Venmurasu VI

06-வெண்முகில் நகரம்

ஜெயமோகன்



Venmugil Nagaram describes the background stories that led to the development of Indrprastha, the city of Pandavas. Its axis is Draupadi, The novel begins with her coming to Asthinapuri as the Queen and ends at the point when she orders the Indraprastha to be built. The novel's main foreground characters are Bhurishravas and Satyaki. While they played minor parts in the Mahabharata, Venmugil Nagaram expands them in great detail. It describes their lands, their clans and their politics and through it all, the subtle depth of their relationship.!

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 1

முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக! அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக! தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக!

கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் மெய்யாகவும் திகழ்பவன். பசுக்களில் விழியாக, பாம்பில் நாவாக, கன்னியரில் செவ்விதழ்களாக, மரங்களில் தளிர்களாக சிவந்திருப்பவன் மெய்யறிந்த ஜாதவேதன். வானறிந்த பேரமைதியை பாடும் நாக்கு. மண் தொட்டு நின்றாடும் விண். அனைத்துக்கும் சான்றானவனை, எங்குமுள்ளவனை, எப்போதுமிருப்பவனை வணங்குக!

பிரம்மத்திலிருந்து விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மன் தன் ஒளிமுகத்தை வெறும்வெளியை ஆடியாக்கி நோக்கிய படிமை ஒரு மைந்தனாகியது. முடிவிலா ஒளியாகிய அங்கிரஸ் என்னும் பிரஜாபதி பிறந்தார். காலம் மறைந்த யோகத்திலமைந்து தன் அசையாத சித்தத்தை அறிந்த அங்கிரஸ் அதை சிரத்தா என்னும் பெண்ணாக்கினார். அவரது கருணையும் அன்பும் புன்னகையும் நெகிழ்வும் சினிவாலி, கஹு, ராகை, அனுமதி என்னும் நான்கு பெண்மக்களாக பிறந்து ஒளிக்கதிர்களென விண்திகழ்ந்தனர்.

தன் அகத்தின் அசைவின்மைக்கு அடியில் வாழ்ந்த முடிவின்மையை அறிந்த அங்கிரஸ் அதை ஸ்மிருதி என்னும் பெண்ணாக்கினார். அவள் வயிற்றில் அவரது அறிவாண்மை உதத்யன் என்னும் மைந்தனாகியது. அவரது கடும் சினம் பிரஹஸ்பதி என்னும் இளமைந்தனாக எழுந்தது. தன்னுள் எஞ்சிய கனிவை யோகசித்தி என்னும் மகளாக்கி தன் மடியிலமர்த்தி நிறைவுற்றார்.

அணையா அனலாக பிரஹஸ்பதி வானில் வாழ்ந்தார். அவர் விழிதொட்டவை கனன்று எழுந்தன. அவர் சித்தம் தொட்டவை வெந்து விபூதியாகின. அவர் சென்ற பாதை விண்ணில் ஒளிரும் முகில்தடமாக எஞ்சியது. அவரது ஒளியால் ஒளிபெற்றன திசைகள். செந்தழல் வடிவினனாகிய தன் பெயர்மைந்தனை குளிர்விக்க விண்ணின் கருமையைக் குழைத்து ஒரு நீர்ப்பெருக்காக்கி அனுப்பினார் பிரம்மன். சாந்த்ரமஸி என்னும் அப்புனலொழுக்கில் பிரஹஸ்பதி தன் அனலைக் கண்டார். அவரது விழிகளும் செவியும் மூக்கும் நாவும் கைகளும் கால்களும் அப்பெருக்கிலிருந்து ஆறு அணையா நெருப்புகளாக பிறந்தன.

அவர் நாவில் பிறந்தவன் கம்யு. விண்கரந்த விழுச்சொல்லென வாழும் அவனை வைஸ்வாநரன் என்றனர் தேவர். எரிந்து எரிந்து முடிவிலாக்காலம் அழிந்து பிறந்து அவன் அறிந்த மெய்மை சத்யை எனும் பெண்ணாகி அவள் அவன் முன் எழுந்தாள். அவளை மணந்து அவன் அக்னிதேவனை பெற்றான். சொல் துளித்து எழுந்தவனை வாழ்த்துவோம்! மெய்மையின் முலையுண்டு வளர்ந்தவனை வாழ்த்துவோம்!

தென்கிழக்கு மூலையின் காவலனை வாழ்த்துக! அங்கே உருகும் பொற்குழம்புகளால் ஆன தேஜோவதி என்று பெயர்கொண்ட அவன் பெருநகரை வாழ்த்துக! எழுதலும் விழுதலுமென இருமுகம் கொண்டவனை, ஏழு பொன்னிற நாக்குகள் திளைப்பவனை, நான்கு திசைக்கொம்புகள் முளைத்தவனை, மூன்றுகால்களில் நடப்பவனை வாழ்த்துவோம்! ஸ்வாகையின் கொழுநனை, தட்சிணம் ஆகவனீயம் கார்ஹபத்தியமெனும் மூன்று பொற்குழவிகளின் தந்தையை வாழ்த்துவோம்!

விண் நிறைந்தவனே, எங்கள் நெய்த்துளிக்கென நாவு நீட்டு! அழியாதவனே, எங்கள் சமதைகளில் எழு! அனைத்துமறிந்தவனே, எங்கள் சொற்களுக்கு நடமிடு! அடங்காப்பசி கொண்டவனே, எங்கள் குலங்களை காத்தருள்! எங்குமிருப்பவனே, எங்களுக்கு அழியாச்சான்றாகி நில்! ஓம்! ஓம்! ஓம்!

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 2

எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில் நெய்விறகில் எழுந்தாடிய தழலை பேணிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் மரப்பலகை இருக்கைகளில் பாண்டவர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர். அப்பால் மரத்தில் சாய்ந்து மார்பில் கரம்கோர்த்து பீமன் நின்றிருந்தான்.

பாணன் புலித்தோல் இருக்கைவிட்டு எழுந்து விலகியதும் அவன் துணைவி தன் நந்துனியுடன் வந்து அதில் அமர்ந்தாள். பாணன் தோளில் விரித்திட்ட நீள் குழலை சுருட்டிக் கட்டி அதன் மேல் தோல்வார் இட்டு இறுக்கியபின் மான் தோல் மேலாடையை சரிசெய்தபடி எரிமுன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். தன் மாணவன் அளித்த நெய்க்குடுவையை வாங்கி தழலுக்குள் சொரிந்தான். நீரில் கூழாங்கல் விழுந்த ஒலியுடன் தீயின் நாக்குகளில் ஒன்று எழுந்து அதை கவ்விக்கொண்டது.

விறலி நுங்கு போன்ற இறுகிய பெருமுலைகளுக்கு நடுவே வளைந்திறங்கிய கல்மாலையும் தோள்தொட தழைந்த காதுமடல்களில் துடிபோன்ற வெள்ளிக்குழைகளும் அணிந்திருந்தாள். காட்டுச்சுனையென இருள் ஒளிர்ந்த விழிகளுடன் பெருந்தொடை திரண்டு ஒசிய கால்மடித்து அமர்ந்து நந்துனியை சிறிய கம்பியால் மீட்டினாள். சுழன்று பறக்கும் தேனீக்கூட்டமென அது ரீங்கரிக்கத் தொடங்கியது. அதன் சுதியுடன் இணைந்து அவள் குரலும் பறந்து சுழன்றது. ”ஓம்” என்று விறலி பாடத்தொடங்கினாள். “என் கதை கேளீரோ! ஊரின் கதையல்ல, உலகின் கதையல்ல! மக்கள் கதையல்ல, தெய்வக்கதையல்ல. காட்டின் கதையிது. காரிருளின் கதையிது."

வைவஸ்வத மன்வந்தரத்தில் விந்தியமலை முடிகள் சூழ்ந்து அரணமைத்த காலகவனம் என்னும் பெருங்காட்டில் வாழ்ந்திருந்தனர் அரக்கர்குலத்தைச் சேர்ந்த தங்கையும் தமக்கையும். தங்கையின்பெயர் புலோமை. தமக்கை காலகை. மூத்தவள் கரும்பாறை நிறத்தவள். இளையவள் அப்பாறையை எதிரொளிக்கும் கருஞ்சுனை போன்றவள். காலகை குளிர்ந்தவள். சொல் மேல் சொல் அமர்ந்து சொல்லடங்கிச் சுருங்கி அமைந்தவள். புலோமை அனல் நிறைந்தவள். சொல்கலைந்து சொல் எழுந்த சுழல் கொண்டவள்.

காலகை மலையுச்சியில் நின்றிருக்கும் கனிமரம். மண்குவளையில் அள்ளிவைத்த தெளிநீர். அசைவறியாச் சொல். சொல்லுக்கு அப்பால் செல்லாத அகம். புலோமை புதர்மறைவுகளும் குகைவழிகளும் பின்னிச்செல்லும் நூறாயிரம் சிற்றடிப்பாதைகளும் கொண்ட காடு. பித்தெழுந்த அக்கரம் முளைத்த சதுப்பு. உயிர் கனலும் சொல். சொல் உடைந்து சொல் முளைக்கும் சித்தம்.

இருவரும் பிரம்மவனத்தில் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து ஆயிரமாண்டுகாலம் தவமியற்றினர். உடல் மட்கி உதிர்ந்தது. உளம் மடிந்து வழிந்தது. சித்தமும் சித்தத்தைக் கடந்த ஆணவமும் புகையென விலகின. தெளிந்த வெளித்திரையில் பிரம்மன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ‘நிறைவு’ என இருவரும் விடை சொன்னார்கள். காலகையிடம் ‘குளிர்ந்தவளே, உன்னில் நீ நிறைக’ என்றார் பிரம்மன். புலோமையிடம் ‘எரிபவளே, உன்னில் இப்புவி நிறைக’ என்றார்.

மலையுச்சியில் ஏறிச்சென்ற காலகை அங்கே கரியதோர் பாறையாக மாறி அமர்ந்து காலத்தைக் கடந்தாள். இளையவள் புலோமை காடிறங்கி ஊர்வந்தாள். ஐந்து கணவர்களை மணந்து ஐந்தாயிரம் மைந்தர்களை அவள் பெற்றாள். அவள் குடிகள் வாழும் நகரம் புலோமபுரி எனப்பட்டது. அங்கே வாழ்ந்தவர்கள் புலோம குடியினர். அவர்களின் காமகுரோதமோகங்களின் அலகிலா விளையாட்டை நோக்கியபடி நகர்நடுவே எரியும் விழிகளுடன் புலோமையன்னை அமர்ந்திருந்தாள். தன் புதல்வியரில் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை பிறந்து இவ்வுலகை முடிவிலாது உண்டாள்.

புலோம நகரில் பிறந்தாள் கன்னிப் புலோமை ஒருத்தி. காராமணி போல, காட்டெருமை விழி போல ஒளிரும் கரிய அழகுடையவள். கனல் நிறைந்தவள். கனவுகளால் விளையாடப்பட்டவள். கற்றறிந்தவள். கனிந்தவள். தலைமுறைக்கு ஒரு புலோமையில் எழும் அன்னைப்புலோமை அவளை கன்னிப்பருவத்தில் குடிசூழ பலிதொழ வந்தபோது கண்டாள். அவள் கண்வழியாக உள்ளே குடியேறினாள். மயங்கி விழுந்து கண்விழித்து நோக்கிய புலோமை ”விடாய்” என முதல்சொல்லை சொன்னாள்.

புலோமபுரியின் இளம் புலோமை மண் நிறைக்கும் விதையின் கனல் கொண்டிருந்தாள். காரிருளிலும் மின்மினி என ஒளிவிட்டாள். நீராடி நீராடித் தீராதது அவள் உடல்வெம்மை. அவள் இரவுறங்கிய பாய் கருகியிருந்தது. அவள் உடலில் சுரந்த வியர்வைத்துளிகள் எரிந்தபடி மண்ணில் விழுந்து புகைவிட்டன. ஆனால் அவள் சூடிய மலர்களோ நீரிலெழுந்த மலர்கள் என ஒளிவிட்டு வாடாமலிருந்தன.

அவள் உடலில் மலர்ந்த வாடாமலர்களைக் கண்டு பித்தானான் புலோமன் ஒருவன். அவள் நிழலென எங்கும் உடன்சென்றான். அவள் காலடி பட்ட மண்ணெல்லாம் தன் உள்ளமே என்று உணர்ந்தான். அவள் நிழல் விழுந்த சுனைகளில் நீந்தித்திளைத்தான். தன் நெஞ்சத்தின் ஆழத்தில் அவள் நிழல்சித்திரம் அசைவற்று நிற்கக் கண்டான்.

தொட்டதையெல்லாம் உண்டு எரிவது தழல். நின்றெரியும் பீடத்திலிருந்து நாற்றிசையும் கைநீட்டி தவித்தாடுவது. தழல் அறியும் பொருளெல்லாம் தழலைக் கொண்டுசெல்லும் புரவிகள் மட்டுமே. வெல்க என்று விண் விடுத்த ஆணையே தழல். செல்க என எழும் விழைவே தழல். தழல்வதெனும் நிகழ்வே அது.

தன்னருகே வந்த புலோமனை புலோமையின் கைகள் நீண்டு தழுவிக்கொண்டன. அத்தொடுகையில் வெந்து உருகி அவனும் அனலானான். எரிமயக்கில் தழைந்தாடி கனலெரிந்த உதடுகளால் 'என் இருப்பும் மறைவும் எஞ்சுவதும் உனக்குரியவை' என்று அவன் சொன்னான். அவ்வுதடுகளை கவ்விச் சுவைத்துண்டு 'இன்னமும் வேண்டும் எனக்கு' என்றாள் அவள். காட்டின் நடுவே எரியெழுப்பி அதை சான்றாக்கி அவள் அவன் கைப்பிடித்தாள். அவனுள் உறைந்த அனைத்தையும் எரிகொழுந்தாக எழச்செய்தாள்.

அவளுடனான காமம் அவனை அழித்தது. அவன் தசைகள் உருகி வழிந்து வெள்ளெலும்புகள் வெளித்தெரிந்தன. ஒவ்வொரு கணமும் உடலென உள்ளமென உள்ளாழமென கொண்ட அனைத்தும் எரியும் பெருவலியின் பேரின்பத்தில் அவன் திளைத்தான். அவன் அழிந்துகொண்டிருப்பதை அவன் குலமும் சுற்றமும் அறிந்தனர். அவன் சித்தமும் அதையறிந்தது. விலகு விலகு என அத்தனை குரல்களும் அஞ்சிப்பதைத்துக் கூவின. அவன் அகமோ இன்னும் இன்னும் என அவளருகே நெருங்க எழுந்தது. விட்டிலுக்கு சுடரிடமிருந்து விடுதலை இல்லை.

'என்னை இக்காட்டுநகருக்கு அப்பால் கொண்டு செல்க!' என்று அவள் சொன்னாள். 'எங்கே?' என்று அவன் கேட்டான். 'அப்பால்... எல்லை என நான் காணும் எதற்கும் அப்பால்' என்று அவள் கைநீட்டினாள். அவளை தன் தோளிலேற்றி புலோமன் காடுகளுக்கு மேல் பறந்தான். மலைகளை வளைத்து மக்கள் வாழும் பெருநகர்களை அடைந்தான். தொடுவான் எல்லையிட்ட மண் விரிவை அவள் முழுமையாகக் கண்டாள்.

அப்போது கங்கையின் கரையில் ஒரு செவ்விண்மீன் என நின்று அந்தியின் நீர்ச்செயல் செய்த பிருகு முனிவரை அவள் கண்டாள். கங்கையில் நீராட விழைவதாகவும் தன்னை இறக்கி விடும்படியும் அவள் அவனிடம் சொன்னாள். அவன் அவளை நீர்க்கரையில் இறக்கியபோது அப்பால் சென்று தனக்கு காவலிருக்கும்படி அவள் ஆணையிட்டாள். காட்டுமரம் ஒன்றின் கீழ் புலோமன் விழிகள் திருப்பி அமர்ந்ததும் நீர் வழியே மூழ்கி பிருகுமுனிவரின் முன்னால் நிறையுடலுடன் எழுந்தாள். கரிய தழலென நின்றசைந்தாள்.

பிரம்மனின் வேட்கையின் துளி எனப்பிறந்தவர் பிருகு. பிரம்மவேள்வியில் எரிகுளத்தில் பேரெழிலுடன் நின்றாடிய தழலின் வளைவுகளின் மென்மையில் பெண்ணெழிலைக் கண்டு பிரம்மனில் காமம் எழுந்தது. அவ்விழைவே செவ்வனலை ஒரு பெண்ணாக்கியது. படைப்பவனை அவி நிறைந்த கலமாக்கியது.

அவர்களின் காதலில் பிறந்த மைந்தனை கையிலெடுத்த பிரம்மன் வெம்மைதாளாமல் விட்டுவிட்டார். எரிவிண்மீன் என அக்குழந்தை கடலில் விழுந்தது. வருணனின் துணைவி சார்ஷணி அதை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டாள். அவள் கருணை முலைப்பாலாகியது. குழவி சற்றே குளிர்ந்து செவ்வைரமென ஒளிவிட்டது.

எரிவிண்மீனின் வெம்மை கொண்டிருந்த மைந்தனை அன்னையின் கரங்களன்றி எவரும் தொடமுடியவில்லை. அவன் சென்ற பாதையில் பசுமை கருகி தடமாயிற்று. அவன் அமர்ந்திருந்த பாறை உருகி குழிந்தது. அவன் தொட்டநீர்நிலைகள் கொப்பளித்துக் கொதித்தன. அவன் மீது விழுந்த மழை புகைமுகிலாக எழுந்தது. அவன் ஓதியபோது வேதம் பொன்னொளிமிக்க அலைகளாக கண்களுக்குத் தெரிந்தது.

எந்தப்பெண்ணும் அணுகமுடியாத இளைஞனாகிய பிருகுவைக் கண்டு சார்ஷணி வருந்தினாள். 'உனக்குரிய துணைவியைத் தேடி அடைக மைந்தா. அவள் கருவில் எழும் உனது மைந்தனால்தான் நீ விண்ணவருலகில் நுழைய முடியும்' என்றாள். அன்னையின் ஆணையை ஏற்று பிருகு மேல் கீழென விரிந்த பதினான்கு உலகங்களிலும் துணை தேடி அலைந்தார். அவர் விழிபட்டதுமே தேவகன்னியர் பொன்னிறப் புகையாக மாறி மறைந்தனர். அவரைக் கண்டதுமே கந்தர்வப்பெண்கள் நிழலுருக்களாயினர். அவர் நிழலைக் கண்டதுமே மானுடப்பெண்கள் எலும்புக்குவைகளாக மாறினர்.

தன் முன் எழுந்து வந்த புலோமையைக் கண்டு பிருகு வேதச் சொல்மறந்து வேட்கையை அறிந்தார். அவ்வேட்கையே சினமாக மாற திரும்பிக்கொண்டு 'விலகு அரக்கியே. என் விழிதொட்ட எவரும் எரிந்தழிவர்' என்றார். அவள் இதழ்குவிய நகைத்து 'நான் எரிந்துகொண்டிருக்கிறேன் அழகனே' என்றாள். மலர் விரியும் முதல் மணத்தை அவர் அறிந்தார். எரிமலரின் மணம் கந்தகச்சாயல் கொண்டிருந்தது. அவளை திரும்பி நோக்கியபோது அவர் நெஞ்சு அதிர்ந்தது. ’இவள் இவள் இவள்’ என தன் அகச்சொல் ஒலிப்பதை கேட்டார்.

ஆயினும் ஆணெனும் ஆணவம் முந்த குனிந்து கங்கையின் நீரை அள்ளி அனலெழும் வேதமந்திரம் சொல்லி அவள் மேல் வீசி 'எரிந்தழிக!' என்றார். அந்நீர்மணிகள் அவளுடைய கரிய உடலில் நீலமலரில் பனித்துளிகளென வழிவதைக் கண்டார். வெண்பல் ஒளிர நகைப்பொலி எழுப்பி அவள் அருகே வந்தாள். 'இக்கங்கையையே அள்ளிச் சொரிந்தாலும் இத்தழல் அணையாது இளையவரே' என்றாள். 'அனலை அனலே அணைக்கமுடியும் என அறியாதவரா நீர்?'

அனலாளும் அறிவனாகிய பிருகு முதல்முறையாக அச்சத்தை அறிந்தார். பின்னடைந்து 'நில். அணுகாதே. நான் பிரம்மனின் மைந்தன். வருணனின் அறப்புதல்வன். தேவர்குலப்பெண்களும் கந்தர்வகன்னியரும் எண்ணமுடியாத என்னை அரக்கர்குலத்துப் பிறந்த நீ அணுகலாகாது' என்றார். 'அவர்கள் உங்கள் தவத்தைக் கண்டனர். நான் உங்கள் வேட்கையை மட்டுமே காண்பவள்' என்றாள் புலோமை.

'சீ, கல்லாக்களிமகளே, இது அறநெருப்பு. அறிவின் அனல்' என்றார் பிருகு. காமம் ஒளிவிட்ட விழிகளுடன் 'அறமும் அறிவும் அமைந்திருக்கும் பீடமென்ன என்று நான் அறிவேன். அது ஒன்றையே நான் விழைகிறேன்' என்றாள் அவள். அஞ்சி வலக்கை நீட்டி இடக்கையால் முகம் மறைத்து பிருகு கூவினார் 'உன் மாயத்தால் என்னை வெல்கிறாய். நீ சொல்வதெல்லாம் பொய்.'

சிரித்தபடி அவள் அருகே நின்றிருந்த குவளைமலர் ஒன்றைக் கொய்து காதருகே குழலில் சூடியபின் 'அவ்வண்ணமெனில் இம்மலரில் ஓர் இதழையேனும் கருக்குக. முடிந்தால் நீர் சொல்வதெல்லாம் உண்மையென ஏற்கிறேன்' என்றாள். அனல்குடிகொண்ட வலக்கையை நீட்டி மும்முறை வேதமோதியும் மலரிலிருந்த நீர்த்துளிகூட வற்றவில்லை என்பதை பிருகு கண்டார். இடக்கையால் அவளை வாழ்த்தி 'ஆம், நான் தோற்றேன்' என்றார்.

அவள் அவர் அருகே வந்து அவரது விரிந்த பொன்னிறத் தோள்களை தன் கரிய தாமரைக்கொடி போன்ற கரங்களால் வளைத்துக்கொண்டு 'தோற்பதில் வெல்வதே காமம் வலியோனே' என்றாள். 'நான் தூய்மையிழந்தேன்' என்றார் பிருகு. 'தவத்தோனே, தூய்மையை இழந்து கனிதலைப் பெறுவதே காமம்' என்றாள். துயருற்று 'நான் அழிந்தேன்' என்றார். 'அழிவதன் மூலம் உயிர்ப்பதே காமம் செந்நிறத்தவனே' என்று அவள் சொன்னாள்.

நிலவை முகிலென குழல் அவர் முகத்தை மூடியது. அவரது நடுங்கும் இதழ்களை தன் இதழ்களால் பெற்றுக்கொண்டாள். சினந்தெழுந்து கோட்டைவாயிலை முட்டும் களிறுகளாயின அவள் கருமுலைகள். அவள் இடை அவர் இடையை அறிந்தது. கால்கள் மரத்தை கொடியென சுற்றிக்கொண்டன. கரியிலெழுந்த எரி என அவள் உடல்மேல் அவர் உடல் அமைந்தது. இருளை அறியும் ஒளி என அவர் அவளது முடிவின்மையை அறிந்தார்.

தழலும் தழலும் என அவர்கள் தழுவியாடினர். அவளை தன் உடலில் எழுந்த தழல்சிறகாகக் கொண்டு அவர் விண்ணில் பறந்து தென்னகம் சென்றார். ஏழு பெருநிலங்களில் அவர்கள் காமத்திலாடினர். தீயை உண்ணுமா தீ? இளையோரே, அரசநாகம் பிற நாகங்களை உண்ணவில்லையா என்ன?

அணையா எரித்துளி என தன்னுள் மைந்தன் ஒருவனை புலோமை பெற்றுக்கொண்டாள். தனித்து கண்மூடிக்கிடக்கும்போது காட்டுத்தீயென ஒன்று நூறாகிப் பெருகி வென்று மேற்செல்லும் தன் மைந்தனை அவள் கனவில் கண்டாள். அவன் உடல் தழல்நிறத்தில் இருந்தது. கூந்தல் கரிப்புகை என நீண்டு பறந்தது. அவன் விரல்நுனிகள் வைரங்களாக ஒளிவிட்டன. தன்னுள் முளைத்த அனல் காலக்கரைகளைக் கடந்து நிலைக்காமல் பெருகி ஓடும் என்று அறிந்தாள்.

அவள் கருவயிற்றில் செவி வைத்து கேட்டு பிருகு சொன்னார் 'அவன் சொல்லும் வேத மந்திரத்தை கேட்கிறேன். அக்னிதேவனுக்கு அவியளிக்கிறான்.' அவள் மெல்லச் சரிந்து பருத்த பெருமுலைகள் ஒன்றன் மேல் ஒன்று அமைய படுத்து புன்னகைத்து 'எப்போதும் அசைந்துகொண்டிருக்கிறான். அவனை சியவனன் என அழைக்கிறேன்' என்றாள். 'இனி இப்புவி உள்ளளவும் ஒருபோதும் அனல் தனித்தெரியாது. அதை என்றும் பேணும் ஒரு எரிகுலம் இங்கு என்னிலிருந்து பிறக்கிறது. என்றும் அழியாதது. அனைத்தையும் வெல்வது.'

விழிகனிந்து அவர் அந்த ஒளிமிக்க வயிற்றில் தன் முகத்தை வைத்தார். அவர் தலையை வருடி அவள் சொன்னாள் 'நான் கொண்டவற்றை எல்லாம் பெருக்கி இதோ திருப்பியளிக்கிறேன்.' பிருகு குரல் நெகிழ்ந்து அவள் உந்திக்குழியைத் தொட்டு வாழ்த்தினார் 'சியவனனே, நீ வளர்க! உன் குருதி பிருகு குலமென்று அறியப்படுவதாக! பார்க்கவர்கள் இப்பாரதவர்ஷத்தை பதினெட்டு முறை வென்று சூழ்வார்கள். அவர்களின் விதைகள் இந்நிலத்தில் என்றும் முளைத்தெழுந்துகொண்டிருக்கும். ஆம், அவ்வாறே ஆகுக!'

விடியற்காலையில் அவள் தன் கருவில் உறைந்த கனலை கனவுகண்டு துயின்று கொண்டிருக்கையில் புலரியின் நீரளிப்புக்காக எழுந்த பிருகு எரிகுளம் அமைத்து அதை தன் சுட்டுவிரலால் தொட்டு நெருப்பை வரவழைத்தார். 'அக்னிதேவனே, இங்கே அணையாது திகழ்க! என் துணைவிக்கு நீ காப்பாகுக!' என்றபின் வெளியேறினார்.

புலோமையின் அருகே நின்றெரிந்த அக்னிதேவன் கைநீட்டி அவள் ஆடையைத் தொட்டார். எரிசுட அவள் திகைத்து எழுந்தபோது நாகமெனச் சீறி 'உன் நெஞ்சுக்கும் நானே காப்பு. இக்கனவில் நீ சென்ற தொலைவுகளை நான் ஒப்பமுடியாது' என்றார். புலோமை சினந்து 'கைகொண்டதை உண்பதும் கைநீட்டித் தாவுவதுமே எரியின் அறம். பெண்ணின் அகத்தைத் தொட எவருக்கும் நெறியில்லை' என்றாள். 'ஏழு உலகங்களிலும் கன்னியருக்கும் குலமகள்களுக்கும் கற்பின் காவல் நானே' என்றார் அக்னி.

சினந்து 'நான் அரக்கி. என் கற்பு என் கருப்பையில் வாழ்கிறது. நான் கட்டற்றவள்' என்று புலோமை சொன்னாள். 'தவமுனிவனாகிய உன் கணவனும் உனக்கொரு பொருட்டு அல்லவா? அவன் அளித்த குடியறத்துக்கும் நீ கட்டுப்பட்டவள் அல்லவா?' புலோமை சிரித்து 'நீ பெண்ணின் விழிகளை மட்டுமே அறிந்திருக்கிறாய். அவள் கருப்பையை அறிந்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டாய்' என்றாள். 'இப்புவியை உண்டு நிறைக என்ற ஆணையைக் கொண்டு இங்கு வந்தவள் நான். அதுவன்றி பிறிதல்ல என் அகம்.'

அக்னி சினந்து எழுந்து கூரை தொட தழல்கூத்தாடி 'அவ்வண்ணமெனில் உன் கணவன் மீண்டு வரட்டும். அவனிடமே இந்நெறியின் அறமென்ன என்று கேட்கிறேன்' என்றார். புன்னகையுடன் திரும்பிப்படுத்து கண்மூடி மீண்டும் தன் கனவுகளில் திளைக்கத் தொடங்கினாள் புலோமை.

அக்கனவில் அவள் புலோமனைக் கண்டாள். 'தேவ, நான் இங்குள்ளேன்' என்றாள். கங்கைக்கரையில் ஒரு கருங்கால் வேங்கை மரமாக மாறி அவளைக் காத்து நின்றிருந்த புலோமன் பேருருக் கொண்டான். இரு கைகளையும் காற்றில் வீசி இடியோசை எழுப்பி எழுந்து பறந்து அவள் துயின்ற குடிலுக்குள் நுழைந்தான்.

எரிகதிர் கை நீட்டி அவனைத் தடுத்தார் அக்னி. 'அரக்கனே, என்னை காவலாக்கிச் சென்ற முனிவரின் சொல் கொண்டு ஆணை. இவளுக்கு நான் காப்பு' என்றார். திகைத்து நின்ற புலோமன் புலோமையிடம் 'இளையோளே, நீ சிறைவைக்கப்பட்டிருக்கிறாயா?' என்று கூவினான். 'நீ முன்னர் என்னை அனல் எழுப்பி சான்றாக்கி கரம்பற்றியவன். அச்சிறையில் இருந்து மீண்டு இங்கே கருவின் சிறையில் இருக்கிறேன்' என்றாள் அவள்.

சினத்துடன் திரும்பிய புலோமன் 'அக்னியே, மாறா நெறியே நீ என்கின்றன வேதங்கள். அது உண்மையென்றால் சொல். நான் இவளை உன்னைச் சான்றாக்கி மணந்தேன். இம்முனிவர் இவளை புனல்கரையில் அடைந்தார். எங்களில் எவருக்குரியவள் இவள்?' என்றான். திகைத்து தழலடங்கி கனன்று ஓசையிட்டது நெருப்பு. 'சொல்க, இருவரில் எவருக்கு இவள் அறத்துணைவி?'

அச்சுறுத்தப்பட்ட நாகம்போல சுருண்டு மெல்லச்சீறி பின் மெல்ல தலை தூக்கி நாபறக்க வளைந்தாடியது நெருப்பு. 'சொல்... நெறிமீறி நீ சொன்னால் இக்கணமே நான் செல்கிறேன்' என்றான் புலோமன். 'எரி சான்றுடன் மணந்தவன் நீயே. உனக்கே இவள் மனைவி. நீ அறியாது இவளைக் கொண்டமையால் பிருகு கொண்டது முறைமணம் அல்ல' என்றார் அக்னிதேவன். 'அவ்வண்ணமெனில் விலகுக' என ஆணையிட்டு புலோமன் கைநீட்ட எரிகுளத்து நெருப்பு அணைந்து புகையாகியது.

புலோமையை அவள் படுத்திருந்த பீடத்துடன் அகழ்ந்து எடுத்து தன் தோளில் தூக்கிக்கொண்டு புலோமன் வெளியே வந்தான். 'நீ எனக்குரியவள்... ஒருபோதும் பிறர் தொட ஒப்பேன்' என்று நகைத்தபடி விண்ணிலெழ முயன்றான். அவள் கருவிலிருந்த குழவியின் எடையால் அவன் தோள்கள் தெறித்தன. நூறுமுறை கால்களை உதைத்து எழுந்தும் அவனால் எழமுடியவில்லை. தன் குலமூதாதையரை முழுக்க எண்ணி அவன் உதைத்தெழுந்ததும் அவளுக்குள் இருந்து குழந்தை நழுவி பேரொலியுடன் மண்ணில் விழுந்தது. அது விழுந்த இடத்திலிருந்த புல்பொசுங்கி புகை எழுந்தது.

அஞ்சி திரும்பி நோக்கிய புலோமனைக்கண்டு புலோமை நகைத்தாள். அவன் அவளை அப்படியே விட்டுவிட்டு தாவி முகில்களில் ஏறி பறந்து மறைந்தான். கையில் குருதிசொட்டும் மைந்தனுடன் புலோமை அழுதுகொண்டு வாயிலில் நின்றிருக்க நீராடி வந்த பிருகு என்ன நிகழ்ந்தது என்று கேட்டார். 'புலோமன் என்னும் அரக்கன் என்னை கவர்ந்துசெல்ல முயன்றான். இம்மைந்தனின் எடையால் அவனால் என்னை தூக்கமுடியவில்லை' என்றாள் புலோமை.

கடுஞ்சினம் கொண்டு குடிலுக்குள் ஓடிய பிருகு 'எழுக நெருப்பே! சொல்க, நான் உன்னை காவலாக்கிவிட்டுச் சென்றேன். கடமை மறந்தது ஏன்?' என்று கூவினார். ஒளிச்சுடராக கைகூப்பி எழுந்த அக்னிதேவன் 'என் பிழை பொறுத்தருள்க முனிவரே. அனல்சான்றுடன் அவளை மணந்தவன் அவ்வரக்கன் என்பதனால் என் நெறி என்னை காவலில் இருந்து விலக்கியது' என்றார்.

சினத்தில் எரிந்து எழுந்த பிருகு 'மாறா நெறியென்பது மூடத்தனமாகவே விளையும் என்றறியாதவனா நீ. பகுத்தறியும் சிந்தையிலேயே நெறி திகழவேண்டும். நன்று தீது அறியாது மயங்கிய நீ இன்றுமுதல் அனைத்தையும் உண்பவனாக ஆவாய்!' என்றார். பதறியழுதபடி 'முனிவரே, சொல் பொறுங்கள்' என்று அக்னிதேவன் மன்றாடினார். 'செல்க, பூவும் புழுவும் மணியும் மலமும் இனி உனக்கு ஒன்றென்றே ஆகுக!' என்று அவர் திரும்பிக்கொண்டார். துயரால் கருமைகொண்டு புகைந்து மறையும் முன் அக்னிதேவன் புலோமையின் இதழ்களில் இருந்த சிறுநகையை கண்டார்.

மண்ணெலாம் பரவி மலினங்களை எல்லாம் உண்டு மாசடைந்தார் அக்னிதேவன். இழிமணம் நிறைந்து ஒளிமங்கி எடைமிகுந்து மண்ணில் பாம்பு போல் இழைந்தார். கழிவுநீரோடைகள் போல நெருப்பு ஓடக்கண்டனர் மானுடர். சிறுவர் அதை அள்ளி வீசி விளையாடினர். இளையோர் மிதித்து பந்தாடினர். நீராடியபின் தலைதுவட்டவும் இல்லத்தைக் கழுவியபின் துடைக்கவும் நெருப்பை பயன்படுத்தினர். நெருப்பிலிறங்கி நீந்தி விளையாடின சிற்றுயிர்கள்.

அக்னி என்பது இளிவரல் சொல்லாக ஆகியது அவர்களிடம். உலகின் அனைத்துக் கழிவுகளையும் அதில்கொண்டு கொட்டினர். மாசு மிகுந்து அக்னி சிறுத்தது. அதிலெழுந்த இழிமணத்தால் அதை பூசைகளிலிருந்து விலக்கினர். வேள்விகளில் வேதம் கேட்கும் தகுதியற்றது என்றனர். அக்னி அமர்ந்த தென்கிழக்குத் திசை அமங்கலமானது என்றனர். அங்கே வாயில்களோ சாளரங்களோ இல்லாமல் வீடுகளை கட்டிக்கொண்டனர்.

கண்ணீருடன் பிரம்மனை எண்ணி தவமிருந்தார் அக்னி. ஆயிரமாண்டுகாலத் தவம் முதிர்ந்து படைப்போன் எழுந்ததும் பாதங்களை பற்றிக்கொண்டு கண்ணீருடன் கேட்டார் 'எந்தையே, சொல்க! நான் செய்த பிழை என்ன?' பிரம்மன் புன்னகைத்து 'பெண்மையின் மாயத்தை ஒருபோதும் அறைகூவலாகாது மைந்தா. அது தாய்மையின் பேராற்றலின் பிறிதுவடிவம்' என்றார்.

'என்னசெய்வேன் தந்தையே. என் இழிநிலையை அகற்றுக' என்று அக்னி அழுதார். 'முனிவரின் தீச்சொல் அழியாது. ஆனால் பிறிதொரு நற்சொல்லை நான் அளிக்கமுடியும். இனி நீ உண்பவை அனைத்தும் உண்ணும் கணத்திலேயே தூய்மையடையும். உன் தூய்மை ஒருபோதும் குன்றாது' என்றார் பிரம்மன். மகிழ்ந்து வணங்கி அக்னி மீண்டார்.

சியவனன், பூதன், வஜ்ரசீர்ஷன், சுக்ரன், ஸவனன், சூசி எனும் ஆறு மைந்தருடன் அனலிருக்கையில் அமர்ந்திருந்த பேரன்னையை வந்து பாதம் பணிந்தார் அக்னி. 'அன்னையே, உன் ஆழத்தை அளவிடும் அகம் எனக்கில்லை என்றறிந்தேன். என்னை பொறுத்தருள்க' என்றார். அன்னை மகிழ்ந்து 'ஒளிகுன்றாது வாழ்க. என் இளையமகள் சூசியை நீ கொள்க. இப்புவியை நீ தூய்மை செய்கையில் உன் கைகளாகவும் நாவாகவும் அவள் அமைவாள்' என்றாள். மகற்கொடை பெற்று அக்னி மீண்டார்.

உண்பனவற்றை எல்லாம் தூய்மையாக்கும் தூயவனை வணங்குங்கள். அவன் இப்புவியெனும் குட்டியை பேரன்புடன் நக்கித் துவட்டும் பிரம்மமெனும் பசுவின் நாக்கு. பேரன்னையாகிய புலோமையை வாழ்த்துங்கள். அவள் பெற்ற மகளை போற்றுங்கள். இப்புவியில் என்றுமிருக்க விழையுங்கள். ஓம்!ஓம்!ஓம்!

கண்மூடி சிலகணங்கள் அமர்ந்திருந்த விறலியின் உடலில் ஓர் அலையென அசைவொன்று எழுந்து சென்றது. அவள் கரிய திரள்முலைகள் அசைந்தமைந்தன. விழிதிறந்து கூடியிருந்தவர்களை நோக்கியபின் அவள் கைகூப்பி எழுந்துகொண்டாள். பீமன் அசைந்த ஒலிகேட்டு தருமன் திரும்பி நோக்கினான். அவன் இருளில் விலகிச் செல்வது தெரிந்தது. பெருமூச்சுடன் அவன் மார்பில் கரங்களைக் கட்டியபடி பீடத்தில் தலைகுனிந்து அமர்ந்தான்.

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 3

பாண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து விலகிச் செல்வதை கேட்டபடி அனல்துண்டுகளாக எஞ்சிய எரிகுளத்தை நோக்கியவண்ணம் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். பாணன் தன் முழவை தோலுறைக்குள் போட்டுக் கட்ட விறலி நந்துனியின் கம்பிகளை புரியிளக்கி அஃகினாள். அதை தோல்மடிப்பில் சுற்றி தோளில் மாட்டும் வார் வைத்துக்கட்டினாள். பாணனின் மாணவர்கள் அவ்வாத்தியங்களை எடுத்துக்கொண்டனர். இரவுக்காற்று கங்கையிலிருந்து எழுந்து வீச கனல் புலிக்குருளை போல உறுமியபடி சிவந்தது.

காலடியோசை கேட்டு தருமன் திரும்பி நோக்கினான். பத்ரர் அருகே வந்து தலை வணங்கியபின் மெல்லிய குரலில் “பாணரே, நீரும் விறலியும் இங்கிருக்கலாம்” என்றார். பாணன் தருமனை ஒருகணம் நோக்கிவிட்டு “ஆணை” என்றபின் தன் மாணவர்களுக்கு விழிசுட்டி ஆணையிட்டான். அவர்கள் தலைவணங்கி விலகிச்சென்றனர். நெருப்புக்குப் பின்னால் பத்ரர் அமர்ந்துகொண்டு இரு பெரிய விறகுக்கட்டைகளை எடுத்து அதிலிட்டார். அருகே நெய்சிந்திக்கிடந்த சருகுகளை அதில் எடுத்துப்போட்டதும் சிவந்த நாக்குகள் எழுந்து விறகை பொதிந்தன.

பத்ரர் வரும் வழியிலேயே பாண்டவர்களை மீள அழைத்திருந்தார். அர்ஜுனன் தளர்நடையில் வந்து தருமனுக்கு இடப்பக்கமாக நெருப்பை நோக்கியபடி அமர அவன் பின்னால் நகுலனும் சகதேவனும் அமர்ந்தனர். பீமன் மீண்டும் அதே மரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான். பத்ரர் அர்ஜுனனிடம் “ஐவரும் கேட்டு அமையவேண்டியவை சில உள்ளன. அதைச் சொல்லும்பொருட்டு குலமூத்தார் என்னை பணித்தனர்” என்றார்.

விறலி பாணனின் அருகே கால்மடித்து அமரும் அணியோசை கேட்டு விழிதூக்கிய தருமன் அவள் கருவிழிகளின் ஆழத்தைக் கண்டு நெஞ்சு அதிர்ந்து விலகிக்கொண்டான். பத்ரர் “பாணரே, நீர் பாஞ்சாலத்தின் நெறிகளையும் முறைமையையும் அறிந்தவர். இன்று இளவரசருக்கு உமது சொற்றுணை தேவையாகிறது” என்றபின் “உமது விறலியும் உம் சொற்களை துணைக்கட்டும்” என்றார். பாணனின் கரிய முகத்தில் வெண்கீற்றாக புன்னகை எழுந்தமைந்தது. “ஆம் நிமித்திகரே. அகம் திறத்தல் இரவிலேயே மானுடருக்கு இயல்வது” என்றான்.

பத்ரர் நெருப்பை நோக்கியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தார். தழல் மெல்ல எழுந்து விறகுருளைகளை தழுவிக்கொண்டது. விறகின் நுனி நீலச்சுடராக வெடித்து பின் சிவந்து கனலும் ஒலியுடன் அனலுமிழ்ந்தது. பத்ரர் பின் நீள்மூச்சுடன் உடல்குலைந்து “ஐவரை மணத்தல் இன்று பாரதவர்ஷத்தில் எங்குமில்லாத நெறி என நாங்களும் அறிவோம். ஷத்ரிய உள்ளம் அதை ஏற்கவும் தயங்கும். துர்வாசரின் ஆணைப்படி அன்னையிட்ட ஆணை பாஞ்சாலத்திலும் திகைப்பையே உருவாக்கியது. ஆனால் இன்று அதன் அரசியல் நுண்பொருளை அரசறிந்தோரும் குலமுறை முதன்மையை குடிகளும் உணர்ந்துவிட்டனர்” என்றார்.

நிமிர்ந்து தருமனை நோக்கியபடி “ஆனால் அதன் உட்பொருட்களை நீங்கள் முழுதறிந்துள்ளீரா என நான் அறியவில்லை. ஆகவேதான் இங்கு வந்துள்ளேன்” என்றார். அவர்கள் ஏதும் சொல்லாமலிருக்கவே பத்ரர் ”நீங்கள் அதைப்பற்றி உங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை என்று உணர்கிறேன்” என்றார். அர்ஜுனன் மெல்லொலியால் குரல் தீட்டியபின் “ஆம் நிமித்திகரே, நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. தாங்கள் வந்தது அப்பேச்சு தொடங்குவதற்கான நல்முகமாக அமைந்தது. நிகழட்டும்” என்றான்.

"சொல்லுங்கள்" என பத்ரர் தலையசைத்தார். அர்ஜுனன் “தனித்துச் சொல்வதற்கேதுமில்லை நிமித்திகரே. மூத்தவர் தோளும், என் வில்லும், இளமைந்தர் வாழ்வும் முழுமையாகவே எங்கள் தமையனுக்குரியவை. நாங்கள் வெல்வதும் கொள்வதும் அவர் பொருட்டே. பாஞ்சாலத்தில் நான் வென்ற குலமகளும் அவருக்குரியவளே. ஐவருக்கும் அறத்துணை அவள் என்று உலகறியட்டும். அவள் தமையனுக்கு மட்டும் இல்லத்துணையாக மட்டும் வாழட்டும்” என்றான்.

தருமன் தலையசைத்து “நானும் அம்முடிவிலேயே இருந்தேன் நிமித்திகரே. ஐவருக்கும் அறத்துணை என்பது ஓர் அரசியல் சூழ்ச்சி மட்டுமே. அது அகத்தில் நிகழவேண்டுமென்பதில்லை. அதை எங்ஙனம் இவர்களிடம் உரைப்பதென்ற எண்ணம் எனக்கிருந்தது. மானுட உள்ளங்களை எவரும் முழுதறிந்துவிட முடியாதென்பதையே மானுட உள்ளங்களைப்பற்றி பேசும் நூல்களிலிருந்து கற்றிருக்கிறேன். இத்தருணம் அதைப்பேச அமைந்தது நன்று” என்றான்.

சொற்களை ஒவ்வொன்றாக அகத்தில் கோர்த்தபடி தருமன் சொன்னான் ”இளையோன் சொன்னபடியே ஆகுக. ஆனால் ஒன்று, வில் குலைத்து இளவரசியை வேட்டவன் விஜயன். அவனுக்குரியவள் அவள் என்பதே முறை. அவன் அவளை இல்லத்துணைவியாக கொள்ளட்டும். பிறர் அவள் அவைத்துணைவர்களாக மட்டும் விளங்கலாம்.”

“அது இயல்வதல்ல மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “அவளை நாம் ஐவரும் மணந்ததே அவள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக வேண்டும் என்பதற்காகத்தான். ஐவரில் ஒருவர் இருப்பது வரை அவள் மங்கலையாக நீடிக்கவேண்டும் என்பதே அன்னையின் விருப்பம். தாங்கள் கைப்பிடித்து இடப்பக்கம் அமரவேண்டியவள் பாஞ்சால இளவரசி. கோலும் முடியும் கொண்டு நீங்கள் அரியணையமரும்போது வைதிகர் சொல்முன்னும் அவர் எழுப்பும் எரிமுன்னும் நின்று அவளை உங்கள் துணைவியெனக் கொள்வதாக சொல்லவேண்டும்.”

தருமன் பேசமுற்படுவதை முந்தி அர்ஜுனன் தொடர்ந்தான் “நீங்கள் அறியாத வைதிக மந்திரங்கள் இல்லை. உடல், பொருள், ஆன்மா ஆகிய மூன்றுக்கும் அவளே துணைவி என நீங்கள் சொல்லவேண்டும். அவள் மஞ்சத்தை நிறைக்கவும் உதரத்தில் முளைக்கவும் குருதியில் தடமளிக்கவும் நீங்கள் உறுதி சொல்லவேண்டும்...”  தத்தளிப்புடன் கைநீட்டி தருமன் “நில் இளையோனே, அச்சொல்லை சொல்வதிலொன்றும் பிழையில்லை” என்றான்.

திகைத்து “எரிசான்றாக பொய்யுரைப்பதா?” என்றான் அர்ஜுனன். தருமன் “ஆம் பொய்யும் மெய்யே புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால். கல்வியற்றவனே பொய்யுரைக்கலாகாது. தீதன்று என்று உணர்ந்து பொய்யுரைக்கவே கல்வி கைகொடுக்கவேண்டும்” என்றான். ”இப்பொய்யால் தெய்வங்கள் நம்மை வாழ்த்தும்.”

“எவரிடமெல்லாம் பொய்யுரைப்பீர்கள் இளவரசே?” என்றார் பத்ரர். “ஊரிடம் பொய்யுரைக்கலாம். உறவிடமும் உரைக்கலாம். உங்களிடமே கூட உரைத்துக்கொள்ளலாம். நாளை உங்கள் குருதியில் எழப்போகும் மைந்தரிடம் உரைக்கலாகாது. அவர்கள் அறிவர் தந்தை எவரென்று. அவர்களுக்கு சொல் முளைக்கும் வரைதான் இது அரண்மனை மந்தணம்.” அர்ஜுனன் “ஆம், முற்றிலும் உண்மை” என்றான்.

தருமன் மீண்டும் ஏதோ சொல்ல முயல பத்ரர் “இளவரசே, இதை தந்தையென்றவனே சொல்ல முடியும். மைந்தனின் உடல் தந்தையை அறியும். தந்தையின் விழிகளே மைந்தன் எவனென்று ஊருக்கு சொல்லிவிடும். நீங்கள் அனலுக்குப் பொய்யுரைத்து இளவரசியை அரியணை அமர்த்துவீர்கள் என்றே கொள்வோம். நாளை அஸ்தினபுரியை ஆளப்போவது யார்? அவளில் எழும் இளையோனின் குருதியா? இல்லை நீங்கள் கொள்ளும் துணைவியில் பிறக்கும் மைந்தனா?” என்றார்.

“பட்டத்தரசியின் மைந்தனே பட்டத்துக்குரியவன்” என்றான் தருமன் தணிந்த குரலில். அதிலுள்ள இடரை அவன் விளங்கிக்கொண்டது தெரிந்தது. பத்ரர் அந்தத் தணிவை உணர்ந்து குரலெழுப்பினார். “ஆனால் அவன் அரசரின் மைந்தனல்ல என்று அறிந்திருப்பான். அதை உங்கள் குருதிக்குரியவனும் அறிந்திருப்பான். அஸ்தினபுரியில் அடுத்த தலைமுறையில் ஒரு பெரும் அரியணைப்போரை அமைக்கிறீர்கள்.”

சினத்துடன் தலைதூக்கிய தருமன் “அவ்வண்ணமென்றால் நான் மணம் கொள்ளப்போவதில்லை. என் குருதியில் மைந்தர் எழார்” என்றான். ”இதுநாள் வரை நான் காத்த காமஒறுப்பை எஞ்சிய நாளிலும் கொள்வதொன்றும் எனக்கு அரிதல்ல.” புன்னகையுடன் பத்ரர் “அதை உங்கள் இளையோன் பீமனிடமும் சொல்லமுடியுமா என்ன? அதைச்சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்றார்.

தருமன் தலையை அசைத்து எதையோ தன்னிடமே மறுத்தான். பிறகு இயலாமை அளித்த சீற்றத்துடன் தலைதூக்கி பற்களைக் கடித்தபடி “என்னதான் சொல்கிறீர் நிமித்திகரே? வேறு வழியென்ன?” என்றான். ”என் இளையோன் வென்ற பெண்ணை நான் கொண்டால் அது முறையல்ல. அகடியமென்றே அதை என் அகம் சொல்கிறது.” பத்ரர் “என்ன அகடியம் என்கிறீர்கள்?” என்றார். தருமன் கையை அசைத்து “அதை அனைவரும் அறிவோம்” என்றான். “சொல்லுங்கள் இளவரசே, என்ன அறப்பிழை உள்ளது அதில்?” என்றார்.

தருமன் விழிதூக்கி நோக்கி வலிதெரிந்த முகத்துடன் “மானுட உள்ளம் அத்தகையது பத்ரரே. என் இளையோன் என் கைபற்றி வளர்ந்தவன். எனக்கென வாழ்க்கையை அளித்தவன். ஆனால் அவன் ஆண்மகன். தன்னால் வெல்லப்பட்ட ஒன்றை முற்றுதற அவன் அகந்தை ஒருபோதும் ஒப்பாது” என்றான். “அதன்மேல் ஆயிரம்கோடிச் சொற்களை அள்ளிப்போடலாம். தெய்வங்களும் அறியாமல் ஒளிக்கலாம். ஆனால் அது அங்கிருக்கும். அவள் அவனுக்குரியவள்.”

தருமன் தன் சொற்களை கண்டுகொண்டான். “நெறிகளை மூன்றடுக்குகளாகக் காண்கின்றன நூல்கள். அரசுநெறி அரசியற் சூழலால் உருவாக்கப்பட்டு அரசால் நிலைநிறுத்தப்படுவது. அது அமர்ந்திருக்கும் பீடமாகிய குலநெறி மூத்தோர் சொல்லால் நிகழ்வது. குலநெறியை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விலங்கு நெறியே தெய்வங்களால் செய்யப்பட்டது. என் இளையோன் துரோணரின் மாணவன். ஆனால் அவனுள் உள்ள விலங்கு ஞானத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது அறியும் அவள் தன்னுடையவள் என்று.”

அனைவரும் அமைதிகொள்ள தருமன் தொடர்ந்தான். “எந்தச்செயலையும் அது தொடங்குமிடத்தில் உள்ள உணர்வுகளைக்கொண்டு மதிப்பிடலாகாதென்பதே அரசு சூழ்தலின் முதல் நெறி நிமித்திகரே. இங்கே இத்தருணத்தில் எங்களுக்கு திரௌபதி வெறும் விழித்தோற்றம் மட்டுமே. நாளை அவள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிவாள். கனவுகளுக்குள் புகுவாள். அப்போது இன்றிருந்த உறுதி எவரிடமும் இருக்காது. இன்று சொன்ன சொற்கள் தளைகளாகும். அகவிலங்கு தளைகளை உடைத்து எழத்துடிக்கும்.”

“எனக்கு அவள் மேலுள்ள உரிமை அவளுக்கு மாலையிட்டேன் என்பது மட்டுமே. அவ்வுரிமை பிற நால்வருக்கும் கூட உண்டு. நாளை அவர்களும் அவ்வுரிமையால் அவளை அகத்தே விழையலாம். அர்ஜுனன் உரிமையோ மாறாதது. அதை எவரும் மீறமுடியாது” தருமன் சொன்னான். “இது ஒன்றே வழி. பிறிது எதையும் இங்கே பேசவேண்டியதில்லை.”

அர்ஜுனன் “மூத்தவரே, தங்கள் பட்டத்தரசியை நான் அகத்துணைவியாகக் கொள்வதென்பது ஒரு கீழ்மை. அது என்னால் ஆகாது. எதன்பொருட்டென்றாலும் ஒளிந்துசெய்தலை என் அகம் ஏற்காது. அவளை நீங்கள் ஏற்றுக்கொள்வதொன்றே வழி. பிற அனைத்தும் உங்கள் உள்ளத்தயக்கங்களே” என்றான். தருமன் சீற்றத்துடன் திரும்பி “அவ்வண்ணமே ஆகட்டும். அதற்கு முன் முன்னால் வந்து இந்த எரிதொட்டு ஓர் ஆணையிடு... அவள்மேல் உன் அகத்தில் இன்று சற்றும் காமம் இல்லை என்று” என்றான்.

அர்ஜுனன் திகைத்து “என்னை அவமதிக்கிறீர்கள்!” என்றான். மூச்சிரைக்க தருமன் “ஆணையிடு... அது போதும் எனக்கு. அவளை ஏற்கிறேன்” என்றான். அர்ஜுனன் நெஞ்சு விம்மி அமைய அசையாமலிருந்தான். “சொல்” என்றான் தருமன். பத்ரர் “போதும் இளவரசே, மானுடரின் அகத்துள் நுழைய குருவன்றி எவருக்கும் உரிமையில்லை” என்றார்.

“அதை நான் அறிவேன்...” என்றான் தருமன். “ஆகவேதான் சொன்னேன். உட்கரந்த காமம் அங்கே வளரும். காடுறை முனிவரும் வெல்லமுடியாதது காமம். வேண்டாம், அது வினைவிதைக்கும்” என்றான். அர்ஜுனன் அக எழுச்சியால் நடுங்கும் குரலில் “நானும் அறிவேன் மூத்தவரே, உங்கள் விழிகளுக்கு அப்பாலுள்ள காமத்தை நானும் கண்டேன். நீங்கள் தீ தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்குள் காமம் இல்லை என்று. சொல்லுங்கள். இல்லையென்று சொன்னால் நான் ஒப்புகிறேன்” என்றான்.

தருமன் நடுங்கி கைகள் அதிர ”என்ன சொல்கிறாய் இளையோனே?” என்றான். “சொல்லுங்கள்... உங்களுக்கு அவள் மேல் காமம் இல்லை என்று சொல்லுங்கள்.” தருமன் இரு கைகளாலும் நெற்றியை பற்றிக்கொண்டான். பத்ரர் “இளவரசே” என்று அர்ஜுனனை அதட்டினார். “ஆம், என்னுள் காமம் இருந்தது. ஆனால் நான் பெண்களை அறிந்தவன். பெண்களில் திளைப்பவன். இனி நாளையும் அப்படியே வாழ்வேன். இவர் அப்படியல்ல. அவர் விழைந்த பெண்ணை அடைந்து நான் வாழமுடியாது” என்றான்.

பாணன் கைகளைத் தட்டி உரக்கச் சிரித்தபடி “உங்கள் ஐவருக்கும் அவள் மேல் காமம் இருப்பதை அறிய நூல் பயிலவேண்டியதில்லை இளவரசர்களே” என்றான். "பீமசேனர் ஒருபோதும் காமத்தை மறுத்துச் சொல்லப்போவதில்லை.” பீமன் அசைந்து எழுந்து நின்று கைகளை தொங்கப்போட்டபடி “ஆம், நான் மறுக்கவில்லை, ஏனென்றால் நான் அவளை முன்னதாகவே கண்டு விழைவுகொண்டுவிட்டேன்” என்றான். “பிறரிடம் கேட்கவேண்டியதேயில்லை” என்றான் பாணன். “அவ்வண்ணம் காமம் கொள்ளவில்லை என்றால்தான் அது வியப்புக்குரியது.”

ஐவரும் தலைகுனிந்து அமர்ந்திருக்க பாணன் சொன்னான் “ஏனென்றால் அவள் பேரன்னை. அன்னையில் கனிந்திருப்பதே கன்னியில் பொலிந்திருக்கிறது. அதை விரும்பாத மானுடர் இருக்கவியலாது. உங்களில் எவர் அவளை அடைந்தாலும் பிறர் அவருக்கு எதிரியாவீர்களென்பதில் ஐயமே இல்லை. பல்லாயிரம் முறை உள்ளத்தால் போர்செய்வீர்கள். அப்போர்கள் உங்களை மேலும் மேலும் நஞ்சு கொண்டவர்களாக்கியபின் வாளெடுத்து உடன்பிறந்தான் தலைவெட்ட எழுவீர்கள்."

பாணன் ஒரு சுள்ளி எடுத்து தீயிலிட்டான். “இன்று கன்னியாக அவளிருக்கையில் ஒருவேளை நீங்கள் காமத்தை வெல்லக்கூடும். நாளை அவள் இளம் அன்னையாக இருக்கையில் அவள்மேலெழும் பெருங்காமத்தை ஒருகணமும் வெல்லமுடியாது. பெண்கள் பெருங்காமத்தையூட்டும் பருவம் அதுவே. அப்போது காய் கனிந்திருக்கிறது. கன்னித்தெய்வம் தன்னை அன்னையெனக் காட்டும் மாயம் சூடியிருக்கிறது. அது ஆண் நெஞ்சில் வாழும் குழவியை தொட்டெழுப்புகிறது. மதநீரை விட நறுமணம் மிக்கது பால்மணம்.”

அச்சொற்களால் ஆடைகளையப்பட்டவர்கள் போல அவர்கள் இருளுக்குள் செல்ல விழைந்தனர். அமைதியைக் கொண்டு போர்த்திமூட விரும்பினர். தருமன் மட்டும் நிமிர்ந்து நோக்கினான். “ஐவருமே அவளைக் கண்டதும் காதல் கொண்டீர்கள். அவளை அடைவதுகுறித்து கனவுகண்டீர்கள். அவளை இளையவர் வென்றபோது நீங்களும் மகிழ்ந்தீர்கள். ஏனென்றால், நீங்கள் ஐவரும் ஒன்றென உணர்பவர்கள்.”

“ஐவரும் அவளை அடைய அன்னை ஆணையிட்டபோது உங்கள் அகம் கிளர்ந்தெழுந்தது. அவ்விழைவை நீங்கள் அஞ்சினீர்கள். ஆகவே அதை வெல்ல முயன்றீர்கள். அந்தப்பொறுப்பை உங்கள் அன்னையே ஏற்றதை எண்ணி அகமகிழவும் செய்தீர்கள். அவள் கரம்பற்றும்போது உங்கள் உள்ளம் குளிர்ந்தது. அவளுடன் மணமேடையில் நின்றபோது உங்கள் தலைகள் தருக்கி நிமிர்ந்திருந்தன” என்றான் பாணன். “எவரிடம் அதை ஒளிக்கவேண்டும்? அன்னையை குழவியர் நாடுவதிலென்ன பிழை?”

பாணனின் குரல் எழுந்தது. “பிரம்மனின் படைப்பில் நொய்மையானதன் மேல் அனைத்தையும் ஏற்றிவைக்கிறோம். இளவரசர்களே, காமத்தின் மேல் ஏற்றப்படும் எடையாலேயே அது பெருவல்லமை கொள்கிறது. அதை அறியுங்கள். அதை வழிபடுங்கள். அது தென்றல் மரத்திலென உங்களில் திகழட்டும். இந்தக் கிணைப்பறையை மீட்டி நாங்கள் நாடெங்கும் நடந்து பாடுவது இது ஒன்றையே.”

நகுலனையும் சகதேவனையும் நோக்கி பாணன் சொன்னான் “இளையோரே, நீங்களிருவரும் அவளில் கண்டுகொண்டதென்ன என்று என்னுள் வாழும் கவிஞன் சொல்லமுடியும். உங்களை விலக்கும் அன்னையை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள். அணைக்கும் அன்னையை விழைகிறீர்கள். உங்களை எண்ணும் அன்னையை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் எண்ணி ஏங்கும் அன்னையை விழைகிறீர்கள்.” அவன் சிரித்து தன் தொடையைத் தட்டினான். “வல்லமை வாய்ந்த அன்னையின் மைந்தர் எளிய பெண்களை காமுறுவதில்லை.”

தொடையிலேயே தாளமிட்டு பாடுவதுபோல பாணன் சொன்னான் “அவள் உங்கள் நெஞ்சத்தசையில் குத்திய முள். அவள் நிமிர்வு நடந்துபோகும் பாதையின் மரவுரி விரிப்பு நீங்கள். அப்பாதங்களை ஏற்று நீங்கள் அடையவிருப்பதே இப்பிறவியின் பேரின்பம். கொன்றுண்ணும் வேங்கையின் செவ்விதழ் கண்டு காமுறுகிறீர்கள். ஆம், காமத்தின் உச்சம் அதுவே.”

அவனில் ஒரு பித்து குடியேறியது. வெறித்த கண்களும் முகத்தில் நகைப்புமாக அவன் அர்ஜுனனை நோக்கி விரல் சுட்டினான். “பெண்களெனும் உடல்பெருக்கை அறிபவர் நீங்கள். இளவரசே, நீங்கள் விழிநோக்க அஞ்சும் ஒரு பெண்ணை விட்டு உங்கள் சித்தம் விலகாது. கட்டுத்தறியற்ற மாடு காட்டில் எதையும் மேயாதென்றறிக! உங்களுக்குள் என்றுமிருந்து பொசுக்கும் இந்நெருப்புத்துளியில் அறியும் காமத்தையே இனி அத்தனை பெண்ணுடல்களிலும் அறியவிருக்கிறீர்கள். தூண்டில் முள்ளில் மீன் இறுதிப்பேரின்பத்தை அடைகிறது.”

சிரித்தபடி பீமனை நோக்கினான் பாணன். “சித்தம் சலித்துக் கசந்து வழிய ஒவ்வொரு முறையும் நீங்களுணரும் உண்மை ஒன்றுண்டு வலியவரே, நீங்கள் வெறும் தசைத்திரள் மட்டுமே. உங்கள் தசைத்திரளை மட்டுமே அறியுமொரு பெண்ணிலிருந்து எப்படி விடுதலை கொள்வீர்கள்? அவள் எரியெனில் நீங்களல்லவா விறகு?”

தருமனை நோக்கி அவன் புன்னகைத்து “நான் சொல்லவிருக்கும் சொற்களை முன்னரே அறிந்துகொண்டுவிட்டீர்கள் மூத்தவரே. அறிவென்பது ஆடை. அணிகொண்ட ஆடை. வண்ணங்கள் விரிந்த ஆடை. சுற்றிச்சுழன்று கவ்வி இறுக்கி உங்களை நீங்களெனக் காட்டும் ஆடை. அவ்வாடைகள் அனைத்தையும் கழற்றும் இருவிழிகள் முன் வெற்றுடல் கொண்டு நிற்கவேண்டுமல்லவா நீங்கள்? உங்கள் மேல் கொட்டிச்சிதறிப்பெருகும் அவ்வருவியில் நீராடுவதைவிடப் பெரியதாக எதை உணரப்போகிறீர்கள்?” என்றான்.

தருமன் ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தடுத்து ஆழ்ந்த இன்குரலில் விறலி சொன்னாள் ”ஐந்து முலைக்காம்புகளால் குருளைகளுக்கு அமுதூட்டும் ஓநாய் என அவளை கொள்ளுங்கள். உங்கள் ஐவரையும் நிறைக்கும் கனிவு அவளிடமுள்ளது.” ஐவரும் அவளுடைய ஆழ்ந்த விழிகளை நோக்கினர். “ஐந்து மைந்தரை பெற்றெடுக்க முடியும் என்றால் ஐந்து ஆடவரை காதலிக்கவும் பெண்ணால் முடியும்” உரக்க நகைத்து அவள் சொன்னாள். “ஆயின் தன் முதற்குருளையைக் கிழித்து உண்டுதான் தன் முலைகளில் பால்நிறைக்கிறது ஓநாய்...”

“ஆம் இளவரசே, நீங்கள் ஐவரும் இளவரசியை அகத்துணையாகவும் கொள்வதே உகந்த வழி” என்றார் பத்ரர். “அதுவே பாஞ்சாலத்தின் முறை. ஐவரும் அதற்கான முறைமைகளை இன்றே வகுத்துக்கொள்ளுங்கள். அம்முறைமையை மீறாதவரை அனைத்தும் சீராகவே நடக்கும். ஒருவருடன் இருக்கையில் அவள் அவர் துணைவியென்றாவாள்.” தருமன் மீண்டும் ஏதோ சொல்ல வர கையசைத்து “இளவரசர்களே, இப்படித்துறையில் வந்தணைந்த கங்கையில் மட்டுமே நாம் நீராடுகிறோம். அவள் வந்த தொலைவும் செல்லும் இலக்கும் நாமறியாதவை” என்றார்.

பாண்டவர்கள் மீண்டும் தலைகுனிந்தனர். பீமன் பெருமூச்சுடன் கைகளைக் கட்டியபடி மீண்டும் மரத்தில் சாய்ந்துகொண்டான். பத்ரர் “இனி நான் சொல்வதற்கேதுமில்லை. ஆகும் முறைமை என்ன என்று விறலி சொல்வாள். அவளே அதற்கேற்றவள்” என்றபின் எழுந்துகொண்டார். பாணனும் எழுந்து தலைவணங்க அவர்கள் இருவரும் விலகிச்சென்றனர். அவர்கள் சென்று இருளில் மறைவதை தருமன் நோக்கினான்.

விறலி தன் கருமுலைகள் அசைய கண்களும் புன்னகையும் ஒளிர தன் குழல்கற்றையை மேலே தூக்கி கட்டினாள். ”முறைமையை நான் சொல்கிறேன் இளவரசர்களே. நானும் பெண் என்பதனால் இதுவே அன்னைக்கும் உகந்ததாக அமையுமென எண்ணுங்கள்” என்றாள். “வசந்தத்தை இளையவர் சகதேவனுக்கு அளியுங்கள். ஒவ்வொரு மலரும் இதழ்விட்டெழும் பருவம். தளிர்களும் சிறகுகளும் கூழாங்கற்களும் மாதர் விழிகளும் மலர்களாகும் மாதம். கந்தர்வர்களின் காலம். இளையோன் இருக்கும் முதிரா இளமைக்குரியது அது."

“கிரீஷ்மம் நகுலனுக்குரியது. ஏனென்றால் கோடையில் இளையோர் ஆற்றல் கொள்கிறார்கள். கோடைச்சூரியனும் இளையோனே. நிழல்களை எல்லாம் உறிஞ்சி உண்டு அவன் ஆற்றல் கொள்கிறான். வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் தளிர்விடும் காலம். இளந்தென்றல் வீசும் இனிய இரவுகளினாலான பருவம். அந்தியில் முல்லையும் காலையில் பாரிஜாதமும் மலரும் பொழுதுகளை வாழ்த்துவோம்."

“வர்ஷம் கார்முகில்களுக்குமேல் இந்திரனின் வஜ்ராயுதம் எழும் பருவம். உச்சிமலைப் பாறைகள் வானருவியிலாடிக் குளிர்ந்து கருக்கொண்ட முலைமேல் காம்புகள் என கருமை கொள்கின்றன. சாளரங்கள் தோறும் மழை வீசியடிக்கிறது. இருண்ட இரவுகளின் இனிய பூடகங்களை கிழித்து எடுத்து நோக்கி நகைக்கிறது மின்னல். மழைக்காலத்தை அர்ஜுனனுக்கு அளியுங்கள். இடியோசையால் வாழ்த்தப்பட்டவன் அவளுடன் அதை பகிரட்டும்” என்றாள் விறலி.

“சரத்காலம் பெருங்காற்றுகளால் ஆளப்படுகிறது. ஆலமரங்களை நடனமிடச்செய்யும் ஆற்றல் மிக்க கரங்களை வாழ்த்துவோம். அதை பீமனுக்கு அளியுங்கள்” என்று தொடர்ந்தாள். “பெரும்புயங்களால் வெல்லப்படமுடியாதவள் அவள் என அவள் உணரவேண்டுமல்லவா? காற்று கரும்பாறையை தழுவ மட்டுமே முடியுமென்று நிறுவப்படவேண்டுமல்லவா?” வெண்பற்கள் தெரிய நகைத்து “வெல்லும் கணம்போல பெண்ணை காமநிறைவடையச் செய்வது எது?” என்றாள்.

“ஹேமந்தம் இனியது. இருண்ட அந்திகள். மெல்லிய குளிர்காற்றுகளால் வாழ்த்தப்பட்ட இரவுகள். இனிய மென்சொற்களுக்குரிய பருவம் அது. சொல்லப்படும் ஒவ்வொன்றும் சிந்தையில் முளைக்கும். மூத்தவர் தருமனுடன் அவளிருக்கட்டும்” என்றாள் விறலி. “அச்சிரம் அவளை அறிதலில் அமரச்செய்யட்டும். புவியாளும் மைந்தர் அவள் கருவில் முளைக்கட்டும். தன் குலமறிந்த பெருங்கற்பையெல்லாம் அவள் அவர்களுக்கு அளிக்கட்டும்.”

“எஞ்சியிருப்பது சிசிரம். இருண்டது. குளிர்ந்து உறைந்தது. தனிமைக்குரிய அந்தப் பருவத்தை அவளிடமே விட்டுவிடுங்கள். பெண் மட்டுமே அறியும் காமம் என்பது அவளுள் எழுந்து அவளுள் அடங்குவது. அப்பருவத்தில் அவளை விண்ணளக்கும் தெய்வங்கள் அறியட்டும். யாழ்மீட்டிவரும் கந்தர்வர்கள் அறியட்டும். சொல்மீட்டி வரும் கின்னரர் அறியட்டும்” விறலி தெய்வமெழுந்ததென மெல்ல ஆடியபடி சொன்னாள்.

அவள் குரல் எழுந்தது “அந்நாளில் அவளில் விழியொளிரும் பாதாளநாகங்கள் அணையட்டும். நாபறக்க அவளுடைய இருளுக்குள் அவை சுருண்டு படமெடுக்கட்டும். பற்றி எரியும் அதலவிதலங்களில் இருந்து கரியபேருருவங்களுடன் ஆழுலகத்து தெய்வங்கள் எழுந்து வந்து அவளுக்கு அருளட்டும். அவர்களின் ஆற்றல்களால் அவள் வெல்லமுடியாதவளாக ஆகட்டும்.”

அணங்கெழுந்தவள் போல சொல்லிச்சொல்லி முன்குனிந்த விறலியின் குழல்கட்டு அவிழ்ந்து விழுந்து அவள் முகம் முழுமையாக மறைந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தனர். எழுந்தாடிய தீயில் விறகு வெடித்த ஒலி கேட்டு அவள் அதிர்ந்தாள். குழலை அள்ளி பின்னால் தள்ளிவிட்டு நிமிர்ந்து வெண்பல்நிரை ஒளிர புன்னகைத்தாள்.

“ஆம், நீ சொல்லும் நெறியை பேணுகிறோம். அது ஒன்றே வழி” என தருமன் மெல்லிய குரலில் சொன்னான். ”மெல்லிய குரலில் சொல்பவை அனைவருக்கும் கேட்கின்றன” என்றாள் விறலி நகைத்தபடி. “ஆண்மகன் அகத்தை அறிந்த விறலி நான். உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இப்போது ஓடுவது பிறநால்வரே” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் சீறியதும் கை நீட்டித் தடுத்து “ஆம்” என்றாள் விறலி. அவன் விழிதிருப்பி தலைகுனிந்தான்.

“பிறரை எண்ணலாகாதென்று எண்ணுகிறீர்கள். அது மடமை. எண்ணாதிருக்க இயலாது. எண்ணுவதை கட்டுப்படுத்தினால் ஏதும் அடையவும் இயலாது” என்று விறலி தொடர்ந்தாள். “எண்ணுக! ஒவ்வொருவரும் பிற நான்கு உடல்களிலும் புகுந்தாடுக! ஏனென்றால் நீங்கள் பிற அனைத்திலும் இதுவரை அவ்வண்ணமே இருந்தீர்கள். அர்ஜுனனுடன் வில் குலைத்தீர்கள். பீமனுடன் கதை சுழற்றினீர்கள். தருமன் அறிந்த மெய்மையெல்லாம் நீங்கள் ஐவரும் கொண்டதுதான். இளையோர் துள்ளித்திரிந்த தொலைவெல்லாம் பிறரும் சென்றீர்கள்.”

“பருவங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பருவத்திலும் வாழுங்கள். எப்போதும் ஒரு பருவம் எஞ்சியிருக்கிறது என்பதை உணருங்கள். அந்த இருண்ட கருவறைக்குள் ஒருபோதும் காலடி வைக்காதீர்கள். அங்கு போரிட்டுக்கொண்டிருக்கும் விண்தெய்வங்களும் இருளுலக தெய்வங்களும் எளிய மானுடரை விரும்புவதில்லை.”

“ஐந்தெனப் பிரிந்து அவளுடனிருங்கள். அவளோ ஐந்தையும் ஒன்றென ஆக்கி உங்களை அறிவாள்” என்று விறலி தொடர்ந்தாள். “பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக! உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும் நிறைக்கவும் எழுந்த பேரவா. ஐந்து முகம் கொண்டு எழுக அனல். ஐவருடனும் கூடியாடும் ஐந்து தேவியரை வணங்குகிறேன். ஐவரில் உறைந்து அனைத்தையும் நோக்கி அகன்றிருக்கும் அன்னை சண்டிகையை வணங்குகிறேன்.”

கைகூப்பியபின் விறலி எழுந்தாள். தலையைச் சொடுக்கி குழல்கற்றையை கையால் அள்ளிச் சுருட்டி கட்டிக்கொண்டாள். முலைமுகைகள் நடுவே அசைந்த கல்மணிமாலையில் செந்தழல் பட்டு கனலெனக் காட்டியது. எழுந்து நின்றபோது அவள் முகம் இருண்ட விண்ணில் இருந்து குனிந்து நோக்குவதுபோலிருந்தது.

பெருமூச்சுடன் எழுந்த தருமன் "உன் சொற்கள் இன்னும் நெடுநாட்கள் எங்கள் நெஞ்சில் முளைத்தெழுந்துகொண்டிருக்கும் விறலியே” என்றான். தன் கையிலிருந்த கணையாழியைக் கழற்றி “அவற்றுக்குரிய பொருள் அளிக்க அரசர்கள் எவராலும் இயலாதென்றாலும் இதை ஏற்றருள்க” என்று நீட்டினான்.

விழியில் அனல் தெரிய திரும்பிய விறலியைக் கண்டு அச்சம் கொண்ட தருமனின் கை தாழ்ந்தது. மெல்லிய குரலில் “தங்கள் கொடைசிறக்கட்டும் இளவரசே” என்று அவள் கை நீட்டினாள். அவள் விழிகளை நோக்காமல் அவன் அதை அவள் கைகளில் வைத்தான். சிலம்புகள் ஒலிக்க அவள் நடந்து செல்லும் ஒலியைக் கேட்டபடி எரிசெம்மையை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 1

நீலவண்ண உலோகத்தாலான மாபெரும் வில் என வளைந்து சென்ற கங்கையின் கரையில் நீர்வெளியை நோக்கித்திறக்கும் நூறு பெருஞ்சாளரங்களுடன் மலர்மரங்கள் செறிந்த சோலை சூழ அமைந்திருந்த காம்பில்யத்தின் இளவேனிற்கால அரண்மனையின் தென்றல்சாலையில் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். சாளரத்தின் பொன்னூல் பின்னலிட்ட வெண்திரைச்சீலைகள் கங்கைக்காற்றில் நெளிந்தாடிக்கொண்டிருக்க அறைக்குள் நீர்வெளியின் ஒளி மெல்லிய அலையதிர்வுடன் நிறைந்திருந்தது. வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதப்பட்ட மரச்சுவர்களும் ஏந்திய கைகள் என கூரையைத் தாங்கும் சட்டங்களுடன் நிரைவகுத்து நின்ற அணித்தூண்களும் அவ்வொளியில் நெளிந்தன.

நீர்வெளிக்கு அடியில் நீரரமகளிர் வாழும் அலையுலகில் அந்த மாளிகை அமைந்திருப்பதாக நினைவு வந்ததுமே அதை எங்கே படித்தோம் என்று எண்ணம் திரும்பியது. தேடியலைந்த சித்தம் கண்டுகொண்டதும் புன்னகையுடன் அவன் அசைந்தமர்ந்தான். வித்யாதரரின் புராணமாலிகையில் வரும் கதை அது. மிக இளமையில் அவனை அதிரச்செய்து கனவுகளில் மீளமீள நிகழ்ந்தது.

தோழருடனும் படைகளுடனும் கடலாட்டுக்குச் சென்ற மாளவ இளவசரன் அஸ்வகன் விடியற்காலையில் கடலோரமாக நடக்கும்போது மணலில் பதிந்து கிடந்த ஒரு செம்பவளத்தைக் கண்டான். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அது உயிருடன் அசைவதை அறிந்தான். அது அழகிய கன்னியிதழ்கள் என்று அவனுக்குத் தோன்றியது. தன் இதழோடு சேர்த்து முத்தமிட்டான்.

முந்தைய முழுநிலவிரவில் அலையாடி கரையணைந்து மணல்விளையாடிச் சென்ற நீரரமகளான ஜலஜையின் இடையணிந்த மேகலையில் இருந்து உதிர்ந்த செம்பவளம் அது. நீராழத்தில் நீந்திக்கொண்டிருந்த அவள் அந்த முத்தத்தை மேகலையிருந்த இடத்தில் அடைந்து மேனி சிலிர்த்தாள். பொன்மின்னலென நீரைப்பிளந்து மேலெழுந்து நீர்த்துளிகள் சிதற சிறகடித்து வந்து கரையணைந்தாள். பொன் மின்னும் அவள் தோள்களையும் ஒளிர்ந்து சொட்டிவிடுமெனத் ததும்பிய முலைத்துளிகளையும் சொல்லனைத்தும் கரந்த நீலவைரக் கண்களையும் கண்டு அஸ்வகன் அக்கணமே காமம் கொண்டான். அவன் இளமையழகும் அறியாமையின் பேரழகும் கண்டு அவள் பெருங்காமம் கொண்டாள்.

அவள் அவனை நீர்விளையாட அழைத்தாள். நீரரமகளிரைப்பற்றி இளமையிலேயே அவன் கேட்ட எச்சரிக்கைகளை எல்லாம் அவள் செவ்விதழ் நகையிலும் யாழிசைக் குரலிலும் அவன் மறந்தான். அவளுடைய தாமரைத்தண்டு என குளிர்ந்த கையைப் பற்றியபடி அலைகளில் புகுந்தான். அவள் தன் கைகளாலும் கால்களாலும் அணைத்தாள். மீன்மூக்குகளென முலைக்கண்களால் தீண்டி அவனை மயக்குறச் செய்தாள். செவ்விதழ் முத்தங்களால் சிந்தையழியச்செய்தாள். செயலோய்ந்து தன்னை அவளிடம் அளித்த அவனை நீர்ப்பளிங்கு வாயில்களை திறந்து திறந்து உள்ளே இழுத்துச்சென்றாள். காலால் தனக்குப்பின் நீர்த்திரைச்சீலைகளை மூடிக்கொண்டே போனாள். சூரியன் கலங்கி ஒளியிழந்து மறைந்தது. அலை வளைவுகளில் எழுந்த தேனிறமான ஒளியே அங்கே நிறைந்திருந்தது.

மூச்சுத்திணறி அவன் துடித்து மேலெழ முயன்றான். அவள் கைகள் அவனை செந்நிற வேர்கள் என பற்றி இறுக்கி ஆழத்துக்கு அழுத்திக் கொண்டு சென்றன. நீர் எடை கொண்டு இரும்புப் பாகு என அவனைச் சூழ்ந்தது. அவன் நெஞ்சுக்குள் புகுந்து விலாவெலும்புகளை உள்ளிருந்து உடைத்தது. அலறியபோது அவ்வோசை குமிழிகளாகி கண்முன் ஒளிவிட்டுச் சுழன்று மேலெழுந்து செல்வதைக் கண்டான். நீர்ப்பரப்புக்கு மேல் வந்து வெடித்த குமிழிகளில் இருந்து அஸ்வகனின் ‘அன்னையே!’ என்ற ஓலம் எழுந்ததை மீன்பிடித்த செம்படவர்கள் கேட்டனர். அகமிரங்கி அவர்கள் கண்ணீர் வடித்தனர்.

தன் அகம் தனித்தனிச்சொற்களாகப் பிரிந்து கிடப்பதை அவன் கண்டான். ஒவ்வொரு சொல்லும் அவனிடமிருந்து நழுவி உதிர்ந்து பல்லாயிரம் குமிழிகளாகி சுழன்று ஒன்றுடன் ஒன்று மோதி இணைந்தும் வெடித்தும் சிரித்தபடி விலகிச்சென்றன. பின்னர் ஒரு பெரும் குமிழியாக அவன் உயிர் மேலெழுந்தது. தன் உயிரை தன்னெதிரே கண்டு அவன் புன்னகைத்தான். நுண்ணிய வண்ணங்களுடன் அது சுழன்று மேலெழுந்தபோது அவன் விழிகள் மீன்விழிகளாகி இமைப்பழிந்தன. அக்குமிழி தலைக்குமேல் அலையடித்த வானத்தில் சென்று சூரியனாக வெடிப்பதை காலமில்லாது நோக்கிக் கொண்டிருந்தான். நீர்ச்சூரியனின் அலைவளையங்கள் மறைந்தபோது அவன் தன்னுடல் எடையற்றிருப்பதை உணர்ந்தான்.

கீழே கடலாழத்தில் தரைதொடாமல் அலைகளில் ஆடித்ததும்பியபடி நின்றிருந்த பெருமாளிகைக்கு மேல் அவன் கடல்பாசிச் சரடு போல மிதந்திறங்கினான். அந்த மாளிகை வெள்ளிச்சுவர்களும் ஒற்றைப் பொற்கதவமும் கொண்டு பெருமீன் ஒன்றின் வடிவில் இருந்தது. அதன் விழிகள் இரு குவியாடிகள் போல அணுகி வரும் அவனை மட்டும் காட்டின. அவன் உள்ளே நுழைந்ததும் புன்னகையுடன் பெருங்கபாடம் மூடிக்கொண்டது.

ஒளிவிடும் சிறிய மீன்களே சுடர்விளக்குகளாக எரிய செவ்வொளியும் நீலஒளியும் நிறைந்த அறைகள் வழியாக அவன் அவளுடன் மிதந்து சென்றான். அம்மாளிகைக்கு கூரையென்றும் தரையென்றும் ஏதுமிருக்கவில்லை. அதன் அறைகளெங்கும் நீரலைகளே சுவர்களாக, பீடங்களாக, மஞ்சங்களாக, திரைச்சீலைகளாக உருக்கொண்டிருந்தன. தேவருலக அக்கசாலை சிதறியதென பொன்னும் வெள்ளியும் செம்பும் மின்னும் கோடிப் பரல்கள் அவனைச்சூழ்ந்து சுழன்றன.

முன் சென்ற நீர்மகளின் அகங்கால்கள் இரு விளக்குகளென அவனுக்கு வழிகாட்டின. தன் அகங்கைகள் செந்நிற ஒளிகொண்டிருப்பதைக் கண்டான். அவள் மெல்லிய குரலில் பாடியதை அலையலையாக அவன் கண்டான். அக்குரல் கேட்டு நீர்மாளிகையின் இருண்ட அறைகளில் இருந்து நீலச்சிறகு உலைத்து எழுந்துவந்த பல்லாயிரம் நீரர மகளிர் இனிய யாழ்மீட்டலுடன் அவனை சூழ்ந்துகொண்டனர். இமையாவிழிகளின் விண்மீன் பெருக்கு. திறந்த வாய்களின் பவழமலர் வசந்தம்.

அவர்கள் மென்மையான விரல்களால் அவனைப்பற்றி ஆழத்திலிருந்து ஆழத்துக்கு கொண்டு சென்றனர். அவனுக்கான அழகிய அலைமஞ்சத்தில் அவனை அமர்த்தினர். அவனைச் சூழ்ந்து சிரித்தும் துள்ளிக்குதித்து அலையிளக்கியும் நெளிந்தும் வளைந்தும் அவர்கள் சுழன்றாடினர். நீரிலிருந்து அவர்களின் உடல்கள் கற்றுக்கொண்ட குழைதல்கள். அஃகியும் விரிந்தும் அணைத்தும் துழன்றும் அவை கொள்ளும் நடனங்கள். .ஒளியே அசைவாகும் விந்தை. அசைவே பொருளாகும் மாயம்.

அவனிடம் நீராலான ஆடி ஒன்றை காட்டினாள். அவன் அதை வாங்கி தன் முகத்தை நோக்கி திகைத்தான். அவன் மீனுருவம் கொண்டிருந்தான். செவிகள் செவுள் அடுக்குகளாக மாறிவிட்டிருந்தன. இமையற்ற விழிகள் மணிகளென உறைந்திருந்தன. ஆடியைத் திருப்பி அவன் மறுபக்கத்தை நோக்கியபோது நெடுந்தொலைவில் என தன் அன்னையையும் தந்தையையும் கண்டு ஏங்கி கண்ணீர் விட்டான்.

அவள் அவன் தோளை தன் கொடிக்கைகளால் வளைத்து ‘வருந்தவேண்டாம். அவர்கள் உன் கொடிவழிப்பேரர்கள். அங்கே கரையில் நூற்றாண்டுகள் கடந்து விட்டன. தலைமுறைகள் பிறந்திறந்து முளைத்துவிட்டன. இங்கே ஆழத்தின் பேரழுத்தம் காலத்தை சுருக்கி செறிவாக்கியிருக்கிறது. எண்ணங்களை மாத்திரைகளாக ஆக்கிவிட்டிருக்கிறது. இங்கே மலைகள் கூழாங்கற்கள் என்று அறிக. இங்கிருப்பதுதான் அமரத்துவம்' என்றாள். அவன் ஆடியை தன் நெஞ்சோடு சேர்த்து விம்மினான். அப்போது அறிந்தான் அந்தத்துயரும் பல்லாயிரம் மடங்கு செறிவுகொண்டிருப்பதை.

அறைச்சுவர்களில் கொடிகளும் இலைகளும் மலர்களுமாக பின்னி விரிந்திருந்த சித்திரக்கோலம் அலையொளியில் நெளிந்து நீர்ப்பாசிப்படலமென விழிமயக்கு காட்டியது. தருமன் தன் அகங்கைகளைத் தூக்கி பார்த்துக்கொண்டான். விரல்கள் அசைந்து நீர்ப்பாசி முனைகள் என நெளிவதுபோல் தோன்றியதும் எழுந்து நின்றான். சாளரம் வழியாக கங்கையின் பெருக்கை நோக்கியபோது தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். என்ன என்ன என்று தவித்த சித்தம் எங்கோ முட்டிக்கொண்டதும் உடல் தவித்து அறைக்கதவைத் திறந்து அங்கே நின்றிருந்த பாஞ்சாலத்தின் சேவகனாகிய சிசிரனிடம் “எனக்கு ஒரு படகை சித்தப்படுத்து... உடனே” என்றான்.

சிசிரனின் விழிகள் சற்றே மாறுபடுவதைக் கண்டு “ஒரு சிறு பயணம். துர்வாசரை கண்டு மீள்கிறேன்” என்றான். சிசிரன் “மாலையாகிவிட்டது இளவரசே. அங்கே செல்வதற்குள் இருட்டிவிடும். இன்று முழுக்கருநிலவு நாள். இருளில் மீள்வதும் கடினம். இன்றிரவு...” என்றான். தருமன் சினத்துடன் “இது என் ஆணை...” என்றான். சிசிரன் தலைவணங்கி வெளியே சென்றான். தருமன் மீண்டும் அறைக்குள் வந்தான். அதுவரை இருந்த சோர்வு விலகி உடலெங்கும் பரபரப்பு குடியேறியிருப்பதை அறிந்தான். அப்போதுதான் ஒன்று தோன்றியது, நினைவறிந்த நாள்முதலாக அவன் தனித்து எங்கும் சென்றதில்லை.

மறுகணமே அச்சம் எழுந்து நெஞ்சை நிறைத்தது. படகிலேறி கங்கையின் மறுபக்கம் செல்லலாம். அங்கே சதுப்புக் காடுகளை வகுந்துசெல்லும் பாதை இருக்கிறது. அதற்கப்பால் வயல்வெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள். அதற்கப்பால் மீண்டும் காடுகள். மீண்டும் ஏகசக்ரபுரிக்கே சென்றுவிட்டாலென்ன என்று எண்ணிக்கொண்டதுமே அந்த முடிவை முன்னரே அகம் வந்தடைந்திருந்தது போல் தோன்றியது. பல ஊர்களில் இருந்து அதை அகம் தெரிவுசெய்யவில்லை. அவ்வூர் மட்டும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது போல. ஏகசக்ரபுரியில் அவனை வைதிகனாக எண்ணுவார்கள். அவனுக்கு உணவும் உறைவிடமும் அளிப்பார்கள். அங்கு எவரும் வரப்போவதில்லை.

கணநேரத்தில் அவன் ஏகசக்ரபுரியில் வாழ்ந்து முடித்துவிட்டான். மணந்து தந்தையாகி முதியவனாகி நூல்கற்று கற்றதையெல்லாம் முற்றிலும் மறந்து அமர்ந்திருந்தான். அச்சலிப்பை ஒரு கணத்திற்குள் அடையமுடிந்த விந்தையை எண்ணி மறுகணம் புன்னகைத்துக்கொண்டான். அங்கு வாழ்வதைவிட அங்கு செல்வதற்கான பயணம் கிளர்ச்சியளித்தது. பறக்கும் மேலாடையுடன் தனித்த காட்டில் அவன் நடந்துசெல்வதை அவன் கண்டான்.

மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு அருகே இருந்த அறைக்குச் சென்று சிறிய பேழையைத் திறந்தான். கையளவுக்கு பொன், வெள்ளி நாணயங்களை அள்ளி கிழியாகக் கட்டி இடைக்கச்சையில் வைத்துக்கொண்டான். இலச்சினை மோதிரத்தையும் சிறிய குத்துக்கத்தியையும் எடுத்து செருகிக்கொண்டு படிகளில் இறங்கி அறைக்கு வெளியே வந்தான். இடைநாழியிலேயே பாதை தொடங்கிவிட்டதைப்போல் உணர்ந்தான். பதற்றத்தில் மூச்சிரைக்கத் தொடங்கியது.

படிகளில் இறங்கியபோது சிசிரன் மேலே ஏறிவந்தான். தலைவணங்கி “படகு சித்தமாக இருக்கிறது இளவரசே” என்றான். தருமன் தலையசைத்துவிட்டு அவனைக் கடந்து சென்றான். அரண்மனையின் பெருமுற்றம் நீண்டு படிகளாக மடிந்திறங்கி கங்கை நீரோட்டத்தை அடைந்தது. படித்துறையின் வலது ஓரத்தில் மரங்களை கால்களாக ஊன்றி நீண்டு வெட்டுண்ட சாலை என படகுத்துறை நின்றது. அங்கே பாஞ்சாலத்தின் கொடிபறக்கும் அணிப்படகு ஒன்று ஆடி நின்றது. படகோட்டிகள் இருவர் குதித்து அதன் கயிற்றை அவிழ்த்துக்கொண்டிருந்தனர்.

இளஞ்சிவப்பு நிறமான ஏழு அணிப்பாய்களுடன் படகு இதழ்விரியாத செந்தாமரை போலிருந்தது. மேலே விற்கொடி கங்கைக்காற்றில் சிறகடித்தது. அதை நோக்கியபடி சிலகணங்கள் நின்ற தருமனின் உடல் தளர்ந்தது. கொடிபறக்கும் அணிப்படகில் ஒளிந்தோடும் ஒருவனைப் பற்றி எண்ணியதும் அவன் உதடுகளை கோடச்செய்தபடி புன்னகை எழுந்தது. திரும்பி மீண்டும் அரண்மனையின் படிகளில் ஏறியபோது உடலின் எடை முழுக்க காலை அழுத்தியது.

சிசிரன் வாயிலில் நின்றான். “படகு தேவையில்லை” என்று சொன்னபடி தருமன் அரண்மனையின் முகக்கூடத்திற்குள் நுழைந்து மேலே சென்றான். படிகளில் ஏறி மீண்டும் தென்றல்சாலையை அடைந்து உள்ளே நுழையாமல் நோக்கி நின்றான். கை மடியில் இருந்த நாணயப் பொதியை தொட்டது. மீண்டும் புன்னகை செய்துகொண்டான். பொதியில் நாணயங்களுடன் இல்லம் விட்டுச் செல்பவன் எத்தனை தொலைவு சென்றுவிடமுடியும்?

பொதியை எடுத்து பீடம் மீது வைத்தான். பின் இலச்சினை மோதிரத்தை. பின்னர் குறுவாளை எடுத்தபோது அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஷத்ரியனும் பிராமணனும் வைசியனுமான ஒருவன். அடையாளங்கள் கூரைகளைப்போல. அவற்றைத் துறந்துசெல்ல உள்ளம் விடுபட்டிருக்கவேண்டும். பின் அவன் நெடுமூச்சுடன் சாளரம் வழியாக கங்கை நோக்கி நின்றான். ஒளிபெருகிச் சென்ற கங்கை. அதன் அலைகளில் இனிய, மகத்தான, எப்போதும் மானுடனைத் தோற்கடிக்கக்கூடிய ஒன்று இருந்தது.

திரும்பி இடைநாழியில் நடந்தான். சூரியதேவரின் பிரஹதாங்கப்பிரதீபத்தின் ஏழாவது அங்கத்தின் சுவடிகளை கொண்டுவந்திருந்தான். அதை எடுத்து வாசிக்கலாம். தேஜோமயரின் சிற்பரத்னாவளி இருந்தது. ஆனால் அப்போது நூல்களை எண்ணியபோதே அகம் சலித்து விலகிக் கொண்டது. ஊழிப்பசி கொண்டவன் என அள்ளி உண்ட நூல்களெல்லாம் கருங்கல் துண்டுகளென பொருளற்றுப்போவது ஏன்? நூல்களை நோக்கி மூடிக்கொள்ளும் அகவாயில் என்ன?

மாளிகையைச் சுற்றிவந்த இடைநாழி கங்கையை நோக்கித்திறந்த உப்பரிகையை வந்தடைந்தது. அங்கே கங்கை நேர்கோடாகத் தெரிந்தது. கங்கையை நோக்கி நின்றபோது அது மெல்ல மெல்ல அணைந்து வருவதாக அறிந்தான். விண்ணில் முகில்களும் ஒளியணைந்து உருத்திரண்டுகொண்டிருந்தன. நீலநிறமான ஒரு பெரும் சால்வை. இல்லை, நீளமான ஒரு ஓலை. இன்னமும் எழுதப்படாதது. அல்லது எத்தனை எழுதினாலும் அழிந்தழிந்து செல்வது. பல்லாயிரமாண்டுகளாக முனிவர்கள் தவத்தாலும் வீரர்கள் குருதியாலும் எளிய மானுடர் கண்ணீராலும் அதில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வீண் எண்ணங்களால் அகத்தை நிறைத்துக்கொண்டு இத்தனைநாள் வாழ்ந்திருக்கிறேன். இப்படியே எஞ்சிய வாழ்க்கையையும் முடித்து முன்செல்வேன். இதுவன்றி புறத்து ஒரு மெய்வாழ்க்கை எனக்கு நிகழப்போவதில்லை. எண்ண எண்ண அத்தன்னிரக்கம் பெருகியது. அது வீண் உணர்வு என்றறிந்தபோதும் அதன் இனிமையால் அவன் அதில் திளைத்தபடி அங்கிருந்தான். பின் சிந்தையில் ஓர் எண்ணம் எழுந்தது. மாலைநேரம்தான் தன்னிரக்கத்தை உருவாக்குகிறதா? இல்லை தன்னிரக்கத்தால் மட்டுமே மாலையை முழுமையாக சுவைக்கமுடியும் என அகம் அறிந்து அந்நாடகத்தைப் போடுகிறதா?

சிசிரன் வந்து பின்னால் நின்றான். தருமன் திரும்பாமலேயே “ம்?” என்றான். “ஒப்பனையாளர்கள் வந்துள்ளனர்” என்றான். ஒருகணம் அனைத்துத் தளைகளையும் உடைத்துக்கொண்டு எழுந்த சினத்தை அடக்க அவன் விரல்களை இறுக்கிக் கொண்டான். பின் பற்களைக் கிட்டித்தபடி “அவர்களிடம் சென்றுவிடும்படி ஆணையிட்டேன் என்று சொல்” என்றான். சிசிரன் அங்கேயே நின்றான். “சொல்” என்றான் தருமன். "அது முறைமை அல்ல...” என்றான் சிசிரன்.

சற்று நேரம் கழித்து தோள்களை தளர்த்திக்கொண்டு “வரச்சொல்” என்றான். எழுந்து சால்வையை சுற்றி அணிந்தபடி நடந்தான். அணியறையில் அவன் நுழைந்தபோது அங்கே மூன்று இருபாலினர் அவனுக்காக ஒப்பனைப்பொருட்களை பரப்பி சீர்செய்துகொண்டிருந்தனர். இரு அனலடுப்புகளில் நறுமண எண்ணையும் செங்குழம்பும் கொதித்துக்கொண்டிருந்தன. அவன் காலடியோசை கேட்டு விழிதூக்கி நோக்கினர். கண்களுக்கு மையிட்டு உதடுகளில் செம்மை தீட்டி முகத்திற்கு நறுஞ்சுண்ணம் பூசி அணிசெய்திருந்தனர்.

கால்வரை நீண்ட செம்பட்டு அந்தரீயமும் உடலை வளைத்துச்சென்ற உத்தரீயமும் சுற்றி, காதுகளில் பெரிய பொற்குழைகளும் கைமுட்டு வரை பொன்வளையங்களும் அணிந்த மூத்தவர் அவனை நோக்கித் திரும்பி நடனம்போல வணங்கி "அஸ்தினபுரியின் இளவரசை வணங்குகிறேன். ஒப்பனைக்கலை அறிவையாகிய என்பெயர் மிருஷை. இவர்கள் என் மாணவிகள். காருஷை, கலுஷை” என்றார். தருமன் “வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களால் மங்கலம் நிறைவதாக!” என்றான்.

மிருஷை புன்னகையுடன் “அமருங்கள் இளவரசே. பேரறச்செல்வன் என்று தங்களை அறிந்திருக்கிறேன். தொடவும் அணிசெய்யவும் வாய்ப்பளித்தமைக்கு தெய்வங்களுக்கு நன்றி சொல்வேன்” என்றார். தருமன் அவர் சுட்டிய பீடத்தில் அமர்ந்துகொண்டு “இது முறைமை என்பதனால் வந்தேன் சமையரே. உடலை அணிசெய்து கொள்வதென்றாலே கூசுகிறது” என்றான்.

மிருஷை சிரித்து “அணிசெய்துகொள்வதா, இல்லை உடலை அணிசெய்துகொள்வதா? கூசச்செய்வது எது?” என்றார். தருமன் நிமிர்ந்து நோக்கி “உடலை அணிசெய்வதுதான்...” என்றான். “இளவரசே, எதைக்கொண்டு உள்ளத்தை அணிசெய்கிறீர்கள்?” என்றார். அவரது மெல்லிய வெண்கரங்கள் அவன் மேலாடையைக் களைந்து அகற்றியது ஒரு நடனம்போலிருந்தது. “சொற்களால்” என்றான் தருமன். “கற்கும்தோறும் சொற்கள் கூர்மையும் ஒளியும் கொள்கின்றன. குறைவாகக் கற்றவர்கள் வெள்ளியணிகள் போல் நகைபூணுகிறார்கள். கற்றுக் கனிந்தவர்கள் வைரங்களை அணிகிறார்கள்.”

மிருஷை அவன் கீழாடையை கழற்றி விலக்கினார். அவன் குண்டலங்களையும் கங்கணத்தையும் கழலையும் ஆணியைத் திருகி விரித்து எடுத்து அகற்றினார். அவன் உடலில் அவரது மென்மையான விரல்கள் இசைமீட்டுபவை போல வருடிச்சென்றன. கலுஷை அவன் இடக்கையை பற்றி தன் மடியில் வைத்து நகங்களை நீள்வட்டங்களாக வெட்டினாள். சிறிய அரைவட்டக் கீற்றுகளாக உதிர்ந்த நகங்களை நோக்கி அவன் விழி விலக்கினான்.

மிருஷை இனிய புன்னகையுடன் “அவ்வணி ஏன் உடலுக்குத் தேவையில்லை என எண்ணுகிறீர்கள்?” என்றார். தருமன் “என் உடல் நான். அதை நான் இன்னொன்றாக மாற்றிக்கொள்வதை வெறுக்கிறேன்” என்றான். மிருஷை “இளவரசே, உங்கள் உள்ளமும் அப்படித்தானே? கல்லாதோன் ஒருவன் நெஞ்சிலிருந்து சொல்லும் சொல்லுக்கு நிகராகாது உங்கள் சொல்லணி என்றால் அதை ஏற்பீர்களா?”

தருமன் சிந்தித்துவிட்டு “ஆம், அதை எளிய சொல்லாடல்களில் பலரும் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்பவர் எதையும் மறைக்காமல் இருக்கும் எளிய சிந்தை கொண்டவர் என்றோ அவ்வெளிமையை விரும்புபவர் என்றோ பொருள் வருகிறது” என்றான். “ஆனால், அவ்வண்ணம் உள்ளத்தை உள்ளபடி சொல்ல பிறமானுடருடன் கூடிவாழும் எவராலும் இயலாது. ஒவ்வொரு மானுடக்குழந்தையும் குடியிலும் குலத்திலும் கூடிவாழும் கல்வியைப் பெற்றதுதான்... புறவுலகை அறியாத பழங்குடியினர் சிலர் பிற மானுடரிடம் மட்டும் ஓரளவு அப்படி பேச முடியும். தனித்து குகைவாழும் சித்தர்கள் பேசமுடியும்.”

காருஷை அவன் கால்நகங்களை மிகச்சிறிய வெள்ளிக்கத்தியால் பிறைவடிவில் வெட்டினாள். நகத்தின் இடுக்குகளைச் சுரண்டியபின் பளிங்குக்கல் உருண்டையால் நகங்களை உரசி ஒளிரச்செய்தாள். மிருஷை குனிந்து “மான்கண் என நகம் ஒளிரவேண்டுமென்பது நூல் நெறி” என்றார். தருமன் குனிந்து நோக்கி புன்னகை செய்தான். “சொல்லுங்கள் இளவரசே” என்றார் மிருஷை.

"ஆனால் அவ்வெளிய பேச்சு இனியதாக இருக்காது. பயன்தருவதாக இருக்காது. அறிவார்ந்ததாகவும் இருக்காது" என்று தருமன் தொடர்ந்தான். “ஏனென்றால் காட்டிலுள்ள அத்தனை கனிகளையும் உண்ணும் விலங்கு ஏதுமில்லை.” மிருஷை கை காட்ட அவரது மாணவிகள் நறுமண நன்னீரில் நனைத்த மென்பஞ்சுப் பொதியை அளித்தனர். அவர் அதை அவன்மேல் மெல்ல ஒற்றி உழிந்து சென்றார். தருமன் புன்னகையுடன் “சமையரே, மானுட உடல் ஆடையின்றி நிற்க முடியும். உள்ளம் ஒருபோதும் ஆடையின்றி நிற்கமுடியாது” என்றான்.

“அணிகளினூடாக நீங்கள் செய்வதென்ன இளவரசே?” என்றார் மிருஷை. “உள்ளமென்பது உள்ளே கரந்த அறியப்படாமை சமையரே. அதில் இருந்து நான் அத்தருணத்திற்குரியதை அள்ளுகிறேன். அதைப் பெறுபவருக்காக சமைக்கிறேன். அங்கு அக்கணம் திகழும் என்னை முற்றிலும் முன் நிறுத்துவதாக அதை வைக்கிறேன்.” காருஷை அவன் முதுகையும் கலுஷை அவன் கால்களையும் வெந்நீர்ப்பஞ்சால் துடைத்தார்கள். மிருஷை அவன் மார்பையும் தோள்களையும் துடைத்தார்.

அவர் நெற்றிக்கூந்தல் அவன் மார்பின் மேல் பட்டபோது அவன் அதை எடுத்து அவர் காதுகளில் செருகினான். மிருஷை நிமிர்ந்து நோக்கி புன்னகைசெய்தார். அவரது புன்னகையின் அழகை அப்போதுதான் தருமன் உணர்ந்தான். மானுடரனைவரையும் விரும்புபவர்களுக்குரிய புன்னகை அது.

மிருஷை “நான் சொல்லவிழைவதை சொல்லிவிட்டீர்கள் இளவரசே” என்றார். “உள்ளத்துக்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் நான் உடலுக்கு சொல்கிறேன். உடல் பருப்பொருளாக தன்னை வெளிப்படுத்தியிருக்கும் அறியபப்டாமை. இங்கே இப்படி இவ்வாடலை நிகழ்த்த எண்ணிய தெய்வங்களால் உருவாக்கப்பட்ட வடிவம். ஒவ்வொரு உடலும் விண்மொழி ஒன்றின் ஓர் எழுத்து என்றறிக!”

தருமன் அவர்களின் கைகள் தன் உடலை மெழுகு என குழைப்பதாக உணர்ந்தான். அவன் உடலை தேய்த்துத்தேய்த்து மெருகேற்றினார்கள். அங்கே புத்தம்புதியவனாக அவனை வனைந்து எடுத்தார்கள். மிருஷை அவன் மீசையின் நரைமுடிகள் சிலவற்றை களைந்தார். அவரது உடலின் ஒவ்வொரு அசைவிலும் நடனமிருந்தது. அது இயல்பாகவே அவரில் கூடியது.

“ஆகவே உடலில் இருந்து அக்கணத்திற்குரிய உடலை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதை அடைபவருக்காக அதை சமைக்கவேண்டியிருக்கிறது. அக்கணம் திகழும் உங்களை முழுமையாக அது காட்டியாகவேண்டியிருக்கிறது. அணிசெய்வது அதற்காகவே” என்றார் மிருஷை. “இளவரசே, அணியென்பது என்ன? ஒரு தருணத்திற்காக உடலை மாற்றியமைத்துக் கொள்வது மட்டும்தானே? மரங்கள் மலரணிவது போல. காட்டெருதின் கன்னம் சிவப்பதுபோல. மலைகள் மேல் பசும்புல் படர்வதுபோல.”

தருமன் சிரித்து “இம்மறுமொழியை முன்னரே அடைந்திருப்பீர் என நினைக்கிறேன் மிருஷை” என்றான். “என் சொற்கள் வழியாக அங்கே சென்றுசேர்ந்து விட்டீர்.” மிருஷை குரல்வளை தெரிய உரக்கச் சிரித்து “இல்லை, இளவரசே, ஒவ்வொருமுறையும் புதிய சொற்கள் வழியாக அதை கண்டடைகிறேன். இம்முறை உங்கள் சொற்கள்” என்றார்.

தருமன் ”இன்று உமது அழகிய சிரிப்பால் என் நாள் அழகுண்டது. காலையில் இவ்வாழ்க்கைமேல் நான் இழந்திருந்த ஈர்ப்பை மீட்டளித்தீர்” என்றான். மிருஷை “உங்கள் விழிகளில் விலக்கம் இல்லை இளவரசே. நீங்கள் மானுடரை நிகரெனக் காண்பவர் என்று சொன்ன சூதர்களை வணங்குகிறேன்” என்றார். "சொல்லும், அத்தனை அசைவுகளிலும் கூடும் இந்த நடனத்தை எங்கு கற்றீர்?” என்றான் தருமன்.

“உள்ளத்தில் எப்போதும் நாதமிருக்கிறது இளவரசே” என்றார் மிருஷை. “இளவயதிலேயே அதை நான் உணர்ந்துகொண்டேன். அதை நான் இசை என்றேன். என் குடியினரும் ஊரினரும் பெண்மை என்றனர். இரண்டையும் நான் ஏற்றுக்கொண்டேன். இப்புவியெங்கும் நிறைந்துள்ள அழகென்பது மென்குழைவே. அதையே என் உடலாகவும் அசைவுகளாகவும் கொண்டேன்.”

கலுஷை எடுத்துத் தந்த தந்தச்செப்பைத் திறந்து உள்ளிருந்து கஸ்தூரிமணம் எழுந்த நறுமணத் தைலத்தை மென்பஞ்சால் தொட்டு தருமனின் உடலெங்கும் ஒற்றத்தொடங்கினார். காருஷை அவன் குழல்கற்றைகளைப் பற்றி அருகே அனலடுப்பில் கொதித்த நறுமண எண்ணையை சிறிய தூரிகையால் தொட்டு அதில் பூசி மெல்லிய மூங்கில்களில் தனித்தனியாகச் சுற்றி முறுக்கியபின் அவற்றைச் சேர்த்துக்கட்டினாள்.

“உங்கள் அணிக்கோலத்தை ஆடியில் பாருங்கள் இளவரசே. உங்கள் உடல் சொல்லும் ஒரு செய்தியை உள்ளமும் உணரக் காண்பீர்கள். ஒரு மலரைக் கொய்து குழலில் சூடிக்கொண்டால் வசந்தத்தில் நுழையலாம். ஒரு பனித்துளியை எடுத்து விழியிமைகள் மேல் விட்டுக்கொண்டால் சிசிரத்தை தழுவிக்கொள்ளலாம். உடல் வழியாக உலகை அறிவதைப்போல எளியது பிறிதில்லை” என்றார் மிருஷை.

அவன் காதுகளில் புதிய குண்டலங்களையும் கைகளில் புதிய கங்கணத்தையும் மிருஷை அணிவித்தார். ”காமத்தை அறிய உடலொன்றே வழி என்று உணருங்கள். உடலிடம் உள்ளத்தை ஒப்படையுங்கள். தெய்வங்களுக்கு விருப்பமானது காமம். ஏனென்றால், அங்கேதான் தெய்வங்களிடமிருந்து கற்றவற்றை மட்டும் மானுடர் நிகழ்த்துகிறார்கள்.” தருமன் தலைகுனிந்தான்.

அவன் தோள்களிலும் முகத்திலும் நறுஞ்சுண்ணத்தை மென்மையாகப் பூசியபடி மிருஷை கேட்டார் “உங்கள் துயர் என்ன இளவரசே?” தருமன் நிமிர்ந்து அவரை நோக்கி “சமையரே, கனிந்தவர் நீர். நீரே சொல்லும். ஒரு பெண்ணை உடலென அள்ளி நுகர்பவன் அவளை அவமதிக்கிறான் அல்லவா? தெய்வத்தை கல்லென பயன்படுத்துவது போன்றதல்லவா அது?” என்றான்.

மிருஷை சிரித்து “இச்சொற்கள் முதிரா இளமையில் ஆண்கள் கேட்பது இளவரசே. முதிரிளமையில் நீங்கள் கேட்கிறீர்கள். இதற்கு மொழியிலெழும் விடையென ஏதுமில்லை. உடலே இதை உங்களுக்கு விளக்கும். இரவு வரை காத்திருங்கள்” என்றார். தருமன் “சொல்லும்” என்றான். “ஆணுக்கு காமத்தை பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் கற்பிக்கவேண்டுமென்பதே நெறி” என்று அவர் மீண்டும் சிரித்தார்.

தருமன் அவரது நகைக்கும் விழிகளை நோக்கி “விழுங்கப்படுவேனா நான்?” என்றான். “இளவரசே, அதையும் நீங்களே ஆழ்ந்து சென்று அறியவேண்டியதுதான்” என்றார் மிருஷை. உருகிய தேன்மெழுகின் மெல்லிய விழுதை கழுதை வால்முடித் தூரிகையால் தொட்டு அவன் மீசையில் பூசி தூரிகையாலேயே நீவி பின்பு வெண்கலக் கம்பிகளால் முறுக்கி கூர்மையாக்கினார். சிறிய எலிவால் தூரிகையால் பலமுறை நீவி ஒளியூட்டினார்.

சிலகணங்களுக்குப்பின் தருமன் சிரித்தான். “ஆம், இவ்வினாக்கள் எதற்கும் பொருளில்லை.” மிருஷை அவன் கால்களில் சூடான நறுமணச் சாந்தைப்பூசி பஞ்சுச்சுருளால் நீவித்துடைத்தார். இறுதியாக அவன் நெற்றியில் புனுகு கலந்த சந்தனமஞ்சளால் பிறைக்குறி தொட்டார். மூங்கில் குழல்களை ஒவ்வொன்றாக காருஷை உருவி எழுத்தபோது அவன் குழல் புரிசுருள்களாக தோளில் விரிந்து கிடந்தது. அவர் திரும்பி நோக்க காருஷை ஆடியைக் கொண்டுவந்து அவன் முன் காட்டினாள்.

தருமன் தன் முகத்தை நோக்கியதும் புன்னகைசெய்தான். “சொல்லுங்கள் இளவரசே” என்றார் மிருஷை. “ஆடியில் தெரிவது என் இளையோன் பார்த்தன்” என்றான் தருமன் சிரித்துக்கொண்டே. மிருஷை வெடித்துச்சிரித்து “உங்கள் உள்ளிருந்து அவரை வெளியே எடுத்து விட்டேன்” என்றார். தருமன் “என் முகத்திற்கு அவன் முகம் இத்தனை அணுக்கமென்று இப்போதுதான் அறிந்தேன்” என்றான். “எப்போதும் எதிர்பாராத முகங்கள்தான் வெளிவருகின்றன இளவரசே. தாங்கள் எதிர்பார்த்த முகமென்ன என்று சொல்லவா?”

புன்னகை எஞ்சிய முகத்துடன் தருமன் நோக்கினான். “தங்கள் தந்தை பாண்டுவின் முகம் அல்லவா?” என்றார் மிருஷை. கலுஷையும் காருஷையும் புன்னகைசெய்தனர். "ஆம்” என்றான் தருமன். மிருஷை அவர்களின் குழுமுறைப்படி மும்முறை கைகளைத் தட்டி மங்கலம் காட்டினார். சிரித்தபடி “இனி நீங்கள் எழலாம் இளவரசே. இத்தருணத்தை ஆளும் கந்தர்வர்கள் இருவர் உங்களுக்கு இருபக்கமும் வந்து நின்றுவிட்டனர். ஒருவர் யாழையும் இன்னொருவர் மலரையும் வைத்திருக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் எழுந்துகொண்டான்.

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 2

சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனைக் கரைத்து வைத்திருந்தது.நீர்பாசியென அவன் உடல் நீரொளியுடன் சேர்ந்து தழைந்தாடியது.

அப்பால் கங்கைக்குமேல் வானம் செந்நிறம் கொண்டது. நீரலைகளின் நீலம் செறிந்து பசுங்கருமை நோக்கிச் சென்றது. அலைகளோய்ந்து கங்கை பல்லாயிரம் கால்தடங்கள் கொண்ட பாலைநிலப்பரப்பு போலத் தெரிந்தது. பெருவிரிவுக் காட்சிகள் ஏன் சொல்லின்மையை உருவாக்குகின்றன? உள்ளம் விரிகையில் ஏன் இருப்பு சிறுத்து இல்லாமலாகிறது?

முரசொலியைக் கேட்டு கலைந்து தருமன் எழுந்து நின்றான். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தபின் கண்களை மூடி அசையாமல் நின்றான். மாளிகை அப்படியே அதலத்திற்கு இறங்கிச்செல்வதுபோலிருந்தது. நிலைதடுமாறி விழுந்துவிடுவோம் என உணர்ந்ததும் முழுஅகத்தாலும் தன்னை நிறுத்திக்கொண்டான். கண்களைத் திறந்தபோது உடல் மென்வியர்வையில் மூடியிருந்தது.

உப்பரிகையை அடைந்து கைப்பிடியைப் பற்றியபடி கீழே இருந்த படித்துறையை நோக்கினான். மாளிகைக்காவலர்கள் கைகளில் படைக்கலங்களுடன் படித்துறை நோக்கிச் சென்றனர். மூன்று அணிச்சேடியர் கைகளில் மங்கலத்தாலங்களுடன் மாளிகையிலிருந்து கிளம்பி பட்டுநூல் பின்னலிட்ட ஆடைநுனிகளின் அலைகளுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பு பூசியகால்கள் செங்கல் பரப்பப்பட்ட பாதையில் பதிந்து பதிந்து எழ, இடையசைய தோள் ஒசிய, நடந்து சென்றனர்.சிசிரன் அவர்களுக்குப்பின்னால் திரும்பி நோக்கி கைகளை வீசி எவருக்கோ ஆணைகளிட்டபடிச் சென்றான்

கங்கையின் காற்றில் உடல்குளிரத்தொடங்கியது. அறியாமல் கையால் தன் குழல்கற்றைகளைத் தொட்ட தருமன் அவை சுருள்களாக கிடப்பதைக் கண்டு புன்னகைத்துக்கொண்டான். அங்கே அக்கோலத்தில் தன்னைப்பார்க்கையில் அவள் என்ன நினைப்பாள் என்ற எண்ணம் வந்தது. கண்களுக்குள் ஊசிமுனையால் தொட்டு எடுத்தது போல் புன்னகை வந்து மறையும். அவளுக்குள் என்ன நிகழ்கிறதென எவரும் அறிய முடியாது. அவன் மீண்டும் தன் உடலெங்கும் நெஞ்சின் ஓசை எதிரொலிப்பதைக் கண்டான்.

கொம்பொலி மிகஅண்மையில் எழுந்தது. மரக்கூட்டங்களுக்கு அப்பால் பாஞ்சாலத்தின் விற்கொடி காற்றில் மெல்லத் துவண்டபடி நீந்தி வந்தது. இலைத்தழைப்பின் இடைவெளிகள் வழியாக கருக்கொண்ட செம்பசுவின் வய்றென சிறிய பாய்களின் புடைப்பு தெரிந்ததும் அவன் மேலும் சாளரத்தை அணுகி பற்றிக்கொண்டான். அங்கிருந்து பார்ப்பதை எவரும் அறியலாகாது என்று எண்ணினாலும் ஒளிந்து நோக்குவதை கற்பனைசெய்ய முடியவில்லை.

கங்கைநீரில் குனிந்து தங்கள் நீர்ப்படிமையை தொட்டு தொட்டு அசைந்துகொண்டிருந்த மலர்மரக்கிளைகளுக்கு அப்பால் காவல்படகின் அமரமுனை நீண்டு வந்தது. அதில் நின்றிருந்த வீரன் கைகளை வீசிக்கொண்டிருந்தான். உச்சகட்ட ஓசையில் அவன் முகம் சுருங்கி கண்கள் மூடியிருக்க அவன் குரல் காற்றில் எங்கோ கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இன்னொருவன் கையிலிருந்த கொடியை வீசியபடி கயிற்றில் தொற்றி மேலேறினான்.

அந்திச்செம்மை பரவிய வெண்பாய்களை அணையும் தழல் எனச் சுருக்கியபடி முதல்படகு துறைநோக்கி வந்தது. எச்சரிக்கையுடன் நீள்மூக்கை நீட்டி பின் கரையணைந்து விலாகாட்டியது. அதன் கொடிமரத்திலிருந்து விழுதுகளெனத் தொங்கிய கயிறுகள் குழைந்தாடின. அதன் கண்ணிச்சுருளை இருகுகர்கள் எடுத்து வீச அதைப்பற்றி கொண்டு ஓடிவந்த சேவகன் கைகளை வீசி ஏதோ கூவினான். துறைமேடையின் அதிர்வு தாங்கும் மூங்கில்சுருள்களகள்மேல் படகு பெரும் எடையின் உறுதியான மென்மையுடன் வந்து முட்டியது. கண்ணிவடங்களை கரை எடுத்து பெருங்குற்றியில் கட்டிச்சுற்றி இரு பக்கங்களிலாக இழுத்ததும மதம் கொண்ட யானை என முன்னும் பின்னும் அசைந்து மெல்ல அலைவடங்கி படகு அமைந்தது

அதை நோக்கி மரமேடையை உத்தி வைத்தனர். படகிலிருந்து இருபது காவல்வீரர்கள் ஏந்திய ஒள்வேல்களுடன் இறங்கி துறையில் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து வந்த அணிப்படகின் பாய்களை கொடிமரத்துடன் சேர்த்துக் கட்டியிருந்தனர். அதிலிருந்து வந்த பெருவடத்தை கரையிலிருந்தவர்கள் இழுத்து கரைசேர்த்து சுற்றிக்கட்டி இறுக்க அது மெல்லத்திரும்பி துறைமேடையை அணுகி மூங்கில்சுருள்களில் மோதி அமைந்தது. அதன் அமரத்தில் நின்றிருந்த வீரன் கொம்பை எடுத்து பிளிறலோசை எழுப்பினான்

அஞ்சிய விரலென துறையிலிருந்து நீண்ட மேடை படகில் அமைந்தது. அணிப்படகிலிருந்து ஐந்து சூதர்கள் மங்கல வாத்தியங்களுடன் முன்னால் வந்து இசைத்தபடியே அதில் நடந்து கரைக்கு வந்தனர். ஏழு அணிப்பரத்தையர் தாலங்களுடன் அறைக்குள் இருந்து வெளிவந்து அதில் நடந்து வந்தனர். அந்தி செம்மையில் அவர்கள் எழுவருமே மாந்தளிர்கள் போல ஒளிவிட்டனர். அவர்களை தொடர்ந்து இருபக்கமும் இரு சேடியர் துணைவர திரௌபதி உள்ளிருந்து நடந்து வந்தாள்

கரையில் நின்றிருந்த சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அணிச்சேடியர் தாலங்களுடன் முன்னால்சென்று தாலமுழிந்து தூபமும் சுடரும் காட்டி அவளை வரவேற்றனர். கால்கீழ் ஒரு கண்காணாத் தெப்பத்தில் ஒழுகிவருபவள் போலிருந்தாள் திரௌபதி. அவள் எப்போதும் அப்படித்தான் நடக்கிறாள் என்று தருமன் எண்ணிக்கொண்டான். உடல் ஒசியாது நடக்கும் பிறிதொரு பெண்ணை பார்த்ததில்லை என்று தோன்றியது. அசையாத சுடரைக் காண்பதுபோல அது அச்சுறுத்தும் அமைதியொன்றை உள்ளே நிறைத்தது

அவள் மாளிகை நோக்கி நடந்து வந்தாள். அவள் நீட்டிய கூரைக்குக் கீழே மறைவதுவரை நோக்கியபின் அவன் திரும்பி நடந்து மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்துகொண்டான். இதுதான் இன்பமா? வாழ்க்கையின் இனியதருணங்களெல்லாம் இப்படித்தான் வந்துசெல்லுமா? அவன் அதைப்போன்ற தருணங்களை மீண்டும் எண்ணினான். இனியவை என தன் வாழ்க்கையில் எதுவுமே நிகழ்ந்ததில்லை என்று தோன்றியது. நெஞ்சம் அலைகளழிந்து அமைந்த கணங்கள் நினைவில் பதிந்து கனவென நீடிக்கின்றன. ஆனால் அவை உவகையின் கணங்கள் அல்ல. உவகை என்பதுதான் என்ன?

புத்தம்புதிய நூல் ஒன்றைக் காணுவது கைகளைப் பரபரக்கச் செய்கிறது. புதிய ஆசிரியர் கிளர்ச்சியளிக்கிறார். ஆனால் அவை மிகச்சில கணங்களில் முடிந்துவிடுகின்றன. பின்னர் அமிழ்தல், இருத்தலழிதல்.இது நிலைகுலைவு. அனைத்தும் இடிந்து சிதறிக்கிடக்கின்றன. சொல்லோடு சொல்லை ஒட்டும் பொருள் என ஏதும் அகத்தில் இல்லை. யானைகள் மேய்ந்து சென்ற புல்வெளி போல என்று பராசரர் புராணசம்ஹிதையில் சொல்லும் உவகை. என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன் நான்? எது வரினும் உவகையை அறியாதவனாக என்னை ஆக்கி இறைவனை நோக்கி ஏகடியம் செய்கின்றனவா நூல்கள்?

சிசிரன் வந்து வணங்கி “இளவரசி அகத்தறை புகுந்துவிட்டார்கள் அரசே” என்றான். தருமன் எழுந்துகொண்டு உடனே விரைந்து எழுந்துவிட்டோமோ என்ற ஐயத்தை அடைந்து மீண்டும் அமரலாமா என ஒருகணம் உடல் தயங்கி என்ன மூடத்தனம் அது என உள்ளூர வியந்து தத்தளித்தபின் “ஆம்” என்றான். ”இடது உப்பரிகையில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வரண்மனையின் கீழ்த்தளத்தில் மட்டுமே சேவகரும் காவலரும் இருப்பார்க்ள். எவரேனும் வரவேண்டுமென்றால் நீங்கள் இச்சரடைப்பற்றி இழுத்து மணியோசையை எழுப்பினால் போதும்” என்றான்

அவன் தலைவணங்கி திரும்பிச்சென்ற ஒலியைக் கேட்டுக்கொண்டு தருமன் நின்றான். பின்னர் அங்கே நின்றிருப்பதன் பொருளின்மையை உணர்ந்தான். மீண்டும் சென்று பழைய பீடத்திலேயே அமர்ந்து கங்கையை நோக்கிக்கொண்டிருக்கவே அவன் உள்ளம் விழைந்தது. அதுவே இனியது. வெறுமே நெஞ்சோடு நவின்று அமர்ந்திருத்தல். இங்கே வேறேதோ நிகழவிருக்கிறது. வேறேதோ. உவகையை அழிப்பது. முற்றாகக் கலைத்திடுவது.ஆம், என் உள்ளம் சொல்கிறது. ஆம், அதுதான். வேண்டாம், இப்படியே இறங்கிச் சென்றுவிட்டாலென்ன?

தருமன் பெருமூச்சு விட்டான். ஒன்றும் செய்யப்போவதில்லை நான். பெருநதி ஒன்று என்னை அள்ளி இத்திசைநோக்கிக் கொண்டுசெல்கிறது.திகைத்தும் தவித்தும் கனன்றும் அணைந்தும் நான் அதன் வழியில்தான் சென்றாக வேண்டும். அங்கே அவளிருக்கிறாள். இடது உப்பரிகை கங்கையின் வளைவை நோக்கித் திறப்பது. அங்கே...

அப்போதுதான் அவளை அத்தனை அண்மையில் அத்தனை துல்லியமாக நோக்கியிருப்பதை அவனே அறிந்தான். இளநீலநிற பட்டாடையின் திரையாடலுக்கு அடியில் செம்பஞ்சுக்குழம்பிட்ட பாதங்கள் தொட்டனவா இல்லையா என தெரியாமல் வந்தன. மேல்பாதங்களில் வரையப்பட்ட நெல்லியிலைச்சித்திரம். கணுக்காலை தழுவி இறங்கிய சிலம்பின் குழைவு. அதன் நடுவரியில் மின்னிய செந்நிறக் கற்களின் கனல் வரி.

நீலப்பட்டாடைக்குமேல் மணியாரங்கள் தொங்கின.வெண்வைரங்கள் ஒளிர்ந்த மணிமேகலை பனித்துளிகள் செறிந்த காட்டுச்சிலந்திவலை என இடைசுற்றியிருந்தது. இடைவளைவில் தழைந்த பொற்கச்சைக்கு மேல் மென்கதுப்புச் சதையில் அணிபுதைந்த தடம். உந்திச்சுழிக்குக் கீழ் நீரலையென அதிர்ந்த மென்மை. கருவேங்கையின் அகக்காழின் வரிகளென மென்மயிர்பரவல். வளைந்தெழுந்த இடைக்கு குழைந்தாடிய சரப்பொளியின் அக்கங்கள். அதற்குமேல் அவன் பார்க்கவில்லை என்று அப்போது உணர்ந்தான்.

கருநிலவு நாளுக்கே உரிய நீலம் நீர்வெளிமேல், இலைப்பரப்புகளுக்குமேல், அரண்மனையின் உலோக வளைவுகளில் தெரியத் தொடங்கியது.நீலத்திரவம் வானிலிருந்து பொழிந்து மண்ணை நிறைத்து மூடுவதுபோல கண் நோக்கியிருக்கவே காட்சிகள் இருண்டன. நெய்ச்சுடர் விளக்குகள் மேலும் மேலும் ஒளி கொண்டன. கங்கை ஓர் இருண்ட பளபளப்பாக மாறியது.அதன் மேலிருந்து நீராவி மணக்கும் காற்று கடந்துவந்தது

அறைவாயிலை கடந்து உப்பரிகையில் அவன் நுழைந்தபோது அங்கே பட்டுவிரித்த பீடத்தில் அமர்ந்திருந்த திரௌபதி காதோரம் மணிச்சரம் அலைய குழைகளின் ஒளி கன்னத்தில் அசைய திரும்பி நீண்ட விழிகளால் நோக்கினாள். அவன் கால்மறந்து நிற்க அவள் இடக்கையால் தன் ஆடைமடிப்புகளை மெல்ல அழுத்தி எழுந்தாள். நிமிர்ந்த தலையும் நேரான தோள்களுமாக நின்று அவனை நோக்கினாள். ஒருகணம் அப்பார்வையை நோக்கியபின் அவன் விழிவிலக்கிக்கொண்டான்.

“தாங்கள் நூலாய்ந்துகொண்டிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்று அவள் சொன்னாள். நூல் என்ற சொல் பட்டு குளிர்ந்துறைந்த அவன் சித்தம் எழுந்தது. “ஆம், ஒரு நூல். அதை இன்னமும் நான் வாசித்து முடிக்கவில்லை.. ” என்றான். உடனே அது பிழையாகப் பொருள்படுமோ என்றெண்ணி “சில பக்கங்களே இருந்தன. முடித்துவிட்டேன்” என்றான். அவள் புன்னகையுடன் “அவ்வாறுதான் நானும் எண்ணினேன்” என்றாள்.

ஒரேகணத்தில் திரைச்சித்திரமென உறைந்த அத்தருணத்தை அவள் உயிர்கொள்ளச்செய்துவிட்டதை அவன் உணர்ந்தான். அவன் பேசவேண்டுமென்று எண்ணாமல் அவளே பேசத் தொடங்கியதும், அவன் பூணவிழையும் சித்திரத்தையே அவனுக்கு அளித்ததும், அதில் நூல் என்ற சொல்லை சற்றே அழுத்தியதும் எல்லாம் எண்ணிச்செய்தனவா என்ற எண்ணம் வந்ததுமே அவன் அகம் திகைத்தது.

“என்ன நூல்?” என்றாள் திரௌபதி “புராணமாலிகா” என்று அவன் சொன்னான். பிரஹதாங்கப்பிரதீபம் என்று சொல்லியிருக்கலாமோ என்று எண்ணியபடி “வித்யாதரர் எழுதிய நூல். தொன்மையான கதைகள் அடங்கியது” அவள் புன்னகையுடன் “அது இளவயதினருக்குரியதல்லவா?” என்றாள். தருமன் புன்னகையுடன் ”ஆம், இளமைக்கு மீள ஒரு முயற்சி செய்யலாமே என்றுதான்” என்றான். திரௌபதி முகவாயை சற்று மேலே தூக்கிச் சிரித்து “நான் மழலையரை இன்னும் சிறிது காலம் கழித்தே வளர்க்க விழைகிறேன்” என்றாள். தருமன் வெடித்துச் சிரித்துவிட்டான்.

அச்சிரிப்புடன் அவளை மிக அண்மையானவளாக உணர்ந்தான். பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமர்க” என்று கைநீட்டினான். “எந்தக் கதையை படித்துக்கொண்டிருந்தீர்கள்?” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். “அந்தத் தற்செயலில் என்ன ஊழ்குறிப்பு உள்ளது என்று நோக்கத்தான். ஏழுசுவடிகளையும் ஏழு வரிகளையும் தள்ளி அவ்வாறு வாசிக்கும் வழக்கம் உண்டல்லவா?” என்று அவள் அமர்ந்தவாறே சொன்னாள்.

சிறகை அடுக்கிக்கொண்டே இருக்கும் சிறிய குருவிகளைப்போல ஒவ்வொரு அசைவிலும் அவள் ஆடையை இயல்பான கையசைவால் சீரமைத்துக்கொண்டாள். நுரைபோல புகைபோல அவள் உடல் அத்தனை மென்மையாக மண்ணில் படிந்திருப்பதாகத் தோன்றியது.

தருமன் “வித்யாதரரின் கதைகள் மிக எளியவை” என்றான்.”அவற்றில் போர்களும் குலமுறைகளும் இல்லை. ஆகவேதான் அவற்றைக் குழந்தைகள் விரும்புகின்றன” . திரௌபதி “ஆம், இளமையில் நானும் அக்கதைகளை விரும்பியிருந்தேன்” என்றாள்.தருமன் “நான் வாசித்த கதையைச் சொல்வதற்கு முன் நீ விரும்பிய ஒரு கதையைச் சொல்” என்றான்

திரௌபதி புன்னகைத்தபோது அவள் இதழ்களின் இருமருங்கும் மெல்லிய மடிப்பு விழுந்தது. ஒருகணத்தில் அறியாச் சிறுமியாக அவள் மாறிவிட்டதுபோலக் காட்டியது அது. “அன்னப்பறவைகளைப் பற்றிய கதை. அதை மிகச்சிறுமியாக இருக்கையில் நானே வாசித்து அறிந்தகணம் இப்போதும் நினைவிருக்கிறது. ஏட்டிலிருந்த கோடுகளும் சுழிகளும் சொற்களாகி பின் கனவாக மாறிய விந்தையில் நான் மெய்சிலிர்த்தேன்”

சிறுமியரைப்போல அவள் துடிப்புடனுன் கையசைவுகளுடனும் பேசினாள் “நாட்கணக்கில் அந்தச்சுவடியுடன் அரண்மனையில் அலைந்துகொண்டிருந்தேன் என்று என் அன்னை சொல்லிச்சிரிப்பதுண்டு. ஒவ்வொரு தாதியிடமாகச் சென்று மடியில் அமர்ந்து அதை வாசித்துக்காட்டுவேனாம். அதுவும் பலமுறை. என்னைக் கண்டதுமே சேடிகள் பயந்து ஓடத்தொடங்கினராம்” பற்கள் ஒளிவிட அவள் நகைத்தாள்.

“அது வான்மீகமுனிவரின் ஆதிகாவியத்தில் உள்ள கதைதான்” என்றான் தருமன் “ஆம், அதை பிறகுதான் அறிந்துகொண்டேன்” என்றாள் திரௌபதி> ‘சொல்” என்றான் தருமன். “இல்லை, உங்களுக்குத்தான் தெரியுமே” என்று அவள் சிறுமிபோல தலையை அசைத்தாள். “நீ கதை சொல்லும்போது மேலும் சிறுமியாக ஆகிவிடுவாய்...அதனால்தான் சொல்” என்றான் தருமன். சிரித்துக்கொண்டு சினந்துன் “மாட்டேன்” என்றாள்.

அவன் கைகூப்பினான் அவள் சரி என்று கையசைத்தபின் “பிரம்மனின் மைந்தரான கஸ்யபர் தட்சனின் எட்டு மகள்களையும் மணந்தார். அவர்களில் தாம்ரை என்னும் துணைவிக்கு ஐந்து பெண்கள் பிறந்தனர். அவர்களில் கிரௌஞ்சி ஆந்தையைப் பெற்றாள். ஃபாஸி கூகைகளையும் ஸ்யேனி பருந்துகளையும் ஸுகி கிளிகளையும் பெற்றாள். திருதராஷ்டிரிதான் சக்கரவாகத்தையும் அன்னப்பறவையையும் பெற்றாள்”

“இத்தனை பறவைகளும் உடன்பிறந்தவர்களா என்று அக்காலத்தில் எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். ஆந்தையும் அன்னப்பறவையும் எப்படி ஒருகுலத்தில் பிறக்க முடியும்? கூகையும் கிளியும் எப்படி ஓருகுருதியாக இருக்கம் முடியும்? எத்தனையோ நாட்கள் இதை எண்ணி எங்கள் தோட்டத்தில் தனித்தலைந்திருக்கிறேன்” அவள் முகத்திலெழுந்த சிறுமிக்குரிய படபடப்பை கண்டு தருமன் புன்னகைசெய்தான். இத்தனை எளிதாக அவளால் உருமாற முடியுமா என்ன?

“பிறகு என்ன தெளிந்தாய்?” என்றான். “ஒருநாள் எங்கள் தோட்டத்தில் உள்ள சிறுகுளத்தில் அன்னங்கள் நீந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தபோது இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். என் தாதி அழைக்கும் குரல் கேட்டதும் எழுந்து அவள் குரல் கேட்ட திசை நோக்கித் திரும்பியபோது உரத்த கூகைக்குரல் கேட்டேன். திகைத்துத் திரும்பியபோது அறிந்தேன். தன் இரையை கவ்விச்சென்ற இன்னொரு அன்னத்தை நோக்கி ஓர் அன்னப்பறவை எழுப்பிய சினக்குரல் அது என்று”

திரௌபதியின் கண்கள் சற்று மாறின. “அதன்பின் ஒவ்வொரு பறவையிலும் இன்னொன்றைக் க்ண்டுகொண்டேன். சின்னஞ்சிறு கிள்ளையும் பருந்தாக முடியும் என்று. இரவில் அந்தையாக ஒலியெழுப்புவது அன்னமாகவும் இருக்கலாம் என்று. அதை என் அன்னையிடம் சொன்னேன். அவளுக்கு நான் சொல்வது புரியவில்லை. தந்தையிடம் ஒருமுறை அதைச் சொன்னேன். நீ அரசுசூழ்தலை கற்கத்தொடங்கிவிட்டாய் என்றார்” அவள் சிரித்து “அன்றுமுதல் நான் அரசியல்நூல்களுக்குத் திரும்பினேன்”

தருமன் சிரித்துக்கொண்டு ”ஆம், அதற்கப்பால் அரசியலில் கற்கவேண்டியதேதும் இல்லை” என்றான். திரௌபதி திரும்பி நோக்கி “சேவகர்கள் கீழே இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தருமன் எழுந்துகொண்டு “ஆம், அவர்களை அழைக்க ஒரு மணிச்சரடு உள்ளது” என்றபின் “எதற்காக அழைக்கிறாய்?” என்றான். “இரவில் நறுநீர் அருந்துவதுண்டு நான்” என்றாள். தருமன் அறைக்குள் சென்று உயரமற்ற பீடத்தில் இருந்த மண்குடத்தை நோக்கி “இங்குளது என எண்ணுகிறேன்” என்றான். “ஆம், நான் சிசிரனிடம் வைக்கும்படிச் சொல்லியிருந்தேன்” என்றாள் திரௌபதி

தருமன் இன்னீரை சந்தனக் குவளையில் ஊற்றி எடுத்துவந்து அவளிடம் அளித்தான். “என்னுடைய நீர்விடாய் அரண்மனையில் இளமைமுதலே நகைப்ப்புகுரியதாக இருந்தது“ என்றபடி அவள் அதை வாங்கி முகம் தூக்கி அருந்தினாள். அவளுடைய மென்மையான கழுத்தின் அசைவை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் குவளையை அருகே வைத்தபடி “என்ன?” என்றாள். “மயில்கழுத்தின் வளைவு” என்றான். திரௌபதி “வர்ணனைகளைக்கூட நூலில் இருந்துதான் எடுக்கவேண்டுமா என்ன?” என்று சிரித்தபடி இதழோரத்திலிருந்த நீரை அவள் விரலால் சுண்டினாள்

“நானறிந்ததெல்லாம் நூல்கள் மட்டுமே” என்றான் தருமன். அவள் “என்னை அனலி என்பார்கள் தாதியர். எனக்குள் இருக்கும் அனலை நீரூற்றி அணைத்துக்கொண்டே இருக்கிறேனாம்” தருமன் “பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு நீர் அருந்துவார்கள் என்கின்றன நூல்கள்” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “தெரியவில்லை. அவர்களிடம் கற்பின் கனல் உறைகிறது என்று கவிஞர்கள் சொல்கிறார்களே, அதனாலோ என்னவோ?” என்று தருமன் நகைத்தான்

திரௌபதி நகைத்துவிட்டு “சொல்லுங்கள், நான் அழைத்தபோது என்ன கதையை வாசித்துக்கொண்டிருந்தீர்கள்?” தருமன் ஒருகணம் திகைத்து உடனே உணர்ந்துகொண்டு “இறுதிக்கதைதான்” என்றான். “எனக்கு நினைவில்லை” என்றாள் அவள். அவள் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் என்னால் கதைகளைச் சுருக்கித்தான் சொல்லமுடியும்” என்றான் தருமன் “சொல்லுங்கள்” என்றாள் அவள் தலையைச் சரித்து கண்களில் புன்னகையுடன்.

தருமன் “மனுவின் மகள் இடா சிறுமியாக இருக்கையில் ஒருநாள் தன் தந்தையிடம் தந்தையே இம்மண்ணில் நன்மையையும் தீமையையும் எப்போது நான் அறிந்துகொள்வேன் என்று கேட்டாள். இன்னும் நீ முதிரவில்லை என்றார் மனு. முதிர்சிறுமையாக ஆனதும் மீண்டும் அவள் கேட்டாள். நீ இன்னமும் முதிரவில்லை என்றார் மனு. இளம்பெண்ணாக அவள் ஆனபோது மீண்டும் கேட்டாள். தேவருலகுக்கும் அசுரர் உலகுக்கும் சென்று எரிகடன்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என்று பார்த்துவா என்று அவளை அனுப்பினார் மனு’

“கீழுலகு சென்ற இடா அங்கே அசுரர்கள் ஆற்றிய எரிகடனைக் கண்டாள். அவர்களின் எரிகுளத்தில் மூன்று நெருப்புகளும் நிகராக எரியவில்லை. அதன்பின் அவள் விண்ணுலகு சென்று தேவர்களின் எரிகடனை நோக்கினாள். அங்கும் மூன்று நெருப்புகளும் நிகரல்ல என்று கண்டாள். மண்ணுலகு மீண்டுவந்து தந்தையிடம் அதைச் சொன்னாள். மனு புன்னகைத்து அவ்வண்ணமெனில் முறையான எரிகடனை நீ அறிந்திருக்கிறாய் என்றே பொருள். அதை நிகழ்த்து என்றார்”

திரௌபதியின் விழிகளில் ஒரு சிறிய ஒளியசைவு நிகழ்ந்தது என்று தருமனுக்குத் தோன்றியது.தான் சொன்னதில் ஏதேனும் பிழையோ என அவன் உள்ளம் தேடியது.“இடா மும்முறை தேவர்களையும் மும்முறை அசுரர்களையும் வாழ்த்தி ஏழாவது முறை கண்களை மூடி ஓம் என்று சொல்லி தந்தையின் எரிகுளத்தில் மூவெரியேற்றினாள். அவள் கைபட்டு எழுந்த நெருப்புகள் மூன்றும் முற்றிலும் நிகராக இருந்தன. தந்தை அவளை வாழ்த்தி நீ நன்றுதீதை அறிந்துவிட்டாய் என்று வாழ்த்தினார்”

அவன் சொல்லி முடித்த பின்னரும் அவள் அமைதியாக இருந்தாள். தருமன் “இது தைத்ரிய சம்ஹிதையில் உள்ள கதை. இதை என் குருநாதர்கள் வேறுவகையில் விளக்குவார்கள்” என்றார். திரௌபதி தலையசைத்தாள். அவள் அதை எதிர்பார்ப்பது தெரிந்தது. “விண்ணுலகிலும் அடியுலகிலும் எரிசெயல் முறையாகத்தான் நடந்துவந்தது. மண்ணுலகப் பெண்ணான இடா அங்கே வெற்றுடலுடன் சென்றாள். அவளை கண்டு தேவர்களும் அசுரர்களும் நிலையழிந்தமையால்தான் சுடர்கள் சமநிலை அழிந்தன”

திரௌபதி புன்னகைத்து “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றாள். “அசுரர்கள் அவளை திரும்பி நோக்கினர், ஆகவே அவர்களின் முனைப்பு சிதறியது. தேவர்கள் அவளை நோக்கி விழிதிருப்பவில்லை. ஆனால் அவர்களின் உள்ளத்தில் அவள் காலடியோசை எதிரொலித்தது. ஆகவே அவர்களின் குவியம் கலைந்தது” என்றான் தருமன். திரௌபதி யின் இதழ்கள் மீண்டும் புன்னகையில் நீண்டு இரு சிறு மடிப்புகள் கொண்டன.

“பின்னர் தேவர்களும் அசுரர்களும் இடாவை தேடிவந்தனர்” என்றான் தருமன். “அசுரர்கள் அவள் பின்வாயில் வழியாக இல்லத்தில் புகுந்து அவளை தங்களை ஏற்கும்படி வேண்டினர். தேவர்கள் அவள் தலைவாயில் வழியாக வந்து அவளிடம் தங்களை ஏற்கும்படி கோரினர். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டாள். அவள் தேவர்களை ஏற்றுக்கொண்டமையால்தான் மண்ணுலகிலுள்ள அத்தனை உயிர்களும் தேவர்களை ஏற்றுக்கொள்கின்றன”

திரௌபதி சிரித்துக்கொண்டே எழுந்தாள். கங்கைக்காற்றில் அவள் ஆடை மெல்ல எழுந்து பறந்தது. அதை இடக்கையால் பற்றிச் சுழற்றியபடி கழுத்தைத் திருப்பி “அவள் ஏன் தேவர்களை ஏற்றுக்கொண்டாள்?” என்றாள். “அவர்கள் தலைவாயில் வழியாக வந்தனர்” என்றான் தருமன் சிரித்தபடி “இல்லை, அவர்கள் அவள் காலடியோசையிலிருந்து கண்டறிந்த இடா பன்மடங்குப் பேரழகி. அவள் அவ்வுருவையே விரும்பினாள்” என்றாள்.

அவள் விழிகள் அவன் விழிகளைத் தொட்டன. சிலகணங்கள் விழிகள் தொடுத்துக்கொண்டு அசைவிழந்து நின்றன. தருமன் தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டான். விழிகளை விலக்கிக்கொண்டு பெருமூச்சுவிட்டான். அவள் தூணில் மெல்லச் சாய்ந்துகொள்ளும் அசைவை நிழலில் கண்டான். மீண்டும் அவளை நோக்கினான். புன்னகையுடன் அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள்.

நூறுமுறை எழுந்து அவளைத் தழுவிய ஆன்மாவுடன் அவன் உடல் அசைவற்று இருந்தது. எழுந்து படியிறங்கி ஓடவேண்டுமென்ற எண்ணம் ஒரு கணம் வந்து சென்றது. மீண்டும் அவளை நோக்கியபோது அவள் தன் இருகைகளையும் குழந்தையை அழைப்பதுபோல விரித்தாள். அவன் தன் உடலில் எழுந்த விரைவுடன் எழுந்து அவளருகே சென்றான்.

ஆனால் அவள் உடலின் நறுமணத்தை அறிந்ததுமே அவன் உடல் அசைவழிந்தது. நீட்டிய கைகள் அப்படியே நின்றன. அவள் தன் இரு கைகளால் அவன் கைகளைப்பற்றிக் கொண்டு அவன் விழிகளுக்குள் நோக்கினாள். அவன் உடல் வெம்மை கொண்டு நடுங்கியது. அவள் விழிகளில் கூரிய ஒளி ஒன்று வந்துவிட்டிருந்தது. கொல்லவரும் வஞ்சமும், நீயல்லவா எனும் ஏளனமும் ,யார் நீ எனும் விலகலும் இணைந்த ஒரு புதிர் நோக்கு.

அவள் மேலுதடு சற்றே எழுந்து வளைந்திருக்க அதன்மேல் வியர்வை பனித்திருந்தது. மேலிதழ்களின் ஓரத்தில் பூமயிர் சற்றே கனத்து இறங்கியிருக்க மலர்ந்த கீழுதடின் உள்வளைவு குருதிச்செம்மை கொண்டிருந்தது. சிறிய மூக்கிலிருந்து மூச்சு எழுவதாகவே தெரியவில்லை. ஆனால் நீண்ட கழுத்தின் குழிகள் அழுந்தி மீண்டன. கழுத்தில் ஓடி மார்பிலிறங்கிய நீல நரம்பு ஒன்றின் முடிச்சைக் கண்டான். முலைக்கதுப்பின் பிளவுக்குள் இதயத்தின் அசைவு.காதிலாடிய குழையின் நிழல் கழுத்தை வருடியது. கன்னத்தில் சுருண்டு நின்ற குழல்கற்றை தன் நிழலை தானே தொட்டு தொட்டு ஆடியது

அவன் கண்களை நோக்கி ஆழ்ந்த குரலில் “நீங்கள் இன்று நினைத்துக்கொண்ட உண்மையான கதை என்ன?” என்றாள் திரௌபதி . மூச்சடைக்க தருமன் “ம்?’ என்றான். “எந்தக்கதை உங்கள் நெஞ்சில் இருந்தது?” என்று கேட்டபடி அவள் அவன் கைகளை எடுத்து தன் இடையில் வைத்துகொண்டாள். அவன் உடல் உலுக்கிக்கொண்டது.

அவனால் நிற்க முடியவில்லை. ஆனால் அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தன. அவள் உடலின் வெம்மையும் மணமும். அத்தனை மணங்களுக்கு அடியில் அவள் மணம். அது எரிமணம். குங்கிலியம் அல்லது அரக்கு அல்லது.... வேறேதோ எரியும் மணம். எரியும் மணமல்ல, எரியக்கூடிய ஒன்றின் மணம்...

அடைத்த குரலில் “இல்லை” என்று அவன் சொன்னான். அவள் தன் முலைகளை அவன் மார்பின்மேல் வைத்து கைகளால் அவன் கழுத்தை வளைத்து முகம் தூக்கினாள். அவனளவே அவளும் உயரமிருந்தாள். “வித்யாதரரின் நூலின் கதை என்றால் அது நீரரமகளைப்பற்றியதுதான்...இல்லையா?” அவள் கன்னத்தில் அந்த மெல்லிய பரு. எப்போதோ பட்டு ஆறிய சிறிய வடுவின் பளபளப்பு. காதோர பூமயிரின் மெல்லிய பொன்பூச்சு.

“ஆம்” என்றான் தருமன் அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. செந்நீல நச்சுமலர் ஒன்று விரிவதைப்போல.கங்கையில் ஓர் ஆழ்சுழி போல. “மீளமுடியாது மூழ்கத்தான் போகிறீர்கள்” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். “என்ன?” என்றாள். “ம்” என்று அவன் சொன்னான். அவன் மூக்கு அவள் கன்னத்தில் உரசிச்செல்ல அவன் உடல் மீண்டும் அதிர்ந்தது.

அவள் மேலும் தலைதூக்க மீண்டும் அவள் உதடுகள் மலரிதழ்கள் பிரிவதுபோல விரிந்தன. அந்த ஓசையைக்கூட கேட்கமுடியுமென்று தோன்றியது. அதன்பொருள் அதன்பின்னர்தான் அவனுப்புப்புரிந்தது. அவன் அவள் இதழ்களில் இதழ்சேர்த்து முத்தமிட்டான்.

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 3

காலையில் சிசிரன் வந்து அழைத்தபோதுதான் தருமன் கண்விழித்தான். முதலில் எங்கிருக்கிறோம் என்பதையே அவன் உணரவில்லை. உணர்ந்ததும் அங்கே சிசிரன் வந்ததைப்பற்றி சிறிய சீற்றம் எழுந்தது. ஆனால் அவன் உள்ளே வராமல் கதவுக்கு அப்பால் நின்றுதான் தட்டி அழைத்திருந்தான். ஆடையை அணிந்தபடி எழுந்து நின்று அடைத்த குரலில் “என்ன?” என்றான். “அமைச்சர் வந்துள்ளார்” என்றான் சிசிரன். “எந்த அமைச்சர்?” என்று கேட்டதுமே அவன் நெஞ்சு அதிரத் தொடங்கியது. அவன் “அஸ்தினபுரியின் அமைச்சர்” என்றான். தருமன் சிலகணங்கள் நின்றுவிட்டு ”சற்று நேரத்தில் நீராடிவிட்டு வருகிறேன் என்று அவரிடம் சொல்” என்றான்.

விரைந்து கீழிறங்கி குளியலறைக்கு சென்றான். நீராட்டுச்சேவகன் ஆடைகளை அவிழ்க்கும்போது அந்த நேரம்கடத்தல் கூட நன்றே என்று எண்ணிக்கொண்டான். நீராடி ஆடையணிகையில் வேண்டுமென்றே பிந்துகிறோமோ என எண்ணியபோதுகூட அந்த விரைவு உடலில் கூடவில்லை. மீண்டும் குழலை சீவிக்கொண்டிருந்தான். முந்தையநாள் இரவில் திரௌபதி அவன் கூந்தல் கீற்றுகளில் கையளைந்து “இது என்ன சுருள்கள்?” என்று கேட்டது நினைவுக்கு வந்தது. அந்த வினா ஒரு கணம் அனலை அவியச்செய்ய, அவன் பேசாமலிருந்தான். அவள் அவன் அகஏடுகளை விரைவாக தொட்டுத் தொட்டு புரட்டி சுட்டு விரல்வைத்துத் தொட்டு “நன்றாகவே இல்லை... இனிமேல் இது தேவையில்லை...” என்றாள். புன்னகையுடன் “ம்" என்றபடி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

படிகளின் ஓசை கேட்டபோதே அது திரௌபதி என்று அறிந்துகொண்டான். அவ்வோசையே தன்னை கிளரச்செய்வதை எண்ணி புன்னகை செய்தபடி ஆடிமுன் இருந்து விலகியபோது அவள் உள்ளே வந்து “அமைச்சர் காத்திருக்கிறார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “ஆம், அறிவேன்” என்றான். அவள் விழிகளும் புன்னகைத்தன. பொதுவான கரவு ஒன்றை அறிந்த குழந்தைகள் போல சிரித்தபடி “இக்காலையில் அறிவுடையோர் வருவதில்லை” என்றான். “ஆம், வரும்படியான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அமைச்சரின் உடல் நிலைகொள்ளாமலிருக்கிறது” என்றாள்.

இருவரும் இணைந்தே கீழிறங்கி வந்தனர். அவர்களைக் கண்டதும் அவைக்கூடத்தில் இருந்த விதுரர் எழுந்தார். தருமன் தலைவணங்கி “வணங்குகிறேன் அமைச்சரே” என்றதும் கை தூக்கி சொல்லின்றி வாழ்த்தியபின் அமரும்படி பீடத்தை காட்டினார். சாளரத்திரைச்சீலை கங்கைக்காற்றில் சிறகடிப்போசை எழுப்ப அதை திரும்பி நோக்கி எரிச்சலுடன் சூள் கொட்டினார். தருமன் நோக்க சிசிரன் ஓடிச்சென்று அதை சேர்த்துக்கட்டினான்.

தருமன் “இளவரசியை...” என தொடங்க விதுரர் “அவர்கள் இருக்கட்டும்...” என்றார். சிசிரன் தலைவணங்கி வெளியேறினான். தருமன் அமர்ந்துகொண்டு ஆடையை தன் மடிமேல் சீரமைத்துக்கொண்டான். உடனே அப்பழக்கம் அவளிடமிருந்து வந்ததா என அகம் வியந்தது. அது எழுப்பிய மெல்லிய புன்னகை அவனை நிலையமைத்தது.

அவள் பீடத்தில் அமர்வதை கண்டான். கைகள் இயல்பாக ஆடையின் மடிப்புகளை அழுத்தியமைத்தன. தோளை மிகமெல்ல அசைத்து அணிகளை சீராக முலைகள் மேல் அமையச்செய்தாள். இடக்கையால் குழல்சுருளை காதோரம் ஒதுக்கி செறிந்த இமைகள் சற்றே சரிய அரைத்துயிலில் அமர்ந்திருப்பவளென இருந்தாள். அவன் அவள் விரல்களை நோக்கினான். சுட்டுவிரல் நுனியில் மட்டுமே அவள் அகம் வெளிப்படுமென அவன் அறிந்துகொண்டிருந்தான். அவை ஆடையின் நூலொன்றை சுழற்றிக்கொண்டிருந்தன.

விதுரர் அவனை நோக்காமல், “நேற்று யாதவ அரசியிடம் பேசினேன்” என்று தொடங்கினார். தருமன் தலைகுனிந்து அமர்ந்திருக்க “நீங்கள் திருதராஷ்டிர மாமன்னருக்கு எழுதிய திருமுகத்தை அரசியார் அறிந்திருக்கவில்லை என்று நேற்றுதான் நானும் அறிந்தேன்” என்றார். தருமன் சொல்லில்லாமல் அமர்ந்திருந்தான். “இளையோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?” என்றார் விதுரர் . தருமன் ஆம் என தலையசைத்தான். “பாஞ்சாலத்தின் பறவைத்தூதை நீங்கள் கைக்கொண்டதாவது அவர்களுக்குத் தெரியுமா?” தருமன் விழிதூக்காமல் “இல்லை” என்றான்.

“அன்னை உங்கள் சொற்களை ஒப்பவில்லை” என்று சற்று தணிந்தகுரலில் விதுரர் சொன்னார். ”அரசரின் ஒப்புதலின்றி வாரணவதத்தின் எரிமாளிகை நிகழ்வு திட்டமிடப்பட்டிருக்காது என்று அவர் எண்ணுகிறார். நான் பலமுறை அதை விளக்கினேன். அஸ்தினபுரியின் ஒற்றர்குழாமை முழுமையாகவே கைகளில் வைத்திருக்கும் எனக்கே அதை குண்டாசியின் நிலைகொள்ளாமை வழியாகத்தான் ஓரளவு உய்த்துணர முடிந்தது. என்ன நிகழவிருக்கிறதென்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஐயம் மட்டுமே இருந்தது. ஆகவேதான் குறிச்சொற்கள் வழியாக எச்சரிக்கையை அளித்து அனுப்பினேன்.”

“அரசருக்கு ஒற்றர்கள் இல்லை. இசையின் உலகில் வாழ்பவர் அவர். அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றேன்” என்றார் விதுரர். “அறிந்தால் அதை எந்நிலையிலும் ஒப்பக்கூடியவர் அல்ல அவர். சிறுமைதீண்டாத மாமனிதர் என் தமையன். ஆனால் யாதவ அரசி அதை ஏற்கவில்லை. ஏற்க விழையாதவற்றை ஏற்கவைக்க எவராலும் இயலாது” என்றார் விதுரர். “குந்திதேவி இன்று அரசரைப்பற்றி மிகக்கடுமையான சொற்களை சொன்னார். அஸ்தினபுரியின் தீமையனைத்தும் விழியற்ற அம்மனிதரையே அச்சாகக் கொண்டிருக்கிறது என்றார். வெளியே கருணையையும் நீதியையும் காட்டியபடி பாண்டுவின் மைந்தர்களை அழிப்பதற்காகவே அவர் அங்கே வாழ்கிறார் என்று கூவியபோது அவர் கண்ணீர் விட்டார். முகம் குருதிப்பிழம்பாக இருந்தது.”

“ஆம், அன்னையின் அகம் அதுவே” என்றான் தருமன். “என்னாலும் அவரிடம் ஏதும் பேசமுடியவில்லை. ஏனென்றால் என்னில் இருப்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. ஆனால் மானுடரைப்பற்றி எதையும் முழுமையாக நம்பிவிடலாகாதென்றும் என் கல்வி என்னிடம் சொன்னது.” விதுரரும் அவனும் விழிதொட்டனர். “ஆகவேதான் நான் அந்த ஓலையைப்பற்றி அவரிடம் பேசவில்லை.”

”அமைச்சரே, காந்தாரர் சகுனி எப்படி பீஷ்மபிதாமகரை தன் உள்ளத்தில் எதிரியாக ஆக்கிக்கொண்டாரோ அந்நிலையில் இருக்கிறார் அன்னை. வென்று செல்லவேண்டிய எதிர்த்தரப்பின் மிகப்பெரிய எதிரி அங்குள்ள நீதியாளனே. எப்போதும் அநீதிக்கெதிராகவே பெரும்போர்கள் தொடங்குகின்றன. அவை நீதியைப்பற்றியே பேசுகின்றன. ஆனால் நீதியால் அல்ல, வெறுப்பின் ஆற்றலால்தான் களத்தில் போர்கள் நிகழ்த்தப்படுகின்றன. எதிர்த்தரப்பு முற்றிலும் அநீதியானது என்று நம்பாமல் போர்வெறி கொள்ள முடிவதில்லை. அதற்கு மிகப்பெரும் தடை எதிர்த்தரப்பிலுள்ள நீதியாளன். அவனை பெரும் அநீதியாளன் என்று ஆக்கிக்கொள்ளாமல் அவர்களுடன் பொருதுவது இயல்வதல்ல.”

”அத்துடன் பெரும் நீதியாளனைப்போல பெரும்அநீதியாளனாகச் சித்தரிக்க எளிதானவன் பிறிதொருவன் இல்லை. அவன் தன் நீதிமீதான நம்பிக்கையுடன் எப்போதும் கவசங்களும் படைக்கலங்களும் இன்றி களத்தின் முன்வரிசையில் நிற்கிறான். சிந்திக்காமல் சொல்தொடுக்கிறான். தன் சொற்களுக்கும் செயல்களுக்கும் முன்னரே விளக்கங்களை அமைத்துக்கொள்வதில்லை. தன் நீதி அவமதிக்கப்பட்டால் அவன் உடைந்து அழியவும் செய்வான்” தருமன் தொடர்ந்தான். “அமைச்சரே, போர்களெல்லாம் எதிர்த்தரப்பின் மாபெரும் நீதியாளனை முற்பலியாகக் கொண்டபின்னரே தொடங்குகின்றன. தன் தரப்பில் நின்று ஐயப்படும் நீதியாளனை முதல் களப்பலியாக அளித்துத்தான் வெற்றிநோக்கி செல்கின்றன”

“அன்னை திருதராஷ்டிர மாமன்னரை மானுடரில் கடையனாக ஆக்கிக்கொண்டுவிட்டார். இத்தனை நாள் அவரை ஆற்றல்மிக்கவராக ஆக்கியது அந்த வெறுப்புதான். அதை என்னிடம் ஒருபோதும் பகிர்ந்ததில்லை. என் இளையோரிடமும் சொன்னதில்லை. ஆனால் அதை நான் அறிவேன்” என்றான் தருமன். விதுரர் கசப்புடன் புன்னகைத்து “உண்மைதான் இளவரசே. ஆனால் வாழ்வின் துயர்மிக்க நடைமுறை இன்னொன்றும் உண்டு. குந்திதேவியின் இவ்வெறுப்பே மெல்லமெல்ல அவரை அநீதியானவராக ஆக்கவும் கூடும். ஒவ்வொரு முறை அவர் நீதியின் எல்லைகளை மீறும்போதும் குந்திதேவியின் உள்ளம் மகிழ்ச்சியடையும். அவர் நம்புவது உண்மையாகிறதல்லவா?” என்றார்.

தருமன் விழித்து நோக்கி அமர்ந்திருந்தான். ”ஏனென்றால் நீதி என்பது மானுட இயல்பல்ல இளவரசே. அது மானுடர் கற்றுக்கொண்டு ஒழுகுவது. பெருங்கற்பு என்று அதையே நூல்கள் சொல்கின்றன. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் மானுடர் தங்கள் கீழ்மையால் மோதியபின்னரும் நீதியென இங்கு ஒன்று எஞ்சியிருப்பது வியப்பிற்குரியது. அது தெய்வங்களின் ஆணை என்பதற்கு அதுவே சான்று” என்றார் விதுரர். அவரது சினம் முழுமையாகவே ஆறிவிட்டிருந்தது. தன் பீடத்தில் முழுமையாக சாய்ந்துகொண்டு “ஓலையில் நீங்கள் அரசு மறுத்ததை அறிந்து குந்திதேவி கொதித்துக் கொண்டிருக்கிறார். என்னுடன் இங்கே வருவேன் என்று சொன்னார். அது முறையல்ல என்று சொல்லி நானே வந்தேன்” என்றார்.

“ஆம், நான் அரசை மறுத்தேன்” என்றான் தருமன். “அது ஒரு பேரழிவை தடுப்பதற்காக. திருதராஷ்டிர மாமன்னரின் உள்ளம் ஐயங்களால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என நான் அறிவேன். எரிநிகழ்வுக்குப்பின் நாங்கள் ஒளிந்து வாழ்ந்ததை அறிந்த கணம் முதல் அவரால் துயின்றிருக்கமுடியாது. அது அவர் மீதான ஐயத்தின் வெளிப்பாடு என்றே எண்ணுவார். அவர் உள்ளம் தேடத்தேட அதற்கான சான்றுகளே எழுந்து வரும். ஏனென்றால் உண்மையிலேயே அது அவர் மீதான ஐயத்தின் விளைவுதான்.”

“ஆம்” என்றார் விதுரர். “நீங்கள் எழுதிய ஓலை அவ்வகையில் நிறைவளிக்கக் கூடியதே.” தருமன் “நன்கு சிந்தித்தே அதை எழுதினேன் அமைச்சரே. அரசரின் உள்ளம் என் விளக்கத்தில் நிறைவடையவேண்டுமென்றால் அரசை மறுப்பதற்காகவே ஒளிந்துவாழ்ந்தோம் என்ற ஒரு கூற்றைத்தவிர்த்து எதுவுமே உதவாது. என் இயல்புக்கு ஏற்றதும் அக்கூற்றே. அவர் தன் ஐயங்கள் விலகி அமைதியுறவேண்டுமென்று விழைந்தேன். ஆகவேதான் எவருக்கும் தெரியாமல் அதை எழுதினேன். என் இளையோர் என் உடலுறுப்புகள் போன்றவர். அன்னையிடம் பின்னர் விளக்கலாமென எண்ணினேன்” என்றான்.

சிலகணங்கள் அவர்கள் அமைதியாக இருந்தனர். சாளரத்திரைச்சீலை விடுபடத் தவித்தது. கங்கைக்கரையில் நின்றிருந்த படகு கயிறு முறுகும் ஒலியுடன் அசைந்தது. தருமன் “அமைச்சரே, தந்தையரின் உள்ளத்தைப்பற்றி காவியங்கள் மீளமீள சொல்லும் ஒன்றுண்டு. அவை எந்நிலையிலும் மைந்தருடன் நின்றிருப்பவை. எந்தக் கனிவும் கல்வியும் அதை மீறமுடியாது. எத்தகைய முறைமையும் நீதியும் அதை கடக்க முடியாது. தேவர்களும் மும்மூர்த்திகளும்கூட அதை விலக்க முடியாதவர்களே. ஏனென்றால் அது உயிர்களுக்கு விசும்புவெளியில் விண்மீன்களை இயக்கிநிற்கும் பிரம்மம் இட்ட ஆணை” என்றான்.

“அமைச்சரே, வாள்முனை போன்ற அறவுணர்ச்சி கொண்ட மாமனிதர் எந்தை. அதைவிட அவர் எங்களுக்கும் தந்தை. என் தந்தையின் தமையன். ஒருகணமும் அந்நினைவை அகற்றாதவர். எண்ணிநோக்குங்கள். நான் அரசரிடம் கௌரவர் செய்த வஞ்சத்தால் நாங்கள் கொல்லப்படவிருந்தோம் என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவர் அக்கணமே மதவேழமென எழுந்து பிளிறியிருப்பார். அத்தனை கௌரவர்களையும் காந்தாரரையும் கழுவேற்றியிருப்பார். அவர்களுக்கு நீர்க்கடன் செய்திருக்க மாட்டார்.”

தருமன் தொடர்ந்தான் “ஆனால், அதன்பின் இருளில், தனிமையில், தன் ஆன்மாகூட கேளாத மெல்லியஒலியில் என்மேல் தீச்சொல்லிட்டிருப்பார். என் குலம் அழிய வேண்டும் என்று அவருள் வாழும் தந்தை அறியாமல் ஒருசொல் உரைத்துவிடுவார். பின்னர் அச்சொல்லை எண்ணி அவர் நெஞ்சில் அறைந்து கதறுவார். அதன்பொருட்டே எரிபுகவும் செய்வார். ஆனால் அச்சொல் அங்கே நின்றிருக்கும்.”

“ஆம், நான் அரசனைப்போல் பேசவில்லை. காட்டில் வாழும் முனிமைந்தனைப்போல் வெற்று நீதியை பேசிக்கொண்டிருக்கிறேன். அதை நானே அறிவேன். ஆனால் அமைச்சரே, நான் அவ்வண்ணமே ஆகியிருக்கிறேன். நான் கற்ற நூல்கள் என்னை மண்மறைந்த நகர்களின் அரியணைகளை நோக்கிக் கொண்டுசெல்லவில்லை. என்னை அவை இன்றும் தளிர்த்துக்கொண்டிருக்கும் அழியாத காடுகளையும் இப்போதும் நீரோடும் மகத்தான நதிக்கரைகளுக்கும்தான் கொண்டுசென்றிருக்கின்றன” தருமன் சொன்னான்.

“நான் தந்தையர் தீச்சொல்லை அஞ்சுகிறேன். எனக்கும் என் மூதாதையருக்கும் நடுவே இன்றிருக்கும் ஒரே கண்ணி அவரே” உளவிரைவால் தருமன் எழுந்தான். “அமைச்சரே, இதைச்சொல்ல நான் நாணவில்லை. அதோ அஸ்தினபுரியில் அமர்ந்திருக்கும் அந்த விழியிழந்த மனிதரின் பெருங்கருணையால்தான் நான் பாண்டுவின் மைந்தன் என்று இருக்கிறேன். என் அன்னை சொன்ன வார்த்தையாலோ அதை ஏற்ற வைதிகர்களின் நெருப்பாலோ அல்ல. அவர் அவைஎழுந்து என் குருதியை மறுத்திருந்தால் நான் யார்?”

“பாண்டுவின் மைந்தனாக நான் உணர்வது வரை அவரை வருத்தும் ஒரு சொல்லையும் சொல்லமுடியாது அமைச்சரே” என்று தருமன் சொன்னான். “அவரே இன்று வாழும் பாண்டு. இம்மண்ணில் இன்று பாண்டுவுக்கு மிக அண்மையானவர் அவரே”. அவன் உள்ளம் மெல்ல அமைந்தது. தோள் தணிய கைகளை கட்டியபடி அறையில் சிற்றடி எடுத்து வைத்து “நான் சொற்களை நம்புபவன். சொற்களுக்கு காலத்தைக் கடக்கும் வல்லமை உண்டென்பதற்கு என் கையிலிருக்கும் ஒவ்வொரு நூலும் சான்று. அமைச்சரே, இதோ இந்நகரங்களனைத்தும் அழியும். மானுடக்குலங்கள் மறையும். சொல் நிலைத்திருக்கும். அச்சொல்லில் எந்தை எனக்களித்த வாழ்த்து மட்டுமே இருக்கவேண்டும். தந்தையின் தீச்சொல் கொண்டு மணிமுடிசூடினான் மைந்தன் என்றிருக்கலாகாது.”

“ஆம், எனக்கு அதுவே முதன்மையானது. அஸ்தினபுரி என்ன பாரதவர்ஷத்தின் மணிமுடிகூட எனக்கு ஒரு பொருட்டல்ல” தருமன் சொன்னான். பெருமூச்சுடன் திரும்பவந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான். “அன்னையிடம் சென்று சொல்லுங்கள் அமைச்சரே. என் சொற்களை இப்படியே சொல்லுங்கள். தாங்கள் வந்தது நன்று. இச்சொற்களை அன்னைமுகம் நோக்கிச் சொல்லும் ஆற்றலை நான் பெற்றிருக்கமாட்டேன்.”

”குந்திதேவி அறிவார்” என்றார் விதுரர். “உங்களை உண்மையில் கட்டுபப்டுத்துவது எதுவென்று.” அச்சொற்களை முழுதுணர்ந்ததுமே துணுக்குற்று திரும்பி திரௌபதியை நோக்கினார். அவள் துயின்றுவிட்டாளா என்ற ஐயம் எழுந்தது. உச்சிவெயிலில் கிளைகளில் கழுத்தை இழுத்து அமர்ந்திருக்கும் பறவை போலிருந்தாள். ”குந்திதேவி அறிய விழைவது ஒன்றே. நீங்கள் அரசைத் துறக்கிறேன் என்று சொன்ன சொல்லின் பொருள் என்ன? திருதராஷ்டிர மன்னர் உங்களையன்றி பிறரை அரியணை அமர்த்தப்போவதில்லை என்று அவையிலேயே அறிவித்துவிட்டார். அஸ்தினபுரி திரும்பிய கௌரவர்களிடமும் அவ்வாணையை இந்நேரம் சொல்லியிருப்பார். என்னை அவர் இங்கு அனுப்பியிருப்பதே உங்களை அழைத்துச்செல்லத்தான். சென்றதுமே முடிசூட்டு என்கிறார்.”

“இல்லை, நான் வரப்போவதில்லை” என்றான் தருமன். “இந்நிலையில் நான் வந்து அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடலாகாது. என் சொல் பிழைப்பதற்கு நிகர் அது.” விதுரர் சற்றே பொறுமை இழந்ததை அவர் உடலசைவு காட்டியது. “உங்கள் சொற்களில் நீங்கள் நின்றிருக்கலாம் இளவரசே, அஸ்தினபுரியின் மணிமுடியை நீங்கள் கோரவேண்டியதில்லை. ஆனால் அதை அரசர் அளிக்கையில் மறுக்கவேண்டியதில்லை. ஏனென்றால் அது உங்கள் தந்தையின் ஆணை.”

“மீண்டும் அதையே சொல்கிறேன் அமைச்சரே. எங்கோ அவரது ஆழத்தில் ஒரு குரல் அவரது மைந்தன் முடிசூட ஏங்குகிறது. எங்கள் எரிபுகல்செய்தியைக் கேட்டதும் மெல்லிய நிறைவை அடைந்த ஆழம் அது.” விதுரர் ஒருகணம் அதிர்ந்து அமர்ந்து உடனே சினத்துடன் பாய்ந்து எழுந்து “என்ன பேசுகிறாய் மூடா! யாரைப்பற்றிப் பேசுகிறாய் அறிவாயா?” என்று உடல்பதற கூவினார். நடுங்கிய கைகளை நீட்டி “இப்போது நீ சொன்னதற்கிணையான ஒரு பழியை அவர்மேல் உன் அன்னையும் சுமத்தவில்லை... மூடா!” என்றார்.

தருமன் எழுந்து “எந்தையே, நாம் நம் வேடங்களைக் கலைத்து முகமோடுமுகம் நோக்கி நிற்கநேர்ந்தமைக்கு மகிழ்கிறேன். தங்கள் கைகளால் என்னை அறைந்திருந்தீர்கள் என்றால் இந்நாள் என் வாழ்வின் திருநாளாக அமைந்திருக்கும்” என்றான். விதுரர் விழிகளை விலக்கி அக எழுச்சியால் வந்த கண்ணீரை மறைக்க சாளரத்தை நோக்கி திரும்பிக்கொண்டார்.

“தந்தையே, இம்மண்ணில் வாழும் மாமனிதர்களில் ஒருவர் என் மூத்த தந்தை என்பதில் எனக்கு ஐயமே இல்லை. ஒருபோதும் பிறிதொரு மானுடரை அவருக்கு நிகர்வைக்க மாட்டேன். பிதாமகர் பீஷ்மரையோ உங்களையோ கூட. ஆயினும் இது உண்மை. அவர் கொண்ட அந்த பெருந்துயர், இறப்பின் எல்லைவரைக்கும் சென்ற வதை. அவருள் எழுந்த அந்தச் சிறு நிறைவுக்குக் கொண்ட பிழையீடு மட்டுமே.”

தலையை இல்லை இல்லை என அசைத்தபடி விதுரர் திரும்ப அமர்ந்துகொண்டார். “தருமா, நூல்களில் இருந்து நீ கற்றது மானுடர் மீது கொண்ட இந்த நம்பிக்கையின்மை மட்டும்தானா?” தருமன் வந்து அவர் அருகே நின்று “தந்தையே, நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் ரகசியங்கள் தெரியவருகின்றன. அந்த ரகசியங்களின் வாயிலற்ற கோட்டை முன் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்.”

“இத்தனை சொற்களிடம் வாதிட என்னால் இயலாது” என்று விதுரர் கைகளை பூட்டிக்கொண்டார். “அவ்வண்ணமென்றால் நீ செய்யவிருப்பதென்ன? அதைமட்டும் சொல்” அவர் குரல் எழுந்தது. “உன் அன்னை என்ன சொல்கிறாள் தெரியுமா? ஷாத்ரநெறிப்படி அநீதியால் நிலம் பறிக்கப்பட்ட ஷத்ரியன் தன் இறுதி ஆற்றலாலும் அதற்கு எதிராகப் போராடவேண்டும். வெல்லவேண்டும், இல்லையேல் உயிர்துறக்கவேண்டும். நீ அந்த ஆற்றலற்றவன், உன்னில் ஓடுவது ஷத்ரிய குருதி அல்ல, பாண்டு தன் அச்சத்தை உன்னில் ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறார் என்கிறாள்.”

தருமன் புன்னகைத்தான். “இளவரசே, உங்களை விலக்கிவிட்டு பீமனை அஸ்தினபுரியின் அரசனாக்குவேன் என்று குந்திதேவி கூவினார்” என்றார் விதுரர். “பாஞ்சாலத்தின் படைகளையும் யாதவப்படைகளையும் திரட்டிக்கொண்டு அஸ்தினபுரியை வெல்லவிருப்பதாக அறைகூவினார்.” தருமன் “பீஷ்மர் இருக்கும் வரை அது நிகழுமென எண்ணுகிறார்களா?” என்றான். “ஆம், அதையே நானும் கேட்டேன். பீஷ்மரை வெல்ல கிருஷ்ணனால் முடியும் என்றார். அப்படி முடியாதென்றால் இரு தரப்பும் முழுமையாக அழியும். அவ்வழிவை உணர்ந்தால் அவர்கள் அடிபணிவார்கள் என்று சொன்னார்.”

“ஆம், அது உண்மை” என்றான் தருமன் புன்னகையுடன். சாய்ந்துகொண்டு மடியில் கைகளை வைத்துக்கொண்டான். “அதில் ஒரே ஒரு இடர்தான். பீமன் அதை ஒப்பவேண்டும்.” விதுரர் கண்களில் ஒரு மெல்லிய மின்னல் வந்துசென்றது. “ஒப்பிவிட்டாரென்றால்?” என்றார். “இல்லை, அது நிகழாது” என்றான் தருமன். “அவன் என்னை என்றேனும் மறுதலிப்பான் என்றால் அது அவன் மைந்தனுக்காக மட்டுமே.”

விதுரர் புன்னகையுடன் “சரி, பீமன் ஒப்பிவிட்டாரென்றால், படைகொண்டு சென்று உங்கள் மணிமுடியை கொண்டார் என்றால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.

“அமைச்சரே, இதுநாள் வரை இம்மண்ணில் வந்த எந்த ஷத்ரியனையும் போன்றவன் அல்ல நான்... அவர்களால் கோழை என்றும் தெளிவற்றவன் என்றும் நான் எண்ணப்படலாம். அதை நான் அறிவேன். ஆனால் எனக்குள் நான் எத்தருணத்திலும் ஷத்ரியனே என்று நேற்றிரவு அறிந்தேன். இன்றுகாலை முதல் நான் வேறொருவன்.” அறியாமல் திரௌபதியை நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டார் விதுரர்.

தருமன் சொன்னான் “ஷத்ரியனாகவே இம்மண்ணில் வாழ்வேன். மூதாதையர் உலகை அடைவேன். ஒருபோதும் மணிமுடியை முற்றிலும் துறக்கப்போவதில்லை. என் மணிமுடியை கவர எண்ணுபவன் துரியோதனன் என்றாலும் பீமன் என்றாலும் எனக்கு நிகர்தான். முறையான மணிமுடிக்காக உடன்பிறந்தோர் எனினும் போரிடலாமென்றே நூல்கள் சொல்கின்றன. ஏனென்றால் தன் முடியைத் துறப்பவன் தான் செய்திருக்கக்கூடிய அறங்களையும் துறந்தவனாகிறான்.”

சற்றுநேரம் தன் உள்ளத்தை நோக்கிவிட்டு பின் தணிந்த உறுதியான குரலில் தருமன் சொன்னான் “இதை என் அரசியல் அறிவிப்பாகவே கொள்ளுங்கள் அமைச்சரே. என் முடிக்காக துரியோதனனை கொல்வேன் என்றால் பீமனையும் கொன்று மணிமுடியை வெல்ல தயங்கமாட்டேன்.” பின்பு இதழ்கள் இழுபட்டு விரிந்த புன்னகையுடன் “அதை மிக எளிதாக என்னால் செய்யவும் முடியும். ஐந்து பாண்டவர்களிலும் ஆற்றல்மிக்கவன் நானே. அதை நால்வரும் அறிவார்கள்” என்றான்.

விதுரர் திகைப்புடன் நிமிர்ந்து அவனை நோக்கினார். முதன்முதலில் சொல்வடிவம் கொண்ட அந்த உண்மையை அவர் முன்னரே அறிவார் என்று தோன்றியது. அவன் அவர் விழிகளை நோக்கியபடி தொடர்ந்தான் “நீங்கள் அறிந்ததே, தோள்வல்லமை கொண்டவன் போரிடலாம், படைநடத்தலாம். மானுடரை இணைப்பவனே நாடாள்கிறான். மேலும் மேலும் மானுடரை இணைப்பவன் சக்ரவர்த்தியாகிறான். அதை இன்று பாரதவர்ஷத்தில் எனக்கிணையாக செய்யக்கூடுபவன் இளைய யாதவன் ஒருவனே.”

விதுரர் விழி விலக்கிக் கொண்டார். தருமன் “ஈடிணையற்ற படைக்கலம் ஒன்று என்னிடமிருக்கிறது அமைச்சரே, அறம். எந்நிலையிலும் அதை நான் மீறமாட்டேன் என்று பாரதமெங்கும் நான் உருவாக்கியிருக்கும் நம்பிக்கை. அதுவே என்னை நோக்கி மானுடரை ஈர்க்கிறது. அரசனை தெய்வமாக்கும் ஆற்றல் அதுவே” என்றான். “இந்த பாரதவர்ஷமெங்கும் இன்று புதிய சில குரல்கள் எழுந்து வருகின்றன. ஷாத்ரநீதிக்கு அப்பால் இன்னுமொரு பெருநீதிக்காக ஏங்கும் குலங்களின் குரல்கள் அவை. யாதவர்கள், மச்சர்கள், வேடர்கள், அசுரர்கள், அரக்கர்குடிகள். அவர்கள் இன்று நம்பி ஏற்கும் ஒரே அரசன் நானே.”

விதுரர் மெல்ல அசைந்தார். பின்னர் சால்வையை சீர்செய்யும் அசைவினூடாக தன்னை மீட்டார். “இளவரசே, சற்று முன் தாங்கள் சொன்னதையே உங்களிடம் நான் கேட்கிறேன். என்றேனும் தங்கள் குருதியில் பிறந்த மைந்தர்களுக்காக தாங்கள் அறம்பிழைக்கலாகுமா?” தருமன் அவர் விழிகளை சற்றும் நிலையழியா விழிகளால் நோக்கி “இல்லை, அது நிகழாது” என்றான். விதுரர் திகைப்புடன் அவன் விழிகளையே நோக்கினார்.

