்போது

உங்கள் உடல்கள் வீங்கிப்பெருக்கின்றன.

பசுவைப்போல அழைக்கும் ஒன்று

ஆடுபோல் கத்தும் இன்னொன்று

புள்ளியுடையது ஒன்று

பச்சை நிறமான பிறிதொன்று

ஒரே பெயரால் அழைக்கப்படுபவை அவை

வெவ்வேறு தோற்றம்கொண்டவை

உரையாடிக்கொள்ளும் அவை

நாதத்தை பரிமாறிக்கொள்கின்றன.

அதிராத்ர வேள்வியின்போது

நிறைந்த அவிப்பொருளைச் சூழ்ந்து அமர்ந்திருக்கும்

வைதிகர்களைப்போல

மழைதோன்றிய முதல்நாளில்

ஏரியைச்சூழ்ந்து அமர்ந்துகொண்டு

இரவெல்லாம் பாடுகிறீர்கள்!

இந்தத் தவளை வைதிகர்கள்

சோமரசத்துடன் வேள்வியை நிறைவுசெய்து

தங்கள் கரங்களைத் தூக்குகிறார்கள்

தங்கள் ஆவியெழும் கலங்களிலிருந்து

இந்த வேள்வித்தவத்தவர்கள்

வியர்வை வழிய வெளிவருகிறார்கள்

எவரும் மறைந்திருக்கவில்லை!

வேள்வித்தலைவர்களான இந்தத் தவளைகள்

தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!

ஆண்டின் உரிய பருவத்தை

அவர்கள் தவறவிடுவதில்லை.

வருடம் சுழன்று மீள்கிறது.

மழை மீண்டும் வருகிறது.

வெம்மைகொண்டு பழுத்த அவர்கள்

மறைவிடங்களில் இருந்து வெளிவந்து

விடுதலையை கொண்டாடுகிறார்கள்

பசுவைப்போல் அழைப்பவனும்

ஆடுபோல கத்துபவனும்

புள்ளியுள்ளவனும்

பச்சைநிறமானவனும்

எங்களுக்கு செல்வங்களை அளிப்பார்களாக!

எங்களுக்கு பசுக்கூட்டங்களையும்

வளங்களையும்

நீண்ட வாழ்நாளையும் அளிப்பார்களாக!

ஓம் ! ஓம்! ஓம்!

[மழைப்பாடல் முழுமை ]


Venmurasu II

Mazhaippadal describes the stories of Ambikai and Ambalikai, their sons Dhritarashtran and Pandu, and then traces the rise of Gandhari and Kunti. The plot sweeps across Asthinapuri, the North-Western kingdom of Gandhara and the Yadava lands. Mazhaippadal is as much a story of the conflict between the adversarial communities and tribes of ancient India as the one between the women of Asthinapuri - which ultimately develops into the great Bharata war.!