“நான் மானுட உயிர்களுக்குரிய அவ்வெல்லையை கடப்பதை அன்றி பிறிது எதையும் இலக்காகக் கொள்ளவில்லை அமைச்சரே. சொல் கற்று சொல்நினைத்து நான் செய்யும் தவம் அதற்காகவே” என்றான் தருமன். “மானுடர் தாங்கள் இயல்பிலேயே நல்லவர்கள் என்றும், அறத்தில் நிற்பவர்கள் என்றும் நம்புகிறார்கள். அநீதியை செய்யும்போதுகூட அது நீதியின்பொருட்டே என்று நம்பிக்கொள்கிறார்கள். தங்களை நிறுவிக்கொள்ளவே மானுடஞானத்தின் சொற்களனைத்தும் செலவிடப்படுகின்றன. நான் மானுடரின் அனைத்து கீழ்மைகளையும் நேர்விழி கொண்டு நோக்குகிறேன். அவற்றை கடந்துசெல்ல முயல்கிறேன். எனக்கு சொல்லன்னை துணையிருப்பாள்.”

விதுரர் தளர்ந்தார். “அவ்வண்ணமே ஆகுக!” என்றபின் பெருமூச்சுவிட்டு, “இனி என்ன செய்யவிருக்கிறீர்கள் இளவரசே?” என்றார். தருமன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு “காத்திருக்கிறேன்” என்றான். விதுரர் விழிதூக்கினார். “தந்தையின் இறப்புக்காக” என்றான் அவன். அவர் மெல்ல அசைய “அதைச் சொல்ல மைந்தர் தயங்குவார்கள். உண்மையின் முன் நாணம் எதற்கு? அவர் நிறைவுடன் மறையட்டும். அதன்பின் முடிவெடுப்போம் அஸ்தினபுரி எவருக்கென்று” என்றான்.

சற்று முன்னால் சரிந்து அவன் தொடர்ந்தான் “அதுவரை நானும் என் இளையோரும் இங்கேயே இருக்கிறோம். நாங்கள் இங்கிருப்பதே இவர்களின் வல்லமையை கூட்டும். பீமனும் அர்ஜுனனும் இருக்கையில் துருபதரின் படைகளை எவரும் வெல்லமுடியாது. எங்களுடன் ஷத்ரியநாடுகள் இணையட்டும். .இளையோருக்கு சிறந்த மணமக்களை அவர்களிடம் தேடுவோம். புதிய அரசுகள் வந்து சேர்ந்துகொள்ளட்டும். வல்லமை வாய்ந்த படைக்கூட்டுடன் நான் இங்கே காத்திருக்கிறேன். என் நாட்டை நான் போரில் வென்றெடுக்கிறேன். அஸ்தினபுரியின் கோட்டையை உடைத்து வந்து அரண்மனை முற்றத்தில் நிற்கிறேன். அதுவே ஷத்ரிய முறைமை.”

விதுரர் அவனை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அவரது கழுத்துத்தசை இறுகி இறுகி தளர, தாடியுடன் தலை ஆடிக்கொண்டிருந்தது. “அமைச்சரே, என் எண்ணங்களை அன்னையிடம் சொல்லுங்கள்” என்றபடி தருமன் எழுந்தான். “இவற்றை அவர்களிடம் நான் நேரில் சொல்லும் தருணம் வாய்க்காமைக்கு நன்றி. இதோ நான் பாஞ்சாலத்தின் இளவரசியை மணம் புரிந்துகொண்டுவிட்டேன். அரசியலை முற்றிலும் என் கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டேன். அவர்களுக்கு ஐயமிருக்கலாம், நான் ஷத்ரியனா என்று. ஆம் என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஷத்ரியன் தன் இறுதி முடிவுக்கு எதிராக நிற்பவர் எவரையும் எதிரியென்றே எண்ணுவானென்று சொல்லுங்கள். அவர்கள் புரிந்துகொள்வார்கள்.”

தருமன் தலைவணங்கியபடி திரும்பி அறைவாயிலை நோக்கி செல்ல விதுரர் “இளவரசே, ஒரே ஒரு வினா. திருதராஷ்டிரருக்கு பின்னால் நீங்கள் அஸ்தினபுரியை வென்றால் உங்கள் நீதி எவரை எப்படி தண்டிக்கும்?” என்றார். தருமன் சற்றும் நிலைமாறா விழிகளுடன் “காந்தாரரை அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்புவேன். அவருக்களிக்கப்பட்ட வாக்கு மீறப்பட்டிருப்பதனால் அஸ்தினபுரியிடமும் நிகரான பிழையிருக்கிறது. ஆனால் ஷத்ரிய நெறியை மீறி அந்த எரிநிகழ்வை திட்டமிட்டமைக்காக அவரது நாட்டிடம் பெரும் பிழையீடு பெற்றபின்னரே அவரை அனுப்புவேன். கணிகரை கிழக்குக் கோட்டைவாயிலில் கழுவேற்றி இறந்த விலங்குகளுடன் எவரும் அறியாத இடமொன்றில் புதைப்பேன். நூறுதலைமுறையானாலும் அவருக்கு நீர்க்கடன்கள் செல்லாது” என்றான்.

விதுரர் தன் உடலெங்கும் பதற்றம்போல பரவிய மெல்லிய அச்சத்தை உணர்ந்தார். தருமன் சொன்னான் "அவைகூட்டி துரியோதனனையும் துச்சாதனனையும் என் நெஞ்சொடு சேர்த்து அணைத்தபின் அவர்களுக்கு என் பாதி நாட்டை அளிப்பேன். துரியோதனனுக்கு என்று தன்னிச்சையான மணிமுடியும் செங்கோலும் இருக்கும்படி செய்வேன். அவர்கள் என்றும் என் அருகில் துணைநாட்டவர்களாக நின்றிருக்கவேண்டுமென்று விழைவேன். குருகுலத்தில் மூத்தவனாக என் இளையோர் செய்த அனைத்துப்பிழைகளையும் மும்முறை பொறுத்தருள கடமைப்பட்டவன் நான். என் தாய்வயிற்று இளையோருக்கு முற்றிலும் நிகராக அவர்களையும் என் அன்பிலேயே வைத்திருப்பேன்.”

”அவர்கள் அதற்கு ஒப்பார்கள் என்றால் துரியோதனனையும் துச்சாதனனையும் என் இளையோனிடம் போரிட்டு மடியவைப்பேன். அவர்கள் ஷத்ரியர்கள். வீரசொர்கத்திற்கு தகுதிகொண்டவர்கள்” என்றான் தருமன். விதுரர் அவரை அறியாமல் கைகளை தளரவிட்டார். “சூதமைந்தன் கர்ணனை அவைக்கு அழைக்காமல் என் அறைக்கு அழைத்து தனியாக வாரணவதத்து எரிநிகழ்வை ஏற்றுக்கொண்டானா என்று கேட்பேன். ஏற்றுக்கொண்டான் என்று அறியவந்தால் அவனை வாள்போழ்ந்து கொன்று என் மூதாதையர் உறங்கும் தென்திசை சோலை ஒன்றில் எரியூட்டுவேன்.” விதுரர் ஏதோ சொல்வதற்குள் தருமன் வெளியே சென்றுவிட்டான். அவன் மரப்படிகளில் ஏறிச்சென்ற ஒலி கேட்டது.

பெருமூச்சுடன் அவர் மீண்டும் பீடத்தில் சாய்ந்துகொண்டார். திரும்பி திரௌபதியை நோக்கி ஏதேனும் சொல்ல வேண்டுமென்று அவர் எண்ணுவதற்குள் அவள் திரை ஓவியம் காற்றில் உலைவதுபோல் உயிர்கொண்டு “யாதவஅரசியிடம் நான் ஏதேனும் பேசவேண்டுமா அமைச்சரே?” என்றாள். விதுரர் திடுக்கிட்டு அந்த வினாவிலிருந்த நெடுந்தொலைவைக் கடந்து “இல்லை, இப்போது சொன்னதற்கு அப்பால் என்ன?” என்றார்.

திரௌபதி தன் ஆடையை இடக்கையால் பற்றிக்கொண்டு எழுந்து பீடத்தின் வலப்பக்கம் போடப்பட்டிருந்த தன் நீள்கூந்தலை எடுத்து பின்னால் இட்டு தலையை மயில் என சொடுக்கி அதை சீர்ப்படுத்தியபின் “வணங்குகிறேன் அமைச்சரே” என்றாள். விதுரர் எழுந்து தலைவணங்கினார். அவள் நடந்துசெல்லும்போது அலையடித்த கூந்தலை அவர் நோக்கிக்கொண்டிருந்தார்.

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 1

அணியறையில் பீமனின் பெருந்தோள்களை கைகளால் நீவியபடி மிருஷை “அணிசெய்வது எதற்காக என்றார் தங்கள் தமையனார்” என்றார். பீமன் ”நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றான். “உடல் ஒரு செய்தி. அது ஐயத்திற்கிடமில்லாமல் நம் அகம் எண்ணுவதை சொல்வதற்கே அணிசெய்துகொள்கிறோம் என்றேன்“ என்றார் மிருஷை.

பீமன் மெல்ல நகைத்தபடி அசைந்து அமர்ந்து “அது நல்ல மறுமொழி. தேர்ந்த சொல்” என்றான். “உண்மையல்ல என்கிறீர்களா?” என்றபடி மிருஷை கைகாட்ட கலுஷை நறுவெந்நீர் நிறைந்த வெண்கலக் குடத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள். அதை அவன் மேல் மெல்ல ஊற்றினார். அவன் தோள்கள் வழியாக வழிந்த நீரை அள்ளி உடலெங்கும் பரப்பினார்.

”ஒரு தருணத்தில் எழுப்பப்படும் வினாவுக்கு அளிக்கப்படும் மறுமொழி பெரும்பாலும் அத்தருணத்தை மட்டுமே விளக்குகிறது” என்றான் பீமன். புன்னகைத்தபடி “ஏன்? அம்மறுமொழியில் என்ன பிழை?” என்றார் மிருஷை. “நாம் சொற்களுக்கு அப்பால் சிந்திப்பதில்லை சமையரே. சொல்லெடுக்கையிலேயே அச்சொல்லும் அதன்பொருளென அமைந்த சிந்தனையும் அங்கிருப்பதை உணர்கிறோம். உடலை அணிசெய்வதன் வழியாக நாம் உணர்த்தும் பொருளென்ன என்பதை எப்படி முழுமையாக அறியமுடியும்?” சிரித்தபடி “என் உடல் உங்கள் அணிகளுக்குப்பின் வெறும் சமையற்காரனாகத் தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றான்.

மிருஷை சிரித்துவிட்டு பின்னர் “ஆம், அது உண்மை. நாம் பொதுப்பொருளையே அளிக்கிறோம். அது அளிக்கும் தனிப்பொருள் நம்மிடமில்லை” என்றார். “அணிசெய்துகொண்டிருக்கிறோம் என்ற தன்னுணர்வும் நம்மை பார்ப்பவர்களுக்கு நாம் அணிசெய்துகொண்டிருக்கிறோம் என்ற அறிதலும் அன்றி வேறேதும் இதிலில்லை” என்றான் பீமன்.

மிருஷை “உங்களிடம் பேசினால் நான் என் கலையையே மறந்துவிடவேண்டியிருக்கும்” என்றார். “எந்தக்கலையும் அதை ஆற்றுபவர் ஒருபோதும் எண்ணாத எதையோ நிகழ்த்துகிறது சமையரே. இல்லையேல் அக்கலை முன்னரே அழிந்திருக்கும்” என்றான் பீமன். அவன் உடலின் மயிரற்ற தசைப்பாளங்கள் ஈரத்தால் பளபளத்தன. அவர் அதை தன் கைகளால் மெல்ல அடித்தார்.

பெரிய மரவுரிப்பட்டையால் அவன் உடலின் ஈரத்தை துடைத்து எடுத்தார் மிருஷை. “எனது இக்கைகளால் தொட்டவற்றிலேயே பெரிய உடல் இதுவே” என்றார். “நீங்கள் என் பெரியதந்தையாரை ஒருமுறை அணிசெய்யவேண்டும்” என்று பீமன் நகைத்தான். “அணிசெய்துகொள்வதில் பேரார்வம் கொண்டவர். ஏனென்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவரால் பார்க்கமுடியாது.” மிருஷை துடைப்பதை நிறுத்திவிட்டு உரக்க நகைக்கத் தொடங்கினார். அவரது மாணவிகளும் சேர்ந்து நகைத்தனர்.

”பேருடல் கொண்டவர்கள் என்றும் என் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்” என்று சொன்னபடி மிருஷை அவன் உடலை துடைத்தார். கலுஷை அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு நகங்களை வெட்டத் தொடங்கினாள். காருஷை அவன் கால்நகங்களை வெட்டினாள். ”ஏனென்றால் அவர்களின் காமத்தை என்னால் அறியமுடிந்ததே இல்லை” என்றார் மிருஷை.

பீமன் கலுஷையின் விழிகளை ஒருகணம் நோக்கினான். எந்தப்பெண் விழிகளிலும் இல்லாத கூர்மையுடன் அவை அவனை நோக்கி தாழ்ந்தன. “பிறர் காமத்தை அறியமுடியுமா மானுடரால்?” என்றான் பீமன். “உடற்காமம் எந்த அளவுக்கு மாற்றமற்றதோ வெளிப்படையானதோ அந்த அளவுக்கு உளக்காமம் தனித்தது, ஆழ்ந்தது என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” மிருஷை கையை அசைத்து “அறியமுடியாத ஏதும் இவ்வுலகில் இல்லை” என்றார்.

அவன் கைகளை தூக்கச் செய்து அடிக்கையை துடைத்தபடி ”உங்கள் பேருடலை எப்படி உணர்கிறீர்கள் இளவரசே?” என்றார் மிருஷை. “ஓடிவிளையாட நிறைய இடமிருக்கும் அரண்மனை இது” என்றான் பீமன். மிருஷை சிரித்து மெல்ல அவனை தன் கையால் அடித்து “விளையாடவேண்டாம்” என்றார். “உண்மை, என் உடல் எனக்கு பிடித்திருக்கிறது. நீரில் என்னை நோக்கும்போது நான் நிறைந்திருப்பதாக உணர்கிறேன். என் தசைகளைப்போல நான் விழைவதொன்றும் இல்லை” என்றான். பின்பு மேலும் சிரித்து “இளமையில் நான் ஒருவனல்ல பலர் என்று எண்ணிக்கொள்வேன். என் கைகளும் கால்களும் தோளும் மார்பும் அடங்கிய ஒரு திரள்தான் நான் என” என்றான்.

“உங்கள் கரங்கள் ஜயவிஜயர்கள் என்னும் இரு நாகங்கள் என சூதர்கள் பாடுகிறார்கள்” என்றார் மிருஷை. “இப்போது இக்கைகளை தொட்டுப்பார்க்கையில் எனக்கும் அதுவே உண்மையென்று தோன்றுகிறது. இவை மண்ணில் நிகழக்கூடியவை அல்ல. விண்ணிலிருந்து வந்தவை.” மிருஷையின் தலையைத் தொட்டு கூந்தலை வருடியபடி “என்னில் காமம் கொள்கிறீரா?” என்றான் பீமன். புன்னகையுடன் “இல்லை. அதனால்தான் கேட்டேன்” என்றார் மிருஷை.

அவன் மீது நறுமணத்தைலத்தை கைகளாலேயே பூசியபடி “என்னுள் வாழும் பெண் காமம் கொள்ளாத ஆணே இல்லை இளையவரே” என்றார் மிருஷை. “தங்கள் தமையனாரை அணிசெய்கையில் என் கூந்தலிழையை எடுத்து என் காதருகே செருகினார். அந்தச் செயலில் இருந்த அன்பை எண்ணி நான் அன்றிரவு அழுதேன். இளவரசே, அவர் சக்ரவர்த்தி. மண்ணிலுள்ள அத்தனை மானுடரின் துயரையும் ஏக்கத்தையும் ஒருவர் சொல்லாமலே அறியமுடியுமென்றால் இப்புவியை ஆள அவரன்றி தகுதிகொண்டவர் எவர்? என் உள்ளத்தில் எழுந்தது என்ன என்று உணர்ந்து அதை அவர் அளித்தார். அந்த ஒருகணத்தில் நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து நிறைந்தேன்.”

பீமன் அவர் விழிகளில் படர்ந்திருந்த மெல்லிய ஈரத்தை நோக்கியபின் கலுஷையை நோக்கினான். அவள் விழியும் கனிந்திருந்தது. “ஆம், அவர் அத்தகையவர். எளிய மானுடர் அவரைப்போன்ற ஒருவருக்காகவே எக்காலமும் எண்ணி எண்ணி ஏங்குகிறார்கள்.” மிருஷை “உங்களைப்பற்றி அறிந்திருந்தேன். மூன்றுநாட்களுக்குப்பின் இன்று உங்கள் முறை என்று சொன்னபோது என் கைகள் பதறிக்கொண்டிருந்தன. இங்கு வரும் பாதையை எண்ணியதுமே நான் நாணம் கொண்டேன். இவர்களிடம் நீங்களே செல்லுங்களடி என்னால் இயலாதென்று சொன்னேன். இவர்களும் அஞ்சி முடியாதென்றனர். ஆனால் வராமலிருக்கவும் எங்களால் முடியாதென்று அறிந்திருந்தோம்” என்றார்.

”இங்கு வந்து அணியறையில் உங்களுக்காக காத்திருக்கையில் நாங்கள் மூவரும் உருகிக்கொண்டிருந்தோம். ஒரு சொல் பேசமுடியவில்லை. யானை நடக்கும் ஒலியுடன் நீங்கள் உள்ளே வந்தீர்கள். ஆம், யானையின் ஒலிதான். காளையோ புரவியோ நடக்கும் ஒலி அல்ல. யானையைப்போல் அத்தனை மென்மையாக காலெடுத்துவைக்கும் உயிர் பிறிதில்லை. மண் அதை ஏந்திக்கொள்கிறது. நாம் அறிவது மண்ணின் நெஞ்சு விம்மும் மெல்லிய ஒலியைத்தான். அதைப்போல நம் செவிகள் தவறவிடாத ஒலியும் பிறிதில்லை. பெரிய கரங்களால் நீரைத் துழாவி வருவதுபோல எளிதாக மிதந்து வந்தீர்கள். இந்த வாயிலில் நின்றீர்கள்” என்றார் மிருஷை.

“உங்கள் உடலைப் பார்க்க அஞ்சி கால்களை நோக்கினேன். அத்தனை பேருருவத்தை ஏந்திய கால்கள் சிறியவையாக கழுகின் இரு உகிர்கள் போல மண்ணை அள்ளியிருந்தன. அதன் பின் விழிவிரித்து உங்கள் உடலை நோக்கினேன். ஒருகணம்கூட உங்கள் மேல் காமம் எழவில்லை என்று கண்டேன்” மிருஷை சொன்னார். பீமன் புன்னகை செய்தான்.

“ஏனென்றால் உங்கள் உடல் முழுமையுடன் இருந்தது. ஒவ்வொரு தசையும் ஒவ்வொரு நரம்பும் தெய்வங்கள் எண்ணிய வகையிலேயே அமைந்திருந்தன. இளவரசே, ஆணுடலில் பெண் பார்ப்பது ஓர் முழுமையின்மையை. தன் உடலால் அவனுடலில் படர்ந்து அவள் அவ்விடைவெளியை நிறைக்க முயல்கிறாள். பெண்ணுடலில் ஆண் பார்ப்பதும் அதே குறையைத்தான். தன் உடலால் அவன் அதை முழுமைசெய்ய முயல்கிறான். ஒரு பெண் எதையும் உங்களுக்கு அளித்துவிடமுடியாது” மிருஷை தொடர்ந்தார்.

கலுஷை எடுத்துத்தந்த நறுஞ்சுண்ணத்தை அவன் உடலில் பூசியபடி “சொல்லுங்களடி” என்றார் மிருஷை. “ஆம், இளவரசே. நீர்க்கரை மரம்போலவோ மலையுச்சி பாறைபோலவோ தன்னந்தனி முழுமையுடன் இருக்கிறது உங்கள் உடல்” என்றாள் கலுஷை. மிருஷை சிரித்து அவள் தோளை செல்லமாக அடித்து “அரிய உவமை... இளவரசே, இவள் காவியமும் படிப்பவள்” என்றார்.

பீமன் நகைத்து “அப்படியென்றால் இன்றிரவு என்ன நிகழப்போகிறது?” என்றான். சிரித்தபடி “இளவரசி எங்கோ உங்கள் முழுமையை கலைக்கப்போகிறார்கள். உங்களை இன்னொன்றாக ஆக்கப்போகிறார்கள்” என்றார் மிருஷை. காருஷை “அஞ்சவேண்டாம்... அதுவும் இன்பமே” என்றாள். கலுஷை “இன்பமாவது எல்லாம் சிறிய இறப்புகளே” என்றாள்.

பீமனின் தாடி முகவாயில் மட்டும் கரிப்புகை போல் சுருண்டிருந்தது. மீசை இரு உதடோரங்களில் மட்டும் தோன்றி கீழிறங்கியது. ஆனால் அவன் குழல் சற்றும் சுருளின்றி பளபளக்கும் காக்கைச்சிறகுகளாக நீண்டு தோளில் விழுந்திருந்தது. “உங்கள் குழல் அழகானது இளவரசே. பீதர்களில் சிலருக்கே இத்தகைய அழகிய நேர்குழல் அமைகிறது” என்றார் மிருஷை அதை ஒரு தந்தச்சீப்பால் சீவி அமைத்தபடி. “தங்கள் தமையனாருக்கு குழலைச் சீவி சுருளாக்கினோம். இக்குழலை சுருளாக்க எவராலும் முடியாது.”

அவர் பின்னால் நடந்து கைநீட்ட கலுஷை ஆடியை நீட்டினாள். பீமன் அதை தவிர்த்தான். “பார்க்க விழையவில்லையா?” என்றாள் காருஷை. “இல்லை, நான் நீரில் என் உடலை மட்டுமே பார்ப்பேன். முகத்தை பார்ப்பதில்லை” என்றான் பீமன் எழுந்தபடி. கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தபோது அவன் உடலுக்குள் சுள்ளிகள் முறிவதுபோல எலும்புகள் நிலைமீளும் ஒலி கேட்டது. “அணிகொள்ளுதல் இத்தனை கடினமானது என்று நான் அறியவில்லை. மீண்டும் பசிக்கிறது” என்றான். மிருஷை “நீங்கள் மீண்டும் உண்ணலாம். இப்போது உங்கள் மேல் ஏறியிருக்கும் கந்தர்வர் அதை விரும்புவார்” என்றார்.

”தங்கள் விரல்களுக்கு வணக்கம் சமையரே” என்றான் பீமன். “உடல் தொடாத ஒன்றை நான் உணர்வதில்லை. இத்தனைநேரம் உங்கள் மூவரின் விரல்கள் அளித்த முத்தங்களில் நீராடிக்கொண்டிருந்தேன்.” மிருஷை கண்கள் மலர்ந்து நகைத்து “நலமும் உவகையும் திகழ்க!” என்றார். வலக்கையால் அவர் தோளை அள்ளி நெஞ்சோடு சேர்த்து “உங்கள் அணிகளால் மங்கலம் நிறையட்டும்” என்று சொன்ன பீமன் இடக்கையால் கலுஷையையும் காருஷையையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

நெடுநேரம் அறைக்குள் இருந்து விட்டதாகவும், வெட்டவெளிக்கு செல்லவேண்டுமென்றும் தோன்றியது. மாளிகையின் படிகளில் இறங்கி அவன் வெளியே சென்று கங்கைக்கரையை அடைந்தபோது பாஞ்சாலத்தின் கொடிபறக்கும் சிறிய படகு கரைநோக்கி வருவதை கண்டான். அதைக் கண்டதுமே எவரென புரிந்துகொண்டான். படகு அணுகியபோது மறுபக்கம் மாலை ஒளியுடனிருந்த கங்கையின் நீரின் பகைப்புலத்தில் குந்தியின் தோற்றம் தெரிந்தது. அவனை அவள் கண்டுவிட்டாள் என உடலில் இருந்த இறுக்கம் காட்டியது.

படகு கரையணைந்ததும் பீமன் அருகே சென்று படித்துறையில் நின்றான். பலகைவழியாக இறங்கி வந்த குந்தி “இன்னமும் நேரமிருக்கிறது. ஆகவே உன்னிடம் விரைந்து உரையாடி முடித்துச் செல்லலாம் என்று வந்தேன்” என்றாள். பீமன் திடமான குரலில் “உரையாட வந்தது விதுரர் சொன்னதைப்பற்றி என்றால் இந்தப் படகிலேயே நீங்கள் திரும்பலாம். நான் என்றும் என் தமையனின் காலடியில் வாழ்பவன்” என்றான்.

குந்தி நிமிர்ந்து சினமெழுந்த விழிகளுடன் அவனை நோக்கினாள். ”ஆம் அன்னையே, தெய்வங்களும் என் அகப்படையலை மாற்றமுடியாது. பொறுத்தருள்க!” என்றபடி பீமன் அணுகினான். பின்பக்கம் அவள் வந்த படகு மெல்ல வந்து படித்துறையை முட்ட அவள் சற்று அதிர்ந்து திரும்பி நோக்கியபின் தலைத்திரையை சீர்செய்து “நான் அதைப்பற்றி பேசவரவில்லை. என்னிடம் விதுரர் சொன்னபோதே உன்னை முழுதுணர்ந்து விட்டேன்” என்றாள்.

பீமன் “அவ்வண்ணமென்றால் வருக!” என்று அவளை கைநீட்டி வரவேற்றான். அவன் அணிசெய்து கொண்டிருப்பதை அவள் ஓரக்கண்ணால் நோக்குவதை அவன் கண்டான். அந்த நோக்கு கூரிய வேல்முனை என தொட்டுச்சென்றது. அவன் சற்று பின்னடைந்தான். அவள் நின்று திரும்பி “இந்த இளவேனில் மாளிகை இத்தனை எழில்மிக்கதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றாள். “ஆம், அழகானது” என்று அவன் விழிகளை கொடுக்காமல் சொன்னான். பொருளற்ற சொற்கள் வழியாக அவர்கள் அந்தத் தருணத்தை கடந்தனர்.

அரண்மனையின் படிகளில் அவள் ஏறியபோதுதான் அவள் வந்த செய்தியறிந்து சிசிரன் பதறியபடி ஓடிவந்தான். வணங்கியபடி “இளவேனில் மாளிகைக்கு நல்வரவு அரசி” என்றான். அவள் அவனை கைதூக்கி வாழ்த்தியபின் சென்று அவைக்கூடத்தில் இருந்த பீடத்தில் அமர்ந்தாள். தலையிலிருந்து சரிந்த ஆடையை சீரமைத்துவிட்டு அவ்வறையை சுற்றி நோக்கினாள்.

பீமன் “இங்கு சொல்சிந்தா அமைப்பு உண்டு. சேவகர் விலகிவிடுவார்கள்” என்றான். அவள் தலையை அசைக்க சிசிரன் தலைவணங்கி “அரசிக்கு இன்னீர் ஏதும்?” என்றான். அவள் வேண்டாம் என்று கையசைக்க அவன் விலகிச்சென்றான். கதவுகள் மெல்ல மூடிக்கொண்டன. சாளரம் வழியாக வந்த கங்கைக்காற்றை பீமன் உணர்ந்தான்.

“உன் தமையன் சொன்னதை அறிந்திருப்பாய்” என்றாள் குந்தி. “ஆம், நீ அவன் சொற்களை மீறமாட்டாய். ஆனால் நீ உகந்ததை அவனுக்காக செய்ய கடன்பட்டவன். அவன் அறமறிந்தவன். அரசு சூழ்தலும் கற்றவன். ஆனால் படைத்திறன் அற்றவன். அவனுடைய அத்தனை கணக்குகளும் பிழையாவது அவை படைக்கணக்குகளாக மாறும்போதுதான்.” பீமன் தலையசைத்தான்.

“பாஞ்சாலப்படை பெரியதுதான். ஆனால் அது இன்று திரௌபதிக்குரியது அல்ல. அது ஐங்குலப்படை. அக்குலத்தலைவர்களுக்குக் கட்டுப்பட்டது அது. அவர்களிடம் மொழிகொள்ளாமல் எந்த முடிவையும் எடுக்கமுடியாது” என்று குந்தி தொடர்ந்தாள். "அருகே சத்ராவதி உள்ளது. அஸ்வத்தாமன் ஆளும் அந்த மண் இந்த ஐங்குலத்திற்கும் உரியது. இவர்கள் ஆண்டது. அதை இழந்து இத்தனை ஆண்டுகளாகியும் அஸ்தினபுரிக்கு அஞ்சி அதை மீட்காமலிருக்கிறார்கள் என்றால் இவர்களின் உண்மையான படைவல்லமை என்ன?"

“உடனே ஒரு போரை நிகழ்த்த துருபத மன்னர் விழையாமலிருக்கலாம். அந்தப்போர் அஸ்தினபுரியுடனான போராக மாறினால் எளிதில் முடியாது” என்றான் பீமன். “ஆம், அதுவும் உண்மையாக இருக்கலாம். ஆனால் சத்ராவதியில் அஸ்வத்தாமன் இருக்கும்வரை பாஞ்சாலர்களை வல்லமைகொண்ட அரசு என்று எவரும் நம்பப்போவதில்லை. வல்லமையற்றவர்களுடன் எவரும் இணைந்து கொள்ளப் போவதுமில்லை” என்றாள் குந்தி.

“சொல்லப்போனால் நம் இளையோருக்கு ஷத்ரியர்களின் இளவரசியரை கேட்பதற்கே நான் தயங்குகிறேன். நம்மிடமிருப்பது என்ன? நிலமில்லை. வல்லமை கொண்ட அரச உறவுமில்லை என்னும்போது எப்படி நான் தூதனுப்ப முடியும்?” குந்தி கேட்டாள். “இன்று பாண்டவர்கள் பாஞ்சாலத்தின் ஷத்ரிய படைவீரர்கள் மட்டுமே. ஐந்து குலங்களிலும் நமக்கு இடமில்லை என்பதனால் என்றும் இம்மண்ணில் நாம் அயலவரே. எவரும் நீண்டநாள் விருந்தோம்பலை பெறமுடியாது.”

பீமன் அவளை நோக்கியபடி அமர்ந்திருந்தான். குந்தியின் குரல் இயல்பாக மாறியது. “சேதிநாட்டரசர் தமகோஷர் நோயுற்றிருக்கிறார். அவர் மைந்தர் சிசுபாலர் விரைவில் அரசுகொள்வார் என்கிறார்கள். சிசுபாலரின் தங்கை கரேணுமதி அழகி, நூல்கற்றவள். அவளை நகுலனுக்காக கேட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன்.”

பீமன் முகம் மலர்ந்து “ஆம், சேதிநாடு வல்லமை கொண்டது. அவ்விளவரசியைப்பற்றி சில சூதர்கள் பாடிக்கேட்டும் இருக்கிறேன்” என்றான். குந்தி “ஆனால் சிசுபாலன் இப்போது மகதத்தின் நட்புநாடாக இருக்கிறான். மகதத்தின் பன்னிரு களப்படைத்தலைவர்களில் அவனும் ஒருவன்” என்றாள். “நம்மிடம் மணவுறவு கொண்டால் அவன் மகதத்தை கைவிடவேண்டும். ஒருவகையில் அஸ்தினபுரியையும் கைவிடவேண்டும். எதன்பொருட்டு அவன் அதைச்செய்யத் துணிவான்?”

அவள் சொல்லவருவதென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் முகத்தை நோக்கியபடி அமைதியாக இருந்தான். “மத்ரநாட்டு சல்யரின் இளையோன் தியுதிமானின் மகள் விஜயைக்கு மணமகன் தேர்வதாக செய்தி வந்தது. அவளைத்தான் சகதேவனுக்காக எண்ணியிருந்தேன்” என்று குந்தி தொடர்ந்தாள். “அவள் அவனுடைய மாமன் மகள். முறைப்படி அவன் அவளை கொண்டாகவேண்டும்.”

பீமன் தலையசைத்தான். குந்தியின் உள்ளம் சென்றுசேரப்போகும் இடம் அவனுக்கு புரியவில்லை. அதை உய்த்துணர முயல்வதை அவன் முழுமையாகக் கைவிட்டு வெறுமனே நோக்கத் தொடங்கினான். குந்தி “சேதிநாடு அங்கநாட்டுக்கு அண்மையில் உள்ளது. மத்ரநாடு காந்தாரத்தின் வணிகப்பாதைகளில் உள்ளது. நாம் வைக்கும் ஒவ்வொரு மணவுறவும் சதுரங்கத்தில் வைக்கப்படும் காய்கள். நாம் இவ்விருநாடுகளையும் தவறவிடவேகூடாது” என்றாள்.

“ஆம்” என்றபடி பீமன் தன் கால்களை விரித்து கைகளை நீட்டி பீடத்தின் மேல் வைத்துக்கொண்டான். “ஆனால் இன்று நாம் இவர்கள் எவரிடமும் மணம் கோரி செல்லமுடியாது. நாம் இன்று எந்த நாட்டுக்குரியவர் என்ற வினா எங்கும் எழும். பீமா, நிலமில்லாத ஷத்ரியன் வெறும் படைவீரன் மட்டுமே. அவனுக்கும் படைக்கலங்களுக்கும் வேறுபாடில்லை. அவை பிறர் கைக்கருவிகள்” என்றாள் குந்தி. அவள் குரல் தழைந்தது.

பீமன் சற்று சீற்றத்துடன் “நாம் பாஞ்சால இளவரசியை கொண்டிருக்கிறோம். இவ்வரசர்களுக்கு பாஞ்சாலத்தை விட பெருமையா என்ன?” என்றான். “அவர்களிடம் நாம் சென்று நின்று பெண் கேட்டு இரக்கவேண்டுமா என்ன? அவர்களின் இளவரசியர் பாஞ்சாலத்தின் பேரரசியின் இளையோராக அல்லவா வருகிறார்கள்?”

பல்லைக்கடித்தபடி குரலெழாமல் “மூடா!” என்றாள் குந்தி. “சிந்தித்துப்பார், துருபதனை நீங்கள் களத்தில் வென்று தேர்க்காலில் கட்டி அவமதித்தீர்கள். எளிய நிகழ்வல்ல அது. பாதிநாட்டை அவர் இழந்திருக்கிறார். அவர் அடைந்த பெருந்துயரை இங்கு வந்தபின்னரே முழுமையாக அறிந்தேன். உடல்நலம் குன்றி இறப்பின் கணம்வரை சென்றிருக்கிறார். பின்னர் உளநலம் குன்றியிருக்கிறார். கிழக்கே எங்கோ சென்று யாஜர் உபயாஜர் என்னும் இரு அதர்வ வைதிகர்களை அழைத்துவந்து சௌத்ராமணி வேள்வியைச் செய்து இவளை பெற்றிருக்கிறார். அது பழிவாங்குவதற்காக மைந்தரை பெறும்பொருட்டு செய்யப்படும் பூதயாகம்.”

முன்னரே கேட்டிருந்த செய்தியாக இருந்தாலும் பீமனின் உள்ளத்தில் மெல்லிய அசைவு ஒன்று நிகழ்ந்தது. “அவர் மகளைப்பெற்றது உங்களை வெல்ல, அடிமைப்படுத்த. வேறெதற்கு? அதைத்தான் துர்வாசர் என்னிடம் சொன்னார்” என்றாள் குந்தி. “துருபதனின் வஞ்சத்தை நான் எப்போதும் அஞ்சிக்கொண்டிருந்தேன். அதைக்குறித்த செய்திகளை ஒவ்வொரு நாளும் சேர்த்துக்கொண்டிருந்தேன். இங்கு மணம்கொள்ளவந்ததே அவ்வஞ்சத்தை உறவின்மூலம் கடக்கமுடியும் என்று நம்பித்தான். இத்தனை பெருந்துயர் என்று அறிந்திருந்தால் அவ்வெண்ணமே கொண்டிருக்கமாட்டேன்.”

பீமன் “அன்னையே, தங்களிடம் அன்றுமுதல் நான் கேட்க எண்ணியது இது. உண்மையில் துர்வாசர் தங்களிடம் என்ன சொன்னார்?” என்றான். குந்தி குரல் சற்று தணிய “அவர் சொன்னபடிதான் நான் நடந்துகொண்டேன்” என்றாள். “அவர் உங்களிடம் சொன்ன அனைத்தையும் அறிய விழைகிறேன் அன்னையே” என்றான் பீமன். அவள் விழிதூக்கி “உங்களை வில்குலைக்க அனுப்பவேண்டாம் என்று சொன்னார். பார்த்தன் வில்லெடுத்தால் திரௌபதியை வெல்வான். அது நமக்கு நல்லதல்ல என்றார். உடனே மைந்தரை அழைத்துக்கொண்டு காம்பில்யத்தைவிட்டு அகலும்படி ஆணையிட்டார்” என்றாள்.

“நீங்கள் அச்சொல்லை மீறினீர்கள்” என்றான் பீமன் சற்றே சினத்துடன். “அவர் உங்கள் ஆசிரியர் அல்லவா?” குந்தி சினத்துடன் “என் ஆசிரியர் இவரல்ல. நான் விளையாடி மகிழ்ந்த முதியவர் மண்மறைந்துவிட்டார்” என்றாள். பீமன் “ஆனால் ஆத்மபுடம் செய்து அவரது உள்ளத்தையும் அறிவையும் முற்றிலும் பெற்றுக்கொண்டவர் இவர். பெருங்குருநாதர்கள் அழிவதில்லை” என்றான். குந்தி இதழ்களைக் கோட்டி “ஆம், ஆனால் இவரை நான் அணுக்கமாக எண்ணவில்லை” என்றாள்.

“அவர் சொன்னவற்றை நீங்கள் எங்களிடம் சொல்லியிருக்கலாம்” என்றான் பீமன். “நீங்கள் அதற்குள் அரண்மனைக்கு சென்றுவிட்டீர்கள்” என்று அவள் கண்களில் சினம் மின்ன சொன்னாள். “அன்னையே, நான் எங்கிருப்பேன் என எப்போதும் உங்களுக்குத்தெரியும்...” என்றான் பீமன். உரத்தகுரலில் “நீ என்னை மன்றுநிறுத்த முயல்கிறாயா?” என்றாள் குந்தி. பீமன் பெருமூச்சுடன் கைகளை விரித்து “சரி, இல்லை” என்றான். மீண்டும் பெருமூச்சு விட்டு “துர்வாசரின் எச்சரிக்கையினால்தான் நீங்கள் இம்முடிவை எடுத்தீர்களா?” என்றான்.

“இல்லை. அதையும் அவரிடம் கலந்தே எடுத்தேன்” என்றாள் குந்தி. “பார்த்தன் அவையில் வென்றதும் அன்றே மீண்டும் அவரிடம் சென்றேன். துருபதனின் வஞ்சத்திற்கு நிகரானது பாஞ்சாலப் பெருங்குடியினரின் வஞ்சம் என்று அவர் சொன்னார். நீங்கள் ஐவரும் அவர் மகளை மணப்பீர்கள், அஸ்தினபுரி அவள் காலடியில் கிடக்கும் என்றால் துருபதனின் வஞ்சம் தணியுமா என்று நான் கேட்டேன். ஆம், அது ஒரு நல்ல எண்ணமே என்று அவர் சொன்னார்.”

பீமன் புன்னகை செய்தான். குந்தி “அம்முடிவு சிறந்தது என்றே உணர்கிறேன். உண்மையிலேயே அது துருபதனை மகிழச்செய்தது என்று கண்டேன். திரௌபதி அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடும்போது அவர் முழுநிறைவடைவார்” என்றாள். பீமன் “இந்தக் கணக்குகள் எனக்கு விளங்குவதில்லை அன்னையே. நான் என்ன செய்யவேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள்” என்றான்.

குந்தியின் விழிகள் மாறுபட்டன. “உன் தமையனிடம் இனி நான் ஏதும் பேசமுடியாது. அவன் அனுப்பிய சொற்களில் அனைத்தும் தெளிவாக இருந்தன” என்றாள். “இனி உன்னிடம் மட்டுமே பேசமுடியும்” என்றாள். அவள் உடலில் ஓர் அண்மை வெளிப்பட்டது. சற்று முன்னகர்ந்து மேலாடையை அள்ளி மடியில் குவித்தபடி “நீ மட்டுமே எனக்கு உதவமுடியும் மந்தா” என்றாள்.

பீமன் நகைத்து “நானா? அன்னையே, நான் எப்போது மூத்தவரிடம் பேசியிருக்கிறேன்? நான் அவருக்கும் வெறும் மந்தன் அல்லவா?” என்றான். “ஆம், நீ பேசமுடியாது. அவள் பேசமுடியும்” என்றாள் குந்தி. “இனி அவனிடம் அவள் மட்டுமே பேசமுடியும்.” பீமன் புன்னகை செய்தான். “நான் சொல்வனவற்றை அவளிடம் சொல்.” பீமன் கைகளை கோர்த்துக்கொண்டு முன்னால் குனிந்து “சொல்லுங்கள் அன்னையே” என்றான்.

குந்தி “நான் சொல்வதெல்லாம் அவள் நலனுக்காகவே” என்றாள். “பாரதவர்ஷத்தின் பேரரசியாக அவள் ஆவாள் என்கின்றனர் நிமித்திகர். அவள் தந்தையும் குலமும் அதையே எண்ணியிருக்கிறார்கள். இங்கே இந்த நகரின் புறமாளிகையில் அவள் வெறும் இளவரசியாக எத்தனைநாள் வாழ்வாள்? இன்று அவளிடமிருக்கும் பெரும் படைக்கலம் என்றால் அவளைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க நிமித்திகர் சொல்லி நிறுவியிருக்கும் அந்த நம்பிக்கை.”

“பாரதவர்ஷம் காத்திருக்கிறது மந்தா. எச்சரிக்கையுடன் மட்டுமல்ல. இத்தகைய செய்திகளில் சற்று எதிர்நம்பிக்கைகளுடனும்தான். எங்கேனும் ஒரு கேலி முளைத்துவிட்டதென்றால் மிக விரைவில் அது பரவும். மக்களின் உள்ளங்களின் அடியாழத்தில் முன்னரே வாழும் கேலிதான் அது. ஏனென்றால் பேருருவம் கொண்ட எதுவும் வீழ்ச்சியடைந்து பார்க்க மக்கள் விழைகிறார்கள். அக்கேலி நெய்க்கடலின் எரி போல பரவும். பின் அதை எவரும் தடுக்க முடியாது. திரௌபதி என்னும் அச்சமூட்டும் ரகசியம் அத்துடன் அழியும்.”

“அது நிகழலாகாது என்பதற்காகவே வந்தேன்” என்றாள் குந்தி. “இன்று உங்களுக்குத்தேவை நிலம். அவளுக்குத்தேவை அவள் வஞ்சம் கொண்ட கொலைத்தெய்வம் என்ற உளச்சித்திரம். பாஞ்சாலத்திற்குத் தேவை வஞ்சம் நிறைவேறல். மூன்றுக்கும் ஒரே வழிதான். அவளிடம் சொல், அஸ்வத்தாமன் மீது படைகொண்டுசெல்ல. சத்ராவதியை வென்று அதில் அவள் முடிசூடட்டும். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் முதல் மணிமுடி அவ்வாறு அவளாலேயே வென்றெடுக்கப்படட்டும்.”

பீமன் ”அன்னையே அது துரோணருக்கு அர்ஜுனன் அளித்த கொடை” என்றான். “இல்லை, துரோணருக்கு அர்ஜுனன் அளித்த கொடை துருபதனை வென்று கொண்டு போட்டது மட்டுமே. சத்ராவதியை அவர் அவரிடமிருந்து பிடுங்கினார். அதற்கும் பார்த்தனுக்கும் தொடர்பில்லை. மந்தா, என்றிருந்தாலும் பார்த்தனுக்கு அஸ்வத்தாமன் பெரும் எதிரிகளில் ஒருவன், அதை மறக்கவேண்டாம். அவ்வெதிரியை ஏன் வளரவிடவேண்டும்?”

“ஆனால்” என பீமன் பேசத்தொடங்க “நான் வாதிடவிரும்பவில்லை. தன் நிலத்தை மீட்க பாஞ்சாலத்து இளவரசிக்கு முழு உரிமையும் உள்ளது. அதற்காக தன் கணவர்களை அவள் ஏவுவதும் இயல்பே. அதில் நெறிமீறல் இல்லை, முற்றிலும் உலகவழக்குதான்” என்றாள் குந்தி. பீமன் கைகளை விரித்தபின் எழுந்துகொண்டான். சாளரத்தை நோக்கியபடி “நான் என்ன செய்யவேண்டும்?” என்றான்.

“நீ அவளிடம் இதை சொல்” என்றாள் குந்தி. “ஆனால் சொல்லிக்கேட்பவள் அல்ல அவள். அதை வேறுவகையிலேயே செய்யவேண்டும். அவளை ஒரு வெறும்பெண் என நடத்து. அவள் அகம் புண்படட்டும். அவள் நிலமற்றவள், வெறும் இளவரசி மட்டுமே என அவள் உள்ளத்தில் தைக்கும்படி சொல். ஆணவம் கொண்ட பெண் அவள். ஆணவத்தைப்போல் எளிதில் புண்படுவது பிறிதில்லை. யானையை சினம்கொள்ளச் செய்வதே மிக எளிது என்று போர்க்கலையில் கற்றிருப்பாய்.”

பீமன் புன்னகையுடன் “நான் போருக்குச் செல்லவில்லை அன்னையே” என்றான். குந்தி “ஷத்ரியனுக்கு எச்செயலும் போரே” என்றாள். பீமன் “நான்...” என சொல்ல வாயெடுக்க அவள் கை நீட்டித் தடுத்து “இது என் ஆணை” என்றாள். பீமன் தலைவணங்கினான். “அவள் புண்பட்டிருக்கையில் சொல் அஸ்வத்தாமன் தலையில் முடி இருக்கும் வரை அவள் வெறும் அரண்மனைப்பெண் மட்டுமே என்று” என்றபடி குந்தி எழுந்துகொண்டாள்.

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 2

சிசிரன் பின்னால் வந்து நின்ற ஒலி கேட்டு பீமன் திரும்பிப்பார்த்தான். சிசிரன் மெல்ல வணங்கி, “இளவரசி இன்னும் கிளம்பவில்லை. இன்று எழுபிறை நான்காம் நாள். அரண்மனையின் காவல் யட்சிக்கென சில பூசனைகள் உள்ளன” என்றான். பீமன் தலையசைத்தான். இன்று நான்காம் நிலவா என்று எண்ணியபடி வானைநோக்கினான். செம்மை அவிந்து இருள்திட்டுகளாக முகில்கள் மாறிக்கொண்டிருந்தன. எங்கும் நிலவை காணமுடியவில்லை.

சிசிரன் “இளவரசர் விழைந்தால் சூதர்கள் பாடுவார்கள். இளவரசி வருவதற்கு பிந்தியதனால் நான் அவர்களை வரவழைத்தேன்” என்றான். பீமன் புருவம் சுளித்து “தேவையில்லை” என்றபின் கைகளைக் கட்டியபடி நீர்வெளியை நோக்கி நின்றான். நீருக்குள் இருந்து எழுந்த ஒளி எஞ்சியிருக்க அதன்மேல் சிறிய பறவைகள் தாவிக்கொண்டிருந்தன. மிகத்தொலைவில் வணிகப்படகுகள் செவ்வொளி விளக்குகளுடன் சென்றுகொண்டிருந்தன. இறுதி முகிலும் அணைந்தபோது வானம் முழுமையாகவே இருண்டது.

பீமன் திரும்பி நோக்க அப்பால் அவனை நோக்கி நின்றிருந்த சிசிரன் அருகே ஓடிவந்து “இளவரசே” என்றான். “சூதர்கள் பாடட்டும்” என்றபடி பீமன் மேலேறிவந்தான். சிசிரன் “ஆணை” என்றபடி ஓடினான். பீமன் முற்றத்தில் சிலகணங்கள் நின்றபின் பக்கவாட்டில் திரும்பி சமையலறை நோக்கி சென்றான். அங்கே ஆவியில் வேகும் அக்காரத்தின் நறுமணம் எழுந்துகொண்டிருந்தது. அவன் அகம் மலர்ந்தது. கைகளை வீசியபடி படிகளில் ஏறி வளைந்து அடுமனைக்குள் சென்றான்.

அவனைக் கண்டதும் சூதர்கள் ஐவரும் எழுந்து முகம் மலர்ந்து “வருக இளவரசே” என்றனர். “மேகரே, அக்காரம் மணக்கிறதே” என்றபடி அவன் அடுமனையில் இருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். அடுப்பில் நெளிந்தாடிய தழல்களுக்குமேல் அகன்ற பித்தளை உருளி அமர்ந்திருந்தது. அதை மூடியிருந்த எடைமிக்க வங்கத்தின் சிறிய துளைகளைத் தூக்கியபடி ஆவி நீர்த்துளிகளுடன் வெடித்து வெடித்துச் சீறியது.

“அக்காரை என்று இங்கே நாங்கள் சொல்வோம். கோதுமை, தினை, வஜ்ரம் என்னும் மூன்று மணிக்கூலங்களுடன் வெளியே சொல்லாத ஒரு பொருளையும் சேர்த்து பொடித்து அதில் அக்காரமும் ஏலக்காயும் சேர்த்து ஆவியில் வேகவைப்பது” என்றார் மேகர். பீமன் மூக்கை சற்றே தூக்கி “அது என்ன என்று சொல்கிறேன்... சற்று பொறுங்கள்” என்றான். பின் விழிதிருப்பி “சளையீச்சையின் காய்கள்...” என்றான். மேகர் புன்னகைத்து “அது அஸ்தினபுரியிலும் உண்டா? மலைப்பகுதியில்தான் வளரும் என்றார்கள்” என்றார்.

“இல்லை, நான் அதை இடும்பவனத்தில் உண்டேன்” என்றான் பீமன். “அவர்கள் அதை பறித்து வெட்டி உலரச்செய்தபின் கொடிவலைக்கூடையில் இட்டு ஓடும் நீருக்குள் போட்டுவிடுகிறார்கள். அதன் நஞ்சு முற்றிலுமாக அகன்றபின்னர் எடுத்து சுட்டு உண்கிறார்கள்”. மேகர் “இங்கும் மலைமக்கள் அதைத்தான் செய்கிறார்கள். நாங்கள் அதை ஐந்துமுறை கொதிக்கச்செய்து ஊறலை களைவோம். அதன்பின் உலரவைத்து தூளாக்குவோம்” என்றார்.

கிஞ்சனர் திரும்பி “அவிந்துவிட்டது. உண்கிறீர்களா இளவரசே?” என்றார். மேகர் “அதற்காகத்தானே வந்திருக்கிறார்?” என்றதும் அத்தனை அடுமனையாளர்களும் நகைத்தனர். கயிறுகளைப்பற்றி வங்கத்தை மெல்ல தூக்கி அகற்ற ஆவி எழுந்து அடுமனைக்கூடத்தை மூடியது. “தேவர் வருக!” என்று சொன்னபடி மேகர் உருளிக்குள் ஒரு நீண்ட இரும்புக்கம்பியை விட்டு ஓர் அப்பத்தை எடுத்து தென்மேற்கு மூலையில் வைத்தார். பின்னர் அப்பங்களை எடுத்து எடுத்து அருகில் இருந்த பெரிய தாலத்தில் வைத்தார்.

“நூறு அப்பம் இருக்குமா?” என்றான் பீமன். “தாங்கள் உண்ணுமளவுக்கு இருக்காது இளவரசே, இன்றிரவுக்குள் மேலும் பலமுறை அவித்துவிடுவோம்” என்றார் கிஞ்சனர். அப்பங்களை பெரிய பனையோலைத் தொன்னைகளில் வைத்து அவித்திருந்தார்கள். பீமன் அப்பங்களை எடுத்து அவற்றின் ஓலையை சுழற்றி அகற்றி வெளியே தெரிந்த பகுதியை கவ்வி உண்ணத் தொடங்கினான். இடக்கையால் அவன் ஓலையின் மீது பற்றியிருந்தான். மிக விரைவாக அவன் உண்டபோதுகூட ஓலையை முற்றிலும் அகற்றி அப்பத்தை கைகளால் தொடவில்லை.

“பார்த்துக்கொள்ளுங்கள் மேகரே, உணவை உண்பதும் ஒரு தவம்” என்றார் கிஞ்சனர். “இளவரசே, எங்கள் ஆசிரியர் அசரர் முன்பொருமுறை விதேகமன்னரிடம் சமையற்காரராக இருந்தார். முழுவிருந்தொன்றை அரசர் முன் படைத்துவிட்டு அருகே நின்று முறைமைசெய்தார். அரசர் முதலில் ஒரு வாழைப்பழத்தை எடுத்து தோலை முழுமையாக உரித்துவீசிவிட்டு பழத்தை வெறும்கையில் பிடித்தபடி உண்ணத்தொடங்கினார். அசரர் சினம் கொண்டு அரசர் முன்னாலிருந்த உணவுத்தாலத்தை இழுத்து திரும்ப எடுத்துக்கொண்டார். குரங்கு போல உணவுண்ணத்தெரியாத உன்னால் என் சமையலை எப்படி உண்ணமுடியும் என்று கூவினார். வேண்டுமென்றால் என்னை தலைகொய்ய ஆணையிடு. உனக்கென இனி சமைக்க மாட்டேன் என்றார்.

“அரசன் அந்த உணர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. திகைத்தபின் தலைவணங்கி அடுநூலரே அறியாமல் செய்த பிழை பொறுத்தருள்க. எனக்கு உண்பதை எவரும் கற்பிக்கவில்லை என்றார்” என்றார் கிஞ்சனர். “அவனுக்கு உண்பதெப்படி என்று அசரர் கற்பித்தார். அதன்பின் அவன் உடுப்பதெப்படி என்று கற்றுக்கொண்டான். வாழ்க்கையின் அனைத்தையும் கற்றுக்கொண்டான். விதேகம் வளர்ந்து பேரரசானது அதன்பின்னர்தான் என்பார்கள். அசரர் அவனது அவையாசிரியராக இறுதிவரை இருந்தார்.”

பீமன் உண்டு முடித்து எழுந்து கைகழுவியபின் ஏப்பம் விட்டபடி திரும்பி “உண்பதை நான் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றான். “அதற்கு நான்கு நெறிகள்தான். இவ்வுணவு அரிதானது என எண்ணுதல். உண்ணும்போது உணவை மட்டுமே எண்ணுதல். வீணடிக்காது உண்ணுதல். பகிர்ந்துண்ணுதல்” என்றான். “அழுகிய ஊனை கிழித்துண்ணும் கழுதைப்புலிகள் கூட அப்படித்தான் உண்கின்றன. அவை உண்ணும் அழகு நடனம்போலிருக்கும்.”

“நல்லுணவு உண்ணப்படும் இடத்தில் உவகை நிறைந்திருக்கவேண்டும். அங்கே தெய்வங்கள் சூழும்” என்றார் கிஞ்சனர். “மண்ணில் உண்ணப்படும் ஒவ்வொரு அன்னமும் அன்னத்திற்கு அளிக்கப்படும் அவியே.” பீமன் “இனிய சளையீச்சையை வணங்குகிறேன். அதன் ஓலைகளில் இந்நேரம் குளிர்ந்த தென்றல் தழுவட்டும். அதன் வேர்களுக்கு அன்னை முலைகனிந்தூட்டட்டும்” என்றான்.

சிசிரன் வந்து பின்னால் நின்றான். பீமன் திரும்பியதும் “சூதர் அமர்ந்துவிட்டனர் இளவரசே” என்றான். பீமன் திரும்பி அடுமனையாளர்களிடம் விடைபெற்றுவிட்டு அவனுடன் நடந்தான். “இத்தனை நல்லுணவுக்குப்பின் கதைகேட்பதைப்போல சோர்வு அளிப்பது பிறிதில்லை சிசிரரே. என் கதையை கொண்டுவந்திருந்தால் பயிற்சி செய்யத் தொடங்கியிருப்பேன்” என்றான். சிசிரன் புன்னகைத்து “கதைகேட்பதும் பயிற்சியே” என்றான்.

கூடத்தில் ஏற்றப்பட்ட பன்னிரு திரி நெய்விளக்கின் முன்னால் மூன்று சூதர்கள் அமர்ந்திருந்தனர். பீமன் வருவதைக் கண்டதும் முதியவர் மட்டும் தலைவணங்கினார். பீமன் பீடத்தில் அமர்ந்துகொண்டான். நடுவே அமர்ந்திருந்த முதியவர் விழிகளால் இருபக்கமும் அமர்ந்திருந்தவர்களை தொடங்கச் சொன்னார். முழவும் யாழும் ஒலிக்கத் தொடங்கின. முதியவர் இறைவணக்கங்கள் பாடி பாஞ்சாலனின் குலத்தையும் கொடியையும் கோலையும் வாழ்த்தினார். கதைகேட்கும் பீமனின் குலத்தை வாழ்த்தினார். “ஜயவிஜயர்களால் எந்நேரமும் தழுவப்படும் மலைபோன்ற தோள்களை வணங்குகிறேன். வெல்வதற்கு அவர்களுக்கு இப்புவியே உள்ளபோது அவர்கள் எப்படி ஓய்வெடுக்க முடியும்?”

பீமன் புன்னகைத்துக்கொண்டான். சற்று கண்சொக்குவதுபோல் உணர்ந்தான். “இளவரசே, தாங்கள் விரும்பும் கதையை சொல்லலாம். பாடுகிறோம்” என்றார் முதுசூதர். பீமன் “எனக்கு முன்னரே தெரிந்த கதையைத்தானே நான் கேட்கமுடியும்?” என்றான். “நான் அறியாத கதை ஒன்றைப்பாடுக.” முதுசூதர் புன்னகையுடன் மீசையை நீவியபடி “பாரதவர்ஷத்தில் உள்ள அறியாத நாடொன்றைச் சொல்லுங்கள்... அந்நாட்டுக்கதையைப் பாடுகிறேன்” என்றார்.

பீமன் சிறிய கண்களில் சிரிப்புடன் “இங்கிருந்து வடக்கே சென்றால் எந்த நாடு வரும்?” என்றான். “இங்கிருந்து வடக்கே உசிநாரநாடு. அதற்கப்பால் குலிந்த நாடு.” பீமன் ”அதற்கப்பால்?” என்றான். “அதற்கப்பால் கிம்புருடநாடு... அங்கே வெண்முகில்களில் நடக்கக் கற்றவர்கள் வாழ்கிறார்கள்.” பீமன் தலையை அசைத்து “சரி, அதற்குமப்பால்?” என்றான். சூதர் சிரித்து “அதற்கப்பால் ஸ்வேதகிரி. ஹிமவானின் வெண்பனி மலையடுக்குகள்” என்றார்.

“அதற்கப்பால்?” என்றான் பீமன். ”அத்துடன் ஜம்புத்வீபம் முடிவடைகிறது. அதற்கப்பால் ஒன்றுமில்லை” என்றார் சூதர். “சரி அங்குள்ள கதையைப்பாடுக” என்றபடி பீமன் சாய்ந்துகொண்டான். சூதர் கைகாட்டி “வெண்பனி பெய்கிறது. எங்கும் வெண்மை நிறைந்திருக்கிறது! வெண்பனி பெய்கிறது. எங்கும் வெண்மை நிறைந்திருக்கிறது! “ என்று பாடினார். அவ்விரு வரிகளையும் மீண்டும் மீண்டும் பாடினார். “கதையைத் தொடங்குங்கள்” என்றான் பீமன். “இளவரசே, அங்கு இவ்விரு வரிகளில் உள்ள கதை மட்டுமே நிகழ்கிறது” என்றார் முதுசூதர். பீமன் வெடித்துச் சிரித்து தொடையில் அறைந்து “நன்று! நன்று” என்றான்.ந்

பின்பு மீசையை நீவியபடி “சரி, இங்கிருந்து தெற்கே?” என்றான். “சேதிநாடு. அப்பால் புலிந்த நாடு. அதற்கப்பால் விந்தியமலை.” பீமன் சிரித்துக்கொண்டு “சரி, அதற்குமப்பால்?” என்றான். ”விதர்ப்பம், வாகடகம்,அஸ்மாரகம், குந்தலம் என்று சென்றுகொண்டே இருக்கின்றன நாடுகள். அப்பால் வேசரம் திருவிடம் அதற்கப்பால் புனிதமான காஞ்சி பெருநகர். கல்வியும் கலையும் செறிந்த இடம். அங்குள்ள கதையொன்றைச் சொல்கிறேன்.”

“இல்லை, அதற்கும் அப்பால்?” என்றான் பீமன் “அதற்குமப்பால் தமிழ்நிலம்” என்றார் முதுசூதர். “சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள். பாண்டியர்களின் தொல்நகரமான மாமதுரை... கருங்கால் பெருங்கோட்டை எழுந்தமையால் மதில்நிரை. கடல் அருகே அமைந்து அலைகள் கொண்டமையால் அலைவாய்.” பீமன் “அதற்கும் அப்பால்?” என்றான். “அதற்குமப்பால் தீவுகள். மணிபல்லவம், நாகநகரி.” பீமன் “சரி அவர்களின் கதைகளைச் சொல்லுங்கள்” என்றான்.

முதுசூதர் தலைவணங்கி “அலைகளின் மேல் கட்டுமரம் மிதக்கின்றது. நாகர்கள் மீன்பிடிக்கிறார்கள். இனிய தென்னங்காய்களுடன் மீனை உண்கிறார்கள். மீண்டும் காலையில் எழுகிறார்கள். மீன்பிடிக்கிறார்கள். இனிய தென்னங்காய்களுடன் மீனை உண்கிறார்கள். மீண்டும் காலையில் எழுகிறார்கள்” என்றார். சிரித்தபடி பீமன் கையை காட்டினான். முதுசூதர் சிரித்து “அவ்வளவுதான் அவர்களின் கதை இளையவரே. ஆனால் கலைமகள் தோன்றி கலைதோன்றா காலம் முதல் இது நிகழ்கிறது. நாம் முடிவில்லாமல் இதை பாடமுடியும்” என்றார்.

பீமன் நகைத்தபடி தொடையில் தட்டினான். “நன்று! பிறிதொருநாள் விடியும்வரை இந்தக்கதையைக் கேட்கிறேன். பாண்டியநாட்டின் கதையைச் சொல்லும்” என்றான். சூதர் தலைவணங்கினார். “அங்கு ஏதேனும் நிகழுமா? இல்லை முத்துக்குளித்தபடியே இருப்பார்களா?” என்றான் பீமன். முதுசூதர் “பாண்டிய இந்திரத்யும்னனின் கதையைச் சொல்கிறேன் இளவரசே” என்றார். “சொல்லும்” என பீமன் சாய்ந்துகொண்டான்.

கண்மூடி சிலகணங்கள் அமர்ந்துவிட்டு யாழின் மீட்டலுடன் தன் குரலை இழையவிட்டு பாட்டும் உரையுமாக முதுசூதர் தொடங்கினார். “விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மனிலிருந்து சுயம்புமனு எழுந்தார். சுயம்புமனுவின் மைந்தர் பிரியவிரதர். அவரது குருதிவழி வந்தவர் அக்னீத்ரன். அவரது மைந்தர் பிரியவிரதன். அவருடைய கொடிவழியில் நாபி, ரிஷபன், பரதன், சுமதி என விரியும் குலமுறையில் வந்த மைந்தர் இந்திரத்யும்னர். அவர் வாழ்க!”

“ஆழிப்பெரும்பசு நக்கீத்தீராத அன்புக்குழவி மாமதுரை. துமிமழை பெய்யும் குளிர்நகர். அலையோசை சூழ்ந்த சுழல்வட்டத் தெருக்கள் கொண்ட வலம்புரிச்சங்கு. குமரியன்னை விழிதொட்டு அணையாது புரக்கும் அகல்சுடர்” என்றார் முதுசூதர். ”அந்நகரில் அரியணை அமர்ந்து வெண்குடை கவித்து முடிசூடி கோலேந்தி கடல்முகம் புரந்தான் இந்திரத்யும்னன். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அவன் கோலுக்குத் துணை நின்றன.

ஒருமுறையும் அவன் கோல் தாழவில்லை. ஆழிக்கைகள் அணைத்த பெருநகரை அடையும் எதிரியென எவரும் இருக்கவில்லை என்பதனால் உறைவிட்டு உடைவாளை உருவாமலேயே ஆண்டு வயதமைந்தான் அரசன். அறம் நிறுத்தி குலம் பெருக்கி அவன் நாடாண்டு முதிர்ந்தான். மண்ணில் விழுந்த வானுறை மூதாதையரின் வாழ்த்துச்சொல் அவன் என்றனர் புலவர்.

ஆவது அறிந்து அடைவது எய்து மூவது வென்று முதிர்வது அறிந்த இந்திரத்யும்னன் தன் மைந்தரை அழைத்து அவரவர் பணிகளை அறிவித்து மூத்தவன் கையில் முடியும் கோலும் அளித்து காடேகினான். மாமதுரை அருகே பஃறுளிப்பெருநதிக் கரையில் அமைந்த குமரிச்சோலை எனும் குறுங்காட்டில் சிறுகுடில் அமைத்து அதில் காயும் கனியும் உண்டு ஊழ்கமியற்றி விண்நுழையும் வழிதேடினான்.

நாள் செல்லச்செல்ல அவன் உடல் வலிமை குன்றி மெலிந்தது. கைகள் மெலிந்து உலர்சுள்ளியாகின. கால்கள் அவன் உடல் தாளாமலாயின. கிளைவிரித்த ஆலமரத்தடியில் வடதிசை நோக்கி தர்ப்பைப்புல் விரித்து அமர்ந்து விழிமூடினான். அவனில் எரிந்த ஐம்புலன்களும் அணைந்து பின்வாங்கின. தன்மேல் விழுந்த ஆலிலைச்சருகுகளைக்கூட எடுத்து விலக்கும் ஆற்றலற்றவையாயின அவன் விரல்கள். விழிதிறந்து நோக்கும் விசையற்றவையாகின அவன் இமைகள். எரியும் விடாய் கொண்டிருந்தாலும் நீரென்று சொல்லி நெகிழமுடியாதவை ஆயின அவன் இதழ்கள்.

ஆனால் அவன் உடல் மெலிய மெலிய உள்ளுறைந்த எண்ணம் வலுத்தபடியே சென்றது. பேருருவம் கொண்ட யானையென்றாகி அவன் மரங்களை வேருடன் பிடுங்கி உண்டான். காடதிர சின்னம் விளித்து துதிக்கைசுழற்றி நடந்தான். எதிர்பட்ட பெரும்பாறைகளைத் தூக்கி மலைச்சரிவில் வீசினான். மதம் வழியும் மத்தகம் கொண்ட பிடியானைகளை மறித்து மலையடுக்குகள் எதிரொலிக்க கூவியபடி புணர்ந்தான். துயிலற்றவனாக மலைச்சரிவுகளில் அலைந்தான்.

அவன் தன்னிலாழ்ந்து இருக்கையில் அவன் நாவில் இறுதித்துளி நீர் விடும்பொருட்டு அவனுடைய அறிவாசிரியராகிய அகத்தியர் அங்கே வந்தார். சருகுமூடிக்கிடக்கும் அவனைக் கண்டு அணுகி அமர்ந்து அவன் உலர்ந்த இதழ்களை நோக்கி தன் கொப்பரைக் கமண்டலத்தை சரித்தபோது அவன் உதடுகள் அசைவதைக் கண்டார். ஓசையின்றி அவன் சொன்னதென்னவென்று அறிந்து திகைத்து எழுந்தார். ”உளமறுவதற்குள் உடலறுக்க எண்ணிய மூடா. நீ விழைவதெல்லாம் அடைந்து எல்லை கண்டு அமைக!” என்று தீச்சொல்லிட்டு திரும்பிச்சென்றார்.

அங்கிருந்து மதமொழுகும் பெருங்களிறாக எழுந்தான் இந்திரத்யும்னன். மரங்களை கலக்கியபடி சுழல்காற்றென காட்டுக்குள் புகுந்தான். விழுதோடு கிளைபரப்பிய ஆலமரங்களெல்லாம் அவனுக்கு முன் கோரைப்புற்களாயின. உச்சிமலைகளில் ஏறி அங்கிருந்த பெரும்பாறைகளை அறைந்து உருட்டிவிட்டு தன் கரியபேருடல் திகழ நின்று துதிக்கை தூக்கி அறைகூவினான். “எனக்கு நிகர் எவர்?” என்று முழங்கினான்.

தென்குமரி நிலத்தின் நூறு மலைமுடிகளை அவன் வென்று சென்றபோது எதிரே குறுமுனி தன் கையில் கொப்பரைக் கமண்டலத்துடன் வருவதைக் கண்டு துதிக்கை சுழற்றி பிளிறியபடி அணைந்தான். அவர் தன் கமண்டலத்திலிருந்த நீரில் சில துளிகளை எடுத்து அவன் மேல் தெளித்து “உணர்க!” என்றார். அவர் காலடியில் ஒரு சின்னஞ்சிறிய கருவண்டாக அவன் சுழன்றான். அவர் அவனை தன் சுட்டு விரல் நுனியால் தொட்டு எடுத்து கண்முன் கொண்டுவந்தார்.

துதிக்கை தூக்கித் தொழுது இந்திரத்யும்னன் கேட்டான் “நான் விழைவதென்ன? எந்தையே, நான் ஆகப்போவதென்ன?” முனிவர் சிரித்து “உன் அரசவாழ்க்கையில் நீ எதிரியையே அறியவில்லை மைந்தா. நிகரான எதிரியை அறியாதவன் தன்னையும் அறியாதவனே” என்றார். செவிகேளா சிற்றொலியில் பிளிறி இந்திரத்யும்னன் கோரினான் “என் எதிரியெவர் என்று சொல்லுங்கள் ஆசிரியரே!”

அகத்தியர் அவனை நோக்கி புன்னகைத்து சொன்னார். "வடதிசை செல்க! அங்கே அருவிகளை வெள்ளி அணிகளாக அணிந்து பச்சை மேலாடை போர்த்தி முகில்ளைத் தொடும் மூன்று தலைகளுடன் நின்றிருக்கும் திரிகூட மலையை காண்பாய். அதனருகே தேவலசரஸ் என்னும் குளம் உள்ளது. அதற்குள் உனக்கு நிகரானவன் இருக்கிறான். எங்கு நீ மத்தகம் தாழ்த்துகிறாயோ அங்கு உனக்கு விடுதலை அமையும்.”

அவர் விரலில் இருந்து மண்ணில் விடப்பட்ட இந்திரத்யும்னன் பேருருவம் கொண்டு துதிக்கை சுழற்றி பெருந்தந்தங்கள் உலைய தலையசைத்து காட்டுக்குள் புகுந்து திரிகூடமலையடியில் தேவலசரஸ் என்னும் பெருங்குளத்தை அணுகினான். நீரலைத்துக் கிடந்த அந்தக்குளம் அவனுக்காகவே நூற்றாண்டுகளாக அங்கே காத்திருந்தது.

தேவலர் என்னும் முனிவர் தவம்செய்வதற்காக அவர் ஆணைப்படி பூதங்களால் அகழப்பட்ட பெருங்குளம் அது. அதனருகே ஒரு நெல்லி மரத்தடியில் அவர் அமர்ந்து நூற்றாண்டுகளாக ஊழ்கத்தில் மூழ்கியிருந்தார். ஒருமுறை சித்திரை முழுநிலவில் ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு அப்சர தோழியருடன் கந்தர்வன் ஒருவன் விண்ணில் முகில்விளையாடினான். சினந்து ஒருத்தி விலகுகையில் கனிந்து ஒருத்தி அவனை அணைத்தாள். இருண்டு ஒருத்தி மறைகையில் ஒளிர்ந்து ஒருத்தி அருகணைந்தாள்.

ஆயினும் அவன் முகில்களை அள்ளிஅள்ளி தேடிக்கொண்டிருந்தான். ”என்ன தேடுகிறீர்கள் தேவா?” என்றாள் அப்சரப்பெண். “இன்னும் இளமங்கையர் இங்குண்டோ என்று” என்றான் கந்தர்வன். “நாங்கள் ஏழுபெண்டிர் இங்குளோம் அல்லவா?” என்றாள் அவள். “விண்ணில் ஏழுக்கு அப்பால் எண்ணிக்கை இல்லை என்று அறியமாட்டீரா என்ன?”

“கன்னியே, காமத்திற்கு ஏழாயிரம் வண்ணங்கள். ஏழுகோடி வடிவக் கோலங்கள். ஆண்மகன் ஆழத்தை நிறைக்க கணம்தோறும் பெருகும் பெண்கள் தேவை என்று அறிக” என்றான் அவன். சிரித்தபடி அவனைத் தழுவிய அப்சரப்பெண் “தன்னை தான் பெருக்கி முடிவிலா உருவம் கொண்டு எழ பெண்னால் முடியும். அவளுக்குத் தேவை ஓர் ஆடி மட்டுமே” என்றாள்.

ஆடியைத்தேடி அவர்கள் விண்வழியே பறந்துசென்றபோது தேவலரின் தவத்தால் நூற்றாண்டுகாலமாக தூய்மை அடைந்து தெளிந்து தெளிந்து படிகப்பெரும்பரப்பாகக் கிடந்த தேவலசரஸை கண்டார்கள். கந்தர்வன். முகில் விட்டிறங்கி அதில் அவர்களுடன் காமநீராடினான். ஏழு பெண்கள் தங்கள் படிமைகளை பெருக்கிப் பெருக்கி பெருவெளியாகிச் சூழ்ந்து அதில் அவனை சிறையிட்டனர். ஒன்றைத்தொட்டு ஓராயிரத்தை எழுப்பி திகைத்து திகைத்து திளைத்தாடினான் அவன்.

பின் சலித்து சோர்ந்து மூழ்கி ஆழத்தை அடைந்தான். தவித்து உந்தி மேலெழுந்தவனை அணுகி தாமரைக்கொடிக் கைகளால் கால்பற்றி இழுத்து அடியில்கொண்டுசென்று சூழ்ந்து நகைத்துத் திளைத்தனர் பெண்கள். அலைநெளிவுகளில் எல்லாம் அவர்களும் நெளியக் கண்டான். முடிவற்றது பெண்ணுடல், முடிவற்றது பெண்ணின் மாயம் என்றறிந்தான்.

குளத்தின் ஆழத்தை தொட்டகாலை உந்தி அவன் மேலெழுந்தபோது நீர் கலங்கி அவனருகே கொல்லும் சிரிப்புடன் நெளிந்த நூறு கன்னியரை மறைக்கக் கண்டான். அக்குளத்தைக் கலக்குவதே தான் விடுதலை கொள்ளும் வழி என்று கொண்டான். ‘இதோ ஏழாயிரம் கோடி கன்னியரை மீண்டும் எழுவராக்குகிறேன்' என்று அக்குளத்தைக் கலக்கினான். நூற்றாண்டுக்காலமாக அடியில் படிந்திருந்த வண்டலும் சேறும் எழுந்து மேலே வந்தன.

கலங்கிய நீரலைகள் எழுந்து வந்து நெல்லிமரத்தடியில் புற்றுக்குள் அமர்ந்திருந்த தேவலரைத் தொட சினந்தெழுந்த அவர் நீராடிக்கொண்டிருந்த கந்தர்வனை நோக்கி “நீ யார்? இது என் குளம். உன் பெயரென்ன?" என்றார். காமத்தில் களித்து கள்வெறி கொண்டிருந்த கந்தர்வன் “ஹூஹூ!” என்று கூவி பதில் சொன்னான். “சொல், உன் பெயரென்ன?” என்றார் தேவலர். “ஆம் அதுதான் என்பெயர், ஹூஹூ!" என்று அவன் கூவிச்சிரித்தான்.

“இனி உன் பெயர் அவ்வண்ணமே ஆகுக! நீர் விளையாட்டில் தன்னை மறந்த நீ இக்குளத்திலேயே ஆயிரம் வருடம் நீராடுக! உன்னை நிகர்வல்லமை கொண்ட ஒருவன் வந்து இழுத்துக் கரைசேர்க்கும் வரை உனக்கு மீட்பில்லை” என்று தேவலர் சொன்னார். ஹூஹூ ஒரு பெருமுதலையாக மாறி அந்தக்குளத்தில் வாழலானான். நீரின் அலையடிக்கும் எல்லைக்கு அப்பால் செல்ல அவனால் முடியவில்லை. கரைவந்த யானைகளையும் புலிகளையும் அவன் கவ்விக்கொண்டான். அனைத்தும் அவனுடன் நீருள் வந்து அவனுக்கு உணவாயின. பல்லாயிரமாண்டுகளாக அவன் காத்திருந்தான்.

நீரிலிறங்கி துதிக்கை விட்டு அள்ளிக்குடிக்க முற்பட்ட இந்திரத்யும்னனின் கால்களை ஹுஹு பற்றிக்கொண்டான். சினம் கொண்டு துதிக்கையால் அவனை அறைந்தும் மறுகாலால் மிதித்தும் இழுத்து கரைசேர்க்க முயன்றான் இந்திரத்யும்னன். சிலகணங்களிலேயே முற்றிலும் நிகர்வல்லமை கொண்டது அம்முதலை என்று அறிந்துகொண்டான். மலைகள் யானைகளாகி எதிர்க்குரலெழுப்ப சின்னம் விளித்து தரையை மிதித்து சேற்றைக்கலக்கி முதலையை இழுத்தான். நாற்புறமும் ஏரிநீர் அலையெழுந்து கரையை அறைய வாலைச்சுழற்றி நீரில் அடித்து துள்ளினான் ஹூஹூ.

இருவர் விசையும் மாறிமாறி எழுந்து விழுந்து பின் ஒற்றைப்புள்ளியில் முழுச்சமன் கொண்டன. அசைவின்மை ஒரு கணமாக ஒரு நாளாக ஆயிரமாண்டுகளாக நீடித்தது. இறுதிமுயற்சியாக முதலையை முழுவிசையாலும் கரைநோக்கி இழுத்தபோது இந்திரத்யும்னன் தலை தாழ்ந்தது. அக்கணம் ஹூஹூவின் முழு உடலும் கரை வந்தது. அப்போது மின்னல் என விண்ணிலெழுந்தது ஆழிக்குரியவனின் ஆழி.

மின்னல் தாக்கி துள்ளிச்சுருண்டு நீரிலமிழ்ந்தான் ஹூஹூ. ஒளிமிக்க பொன்னுருவுடன் கைகூப்பி அலைமேல் எழுந்தான். துதிக்கை கருகி பின்னால் சரிந்தான் இந்திரத்யும்னன். செம்மலர் செறிந்த ஒரு பூமரமாக காட்டில் எழுந்தான். இருவரும் முழுமை கொண்டனர். முதுசூதர் பாடி முடித்தார். “அணையாத காமம் கொண்ட வேழத்தை வாழ்த்துவோம். முடியாத காத்திருப்பு கொண்ட முதலையையும் வாழ்த்துவோம். அவர்கள் தங்களைக் கண்டடைந்த அமரகணத்தை வாழ்த்துவோம். ஓம் அவ்வாறே ஆகுக!”

அவர் கைகூப்பி யாழ் தாழ்த்தியபோது பீமன் சொல்மறந்து அவரையே நோக்கி இருந்தான். பின்பு பெருமூச்சுடன் எழுந்து “சொற்களையும் சொல்லின்மைகளையும் உணர்ந்துகொண்டேன் சூதரே” என்றான். “மதுரை மிகமிக அகலே இருக்கிறது" என்றார் சூதர் நடுங்கும் முதியகைகளை தூக்கி அவனை வாழ்த்தியபடி. “ஆனால் நாம் அதை மிக எளிதில் அணுகும் ஒரு குகைப்பாதை உண்டு...” பீமன் தலையசைத்து “ஆம்” என்றான்.

பரிசில்பெற்று சூதர்கள் கிளம்பிச்சென்றனர். பீமன் அவர்களைத் தொடர்ந்து படகுத்துறை வரைக்கும் சென்றான். அவர்கள் மீண்டும் அவனை வணங்கி பலகை வழியாக ஏறி உள்ளே சென்று அமைந்ததும் ஏதோ கூவ விரிந்த இதழ் போல பாய் விரிந்தது. படகு முகம் தூக்கி அலையில் ஏறிக்கொண்டது. கொடி படபடத்து படகை இழுத்துச்செல்வதுபோல தோன்றியது.

அவன் விண்மீன்களை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். பின்னர் நினைத்துக்கொண்டு விண்ணில் தேடினான். நான்காம் நிலவை காணமுடியவில்லை. மேலும் மேலும் விண்மீன்கள்தான் இருண்டவானின் ஆழத்திலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தன. சிசிரன் அருகே வந்து நின்று “இளவரசியார் கிளம்பிவிட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் அணிப்படகு கரைசேரும்” என்றான். அவன் தலையசைத்தபின் மீண்டும் விண்மீன்களை நோக்கினான் பீமன்.

தருமன் அத்தனை விண்மீன்கூட்டங்களுக்கும் பெயரும் கதையும் சொல்வான் என்று எண்ணிக்கொண்டான். சிறுவயதில் அவனை அருகே அமர்த்தி மீண்டும் மீண்டும் அந்த விண்மீன்களை அவனுக்குக் கற்பிக்க முயன்றிருக்கிறான். பின்னர் சலித்து “மந்தா, உன் அகத்தே இருப்பது பெருங்கற்பாறை” என்பான். பீமன் புன்னகைத்துக்கொண்டான். அவனுக்கு எப்போதுமே விண்மீன்கூட்டம் பெரும் பொருளின்மையையே அளித்தது.

சதசிருங்கத்தின் காடு. அங்குள்ள ஏரி. அதன்பெயர், ஆம் அதன் பெயர் இந்திரத்யும்னம். சூதர் சொன்ன கதை அவனை கனவிலாழ்த்தியது அதனால்தான். ஏரியின் நீலநீர்விரிவின் கரை. அங்கே விண்மீன்கள் மேலும் துல்லியமாகத் தெரியும். மிக அருகே. கைநீட்டினால் அள்ளிவிடக்கூடும் என்பதுபோல.

“மூத்தவரே இவற்றை கலைத்திட்டவர் யார்?” என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தான். தருமன் சலிப்புடன் “பிரம்மன்” என்றான். “ஏன்?” என்றான் பீமன். தருமன் மேலும் சலிப்புடன் “ஏனென்றால் பிரம்மன் கலைத்துப்போட விழைகிறான். மனிதர்கள் அடுக்கிவைக்க விழைகிறார்கள்” என்றான். ”ஏன்?” என்று பீமன் மீண்டும் கேட்டான். தருமன் ஒன்றும் சொல்லவில்லை. “ஏன்?” என்று மீண்டும் கேட்டபின் பீமன் மீண்டும் ஓசையின்றி “ஏன்” என்றான்.

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 3

அலைகளற்று இருண்ட பெருக்காகக் கிடந்த கங்கையை நோக்கியபடி நின்றிருந்த பீமன் திரும்பி தன் மேலாடையைக் கழற்றி சுருட்டி படிக்கட்டின் மீது வைத்தான். இடைக்கச்சையைத் தளர்த்தி ஆடையை அள்ளி நன்றாகச் சுருட்டி சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தான். நீர் பிளந்த ஒலிகேட்ட சிசிரன் மாளிகையிலிருந்து ஓடிவந்து திகைப்புடன் நோக்குவதை காணமுடிந்தது. கைகளை வீசி நீந்தியபடி திரும்பி நோக்கி நீரை உமிழ்ந்தபின் மீண்டும் நீந்தினான். பனிமலைநீர் குளிருடன் தோள்களை இறுக்கியது. சற்று நேரம் தாண்டியதும் உடல் வெம்மை எழுந்து அக்குளிரை எதிர்கொண்டது.

துள்ளும் இளங்குதிரை போலிருந்தது கங்கை. அவன் கைவீசி வைத்த ஒவ்வொரு முறையும் நீர் அவனை அள்ளி அப்பால் கொண்டு சென்றது. சற்று தொலைவுக்கு சென்றபின் அவன் நீருக்கு எதிராக கைவீசத்தொடங்கினான். கைகளை வீசி எம்பி குதித்து மீண்டும் எம்பி ஒழுக்கை எதிர்த்து சற்று தூரம் சென்றபின் சலித்து மீண்டும் ஒழுக்கில் சென்றான். மூச்சு வாங்கத் தொடங்கியதும் கரைநோக்கி திரும்பினான்.

அப்பால் ஒளிவிடும் பொன்வண்டுபோல பந்த ஒளிகளுடன் படகு ஒன்று மாளிகை நோக்கி செல்வதை காணமுடிந்தது. அத்தனை சாளரங்களிலும் விளக்கொளிகள் எழ நின்றிருந்த மாளிகை நீரலைகளில் மிதந்தாடுவதுபோல் தெரிந்தது. படகு மாளிகையை அணுகுவதற்குள் சென்றுவிடவேண்டும் என்று எண்ணியவனாக அவன் கரையோரமாகச் சென்று ஒழுக்கு குறைந்த விளிம்பை அடைந்ததும் எதிரே நீந்தத்தொடங்கினான். கைகளை வீசி வீசி எழுந்து எதிரலைகள் மேல் சென்றான்.

எதிரே அந்த அணிப்படகு பெரிதாகியபடியே வந்தது. அதிலிருந்த அமரக்காவலன் அவனை கண்டுவிட்டான். முதலில் திகைப்புடன் நோக்கியபின் கைகளில் வில்லுடன் கூர்ந்து நோக்கி நின்றான். அம்பை செலுத்திவிடப்போகிறான் என எண்ணியதுமே அத்தனை அச்சம் கொண்டவன் ஓடும் படகிலிருந்து அலைமேல் அம்புவிடுபவனாக இருப்பானா என புன்னகையுடன் எண்ணியது அகம்.

படகு படித்துறையை அணுகியதும் காவலர் இறங்கிச்சென்றனர். இசைக்கலங்கள் இன்னொலி எழுப்ப மங்கலச்சூதரும் அணிப்பரத்தையரும் தொடர்ந்தனர். அமரத்தில் நின்றவன் கைசுட்டி சொல்ல காவலர் நால்வர் அம்புகள் பூட்டிய வில்லுடன் வந்து படகுத்துறை முகப்பில் நின்று பீமனை நோக்கி கண்கூர்ந்தனர். அதைக்கண்டு சிசிரன் ஓடிவந்து அவன் பீமன் என்று சொல்ல அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி வில்தாழ்த்திக்கொண்டனர்.

படகிலிருந்து திரௌபதி இறங்கி உள்ளிருந்து வந்த அணிப்பரத்தையராலும் சூதர்களாலும் எதிர்கொள்ளப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் பீமன் படித்துறையில் கால்வைத்தான். நீர் வழியும் உடலுடன் எழுந்து நீண்ட குழலை கையால் நீவி பின்னால் சரித்துக்கொண்டு படிகளில் ஏறி மேலே சென்று தன் மேலாடையை எடுத்தான். திரௌபதி மேலே மாளிகைப்படிகளில் நின்று கழுத்தைத் திருப்பி அவனை நோக்கினாள். அவள் இதழ்கள் சற்றே மடிந்து ஒரு சிறிய புன்னகை எழுந்தது.

மேலாடையால் உடலைத் துடைத்தபடி பீமன் அவளை அணுகினான். அவள் விழிகளை நோக்கி புன்னகையுடன் “நெடுநேரமாயிற்று. விண்மீன்களுக்குக் கீழே நீந்துவோமே என்று குதித்தேன்” என்றபடி அவளருகே சென்றான். “விண்மீன்களுக்குக் கீழே நீந்துவதில் என்ன சிறப்பு உள்ளது?” என்றாள் திரௌபதி. “அதை சொல்லத்தெரியவில்லை. விண்மீன்களை நோக்கியபடி இருண்ட நீரில் நீந்தும்போது நாம் வானில் நீந்தும் உணர்வை அடையமுடியும்” என்றான் பீமன். அவள் புருவங்கள் மேலெழ புன்னகைத்தாள்.

மாளிகைக்குள் இருந்து மிருஷையும் அவர் மாணவிகளும் படியிறங்கி வந்து திரௌபதியை வாழ்த்தினர். “நாங்கள் ஒப்பனையாளர்கள் இளவரசி” என்றார் மிருஷை. சிரித்துக்கொண்டு “சற்றுமுன் நாங்கள் இளவரசரை அணிசெய்ய இரண்டுநாழிகை நேரம் பணியாற்றினோம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு பீமனை நோக்கினாள். பீமன் “அணிசெய்தபின் நான் அழகாகவே இருந்தேன். ஆனால் நடுவே சென்று அக்காரை உண்டேன். உணவுண்டால் உடலை அசைக்காமல் என்னால் இருக்கமுடியாது” என்றபின் சற்றே நாணம் தெரிய புன்னகைத்து “அதற்கென்ன, மீண்டும் ஒருமுறை அணிசெய்துகொள்வோம்” என்று மிருஷையிடம் சொன்னான்.

”இந்தக்கோலமே உங்களுக்கு இன்னும் பொருந்துகிறது இளவரசே” என்றாள் கலுஷை. பிற இருவரும் சிரித்தார்கள். மிருஷை “அறைக்கு வாருங்கள் இளவரசே, தங்களை வேற்றுடை அணிவித்து அனுப்புகிறேன்” என்றார். பீமன் அவர்களுடன் அணியறைக்குச் சென்று வெள்ளைநிறமான பட்டாடையும் மேலாடையும் அணிந்துகொண்டு ஈரம் விலகாத கூந்தலுடன் இடைநாழிக்கு வந்தான். சிசிரன் தலைவணங்கி “இளவரசி கிழக்கு உப்பரிகையில் இருக்கிறர்” என்றான்

உப்பரிகையில் இருந்த திரௌபதி அவன் வரும் ஒலியைக் கேட்டதும் கழுத்தைத் திருப்பி நோக்கி புன்னகை செய்தாள். இலைவிழுந்த குளமென அவள் ஆடைகள் வழியாக ஓர் உடலசைவு கடந்து சென்றது. கண்களில் புன்னகையுடன் “கங்கையை எத்தனை முறை நீந்திக்கடப்பீர்கள்?” என்றாள். “தொடர்ச்சியாக ஏழுமுறை” என்றான் பீமன். அவள் வியப்புடன் “ஏழுமுறையா? இங்கே மிகச்சிறந்த நீச்சல்வீரர்களான குகர்கள் ஒருமுறை நீந்திக்கடந்து ஓய்வெடுத்து திரும்பவருவார்கள். அதற்கே குலதெய்வக் கோயிலில் பூசையிட்டு பரிவட்டம் கட்டி வாழ்த்துவார்கள் அவன் குலத்தார்” என்றாள்.

புன்னகையுடன் பீமன் பீடத்தில் அமர்ந்து தன் எடைமிக்க கரங்களை மடியில் கோர்த்து வைத்துக் கொண்டான். “இன்று நான்காவது வளர்பிறை” என்றாள் திரௌபதி. “அரண்மனையின் தென்மேற்குமூலையில் ஒரு யட்சி குடியிருக்கிறாள். அவளை முன்பொருநாள் பாஞ்சாலத்தின் குலமூதாதையொருவர் கின்னரநாட்டிலிருந்து கொண்டுவந்ததாக சொல்கிறார்கள். அரண்மனைப் பெண்களை அணங்குகள் கொள்ளாது காப்பவள் அவள். கருநிலவு மூன்றாம் நாள் அவள் எழுவாள். மூன்றுநாள் பூசனையும் பலியும் கொடுத்து அறையமரச்செய்வார்கள்.”

“ஆம், அறிந்தேன்” என்றான் பீமன். அவளுடைய மெல்லிய கழுத்தையும் விரிந்த தோள்களையும் விட்டு தன் விழிகளைத் தூக்க அவனால் முடியவில்லை. இருண்ட நீரின் அலைவளைவுகள் என அவை ஒளிகொண்டிருந்தன. அவள் அப்பார்வையை உணர்ந்தபோது அவள் கை இயல்பாக தலைமுடியை நீவி ஒதுக்கியது. ஒளிரும் விழிகளுடன் சற்றே தலைசரித்தபோது கன்னங்களின் ஒளி இடம்மாறியது. “நான் உங்களை என் தேரில் பூட்டிய அன்று என் மேல் சினம் கொண்டீர்களா?” என்றாள்.

பீமன்”ஏன்?” என்றான். விரிந்த புன்னகையுடன் “காமம் கொண்டபெண்ணை ஆண் விரும்புவதல்லவா இயல்பு?” அவள் சிரித்தபடி முகத்தருகே கைகளை வீசி ‘என்ன இது’ என செய்கை காட்டினாள். பின்னர் இதழ்களை உட்பக்கமாகக் குவித்து கன்னங்களில் செம்மை கலக்க சிரித்தாள். கங்கையிலிருந்து காற்று எழுந்து வந்து அவள் ஆடைகளை அசைத்தது. ஏதோ எண்ணிக்கொண்டதுபோல எழுந்து “நாம் கங்கைக்கரைக்குச் செல்லலாமே” என்றாள். “ஆம், எனக்கு மாளிகைகள் பிடிப்பதில்லை” என்றான் பீமன்.

அவர்கள் படிகளில் இறங்கி வெளியே வந்தனர். காவல் வீரர்கள் வியப்புடன் அவர்களை நோக்கி தலைவணங்க படித்துறையை அணுகி நின்றனர். அலைகள் துறைமேடையின் மரக்கால்களை அளையும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. “மாபெரும் சிங்கங்கள் நீர் குடிப்பதுபோன்ற ஒலி” என்று திரௌபதி சொன்னாள். பீமன் சிரித்துக்கொண்டு “சிறுவயதில் எனக்கும் இத்தகைய எண்ணங்கள் எழும்” என்றான். “இங்கு வரும்போது மட்டும் நான் மீண்டும் இளமைக்குச் செல்கிறேன்” என்றாள் திரௌபதி.

கங்கையிலிருந்து எழுந்துவந்த காற்றின் அலையில் அவள் மேலாடை எழுந்து மேலே பறக்க அதை அவள் அள்ளி சுற்றிக்கொண்டு ஒருமுறை சுழன்றுவந்தாள். அவள் விழிகளும் பற்களும் இருளில் ஒளிர்ந்து சுழன்றன. “என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” என்றாள். “சூதர்கள் கதை சொன்னார்கள். நான் இளமையில் வாழ்ந்த இந்திரத்யும்னம் என்னும் ஏரிக்கரையை நினைத்துக்கொண்டேன். சதசிருங்கம் என்னும் மலைசூழ்ந்த காடு. அங்குதான் நான் பிறந்தேன்.”

திரௌபதி கங்கையை நோக்கியபின் கைசுட்டி “நான் அங்கே செல்லவிரும்புகிறேன். கங்கையின் நடுப்பெருக்கில்” என்றாள். “படகிலா?” என்றான் பீமன். சிரித்தபடி “படகுசெல்வதைப்பற்றி சொல்லவில்லை. நான் செல்ல விழைகிறேன்” என்று அவள் சொன்னாள். “வா, நீந்துவோம்” என்றான் பீமன் மேலாடையைக் களைந்தபடி. “ஆனால் எனக்கு நீச்சல் தெரியாதே” என்று அவள் சொன்னாள்.

பீமன் அவள் சொன்னது புரியாதவன் போல திரும்பி “ஏன்?” என்றான். ”பலமுறை கற்பிக்கப்பட்டிருக்கிறேன். என் உடல் நீச்சலுக்கு நெகிழவில்லை” என்றாள். தன் உடலை இருகைகளாலும் காட்டி “என் உடல் வளையாதது என்று எனக்குக் கற்பித்த விறலி சொன்னாள்” என்றாள். பீமன் “உனக்கும் சேர்த்து என் உடல் வளையும். வருக!” என்று கைநீட்டினான். “என்னைத் தூக்கிக் கொண்டுசெல்ல உங்களால் முடியுமா?” என்றாள் திரௌபதி கைகளை நீட்டியபடி. “என்னிடம் எவரும் இப்படி கேட்பதில்லை” என்றான் பீமன்.

அவள் அவனை விழிகளால் கூர்ந்து நோக்கியபடி தன் மேலாடையை களைந்தாள். அவள் மார்பின் மெல்லிய கரிய தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னுவதை கண்டான். அவள் “நீந்துவதற்குரிய உடைகள் இல்லையே” என்றாள். ”நீந்துவதற்குரிய உடை ஆடையின்மையே” என்றான் பீமன். அவள் சிறிய பறவை போல ஒலியெழுப்பிச் சிரித்தபடி தலையை பின்னால் சொடுக்கி கூந்தலை முன்னால் கொண்டுவந்து கைகளால் அள்ளிச்சுழற்றி கட்டினாள். “அதை பரவ விடு...” என்றான் பீமன். “ஏன்?” என்று அதே சிரிப்புடன் கேட்டாள். “காற்றைப்போலவே நீருக்கும் கூந்தல் பிடிக்கும்.”

சிரித்தபடி திரௌபதி படிகளில் இறங்கினாள். அவளுடைய பட்டாடை காற்றை ஏற்று விம்மிப் பெருத்தது. அதை இழுக்க பெருமூச்சுடன் மூழ்கியது. நீருளிருந்தபடியே ஆடைகளைக் கழற்றி சுழற்றி கரையில் வீசினாள். அதைப்பற்றி படிகளில் வைத்துவிட்டு பீமன் தன் இடைசுற்றிய சிற்றாடையுடன் நீரில் இறங்கினான். அவள் தோள்களைச் சுற்றி நீர்வளையம் நெளிந்தாடியது. முலைகளின் பிளவில் நீராலான ஓர் ஊசி எழுந்து எழுந்து அமைந்தது.

பீமன் அவளருகே சென்று அவள் கைகளைப் பிடித்தான். “அச்சமின்றி தொடுகிறீர்கள்” என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். ”என்ன அச்சம்?” என்று பீமன் கேட்டான். “பெண்ணைத் தொடும் அச்சம். பீமன் நகைத்து “நான் ஏற்கனவே பெண்ணை அறிந்தவன்” என்றான். கன்னங்களில் குழி அமைய உதடுகளை அழுத்தி “ஒரு பெண்ணைத்தானே?” என்று அவள் கேட்டாள். “ஆம், ஆனால் அவள் காட்டுப்பெண். நாணமற்றவள்” என்றான் “நான் அரண்மனைப்பெண் நானும் நாணமற்றவளே” என்றாள் திரௌபதி சிரித்தபடி.

அவன் அவள் இடையைப்பற்றித் தூக்கி கங்கையின் ஆழமான சுழிப்பை நோக்கி வீச அவள் பதறியகுரலுடன் நீரில் விழுந்தாள். ஒரு கணத்தில் இருண்ட வெளியில் ததும்பும் முலைகளும் திரண்ட இடையுமாக விண்ணிலிருந்து விழும் அப்சரப் பெண் எனத் தெரிந்தாள். பீமன் பாய்ந்து நீரில் மூழ்கி அவள் இடையை இடக்கையால் உந்தி மேலேற்றினான். நீர்மேல் எழுந்த விசையிலேயே அவள் மூச்சிழுத்து பின்பு நகைத்தாள். அவன் அவளருகே நீந்த அவன் தொடையில் தன் கால்பெருவிரலை ஊன்றி நீரில் எழுந்து கைகளை விரித்து அவள் நகைத்தாள். அவளுடைய நீள்கூந்தல் நீரில் விழுந்து நெளிந்து நுனியலைந்தது.

”எனக்கு எப்போதுமே நீர் அச்சமூட்டுவது. அந்த அச்சம்தான் என்னை அசையவிடாமல் செய்திருந்தது” என்றாள் திரௌபதி. “இப்போது அச்சமே இல்லை” என்று அவள் சொன்னதுமே ”சரி, அச்சம்கொள்” என்றபடி அவன் விலகிச்சென்றான். அவள் ஒரே உந்தில் அவனை அணுகி அவன் தோளில் மிதித்து மேலெழுந்து முகத்தை வருடி நீரை வழித்து சிரித்தாள்.

அவள் அவன் தோளில் மென்முலைகள் தோய அவனை பற்றிக்கொள்ள அவன் கங்கையின் ததும்பும் அலைகளுக்குமேல் ஏறிச்சென்றான். கால்களை நீரில் உதைத்து அவளைத் தூக்கிக்கொண்டு எம்பிக்குதித்து விழுந்து மூழ்கினான். இருண்ட நீருக்குள் அவளுடைய நிழலுருவம் கால்களை உதைத்து கூந்தல் நீண்டு பறக்க நெளிந்தது. அவள் இதழ்கள் குவிந்து பிறந்த குமிழி வெடித்து மேலெழுந்தது. அவன் அவள் வயிற்றில் மெல்ல கைகொடுத்து நீர்மேல் தூக்கினான்.

“மானுடனின் உடல் மண்ணால் ஆனது. கூந்தல் வானத்தாலும் கண்கள் நெருப்பாலும் மூக்கு காற்றாலும் ஆனவை. கைகள் மட்டும் நீராலானவை” என்றான் பீமன். “கைகளை அப்படியே விட்டுவிட்டாலே போதும். அவை நீரை அறியும்” அவள் அவன் ஒரு கையின் ஏந்தலில் நீரில் நெளிந்து கொண்டிருந்தாள். “பறக்கும் கொடியைப் பற்றியது போலிருக்கிறது” என்றான். ”கங்கையையே இமயமென்னும் கொடிமரத்தில் பறக்கும் கொடி என்று வித்யாதரர் சொல்கிறார்” என்றாள். “யாரவர்?” என்றான் பீமன். “கவிஞர். புராணமாலிகையின் ஆசிரியர்.” பீமன் “நானறிந்ததில்லை” என்றான்.

அவள் அவன் தோளில் மிதித்து துள்ளி நீரில் பாய்ந்து கைகால்களை அடித்து சற்றுதூரம் சென்று அமிழ்ந்தாள். அவன் சென்று அவள் தோள்களைப் பற்றி அள்ளித்தூக்கிக் கொண்டான். அவன் உடலில் அவள் நீரில் வந்த மெல்லிய வல்லி என சுற்றிக் கொண்டாள். “என்னை தொலைவுக்கு கொண்டு செல்லுங்கள்” என்று அவன் காதில் சொன்னாள். “எங்கே?” என்று அவன் கேட்டான். “தொலைவில்... நெடுந்தொலைவில்...” என்றாள் அவள். கைநீட்டி “அங்கே” என்றாள்.

விழி நன்றாகத் தெளிந்தமையால் நீரின் அலைவளைவுகளையும் மிகத்தொலைவில் நிழலுருவாக நின்ற கரைமரங்களையும் காணமுடிந்தது. காம்பில்யத்தின் துறைமுகப்பு நெடுந்தொலைவு தள்ளிச்சென்றுவிட்டது என்று பீமன் அறிந்தான். “நாம் இப்போதே நெடுந்தொலைவு வந்துவிட்டோம்” என்றான். “ஆம், இன்னும் அப்பால்” என்றாள் அவள். அவள் உடலில் நீர்வழியும் ஒளியை காணமுடிந்தது. புல்லாக்கு என மூக்கு நுனியில் நின்று ததும்பிச் சொட்டி மீண்டும் ஊறியது நீர்த்துளி. முகத்தில் சரிந்த கூந்தல் கன்னத்தில் ஒட்டியிருந்தது. கண்கள் கரியவைரத்துளிகள். கருமையின் ஒளியென பற்களின் வெண்மை.

அவன் அவள் இடையைப்பற்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அவனுடைய பெருத்த கைகள் நீரில் எழுந்து துழாவிச்சென்றன. அவனுடலின் நெளிவுகளுடன் இணைந்தபடி அவள் அவன் முதுகின்மேல் பற்றிக்கொண்டு பறக்கும் சால்வை போல நெளிந்தாடினாள். மானுட உடலென்பது வருடுவதற்கானது, உரசிச்செல்வதற்கானது. தொடுகையில் உடல் எதுவோ அது மறைந்துவிடுகிறது. உடலுக்கு அப்பாலிருந்து வேறேதோ பேசத் தொடங்கிவிடுகின்றது. மெல்ல வழுக்கிச்செல்லும் உடல் சொல்கிறது, அது ஒரு நாகம் என.

அவள் கூந்தல் எழுந்து வந்து அவன் முகத்தை மூடியது. கற்றைகளை கைகளால் விலக்கினான். அவன் பின்கழுத்து வளைவில் அவள் முலைக்குவடுகள் பொருந்தின. அவன் கன்னத்தில் உதடுகள் பட்டன. “இப்படி எவரையேனும் சுமந்து நீந்தியதுண்டா?” என்றாள் திரௌபதி. “இளவயதில் இளையோர் மூவரையும் சேர்த்து சுமந்துகொண்டு கங்கையில் நீந்துவேன்” என்றான் பீமன். “ம்ம்ம்ம்? பெண்களை?” என்றாள். “இல்லை... நான் பெண்களை அணுகியதில்லை.”

அவள் அவன் காதுமடலை மெல்லக் கடித்து “அவர்களும் அணுகியதில்லையா?” என்றாள். “இல்லை” என்றான். ”ஏன்?” என்று அவள் கேட்டாள்.”தெரியவில்லை” என்றான். ”நான் சொல்லவா?” என்றாள் அவள். “சொல்” அவள் அவன் காதுக்குள் “உங்கள் உடலைக் கண்டு பெண்கள் அஞ்சுவார்கள். எந்தப்பெண்ணும் இந்த முழுமையுடல் மேல் காமம் கொள்ள மாட்டாள்" என்றாள். பீமன் நீரை அள்ளி உமிழ்ந்தபடி “சற்று முன் மிருஷையும் அதைத்தான் சொன்னார்” என்றான். “ஆனால் நான் காமம் கொண்டேன்” என்றாள் திரௌபதி.

சிரித்தபடி திரும்பி அவளை அடியிலாக்கி புரண்டு எழுந்து பீமன் “ஏன்? நீ பெண்ணல்லவா?” என்று சிரித்துக்கொண்டு கேட்டான். “பெண்களெல்லாம் பூனைகள். எலிகளைத்தான் விரும்புகிறார்கள். நான் வேங்கை. யானையைக் கிழித்து உண்டாலும் குருதிப்பசி அடங்குவதில்லை” என்றபின் அவன் தோளில் மிதித்து எம்பி காற்றில் குதித்து அப்பால் நீரில் விழுந்து மூழ்கி எழுந்து சிலமுறை கைவீசி நீந்திச் சென்று அமிழ்ந்தாள். அவள் அமிழும் இடத்தில் சரியாக பீமனின் கைகள் சென்று அவளை ஏந்தி மேலெழுப்பின.

அவள் நீரைக் கொப்பளித்து குழலை தள்ளியபடி “நீங்கள் கங்கைக்குள் மூழ்கி நாகர்களின் உலகுக்குச் சென்றதாக ஒரு கதை சூதர்களால் பாடப்படுகிறதே” என்றாள். “ஆம், உண்மைதான்” என்றான் அவன். “நான் ஏதோ ஓர் உலகுக்குள் சென்று மீண்டேன். அது நீருக்குள் உள்ளதா என்று என்னால் சொல்லமுடியாது.” அவள் அவன்மேல் மெல்லுடலால் வழுக்கிச்சென்று சுழன்று வந்து “நாகங்கள் இருந்தனவா?” என்றாள். “ஆம்... பெருநாகங்கள்.”

“அவை உங்களுக்கு நஞ்சூட்டினவா?” என்று மீண்டும் கேட்டாள். “ஆம், என் உடலெங்கும் அந்நஞ்சு உள்ளது.” அவள் சிரித்தபடி அவன் தலையைத்தழுவி “ஆம் நான் அறிவேன்” என்றாள். பின் அவன் தோள்களில் வளைந்து “அங்கே நாகினிகள் இருந்தனவா?” என்றாள். “இல்லை” என்றான். “ஏன்?” என்றாள். ”ஏனென்றால் நான் அன்று சிறுவன்.” அவள் சிரித்துக்கொண்டு மேலெழுந்து மூச்சை சீறி விட்டு நெளிந்தபடி “நானும் நாகமே” என்றாள். “நானூட்டும் நஞ்சு ஒன்று உண்டு.” நீரொலியுடன் இணைந்த ரகசியக் குரல்.

அவன் அவள் கால்களைப்பற்றி இழுத்தான். அவள் நீரில் மூழ்கி அவன் முகத்தருகே குமிழிகள் பறக்கும் முகத்துடன் தெரிந்தாள். வாய்திறந்து அவனை கடிக்க வந்தாள். அவளை அவன் பிடித்துத்தள்ள மேலெழுந்து மூச்சுவிட்டு நகைத்தாள். பலமுறை நீள் மூச்சு இழுத்தபின் “என் கைகள் நீரை அறியத்தொடங்கிவிட்டன” என்றாள். “இன்னும் சற்று நேரம். நீந்தத் தொடங்கிவிடுவாய்” என்றான் பீமன்.

நீரிலாடுவதற்கென்றே உருவானது உடலென உணர்ந்தான். உடல் உடலைத் தொட்டு உரசி வழுக்கிச் சென்றது. உடலால் உடலுக்களிக்கும் முத்தங்கள். அவன் முகத்தில் படிந்து இழுபட்டுச்சென்றது அவள் மெல்லிருங்கூந்தல். பொன்னிறத்தில் மின்னிச்சென்ற அவள் அகபாதங்களை மூழ்கிச்சென்று முத்தமிட்டான். அந்த உவகையில் ஒருகணம் செயல்மறந்தபோது கருக்குழந்தையெனச் சுருண்டு பறந்து விலகிக்சென்றான். கைநீட்டி எம்பி அவளை அணுகி தோள்தழுவினான். எழுந்து ஒரே சமயம் மூச்சுவிட்டு நகைத்தனர்.

“உங்களுக்கு களைப்பே இல்லையா?” என்றாள் திரௌபதி. “உண்மையைச் சொன்னால் என் வாழ்வில் இதுவரை களைப்பு என எதையும் நான் அறிந்ததில்லை. பசியை மட்டுமே அறிந்திருக்கிறேன்” என்றான் பீமன். அவள் மீண்டும் அவன் பிடியை உதறி கைவீசி நீந்தினாள். அவள் செல்லும் தொலைவுவரை விட்டுவிட்டு பின் அணுகி அவளைப்பற்றிக்கொண்டு மேலெழுப்பினான்.

மேலும் சிலமுறை நீந்தியபோது அவள் உடல் நீருடன் இணைந்துகொண்டது. அவள் நெடுந்தூரம் கைவீசி நீந்திச் சென்று மூச்சு வாங்கியபோது அவன் அருகே சென்று அவளை தோளிலேற்றிக்கொண்டான். அவள் திரும்பி நோக்கி வியந்து “இத்தனை தூரம் நானே வந்திருக்கிறேன்” என்றாள். பீமன் “ஆம், நீ நீந்தக்கற்றுக் கொண்டுவிட்டாய்” என்றான். “நீந்துவதைப்போல் எளியதேதும் இல்லை” என்றாள் திரௌபதி.

அவனருகே எழுந்து தழுவி செவிநோக்கி இறங்கி மெல்ல “இடும்பியுடன் நீந்தியதுண்டா?” என்று திரௌபதி கேட்டாள். “அவர்கள் நதியில் இறங்குவதில்லை" என்றான் பீமன். ”ஆனால் மரங்களில் நீந்துவார்கள்.” திரௌபதி வியப்புடன் “மரங்களிலா?” என்றாள். “ஆம், இலைகளின் வழியாக காற்றில். இதோ நீ அமிழும்போது என் கரம் வருகிறதே அப்படி ஒரு மரக்கிளை வந்து ஏந்திக்கொள்ளும்.”

சிலகணங்களில் அவள் அதை அகக்கண்ணால் கண்டுவிட்டாள். “வியப்புதான்” என்றாள். “என்றாவது ஒருநாள் அவளுடன் அதைப்போல நீந்த விழைகிறேன்” என்றபின் “ஆனால் அவள் என்னை கீழே விட்டுவிடுவாள்” என்று சிரித்து கூந்தலை முகத்திலிருந்து விலக்கினாள். தாடையில் இருந்து நீர் வழிந்தது. “இல்லை, அவளுக்கு அத்தகைய உணர்வுகள் எழாது. அவர்களின் குலம் அவ்வுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்றான் பீமன். “பொறாமையே இல்லையா?” என்றாள் அவள். “இல்லை” என்றான் அவன். ”வஞ்சம், காழ்ப்பு?” பீமன் “இல்லை” என்றான். “ஏனென்றால் அவர்களுக்கு விழைவுகளில்லை.”

அவள் மல்லாந்து கைகளை வீசி நீந்தினாள். அவள் இளமுலைகள் நீருக்குமேல் தாமரைமொட்டுகளென உலைந்தாடின. மூழ்கப்போனதும் கவிழ்ந்து அவனைப்பற்றியபடி “நல்லவேளை நான் அப்படி இல்லை. எனக்குள் ஆசையும் அகந்தையும் நிறைந்திருக்கின்றன. ஆகவே வஞ்சமும் காழ்ப்பும் பழியும் கொண்டவளாகவே இருந்துகொண்டிருக்கிறேன்” என்றாள். “அவள் நீர், நீ நெருப்பு. அவரவர் இயல்பு” என்றான் பீமன். “ஆம், அப்படித்தான் கொள்ளவேண்டும்” என்றபின் அவள் மீண்டும் மல்லாந்து நீந்தினாள். அவள் அலையும் முலைகளுக்குக் கீழே உந்தியும் தொடைவளைவுகளும் நீரில் தெரிந்தன.

மீண்டும் மூழ்கி எழுந்து அவனைப்பற்றியபடி “நீங்கள் சொன்னது சரிதான். விண்மீன்களின் கீழே நீந்தும்போது வானில் நீந்துவதைப் போலவே இருக்கிறது” என்றாள். “கந்தர்வர்களைப்போல, தேவர்களைப்போல.” மூச்சு அடங்கியதும் அவள் மீண்டும் பாய்ந்து கை சுழற்றி வீசி நீந்தத் தொடங்கினாள். அவள் இடைவளவுக்கு மேல் நீர்நாகம்போல கூந்தல் நெளிந்துலைந்தது.

பீமன் அவளுடன் இணைந்து நீந்தியபடி “நீ ஆண்களைப்போல் நீந்துகிறாய்” என்றான். “அப்படியா" என்றாள். “ஆம், பெண்கள் இதைப்போல கைவீசி நீந்துவதில்லை. அத்துடன் கைவீசி நீந்தும்போது எவரானாலும் சற்று கோணலாகவே செல்வார்கள். ஏனென்றால், இருகைகளில் ஒன்றின் விசை கூடுதலாக இருக்கும். நீ செலுத்தப்பட்ட அம்பு என செல்கிறாய்.” அவள் மூழ்கி நீரள்ளி உமிழ்ந்து சிரித்து “அதனால்தான் நான் நீந்த இத்தனை பிந்தியதோ என்னவோ?” என்றாள்.

மீண்டும் மல்லாந்தபடி “விண்மீன்கள்... நான் இளமையில் அவற்றை நோக்கி கனவுகாண்பேன். ஆனால் ஒருமுறைகூட நீரில் மிதந்தபடி அவற்றை நோக்குவேன் என எண்ணியதில்லை” என்றாள். “நீ விரும்பிய விண்மீன் எது?” என்றான் பீமன். “எனக்குரியது மகம். இளமையிலேயே என்னை அருந்ததியை நோக்கு என்று சொல்லி வளர்த்தனர். நான் எப்போதும் நோக்குவது துருவனை” என்றாள் திரௌபதி. ”மாறாதவன்” என்றான் பீமன். “ஆம்,ஒளிமிக்கவன், தன்னந்தனியவன்” என்று திரௌபதி சொன்னாள்.

நீரில் கால்துழைந்தபடி அவள் வானை நோக்கினாள். “அதோ, துருவன்” என்றாள். அவன் மல்லாந்து அதை நோக்கினான். “அதை நான் நோக்குவதில்லை. என் தந்தை அதை நோக்குவார் என்று மூத்தவர் சொல்வதுண்டு. அதன் தனிமை அச்சுறுத்துகிறது. கோடானுகோடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க உறுத்து நோக்கி அசையாமல் இருக்கிறது ஒருகுழந்தை என்று தோன்றுகிறது” என்றான் பீமன்.

மல்லாந்தவாறே எம்பி நீரில் விழுந்து எழுந்து “குழந்தையாக இருக்கையில் என்னை வளர்த்த செவிலியான அனகையிடம் ஒருமுறை துருவனைக் காட்டி அழகாக உள்ளது அல்லவா என்று சொன்னேன். துருவனை நோக்காதே, அவனை நோக்குபவர்கள் உலகியலை விட்டு துறவுபூண்டு ரிஷிகளாகி விடுவார்கள் என்றாள்” என்றான் பீமன். “அதுவேகூட அந்த அச்சத்திற்கு அடிப்படையாக இருக்கலாம்.”

திரௌபதி “துருவனை நோக்குபவர்கள் சக்ரவர்த்திகளாக ஆவார்கள் என்றாள் என் செவிலி” என்றாள் திரௌபதி. “இருக்கலாம். இருவருமே முற்றிலும் தனித்தவர்கள் அல்லவா?” என்று பீமன் சிரித்தான். திரௌபதி மேலே நோக்கியபடி “சக்ரவர்த்திகளையும் முனிவர்களையும் தன் பார்வையாலே உருவாக்குபவன். தனக்குள் முழுமையானவன்” என்றாள். ”அவனை நோக்குகையில் ஒளி மிகுந்தபடியே வருகிறான்.”

பின்னர் திரும்பி கைவீசி நீந்தி வந்து அவனைப்பற்றிக்கொண்டு மூச்சிரைத்தாள். ”அது என்ன அசைகிறது? முகில்நிழலா?” என்றாள் திரௌபதி “இல்லை, அது ஓர் ஆற்றிடைக்குறை” என்றான் பீமன். “ஆறு அதனருகே சுழிக்கிறது.” அவள் நோக்கிவிட்டு “நாம் அங்கே கரையேறுவோம்” என்றாள். பீமன் “கங்கையின் ஆற்றிடைக்குறைகள் பெரும்பாலும் மணற்சதுப்புகள். நிற்கமுடியாதவை” என்றான். அவள் கூர்ந்து நோக்கியபடி ”அங்கே கோரைப்புல் வளர்ந்திருக்கிறதே” என்றாள். “புல் எங்கும் வளரும்” என்றான் பீமன். திரௌபதி “நாம் அங்கு சென்றுதான் பார்ப்போமே... அது சதுப்பு என்றால் அடுத்த ஆற்றிடைக்குறைக்கு செல்வோம்” என்றாள்.

திரும்பி இருண்ட அலைகளாகத் தெரிந்த கங்கையை நோக்கி “அங்கே காம்பில்யத்தில் நாம் இறந்துவிட்டோம் என்று அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்” என்றான் பீமன். “ஆம், இறந்துவிட்டோம்... பாதாள உலகுக்கு சென்றுவிட்டோம். அங்கே உங்களுக்கு அமுதளித்த மூதாதையருடன் நெளிந்தாடிக்கொண்டிருக்கிறோம்” என்றாள் திரௌபதி. பின் எம்பி அவன் தோள்களில் கையிட்டு அணைத்து “நஞ்சுண்ணப்போகிறோம்” என்றாள்.

அவர்கள் அந்த ஆற்றிடைக்குறையை நோக்கி நீரலைகளில் எழுந்தமைந்து விரைந்து சென்றார்கள். “பறவைகள் பறந்திறங்குவதுபோல” என்றாள் திரௌபதி கைகளை விரித்தபடி. “நான் ஓர் அன்னம். இமயத்திலிருந்து இணைப்பறவையுடன் இந்த சிறு தீவுக்கு வருகிறேன். முட்டையிட்டு அடைகாக்க.” பீமன் சிரித்துக்கொண்டு “அங்கே ஒரு சிறு கூட்டை கட்டிக்கொள்வோம்” என்றான்.

ஆற்றிடைக்குறையை நெருங்கியதும் பீமன் அவள் கையை பற்றிக்கொண்டான். “நீர் அதனருகே வளையும். அங்கே சுழி இருக்கும்... மறுபக்கமாக நீர் விரைவழியும், அங்கே கரையேறுவோம்” என்றான். அவர்கள் ஆற்றிடைக்குறையை அடைந்தபோது அதன்மேல் கோரைநுனிகளை அலைத்தபடி காற்று கடந்தோடும் ஒலியை கேட்கமுடிந்தது. இடக்கால் தரையைத் தொட்டதும் பீமன் அடுத்த காலை ஊன்றி நின்று அவள் இடையை பற்றிக்கொண்டான்.

அவள் அவன் மேல் மெல்ல பறவையென எடையில்லாது அமர்ந்தபடி “வானில் பறந்து வந்து கிளையில் இறங்கியது போல” என்றாள். ”உறுதியான நிலம்” என்றான் பீமன். “இதுவரை நீங்கள் உறுதியான நிலமாக இருந்தீர்கள். ஒவ்வொரு முறை மிதிக்கையிலும் பாறை என்றே அகம் எண்ணியது” என்றாள் திரௌபதி.

பீமன் சேற்றில் கால் வைத்து நடந்து ஆற்றிடைக்குறையில் ஏறியபடி “நீ சொன்ன வித்யாதரரின் நூலில் நீரரமகளிர் பற்றிய கதை உள்ளதா?” என்றான் பீமன். “ஆம்” என்று அவள் சொன்னாள். “சற்று முன் நீருக்குள் நீ என்னை கடிக்க வந்தபோது நான் ஒரு கதையை நினைவுகூர்ந்தேன். கடலுக்குள் சென்று நீரரமகளிருடன் கூடி மறைந்த மாளவ இளவரசன் அஸ்வகனின் கதை.” பீமன் விழிகளில் ஒரு மெல்லிய சுருக்கம் வந்தது. ”ஆம் அக்கதை நினைவுள்ளது” என்றாள் திரௌபதி.

“என் தமையன் அதை ஒருமுறை எனக்கு சொல்லியிருக்கிறார்” என்றான் பீமன். “நான் உன்னை நீருள் நோக்கியபோது அக்கதையின் மாளவ இளவரசன் நானே என்று எண்ணினேன். நீர் விட்டு எழுந்தபோதுதான் அது நானறிந்த கதை என்று நினைவுகூர்ந்தேன். வியப்பென்னவென்றால் அந்தக்கதையை நேற்றோ முன்தினமோ ஏதோ சுவடியில் நான் வாசித்தேன் என்று என் நினைவு சொன்னது. நான் சுவடியைத் தொட்டு பல்லாண்டுகளாகின்றன.”

இடை வரை நீரில் நின்று அவனை கூர்ந்து நோக்கிய திரௌபதி பின் கலைந்து திரும்பி தன் நீள்குழலை அள்ளி சுழற்றிக் கட்டியபடி ஆற்றிடைக்குறையின் புல்மேடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 4

ஆற்றிடைக்குறை புழுதிக்கு நிகரான மென்மையான மண்லால் ஆனதாக இருந்தது. கோரையின் செறிவுக்கு நடுவே காற்று மணலை வீசி உருவாக்கிய மென்கதுப்புப்பாதை வெண்தடமாகத் தெரிந்தது. அவள் அதில் நடந்தபின் நின்று மீண்டும் அண்ணாந்து நோக்கி “விண்மீன்கள்... இரவில் தனித்திருக்கையில் அவை மிக அருகே வந்துவிடுகின்றன” என்றாள். பீமன் புன்னகையுடன் “ஆம்... அவை ஏதோ சொல்லவருபவை போலிருக்கும்” என்றான்.

திரௌபதி ”பசிக்கிறது” என்றாள். “இங்கே என்ன இருக்கப்போகிறது?" என்றான் பீமன் . திரௌபதி உதட்டைச் சுழித்து “ஏதாவது இருக்கும்... நான் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? எனக்குப் பசிக்கிறது, அவ்வளவுதான்” என்றாள் . ”இரு” என்றபடி பீமன் கோரைநடுவே இடையில் கைவைத்துநின்று நாற்புறமும் நோக்கினான். அருவி விழும் குழியின் நீர்க்கொந்தளிப்பு போல அவனைச்சுற்றி கோரை காற்றில் முறிக்கொப்பளித்தது.. “பாம்பின் வாசம் இருக்கிறது” என்றான். “பாம்பா, இங்கா? எப்படி வந்திருக்கும்?” என்று அவள் அச்சமில்லாமல் சுற்றி நோக்கியபடி கேட்டாள். “பாம்பின் முட்டைகள் வந்திருக்கலாம். பறவைகள் சிலசமயம் கொண்டு வந்து போடும்...” என்ற பீமன் “அதோ” என்றான்.

அப்பால் கோரைப்புல் நடுவே இருந்த வெண்ணிறமான மணல்பரப்பு வழியாக ஒரு பாம்பு ஒளிவிட்டு வளைந்து மறைந்தது. “ஒரு முறை நாக்கைச் சொடுக்கியதுபோல” என்றாள். அந்த உவமை அவனை புன்னகைசெய்ய வைத்தது. “இங்கே என்னென்ன செடிகள் இருக்கின்றன என்று தெரியவில்லை” என்றபடி பீமன் அந்த மணல்மேட்டில் சுற்றிவந்தான். “செடியோ கிழங்கோ ஏதுமில்லை. பறவைகள் கூட இல்லை. ஆனால் மீன் பிடிக்கமுடியும்”

“மீன் எனக்கு விருப்பமானது” என்றபடி திரௌபதி மணலில் அமர்ந்துகொண்டாள். “உறுதியான தரையை இன்னமும் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அது நெளிந்துகொண்டே இருக்க விழைகிறது” என்றபடி மல்லாந்து படுத்துக்கொண்டாள். “உடலுக்குள் திரவங்கள் இன்னமும் அடங்கவில்லை என்று தோன்றுகிறது” கைகளை தலைக்குமேல் மடித்து வைத்துக்கொண்டு கால்களை ஆட்டினாள். “விண்மீன்களை மல்லாந்து படுத்தபடித்தான் பார்க்கவேண்டும். அதை இன்றுதான் கற்றேன்” என்றாள். சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சுடன் “இன்று நான் உணர்ந்த விடுதலையை என்றுமே உணர்ந்ததில்லை.”

பீமன் கோரைத்தாள்களைப் பிடுங்கிக்கொண்டிருந்தான். அவள் சற்றே புரண்டு இடமுலை மணலில் அழுந்த இடை குவிந்து எழ மலைவிளிம்பென தெரிந்த உடலின் வளைவுடன் “நான் சென்ற மூன்று நாட்களும் முழுக்க் இன்னொரு உலகில் இருந்தேன். அது முழுமையான சிறைப்படல். சொற்களில் ,சிந்தனைகளில், முறைமைகளில், வரலாற்றில்... உடல் முழுக்க வேர்கள் எழுந்து பரவி இறுக்கி மண்ணுடன் அசையாமல் கட்டிவிட்டது போன்ற உணர்வு” என்றாள்

பீமன் புன்னகையுடன் கோரைகளை சேர்த்து நுனியில் முடிச்சிட்டான். அவற்றின் தடித்த அடிப்பகுதிகளை வட்டமாக ஆக்கி விளிம்புகளை வேறு கோரைகளைக்கொண்டு இணைத்துக்கட்டினான். நீண்ட கூம்பு வடிவில் அமைந்த அந்த வலைக்கூடையின் நீட்டுக்கோரைகளை குறுக்காக வேறு கோரைகளை நெருக்கமாக வைத்து கட்டி முடைந்தான். அவனுடைய விரல்களின் விரைவை நோக்கியபடி ”ஆனால் அதுவும் எனக்குப்பிடித்திருந்தது. ஏனென்றால் அந்த நாட்களில் அவருடன் அத்தனை விவாதிக்க இன்னொரு பெண்ணால் முடியாதென்று அறிந்தேன்” என்றவள் புன்னகையுடன் காலை ஆட்டி “இன்று இத்தனை தொலைவுக்கு உங்களுடன் வருவதும் இன்னொரு பெண்ணால் ஆவதல்ல” என்றாள்.

பீமன் அந்த வலைக்கூடையை எடுத்து தூக்கி பார்த்தான். அவள் எழுந்து அமர்ந்து ”காட்டுங்கள்... இதை வைத்து மீன்பிடிக்கமுடியுமா?” என்றாள். அவன் அதை அவளிடம் நீட்டினான். அவள் அதை தூக்கி நோக்கியபோது உடலில் விழுந்த நிழல்கோடுகளின் ஆடை மட்டும் அணிந்திருந்தாள்.

பீமன் மேலும் கோரைகளை பிடுங்கி சேர்த்து முறுக்கி வடம்போல ஆக்கினான்.இரு வடங்களில் அந்தக்கூடையை பிணைத்தான். அவள் எழுந்து வந்து அதை நோக்கியபடி இடையில் கையூன்றி நின்று “இதைக்கொண்டு எப்படி மீன் பிடிப்பது?” என்றாள். “இங்கே நீர் சுழிப்பதனால் மீன்கள் தேடிவரும். மணல்கரை என்பதனால் அவற்றுக்கு உணவும் இருக்கும்” என்றான். அந்த கூடையின் இரு பக்கமும் வடத்தைக் கட்டி இரு கைகளிலும் ஏந்தியபடி ஆற்றிடைக்குறையின் விளிம்பில் சென்று நின்றான்.

நீர் சுழித்துச்சென்ற இடத்தை நோக்கி அதை வீசி ஒரே சுழற்றில் வீசி மேலிழுத்தான். அதில் இரண்டு சிறியமீன்கள் துள்ளின. அவற்றை கையால் பிடித்து கிழித்து துண்டுகளாக்கி அத்துண்டுகளை கோரையில் குத்திக்கோர்த்து கூடைக்குள் போட்டு சேர்த்துக்கட்டியபின் மீண்டும் வீசினான். நீர்க்கொப்பளிப்பில் கூடை எழுந்து எழுந்து அமைந்தது. சற்றுநேரம் கூர்ந்தபின் வீசித்தூக்கியபோது உள்ளே பெரிய மீன்கள் இரண்டு வால் குழைத்துத் துள்ளின. அவற்றின் வெள்ளிவெளிச்சத்தை இருளில் நன்றாகக் காணமுடிந்தது.

சிறுமியென கையை வீசி குதித்து சிரித்தபடி “இவைபோதும்... இவைபோதும்” என்றாள்: “எனக்குப்போதாது” என்றபடி அவன் மீண்டும் வீசினான். “அத்தனை மீன்களும் அகப்படுமா?” என்றாள். பீமன் “மீன்களுக்கு தனிச்சிந்தனை இல்லை. இங்கே மீன்கள் வரும் என்பது தெரிந்துவிட்டது. அவை வந்துகொண்டேதான் இருக்கும்” என்றான். அவள் குனிந்து தரையில் துள்ளிய மீன்களை நோக்கி “தனிச்சிந்தனை எவருக்குத்தான் உள்ளது?” என்றாள்.

மீன்களை எடுத்து மணலில் வீசிக்கொண்டே இருந்தான் பீமன். “இத்தனை மீன்களா? இவ்வளவு மீனையும் உண்ண நீங்கள் என்ன நீர்நாயா?” என்றாள். பீமன் புன்னகைத்தான். எழுந்து கைகளை தூக்கி சோம்பல்முறித்த பின் இரு உலர்ந்த கோரைத்தாள்களை எடுத்து அவற்றின் நுனி அரத்தை ஒன்றுடன் ஒன்று உரசினான். பலமுறை உரசியபின் அவை தீப்பற்றிக்கொண்டன. குவித்து வைத்த உலர்ந்த கோரைமேல் வைத்தான். கோரை மெல்லப்பற்றிக்கொண்டு புகை மணம் எழுப்பியது. சிறிய இரு செவ்விதழ்களாக தீ எழுந்தது நன்றாகப் பற்றிக்கொண்டதும் தீயில் மீனைக்காட்டிச் சுடத்தொடங்கினான்.

“சுட்டு உண்பதைப்பற்றி கதைகளில் கேட்டிருக்கிறேன்” என்று திரௌபதி அருகே அமர்ந்து நோக்கினாள்.”சுவையாக இருக்குமா?” பீமன் புன்னகைத்து “இத்தனை தொலைவுக்கு நீந்திவந்தபின் சுவையாகத்தானே இருக்கவேண்டும்?”என்றான். முதல் மீனை அவள் கையில் எடுத்து “நன்றாகக் கருகிவிட்டதே” என்றாள். “செதில் கருகினால் மட்டுமே உள்ளே வெந்திருக்கும்” என்றான். அதை தன் கைகளால் இரண்டாகப்பிய்த்து “உள்ளிருந்து ஊனை எடுத்து உண்ணவேண்டும்”என்றான். பின்னர் சிரித்து “நான் அப்படி உண்பதில்லை” என்றான்.

அவள் மீனை எடுத்து உண்டபின் கைகளை நக்கியபடி “சுவையாகவே இருக்கிறது” என்றாள்.”கங்கையின் மீன்...கொழுப்பு நிறைந்தது” என்றான் பீமன். திரௌபதி “நீங்கள் பாதாளத்தில் அருந்திய நஞ்சு என்ன சுவை?” என்றாள். “கசப்பு”என்றான் பீமன்”நினைக்க நினைக்க ஊறிப்பெருகும் கசப்பு”. திரௌபதி சிரித்தபடி “ஆனால் நஞ்சு என்பது அமுதத்தின் தங்கை என்கிறார்கள். அது இனியது என்று சொல்லப்படுவதுண்டு”என்றாள். “அதை நாடிச்செல்பவர்களுக்கு இனிக்கக்கூடும்” என்றான் பீமன்.

“நஞ்சுக்கு மிகச்சிறந்த மருந்து ஒன்று உண்டு என்பார்கள்”என்றாள் திரௌபதி . அவனருகே அவள் கண்கள் மின்னின “புதிய மானுடக்குருதி. அதில் எஞ்சியிருக்கும் உயிர் சிறிய கொப்புளங்களாக வெடிக்கும். குடிக்கும்போது வாய்க்குள் குமிழிகள் வெடிக்கும் என்பார்கள். எங்கள் பூசகர்கள் அரசகுலத்தார் எவருக்கேனும் நஞ்சூட்டப்பட்டால் அம்மருந்தை அளிப்பதுண்டு” . சிரித்துக்கொண்டு “குடித்திருக்கிறீர்களா?” என்றாள். “இல்லை” என்றான் பீமன்

திரௌபதி “ஆனால் அத்தனைபேரும் தங்கள் குருதியின் சுவையை அறிந்திருப்பார்களல்லவா?” என்றாள். “அதை மானுட உயிர் விரும்பும் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றாள் .பீமன் ”குருதியா?”என்றான். “அதைக்குடிப்பதற்கும் மானுடனின் சிறுநீரைக் குடிப்பதற்கும் என்ன வேறுபாடு?” என்றான். அவள் “கழிவுநீருக்கும் நன்னீருக்குமான வேறுபாடுதான்”என்று சிரித்தாள். பின்னர் “குருதி வெறும் நீரா என்ன? அது உடலுக்குள் ஓடும் அனல் அல்லவா?” என்றாள்.

பீமன் அவளை நோக்கினான். அவள் இன்னொருத்தியாக ஆனதுபோலத் தோன்றியது “மானுடனின் காமம் கனவு சினம் வஞ்சம் அனைத்தும் குருதியில் உள்ளன. குருதியைப்போல தெய்வங்களுக்குப் பிடித்தது பிறிதில்லை” என்றாள். “நீ அருந்துவாயா மானுடக்குருதியை?” என்றான் பீமன். “எங்கள் குலங்களில் குருதிதொட்டு கூந்தல்முடியும் ஒரு சடங்கே உண்டு” என்றாள் திரௌபதி.

பீமன் மீன்களை எடுத்துத் தின்னத்தொடங்கினான். “முள்ளுடனா?” என்று அவள் வியந்தாள். “ஆம், அதுகூட எனக்கு போதாது”என்றான் அவன் சிரித்துக்கொண்டு. ‘நீங்கள் நீர்நாய் அல்ல. நீர்நாய் பெரிய முட்களை உண்ணுவதில்லை”என்றாள் திரௌபதி காற்று வீசி கனல் பறந்தது. பீமன் காலால் மணலை அள்ளி அனல்மேல் போட்டு அணைத்தான். “இங்கு அக்காளப்புல் இருக்கிறது. பற்றிக்கொண்டால் கோரைக்காடு பற்றி அனலாகிவிடும்.”

திரௌபதி அவன் உண்ணுவதையே நோக்கியிருந்தபின் “நேற்று என்ன கதை கேட்டீர்கள்?” என்றாள். “இந்திரத்யும்னன் என்ற யானையின் கதை”என்றான் பீமன். பீமன் சிரித்துக்கொண்டு “முதலையை சந்தித்துவிட்டீர்களா?” என்றாள். பீமன் அவளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஆம்” என்றான். அவள் எழுந்துசென்று நீரில் கைகளைக் கழுவினாள். அவள் உடல் குனிந்த நிலையில் ஒளிவிடும் அகிவில் போலிருந்தது. கைகள் நாண்கள் போல ஆடின.

”இந்திரத்யும்னனின் கதையை பராசரரின் புராணமாலிகை மேலும் கொண்டுசெல்கிறது தெரியுமா?”என்றாள். அவன் “என்ன”என்றான். மீன்கள் தீர்ந்து விட்டிருந்தன. “விண்ணுலகில் இந்திரனின் அவையில் இந்திரத்யும்னன் அமர்ந்திருந்தார். அவையில் ஊர்வசியின் நடனம் நிகழ்ந்தது. ஆடலில் அவள் ஆடை நெகிழ்ந்ததைக் கண்டு இந்திரத்யும்னன் காமம் கொண்டார். அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. இந்த அமரர் வாழ்க்கையை விட ஓர் இளைஞனாக காமம் நுகரும் வாழ்க்கையை அல்லவா தன் உள்ளம் தேர்ந்தெடுக்கும் என்று.”

பீமன் நகைத்து “இயல்புதானே?” என்றான். “அக்கணமே இந்திரத்யும்னன் இளமைந்தனாக மாறி விண்ணுலகிலிருந்து தலைகீழாக கீழே விழுந்தார்.விழுந்த இடம் அவரது சொந்த நாடான தென்பாண்டியம். ஆனால் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டிருந்தன. அங்கிருந்தவர்களெல்லாம் அவருடைய குருதிவழி வந்த இளமைந்தரும் மகளிரும். எந்தப்பெண்ணையும் அவரால் அணுகமுடியவில்லை. அனைவரும் அவருக்கு தன் குருதிவழி பெயர்த்திகளாகவே தெரிந்தனர்” அவள் சொல்லத்தொடங்கினாள்.

இளமைந்தனின் உடலுடன் மூதாதையின் உள்ளத்துடன் அவர் மண்ணுலகில் அலைந்தார். விண்ணுக்குத் திரும்ப விழைந்தார்.விண்ணுலகுக்குச் செல்வதற்காக மகேந்திர மலையின் உச்சியில் ஏறிச்சென்றார்.அங்கே அவர் தவம் செய்தபோது வியோமயான விமானம் வந்து நின்றது. அதிலிருந்த இந்திரனின் அகம்படியன் அவர் எவரென்று கேட்டான்.

தன்னை முழுதும் மறந்திருந்த இந்திரத்யும்னன் "நான் யாரென்று அறியேன், இளையோன், இங்கு இடமில்லாதோன், விண்ணகம் புக விழைவோன்” என்றான். “ நீர் எவரென்று சொல்லும். அதை மண்ணில் எவரேனும் சான்றளிக்கவேண்டும். எவர் உள்ளனர்? உமது மைந்தர்கள், பெயரர்கள், கொடிவழிவந்தவர் எவருளர்?” என்று அகம்படியன் கேட்டான். ”அறிந்த ஒருவர் உமது பெயர்சொல்லி தென்கடல்முனையில் ஒரு கைப்பிடி நீரள்ளி விடட்டும். உம்மை விண்ணுலகு ஏற்கும்” என்றாபின் திரும்பிச்சென்றான்.

தன்னை அறிந்தவர்கள நாடி பாண்டிய நாடெங்கும் அலைந்தார் இந்திரத்யும்னன். அவரை அங்குள்ள எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவர் ஆண்ட நகரம் மாறிவிட்டிருந்தது. அவரது கொடிவழியினர் அவரது பெயரையும் அறிந்திருக்கவில்லை. மாமதுரை நகர்களில் இரவலனாக "என்னை அறிவாருளரோ?” என்று கேட்டு அலைந்தவன் பித்தன் என்றே அங்குள்ள மக்கள் எண்ணினர்.

முக்கண் இறைவன் அருளால் மூவா இளமை பெற்ற மார்க்கண்ட முனிவர் அறிந்திருக்கலாமென்று அவரைத் தேடிச்சென்றார். பஃறுளி ஆற்றங்கரையின் குமரிக்காட்டில் தவம்செய்த இளமுனிவரை அணுகி “என்னை அறிவீரோ இளமையழியாதவரே?” என்று கேட்டார்.

இறப்பின்மையை அடைந்திருந்தமையால் முனிவர் காலத்தை அறியும் திறனை இழந்திருந்தார். தீப்பொறியை செவ்வரியாகப் பார்ப்பது போல பிறந்திறந்து மாளும் மானுடரெல்லாம் உடலெனும் ஒற்றைப் பெருஞ்சரடாகவே அவர் விழிகளுக்குத்தெரிந்திருந்தன. ”நான் என்றும் அழியாத இந்திரத்யும்னனின் உடலை மட்டுமே அறிவேன். அது நீ அல்ல” என்று அவர் சொன்னார்.

தன் துயரை இந்திரத்யும்னன் அவரிடம் சொன்னார். மார்க்கண்டேயர் இரங்கி, ”நான் பிராவீரகர்ணன் என்னும் ஆந்தையை அறிவேன். அசைவற்ற பெரிய விழிகளால் அவன் இப்புடவியை நோக்கத் தொடங்கினான். தானிழந்து தன் நோக்கு மட்டுமேயான அவன் தவத்திற்குக் கனிந்து அவன் முன் பிரம்மன் தோன்றி நீ விழைவதென்ன என்றார். "நோக்கல்" என அவன் மறுமொழி சொன்னான். முடிவிலி வரை நீ நோக்குக என்று சொற்கொடை அளித்து பிரம்மன் மீண்டார். அன்று முதல் இன்றுவரை விழி அசைக்காது அவன் இப்புவியை நோக்கி வருகிறான். அவனிடம் கேட்போம்” என்றார்.

அவர்கள் மகேந்திரமலை உச்சியில் கரும்பாறைப் பொந்து ஒன்றிலிருந்த பிராவீரகர்ணனை அணுகினர். ஆனால் அவனும் அரசனை அறியவில்லை. “நானறிந்தது இந்திரத்யும்னனின் விழிதிகழ்ந்த குன்றாப் பெருங்காமத்தை மட்டுமே. அவ்விழிகள் தவித்துத் தவித்து அள்ளிக்கொண்ட ஆயிரம்கோடி பெண்ணுடல்களின் கணங்களை மட்டுமே.அவன் அகத்தை நான் அறியேன்” என்றான்.

“ஆனால் நாடீஜங்கன் என்னும் கொக்கு ஒன்றை நான் அறிவேன். தன்னைத் தான் நோக்கி விழிமூடாதிருந்த அவனுடைய அகமுனைப்பை கண்டு தோன்றிய பிரம்மன் அவன் விழையும் சொற்கொடை ஏது என வினவினான். நாடீஜங்கன் “அறிதல்" என்றான். அன்று அவன் தன்னை நோக்கத் தொடங்கி இன்னமும் முடிக்கவில்லை. யுகங்களும் மன்வந்தரங்களும் கடந்துசென்றன. அவனிடம் கேளுங்கள்” என்றது பிராவீரகர்ணன்.

அவர்களை மூவரும் நாடீஜங்கனைத் தேடிச்சென்றனர். அவர்களை நாடீஜங்கனும் அறியவில்லை. “அரசே, உங்கள் அகம் நிறைந்து கொப்பளித்த பெருங்காமத்தின் ஊற்றுமுகத்தை மட்டுமே நானறிவேன். ஊசிமுனை செல்லும் சிறியதோர் ஊற்று அது. அதற்கப்பால் இருந்து உங்களை திகைத்து நோக்கிய உங்கள் முகத்தையும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்களல்ல” என்றான்.

நாடீஜங்கன் அவர்கள் இருவரையும் அகூபாரன் என்னும் ஆமையை பார்க்க அழைத்துச்சென்றான். “தன்னை முழுதாக உள்ளிழுத்துக்கொண்டு பாறையென ஆகிவிடும் கலைகற்றவன் அகூபாரன். முழுமையாகத் தன்னுள் தான் ஒடுங்கிய அவனுடைய கலையைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன் அவனிடம் சொற்கொடை அளிக்கவந்து என்னவேண்டும் என்றான். “இருத்தல்” என்றான் அகூபாரன். "இன்று வரை அவன் இருந்துகொண்டிருக்கிறான்."

அகூபாரனிடம் என்றுமிருப்பவரே என்னை அறிவீரா என்றார் இந்திரத்யும்னன். “ஆம், அறிவேன் நீ இந்திரத்யும்னன். அனைத்தையும் உன்னுள் இழுத்துக்கொண்டபின் உன்னில் எஞ்சுவதை நான் காண்கிறேன். அதை நான் இந்திரத்யும்னன் என அழைக்கிறேன்” என்றான் . மார்க்கண்டேயர் “அதை தென்கடல் நீர்முனையில் நான் கரைக்கிறேன்” என்றார். மார்க்கண்டேயர் நீர்க்கடன் அளிக்க இந்திரத்யும்னன் மீண்டும் விண்புகுந்தான்.

அவள் விழிகளை நோக்கியபடி கதைகேட்டிருந்தான் பீமன் . அவள் எழுந்து அமர்ந்து “என்ன பார்வை?” என்றாள். “கதை சொல்லும்போது மீண்டும் சிறுமியாகிறாய்”. அவள் மென்மணலை அள்ளி தன் தொடையில் மெதுவாக உதிர்த்தபடி “கதை என்றாலே இளையோருக்குரியதுதானே?” என்றாள். விழிதூக்கியபோது வானொளிகள் இரு புள்ளிகளாக உள்ளே தெரிந்தன “ஆமையை நீரில் மிதக்கும் நிலம் என்று சொல்வார்கள் தெரியுமா?” என்றாள்.

“அப்படியா?” என்றான் பீமன் அவள் என்ன சொல்கிறாள் என்று அவனுக்குப்புரியவில்லை. “மண்ணில் யானையென இருப்பதே நீரில் ஆமை” என்றாள். அவன் மெல்ல அவள் சொல்ல வருவதைப் புரிந்துகொண்டு “அனைத்தையும் நோக்குபவனும் ஆடியையே நோக்குபவனும்” என்றபின் உரக்கச் சிரித்து “ஆம், மூதாதையர் எழுதி வைக்காத ஏதுமில்லை” என்றான்

திரௌபதி நின்று தலைதூக்கி நிலைவிண்மீனை நோக்கியபின் திரும்பி “காற்று முழுமையாகவே நின்றுவிட்டது” என்றாள். மல்லாந்து மணலில் படுத்து கைகளை தலைமேல் கோர்த்தபடி “கங்கையில் சிலசமயம் அப்படி ஆகும்” என்றான் பீமன். “திரும்பிச்செல்லத் தோன்றுகிறது” என்றாள் திரௌபதி. “ஏன்?’ என்றான். “வெறுமே” என்றாள். “ஏன்?” என்று அவன் தணிந்த குரலில் கேட்க அவள் சூள் கொட்டினாள்

“இதுவல்ல அந்த இடம் என எண்ணுகிறாயா?” என்றான் பீமன். அவள் மறுமொழி சொல்லாமல் விண்ணை நோக்கினாள். அவள் நெற்றியிலிருந்து வளைந்து இறங்கிய கோடு மூக்காகி எழுந்து வளைந்து உதடுகளாகி முகவாயின் வளைவாகி கழுத்தாகக் குழைந்து முலையாகி வயிறாகி இடையாகி சென்றது. நீண்ட ஒற்றைத்தலைமுடை ஈரப்பளிங்கில் வளைந்து விழுந்தது போல என்று எண்ணிக்கொண்டான்.

அவள் செல்வோம் என்பது போல கையசைத்தாள். அவன் எழுந்து அமர்ந்து தன் கைகளை மணல்போக தட்டியபோது அப்பால் ஒளியென வழிந்து வந்த நாகத்தை நோக்கினான். மெல்லிய குரலில் “உன் வலப்பக்கம் நாகம்” என்றான். அவள் சற்றும் அதிராமல் திரும்பி அதை நோக்க அந்த கூந்தலிழைக்கோடு வளைந்து உருமாறியது. பக்கவாட்டில் கண்களின் வெண்மையும் பற்களும் வெண்ணிறமாக மின்னின.

“இது நச்சுப்பாம்பா?” என்றாள். “ஆம்” என்றான் பீமன். அவன் கிழித்துப்போட்ட மீன்தலைகளை நாடி அது வந்திருக்கிறது என்று தோன்றியது. எச்சரிக்கையுடன் தலையை தரையில் வைத்து உடலை பின்பக்கம் வளைத்து சுழற்றிக்கொண்டது. வால் புதருக்குள் அசைந்தது. அவள் குனிந்து அதை நோக்கினாள்.

நாகம் சிலகணங்கள் அசைவை கூர்ந்தபின் மெல்ல தலையை முன்னோக்கி நீட்டியது. அவள் அசையாமல் நின்றிருக்க பீமன் “அபப்டியே பின்னோக்கி காலெடுத்து வைத்து விலகு” என்றான். “வேண்டாம்” என்றாள் அவள். மூச்சின் ஒலியில் “அதற்கு என்னைத்தெரியும்” என்றாள். “மூடத்தனம். இது சிறுவர்களின் கதைநிகழ்வு அல்ல. அது ஊன்மணம் தேடி வந்திருக்கிறது” அவள் தலையை அசைத்தாள்.

நாகம் தலையை தூக்கி இருபக்கமும் நோக்கியபின் நீண்டு அவள் உள்ளங்காலில் ஏறியது. அவள் கணுக்காலில் வழுக்கியபடி வளைந்து வலக்காலைச் சுற்றிக்கொண்டு ஒழுகிச்சென்றது. அதன் வால்நுனி அவள் வலது கணுக்காலை விட்டுச்சென்றதும் அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. கனி உதிர்ந்த கிளை என.

நாகம் மணலில் கிடந்த மீன்தலை ஒன்றைக் கவ்விக்கொண்டதும் அதன் உடல் முறுகிச் சுழன்றது . பீமன் எழுந்து சென்று குனிந்து பருந்தின் விரைவுடன் அதன் கழுத்தைப் பற்றினான். அதன் உடல் அவன் கையைச் சுற்றிக்கொள்ள மறுகையால் அதை பிடித்தான். அவன் கைகளில் அது நெளிவதை அவள் விழிகள் மின்ன சிறிய உதடுகள் சற்றே விரிந்திருக்க நோக்கினாள். அதை அவன் தூக்கி அப்பால் கோரைக்குள் வீசினான்.

அவன் திரும்பியபோது அவள் கைகளை நீட்டினாள். ஓடிவரும் சிறுகுழந்தையை நோக்கி அன்னை போல. அவன் அவளை ஏறிட்டு நோக்கினான். அவள் விழிகளின் மிகமெல்லிய அசைவால் மீண்டும் அழைத்தாள். அவன் அருகே சென்று அவள் இடையை வளைத்துக்கொண்டான். ஒண்டிக்கொள்ளும் நாய்க்குட்டி போன்ற மெல்லிய முனகல் ஒலியுடன் அவனை அவள் அணைத்து இறுக்கி கைகளாலும் இடக்காலாலும் பின்னிக்கொண்டு இதழ்சேர்த்துக்கொண்டாள். அவள் கைகளை அவன் நாகம் என தன் தோளில் உணர்ந்தான்.

அவள் இதழ்களில் புனுகின் நறுமணம் இருந்தது. குருதியும் அனலும் கலந்ததுபோல. அவள் மூச்சுக்காற்று அவன் கன்னத்தில் பட்டது. அவள் அவனை பற்றி மென்மணலில் சரிந்து ஏந்திக்கொண்டாள். அவள் அவன் தோள்களில் முத்தமிட்டாள். “கதாயுதத்தால் ஒரே ஒரு நரம்பை மட்டும் அடிப்பீர்கள் என்றார்களே?” என்றாள். “ஆம், கீழே கிடக்கும் ஒரு தலைமயிரை அதனால் எடுக்கமுடியும் என்னால்” அவள் அவன் இரு தோள்களிலும் முத்தமிட்டு “ம்ம்” என்றாள். “என்ன?” என்றான். “ஆற்றல்...ஆற்றல் மட்டும்” என்றாள்.

தலையை அண்ணாந்து “ம்ம்” என்றாள். அவள் கழுத்தில் முகம் அமைத்து “என்ன ?”என்றான். “நான்காம் நிலா” என்றாள். “எங்கே?” என அவன் அசைய அவனைப்பற்றி தன் தோளுடன் இறுக்கி “நான் மட்டுமே பார்ப்பேன்” என்றாள். “ம்” என்றான். புரவியின் உடல் வீரனின் உடலுக்கு அளிக்கும் தாளம். புரவி தன் பாதையைத் தேர்ந்தெடுத்தது. புல்வெளியில் பெருநடையிட்டு மலைச்சரிவில் குளம்போசை எதிரொலிக்க இறங்கி மலைவிளிம்பிலிருந்து அடியற்ற ஆழம் நோக்கி பாய்ந்தது. அதன் குளம்புகள் காற்றில் ஓசையின்றி பதிந்து பதிந்து சென்றன.

அவன் மல்லாந்து விண்ணை நோக்கி “அதுவா ?” என்றான். திரைச்சீலை மூடிய சிற்றகல்சுடர் என தெரிந்தது நான்காம் நிலா. “ஆம்” என்றாள் அவள். ஒருக்களித்து அவன் தோள் தழுவி காதில் “சற்றுமுன் அது நடனமிட்டது. உடைந்து பலவாக ஆகி சுழன்றது” என்றாள். “ஏன்” என்றான். அவள் அவன் தோளை இறுகக் கடித்தாள். அவன் சிரித்தான்.

அவள் எழுந்து கூந்தல் நெளிய மீன் என பாய்ந்து நீரில் விழுந்து நீந்த தொடங்கினாள். அவன் நீந்திச்சென்று அவளை பிடித்தான். அவன் தோளை மிதித்து எழுந்து பாய்ந்து அப்பால் விழுந்தாள். சிரித்துக்கொண்டே அவன் அவளை துரத்திச்சென்றான். காற்று மீண்டும் வீசத்தொடங்கியது. கங்கையின் நீரலைகள் பெரிதாக வளைந்தன. அவளும் ஓர் இருண்ட ஒளிவளைவெனத் தெரிந்தாள்.

அலைவளைவுகளில் செவ்வொளி தெரிய பீமன் திரும்பி நோக்கினான். ஆற்றிடைக்குறை செந்தழலாக எரிந்துகொண்டிருந்தது. அதன் நீர்படிமம் ஆழத்தை நோக்கி அலையடித்தது.திரௌபதி அவன் மேல் தொற்றிக்கொண்டு ”நான் நெருப்பைக் கிளறிவிட்டேன்...எரியட்டும் என்று” என்றாள். “ஏன்?” என்றான். சிரித்தபடி அவள் அவன் தொடையில் உதைத்து எம்பி நீரில் விழுந்தாள்.

பகுதி 4 : தழல்நடனம் - 1

அணுக்கச்சேவகன் அநிகேதன் வந்து வணங்கியதும் அர்ஜுனன் வில்லைத்தாழ்த்தினான். “இளையவர் சகதேவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்ததும் அவன் திரும்பிச்செல்லும் காலடியோசை கேட்டது. அந்த ஒவ்வொரு ஒலியும் அளித்த உளவலியை தாளாமல் அர்ஜுனன் பற்களைக் கடித்தான். பின் வில்லை கொண்டுசென்று சட்டகத்தில் வைத்துவிட்டு அம்புச்சேவகனிடம் அவன் செல்லலாம் என கண்காட்டினான். தன் உடலெங்கும் இருந்த சினத்தை ஏதும் செய்யாமல் இருக்கும்போதுதான் மேலும் உணர்ந்தான்.

மரவுரியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்ந்தான். சகதேவன் வந்து “மூத்தவரை வணங்குகிறேன்” என்றான். வாழ்த்து அளித்தபின் பீடத்தைக் காட்டினான். அவன் அமர்ந்துகொண்டு “அன்னை தங்களிடம் பேசிவிட்டு வரும்படி என்னை அனுப்பினார்கள்” என்றான். அர்ஜுனன் பெருமூச்சுடன் உடலைத் தளர்த்திக்கொண்டு “சொல்”என்றான். சகதேவன் புன்னகையுடன் “அடவியை விட்டு அரண்மனைக்கு வந்துவிட்டோம். மீண்டும் அத்தனை அரசமுறைகளும் வந்து சேர்ந்துவிட்டன” என்றான்

புன்னகைத்தபோது தன் முகத்தில் விரிசல்கள் விழுவதுபோலத் தோன்றியது. சகதேவன்னின் முகம் எப்போதுமே மலர்ந்திருப்பது. அவன் கண்களில் அனைத்தையும் அறிந்து விலகியவனின் மெல்லிய சிரிப்பு உண்டு. அர்ஜுனன் “அன்னை எங்கிருக்கிறார்கள்?” என்றான். தன் அகம் மலர்ந்துவிட்டதையும் சினம் விலகிவிட்டதையும் உணர்ந்து “எந்த உளநிலையில் இருக்கிறார்கள்?” என்றான்

“அவர்களுக்கு கங்கைகரையிலேயே ஓர் அரண்மனையை அளித்திருக்கிறார் பாஞ்சாலர். அதன் மாடம் மீது மார்த்திகாவதியின் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். நேற்றுத்தான் நானே அதைக் கண்டேன். அன்னையிடம் சொன்னேன், இது நம் அரசல்ல, நாம் இங்கு அரசமுறைப்படி வரவும் இல்லை என்று. விடையாக ,பதுங்கியிருக்கும் வேங்கைதான் மேலும் வேங்கை என்றார்கள். விடையை முன்னரே சிந்தனை செய்திருப்பார்கள் போலும்” என்றான்

”பாஞ்சாலன் ஒரு நல்ல புலிக்கூண்டைச் செய்து அளித்திருக்கலாம்”என்றான் அர்ஜுனன். சகதேவன் சேர்ந்து நகைத்தபடி “அன்னை அரண்மனையில் முன்னும்பின்னும் நடந்த இடம் காலடிப்பாதை போல மரத்தரையின் வடுவாகி விட்டிருப்பதாக தோன்றியது. கொதிக்கும் செம்புக்கலம் போலிருக்கிறார்கள்”என்றான். அர்ஜுனன் விழிகளைச் சரித்து “அவர்களை நாம் ஒருபோதும் நிறைவுசெய்யப்போவதில்லை இளையோனே” என்றான்

சகதேவன் “இன்றுகாலை மூத்தவர் பீமசேனரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களிடையே பெரும் பூசல் நிகழ்ந்திருக்கிறது” அர்ஜுனன் தலையசைத்தான். “அன்னை மூன்றுநாட்களுக்கு முன்னால் மூத்தவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்கள். இளவரசியை எப்படியேனும் அஸ்வத்தாமனின் சத்ராவதிமேல் படைகொண்டுசெல்ல ஒத்துக்கொள்ள வைக்கும்படி. இளவரசியின் ஆணையை பாஞ்சாலம் மீறமுடியாது என எண்ணியிருக்கிறார். மூத்தவர் அதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்”

“ஆனால் அதை அவர் இளவரசியிடம் சொல்லவேயில்லை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், எப்படி அதை உணர்ந்தீர்கள்?” என்றான் சகதேவன். “இளையோனே , கங்கை எற்றி எறிந்து கொண்டுசெல்லும் நெற்று போல சென்றிருப்பார் மூத்தவர்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். சகதேவன் சிரித்தபடி எழுந்து “ஆம், அதைத்தான் அன்னையும் சொன்னார்கள். அவள் கையில் பந்தெனத் துள்ளியிருக்கிறாய் மூடா என்று. முதலில் அன்னை தன்னிடம் சொன்னதென்ன என்றே அவருக்கு நினைவில் இல்லை. அதுவே அன்னையை சினவெறி கொள்ளச்செய்துவிட்டது. நான் கூடத்திற்கு அப்பால் இருந்தேன். மூடா, மந்தா, ஊன்குன்றே என்றெல்லாம் அன்னை வசைபாடும் ஒலி கேட்டு எழுந்து அறைக்குள் சென்று நின்றேன். என்னைக் கண்டதும் அன்னை தன்னை மீட்டுக்கொண்டாள். மூச்சிரைத்துக்கொண்டு மேலாடையை முகத்தின் மேல் இழுத்துப்போட்டபடி பீடத்தில் அமர்ந்து விம்மி அழத்தொடங்கிவிட்டார்”

“மூத்தவர் அன்னையை நோக்கியபடி சிலகணங்கள் நின்றார். அவர் உடலில் ஓர் அசைவு எழுந்தது. அவர் ஏதோ சொல்லப்போவதாக எண்ணினேன். ஆனால் திரும்பி என்னை நோக்கி புன்னகைசெய்தார்” என்றான் சகதேவன் “மூத்தவரே, நீங்கள் அப்புன்னகையைப் பார்த்திருக்கவேண்டும். அத்தனை அழகிய புன்னகை. திருடிஉண்ட குழந்தையை பின்னால் சென்று செவிபிடித்தால் சிரிப்பதுபோல. அப்படியே அவரைச் சென்று அணைத்துக்கொள்ளவேண்டும் போல தோன்றியது” அர்ஜுனன் சிரித்தபடி “மூத்தவர் ஓர் அழகிய குழந்தை. இறுதிவரை அப்படித்தான் இருப்பார். அவர் இருக்கும் வரை நம்முடன் காட்டுதெய்வங்களனைத்தும் துணையிருக்கும்” என்றான்

”மூத்தவர் கைகளை விரித்தார்... ஏதோ சிந்திக்க முயல்கிறார் என்று தெரிந்தது. சொற்கள் ஏதும் சிக்கவில்லை. எனவே மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டார். அப்பால் ஏதோ ஓசை. அது இளவரசியின் காலடி என்று தோன்றிருக்கக் கூடும். அவர் திரும்பி பார்த்தபோது முகத்தில் இசை மீட்டும் கந்தர்வர்களின் மலர்ச்சி இருந்தது. பின்னர் திரும்பி அன்னையை நோக்கினார். நான் அவர் சொன்னதிலேயே மூடத்தனமான சொற்களை கேட்டேன். மூத்தவரே, அதைச் சொன்னமைக்காக அவரை மீண்டுமொருமுறை உள்ளத்தால் தழுவிக்கொண்டேன்”

சிரித்துக்கொண்டே சகதேவன் சொன்னான் “மூத்தவர் எழுந்து மண்டியிட்டு அன்னையருகே அமர்ந்து, ‘அன்னையே நான் உடனே சென்று இளவரசியிடம் அனைத்தையும் தெளிவாகப் பேசிவிடுகிறேன்’ என்று சொன்னார்.அதைக்கேட்டதும் அன்னையின் அத்தனை கட்டுக்களும் அறுந்து தெறித்தன. ’மூடா, மந்தா! நீ மனிதனல்ல அறிவற்ற குரங்கு’ என்று கூவியபடி அவர் தலையிலும் தோளிலுமாக அடித்தார். உடனே என்னை உணர்ந்து திரும்பி நோக்கியபின் எழுந்து மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டு வாயிலை நோக்கிச் சென்றார். அங்கு தாளாமல் நின்று திரும்பி ‘அறிவிலியே, வேங்கை உன்னை கிழித்து உண்ணும்போது எஞ்சியதைச் சொல்’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்”

அர்ஜுனன் சிரிப்பை அடக்கியபடி எழுந்துவிட்டான். இளையவனின் விழிகளை நோக்காமல் திரும்பி உடல் முழுக்க அதிர மெல்லச் சிரித்தான். “மூத்தவர் என்னிடம் ‘எந்த வேங்கையும் என்னை உண்ண முடியாது. நான் இடும்பனையும் பகனையும் கொன்றவன்’ என்றார்” என்று சகதேவன் சொன்னதும் அர்ஜுனனுக்கு அடக்கமுடியாதபடி சிரிப்பு பீரிட்டு விட்டது. சிரிப்பை அடக்கிய இருமலுடன் அவன் திணறினான்.

சகதேவனும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு எழுந்து “நான் சொன்னேன், ‘மூத்தவரே, இன்றுடன் உங்கள் முறை முடிகிறது’ என்று. அதற்கு அவர் திகைத்து,‘மூன்றுநாட்கள் உண்டு அல்லவா?’ என்றார். நான் ‘மூத்தவரே, இன்றோடு மூன்றுநாள் ஆகிறதே’ என்றேன். உள்ளூர கணக்கிடுகிறார் என்று தோன்றியது. முன்னும் பின்னுமாக பல கோணங்களில் எண்ணிப் எண்ணிப்பார்த்தும் மூன்று மூன்றாகவே எஞ்சியிருக்கக் கண்டு சினமடைந்து தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டு என்னிடம் ‘மூடா, நான் எனக்குத் தோன்றியதைச் சொல்வேன். என்னை எவரும் கட்டுப்படுத்தமுடியாது’ என்று கூவினார். சிரிக்காமல் நான் தலையசைத்தேன்” என்றான்.

அர்ஜுனன் சிரித்துக்கொண்டிருக்க சகதேவன் தொடர்ந்தான் “மூத்தவர் மேலும் சினம் அடங்காமல் ‘நான் மறக்க முடியாதபடி தன் சொற்களை அமைக்கத்தெரியாதது அன்னையின் பிழை! அதற்கு நானா பொறுப்பு?’ என்றார். மேலும் சினம் தாளாமல் அறைக்குள் சுழன்றார். சினம் கட்டுமீறிக்கொண்டே சென்றது. அவர் உடலில் மலைப்பாம்புகளும் மத்தகங்களும் பொங்கி எழுந்தன. கடும் சினத்த்தால் பற்களை கிட்டித்தபடி என்னை நோக்கி ‘நான் அடுமனைக்குச் செல்கிறேன். நீ வருகிறாயா?இங்கே அக்காரை என்றொரு அப்பம் செய்கிறார்கள்’ என்றார்”

சிரிப்பில் அர்ஜுனன் கண்கள் கலங்கி விட்டன. சிரிப்பை நெறிப்படுத்துவதற்காக அவன் மீண்டும் வில்லை எடுத்துக்கொண்டான். “மூத்தவர் கடும் சினத்துடன் எதிர்ப்பட்ட அனைத்தையும் தட்டித்தள்ளியபடி நேராக அடுமனைக்குச் சென்று இடிபோல முழங்கினார் ‘கிஞ்சனரே, எடுத்துவையுங்கள் அக்காரையை’ என்று. முழங்கால் உயரத்துக்கு குவிக்கப்பட்ட அக்காரைகளை உண்டு நெடுந்தூரம் சென்றபின் அவருக்கு என் நினைவு எழுந்தது. திரும்பி நோக்கி ‘நீயும் அமர்ந்துகொள்... இது இப்பகுதிக்கே உரிய சிறந்த அப்பம்’ என்றார். நான் அமர்ந்துகொண்டதும் ஒவ்வொரு அப்பமாக எடுத்து முகர்ந்து அவற்றில் மிகச்சிறந்தவற்றை எடுத்து என் தாலத்தில் வைத்து ‘புசி... இது ஆற்றலை வளர்க்கும்’ என்றார்” என்றான் சகதேவன்.

அர்ஜுனன் சிரித்து அடங்கி “அனைத்தையும் உண்டபின் கங்கையில் குதித்திருபபர்” என்றான். “ஆமாம், அப்போது சென்றவர் இதுவரை மீளவில்லை” என்றான் சகதேவன். அர்ஜுனன் “கங்கைக்கரைக்கு அப்பாலுள்ள காடுகளில் ஏதேனும் குரங்குகுல இளவரசியை மணந்து மைந்தனையும் பெற்று பெயர்சூட்டிவிட்டு திரும்பி வந்தால்கூட வியப்பில்லை” என்றான். சகதேவன் “நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கங்கை வழியாகச் சென்று பாஞ்சாலநாட்டின் எல்லையையும் கடந்து கன்யாகுப்ஜத்திற்கு அருகே ஒரு சிறு துறைக்குச் சென்று கரையேறி இலச்சினைமோதிரத்தை அளித்து பாய்மரப்படகு ஒன்றை வாங்கி மறுநாள் பின்காலையில்தான் திரும்பிவந்திருக்கிறார்கள்”

அர்ஜுனன் தலையசைத்தான். “அன்னை அதைத்தான் உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்” என்றான் சகதேவன் “உங்களிடம் நேரில் சொல்லமாட்டார்கள் என நீங்களே அறிவீர்கள்” அர்ஜுனன் முகம் மாறி “சொல்...” என்றான். “நீங்கள் அஸ்வத்தாமனை வெல்லவேண்டும். இந்நகரிலிருந்து சத்ராவதிக்குத்தான் திரௌபதியுடன் நாம் செல்லவேண்டும். அங்கே திரௌபதி முடிசூடி அரியணையில் அமரவேண்டும்....”. அர்ஜுனன் “அன்னையின் திட்டங்களை நான் அறிவேன். ஆனால் திரௌபதியைப்போன்ற ஒரு பெண்ணை சொல்லித் திசைதிருப்பமுடியும் என அவர் நம்புகிறார் என்றால்...” என்றபின் கைகளை விரித்தான்

“தங்களால் முடியும் என்று அன்னை சொன்னார். தங்களிடம் சொல்லவேண்டாமென்பதே அன்னையின் எண்ணமாக இருந்தது” சகதேவன் சொன்னான். “பாஞ்சால இளவரசர்கள் சத்ராவதியிடம் போர்புரியும் ஆற்றல் கொண்டவர்களல்ல. தாங்கள் படைநடத்தினால் மட்டுமே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். பாஞ்சாலத்தின் ஐங்குலங்கள் தாங்கள் படைநடத்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கு திரௌபதி ஆணையிடவேண்டும்”

“இதை ஒரு தூதனிடம் ஓலையாகக் கொடுத்தனுப்பலாமே?ஏன் நீயே வரவேண்டும்?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் தங்களைச் சற்று சிரிக்கவைத்துவிட்டு இதைச் சொல்ல தூதனால் முடியாதே” என்றான் சகதேவன் “மூடா” என்று திரும்பி செல்லமாக அவன் தோளில் அறைந்தான் அர்ஜுனன். ”நான் சினமாக இருக்கிறேன் என எவர் சொன்னது?” சகதேவன் “சினமில்லையேல் திறந்த வெளியில் அல்லவா விற்பயிற்சி செய்வீர்கள்” என்றான் சகதேவன். அவன் விழிகளை அர்ஜுனன் நோக்கினான். தெளிந்த படிகவிழிகள்.

“இளையோனே, நீ உன் நிமித்தநூல் மூலம் மானுட வாழ்க்கையை எத்துணை தொலைவுக்கு அறியமுடியும்?” என்றான் அர்ஜுனன். “கற்க விழைகிறீர்களா?” என்றான் சகதேவன். “சொல்” என்றான் அர்ஜுனன் “ மூத்தவரே, நாம் மானுடர். ஆகவே மானுட வாழ்க்கையை மட்டுமே அறிகிறோம். அதில் நம் நாடு நம் குலம் நம் குடியை மட்டுமே கூர்ந்து நோக்குகிறோம். நம்மையும் நம்மைச்சார்ந்தவர்களையும் பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறோம். இங்கு நிக்ழ்வன எதையும் நம்மால் அறியமுடியாமைக்குக் காரணம் இதுவே”

“நிமித்தநூல் என்பது இங்குள்ள வாழ்க்கையை ஒரு பெரும் வலைப்பின்னலாக நமக்குக் காட்டுகிறது. நம்மை விலக்கி நிறுத்தி அந்த வலையில் ஒவ்வொன்றும் எங்கெங்கே நிற்கின்றன என்பதைப் பார்க்கவைக்கிறது. அனைத்தையும் பார்க்க முடியுமா என்று நான் அறியேன். ஆனால் காவல்கோபுரம் மீதேறி நின்று நகரை நோக்குவதைப்போல ஊழாடலை நோக்க முடியும்”

”நீ நோக்குகிறாயா?” என்றான் அர்ஜுனன் “இல்லை, தேவையானபோது மட்டும் நோக்குகிறேன். அத்துடன் நிமித்திகன் ஒருபோதும் தன் வாழ்க்கையை நோக்கக் கூடாது. அதன்பின் அவன் இங்கே இந்த பெருநாடகத்தில் ஒருவனாக நடிக்க முடியாது. இருத்தலின் அனைத்து உவகைகளையும் இழந்துவிடுவான்” அர்ஜுனன் தலையசைத்து “நன்று” என்றான். பின் தன் கையில் இருந்த வில்லை இது என்ன என்பதுபோல நோக்கினான். அதை வைத்துவிட்டு திரும்பி “என் உள்ளம் நிலைகொள்ளவில்லை இளையவனே” என்றான் ‘இவை எதன் பொருட்டும் அல்ல அது”

“சொல்லுங்கள்” என்றான் சகதேவன் “இந்தப்ப்பெண்ணோ, மண்ணொ, புகழோ எனக்கொரு பொருட்டே அல்ல. நான் விழைவது என்னவென்றும் அறியேன்.நான் என்னசெய்யவேண்டும் சொல்” என்றான் அர்ஜுனன் “மூத்தவரே, தன் காதலனுக்காகக் காத்திருக்கும் பேதைப்பருவப் பெண்ணின் நிலைகொள்ளாமை தங்களுடையது. மண்ணில் எவரும் அருந்தாத பெருங்காதலின் அமுதை என்றோ ஒருநாள் தாங்கள் அருந்தக்கூடும். தங்களுக்குள் உள்ள அந்தத் தத்தளிப்பை அடைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களை தெய்வங்கள் தங்கள் ஆடலில் கருவாக்குகின்றன.” என்றான் சகதேவன்

“ஆகவே அந்த தத்தளிப்பு அங்கே இருக்கட்டும்... அதை சுவைத்துக்கொண்டிருங்கள்” என்று தொடர்ந்தான் “ஆனால் இத்தருணத்தின் சினம் வேறு ஒன்றினால்... அதை நான் உங்களிடம் சொல்லமுடியாது” சகதேவன் புன்னகைத்து “ சூதர்களிடம் சொல்லிவிட்டுச் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன் தலையசைத்து புன்னகைத்தான்

“சரி, அன்னையின் இக்கோரிக்கை. இதில் நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் அர்ஜுனன் “அன்னையின் ஆணை இது. இதை நீங்கள் மீறலாகாது மூத்தவரே. உங்களால் முடிந்தவரை இதைச் செய்ய முயலுங்கள்” என்றான். அர்ஜுனன் அவன் விழிகளை நோக்கி “நான் வென்று துரோணருக்கு அளித்த மண் அது. அதை நான் மீண்டும் வென்றெடுப்பது முறையல்ல...” என்றான் “ஆம், நானறிவேன், அன்னை நொல்லும் தர்க்கங்களை. அவை நாம் சொல்வது. அவற்றை ஆசிரியர் ஏற்கவேண்டுமென்பதில்லை சூதர்கள் ஒப்பவேண்டுமென்பதில்லை”

“ஆம், அந்த தர்க்கங்கள் எவையும் முழுமையானவை அல்ல” என்றான் சகதேவன் “ஆனாலும் அன்னையின் ஆணையை நீங்கள் நிறைவேற்றலாம்” சிலகணங்கள் கழித்து “அது நிறைவேறப்போவதில்லை என்பதனால் உங்களுக்குப் பழி ஏதும் வராது” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அச்சொற்களே போதும். அவ்வண்ணமே செய்கிறேன்” என்றான்.

சகதேவன் புன்னகையுடன் “இன்று ஏழாம் வளர்பிறை. தங்கள் நாள்” என்றான். அர்ஜுனன் “ஆம்”என்றான். சகதேவன் மேலே ஒன்றும் சொல்லாமல் வணங்கி பின்னால் சென்றான். அர்ஜுனன் அவனுக்கு வாழ்த்தளித்துவிட்டு படைக்கலச்சாலையின் நடுவே கைகளை இடைகோர்த்து நின்றான். பின்னர் திரும்பி வில்லை எடுத்து அதில் அம்பைப்பொருத்தி தொடுத்து சுழிமையத்தில் நிறுத்தினான். அதன்பின் அடுத்த அம்பால் முதல் அம்பை இரண்டாகப்பிளந்தான். அடுத்த அம்பால் அதை இரண்டாகப் பிளந்தான். அம்புகள் பிளந்து விழுந்தபடியே இருந்தன

வில் தாழ்த்தியபோது அநிகேதன் பின்னால் வந்து நின்றிருந்தான். “நீராட்டறைக்குச் சொல்” என்றான். அவன் திரும்பி ஓடினான். அர்ஜுனன் சென்று மேலாடையை அணிந்து குழலைக் கலைத்து தோளில் பரப்பிக்கொண்டு வெளியே சென்றான். குளிர்ந்த கங்கைக்காற்று பட்டு அவன் தோள்கள் சிலிர்த்தன. கால்களை சீராக எடுத்துவைத்து நடந்தான்

மாளிகைக்குச் சென்றதும் அநிகேதனிடம் “நான் பாஞ்சால அரசரைச் சந்திக்க விழைகிறேன் என செய்தி அனுப்புக” என்றான். நீராட்டறையில் நீராட்டறைச் சேவகர் இருவர் அவனுக்காக நறுமணப்பொடிகளும் மூலிகை எண்ணைகளுமாகக் காத்திருந்தனர். ஒருசொல்கூடப் பேசாமல் அவன் நீராடி முடித்தான். வெண்ணிற ஆடையும் கச்சையும் அணிந்து வெளிவந்தபோது அரசர் அவரது தென்றலறையில் சந்திப்புக்கு நேரமளித்திருப்பதாக அநிகேதன் சொன்னான்

முற்றத்துக்கு வந்து சிறியதேரில் ஏறி அரண்மனைக்குச் செல்ல ஆணையிட்டபின் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து சொற்களைக் கோர்க்கத் தொடங்கினான். “ஆம்” என்று சொன்னபடி அசைந்து அமர்ந்து பெருமூச்சுடன் அரண்மனையின் செங்கல்பரப்பப்பட்ட பெருமுற்றத்தையும் பின்னோக்கி ஒழுகிய ஏழடுக்கு மாளிகைகளையும் நோக்கினான். ரதம் சிறிய அதிர்வுடன் நின்றதும் இறங்கி சால்வையை சுற்றிக்கொண்டு அரண்மனை முகப்பை நோக்கிச் சென்றான்

வாயிலிலேயே கருணர் நின்றிருந்தார். அவனைக்கண்டதும் ஓடிவந்து பணிந்து “அரசர் தென்றலறையில் இருக்கிறார். இட்டுச்செல்ல ஆணை” என்றான். “துணையுடன் இருக்கிறாரா?” என்றான் அர்ஜுனன் “ஆம், இளவரசர் தருமருடன் நாற்களம் ஆடிக்கொண்டிருக்கிறார்” அர்ஜுனன் எதையும் வெளிக்காட்டாமல் “மூத்தவர் இங்கா இருக்கிறார்?” என்றான். “ஆம் இளவரசே, அரசருக்கு இப்போது அணுக்கக்கூட்டு என்பது மூத்த இளவரசர்தான். பகலெல்லாம் இருவரும் நாற்களமாடிக் களிக்கிறார்கள்”

அர்ஜுனன் தன் சொற்களை மீண்டும் எண்ணத்தில் ஓட்டினான். பொருளற்ற மதிசூழ் சொற்கள். அவற்றையா அத்தனை நேரம் திட்டமிட்டு அமைத்தோம் என அவன் அகம் திகைத்துக்கொண்டது. வேறென்ன சொல்வது? அச்சூழலை அவனால் எண்ணத்தில் எழுப்பவே முடியவில்லை. ஒரு சொல்கூட எழுந்து வரவில்லை. அதற்குள் தென்றலறையின் வாயில் வந்துவிட்டது. கருணர் புன்னகையுடன் வாயிலைத் திறந்து “தாங்கள் பேசிக்கொண்டிருக்கலாம் இளவரசே” என்றபின் விலகினார். அவன் உள்ளே நுழைந்தான்

தென்றலறை அப்பால் இருந்த விரிந்த மலர்ச்சோலையை நோக்கித் திறந்த உப்பரிகை கொண்டிருந்தது. பச்சைநிறமான திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடின. செம்மஞ்சள்நிற பாவட்டாக்கள் அறைமூலையில் காற்றில் திரும்பின. சுவர்கள் முழுக்க மயிற்பீலிவளையங்களால் அணிசெய்திருந்தனர். நடுவே குறுபீடத்தில் இருந்த இருவண்ணக் களத்தில் பொன்னாலும் தந்தத்தாலுமான காய்கள் காத்திருந்தன. துருபதன்னும் தருமன்னும் அவற்றை நோக்கி அமர்ந்திருந்தனர்

முகவாயை வருடியபடி கணித்துக்கொண்டிருந்த துருபதன் திரும்பி “வருக இளவரசே” என்றார். தருமன் “ இளையோனே, நீ வருகிறாய் என்று சற்றுமுன் சொன்னார்கள்... நான் இங்குதான் காலைமுதல் இருக்கிறேன்” என்றபின் புன்னகையுடன் குதிரைவீரனை முன்னால் கொண்டு வைத்து “தடைதாண்டிவிட்டேன்” என்றான். துருபதன் திகைத்து நோக்கி “ஓ” என்று கூவியபின் பெருமூச்சுடன் “அவ்வளவுதான்” என்றார். “இன்னொரு வழி உள்ளது... ஆனால் அதை நீங்களே கண்டடையவேண்டும்” என்றான் தருமன்

துருபதன் அர்ஜுனன்னிடம் அமரும்படி கைகாட்டினார். அர்ஜுனன் அமர்ந்துகொண்டு துருபதனிடம் “அரசே, தாங்களிடம் முதன்மையான அரசுச்செயலபாடு ஒன்றை சொல்ல வந்துள்ளேன்” என்றான். துருபதன் விழிதூக்கினார். ”நாம் சத்ராவதியின்மேல் படைகொண்டு சென்று அதைக் கைப்பற்றவேண்டும். அஸ்வத்தாமனைக் களத்தில் வெல்வது என் கடன். சத்ராவதியை வென்று அதன் மேல் பாஞ்சாலக்கொடியை பறக்கவிடாதவரை காம்பில்யம் தன் மதிப்பை மீட்கமுடியாது என்பதை அறிவீர்கள். ஐம்பெருங்குலங்களுக்கும் அது கடமையும்கூட”

தருமன் திகைப்புடன் “இளையோனே” என்று சொல்லத் தொடங்க அர்ஜுனன் தலைவணங்கி தொடர்ந்து சொன்னான். “எங்கள் அரசியை ஒரு நாட்டின் அரசியாகவே இங்கிருந்து அழைத்துச்செல்ல விழைகிறோம். அவளுக்கென அரியணையும் செங்கோலும் மணிமுடியும் தேவை. அது அவள் இழந்த சத்ராவதியாகவே இருக்கட்டும். அத்துடன்--”

ஒரு கணம் அவன் தயங்கினான். குரல் சற்றே தழைய “அந்தக் களத்தில் உங்கள் ஐங்குலப் படைவீரர் நடுவே நான் சத்ராவதியின் மணிமுடியைக்கொண்டுவந்து உங்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன். அன்று களத்தில் நான் செய்த பெரும்பிழையை அவ்வண்ணம் நிகர் செய்கிறேன். ஆணையிடவேண்டும்”

துருபதன் முகம் கனிந்தது. கைநீட்டி அர்ஜுனன் தொடைகளைத் தொட்டபின்னர்தான் அவருக்குச் சொல்லெழுந்தது. “இளவரசே,அன்று அடைந்த அவமதிப்பின் பெருந்துயரை நான் மறுக்கவில்லை. எத்தனை நாட்கள்... இளவரசே, வஞ்சம் கொண்ட மனிதனுக்கு இன்பங்கள் இல்லை. சுற்றமும் சூழலும் இல்லை. தெய்வங்களும் அவனுடன் இல்லை. நஞ்சு ஒளிவிடும் விழிகள் கொண்ட பாதாளநாகங்கள் மட்டும் அவனைச்சூழ்ந்து நெளிந்துகொண்டிருக்கின்றன” என்றார் முகத்தை கைகளால் வருடி “அனைத்தையும் இழந்தேன். கற்றதையும் உற்றதையும் குலம் வழிப் பெற்றதையும்...”

“என்னுள் எழுந்த பெருவஞ்சத்தால் அனல்வேள்வி செய்து இம்மகளையும் பெற்றேன். ஆனால் ஈற்றறை வாயிலில் காத்திருந்தேன். என் மகளை கொண்டுவந்து எனக்குக் காட்டிய வயற்றாட்டி சொன்னாள் இருகால்களிலும் சங்கும் சக்கரமும் உள்ளன என்று. நான் அதைக் கேட்டு எப்பொருளையும் உள்வாங்கவில்லை. கருந்தழல் என நெளிந்த என் மகளைத்தான் நோக்கிக்கொண்டிருந்தேன். என்னிடம் அவளை நீட்டினர். கைகள் நடுங்க அவளை வாங்கி என் முகத்துடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன்”

“என் பின்னால் நின்ற நிமித்திகர் அவளை வாங்கி கால்களை நோக்கி மெய்சிலிர்க்கக் கூவினார். இதோ பாரதவர்ஷத்திற்குச் சக்கரவர்த்தினி வந்துவிட்டாள் என்று. நான் ஒருகணம் கால் மறந்து தரையில் விழப்போனேன். என்னை கருணர் பற்றிக்கொண்டார். என்னை பீடத்தில் அமரச்செய்தனர். குளிர்கொண்டதுபோல என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சிலிர்த்து சிலிர்த்து துள்ளி அடங்கியது அப்போது ஒன்றை உணர்ந்தேன். பல்லாண்டுக்காலமாக என்னுள் எரிந்துகொண்டிருந்த அனற்குவை மேல் குளிர்நீர் பெய்துவிட்டிருந்தது. ஆம், அனைத்தும் முழுமையாகவே அணைந்துவிட்டன”.

“அந்தப் பேரின்பத்தை நான் சொல்லி நீங்கள் உணரமுடியாது இளவரசே. இன்று நெஞ்சில் கைவைத்து ஒன்றைச் சொல்வேன். நீங்கள் எனக்கிழைத்தது பெரும் நன்மையை மட்டுமே. இல்லையேல் இவளுக்கு நான் தந்தையாகியிருக்கமாட்டேன். நான் அடைந்த வதையெல்லாம் முத்தைக் கருக்கொண்ட சிப்பியின் வலி மட்டுமே. அதற்காக இன்று மகிழ்கிறேன். எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்கிறேன். மாதவம் செய்தவர் அடையும் ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் காலத்தைக் கடந்துவிட்டேன். அவள் பெயருடன் என் பெயரையும் இனி இப்பாரதவர்ஷமே எண்ணிக்கொள்ளும்”

”இத்தனை வருடம் அவளுக்குத் தந்தையென்று மட்டுமே இருந்தேன். பிறிது ஏதுமாக இல்லை. அரசனோ சோமககுலத்தவனோ அல்ல. துருபதன் கூட அல்ல. திரௌபதியின் தந்தை மட்டுமே. அவள் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் முத்தமிட்டு வளர்த்திருக்கிறேன். எத்தனை இரவுகளில் அவளை நெஞ்சிலேற்றி விண்மீன்களை நோக்கி நின்று கண்ணீர் வடித்திருக்கிறேன்... நான் என் மகளின் தந்தை அல்ல சேவகன். ஆம், கொல்வேல் கொற்றவை ஏறியமர்ந்த சிம்மம்”

தன் சொற்பெருக்கை நாணியவர் போல அவர் சிரித்து மேலாடையால் கண்களைத் துடைத்துக்கொண்டார். பெருமூச்சுடன் “சொற்களால் எத்தனை சொன்னாலும் அங்கே செல்ல முடியவில்லை. ஆகவே அணிச்சொற்களை நாடுகிறேன்” என்று புன்னகைத்தபின் “ இளவ்ரசே, என் மகள் என்று என் கைக்கு வந்தாளோ அன்றே என் எண்ணங்கள் மாறிவிட்டன. அவள் செம்பாதங்களை தலைசூடி நான் எண்ணும் ஒரே எண்ணம்தான் இன்று என் அகம். அவள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும். அதைவிட பிறிதொரு இலக்கு எனக்கு இல்லை”

“அவள் சக்கரவர்த்தினியாக ஆகவேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு அவளை மணம்புரிந்தளிக்க எண்ணினேன். உங்களால் மட்டுமே வெல்லப்படும்படியாக கிந்தூரத்தின் உள்ளே கலிங்கச் சிற்பிகளைக்கொண்டு பொறிகளை அமைத்தேன்” துருபதன் சொன்னார். “அவளை கைப்பிடிக்கப்போகிறவர் பாரதவர்ஷத்தில் மூன்று அஸ்வமேதங்களைச் செய்யப்போகும் மாபெரும் வில்வீரர் என்றனர் நிமித்திகர்.அது நீங்கள் என்று நான் கணித்து அறிந்தேன்”

திரும்பி தருமனை நோக்கி கைகாட்டி துருபதன் சொன்னார் “இது முற்றிலும் உங்கள் குடிக்குள் நிகழ்வது. முடிவெடுக்கவேண்டியவர் உங்கள் மூத்தவர்” என்றார் “அவரது முடிவில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது இளவரசே”

அர்ஜுனன் “ஆம் அரசே, அவரது படைக்கலங்களே நாங்கள்” என்றான். “இளவரசே, ஐங்குலங்களுக்கும் ஆணையிடும் வல்லமை எனக்கில்லை. ஆனால் இது அன்னையர் பூமி. திரௌபதி ஆணையிட்டால் அவர்கள் மீறமாட்டார்கள். நீங்கள் படைநடத்தலாம். திரௌபதி என் சொல்லை ஏற்பாள். ஆனால் நான் தங்கள் மூத்தவரின் ஆணையை மட்டுமே ஏற்பேன். அவரது அறச்சொல் தென்றிசை ஆளும் இறப்பிற்கரசின் சொல்லுக்கு நிகரானது” என்றார் துருபதன்

அர்ஜுனன் தருமனை நோக்கியபடி காத்திருந்தான். தருமன் ”இளையோனே, அன்னை விழைவது ஒரு செய்தியை மட்டுமே. விதுரர் இங்கிருந்து செல்வதற்குள் அதை அனுப்பிவிட எண்ணுகிறார்” என்றான் .“சத்ராவதி இன்று அஸ்தினபுரத்தின் துணைநாடு. அதை நாம் வென்று நம் தேவி முடிசூடுவது அஸ்தினபுரிக்கு எதிரான படைநீக்கம் மட்டுமே. அன்னை அதையே திருதராஷ்டிர மாமன்னருக்கு அறிவிக்க எண்ணுகிறார்”

“ஆம்” என்றான் அர்ஜுனன். “அது ஒருபோதும் நிகழாது பார்த்தா. எந்நிலையிலும் நாம் எவரும் நம் பெரியதந்தைக்கு எதிராக எழப்போவதில்லை. மூதாதையருக்கு எதிராக பாண்டவரின் வில்லோ சொல்லோ எழாது” சிலகணங்கள் அவன் நாற்களக் காய்களையே நோக்கியபடி இருந்தபின் “தந்தையா தாயா என்ற வினா உச்சப்படும் என்றால் நான் தந்தையையே தேர்ந்தெடுப்பேன்” என்றான்

அர்ஜுனன் சகதேவனை நினைத்துக்கொண்டான். பெருமூச்சுடன் எழுந்து “நான் இதை இளவரசியிடம் சொல்லவேண்டும் என அன்னை கோரினாள். பெண்ணிடம் அரசு சூழதலைப் பேச என் அகம் ஒப்பாது. எனவே அரசரிடமே பேசிவிடலாமென்று வந்தேன்” என்றான். “அது நன்று. நேராகச் செல்லும் அம்புதான் விசைமிக்கது” என்றான் தருமன். ”நான் சகதேவனிடம் சொல்லி அன்னையை அறிவிக்கிறேன் இளையோனே ” என்றபின் துருபதனிடம் நாற்களத்தைச் சுட்டி புன்னகை செய்து “உங்கள் முறை, பாஞ்சாலரே” என்றான்

பகுதி 4 : தழல்நடனம் - 2

சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து துயிலின்றி எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்து மீண்டும் படுத்து விடியற்காலையில்தான் கண்ணயர்ந்தான். துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் எண்ணங்களுடன் அன்றாடச்செயல்களுடன் அத்தனை உரையாடல்களுடன் அந்தச்சினமும் உடனிருந்தது.

ஆனால் ஆடியை நோக்காமலிருக்கவும் முடியவில்லை. அது அவனருகே அவனுக்கு நிகரான ஒருவனை படைத்து நிறுத்தியிருந்தது. அவனை உற்றுநோக்கிக்கொண்டிருப்பவன். துயிலற்றவன். அதன் ஓசையின்மையைப்போல குரூரமானது ஏதுமில்லை என்று தோன்றியது. அதனுள் கிளைகள் ஓசையின்றி காற்றிலாடின. காகம் ஓசையின்றி கரைந்த பின் எழுந்து சிறகடித்து அதன் ஒளிமிக்க ஆழத்திற்குள் சென்று மறைந்தது. அது தனக்குள் ஒரு வான்வெளியை கொண்டிருந்தது.

குழலை மீண்டும் நீவி தோளில் அமைத்தபின் சால்வையை சரிசெய்தபடி அர்ஜுனன் வெளியேவந்தான். சிசிரன் “சூதர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். அப்போதுதான் சகதேவன் சொன்னதை அர்ஜுனன் நினைவுகூர்ந்தான். தனக்கென அவன் தெரிவுசெய்த கதை எதுவாக இருக்கும்? அவன் தலையை அசைத்துக்கொண்டான். அவனுக்கு சகதேவன் எப்போதுமே பெரும் புதிர். அவன் தேவைக்குமேல் பேசுவதில்லை. எப்போதும் நகுலனின் வெண்ணிறநிழல் போல உடனிருப்பான். “நிழலை உருவம் தொடர்வதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று திரௌபதி அவனை ஒருமுறை கேலிசெய்தாள். அவனுக்கென்று விருப்போ செயல்களோ இல்லை என்பதுபோல நகுலனுடன் இருந்தான்.

ஆனால் அவன் முற்றிலும் வேறானவன். நகுலனின் உள்ளம் குதிரைகளுடன் வாழ்வது. விரிவெளியில் வால்சுழற்றிச்செல்வது. சரிவுகளில் பாய்ந்திறங்குவது. விழித்துத் துயில்வது. சகதேவனிடம் எப்போதுமே சோழிகள் இருக்குமென்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். தனிமையில் அவற்றை கோடுகள் மேல் பரப்பி விழியூன்றி அமர்ந்திருப்பவனுக்கு பலநூறாண்டுகால வயது ஆகியிருக்குமென்று தோன்றும். அவனறியாத ஏதுமில்லை. அவன் முன்னரே அறிந்ததை மீண்டும் நடிக்கும் எளிய நடிகர்களுக்கு நடுவே சற்றே சலிப்புடன் அவன் நோக்கியிருக்கிறான்.

இசைக்கூடத்தில் மூன்று சூதர்கள் இளஞ்செந்நிறப் பட்டாடை அணிந்து செந்நிறத் தலைப்பாகையுடன் அமர்ந்திருந்தனர். பெரிய பதக்கமாலை அணிந்திருந்த நடுவயதான சூதர் அவனைநோக்கி வரவேற்கும்முகமாக தலையசைத்தார். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டதும், சிசிரன் தலைவணங்கி வெளியேறினான். சூதர் அவனை நோக்கி தொடங்கலாமா என்று விழிகளால் கேட்க அவன் கையசைத்தான். அவர் திரும்பி முழவேந்தியை நோக்க அவன் விரல் தொட்ட குறுமுழவு தண்ண்ண் என்றது. யாழ் ஆம்ம்ம்ம்ம் என்று இணைந்துகொண்டது. 'ம்ம்ம்ம்' என அதனுடன் குரலை இணைத்து சுதிகொண்ட சூதர் வாழ்த்துரைகளை தொடங்கினார்.

“தத்தகி தத்தகி தகதிமி திருநடனம். தித்திமி தித்திமி திமிதிமி பெருநடனம்! வெற்புகள் உடைபட இடியெழுக! அனலெழு பொற்பதம் தொட்டிடும் முடியுருக!" என்று சூதர் பெருங்குரலில் தொடங்கினார். வெடிப்புறு தாளத்துடன் முழவு இணைந்துகொள்ள யாழில் துடிதாளம் எழுந்தது. கயிலை மலைமுடியின் வெண்பனிக்குவைகள் அண்ணலின் கால்கனலில் உருகி வழிந்து பேரலையாக இறங்கின. இடியோசையென எழுந்த தாளம் முகில்களை நடுங்கச்செய்தது. மின்னலெனும் தந்தங்களைக் கோர்த்து போரிட்டுப் பிளிறின வெண்முகில் மதகரிகள்.

பின்பு பெருங்கருணை மழையெனப்பொழிந்து மண்குளிர்ந்தது. விண்ணில் பெருகியோடின பொன்னிறமான வான்நதிகள். ஒலிகள் எழுந்து ஒன்றோடொன்று இணைந்து ஒன்றென்றாகி ஓங்காரமென ஒலித்து அமைதியில் அடங்கின. கயிலை முடி மீண்டும் குளிர்ந்தது. வெண்பனிசூடி இமயமலைமுடிகள் தங்கள் ஊழியமைதிக்குள் மீண்டும் சென்றமைந்தன. தன்னுள் தானடங்கி விழிமூடி ஊழ்கத்திலமர்ந்தான் முக்கண்ணன்.

விழிகாணாததை அவன் நுதல்கண்டுகொண்டிருந்தது. அவன் பின்னால் மெல்லடி வைத்து இளநகையுடன் இடையொசிய முலைததும்ப வந்தாள் சிவகாமி. அவனருகே குனிந்து அவன் விழிகளை ஒருகையாலும் நுதல்விழியை மறுகையாலும் மூடிக்கொண்டாள். அவள் மென்முலை தொட்ட இன்பத்தில் ஒருகணம் அப்பனும் தன்னை மறந்தான். மூவிழியும் மூடியபோது விசும்பெங்கும் ஒரு கன்னங்காரிருள் கவிந்தது. மறுகணம் அவன் அவள் கைகளைப்பற்றி இழுத்து மடியிலிட்டு முகம் நோக்கி புன்னகைசெய்தபோது பேரொளி கொண்டு ககனம் பொன்வெளியாகியது.

அந்த இருள்கணம் திரண்டு ஒரு மைந்தனாகியது. இருண்ட பாதாளத்தின் மடிப்பொன்றில் கண்களேயற்ற கரிய குழந்தையென பிறந்து கால்களை உதைத்து பாலுக்கு அழுதது. அழுகையொலி கேட்டு முலைநெகிழ்ந்தாள் அன்னை. குனிந்து தன் ஒளிக்கரங்களால் அவனை அள்ளி எடுத்துக்கொண்டாள். முலைக்கச்சை நெகிழ்த்து கருமொட்டை அவன் இதழ்களில் வைத்தாள். நெற்றிப்பொட்டின் ஆயிரமிதழ்த்தாமரை அறியும் விண்ணொளியால் அவளைப்பார்த்து கைவீசி குதித்து கவ்வி அமுதுண்டான். வயிறு நிறைந்து வாய்வழிய சிரித்தான்.

விழியற்றிருந்த கரியபேரழகனை அந்தகன் என்று அழைத்தாள் அன்னை. தன் செவ்விதழ்களைக் குவித்து அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். அன்னையின் மென்முலைமேல் முகம் வைத்து விழியுறங்கியது மகவு. “இன்னுமொரு மைந்தனைப் பெற நன்றுசெய்தேன்” என்றாள் அன்னை. “மண்ணில் இக்கணம் என்னை நோக்கி கோருபவருக்கு இவன் மைந்தனாகட்டும்” என்றார் அச்சன்.

அப்போது ஹிரண்மயம் என்னும் அசுரநகரை ஆண்ட ஹிரண்யகசிபுவின் இளவல் ஹிரண்யாக்ஷன் தன் நகரின் உச்சிமாடம் ஒன்றில் புத்திரகாமேஷ்டி வேள்வி செய்துகொண்டிருந்தான். நூறு அஸ்வமேத வேள்விகளாலும், அந்நூறு வேள்விகளின் செல்வத்தைக்கொண்டு செய்யப்பட்ட விஸ்வஜித் வேள்வியாலும் அந்நகரை மண்ணிலிருந்து மேலெழச்செய்தார்கள் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும். விண்ணில் முகில்களுடன் மிதந்தலைந்த அந்நகரின் அசுரர்கள் புகைச்சுருள்களென பறக்கும் வல்லமை கொண்டிருந்தனர்.

வேள்வி முடித்து ஹிரண்யாக்ஷன் கைநீட்டிய கணம் முக்கண்ணன் தன் சொல்லை சொன்னான். வேள்வியின் கரிக்கனலில் கிடந்த அந்தகன் கைகால் உதைத்து அழுதான். கண்ணீருடன் ஓடிச்சென்று மைந்தனை எடுத்து மார்போடணைத்துக்கொண்டான் ஹிரண்யாக்ஷன். “இவனுக்கு விழியில்லை என்று வருந்தாதே. இவன் நீங்கள் காணாதவற்றையும் காண்பவனாவன்” என்றது அனலில் எழுந்த இடிக்குரல்.

அந்தகன் மழையில் கரைந்தழிந்த சிற்பமெனத் தோன்றிய தன் விழியற்ற முகத்தில் கண்களிருக்கும் இடத்தில் இரண்டு நீலவைரங்களை கருவிழிகளாகப் பதித்துச் செய்யப்பட்ட பொய்க்கண்களை பொருத்திக்கொண்டான். அவன் விழிகள் தன்னைச் சூழ இருந்த அனைத்துக்கும் அப்பால் நோக்கிக்கொண்டிருப்பவை போலிருந்தன. அவனுடைய வைரவிழிகளை நோக்கி நின்று பேச அவன் தந்தையும் அஞ்சினார்.

ஊர்ந்து செல்லும் எறும்பையும் ஒலியால் அறியக்கூடியவனாக அவன் இருந்தான். பறந்துசெல்லும் பறவையின் ஒற்றை இறகை மட்டும் அம்பால் சீவி எடுக்கும் வல்லமை கொண்ட மாபெரும் வில்லாளியாக ஆனான். எண்ணம் சென்று தொடுவதற்குள் அந்தகனின் அம்புசென்று தைத்துவிடும் என்று அசுரர்களின் கவிஞர்கள் பாடினர். அன்னையை தந்தையை நட்பை சுற்றத்தை அவர்களின் ஓசைகளாலும் மணத்தாலும் தொடுகையாலும் அவன் பார்த்தான். அவர்களின் உள்ளங்களை தன் வைரவிழிகளால் நோக்கி அறிந்தான்.

அந்தகனுக்கு இளமை நிறைந்தபோது ஹிரண்யாக்ஷன் மணமகளைத் தேட அசுரநாடுகளெங்கும் தூதனுப்பினான். அச்செய்தியை அறிந்த அந்தகன் தந்தையை அணுகி தன்னுள் ஒரு பெண்ணின் உளச்சித்திரம் உள்ளது, அதுவன்றி எப்பெண்ணுருவும் தன் அகம் நிறைக்காது என்றான். "எங்கே எப்போது என்னுள் நிறைந்ததென்று அறியேன். நான் என என்னை உணர்ந்தபோதே என்னுள் உள்ளது இது. இவளே என் பெண்.”

”அவளை காட்டு எனக்கு. எங்கிருந்தாலும் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றான் ஹிரண்யாக்ஷன். நூறு சூதர்கள் அந்தகனின் அவையில் வலப்பக்கம் அமர்ந்தனர். நூறு ஓவியர் இடப்பக்கம் அமர்ந்தனர். நூறு நிமித்திகர் எதிரில் அமர்ந்தனர். அந்தகன் தன் நெஞ்சிலுள்ள சித்திரத்தை சொல்லச் சொல்ல சொல்லிலும் வண்ணங்களிலும் முத்திரைகளிலும் அவளை தீட்டி எடுத்தனர்.

அவர்களின் சித்திரங்களை எல்லாம் ஒன்றாக்கி எடுத்தபோது வந்த பெண்ணுருவம் விண்ணொளிகொண்டிருந்தது. பெருங்கருணையும் கொடுஞ்சினமும் ஒன்றாய்க்கலந்த விழிகளுடன் ஒவ்வொரு உறுப்பிலும் முழுமை நிகழ்ந்த உடலுடன் நின்றிருந்தது. “யாரிவள், தேடுங்கள்” என்று ஹிரண்யாக்ஷன் ஆணையிட்டான். மூவுலகங்களிலும் தேடிய தூதர் அந்தச் சித்திரத்தின் கால்கட்டைவிரல் நகத்தளவுக்கு எழில்கொண்டவளாகக் கூட பெண்டிர் எவருமில்லை என்றனர்.

செய்தியறிந்து அந்தகனின் தமையனான பிரஹலாதன் தேடிவந்தான். அந்த ஓவியத்தைக் கண்டதுமே கண்ணீருடன் கைகூப்பி “என் விழிகள் இதற்கென்றே முகத்தில் மலர்ந்தன போலும். இதோ இவ்விசும்பை புரக்கும் பேரன்னையை கண்டேன். வெறும்வெளியை ஆடையாக்கி காலத்தை இடையணியாக்கி பேரொளியை மணிமுடியாக்கி அமர்ந்திருக்கும் ஆற்றல்முதல்வியை கண்டேன்” என்றான். அவனருகே வந்த அந்தகன் “யார் அவள்?” என்றான். “இவளே அன்னை சிவகாமி. ஆடவல்லான் கொண்ட துணையான உமை” என்றான் பிரஹலாதன்.

”அவ்வண்ணமென்றால் உடனே கிளம்பட்டும் நமது படைகள். கயிலையை வென்று அவளை இக்கணமே கவர்ந்து இங்கே கொண்டுவரட்டும்” என்று அந்தகன் ஆணையிட்டான். அசுரர் படைத்தலைவன் சம்பாசுரன் நடத்திய ஆயிரத்தெட்டு அக்ரோணி படைகள் விண்ணிலேறி கயிலையை சூழ்ந்துகொண்டன. தன்னுடைய எட்டு பெருஞ்சிறைகளை வீசி இடிப்புயலென ஒலியெழுப்பி கயிலையை சூழ்ந்தான் சம்பன். அசுரப்படைகள் பூதகணங்களால் கொல்லப்பட்டன. சிவன் தன் சூலாயுதத்தால் குத்தி அவனைக் கொன்று விண்ணிருளில் வீசினார்.

படைத்தலைவனின் இறப்பை அறிந்த அந்தகன் விண்பிளக்கும் இடியோசையுடன் சுஃப்ரு என்னும் வில்லையும் முடிவிலாது அம்புகள் ஊறும் குரோதாக்ஷம் என்னும் அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டு முகில்கள் மேல் பாய்ந்து பாய்ந்து விண்ணிலேறி கயிலை முடியை அடைந்தான். அவன் வருகையைக் கண்ட பூதகணங்கள் எழுந்து பேரொலி எழுப்பி தாக்கவந்தன. அவன் சிவமைந்தன் என்பதனால் அவற்றால் அவனை தடுக்கமுடியவில்லை. அவனுடைய குறிபிழைக்காத அம்புகள் கொண்டு அவர்கள் உதிர்ந்து விண்ணை நிறைத்துப்பரவினர்.

கயிலையின் பனியாலான பெருவாயிலை உடைத்துத் திறந்து அறைகூவியபடி உள்ளே சென்றான் அந்தகன். “என்னை எதிர்ப்பவர் எவரேனும் உளரென்றால் வருக. என் உளம்கவர்ந்த பெண்ணை கவராது இங்கிருந்து செல்லமாட்டேன்!" என்று கூச்சலிட்டான். மைந்தனுக்கு முன் நீறணிந்த செம்மேனியும் மான்மழுவேந்திய கரங்களுமாக சிவன் தோன்றினார். “மைந்தா, உன்னுடன் போரிடுவது எனக்கு உகந்தது அல்ல. நாம் நாற்களம் ஆடுவோம். அதில் நீ வென்றாயென்றால் அவளை கொள்க” என்றார்.

”ஆம், அதற்கும் நான் சித்தமே” என்று அந்தகன் அமர்ந்துகொண்டான். பனியில் களம் வரைந்து பூதகணங்களை சிறுகாய்களாக ஆக்கிப்பரப்பி அவர்கள் ஆடத்தொடங்கினர். தங்கள் குலத்தையும் உறவுகளையும் காய்களாக்கி அவர்கள் ஆடிய அந்த விளையாட்டு காலம் மலைத்து விலகி நின்றிருக்க முடிவில்லாமல் தொடர்ந்தது. பின் அந்தகன் அசைவற்று சிலைத்திருக்க அவன் கனவில் அந்த ஆடல் நீடித்தது.

தன் தந்தை என்று ஹிரண்யாக்ஷனை முன்வைத்த ஒவ்வொரு முறையும் தன் காய் நிலைக்காததை கண்டான் அந்தகன். புன்னகையுடன் அவனை தன் மைந்தன் என்று காயை வைத்த சிவன் அவனுடைய காவல்களை எல்லாம் உடைத்தார். நிமிர்ந்து அவர் முகத்தை நோக்கியதுமே அவரை அறிந்துகொண்ட அந்தகன் தந்தையே என்றான். தன் துணைவியாக பார்வதியை வைத்தார் சிவன். அனல்கொண்டது போல துடித்து எழுந்த அந்தகன் தன் தந்தையருகே புன்னகையுடன் நின்றிருந்த தாயை கண்டுகொண்டான்.

குனிந்து அவள் காலடியில் விழுந்து பொற்பாதங்களை முத்தமிட்டு விழிநீர் சிந்தி அழுதான். “அன்னையே அன்னையே” என்று கூவி ஏங்கினான். அவனை அள்ளி எடுத்து தன் முலைகளுடன் சேர்த்துக்கொண்டு “மைந்தா” என்றாள் அன்னை. “நீ பிழையேதும் செய்யவில்லை. உனக்கு நான் அளித்த தாய்ப்பால் போதவில்லை” என்றாள். அவள் முலைகளை அவன் விழிநீர் நனைத்தது.

தந்தையும் தாயும் அமர்ந்திருக்க அவர்கள் காலடியில் அமர்ந்து அவர்கள் அருளிய இன்சொல் கேட்டான் அந்தகன். “இங்கே உங்கள் உலகில் இனிது வாழ எனக்கு அருளவேண்டும்” என்று கோரினான். “நீ விழைந்தவை எல்லாம் அங்கே மண்ணில் உள்ளன. மானுடர் மறைந்தாலும் அவ்விழைவுகள் அழிவதில்லை. திரும்பிச்சென்று அவற்றை கைக்கொள். வாழ்ந்து நிறைந்து திரும்பி வருக” என்றார் சிவன்.

”நீ விழைந்தவை வண்ணங்களை அல்லவா? ஆகவே மண்ணில் ஒரு வண்டெனப்பிறப்பாய். நூறாண்டுகாலம் மலர்களை நோக்கி நோக்கி வாழ்வாய். பின் பிருங்கி எனும் அசுரனாகப் பிறந்து காமகுரோதமோகங்களை அடைவாய். நிறைந்து உதிர்ந்து இங்கு மீள்வாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் சிவன். அந்தகனின் உடல் ஒளிபட்ட கருநிழல் என கரைந்தது. அவன் விழிகளாக இருந்த வைரங்கள் இணைந்து ஒரு தேன்வண்டாக மாறின. யாழிசைமீட்டி அவன் மண்ணுக்கிறங்கினான்.

”முடிவற்ற மலர்வண்ணங்களாகி நிற்பவள். எல்லையற்ற தேன் என இனிப்பவள். இப்புவியின் அன்புச்சொற்களெல்லாம் அவளுக்குரிய வாழ்த்துக்கள். இங்குள்ள முத்தங்கள் எல்லாம் அவள் முன் விழும் செம்மலர்கள். இங்கு நிகழும் தழுவல்களெல்லாம் அவள் காலடி வணக்கங்கள். என்றும் அழகியவள். குன்றா இளமைகொண்டவள். அன்னையெனும் கன்னி. அவள் வாழ்க! ஓம்! ஓம்! ஓம்!” என்று சூதர் பாடி முடித்தார்.

அர்ஜுனன் சற்றே திகைத்தவன் போல கேட்டுக்கொண்டிருந்தான். பாடல் முடிந்ததும் அவன் ஏதேனும் சொல்வான் என்பதுபோல அவர் நோக்கி அமர்ந்திருந்தார். அர்ஜுனன் சற்று அசைந்த ஒலியே ஒரு சொல்லென ஒலிக்க அவர்கள் செவிகூர்ந்தனர். அவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்து ”சிறந்த பாடல். முழுமைகூடிய நல்லிசை. நன்று சூதரே” என்றான். சிசிரன் வந்து நிற்க அவன் கொண்டுவந்த பரிசில்தாலத்தை வாங்கி சூதருக்கு அளித்தான். அவர் அதை பெற்றுக்கொண்டு வணங்கினார்.

அர்ஜுனன் தன் சால்வையை சீரமைத்தபடி “இப்பாடலை என் இளவலா சொன்னான்?” என்றான். சூதர் “ஆம், நாங்கள் சொல்லவிருந்தது ஊர்வசியின் கதையைத்தான்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இளவரசியின் தோழி ஸ்வாஹாதேவியின் கதையை சொல்லும்படி சொன்னார்கள்...” என்றார் சூதர். “அவற்றை அடுத்துவரும் நாட்களில் சொல்கிறோம்.” அர்ஜுனன் தலையசைத்து “நன்று” என்றபின் வணங்கினான். அவர்கள் செல்வதை சிலகணங்கள் நோக்கியபின் மேலே சென்று உப்பரிகையில் அமர்ந்துகொண்டான்.

மாலைவெயிலில் மஞ்சள்நிறம் கலந்துகொண்டிருந்தது. இலைத்தகடுகளும் அலைவளைவுகளும் கண்கூச மின்னின. ஒருகணத்தில் மண்ணிலுள்ள அத்தனைபொருட்களிலும் விழிகள் திறந்துகொண்டதைப்போல தோன்றியது. நிலைகொள்ளாமல் எழுந்து சென்று தூணைப்பற்றியபடி நின்றான். உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்று பின்னர் இடமுணர்ந்து திரும்பியபோது நினைவு எழுந்தது. மாயை சொன்ன கதை.

அவன் திரும்பி படிகளை நோக்கி நடந்த ஒலியே சிசிரனை வரவழைத்தது. “இளவரசியின் தோழி மாயையிடம் ஒரு தூதனை அனுப்புக! அவள் என்னிடம் சொல்லச்சொன்ன கதை என்ன என்று அறிய விழைகிறேன்” என்றான். சிசிரன் தலைவணங்கினான். திரும்பும்போது அர்ஜுனன் “செல்வது இருபாலினராக இருக்கட்டும்” என்றான். ”ஆம், இங்கே சமையர் கலுஷை இருக்கிறாள்... அவளை அனுப்புகிறேன்” என்றான் சிசிரன்.

மாயையின் முகத்தை நினைவில் மீட்டியபடி அமர்ந்திருந்தான். அலையடிக்கும் நீரின் படிமம் என கலைந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சலிப்புடன் நீர்ப்பரப்பை கையால் அடித்து அனைத்தையும் கலைத்தபின் எழுந்துகொண்டான். உடலில் மீண்டும் அந்தச் சினம் ஊறி நரம்புகள் வழியாக அமிலமென பரவியது. பற்களை இறுகக் கடித்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கழுத்துநரம்புகள் இறுகி இருந்தன.

மூச்சை இழுத்துவிட்டு தன்னை எளிதாக்கிக்கொண்டான். மீண்டும் கங்கையை நோக்கினான். நீர்ப்பரப்பு மேலும் கருமைகொண்டிருந்தது. உள்ளே மையநீர்வழியில் வணிகப்படகுகளின் பெரிய நிரை ஒன்று பாய்விரித்து கொக்குக்கூட்டம் போல சென்றது. ஒன்றிலிருந்து சிந்திய முழவின் ஒலி காற்றில் வந்து விழுந்தது. பறவைகள் கலைந்த குரல்களுடன் கூடணையத் தொடங்கிவிட்டிருந்தன. உப்பரிகை அருகே இருந்த மரமொன்றில் அமர்ந்திருந்த ஒரு காகம் உடலை எக்கி எக்கி குரலெழுப்பிக்கொண்டே இருந்தபின் சினத்துடன் எழுந்து பறந்தது.

ஓசையின்றி ஒரு படகு மரங்களினூடாக வருவதை அவன் கண்டான். மிகச்சிறிய அணிப்படகு. அதன் மேல் பாஞ்சாலத்தின் கொடி துடித்துக்கொண்டிருந்தது. கரிய உடலுடன் குகன் அதை துழாவிச்செலுத்த கரைதேடும் முதலை என நீர் நலுங்காமல் அது படித்துறையை நோக்கிவந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பனைமரவோலை தட்டிகளால் ஆன அதன் சிறிய அறையின் வண்ணத்திரைச்சீலையை விலக்கி முழுதணிக்கோலத்தில் திரௌபதி வெளியே வந்து இடையில் ஒரு கையை வைத்து ஒசிந்து நின்றாள்.

படகின் அமரம் வந்து துறைமேடையைத் தொட்டது. குகன் பாய்ந்திறங்கி வடம் சுற்றியதும் அதன் உடல் வந்து உரசி நின்றது. நடைப்பலகையை நீட்டி வைத்த சேவகன் திரும்பி உள்ளிருந்து வந்த சிசிரனை நோக்கினான். இறங்கும்போதுதான் அவள் மாயை என்பதை அர்ஜுனன் கண்டான். புன்னகையுடன் கைப்பிடி மரத்தைப்பற்றியபடி குனிந்து நோக்கினான்.

மாயை இளநீலப்பட்டாடை நெளிய உடலெங்கும் அணிந்த அணிகள் மின்னி அலுங்க படிகளில் ஏறி மறைந்தாள். சிலகணங்களுக்குப்பின் அர்ஜுனன் புன்னகையுடன் திரும்பிச்சென்று உப்பரிகையில் போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டான். சிசிரன் வந்து வணங்கி “பெருந்தோழி மாயை” என்றான். வரச்சொல் என அர்ஜுனன் கைகாட்ட அவன் பின்னால் சென்றான். மாயை வாயிலின் வழியாக வந்து ஒருகையை தூக்கி நிலையைப் பற்றியபடி நின்றாள்.

அர்ஜுனன் அவளை சிலகணங்கள் நோக்கியபின் வருக என கைகாட்டினான். அவள் அணிகள் சிலம்ப ஆடை நலுங்க அருகே வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு தன் ஆடையை கையால் நீவி அதன் அடுக்குகளை சீரமைத்தாள். தோள்களை சற்றே உலுக்கி உலைந்த முலையணிகளை சீரமைத்துக் கொண்டு நீண்ட குழலை அள்ளி பக்கவாட்டில் பீடத்தின் கைப்பிடிமேல் அள்ளி ஊற்றுவதுபோல அமைத்தாள்.

“இளவரசருக்கு வணக்கம்” என்று அவள் அவன் விழிகளை நோக்கி சொன்னாள். அவன் புன்னகையுடன் “நீ வருவதைக் கண்டேன். திரௌபதியே வருவதாக எண்ணினேன்” என்றான். “அவர்கள் இத்தனை ஓசையின்றி வருவார்களா என்ன?” என மாயை புன்னகைசெய்தாள். “நான் நிழல்... ஆகவே ஓசையின்றி வந்தேன்.” அர்ஜுனன் ”உன்னில் அவள் இருக்கிறாள். தன்னை விதவிதமாகக் கலைத்து உனக்குள் மறைத்துக்கொண்டிருக்கிறாள்” என்றான்.

மாயை ஆடையும் அணியும் இளக மெல்ல உடலசைத்துச் சிரித்து “ஆம், என்னை அவிழ்த்து அவர்களை செய்துவிடலாமென்று கலிங்கத்து அணிச்சிற்பி ஒருமுறை சொன்னார்” என்றாள். அர்ஜுனன் அவளை கூர்ந்து நோக்கி “எதுவும் எஞ்சியிராதா?” என்றான். மாயை “எஞ்சாது” என்றபின் மேலுதட்டை இழுத்து பற்களால் கவ்வியபடி மீண்டும் சிரித்தாள்.

அவள் உடலெங்கும் வெளிப்பட்டதை அர்ஜுனன் நோக்கிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு உறுப்பும் உடலெனும் தொகுதியை உதறி தனித்து எழமுயல்பவை போலிருந்தது. அவன் நோக்கைக் கண்டு அவள் நாணி விழி விலக்கியபோது அவள் உடல் முன்னெழுந்தது. பின் அவள் திரும்பி அவனை நோக்கி “பெண்பித்தனின் பார்வை” என்றாள். “ஏன் நீ அதை விரும்பவில்லையா?” என்றான் அர்ஜுனன். “அதை விரும்பாத பெண் உண்டா?” என அவள் சிரித்து தன் குழலை நீவி ஒதுக்கினாள். கைகள் கன்னத்தைத் தொட்டு கழுத்தை வருடி முலைமேல் பட்டு மடியில் அமைந்தன. “நீங்கள் இந்திரனின் மைந்தர் என்கிறார்கள் சூதர்கள்.”

“ஆம், அதை நான் உறுதியாகச் சொல்வேன்” என்றான் அர்ஜுனன். “அத்தனை பெண்களும் அதை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.” அவள் சிறிய பறவையின் ஒலி போல சிரித்து விழிகளை தாழ்த்திக்கொண்டாள். தோளிலும் கழுத்திலும் கரிய மென்தோலில் புளகத்தின் புள்ளிகளை காணமுடிந்தது. ஊசிமுனையில் ஆடிய கணம். அதை நீடிக்கவேண்டுமென்றால் கலைப்பதொன்றே வழி.

“நீ ஒரு கதையை சொல்லி அனுப்பியதாக சூதர் சொன்னார்." ”ஆம்” என்றாள் அவள். “பராசரரின் புராணசம்ஹிதையில் உள்ள கதை. அக்னி ஸ்வாஹாதேவியை மணந்தது.” அர்ஜுனன் சால்வையை எடுத்து மடிமேல் சுழற்றி வைத்து சாய்ந்துகொண்டு “சொல்” என்றான். அவள் விழிகளை பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு “என்னால் பாட முடியாதே” என்றாள். “சொன்னாலே போதும்” என்றான். அவள் உதடுகளை இறுக்கி சற்றுநேரம் அமர்ந்திருந்து 'ம்ம்' என முனகியபின் சொல்லத் தொடங்கினாள்.

பிரம்மனின் காமமே அக்னிதேவன் என்கின்றன நூல்கள். மாளாப் பெருங்காமத்தின் அனலே அக்னி. ஆயிரம் நாக்குகளால் ஆன ஒளி. தொட்டுத்தொட்டுத்தாவும் துடிப்பு. உச்சம் கொண்டு அந்தரத்தில் எழுந்து நிற்கும் விசை. அணைந்து புகைந்து கருகி மறைகையிலும் எங்கோ தன் பொறியை விட்டுச்செல்பவன். குளிர்ந்திருக்கும் அனைத்திலும் உள்நின்று எரிபவன். அமைந்திருக்கும் அனைத்திற்குள்ளும் தழலாடும் தனியன்.

ஏழுமுனிவரும் பங்குகொண்ட பெருவேள்வி ஒன்றில் மூன்று எரிகுளங்களிலாக எழுந்து பொன்னொளியுடன் நின்றாடினான் எரியிறை. அக்னியின் முன் அத்தனை பெண்களும் அழகிகளாகிறார்கள். அங்கிரஸின் அறத்துணைவி சிவை பேரழகியாக சுடர்ந்தாள். அவளை நோக்கி நா நீட்டி தவித்தாடியது நெருப்பு. அதன் நடனத்தை எதிரொளித்து தழலாடியது அவள் உடலின் மென்மை.

எரிந்து எரிந்தமைந்தது எரியிறையின் காமம். அதில் தெறித்த பொறி பறந்துசென்று அருகே ஒரு காய்ந்த மரத்தை பற்றிக்கொண்டு வானோக்கி இதழ் விரித்து பெருமலராகியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றி எரிந்துகொண்டே இருந்தான் அக்னிதேவன். அவன் காமத்தில் அவியாகி அழிந்தது காய்ந்து நின்றிருந்த மலைச்சரிவின் காடு.

அக்னிமேல் காதல்கொண்டிருந்தாள் தட்சனின் மகளாகிய ஸ்வாஹாதேவி. ஒளிரும் செவ்விழிகளும் ஏழு செந்நிற நாக்குகளும் கொண்ட நாகவடிவம் அவள். நெளியும் செந்நாகம் என அவள் அனலோனை எண்ணினாள். அவனைத் தழுவி தன்னை நிறைக்க விழைந்தாள். அவன் காமம் கொண்டு எரிந்து நின்ற காட்டை அணுகி சிவையென தன்னை உருமாற்றிக்கொண்டாள்.

அக்னிதேவனை அணுகி “தேவ, தங்கள் ஒளியால் நான் உருகும் பொற்சிலையானேன். உங்கள் விழைவு என்னிலும் எரிகிறது. என்னை ஏற்றருள்க!” என்றாள். உவகைகொண்டு குதித்தாடிய எரியோன் இரு தழல்கரங்களை நீட்டி அவளை அள்ளி தன்னுள் எடுத்துக்கொண்டான். அக்கணமே அவனறிந்தான் அவள் சிவை அல்ல என்று. ஆனால் ஸ்வாகையின் பெருங்காமத்தின் அனல் அவனை எரித்து தன்னுள் அடக்கிக்கொண்டது. ஸ்வாகை கனலோனின் அறத்துணைவியாக ஆனாள்.”

அவள் கதையை சொல்லிவிட்டு தலைசரித்து விழிகளைச் சாய்த்து அசையாமல் அமர்ந்திருந்தாள். உள்ளிருந்து பறவைக்குஞ்சால் கொத்தப்படும் முட்டையைப்போலிருந்தது அவள் உடல். அர்ஜுனன் அவளை நோக்கிய விழிகளாக இருந்தான். சிறிய உளஅசைவுடன் அப்பாலிருந்த அவள் நிழலை நோக்கினான். அது திரௌபதி வந்து நின்றிருக்கிறாள் என்று எண்ணச் செய்தது. மீண்டும் விழிகளைத் திருப்பி அவளை நோக்கினான்.

அவன் விழியசைவே அவளை கலைக்க போதுமானதாக இருந்தது. நிழல்பட்டு நீருள் மறையும் மீன்குலம் என அவளில் எழுந்தவை எல்லாம் உள்ளடங்கின. அவள் கை அசைந்து குழலை நீவி கழுத்தைத் தொட்டு கீழிறங்கியது. மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அர்ஜுனன் “உன் நிழல்” என்றான். அவள் “மாயையின் நிழல்” என்று புன்னகைத்தாள். அவன் உள்ளம் மற்போரில் உச்சகட்டப்பிடியில் திமிறி நெளியும் உடல் என அசைந்தது. அடிபட்ட தசையின் துடிப்பு என ஒன்று அவளில் நிகழ்ந்தது.

அவள் உதடுகள் மெல்ல பிரிந்தன. கீழுதடு மடிந்து உள்ளே சென்று நாக்கால் தொடப்பட்டு மெல்லிய ஈரப்பளபளப்புடன் மீண்டுவந்தது. விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். அவன் எழுந்து வந்து அவளை தன் கைகளில் அள்ளி எடுத்துக்கொண்ட கணமே அவள் தழல் போல அவனை சூழ்ந்துகொண்டாள்.

பகுதி 4 : தழல்நடனம் - 3

கதவு பறக்கும் நாரையின் ஒலியென கூவக்கேட்டு அர்ஜுனன் திரும்ப வாயிலில் மூச்சிரைக்க நின்றிருந்த திரௌபதியை கண்டான். இதழ்களில் புன்னகையுடன் அவளை ஏறிட்டு நோக்கியபடி அமர்ந்திருந்தான். அஞ்சி நெடுந்தொலைவு ஓடிவந்து நின்றவள் போல அவள் உடல் வியர்வையில் நனைந்து மூச்சில் விம்மிக்கொண்டிருந்தது. ஈரமான கழுத்தில் நரம்புகள் அதிர்ந்தன. தோள்குழிகள் அசைந்தன. நீர்மணிகள் ஒட்டிய இமைகளுடன் உதடுகள் ஏதோ சொல்லுக்கென விரிந்து அதிர்ந்திருக்க அவள் நின்றிருந்தாள்.

அவர்கள் விழிகள் கோர்த்துக்கொண்டன. ஒருகணம் அவள் தன் விழிகளை விலக்கினாள். அப்படி விலக்கியமைக்காக சினம்கொண்டு மீண்டும் அவனை நோக்கி “சீ” என்றாள். நஞ்சு உமிழ்ந்த பின் நாகம் என அவள் உடல் நெளிந்தது. அவன் அதே புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். தன் உடலெங்கும் நிறைந்திருப்பது உவகை என உணர்ந்தான்.

அவள் கைகளை நீட்டியபடி உள்ளே வந்து உடைந்த குரலில் “நீ ஆண்மகனா?” என்றாள். அவள் குரல் மேலெழுந்தது. “குலமகள் வயிற்றில் உதித்தவனா? கீழோன், இழிந்தோன்... சிறுமையே இயல்பெனக்கொண்ட களிமகன்” என்று கூவினாள். அர்ஜுனன் அவளை நோக்கி புன்னகைத்து “எதையும் நான் மறுக்கப்போவதில்லை. நான் எவரென்று அனைவருக்குமே தெரியும்” என்றான்.

“பெருநோயாளி நீ... அழுகிச்சொட்டுகிறது உன் உடல். கங்கையில் கைவிடப்பட்ட பிணம் போன்றவன் நீ” என்று அவள் மேலும் ஓர் அடி எடுத்துவைத்து கூவினாள். “எந்தச் சொல்லையும் நான் மறுக்கப்போவதில்லை“ என்று அர்ஜுனன் தன் கைகளைக் கோர்த்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டான். “நீ... நீ...” என்று மேலும் கைசுட்டி கொந்தளித்தபின் திரௌபதி ஒரு கணத்தில் அத்தனை சொற்களாலும் கைவிடப்பட்டு உடல் தளர்ந்து இருக்கையின்மேல் விழுந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள்.

அவன் அவள் அழுவதை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இரைவிழுங்கும் நாகம் போல அவள் கரிய மென்கழுத்து சுருங்கி விரிந்து அதிர்ந்தது. மூடிய கைகளின் விரலிடுக்குகள் வழியாக கண்ணீர் கசிந்தது. அர்ஜுனன் எழுந்து கங்கையை நோக்கி கைகளைக் கட்டியபடி நின்றான். கொதிகலன்ஆவி சீறுவதுபோல அவளிடமிருந்து எழுந்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தான். பின் அவள் உடைகள் நலுங்கும் ஒலி எழுந்தது. அணிகள் மெல்ல குலுங்கின. அவன் சித்தம் செவியிலிருந்தது. வளையல்களை பதக்கமாலையின் உலைவை கேட்டான். காதிலாடிய குழையிலிருந்த சிறிய மணிகளின் கிலுங்கலைக்கூட பிரித்தறிந்தான்.

அவள் நீள்மூச்செறிந்தபோதுதான் அவன் திரும்பவேண்டுமென எதிர்பார்க்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவ்வெண்ணமே புன்னகையை அளிக்க அவன் கங்கையை நோக்கி நின்றான். அவன் புன்னகை தோள்களிலேயே வெளிப்பட்டிருக்கக் கூடும். அவள் சீற்றத்துடன் அணிகள் சிலம்ப எழுந்து அருகே வந்து “இதன் மூலம் என்னை அவமதிக்கிறாயா என்ன?” என்றாள். அர்ஜுனன் திரும்பி அவள் விழிகளை நோக்கி “எதன்மூலம்?” என்றான்.

”நான் வரும்போது மாயை அவளுடைய அணிப்படகில் செல்வதை கண்டேன். அவளை மிகத்தொலைவில் கண்டதுமே என் அகம் உணர்ந்தது அவள் ஏன் வந்தாள், எதற்குப்பின் திரும்புகிறாள் என்று. என் நெஞ்சு முரசறைந்தது. அவளை விட்டு விழிகளை விலக்க என்னால் முடியவில்லை. அவளுடைய படகு என்னை அணுகியதும் அவள் எழுந்து நின்றாள். என்னிடம் ஏதோ சொல்லப்போகிறாள் என எண்ணினேன். எச்சொல் பேசினாலும் நான் என் பொறையுடைந்து கூச்சலிட்டிருப்பேன். ஆனால் அவள் தன் கைகளைத் தூக்கி கொண்டையிலிருந்து தொங்கிய வாடிய மலர்ச்சரத்தை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு புன்னகைசெய்தாள்.”

“அவளுடைய அவ்வசைவு இக்கணம் வரை என்னை எரியச்செய்கிறது. அவள் அதை தெரிந்து செய்யவில்லை என்று அறிவேன். ஆனால் அவள் அகம் அதை சொன்னது. இல்லை, சொன்னது உடல். அது என்னிடம் சொன்னது” திரௌபதி மூச்சிரைத்தாள் .“ஒவ்வாத எதையோ உண்டுவிட்டவள் என என் வயிறு குழம்பி எழுந்தது. என்னால் அணிப்படகில் அதற்குமேல் நிற்க முடியவில்லை. என்னைக்கடந்து சென்ற அவளை திரும்பிப்பார்க்க என் தலை துணிவுகொள்ளவில்லை. கால்தளர்ந்து அமர்ந்துகொண்டபோது ஒருகணம் நெஞ்சுடைந்து விம்மினேன்.”

“பின்னர் அவ்வாறு விம்மியமைக்காக பெருஞ்சினம் கொண்டேன். சிறுத்து மண்துகளாக ஆனதுபோல் உணர்ந்தேன். என்னை அப்படி ஆக்கியது நீ என்றபோது நான் உணர்ந்தது உன் கழுத்தைக்கவ்வி குருதியை குடிக்கவேண்டுமென்ற வெறியை மட்டுமே.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி “அதைச் செய்ய முயன்றிருக்கலாமே” என்றான். திரௌபதி சீறி தலைதூக்கி “அதைச்செய்ய என்னால் முடியும். ஆனால்...” என்றபின் தலைதிருப்பி விழிகளில் மீண்டும் நீர்த்துளிகள் கோர்க்க “உன்னிடம் நான் கேட்க விழைவது இதுதான். இதை செய்வதனூடாக என்னை அவமதிக்கிறாயா?” என்றாள்.

“இல்லை” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் நான் என்னைப்பற்றிய எதையும் மறைக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்களை அறிந்தவன் நான். என் நாட்களெல்லாம் பெண்கள். அவர்களின் முகங்கள் கூட என் நினைவில் இல்லை. என்னை பெண்வெறியன் என்றே சூதர்கள் பாடுகிறார்கள். அச்சொற்களை ஆரமாக அணிந்தபடிதான் எந்த மேடையிலும் எழுந்து நிற்கிறேன். உன்னை மணக்க கிந்தூரத்தை ஏந்தும்போதும் என் கழுத்தில் அந்த ஆரம் கிடந்தது. அதை அறிந்தபின்னரே எனக்கு நீ மாலையிட்டாய்...”

”ஆம், ஆனால் மாயை அந்த முகமறியாத பெண்களில் ஒருத்தி அல்ல” என்று அவள் பற்களைக் கிட்டித்தபடி சொன்னாள். “அவள் உன் நிழல்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் என்னை அவள் நிழலாக நீ ஆக்கிவிட்டாய்.” அர்ஜுனன் அகமுலைந்து அவளை நோக்கினான். “அவள் உன்னுடன் இங்கிருக்கையில் நிழலென நான் இவ்வறைக்குள் இருந்ததுபோல் உணர்கிறேன். என்னை அவள் வென்றுசென்றுவிட்டாள்.” அர்ஜுனன் “அது உங்களுக்குள் உள்ள ஆடல். அதை நான் ஏன் கருத்தில்கொள்ளவேண்டும்? என் முன் வந்தவள் காதல்கொண்ட ஒரு பெண். காமத்தில் உருகும் ஓர் உடல்” என்றான்.

“அவளை காமத்தின்பொருட்டு நீ அடையவில்லை” என்று திரௌபதி கூவினாள். “ஆம், அதை அறிவேன். அது வேறொன்றுக்காக. அது என்ன என்று நானறியவில்லை. ஆனால் அது காமம் அல்ல. வேறு ஒன்று” என்றான் அர்ஜுனன். “காமம் எப்போதுமே பிறிதொன்றுக்காகத்தான். நன் மைந்தருக்காக என்கிறது வேதம். ஆனால் அத்தனை மானுடக்காமமும் பிறிதொன்றுக்காகத்தான். வெற்றிக்காக, கடந்துசெல்லலுக்காக, நினைவுகூர்தலுக்காக, மறப்பதற்காக.” திரௌபதி “இது அவ்வகையில் அல்ல. இதை செய்வதனூடாக இன்று நீ எதிலிருந்தோ விடுபட்டாய்” என்றாள்.

”இருக்கட்டும், அதனாலென்ன?” என்றான். அவள் என்னசெய்வேன் என இரு கைகளையும் தூக்கினாள். ஒருகணம் நின்று ததும்பியபின் சென்று அமர்ந்துகொண்டு “தெய்வங்களே, இப்படி ஒரு தருணமா?” என்றாள். தலைதூக்கி “இக்கணம் நான் உன்னை வெறுப்பதுபோல இப்புவியில் எவரையும் வெறுத்ததில்லை” என்றாள். அர்ஜுனன் “ஏன்?” என்றான். ”ஏன் என்று நோக்கு. நான் உன் உள்ளம் கவர்ந்தவன். எவரோ ஆன ஒருவர் மேல் நாம் வெறுப்புகொள்வதில்லை”

“பேசாதே” என்று அவள் கூவினாள். நிலைகுலைந்து திரும்பி நோக்கி அருகே இருந்த நீர்க்குடுவையைத் தூக்கி அவன் மேல் வீச அது அப்பால் சென்று விழுந்து உடைந்தது. “உன் சொற்கள் என்னை எரியச்செய்கின்றன. கீழ்மகன் என ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் ஒருவனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை” என்றாள். அதைத் தொடர்ந்து அவளே எதிர்பாராதபடி ஒரு விம்மல் எழுந்தது.

அர்ஜுனன் அருகே சென்று “ஏன் இந்த கொந்தளிப்பு? நான் உன்னை வென்றடைந்தவன். ஆகவே உன் கொழுநன். அதற்கென்ன? இங்கு நீ என்னுடன் இருக்கவேண்டுமென எந்நெறியும் இல்லை. இப்போதே கிளம்பிச்செல்லலாம். என்னை முழுதாக உன்னுள்ளத்திலிருந்து அகற்றலாம். இனி ஒருபோதும் நாம் தனியாக சந்திக்காமலும் இருக்கலாம்....” என்றான். “என் வில் உன் வெற்றிக்கும் சிறப்புக்கும் கருவியாக என்றும் உடனிருக்கும். ஏனென்றால் என் தமையனுக்குரியது அது.”

அவள் அவனை நீர் நிறைந்த விழிகளால் நோக்கி அமர்ந்திருந்தாள். எதையோ சொல்லப்போவதுபோல இதழ்கள் விரிந்து பின் அமைந்தன. “என் காமம் தனித்த காட்டுவிலங்கு. அது ஒருபோதும் ஒருவருக்கு கட்டுப்படாது. நேற்றைப்பற்றி மட்டும் அல்ல நாளையைப்பற்றியும் எச்சொல்லையும் நான் உனக்கு அளிக்கவியலாது” என்றான் அர்ஜுனன். “நீ என்னுடன் இருக்கவில்லை என உன் சேவகர் அறியட்டும். கிளம்பிச்செல்!”

திரௌபதியின் தோள்கள் தழைந்தன. பெருமூச்சுடன் அவள் மேலாடையை சரிசெய்தபின் “அது நாளை காம்பில்யத்தின் சூதர்களின் பாடலாக ஆகும்” என்றாள். சிரித்தபடி அர்ஜுனன் “ஒன்று செய்யலாம். அர்ஜுனன் ஆண்மையற்றவன் என்று சொல். அவன் தந்தை பாண்டுவைப்போல அனலெழாத உடலுள்ளவன் என்று சொல்... நம்புவார்கள்” என்றான்.

முதல்முறையாக திரௌபதி விழிகளில் ஒரு சிறிய புன்னகை எழுந்தது. “அதுவும் ஆரத்தில் ஒரு மணியாகும் அல்லவா?” என்றாள். “இல்லை, அதை நம்ப எளிய மக்கள் விரும்புவார்கள். நான் அடையும் அழகிகளின் கணக்கு பாரதவர்ஷத்தின் எளிய ஆண்மகனிடம்தான் இருக்கும். அவனுள் உள்ள சீண்டப்பட்ட விலங்கு நிறைவடையும். உன்மேல் பழியும் இராது” என்றான் அர்ஜுனன். “அத்துடன் ஆயிரம் பெண்களைப் புணர ஆணிலியால்தான் முடியும் என்ற பழமொழியும் உருவாகிவரும்... நல்லதல்லவா?”

“அதில் உனக்கு என்ன நலன்?” என்றாள் திரௌபதி. “ஏதுமில்லை. என்னைப்பற்றிய சொற்கள் எவையும் என்னை ஆள்வதில்லை. நான் அச்சொற்களுக்கு மிகமிக முன்னால் எங்கோ தனித்து சென்றுகொண்டிருக்கிறேன்.” திரௌபதி அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு தன் அணிகளை சீரமைத்து ஆடையின் மடிப்புகளை சரிசெய்து எழுந்தாள். கூந்தலை கையால் நீவி ஒழுங்காக்கி “ஆம், நான் செல்வதே முறை” என்றாள்.

”நலம் திகழ்க!” என்றான் அர்ஜுனன். “என் ஒரு சொல்லை மட்டும் கொண்டுசெல்லுங்கள் தேவி. நான் ஒருபோதும் ஒருவரையும் அவமதிக்க விழைந்ததில்லை. உங்கள் தந்தையைக்கூட நான் அவமதிக்கவில்லை.” திரௌபதி பெருமூச்சுடன் “நான் அதை அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பாரதவர்ஷமே உங்கள் தந்தையை சிறுமைசெய்தவன் என்றல்லவா என்னைப்பற்றி எண்ணுகிறது?”

திரௌபதி விழிதூக்கி “தொலைவிலிருந்தாலும் நாம் சிலரை மிக அண்மையில் தொடர்ந்துசென்றுகொண்டிருப்போம் அல்லவா?” என்றாள். “என்னை நீ அவமதிக்கவில்லை என்றே என் அகம் உணர்கிறது. அது நிறைவளிக்கிறது. ஆனால் என்னை நானே அவமதிக்கலாகாது. ஆகவே நான் செல்கிறேன். இனி நாம் ஒருபோதும் சந்திக்கவும்போவதில்லை.”

“நன்று” என்றான் அர்ஜுனன் கைகளை விரித்து அவள் செல்லலாம் என்று காட்டியபடி. அவள் தன் வலக்கையின் கடகத்தை இடக்கையால் உருட்டியபடி ஒரு சிலகணங்கள் தயங்கி பின்பு வருகிறேன் என தலையசைத்து படிகளில் இறங்கினாள். இரண்டு முறை காலெடுத்துவைத்துவிட்டு திரும்பி அவனிடம் “நான் செல்வதில் சற்றும் வருத்தமில்லையா உனக்கு?” என்றாள்.

அர்ஜுனன் புன்னகைத்து “வருத்தம் உள்ளது என்றால் நீ நம்புவாயா?” என்றான். “இல்லை, உன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவற்றில் சற்றும் வருத்தம் தெரியவில்லை.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கியபடி “வருத்தம் என்று எதை சொல்கிறாய் என்று தெரியவில்லை. நீ அகன்றுசெல்லும்போது நான் அரியது ஒன்றை இழக்கிறேன் என உணர்ந்தேன். நான் என் வாழ்நாளில் கண்ட முதன்மையான அழகியை அடையமுடியவில்லை என்று அறிந்தேன். ஆனால் நீ செல்வதே உகந்தது என்றும் தோன்றியது.”

“ஏன்?” என்றாள் திரௌபதி. “உன் துயரத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். மிக அழுத்தமானது அது. எனது காமத்தை உன் புலன்களால் தாளமுடியாது” என்றான் அர்ஜுனன். “அந்த எண்ணம் துயரை முற்றாக அழித்துவிடுமா என்ன?” என அவள் தலைசரித்தாள். “இல்லை, அந்த எண்ணத்துடன் சேர்ந்த ஓர் அறிதல் எனக்குண்டு. இதுவென்றல்ல எதுவும் வந்துசெல்வதே. வருவதற்காக பெரிதும் மகிழ்வதில்லை. செல்வதற்காக துயர்கொள்வதுமில்லை. நீ என் வாழ்க்கையின் ஒரே பெண் அல்ல. ஒரே சக்ரவர்த்தினிகூட அல்ல.”

அவள் நின்று திரும்பி படிகளின் கைப்பிடியை பற்றிக்கொண்டபோது உடல் தளர்ந்து குழைந்தது. “என்னால் செல்லமுடியவில்லை” என்றாள். “ஏன்?” என்றான். “தெரியவில்லை. சிந்தித்துப்பார்க்கையில் நான் ஏன் அத்தனை பெருந்துயருற்றேன் என்றே புரியவில்லை. உன்னை நான் அறிவேன். உன்னை விரும்பியதே நீ காமக்களிமகன் என்பதற்காகத்தான். ஆனால் சற்று முன் அதன்பொருட்டே உன்னை வெறுத்தேன்...” என்றபின் தலையை அசைத்து ”தெரியவில்லை”என்றாள்.

“நீ ஒரு உளச்சித்திரம் கொண்டிருக்கலாம். நான் இங்கே உன்னை எண்ணி ஏங்கி காத்திருப்பேன் என்று. காமத்தால் கொதிக்கும் என் மேல் ஒரு குளிர்மழைத்துளியாக விழலாம் என்று” புன்னகையுடன் அர்ஜுனன் சொன்னான். “எந்தப்பெண்ணும் அவ்வாறுதான் எண்ணுவாள்!” திரௌபதி சிரித்துவிட்டாள். ”ஆம், உண்மை” என்றாள். “நான் உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். ஏங்கவில்லை. இப்பிறவியில் இனி எந்தப்பெண்ணுக்காகவும் ஏங்கப்போவதில்லை. யார் பிரிவுக்காகவும் வருந்தப்போவதும் இல்லை” என்றான் அர்ஜுனன். பின் மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆகவேதான் நான் பெண்களிமகன் எனப்படுகிறேன்.”

அவள் மெல்ல அவனை நோக்கி படியேறி வந்து அருகே நின்று இடையில் கைவைத்து தலைதூக்கி கேட்டாள் “நான் ஒன்று கேட்கிறேன். இங்கிருந்து சென்று நான் கங்கையில் இறந்தால் வருந்துவீர்களா?” அர்ஜுனன் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “இல்லை” என்றான். “கொலைவில் எடுத்தவன் இறப்புகளுக்காக வருந்தமாட்டான்.” அவள் விழிகள் மெல்ல அசைந்தன. ஓர் எண்ணத்தை நிகழ்வாகக் காணமுடிவதை எண்ணி அவன் வியந்தான். “உங்கள் தமையன் இறந்தால்?” என்றாள். “நான் அதன்பின் உயிர்வாழமாட்டேன். ஏனென்றால் என் வாழ்க்கையின் பொருள் இல்லாமலாகிறது” என்றான் அர்ஜுனன்.

அவள் இமைகள் சரிந்தன. உதடுகள் மெல்ல குவிந்து ஒரு சொல்லாக ஆகி பின் அதை ஒலியின்மையில் உதிர்த்துவிட்டு விரிந்தன. விழிகளைத் தூக்கி “என்னால் இங்கிருந்து செல்லமுடியாது” என்றாள். “ஏன்?” என மெல்லிய குரலில் கேட்டான். ”அறியேன். நானறியாத ஓரு பெருநதியின் சுழலைக் காண்பதுபோல தோன்றுகிறது...” தலையை இல்லை என அசைத்து “இப்படியே உதறிவிட்டு விலகிச்சென்றால் நான் தப்புவேன். ஆனால் என்னால் முடியுமென தோன்றவில்லை” என்றாள்.

“ஏன்?” என்று அவன் மேலும் தாழ்ந்த குரலில் கேட்டான். குரலைத் தூக்கி “ஏனென்றால் தீமை பெரும் கவர்ச்சி கொண்டது” என்றாள். அவன் சிரித்தபடி விலகி “அவ்வண்ணமென்றால் உள்ளே வருக! நஞ்சு அருந்த நாகத்தின் அழைப்பு இது” என்றான். அவள் பற்களைக் கடித்து விழியில் சினத்துடன் “ஏளனம் செய்கிறாயா?” என்றாள். “ஏளனமும் சற்று உண்டு” என்றான் அர்ஜுனன்.

அவள் அவனைக்கடந்து உள்ளே சென்று பீடத்தில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு நிமிர்ந்தாள். அவன் விழிகளை நோக்கி சிவந்த முகத்துடன் “அஞ்சி ஓடுவது என் இயல்பல்ல” என்றாள். அவள் செப்புமுலைகள் எழுந்தமைந்தன. “நீ அஞ்சுவது உன்னுள் உறையும் தீமையை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், நீயும் என் முகமே” என்றாள் திரௌபதி. இதழ்களைக் கடித்து வெறுப்பு பொங்கும் கண்களுடன் “என் நெஞ்சில் நானே வேலைக் குத்தி இறக்குவதுபோன்றது இத்தருணம்” என்றாள்.

அர்ஜுனன் அருகே வந்து அவளருகே நின்றான். “சில தருணங்கள் அத்தகையவை” என்றான் ”நம் அகம் உடைபடும் தருணங்கள் அவை.” கையை விலகு என்பதுபோல வீசி “நான் இங்கே இருக்க விழையவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு எரியெழும் பாதாளத்தில் இருப்பதுபோல. ஆனால் நான் செல்லவும் விழையவில்லை” என்றாள்.

அவன் அவள் செவிகள் மட்டுமே கேட்கும் குரலில் “என் மேல் காமம் இல்லை என்கிறாயா?” என்றான். அவள் செவிதுளைக்கும் கூர்குரலில் வீரிட்டாள் “இல்லை... முற்றிலும் இல்லை.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி குனிந்து “இல்லையா?” என்றான். “இல்லை... காமம் இருந்தது. ஆனால் இக்கணம் என்னில் ஊறும் கடும் வெறுப்பு அதை அழித்துவிட்டது. என் ஆணவம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. புறக்கணிக்கப்படுபவளாக இருக்க நான் விரும்பவில்லை...” சீறி வெளித்தெரிந்த பற்களுடன் “எவர் முன்னும் எளியவளாக நான் இருக்க முடியாது” என்றாள்.

அர்ஜுனன் அவளையே நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “உன் நெஞ்சை நோக்கி சொல், காமம் இல்லை என்று” என்றான். “இல்லை இல்லை” என்று சொல்லி “விலகு...” என்றாள். “ஏன்?” என்றான். “உன் வியர்வை நெடி குமட்டுகிறது.” அர்ஜுனன் அவள் கைகள் மேல் கையை வைத்தான். அவள் “சீ” என அதிர்ந்து அந்தக்கையை தட்டிவிட் முனைந்தபோது மறுகையையும் பற்றிக்கொண்டான். அவள் திமிறி விலக முயல மேலாடை சரிந்து இளமுலைகள் அசைந்தன. அவ்வசைவை அவள் விழிகள் நோக்க அவள் கை தளர்ந்தது. அப்படி தளர்ந்ததை உணர்ந்த மறுகணம் “சீ, விடு...” என்று அவள் திமிறி காலைத்தூக்கி அவன் இடைக்குக் கீழே உதைக்க முயன்றாள். அவன் எளிதாக விலகி அதைத்தவிர்த்து அவளைச் சுழற்றிப் பிடித்து இடைவளைத்து தன் இடையுடன் அவள் பின்பக்கத்தை இறுக்கிக்கொண்டு அவள் பின்கழுத்தின் மெல்லிய மயிர்ச்சுருள்களில் முகம் புதைத்தான்.

”என்னை அவமதிக்காதே... விடு என்னை!” என்று அவள் இறுகிய பற்களுடன் சொல்லி கால்களை மண்ணில் உதைத்து எம்பினாள். அவன் அவளை மூன்றுமுறை சுழற்றி தூணுடன் முகம் சேர்த்து அழுத்திக்கொண்டான். “கொன்றுவிடுவேன்... இது என் நாடு” என்று அவள் முனகினாள். அவள் முழுமையாக அசைவிழக்கும் வரை அழுத்தியபின் சற்றே விலகி அக்கணத்திலேயே அவள் கச்சின் பின்முடிச்சை அவிழ்த்து அப்படியே திருப்பி அவள் வெறும் முலைகளை தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டான். “இழிமகனே” என அவள் கூவ அவள் முகத்தை இறுகப்பற்றி அசைவிலாது நிறுத்தி அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டான்.

உயிரிழக்கும் விலங்கு என அவள் உடலின் திமிறல் மெல்ல மெல்ல தளர்ந்தது. அவன் தோள்களை நகம் அழுந்தப் பற்றியிருந்த கைகள் தளர்ந்து வளையல்கள் ஒலிக்க கீழே விழுந்தன. அவன் அவளை முத்தமிட்டுக்கொண்டிருக்க மெல்ல அவை மேலெழுந்து வந்து அவன் குழலை கவ்விக்கொண்டன. அந்தக் கணம் நீண்டு நீண்டு செல்ல ஒரு கணத்தில் அவள் உடல் மீண்டும் இறுகி அவனை விட்டுத் திமிறியது. அவன் இறுக்கி அவளைப் பற்ற அவள் அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளி வில்லென உடலை வளைத்தாள், அவன் அவளை விட்டதும் அதேவிசையில் பின்னகர்ந்தாள். அவன் அவள் கன்னத்தை ஓங்கி அறைந்தான்.

அடிபட்ட கன்னத்தை கையால் பொத்தியபடி அவள் திகைத்து நிற்க அவன் முன்னகர்ந்து அவளை அள்ளித்தூக்கிக் கொண்டான். அவள் பொருளின்றி ஏதோ முனக அவன் கதவை காலால் தள்ளித்திறந்து அவளை மஞ்சத்தை நோக்கி கொண்டுசென்றான். பட்டுச்சேக்கைமேல் அவளைப் போட்டு அவள்மேல் பாய்ந்து தன் கைகளாலும் கால்களாலும் அவளை கவ்விக்கொண்டான். அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் சொட்டியது. கடும்வலி கொண்டவள் போல தலையை அசைத்தபடி முனகிக்கொண்டிருந்தாள்.

அவன் அவளை ஒரு துணிப்பாவை என கையாண்டான். உடல் தன் கரவுகளை எல்லாம் இழந்து வெறுமைகொண்டு கிடந்தது. பிறிதொன்றுமில்லை என்று ஆனது. அதன்பின் அதிலுறங்கிய விதைகள் முளைத்தெழத் தொடங்கின. ஏதோ ஒருகணத்தில் புலிக்குருளை போல மெல்ல உறுமியபடி தன் கைநகங்கள் அவன் தோளை கவ்வி இறுக்க அவனை தழுவி இறுக்கினாள். ஒன்றை ஒன்று உண்ணும் நாகங்கள் அறிந்தது. நெருப்பு மட்டுமே அறிந்தது. உடல் ஒன்றாகி ஆன்மா தன்னந்தனிமையில் தவிப்பது.

அவன் ஆடையணிந்து திரும்பியபோது அவள் உடலை நன்கு சுருட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளருகிலும் மஞ்சத்தைச் சுற்றியும் அவள் ஆடைகளும் அணிகலன்களும் சிதறிக்கிடந்தன. அவன் அவற்றை சிலகணங்கள் நோக்கிய பின்பு வெளியே சென்று ஒழுகும் கங்கையை நோக்கி சற்று நேரம் நின்றிருந்தான். விண்மீன்குவைகள் போல தொலைதூர வணிகப்படகுகள் சென்றன. கங்கைமேல் இருளில் பறக்கும் பறவைகளில் சில கரைவந்து அவனைக் கடந்து மாளிகை முகடில் சென்று அமர்ந்தன. காற்று சீரான பெருக்காக இருந்தது. பின்பு அது நின்றதும் பறக்கும் சாளரத்திரை அசைவிழப்பதுபோல உள்ளம் அமைந்தது. நீரின் மணத்துடன் மறுகாற்று ஒன்று எழுந்து காதுமடல்களை தொட்டது.

அவன் மீண்டும் மஞ்சத்தறைக்கு வந்தபோது அவள் ஆடைகளை அணிந்துகொண்டு அதேபோல வளைந்து படுத்திருந்தாள். அவன் அவளருகே படுத்தபோது மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டது. கால்களை நீட்டிக்கொண்டு மார்பின்மேல் கைகளை வைத்து கூரைமுகடின் தடித்த உத்தரத்தை நோக்கினான். அக்கணமே துயிலில் மூழ்கிமறைந்தான்.

மெல்லிய அசைவை அறிந்து அவன் விழித்து எழுந்தான். அவன் கழுத்துக்குமேல் சாளரத்தின் மெல்லிய ஒளியை வாங்கியபடி வாளின் நாக்கு நின்றிருந்தது. அவன் உடலிலோ விழியிலோ சற்றும் அசைவு எழவில்லை. இதழ்களில் மட்டும் மெல்லிய புன்னகை பரவியது.. இருகைகளாலும் வாளைப் பற்றியிருந்த திரௌபதி அதை தூக்கிவிட்டு பெருமூச்சுவிட்டாள். உடல் தளர்ந்து விழுபவள்போல மஞ்சத்தில் அமர்ந்தாள்.

அவன் அதே புன்னகையுடன் படுத்திருந்தான். அவள் சீற்றத்துடன் திரும்பி அவனை நோக்கி “கொல்லமாட்டேன் என்று எண்ணினாயா?” என்றாள். “இல்லை என்னால் முடியாதென்று நினைக்கிறாயா?” அவள் முகத்தில் கூந்தலிழைகள் வியர்வையில் ஒட்டியிருந்தன. நெடுநேரம் தலையணையில் பதிந்திருந்த முகத்தில் துணியின் பதிவிருந்தது. அர்ஜுனன் “இல்லை” என்றான். “எவராலும் கொல்ல முடியும். கொல்வதைப்போல எளியது பிறிதில்லை. வாளேந்திய கை எண்ணாவிட்டாலும்கூட வாள் அதை செய்யக்கூடும்.”

அவள் விழிகள் அசைந்தன. “ஆனால் எனக்கு முற்றிலும் இல்லாத ஓர் உணர்வு என்றால் உயிரச்சம்தான்” என்றான் அர்ஜுனன். “என் கைகளால் இதற்குள் பலநூறுபேரை கொன்றிருபேன். ஆகவே நான் உயிரச்சம் கொள்ளலாகாது என்பதே அறம்.” திரௌபதி வாளைத் தூக்கி அதை நோக்கினாள். “வெட்டுவதற்கு ஒரு கணம் முன்னர்கூட வெட்டிவிடுவேன் என்றுதான் எண்ணியிருந்தேன்” என்றாள்.

“துயில்கையில் வெட்டுவது அறமல்ல என்று தோன்றியதா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, துயிலும்போதன்றி உன்னை என்னால் கொல்லமுடியாது. என் வாள் உயர்ந்ததுமே உன் இமைகள் அசைந்தன. அதனால்கூட என் கை தளர்ந்திருக்கலாம்.” அர்ஜுனன் “ஆம், என்னை துயிலற்றவன் என்கிறார்கள்” என்றான். அவன் திரும்பி கையை தலைக்கு வைத்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு “நீ மீண்டும் முயலலாம்” என்றான். அவள் தன் கரிய விழிகளால் அவனை கூர்ந்து நோக்கினாள். பின் விழிகளை விலக்கி தலையை அசைத்து “என்னால் முடியாது” என்றாள்.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் என்னுள் உறையும் ஒரு கீழ்மகளின் துணைவன் நீ. அவளை வெல்ல என்னால் முடியாது” என்றபடி அவள் எழுந்தாள். கைதூக்கி தன் குழலைச் சுருட்டிக் கட்டியபின் திரும்பி “மீளமீள உன்னை வெறுத்துக்கொண்டும் தோற்றுக்கொண்டும்தான் இருப்பேன். இது என் ஊழின் சுழி” என வெளியே சென்றாள். அவன் எழுந்து அமர்ந்தபோது “என்னை தனிமையில் விடு” என்றாள்.

அவன் சிலகணங்கள் சேக்கைவிரிப்பை விரலால் சுண்டியபின் “அழகிய தனிமை நிறையட்டும்” என்று சொன்னபின் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மறுகணமே அவனுடைய சீரான துயில்மூச்சு எழத்தொடங்கியது.

பகுதி 4 : ஆடிச்சூரியன் - 1

நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து சுடராடலுக்கு இசைய அசைந்தன. கடிவாளக்காப்பாளன் ஓடிவந்து குதிரைகளைப்பற்ற தேர்ப்பாகன் இறங்கி படிகளை நீக்கி வைத்தான். நகுலன் இறங்கி அவனிடம் புன்னகைத்துவிட்டு திரும்ப வெண்ணிறக் குதிரை ர்ர்ர்ப் என்ற ஒலியெழுப்பி தலையசைத்து அவனை அழைத்தது.

அவன் தன்னுடைய பட்டாடையையும் அணிகளையும் நோக்கிவிட்டு தேர்ப்பாகனை நோக்கி புன்னகைசெய்தான். அவனும் சிரித்துக்கொண்டு திரும்பி குதிரையை மெல்ல தட்டினான். அது பிடிவாதமாக தன் முன்னங்காலால் தரையைத்தட்டி தலையிலணிந்திருந்த மணிகள் ஒலிக்க குனிந்து மீண்டும் ஓசையெழுப்பியது. நகுலன் வாய்விட்டு சிரித்தபடி அதை அணுகி அதன் குஞ்சிமயிரில் கையை வைத்தான். அதன் விலாவும் முன்தொடையும் சிலிர்த்துக்கொண்டன. முன்னங்காலை எடுத்துவைத்து கழுத்தை வளைத்து அவன் மேல் தன் எடைமிக்க தலையை வைத்துக்கொண்டது. அதன் எச்சில் கோழை அவன் மேல் வழிந்தது.

நகுலன் அதன் உடலின் வெவ்வேறு இடங்களை தொட்டு அழுத்திக்கொண்டிருக்க அதன் வெண்ணிற இமைமயிர்கள் கொண்ட கண்கள் பாதிமூடின. மூக்குத்துளைகள் நன்றாக விரிய வாய்திறந்து செந்நீல நாக்கு வாழைப்பூ மடல் போல நீண்டு வெளிவந்தது. அவன் முழங்கையை மெல்ல நக்கியபடி குதிரை பெருமூச்சு விட்டு கால்களை தூக்கி வைக்க தேர் சற்று முன்னகர்ந்தது. அது சிறிய செவிகளை தொழும் கரங்களென தலைக்குமேல் குவித்து தலையை குலுக்கியபடி மீண்டும் கனைத்தது.

நுகத்தின் மறுபக்கம் இருந்த குதிரை அவனை நோக்கி விழிகளை உருட்டியபடி கழுத்துமயிர்நிரையை குலைத்து வாலைச்சுழற்றி முன்னடி வைத்தது. அவன் முன்பக்கம் வழியாக சுற்றிவந்து அதன் நெற்றிச்சுட்டியை தட்டினான். காதுகள் நடுவே இருந்த சங்கை கையால் வருடி கழுத்தை நீவி விட்டான். நெற்றியில் இரண்டு சிறிய சுழிகளும் முகத்தின் வலப்பக்கம் அரைச்சுழியும் கொண்ட நந்தம் அது. இரு குதிரைகளும் அவனை நோக்கி கழுத்தை வளைத்து நாக்கை நீட்டின. அப்பால் கட்டுத்தறிகளில் கட்டப்பட்டிருந்த குதிரைகளனைத்தும் கடிவாளத்தை இழுத்து அவனைநோக்கி திரும்பியிருந்தன.

பின்னால் வந்து நின்ற அரண்மனைச்சேவகன் தொண்டையொலி எழுப்ப நகுலன் திரும்பி நோக்கி புன்னகைத்தான். தேர்ப்பாகன் “நீங்கள் அத்தனை குதிரைகளிடமும் குலவவேண்டியிருக்கும் இளவரசே" என்றான். நகுலன் திரும்பி நோக்க சேவகன் ஓடிச்சென்று அப்பால் பெரிய கற்கலத்தில் தேக்கப்பட்டிருந்த நீரை மரக்குடுவையில் எடுத்துக்கொண்டுவந்தான். அதை அவன் ஊற்ற நகுலன் கைகளை கழுவிக்கொண்டான். சேவகன் “அமைச்சர் கிளம்பிவிட்டார். பெருங்கூடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசருக்காக சேவகர் சென்றிருக்கிறார்” என்றான்.

இடைநாழி வழியாக செல்லும்போது சேவகன் பின்னால் வந்தபடி “அஸ்தினபுரியின் படகுகளுடன் பாஞ்சாலத்தின் ஏழுபடகுகளும் செல்கின்றன. பாஞ்சாலத்திலிருந்து அஸ்தினபுரியின் மாமன்னருக்கு பரிசில்கள் கொண்டுசெல்லப்படுகின்றன” என்றான். “பாஞ்சாலத்தின் செல்வம் என்றால் கோவேறுகழுதைகள்தான். துர்வாசர்கள் அத்திரிகளை உருவாக்கும் கலையறிந்தவர்கள். நூறு கோவேறு கழுதைக்குட்டிகள் அஸ்தினபுரிக்கு செல்கின்றன” என்றான்.

நகுலன் “அவற்றை எப்படி நடத்தவேண்டும் என்றறிந்த புரவியாளர்களையும் அனுப்பச் சொல்லவேண்டும். அத்திரிகள் எடைசுமப்பவை. ஆனால் அவற்றின் முதுகுகள் கழுதைகளைப்போல ஆற்றல்கொண்டவையல்ல என்று இன்னமும் அஸ்தினபுரியினருக்கு தெரியாது. அங்கே பெரும்பாலான அத்திரிகள் முதுகுடைந்து தளர்ந்தவை” என்றான். “ஆம், இங்கிருந்து பன்னிரு புரவியாளர்களும் செல்கிறார்கள்” என்றான் சேவகன்.

பெருங்கூடத்தின் வெளியே நின்றிருந்த சேவகன் வணங்கி உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். உள்ளே ஏழு நெய்விளக்குகள் எரிந்த செவ்வொளியில் பீடத்தில் அமர்ந்து சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்த விதுரர் திரும்பி நோக்கி முகம் மலர்ந்து “வருக!” என்றார். நகுலன் அவரை பணிந்து நின்றான். அவர் அமரும்படி கைகாட்டியதும் அப்பால் விலகி பீடத்தில் அமர்ந்துகொண்டான். “முதலில் நீதான் வருவாய் என நினைத்தேன்” என்றார்.

“குதிரைகளை விரும்புபவன் முன்புலரியில் எழுந்தாகவேண்டும். அவை அப்போதுதான் முழுமையான துள்ளலுடன் இருக்கும்” என்றான் நகுலன். “நினைவறிந்த நாள் முதலே நான் விடியலில் துயில்வதில்லை.” விதுரர் புன்னகை செய்து “உன் இளையோனைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று பிரம்மமுகூர்த்தம் முடிந்ததுமே கிளம்பிவிடலாம் என்று அவன் சொன்னான். ஆனால் கதிரெழுவதற்கு முன் என்னால் கிளம்பமுடியாதென்றே தோன்றுகிறது. நேரத்தை மாற்றிக்குறிக்கவேண்டும்” என்றார்.

“அரசரா?” என்று நகுலன் புன்னகையுடன் கேட்டான். “உன் தமையனும்தான். நேற்று இருவரும் விடிவதுவரை நாற்களப்பகடை ஆடியிருக்கிறார்கள்.” நகுலன் “மூத்தவர் அவர் வாழ்க்கையைப்பற்றி கற்ற அனைத்தையும் நாற்களத்தில் உசாவிப்பார்க்கிறார்” என்றான். விதுரர் “உன் புன்னகை மாறவேயில்லை. பாரதவர்ஷத்தின் பேரழகன் நீ என்று சூதர் பாடும்போதெல்லாம் நீ எப்படி இருக்கிறாய் என எண்ணிக்கொள்வதுண்டு. உன் முதிரா இளமை முகத்தை நினைவில் மீட்டி பெருமூச்சு விடுவேன். இனி உன் இந்த முகம் என்னிடமிருக்கும்” என்றார். நகுலன் நாணத்துடன் புன்னகைசெய்தான்.

“இங்கே மலைப்புரவிகளை பழக்குகிறார்கள் என்றார்களே” என்று விதுரரே அந்த இக்கட்டான நிலையை கடந்தார். நகுலன் எளிதாகி “ஆம் அமைச்சரே. இவர்களுக்கு புரவிகளைப் பிடிக்கவும் பழக்கவும் தனித்த வழிமுறைகள் உள்ளன. புரவிகளை இவர்கள் கண்ணியிட்டு பிடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்டவகை புல்லை பறித்துவந்து அதை அரைத்துக் கூழாக்கி சிறிய அப்பங்களாக்கி காட்டில் போட்டுவிடுகிறார்கள். அதைத்தின்றபடி குட்டிக்குதிரைகள் காடிறங்கி ஊருக்குள் வந்துவிடுகின்றன. அவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு காட்டுக்குதிரைகளை வரச்செய்கிறார்கள்” என்றான்.

“சுவை என்னும் பொறி... பொறிகளில் அதுவே மிகச்சிறந்தது” என்றார் விதுரர். “ஆம், ஆனால் குதிரைகளை தூண்டிலிட்டுப்பிடிப்பதை இங்கே தான் கண்டேன்” என்று நகுலன் சிரித்தான். சேவகன் வந்து பணிந்து கதவைத் திறக்க சகதேவனும் அர்ஜுனனும் உள்ளே வந்தனர். அவர்கள் பணிந்து அமர்ந்துகொண்டதும் விதுரர் “நீ குறித்த நேரம் கடந்துவிடும் மைந்தா. புதிய நேரம் தேவை” என்றார். சகதேவன் சிரித்துக்கொண்டே “ஆம், அதை அறிந்தே புதிய நேரத்துடன் வந்தேன். முதல்கதிர் எழுந்த இரண்டாம்நாழிகை நல்லது” என்றான்.

நகுலன் புன்னகைத்து “சென்று முடிக்கவேண்டிய பணியென ஏதுமில்லை. எல்லா நேரமும் நன்றே” என்றான். வெளியே பீமனின் காலடியோசை கேட்டது. நகுலன் ”மூத்தவர் நேற்றே கங்கைக்கு அப்பால் காட்டுக்குச் சென்றுவிட்டார் என்றார்கள். எப்படி செய்தியறிந்தார்?” என்றான். பீமன் உள்ளே வந்து உரத்தகுரலில் “வணங்குகிறேன் அமைச்சரே” என்று தலைவணங்கினான். விதுரர் வாழ்த்தினார். பீமன் சாளரத்தருகே கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றான்.

குண்டாசியும் ஒரு சேவகனும் உள்ளே வந்தனர். குண்டாசி ஓரிருநாட்களிலேயே முகம் தெளிந்து விழியொளி கொண்டிருந்தான். “அமைச்சரே, அரசரும் மூத்தவரும் கிளம்பிவிட்டனர்” என்றான். “தருமன் எங்கிருந்து வருகிறான்?” என்றார் விதுரர். “நேற்று மிகவும் பிந்திவிட்டமையால் அவரும் அரசமாளிகையிலேயே துயின்றாராம்” என்றான் குண்டாசி. பீமனை நோக்கி தலைவணங்கி புன்னகைசெய்தான்.

“உன் விழிகள் சற்று தெளிந்திருக்கின்றன” என்றான் பீமன். குண்டாசி கைகளை நீட்டி “பாருங்கள், நடுக்கம் நின்றுவிட்டது” என்றான். ஆனால் அவன் கைகள் சிலகணங்களுக்குள் நடுங்கத் தொடங்கின. தாழ்த்திக்கொண்டு “இன்னும் சிலநாட்களில் முழுமையாகவே சீரடைந்துவிடுவேன். கதைப்பயிற்சிக்கு மீளவேண்டும்” என்றான். பீமன் “அது நிகழ்க!” என வாழ்த்தினான்.

விதுரர் “தருமனும் வந்துவிட்டால் சில சொற்களை சொல்லிச்செல்லலாம் என எண்ணினேன். தாழ்வில்லை, உங்களிடமே சொல்கிறேன்” என்றார். சகதேவனை நோக்கி “தருமன் இல்லாத இடத்தில் நீயே விவேகி. ஆகவே உன்னிடம் சொல்கிறேன். உறவுகளைப்போல உற்று உதவுபவை பிறிதில்லை. ஆனால் உறவுகளைப்போல எளிதில் விலகிச்செல்வதும் வேறில்லை. மணமான பெண் தன் தந்தையின் இல்லத்தில் அயலவள். ஒவ்வொரு கணமும் அவள் விலகிச்சென்றுகொண்டிருக்கிறாள்” என்றபின் ”உங்கள் திட்டங்கள் என்னவென்று நானறியேன். ஆனால் அவை எப்போதும் மானுடர் மீதான நம்பிக்கையின்மையிலிருந்து எழவேண்டுமென விழைகிறேன்” என்றார்.

சகதேவன் தலையசைத்தான். “பொறுமை பேராற்றலை அளிக்கிறது என்பது உண்மையே. ஆனால் நெடுநாள் பொறுத்திருக்கையில் அதுவே ஒரு வாழ்நிலையாகவும் உளஇயல்பாகவும் ஆகிவிடுகிறது. மானுட அகம் செயலற்றிருக்க விழைவது. செயலின்மையின் சுவையைக் கண்டபின் அது தன்னை அசைத்துக்கொள்ளவே விரும்பாது” என்றபின் பெருமூச்சுடன் “சிறியவெற்றிகள் வழியாகவே பெரிய வெற்றிகளை நோக்கி செல்லமுடியும். வேறுவழியே அதற்கில்லை” என்றார்.

வெளியே வாழ்த்தொலிகள் எழுந்தன. மங்கல இசைக்கலன்கள் ஒலித்தபடி வந்த சூதர்கள் இடைநாழியிலேயே நின்றனர். உள்ளே வந்த கோல்காரன் “பாஞ்சாலத்தின் தலைவர் காம்பில்யம் ஆளும் அரசர் துருபதர் வருகை” என அறிவித்தான். அனைவரும் எழுந்து நிற்க விதுரர் தன் சால்வையை சீரமைத்தார். இரு சேவகர் வாயில்களை விரியத்திறந்தனர். அரசணிக்கோலத்தில் துருபதன் உள்ளே வர விதுரர் முன்னால் சென்று அவரை வணங்கி வரவேற்றார்.

அவருக்குப்பின்னால் அணிக்கோலத்தில் வந்த தருமன் விதுரரை அணுகி வணங்கினான். துருபதன் “சற்று பிந்திவிட்டோம் என்று புரிகிறது” என்றார். தருமன் “ஆம், மறுநேரம் கணிக்கப்பட்டிருக்குமென நினைக்கிறேன்” என்றான். ”ஆம்” என்றபடி அமர்வதற்காக கைகாட்டினார் விதுரர். அவர்கள் அமர்ந்துகொண்டதும் தானும் அமர்ந்தபடி “பாஞ்சாலத்தில் இருந்த இனியநாட்கள் என் நினைவில் என்றும் வாழும் அரசே” என்றார். துருபதன் “ஆம், எங்கள் வரலாறுகளில் அஸ்தினபுரியின் அமைச்சரின் கால்கள் இங்கு பட்டன என்பதும் எப்போதும் எழுதப்பட்டிருக்கும்” என்றார்.

விதுரர் “நான் வந்த பணி முடிவடையவில்லை. ஐவரையும் அழைத்துச்சென்று என் மூத்தவர் முன் நிறுத்தும்பொருட்டே வந்தேன். ஆனால் எப்போதும் யுதிஷ்டிரனின் முடிவே முதன்மையானது என்று அறிவேன்” என்றார். தருமன் “அமைச்சரே, அனைத்துத் திசைகளையும் தேர்ந்து நான் எடுத்த முடிவு இது...“ என்றான். “நலம் சூழ்க!” என்றார் விதுரர்.

துருபதன் “அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள் அமைச்சரே, இங்கே முடிவெடுப்பவர் யுதிஷ்டிரரே என்று. பாஞ்சாலம் தனது ஐங்குலங்களையும் நகரத்தையும் அஸ்தினபுரியின் மூத்தபாண்டவருக்கு முழுமையாகவே அளித்திருக்கிறது. இனி அவரது வெற்றியும் புகழும் மட்டுமே எங்கள் கடனாகும்... இது காம்பில்யத்தின் அரசனின் சொற்கள்” என்றார். விதுரர் வணங்கி “அஸ்தினபுரி அடைந்த பரிசுகளில் முதன்மையானது இது அரசே” என்றார்.

“அஸ்தினபுரியின் முடியுரிமைகளில் பாஞ்சாலம் எவ்வகையிலும் ஈடுபடாது அமைச்சரே. ஆனால் பாஞ்சாலத்தின் உள்ளத்தில் அவ்வரசின் தலைவர் எங்கள் மருகரே. அவர் சொல்லுக்கு மட்டுமே நாங்கள் பணிவோம்” என்றார் துருபதன். விதுரரின் விழிகள் சற்றே சுருங்கின. “அஸ்தினபுரி அதன் அரசராலேயே முழுமையாக ஆளப்படுகிறது” என்றார். அச்சொல்லின் பொருள் என்ன என்று துருபதன் எண்ணுவதற்குள்ளாகவே “யுதிர்ஷ்டிரனுக்குத் தெரியாத அறமோ நெறியோ இல்லை” என்றார்.

சத்யஜித் வந்து தலைவணங்கி நின்றார். துருபதன் அவரை நோக்கியபின் “செலவுக்குக் குறித்த நேரம் அணுகுகிறது“ என்றபடி எழுந்தார். அனைவரும் எழுந்துகொண்டனர். துருபதன் சத்யஜித்திடம் தலையாட்ட அவர் வெளியே சென்று ஆணைகளை இடும் குரலோசை கேட்டது. துருபதன் முன்னால் செல்ல பிறர் தொடர்ந்தனர். பீமன் கைகளை விரித்தபடி வந்து நகுலனின் பின்னால் நின்று “முறைமைகள் ஏதும் குறையவில்லை இளையோனே” என்றான்.

எப்போதுமே சடங்குகளில் நகுலனின் அகம் நிலைப்பதில்லை. அவன் ஒவ்வொருவரும் இயல்பாக நிரைகொண்டதைத்தான் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொருவர் அகத்திலும் முறைமை என ஒன்று உள்ளது. அதை எவருமே உணராதது போல தோன்றும், ஆனால் அது மீறப்படுமென்றால் அவர்கள் நிலைகுலைவார்கள்.

குண்டாசி அந்த நிரைநகர்வில் கால்தடுமாறியவன் போல பின்னடைந்து நகுலனின் அருகே வந்தான். அவன் உடல் தன்னுடன் முட்டிக்கொண்டதும் நகுலன் புன்னகைசெய்தான். குண்டாசி நாணியதுபோல புன்னகைசெய்து “இந்தச் சடங்குகள் எனக்கு ஒப்பவில்லை மூத்தோரே” என்றான். நகுலன் “நாம் இளையோர் என்பதனால் பின்னால் நின்றிருக்கமுடிகிறது” என்றான். குண்டாசி புன்னகைத்தபின் பின்னால் வந்த பீமனை கண்டான். அவன் விழிகள் மாறின.

துருபதன் இடைநாழியை அடைந்ததும் மங்கல இசைக்கலன்கள் இமிழத்தொடங்கின. இருபக்கமும் நின்ற சேவகர்களும் சூதர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். குரவையொலி எழுப்பிய அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் முன்னால் செல்ல துருபதனும் தருமனும் விதுரரும் சீர்நடையிட்டு பின்தொடர்ந்தனர். அவர்கள் முன் காவலர்கள் படைக்கலம் தாழ்த்தினர்.

நகுலன் ஆர்வமற்று நோக்கியபடி பின்னால் சென்றான். அவனுக்குப்பின்னால் பெரிய திரை போல பீமனின் மஞ்சள்நிறமான உடல் அசையக்கண்டு திரும்பி அண்ணாந்து நோக்கி புன்னகைத்தான். பீமனும் புன்னகைத்து விழிகளை சற்றே அசைத்தான். பேரமைச்சர் கருணரும் படைத்தலைவர் ரிஷபரும் வந்து துருபதனை எதிர்கொண்டனர். முதுநிமித்திகர் பத்ரர் கீழே அவரது மாணவர்களுடன் நின்றிருந்தார்.

மங்கல இசைக்கலன்கள் முழங்க மறுபக்கம் இடைநாழியில் இருந்து அகலியையும் பிருஷதியும் திரௌபதியும் முழுதணிக்கோலத்தில் மங்கலச்சேடியருக்குப்பின்னால் மெல்ல நடந்துவந்தனர். அவர்கள் இடப்பக்கம் சேர்ந்து நிற்க இசைச்சூதர் மட்டும் வந்து பிறருடன் இணைந்தனர்.

பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் இளவரசர்கள் சுமித்ரனும் யுதாமன்யுவும், விரிகனும் வந்து தங்கள் வாள்களை உருவி காலடியில் தாழ்த்தி வணங்கி விதுரரை வரவேற்றனர். அதன்பின் அரசியரும் இளவரசியரும் வந்து வணங்கி வாழ்த்துபெற்றனர். நகுலன் சலிப்புடன் கால்களை மாற்றிக்கொண்டான். மீண்டும் மீண்டும் ஒரே செயல்கள், ஒரே தாளம். வாழ்நாளெல்லாம் அதை நடிப்பவர்களே அரசர்களாக முடியும்.

காலையொளி விரியத்தொடங்கிய முற்றத்தில் பந்தங்கள் மஞ்சள்நிறக் கொடிகள் போல துடித்துக்கொண்டிருந்தன. நகுலனின் மணத்தை அறிந்த குதிரைகளில் ஒன்று மூக்கை விடைத்து ப்ர்ர்ர் என ஒலியெழுப்ப இன்னொரு பெண்குதிரை முன்காலால் தரையைத் தட்டியது. அவன் திரும்பி பீமனை நோக்க அவர்கள் புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

முற்றத்தில் கங்கைநீர்க்குடங்களுடன் நின்றிருந்த முதுவைதிகர் தௌம்யரும் அவரது ஏழுமாணவர்களும் வேதம் ஓதியபடி வந்து மாமரத்திலையில் நீர் தொட்டுத் தூவி வாழ்த்தினர். பீமன் நகுலனின் தோளில் கையை வைத்து “சக்ரவர்த்திகளுக்குரிய வழியனுப்புதலை ஒழுங்கமைத்திருக்கிறார்கள் இளையோனே” என்றான். “ஆம், அது அஸ்தினபுரிக்கு ஒரு செய்தி” என்றான் நகுலன். “அதை தெளிவாகவே துருபதன் சொல்லியும் விட்டார்.”

முரசுகளும் கொம்புகளும் மங்கலப்பேரிசையும் கலந்த ஒலிக்குள் சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்துகொண்டிருந்தன. வேதத்தூய்மைக்குப்பின் விதுரர் முற்றத்தில் இறங்கியபோது காவல் கோட்டங்களின் மேல் பெருமுரசங்கள் முழங்க கொம்புகள் இணைந்துகொண்டன. பாஞ்சாலனின் இளவரசர்கள் விதுரரைப் பணிந்து வாழ்த்துபெற்றனர். தருமன் திரும்பி நோக்க சகதேவனும் நகுலனும் முன்னால் சென்று விதுரரின் கால்களைப் பணிந்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அர்ஜுனனும் பீமனும் பணிந்தனர்.

குண்டாசி சகதேவனையும் நகுலனையும் அர்ஜுனனையும் பீமனையும் தருமனையும் முறைப்படி வணங்கினான். கடுங்குளிரில் நிற்பவன் போல அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. உதறும் கைகளால் கச்சையை பற்றிக்கொண்டான். அவமதிப்புக்குள்ளானவன் போல, அங்கிருந்து ஓடித்தப்ப விழைபவன் போல தெரிந்தது அவன் முகம்.

அவன் தேரில் ஏறிக்கொள்ள திரும்பியதும் பீமன் நகுலனை கைகளால் விலக்கி முன்னால் சென்று குண்டாசியை அள்ளி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். அவன் தலையை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு கைகளால் மெல்ல அடித்தான். குண்டாசி விம்மி அழத்தொடங்கினான். பீமன் அவனைப் பிடித்து விலக்கி ”குடிக்காதே” என்றதை உதடுகளின் அசைவால் நகுலன் அறிந்தான். “இல்லை மூத்தவரே...” என்றான் குண்டாசி. பீமன் அவனை மீண்டும் இறுக அணைத்தான். அவன் பீமனின் பிடியிலிருந்து நழுவி மீண்டும் அவன் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தலைகுனிந்து கண்ணீருடன் தேரில் ஏறிக்கொண்டான்.

தருமன் மெல்லிய கடுகடுப்புடன் பீமனிடம் ஏதோ சொல்ல அவன் பின்னால் சென்றான். குண்டாசி ஏறிய தேர் சகட ஒலியுடன் எழுந்து முன்னால் சென்றது. தருமன் குனிந்து தாள் பணிந்ததும் விதுரர் மெல்லிய உதட்டசைவுடன் அவனிடம் ஏதோ சொன்னார். அவன் தலையசைத்தான். துருபதனை வணங்கி விடைகொண்டு தேரில் ஏறிக்கொண்ட விதுரர் விழிசரித்து நகுலனை நோக்கி தன்னுடன் ஏறிக்கொள்ளும்படி கைகாட்டினார். ஒருகணம் திகைத்தபின் நகுலன் பீமனை நோக்கிவிட்டு தேரில் ஏறிக்கொண்டான்.

விதுரர் தேர்த்தட்டில் அமர்ந்து களைத்தவர்போல கால்களை நீட்டிக்கொண்டார். பெருமூச்சுடன் வெளியே கடந்துசெல்லும் காம்பில்யத்தின் அரண்மனை வரிசையையும் காவல்மாடங்களையும் எழுந்து வந்த சிவந்த கல்பரப்பப்பட்ட தேர்ச்சாலையையும் இருமருங்கும் இருந்த மரத்தாலான மூன்றடுக்கு மாளிகைகளையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவரது முகத்தின் ஒளிமாறுதல்களை நோக்கியபடி நகுலன் அமைதியாக இருந்தான்.

குதிரைக்குளம்படிகளின் சீரான தாளம் நகுலனை அமைதிகொள்ளச் செய்தது. அவன் தன் முன் ஆடும் திரைச்சீலையை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கரியநிறமான குதிரைகளின் பின்தொடைகள் கரிய மெழுகு போல பளபளத்து அசைந்துகொண்டிருந்தன. விதுரர் பெருமூச்சுவிட்டு அசைவதைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். “நீ என்ன எண்ணுகிறாய்?” என்று விதுரர் கேட்டது என்ன என்று அவனுக்குப்புரிந்தது. ”இங்கு மூத்தவர் அரசருக்கு நிகரானவர் என்கிறார்” என்றான். “மூத்த கௌரவரை ஒருபோதும் பாஞ்சாலம் ஏற்காது என்று அதற்குப்பொருள்.”

“ஆம், அதைத்தான் சொல்கிறார்” என்றார் விதுரர். “அதைத்தான் நான் மாமன்னரிடம் சொல்லவேண்டு.ம்” தாடியை கையால் வருடியபின் “அஸ்தினபுரி பாஞ்சாலத்தை இன்று எவ்வகையிலும் தவிர்க்கமுடியாது. ஒரு போரில் பாஞ்சாலம் நம்மிடமிருந்து விலகி நிற்குமென்றால் நமக்கு படைவல்லமையே இல்லையென்றாகும்” என்றார். அவர் பேசுவதற்காக நகுலன் காத்திருந்தான்.

“எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. துருபதன் எண்ணுவது என்ன? நீங்கள் இங்கே எத்தனைகாலம் இருக்க முடியும்? இங்கே எளிய மணமுறை இளவரசனாக இருக்கவே தருமன் எண்ணியிருந்தான். தருமனுக்கு அளிக்கும் அரசச்சீர்கள் மூலம் அதை முடியாதென்று ஆக்கிவிட்டிருக்கிறார். அரசனுக்குமேல் ஓர் அரசனாக இங்கே அவன் நெடுநாள் நீடிக்கமுடியாது.” கைகளை விரித்து “அதைத்தான் இறுதியாக தருமனிடம் சொன்னேன், நிலமில்லாது இந்நகர்விட்டு நீங்காதே என்று” என்றார்.

மீண்டும் தன் எண்ணங்களில் மூழ்கி வெளியே நோக்கி அமர்ந்திருந்தார். வணிகவீதிகள் கடந்துசென்றன. அப்போதுதான் கடைகளின் பலகையடுக்குக் கதவுகளைத் திறந்து தோல்கூடாரங்களை முன்னால் கட்டிக்கொண்டிருந்தார்கள். பொதிகளுடன் வந்த அத்திரிகள் கடைகளை ஒட்டிய சிறிய முற்றங்களில் முதுகோடு முதுகு ஒட்டி மூன்றுகால்களில் தலைதொங்க நின்று துயின்றன. ஒரு காற்று எழ அங்காடியின் அனைத்துக்கொடிகளும் சிர்ர்ர் என்ற ஒலியுடன் துடித்தன.

எதிரே வந்த யானைக்கூட்டத்துக்காக தேர் சற்று நின்றது. பொறுமையிழந்த குதிரை காலால் செங்கல்தரையை தட்டியது. கையில் சங்கிலியுடன் கங்கையில் நீராடிவந்த பன்னிரு யானைகள் கரிய மதில்சுவரென தெரிந்து இருள் அசைவதுபோல கடந்துசென்றன. சங்கிலிகளின் எடைமிக்க கிலுங்கலோசை கேட்டுக்கொண்டிருந்தது. முதல் பாகன் “சலதி ஹஸ்தி” என்று கூவினான். புறாக்கூட்டம் காற்றில் பிசிறிய சிறகுகளுடன் வளைந்து வந்து சிறிய சாலையில் அமர்ந்து மணிநிறக் கழுத்துக்களில் வண்ணங்கள் கலந்து மாற குனிந்து கொத்தத் தொடங்கியது. சிறிய நகங்களைப்போன்ற அலகுகள். குன்றிமணிக் கண்கள். இரும்புத்தகடு உரசுவதுபோன்ற குரல்கள்.

மீண்டும் தேர் கிளம்பியதும் விதுரர் திரும்பிப்பாராமல் “இன்றுமுதல் நீ அல்லவா?” என்றார். அவன் உடல் உலுக்கிக்கொண்டது. “பாண்டவர்களில் இன்னொரு கரிய அழகன்” என்றபின் “எதையும் எண்ணாமல் உன்னை ஒப்படைத்துவிடு” என்றார். “ஆம் அமைச்சரே” என்றான். “ஆடியும் சூரியனே” என்றபின் விதுரர் தலையை ஆட்டினார். “தெய்வங்கள் ஆடும் நாற்களம் என்று மானுட அகத்தை வியாசர் சொல்கிறார். அதில் மிகப்பெரிய காய் காமமே” என்றபின் தான் சொன்னவற்றை தானே எண்ணிப்பார்ப்பவர் போல உதடுகளை மெல்ல அசைத்தபின் “நீ இங்கிதம் அறிந்தவன். உனக்கு சொல்லவேண்டியதே இல்லை” என்றார்.

கங்கை அணுகும் நீர்மணம் காற்றில் எழுந்தது. நீரிலிருந்து வந்த கொக்குகள் சாலைக்குக் குறுக்காகப் பறந்து சென்று தாழ்வான பண்டகசாலைகளின் கூரைமேல் அமர்ந்தன. சாலை சரிந்து சென்றதனால் தேரின் பின்தடி சகடங்களை உரசி ஒலியெழுப்பியது. பின்னர் பெருந்துறையை நோக்கித் திறக்கும் கோட்டைவாயிலும் அதன் மேலிருந்த காவல்மாடங்களும் தெரிந்தன. பெருவாயில் செங்குத்தாக எழுந்த ஒளிமிக்க தடாகம் போலிருந்தது..

அவர்கள் அதை அணுகியபோது கோட்டைமேலிருந்த பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. கோட்டைவாயிலைக் கடந்ததுமே ஒளிபரவிய கங்கை நீர்ப்பரப்பின்மேல் நூற்றுக்கும் மேற்பட்ட கலங்களும் அம்பிகளும் நாவாய்களும் உருக்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி நின்றிருந்த துறைமுகப்பு ஓர்அலைநகரம் என கொடிகளும் பாய்களும் வணிகர்களின் ஆடைகளுமாக வண்ணங்கள் கொப்பளிக்க ஒட்டுமொத்தப் பேரோசையுடன் கண்முன் எழுந்து விரிந்தது.

காம்பில்யத்தின் பதினெட்டு துறைமேடைகளிலும் கலங்கள் அணுகியிருந்தன. கொடிமரங்களில் கட்டப்பபட்ட பாய்கள் காற்றில் அடிக்கும் ஒலியும் துறைமேடைக்கு அடியில் பெரிய மரக்கால்களில் அலைகள் சிதறும் நீரொலியும் சகடங்கள் மரமேடையில் ஓடும் ஒலியும் அத்திரிகளின் குளம்படியோசைகளும் அப்பால் யானைகளால் சுழற்றப்பட்ட சுமைசக்கரங்களின் உரசொலியும் கலந்து சூழ்ந்தன. தலைக்குமேல் எழுந்த ஏழு துலாத்தடிகள் தங்கள் அச்சுமேடையில் சுழன்றிறங்கி கலங்களில் இருந்து பொதிகளைத் தூக்கி கரைசேர்த்தன. கலங்களை இணைத்த மரப்பாலங்கள் வழியாக உணவேந்திய எறும்புகள் போல அத்திரிகள் பொதிகளுடன் உள்ளே சென்றுகொண்டும் மீண்டுகொண்டும் இருந்தன.

குண்டாசியின் தேர் நின்றிருந்தது. அவன் இறங்கி துறைமேடையின் அருகே அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் நின்ற பெரிய கலம் நோக்கி சென்றான். அவனுடைய மெலிந்த உடலில் ஆடை படபடத்தது. அவனுடன் குனிந்து பேசியபடி இரு சேவகர் சென்றனர். இருவர் பறக்கும் ஆடைகளுடன் தேர் நோக்கி வந்தனர். ஈரப்பாசி மணத்துடன் நீர்ப்பிசிறுகள் எழுந்து வந்து முகத்தை நனைக்கத் தொடங்கின. துறைமேடையில் இருந்து விலகிய அஸ்தினபுரியின் கலம் ஒன்று யானைபோல பிளிறியபடி ஒற்றைப் பாயை விரித்து நாய்ச்செவி என சற்றே திருப்பிக்கொண்டு காற்றை வாங்கி விலகிச்சென்றது.

பிளிறியபடி பாஞ்சாலத்தின் கலம் ஒன்று அமரமுனையைத் திருப்பி அலையில் எழுந்தமைந்து துறைமேடை நோக்கி வந்தது. அமரமுனையில் கொடிகளுடன் நின்றிருந்த மூவர் அவற்றை வீசினர். துறைமேடையில் நின்றிருந்த துறைச்சேவகர் கொடிகளை வீசியபடி ஓடி விரிந்தனர். கொழுத்த வெண்ணிறக் காளைகளால் இழுக்கப்பட்ட இரண்டு பொதிவண்டிகள் ஓசையுடன் மரமேடைமேல் ஏறின. மூக்குக் கயிறு இழுக்கப்பட்ட காளைகள் மூக்கைத்தூக்கி தலையை வளைக்க சகடங்கள் ஓசையுடன் ஒலிக்க வண்டிகள் தயங்கின.

நகுலன் அவிழ்த்து நிறுத்தப்பட்ட குந்தியின் ரதத்தை கண்டான். அதன் கொடி தும்பியின் சிறகென விர்ர்ர் என பறந்துகொண்டிருக்க சுற்றிக்கட்டப்பட்ட செம்பட்டுத்திரைச்சீலைகள் அதிர்ந்தன. அதன் இரண்டு வெண்குதிரைகளும் அப்பால் கட்டுத்தறிகளில் மூக்கில் தொங்கிய மரவுரிப்பைகளில் இருந்து கொள் மென்றுகொண்டிருந்தன. நகுலன் திரும்பி விதுரரை பார்த்தான். அவர் அதை பார்த்து விட்டார் என்று தோன்றியது. அவரது கண்களைப் பார்த்ததும் குந்தி அங்கே வருவதை அவர் முன்னரே அறிவார் என்று அறிந்துகொண்டான்.

சேவகர்கள் படியை அமைக்க நகுலன் இறங்கினான். விதுரர் இறங்கி காற்றில் எழுந்த சால்வையை சுற்றிக்கொண்டபின் மெல்லிய குரலில் “அரசியார் எங்கே?” என்றார். “சுங்கமாளிகையில் இருக்கிறார்கள்” என்றான் சேவகன். தலையசைத்துவிட்டு திரும்பி நகுலனிடம் “வா” என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றார். அவன் திரும்பி பாஞ்சாலத்தின் கலம் நோக்கி நீண்டுசென்ற பாதைப்பாலத்தை ஒருமுறை நோக்கிவிட்டு தொடர்ந்தான்.

பாஞ்சாலத்தின் கொடிபறந்த சுங்க மாளிகையின் முன்னால் சுங்கநாயகம் தன் இரு துணையாளர்களுடன் நின்று வணங்கி வரவேற்றார். நகுலன் வாழ்த்துச் சொன்னதும் அவரே உள்ளே அழைத்துச்சென்றார். கொம்பரக்கும் தேன்மெழுகும் கலந்த மணம் எழுந்த அறைகளில் பலர் சிறிய பீடங்களில் அமர்ந்து ஓலைகளில் எழுத வேறுசிலர் அவர்களுக்கு கணக்குகளை சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் தலைதூக்காவிட்டாலும் அவர்களின் உடல்கள் நோக்கின.

சிறிய கதவைத் திறந்து உள்ளே செல்லும்படி சொன்னார் சுங்கநாயகம். நகுலன் தயங்கினான். வா என தலையை அசைத்துவிட்டு விதுரர் உள்ளே நுழைய தலையைக் குனித்து நகுலனும் உள்ளே சென்றான். கங்கையின் ஒளியைக் கண்ட கண்களுக்கு அறையிருட்டு பழக சற்று நேரமாகியது. வெண்ணிற ஆடையுடன் பீடத்திலிருந்து எழுந்த குந்தியின் முகம் அதன்பின்னரே தெளிந்தது.

விதுரர் அமர்ந்து கொண்டார். குந்தி ஒருகணம் நகுலனை திரும்பி நோக்கிவிட்டு தன் பீடத்தில் அமர்ந்து முகத்தின்மேல் மேலாடையை இழுத்துவிட்டாள். நகுலன் கைகளைக் கட்டியபடி சுவர்மேல் சாய்ந்து நின்றான். வெளியே ஒரு வண்டியின் சகட ஒலி கேட்டது. அக்கட்டடம் அதற்குள் உள்ளவர்களின் பேச்சொலிகளின் மெல்லிய அதிர்வால் நிறைந்திருந்தது. சாளரத்திரைச்சீலை கங்கைக்காற்றில் உதறிக்கொண்டது.

“நான் சென்று செய்தியை சொல்கிறேன்” என்று விதுரர் தொடங்கினார். “நான் வந்தது நடக்கவில்லை. இனிமேல் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.” குந்தி தலைகுனிந்தே அமர்ந்திருந்தாள். அவள் தன்னை நோக்கிய பார்வையில் வியப்பு இருக்கவில்லை என்பதை நகுலன் உணர்ந்தான். சாளரம் வழியாக அவன் வருவதை அவள் நோக்கியிருக்கவேண்டும்.

விதுரர் ”ஏதேனும் செய்தி உண்டா?” என்றார். குந்தி தலையை அசைத்தாள். “பார்க்கவேண்டும் என்று சொன்னதாக தூதன் சொன்னான். தாங்கள் இடும் பணியை தலைதொட்டுச் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.” குந்தி பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தபோது குழலில் வழுக்கி தலையாடை பின்னால் சரிய அவளுடைய வெண்ணிறமான முகம் தெரிந்தது. கண்களுக்குக் கீழே சதை சற்று சுருங்கி மடிந்திருந்தது. உதட்டின் இரு எல்லையிலும் இரு மடிப்புகள். கழுத்திலும் கன்னங்களிலும் நீல நரம்புகள் தெரிந்தன.

“நான் சொல்வதென்ன? உங்களுக்கே தெரியும்” என்றாள் குந்தி. “உங்களை நம்பி இங்கிருக்கிறோம்... நானும் என் மைந்தரும்” அவள் குரல் உடைந்தது. உதடுகளை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்தபோது கண்ணீர் மூக்கு நுனியில் ததும்பிச் சொட்டியது. மேலாடையால் கண்ணீரைத் துடைத்து அழுகையை அடக்க முயன்றாள். கழுத்தின் வெண்ணிறச் சதை அதிர்ந்தது. பின் மீண்டும் ஒரு விசும்பல்.

நகுலன் திரும்பி வெளியே செல்லும்பொருட்டு சற்றே அசைந்தான். விதுரர் அவனை நோக்கி நிற்கும்படி விழியசைத்தார். அவன் மீண்டும் சுவரில் சாய்ந்துகொண்டான். மெல்லிய சீறல் ஒலிகளுடன் குந்தி அழுதாள். அவள் நெற்றியிலிருந்து மேலேறிய வகிடு வெண்மையாக இருந்தது. இருபக்கமும் ஓரிரு நரையிழைகள் சுருண்டு நின்றிருந்தன. காதோரம் இறங்கிய மென்மயிரிலும் நரை. அவளை அணுக்கமாக நோக்கியே நெடுங்காலம் ஆயிற்று என நகுலன் எண்ணிக்கொண்டான்.

குந்தி மெல்ல அழுது அடங்கினாள். மேலாடையால் முகத்தை அழுத்தித் துடைத்தபோது கன்னங்களும் மூக்கும் குருதிநிறம் கொண்டன. விதுரர் கைகளைக் கட்டியபடி அவளையே நோக்கி அசையாமல் அமர்ந்திருந்தார். அவள் நிமிர்ந்து செவ்வரி ஓடிய விழிகளால் நோக்கி “நீங்கள் செல்லலாம் அமைச்சரே. அஸ்தினபுரியின் அரசருக்கும் அரசிக்கும் என் வணக்கங்களை தெரிவியுங்கள்” என்றாள்.

விதுரர் எழுந்து தலைவணங்கியபின் நகுலனிடம் செல்வோம் என்று தலையசைத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல் வெளியே சென்றார். குந்தி தன் முகத்தை ஆடையால் மூடிக்கொண்டதனால் நகுலன் அவள் முகத்தை பார்க்கமுடியவில்லை. தலைவணங்கிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே வந்தபோது விதுரர் விரைந்த நடையில் நெடுந்தூரம் சென்றுவிட்டிருந்தார்.

பகுதி 4 : ஆடிச்சூரியன் - 2

மிருஷை நகுலனின் குழலை மூங்கில்களில் சுற்றி சுழற்றியபடி “அணிகொள்ளுதலைப்பற்றி உங்கள் மூத்தவர் மூவரிடமும் பேசினேன் இளவரசே” என்றார். நகுலன் அவரை நோக்கி விழிகளை தூக்கினான். அவரது மெல்லிய விரல்கள் அவன் தலையில் சிட்டுகள் கூட்டில் எழுந்தமர்ந்து விளையாடுவது போல இயங்கின. அவரது பணிக்கேற்ப அவரது உடல் வளைந்து அவன் உடலில் உரசிக்கொண்டிருந்தது.

மிருஷை “அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்து கொண்டிருந்தனர்” என்றார். நகுலன் புன்னகையுடன் “ஆகவே?” என்றான். “தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” நகுலன் சிரித்துக்கொண்டு “நான் அப்படியெல்லாம் சிந்திப்பதில்லை. பெரும்பாலும் சிந்தனையற்ற விலங்குகளுடன்தான் என் வாழ்க்கை” என்றான்.

“குதிரைகள் அணிசெய்ய விழைந்தால் எதற்காகவிருக்கும்?” என்றாள் கலுஷை. காருஷை சிரித்துக்கொண்டு “அய்யோ, இதென்ன வினா?” என்றாள். “சொல்லுங்கள்” என்றாள் கலுஷை நகுலனின் குழலை தன் கைகளால் அள்ளியபடி. நகுலன் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “இதை நான் குதிரைகளில் கண்டிருக்கிறேன். அக்குலத்தில் ஆண்மையும் விரைவும் மிக்க குதிரை ஒன்றிருக்கும். பிற குதிரைகள் அக்குதிரையின் நடையையும் அசைவுகளையும் பிரதியெடுக்க முயலும்.” என்றான். “குறிப்பாக குட்டிக்குதிரைகள்...”

குதிரைகளைப்பற்றி பேசத்தொடங்கியதும் அவனுக்கு சொற்கள் எழுந்தன. “நான் இதைக் கண்டது சாலிஹோத்ரசரஸில். அங்கே ஆக்னேயன் என நான் பெயரிட்டிருந்த ஓர் ஆண்குதிரை எண்பது குதிரைகள் கொண்ட குலமொன்றின் முதல்வனாக இருந்தது. அது தாவும்போது குளம்புகளில் அடிபட்டுவிட்டதனால் அதன் நடை சற்று கோணலாகியது. அக்குலத்தின் இளங்குதிரைகள் அனைத்துக்கும் அந்தக் கோணல்நடை வந்ததை கண்டேன்...”

அவன் ஊக்கத்துடன் குரலை உயர்த்தி “அதில் கூர்ந்து நோக்கும்படி ஒன்று உள்ளது. காலில் அடிபட்டு கோணலாகியதும் ஆக்னேயன் ஆற்றலை இழக்கவில்லை. மேலும் விரைந்தோடி ஆற்றலை பெருக்கிக் கொண்டது. ஆண்மை என்பது குளம்புகளில் இல்லை. தொடைச்சதைகளில் இல்லை. குதிரையின் உள்ளத்தில் உள்ளது என்று அறிந்துகொண்டேன். அந்த தனித்தன்மை அதன் சிறப்பாற்றலாக ஆகியது. அது ஓடுவதைக்கொண்டு அதன் திசையை கணிக்கமுடியாமலாகியது. அநந்த் திறனை அக்குலமே விரைவில் அடைந்தது...”

"ஆம், மானுடர்களாக இருந்தால் அக்குதிரைக்குலம் ஒரு பேரரசை நிறுவ அது ஒன்றே போதிய அடிப்படையாக ஆகும்” என்றார் மிருஷை. கலுஷையும் காருஷையும் கிளுகிளுத்துச் சிரித்தனர். சிரிக்காமல் ”குதிரைகளிலும் அரசுகள் உள்ளன” என்றான் நகுலன். “ஒரு புல்வெளியில் ஒருவகைக் குதிரையே ஆளுகிறது. அது ஒரு தனிக்குலம். பிற குதிரைகள் அவற்றுக்கு ஒதுங்கி வழிவிடுகின்றன. அவை வருகையில் தலைதாழ்த்தி மெல்ல கனைத்து பணிகின்றன. எங்கு குலமென்று ஒன்று உண்டோ அங்கே அரசும் உண்டு.”

“ஆகவே குதிரைகள் அணிசெய்வதென்றால் மேலும் ஆற்றல்கொண்ட குதிரையென தங்களை காட்டிக்கொள்ள விழையும் இல்லையா?" என்றார் மிருஷை. நகுலன் “ஆம், குறிப்பாக ஆற்றல்கொண்ட இன்னொரு குதிரையாக ஆக விரும்பும்” என்றான். மிருஷை “இளவரசே, சமையம் என்பது அதுவே அல்லவா? ஒருவர் தன்னை விடப்பெரிய ஓர் ஆளுமையை தன்மேல் ஏற்றிக்கொள்வதுதானே அது?” என்றார். நகுலன் சிந்தனையுடன் “அதனால் என்ன பயன்? நான் கதாயுதம் எடுத்தேனென்றால் பீமசேனராக ஆகிவிடமுடியுமா என்ன?”

“முடியாது. ஆனால் பீமசேனர் என உங்களை பிறர் எண்ணச்செய்ய முடியும்.” என்றார் மிருஷை. ”சொற்கள் ஒலித்ததுமே பொருளாகி எண்ணமாகி நினைவாகி அழிந்துவிடுகின்றன. அணியம் காலத்திலும் வெளியிலும் அவ்வண்ணமே நின்றிருக்கிறது. கலையாது மறையாது. மீண்டும் மீண்டும் அது கண்ணுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதுவாக காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை அணியுங்கள். அது உங்களை இடைவெளியில்லாமல் அறிவித்துக்கொண்டே இருக்கும்.”

மிருஷை அவன் குழலை சுருட்டி முடித்து குழல்களின் முனைகளில் சூடான நீராவிக்குழாய்களை பொருத்தினார். மூங்கில்களில் வெம்மை எழத்தொடங்கியது. ”குதிரைகள் என்றாவது தங்கள் வால்களை சுருட்டிவிட விழையுமா என எண்ணிக்கொண்டேன்” என்றான் நகுலன் சிரித்தபடி. மிருஷை “எண்ணச்செய்ய முடிந்தால் எங்களில் ஒரு பிரிவு உருவாகும்” என்றார். “மானுடரன்றி எவ்வுயிரும் அணிசெய்துகொள்வதில்லை” என்றான் நகுலன். “மயிலுக்கும் கிளிக்கும் பருவங்களை ஆக்கும் தெய்வங்கள் அணிசெய்கின்றன” என்றார் மிருஷை.

வாயிலில் சிசிரன் வந்து “இளவரசி திரௌபதி வருகை” என்றான். மிருஷை திகைத்து “இப்போதா? இன்னமும் மாலையே ஆகவில்லை...” என்று சொல்ல “இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சிசிரன். “இங்கா? இங்கே...” என்று மிருஷை இருவரையும் பார்த்தபின் “இங்கே எதற்கு?” என்றார்.. சிசிரன் புன்னகையுடன் “அணிசெய்வதில் அவரது கைகளும் தேவையென உணரலாம் அல்லவா?” என்றபின் திரும்பிச்சென்றான். ”இங்கு எதற்கு வருகிறார்கள்?" என்று கலுஷை வியந்தாள். காருஷை ”எதற்காக என்றாலும் நமக்கு என்ன?“ என்றாள் கழுத்தை நொடித்தபடி. “நாம் பெண்களுக்கு அணிசெய்ய அனுமதிக்கப்படுவதேயில்லை.”

திரௌபதியின் அணிகளின் ஒலி முன்னரே கேட்டது. கைவளைகளின் கிலுக்கத்துடன் அவள் கதவைத்திறந்து உள்ளே வந்தபோது சமையர்கள் மூவரும் நடனம்போல உடல் வளைத்து வணங்கினார்கள். திரௌபதி மிருஷையிடம் “நான் முன்னரே வந்துவிட்டேன் சமையரே... அங்கே அரண்மனையில் இன்று சடங்குகள் என ஏதுமில்லை. தங்களைப்பற்றி அறிந்துள்ளேன். தங்கள் பணியை காணலாமென்ற எண்ணம் வந்தது” என்றபின் அருகே வந்து இடையில் கைவைத்து நின்று நகுலனை நோக்கி நின்றாள். “எல்லா பெண்களையும்போல எனக்கு அணிகளை காண்பது பிடிக்கும்.”

மிருஷை “ஆம், அவை மானுட உள்ளத்தின் மிக அழகிய சில தருணங்களை புறப்பொருளில் சமைத்தவை” என்றபின் “ஆண்களின் அணிகள் சற்று வேறானவை இளவரசி” என்றார். “அவற்றில் ஆண்மை இருக்குமோ?” என்றாள் திரௌபதி. “இல்லை, அணிகளில் ஆண்களும் பெண்களும் உண்டு. இரு பாலினருமே அவற்றை அணிகிறார்கள். தோள்வளைகள் எவர் அணிந்தாலும் ஆண்மைகொண்டவை. தொடைச்செறிகளும் கச்சைகளும் ஆண்கள். கழலும் கணையாழியும் குழையும் ஆண்களணிந்தாலும் பெண்மையின் குழைவுள்ளவை.”

திரௌபதி புன்னகை செய்தாள். “ஆண்கள் எதற்காக பெண்அணிகளை அணியவேண்டும்?” என்றாள். “இரண்டும் உண்டு இளவரசி. மானுட உடலில் ஆண்மைகொண்ட உறுப்புகள் உண்டு. பெண்மை கொண்ட உறுப்புகளும் உண்டு. ஆணிலானாலும் பெண்ணிலானாலும் தோள்கள் ஆண்மை கொண்டவை. அவற்றை தோள்வளைகளை அணிவித்து மேலும் ஆண்மிடுக்கு கொள்ளச்செய்கிறோம்.” புன்னகையுடன் “ஆனால் கணுக்கால்களும் ஆண்மை கொண்டவையே. அவற்றில் சிலம்பையோ கழலையோ அணிவித்து சற்று பெண்மையை கலக்கிறோம்” என்றார்.

“ஏன்?” என்று அதுவரை இருந்த புன்னகை மறைய கண்கள் சுருங்க திரௌபதி கேட்டாள். “எவர் சொல்ல முடியும்? அதை அறிய மானுடக்காமத்தை முழுதறியவேண்டும்... மானுடவிழிகளில் அழகுணர்வாக திகழும் தெய்வங்கள் ரதியும் மதனும் அல்லவா?” திரௌபதி தலையசைத்து “ஆம்” என்றாள். ”பெண் அணியும் அணிகளிலேயே சரப்பொளி பெண்மைகொண்டது. பதக்கமாலை ஆண்மை கொண்டது. அவை நன்கு சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும் என்கின்றன சமையநூல்கள்” என்றார் மிருஷை.

திரௌபதி நகுலனின் குழல்களை சுற்றியிருந்த மூங்கில்களை அப்போதுதான் கண்டாள். ”அது என்ன குழலில்?” என்றாள். “சுருள்களுக்காக இளவரசி” என்றார் மிருஷை. “தங்கள் குழல் சுருளானது என்பதனால் இதை கண்டிருக்கமாட்டீர்கள்.” திரௌபதி “தேவையில்லை... சுருள்முடி அவருக்கு பொருந்தாது. காகச்சிறகு போன்ற நீள்குழலே அழகு” என்றாள். மிருஷை “அவரது குழல் மென்மையானது, எளிதில் சுருளும். சுருள் நீடிக்கவும் செய்யும்” என்றார். திரௌபதி கையை வீசி “தேவையில்லை. அதை நீள்கற்றைகளாக ஆக்குங்கள்” என்றபடி சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.

நகுலன் அவளை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவள் ஓரிரு அணிகளே பூண்டிருந்தாள். பட்டாடையின் பொன்னூல் பின்னல்களில் குதிரைகள் ஒன்றை ஒன்று கடந்து தாவிக்கொண்டிருந்தன. நகுலன் “அணிசெய்தலை கற்றிருக்கிறாயா?” என்றான். திரௌபதி “அணிக்கலை அறியாத பெண்கள் உண்டா?” என்றாள். மிருஷை திரௌபதி தன் அணிக்கலையில் தலையிட்டதை விரும்பாதவராக விரைந்து அவன் குழலில் இருந்து மூங்கில்களை எடுத்தபின் நறுமண எண்ணையைப் பூசி தந்தச்சீப்பால் சீவி நீட்டி நேராக்கினார். மெழுகு கலந்த குழம்பை குழலில் பூசி மீண்டும் மீண்டும் சீவியபோது குழல் ஒளியுடன் நீண்டு வந்தது.

“அதை இரு தோள்களிலும் விழும்படி போடுங்கள்” என்றாள் திரௌபதி. ”வகிடு தேவையில்லை. நேராக பின்னால் சீவி...” என்றாள். மிருஷை “ஆணை இளவரசி” என்றார். கலுஷை அவன் கைநகங்களை வெட்ட காருஷை கால்களின் கீழ் அமர்ந்தாள். திரௌபதி அவனையே தன் பெரிய விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் விழிகள் அவள் நோக்கை சந்தித்தபோது அவை தன்னைக் கடந்து நோக்குவதுபோல உணர்ந்தான்.

நறுவெந்நீரால் அவன் உடலை துடைத்து சுண்ணமும் சந்தனப்பொடியும் அணிவித்தனர். “நெற்றியில் மஞ்சள்நிறப்பிறை” என்றாள் திரௌபதி. “ஆணை இளவரசி” என்றார் மிருஷை. அவளே எழுந்து அருகே வந்து “மீசையை இன்னமும் கூராக்கலாமே” என்றாள். “அவரது மீசை மிகவும் மென்மையானது இளவரசி.” அவனை கூர்ந்து நோக்கி பின்பு “தேன்மெழுகிட்டு முறுக்கினால் கூராகுமல்லவா?” என்றாள். ”ஆம், ஆனால்...” என்று மிருஷை தயங்க “செய்யுங்கள்” என்று அவள் ஆணையிட்டாள்.

மிருஷை தலைவணங்கி “இளவரசி... தங்கள் ஆணைப்படி அணிசெய்கிறோம்” என்றதும் அதைப்புரிந்துகொண்ட திரௌபதி திரும்பி நகுலனை நோக்கி புன்னகை புரிந்துவிட்டு வெளியே சென்றாள். மூவரும் தங்கள் சொற்களை முழுமையாக இழந்தவர்கள் போல அணிசெய்கையில் மூழ்கினர். முடிந்ததும் கலுஷை ஆடியை எடுத்துக்காட்டினாள். நகுலன் புன்னகையுடன் தன் முகத்தை நோக்கி “யாரிவன்?” என்றான். “உங்களை விடவும் ஆற்றல் மிக்கவன்...” என்றார் மிருஷை. நகுலன் புன்னகைசெய்தான்.

எழுந்து தன் சால்வையை அணிந்தபடி “நன்றி சமையரே. இனிய சொற்களுக்காகவும்” என்றான். “அணிசெய்துகொண்டவர்களை மூன்றுதேவர்கள் தொடர்கிறார்கள் என்பார்கள். நெளிவின் தேவனாகிய நீர். துடிப்பின் தேவனாகிய எரி. ஒளியின் தேவனாகிய சூரியன். மூவரும் உங்களுடன் இருக்கிறார்கள்” என்றார் மிருஷை.

கூடத்தில் அணிப்பரத்தையரும் சூதர்களும் தரையில் அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டு நகையாடிக்கொண்டிருந்தனர். அவனைக்கண்டதும் ஒரு சூதர் எடுத்து அப்பால் வைத்த யாழ் 'தண்ண்' என ஒலித்து வண்டுபோல ரீங்கரித்துக்கொண்டே இருந்தது. அவன் அவர்களைக் கடந்து படி ஏறி மாடியை அடைந்தான்.

கிழக்கு உப்பரிகையில் திரௌபதி பீடத்தில் அமர்ந்து கங்கையை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் நெற்றியின் புரிகுழலின் நிழல் மூக்கின்மேல் ஆடியது. பக்கவாட்டில் அவள் விழிகளிரண்டும் வெளியே பதிந்திருப்பவை போல, இரு பெரிய நீர்க்குமிழிகள் என ஒளியுடன் தெரிந்தன. காலடி ஒலிகேட்டு திரும்பியபோது காதணிகள் கன்னத்தைத் தொட்டு அசைந்தன. அவன் தலைவணங்கியபின் அப்படியே நின்றான்.

திரௌபதி புன்னகையுடன் அவனையே நோக்கி சிலகணங்கள் இருந்தபின் எழுந்து “பாரதத்தின் நிகரற்ற அழகன் என்று உங்களை சூதர்கள் சொல்கிறார்கள்” என்றாள். “அது இமயம் உயர்ந்தது என்று சொல்வதைப்போன்ற சொல்” என்றாள். ”பெருவீரர்கள் எப்படியோ மிதமிஞ்சிய பயிற்சியால் உடலின் சமநிலையை இழந்துவிடுகிறார்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பும் முழுமைகொண்டவர் நீங்கள்.”

நகுலன் “நான் அரசகுடியில் பிறந்திருக்காவிட்டால் என்னை சூதர்கள் அழகன் என்று சொல்லியிருப்பார்களா?” என்றான். “ஆம், அரசர்களையே சூதர்கள் பாடமுடியும்...” என்றபின் திரௌபதி வாய்விட்டுச் சிரித்து “தாழ்வில்லை, தன்னடக்கத்துடன் இருக்கிறீர்கள்” என்றாள். நகுலன் அவளை அணுகி வந்து பீடத்தில் அமர்ந்தபடி “என்றும் இளையோனாக இருக்கும் நல்லூழ் கொண்டவன் அல்லவா நான்?” என்றான்.

திரௌபதி அவனருகே பீடத்தில் அமர்ந்தபடி. “உங்கள் இளையோன் உங்கள் வெண்ணிறப்படிமை போலிருக்கிறார்” என்று அவள் சொன்னாள். “வெண்ணிறத்தாலேயே ஒரு படி அழகு குறைந்துவிட்டார்.” நகுலன் “நாங்கள் இரட்டையர்” என்றான். “இளமையில் நான் அவனை நோக்கி திகைத்துக்கொண்டே இருந்தேன். இன்னொரு நான் ஏன் வெண்மையாக இருக்கிறேன் என்று.” திரௌபதி சிரித்து “இரட்டையராக இருப்பதைப்பற்றி என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. என்னைப்போல் இன்னொருவர் என்பதே தாளமுடிவதாக இல்லை.”

“மாறாக இன்னொரு நான் இருக்கிறேன் என்பது ஒரு பெரும் விடுதலை” என்றான் நகுலன். “வெளியே கிளம்பும்போது ஆடியில் நம் படிமையை விட்டுச்செல்வதுபோல. அச்சங்கள் எழும்போது எண்ணிக்கொள்வேன், நான் திரும்பாவிட்டாலும் இன்னொரு நான் இல்லத்தில் உள்ளேன் என்று.” சிரித்து “என்னை இருமுறை கொல்லவேண்டும் என்பதே எனக்களிக்கப்பட்ட பெரும் நல்லூழ் அல்லவா?” என்றான்.

திரௌபதி தன் கையின் வளையல்களை சுழற்றியபடி, “தாங்கள் புரவியியல் கற்றவர் என்கிறார்கள் சூதர்கள்” என்றாள். நகுலன் “ஆம், அதை இப்போது பாடல்களில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏழு வருடம் நான் சாலிஹோத்ரரின் குருகுலத்தில் இருந்தேன். அங்கே பெரும்புல்வெளி இருந்தது. அதில் காட்டிலிருந்து குதிரைக்குலங்கள் மேயவரும். அவற்றைக் கண்டு அவற்றின் மொழியையும் வாழ்வையும் கற்றேன். புரவிகளை நன்கறிந்தபின் நானறிந்தவை நூல்களில் உள்ளனவா என்று பார்த்துக்கொண்டேன், அவ்வளவே” என்றான்.

சற்று முன்னால் வந்து முகத்தை மடித்த கைவிரல்கள் மேல் வைத்தபடி “யானைகளில் பிடியே தலைமகள் என்றார்கள்” என்றாள் திரௌபதி. “குதிரைகளிலும் பெண்களே குலத்தை நடத்துகின்றன. ஆண்குதிரைகள் தனியர்கள்” என்றான் நகுலன். “ஒரு புரவியை எப்படி பழக்குவீர்கள்?” என்று அவள் தலைசரித்து கேட்டாள். அவள் உதடுகளின் உள்வளைவின் செம்மையை கன்னவளைவுகளின் ஒளியை மூக்கின்மேல் பரவியிருந்த மெல்லிய வியர்வையை கண்டான். “குதிரைகளைப் பழக்குவதென்பது நம்மை அவை ஏற்கும்படி செய்வதே.”

இடது கன்னத்தின் ஓரம் சற்றே மடிய, “உங்களை அவை ஏன் ஏற்கவேண்டும்?” என்றாள் திரௌபதி. “இளவரசி, குதிரைகள் விரைந்தோட விழைகின்றன, அவற்றின் குளம்புகள், சாட்டைக்கால்கள், நீள்கழுத்து, சுழலும் வால், பறக்கும் குஞ்சிமயிர் அனைத்துமே தெய்வங்கள் உணர்ந்த விரைவு என்பது விலங்குவடிவம் கொண்டு எழுந்தவை.. விரைவை அன்றி எதையும் புரவி ஏற்காது. புரவிக்கு அதன் விரைவுக்கு உதவுபவன் நான் என கற்பித்தலையே நான் புரவியணைதல் என்கிறேன்.”

திரௌபதி சிரித்தபோது அவள் வெண்பற்கள் சிவப்பு நிறமான ஈறுகளுடன் வெளித்தெரிந்தன. “புரவியின் மீது மனிதன் ஏறுவது அதன் விரைவைக் கூட்டும் என அதை நம்பவைக்கவேண்டும், இல்லையா?” என்றாள். ”கட்டுப்படுதல் என்பது ஒருவகை விரைவே என அதற்கு சொல்லவேண்டும்...” கண்களில் சிரிப்பு எஞ்சியிருக்க முகம் கூர்மைகொண்டது “அரியகலைதான் அது. ஆனால் இயல்வதே.”

“உண்மையிலேயே புரவியின் மீது ஏறும் மனிதன் அதன் விரைவை கூட்டுகிறான்” என்றான் நகுலன். அவன் சொற்களில் அகவிரைவு குடியேறியது. ”புரவி கட்டற்றது. கடிவாளமில்லாத குட்டிக்குதிரையைப்போல ஆற்றல் நிறைந்த விலங்கு இல்லை. ஆனால் அதனால் ஒரு நாழிகை தொலைவை ஓடிக்கடக்க முடியாது. நுரைதள்ள நின்றுவிடும். ஏனென்றால் அதன் சித்தம் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கும். செல்லும் வழியில் தேவையின்றி துள்ளும். திசைமாறி ஓடும். கடினமான பாதைகளை தெரிவு செய்யும்... நீர் தன் பாதையை தானே வகுக்கும் ஆற்றல் அற்றது என்பார்கள்... குதிரையும் அப்படித்தான்.”

நகுலன் தொடர்ந்தான் “பரிமேல் ஏறும் வீரன் அதன் ஆற்றல்களை தொகுத்து அளித்து அதன் பாதைகளையும் வகுக்கிறான். புரவியின் கண்களுடன் மனிதனின் கண்களும் சேர்ந்துகொள்ள அது அறியும் நிலம் இருமடங்கு ஆகிறது. இளவரசி, காட்டுப்புரவி என்பது வீசியெறியப்பட்ட அம்பு. மானுடன் ஏறிய புரவி வில்லால் தொடுக்கப்பட்ட அம்பு. அதை அப்புரவியே உணரும்படி செய்ய முடியும்.” அவள் அவனை புன்னகையுடன் நோக்கியபின் மீண்டும் சிரித்து “ஆனால் புரவிகளை அடித்தும் வதைத்தும் சேணமேற்கச் செய்வதையே நான் கண்டிருக்கிறேன்.”

“ஆம், அதைத்தான் பெரும்பாலும் செய்கிறார்கள். ஏனென்றால் குதிரைகள் கூட்டமாக வாழ்பவை. உடனுறை குலத்தை அவை உடலாலேயே அறிகின்றன. குதிரையின் உடலையே ஒரு பெரிய விழி என்று சொல்லலாம். விழிபோல அது எப்போதும் மெல்லிய துடிப்புடன் அசைந்து கொண்டிருக்கிறது. மிகமிக நுண்ணுணர்வுகொண்டது. அதற்கு மானுடன் முற்றிலும் அயலவன். அவன் தொடுகை அதை நடுங்கச் செய்கிறது. இளவரசி, கண்கள் மட்டும்தான் நாம் கைநீட்டும்போது தொடுவதற்குள்ளேயே அதிர்ந்து தொடுகையை உணர்பவை. இளம்குதிரையை தொட கைநீட்டும்போது கண்போல அதன் உடல் அதிர்வதை காணமுடியும்.”

நகுலன் தொடர்ந்தான் ”காட்டில் புரவியின் முதுகின்மேல் பாய்ந்தேறுவது வேங்கை மட்டுமே. அத்தனை புரவிகளும் தங்கள் முதுகின்மேல் வேஙகையின் நகங்களைப்பற்றிய அச்சத்தை பூசிக் கொண்டிருக்கின்றன. சிறிய ஒலியிலும் அசைவிலும் வேங்கையால் கிழிக்கப்பட்ட மூதாதைப்புரவிகள் அவற்றின் முதுகுகளை சிலிர்க்கச்செய்கின்றன. மேயும் காட்டுக்குதிரை அருகே ஒளிந்து நின்று ஒருமுறை கைசொடுக்கிநோக்கினால் இதை அறியலாம். அதன் முதுகில் வேங்கையெனும் எண்ணம் ஒருமுறை பாய்ந்துவிட்டிருக்கும். சிலிர்த்து கனைத்தபடி அது சில அடிகள் முன்னால் செல்லும்.”

“ஆகவே மானுடன் ஏறும்போது குதிரை வெருள்கிறது. பின்னர் கூருகிர்கள் அற்ற எளிய மானுடன் அவன் என அறிகையில் சினம் கொள்கிறது. தான் கட்டுப்படுத்தப்படுவதாக எண்ணுகிறது. வெல்லப்படுவதாக உணர்ந்து சீற்றம் கொள்கிறது. இளம்புரவியின் சீற்றம் எளியதல்ல. அதை தேர்ச்சியற்றவர் எதிர்கொண்டால் அக்கணமே கழுத்து முறிந்து உயிர்துறக்கவேண்டியிருக்கும்” நகுலன் சொன்னான். “யானைக்கும் காட்டெருதுக்கும் குதிரைக்கும் மட்டுமே கொலையின் இன்பம் தெரியும் இளவரசி. ஏனென்றால் அவை கொல்வதற்காகவே கொல்பவை. உண்ணும் சுவை அறியாதவை.”

“ஆகவே புரவியின் கொலைவிருப்பு மிக நுட்பமானது. அதை உணர்வதே புரவியியலின் உச்சஅறிதல்” என்றான் நகுலன். “புரவி தன் கொலைவிருப்பை தானே அறியாமல் தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது. தேன்துளிபோல, பாலாடைபோல ஒளிவிடும் இந்த உயிருக்குள் அப்படி ஓர் விருப்பு உண்டு என எவரும் எண்ணமாட்டார். விலங்குகளில் புரவியே தளிர். கொலை எனச் சொல்லும் எதுவும் அதன் உடலில் இல்லை. உகிர்கள், பற்கள்.. ஏன் கொம்புகள் கூட. புரவியின் கண்கள் மானுக்குரியவை. ஆண்புரவியில்கூட எப்போதுமுள்ள உணர்வென்பது கன்னியின் மிரட்சியே.”

“புரவி கொல்வதில்லை. அதனுள் வாழும் அந்த அறியாவிழைவின் தெய்வம் அதைவிட்டு எழுந்து அக்கொலையை நிகழ்த்துகிறது. புரவி கொல்வதை பதினெட்டுமுறை கண்டிருக்கிறேன். படகு என அலைக்கழியும். மீன் என வழுக்கி அது விலகும். அலையென தூக்கி சுழற்றிவீசும். எப்போதுமே அஞ்சி விலகிச்செல்வது என்றே தன்னை அமைத்துக்கொள்ளும். ஆனால் அம்மனிதன் கழுத்து எலும்பு ஒடியும் ஒலியுடன் மண்ணில் விழுவான். முதுகுவடம் உடைந்து ஒடிந்து அதிர்ந்து அமைவான்.”

“கொன்றபின் குதிரை என்ன நிகழ்ந்தது என உணராமல் சுழன்று வால் குலைத்து பிடரி உலைத்து நின்று அறியா பெருவிழிகளை உருட்டி நோக்கும். குனிந்து முகர்ந்து மூச்சுவிடும். துயர்கொண்டு தோலை சிலிர்க்கும். காதுகளை கூப்பி கரியவிழிகள் மருண்டு சுழல மெல்ல கனைக்கும். என்ன நிகழ்ந்தது என நாம் அதற்கு சொல்லவேண்டுமென எண்ணி நம்மை நோக்கும். இளவரசி, அப்போது நாமறிவோம். புரவியைப்போல இரக்கமற்ற கொடிய விலங்கை தெய்வங்கள் படைக்கவில்லை. உகிர்பரப்பி அறைந்து தலைபிளந்து குருதிகுடிக்கும் சிம்மமும் எளியதே.”

“கொன்றபின்னரும் புரவி குருதிமணம் அற்றதாகவே இருக்கும்” என்றான் நகுலன். “புரவியியலாளனுக்கு குதிரையின் மணமே இனியது. சாரல்மழைபெய்த புல்வெளி என மெல்லிய ரோமப்பரப்பில் ஊறி உருண்டு சொட்டும் வியர்வைத்துளிகளின் மணம். கடைவாயில் வெண்நுரையாக வழியும் எச்சிலின் மணம் நம் கனவுகளுக்குள் புகுவது. அதை யானைமதத்தின் மணத்துடன் ஒப்பிடுவார்கள். குருதியின் மணம் போன்றது அது. குருதியின் உப்பும் அனலும் அதில் இல்லை. கனிந்து பழுத்த குருதி அது.”

“குதிரை கொலைவிலங்கு என அறிந்த புரவியாளன் அதன் அழகைக் கண்டு அதை கள்ளமற்றது என்று எண்ணுவதை கடந்தவன். கட்டற்று துள்ளும் குதிரைக்குட்டி ஒரு கன்று அல்ல. மான் அல்ல. சிம்மக்குருளை கூட அல்ல. அது பிறிதொன்று. நஞ்சுமுனைகொண்ட அம்பு. அறம்பாடப்பட்ட சுவடி. ஆனால் பேரழகு கொண்டது. அதை வென்றவனின் ஆற்றல் வாய்ந்த படைக்கலம்” என்றான் நகுலன். “ஆகவே கட்டற்று துள்ளும் புரவியை வெல்ல எளிய வழி என்பது அதை வல்லமையால் அடக்குவதே.”

“வேங்கையால் பாய்ந்து பற்றப்பட்ட புரவி காட்டில் கனைத்தபடி விரைந்தோடும். ஓடி ஓடி ஓர் எல்லையில் அது அறியும் வேங்கையின் வல்லமை பெரிதென்று. அக்கணத்தில் அதன் கால் தளரத்தொடங்கும். அது தன்னை வேஙகையின் பசிக்குமுன் படைக்கும். புரவியை பழக்குபவர்கள் வேங்கைநகத்தை படைக்கலமாக கொண்டிருப்பார்கள். இரும்புத் துரட்டியின் கூர்முனையால் துளைக்கப்பட்டு கனைத்துக்கொண்டே குதிரை கால்தளரும்போது புரவியாளன் வெல்லத்தொடங்குகிறான்.. புரவியாளனின் அறைகூவல் என்பது அக்கணம் வரை அதன்மேல் இருந்துவிடுவதே... அவனால் அவன் வெல்லத்தொடங்கும் அக்கணத்தை உணரமுடியும். அவன் தன் வாழ்நாளில் உணரும் பெரும் இன்பம் அதுவே.”

நகுலன் அவளிடம் பேசவில்லை. ஒவ்வொரு அறிதலும் இன்னொன்றை காட்ட தன் சொற்களாலேயே இழுக்கப்பட்டு சென்றான். அவன் சொல்லிக்கொண்டிருந்ததை அப்போதுதான் அவன் அறிந்துகொண்டான். “குதிரை முதலில் தன்னை அவனுக்கு அளிக்கிறது. முழுமையாக பணிந்து நின்றுவிடுகிறது. அதன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்கும். அதன் வாயிலிருந்து வழிந்த நுரைதெறித்து அவன் உடலெங்கும் மதநீரின் மணம் நிறைந்திருக்கும். என்னை கொன்று உண் என்று அது அவனிடம் சொல்லும்.”

“அப்போது அவன் கனிந்து அதனிடம் சொல்கிறான், நான் உன்னை வெல்லவில்லை. உன் ஆணவத்தை அவமதிக்கவுமில்லை. உன்னை என்னுடன் இணைத்துக்கொள்கிறேன். நீ என் உடலாக நான் உன் உடலாக ஆகப்போகிறோம். நான் எளிய கால்கள் கொண்ட மானுடன். நீ மலைக்காற்றுகளை குளம்புகளாகக் கொண்டவள். உன் கால்களை எனக்குக் கொடு. என் கண்களை நான் உனக்கு அளிக்கிறேன். நான்கு கால்களும் இரண்டு கைகளும் இரண்டு தலைகளும் கொண்ட வெல்லமுடியாத இவ்விலங்கை தெய்வங்கள் படைக்கவில்லை. ஆனால் தெய்வங்களனைத்தும் விரும்புவது இது என்கிறான்.”

“அது அவனுடன் இணைந்துகொள்கிறது. என்றோ மானுடவரலாற்றின் ஏதோ ஒரு மகத்தான தருணத்தில் நிகழ்ந்த இணைவு அது. ஒவ்வொரு முறை அது நிகழும்போதும் அந்த படைப்புவிந்தை மீண்டும் வெளிப்படுகிறது” என்றான் நகுலன். “புரவியின் உடல் மானுடனை அறியும் கணம் போல ஒருபோதும் சொல்லிவிடமுடியாத மந்தணம் வேறில்லை. அது ஒரு யோகம். இரண்டின்மை. சொல்லுக்கு அப்பால் உடல்கள் ஒன்றை ஒன்று அறிகின்றன. இரண்டு உள்ளங்களும் திகைத்து விலகி நின்றிருக்கின்றன. மிகச்சிறந்த புரவியூர்தலுக்குப் பின் மானுடன் ஒருபோதும் இப்புவியில் தன்னை தனியனென்று உணரமாட்டான்.”

திரௌபதியின் விழிகள் அவன் மேல் நிலைத்திருந்தன. அவற்றின் இருபக்கக் கூர்முனைகள் மையிடப்பட்டு கருங்கரடியின் நகங்கள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டான். பெருமூச்சுடன் அவள் கலைந்து “நாளை உங்களுடன் குதிரையில்லம் செல்ல விழைகிறேன்...” என்றாள். ”ஆம், செல்வோம்” என்றான். அவள் எழுந்தபோது மேலாடை சரிந்தது. மெல்ல அதை எடுத்து தன் முலைகள் மேல் போட்டபடி அவன் விழிகளை நோக்கினாள். அவற்றுக்குள் தொலைதூரத்துப் பறத்தல் ஒன்றின் நிழல் என ஓர் அசைவு தெரிய அவன் எழுந்து கைகள் பதைக்க நின்றான்.

அவள் புன்னகைத்ததும் அவன் அவளை அணுகி இடையை சேர்த்து பற்றிக்கொண்டான். அவள் தன் கைகளால் அவனை சுற்றி அணைத்து முகத்தருகே முகம்தூக்கி “நான் முதல்பெண் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றபின் அவன் குனிய அவன் மூச்சுக்காற்றில் அவள் நெற்றியின் ஒற்றைக்குழல் அசைந்தது. “இன்று நானும் புதியவளே” என்றாள். அவன் அவள் கன்னத்தை மிக மென்மையாக தடவி புன்னகைத்தான். பின் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

அவள் தோள்வளைவில் அவன் முகம் பொருந்தியது. அவன் காதுகளில் மெல்லிய குரலில் அவள் கேட்டாள் “நீங்கள் எப்படி புரவியை பழக்குவீர்கள்?” நகுலன் “புரவிக்குப் பிடித்த ஒரு நடிப்பை அளிப்பேன். அதைவிட எளிய புரவியென அதன் முன் நிற்பேன். உடலால் அசைவால் மணத்தால் புரவியென்றே ஆவேன். அது என்னை வெல்லும்போது அதன் தயக்கங்கள் மறையும். அந்த அணுக்கத்தில் அதன் நெஞ்சில் நுழைவேன். பின் அதன் முதுகை ஆளுவேன்” என்றான். அவள் அவன் காதில் சிட்டுக்குருவியின் ஒலி என மெல்ல சிரித்து காதுமடலை கடித்தாள். அவன் அவளை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டான்.

பகுதி 4 : ஆடிச்சூரியன் - 3

"வைவஸ்வத மனுவின் மைந்தனாகிய மாமன்னர் சர்யாதிக்கு மகளாகப் பிறந்த சுகன்யையை வாழ்த்துவோம். இந்த இளங்குளிர் மாலையில் அவள் கதையை பாடப்பணித்த சொல்தெய்வத்தை வணங்குவோம். வெற்றியும் புகழும் விளங்கும் பாஞ்சால மண்ணில் அவள் கதை மீண்டும் எழுக! நாவிலிருந்து நாவுக்கு பற்றிக்கொண்டு காலமுடிவுவரை அது நீள்க!” என்று சூதர் பாடிவிட்டு கண்களை மூடிக்கொள்ள குறுமுழவும் யாழும் அந்த சுதியை மீட்டி முன்சென்று அமைந்தன. அவரது குரல் எழுந்தது.

சர்யாதிக்கு நாலாயிரம் துணைவியர் இருந்தனர் என்றனர் புலவர். அவர்கள் எவரும் கருவுறாததனால் துயர்கொண்டிருந்தபோது பாலையில்மழையென சிவை என்னும் துணைவி கருவுற்ற செய்திவந்தது. தென்மேற்கு திசை நோக்கி நின்று தன் மூதன்னையரை எண்ணி கண்ணீர்விட்ட சர்யாதி மகளிர்மாளிகைக்கு ஓடிச்சென்று சிவையின் காலடிகளில் விழுந்து பணிந்தான். அவள் வயிறு எழுந்து பெற்ற மகளுக்கு நன்மகள் என்ற பொருளில் சுகன்யை என்று பெயரிட்டான்.

அதன்பின் மகளுடன் குலவி வாழ்வதே அவன் அறிந்த உலகின்பமாக ஆயிற்று. கோலையும் முடியையும் அமைச்சரிடம் அளித்துவிட்டு இனிய மலர்க்காடுகளில் மகளுடனும் மனைவியருடனும் விளையாடி வாழ்ந்தான். ஒவ்வொரு முறையும் மானுடர் புகாத பேரழகுகொண்ட காடுகளை கண்டறிந்து சொல்லும்படி தன் ஒற்றர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் சொன்ன சியவனவனம் என்னும் காடு அவன் கண்டதிலேயே பேரழகு கொண்டிருந்தது. வானுருகி வழிந்த சிற்றாறின் கரையில் தளிர்களும் மலர்களும் செறிந்த மரங்களால் ஆன இளஞ்சோலை. அதில் யானைத்தோலால் கூடாரமடித்து தன் ஏழு துணைவியருடனும் இளமகளுடனும் அவள் தோழிகளுடனும் அவன் கானாடலானான்.

பேதை முதிர்ந்து பெதும்பையென்றாகிய சுகன்யை பேரழகு கொண்டிருந்தாள். மண்ணிற்கு வந்த பெண்களில் அவளுக்கு நிகரான பேரழகிகள் பன்னிருவர் மட்டுமே என்றனர் சூதர். அப்பன்னிருவரில் வாழ்பவள் அவளே என்றனர். எருமைவிழிகளின் மின்னும் கருமைகொண்டது அவள் உடல். இருளில் அவள் நகங்களின் ஒளியை காணமுடியும் என்றனர் சேடியர். தொலைதூரத்து ஒளிச்சாளரத்தை மின்னும் அவள் கன்ன வளைவில் கண்டேன் என்றாள் ஒரு செவிலி. இருண்ட அந்தியில் பறக்கும் கொக்குநிரை என புன்னகைப்பவள் என்றனர் அவைக்கவிஞர். வைவஸ்வத நாடு மறுவுருகொண்ட திருவுரு என அவளை வழிபட்டது.

சுகன்யை தன் தந்தையை அன்றி ஆண்மகன்களை அணுகியறிந்திருக்கவில்லை. அவனோ மணிமுடியை அவள் காலடியில் வைத்துப் பணிந்து அவள் சொற்கள் ஒவ்வொன்றையும் இறையருளிச்செயல்கள் என எண்ணுபவனாக இருந்தான். அவள் எண்ணங்கள் ஆணைகளென்றாயின. அவள் விழியசைவுக்காக படைக்கலங்கள் காத்திருந்தன. தன் ஒளியையே தன்னைச்சுற்றி உலகாக அமைத்துக்கொண்ட அகல்சுடர் என அங்கிருந்தாள்.

சியவனவனத்தில் மரங்களில் ஏறி மலர்கொய்து தொடுத்து காட்டுமான்களுக்கு அணிவித்தும் சிட்டுகளைப் பிடித்து சிறகுகளில் வண்ணம்பூசி பறக்கவிட்டும் காட்டுப்புரவிகளை அஞ்சி விரையச்செய்து நகைத்தும் அவளும் தோழியரும் விளையாடினர். அங்கிருந்த சியவனதீர்த்தமெனும் ஆற்றில் குளிராடினர். பின்னர் அவள் கரையேறி அங்கிருந்த பெருமரமொன்றின் அடியில் சென்று நின்று தன் ஆடையை அகற்றி மாற்றாடையை கையிலெடுத்தாள்.

கன்னியுடலில் ரதிதேவியளித்த காணான் கண்களுண்டு. தன்னை எவரோ நோக்குவதறிந்து அவள் ஆடையால் முலைகளை மறைத்துக்கொண்டு நோக்கினாள். எங்கும் எவருமில்லை என்றானபின்னும் இளநெஞ்சம் ஏன் துடிக்கிறதென்று வியந்தாள். திரும்பித்திரும்பி நோக்கியபோது அருகே இருந்த புற்றுக்குள் இருந்து மின்னும் இரு விழிகளைக் கண்டாள். சினம் கொண்டு “நாணிலாது என்னை நோக்கும் நீ யார்?” என்று கேட்டாள்.

புற்றுக்குள் வேரும் சருகும் இலையும் தன் சடையும் மூடி அமர்ந்து நெடுந்தவம் செய்துகொண்டிருந்த சியவனர் “பெண்ணே, இது என்காடு. என் தவச்சாலை. இங்கு வந்தவள் நீயே” என்றார். “எழுந்து விலகு, இது என் ஆணை” என்றாள் சுகன்யை. “விலகிச்செல்லவேண்டியவள் நீ...” என்றார் சியவனர். சினம்கொண்ட சுகன்யை அருகே இருந்த இரு முட்களைப்பிடுங்கி அவர் விழிகளில் பாய்ச்சினாள். தன் வலியை வென்று சியவனர் புன்னகைசெய்து ”இவ்வண்ணம் ஆகுமென்றிருக்கிறது... நன்று” என்றார். ஏளனத்துடன் அங்கேயே நின்று தன் ஆடைகளைந்து மாற்றாடை அணிந்து நீள்குழலைச் சுருட்டி கட்டி சுகன்யை நடந்து சென்றாள். நடந்தது என்ன என்று எவரிடமும் சொல்லவில்லை.

வைவஸ்வதநாட்டில் அன்றுமுதல் மழையில்லாமலாகியது. பசுக்கள் குருதி கறந்தன. கன்றுகள் ஊனுண்டன. குழவிகள் இறந்து பிறந்தன. வயல்களில் எருக்கு எழுந்தது. அன்னக்கலங்களில் நாகம் சுருண்டிருந்தது. நிமித்திகரை வரவழைத்து குறிகள் தேர்ந்தபோது அவர்கள் ”முனிவர் எவரோ தீச்சொல்லிட்டுவிட்டனர். நோவில் நெளிந்த நா ஒன்றின் சொல்லே இங்கு நெருப்புமழையென்று பெய்திறங்குகிறது” என்றனர். “எவர் பிழை செய்தது? பிழைசெய்தோர் வந்து சொல்லுங்கள்” என்று அரசர் அறிவித்தார்.

எவரும் வந்து பிழை சொல்லவில்லை. அரசனின் அறிவிப்பை அறிந்தாலும் சுகன்யை தன் பிழை என்னவென்று அறிந்திருக்கவில்லை. உரியது செய்தவளாகவே தன்னை உணர்ந்தாள். குடிகளனைவரும் வந்து அரசக் கொடிமரத்தைத் தொடவேண்டுமென்று சர்யாதி ஆணையிட்டார். பிழைசெய்த நெஞ்சுள்ளவர் தொட்டால் கொடி அறுந்து கீழிறங்கும் என்றனர் நிமித்திகர். நாட்டுமக்கள் அனைவரும் தொட்டனர். சுகன்யையும் தொட்டு வணங்கினாள். கொடி இறங்கவில்லை.

சுகன்யையின் கண்ணெதிரே நாடு கருகி அழிந்தது. கொற்றவை ஆலயத்தில் குழல்பூசனை செய்யச் சென்று மீண்டபோது சாலையோரத்தில் பசித்து சோந்து கிடந்த குழவிகளைக் கண்டாள். நெஞ்சு உருகி அழுதபடி அரண்மனைக்கு வந்தாள். தன் உப்பரிகையில் அமர்ந்து அழுத அவளிடம் செவிலியான மாயை வந்து ஏனென்று கேட்டாள். நிகழ்ந்ததை சொன்னபின் “நான் செய்ததில் பிழையென்ன? என் கன்னியுடலைப் பார்த்த விழிகள் பிழை செய்தவை அல்லவா?” என்றாள்.

“ஆடை விலக்குகையில் உன் ஆழ்நெஞ்சு அங்கே இரு விழிகளை விழைந்தது என்றால் உன் செயல் பிழையே” என்றாள் செவிலி. திகைத்து சிலகணங்கள் நோக்கியிருந்தபின் எழுந்து ஓடி தன் தந்தையை அணுகி “தந்தையே, நான் பெரும்பிழை செய்துவிட்டேன்” என்று கூவி அழுதாள். ”முனிவர் ஒருவருக்கு தீங்கிழைத்துவிட்டேன்... என்னை அவரிடம் அழைத்துச்செல்லுங்கள்” என்றாள்.

மகளுடன் சியவனவனத்திற்குச் சென்ற சர்யாதி அங்கே விழிகள் புண்ணாகி அமர்ந்திருந்த சியவனமுனிவரின் கால்களில் விழுந்து பணிந்தார். “எந்தையே, எங்கள் மேல் சினம் கொள்ளாதீர். உங்கள் தீச்சொல்லை இன்சொல்லால் அணையுங்கள்” என்றார். “அரசே, உன் மகள் என் முகவிழிகளை அணைத்தாள். அணைந்தவை அனல்களாக என்னுள்ளே விழுந்து எழுந்தன. எனக்குள் திறந்திருக்கும் ஆயிரம் கோடி விழிகளால் நான் காண்பதெல்லாம் காமமே. இனி எனக்கு தவம் நிறையாது. இல்லறத்தை விழைகிறேன். உன் மகளை எனக்குக் கொடு” என்றார்.

திகைத்த அரசன் “முனிவரே, தாங்கள் முதியவர். அழகற்றவர். விழிகளும் இல்லாதவர். மண்ணில் மலர்ந்த பேரழகிகளில் ஒருத்தி என் மகள். அவளை எப்படி உங்களுக்கு அளிப்பேன்?” என்றார். “பேரழகிகள் ஒருபோதும் எளிய வாழ்க்கையை அடைவதில்லை என்று உணர்க. நான் பிறிதொரு பெண்ணை மணப்பதே அப்பெண்ணுக்கிழைக்கும் தீங்கு. உன் மகளை மணந்தால் அவள் செய்த பிழையின் ஈடென்றே ஆகும் அது” என்றார் சியவனர்.

சுகன்யை தந்தையிடம் ”தந்தையே, அவர் சொல்வதே முறை என்று எண்ணுகிறேன். நான் செய்த பிழையை நானே ஈடுசெய்யவேண்டும். என்னால் என் நகர் அழிந்தது என்ற சொல் நிற்றலாகாது. அங்கே பசித்து கலுழும் குழந்தைகளுக்காக நான் செய்தாகவேண்டியது இது. என்னை வாழ்த்துங்கள்” என்றாள். அருகிருந்த ஆற்றின் நீரை அள்ளி அவளை முனிவருக்கு நீரளித்து கண்ணீருடன் மீண்டார் சர்யாதி.

கன்னி குலமகளாகும் விந்தைக்கு நிகரானது மலர் கனியாவது மட்டுமே. முனிவரை மணந்த சுகன்யை அவருடைய நலமொன்றையே நினைப்பவள் ஆனாள். அவள் மிகுபுலர் காலையில் எழுந்து நீராடி அவரது பூசெய்கைக்கான மலர்கொய்து வந்து வைத்து அவரை எழுப்பினாள். அவர் வழிபட்டு வந்ததும் இன்னமுதை ஆக்கி அவருக்கு அளித்தாள். காட்டில் சென்று காய்கனிதேர்ந்து கொண்டுவந்து அவருக்கு அளித்தாள். எதையும் அவளிடம் கேட்டு அவர் அடையவில்லை. அவர் துயின்றபின் தான் துயின்றாள்.

விழியற்றவரின் விழிகளாக அவள் சொற்கள் அமைந்தன. அவள் விழிகள் வழியாக அவர் இளமை எழுந்த மலர்ச்சோலையையும் வண்ணப்பறவைகளையும் மலைகளையும் முகில்களையும் கண்டார். அவர் அறிந்த சொற்களெல்லாம் புதுப்பொருள் கொண்டன. அவர் கற்று மறந்த நூல்களெல்லாம் பிறவி நினைவுகளென மீண்டு வந்தன. பிறிதொரு வாழ்க்கையில் நுழைந்த சியவனர் “விழியின்மையை அருளென உணரச்செய்தாய் தேவி... நீ வாழ்க!” என்றார்.

கடும் கோடையில் ஒருநாள் இரவெல்லாம் கணவனுக்கு மயில்பீலி விசிறியால் விசிறி துயிலச்செய்தபின் சற்றே கண்ணயர்ந்து விழித்த சுகன்யை உடலெங்கும் வெம்மையை உணர்ந்து விடிந்துவிட்டதென்று எழுந்து பின்னிரவிலேயே சியவனவதி ஆற்றுக்கு சென்றாள். இரவு கனிந்த அவ்வேளையில் அங்கே நீர்ச்சுழிப்பில் துளிசிதறத் துள்ளியோடியும் கழுத்துக்களை அடித்துக்கொண்டு கனைத்தும் விளையாடிய இரு குதிரைகளை கண்டாள். ஒன்று வெண்குதிரை. இன்னொன்று கருங்குதிரை. அவற்றின் அழகில் மயங்கி அங்கே நின்றிருந்தாள்.

அவள் உள்ளம் சென்று தொட்டதும் குதிரைகள் திரும்பி நோக்கின. குதிரை வடிவாக வந்த அஸ்வினிதேவர்கள் இருவரும் உருவும் நிழலுமென ஓடி அவளருகே வந்தனர். ”விண்ணகத்து கன்னியரை விட அழகுகொண்டிருக்கிறாய். இந்த அடவியில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டனர். “நான் சர்யாதி மன்னரின் மகள். சியவனரின் துணைவி. இங்கு நீராட வந்தேன்” என அவள் சொன்னதும் அவர்கள் அவளை அறிந்துகொண்டனர்.

“உன் அழகை விழியிழந்தவனுக்காக வீணடிக்கலாமா? எங்களை ஏற்றுக்கொள். விண்ணில் முகில்களில் உன்னை ஏற்றிக்கொண்டு செல்கிறோம்” என்றனர் அஸ்வினிதேவர்கள். “வாழ்க்கையின் இன்பத்தை எதன்பொருட்டும் மானுடர் துறக்கலாகாது. ஏனென்றால் துறந்தவை பேருருக்கொள்ளும் ஆழம் ஒன்று அவர்களுக்குள் உள்ளது.” சினம் கொண்ட சுகன்யை “விலகிச்செல்லுங்கள்! என் கற்பின் சொல்லால் உங்களை சுட்டெரிப்பேன்” என்று சீறினாள்.

ஆனால் அஞ்சாது அவர்கள் அவளை தொடர்ந்து வந்தனர். “நீ விழைவதென்ன? எங்கள் காதலுக்கு நாங்கள் கையளிக்கவேண்டிய கன்னிப்பரிசென்ன?” என்றனர். ”இக்கணமே செல்லாவிடில் பழிகொண்டே மீள்வீர்” என்று அவள் கண்ணீருடன் சொன்னாள். “பத்தினியாகிய உனது நெஞ்சு நிறைந்திருப்பது கணவன் மீதான காதலே என்றறிவோம். நாங்கள் பேசுவது உன்னுள் உறையும் கன்னியிடம். அவள் விழைவை கேட்டு எங்களுக்கு சொல்” என்றனர். அவள் திரும்பி ஒரு கை நீரை அள்ளி கையிலெடுத்தபோது அது ஊழி நெருப்பென செவ்வொளி கொள்வதைக் கண்டு அவர்கள் அஞ்சி பணிந்தனர்.

“தேவி, எங்களை பொறுத்தருளுங்கள்...” என்றனர் அஸ்வினிதேவர்கள். “மண்ணிலுள்ள மானுடரின் ஒழுக்கங்களும் நெறிகளும் எங்களுக்கில்லை. மானுடர் சொற்களில் உறையும் மறைபொருட்களையும் நாங்கள் அறியோம். சேவல் கொண்டையை சூடியிருப்பதுபோல் விழைவை ஒளிரும் முடியெனச் சூடியவர்களென்பதனால்தான் நாங்கள் தேவர்கள். எங்கள்மீது பிழையில்லை” என்றனர்.

“விலகிச்செல்லுங்கள்” என்று அவள் கண்ணீருடன் மூச்சிரைக்க சொன்னாள். “செல்கிறோம். நீ செல்லும்பாதையில் எங்கள் குளம்படிகளை காண்பாய் என்றால் மீள வருவோம்” என அவர்கள் மறைந்தனர். அவள் மெல்ல நடந்து காட்டுப்பாதையைக் கடந்து தன் குடிலுக்குச் செல்லும் வழியெல்லாம் மண்ணை நோக்கியபடியே வந்தாள். பன்றியும் காட்டாடும் மானும் நடந்த குளம்படிகளையே கண்டாள். குடிலை அணுகும்போது கால்கழுவி வந்த ஈரமண்ணில் குளம்படிகளைக் கண்டு திகைத்து நின்றாள்.

அவள் முன் எழுந்த அஸ்வினிதேவர்கள் “நீ எங்களுக்கு அருளவேண்டும்... உன் கணவனை உதறி எங்களை ஏற்றுக்கொள்” என்றனர். “கன்றுணாது கலம்படாது வீணான பால் என நீ அழியலாகாது” என்றனர். அவள் “விலகுங்கள்” என்று கூவி அவர்கள் மேல் தீச்சொல்லிட தன் குடத்து நீரில் கைவிட்டாள். அதில் விழுந்த துளை வழியாக நீரெல்லாம் ஒழுகி மறைந்திருப்பதை கண்டாள்.

“உன் கணவனை விட்டு மீள உனக்கிருக்கும் தடைதான் என்ன? அவர் விழிகளை பறித்தவள் நீ என்பது மட்டும்தானே? உன் கணவரின் விழிகளை திருப்பி அளிக்கிறோம்” என்றனர். “விலகுங்கள்... “ என்று சொல்லி தன் மூதாதையரை விளித்தபடி அவள் கண்களை மூடிக்கொண்டாள். உடல்நடுங்கி கைகள் பதைக்க நின்று அழுதாள்.

அவள் செவிகளை அணுகி “நீ பழி சுமக்காமலிருக்கும் வழியொன்றை சொல்கிறோம். நாங்கள் விண்மருத்துவர்கள் என்று அறிந்திருப்பாய். எங்கள் பெயரைச்சொல்லி இந்த ஆற்றுநீரில் மூழ்கி எழுந்தால் உன் கணவர் விழியை மீளப்பெறுவார். ஆனால் அவருடன் நாங்களும் எழுவோம். தோற்றத்திலோ அசைவிலோ பேச்சிலோ பிறவற்றிலோ மூவரும் ஒன்றுபோலவே இருப்போம். மூவரில் ஒருவரை நீ உன் கணவனென தெரிவுசெய்யலாம்” என்றனர்.

“விலகுங்கள்!” என அவள் கூவினாள். “ஆம், அது ஒன்றே நல்ல வழி. நீ செய்த பிழை நிகராகும். உன் கணவன் விழிபெற நீ செய்த நற்செயல் என்றே இது கொள்ளப்படும். நீ எங்களில் ஒருவரை தெரிவுசெய்தால் அது உன் அறியாமை என்றே தெய்வங்களும் எண்ணலாகும்” என்றார்கள். அவள் அழுதபடி திரும்பி நோக்காமல் குடிலுக்குள் ஓடி துயின்றுகொண்டிருந்த சியவன முனிவரின் அருகே விழுந்தாள்.

விழித்தெழுந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார் சியவனர். அவர் காலடியில் விழுந்து கண்ணீருடன் அவள் சொல்லி முடித்தபோது அவர் தாடியை தடவியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ”நான் என்ன சொல்வது, சொல்லுங்கள்” என்றாள் சுகன்யை. “உன் பிழைநிகராவதோ பிறிதோ எனக்கு பெரிதெனப் படவில்லை. நான் விழியடைவதொன்றே எனக்கு முதன்மையானதென்று படுகிறது... அந்த வாய்ப்பை நான் எந்நிலையிலும் தவறவிட விழையவில்லை” என்றார் சியவனர். “ஆனால் மீண்டும் முதியவிழிகளை அடைந்து நான் வாழமுடியாது. நீ சொற்கள் மூலம் எனக்கு அளித்தது இளைமையின் விழி. அதுவே எனக்குத்தேவை. அவர்கள் அதை அளிப்பார்களா என்று கேட்டுப்பார்” என்றார்.

அவள் வெளியே வந்தபோது அங்கே அஸ்வினிதேவர்கள் நிற்கக் கண்டாள். அவளுடைய சொற்களைக் கேட்டு புன்னகைசெய்து “ஆம், அதுவும் நன்றே. ஆனால் அவருடைய உடலில் வாழ்ந்த அந்த இளமை தேவையா, இல்லை உள்ளத்திலுள்ள இளமை தேவையா என கேட்டுவா” என்றனர். சியவனர் “நான் கடந்துவந்த இளமையை மீட்டெடுத்து என்ன பயன்? எனக்குள் கொந்தளிக்கும் இவ்விளமையை நான் வாழ்ந்து முடித்தேன் என்றால் மீள்வதும் இயல்வதாகும்” என்றார்.

அஸ்வினி தேவர்கள் நகைத்து “அதையே அவர் விழைவாரென அறிவோம். பெண்ணே அவர் கொள்ளப்போகும் அந்த இளையதோற்றத்தை விழிகளால் இதுவரை கண்டிருக்கமாட்டாய். நாங்களும் அவ்வடிவிலேயே வரும்போது உன்னால் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது“ என்றார்கள். அவள் திகைத்து ஓடி சியவனரிடம் அதை சொல்ல “அதைப்பற்றி நான் கருதவில்லை. நான் மீள்வதொன்றே என் இலக்கு” என்றார்.

அவர்கள் இருவரும் நடந்து சியவனவதியை அடைந்தனர். அதன் சேற்றுவிளிம்பில் இரு குதிரைகளின் குளம்புகள் நீரில் இறங்கிச்சென்றிருப்பதை சுகன்யை கண்டாள். அவள் கையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சியவனர் ஆடைகளை களைந்தபின் மெல்ல நீர் விளிம்பை அடைந்து திரும்பி “அத்துடன் எனக்கு ஒரு எண்ணமும் இருந்தது. என்னசெய்வது என நீ என்னிடம் கேட்டதே உன் உள்ளத்தின் விரிசலை காட்டியது. நாங்கள் மூவரும் ஒன்றுபோல் தோற்றம் கொண்டு எழுகையில் நீ என்னை கண்டடைந்தால் உன் பொற்புக்கு அஸ்வினிதேவர்கள் அளித்த சான்று என்று எண்ணுவேன். இல்லையேல் நீ அவர்களுடன் சென்றாலும் எனக்கு இழப்பு இல்லை என்று கொள்வேன்” என்றபின் நீரில் இறங்கி மூழ்கினார்.

நீரைப் பிளந்தபடி மூன்று பேரழகர்கள் எழுந்தனர். அம்மூவரையும் அவள் அதற்கு முன் கண்டிருக்கவில்லை என்பதனால் திகைத்து சொல்லிழந்து கைகள் பதற நின்றாள். முற்றிலும் புதியவர்களான மூவரும் அவளை நோக்கி புன்னகைசெய்து ஒன்றென்றே ஒலித்த குரலில் “அறியாயோ நீ?” என்றனர். ஆடிப்பாவைகள் போல ஒன்றென்றே புன்னகை செய்து “நான் சியவனன். உன் கொழுநன்” என்றனர்.

அவள் அவர்களுடைய உடலை விழிகளால் தொட்டுத்தொட்டுச் சென்ற ஒரு கணம் அகம் அதிர்ந்து வாய்பொத்தினாள். தன் கரவறைச் சேமிப்புகளை கைநடுங்க தொட்டுத்தொட்டுப்பார்க்கும் இளஞ்சிறுமி என அவர்களின் உடலுறுப்புகளை நோக்கி நோக்கி நின்றாள். ”ஆம், உன் ஆழ்கனவுகளில் இருந்து நீ சொன்ன சொற்கள் வழியாக நான் விழைந்த இளமை இது” என்றார் ஒருவர். “சுகன்யை. உன் கன்னியுள்ளம் தேடிய ஆணுடல்” என்றார் இரண்டாமவர். “நீ நினைத்தவற்றை எல்லாம் அறிந்த உடல் இது“ என்றார் மூன்றாமவர்.

“சொல்... மூவரில் எவரை ஏற்கிறாய்?” என்றார்கள் மூவரும். அவள் அவர்களின் விழிகளை நோக்கினாள். பின்னர் கண்மூடி தன் குலத்தை ஆளும் ஐந்தொழில் கொண்ட அன்னையரை எண்ணினாள். கொல்வேல் கொற்றவையும் லட்சுமியும் சொல்மகளும் சாவித்ரியும் ராதையும் அவள் நெஞ்சில் புன்னகைத்து சென்றனர். பின்னர் முள்நிறைந்த காட்டில் உடல் கிழிய நெடுந்தொலைவு விரைந்து உக்கிரசண்டிகையின் காலடியில் விழுந்தாள். மும்மூர்த்திகளையும் தன்னிலடக்கிய பெருங்கருவறையை வணங்கி விழிதிறந்தாள். “இவரை” என இளமைகொண்டு நின்ற சியவனனை சுட்டிக்காட்டினாள்.

“அஸ்வினிதேவர்கள் இருவரும் புரவித்தோற்றம் கொண்டு அவளை வணங்கி வாழ்த்தி மறைந்தனர். இளமை திரண்ட பெருங்கரங்களால் அவள் கணவன் அவளை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டான்” என்று சூதர் பாடி முடித்தார். “பொற்பின்செல்வியை பெரும்புகழ் சுகன்யையை வாழ்த்துவோம்! அவள் சிலம்பின் ஒலி எங்கள் இளங்கன்னியர் செவிகளில் நிறையட்டும். ஓம் ஓம் ஓம்!” சூதர் வணங்கியபின் தன் சிற்றிலைத்தாளத்தை தன் முன் வைத்தார்.

திரௌபதியே சூதர்களுக்கு பரிசில்களைக் கொடுத்து வாழ்த்துரை சொன்னாள். அவர்கள் சென்றதும் அவள் புன்னகையுடன் திரும்பி நகுலனிடம் “அவர்கள் கதைகளை தெரிவுசெய்கையில் தெய்வங்களும் அருகே நிற்கின்றன போலும்” என்றாள். நகுலன் “எங்கள் இருவரையும் அஸ்வினி தேவர்களுக்கு இணையானவர்கள் என சொல்வது சூதர் மரபு. ஆகவே இக்கதையை தெரிவுசெய்திருக்கிறார்கள்” என்றான். திரௌபதி புன்னகைத்து “ஆயினும் பொருத்தமான கதை” என்றாள்.

படிஏறுகையில் முன்னால் சென்ற அவள் நின்று “சுகன்யை எப்படி தன் கணவனை கண்டடைந்திருப்பாள்?” என்றாள். ”அவள் பொற்பரசி. தன் கணவனை கண்டடைவது இயல்பு” என்றான் நகுலன். “நான் எண்ணிக்கொண்டேன் அவள் அவர்கள் மூவரின் விழிகளையும் நோக்கியிருப்பாள். இருவிழிகளில் தெரிந்தது அவள்மேல் கொண்ட காமம். ஒருவிழி புதிய இளமையை பெற்றிருக்கிறது. அங்குள்ள அனைத்தையும் நோக்கித் துழாவியபின் அவளை வந்தடைந்திருக்கும்...” என்றாள்.

பின் வாய்விட்டுச் சிரித்தபடி “ஆண்களின் விழிகள் வேறு கணவர்களின் விழிகள் வேறென்று அறியாத பெண்களுண்டா என்ன?” என்றாள். நகுலனும் சிரித்தபடி அவளருகே சென்று அவள் இடையை வளைத்து “நீ சொல்வதையே நான் விரித்துரைக்கவா?” என்றான். “ம்” என்றாள். ”எவர் விழிகளை நோக்கியதும் அவளுக்குச் சலிப்போ சினமோ வந்ததோ அது அவள் கணவன்” என்றான். அவள் அவனை செல்லமாக அடித்து “இதென்ன எளிய பேச்சு?” என்றாள்.

அவளைத் தழுவியபடி உப்பரிகைக்கு செல்கையில் அவன் கேட்டான் “சரி, நீ சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். அவ்வண்ணமென்றால் அவள் ஏன் தன் கணவனை ஏற்றுக்கொண்டாள்?” திரௌபதி திரும்பி “அப்படி ஏற்றுக்கொண்டமையால்தான் அவள் பொற்பரசி” என்றாள். நகுலன் அவள் விழிகளை நோக்கினான். அவள் “புரியவில்லை அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான். “புரியாமலே அங்கிருக்கட்டும்...” என்றாள்.

“அவளுடைய ஆணவம்...” என்றான் நகுலன். “அஸ்வினிதேவர்களிடம் தோற்க அவள் விழையவில்லை.” திரௌபதி சிரித்து “அதுவும் ஆம்” என்றாள். அவன் மேலும் சென்று “அவள் அவரது அகத்தை முன்னரே அறிந்து ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தாள்” என்றான். “அதுவும் ஆம்” என்றபின் அவள் திரும்பி அவன் கழுத்தை தன் கைகளால் வளைத்து “இன்றிரவெல்லாம் நீங்கள் சொல்லப்போகும் அத்தனை விடைகளும் ஆம்... அதன்பின் ஒன்று எஞ்சியிருக்கும்” என்றாள்.

அவள் கன்னத்தை தன் உதடுகளால் வருடி காதோர மயிர்ச்சுருளை இதழ்களால் கவ்வினான். “சூ” என அவள் அவனை தள்ளினாள். “சொல், அது என்ன?” என்றான். சிறுவர்களிடம் பேசும் அன்னையின் மொழியின் சந்தத்துடன் “நானும் நீங்களும் வாழ்ந்து முதிர்ந்து நான் நூற்றுக்கிழவியாகி, நீங்கள் அதற்குமேல் முதிர்ந்து, என்பும் தசையும் தளர்ந்து, விழி மங்கி, சொல்குழறி வாழ்வென்பதே பழைய நினைவாகி எஞ்சி இறப்பின் அழைப்புக்காக அமர்ந்திருக்கும்போது...” என்றாள்.

“ம்” என்றான். சிறுமியைப்போன்று துள்ளிச் சிரித்தபடி “அப்போதும் சொல்லமுடியாது” என்று அவன் தலையை தன் கைகளால் வளைத்து இதழ்சேர்த்துக்கொண்டாள்.

பகுதி 5 : ஆடியின் அனல் - 1

சூதர்கள் அமர்ந்த பின்னர் சிசிரனால் அழைத்துவரப்பட்ட சகதேவன் கூடத்திற்குள் வணங்கியபடி வந்து அமர்ந்து புன்னகையுடன் தொடங்கலாமென்று கையசைத்தான். முழவை மெல்லத் தட்டிய சூதர் திரும்பி அறையின் கதவை நோக்க சகதேவன் அதை உணர்ந்து “அந்தக்கதவை மூடுங்கள். அவர் கண்களில் கங்கையின் ஒளிபடுகிறதென்று எண்ணுகிறேன்” என்றான். சிசிரன் கதவைமூடிவிட்டு பின்னகர்ந்தான். நீண்ட குழல்கற்றைகளை தோளில் எடுத்துவிட்டுக்கொண்டு முன்னால் வந்து அமர்ந்த சூதருக்குப் பின்னால் அவரது விறலி அமர்ந்தாள். அவள் கையில் வட்டவடிவமான சிறுபறை இருந்தது.

அணிக்கோலத்தில் இருந்த சகதேவன் கைகளைக் கட்டிக்கொண்டு அவர்களை நோக்கினான். சூதர் விறலியிடம் என்ன கதை சொல்வதென்று மெல்லிய குரலில் கேட்டார். அவள் ஏதோ சொல்ல அவரை அறியாமலேயே அவரது உதடுகளில் ஒரு புன்னகை வந்து மறைந்தது. சூதர் கைகளை கூப்பி வணங்கியதும் சகதேவன் “சூதரே, இம்முறை விறலி பாடலாமே” என்றான். சூதர் “வழக்கமாக...” என்று சொல்லத்தொடங்க “இம்முறை எனக்காக பெண் குரல் என்ன சொல்கிறதென்று அறியவிழைகிறேன்” என்றான்.

சூதர் தலைவணங்கி விறலியிடம் ஏதோ சொல்ல அவள் முகம் சற்றே சிவந்தது. பெரிய விழியிமைகள் ஒருகணம் சரிந்து எழுந்தன. எழுந்து தன் பெரியமுலைகளை மூடிய மெல்லிய கலிங்கத்தை சீரமைத்துக்கொண்டு வந்து முன்னால் அமர்ந்தாள். கரிய தடித்த உருவமும் உருண்டமுகமும் கொண்டிருந்தாள். விழிகளும் பெரியதாக இரு கரிய கிண்ணங்கள் போலிருந்தன. ஆனால் இதழ்களும் மூக்கும் செவிகளும் மிகச்சிறியவை. கழுத்தென்பதே இல்லாததுபோன்ற உருவம். மூக்கின் இருபக்கமும் ஏழுகற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி போட்டு அகன்ற மென்மார்பில் பதிந்த வேப்பிலையடுக்குத்தாலி அணிந்திருந்தாள்.

“உங்கள் ஊர் எது?” என்றான் சகதேவன். ”திருவிடம்” என்றாள் விறலி. “அங்கே கோதையின் கரையில் உள்ளது என் சிற்றூர்.” சகதேவன் “நெடுந்தொலைவு” என்றான். “சொல் செல்லும் தொலைவுடன் நோக்க அண்மையே” என்று அவள் புன்னகைசெய்தாள். அவள் பற்களும் மிகச்சிறியவை. நாக்கு நாகப்பழம் தின்றதுபோல செந்நீல நிறத்துடனிருந்தது. “எனக்கென பாடப்போவது எந்தக்கதை?” என்றான் சகதேவன். அவள் மூக்கைச்சுளித்து நாணிச்சிரித்து “ஒன்றும் சித்தத்தில் எழவில்லை இளவரசே” என்றாள்.

“என்னை நீயென எண்ணிக்கொள்... கதை எழும்” என்றான். அவள் சிரித்து “நான் பெண்ணல்லவா?” என்றாள். ”சரி அப்படியென்றால் உன்னை திரௌபதி என எண்ணிக்கொள்” என்றான். அவள் நாணி தலைசாய்த்து “அய்யோ” என்றாள். நாணிச்சிரிக்கையில் அவள் சிறிய மூக்கு வரிவரியாகச் சுருங்கும் அழகைக் கண்டு சிரித்த சகதேவன் “சூதரே, உம் விறலி பேரழகி” என்றான். சூதர் “இளமையில் அழகியாக இருக்கவில்லை இளவரசே. என் கவிதையால் அவளை அழகாக்கினேன்” என்றார். சகதேவன் சிரிக்க அவள் திரும்பி சூதரின் தொடையில் தன் குறுபறையால் அடித்தாள்.

”நீ பிறந்த மீன் எது என்று சொல்” என்றான் சகதேவன். அவள் தாழ்ந்த குரலில் "விசாகம்” என்றாள். ”விசாகம்... அதன் தேவர்கள் அக்னியும் இந்திரனும். அவர்கள் இருவரும் அமையும் ஒரு கதையை சொல்...” அவள் கீழுதட்டை கடித்துக்கொண்டு தலைசரித்து சிந்தித்தாள். விழிகளைத் தூக்கி “சொல்கிறேன்” என்றபின் திரும்பி தன் கணவனிடம் அதை சொன்னாள். அவர் தலையசைக்க அவள் தன் குறுபறையை விரல்களால் முழக்கி “ம்ம்ம்” என்று முனக யாழுடன் இருந்த சூதர் அந்தச்சுதியை பற்றிக்கொண்டார். அவள் சொல்மகளுக்கும் பாஞ்சாலமன்னனுக்கும் அவனை ஆளும் தெய்வங்களுக்கும் வாழ்த்துரைத்தாள். இந்திரனையும் அக்னியையும் வாழ்த்திவிட்டு கதை சொல்லத் தொடங்கினாள்.

காமிகம் என்னும் இனியகாடு பிரம்மத்தால் தொடப்பட்ட முகில்வெளி என பூத்தது. அங்கே அழகிய முகத்தின் புன்னகை என வழிந்தோடியது ஒளிமிக்க காமவதி என்னும் ஆறு. அதனருகே அமைந்த தவக்குடிலில் தேவசர்மர் என்னும் வேதமுனிவர் வாழ்ந்திருந்தார். மூன்று வேதங்களும் முறைப்படி கற்பிக்கப்பட்ட அந்த அறிவுச்சாலையில் பன்னிரு மாணவர்கள் அவருடன் தங்கியிருந்தனர். அவரது துணைவியாகிய ருசி அவர்களுக்கு உணவிட்டு புரந்தாள்.

இளங்காலை ஒளிபட்ட மலர்க்கொன்றை போன்றவள் ருசி. பெருங்காதலுடன் கணவனால் முத்தமிடப்பட்டமையால் மேலும் அழகுகொண்டாள். ஒவ்வொரு நாளும் அவள் அழகு வளர்ந்தது. அவள் நீராடச்சென்ற இடங்களில் கந்தர்வர்கள் மலர்தேடும் வண்டுகளாகவும் விழியேயான தவளைகளாகவும் உடல் சிலிர்க்கும் ஆண்மான்களாகவும் வந்து சூழ்ந்துகொண்டனர். அவளழகைக் கண்ட உவகையால் அவர்களின் உடல்கள் பொன்னொளி கொண்டன. சிறகுகளில் புலரிச்செம்மை எழுந்தது.

வானவீதியில் தன் வெண்முகில் யானைமேல் மின்னல்வாளேந்தி சென்றுகொண்டிருந்த இந்திரன் கீழுலகில் எழுந்து பறந்துகொண்டிருந்த கந்தர்வர்களில் சிலரது உடல் மட்டும் பொன்னென ஒளிர்வதைக் கண்டான். அவர்களில் சிலரை அழைத்து உங்கள் ஒளியை எங்ஙனம் அடைந்தீர் என்று கேட்டான். அவர்கள் மண்ணில் எங்குமில்லாத பேரழகை காமிகவனத்திலே கண்டோம். எங்கள் விழிகள் மலராயின. உடல் பொன்னாயிற்று என்றனர்.

ஒரு பொன்வண்டாக மாறி மறுநாள் காமவதிக்கரையில் யாழிசைமீட்டி சுழன்றுகொண்டிருந்த இந்திரன் நீராட வந்த ருசியை கண்டான். மலரிலிருந்து மலரில் விழுந்து மண்ணை அடைந்து விழிமட்டும் உயிர்கொண்டு கிடந்தான். அவள் நீராடிய அழகை இருமுறை காண்பதற்காக காற்றை நிறுத்திவைத்து ஆற்றை ஆடியாக்கினான். அவள் சென்றபின்னரும் அந்த ஆடிப்பாவை அங்கேயே கிடக்கும்படி செய்தான். அதை நோக்கி நோக்கி நெஞ்சுலைந்து அங்கே நின்றான்.

மறுநாள் ஒரு காட்டுமானாக அவள் குடிலுக்குப்பின்பக்கம் சென்று நின்றான். அதன் மலர்க்கிளைக்கொம்பைக் கண்டு ஆசைகொண்ட ருசி அதை அருகே அழைத்து இளந்தளிர்க் கீரையும் வெல்லமும் கொடுத்து அதன் நீள்கழுத்தை வருடினாள். மறுநாள் வெண்நுரை என சிறையெழுந்த அன்னமாக அவள் செல்லும் வழியில் வந்து நின்றான். அதை கூலமணிகொடுத்து அருகழைத்து தன் நிறைமுலைகள் அழுத்த அணைத்துக்கொண்டாள். மறுநாள் அவள் துயிலெழுவதற்காக சேவலாக வந்து நின்று கூவினான். அவள் தனிமையில் கனவுகண்டு அமர்ந்திருக்கும் மாதவிப்பந்தலில் வந்தமர்ந்து குயிலென கூவினான்.

இனியவனே கேள், மனைவியின் அழகென்பது அழகிய சித்திரங்களுடனும் கொடிகளுடனும் கணவனுக்காகத் திறந்திருக்கும் பொன்னிறப்பெருவாயில் மட்டுமே. அவன் ரதம் நுழைந்ததும் அது விலகி பின்னால் சென்றுவிடுகிறது. அந்தப்புரத்தின் மையத்தில் அவள் இலச்சினைக்கொடி பறக்கும் அரண்மனையை நோக்கியே சாலைகளனைத்தும் செல்கின்றன. அங்கே அடித்தளத்தின் ஆழத்தில் உறையும் தெய்வத்தைக் கண்டவனே மனைவியை அடைந்தவன்.

தன் விழிகளுக்கப்பால் நோக்கத் தெரியாதவனை பெண்களும் அறிவதேயில்லை. அவர்கள் அவன் கண்களையும் கைகளையும் வெண்குருதி மணத்தையும் வீண்சொற்களையும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். உள்ளம் இதோ இதோ என எழுகையிலும் உடல் முந்தியெழும் தீயூழ் கொண்டவள் பெண். வாயில்களற்ற மாளிகையில் சுவரோவியங்களெனத் தெரிபவை வாயில்களே.

வறியோன் வழியில் கண்டெடுத்த வைரமென தன் துணைவியை அறிந்தவர் தேவசர்மர். இமை மூடினாலும் அழியாத விழிச்சித்திரமாக அவளிருந்தாள். அவள் கண்ணசைவை உதட்டுச்சுழிப்பை கழுத்துவளைவை விரல்நெளிவை சொற்களென்றாக்கிய மொழியை அறிந்தவர். எங்கு சென்றாலும் அவளுடன் அவர் இருந்தார். அவளைச்சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் அவர் விழி ஒளியுடன் திறந்திருந்தது.

அவளை வழிபடுந்தோறும் அணுகினார். அணுகும்தோறும் அறியமுடியாமை கண்டார். அறியமுடியாதவை அச்சமூட்டுகின்றன. அச்சமோ ஐயமாகிறது. ஐயம் தன்னை தான் வளர்க்கும் பூசணம். அவள் அவரில் குடியேறிய நஞ்சானாள். கனிந்து சிவந்து கணம் தோறும் தெறிக்கும் வலி. இறக்கிவைக்கமுடியாத சுமை. எவரிடமும் பகிரமுடியாத பழிக்கனவு. எப்போதும் உடனிருக்கும் இழிமணம்.

நீராடித் திரும்புகையில் சேற்றில் பதிந்த தன் மனைவியின் காலடியை கண்டார். ஒவ்வொரு இரண்டாவது காலடியும் அழுந்தப்பதிந்திருக்கக் கண்டு அவள் சிறு துள்ளலுடன் சென்றிருப்பதை உணர்ந்து உடல்நடுங்கினார். நாவில் திகழ்ந்த வேதம் மறந்து அவள் காலடிகளை தொடர்ந்து சென்றார். அவள் தன் குடிலில் அடுப்பில் நெருப்பேற்றி கைகூப்பி கலம் ஏற்றுவதை கண்டார். அவள் கைகளிரண்டும் ஒன்றுடன் ஒன்று முழுமையாக பொருந்தியிருக்கவில்லை.

அவர் விழிகள் அன்றுமுதல் மாறுபட்டன என்பதை அவளும் கண்டாள். அவளைச்சூழ்ந்து அவை பறந்தலைந்தன. கேட்டவினாக்களுக்கு ஒருகணம் கடந்தபின்னரே விடைவந்தது. உண்ணும் உணவிலும் ஓதும் மொழியிலும் சிந்தை நிலைக்கவில்லை. அவள் கழற்றியிட்ட ஆடைகளை எடுத்துப்பார்த்தார். அவள் தொட்டெடுத்த குங்குமக்கதுப்பில் எஞ்சிய கைவிரல் பதிவை தான் தொட்டு நோக்கினார். அவள் கால்சிலம்பின் உதிர்ந்த மணி ஒன்றை தேடிச்சென்று கடம்பமரத்தடியில் கண்டெடுத்தார். அவள் துயில்கையில் ஓசையின்றி எழுந்து வந்து நோக்கினார்.

ஏதுமில்லை எவருமில்லை என்று சித்தம் சொல்லச் சொல்ல சித்தத்தை ஆளும் இருள் மேலும் அச்சம் கொண்டது. இருளுக்குள் ஓசைகளெல்லாம் காலடிகளாயின. இலையலுங்கி ஆடையோசையாகியது. அணுகி மூச்சுவிட்டு விதிர்க்கச்செய்து விளையாடியது காற்று. அப்பால் தன்னை நோக்கும் விழிகளிரண்டை எப்போதும் உணர்ந்தார்.

பருவம் தவறி பூக்கும் கொன்றை என தன் மனைவி பொன்பொலிவதை கண்டார். அவள் விழிகளின் நுனிகளில் என்றுமிலாத கூர்மை. அவள் புன்னகையில் எப்போதும் ஒரு நாணம். தனித்திருக்கையில் அவளில் எழும் மூச்சில் வெம்மை ஏறியது. கனவில் நடந்தாள். கைகள் செய்வதை கண்கள் அறியாமலிருந்தாள். பொருள்பொருந்தா சொற்கள் உதிர்த்தாள். துயில்கையில் அவள் முகத்தில் சாளர இடுக்கில் ஊறும் விளக்கொளி என எப்போதும் புன்னகை இருந்தது. பெரிய மீன் உள்ளே நீந்தும் சுனைநீர் என அவள் எப்போதும் அலையழிந்த உடல்கொண்டிருந்தாள்.

அவரது நிலைமாற்றம் கண்டு அவள் முதலில் திகைத்தாள். பின் உதிர்ந்த மணிகளை ஒவ்வொன்றாய் சேர்த்து கோர்த்து எடுத்து அவர் உள்ளத்தை அறிந்தாள். அவரது ஐயம் அவளை சினம் கொள்ள வைத்தது. தன்னை இழிவுபடுத்தும் அவர் முகத்தை நோக்குகையில் வெறுப்பெழுந்தது. தனித்திருந்து எண்ணுகையில் அகம் கனன்றது. அவரிடம் முகம் நோக்கி சொல்லவேண்டிய சொற்களை எடுத்து கோர்த்துக்கோர்த்து திரட்டியபின் வீசி நீள்மூச்செறிந்தாள். நூறுமுறை அவர் முன் தீக்குளித்தாள். நீறிலிருந்து மீண்டும் எழுந்தாள்.

பின் மெல்ல தன் அகச்செப்பின் அந்த சிறு ஒளிர்மணியை அவரால் தொடவே முடியாதென்று உணர்ந்தாள். அதை எண்ணி புன்னகைத்துக்கொண்டாள். இத்தனைக்கும் அப்பால் இப்படியொன்று தன்னில் நிகழ்ந்திருப்பதை எண்ணி மெய்சிலிர்த்தாள். கன்னிப்பருவத்தின் களிப்புகளுக்குள் செல்ல இன்னும் ஒரு மந்தணக்குகைவாயில் இருக்கிறது. காலத்தில் மீண்டு செல்ல ஒரு கரவுச்சொல் இருக்கிறது. தெய்வங்கள் மட்டுமே அறிந்த ஒன்று எஞ்சியிருக்கிறது.

கன்னியர் தங்கள் அகத்தை ஒளிப்பதில்லை இளையோனே. அவர்கள் அதை மலரென கூந்தலில் சூடிக்கொள்கிறார்கள். செஞ்சாந்தென நெற்றியில் அணிகிறார்கள். ஒளிமணிகளென முலைகள் மேல் தவழவிடுகிறார்கள். கரந்துறைக கரந்துறைக என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது அவளைச்சூழ்ந்திருக்கும் காற்று. கரந்துவைக்க சிலவற்றை அவள் கண்டடைகிறாள். அதை எண்ணி எண்ணி முகம் சிவக்கிறாள். மூச்செறிகிறாள். இருளில் ஓசையின்றி புரண்டுபடுக்கிறாள்.

பெண்ணை அடைபவன் அவள் கரவுகளை கைப்பற்றுகிறான். அரண்மனையின் அத்தனை வாயில்களையும் திறக்கிறான். நிலவறைகளை, குகைவழிகளை, கண்கள் ஒளிரும் இருள்தெய்வங்கள் குடியிருக்கும் கருவறைகளை. ஆடைபறிக்கும் காற்று சுழன்றடிக்க பதறும் இரு கைகளால் பற்றிப்பற்றி சுழன்று குனிந்து தவிக்கிறாள். கையளவே எஞ்சுமா? காற்றறியாதது ஒன்றுமில்லை என்றாகுமா? தானென ஏதுமில்லையா? தெய்வங்களுக்குப் படைக்க குருதி ஒரு சொட்டும் மிச்சமில்லையென்றாகுமா?

இளையோனே, இழந்திழந்து ஏங்கித்தவிப்பது என்பதே பெண்ணின் பெருங்காலம். சுட்டும் குளிர்ந்தும் கைதவித்துக் கைதவித்து அவள் ஏந்திய கன்னிப்பருவத்தை நழுவவிட்டபின் அதை எண்ணாது ஒருநாளும் கடந்துசெல்வதில்லை. குளிர்ந்துறைந்த பனிவெளியின் பாழ்வெண்மையில் உருகிச்சொட்டும் பொற்துளியென சிறுசூரியன் ஒன்று எழுமெனில் அவள் பூத்து மீள்கிறாள். அதை அவள் ஒருபோதும் இழப்பதில்லை. இனியவனே, இனியவனே, பாவத்தை விட இனிதாவதுதான் என்ன?

பின்னர் அவள் அவரை எண்ணி புன்னகைக்கத் தொடங்கினாள். அப்புன்னகை கண்டு அஞ்சி அவர் விழிதிருப்புகையில் அதை விளக்கும் இன்சொற்களை சொன்னாள். போர்வையின் இளவெம்மையின் இதமறிந்தோர் குளிர்காற்றை விரும்புவர். அவர் ஐயம் தன்னை சூழ்ந்துவருகையில் அவள் உவகை பெருகியது. அவர் விழிமுன்னர் ஒளிந்தோடுகையில் அவள் சிறுமியென உடல்குறுக்கி வாய்பொத்திச் சிரித்து உடல் அதிர்ந்தாள்.

கொலைவாளை அருகே உருவி வைத்துவிட்டு ஆடும் பகடை. கட்டங்கள் ஒவ்வொன்றும் அஞ்சிய விலங்கின் உடலென அதிரும் களம். குருதிமணமெழுந்த காற்றில் ஆடவேண்டும் சூது. அவள் பேசிய ஒவ்வொரு சொல்லும் புதிரானது. அவள் சென்ற காலடிச்சரடுகள் எல்லாம் சுழல் பாதைகளாயின. அவள் அளித்த சான்றுகளெல்லாம் அவரை தன் பெருநிழல்முன் கொண்டுசென்று நிறுத்தின. அவளை அவர் மீண்டும் மீண்டும் கண்டுபிடித்தார். ஒன்றுநூறாகி நூறு ஆயிரமாகி ஆடிப்பாவைகளென முடிவிலிப் பெருக்காகி அவள் அவர் திசைகளை நிறைத்தாள்.

போதும் போதுமென்று கண்ணீருடன் தவித்தது அவரது அகம். என்னை வாழவிடு என்று எவரிடமோ கணமொழியாது கெஞ்சியது அவரது அகச்சொல். தன் குருதிநக்கி சுவைகண்ட குகைவிலங்கு. தன்னையே தின்று வெள்ளெலும்பாக அங்கே எஞ்சும். இலைகளெல்லாம் விழிகளான காடு. நிழல்களெல்லாம் வலைக்கண்ணிகளான நிலம். தன் கைகளே நாகங்களாகக் கூடுமென்றால் துயில் எங்கு நிகழும்? காற்று எடை கொண்டது. ஆவியாகி நீராகி பனிப்பாறையாகி உடலை அழுத்தியது. எஞ்சுமொரு சொல்லென்றால் அது என்ன?: ஏன் ஏன் ஏன் என்றல்லாமல் மானுடம் என்ன சொல்லிவிடமுடியும் இளையோனே?

ஓய்ந்து கண்மூடி விழிமுனைகள் பனித்து நிற்க படுத்திருப்பாள். பெருமூச்சுடன் உடல் உடலுக்குள் புரண்டு கொள்ளும். ஊற்றெழுந்த மலைச்சுனை என முகம் ஓயாது அலைபாயும். முத்தமிடும் கருநாகக் குழவிகள் என புருவங்கள். உதடுகள் ஒலியேற்காத ஓராயிரம் சொற்கள் உச்சரித்து உச்சரித்து அழியும். கைகளை விரித்து “இத்துடன் இங்கே” என்று சொல்லி எழுவார். எழுந்து சென்று ஆற்று நீரில் இறங்கி மும்முறை மூழ்கி நீராடி ஆடை அகற்றி பிறந்த உடலுடன் எழுந்து கரைசேர்ந்து மரவுரி மாற்றி மீள்வார்.

எடையகன்ற இதம் திகழும் அகம். முகம் மலர்ந்து இன்சொல்லெழும். தன்னை தான் நிகழ்த்தத் தொடங்குவார். மாணவர்களிடம் சிறுநகை சொல்லிச் சிரிப்பார். இன்னுணவு வேண்டும் எனக்கு என்பார். இளமையை மீட்டெடுத்தவரெனத் திகழ்வார். அவளை புதியவள் என அணைப்பார். சொல்லி மறந்த சொற்களால் அழைப்பார். அனைத்தையும் மீண்டும் தொடங்க விழைவார்.

ஆனால் அது அவளை ஏமாற்றத்தில் சுருங்கச்செய்யும். தன் அகத்தில் அவள் துளித்துளியாக அருந்தும் தேன்கிண்ணம் ஒழிகிறது. அவள் அகக்காட்டில் அந்தி எழுகிறது. அவள் அவரையே ஓரவிழிகளால் வேவு பார்ப்பாள். பார்க்கப்பார்க்க அவரது உவகையின் மிகையே அது நடிப்பு என்று காட்டும். நடிக்கநடிக்க அதன் நெறிகளை அவரே கண்டடைந்து விரிவாக்கிச் செல்வது தெரியும். அதற்கு எல்லையிருப்பதை அவள் அகம் உணர்ந்ததும் அடுமனையில் நின்று புன்னகை புரிந்துகொள்வாள்.

பின் அவர் அமைதியை சென்று முட்டிக்கொள்வார். கைப்பிழையால் கட்டவிழ்ந்து நாடகத்தின் நடுவே திரைவிழுந்துவிடும். தனிமையில் வெறுமை சூழ்ந்த முகத்துடன் அவர் அமர்ந்திருக்கையில் அவள் புண்பட்டு மயங்கிய சிம்மத்தை அணுகும் நரியென மெல்ல காலடி வைத்து மூக்குநீட்டி விழிகூர்ந்து அணுகுவாள். மிக மெல்ல ஒரு சிறு சான்றை அருகே இட்டுவிட்டு விலகி ஓடி பதுங்கிக்கொள்வாள். காய்ந்த தைலமரக்காட்டில் ஒரு நெருப்புப்பொறி.

மீண்டும் பகடைகள் உருளும். பற்றி வாங்கி உருட்டி வென்று தோற்று ஆடி முடித்து சலித்து காய்களைக் கலைத்து புதியதாக மீண்டும் நிகழும். பகடைகளில் தோற்றவர்கள் வெற்றிக்காக துடிக்க வென்றவர்கள் தோல்வியை அஞ்சி தவிக்க அது அவர்களை ஒருபோதும் விடுவதேயில்லை இளையவனே. பகடையென்று ஆன எதுவும் பாழ்வெளி நோக்கி கொண்டுசெல்லும் தெய்வங்களின் களமே.

எந்த ஆடலிலும் இருமுனைகள் ஒன்றை ஒன்று அணுகுகின்றன. நஞ்சோ அமுதோ பரிமாறி முடிகின்றன. இளையோனே, ஆடலென்பது யோகம். யோகமென்பது ஒன்றாகும் நிறைவு. ஒவ்வொரு சான்றாக கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றாகப் பற்றி சேர்த்துக்கொண்டு நூறுநூறாயிரம் வடிவங்களில் வைத்து வைத்து நோக்கிக்கொண்டிருந்தார். அவள் அளித்தவை பெருகின. அவர் அடைந்தவை கூர்ந்தன.

எங்கோ ஒரு முனையில் அவர் அறியவேண்டுமென அவள் விழைந்தாள். ஆடலில் அவள் அடையும் முழுவெற்றி அதுவே என்று உணர்ந்தாள். எங்கோ ஒரு முனையில் அவள் அறியத்தருவாள் என அவர் புரிந்துகொண்டார். அத்துடன் அவ்வாடல் முடியும் என்று அவர் உணர்ந்தார். இருவரும் அந்தத் தருணம் நோக்கி தங்கள் அறியாப்பாதைகளில் இருளில் ஒலிக்கும் குளம்புகளுடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலையில் நீராடச் செல்கையில் அவள் காலடிகளால் அவரை எழுப்பினாள். அவர் தொடர அறியாதவளென குளிர்நீர்ச்சுனை ஒன்றை அடைந்தாள். நீலநீர்ப்பரப்பில் அவள் நீராடும்போது நீரிலெழுந்த பாவையை முத்தமிட்டு முத்தமிட்டு எழுந்த பொன்னிறச் சிறுகுருவியை அவர் கண்டார். அதற்கு நிழலில்லை என்பதை அவர் காண்பதற்காக அவள் அருகே நின்ற குவளை மலரொன்றை எடுத்து அதை நோக்கி வீசினாள். கிளுக் எனச் சிரித்து எழுந்து பறந்தபின் சிறகடித்து வந்து அவள் தோளில் அமர்ந்து பின் எழுந்ததை கைவீசி கலைத்து நகைத்தாள்.

கண்டுகொண்டதும் அவர் எரிந்த உடலில் குளிரெண்ணை விழுந்த இதத்தையே உணர்ந்தார். சினமோ துயரோ இல்லாத நெஞ்சில் விழவு முடிந்த பெருங்களத்தில் எவரோ கைவிட்டுச்சென்ற சால்வை என ஒற்றைச் சொல் ஒன்று மெல்ல நெளிந்தது. பெருமூச்சுடன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்து தன் சித்தத்தையே வியந்து நோக்கிக் கொண்டிருந்தார். சித்தமென்பது கலைந்தபின் தன்னை அடுக்கத் தெரியாத ஆட்டுமந்தை. கூடணைவதற்காக பூசலிடும் அந்திப்பறவைக்குலம். நெளிந்து நெளிந்து மீண்டும் பழைய பாவையையே காட்டும் அலைநீர்ப்பரப்பு.

அவள் மீண்டுவந்தபோது விழிமுனை வந்து தன்னை தொட்டுச்செல்வதை அறிந்தார். உடல் பதற எரிந்து அணைந்தது வெந்தணல். அவள் உடலில் கூடிய துள்ளல் அவளும் அதை அறிந்திருந்தாள் என்பதையே காட்டியது. அவள் காலடிகளை மட்டுமே தொட்டுத் தொட்டுச்சென்ற அவர் கண்கள் ஈரப்பாதத் தடங்களிலேயே அவள் அகத்தை முழுதறிந்தன. மெல்லியகுரலில் பாடிக்கொண்டாள். கன்னியென சிறுமியென உருமாறிக்கொண்டிருந்தாள். எரியடுப்பில் கலமேற்றியபோது கன்னம் சிவந்தாள். பின்கட்டில் குவளை ஒன்றை கழுவுகையில் விழியலைந்து முகம் வியர்த்தாள்.

துயிலற்ற இரவைக் கடந்து மறுநாள் காலையில் எழுந்ததுமே மழையால் உருட்டிவரப்பட்டு முற்றத்தில் கிடக்கும் கரும்பாறை என ஒன்றை உணர்ந்தார். அன்றுதான் அந்நாள். எழுந்து சென்று சுவடிகளை நோக்கினார். அது விசாகம், இந்திரனுக்குரிய நாள். நெடுமூச்சுடன் எழுந்து செல்லும்போது ஒன்றை உணர்ந்தார், அது அக்னிக்குரிய நாளும்கூட. நீராடி வந்த ருசி தன் நீள்குழலை புகையிட்டு உலரசெய்து ஐந்து புரிகளாக பின்னி அவற்றில் மலர்சூடியிருந்தாள். அவள் கண்களில் கனல் ஒளிர்வதை, கன்னங்கள் வெம்மைகொண்டு கனிந்திருப்பதை அவர் கண்டார்.

அவரது மாணவர்களில் பிருகுகுலத்தைச் சேர்ந்த விபுலனும் இருந்தான். பிரம்மனின் வேட்கையின் வடிவாக வேள்விநெருப்பில் தோன்றிய பிருகுவின் கொடிவழி வந்தவர்கள் அக்னிகுலத்தார் என்று அறியப்பட்டனர். வெறும் கைகளாலேயே தொட்டு சமதையை நெருப்பாக்கி வேள்வியைத் தொடங்கும் வல்லமை கொண்டிருந்தான் விபுலன். அவன் மூச்சுபட்டால் சருகுகள் எரிந்தன. அவன் கால்பட்ட இடங்களில் புல்கருகி தடமாயிற்று. இரவுகளில் சுனைகளுக்குள் உடல் முக்கி படுத்துத் துயின்றான். அவன் சொல்லும் வேதச்சொல் உருகிச் சொட்டியது.

ஆசிரியன் முன் பணிந்து நின்ற சிறுவனாகிய விபுலன் மெல்லிய தோள்கள் கொண்ட செந்நிற உடலும், எரிமீன் எனச் சிவந்த கண்களும் கனலென கனிந்த இதழ்களும், செந்தழல் அலைகளென பறக்கும் குழலும் கொண்டு உடல்கொண்டு வந்த எரி என தோன்றினான். “மைந்தா, நான் நீராடச் செல்கிறேன். இங்கிருப்பாயாக. உன் குருவன்னையின் கற்புக்கு நீயே காப்பாகுக” என்று அவனை நிறுத்தியபின் மரவுரியையும் நீராட்டுத்தூளையும் எடுத்துக்கொண்டு தன் மாணவர்களுடன் நீராடச்சென்றார்.

திண்ணையில் ஏற்றப்பட்ட சிற்றகல் அருகே அமர்ந்திருந்தான் விபுலன். கண்நோக்கியிருக்கவே அக்காடு பொன்னொளி கொண்டு எழுவதைக் கண்டான். வானில் முகில்கணங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு வந்து தேங்கிச் செறிந்தன. பொன் துருவல் பொழிந்ததுபோல் ஓர் இளமழை விழுந்தது. இலைத்தகடுகளில் ஒளி வழிந்து துளித்துச் சொட்டியது. பறவைக்குலங்கள் ஒலியடக்கி இலைகளுக்குள் அமைந்து விழி விரித்து நோக்கின. தென்கிழக்கு திசையில் ஒரு வானவில் எழுந்து தெளிந்தது.

சோலைமரங்களுக்கு மேல் ஒரு சிறு மின்னல் அதிர்ந்ததை விபுலன் கண்டான். எழுந்து நின்று நோக்கியபோது அது சிறு சுனையொன்றில் விழுந்து நீரை பொற்குழம்பாக்கியதையும் மின்னல் அணைந்தபின்னரும் சுனை ஒளிவிடுவதையும் பார்த்தான். சுனையில் இருந்து எழுந்த குழலிலும் ஆடையிலும் ஈரநீர் சொட்டும் இளைஞன் ஒருவன் கைகளை உதறிக்கொண்டு கரைவந்து நின்றான். குழலை நீவி நீரை வழித்தபின் சுருட்டி கொண்டையாகக் கட்டி அருகே நின்றிருந்த பத்ரபுஷ்பம் ஒன்றைப் பறித்து அதில் சூடிக்கொண்டு நடந்து வந்தான்.

அவன் வருவதைக் கண்ட விபுலன் இல்லத்திற்குள் புகுந்தான். அங்கே ருசி புத்தாடை அணிந்து முலையிணைகள் மேல் மலர்மாலை சூடி கால்மேல் கால் ஏற்றி மஞ்சத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டான். நோவுகண்ட பசுவென அவள் விழிகள் நனைந்து சரிந்திருந்தன. மூச்சில் அவள் முலைகள் எழுந்தமைந்தன. கனிந்து உதிரப்போகும் பழமென சிவந்திருந்தன அவள் உதடுகள். மதயானையின் வாசத்தை அவன் உணர்ந்தான்.

அவனைக் கண்டதும் ஏறிட்ட அவளுடைய செவ்வரி விழிகள் அவனை நோக்கவில்லை. அவன் அவளிடம் “குருவன்னையே, தாங்கள் உள்ளறைக்குச் செல்லுங்கள்” என்றான். அணங்கெழுந்த பெண்ணென அவள் பொருளின்றி ஏதோ முனகினாள். வெளியே குயில்களின் ஓசையை அவன் கேட்டான். பொன்னிறமான நீள்நிழல் ஒன்று முற்றத்தை தொட்டதை கண்டான். பாரிஜாதம் மணத்தது. யாழேந்திய மதுகரம் சுழன்று சுழன்று இசைத்தது.

அவன் மண்டியிட்டு வணங்கி அனலுருக்கொண்டு எழுந்து அவளை அள்ளித்தழுவினான். “இழிமகனே, நான் உன் குருவின் துணைவி” என்று கூவினாள். “ஆம், ஆகவே உங்கள் கருவறையில் புகுந்துகொள்கிறேன்” என்று அவன் அவள் உடலுக்குள் நுழைந்து கருவறையில் அமர்ந்து கொண்டான்.

வாயிலில் வந்து நின்ற அழகனைக் கண்டு எழுந்தோடிச்சென்றாள் ருசி. கதவை அணுகுவதற்குள் கால்தளர்ந்து முகம் வியர்த்தாள். விழிபூக்க, முலைகள் விம்ம, இடை குழைய நிலைப்படியில் நின்று கைகளை நீட்டினாள். முகம் மலர்ந்து அந்த அழகன் படியேறும்போது அவள் வாய் “கீழ்மகனே, விலகு. இது வேதமுனிவர் தேவசர்மரின் குடில். இப்படிகளை கடந்தால் உன்னை சுட்டெரிப்பேன்” என்று கூவியது.

திகைத்து முற்றத்தில் நின்ற இந்திரன் “தேவி!” என்றான். “விலகிச்செல்... இல்லையேல் நீ அழிவாய்” என்றாள். அவள் வாய்க்குள் இருந்து அனல்கதிர் ஒன்று நாவாக எழுந்து நெளிவதைக் கண்டான். கைகளை விரித்து “நீ யார்? இப்பெண்ணுக்குள் குடியிருக்கும் நீ யார்?” என்றான். “நான் இவள் மைந்தன்... அணுகாதே” என்றாள் ருசி.

மணிவெளிச்சம் பரவிய அவன் பெருந்தோள்களையும் கைகளையும் கண்டு அவள் முலைகள் விம்மின. தொடைகள் நெளிந்து கதவுடன் இழைந்தன. கண்களில் கசிந்த நீர் இமைப்பீலிகளில் சிதறி மின்னியது. “தேவி, நீ என்னை அறியாயா?” என்று இந்திரன் கேட்டான். “கன்னியரை களவுக்கு அழைக்கும் கீழ்மகன் நீ. உன்னை நன்கறிவேன்... இவ்வில்லத்தை அணுகாதே” என்றாள் ருசி.

அவன் மெல்ல கால்களை எடுத்து வைத்தபோது அவள் நாவு அனலென எழுந்து அவனை சுட்டது. அவன் மீசையும் காதோரக்குழலும் பொசுங்கிச் சுருண்டன. அஞ்சி காலெடுத்து வைத்து அவன் பின்னால் சென்றான். “ஆம், நிகழ்ந்தது என்னவென்று அறிந்தேன். அனலோன் மைந்தனே, உனக்கு வணக்கம்” என்றபின் ஒரு சிறிய செம்மணிக்குருவியாக மாறி வானிலெழுந்து மறைந்தான்.

அவள் நா தொட்ட நிலைச்சட்டம் பற்றிக்கொண்டது. அவ்வனலில் இருந்து விடுபட்டவள் என அவள் பின்னால் சரிந்து விழுந்து கால்கள் குவித்து முகம் புதைத்து அமர்ந்து தோள்கள் அதிர அழுதாள். அவளருகே குடிலின் சட்டகமும் கதவும் மெல்ல வெடித்து நாவோசையுடன் எரிந்துகொண்டிருந்தன. நீராடிய ஈரத்துடன் ஓடிவந்த தேவசர்மர் நீரூற்றி நெருப்பை அணைத்து உள்ளே சென்றார். கதறியபடி அவள் அவர் கால்களை பற்றிக்கொண்டாள். தன் கமண்டலத்து நீரை அவள் நெற்றியில் தெளித்து “அறிந்து கடந்தாய். இனி அவ்வாறே அமைக!” என்று அவளை வாழ்த்தினார் தேவசர்மர்.

மறுநாள் தன் தோல்மூட்டையுடன் விபுலன் தேவசர்மரின் குருகுலத்தில் இருந்து கிளம்பினான். அவள் கண்ணீருடன் அவன் பின்னால் சோலை முகப்பு வரை வந்தாள். “நீ செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். “மைந்தனா கொழுநனா என தெய்வங்கள் திகைக்கும் உறவு இது. இது நீடிக்கலாகாது” என்றபின் அவன் சோலைக்குள் சென்று மறைந்தான். பல்லாயிரம் கோடி நாக்குகளுடன் சொல்லற்று நின்றது காடு.

“காட்டில் திகழும் சொல்லின்மையை வாழ்த்துக! கோடிநாக்குகள் உதிர்கின்றன. கோடி நாக்குகள் தளிரிடுகின்றன. சொல்லப்படாத ஒன்றால் நிறைந்து நின்றிருக்கிறது பசுமையின் இருள். அதை தெய்வங்கள் அறியும். தெய்வங்களே அறியும். இளையோனே, பெண்தெய்வங்கள் மட்டுமே அறியும். ஓம்! ஓம்! ஓம்!”

குறுபறையை தூக்கி அதன் மேல் முகம் வைத்து வணங்கிய விறலி அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய கொழுத்து விரிந்த கரிய தோள்களில் மயிர்க்கால்கள் புள்ளியிட்டிருப்பதைப் பார்த்தபடி சகதேவன் அமர்ந்திருந்தான்.

பகுதி 5 : ஆடியின் அனல் - 2

திரௌபதி வந்திறங்கியபோதே களைத்திருந்தாள். அணிப்படகிலிருந்து நடைப்பாலம் வழியாக மெல்ல வந்தபோது மாலையிளவெயில் அவளை வியர்த்து தளரச்செய்தது. மங்கல இசையைக் கேட்டு உடலதிர்ந்தவள் போல் முகம் சுளித்து கைகளால் 'மெல்ல' என்றாள். பெருங்கூடத்தை அடைந்ததும் சேடியிடம் மெல்லிய குரலில் அணியறைக்குச் செல்லவேண்டும் என்றாள்.

அவள் வரும் இசையைக் கேட்ட சகதேவன் எழுந்து சாளரத்துக்கு வந்து கீழே நோக்கவேண்டுமென விழைந்தான். ஆனால் உடல் தயங்கிக்கொண்டே இருந்தது. அவள் அணியறைக்குச் சென்றுவிட்டதை அவனே உய்த்துணர்ந்துகொண்டான். அது அவனுக்கு சற்று ஆறுதலை அளித்தது. உடலை எளிதாக்கிக்கொள்ளும்பொருட்டு சால்வையை சீராக மடித்து தன் தோள்களில் அணிந்துகொண்டான்.

கீழே எங்கோ எழுந்த ஒரு சிறிய ஓசை அவனை மீண்டும் அதிரச்செய்தது. நடுங்கும் விரல்களுடன் சால்வையை சீரமைத்து கழுத்திலணிந்த மணியாரத்தை திருத்தினான். தன் மூச்சை உணர்ந்தபடி காத்திருந்தான். மீண்டும் ஓசைகள் கேட்கவில்லை. அது சாளரக்கதவின் ஒலி என உணர்ந்து மீண்டும் எளிதானான். சால்வையை சீரமைத்தபடி எழுந்து சென்று சாளரத்தருகே நின்றாலென்ன என்று எண்ணினான். அப்போது அவள் நடந்து வரும் ஒலியை கேட்டான்.

அவள் உயரமும் எடையும் அவ்வொலியில் இருந்தது. அவள் பாதங்களின் மென்மையும் அவள் மூச்சின் தாளமும் அதிலிருந்தது. ஒலி இத்தனை துல்லியமாக ஒரு உடலை காட்டுமா? அணுகி மேலும் அணுகி கதவுக்கு அப்பால் எழுந்தது. அணிகள் குலுங்கும் ஒலி. ஆடை நலுங்கும் ஒலி. மெல்லிய மூச்சொலி. இதழ்களை நாவால் நனைக்கும் ஒலிகூட.

எழவேண்டுமென எண்ணியபடி அசையாமலேயே அமர்ந்திருந்தான். அவளுடைய கைகள் கதவை தொட்டதை தன்மேல் என உணர்ந்தான். அவள் சிலகணங்கள் வாயிலிலே நின்றபின் தாழ்த்திய கைகளின் கைவளைகள் குலுங்க மேகலை மணிகள் கிலுங்க அருகே வந்தாள். சகதேவன் அறியாமல் மெல்ல எழுந்தான். அவன் உடலின் எடையை தாளமுடியாமல் கால்கள் தளர்ந்தன. அவள் அருகே வந்து அவனை நோக்கி களைத்த மென்புன்னகையுடன் இதழ்கள் மலர்ந்து “எதிர்வெயிலில் வந்தேன்” என்றபடி பீடத்தில் அமர்ந்தாள்.

சகதேவன் அமர்ந்துகொண்டு “மேல்திசை வெயில் கூரியது” என்றான். அத்தனை எளிய உலகியல் பேச்சொன்றை அவள் தொடங்கியதற்காக அவளை அப்போது மிக விரும்பினான். வேறென்ன பேசுவார்கள், காவியங்களின் அணிச்சொற்களையா என்று எண்ணியதும் புன்னகைத்தான். அப்புன்னகையிலேயே மேலும் எளிதானான்.

”ஆம், கங்கையில்தான் நிழலே இல்லையே” என்றபின் அவள் புன்னகைசெய்தாள். தன் புன்னகையின் எதிரொளி அது என்று அவன் எண்ணினான். தலையை சற்றே சாய்த்து கூரிய மூக்கைச் சுளித்து நெற்றியை கைகளால் பற்றிக்கொண்டு “நாளை முழுநிலவு. இன்று அரண்மனையில் அதற்குரிய சடங்குகள் காலைமுதலே இருந்தன. உள்ளறையைச் சுற்றி பந்தலிட்டிருந்தார்கள். அறையிலிருந்து வேள்விப்புகை வெளியே செல்லவே முடியவில்லை” என்றாள். ”துயின்று எழுந்தபோது மூக்கு அடைத்துக்கொண்டிருந்தது. தொண்டையிலும் வலியிருந்தது.”

“மருத்துவச்சிகள் இருப்பார்களே?” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள்தான் உடனே கையிலிருக்கும் அனைத்து மருந்துகளுடனும் வந்துவிடுவார்களே?” என்று அவள் கையை வீசினாள். “எல்லா மருந்தும் ஒன்றுதான், சுக்கு, மிளகு, திப்பிலி. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மணத்தை கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்” என்றபடி அவனை நோக்கி புன்னகை செய்தாள். “ஆம், நோய் ஒன்றுதானே. நாம் கொள்ளும் துயர்தானே பல?” என்றான்.

அவள் கைகளை பீடத்தின் மேல் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அவனை விழிகளால் அளந்து “அழகுடன் அணிசெய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். சகதேவன் நாணிச்சிரித்து “ஆம், அணிசெய்துகொண்டால் நான் மூத்தவர் தருமனின் சாயலை அடைவதுண்டு என்பார்கள்” என்றான். திரௌபதி முகவாய் தூக்கி கழுத்து மயிலென நீள உரக்கச் சிரித்தபடி “அச்சாயலில் இருந்து விலகிச்செல்வதற்கல்லவா நீங்கள் அணிசெய்துகொள்ளவேண்டும்?” என்றாள்.

இணைந்து நகைத்தபடி “அதை நான் அவரிடமே சொன்னேன்...” என்றான். “அவர் எல்லா நகைச்சுவைகளையும் முன்னரே நூல்களில் வாசித்திருப்பதனால் நகைப்பதில்லை.” அவள் சிரித்து “ஆம்” என்றாள். அவன் “இளமையிலிருந்தே நான் அவரைத்தான் தந்தையென்றும் ஆசிரியரென்றும் தமையனென்றும் கண்டு வருகிறேன். குழந்தைநாட்களில் அவரைப்போல தோளில் ஒரு சால்வை சரிய கையில் எந்நேரமும் ஏடு ஒன்றுடன் அலைவேன் என்று அன்னை சொல்லி நகைப்பதுண்டு” என்றான்.

திரௌபதி “ஆகவேதான் நூல்நவிலத் தொடங்கினீர்களா?” என்றாள். “ஆம், அவர் கற்றுக்கொண்ட நூல்களையே நானும் கற்றேன். ஆனால் எங்கோ என் உள்ளம் அவரது விழிதீண்டாத நூல்துறை ஒன்றை தேடியிருந்திருக்கிறது. கோள்நூலும் குறிநூலும் என்னுடையதாயின” என்றான். அவள் சிரிப்புகள் வழியாக அந்தத்தருணத்தை மிக இயல்பானதாக ஆக்கிவிட்டிருந்தாள் என்று புரிந்தது.

“கோள்நிலையும் குறிநிலையும் கண்டு வாழ்க்கையை அறியமுடியுமா என்ற ஐயம் எப்போதும் எனக்குண்டு” என்றாள். அவள் தன்னுடன் இயல்பான உரையாடலை தொடரவிழைவதை அவன் உய்த்துக்கொண்டான். “அந்த ஐயமில்லாதவர் எவருமில்லை. நிலைகூறும் அக்கணத்தில் மட்டும் கேட்பவர்கள் நம்புகிறார்கள். கூறுபவன் அப்போதும் நம்புவதில்லை” என்றான். அவள் சிரித்துவிட்டு கைகளால் இதழ்களைப் பொத்தி “மூத்தவரும் சற்று சிரிக்கலாம். நெறிநூல்கள் இன்னும் அழகுகொண்டிருக்கும்” என்றாள்.

“சிரிக்கத்தெரியாத நிமித்திகன் மெல்லமெல்ல சித்தமழிவான்” என்றான் சகதேவன். “எண்ணி எண்ணிச் சிரிக்க அன்றாடம் ஏதேனும் ஒன்று சிக்காமல் ஒருநாள் கூட செல்வதில்லை.” அவள் “அரசகுலத்தார் நிமித்திகநூல் கற்பதில்லையே” என்றாள். “ஆம், நெறிநூலும் கதையும் வில்லும் கற்பார்கள். எஞ்சியது நகுலனுக்குப் புரவி. எனக்கு நிமித்தநூல்” என்றான்.

“இளவயதில் ஒருமுறை தெற்குப்பெருவாயிலில் இருந்து கணிகர்வீதி வழியாக வந்துகொண்டிருந்தபோது நிமித்திகர் கூடும் பிரஹஸ்பதியின் ஆலயமுற்றத்துப் பெருமண்டபத்தின் முன்னால் முச்சந்தியில் இருந்த சின்னஞ்சிறு கோயிலை கண்டே0ன். பெட்டிபோன்ற கருவறைக்குள் ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அமர்ந்திருந்த தேவன் யார் என்று தெரியவில்லை. அங்கிருந்த இளம்பூசகன் அவர்களின் முதுமூதாதை அவர் என்றான். அவர் பெயர் அஜபாகன்.”

“அங்கிருந்து செல்லத் தோன்றவில்லை. தூண்டிலில் சிக்கியதுபோல் என் சித்தம் அங்கே கிடந்து துள்ளியது. ஏனென்று அப்போது அறியவில்லை, பின்னர் அதை சொற்களாக்கிக் கொண்டேன். அந்த தெய்வத்தின் விழிகளில் இருந்த கடுந்துயர் என்னை அங்கே நிற்கச்செய்தது. என்னை அது அச்சுறுத்தியது, அமைதியிழக்கச் செய்தது. அதற்கு அடியில் என்னென்றோ ஏனென்றோ அறியாமல் என் சித்தம் உருகிக்கொண்டிருந்தது.”

“கோடி சிற்பங்களுண்டு மண்ணில். அவையெல்லாம் பொருட்கள். மானுட உடலோ நிகழ்வு. அனல் போல, நீர் போல, வான் போல. உயிரற்ற மானுட உடலை எவரும் விழைவதில்லை. எந்தச்சிற்பியும் செதுக்குவதுமில்லை. சிற்பி செதுக்க எழுவது உயிர் உடலில் நிகழ்த்தும் அசைவைத்தான். சில அருந்தருணங்களிலேயே உளியின் தொடுகை கல்லிலோ மரத்திலோ உயிரசைவை கொணர்கிறது. அதிலும் மானுட உடலில் விழியைப்போல் அசைவே உருவான பிறிதொன்று இல்லை. ஒரு கணத்தில் ஆயிரம் முறை பிறந்திறப்பது அது. அதை செதுக்குவது பெருஞ்சிற்பியின் கையில் எழுந்த பெருங்கணம். அது நிகழ்ந்த சிற்பம் அது...” சகதேவன் சொன்னான்.

“தேரில் செல்லும் ஒருவனின் கணநேரப் பார்வையிலேயே தன் உள்ளத்தை அறிவித்தவை அச்சிற்ப விழிகள். சற்று நேரம் அவற்றை நோக்கி நின்றால் உடல் பதறத்தொடங்கும். நான் எண்ணியதையே பூசகனும் சொன்னான். ’பெருந்தந்தை அஜபாகரின் விழிகளை நோக்கலாகாது இளவரசே, அவை நம்மை பித்தாக்கிவிடும்’ என்றான். அவ்விழிகளைக் கடந்து என்னால் திரும்ப முடியவில்லை. அவற்றிலிருந்தது துயரம்” என்றான் சகதேவன்.

“மானுடர் மண்ணிலறிவதெல்லாமே சின்னஞ்சிறுதுயரங்களைத்தான். இறப்பு, நோய், பிரிவு, இழப்பு, அவமதிப்பு, தனிமை என நூறுமுகங்கள் கொண்டுவருவது உண்மையில் ஒன்றே. மிகமிகச் சிறியது அது. மானுடன் விட்டால் விட்டுவிடக்கூடியது. பெருந்துயர் என்பது வானிலிருந்து மண்ணை நோக்கும் தெய்வங்கள் கொள்வது. அது கலையாத கொடுங்கனவு. அத்துயரை அடைந்தவன் அதில் உறைந்து விடுகிறான். அவனை சிற்பமாக்குவது எளிது என தோன்றியது. அவன் நீர் பனிக்கட்டியாக ஆனதுபோல வாழ்விலேயே சிற்பமாக ஆனவன் அல்லவா?”

”முதுசூதர் ஒருவரை அரண்மனைக்கு வரச்சொல்லி அவரிடம் அஜபாகனைப்பற்றி கேட்டேன்” என்றான் சகதேவன். “சந்திரகுலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டி ஒரு களத்தில் அமைத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு முழுமைச்சித்திரத்தை அமைக்கமுயன்றவர் அவர். அஸ்தினபுரியின் வரலாற்றிலேயே அவருக்கிணையான நிமித்திகர் இருந்ததில்லை என்றார் சூதர். ஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் அவருக்கு பெருஞ்சுடரேற்றும் அன்னக்கொடையும் நிகழ்கின்றன.”

திரௌபதி “அந்த நாள் மாமன்னர் சந்தனு மறைந்த நாள்” என்றாள். சகதேவன் “குலக்கதைகளை நினைவில் கொண்டிருக்கிறாய். நன்று” என்றான். திரௌபதி “அரசுசூழ்தலில் முதல் நெறி என்பது அத்தனை அரசர்களுடைய குலமுறைகளையும் நினைவில் கொண்டிருத்தல்தான். அஸ்தினபுரியின் குலக்கதை அறியாத அமைச்சுத்தொழிலோர் எவரும் இருக்கமுடியாது” என்றாள்.

சகதேவன் புன்னகைத்து “ஆம், அன்றுதான் அவரும் நிறைவடைந்திருக்கிறார். மாமன்னர் சந்தனுவுக்காக விண்சுடர் எழுப்புதல் தெற்குக்கோட்டைக்கு அப்பால் அரசர்களுக்குரிய இடுகாட்டில் அவரது பள்ளிப்படைச் சிற்றாலயத்தில் நிகழும். மூத்தவர் அமைச்சர் விதுரருடன் அங்கே வழிபாட்டு நிகழ்ச்சிகளை அறிவிப்பதற்காக சென்றிருந்தார். அவருடன் சென்ற நான் அவரது ஆணைக்கேற்ப அரசரிடம் ஒரு சொல் அளிப்பதற்காக திரும்பி வருகையிலேயே அஜபாகனின் ஆலயத்தைக் கண்டேன்” என்றான்.

“கதைகளின்படி அஜபாகன் சந்தனு மன்னர் இறந்த நாளில் கோட்டைமுகப்பில் நின்றிருந்தார். மழைக்கால இரவின் நான்காம் சாமம். அவரது உடல்நிலையை பலநாட்களாகவே அனைவரும் அச்சத்துடன் நோக்கியிருந்தனர். அன்றிரவு அனைவருக்கும் தெரிந்துவிட்டது அரண்மனை மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று. ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் நெடுங்காலம் இமயமலையடுக்குகளில் எங்கோ அலைந்துவிட்டு அஜபாகன் அஸ்தினபுரிக்குள் நுழைந்தார்.”

“அவரை அவரது குலம் மறந்துவிட்டிருந்தது. அவரது கொடிவழியினர் நீர்க்கடன் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். எவரும் அவரை அடையாளம் காணவில்லை. மாமன்னர் சந்தனு விண் ஏகிய அத்தருணத்தில் அரண்மனையின் வெண்மாடமுகட்டிலிருந்து ஒரு சின்னஞ்சிறிய வெண்பறவை எழுந்து பறந்து மறைந்தது என்கிறார்கள் சூதர்கள். அதைக் கண்டதும் அஜபாகன் கைநீட்டி எக்களித்து நகைத்து ‘சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது’ என்று கூவினாராம்.”

”அன்றுமாலையே அவர் பிரஹஸ்பதியின் ஆலயத்தின் முன் பெருமண்டபத்தின் ஏழாவது படிக்கட்டில் படுத்து கண்ணீருடன் உடல் அதிர நகைத்து நகைத்து உடல் வலிப்புகொள்ள சோர்ந்து உயிர்துறந்தார்” என்றான் சகதேவன். “அவர் இறக்கும் முன் சொன்ன நான்கு வரிகளை நிமித்திகர் குறித்துவைத்திருந்தனர். அதற்கு பொருள் காண நெடுங்காலம் முயன்றனர். பின்னர் அதுவே ஒரு நூல்வரிசையாக மாறியது. அஜபாகரகஸ்யம் அவற்றில் முதன்மையான நூல். அஜபாகசித்தம், அஜபாககாமிகம் இரண்டும் வேறுகோணங்களில் ஆராயும் நூல்கள். பின்னர் அந்நூல்களை வெறுமனே நிமித்தவியல் மாணவர்கள் கற்று மறக்கத் தொடங்கினர். அவரது அச்சிலை மட்டும் துயர் ததும்பி ஒளிவிடும் விழிகளை வெறித்து அங்கே அமர்ந்திருக்கிறது.”

“என்ன வரிகள்?” என்றாள் திரௌபதி. “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்பது முதல் வரி. வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது ஆகியவை எஞ்சியவரிகள்” சகதேவன் சொன்னான். “அன்றுதான் நான் நிமித்திகநூலில் ஆர்வம் கொண்டேன். அவ்வரிகளின் பொருளை அறியவிழைந்தேன்.”

”என்னை அமைச்சர் விதுரர் எச்சரித்தார். தொழிலாக அன்றி அறிதலின் பாதையாக ஒருபோதும் நிமித்தநூலை கற்கலாகாது என்றார். ஏனென்றால், மானுட அறிவென்பதே நேற்று நிகழ்ந்ததைக் கொண்டு இன்றையும் நாளையையும் அறிவதுதான். நிமித்தநூல் நாளை நிகழவிருப்பதைக்கொண்டு இன்றை அளக்க முற்படுகிறது. அம்முறையில் எங்கோ ஆழ்ந்த பிழை ஒன்று உள்ளது. நிமித்திகர் தேவை. நிமித்தங்கள் ஆராயப்படவும் வேண்டும். ஆனால் நிமித்தநூல் வழியாக சென்றடையும் இடமென ஒன்றில்லை.” சகதேவன் புன்னகைத்து “அதையே எளியோரும் சொல்வார்கள். நிமித்தநூல் கற்பவன் மேல் தெய்வங்கள் சினம்கொள்கின்றன என்று” என்றான்.

”அந்த நான்கு வரிகளுக்குமே அஸ்தினபுரியில் விடையுள்ளது அல்லவா?” என்றாள் திரௌபதி. “சந்தனு மன்னரின் காமவிழைவை முதல்வரி குறிப்பிடுகிறது. சந்திரகுலத்தில் பிறந்த வீரியமற்ற இளவரசர்களை இரண்டாம் வரி. மூன்றாம் வரி அவர்களின் வாழ்க்கையின் துயரை. நான்காவது வரி அஸ்தினபுரியின் மேல் விழுந்த காசிநாட்டு இளவரசி அம்பையின் தீச்சொல்லை” என்றாள்.

“ஆம், ஆனால் நிமித்திகச் சொற்களுக்கு சுட்டுவதற்கு அப்பால் பொருளிருக்கும்” என்றான் சகதேவன். “நான்கு சொற்கள். இச்சையின் கொடி. சத்தற்ற விதை, வதைக்கும் மண், வடதிசை எரிவிண்மீன். அவை நான்கும் இணைகையில் முழுமையான பொருள் ஒன்று எழுகிறது.” சகதேவன் “என்னுடைய தனிப்பட்ட கணிப்புகள் இவை. தனிப்பட்ட அச்சங்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்நான்கு சொற்களால் நான் அனைத்தையும் தொகுத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“எரிவிண்மீன்... வடதிசை எரிமீன் என எதைச் சொல்கிறார்?” என்றாள் திரௌபதி. சகதேவன் “துருவனைச் சொல்வதாக ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்றான். “துருவன் குளிர்மீன் அல்லவா?” என்றாள் திரௌபதி. சகதேவன் மெல்லிய புன்னகையுடன் “அவன் எரியாகும் தருணமொன்று வரலாகாதா என்ன?” என்றான். திரௌபதி அவனையே இமைக்காமல் சற்றுநேரம் பார்த்திருந்தாள். பின்னர் பெருமூச்சுடன் “தெரியவில்லை” என்றாள்.

“நிமித்தநூல்களை இரண்டாகப்பிரிக்கிறார்கள்” என்றான் சகதேவன். ”குறிநூல் இங்கே நம்மைச்சுற்றி இருக்கும் பொருட்களை கணிக்கிறது. கோள்நூல் விண்ணில் நம்மைச்சுற்றிச் சுழலும் மீன்களை கணிக்கிறது. முதல்மூன்றும் குறிநூல் சார்ந்தவை. நான்காவது கோள்நூல் சார்ந்தது.” அவள் முகத்தின் ஆர்வமின்மையை நோக்கி அவன் மெல்ல புன்னகைசெய்தான். “நிமித்திகர் தங்கள் நூலை வலியுறுத்த சொல்லும் சில சொற்கள் உள்ளன.”

“நிமித்தநூலுக்கு அடிப்படை ஒரு பெரிய மெய்நோக்கு. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும் காற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”

“அப்படியென்றால் அதை மண்ணைவைத்து மட்டும் ஏன் கணிக்கவேண்டும் என்பதே நிமித்தமெய்யறிவின் முதல் வினா. விண்ணிலுள்ள கோள்களெல்லாம் நம் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளன. மீன்கள் பிணைந்துள்ளன. கடுவெளியின் அலைகளும் நம் வாழ்வும் ஒற்றை நிகழ்வின் இரு தருணங்களே” என்றான் சகதேவன். “அந்த மெய்யறிதலில் இருந்து உருவானதே நிமித்திகம்.” புன்னகையுடன் “சரியாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்” என்றான்.

“ஆம்” என்று அவள் சிரித்தாள். “அவையில் அமர்ந்து பரிசில் பெறவேண்டுமென்றால் இந்த இளமைக்குரல் போதாது. இன்னும் எழுந்த மணிக்குரல் வேண்டும்.” தன் உடலை நிமிரச்செய்து “என் எதிர்காலத்தை கணித்துச்சொல்லுங்கள்” என்றாள். சகதேவன் தலையசைத்து “இல்லை, நூல் நெறிப்படி தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் கணிக்கலாகாது” என்றான்.

திரௌபதி வியப்புடன் “நூலறிந்த ஒருவர் அவ்வாறு கணிக்காமலிருக்க முடியுமா என்ன? உண்மையிலேயே என்னை கணிக்கத் தோன்றவில்லையா?” என்றாள். “தோன்றவில்லை என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு கணமும் தோன்றுகிறது. ஆனால் கணிப்பதில்லை” சகதேவன் சொன்னான். “அது ஓர் ஆழ்ந்த அச்சம். நூல் கற்கும்தோறும் வலுப்பெறுவது.”

திரௌபதி சிலகணங்கள் நோக்கிவிட்டு “வியப்புதான். ஐவரில் இளையவரிடமே முழுமை நிகழ்ந்திருப்பது” என்றாள். சகதேவன் “நற்சொல் என்னை மகிழ்விக்கிறது. ஆனால் எங்கும் செல்வதற்கில்லாதவன் அமர்ந்திருக்கும் அழகை புகழ்வதற்கென்ன இருக்கிறது?” என்றான். திரௌபதி சற்று முன்னால் சாய்ந்து “சிறியவரே, நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள்?” என்றாள்.

அவன் திகைப்புடன் நிமிர்ந்து “அச்சமா, எனக்கா?” என்றான். “ஆம், அது அச்சம்தான். வேறெதையும் அறிய விழியில்லையென்றால் அச்சங்களை மட்டும் நான் அகம்சென்று அறிவேன்” என்றாள் திரௌபதி. சகதேவன் விழிகளை திருப்பிக்கொண்டு “அச்சம்தான்” என்றான். “எதை?" என்றாள். சகதேவன் அவளை நோக்கி “நிமித்திகரெல்லாம் அஞ்சுவது வாழ்க்கையின் கட்டற்ற பெரும் பெருக்கை. நிலையின்மையை. அதன் உள்ளீடாகத் திரண்டெழும் பொருளின்மையை. நான் அஞ்சுவது அதையல்ல.”

அவன் விழிகளை நோக்கி அவள் விரல்களை பூட்டிக்கொண்டாள். அவன் அவளை ஒருகணம் நோக்கி பின் விலகி “நான் மானுடரின் உள்ளே கொந்தளிக்கும் ஆணவத்தை அஞ்சுகிறேன்” என்றான். அவன் இதழ்களின் ஓசை அங்கே ஒலித்தது. “காமம் குரோதம் மோகம் என்கிறார்கள். அவையெல்லாம் எளியவை. அத்தனை விலங்குகளுக்கும் உள்ளவை. ஒவ்வொன்றையும் சென்றுதொடும் ஆணவமே அவற்றை பேருருக்கொள்ளசெய்கிறது. குருதிவிடாயெழுந்த கொடுந்தெய்வங்களாக்குகிறது.”

விழிகள் சுருங்க “நீங்கள் காண்பது என்ன?” என்றாள் திரௌபதி. அவன் புன்னகையுடன் தலையசைத்து “ஒன்று தெரியுமா? முன்பொருமுறை அஸ்தினபுரியில் குருதிமழை பெய்திருக்கிறது” என்றான். “குருதிமழையா...” என்று அறியாமல் அவள் புன்னகைசெய்து பின் “குருதிமழை என்றால்...” என்றாள். “கதைகள்தான்” என்றான் சகதேவன். “வெளியே வானிலிருந்து பெய்திருக்கலாம். உள்ளே கனவிலிருந்தும் பெய்திருக்கலாம். ஆனால் அப்படியொரு கதை உள்ளது.”

“காந்தாரத்து அன்னை நகர்நுழைவதற்கு முந்தையநாள் நள்ளிரவில் விண்ணிலிருந்து குருதித்துளிகள் பொழிந்தன. அஸ்தினபுரியின் நாணேறி நின்றிருக்கும் கைவிடுபடைகளின் கூர்முனைகளிலிருந்து குருதி துளிர்த்துச் சொட்டியது. அதைக் கண்டவர்கள் காவலிருந்த படைவீரர்கள் மட்டுமே. கிழக்குக்கோட்டைவாயிலில் காவலிருந்த படைவீரன் ஒருவன் அதில் நனைந்து அன்றுபிறந்த குழவி போல் எழுந்தான். அவன் அதை பாடலாகப் பாட அப்பாடல் படைவீரர்கள் நடுவே நெடுங்காலம் பாடப்பட்டு வந்தது. பின்னர் அதை மறந்துவிட்டனர். நிமித்தநூல்களின் எளிய குறிப்பாக அது மறக்கப்பட்டுவிட்டது.”

திரௌபதி அவனை நோக்கியபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் நன்றாக சாய்ந்துகொண்டாள். கண்கள் சிரிக்க, உரத்த குரலில் “நிமித்திகரே, இத்தருணத்தில் பாண்டவர்கள் செய்யவேண்டுவதென்ன?” என்றாள். அவன் புன்னகையுடன் அவள் கண்களை நோக்கி இதழ்கள் புன்னகைத்தாலும் கண்களில் கூர் ஒளிர்ந்ததை கண்டான். ஆயினும் சிரிப்பை விடாமல் தலைவணங்கி “ஆணை இளவரசி. செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஐவரும் தங்கள் துணைவியுடன் இந்த பாரதவர்ஷத்தை விட்டு விலகிச் செல்லவேண்டும். வடக்கே கின்னர கிம்புருட நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது மேற்கே காந்தாரத்தைக் கடந்து பெரும்பாலை நாடுகளுக்குச் செல்லலாம். அல்லது தெற்கேசென்று கடல்களைக் கடந்து தொலைதூரத்து தீவுகளில் குடியேறலாம்” என்றான்.

திரௌபதி புன்னகையை பெரிதாக்கி “அது ஒன்றே வழி, அல்லவா?” என்றாள். “ஆம், இளவரசி. நிமித்திகன் சொல்லக்கூடுவது அது ஒன்றே” என்றான். “அரசியர் நிமித்திகர் சொல்லை கேட்டுக்கொள்ளவேண்டும் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றாள் திரௌபதி. “மூத்தோர், அவையோர், அமைச்சர், நிமித்திகர், ஒற்றர் என்னும் ஐம்பேராயத்தை கலந்துகொள்ளவேண்டும். அதன் உள்ளுறையும் தெய்வம் சொல்வதையே செய்யவேண்டும்.”

“ஆம்” என்றான் சகதேவன். “என் உள்ளுறைத்தெய்வம் சொல்கிறது எனக்கு அஸ்தினபுரி வேண்டும். அப்பாலுள்ள நாடுகளனைத்தும் வேண்டும். பாரதவர்ஷத்தின் அரியணையன்றி எதிலும் நான் நிறைவடைய முடியாது. ஏனென்றால் நான் பிறந்ததே அதற்காகத்தான்.” சகதேவன் புன்னகை மேலும் விரிய “இளவரசி, நிமித்த நூல் தாங்கள் இதையே சொல்வீர்கள் என்றும் சொல்கிறது” என்றான்.

திரௌபதி சிரித்தபடி “நிமித்தநூல் அதை சொல்லும் என்று எங்கள் அரசுநூல்களும் சொல்கின்றன” என்றபடி கைகளை பீடத்தின்மேல் வைத்து உடலைக் குறுக்கி “குளிர்கிறதே... கங்கையின் காற்றில் ஈரம் மிகுந்துள்ளதா?” என்றாள். “இல்லையே, இன்று முன்பைவிட வெக்கையல்லவா உள்ளது?” என்றான். அவள் மேலாடையை போர்த்திக்கொண்டு “எனக்கு குளிர்ந்து உடல் சிலிர்க்கிறது” என்றாள்.

சகதேவன் எழுந்து அவள் கைகளில் தன் கையை வைத்து தொட்டுப்பார்த்து “வெம்மை தெரிகிறது. உடல்காய்கிறது” என்றான். “நீர்நோய் போலத்தான் தெரிகிறது. அதை நான் புகை அடைத்தது என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் திரௌபதி. அவன் அவள் நெற்றியைத் தொட்டுவிட்டு “ஓய்வெடு... மருத்துவர் கீழே இருப்பார்” என்றான். “தேவையில்லை. நான் முன்னரே மருந்துச்சாறு அருந்திவிட்டேன்” என்றபின் அவள் அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். சற்று தள்ளாடி தன் உடலை அவன் மேல் நன்றாக சாய்த்துக்கொண்டாள்.

“கால்கள் தளர்கின்றன. மாளிகைச்சுவர்கள் மெல்ல ஆடுகின்றன” என்றாள். “நாளை ஒருவேளை இவ்வெம்மைநோய் மேலும் கூடலாம்” என்றான் சகதேவன். “கங்கைக்கரை மாளிகை நீர்நோய்க்கு உகந்தது அல்ல.” “எனக்கு அது பழக்கம்தான்... இளமையில் இந்த மாளிகையில்தான் நாங்கள் இளமகளிர் தங்கி வேனலாடுவோம்” என்றாள்.

அவன் அவளை மெல்லத் தாங்கி கொண்டுசென்றான். அவள் உடலின் வெம்மையை தோள்கள் உணர்ந்தன. வெம்மை கொண்ட உடலில் இருந்து எழுந்த தோல்மணம் அவன் எங்கோ அறிந்ததுபோல் இருந்தது. அதை அவன் முகர்வதை அவளறியலாகாது என்று எண்ணிக்கொண்டான். அவள் அவன் தோளிலிருந்து கைகளை எடுத்து மஞ்சத்தில் அமரப்போனபோது கால்தளர்ந்தாள். அவன் அவளை பற்றிக்கொண்டான். அவள் கழுத்தில் அவன் முகம் உரசிச்சென்றது. மென்மணம். உச்சிவேளைத் தாமரையிதழின் மணம்.

அவள் முலையிடுக்கின் வியர்வைப் பளபளப்பை கண்டான். அவன் விழிகளைக் கண்டதுமே அவள் அறிந்து புன்னகைத்து “கீழே சென்று மருத்துவரிடம் என் உடல்நிலையைச் சொல்லி மருந்து வாங்கி வாருங்கள்...” என்றாள். “அவரை அழைத்துவருகிறேன்” என்றான் சகதேவன். “இல்லை, அவர் இங்கே வரலாகாது... எனக்கு சிறிய வெம்மைநோய்தான். நாளை எழுந்துவிடுவேன்.” பின் அவனை நோக்கி புன்னகைசெய்து “ஆனால் இன்று உங்கள் நாளல்லவா? அதை நீங்கள் இழக்கலாகாது” என்றாள்.

சகதேவன் உடல் விதிர்க்கத் திரும்பி “இல்லை, நீ ஓய்வெடுக்கலாம். ஒன்றுமில்லை” என்றான். அவள் சிரித்து “சென்று சூர்ணமோ லேகியமோ வாங்கிவாருங்கள்” என்றாள். “வேண்டாம்...“ என்றான். செல்வதா நிற்பதா என்று அவனுக்குத்தெரியவில்லை. “வேண்டாமா என பிறகு பார்ப்போம்... முதலில் மருந்து” என்றாள். அவன் “என்ன சொல்கிறாய்... எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என்றான். அவள் உரக்க நகைத்து “இந்தச்சிறுவன் வெளியே வருவதைத்தான் நோக்கியிருந்தேன். செல்லுங்கள்” என்றாள். "ஆனால்...” என்று அவன் சொல்லத் தொடங்க “சொன்னதை செய்யுங்கள்” என அவள் உரத்தகுரலில் சொன்னாள். “சரி” என்று அவன் இறங்கி வெளியே சென்றான்.

மருத்துவர் அவன் சொல்வதைக்கேட்டு “உடல் அலுப்பு. புகையை உடல் ஏற்கவில்லை. துயின்று எழுந்தால் மீண்டுவிடுவார்கள்” என்றார். இலையில் களிம்புபோல அரைகூழை அள்ளி வைத்துக்கட்டி “இதில் பாதியை இப்போது உண்ணட்டும். விடியலில் சிலசமயம் வெம்மை கூடக்கூடும். நடுக்கமும் இருக்கும். அப்போது தேவையென்றால் எஞ்சியதை உண்ணலாம்” என்றார். சகதேவன் அதை முகர்ந்து நோக்கி “தேன் மணம்” என்றான். “ஆம், நெஞ்சுநோய்களுக்கான எல்லா மருந்தும் மதுவும் தேனும் கலந்ததே” என்றார்.

அவன் இலைப்பொதியுடன் மேலே வந்தான். மஞ்சத்தில் படுத்திருந்த திரௌபதி கையூன்றி எழுந்து “அரைகூழா? நன்று. இடித்தூள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமென எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றபடி அதை வாங்கிக்கொண்டாள். “பாதியை இப்போது உண். எஞ்சியது நாளை விடிவதற்கு முன்” என்றான் சகதேவன். அவள் அதை உண்டுவிட்டு கைகளை நீட்டினாள். அவன் மரவுரியை நீரில் நனைத்து அவள் விரல்களை துடைத்தான். "தேன்சுவைதானே?” என்றான்.

“கசப்பும் காரமும்” என அவள் முகம் சுளித்து உதடுகளை குவித்தாள். “நெஞ்சுநோய்களுக்கு எப்போதும் தேன் கலந்திருப்பார்கள்” என்றான். “தேனில் கசப்பு கலக்கையில்தான் அதன் உண்மையான சுவை வெளிப்படுகிறது என்பார்கள்.” அவள் மீண்டும் உதட்டைச் சுழித்தபடி மல்லாந்து படுத்துக்கொண்டாள். “துயில்கொள்” என்றான். “ஏன்?” என்றாள். “ஆம், அவ்வண்ணமே” என்று சொல்லி அவன் எழுந்தான்.

“சற்றுநேரத்தில் வியர்வை வரும். வெம்மை இறங்கும்” என்றாள் திரௌபதி. “இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. நாளை முழுநிலவு நாள்” என்றான் சகதேவன். “இன்று முழுக்க துயில்கொள்.” அவள் முகம் சிவந்திருந்தது. விழிகளிலும் வெம்மைநோயின் ஈரம் தெரிந்தது. “ஏமாற்றமில்லையே?” என்றாள். “சற்றும் இல்லை” என்றான். “உண்மையாகவா?” என்றாள். “உன்னிடம் பேசிச்சிரித்தபோதே என் அகம் நிறைந்துவிட்டது.” அவள் கூர்விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “என் நூல்கள்மேல் ஆணையாக... போதுமா?” என்றான். ”சரி” என்றபின் அவள் புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

புன்னகையில் அவள் இதழ்களின் இருமருங்கும் வந்துசென்ற சிறுமடிப்பைக் கண்டு உவகை எழுந்த நெஞ்சுடன் நோக்கி நின்றபின் அவன் திரும்பி உப்பரிகைக்கு சென்றான். “என்ன?” என்றாள். “நிலா... சற்றுநேரம் பார்க்கிறேனே” என்றான். அவள் “நானும் இன்று நிலாவை நோக்க விரும்பினேன்...” என்றாள். மெல்லப் புரண்டபடி “உடல் வலிக்கிறது... விழிகள் எரிகின்றன” என்றாள்.

கிழக்கு உப்பரிகையில் மூன்றுபக்கச் சாளரங்கள் வழியாகவும் நிலவொளி சரிந்து வந்து விழுந்திருந்தது. அப்பால் இலைப்பரப்புகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அவன் சென்று நிலவை நோக்கி நின்றான். முழுநிலவு என்றுதான் தோன்றியது. எங்காவது குறைகிறதா என்று நோக்கினான். அதன் கரியதிட்டுகளை சிறுவயதில் நோக்கி இருந்ததை நினைத்துக்கொண்டான். கங்கையின்மேல் நிலவொளி விரிந்திருந்தது. அலைகளில் ஆடி நின்ற படகின் பாய்மரத்தில் கட்டப்பட்ட பாய் எழுந்து துடித்து கொடிமரத்தை அறைந்தது. எங்கோ ஒரு பறவையின் ஒலி. ஏதோ ஒற்றைச் சொல்.

முகத்தின்மேல் நிலவொளி விழுவதைப்போல நின்றுகொண்டான். நிலவு முகத்தில்பட அவர்களை மடியில் படுக்கவைத்துக்கொள்வது குந்தியின் வழக்கம். அப்படியே கண்களை மூடி துயில்கையில் கனவுக்குள்ளும் நிலவொளியே நிறைந்திருக்கும். அவர்கள் அரைத்துயிலில் இருக்கையில் சற்று இனிப்புப் பண்டத்தை வாயில் வைப்பாள். கனவுகளில் இனிப்பு குவிந்திருக்கும். உண்டு உண்டு தீராத இனிப்பு. காலையில் 'அன்னையே இனிப்பு! அப்பம்!’ என்று கூவியபடிதான் கண்விழிப்பார்கள்.

அவன் திரும்ப வந்து கதவை ஓசையின்றி திறந்து உள்ளே சென்று மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து பின் காலை நீட்டிக்கொண்டான். அவள் சீரான மூச்சுடன் துயின்றுகொண்டிருந்தாள். கன்னத்தின் மெருகு இருளிலும் தெரிந்தது. திரும்பி குறுங்கால் பீடத்தில் இருந்த அரைகூழ் பொதியை நோக்கினான். அதை எடுத்து திறந்து கைகளால் வழித்து வாயிலிட்டான். தூதுவளையின் மணம் அது என வாய் வழியாக மூக்கு அறிந்தது. சுக்கின் காரம்.

எஞ்சியதையும் வாயில் இட்டபின் கையை அந்த இலையிலேயே துடைத்துவிட்டு திரும்பியபோது அவன் அவள் தன்னை நோக்குவதை கண்டான். சிரித்து “எறும்புகள் வந்துவிடும்...” என்றான். அவள் சிரித்துக்கொண்டு தலையைத் தூக்கி அவன் நெஞ்சில் வைத்துக்கொண்டாள்.

பகுதி 5 : ஆடியின் அனல் - 3

எழுதல்

தேவி, நீ விழிதிறக்காத இவ்வாலயத்தின் முகப்பில் வெண்ணீறால் உடல்மூடி வெள்ளெருக்கு மாலைசூடி மண்டைக்கலம் இரண்டேந்தி திசையாடை அணிந்து தனித்தமர்ந்திருக்கிறேன். என்தலைக்குமேல் ஒளிர்ந்து வற்றி மெல்ல முகில்மூழ்கி மறைகிறது நிறைவற்ற மதி. இங்கு நிகழ்ந்து நிகழ்ந்து மறையும் நனவுக்கனவிலெழுந்த குகைமுனை வெளிச்சமென நீ அகன்றகன்று செல்லும் என் காலம் சுருள் விரித்து நீண்டு நீண்டு எல்லைகளில்லாது விரியும் இத்தனிக்கணத்தில் என்னையாளும் ஒற்றைப்பெருஞ்சொல் நீ.

புலரி

ஓம்! சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! இவையனைத்தும் நீ. நீயன்றி ஏதுமில்லை. நீ உன்னை அறியும் இப்பெருங்களியாடல் கோடிகோடி கைகளின் கொந்தளிப்பு. கோடிநாவுகளின் ஓங்காரம். கோடிவிழிகளின் ஒளி. எழுக எழுக எழுக!.உன்னில் எழுபவை உன்னில் அடங்குக!. தேவி நீயன்றி பிறிதில்லை. தேவி நீ நிகழ்க இங்கு! நீயே எஞ்சுக இங்கு! இங்கு. இங்கு. இங்கு. இக்கணம். இக்கணம். இக்கணம். இதில். இதில். இதில். இங்கிக்கணமிதில். ஆம்!

சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம் !நீ நீ நீ. நீயொரு தனிச்சொல். சொல்லெனும் தனிமை. தனிமையெனும் சொல். சொல்லிச்சொல்லி எஞ்சும் தனிமை. இலைகள் துழாவும் தனிமை. வேர்கள் தேடியமையும் தனிமை. சிறகுகள் மிதக்கும் தனிமை. உகிர்கள் அள்ளியள்ளி நெரிக்கும் தனிமை. சிறைகள் அலைபாயும் தனிமை. செவுள்கள் உண்டுமிழும் தனிமை. தனிமையில் எஞ்சும் சொல். தேவி! நீ நீ நீ! த்வம்! த்வம்! த்வம்! ஸ்வம்! ஸ்வம்!.ஸ்வம்!

எழுக தேவி! ஐந்துமுடி கொண்ட காலம் முதல் அகத்திலமர்ந்தவளே. ஐங்குழலாளே. ஐந்தவித்து ஐந்தில் உறைந்து ஐந்தொழிலாக்கி அழிவின்றி எஞ்சும் ஆழ்நிலையே.கருவுண்டு குகைதிறந்து குருதியுடன் உமிழ்ந்து கொன்றுண்டு சிரிக்கும் குமரி நீ. ஐந்துமுகம் கொண்டவள். ஐந்து சொல்கொண்டவள். ஐவரொன்றானவள். எழுக தேவி! கொலைவேல் கொற்றவை. குவைப்பொருள் இலட்சுமி. குன்றா சரஸ்வதி. குன்றொளி சாவித்ரி. கொஞ்சும் ராதை. அன்னையே எழுக!

எழுக தேவி! இது புலர்காலை. ஐங்குருதி ஆடிய கருநெடுங்குழலி. ஐந்தென விரிந்த ஆழிருள் அரசி. எழுக என் தேவி! என் தேவி. என் குருதிமுனைகொண்டு எழுக! குருதி உண்டு கண்விழிக்கட்டும் என் சிறு குழவி. ஒற்றைவிழிக் குழவி. குழவிகண் சுட்டும் இத்திசை எழுக! இருள்கவிந்த என் விழிமுனை நோக்கும் இத்திசை எழுக! என் நெற்றி பீடத்தில் எழுந்து பேரொளி செய்க! எழுக, இங்கென்றெழுக! இக்கணம் தொடங்குக அனைத்தும்!

தேவி! ஓம், ஹ்ரீம், த்வம். ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்! இதோ நீ எழுகிறாய். முதல்முகிலின் முறுவல். முதல் வானின் முதல்முகிலின் முறுவல். முதல் முறுவல். முதல் கதிர். முதல் வலி முனகல். இருளின் விலாவதிரும் முதல் அசைவு. இருளின் எழும் கருக்குருதி மணம். ஆம் என்கிறது கரிச்சான். ஆம் ஆம் ஆம் என்கின்றது இருள். ஓம்! ஸ்ரீம்! ஹம்!.

விரிகின்றன கருதொடைகள். புன்னகைத்து நெகிழ்ந்து குருதியுமிழ்கின்றது நிலைநேர்விழி. பிறந்து எழும் கரிய குழவியின் புன்தலை. துடித்துத்துடித்து பதறியமைகின்றது அதன் செவ்விதழ்ச் சொட்டு. தேவி, இங்கெழுந்தாய். இதுநான் இதுநான் என்றெழுகின்றன நீயென்றானவை. எழுகின்றதொரு சித்தம். எழுகின்றதொரு பித்தம். எழுந்து விரிந்தாடுகின்றது அகாலப்பெருங்காலாகாலம்! இவ்விடம் இக்காலம் இது இனி என்றானது. கரியுரித்தெடுத்த இருள்வெளி! மதகரி உரித்த கடுவெளி!

இருநிலவு எழுந்த இரவு. மானும் மழுவும் புலித்தோலும் சூலமும் ஓடும் செவ்விழி நுதலும் விரிசடை வெண்ணிலாக்கீற்றும் விரிவரிப்பல்லும் வெங்கனல் விழியும் இன்றென எழுக! இவ்விதமாகுக. நின்றெழுந்தாடி நிலையழிந்தாடி சென்றவை வந்தவை வானில் நின்றவை எல்லாம் நில்லாதொழிய கொன்றவை எல்லாம் மீன்கணமாகுக! கொற்றவை அணியும் மணிச்சிலம்பாகுக! கொன்றவை எழுக! கொற்றவை எழுக! இக்கணம் எழுக! இங்கொரு காலமும் வெளியும் கடுவிசை திசைகளும் துளித்து சொட்டுக! சொட்டி உடைந்து சூரியர் எழுக!

எழுகின்றன சூரியகோடிகள். விண்மீன் முடிவிலிகள். எழுகின்றன சொற்கள். எழுந்தமைகின்றன தேவி புடவிப்பெருவெளிப்பெருக்கலைகளெழும் இன்மை. இன்றிருக்கும் உன்னில் இனியிருக்கும் உன்னில் உண்டுமுடித்தெழும் வேங்கையின் செந்நாவென சுழன்றெழுகின்றது காலை. கன்னிக்கருவறை ஊறிய புதுக்குருதியெனக் கசியும் இளங்காலை.

தோலுரிந்த பசுந்தசை அதிரும் யானை . துடிதுடிக்கின்றது செந்நிணப் புதுத்தசை. வலியில் பெருவலியில் உயிர் அமர்ந்து துள்ளும் அணுப்பெருவலியில் இழுத்திழுத்தடங்கும் செவ்விளஞ்சதை. யானை. செந்நிற யானை. உருகி வழிந்தோடும் பெருகுருதி ஊறும் சிறுமலை. யானை. தோலுரித்த யானை. கால்சுற்றி கழலாகும் கொழுங்குருதிப் பெருக்கில் தேவி, காலையென்றானவளே.பொன்னொளிர் கதிரே, எழுக எழுக எழுக!

உன் விரல்தொட்டு எழுகின்றன ஐந்து இசைகள். வீணையும் குழலும் முழவும் சங்கும் முரசும் சொல்வது ஒற்றைப் பெருஞ்சொல். ஓம் ஸ்ரீம் ஹம்! நீலம் வைரம் பத்மராகம் முத்து பவளம் என்று ஐந்து மணிகளாக மின்னுவது ஒரு பெயர். காமினி, காமரூபிணி, கரியவளே. கொள்க இச்சிறுசெம்மலர்! ஓம் ஸ்ரீம் ஹம்!

காலை

சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! ஓம். புற்றெழுந்து பெருகின ஈசல்கள். புழைவிட்டெழுந்தன விண்மீன் வெளிகள். கோள்கள். கோள்வெளிகொண்ட சூல்கள். சூல்கொண்டவளே. சூலி. சூலப்பெருங்காளி. காலப்பெருக்கே. கன்னங்கரியவளே. வருக! செயல்களாகி வருக! கோடி வேர்களாகி வருக! கோடானுகோடி இலைத்தளிர்களாகி எழுக! மலர்களாகி விரிக! மண்ணில் விண்ணென நிறைக! ஓம் ஹ்ரீம் த்வம். ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்!

பொன்னொளிர் காலையில் உன்னை மணந்து மாலைசூடி வந்தன குறையாச் செல்வங்கள் ஐந்து. செல்வங்கள் எழுந்து உன்னைச்சூழ்ந்தன. செல்வத்திலுறையும் உன்மேல் காமம் கொண்டன. முத்தெய்வம் கொண்ட காமம். முனிவர் கொண்ட காமம். மாமயிடன் கொண்ட காமம். மானுடரெல்லாம் கொள்ளும் காமம். தேவி, உன் ஒளிமுலைக் கண்களின் நோக்கு. உன் இருகை நகவிழி நோக்கு. உன் இளம்பாத நகமுனை நோக்கு. உன் கருபுகை எழுந்த செஞ்சுடர் விழி கொண்ட நோக்கு.

தேவி, இதோ மித்ரன் உன் வலக்காலில் அமர்ந்திருக்கிறான். பண்டிதன் உன் இடக்காலுக்கு பணிசெய்கிறான். ஸௌர்யன் உனக்கு கவரி வீச அனாலஸ்யன் குடைநிழல் சூட முதல்வனாகிய சுசீலன் உன்னை புணர்கிறான். பொந்தில்நுழைந்தது மணியுமிழ் நாகம். பொந்தில் சுருண்டது கருவறை நாகம். புழையிலமைந்தது அருஞ்சுருள் காலம். காலச்சுருளில் அமைந்தது நஞ்சு. கடுந்துடிகொட்டும் கருமுகில் விசும்பு.

சுசீலன். நன்னெறியன் தேவி, அவன் உன் சொல்கண்டு காமம் கொண்டவன். உன் விழிகாணாது காமம் கொண்டவன். கனைத்து சிலிர்த்து கால்தூக்கி எழுந்தது செந்நிறக்குதிரை. வால்சுழற்றி பிடரி வீசி திமிறியெழுந்தது செந்நிறப்பெருங்கனல். திசைவெளிகளில் திகைத்துச் சுழன்றன. கரிய நாகங்கள் சுருளவிழ்ந்து சீறி விழி மின்னும் இருண்ட பாதைகளில் செல்பவன் யாரவன்? மாமலையடுக்குகளில் இடி ஒலிக்கிறது. முகில்குவைகளில் மின்னல் சீறுகிறது. தன்னந்தனிமையில் அவன் இருண்ட பிலமொன்றில் மறைகிறான்.

பிலம். பிளந்த பெரும்பிலம். செங்கனல் உறையும் கரும்பிலம். தேவி,அதன் வாயிலின் மேல் படம்கொண்டு எழுந்த நஞ்சுமிழ்நாகத்திற்கு வணக்கம். அதன் நூறு செஞ்சதை கதவிதழ்களுக்கு வணக்கம். மதமெனும் தேன்கொண்ட பெருமலர். ஞாலப்பெருவெளியை ஈன்ற கருமலர். தலைகீழ் சிவக்குறி. சூழ்ந்த இருள்சோலை. தேவி. ஊனில் நிகழ்ந்த ஊழிப்பெருஞ்சுழி.

உன் விழிகண்டு சொல்காணாதவன் ஸௌர்யன். உன் கைகளையே கண்டவன் அனாலஸ்யன். உன் கால்கள்ள் கண்டு காமம் எழுந்தவர்கள் பண்டிதனும் மித்ரனும். ஐவரும் நுழைந்து மறைந்த அகழிக்கு வணக்கம். அங்குறையும் காரிருள் வெளிக்கு வணக்கம். அதற்கப்பால் எழுந்து வெடித்து சிதறி மறையும் பேரிடிப்பெருநகைப்புக்கு வணக்கம். பித்தமெழுந்த பெருநிலை நடனம். சித்தமழிந்த சிவநிலை நடனம்! தத்தமி தகதிமி தாதத் தகதிமி. பெற்றதும் உற்றதும் கற்றதும் கரந்ததும் செற்றதும் சினந்ததும் சீறித்தணிந்ததும் மற்றதும் மடிந்ததும் மாணச்சிறந்ததும் எற்றி எகிறிட எழுந்தருளாடி நின்றிருள் வாழும் நிலையழி காலம். துடிதுடிதுடிதுடி துடியொலி திமிறும் காரிருள் காலம்.

தனித்தவளே. தன்னந்தனித்தவளே. உண்டுண்டு நிறையா ஊழிப்பெருந்தீயே. அன்னையே. ஆயிரம்கோடி அல்குல்கள் வாய் திறந்த இருள்வெளியே. சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்!.சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! தேவி! ஓம் ஹ்ரீம் த்வம்! ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்! உண்ணுக உண்ணுக உண்ணுக, இப்புவி உன் பலி. இப்புடவி உன் பலி. இவ்விசும்பு உன் பலி. இக்கடுவெளி உன் பெரும்பலி. நிலம் நீர் தீ காற்று வானம் என எழுந்த ஐம்பெரும் பருவும் உன் பலி. ஐந்து பலிகொண்டவளே. ஐங்குழல்கன்னியே. ஐந்திருள் முடியே. ஐந்துவெளியின் ஆழமே. ஆழ்க! ஆழ்க! ஆழ்க!

இளங்காலைகளின் அரசி. காதலின் கனவுகளின் தென்றலின் தோழி. மலர்ப்பொடியின் சிலந்திவலையின் பட்டுக்கூட்டின் இளம்புழுதியின் இறகுப்பிசிறின் மென்மழையின் பனிப்பொருக்கின் இறைவி. மெல்லியவளே. நறுமணங்களை முகரச்செய்யும் உள்மணமே. வண்ணங்களை காணவைக்கும் விழிவண்ணமே. சுவைகளை தொட்டுணர்த்தும் நெஞ்சினிமையே. இசையை எதிர்கொள்ளும் கனவிசையே இக்கணம் உன்னுடையது. நீ திகழ்க!

மெல்லிய காற்றால் தழுவப்படுகிறேன். தேவி, மலர்மணங்களால் சூழப்படுகிறேன். தேவி, இனிய பறவைக்குரல்களால் வாழ்த்தப்படுகிறேன். தேவி, அழியாத ஒற்றைச் சொல்லால் வழிநடத்தப்படுகிறேன். ஆடைகளைக் களைந்து அன்னையை நோக்கி கைவிரித்தோடுகிறேன். காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் நெஞ்சுருகும் இம்மாமந்திரம். ஓம் ஸ்ரீம் ஹம்!

மதியம்

சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! ஓம். சுட்டெரிக்கும் அனல்வெளியே. சுடருள் பாய்ந்த விட்டில்களை அறிக! கோடிக்கோடி புழுக்கள் நெளிந்து நெளிந்துமறையும் வெயில். உருகி வழிகின்றன மாமலைகள். கொதித்துக் குமிழியிடுகின்றது கடல். நீயென்றான பகல். நீயேயென்றான வெம்மை. நீமட்டுமேயென்றான சாவு. நீயில்லையென்றான வெறுமை. இங்குள்ளேன் என்னும் முகிழ். இங்குளதென்ன என்னும் இதழ். இங்குளதாதலென்னும் மணம். இங்குள்ளவற்றிலெல்லாம் எஞ்சும் தேன். காமக்கருமை கொண்ட காரிருள் நீ. அடி, என் நெஞ்சத்திரை கிழித்து நேர்நின்று இதயம் தின்னும் செவ்விதழி. என் சிதைநின்றாடும் கருந்தழல். என் சொல்நின்றாடும் முதல்முற்றுப் பொருளிலி.

ஐந்தொழிலோளே. படைத்தல், காத்தல், அழித்தல், மறைதல், அருள்தல் என்னும் ஐந்து ஆடல்கொண்டவளே. உன்னை அள்ளியுண்ணும் ஐந்து பெருங்காமங்கள் அவை. சிருஷ்டன் உன் செவ்விதழை சுவைக்கின்றான். இதோ உன் மென்முலைபற்றுகின்றான் ஸ்திதன். உன் உந்தியில் நாப்புதைக்கின்றான் சம்ஹாரன். பணிந்து உன் செம்பாதங்களில் நாத்தழுவுகிறான் திரோஃபாவன். உன் அல்குலில் ஆழ்கின்றான் அனுக்ரகன். ஐந்து முனைகளில் பற்றி எரிகிறாய். ஐந்தழலுக்கும் அப்பால் நின்று அறிவிழி சினந்து நோக்கும் அறியவொண்ணாதவளே நீ கற்காத காமம்தான் என்ன?

ஐந்து பெருந்துயர்களால் ஆரத்தழுவப்படும் காதலி நீ. பெருந்துயர்கள் தேவி. கொன்று கொன்று தின்று குருதிச்சுவையறிந்த தேவர்கள். இருளிலூறி எண்ணங்களிலேறி வருபவர்கள். கிழிபடுமோசையில் குடிகொள்ளும் கீழோர். வெடிபடு ஒலியொடு கிழிபடுக மண்! இடியெழு ஓதையோடு துணிபடுக விண்! ஓசையின்றி குறைபடுக உள் நெஞ்சு! காறி உமிழப்பட்டவனின் தானிலை. கைவிடப்பட்டவனின் தனிமை. வஞ்சிக்கப்பட்டவனின் நினைவு. முற்றுமிழந்தவனின் முதுமை. எஞ்சியிருப்பவனின் இயலாமை. தேவி, கோடிமுகம் கொண்டு மானுடனில் எழுக! கோடி கைகளால் அவனை கிழித்துண்டு எழுக! திசைமூடி எழுந்த ஆறு பெரும்பாறைகளால் நசுக்குண்டவனின் வெங்குருதியடி நீ!

கொள்க காமம்! தேவி, கலம் நிறைய அள்ளி நிறைக காமம்! மொள்க காமம்! முறைதிகழ மூழ்கி எழுக காமம்! அவித்யன் உன் கால்விரல்களில் முத்தமிடுகிறான். அஸ்மிதன் உன் கைவிரல்களில் முத்தமிடுகிறான். ராகன் உன் இதழ்களை பருகுகிறான். அபினிவேசன் உன் முலைகளில் புதைகிறான். த்வேஷன் உன் தொடைகள் திறந்த கருமலர் இதழ்களில் முத்தமிடுகிறான். தேவி அவன் நெற்றிசூடும் செம்மணி நீ. எழுந்தமரும் கரியபேரலைகளில் எழுந்தமரும் சூரியமொட்டு நீ. சொல்லுக்கு மேல் சுட்டிய பொருள் நீ. பொருளிலியாகிய சொல்லிலி நீ. அறிந்தவரறியாத ஆழம். ஓம் ஸ்ரீம் ஹம்!

இருகருஞ்செவிகளாடும் செம்மலர்சூடிய மத்தகம். இருமரங்கள் ஏந்திய ஒருதேன்கூடு. இரு தூண்கள் தழுவிப் பறக்கும கொடி. செஞ்சிற்றலகு கூர்ந்த சிறுகுருவி அமர்ந்த கூடு. புவிதிறந்தெழுந்த அனல். பூத்த மடல் திறந்தெழுந்த புனல். செம்மை சூடிய கருமுகில். தேவி, முத்தேவர் முழுகியெழும் சுனை.

தேவி, காமமென்றாகி வருக! இவ்வுலகை காமமென்றாகி அணைக! காமமென்றாகி புணர்க! இப்புடவியை காமமென்றாகி உண்க! காமமென்றாகி கொள்க! காலத்தை காமமென்றாகி சூடுக! காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் நெஞ்சக் குருதி பிசைந்த வெம்மாவு. ஓம் ஸ்ரீம் ஹம்!.

மாலை

சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! ஓம். சூழுமிருள் உன் சொல்லா? சொல்லுருகி வழியும் குருதி உன் கருவா? உன்னில் கருவுண்டு கால்சுவைத்து ஆலிலைமேல் கைகூப்பி ஒடுங்கிய ஊன்துளி உருகி வழிந்தோடி செங்கதுப்பு சரிவுகளாகி சூழ்ந்திருக்கும் இவ்வந்தி. இருள் எழுந்து எங்கும் பரவ எங்கிருந்தென்றிலாமல் எழுந்துவருகின்றன நாகங்கள். சித்தப்பெருக்குகள். சித்தக்குழைவுகள். சித்தநெளிவுகள். சித்தநுனி விழுங்கும் சித்தத்தலைகள். சித்தச்சுழியின் நடுப்பெரும் பள்ளம். சித்தமெழுந்த பித்தின் இமையாப்பெருவிழிகள். சித்தமெரியும் செங்கனல் இருநா.

ஐந்து பெருநாகங்கள். நாநீட்டி எழுந்துவரும் ஐந்து கரிய படங்கள். நஞ்சுமிழ் வாய்கள். ஐந்து. இமையிலி நோக்குகள் ஐந்து. க்‌ஷிப்தன் உன் வலக்கால் கழல். மூடன் உன் இடக்கால் கழல். சிக்‌ஷிப்தன் உன் இடக்கை வளை. நிருத்தன் உன் வலக்கை வளை. ஏகாக்ரன் தேவி உன் முலைதவழ் மணியாரம். ஐந்து நாகங்கள் தவழும் புற்று. ஐந்து நதிகள் இழையும் மலை. ஐந்து நஞ்சுகள் கொஞ்சும் அமுது. ஐந்து பித்தங்களின் புத்தி. ஐந்து தனிமைகள் அடைந்த சித்தி.

தோலுரிந்த நாகங்கள் நெளியும் வழுக்கு. பீளையும் சலமும் குழம்பும் சழக்கு. ஐந்து பேரிடர்களின் அரசி. பிறப்பு, நோய், மூப்பு, துயர், இறப்பென்னும் ஐந்து அரக்கர்கள் புதைகுழி பிளந்து வேர்ப்பிடிப்பறுத்து எழுந்து வருகின்றார்கள். சீழ்சொட்டும் கைகளுடன் உன்னை தழுவுகிறார்கள். உன் ஐந்து வாயில்களிலும் புணர்கிறார்கள். மலநீரிழியும் மலையில் ஏறும் புழுக்கள். கழிவுப்பெருக்கே, இழிமணச்சுழியே, கீழ்மைப் பெருங்கடலே உனக்கு கோடிவணக்கம்.

ஐந்து மூச்சுகள் எழும் பெண்ணுடல். ஐந்து காற்றுகள் ஆளும் படகு. ஐந்து கொடிமரங்களில் கட்டிய பாய். பிராணன் உன்முலைகளை தாலாட்டுகிறான். அபானன் உன் பின்குவைகளை அணைக்கிறான். சமானன் உன் தோள்களை வளைக்கின்றான். உதானன் உன் உந்திக்கதுப்பில் திளைக்கிறான். வியானன் உன் அல்குல் அகல்சுடரை ஊதி அசைக்கின்றான்.

தேவி, அலைகடலரசி. ஆழ்நீரரசி. அடிக்கூழரசி. அனலரசி. அனலசேர் வெளியரசி. செயலரசி. அசைவிலி. அனைத்துமானவளே. திசையென்றான இருளென்றாகி திகைப்பென்றாகி திணிவென்றாகி தானென்றாகி இங்கெழுந்தவளே. மும்மலமாகி எழுக! நான்கறமாகி எழுக! ஐம்புலன்களாகி எழுக! தேவி, இத்தனியுடலில் நின்றுகனன்றெரியும் இருளே. தேவி, வந்து மலர்ந்த வடிவே. இருளில் இதழிட்ட மலரே.காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க சங்கறுத்து சமைத்து வைத்த இம்மாமிசம்! ஓம் ஸ்ரீம் ஹம்!.

இரவு

சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! ஓம். எழுநிலவென எழுந்தவள் நீயா? இச்சிறுவட்டம் நீயா? விண்ணெழு வெண்தாழி. விரிகதிர் ஆழி. தொட்டுத் தொட்டு மலர்கின்றன ஐம்பெரும் மலர்கள். அரவிந்தம், அசோகம், சூதம், நவமாலிகம், நீலம். ஐந்து மலர்கள் தேவி. அதிலிரண்டு கருமை. இன்கருமை. கரும்பினிமை. நீலம் உன் நிறம். நீலம் உன் விழி. நீலம் உன் குரலின் இடி. நீலம் உன் சொல்லூறிய நஞ்சு. நீலம் உன் அல்குலின் அணையா அனல். நீலம் உன் மதமொழுகும் மலர். கவர்ந்துண்டு களிக்கும் கள்ளி, எழுந்தென் நெஞ்சுபறித்துண்டு நகையடி கூளி!.

தொட்டுத்தொட்டெழுகின்றன பாற்கடல் அலைகள். இலைவிழி இமைப்புகள். அலைக்குமிழ் சுழிப்புகள். ஒளியெழுகின்றது. ஒளியாய் எழுக! கன்னங்கரியவளே எழுக ஒளியாக! மந்தாரம் பாரிஜாதம் சந்தனம் கல்பமரம் ஹரிசந்தனம். ஐந்து மலர்மரங்கள். பூத்த ஐந்து வேர்க்குவைகள். ஐந்து சாமரங்கள். அடி உன் அனலெழுந்த கடலுடல் மேல் ஐந்து தும்பிச்சிறகுகள்.

நிலவெழும் இரவு. கீழ்த்திசை முகில்கள் காண்பதென்ன கனவு? கீழே நிழலிருள் திட்டுகள் கொண்டதென்ன கரவு? திரிபுரப் பெருநகர் நெய்கொண்டிருக்கிறது. கனிந்து வழிகின்றன கோபுரமுகடுகள். ஈரம் ஒளிரும் ஏழ்நிலை மாடங்கள். எரியேறி வருக! தேவி, உன் இடமுலை எறிந்து எரியூட்டுக! எழுக வெங்கனல்! எழுக செவ்வெரி! எழுக விரிகதிர்! எழுந்தாடுக! உருகி வழியும் அவுணர் வெந்நிணம் அவியாக வேள்விக்குளம் நிறைந்தெழுக தீ!

நீல இரவு. இளநீல இரவு. நிலவெழுந்த தனித்த இரவு. முழுநிலவெழுந்த இரவு. யோகப்பெருநிலவெழும் இரவு. தேவி இதோ நான். ஐவரும் ஒன்றாய் அடிபணிந்தமர்ந்தேன். ஐம்முகத்தன்னை விழியொளி தேர்ந்தேன். விண்மீன்களின் விழி பெருகும் இரவு. உருகி வழியும் முகில்களின் இரவு. தேவி, முள்முனை நிழல்கள் கூர்கொண்டு நீளும் கொடுவேளை. நிழல்முட்கள் வேங்கைநகங்களென கிழிக்கக்கிழிக்க தொலைவெளியோடி வந்தேன். தோல்கிழித்து ஊன்கிழித்து உள்ளுறுப்புகள் கிழித்து வெள்ளெலும்புக் கூடென வந்து சிரித்தமைந்தேன். குருதி சொட்டிச்சொட்டிச்சொட்டி காலமென்றாயின கருமுட்கள். குருதியின் காலம். சொட்டும் கொடுநினைவின் காலம். இது நீர்க்கதுப்புகள் வளைந்தமிழும் இரவு. நீளிரவு.

முகில்நிழல் வழிந்த மலைவெளித் தனிமை. முகில்முடி சூடிய மலைமுடித் தனிமை. நிலவை உண்ட கருமுகில் நீயா? இருள்வெளி திறந்த இருவிழி நீயா? விழியொளி காட்டிய கருந்தழல் நீயா? தழல்பிளந்தெழுந்த செம்பிலம் நீயா? எழுந்தெழுந்து தாவியது கைக்குழவி. விழியற்ற குழவி. பசித்த வாய்கொண்ட சிறுகுழவி. வாய்க்குள் வாய்க்குள் வாயெனத் திறந்து குழவியை உண்ட செவ்விருள் நீயா? இருளில் இவ்விருளில் இருளிருளிருளில் ஒருபெருந்தனிமை இருந்தெழுந்தாளும் கருந்தழல்வெளியில் நீயென்றான ஈரத்தழலில். உண்டுநிறைக ஊன்வாய் அனலே! உண்டெழுந்தாடுக ஊனிதழ் மலரே! மலரிதழ் விதையே. உண்டுநிறைக ஊழிப்பெருங்கருவே!

ஐந்து யோகங்கள் தேவி. ருசகம், பத்ரம், ஹம்சம், மாளவம், சசம். ஐந்து பிறப்புகள். ஐந்து இறப்புகள். ஐந்து கொப்பளிப்புகள். ஐந்து இறுதியெல்லைகள். ஐந்து பேரிணைவுகள். தேவி, இவை ஐந்து பலிகள். ஐந்து அருங்கொலைகள். எழுந்தாடியது ஐந்து நாகொண்ட நெருப்பு. பொன்னிறமான தட்சிணம். செம்மலர் நிறம்கொண்ட ஆகவனீயம். நீலமெழுந்த கார்ஹபத்யம். வெண்சுடரான சஃப்யம். கரும்புகை எழும் ஆவஸ்த்யம். அணைந்து நீறி அமைவதென்ன அனல்? ஆறாவது தழல்? அன்னையே. இங்கு ஆகுமிக் காலப்பெருக்கெழுந்த சுழியொரு விழியாகி அமைந்தமைந்தமைந்து ஓடிமறையும் கரியபெருநதியில் என்றேனும் ஏதேனும் நிகழ்ந்ததுண்டா என்ன?

தேவி, ஒளியிருள் வாழும் களிகொள் காளி. திரையென்றாகி திரைமறைவாகி திகழும் விறலி. காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் பன்னிரு குறிமுனைகள் துடித்துத்துடித்தளிக்கும் இம்மைதுனம்! ஓம் ஸ்ரீம் ஹம்!.

அமைதல்

தேவி உன் கருவறை வாயிலில் கண்விழி மணிகள் ஒளிரக்கிடக்கின்றான் ஒருவன். அவன் நெஞ்சில் மிதித்தெழுந்து உன்னை சூழ்கின்றேன். முப்பத்துமுக்கோடி தேவர்கள் மும்மூர்த்திகள் தலைகளில் மிதித்தேறி உன்னருகே வருகிறேன். மேலே முகிலற்ற பெருவெளியில் எழுந்த பனிச்செந்நிலவு அதிர்கிறது. அதற்கு அப்பால் எழுந்தது வான்நிறைக்கும் பெருநிலவு. கோடிகோடி அண்டங்கள் குவிந்து குவிந்து எழுந்த நிலவு. கொள்ளாக் கோடி இதழ் விரித்த குளிர்நிலவு. குன்றாத் தளிர்நிலவு. ஓம்! தேவி நீ அறிவாயா? சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! இவையனைத்தும் நானே. நானன்றி ஏதுமில்லை. தேவி, நானன்றி நீயுமில்லை. ஓம் ஓம் ஓம்!

பகுதி 6 : மலைகளின் மடி - 1

மண்ணையும் பாறைகளையும் உமிழும் நூற்றுக்கணக்கான திறந்த வாய்கள் கொண்டு சூழ்ந்திருந்த மலையடுக்குகளுக்குக் கீழே செந்நிற ஓடை போல வளைந்து சென்ற மலைப்பாதையில் பால்ஹிக குலத்தின் மூன்று அரசர்களின் படைகள் இணைந்து சென்றுகொண்டிருந்தன. மத்ரநாட்டின் கலப்பைக்கொடி ஏந்திய குதிரைவீரன் முதலில் செல்ல முப்பது புரவிவீரர்களும் நாற்பது பொதிக்குதிரைகளும் சூழ சல்லியர் தன் வெண்குதிரைமேல் தோளில் கட்டுபோட்டு தொங்கிய கைகளுடன் சென்றார். அவருடன் அவருடைய மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் சென்றனர்.

அவருக்குப்பின்னால் சௌவீர நாட்டின் ஓநாய்க்கொடி செல்ல இருபது வீரர்கள் இருபது பொதிக்குதிரைகளுடன் சூழ சௌவீர மன்னன் சுமித்ரர் சென்றார். தொடர்ந்து மறிமான் கொடிபோட்ட பால்ஹிக நாட்டின் கொடி சென்றது. அதைத் தொடர்ந்து இருபது பால்ஹிக வீரர்கள் செல்ல நடுவே தன் கரியகுதிரையில் அரசர் சோமதத்தர் சென்றார். அவருக்குப்பின்னால் அவரது மைந்தர்கள் ஃபூரியும் சலனும் இரு செந்நிறக்குதிரைகளில் சென்றார்கள். இருபது பொதிக்குதிரைகளுக்கு பின்னால் இறுதியில் வந்த இரு வீரர்களுடன் பூரிசிரவஸ் தன் வெண்குதிரையில் வந்தான் மலைச்சரிவில்.

பாறைக்கூட்டம் உருண்டு சரிவது போல குதிரைகளின் குளம்பொலி எழுந்து மலைமடிப்புகளில் எதிரொலித்தது. முகில்சூடிய முடிகளுடன் தோளிலிலிருந்து மணலருவிகள் சால்வையென நழுவ கைகள் கோர்த்தவை போல் நின்றிருந்த மலையடுக்குகள் பேசிக்கொள்வதுபோல தோன்றியது அவனுக்கு. உரத்த குரலில் அருகிலிருந்த மலை கேட்ட வினாவுக்கு அப்பால் அப்பாலென்று பல மலைகள் விடையிறுத்தன. இறுதியில் எங்கோ ஒரு குரல் ஓம் என்றது. பாதை மலையின் இடையில் வளைந்து சென்றபோது அவ்வோசை அவர்களுக்குப் பின்னால் ஒலித்தது. மீண்டும் எழுந்தபோது நேர்முன்னாலிருந்து வந்து செவிகளை அலைத்தது.

பூரிசிரவஸ் அமர்ந்திருந்த வெண்புரவி அவனையும் மலைப்பாதையையும் நன்கறிந்தது. அவன் பிடித்திருந்த கடிவாளம் தளர்ந்து தொங்கியதை, விலாவை அணைத்த அவன் கால்கள் விலகியிருந்ததை அது உணர்ந்தது. உருளைக்கற்கள் புரண்டுகிடந்த புழுதிச்சாலையில் நோக்கி நோக்கி காலெடுத்துவைத்து அது சென்றது. உருண்டிருந்த பெருங்கற்களைக் கண்டு அதன் கழுத்துத்தோல் சிலிர்த்துக்கொண்டது. மண்ணில் விரிசல் தெரிந்தபோது அடிதயங்கி நின்று மூச்செறிந்து எண்ணி காலெடுத்துவைத்தது. அவன் ஆடும் படகில் என கால்பரப்பி அமர்ந்து மலைமடிப்புகளை நோக்கிக்கொண்டிருந்தான்.

முடிவற்ற செந்நிறச் சால்வை. மடிந்து மடிந்து சுழன்று சுழன்று சென்றுகொண்டிருந்தது அது. கூம்புக்கோபுரங்கள் என செறிந்த மரங்கள்கொண்ட சோலைகள் கீழே சென்றுவிட்டிருந்தன. அங்கெல்லாம் மலைச்சரிவுகள் மண்வீழ்ச்சிகளால் பாறைஎழுச்சிகளால் மட்டுமே தெரிந்தன. கற்களோடும் நதி. கற்கள் பொழியும் அருவி. பாதைகளை மறைத்தன பொழிந்தெழுந்த கற்களின் கூம்புகள். முன்னால் சென்ற வீரன் கொடியை ஆட்டியதும் அனைவரும் நின்று புரவிகள் விட்டிறங்கி அப்பாறைக்குவைகளை அள்ளி அகற்றி மேலும் சென்றனர்.

எவரும் எச்சொல்லும் பேசவில்லை. தோலால் ஆன நீர்ப்பைகள் குலுங்கின. அம்பறாத்தூணியில் உலோக முனைகள் தொட்டுக்கொண்டன. சேணங்கள் குதிரைவிலாக்களில் அடித்துக்கொண்டன. அவ்வப்போது ஒரு குதிரை பிறிதிடம் ஏதோ சொன்னது. தலைக்குமேல் குளிர்நிறைந்த காற்று ஓலமிட்டபடி கடந்துசென்றது. எலும்புவீழ்த்தி உண்ணும் செந்தழல் கழுகு வானில் வட்டமிட்டு தாழ்ந்து சென்றது. மலைச்சரிவை கடக்கையில் நீண்ட சரவாலை காலிடுக்கில் தாழ்த்தி உடல்குறுக்கி ஒரு செந்நாய் கடந்து சென்றது.

பாறைகள் வெடித்து நின்றன. பச்சைப்புல் எனத் தெரிந்தது பசுந்துகள் பாறைகள் என கண்டபின் அவன் விழிதூக்கி நோக்கினான். செம்பாறைகளுக்குள் பச்சைப்பாறைக்கதுப்புகள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. பொன்னிறப்பாறைகள். இளநீலப்பாறைகள். குருதித்தசைப்பாறைகள். பாறைகள் அங்கே விளைந்து கனிந்து உலர்ந்து உதிர்கின்றன. மிகத்தொலைவில் ஒரு செந்நாயின் ஊளையைக் கேட்டு குதிரைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்று உடல்சிலிர்த்து பெருமூச்சுவிட்டன. வீரர்களில் ஒருவன் கற்களை உரசி நெருப்பெழச்செய்து பந்தமொன்றை கொளுத்திக்கொண்டான்.

முன்னால் செல்ல குதிரைகளை தட்டித்தட்டி ஊக்கவேண்டியிருந்தது. முதல்குதிரை ஐயத்துடன் காலெடுத்துவைக்க பிற குதிரைகள் விழிகளை உருட்டி நீள்மூச்செறிந்தன. முன்குதிரையை பிறகுதிரைகள் தொடர்ந்தன. நெருப்புடன் முதலில் சென்றவனை எங்கோ நின்று கண்ட ஓநாய் மீண்டும் குரலெழுப்பியது. அடுத்தகுரலில் அது ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவை கூட்டமாக வந்திருக்கவேண்டும். ஊன்மணம் அடைந்தவை. இந்த பெரும்பாறைவெளியில் அவை பசியையே முழுமுதல் தெய்வமாக அறிந்திருக்கும்.

கலங்கிய நீர்ப்பரப்புபோலிருந்தது வானம். வெண்முகில்கள் மலைமுடிகளில் மட்டும் ஒளியின்றி நனைந்த பஞ்சுக்குவைகள்போல் எடைகொண்டு அமர்ந்திருந்தன. திரும்பித்திரும்பிச் சென்ற பாதைக்கு அப்பால் ஆழத்தில் ஒளியுடன் வாள் ஒன்று கிடப்பதுபோல ஓடை தெரிந்தது. விண்ணிலிருந்து நோக்குவதுபோலிருந்தது. அங்கே அந்த ஓடையின் இருபக்கமும் பசுந்தீற்றல் என சோலைகள் தெரிந்தன. வானின் ஒளி அங்கே மட்டும் முகில் திறந்து இறங்கியிருந்தது. சிறு பசுமொட்டாகத் தெரிந்தது ஒற்றைப்பெருமரம் என்று எண்ணிக்கொண்டான்.

மூன்றாவது வளைவில் மாலையிருளத் தொடங்கியதை உணரமுடிந்தது. பாறைநிழல்கள் கரைந்துவிட்டிருந்தன. அப்பால் மலைமேலமர்ந்த பெரும்பாறைகள் துல்லியம் கொண்டன. சுவர்ணகனகன் என்று மலைமக்கள் அழைக்கும் கீரிகள் கொழுத்த அடிவயிற்றுடன் மெல்ல வளைவிட்டெழுந்து கூழாங்கல் கண்களால் நோக்கியபின் தத்தித்தத்தி ஓடி அமர்ந்து இரண்டு கால்களில் எழுந்து அமர்ந்து கைகளை விரித்தபடி நோக்கின.

அந்தித்தாவளம் வருவதை அத்தனைபேரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்குரிய இடங்களெல்லாம் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருந்தன. முதிய வழிகாட்டி மலைமகனாகிய பீதன். அவன் சொல்லாத இடங்களில் தங்கமுடியாது. அவனுக்கு மலைகளை தெரியும். நெடுந்தொலைவை நோக்குவதற்கென சிறியவிழிகள் கொண்டவன். நோக்கி நோக்கிச் சுருங்கிய முகம் கொண்டவன்.

மலைமகன் கைவீசி தன்மொழியில் சுட்டிக்காட்டினான். படைகள் முழுக்கப் பரவிய உடலசைவு அனைவரும் எளிதாகிக்கொண்டதை காட்டியது. மலைப்பாதைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்களாலான சிறிய சோலை ஒன்று தெரிந்தது. அதற்கு அப்பால் எழுந்த மலையிடுக்கிலிருந்து சிறிய காட்டருவி ஒன்று சொட்டுவது போல் விழுந்துகொண்டிருந்தது.

சோலைக்குள் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட மூன்று சுனைகள் இருந்தன. ஒன்றில் தேங்கிய அருவிநீர் எழுந்து வழிந்து பிறிதில் தேங்கி பின்பு இறங்கி வளைந்து மீண்டும் அருவி என கரிய பாறையின் இடுக்கு வழியாக சரிவில் பெய்தது. கீழே நின்றிருந்த புதர்மரங்களுக்குமேல் மழைத்துளிகளாக விழுந்தது. பறவையொலிகளற்ற ஊமைச்சோலை. புழுதிபடிந்த சிறிய இலைகளுடனும் அடர்ந்த முட்களுடனும் நின்ற மரங்களுக்குக் கீழே மறிமான்களின் புழுக்கைகள் ஓடைக்கற்கள் போல உருண்டு சிதறிக்கிடந்தன.

குதிரைகளை நிறுத்தி பொதிகளை அவிழ்க்கத் தொடங்கினர். பிறகுதிரைகள் சுனையில் சென்று பெருமூச்சு விட்டு பிடரி சிலிர்க்க குனிந்து நீரலைகளை நோக்கி விழியுருட்டின. பின் நீரை உறிஞ்சி வாய்வழிய குடிக்கத் தொடங்கின. பொதிகளை அவிழ்த்து கீழே அடுக்கினர். யானைத்தோலால் ஆன கூடாரப்பொதிகளை முதலில் எடுத்து பிரித்து விரித்து அவற்றின் சரடுகளை சுருள் நீட்டி போட்டனர். சிலர் உணவுப்பைகளை எடுக்க சிலர் கீழே கிடந்த மான்புழுக்கைகளை கூட்டிப்பெருக்கி குவித்தனர். சிலர் மேலே சென்று முட்செடிகளை வெட்டிக்கொண்டுவந்தனர்.

கூடாரங்கள் அடிக்கப்படும் இடங்களை தேர்ந்து அங்கே கற்களை அகற்றினர். தறிகளை சிலர் அறைந்தனர். பூரிசிரவஸ் எழுந்து சென்று மலைச்சரிவில் நீட்டி நின்ற பாறைமேல் ஏறி இடையில் கைவைத்து நின்று சுழன்று சுழன்றிறங்கிய பாதையை நோக்கிக்கொண்டிருந்தான். மாலையின் வெளிச்சம் நிறம்மாறிக்கொண்டே இருந்தது. முகில்கள் கருமைகொண்டன. கீழே பாறைகளின் மடிப்புகள் ஆழம் கொண்டன. எண்ணைக்குடுவையில் இருந்து எடுத்துவைக்கப்பட்டவை போல சில பாறைகள் மின்னிக்கொண்டிருந்தன.

அவன் திரும்பியபோது யானைக்கூட்டங்கள் போல இருபது கூடாரங்கள் எழுந்து நின்றிருந்தன. காற்று வீசாவிட்டாலும் கூட அவை மூச்சு விடுபவை போல மெல்ல புடைத்து அழுந்தின. மூன்று அரசகுடியினருக்கும் கொடிபறக்கும் பெரிய கூடாரங்களும் படைவீரர்களுக்கு தாழ்வான பரந்த கூடாரங்களும் கட்டப்பட்டிருந்தன. மத்ரநாட்டுக் கூடாரத்தின் முன் மரக்கால்கள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட பீடத்தில் சல்லியர் அமர்ந்திருக்க மருத்துவர் ஒருவர் அவரது தோளை கட்டியிருந்த தோல்நாடாக்களை மெல்ல அவிழ்த்தார். அவர் பற்களைக் கடித்து பிறதிசை நோக்கி வலியை வென்றார்.

கூடாரங்களுக்கு அப்பால் மலைச்சரிவில் கற்களைக் கூட்டி எழுப்பப்பட்ட நெருப்புக்குழியின் அருகே விறகையும் மான்புழுக்கைகளையும் சேர்த்துக்கொண்டுவந்து குவித்துக்கொண்டிருந்தனர். தழைகள் கொண்ட பச்சை மரங்களையும் வெட்டிக்கொண்டுவந்து போட்டனர். முதல் சுனை அருகே அரசகுலத்தவர் நின்று கொப்பரைகளில் அள்ளிய நீரால் முகத்தை கழுவிக்கொண்டிருந்தனர். பூரிசிரவஸ் அங்கே சென்று தன் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு நீர் அருந்தினான். எவரும் பேசிக்கொள்ளவில்லை.

குளிரில் ஈரமுகம் விரைத்துக்கொள்ள உதடுகள் உளைந்தன. பூரிசிரவஸ் சல்லியரின் முன்னால் நின்று வணங்கினான். அவர் அமரும்படி கைகாட்ட அருகே கிடந்த உருளைப்பாறையில் அமர்ந்தான். மருத்துவர் சல்லியரின் கையிலும் தோளிலும் இருந்த பருத்த கட்டை மெல்ல சுற்றிச் சுற்றி அவிழ்த்தார். உள்ளே எண்ணை ஊறிய உள்கட்டு இருந்தது.

”பல எலும்புகள் முறிந்துள்ளன என்றார்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நெடுநாட்களாகும்” என்றார் சல்லியர். மேலே என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. அப்பால் நெருப்பு எழுந்தது. புகைவிட்டு சற்று தயங்கி சடசடவென்ற ஒலியுடன் பற்றி மேலேறியது. அதன்மேல் தாமிரக்கலத்தை ஏற்றிவைத்து நீரூற்றினார்கள். அவர்களின் பேச்சொலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. மலையிறங்கி வந்த குளிர்காற்று அதன் புகையை அள்ளி அவர்கள் மேல் மூடி கடந்துசென்றது. செந்தழல் எழுந்து நா பறக்க சீறி பின் தணிந்தது.

மருத்துவர் தன் குடிலில் இருந்து எடுத்துவந்த கொப்பரையின் அரக்கிட்டு மூடிய வாயைத் திறந்து பச்சிலைமணமெழுந்த எண்ணையை சிறு கரண்டியால் அள்ளி சல்லியரின் கட்டுகள் மேல் ஊற்றினார். உலர்ந்து பச்சைப்பாசி படிந்திருந்த துணி ஊறி நிறம்மாறத் தொடங்கியது. அதன் அடியில் எண்ணை விடுவதற்காக வைத்தியர் சல்லியரின் கைகளை மெல்லப் பற்றி அகற்றியபோது சல்லியர் தானறியாமல் “ஆ” என்றார். மருத்துவர் பதறி “இல்லை” என்றார். மேலே செய் என்று சல்லியர் கையசைத்தார்.

ஃபூரியும் சலனும் அருகே வந்து அமர்ந்தனர். சிறிய பீடத்தின் கால்களை பொருத்தியபடி சேவகன் வருவதைக் கண்டதும் மூவரும் எழுந்து நின்றனர். அவன் போட்ட பீடத்தில் சோமதத்தர் வந்து அமர்ந்து காலை நீட்டினார். “நெடும்பயணம்” என்றார். “ஆம், இமயம் தொலைவுகளை சுருட்டி வைத்திருக்கிறது என்பார்கள்.” சோமதத்தர் முனகியபடி “அதுவும் சின்னஞ்சிறு மாத்திரைகளாக” என்றார். சல்லியர் புன்னகை செய்தார்.

இளையோரான ருக்மாங்கதனும் ருக்மரதனும் சமையல் செய்பவர்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொள்வதை பூரிசிரவஸ் நோக்கினான். அவன் பார்வையை அறிந்ததும் அவர்கள் புன்னகை செய்தனர். அவன் அவர்களை ஊக்குவதுபோல புன்னகைத்தான்.

சேவகன் பீடத்துடன் பின்னால் வர சுமித்ரர் நடந்து வந்தார். அமர்ந்து திரும்பி இளையோரை நோக்கி அமரும்படி கைகாட்டினார். ஃபூரியும் சலனும் அமர்ந்தார்கள். பூரிசிரவஸ் சற்று பின்னால் சென்று இன்னொரு பாறையில் அமர்ந்தான். அவர்கள் தலைகுனிந்து தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்தபடி அமர்ந்திருந்தனர். இமயத்தின் பேரமைதி பேசுவதை பிழையென உணரச்செய்கிறது. நாட்கணக்கில் பேசாமலிருந்து பழகியபின் சிந்தனைகள் உள்ளேயே சுழன்று அடங்கத் தொடங்கிவிடுகின்றன. நாவுக்கு வருவதில்லை.

பூரிசிரவஸ் “பாண்டவர்கள் அஸ்தினபுரிக்கு திரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொற்கள் எதிர்பாராமல் வந்து விழுந்தவை என அனைவரும் திரும்பி நோக்கினர். அப்போது அவன் அறிந்தான், அவர்களனைவருமே அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று. சுமித்ரர் “அத்தனை எளிதாக அது முடியாது...” என்றார். “விதுரர் பாண்டவர்களுக்கு அண்மையானவர். அவர் முடிந்தவரை முயல்வார். ஆயினும்...” என்றார்.

சோமதத்தர் “அவர் திருதராஷ்டிரருக்கும் அண்மையானவர். அவர் இருப்பதுவரை விழியிழந்த மன்னர் பாண்டவர்களுக்கு உகந்ததையே செய்வார்” என்றார். ”கௌரவர்கள் பாண்டவர்களை கொல்ல முயன்றிருக்கிறார்கள். அதை பாஞ்சாலத்தில் அத்தனை சூதர்களும் சொல்கிறார்கள். அச்செய்தியை திருதராஷ்டிரர் அறிந்தால் கௌரவர்களை வெறுத்து ஒதுக்குவார். கழுவேற்றவும் ஆணையிடலாம். இனி அச்செய்தியைப்போல பாண்டவர்களுக்கு பெரும்படைக்கலம் பிறிதில்லை. மக்கள் மன்றின் ஏற்பும் குலமூத்தோர் அருளும் அனைத்தும் அவர்களுக்கே இருக்கும். அப்படைக்கலத்தை கௌரவர் வெல்லவே முடியாது.”

தலையை ஆட்டியபடி சோமதத்தர் தொடர்ந்தார் “அவர்களின் யாதவக்குருதியை ஏற்க அங்கே ஷத்ரியர்களுக்கு தயக்கம் இருந்தது. பிறகுலங்களுக்கு யாதவர்மேல் அச்சமும் காழ்ப்பும் இருந்தது. அனைத்தும் இந்த ஒருசெய்தியை உரியமுறையில் பரவவிட்டால் அழிந்துவிடும். அஸ்தினபுரி சினந்தெழுந்து பாண்டவர்களுடன் நிற்கும். அதன் முதல்வராக திருதராஷ்டிர மாமன்னரே இருப்பார். கௌரவர்முதல்வன் செய்ய உகந்தது திரும்பி நகர்நுழையாமல் எங்காவது சென்றுவிடுவதே. தந்தையின் தீச்சொல் தொடரும். ஆனால் கழுவிலேறி சாவதை விட அது மேலானது.”

சுமித்ரர் “ஆம், அவ்வாறே நிகழுமென்று நினைக்கிறேன்” என்றார். “ஆயினும் எனக்கு ஐயமிருக்கிறது. காந்தாரர் சகுனி எல்லையற்ற ஆற்றல் கொண்டவர். அவர் காணும் வழியென்ன என்று இங்கிருந்து நாம் அறியமாட்டோம்.” சல்லியர் நிமிர்ந்து பூரிசிரவஸை நோக்கி “இளையோனே, நீ எண்ணுவதென்ன?” என்றார்.

பூரிசிரவஸ் தலைவணங்கி “நாம் எண்ணமறந்தது ஒன்றுண்டு. மூத்தபாண்டவரின் அகம். அவரை தருமன் என்று போற்றுகின்றனர் சூதர். யுதிஷ்டிரர் ஒருபோதும் தன் இளையோர் செய்த பிழையை தந்தையிடம் சொல்ல மாட்டார். அச்சொல் வழியாக அவர்கள் கழுவேறுவார்களென்றால் அது மூதாதையரின் தீச்சொல் எழ வழிவகுக்கும் என அறிந்திருப்பார். இன்று கௌரவர் செய்த பிழையை எண்ணி அவருடன் சேர்ந்து நிற்கும் அஸ்தினபுரியின் குடிகளும் குலங்களும் கௌரவர்கள் தெய்வமானார்கள் என்றால் அவர்களையே வழிபடுவர். தந்தையின் விழிநீர் விழுந்த மண் வாழாதென்று அறியாதவரல்ல யுதிஷ்டிரர்” என்றான்.

“ஆனால் அவர் பொய் சொல்லா நெறிகொண்டவர் என்று சொல்கிறார்கள்” என்றார் சுமித்ரர். “சௌவீரரே, தீங்கிலாத சொல்லே வாய்மை எனப்படும்” என்றான் பூரிசிரவஸ். சல்லியர் தலையை அசைத்து “ஆம், அது உண்மை” என்றார். “யுதிஷ்டிரர் அஸ்தினபுரிக்கு செல்லமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்று பூரிசிரவஸ் தொடர்ந்தான். ”கௌரவர் செய்த பிழை வெளிப்படாமல் அவர் அஸ்தினபுரிக்கு சென்றாலும் பெரும்பயன் ஏதுமில்லை. அவருக்கு முடிசூட்ட திருதராஷ்டிர மன்னர் முயல்வார். குடிகளில் பாதிப்பேர் அவரை ஏற்கமாட்டார்கள். பிளவுண்ட குடிகளுக்கு சகுனியும் துரியோதனரும் தலைமைகொள்வார்கள். அஸ்தினபுரியில் ஒருகணமும் அமைதி நிலவாது. அத்தகைய ஒரு நாட்டை ஆள யுதிஷ்டிரர் விரும்பமாட்டார்.”

“அவர் என்ன செய்வார் என்று நினைக்கிறாய்?” என்றார் சோமதத்தர். “அவர் நெறிநூல் கற்றவர். பொறுமையே மிகப்பெரும் படைக்கலன் என்று அறிந்தவர். பாஞ்சாலத்தில் இருப்பார். அல்லது தன் தம்பியருடன் யாதவ கிருஷ்ணனின் புதியநகருக்கு செல்வார். அங்கிருந்தபடி காத்திருப்பார். தன் தந்தை இருக்கும் வரை அஸ்தினபுரியை எவ்வகையிலும் எதிர்க்க மாட்டார்.” சற்று சிந்தித்தபின் “அவர் யாதவபுரிக்கே செல்வார். ஐயமில்லை. ஏனென்றால் இப்போது அவருக்குத்தேவை தன் இளையோருக்கான ஷத்ரிய மணமகள்கள். பாஞ்சாலத்தின் சமந்தர்களாக அமர்ந்துகொண்டு அந்த இலக்கை அடையமுடியாது” என்றான்.

அவர்களின் நெஞ்சில் எழுந்த எண்ணத்தை உடனே தொட்டுக்கொண்டு பூரிசிரவஸ் தொடர்ந்தான் “ஆம், யாதவர்கள் என்ற குறை அவர்கள் மேலிருக்கையில் யாதவபுரியில் இருப்பது பிழையே. ஆனால் மூத்தோரே, யாதவபுரி இன்று பெருவல்லமை கொண்ட நாடு. அதன் தூதன் வைரம் பதித்த பொற்தேரில் எந்த நாட்டுக்குள்ளும் நுழையமுடியும். பட்டில் சுற்றிய உடைவாளை கொண்டுசெல்லமுடியும்.”

சல்லியர் சற்று நேரம் தலைகுனிந்து சிந்தித்த பின் “ஆம், அதுவே நிகழுமென்று எண்ணுகிறேன். இன்றிருக்கும் நிலை இப்படியே தொடர்வதற்கே வாய்ப்பு” என்றார். “இது நமக்கு இறையருள் அளித்த வாய்ப்பு. நாம் பெருந்தேர்கள் ஓடும் சாலையில் சகடம் பட்டுச் சிதறும் கூழாங்கற்கள். ஆனால் நாமும் இங்கே வாழ்ந்தாகவேண்டும்...” பின் கண்களில் ஒளியுடன் நிமிர்ந்து “நாம் என்னசெய்யவிருக்கிறோம்?” என்றார்.

“நாம் என்றால்...?” என்றார் சோமதத்தர். “நீங்கள் பாண்டவர்களின் மாதுலர்... உங்கள் தங்கையின் மைந்தர்கள் அவர்களில் இருவர்.” சல்லியர் கையை சற்று அசைத்து அதைத் தடுத்து “அதுவல்ல இங்கே பேசவேண்டியது. அரசர்களாக நாம் நம் குடிகளுக்கு மட்டுமே கடன்பட்டவர்கள்” என்றார். வலியுடன் முகம் சுளித்து தன் கையை மெல்ல அசைத்து நிமிர்ந்து அமர்ந்து “பால்ஹிக குலத்தின் முதல் எதிரி இன்று யார்?”என்றார். அவர்கள் அவர் சொல்லப்போவதென்ன என்பது போல் நோக்கினர்.

சுமித்ரர் மெல்லியகுரலில் “காந்தாரர்” என்றார். பிறர் அவரை திரும்பி நோக்கியபின் தலையசைத்தனர். “ஆம், அவர் எதிரியே. ஆனால் முதல் எதிரி அல்ல” என்றார் சல்லியர். ”சௌவீரரே, பால்ஹிகரே, நமக்கு முதல் எதிரி கூர்ஜரத்தை உண்டு வளர்ந்துவரும் யாதவனே!”

அங்கிருந்த அனைவருமே அவரை கிளர்ந்த முகத்துடன் நோக்கினர். “நாடுகளை படைகளைக் கொண்டு மதிப்பிடலாம். ஆனால் அரசுகளை ஆள்பவனைக்கொண்டே மதிப்பிடவேண்டும். சகுனி பாரதவர்ஷத்தை வெல்லும் கனவுள்ளவன். ஆனால் அது பின்னர். அவனிடம் நாம் பேசமுடியும். ஆனால் இன்றே இப்போதே என எழுந்து வருபவன் யாதவகிருஷ்ணன். அவனுடைய கடல்முகநகரம் ஒவ்வொரு நாளும் வளர்கிறதென்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இன்று அதுவே பெருநகர் என்கிறார்கள்.”

அவர் சொன்னபோதே அனைவரும் அதை முன்னரே உணர்ந்திருந்தார்கள் என்பது முகங்களில் தெரிந்தது. சற்று ஒலிமாறிய குரலில் சல்லியர் சொன்னார் “சுமித்ரரே, பாண்டவர்கள் படைகொண்டு வந்து உங்கள் நாட்டை வென்று உங்கள் தமையன் விபுலரைக் கொன்று மீண்டு சில வருடங்களே ஆகின்றன. இன்னமும் அந்த வடுக்கள் உங்கள் கோட்டையில் இருக்கும்.” சுமித்ரர் தன்மேல் ஒரு கல்விழுந்தது போல உடலசைந்தார். இரு கைகளையும் கூப்பியது போல தன் வாய்மேல் வைத்துக்கொண்டார்.

”சௌவீர மணிமுடி இன்று உங்களிடம் இல்லை சுமித்ரரே. அது அங்கே அஸ்தினபுரியில் இருக்கிறது. யாதவப்பேரரசி அதை தன் தலையில் சூடி அரியணை அமர்ந்து பெருங்கொடையாடல் நடத்தியிருக்கிறாள். இன்று சௌவீரநாட்டுக்கு உண்மையான ஆட்சியாளர் குந்திதேவிதான். எந்த வைதிகரும் வேள்விக்கென உங்களிடம் கோல்தர மாட்டார். நீங்கள் நாடற்றவர்.” நீர்விழும் இலை போல அச்சொற்களைத் தவிர்க்க சுமித்ரரின் உடல் நெளிந்தது.

கசப்பு நிறைந்த முகத்துடன் சல்லியர் சொன்னார் “பாஞ்சாலத்தின் அரசப்பேரவையில் உங்களை அரசவரிசையில் அமர்த்தாமல் சிற்றரசர்கள் நடுவே அமரச்செய்தபோது என் நெஞ்சு அதிரத் தொடங்கியது. நான் காண்பதென்ன என்று சில கணங்கள் என் உள்ளம் அறியவில்லை. அறிந்தபோது எப்படி என்னை அடக்கிக்கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. என் நடுங்கும் கைகளை கோர்த்துக்கொண்டேன். அங்கே என்னால் அவையிலமரவே முடியவில்லை.”

உதடுகளைக் கடித்தபடி சுமித்ரர் தலைகுனிந்தார். அவரது இமைகளில் விழிநீர்த்துளிகள் தெரிகின்றன என்று பூரிசிரவஸுக்கு தோன்றியது. சல்லியர் தாழ்ந்த கரகரத்த குரலில் “அனைத்தும் என் பிழையே என்று எண்ணிக்கொண்டேன் சௌவீரரே. பாண்டவர்கள் உங்கள் மேல் படைகொண்டு வந்தபோது நான் என் படையுடன் வந்து உங்கள் தோள்சேர்ந்து நின்றிருக்கவேண்டும். உங்களுக்காக குருதி சிந்தியிருக்கவேண்டும். உங்களுக்காக எங்கள் படைகள் இறந்திருக்கவேண்டும். அதைப்போல பாரதவர்ஷத்திற்கு நாம் அளிக்கும் செய்தி பிறிதொன்றில்லை. உண்மையில் அது நல்வாய்ப்பு” என்றார்.

இடக்கையை விரித்து தலையை அசைத்தார் சல்லியர். “ஆனால் நான் தயங்கிவிட்டேன். நான் செய்தியறிந்து சினம் கொண்டு எழுந்தேன். என் அமைச்சர்கள் அது மத்ரநாட்டை இக்கட்டிலாழ்த்தும் என்றனர். பாண்டவர்களின் பெரும்படையுடன் நான் பொருத முடியாது என்றனர். பாண்டவர்கள் என் தங்கையின் மைந்தர், எனவே என் குருதி என்று வாதிட்டனர். அவர்களின் சொற்களை நான் ஏற்றுக்கொண்டேன். அரியணையில் அமர்ந்து தலையை பற்றிக்கொண்டேன். பின்னர் எழுந்துசென்று மகளிர்மாளிகையில் புகுந்து மதுவுண்டு மயங்கினேன்."

“நான்குநாட்கள் மகளிர்மாளிகைவிட்டு எழவில்லை. மதுவின் போதைக்குள் இருந்தேன். பின்னர் செய்திவந்தது, விபுலர் களத்தில் பட்டார் என்று. நானும் அவரும் இளமையில் மலைமடிப்புகளில் நாட்கணக்காக புரவியேறிச்சென்று மறிமான்களை வேட்டையாடியிருக்கிறோம். மிக அண்மையெனத்தெரியும் மறிமான்கள் கண்தொட்டு காலெட்டா தொலைவிலிருப்பவை என்று எண்ணி எண்ணி வியந்த நாட்கள் பல. ஏங்கி முதிர்ந்தோம். கனவுகளை நெருப்பருகே அமர்ந்து பகிர்ந்துகொண்டோம். பின் இந்த மலைமடிப்புகளுக்குள் வாழ்ந்து மறையும் வாழ்வையே கனவும் காணமுடியும் என்று அமைந்தோம்.”

“அங்கே கீழே மக்கள் செறிந்த நாடுகளை புழுத்தஊன் என்பார் விபுலர். அவை அழுகி நாறுகின்றன. ஊன் முடிந்ததும் ஒன்றையொன்று தின்கின்றன புழுக்கள். நிறைய புழுக்களை உண்டு பெரும்புழுவானது அரசனாகிறது. இங்கே அரசன் என்பவன் ஓநாய்க்கூட்டத்தின் வேட்டைத்தலைவன் மட்டுமே என்பார். சௌவீர அரசு ஷத்ரிய அரசுகளைப்போல ஆனதே பெரும்பிழை என்பார். மீண்டும் குலச்சபை அரசை கொண்டுவரவேண்டும் என்பார்.”

இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. அப்பால் தீயில் கோதுமை அடைகளை கம்பிகளில் கோர்த்து நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்த மணம் புகையுடன் காற்றிலெழுந்து அவர்களை சூழ்ந்தது. அந்த நெருப்பின் ஒளியில் கூடாரங்களின் பக்கங்கள் புலரிபட்ட மலைமுடிகள் என செம்மைகொண்டு தெரிந்தன. மலைச்சரிவுக்கு கீழே எங்கோ காற்று ஓலமிடும் ஒலி எழுந்தது. மிக அப்பால் பாறைக்கூட்டம் ஒன்று இடிந்து சரிந்திறங்குவது மலை இருளில் நகைப்பதுபோல் ஒலித்தது.

சல்லியர் நிமிர்ந்து நோக்கி கைகளை விரித்து “சரி, அதைச் சொல்ல இனி என்ன தயக்கம்? இனி ஆடை எதற்கு? அணிகலன்கள்தான் எதற்கு?” என்றார். கடும் வலி தெரிந்த முகத்துடன் “சௌவீரரே, அமைச்சர்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட உள்ளம் என்னுடையதே. நான் சொல்லவிழைந்ததையே அவர்கள் சொன்னார்கள். அதை நான் விழையவில்லை என்பதெல்லாம் நானே என்னிடம் ஆடிய நாடகம். நான்கு நாட்கள் மதுவுண்டு களித்து நான் ஒருபோதும் இருந்ததில்லை. மனிதன் தெய்வங்களிடமே மிகவும் பொய்யுரைக்கிறான்” என்றார்.

“சௌவீரரே, நான் அவர்களின் மாதுலன் என்பதனால் அவர்களின் பெரும்படை என் நாட்டை வெல்ல வராது என்று எண்ணினேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. நானும் அவர்களும் ஒரே குருதி என்ற நிகர்படுத்தலை நான் அடைந்ததே அதனால்தான். அது நான் ஒளிந்துகொண்ட புதர். வேறொன்றுமில்லை” என்று சல்லியர் தொடர்ந்தார். “கோழைத்தனம். அச்சொல் அன்றி வேறெதுவும் பொய்யே... வெறும் கோழைத்தனம்.”

சுமித்ரர் “அதிலொன்றுமில்லை சல்லியரே. நானாக இருந்தாலும் அதையே செய்திருப்பேன்...” என்றார். சோமதத்தர் மெல்ல அசைந்து “நான் செய்ததும் அதைத்தான். அவர்கள் என்மேல் படைகொண்டு வரக்கூடாதென்று என் மூதாதையரை வேண்டியபடி அரண்மனையில் அஞ்சி அமர்ந்திருந்தேன். இந்த சுவர்ணகனகர்களைப்போல ஆழ வளை எடுத்து அடிமண்ணில் சென்று சுருண்டுகொள்ள எண்ணினேன்” என்றார்.

சல்லியர் “பாஞ்சாலத்தின் மணத்தன்னேற்பு அவையில் எப்படியோ என் பிழைக்கு நிகர்செய்யவேண்டுமென்று எண்ணினேன். ஆகவேதான் பாண்டவர்களுடன் போரிட்டேன். இந்தப் புண் நன்று. இது எனக்கு ஒரு நிறைவை அளிக்கிறது. என்னளவிலேனும் நான் ஈடுசெய்துவிட்டேன். சுமித்ரரே, நீங்கள் அடைந்த உளவலியில் சிறிய பகுதியை உடல்வலியாக நானும் அடைந்திருக்கிறேன்” என்றார்.

“என்ன பேச்சு இது” என்றார் சுமித்ரர். மெல்ல கைநீட்டி சல்லியரின் கையை தொட்டு “நானும் சொல்லியாகவேண்டும். மாத்ரரே, இக்கணம் வரை நான் உங்களை ஆழ்நெஞ்சில் வெறுத்தேன். அஸ்தினபுரியின் சமந்தர் என்பதனால் உங்களை என் எதிரியென்றே எண்ணினேன். பாண்டவர்கள் உங்கள் உளவுப்படைகளின் உதவியுடன்தான் எங்கள் மேல் படைகொண்டுவந்தார்கள் என்று என் ஒற்றன் ஒருவன் சொன்னான். அதை நான் முழுமையாகவே நம்பினேன்” என்றார்.

சுமித்ரர் கைகளை எடுத்துக்கொண்டு முகம் திருப்பி “உங்களை என்னால் பகைக்க முடியாது. நீங்கள் என் அண்டைநாடு. ஆனால் என் நெஞ்சு முழுக்க வஞ்சம்தான் இருந்தது. என்றோ ஒருநாள் என் வழித்தோன்றல்கள் உங்கள் தலைகொள்ளவேண்டும் என்று விழைந்தேன். பீமன் உங்களை அடித்தபோது நீங்கள் சாகக்கூடாது என்று நான் எண்ணினேன், என் குலத்தவரால் கொல்லப்படுவதற்காக” என்றார்.

சல்லியர் புன்னகையுடன் “அந்த எண்ணங்கள் முற்றிலும் சரியானவையே” என்றார். “இப்போதுகூட உங்கள் குலத்து இளையோன் கையால் நான் கொல்லப்படுவேன் என்றால் அதுவே முறையாகும்.” சுமித்ரர் “என்ன பேச்சு இது” என அவர் கையை மீண்டும் தொட்டார். “நாம் ஒரே குருதி.” சல்லியர் தலைகுனிந்து உதடுகளை அழுத்திக்கொண்டார். பின் நெடுநேரம் தீயின் ஓசைதான் கேட்டுக்கொண்டிருந்தது.

பகுதி 6 : மலைகளின் மடி - 2

நீளச்சரடுகளாக கிழிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தி சுக்காக்கி உப்புடன் அழுந்தச் சுருட்டி உலர்ந்த இலைகளால் கட்டப்பட்டு மேலே தேன்மெழுகு பூசி காற்றுபுகாத பெரிய உருளைகளாக ஆக்கப்பட்ட கன்றின் இறைச்சி நார்க்கூடைகளில் அடுக்கப்பட்டிருந்தது. அவற்றை எடுத்துச்சென்று உடைத்து இலைப்பொதிகளை விரித்தபோது உப்புடன் மடித்துப்போன ஊன்நாற்றம் எழுந்தது. அவற்றை எடுத்து நீட்டியபோது சடைமுடிக்கற்றைகளைப்போல் இருந்தன.

மரவுரியால் அவற்றின்மேல் படிந்திருந்த உப்பை அழுத்தித்துடைத்து எடுத்தனர். நீண்ட கம்பிகளில் அவற்றைக் கோர்த்து எரிந்துகொண்டிருந்த நெருப்புக்குமேல் வைத்தபோது உப்பு வெடித்து பின் கொழுப்புடன் சேர்ந்து உருகி இறைச்சியில் ஊறியது. இறைச்சியிலிருந்து உருகிவிழுந்த கொழுப்பில் அனல் நீலமாகி எழுந்து துப்புவதுபோல ஒலியெழுப்பியது. இரு சமையற்காரர்கள் புரட்டிப்புரட்டி ஊனுலர்வை சுட்டனர். ஊன் மணம் காற்றில் எழுந்து பரவ நெடுந்தொலைவில் பசித்த ஓநாய் ஒன்று நீளமாக ஊளையிட்டது.

பூரிசிரவஸ் அந்த கொடும்பசியை எண்ணிக்கொண்டான். அவர்களுடன் வந்த எவரேனும் ஒருவர் அங்கே செத்துவிழுந்தால் அந்த ஓநாய்கள் மேலும் சிலகாலம் வாழக்கூடும் என்று தோன்றியதும் புன்னகைத்து ஏன் அது தானாக இருக்கக் கூடாது என்று நினைத்தான். அரசகுலத்தவர் எப்போதும் பிறரது இறப்பையே எண்ணுகிறார்கள். அவன் அந்நினைப்பை அழித்து ஒரு புரவி இறப்பதைப்பற்றி நினைத்தான். பின்னர் மீண்டும் புன்னகைத்தான். ஒரு புரவியைக் கொன்று ஓநாய்களை காப்பதில் என்ன இருக்கிறது! அந்த மலைப்பாதை எங்கும் அவர்களுக்காக சுமைதூக்கிய புரவி அது.

அங்கே ஒரு போர் நிகழவேண்டும் என்று மீண்டும் எண்ணிக்கொண்டான். உடல்கள் சரியவேண்டும். ஓநாய்கள் அவற்றை உண்டு கொண்டாடலாம். அதில் அநீதி என ஏதுமில்லை. போர் தெய்வங்களுக்கு பிடித்தமானது. போர்வீரர்கள் போரில் இறப்பதற்கென்றே பிறக்கிறார்கள். அந்நினைவு அறுந்தது. எத்தனை மூடத்தனமான எண்ணம். இறப்பதற்கென்றே பிறப்பு. ஆனால் அந்த எண்ணத்தைத்தான் அரசுசூழ்தலின் முதல் நெறியாக கற்கிறார்கள். அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

சுடப்பட்ட ஊனை சிறிய துண்டுகளாக வெட்டி தட்டுகளில் அடுக்கினார்கள். அதுவரை அடிவயிற்றில் எங்கோ இருந்த பசி பற்றி எரிந்து நெஞ்சைக்கவ்வுவது போலிருந்தது. வாயில் ஊறி நிறைந்த எச்சிலை கூட்டி விழுங்கியபின் அதை எவரேனும் பார்த்துவிட்டார்களா என்று நோக்கினான். அவர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களில் ஆழ்ந்து வெறும் விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.

பெரிய கலத்தில் நீர் விட்டு அதில் உலர்ந்த காய்கறிகளைப்போட்டு பருப்புத்தூளும் உப்பும் போட்டு கொதிக்கச்செய்துகொண்டிருந்தனர். காய்கறிகள் வேகத்தொடங்கியபின்னர்தான் அவற்றின் வாசனை எழுந்து எவையென்று காட்டின. கத்தரிக்காயின் இளம்பாசிமணமும் பாகற்காயின் கசப்புமணமும் கலந்து எழுந்தன. சேனைக்கிழங்கு வேகும் மாவு மணம். வாழைக்காய் துண்டுகளும் தாமரைத்தண்டு வளையங்களும் நேரடியாகவே தீயில் சுட்டு எடுக்கப்பட்டன.

எழுந்து சென்று உணவருகே நிற்கவேண்டும் என்ற அகஎழுச்சியை பூரிசிரவஸ் வென்றான். சல்லியர் நிமிர்ந்து நோக்கி “இளையோன் பசித்திருக்கிறான்” என்றார். “ஆம் மாத்ரரே, பசிக்கத் தொடங்கி நெடுநேரமாகிறது” என்றான் பூரிசிரவஸ். ”கொண்டுவரச்சொல்லலாமே... இருட்டிவருகிறது. குளிர் ஏறுவதற்குள் துயில்வது நல்லது” என்றார் சல்லியர். சலன் எழுந்து சமையற்காரர்களை நோக்கி சென்றான். ருக்மாங்கதனும் ருக்மரதனும் உணவுகளை எடுத்து தாலங்களில் வைக்கத்தொடங்கினர்.

பெரிய மரத்தாலங்களில் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. சுட்டகோதுமை அப்பங்களை காய்கறிக்குழம்பில் தொட்டு உண்டனர். உலர்இறைச்சியை ஊன்கொழுப்புடன் மென்றபோது உள்ளிருந்து அனல் எழுந்து இன்னும் இன்னும் என்று நடமிட்டது. மலைப்பயணத்தில் உணவுக்கிருக்கும் சுவை வேறெங்கும் கிடைப்பதில்லை என்று எண்ணிக்கொண்டான். அரண்மனையில் மாட்டிறைச்சி உண்பதில்லை. ஆட்டிறைச்சிதான். ஆனால் பயணங்களில் மாட்டிறைச்சிதான் எப்போதும். நீள்நாடாக்களாக உலரவைக்க ஏற்றது. நெடுநேரம் வயிற்றில் நின்று பசியை வெல்வது. கொழுப்பு நிறைந்தது.

தீயில் பெரிய இரும்புப் பாத்திரத்தை வைத்து அதில் துண்டுகளாக வெட்டிய பன்றித்தோலை போட்டு வறுத்தனர். கொழுப்பு உருகும் மணம் எழுந்தது. அப்பங்களையும் ஊனையும் தின்றுமுடித்தபோது எருதுக்கொம்புகளில் செய்த குவளைகளில் சூடான இன்னீருடன் பன்றித்தோல் வறுவலை கொண்டு வைத்தனர். உலர்ந்த அத்திப்பழங்களும் இருந்தன. அப்பால் வீரர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒலிகள் கலந்து ஒலித்தன.

உணவு அனைவரையும் எளிதாக்கியது என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். துயரமும் கசப்பும் கலந்திருந்த முகங்கள் இளகின. பன்றித்தோல் வறுவலை மென்றபடி சுமித்ரர் “சல்லியரே, இனி பால்ஹிக குலத்தின் மூத்தவர் நீங்கள். நீங்கள் முடிவெடுங்கள். நாம் ஆவதை செய்வோம்” என்றார். “சௌவீர குடிகளிடம் நான் பேசிக்கொள்கிறேன். இனி நாம் ஒன்றாகவேண்டும்.”

சல்லியர் “ஒன்றாகியே தீரவேண்டும்... இல்லையேல் அழிவுதான்” என்றார். “இத்தனைநாட்களாக நம்மை எவரும் மனிதர்களாக எண்ணியதில்லை. இந்த மூளிமலைத்தொடர்களைக் கடந்து வந்து நம்மை வென்று அவர்கள் கொள்வதற்கு ஏதுமில்லை. சப்தசிந்துவையும் பஞ்சகங்கையையும் ஒட்டியிருக்கும் நாடுகளிடமே செல்வம் இருந்தது. அவற்றையே பெரியநாடுகள் வென்று கப்பம் கொண்டன. ஏனென்றால் நதிகளே வணிகப்பாதைகளாக இருந்தன.”

சல்லியர் “ஆனால் இப்போது அப்படி அல்ல” என்றார். “நாம் உத்தரபதத்திற்கு மிக அண்மையில் இருக்கிறோம். பீதர்களின் பட்டுவணிகர்களும் யவனர்களின் பொன்வணிகர்களும் செல்லும் பாதைகளை காக்கிறோம். நமது கருவூலங்களில் பொன் வந்து விழத்தொடங்கியிருக்கிறது. இனி நாம் முன்னைப்போல நமது மலைமடிப்புகளுக்குள் ஒளிந்து வாழமுடியாது. எங்குசென்றாலும் நம்மைத்தேடி வருவார்கள். ஏனென்றால் நாம் எறும்புக்கூடுகளைப்போல கூலமணிகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம். எத்தனை ஆழத்தில் புதைத்தாலும் நம்மை தோண்டி எடுப்பார்கள். புகையிட்டு வெளியே கொண்டுவருவார்கள். நசுக்கி அழித்து கொள்ளையிட்டுச் செல்வார்கள்” என்றார்.

“சௌவீரரே, அஸ்தினபுரி உங்கள் மேல் படைகொண்டுவந்தது தற்செயல் அல்ல. அவர்கள் நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமது செல்வம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தப்போர் எதன்பொருட்டு செய்யப்பட்டது? பாண்டவர்களின் வீரத்தை அஸ்தினபுரி மக்களுக்குக் காட்ட. அவர்கள் கொண்டுவரும் செல்வத்தை குலச்சபையினருக்கும் வைதிகர்களுக்கும் சூதர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களை வென்றெடுக்க. ஆகவே குறைவான போரில் கூடுதல் செல்வத்தைத் திரட்ட எண்ணினர். உங்களை தேர்ந்தெடுத்தனர்” சல்லியர் தொடர்ந்தார்.

“அது ஒரு தொடக்கம் சௌவீரரே. நமக்கு இருந்த பெரும் கோட்டை என்பது நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த வீண்நிலத்தின் விரிவே. இந்த மலைப்பாதைகளில் இத்தனை தொலைவுக்கு வர ஷத்ரியர்களால் இயலாது. வந்தாலும் அதற்குரிய பயனில்லை. ஆனால் அஸ்தினபுரியின் படைகள் வந்து வென்றன. நூறு வண்டிகள் நிறைய செல்வத்தை கொண்டுசென்றன. உண்மையில் கொண்டுசென்ற செல்வத்தைவிட பலமடங்கு செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதாகவே சூதர்கள் வழியாக பரப்பப்படும். அது பாண்டவர்களின் புகழ்பரப்புவது அல்லவா?”

“பாரதவர்ஷத்தின் அத்தனை அரசர்களும் அச்செய்தியை கேட்பார்கள். கூர்ஜரனும் சிந்துமன்னனும் அறிவார்கள். இன்னும் இன்னும் என கவந்தப்பசி கொண்ட யாதவனின் வளரும் பேரரசு அதை அறியும். ஆகவே இனி வந்தபடியேதான் இருப்பார்கள்” என்றார் சல்லியர். “நாம் ஒன்றாகவேண்டும். ஒருகளத்திலேனும் அவர்களுக்கு பேரிழப்பை அளிக்கவேண்டும். இது எறும்புப்புற்று அல்ல மலைத்தேனீக்கூடு என்று தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நாம் வாழமுடியாது.”

“சல்லியரே, நாம் இன்றுவரை பயின்ற போர்க்கலை ஒளிந்துகொள்வது அல்லவா? வரலாற்றில் என்றேனும் நாம் போரிட்டிருக்கிறோமா?” என்றார் சோமதத்தர். சல்லியர் பெருமூச்சுடன் “உண்மை, நாம் போரிட்டதே இல்லை. நமது படைகள் படைகளே அல்ல. அவை ஒன்றாகச்சேர்ந்த மலைவேடர் குழுக்கள். நமக்கு ஒன்றாகத் தெரியவில்லை. நம் உடல்கள் ஒன்றாகி படையாகும்போதும் நாம் ஒவ்வொருவரும் தனித்திருக்கிறோம். தனியாகப்போரிட்டு தனியாக இறக்கிறோம். நாம் ஒரு நாடே அல்ல. நாம் ஒரு படையாகவும் ஆகவில்லை” என்றார்.

”சோமதத்தரே, நாம் மலைமக்களின் குருதி. வெறுமை சூடிய இந்த மலைச்சரிவுகளில் உயிர்கள் மிகக்குறைவு. சிற்றுயிர்களை உண்டுவாழும் ஊர்வன. அவற்றை உண்டு வாழும் ஓநாய்கள். பசிவெறிகொண்டு நாத்தொங்க அலைந்து தனித்தமர்ந்து ஊளையிடும் ஓநாயின் நிலம் இது. இங்கு நம் மூதாதையர் தோன்றியிருக்க முடியாது. அவர்கள் இங்கே வந்து குடியேறியிருக்கவேண்டும். ஏன் வந்தார்கள்?” சல்லியர் கேட்டார்.

“எளிய விடைதான். அவர்கள் அஞ்சி வந்து ஒளிந்துகொண்டவர்கள். கீழே விரிந்து கிடக்கும் விரிநிலத்தையும் அங்கே செறிந்து நெரியும் மக்களையும் விட்டு வெளியே ஓடிவந்தவர்கள். சுமித்ரரே, அவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள். துரத்தப்பட்டவர்கள். அஞ்சியவர்கள். அந்த அச்சம் அவர்களின் குருதியில் கலந்துவிட்டிருக்கவேண்டும். இந்த மாபெரும் மலையடுக்குகளில் அவர்கள் முழுமுற்றான தனிமையிலேயே வாழ்ந்திருக்கவேண்டும். தனிமையையே அவர்கள் பெருந்துணையாக கண்டார்கள்.”

சல்லியர் தொடர்ந்தார் “இன்றும் அதை நான் காண்கிறேன். நம்குலத்தவர் மலைவெளியில் தங்கள் ஆடுகளுடன் மாதக்கணக்கில் பிறிதொரு மானுடனை பாராமல் மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆயினும் நெடுந்தொலைவுகளை அவர்களின் விழிகள் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கின்றன. சிற்றொலிகளுக்காக அவர்களின் செவிகள் காத்திருக்கின்றன. விழிதொடும் தொலைவிளிம்பில் சிற்றுயிரின் அசைவென ஒரு மானுடனைக் கண்டால் அக்கணமே பாறைகளுக்குள் மறைந்து அசைவற்றுவிடுகிறார்கள். அசைவற்று கண்மூடி அமர்வதுதான் அவர்கள் அறிந்த மிகப்பெரிய தற்காப்பு."

”இங்குள்ள அத்தனை உயிர்களும் செய்வது அதைத்தான். ஓநாய்கள் மலைஓணான்கள் கீரிகள் அனைத்தும். அவற்றிடமிருந்து நம்மவர் கற்றுக்கொண்ட போர்முறை அது. நாமறிந்ததெல்லாம் கோடைகாலம் முழுக்க உணவுதேடுவது. அதை முடிந்தவரை உண்ணாமல் சேர்த்துவைப்பது. வெண்பனி இறங்கும்போது அவற்றை குறைவாக உண்பது. பால்ஹிகநாட்டு குடிகளில் சென்று பாருங்கள். இங்கே குளிர்காலம் முடியும்போது சேர்த்துவைத்த உணவிலும் விறகிலும் பாதிக்குமேல் எஞ்சியிருக்கும். ஆனால் வருடம் முழுக்க குழந்தைகளை அரைப்பட்டினி போடுவார்கள்.”

“உத்தரபதத்தின் வணிகர்கள் நமக்களிப்பது மிகச்சிறிய தொகைதான். இந்த விரிநிலத்தை நாம் அவர்களுக்காக காக்கிறோம். அவர்களுக்கு இல்லங்களும் உணவும் அளிக்கிறோம். அவர்கள் செல்லும்போது ஒரு நாணயத்தை நம்மை நோக்கி வீசிவிட்டுச் செல்கிறார்கள். அதை நாம் அப்படியே புதைத்துவைத்திருக்கிறோம். சௌவீரரே, இங்கே நம் குடிகளிடம் நம்மிடமிருப்பதைவிட நான்குமடங்கு பொன் இருக்கிறது. அதை நாம் வரியாகக் கொள்ளமுடிந்தால் வலுவான அரசுகளை இங்கே எழுப்பமுடியும்.”

“அதை அஸ்தினபுரியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து அவர்கள் வலுவடைவதற்குள் நாம் செய்து முடிக்கவேண்டும்” என்றார் சல்லியர். “நம் நகரங்கள் எவையும் இன்று கோட்டைகள் அற்றவை. நாம் வலுவான கோட்டைகளை கட்டிக்கொள்ளவேண்டும். உத்தரபதத்தின் வணிகச்சாலைகள் முழுக்க காவல்மாடங்களை அமைக்கவேண்டும். மலையுச்சிகளில் காவல்கோட்டைகளைக் கட்டி அங்கே சிறியபடைகளை நிறுத்தவேண்டும். நாம் புதைத்துவைத்திருக்கும் நிதியை செலவிட்டால் பலமடங்கு ஈட்டமுடியும்.”

சௌவீர மன்னரின் கண்களை நோக்கி சல்லியர் சிரித்தார். “இப்போது உங்கள் நெஞ்சில் ஓடிய எண்ணமென்ன என்று அறிவேன்... நான் நீங்கள் புதைத்துவைத்திருக்கும் பொன்னைப்பற்றி உளவறிவதன் பொருட்டு பேசுகிறேனா என்ற ஐயம்...” என்றார். “இல்லையில்லை” என்று சுமித்ரர் கைநீட்டி மறுக்க “அதில் பிழையில்லை சுமித்ரரே. நாம் அப்படிப்பட்டவர்கள். நாம் அனைவருமே தன்னந்தனியர்கள். பிறன் என்பதை எதிரி என்றே எண்ணும் மலைக்குடிகள்” என்று நகைத்தார்.

“நாம் பாரதவர்ஷத்தின் மக்கள் அல்ல. அந்தப் பெருமரத்தில் இருந்து எப்போதோ உதிர்ந்தவர்கள்” என்றார் சல்லியர். பூரிசிரவஸ் மெல்ல “ஆனால் பாரதவர்ஷத்தின் நூல்களிலெல்லாம் நூற்றெட்டு ஷத்ரியநாடுகளின் நெடுநிரையில் நாமும் இருந்துகொண்டிருக்கிறோம். நம்மைத்தேடியும் சூதர்கள் வருகிறார்கள். இணையாக அல்ல என்றாலும் நமக்கும் அவையில் பீடம் இருக்கிறது” என்றான்.

“ஆம், அதற்கு ஒரு நீள்வரலாறு உண்டு. நெடுநாட்களுக்கு முன் குருகுலத்து மாமன்னர் பிரதீபரின் மைந்தர் பால்ஹிகர் இங்கே வந்தார். அவரது குருதி முளைத்த குலம் நாம். ஆகவேதான் நாம் இன்னும் நம்மை குருகுலத்தோன்றல்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.” சல்லியர் இதழ்களில் கசப்பு நிறைந்த புன்னகை விரிந்தது. நிமிர்ந்து பூரிசிரவஸ்ஸையும் ஃபூரியையும் சலனையும் நோக்கி “பால்ஹிகர்களாகிய நாம் குருகுலம் அல்லவா?” என்றார். ஃபூரி “ஆம்” என்றான். “சிபிநாட்டு சுனந்தைக்கு பிரதீபரில் பிறந்தவர் பால்ஹிகர்.”

“அவர் ஏன் இந்த மலைநாட்டுக்கு வந்தார்?” என்றார் சல்லியர். திரும்பி பூரிசிரவஸிடம் “நீ சொல்” என்றார். பூரிசிரவஸ் தணிந்த குரலில் “அஸ்தினபுரியின் அரசர் பிரதீபருக்கு மூன்று மைந்தர்கள். முதல்மைந்தரான தேவாபி சூரியக்கதிர் தொடமுடியாத தோல்நோய் கொண்டிருந்தார். இளையவரான பால்ஹிகர் பெருந்தோள் கொண்டவர். தமையன் மேல் பேரன்பு கொண்டிருந்த பால்ஹிகர் அவரை தன் தோள்களிலேயே சுமந்து அலைந்தார். தமையனின் கைகளும் கால்களுமாக அவரே இருந்தார். மூன்றாமவர்தான் அஸ்தினபுரியின் அரசராக முடிசூட்டிக்கொண்ட மாமன்னர் சந்தனு” என்றான்.

“குலமுறைப்படி தேவாபியே அரசராகவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் அவரால் ஒளியை நோக்கமுடியவில்லை என்று குலமூத்தார் குறைசொன்னார்கள். சூரியனுக்குப் பகையானவர் முடிசூடினால் கதிர்மணிகள் தாழாது என்றனர். மூத்தவர் இருக்க தான் முடிசூட பால்ஹிகர் விழையவில்லை. அவர் மணிமுடியை சந்தனுவுக்கு அளித்தபின் தன் தாயின் நாடான சிபிநாட்டுக்கே சென்றார். அங்கே அவரது மாதுலர் சைலபாகு ஆட்சிசெய்துகொண்டிருந்தார். மாதுலரின் படைத்தலைவராக சிபிநாட்டில் வாழ்கிறார்.”

“ஆம், கதைகள் நன்று” என்றார் சல்லியர் இதழ்கள் கோணலாக புன்னகைத்தபடி. “இளையோனே, முடிதுறந்த பால்ஹிகர் ஏன் நாட்டையும் துறந்தார்? பெருந்தோள்வீரரான அவர் அஸ்தினபுரியின் படைத்தலைவராக இருந்திருக்கலாமே?” என்றார். பூரிசிரவஸ் அவர் சொல்லப்போவதென்ன என்று நோக்கினான். "பால்ஹிகர் பின்னர் ஒரே ஒருமுறைதான் திரும்பி அஸ்தினபுரிக்கு சென்றிருக்கிறார். தன் இளையோன் மைந்தனாகிய பீஷ்மரிடம் கதைப்போர் புரிய...”

“முடிசூட்டுவிழாக்களுக்கும் பெயர்சூட்டுவிழாக்களுக்கும் கூட அவர் சென்றதில்லை. தன் இளையோன் அரசாண்டபோது ஒருமுறைகூட அந்நாட்டில் கால்வைத்ததில்லை. எதற்கு செல்லவில்லை என்றாலும் குருதித்தொடர்புடையோரின் எரியூட்டுக்குச் செல்வது பாரதவர்ஷத்தின் மரபு. பால்ஹிகர் தன் இளையோன் சந்தனு இறந்த செய்தி கேட்டபோது வேட்டையாடிக்கொண்டிருந்தார். வில் தாழ்த்தி சிலகணங்கள் சிந்தித்தபின் அம்பு ஒன்றை எடுத்து நாணேற்றினார். ஒரு சொல்லும் சொல்லவில்லை. அஸ்தினபுரிக்கு செல்லவுமில்லை.”

“சந்தனுவின் மைந்தர்களை அவர் பார்த்ததே இல்லை” என்றார் சல்லியர். "ஏன்?” சோமதத்தர் மட்டும் சற்று அசைந்தார். “அவர் புண்பட்டு மலைக்கு ஓடிவந்த விலங்கு” என்றார் சல்லியர். “சைப்யபுரியின் நிலவறையில் இன்றும் அவர் வாழ்கிறார். முதுமையில் தசைகளெல்லாம் தளர்ந்தபின்னரும் பேராற்றல் கொண்டவராகவே இருக்கிறார். அவரை சென்று பார். அவரிடம் கேட்டு அறியமுடியாது. ஆனால் அவர் அருகே நின்று அறியலாம். அவருள் எரியும் அழல் வெம்மையை அவ்வறையிலேயே உணரலாம்...”

பெருமூச்சுடன் சல்லியர் தொடர்ந்தார். “நெடுநாட்கள் ஸென்யாத்ரியும், போம்போனமும், துங்கானமும்தான் அவரது எல்லைகளாக இருந்தன. அவரது மாதுலர் சைலபாகு மறைந்தபின்னர் அவரது மைந்தர் கஜபாகு அரசரானபோது சிபிநாட்டிலிருந்து பால்ஹிகர் கிளம்பி வடக்கு நோக்கி வந்தார் என்று கதைகள் சொல்கின்றன. அவர் இங்கே மலைமடிப்புகளில் வாழ்ந்த தொன்மையான குடிகளை வந்தடைந்தார். இருபத்தாறாண்டுகாலம் அவர் இங்கே வாழ்ந்தார். ஏழு மனைவியரை மணந்து பத்து மைந்தர்களுக்கு தந்தையானார். அவர் கொடிவழியினரே நாம்.”

சல்லியர் நிமிர்ந்து பூரிசிரவஸை நோக்கி “இளையோனே, இதெல்லாம் நீங்கள் இளமையிலேயே அறிந்தகதைகள். நமது குலப்பாடகர் பாடிப்பாடி வளர்த்தவை. ஆனால் நீ இச்செய்திகளை மேலும் தொடர்ந்து செல்வாய் என்று எண்ணுகிறேன். பால்ஹிகரின் குருதியில் எழுந்த மைந்தர்கள் அமைத்த அரசுகள் பத்து. மத்ரநாடு, சௌவீர நாடு, பூர்வபால்ஹிகநாடு, சகநாடு, யவனநாடு, துஷாரநாடு ஆகிய ஆறும் முதன்மை அரசுகள். கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் நான்கும் மலைக்குடிகளின் அவையரசுகள்” என்றார்.

“ஆனால் இக்கதையில் ஒரு இடர் உள்ளது. பால்ஹிகர் இங்கு வந்த காலத்திற்கு முன்னரே எழுந்த தொல்நூல்களில் கூட இந்த நிலத்திற்கு பால்ஹிகம் என்ற பெயர் உள்ளது. பால்ஹிகம் என்பது ஒரு மலைநிலப்பரப்பென்று ஆரண்யகங்களில் ஏழுமுறை சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களிலேயே அச்சொல் இரண்டுமுறை உள்ளது என்று நான் ஆராய்ந்து அறிந்தேன்” என்றார் சல்லியர். சுமித்ரர் “அப்படியென்றால்...” என்று புரியாமல் இழுத்து நிமிர்ந்து பூரிசிரவஸ்ஸை பார்த்தார்.

“இளையோனே, பிரதீபரின் மைந்தனுக்கு ஏன் பால்ஹிகர் என்ற பெயர் அளிக்கப்பட்டது என்பதே நாம் எண்ணவேண்டிய வினா. முதியமன்னர் பிரதீபர் தன் துணைவிக்கு நெடுநாள் மைந்தரில்லாதிருக்க காடேகி கடும்தவம் புரிந்து மைந்தரைப் பெற்றார் என்கிறார்கள். அக்குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றம் கொண்டவை. தோல்வெளுத்த தேவாபி. வெண்ணிறப் பேருருக்கொண்ட பால்ஹிகர். அதன்பின் கரிய அழகனாகிய சந்தனு.”

சில கணங்களுக்கு பின் “சுனந்தை நியோகமுறையில் கருவுற்றிருக்கவேண்டும்” என்றார் சோமதத்தர். “ஆம், அது ஒன்றே விடையாக இருக்கமுடியும். அவரது குருதித்தந்தை பால்ஹிக நிலத்தைச் சேர்ந்த ரிஷியாக இருக்கலாம். பால்ஹிகரின் தோற்றம் மலைமக்களாகிய பால்ஹிகர்களுடையது. ஆகவே அவருக்கு அப்பெயர் சூட்டப்பட்டது” என்றார் சல்லியர் “ஆனாலும் அவர் அங்கே மலைமகனாகவே கருதப்பட்டார். அஸ்தினபுரியின் தொல்குடிகள் அவரை ஒருபோதும் அரசனாக ஏற்காதென்று உணர்ந்தார். அங்கு தனக்கு இடமில்லை என்று உணர்ந்தபின்னர்தான் அவர் சிபிநாட்டுக்கு வந்தார்.”

“அங்கும் அவர் அயலவராகவே கருதப்பட்டார். எனென்றால் அவர் பிரதீபரின் மைந்தர். சிபிநாட்டுப்படைகளை அவர் ஒருமுறைகூட நடத்தவில்லை. ஒருமுறைகூட அரசவையில் அமரவுமில்லை. நாளெல்லாம் மலைகளில் வேட்டையாடுவதையே வாழ்க்கையாக கொண்டிருந்தார்” சல்லியர் சொன்னார்.

“இளையோனே, அவரது தோற்றமே அவரை பாரதவர்ஷத்தில் எங்கும் அயலவனாக்கிவிடும். இன்று பாண்டவர்களில் இரண்டாமவன் தொன்மையான பால்ஹிககுலத்து பேருடல் கொண்டிருக்கிறான். நியோகத்தில் அவன் எவருடைய மைந்தன் என்று தெரியவில்லை. அவர் பால்ஹிகராக இருக்கவேண்டும். அவனை பெருங்காற்றுகளின் மைந்தன் என்கிறார்கள். பால்ஹிகநாட்டை பெருங்காற்றுகளின் மடித்தொட்டில் என்று கவிஞர்கள் சொல்கிறார்கள்.”

சல்லியர் தொடர்ந்தார் “சைலபாகுவின் மறைவுக்குப்பின் அவர் அங்கிருந்து கிளம்பி தன் குருதிவழியைத் தேடி இந்த மலைமடிப்புகளுக்கு வந்திருக்கவேண்டும். அவரை இம்மக்கள் ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் தெளிவு. இங்கே அவர் மகிழ்ந்திருந்தார். இங்குள்ள மலையடுக்குகளின் பேரமைதியிலேயே அவர் தான் யாரென்பதை உண்மையில் உணர்ந்திருக்கவேண்டும். இன்றும் அவர் தங்கியிருந்த பன்னிரு மலைவீடுகளை நாம் பேணிவருகிறோம். மலைச்சரிவுகளில் பெரிய கற்களை தூக்கிவைத்து கட்டப்பட்ட தன்னந்தனியான இல்லங்கள் அவை.”

“இங்கே அவர் தன் குருதியை விளையவைத்தார். நம் குலங்கள் உருவாகி வந்தன” என்றார் சல்லியர். “இளையோரே, நம்மில் குருகுலத்து பால்ஹிகரின் குருதி இருப்பதனால்தான் நம்மை அரசர்களாக ஏற்றுக்கொண்டது பாரதவர்ஷம். நம்மிலிருந்து அரசுகள் உருவாகி வந்தன. நமக்கு அவைகளில் இடமும் சொற்களில் சிலவும் கிடைத்தது. நாம் என நாமுணரும் இன்றைய எண்ணங்களெல்லாம் அவருக்கு பிரதீபர் அளித்த அடையாளத்தில் இருந்து எழுந்தவைதான்.”

“ஆயினும் நாம் இன்னமும் ஒதுக்கப்பட்டவர்களே. பாஞ்சால அவையில் அதை கண்கூடாகவே கண்டேன். பால்ஹிககுலத்திலிருந்து மணத்தன்னேற்புக்கென அழைக்கப்பட்டவர்களே நாம் மூவர்தான். சகர்களும் யவனர்களும் துஷாரர்களும் அழைக்கப்படவே இல்லை. பிறகுடிகள் கருத்தில்கொள்ளப்படவே இல்லை” என்றார் சல்லியர். “ஆம், அதுவே முறைமையாக உள்ளது” என்றார் சுமித்ரர்.

“என் குடியில் அஸ்தினபுரி பெண்ணெடுத்தது ஏன் என்றும் எனக்குத் தெரியும். சந்தனுவின் மைந்தர் பாண்டு ஆண்மையற்றவர். அவருக்கு எந்த தூய ஷத்ரியர்களும் மகள்கொடை அளிக்கமாட்டார்கள். நெடுங்காலம் முன்பு யாதவரவையில் என்னைத் துறந்து பாண்டுவுக்கு ஏன் குந்தி மாலையிட்டாள் என்று இன்று அறிகிறேன். சற்றேனும் அரசுசூழ்தல் அறிந்தவர்கள் அந்த முடிவையே எடுப்பார்கள். அவளுக்குத்தெரியும், இளையோரே, நாம் ஷத்ரியர்களே அல்ல. நாம் ஷத்ரியர்களென நடிக்க விடப்பட்டிருக்கிறோம்.”

”நான் இன்றும் நினைவுகூர்கிறேன். பெண்கொள்ள விழைந்து பீஷ்மர் என் குடிக்கு வந்தபோது நான் அடைந்த பெருமிதம். பாரதவர்ஷத்தின் மையத்தை நோக்கிச் செல்கிறேன் என்று நான் கொண்ட பேருவகை. குந்தி யாதவகுலத்தைச் சேர்ந்தவளாகையால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் அவளை ஏற்கமாட்டார்கள் என்பதனால் என்னிடம் பெண்கொள்ள வந்ததாகச் சொன்னார் பிதாமகர். நான் விம்மிதமடைந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டு அது எனக்களிக்கப்படும் பெரும் மதிப்பு என்று நாதழுதழுத்தேன்.”

சோமதத்தர் “குந்தி உங்களை மறுதலித்ததனால் நீங்கள் சினம்கொண்டு கூர்ஜரர்களையோ மகதத்தையோ சார்ந்துவிடக்கூடாது என்று பிதாமகர் அஞ்சியிருக்கலாம்” என்றார். சல்லியர் சினம் கொள்வார் என்று எண்ணி பூரிசிரவஸ் நோக்கினான். அவர் புன்னகைசெய்து “ஆம், அதுவும் அவர் எண்ணமாக இருந்திருக்கலாம்” என்றார்.

“இளையோரே, நாம் வெளிவரவேண்டியது அந்த மாயையில் இருந்துதான்” என்றார் சல்லியர். "நாம் இனி நம்மை ஷத்ரியர்களாக எண்ணவேண்டியதில்லை. நம்மை பால்ஹிகர்களாக எண்ணுவோம். இங்கே ஒரு வல்லமை வாய்ந்த பால்ஹிக கூட்டமைப்பை உருவாக்குவோம். அது ஒன்றே நாம் வாழும் வழி. இல்லையேல் யாதவகிருஷ்ணனின் சக்கரத்தால் துண்டுகளாக்கப்படுவோம். அல்லது அவன் கால்களைக் கழுவி நம் மணிமுடிமேல் விட்டுக்கொள்வோம்.”

குரலை உயர்த்தி “நாம் செய்யவேண்டியது ஒன்றே. இன்று நம் பால்ஹிகக் குடிகளனைவரும் பிரிந்திருக்கிறோம். ஒவ்வொருவரிடமும் தூதனுப்பி இதைப்பற்றி பேசுவோம். அதுவரை அஸ்தினபுரியின் இரு தரப்பினரிடமும் நல்லுறவை நடிப்போம்” என்றார் சல்லியர். “நம்மால் மலைக்குடியரசுகள் என இழித்து ஒதுக்கப்பட்ட நான்கு குலங்களையும் நம்முடன் சேர்த்துக்கொள்வோம்.”

சுமித்ரர் “அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே?” என்றார். “அவர்கள் பார்வையில் நாம் அயலவர். ஷத்ரியர்.” சல்லியர் “அதற்கு ஒரு வழி உள்ளது. சிபிநாட்டு நிலவறையில் இருந்து பால்ஹிகரை கொண்டுவருவோம். அவரே நமக்கெல்லாம் தந்தை வடிவம். அவரைக் கண்டபின் எவரும் விலகி நிற்க முடியாது. நம்குடிகளை எல்லாம் இணைக்கும் கொடிமரம் அவரே” என்றார் சல்லியர். “ஆம்” என்றார் சுமித்ரர். சோமதத்தர் “ஆம், நான் இன்றுவரை பிதாமகரை பார்த்ததில்லை. அவர் பாதம் தொட்டு தலையில் வைக்க முடிந்தால் நான் வாழ்ந்தவனாவேன்” என்றார். சுமித்ரர் அச்சொல்லைக் கேட்டு நெகிழ்ந்து சோமதத்தரின் தொடையை தொட்டார்.

குளிர்காற்று வீசத்தொடங்கியது. கூடாரங்கள் படகுகளின் பாய்கள் போல உப்பி அமைந்தன. “துயில்வோம். நாளை முதலொளியிலேயே கிளம்பிவிடவேண்டும். எண்ணியதைவிட இரண்டுநாட்கள் பிந்தி சென்றுகொண்டிருக்கிறோம்” என்று சல்லியர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர். மலைக்குடிகளுக்குரிய முறையில் ஒருவரை ஒருவர் தோள்களைத் தொட்டு வணங்கியபின் கூடாரங்களுக்கு பிரிந்துசென்றனர். ருக்மாங்கதன் வந்து தந்தையருகே நிற்க ருக்மரதன் அப்பால் சென்று கம்பளிப்போர்வைகளை சல்லியரின் கூடாரத்திற்குள் கொண்டுசென்றான்.

சலன் பூரிசிரவஸ்ஸை நோக்கி வா என்று விழியசைத்துவிட்டு சென்றான். பூரிசிரவஸ் தயங்கி நின்றான். உதவியாளன் வந்து சல்லியரை மெல்ல தூக்கினான். அவர் வலியில் உதடுகளை இறுக்கிக்கொண்டு எழுந்தார். திரும்பி அவனிடம் “இரவில் கைக்குழந்தையை தொட்டிலில் இட்டுக்கொண்டு அருகே துயிலும் அன்னையைப்போல் படுக்கிறேன்” என்றார். “அகிபீனா இல்லாமல் கண்ணயர முடிவதில்லை.”

பூரிசிரவஸ் மெல்ல ”மாத்ரரே, தன் குருதிக்கு மீண்டு ஏழு மனைவியரில் பத்து மைந்தரைப்பெற்ற பின் ஏன் பால்ஹிகர் மீண்டும் சிபிநாட்டுக்குச் சென்றார்?” என்றான். சல்லியர் நிமிர்ந்து நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் “அதை நானறியேன். நீ சென்று அவரை பார். அதைக் கேட்டு அறிந்துகொள். அது நாமனைவருக்கும் உரிய ஓர் அறிதலாக இருக்கக்கூடும்” என்றார்.

நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 22

பகுதி 6 : மலைகளின் மடி – 3

சைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி வரை தேர்களில் வந்து அங்கிருந்து

சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி ஆறு வழியாக சகலபுரி வரை வந்து

அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி சென்றது பூரிசிரவஸ்ஸின்

சிறிய படை. படையின் நடுவே வந்த பெரிய கூண்டுவண்டியில் தடித்த இறகுச்சேக்கையில்

முதியவரான பால்ஹிகர் படுத்திருந்தார். அவர் பெரும்பாலும் கண்கள் மேல் கரிய

மரவுரியை போட்டுக்கொண்டு படுத்த நிலையில்தான் இருந்தார். நன்றாக ஒளி

மங்கியபின்னர்தான் எப்போதாவது எழுந்து அமர்ந்து கடந்துசெல்லும் வறண்ட நிலத்தை

எந்த இடமென்றறியாதவர் போல பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரது உடலில் தசைகள் சுருங்கித் தளர்ந்து மிகப்பெரிய எலும்புச்சட்டகத்தில்

தொங்கிக்கிடப்பதுபோலிருந்தன. பாலைவனத்து முள்மரம் ஒன்றில் செந்நிற மரவுரிகள்

தொங்கிக்கிடப்பதுபோல என்று முதல்முறை நோக்கியபோது பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான்.

கழுத்தில் பெரிய தசைத்தூளி தொங்கியது. உடலில் முடியே இல்லாமல் செந்நிறமான

பாலைமண்ணை குழைத்துச்செய்து வெயிலில் காயவைத்த சிற்பம் போலிருந்தார்.

முகத்தில் சுருக்கங்கள் ஆழ்ந்த வெடிப்புகள்போல. நடுவே வெண்பச்சைநிறமான சிறிய

விழிகள். உதடுகள் முழுமையாகவே உள்ளே சென்று வாய் ஒரு தோல்மடிப்பு போலிருந்தது.

வாயில் பற்களே இருக்கவில்லை.

அவர் கிளம்பியதிலிருந்து பெரும்பாலும் துயிலில்தான் இருந்தார். பயணங்களில்

துயின்றார். இரவில் தங்குமிடங்களில் மட்டும் எழுந்து சென்று சோலைமரம் ஒன்றின்

அடியில் அமர்ந்து வெறுமனே இருண்ட பாலையை நோக்கிக்கொண்டிருந்தார். நோக்க நோக்க

ஒளிகொள்வது பாலைநிலம் என பூரிசிரவஸ் அறிந்திருந்தான். விழிதொடும் தொலைவு

கூடிக்கொண்டே சென்று ஒருகட்டத்தில் வான்விளிம்பில் அசையும் முள்மரத்தின்

இலைகளைக்கூட நோக்கமுடியும். மலைப்பாறைகளின் விரிசல்களை காணமுடியும்.

அவர் பெரும்பாலும் எவரிடமும் எதுவும் பேசுவதில்லை. பூரிசிரவஸ் ஒவ்வொருநாளும்

அருகே சென்று “பிதாமகரே” என்று அழைப்பான். அவரது விழிகள் அவனை நோக்கும்.

மானுடனை அறியாத தெய்வ விழிகள். “தங்களுக்கு என்னவேண்டும்?” என்பான்.

ஒன்றுமில்லை என்று கையசைப்பார். “ஏதாவது நலக்குறைகள் உள்ளனவா?” அதற்கும்

கையசைப்பார். சிலகணங்கள் நின்றுவிட்டு அவன் திரும்பிவிடுவான்.

மெதுவாகத்தான் அவர்கள் பயணம்செய்தனர். சைப்யபுரியில் இருந்து மூலத்தானநகரிக்கு

வரவே பன்னிரண்டு நாட்களாயின. மாலைவெயில் அடங்கியபின்னர்தான் தேர்கள்

கிளம்பமுடிந்தது. இருள் அடர்வதற்குள் பாலைவனச்சோலையை சென்றடைந்து புரவிகளை

அவிழ்த்து நீர்காட்டி நிழல்களில் கட்டிவிட்டு கூடாரங்களைக் கட்டி துயில்கொள்ள

ஆரம்பித்தார்கள். மறுநாள் மென்வெளிச்சம் எழுந்த விடியலிலேயே கிளம்பி வெயில்

வெளுக்கும் வரை மீண்டும் பயணம்.

இரவுகளில் கூடாரங்களின்மேல் மழையென மணல் பெய்துகொண்டே இருந்த ஒலியை

கேட்டுக்கொண்டு நெடுநேரம் துயிலாதிருந்தான் பூரிசிரவஸ். சிபிநாட்டின்

வெறுமைமூடிய பாழ்நிலம் அவன் கனவுகளை குலைத்துவிட்டிருந்தது. பகலில் எதுவும்

தெரிவதில்லை. வழிகாட்டியை நம்பி சென்றபோதிலும்கூட வழித்தடத்தையும் குறிகளையும்

அவனும் குறித்துக்கொண்டான். அடுத்த தங்குமிடத்தை மட்டுமே நினைத்துக்கொண்டுதான்

ஒவ்வொரு பயணமும் நிகழ்ந்தது. நெஞ்சில் வேறெந்த நினைப்பும் இல்லை.

சூழ்ந்திருக்கும் விரிநிலத்தை விழிகள் நோக்கவேயில்லை என்றுதான் அவன்

எண்ணினான். ஆனால் இரவில் கண்மூடியதும் அன்று முழுக்க அவன் பார்த்த நிலங்கள்

எழுந்தெழுந்து வந்தன. ஒன்றிலிருந்து ஒன்றாக சுருள் விரிந்து பரவி அவனை

சூழ்ந்தன.

வெறுமை தாளாமல் அவன் ஒவ்வொருநாளும் தோல் இழுத்துக்கட்டிய தூளிமஞ்சத்தில்

புரண்டுபுரண்டு படுத்து நீள்மூச்செறிந்தான். அவன் அறிந்த பால்ஹிக நாடும்

பசுமையற்ற வெறும் மலையடுக்குகளால் ஆனதுதான். ஆனால் அங்கே நிலம் கண்முன்

எழுந்து செந்நிறத்திரைச்சீலை என மடிந்து மடிந்து திசைகளை மூடியிருந்தது.

மலைமுடிகளின் மேல் எப்போதுமே வெண்மேகங்கள் கவிந்திருந்தன. மலையிடுக்குகளில்

இருந்து குளிர்ந்த காற்று இறங்கிவந்து தழுவிச்சுழன்று சென்றது.

மலைகளின் மூச்சு அது என்பார்கள் முதியதாதிகள். மாபெரும் முதுகுச்செதில்கள்

கொண்ட உடும்பு அந்த மலைத்தொடர் என்று ஒருமுறை அவனுடைய தாதி சலபை சொன்னாள். அது

இட்ட முட்டையில் இருந்து வந்தவர்கள் அவர்கள். அன்னை அதை குனிந்து நோக்கி

குளிர்மூச்சு விடுகிறாள். அவளுடைய முலைப்பால் ஆறாக மாறி ஓடிவந்து

அமுதூட்டுகிறது.மலைகளை அன்னையென்றே மலைமக்கள் சொன்னார்கள். கங்காவர்த்தத்தில்

இமயத்தை ஆணாகச் சொல்கிறார்கள் என்பதை பூரிசிரவஸ் அறிவான். ஹிமவான் என்பது

அவனுக்கு ஒருமலையென்றே பொருள்படுவதில்லை.

எப்போதாவது மலைகளுக்கு அப்பாலிருந்து மெல்லிய மழைச்சாரல் கிளம்பிவந்து

மாபெரும் பட்டுத்திரைச்சீலை போல மலைகளை மறைத்து நின்று ஆடும். அது சுழன்று

நெருங்கி வருவதை காணமுடியும். முகில்களில் ஒரு பகுதி இடிந்து சரிந்தது போல.

வானுக்கு ஒரு பெரிய பாதைபோடப்பட்டது போல. அது வருவதை குளிர்ந்த உடல் குறுக்கி

நின்று நோக்கும் உவகையை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. குளிர்காற்று வந்து

கடந்துசெல்லும். அதிலிருந்த ஈரத்துளிகளால் அரண்மனையின்

மரவுரித்திரைச்சீலைகளில் நீர்ப்பொடிகள் படிந்து மின்னும். மரப்பலகைகளில்

வியர்வைத்துளிகள் எழுந்து திரண்டு மண்புழுபோல நெளிந்து வளையும்.

பள்ளத்தாக்கின்மேல் மழை பேரொலியுடன் கவியும். மழையுடன் நகரமக்கள் எழுப்பும்

கூச்சல்களின் ஒலியும் கலந்துகொள்ளும். பால்ஹிகநாட்டில் மழை ஒரு பெரும் விழா.

அனைவரும் இல்லத்துத் திண்ணைகளில் நின்று மழைநோக்குவார்கள். வானம் மண்ணை

பீலித்துடைப்பத்தால் வருடிச்செல்வதுபோலிருக்கும். மாளிகைமுகடுகளும்

பெரும்பாறைவளைவுகளும் ஒருபக்கம் மட்டும் நனைந்து ஒளிவழியும். சற்றுநேரத்திலேயே

மழை நின்றுவிடும். பூசகரின் ஊழ்கச்சொல் போல மழைத்துளிகள் கூரைவிளிம்பிலிருந்து

சொட்டும் ஒலியே கேட்டுக்கொண்டிருக்கும்.

பெருங்கூச்சலுடன் மக்கள் தெருக்களில் இறங்குவார்கள். சாரல் எஞ்சிய

மழைக்காற்றில் கைகளைத் தூக்கியபடி நடனமிடுவார்கள். முதியவர்களும் பெண்களும்

குழந்தைகளுடன் கலந்துவிடும் நாள் அது. சேறுமிதித்தல் மிக மங்கலமான நிகழ்வாக

கருதப்பட்டது. நகரின் தெருக்களெல்லாமே அடர்ந்த புழுதி நிறைந்தவை. அவை

குருதியெழும் நிணச்சேறாக மிதிபடும். நகர்முழுக்க கால்கள் பட்டுவிடவேண்டும்

என்பது நெறியாகையால் செந்நிறக் கால்களுடன் இளையோர் கூச்சலிட்டுச் சிரித்தபடி

ஓடி அலைவார்கள்.

மழைச்சேறு தூயது என்றார்கள் மலைக்குடிகளின் தொல்பூசகர்கள். செஞ்சேற்றை அள்ளி

ஒருவர் மேல் ஒருவர் வீசிச்சிரிப்பார்கள். உடைகள் சேற்றில் மூழ்கிச் சொட்டும்.

செந்நிறச்சேற்றை அள்ளி வீட்டுச் சுவர்களின் மேலும் கூரைகளின் மேலும் வீசி

நகரையே மூடிவிடுவார்கள். குருதிசொட்ட கருவிலிருந்து எழுந்து வந்த குழந்தைகள்

போலிருப்பார்கள் நகர்மக்கள். நகரமே அக்கணம் பிறந்து கருக்குருதியுடன்

கிடக்கும் குட்டிபோலிருக்கும். மலையடுக்குகள் குனிந்து நோக்கி

பெருமூச்சுவிடும்போது முதுகுச்செதில்கள் அசைவதுபோலவே தெரியும்.

இரவில் அவர்கள் அந்தச் சேற்றுடனே துயிலச் செல்வார்கள். மிக விரைவில் சேறு

உலர்ந்து செம்புழுதியாக மாறி உதிர்ந்துவிடும். வீட்டுக்குள் பதிந்த செந்நிற

கால்தடங்களை அழிக்கலாகாதென்பது நெறி. அவை மறுநாள்கூட எஞ்சியிருக்கும்.

பல்லாயிரம் காலடிகளுடன் நகரத்தெருக்கள் காற்றில் உலரும். மறுநாள்

வெயிலெழுகையில் அவை கலைந்து மீண்டும் செம்புழுதியாக பறக்கத் தொடங்கிவிடும்.

மூன்றாம்நாள் மலைச்சரிவுகள் பசுமைகொண்டு சிலிர்த்துக்கொண்டிருக்கும். ஆடுகளை

ஓட்டிக்கொண்டு இளம்மேய்ப்பர்கள் ஊசலாடுவதுபோல மலைச்சரிவில் ஏறி

ஏறிச்செல்வார்கள். மலைகளின் மேல் பேன்கள் போல ஆடுகள் ஒட்டி அசைவதை அரண்மனைச்

சாளரம் வழியாக காணமுடியும். அசைவற்றதுபோலவும் அசைந்தபடியும் இருக்க மலையில்

மேயும் ஆடுகளால் மட்டுமே முடியும். சிந்தனையை அசைவற்றதாக ஆக்க அவற்றை

நோக்குவதைவிட வேறு சிறந்த வழி இல்லை.

மேலுமிரு மழைபெய்தால் மலைகளின் காலடிகளில் குத்துச்செடிகள் பசுமைகொண்டு எழும்.

தண்டிலும் இலைகளிலும் கூட முட்கள் கொண்டவை. அவற்றின் முட்செறிவுக்குள் இருந்து

மலர்கள் விரிந்து பெருகும். உடலெல்லாம் முள்கொண்ட செடிகளே உடலே மலராக ஆகும்

திறன்கொண்டவை என்பது பால்ஹிகநாட்டுப் பழமொழி. பள்ளத்தாக்குமுழுக்க செம்மை,

நீலச்செம்மை, மஞ்சள் நிறங்களில் மலர்கள் பூத்து விரிந்திருக்கும். எக்கணமும்

அந்த மலர்விரிப்பின் மேல் மலை தன் கால்களை எடுத்து வைத்துவிடும் என்று

தோன்றும்.

வறண்டதென்றாலும் கோவாசனர் நாடு மலைகளால் வாழ்த்தப்பட்டது என்று பூரிசிரவஸ்

எண்ணிக்கொண்டான். சூழ்ந்து நின்று குனிந்து நோக்கி நிற்கும் மலைகளின் கனிவை

தலைக்குமேல் எப்போதும் உணரமுடியும். மலைகளில்லாமல் திசைகள் திறந்துகிடக்கும்

சிபிநாட்டின் பாழ்வெளியைக் கண்டு அவன் அகம் பதைபதைத்தது. கால்கீழ் அடியிலி

திறந்துகிடக்கும் தவிப்பு அது. சிபிநாட்டின் வெயில் நின்றெரியும் மணல்வெளியில்

சுட்டுக்கனன்று நிற்கும் செம்மண் மலைகளையும் காற்றில் உருகிவழிந்து உருவழிந்து

நின்ற மணல்பாறைக்குன்றுகளையும் நோக்கும்போதெல்லாம் அவன் தன் எண்ணங்களை எல்லாம்

உலரச்செய்யும் அனலைத்தான் உணர்ந்தான்.

பாலைநிலத்திற்குள் நுழைந்த சிலநாட்களுக்குள்ளாகவே அவன் உதடுகளும் கன்னங்களும்

மூக்கும் வெந்து தோலுரிந்துவிட்டன. கண்களைச் சுருக்கி நோக்கி நோக்கி முகமே

கண்களை நோக்கிச் சுருங்கி இழுபட்டுவிட்டதுபோலிருந்தது. அச்சுருக்கங்கள்

முகத்தில் ஆழ்ந்த வரிகளாகப் படிந்து பின் சிவந்த புண்கோடுகளாக மாறின.

முதல்நாள் தண்ணீர்குடித்துக்கொண்டே இருந்தான். வழிகாட்டியாக வந்த சைப்யன்

“நீர் அருந்தலாகாது இளவரசே. குறைந்த நீருக்கு உடலை பழக்குங்கள்” என்று

சொல்லிக்கொண்டே இருந்தான். சிலநாட்களிலேயே விடாய் என்பது உடலின் ஓர் எரிதலாக

நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் நீரின் நினைவே எழாதாயிற்று.

ஒவ்வொருநாளும் இரவின் இருளில் கண்களைமூடிக்கொண்டு அவன் தன் பால்ஹிகநாட்டின்

மலையடுக்குகளை எண்ணிக்கொள்வான். நாளடைவில் அவன் அதற்கான வழிகளை கண்டுகொண்டான்.

மலையின் கீழே விரிந்துகிடக்கும் மஞ்சள்பச்சை நிறமான புல்வெளியை அசிக்னியின்

கிளையாறான தேவாசியின் இருமருங்கும் செறிந்திருக்கும் பச்சையாக

எண்ணிக்கொள்வான். மெல்லமெல்ல மேலே சென்று உருண்டு நிற்கும் பெரும்பாறைகளை

அவற்றுக்குமேல் அணுகமுடியாத சரிவில் நின்றிருக்கும் தனித்த தேவதாருகக்ளை

பார்ப்பான். மெல்ல உச்சியின் வான்வளைவை அங்கே தேங்கி நின்றிருக்கும் ஒளிமிக்க

பேரமைதியை பார்ப்பான்.

அந்த அமைதிக்குமேல் வெண்குடைகளாக நின்றிருக்கும் முகில்கள். முகில்களால் ஆன

மங்கலான வானம். வானம் அவனை அமைதிப்படுத்தும். துயில முடியும். அப்போது

கூடாரத்தின்மேல் பெய்யும் மணல்காற்று மலையிறங்கி வரும் பனிக்குளிர்காற்றாக

அவனுக்குள் வீசி உடலை சிலிர்க்கச்செய்யும்.

சிபிநாட்டின் வானில் முகில்களே இல்லை. நீலநிறமான வெறுமை. நீலநிறமான இன்மை.

எங்கும் எப்போதும் ஒரே வானம்., அந்த மாற்றமின்மைதான் அந்நிலத்தை

அச்சமூட்டுவதாக ஆக்குகிறது என்று தோன்றும். அதில் விடிகாலையிலேயே

மலைகளுக்கப்பாலிருந்து ஒளி விழத்தொடங்கிவிடும். முட்கள் செறிந்த

குத்துச்செடிகளின் புழுதிபடிந்த இலைகளின்மேல் கனிந்த பனித்துளிகள் ஒளிவிடும்.

வானொளி மாறிவருவதை அந்த முத்தொளியிலேயே காணமுடியும்.

அந்நீர்த்துளிகளை உண்ணும் சிறிய ஓணான்கள் வால்விடைக்க முட்கள் மேல் அமர்ந்து

காலடியோசைகளை செவிகூர்ந்து கேட்டு சிலிர்த்து சிவக்கும். சினம் கொள்பவை போல.

அவற்றின் செவிள்கள் விடைக்கும். சைப்யர்கள் அனைத்து உயிர்களையும் உண்டார்கள்.

ஓணான்களை கல்லால் எறிந்து அவை விழுந்து மல்லாந்து எழுந்து ஓடி தள்ளாடிச்

சரியும்போது ஓடிச்சென்று எடுத்து தங்கள் தோல்பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.

வெயிலெழுந்த பகலில் தங்கும்போது அவற்றை கனலில் இட்டு சுட்டு தோலுரித்து

கிழங்குகள் போல தின்றார்கள். உடும்புகளையோ பாம்புகளையோ கண்டால்

அனைத்துப்பொதிகளையும் விட்டுவிட்டு ஓடிச்சென்றார்கள்.

அத்தனை பேருடைய முகங்களும் ஒன்றுபோலிருந்தன. அவர்களின் உடல்களும் அங்குள்ள

பாறைகளைப்போலவே வெந்து அனல்நிறமாகியிருந்தன. வரிவரியாக வெடித்த தோல். வற்றிய

சுனைக்குள் நீர் போல சுருக்கம் நிறைந்த கண்களுக்குள் ஆடும் இளம்பச்சை விழிகள்.

எட்டுநாட்களில் அவன் சைப்யபுரிக்கு சென்றுசேர்ந்தபோது அவன் பிறந்து வாழ்ந்த

நிலம் மண்ணின்மேலிருந்தே அகன்று எங்கோ சென்றுவிட்டதுபோலிருந்தது. கயிறு அறுந்த

பட்டம் போல அவன் எங்கோ சென்று இறங்கிவிட்டதுபோல.

சைப்யபுரியின் பாறைக்குடைவு மாளிகைகளைப்பற்றி அவன் கேட்டிருந்தான். அவன்

கற்பனையில் அவை பேருருக்கொண்டவையாக இருந்தன. உடலெங்கும் விழிதிறந்த

அரக்கர்களைப்போல. மலைக்குடைவு வழியினூடாக ஏறி சைப்யபுரிக்குள் சென்றதும் அவன்

முதலில் அடைந்தது ஏமாற்றம்தான்.

அது முன்மாலைநேரம். வெயில் வெம்மை குறையாமலிருந்தமையால் தெருக்களில்

மிகச்சிலரே இருந்தனர். வறண்ட தோல்கொண்ட வைக்கோல்நிறக் குதிரைகளும்

பாலைமண்ணாலேயே ஆனவை போன்ற கழுதைகளும் தோலிழுத்துக் கட்டப்பட்ட கூரைகளுக்குக்

கீழே நிழலில் தலைகுனிந்து நின்றிருந்தன. தெருக்கள் அலையலையாக புழுதிநிறைந்து

செந்நிற ஓடைகள் போல தெரிந்தன.

கடைகளில் ஓரிரு வணிகர்களே இருந்தனர். மிகஅகலமான மரச்சகடங்கள் கொண்ட பாலைவனப்

பொதிவண்டிகள் ஆங்காங்கே நின்றிருக்க அவற்றிலிருந்து உலரவைக்கப்பட்ட

ஊன்நாடாக்களை எடுத்து உள்ளே கொண்டுசென்றுகொண்டிருந்த தலைப்பாகையணிந்த

சேவகர்கள் அவர்களின் குதிரைப்படையை வியப்புடன் நோக்கினர். அவன்

அதன்பின்னர்தான் பாறைக்குடைவு மாளிகைகளை பார்த்தான். அவை பெரிய

கரையான்புற்றுகள் போன்றே தோன்றின.

காற்று வீசி வீசி அக்கட்டடங்களின் சாளரங்களும் வாயில்களுமெல்லாம்

அரிக்கப்பட்டு மழுங்கி நீள்வட்டவடிவம் கொண்டிருக்க அகழ்ந்தெடுத்த விழிகள்

போலவோ திறந்த பல்லில்லாத வாய்கள்போலவோ தோன்றின. சிலகணங்களில் அவை பெரிய பாலைவன

விலங்குகள் போல தோற்றம் தரத்தொடங்கின. உடும்புகள் போல அசைவற்று வெயிலில்

நின்றிருப்பவை. வாய்திறந்தவை. அவை மூச்சுவிடுவதைக்கூட காணமுடியுமென்று

தோன்றியது.

அவனை நோக்கி வந்த சைப்யபுரியின் காவலன் சலிப்புகலந்த குரலில் “யார் நீங்கள்?”

என்றான். எந்தவிதமான எச்சரிக்கைகளும் இல்லாத காவலர்கள் என பூரிசிரவஸ்

எண்ணிக்கொண்டான். பெரும்பாலான பாலைநகரங்களுக்கு எதிரிகளே இல்லை. அவன் தன்

முத்திரைமோதிரத்தைக் காட்டியதும் காவலன் தலைவணங்கி அவனை அழைத்துச்சென்றான்.

அந்தப்பாறைக்குடைவுக்குள் வெம்மையில்லை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.

தண்மைக்கு அப்பால் இன்னொன்று அங்கே இருந்தது. அதுவே அக்குகைகளை அவர்கள்

செய்வதற்கான அடிப்படை. பின் அதை உணர்ந்தான். நிலைத்த தன்மை. அவர்களின்

இல்லங்களெல்லாமே மழைக்கோ காற்றுக்கோ தாளாதவை. கூடாரங்கள் அலையடிப்பவை. இங்கே

கூரை உறுதியுடன் ஆயிரமாண்டுகாலம் நிற்கும் என்பதுபோல நின்றிருந்தது.

சேவகர்கள் அவனை அழைத்துச்சென்று தங்கும் அறையை காட்டினர். மிகச்சிறிய அறையும்

நீள்வட்டமாகவே இருந்தது. அவன் நீராட விரும்பினான். ஆனால் சிபிநாட்டில்

அவ்வழக்கம் இல்லை போலும். அவனை அணுகிய இரண்டு இருபால் சேவகர்கள் ஆடைகளை

கழற்றச்சொல்லிவிட்டு மெல்லிய இறகுக்குவையால் அவன் உடலை நன்றாக

வீசித்துடைத்தனர். அதன்பின் ஈரமான மரவுரியால் அவன் உடலை துடைத்தனர்.

அதிலிருந்த வாசனைப்புல்தைலம் அவன் உடலின் நூற்றுக்கணக்கான விரிசல்களை

எரியச்செய்தது. ஏன் அவர்கள் நீராடுவதில்லை என அப்போது புரிந்தது. நீர்பட்டால்

அத்தனை புண்களும் சீழ்கட்டிவிடும்.

தலைக்குழலை நான்குவகைப் பீலிகளால் நன்றாகத் துடைத்து ஏழுவகைச் சீப்புகளால்

சீவி சுருட்டிக் கட்டினார்கள். அவன் அணிவதற்காக புதிய ஆடைகளை கொடுத்தார்கள்.

சுட்ட ஊனுலர்வும் அப்பங்களும் பருப்புக்கூழும் அவனுக்கு உணவாக வந்தது. தேனில்

ஊறவைத்த அத்திப்பழங்களை இறுதியாக உண்டு நிறைவடைந்தபின் தாழ்வான மரமஞ்சத்தில்

மரவுரிப்படுக்கையில் படுத்து உடனே ஆழ்ந்து துயின்றுவிட்டான்.

விழித்தபோதுதான் அப்படி ஆழ்ந்து துயின்றது எதனாலென்று அவனுக்குத்தெரிந்தது.

அந்தக் குகையின் உறுதிதான். பாலைநிலத்தில் வெறுமையில் விடப்பட்ட உணர்வு

தலைக்குமேல் இருந்தபடியே இருந்தது. அக்குகைக்குள் அது இல்லை. அகவேதான்

பாலையுயிர்கள் எல்லாமே வளைகளுக்குள் வாழ்கின்றனபோலும் என எண்ணிக்கொண்டான்.

மீண்டும் உடைமாற்றிவிட்டு தன் சேவகர்களுடன் அரசனை காணச்சென்றான்.

சிபிநாட்டை ஆண்ட கஜபாகுவின் மகன் கோவாசனரைப்பற்றி எதையுமே பூரிசிரவஸ்

கேட்டிருக்கவில்லை. அவரது பெயரைக்கூட சைப்யபுரிக்குள் நுழைந்தபின்னர்தான்

அறிந்துகொண்டான். ஓர் எளிய புகழ்மொழிகூட இல்லாத அரசர் என நினைத்து அப்போது

புன்னகைத்துக்கொண்டான். ஆனால் பாரதவர்ஷத்தில் ஒரு சூதனின் ஒரு பாடலையாவது

சூடிக்கொள்ளாத மன்னர்களே கூடுதல் என அடுத்த எண்ணம் வந்தது. சூதர்களின்

பட்டியலில் பெயர் கொள்வதென்பதற்காகவே வாழும் மன்னர்கள் எத்தனை நூறுபேர்.

கோவாசனரின் அரசவையும் ஐம்பதுபேர்கூட அமரமுடியாதபடி சிறியதாக இருந்தது.

சேவகனால் அழைத்துச்செல்லப்பட்டு அவன் அதற்குள் நுழைந்தபோது அமைச்சர்களும்

படைத்தலைவர்களும் நிமித்திகர்களும் அரசனைக் காணவந்த அயல்நாட்டு வணிகர்களுமாக

பன்னிருவர் உள்ளே காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர்களின் விழிகளில்

வியப்பு தெரிந்தது. கோவாசனரைக்காண எந்த அயல்நாட்டு அரசர்களும்

வருவதில்லைபோலும்.

அமைச்சர் ஒருவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. நான் திரிவிக்ரமன்.

இங்கே அமைச்சராக பணிசெய்கிறேன். தாங்கள் வந்த செய்தியை அறிந்தேன். அரசர்

வந்துகொண்டிருக்கிறார்” என்றார். அவர் தனக்கு வரவேற்போ முகமனோ சொல்லவில்லை

என்பதை எண்ணி பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். அவர்களுக்கு அந்த முறைமைகள் எவையும்

இன்னும் வந்துசேரவில்லை. ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று

வறண்ட மலைகளால் சூழப்பட்ட சிபிநாட்டைத்தேடி சில பாலைவணிகர்கள் வந்தால்தான்

உண்டு.

பூரிசிரவஸ் “தங்களை சந்தித்தமை பெருமகிழ்ச்சி அளிக்கிறது திரிவிக்ரமரே. தங்கள்

இன்சொற்களால் மதிப்புக்குரியவனானேன்” என்றான். அந்த முறைமைச்சொற்களைக் கேட்டு

குழம்பிய திரிவிக்ரமர் “ஆம் அதில் எனக்கும் நிறைவே” என்றபின் அச்சொற்கள்

முறையானவையா என சிந்தித்து மேலும் குழம்பி “ஆம், தாங்கள் எங்கள் சிறப்பு

விருந்தினர்” என்றபின் அச்சொற்களும் பொருந்தாதவை என உணர்ந்து முகம் சிவந்தார்.

பிறர் அவனை வணங்கினர். அவன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அரியணை கல்லால் ஆனதாக இருந்தது. தொன்மையானது என்று தெரிந்தது. அதன் பல

பகுதிகள் மழுங்கி பளபளப்பாக இருந்தன. அறைக்குள் காற்று வருவதற்கான மெல்லிய

குகைவழிகளும் ஒளி வருவதற்கான உயர்சாளரங்களும் இருந்தன. கண்களுக்கு மென்மையான

ஒளியும் இளங்குளிர் இருக்கும்படி காற்றும் அமைக்கப்பட்டிருப்பதை அதன்பின்

உணர்ந்தான். சற்றுநேரத்தில் அவன் சென்ற அரசவைகளிலேயே அதுதான் உகந்தது என்ற

எண்ணம் வந்தது.

அப்பால் மணியோசை கேட்டது. ஒரு சங்கொலி எழுந்தது. முழவோ முரசோ ஒலிக்கவில்லை.

பெரிய செங்கழுகின் இறகைச் சூடிய தலைப்பாகையுடன் ஒரு சேவகன் வெள்ளிக்கோல்

ஒன்றைக் கொண்டு முன்னால் வர வெண்குடை பிடித்து ஒருவன் பின்னால் வர தாலமேந்திய

அடைப்பக்காரன் இடப்பக்கம் வர கோவாசனர் இயல்பாக நடந்து வந்தார். அவருடன்

இளம்பெண் ஒருத்தியும் பேசிச்சிரித்துக்கொண்டே வந்தாள். அவளுடைய பட்டாடையும்

அணிகலன்களும் அவள் இளவரசி என்று காட்டின. ஆனால் அணிகள் எதிலும் மணிகள் இல்லை.

எளிய பொன்னணிகள்.

கோவாசனர் பூரிசிரவஸ்ஸைதான் முதலில் பார்த்தார். விழிகளில் சிறு வியப்பு

எழுந்து மறைந்தது. கோல்காரன் உள்ளே நுழைந்து அரசனுக்கு கட்டியம் கூவினான்.

அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துகூவினர். அனைத்துமே மிக எளிமையாக நிகழ்ந்தன.

கோவாசனர் அரியணையில் அமர்ந்ததும் அமைச்சர் வாழ்த்துக்களோ முகமனோ ஏதுமில்லாமல்

“நான்கு யவன வணிகர்கள் வந்துள்ளார்கள். ஒரு சோனக வணிகர். ஒருவர்

மலையடுக்குகளில் இருந்து வந்தவர். பால்ஹிகநாட்டு இளவரசர்” என்றார்.

கோவாசனர் அவனை நோக்கிவிட்டு “வணிகர்கள் முதலில் பேசட்டும்” என்றார். அந்த

இளம்பெண் தந்தைக்கு அருகே ஒரு பீடத்தில் அமர்ந்து தன் கைகள் மேல் முகவாயை

வைத்தபடி மிக இயல்பாக அங்கே நிகழ்வனவற்றை நோக்கிக்கொண்டிருந்தாள்.

யவனர்களுக்குரிய பால்வெண்மை நிறம். நீண்ட கரியகூந்தலை பின்னலாக மடியில்

இட்டிருந்தாள். சற்றே ஒடுங்கிய கன்னங்களுடன் நீண்ட முகம்.

அவளுடைய மூக்கைப்போல் ஒன்றை பூரிசிரவஸ் எங்குமே கண்டதில்லை. அலகு போல நீண்டு

கூரியதாக இருந்தது. குருதி என சிவந்த சிறிய உதடுகள். அவள் கண்கள் பச்சைநிறமாக

இருந்தன. அவனை ஒரே ஒருமுறை வந்து தொட்டுச்சென்றபின் திரும்பவேயில்லை. அவளுக்கு

கட்டியம் கூறப்படவில்லை. அவள் அரசரின் மகள் என்பதில் ஐயமில்லை என பூரிசிரவஸ்

எண்ணிக்கொண்டான்.

வணிகர்கள் ஒவ்வொருவராக எழுந்து முகமன் சொல்லி அவர்கள் கொண்டுவந்த பரிசுகளை

அரசருக்கு அளித்தனர். புலித்தோல், யானைத்தந்தத்தால் பிடியிடப்பட்ட குத்துவாள்,

பொன்னாலான கணையாழி, சந்தனத்தால் ஆன பேழை, ஆமையோட்டுமூடிகொண்ட பெட்டி என

எளிமையான சிறிய பொருட்கள். அவற்றை கருவூலநாயகம் பெற்றுக்கொண்டார். வணிகர்கள்

சென்றதும் கோவாசனர் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகநாட்டைப்பற்றி

கேள்விப்பட்டிருக்கிறேன். என் மூதாதை பால்ஹிகரால் உருவாக்கப்பட்டது என்று

சொல்வார்கள்” என்றார்.

நேரடியாக உரையாடலைத் தொடங்கும் பயிற்சி இல்லாத பூரிசிரவஸ் சற்று திகைத்து

“ஆம், அரசே. பால்ஹிகநாட்டில் இருந்து வந்து தங்களை சந்திப்பது என் நல்லூழ்.

தங்களைப் பார்த்தமையால் என் வழியாக பால்ஹிகநாடும் பெருமை அடைந்தது. தங்கள்

குலச்சிறப்பையும் பெருங்கொடைத்திறனையும் குன்றா வீரத்தையும் பால்ஹிகநாட்டு

மக்களைப்போலவே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான்.

அந்தப்பெண் அவனை நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் வெண்மை சற்றுக்குறைவாக

யானைத்தந்தத்தில் செய்யப்பட்டவை போலிருந்தன. கோவாசனர் திகைத்து அமைச்சரை

நோக்கிவிட்டு “ஆம், அது இயல்புதான்” என்றபின் மேற்கொண்டு என்னசொல்வது என தன்

மகளை நோக்கியபின் முகம் மலர்ந்து “இவள் என் மகள். தேவிகை என்று இவளுக்குப்

பெயர்” என்றார்.

“இளவரசியை சந்தித்ததில் என் அரசகுலம் பெருமகிழ்வடைகிறது. நிகரற்ற அழகி என்று

சூதர்பாடல்கள் கேட்டு அறிந்துள்ளேன். இன்று நேரில் பார்க்கிறேன். சூதர்களுக்கு

சொல்குறைவு என்றே உணர்கிறேன்” என்றான். தேவிகை சிரித்து “என்னை எந்தச் சூதரும்

பாடியதில்லை இளவரசே” என்றாள். “ஏனென்றால் சூதர்களை நான் கண்டதே இல்லை.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்து “ஆனால் சூதர்கள் அறிவிழி கொண்டவர்கள். தங்கள்

அழகைப்பற்றி தங்கள் குடிகள் பேசும்பேச்சுக்களே அவர்கள் தங்களைப்

பார்ப்பதற்குப் போதுமானவை” என்றான். அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டு அவளை

மேலே பேசவிடக்கூடாது என்று தொடர்ந்தான். “அரசரும் இளவரசியும் எனக்கு

ஒருவகையில் மிக நெருக்கமான குருதித்தொடர்புடையவர்கள். நான் தங்கள் மூதாதையான

பால்ஹிகருக்கு பால்ஹிகநாட்டிலே பிறந்த மைந்தர்களில் முதல்வரான உக்ரபால்ஹிகரின்

கொடிவழி வந்தவன். பத்து பால்ஹிக குலங்களில் முதன்மையானது எங்கள் குலம்”

என்றான்.

கோவாசனர் “ஆம், அதை நான் கேட்டறிந்துள்ளேன். ஆனால் ஒரு பால்ஹிகரை இப்போதுதான்

முதலில் காண்கிறேன்” என்றான். “அரசே, நான் வந்தது முதுமூதாதையான பால்ஹிகரை

மீண்டும் எங்கள் நாட்டுக்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காகத்தான். அவர்

எங்கள் மண்ணுக்கு வந்து நூறாண்டுகளாகின்றன. அவரைக் காணாத நான்கு தலைமுறையினர்

பிறந்துவந்துவிட்டார்கள். அவர் வந்தால் அது எங்கள் குலங்களெல்லாம்

கூடிக்களிக்கும் பெரும் திருவிழாவாக இருக்கும்.”

கோவாசனர் குழம்பி “அவரையா?” என்றார். “அவர் நோயுற்றிருக்கிறார். இருளைவிட்டு

வெளியே அவரால் செல்லமுடியாது” என்றார். பூரிசிரவஸ் “நான் உரிய ஏற்பாடுகளுடன்

வந்துள்ளேன். அவரை இருளிலேயே கொண்டுசெல்கிறேன்” என்றான். “ஆனால் அவர்…” என்று

ஏதோ சொல்ல வந்த கோவாசனர் திரும்பி தேவிகையை பார்த்தார். “இளவரசே, முதியவரின்

உளநிலையும் நோயில் உள்ளது. அவர் அவ்வப்போது அனைத்துக் கட்டுகளையும்

மீறக்கூடும்” என்றாள் தேவிகை.

“நாங்கள் அதற்கும் சித்தமாகவே வந்தோம் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “அவர்

கட்டுகளை மீறும்போது அவரை எவரும் அடக்கமுடியாது. முதியவர் இன்றும் நிகரற்ற

உடல்வல்லமைகொண்டவர்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ் “அவரை நான் கொண்டுசெல்ல

முடியும் அரசே. அதன்பொருட்டே இத்தனைதொலைவுக்கு வந்தேன்” என்றான். கோவாசனர்

மகளை நோக்கிவிட்டு “தாங்கள் அவரை கொண்டுசெல்வதில் எங்களுக்குத் தடையில்லை

இளவரசே. அதற்குமுன் முதியவரை பாருங்கள். அவர் வர ஒப்புக்கொண்டால், அவரை கொண்டு

செல்ல தங்களால் இயலுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.

அத்தனை எளிதாக அது முடியுமென பூரிசிரவஸ் எண்ணவில்லை. தலைவணங்கி “சிபிநாட்டின்

அரசருக்காக நான் கொண்டுவந்த பரிசுகளை என் சேவகர்கள் கொண்டுவர ஒப்ப வேண்டும்”

என்றான். முகம் மலர்ந்து “கொண்டுவாருங்கள்” என்றார் கோவாசனர். பூரிசிரவஸ்ஸின்

சேவகர்கள் மூன்று பெரிய மரப்பெட்டிகளை கொண்டு வந்து வைத்தனர். ஒவ்வொன்றையும்

அவர்கள் திறந்து காட்டினர். ஒன்றில் பட்டாடைகளும் இன்னொன்றில் தந்தத்தால் ஆன

சிறிய சிற்பங்களும், செம்புக்கலங்களும் இன்னொன்றில் வெள்ளியாலும் பொன்னாலுமான

பலவகையான பொருட்களும் இருந்தன.

கோவாசனரின் முகம் மலர்ந்து பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “பால்ஹிகர்கள் இத்தனை

செல்வந்தர்கள் என நான் அறிந்திருக்கவில்லை” என்றார். “சிபிநாடு மிகச்சிறியது.

எங்கள் கருவூலமே இப்பரிசுப்பொருட்களை விட சிறியது.” பூரிசிரவஸ் புன்னகையுடன்

“நம் நட்பு வளருமென்றால் இந்தக் கருவூலமும் வளரும் அரசே” என்றான். “ஆம், ஆம்,

வளரவேண்டும்” என்றார் கோவாசனர்.

பின்னர் திரும்பி தன் மகளை நோக்கிவிட்டு “என் மகளுக்கு கங்காவர்த்தத்தின் ஓர்

அரசனை மணமகனாகப் பெறவேண்டும் என்பதே என் கனவு. ஆனால் என் கருவூலமும் படைகளும்

சிறியவை. மலைகளுக்கு இப்பால் இப்படி ஒரு நாடு உண்டென்பதையே எவரும்

அறிந்திருக்கவில்லை” என்றார். “அஸ்தினபுரிக்கு எங்கள் இளவரசி சுனந்தை

அரசியாகச் சென்றாள் என்ற ஒற்றை வரியால் நினைவுகூரப்படுபவர்கள் நாங்கள்.”

பூரிசிரவஸ் “அந்நிலை மாறும் அரசே. அத்தனை அரசுகளும் இப்படி இருந்தவை அல்லவா?

சிறியவிதைகளில் இருந்தே பெருமரங்கள் முளைக்கின்றன” என்றான். கோவாசனர்

“தேவிகையும் திரிவிக்ரமரும் உங்களுக்கு பிதாமகரை காட்டுவார்கள். அவளுக்கு அவரை

நன்குதெரியும்” என்றார். தேவிகை புன்னகையுடன் எழுந்து “வாருங்கள்” என்றாள்.

திரிவிக்ரமரும் தலைவணங்கியபடி உடன் வந்தார்.

பகுதி 6 : மலைகளின் மடி - 4

வெளியே இடைநாழிக்குச் சென்றதும் தேவிகை அமைச்சரிடம் “நானே அழைத்துச்செல்கிறேன் அமைச்சரே, தாங்கள் செல்லலாம்” என்றாள். அவர் பூரிசிரவஸ்ஸை ஒருமுறை நோக்கிவிட்டு தலைவணங்கி திரும்பிச்சென்றார். தேவிகை கண்களால் சிரித்தபடி பூரிசிரவஸ்ஸிடம் “உங்களிடம் பேசும்பொருட்டே அவரை அனுப்பினேன்” என்றாள். அந்த நாணமில்லாத தன்மை பூரிசிரவஸ்ஸை மகிழ்வித்தது. அவளிடம் அரசியருக்குரிய நிமிர்வு இருக்கவில்லை. ஆனால் அரண்மனைப்பெண்களுக்குரிய நடிப்புகளும் இருக்கவில்லை. பாலைவனநகரிகளில் தெருக்களில் புழுதிமூடித்தென்படும் குமரிகளைப்போல் இயல்பாக இருந்தாள்.

“இங்கே அயலவர் எவரும் வருவதில்லை. வருபவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். அதிலும் முதியவர்களே கூடுதல். அவர்களிடம் பேசுவதன்றி எனக்கு வெளியுலகத்தை அறிய எந்த வழியும் இல்லை” என்று அவள் சொன்னாள். "இளவரசி, நீங்கள் கல்விகற்றிருக்கிறீர்களா?” என்றான் பூரிசிரவஸ். “என்னைப்பார்த்தால் என்ன தோன்றுகிறது?” என்று அவள் கேட்டாள். “உங்கள் மொழியில் கல்விகற்ற தடயம் இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்து “ஆம், இங்கே எவரும் அந்தப்பேச்சுகளை பேசுவதில்லை. கல்விகற்றவளாக நடந்துகொள்ள எனக்கு மறுதரப்பே இல்லை” என்றபின் சிரித்து “நான் முறையாகக் கற்றிருக்கிறேன்” என்றாள்.

“காவியங்களையும் குலவரலாறுகளையும் எனக்கு இரு முதுசூதர்கள் கற்பித்தனர். மறைந்த அமைச்சர் நந்தனர் எனக்கு அரசு சூழ்தல் கற்பித்தார். ஆனால் அதெல்லாம் கல்வி என்று சொல்லமாட்டேன். பாரதவர்ஷத்தில் என்னென்ன கலைகள் வளர்கின்றன என்று எனக்குத்தெரியும். நான் கற்றது குறைவான கல்வியே என்று அறியுமளவுக்கு கற்றிருக்கிறேன் என்று சொல்வேன்” என்றாள். “கல்வியை ஒப்பிட்டு மதிப்பிடக்கூடாது. கற்கும் மனநிலையை அளிப்பது எதுவும் கல்வியே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்துக்கொண்டு ”உகந்த மறுமொழி சொல்லக் கற்றிருக்கிறீர்கள் இளவரசே” என்றாள்.

”இளவரசி” என அவன் சொல்லத்தொடங்க “என்னை தேவிகை என்று அழைக்கலாமே” என்றாள். “நான் உங்கள் குலம் என்று சொன்னீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “அதை ஒரு நல்லூழாகவே எண்ணுவேன்” என்றபின் “தேவிகை, உனக்கு நான் எந்தவழியில் உறவு என்று தெரியும் அல்லவா?” என்றான். “ஆம், எங்கள் பிதாமகர் பால்ஹிகர் நெடுநாட்களுக்கு முன்னர் வடக்கே இமயமலைகள் சூழ்ந்த மண்ணுக்குச் சென்று ஏழு மனைவியரிலாக பத்து மைந்தரைப்பெற்று பத்துகுலங்களை உருவாக்கினார்.” விரல்களை நீட்டி இன்னொரு கையால் மடித்து எண்ணி “மாத்ரம்,சௌவீரம், பூர்வபாலம், சகம், யவனம், துஷாரம், கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம்” என்றாள்.

பெண்கள் சிறுமிகளாக ஆகிவிடும் விரைவை எண்ணி புன்னகைத்த பூரிசிரவஸ் “ஆம், சரியாக சொல்லியிருக்கிறாய். ஆனால் கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய நான்கும் நாடுகள் அல்ல. அவை குலக்குழுக்கள் மட்டும்தான். துவாரபாலம் மலைக்கணவாயை காவல்காக்கும் குலம். அனைவருமே பால்ஹிகரின் குருதி என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றான்.  தேவிகை விழிகளை சரித்து “அப்படி இல்லையா?” என்றாள். “எப்படி தெரியும்? இந்தக்குலங்களெல்லாம் பல ஆயிரம் வருடங்களாக அந்த மலையடுக்குகளில் வாழ்பவை. ஒரு ஷத்ரியரின் குருதி கிடைப்பதை அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்” என்றான்.

அவள் சிலகணங்கள் தலைகுனிந்து சிந்தித்தபின் தன் பின்னலை முன்னால் கொண்டுவந்து கைகளால் பின்னியபடி “திரௌபதியைப் பற்றி சொல்லுங்கள்...” என்றாள். “என்ன சொல்வது?” என்றான் பூரிசிரவஸ். “பேரழகியா?” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “என்ன சிரிப்பு?” என்றாள். “முதன்மையான அரசியல் வினா...” என்றபின் மீண்டும் சிரித்தான். “அரசு சூழ்தல் எனக்கும் தெரியும். அவள் அழகி என்பதுதான் இன்றைய முதன்மையான அரசியல் சிடுக்கு...” என்று தலைதூக்கி சீறுவதுபோல சொன்னாள். அதிலிருந்த உண்மையை உணர்ந்த பூரிசிரவஸ் “ஆம், ஒருவகையில் உண்மை” என்றான்.

“ஆகவேதான் கேட்கிறேன். அவள் பேரழகியா?”என்றாள். “இளவரசி, அழகு என்றால் என்ன? அது உடலிலா இருக்கிறது?” தேவிகை “வேறெதில் உள்ளது?” என்றாள் கண்களில் சிரிப்புடன். “உடலில் வெளிப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். “அதை என்னவென்று சொல்ல? பாரதவர்ஷத்தின் ஆண்களுக்குப் பிடித்தமான, அரசர்களை அடிமைப்படுத்தக்கூடிய ஒன்று. அவளுடைய ஆணவம், அதன் விளைவான நிமிர்வு, உள்ளத்தின் கூர்மை, அது விழிகளில் அளித்துள்ள ஒளி. எல்லாம்தான். எப்படி சொல்வது?”

அவன் சொற்களை கண்டுகொண்டான். “அதைவிட முக்கியமானது விழைவு. அவள் கண்களில் இருப்பது விழைவு. அவள் உடலின் அத்தனை அசைவுகளிலும் அது வெளிப்படுகிறது. வெப்பம் தீயாக வெளிப்படுதல் போல. அதுவே அவளை அழகாக ஆக்குகிறது. அதன் எழுச்சியே அவளை பேரழகியாக்குகிறது... ஆம், பேரழகிதான். அவளை ஒருமுறை பார்த்தவர்கள் நாளில் ஒருமுறையேனும் அவளை எண்ணுவார்கள். பிற பெண்களுடன் எல்லாம் அவளை ஒப்பிடுவார்கள். ஆகவேதான் அவள் பேரழகி என்கிறேன்.”

“நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?” என்று அவள் அவனை நோக்காமல் இயல்பாக இடைநாழியின் கடினமான கற்சுவரை நோக்கியபடி கேட்டாள். “ஆம், எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது.” அவள் தலைதிருப்பி “ஒப்பிடுகிறீர்களா?” என்றாள். அதன் பின்னர்தான் அவள் கேட்பதை புரிந்துகொண்டு பூரிசிரவஸ் “இளவரசி, நான் ஒப்பிடுகிறேன் என்பது மதிப்பிடுகிறேன் என்றல்ல” என்றான். அவள் பற்றிக்கொள்வது போல திரும்பி சிரித்து “மழுப்பவேண்டியதில்லை. ஒப்பிடுகிறீர்கள்... அதனாலென்ன?” என்றாள்.

“இப்போது நான் அவளிடமிருக்கும் பேரழகு என்ன என்று சொன்னது உன்னை வைத்தே. அவளிடமிருப்பது விழைவு.” அவள் தலைகுனிந்து உதடுகளை பற்களால் கவ்வி சில கணங்கள் சிந்தித்து “காம விழைவா?” என்றாள். “ஆம், ஆனால் அது மட்டும் அல்ல.” தேவிகை “அவள் பாரதத்தை வெல்ல நினைக்கிறாள்...” என்றாள். “இல்லை, அதுவும் அல்ல. அவளுக்கு பாரதவர்ஷத்தின் மணிமுடி வேண்டும். அதுவும் போதாது. இங்குள்ள அத்தனை மானுடரின் மேலும் அவள் கால்கள் அமையவேண்டும். அதுவும் போதாது, அவள் விழைவது காளியின் பீடம். அதுதான். அதுதான் அவளை ஆற்றல்மிக்கவளாக ஆக்குகிறது. அவள் ஆணாக இருந்திருந்தால் பெருவீரம் கொண்டவளாக வெளிப்பட்டிருப்பாள். பெண் என்பதனால் பேரழகி.”

தேவிகை பெருமூச்சுவிட்டு “இங்கே செய்திகளே வருவதில்லை. சூதர்களும் வருவதில்லை. ஆனாலும் அவளைப்பற்றி எவரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஒரு இளையபோர்வீரனை கொற்றவைக்கு பலிகொடுத்து அவன் நெஞ்சில் இருந்து அள்ளிய குருதியை அவள் கூந்தலுக்குப் பூசுவார்கள் என்றார்கள். குருதி பூசப்பட்டமையால் அவளுடைய கூந்தல் நீண்டு வளர்ந்து தரையைத் தொடும் என்றார்கள். அவள் அமர்ந்திருக்கையில் அது கரிய ஓடை போல ஒழுகும் என்றார்கள்... எத்தனை கதைகள்!” என்றாள்.

”கதைகள் பொய், அவற்றின் மையம் உண்மை” என்றான் பூரிசிரவஸ். “அவள் கூந்தல் பேரழகுகொண்டது. கன்னங்கரியது. இருண்ட நதிபோல.” தேவிகை “நீங்கள் கண்டீர்களா?” என்றாள். ”ஆம், நான் அவளை வேட்க மணநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.” தேவிகை சிரித்து “அடடா... கனியை இழந்த கிளியா நீங்கள்?” என்றாள். அவனும் சிரித்து “இல்லை. கனியை குறிவைக்கவேயில்லை. அங்கே என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் வழியாக அறிந்தோம். அந்த வில்லை பரசுராமனும் அக்னிவேசரும் பீஷ்மரும் துரோணரும் இளைய யாதவனும் கர்ணனும் அர்ஜுனனும் மட்டுமே ஏந்த முடியும். நான் அதை நாணேற்றக்கூட செல்லவில்லை” என்றான்.

“பிறகெதற்கு சென்றீர்கள்?” என்று அவள் கேட்டாள். “மணநிகழ்வுக்கு அழைப்பு அனுப்பப்படுவது என்பது ஆரியவர்த்தத்தின் அரசகுடிகளில் நமக்கும் இடமுண்டு என்பதற்கான சான்று. அங்கே நமக்களிக்கப்படும் இடம் நாம் எங்கிருக்கிறோம் என்பதற்கான குறி. அத்தனை அரசர்களும் அதன்பொருட்டே வருகிறார்கள். அது ஒரு தொன்மையான குலமுறை. இது வெறும் விளையாட்டாக இருந்த காலத்தை சேர்ந்தது. முதியவரான சல்லியரும் வந்திருந்தார்.”

தேவிகை சிந்தனையுடன் “ஆனால் எங்களுக்கு அழைப்பு இல்லை” என்றாள். “அது ஒரு தொன்மையான பட்டியல். அதில் இடம்பெறவேண்டுமென்றால் போர்வெற்றி தேவை” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் ஷத்ரிய அரசகுலம் அல்லவா?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஆம், ஆனால் அது ஓர் அளவுகோல் அல்ல. மலைவேடர்மரபுகொண்ட மன்னர்களும் அங்கிருந்தார்கள்” என்றபின் “தேவிகை, கருவூலம் மட்டுமே அரசனின் இடத்தை வரையறுக்கும் ஆற்றல்கொண்டது” என்றான்.

“பிதாமகர் பால்ஹிகருக்கு சூரிய ஒளியை நோக்கும் விழி இல்லை. அவரது உடலிலும் சூரிய ஒளிபட்டு நெடுநாட்களாகின்றன. என் தந்தை சிறுவனாக இருந்தகாலம் முதலே அவர் இந்த நிலவறைகளில் ஒன்றில்தான் வாழ்கிறார். நினைவும் இல்லை. என்னை அவர் அறியார்” என்றபடி தேவிகை அவனை நிலவறைக்குள் சுழன்று இறங்கிய படிகளில் அழைத்துச்சென்றாள். வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தீட்டப்பட்ட பளிங்குக் கற்கள் வழியாக உள்ளே சீரான ஒளி நிறைந்திருந்தது.

மூன்று அடுக்குகள் கீழிறங்கிச் சென்றார்கள். “நாம் மண்ணுக்குள்ளா செல்கிறோம்?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு மழை பெய்வதில்லை. ஆகவே நீர் இல்லை” என்றாள் தேவிகை. “எங்கள் நாட்டிலும் மழை மிகக்குறைவே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் மலையிலிருந்து சாரல் விழுந்துகொண்டு இருக்கும்.” “உங்கள் நாடு குளிரானதா?” என்றாள். “ஆம், ஆனால் உங்களூருடன் ஒப்பிடுகையில் உலகில் எதுவும் குளிர்நாடே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்தாள். “ஆம், இங்கு வருபவர்கள் எல்லாருமே உலகிலேயே வெப்பமான ஊர் இது என்கிறார்கள்.”

உள்ளே செல்லச்செல்ல புழுதியின் மணம் வந்தது. அல்லது இருட்டின் மணமா? பூரிசிரவஸ் “நிலவறை மணம்” என்றான். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்” என்றாள் தேவிகை. “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்” என்றான் பூரிசிரவஸ். தேவிகை இயல்பாக “எனக்கு என் தந்தை அரசகுலங்களில் மணமகன் தேடுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைத்து “ஆம், அது இயல்பே” என்றான். “ஆனால், இந்த நீண்ட பாலைவழிச்சாலையைக் கடந்து எவர் வரக்கூடும்?” என்றாள் அவள்.

“வைரங்கள் மண்ணின் ஆழத்தில்தானே உள்ளன?” என்றான் பூரிசிரவஸ். “அழகியசொற்கள்... நான் இவற்றைத்தான் கற்றுக்கொள்ளவேண்டும்...” என்ற தேவிகை “இவ்வழி” என்றாள். உள்ளே நீண்ட இடைநாழியின் இருபக்கமும் சிறிய அறைகள் இருந்தன. அவை மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தன. “அவை கருவூலங்களா?” என்றான் பூரிசிரவஸ். சிரித்தபடி “ஆம், ஆனால் அவற்றில் பழைய தோலாடைகளும் உலர்ந்த உணவும் மட்டும்தான் உள்ளன” என்றாள் தேவிகை.

உள்ளே அரையிருட்டாக இருந்த அறைக்குள் அவள் அவனை கூட்டிச்சென்றாள். அறைவாயிலில் நின்றிருந்த சேவகன் அவளைக் கண்டதும் பணிந்து “துயில்கிறார்” என்றான். “பெரும்பாலும் துயிலில் இருக்கிறார். ஒருநாளில் நாலைந்து நாழிகை நேரம்கூட விழித்திருப்பதில்லை” என்றாள். அவள் முதலில் உள்ளே சென்று நோக்கிவிட்டு “வருக” என்றாள். அவன் உள்ளே நுழைந்து தாழ்வான மஞ்சத்தில் மரவுரிப்படுக்கைமேல் கிடந்த பால்ஹிகரை நோக்கினான்.

முதலில் அவர் இறந்துவிட்டார் என்ற எண்ணம்தான் அவனுக்கு வந்தது. மலைச்சரிவுகளின் ஆழத்தில் விழுந்து ஓநாய்களால் எட்டமுடியாத இடங்களில் கிடக்கும் சடலங்கள் போல உலர்ந்து சுருங்கியிருந்தது உடல். தேவிகை “பிதாமகரே” என்றாள். நாலைந்துமுறை அழைத்தபோது அவர் விழிதிறந்து “ஆம், மலைதான். உயர்ந்தமலை” என்றார். பின்னர் பால்ஹிகநாட்டு மொழியில் “ஓநாய்கள்” என்றார். அச்சொல்லை அங்கே அந்த வாயிலிருந்து கேட்டபோது அவன் மெய்சிலிர்த்தான்.

“என்ன சொல்கிறார்?” என்றாள். “ஓநாய்கள்... என் மொழி அது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அது பால்ஹிகநிலத்து மொழி என்றே நானும் நினைத்தேன். அந்தமொழியில்தான் பேசுவார்.” அவர் உள்ளூர அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் வியப்புடன் எண்ணிக்கொண்டான். இங்குள்ள வாழ்க்கை அல்ல அது. அங்குள்ள வாழ்க்கையும் அல்ல. எங்கோ என்றோ இருந்து மறைந்த வாழ்க்கை. இந்த மட்கிக்கொண்டிருக்கும் முதிய உடலுக்குள் ஒருமண், மலைகளுடன் மரங்களுடன் முகில்களுடன் மழைக்காற்றுகளுடன், திகழ்கிறது.

“பிதாமகரே, இவர் பால்ஹிகர். பால்ஹிகநாட்டிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள் தேவிகை. அவர் திரும்பி பழுத்த விழிகளால் நோக்கி “ஓநாய்களுக்கு தெரியும்” என்றார். தேவிகை பெருமூச்சுவிட்டு “பிதாமகருக்கு விழிப்பும் கனவும் நிகர்” என்றபின் “ஆனால் திடீரென்று கட்டற்றவராக எழுவார். அப்போது அருகே நிற்பவன் ஓடி வெளியே சென்றுவிடவேண்டும். ஒரு மனிதத்தலையை வெறுங்கைகளாலேயே அடித்து உடைக்க அவரால் முடியும்” என்றாள்.

“எழுந்து நிற்பாரா?” என்றான் பூரிசிரவஸ். "அவர் உடலில் ஆற்றலுக்குக் குறைவில்லை. எழுந்து நன்றாகவே நடப்பார். எடைமிக்க பொருளைக்கூட தூக்குவார். பற்களில்லாமையால் அவரால் உணவை மெல்ல முடியாது. கூழுணவுதான். இப்போதும் அவர் உண்ணும் உணவை பத்துபேர் உண்டுவிடமுடியாது” என்றாள் தேவிகை. “பாண்டவர்களில் பீமசேனருக்கு நிகரானவர் என்று இவரை ஒருமுறை ஒரு மருத்துவர் சொன்னார்.”

பூரிசிரவஸ் சிரித்து “ஆம் அவரை நான் பார்த்திருக்கிறேன். பேருடல். பெருந்தீனி. இவரைப்போலவேதான். ஆனால் மஞ்சள்நிறமான பால்ஹிகர்” என்றான். தேவிகை “இவரை உங்களால் கொண்டுசெல்லமுடியுமா என்ன?” என்றாள். ”கொண்டுசென்றாகவேண்டும். அது எனக்கு இடப்பட்ட ஆணை.” தேவிகை சிலகணங்களுக்குப்பின் “:இளவரசே, இவரை கொண்டுசென்று என்னசெய்யப்போகிறீர்கள்?” என்றாள்.

அவன் அவள் விழிகளை நோக்கி “அஸ்தினபுரியில் அரியணைப்போர் நிகழவிருக்கிறது. பாரதவர்ஷம் முழுக்க போருக்கான சூழலே திகழ்கிறது. ஒவ்வொன்றும் போரை நோக்கியே கொண்டுசெல்கின்றன. நாங்கள் எங்களை காத்துக்கொள்ளவேண்டும். முதலில் யாதவகிருஷ்ணனிடமிருந்து. பின்னர் அஸ்தினபுரியிடமிருந்தும் மகதத்திடமிருந்தும். எங்களுக்குத்தேவை ஒரு வலுவான கூட்டமைப்பு. பத்து பால்ஹிகக்குடிகளையும் ஒன்றாக்க விழைகிறோம். அதை நிகழ்த்தும் உயிருள்ள கொடி இவர்தான்” என்றான்.

“இவரை உங்கள் மக்கள் பார்த்தே நூறாண்டுகள் இருக்குமே” என்றாள். “ஆம், தேவிகை. ஆனால் பால்ஹிக உடல் என்றால் என்ன என அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரைப்போன்ற பலநூறு பெரும்பால்ஹிகர்கள் மலைக்குடிகளில் உள்ளனர். நாங்கள் ஷத்ரிய சிற்றரசர்களிடம் மணம்புரிந்து எங்கள் உடல்தோற்றத்தை இழந்தோம். ஆகவே மலைக்குடிகள் எங்களை அணுகவிடுவதில்லை” என்றான் பூரிசிரவஸ்.

“எங்களிடமும் பிழையுண்டு. சென்றகாலங்களில் அவர்களை வென்று கப்பம் பெற மத்ரநாட்டிலிருந்தும் யவனநாட்டிலிருந்தும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஆனால் இவர் எங்கள் அரண்மனைவிழவு ஒன்றில் அவையில் வந்து அமர்ந்தால் அனைத்தும் மாறிவிடும். இவரது பெயரால் நாங்கள் விடுக்கும் ஆணையை அவர்கள் எவரும் மீறமுடியாது. ஆகவே எவ்வண்ணமேனும் இவரை கொண்டுசென்றாகவேண்டும்.”

“நீங்கள் வந்துள்ள புரவிகளில் இவரை கொண்டுசெல்லமுடியாது. இங்கே சுருள்மூங்கிலை அடித்தளமாக அமைத்து பெரிய வண்டிகளை கட்டும் தச்சர்கள் உள்ளனர். அகன்ற பெரிய சக்கரங்கள் கொண்ட அவ்வண்டிகள் குழிகளில் விழாமல் ஓடக்கூடியவை. மணலில் புதையாதவை. அப்படி ஒரு வண்டியை ஒருங்கமையுங்கள். இவரை கூட்டிவந்து வண்டியில் ஏற்றுகிறேன்."

“இவரிடம் கேட்கவேண்டாமா, எங்களுடன் வருவாரா என்று?” என்றான் பூரிசிரவஸ். "கேட்டால் அவர் மறுமொழி சொல்லப்போவதில்லை. சொல்லும் மொழி ஏதும் இவ்வுலகிலுள்ளவையும் அல்ல. இரவிலேயே கொண்டுசெல்லுங்கள்” என்றாள் தேவிகை. “எப்படி செல்வீர்கள்?” “இங்கிருந்து மூலத்தானநகரி வரை மண்ணில். அதன் பின் நீர்வழியாக அசிக்னியின் மலைத்தொடக்கம் வரை. அங்கிருந்து மீண்டும் வண்டியில் பால்ஹிகநகரி வரை...”

“நீண்டபயணம்” என்றாள். “என் வாழ்நாளில் நான் இந்த சிறிய சிபிநாட்டு எல்லையை கடந்ததில்லை. ஆனால் வகைவகையான நிலங்களைத்தான் எப்போதும் கனவுகண்டுகொண்டிருக்கிறேன்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நெடுந்தொலைவில் உள்ள நாடொன்றுக்கு அரசியாகச் செல்ல நல்லூழ் அமையட்டும்” என்றான். அவள் உதடுகளை சற்றே வளைத்து சிரித்தாள். அறைக்குள் ஒரு மனிதர் விழித்திருப்பதை பொருட்படுத்தாமல் சிந்தை ஆகிவிட்டிருந்ததை அவன் எண்ணிக்கொண்டான்.

“செல்வோம்” என்று தேவிகை சொன்னாள். அவர்கள் எழுந்ததும் பால்ஹிகர் கூடவே எழுந்து தன் கையில் இருந்த சிறிய சால்வையை சுருட்டியபடி “செல்வோம். இங்கே இனிமேல் மறிமான்கள் வரப்போவதில்லை. பிரஸ்னமலைக்கு அப்பால் சென்று முகாமடிப்போம். அங்கே ஊற்றுநீர் உண்டு” என்றார். பூரிசிரவஸ் திகைத்து அவரை நோக்கினான். அவர் பால்ஹிகமொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன இடங்களெல்லாம் அவன் நன்கறிந்தவை. “பிதாமகரே!” என்றான். “நீ என் வில்லை எடுத்துக்கொண்டு உடன் வா. செல்லும் வழியில் நாம் வாய்திறந்து பேசலாகாது. ஓநாய்கள் நம் ஒலியை கேட்கும்” என்றார்.

தேவிகை “அவர் உங்களை அடையாளம் கண்டுகொண்டாரா?” என்றாள். “இல்லை, அவர் வேறு எவரிடமோ பேசுகிறார்” என்றான் பூரிசிரவஸ். ”அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் மண் இன்று இல்லை.” பால்ஹிகர் சென்று அறைமூலையில் இருந்த பெரிய குடுவையில் இருந்து நீரை அப்படியே தூக்கி முற்றிலும் குடித்துவிட்டு வைத்து தன் பெரும்கைகளில் தசைகள் அசைய உரசிக்கொண்டு “அக்னிதத்தா” என்று அவனை அழைத்து “இதை கையில் வைத்துக்கொள்” என்று அந்தக்குடுவையை சுட்டிக்காட்டினார்.

“அக்னிதத்தன் யார்?” என்றாள் தேவிகை. “பால்ஹிகரின் மைந்தர் சுகேது. அவரது மைந்தர் அக்னிதத்தர். அவரது மைந்தர் தேவதத்தர். தேவதத்தரின் மைந்தர் சோமதத்தரின் மகன் நான்” என்றான். தேவிகை “வியப்புதான்” என்றாள். “இவளும் உடன் வரட்டும். நாம் விரைவிலேயே சென்றுவிடுவோம்” என்றார். பூரிசிரவஸ் “இருக்கட்டும் பிதாமகரே. தாங்கள் சற்று நேரம் அமருங்கள். நான் புரவிகளுடன் வருகிறேன்” என்று திரும்பினான்.

“நில்லுங்கள். இத்தனை தெளிவுடன் இவர் பேசி நான் கேட்டதில்லை. இவரை இப்படியே அழைத்துச்செல்வதே உகந்தது. இல்லையேல் நீங்கள் அகிபீனா அளித்து கூட்டிச்செல்லவேண்டியிருக்கும்” என்றாள் தேவிகை. பால்ஹிகரிடம் “வண்டிகளை மேலே மலைப்பாதையில் நிறுத்தியிருக்கிறோம் பிதாமகரே. உடனே சென்றுவிடுவோம்” என்றாள். அவர் “ஆம், விரைவிலேயே இருண்டுவிடும். இருண்டபின் இது பசித்த ஓநாய்களின் இடம்” என்றபின் தன் போர்வையை எடுத்து தோளிலிட்டபடி நிமிர்ந்த தலையுடன் கிளம்பினார்.

தேவிகை மெல்லியகுரலில் “அவர் அந்த நிலைப்படியை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கடந்ததே இல்லை. எத்தனை சினம் கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நின்றுவிடுவார்” என்றாள். “செல்லுங்கள், உடன் செல்லுங்கள்.” பால்ஹிகர் “என் கோல் எங்கே?” என்றார். "பிதாமகரே” என்றபின் ஓடிச்சென்ற பூரிசிரவஸ் “அதை நான் வைத்திருக்கிறேன். நாம் வண்டிக்கே சென்றுவிடுவோம்” என்றான். திரும்பி “வெளியே இன்னமும் வெளிச்சம் இருக்கிறதே” என்றான்.

“அவரை அந்தப்போர்வையை சுற்றிக்கொள்ளச் செய்யுங்கள்” என்று சொன்னபடி அவள் பின்னால் வந்தாள். பால்ஹிகர் அந்த நிலைப்படி அருகே வந்ததும் நின்று தொங்கிய கழுத்துத் தசைகளை அசைத்தபடி “ஓநாய்களின் ஒலி கேட்கவில்லை...” என்றார். “அவை ஒலியில்லாமல் வருகின்றன. செல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு இருக்கமுடியாது” என்றபடி அவர் நிலைப்படியைக் கடந்து மேலே படிகளில் ஏறினார். அங்கே நின்றிருந்த சேவகன் திகைத்து ஓடி மேலே சென்றான்.

“அது யார் ஓடுவது?” என்றார் பால்ஹிகர் பால்ஹிக மொழியில். “விஸ்வகன்... நம் வண்டியில் புரவிகளைப் பூட்டுவதற்காக ஓடுகிறான்” என்றான் பூரிசிரவஸ். “மேலாடையால் நன்றாக மூடிக்கொள்ளுங்கள் பிதாமகரே. பனி பெய்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். மிகவிரைவாக பால்ஹிகர் மேலேறிச்சென்றார். அவரது உடலின் எடை கால்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. நீளமான கால்களாகையால் அவருடன் செல்ல அவன் ஓடவேண்டியிருந்தது. பால்ஹிகர் தன் போர்வையால் முகத்தையும் உடலையும் நன்கு போர்த்திக்கொண்டார்.

“இந்தவாயில் நேராக அரண்மனை முற்றத்துக்குச் செல்லும். அங்கே ஏதேனும் ஒரு தேரில் கொண்டுசென்று அமரச்செய்யுங்கள்” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். “நாங்கள் கிளம்ப நேரமாகுமே. உணவு நீர் எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை.” தேவிகை “தேரிலேறியதுமே அவர் துயின்றுவிடுவார். நீங்கள் புலரியில் கிளம்பலாம்” என்றாள். ”அதற்குள் நான் அனைத்தையும் ஒருங்கமைக்கிறேன்.” பூரிசிரவஸ் “பிதாமகரே, இவ்வழி... நமது தேர்கள் இங்கே நிற்கின்றன” என்றான்.

அவர்கள் இடைநாழியை அடைவதற்குள் அங்குள்ள அத்தனை காவல் வீரர்களும் அறிந்திருந்தார்கள். எதிரே எவரும் வராமல் விலகிக்கொண்டார்கள். தேவிகை உரக்க “பெரிய வில்வண்டியை கொண்டுவந்து நிறுத்துங்கள்” என்று ஆணையிட இருவர் குறுக்குவழியாக ஓடினார்கள். “பால்ஹிகநாட்டு வீரர்களை வண்டியருகே வரச்சொல்லுங்கள்” என்று தேவிகை மீண்டும் ஆணையிட்டாள். அவர்கள் இடைநாழியைக் கடந்து சிறிய கூடத்திற்கு வந்ததும் பால்ஹிகர் போர்வையால் நன்றாக முகத்தை மூடிக்கொண்டு “பனி பெய்கிறதா? இத்தனை வெளிச்சம்?” என்றார்.

பூரிசிரவஸ் “ஆம், வெண்பனி” என்றான். அவர் முகத்தை மறைத்து குனிந்தபடி முற்றத்தை நோக்கி சென்றார். அங்கே பெரிய மூங்கில்விற்கள்மேல் அமரும்படி கட்டப்பட்ட கூண்டுவண்டியை கைகளால் இழுத்து நிறுத்தியிருந்தனர் வீரர்கள். தேவிகை கைகாட்டி அவர்களிடம் விலகும்படி சொன்னாள். அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். “பிதாமகரே, நீங்கள் வண்டிக்குள் அமர்ந்துகொள்ளுங்கள். நான் பொருட்களை மற்ற வண்டிகளில் ஏற்றவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், பனி பெய்கிறது” என்றபடி பால்ஹிகர் ஏறி உள்ளே அமர்ந்துகொண்டார். உள்ளே விரிக்கப்பட்ட மரவுரிமெத்தையில் அவரே படுத்துக்கொண்டார்.

“சற்று ஓய்வெடுங்கள் பிதாமகரே” என்றபின் பூரிசிரவஸ் வெளியே வந்து கூண்டுவண்டியின் மரப்பட்டைக்கதவை மூடினான். தேவிகை மூச்சிரைக்க “இன்னொரு பெரிய வண்டிக்கு சொல்லியிருக்கிறேன். அதில் இறகுச்சேக்கை உண்டு. பாதையின் அதிர்வுகள் உள்ளே செல்லாது” என்றாள். “உங்களுக்கு உலருணவும் நீரும் மற்றபொருட்களும் உடனே வந்துசேரும்.”

”நீ இன்னும் பெரிய அரசை ஆளக்கூடியவள்... ஐயமே இல்லை” என்று பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் சொன்னான். “பெரிய அரசுடன் வருக” என்றாள் தேவிகை. அவன் திடுக்கிட்டு அவள் விழிகளை நோக்கினான். அவள் சிரித்தபடி “ஆம்” என்றபின் புன்னகைத்தாள். “இப்போதே என் அரசு பெரியதுதான். மேலும் பெரிதாக்க முடியும்” என்றான். “பிறகென்ன?” என்றாள். “சொல்கிறேன்...” என்றான்.

அவள் உதடுகளை மடித்தாள். கழுத்தில் நீலநரம்பு புடைத்தது. “இது காத்திருப்பதற்குரிய இடம்... அமைதியானது” என்று தலை குனித்து விழிகளை திருப்பியபடி சொன்னாள். “நெடுநாள் வேண்டியிருக்காது” என்றான். அவள் ஒருமுறை அவனை நோக்கி “நலம் திகழ்க!” என்றபின் உள்ளே செல்ல ஓரடி எடுத்துவைத்து திரும்பி “அரசரிடம் விடைபெற்று செல்லுங்கள்” என்றாள். ஆடை சுழன்று அசைய உள்ளே சென்றாள். அவளுடைய பார்வையை அவள் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதுபோலிருந்தது.

மறுநாள் காலையிலேயே அவர்கள் கிளம்பிவிட்டனர். இரவுக்குள் பயணத்துக்கான அனைத்தும் செய்யப்பட்டன. வண்டிக்குள் ஏறியதுமே பால்ஹிகர் துயின்றுவிட்டார். அவன் அரசரிடம் விடைகொள்ளும்போது விழிதுழாவி அவளை நோக்கினான். பின்னர் அவள் அவன் முன் வரவேயில்லை. கேட்பதற்கும் அவனால் முடியவில்லை. அவளிடம் அந்த இறுதிச் சொற்களை பேசாமலிருந்தால் கேட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.

கிளம்பும்போது விடியலில் நகரம் பரபரப்பாக இருந்தது. தெருவெங்கும் வண்டிகளும் வணிகக்கூச்சல்களும் மக்களும் நெரிந்தனர். வண்டியை பல இடங்களில் அரசச் சேவகர்கள் வந்து வழியெடுத்து முன்னால் அனுப்பவேண்டியிருந்தது. வெயில் எழுவதற்குள் நகரம் மீண்டும் ஒலியடங்கி துயிலத் தொடங்கிவிடும் என்று பூரிசிரவஸ் நினைத்துக்கொண்டான். வண்டிகள் நகரின் சாலையில் இருந்து இறங்கி மலைக்குடைவுப்பாதைக்குள் நுழைந்தபோது திரும்பி நோக்கினான். பந்தங்களின் செவ்வொளியில் பரிமாறி வைக்கப்பட்ட இனிய அப்பங்கள் போல தெரிந்தன சைப்யபுரியின் பாறைமாளிகைகள். செந்நிறமான ஆவி போல சாளரங்களில் இருந்து ஒளி எழுந்தது.

மறுநாள் வெயில் ஏறும்போது அவர்கள் முதல் சோலையை அடைந்திருந்தனர். புரவிகளை அவிழ்க்கும்போது எழுந்து “எந்த இடம்?” என்றார். பூரிசிரவஸ் பால்ஹிகநாட்டில் ஒரு மலைமடிப்பை சொன்னான். அவர் ஏதோ முணுமுணுத்தபடி திரும்பவும் படுத்துக்கொண்டார்.

பூரிசிரவஸ் கூடாரத்திற்கு வெளியே மெல்லிய உலோக ஒலியைக் கேட்டு எழுந்துகொண்டான். சேவகன் அவனுக்கு செம்புக் குடுவையில் சூடான இன்னீருடன் மறுகையில் முகம் கழுவ நீருடன் நின்றிருந்தான். அவன் எழுந்து முகத்தை கைகளால் துடைத்தபடி வந்தான். நீரை வாங்கி முகம் கழுவியபின் இன்னீரை கையில் வாங்கிக்கொண்டு “இன்னமும் அரைநாழிகையில் நாம் இங்கிருந்து கிளம்பவேண்டும்” என்றான். ”இன்று வெளிச்சம் எழுகையில் மூலத்தானநகரி நம் கண்களுக்குப்படவேண்டும். மூன்றுநாட்கள் பிந்தி சென்றுகொண்டிருக்கிறோம்.”

பகுதி 6 : மலைகளின் மடி - 5

பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற பாதையில் குதிரைகளின் குளம்பொலிகள் எழுந்து இருட்டுக்குள் நின்ற மலைப்பாறைகளில் எதிரொலித்து திரும்பி வந்தன. தொடர்ந்து அவர்கள் தங்களை நோக்கியே சென்றுகொண்டிருப்பதுபோன்ற உளமயக்கு ஏற்பட்டது. பாதையோரக் குறுங்காடுகளில் சிற்றுயிர்கள் அஞ்சிக் குரலெழுப்பி சலசலத்தோடின. மரக்கூட்டங்களுக்கு அப்பால் புதைந்துகிடந்த சிற்றூர்களிலிருந்து காவல் நாய்களின் மெல்லிய ஓசை கேட்டது. குதிரைகள் எப்போதாவது செவிகளை விடைத்தபடி நின்று மூச்சிழுத்தன. அப்போது ஒளியுடன் நாகம் சாலையை கடந்துசென்றது.

பால்ஹிகர் பெரிய குதிரை ஒன்றின்மேல் கட்டப்பட்ட மூங்கில் கூட்டில் அமைக்கப்பட்ட நீளமான சேக்கையில் மெத்தைமேல் நாடாக்களால் கட்டப்பட்டு படுத்துத் துயின்றபடியே வந்தார். அக்குதிரையின் இருபக்கமும் இரு குதிரைவீரர்கள் அந்தக்கூடு சரிந்துவிடாதபடி பிடித்துக்கொண்டு சென்றனர். பால்ஹிகர் துயிலிலேயே அவர் உதிரிச்சொற்களை பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலானவை பால்ஹிகமொழியின் சொற்களென்றாலும் அவ்வப்போது சைப்யமொழியின் சொற்களும் எழுந்தன. அவர் வேட்டையாடிக்கொண்டே இருந்தார். அங்கே அவருடன் எப்போதும் புரவிகளும் வேட்டைநாய்களும் ஓநாய்களும் இருந்தன. ஒரே ஒருமுறை அவர் சிறுத்தையைப்பற்றி சொன்னார்.

ஒருமுறை அவரைக் கடந்துசென்றபோது அச்சொற்களைக்கேட்டு பூரிசிரவஸ் புன்னகைத்துக்கொண்டான். அவருக்குள்ளும் நிலம் வெறுமையாகவே விரிந்திருக்கிறது. ஒருமுறைகூட அவர் பிறந்து இளமையைக் கழித்த அஸ்தினபுரி வரவில்லை. தேவாபியோ, சந்தனுவோ, அவர்களின் தந்தை பிரதீபரோ வரவில்லை. அவரது மைந்தர்கள் கூட அவரது சொற்களில் வரவில்லை என்பதை அதற்குப்பின்னர்தான் உணர்ந்தான். அவரது ஆன்மா அது வாழ்வதற்கான இடத்தையும் காலத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.

விடியற்காலையில் அவர்கள் தூமபதம் என்ற பெயருள்ள மலைக்கணவாயை அடைந்தனர். தெற்கிலிருந்து பால்ஹிக நகருக்குள் வருவதற்கு அந்த சிறிய மலையிடுக்கு அன்றி வேறுவழி இல்லை. வடக்கே இருபெரிய மலைகள் நடுவே செல்லும் ஷீரபதம் என்ற பெயருள்ள இன்னொரு இடுக்கு உண்டு. அதை மிக அருகே சென்றால் மட்டுமே காணமுடியும். தொலைவிலிருந்து நோக்கினால் வெற்றிலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி விரித்ததுபோல இடைவெளியே இல்லாமல் மலைகள்தான் தெரியும். அசிக்னியின் துணையாறான சிந்தாவதி வழிகண்டுபிடித்து மலையிடுக்கு வழியாக வந்து அந்த பள்ளத்தாக்கை உருவாக்கிவிட்டு வளைந்து தெற்கே வந்து இன்னொரு மலையிடுக்கு வழியாக சென்று காட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிறிய அருவிகளாக விழுந்து சமநிலத்தை சென்றடைந்தது.

ஆறு உருவாக்கிய வழியே இருபக்கங்களிலும் அந்நிலத்தை அடைவதற்குரியது. ஆகவே ஆற்றில் பனியுருகிய நீர் பெருகும் முதற்கோடையிலும் மலைகளுக்குமேல் மழைபெய்யும் பெருவெள்ளக்காலத்திலும் பால்ஹிகநாட்டிலிலிருந்து எவரும் வெளியேற முடியாது. பால்ஹிகநாட்டுக்கு மழைமுகில்கள் வராமல் கைகளால் பொத்திக் காப்பதும் அந்த மலைகளே என்பர் மூத்தோர். அதை மூதன்னையர் என்று வழிபடுவார்கள். தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்‌ஷ்மபிந்து, திசாசக்ரம் என அவற்றில் பெரிய பதினொரு அன்னையருக்கு பெயர்கள் இருந்தன.

சிந்தாவதியின் அருகே மலைச்சரிவுக்குமேல் அமைந்திருந்த பெரிய பாறையில் காவல்மாடத்தில் பால்ஹிக வீரர்கள் காவலிருந்தனர். இருளில் அவர்கள் வருவதை தொலைவிலேயே பார்த்து சிறு எரியம்பு விட்டனர். எரியம்பில் மறுகுறி கிடைத்ததும் அங்கே ஒரு கொம்பொலி எழுந்தது. பூரிசிரவஸ்ஸுடன் வந்த வீரனும் கொம்பொலி எழுப்பி தங்களை அறிவித்தான். காவல்கோட்டத்தில் இருந்த வீரர்களில் சிலர் குதிரைகளில் இறங்கி வந்த ஒலி மலையடுக்குளில் எங்கோ கல்லுருளும் ஒலி என கேட்டது. இருளில் அரக்கவடிவம் கொண்ட மலை ஏதோ சொல்வதைப்போல.

நகரை அணுகிய உணர்வு அவர்களனைவரிலும் உடல் விரைவாக வெளிப்பட்டது. குதிரைகளை அவர்கள் தட்டியும் குதிமுள்ளால் குத்தியும் ஊக்கினாலும் அவை மிகவும் களைத்திருந்தமையால் விரைந்து சில அடிகள் எடுத்து வைத்தபின் பெருமூச்சுடன் தளர்ந்தன. அவற்றின் உடலில் இருந்து வியர்வை ஊறி சொட்டியது. பாதையின் வளைவுக்கு அப்பாலிருந்து வீசிய குளிர்ந்த மலைக்காற்றில் குதிரைகளின் வியர்வை மணம் கலந்து வீசியது. வீரர்கள் மெல்லிய குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதை சுழன்று சென்ற காற்று சொற்களாக சிதறடித்தது. ஒடுக்கமாக வளைந்து ஏறிச்செல்லும்போது புரவிகளின் குளம்படியோசை முற்றிலும் வேறுபட்டு ஒலித்தது. குதிரைகள் ஒன்றன் மேல் ஒன்றாக கால்வைப்பதுபோல.

அவர்கள் மலையேறி மேலே சென்று மலைவிளிம்பை அடைந்து நகரை பார்ப்பதற்கு மேலும் ஐந்துநாழிகை ஆகியது. அதற்குள் மலைகளுக்கு அப்பால் வானில் வெளிச்சம் எழுந்துவிட்டிருந்தது. நான்காவது அடுக்கிலிருந்து பிறமலைகளுக்கு மேல் தலையை மட்டும் காட்டிய முதியமலைகள் பனிமுடி சூடியிருந்தன. மலையிடுக்குகள் வழியாக வந்த குளிர்காற்று அவர்களை அடைந்தது. அதில் பசும்புல்லும் புழுதியும் நீராவியும் கலந்த இனிய மணம் இருந்தது. பால்ஹிகநாட்டின் மணம். அவனுடைய முதியதந்தையரின் மூதன்னையரின் அரண்மனையின் மஞ்சத்தின் மணம். மலைகளில் இருந்து மீளும் ஆடுகளின் மணம். மலைக்கனிகளின் மணம்.

விடியத் தொடங்கிவிட்டமையால் பால்ஹிகபுரியின் தொலைதூரக்காட்சி தெரிந்தது. சுற்றிச்சுற்றிச் மேலேறி நின்றபாதை இரண்டு மலைகளுக்கு நடுவே இருந்த இடைவெளிவழியாகச் சென்று வளைந்து கீழே ஆழத்தில் தெரிந்த நகரத்தை காட்டியது. அவன் பார்த்திருந்த பெரிய நகரமான காம்பில்யத்துடனும் சத்ராவதியுடனும் ஒப்பிட்டால் அதை நகரம் என்று சொல்வதே மிகை. ஊர் என்று சொல்லலாம். ஆயிரம் வீடுகள் சற்றே சீரான வண்டல்சமவெளியில் ஒழுங்கற்று அமைந்திருந்தன. சுற்றிலும் கோட்டை என ஏதுமில்லை. நான்குபக்கமும் புல்வெளிகள் விரிந்து சென்று மலையடிவாரங்களைத் தொட்டு மேலேறி மலைகளாக ஆயின. மலைகளே பெரும் கோட்டையைப்போல நகரை சூழ்ந்திருந்தன.

அங்கிருந்து பார்க்கையில் மிகப்பெரிய பகடைக்களத்தில் கையால் அள்ளி வைக்கப்பட்ட சோழிகளைப்போல நகரம் தோற்றமளித்தது. நகரத்தின் நான்கு எல்லைகளிலும் இருந்த காவல்மாடங்களில் பால்ஹிகபுரியின் கொடி பறந்துகொண்டிருந்தது. நகரைச்சுற்றி இருந்த புல்வெளிகள் பசுக்கூட்டங்கள் பரவி மேய்ந்துகொண்டிருக்க நீலநிறமான மரவுரி அணிந்த மேய்ப்பர்கள் ஆங்காங்கே சிறிய புள்ளிகளாக தெரிந்தனர். நகரின் மேலிருந்து காலையில் எழுந்த சமையற்புகை அசைவற்ற நீரில் விழுந்த பால்துளிகள் போல மேலேயே நின்று பிரிந்து காற்றில் கரைந்துகொண்டிருந்தது.

அவன் மலைச்சரிவில் இருந்த பாறைமேல் நின்று தன் நகரை நோக்கிக்கொண்டிருக்க அவனைக்கடந்து அவனுடைய படை இறங்கி வளைந்து சென்றது. மேலிருந்து நோக்கியபோது ஒரு உருத்திராட்ச மாலை நதிச்சுழலில் செல்வதுபோல  தோன்றியது. பால்ஹிகபுரி அண்மை என தெரிந்தாலும் அங்கே சென்றுசேரும்போது இளவெயில் எழுந்துவிடும் என அவன் அறிந்திருந்தான். நகரிலிருந்து எரியம்பு எழுந்து அவர்களை வரவேற்க ஒரு சிறிய காவல்படை வருவதை அறிவித்தது. அவர்கள் கிளம்புவதன் முரசொலி தொடர்பே இல்லாத கிழக்கு மலையில் இருந்து மெலிதாகக் கேட்டு அடங்கியது.

இறுதிப்படைவீரன் வந்து தன்னருகே நின்றதும் பூரிசிரவஸ் தன் புரவியை தட்டினான். களைத்து தலைசாய்த்து துயில்வதுபோல நின்றிருந்த அது மெல்ல மூச்சுவிட்டு வால்தூக்கி சிறுநீர் கழித்தபின் எடைமிக்க குளம்போசையுடன் கூழாங்கற்கள் பரவிய மலைப்பாதையில் இறங்கிச்செல்லத்தொடங்கியது. அவன் உடலை எளிதாக்கி கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தான். அப்போது ஓர் எண்ணம் வந்தது. அவனுள் இருந்து முழுமையாகவே சிபிநாட்டின் நிலம் மறைந்துவிட்டிருந்தது

நினைவில் சிபிநாட்டை மீட்கமுயன்றான் தேவிகையின் முகம் நினைவில் எழுந்தது. ஒளிமிக்க சாளரங்களுடன் அமைந்திருந்த பாறைக்குடைவு மாளிகைகள் எழுந்தன. பாலைவெளி நினைவிலெழுந்ததுமே மறைந்தது. நினைவில் காட்சியாக அது எழவில்லை, நிகழ்வுகளாகவே வந்தது. அவன் புன்னகைசெய்துகொண்டான். கண்களை மூடி சைப்யபுரியின் செந்நிறமான மலைகளையும் மண்ணையும் நினைவின் அடியடுக்குகளில் இருந்து இழுத்து எடுத்து சுருளவிழ்த்தான். அவை முகங்களுடனும் வேறு நிலங்களுடனும் கலந்தே வந்தன.

சற்றுநேரம் கழித்து எண்ணிக்கொண்டபோது அந்த நிலம் காலத்தின் நெடுந்தொலைவில் எங்கோ என தோன்றியது. ஆன்மா மறக்கவிரும்பிய நிலம் அது போலும் என எண்ணிக்கொண்டான். அவர்களை எதிரேற்க பால்ஹிகநாட்டுக் காவல்படை புரவிகளின் குளம்புகள் மண்ணை சிதறித்தெறிக்கவைத்தபடி கொடியுடன் வந்தது. அனைவரும் வருகையிலேயே கைகளைத் தூக்கி சிரித்தபடி வந்தனர். முன்னால் வந்த பெரிய வெண்புரவியில் இருந்த படைத்தலைவன் காமிகன் அருகே வந்து அவனிடம் தலைவணங்கி “பால்ஹிகபுரிக்கு இளவரசை வரவேற்கிறேன். இந்த இனிய பருவம் நிறைவுறட்டும்” என்றான்.

பூரிசிரவஸ் ”மூத்தவர்கள் இங்கிருக்கிறார்களா?” என்றான். “ஆம், இருவருமே இருக்கிறார்கள். அனைவரும் தங்களுக்காகவும் பிதாமகருக்காகவும் காத்திருக்கிறார்கள். நீங்கள் அசிக்னியில் இருந்து கரையேறியதைக் கண்டதுமே ஒற்றன் பறவைத்தூதை அனுப்பிவிட்டான்” என்றான். பூரிசிரவஸ் பால்ஹிகரை சுட்டிக்காட்டி “பிதாமகர் துயில்கிறார். அவரை எழுப்பவேண்டியதில்லை” என்றான். காமிகன் தலையசைத்தான்.

பால்ஹிகநாட்டு முகக்காவல்படையினர் அவனுடைய படைகளுடன் கலந்து தோள்தழுவும் நட்புக்குறிகளை பரிமாறிக்கொண்டனர். அவர்கள் பேசிய இன்சொற்களும், கண்கள் சுருங்க பற்கள் ஒளிர எழுந்த சிரிப்புகளில் இருந்த நட்புணர்வும் அவனுக்கு ஊர் திரும்பிவிட்ட உணர்வை அளித்தன. மலைப்பகுதிகளில் மட்டுமே உடல்தழுவி வரவேற்கும் முறை இருந்ததை அவன் எண்ணிக்கொண்டான்.

அவர்கள் இறங்கிச்சென்று பால்ஹிகப் பள்ளத்தாக்கை அடைந்ததும் புரவிகள் பெருமூச்சு விட்டன. சிந்தாவதியின் கரைவழியாகவே பாதை சென்றது. நீர் இறங்கிய நதிக்கரைச் சதுப்பில் நீர்ப்பூசணிகளை பயிரிட்டிருந்தனர். கரைமேட்டில் வெள்ளரியும் பூசணியும் பாகலும் அவரையும் கீரைகளும் பச்சை இலைவிட்டு எழுந்திருந்தன. அவற்றைச்சுற்றி மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட முட்களைக் கொண்டு வேலியிடப்பட்டிருந்தது.

விடியற்காலையின் குளிரிலேயே அங்கே பணியாற்ற உழவர்கள் வந்திருந்தனர். மரப்பட்டைகளை இணைத்துச்செய்த கோட்டைக்கலங்களை காவடியாகக் கட்டி சிந்தாவதியின் நீரை அள்ளி செடிகளுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தனர். பால்ஹிக மக்களின் முகங்களை அவன் புதியவன் என நோக்கினான். அவர்களில் மிகச்சிலரே பால்ஹிகம் என்று சொல்லத்தக்க பேருடலுடன் இருந்தனர். பெரும்பாலானவர்கள் பீதர்களுக்குரிய வெந்து சிவந்த மஞ்சள்தோலும் சுருக்கங்கள் அடர்ந்த முகங்களும் சிறிய குழிக்கண்களும் மழுங்கிய மூக்கும் கொண்டிருந்தனர்.

வழியில் இரு பக்கமும் பெரும் கோட்டைக்கலங்களில் நீருடன் சென்ற இருவரை அவன் கூர்ந்து பார்த்தான். பீதர்களின் நிறமும் பால்ஹிகர்களின் பேருடலும் கொண்டவர் அவர்களை அஸ்தினபுரியின் பீமசேனரின் மூத்தோர் என்று சொல்லிவிடமுடியும். பீமசேனரின் தந்தை யாராக இருக்கக் கூடும் என்ற எண்ணம் அவன் நெஞ்சில் வந்தது. என்றேனும் ஒரு முதிய சூதனைக் கண்டால் மதுவுண்ணச்செய்தபின் அதை கேட்டறியவேண்டுமென எண்ணிக்கொண்டான்.

நகருக்கு வெளியே அவர்களின் குலதெய்வமான ஏழு அன்னையரின் சிறிய கற்சிலைகள் அமைந்த திறந்தவெளி ஆலயம் இருந்தது. செந்நிறமான ஏழுகொடிகள் சிறிய மூங்கில்களில் பறந்தன. அங்கே இருந்து எழுந்த தூபத்தின் நீலவண்ணப்புகையில் தேவதாருப்பிசின் மணமிருந்தது. பின்னாலிருந்த முள்மரத்தில் வேண்டுதலுக்காகக் கட்டப்பட்ட பலவண்ண துணிநாடாக்களால் அந்தமரம் பூத்திருப்பதுபோல தோன்றியது.

தேவதாருப்பிசினை விற்றுக்கொண்டு ஆலயத்தின் வெளியே ஒரு கிழவி அமர்ந்திருந்தாள். படைவீரகள் கோயில் முன் குதிரைகளை நிறுத்திவிட்டு அவளிடம் செம்புநாணயங்களைக் கொடுத்து பிசினை வாங்கி அனல் புகைந்த தூபங்களில் போட்டு கைகூப்பி உடல்வளைத்து வணங்கினர். அங்கே மூங்கில் வளைவில் கட்டப்பட்டிருந்த ஏழு சிறியமணிகளை ஒவ்வொன்றாக அடித்தனர். மணியோசை சிரிப்பொலி போல கேட்டுக்கொண்டிருந்தது.

பூரிசிரவஸ் அருகே சென்றதும் இறங்கி பிசின் வாங்கி தூபத்திலிட்டான். முன்னரே சென்றவர்கள் போட்ட பிசினால் அப்பகுதியே முகில்திரைக்குள் இருந்தது. ஏழன்னையரும் குங்குமம், மஞ்சள்பொடி, கரிப்பொடி, வெண்சுண்ணப்பொடி, பச்சைத்தழைப்பொடி, நீலநிறப் பாறைப்பொடி, பிங்கல நிறமான மண் ஆகியவற்றால் அணிசெய்யப்பட்டிருந்தனர். அவற்றை தொட்டுத்தொட்டு வணங்கி வண்ணப்பொடியை தலையிலணிந்துகொண்டான்.

ஆலயத்தைவிட்டு வெளியே சென்றபோதுதான் ஏழன்னையர் என்ற எண்ணம் சற்றே புரண்டு இன்னொரு பக்கத்தைக் காட்டியது. பால்ஹிகர் அங்கே வருவதற்கு முன்னர் அவர்கள் இருந்தார்களா? பால்ஹிகர் மணந்த ஏழு அன்னையரா அவர்கள்? இருக்காதென்று தோன்றியது. அன்னைத்தெய்வங்கள் பழங்காலம் முதலே இருந்திருக்கும். அப்படியென்றால் பால்ஹிகர் ஏழன்னையரை மணந்தார் என்ற கதை அதைச்சார்ந்து உருவானதா? அவர் உண்மையில் எத்தனை பேரை மணந்தார்?

நெடுநேரமாக முதியவரை பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு அவன் புரவியைத் தட்டி முன்னால் சென்றான். ஓசைகளில் அவர் விழித்துக்கொண்டிருக்கக் கூடும். குதிரைமேல் இருந்த மூங்கில் படுக்கைக்கூடைக்குள் அவர் உடலை ஒடுக்கிச் சுருண்டு கருக்குழந்தைபோல துயின்றுகொண்டிருந்தார். செந்நிறமான மரவுரி மெத்தை கருவறைத் தசை போலவே தோன்றியது. பிளந்த கனிக்குள் விதைபோல என்று மறுகணம் தோன்றியது.

அவரது இமைகளில் முடிகள் இல்லை என்பதை அவன் அப்போதுதான் நோக்கினான். புருவங்களே இல்லை. அவரது முகத்தை மானுடமுகமாக அல்லாமலாக்கியது அதுதான். உதடுகள் உள்ளே மடிந்து மூச்சில் வெடித்து வெடித்து காற்றை விட்டுக்கொண்டிருந்தன. உலர்ந்த கொன்றைக் காய்கள் போன்ற பெரிய விரல்கள் சிப்பிநகங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்து தொழுவதைப்போல் இருந்தன.

செல்லலாம் என்று தலையசைவால் சொல்லிவிட்டு அவன் தன் புரவியில் முன்னால் சென்றான். அவனை வரவேற்க அரண்மனை முன்னாலிருந்த காவல்மாடத்தில் முரசு முழங்கத்தொடங்கியது. நகரத்தின் முகப்பில் அவர்களின் மூதாதைமுகங்களும் தெய்வமுகங்களும் செதுக்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத்தேவதாரு தடி நாட்டப்பட்டிருக்க அதன் கீழே குலப்பூசகன் நின்றிருந்தான். முன்னால் சென்ற காவல்வீரன் ஒரு கோழியை அந்தத் தூணுக்குக் கீழே சிறிய உருளைக்கல் வடிவில் கோயில்கொண்டிருந்த மலைத்தெய்வத்தின் முன்னால் பிடித்து வாளால் அதன் கழுத்தை வெட்டினான். தெய்வத்தின்மீது குருதியை சொட்டிவிட்டு கோழியை பூசகனிடம் கொடுத்தான்.

பூசகன் அவனிடமிருந்த கொப்பரையில் இருந்து சாம்பலை எடுத்து மறைச்சொற்களைக் கூவியபடி அவர்கள் மேல் வீசி அவர்கள் மேல் ஏறிவந்திருக்கக்கூடிய பேய்களை விரட்டினான். அவர்கள் அவனை வணங்கி கடந்து சென்றதும் அவர்களின் குதிரைகளின் குளம்படிகளில் அந்தச் சாம்பலை வீசி அவர்களைத் தொடர்ந்து வந்திருக்கக்கூடிய பேய்களை துரத்தினான். ஏழுகோழிகளும் ஏழு நாணயங்களும் அவனுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் சென்றபின்னரும் அவன் மறைச்சொற்களை கூவிக்கொண்டிருந்தான்.

நகரம் கோடைகாலத்தில் காலையில் முழுவிரைவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும். பெண்கள் சாணிக்குவியல்களை அடைகளாக பரப்பிக்கொண்டிருந்தனர். மரவுரியாடை அணிந்த, முகம் கன்றிச்சிவந்த குழந்தைகள் அவர்கள் நடுவே கூச்சலிட்டுச் சிரித்தபடி ஓடிவிளையாடின. குதிரைகளைக் கண்டதும் அவை நின்று வியப்புடன் நோக்கின. நீளமான பின்னலை ஒரு கையால் பிடித்து இழுத்தபடி ஒரு பெண் தன் இளையோனை புன்னகையுடன் நோக்க அவன் சின்னஞ்சிறு மூக்கினுள் விரலை நுழைத்தபடி உடல் வளைத்து ஐயத்துடன் பார்த்தான்.

ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்த சாணிக்குவியல்களிலிருந்து இளம்புகை எழுந்தது. திண்ணைகளில் இருந்த முதியவர்கள் கம்பளிநூல்களால் ஆடைகளை பின்னிக்கொண்டிருந்தனர். பல இடங்களில் இல்லங்களுக்குப்பின்னால் மத்துகள் சுழலும் ஒலி கேட்டது. வெயில் பரவிய இடங்களில் பாய்களை விரித்து பழைய மரவுரிச்சேக்கைகளையும் கம்பளிப்போர்வைகளையும் கொண்டுவந்து காயப்போட்டுக்கொண்டிருந்தனர்.

நகரத்தின் அரசவீதி முழுக்க சாலையை மறித்தபடி பருத்த பசுக்களும் எருதுகளும் வெயிலில் கண்களை மூடி நின்றுகொண்டிருந்தன. அவற்றின் மேல் மொய்த்த சிற்றுயிர்கள் ஒளிரும் சிறகுகளுடன் எழுந்து எழுந்து சுழன்றன. முன்னால் சென்ற குதிரைவீரன் ஓசையிட்டு அவற்றை அடித்து விலக்கி உருவாக்கிய வழியில்தான் அவர்கள் செல்லமுடிந்தது. சுழலும் வால்களும் அசையும் கொம்புகளுமாக மாடுகள் சற்றே ஒதுங்கி வழிவிட்டு உடலை சிலிர்த்துக்கொண்டன.

பெரியசாலையில் இருந்து பிரிந்த நான்கு கடைவீதிகளிலும் தோல்கூரைகளை நன்றாக இறக்கி விட்டுக்கொண்டு வணிகத்தை முன்னரே தொடங்கிய வணிகர் விற்று முடிக்கும் நிலையில் இருந்தனர். உலர்ந்த இறைச்சிநாடாக்கள், உலர்ந்த மீன், பல்வேறுவகையான வேட்டைக்கருவிகள், கொம்புப்பிடியிட்ட இரும்புக் கத்திகள், குத்துவாட்கள், மட்காத புல்லால் திரிக்கப்பட்ட உறுதியான கயிறுகள், கூடாரங்கள் கட்டுவதற்குரிய தோல்கள், தோலால் ஆன தண்ணீர்ப்பைகள், மரவுரியாடைகள், பருத்தியாடைகள், வெல்லக்கட்டிகள், அரிசி, வஜ்ரதானியம் போன்ற கூலவகைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் விற்கப்பட்டன.

அனைவரும் வாங்கியாகவேண்டியது உப்புக்கற்களை. மேற்கே வறண்டபாலை நில மலைச்சரிவுகளில் இருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட கட்டிகள் விலைமிகுந்தவை. அவற்றை தோல் பைகளில் போட்டு கரையாமல் கொண்டுசென்றாகவேண்டும். மலைமக்கள் உப்பை மிகக்குறைவாகவே பயன்படுத்துவார்கள். அவர்களின் தெய்வங்கள் உப்பு படைக்கப்படுவதை விரும்பின. உப்பையே அவர்கள் நாணயமாகவும் பயன்படுத்தினர்.

பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் முந்தையநாள் இரவே வந்து நகரின் சத்திரங்களில் தங்கியிருக்கும் மலைமக்கள். தாங்கள் கொண்டுவந்த மலைப்பொருட்களை விற்றுவிட்டு நாணயங்களுடன் துயில்வார்கள். விடிந்ததுமே பொருட்களை வாங்கிக்கொண்டு சுழன்றேறும் ஒற்றையடிப்பாதைகளில் நடந்தும் கழுதைகளிலேறியும் மலையேறத்தொடங்குவார்கள். இருட்டுவதற்குள் தங்கள் ஊரையோ முதல் தங்குமிடத்தையோ அவர்கள் அடைந்தாகவேண்டும்.

நகரிலிருந்த ஐந்து கோயில்களிலும் காலைப்பூசனைகள் முடிந்து நெய்ச்சுடர்களுடன் தெய்வங்கள் கருவறைகளில் விழித்து நோக்கியபடி தனித்திருந்தன. பூசகர்கள் முன்னாலிருந்த முகமண்டபத்தில் படுத்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தனர். கோயில்களை தொழிலிடங்களாகக் கொண்ட நிமித்திகர்களும் கணிகர்களும் அவர்களை நாடிவந்தவர்களும் அங்கே கூடியிருந்தனர். கோடைகாலம்தான் அவர்களின் அறுவடைக்காலம். பயிர்வைக்கப்படும். மணநிகழ்வுகள் ஏற்பாடாகும். ஆலயத்தை ஒட்டியமண்டபங்களில் நாவிதர்கள் சிலருக்கு மழித்துக்கொண்டிருந்தனர். நீர்தொட்டு கன்னங்களில் பூசி கத்தியை வைத்தபடி திரும்பி நோக்கினர்.

அரண்மனையின் முன்னால் நின்றிருந்த இரு பெரிய தூண்களில் பால்ஹிகநாட்டின் மறிமான்கொடி பறந்துகொண்டிருந்தது. முரசுகளும் கொம்புகளும் முழங்க அவர்களின் குதிரைகள் அரண்மனை முற்றத்தை சென்றடைந்தன. அவன் தன் அரண்மனையை புதிய விழிகளுடன் நோக்கினான். காம்பில்யத்தின் ஏழடுக்கு, ஒன்பதடுக்கு மாளிகைகளுடன் ஒப்பிட்டால் அவற்றை குதிரைக்கொட்டில்கள் என்றுதான் சொல்லமுடியும். இளமையில் தங்கள் அரண்மனைதான் உலகத்திலேயே பெரிய கட்டடம் என உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டதை எண்ணிக்கொண்டான்.

பிறைவடிவிலான பன்னிரண்டு கட்டடங்களால் ஆனது அரண்மனை வளாகம். சிந்தாவதியின் கரையில் இருந்து எடுக்கப்பட்ட உருளைக்கற்களால்தான் அந்நகரின் அத்தனை கட்டடங்களும் கட்டப்பட்டிருந்தன. முதலைமுதுகுபோன்ற சுவர்களுக்குமேல் தடித்த தேவதாரு மரங்களை வைத்துக் கட்டப்பட்ட தாழ்வான கூரைச்சட்டத்துக்கு மேல் இடையளவு உயரத்தில் சுள்ளிகளை நெருக்கமாக அடுக்கி அதன்மேல் மண்ணைக்குழைத்துப்பூசி புல்வளர்த்திருந்தனர்.

நகரின் அத்தனை கட்டடங்களும் ஒற்றை அடுக்கு கொண்டவை. குளிர்காலத்தில் விழுந்து மூடும் பனியின் எடையைத் தாங்குவதற்காகவே பெருத்த தூண்களுடன் மிகத்தடித்த கற்சுவர்களுடன் அவை அமைக்கப்பட்டிருந்தன. வாயில்கள் அன்றி எந்த இல்லத்திற்கும் சாளரங்கள் இருக்கவில்லை. அரண்மனை கட்டடங்கள் மட்டும் இரண்டு அடுக்குகள் கொண்டவை. மரத்தடிகளை மேலே தூக்கி வைத்து உருவாக்கப்பட்ட சிறிய சாளரங்கள் அமைந்தவை.

அரண்மனை முகப்பில் சிறிய கொட்டகையில் இருந்து எழுந்து வந்த ஏழு சூதர்கள் மங்கல இசையுடன் அவர்களை எதிரேற்றனர். அவர்களுடன் இருந்த மூன்று அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் வந்து குங்குமக் குறியிட்டு மஞ்சளரிசி தூவி வாழ்த்தினர். முதன்மைமாளிகையில் இருந்து அமைச்சர் சுதாமர் வந்து வணங்கி “பால்ஹிகநாட்டுக்கு வருக இளவரசே. தாங்கள் வரும் செய்தி இங்கே உவகையை அளித்திருக்கிறது. மத்ரநாட்டிலிருந்து சல்லியரும் சௌவீரத்தில் இருந்து சுமித்ரரும் கிளம்பி விட்டனர். இருநாட்களுக்குள் அவர்களும் இங்கு வருவார்கள்” என்றார்.

பூரிசிரவஸ் புரவியில் இருந்து இறங்கி கால்களை விரித்து மீண்டு கூட்டி இயல்பாக்கிக் கொண்டான். “அரசர் தங்கள் வருகையை எதிர்நோக்கி இருக்கிறார். அவை கூடியிருக்கிறது” என்றார் சுதாமர். பூரிசிரவஸ் “புரவியில் பால்ஹிக பிதாமகர் துயின்றுகொண்டிருக்கிறார். அவர்மேல் வெயில்படக்கூடாது. அவரது விழிகள் வெயிலை ஏற்பதில்லை” என்றான்.

“புரவியை அப்படியே அரண்மனைக்கொட்டிலுக்குள் கொண்டுசென்றுவிடலாம். அங்கிருந்து நேரடியாகவே அவரை அவருக்குரிய அறைக்கு கொண்டுசெல்லலாம்” என்றார் சுதாமர். “தாங்கள் சென்ற நோக்கத்தையோ பால்ஹிக பிதாமகர் வரும் செய்தியையோ இங்கே குடிகளுக்கு அறிவிக்கவில்லை. அது மந்தணமாகவே இருக்கட்டும் என விட்டுவிட்டோம். ஏனென்றால் அவர் எந்நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை அல்லவா?”

“ஆம், அது நன்று. அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எனக்கும் அச்சமிருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் அமர்ந்திருந்த புரவியை மட்டும் கடிவாளத்தைப்பற்றி உள்கொட்டிலுக்குள் கொண்டுசென்றனர். பனிக்காலத்தில் அரசகுடியினர் வந்து இறங்குவதற்கான அந்தக் கொட்டில் மூடப்பட்டிருந்தது. அதைத்திறந்து உள்ளே சென்றார்கள்.

”இத்தனை ஓசையிலும் எப்படி துயில்கிறார் என்றே தெரியவில்லை” என்றார் சுதாமர்.. “மிகவும் முதியவர். அவருக்கு நூற்றைம்பதாண்டுகளுக்கும் மேல் வயதாகிறது என்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம் இருக்கும், அவர் இந்நிலத்தைவிட்டுச்சென்றே நூறாண்டுகள் கடந்துவிட்டன” என்றார் சுதாமர். “இங்கே மலைப்பகுதிகளில் இவரளவுக்கே வயதுடையவர்கள் சிலர் உண்டு. அவர்கள் இவரை கண்டிருக்கவும் கூடும்.”

கொட்டகைக்கு உள்ளே அரையிருள் இருந்தது. பூரிசிரவஸ் சென்று மூங்கில் கூடை திறந்தான். மரவுரிக்குள் பால்ஹிகர் விழிகளை மூடிக்கிடந்தார். ”பிதாமகரே, நாம் நம் இல்லத்தை அடைந்துவிட்டோம்” என்றான் பூரிசிரவஸ். அவர் கண்களை மூடியபடி செம்மொழியில் “யானைகளை புராணகங்கைக்கு அப்பால் கொண்டுசெல்லச்சொல்” என்றார். பூரிசிரவஸ் திகைத்து நோக்கி “பிதாமகரே” என்றான். ”கங்கை பெருகிச்செல்கிறது. வெள்ளத்துக்கான முரசுகளும் கொம்புகளும்...” என்றார் பால்ஹிகர்.

“இதுவரை இங்கே பால்ஹிக நாட்டில்தான் இருந்தார். இப்போது அஸ்தினபுரிக்கு சென்றுவிட்டார். விந்தைதான்” என்றான் பூரிசிரவஸ். சுதாமர் “ஆன்மா போடும் நாடகங்களை தெய்வங்களும் அறியமுடியாதென்பார்கள்” என்றார். “பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ் சற்று விசையுடன் அவர் கையைப் பிடித்து உலுக்கியபடி. பால்ஹிகர் திடுக்கிட்டு உடனே எழுந்தமர்ந்து “முரசுகள்!” என்றார். “பிதாமகரே. அரண்மனைக்கு வந்துவிட்டோம்” என்றான் பூரிசிரவஸ். அவர் அவர்களை பழுத்த விழிகளால் நோக்கி தன் முகவாயை கையால் வருடினார். ஒருகணம் அச்சம் பூரிசிரவஸ் நெஞ்சில் கடந்துசென்றது.

பால்ஹிகர் எழுந்து கூட்டிலிருந்து கீழே குதித்தார். அவன் அவரை பிடிப்பதா என எண்ணியதும் அவர் நிமிர்ந்து “என் கவசங்களையும் கதையையும் படைக்கலச்சாலைக்கு கொண்டுசெல்ல ஆணையிடு... வெள்ளச்செய்தி எனக்கு நாழிகைக்கு ஒருமுறை அளிக்கப்படவேண்டும் என்று கங்கரிடம் சொல்” என்றபின் திரும்பி படிகளில் ஏறி அரண்மனைக்குள் சென்றார். “என்ன வெள்ளம்?” என்றார் சுதாமர். “அஸ்தினபுரியில் நூற்றுமுப்பதாண்டுகளுக்கு முன்வந்தவெள்ளம். இன்னமும் வடியவில்லை” என்றான் பூரிசிரவஸ். சுதாமர் புன்னகைத்தார்.

பூரிசிரவஸ் அவர் பின்னால் ஓடினான். “பிதாமகரே, தங்கள் மஞ்சத்தறை இப்பகுதியில் உள்ளது” என்றான். “ஆம், அதற்கு முன் நான் நீராடவேண்டும். உடலெங்கும் சேறு...” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் ஒருகணம் சிந்தித்தபின் “நீராட்டறை இப்பகுதியில்” என்றான். பால்ஹிகர் அஸ்தினபுரியிலேயே இருந்தார். நிமிர்ந்து நடந்தபோது அவரது தலை மேல் உத்தரத்தில் இடித்துவிடும் என்று தோன்றியது. சுதாமர் தன்னைத் தொடர்ந்து வந்த சேவகனிடம் நீராட்டறையை ஒருக்கும்படி ஆணையிட அவன் முன்னால் ஓடினான்.

பால்ஹிகர் சென்று நீராட்டறையின் உள்ளே நின்றார். ”நீராட்டு பீடம் எங்கே?” என்றார். அவர் என்ன கேட்கிறார் என்று பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். “பிதாமகரே தங்கள் ஆணைப்படிதான் மாற்றியமைக்கப்பட்டது. இது மலைமக்களின் நீராட்டுமுறை. தாங்கள் இந்த மரத்தொட்டிக்குள் அமர்ந்துதான் நீராடவேண்டும்...” அவர் ஐயத்துடன் பெரிய கரியநிறத் தொட்டியை நோக்கி “இது படகு அல்லவா?” என்றார். “படகும்தான்”என்றான்.

உண்மையில் சுதுத்ரியின் கரைகளில் இருந்து வாங்கிக்கொண்டுவரப்பட்ட படகுதான் அது. அரண்மனையில் எஎல்லா குளியல்தொட்டிகளும் படகுகள். பால்ஹிகநாட்டில் படகுகளையே எவரும் கண்டதில்லை. அதை மிக்ப்பெரிய உணவுக்கலம் என்றுதான் புரிந்துகொண்டார்கள். அரண்மனையில் அரக்கர்கள் உண்ணும் மரவைக்கலங்கள் உள்ளன, அவற்றில் இரவில் அரக்கர்களுக்கு உணவளிக்கிறார்கள் என குழந்தைகளுக்கு கதை சொல்லப்பட்டது.

அவர் உதட்டை சுழித்தபடி தலையை ஆட்டினார். பூரிசிரவஸ்ஸின் நெஞ்சு அடித்துக்கொண்டது. “நான் ஆணையிட்டிருந்தால்...” என்றபின் ”சரி” என்று நீராட்டறைச் சேவகனிடம் கையை நீட்டினார். அவன் அவரது ஆடைகளை கழற்றத்தொடங்கினான். பூரிசிரவஸ் திரும்பி “சுதாமரே, அவரை அஸ்தினபுரியில் இருப்பவராகவே நடத்துங்கள். நீராடி ஆடைமாற்றி அறைசெல்லட்டும். அவருக்கு உணவளியுங்கள். நான் தந்தையைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றான். பின்னர் திரும்பி “அவருடைய உணவெரிப்பு வல்லமை மிக கூடுதல். ஏராளமான உணவு அவருக்குத்தேவை...நம்மைவிட பத்துமடங்கு” என்றான்.

சுதாமர் தலையசைத்தார். விழிகளில் நம்பிக்கையின்மை தெரிந்தது. பூரிசிரவஸ் “அவரை அஸ்தினபுரியில் இருப்பவர் போலவே நடத்துங்கள். அவரது ஆணைகளுக்கு அரசரின் ஆணைகளுக்குரிய எதிர்வினைகள் அளிக்கப்படவேண்டும்” என்றபின் “நான் நீராடி உடைமாற்றிவிட்டு அரசவைக்குச் செல்கிறேன்” என்றான்.

பகுதி 6 : மலைகளின் மடி - 6

பூரிசிரவஸ் தன் துணைமாளிகைக்குச் சென்று சேவகர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தான். நிலையழிந்தவனாக உடலை அசைத்துக்கொண்டிருந்தமையால் அவனுடைய சேவகனால் ஆடைகளை கழற்ற முடியவில்லை. “இளையவரே, தங்கள் வெற்றி அரண்மனை முழுக்க முன்னரே பரவிவிட்டிருக்கிறது. தங்களைப்பற்றித்தான் அனைத்து நாவுகளும் பேசிக்கொண்டிருக்கின்றன” என்று புகழ்மொழி சொன்னான் சேவகன். பூரிசிரவஸ் அவனை பொருளில்லாத விழிகளால் நோக்க அவன் உடலசைவு நின்றுவிட்டது.

ஆடைகளை கழற்றியபடி “தாங்கள் பிதாமகருடன் வந்துவிட்டீர்கள். இனிமேல் பால்ஹிக குலங்கள் ஒன்றாவதற்கு தடையேதுமில்லை. மூத்தவருக்கு இங்கே பால்ஹிககுடிகளிலிருந்தே மணமகள் நோக்கி மங்கலம் செய்தபின் முடிசூடவேண்டுமென்று அரசர் விழைகிறார்” என்றான். அவன் தலையசைத்தான். “அனைத்தும் நினைத்தபடியே நிகழ்கிறது இளவரசே” என்றான் சேவகன்.

நீராட்டறைக்குச் செல்வதற்கு முன் சேவகனை அனுப்பி பிதாமகர் என்ன செய்கிறார் என்று பார்த்துவரும்படி சொன்னான். அவர் நீராடி உடைமாற்றிக்கொண்டிருப்பதாக சொன்னான் சேவகன். பூரிசிரவஸ் நீராட்டறைக்குச் சென்று வெந்நீராடினான். படகுக்குள் அமர்ந்ததும் புல்தைலம் கலந்த வெந்நீர்பட்டு உடலெங்கும் தீவிழுந்ததுபோல வெடிப்புகளும் விரிசல்களும் எரிந்தன. பற்களை கடித்துக்கொண்டு நீரை அள்ளி அள்ளி விட்டான். கழுத்தின் பின்பக்கம் முற்றிலும் தோலில்லாமல் புண்ணாகவே இருந்தது.

நீராட்டறைச்சேவகன் அவன் உடலைக்கண்டு அஞ்சியவன் போல அருகே நெருங்காமல் நின்றான். பூரிசிரவஸ் நீராடி முடித்து எழுந்து ஆடியில் தன் உடலைநோக்கியதுமே கணத்தில் விழிகளை திருப்பிக் கொண்டான். அவன் உடல் கூரிய பாறைச்சரிவில் நெடுந்தூரம் உருண்டது போலிருந்தது. நீராட்டறைச் சேவகன் “நீங்கள் மருத்துவரை பார்க்கலாம் இளவரசே” என்றான். அவன் தலையை மட்டும் அசைத்தான். “சுண்ணத்தை பூசிக்கொள்ளலாம். தோல்புண்கள் சீழ்கட்டாமலிருக்கும்” என்றான் சேவகன்.

சேவகர்கள் நறுஞ்சுண்ணம் போட்டுவிடுகையில் பூரிசிரவஸ் தந்தையை சந்திப்பதை ஏன் தன் அகம் ஆவலுடன் எதிர்கொள்ளவில்லை என எண்ணிக்கொண்டான். அவன் வெற்றியுடன் மீண்டிருக்கிறான். ஆனால் சோர்வுதான் எஞ்சியிருந்தது. அவன் அப்போது விரும்பியதெல்லாம் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களைமூடிக்கொள்வதை மட்டும்தான். ஆனால் அவன் அணிசெய்துகொண்டிருக்கும்போதே சேவகன் அவையில் இருந்து வந்து அரசர் காத்திருப்பதாக மீண்டும் சொன்னான். அவைக்குரிய ஆடைகளை அணிந்து பொற்பிடியிட்ட குத்துவாளை அணிந்து அவனுடன் சென்றான்.

கதவுக்கு வெளியே நின்று தன் தலைப்பாகையையும் சால்வையையும் சீரமைத்துக்கொண்டான். அது அகத்தை சீரமைத்துக்கொள்ளவும் உதவியது. ஆனால் நெஞ்சில் உரிய சொற்களேதும் எழவில்லை. அவனுடைய வருகை உள்ளே அறிவிக்கப்படுவதை கேட்டான். அவையில் எழுந்த மெல்லிய பேச்சொலி அவையின் உள்ளம் என்றே ஒலித்தது. கதவைத்திறந்து சேவகன் தலைவணங்கியதும் உள்ளே நுழைந்தான். மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் முழங்கின. அவைக்குள் சென்று ஓசை நடுவே நின்றபோது ஒரு நீண்ட கனவிலிருந்து மீண்டவனைப்போல் உணர்ந்தான். பெருமூச்சுடன் தலைவணங்கினான்.

சோமதத்தர் அரியணையில் அமர்ந்திருக்க அவையில் ஃபூரியும் சலனும் பீடங்களில் அமர்ந்திருந்தனர். கருவூலநாயகமான பிண்டகர் ஏடு ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார். ஓலையுடன் நிமிர்ந்து அவனை நோக்கி சரிந்த சால்வையை இடக்கையால் ஏந்தினார். அவையில் ஏழு குடித்தலைவர்களும் பன்னிரு அமைச்சர்களும் மூன்று வணிகர்களும் அமர்ந்திருந்தனர். அப்பால் இசைச்சூதர்களும் சேவகர்களும் நின்றிருந்தனர். தலைமை அமைச்சர் கர்த்தமர் பெரிய ஏடுப்பெட்டி ஒன்றுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

பூரிசிரவஸ் அரசருக்கும் அவைக்கும் முகமன் சொல்லி வாழ்த்துரைத்தான். அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி மறுவாழ்த்துரைத்தனர். தமையர்களை வணங்கியபின் தந்தை முன் முழந்தாளிட்டு தாள்வணக்கம் செய்தான். எழுந்து விலகி தன் பீடத்தில் அமர்ந்துகொண்டன். அடைப்பக்காரன் அவனருகே வந்து தாலத்தை நீட்ட வேண்டாமென்று தலையசைவால் விலக்கினான். அரசரே கேட்கட்டும் என்று எண்ணிக்கொண்டான்.

“எப்படி இருக்கிறார்?” என்றார் சோமதத்தர். எப்போதுமே அவர் ஒரு மலைக்குடிமகனுக்குரிய நேரடித்தன்மை கொண்டவர். அரசு சூழ்தலென ஏதும் அறியாதவர். "உடல்நலமாகவே இருக்கிறது. நடமாடுகிறார். பேசுகிறார். அத்துடன் நிறைவாக உண்கிறார்” என்றான் பூரிசிரவஸ். சோமதத்தருக்கு ஏதோ ஐயமிருப்பதுபோல அவர் விழிகளில் தோன்றியது. அனைவரிலும் மெல்லிய ஐயமும் ஊக்கக்குறைவும் இருப்பதை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். தணிந்த குரலில் “ஆனால் அவர் இங்கில்லை... அஸ்தினபுரியில் இருக்கிறது அவர் உள்ளம்” என்றான்.

சோமதத்தரின் புருவங்கள் இணைந்து சுருங்கின. பூரிசிரவஸ் “இப்போது அஸ்தினபுரியில் இருப்பவராகவே எண்ணிக்கொண்டிருக்கிறார்” என விளக்கினான். சோமதத்தர் முகத்தில் மேலும் குழப்பம் தெரிந்தது. அவர் திரும்பிநோக்கியதும் ஃபூரி "நமது மொழி பேசுகிறாரா? நாம் பேசினால் அவரால் விளங்கிக்கொள்ள முடிகிறதா?” என்றான். “அவர் நான் நோக்கும்போது இங்கே நம் நிலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். நமது மொழி மட்டும் பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ். ”இங்குவந்து இங்குள்ள முரசொலிகளையும் கொம்பொலிகளையும் கேட்டதும் அவரது அகம் அஸ்தினபுரிக்கு சென்றுவிட்டது.”

சோமதத்தர் “கேட்கும் வினாக்களுக்கு விடைசொல்லவில்லை என்றால் அவரை எப்படி நம்மவர் ஏற்பார்கள்?” என்றார். ”அதில் சிக்கலில்லை என நினைக்கிறேன் தந்தையே. அவரைப் பார்த்தாலேபோதும், அவர் பால்ஹிகர் என்பதில் எவருக்கும் ஐயம் எழாது.” சோமதத்தர் தத்தளிப்புடன் “ஆனால் இங்கே மலைக்குடிகளில் பால்ஹிகப்பேருடல் கொண்ட நூறுவயதைக் கடந்த முதியவர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவரை நாம் கொண்டுவந்து நடிக்கவைக்கிறோம் என மலைக்குடிகள் ஐயம்கொள்ளலாமே” என்றார். ”ஏனென்றால் மலைக்குடிகள் நம்மை இக்கணம் வரை நம்பி ஏற்கவில்லை.”

“அவ்வாறு ஐயம் கொள்பவர்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அவரை நோக்கினால் நம்பும் நெஞ்சுள்ளவர்கள் நம்பக்கூடும் என்றே எண்ணுகிறேன்” என்றான். “இதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை அரசே. சல்லியர் வரட்டும். அவர் முடிவெடுக்கட்டும்” என்றான் ஃபூரி. அமைச்சர்களும் ”ஆம், அதுவே சிறந்த வழி” என்றனர். அதுவும் மலைக்குடிகளுக்குரிய உள்ளப்போக்கு என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். முடிந்தவரை அனைத்தையும் ஒத்திப்போட முயல்வார்கள். மலைகளில் நூற்றாண்டுகளாக அசையாமல் கிடக்கும் பாறைகளைப்போன்றவர்கள் அவர்கள்.

“இப்போது அவர் ஓய்வெடுக்கட்டும். மாலை அவரை அவைக்குக் கொண்டுவந்து முறைமை செய்வோம்” என்றான் சலன். அமைச்சர் ஒருவர் “பிதாமகர் இங்கே அவையிலமர்வது முறையாக இருக்காது...” என மெல்ல சொல்ல சோமதத்தர் உணர்வெழுச்சி கொண்ட குரலில் ”அவர் அமரவேண்டிய இடம் இந்த அரிய்ணைதான் அமைச்சரே. நான் அவர் காலடியில் பீடத்தில் அமர்கிறேன்” என்றார். மூத்தகுடித்தலைவர் “ஆம், அதுவே முறையாகும். இங்குள்ள அனைத்து மணிமுடிகளும் பிதாமகருக்குரியவைதான்” என்றார். சலன் “அவரை நாம் அரியணையமர்த்துவதே அவர் எவரென்று காட்ட போதுமானதாக இருக்கும்” என்றான்.

தலைமைஅமைச்சர் கர்த்தமர் “அவர் இன்று அவைக்கு வரட்டும். நாளை மறுநாள் சல்லியரும் சுமித்ரரும் வந்ததும் முறையாக பிதாமகரின் நகர்நுழைவுச் செய்தியை மக்களுக்கு அறிவிப்போம். குலதெய்வங்களுக்கு முன்னால் ஒரு விழவெடுப்போம். குடிகளனைத்தும் கூட அவர்களின் முன்னிலையில் பால்ஹிக அரியணையில் பால்ஹிக பிதாமகர் அமரட்டும். மூன்று மன்னர்களும் அவரது பாதங்களில் தங்கள் மணிமுடிகளையும் செங்கோலையும் வைத்து வாழ்த்து பெறட்டும். அதன்பின் நாம் எவருக்கும் எதையும் சொல்லி தெரியவைக்கவேண்டியிருக்காது” என்றார்.

“ஆம், அது சிறந்த முடிவு” என்றார் குடித்தலைவர். “எந்த அறிவிப்பை விடவும் ஒரு சடங்கு தெளிவாக அனைத்தையும் சொல்லிவிடக்கூடியது...” சலன் “பிறர் வந்தபின் கலந்துபேசி அம்முடிவை எடுக்கலாமே?” என்றான். “ஆம், அவர்கள் வரட்டும்” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் தலைவணங்கி “நானும் சற்று ஓய்வெடுக்கிறேன் அரசே” என்றான். “நீ போரிலிருந்து மீண்டவன் போலிருக்கிறாய். உன் உடலை மருத்துவர்களிடம் காட்டு” என்றான் சலன். பூரிசிரவஸ் ”ஆம், காட்டவேண்டும்” என்றான்.

அவன் மீண்டும் தன் அறைக்குச் சென்றபோது எண்ணங்களேதுமில்லாமல் தலை இரும்புபோல எடைகொண்டு கழுத்தை சாய்த்தது. சேவகன் பிதாமகர் துயின்றுகொண்டிருப்பதாக சொன்னான். “உணவருந்தினாரா?” என்றான். “ஏராளமான உணவை உண்டார் என்கிறார்கள். அவரைப்போல உணவுண்ணும் எவரையும் இங்கே உள்ளவர்கள் பார்த்ததில்லை”. பூரிசிரவஸ் புன்னகைத்தபின் உடைமாற்றாமல் படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். சுழன்று சுழன்று மேலேறும் உணர்வு உடலில் இருப்பதை அறிந்தான். சித்தம் இன்னும் தன் மலைப்பயணத்தை முடிக்கவில்லை.

களைப்பு இருந்தபோதிலும் துயில் வரவில்லை என்பதை வியப்புடன் உணர்ந்தான். கண்களை மூடிக்கொண்டால் மலைகள் மிக அண்மையிலென எழுந்தெழுந்து வந்தன. தலைக்குமேல் செங்குத்தாக ஓங்கி நின்றன. மலைகளுக்கு இடையே இருந்த பள்ளத்தாக்கு மிக இடுக்கமானதாக அவன் இருகைகளால் இரு மலைகளை தொட்டுவிடும்படி தெரிந்தது. எங்கெங்கோ ஓசைகள். பேச்சொலிகள். சகட ஒலிகள். காற்று கடந்துசெல்லும் முனகல்கள். மூச்சுத்திணற கண்களை விழித்தான். அறையின் கூரைச்சட்டங்களும் சுவர்களும் நெளிந்தன. மீண்டும் கண்களை மூடியபோது மிக அண்மையில் பெரிய மலை தெரிந்தது. அதில் கரியபாறைகள் உருளப்போகும் கணத்தில் அமர்ந்திருந்தன.

அவன் கண்களைத் திறந்து பெருமூச்சு விட்டான். பால்ஹிக நாட்டுக்கு வந்த அயலவன் அப்படித்தான் உணர்வான் என்று எண்ணிக்கொண்டான். அங்கு அவன் அயலவனாகிவிட்டானா என்ன? பலமுறை புரண்டு படுத்தபின் எழுந்து குளிர்நீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்தான். கண்களை மூடிக்கொண்டு சிபிநாட்டின் விரிந்த நிலத்தை நினைவில் எடுத்தான். நான்குபக்கமும் ஓசையே இன்றி அகன்று அகன்று சென்றது செம்மண்புழுதி வெந்து விரிந்த நிலம்.

மென்கதுப்புத் தசைபோல அலைபடிந்த மணல். அவற்றில் சிற்றுயிர்கள் எழுதிய வரிகள். குத்துச்செடிகளின் சிறிய குவைகள். முட்கிளைகள் காற்றில் சுழன்று சுழன்று போட்ட அரைவட்டங்கள். சூழ்ந்திருந்த துல்லியமான வட்டவடிவத் தொடுவானம். கூரிய வாள்முனைபோன்று ஒளிவிட்டது அது. இழுத்துக்கட்டப்பட்ட நீலப்பட்டாலான கூடாரம்போல முகில்கறைகளே அற்ற நீலவானம். செவிகளை நிறைக்கும் அமைதி. உடலுக்குள் புகுந்து சிந்தனைகளை எல்லாம் உறையச்செய்தது அது. நான்குபக்கமும் அவன் இழுக்கப்பட்டான். இழுத்து இழுத்து அவனை இறுக்கி தரையோடு அசைவில்லாமல் கட்டிப்போட்டது திசைவெளி.

அவன் தேவிகையின் முகத்தை பார்த்தான். அவள் மேலுதட்டில் மெல்லிய நீலநிற மயிர்கள் இருந்தன. கன்னங்களில் செந்நிற முத்துக்கள் போல சிவந்த பருக்கள். நீண்ட கழுத்தின் மலர்க்கோடுகள். தோளெலும்பு பெரிதாக வளைந்திருக்க கீழே முலைகளின் தொடக்கத்தின் பளபளக்கும் மெல்லிய வளைவு. அங்கே மூச்சின் சிறு துடிப்பு. அவளை அப்படி நோக்கியது எப்போது? அவளுடைய மையிட்ட நீண்ட விழிகள் அவனை நோக்கி ஏதோ சொல்லின. பச்சைக் கண்கள். ஏதோ காட்டுப்பழம் போல, மரகதக்கல் போல. அவை சொல்வது என்ன? சிபிநாட்டின் செந்நிற மண்ணில் அவள் கால்கள் பதிந்து பதிந்து போன தடம் தொடுவானில் மறைந்தது. அங்கே அவளுடைய மெல்லிய சிரிப்பொலி கேட்டது.

அவன் விழித்துக்கொண்டபோது நெஞ்சில் விடாய் நிறைந்திருந்தது. எழுந்ததுமே நெடுநேரம் துயின்றுவிட்டதைத்தான் உணர்ந்தான். சாளரத்துக்கு அப்பால் அரையிருள் கவிந்திருக்க ஓசைகள் மாறுபட்டிருந்தன. எழுந்து நீர் அருந்திவிட்டு திரும்பும்போதுதான் உடலில் ஏதோ மாறுதலை உணர்ந்தான். பின்னர் தெரிந்தது உடலில் இருந்த கீறல்களெல்லாம் சுண்ணத்துடன் சேர்ந்து உலர்ந்து சரடுகளைப்போல தசைகளை கட்டியிருந்தன. வாயைத்திறந்தபோதே பல சரடுகள் இழுபட்டு வலியெழுந்தது.

அவன் எழுந்த ஓசைகேட்டு கதவுக்கு அப்பால் நின்றிருந்த சேவகன் வந்து வணங்கி நீரையும் துணிச்சுருளையும் கொடுத்தான். முகம் கழுவியபடி “பிதாமகர் எங்கே?” என்றான். “இன்னும்கூட துயின்றுகொண்டுதான் இருக்கிறார். சற்று முன்னர் பார்த்தார்கள்” என்றான். “அவரை அரசவைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றபடி பூரிசிரவஸ் இடைநாழியில் நடந்தான். “அவரை அணிசெய்ய வேண்டும். சேவகர்களிடம் சொல். பட்டாடையும் அனைத்து அணிகளும் தேவை.”

சேவகன் அவரை பால்ஹிகரின் அறையை நோக்கி கொண்டுசென்றான். மாளிகைகளை இணைத்த இடைநாழிகளில் நின்ற வீரர்கள் வேல்தாழ்த்தி வணங்கினர். பூரிசிரவஸ் அறையை அடைந்ததுமே ஏதோ ஓர் உள்ளுணர்வை அடைந்தான். அறையின் வாயில் திறந்து கிடந்தது. அவன் உள்ளே சென்று நோக்கியபோது படுக்கை ஒழிந்திருந்தது. அறைக்குள்ளும் படுக்கைக்கு அடியிலும் பதற்றத்துடன் நோக்கியபடி அவன் வெளியே ஓடிவந்தான்.

எதிர்ப்பட்ட காவல் வீரனிடம் “பிதாமகர் எங்கே?” என்றான். “சற்று முன்னர் வெளியே வந்து புரவிகளை ஒருக்கும்படி சொன்னார்...” என்றான். “புரவிச்சேவகனிடம் ஆணையிட நான் சென்றேன். திரும்பி வந்தபோது அவர் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்” என்றான். பூரிசிரவஸ் பதற்றத்துடன் “வெளியேவா?” என்றபின் “அவர் என்ன மொழியில் பேசினார்?” என்றான். அவன் திகைத்து “அவர்... அவர் செம்மொழியில் பேசியதாக நினைவு” என்றான்.

பூரிசிரவஸ் வெளியே ஓடி முற்றத்திற்கு வந்தான். முற்றம் முழுக்க மக்கள் கூட்டம் நெரித்துக்கொண்டிருந்தது. பால்ஹிகநாட்டில் அரண்மனையை அணுக தடையேதும் இருக்கவில்லை. தடையிருந்தாலும் அவர்கள் அதை பொருட்டாக கொள்ளப்போவதில்லை என்று அறிந்திருந்தார்கள். நகரத்தில் இருந்த பெரிய முற்றம் அரண்மனையுடையதுதான். ஆகவே மாலைநேரத்தில் நகரமக்கள் அனைவருமே அங்கே கூடி உடலோடு உடல்முட்டி கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் குதிரைகளும் கழுதைகளும் ஊடே கால்தூக்கி நின்றிருக்க கால்களுக்கிடையே குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடிவிளையாடினர்.

பூரிசிரவஸ் வெளியே வந்து அந்தக்கூட்டத்தை நோக்கியபடி மலைத்து நின்றான். தொடர்ந்து ஓடிவந்த சேவகர்களிடம் “அத்தனை வீரர்களிடமும் கேளுங்கள். பிதாமகரை பார்த்தவர்கள் அவரை தவறவிடமுடியாது. அவரை பார்த்தவர்கள் உடனே அவர் சென்றதிசை, அவருடன் எவரேனும் இருந்தார்களா என்பதை அறிவிக்கவேண்டும்” என்றான். “முரசறையலாமா?” என்றான் தலைமைச்சேவகன். “தேவையில்லை. பார்ப்போம்” என்றான் பூரிசிரவஸ்.

அவன் தன் புரவியில் ஏறிக்கொண்டு கூட்டத்தை ஊடுருவிச் சென்றான். மையத்தெருக்களில் கூட்டம் நெரிந்துகொண்டிருந்தது. ஆனால் ஊடுவழிகளெல்லாம் இருள்மூடி தனித்துக்கிடந்தன. கடைகளை மூடிவிட்டிருந்தனர். காவல்மாடங்களில் ஒவ்வொன்றாக பந்தங்கள் எரியத்தொடங்கின. அவன் விழிகளை துழாவியபடி நகரின் வெளிப்பகுதிக்கு வந்தான். ஏழன்னையர் ஆலயம் வரை வந்துவிட்டு திரும்பினான். சேவகர்களிடம் “ஊடுவழிகள் முழுக்க தேடுங்கள். அவர் எங்கேனும் விழுந்துகிடக்கவும் கூடும்” என்றான்.

அரண்மனைக்கு வந்து அரசரின் அறைக்கு சென்றான். உள்ளே சோமதத்தர் ஆடைமாற்றிக்கொண்டிருந்தார். சேவகன் உதவியுடன் கச்சையை இறுக்கியபடி “பிதாமகரை ஒருக்கிவிட்டாயா?” என்றார். ”அரசே, பிதாமகர் எங்கோ வெளியே சென்றுவிட்டார்” என்றான் பூரிசிரவஸ். அவருக்கு எச்செய்தியும் உடனே உள்ளே செல்வதில்லை. நின்று திரும்பி நோக்கி “எங்கே?” என்றார். “தெரியவில்லை. சற்றுமுன் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.”

“முற்றத்தில் பார்த்தாயா?” என்று அப்போதும் அதன் இடரை உணராமல் சோமதத்தர் கேட்டார். “நகர் முழுக்க தேடிவிட்டேன். கோடைகாலத்தில் நகர் முழுக்க மக்கள் திரண்டிருக்கிறார்கள். எங்கும் அவரை காணவில்லை. ஊடுவழிகளிலெல்லாம் தேடும்படி சேவகர்களை அனுப்பியிருக்கிறேன்.” சோமதத்தர் அப்போதுதான் அதன் பொருளை உணர்ந்து “அய்யோ” என்றார். “முதியவர். புதிய ஊரில் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நாம் எத்தனைபேருக்கு மறுமொழி சொல்லவேண்டியிருக்கும்.”

“கிடைத்துவிடுவார்” என்றான் பூரிசிரவஸ். ”எப்படி..? கிடைப்பதென்றால் இதற்குள் கிடைத்திருக்கவேண்டும். இது சின்னஞ்சிறிய ஊர். நாற்பது தெருக்கள். எங்கே போக முடியும்?” பூரிசிரவஸ் நிலையழிந்து “முழுமையாக தேடச்சொல்லியிருக்கிறேன்” என்றான். “எங்கேனும் விழுந்திருக்கக் கூடும்... இல்லையேல் இதற்குள் கண்டுபிடித்திருப்பார்கள். இரவு ஏறஏற குளிர் கூடிவரும்.” சோமதத்தர் தன் மஞ்சத்தில் அமர்ந்துவிட்டார். “இப்போது இதை நாம் செய்தியாக்க வேண்டியதில்லை அரசே. தேடிப்பார்ப்போம்” என்றான் பூரிசிரவஸ். சோமதத்தர் தலையசைத்தார்.

அவன் வெளியேறும்போது சோமதத்தர் ”அவரை நம் எதிரிகள் கொண்டுசென்றிருக்கலாமோ?” என்றார். பூரிசிரவஸ் சிரித்து “ஏன்?” என்றான். “தெரியவில்லை. நம்மைச்சுற்றி ஒற்றர்கள். எனக்கு அன்று மலைச்சாரலில் சல்லியரிடம் பேசியபின்னர் உளம் அமைதிகொள்ளவில்லை. மைந்தா, நாம் சிறிய அரசு. மலைக்குடிகள் நாம். நமக்கு எதற்கு இந்தப்பெரிய அரசியல்” என்றார் சோமதத்தர் . “தந்தையே, நாம் எளிய மலைக்குடிவாழ்க்கையை வாழ்வதற்குக்கூட வல்லமைகொண்டவர்களாக இருக்கவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் நெடுந்தொலைவு செல்லும் படைகள் எவரிடமும் இல்லை. நம் மூதாதையர் அமைதியாக வாழ்ந்தனர். இன்று யவனநாட்டுக்குதிரைகள் பலநூறு காதம் செல்கின்றன.”

“இருந்தாலும்...”என்றார் சோமதத்தர் “சதியெல்லாம் நமக்கு உகந்தது அல்ல என்றே என் உளம் சொல்கிறது” பூரிசிரவஸ் சிரித்து “ஆம் சதிசெய்யவேண்டியதில்லை தந்தையே. சௌவீரருக்கு நிகழ்ந்தது நமக்கு நிகழாமல் காத்துக்கொள்வோம். அவ்வளவுதான்”என்றான். சோமதத்தர் பெருமூச்சுடன் தன் தலையைக் கையால் தாங்கிக்கொண்டார்.

பூரிசிரவஸ் மீண்டும் வெளியே வந்தான். முரசறைய நேரிட்டால் அதைப்போல இழிவு பிறிதொன்றில்லை. பிதாமகரின் உள்ளம் நிலையில் இல்லை என்பதற்கும் அதுவே சான்றாகிவிடும். சேவகன் அவனைநோக்கி வந்து “எந்தச் செய்தியும் இல்லை இளவரசே” என்றான். “தேடுங்கள். அத்தனை இல்லங்களையும் தட்டிக் கேளுங்கள். எவரேனும் கேட்டால ஒற்றனைத் தேடுவதாகச் சொல்லுங்கள்” என்றான். அவனால் நிற்கமுடியவில்லை. அரண்மனைக்குள் அமரவும் முடியவில்லை

மீண்டும் அரண்மனை முற்றத்துக்கு வந்தான். மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்து பானைகளில் மதுவையும் வலைக்கூடைகளில் தீயில்சுட்ட அப்பங்களையும் ஊனையும் கொண்டுவந்திருந்தனர். குடும்பங்களாக மண்ணில் வட்டமிட்டு அமர்ந்து பெருங்கூச்சல்களுடன் உண்டுகொண்டிருந்தனர். அப்பங்களின் மணத்தை அடைந்த குதிரைகள் அவர்களுக்கு மேலே தலைநீட்டி வாயை மெல்வது போல அசைத்து அப்பங்களை கேட்டன. சில குடும்பத்தலைவர்கள் அவற்றுக்கு கொடுத்த அப்பங்களை அவை தொங்கிய தாடைகளால் வாங்கி மென்றன

அவன் புரவியில் ஏறப்போகும்போது ஒருவன் புரவியில் விரைந்தோடி வந்து அவனருகே இறங்கினான். “பிதாமகரை கண்டுவிட்டோம்”எ என்றான். “எங்கே?" என்றான் பூரிசிரவஸ் பதற்றத்துடன். “நகருக்கு மறுஎல்லையில் ஒரு பழைய வீட்டில் இருக்கிறார். அங்குள்ளவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். எங்களை அவர் அடையாளம் க்ண்டுகொள்ளவில்லை. நாங்கள் கேட்ட வினாக்களுக்கு உரிய விடைகளையும் சொல்லவில்லை” பூரிசிரவஸ் குதிரையை சுண்டுவதற்கு முன் “அவர் எந்த மொழியில் பேசினார்?”என்றான். “பால்ஹிக மொழியில்தான்” என்றான் வீரன். பூரிசிரவஸ் தன் நெஞ்சிலிருந்து எடையிறங்கியதாக உணர்ந்தான்.

நகரத்தின் தெருக்களில் மதுவுண்டவர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். ஒருவன் குழறும்குரலில் கைநீட்டி “யாரது குதிரையிலே? டேய் இறங்கு”என்றான். அவன் தெருக்களில் குளம்போசை எதிரொலிக்க விரைந்தான். நகரின் வடக்கு எல்லையில் எழுந்து நின்றிருந்த திசாசக்ர மலைக்குச் செல்லும் சிறிய பாதையோரமாக இருந்த தனித்த இல்லத்தின் முன் மூன்று குதிரைகள் நின்றிருந்தன. அவன் இறங்கியதும் வீரர்கள் வணங்கினர்

“எவரது இல்லம் இது?” என்றான். “இந்நகரின் மிகப்பழைமையான இல்லங்களில் ஒன்று இது இளவரசே. முன்பு ஒருகாலத்தில் இதுதான் நகரின் மிகப்பெரிய இல்லம் என்கிறார்கள். நகரமே தெற்காக சென்றுவிட்டது. அன்றைய குடித்தலைவர் ஒருவரின் இல்லம். இப்போது அவரது உறவினர்கள் சிலர் இங்கே வாழ்கிறார்கள். அவரது கொடித்தோன்றல்கள் வடக்குத்தெருவில் புதிய இல்லத்தில் வாழ்கிறார்”

அந்த வீடு நூறாண்டுகளைக் கடந்தது எனத்தெரிந்தது. அத்தனை காலம் ஏன் இடியாமலிருந்ததென்றும் புரிந்தது. மிகப்பெரிய பாறாங்கற்களை உருட்டிவைத்து அதன் தடித்த சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மனித உடலைவிட தடிமனான வைரம்பாய்ந்த தேவதாருத்தடிகளை நெருக்கமாக அடுக்கி கூரை கட்டப்பட்டிருந்தது. சாளரங்களேதுமில்லை. நகரின் மற்றவீடுகளை விட அடித்தளமும் கூரையும் தாழ்வாக இருந்தது.

சிறிய வாயில் வழியாகக் பூரிசிரவஸ் உள்ளே குனிந்து சென்றான். அறைக்குள் மூன்று மண்விளக்குகள் விலங்குக்கொழுப்பு உருகும் மணத்துடன் எரிந்துகொண்டிருந்தன. பால்ஹிகர் நடுவே கம்பிளிகள் மேல் அமர்ந்திருக்க அந்த இல்லத்தின் குழந்தைகளும் பெண்களும் சூழ அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

அருகே நின்றுகொண்டிருந்த முதிய குடும்பத்தலைவர் அவன் அருகே வந்து வணங்கி “என் பெயர் சிபிரன் இளவரசே. எனக்கு மூன்று மைந்தர்கள். மலைகளில் கன்றுமேய்க்கச்சென்றிருக்கிறார்கள். இங்கே நானும் பெண்களும் குழந்தைகளும்தான் இருக்கிறோம்”என்றார். “அந்தியில் வீட்டுக்கதவைத் தட்டினார். திறந்தால் இவர் நின்றுகொண்டிருக்கிறார். மலைகளுக்குமேல் எங்கள் தொல்குடியில் பார்த்திபர் என்று ஒரு முதியவர் வாழ்கிறார். நூறாண்டு கடந்தவர். பேருடல் கொண்ட தூய பால்ஹிகர். அவர்தான் வந்துவிட்டார் என்று எண்ணி உள்ளே அழைத்தோம்”

“ஆனால் அவர் இத்தனை தொலைவுக்கு வரக்கூடியவரல்ல என்று பிறகு தோன்றியது. அத்துடன் அவர் இவரளவுக்குப் பெரியவரல்ல. உள்ளே வந்ததுமே பார்த்திபன் எங்கே என்றுதான் அதட்டிக் கேட்டார். அப்படியே திகைத்துப்பொய்விட்டோம். பேசத்தொடங்கியதும் எங்கள் நான்கு மூதன்னையரையும் நினைவுகூர்ந்தார். மண்மறைந்த அத்தனை தொல்மூதாதையரையும் நினைவுகூர்கிறார். என்ன வியப்பென்றால் அவர்களையெல்லாம் இவர் சிறுவர்களாகவே பார்த்திருக்கிறார் என்கிறார். ஏதோ மூதாதையின் ஆன்மா எழுந்து இந்த உடலில் கூடி இங்கு வந்துள்ளது என எண்ணினோம்.”

“எப்படி இருந்தாலும் மூதாதை ஒருவர் இல்லம்தேடி வந்தது நல்லூழே. ஆகவே இவரை இங்கேயே தங்கச்செய்தோம். உணவுகொண்டுவரச்சொன்னார். பத்துபேர் உண்ணும் உணவை உண்டார். மூதாதையரின் ஆன்மா மானுடரில் எழுந்தால் அவ்வண்ணம் எல்லையற்ற பசியும் விடாயும் இருக்கும். உண்டு முடித்தபோதுதான் அரண்மனைப்படைவீரன் வந்து கதவைத்தட்டினான்”என்றார் சிபிரர் பூரிசிரவஸ். “சிபிரரே, இவர்தான் உண்மையான மூதாதை. நூற்றைம்பது வயதாகிறது இவருக்கு. நம் குலத்தின் முதல் பிதாமகர் பால்ஹிகர் இவரே”என்றான்

சிபிரரின் வாய் திறந்தபடி நின்றது. பூரிசிரவஸ் “ஆம், சிபிநாட்டிலிருந்து இன்றுதான் வந்தார். அதற்குள் இத்தனை தொலைவுக்கு வந்து அன்றிருந்த ஒரே கட்டிடத்தைக் கண்டுபிடிப்பார் என்று நினைக்கவில்லை” என்றான். திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். பூரிசிரவஸ் உள்ளே சென்று மண்டியிட்டு பால்ஹிகர் அருகே அமர்ந்து “பிதாமகரே, நான் இளவரசன் பூரிசிரவஸ்” என்றான். “யாருடைய மைந்தன் நீ?” என்றார் பால்ஹிகர் கண்களைச் சுருக்கியபடி. “அரசர் சோமதத்தரின் மைந்தன்” என்றபின் “எங்கள் மூதன்னையின் பெயர் சிவானி” என்றான்

அவரது முகத்தில் புன்னகை விரிந்தது. “பீதர்களைப்போல் இருப்பாளே?”என்றார். “என்ன செய்கிறா? எங்கே அவள்?” பூரிசிரவஸ் “அவர்கள் இப்போது இல்லை. மண்மறைந்துவிட்டார்கள்” பால்ஹிகர் முகம் சுருங்கி தலையை அசைத்து “ஆம், நான் சென்று மீள்வதற்குள் அனைவருமே மறைந்துவிட்டார்கள்.இவர்களிடம் ஒவ்வொருவரைப்பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தேன்.” என்றார். “நெடுநாட்களாகிறது” கைகளை விரித்து “மலைகளில் வேட்டைக்குச் சென்றால் எளிதில் மீண்டுவரமுடிவதில்லை. இங்குள்ள மலைகள் தொலைவுகளைச் சுருட்டி வைத்திருப்பவை”

பூரிசிரவஸ் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் அங்கே இயல்பாக இருப்பதாகத் தோன்றியது. “இவர்களின் மூதாதை சோமபர் எனக்கு மிக அண்மையானவர். மலைகளில் வேட்டைக்கு சென்றபோது பாறை உடைந்து விழுந்து மறைந்தார்” குழந்தைகளை நோக்கி “அவரது கொடிவழிப் பெயரர்கள். இந்தச்சிறுவன் பெயரும் சோமபன்தான். மனிதர்களின் உடல்கள்தான் அழியமுடியும் என்று கேட்க மகிழ்ச்சியாக உள்ளது” பூரிசிரவஸ் “பிதாமகரே தாங்கள் இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறீர்களா?”என்றான். பால்ஹிகர் சிரித்து “என்ன வினா இது? இது என் இல்லம். நீதான் என் விருதினர்...”என்றார்

பூரிசிரவஸ் மெல்ல எழுந்து “நான் நாளைக்காலை வந்து தங்களைப் பார்க்கிறேன்”என்றான். சிபிரர் அவன் பின்னால் வந்து “இங்கேயே இருக்கப்போகிறாரா?”என்றார் படபடப்புடன். “ஆம், அதற்கான செலவுகளை” என பூரிசிரவஸ் தொடங்க “செலவுகளா? இளவரசே, என் மூதாதைக்கு நீங்கள் ஏன் செலவு செய்யவேண்டும்...நான் என் மைந்தரை உடனே வரச்சொல்லவேண்டும். இப்போது இவரைப்பார்க்க எனக்கு தெரிகிறது. என் இரண்டாவது மைந்தன் சேயனின் முகம் இவருடைய இளமைமுகம்... “

பூரிசிரவஸ் புன்னகையுடன் “பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான். சிபிரர் பின்னால் வந்தபடி “அவர் எங்களைப் பார்த்துக்கொள்வார். நாங்கள் அவர் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சிறு மகவுகள்” என்றார். வெளியே வந்து புரவியில் ஏறும்போது தன் முகத்தில் சிரிப்பு நிறைந்திருப்பதை, வாய் விரிந்து கன்னங்கள் மலர்ந்திருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனுடைய வீரர்கள் அனைவர் முகங்களும் மலர்ந்திருந்தன.

பகுதி 6 : மலைகளின் மடி - 7

இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு சொல்லுக்குத் தயங்கசோமதத்தர் “சொல்”என்றான். “இளவரசி விஜயையையும் தியுதிமான் அழைத்துவருகிறார். அது மரபல்ல”என்றான் தூதன். “ஆம், ஆனால் பிதாமகர் வந்திருப்பதனால் அழைத்து வரலாமே?”என்றார்சோமதத்தர். “இருக்கலாம். ஆனால்...”என்றபின் தூதன் “அரண்மனையில் நிகழ்ந்த பேச்சுகளைக்கொண்டு நோக்கினால் நம் இளையோர் பூரிசிரவஸ் அவர்களுக்கு மணமகனாக செல்லவேண்டுமென்ற விழைவு அவர்களிடமிருப்பது தெரிகிறது” என்றான்.

சோமதத்தர் குழப்பமாகி மைந்தர்களைப்பார்த்தார். சலன் “ஆம், நம்மில் மணமாகாதிருப்பவன் அவனே. அவ்வண்ணம் நிகழுமென்றால் நல்லதல்லவா?”என்றான். “இல்லை, நாம் மீண்டும் நமக்குள்ளேயே மணம்புரிந்துகொள்ளவேண்டுமா? ஷத்ரியர்களிடம்...”என்றுசோமதத்தர் தொடர்ங்க சலன் “இவ்வெண்ணம் தங்களிடமிருப்பது அவர்களுக்குத்தெரிந்திருக்கலாம். ஆகவேதான் இளவரசியையும் அழைத்துக்கொண்டே வருகிறார்கள். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது பால்ஹிககுலத்தின் ஒற்றுமையைப்பற்றி. நமக்கு ஷத்ரியர் என்ற சொல்லில் இருக்கும் மையலை விலக்காமல் நம்மால் அதை அடையவே முடியாது”என்றான்.

சோமதத்தர் சினத்துடன் “அதற்காக தலைப்பாகை நீளம்கூட இல்லாத மத்ரநாட்டின் பாதியை ஆள்பவனுடைய மகளுக்கு நம் இளவரசனை அளிக்கமுடியுமா என்ன?” என்றார். “அதை நாம் முடிவெடுக்கவேண்டியதில்லை. அவள் வரட்டும். இங்கு நிகழும் விழவில் அவர்கள் பேசிக்கொள்ளட்டும். விரும்பினால் மணம்கொள்ளட்டும். அதல்லவா நம்முடைய வழக்கம்?”என்றான் ஃபூரி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அவையில் இருந்தாலும் இல்லாததாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் அப்போது உண்மையிலேயே அவனை பொருட்படுத்தவில்லை என்று தோன்றியது. அவர்களின் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு அவன் இளையோன் ஆகிவிட்டதுபோலிருந்தது

சோமதத்தர் சற்று சோர்வுடன் எழுந்து “நாம் ஒற்றுமையை அடையமுடியுமா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. நம்மில் எவர் பெரியவர் என்பது இருக்கத்தானே செய்கிறது?பால்ஹிக நாடு மற்ற அனைத்து நாடுகளைக்காட்டிலும் தொன்மையானது. அந்த வேறுபாட்டை அவர்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை”என்றார். சலன் “என்ன பேச்சு இது? இந்த உளநிலைதான் நம்மைப்பிரிக்கப்போகிறது. நான்முடிவெடுத்துவிட்டேன். இந்த மணவுறவு வழியாக மத்ரம் நம்மிடம் மேலும் நெருங்கும் என்றால் அவ்வண்ணம் ஆகட்டுமே”

அமைதியாக இருக்கும் தருணமல்ல என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். “தந்தையே வணங்குகிறேன்” என்றான். அவர்களனைவரும் திரும்பி நோக்கினர். “உள்நுழைந்து பேசுவதற்கு என்னைப் பொறுத்தருளவேண்டும்”என்றபின் சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “சிபிநாட்டு இளவரசி தேவிகையை பார்த்தேன்”என்றான். அவர்கள் முகத்தில் ஒரு திகைப்பும் பின் புன்னகையும் எழுந்தன. சலன் சிரித்தபடி “நன்று. சிபிநாடும் நமக்குகந்ததே” என்றான்.சோமதத்தர் “சிரிப்நாட்டு இளவரரசியையும் மணந்துகொள். என்னகுறை? இங்கே நீ மணிமுடிசூடப்போவதில்லை. ஆகவே பட்டத்தரசி எவர் என்று கேள்வி எழாது” என்றார்

பூரிசிரவஸ் “இல்லை, நான்...”என்று சொல்லத் தொடங்க “வாக்களித்துவிட்டேன் என்கிறாயா? சரி, நீ அதை விஜயையிடம் சொல். அவளுக்கு ஒப்புதலிருந்தால் மணந்துகொள். இதில் என்ன இருக்கிறது?”என்றான் சலன்.சோமதத்தர் “ஆண்மகன் எத்தனை பெண்களை வேண்டுமென்றாலும் மணந்துகொள்ளலாம். அதைப்பற்றி பொய்யுரைப்பதே அகடியம் எனப்படும்”என்றார். அவர்களிடம் மேற்கொண்டு என்ன் பேசுவதென்று தெரியாமல் பூரிசிரவஸ் தலைகுனிந்தான். மத்ரநாட்டின் அரசர்களை எங்கே தங்கைவைப்பதென்ற பேச்சுகள் எழுந்து முடிவு எடுக்கப்பட்டபோது நிசி ஆகிவிட்டிருந்தது

பூரிசிரவஸ் தன் அறைக்குச்சென்றதுமே சேவகன் உணவைக்கொண்டுவந்தான். அதை தன்னினைவின்றி உண்டுவிட்டு படுத்துக்கொண்டான். தன் அகம் நிலைகுலைந்திருப்பதை உணர்ந்தபடி புரண்டுபடுத்தான். தேவிகையின் முகத்தை நினைவிலெடுத்தான். அவனை நோக்கி பொய்ச்சினம் கொண்டன அவள் விழிகள். பின் இதழ்கள் விரிந்து புன்னகையாயின. கழுத்து சொடுக்கிக்கொண்டது. கன்னம் சற்றே ஒதுங்கி அவள் குறும்பாக சிரித்தாள்

புன்னகையுடன் பெருமூச்சுவிட்டன். அத்தனை நுணுக்கமாக அவளை எங்கே நோக்கினோம் என எண்ணிக்கொண்டான். அவளுடன் இருந்ததே ஒருநாழிகைதான். ஆனால் நெடுநாட்கள் பழகியதுபோலிருந்தாள். மிக அண்மையில் அவளை அவன் பலமுறை நோக்கியிருந்தான். அவளுடன் இருந்த காலம் இழுபட்டு நீண்டு ஆண்டுகளாகவே ஆகிவிட்டிருந்தது என்று தோன்றியது. “இல்லை, அவள்தான்”என எண்ணியபடி கண்களை மூடினான். மத்ரநாட்டு இளவரசி விஜயையைப்பற்றி முன்னரே அறிந்திருந்தான். அழகி என்றும் நூல்கற்றவள் என்றும் மலைப்பாடகர்கள் சொல்லியிருந்தன. முற்றிலும் மலைமகள். உத்தரமத்ரம் என்பது இமையமலையின் அடிவாரம். கரடிகள் மலையிறங்கும் ஊர்கள் கொண்டது.

ஒரு மலைமகள் ஒரு பாலைமகள் என அவன் விழிமூடியபடியே எண்ணிக்கொண்டான். அரசர்களுக்கு பல பெண்கள். ஆகவே அவர்களுக்குக் காதலிக்கவே தெரியாது என்பார்கள். ஆனால் என்னால் இரண்டு பெண்களையும் விரும்ப முடியும். எனக்கு மலையும் பாலையும் பிடித்திருக்கிறது. மலையும் பாலையும். மூடியசுவர்களின் காப்பு. விரிந்த வெளியின் திகைப்பு. இரண்டும். ஆம்... அவன் துயிலத்தொடங்கியபோது எதையோ எண்ணிக்கொண்டிருந்தான். எதை என உள்ளத்தின் ஒரு பகுதி வியந்துகொண்டும் இருந்தது

காலையில் எழுந்ததும் முந்தையநாள் இறுதியாக எண்ணியது என்ன என்று எண்ணிக்கொண்டான். நினைவிலெழவில்லை. மிக இனிய ஒன்று. குளிர்காற்றுபோல நறுமணம் போல இளமழை போல இனியது. ஆனால் நினைவில் அந்த இனிமை மட்டுமே எஞ்சியிருந்தது. என்ன என்ன என்று சிந்தயைக்கொண்டு சித்தவெளியை துழாவிச் சலித்தபின் எழுந்துகொண்டான். சேவகனிடம் நீராட்டறை ஒருக்க ஆணையிட்டான்

நீராடி அணிபூண்டு புரவியில் ஏறிக்கொண்டான். தன் உள்ளத்திலிருந்த எண்ணங்களும் எம்பி புரவியில் ஏறிக்கொண்டதைப்போலவே உணர்ந்தபோது சிரிப்பு வந்தது. இருபெண்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். இரண்டுபெண்களைப்பற்றி. ஒருத்தியை இன்னமும் பார்க்கவே இல்லை. சிரித்தபடி புரவியை தெருக்களில் செலுத்தினான். காலையிளவெயிலில் சிலிர்த்துக்கொண்டு கண்மூடி நின்றிருந்த பசுக்களை அதட்டி விலக்கிக்கொண்டு சென்றான்.

சிபிரரின் இல்லத்தின் முன்னால் எவருமில்லை. அவன் புரவியை நிறுத்தியபோது ஒரு முதியபெண் எட்டிப்பார்த்து “வருக இளவரசே”என்றாள்.“பிதாமகர் எங்கே?”என்றான். “அவர்கள் புலரிக்குமுன்னரே மலையேறிவிட்டார்களே?”என்றாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து “மலையேறியா?”என்றான். “ஆம், நேற்றிரவே வேட்டைக்குச் செல்லவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார். காலையில்செல்வோம் என்றார் என் கணவர். அம்புகளையும் விற்களையும் இரவே சீர்ப்படுத்தினார்கள். கருக்கிருட்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.”

“எந்தவழியாகச் சென்றிருப்பார்கள்?”என்றான். “தெரியவில்லை, வேட்டைவழிகளை பெண்களிடம் சொல்வார்களா என்ன?”என்றாள் “மறிமானை உண்ணாமல் திரும்புவதில்லை என்று சொன்னார் பிதாமகர்” பூரிசிரவஸ் பெருமூச்ச்டுவிட்டு “பிதாமகர் நடந்து மலையேறினாரா?”என்றான். “ஆம், அவர்தான் கூடாரப்பொதியையும் படைக்கலக்கூடையும் எடுத்துக்கொண்டார்...” பூரிசிரவஸ் தலையசைத்துவிட்டு திரும்பி சென்று குதிரைமேல் ஏறிக்கொண்டான். சற்றுநேரம் என்னசெய்வதென்றே தெரியாமல் சித்தம் திகைத்து நின்றது

மீண்டும் அரண்மனைக்குச் சென்று காவலர் சாவடியை அடைந்து இறங்கிக்கொண்டு “ஒற்றர்தலைவர் சலகரை நான் பார்க்கவிழைந்ததாக ச்சொல்” என்று சேவகனை அனுப்பிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். அந்த இடைவெளியில் இரு பெண்களின் நினைவும் முட்டி முன்வந்தன. அவற்றை உள்ளே அனுப்ப விழைவதுபோல தலையில் தட்டிக்கொண்டான். ஒன்றுமில்லை, இன்னும் சற்று நேரத்தில் திரும்பிவிடுவார்கள். இப்போதுதான் வெயில் வந்திருக்கிறது. அவருக்கு வெயில் உகந்ததல்ல. திரும்பி வந்துவிட்ட செய்தி எப்போதும் வரும்

சலகரிடம் சிபிரரின் இல்லத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படியும் அவரோ பிதாமகரோ திரும்பி வந்துவிட்டால் செய்தி அறிவிக்கும்படியும் ஆணையிட்டான். அப்போதே தெரிந்துவிட்டது, அவர்கள் உடனே திரும்பி வரப்போவதில்லை என்று. வீரர்களை அறியப்பட்ட அனைத்து வேட்டைவழிகளிலும் அனுப்பி தேடும்படிச் சொன்னான். ”அரசர் அவைகூடச் சொன்னாரா?”என்றான். “இல்லை, இன்றுமாலைதான் அவைகூடுவதாக ஆணை”என்றார் சலகரர்.

அரசரிடம் சென்று பிதாமகரைக் காணவில்லை என்று சொல்லலாமா என்று எண்ணினான். ஆனால் அவர் மேலும் பதற்றம் கொள்வார் என்றுதோன்றியது. “மூத்தாரிடம் இச்செய்தியைச் சொல்லிவிடுங்கள்”என்று சலகரிடமே சொல்லிவிட்டு திரும்பி தன் அறைக்குச் சென்றான். நூல்கள் எதையாவது வாசிக்கலாமென ஏட்டுப்பெட்டியைத் திறந்து புராணகதாமாலிகாவை எடுத்துக்கொண்டு அமர்ந்தான். ஆனால் ஏடுகளை வெறுமே மறித்தபடி சாளரத்தின் ஒளியை துழாவியபடி ஆடிக்கொண்டிருந்த மரக்கிளைகளை பார்த்து அமர்ந்திருந்தான்

உச்சிவேளையில் முதல்செய்தி வந்தது.பிரக்யாவதியின் வலப்பக்கமாக தூமவதி நோக்கிச்செல்லும் வேட்டைப்பாதையில் அவர்கள் இருவரும் செல்வதை இறங்கிவந்துகொண்டிருந்த இடையர்கள் நால்வர் பார்த்திருக்கிறார்கள். “இருவரும் ஊக்கத்துடன் மலையேறிச்சென்றதாகச் சொல்கிறார்கள் இளவரசே” என்றார் சலகரர்.” நூற்றைம்பது வயதானவர். வியப்புதான்”என்றார். “இங்குள்ள தூய பால்ஹிகர்கள் நூறுவயதுக்குமேலும் ஆற்றலுடன் இருக்கிறார்கள், நான் பலரை அறிவேன்”என்றார் சலகரர்.

அதற்குமேல் பாதை இல்லை. தூமவதியின் மடி குற்றிச்செடிகளின் மாபெரும் வெளி. அங்கே சென்று தேடுவதற்கு பெரும் படையே தேவைப்படும். “மறிமான்களை வேட்டையாடுவதென்றால் மலை ஏறி இறங்கி மறுபக்கம் சென்று மேலும் செங்குத்தான சரிவில் ஏறிச்செல்லவேண்டும். மறிமானுக்காகச் சென்று உயிரிழந்தவர்கள் பலர்”என்றார் சலகரர். “அவர் இறக்கமாட்டார் சலகரரே. அவரது ஊழ்நோக்கம் அது அல்ல. ஆனால் மத்ரரும் சௌவீரரும் வரும்போது அவரும் வந்தாகவேண்டும்” என்றான் பூரிசிரவஸ்

மாலைவரை செய்தி ஏதும் வரல்லை.மத்ரநாட்டு அரசப்படை நெருங்கிவிட்டது என்று செய்தி வந்தது. சலன் தன் சேவகனை அனுப்பி அவனை அரசரின் அறைக்கு வரச்சொன்னான். பூரிசிரவஸ் அரசரின் மஞ்சத்தறைக்குச் சென்றபோது அங்கே அந்தச் சிறிய அறைக்குள் ஃபூரியும் சலனும் அமர்ந்திருந்தனர். அருகே பேரமைச்சர் கர்த்தமர் நின்றிருந்தார். அவன் உள்ளே நுழைந்ததும்சோமதத்தர் “நான் அப்போதே சொன்னேன். இதெல்லாம் தேவையில்லை என்று. இந்த மனம்பிறழ்ந்த முதியவரைக்கொண்டு நாம் என்னசெய்யப்போகிறோம்” என்றார்

“என்ன நிகழ்ந்துவிட்டது? பிதாமகர் திரும்பிவந்து விட்டார். அவர் சென்றபோதிருந்த இடத்தில் இருந்து வாழத்தொடங்கிவிட்டார்” என்றான் பூரிசிரவஸ் “நடுவே நூறுவருடங்கள் கடந்துவிட்டன. அதை அவர் அறியவேயில்லை” ஃபூரி புன்னகைசெய்தான். சலன் “ஆம், தந்தையே இளையோன் சொல்வதிலும் உண்மை உண்டு. அவர் இங்கே ஒரு சிறந்த பால்ஹிகவீரரைப்போல் இருப்பதில் என்ன பிழை?அவர்கள் வரட்டும். பிதாமகர் வேட்டையாடச்சென்றிருக்கிறார் என்றே சொல்வோம். அதைவிட அவரைப்பற்றி நாம் சிறப்பாகச் சொல்லும்படி என்னதான் இருக்கிறது?”என்றான்

“ஆனால்..”என்று ஏதோ சொல்லவந்தசோமதத்தர் “எனக்குப்புரியவில்லை. ஏதேனும் செய்துகொள்ளுங்கள்”என்றார். “நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அரசே. தாங்கள் அமைதியாக இருங்கள்”என்றார் அமைச்சர்.சோமதத்தர் “இதெல்லாம் சிறப்பாக நிகழுமென்ற எண்ணமே என்னிடமில்லை. ஏதோ பெரும் பிழை நிகழத்தான் போகிறது”என்றார்சோமதத்தர்

சலன். “அவர் திரும்பி வந்தபின் நாம் விழவறிவிப்போம். அதுவரை இச்செய்தியை முறையாக அறிவிக்கவேண்டியதில்லை. ஆனால் வந்திருப்பவர் நம் ஏழுகுடிகளின் முதல்தந்தை என்ற செய்தியை ஒற்றர்கள் பரப்பட்டும். இன்னும் ஒர் இரவு முடிவதற்குள் அவர் மாபெரும் புராணக்கதைமாந்தராக ஆகிவிடுவார்.அவரைப்பற்றி வியப்புக்குரிய கதைகளை நாம் கேள்விப்படுவோம். அந்தக்கதைகளைப்போல நமக்கு ஆற்றலளிக்கும் விசை வேறில்லை”என்றான்.

“ஆம், உயிருடன் ஒரு தெய்வம். அதைவிட என்ன?”என்று _ புன்னகைசெய்தார். பூரிசிரவஸ் சலனின் தடுமாற்றமில்லாத சிந்தனையை வியந்தான். அவனால் எப்போதுமே அப்படி நடைமுறை சார்ந்து எண்ணமுடிவதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றென்று சிந்தனைகள் தொட்டுத் தொடர்ந்து எங்கோ சென்று முட்டி நிற்க ஓர் எண்ணம் தோன்றும். அதையே அவன் முடிவாக எடுத்துக்கொள்வான். அது சிந்தனையின் விளைவல்ல. சிந்தனைக்கு அப்பாலிருந்து வந்து அவன்முன் விழுவது

சலன் “அவர்களின் நகர்நுழைவுக்கான அனைத்தும் சித்தமாகட்டும். நாளை விடியலின் முதல்கதிரில் மத்ரர்கள் நகர்நுழைகிறார்கள்”என்றார்.”இளவரசி வருவதனால் அரண்மனையிலிருந்து பெண்கள் சென்று எதிரேற்க வேண்டும். அவர்களை முறைமைசெய்வதற்காக நாளைக் காலையிலேயே அவைகூடும். ஐந்துசபையினரும் குடித்தலைவர்களும் அணிக்கோலத்தில் வந்தாகவேண்டும்” என்றான். _ “ஆணை இளவரசே”என்றான். பூரி சிரித்தபடி “ஒற்றை அணியாடைகள் வைத்திருப்பவர்களிடம் சொல்லிவிடுங்கள், மறுநாள் காலையே சௌவீரர்களும் வந்துவிடுவார்கள், அவர்களுக்கும் அதே முறைமைகள் உண்டு என்று”என்றான்

அன்று அரசவை கூடவேண்டியதில்லை என்று சலன் ஆணையிட்டான். ஃபூரி “முதியவர் மறிமான்களை வேட்டையாடிவிட்டுத் திரும்புவார் என்பது உறுதி என்றால் அவர் சென்றதிசையில் ஒரு கல்லை நாட்டி அதுவே அவர் என நாம் உருவகம் செய்யக்கூடாதா என்ன?”என்றான். சலன் “மூத்தவரே, நாங்கள் வேறு உளநிலையில் இருக்கிறோம்”என்றான். ஃபூரி “எனக்குப்புரியவில்லை. உளநிலை குழம்பிய முதியவரை விட கல் உறுதியானது அல்லவா?”என்றார்

பூரிசிரவஸ் அன்றிரவு ஒருமுறை புரவியில் நகரைச் சுற்றிவந்தான். குளிர் தொடங்கியிருந்ததனால் நகரத்தெருக்கள் ஒழிந்துவிட்டிருந்தன. வீடுகளும் ஒளியடங்கி துயின்றன. சில வீடுகளுக்குள் கைக்குழந்தைகளின் அழுகையொலியும் அன்னையர் குரல்களும் கேட்டன.சேவகர்கள் நகரெங்கும் மூங்கில்களை நட்டு தோரணங்களையும் கொடிகளையும் கட்டிக்கொண்டிருந்தனர். நகர்முகப்பில் ஏழன்னையர் ஆலயத்திற்கு அருகே பெரிய வளைவு ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது.

பூரிசிரவஸ் திரும்ப தன் அறைக்கு வந்தபோது குளிர்ந்துவிரைத்திருந்தான். ஆடைகளை கழற்றிவிட்டு உணவருந்திபடுத்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டபோது அன்றைய நிகழ்ச்சிகள் குறுகிய பாதையில் தேங்கி நின்று ஒன்றன்மேல் ஒன்றாக ஏறமுயலும் ஆட்டுமந்தை போல குழம்பின. புரண்டுபடுத்தபடி சிபிநாட்டின் விரிந்த பாலைவெளியை நினைவில் விரித்தான். கண்களுக்குள் ஒளி நிறைந்தது. அது முகத்தை மலரச்செய்தது. ஒரு காலடித்தடம் கூட இல்லாத விரிந்த வெறும்வெளி. மென்மையான பாலைமணலில் காற்று புகைபோல கடந்துசென்றது. மலையிடுக்குகளில் ஓசையின்றி மென்மணல் பொழிந்துகொண்டிருந்தது

தேவிகையின் முகத்தை மிக அண்மையில் பார்த்தான். அவளுடைய தூயபால்நிறம் அவள் முகத்திலிருந்த மென்மயிர்பரவலை நீலநிறமாகக் காட்டியது. மேலுதட்டிலும் கன்னங்களிலும் நெற்றிவிளிம்பிலும். அவள் காதோரமும் முன்னெற்றியிலும் சுழிகள் இருந்தன. சிறிய செந்நிறப்புள்ளிகளாக பருக்கள். பருக்கள் ஏன் பெண்களை உணர்ச்சிகரமானவர்களாகக் காட்டுகின்றன? அவன் அவளை நோக்கியபடி துயிலில் ஆழ்ந்தான்

காலையில் சேவகன் வந்து மணியோசை எழுப்பி அழைக்க எழுந்துகொண்டான். “இன்னும் விடியவில்லை அரசே. ஆனால் மூத்தவர்கள் நீராடி அணிகொண்டிருக்கிறார்கள்”என்றான் சேவகன். அவன் எழுந்து கைகளை உரசிக்கொண்டு புன்னகைசெய்தான். ஒவ்வொருநாளும் துயில்கையில் அவள் நினைவுடன் ஆழ்ந்து அவள் நினைவுடன் எழுந்துகொண்டிருந்தான். ஒரு பெண்ணை அப்படி அவனால் நினைக்கமுடியுமென்பதை எண்ணவே வியப்பாக இருந்தது. புன்னகையுடன் சென்று நீராடி உடைமாற்றினான். உணவருந்திக்கொண்டிருக்கையில் வெளியே முரசுகள் முழங்கக்கேட்டான்.

வெளியே அரண்மனையின் பிறைவடிவ முற்றம் முழுக்க வண்ணத்துணித்தோரணங்களாலும் கொடிகலாலும் அணிசெய்யபப்ட்டிருந்தது. எந்த ஒழுங்கிமில்லாமல் சேவகர்களும் வீரர்களும் முட்டிமோத தலைப்பாகைகள் அஞ்சிய பறவைக்கூட்டம் என காற்றில் சுழன்றன.படைக்கலங்கள் மோதி ஒலித்தன. ஒரு குதிரை வீரன் அவனிடம் “அகன்றுசெல் மூடா” என்றபின் “பொறுத்தருள்க இளவரசே” என்றான்.”பொறுத்தருள்க “என்றபடி குதிரையிலிருந்து இறங்கினான்

பூரிசிரவஸ் அக்குதிரைமேல் ஏறிக்கொண்டு “நான் அணிச்செயல்களைப் பார்த்துவருகிறேன்” என்று சொல்லி கிளம்பினான். நகரம் பதற்றமும் பரபரப்புமாக முட்டிமோதுவதைக் கண்டான். புரவிக்கு வழிவிட எவராலும் முடியவில்லை. மலைமக்கல் தன்னந்தனிமையில் மலைகளில் வாழ்பவர்கள். அவர்கள் ஊருக்கு வருவதே முட்டிமோதுவதற்காகத்தான். அல்லது அவர்களுக்கு கூட்டமாக திரளவோ செயல்படவோ தெரியவில்லை. அனைவரும் கிளர்ச்சிகொண்ட வாத்துக்கள் போல தலையை நீட்டி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்

ஏழன்னையர் கோயிலருகே அணிவாயில் எழுந்திருந்தது. அதில் மறிமான் பொறிக்கப்பட்ட பால்ஹிகக்கொடியுடன் மத்ரநாட்டுக் கலப்பைக்கொடியும் கொடி பறந்தது. அவனைக்கண்டதும் அங்கே நின்றிருந்த சுதாமர் அருகே வந்து வணங்கி “கணவாயை கடந்துவிட்டார்கள் இளவரசே. வரவேற்புப்படை சென்றிருக்கிறது”என்றார். “சாலையில் நின்றிருக்கும் பசுக்களை அகற்றக்கூடாதா?”என்றான் பூரிசிரவஸ். சுதாமர் சஞ்சலத்துடன் நோக்கியபின் “பசுக்களையா?”என்றார். அவர் அதை சிந்தித்திருக்கவில்லை என்று தெரிந்தது.

”ஆம், பசுக்கள் சாலையில் நின்றால் எப்படி அணியூர்வலம் சாலையில் செல்லமுடியும்... செய்யும்ங்கள்” என்றான். பின்னர் “பிதாமகரைப்பற்றிய செய்தி ஏதேனும் கிடைத்ததா?”என்றான். “இல்லை இளவரசே” என்றார் சுதாமர் “ஒற்றர்கள் செல்லாத இடமில்லை.சூக்ஷ்மபிந்துவின் உச்சியில் ஏறிக்கூட நோக்கிவிட்டார்கள். எங்கும் அவர்கள் தென்படவில்லை” பூரிசிரவஸ் “மறிமான் வேட்டையாட செல்லக்கூடிய இடங்களென சில மட்டும்தானே உள்ளன?”என்றான். “அவ்விடங்களிலெல்லாம் நோக்கிவிட்டார்கள்” என்றார் சுதாமர். பூரிசிரவஸ் தலையசைத்தான்

திரும்ப அரண்மனைக்கு வந்தான். ஏதோ ஒருவகையில் அன்றைய நாள் களியாட்டத்திற்குரியது என மக்கள் முடிவெடுத்துவிட்டிருந்தனர். கோடைகலாத்தில் அவர்கள் களியாட்டத்திற்கான நாட்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே வண்ணஉடைகளுடனும் கூந்தல்களில் மலர்க்கொத்துகளுடனும் தெருக்களில் முட்டிமோதிக்கொண்டிருந்தனர். புதைக்கப்பட்ட மதுக்கலங்களெல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன என்று மணம் சொல்லியது. சாலையில் பார்த்த பெரும்பாலானவர்கள் வாயை அழுத்தி உதடை விதவிதமாக நெளித்து புருவத்தைத் தூக்கியிருந்தார்கள்

அரண்மனை முற்றத்திற்கு அவன் செல்லும்போதுசோமதத்தர் கிளம்பிக்கொண்டிருந்தார். அவன் அன்னை சுதுத்ரியும் தங்கை சித்ரிகையும் அணிக்கோலத்தில் வந்து இடைநாழியில் நின்றிருக்க உள்ளிருந்து தந்தை மிகமெல்ல நடந்துவந்தார். தொடர்ந்து ஏதோ பேசியபடி சால்வையை அள்ளி அள்ளி போட்டபரி தலைமையமைச்சர் கர்த்தமர் வந்தார் பட்டு மேலாடையை எப்படி போடுவதென்று அவ்ருக்குத்தெரியவில்லை. அனைத்து ஆடைகளையும் இறுக்கமாக உடலுடன் சுற்றிக்கொண்டுதான் அவருக்குப்பழக்கம். ஆடைகளில் தழைந்தபடியே இருக்கவேண்டும் என அணிச்சேவகன் சொல்லியிருந்தான் .சரியும் ஆடை அவரை நிலையழிய்ச்ச்செய்தது

ஃபூரி அவனருகே வந்து “நீர்மலம் கழிக்கும் குழந்தையை கையில் வைத்திருக்கும் அன்னையைப்பொலிருக்கிறார் தந்தை”என்றான் பூரிசிரவஸ் பல்லைக்கடித்தான். எப்படி இவரால் எப்போதும் இந்த விழிகளுடன் இருக்கமுடிகிறது என எண்ணிக்கொண்டான். அவருடைய துணைவியாகிய சிவி அரசிளங்குமரி சதயை உள்ளிருந்து சேடியுடன் வந்தாள். ஒவ்வொன்றும் எல்லாவகையான குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நிகழ்வதை பூரிசிரவஸ் கண்டான். பாஞ்சாலத்தில் நூறுமுறை ஒத்திகைபார்க்கப்பட்ட நாடகம்போல நடந்தவை அவை. பேரரசி இடைநாழியில் காத்து நின்றிருப்பதை எங்கும் நினைத்தேபார்க்கமுடியாது. அவள் தன் மேலாடை நுனியை கையால் சுழற்றிக்கொண்டிருப்பதை கவிஞர்கள் மட்டுமே கற்பனைசெய்ய முடியும்

சோமதத்தர் சலனிடம் ஏதோ ஆணையிட்டுவிட்டு வந்து சுற்றும்நோக்கினார். அதன்பின்னர் எவரோ கைகாட்ட மங்கல இசை முழங்கியது. வாழ்த்தொலிகள் எழுந்தன. அவர் தன் புரவிமேல் ஏறிக்கொண்டதும் கோல்காரன் முன்னால் நின்ற புரவியில் ஏறிக்கொண்டான். அவனுக்குப்பின்னால் அணிப்பரத்தையரும் இசைச்சூதரும் சிறிய குழுக்களாக வந்து நின்றனர். ஃபூரி “எதையோ மறந்துவிட்டார்கள். முக்கியமான ஒன்று”என்றான்

சலன் சினத்துடன் பின்னாலிரூந்து கைகாட்டி ஆணையிட ஒருவன் ஓடிச்சென்று ஓரமாக வைக்கப்பட்டிருந்த பால்ஹிகர் நாட்டுக்கொடியை எடுத்துவந்தபோதுதான் அது என்ன என்று பூரிசிரவஸ்னுக்குப்புரிந்தது. கொடியுடன் அவன் தடுமாறி அழைக்க கொடிச்சேவகன் ஓடிச்சென்று தன் குதிரையில் ஏறி வந்து கோல்காரனுக்குப்பின்னால் கொடியுடன் நின்றுகொண்டான். சலன் சினத்துடன் ஏதோ சொன்னபடி உள்ளே சென்றான்.

ஃபூரி “இப்போதே போவது எதற்காக? அங்கே சென்று வெயிலில் காத்து நிற்கவா?”என்றான். “இல்லை, இன்று ஊர் இருக்கும் நிலையில் அங்கே செல்வதற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள்”:என்றான் பூரிசிரவஸ். அணியூர்வலம் முன்னால் சென்றது. “நானும் செல்லவேண்டும். பட்டத்து இளவரசன் எங்கே என்று மத்ரர் கேட்ட்டால் தந்தை அருகே நிற்கும் வேறு எவரையாவது சொல்லிவிடுவார்”என்றபடி ஃபூரி ஓடிச்சென்று அவனுக்காக சேவகன் பிடித்திருந்த குதிரையில் ஏறிக்கொண்டான். அரண்மனை மகளிர் அவர்களுக்கான அணிமஞ்சல்களில் ஏறிக்கொண்டர். ஊர்வலம் குதிரைகள் ஒன்றை ஒன்று இடிக்க அரண்மனை முற்றத்தைக் கடந்தது

பூரிசிரவஸ் உள்ளே சென்றான். சலிப்பாக இருந்தது. தன் அறைக்குச் சென்று முடங்கிவிடத்தான் தோன்றியது. ஆனால் வேறுவழியில்லை. சேவகன் அவனிடம் “மூத்தவர் தங்களை அழைத்தார்”என்றான். பூரிசிரவஸ் சென்றபோது அரசவையில் சலன் நின்றிருந்தான். சினத்துடன் இடையில் கையை வைத்து கூவிக்கொண்டிருந்தான். “மூத்தவரே”என்றான் பூரிசிரவஸ் “வந்துவிட்டாயா? இந்த அரசவையை நீ நின்று ஒழுங்குசெய். பலமுறை சொல்லியிருந்தேன், வழக்கமான அரியணையில் அரசர் அமரப்போவதில்லை என்று. மூன்று அரசர்களுக்கும் நிகரான அரியணைகளை கீழே போடு என்றேன். அதைச்செய்துவிட்டு அரசியின் அரியணையை மட்டும் மேலே இருக்கும் அரியணைக்கு அருகிலே போட்டிருக்கிறார். ஒழிந்த அரியணைக்கு அருகில் அரசி அமர்ந்திருகக்வேண்டுமாம்... மூடர்கள்”

பூரிசிரவஸ் “நம் அரசில் இதெல்லாம் புதியவை அல்லவா மூத்தவரே”என்றான். “எனக்கு உண்மையிலேயே அச்சம் இளையோனே. நம்குடிகளை நாம் நம்ப முடியாது. பத்துகுலங்களும் ஒன்றாகிறோம். அதைக்கேட்டு அஸ்தினபுரியோ துவாரகையோ படைகொண்டுவந்தால் என்ன செய்ய? இவர்களை அழைத்துக்கொண்டு போருக்குச் செல்லமுடியுமா? போர்க்களத்தில் இரண்டு குலங்கள் எங்களுக்கு வெற்றிலைபாக்கு வைத்து அழைப்பு வரவில்லை என்று சினந்து திரும்பிவிடுவார்கள். மூடர்கள்,மலைமூடர்கள்”

பூரிசிரவஸ் புன்னகைத்தான். “நீயே ஒழுங்கு செய். மேலிருக்கும் அரியணை பால்ஹிகர்ருக்கு. பிறர் கீழே அமர்கிறார்கள். மூன்று அரியணைகளில் தந்தையும் சல்லியரும் அவரது இளையோன் ^ரும் அமர்வார்கள். நாளை இன்னொரு அரியணை தேவை. சௌவீரர் அவர் மட்டும்தான் வருகிறார்” என்றபின் திரும்பியபோது நிழல் ஒன்று சரிந்தது. ஓரிரு குரல்கள் ஒலித்தன”என்ன என்ன?” என்றான் சலன். “பாவட்டா ஒன்று அவிழ்ந்து விழுந்துவிட்டது இளவரசே, இதோ கட்டுகிறோம்”:

”பார்த்தாயா? அது மத்ரரின் தலையில் அவிழ்ந்து விழாமலிருந்தது என் நல்லூழ்”என்றபடி சலன் உள்ளே சென்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சேவகன் அவன் சிரிப்பதைக் கண்டு தானும் சிரித்து “அது நான்குமுறை அவிழ்ந்து விழுந்துவிட்டது... அதைக்கண்டு மூத்தவர் மாளிகையே மதுவருந்தியிருக்கிறது. இடையில் ஆடை நிற்கவில்லை என்கிறார்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்

அவன் அவையை ஒழுங்குசெய்து முடித்தபோது எரியம்புகள் வானில் வெடிக்கும் ஒலியும் நகரமே மழை எழுந்ததுபோல ஓசையிடுவதும் கேட்டது. வெளியே வந்தான். “அவர்கள் நகர்நுழைகிறார்கள் இளவரசே”என்றான் சேவகன். “நகர்ச்சாலைகளை பசுக்களை ஒதுக்கிச் சீரமைக்கச் சொன்னேனே?”என்றான் பூரிசிரவஸ் “ஆம், செய்துவிட்டோம். பசுக்கள் நின்றவரை நன்றாக இருந்தது. இப்போது அந்த இடத்தில் குடிகாரர்கள் நிற்கிறார்கள். அவர்களை அகற்றுவது கடினம்” என்றான் சேவகன்

பூரிசிரவஸ் தன் புரவியில் ஏறி நகருக்குல் நுழைந்தான். அது நகரமாகவே இருக்கவில்லை. ததும்பும் மக்கள்திரள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் நோக்கி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். மரவுரியாடைகளும் கம்பிளியாடைகளும் அணிந்த குழந்தைகள் தந்தையர் தலைமேல் மிதந்து அமர்ந்து விழித்து நோக்கின. வானில் எரியம்புகள் எழுந்து வெடித்தபடியே இருந்தன. நகரின் கூச்சலில் முரசுகளும் கொம்புகளும் எழுப்பிய பேரொலி மறைந்தது

அவன் ஏழன்னையரின் ஆலயமுற்றத்துக்குச் சென்றபோது மத்ர மன்னர்கள் இருவரும் வந்து முறைமைகளும் முகமன்களும் முடிந்திருந்தன. உரிய குளறுபடிகளுடன் என்று அவன் நெஞ்சில் கரந்த புன்னகையுடன் எண்ணிக்கொண்டபோதே சுதாமர் ஓடிவந்து “இளவரசே, இரண்டு பொற்தாலங்கள்தான் வந்தன. ஒன்று வரவில்லை. ஆகவே மத்ரமன்னர்களை மட்டுமே தாலமுழிந்து வரவேற்றோம். இளையோரை விட்டுவிட்டோம்”என்றார். பூரிசிரவஸ் சினத்தை அடக்கினான். “பிற தாலங்களை அரண்மனையிலேயே விட்டுவிட்டார்கள்” பூரிசிரவஸ் “சரி, நமது முறைப்படி இளவரசர்களை அரண்மனை வாயிலில்தான் தாலமுழிந்து வரவேற்போம் என்று சொல்லிவிடலாம்...அதற்கு ஆவன செய்யுங்கள்” என்றான்

அவன் அரசரின் அகம்படியினரின் பின்நிரையில் சென்று நின்றான். மத்ர மன்னர்களைசோமதத்தர் வரவேற்று முடிந்ததும் பூரி அவர்களை கால்தொட்டு வணங்கினான். பின்னர் சல்லியரின் மைந்தர்களான ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் தழுவி வரவேற்றான். அவர்களிடம் அவன் ஏதோ சொல்ல அவர்கள் திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கினர். முரசுகளும் கொம்புகளும் மங்கலஇசைக்கலங்களும் வாழ்த்தொலிகளும் சூழ்ந்த பேரொலிக்குள் ஒரு குழந்தை வீரிட்டலறியது

அரசி முன்னால் சென்று சல்லியரின் துணைவி விப்ரலதையை வணங்கி முகமன் சொல்லி வரவேற்றாள். அருகே தியுதிமானின் துணைவி பிரசேனை நின்றிருந்தாள். அப்போதுதான் பூரிசிரவஸ் விஜயையை நினைவுகூர்ந்தான். அவன் நினைவுகூர்ந்ததை எவரெனும் கண்டிருப்பார்களோ என்ற ஐயத்துடன் அவன் சுற்றிலும் நோக்கினான். அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. மறுபக்கம் அணிப்பரத்தையர் கூடி நின்றிருந்தனர். அனைவருமே அரசிகளாகத் தோன்றினர்.

குளிர்ந்த காற்று ஒன்று வீசி அவன் உடல் சிலிர்த்தது. உண்மையிலேயே காற்று வீசியதா என்று மீண்டும் எண்ணிக்கொண்டான். குழல் அசைந்தபோதுதான் காற்று வீசியதென்று தெரிந்தது. அவன் தங்கை சித்ரிகை கையில் முன்னால் சென்றாள். எதிரில் அணிப்பரத்தையர் நடுவே இருந்து உயரமற்ற சிறு பெண் ஒருத்தி வந்து நின்றாள். பீதர்களின் சாயல் கொண்டவள். மிகச்சிறிய பரந்த மூக்குகொண்ட மஞ்சள்செப்பு முகம். கன்னங்கள் சிவந்திருந்தன.பீதர்களுக்குரிய சிறிய விழிகள். கரிய நேர்குழல்கற்றைகளை பின்னால் கட்டி இறக்கி அவற்றில் மணிச்சரங்களால் அணிசெய்திருந்தாள்

பூரிசிரவஸ் ஏமாற்றத்துடன் விழிகளை விலக்கிக்கொண்டன். சித்ரிகை அவளுக்கு குங்குமம் இட்டு மலர் அளித்து வரவேற்றாள். அவன் மீண்டும் அவளை நோக்கினான். பெண் என்றே அவளை நினைக்கத் தோன்றவில்லை.மரச்செப்புபோலவே இருந்தாள். அல்லது தந்தப்பாவை போல. பொன்மூங்கில் போன்ற கைகள். பீதர்களின் நீள் கலம் போன்ற மெலிந்த கழுத்து. சிறிய செம்மலர் போன்ற உதடுகள். அவள் கண்களும் துழாவிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்

அவன் உள்ளத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று நினைத்துக்கொண்டு அவன் நோக்கி நின்றான். அவள் நோக்கு அவன் நோக்கை வந்து தொட்டது. அவள் சற்றே அதிர்வதும் விழிகளை விலக்கிக்கொள்வதும் தெரிந்தது. அத்தனை தொலைவிலேயே அவள் கழுத்தில் ஏற்பட்ட புளகத்தை காணமுடிந்தது. அவன் உள்ளத்திலும் இளங்குளிர்காற்று பட்டது போலிருந்தது, அவன் அவளிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டான். சல்லியரும் தியுதிமானும்சோமதத்தர்ரும் ஏழன்னையர் ஆலயத்திற்குள் நுழைந்தனர்

தொடர்ந்து அவன் அன்னையும் தங்கையும் மத்ரநாட்டு அரசியர் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றனர். அவள் திரும்பிப்பார்ப்பாள் என்று பூரிசிரவஸ் எண்ணினான். பார்க்கிறாளா என்று அவனுள் சிறிய பதற்றம் எழுந்தது. அவள் தலைகுனிந்து ஆடையை கையால் தூக்கிபடி ஆலயத்தின் வளைப்பின் படியை நோக்கியபின் திரும்பி அவனை நோக்கினாள். மலையிச்சி திரும்புகையில் ஆழத்தில் அடிவாரத்தின் நீர்ச்சுனை மின்னுவதுபோல மெல்லிய புன்னகை அவள் இதட்மிகச்சிறிய புன்னகை வந்து சென்றது. உள்ளே சென்றபோது அவள் உடலில் ஒரு சிறிய துள்ளல் இருந்தது

பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். சுதாமர் அவனருகே வந்து “இளவரசே, குடிகாரர்கள் என்னையே அடிக்க வருகிறார்கள். அத்தனைபேரும் மலைப்பழங்குடிகள்...அவர்களை அடிக்க நம்மால் முடியாது”என்றார். பூரிசிரவஸ் வெடித்துச்சிரித்து “சரி அவர்களிடமே கூட்டத்தை கட்டுப்படுத்தச் சொல்லிவிடுங்கள்”என்றான் சுதாமர் திகைத்து நோக்க சிரித்தபடியே புரவியைத் தட்டினான். அவளுடைய சிறிய செப்புடல் கண்ணில் எஞ்சியிருந்தது. அது மிக அழகானதாக ஆகிவிட்டிருந்தது

பகுதி 6 : மலைகளின் மடி - 8

அவை நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியே சென்றபின் சலன் பூரிசிரவஸ்ஸிடம் “நாளை காலையே சௌவீரர் வருகிறார். அவை நாளைக்கு வேறுவகையில் அமையவேண்டும். அனைத்து அரசர்களும் நிகரான அரியணையில் அமரவேண்டும். அதை அமைத்தபின் நீ அறைக்கு செல். நான் உளவுச்செய்திகளை நோக்கவேண்டியிருக்கிறது” என்றபடி சென்றான்.

ஃபூரி “அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இங்குள்ளார்கள் என்று உண்மையிலேயே சலன் நம்புகிறான். இப்படி ஒரு நாடு இருப்பதை அஸ்தினபுரிக்கு கண்டுசொல்லத்தான் முதலில் ஓர் ஒற்றன் தேவை” என்றான்.

பூரிசிரவஸ் புன்னகைத்தான். சேவகர்கள் அவையை தூய்மைசெய்யத் தொடங்கினர். “நான் சென்று இளைய மத்ரர் சூதாடுவதில் விருப்புள்ளவரா என்று கேட்டுப்பார்க்கிறேன். தியுதிமான் என்று பெயருள்ளவர்கள் சிறப்பாக வெல்லக்கூடியவர்கள் என்று சொல்லிப்பார்க்கிறேன். சரியான எதிர் கை அமைந்து நெடுநாட்களாகின்றன. சல்லியர் எனக்கு மூத்தவர். அவரது மைந்தர்கள் மிக இளையவர்” என்றபின் புன்னகையுடன் “உன் இளவரசியை பார்த்தேன். கூரிய மூக்கை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யபோகிறாய்? அந்த சிபிநாட்டு இளவரசிக்கு இவளுக்கும் சேர்த்தே மூக்கு இருக்கும்” என்றான் ஃபூரி. பூரிசிரவஸ் “ஆம் மூத்தவரே” என்றான். “மூக்கு பற்றிய பூசல் தொடங்கட்டும்...” என்றபின் அவன் சென்றான்.

சேவகர்கள் அவையை தூய்மைசெய்து திரைச்சீலைகளை கட்டி முடித்து அரியணைகளை மீண்டும் ஒழுங்கமைத்து முடிக்கையில் இரவு பிந்திவிட்டது. பூரிசிரவஸ் உடலை துயில் வந்து அழுத்தியது. நேரம் செல்லச்செல்ல துயிலின் எடை கூடிக்கூடி வந்தது. எப்போது முடிப்பார்கள் என்ற சலிப்புடன் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தான். ஐயம் போக இறுதியாக ஒருமுறை நோக்கியபின் “இதில் எந்த மாறுதல் செய்வதாக இருந்தாலும் எனக்கு தெரிவிக்கப்படவேண்டும். அரசரோ மூத்தவரோ ஆணையிட்டால்கூட” என்றான். சேவகர்தலைவன் “ஆணை” என்றான். அவன் விழிகளிலும் துயில் இருந்தது.

பூரிசிரவஸ் வெளியே வந்து அவைக்கூடத்தை பூட்டச்செய்து தாழ்க்கோலை தலைமைச்சேவகனிடம் கொடுத்தனுப்பிவிட்டு இடைநாழி வழியாக சென்றபோது மெல்லிய வளையலோசையை கேட்டான். நாகத்தை உணர்ந்த புரவி என அவன் உடல் சிலிர்த்துக்கொண்டது. சிரித்தபடி அவன் தங்கை சித்ரிகை வெளியே வந்து “யாருடைய வளையல் என்று நினைத்தீர்கள்?” என்றாள். “இங்கே என்ன செய்கிறாய்?” என்றான். “ஏன்? நான் இங்கே வரக்கூடாதா?” என்றாள். “சற்று முன்னால் வந்திருந்தால் அவைக்கூடத்தை துடைக்கச் சொல்லியிருப்பேன்...” என்றான்.

“இத்தனை நேரம் அதைத்தான் செய்தீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் சிரித்தபடி அவள் செவியைப் பிடித்தபோதுதான் தூணுக்கு அப்பால் விஜயை நின்றிருப்பதை கண்டான். அவளுடைய செந்நிற பூப்பின்னல் ஆடைதான் முதலில் தெரிந்தது. சித்ரிகையின் காதை விட்டுவிட்டு “மூடத்தனமாக பேசுவாள்” என்றான். விஜயை சிறிய விழிகளால் நோக்கி புன்னகைசெய்தாள். அவள் பற்கள் மிகச்சிறியவையாக இருந்தன. தோள்கள் இடை கைகள் எல்லாமே மிகச்சிறிதாக கங்காவர்த்தத்தின் தந்தப்பாவை போலிருந்தன. ஒருகையால் அவளை தூக்கிவிடலாமென்று எண்ணினான்.

சித்ரிகை “இவள் தங்களை பார்க்க விழைகிறாள் என்று அறிந்தேன். எப்படி அறிந்தேன் என்று கேளுங்கள்” என்றாள். “சொல்” என்றான். “கேளுங்கள்” என அவள் அவன் கையை அடித்தாள்.

சித்ரிகையின் பேச்சில் எப்போதுமே இருக்கும் சிறுமிகளுக்குரிய எளிய அறிவுத்திறனும் சிரிப்பும் அவனை புன்னகைக்க வைத்தது, “சொல்லுங்கள் இளவரசி” என்றான். “இவள் இங்குள்ள சேடியிடம் கேட்டாள். சேடி என்னிடம் சொன்னாள்.” பூரிசிரவஸ் “நுட்பமாக புரிந்துகொள்கிறாய். அந்தச்சேடி உன் உளவுப்பெண்ணா?” என்றான். “எப்படி தெரியும்?” என்றாள் சித்ரிகை. பூரிசிரவஸ் சிரித்தபடி விஜயையை பார்த்தான். அவளும் சிரித்தாள். “ஆகவேதான் நான் இவளை கூட்டிவந்தேன். நான் இங்கே நிற்கலாமா?”

“மலைமகள் விரும்பியவரை பார்க்கவும் பேசவும் தடை என்ன உள்ளது?” என்றான் பூரிசிரவஸ் விஜயையை நோக்கி. “ எதற்காக இவள் உதவி?” விஜயை “உதவியை நான் கோரவில்லை. அவளே அதை அளித்தாள்” என்றாள். சித்ரிகை “நான் கதைகளிலே வாசித்தேன். தோழியின் உதவியுடன்தான் நாயகி ஆண்களை பார்க்கச்செல்லவேண்டும். தனியாக செல்பவளை அபிசாரிகை என்கிறார்கள்.”

பூரிசிரவஸ் சிரித்து அவள் தலையைத் தட்டி “சரி, நீ உன் அறைக்கு செல். நான் இவளிடம் பேசிக்கொள்கிறேன்” என்றான். சித்ரிகை “நான் உடனே துயின்றுவிடுவேன். அவளையே துயிலறைக்கு செல்லும்படி சொல்லுங்கள். நான் நாளையும் காலையில் எழுந்தாக வேண்டியிருக்கிறது” என்றபடி சென்றாள்.

“மிக எளியவள்” என்றான் பூரிசிரவஸ். “மலைக்குடிப்பெண். இளவரசி என்பது ஆடையணிகளில் மட்டுமே.” விஜயை புன்னகையுடன் “நானும் மலைக்குடிமகள்தான்” என்றாள். “நான் அதையே விரும்புகிறேன்... குறைவாக நடித்தால் போதுமே” என்றான். “தங்களை நான் சந்தித்துப்பேசி என் எண்ணத்தை தெரிவிக்கவேண்டும் என்றார் என் அன்னை. தங்களை என் மணமகனாக அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். அதற்காகவே வந்தேன்.”

“மலைமகளாகவே இருந்தாலும் இந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை கூடாது” என்று அவன் சிரித்தான். “வருக! நந்தவனத்தில் அமர்ந்து பேசுவோம்.” விஜயை “வெளியே குளிராக இருக்காதா?” என்றாள். “இல்லை, இங்கே மேலே கூரையிட்ட நந்தவனம் ஒன்று உண்டு. என் இளைய தமையன் கிம்புருடநாட்டில் கண்டது அது” என்றான். “கொட்டகைக்குள் தோட்டமா?” என்றபடி அவள் அவனுடன் வந்தாள்.

அரண்மனையின் பின்பக்கம் பெரிய மரப்பட்டைகளால் கூரையிடப்பட்ட பெரிய கொட்டைகை நூற்றுக்கணக்கான மெல்லிய மூங்கில்தூண்களின் மேல் நின்றிருந்தது உள்ளே மரத்தொட்டிகளில் பூச்செடிகளும் காய்கறிச்செடிகளும் இடையளவு உயரத்திற்கு வளர்ந்து நின்றன. அவள் திகைப்புடன் நோக்கி “இவற்றில் எந்தச்செடியையும் நான் பார்த்ததே இல்லை” என்றாள். “இவை கீழே கங்காவர்த்தத்தில் வளர்பவை. இங்குள்ள குளிரில் இவற்றின் இலைகள் வாடிவிடும். ஆகவேதான் கொட்டகைக்குள் வைக்கிறோம்.”

“வெயில்?” என்றாள். “ஒவ்வொருநாளும் இவற்றை வெளியில் அப்படியே இழுத்து வைத்துவிடுவார்கள்” என்றான். அவள் அப்போதுதான் அந்தத் தொட்டிகளுக்கு அடியில் சக்கரங்களை பார்த்தாள். புன்னகையுடன் “நல்ல திட்டம்” என்றாள். “அரண்மனை என்றால் ஏதாவது ஆடம்பரமாக தேவை என்று மூத்தோர் நினைத்தார். ஆனால் நான் இதை விரும்பத் தொடங்கிவிட்டேன்” என்றான். "இவற்றில் பெரும்பாலான செடிகள் குளிர்காலத்தில் குறுகிவிடும். சிலசெடிகள் மறையும். ஆனால் கோடையில் மீட்டு கொண்டுவரலாம்.”

அவள் செடிகளை நோக்கிக்கொண்டே சென்றாள். “காலையில் பார்த்தால் வண்ணங்கள் நிறைந்திருக்குமென நினைக்கிறேன்.” பூரிசிரவஸ் “ஆம்” என்றான். “அரண்மனைப் பெண்களைப்போல வெளிக்காற்றுக்கு அஞ்சி சிறைப்பட்டவை...” என்றாள். “இங்கே நம் மலைக்குடிகளில் இற்செறிப்பு என ஏதுமில்லை. கங்காவர்த்தத்தின் ஷத்ரிய இளவரசிகள் மூடுபல்லக்கில் மட்டுமே வெளியே செல்லமுடியும்.”

அவள் இயல்பாக “எல்லோருமா?” என்றாள். “காம்பில்யத்தின் இளவரசியைப்பற்றி அவ்வண்ணம் கேள்விப்படவில்லையே!” மிக நுட்பமாக அவள் அங்கே வந்துசேர்ந்ததை உணர்ந்ததும் அவன் புன்னகைசெய்தான். “என்ன கேள்விப்பட்டாய்?” என்றான். “பேரழகி என்றார்கள். ஆனால் ஆண்களைப்போல போர்க்கலையும் அரசுசூழ்தலும் அறிந்தவள். எங்கும் முன்செல்லும் துணிவுள்ளவள். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆகப்போகிறவள்.” பூரிசிரவஸ் வாய்விட்டு சிரித்தான்.

“என்ன?” என்று அவள் புருவத்தை சுளித்துக்கொண்டு கேட்டாள். “ஒன்றுமில்லை. அவளைப்பற்றி அரண்மனைப்பெண்கள்தான் கூடுதலாக அறிந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம் அதிலென்ன? அரண்மனைப்பெண்களெல்லாம் அவளைப்போல் ஆக ஏங்குபவர்கள்தானே?” அவன் அவளை கூர்ந்து நோக்கி “ஏன்?” என்றான். “ஐந்து கணவர்கள் காலடியில் கிடக்கிறார்கள். ஒரு பேரரசின் மணிமுடி. வேறென்ன வேண்டும்?” பூரிசிரவஸ் புன்னகைத்து “ஐந்து கணவர்கள் வேண்டுமா உனக்கும்?” என்றான்.

அவள் சீற்றத்துடன் திரும்பி “வேண்டாம். ஏனென்றால் எனக்கு அதற்கான திறன் இல்லை” என்றாள். “ஆனால் நான் பொறாமைப்படுவேன்.” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “சிரிப்பு எதற்கு?” என்றாள். “கீழே ஆரியவர்த்தத்தின் அரசிகள் இத்தனை வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.” அவள் சற்று சீற்றத்துடன் "இல்லை, எல்லா ஆண்களும் ஓர் இளிவரலாகவே அதை சொல்லத் தொடங்கிவிட்டனர். இங்கே மலைமேல் பத்துகணவர்களைக்கொண்ட பெண்கள்கூட உள்ளனர். என் பாட்டிகளில் இருவருக்கு நான்கு கணவர்கள் இருந்தனர்” என்றாள். “நான் இளிவரலாக அதைச் சொல்லவில்லை” என்றான் பூரிசிரவஸ்

“சொல்லுங்கள். அவள் எப்படி இருந்தாள்?” பூரிசிரவஸ் ஒருகணம் சிந்தித்து “அவளை அழகு என்று சொல்லமாட்டேன். நோக்கும் எவரையும் அடிபணியவைக்கும் நிமிர்வு அது. தெய்வங்களுக்கு மட்டும் உரிய ஒரு ஈர்ப்பு...” என்றான். அவள் “அதைத்தான் அழகு என்கிறார்கள். அவளையே கொற்றவை வடிவம் என்று சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள். அவள் விழிகள் மாறுபட்டன "நீங்கள் வில்தீண்டவில்லையா?” என்றாள். “இல்லை. நான் வெறுமனே விழவுகளுக்காகவே சென்றேன்.” அவள் விழிகளை பூக்களை நோக்கித் திருப்பி “ஏன்? அவளை நீங்கள் விழையவில்லையா?” என்றாள்.

“இல்லை என்று சொன்னால் பொய்யாகும். ஏனென்றால் எந்த ஆணும் தன்னை சக்ரவர்த்தியாகவே தன் பகல்கனவில் எண்ணிக்கொள்கிறான்...” என்றான். “ஆனால் அவளை நேரில் கண்டதுமே ஒன்று தெரிந்துகொண்டேன். நான் மிக எளியவன். அந்த உண்மையை நான் இல்லை என கற்பனைசெய்துகொள்வதில் பொருளில்லை. ஆகவே களமிறங்கவில்லை” அவள் ஓரவிழியால் அவனை வந்து தொட்டு “இங்கே நீங்கள் இளவரசர் மட்டுமே என்பதனாலா?” என்றாள்.

“அதில் எனக்கு இழிவென்பது ஏதுமில்லை. என் தமையனுக்கு கீழ்ப்பட்டிருப்பதில் நிறைவே” என்றான். “ஆனால் என் அகம் சொல்கிறது, நான் எங்கோ நாடாள்வேன் என. அது எங்கே என எனக்குத் தெரியாது. ஆனால் மணிமுடி சூடுவேன். போர்களில் இறங்குவேன். என் வாழ்க்கை இந்த மலைநாட்டைவிட பெரியதுதான்.” பூரிசிரவஸ் அவள் முகம் சிவப்பதைக் கண்டான். மூச்சுத்திணறுபவள் போல நெஞ்சில் கைவைத்தாள். அப்போதே அவள் கேட்கப்போவதென்ன என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.

“அது சிபிநாடாக இருக்குமா?” என்றாள். ஒரு கணம் அவனை நோக்கிவிட்டு விழிதிருப்பிக்கொண்டாள். பூரிசிரவஸ் புன்னகைத்து “நான் எதையும் மறைக்க விழையவில்லை. சிபிநாட்டுக்குச் சென்றேன். அங்கே அரசரின் மகள் தேவிகையை பார்த்தேன். சற்றுநேரம்தான் பேசினோம், இதைப்போல. அவளை நான் விரும்பினேன். அவளைத் தேடி திரும்பவருவேன் என ஒரு சொல் அளித்து மீண்டேன்” என்றான். “அப்படியென்றால்...” என அவள் சற்று தடுமாறி உடனே விழிதூக்கி அவனை நோக்கி “என்னைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?” என்றாள்.

“உன்னையும் நான் விரும்புகிறேன். நீ வருவதற்குள்ளே உன்னைப்பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டேன்” என்றான். “எனக்கு இருவருமே வேண்டுமென்று தோன்றுகிறது.” அவள் சற்று நேரம் சிந்தித்துவிட்டு “ஆம், அரசகுடிகளில் அப்படித்தான். ஆனால்...” என்றபின் “என்னைப்பற்றி அவளுக்கும் தெரியவேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். அதற்கு முன் என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றான். அவள் சீற்றத்துடன் தலைதூக்கி “அதைக்கூட தெரிந்துகொள்ளாத மூடரா நீங்கள்?” என்றாள்.

அவன் சிரித்தபடி “அப்படியென்றால் சரி” என்றான். “என்ன சரி? இனிமேல் எத்தனை இளவரசிகளைக் கண்டு விருப்பம் கொள்வதாக திட்டம்?” என்றாள். “இனிமேல் எவருமில்லை” என்றான். “அது ஒரு வாக்கா?” என்றாள். “ஆம், இந்த காற்றும் மலர்களும் அறியட்டும்.” அவள் நிமிர்ந்து அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு “எனக்கு ஏனோ படபடப்பாக இருக்கிறது. நான் நினைத்ததுபோல இது இல்லை” என்றாள்.

“ஏன்?” என்றான். “இந்தத்தருணம். இதை நான் சொல்லும் நேரம்... என் நெஞ்சு தித்திக்கும் என்று நினைத்தேன்.” பூரிசிரவஸ் குனிந்து “இல்லையா?” என்றான். “இல்லை. எனக்கு அச்சமாக இருக்கிறது. வல்லமை வாய்ந்த எவரோ மறுபக்கம் நின்று இதைக்கேட்டு புன்னகை செய்வதுபோல.” பூரிசிரவஸ் “வீண் அச்சம் அதெல்லாம்” என்றான். “இல்லை... என்னால் அச்சத்தை கடக்கவே முடியவில்லை” என்றபின் அவள் தலைகுனிந்து “சிபி நாட்டுக்குச் சென்ற செய்தியை நான் அறிந்தேன். ஆகவேதான் நானே அன்னையிடம் சொல்லி கிளம்பி வந்தேன்” என்றாள்.

“நீ...” என்றதுமே அவன் புரிந்துகொண்டு “ஆனால்...” என்றபின் சொற்களை விட்டுவிட்டான். “எனக்கு இந்தச் சொற்கள் போதும்” என்றபோது அவள் விசும்பிவிட்டாள். அவன் அதை எதிர்பாராமல் திரும்பி நோக்கிவிட்டு “என்ன இது?” என்றான். அவள் அவனை திரும்பிப்பாராமல் ஓடி இடைநாழியைக் கடந்து மறைந்தாள். அவன் அங்கேயே பூக்கள் நடுவே நின்றிருந்தான். கூரைக்குமேல் மலைக்காற்றில் வந்த மழைத்துளிகள் சுட்டுவிரலால் முழவை அடிப்பதுபோல ஒலித்துக்கொண்டிருந்தன.

பின்னர் அவன் குழம்பிய சித்தத்துடன் நடந்து தன் அறைக்கு சென்றான். அவள் சொன்னபின் அந்த அச்சம் தன்னுள்ளும் குடியேறியிருப்பதை உணர்ந்தான். எவருக்கான அச்சம்? அல்லது எதற்கானது? மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். கண்களை மூடியதுமே சிபிநாட்டின் செந்நிறப் பாலைநிலம் விரிந்தது. தேவிகையின் முகம் தெரிந்தது. அவள் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு உணர்ச்சியுடன் எழுந்து வருவதாக எண்ணிக்கொண்டான். அவளுக்கு அவன் விஜயையிடம் பேசியது தெரியுமா என்ற எண்ணம் வந்தது. என்ன எண்ணம் அது என்ற வியப்பு வந்தது.

அந்த வியப்புடன்தான் காலையில் விழித்துக்கொண்டான். சேவகன் அவனை மணியோசையால் எழுப்பி “ஒற்றர்தலைவர் வந்திருக்கிறார், தங்கள சந்திக்க விழைகிறார்” என்றான். எழுந்து முகத்தைத் துடைத்தபடி “வரச்சொல்” என்றான். ஒற்றர்தலைவர் சலகர் உள்ளே வந்து வணங்கிவிட்டு நேரடியாகவே சொல்லத் தொடங்கினார். “இளவரசே, பால்ஹிகர் இருக்குமிடம் தெரிந்துவிட்டது...” பூரிசிரவஸ் நெஞ்சு படபடக்க “உயிருடன் இருக்கிறாரா?” என்றான். சலகர் புன்னகைத்து “மறுபிறப்பு எடுத்துவிட்டார்” என்றார்.

பூரிசிரவஸ் நோக்க சலகர் “அவரும் சிபிரரும் மறிமான்வேட்டைக்குச் செல்லும் வழியில் மலைச்சரிவில் ஓர் இடையன் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மலைமேலேயே வாழும் பூர்வபால்ஹிக குடியான துர்கேச குலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் குலத்தில் ஓர் இளம்பெண்ணை அன்றுமாலை பால்ஹிகர் மணம்புரிந்திருக்கிறார்.”

பூரிசிரவஸ் சிலகணங்கள் சிந்தையே ஓடாமல் நின்றபின் “யார்?” என்றான். “பிதாமகர்தான். அவர் அந்தப்பெண்ணை கேட்டிருக்கிறார். அவளுக்கும் அவரை பிடித்திருக்கிறது. அவர் கையில் நீலமணி பதிக்கப்பட்ட சிபிநாட்டு முத்திரைகொண்ட விரலாழி இருந்திருக்கிறது. அதை அவள் தந்தைக்கு கன்யாசுல்கமாக அளித்து அவரைப் பெற்றார். அதுதான் அவர்கள் முறைப்படி மணம் என்பது. அன்றிரவு அவளுடன் தங்கியிருக்கிறார். அந்தத் தந்தையிடம் மணிகொண்ட விரலாழி இருப்பதைக் கண்டு நம் ஒற்றர்கள் கேட்டிருக்கிறார்கள்...”

பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “எங்கே? எந்த இடம்?” என்றான். ”பிரக்யாவதியின் மறுகரையில்... அந்த இல்லத்தை கண்டுபிடிப்பது கடினம்.” பூரிசிரவஸ் “நான் செல்லவேண்டும், உடனே” என்றான். “பிதாமகர் அங்கே இல்லை. அவரும் சிபிரரும் தூமவதிக்கு சென்றுவிட்டார்கள்.” பூரிசிரவஸ் “அவர் அங்கேதான் தங்குவார். ஊருக்கு மீண்டுவரமாட்டார். அவர் வரவேண்டுமென்றால் நானே சென்று அழைக்கவேண்டும்” என்றான். “ஒற்றனை துணைக்கு அனுப்புகிறேன் இளவரசே” என்றார் சலகர்.

பூரிசிரவஸ் அரைநாழிகைக்குள் புரவியில் ஏறிவிட்டான். “சௌவீரர் இன்று வருவார். வரவேற்பு நிகழ்விலும் அவைகூடலிலும் நான் இல்லாதது குறித்து மூத்தவர் கேட்டால் சொல்லிவிடுக!” என்றபடி குதிரையை கிளப்பினான். அவனை மலைநாட்டை அறிந்த ஒற்றன் சகன் சிந்தாவதியின் கரைவழியாகவே இட்டுச்சென்றான்.

இரண்டாம்நாள் கொண்டாட்டம் கொஞ்சம் ஊக்கம் குறைவாக இருப்பதை நகரில் காணமுடிந்தது. சாலையோரங்களில் முந்தையநாள் மதுஅருந்தியவர்கள் பஞ்சடைந்த கண்களுடன் இளவெயிலில் குந்தி அமர்ந்து ஆர்வமே இல்லாமல் பார்த்தார்கள். பசுமாடுகள் மட்டும் வழக்கம்போல வெயிலை உடலால் வாங்கிக்கொண்டிருந்தன. உடலுக்குள் வெயில் நிறைய நிறைய அவை எடைகொண்டு வயிறு தொங்க உடல் சிலிர்த்து அமைதிகொண்டன.

சிந்தாவதி ஷீரவதிக்கும் பிரக்யாவதிக்கும் நடுவே இருந்த மலையிடுக்குக்குள் இருந்து யானைத்தந்தம் போல வெண்மையாக எழுந்து இருபத்தெட்டு சிறிய பாறைப்பள்ளங்களில் சிறிய அருவிகளாகக் கொட்டி வெண்ணிறமான சால்வைபோல இறங்கி வந்து பள்ளத்தாக்கை அடைந்து தேங்கி சிறிய மூன்று ஓடைகளாக ஆகி உருளைக்கல் பரப்பில் பேரோசையுடன் நுரைத்துச் சென்றது .ஆற்றின் கரைவழியாக ஏறிச்சென்றால் பதினேழாவது வளைவில் ஷீரபதம் என்னும் கணவாயை காணமுடிந்தது. அதனுள் மண்சாலை சென்று மறைய அப்பால் தூமவதியின் வெண்ணுரைசூடிய மணிமகுடம் தெரிந்தது.

குதிரை நுரைகக்கத் தொடங்கியதும் நின்று அதை இளைப்பாற்றி அங்கே சாலையோரம் தோண்டப்பட்டிருந்த சிறு ஊற்றில் நீர் அருந்தச்செய்தார்கள். பூரிசிரவஸ் சாலையோரத்துப் பாறையில் நின்றபடி கீழே சிந்தாவதி வெண்ணிறத்தில் பிரிந்தும் இணைந்தும் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். ஆங்காங்கே அது அருவிகளாகக் கொட்டும் இடம் மட்டும் வெண்ணிறமாக விரிந்து தெரிந்தது. அதன் நீர் அப்பாலிருக்கும் பனிமலைகள் உருகி வருவது என்று சொல்லி அறிந்திருந்தான். அந்தப்பனிமலைகளை மாமுனிவர்களே சென்று தொடமுடியும். கின்னரர்களும் கிம்புருடர்களும் வாழும் உச்சி அது.

சிந்தாவதியின் பால்ஹிகபுரியின் பக்கத்து கரையில் காய்கறித்தோட்டங்களின் பச்சை செறிந்திருந்தது. அப்பால் மலையடிவாரத்தில் ஷீரவதியின் அடிச்சாரலில் பசும்புல் சிவப்பாக பூத்திருந்தது. இத்தனை இரைச்சலிடும் ஒரு ஆற்றுக்கு யார் சிந்தாவதி என்று பெயரிட்டிருக்கக் கூடும் என அவன் எண்ணிக்கொண்டான். அத்தனை பெயர்களுமே ரிஷிகளிட்டவை போல இருந்தன. நினைக்கநினைக்க சிந்தையில் வளர்பவை. அவை தங்கள் பெயரை அவர்களின் கனவில் வந்து சொல்லியிருக்கக் கூடும்.

ஷீரவதியை ஏன் பால்மகள் என்று சொல்கிறார்கள் என்பது மேலும் சென்றபோது தெரிந்தது. முழுமையாகவே வெண்ணிறமான மூடுபனி வந்து சரிவுகள் மறைந்தன. முன்னால் சென்ற ஒற்றனின் புரவியின் பின்பக்கத்தை மட்டுமே நோக்கிக்கொண்டு பயணம் செய்யவேண்டியிருந்தது. குதிரையின் காலடிஓசை பின்பக்கம் எங்கோ கேட்டு எவரோ தொடர்ந்து வருவதுபோல எண்ணச்செய்தது. பனிப்புகை மேல் பரவிய ஒளி அதை பளிங்குபோல சுடரச்செய்தது. பனிவெளிக்கு மேலே வெள்ளிமுடி சூடி அமைதியில் அமர்ந்திருந்த தூமவதியை நோக்கியபடியே சென்றான்.

சக்ரவர்த்திகளுக்குரிய அமைதி என எண்ணிக்கொண்டான். சக்ரவர்த்திகள் எப்படி இருப்பார்கள்? அவன் எவரையும் பார்த்ததில்லை. அவன் பார்த்தது சக்ரவர்த்தினியை. அவள் சக்ரவர்த்தினி என அத்தனை பேரும் அறிந்திருக்கின்றனர். அத்தனை பெண்களும் அவளையே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். வழிபாட்டுடன் பொறாமையுடன் கசப்புடன்.

சக்ரவர்த்தினி என்பதில் ஐயமே இல்லை என அவன் எண்ணிக்கொண்டான். இந்தப்பெண்களில் எவரிலும் இல்லாத ஒன்று அவளில் இருந்தது. 'அவள்' என்று நினைத்தபோதே அவள் முகம் மலைமுடி எழுந்து முன்னால் திசை நிறைத்து நிற்பதுபோல சிந்தையில் எழுவதைக் கண்டான். மிகத்தொலைவில்தான் அவளை நோக்கினான். கருவறை அமர்ந்த தெய்வச்சிலையை பார்ப்பதுபோல. ஆனால் அவள் விழிகளின் ஒவ்வொரு சிறு அசைவையும், முகத்தின் சிறிய பருவைக்கூட பார்க்கமுடிந்தது.

அவளைப்போல வேறெந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை என்று அவன் உணர்ந்தான். அவன் உள்ளத்திலும் அவளே பெண்ணென்று இருந்தாள். பிறர் எல்லோரும் தொலைவில் எங்கோதான் இருந்தனர். அதை அவர்களும் அறிவார்கள் போலும். ஆகவேதான் அவன் விழிகளைப் பார்த்ததுமே அவர்கள் அவளைப்பற்றி கேட்கிறார்கள். அவளைப்பார்த்த விழிகள்.

மூன்றுமுறை அமர்ந்து ஒய்வெடுத்தபின் பனிப்படலத்தை கடந்தனர். நான்குபக்கமும் குறுமுள்செடிகளும் உருண்டு வந்து நிலைத்த பாறைகளும் மட்டும் அடங்கிய நிலச்சரிவின் பாதியில் பக்கவாட்டிலிருந்த மலையின் நிழல் விழுந்து கிடந்தது. எஞ்சியபகுதி ஒளியில் நனைந்து கண்கூசியது. பாறைகளின் நிழல்கள் நீண்டு கிடந்தன. நிழலில் இருந்து ஒளிக்குள் நுழைந்தபோது சிலகணங்கள் காட்சியே மறைந்தது. பின்னர் மீண்டும் நிழலுக்குள் நுழைந்தபோது குளிர்ந்தது. காலடிச்சுவடுகள் எங்கெங்கோ விழுந்து எதிரொலித்து திரும்பி வந்தன.

கீழே பால்ஹிகபுரி கையிலிருந்து கொட்டிய பொரி போல தெரிந்தது. அவன் புரவியை நிறுத்தி நோக்கினான். அத்தனை சிறிய காட்சியிலேயே தூமபதக் கணவாயிலிருந்து கிளம்பி நகரத்தை நோக்கிச் சென்ற சௌவீரர்களின் அணியூர்வலத்தை காணமுடிந்தது. சிறிய செந்நிற எறும்பு வரிசை. கூர்ந்து நோக்கியபோது கொடிகளைக்கூட காணமுடிந்தது. அவர்களை எதிர்கொள்ள நகரிலிருந்து செல்லும் அணிநடையை கண்டான். அதன்முன்னால் சென்ற பால்ஹிகக் கொடி காற்றில் பறந்தது.

இருள்படர்ந்தபோது அவர்கள் சாலையோரத்தில் பாறையில் குடையப்பட்ட வணிகர்களுக்கான சத்திரத்தை அடைந்தனர். செவ்வக வடிவமான சிறிய குகைக்கு தடித்த மரத்தால் கதவிடப்பட்டிருந்தது. அதனருகே இருந்த சிறிய பாறையில் இருந்து நீர் ஊறி சொட்டிக்கொண்டிருக்க கீழே கற்களால் அந்த நீர் தேங்குவதற்கு சிறிய குட்டை அமைக்கப்பட்டிருந்தது. குதிரைகள் மூச்சு சீறியபடி குனிந்து நீர் அருந்தின.

பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டான். உடலில் குதிரையின் அசைவு எஞ்சியிருந்தது. சகன் அங்கே கிடந்த சுள்ளிகளை கொண்டுசென்று குகைக்குள் தீயிட்டான். தீ கொழுந்துவிட்டெரிந்ததும் குகையின் பாறைகள் சூடேறத்தொடங்கின. அதன்பின் நெருப்பை அணைத்து தணலாக ஆக்கினான். அதன்பின் அவர்கள் உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்டனர். கதவருகே நெருப்பின் வெம்மை ஏற்கும்படி புரவிகளை கட்டினர். அவை உடலை கதவின் விரிசல்களில் சேர்த்து வைத்து நின்று பெருமூச்சுவிட்டன.

தணலின் செவ்வொளியில் அமர்ந்து பையிலிருந்த உலர்ந்த பழங்களையும் சுட்ட ஊன் துண்டுகளையும் உண்டு நீர் அருந்தினர். வெளியே குளிர்ந்த வடகாற்று ஓசையிட்டபடி மலையிறங்கிச் சென்றது. நெடுந்தொலைவில் ஓநாய்களின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. அவை புரவிகளின் மணத்தை அறிந்துவிட்டிருந்தன. ஆனால் அனல் மணம் இருக்கும் வரை அவை அண்டமாட்டா என அவன் அறிந்திருந்தான். புரவிகள் தோல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டு கால்களால் தரையை தட்டிக்கொண்டிருந்தன.

அவன் கால்களை நீட்டிக்கொண்டான். அதற்குள் ஐந்துபேர் உடலை ஒட்டிக்கொண்டு படுக்க இடமிருந்தது. அவர்களின் கம்பளியாடைகள் அனலால் சூடேறியிருந்தன. அவன் உடலை நன்றாக ஒட்டிக்கொண்டு கண்களை மூடி துண்டுதுண்டாக சிதறிச்சென்ற எண்ணங்களை நோக்கிக்கொண்டிருந்தான். புரவியில் வந்தபடியே சிந்திப்பதுபோல உடல் உணர்ந்துகொண்டிருந்தது. கண்களைத் திறந்து பாறைக்குடைவுக்கூரையை நோக்கினான். சிபிநாட்டின் விரிந்த பெரும்பாலையை நினைத்தான். அது அவனுள் சித்திரமாக வரவில்லை. ஒரு நினைவுமட்டுமாகவே எஞ்சியது.

இருமுறை உடலை அசைத்து பெருமூச்சுவிட்டான். பின்னர் விஜயையை எண்ணினான். அந்த மலர்வெளி நடுவே அவள் நின்றகாட்சி தெளிவாக விழிகளுக்குள் எழுந்தது. அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். நீர்ப்பாவை போல மெல்ல நெளிந்தபடி அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ஓசையேதும் இல்லாத இதழசைவு. உறக்கத்தில் அவனை மலைகள் சூழ்ந்து குனிந்து நோக்கி கடும்குளிராக மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் கனவை மீண்டும் மீண்டும் கண்டான்.

பகுதி 6 : மலைகளின் மடி - 9

ஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் இருந்தது அந்த சிறிய கல்வீடு. தொன்மையானது என்று தெரிந்தது. மலைச்சரிவின் கற்களைத் தூக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. அந்தமலைப்பகுதிகளில் அமைக்கப்படும் மிகச்சிறந்த இல்லங்களில் ஒன்று அது. மலையின் சரிவில் இருந்த வெட்டுப்பள்ளம் போன்ற இடைவெளியில் அமைந்திருந்தது அது. சரிவில் ஒரு பெரும் பாறை உருண்டு வந்தால்கூட அந்த வீட்டின்மேல் உருண்டு கீழே சென்றுவிடுவதை அறியாமல் வீட்டுக்குழந்தைகள் துயிலமுடியும். மேலிருந்து இறங்கிவரும் பனியும் அந்த வீட்டின்மேல் சரிந்து அதற்கு கூரையாகவே அமையும்.

அங்கே சுவர்கள் எந்த அளவுக்கு பருமனான கற்களால் அமைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இல்லம் சிறந்தது. ஆகவே மேலிருந்து பெரும்பாறைகளை உருட்டிக்கொண்டுவந்து அமைத்து அந்தச் சுவர்களை கட்டுவார்கள். உருளைக்கற்களை கொண்டு சாய்வான பாதை ஒன்றை வீட்டுக்கூரைவரைக்கும் அமைத்துக்கொள்வதும் உண்டு. தடித்த சுவர்களுக்குமேல் தேவதாருவின் பெருமரங்களைப் பரப்பி அதன்மேல் மூன்றடி உயரத்துக்கு தேவதாருவின் சுள்ளிகளை செறிவாக அடுக்கி அதன்மேல் மண்போட்டு மெழுகி மூடியிருந்தனர். கூரைமண் மழைநீரில் கரையாமலிருக்க அதில் புல்வளர்க்கப்பட்டிருந்தது. அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த புகைக்குழல்வழியாக நீலநிறப்புகை எழுந்து புல்வெளியில் பரவியது

அவர்களின் புரவிகளைக் கண்டதும் அந்த இல்லத்தின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த தடித்த கம்பளியாடை அணிந்த ஏழு சிறிய குழந்தைகள் ஒன்றாகக் கூடி நின்று நோக்கின. வீட்டின் மேல் ஏறிச்சென்ற மலைச்சரிவில் செம்மறியாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இரு பெண்கள் கைகளை நெற்றியில் வைத்து நோக்கியபடி அவர்களை நோக்கி வந்தனர். அருகே வந்தபின்னர்தான் அவர்கள் மிக இளையோர் என தெரிந்தது. அவர்களின் உயரமும் பெரிய உடலும்தான் முதியவர்கள் என எண்ணச்செய்தது.

வீட்டுக்குள் இருந்து பேருருவம் கொண்ட கிழவி கையில் மண்கலத்துடன் வெளியே வந்து அவர்களை நோக்கி கையசைத்து அழைத்தாள். மரவுரி ஆடை மட்டுமே அணிந்திருந்தாள். அவள் கைகள் ஒவ்வொன்றும் பருத்த அடிமரங்கள் போலிருந்தன. கரிய புருவங்களும் நீண்ட மூக்கும் பச்சைநிறமான விழிகளும் கொண்டிருந்தாள். கழுத்தின் கீழ் தாடை பல மடிப்புகளாக தொங்கியது.

அவர்கள் அருகே சென்றதும் கிழவி “சூடான பாலும் அப்பமும் அருந்திவிட்டு எங்கள் குடியை வாழ்த்துங்கள்” என்றாள். அவள் தலை புரவிமீதிருந்த அவன் தொடைக்குமேல்உயரமிருந்தது. பூரிசிரவஸ் இறங்கிக்கொள்ள சகன் புரவிகளை பற்றிக்கொண்டு மேலே கொண்டுசென்றான். அவற்றின் சேணங்களைக் கழற்றி கடிவாளங்களை ஒன்றோடொன்று கட்டி மேயவிட்டான். பூரிசிரவஸ் கிழவியின் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவது என் நல்லூழ் அன்னையே” என்றான். ”இல்லத்திற்குள் வருக!” என்றாள் கிழவி.

பூரிசிரவஸ் தன் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். மரப்பலகை போடப்பட்ட தரையில் புல்பரப்பி மேலே கம்பளியையும் விரித்திருந்தனர். இல்லத்தின் நடுவே கணப்பு கனன்றுகொண்டிருந்தது. அதிலிருந்து புகைக்குழாய் எழுந்து சென்றது. கணப்பைச்சுற்றி அமரவும் படுக்கவும் உகந்த சேக்கைகள். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டதும் கிழவி கொதிக்கும் நீரில் முக்கிய மெல்லிய மரவுரியை கொண்டுவந்து தந்தாள். அதை வாங்கி அவன் முகத்தை துடைத்துக்கொண்டான்.

சகன் அவர்கள் கீழே இருந்து கொண்டுவந்த உப்புக்கட்டிகள், உலர்ந்த பழங்கள், வெல்லக்கட்டிகள் அடங்கிய தோல்பையுடன் வந்தான். பூரிசிரவஸ் அதை வாங்கி கிழவியின் முன் வைத்து “என்னை வாழ்த்துக அன்னையே! நான் பால்ஹிகபுரியின் இளவரசன் பூரிசிரவஸ். தங்களைக் காணவே வந்தேன்” என்றான்.

கிழவி முகம் மலர்ந்து பொதியைப்பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தபடி “மகிழ்ச்சி... நீடூழி வாழ்வாய்!” என்றாள். வெளியே இருந்து இரு இளம்பெண்கள் உள்ளே வந்தனர். ஒருத்தி கையில் மஞ்சள்சரடு கட்டியிருந்தாள். அவர்கள் இருவரும் அவனை விட உயரமானவர்களாக இருந்தனர். அவர்களின் கைகளைத்தான் அவன் மீண்டும் மீண்டும் பார்த்தான். மிகப்பெரிய வெண்ணிறமான கைகள். நீண்ட விரல்கள்.

“அவள் பெயர் ஹஸ்திகை” என்றாள் கிழவி சரடு கட்டப்பட்டவளை சுட்டிக்காட்டி. “அவளைத்தான் பிதாமகர் மணந்துகொண்டார். இந்த பனிக்காலத்தில் அவளுக்கு பதினேழு வயதாகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அவளுக்குரிய கணவனை தெய்வங்களே தேடிவரச்செய்தன.” சுருக்கங்கள் அடர்ந்த கண்களை இறுக்கியபடி அவள் சிரித்தாள். “உன் மூத்தவர் இருவரையும் வணங்கு. அவரது வாழ்த்துக்களால் நீ நிறைய குழந்தைகளை பெறுவாய்!”

ஹஸ்திகை அவர்கள் இருவர் முன்னால் வந்து மண்டியிட்டு வணங்க அவன் அவள் நெற்றியைத் தொட்டு “நலம் திகழ்க!” என்று வாழ்த்தியபின் தன் கையிலிருந்த விரலாழி ஒன்றை எடுத்து அவளுக்கு அளித்து “இது உன் மூத்தானின் பரிசு. உன் குழந்தைகளுக்கெல்லாம் நான் மாதுலன்” என்றான். அவள் பச்சைக்கண்கள் ஒளிர புன்னகைசெய்தாள். செந்நிற ஈறுகளில் வெண்பற்கள் ஈரமாக ஒளிவிட்டன. சகனும் ஒரு பொன்நாணயத்தை அவளுக்கு அளித்து வாழ்த்தினான்.

பரிசுகள் ஹஸ்திகையை பூரிக்கச் செய்தன. கண்களை இடுக்கிச் சிரித்தபடி இன்னொருத்தியை பார்த்தாள். சற்று இளையவளான அவள் பரிசுகளைப் பிடுங்கி திருப்பித்திருப்பி பார்த்தாள். “அவள் பெயர் பிரேமை. இவளைவிட ஒருவயது குறைந்தவள்.” பூரிசிரவஸ் “இவளுக்குத் தங்கையா?” என்றான். “இல்லை, இவள் தமையனின் மகள் அவள். இவள் என்னுடைய மகள். எனக்கு ஏழு மைந்தர். பிரேமை என் முதல் மைந்தனின் மகள். என் பெயர் விப்ரை” என்றாள் கிழவி.

அந்தப் பெரிய அறைக்கு அப்பாலிருந்த சிறிய அறை அடுமனை என்று தெரிந்தது. பிரேமை உள்ளே சென்று அடுப்பில் கலத்தை தூக்கி வைத்தாள். மிகப்பெரிய கலத்தை விளையாட்டுச்செப்பு போல அவள் கையாண்டாள். மூங்கில் குழாயால் ஊதும் ஒலி கேட்டது.

“கீழே நிலத்தில் இருந்து பிதாமகர் வேட்டைக்குப் போகும் வழியில் இங்கே வந்தார். எங்கள் இல்லத்தின் சுவரிலிருந்து கீழே விழுந்து கிடந்த பாறை ஒன்றைத் தூக்கி மேலே வைத்தார்” என்றாள் கிழவி “இந்த இல்லத்தைக் கட்டியபோது அந்தப்பாறையை அவர்தான் மேலே தூக்கி வைத்திருக்கிறார். நான் அப்போது இல்லை. என் அன்னை சிறுமியாக இருந்தாள் என்றார். என் அன்னையின் தந்தை வாகுகரை பிதாமகருக்கு தெரிந்திருக்கிறது.” ஹஸ்திகையைப் பார்த்தபடி “இவள் நல்லூழ் கொண்டவள். நூறு யானை ஆற்றல்கொண்ட உண்மையான பால்ஹிகர்களை பெறப்போகிறாள். எங்கள் இளையோர் ஏழுபேர் சேர்ந்தாலும் அந்தப்பாறையை அசைக்க முடியாது. இந்த மலையிலேயே அவருக்கிணையான ஆற்றல்கொண்டவர் இல்லை.”

ஹஸ்திகை நாணத்தால் முகம் சிவந்து பார்வையைத் திருப்பி உதடுகளை கடித்துக்கொண்டாள். பூரிசிரவஸ் புன்னகை செய்தான். ”அவருடன் இவள் காமம் நுகர்ந்ததைப்பற்றி சொன்னாள். இவளுக்கு முதலில் அச்சமாக இருந்ததாம். பின்னர் அவர் பழகிய கரடியைப்போல என்று புரிந்துகொண்டாளாம்.” ஹஸ்திகை மகிழ்ச்சியில் கண்கள் பூத்து அவனைநோக்கி சிரித்தாள். “வாழ்க!” என்று பூரிசிரவஸ் வாழ்த்தினான். “என் அன்னையின் தந்தை உண்மையான பால்ஹிகர். அதன்பின் இதுவரை உண்மையான பால்ஹிகர்கள் இந்த மலைப்பகுதிக்கு மணம் கொள்ள வரவில்லை.” ஹஸ்திகை மகிழ்ச்சி தாளமுடியாமல் தோள்குலுங்க சிரிக்கத் தொடங்கினாள்.

பிரேமை பெரிய கலத்தில் கொதிக்கச்செய்த பாலையும் மூங்கில்தாலத்தில் சுட்ட அப்பங்களையும் கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால் வைத்தாள். அடுப்பில் உலர்ந்த இறைச்சிநாடாவைப்போட்டு சுடத்தொடங்கினாள். அந்த இல்லம் எத்தனை சிறந்தது என்று பூரிசிரவஸ் கண்டான். ஊன்மணம் அறைகளை நிறைத்தது. ஆனால் சற்றும் புகை மூடவில்லை. மலைப்பகுதிகளுக்கே உரிய பசி உணவை சுவைமிக்கதாக்கியது. அப்பங்களையும் ஊனையும் தின்றுகொண்டிருந்தபோது கிழவியிடம் பால்ஹிகர் யார் என்று சொல்லலாமா என்று அவன் எண்ணினான். ஆனால் அவளால் அதை புரிந்துகொள்ளமுடியாது என்று தோன்றியது.

பிரேமை வந்து அவன் அருகே அமர்ந்துகொண்டு கால்கள் மேல் கம்பளியை இழுத்து போர்த்துக்கொண்டாள். “நீங்கள் கீழே நிலத்தில் இருந்தா வருகிறீர்கள்?” என்றாள். “ஆம்” என்றான். “நான் சென்றதில்லை. ஆனால் ஒரே ஒருமுறை கீழே பார்த்திருக்கிறேன். மிகச்சிறியது” என்றாள். “அதற்கு அப்பால் மலை. அதற்கு அப்பால் அஸ்தினபுரி இல்லையா?” பூரிசிரவஸ் வியப்புடன் ”ஆம்” என்றான். “அஸ்தினபுரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” பூரிசிரவஸ் “இல்லை” என்றான். ”மிகப்பெரிய நகரம்... அதன் கோபுரங்கள் வானத்தை முட்டிக்கொண்டிருக்கும்” என்று அவள் கைகளைத் தூக்கினாள். “மலைகளைப்போல”

“ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “அங்கேதான் திரௌபதி இருக்கிறாள். மிகப்பெரிய அழகி” என்றாள் பிரேமை. “நீங்கள் அவளை பார்த்ததுண்டா?” பூரிசிரவஸ் சிரித்தபடி “ஆம்” என்றான். அவள் பரபரப்புடன் அவன் கைகளைப்பற்றிக்கொண்டு “மிகப்பெரிய அழகியா? வெண்பனி போல இருப்பாளா?” என்றாள். பூரிசிரவஸ் கண்களில் சிரிப்புடன் “இல்லை, ஈரமான கரும்பாறை போல இருப்பாள்” என்றான். அவள் விழிகளை மேலே உருட்டி சிந்தனைசெய்து “ம்ம்” என்றாள். “தெய்வங்களைப்போல தோன்றுவாள்.”

அவள் உதட்டைச் சுழித்து “அவர்களெல்லாம் ஏராளமான அணிகளும் பட்டாடையும் வைத்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அதெல்லாம் இருந்தால் நானும்கூடத்தான் அழகாக இருப்பேன்” என்றாள். பூரிசிரவஸ் “அவை இல்லாமலே நீ அழகுதான்” என்றான். அவள் ஐயமாக தலையை சரித்து நோக்கி “உண்மையாகவா?” என்றாள். ”ஆம்” என்றான். சகனிடம் “உண்மையா? என்றாள். சகன் சிரித்து “அவர் பொய்சொல்லவில்லை இளையவளே. நீ அழகிதான்” என்றான். அவள் துள்ளி பூரிசிரவஸ்ஸின் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு “என்னிடம் யாருமே சொன்னதில்லை” என்றாள். “நான் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவள் சிரித்துக்கொண்டு திரும்பி ஹஸ்திகையிடம் “கேட்டாயா? நான் அழகி என்கிறார்” என்றாள். ஹஸ்திகை “உனக்கு அவர் பரிசுகள் தருவார். கேட்டுப்பார்” என்றாள். அவள் திரும்பி அவனிடம் “எனக்கு என்ன பரிசு அளிப்பீர்கள்?” என்றாள். பூரிசிரவஸ் தன் இன்னொரு விரலாழியை எடுத்து அவளுக்கு கொடுத்தான். உவகைக்கூச்சலுடன் அதை வாங்கி அவள் புரட்டிப்புரட்டிப் பார்த்தாள் எழுந்தோடி ஹஸ்திகையிடம் கொண்டுசென்று காட்டினாள். “எனக்கு... எனக்கு கொடுக்கப்பட்டது” என்றாள்.

அவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். சிவந்த பெரிய உதடுகள். இளநீலநிறமான விழிகள். உருண்ட கன்னம் குளிரால் சிவந்து உலர்ந்திருந்தது. பெரிய உடலுக்கு மாறாக மிகச்சிறிய காதுமடல்கள். அவற்றில் ஏதோ செந்நிறமான காட்டுவிதையை அணிந்திருந்தாள். கழுத்திலும் செந்நிறக் காட்டுவிதைகளை கோர்த்துச் செய்த மாலை. வேறு அணிகளே இல்லை. சகன் மெல்ல “இளவரசே, அது முத்திரைமோதிரம்” என்றான். பூரிசிரவஸ் அவனை நோக்கியபின் தலையசைத்தான்.

சகன் அவனிடம் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் இளவரசே” என்றான். அந்த சேக்கையில் பரவியிருந்த வெம்மையும் வெளியே ஓசையிட்ட காற்றும் அவனிடம் துயில்க என்று ஆணையிட்டன. “ஆம், சற்றுநேரம் விழிமூடுகிறேன்” என்றபடி அவன் கால்களை நீட்டிக்கொண்டான். கம்பளிப்போர்வையை ஒற்றன் அவன் மேல் தூக்கிப்போட்டான். அது நனைந்ததுபோல எடையும் குளிரும் கொண்டிருந்தது.

அவன் உடலை அசைத்து வெப்பத்தை உண்டுபண்ணி அதற்குள் நிறைக்க முயன்றான். கண்களை மூடிக்கொண்டு முந்தையநாள் இரவில் அவனை மீண்டும் மீண்டும் சூழ்ந்த கனவை எண்ணிக்கொண்டான். மலைகள் மெல்ல எழுந்து வந்து சூழ்வதுபோல . கடும்குளிரான மூச்சு வந்து உடலைச்சூழவது போல.

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது இருட்டு வரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் இருட்டாவதை பார்க்கமுடியவில்லை. மலைச்சரிவை வகுந்து சென்ற மலைநிழல் மறைந்தது. பின்னர்தான் மொத்த மலைச்சரிவும் நிழலாக ஆகிவிட்டதென்று புரிந்தது.

அவன் எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு வாயில்வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். மிகமெதுவாக வடக்கிலிருந்து மூடுபனி இறங்கிவந்து அந்நிலப்பகுதியை முழுமையாகவே மூடிக்கொண்டது. ஹஸ்திகையும் பிரேமையும் ஆடுகளை தொகுத்துக்கொண்டுவந்தார்கள். அவற்றின் ஒலிகள் வெண்ணிற இருளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. அவை இல்லத்தை கடந்துசெல்லும் குளம்போசை கூழாங்கற்கள் உருள்வதுபோல கேட்டது.

ஆடுகள் கடந்துசென்றதை உணர்ந்த பூரிசிரவஸ் “எங்கே செல்கிறார்கள்?” என்றான். “பட்டிகளுக்கு. அங்கே...” என்றாள் விப்ரை. “மலைச்சரிவில்தான் பட்டிகள் இருக்கின்றன." ”நான் பார்த்துவிட்டு வருகிறேன்...” என அவன் எழுந்தான். நெடுநேரமாக உள்ளேயே அமர்ந்திருந்து கால்கள் கடுத்தன. “அங்கே” என்று விப்ரை சொன்னாள். ”நான் ஒலிகளை பின்தொடர்ந்தே செல்கிறேன்” என்றபடி அவன் வெளியே வந்தான்.

வெண்மூட்டத்திற்குள் ஒலிகள் மிக அண்மையில் என கேட்டன. நீர்போல பனிப்புகை காதுகளையும் அழுத்தி மூடியிருந்தமையால் ஒலிகளை உடலால் கேட்பதுபோல தோன்றியது. காலணிகளை அணிந்துகொண்டு அவன் தொடர்ந்து சென்றான். பஞ்சுபோன்ற வெளியில் கைகளை அசைத்துச் சென்றபோது நீந்திச்செல்வதாக உணர்ந்தான்.

அப்பால் கூச்சல்களும் சிரிப்பும் கேட்டன. எதிர்ப்பக்கமிருந்தும் ஆடுகளுடன் பலர் வருவதை உணரமுடிந்தது. அந்தக் குடியில் ஏராளமான மைந்தர்களும் மகளிரும் உள்ளனர் என எண்ணிக்கொண்டான். மலைச்சரிவுக்கு அப்பால் ஒரு கொட்டகை இருப்பது தெரிந்தது. அவன் அருகே சென்றுகொண்டிருந்தபோதே மேலிருந்து குளிர்ந்த காற்று அவனுடைய கம்பளியாடையை ஊடுருவி ஊசிகளாக குளிரை உள்ளே இறக்கியபடி கடந்துசென்றது. பனிப்புகை இழுபட்டபடியே சென்று காட்சி துலங்கியது.

எடையற்ற மெல்லிய மரப்பட்டைகளை இணைத்து இணைத்து கூரையிடப்பட்ட பெரிய கொட்டகை. அத்தகைய கொட்டகைகளை பலமுறை பார்த்திருந்தபோதிலும் அதை அமைத்திருக்கும் விதம் அப்போதுதான் வியப்பூட்டியது. சிறிய அலகுகளாக இணைத்துக்கொண்டே செல்லக்கூடிய அமைப்புகொண்டிருந்தது. ஒவ்வொரு மரப்பட்டையும் ஒன்றுடன் ஒன்று சிறிய மூங்கிகளால் இணைக்கப்பட்டு மண்ணில் நாட்டப்பட்டிருதது. தேவையானபடி விரிவாக்கலாம். கழற்றி அடுக்கி கொண்டுசெல்லலாம்.

உடன்பிறந்தார் என முகமே சொன்ன பன்னிரு சிறுவர்களும் ஏழு பெண்களும் அங்கே இருந்தனர். அனைவரும் கம்பளி அணிந்து தலையணி போட்டிருந்தனர். குளிரில் வெந்த முகங்கள். நான்கு ஆண்கள் ஆடுகளை ஒவ்வொன்றாக எண்ணி உள்ளே அனுப்பினர். அவன் வருவதைக்கண்டு அனைவரும் திரும்பி அவனை நோக்க ஒரு பெண் கைசுட்டி அவனைக்காட்டி ஏதோ சொன்னாள். அவள் இல்லத்துக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.

அவர்களில் மூத்தவர் அருகே வந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே. என்பெயர் கலன். மூத்தவன்” என்றார். ”என் தந்தையும் மூன்று இளையோரும் தூமவதிக்கு அருகே ஆட்டுப்பட்டி போட்டிருக்கிறார்கள். அவரது தந்தையும் எனது இரு மைந்தரும் அதற்கும் அப்பால் சத்ராவதியின் கரைக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வர பலநாட்களாகும். தங்களை சந்திக்கும் பேறு அவர்களுக்கு அமையவில்லை.” பூரிசிரவஸ் அவருக்குத் தலைவணங்கி முறைமைசெய்தான்.

“எத்தனை ஆடுகள் உள்ளன?” என்றான் பூரிசிரவஸ். “நாநூற்றி முப்பத்தாறு ஆடுகள் இங்குள்ளன. அவர்களுடன் அறுநூற்றெட்டு” என்றார் கலன். ஆடுகளெல்லாம் முடிவெட்டப்பட்டு சிறியதாக இருந்தன .அதை நோக்கிவிட்டு அவர் “சற்று முன்னர்தான் முடிவெட்டினோம். நாங்கள் வெட்டுவதில்லை. கீழிருந்து வணிகர்கள் முடிவெட்டுபவர்களை கூட்டிவருவார்கள். இந்தமுறையும் சிறந்த ஈடு கிடைத்தது. நிறைய ஊனும் கொழுப்பும் வெல்லமும் உப்பும் சேர்த்துவிட்டோம். குளிர்காலம் மகிழ்ச்சியாக செல்லும்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.

“குளிர்காலத்தில் நாங்கள் மைந்தருடன் மகிழ்ந்திருப்போம். விழித்திருக்கும் நேரமெல்லாம் கதைகள்தான் பாடுவோம். இம்முறை நூறுகதைகளை நான் கற்றுவந்திருக்கிறேன். கீழே ஊரில் இருந்து. போரின் கதைகள். நாககன்னியின் கதைகள்.” கண்களை இடுக்கியபடி கலன் சிரித்தார்.

“இக்குளிர்காலத்தில் எங்களுடன் பிதாமகரும் இருப்பார் என்று சொன்னார். அது மேலும் உவகை அளிக்கிறது. குளிர்காலம் முடியும்போது குடியில் மேலும் ஒரு குழந்தை வந்துவிடும்” என்றான் அவர் அருகே நின்ற இளையவன். பிறர் புன்னகைசெய்தனர்.

“இங்கே ஆடுகளை விட்டுவிடுவீர்களா?” என்றான் பூரிசிரவஸ். “எப்படி முடியும்? வசந்தம் முடிந்துவிட்டது. ஓநாய்கள் குட்டி போடும் காலம். பசிவெறிகொண்ட அன்னை ஓநாய்கள் மலைச்சரிவெங்கும் அலையும். இரவெல்லாம் பந்தங்களுடன் நான்குமுனையிலும் நால்வர் இங்கே காவலிருப்போம்.”

இளையவன் “பகலில் ஆடுகளை விட்டுவிட்டு முறைவைத்து துயில்வோம்” என்றான். “போதிய அளவுக்கு புல்லை சேர்த்துக்கொண்டால் குளிர்காலத்தில் இவற்றை தக்க வைத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் இவை குறைவாகவே உண்ணும்...” ஆடுகளை உள்ளே கொண்டுவந்ததும் பட்டியை மரப்பலகைகளால் மூடினர். உள்ளே இருந்த பெரிய குழியில் விறகு அடுக்கி அதில் அரக்கைப்போட்டு கல்லை உரசி தீ எழுப்பினர். ஆடுகள் நெருப்பை அணுகி ஆனால் பொறி மேலே விழாதபடி விலகி நின்றன. பின்னால் நின்ற ஆடுகள் முட்டி முட்டி முன்னால் சென்றன. அவற்றின் குரல்கள் எழுந்து சூழ்ந்து ஒலித்தன.

“நான் அஸ்தினபுரியைப்பற்றி பதினேழு கதைகளை கற்றேன்” என்றார் கலன். “அஸ்தினபுரியில் பாண்டவர்கள் முடிசூடிவிட்டனரா?” என்றான் இளையவன். பூரிசிரவஸ் புன்னகையுடன் “இல்லை” என்றான். “அவர்களுக்குத்தான் மணிமுடிக்கு உரிமை என்றார் தென்திசை வணிகர் ஒருவர். அவர்களிடமிருந்து மணிமுடியைக் கவர விழியற்ற அரசர் முயல்கிறார் என்றார். உண்மையா?” பூரிசிரவஸ் புன்னகையுடன் “இருக்கலாம். அங்கே அதிகாரப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றான். கலன் “விழியிழந்தவர்கள் தீயவர்கள்” என்றார்.

“யாதவகிருஷ்ணனின் நகரத்தைப்பற்றியும் அறிந்தோம். அதை தூய பொன்னாலேயே செய்திருக்கிறாராம். அங்கே சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் மணிகளின் ஒளியால் இரவிலும் நீலநிறமான ஒளியிருக்கும் என்றார்கள்” என்றான் இன்னொரு இளையவன். பூரிசிரவஸ் “நான் பார்த்ததில்லை. ஆனால் அங்கே நிறைய செல்வம் குவிவதாக சொன்னார்கள்” என்றான். “நிறைய செல்வம் தீமை மிக்கது” என்றார் கலன். நான்கு முனைகளிலும் சிறுவர்கள் தீ பொருத்தினர்.

“குளிரில் எப்படி துயில்வீர்கள்?” என்றான் பூரிசிரவஸ். “குளிரும். ஆனால் இது கோடைகாலமல்லவா? கம்பளிகள் வைத்திருக்கிறோம். நெருப்பும் இருக்கிறது” என்றார் கலன். ”இரவில் கதைகளை சொல்வோம். நேற்று நான் பாஞ்சாலியின் மணநிகழ்வு பற்றிய கதையை சொன்னேன். அந்த மாபெரும் வில்லின் பெயர் கிந்தூரம். அதற்கு உயிருண்டு. பாதாளநாகமான கிந்தூரிதான் பாஞ்சாலனின் வைதிகர்களால் வில்லாக ஆக்கப்பட்டிருந்தது.” பூரிசிரவஸ் புன்னகைத்தான்.

இருட்டு சூழ்ந்துகொண்டது. பனிப்படலமும் இருட்டாக ஆகியிருந்தது. நெருப்பைச்சுற்றி அது பொன்னிற வட்டமாக தெரிந்தது. அதில் பொற்துகள்களாக நூற்றுக்கணக்கான பூச்சிகள் சுழன்று பறந்தன. அப்பால் மலையுச்சிகள் மட்டும் செம்பொன்னொளியுடன் அந்தரத்தில் மணிமுடிகள் போல நின்றன. அவன் திரும்பி நடந்தான்.

சிறுவர்கள் அவனை சூழ்ந்துகொண்டனர். ஒருவன் “உங்களுக்கு பாடத்தெரியுமா?” என்றான். “இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவன் ஏமாற்றத்துடன் “நீங்கள் இளவரசர் என்று இவன் சொன்னானே?” என்றான். ”என் தமையன் பாடுவார்” என்றான் பூரிசிரவஸ். “நான் குழலிசைப்பேன்” என்றான் அவன். இன்னொருவன் “நீங்கள் வளைதடி எறிவீர்களா?” என்றான். பூரிசிரவஸ் ”இல்லை” என்றான். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தயங்கினார்கள். ஒருவன் “நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றான்.

“வில்லில் அம்பு தொடுப்பேன்” என்றான் பூரிசிரவஸ். ”வில் கையில் இல்லாவிட்டால்? அப்போது ஓநாய் உங்களை தாக்கவந்தால்?” என்றான் முதல் சிறுவன். “நீ என்ன செய்வாய்?” என்றான் பூரிசிரவஸ். “என்னிடம் கவண் உள்ளது” என்று சொல்லி தூக்கிக் காட்டினான். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சரி, நான் உன்னை தாக்கவந்தால் என்ன செய்வாய்?” என்றான். “கவண்கல் உங்கள் மண்டையை உடைக்கும்” பூரிசிரவஸ் புன்னகையுடன் “என்னை கல்லால் அடி பார்ப்போம்” என்றான்.

சிறுவன் தயங்கினான். “அடி” என்றான் பூரிசிரவஸ். அவன் சற்று தள்ளி நின்று எதிர்பாராத கணத்தில் தன் ஆடையிலிருந்து கல்லை எடுத்து கவணில் வைத்து செலுத்தினான். பூரிசிரவஸ் மிக இயல்பாக வளைந்து அதை தவிர்த்தான். அவன் திகைத்து வாய் திறந்தான். “மீண்டும் அடி” என்றான். அவன் அடித்த அடுத்த கல்லையும் பூரிசிரவஸ் தவிர்த்தான். “முடிந்தவரை விரைவில் முடிந்தவரை கல்லால் அடி” என்றான். கற்கள் அவனை குளவிகள் போல கடந்து சென்றன.

சிறுவன் வியந்து கவண் தாழ்த்தி “நீங்கள் மாயாவி” என்றான். பூரிசிரவஸ் “இல்லை, இதுதான் வில்வித்தையின் முதன்மைப்பாடம். அம்புகள் என்மேல் படக்கூடாதல்லவா?” என்றான். “எனக்கும் இதை கற்றுத்தர முடியுமா?” என்றான். “ஏன்? நீ ஆடுமேய்ப்பதற்கு கவண்கல்லே போதுமே” என்றான். “நான் கீழே வந்து போர் செய்வேன்.” பூரிசிரவஸ் அவன் தலையைத் தொட்டு “போர்செய்யாமல் வாழ்பவர்கள்தான் விண்ணுலகு செல்லமுடியும்” என்றான்.

ஒரு சிறுமி அவன் அருகே வந்து “எனக்கும் கணையாழி தருவீர்களா?” என்றாள். “என்னிடம் வேறு கணையாழி இல்லையே. திரும்பி வரும்போது தருகிறேன்” என்றான். “நீங்கள் திரும்பி வரும்போது நான் பெரிய பெண்ணாக இருப்பேன். அப்போது நான் உங்களுடன் இரவு படுத்துக்கொள்வேன்” என்றாள். அவன் அவள் தலையைத் தொட்டு “யார் சொன்னது இதை?” என்றான். “நீங்கள் பிரேமை அத்தைக்கு விரலாழி கொடுத்தீர்கள். அவள் இன்று உங்களுடன் காமம் துய்க்கப்போகிறாள்.”

பூரிசிரவஸ் நெஞ்சு அதிர்ந்தது. சில கணங்களுக்குப்பின் “யார் சொன்னது?” என்றான். “இவள்தான் வந்து சொன்னாள். ஆகவேதான் பிரேமை அத்தை நீராடி கூந்தலில் அரக்குப்புகை போடுகிறாள்.” பூரிசிரவஸ் தன் கால்கள் தளர்ந்து நிற்கமுடியாதவன் ஆனான். பெண்குழந்தைகள் ஆவலாக அவனருகே வந்தன. “பிரேமை அத்தைக்கு உங்கள் குழந்தை பிறக்கும்போது அதுவும் இளவரசராகவா இருக்கும்?” என்றாள் ஒரு சிறுமி. “ஆம்” என்றான். “பெண்குழந்தை என்றால்” “இளவரசி” என்றான் பூரிசிரவஸ்.

அவர்கள் குடிலுக்கு வந்தபோது குடிலுக்குள் முன்னரே குழந்தைகள் நிறைந்திருந்தனர். அவர்களும் உள்ளே நுழைந்தனர். சகன் “இளவரசே, நான் பட்டியில் அவர்களுடன் இருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் ஏதோ சொல்ல “எனக்கு இக்குளிர் நன்கு பழகியதுதான்” என்றபடி அவன் பெரிய கம்பளிப்போர்வையுடன் வெளியே சென்றான். வீட்டுக்கதவுகளை மூடினார்கள். உள்ளே கனலின் செவ்வொளி மட்டும் நிறைந்திருந்தது. அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்துகொண்டார்கள். ஆடுகள் போல முட்டிமோதி நெருப்பருகே சென்றனர்.

ஹஸ்திகை உள்ளிருந்து அப்பங்களை சுட்டுப்போட விப்ரை அவற்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் அதை கீழே வைப்பதற்குள் பாய்ந்து எடுத்துக்கொண்டனர். “விருந்தினருக்கு... விருந்தினருக்கு” என்று விப்ரை கூவிக்கொண்டே இருந்ததை எவரும் செவிமடுக்கவில்லை. ஏதோ விலங்கை வேட்டையாடி கொண்டுவந்திருந்தனர். அந்த ஊனைச் சுட்டு கொண்டுவந்தபோது தீயில் போட்டதுபோல அது ஆடிய கைகளில் விழுந்து மறைந்தது.

“என்ன ஊன் அது?” என்றான் பூரிசிரவஸ். “காட்டுப்பூனை... பெரியது” என்றாள் விப்ரை. ”பொறியில் சிக்கியது. நீங்கள் அஞ்சவேண்டாம் இளவரசே. இன்னொரு காட்டு ஆடும் உள்ளது.” பூரிசிரவஸ் “பூனையை உண்ணலாமா?” என்றான். "நாங்கள் பல தலைமுறைகளாக உண்கிறோமே” என்றாள் விப்ரை.

அவர்கள் உண்ணும் விரைவு குறைந்து வந்தது. அதன்பின் அமர்ந்துகொண்டு பேசியபடியே மெல்லத் தொடங்கினர். பிரேமை அவனுக்கு பெரிய தாலத்தில் சுட்ட அப்பமும் ஊனும் கொண்டுவந்தாள். ஊன் மெல்லிய தழைமணத்துடன் கொழுப்பு உருகிச் சொட்ட இருந்தது. உப்பில்லாத ஊனை முதல்முறையாக உண்கிறோம் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். ஆனால் சற்றுநேரம் மென்றபோது நேரடியாகவே ஊனின் சுவை நாவில் எழுந்தது.

பிரேமை அவனுக்கு பால் கொண்டுவந்தாள். அவள் விழிகளை நோக்கியபின் அவன் தலைதாழ்த்திக்கொண்டான். அவள் நீராடி ஆடைமாற்றி குழலை சிறிய திரிகளாகச் சுருட்டி தோளிலிட்டிருந்தாள். மகிழ்ச்சியால் மலர்ந்த முகத்துடன் அவனையே விழிகளை விரித்து நோக்கிக்கொண்டிருந்தாள்.

உணவுண்டதுமே குழந்தைகள் சேக்கைகளில் ஒட்டி ஒட்டி படுத்துக்கொண்டார்கள். விப்ரை “இளவரசே, தாங்கள் அந்த துணை அறையில் படுத்துக்கொள்ளுங்கள். பிரேமையும் தங்களுடன் வந்து படுத்துக்கொள்வாள்” என்றாள். பூரிசிரவஸ் அந்த நேரடித்தன்மையால் கைகள் நடுங்க விழிகளை தாழ்த்திக்கொண்டான். “தாங்கள் நிறைவாக காமம் துய்க்கவேண்டும். இவளை தாங்கள் கணையாழி அளித்து வேட்டது எங்கள் குடிக்கு சிறப்பு. நல்ல மைந்தர் இங்கே பிறக்கவேண்டும்.”

பூரிசிரவஸ் எழமுடியாமல் அமர்ந்திருந்தான். நிமிர்ந்து அவளை பார்த்தான். அவள் அவனை புன்னகையுடன் நேராக நோக்கி நின்றிருந்தாள். அவன் மெத்தையை கைகளால் சுண்டிக்கொண்டான். பிரேமை அவனிடம் “எழுந்து வாருங்கள்” எனறாள். அவன் திகைத்து அவளை நோக்க அவள் கைகளை நீட்டி சிரித்தாள். விப்ரையும் சிரித்தாள். அவன் எழுந்ததும் இருவரும் ஓசையிட்டு நகைத்தனர்.

பகுதி 6 : மலைகளின் மடி - 10

ஒரு சேக்கைக்கு மட்டுமே இடமிருந்த அந்தச் சிறிய அறை அவ்வில்லத்தில் காமத்திற்குரியது என்று தெரிந்தது. அதற்கு அப்பாலிருந்த சுவர் மண்ணுடன் இணைந்திருப்பதாக இருக்கவேண்டும். மெல்லிய மரப்பட்டையால் காப்பிடப்பட்டிருந்தது. ஒரே ஒரு கம்பளிச்சேக்கை. அதன்மேல் மரவுரியாலும் கம்பளியாலும் செய்யப்பட்ட பெரிய போர்வை.

அவன் அமர்ந்ததுமே பின்னாலேயே பிரேமை காலடிகள் உரக்க ஒலிக்க ஆவலுடன் உள்ளே வந்து கதவை மூடிக்கொண்டு உரக்கச் சிரித்தபடி சிறிய துள்ளலுடன் அவனருகே வந்து அமர்ந்துகொண்டாள். கம்பளியை தன் கால்கள் மேல் ஏற்றிவிட்டு “உங்கள் ஒற்றர்தான் சொனனர். அது முத்திரை உள்ள கணையாழி என்று... அன்னை மகிழ்ந்துவிட்டாள்” என்றாள். பூரிசிரவஸ் “ஆம்” என்றான். ”நான் இதுவரை காமம் துய்த்ததில்லை. இங்கே ஆண்களே வருவதில்லை” என்றாள்.

பூரிசிரவஸ் “உன் தமையன்களுக்கு சொல்லவேண்டியதில்லையா?” என்றான். “எதற்கு?” என்றாள். பூரிசிரவஸ் “எங்களூரில் சொல்லியாகவேண்டும்” என்றான். “குழந்தை பிறப்பதைத்தான் நாங்கள் சொல்வோம்” என்றாள் பிரேமை. அவள் அவன் தோளில் கையிட்டு சற்றும் தயக்கமின்றி தழுவியபடி கரிய புருவங்களைத் தூக்கி இளநீல விழிகள் மின்ன “நான் அழகி என்று சொன்னீர்களே, அது உண்மையா?” என்றாள். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”ஆம்” என்றான். “என்னிடம் எவரும் அதை சொன்னதில்லை” என்று அவள் வாய்விட்டுச்சிரித்தாள். அவளுடைய பெரிய கைகளின் எடையில் அவன் தோள்கள் தழைந்தன.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் பிற இருவரைப்பற்றியும் சொல்லலாமா என்று எண்ணிக்கொண்டான். அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது என்கையில் அதை சொல்வதனால் பொருளில்லை. எத்தனை பெரிய உடல் என அவளை அருகே பார்த்தபோது அவன் அகம் வியந்துகொண்டே இருந்தது. அவன் அவள் கைகளைப் பற்றி தூக்கி நோக்கினான். “என்ன பார்க்கிறீர்கள்?” என அவள் கேட்டாள். “உன் கைகள். மிகப்பெரியவை. நீ நிற்கும்போது இரண்டு சிறுவர்கள் உன் இருபக்கமும் நிற்பது போலிருக்கிறது” என்றான்.

ஃபூர்ஜ மரப்பட்டையின் உட்பக்கம் போல மிகவெண்மையான கைகள். அவன் கைகளை விட மும்மடங்கு பெரியவை. “நீ என்னைவிட இருமடங்கு பெரியவளாக இருக்கிறாய்” என்றான். “ஆம்” என்று அவள் சிரித்தாள். மகிழ்ச்சியை சிரிப்பாக அன்றி வெளிக்காட்ட அவளுக்குத் தெரியாது என நினைத்துக்கொண்டான். கைகளை விரித்துக்காட்டி “பிதாமகர் சொன்னார். நான் அவரைப்போலவே இருக்கிறேன் என்று. என் தந்தையின் தந்தை மிகப்பெரியவர்.” அவன் அவள் கைகளை வருடி “ஃபூர்ஜபத்ரம்... எத்தனை வெண்மை!” என்றான்.

“ஃபூர்ஜமரத்தின் பட்டைகளை நாங்கள் வெட்டி சிறிய துண்டுகளாக்கி வைப்போம். கீழிருந்து வணிகர்கள் வந்து வாங்கிச்செல்வார்கள்” என்றாள் பிரேமை. “எதற்கு என்று தெரியுமா?” என்றான். “தெரியாது” என சிரித்தாள். “அது ஏடு. அதில்தான் நூல்களை எழுதுகிறார்கள்” என்றான். “நூல்கள் என்றால்?” என்றாள்.

அவன் ஒருகணம் திகைத்துவிட்டான். “உனக்கு எழுத்துக்கள் தெரியுமா?” என்றான். “வணிகர்கள் தோல்பட்டையில் எழுதுவார்களே?” என்றாள். “அது தெரியாது.” “அவை எண்கள். எழுத்துக்களும் உண்டு. அவற்றைச் சேர்த்து எழுதுவதற்குப்பெயர் நூல்” என்றான். “ஏன் எழுதவேண்டும்?” என்றாள். “நாம் இப்போது பேசுவதை முழுக்க அப்படியே எழுதிவைக்க முடியும். நீயும் நானும் முதிர்ந்து கிழங்களாக ஆனபின்னர் எல்லா சொற்களையும் அப்படியே வாசிக்க முடியும்.”

அவள் விழிகளை விரித்து “ஏன் அவற்றை வாசிக்கவேண்டும்?” என்றாள். பூரிசிரவஸ் அந்த வினாவை சிந்திக்கவே இல்லை. விழிகளைச் சரித்து ”அப்போது நாம் கிழவர்களாக இருந்தால் கிழவர்களின் பேச்சுகளைத்தானே அறியவேண்டும்” என்றாள் அவள். நீலவிழிகள். கள்ளமற்றவை. ஆனால் அவற்றில் அறியாமை இல்லை. அவனறியாத பலவற்றையும் அறிந்த நிறைவு ஒளிர்ந்தவை.

அவன் சிரித்தபடி “ஆம், தேவையில்லாத வேலைதான்.”என்றான். அவள் அணிந்திருந்த மரவுரியாடையை அகற்றி அவள் கைகளை முழுமையாக பார்த்தான். புயங்கள் பெரிய வெண்தொடைகள் போல உருண்டிருந்தன. தோளிலிருந்து ஆறு போல இறங்கிய பெரிய நீலநரம்பு கிளைவிரித்து முழங்கைக்கு வந்தது. தோலுக்கடியில் ஓடிய நரம்புகளை முழுக்க பார்க்கமுடிந்தது. அவளது உள்ளங்கையை விரித்தான். அவனுடைய கையை முழுமையாகவே உள்ளே வைக்க முடிந்தது. மரப்பட்டை போல காய்த்திருந்தன.

அவன் குனிந்து அவளுடைய பருத்த புயங்களை முத்தமிட்டான். அவள் கூசி ஓசையிட்டு சிரித்தாள். “அய்யோ, வெளியே கேட்கும்” என்றான். அவள் விழிகூர்ந்து ”ஏன் கேட்டாலென்ன?” என்றாள். அவன் “ஒன்றுமில்லை” என்றான். அத்தனை பருத்திருந்தாலும் புயங்கள் ஷ்யோனக மரத்தில் கடைந்தவைபோல உறுதியாகவும் இருந்தன. மாமல்லர்களுக்குரிய பெருந்தோள்கள். ஆனால் அவை முற்றிலும் பெண்மை கொண்டவை.

“என் முப்பாட்டியைப்பற்றி தந்தை சொல்வதுண்டு. இளமையில் அவர் அவளை பார்த்திருக்கிறார். அவள் தூய பால்ஹிகக்குருதி. அவள் ஒருமுறை ஒரு இறந்த எருதை தூக்கிக்கொண்டு மலையிறங்கி வந்தாளாம்” என்றான். “எருதையா?” என்றாள். “நான் பெரிய கன்றுக்குட்டியை தூக்கியிருக்கிறேன். மலையிலிருந்து இங்கே கொண்டுவந்தேன். அதன் கால் உடைந்துவிட்டது...” என்றாள்.

“உன்னைப்போல் இருந்திருப்பாள்” என்றான். “எப்படி?” என்றாள். “பெருந்தோள்கள்...” என்றான் பூரிசிரவஸ். அவள் "தோள்களா?” என்றபடி தன் மரவுரி மேலாடையை கழற்றினாள். இரு யானைத்தந்தங்கள் போல அவள் கழுத்தெலும்புகள் வளைந்திருந்தன. தோள்களை நோக்கி மார்பிலிருந்து நாகம்போல ஒரு நரம்பு ஏறியது. கழுத்தின் இருபக்கமும் நீலநரம்புகள் முடிச்சுகளுடன் கீழிறங்கின. திரண்டு விரிந்த தோள்களை இருபக்கமும் பார்க்கவே தலையை திருப்பவேண்டியிருந்தது. வெயில்படும் கழுத்துப்பகுதி சிவந்திருக்க மார்பின் பெருவிரிவு மெல்லிய செந்நிற மயிர்ப்புள்ளிகளுடன் பனிநிறமாக இருந்தது.

அவள் தோளின் எலும்புமுட்டில் மெல்ல தொட்டான். அதன் உறுதியை உணர்ந்தபடி கையை மெல்ல இறக்கி புயங்களை பற்றிக்கொண்டான். அரக்குநிறக் காம்புகள் கொண்ட சிறிய கன்னிமுலைகள். அவற்றின் மேலும் நீலநரம்புகள். அவன் அவள் தோள்களை குனிந்து முத்தமிட்டான். அவன் அவளை அணைத்துக்கொண்டபோது மலைப்பாம்புகள் வளைப்பதுபோல அவள் கைகள் அவன் கழுத்தை சுற்றிக்கொண்டன. அவள் முகமும் கழுத்தும் சிவந்து வெம்மை கொண்டிருந்தன. “நீ இங்குவரும் பிற ஆண்களுடன் காமம் கொண்டாடுவாயா?” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “உன்னிடமிருப்பது பால்ஹிகநாட்டின் கணையாழி. நீ அதை செய்யக்கூடாது” என்றான். “நாங்கள் அதை செய்வதில்லை. அலைந்து திரியும் இடையர்கள்தான் அப்படி செய்வார்கள்” என்றாள். “நாங்கள் கணவன் இறந்து போனபிறகுதான் வேறு கணவர்களை தேர்ந்தெடுப்போம். ஏனென்றால் பசுவும் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமல்லவா?” பூரிசிரவஸ் அவளை முத்தமிட்டு “ஆம்” என்றான்.

அவளுடைய மணம். வெயில்படாத தோலில் அப்பகுதி மரங்கள் அனைத்திலும் இருக்கும் பாசியின் மணமிருந்தது. “ஹஸ்திகை மகிழ்ச்சியாக இருக்கிறாளா?” என்றான். “ஆம், அவள் கணவர் யானைகளை விட ஆற்றல் கொண்டவர்” என்றாள். “நான் அத்தனை ஆற்றல்கொண்டவன் அல்ல” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நான் ஆற்றல்கொண்ட மைந்தனை பெறுவேன்” என்றாள். “ஏனென்றால் நீங்கள் என்மேல் அன்பாக இருக்கிறீர்கள். கணவன் அன்பாக இருந்தால் மலைத்தெய்வங்கள் மகிழ்ந்து அழகிய குழந்தையை அளிக்கின்றன.”

வெளியே கேட்டுக்கொண்டிருந்த காற்றின் ஓசை மிக அண்மையில் வந்தது போல் பூரிசிரவஸ் உணர்ந்தான். வெண்ணிறப் பனிக்குள் மூழ்குவது போல அவளுடைய வெம்மையான கைகளுக்குள் தன்னை ஒப்புக்கொடுத்தான். மிக அப்பால் எங்கோ ஓநாயின் ஊளை கேட்டது. மேலும் மேலும் ஓநாய்கள் ஊளையிட்டன. ”அது என்ன ஓசை?” என்றான். அவள் அவன் செவியில் மூச்சொலியுடன் “ஓநாய்கள்” என்றாள். ஓநாய்களை கேட்டுக்கொண்டே இருந்தான்.

பின் தன்னை உணர்ந்தபோது கடும் குளிர் காதுகளை நோகச்செய்தது.அவன் கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு கருக்குழந்தைபோல சுருண்டு கொண்டான். அவள் எழுந்து அவன் தலைக்குமேல் தேவதாரு மரம்போல நின்றாள். எத்தனை பெரிய உடல் என மீண்டும் அவன் அகம் திகைத்தது. ஆனால் பேருடல்களுக்குரிய ஒழுங்கின்மை இல்லை. சிற்பியின் கனவு போன்ற உடல்.

அவள் தன் ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டிருப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “அது அன்னை ஓநாய். பசித்திருக்கிறது. நாங்கள் உண்ணாத ஊன்பகுதிகளை கொண்டுசென்று அதற்குக்  கொடுக்கவேண்டும்” என்றாள். திகைப்புடன் “ஏன்?” என்றான். “அன்னை ஓநாய் பசியில் சாகக்கூடாது அல்லவா” என்றாள். “அதன் குட்டிகள் குகைக்குள் பாலுக்காக குகைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும். அவை சாகக்கூடாது.”

அவன் புன்னகையுடன் ஒருக்களித்து “ஏன்?” என்றான். “தெய்வங்கள் சினம் கொள்ளும். அவை முயல்களையும் எலிகளையும் அனுப்பி எங்கள் கிழங்குப் பயிர்களை முற்றாக அழித்துவிடும்” என்றபின் குழலை சுருட்டிக் கட்டினாள். அவள் வெளியே சென்றபோது பூரிசிரவஸ் எழுந்து அவளுடன் சென்றான். “நானே போட்டு விடுவேன்” என்றாள். “நான் வெறுமனே பார்க்கத்தான் வருகிறேன்” என்றான். “மிதிக்காமல் வாருங்கள். குழந்தைகள் துயில்கின்றன” என்றாள்.

அடுமனைக்கு அப்பாலிருந்த சாய்வான கொட்டகையில் அவர்கள் கொன்று உரித்த பெரிய காட்டு ஆடின் எஞ்சிய உடல் கிடந்தது. அண்மையில் பார்த்தபோதுதான் அது எத்தனை பெரிய விலங்கு என்று தெரிந்தது. அதன் தோல் உரிக்கப்பட்டு தொடையிலும் விலாவிலும் இறைச்சி சீவி எடுக்கப்பட்டிருந்தது. எலும்புகளை இணைத்த தசைகள் இருந்தமையால் அது தன் வடிவிலேயே பெரிய தலையுடன் கிடந்தது. குடலும் இரைப்பைகளும் தனியாக தரையில் இருந்தன. அப்பால் காட்டுப்பூனை வாயின் கோரைப்பற்கள் தெரிய நாக்கு நீட்டிக் கிடந்தது.

அவற்றை அவள் எடுத்து வெளியே போடப்போகிறாள் என்று அவன் நினைத்தான். ஆனால் அவள் அவற்றை எடுத்து அருகே இருந்த காட்டுக்கொடியாலான கூடையில் வைத்தாள். “என்ன செய்யப்போகிறாய்?” என்றான். "நெருப்பு மணமிருப்பதனால் இங்கே ஓநாய்க்கூட்டம் வராது. அவை நிற்குமிடத்திற்கு கொண்டுசென்று போடவேண்டும். அன்னை ஓநாயை தனியாக அழைத்து உணவை அளிக்கவேண்டும். பிற ஓநாய்களை கல்வீசி துரத்தாவிட்டால் அன்னை ஓநாய்களை உண்ணுவதற்கு அவை விடா” என்றாள்.

பூரிசிரவஸ் திகைப்புடன் “நீ தனியாகவா செல்கிறாய்?” என்றான். வெளியே இளநீல நிறமான பனிப்புகையின் திரை மட்டும்தான் தெரிந்தது. “ஏன்? எனக்கு இந்தக் காட்டை நன்கு தெரியும். இந்த ஆட்டையே நான்தான் கண்ணிவைத்துப்பிடித்தேன்...” என்றபடி அவள் கூடையை முதுகில் தூக்கிக் கொண்டாள். “நான் வர நேரமாகும். ஓநாய்கள் தொலைவில் மலைச்சரிவில் நிற்கின்றன” என்றபின் அவனை நோக்கி புன்னகைத்தபின் ஒரு பெரிய கழியுடன் திரைக்கு அப்பால் சென்றாள்.

அவளுடன் செல்ல ஒருகணம் அவன் உடல் அசைந்தது. ஆனால் செல்லமுடியாதென்று அவன் அறிந்திருந்தான். குளிரைத் தாளமுடியாமல் அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. பற்கள் கிட்டித்து தாடை இழுத்துக்கொள்வது போலிருந்தது. அப்பால் ஓநாய்களின் ஓசை கேட்டது. பூரிசிரவஸ் கதவைமூடிக்கொண்டு திரும்ப வந்து சேக்கையில் படுத்துக்கொண்டு கால்கள்மேல் கம்பளியை போர்த்திக்கொண்டான். ஓநாய்களின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் செல்வதை அவை அறிந்துவிட்டன.

ஏராளமான ஓநாய்கள் இருக்கும் என தோன்றியது. பசித்த ஓநாய்களின் விழிகள் மட்டும் பனித்திரைக்கு அப்பால் மின்னுவதை அவன் அகத்தில் பார்த்தான். மின்மினிக்கூட்டங்கள் போல அவை சூழ்ந்துகொண்டன. அவற்றின் மூச்சொலியை கேட்டான். அவை மேலும் மேலும் அவனைச்சூழ்ந்து அணுகி வந்தன. “பிரேமை” என்றபடி அவன் விழித்துக்கொண்டான். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சிலகணங்கள் இருளை நோக்கி படுத்திருந்தான்

இருளில் கையருகே ஒரு மரவுரியாடை தட்டுப்பட்டது. அவள் இடையில் சுற்றியிருந்தது அது என உணர்ந்தான். அதை கையில் எடுத்தான். முகர்ந்து பார்த்தான். அவளுடைய மணம் அதிலிருந்தது. பசும்புலின் தழைமணம். ஊன்மணம். வியர்வையின் உப்பு மணம். அவள் முலைகளின் பாசிமணம். அவன் அதை தன் முகத்தின்மேல் போட்டுக்கொண்டான்.

மிகவெண்மையான ஃபூர்ஜமரப்பட்டையில் நீலநரம்புகள் போல எழுதப்பட்ட வாக்கியங்களை அவன் வாசிக்கத் தொடங்கினான். வாசித்தபோதும்கூட பொருள் கொள்ளமுடியவில்லை. பொருள்கொள்ள கூர்ந்தபோது அவை அழிந்தன. ஃபூர்ஜமரப்பட்டை உயிருடன் இருந்தது. மெல்ல நெளிந்தது. தொட்டபோது பட்டு போல மென்மையாக குழைந்தது. நீலநரம்புகள். மிகமென்மையானவை. அவன் அவற்றை வாசிக்கமுயன்றபடியே இருந்தான். மிகப்பெரிய நூல் அது.

பேச்சொலிகளைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டபோது அறைக்குள் இளவெயில் நிறைந்திருந்தது. கண்கள் கூச திரும்பவும் மூடிக்கொண்டான். விப்ரை வந்து கதவருகே நின்று “பாலும் அப்பமும் உள்ளன இளவரசே” என்றாள். அவன் எழுந்து கம்பளியை இடைவரை போர்த்தியபடி அமர்ந்து “பிரேமை எங்கே?” என்றான். “அவள் காலையிலேயே ஆடுகளுடன் சென்றுவிட்டாளே” என்றாள் விப்ரை.

அவன் எழுந்து அருகே சென்றுகொண்டிருந்த ஓடையில் முகம்கழுவி திரும்பிவந்து அப்பத்தையும் பாலையும் உண்டான். வெளியே வந்தபோது சகன் நின்றுகொண்டிருந்தான். “நான் கிளம்புகிறேன் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் “நான் பிதாமகருக்காக காத்து இங்கேயே இருக்கிறேன் என்று சொல்க” என்றபின் புன்னகையுடன் “எவருக்கும் எதையும் ஒளிக்கவேண்டியதில்லை” என்றான். சகன் “அது இங்கு வழக்கம்தான் இளவரசே” என்றபடி தலைவணங்கிவிட்டு புரவியில் ஏறிச்சென்றான்.

பிரேமை ஹஸ்திகையுடன் கருக்கிருட்டிலேயே எழுந்து கன்றுகளுக்கு பால்கறந்து கொண்டுவந்து வைத்துவிட்டு ஆடுகளுடன் மலைச்சரிவுக்குச் சென்றாள். இரண்டாம் நாள்முதல் அவனும் உடன் சென்றான். ஹஸ்திகை அவர்களை விட்டுவிட்டு விலகிச் செல்ல அவனும் அவளும் மட்டும் மலைச்சரிவில் அமர்ந்திருந்தனர். ஆடுகள் இளவெயிலில் மேய காலமே அற்றதுபோல மலைச்சரிவு விரிந்துகிடக்க அவளுடன் இருக்கையில் எதைப்பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. அவனறிந்த அனைத்தும் பொருளற்றுப்போயிருந்தன.

மீண்டும் மீண்டும் அவள் உடலை நோக்கியே அவன் சித்தம் சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் அவளுடைய பெரிய கைகளைப்பற்றியே பேசினான். “கைகளைப்பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்” என்று அவளே சிரித்துக்கொண்டு சொன்னாள். “ஆம், அவற்றைப்பற்றி ஒரு காவியம் எழுதினால்தான் என்னால் நிறுத்திக்கொள்ள முடியும்” என்றான். “காவியம் என்றால்?” என்று அவள் கேட்டாள். “நீளமான கதைப்பாடல். நூறுநாள் பாடினாலும் தீராத கதை.” அவள் விழிகளை விரித்து “அப்படி ஒரு பாடல் உண்மையில் உண்டா?”என்றாள்.

“ஆம், நிறைய” என்றான். அவள் தலைசரித்து சிந்தித்து “மனிதர்களுக்கு அத்தனைபெரிய கதை எங்கே இருக்கிறது?” என்றாள். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்தான். பிறகு வாய்விட்டுச்சிரித்தபடி “ஆம் உண்மைதான். மிகச்சிறிய கதைதான். ஆனால் சொல்வதற்கு நிறைய நேரமிருக்கிறதே. ஆகவே நீளமாக சொல்கிறோம்” என்றான்.

இரண்டுநாட்களிலேயே அவளுடைய உடல் அவனுக்குப் பழகியது. அதன்பின் அவள் விழிகளை நோக்கி பேசத்தொடங்கினான். தன் கனவுகளையும் இலக்குகளையும் பற்றி. “எனக்கு என ஒரு நிலம். அங்கே நான் அரசனாவேன். ஆனால் அங்குள்ள மக்களைக் கேட்டுதான் ஆட்சி செய்வேன். இன்றுவரை இங்கே வேளாண்மை செய்பவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்ததில்லை. வேளாண்குடிகளை தொல்லைசெய்பவர்கள் என்றே அரசர்கள் எண்ணுகிறார்கள்.”

”பாரதவர்ஷத்தின் எல்லா அரசுகளும் வணிகர்களுக்குரிய அரசுகளே. ஏனென்றால் அவர்கள்தான் அரசர்களுக்கு நிதி அளிக்கிறார்கள். ஆகவே அரசர்கள் வணிகர்கள் வேளாளர்களிடமிருந்து பொருள் கொள்ள ஒப்புகிறார்கள். நான் வேளாண்குடிகளுக்குரிய அரசொன்றை அமைக்க விழைகிறேன். அவர்களுக்கு நலம்செய்யும் ஓர் அரசு. ஏன் வணிகர்களை அரசுகள் வளர்க்கவேண்டும்? அரசே ஏன் வணிகம்செய்யக்கூடாது?”

அவள் அவன் பேசுவதை புன்னகை நிறைந்த விழிகளுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் பேசுவது புரிகிறதா என்ற ஐயம் எப்போதும் அவனுக்கு வரும். ஒவ்வொருமுறையும் அவள் அதை உடைத்து அவனை திகைக்கச் செய்வாள். “அரசே சந்தைகளை நடத்தலாம். இந்த வணிகர்கள் எந்த முறைமையும் இல்லாமல் இன்று செய்துகொண்டிருக்கும் வணிகத்தைவிட அது மேலானதாகவே இருக்கும்” என்றான்.

அவள் “ஆடுகளில் சில தற்செயலாக பாறையிடுக்குகளில் விழுந்து குவிந்திருக்கும் காய்களை தின்பதை பார்த்திருக்கிறேன். அதன்பின் அவை பாறையிடுக்குகளை முதலில் தேடிச்செல்லும். பிற ஆடுகளுக்குத்தெரியாமல் அவை செல்வதை கண்டிருக்கிறேன்” என்றாள். அவள் சொல்லவருவது அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவள் எப்போதுமே நுட்பமான எதையோ சொல்லக்கூடியவள் என்று அறிந்திருந்தான்.

“வணிகர்கள் செய்யும் வணிகத்தை யார் செய்வார்கள்” என்றாள். “அரசின் ஊழியர்கள்” என்றான். உடனே அவள் கேட்கவருவதை அவன் புரிந்துகொண்டான். அவள் “அவர்கள் வணிகர்களாக ஆகமாட்டார்களா?” என்றாள். அவன் சற்று கழித்து “ஆம், உண்மை” என்றான். மேலும் சிந்தித்து “ஆம், வணிகர்கள் என்பவர்கள் குலங்கள் அல்ல. மானுடரும் அல்ல. சில இயல்புகள்தான் வணிகம். அதைக்கற்றவர்கள் அதற்குரிய அனைத்து இயல்புகளையும் சேர்த்தே அடையமுடியும்.” என்றான்.

பிரேமை ”இங்குவரும் வணிகர்கள் எங்களிடம் பொருள்கொள்ளும்போது எங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனாலும் நாங்கள்தான் அவர்களுக்கு உணவும் இடமும் அளிக்கிறோம்” என்றாள். அவள் சொல்வதை அவன் புரிந்துகொண்டான். “ஆம், ஒவ்வொரு தொழிலும் அதற்கான அகநிலையை உருவாக்குகிறது. வணிகம் வணிகர்களை உருவாக்குகிறது.” பிரேமை சிரித்து “ஆடுகள் ஆடுமேய்ப்பவர்களை உண்டுபண்ணுகின்றன” என்றாள். “இதைச்சொன்னால் என் தந்தை மகிழ்வார்.”

ஏழாம்நாள் பிரேமையுடன் மலைச்சரிவில் அமர்ந்திருந்தபோதுதான் சிறுவன் சிவஜன் சிவந்த தலைமயிர் பறக்க சரிவில் ஓடிவந்தான். மூச்சிரைக்க “இளவரசே, உங்களைத்தேடி சகன்” என்றான். பூரிசிரவஸ் “யார்?” என்றான். “சகன்... இங்கிருந்து சென்றாரே அவர்தான்... மீண்டும் உப்பும் வெல்லமும் கொண்டுவந்திருக்கிறார். நீங்கள் உடனே வரவேண்டும் என்று என்னிடம் சொல்லியனுப்பினார்.” பூரிசிரவஸ் சிரித்தபடி “சரி நீ போ... நான் ஆடுகளுடன் வருகிறேன்” என்றான்.

பிரேமை “அவர் அதற்குள் சென்று மீண்டுவந்துவிட்டாரே. நான் நீங்கள் இங்கே கோடைகாலம் முழுக்கவும் இருப்பீர்கள் என்று நினைத்தேன்” என்றாள். “ஆம், கோடைகாலம் முழுக்க இருப்பேன்” என்றான் பூரிசிரவஸ். அவள் ஆடுகளை நோக்கியபின் “நீங்கள் சென்று ஒற்றரிடம் பேசுங்கள்... நான் மாலை வருகிறேன்” என்றாள். பூரிசிரவஸ் அவளைப்பார்த்து ஒருகணம் தயங்கி பின் “பிரேமை, நான் இன்றே ஒற்றனுடன் கிளம்பிச்செல்லவேண்டியிருக்கலாம்” என்றான். அவள் “எங்கே?” என்றாள். “பால்ஹிகபுரிக்கு.” அவள் கையிலிருந்த வளைதடி தாழ்ந்தது. உதடுகள் மெல்ல அதிர்ந்தன. “எப்போது வருவீர்கள்?” என விழிகளை விலக்கியபடி கேட்டாள்.

“வருவேன். அங்கே எனக்கிருக்கும் பணி என்ன என்று தெரியவில்லை. நான் பிதாமகரை அழைத்துசெல்வதற்காக வந்தவன். ஏழுநாட்களாக இங்கே இருக்கிறேன். அங்கே மூன்று அரசர்களும் எனக்காக காத்திருக்கிறார்கள். நான் சென்று ஆற்றவேண்டியபணிகள் பல உள்ளன...” என்றான். “ஆனால் ஓரிரு நாட்கள்தான். மீண்டு வருவேன். இந்தக்கோடைகாலம் உனக்குரியது...” அவள் உதடுகளை மடித்து கடித்துக்கொண்டாள். கண்கள் மெல்ல கலங்கி நீர்மைகொண்டன. பெருமூச்சுடன் ஆடுகளை நோக்கி சிலகணங்கள் கண்களைக் கொட்டி விட்டு சீழ்க்கை அடித்தாள்.

ஒரு ஆடு தலைதூக்கி நோக்கியது. பிற ஆடுகளும் ஓசையிட்டன. அவள் நாக்கைமடித்து ஒலியெழுப்ப முதல் சில ஆடுகள் திரும்பி மேடேறத்தொடங்கின. மற்ற ஆடுகளும் முண்டியடித்துக்கொண்டு ஓடைநீரலைகள் போல சென்றன. அவள் திரும்பி “செல்வோம்” என்றாள். அவன் அவளுடன் நடந்தபடி “என்மேல் சினம் கொள்ளக்கூடாது. நான்...” என்றான். அவள் “சினம் எதற்கு? எங்கள் துர்கேசகுலம் என்றும் இப்படித்தான் இருந்திருக்கிறது. பெண்கள்தான் இங்கே இருப்போம். நாங்கள் காடுபோல என்று என் அன்னை சொல்வாள். வேட்டைக்காரர்கள் வந்து மீண்டு செல்வார்கள்.”

“நான் திரும்பி வருவேன். நான்குநாட்களில்...” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் திரும்ப வராமலும் போகலாம். நான் அதை அறிவேன். துர்கேசிகள் அதற்கும் சித்தமாகத்தான் இருக்கவேண்டும்...“ என்றபின் சிரித்து “அதைப்பற்றி நாங்கள் துயருறுவதில்லை. நீங்கள் உங்கள் கடமைகளை செய்யலாம்” என்றாள். அவன் அவளருகே சென்று அவள் கைகளைப்பற்றி “நான் உன்னை விரும்பவில்லை என்று நினைக்கிறாயா?” என்றான். “இல்லை... விரும்புகிறீர்கள்... அதுகூட பென்ணுக்குத்தெரியாதா என்ன?”

”அப்படியானால்...” என்றான் பூரிசிரவஸ். அவள் “நாம் இதைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” என்றாள். இருவரும் ஆடுகளுக்குப்பின்னால் சென்றனர். பூரிசிரவஸ் கால்கள் தளர தலைகுனிந்து நின்றான். பின்னர் ஒரு எட்டில் முன்சென்று அவளை அள்ளி இடைவளைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டான். அவள் இதழ்களிலும் கன்னங்களிலும் முத்தமிட்டான். அவள் துயர் மிகுந்த முகத்துடன் அந்த முத்தங்களை வாங்கிக்கொண்டாள். ஈரத்தரைமேல் கனிகள் உதிர்வதுபோல அவள்மேல் முத்தங்கள் விழுந்துகொண்டிருந்தன.

பின்னர் அவன் நீள்மூச்சுடன் அடங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான். அவளுடைய பெரிய கைகள் அவன் தலைமயிரை வருடின. அவன் காதில் “ஆண்கள் துயரம்கொள்ளக்கூடாது. ஆண்களுக்கு துயரமளிக்கும் பெண்களை மூதன்னையர் விரும்புவதில்லை” என்றாள். அவன் “ம்” என்றான். அவள் “நீங்கள் திரும்பிவருவீர்கள்... எனக்குத்தெரிகிறது” என்றாள். “ஏன்?" என்றான். “தெரிகிறது” என்றாள். “எப்படி?” என்றான். “இப்போது...” என்றபடி அவன் தோளை விலக்கினாள்.

அவன் அவள் தோளில் முகம் புதைத்து “நான் நீ இல்லாமல் வாழமுடியாதவனாக ஆகிவிட்டேன்” என்றான். பிரேமை “அதெப்படி?” என்றாள். “ஏன்?" என்றான். “ஒருவர் இல்லாமல் இன்னொருவர் ஏன் வாழமுடியாது?” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “வாழலாம்... நான் வெறுமனே சொன்னேன்” என்றபின் “எப்போதாவது நீ என்னை உலகம் தெரியாத சிறுவன் என எண்ணியிருக்கிறாயா?”என்றான்.

“எப்போதுமே” என்றாள் அவள். ஒருகணம் சினந்து உடனே அவள் கண்களில் சிரிப்பை நோக்கி “கொன்றுவிடுவேன்” என்று கூவியபடி அடிக்கப்போனான். அவள் சிரித்தபடி சரிவில் ஏறி ஓடினாள். மறுபக்கம் ஏறி மலைச்சரிவில் தொலைவில் சிறிய புள்ளியாகத் தெரிந்த இல்லத்தை நோக்கி சென்றார்கள். அவள் அவனிடம் “அங்கே ஊரில் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று கேட்டாள்.

அவள் எப்போதும் கேட்க எண்ணியது அது என உணர்ந்தான். அதை இத்தனைநாள் கேட்காமல் தவிர்த்திருக்கிறாள். ”எவருமில்லை” என்றான் அவள் கைகளைப்பற்றி “நீதான் முதல்” என்றான். அவள் புன்னகைசெய்தாள். ஆடுகள் தொலைவில் வீட்டைக்கண்டதும் விரைந்து ஓடத்தொடங்கின. “நீர் அருந்த விழைகின்றன” என்றபடி அவள் நாவொலி எழுப்பி அவற்றைத் தொடர்ந்து சென்றாள்.

சகன் அவனுக்காக காத்து நின்றிருந்தான். புரவிகள் சேணமிடப்பட்டிருந்தன. பூரிசிரவஸ் அருகே சென்றதும் அவன் தலைவணங்கி “நாளைமாலை சௌவீரர் அவருடைய நாட்டுக்கு கிளம்புகிறார் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் “ஏன்?” என்றான். “இத்தனைநாள் காத்திருந்தார்கள். பிதாமகர் வருவதை இனிமேலும் எதிர்பார்க்கமுடியாது. அவர் மணம்புரிந்துகொண்ட செய்தியும் அவர்களுக்கு தெரிந்துவிட்டது” என்றான் சகன். “ஆகவே ஒரு விழவு எடுத்து பிதாமகரை வணங்கிவிட்டு திரும்பலாமென்று எண்ணியிருக்கிறார்கள்.”

“என்றைக்கு விழவு?” என்றான். “நாளை காலை” என்றான் சகன். ”ஏழன்னையர் ஆலயமுகப்பில் ஒரு பீடம் அமைத்து அதில் பிதாமகரின் கால்களை குறியாக நிறுவி மூன்று அரசர்களும் மலர்வணக்கம் செய்கிறார்கள். தங்கள் மணிமுடிகளை அதன்முன் வைத்து வணங்கிவிட்டு செல்கிறார்கள்...” பூரிசிரவஸ் “உண்மைதான். இனிமேலும் பிதாமகரை காத்திருப்பதில் பொருளில்லை” என்றான்.

அவன் உள்ளே சென்று தன் ஆடைகளை அணிந்துகொண்டான். பிரேமை இளஞ்சூடான நீரை தாலத்தில் கொண்டுவந்து நீட்டினாள். அதில் முகத்தையும் கழுத்தையும் கழுவிக்கொண்டான். இல்லத்தில் விப்ரை மட்டுமே இருந்தாள். அவள் கொண்டுவந்த வஜ்ரதானியப்பொடி இட்டு கொதிக்கவைக்கப்பட்ட பாலை அருந்திவிட்டு வணங்கி விடைபெற்றுக்கொண்டான். மீண்டும் வருக என்ற சொல்லையே அவளோ பிரேமையோ சொல்லவில்லை. அவன் பிரேமையின் கைகளைப்பற்றி “வருகிறேன்” என்று சொன்னபோது அவள் விழிகள் இயல்பான சிரிப்புடன்தான் இருந்தன.

புரவிமேல் ஏறிக்கொண்டபோது அவன் நெஞ்சில் துயர் நிறைந்தது. அது ஒற்றையடிப்பாதையில் இறங்கி பாதைநோக்கி சென்றபோது குருதி வழியும் தசைநார்களை ஒவ்வொன்றாக இழுத்து அறுத்துச்செல்வதாக உணர்ந்தான். கவண் வைத்திருந்த சிறுவன் அதை எப்படிச் செய்வான் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். அது மாட்டின் இதயத்தசையால் ஆனது. இதயம் குருதிசொட்டும்போதே அதை வளையமாக ஒற்றை நீள்சரடாக வெட்டிவிடவேண்டும். பின் நிழலில் இட்டு உலர்த்தி எடுத்து நன்றாக முறுக்கினால் இழுவிசைகொண்ட கவண்சரடாக ஆகிவிடும். பூரிசிரவஸ் புன்னகைத்துக்கொண்டான்.

மலைச்சரிவின் பாதையில் புரவிகள் நெட்டோட்டம் ஓடின. அவற்றின் குளம்படியோசை வெவ்வேறு திசைகளிலிருந்து மீண்டுவந்துகொண்டிருந்தது. புரவிகள் நுரைகக்கியபோது சற்று நின்று அவற்றை இளைப்பாறச்செய்தபடி மீண்டும் சென்றார்கள். மாலையிலேயே பால்ஹிகபுரி வந்துவிடுமென எண்ணிக்கொண்டான். மலைச்சரிவில் இப்போது வெள்ளிநிறமான வெயில் பொழிந்துகொண்டிருக்கும். “மீன்வெயில்” என்று அதை அவள் சொன்னாள். ”மாலைவெயில்?” என்றான். ”பூவெயில்” என்றாள். ஒவ்வொன்றுக்கும் அங்கிருந்தே சொற்களை எடுத்துக்கொண்டாள். அவள் மலைப்பாறையில் அமர்ந்து தன் வளைதடியில் முகம் சேர்த்து அரைத்துயிலில் இருப்பாள் என்று எண்ணிக்கொண்டான்.

மீண்டு வரவேண்டும். நான்கு நாட்களில். அது அவளுக்களித்த சொல். நான்கே நாட்கள். அச்சொற்களின் முடிவில் அவன் நினைவுகூர்ந்தான் அந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் பால்ஹிகபுரியையோ பிற நிலங்களையோ எண்ணிக்கொள்ளவில்லை.

பகுதி 6 : மலைகளின் மடி - 11

தூமபதத்தின் நுழைவாயிலை அஸ்வயோனி என்று பாடகர்கள் அழைப்பதுண்டு. மிக அருகே நெருங்கிச்சென்று அஸ்வபக்‌ஷம் என அழைக்கப்பட்ட கரியபாறைகளின் அடர்வை கடந்தாலொழிய அந்த சின்னஞ்சிறிய பாறையிடைவெளியை காணமுடியாது. குதிரையே விரும்பி வாலகற்றி அதை காட்டவேண்டும் என்பார்கள் பாடகர்கள். அயலவரைக் கண்டால் தன்னை மூடிக்கொண்டுவிடும்.

மலரிதழ்கள் போல எழுந்து விரிந்து நின்ற ஆறு பெரிய பாறைகளை கடக்கும்போது பேரோசையுடன் கீழே சரிந்துசெல்லும் சிந்தாவதியின் நீரோசை எழத்தொடங்கும். துமிப்புகை மூடிய இரண்டு பெரிய பாறைகளுக்கும் நீர்வழிந்து கருமையாக பளபளக்கும் நான்கு பாறைகளுக்கும் நடுவே சாட்டை கீழே விழுந்து கிடப்பதுபோல செல்லும் மூன்று வளைவுகள் கொண்ட பாதைக்கு அப்பால் தூமபதத்தின் பெரிய பாறைவெடிப்பு பிறப்புவாயில் என தெரியும்.

மேலே நின்றிருக்கும் பெரிய சாலமரம் ஒன்றின் வேர்கள் பாறைவிரிசல்களில் ஊறி வழிந்து தொங்கியாடும். அந்த வெடிப்புக்குள் நுழைவது வரை அதன் வழியாக மறுபக்கம் செல்லமுடியுமா என்ற ஐயம் எழும். பத்து குதிரைகள் ஒரேசமயம் உள்ளே நுழையும் அகலமும் ஐம்பது ஆள் உயரமும் கொண்டது அது என்று நுழைந்த பிறகுதான் தெரியவரும். இருபக்கமும் நீர் வழியும் பாறைகள் இருதிசை வெயிலையும் அறிந்தவை அல்ல என்பதனால் அங்கே இருளும் குளிரும் நிறைந்திருக்கும். ஒவ்வொருமுறையும் ஆழ்ந்த நீர்நிலை ஒன்றில் மூழ்குவதாகவே அதை பூரிசிரவஸ் உணர்வான்.

அதன் வழியாக மறுபக்கம் சென்றதுமே அதுவரை இருந்த குளிர் திடீரென்று குறைந்து பிறிதொரு நிலத்துக்கு வந்துவிட்டதை உணரமுடியும். அதுவரை இருந்த மங்கலான காற்றுவெளி கிழிந்து விலகி கண்களைக் கூசி நிறைத்து கண்ணீர் வழியச்செய்யும். ஒளிமிக்க வானம் கண்ணெதிரே மிக அண்மையில் என வளைந்து சென்று நிலத்தில் படிந்திருக்கும். சிந்தாவதியின் இருபக்கமும் பரவிய பச்சைவெளியில் இருந்து எழுந்து வானில் சுழலும் பறவைகளையும் இல்லங்களில் இருந்து எழுந்து மெல்ல பிரிந்துகொண்டிருக்கும் அடுபுகைக் கற்றைகளையும் காணமுடியும். மெல்லிய ஒலிகள் எழுந்து காற்றில் சிதறி மலைகளில்பட்டு திரும்பி காதுகளில் விழும். தெளிவாகக் கேட்பவை மணியோசைகள் மட்டுமே.

வலப்பக்கம் சரிந்துகொண்டிருந்த சிந்தாவதியின் அருவியை ஒட்டி இறங்கிச்சென்ற பாதையில் குதிரையில் செல்லும்போதே பூரிசிவரஸ் கீழே நகரத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த விழாக்களியாட்டுகளை பார்த்துவிட்டான். நகரமுகப்பிலிருந்து எரியம்புகள் எழுந்து வெடித்து அனல்மலர்களை விரித்து அணைந்தன. முரசொலியும் கொம்போசையும் மெல்லிய அதிர்வுகள் போல கேட்டுக்கொண்டிருந்தன. ரீங்காரமிட்டபடி துயிலும் பூனை போன்றிருந்தது நகரம். தெருக்களெங்கும் மக்கள் நெரித்துக்கொண்டிருப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது. கொடிகளும் மக்களின் மேலாடைகளும் ஒன்றான வண்ணக்கலவை நகரெங்கும் விரிந்தும் வழிந்தும் ததும்பியது.

ஒவ்வொருமுறை மலையிறங்கும்போதும் அந்த விழிநிறைக்கும் வான்வளைவும் நகரத்தின் சின்னஞ்சிறிய வண்ணக்குவியலும் அளிக்கும் உவகையை அவன் உடலெங்கும் உணர்வதுண்டு. அப்படியே மலையிலிருந்து பாய்ந்து இறகுபோல இறங்கி நகரில் சென்று நின்றுவிடவேண்டுமென விழைவான். ஆனால் அப்போது சலிப்புதான் எழுந்தது. திரும்பிச்சென்று பிரேமையின் கல்வீட்டின் இனிய வெம்மைக்குள் அமர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. மலைக்குமேல் நிறைந்திருக்கும் இனிய அமைதிக்கு செவியும் அகமும் பழகிவிட்டதுபோல தொலைவில் கேட்ட அந்த ஒலிச்சிதறல்களே அமைதியிழக்கச்செய்தன.

இன்னமும் மூன்றுநாட்கள். ஆம், மூன்றுநாட்கள். அதற்குமேல் நகரில் இருக்கலாகாது. விழவுமுடிந்ததும் பிதாமகரைத் தேடுவதாக அறிவித்துவிட்டு மலையேறி வந்துவிடவேண்டும். இந்தக்கோடையை முழுக்க பிரேமையின் வெம்மையான பெரிய கைகளின் அணைப்புக்குள் கழிக்கவேண்டும். அவள் இதழ்களின் மெல்லிய தழைமணத்தை அவள் தசைமடிப்புகளில் இருக்கும் பாசிமணத்தை அத்தனை அண்மையில் உணர்ந்தபோது புரவியிலிருந்து விழுந்துவிடுவதைப்போல ஓர் உணர்வெழுச்சியை அடைந்தான்.

சரிவுகளில் மிக விரைவாகவே புரவிகள் இறங்கிச்சென்றன. நிரைநிலத்தை அடைந்தபோது மலைச்சரிவுகளில் மலைநிழல்களும் முகில்நிழல்களும் மறைந்து வானம் மங்கலடையத் தொடங்கியிருந்தது. சிந்தாவதியின் கரைகளில் இலைகள் பசுங்கருமை கொள்ளத்தொடங்கி, பூசணிமலர்கள் அகல்சுடர்களாக ஒளிவிட்ட காய்கறித்தோட்டங்களில் மிகச்சிலரே இருந்தனர். அந்தியில் மலையிறங்கி வரும் விலங்குகளை அகற்றுவதற்காக விறகுகளை அடுக்கி தீயெழுப்பிக்கொண்டிருந்தனர். அவற்றின் தழலின் செம்மை நிறத்தைக் கண்டபோதுதான் இருட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.

முகில்களற்ற தென்கிழக்கு வானில் செம்மை பரவாமலேயே இருள் வந்தது. நகரிலிருந்து எழுந்த எரியம்புகளின் ஒளி வானின் இருளை மேலும் காட்டியது. பட்டிகளில் முன்னரே அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் நடுவே மூட்டப்பட்டிருந்த தழலுக்கு அருகே முட்டி மோதி ஒரே உடற்பரப்பாக மாறி நின்று சீறல் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. நகரின் மணம் வரத்தொடங்கியது. கன்றுத்தொழுவுக்கும் ஆட்டுப்பட்டிகளுக்கும் ஓநாய்க்குகைகளுக்கும் போல மனிதர்களுக்கென ஒரு மணமிருப்பதை பூரிசிரவஸ் அறிந்தான்.

நகரின் எல்லைக்குள் நுழைந்ததும் பூரிசிரவஸ் மெல்ல தன் சோர்வை இழந்து அகவிரைவை அடைந்தான். வெயிலில் காய்ந்துகொண்டிருந்த சாணிமணம் நிறைந்த தெருக்களில் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் உவகை நிறைவதை உடலசைவுகளிலேயே உணர்ந்தான். அதை அவன் புரவியும் அறிந்தது. பெரும்பாலும் ஆளொழிந்துகிடந்த தெருக்களில் குதிரையை குளம்படியோசை சுவர்களில் பட்டு எதிரொலி எழுப்ப விரையச்செய்து மையச்சாலையை அடைந்தான்.

குளிர் எழத்தொடங்கியிருந்தாலும் அத்தனை வணிகர்களும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். மலைகளில் இருந்து இறங்கிவந்த மக்கள் தடித்த கம்பளியாடைகளுடன் கரடிகள் போல ஆடியசைந்து தெருக்களை நிறைத்திருந்தனர். பொதுவாகவே திறந்தவெளிமக்கள் ஒருவருக்கொருவர் கூவிப்பேசுபவர்கள். விழவுநேரத்தின் களிவெறியே அவர்களை மேலும் கூச்சலிட்டுப் பேசச்செய்தது. மிக அருகே ஒருவன் இன்னொருவனை அழைத்த ஒலியின் காற்றசைவையே காதில் கேட்க முடிந்தது.

நகரத்தின் அத்தனை தெருக்களிலும் அனற்குவை மேல் ஏற்றிவைக்கப்பட்ட பெரிய செம்புக்கலங்களில் மது விற்கப்பட்டதை பூரிசிரவஸ் கண்டான். இந்தமக்கள் குளிர்காலம் முழுக்க மதுவுண்டு மயங்கிக்கிடக்கிறார்கள். கோடையில்தான் சற்று உடலசைத்து வேலைசெய்கிறார்கள். அப்போதுகூட அவ்வப்போது மதுக்களியாட்டம் தேவையாகிறது. அமைதிநிறைந்த அசைவற்ற மலைகளை நோக்கி நோக்கி அவர்களின் சித்தமும் அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது. அகத்தின் அசைவின்மையை அவர்கள் மதுவைக்கொண்டு கலைத்துக்கொள்கிறார்கள்.

விதவிதமான மதுமணங்கள் ஒன்றாகக் கலந்து குமட்டலெடுக்கச்செய்தன. வஜ்ரதானியம், கோதுமை, சோளம் ஆகியவற்றின் மாவை கலந்து புதைத்து புளித்து நொதிக்கவைத்து எடுத்த சூரம் என்னும் மதுவே பெரும்பாலான கலங்களில் இருந்தது. இன்கிழங்கை புளிக்கவைத்து எடுத்த சுவீரம். பலவகையான காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சோமகம். ஊனை புளிக்கவைத்து எடுக்கப்பட்ட துர்வாசம். அத்தனைக்கும் மேலாக அகிபீனாவின் இலைகளைக் கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம். 'காதலை புதைத்துவையுங்கள் கன்னியரே. அது கள்ளாகி நுரையெழட்டும். நினைவுகளை நொதிக்கவையுங்கள் காளையரே. அவை மதுவாகி மயக்களிக்கட்டும்.' மலைப்பாடகனின் வரிகளை நினைவுகூர்ந்தான்.

நினைவுகூர்ந்தானா இல்லை வெளியே அவற்றை கேட்டானா என திகைக்கும்படி அவ்வரிகளை அப்பால் எவரோ பாடிக்கொண்டிருந்தனர். தெருக்களில் மதுவருந்தாத ஆணையோ பெண்ணையோ பார்க்கமுடியவில்லை. ஒருவரோடொருவர் பூசலிடுகிறார்களா குலவிக்கொள்கிறார்களா என்றே உய்த்தறிய முடியவில்லை. பாதையை முழுமையாக மறித்து நின்று கைகளை ஆட்டி பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் வாயில் ஊறிய கோழையை துப்பிக்கொண்டும் இருந்தனர். பல இடங்களில் ஒற்றன் அவர்களை அதட்டியும் காலால் உதைத்தும் விலக்கித்தான் அவனுக்கு வழியமைக்க முடிந்தது. புரவிகளில் உரக்கப்பேசியபடி சென்ற படைவீரர்களும் மதுவருந்தியிருந்தனர். அவர்களில் எவருமே தங்கள் இளவரசனை அடையாளம் காணவில்லை. அல்லது கண்டாலும் பொருட்டாக எண்ணவில்லை.

பூரிசிரவஸ் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அங்கே கூடியிருந்தவர்களின் குரல்கள் கலந்த முழக்கம் எழுவதை கேட்டான். சுவர்களிலிருந்தெல்லாம் அந்த ஓசை எழுந்து தெருக்களை ரீங்கரிக்கச்செய்தது. முற்றமெங்கும் நகர்மக்கள் கூடி களிமயக்கில் கூச்சலிட்டு சிரித்து ஆடிக்கொண்டிருந்தனர். உடலசைவுகளில் இருந்து அங்கே ஒரு பெரும் பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. பெண்களும் குழந்தைகளும்கூட களிமயக்கில் இருக்க நடுவே சிலகுதிரைகளுக்கும் மது புகட்டப்பட்டிருந்தது அவை தலையை அசைத்து இருமுவது போன்ற ஒலியெழுப்பியதில் தெரிந்தது. ஆங்காங்கே எரிந்த அனலைச் சூழ்ந்து சிறிய குழுக்களாக கூடி நின்று கைகளை கொட்டியபடி இளம்பெண்களும் ஆண்களும் பாடி ஆட, அருகே முதியவர்கள் நின்றும் அமர்ந்தும் சிரித்துக்கொண்டிருந்தனர்.

ஒற்றன் இடைகளையும் விலாக்களையும் தோள்களையும் பிடித்துத்தள்ளி உருவாக்கிய இடைவெளி வழியாக முற்றத்தில் அவன் நுழைந்ததும் அவன் புரவியை சுட்டிக்காட்டிய ஒருவன் “இவன்... இவன்...” என்று சொல்லி சிரிக்கத்தொடங்கினான். இன்னொருவன் அவனை நோக்கி வாயில் கைவைத்து “உஸ்ஸ்!” என்றான். புருவங்களை நன்றாகத் தூக்கி வாயை இறுக்கியிருந்த ஒருவன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தான். இருவர் திரும்பத்திரும்ப சில சொற்களை பேசமுயல ஒருவன் குதிரையை நோக்கி வந்து அப்படியே கீழே விழுந்தான். பலர் குதிரைக் கனைப்பொலி எழுப்பி சிரிக்க சிலர் திரும்பிப் பார்த்து அவனை சுட்டிக்காட்டியபின் மேலே சிந்தனை எழாமல் நின்றனர். அப்பால் எவனோ ஒருவன் கால்தளர்ந்து மண்ணில் விழுந்தான்.

அவர்கள் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட முறையில் இருந்தே அவர்கள் அருந்தியிருந்த மதுவை உய்த்தறிய முடியும் என்று தெரிந்தது. ஓசையை வெறுத்தவன் ஊன்புளித்த துர்வாசத்தை அருந்தியிருப்பான். அதுதான் செவிப்பறையை நொய்மையாக்கி ஒலிகளை பலமடங்கு பெருக்கிக் காட்டி உடலை அதிரச்செய்யும். சுவீரம் தலையை எடைகொண்டதாக ஆக்கி செவிகளை மூடிவிடும். அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள். சுவீரம் குடித்தவனும் துர்வாசம் குடித்தவனும் இணைந்தால் அங்கே அடிதடி நிகழாமலிருக்காது.

பத்துப்பதினைந்துபேர் அமர்ந்து விம்மியழுதுகொண்டிருந்த படிகளில் ஊடாகப் படுத்திருந்தவர்கள் மீது காலடி படாமல் எடுத்து வைத்து பூரிசிரவஸ் மேலே சென்றான். அரண்மனையின் இடைநாழியில்கூட படைவீரர்கள் மயங்கி விழுந்து துயின்றுகொண்டிருந்தனர். ஒரே ஒரு வாள் மட்டும் தரையில் தனியாகக் கிடந்தது. சிறிய மரக்கதவுக்கு அப்பால் இரு வீரர்கள் குழறிப்பேசிப் பூசலிடும் ஒலி கேட்டது. அரண்மனையே காவலின்றி திறந்து கிடந்தது. பந்தங்கள் தங்கள் நிழல்களுடன் அசைந்தாடிக்கொண்டிருக்க தூண்கள் நெளிந்தன.

அரண்மனையிலும் எவரும் தன்னிலையில் இருக்க வழியில்லை என அவன் எண்ணிக்கொண்டான் அவன் காலடியோசை கேட்டு வந்து தலைவணங்கிய சேவகனிடம் “அமைச்சர் எங்கிருக்கிறார்?” என்றான். ”அவையில் இருக்கிறார் அரசே” என்றான். அவனுடைய இறுக அழுந்திய வாயை நோக்கியதும் பூரிசிரவஸ் தெரிந்துகொண்டான், அவனும் மது அருந்தியிருக்கிறான் என்று. ”மூத்தவர்?” என்றான். அவன் புருவம் ஒன்றைத் தூக்கி “அவர்...” என்றபின் “தெரியவில்லை இளவரசே, நான் உடனே சென்று...” என்று கையை நீட்டினான்.

அவையில் அவன் நுழைந்தபோது சுதாமர் அங்கே இருக்கைகளை சீரமைத்துக்கொண்டிருந்த சேவகர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் வணங்கி “வருக இளவரசே” என்றார். “நேற்று முழுக்க தியுதிமான் மூன்றுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். அவரும் மகளும் இங்கு வந்திருக்கையில் தாங்கள் இங்கில்லாமலிருந்ததை ஏதோ உளப்பிழை என அவர் எண்ணுகிறார் என்று தெரிந்தது” என்றார். “ஆம், அது இயல்பே” என்றான் பூரிசிரவஸ். “ஏதோ விழா என்றான் ஒற்றன். என்ன நடக்கப்போகிறது?”

“இனிமேல் காத்திருக்கவேண்டியதில்லை என்று சல்லியர் நினைக்கிறார். பிதாமகர் மலையிலிருந்து எப்போது மீள்வார் என்று தெரியவில்லை. மீள்வாரா என்றும் ஐயமிருக்கிறது. ஆகவே அவருக்காக ஒரு பாதுகைக்கல்லை நாட்டி பூசை செய்து மீளலாம் என அவர் சொன்னார்.” “பிதாமகர் நம் நாட்டுக்கு வந்திருப்பதை நமது குலங்கள் நம்பவேண்டுமே” என்றான் பூரிசிரவஸ்.

“ஏற்கெனவே நம்பிவிட்டார்கள். சிபிரரின் இல்லத்தில் அவர் தங்கியதை அக்குடிப்பெண்கள் சொல்லி பிறர் அறிந்திருக்கிறார்கள். ஒருநாளில் அது பெரிய புராணமாக மாறி பொங்கி எழுந்துவிட்டது. மலைக்குடிகள் அனைவரும் அறிந்துவிட்டார்கள். இன்று காலைமுதலே மலைகளில் இருந்து மழைநீர் போல மக்கள் இறங்கிவந்து நகரை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். புதைக்கப்பட்ட அத்தனை மதுக்கலங்களும் அகழப்பட்டுவிட்டன. நாளை காலைக்குள் நகர் முழுமையாகவே நிறைந்துவிடும். இனி நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை” என்றார் சுதாமர்.

பூரிசிரவஸ் பெருமூச்சுடன் ”இப்படி ஒரு வருகைக்காக மக்கள் காத்திருந்தார்கள் போலும்” என்றான். “இளவரசே, மக்கள் புராணங்களை நம்புகிறார்கள். உண்மைகள் மேல் தீராத ஐயம் கொண்டிருக்கிறார்கள் என்றார் சல்லியர். அவர்களுக்கு புராணங்களை அளிப்போம். அதன்பொருட்டு அவர்கள் வாளுடன் வருவார்கள் என்றார்.” பூரிசிரவஸ் “சுதாமரே, வரும்போது பார்த்தேன். மிக எளிய மக்கள். கிடைக்கும் தருணங்களிலெல்லாம் குடித்து கொண்டாட விழைபவர்கள். இவர்களைத் திரட்டி வாளேந்தச்செய்து களத்தில் கொன்று நாம் அடையப்போவது என்ன?” என்றான்.

“இல்லையேல் இந்த வாழ்க்கையை இவர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியாது இளவரசே. ஒரு பேரரசு நம்மை வென்று நம் மீது கப்பம் சுமத்தினால் இவர்களை அடிமைகளாக ஆக்கி நாம் மலைகளைக் கறந்து பொன்னீட்டவேண்டியிருக்கும். இவர்கள் இப்படி வாழவேண்டுமென்றால் வாளேந்தியாகவேண்டும்” என்றார். அது தன் எண்ணம் என்பதுபோல அத்தனை அண்மையாக இருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றான். “அரசாக திரள்வதா அழிவதா என்ற வினா மட்டுமே இம்மக்கள்முன் இன்று உள்ளது” என்றார் சுதாமர்.

“நாளை என்ன சடங்குகள்?” என்றான் பூரிசிரவஸ். “புலரி முதல் வேள்வி தொடங்கிவிடும். எரியெழலும், கதிர்வணக்கமும், இந்திரகொடையும் முடிந்தபின் பித்ருசாந்திக்கான பிண்டவேள்வி. அதன்பின்னர் வேள்வியன்னத்துடன் ஊர்வலமாகச் சென்று ஏழன்னையர் ஆலயத்தின் வலப்பக்கம் பீடம் அமைத்து நடப்பட்டுள்ள பாதுகைக்கல்லுக்கு அதைப்படைத்து நான்கு வேந்தரும் மூன்று குடியினரும் தங்கள் முடியும் கோலும் தாழ்த்தி பாதவழிபாடு செய்வார்கள். வைதிகர் வலம்வந்து வாழ்த்தி திரும்பியபின்னர் ஏழு குருதிக்கொடைகள். குருதியன்னத்தை மன்னரும் குலத்தலைவர்களும் குடிகளும் கூடி பகிர்ந்துகொள்வார்கள்” என்றார் சுதாமர்.

“சல்லியர் ஐந்து நெறிகளை வகுத்துள்ளார்” என்று சுதாமர் தொடர்ந்தார். ”இக்கொடைநிகழ்வுக்குப்பின் பால்ஹிககுலத்தின் ஒவ்வொரு குடியும் தனது கொடியுடன் பிற ஒன்பது குலங்களின் கொடிகளையும் சேர்த்தே தங்கள் ஊர்முகப்பிலும் அரண்மனை முகடிலும் பறக்கவிடவேண்டும். அத்தனை குடிநிகழ்வுகளிலும் பத்துகுலங்களில் இருந்தும் குடிகள் பங்கெடுக்கவேண்டும். முதன்மை முடிவுகள் அனைத்தையும் பத்து குலங்களின் தலைவர்களும் மன்னர்களும் கூடியே எடுக்கவேண்டும். தனியாக எந்த நாட்டுக்கும் தூதனுப்பவோ தூது பெறவோ கூடாது. பால்ஹிகக் குடிக்கு வெளியே குருதியுறவு கொள்வதாக இருந்தால் பத்துகுலங்களில் இருந்தும் ஒப்புதல் பெறவேண்டும்.”

”பத்து குலங்களிலிருந்து எவையெல்லாம் இப்போது இதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன?” என்றான் பூரிசிரவஸ். “சிறுகுடிகளில் கரபஞ்சகம் இன்னமும் வந்துசேரவில்லை. குக்குடம் வருவதாக தூதனுப்பியிருக்கிறது. பிற இரு குலங்களின் தலைவர்களும் தங்கள் அகம்படியினருடனும் பரிசுகளுடனும் வந்துவிட்டனர். கலாதம் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறது. துவராபாலம் சில கட்டளைகளை போடுகிறது. பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சுதாமர்.

“அரசர்களில் சகர் வந்துவிட்டனர். யவனர் இதுவரை எந்தச்செய்தியையும் அளிக்கவில்லை. துஷாரர் வந்துகொண்டிருப்பதாக பறவைச்செய்தி வந்தது. அவர்கள் விடியலில் ஷீரபதத்தருகே வரக்கூடும்.” பூரிசிரவஸ் தலையசைத்து “நல்ல செய்திதான் அமைச்சரே. பிறர் வந்துவிட்டதாக அறிந்தால் யவனர் வந்துவிடுவார்கள். இரு மலைக்குடிகளையும் சற்று அழுத்தம் கொடுத்தால் சேர்த்துக்கொள்ள முடியும்.”

“ஆம், நாளை மாலை இங்கே கூடும் பேரவைதான் பால்ஹிககுலத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்யவிருக்கிறது. சல்லியரையே இப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்பது சௌவீரரும் தங்கள் தமையனும் ஏற்றுக்கொண்ட முடிவாக இருக்கிறது. சகநாட்டு அமைச்சர்களிடம் அதைப்பற்றிய குறிப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் அரண்மனையின் அவைக்கூடத்தில் இப்போது அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு வேறுவழியில்லை” என்றார் சுதாமர். “ஆம், அதற்கு முன் அவர்கள் துஷாரரின் கருத்தென்ன என அறிய விழைவார்கள்” என்றான் பூரிசிரவஸ்.

மறுபக்கம் அரசமாளிகைக்குள் செல்லும் சிறுவாயில் திறந்து சலன் விரைந்து உள்ளே வந்தான். “சுதாமரே” என்றவன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்து ”வந்துவிட்டாயா? உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நாளை பாதுகைக்கல் பூசையில் அனைத்து இளவரசர்களும் வாளுறுதி பூணவேண்டும் என்றார் சல்லியர். ஆகவேதான் உன்னை வரச்சொன்னேன். இன்று உனக்கு ஓய்வில்லை. நகருக்குள் சென்று செல்லும் வழிகளை சற்றேனும் சீரமைக்க முடியுமா என்று பார். சென்றமுறை சாலைகளில் நின்ற பசுக்களையும் குடிகாரர்களையும் கடந்து வெளியே செல்ல இரண்டு நாழிகை ஆகிவிட்டது” என்றான்.

பூரிசிரவஸ் ”வேண்டுமென்றால் பசுக்களை அகற்றுபவர்களுக்கு ஏதேனும் பரிசுகளை அறிவிக்கலாம்” என்றான். “எத்தனை பசுக்கள் என்று என்ன கணக்கு இருக்கிறது? குடிகாரர்கள் பசுக்களை கொண்டுவந்தபடியே இருப்பார்கள். நமது வீரர்கள் பின்பக்கம் பசுக்களை அவர்களுக்கு பாதிப்பணத்துக்கு கொடுத்தபடியும் இருப்பார்கள். கருவூலமே ஒழிந்துவிடும்” என்றான் சலன்.

சுதாமர் புன்னகைக்க பூரிசிரவஸ் “அப்படியென்றால்...” என்றான். கையை வீசித்தடுத்து “சாலையில் நின்றிருக்கும் பசுக்களில் சிலவற்றை பிடித்துக்கொண்டு வரச்சொல். அவற்றின் உரிமையாளர்கள் வந்து தடுத்தால் நாளை வைதிகர்களுக்கு ஆயிரத்தெட்டு பசுக்களை அரசர் அறக்கொடையாக அளிக்கவிருப்பதாகவும் அரண்மனைப்பசுக்கள் போதவில்லை என்றும் சொல்லும்படி ஆணையிடு. காலையில் சாலையில் ஒரு பசுகூட இருக்காது” என்றபின் சலன் “யவனரும் கிளம்பிவிட்டார் அமைச்சரே. செய்தி வந்துவிட்டது” என்றான்.

”நன்று” என்றார் சுதாமர். “ஆம். ஆனால் யவனர் ஏன் தயங்கினார், அவருக்கு ஏதேனும் வேறு திட்டங்கள் இருந்தனவா என அறிந்தாகவேண்டும். அதை அவர் இங்கே எவ்வகையில் வெளிப்படுத்துவார் என்பதும் கருத்திற்குரியது” என்றான் சலன். சுதாமர் “ஆம், அதை அவர் இங்கே வந்தபின்னர்தான் உய்த்துணரமுடியும்” என்றார். சலன் “நான் தந்தையிடம் இதைப்பற்றி பேசவேண்டும். அவர் மதுவருந்திவிட்டு படுத்துவிட்டார். சற்று நேரம் கடந்தபின் நீங்களே சென்று அவரை எழுப்பிவிட்டு எனக்குத்தெரிவியுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான்.

அவனைப் பார்த்தபின் பூரிசிரவஸ் புன்னகையுடன் “இப்போதே ஒருவரை ஒருவர் வேவுபார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமை எவ்வளவுநாள் நீடிக்கும்?” என்றான். “நீடிக்கும் இளவரசே, இதை உருவாக்குவது அச்சம். ஒற்றுமைமூலம் அச்சம் அகல்வதை அறிந்தபின் பிரிந்துசெல்லமாட்டார்கள். தொடர்ந்து மாறிமாறி ஐயுற்றும் வேவுபார்த்தும் விவாதித்தும் சேர்ந்தே இருப்பார்கள். அரசக்கூட்டுகள் அனைத்தும் இவ்வகையினவே” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்து “நான் உணவருந்தி சற்றுநேரம் படுத்துவிட்டு நகருக்குள் செல்கிறேன்” என்றான்.

தன் அறைக்குள் சென்று ஆடைகளை மாற்றாமலேயே படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பனிமூடிய மலைச்சரிவுகளை கண்டான். பிரேமையின் வெண்ணிறமான பேருடல். பெரிய கைகள். எத்தனை பெரிய கைகள். அவள் ஆடையின்றி இருக்கையில் மூன்று உடல்கள் நெருங்கியிருப்பதுபோலவே தோன்றுவன. அவளுக்குப்பிறக்கும் மைந்தனும் பெருந்தோள்கொண்டவனாக இருப்பானா? அவன் உடல் சிலிர்த்து உடலை ஒடுக்கி இறுக்கிக்கொண்டு புன்னகைத்தான். இருளுக்குள் மூடிய கண்களுக்குள் அத்தனை ஒளி எங்கிருந்து வந்தது? உள்ளேதான் அத்தனை ஒளியும் இருக்கிறதா? அந்த ஒளிப்பெருக்கை கண்கள் வழியாக மொண்டு வந்திருக்கிறானா?

அவன் சிபிநாட்டின் செந்நிறப்பெரும்பாலையில் நடந்துகொண்டிருந்தான். அவன்மேல் பனிக்கட்டிகள் விழுந்தன. ஒரு சிரிப்பொலி. திரும்பிப்பார்க்கையில் விஜயையை கண்டான். சிறிய கண்கள். சிறிய பற்கள். கேழைமான் போன்ற சின்னஞ்சிறு உடல். கேழைமான் போலவே அவள் துள்ளி விரைந்தோடினாள். நில் நில் என்று கூவியபடி அவன் அவளைத்தொடர்ந்து ஓடினான். நான்குபக்கமிருந்தும் ஏராளமான பெண்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். எல்லோருமே அவள் முகம் கொண்டிருந்தனர். ஆடிப்பாவைப்பெருக்கம் போல. அவன் திகைத்து ஒவ்வொரு முகமாக நோக்கி சுழன்றான். அவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்க விழித்துக்கொண்டான். இருண்ட அறையில் சற்று நேரம் விழி திறந்து கிடந்தபின் எழுந்தான்.

இன்னொரு நாள் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இன்னமும் நடுநிசி ஆகவில்லை என வெளியே கேட்ட ஓசைகளிலிருந்து அறிந்தான். இன்று ஒருநாள். நாளை சௌவீரரும் மத்ரரும் கிளம்பிச்செல்வார்கள். பிறரும் அன்றே கிளம்பக்கூடும். அவர்கள் கிளம்பவில்லை என்றாலும் தாழ்வில்லை. அவன் கிளம்பமுடியும். மலைப்பாதையில் சுழன்று ஏறிச்செல்லும் அவனை அவனே கண்டான். காற்றுப்பாதையில் செல்லும் செம்பருந்து போல. முகில்களுக்கு நடுவே கல்லடுக்கிக் கட்டப்பட்ட ஒரு அழகிய வீடு. அந்திவெயிலில் பொன்னென மின்னுவது. அங்கே வெண்முகில்களால் ஆன உடல்கொண்ட ஒரு பெண். ஆம், இன்னும் இருநாட்கள்.

வெளியே வந்தபோது சேவகன் வந்து வணங்கினான். "ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். நகரை பார்த்துவருகிறேன்” என்றான். சேவகன் கொண்டுவந்த வெந்நீர்த்தாலத்தில் முகம் கழுவி வேறு ஆடைகளை அணிந்துகொண்டு இடைநாழி வழியாக நடந்தபோது சிரிப்பொலி கேட்டது. சில கணங்கள் நின்றபின் மெல்ல சென்று மலர்வாடியை பார்த்தான். அங்கே சேடியர் சூழ விஜயையும் சித்ரிகையும் வேறு மூன்று இளவரசிகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை கண்டான். அனைவருமே சற்று மதுமயக்கில் இருப்பது சிரிப்பொலியில் இருந்து தெரிந்தது. யாரோ ஏதோ தாழ்ந்த குரலில் சொல்ல மீண்டும் சிரிப்பொலி வெடித்தெழுந்தது. ஒருத்தி எழுந்து அப்பால் ஓட பிறர் சிரித்தபடி அவளை துரத்திப்பிடித்துக்கொண்டனர்.

அவன் இடைநாழி வழியாக சென்றபோது சேவகன் வந்து “மூத்தவர் தங்களை அழைத்துவரச்சொன்னார்” என்றான். ”எங்கே இருக்கிறார்கள்?” என்றான். “சிற்றவைக்கூடத்தில். அங்கே மத்ரரும் அவரது இளையவரும் சௌவீரரும் இருக்கிறார்கள்” என்றான். திரும்பி மரப்படிகளில் ஏறி மேலே சென்று அரசரின் சிற்றவைக்கூடத்தை அடைந்தான் பூரிசிரவஸ். வாயிலில் நின்ற காவலன் அவன் வருகையை உள்ளே சென்று அறிவித்துவிட்டு கதவைத்திறந்தான். உள்ளே சென்று தலைவணங்கி விலகி நின்றான். சலன்  "அமர்க!” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டான்.

தியுதிமான் அவனை கூர்ந்து நோக்குவதை உணர்ந்தான். அவையில் சோமதத்தரும் ஃபூரியும் இருக்கமாட்டார்கள் என்பதை அவன் முன்னரே எதிர்பார்த்திருந்தான். சலன் “இளையோனே, பால்ஹிகர்களின் பத்துகுலங்களும் ஒன்றாவது உறுதியாகிவிட்டது. புலரியில் நிகழும் அடிபூசனைக்குப்பின் அவைக்கூடத்தில் அரசுக்கூட்டு முறைப்படி உறுதிசெய்யப்பட்டு எழுதி கைமாற்றப்படும்” என்றான். ”அதற்கு முன்பு அஸ்தினபுரியுடனான நமது உறவை நாம் முறைமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கே கூடியிருக்கிறோம்.” பூரிசிரவஸ் தலையசைத்தான்.

சல்லியர் “அஸ்தினபுரியின் இரு தரப்பில் எவருடன் நாம் இணையப்போகிறோம் என்பதை இப்போதே முடிவெடுத்தாகவேண்டும். அதை முறைப்படி அவர்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும்” என்றார். ”அனைத்து முறைகளிலும் சிந்தனைசெய்தபின் கௌரவர்தரப்பில் இணைந்துகொள்வதே நமக்கு உகந்தது என்ற எண்ணத்தை அடைந்தேன். அதை இங்கே முன்வைத்தேன்” என்றார். சலன் “இளையோனே, நான் உன் எண்ணங்களையும் அறியலாமென விழைந்தேன்” என்றான்.

“ஏன் நாம் உடனே ஒருபக்கத்தை நோக்கி செல்லவேண்டும்?” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் நடுவே போர் நிகழும். அதில் ஐயமே இல்லை. அப்போரில் நாம் எவரை சார்ந்திருக்கிறோம் என்பதை முடிவெடுக்கவேண்டும்...” என்றார் சல்லியர். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ். “இளவரசே, போரில்தான் வலுவான கூட்டுகள் உருவாகின்றன. அவை அமைதிக்காலத்திலும் நீடிப்பவை. இப்போது பாண்டவர்களைவிட கௌரவர்களே நம் உதவியை நாடுபவர்கள். நாம் கௌரவர்களுடன் இணைந்துகொண்டால் சிந்து நாட்டை விழுங்கவரும் யாதவகிருஷ்ணனையும் அஞ்சி பின்னடையச்செய்யலாம்” என்றார் சல்லியர்.

சற்று நேரம் சிந்தித்தபின் “உடனே ஒரு போர் நிகழுமென நான் எண்ணவில்லை மத்ரரே” என்றான் பூரிசிரவஸ். “திருதராஷ்டிரர் இருக்கும்வரை யுதிஷ்டிரர் போருக்கு எழமாட்டார்.” சல்லியர் “இல்லை, சத்ராவதியில் இருந்து உளவுவந்தது. அஸ்வத்தாமன் தன் படைகளை ஒருங்கமைத்து அரண்களைமூடிக்கொண்டு காத்திருக்கிறார். எக்கணமும் பாஞ்சாலப் படைகள் தன்மேல் எழுமென எண்ணுகிறார்” என்றார்.

“அது அவரது ஐயம். அவ்வண்ணம் நிகழாதென்றே எண்ணுகிறேன். இன்றைய அரசுச்சூழல் இன்னமும் தெளிவடையவில்லை. இன்று நான்கு பெரும் விசைகள் உள்ளன. மகதமும் துவாரகையும் இருமுனைகளில் நிற்கின்றன. நடுவே அஸ்தினபுரி பிளவுண்டிருக்கிறது. இது போருக்கான சூழல் அல்ல. இவை மோதியும் இணைந்தும் இருமுனைகளாக ஆகவேண்டும். எப்போதுமே பெரிய போர்கள் இரண்டு நிகரான முனைகள் உருக்கொள்ளும்போது மட்டுமே உருவாகின்றன” என்றான் பூரிசிரவஸ்.

“என்ன நிகழுமென எண்ணுகிறாய்?” என்றான் சலன். “மகதம் வெல்லப்படுமென்றால் அரசியல் நிகர்நிலைகுலையும், தொடர்ந்த மோதல்கள்வழியாக இருமுனைகள் கூர்படலாம். அதுவரை ஒன்றுமே நிகழாது. யானைகள் இழுக்கும் வடங்கள் போல நான்குதிசையிலும் அனைத்தும் தெறித்து உச்சகட்ட நிலையில் அசைவிழந்து நிற்கும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அது நல்லது. நாம் காத்திருப்போம். நம்மை வலுப்படுத்திக்கொள்வோம். நமது கூட்டு வலிமையாகட்டும். நமக்கென படைகள் திரளட்டும்.”

“அதைத்தான் நான் அஞ்சுகிறேன் இளையோனே” என்றான் சலன். “இந்தக்கூட்டு குறித்த செய்தி துவாரகைக்கோ அஸ்தினபுரிக்கோ செல்லும்போது நம்மை முளையிலேயே கிள்ள அவர்கள் முடிவெடுக்கலாம்.” பூரிசிரவஸ் “அதற்கான வாய்ப்பு உள்ளது மூத்தவரே. ஆனால் அதற்காக நாம் வல்லமைகுறைவான எவருடனாவது சேர்ந்துவிடக்கூடாது. அது நம்மை அழித்துவிடும்” என்றான். “நாம்..." என சலன் தொடங்கியதும் சல்லியர் கையமர்த்தி “நான் இளையவன் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் இங்கிருந்து நாம் எம்முடிவையும் எடுக்கவேண்டியதில்லை” என்றார்.

”இளையவனே, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பிய துரியோதனனும் சகுனியும் கர்ணனும் இன்னமும் அஸ்தினபுரிக்கு சென்று சேரவில்லை. அவர்கள் கங்கைக்கரையில் பாஞ்சால எல்லையில் உள்ள தசசக்ரம் என்னும் ஊரின் கோட்டைக்குள் தங்கள் படைகளுடன் தங்கியிருக்கிறார்கள். நீ அங்கே சென்று அவர்களிடம் பேசு. அவர்கள் எண்ணுவதென்ன என்று அறிந்து வா” என்றார்.

“அவர்களை சென்று பார்ப்பதே ஒரு தரப்பை சார்வதாக எண்ணப்படுமே” என்றார் சுமித்ரர். “நான் பாண்டவர்களிடம் அவர்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது என்று பேசுகிறேன். குந்தியின் ஒற்றர்கள் கௌரவர் அவையிலிருந்து அச்செய்தியை பாண்டவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். அதனூடாக இரு தரப்புக்கும் நடுவே நாம் இருப்பதாகத் தெரிவோம்” என்றான் பூரிசிரவஸ்.

சலன் நகைத்து “இவன் என்றோ சக்ரவர்த்தியாகப் போகிறான் மத்ரரே. உறுதி” என்றான். சல்லியர் சிரித்து “எனக்கு மகள் இருந்தால் கொடுத்திருப்பேன். அதைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றார். பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன். நகர்க்காவலை சீர்பார்க்கவேண்டும்” என்றான்.

கதவைக் கடந்து இடைநாழி வழியாக படிகளை நோக்கி நடக்கும்போது சாளரம் வழியாக வந்த குளிர்காற்று அவன் மேல் படர்ந்து பிரேமையின் இல்லத்தையும் மலைச்சாரலையும் அவன் நெஞ்சில் எழுப்பியது. அவளுடைய பச்சைக்கண்களையும் பெரிய கைகளையும் நினைத்துக்கொண்டான். திடீரென்று எங்கோ நெடுந்தொலைவில் கடந்தகாலத்தின் ஆழத்தில் அவளும் அந்நிலமும் இருப்பதாகத் தோன்றியது.

பகுதி 6 : மலைகளின் மடி - 12

பூரிசிரவஸ் அரண்மனை முகப்புக்கு நடக்கும்போது தன் உடலின் எடையை கால்களில் உணர்ந்தான். திரும்பச்சென்று படுக்கையில் உடலை நீட்டிவிடவேண்டுமென்று தோன்றியது. முகத்தை கைகளால் அழுத்தி வருடிவிட்டு களைத்த குரலில் சேவகனிடம் “புரவியை ஒருக்கச் சொல்" என்றான். அவன் வணங்கி முன்னால் ஓடினான். எவரிடமென்றில்லாத சினம் அவனுள் ஊறி நிறைந்திருந்தது. தன் தாடை இறுகியிருப்பதை உணர்ந்து அதை நெகிழச்செய்துகொண்டான்.

முற்றத்திலிருந்து வந்த காற்றிலேயே மதுவின் நாற்றமும் கூட்டத்தின் ஓசையும் அனலொளியும் கலந்திருந்தன. அந்த வாள் இடைநாழியில் அப்படியே கிடந்தது. அதை காலால் தட்டி வீசினான். அது மரச்சுவரில் பட்டு உலோக ஒலியுடன் சுழன்று சென்று நின்றது. அப்பால் எவரோ “யாரடா அவன் சோம்பேறி?” என்று குழறிய குரலில் கேட்டான். உடைவாளை உருவி அவனை வெட்டி வீழ்த்தவேண்டுமென எழுந்த சினத்தை மீண்டும் பற்களைக் கிட்டித்து அடக்கிக்கொண்டான்.

முற்றத்தில் இறங்கியபோது அலைகலந்த நீர்ச்சுழியில் குளிரக்குளிர இறங்குவதுபோலிருந்தது. அரைவட்டமான வெளியில் கூட்டம் மேலும் செறிந்திருந்தது. கடுமையான பனி அவர்கள் மேல் பொழிந்து குதிரைகளின் உடல்களை சிலிர்க்கச்செய்தது. அவ்வப்போது வீசியகாற்றில் தழல்களும் கூடாரத்துணிகளும் தழைந்தாடின. பனிச்சாரலால் அரண்மனையின் மரமுகடுகள் நனைந்து வழிந்தன. ஆனால் இளையோர் அதை பொருட்படுத்தாமல் குடித்து களியாடிக்கொண்டிருந்தனர். காட்டீச்சை ஓலையால் செய்யப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்ட மெல்லிய மழையாடைகளைப் போர்த்தியபடி குழந்தைகளும் முதியவர்களும் முற்றம் முழுக்க பரவி துயின்றுகொண்டிருந்தனர்.

பூரிசிரவஸ் புரவியில் ஏறி நகர்த்தெருக்கள் வழியாக சென்றான். பசுக்களாலும் குடித்து மயக்கேறி விழுந்து கிடந்த மலைமக்களாலும் தெரு நிறைந்திருந்தது. ஆனால் வணிகர்கள் ஊன்கொழுப்பு எரிந்த விளக்குகளுடனும் மதுக்கலங்களுடனும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். பசுக்களை பிடித்துவருவது குறித்து சலன் சொன்ன எண்ணத்தை அவன் நினைத்துக்கொண்டான். மயங்கி ஆடிக்கொண்டிருந்த நகரில் பெண்களை பிடித்துக்கொண்டு சென்றால்கூட எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அறைக்குள் இருந்தே போடப்படும் திட்டங்களில் இருக்கும் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையை எண்ணியபோது தாடையின் இறுக்கம் நெகிழ்ந்து புன்னகை எழுந்தது.

ஏழன்னையர் கோயிலருகே வலப்பக்கமாக கல்லில் அமைக்கப்பட்ட பெரிய பீடத்தின்மேல் குடைவாக இரண்டு பெரிய பாதங்கள் செதுக்கப்பட்ட கல் வைக்கப்பட்டிருந்தது. மானுட அளவைவிட இருமடங்கு பெரிய பாதங்கள். இரண்டு கல்சிற்பிகள் அப்போதும் அதை செம்மைசெய்துகொண்டிருந்தனர். அவனைக்கண்டதும் முதிய சிற்பி நிமிர்ந்து “வணங்குகிறேன் இளவரசே” என்றார். பூரிசிரவஸ் “விடிவதற்குள் முடிந்துவிடுமா?” என்றான். “சிறியவேலை. நேற்றே முடித்துவிட்டேன். நிறைவாக இல்லை என்று சற்று முன்னர்தான் தோன்றியது” என்றார் சிற்பி. பின்னர் “எளிய சிற்பம்தான். ஆனால் இனி நெடுங்காலம் இது இறைவடிவமாக வணங்கப்படும் அல்லவா?” என்றார்.

புன்னகையுடன் அவன் அணிவாயிலையும் தோரணங்களையும் பார்த்தான். அனைத்தும் முன்னர் பலமுறை அங்கே செய்யப்பட்டவைபோலவே இருந்தன. சலன் இம்முறை வேறுவகையில் மேலும் சிறப்பாக அமைய என்னென்ன ஆணைகளை விடுத்திருப்பான் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அந்நகரம் மலைக்காற்று உருவாக்கும் மணல்குவை போல. அது தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்ளமுடியாது. கூர்ந்து நோக்கினால் சென்றமுறை நிகழ்ந்த அத்தனை பிழைகளும் மீண்டும் நிகழ்ந்திருக்கும் என்று தோன்றியது.

எரியம்பு ஒன்று ஷீரபதத்திற்கு அப்பால் எழுந்தது. காவல்மாடத்தில் இருந்து மேலும் இரு எரியம்புகள் எழுந்தன. மும்முறை எரியம்பு பரிமாறப்பட்டதும் பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். துஷாரர் படைகள் நெருங்கிவிட்டன. அரண்மனையிலிருந்து எரியம்பு எழுந்தது. பன்னிருவர் கொண்ட காவலர்படை ஒன்று குதிரைகளின் குளம்போசை சுவர்களெங்கும் எதிரொலிக்க சாலைவழியாக வந்தது. பசுக்களையும் குடிகாரர்களையும் அதட்டியபடி அவர்கள் எதிரே வந்து நின்றனர்.

முன்னால் வந்த நூற்றுக்குடையோன் “துஷாரர் வந்துவிட்டார்கள் இளவரசே. எதிர்கொண்டு அழைத்துவர ஆணை” என்றான். “அமைச்சர் மூத்த இளவரசரை அழைத்துச்செல்லும்படி சொன்னார். அவர் துயின்றுகொண்டிருக்கும் இடமே தெரியவில்லை. ஆகவே மாத்ர இளவரசர்களை அழைத்துச்செல்கிறோம்.” அதன்பின்னர்தான் பூரிசிரவஸ் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் பார்த்தான். இருவரும் பெரிய மழையாடைக்குள் முகம் தெரியாமல் குனிந்து அரைத்துயிலில் இருந்தனர். "செல்லுங்கள்” என்றபின் அவன் நகருக்குள் நுழைந்தான்.

நகர் முழுக்க குடிகாரர்கள்தான் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் நிறைந்திருந்தனர். அனைத்து இல்லங்களும் கதவுகள் விரியத்திறந்து உள்ளறைகளில் எரிந்த ஊன்நெய் விளக்குகளைக் காட்டியபடி மனித அசைவில்லாமல் நின்றிருந்தன. இந்நகரை ஒன்றும் செய்யமுடியாது என எண்ணிக்கொண்டான். அனைத்தும் எப்போதும் எப்படி நிகழுமோ அப்படித்தான் நிகழும். இந்நகரை கட்டுப்படுத்தும் ஆணை என ஏதுமில்லை. இது நகரமே அல்ல. ஒரு மக்கள்திரள். அல்லது மக்கள் திரளும் ஒரு இடம். ஒரு நிலச்சுழி. வேறொன்றுமில்லை.

மீண்டும் திறந்த இல்லங்களை நோக்கியபடியே சென்றான். அப்போது அவன்மேல் எடைமிக்க ஒன்று விழுந்தது போல அவ்வெண்ணம் வந்தது. உடல் உவகையால் நடுங்க “ஆம்!” என்று சொல்லிக்கொண்டான். “ஆம் ஆம் ஆம்” என உள்ளம் துள்ளியது. அந்த உவகையின் சில அலைகளுக்குப்பின்னரே அவ்வெண்ணத்தை சொற்களாக ஆக்கிக்கொள்ள அவனால் முடிந்தது. அது ஒரு நகரமாக ஆகாமலிருக்கக் காரணம் ஒன்றே. அதைச்சுற்றி ஒரு கோட்டைவேண்டும்.

மலைகள் சூழ்ந்திருக்கையில் பாதுகாப்புக்கென கோட்டை தேவையில்லைதான். ஆனால் கோட்டை கண்கூடான எல்லை. இன்று அந்நகரம் ஓர் அக உருவகம் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் அதன் எல்லை ஒவ்வொன்று. கோட்டை அதற்கொரு உடலை அளிக்கிறது. அதன்பின்னரே அந்நகரம் விழிகளால் பார்க்கப்படுவதாகிறது. தங்களை இம்மக்கள் இன்று ஒரு கூட்டமாகவே உணர்கிறார்கள். கோட்டைக்குப்பின் அவர்கள் ஒரு பேருடலாக உணர்வார்கள். ஒரு கொடியசைவு ஓர் எரியம்பு ஒரு முரசொலி அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும்.

எண்ண எண்ண அவ்வெண்ணம் விரிந்தபடியே செல்லும் அகவிரைவால் அவன் குதிரையை விலாவணைத்து விரையச்செய்தான். சேறு தெறிக்க அது இருண்ட தெருவில் துள்ளிச்சென்றது. கோட்டையை மூன்று வட்டங்களாக அமைக்கவேண்டும். அரண்மனையை மக்கள் நெருங்கலாகாது. அதைச்சுற்றி உள்கோட்டையும் காவலரண்களும் தேவை. அதற்குள் அழைப்புள்ள அதிகாரிகளும் உயர்குடியினரும் வணிகர்களும் மட்டுமே செல்லவேண்டும். மக்களுக்கு அரண்மனை அச்சமூட்டும் ஓர் அறியமுடியாமையாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் அதை அவர்கள் எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அதைப்பற்றிய கதைகளை உருவாக்கிக்கொள்வார்கள். அதிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்களே பேசிப்பேசி எடையை ஏற்றிக்கொள்வார்கள். அந்நிலையில்தான் அவை மீறமுடியாமலாகின்றன.

அடுத்த வட்டத்திற்குள் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்கும் மாளிகைகள். அதற்கு வெளியே வணிகர்களும் உழவர்குடிகளும். இறுதியாக கோட்டைக்காவலர்கள். அவ்வாறு கோட்டை அமையும் என்றால் மெல்லமெல்ல குடிகாரர்களும் குடியிலிகளும் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் வெளியே தள்ளப்படுவார்கள். மூன்றாம் அடுக்கில் அவர்களின் இடங்கள் அமையும். அங்கு செல்வதே இழிவென ஆகும். அவர்கள்மேல் காவலர்களின் கட்டுப்பாடு உருவாகும். அவர்கள் அங்கு வாழ்வதே தண்டனைக்குரியதென்றாகும். மேலும் கீழ்மக்கள் கோட்டைக்கு வெளியே வாழ்பவர்களாக ஆவார்கள். அவர்கள் குடிகளாகவே எண்ணப்படமாட்டார்கள்.

அவன் அக்கோட்டையை முழுமையாகவே அகக்கண்ணில் கண்டுவிட்டான். சத்ராவதியிலும் காம்பில்யத்திலும் உள்ளது போன்ற மிக உயரமான பெரிய கோட்டை தேவையில்லை. ஆனால் அது குடிகளால் கடக்கமுடியாததாக இருக்கவேண்டும். குடிகளை அது சூழ்ந்துகொள்ளவேண்டும். உடலை ஆடை மூடியிருப்பதைப்போல. உடையின்மையை எண்ணினாலே உடல் அஞ்சி சிலிர்த்துக்கொள்ளவேண்டும்.

நின்று திரும்பிப்பார்த்தபோதுதான் அரண்மனையின் மணியோசை தன் சிந்தையொழுக்கை தடுத்திருப்பதை அறிந்தான். மணியோசை கேட்டதும் முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் இணைந்த ஓசை எழுந்தது. உறுமியபடி ஒரு பெரும் மிருகம் எழுந்துகொள்வது போல நகர் விழித்துக்கொண்டது. தொலைவிலிருந்து வரும் புயலின் ஒலி என நகர்மக்கள் விழித்துக்கொள்ளும் ஒலி தொடங்கி மெல்லமெல்ல வலுப்பெற்றபடியே வந்து முழக்கமாக மாறி சூழ்ந்துகொண்டது. இன்னும் சற்று நேரத்தில் விழுந்து கிடந்த குடிகாரர்கள் எழுந்துவிடுவார்கள். முகம் கழுவி உடைமாற்றி உணவுண்டு மீண்டும் பிறந்தெழுபவர்கள் போல நகரை நிறைத்துவிடுவார்கள். இந்த மக்களின் களியாட்டத்துக்கான விடாயை தேவர்கள் கூட நிறைத்துவிடமுடியாது.

பாரதவர்ஷத்தில் அத்தனை நகரங்களும் படைக்கலமேந்திய வீரர்கள் போலிருக்கின்றன. எதிரிகளுக்காக விழி கூர்ந்து காத்திருக்கின்றன. இந்த மக்கள் பற்பல தலைமுறைகளாக எதிரிகளை அறியாதவர்கள். எதிரி வந்து வாயிலில் நிற்பது வரை அவர்களுக்கு எதிரி என்றால் என்ன பொருள் என்று சொல்லிப்புரியவைக்கவும் முடியாது. ஆனால் ஒரு கோட்டை அவர்களுக்கு எதிரியைப்பற்றிய எண்ணத்தை அளித்துவிடும். கன்னங்கரியதாக கண்மூடினாலும் தெரிவதாக அது அவர்கள் முன் நின்றுகொண்டே இருக்கும்.

இன்று அவர்களின் சித்தம் இந்த பத்து மலைமுடிகளையும் தழுவிப்பரந்ததாக உள்ளது. சில ஆண்டுகளிலேயே அந்தக்கோட்டைக்குள் அது நத்தை என சுருண்டுகொள்ளும். அதற்கு வெளியே இருப்பதெல்லாம் எதிரி என உணர்வார்கள். அதற்குள் இருக்கையில் மட்டுமே பாதுகாப்பை அறிவார்கள். அது ஆடையல்ல, கவசம். அதன்பின் இந்நகரில் எவரும் வீட்டு வாயிலை திறந்துபோடமாட்டார்கள். அவன் புன்னகைத்துக்கொண்டான். அச்சமே வீரத்தின் அடித்தளம். எத்தனை ஆழ்ந்த அறிதல். அதை அறிய உண்மையிலேயே அச்சம் வந்து வாயிலை முட்டவேண்டியிருக்கிறது.

நகரை விட்டு வெளியே சென்று மலைப்பாதைச்சுருளில் ஏறி ஏறிச் சென்றான். நகரில் அனைத்து விளக்குகளும் எரியத்தொடங்கியதை காணமுடிந்தது. அவன் அகன்று செல்லச்செல்ல நகரின் ஓசை வலுத்தமையால் அவன் முன்செல்லவேயில்லை என அகம் மயக்கு கொண்டது. திரும்பாமல் சென்றபோது தனக்குப்பின்னால் அவன் ஒரு கோட்டைசூழ்ந்த பால்ஹிகபுரியை கண்டான். பெரிய காவல்மாடங்கள் மேல் கொடிகள் மலைக்காற்றில் படபடக்கும் நகரம். கணமும் பொறுக்கமுடியாதென்று தோன்றியது. இத்தனைநாள் ஒரு கோட்டைநகர் இல்லாது எப்படி அரசிளங்குமரன் என்று எண்ணிக்கொண்டோம் என வியந்தான்.

ஏழாவது பாதைவளைவின் அருகே மலைமேல் நின்றிருந்த நீண்ட பாறைத்துருத்துக்குமேல் ஏறி நின்றுகொண்டு கீழே பார்த்தான். அறியாமலே அங்கே வந்தது ஏன் என அவன் அப்போது அறிந்தான். சென்றமுறை மலையேறும்போது அங்கிருந்துதான் நகரை முழுமையாகப்பார்த்தான். கைகளால் அள்ளி எடுக்குமளவுக்கே சிறிய கூழாங்கல்கூட்டம் என எண்ணியிருந்தான். ஒரு கோட்டை கட்டவேண்டும் என்ற எண்ணத்தை ஆன்மா அப்போது அடைந்திருக்கிறது. அள்ளி எடுக்கும் அந்தக்கைகளை கோட்டை என சித்தம் புரிந்துகொள்ள அத்தனை நேரமாகியிருக்கிறது.

கோட்டை கட்டுவது மிக எளிது என்ற எண்ணம் வந்தது. எண்ணம் அப்படி பெரும் திரைச்சீலை ஓவியம்போல ஒரு காட்சியாக கண்முன் சரிவதை வியப்புடன் எண்ணிக்கொண்டான். மலைகளில் எல்லாம் பாறைக்கூட்டங்கள் சரிந்து நின்றிருந்தன. அவற்றை தாங்கி நிற்கும் மண்ணைத் தோண்டி உருட்டி கீழே போட்டுவிட்டால் கோட்டையை கட்டுவதற்கான கற்கள் நகர் அருகிலேயே வந்து குவிந்துவிடும். சகடங்களில் அவற்றை ஏற்றிக்கொண்டுசென்று கோட்டைமேல் ஏற்றிவிடமுடியும். எருதுகளே போதுமானவை.

அவன் அங்கே நின்று பால்ஹிகபுரியின் கற்கோட்டையை பார்த்தான். தென்கிழக்காக ஷீரபதம் நோக்கி ஒரு வாயில். வடமேற்காக தூமபதம் நோக்கி இன்னொரு பெருவாயில். வடக்கிலும் தெற்கிலுமாக இரு சிறிய வாயில்கள். இரு பெருவாயில்களிலும் மரத்தாலான உயரமான மூன்றடுக்குக் காவல்மாடங்கள். முதலடுக்கில் எரியம்பு விடும் காவலர்கள். இரண்டாம் அடுக்கில் முரசுகளும் மணிகளும். மூன்றாம் அடுக்கில் காவலர்களின் தங்குமிடங்கள். தென்கிழக்குப் பெருவாயிலில் தொடங்கும் அரசவீதி நகர்நடுவே அரண்மனைக்கோட்டையை நோக்கி சென்று உள்நுழையும்போது அதன் இரு கிளைகள் இரண்டாகப்பிரிந்து அரண்மனைக்கோட்டையை வளைத்து பின்னால் வந்து இணைந்து மீண்டும் அரசவீதியாக ஆகி வடமேற்குப் பெருவாயிலை நோக்கி வரவேண்டும்.

விடியத்தொடங்கியபோதும் அவன் அங்கேயே நின்றிருந்தான். கோட்டைக்கான செலவுகள் என்னென்ன என எண்ணிக்கொண்டான். மானுட உழைப்பு மட்டுமே செலவாக இருக்கமுடியும். கோட்டையை குளிர்காலத்தில் கட்டினால் மலைக்குடிகளை மலையிறங்கி வரச்செய்ய முடியும். உடனே புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். கீழ்நிலத்திற்குச்சென்று அங்கு ஏராளமாகக் கிடைக்கும் விலைகுறைவான மதுவை வாங்கி பீப்பாய்களில் ஏற்றி கழுதைகளில் கொண்டுவந்து கூலியுடன் சேர்த்துக்கொடுத்தால் மலைக்குடிகள் வந்து குழுமுவதில் ஐயமே இல்லை. குடியை நிறுத்துவதற்கான செயலையும் குடியைக்கொண்டே செய்யவேண்டியிருக்கிறது.

பால்ஹிகநாடு அந்தக் கோட்டைக்குப்பின்னரே உருவாகும் என எண்ணிக்கொண்டான் இன்றுவரை ஒரு தொன்மையான ஜனபதம்தான் இங்கிருந்தது. மறக்கப்பட்டது. அணுகப்படாதது. ஆகவே தன்னைத் தானே வியந்துகொண்டு ஒளிந்திருந்தது. ஆனால் கோட்டை கட்டும் செய்தி உடனே கீழே சென்றுவிடும். அது ஓர் அறைகூவலாகவே கொள்ளப்படும். பால்ஹிகநாட்டின் கருவூலத்தில் அத்தனை செல்வமிருப்பதை சிந்து கங்கை நிலத்திற்கு முரசறைந்து அறிவிப்பதுதான் அது. ஆனால் அதுவும் நன்றே. எதிரிகள் உருவாகட்டும். எதிரிகளே இந்தப்பழங்குடித்தொகையை அரசாக ஆக்கப்போகிறார்கள். ஊழ் கனிந்ததென்றால் இந்த மலையடுக்குகளின் மேல் ஒரு பேரரசும் எழக்கூடும்.

கோட்டைகட்டும் எண்ணம் உருவானதற்குப்பின்னால் இருந்தது பால்ஹிகக்கூட்டமைப்பைப்பற்றிய எண்ணமே என அவன் மேலும் உணர்ந்தான். அக்கூட்டமைப்பு உருவானபின்னர் அத்தனை எளிதாக கீழ்நிலநாடுகள் படைகொண்டு வரமாட்டார்கள். சௌவீரத்தின் மேல் படைகொண்டுவந்த பாண்டவர்கள் பால்ஹிகப்பேரரசை தொடங்கிவைத்தார்கள் என கீழ்நிலத்து அரசர்கள் அறியட்டும். அவர்களின் அமைச்சர்கள் அவையமர்ந்து சிந்திக்கட்டும். ஆனால்... அவ்வெண்ணம் உருவானதுமே அவன் நீர்ப்பாவையை கையால் கலைப்பதுபோல அழித்தான். அலையடித்து அலையடித்து அது கூடிக்கொண்டது.

கௌரவரை பார்க்கச் செல்வதைப்பற்றி சல்லியர் சொன்னதுமே அவன் நெஞ்சு ஒருகணம் அதிர்ந்தது. ஏன்? அஸ்தினபுரியையோ காம்பில்யத்தையோ பாண்டவர்களையோ கௌரவர்களையோ சுட்டும் எந்தச்சொல்லும் திரௌபதியின் முகமாக மாறிவிடுகிறது. அச்சொற்களுடன் இணைந்த சொற்கள்கூட ஒன்று இன்னொன்றில் முட்டி முட்டி அவளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்கள் அரசியல் பேசியபோது அவன் ஆழம் அவளை எண்ணிக்கொண்டிருந்தது. அதனால்தான் பாண்டவர்களுக்கு எதிரான அரசியலை அவன் தவிர்த்தானா? இக்கோட்டையைப்பற்றிய கனவு அதிலிருந்தே முளைத்ததா? மீண்டும் அவளைப்பார்த்தால் எப்படியோ இப்படியொரு கோட்டையை கட்டப்போவதை சொல்லிவிடுவானா?

புரவியில் ஏறி சரிவில் விரைந்தான். எண்ணங்களை அந்த விரைவில் எழுந்த காற்றே சிதறடித்து பின்னால் வீழ்த்திவிடும் என எண்ணியவன் போல. ஆனால் எண்ணங்கள் அந்த புரவிக்காலடித்தாளத்துடன் சேர்ந்து விரைவுகொண்டன. புரவியை நிறுத்தி மூச்சிரைத்தபோது வந்து சேர்ந்துகொண்டன. உண்மை, அவள்தான். இத்தனை பெண்களை அள்ளி அள்ளிப்போட்டு அவன் நிரப்பிக்கொண்டிருக்கும் வெற்றிடம். கண்களை மூடிக்கொண்டு இமைப்படலத்தில் வெங்குருதி செல்லும் சுழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.

பின்னர் நிறைவுகொண்ட சோர்வுடன் புரவியைத்தட்டி பெருநடையில் செல்லவிட்டான். அப்பால் நகரத்திற்குள் முரசுகளும் கொம்புகளும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. மக்களின் ஓசையும் பின்னணியில் அலையடித்தது. எரியம்புகளைக்கொண்டு மன்னர்களின் அணிவகுப்பு தென்கிழக்கு நுழைவாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். அங்கே சடங்குகள் நடக்கும்போது தன்னை தேடுவார்கள் என்று தெரிந்தாலும் விரைந்து செல்லவேண்டுமென்று தோன்றவில்லை. இல்லை, அதுவல்ல என்று மீளமீள சொல்லிக்கொண்டாலும் நீரலைகளாக அச்சொற்கள் அலையடிக்க அடிப்பாறையென அவ்வுண்மை நின்றுகொண்டிருந்தது.

நகருக்குள் நுழைந்தபோது சற்று திரும்பி சிபிரரின் இல்லம் நோக்கி சென்றான். திரும்பியதுமே அவ்வேளையில் ஏன் அப்படித்தோன்றியது என்று எண்ணிக்கொண்டான். சிபிரரின் இல்லத்தில் எவருமில்லை. அவன் புரவியை விட்டு இறங்கி மூடிய கதவை நோக்கியபடி நின்றான். இல்லத்திற்குப்பின்னாலிருந்து பசுமாட்டை இழுத்துக்கொண்டு வந்த கிழவி நெற்றியில் கைவைத்து நோக்கி “பிதாமகர் இன்னமும் மலையிறங்கி வரவில்லை வீரரே” என்றாள். தலையசைத்துவிட்டு அவன் புரவியில் ஏறிக்கொண்டான்.

அந்த இல்லம் நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே நின்றிருக்கிறது. கட்டுமானங்களில் அதைக்கட்டியவர்களோ அதில் வாழ்பவர்களோ படிவதே இல்லை. அவர்கள் காற்றுபோல அதன்மேல் கடந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. அதைக்கட்டியவர் இன்று நினைவுகூரப்படுகிறார். அவரது பெயரைச் சொல்லியே அக்கல்கட்டுமானம் அங்கே நின்றிருக்கிறது. அவரது அச்சங்கள் தயக்கங்கள் சினங்கள் அனைத்தும் மண்மறைந்துவிட்டன. அவன் ஒரு கோட்டையை கட்டலாம். எதற்காக என்றாலும் அது அங்கே இருக்கும். அவனுடைய எளிய விருப்புவெறுப்புகள் அதிலிருக்காது. அந்தக்கல்லும் மண்ணும் மட்டும் அங்கே இருக்கும். நெடுங்காலத்துக்குப்பின்னரும் அவனுடைய பெயரை அது சொல்லிக்கொண்டிருக்கும்.

அந்த எளிமையான எண்ணம் ஏன் அத்தனை விடுதலையுணர்ச்சியை அளிக்கிறது என அவனே வியந்துகொண்டான். இத்தனை சிறிய விடையால் நிறைவுறச்செய்யும் தத்தளிப்பையா இத்தனை தொலைவுக்கு சுமந்து வந்தோம். இல்லை, எதனாலும் கோட்டை கட்டும் எண்ணத்தை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் அத்தனை பேரூக்கத்துடன் அதை அடைந்துவிட்டான். அதை விட்டு விலகாதிருக்க எளிய அடிப்படைகளைத்தான் உள்ளம் தேடிக்கொண்டிருந்தது, கண்டடைந்தது. அவன் புரவியிலமர்ந்தபடி புன்னகைத்தான். எத்தனை எளியவன் மானுடன். அவ்வெண்ணம் மேலும் விடுதலையை அளித்தது. ஆம், நான் மிக எளியவன். இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் எண்ணப்பேரொழுக்குக்கும் அப்பால் சின்னஞ்சிறு மானுடன். அவ்வளவுதான்.

தென்கிழக்கு நோக்கிச்சென்ற அரசப்பெருவீதியை அடைந்தபோது புரவி திகைத்து நின்று செருக்கடித்தது. வீதிமுழுக்க மக்கள் தோளோடு தோள் என நெருங்கி நின்றனர். பேச்சொலிகள் அடங்கி அவர்கள் எரியம்புகளுக்காக வானை நோக்கிக்கொண்டிருந்தனர். பூரிசிரவஸ் ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். அனைத்திலும் பெரும் வழிபாட்டுணர்வு நிறைந்திருந்தது. முந்தைய இரவெல்லாம் குடித்துக்களித்தவர்கள் வேறு மக்கள் என தோன்றியது. ஆனால் அவ்விரு இயல்புகளுமே மலைக்குடிகளுக்குரியவை அல்லவா என அவன் எண்ணம் மீண்டும் முன்னால் சென்றது.

வேல்களை நீட்டி கூச்சலிட்டபடி ஏழு புரவிவீரர்கள் தென்கிழக்கு வாயிலில் இருந்து வந்தனர். கூட்டம் பிளந்து வழிவிட்டது. “வழியில் நிற்காதீர்கள். புரவிகளை தடுக்காதீர்கள்” என்று அவர்களின் தலைவன் கூச்சலிட்டபடியே சென்றான். அவர்களால் உருவாக்கப்பட்ட இடைவெளி வழியாக பூரிசிரவஸ் உள்ளே நுழைந்துவிட்டான். புரவி தயங்கினால் சென்று சேர முடியாதென்று உணர்ந்தவனாக குதிமுள்ளால் புரவியை குத்திச் செலுத்தினான். அது புரிந்துகொண்டு உரக்கக் கனைத்தபடி மண்ணில் குளம்படிகள் விழுந்து ஒலிக்க விரைந்தோடியது. இருபக்கமும் எழுந்த வசைச்சொற்கள் சிதறி பின்னால் சென்றன.

தென்கிழக்கு வாயிலில் நின்றிருந்த அரசப்படைகளின் பின்பக்கம் அவன் சென்றபோது சுதாமரின் முதன்மைச்சேவகன் சுபகன் அவனை கண்டுவிட்டான். “இளவரசே” என்று கூவியபடி ஓடிவந்தான். “அமைச்சர் நூறுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். முன்னால் செல்லுங்கள்... வாருங்கள்” என்றான். நிரைநிரையாகச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தை வலப்பக்க இடைவெளி வழியாக புரவியில் கடந்து சென்றான். “அணியேதும் செய்யாமலிருக்கிறீர்கள் இளவரசே. இந்த எளிய கம்பளியாடையிலா விழவில் கலந்துகொள்வீர்கள்?” என்றான் சுபகன். “தாழ்வில்லை. நான் காவலன் அல்லவா?” என்றான் பூரிசிரவஸ்.

நீண்ட அரச அகம்படிப்படையினரைக் கடந்து முன்னால் சென்றான். சகநாட்டின் கொடிகளேந்திய காவல்படைகளும் அணிச்சேவகர்களும் சூதர்களும் அணிப்பரத்தையரும் சென்றனர். அதன் பின்னர் மத்ர நாட்டு அணியினர். பின்னர் சௌவீரர். தொடர்ந்து கலாத, துவாரபால குடிகளின் அணிநிரை. அணிஊர்வலத்திற்கு முன்னால் சௌவீரரும் மத்ரரும் நின்றனர். அப்பால் முகப்பில் பால்ஹிகப் படைகள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வந்த அரண்மனைப்பெண்களின் அணி தாலச்சேடியரும் அணிச்சேடியரும் சூழ சென்றுகொண்டிருந்தது. அவன் விழிகள் அத்தனை கூட்டத்திலும் விஜயையை கண்டுகொண்டன. அவள் விழிகள் அவனை சந்தித்ததும் அவள் எங்கிருந்தீர்கள் என விழிதூக்கி வினவினாள். வேலை என அவன் உதடுகளை குவித்துச் சொல்லி புன்னகைசெய்தான்.

ஒன்பது குலக்கொடிகளையும் வரிசையாக ஏந்தி ஒன்பது சேவகர்கள் வெண்புரவிகளில் முன்னால் செல்ல அவர்களுக்குப்பின்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் சென்றனர். சல்லியரும் தியுதிமானும் சுமித்ரரும் சோமதத்தரும் முன்னால் செல்ல அவர்களுக்குப்பின்னால் சகநாட்டு அரசர் பிரதீபனும் கலாத குடித்தலைவர் சுக்ரரும் துவாரபால குடித்தலைவர் துங்கரும் சென்றனர். ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களின் குலங்களின் இளவரசர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

ஃபூரி திரும்பி அவனை நோக்கி சிரித்தான். அவன் திரும்பியதைக் கண்டு தானும் திரும்பிய சலன் பூரிசிரவஸ்ஸைக் கண்டு சினத்துடன் பார்வையை திருப்பிக்கொண்டான். ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவனை நோக்கி வியப்புடன் புன்னகை செய்தனர். அவன் சென்று அவர்கள் நடுவே நின்றுகொண்டான்.

முரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இணைந்து ஒற்றைப் பேரிசையாக ஆகி அது மழைக்காலச் சிந்தாவதி போல பொங்கி நுரைந்து இறங்கிச் சுழித்து கடந்து சென்றது. ருக்மாங்கதன் அவனிடம் “எங்கே சென்றிருந்தீர்கள்? தங்கள் மூத்தவர் கடும் சினம் கொண்டு கூச்சலிட்டார்” என்றான். ருக்மரதன் “எங்களுக்குத்தெரியும் என ஏன் அவர் எண்ணுகிறார் என்றே தெரியவில்லை மூத்தவரே” என்றான். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.

ஏழன்னையர் கோயிலின் பூசகன் தோளில் விரித்திட்ட சடைகளுடன் செம்பட்டாடை மேல் செந்நிறக்கச்சையும் கையில் தாலமுமாக அரசர்களை நோக்கி வந்தான். சன்னதம் கொண்டவன் போல அவன் மெல்ல துள்ளிக்கொண்டிருந்தான். செந்தூரம் பூசப்பட்ட முகத்தில் சிவந்த விழிகளில் தெய்வ வெறி எழுந்திருந்தது. அவன் அரசர்களை நெருங்கும்போது மறுபக்கம் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் சிலர் வேல்களுடன் ஓடுவதை பூரிசிரவஸ் கண்டான். யாரோ ஏதோ கூவினர். சல்லியர் திரும்பிப்பார்த்தார். வீரர்களின் காவலைக் கடந்து யாரோ ஆயனோ வேளானோ அவ்வழி புகுந்துவிட்டிருக்க வேண்டும் என பூரிசிரவஸ் எண்ணினான். “இந்த மூடர்களின் காவல்...” என சலன் சொன்னதுமே அது யாரென பூரிசிரவஸ் கண்டுகொண்டான்.

“நிறுத்துங்கள்... அவர்தான் பால்ஹிகர். நம் பிதாமகர்!" என்று அவன் கூவினான். அனைவரும் திரும்பி நோக்கினார்கள். “நிறுத்துங்கள்... அவர் நமது பிதாமகர்... மலையிறங்கும் நம் பிதாமகர்” என்று கைதூக்கிக் கூவியபடி பூரிசிரவஸ் மத்ரரையும் சௌவீரரையும் கடந்து மறுபக்கம் ஓடினான். வேலுடன் பாய்ந்த வீரர்கள் திகைத்து நின்றனர். முரசொலியும் முழவொலியும் நின்றன. கொம்புகள் தழைந்தன. வியப்பொலிகள் மட்டும் நிறைந்த அமைதியில் கைநீட்டி “பிதாமகர்!” என்று கூவியபடி பூரிசிரவஸ் ஓடினான்.

பால்ஹிகரும் சிபிரரும் ஒரு மலைமகனும் வந்துகொண்டிருந்தனர். பால்ஹிகர் பெரிய காட்டெருது ஒன்றை தன் தோளில் போட்டு அதன் கால்களை இருகைகளாலும் பற்றியிருந்தார். மலைமகன் தோளில் ஒரு மறிமான் கிடந்தது. பையையும் படைக்கலங்களையும் சிபிரர் வைத்திருந்தார். அந்தப்பெரிய அணிநிரையைக் கண்டு திகைத்து அவர்கள் அங்கேயே நின்றனர். பூரிசிரவஸ் திரும்பி இசைக்கலங்களை ஏந்தியவர்களிடம் கைகாட்டினான். கூட்டத்தின் வாழ்த்தொலிகளும் பேரிசையும் இணைந்து வெடித்தெழுந்து காற்றை நிறைத்தன.

பகுதி 7 : நச்சு முள் - 1

கங்கைக்குள் நீட்டியதுபோல நின்றிருந்த உயரமில்லாத குன்றின்மேல் அமைந்திருந்தது தசசக்கரம். அதைச்சுற்றி கட்டப்பட்டிருந்த செங்கல்லால் ஆன கோட்டையின் தென்கிழக்கு வாயில் மரத்தாலான பெரிய படகுத்துறையை நோக்கி திறந்தது. கோட்டைக்கும் படகுத்துறைக்கும் நடுவே இருந்த வெளியில் தாழ்வான மரப்பட்டைகூரையிடப்பட்ட துறைக்காவலர் குடியிருப்புகளும் ஆட்சியர் பணியகங்களும் அமைந்திருந்தன. வணிகச்செயல்பாடுகளேதும் இல்லாததனால் துறையில் ஓசையோ நெரிசலோ இருக்கவில்லை.

இரண்டு பெரிய போர்ப்படகுகள் மட்டும் துறைமுகப்பில் அசைந்தாடியபடி நின்றன. அப்பால் கங்கைக்குள் பாயிறக்கி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கட்டப்பட்டு நங்கூரம் இறக்கப்பட்ட இருபது போர்ப்படகுகள் நின்றிருந்தன. அனைத்திலும் துரியோதனனின் அரவக்கொடி பறந்துகொண்டிருந்தது. கோட்டைமுகப்பில் நடுவில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் வலப்பக்கம் இணையான உயரத்தில் துரியோதனனின் அரவக்கொடியும் இடப்பக்கம் சகுனியின் ஈச்ச இலைக் கொடியும் கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடியும் பறந்தன.

பாய்மரம் தாழ்த்தி எரியம்பு ஒன்றை மேலே செலுத்தியபடி பூரிசிரவஸ்ஸின் படகு துறையை நெருங்கியது. படகுத்துறையின் எரியம்புகள் எழுந்து அடையாளம் காட்டும்படி கோரின. படகிலிருந்தவர்கள் பால்ஹிகநாட்டின் கொடியை விரித்துக்காட்டினார்கள். தசசக்கரத்தின் படகுத்துறையின் காவல்மேடையில் மஞ்சள்நிறமான கொடி அசைந்து படகு துறையணையலாமென ஆணையிட்டது.

படகைச்செலுத்திய குகர்கள் துடுப்புகளை நீரோட்டத்திற்கு எதிராகத் துழாவியபடி நங்கூரத்தை நீரிலிட்டனர். கல்லால் ஆன நங்கூரம் ஆழத்திற்குச் சென்று உலைந்தாடி படகைப்பற்றிக்கொண்டதும் மெல்ல ஓடும் நீரிலேயே அது அசைவின்றி நின்றது.

படகிலிருந்தவர்கள் மெல்ல துடுப்பால் துழாவ படகு பக்கவாட்டில் திரும்பி துறைமேடைநோக்கி சென்று அங்கே அமைக்கப்பட்டிருந்த மூங்கில்சுருள்களில் முட்டி நின்றது. படகுத்துறையின் பலகை இணைப்புகள் முனகி அமைந்தன. படகின் பெருவடங்கள் கரை நோக்கி வீசப்பட்டன. அவற்றைப் பற்றி தறிகளில் கட்டியதும் படகின் அசைவு நின்றது.

பாலம் இணைக்கப்பட்டதும் கொம்பூதி முதலில் இறங்கி ”பெரும்புகழ் கொண்ட பால்ஹிகத் தொல்நாட்டின் இளவரசர் பூரிசிரவஸ் வருகை” என அறிவித்தான். பால்ஹிகநாட்டின் மறிமான் கொடியுடன் கொடிச்சேவகன் இறங்கியதும் காவல்மாடத்தின்மேல் முரசும் கொம்புகளும் முழங்கின. பால்ஹிகநாட்டின் கொடி கோட்டைக்குமேல் ஏறியது.

படகிலிலேயே நீராடி முழுதணிக்கோலத்தில் இருந்த பூரிசிரவஸ் நடைப்பாலம் வழியாக கைகூப்பியபடி இறங்கி துறைமேடைக்கு வந்தான். துறைமுகக் காப்பாளரான சிவதர் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடனும் மங்கலத்தாலமேந்திய மூன்று சேவகர்களுடனும் வந்து அவனை எதிர்கொண்டு “அஸ்தினபுரியின் மண்ணுக்கு பால்ஹிக இளவரசரின் வருகையால் அனைத்து நலன்களும் சூழ்வதாக!” என்று முகமன் சொல்லி வரவேற்றார். தாம்பூலமும் நறுமணச்சுண்ணமும் அளித்து “தங்களுக்கு அணித்தேர் ஒருக்கப்பட்டுள்ளது இளவரசே” என்றார்.

கோட்டை முகப்பில் பால்ஹிகக்கொடி பறக்கும் தேர் நின்றிருந்தது. எடையற்ற மரத்தால் பெரிய சக்கரங்களுடன் கட்டப்பட்ட சிறிய தேருக்கு மூன்று குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அதற்கு மூன்று பின்கட்டைகள் இருப்பதை அவன் நோக்கினான்.

பூரிசிரவஸ் ஏறிக்கொண்டதும் பாகன் திரும்பி நோக்க அவன் கையசைத்தான். தேர் கோட்டைவாயிலைக் கடந்து ஊருக்குள் நுழைந்தது. தேரின் பின்கட்டைகள் சகடங்களில் சடசடவென ஒலித்தன. கோட்டைவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் சிறிய காவல்குடில்கள் நிறைந்திருந்தன. கோட்டைக்குள் சிறிய படை ஒன்று இருப்பதன் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது.

மையச்சாலை இருபக்கமும் பிரிந்து வட்டமாக உள்ளே அமைந்திருந்த உயரமில்லாத வண்டல்குன்றை கோட்டையை ஒட்டியபடி சுற்றிச்சென்றது. குன்றின்மேல் வளைந்து நெளிந்து ஏறிச்சென்ற அகலமற்ற மண்சாலையின் இருபக்கமும் சிறிய கட்டடங்கள் இருந்தன. தேன்மெழுகுடனும் அரக்குடனும் சேர்த்து அரைக்கப்பட்ட களிமண் பூசப்பட்ட மரப்பட்டைக்கூரையிடப்பட்ட இல்லங்கள் ஒன்றுடன் ஒன்று செறிந்து உச்சியில் மூன்று குவைமுகடுகள் கொண்ட அரண்மனையில் சென்று முடிந்தன. தலைகீழாக தேன்கூடு ஒன்றைப்பார்க்கும் சித்திரத்தை அளித்தது அந்தக் குன்று.

சுருள்சாலையில் தேரை ஏற்ற புரவிகள் மூச்சிரைத்தன. சாலையோரமாகச் சென்றுகொண்டிருந்த மூன்று யானைகள் விலகி வழிவிட்டன. பாகன்களின் அதட்டல் ஓசை தலைக்குமேல் கேட்டது. காலையிலேயே எழுந்துவிட்ட இளவெயில் கண்களை கூசச்செய்தது. உடல் வியர்த்து வழிய பூரிசிரவஸ் திரும்பி கீழே தெரிந்த கங்கையின் ஒளிவிடும் நீல நீரலைகளை பார்த்தான். அவற்றிலிருந்து வெம்மையான நீராவி எழுந்து வந்து குன்றைச்சூழ்வதாகத் தோன்றியது.

அந்த மிகச்சிறிய குன்று மலைமகனாகிய தன்னை களைப்படையச்செய்வதைப்பற்றி அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். ஆனால் பால்ஹிகமலைகள் குளிர்ந்தவை. அமைதியானவை. அந்தக்குன்று ஒரு பெரும் குப்பைக்குவியல். மட்கி ஆவியெழுவது.

கீழே குன்றைச்சுற்றிச் சென்ற சாலையை ஒட்டி கோட்டையை ஒருபக்கச் சுவராகக் கொண்டு ஈச்சையோலைத் தட்டிகளால் சுவர்களும் மரப்பட்டைகளால் கூரையும் இடப்பட்ட தற்காலிகப் பாடிவீடுகளில் ஈக்கூட்டங்கள் போல வீரர்கள் செறிந்து ரீங்கரித்து அசைந்துகொண்டிருந்தனர். யானைகளும் புரவிகளும் வண்டுகள் போல அவற்றின் நடுவே சென்றன. ரதங்கள் செல்லும் தூசுப்படலம் செந்நிறமான பஞ்சுத்திவலை என எழுந்து சுருண்டு மீண்டும் மண்ணில் படிந்தது. காவல்மாடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த பெருமுரசங்களின் வட்ட வடிவ தோல்பரப்பு சிறிய அப்பங்களாகத் தெரிந்தது.

குன்றின்மேலிருந்த சிற்றில்லங்கள் எதிலும் மக்களோசை இருக்கவில்லை. அவை உணவும் படைக்கலமும் படகுகளுக்கான பொருட்களும் சேமிக்கப்படும் பண்டகசாலைகளாக இருக்கவேண்டும். தசசக்கரம் ஒரு வணிக நகரல்ல. பாஞ்சாலத்தின் எல்லையில் அக்குன்று இருப்பதனால் அது ஒரு முதன்மையான காவல்மையம் என அடையாளம் கண்டு அதை அமைத்திருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் அஸ்தினபுரியின் படைகளும் அவர்களின் குடும்பமும் மட்டுமே என பூரிசிரவஸ் மதிப்பிட்டான்.

ஒரு படைகொண்டுவந்து அந்தக் கோட்டையைப்பிடிப்பது கடினம். கோட்டையைக் கடந்தால்கூட குன்றின்மேல் ஏறிவந்து அரண்மனையை கைப்பற்றமுடியாது. கோட்டைக்குள் இருக்கும் படைகள் குன்றில் ஏறிக்கொண்டால் உள்ளே வருபவர்கள் கோட்டைக்கும் குன்றுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் அகப்பட்டுக்கொள்வார்கள்.

அரண்மனை முற்றம் சிறியதாக பிறை வடிவில் இருந்தது. ஒரு சிறிய தேர் நின்றிருக்க அவிழ்க்கப்பட்ட குதிரைகள் அப்பால் கண்மூடி அசைவற்று நின்றன. உள்ளிருந்து அரண்மனை செயலகர் வந்து அவனை வணங்கி வரவேற்றார். “பால்ஹிகநாட்டு இளவரசை வாழ்த்துகிறேன். நான் அரண்மனை ஸ்தானகர் சுருதசன்மன்” என்றார். “தாங்கள் சற்று ஓய்வெடுத்து உணவுண்டபின் இளவரசை சந்திக்கலாம்.”

பூரிசிரவஸ் “இல்லை, நான் படகில் முழு ஓய்வுடன் வந்தேன். நீராடியும் விட்டேன்” என்றான். “நேராகவே இளவரசை சந்திப்பதையே விழைகிறேன்.” சுருதசன்மர் “அவ்வண்ணமெனில் காத்திருங்கள். இளவரசரும் காந்தாரரும் அங்கரும் சிற்றவையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...” என்றபின் திரும்பிச் சென்றார்.

கூடத்தில் பூரிசிரவஸ் காத்திருந்தபோது சுருதசன்மர் வந்து அவனை சிற்றவைக்கூடத்திற்கே வரும்படி துரியோதனன் கோரியதாக சொன்னார். பூரிசிரவஸ் எழுந்து தன் மேலாடையை சீரமைத்தபடி இடைநாழி வழியாகச் சென்று மரப்படிகளில் மேலேறி இன்னொரு இடைநாழி வழியாக சிற்றவைக்குள் நுழைந்தான்.

செவ்வக வடிவமான பெரிய அறைக்குள் காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. சாளரக்கதவுகளெல்லாமே அசையாமல் தாழ்களில் மாட்டப்பட்டிருந்தன. எந்தச் சாளரத்திற்கும் திரைச்சீலைகள் இருக்கவில்லை. அரக்கு பூசப்பட்டு மெருகூட்டப்பட்ட மரச்சுவர்களில் சாளரங்களின் ஒளிப்பாவை தெரிந்தது.

அவையில் நடுவே போடப்பட்டிருந்த பெரிய பீடத்தில் துரியோதனன் அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கமாக துச்சாதனன் அமர்ந்திருக்க வலப்பக்கம் கர்ணன் அமர்ந்திருந்தான். சுவர் சாய்ந்து துச்சலன் நின்றிருந்தான். முன்னால் தாழ்வான இருக்கையில் சகுனி கால்களை இன்னொரு பீடத்தில் போடப்பட்ட பஞ்சுத்திண்டின்மேல் நீட்டி அமர்ந்திருந்தார். மிகவும் அப்பால் அறைமூலையில் போடப்பட்ட உயரமற்ற பஞ்சுத்திண்டில் உடைந்து மடிந்த உடலுடன் கணிகர் அமர்ந்திருந்தார்.

பூரிசிரவஸ் உள்ளே நுழைந்ததுமே இயல்பாக தலைவணங்கினான். நிமிர்ந்ததும் ஒருகணம் அவன் நோக்கு கணிகரின் மின்னும் எலிக்கண்களை சென்று தொட்டு மீண்டது. அவரை அத்தனை அருகில் பார்ப்பது முதல்முறை. அவரை முன்னரே நன்கறிந்திருப்பதுபோன்ற ஓர் உணர்வு எழுந்தது. எந்தெந்த முகத்திலோ விழிகளிலோ அவர் தெரிந்திருக்கிறார் என எண்ணிக்கொண்டான். எங்கே எங்கே என சித்தம் அலைந்தது.

துரியோதனன் “அமருங்கள் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்து உடலை எளிதாக்கிக்கொண்டான். உடலை எளிதாக்குவது உள்ளத்தையும் அவ்வண்ணம் மாற்றுவதை அவன் கண்டு பயின்றிருந்தான். சகுனி “தாங்கள் எங்களை சந்திக்கவந்தது குறித்து மகிழ்ச்சி” என்றார். “காந்தாரரே, நான் பத்து பால்ஹிககுலங்களின் குரலாகப்பேசும்படி பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்றபின் “குறிப்பாக பீமசேனரின் அடியால் எலும்பு உடைந்து நோயுற்றிருக்கும் சல்லியரின் குரல் இது” என்றான்.

சகுனி புன்னகைத்தார். கணிகரின் கண்களில் அதே பொருளில்லாத வெறிப்புதான் இருந்தது. ”அஸ்தினபுரியின் ஆட்சியாளர்கள் எங்கள் நோக்கில் தாங்களே. தங்களுடன் நேரடியாகப்பேசவே பால்ஹிகநாடுகள் விழைகின்றன. அத்துடன் சௌவீர நாடு அண்மையில்தான் பாண்டவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சௌவீர மணிமுடியும் அவர்களிடமில்லை. தங்களுடனான நல்லுறவின் வழியாக அவர்கள் விழைவது தங்கள் மணிமுடியை மீட்கவே. நான் அதன்பொருட்டும் இங்கே வந்திருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ்.

“பால்ஹிகர் என்னுடன்  ஒரு வெளிப்படையான படைக்கூட்டுக்கு சித்தமாக உள்ளனரா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் தற்போது அப்படி ஒரு படைக்கூட்டுக்கு கைச்சாத்திட்டாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் இன்றும் அஸ்தினபுரியின் அரசர் திருதராஷ்டிரரே.”

துரியோதனன் கண்களில் மெல்லிய சிரிப்பு வந்து சென்றது. “சரி, அவ்வண்ணமென்றால் ஓலைப்பதிவு தேவையில்லை. வாள்தொட்டு ஆணையிட்டால் போதும்.” பூரிசிரவஸ் பணிந்து “அதை எனக்களிக்கப்பட்ட நன்மதிப்புச் சான்றாகவே கொள்வேன். ஆனால் நான் அப்படி செய்ய முடியாது. நாங்கள் பத்துகுலம். பத்துகுலத்தையும் ஓலை ஒன்றே கட்டுப்படுத்தும்” என்றான்.

துரியோதனன் சிரித்துவிட்டான். “எண்ணித்துணிந்தே உம்மை அனுப்பியிருக்கிறார்கள்” என்றான். ”எண்ணையில் நெளியும் மண்புழு என ஒரு சொல்நிகரி உண்டு. அதைத்தான் நினைவுகூர்ந்தேன்.” பூரிசிரவஸ் “அதையும் ஒரு நற்சொல்லாகவே கொள்கிறேன் கௌரவரே. நாங்கள் மிகச்சிறிய மலையரசுகள். ஓடுமிடத்தில் தவழக்கடமைப்பட்டவர்கள்” என்றான்.

துரியோதனன் ”சொல்லும், நீர் இப்போது வந்ததன் நோக்கம் என்ன?” என்றான். கர்ணன் உரத்த குரலில் “வேறு என்ன நோக்கம்? இங்கே என்ன நிகழ்கிறதென்பதை கண்டுசெல்வது...” என்றான். பூரிசிரவஸ் “அப்படி அல்ல என்று மறுத்தால் நான் பொய் சொன்னவன் ஆவேன். நான் வந்தது பால்ஹிககுலங்களின் நலன்கள் அஸ்தினபுரியின் அரசுரிமைப்போரால் எவ்வண்ணம் பாதிக்கப்படும் என அறியும்பொருட்டே. யாதவகிருஷ்ணனின் படைபலம் கண்டு அஞ்சியே தங்களை காணவந்தேன். அதையும் மறுக்கவில்லை” என்றான்.

கர்ணன் கூரிய விழிகளுடன் மீசையை நீவியபடி பேசாமலிருந்தான். துரியோதனன் “பால்ஹிகரே, நாங்கள் இங்கே தங்கியிருப்பது என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாததனால்தான். அஸ்தினபுரிக்கு திரும்பிச்சென்றால் நாங்கள் மீண்டும் என் தந்தையின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்களாவோம். அவர் தருமனுக்கே மணிமுடி என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மறைவுவரை காத்திருப்பது மட்டுமே எனக்கும் தருமனுக்கும் இன்றிருக்கும் வழி. நான் அதை விரும்பவில்லை. ஆகவேதான் வழியிலேயே இந்தக் கோட்டையில் தங்கினேன். இந்த இக்கட்டை இங்கேயே முடித்துவிட்டு திரும்ப விழைகிறேன்” என்றான்.

துரியோதனனின் அந்த அப்பட்டமான பேச்சு பூரிசிரவஸ்ஸை திகைக்கச்செய்தது. ஆனால் சகுனியின் கண்களிலோ கர்ணனின் கண்களிலோ திகைப்பு இல்லை. அது மூத்த கௌரவனின் இயல்பு எனத்தெரிந்தது. உடனே அவனைப்பற்றிய தன் மதிப்பு உயர்ந்துவிட்டதை அவன் உணர்ந்தான். ஆனால் விழிகளை எந்த உணர்ச்சியும் காட்டாதனவாக வைத்துக்கொண்டான்.

”நாங்கள் ஒரு படைநகர்வை திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம் இளைய பால்ஹிகரே” என்றான் துரியோதனன். கர்ணன் ஏதோ சொல்ல வர கைநீட்டி “இளைய பால்ஹிகரை ஒற்றர்கள் வழியாக நான் நன்கறிவேன். அவரது சொற்களும் இங்கே ஒலிக்கட்டும். நாம் இணைந்துசெய்யவேண்டிய பணி இது” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கினான்.

“முன்பு துருபதநாட்டை நாங்கள் தாக்கியதுபோல ஒரு சிறிய போர். அதைத்தான் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். பாண்டவர்கள் இப்போது காம்பில்யத்தில் தனித்திருக்கிறார்கள். தங்களுக்கென ஒரு படையை அவர்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை. இதுதான் சிறந்த தருணம்” என்று துரியோதனன் சொன்னான். “நாம் நமது எல்லையை பாஞ்சாலப்படைகள் மீறி வந்து கொள்ளையடித்தன என ஒரு நாடகத்தை நடத்துவோம். எதிரடியாக நமது படை ஒன்று பாஞ்சாலத்தை தாக்கவேண்டும். பாண்டவர்கள் துருபதன் படையை தலைமைதாங்கி நடத்துவார்கள்...”

துரியோதனன் தொடர்ந்தான். ”அப்போரில் தருமனைக் கொல்வது நெறிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. ஏனென்றால் அவன் படைக்கலம் எடுத்து நமக்கு எதிராக போருக்கு வந்தவன். அஸ்தினபுரியின் இளவரசனாக நமது எல்லைகளைக் காக்கும் பொறுப்பு எனக்குண்டு. போர் முடிந்தபின் அவற்றை குடியவையில் பேசிக்கொள்ளலாம். இப்போது ஒரு சிறிய கூரிய தாக்குதல். இந்தக்கணக்கை இப்போதே முடித்துவிடலாம்.”

துரியோதனனின் விழிகள் தத்தளித்து சற்று விலகின. மீசையை நீவியபடி சற்று குரலைத் தாழ்த்தி “நீரும் நிகழ்ந்தனவற்றை அறிந்திருப்பீர். மிதியுண்ட நாகம்போலிருக்கிறாள் யாதவ அரசி. அவளை இன்னும் விட்டுவைக்கக் கூடாது. மிதித்தவர்கள் நாம் என்பதனால்” என்றான்.

சகுனியும் கணிகரும் என்ன சொல்கிறார்கள் என்று அறிய பூரிசிரவஸ் விரும்பினான். ஆனால் பார்வையை திருப்பாமல் அமர்ந்திருந்தான். சகுனி மீசையை நீவியபடி அமைதியாக இருந்தார். பேசாதபோது எப்படி இல்லாதவராகவே ஆகிவிடுகிறார் கணிகர் என அவன் வியந்துகொண்டான்.

“பால்ஹிகரே, நீர் உமது எண்ணங்களை சொல்லலாம்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் தலைவணங்கி “நான் இளையவன். களம் காணாதவனும்கூட. ஆயினும் அரசாணைக்காக என் சொற்களை முன்வைக்கிறேன்” என்று முகமன் சொன்னான்.

பின்பு “இளவரசே, அரசசுற்றம், அமைச்சர், நண்பர்கள், கருவூலம், மக்கள், கோட்டை, படை என எழுவகை படைக்கலங்கள் கொண்டவன் அரசன் என நூல்கள் சொல்கின்றன. இந்த எழுவகை ஆற்றல்களும் இன்று பாண்டவர்களிடமிருக்கின்றன என்பதே என் எண்ணம். ஐவரும் ஓர் எண்ணம் கொண்டவர்கள். விதுரரும் துருபதனும் அவர்களுடனிருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதல்ல” என சொல்லத் தொடங்கினான்.

கர்ணன் ஏதோ சொல்ல வர துரியோதனன் கையசைத்து “அவர் பேசட்டும்” என்றான். பூரிசிரவஸ் “அத்துடன் அவர்களுக்கு மக்களின் நல்லெண்ணம் உள்ளது. அது மிகப்பெரிய படைக்கலம்” என்றான். கர்ணன் ஏளனத்துடன் சிரித்து “போர்கள் நல்லெண்ணங்களால் நிகழ்வதில்லை இளையவரே” என்றான் “நல்லெண்ணங்களால்தான் நிகழ்கின்றன” என்றான் பூரிசிரவஸ் திடமான குரலில். “மக்கள் எனும் பாலில் கடைந்தெடுக்கப்படும் வெண்ணையே படை என்பது. போரை நிகழ்த்துவது படைதான்.”

கர்ணனின் உடல் பொறுமையற்று அசைந்ததை பூரிசிரவஸ் வியப்புடன் கண்டான். ஒரு கூரிய எண்ணம் அவனில் குடியேறியது. “தனிநபர் போர்களிலேயேகூட கூடியிருப்பவர்களின் கூட்டு எண்ணம் பெரிய படைக்கலமாக ஆவதைக் காணலாம் அங்கரே. அன்று மணஅவையில் தங்கள் வில்பிழைத்ததும் அதனாலேயே“ என்றான்.

கர்ணன் கடும்சினத்துடன் தன் இருக்கையின் கைகளை அடித்தபடி எழுந்து “எவரிடம் பேசுகிறீர் என்று எண்ணிப்பேசும்...” என்று கூவினான். துரியோதனன் “கர்ணா, அவர் சொல்லட்டும். அமர்க!” என்றான். கர்ணன் திரும்ப அமர்ந்துகொண்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். துரியோதனன் “சொல்லும் பால்ஹிகரே” என்றான்.

”நான் காம்பில்யத்தை நன்கு பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ். “நீங்கள் முன்னர் படைகொண்டு வென்ற காம்பில்யம் அல்ல அது. மூன்று சுற்றுக் கோட்டையும் ஏழு அடுக்குகளாக சுற்றிச்செல்லும் தெருக்களும் கொண்டது அது. தெருக்களின் கட்டடவரிசைகளும் கூட போரின்போது அரண்களாக ஆகும். அதன் கோட்டைமுகப்புகளில் எல்லாம் எரியம்புகளைத் தொடுக்கும் சக்கரப்பொறிகள் உள்ளன. ஒவ்வொரு கோட்டை வாயிலிலும் கந்தகமேந்திய பன்னிரு சதக்னிகள் காவல்காக்கின்றன. கோட்டையை ஒரு பெரும்படைகூட எளிதில் தீண்டிவிடமுடியாது.”

“ஆகவே என்ன செய்யலாமென எண்ணுகிறீர்?” என்று துரியோதனன் கேட்டான். “நான் சொல்வது ஒன்றே. இத்தருணத்தில் போர் என்பது உகந்தது அல்ல. இப்போரில் வெற்றி அடையப்படலாம். ஆனால் தோல்வி நிகழ்ந்தால் அது தங்கள் வாழ்க்கைக்கே முடிவாக அமையக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் தலையசைத்து "சொல்லும்“ என்றான்.

“நான் தங்கள் சார்பில் பாண்டவர்களிடம் தூது செல்ல சித்தமாக இருக்கிறேன். இதுவரை நிகழ்ந்தவற்றை அவர்கள் முழுமையாக மறந்துவிடவேண்டும் என்று கோரலாம். இந்நிலையில் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இன்னொரு தருணத்திற்காக காத்திருக்கலாம். அதுவே ஒரே வழி” என்றான் பூரிசிரவஸ். “இது தருணமல்ல. அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.”

“முடித்துவிட்டீரா?” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் தலையசைத்தான். “பால்ஹிகரே, இளையவர் என்றாலும் உமது நோக்கின் கூர்மை வியப்புக்குரியதே. ஆனால் உம்முடையது களம் காணாத அமைச்சனின் சொற்கள். அமைச்சர்கள் தோல்விக்கான வாய்ப்புகளை மட்டுமே தேடுவார்கள். அவர்களுக்கு அவை மட்டுமே கண்ணிலும் படும். வீரர்கள் வெற்றிக்கான வழிகளை தேடுவார்கள். அவர்கள் அதை கண்டடைவார்கள்” என்றான் கர்ணன்.

“நீர் நமது வல்லமைகளை கருத்தில்கொள்ளவில்லை. அஸ்வத்தாமனின் யானைப்படை நம்முடன் இருக்கிறது. படகில் அவற்றை ஏற்றிக்கொண்டுசென்று காம்பில்யத்தின் முன் இறக்கினால் நான்கு நாழிகையில் நாம் கோட்டைச்சுவரை உடைத்து உட்புக முடியும். சிந்து நாட்டு இளவரசன் ஜயத்ரதன் இன்னமும் ஊர் திரும்பவில்லை. நம் ஓலைக்காகக் காத்து காம்பில்யத்திற்கு மேற்கே கங்கைக்கரைக்காட்டுக்குள் படைகளுடன் காத்திருக்கிறான். கௌரவப்படைகளுக்கு இது ஒருநாள் போர். அவ்வளவுதான்.”

துரியோதனன் இயல்பாக சகுனியை நோக்கி திரும்ப அவர் மெல்ல “நான் இளையபால்ஹிகர் சொன்னதையே ஆதரிக்கிறேன் துரியோதனா” என்றார். “இப்போரில் நாம் வெல்வோம். ஆனால் வெல்லமுடியாமலாகிவிட்டால் நாம் இழப்பது மிகப்பெரிது. அஸ்தினபுரிக்குள் அதன்பின் நாம் நுழைய முடியாது. உன் தந்தைக்கு நீத்தார்கடன் கூட செய்யமுடியாது.”

கர்ணன் உரக்க “அப்படியென்றால் நீங்கள் என் வில்லையும் சொல்லையும் நம்பவில்லை அல்லவா? அதைச்சொல்லவா இத்தனை சொற்சுழல்கள்?” என்றான். அதிராத குரலில் “நம்புகிறேன். ஆனால் எதையும் நான் முழுமையாக நம்புவதுமில்லை” என்றார் சகுனி.

சகுனியின் அமைதியால் சீண்டப்பட்ட கர்ணன் “இது போர், பகடையாட்டம் அல்ல” என்றான். கண்களில் மட்டும் புன்னகையுடன் “கர்ணா, போர் மட்டுமல்ல வாழ்க்கையேகூட பகடையாடல்தான்” என்றார் சகுனி. “பகடைகளில் ஏறியமர்கின்றன நம்மை ஆளும் பேராற்றல்கள்.”

“ஊழா? தெய்வங்களா?” என்றான் கர்ணன் இகழ்ச்சியுடன். “காந்தாரத்து மாவீரர் நிமித்தநூல் கற்கலாயிற்றா?” சகுனி “அங்கரே, ஊழ்தான். தெய்வங்கள்தான். ஆனால் அவை குடியிருப்பது நம் அகத்தில்தான். அதைத்தான் சற்று முன் பால்ஹிகரும் சொன்னார். நாமறியாதவை. வெளிப்படுகையில் மட்டுமே அறியப்படுபவை. அவற்றையும் கருத்தில்கொண்டே நான் சிந்திப்பேன்...” என்றார்.

“என்ன வீண்பேச்சு இது? நான் கோருவது ஒன்றே. அஸ்தினபுரியின் இளவரசின் ஆணை. அதுமட்டும் போதும். நான் பாண்டவர்களை வென்று அவர் காலடியில் கிடத்துகிறேன். இது என் வில் மேல் ஆணை” என்றான் கர்ணன். திரும்பி “கௌரவரே, என்னை நம்புங்கள். நான் வென்று மீள்வேன்.” என்றான்.

கணிகர் மெல்ல அசைந்து “அங்கரே, இதில் தங்கள் தனிப்பட்ட சினமேதும் உள்ளதா?” என்றார். கர்ணன் திரும்பி “சினமா?” என்றான். அவன் குரலில் இருந்த மெல்லிய நடுக்கத்தை பூரிசிரவஸ் கண்டு சற்று வியப்படைந்தான். கர்ணன் தன்னை திரட்டிக்கொண்டு “ஆம், என்னுள் சினம் உள்ளது. அவையில் சிறுமைப்படுத்தப்பட்டவர்கள் நாம்” என்றான்.

கணிகர் மெல்லிய நடுக்கமோடிய குரலில் “அது உண்மை. ஆனால் தாங்கள் சற்று கூடுதலாக சிறுமைகொண்டீர்களோ?” என்றார். அந்தச்சொற்கள் கர்ணன் மேல் அடி போல விழுவதன் உடலசைவையே பூரிசிரவஸ் கண்டான்.

கர்ணன் பேசுவதற்குள் துரியோதனன் “ஆம், அதுவும் உண்மை. அங்கே களத்தில் வென்று திரௌபதியை அடையவேண்டியவன் இவன். அனைத்தும் அமைந்தும் ஏதோ ஒன்றால் இவன் வீழ்த்தப்பட்டான். ஆண்மகன் என்றால் அதற்கு நிகரீடு செய்யாமல் இங்கிருந்து செல்லமுடியாது” என்றான். “கணிகரே, என் நண்பனின் சிறுமை எனக்கும்தான். அவன் செய்யும் பழிநிறைவை நானும் காணவிழைகிறேன்.”

கணிகர் கைகளை விரித்து “அவ்வாறென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். சகுனி “நமது போர் எவரிடம் மருகனே? பாண்டவர்களிடமா இல்லை பாஞ்சாலியிடமா?” என்றார்.

ஓங்கி தொடையில் அறைந்தபடி எழுந்த துரியோதனன் உரத்த குரலில் “ஆம், திரௌபதியிடம்தான். அவளிடம் மட்டும்தான். மாதுலரே, இனி என் வாழ்நாள் முழுக்க நான் போரிடப்போவது அவளிடம் மட்டுமே. இதில் இனி எந்த ஐயமும் எவருக்கும் தேவையில்லை” என்றான்.

”ஆகவே இனி இது மணிமுடிப்போர் அல்ல. காமப்போர்” என்றார் கணிகர். துரியோதனன் கடும் சினத்துடன் கையை ஓங்கியபடி அவரை நோக்கித் திரும்பி உடனே தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு மந்தணமென அடைத்த குரலில் “என்ன சொல்கிறீர்?” என்றான்.

மூச்சு வாங்க நின்ற அவனை நோக்கி பற்கள் தெரிய புன்னகை செய்தபடி “எளிய சொற்கள்...” என்றார் கணிகர். அவரது விழிகளில் புன்னகை இருக்கவில்லை என்பதை பூரிசிரவஸ் கண்டான். ஒருமுகத்தில் கண்ணுக்கும் உதடுகளுக்குமிடையே அத்தனை தொலைவு எப்படி நிகழமுடியும் என அவன் அகம் வியந்தது.

“சர்ப்பதம்சம் என்று ஒரு முள் இருக்கிறது. மிகமிகச்சிறியது. பூமுள்போல. அது யானையின் கால்களில் குத்தினால் கண்டுபிடிக்கவோ அகற்றவோ முடியாது. ஆனால் யானையின் கால்கள் மெல்லமெல்ல புண்ணாகி சீழ்கட்டும். யானை மரத்தில் சாய்ந்து நின்று காடதிர சின்னம் விளித்து வலியில் கூவிக்கூவி இறக்கும்” என்றார் கணிகர்.

அவரது பற்கள் மேலும் வெளியே வந்தன. “மிகமிகச் சிறிய முள் அது. மிகச்சிறியவை வல்லமை கொண்டவை. அவை மிகச்சிறியவை என்பதனாலேயே பெரியவற்றால் தீண்டப்படமுடியாதவை. ஆகவே அழியாது வாழ்பவை.”

பூரிசிரவஸ் கர்ணனின் முகத்தை நோக்கினான். அது திகைப்பு கொண்டது போல கணிகரை நோக்கி சிலைத்திருந்தது. துரியோதனனின் தலை நடுங்கியது. தோளில் இருந்து பரவிய துடிப்பு ஒன்று அவனுடைய பெரிய கைகளை அதிரச்செய்ததை அவன் கண்டான்.

தன் இரு கைகளையும் வெடிப்போசையுடன் கூட்டி அறைந்தபடி துரியோதனன் கூவினான் “இனி இதைப்பற்றி எவரும் பேசவேண்டியதில்லை. நமது படைகள் நாளை காலையிலேயே பாஞ்சால எல்லைக்குள் செல்கின்றன. அஸ்தினபுரியின் இளவரசனின் ஆணை இது.”

துரியோதனனின் உணர்வெழுச்சியை முன்னரே அறிந்திருந்தவர் போல எதிர்கொண்ட கணிகர் “அவ்வண்ணமே ஆகுக!” என தலைவணங்கினார். துரியோதனன் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு “என் ஆணை... கர்ணா, நமது படைகள் எழுக!” என்றான்.

பகுதி 7 : நச்சு முள் - 2

அரசு சூழ்தல் கூட்டங்களில் எப்போதும் நிகழும் ஒன்றை பூரிசிரவஸ் கூர்ந்தறிந்திருந்தான். அங்கே ஒவ்வொரு கருத்தும் மறுக்கப்படும், ஐயப்படப்படும். சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்றென பிறந்து நீண்டுசெல்லும். ஆனால் எங்கோ ஓர் இடத்தில் அதுவே முடிவென அனைவருக்கும் தெரிந்துவிடும். அதன் பின் சொல்லெழுவதில்லை. அந்த முழுமைப்புள்ளியை அனைவரும் முன்னரே அறிந்திருந்தார்கள் என அப்போது தோன்றும். அதுவரை பொருளின்றி அலைபாய்ந்த கருத்தாடல் அந்தப் புள்ளியால் முழுமையாகவே தொகுக்கப்பட்டிருப்பதாக, அதைநோக்கியே வந்துகொண்டிருந்ததாக அதன்பின் தோன்றும்.

அத்தகைய புள்ளி துரியோதனனின் சொற்களில் நிகழ்ந்தது. அதன் பின் அனைவரும் சொல்லின்மையை அடைந்தனர். கர்ணனின் உடலில் இருந்து தெய்வமொன்று நீங்கிச்சென்றதைப்போல ஒரு தளர்வு குடியேறியது. சகுனியும் மெல்ல அசைந்தார். அதுவரை கேளாதிருந்த சூழலின் ஒலிகள் கேட்கத்தொடங்கின. எங்கோ எவரோ ஆணையிட்டனர். ஒரு கதவு காற்றில் அசைந்தது. குதிரை ஒன்று முற்றத்தில் கனைத்தது.

துரியோதனன் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டு பெருமூச்சுவிட்டான். பின்னர் பெரிய கைகளை கைப்பிடிமேல் வைத்துக்கொண்டு அமர்ந்து இயல்பாக ஆனான். அவன் உடலில் இருந்த இருபக்க நிகர்த்தன்மையை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். துரியோதனன் உடல் மிக இறுக்கமானதாக இருப்பதாக தோன்றிக்கொண்டே இருந்தது. உண்மையில் அவனை முதல்முறையாக துருபதன் அவையில் பார்த்தபோதே தோன்றிய எண்ணம்தான் அது. இவர் ஏன் இத்தனை கல்லாக இருக்கிறார் என்றே அப்போது எண்ணிக்கொண்டான்.

பின்னர் கூர்ந்தபோது அவன் தசைகள் அத்தனை இறுக்கமானவை அல்ல என்று தெரிந்தது. அவன் படைக்கலப்பயிற்சியை கைவிட்டு பலவருடங்களாகியிருக்கவேண்டும். தோள்களும் கைகளும் மிகப்பெரியதாக பாறையில் ஓடிய மாணைக்கொடி போல தடித்த நரம்புகளால் பிணைக்கப்பட்டதாக இருந்தபோதிலும்கூட உடல் எடைமிகுந்து வயிறு பருத்திருந்தது. அப்படியானால் ஏன் அவன் இறுக்கமாகத் தெரிகிறான் என எண்ணிக்கொண்டான். திரௌபதியின் மணவரங்கில் அத்தனை அரசர்களுக்கு நடுவிலும் அவன் தனித்துத் தெரிந்ததே அதனால்தான். அதை அவளும் எப்படியோ உணர்ந்திருந்தாள் என்பது அவன் வில்லெடுக்கச் செல்லும்போது அவள் உடலில் தெரிந்தது.

துரியோதனன் தன் கைகளை இருக்கையின் கைப்பிடிமேல் வைத்த அசைவு அவன் அகத்தை உலுக்கி அனைத்தையும் தெளிவாக்கியது. அவன் இரு கைகளும் முற்றிலும் ஒன்றைப்போல் பிறிதிருந்தன. அவற்றின் அசைவுகளும் முற்றிலும் நிகர்த்திருந்தன. அவன் அமர்ந்திருந்தமை அணுவிடை அளந்து சிற்பி அமைத்த சிற்பம் போலிருந்தது. அந்த நிகர்த்தன்மையே அவனை கற்சிலை எனக்காட்டியது என்றும் அதையே தன் அகம் இறுக்கமென புரிந்துகொண்டது என்றும் அவன் அறிந்தான்.

“பால்ஹிகரே, இப்போரில் தாங்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். “ஏனென்றால் இன்னமும் தங்கள் நாடுகள் எங்களுடன் ஓலை கைமாற்றவில்லை.” பூரிசிரவஸ் தலைவணங்கி “நானும் போரில் கலந்துகொள்ளவே விழைகிறேன் கௌரவரே” என்றான். துரியோதனனின் விழிகள் அவனை நோக்கி வினவ “எங்கள் குலங்களில் தனிப்பட்ட முறையில் போரில் கலந்துகொள்ள உரிமை எந்த வீரனுக்கும் உண்டு. நான் இன்றுவரை விரிநிலப்போர்களில் கலந்துகொண்டதில்லை” என்றான்.

துரியோதனன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன. எத்தனை அழகிய புன்னகை என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இந்த மனிதனுக்காக என்றோ களத்தில் உயிர்துறக்கப்போகிறோம் என்ற எண்ணம் உள்ளத்தில் மின்னியது. அவன் உடல் சிலிர்த்தது. மறுகணம் அது முதிரா இளைஞனின் அகஎழுச்சி மட்டுமே என சித்தம் அதை கலைத்துப் போட்டது. பேரழகன், ஆம். ஐயமே இல்லை. துரியோதனன் ”என்ன பார்க்கிறீர்?” என்றான். பூரிசிரவஸ் நாணப் புன்னகையுடன் தலையசைத்தான்.

துரியோதனன் “உமது வருகை தக்க தருணத்தில் நிகழ்ந்திருக்கிறது. இப்போரில் நீர் கலந்துகொள்ளும். நாங்கள் பாண்டவர்களை வென்று அஸ்தினபுரியை ஆளும்போது எங்கள் சமந்த நாடாக பால்ஹிகம் அறியப்படும்” என்றான். தலைவணங்கி “அதுவே நாங்கள் விழைவது” என்றான் பூரிசிரவஸ். “சௌவீரத்தின் மணிமுடியையும் செங்கோலையும் பெற தங்களையே நம்பியிருக்கிறோம்.” துரியோதனன் மீசை அசைய இதழ் விரிய விழி மின்ன நகைத்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.

சகுனி தன் சால்வையை இழுக்கும் அசைவு அவர்களை ஒருவரோடொருவர் பிணைத்த சித்தம் கலைந்து விலகச்செய்தது. சகுனி எழுந்துகொண்டு “நாளை படைப்புறப்பாடென்றால் பணிகளை இன்றே ஒருக்கவேண்டும். நிறைய கடமைகள் உள்ளன” என்றார். எழுந்து அவருக்கு விடைகொடுத்தபடி “ஆம், நிகழட்டும். தங்களுடன் கர்ணனும் வருவான். இவ்விளையோனையும் சேர்த்துக்கொள்க! இவரும் படைநீக்கம் பயிலட்டும்” என்றான் துரியோதனன்.

கணிகர் எழுந்து கொள்ளும்பொருட்டு கைநீட்ட அப்பால் கதவருகே நின்றிருந்த ஊமைச்சேவகன் ஓடி வந்து அவரை பற்றித் தூக்கினான். வலியுடன் முனகியபடி அவர் நின்று நிமிர்ந்தபின் மீண்டும் தளர அவரது மையத்தில் ஒடிந்த உடல் மீண்டும் குறுகியது. அவன் கைகளைப்பற்றியபடி துரியோதனனுக்கு தலைவணங்கிவிட்டு சிற்றடி எடுத்துவைத்து வெளியே சென்றார்.

சகுனி “என் மாளிகைக்கு வாரும் பால்ஹிகரே” என்று சொல்லிவிட்டு முகத்தில் வலிச்சுளிப்புடன் தன் வலக்காலை மெல்ல மெல்ல அசைத்து வைத்து முன்னகர்ந்தார். பூரிசிரவஸ் அவரை வணங்கினான். அவர் மெல்ல வலப்பக்கம் சரிந்து செல்வதைக் கண்டபோது அவர் எடைமிக்க எதையோ கொண்டுசெல்வதுபோல தோன்றியது. அல்லது அவருடன் விழிக்குத் துலங்காத எவரோ துணைசெல்வதுபோல.

அவர்கள் செல்வதை வாயில் வரை நோக்கியபின் திரும்பி துரியோதனனை நோக்கினான். “தாங்கள் சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம் பால்ஹிகரே. கங்கைக்கரையின் சிறந்த மீனுணவை தங்களுக்காக சித்தமாக்கச் சொல்கிறேன்” என்றான் துரியோதனன். “ஆணை” என்றான் பூரிசிரவஸ் புன்னகையுடன்.

துரியோதனன் கர்ணனை நோக்கி திரும்பி “முதலில் அஸ்வத்தாமனுக்கும் ஜயத்ரதனுக்கும் செய்தி செல்லட்டும். படைகளுக்கான அனைத்து வரைவுகளும் இன்றுமாலைக்குள் சித்தமாகவேண்டும். இரவுக்குள் படகுகள் பாய்திறந்துவிடவேண்டும்... நான் மாலையில் படைநோக்குக்கு வருகிறேன். ஆவன செய்க!” என்றான். கர்ணன் “ஆம், இன்றே முடிந்துவிடும்” என்றான்.

அந்தக்கணத்தில் அங்கே ஏதோ ஒன்று நிகழ்ந்தது என பூரிசிரவஸ் உணர்ந்தான். இரு மதயானைகள் கொம்புகளால் மெல்ல தொட்டுக்கொண்டன. அது ஏன் என அவன் சித்தம் தவிக்கத் தொடங்கியது. கர்ணன் தலைவணங்கிவிட்டு வெளியே சென்றான். பூரிசிரவஸ்ஸை நோக்கி திரும்பிய துரியோதனன் அவன் தோளைத் தொட்டு “தாங்கள் வருவதை முன்னரே அறிவேன் பால்ஹிகரே. தாங்கள் சென்ற தொலைவுகளும் ஒற்றர் வழியாக தெரியவந்தன” என்றான்.

பூரிசிரவஸ் வினவுடன் நோக்க “பால்ஹிக பிதாமகரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க விழைகிறேன். நம் குலத்தில் இன்றுள்ள மூத்தவர் அவரே. அவருடன் ஒருமுறை தோள்பிணைத்து களம் நிற்க முடிந்தால் அது என் நல்லூழ் என்றே கொள்வேன்” என்றான். “அவர் மலைக்கே திரும்பிவிட்டார். மலைமகள் ஒருத்தியை மணந்திருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். “அறிவேன். அவள் பெயர் ஹஸ்திகை. உங்கள் துணைவியும் அங்குதான் இருக்கிறாள். அவள் பெயர் பிரேமை” என்றான் துரியோதனன்.

பூரிசிரவஸ்ஸின் முகம் சிவந்து சற்று மூச்சு தடுக்கிக்கொண்டது. “மேலுமிரு பெண்களைப்பற்றியும் அறிவேன். சிபிநாட்டுப்பெண் தேவிகை. மத்ரநாட்டுப்பெண் விஜயை. சிபிநாட்டு வெண்ணிற அழகி ஒருத்தி. மஞ்சள்நிறமான மலைமகள் ஒருத்தி. பால்ஹிககுலத்து பேருடல் அழகி ஒருத்தி...” என்று சொல்லி அவன் தோளில் தட்டினான் துரியோதனன். “இனிய காதல்களால் நிறைந்திருக்கிறது உமது உள்ளம்... வாழ்க!” பூரிசிரவஸ் தலைவணங்கி “தங்கள் அருள் தேவை” என்றான்.

“உம்மைக் கண்டதுமே என் நெஞ்சால் தழுவிக்கொண்டேன். நான் முடிசூடும்போது மலைச்சாரலில் முந்நூறு கிராமங்களை உமக்களிக்கிறேன். உமக்கென ஒரு நாட்டை அமைத்துக்கொள்ளும். அங்கே தேவியர் மூவருடன் அரசாளும். உமது நாடு ஒருபோதும் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டவேண்டியதில்லை. என் அவையில் என்றும் நீர் கர்ணனுக்கு நிகராக என் தோழராகவே அமர்ந்திருப்பீர். வருங்காலத்தில் நம் குழந்தைகள் மணம் கொண்டு நாம் இணைந்தால் மேலும் மகிழ்ச்சி...” துரியோதனன் அவனை தன் பெரிய கைகளால் வளைத்து மார்புடன் தழுவிக்கொண்டான். “இனி நீர் எங்களில் ஒருவர். உமக்கு உடன்பிறந்தார் நூற்றுவர்” என்றான்.

தன் நெஞ்சு நெகிழ்ந்து விழி கசிவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். மண்ணில் எந்த மன்னனும் அப்படி தன்னை முழுமையாக நட்புக்கு திறந்து வைப்பதில்லை என்று எண்ணிக்கொண்டான். தன் தலையை துரியோதனனின் பெரிய தோள்களில் வைத்தான். “நானும் என் குலமும் தங்களுக்குரியவர்கள் இளவரசே” என்றான். ”தங்களுக்கென களம்பட வாய்ப்பிருக்குமென்றால் அதுவே என் நிறைவு.” ஏன் அப்படி சொன்னோம் என சொல்லிமுடித்ததுமே நாணினான். ஆனால் துரியோதனன் அவன் தலையைத் தட்டியபடி நகைத்தான்.

பூரிசிரவஸ் “இளவரசே, என் தந்தை ஒருமுறை சொன்னார். அஸ்தினபுரியின் மதவேழத்தின் அணைப்பை ஒருமுறை அடைந்தவன் தேவர்களால் சூழப்பட்டவன் என. அவரது மைந்தனும் இணையான மதவேழம் என இன்று அறிந்தேன்” என்றான். துரியோதனன் “அவருடன் என்னை நீர் ஒப்புமைப்படுத்தலாகாது. அவரது உளவிரிவை இப்பிறவியில் என்னால் அடைய முடியாது. அதை நான் நன்கறிவேன்” என்றான்.

துரியோதனனுக்குப்பின்னால் நிழலென நின்ற துச்சாதனன் வந்து பூரிசிரவஸ்ஸை தழுவிக்கொண்டான். அதன்பின் துச்சலன் தழுவிக்கொண்டான். அவர்களின் தொடுகைகள் கூட தமையனைப்போலவே இருப்பதை பூரிசிரவஸ் வியப்புடன் எண்ணிக்கொண்டான். ஒரு மனிதன் அத்தனை உடல்களில் எப்படி திகழமுடிகிறது? ஓர் உடலை நிறைத்து ததும்பி பிறவற்றிலும் நிறையும் ஏதோ ஒன்று அவனிடமிருக்கிறது.

பூரிசிரவஸ் துரியோதனனை வணங்கிவிட்டு வெளியே சென்றான். சுருதசன்மர் வந்து பணிந்து “தங்களுக்கான அறை கீழ்த்தளத்தில் உள்ளது இளவரசே” என்றார். “வருக!” என அழைத்துச்சென்றார். குன்றின் சரிவிலேயே அந்த அரண்மனையும் இறங்கி நின்றிருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். படிகள் தடித்த மரத்தாலானவை என்பதனால் ஓசையெழுப்பவில்லை. அரண்மனை முழுக்க காற்று குளிர்ப்பெருக்காக சுழன்று சென்றுகொண்டிருந்தது.

“இந்த அறையில் தங்களுக்கான அனைத்தும் சித்தமாக உள்ளன... ஓய்வெடுங்கள்” என்றார் சுருதசன்மர். “நான் சற்றுநேரம் தங்களுக்கு பணிசெய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அஸ்தினபுரியில் இருந்து இளவரசி இங்கு வருகிறார்கள். படகு அணுகிவிட்டதென பறவைச்செய்தி வந்தது. நான் ஆவன செய்யவேண்டும்.” பூரிசிரவஸ் “எந்த இளவரசி?” என்றான். சுருதசன்மர் “அஸ்தினபுரிக்கு ஒரே இளவரசிதான் இளவரசே. குருகுலத்தவர் நூற்றைந்துபேருக்கும் ஒரே தங்கை” என்றார்.

பூரிசிரவஸ் முகம் மலர்ந்து “அவர் பெயர் துச்சளை அல்லவா?” என்றான். சுருதசன்மர் “ஆம், பாரதவர்ஷத்தில் அவர்களை அறியாதவர்கள் குறைவு. சூதர்களின் பாடல்களே நூற்றுக்கும் மேலாக உள்ளன” என்றார். பூரிசிரவஸ் “இங்கே படைப்புறப்பாடு நிகழ்கையில் அவர்கள் ஏன் வருகிறார்கள்?” என்றான். “படைப்புறப்பாடு நிகழப்போவது எவருக்குமே தெரியாது. இளவரசி தமையன் தந்தையுடன் பூசலிட்டு இங்கே தங்கியிருப்பதாக எண்ணுகிறார். அவரை அமைதிப்படுத்தி அழைத்துச்செல்லும்பொருட்டு வருகிறார்.”

பூரிசிரவஸ் ”உண்மையில் இங்கே தேவையாவது அதுதான்...” என்றபின் விடைகொடுத்தான். சேவகன் கொண்டுவந்த உணவை உண்டபின் ஆடைமாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்துக்கொண்டான். நீண்ட படகுப்பயணம் உடலில் எஞ்சியிருந்தமையால் தொட்டிலில் ஆடுவதுபோல் உணர்ந்தான். கண்களுக்குள் குருதியின் அலைகள். பின்னர் துயின்றுவிட்டான்.

அவன் விழித்துக்கொண்டபோது குளியல்பொருட்களுடனும் மாற்று ஆடைகளுடனும் சேவகன் காத்திருந்தான். குளியலறை மிகச்சிறியதாக இருந்தாலும் சேவகன் திறனுள்ளவனாக இருந்தான். ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோது சுருதசன்மர் வந்து அறைவாயிலில் நின்று “வணங்குகிறேன் இளவரசே” என்றார். “படைப்புறப்பாட்டுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டனவா?” என்றான் பூரிசிரவஸ். “நான் இப்போதே கிளம்பி படைகளை பார்க்கவேண்டும்.”

“ஆணைகளை அங்கநாட்டரசர் முன்னரே எழுதிவிட்டிருந்தார்” என்றார் சுருதசன்மர். “அவை அனைவருக்கும் சென்றுவிட்டன. கீழே படைகள் கவசமும் படைக்கலமும் கொண்டு எழுந்துவிட்டன. இன்னும் நான்கு நாழிகைக்குள் அவை படகுகளில் ஏறிவிடும்.” பூரிசிரவஸ் திகைப்புடன் “அத்தனை விரைவாகவா? ஆயிரம்பேராவது இருப்பார்களே?” என்றான். “நமது படைகள் மட்டுமே எட்டாயிரம் பேர். ஜயத்ரதனின் இரண்டாயிரம் பேர். அஸ்வத்தாமனின் பத்தாயிரம்பேர்” என்றார் சுருதசன்மர். “நாநூறு படகுகள். எழுநூறு யானைகள்...”

பூரிசிரவஸ்ஸின் திகைப்பை நோக்கி புன்னகைத்த சுருதசன்மர் “அவை எப்போதும் புறப்படச்சித்தமாக இருப்பவை இளவரசே” என்றார். “அங்கநாட்டரசர் தாங்கள் விழித்ததும் பாடிவீட்டுக்கு அழைத்துவரச்சொன்னார். ஆனால் அதற்கு முன் தங்களை சந்திக்கவேண்டுமென இளவரசி விழைந்தார். அதைச் சொல்லவே வந்தேன்” என்றார். பூரிசிரவஸ் “இளவரசியா?” என்றதுமே புரிந்துகொண்டு “என்னை தனியாக சந்திக்கவா?” என்றான். “ஆம்” என்றார் சுருதசன்மர். “பின் பக்கம் சூதர்சாலை அருகே ஒரு சிறிய அவைக்கூடம் உள்ளது. அங்கே” என்றார்.

”நான் இதோ கிளம்பிவிடுகிறேன்... தெரிவித்துவிடுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “இளவரசி முன்னரே அங்கே காத்திருக்கிறார்கள்” என்றார் சுருதசன்மர். “இப்போதே செல்வோம்... “ என்று உடைவாளை கையிலெடுத்தபடி பூரிசிரவஸ் சொன்னான். சுருதசன்மருடன் மரத்தாலான தரை ஒலிக்க நடந்து இடைநாழிகளை சுற்றிக்கொண்டு சூதர்சாலைக்கு அருகே சென்றான். உள்ளே நான்கு சூதர்கள் அமர்ந்து யாழ்களை பழுதுநோக்கிக்கொண்டிருந்தனர். சுருதசன்மர் “சற்று பொறுங்கள்” என கதவைத் திறந்து நோக்கிவிட்டு “உள்ளே செல்லலாம்” என்றார்.

பூரிசிரவஸ் உள்ளே நுழைந்து சாளரத்தோரம் நின்றிருந்த துச்சளையை நோக்கி தலைவணங்கினான். முதல்கணம் எழுந்த எண்ணம் அவள் துரியோதனனை போலிருக்கிறாள் என்பதுதான். நிமிர்ந்த பெரிய உடல் கொண்டிருந்தாள். உயிர்மின்னும் கரிய நிறம். சுருளாக தோளுக்குப்பின் பொழிந்த அடர்கூந்தல். செறிந்த புருவங்கள். கரிய ஒளி மின்னும் நீண்ட பெருவிழிகள். உருண்ட கன்னங்களுடன் படர்ந்த முகம். காதோரம் மென்மயிர் இறங்கி சுருண்டு நின்றது. சிறிய மாந்தளிர் நிற உதடுகளுக்குப் பின்னால் இரு பற்களின் வெண்ணிற நுனி.

பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் இளவரசியை வணங்குகிறேன். தங்களைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன். தங்களைக் காண்பதில் உவகை கொள்கிறேன். இச்சந்திப்பால் பால்ஹிககுலம் வாழ்த்தப்படுகிறது” என்றான். முறைமை சார்ந்த சொற்களை ஏன் கண்டுபிடித்தார்கள் என அப்போது தெரிந்தது. அவை சந்திப்புகளைத் தொடங்க பேருதவிபுரிபவை. திகைத்து நிற்கும் சித்தம் தொட்டெடுக்க எளிதானவை. முன்னரே வகுக்கப்பட்டவை என்பதனால் தீங்கற்றவை.

“தங்களைப்பற்றியும் நான் நன்கறிவேன்” என்று துச்சளை சொன்னாள். “இங்கு வரும்போதே தாங்கள் இங்கே வந்துகொண்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தங்களை சந்திப்பதும் என் எண்ணத்திலிருந்தது.” “அது என் நல்லூழ்” என்றான் பூரிசிரவஸ். “அமர்க!” என அவள் பீடத்தை காட்டினாள். அவன் அமர்ந்ததும் தானும் அமர்ந்துகொண்டாள். அவள் உள்ளூர அல்லல் கொண்டிருப்பது விரல்நுனிகளின் அசைவில் தெரிந்தது. விழிகள் அவனை நோக்கியபின் திரும்பி சாளரத்தை நோக்கி மீண்டன. விழிக்குமிழிகளில் சாளரம் தெரிந்தது.

முதல்நோக்கில் அவளுடைய கரியபேருடல் அளித்த திகைப்பு விலகி அவள் அழகாக தெரியத்தொடங்குவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். திரண்ட பெருந்தோள்கள். வலுவான கழுத்து. உருண்ட பெரிய செப்புமுலைகள். அத்தனை பெரிய உடலுடன் அவள் அமர்ந்திருக்கையில் எவ்வண்ணமோ மென்மையான வளைவுகள் நிகழ்ந்து அருவி தழுவிக் கரைத்த மலைப்பாறையின் குழைவுகள் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். துரியோதனனுக்கும் அவளுக்குமான வேறுபாடே அந்தக் குழைவுகள்தான்.

அப்போதுதான் துரியோதனனை எண்ணும்போதெல்லாம் ஏன் திரௌபதியையும் எண்ணினோம் என அவன் அகம் உணர்ந்தது. அவனைப்போலவே அவளுடலும் முற்றிலும் நிகர்நிலை கொண்டது. ஆகவே அவளும் சிலை என்றே தோன்றினாள். ஆனால் கற்சிலை அல்ல. உருகும் உலோகத்தில் வார்க்கப்பட்டவள். அவன் பெருமூச்சுவிட்டான். ஒவ்வொரு பெண்ணின் முன்னாலும் இப்படித்தான் எண்ணங்களில் நிலையழிந்துபோகிறோம் என தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டதும் புன்னகை செய்தான்.

“நான் வந்தது எந்தைக்கும் தமையனுக்கும் இடையே இருக்கும் ஐயங்களை அகற்றுவதற்காகவே என அறிந்திருப்பீர்கள் பால்ஹிகரே” என்றாள் துச்சளை. “ஆனால் இங்கு வந்தபின்னர்தான் அறிந்தேன், முதலில் தீர்க்கவேண்டிய பூசல் என்பது என் தமையன்களுக்கு நடுவேதான் என்று. அதன்பொருட்டே உங்களைத் தேடிவந்தேன்.” பூரிசிரவஸ் “தங்கள் ஆணையை ஏற்க சித்தமாக உள்ளேன் இளவரசி” என்றான்.

”நீங்கள் இன்று அவையில் பேசியதையும் அறிந்தேன். இது எவருக்கும் நலன் செய்யாத போர். எவ்வகையிலாவது இப்போரை நிறுத்தமுடியுமா?” என்று துச்சளை கேட்டாள். “இப்போதே படைகள் எழுந்துவிட்டன. இதை நிகழ்த்துபவர் அங்கநாட்டரசர். அவருடைய தனிப்பட்ட சினமே இதை முன்னெடுக்கிறது.” பூரிசிரவஸ் ஒரு கணம் தயங்கியபின் “இல்லை” என்றான். அவள் திகைத்து விழிதூக்க “இது முதல் கௌரவரின் சினம்” என்றான்.

அவள் விழிகள் அவன் விழிகளை சிலகணங்கள் சந்தித்து நின்றன. பின் அவள் கை எழுந்து தோளில் விழுந்த குழலை பின்னுக்குத்தள்ளியது. அந்த இயல்பான அசைவில் அவள் காற்றில் பிரியும் கருமுகில் போல் எடையற்றவளானாள். கழுத்து மெல்ல வளைய இதழ்கள் பிரிய ஏதோ சொல்லவந்தபின் அடங்கி தலையை அசைத்தாள். பூரிசிரவஸ் “நான் என்ன செய்ய இயலும்?” என்றான்.

“எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நானறிந்த ஒரேவழி எவ்வகையிலேனும் மூத்தவர் சகதேவனை நீங்கள் சந்திக்கமுடியுமா என்று முயல்வதுதான். அவரிடம் நிலைமையைச் சொல்லி இப்போரை நிறுத்தமுடியுமா என்று பாருங்கள்...” பூரிசிரவஸ் “இளவரசி, இப்போரை முன்னெடுப்பவர் மூத்த கௌரவரும் அங்கநாட்டரசரும். அதை அவர் எப்படி நிறுத்த முடியும்?” என்றான். “அதையும் நானறியேன். ஒருவேளை பாண்டவர்கள் இவர்கள் விழையும் எதையாவது அளிக்க முடிந்தால்...” என்றபின் துச்சளை கைகளை வீசி “என்னால் சிந்திக்கவே முடியவில்லை” என்றாள்.

“மேலும் நான் எப்படி இப்போது கிளம்ப முடியும்? படைப்புறப்பாட்டில் ஒத்துழைப்பதாக நானே மூத்தகௌரவருக்கு வாக்களித்திருக்கிறேன். இப்போது கிளம்பி காம்பில்யம் செல்வதென்பது காட்டிக்கொடுத்தலாகவே பொருள்படும்” என்றான். துச்சளை “அதை நானும் சிந்தித்தேன். நீங்கள் என் தூதராகச் செல்லலாம். அதை நானே மூத்தவரிடம் சொல்கிறேன்” என்றாள். பூரிசிரவஸ் “அதை அவர் விரும்பமாட்டார்” என்றான். “ஆம், ஆனால் படைப்புறப்பாட்டை அவர்களிடமிருந்து மறைத்து திசைதிருப்பும்பொருட்டே இந்த தூது என அவரிடம் சொல்கிறேன். அவர் அதை ஏற்பார்” என்றாள்.

அவளுடைய தோற்றம் அளித்த சித்திரத்துக்கு மாறாக அவள் மிகக்கூரியவள் என்ற எண்ணத்தை பூரிசிரவஸ் அடைந்தான். பேருடல் கொண்டவர்கள் எளிய உள்ளம் கொண்டவர்கள் என ஏன் உளமயக்கு ஏற்படுகிறது? அவர்களின் உடல் விரைவற்றது என அகம் மயங்குகிறது. உள்ளமும் அப்படியே என எண்ணிக்கொள்கிறது. இரண்டுமே பெரும்பாலும் பிழையானவை. துச்சளை “சகதேவரிடம் என் துயரை சொல்லுங்கள் பால்ஹிகரே. இந்நிலையில் என்ன செய்யமுடியும் என்று அவரும் நீங்களும் இணைந்து முடிவெடுங்கள்...” என்றபின் சற்று தயங்கி “காம்பில்யம் இப்படைப்புறப்பாட்டை அறிந்துவிட்டது என இவர்கள் அறிந்தால்கூட படைப்புறப்பாடு நின்றுவிடக்கூடும்” என்றாள்.

கூர்ந்து நோக்கியபடி “அதாவது நான் இப்படைப்புறப்பாட்டை பாண்டவர்களுக்கு காட்டிக்கொடுக்கவேண்டும், இல்லையா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, அப்படி அல்ல” என்று துச்சளை கைநீட்டி பதறியபடி சொன்னாள். “தாங்கள் சென்றாலே அதை சகதேவர் உய்த்தறிந்துவிடுவார். பாண்டவர்களில் மிகக்கூரியவர் அவரே. அது போரை நிறுத்துமெனில் ஏன் அதை செய்யக்கூடாது? அனைவருக்கும் நலம் பயக்கும் ஒன்றல்லவா இது?” அவள் குரல் தழைந்தது. “என் உடன்பிறந்தார் போரில் எதிர்நின்று அழியக் கூடாது. அதன்பொருட்டே இதை சொல்கிறேன்.”

பூரிசிரவஸ் “இல்லை, நான் அதை செய்யமுடியாது இளவரசி. என் மீறும்சொல் பொறுத்தருளவேண்டும்” என்றான். “நான் செய்வதன் விளைவு தார்த்தராஷ்டிரருக்கு எதிரானதாக அமைந்தால்கூட நான் அவருக்கு இரண்டகம் செய்ததாக ஆகும். இன்றுதான் நான் அவரது தோள்தழுவினேன். வாழ்வும் இறப்பும் அவருடனேயே என அகத்தே உறுதிகொண்டேன்.” துச்சளை “அதை நான் அறிந்தேன். ஆகவேதான் உங்களைத் தேடிவந்தேன். என் தமையனின் நலனை நாடுவதில் எனக்கிணையானவர் நீங்கள் என்பதனால்...” என்றாள்.

“நான் அங்கநாட்டரசரிடம் பேசுகிறேன்...” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, அவர் ஒப்பமாட்டார். நான் மாதுலரிடம் பேசினேன். கணிகரிடமும் கூட சற்றுமுன் பேசினேன். ஏதும் செய்யமுடியாது. அங்கநாட்டரசரும் தமையனும் உறுதிகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். நான் என்ன செய்வதென்றறியாமல் தவிக்கிறேன்.” அவள் விழிகளில் நீர் பரவுவதை பூரிசிரவஸ் கண்டான். உதடுகளை அழுத்தியபடி “பெருந்தீங்குகள் நிகழவிருக்கின்றன என என் அகம் சொல்கிறது... அதைத் தவிர்க்க என்ன செய்யமுடியும் என்றும் அறியேன்...” என்றாள்.

தன் கையிலிருந்த பட்டுச்சால்வையால் விழிகளை துடைத்துக்கொண்டாள். பின் நிமிர்ந்து “எத்தகையவளானாலும் பெண் ஓர் ஆணிடம்தான் உதவிகோரவேண்டியிருக்கிறது” என்றாள். பூரிசிரவஸ் தன் நெஞ்சுக்குள் குளிர்ந்த அசைவொன்றை உணர்ந்தான். “நான்...” என்று அவன் சொல்லத் தொடங்க “மேலும் சொற்கள் என்னிடமில்லை. நான் உங்களை நம்பி வந்தேன்” என்றாள். நெஞ்சு படபடக்க பூரிசிரவஸ் சில கணங்கள் அமர்ந்திருந்தான். காதுகளில் அணிந்திருந்த குழை கழுத்தைத் தொட்டு ஆடியது. சுருள்குழல்கள் அதன்மேல் பரவியிருந்தன.

பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஒன்று செய்யலாம். அஸ்வத்தாமரிடம் பேசிப்பார்க்கலாம். அங்கநாட்டரசரிடம் நிகர்நின்று பேசுபவர் அவர் என்றார்கள்” என்றான். “இன்றே நீங்கள் உத்தரபாஞ்சாலம் செல்லமுடியுமா என்ன?” என்றாள் துச்சளை. “ஆம், விரைவுப்படகிருந்தால் சென்றுவிடலாம்.” துச்சளை அவனை நோக்கிய விழிக்கு அப்பால் சித்தம் வேறெங்கோ சென்று மீண்டது. “பால்ஹிகரே, அஸ்வத்தாமர் ஒருபோதும் ஒப்பமாட்டார்” என்றாள்.

அவன் ஏன் என விழிதூக்க “உத்தரபாஞ்சாலத்தை காம்பில்யம் தாக்கக்கூடுமென அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார். இப்போது அஸ்தினபுரியின் படைகளுடன் இணைந்து ஒரு தாக்குதலை நிகழ்த்தமுடியும் என்றால் அதுவே அவரது அரசுக்கு நல்லது. அவர் இன்று முதன்மையாக சத்ராபுரியின் அரசர், அதன்பின்னரே கௌரவர்களின் துணைவர்” என்றாள். அவள் சொல்லத்தொடங்கியபோதே அதை பூரிசிரவஸ் தெளிவுற உணர்ந்திருந்தான்.

அத்தனை சொற்களும் ஒழிய அறையில் நிறைந்திருந்த காற்று எடைகொண்டு அவர்களை சூழ்ந்துகொண்டது. ஆடைநுனியை சுழற்றிக்கொண்டிருந்த கைகளை விடுவித்து அவள் விரல்கோர்த்துக்கொண்டு மெல்ல சாய்ந்தாள். பெருமூச்சுடன் “நான் எளியவள். என்னால் முடிந்ததை செய்யலாமென எண்ணினேன்” என்றபின் எழுந்துகொண்டாள். “தங்களுக்கு தொல்லைகொடுத்தமைக்கு வருந்துகிறேன் இளவரசே” என்றாள். யானைத்துதிக்கைக்கு மட்டுமே உரிய மென்மையுடன் பின்பக்கம் சரிந்து கிடந்த ஆடையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள்.

“என் தமையன் குண்டாசியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இவர்கள் செய்த வஞ்சத்தால் அகமுடைந்து களிமகனாகிவிட்டார். இருநாட்களுக்கு முன் என்னை வந்து சந்தித்து அழுதார். உடனே கிளம்பிச்செல்லாவிட்டால் உடன்பிறந்தார் களத்தில் குருதிசிந்துவர் என்றார். அவரது கண்ணீரே என்னை இங்கே வரச்செய்தது” என்றாள் துச்சளை. “உன்னால் மட்டுமே அதை தடுக்கமுடியும் இளையவளே என்று அவர் சொன்னபோது என் நெஞ்சு சற்று தருக்கியிருக்க வேண்டும். அதற்கு இது உகந்த முடிவுதான்... வருகிறேன்.”

அவள் உடலில் செல்வதுபோன்ற அசைவு நிகழ்ந்தாலும் காலடிகள் நிலம்பெயரவில்லை. பூரிசிரவஸ் எழுந்தான். அவளுடைய விரிந்த தோள்களில் கரியபரப்பு இழுத்துக்கட்டப்பட்ட பழந்துடியின் தோலென மின்னியது. அவள் உடலின் தனித்தன்மை என்ன என அப்போதுதான் அவன் அறிந்தான். அவள் தோளெலும்புகளும் கழுத்தின் எலும்பும் மிகப்பெரியவை. பிரேமையின் கழுத்தைவிட. ஏன் இப்போது அவளை நினைக்கிறோம் என வியந்துகொண்டான். மல்லர்களுக்குரிய எலும்புகள். ஆனால் அவற்றிலும் முழுமையாகவே பெண்மையின் எழில் கூடியிருக்கிறது.

தன் பார்வைதான் அவளை நிற்கச்செய்கிறது என அவன் உணர்ந்தான். ஏதாவது சொல்லவேண்டும், ஆனால் என்ன சொல்வதென்று புரியவில்லை. வெற்றுரைகள் அப்போது இரக்கமற்றவையாக ஆகக்கூடும். அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்து கழுத்தில் ஒரு மெல்லிய சொடுக்கலாக முழுமைகொண்டது. தணிந்த குரலில் “நீங்கள் திரௌபதியை பார்த்தீர்களா?” என்றாள்.

பூரிசிரவஸ் திகைத்து “ஆம், நான் மணநிகழ்வில் பங்கெடுத்தேனே” என்றான். “பேரழகியா?” என்றாள். அவள் கண்களில் தெரிவதென்ன என அவனுக்குப் புரியவில்லை. “அத்தனை ஆண்களும் அப்படி எண்ணுகிறார்கள்” என்றான். அவள் சட்டென்று வெண்பற்கள் தெரியச்சிரித்து “மிகநுட்பமான மறுமொழி... நன்று” என்றாள். “அழகென நூலோர் வகுத்தவை அவளில் உண்டா என அறியேன். அவளைக் கண்ட ஆண்களெல்லாம் அவளை எண்ணிக்கொண்டிருப்பார்கள்.”

“நீங்களுமா?” என்றாள். பூரிசிரவஸ் அவள் விழிகளை நோக்கி “மெய் சொல்வதென்றால் ஆம்” என்றான். அவள் மீண்டும் சிரித்து “உண்மை சொன்னதற்கு நன்றி. அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையேல் இத்தனை சிடுக்குகள் விழுந்திருக்காது” என்றபின் “அவளை சந்திக்க விழைகிறேன். அஸ்தினபுரியின் மக்களெல்லாம் இன்று அவளைப்பார்ப்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். பூரிசிரவஸ் “அவள் அஸ்தினபுரியின் அரசி அல்லவா?” என்றான்.

“ஆம், இச்சிக்கல்கள் முடிந்து அவள் நகர்நுழைந்தால் அனைத்தும் சீரமைந்துவிடும் என நினைக்கிறேன். பெருங்கருணை கொண்டவள் என்கிறார்கள். அவளால் அனைத்தையும் புரிந்துகொள்ளமுடியும்...” பெருமூச்சுடன் “அவ்வண்ணம் நிகழட்டும்” என்றபின் “வருகிறேன். நலம் திகழ்க!” என்று தலைவணங்கி முன்னால் சென்றாள். அவள் ஆடையின் பொன்னூல்கள் மின்னி உலைந்தன. கூந்தலில் தொங்கிய மணிச்சரம் நெளிந்தது.

பூரிசிரவஸ் “இளவரசி” என்று அழைத்தான். அவள் அவ்வழைப்பை எதிர்பார்த்தவள்போல நின்றாள். “நான் அங்கநாட்டரசரை தடுத்து நிறுத்துகிறேன்” என்றான் பூரிசிரவஸ். அவள் வியப்புடன் நோக்க “அது ஒன்றே வழி. அவர் சித்தத்தை கலைக்கிறேன். அவரை இப்போரிலிருந்து பின்வரச் செய்கிறேன்” என்றான். அவள் முகம் மலர்ந்தது. கண்களில் கனிவு வந்தது. “நினைத்திருப்பேன்” என்றபின் வெளியே சென்றாள்.

பகுதி 7 : நச்சு முள் - 3

பெருமுரசம் ஒலிக்கத்தொடங்கும்வரை பூரிசிரவஸ்ஸின் எண்ணங்கள் சிதறிப்பரந்துகொண்டிருந்தன. எங்கோ ஒரு கணத்தில் இங்கே என்னசெய்கிறோம், யாருக்காக என்ற எண்ணம் வந்து உடனே திரும்பிச்சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததுமே அவனுடைய அழகிய மலைநிலம் நினைவுக்கு வந்து அக்கணமே கிளம்பிவிடுவான் என்ற புள்ளியை அடைந்து பெருமூச்சுடன் மீண்டான்.

அவ்வண்ணம் கிளம்ப முடியாது என உணர்ந்ததுமே எதற்காக அந்த வாக்குறுதியை துச்சளைக்கு அளித்தோம் என வியந்துகொண்டான். அது எவ்வகையிலும் எண்ணி எடுத்த முடிவு அல்ல. அக்கணம் அப்படி நிகழ்ந்தது, அவ்வளவுதான். ஏன் என்றால் அவன் அப்படிப்பட்டவன் என்பது மட்டுமே அவன் சென்றடையக்கூடிய விடை. இன்னமும் கணங்களால் கொண்டுசெல்லப்படும் சிறியவன். அம்பு அல்ல, இறகு. ஆம், அப்படித்தான் அவன் இருந்துகொண்டிருக்கிறான்.

போர்முரசத்தின் முதல் அதிர்வு அவனை திடுக்கிடச்செய்தது. உப்பரிகைக்கு வந்து குன்றின் சரிவுக்குக் கீழே அனல்பட்டு எறும்புப்புற்று கலைந்ததுபோல படைவீரர்கள் பலதிசைகளிலாக ஓடுவதை நோக்கி நின்றான். நதியலைகள் என முரசின் ஓசை சீரான தாளத்துடன் எழுந்து சூழ்ந்துகொண்டபோது அதுவரை இருந்த அலைக்கழிப்புகளும் ஐயங்களும் விலகி மெல்ல உள்ளமெங்கும் ஓர் விரைவு நிறைந்தது.

அது அவன் பங்குகொள்ளப்போகும் முதல்போர். சௌவீரத்தை பாண்டவர்கள் தாக்கியபோது அவன் உதவிக்குச்செல்ல விழைந்தான். சோமதத்தர் தடுத்துவிட்டார். சலன் அது அப்போது பால்ஹிகநாட்டுக்கு உகந்தது அல்ல என்று விலக்கினான். அந்தப்போரை அகக்கண்ணில் கண்டபடி அவன் படுக்கையில் பலநாள் விழித்துக்கிடந்தான். இது அந்தப்போரின் இன்னொரு வடிவம். அதையே மீண்டும் நடிப்பதுபோல இத்தருணம். இதில் அவன் ஈடுகட்டமுடியும். ஒருமுறை, ஒருகணம் அர்ஜுனனை களத்தில் சந்திக்கவேண்டும். அவன் கவசங்களில் ஒன்றையேனும் உடைத்தால், அவன் ஒருகணமேனும் தன்னையெண்ணி அச்சம்கொள்ள முடிந்தால் அது தன் முழுமை. பால்ஹிகர்களுக்காக... நாடுகடத்தப்பட்ட பால்ஹிகபிதாமகருக்காக... சௌவீரர் தன் மஞ்சத்தில் துயில்மறந்து புரண்ட இரவுகளுக்காக...

கச்சையை இறுக்கியபடி வெளியே வந்து முற்றச்சேவகனிடம் ஒரு புரவியை வாங்கிக்கொண்டு வளைந்துசென்ற பாதையில் பாய்ந்திறங்கி கீழே சென்றான். கோட்டையை ஒட்டிய மரப்பட்டைச்சுவர்கொண்ட பாடிவீடுகளிலிருந்து படைவீரர்கள் எருமைத்தோலாலும் தோதகத்தி மரப்பட்டைகளாலும் ஆமையோடுகளாலும் இரும்புச்சங்கிலிகளாலும் செய்யப்பட்ட கவசங்களை அணிந்துகொண்டு படைக்கலங்களுடன் திரண்டுகொண்டிருந்தனர்.

அந்தச்சிறுகோட்டைக்குள் பல்லாயிரம் பேர் தங்கியிருப்பது அவனுக்கு வியப்பை அளித்தது. அதற்குள் நுழைகையில் அதை ஓர் எறும்புப் புற்று என அவன் எண்ணியது எத்தனை சரியானது என எண்ணிக்கொண்டான். படைக்கலங்களாகவும் கேடயங்களாகவும் கவசங்களாகவும் இரும்பு நீரலையென ஒளிவிட்டபடி சென்றுகொண்டிருந்தது. உயிர்கொண்ட இரும்பு. குருதிகொள்வதற்காகவே மண்ணின் கருவறைக்குள் இருந்து எழுந்து வந்த பாதாளநாகங்களின் குளிர்நஞ்சு.

அத்தனைபேர் திரண்டுகொண்டிருந்தபோதிலும் ஓசை மிகக்குறைவாக இருந்தது, அதுவும் எறும்புகளைப்போலத்தான். கட்டளைகளை கொடியசைவுகளும் ஆங்காங்கே எழுந்து விழுந்த எரியம்புகளுமே அளித்தன. படைவீரர்கள் நூறு நூறுபேராக கூடி ஒருவரோடொருவர் உடலொட்டி கரியவண்ணம் பூசப்பட்ட கேடயங்களை வெளிப்பக்கமாக பிடித்துக்கொண்டு சீராகக் காலெடுத்து வைத்து நடந்தனர். ஆயிரங்காலட்டைகள் போல நெளிந்து ஊர்ந்து சென்ற நூற்றுவர் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. கைகால்கள் இணைந்து ஒரு பெரும் பூச்சி ஒன்று பிறந்து வந்தது. கொடிகள் அதன் உணர்கொம்புகள். முரசுகள் அதன் செவிகள்.

மானுட உடல் என்பது ஒவ்வொன்றும் ஒரு முழுமை. முழுமைகள் ஒன்றுடன் ஒன்று பிசிறில்லாது இணையமுடியும் என்பதை அந்தப்படைநகர்வை நோக்கியபோது பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனுடைய பால்ஹிகபூமியில் அத்தனைக் கற்களும் உருளைக்கற்களே. கீழிருந்து வரும் கட்டடச்சிற்பிகள் அவற்றைக்கொண்டு இல்லங்களை அமைக்கமுடியாதென்பார்கள். ஒவ்வொரு உருளைக்கல்லும் முழுமைவடிவு கொண்டு தனித்தது, அது இன்னொன்றை ஏற்காது என்பார்கள்.

“யானைகளையும் எருமைகளையும் பன்றிகளையும் ஒன்றின் மேல் ஒன்றென நிறுத்தமுடியாதல்லவா?” என்றார் சிந்துநாட்டுச் சிற்பியான பூர்ணகலிகர். ”சமநிலத்துக் கற்கள் பெரிய ஒரு கல்லில் இருந்து உடைபட்டவை. உடைவையே வடிவமெனக்கொண்டவை. அவற்றின் வெட்டுகளும் சரிவுகளும் ஒடுங்கல்களும் உந்தல்களும் பிறிதொன்றைத்தேடுகின்றன. முழுமை முழுமை என கூவுகின்றன. கட்டடமாக ஆகும்போதே அவை அமைதிகொண்டு காலத்தில் உறைந்து கண்மூடுகின்றன. உருளைக்கல்லோ தன்னுள் காலத்தை நிறைத்திருக்கிறது. ஒரு சொல்கூட எஞ்சாதிருக்கிறது.

ஆனால் அவன் நாட்டில் அவற்றை அடுக்கும் கலையை நூற்றாண்டுகளாக கற்றுத்தேர்ந்திருந்தனர். ஒரு பெரிய உருளைக்கல்லை ஐந்து சிறிய உருளைக்கற்கள் கவ்வியும் தாங்கியும் ஆயிரமாண்டுகாலம் அசையாமல் அமரச்செய்யும் என கண்டறிந்தவர்கள் அவர்கள். "ஒவ்வொரு கல்லுக்கும் அதற்கான இடமென்று ஒன்றுள்ளது. அதை கண்டுபிடித்து அமரச்செய்தால் தன் முழுமையை இழந்து பிறிதொரு முழுமையில் அது அமரும் இளவரசே” என்றார் மலைப்பழங்குடிச் சிற்பியான சுகேது. ஆனால் ஒவ்வொரு கல்லும் அங்கே கட்டுண்டிருக்கிறது. கரைந்திருப்பதில்லை என்பதை மலைவெள்ளம் வரும்போது அவைகொள்ளும் விடுதலையில் காணமுடியும்.

இங்கே மனிதர்கள் அதேபோல முழுமையிழந்து அடுக்கப்பட்டு பிறிதொரு முழுமையின் துளிகளாக மாறியிருந்தனர். பூரிசிரவஸ் அக்கணம் விழைந்ததெல்லாம் பெருவெள்ளத்தில் குதிப்பதுபோல அந்த மானுடப்பெருக்கில் பாய்ந்து மூழ்கியழிவதை மட்டும்தான். போரிலிருக்கும் பேரின்பமே அதுதானா? இனி நான் என ஏதுமில்லை என்ற உணர்வா? போரிடும் படை என்பது மானுடம் திரண்டுருவான மானுடப்பேருருவா? அந்த விராடவடிவம் ஒவ்வொருவனின் உள்ளத்திலும் இருப்பதனால்தான் அவன் தன் இறப்பையும் பொருட்டெனக்கொள்வதில்லையா?

பெருந்திரளில் அன்றி தன்னை மறந்த பேருவகையை மானுடன் அடைய முடியாது. ஆகவேதான் திருவிழாக்கள். ஊர்வலங்கள். அத்தனை திருவிழாக்களும் இறப்பு நிகழாத போர்களே. பழங்குடிகளுக்கு போரும் திருவிழாவும் ஒன்றே. இக்கணம் நான் இருக்கிறேன். ஒரு துள்ளல். ஒரு எழல். அதன்பின் நான் இல்லை. அது மட்டுமே இருக்கும். ஒற்றை விழைவு. ஒற்றைச் சினம். ஒற்றைப்பெருங்களிப்பு.

கண் எட்டும் தொலைவு வரை குன்றின் சரிவெல்லாம் படை திரண்டு வந்துகொண்டிருப்பதை பார்த்தபடி அவன் புரவியில் சென்றான். தனக்குத்தானே ஆணையிட்டுக்கொண்டது ஆயிரம் கைகளும் பல்லாயிரம் கண்களும் கொண்ட யாளி. தன் வாலை சுழற்றிக்கொண்டது. தலையைத் திருப்பி தன் உடலை நோக்கியது. நாவுகளால் தன் விலாவையும் கால்களையும் நக்கிக்கொண்டது. ஒவ்வொரு நூற்றுவர் குழுவுக்கும் மூன்று கொடிக்காரர்களும் மூன்று முரசுகளும் மூன்று படைத்தலைவர்களும் இருந்தனர். ஒற்றைப்பேருடலான அந்தப்படைக்குள் ஒவ்வொரு நூற்றுவரும் தனிப்படைகளாகவும் இருந்தனர்.

கங்கைக்கரையின் பின்மாலை வெம்மை மிக்கது. காற்றில் நீராவி நிறைந்திருந்தது. அத்தனை வீரர்களின் ஆடைகளும் வியர்வையால் நனைந்திருந்தன. பல்லாயிரம் உடல்களில் இருந்து எழுந்த வியர்வை வீச்சம் உப்புச்சமவெளி ஒன்றில் நிற்பதுபோன்ற உளமயக்கை அளித்தது. குதிரைகள் மேல் வியர்வைமணிகள் உருண்டு அடிவயிற்றில் சொட்டின. அவை குளம்புகளை மாற்றிவைத்து உடலை ஊசலாட்டி வெம்மையை ஆற்றிக்கொண்டன. பெருமூச்சு விட்டு பிடரி சிலிர்த்தன. தொலைவில் கொம்பு ஒன்று ஊதியதும் முகப்பில் நின்ற நூற்றுவர் குழு கோட்டைக்கதவு வழியாக வெளியே சென்றது. அந்த இடத்தை அடுத்த குழு நிரப்ப மானுட உடல்களின் நதி ஓடத்தொடங்கியது.

கைகளில் இருந்த சிறிய கொடியை வீசி ஆணையிட்டபடி குதிரையில் சுருதசன்மர் அவனைக் கடந்து சென்றார். அவன் அவரை அழைக்க கையைத் தூக்கியபோதுதான் அங்குள்ள செவிநிறைக்கும் பெருமுழக்கத்தை உணர்ந்தான். அதைத்தான் அதுவரை அமைதி என உணர்ந்துகொண்டிருந்தான். தோல் காலணிகள் லாடங்கள் சகடங்கள் மண்ணில் பதியும் ஒலி. ஆடைகளின் படைக்கலங்களின் கவசங்களின் ஒலி. பல்லாயிரம் கொடிகள் படபடக்கும் ஒலி. பல்லாயிரம் மூச்சுகளின் ஒலி. அந்த முழக்கத்தில் தன் குரல் ஒரு கொப்புளமாக வெடித்தழியும்.

அவன் புரவியைத் தட்டி சுருதசன்மருக்கு இணையாக விரைந்தபடி “நான் அங்கநாட்டரசரை பார்க்கவிழைகிறேன் சுருதசன்மரே, மூத்த கௌரவரின் ஆணை” என்றான். அவனை அவர் அடையாளம் காண சில கணங்களாயின. மூன்றாம் முறை அவன் உதடுகளை வாசித்து “நான்காவது காவல்மாடத்தின் உச்சியில் இருக்கிறார். வெண்ணிற எரியம்பு அவருடையது” என்றார். பூரிசிரவஸ் புரவியைத்திருப்பி கோட்டைமேல் நோக்கியதுமே நான்காவது காவல்மாடத்தை கண்டுகொண்டான். அதுதான் கோட்டையின் எட்டு காவல்மாடங்களில் மிக உயரமானது.

கோட்டைக்குக் கீழே புரவியை நிறுத்திவிட்டு காவல்வீரனிடம் முத்திரைமோதிரத்தைக் காட்டி குறுகலான மரப்படிகளில் சிற்றோட்டமாக வளைந்து வளைந்து ஏறி கோட்டைக்குமேல் சென்று அங்கே தனித்து எழுந்து நின்ற ஒன்பது அடுக்குக் காவல்மாடத்தை அடைந்தான். முதல் ஏழு அடுக்குகளில் சிறிய வாளிச்சகடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வளையங்களில் சுருள்விற்களை இழுத்து அம்புகளை பொருத்திக்கொண்டிருந்தனர். முள்நிறைந்த காட்டுக்கனி போலிருந்தது நூற்றுக்கணக்கான அம்புகளை ஏந்திய சகடம். அதன் விற்கள் சினந்த நாய் என முனகின.

எட்டாவது மாடத்தில் இரு கோல்வீரர்கள் அருகே நின்றிருந்த பெருமுரசும் ஏழு வீரர்கள் ஏந்திய வண்ணக் கொடிகளும் இருந்தன. அருகே மூவர் எரியம்புகளுடன் காத்திருந்தனர். அவன் மேலும் செங்குத்தான படிகள் வழியாக ஏறிச்சென்றடைந்த ஒன்பதாவது மாடத்தில் கர்ணன் தனித்து நின்றிருந்தான். அவனருகே நால்வர் நிற்குமளவுக்கு மட்டுமே இடமிருந்தது. சுழன்றடித்த காற்றில் அவன் ஆடைகளும் நீள்குழலும் பறந்துகொண்டிருந்தன. நாற்புறமும் திறந்த பெருஞ்சாளரங்களுக்கு அப்பால் உருகிய வெள்ளிப்பிழம்பு என வானொளி. ஒளிக்குச் சுருங்கிய விழிகளுடன் அவன் கோட்டைக்கு அப்பால் விரிந்து கிடந்த கங்கையின் அலைநீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான்.

ஓசைகேட்டு சற்று அதிர்ந்து கலைந்த கர்ணன் திரும்பிநோக்கினான். பூரிசிரவஸ் தலைவணங்கி விழிநோக்கி நின்றான். கர்ணனின் விழிகளில் வெறுப்பு தெரிகிறதா என்று அவன் எண்ணம் துழாவியது. ஆனால் தன்னுள் ஆழ்ந்து தனித்தலைபவனின் பொருளின்மையே அவற்றில் தெரிந்தது. பூரிசிரவஸ் “படைநகர்வுக்கு நான் தங்களுக்கு உதவவேண்டுமென மூத்த கௌரவர் விழைந்தார்” என்றான். “படைநகர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் இருநாழிகையில் படைகள் படகுகளில் ஏறிவிடும்” என கர்ணன் சுட்டிக்காட்டினான்.

கீழே தசசக்கரத்தின் படித்துறையில் ஏழு பெரும்படகுகள் பாய்தாழ்த்தி நின்றிருந்தன. அவற்றிலிருந்து நீண்ட நடைப்பாலங்களின் வழியாக அம்புகள் செறிந்த சகடப்பொறிகளை உருளைச்சகடவண்டிகளில் வடத்தால் இழுத்து ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்தக்காட்சி முற்றிலும் ஒலியில்லாமல் தெரியக்கண்டபோதுதான் அங்கே முழுமையான அமைதி நிலவுவதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அந்த மேடை கீழிருந்து மிக உயரத்தில் இருந்தது. அத்துடன் அங்கு கிடைமட்டமாக கங்கைக்காற்று பீறிட்டுச்சென்றுகொண்டிருந்தது. கீழிருந்த ஒலிகளேதும் மேலே வந்து சேரவில்லை. கீழே கோட்டைக்குள் இருந்து சீராக வெளியே வழிந்து துறைமேடையில் அணிவகுத்து அமைந்துகொண்டிருந்த படைகள் ஓசையில்லாமல் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மேலே என்ன பேசுவதென்று அறியாமல் பூரிசிரவஸ் கீழே நோக்கியபடி நின்றான். இத்தனைக்குப் பிறகும் இவரை எப்படி பின்திருப்ப முடியும் என எண்ணிக்கொண்டான். எந்த நம்பிக்கையில் துச்சளைக்கு அந்தச் சொல்லை அளித்தேன்? பேடை முன் மயில் தோகை விரிப்பதுபோல ஆண் சொல்விரிக்கிறான். புன்னகையை கர்ணன் பார்க்கலாகாது என திரும்பி படகுகளை கூர்ந்து நோக்குவது போல நடித்தான். அங்கிருந்த ஒளியால் கண்கள் கூசி நீர்வழிந்தது. மேலாடையால் துடைத்துக்கொண்டான்.

கொடிகள் அசைய படகுகளில் வீரர்கள் ஏறத்தொடங்கினர். பூரிசிரவஸ் திரும்பி “நமது சூழ்கைமுறை என்ன?” என்றான். “அதை அங்கே காம்பில்யத்தின் கோட்டைமுகப்பை அடைவதுவரை முடிவுசெய்யமுடியாது. அவர்களுக்கு நாம் கிளம்பும் செய்தி எத்தனை விரைவாகச் சென்று சேர்கிறதென்பதையும் நம்மை வெளியே வந்து கங்கைமுகத்திலேயே செறுக்க முயல்கிறார்களா இல்லை கோட்டைக்குள்ளேயே ஒடுங்கி தாக்குப்பிடிக்க முயல்கிறார்களா என்பதையும் பொறுத்தது அது” என்றான் கர்ணன்.

“ஆனால் யாதவப்பேரரசியின் ஒற்றர்களை நான் நம்புகிறேன். அவர்கள் திறன் மிக்கவர்களாகவே இருப்பார்கள். இந்நேரம் இங்கிருந்து பறவைகள் சென்றிருக்கும். நாம் சென்றிறங்குகையில் எரியம்புகள் காத்திருக்கும். படைக்கலம் பூண்டு பாண்டவர்கள் நம்மை களம்காண்பார்கள்...” புன்னகையுடன் “கோட்டைக்குள் இருக்க பார்த்தனின் ஆணவம் ஒப்பாது. அவன் என்முன் களம் நிற்பான், ஐயமே இல்லை” என்றான்.

கர்ணன் பேசியபோதுதான் அவனுக்கு தன்னிடம் சினமேதும் இல்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். இயல்பாகவே அவனிடம் ஒரு மூத்தவனின் தோரணை இருந்தது. கைகளைச் சுட்டி “நமது படைகள் படகிலேறிக்கொண்டால் எதிர்க்காற்றை வென்று இரவெல்லாம் சென்று கருக்கிருட்டில்தான் காம்பில்யத்தை அடையும். சத்ராவதிக்கு செய்தி சென்றுவிட்டது. அஸ்வத்தாமனின் படைகள் நமக்கு சற்றுமுன்னரே காம்பில்யத்தை வந்தடையும். ஜயத்ரதனும் இந்நேரம் கிளம்பியிருப்பான். செய்திகளுக்காகக் காத்திருக்கிறேன். மூவரும் ஒரே நேரத்தில் மூன்று திசைகளில் காம்பில்யத்தை தாக்குவோம்...” என்றான்.

“போர் விரைவில் முடிந்துவிடும் என்றீர்கள்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் சிந்தனையுடன் “அது அக்கணம் எழுந்த அகவிரைவின் சொல். பார்த்தன் இருக்கையில் போர் எளிதில் முடியாது” என்றான். “எந்தக் கணக்கிலும் அவனை குறைத்து மதிப்பிடமுடியாது. தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமைகொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில். அவர்களே கர்மயோகிகள் எனப்படுகிறார்கள். அவன் அத்தகையோரில் ஒருவன்.”

தன்னுள் நிகழ்ந்த பல கணிப்புகளின் முடிச்சுகளை தொட்டுத்தொட்டு ஓடி வந்து நின்று சொல்தேர்ந்து பூரிசிரவஸ் “மூத்தவரே, அவர் தங்களை விட மேலானவரா?” என்றான். அவன் எதிர்பார்த்ததுபோல கர்ணன் சீண்டப்படவில்லை. மிக இயல்பாக “அதிலென்ன ஐயம்? இன்று பாரதவர்ஷத்தில் பார்த்தனுக்கு நிகரென எவருமில்லை” என்றான்.

பூரிசிரவஸ் மேலும் சொல்தெரிந்து “தாங்கள் பரசுராமரிடம் கல்விமுழுமை அடைந்தவர் என்கிறார்கள்” என்றான். “ஆம், அதுவும் உண்மை. அவனைவிட தோள்வல்லமை எனக்குண்டு. அவன் எண்ணிப்பாராத கல்விவிரிவினையும் அடைந்துள்ளேன். ஆனால் அவன் உள்ளம் இளமை நிறைந்ததாக இருக்கிறது. சினமற்றவனாக, விருப்பற்றவனாக இருக்கிறான். இளமைக்குரிய தூயவிழைவே உருவானவன். அவன் அம்புகளின் கூர்மையாக அமைவது அந்த இந்திரவீரியமே.”

கைகளை விரித்தபின் “நான் அப்படி அல்ல. என் அம்புகளை மழுங்கச்செய்பவை என் ஆற்றாமையும் சினமும்தான். புண்பட்ட வேங்கையின் விரைவு அதிகம். ஆனால் அது விரைவிலேயே களைத்துவிடும்” என்றான் கர்ணன். “பார்த்தனை நான் ஒரே ஒருமுறை களத்தில் கண்டிருக்கிறேன். அவனைச்சூழ்ந்திருக்கும் தெய்வங்களையும் அப்போது காணமுடியுமெனத் தோன்றியது. இளைஞரே, நான் பார்த்தனாகவேண்டுமென்றால் எனக்கென எதையும் விரும்பக்கூடாது.” கர்ணன் கசப்பான புன்னகையுடன் “இப்பிறவியில் அதற்குரிய நல்லூழ் எனக்கு அமையவில்லை” என்றான்.

சிலகணங்களிலேயே அவனுடன் மிக அணுக்கமாகிவிட்டதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அங்கு வந்ததே அவனை போரிலிருந்து விலக்கத்தான் என்ற எண்ணம் வந்ததுமே அவன் அகம் வெளியேற வழிதேடும் அடைபட்ட கானகவிலங்குபோல முகர்ந்து தவிக்கத் தொடங்கியது. சூழ்ச்சியறியாதவனாக, சொல்தேர்ந்து பேசத்தெரியாதவனாகத்தான் கர்ணனை அவன் துரியோதனன் அவையில் மதிப்பிட்டான். ஆனால் சூழ்ச்சிக்கும் நுண்சொல்லுக்கும் அப்பால் தலையுயர்த்தி நின்றிருந்தான். நகரங்களுக்கும், சமவெளிகளுக்கும், காடுகளுக்கும் மேல் நான் இங்கில்லை என நின்றிருக்கும் விண்குலாவும் மலைமுடி என.

”அப்படியென்றால் இந்தப்போர்...” என்று பூரிசிரவஸ் தொடங்குவதற்குள் “நான் வெல்வேன். அதில் ஐயமில்லை. அவர்கள் ஐவரும் கோட்டைவிட்டு என் முன் வருவார்கள். அவர்களை நான் தனியனாக களத்தில் சந்தித்து வெல்வேன். புண்ணும் மண்ணும் நிறைந்த உடல்களுடன் அவர்கள் தலைகுனிந்து மீள்வார்கள். அது நிகழும். நிகழாது நான் களம் விட்டு விலகப்போவதில்லை” என்று கர்ணன் சொன்னான். அக்கணம் வரை இருந்த தன்னந்தனிமை சூழ்ந்த கர்ணன் கலைந்து அங்கு வஞ்சம் கொண்ட பிறிதொருவன் நின்றிருந்தான்.

அடிவாரம் முதல் உச்சிப்பாறைவரை மலை ஒன்றே என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இந்த விரிவை அள்ள என்னால் இயலாது. ஆனால் இதை குலைத்துச் சரிக்க முடியும். நான் மலைகளைச் சரித்து ஊர்களை அமைக்கும் கலையறிந்த மலைமகன். அதற்கான வழி எங்கோ உள்ளது. சிறிய விரிசல். எறும்பு நுழையும் பாதை. “யுதிஷ்டிரர் போர்முனையில் கொல்லப்படுவாரென்றால்....” என அவன் தொடங்குவதற்குள்ளேயே “கொல்லப்படமாட்டார்” என்றான் கர்ணன். “ஏன்?” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் தோற்பார்கள், கொல்லப்படமாட்டார்கள்.” மிகமெல்ல பூரிசிரவஸ் நெஞ்சுக்குள் நாகம் ஒளிரும் விழிகளுடன் எழுந்து ஓசை தேர்ந்தது. தொலைதூரக் காலடிகளை அறிந்தது.

“ஆனால் அவர் கொல்லப்படாமல் மூத்தகௌரவரின் முடிநிலைப்பதில்லை” என்றான். “தருமன் கொல்லப்படவேண்டியதில்லை. அவர்கள் தோல்வியடைந்தாலே போதும். அஸ்தினபுரிக்கு எதிராக படைகொண்டுவந்து தோற்றோடினார்கள் என்ற பழியே தருமனை முடிப்பூசலில் இருந்து முழுதாக விலக்கிவிடும்” என்றான் கர்ணன். நாகம் பத்தி விரித்து வால் சொடுக்கிக் கொண்டது. அதன் நச்சு நா பறந்தது. மிகமிக மெல்ல அது கூர்ந்தது. அசைவிழந்தது.

“நான் சூதர் சொற்களிலிருந்து தங்களைப்பற்றி ஒன்று கேள்விப்பட்டேன். இளைய பாண்டவர் அர்ஜுனனும் தாங்களும் நோக்குக்கு ஒன்றுபோலிருப்பீர்கள் என்று. அவைக்களத்தில் நீங்கள் சென்று அவர் எழுந்து வந்தபோது பிறிதொரு வடிவில் நீங்களே வருகிறீர்கள் என்றே எண்ணினேன்” என்றான். கர்ணனின் விழிகள் இயல்பாக அவனை நோக்கியபின் விலகிக்கொண்டன. தன் சொற்களின் நஞ்சு அவனைத் தாக்கவில்லை என பூரிசிரவஸ் உணர்ந்தான். “மூத்தவரே, இந்தப்போர் என்பதுகூட நீங்கள் உங்களுக்கெதிராகச் செய்வதுதானோ என்று ஒருமுறை தோன்றியது.”

கர்ணனின் விழிகளில் அதிர்வைக் கண்டதுமே அச்சொற்கள் சென்று சேர்ந்துவிட்டன என்பதை புரிந்துகொண்டான். மேலும் சொற்களைத் தெரிந்து “அவ்வகையில் பார்த்தால் அஸ்தினபுரியின் படைகள் அஸ்தினபுரிக்கு எதிராகப்போரிடுகின்றன. களத்தில் தங்கள் தலைகளை தாங்களே வெட்டிக்கொள்கின்றன” என்றான். கர்ணன் “நான் உம்முடன் சொல்லாடும் நிலையில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் படைகள் கிளம்பவேண்டும்” என்றான்.

“இப்போரைக்குறித்து சூதர்கள் எப்படி சொல்லடுக்கப்போகிறார்கள் அங்கரே? இதற்குப்பதிலாக அங்கநாட்டரசர் ஆடிமுன் நின்று தன் கழுத்தை அறுத்திருக்கலாமே என்றா?" என்றான் பூரிசிரவஸ். அந்தக்கணத்தில் கர்ணனின் இறுதிச்சரடும் அறுந்தது. பூரிசிரவஸ் எண்ணியிருக்காத கணத்தில் கர்ணன் திரும்பி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தலைக்குள் வெடித்த பேரொலியுடன் மறுபக்கச் சுவரில் முட்டி பூரிசிரவஸ் கீழே விழுந்தான். கையை ஓங்கியபடி நின்று மூச்சிரைத்த கர்ணன் “செல்லும்... இனி நீர் என் முன் வந்தால் தலைகொய்யாமல் அடங்க மாட்டேன்” என்றான்.

“அதுவே நிகழட்டும்” என்று கையூன்றி எழுந்து அமர்ந்தபடி மெல்லியகுரலில் பூரிசிரவஸ் சொன்னான். “நான் இதையே மீண்டும் சொல்வேன். ஏனென்றால், இன்றுகாலை என்னை மூத்தகௌரவர் தோள்தழுவினார். அஸ்தினபுரியின் மதவேழத்தின் அணைப்பை அறிந்த எவரும் மீள்வதில்லை என்பார்கள் சூதர்கள். இன்றுமுதல் நான் இந்த இளைய வேழத்தின் அடிமை. இதன் நலனன்றி பிறிது என் நோக்கில் இல்லை. ஏனென்றால் நான் புண்பட்ட வேங்கை அல்ல. தன் புண்ணன்றி எதையும் எண்ணாத சிறியோனும் அல்ல” என்றான்.

“செல்லும்...” என கர்ணன் உறுமினான். கருநாகமென ஒளியுடன் நெளிந்த நீள்கரங்கள் அலைபாய்ந்தன. பறக்கும் மேலாடையும் குழலுமாக வானத்தின் பகைப்புலத்தில் விண்ணெழுந்த தேவன் என நின்றான். “சென்றுவிடும்... இக்கணமே.” பூரிசிரவஸ் “நான் இறப்புக்கு அஞ்சவில்லை அங்கரே. என் சொற்களைச் சொல்லிவிட்டு இறக்கிறேன். எதற்காக இந்தப்போர்? அங்கே மணவரங்கில் உங்கள் கைநழுவிய இலக்கை இங்கே சமர்களத்தில் வென்றெடுக்கலாமென்றா எண்ணுகிறீர்கள்? முடியாது. ஆடிப்பாவையுடன் போர் புரிந்து வென்றவர் எவருமில்லை என்ற சொல்லை நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றான்.

“உங்கள் வஞ்சத்திற்கு விழவேண்டியது அஸ்தினபுரியின் குருதியல்ல. எவர் முன் தருக்கி நிற்க விழைகிறீர்கள்? எந்த தெய்வத்தை வென்றெடுக்க முனைகிறீர்கள்?” என்று உடைந்தகுரலில் பூரிசிரவஸ் மேலும் கூவினான். "என்னிடம் கௌரவகுலத்து இளவரசி வந்து இறைஞ்சினார், உங்கள் வஞ்சத்துக்கு அஸ்தினபுரியின் சிறப்பும் மகிழ்ச்சியும் பலியாகிவிடலாகாதென்று. உங்கள் குருதிச்சுவை தேரும் கூர்வாளால் குருகுலமே அழிந்துவிடக்கூடாதென்று. அதை உங்களிடம் சொல்லவே வந்தேன்.”

கர்ணன் விரைந்த காலடிகளுடன் அவனைக் கடந்து படிகளில் இறங்கினான். பூரிசிரவஸ் எழுந்து நின்று அவன் முதுகை நோக்கி “நீங்கள் இழந்தவற்றை மீள அடையமுடியாது என்று உணராதவரை உங்கள் அகம் அடங்குவதில்லை அங்கரே. இன்று அல்லும்பகலும் ஆடிநோக்கி நடிக்கும் பேதையல்லவா நீங்கள்? நான் வந்தகணத்தில் கூட நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தது அவனை அல்லவா?” என்றான். கர்ணன் படிகளின் நடுவே கைகள் பதற நின்று திரும்பி நோக்கினான். “என் வருகையால் ஏன் திகைத்தீர்கள்? ஏன் உங்கள் விழிகள் பதைத்தன?”

கர்ணனின் கழுத்தில் தசைநார்கள் இழுபட்டன. மீசை இழுபட கன்னம் ஒருபக்கமாக கோணலாகியது. அவன் மேலேறிவரப்போகிறான் என பூரிசிரவஸ் எண்ணியகணம் கர்ணன் சரசரவென கீழிறங்கினான். பூரிசிரவஸ் எழுந்து தானும் விரைவாகப் படிகளில் இறங்கியபடி “நம் நிழல்களின் ஆடல் நம்முடையதல்ல அங்கரே. அவை தழலின் மாயங்கள் மட்டுமே” என்றான். சீற்றத்துடன் கையை ஓங்கி உறுமியபடி திரும்பிய கர்ணன் அவன் விழிகளைச் சந்தித்து திகைத்து நின்றான். ஓசைகேட்டு முரசுக்கொட்டிலில் இருந்த இரு வீரர்கள் எட்டிப்பார்த்தனர்.

கர்ணன் திரும்பி அடுத்தபடிக்கட்டில் இறங்கி மறைந்தான். பெருமூச்சுடன் தோள் தளர்ந்த பூரிசிரவஸ் தன் கன்னத்தை தொட்டுப்பார்த்தான். அடிபட்டுக்கன்றிய இடம் மிகமென்மையாக தொடுகையுணர்ந்து கூசியது. வாயோரம் கிழிந்திருந்த இடத்தில் சற்று குருதிச்சுவை தெரிந்தது. திரும்பி காவலர்களை நோக்கியபின் அவன் நீர்த்துளி என முன்னும் பின்னும் ஒரு கணம் ததும்பித்தயங்கிவிட்டு படியேறி மீண்டும் ஒன்பதாவது அடுக்கை நோக்கி சென்றான்.

நான்கு திறந்த சாளரங்கள் வழியாகவும் காற்று சுழன்றடித்தது. மேலாடையைப் பிடிக்க முனைந்தவன் அதை அப்படியே பறக்கவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். சாய்ந்த மாலையொளி பரவிய கங்கையலைகளை நோக்கிக்கொண்டிருந்தபோது முதல்முறையாக அவன் தன்னைப்பற்றிய கசப்பை அடைந்தான். நாவால் தொட்டு அந்த குருதியை மீண்டும் அறிந்தான். ஆடை படபடத்தது, இழுத்து விண்ணில் வீழ்த்த விழைவதுபோல. அழவேண்டுமென்று, எழுந்தோடி புரவியேறி தன் மலைமடிப்புகளை நோக்கி சென்று முகில்வெண்மைக்குள் புதைந்துகொள்ளவேண்டுமென்று விழைந்தான்.

பகுதி 7 : நச்சு முள் - 4

பூரிசிரவஸ் காவல்மாடத்தைவிட்டு கீழே வந்தபோது தன் உடலை கால்கள் தாங்காத அளவுக்கு களைத்திருந்தான். படிகளின் முன்னால் நின்று சேவகனிடம் குதிரையை கொண்டுவரும்படி அவனால் கையசைக்கவே முடிந்தது. ஏறிக்கொண்டு குதிகாலால் மெல்லத்தொட்டபோதே அவன் எண்ணத்தை உணர்ந்துகொண்டதுபோல அது மெல்ல எதிர்த்திசை நோக்கி செல்லத் தொடங்கியது. படையணிவரிசைகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது அவன் சூழலை சற்றும் உணரவில்லை. அவனைச் சுற்றி ஓசைகள் அடங்கிக்கொண்டிருந்தன. படைகள் குழம்பித்தேங்கின. ஆணைகள் பல திசைகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தன.

சுருதசன்மர் அவனுக்கு எதிரே வந்து அழைத்தபோதுதான் அவரைக்கண்டான். “பால்ஹிகரே, தாங்கள் அங்கநாட்டரசரிடம் மேலே சென்று சொன்ன செய்தி என்ன?” என்றார். “என்ன?” என்று பூரிசிரவஸ் கேட்டான். அவர் மீண்டும் சொன்னபோதே அவன் அகம் விழித்துக்கொண்டது. “ஏன், என்ன ஆயிற்று?” என்றான். “படைப்புறப்பாட்டை நிறுத்தும்படி அங்கர் ஆணையிட்டுச் சென்றிருக்கிறார். படகிலேற்றிய படைகள் இறங்கிவிட்டன. ஆவசக்கரங்கள் முன்னரே ஏறிவிட்டன. அவற்றை இறக்குவது எளிதல்ல. படைத்தலைவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.”

மெல்லிய நிறைவு ஒன்று பூரிசிரவஸ் உள்ளத்திலெழுந்தது. மறுகணமே அதை தன்கசப்பு வென்றது. “நானறியேன். என்னிடம் அவர் ஏதும் சொல்லவில்லை. நானறியாத செய்தியேதும் அவருக்கு வந்திருக்கக்கூடும்” என்றபின் குதிரையை காலணைத்தான். அது முன்காலைத்தூக்கி மெல்ல கனைத்தபின் வால்சுழற்றிக்கொண்டு சுருள்பாதையில் ஏறி மேலே சென்றது. அவன் முதுகுக்குப்பின் படைகளின் ஓசை அடங்கி பின்னகர்ந்தது. மேலே செல்லச்செல்ல அவன் உடல் வியர்த்து தளர்ந்து குதிரைமேல் நனைந்த துணிச்சுருளென ஒட்டிக்கொண்டது.

மாளிகை முன் இறங்கி உள்ளே செல்லும்போது இடைநாழி நெடும்பாதையென நீண்டு கிடப்பதாக உணர்ந்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு மரத்தாலான கூரையின் சட்டங்களை நோக்கிக்கொண்டிருந்தான். பின் கண்களை மூடிக்கொண்டு பனிப்புகை பரவிய பிரேமையின் மலைச்சரிவை நினைவுகூர முயன்றான். ஆனால் சிபிநாட்டு செம்பாலைநிலம்தான் விழிக்குள் விரிந்தது. புரண்டுபடுத்து சில கணங்கள் விழிவிரித்து நோக்கியபின் மீண்டும் நினைவை அழுத்தி அங்கே கொண்டுசென்றான். இம்முறை விஜயையின் சிரிக்கும் சிறியவிழிகள். செவ்விதழ்களின் சுழிப்பு.

எழுந்து அமர்ந்து தலையை அடித்துக்கொண்டான். அந்தத் தவிப்பு ஒருபக்கம் ஓட மறுபக்கம் கர்ணன் என்ன சொல்லியிருப்பான் என்ற எண்ணம் ஓடியது. மீண்டும் படுத்துக்கொண்டான். கண்களுக்குள் சிபிநாட்டு செம்மஞ்சள் மலைகள். மலைகளின் நடுவே பாதத்தடம். மிகப்பெரிய பாதம் அது. எடையுடன் மணலில் பதிந்தது. அவன் ஆவலுடன் மலைகளின் வளைவுகளை கடந்து கடந்துசென்று விஜயையின் சிரிப்பை கேட்டான். விஜயையா? அவளுடைய பாதங்கள் மிகச்சிறியவை அல்லவா? மீண்டும் விழித்துக்கொண்டான். எழுந்து நீர் அருந்திவிட்டு படுத்தான்.

தொலைவில் முரசு ஒன்று முழங்கியது. போர்முரசா? அது ஏன் இப்போது ஒலிக்கிறது? இது குளிர்காலம். மலைகளெல்லாம் பனிப்போர்வைக்குள் ஆழ்ந்துவிட்டன. பனிவிரிசலிடும் ஒலியன்றி வேறேதுமில்லை. நான் இதோ சின்னஞ்சிறிய மரவீட்டின் அறைக்குள் பிரேமையின் பெரிய கைகளுக்குள் இருக்கிறேன். பெரிய தோள்கள். பெரிய முலைகள். சிறிய முலைக்குமிழ்கள். ஆனால் அவை கரியவை. அவன் திடுக்கிட்டு எழுந்துகொண்டான். அவன் உடலை வியர்வை மூடியிருந்தது.

நெடுநேரமாகிவிட்டதென்று ஒருகணம் தோன்றினாலும் சித்தம் தெளிந்தபோது அரைநாழிகைக்குள்தான் ஆகியிருக்குமென அறிந்தான். கதவருகே மெல்லிய உடலசைவு. சேவகனை அவன் ஏறிட்டதும் அவன் தலைவணங்கி “இளவரசி தங்களை பார்க்க விழைகிறார்கள்” என்றான். எழுந்துகொண்டு “இதோ சித்தமாகிறேன்” என்றான். முகத்தில் நீரை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தபோது மெல்லிய நிறைவொன்றை உணர்ந்தான். இப்போது அவள்முன் வெற்றிபெற்றவனாக சென்று நிற்கமுடியும்.

அதே சிற்றறைக்குள் சாளரத்தருகே அவள் நின்றிருந்தாள். கீழே எதையோ நோக்கிக்கொண்டிருந்தவள் திரும்பி “வருக இளவரசே!” என்றாள். அமரும்படி கைகாட்டி அவன் அமர்ந்தபின் தானும் அமர்ந்தாள். “சற்று ஓய்வெடுத்தேன்” என்றான் பூரிசிரவஸ். “அங்கநாட்டரசரை இப்போர் அவரது வீண்வஞ்சத்திற்காக மட்டுமே நடத்தப்படுவது என உணரும்படி செய்தேன்.”

துச்சளை “அதற்காக நான் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்...” என்றாள். “அங்கர் போரை நிறுத்திவிட்டார் என அறிந்ததும் உங்களிடம் பேசவிழைந்தேன். துயில்கொள்வதாக சொன்னார்கள். தமையனை பார்க்கச்சென்றேன். அதற்குள் அனைத்தும் மாறிவிட்டன.” பூரிசிரவஸ் புருவம் சுருக்கினான். “தமையன் படைநகர்வுக்கு ஆணையிட்டுவிட்டார். ராதேயர் வரவில்லை என்றால் தானே படைகொண்டு செல்வதாக சொல்லிவிட்டார். இப்போது படைகள் படகுகளில் ஏறிக்கொண்டிருக்கின்றன.”

அதை தன் அகம் எதிர்பார்த்திருந்தது என்பதை பூரிசிரவஸ் அப்போது உணர்ந்தான். கணிகரின் சொற்கள் நினைவுக்கு வந்ததும் அவனால் அமரமுடியவில்லை. நிலைகொள்ளாமல் எழுந்து சாளரம் நோக்கிச் சென்று கீழே பார்த்தான். படைகள் சீராக சென்றுகொண்டிருந்தன. துச்சளை எழுந்து “இனிமேல் போரை தவிர்க்கமுடியாது பால்ஹிகரே. மூன்றுபடைகளும் கிளம்பிவிட்டன. என் உடன்பிறந்தார் களத்தில் படைக்கலம் கோர்ப்பது உறுதி” என்றாள். அவன் எழுந்ததுமே அவளும் எழுந்தது அவனுக்குள் இனிய நிறைவொன்றை அளித்தது. அஸ்தினபுரியின் அவையில் அவள் காலடியில் பணிந்துநிற்கும் சிறுநாட்டரசர்களில் ஒருவனல்ல அவன் என்றது அச்செய்கை.

பூரிசிரவஸ் பெருமூச்சுடன் "ஆம்" என்றான். துச்சளை “இப்போரில் எவர்கொல்லப்பட்டாலும் இழப்பவள் நானே” என்றாள். அவள் கழுத்து அசைந்தது. கீழுதட்டை கடித்தபடி விழிகளை திருப்பிக்கொண்டாள். நெற்றியில் சுருண்டு ஆடிய புரிகுழலை அவன் நோக்கினான். அழுகையை வெல்ல அவள் பலமுறை வாய்நீரை விழுங்கினாள். பெருமூச்சில் உருள்முலைகள் எழுந்தமைந்தன. “அதைப்பற்றி அஞ்சவேண்டாமென எண்ணுகிறேன் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்றாள். “கௌரவர் எவரும் கொல்லப்படமாட்டார்கள். ஏனென்றால் மறுபக்கமிருப்பவர் தருமர்” என்றான்.

“ஆம், அதை அறிவேன்” என்றாள். “ஆனால் அவர்கள் கொல்லப்பட்டாலும் என் துயர் நிகரானதே.” பூரிசிரவஸ் அவளை நோக்கி சிலகணங்கள் தயங்கியபின் “பாண்டவர்களிலும் எவரும் இறக்கப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “தருமர் இறந்துவிட்டதாகவே என் தமையன் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்...” பூரிசிரவஸ் மேலும் தயங்கி “ஆனால்” என்றபின் முடிவுசெய்து “இப்பக்கம் இருப்பது பார்த்தனின் ஆடிப்பாவை” என்றான். அவள் நிமிர்ந்து அவன் விழிகளை சந்தித்தாள். அவள் தோள்களில் படர்ந்த புல்லரிப்பின் புள்ளிகளை கண்டான்.

மெல்ல அவள் இதழ்கள் பிரிந்து வெண்பல் நுனிகள் தெரிந்தன. தலை அசைந்து ஒரு சொல் ஊறி வருவது தெரிந்தது. அரக்குநிற இதழ்களுக்கு அப்பால் அச்சொல் மடிந்தது. அவள் தன் மேலாடையை எடுத்து முன்பக்கம் விட்டுக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். “அவ்வண்ணமே ஆகட்டும்... இந்த நாடகம் எதை நோக்கி செல்கிறதென யாரறிவார்!” என்றாள். பூரிசிரவஸ் “நல்லது நிகழும் என நினைப்போம்” என்றான். “எனக்காக போர்க்களத்திலிருங்கள் பால்ஹிகரே. போரின் முடிவில் என் தமையன்கள் அனைவரும் உயிருடனிருக்கவேண்டும்... அதையன்றி எதையும் எண்ணமுடியவில்லை என்னால்” என்றாள்.

“என் கடமை” என்றான் பூரிசிரவஸ். அவள் இதழ்களும் விழிகளும் புன்னகையில் ஒளிகொண்டன. “நான் தங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என்றாள். “நான் அஸ்தினபுரியின் சிற்றரசர்களில் ஒருவன். நீங்கள் என் தலைக்குமேல் கழல் வைக்கும் பேரரசி” என்றான். அவள் முகம் தழலொளிபட்ட கற்சிலையென சிவந்தது. “காலம் வரட்டும்...” என்றாள். என்ன பொருளில் சொன்னாள் என அவன் அகம் வியந்தது. விழிகளில் நகைப்பின் ஒளி வெள்ளிநாணயம் திரும்புவது போல மாறுபட்டது. “தேவிகை விஜயை என்றெல்லாம் சொல்கிறார்கள் ஒற்றர்கள்” என்றாள்.

அவன் திடுக்கிட்டு “இல்லை” என்றபின் “நான்...” என்றான். அவள் வெள்ளியொலியுடன் சிரித்து “பேரரசருக்குரிய திட்டங்களுடன் இருக்கிறீர்கள்... வாழ்க!” என்றபின் “பால்ஹிகநாட்டிலிருந்து எவர் வந்தாலும் உடனே அரண்மனைக்கு அழைத்துவரச்சொல்வார் எந்தை. அவர்களுடன் தோள்தொடுப்பார். பெருந்தோளும் வெண்ணிறமும் கொண்டவர்களையே நான் பால்ஹிகர்களாக எண்ணியிருந்தேன்” என்றாள். பூரிசிரவஸ் “அப்படி அல்லாதவர்களும் அங்குண்டு... என்னைப்போல” என்றான். “அதை சூதர்கள் சொல்லவில்லை” என்றாள்.

பூரிசிரவஸ் “என்னைப்பற்றி சூதர்கள் சொன்னார்களா? தங்களிடமா?” என்றான். அவள் புன்னகைத்து திரும்பி வெளியே சென்றாள். அவன் அவள் சுருண்டகுழலின் அலையசைவை நோக்கியபடி நின்றான். பின்னர் நீள்மூச்சுடன் மீண்டு சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே நோக்கினான். படைகளில் பெரும்பகுதி படகுகளுக்குச் சென்றுவிட்டதென்று தெரிந்தது. மிகமெலிதாக துறையகன்று நீரேகும் படகொன்றின் சங்குப் பிளிறலோசை கேட்டது.

என்னசெய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எப்போதும் போல அத்தருணத்தில் முதலில் தோன்றிய எண்ணம் புரவியில் ஏறிக்கொண்டு விரைந்து விலகிச்சென்று தன் மலைநகரை அடைவது மட்டுமே. மலைநகரல்ல, அதற்கும் மேல் வெண்பனிச்சரிவு. சிறுமரக்குடில் உடல்வெம்மை ஏற்று மென்தசைக்கதுப்பாகவே ஆகிவிட்டிருக்கும் கம்பளிகள். அமைதி. பிறிதொன்றிலாத அமைதி. அமைதி அமைதி என ஓசையிடும் காற்று. அமைதி என்று உச்சரிக்கும் மரங்கள். அமைதியென காட்சிதரும் மலைப்பாறைகள். அமைதியாலான மலைமுடியடுக்குகள். அமைதிப்பெருவெளியான வானம். ஏன் இங்கு வந்தேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

பெருமூச்சுடன் அவன் உடைவாளை தொட்டுப்பார்த்தான். சேவகன் எட்டிப்பார்த்து “இளவரசே, தங்களுக்காக புரவி காத்திருக்கிறது” என்றான். “புரவியா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், மூத்த இளவரசர் கிளம்பிவிட்டார். தங்களை உடனே படகுக்கு வரச்சொன்னார். தங்கள் கவசங்கள் சித்தமாக உள்ளன.” பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். பெருக்கில் விழுந்தவன் நீந்துவதென்பது மூழ்காமலிருக்கும்பொருட்டே.

பூரிசிரவஸ் படையறைக்குச் சென்றபோது அங்கே நான்குசேவகர்கள் அவனுக்கான கவசங்களுடன் காத்திருந்தனர். அவன் உடலளவை அவர்கள் முன்னரே விழிகளால் மதிப்பிட்டிருந்தமையால் அவை அவனுக்கு மிகப்பொருத்தமாக இருந்தது பார்வைக்கே தெரிந்தது. ஆமையோடால் ஆன மார்புக்கவசம். தோள்களில் இருந்து கைவரை இரும்புச்சங்கிலிகளால் நெய்யப்பட்ட வலைக்கவசம். தலைக்கு இரும்புக்கவசம். களப்போருக்கான நீண்ட உடைவாள். தோளுக்குமேல் வளைந்து எழுந்து நின்ற இரும்பு வில். ஆவநாழி. அதில் கூர்நுனிகளைக் கவிழ்த்து இறகுவால் கட்டிச் செறிந்திருந்த அம்புகள். ஆம், போர்!

அவன் அமர்ந்துகொண்டதும் அவர்கள் கவசங்களை அணிவித்தனர். வாளுடன் எழுந்துகொண்டு அவன் தன்னை ஆடியில் நோக்கினான். அங்கே நின்றிருந்த உருவம் இரும்பாலானதாக இருந்தது. இரும்பு அவனை உண்டுவிட்டது. தன் பணிக்கு அவன் ஆன்மாவை எடுத்துக்கொண்டுவிட்டது. ”இளவரசே, தங்கள் வில்” என்றான் சேவகன். அதை வாங்கிக்கொண்டு அவன் இடைநாழியில் நடந்தான்.

இரும்புக்குறடுகள் மரத்தரையை மோதி ஒலியெழுப்பின. மானுட ஓசை அல்ல அது. குளம்புகனத்த காட்டெருமை போல. அவன் நடையே அல்ல. அவன் கால்களல்ல. அவன் தோள்களல்ல. அவன் நடக்கையில் நடப்பது அவனல்ல. படிகளில் இறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன் அந்த இரும்புடலாக மாறிவிட்டிருந்தான். அந்த நடையின் சீர்மை அவன் சிந்தையை ஆண்டது. மண்ணில் வாழும் எவ்வுயிருக்கும் அப்பால் வாழும் பேருயிரென உணரச்செய்தது. வாழ்நாளில் ஒருபோதும் அதற்கிணையான ஆணவத்தை அவன் தன் உடலால் உணர்ந்ததில்லை.

அவன் எடைமிகுந்திருந்தான். அத்தனை எடையுடனும் மண்மேல் அழுந்தினான். இருக்கிறேன், இங்கிருக்கிறேன் என்றது சித்தம். நான் நான் என்றது உள்ளம். வாழ்நாளில் ஒருபோதும் அவன் அத்தனை வலுவாக மண்மீது இருந்ததில்லை. ஒவ்வொரு நடையிலும் குறடுகள் நான் நான் என்றன. கவசங்கள் நான் நானென்று அசைந்தன. இப்போது இப்புவியில் நானன்றி பிறிதில்லை. பிறிதொன்றை நான் ஒப்பமாட்டேன். பிறிதைக் கொன்று குதறி அழிப்பதனூடாகவே நான் வளரமுடியும். நான்குபக்கமும் பெருகி வழிந்தோடி இப்புவியை நிறைக்கமுடியும். இப்போது நான் தேடுவது குருதியை. வெங்குருதியை. மானுடனை ஆளும் திரவப்பேரனலை.

குருதி குருதி என தன் அகம் ஒலிப்பதை உணர்ந்தான். வெளியே இருள் கவியத்தொடங்கியிருந்தது. பறவைகள் அடர்ந்த குறுமரங்கள் கூச்சலிட்டன. அரண்மனைச் சுவர்களின் இருண்ட முகடுகள் இருள்படர்ந்த வானின் பின்னணியில் இருள்குவைகளாக மாறின. அரண்மனையின் காவல்மாடங்களில் ஒன்றில் மீன்நெய் உருகும் மணமெழ செம்பந்தம் விழிதிறந்தது. பின் ஒவ்வொரு காவல்மாடமாக செந்தழல்கள் எழுந்தன. அரண்மனைமாடங்களில் மலைத்தீ என ஒளி பரவியது. குன்றின் சரிவில் பந்தங்கள் எரியத்தொடங்கின. செந்நிற ஒளியாலான படிக்கட்டு ஒன்று வளைந்து கீழே சென்றது. ஒலிகளை இருள் சூழ்ந்துகொண்டு அழுத்தம் மிக்கதாக ஆக்கியது.

பூரிசிரவஸ் குதிரையில் கீழிறங்கிச்சென்றான். பந்த ஒளியில் கவசங்களணிந்து படைக்கலமேந்தி சென்றுகொண்டிருக்கும் அனைவர் விழிகளும் ஒன்றுபோலிருந்தன. எங்கோ அவற்றை நோக்கியிருக்கிறான். எங்கே? ஆம், அவை மதுவுண்டு மதம்நிறைந்து களம்நிற்கும் எருதின் விழிகள். தன் விழிகளும் அதைப்போலிருக்கின்றனவா? இல்லை, நான் என்னையே பதைப்புடன் நோக்கிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கவசமும் படைக்கலமும் ஏந்திச்செல்பவன் பிறிதொருவன். நான் பிரேமையின் மரக்குடில்வாயிலில் திகைத்து வாய்திறந்து நின்றிருக்கிறேன். என் வாயிலினூடாக சென்றுகொண்டிருக்கின்றது இந்தப் பெரும்படை. இந்த வரலாறு. இந்தக்காலப்பேரொழுக்கு.

கோட்டைக்கு வெளியே தசசக்கரத்தின் படித்துறையில் இரண்டு பெரும்படகுகள் நின்றன. முதற்படகின் பாய் பந்த ஒளியில் இருளின் பகைப்புலத்தில் தழல் பற்றி மேலெழுவதுபோல கொடிமரம் மேல் ஏறியது. இருபது பாய்கள் ஒன்றன்மேல் ஒன்றாக ஏறி புடைத்தன. வானேறிய பெருந்தழல் காற்றில் அசைந்தது. கயிறுகள் முனக படகு ஒரு யாழென முறுகியது. பெருமுரசம் கோட்டையில் உறுமியமைய எரியம்பு ஒன்று இருளில் சீறி அணைந்தது. படகு நீரில் எழுந்து இருளுக்குள் செல்லத்தொடங்கியது.

பின்னால் நின்ற படகின் பாய்களின் கயிறுகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். கட்டுண்ட பெரும்பறவை போல பாய்கள் காற்றேற்று திமிறின. சுருதசன்மர் அவனை நோக்கி ஓடிவந்து “நெடுநேரமாக கேட்டுக்கொண்டிருக்கிறார் இளவரசர்” என்றார். பூரிசிரவஸ் தலையசைத்தான். கர்ணனை சந்திப்பதைப்பற்றித்தான் அஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் கவசங்களணிந்த பூரிசிரவஸ் அச்சந்திப்பை விழைந்தான். மதம் கொண்டெழும் எதிரியை விழைந்தன அவன் தோள்கள்.

நடைப்பாலத்தில் ஏறி உள்ளே சென்றான். அவன் ஏறிக்கொண்டதுமே ஒற்றைவடத்தால் இழுக்கப்பட்டு வெம்மைமிக்க கலத்தில் நீர்விழுந்து ஆவிஎழுவதுபோல சீறுமொலியுடன் பாய்கள் மேலேறிச்சென்றன. படகின் மேல்தளத்தில் அமரமுனையருகே துரியோதனனின் பீடம் கிடந்தது. அவன் அப்பால் கயிற்றைப்பற்றிக்கொண்டு கங்கையின் இருண்ட அலைகளை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். பூரிசிரவஸ் சென்று அருகே நின்ற அசைவை அவன் அறிந்தும் திரும்பிப்பார்க்கவில்லை.

அப்போதுதான் அவனுக்கு கர்ணனிடம் தான் பேசியது துரியோதனனுக்குத் தெரியுமா என்ற ஐயம் வந்தது. கர்ணன் சொல்லப்போவதில்லை. ஆனால் அதற்குமப்பால் அவர்கள் நடுவே ஏதோ ஓர் உரையாடல் உண்டு. துரியோதனனின் உள்ளத்தின் ஒரு பகுதி கர்ணனின் உள்ளத்துடன் கலந்துவிட்டதுபோல.

துரியோதனன் திரும்பி மீசையை நீவியபடி புன்னகைத்து “உமது முதல்போர் அல்லவா? எப்படி உணர்கிறீர்?" என்றபோது அந்த எளிமையாலேயே அவனுக்குப் புரிந்துவிட்டது அவனுக்குத்தெரியும் என்று. அவன் ஒருகணம் தயங்கினான். அதன் பின் துணிந்து அச்சொற்கோவையை உருவாக்கினான். “இளவரசியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போரில் எனக்கு ஒரு முதன்மைப்பங்கு உள்ளது என்று சொன்னார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வெண்ணமே என்னுள் இருக்கிறது.”

துரியோதனன் விழிகள் சற்றே சுருங்கின. அத்தனை நுண்ணிய குறிப்புகளை அவன் உணர்பவனல்ல என்று பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். மேலும் சொற்களைக் கோர்த்து “இப்போரை இளவரசி விரும்பவில்லை. இது தன் உடன்பிறந்தவர்களை எதிரெதிரே நிகழ்த்துமென அஞ்சுகிறார்” என்றான். துரியோதனன் “ஆம் என்னிடமும் சொன்னாள்” என்றான். அச்சொற்களும் பொருளாக விரியவில்லை என்று உணர்ந்ததும் பூரிசிரவஸ் சிறு சலிப்பை அடைந்தான். அரசனாகப்போகிறவன் எப்படி அத்தனை சொல்லுணர்வற்றவனாக இருக்கமுடியும்!

“இளவரசியின் ஆணைப்படி நான் அங்கரிடம் இப்போர் தேவையில்லை என்றேன். இது அவரது ஆணவத்தின்பொருட்டு அவர் முன்னெடுப்பதென்றே பொருளாகும் என்றும் பாண்டவர்களிலோ கௌரவர்களிலோ எவர் இறக்கநேரிட்டாலும் அப்பழியை அவரே சுமக்கநேரும் என்றும் சொன்னேன்.” துரியோதனன் மீசையை மீண்டும் நீவியபடி புன்னகைத்து “நீர் சொன்னதனால்தான் கர்ணன் போரைத்தவிர்த்தான் என நான் அறிவேன். ஆனால் இப்போரை நான் அகத்தே நிகழ்த்திவிட்டேன். அது புறத்தில் நிகழ்ந்தாகவேண்டும். அன்றி என்னால் அமைய முடியாது” என்றான்.

பூரிசிரவஸ் தன்னுள் மிக மெல்ல புலியென காலெடுத்துவைத்து முகர்ந்து முன்னகர்ந்து “எவர்முன் இப்போர் நிகழவிருக்கிறது என்று நான் அங்கரிடம் கேட்டேன்” என்றான். துரியோதனன் விழிகளை திருப்பிக்கொண்டு "எல்லாப்போர்களும் ஆணவமெனும் தெய்வத்திற்கான பலிகளே” என்றான். பூரிசிரவஸ் சலிப்புடன் தோள்கள் தொய்ந்தான். துரியோதனனிடம் அதைப்பற்றி பேசமுடியாது என்று தோன்றியது. அவன் தன்னைத்தானே நோக்குபவனல்ல. தன்னுள் முற்றிலும் நிறைந்திருக்கிறான். ஒருதுளியேனும் தன்னிலிருந்து சிந்தாதவனால் தன்னை பார்க்கமுடியாது. அவனுடைய உடலின் முழுமையான நிகர்நிலை எதனால் என்று அவனுக்குப் புரிந்தது.

அதை உணர்ந்தவன் போல துரியோதனன் “ஓடும்படகின் அமரம் காட்டில் பாயும் யானையின் மத்தகம்போல. தேர்ந்த குகர்கள்கூட அதன்மேல் நிற்க அஞ்சுவார்கள். அதன் அசைவுகளுக்கென ஒரு ஒழுங்கு உருவாவதே இல்லை. அலைகளுக்கும் படகின் எடைக்கும் பாய்மேல் பொழியும் காற்றுக்கும் இடையேயான முடிவற்ற உரையாடல் அது. அதன் மேல் நிற்பவன் சற்று அடிசறுக்கினாலும் கீழே படகின் கூர்மூக்கின் முன் விழுந்து கிழிபடுவான். ஆனால் நான் அதன்மேல் நிற்பதையே விரும்புவேன். கைகளால் எதையும் பற்றிக்கொள்ளவேண்டியதில்லை” என்றான்.

பூரிசிரவஸ் “ஆம், தங்கள் உடல் முற்றிலும் நிகர்நிலைகொண்டிருக்கிறது இளவரசே” என்றான்.  துரியோதனன் விழிகள் மாறுபட்டன. அவன் அதைப்பற்றி பேசவிரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் உடனே அவன் “இளமையில் ஸ்தூனகர்ணன் என்னும் தேவனின் ஆலயத்திற்கு வழிதவறிச்சென்று அங்குள்ள குளத்தருகே மயங்கி விழுந்தேன். மீண்டுவந்தபோது என் உடல் முற்றிலும் நிகர்நிலை கொண்டுவிட்டது என்றார்கள்” என்றான். பூரிசிரவஸ் புன்னகைத்தான். சொல்லவிரும்பவில்லை என்றாலும் சொல்லாமலிருக்க முடியாத பேரரரசன் மண்ணில் நிகழவிருக்கிறான்.

துரியோதனன் “நீர் கர்ணனிடம் பேசும்” என்றான். பூரிசிரவஸ் “அவர் நான் சொன்ன சொற்களை கடந்திருப்பார்” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். “இக்கவசங்களை அணிந்தபின் எவரும் போர்பற்றி மட்டுமே எண்ணமுடியும்.” துரியோதனன் உரக்க நகைத்து “ஆம், அது உண்மை...” என்றான். “இன்னும் மூன்றுநாழிகையில் நாம் காம்பில்யத்தை அடைவோம். அஸ்வத்தாமனின் படைகளும் ஜயத்ரதனின் படைகளும் வந்துவிட்டன."

குறடுகளின் எடைமிக்க ஒலியுடன் துச்சாதனன் வந்து நின்றான். துரியோதனன் திரும்பி “நான் உணவுண்ணவில்லை. படகிலேயே உண்ணலாமென எண்ணினேன்” என்றான். பூரிசிரவஸ் “நான் உண்டுவிட்டேன். இப்போது உண்ணும் நிலையில் இல்லை” என்றான். “சிறந்த போருக்கு முன் உண்டு உறங்குவது நன்று என்பார்கள்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “என்னால் உறங்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றான். “முதல்போருக்கு முன் எவரும் உறங்குவதில்லை....” என்றபின் துரியோதனன் உள்ளே சென்றான்.

பூரிசிரவஸ் அமரமுனையருகே சென்று வடத்தைப்பற்றியபடி நின்றுகொண்டான். வாள்முனை என நீரை கிழித்துச்சென்றுகொண்டிருந்தது படகுமுகப்பு. மலர்போல சுழன்று நின்ற பாய்கள் எதிர்க்காற்றை வாங்கி படகை காற்றடித்த திசைக்கே சுழற்றிக்கொண்டுசென்றன. இருளுக்குள் செல்லும் படகுகளை காணமுடியவில்லை. அலைகளில் எழுந்தமைந்தபோது ஒரே ஒருமுறை அருகே சென்றபடகின் பாய்க்கொத்தை மட்டும் பார்த்தான். காற்று பாய்களில் மோதி கீழே பொழிந்து சுழன்றது. அவன் சால்வை எழுந்து முன்பக்கமாக பறந்தது. அவன் பிடிப்பதற்குள் பின்னோக்கி எழுந்தது.

கால்கள் தளர்ந்தபோது கிடைமட்டமாகச் சென்ற பெரிய வடம் மேல் அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் துயில் வந்து தலை சற்று சரிந்தது. அவன் தலை துண்டாகி கீழே கிடப்பதைக் கண்டான். போர்க்கூச்சல்கள் சூழ ஒலித்தன. “அவன் மலைமகனாகிய பூரிசிரவஸ். தலையைக்கொய்து களத்திலிட்டிருக்கிறார்கள்” என எவரோ சொன்னார்கள். “கைகளை துண்டித்தவன் எவன்?” என்று இன்னொரு குரல். “முன்னரே பிறையம்பால் அவன் கைகள் வெட்டுபட்டிருந்தன” என்றது பிறிதொரு குரல். புலி ஒன்று மெல்ல அவனை நோக்கி வந்து முகம் தாழ்த்தி அவன் கழுத்தின் வெட்டிலிருந்து ஒழுகிய குருதியை நக்கியது. மெல்ல உறுமியது.

விழித்துக்கொண்டான். பாய் திரும்ப வடம் உறுமிக்கொண்டிருந்தது. பெருமூச்சுடன் எழுந்து கைகளை விரித்து உடலை நிமிர்த்திக்கொண்டு வானை நோக்கினான். விண்மீன்களின் பெருக்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அத்தனை விண்மீன்களும் சென்று எங்கோ அருவியாக கொட்டப்போகின்றன. அவன் இருளில் புன்னகைசெய்துகொண்டான். தொடர்பில்லாமல் துச்சளையின் முகம் நினைவுக்கு வந்தது. இருளே பெண்ணாகி வந்ததுபோல. கரியநிறம் போல தோலை அழகாக்குவது பிறிதில்லை. இந்த இருளில் அவள் நின்றிருந்தால் விழிகளின் ஒளியை மட்டுமே காணமுடியும். அதைச் சொன்னால் அவள் பற்களும் ஒளிரக்கூடும்.

அந்த எண்ணத்தை எவரோ பார்த்துவிடுவார்களென்று அஞ்சியவன் போல அவன் திரும்பி நோக்கினான். திசையுருளையில் அமர்ந்திருந்த நான்கு குகர்கள் கைகளை தளரவிட்டு நீர்வெளியை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். எங்கோ கட்டப்பட்டிருந்த உலோகப்பொருள் ஒன்று குலுங்கிக்கொண்டிருந்தது. ஒரு சொல். அல்லது ஒரு சிரிப்பு. அகஎழுச்சி கொண்ட கன்னியின் கிளுகிளுப்பு.

அவன் அமரம் வரை நடந்தான். மீண்டும் வந்து அந்த பாய்க்கயிற்றில் அமர்ந்துகொண்டான். நெடுநேரமாகியிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் விண்மீன்கள் ஒருநாழிகைகூட கடக்கவில்லை என்றே காட்டின. போரில் காலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தான். போருக்கு முன் அது விரிந்து விரிந்து கிடக்கும்போலும்.

காலடியோசையிலேயே அது கர்ணன் என அவன் அறிந்துவிட்டான். அவன் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து நின்றான். அறியாமலேயே கை நீண்டு வடத்தைப்பற்றிக்கொண்டது. படகின் அடிக்குவையில் இருந்து சிறிய படிகள் வழியாக ஏறி மேலே வந்த கர்ணன் அவன் அங்கிருப்பதை முன்னரே அறிந்திருந்தான். அவன் அருகே வந்தபோது தனக்காகவே அவன் வருவதையும் பூரிசிரவஸ் அறிந்துகொண்டான். அவன் நா உலர்ந்தது.

துரியோதனனின் பீடத்தை இயல்பாக இழுத்துப்போட்டு அதில் கர்ணன் அமர்ந்துகொண்டபோது பூரிசிரவஸ் திகைத்தான். எந்த அரசிலும் அது அரசனுக்கு செய்யப்பட்ட அவமதிப்பாகவே கருதப்படும். ஆனால் கர்ணன் அதைப்பற்றி எண்ணியதாகவே தெரியவில்லை. அவனை நிமிர்ந்து நோக்கியபோது அவன் திகைப்பும் அவனுக்குப்புரியவில்லை. அதை தன் கோணத்தில் புரிந்துகொண்டு “நான் உமது மூத்த உடன்பிறந்தான் என எடுத்துக்கொள்ளும். ஆகவே உம்மை அறைந்ததற்காக நான் பிழைகோரப்போவதில்லை” என்றான்.

பூரிசிரவஸ் “அது என் நல்லூழ் மூத்தவரே” என்று குனிந்து கர்ணனின் கால்களை தொட்டான். அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் சிறப்பும் திகழ்க!” என கர்ணன் வாழ்த்தினான். ”நானே பிழைகோரவேண்டியவன் மூத்தவரே. என் துடிப்பில் எல்லைமீறிவிட்டேன்” என்றான் பூரிசிரவஸ். “இல்லை. நீர் செய்தது சரிதான். நீர் சொன்ன சொற்களால்தான் நான் பின்னடைந்தேன். இது இப்போது குருகுலத்து இளவரசின் போர். நான் அவன் தோழன்” என்றான் கர்ணன். “இப்போரை நானே முன்னெடுத்திருக்கக் கூடாது. அது பிழை. அதன்பொருட்டு உமக்கு நான் நன்றிகூறவேண்டும்.”

பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நான் என்றும் விழைவது தருமனின் அறநிலையையும் பார்த்தனின் பற்றின்மையையும்தான் இளையோனே. அது எனக்கு வாய்ப்பதேயில்லை” என்று கர்ணன் பெருமூச்சுவிட்டான். “துதிக்கையில் புண்பட்ட யானை என்று என்னை ஒரு சூதன் பாடுவதை நகருலாவில் கேட்டேன். எத்தனை பொருத்தமான சொல்லாட்சி!”

பூரிசிரவஸ் மெல்ல அசைந்தபோது வடம் அவனை மேலும் தள்ளியது. “ஆறாத புண் என ஒன்றுண்டா மூத்தவரே? இப்புவியில் நீரும் நிலமும் வானும் இனியதாக இருக்கையில் துயரைச் சுமந்தலையும் உரிமை மானுடனுக்கு உண்டா?” என்றான். கர்ணன் “அந்த வினாவை நூறாயிரம் முறை நானே எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இளையோனே. ஆனால் அதற்கும் நூல்கள் விடை சொல்கின்றன. ஆதிபௌதிகம் என்று நூல்கள் வகுக்கும் இவ்வுலகத் துயர்களனைத்தையும் மானுடன் வெல்லலாம். ஆதிதெய்வீகத் துயர் அவனை ஆட்டிவைக்கும் தெய்வங்களின் சித்தம். அதை ஒன்றும் செய்யமுடியாது” என்றான்.

“என் மலைநகருக்கு வாருங்கள்... அல்லது என்னுடன் இமயத்தின் மலையடுக்குகள் ஒன்றுக்கு வாருங்கள். வானம் போல மண்ணும் விரிந்திருப்பதை காண்பீர்கள். இப்புவியில் நாமடையும் வெற்றியையும் தோல்வியையும் உவகையையும் துயரையும் பொருளில்லாதவையாக ஆக்கும் அமைதிப்பேருருக்களான மலையடுக்குகளை காண்பீர்கள்.” கர்ணன் ஏறிட்டு நோக்கி புன்னகைசெய்தான். இருளில் அந்தப்புன்னகை ஒரு அரிய வெண்மலர் என விரிந்தது. “ஆம், ஒருநாள் வருகிறேன். வருவேன், இளையோனே” என்றான்.

பின்னர் இருவரும் சற்றுநேரம் இருளென அலையடித்த நீரை நோக்கியிருந்தனர். கர்ணன் தலையை திருப்பாமல் நீரை நோக்கியபடி “நீ கேட்டதை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். எவர்முன் ஆடவிழைகிறேன்?” என்றான். பூரிசிரவஸ் காத்திருந்தான். “அவள் முன்...” என்றான் கர்ணன். “அதை அறியாத ஒரு படைவீரன் கூட இங்கிருப்பான் என்று தோன்றவில்லை.” பூரிசிரவஸ் ஏதோ பேச முனைந்தான். ஆனால் தொண்டை கட்டியிருந்தது.

“இளையோனே, அவள் எனக்கு யார்? அதை நூறுநூறாயிரம் கோணங்களில் வினவிக்கொண்டேன். ஒவ்வொரு விடையையும் உதிர்த்துவிட்டு மேலே செல்லவே தோன்றியது. நீ சொன்ன சொற்களை எண்ணிக்கொண்டேன். நீ எனக்கு சொல்லமுடியும் அதற்கான விடையை என்று தோன்றியது.” பூரிசிரவஸ் “நான் எளியவன்... இனி என் தமையனின் அகத்தே நுழையும் உரிமையும் எனக்கில்லை” என்றான். “நீ என் நெஞ்சில் மிதிக்கலாம்” என்றான் கர்ணன். படகு மெல்ல வளைந்தது. நேர் எதிரே தெரிந்த நிழல்மரக்கூட்டங்களான காடு வளைந்தோடி ஒதுங்கியது. வடங்கள் நூற்றுக்கணக்கான புலிகள் என உறுமிக்கொண்டன.

பகுதி 8 : செம்மலர் பீடம் - 1

அறைக்குள் பூரிசிரவஸ் வந்து “மூத்தவரே” என அழைத்த ஒலியில் கவசங்களுடன் படுத்துத் துயின்றுகொண்டிருந்த கர்ணன் எழுந்துவிட்டான். அதேவிரைவில் தன் ஆவநாழியை அணிந்து வில்லை எடுத்தபடி வெளியே ஓடினான். அவன் செல்வதற்குள் தன் அறையிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் துச்சலனும் வெளியே ஓடிவந்தனர். போருடையிலேயே அவர்களும் துயின்றிருந்தனர். முதற்படகிலிருந்து எரியம்பு எழுந்தது. முதற்படகிலிருந்து அறிவிப்பாளன் கூவியசெய்தியை பிறகு சென்ற படகுகள் ஒவ்வொன்றாக ஏற்றுக்கூவின. “காம்பில்யத்தின் மூன்று உளவுப்படகுகள் ஆவசக்கரங்களால் அழிக்கப்பட்டன. அவை செய்தி அனுப்ப முடியவில்லை.”

துரியோதனன் புன்னகையுடன் “நன்று” என்றான். பூரிசிரவஸ்ஸிடம் “அஸ்வத்தாமனின் படைகள் எங்குள்ளன என்று பார்க்கச்சொல்லும். நீரும் கர்ணனும் முதற்படகில் ஏறிக்கொள்ளுங்கள்...” என்றான். கர்ணன் கீழ்த்திசையை நோக்கிக்கொண்டிருந்தான். “இன்னமும் தூதுப்புறாக்கள் வரவில்லை. வந்ததும் சொல்லச்சொல்லியிருந்தேன்.” துரியோதனன் “எரியம்புகள் செலுத்தச் சொல்லியிருக்கலாமே” என்றான். “அவை காம்பில்யத்தை எச்சரித்துவிடும்...” என்றான் கர்ணன். “காம்பில்யம் செய்தி அறியாதது போலிருக்கிறது. அது ஐயமூட்டுகிறது. எப்படியானாலும் உளவுப்படகுகளின் சுற்றுச் செய்தி சென்று சேராததை அவர்கள் அறிய இன்னும் அரைநாழிகை நேரமே உள்ளது.”

துரியோதனன் “அரைநாழிகைக்குள் ஜயத்ரதனும் வந்துவிடுவான்” என்றான். கர்ணன் “போரில் எப்போதுமே ஒன்று பிழையாகும். அது என்னவென்று முன்னரே எவராலும் சொல்லமுடியாது” என்றான். துரியோதனன் பதற்றத்துடன் துச்சாதனனை நோக்கி “மூடா, அங்கே என்ன செய்கிறாய்? நம் ஆவசக்கரங்கள் அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும். நான் சொன்னேன் என்று சொல். ஒரு ஆவசக்கரம் சிக்கிக்கொண்டால்கூட அத்தனை பேரையும் கழுவிலேற்ற ஆணையிடுவேன்” என்று கூவினான். துச்சாதனன் “ஆணை, மூத்தவரே” என்றபின் திரும்பி படகுக்குப் பின்னால் ஓடினான்.

கர்ணன் “வா” என்று பூரிசிரவஸ்ஸை நோக்கி சொல்லிவிட்டு படகின் அமரமுனையை நோக்கி சென்றான். முன்னால் சென்ற படகிலிருந்து வீசப்பட்ட வடம் வந்து விழுந்தது. அதை வீரர்கள் எடுத்து பாய்மரத்தில் கட்டிக்கொண்டிருக்கையிலேயே இன்னொரு வடமும் வந்து விழுந்தது. இரு வடங்களும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்டு படகுகளின் ஆட்டத்துக்கு ஏற்ப தளர்ந்தும் இறுகியும் அசைந்தன. கர்ணன் ஒருவடத்தைப் பற்றியபடி இன்னொன்றில் கால்வைத்து எளிதாக நடந்து முந்தைய படகுக்குச் சென்றான். பூரிசிரவஸ் ஒருகணம் தயங்கிவிட்டு அவனைத் தொடர்ந்தான். அலையாடிய படகின் நடுவே நீருக்குமேல் ஊசலாடிய வடப்பாதையில் அவன் ஒருகணம் தத்தளித்து விழப்போனான். ஆனால் கர்ணன் திரும்பிப்பார்க்கவில்லை.

அத்தனை படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றுப்பாதையால் இணைக்கப்பட்டிருந்தன. சாலையில் செல்வதுபோல கர்ணன் அவற்றினூடாக சென்றான். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு படகிற்கும் ஆணைகளை விடுத்தபடி சென்றான். ஆவசக்கரங்களும் சதக்னிகளும் படகுகளின் முகதளங்களுக்கு இழுத்துக் கொண்டுவந்து வைக்கப்பட்டன. சிறிய தோணிகளில் மீன் எண்ணை நிறைக்கப்பட்டு அவற்றில் சதக்னிகளுக்குள் போடவேண்டிய எரியுருளைகள் ஊறிக்கொண்டிருந்தன. எரியம்புகளுக்குரிய பந்தமுனைகள் ஊன்கொழுப்பும் அரக்கும் தேன்மெழுகும் கலந்த குழம்பில் முக்கப்பட்டன. வில்லவர்கள் தங்கள் விற்களை கையிலேந்தி நின்றிருக்க அமரமுனையில் செய்தியாளன் நின்றிருந்தான்.

முதற்படகை அடைந்தபின் கர்ணன் கயிற்றைப்பற்றியபடி நின்று தொலைவில் தெரிந்த காம்பில்யத்தின் கோட்டைவிளக்குகளை நோக்கினான். “கோட்டைக்குள் இருந்து எந்த ஓசையுமில்லை. அவர்கள் உண்மையிலேயே அறியாதிருக்கிறார்களா?” என்றான் பூரிசிரவஸ். “யாதவ அரசியின் ஒற்றர்களை நான் நம்புகிறேன்” என்றான் கர்ணன். “நமக்காக காம்பில்யம் ஏதோ கேணி ஒருக்கியிருக்கிறது. அதை அறியவேண்டும்... ஆனால் நேரமில்லை.” அவன் கைகாட்ட அலைகளிலாடியபடி அலையறையும் ஓசையுடன் படகுகள் நின்றன காம்பில்யத்தை நோக்கிக்கொண்டு கர்ணன் அமரத்தில் நிழலுருவாக நின்றான்.

சற்றுநேரம் கழித்து “அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் பூரிசிரவஸ். “உளவுப்படகுகளின் செய்தி செல்லவேண்டிய நேரம் கடந்துவிட்டது. இன்னமும் அங்கே எந்த அசைவும் இல்லை.” திரும்பி வந்து வடத்தில் அமர்ந்தபடி “காத்திருக்கவேண்டியதுதான்... வேறுவழியே இல்லை” என்றான். “நாம் கருக்கலில் தாக்குவதாகத்தானே திட்டம்?” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் “ஆம், ஆனால் இந்த இருளில் அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்றறியாமல் சென்று சிக்கிக்கொள்வதில் பொருளில்லை” என்றான். “ஜயத்ரதனின் படைகளாவது செய்தியனுப்பவேண்டும். அதற்கு முன்னர் தாக்கத் தொடங்கினால் நாம் தனித்துவிடப்படுவோம்.”

பூரிசிரவஸ் நின்றுகொண்டிருந்தான். கர்ணன் துரியோதனனுக்கு செய்தியனுப்பிவிட்டு கோட்டைவிளக்குகளை நோக்கி விழியூன்றி அமர்ந்திருந்தான். பிறகு திரும்பி கிழக்கே விடிவெள்ளி எழுந்திருப்பதைக் கண்டான். எத்தனையோ முறை எங்கெங்கோ பார்த்திருப்பினும் எப்போதும் போல அக்கணமும் அது முற்றிலும் புதியதாக இருந்தது. மெல்லிய நடுக்கத்துடன். அந்த நடுக்கம்தான் விண்மீன்களை பொருள்கொண்டதாக ஆக்குகிறது. உயிருள்ளவையாக, அனைத்தையும் அறிந்தவையாக, பேச விழைபவையாக. வெள்ளியையும் துருவனையும் பார்க்கும்தோறும் ஒளிகொண்டதாகி வருவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். கனிந்து கனிந்து திரண்டு வருவன போல. உதிர்ந்துவிடுவன போல.

குரல்செய்தி வந்தது. “அஸ்வத்தாமனின் படைகள் காம்பில்யத்தின் வடக்குவாயிலுக்கு அப்பாலுள்ள குறுங்காட்டை அடைந்துவிட்டன. தாக்குவதற்கு சித்தமாக உள்ளன.” துரியோதனனின் செய்தி தொடர்ந்து வந்தது “இனிமேலும் காத்திருக்கவேண்டியதில்லை. போரைத் தொடங்குவோம்.” கர்ணன் காத்திருப்போம் என செய்தி அனுப்பினான்.

வெள்ளியின் ஒவ்வொரு நடுக்கமும் ஒருகணம் என காலம் கடந்துசென்றது. துரியோதனன் சீற்றத்துடன் “எதற்காக காத்திருக்கிறோம்? விடியப்போகிறது. அவர்கள் நம்மை பார்த்துவிடுவார்கள்” என்று செய்தியனுப்பினான். ”காத்திருப்போம்” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் “மூத்தவரே, ஜயத்ரதன் வந்து சேர்ந்துகொள்ளட்டும்” என்றான். கர்ணன் “இல்லை, அவன் வந்துசேர்வது ஓர் உறுதியை அளிக்கிறது. அவன் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கவும் கூடும். இன்னும் சற்றுநேரம் பார்ப்போம்” என்றான்.

மீண்டும் துரியோதனனின் செய்தி வந்தது “எதன்பொருட்டு காத்திருக்கிறோம்?” கர்ணன் “இன்னும் சற்றுநேரம்... விடிவதனால் நமக்கு இழப்பு இல்லை. இருளில் செல்லவேண்டியதில்லை” என்றான். பூரிசிரவஸ் “காத்திருப்பது மலையை அழுத்தி அணுவாக்குவதுபோல காலத்தை ஆக்கிவிடுகிறது” என்றான். “மலைநாட்டில் நீங்கள் காத்திருப்பதில்லையா?” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அங்கே காலம் முகிலாக மாறி மறைந்துவிடும்.” கர்ணன் மீசையை நீவியபடி மீண்டும் காம்பில்யத்தை நோக்கினான்.

மீண்டும் இருமுறை துரியோதனனின் செய்தி வந்தது. ஒரு விடியல்பறவை தலைக்குமேல் இருளில் ரீக் என ஒலியெழுப்பிச் சென்றது. படைவீரர்கள் அசைந்து அமர்ந்தனர். துரியோதனன் “நான் படைநீக்கத்திற்கு ஆணையிடுகிறேன். காம்பில்யத்தை தாக்குவோம்” என்றான். “இல்லை, பொறுப்போம்” என்று கர்ணன் அனுப்பிய செய்தி ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே துரியோதனன் படகிலிருந்து எரியம்பு எழுந்து வெடித்தது. அத்தனை படகுகளில் இருந்தும் எரியம்புகள் எழுந்தன. தொலைவில் காம்பில்யத்தின் வடக்கிலிருந்து மூன்று எரியம்புகள் எழுந்தன.

கர்ணன் சினத்துடன் எழுந்து கையை தூக்குவதற்குள் முதற்படகின் பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. படகுகள் அனைத்தும் முரசொலி எழுப்பியபடி பாய்களை விரித்துக்கொண்டு காம்பில்யத்தின் துறைமுகப்பு நோக்கி சென்றன. “என்ன செய்கிறான்? மூடன்! மூடன்!” என்று கர்ணன் கூவினான். “பால்ஹிகனே, சென்று அவனை நிறுத்தச்சொல்... படகுகள் துறைமுகப்புக்கு செல்லலாகாது. பக்கத்தில் காட்டருகே நிறுத்தி படைகளை கரையிறங்கச் செய்வோம்...”

பூரிசிரவஸ் செய்தியுடன் ஓடி வடம் வழியாக மூன்றாவது படகுக்கு ஓடும்போதே காம்பில்யத்தை நோக்கி முதல் எரியம்பை துரியோதனனின் படகு விடுத்துவிட்டது. எரியம்பு சென்றுதொடும் அண்மை வரவில்லை என பூரிசிரவஸ் உணர்ந்து திரும்பி நோக்கினான். அந்த எரியம்பு நீரில் விழுந்து அணைந்தபோது நீர்வெளியெங்கும் சிறிய பீப்பாய்கள் மிதப்பதைக் கண்டான். மேலுமொரு கணம் கழித்தே அவையெல்லாம் ஆழத்தில் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். இருபடகுகள் நடுவே கயிற்றில் திகைத்து நின்றான்.

சரசரவென்று அத்தனை படகுகளிலிருந்தும் எரியம்புகள் எழுந்து சீறி செந்நிறக்கோடுகளாக இருண்ட வானில் வளைந்து நீரில் விழுந்தன. முதல் பீப்பாய் செந்தழலாகப் பற்றிக்கொண்டதும் தொடர்ந்து நீரில் மிதந்தாடிய பீப்பாய்களனைத்தும் பற்றிக்கொண்டன. கர்ணன் அமரத்தில் நின்றபடி படகுகளை திருப்பும்படி கைகாட்டி கூச்சலிட்டான். குகர்கள் ஓடிச்சென்று பாய்களை அவிழ்த்தனர். அதற்குள் முதற்படகு விசையிழக்காமல் சென்று இரண்டு எரியும் பீப்பாய்களில் முட்டியது. அவற்றிலிருந்து உடைந்து பீறிட்ட எரிநெய் செந்தழலாகப் பரவி படகின் அமரமுனையை தீண்டியது.

அதேகணம் காம்பில்யத்தின் கோட்டைமேல் நூற்றுக்கணக்கான பந்தங்கள் எரிந்தெழ அது தீப்பற்றிக்கொண்டதுபோல தெரிந்தது. அங்கிருந்து எரியம்புகள் வந்து நீரிலும் முதல்படகின் மேலும் விழுந்தன. நீர்வெளியில் பீப்பாய்கள் பற்றிக்கொள்ள பாய்கள் எரியம்பால் பற்றிக்கொள்ள தீத்தழல்களும் அவற்றின் நீர்ப்பாவைகளும் இணைந்து அத்திசையே அனலாக ஆனதுபோலிருந்தது. குகர்கள் பாய்களை அவிழ்த்துவிட்டாலும் படகு விரைவழியவில்லை. கர்ணன் சுக்கானைத் திருப்பி படகை பக்கவாட்டில் திருப்பச்சொல்லி ஆணையிட்டான். படகு பக்கவாட்டில் திரும்பியதும் விரைவிழந்தது. ஆனால் அதற்குள் பின்னால் வந்த படகு அதை முட்டி தீக்குள் தள்ளியது.

பூரிசிரவஸ் தொங்கி நின்ற வடம் தளர்ந்தது. மறுமுனைப்படகின் அமரம் தன்னை நோக்கி வருவதைக்கண்டு அவன் ஓடிச்சென்று தாவிக்கொண்டான். அந்த அமரமுனை பேரெடையுடன் முன்னால் சென்ற படகை முட்டியது. ஒவ்வொரு படகும் ஒன்றை ஒன்று முட்டி முன்னால் செலுத்த முதல்படகுகள் நான்கும் நெருப்புக்குள் நுழைந்துவிட்டன. முதல்படகின் பாய்களும் உடலும் சேர்ந்து எரிந்தன. அந்தப்பெரும்படகு எரியும் அனல்வெம்மையே அடுத்த படகுகளை எரிக்க வல்லது என பூரிசிரவஸ் புரிந்துகொண்டான்.

நான்குபக்கமும் எண்ணைப்புகையுடன் வெடித்து எரிந்த தழல்களின் நடுவே ஆடி நின்ற படகில் நின்றபடி பூரிசிரவஸ் நோக்கினான். தழல்கள் நடுவே கர்ணன் கரிய கவசத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதை கண்டான். வடத்தில் தொற்றி ஏறி அவன் பூரிசிரவஸ் படகில் வந்து நின்று திரும்பி நோக்கினான். “முன்வரிசைப் படகுகளை இனிமேல்காக்க முடியாது.. பின்னால் வந்த படகுகளுக்குச் செல்லுங்கள்...” என ஆணையிட்டபடி அவன் ஓட அவனுக்குப்பின்னால் அந்தப்படகை கைவிட்டுவிட்டு பிறரும் ஓடினர்.

பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். முதல்படகின் உள்ளிருந்த எண்ணைப்பீப்பாய்கள் பற்றிக்கொள்ள பேரொலியுடன் வெடித்து வானளாவிய செந்தழலாக எழுந்தது. அதிலிருந்த வீரர்கள் நான்குபக்கமும் நீரில் குதித்தனர். புரவிகள் நீரில் குதித்து தலையை மேலே தூக்கியபடி கனைத்துக்கொண்டு கரைநோக்கி சென்றன. வீரர்கள் எடைமிக்க கவசங்களுடன் இருந்தமையால் நீந்தமுடியாமல் மூழ்கி எழுந்து கூவினர். பலர் ஒழுக்கிலேயே சென்று பின்னர் மூழ்கி மறைந்தனர்.

நீர்வெளியும் நெருப்பாக இருந்தமையால் பலர் தயங்க அவர்கள்மேல் எரிந்தபடி பாய்மரமும் பாய்களும் விழுந்தன. முதல்படகு எரிந்தபடி நின்று மெல்லச் சுழன்றது. மேலே செலுத்திச்சென்ற பாய்கள் அழிந்தமையால் அதை காற்றும் ஒழுக்கும் தள்ளிக்கொண்டு வந்து பின்னால் நின்ற படகுடன் இணையச்செய்தன. மேலும் மேலும் படகுகள் இணைந்துகொள்ள தழல்கள் ஒன்றை ஒன்று உண்டு எழுந்து படபடத்தன.

கர்ணன் துரியோதனனின் படகை அடைந்தான். துரியோதனன் பதறியபடி ஓடிவந்து “நாம் வருவதை அறிந்திருக்கிறார்கள்... கர்ணா நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்றான். “அதை பிறகு பேசுவோம்” என்று கர்ணன் சொன்னான். “முதலில் நமது எரியாத படகுகளை பின்னால் திருப்புவோம். படகுகள் எரியும் தழல் ஆற்றல் மிக்கது.” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தழல்தொடாத ஒரு படகின் பாய் தன்விழைவாலேயே பற்றிக்கொண்டதுபோல எரியத் தொடங்கியது.

“பாய்களை தாழ்த்துங்கள்... அவை எளிய இலக்குகள்” என்று கர்ணன் ஆணையிட்டான். “நங்கூரமிட்ட ஒரு படகு நின்றிருக்கட்டும். அது ஒழுக்கில் வரும் படகுகளை நிறுத்தும். பிறபடகுகள் நீரின் விரைவிலேயே விலகிச்செல்லட்டும்...” படகுகள் பாய்களைச் சுருக்கியபடி கங்கையின் ஒழுக்கில் ஓடத் தொடங்கின. நங்கூரமிடப்பட்ட ஏழாவது படகு பாய்தாழ்த்தி நின்றிருக்க அதை நோக்கி மெல்ல ஒழுகிவந்த எரியும்படகுகளின் தொகை மோதி மெல்ல நகரச்செய்தபின் சேர்ந்து எரிந்தபடி தேங்கியது. கர்ணன் “நீ என்னுடன் வா” என்று பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிக்கொண்டே சென்றான்.

“மையத்திற்கு செல்வோம்” என்று துரியோதனன் சொன்னான். “இவர்கள் நம்மை எதிர்நோக்கி இக்காடுகளில் படைகளை நிறுத்தியிருப்பார்கள்.” கர்ணன் “இல்லை இளவரசே, நாம் திரும்பமுடியாது. அஸ்வத்தாமனின் படைகள் காம்பில்யத்தை தாக்கியிருக்கும். நாம் அவருக்கு துணைநிற்கவேண்டும்” என்றான். மூன்று எரியம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து வானில் வெடித்தன. துச்சாதனன் “ஜயத்ரதன்... அவரும் தாக்கிவிட்டார்” என்றான். அதற்குள் அஸ்வத்தாமன் தாக்கியதை எரியம்புகள் அறிவித்தன.

“அனைத்து ஆவசக்கரங்களும் சதக்னிகளும் கரைநோக்கி திரும்பட்டும்” என்று ஆணையிட்டபடி அடுத்த படகுக்கு சென்றான் கர்ணன். வீரர்கள் கூச்சலிட்டபடி ஆவசக்கரங்களை திருப்பி கரைநோக்கி வைத்தனர். “கரைநோக்கி செல்வோம்...” என்று கர்ணன் ஆணையிட்டதும் குகர்கள் சுக்கான்களைத் திருப்பி துடுப்பிட்டு படகுகளை கரையோரக் காடுகளை நோக்கி செலுத்தினர். படகுகள் நீரோட்டத்தை பயன்படுத்திக்கொண்டு முகம் திருப்பின. குகர்கள் கூச்சலிட்டபடி ஒரேவிசையாக மாறி துடுப்புகளால் துழாவ படகுகள் யானைகள் என எடையுடன் மெல்ல ஊசலாடி கரைநோக்கி சென்றன.

கரையின் காடுகளுக்குள் மரங்களுக்குள் தழைமறைத்துக் கட்டப்பட்டிருந்த படைப்பரண்களில் காம்பில்யத்தின் வீரர்கள் எழுந்தனர். போர்க்கூச்சலுடன் அவர்கள் எய்த எரியம்புகள் எழுந்து வளைந்து நீரிலும் படகுகளின் முகப்பிலுமாக விழுந்தன. அஸ்தினபுரியின் படகுகளுக்குள் அமர்ந்துகொண்டு வீரர்கள் ஆவசக்கரங்களை இயக்கினர். பதினெட்டு தொகைகளாக எரியம்புகள் எழுந்து காடுகள் மேல் விழுந்தன. சதக்னிகள் ஓசையுடன் வெடித்து எரியுருளைகளை காடுகள் மேல் பொழிந்தன.

கொடித்தூணின் மறைவில் நின்றபடி கர்ணன் அந்தப்போரை நோக்கிக்கொண்டிருந்தான். பூரிசிரவஸ் அருகே வந்து “நாம் வில்லெடுக்கலாமா?” என்றான். “எறும்புகள் கலையட்டும்...” என்றான் கர்ணன். “இப்போது அம்புகள்தான் வீணாகும்.” சதக்னிகளின் தழலுருளைகள் விழுந்த இடங்களில் காட்டுக்குள் சருகுகள் பற்றிக்கொண்டன. புகையுடன் எழுந்த நெருப்பு பின்னர் செந்நிறச்சுவாலைகளாகியது. பின்பு பசுந்தழைகளுக்குமேல் அதன் நாக்குகள் எழத்தொடங்கின.

காடுகளுக்குள் தழைமறைப்புக்குள் இருந்த வீரர்கள் இறங்கி தரையில் ஓடத்தொடங்கியதும் கர்ணன் தன் வில்லை எடுத்தான். அவன் கைகளும் விழிகளும் வில்லும் அம்பும் ஒற்றைப்படைக்கலமாக ஆயின. நாண் விம்மி விம்மி தழைந்தது. முரசில் கைவைத்து இழுத்த ஒலியுடன் அம்புகள் பறந்து காட்டுக்குள் சென்றன. அவனுடைய ஒரு அம்புகூட வீணாகவில்லை. காடுகளுக்குள் அலறல் ஒலியுடன் காம்பில்யத்தின் வீரர்கள் சரிந்துகொண்டே இருந்தனர்.

கர்ணனிடம் களிவெறியோ கொந்தளிப்போ உருவாகவில்லை என்பதை பூரிசிரவஸ் கண்டான். அனல்கூர்ந்து நகைசெய்யும் பொற்கொல்லனை போலிருந்தன அவன் முகமும் கைகளும். அவன் வில் அவனுடன் இணைந்து நடமிட்டது. அவன் கைபட்டதும் துள்ளி நகைத்தது. அவனிடமிருந்து அம்புகள் சூரியனிடமிருந்து கதிர்களென கிளம்பின. அவை அம்புகளல்ல அவன் விழிப்பார்வைகள் என பூரிசிரவஸ் நினைத்தான்.

அம்புகளையும் அனலையும் பொழிந்தபடி படகுகள் கங்கைக்கரையை அடைந்தன. கரையோரக்காடு தீப்பற்றி புகைவிட்டு எரிந்துகொண்டிருந்தது. பசுந்தழை பொசுங்கும் நாற்றமும் எண்ணையின் எரிநாற்றமும் கலந்து வீசின. காட்டுக்குள் சேக்கேறியிருந்த பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து கூச்சலிட்டுச் சுழன்றன. “கரையில் இறங்கவேண்டியதில்லை. ஆவசக்கரங்களை கைவிடாமல் காடுவழியாக செல்லமுடியாது” என்றான் கர்ணன். "கங்கையோரமாகவே படகுகள் செல்லட்டும்... அங்கே எண்ணைப்பீப்பாய்கள் எரிந்தணைந்திருக்கும்.”

படகுகள் காட்டை எரியம்புகளால் தாக்கியபடி கரையோரமாகவே சென்றன. ஆழமற்றபகுதி என்பதனால் கழிகளால் உந்தியே படகுகளை செலுத்த முடிந்தது. காம்பில்யத்தின் இரு முனைகளிலும் போர் நிகழ்வதற்கான ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. இடைவிடாமல் கரைநோக்கி அம்புகளை செலுத்தியபடியே வந்தான் கர்ணன். பூரிசிரவஸ் விட்ட அம்புகளுக்குத் தப்பி விலக முயன்றவர்களை அவன் அம்புகள் எளிதாக குத்தி வீழ்த்தின.

ஏழு படகுகளும் சேர்ந்து எரிந்துகொண்டே விலகிச்சென்றிருந்தன. எரிந்தணைந்த பீப்பாய்களில் சில சிறு தழலுடன் புகைவிட்டுக்கொண்டிருந்தன. நீரில் எரிந்த தழல் இரு செஞ்சிறகுகள் கொண்ட பறவைபோல தோன்றியது. “படகுகளை கரையணையச்செய்து வீரர்களை இறக்குங்கள். ஆவசக்கரங்களுடனும் சதக்னிகளுடனும் படகுகளில் சிலர் மட்டும் இருந்தால் போதும். காம்பில்யத்தைத் தாக்கியபடியே படகுகள் அணையட்டும்” என்று கர்ணன் ஆணையிட்டான்.

முதல் குகன் நீரில் பாய்ந்து நீந்திச்சென்று கரையேறினான். அவன் தன்னுடன் கொண்டுசென்ற வடத்தை அங்குள்ள மரத்தில் சுற்றி பிணைத்தான். அதை படகிலிருந்த சக்கரத்தில் சுற்றினார்கள். தக்கைமரங்களாலான தெப்பங்கள் அந்தக் கயிற்றில் பிணைக்கப்பட்டு நீரில் போடப்பட்டன. படகுகளிலிருந்து நூலேணிகள் வழியாக நீரில் விழுந்த வீரர்கள் அவற்றைப்பற்றிக்கொள்ள தெப்பங்களுடன் படகுக்கும் கரைக்குமாகச் சுழன்ற கயிறு அவர்களை கரைநோக்கி கொண்டுசென்றது. வீரர்கள் கூச்சலிட்டபடி சக்கரத்தைச் சுழற்ற நிரைநிரையாக வீரர்கள் மிகவிரைவாக கரையை அடைந்தனர்.

புரவிகள் சேணத்துடனேயே நீரில் குதித்து இயல்பாக நீந்தி கரையேறி உடலை உதறிக்கொண்டு ஒன்றை ஒன்று நோக்கி கனைத்து அழைத்தன. பூரிசிரவஸ் நீரில்பாய்ந்து கரையேறி தன் இடையிலிருந்த கொம்பை ஊதி அவர்களை ஒருங்கிணைத்து கங்கையின் அழுத்தமான மென்மணல் பரப்பு வழியாகவே அணிவகுத்து கொண்டுசென்றான். முன்பக்கம் துச்சாதனனும் துச்சலனும் இறங்கிவந்து படைகளை ஒருங்கிணைத்தனர். மேலே மணல்சரிவு முடியும் இடத்திலிருந்து அடர்காடு தொடங்கியது. அங்கே காம்பில்யத்தினர் எவரும் ஒளிந்திருக்காதபடி அஸ்தினபுரியின் படகுகள் அம்புகளை பொழிந்துகொண்டிருந்தன.

அனைத்துப்படகுகளிலிருந்தும் வீரர்கள் இறங்கியதும் கர்ணனும் துரியோதனனும் நீரில் கயிறு வழியாக இறங்கி நீந்தி வந்தனர். ஈரம் சொட்டும் கவசங்களுடன் வந்த கர்ணன் தன் குதிரையை அணுகி அதன் சேணத்தைப்பற்றி கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தினான். அது தலைதிருப்பி அவனை நக்கியது. தன் வில்லுடனும் வாளுடனும் அவன் புரவியில் ஏறிக்கொண்டு ”வில்லவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு முன்னால் வாருங்கள்... பிறபடைகள் காம்பில்யத்தை அணுகியதும் காடுகளுக்குள் புகுந்துகொண்டு புதர்களுக்குள் என் ஆணைக்காக காத்திருங்கள்” என்று கூவிவிட்டு அதை தட்டினான்.

வால் சுழற்றி கனைத்தபடி அவன் குதிரை குளம்புகள் மணலை அள்ளி பின்னால் வீச ஓடிச்சென்றது. எரியும் படகுகளின் மெல்லிய செவ்வொளியில் அவன் செல்லும் காட்சியை பூரிசிரவஸ் கண்டான். களத்தில் அவன் பிறிதொருவனாக இருந்தான். அங்கு வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவனாக. பிறவாழ்க்கையை முழுக்க அதன்பொருட்டு செலுத்திக்கொண்டிருப்பவனாக. அங்கே அவனறியாத ஏதுமிருக்கவில்லை என்று தோன்றியது.

நீந்திக்கரைசேர்ந்த அஸ்தினபுரியின் வீரர்கள் கரைகளில் தயங்கி நின்ற குதிரைகளைப் பிடித்து சேணங்களை சரிசெய்து ஏறிக்கொண்டனர். தெப்பங்களில் கரை வந்து சேர்ந்த படைக்கலங்களை வீரர்கள் ஓடிச்சென்று எடுத்துக்கொண்டார்கள். தீக்காயங்களுடன் நீந்திக்கரைசேர்ந்த வீரர்கள் காட்டுக்குள் சென்று ஒளிந்தனர். சற்றுநேரத்தில் குதிரைப்படை ஒன்று விற்களுடன் உருவாகி அணிவகுத்து கர்ணனின் பின்னால் சென்றது. அதில் பூரிசிரவஸ் இருந்தான். அவனுக்குப்பின்னால் கௌரவர்களால் நடத்தப்பட்ட காலாள்படை படைக்கலங்களுடன் அணிதிரண்டு கொண்டிருந்தது.

நீருக்குள் ஒருபடகு இறுதியாகவெடித்து மெல்ல அமிழத்தொடங்கியது. அஸ்தினபுரியின் படகுகள் எரியம்புகளை செலுத்தியபடி காம்பில்யத்தின் துறைமுகப்பு நோக்கி சென்றன. நூற்றுக்கணக்கான சிறிய செந்நிற மீன்கொத்திகள் போல எரியம்புகள் எழுந்து இருண்டவானில் கோடுகளைக் கீறியபடி சென்று காம்பில்யத்தின் துறைமேடையில் விழுந்தன. சதக்னிகள் எட்டும் தொலைவு வந்ததும் எரியுருளைகள் எழுந்து சென்று துறைமேடையில் விழுந்து அனல்பொறிகள் சிதற வெடித்தன. துறைமேடையின் ஒரு மூலையில் கட்டடம் ஒன்று பற்றிக்கொண்டது.

துறையிலிருந்த வீரர்கள் அதை அணைக்கச்செல்ல அவர்கள்மேல் மேலும் மேலும் எரியுருளைகள் விழுந்தன. துறைமேடையின் பெரிய எடைதூக்கிச் சக்கரமும் மூங்கில்களும் எரியத்தொடங்கின. சற்றுநேரத்தில் துறைமேடையின் ஓரம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அங்கே நின்றிருந்த சிறிய பாஞ்சாலப்படை கூச்சலிட்டபடியும் எரியம்புகளால் ஆணைகளை இட்டபடியும் கோட்டைக்குள் சென்று மறைந்ததும் கோட்டைக்கதவுகள் ஓசையுடன் மூடப்பட்டன. கோட்டைக்குமேல் பெருமுரசுகள் ஓசையிட்டன.

கர்ணனால் வழிநடத்தப்பட்ட வில்லவர்படை கங்கையின் மென்மணல் கதுப்புவழியாக குறுங்காட்டை ஒட்டி கோட்டை முகப்பு நோக்கி சென்றது. அஸ்தினபுரியின் படகுகளில் இருந்து எழுந்த சதக்னிகளின் எரியுருளைகள் அவர்களுக்கு முன்னால் சென்று விழுந்து கொண்டே இருந்தன. சற்றுநேரத்தில் துறைமுகப்பின் மாபெரும் மரத்தடிகள் நின்றெரியத்தொடங்கின. அந்தப்புகையால் கோட்டை முழுமையாகவே மூடப்பட்டது. காற்று புகையை அள்ளி கோட்டையை நோக்கி கொண்டு சென்றது.

புகைத்திரைக்குள் கர்ணனின் வில்லவர்படை குதிரைகளில் ஊடுருவிச்சென்றது. கோட்டைக்குமேல் எழுந்த காவல்மாடங்களை நோக்கி அம்புகளை ஏவியபடி படகுகள் அணுகி வந்து எரியும் துறைமேடைக்கு முன்னால் நின்றன. கோட்டைக்குமேலிருந்து வில்லேந்திய காவலர்கள் அலறியபடி உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தனர். புகைக்குள் செல்ல குதிரைகள் தயங்க வீரர்கள் அவற்றை சம்மட்டியால் அடித்துச்செலுத்தினார்கள். பின்னர் கர்ணன் இறங்கிக்கொண்டு குதிரையை பிடித்தபடி காத்து நின்றான். வில்லவர்களும் விற்களுடன் இறங்கிக்கொண்டனர்.

கோட்டைமேலிருந்த சதக்னிகளால் அஸ்தினபுரியின் இரண்டு படகுகள் எரியத்தொடங்கின. அவற்றை பாய்களை விரித்து துறைமேடை நோக்கிச்செலுத்தும்படி கர்ணன் எரியம்புகளால் ஆணையிட்டான். அதன் மேலிருந்த குகர்கள் நீரில் பாய்ந்தனர். தழல்விட்டு எரிந்தபடியே முதல்படகு பேரெடையுடன் சென்று துறைமேடையில் எரிந்துகொண்டிருந்த மரச்சட்டங்களை முட்டியது. எரியும் தழலுடன் முனகியபடி மேலெழுந்து புரண்ட மரத்தடிகள் உருண்டு கோட்டை வாயில் நோக்கி சென்றன. இரண்டாவது படகும் மேலும் விசையுடன் முதல்படகில் முட்டி அதை தழலுடன் துறைமேடையுடன் சேர்த்து அழுத்தியது.

காம்பில்யத்தின் கோட்டைமுன் உலர்ந்த பெரிய தடிகள் கனலாகி வெடித்து நின்றெரிந்தன. கங்கைக்காற்று மொத்த அனலையும் அள்ளி கோட்டைமேலேயே பொழிந்தது. ஐந்து ஆள் உயரமான தழல்கற்றைகள் சுழன்று பறந்து கோட்டையின் கரியசுவரை நக்கி மேலெழுந்தன. நீரலை போலவேதான் நெருப்பலையும் என்பதை பூரிசிரவஸ் கண்டான். நெருப்பு அறைந்து வளைந்து விழுந்து மீண்டும் எழுந்து வழிந்தோடி பக்கவாட்டில் பரவி அங்கிருந்த கட்டடங்களை சுருட்டி எடுத்துக்கொண்டது. பச்சை மரங்கள் சடசடவென இலைசுருண்டு பொசுங்கி பின் அனல்கொண்டு எரிந்தன.

கோட்டைக்கதவு முழுமையாகவே செந்தழலாக மாறி எரிந்தது. பின் அதன் ஒரு பாளம் உடைந்து எரிந்தபடியே பின்னால் விழுந்தது. கோட்டைமேல் காவலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். கோட்டைக்கு அப்பால் படைகள் அணிவகுப்பதற்கான பெருமுரசங்கள் முழங்கின. கோட்டைக்கதவின் இரண்டாவது பாளமும் எரிந்து நடுவே உடைந்து மடிந்து விழுந்தது. கோட்டைக்குமேல் கட்டப்பட்டிருந்த மரத்தாலான காவல்மாடங்களும் எரியத்தொடங்கின.

கோட்டைக்கு அப்பால் வானத்தில் தெரிந்தது நெருப்பின் செந்நிறமா என்று பூரிசிரவஸ் முதற்கணம் எண்ணினான். முகில்களிலும் அனல் பற்றி ஏறிக்கொண்டதுபோல தோன்றியது. வானிலும் மண்ணிலும் நீரிலும் செந்தழல் சூழ கோட்டையே பற்றி எரிந்துகொண்டிருந்தது என விழிமயக்கு கொண்டான்.

கர்ணன் குதிரைமேல் ஏறிக்கொண்டு தன் கையை நீட்டினான். அவனுக்குப்பின்னால் நின்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத காட்டுக்குள் இருந்து போர்க்கூச்சலுடன் கௌரவப்படைகள் படைக்கலங்களுடன் சீரான வரிசைகளாக இறங்கி அனலெரியும் கோட்டைமுற்றம் நோக்கி வந்தன. துறைமேடையில் எரிந்த பெருந்தடிகள் நீரில் அடர்ந்து ஓசையுடன் விழுந்து எரிந்தபடியே மிதந்து சென்றன. எரியாத தடிகளில் மிதித்து குதிரைகள் தழல்நடுவே பாய்ந்து சென்றன.

கர்ணனின் வெண்ணிறமான குதிரை தழலின் செந்நிறத்தில் தானும் தழலாக தெரிந்தது. தழல் நுனி போல அதன் சரவால் சுழன்று பறந்தது. பறவை போல பாய்ந்து நெருப்பலைகளைக் கடந்து சென்ற அதன்மேல் குதிரைவிலாவில் நுனி ஊன்றி இடக்கையால் பற்றி நிறுத்தப்பட்ட வில்லும் வலக்கையில் அம்புமாக குழல் பறக்க அவன் அமர்ந்திருந்தான். அவன் ஒளியில் திரும்பியபோது காதுமடல்களில் இரு செந்நிற மணிக்குண்டலங்களை பூரிசிரவஸ் கண்டான்.

பகுதி 7 : நச்சு முள் - 6

சூரியனின் முதற்கதிர் வானில் எழுந்தவேளை சூழ்ந்து எரிந்த செந்தழல்களின் நடுவே தன் வெண்புரவியில் அமர்ந்து இடையறாது அம்புகளைத் தொடுத்தபடி கர்ணன் காம்பில்யத்தின் மேற்குக் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தான். அவனைத்தொடர்ந்து அஸ்தினபுரியின் வில்லவர் படையும் இறுதியாக பூரிசிரவஸ்ஸும் அம்புகளைத் தொடுத்தபடி பாய்ந்து சென்றனர். துறைமேடையில் எரிந்த தழலின் அடர்ந்த கரும்புகையே அவர்களுக்கு அரணாக அமைந்தது.

கோட்டைமேல் இருந்த வில்லவர்களும் ஆவசக்கரப் படையினரும் கீழே நோக்கமுடியாமல் இலக்கின்றி அம்புகளை பெய்தனர். வடக்குக்காற்றால் அள்ளிக்கொண்டு வந்து வீசப்படும் பெரிய மழைத்துளிகள் போல அவை அவர்களுக்கு மேல் பரவின. விரைவை கொண்டே அவற்றை வெல்லமுடியும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். கோட்டை இருநூறு வாரை தொலைவிலிருந்தது. ஆயிரத்திருநூறு அடி. அறுநூறு குதிரைப்பாய்ச்சல்கள். அறுநூறு கணங்கள். அறுநூறு யுகங்கள். அறுநூறு இறப்புகள். அறுநூறு பிறவிகள். அப்பால் கோட்டை கரிப்புகை படிந்து இருண்டு அசைவின்றி நின்றுகொண்டிருந்தது. அருகே வா. அருகே வா. விரைக! விரைக! இன்னும் அருகே. ஆனால் இரக்கமில்லாமல் அது அங்கேயே நின்றுகொண்டிருந்தது. அதை நோக்கி சென்ற அவன் குதிரை காலமின்மையில் கால்களால் நீந்திக்கொண்டு வானில் அசைவற்று நின்றது.

புரவிகளின் குளம்படித்தாளமன்றி எதையும் பூரிசிரவஸ் கேட்கவில்லை. அவன் நெஞ்சும் அதைப்போலவே ஒலித்துக்கொண்டிருந்தது. கர்ணனின் கொம்போசையைக் கேட்டு புரவியை குதிமுள்ளால் உதைத்து கூச்சலிட்டபடி வில்லைத்தூக்கி விரையத்தொடங்கிய கணம் முதல் காலம் கணங்களால் ஆனதாக மாறியது. ஆயிரம் காதுகள் பல்லாயிரம் கண்கள் நூறாயிரம் சித்தம். அங்கிருந்த ஒவ்வொரு எரிதூணையும் அவன் கண்டான். ஒவ்வொரு குதிரையின் குளம்புகளையும் ஒவ்வொரு பிடரிமயிர்க்குலைவையும் ஒவ்வொரு வீரனின் விழி தெறித்த வெறிமுகங்களையும் தனித்தனியாகக் கண்டான். அவன் கைகளிரண்டும் வில்லில் இருந்து அம்புகளை தொடுத்தன. குதிரையின் தாவும் உடலின் ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி அவன் உடல் அதனுடன் இணைந்து நடனமிட்டது.

அத்தனைக்கும் அப்பால் அவன் உள்ளம் அங்கு நிகழ்வன அனைத்தையும் சொற்களாக்கிக்கொண்டுமிருந்தது. அவன் பிறந்தநாள் முதல் அதுவரை ஒருபோதும் அத்தனை முழுமையாக இருந்ததில்லை. அவன் ஆடிப்பாவைகளாகப் பிரிந்து பிரிந்து பல்லாயிரமாகி சூழ்ந்து சென்றுகொண்டிருந்தான். பல்லாயிரம் பாவைகளுக்குள்ளும் ஒற்றைப்பேரிருப்பாகத் திகழ்ந்துகொண்டுமிருந்தான். இது போர். ஆம், இது போர். இதுதான் போரா? இப்படித்தான் போர் இருக்குமா? இதுதான் போர் என்றால் எப்படி மானுடனால் போரின்றி வாழமுடியும்?

மானுடன் படைக்கப்பட்டதே போருக்காகத்தான். அவன் கண்கள் செவிகள் கைகள் உடல் அனைத்தும் போருக்கானவை. அம்பு நுனிமுதல் இறகு வரை போருக்கானது. வில் வளைமுனை முதல் ஊன்றுமுனை வரை போருக்கானது. நாணில் நின்று அது விம்மிநடமிடுகிறது. அது அதன் உச்சம். சித்தமொன்றில் உருவெடுத்து விண்ணில் திரண்டு மண்ணில் வந்ததன் பொருள். இக்கணங்கள். இக்கணம். இக்கணத்துளி. இனி இதை எப்படி மறப்பேன்? இனி இது இன்றி எப்படி வாழ்வேன்? இது போர்! போரில் திகழ்கின்றன வாழ்க்கையின் உள்ளுறைகள். போரில் திரள்கின்றன தெய்வங்கள் மானுடனுக்களித்தவை அனைத்தும்.

ஆனால் இறப்பு! இங்கே இறப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்குள் பலநூறுபேர் இறந்துவிட்டனர். அம்பு நெஞ்சைத் துளைக்கையில் அந்த முகங்களில் எழுவதென்ன? திகைப்பு. ஆம், திகைப்பு. படைக்கலமெடுத்து களம்புகும் எவனுக்கும் தெரியும் இது ஓரு சாவுப்பெருவெளி என. ஆயினும் அவன் தன் நெஞ்சில் அம்பு தைக்கையில் வியக்கிறான். அவ்வளவுதானா? அந்த ஒரு சொல்லைத்தான் அத்தனை முகங்களிலும் காண்கிறேன். இதுவா? இதுவேதானா? முகங்களாக மாறி அச்சொல் மண்ணில் உதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதோ. கடந்துவிட்டது அந்த அம்பு. இன்னொரு அம்பு. விம்மி விம்மி என்னைக் கடந்து செல்லும் இந்த அம்புகளில் ஏதோ ஒன்றில் என் இறப்பு பொறிக்கப்பட்டிருக்கிறது. இக்களத்தில் நான் விழுந்தால்....

நெஞ்சை அடைத்து ஒரு கணம் சித்தத்தை உறையவைத்தது கடுங்குளிர். இதுவரை இத்தகைய பேரச்சத்தை நான் உணர்ந்ததில்லை. இதுவரை இறப்பென்பது ஒரு தொலைதூர நிகழ்வு. எழுதப்பட்ட சொல். கேட்டு நினைவில் நின்ற கதை. கனவிலெழுந்த சித்திரம். இங்கு இதோ அது என்னைச் சூழ்ந்துள்ளது. இறப்பெனும் இன்மை. இருள். இறப்பென்பது... இதோ கடந்துசெல்லும் அம்பு அதை அறியுமா? இதோ அலறி வீழும் வெறித்த விழிகொண்ட வீரன் அறிந்துவிட்டானா? அன்னை முகம். அன்னைமுகம். அன்னைமுகம். இதோ இன்னொருவன் வீழ்ந்து துவண்டெழுந்து பாய்ந்து வரும் குதிரைக்கால்களால் மிதிபட்டு சிதறடிக்கப்படுகிறான். அவன்மேல் உருண்டேறுகிறது எரியும் கனல்தடி. அன்னை. ஏன் வேறெந்த முகமும் எழவில்லை?

மணப்பதென்ன? உப்பு எரிகிறது. இல்லை அது குருதி. இங்கே எரியும் நெருப்பை மீறி மணப்பது பச்சைக்குருதி. குமிழியிடுகிறது. சிதறி செம்முத்துக்களாக பரக்கிறது. மண்ணில் சாம்பலில் எரிதழலில் விழுகிறது. முலைப்பாலாக உண்ணப்பட்டது. எண்ணங்களாக விழைவுகளாக அச்சங்களாக வஞ்சங்களாக கனவுகளாக உடலுக்குள் குமிழியிட்டது. குமிழிகள். இங்கே சிதறிப்பரக்கையில் குருதிக்கு என்ன பொருள்? கோட்டைமேலிருந்து அலறி விழுபவனின் கைகள் துழாவித்துழாவிப் பற்றும் வெட்டவெளி. அவன் விழுந்து மண்ணிலறைபட்டு துடிதுடிக்கையில் அவன் மேல் வந்து விழுகிறான் அவன் தோழன். இரு உடல்கள். வெறும் இரு குருதிப்பைகள்.

என்ன இது? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறேன்? நூறடித்தொலைவைக்கூட என் புரவி கடந்திருக்கவில்லை. என் கைகள் நூறு அம்புகளை தொடுத்துவிட்டன. என் அம்புகளால் நூறுபேராவது விழுந்து உயிர்துறந்திருப்பார்கள். ஆனால் இங்கில்லாமல் இருந்து இவற்றை நோக்கிக்கொண்டிருக்கிறேன். என் ஆடிப்பாவை இங்கு நின்று கொந்தளிக்கிறது. என்னுடன் பிறந்தது. நான் இறக்கையில் தானுமிறப்பது. இங்கே என்னசெய்துகொண்டிருக்கிறேன்?

தன்முன் சென்ற வில்லவன் ஒருவன் விரைந்தோடும் புரவியின் மேலிருந்து அம்புபட்டு சரிந்து விழுவதை பூரிசிரவஸ் கண்டான். பூரிசிரவஸ்ஸின் புரவி அவனைக் கடந்துதாவி மேலே சென்றது. வில்லவனின் புரவி போர்க்கலை பயிற்றுவிக்கப்பட்டதாகையால் பின்னால் வந்த குதிரைகளை மோதாமல் முன்னால் ஓடியபடியே விலகிச்சென்று வளைந்து பின்னோக்கி திரும்பியோடியது. அதற்குள் இன்னொரு புரவியின் விலாவில் ஆவசக்கரத்தின் நீளம்பு பாய்ந்து இறங்கி சிறகு நடுங்கியது. அதன் விலாவில் தோல் துடித்தது. விசையுடன் எழுந்த முன்னங்கால் தசை விதிர்க்க பெரிய கழுத்து நரம்பு சுண்ட அது அம்பை நக்க விழைவதுபோல தலை வளைத்து அவ்விசையால் உடல் கோணலாகி முன்னால் விழுந்து கழுத்து அறைபட்டு பின்னங்கால்கள் லாடங்கள் தெரிய எழுந்து உதற மும்முறை தலை குத்தி உருண்டு சென்று விழுந்து புரண்டு எழுந்தது. அதன் ஆமையோட்டுக்கவசம் தெறித்து உருண்டு அதிர்ந்து சுழன்று அமைந்தது.

எரிந்துகொண்டிருந்த மரத்தடிமேல் விழுந்த குதிரை மேலும் அலறியபடி துடித்தெழுந்து மறுபக்கம் பாய்ந்து மீண்டும் விழுந்தது. அதன்மேலிருந்து குதித்த வில்லவன் பின்னால் வந்துகொண்டிருந்த குதிரைகளின் காலில் படாமல் விலகி ஓடினான். மண்ணில் விழுந்து துடித்த குதிரையை தாவிக்கடந்தபடி மற்றகுதிரைகள் கனைத்துக்கொண்டே முன்னால் ஓடின. தன் முன் மேலும் இரு வீரர்கள் அம்புபட்டு விழுவதை பூரிசிரவஸ் கண்டான். ஒருவனை பின்னால் வந்த புரவி மிதித்து துவைத்து மேலே சென்றது. அலறல்கள் எங்கோ என ஒலித்தன. பெருமுரசுகள் உடலுக்குள் புகுந்து விம்மின. எங்கோ ஒலித்த சங்கு செவிக்குள் புகுந்து தலையை நிறைத்தது.

போர்ப்புரவிகள் வெறிகொண்டிருந்தன. அனலையும் அம்புகளையும் அவை அப்போது அஞ்சவில்லை. முன்னால் செல்வதற்காக அவற்றை தூண்டவே வேண்டியிருக்கவில்லை. கர்ணன் கோட்டைக்கு அப்பால் மறைந்தான். வால் சுழலும் கவசப்புரவிகள் ஒவ்வொன்றாக புகைத்திரையைக் கிழித்து உள்ளே சென்று மறைந்தன. அங்கே கர்ணனின் அம்புகள் பட்டு விழும் வீரர்களின் ஒலிகளை கேட்கமுடிந்தது. பெருமுரசொன்றின் அதிர்வுக்குப்பின் கொம்பொலிகள் எழுந்தன. அங்கே ஒரு படை நின்றிருக்கிறது.

அஸ்தினபுரியின் பெரும்படகுகள் காம்பில்யத்தின் எரியும் துறையை அணுகி அனல் தொடாதபடி நீருக்குள் நின்றுகொண்டு கோட்டைமேலிருந்த காவல்மாடங்களை நோக்கி அம்புகளை செலுத்தின. சதக்னிகளின் எரியுருளைகள் தலைக்குமேல் முழங்கியபடி சென்று கோட்டைமேல் விழுந்து வெடித்து அனல்குழம்புகளை சிதறடித்தன. கோட்டைமேலிருந்த காவல்மாடங்களனைத்தும் எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்த சதக்னிகளும் எண்ணைக் கலங்களும் பற்றிக்கொண்டு வெடித்து எரியத்தொடங்கின. கோட்டைமேலிருந்த வில்லவர்கள் மறுபக்கம் படிகளினூடாக இறங்கி ஓடினர்.

கோட்டைமேலிருந்து அம்புகள் நின்றதும் பின்பக்கம் துரியோதனனின் சங்கொலி எழுவதை பூரிசிரவஸ் கேட்டான். அஸ்தினபுரியின் காலாள்படைகள் போர்க்கூச்சலிட்டபடி தீயும் புகையும் நிறைந்த துறைமேடையில் ஏறி ஓடிவந்தன. ஒரு கணம் திரும்பி நோக்கிவிட்டு அவன் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே சென்றான். அவனுக்குபின்னால் புகைக்கதவுகள் மூடிக்கொண்டன. முன்னால் அலையடித்த படைக்கலங்களின் அசைவுகளை போர்க்குரல்களை மரணக்கூச்சல்களை வெயிலை புழுதியை எரிமணத்தை குருதிமணத்தை ஒரேகணம் அவன் எதிர்கொண்டான்.

கோட்டைவாயிலுக்கு அப்பால் காலையொளி எழுந்திருந்தது. காம்பில்யத்தின் பன்னிரு அடுக்குகொண்ட காவல்கோட்டங்களின் நிழல்கள் நீண்டுவந்து கோட்டை மேல் விழுந்து மடிந்திருந்தன. அவற்றில் இருந்து நிழலம்புகள் எழுந்து ஏதோ திசை நோக்கிச் சென்று மடிந்தன. தொலைவில் குவைமுகடுகள் கொண்ட சுங்கமாளிகைகளும் படைத்தலைவர் மாளிகைகளும் அதற்கப்பால் எழுந்த செந்நிறக் கதிரொளியில் நிழலுருக்களாக தெரிந்தன. காம்பில்யத்தின் நகர்மையத்திற்குள் செல்லும் இரு பெருஞ்சாலைகளிலும் பாஞ்சாலப்படையினர் அணிவகுத்து அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தனர். மாளிகைகளின் உப்பரிகைகளிலும் காவல்கோட்டங்களின் முகடுகளிலும் இருந்து வில்லவர் அம்பெய்தனர்.

அவனுக்கு சிலகணங்களுக்கு முன்னர் உள்ளே புகுந்திருந்த கர்ணன் தன் அம்புகளால் முன்னணியில் நின்ற பாஞ்சாலர்களை வீழ்த்தியபடி பாய்ந்துசென்று பாஞ்சாலத்தின் படைகளை மோதி சிதறடித்துவிட்டிருந்தான். உப்பரிகைகளில் இருந்தும் காவல்கோட்டங்களில் இருந்தும் அவன் அம்புகள் பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்தனர். கர்ணன் கைகளைத் தூக்கி தன் பின்பக்கத்தை காக்கும்படி பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிக்கொண்டு முன்னேறினான். கர்ணனை குறிவைத்து வில்லெடுத்த ஒவ்வொருவரையும் தன் அம்புகளால் வீழ்த்தியபடி பூரிசிரவஸ் தொடர்ந்தான்.

கொம்புகளும் முரசுகளும் ஒலிக்க தனக்குப்பின்னால் துரியோதனனின் காலாள்படைகள் நுழைந்ததை பூரிசிரவஸ் கேட்டான். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் வீரர்கள் அணியணியாக உள்ளே வந்தபடியே இருந்தனர். உலோகக் கவசமணிந்து கையில் கதையுடன் துரியோதனன் வர அவனுக்குப்பின்னால் துச்சாதனன் இடப்பக்கம் காத்துக்கொண்டு வந்தான். கர்ணனின் குதிரைப்படை பாஞ்சாலப்படையை இரு கதிர்களாக வகுந்தபடி முன்னால் செல்ல அந்த இடைவெளியில் துரியோதனனின் காலாள்படை உள்ளே புகுந்தது. உரக்க நகைத்தபடி தன் நீண்டகதாயுதத்தால் தலைகளை உடைத்துக்கொண்டு முன்னால் சென்றான். அவன் உடல் மதம் கொண்டு ததும்பியது. இரும்புக்கவசம் காலையொளியில் வெட்டி வெட்டி மின்னியது.

அவர்களுக்குப்பின்னால் துச்சலனின் தலைமையில் படகுகள் அனைத்தும் எரிந்து உடைந்து சரிந்த துறைமேடையை அணுகி நிற்க அவற்றிலிருந்து சதக்னிகளையும் ஆவசக்கரங்களையும் இறக்கி உருளைகளில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர். அவை நிலைகொண்டதுமே அம்புகளையும் எரியுருளைகளையும் ஏவத்தொடங்கின. அவர்களின் தலைக்குமேல் பறவைக்கூட்டங்கள் போல முன்னும் பின்னும் அவை பறந்துகொண்டிருந்தன.

ஒன்றுடன் ஒன்று முட்டி இருமுனைகளுமே உடைந்து மரச்சிம்புகளாகித் தெறிக்க ஒன்றுக்குள் ஒன்று உள்ளே செல்லும் நாவாய்கள் போல இரு படைகளும் ஆயின. அந்த உடைவுமுனையில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை. கர்ணன் கைகளைத் தூக்கியதும் அவன் கொம்பூதியின் ஓசை எழுந்தது. வில்லவர்கள் ஐவர் ஐவராக அணிபிரிந்து விலகி வலைபோல மாறி காம்பில்யப்படைகளை எதிர்கொண்டனர். அவர்களின் அம்புபட்டு வீழ்ந்த பாஞ்சாலர்களின் மீது ஏறிக்குதித்து முன்னால் சென்றனர்.

பூரிசிரவஸ் வலப்பக்கத்து காவல்கோபுரத்தை தொடர்ச்சியாக அம்புகளால் தாக்கி அங்கிருந்த அனைவரையும் வீழ்த்தினான். அஸ்தினபுரியின் வில்லவர்கள் பாய்ந்து அதில் ஏறிக்கொண்டு அதன் வளைந்த சிறிய மாடங்களில் தோன்றி காம்பில்யப்படைகளை நோக்கி அம்புகளை தொடுத்தனர். அந்த முதல்வெற்றியை அஸ்தினபுரியின் வீரர்கள் கூவி ஆர்த்து கொண்டாடினர்.

போரின் ஒலிப்பெருக்கு ஏன் அலையடிக்கிறது என்று பூரிசிரவஸ் வியந்தான். ஒவ்வொரு எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஓசையாகவே கேட்டறிய முடிந்தது. அப்படியென்றால் அந்த மொத்தப் படையும் ஒன்றாகவே இருக்கிறது. அது ஒவ்வொன்றையும் காண்கிறது. ஒவ்வொரு வீரனும் தன் இலக்கை தன்னந்தனியாகவே அடைகிறான். தனிமையிலேயே இறக்கிறான். ஆனால் அவர்களனைவரும் இணைந்து ஒன்றாகவும் இருக்கிறார்கள். இப்போது நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் கைகளும் கண்களும் படைகளில் கலந்துள்ளன. இந்த ஆழத்தில் என்னுள் நின்று ஒரு சிறுவன் கிளர்ச்சிகொண்டு கொந்தளிக்கிறான்.

பேரோசையைக் கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். பாஞ்சாலப்படைகளுக்கு அப்பால் குரங்குக்கொடி பறக்கும் பொன்னிறத்தேரில் வந்த அர்ஜுனனைக் கண்டு கர்ணன் நாணோசை எழுப்பியபடி தன் வெண்புரவியில் விரைந்துசென்றான். அவனைச்சூழ்ந்து அவன் வில்லவர் சென்றனர். பூரிசிரவஸ் தன் வில்லை ஒலித்தபடி புரவியைச் செலுத்தி கர்ணனின் வலப்பக்கத்தை காத்துக்கொண்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அதே கணத்திலேயே அவர்களின் அம்புகளும் காற்றில் ஒன்றையொன்று மறித்து உடைந்து தெறித்தன.

அர்ஜுனனும் கர்ணனும் பொருதத் தொடங்கிய முதற்கணம் அங்கிருந்த அத்தனை படைவீரர்களும் போரை நிறுத்தி விழிதிகைத்து நோக்கி நின்றனர். இருவரின் விற்களிலிருந்தும் அம்புகள் எழுந்து மோதிச் சிதறின. அம்புகளின் உலோக அலகுகள் மோதி விண்ணில் பொறி தெறிப்பதை பூரிசிரவஸ் முதல்முறையாகக் கண்டான். சிலகணங்களுக்குள் பேரோசையுடன் இருபடைகளும் மீண்டும் மோதிக்கொள்ளத் தொடங்கின.

அர்ஜுனனுக்கு வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் நகுலனும் வில்லேந்தி வந்தனர். துரியோதனன் தன் கதையை வீசிவிட்டு வில்லை வாங்கிக்கொண்டு தருமனை எதிர்கொண்டான். பூரிசிரவஸ் நகுலனுடன் பொருதினான். போரை விற்களே நிகழ்த்திக்கொண்டன. பாதாளநாகங்கள் உடலில் குடியேறியதுபோல அவை விம்மி நெளிந்து துள்ளி நடனமிட்டன. மூன்றடுக்குகளாக வெளி கொந்தளித்தது.அ ம்புகளால் ஆன கூரைக்குக் கீழே மனித உடல்களின் அலை. அதற்கு அடியில் கீழே விழுந்து துடிக்கும் உடல்களின் நெளிவு.

நெடுந்தொலைவில் என கொம்புகளும் முரசுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் கிழக்குவாயிலையும் வடக்குவாயிலையும் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே பாஞ்சால இளவரசர்களும் பீமனும் சகதேவனும் அவர்களை எதிர்கொள்கிறார்கள். மூன்று பெருங்கழிகளால் அறையப்படும் மூன்றுமுக முரசு. மூன்று வேங்கைகளால் தாக்கப்படும் யானை. அது முழங்கி அதிர்ந்தது. அஞ்சியும் சினந்தும் பிளிறியது.

போர் தொடங்கி மிகக்குறைவான நேரமே ஆகியிருக்கிறது என்று திடீரென்று பூரிசிரவஸ் உணர்ந்தான். முழுநாளும் சென்று மறைந்தது போலிருந்தது. நெடுங்காலமாக அங்கே அப்போரே நிகழ்ந்துகொண்டிருப்பது போல தோன்றியது. போரிடும் படைகளின் நிழல்கள் கோட்டைச்சுவரில் சுழன்றாடின. அதில் வெயிலின் செம்மை மறைந்து வெள்ளிப்பெருக்காகியது. மின்னும் படைக்கலங்கள் அதில் நூறுநூறு சிறு மின்னல்களை உருவாக்கின.

மத்தகங்கள் முட்டிக்கொள்ளும் மதயானைகள் போல இருபடைகளும் மோதி உறைந்து நின்றன. திரும்பி நோக்கியபோது பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் படைகள் முன்னால்செல்வதை உணர்ந்தான். கர்ணனின் அம்புவெள்ளத்தை தடுக்கமுடியாமல் அர்ஜுனனின் தேர் அறியாமலேயே பின்னால் சென்றது. தோளில் துரியோதனின் அம்புபட்டு தருமன் தேர்த்தட்டில் சரிந்து விழுந்தான். பாஞ்சாலப்படைகள் பெருங்கூச்சலுடன் அவன் தேரை சூழ்ந்துகொண்டன. களிவெறியுடன் சிரித்துக்கொண்டு துரியோதனன் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி தருமனை நோக்கி சென்றான். தருமனைப் பாதுகாத்தபடி பாஞ்சாலர்கள் பின்னால் செல்ல அங்கே உருவான வளைவை அஸ்தினபுரியின் காலாள்படைகள் நிறைத்தன.

அர்ஜுனன் திரும்பி தருமனை நோக்கி ஏதோ சொல்லமுயன்ற கணத்தில் அவன் தொடையிலிருந்த இரும்புவலைக் கவசத்தின் இடைவெளியில் கர்ணனின் அம்பு தைத்தது. பாஞ்சாலப்படைகள் திகைத்து கூச்சலிட்டன. அர்ஜுனன் தேர்த்தூணில் சாய்ந்தபடி நிற்காமல் முன்னேறும்படி தன்படைகளை நோக்கிக் கூவியபடி வெறியுடன் அம்புகளைத் தொடுத்தான். அவனுடைய வில் உடைந்து தெறித்தது. அவனை நோக்கி நகுலன் பாய்ந்து வர நகுலனின் தலைக்கவசத்தை பூரிசிரவஸ்ஸின் அம்பு உடைத்தெறிந்தது.

அர்ஜுனனின் தேரோட்டி தேரை பின்னோக்கி செலுத்தினான். அர்ஜுனன் பின்னடைந்தபோது மொத்த பாஞ்சாலப்படையும் இழுபடும் வலைபோல அவனுடன் சேர்ந்து பின்னால் சென்றது. கர்ணன் கைகாட்ட அவனுடைய கொம்பூதி முன்னேறும்படி அறைகூவினான். அர்ஜுனன் மீண்டு எழமுடியாதபடி அம்புகளால் அவனை சூழ்ந்துகொண்டு கர்ணன் முன்னால் சென்றான். அர்ஜுனன் உடல் இயல்பாக அசைந்து அம்புகளைத் தவிர்த்தது. ஒரு கணம் அவன் உள்ளம் பதறினால்போதும் அவன் நெஞ்சை கர்ணனின் அம்புகள் தைத்துவிடும் என்று பூரிசிரவஸ் அறிந்தான்.

ஒரு கணம். அச்சமோ தளர்வோ ஒரு கணம். அந்தக்கணத்தில் அனைத்தும் முடிந்துவிடும். அந்தக்கணம் மிக மிக அருகே நின்றிருந்தது. கண்ணெதிரே ஒளிவிட்டு கை தொட விலகும் நீர்க்குமிழி போல. ஒரு கணம். ஒருகணம். ஒருகணம்... அம்புகள் எழுந்து எழுந்து கடந்தன. சிறுபூச்சிகளால் சூழப்பட்ட காட்டெருதுகள் போலிருந்தனர் இருவரும். ஒருகணம். நகுலனை தன் அம்புகளால் தடுத்து அர்ஜுனனை நெருங்கவிடாது செய்தபடி பூரிசிரவஸ் அர்ஜுனன் விழிகளையே நோக்கினான். விழிகள் அத்தனை அண்மையில் வந்தன. தொட்டுவிடலாமென. ஓவியத்தில் எழுதி விரித்தவை என. அவற்றில் தெரிந்தது உலோகம். உணர்வற்றது. உயிரற்றது.

உலோகம் அல்ல. அது திரை. அப்பால் இருக்கிறது அவன் உள்ளம். அங்கே அச்சம் எழவில்லை. ஆனால்... ஆம், திகைப்பு. ஒருகணம் அங்கே மின்னி மறைந்த திகைப்பைக் கண்டு பூரிசிரவஸ்ஸின் உள்ளம் துள்ளியது. வில்லை ஏந்திய கைகள் நடுங்கின. திகைப்பு. திகைப்புதான் அது. இதோ அதுவும் உடையும். ஒரு கணம்.... அர்ஜுனன் தோற்கப்போகிறான். பெரும்புகழ் பார்த்தன். வில்லேந்திய இந்திரன்... திகைக்கிறான். திகைப்பு அகலும் இக்கணத்தில் இதோ...

அவன் அகம் நிலையழிந்த கணத்தில் நகுலனின் அம்பு அவன் மார்புக்கவசத்தை உடைத்தது. மறுகணமே அவன் திரும்பி நகுலனின் வில்லை உடைத்தெறிந்தான். நகுலன் தன் தேர்த்தூணுக்குப்பின்னால் செல்வதற்குள் அவன் தோளில் பூரிசிரவஸ்ஸின் அம்பு தைத்தது. அப்போது தன்னைச்சூழ்ந்த அமைதியை பூரிசிரவஸ் கேட்டான். படைகள் அசைவிழந்திருந்தன. அத்தனை விழிகளாலும் அந்தச்சூழல் கர்ணனையும் அர்ஜுனனையும் நோக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி தழலென நெளிந்தாடினர். அவர்கள் நடுவே அம்புகளால் ஆன ஒரு பாலம் காற்றில் நின்றிருந்தது.

பெருமரமொன்று கிளையோலத்துடன் சரிந்துவிழுவதுபோல படைகள் எழுப்பிய அமலை கேட்டது. சில கணங்களுக்குப்பின்னர்தான் அது கிழக்குவாயிலில் என்று பூரிசிரவஸ் உணர்ந்தான். அங்கே பெருமுரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டன. தத் தத் ததா! தத் தத் ததா! தத் தத் ததா! வெற்றிமுரசு! அஸ்தினபுரியின் படையின் ஒட்டுமொத்தப் படைக்கலங்களும் ஒரே கணத்தில் சரிவதை பூரிசிரவஸ் கண்டான். “ஜயத்ரதன்!” என்று எவரோ கூவினர் “சைந்தவர் பின்வாங்கிவிட்டார்” என்று இன்னொரு குரலெழுந்தது. தன்னையறியாமலேயே அஸ்தினபுரியின்படை ஒரு எட்டு பின்னடைந்தது.

மரக்கிளைகளில் நீர்த்துளிகளென ததும்பி நின்ற பாஞ்சலாப்படையை அந்தச் சிறிய அசைவு தூண்டியது. அவர்கள் படைக்கலங்களைத் தூக்கியபடி அமலையாடிக்கொண்டு முன்னால் பாய்ந்தனர். கர்ணன் திரும்பி நோக்கிய கணம் அவன் வில் உடைந்து தெறித்தது. அவன் விரைவாக புரவியில் திரும்பி அருகே நின்ற வீரனின் வில்லை எடுத்துக்கொண்டபோது அவன் புரவியின் விலாவில் அர்ஜுனனின் வில் பாய்ந்தது. புரவியில் கையூன்றி காற்றில் எழுந்து பாய்ந்து அருகிருந்த வீரனின் புரவியில் ஏறிக்கொண்டு கர்ணன் திரும்பி அம்புவிட்டு அர்ஜுனனை தடுத்தான். ஆனால் அதற்குள் அஸ்தினபுரியின்படைகள் பின்னடைந்து விட்டன. கர்ணனையும் பூரிசிரவஸ்ஸையும் பாஞ்சாலப்படைகள் சூழ்ந்துகொண்டன.

வடக்குவாயிலிலும் பேரோசை எழுந்தது. அங்கும் பசியடங்கிய சிம்மம்போல வெற்றிமுரசு ஒலிக்கத்தொடங்கியது. அஸ்தினபுரியின் படைகள் சிதறித்திரும்பி ஓடி கோட்டைவாயிலருகே ஒடுங்கி வெளியே பீறிட்டுச்சென்றன. துரியோதனனின் கொம்பூதி அவர்களை நிறுத்தும்பொருட்டு கூவிக்கொண்டே இருந்தான். கைகளை வீசி துரியோதனன் கூச்சலிட்டான். அவன் ஆணையிடுவதைக் கேட்டு துச்சாதனன் படைகளைக் கடந்து சென்று கைவிரித்து நின்று அவர்களை செறுக்க முயன்றான். மறுபக்கம் கைவிடுபடைகளின் அருகே நின்ற துச்சலன் கொடியை வீசியபடி அவர்களுக்கு ஆணையிட்டான்.

ஆனால் அவர்கள் எதையுமே அறியவில்லை. படை என்பது ஒரு விலங்கு என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். அது திரும்பிச்செல்ல முடிவெடுத்துவிட்டிருந்தது. கரையுடைந்த வெள்ளம்போல அது ஒழுகிச்சென்று துறைமேடையில் பரவி படகுகளை நோக்கி சென்றது. இரு விளிம்புகளும் பிரிந்து கங்கைக்கரைக் குறுங்காடுகளை நோக்கி ஒழுகியிறங்கின.

அப்போதும் உச்சவிரைவுடன் கர்ணனும் அர்ஜுனனும் போர் புரிந்துகொண்டிருந்தனர். “மூத்தவரே” என்று பூரிசிரவஸ் அழைத்தான். கர்ணன் அதை கேட்கவில்லை. அவனைச்சூழ்ந்து பாஞ்சாலத்தின் நூற்றுக்கணக்கான வில்லவர்கள் தங்கள் அம்புகளை குறிநோக்கிவிட்டதையும் அவன் அறியவில்லை. பூரிசிரவஸ் வில்லைத் தாழ்த்தி “மூத்தவரே” என மீண்டும் அழைத்தான். கர்ணன் அப்போதுதான் தன்னை உணர்ந்து திரும்பி நோக்கினான். ஒருகணத்தில் அனைத்தையும் புரிந்துகொண்டான். அவன் வில் தாழ்ந்தது. மறுபக்கம் அர்ஜுனனும் புன்னகையுடன் தன் வில்லைத் தாழ்த்தினான். பாஞ்சாலப்படைகள் ஒற்றைபெருங்குரலாக வெடித்தெழுந்தன.

கர்ணன் கூரிய அம்பொன்றை தன் கழுத்தை நோக்கி மேலெடுத்த கணம் துரியோதனன் “கர்ணா, நில்” என்று கூவினான். “வேண்டாம்... உன் உயிரை நீ எனக்களித்திருக்கிறாய்.” கர்ணனின் கையில் அந்த அம்பு சிலகணங்கள் நின்று நடுங்கியது. பின் அதை கீழே போட்டுவிட்டு பற்களைக் கடித்தபடி தோள்களை குறுக்கிக்கொண்டு அவன் தலைகுனிந்தான்.

கோட்டையின் வலப்பக்க வழியில் பாஞ்சாலப் படைப்பிரிவு முரசொலியும் கொம்பொலியும் துணைக்க அமலையாடியபடி வந்தது. அதன் முகப்பில் புரவியில் வந்த பீமனையும் சகதேவனையும் பூரிசிரவஸ் கண்டான். அங்கு நிகழ்ந்ததை அவர்கள் ஓசையிலிருந்தே அறிந்திருந்தனர். தலைகுனிந்து நின்ற கர்ணனைக் கண்டதும் பாஞ்சாலர்கள் கூச்சலிட்டு நகைத்தபடி படைக்கலங்களை வானில் வீசிப்பிடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

பாஞ்சாலப்படைகளால் சூழப்பட்டு கதைதாழ்த்தி நின்ற துரியோதனன் பீமனை நோக்கவில்லை. ஆனால் அவன் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலாலும் பீமனைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான் என்று பூரிசிரவஸ் நினைத்தான். அவன் பெருந்தோள்கள் தளர்ந்தன. விழுந்துவிடுவான் என்பதுபோல மெல்ல ஆடினான். அவனுக்குப்பின்னால் துச்சாதனன் அப்போதும் கதை தாழ்த்தாமல் நின்றுகொண்டிருந்தான். பீமன் அப்பால் தன் புரவியை நிறுத்திவிட்டு இடையில் கைகளை வைத்துக்கொண்டு அதன்மேல் அசையாமல் அமர்ந்திருந்தான்.

தோளில்வழிந்த குருதியை மரவுரியால் அழுத்திப்பிடித்தபடி தருமன் தேர்த்தட்டில் ஏறி நின்றான். அவனைக்கண்டதும் அமலையோசை அடங்கி படை அமைதிகொண்டது. அர்ஜுனனிடம் “இளையோனே, இது போரல்ல, போர்விளையாட்டு மட்டுமே” என்றான். திரும்பி துரியோதனனிடம் “சுயோதனா, இதோ நீ என்னை வென்றிருக்கிறாய். நீ விழைந்ததுபோல் என் குருதி இங்கே விழுந்திருக்கிறது. இந்த விளையாட்டை முடித்துக்கொள்வோம். சென்றுவா” என்றான்.

துரியோதனன் நிமிர்ந்து தருமனை நோக்கினான். “சுயோதனா, இதை உன் இளையோரின் விளையாடலாகக் கொள்க! ஒருபோதும் இதை ஒரு போர்வெற்றி என எங்கள் சூதர்கள் பாடமாட்டார்கள். இதன் பொருட்டு நீ எதையும் இழக்கப்போவதில்லை என நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். குடிமூத்தவனாக என் இளையோரை வாழ்த்திவிட்டுச்செல்” என்றான் தருமன் மீண்டும்.

துரியோதனன் கண்களைச் சுருக்கி உதடுகளை இறுக்கி அசைவில்லாது நின்றான். பெருவெள்ளம் ஓடும் நதி என அவன் உடற்தசைகள் இறுகி நெளிந்தன. கழுத்தில் நரம்புகள் இறுக தலை மட்டும் அசைந்தது. பூரிசிரவஸ் “ஆம் இளவரசே, இது ஒரு விளையாட்டுப்போரென்றே இருக்கட்டும்... தம்பியரை வாழ்த்துங்கள்” என்றான். அச்சொற்கள் நீரில் இலைகள் விழும் அசைவை துரியோதனன் உடலில் உருவாக்கின.

தருமன் திரும்பி நோக்கியதும் அர்ஜுனனும் நகுலனும் விற்களை தேர்த்தட்டில் வைத்து துரியோதனனை வணங்கினர். துரியோதனனின் வலக்கை வாழ்த்துவதற்காக எழப்போவதை பூரிசிரவஸ் கண்டான். ஆனால் மறுகணம் அவன் திரும்பி அருகே நின்ற புரவியில் ஏறிக்கொண்டு விரைந்தோடிச்சென்றான். அவன் சென்றவழியில் பாஞ்சாலப்படை பிளந்து விலகியது. ஒருகணம் கர்ணனை நோக்கியபின் அவ்வழியே துச்சாதனனும் சென்றான்.

பூரிசிரவஸ் “மூத்தவரே” என்று கர்ணனை அழைத்தான். அந்த அழைப்பை ஓர் உடல் உலுக்கலுடன் அறிந்த கர்ணன் திரும்பி அவனை நோக்கினான். அந்த விழிகளைக் கண்ட பூரிசிரவஸ் நெஞ்சதிர்ந்தான். அவை இரு கூழாங்கற்களென உயிரற்றிருந்தன. முகம் சடலமெனத் தெரிந்தது. ஏதோ ஒன்று அவனுள் சொல்ல அவன் நிமிர்ந்து நோக்கினான். மூன்றாவது காவல்மாடத்தின் பன்னிரண்டாவது மாடவளைவில் செவ்வண்ணப் பட்டுச்சேலையின் அசைவு தெரிந்தது.

பூரிசிரவஸ் கர்ணனின் புரவியின் கடிவாளத்தை ஒரு கையால் பற்றி அதைத் திருப்பிக்கொண்டு தன் புரவியை உதைத்தான். இரு புரவிகளும் பாஞ்சாலப்படை நடுவே சென்றபோது வீரர்கள் விலகி விரிந்தனர். சடலத்தை ஏந்திச்செல்வதுபோல கர்ணனின் புரவி சீரான பெருநடையில் சென்றது. தனக்குப்பின்னால் பாஞ்சாலப்படைகளின் களிக்கூச்சலை பூரிசிரவஸ் எதிர்பார்த்தான். ஆனால் கற்சிலைக்குவியலென நின்றிருந்தது பாஞ்சாலப் படை.

பகுதி 8 : பெருவாயில்புரம் - 1

நெடுந்தொலைவிலேயே துவாரகையின் கடல்நோக்கி எழுந்த பெருவாயிலின் பின்பக்கத்தை காணமுடியும் என்று சாத்யகி கேட்டிருந்தான். முன்பக்கம் இரண்டு பசுக்களின் நடுவே யாதவர்களின் குலக்குறியான பன்னிரு ஆரங்கள் கொண்ட வெண்சக்கரம் இருக்கும். பின்னாலிருந்து பார்க்கையில் அவ்விரு பசுக்களும் சிம்மங்களாக வாய்திறந்திருக்க நடுவே செந்நிறவிழிக்கற்களுடன் செம்பருந்து சிறகு விரித்திருக்கும்.

"கடல்நோக்கி புன்னகைக்கும் அந்தவாயில் கரைநோக்கி சினந்திருக்கும். அது இளைய யாதவன் பாரதவர்ஷத்திற்கு விடும் செய்தி” என்று குலமூத்தாரான மதுபர் சொன்னார். “கடல்நோக்கி எழுந்த பெரும்பாறைமேலிருக்கிறது அந்த வாயில். நிலத்திலிருந்து நோக்கும்போது அது ஒளிமிக்க தெற்குவானை நோக்கி திறந்திருக்கும். விண்ணவர் வந்திறங்க வானம் திறந்து வாயிலானதுபோல.” உணர்ச்சியால் நடுங்கும் குரலுடன் கைகளைத் தூக்கி “அது விண்ணவர் நகரம்! மண்ணில் எழுந்த விண்ணுலகு” என்றார்.

துவாரகையைப்பற்றி அவன் மிகஇளமையிலேயே கேட்டிருந்தான். நெடுந்தொலைவில் தெற்குக் கடல்முனையில் யாதவர்களுக்கென்றே உருவாகும் மாநகரம் பற்றி யாதவகுலப்பாடகர்கள் அத்தனை குலக்கூடல்களிலும் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் துவராகையைப்பற்றிய புதியசெய்தியுடன் சூதர்கள் வந்தனர். சூதர்கள் பாடிச்சென்றவற்றை யாதவப்பாடகர்கள் கற்பனைசெய்து விரித்தெடுத்து அடர்காடுகளுக்குள்ளும் புல்வெளிகளிலும் வாழ்ந்த மேய்ச்சல்குழுக்களுக்கு கொண்டுசென்றனர். மீண்டும் மீண்டும் துவாரகையைப்பற்றிய கதைகளைக் கேட்டும் எவரும் சலிக்கவில்லை. ஒரே கதை வெவ்வேறு வடிவங்களில் அவர்களிடம் வந்தபோதும் அவற்றை விரும்பினர்.

துவாரகைக்குமேல் கடலின் துமி எப்போதும் மழையென பெய்துகொண்டிருப்பதனால் அங்கே வெயில் வெம்மை படிவதேயில்லை என்றனர் சூதர். கூம்பிய அல்லிமொட்டுகள் என எழுந்த வெண்ணிறமான குவைமாடங்கள் எந்நேரமும் நீர்வழிந்து மின்னிக்கொண்டிருக்கும். தழல்நிறக்கொடிகள் பறக்கையில் நீர்த்துளிகள் பொற்சிதறல்களாக மின்னித்தெறிக்கும். துவாரகையின் தெருக்களெல்லாம் தூயவெண்சங்குகள் பதிக்கப்பட்டவை. மாளிகை முற்றங்களை வளைத்து கடல்நீர் ஓடும் தெளிந்த ஓடைகளில் இருந்து மீன்கள் துள்ளி புரவிகளின் கால்களுக்கு நடுவே பறக்கும். அங்கே குதிரைகள் அருந்த பெரும் ஆமையோடுகளில் நீர் தேக்கப்பட்டிருக்கும்.

மாடவீடுகளின் தூண்கள் வெண்பளிங்கால் ஆனவை என்பதனால் அவை கண்ணுக்குத்தெரியாமல் நின்றிருக்கும். நிறைநிலவென வெண்ணிற ஒளி பரவிய இல்லங்களில் அயலவர் கைகளை முன்னால் விரித்துத் துழாவியே நடக்கமுடியும். அங்கே வணிகச்சாலைகளில் ஏழுகடல்களுக்கு அப்பாலிருந்து வந்த பொருட்கள் குவிந்துகிடக்கும். வெண்பட்டுத்துணியால் யவனர் கட்டிய கூடாரங்கள் பாற்கடல் அலைகளென காற்றில் கொந்தளிக்கும். சோனகத்து லேபனங்களும் யவனத்து மதுவினங்களும் காப்பிரிநாட்டு ஊனுணவுகளும் இணைந்து மணக்கும்.

“ஆடகமும் கிளிச்சிறையும் சாதரூபமும் சாம்பூநதமும் தனித்தனியாக விற்கப்படும் கடைவீதிகள் கொண்ட மாநகரம் இப்புவியில் ஒன்றே” என்றார் சூதர். “நான்குவகை பொன்னா?" என்று முதியவரான ஃபௌமர் வியந்தார். “அவை வெவ்வேறாகத் தெரியுமா என்ன?”

சூதர் புன்னகைத்து யாழ்மீட்டலை நிறுத்தினார். “என் சொற்கள் அவற்றை காட்டவல்லவை அல்ல யாதவரே. ஆடகம் என்பது தூயபசும்பொன். அரைத்து உருட்டி உலரச்செய்த சந்தனம் போன்றது. வெறும் நகத்தாலேயே அதன் ஓரத்தை கிள்ளி எடுக்கமுடியும். கிளிச்சிறை சற்றே செம்பு கலந்து எரிதழலின் அழகுகொண்டது. சாதரூபம் மேலும் செம்புகலந்து கனல்போல் செம்மை மின்னுவது. சாம்பூநதம் ஈயமும் கலந்து வெண்ணிற அழகியின் வெயில்படாத தொடைகளைப்போல மின்னுவது. நால்வகைப்பொன்னுடன் ஐந்தாவதாக வெள்ளியையும் சேர்த்து உருக்கிய உலோகத்தை ஐம்பொன் என்கிறார்கள். ஐம்பொன் சிலைகள் மின்னுபவை அல்ல. அவை உயிருள்ள உடல் என மிளிர்பவை. ஐம்பொன் சிலையாக நிற்கும் அழகியின் முலைகளின் வளைவில் அவள் காமம் சிலிர்ப்பதை காணமுடியும் அங்கே.”

கருநிலவிருள் படர்ந்து கடற்கரை மறையும் இரவுகளில் துவாரகையின் கடற்கரையில் கடற்சிங்கங்கள் பால்நுரைபோல் பிடரிமயிர் பறக்க அம்புமுனைகள் என மின்னும் பற்களுடன் உறுமியபடி ஏறிவரும் என்றனர். அப்போது கடற்கரையை அவற்றுக்காக முற்றிலும் ஒழித்துவிட்டிருப்பர். அவற்றின் நான்கு உகிர்களும் ஐந்தாவது பேருகிரும் பதிந்த காலடிகள் கரைமணல்கதுப்பில் காலையில் விரிந்திருக்கும். மறுநாள் அந்தக் காலடிச்சுவடுகளில் குருதிசொட்டும் மலரும் மஞ்சளரிசியும் இட்டு பூசனைசெய்வார்கள் கடலோடிகள்.

முழுநிலவு எழுந்து கடற்பாறைகள் ஒளிகொள்ளும் இரவுகளில் வெண்பட்டாடை என நெளியும் வால்களுடன் கடற்கன்னியர் அங்கு நீந்தி வருவார்கள். அம்பென நீரிலிருந்து எழுந்து துள்ளிச்சுழன்று அலைவட்டங்களுக்கு நடுவே விழுந்து மூழ்கி மறைவார்கள். பற்கள் ஒளிர கூவிச்சிரித்து களியாடுவார்கள். களைத்தபின் அலைசூழ்ந்த கடற்பாறைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து நிலவை நோக்குவார்கள். அவர்களின் கருநீலக் குழல் நீண்டு நீருள் விழுந்து பாசிக்கொடி என அலையடிக்கும்.

செவ்வைரங்கள் மின்னும் ஆமையோட்டுப் பேரியாழ்களை மடியில் வைத்து செண்பக மொட்டென குமிழ் எழுந்த குவைமுலைகள் மேல் சாய்த்து சிட்டுக்குருவி அலகுபோல் செந்நிற நகம் நீண்ட சிறுவிரல்களால் மீட்டி அவர்கள் பாடும் இசையை இரவில் விழித்து அமர்ந்திருந்தால் கேட்கமுடியும். ஓங்கி அறைந்து ஓலமிடும் கடலலைகள் அதைக்கேட்டு மெல்ல மெல்ல அமைந்து கடல் ஒரு கரிய பட்டுப்பரப்பென்றாகும். அந்த அமைதியில் அவ்விசையைக் கேட்கும் இளையோர் கண்மூடிய கனவில் அவர்களின் நீலச்சுடர்விழிகளை காணமுடியும். வைரத்திற்குள் நீரோட்டமென அவற்றுள் ஓடும் அழியாப்பெருங்காமத்தை அவர்கள் அறிவார்கள். பின்னர் அவர்கள் இல்லம்தங்குவதில்லை. பித்தெழுந்த விழிகளும் நடுங்கி சொல்லுதிர்க்கும் இதழ்களுமாக கடற்கரையில் அலைவார்கள். மறுநாள் நிலவில் அவர்கள் நீரலைகளுக்குள் சென்று மறைவார்கள்.

துவாரகைக்கு அருகே நீருக்கு அடியில் இன்னொரு துவாரகை உள்ளது என்றனர் கவிஞர். சென்றமகாயுகத்தில் மண்ணில் வாழ்ந்த முந்தைய கிருஷ்ணன் கட்டிய பெருநகர் அது. அலையவிந்த கோடைநாள் நடுப்பகல் ஒன்றில் நீலம் மறைந்த கடலுக்குள் மூழ்கிச்சென்று அதை கண்டுவந்த இளையயாதவன் அந்தப் பெருநகரின் வடிவிலேயே தன் நகரை அமைத்தான். நீலம் ஒளிவிட்ட நீருள் பச்சைப்பாசி படர்ந்து அலையொளிவாள்கள் சுழன்று சுழன்று பரவ விரிந்திருக்கும் தொல்துவாரகைக்குமேல் வெள்ளிவால்கள் அலைக்கழிய வெள்ளிச்சிறகுகள் துழாவ விழித்த பெருவிழிகளுடன் உகிர்ப்பற்கள் தெரியும் பசித்த வாய்களைத் திறந்து சுறாக்கள் மிதந்தலைந்தன. அவற்றின் மெல்லுடல் அங்கு விழிதிறந்து நகைத்து நின்ற கன்னியர்சிலைகளை தீராக்காமத்துடன் உரசிச்சென்றது.

மீன்நிழல்கள் பறந்து சென்ற முகடுகளுடன் பல்லாயிரம் ஆண்டுக் கடுந்தவத்தில் உறைந்திருந்தது தொல்துவராகைப்பெருநகர். அதற்கும் அப்பால் மேலும் ஆழத்திலிருந்தது அதற்கும் முந்தைய கிருஷ்ணனால் அமைக்கப்பட்ட ஆழ்துவாரகை. மானுட விழிகள் செல்லமுடியாத இருண்ட கடலாழத்தில் அது இருட்பாளங்களால் ஆன சுவர்களும் இருள்குமிழிகளால் ஆன குவைமாடங்களும் இருள்படிகளுமாக நின்றிருந்தது. இருளுக்குள் நீர்க்குமிழிகள் செல்லும் மெல்லிய ஒளியொன்றே இருந்தது. அந்தத் துளிவெளிச்சம் பட்டு விழிமின்னின கடலுண்ட மூதாதையரின் விழிமுனைகள்.

அதற்கும் அப்பால் இருட்டு செறிந்து கல்லென்றான ஆழத்தில் மேலுமொரு துவாரகை உண்டென்றனர் சூதர். இருட்டின் எடை அதை அழுத்தி அழுத்தி சிறியதாக ஆக்கிவிட்டிருந்தது. ஆழத்தில் வாழும் ஒளியறியா விழியிலிகள் தங்கள் இருண்ட மென்மயிர்க் கால்களால் பற்றி அதன் மேல் ஊர்ந்தன. அதன் சின்னஞ்சிறிய குவைமாடங்களில் வழுக்கி உள்ளறைகளுக்குள் தவழ்ந்தன. விரல்களேயான உடல்களால் சிலைகளை வருடி வருடி அறிந்தன. அறிந்தும் அறிந்தும் தீராமல் முடிவிலாது தவித்தன.

அதற்கும் அப்பால் செறிவே இருளென்றான பேராழத்தில் இருந்த துவாரகை அழுந்திக்குறுகி கையளவே ஆகிவிட்டிருந்தது. அதன் மாடங்களுக்கு மேல் அணுவடிவ சிற்றுயிர்கள் ஒட்டியிருந்தன. அதன் சிற்பங்கள் எறும்புருக்களாக மாற அதற்குள் முன்பு பேருருவம் கொண்டு நின்றிருந்த மூதாதை கிருஷ்ணனின் சிலை சிறு புழுவென நெளிந்து நின்றது. அதற்குமப்பால் அணுவடிவத் துவாரகை இருந்தது. அப்பால் கடலாழத்தின் மையத்தில் எங்கோ இருந்த முதற்துவாரகை ஏழ்கடல்களும் சுழிக்கும் உந்தியின் நடுவே ஓர் ஓங்காரமாக மட்டும் எஞ்சியிருந்தது.

சாத்யகி யமுனைக்கரையின் ரிஷபவனத்தில் இருந்து கிளம்பி பன்னிரு நாட்கள் அடர்காடுகள் வழியாக வந்து அதன்பின் தென்மேற்குக் கூர்ஜரத்தின் வெளிறிவறண்ட பெரும்பாலை நிலத்தை அடைந்தான். எட்டுநாட்கள் பாலைவழியாக பயணம் செய்து துவாரகையின் முகப்பை அடைந்தபோது அவன் நினைவிலிருந்தே ரிஷபவனமும் தன் குலமும் மறைந்துவிட்டிருந்தது. எண்ணமெல்லாம் துவாரகை மட்டுமே நிறைந்திருந்தது.

மரங்களை வெட்டிவிலக்கி பாறைபிளந்து எடுத்த கற்பாளங்களை சீராகப் பரப்பி காட்டுக்குள் பாதை அமைக்கப்பட்டிருந்தது. இருபது காதத்திற்கு ஓர் இடத்தில் யாதவர்களால் காக்கப்பட்ட அன்னவிடுதியில் இரவு தங்கவும் உணவுண்ணவும் புரவிக்கு புல்லிடவும் ஒருங்குசெய்யப்பட்டிருந்தது. பாலையில் பன்னிரு காதத்திற்கு ஓர் இடத்தில் சோலைவிடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விடுதியும் வில்லும் வாளுமேந்திய நூறு யாதவப்படையினரால் காக்கப்பட்டது. தொலைவிலேயே இடமறியும்படியாக அருகேநின்ற பெரிய மரத்தின் மீதிருந்த முழவன் குறுமுழவை முழக்கிக்கொண்டிருந்தான். விடுதிக்குமேல் உயர்ந்த முளையில் யாதவர்களின் கருடக்கொடி பறந்தது.

அத்தனை தொலைவையும் கடந்து மதுராவிலிருந்து கழுதைகளிலும் அத்திரிகளிலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வணிகர்கள் துவராகைக்கு சென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு விடுதியிலும் அவர்கள் பொதிவிலங்குகளை அவிழ்த்து மேயவிட்டுவிட்டு ஈச்சஓலைவேய்ந்த கொட்டகைகளில் மரப்பட்டைகளால் அமைக்கப்பட்ட மஞ்சங்களில் முதுகை விரித்துப் படுத்துக்கொண்டு உரக்க பேசிக்கொண்டிருந்தனர். அனைத்து இடங்களிலும் அவன் தன்னை யாதவப்படைவீரன் என்றே சொல்லிக்கொண்டான்.

அனைவரும் துவாரகையைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். செல்பவர்களும் வருபவர்களும் பேசிக்கொள்ள முடிவில்லாத செய்திகள் இருந்தன. ஆனால் அவை காட்டிய துவாரகை பெருநாவாய்கள் வந்து இறங்கும் துறைமுகமாக மட்டுமே இருந்தது. உத்கலத்திலோ தாம்ரலிப்தியிலோகூட துவாரகையில் வந்திறங்கும் அரும்பொருட்கள் வருவதில்லை என்றார் ஒரு முதியவணிகர். அவர் யவனமதுக்கலங்களை வாங்கி கங்காவர்த்தத்துக்கு எடுத்துச்சென்றுகொண்டிருந்தார். “அங்கே நால்வகைப் பொன்னுக்கும் நான்கு கடைத்தெருக்கள் உள்ளனவா?" என்று சாத்யகி கேட்டான். வீரஜர் நகைத்து “இளைஞனே, பொன் என்பது விற்கப்படுவதோ வாங்கப்படுவதோ அல்ல. அது வணிகத்தின் உட்பொருளென இலங்குவது. விற்கப்படாததும் வாங்கப்படாததுமான அதுவே இப்புவியில் மிகவும் கைமாறுகிறது” என்றார்.

”நான் கொண்டுசெல்வது கங்காவர்த்தத்தின் மதிப்பு மிக்க வாட்களை. இவற்றைச்செய்யும் முறையை இரும்புக்கொல்லர்கள் தங்கள் குலத்துக்குள் வைத்திருக்கிறார்கள்” என்று அவர் எடுத்துக்காட்டினார். “இவை உப்புநீரிலும் துருப்பிடிப்பதில்லை. பாறையை முட்டினாலும் முனைவளைவதில்லை. உச்சவெம்மையில் மட்டுமே உருகுகின்றன. இவற்றுக்காக சோனகர் பொன்னை நிகர்வைப்பார்கள்.” அந்தப்பொன்னை வாங்கி அதைக்கொண்டு யவனரின் மதுவை வாங்குவதாக அவர் சொன்னார். அந்தப்பொன்னைக்கொண்டு அவர்கள் துவாரகையின் கடைத்தெருக்களில் இருந்து அகில் சந்தனம் மிளகு யானைத்தந்தம் போன்றவற்றை வாங்குவார்கள்.

“இறுதியில் அந்தப்பொன் எவருமறியாமல் சென்று யாதவனின் கருவூலத்தில் அமர்கிறது. இன்று கருவூலத்தை பொன்னால் நிறைத்திருக்கும் ஒரே பேரரசன் அவனே. அந்தப்பொன்னே அவனுடைய பெரும்படையாகவும் நாவாய்களாகவும் ஆகின்றது. கலிங்கச்சிற்பிகளின் கைவண்ணம் பொலியும் மாளிகைகளாக ஆகின்றது. அங்கே சூதர்கள் பாடும் கதைகளும் கவிஞர்கள் யாக்கும் காவியங்களும் எல்லாம் அப்பொன்னில் எழுந்த நுரைகள் என்றே சொல்வேன்” உத்கலவணிகரான வீரஜர் சொன்னார்.

அன்றிரவு கொட்டகைக் கூரைமேல் பாலைக்காற்று வீழ்த்திய மணல்மழையின் ஓசையைக் கேட்டுக்கொண்டு மரப்பட்டைப் பலகையில் கண்மூடிக் கிடக்கையில் சாத்யகி தன் குடியை எண்ணிக்கொண்டான். அவனுடைய ஊரில் அவன் தந்தையிடமன்றி எவரிடமும் பொன் என ஏதுமிருக்கவில்லை. அவன் தந்தைக்கு பரிசாகக் கிடைத்த பொற்கலன்களை பட்டில் சுற்றி கருவூலத்தின் பெட்டிகளுக்குள் வைத்துவிடுவார்கள். என்றேனும் அவரோ பிற அரசகுடியினரோ அரசநிகழ்வுகளில் தோன்றும்போது மட்டும் எடுத்தணிந்துகொள்வார்கள். யாதவர்களின் நாணயம் என்பது பசுவே. ஆயிரம் வெண்பசுக்களுக்கு அழகிய இளம்கன்னியை வாங்கி மணம்கொள்ளமுடியும். இருபது பசுக்களுக்கு ஒரு இல்லம் நிகராகும். ஐம்பது பசுக்களுக்கு ஒரு படகு. அவன் அனைத்தையும் பசுக்களாகவே எண்ணப்பழகியிருந்தான்.

“பொன் என்பது கறக்காத பசு. ஆனால் குட்டிபோடுவது” என்றர் வீரஜர். “பசுக்கள் இறக்கும். பொன் இறப்பதில்லை. பசுக்கள் உணவூட்டும். பொன் உணவூட்டுவதுமில்லை.” சாத்யகி சிலகணங்கள் தயங்கிவிட்டு “வீரஜரே, பசுவைப்பேணுபவன் விண்ணுலகு செல்வான். பொன்னைப்பேணுபவன் செல்லமுடியுமா?"  என்றான். வீரஜர் அவ்வினாவை எதிர்பார்க்கவில்லை என அவரது மரப்பட்டை மஞ்சம் முனகியதிலிருந்து தெரிந்தது.

சற்றுநேரம் கழித்து இருளில் அவர் பெருமூச்சுவிட்டார். “அறியேன் இளைஞனே” என்றார். "என் வாழ்க்கை பொன்னைத் துரத்துவதில் கழிந்துவிட்டது. நீ கேட்டதை நான் எண்ணிப்பார்த்ததே இல்லை.” மறுநாள் அவன் விழித்தபோது விடியலிலேயே அத்தனை வணிகர்களும் சென்றுவிட்டிருந்தனர். கொட்டகையும் விடுதிச்சுற்றுப்புறமும் ஒழிந்துகிடந்தன. வினைவலர் கூட்டி குப்பைகளைப் பெருக்கி அகற்றிக்கொண்டிருந்தார்கள். அவன் தன் புரவி நோக்கி செல்லும்போது வீரஜரிடம் கேட்ட வினாவையே எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு புள்ளியில் எத்தனை எளிய வினா என்று தோன்றியது. காடுகளில் மாடுமேய்க்கும் யாதவன் மட்டுமே அதை கேட்கமுடியும்.

அவன் துவாரகையை அடையும்போது முன்னிரவு ஆகிவிட்டிருந்தது. தொலைதூரத்தில் இருட்டின் எல்லையின்மையே திசைகளாகச் சூழ்ந்த வெளிக்கு நடுவே எவரோ கணப்பிட்டு அணைக்காமல் போன கனல்குவை போல செந்நிற ஒளிப்புள்ளிகளாகத் தெரிந்ததுதான் துவாரகை என்று கண்டான். அவன் நின்றிருந்த உயரமற்ற மணல் மேட்டின்மேல் தெற்கிலிருந்து வந்த கடற்காற்று மோதிச் சுழன்று சென்றுகொண்டிருந்தது. அதில் நீரின் மணம் இருந்தது. காற்றில் வந்த மணல்பருக்கள் அவன் ஆடைக்குமேல் பொழிந்து உதிர்ந்தன.

காலையில் மேலும் எட்டுநாழிகை சென்றால்தான் துவாரகையின் கோட்டைமுகப்பை அடையமுடியும் என்று எண்ணிக்கொண்டான். புரவியை அவிழ்த்து விட்டுவிட்டு மணலில் தன் தோலாடையை விரித்து படுத்துக்கொண்டு விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். பாலைநிலத்தின் விண்மீன்கள் மிகப்பெரியவை. கொழுத்த மீன்கள் என்று வணிகர்கள் சொன்னார்கள். “பாலைநிலத்து விண்மீன்களை நோக்கியபடி துயிலாதே. அவற்றில் ஒன்று உன் தலையில் விழக்கூடும்” என்றார் வீரஜர். ”விண்மீன் விழுந்து இறந்த வணிகர்களை நான் அறிவேன்.”

முந்தைய விடுதியிலேயே அந்தியில் தங்கியிருக்கலாம் என எண்ணிக்கொண்டான். முன்மாலையிலேயே அங்கு வந்துவிட்டான். துவாரகையை நெருங்க நெருங்க உள்ளத்தில் எழுந்த எழுச்சியால் அங்கே தங்க அகம் ஒப்பவில்லை. புரவியை ஊக்கினால் இருளுக்குள் சென்று சேர்ந்துவிடமுடியும் என்று தோன்றியது. ஆனால் புரவி மிகவும் களைத்திருந்தது. துவாரகையை நெருங்க நெருங்க மணலின் இறுக்கம் குறைந்து பொருக்குகளாக இருந்தமையால் அதன் குளம்புகள் புதைந்தன. காற்றில் இருந்த ஈரம் இரவில் பனியாகப்படிந்து உருவான பொருக்கு அது என அவன் அறிந்தான். தொலைவில் துவாரகையின் விளக்குகள் தெரியத் தொடங்கும்போதே வானில் விண்மீன்கள் பழுத்துப்பிதுங்கி வந்து நின்றன.

மேலே பார்க்க அஞ்சினான். விண்மீன்களின் பெருவெளி. ஆனால் அவற்றில் ஒன்று விழுந்து அவன் தலை உடையக்கூடும். வியப்புதான். விண்மீன் விழுந்து ஒருவன் இறப்பதைப்போல விந்தையான பிறிது எது? வானம் நேரடியாகவே அவனை எடுத்துக்கொண்டிருக்கிறது. விண்மீன்களின் ஒளி நோக்க நோக்க கூடி வருவதாகத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு கண்ணுக்குள் எழுந்த விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான்.

அவன் விழித்துக்கொண்டபோது அவன் புரவி அவனருகே வந்து நின்றிருந்தது. காற்றில் வந்த மென்மணலால் அவன் உடல் முழுமையாகவே மூடியிருந்தது. விழித்தெழுந்தபின்னர்தான் அதுவரை கனவில் இருந்திருக்கிறோம் என்று அறிந்தான். என்ன கனவு என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சிந்தையை குவித்தாலும் எதையும் தொட்டு எடுக்கமுடியவில்லை.

எழுந்து ஆடைகளை நன்கு உதறிக்கொண்டு விடிமீனை தேடினான். அவன் ஊரில் விடிவெள்ளி பெரியதாக வெள்ளிச்சிமிழ் போல தனித்துத்தெரியும். பாலையில் அத்தனை விண்மீன்களும் பெரிதாகத் தெரிந்தன. அவன் புரவியின் உடலையும் துணியால் வீசி மண்ணைப்போக்கியபின் அதன்மேல் ஏறிக்கொண்டான். அது வாயை திறந்துமூடி நீர் அருந்த விரும்புவதை தெரிவித்தது.

மணல்சரிவில் இறங்கும்போது அவன் துவாரகையை நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக் கனல்குளம் அப்படியேதான் செவ்வொளி விட்டுக்கொண்டிருந்தது. வானம் நெடுந்தொலைவுவரை சென்று வளைந்து இறங்கி மண்ணைத்தொட்டிருந்தமையால் தூரத்துவிண்மீன்கள் மண்ணில் விழுந்து கிடப்பவை போல தோன்றின. நகரின் செவ்வொளிக்குவை விண்மீன்களுக்கு நடுவே தெரிந்தது.

இயல்பாக ஒரு முகம் நினைவில் வந்தது. அதன்பின்னர் அந்தக் கனவு. கனவில்தான் அவன் வந்தான். அவனை மிக அண்மையில் அவன் கண்டது கனவில்தான். அவன் குனிந்து ஒரு சடலத்தைப்பார்க்கிறான். தலை இருந்த இடத்தில் கருகிய ஊன்சிதறல்கள். அதைச் சிதறடித்த எரிவிண்மீன் அப்பால் பாலைமணலில் ஆழ இறங்கி புகை விட்டுக்கொண்டிருந்தது. இறந்தவனின் புரவி அஞ்சி உடல் சிலிர்த்துக்கொண்டும் சீறிக்கொண்டும் அருகே தலைகுனிந்து நின்றது. இறந்தவன் தோல்பையும் நீண்ட வாளும் வைத்திருந்தான்.

நோக்கி நின்ற இளைஞன் மேலும் குனிந்து கைகளால் இறந்தவனின் ஆடையை விலக்கி அவன் கச்சையையும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்த குலக்குறியையும் நோக்கினான். அவன் எவரெனப்புரிந்துகொண்டவன் போல நிமிர்ந்து வானில் எரிந்துகொண்டிருந்த விண்மீன்களை நோக்கியபின் தன் புரவியை நோக்கி சென்றான். அவன் புரவி மணல் குன்றுக்குக் கீழே சேணத்துடன் நின்றிருந்தது. அவனைக் கண்டதும் தலையை ஆட்டி காதுகளைக் குவித்து மெல்ல கனைத்தது.

அவன் எவரென்று உணர்ந்ததும் சாத்யகி கடிவாளத்தை அறியாமல் பற்றிவிட்டான். புரவி தலைதிருப்பி முன்காலை நடனமென எடுத்துவைத்து நின்றது. அவன் பெயர் பூரிசிரவஸ். பால்ஹிக நாட்டு இளவரசன். அவனை காம்பில்யத்தில் திரௌபதியின் சுயம்வரத்தில் அவன் பார்த்திருந்தான். சிற்றரசர்களுக்கான நீண்ட வரிசையில் பன்னிரு யாதவக்குலக்குழுத்தலைவர்களும் அவர்களின் மைந்தர்களும் அமர்ந்திருந்தனர். அவ்வரிசையில் இறுதியாக சாத்யகி தன் தந்தை சத்யகருக்கு அருகே அமர்ந்திருந்தான். அவனுக்கு அப்பால் பால்ஹிக சோமதத்தர் அமர்ந்திருக்க அதற்கப்பால் பூரிசிரவஸ் இருந்தான்.

மென்மீசை பரவிய சிவந்த உதடுகளும் சிறிய பருக்கள் அரும்பிய வட்டக்கன்னங்களும் நீலக்கண்களும் சுண்ணப்பாறைகளின் நிறமும் கொண்ட இளைஞனைக் கண்டதுமே சாத்யகி வெறுத்தான். அவ்வெறுப்பை அவனே வியப்புடன் நோக்கி ஆராய்ந்தான். வெறும் வெறுப்புதான் அது என்று புரிந்தபோதும் அவ்வுணர்ச்சி மாயவில்லை. இலைநுனியில் அமர்ந்த தும்பி போல பூரிசிரவஸ் ததும்பிக்கொண்டே இருந்தான். அரசர்கள் ஒவ்வொருவரையும் திரும்பித்திரும்பி நோக்கி அவர்களின் பெயர்களையும் குலங்களையும் தன் இதழ்களுக்குள் சொல்லிக்கொண்டான். கர்ணனும் துரியோதனனும் வந்தபோது உளஎழுச்சியால் தன்னையறியாமலேயே எழுந்து மீண்டும் அமர்ந்துகொண்டான்.

திரௌபதி அவைக்கு வந்த கணம் முதல் அவன் அங்கில்லாததுபோல் ஆனான். அவன் விழிகள் அவளை அன்றி வேறெதையும் நோக்கவில்லை. மூச்சு மட்டும் ஓட அசைவழிந்து அமர்ந்திருக்கும் அவனை திரும்பி நோக்கியபோது சாத்யகியின் உடல் எரிந்தது. அவையமர்ந்த அனைவருமே திரௌபதியைத்தான் பார்க்கிறார்கள் என அவனும் அறிந்திருந்தான். ஆனால் அப்படி விழிமலர்ந்து வாய்திறந்து நோக்க மூடனாகிய மலைமகனால் மட்டுமே முடியும்.

அவனை எவரும் நோக்கவில்லைதான். அவனை நோக்கும் நிலையில் அவன் தந்தைகூட இருக்கவில்லை. ஆனால் அவனை எவராவது பார்த்துவிடுவார்கள் என்று சாத்யகி அஞ்சினான். அவனுக்காக நாணினான். அவனுடன் அங்கே அமர்ந்திருக்கவே கூசினான். அவனை அழைத்து சொல்லிவிடலாமா என்று நூறுமுறை நெஞ்சு எழுந்தது. 'மலைமூடா, விழிகளை மூடு' என்று அவனுள் சினக்கூற்று ஆயிரம் முறை ஒலித்தது. அங்கிருக்கும் நேரமெல்லாம் அவன் எதையுமே நோக்கவில்லை.

பாண்டவர்கள் வந்ததும்தான் அவன் சித்தம் பூரிசிரவஸ்ஸை மறந்தது. பின்னர் சாத்யகி அவனை பார்க்கவேயில்லை. தந்தையுடன் தன் ஊருக்குத்திரும்பும்போது அவன் சித்தத்தில் திரௌபதியின் பேரழகுக்கும் அங்கு நிகழ்ந்த போட்டிக்கும் பின்னர் தொடர்ந்த போருக்கும் நிகராக பூரிசிரவஸ்ஸின் முகமும் எழுந்து வந்தது. கசப்புடன் முகத்தை மறைக்கும் திரையை கிழித்து விலக்குவது போல அச்சித்திரத்தை அகற்றிக்கொண்டிருந்தான்.

படகுகளில் ரிஷபவனத்துக்கு திரும்பிச் செல்லும் பாதையில் சத்யகர் “நம்மருகே அமர்ந்திருந்த இளைஞனின் பெயர் பூரிசிரவஸ்” என்றார். “பால்ஹிககுலத்தவன். மலைமகன். ஆயினும் நுண்ணறிவும் தேர்ந்த கல்வியும் கொண்டவன் என்று சொல்கிறார்கள்.” அவன் பெயரை சாத்யகி அப்போதுதான் அறிந்தான். இருளில் படகின் முகப்பில் இரும்புக்கலத்தில் எரிந்த கணப்பருகே அமர்ந்திருந்த முதிய யாதவரான துவஷ்டர் “பால்ஹிகர்களை என்றேனும் யாதவர்கள் போரில் சந்திக்கவேண்டும்” என்றார். அந்த வரி அவனுக்கு விளக்கமுடியாத அக எழுச்சியை அளித்தது. தந்தைக்குப்பின்னால் இருட்டுக்குள் வடத்தின் மேல் அமர்ந்திருந்தவன் எழுந்துகொண்டான். சத்யகர் திரும்பிப்பார்த்தார். அவன் அமர்ந்துகொண்டான்.

“அவர்களின் நிலம் நமக்கு மிக அயலானது. அங்கே நாம் கன்றுமேய்க்கவும் முடியாது. பனிபரவிய வீண்நிலம் என்கிறார்கள்” என்று சத்யகர் சொன்னார். துவஷ்டர் “நாம் என்றால் நமது குலம் அல்ல. இன்று யாதவர்கள் என்பது துவாரகையை மட்டுமே குறிக்கும். கூர்ஜரத்தையும் சப்தசிந்துவையும் கைப்பற்றிய பின் இளைய யாதவனின் படைகள் பால்ஹிகர்களைத்தான் வென்றாகவேண்டும். சிந்துவின் முழுப்பெருக்கும் யாதவன் ஆட்சிக்கு விரைவில்வரும். இமயம் முதல் தென்கடல் வரை கருடக்கொடி பறக்கும்” என்றார்.

சத்யகர் பெருமூச்சுடன் “நான் இத்தகைய பேச்சுக்களை வெறுக்கிறேன்” என்றார். “இவற்றில் உள்ளது வெறும் பேராசை மட்டுமே. இன்று அவையில் இளையயாதவன் ஏன் இளவரசியை வேட்கவில்லை? அவனால் முடியுமென காட்டிவிட்டு திரும்பிச் சென்றான் என்பதை நாமனைவருமே பார்த்தோம்.” அவரை அனைவரும் ஏறிட்டுப்பார்த்தனர். “...ஏனென்றால் அதை அங்கிருந்த எந்த ஷத்ரியரும் விரும்பவில்லை. அவன் இளவரசியை வென்றிருந்தால் அங்கே அத்தனை ஷத்ரியர்களும் இணைந்திருப்பார்கள். பாரதவர்ஷமே அவனுக்கு எதிராக வாளெடுத்திருக்கும்.”

“பெருங்கனவுகள் நன்று” என்றார் சத்யகர். “ஆனால் அவை பேரழிவுகளையும் உடன்கொண்டுவரும். யாதவகுலத்தின் நிகரற்ற மாவீரர் கார்த்தவீரியரின் வரலாறு நம் ஒவ்வொருவர் நாவிலும் உள்ளது. கங்கையையும் யமுனையையும் அவர் வென்றார். அவருடைய ஆயிரம் கைகள் பாரதவர்ஷத்தை வெல்லும்பொருட்டு எழுந்ததும் ரிஷிகளின் சினம் அவருக்கு எதிராக எழுந்தது. இளையோரே, அவருடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டி கங்கைக்கரையில் மலையெனக் குவித்தார் என்ற கதையை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது. ஆயிரம் கைகளும் தனித்தனியாக வானை அள்ளத் துடித்தன. ஒவ்வொரு யாதவனும் நினைவில்கொள்ளும்பொருட்டு அதை இன்றும் சூதர்கள் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.”

சாத்யகி பொறுமையிழந்து அசைந்தபோது அவன் அமர்ந்திருந்த வடம் முனகியது. சத்யகர் மீண்டும் திரும்பி நோக்கினார். அவன் அவர் நோக்கை விலக்கி தலைகுனிந்தான். “நாம் நூற்றாண்டுகளாக அடக்கி ஆளப்பட்ட மக்கள். கார்த்தவீரியரின் மறைவுக்குப்பின் நம் குலங்கள் சிதறிப்பரந்தன. பூசலிட்டு அழிந்தன. நம் அனைவர் உள்ளத்திலும் இன்னொரு கார்த்தவீரியருக்கான எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே நாம் இந்த இளைய யாதவனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறோம். சொல்லிச்சொல்லி அவனை ஒரு கார்த்தவீரியராக ஆக்குகிறோம்.”

“அவன் முடிவும் கார்த்தவீரியருடையதாக ஆகக்கூடாதென்று நான் அஞ்சுகிறேன்” என்று சத்யகர் நெருப்பை நோக்கியபடி சொன்னார். “கூர்ஜரத்தின்மேல் அவன் கொண்ட வெற்றி நல்லூழால் நிகழ்ந்தது. அவன் அத்தையின் சொல் அஸ்தினபுரியில் அன்று ஒலிக்கமுடிந்தது. ஏனென்றால் அன்று அப்போது அங்கே விதுரரும் குந்தியும் மட்டும் கோலோச்சினர். பிதாமகர் பீஷ்மர் காடேகியிருந்தார். கூர்ஜரத்தின் புதையல்கள் அவனுக்குக் கிடைத்த இரண்டாவது ஊழின்பரிசு. அந்த நிலம் மூன்றாவது ஊழ்க்கொடை. எதிரிகள் எட்டமுடியாத பாலைக்கு அப்பால் இருக்கிறது அது என்பதே அவனை வளரச்செய்தது. யவனரும் சோனகரும் காப்பிரிகளும் பீதரும் விரும்பும் அலையடங்கிய துறைமுகப்பாக ஆக அதனால் முடிந்ததும் நல்லூழே.”

“இவ்வெற்றிகளில் அவர் ஆற்றியது எதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா?” என்றார் துவஷ்டர். அவன் தன் நெஞ்சுக்குள் எழுப்பிக்கொண்ட வினா அது. “இல்லை. அவன் நுண்மதியன். போர்க்கலை அறிந்தவன். கூர்ஜரத்தில் புதையலிருப்பதை உய்த்தறிந்ததும் அந்நிலத்தை பெருந்துறைமுகமாக அகக்கண்ணில் கண்டதும் தன் அத்தையின் உள்ளத்தை வென்று அஸ்தினபுரியின் படைகளைப் பெற்றதும் அவன் திறனே. ஆனால் அவன் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்றால்...” என்று சொன்னபின் சத்யகர் கையை விரித்தார். “மூத்தவரே, அவனுக்கு இன்று இப்பாரதவர்ஷத்தில் ஒருவரும் துணையில்லை. நான் சொல்லவந்தது அதைமட்டுமே” என்றார்.

“அவனுக்கு வில்விஜயனின் துணை இருக்கிறது” என்று சொன்னபோது துவஷ்டரின் குரலில் நம்பிக்கை இருக்கவில்லை. “அவர்களே இன்று நாடிலிகளாக மணமகள் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அஸ்தினபுரிக்குள் இனி அவர்களை துரியோதனன் நுழைய விடமாட்டான்” என்றார் சத்யகர். “விழியிழந்த மாமன்னன் பெரும் வஞ்சகன் என்கிறார்கள். அவனுடைய உள்ளமும் விழியற்றது. அவனுடைய வஞ்சத்தால்தான் பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். வாரணவதத்தில் அவர்களை எரித்துக்கொல்ல முயன்றதும் அவனே. அவனிடமிருந்து அவர்கள் கால்வைக்கும் நிலம்கூடப் பெறமுடியாது.”

கங்கையிலிருந்து வந்த காற்றில் நெருப்பு வெடித்துச்சீறியது. சாத்யகி முடிவெடுத்து சிலகணங்களிலேயே சொற்களை தேர்ந்து கோர்த்து அமைத்துவிட்டான். “தந்தையே, நான் துவாரகைக்கு செல்லவிருக்கிறேன்” என்றான். சத்யகர் திகைத்துத் திரும்பி “ஏன்?” என்றார். “என் பணி அங்கேதான். நான் யாதவப்பேரரசருடன் இருக்கவேண்டியவன்.” சத்யகர் சீற்றத்துடன் “அதைமுடிவுசெய்யவேண்டியவர்கள் யாதவக்குலமூதாதையர்... நீயல்ல” என்றார்.

“நான் வளைகோல் கொண்டு வாழப்பிறந்தவன் அல்ல. என் கை வாளுக்குரியது. அது இளையயாதவருக்குரியது” என்றான் சாத்யகி. அவன் எழுந்தபோது வடமும் இறுக்கமிழந்து மேலெழுந்தது. முதிய யாதவர் “இந்நாளில் அத்தனை இளையோருக்கும் இதுவே பித்தாக உள்ளது. காடுகளில் கன்றுகளைத் துறந்து வாளேந்தியபடி துவாரகை நோக்கி கிளம்பிவிடுகிறார்கள்” என்றார். “இளையோனே, கன்றுசூழும் யாதவனின் வாழ்க்கைக்கு நிகரான பேரின்பம் கொண்ட வாழ்க்கை ஏதும் இம்மண்ணில் இல்லை. நீ வென்றடையும் எதுவும் ஒரு பசு உன்னை வாழ்த்தும் சொல்லுக்கு நிகரானதல்ல.”

“மூத்தவரே, நான் செல்வது வாழ்வதற்காக அல்ல, இறப்பதற்காக. யாதவப்பேரரசுக்காக களம்படுகையில் மட்டுமே என் மூதாதையர் என்னை வாழ்த்துவர். இதுவே யாதவர்களின் தலைமுறைகள் ஏங்கிக்காத்திருந்த தருணம். இதைத் தவறவிடுபவன் ஆண்மகன் அல்ல” என்றான் சாத்யகி. “ஏன் களம்படவேண்டும்? நாம் வேளாண்மக்கள் அல்ல. நமக்கு நாடென ஏதும் தேவையில்லை. புல்லிருக்கும் இடமெல்லாம் நாம் வாழும் மண்ணேயாகும்” என்றார் சத்யகர்.

“தந்தையே, பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை என்று உணருங்கள். என்னை வாழ்த்துங்கள்” என்று சாத்யகி சொன்னான். அவன் தந்தை சொல்லற்று நின்று திறந்த வாயுடன் நோக்கியபோது அவன் அறிந்தான், அவன் சொல்லப்போவதை அவர் உள்ளறிந்திருந்தார் என்று. அவர் யாதவனைப்பற்றி சொல்லத்தொடங்கியதே அதற்காகத்தான்.

“காம்பில்யத்தில் நான் இளைய யாதவரைக் கண்டு வணங்கினேன். என்னை அவர் அழைத்தார்” என்றான் சாத்யகி. “ரிஷபவனத்துக்கு வந்து அன்னையைப் பார்த்து வணங்கியபின் நான் கிளம்பலாமென்றிருக்கிறேன்.” அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் தலைவணங்கிவிட்டு அவன் விலகிச்சென்றான். தன் காலடிகள் படகின் பலகையில் ஓசையெழுப்புவதைக் கேட்டான். அத்தனை விழிகளும் தன் மேல் அமைந்திருப்பதை உணர்ந்தான்.

தொலைவில் துவாரகையின் புலரிமணியோசை எழுந்தது. மிகமெல்லிய ஓசை. யாழின் தந்தி ஒன்றில் வண்டு முட்டியதுபோல. தொடர்ந்து பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அந்த ஓசையும் செவியறிந்ததா சிந்தையறிந்ததா என மயங்கும்விதத்தில் இருந்தது. குன்றிறங்கியதுமே துவாரகை விழிகளில் இருந்து மறைந்துவிட்டது. ஆனால் இருளுக்குள் நகரின் செம்பந்த ஒளி மேலே எழுந்து தெரிந்தது. அங்கே மிகச்சிறிய செம்மேகத்தீற்றல் ஒன்று நின்றிருப்பதுபோல.

சாத்யகி புரவியை கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். ஒரு விதிர்ப்புடன் அவன் உணர்ந்தான், பூரிசிரவஸ் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது அவனுடைய உடலைத்தான். கண்களை மூடி மீண்டும் அந்தக் கனவுக்காட்சியை தன்னுள் ஓடவிட்டான். ஒவ்வொன்றும் துல்லியமாக இருந்தது. ஆடைகள், கச்சை, உடைவாள், முழங்கையின் நீலநிறமான குலக்குறி, அப்பால் நின்றிருக்கும் குதிரை. அது அந்த மணல்மேடுதான். அதை அவன் இருளில்தான் பார்த்தான். கனவில் பகலொளியில் அது அத்தனை துல்லியமாக எப்படி வந்தது என வியந்துகொண்டான்.

பகுதி 8 : பெருவாயில்புரம் - 2

துவாரகையின் பெருவாயிலை நோக்கிச்சென்ற கற்சாலையை அடைந்ததும்தான் சாத்யகி இரவில் அவன் நெடுந்தூரம் பாதைவிலகிச்சென்றிருப்பதை அறிந்தான். கடலில் இருந்து இடையறாது வீசிய காற்றில் பாலைமண்ணில்போடப்பட்டிருந்த கற்பாளங்கள் மேல் மென்மணல் பரவி மூடியிருந்தமையால் சாலையை அந்திவெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. காலையொளி எழுந்தபோது செந்நிறப்புரவியின் தோலில் விழுந்த சாட்டையடித்தடம் போல அது தெரிந்தது. அதன்மேல் புரவி குளம்புகள் புதையாமல் துடிதாளம் எழுப்பி ஓடியது.

பாலையில் காலை மிகமுன்னதாகவே எழுந்தது. வானிலிருந்து கசிந்துபரவிய மெல்லிய ஒளி செந்நிற மணல்வளைவுகளை பசுக்கூட்டங்களாகக் காட்டியது. தொலைவிலேயே வணிகர்குழுக்களின் பாடலோசையை கேட்டுவிட்டான். மணலில் விரைந்து சாலையை அடைந்தபோது நூற்றைம்பது அத்திரிகளுடன் கலிங்கவணிகர் குழு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அவர்களுக்குப்பின்னால் சிறகு போல செந்நிறமான தூசுப்படலம் நின்றது. அவன் தன் கையிலிருந்த வெண்ணிறத்துணியைத் தூக்கி வீசியபடி அருகே சென்றான். விற்களைத் தாழ்த்திய காவலர்கள் பின்னால் செல்ல முதுவணிகர் ஒருவர் அவனை நோக்கி கைகூப்பி வணங்கினார்.

திரயம்பகரின் மைந்தரின் தலைமையில் நூறு கழுதைகளின் குழு ஒன்று அவர்களுக்கு சற்று அப்பால் வந்திருந்தது. சாத்யகி தன்னை “விருஷ்ணிகுலத்து யாதவ வீரன் யுயுதானன். துவாரகைக்கு படைப்பணிக்காக செல்கிறேன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். திரயம்பகர் “இன்னீர் அருந்துங்கள் யாதவரே” என்று தோல்பையை நீட்டினார். அவன் நீர் அருந்தி முடித்தபின் அவர் அளித்த உலர்ந்த ஈச்சைப்பழங்களையும் வெல்லத்துடன் சேர்த்து உருட்டிய ஈசலையும் உண்டான். “இன்னும் இரண்டுநாழிகையில் துவாரகை வந்துவிடும். முதற்காவல்கோட்டத்திற்கு அப்பால் கற்சாலைக்கு இருபக்கமும் பெரிய மரங்களை நட்டு பேணிவருகிறார்கள். இந்தப் பாலைவனப்பயணத்திற்குப்பின் நாம் பசுமையை பார்ப்போம்” என்றார் திரயம்பகர்.

கலிங்கத்தின் கதையொன்றைப்பாடியபடி முன்னால் சூதர்கள் மூவர் சென்றனர். அந்தக்கதையின் பல்லவியை மட்டும் வணிகர்கள் அனைவரும் திரும்பப் பாடினர்.

“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு - என்குலமே

சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”

தன் தாய்தந்தையை இறைவடிவாக வணங்கிவந்த சக்ரிகன் அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் இனி எனக்கு எவர் துணை என்று கேட்டான். தாய்தந்தையர் என்பவர் மழைத்துளிகள். சான்றோர் ஓடைகள். நல்லாசிரியர்கள் நதிகள். இறைவனே கடல். ஆழிகைகொண்ட ஆழிவண்ணனை வணங்கு என்றனர் அவர்கள்.  நாங்களிருந்த இந்தப் பீடத்தில் ஒரு நதிக்கல்லை நிறுவி அவனை வணங்குக என்று வழிகாட்டினர். அன்றுமுதல் சக்ரிகன் விண்ணவனின் அடியவனானான்.

தன் முதிய தாய்தந்தையருக்கு ஒவ்வொரு நாளும் காட்டில் கனிதேர்ந்து கொண்டுசென்று கொடுப்பது அவன் வழக்கம். கனிகளை தான் முதலில் சுவைத்து அறிந்துவிட்டே அவர்களுக்கு அளித்துவந்தான். அவர்கள் பற்களை இழந்து முதியவர்களானபோது தன் வாயால் கனிகளை மென்று கூழாக்கி அவர்களுக்கு ஊட்டிவந்தான். முதிர்ந்து இறந்த பெற்றோரும் சென்றுசேரும் முதியவன் என்றால் விண்ணவன் விழியறியாத சொல்மறந்து பல்லுதிர்ந்த முதுமூதாதையாகவே இருக்கமுடியுமென எண்ணினான். ஒவ்வொருநாளும் தான் தேடிய கனிகளை மென்று அக்கல்மேல் துப்பி விண்ணவனுக்கு அமுதளித்தான்.

கோடைவந்து காடுவறண்டது. காடெங்கும் அலைந்து ஒரு கனியையும் அவன் காணவில்லை. மாலையிருண்டுகொண்டிருக்கும் வேளை சோர்ந்து திரும்புகையில் ஒரே ஒரு கள்ளிப்பழத்தை கண்டான். அதை வாயிலிட்டு மென்றபோது அதன் முள் அவன் தொண்டையில் சிக்கிக்கொண்டது. அந்தியடங்கி வந்தது. இருள்வதற்குள் இறைவனுக்கு கனிபடைக்க விரும்பிய சக்ரிகன் பலவிதமாக துப்பிப்பார்த்தான். இரவணைவதைக் கண்டதும் தன் வாளெடுத்து கழுத்தை அறுக்கப்போனான். அவன் முன் நின்றிருந்த காய்ந்தமரம் தளிர்கொண்டது. வானில் மழைமுகில்கள் நிறைந்து வண்ணவில்லெழுந்தது. 'நீ என் அடியவன். உன்னை ஆட்கொண்டேன்’ என்றது இடியோசை.

“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு - என்குலமே

சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”

துவாரகையில் ஒரு கல்லாக அவன் பிறந்தான் என்றார் சூதர். அந்தச்சதுரவடிவமான கல்லை துவாரகையின் அரண்மனையின் வாயிற்படியாக அமைத்தனர். விண்ணளந்தோனின் மண்நிகழ்ந்த வடிவமான நீலக்கண்ணன் அதில் ஒவ்வொருநாளும் காலெடுத்துவைத்தான். தன் நெஞ்சில் அச்செம்மலர்ப்பாதங்களை ஏந்தி சக்ரிகன் நிறைவடைந்தான். அவனுடைய ஒவ்வொருநாளும் ஒரு யுகமென ஆயிற்று. அவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் ஆழிமழைக்கண்ணன் பிறந்து மறைந்தான்.

“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு - என்குலமே

சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”

சாத்யகி முதற்சில வரிகளுக்குள்ளேயே அப்பாடல்களுக்குள் சென்றுவிட்டான். கதைமுடியும்போது அவன் புரவியில் குனிந்து அமர்ந்து அழுதுகொண்டிருந்தான். அவர்கள் அவனை திரும்பிப்பார்த்து புன்னகை செய்தனர். அவன் எதையும் அறியவில்லை.

“யாதவரே, பெருவாயில் தெரிகிறது” என்றார் திரயம்பகர். அவன் நிமிர்ந்து நோக்கியபோது விழிநீரால் ஒன்றும் தெரியவில்லை. தலைப்பாகையின் நுனியால் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு நோக்கினான். அப்பால் கண்கூசும் ஒளியுடன் வளைந்த தெற்குவானத்தில் எழுந்த கரியபாறைக்குமேல் சிறிய கல்வளைவென அந்த வாயில் தெரிந்தது. விரித்த உள்ளங்கையில் வைக்கப்பட்ட கணையாழி போல. அதன் வழியாக சிறிய நீள்சதுர வடிவ வானம் ஒளிவிட்டது.

தோரணவாயில் வருவது வரை சாத்யகி அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அணுகிச்சென்றுகொண்டே இருந்தபோதிலும் அது பெரிதாகவில்லை என்று தோன்றியது. ஆனால் வண்டு முரல்வதுபோல நகரின் ஒலி கேட்கத் தொடங்கியது. மேலும் சென்றபோது பீதர்நாட்டுப் பெருநாவாய் ஒன்று களிறுபோல குரலெழுப்பியதை கேட்டான். மணலடுக்குக்கு அப்பால் இருந்து காவல்கோட்டத்தின் குவைமுகடும் தோரணவாயிலின் உச்சிமாடமும் மேலெழுந்தன.

இருபக்கமும் சங்கும் சக்கரமும் நடுவே செம்பளிங்குக் கண்கள் கொண்ட கருடமுகமும் பொறிக்கப்பட்டிருந்த வடக்குத் தோரணவாயில் முற்றிலும் செந்நிறக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. இருபக்கமும் ஏழு சிம்மங்கள் வாய்திறந்து நின்றிருக்க அவற்றின் மேல் ஆநிரைகள் செதுக்கப்பட்டிருந்தன. ஆநிரைகளுக்குமேல் சூரியன் ஒளிவிட்டான். சூரியனுக்குமேல் ஆதித்யர்களும் கந்தர்வர்களும் தேவர்களும் நிறைந்திருந்தனர். சாத்யகி அதற்கு நிகரான சிற்பவேலையை வேறெங்கும் கண்டதில்லை.

“அவை மிகப்பெரியவை. இங்குதான் அவற்றை நன்கு காணமுடியும். அணுகும்போது சிம்மங்களின் உகிர்களே நம் தலையை விடப்பெரியவையாக மாறிவிட்டிருக்கும்” என்றார் திரயம்பகர். சாத்யகி அந்த சிம்மங்களையே நோக்கி அமர்ந்திருந்தான். வளைவான ஒற்றைப்பீடம் மீது ஏழு சிம்மங்களும் ஒன்றுடன் ஒன்று ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தன. அவற்றின் பிடரிமயிரலைகள் சீரான வளைவுகளாக சூழ்ந்திருந்தன. ஒருநோக்கில் அவை தழல்களென்றும் தோன்றின. விழிகள் உருளைகள் போல செதுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் சினந்த நோக்கும் இருந்தது. நரம்புகள் புடைத்த பெருங்கைகளில் கூருகிர்கள் நீண்டிருந்தன.

அவன் நோக்குவதைக் கண்ட திரயம்பகர் “அவை பீதர்குலத்துச் சிற்பிகளால் செய்யப்பட்டவை. சிம்மம் அவர்களுக்கு விருப்பமான விலங்கு” என்றார். சாத்யகி “அவை சிம்மங்கள் போலவும் தெரியவில்லை” என்றான். “ஆம், அவர்கள் சிம்மத்தலைகொண்ட பாம்பு ஒன்றை வணங்குகிறார்கள். அதன் சாயல் இவற்றுக்கு இருக்கிறது” என்றார். “ஆனால் மேலே உள்ள பசுக்களும் தேவர்களும் கலிங்கச்சிற்பிகளால் செய்யப்பட்டவை.”

அணுகிச்செல்லச்செல்ல சாத்யகி பெருவியப்புக்கு ஆளானான். “இத்தனை பெரிய கற்களை எப்படி தூக்கி அடுக்கமுடிந்தது?” என்றான். “யாதவகுடிகளில் இந்தப்பெருநகரே கடற்பூதங்களால் கட்டப்பட்டது என்ற கதைகள் உள்ளன.” திரயம்பகர் நகைத்து “ஒருவகையில் சரிதான். கடற்காற்றுகளை கடலை ஆளும் பூதங்கள் என்று சொல்லலாம்” என்றார். தோரணவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் மரங்கள் அடர்ந்த சோலைகளுக்குள் ஒளிவிடும் செம்பாலான கூரைகொண்ட பன்னிரு காவல்மாளிகைகள் இருந்தன. அவற்றில் எல்லாம் கருடக்கொடி பறந்துகொண்டிருந்தது.

“செம்புக்கூரை என்று நினைக்கிறீர்” என்றார் திரயம்பகர். “அவை பீதர் நாட்டு வெண்களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணமேற்றப்பட்ட ஓடுகள். தொட்டுப்பார்த்தால் பளிங்காலானவைபோலிருக்கும். ஒரு துளி நீர் கூட அவற்றில் ஒட்டுவதில்லை. துவாரகையின் அரசு மாளிகைகள் அனைத்தும் செந்நிறக்கூரை கொண்டவை. வணிகர் மாளிகைகள் இளநீலம். குடிகளின் இல்லங்கள் மஞ்சள். நகர்நடுவே இளையயாதவனின் அரண்மனைத் தொகையின் கூரைகள் மட்டும் தூயவெண்ணிறம்.” திரயம்பகர் முகம் மலர்ந்து “அல்லிமொட்டுக் குவைமுகடுகள் என்பார்கள் சூதர்கள்” என்றார்.

தோரணவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தபோதுதான் விழிதொடும் தொலைவுவரை நெரித்து நின்ற வணிகர்கூட்டத்தை கண்டான். ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருந்த வண்டிகள் ஒருநிரையாகவும் அத்திரிகளும் கழுதைகளும் தனித்தனியான நிரைகளாகவும் சென்றுகொண்டிருந்தன. வலது ஓரம் அரசுவண்டிகளும் காவலர்புரவிகளும் செல்வதற்காக விடப்பட்டிருந்தது. “இரவே வந்து தோரணவாயிலுக்கு வெளியே காத்திருந்தால்தான் காலையிலேயே உள்ளே நுழைய முடியும். முதலில் செல்பவர்கள் கடைவீதிகளில் சிறந்த இடத்தை கண்டடைகிறார்கள்” என்றார் திரயம்பகர்.

நீண்ட வரிசையை எம்பி நோக்கிவிட்டு திரயம்பகர் தனக்குள் என சொல்லிக்கொண்டார் “பீதர்கள் சிறந்த வணிகர்கள். ஆனால் யவனரும் காப்பிரிகளும் பொறுமையற்றவர்கள். முதலில் கண்ணில்படும் வணிகர்களிடமே அனைத்து வணிகத்தையும் முடித்துவிட்டு பரத்தையர் இல்லம் நோக்கி விரைவார்கள். நான் இன்று மிகவும் பிந்திவிட்டேன். ஆனால் நான் வருவதாக என் தோழர்களுக்கு பறவைச்செய்தி அனுப்பியிருந்தேன். எனக்கான இடம் துறையங்காடியில் சித்தமாகவே இருக்கும்.”

காவல்வீரர்கள் ஒவ்வொரு குழுவின் தலைவர்களையும் அருகே அழைத்து அவர்களின் குலக்குறிகளையும் அடையாளக் கடிதங்களையும் கூர்நோக்கினர். பூர்ஜமரப்பட்டைகளிலும் மான்தோலிலும் செம்புச்சுருளிலும் வெவ்வேறு மன்னர்களால் எழுதி அளிக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஏற்கெனவே அவர்களிடமிருந்த குறிப்புகளுடன் ஒப்பிட்டுநோக்கியபின் வெண்ணிறமான பிசினை எடுத்து அதில் இரும்பாலான அச்சை அழுத்தி எரிந்துகொண்டிருந்த சூளையின் அடுக்குமேல் வைத்து சற்றுநேரத்திலேயே சுட்டு எடுத்து அளித்தார்கள். வணிகர்தலைவர் காவலர்தலைவரைப் பார்த்துவிட்டு இடைநாழியில் நடந்து மறுபக்கம் சென்று அவற்றை பெற்றுக்கொண்டு தன் குழுவைநோக்கி சென்றார்.

“அதுதான் பீதர்களின் வெண்களிமண். பீதர்நாட்டில் ஓர் ஆற்றின் கரையெங்கும் அந்தமண்தான் விளைகிறது என்கிறார்கள்” என்றார் திரயம்பகர். வெண்களிமண்ணில் பதிக்கப்பட்ட குறியச்சை காட்டினார். சாத்யகி அதை வாங்கி நோக்கினான். வெம்மை ஆறாத வெண்களிமண் வட்டம் பளிங்குத் துண்டு போலிருந்தது. அதிலும் சங்கும் சக்கரமும் நடுவே கருடனும் இருந்தன. திரயம்பகர் “நகர் நீங்குகையில் இதை திரும்ப அளித்துவிடவேண்டும்... இந்நகரில் இருக்கையில் இதுவே எங்களுக்கான உணவும் உறைவிடமும் காவலுமாகும்” என்றார்.

“யாதவர்களுக்கு சங்குக்குறி இருந்ததில்லை. வெண்ணிற ஆழியே எங்கள் அடையாளம்” என்றான் சாத்யகி. “ஆம், பால்வண்ண ஆழியுடன் வெண்சங்கையும் இணைத்தவன் இளையயாதவன். இது யாதவர்களின் கடல்வெற்றியை குறிக்கிறது” என்று திரயம்பகர் சொன்னார். சாத்யகி அதை வருடி நோக்கினான். நுண்ணிய எழுத்துக்களில் துவாரகையின் அரசனின் சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தன. “ஏழு மொழிகளில் இளைய யாதவனின் ஆணை இதில் உள்ளது. சதுரக்குறிகளாக உள்ளது யவனம். உகிர்கீறல்கள் போன்றது சோனகம். புள்ளிகளால் ஆனது காப்பிரிமொழி. ஒன்றன் மேல் ஒன்றென ஏறிய சித்திர எழுத்துக்கள் பீதம். சுழல்வடிவில் உள்ளது தென்னக எழுத்து. பாரதவர்ஷத்தின் செம்மொழியிலும் பைசாசிகமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.”

புன்னகையுடன் அதை திரும்பக்கொடுத்த சாத்யகி “என்னால் எந்த மொழியையும் வாசிக்கமுடியாது வணிகரே” என்றான். திரயம்பகர் புன்னகைத்து “அது நீங்கள் எழுத்துக்களை கைகளால் சுரண்டிப்பார்த்தபோதே எனக்குத்தெரிந்தது” என்றார். ”எங்கள் குலத்தில் கயிறிலிடப்படும் முடிச்சுகள் வழியாகவே அனைத்தையும் சொல்கிறோம். அவை ஒருவகை எழுத்துக்கள்தான்” என்றான் சாத்யகி.

“ஆம், கலிங்கத்தில் மீனவர்கள் வண்ணத்துணிகளை வீசி ஒருவரோடொருவர் செய்திசொல்கிறார்கள். காடுகளுக்குள் அரக்கர்களும் அசுரர்களும் முழவுகளின் ஓசையால் பேசிக்கொள்கிறார்கள். அனைத்தும் எழுத்துக்களே. விழிகளாலும் செவிகளாலும் வாசிக்கப்படுபவை” என்றார் திரயம்பகர். “எங்களுக்குள் விரல்தொட்டுப்பேசும் மொழி ஒன்று உள்ளது... எங்கள் கணக்குகளை அதனூடாக பேசிக்கொள்கிறோம். மண்ணுக்குள் மரங்கள் வேர்தொட்டுப் பேசும் மொழியும் அதுவே.”

உள்ளே நூலெழுத்தர்கள் வணிகர்களின் செய்திகளை பதிவுசெய்துகொண்டிருந்த ஏடு வெண்ணிறமான துணிபோலிருந்தது. “துணியா?” என்றான் சாத்யகி. “இல்லை. அது பீதர்களின் ஒருவகையான புல். இங்குள்ள புல்லைவிட நான்குமடங்கு அகலமானது. பட்டுத்துணிபோல மெல்லியது, வெண்மையானது. அதை பெரிய கல்லுருளைகளால் சீராக்கி நறுக்கி விளிம்புகளைச் சேர்த்து பசையிட்டு ஒட்டி நிழலில் உலர்த்தி எடுக்கிறார்கள். பீதப்புல் என்று அதை சொல்கிறோம்.”

அதில் சிறிய பளிங்குக்குடுவையில் இருந்த செந்நீலநிற மையை செங்கழுகின் இறகின் கூர்முனையால் தொட்டு சித்திரம்போல எழுத்துக்களை வரைந்துகொண்டிருந்தனர். “மரச்சாறுடன் மயில்துத்தம் கலந்த மை அது. நீரிலும் அழிவதில்லை” என்றார் திரயம்பகர். சாத்யகி வியப்புடன் விழிவிரித்து நின்றான். தன் மைந்தனின் குழுவுக்கும் குறியச்சு கிடைத்ததும் திரயம்பகர் தலைவணங்கினார். “அந்த மூன்றாவது மாளிகை வீரர்களுக்குரியது. அங்குசென்று பேசும் இளையோனே... இப்பெருநகரில் தங்களுக்கு நல்லூழ் துணைநிற்கட்டும்.”

அவர்கள் சென்றபின்னரும் சாத்யகி சற்றுநேரம் சிந்தை தெளியாதவனாக நின்றுகொண்டிருந்தான். வெவ்வேறு குழுக்களாக மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். அவன் மூன்றாவது மாளிகையை நோக்கி சென்றான். மாளிகைகளின் வளைந்த பெருமுற்றங்களில் செம்பட்டுத் திரைச்சீலைகள் ஆடிய பல்லக்குகளும் குதிரைகள் அவிழ்க்கப்பட்ட தேர்களும் நின்றிருந்தன. நிரைநிரையாகச் சென்ற படைவீரர்கள் தங்கள் ஆடைகளை விலக்கி உடலில் பொறிக்கப்பட்டிருந்த குலக்குறிகளை வீரர்களுக்கு காட்டினர். அவற்றை நோக்கி ஏடுகளில் பதிவுசெய்தபின்னர் மாளிகைகளுக்கு அப்பால் தெரிந்த அடுத்த நிரைக்கு அவர்கள் அனுப்பப் பட்டனர்.

நீண்ட வீரர் நிரையின் இறுதியில் சாத்யகி சென்று நின்றுகொண்டான். அவனுக்குமுன்னால் நின்றவர்கள் அப்பால் அமர்ந்திருந்த யாதவ நூற்றுவர்தலைவனையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தனர். தன் முன்னால் நின்று மெல்லிய குரலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன் சப்தசிந்துவைச்சேர்ந்த கிந்தமன் என்று சாத்யகி அறிந்தான். கண்டாகர்ணகுலத்தின் கைக்கோல் குடியை சேர்ந்தவன். பீலிக்கூட்டத்தவன். “நீர் யாதவரா?” என்றான். சாத்யகி “ஆம்” என்றபின் தன்னைப்பற்றி சொன்னான். “யாதவர்கள் எங்கிருந்தாலும் இங்கு வந்துவிடுகிறார்கள்...” என்றான் கிந்தமன்.

கிந்தமனை நிமித்தக்கோல் வைத்திருந்த வீரன் கைசுட்டி அழைத்தான். அவன் தலை வணங்கி முன்னால் சென்று பீடத்தில் அமர்ந்திருந்த நூற்றுவர்தலைவனுக்கு தன் குலக்குறிகளை காட்டினான். “இங்கு எதற்காக வந்தீர்?” என்று அவன் கேட்டான். “நூற்றுவரே, நான் கடலோடியாக ஆவதற்காக வந்தேன்” என்றான் கிந்தமன். கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் “கடலுக்குப்போக பல வழிகள் உள்ளன” என்றான் நூற்றுவன். “வீரரே, இங்குதான் கடலுக்கு ஆழம் மிகுதி” என்றான் கிந்தமன். நூற்றுவன் புன்னகைசெய்தான்.

“என் குலம் போர்புரிவது. சிறுவயதுமுதலே நான் கடலை கனவுகண்டேன். நாவாய்களில் பயணம்செய்யவும் கடல்கடந்த தொலைநிலங்களைக் காணவும் விழைகிறேன். நாவாய்களின் நகரம் என்று துவாரகையை சொன்னார்கள். ஆகவேதான் வந்தேன்” கிந்தமன் சொன்னான். நூற்றுவர்தலைவன் அவனை கூர்ந்து நோக்கி “கடலோடிகளில் நூற்றுக்கு பன்னிருவரே மீள்வர் என அறிவீரா?” என்றான். “நூற்றுவரே, எந்தப்படைவீரனும் இறப்பை அஞ்சுவதில்லை.”

தலையை அசைத்து “கடல் உம்மிடம் கனிவுடன் இருப்பதாக!” என்றபடி கிந்தமனின் உள்ளங்கையில் செந்நீலநிறத்து மையை இரும்பு அச்சில் தொட்டு ஒற்றி அடையாளமிட்டு “நீர் மறுநிரைக்கு செல்லலாம்” என்று நூற்றுவன் ஆணையிட்டான். கோல்காரன் தன்னை அழைப்பதை சாத்யகி சிலகணங்களுக்குப்பின்னரே கண்டான். பதறும் உடலுடன் ஓடிச்சென்று நின்றான். “விருஷ்ணிகுலத்தின் பிரஸ்னி குடியைச் சேர்ந்த என்பெயர் யுயுதானன். எந்தையின் பெயர் சத்யகன் என்பதனால் நான் சாத்யகி.”

நூற்றுவர்தலைவன் “உமது ஊர் எது?” என்றான். "யமுனைக்கரையில் ரிஷபவனம்” என்றான் சாத்யகி. பெருமூச்சுடன் “நீண்டபயணம்” என்ற நூற்றுவன் “இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தீர்?” என்றான். “யாதவர்களின் அரசு இது என்பதனால் வந்தேன்” என்றான் சாத்யகி. “இங்கு யாதவப்படைகளில் சேரவும் மூதாதையருக்காக உயிர்விடவும் விழைகிறேன்.”

நூற்றுவன் புன்னகையுடன் “இது யாதவர்களின் அரசல்ல. அறமெனும் தெய்வம் வாழும் அரசு” என்றான். “ஆகவே பாரதவர்ஷத்தின் அனைத்து நிலங்களிலிருந்தும் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான வீரர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் யாதவர்கள் தங்கள்நாடு இது என எண்ணுகிறார்கள்” என்றான். “ஆம், அது இயல்பே” என்றான் சாத்யகி.

“தண்டகாரண்யத்திலிருந்தும் தெற்கே வேசரநாட்டிலிருந்தும்கூட யாதவர்கள் வருகிறார்கள். நூறுநூறு ஆண்டுகளாக யாதவர்கள் பாரதவர்ஷமெங்கும் பரவிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இன்று அவர்களனைவரும் துவாரகையைப்பற்றியும் இளைய யாதவரைப்பற்றியும் அறிந்திருக்கிறார்கள்...” என்று அருகே நின்ற வீரன் சொன்னான்.

கோல்காரன் நகைத்து “அவர்கள் கிளம்பிச்சென்றபின் அறிந்த முதல்செய்தியே இதுவாக இருக்கலாம்” என்றான். நூற்றுவனும் புன்னகைத்து “ஆனால் எவருக்கும் படைக்கலப்பயிற்சி என ஏதும் இல்லை. நீர் படைபயின்றவரா?” என்றான். “போர்க்கலங்கள் பயின்றதில்லை. கவண்கல்லெறிவேன். வளைதடி நான் எண்ணியதை செய்யும்” என்று சாத்யகி சொன்னான்.

நூற்றுவன் நிறைவின்மை தெரிய தலையை அசைத்து “உமக்கு வயது இருபது கடந்திருக்கும் என எண்ணுகிறேன்... இனிமேல் உமது கைகளுக்கு வில்லும் வாளும் தங்களை ஒப்புக்கொடுக்காது. இங்கு வந்துசேரும் அத்தனை யாதவர்களும் உம்மைப் போன்றவர்களே. அவர்கள் எழுச்சிகொண்ட உள்ளங்களும் பணியாத பெருங்கைகளும் கொண்ட வெறும் மக்கள்திரளாகவே எஞ்சுகிறார்கள்” என்றான். அதற்கு என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை. “நான் இந்நகருக்காக உயிர்துறப்பேன் நூற்றுவரே, அதையன்றி எதையும் அறியேன்” என்றான்.

”பயிற்சியற்ற இளைஞர்களை மேலும் படைகளில் சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்பது அமைச்சரின் ஆணை” என்று நூற்றுவன் சொன்னான். சாத்யகி விழிகளில் படர்ந்த கண்ணீருடன் “நான் இளைய யாதவருக்காக வாழ எண்ணுகிறேன் நூற்றுவரே... கருணை காட்டுங்கள்” என்றான். ”நீர் வேறென்ன தொழில் செய்வீர்? செம்மொழி சற்றேனும் தெரியுமா? அரண்மனைப்பணிகள் ஏதேனும் அறிவீரா?” என்று அவன் கேட்டான். “நான் காட்டில் வாழ்ந்த யாதவன்... கன்றுமேய்ப்பதொன்றை மட்டுமே அறிந்தவன்” என்று சாத்யகி தாழ்ந்த குரலில் சொன்னான்.

“இங்கு கன்றுகளே இல்லை” என்றபின் நூற்றுவன் அருகே நின்றவனை நோக்க அவன் “நீர் இங்கே வணிகர்களிடமோ துறையிலோ வினைவலனாக பணியாற்றலாம். குறுகியகாலத்திலேயே செல்வமீட்டலாம். திறனிருந்தால் நீரே வணிகராகவும் ஆகமுடியும்” என்றான். சாத்யகி “நூற்றுவரே, நான் யாதவ மன்னரின் காலடியில் எளிய கூழாங்கல்லென அமையும் பணிக்காக மட்டுமே இங்கு வந்தேன். பிறிது எதையும் எண்ணமாட்டேன்” என்றான்.

நூற்றுவர்தலைவன் அவன் உறுதியைக் கண்டு சற்று குழம்பி “இளைஞராக இருக்கிறீர்...” என்றபின் முடிவெடுத்து முகவாயில் கைகளை சேர்த்துக்கொண்டு அவனை கூர்ந்து நோக்கி “அரண்மனையில் தொழும்பராக பணியாற்றுவீரா?” என்றான். சாத்யகி ஆவலுடன் “ஆம், அந்தப்பணியை செய்கிறேன். அதுவே எனக்குப்போதும்” என்றான்.

“அது என்ன பணி என அறிவீரா?" என்றான் நூற்றுவன். “எதுவாக இருந்தாலென்ன? இளையவரின் காலடிகள் தொடும் மண்ணில் நான் வாழவேண்டும்” என்று சாத்யகி சொன்னான். நூற்றுவன் “நீர் யாதவ மன்னருக்கு அடிமையாவீர். உமது சொல்லும் செயலும் எண்ணமும் கனவும் அவருக்கென அளிக்கப்பட்டாகவேண்டும்” என்றான். “ஆம், என் மூதாதையர் மேல் ஆணை” என்றான் சாத்யகி. அகக்கிளர்ச்சியுடன் நெஞ்சில் கைவைத்து “நான் எத்தகைய உறுதிமொழியை வேண்டுமென்றாலும் அளிக்கிறேன்...” என்றான்.

நூற்றுவர்தலைவன் “நீர் உமது தன்விருப்பத்தால் தொழும்பராகிறீர் என்று வாக்களித்தால் உமது உடலில் தொழும்பருக்கான ஒப்புக்குறி பொறிக்கப்படும். அதன்பின் உமக்கு இப்பிறவியில் பிறிதொரு அடையாளம் இல்லை” என்றான். கிளர்ச்சியால் நடுங்கிய குரலில் “ஆம், இக்கணமே... அதுவே என் மூதாதையரின் நல்லூழ் என்று கொள்வேன்” என்றான் சாத்யகி. நூற்றுவர்தலைவன் திரும்பி தலையசைத்தான்.

நூற்றுவன் சாத்யகியின் கையில் மை தீட்டிய இரும்பு அச்சால் குறியொற்றியதும் அவன் மும்முறை தலைவணங்கி முன்னால் சென்று நின்றான். அவ்வரிசை மெல்ல முன்னகர்ந்து மாளிகையின் வலப்பக்கம் இருந்த தாழ்வான கூரைகொண்ட கூடத்திற்குள் நுழைந்தது. அங்கே அவன் கையிலிருந்த ஒப்புக்குறியை நோக்கி அவனை விலகி நிற்கச்செய்தனர். அங்கே முன்னரே இருபதுபேருக்குமேல் நின்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் சர்மாவதிக்கரையிலும் தண்டகாரண்யத்திலும் இருந்து வந்த கரிய மலைமக்கள். பதைத்த விழிகளும் உயரமற்ற உடலும் வளைந்த மெலிந்த தோள்களும் கொண்டவர்கள்.

ஒரு வீரன் வந்து மலைமக்களின் மொழியில் “ஒவ்வொருவராக அங்கே செல்லுங்கள்... ஒப்புக்குறி பெற்றுக்கொள்ளுங்கள். நன்கு சிந்தியுங்கள், இந்த ஒப்புக்குறியில் நீங்கள் யாதவமன்னருக்கு அடிமை என்றிருக்கிறது. ஒப்புக்குறி பதிக்கப்பட்டபின்னர் உங்களுக்கு எவ்வகையிலும் விடுதலை இல்லை. இங்கிருந்து விலகிச்சென்றால் யாதவர்களின் வாள் உங்களைத் தொடர்ந்து வரும். எங்கு சென்றாலும் அங்குள்ள அரசர்களால் சிறையிடப்படுவீர்கள்...” என்றான். அதை அவன் அத்தனை மலைமொழிகளிலும் மீண்டும் மீண்டும் சொன்னான். அவன் சொன்னதை அவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. மின்னும் கண்களுடன் நோக்கியபடி உடல் ததும்பி நின்றனர்.

வீரர்களால் அழைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் மூன்று வீரர்கள் நின்றிருந்த ஒரு பீடம் நோக்கி சென்றனர். பீடத்தின்மேல் இரும்பாலான கலத்தில் செங்கனல் கீழிருந்து வந்த காற்றில் சீறிக்கொண்டிருந்தது. வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறிய அச்சு ஒன்றை அந்தக்கனலில் இட்டு பழுக்கக் காய்ச்சி சிவந்த மலர் போல மரப்பிடிகொண்ட கிடுக்கியால் எடுத்து அவர்களின் வலத்தோளில் அழுத்தினர்.

முதலில் சென்றவனின் தோளில் அச்சுபதிந்ததும் அவன் முதுகுச்சதைகள் அதிர்வதையும் கழுத்து இழுபட்டு தெறிப்பதையும் சாத்யகி கண்டான். கண்களில் நீர் வழிய பற்களைக் கிட்டித்தபடி உடல்குறுக்கி நின்ற அவன் நீண்டமூச்சுடன் விடுபட்டு முன்னால் சென்றான். அச்சு பதிந்த புண்மேல் இன்னொரு வீரன் மயிற்பீலியால் பச்சைநிறமான எண்ணை ஒன்றை அள்ளி மெல்லப்பூசினான். கண்களை மூடி அதை ஏற்றபின் முன்னால் சென்ற அவன் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் சாத்யகியை நோக்கினான்.

சாத்யகி கனல் முன் சென்று நின்றான். பழுக்கக் காய்ச்சப்பட்ட உலோக அச்சில் இருப்பது சங்குசக்கரக் குறி என தெரிந்தது. அது தன் தோளைத் தொடுவதற்காக அவன் விழிவிலக்கிக் காத்திருந்தான். அந்த எதிர்பார்ப்பினாலேயே அது பெரிய வலி என தெரியவில்லை. ஒருகணம் உடல்குறுக்கி அதை ஏற்றபின் அவன் முன்னகர்ந்து தைலதாரைக்குச் சென்று நின்றான். தோளில் தேள்கடி ஏற்றதுபோல வலி தெறிக்கத்தொடங்கியது. தொழும்பராக ஒப்புக்குறி பெற்றவர்கள் வலிக்காக உதட்டை அழுத்தியபடி ஒன்றும் பேசாமல் கூடி நின்றனர்.

கிந்தமன் மறுபக்கமிருந்து வந்து “உம்மைத் தேடினேன்...” என்றபின் அந்தக் குழுவை நோக்கி “என்ன செய்துவிட்டீர்? தொழும்பராகவா சேர்ந்தீர்?” என்றான். சாத்யகி “ஆம், நான் அரண்மனையில் பணியாற்றவேண்டும்” என்றான். கிந்தமன் சினத்துடன் குரலைத் தாழ்த்தி “தொழும்பன் ஒருபோதும் வாளெடுக்கமுடியாது. பொன்னோ மணியோ தனக்கென வைத்துக்கொள்ளக்கூடாது. மந்தணம் காக்கலாகாது. அணிகளோ மேலாடையோ அணியலாகாது. அவனுக்கென தனி இல்லமோ மனையாளோ மைந்தரோ அமையமாட்டார்கள். முன்னோர் வகுத்த நால்வகை அறங்களும் அவனுக்கில்லை. இறையோர் அன்றி அவனுக்கு தெய்வங்களும் இல்லை, அறிவீரா?” என்றான். “அவை எனக்குத்தேவையில்லை” என்றான் சாத்யகி.

“மூடத்தனம் செய்திருக்கிறீர்... சற்றேனும் சிந்திப்பவர்களுக்குரியதல்ல இது... மானுடன் தன்னை விலங்காக ஆக்கிக்கொள்ளுதல் மட்டும்தான். நீர் என்னைப்போல மாலுமியாக விழைவு சொல்வீர் என எண்ணினேன். உமக்காக அங்கே காத்து நின்றேன்...” என்ற கிந்தமன் “இனி பேசிப்பயனில்லை. உம்மை நீர் ஒப்புக்கொடுத்துவிட்டீர்” என்றான். “கிந்தமரே, நான் கிளம்புகையிலேயே என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன்” என்றான். “உமது ஊழ் அது... அதற்காக வருந்துவீர்" என்றான் கிந்தமன்.

"நீர் ஒப்புச்சாத்து பெற்றுவிட்டீரா?” என்றான் சாத்யகி. கிந்தமன் சால்வையால் மூடப்பட்ட தன் தோளை காட்டினான். சிறிய செந்நிறமான சுட்டவடு அதில் தைலம் வழிய தெரிந்தது. “வலி தாளமுடியவில்லை. ஆனால் இது இருக்கும் வரை இந்நகரில் நான் கட்டற்றவன். என் வாழ்க்கையின் தொடக்கத்தை இதுவே அமைக்கப்போகிறது...”

“வேறெந்த நகரிலும் இத்தகைய அமைப்பு இருப்பதாக அறிந்ததில்லை” என்றான் சாத்யகி. “ஆம், ஆனால் வேறெங்கும் இத்தனை புதியவர்கள் வந்து கூடுவதில்லை அல்லவா?” என்று கிந்தமன் சொன்னான். “ஒவ்வொரு நாளும் என யாதவர்களின் படை பெருகிவருகிறது என்கிறார்கள்.” சாத்யகி அதைக்கேட்டு நெஞ்சு விம்ம “இன்றுமுதல் அவன் அடிமைகளில் நானும் ஒருவன்... யாதவ கிருஷ்ணனுக்காக களப்பலியாகப்போகும் பல்லாயிரவரில் நானும் ஒருவன்” என்றான்.

கிந்தமன் புன்னகை செய்து “நான் இறக்கவிரும்பவில்லை. மாலுமியாகச் செல்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் சாத்யகி. “என் சிற்றூரின் எறும்புப்புற்றுக்குள் வாழ்ந்து சலித்துவிட்டேன். மண்ணில் வாழும் மானுடரில் மாலுமிகளால் மட்டுமே சிறகுவிரிக்க முடியும். அங்கே பெருநாவாய்கள் பல்லாயிரம் சிறகுகளை விரித்தெழுவதை நான் கனவில் காண்கிறேன்” என்றான்.

பின்னர் குரலைத் தாழ்த்தி “இந்த எளிய பெண்களையும் நான் வெறுக்கிறேன். பளிங்குநிறம் கொண்ட யவனப்பெண்களுக்காக நான் எவரையும் கொல்லச்சித்தமாக இருக்கிறேன்” என்றான். சாத்யகி புன்னகைசெய்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.

“வருகிறேன், நாம் இனிமேல் சந்திக்கமுடியாதென்று எண்ணுகிறேன்” என்றபின் கிந்தமன் அணிவகுத்துச் சென்ற மாலுமிகளுடன் சென்று சேர்ந்துகொண்டான். சங்குசக்கரம் பொறிக்கப்பட்ட கொடியுடன் ஒரு படைவீரன் அருகே வந்து “தொழும்பர்குறி பொறிக்கப்பட்டவர்கள் மட்டும் இங்கு நில்லுங்கள்” என்றான். அவர்கள் ஒருவரோடொருவர் உடல்சேர்ந்து நின்றனர். வெந்த தசையின் நாற்றமும் தைலமணமும் கலந்து எழுந்தன.

“கைகளைப்பற்றிக்கொண்டு என்னுடன் வாருங்கள்” என்று வீரன் ஆணையிட்டான். தொழும்பர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிக்கொண்டு ஒற்றைத்தொகையாக ஆயினர். “வருக!” என்றபின் கொடியுடன் வீரன் முன்னால் செல்ல அவர்கள் மந்தை போல கால்கள் பின்ன அவனைத் தொடர்ந்துசென்றார்கள்.

பகுதி 8 : பெருவாயில்புரம் - 3

துவாரகைக்குச் செல்லும் நீண்ட கற்பாளச்சாலையில் நடக்கும்போது சாத்யகி ஏன் கைகளை கோர்த்துக்கொள்ளச் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்தான். தொழும்பர்களாக வந்தவர்கள் அனைவருமே ஒரு பெருநகரை முதன்முறையாக பார்ப்பவர்கள். அவர்களால் இரண்டுபக்கத்தையும் நோக்கி விழிதிகைக்காமலிருக்க முடியவில்லை. பெருகிச்சென்றுகொண்டிருந்த கூட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு சென்றபோதிலும் அவர்கள் முட்டிமோதி தடுமாறினர். இரண்டுமுறை கைச்சங்கிலி உடைந்து மூவர் நெரிசலில் தவறிச்சென்றனர். பின்னால் வந்த வீரர்கள் அவர்களைப் பிடித்து மீண்டும் மந்தையில் சேர்த்தனர்.

சாத்யகியும் இருபக்கங்களையும் நோக்கியபடி வந்தான். சீராக நடப்பட்ட மலர்மரங்களும் வேப்பமரங்களும் செறிந்த சோலைக்குப்பின் காவல்நாயகங்களின் மாளிகைகள் வரத்தொடங்கின. அனைத்துமே உருண்ட பெரிய தூண்கள் கொண்ட முகப்பும் உப்பரிகை நீண்ட மாடமும் திரைச்சீலைகள் ஆடிய பெருஞ்சாளரங்களும் கொண்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் முன்னால் வணிகர்களும் வீரர்களும் நிரைவகுத்து நின்றிருந்தனர். மாளிகைகளின் முகடுகளில் யாதவர்களின் கருடக்கொடி பறந்தது. மாளிகைக்கு முன்னால் அந்தக் காவல்நாயகத்திற்குரிய கொடிகள் பறந்தன. நண்டு, ஆமை, எருமைக்கொம்பு, வில், பற்சக்கரம், நங்கூரம், குதிரை, வளைதடி என வகைவகையான குறிகள். ஒவ்வொன்றிற்கும் தனிப்பொருள் இருக்கும் என சாத்யகி எண்ணிக்கொண்டான்.

துவாரகை உயரமான குன்று என்பதை சாத்யகி சற்றுநேரம் கழித்தே அறிந்தான். முழுக்குன்றும் நகரமாக மாறியிருந்தது. பாலையின் நிரப்பையே சார்ந்த தோரணவாயிலுக்கும் முகப்புச்சாலைக்கும் அப்பால் அரைஆள் உயரத்தில் இரண்டாவது அரசபாதைச்சுற்று இருந்தது. மக்கள் செல்ல மிகநீளமான பன்னிரு படிகள் மையத்தில் இருக்க இருபக்கமும் நடைபாதையே வளைந்து சுழன்று மேலேறிச்சென்றது. அதில் வலப்பக்க வளைவில் தேர்களும் புரவிகளும் செல்ல இடப்பக்கம் வழியாக வண்டிகளும் பொதிவிலங்குகளும் சென்றன. வலப்பக்கப்பாதை நேராக அரசவீதியின் பெருமுகப்பை அடைந்தது. இடப்பக்கப்பாதை அங்காடிகளை நோக்கி சென்றது.

அங்காடியிலிருந்து போரோ பெருவிழவோ நிகழ்வதுபோல முழக்கம் எழுந்துகொண்டிருந்தது. தொலைவில் என எழுந்த கடலோசையுடன் அது முழுமையாக இணைந்து ஒலித்தது. துவாரகைக்குமேல் கடல்துமிகள் பொழியும் என்பது வெறும் கதை என சாத்யகி உணர்ந்தான். கடல் மிக ஆழத்தில் எங்கோதான் இருந்தது என தோன்றியது .அங்கிருந்து ஓசைகூட பெரிதாக மேலெழவில்லை. கடலோரமாகவே அங்காடிகள் அமைந்திருந்தன. அங்காடிகளிலிருந்து சாலைகள் இறங்கி துறைமுகம் நோக்கி செல்லக்கூடும். சாத்யகி அதுவரை கடலையே பார்த்திருக்கவில்லை. அவன் பார்த்த காம்பில்யத்தின் கங்கைத்துறைமுகமே நெடுநேரம் அவனை திகைத்து நெஞ்சமையச் செய்தது. “இதைவிட ஆயிரம்மடங்கு பெரியது துவாரகையின் துறைமுகம். இங்குள்ள அத்தனை படகுகளையும் அள்ளி அங்கு வரும் ஒரு பீதர்நாவாயின் உள்ளே வைக்க முடியும்” என்றார் அவனுடன் நின்று காம்பில்யத்தைப்பார்த்த முதிய யாதவரான பிரதீபர்.

அரசப்பெருவீதியின் இருபக்கமும் ஏழடுக்கு மாடங்கள் நிரைவகுத்திருந்தன. முதல்பார்வைக்கு அவை ஒன்றுபோலிருக்கும்படி கட்டப்பட்டிருந்தாலும் மெல்ல மெல்ல அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகம் கொண்டவை என சாத்யகி கண்டுகொண்டான். மிகப்பெரிய உருண்டதூண்களை அவன் கூர்ந்து நோக்கினான். அத்தனை பெரிய மரங்களை எங்கிருந்துகொண்டுவந்தனர் என எண்ணி வியந்தபின்னர்தான் அவை மரங்களல்ல சுதைபூசப்பட்ட செங்கல்தூண்கள் என தெரிந்துகொண்டான். தூண்கள் லவணர்கள் வாசிக்கும் இரட்டைப்புல்லாங்குழல்கள் போல இணைந்து நின்றிருந்தன. தூண்களுக்குமேல் அமைந்திருந்த உத்தரமுகப்பில் கன்னம் கொழுத்த குழந்தைகளும் பெண்களும் குவிந்த உதடுகளுடனும் சுருள்முடிகளுடனும் செதுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியை சுருண்டு சுருண்டு பரவிய அவர்களின் ஆடைகள் நிறைத்திருந்தன.

அவனுடன் கைகோர்த்திருந்த கரிய மலைமகன் “அவை பூதங்கள் யாதவரே. இரவில் இந்த மாளிகைகளின் கதவங்களை மூடிவிடுவார்கள். நுண்சொற்களின் கட்டவிழ்ந்ததும் இவை அனைத்தும் எழுந்து காற்றை நிறைத்து இத்தெருக்களை காவல் காக்கும்” என்றான். “ஆனால் அவை அழகியவை. இளம்பெண்களும் குழந்தைகளும்” என்றான் சாத்யகி “ஆம், அவை பகலில் அப்படித்தான் தோற்றமளிக்கும். இரவில் அவை கொடுவுருக் கொள்ளும். அவற்றின் உதடுகளைப் பாருங்கள். அவை தப்பி ஓடும் அடிமைகளின் குருதியை உறிஞ்சுபவை.” அவனுடைய பெரிய வெண்ணிற விழிகள் ஒடுங்கிய கரிய முகத்தில் பிதுங்கித்தெரிந்தன.

“தப்பி ஓடும் அடிமைகளை இவை கொன்று போட்டிருக்கும். அவர்கள் குருதி இழந்து வெளுத்து விரைத்துக்கிடப்பார்கள். இரவில் உதிர்ந்த களாப்பழங்களைப்போல அவர்களின் உடல்களை காலையில் அள்ளி வண்டிகளில் கொண்டுசெல்வார்கள். அங்கே துறைமேடைகளுக்கு அப்பால் ஒரு பெரிய கடல்பாறை உள்ளது. அங்கு கொண்டுசென்று சடலங்களை போட்டுவிடுவார்கள். நீள்கழுத்துக் கழுகுகள் அவற்றை கொத்திக்கிழித்துண்ணும். பழகிய கழுகுகள் அவை. அவற்றைத்தான் இங்கே செய்திப்பறவைகளாக பயன்படுத்துகிறார்கள்.”

“இவற்றை எங்கிருந்து அறிந்தீர்?” என்றான் சாத்யகி. “யாதவரே, நான் தட்சிணமாளவத்தின் காட்டிலிருந்து வருகிறேன். நாங்கள் வராலத மலைக்குடியினர். நாங்கள் நூற்றறுபதுபேர் அங்கிருந்து கிளம்பினோம். நாற்பத்தெட்டுநாட்கள் காடுகளிலும் பாலையிலும் நடந்தோம். இங்கு எழுபத்தாறுபேர் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறோம்” என்றான். சாத்யகி வியப்புடன் திரும்பி பிறரைப் பார்த்தான். அவனைப்போலவே பெரிய வெண்ணிற விழிகளும் சிறிய கருமுகமும் கொண்டிருந்தனர்.

“என் பெயர் கரன். எங்களில் நான் மட்டுமே தொல்மொழி பேசுவேன். மலைகளில் வாழ்கையில் மாளவ வணிகர்களிடம் மலைப்பொருள் விற்றுக்கொண்டிருந்தேன். இங்கு வரும் வழியெல்லாம் இக்கதைகளைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.” சாத்யகி ”அதன்பின்னரும் ஏன் இங்கு வந்தீர்?” என்றான். ”நாங்கள் செல்வதற்கு வேறு இடமில்லை. அங்கே மாளவர்களின் படைகள் எங்கள் காடுகளை கைப்பற்றிக்கொண்டிருக்கின்றன. எங்கள் குடிகள் சிதறிக்கொண்டிருக்கிறார்கள்.”

சாத்யகி “நீங்கள் ஏன் அவர்களை எதிர்த்துப்போராடக்கூடாது?" என்றான். “நாங்கள் எப்போதுமே போராடியதில்லை... காடுகள் எங்களுக்கு அதை கற்றுத்தரவில்லை. எங்கள் தெய்வங்கள் நாங்கள் போரிடுவதை விரும்பவுமில்லை.” சாத்யகி “இங்கு இந்த அடிமைக்குறியை பெறுவதற்கா அத்தனை தொலைவுக்கு வந்தீர்கள்?” என்றான். “அடிமை என்பவன் தன் உரிமையாளரால் பாதுகாக்கப்பட்டவன் அல்லவா?” என்றான் கரன். “இங்கே நாங்கள் தேடுவது பசியற்ற வாழ்க்கை. சவுக்குகள் எங்களை ஆண்டாலும் எங்கள் உயிர் பேணப்படும் அல்லவா?"

பாதை மேலும் வளைந்து அடுத்த சுழலை அடைந்தது. மேலும் மேலுமென நகரம் ஏறிச்சென்றுகொண்டே இருந்தது. கீழே நோக்கியபோது மாளிகைகளின் பலவண்ணக் கூரைகள் முதிர்காலையின் வெண்ணிற ஒளியில் மின்னிக்கொண்டிருப்பதை காணமுடிந்தது. மேலே செல்லும்தோறும் கடற்காற்றின் விரைவு கூடிவந்தது. சாத்யகியின் கூந்தல் எழுந்து பறந்தது. அவன் கைகளை விட்டுவிட்டு கூந்தலை அள்ளி முடிச்சிட்டுக்கொண்டான். ஒரு வீரன் “கைகளை விட்டுவிடாதே” என்று எச்சரித்தான்.

துவாரகை அப்போதுதான் மெல்லமெல்ல விழித்தெழுந்துகொண்டிருந்தது. அது துயிலாநகரம் என்று யாதவப்பாடகர்கள் சொல்வதுண்டு. அங்கே வணிகம் முழுக்க இரவில்தான் நிகழும். இரவெல்லாம் விழித்திருந்த வணிகர்கள் முற்பகல் முழுக்க துயில்வார்கள். அவர்களின் வினைவலரும் ஏவல்மாக்களும்கூட வெயில்சாய்ந்தபின்னரே எழுவர். நகர்க்குடிகளில் வணிகர்களே மிகுதி என்பதனால் காலையில் எழுந்து கடமையாற்றுபவர்கள் அரசப்படையினரும் அலுவலர்களும்தான்.

சாலைநிறைத்து சென்றுகொண்டிருந்தவர்களின் முகங்களை நோக்கியபடி சாத்யகி சென்றான். காலையிலேயே நீராடி உயர்தரமான பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். மரவுரியணிந்த பிற எவருமே கண்ணுக்குப்படவில்லை. பல வண்ணங்களில் பல வடிவங்களில் தலைப்பாகைகள். முகப்பில் கருடக்குறி கொண்டவர்கள் அனைவரும் அரசப்பணியாளர்கள் என்று தோன்றியது. சிலர் பொன்னிலும் சிலர் வெள்ளியிலும் சிலர் செம்பிலும் அக்குறிகளை அணிந்திருந்தனர். ஒருவரோடு ஒருவர் விரைந்து பேசியபடி சென்றவர்கள் அவர்களை ஆர்வமற்ற விழிகளால் நோக்கி திரும்பிக்கொண்டனர்.

மாளிகை முகப்புகளிலெல்லாம் சிறுமுரசுகள் அமைந்த மேடைகளில் கொம்பூதிகளும் கோல்காரர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். செந்நிறமான புருவங்களும் பச்சைப்பளிங்கு விழிகளும் புண்போன்ற வாய்க்குள் கூழாங்கல் நிறப் பற்களும் கொண்ட யவனக் காவலர்கள் தங்கள் யவன வேல்களைப்பற்றியபடி துயில் எஞ்சிய விழிகளுடன் காவல் நின்றனர். அவர்களை பணிவிடுவிக்கும் பகல்காவலர்கள் வந்திருக்கவில்லை.

சாலையில் எங்கும் யானைகள் இல்லை. துவாரகையிலேயே யானைகள் கண்ணுக்குப்படவில்லை என அதன்பின்னர்தான் உணர்ந்தான். அங்கே நின்ற பச்சைமரங்கள் அனைத்துமே நட்டு வளர்க்கபப்ட்டவை. புல்வெளிகளும் காடுகளும் இல்லாத அவ்விடத்தில் யானைகளுக்கு உணவு கொடுப்பது கடினமாக இருக்கலாம். அப்படியென்றால் துறைமேடையில் பொதிகளை நாவாய்களில் எப்படி ஏற்றுகிறார்கள்? யானைகள் துறைமுகத்தில் மட்டும் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவை அங்கிருந்தால் நகரிலும் தென்படாமலிருக்காது.

புரவிகளும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. கங்காவர்த்தத்தின் புரவிகள் முதுகுபரந்து வயிற்றின் அடிப்பக்கம் வளைந்து இரட்டை மார்புடன் முரசுமுழக்கும் முழைக்கோல் போன்ற குளம்புகளுடன் இருக்கையில் துவாரகையின் புரவிகள் கிளியலகு போன்று கூரிய குளம்புகளுடன் சவுக்குபோலச் சுழன்ற கால்களுடன் ஒடுங்கி நீண்ட உடலும் மிகநீளமான கூர்முகமும் எப்போதும் நடுங்கி அசையும் சிறியகாதுகளும் கொண்டிருந்தன. அவற்றில் அமர்ந்த வீரர்கள் எடையற்ற சிறிய விற்களை தோளில் மாட்டி கடிவாளத்தைப்பற்றாமல் சரிந்து அமர்ந்து பேசிக்கொண்டு சென்றனர்.

ஏழாவது சுற்றில் மீண்டும் கோட்டைவாயில் வந்தது. அங்கே நின்றிருந்த யவனக்காவலர் அவர்களைக் கொண்டுவந்த வீரர்களிடம் ஒப்புச்சான்றுகளைப் பெற்று உள்ளே அனுப்பினர். இருபக்கமும் நின்ற மாளிகைகள் அனைத்துமே வெண்ணிறமான குவைமுகடுகள் கொண்டவையாக மாறின. அல்லிமொட்டுகள் எழுந்த குளம் போன்றது துவாரகை என்ற யாதவர்களின் பாடலை சாத்யகி நினைவுகூர்ந்தான். மேலே கிருஷ்ணனின் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து நோக்கும்போது அப்படி தெரியலாம். அதைப்பாடிய பாணன் அங்கு நின்று பார்த்திருக்கலாம். பாணர்கள் காற்றுபோல், எங்கும் செல்லும் வல்லமைகொண்டவர்கள்.

பதினெட்டாவது அடுக்கில் மீண்டும் அரண்மனையின் கோட்டைமுகப்பு வந்தது. பெருவாயில் வெண்கலக்குமிழிடப்பட்ட மரக்கதவால் மூடப்பட்டிருந்தது. திறந்திருந்த திட்டிவாயில் வழியாகவே அரசப்பணியாளர் உள்ளே சென்றனர். வாயிலின் இரு பக்கமும் பொறிக்கப்பட்டிருந்த பொன்பூசப்பட்ட சங்குசக்கரத்தையும் நடுவே எழுந்த உச்சி வளைவில் தழல்நிறமான சிறகுவிரித்த செங்கழுகின் சிற்பத்தையும் நோக்கி சாத்யகி சிலகணங்கள் கால் மறந்து நின்றான். கழுகின் செங்கனல் விழிகள் அவனை நோக்கின. பொன்னிறமான அலகு சற்றே திறந்திருந்தது.

உச்சியில் யாதவகிருஷ்ணனின் மாளிகை பெரிய வெண்முகைக்கூட்டம் போல குவைமுகடுகளுடன் எழுந்து நின்றது. அவற்றில் பறந்த நூற்றுக்கணக்கான கொடிகளின் படபடப்பை விழிதூக்கி நோக்கினான். வானொளியில் கண்கூசி விழிநீர் நிறைந்து காட்சி மறைந்தது. “இவ்வழி செல்க!” என்று வீரன் அவர்களுக்கு அறிவுறுத்தினான். கோட்டைக்கு இடப்பக்கமாகச் சென்ற பெரிய பாதையில் அவர்கள் திரும்பி நடந்தனர். அங்கிருந்த மாளிகைகளின் வெண்ணிறச் சுவர்ப்பரப்பில் அரண்மனைமுகடுகளின் குவைநிழல்கள் தெரிந்தன. தரையில் கொடிகளின் நிழல்கள் அசைவதைக் கண்டு சாத்யகி கால்பதறினான். கொடிகளை மிதிக்காமல் அவன் விலகிச்செல்ல பிறர் அவனைக்கண்டு அதேபோல விலகி நடந்தனர்.

பெரிய முகமண்டபம் கொண்ட வினைநாயகத்தின் மாளிகை முகப்பை அவர்கள் சென்றடைந்தனர். கைகளை விட்டுவிட்டு நிரைவகுத்து நிற்கும்படி வீரர்கள் ஆணையிட்டார்கள். கருங்கற்பாளங்கள் பரப்பப்பட்ட முற்றத்தில் வெயில் கண்கூசும்படி பரவியிருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் கீழே மாளிகைகள் முகடுகளில் விரிந்த பீதர்களின் ஓடுகள் வெயிலில் மின்ன கங்கைநீர்ப்பரப்பின் அலைவெளி போல தெரிந்தன. ஒவ்வொரு மாளிகையையும் சூழ்ந்திருந்த மலர்மரங்களின் நிழல்கள் நீர்ப்பாசிப்பரப்புகள் என காற்றில் நெளிந்தன.

தெற்குத்திசையிலிருந்து காற்று சுழன்றடித்து ஆடைகளை படபடக்கச்செய்தது. உப்புமணம் கொண்ட குளிர்காற்று. அங்குதான் கடல் இருக்கிறது என சாத்யகி எண்ணிக்கொண்டான். மிகப்பெரிய கோட்டை ஒன்றால் அத்திசை பாதியளவு மறைக்கப்பட்டிருந்தது. திசைகளை இணைத்துக் கட்டியதுபோல இடைவெளியே இல்லாமல் கட்டப்பட்ட சற்றே வளைந்த அக்கோட்டைவாயிலை அவன் விழியிமைக்காமல் நோக்கிக்கொண்டு நின்றான்.

அதன்பின்னர்தான் அக்கோட்டைப்பரப்பின் மேல் ஓரு வெண்ணிற மலர்வடிவை சாத்யகி கண்டான். அடுத்த சிலகணங்களில் அது கப்பலென்று அறிந்தான். உடனே அந்த நீலநிறமான கோட்டை மாபேரும் நீர்வெளி என்று தெரிந்து உடல்சிலிர்த்தான். அலைகளின் நெளிவை காணமுடிந்தது. விழிவிரித்து இருபக்கமும் மாறிமாறி முகம்திருப்பி கடலையே நோக்கினான். நூற்றுக்கணக்கான நாவாய்களை காணமுடிந்தது. வெண்மலர்க்கொத்துபோல ஏராளமான பாய்களை விரித்த பெருநாவாய்கள். இளஞ்செந்நிறத்தில் பாய்கள் புடைத்த மரக்கலங்கள். இறகைத் தூக்கி ஒருக்களித்து நீந்தும் மீன்போன்ற அம்பிகள். ஒவ்வொன்றையும் அவன் பாடல்கள் வழியாக அறிந்திருந்தான். ஒவ்வொன்றும் வேறாக இருந்தன. பாடல்வரிகள் எங்கோ என ஒலித்தன. ஆனால் சிலகணங்களில் அந்த வரிகளனைத்தும் அப்போது அங்கே கண்டவற்றால் பொருளேற்றம் கொண்டன.

“பெரிய கோட்டை” என்றான் கரன். “அது கடல்” என்று சாத்யகி சொன்னான். “கடலா?” என்றான் கரன் திகைப்புடன். “ஆம், அது நீர்தான்... கூர்ந்து பாரும், அலைகளை காணமுடியும்” கரன் மேலும் திகைப்புடன் வாய்திறந்து நழுவி விழுந்துவிடுமென துருத்திய விழிகளுடன் நோக்கி பெருமூச்சுவிட்டான். “ஆம், நீர்தான்” என்றான். “அது ஏன் அங்கே நின்றிருக்கிறது? ஏன் பெருகிவந்து இவ்விடத்தை நிறைக்கவில்லை?” சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென எண்ணியபோதே கரன் “யாதவ கிருஷ்ணனின் ஆணை. நீரையும் காற்றையும் அவன் ஆள்கிறான்” என்றான்.

பின்னால் நின்றிருந்த அவன் குலத்தினர் உரக்க ஏதோ கேட்க அவன் அவர்களின் மொழியில் மிகவிரைவான சொற்களுடன் விளக்கத் தொடங்கினான். அனைவரும் இணைந்து குரலெழுப்ப பறவைகள் கலைந்ததுபோல ஓசை எழுந்தது. காவலன் “ஓசையிடாதீரக்ள். காவலர்தலைவர் வருகிறார்” என்றான். அவர்கள் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. சாத்யகி கீழிருந்து பெரிய கலம் ஒன்று புடைத்த பாய்களுடன் நீர்வெளியில் மேலேறுவதைக் கண்டான். அதன் பாய்கள் மட்டுமே மேலே தெரிந்தன. முழு உடலும் அலைகளுக்குள் மூழ்கியதுபோல தோன்றியது.

உள்ளிருந்து நடுவயதான ஒருவர் விரைந்து முற்றத்திற்கு வந்து “சாத்யகி எங்கே? இங்கே சாத்யகி யார்?” என்று கூவினார். சாத்யகி “இங்கிருக்கிறேன் அமைச்சரே” என்றான். அவர் மணிக்குண்டலங்கள் அணிந்து நீண்ட குழலுடன் இருந்தார். பொன்னூல் பின்னிய பட்டுச்சால்வையை அள்ளிப்போட்டபடி அவனை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்து “நீயா? மூடா. நீ விருஷ்ணி குலத்தவனல்லவா? நீ ஏன் இந்த நிரையில் நின்றாய்?” என்றார்.

அவன் மறுமொழி சொல்வதற்குள் அவர் வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டார். “நான் யாதவனின் தோழன் ஸ்ரீதமன். இங்கு முறையமைச்சன். விருஷ்ணிகுலத்தவன் நீ என சற்றுமுன்னர்தான் ஓலைக்குறிப்பை நோக்கி அறிந்தேன் மிகவும் தற்செயலாக... இல்லையேல் நான் காணாமலேயே போயிருப்பாய்... நல்லூழ்தான். மிகப்பெரிய நல்லூழ்தான்...”

சிரிப்பும் கொந்தளிப்புமாக அவன் தோளைப்பற்றி உலுக்கினார். "யாதவ மாமன்னரின் மருகன் நீ. இப்படியா வருவது? உன் தந்தையின் ஓலையுடன் வந்திருந்தால் உன்னை வரவேற்க ஏழு அமைச்சர்கள் தோரணவாயிலுக்கு வந்திருப்பார்களே?" என்றார். சாத்யகி “தந்தையின் ஓலையுடன்தான் வந்தேன் அமைச்சரே. அதை இளையயாதவரிடம் பின்னர் கொடுக்கலாமென நினைத்தேன்” என்றான்.

“மூடா மூடா” என்று கூவிய ஸ்ரீதமர் அவன் தோளை நோக்கி “தொழும்பர்குறி....” என்றார். சாத்யகி அதை நோக்கியபின் “இருக்கட்டும். நான் என்றென்றும் இளையயாதவரின் அடிமை. அதற்குமேல் இங்கே நான் எதையும் விழையவில்லை” என்றான். ஸ்ரீதமரின் கண்கள் கனிந்தன. “ஆம், நீ விருஷ்ணிகுலத்தோன். அந்த உளவிரிவை உன்னிடம் காண்பதில் வியப்பில்லை. வருக... அரசர் உன்னை சந்திக்கட்டும்” என்று அவன் தோள்களை அணைத்துக்கொண்டார்.

கரன் அவன் கைகளைப்பற்றி “யாதவரே, யார் இவர்? எங்கு கொண்டுசெல்கிறார்? தனியாக செல்லவேண்டியதில்லை. தகுதியற்ற தொழும்பர்களை உடனே கொன்றுவிடுகிறார்கள் இங்கே” என்றான். “இல்லை, இவர் என் உறவினர்” என்றான் கரன். “ உறவினரா? உமக்கா?” என்றான். “பொய் சொல்கிறார்கள் யாதவரே, செல்லாதீர். எங்கள் குடியுடன் இணைந்து நின்றுகொள்ளும்.”

ஸ்ரீதமர் “இவர் யார்? உமது தோழரா?” என்றார். “ஆம், இந்நிரையில் அறிமுகமானவர் இவர். மாளவத்தின் வராலத குலத்தைச் சேர்ந்த மலைமகன். கரன் என்று பெயர்... பின்னால் நிற்பவர்கள் அனைவருமே அவரது குலத்தவர்தான்” என்றான் சாத்யகி. “மாளவர்களின் படைகளை அஞ்சி இங்கு வந்து தொழும்பர்களாக சேர்ந்துவிட்டார்கள்.”

ஸ்ரீதமர் புன்னகையுடன் “வராதலரே, இங்கு தொழும்பர் என எவரும் இல்லை. இங்கு குலமுறைப் பதிவுக்குப்பின் நீங்கள் அரண்மனையின் அலுவலர்களுக்கு நிகராகவே நடத்தப்படுவீர். மானுடரை விலங்குகள் போல் சவுக்காலடிப்பதும் விற்பதும் பிறவகையில் அவமதிப்பதும் இங்கில்லை” என்றார். கரன் தெறிக்கும் விழிகளுடன் நோக்கி “ஆனால்...” என்றான். “பாரதவர்ஷத்தில் எங்கும் தொழும்பர்முறை என்பது ஒன்றே. இங்கே நாங்கள் தொழும்பர்களைப் பெறுகிறோம். அவர்களை குடிகளாக ஆக்கிக்கொள்கிறோம். இங்குள்ள அனைவரும் புகலிடம் தேடிவந்தவர்களே. வந்தபின் அனைவரும் இளையயாதவரின் தோழர்கள்” என்றபின் சாத்யகியிடம் “வருக” என்றார் ஸ்ரீதமர்.

சாத்யகி அவருடன் சென்றபடி “இங்கே தண்டம் இல்லை என்றால் ஒழுங்கு எப்படி வரும்?" என்றான். ஸ்ரீதமர் “தண்டம் இல்லை என எவர் சொன்னது? இளைய யாதவர் கூரிய படைவாள் போல இரக்கமற்றவர் என அனைவரும் அறிவர். ஆனால் முறையான மன்றுசூழ்தலுக்குப்பின் பிழை வகுக்கப்பட்டு அதற்குரிய தண்டமே அளிக்கப்படும்” என்றார். “இந்நகரம் முற்றிலும் புதியது யாதவரே. இங்குள்ள நெறிகளும் புதியவை. ஏழ்கடல் சூழ்ந்த பேருலகமெங்குமிருந்து புதியவை இங்கு வந்துகொண்டிருக்கின்றன.”

“இந்தப்புரவிகள் சோனகநாட்டிலிருந்து வருபவை. இந்த வெண்பளிங்குச் சிற்பங்கள் யவனர்களுடையவை. இந்த யானைத்தந்தச் செதுக்குகள் காப்பிரிநாட்டைச் சேர்ந்தவை. அந்த வெண்களிமண் தூண்கள் பீதர்களால் கொண்டுவரப்பட்டவை. நீர் இங்கு பேசப்படும் மொழியையும் நோக்கலாம். அதுவும் அனைத்து மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெற்று உருவானதே. அதை மணிமிடைபவளம் என இங்கு சொல்கிறோம்.”

அவனை அவர் அருகே இருந்த இன்னொரு மாளிகைக்குள் செல்லும் நீண்ட இடைநாழி வழியாக அழைத்துச்சென்றார். “ஒவ்வொருநாளும் இந்நகரம் பெருகிவருகிறது. எத்தனை மக்கள் வந்தாலும் திகையாதபடி எங்கள் தேவைகளும் பெருகுகின்றன. இங்கு துவாரகைக்கு மேல் இன்று நாங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வாழ்கிறோம். வணிகம் பெருகி நகரம் விரிய விரிய கோடையில் குடிநீர்ப்பஞ்சம் பேரிடராக உள்ளது” என்று ஸ்ரீதமர் சொன்னார். “தெற்கே பத்து காதம் தொலைவிலிருக்கும் குரங்கசாகரம் ஏரியிலிருந்து நீர் மொண்டு நாவாய்களில் ஏற்றி இங்கே கொண்டுவருகிறோம். இந்நகரின் பெரும்செல்வமும் மானுட உழைப்பும் ஒவ்வொரு நாளும் அதற்காக வீணாகிறது.”

சாத்யகி அந்த மாளிகையின் விரிந்த அறைகளை நோக்கியபடி சென்றான். ஒவ்வொரு அறையிலும் சுவடிநாயகங்கள் சொல்வதை இரண்டுமுழ உயரமுள்ள சிறிய சாய்ந்த பீடங்களுக்குப்பின்னால் தரையில் தோல் விரித்து அமர்ந்த கற்றுச்சொல்லிகள் தலைப்பாகை தெரிய குனிந்து பீதப்புல் ஏடுகளில் தூவல்முனைகளால் பளிங்குக் குடுவையில் இருந்து மைதொட்டு எழுதிக்கொண்டிருந்தனர். எழுதப்பட்ட புல்லேடுகள் பலகைகளில் காயவைக்கப்பட்டிருந்தன. ஏடுகளையும் இலச்சினைகளையும் குறியொப்புச்சுவடிகளையும் கொண்டு நூலேந்திகள் அறைகளில் இருந்து அறைகளுக்கு காற்றுபோல ஓசையின்றி சென்றுகொண்டிருந்தனர்.

”ஆகவேதான் ஒரு பெருந்திட்டத்தை தொடங்கவிருக்கிறோம்” என்றார் ஸ்ரீதமர். ”குரங்கசாகரத்தில் வந்துசேரும் கோமதி ஆற்றை மூன்று பெருங்குன்றுகளால் தடுத்து துவாரகைக்கு அருகே கொண்டுவரலாமென்றனர் சிற்பிகள். மூன்றுவருடங்கள் அதன் வழியை ஆராய்ந்து பிருத்விசூத்ராகிகள் அதற்கான வாஸ்துமண்டலத்தையும் வரைந்தளித்துவிட்டனர். வினைவலர் சேர்ந்ததும் இந்தக்கோடையிலேயே பணிகளை தொடங்கிவிடுவோம்.”

சாத்யகி “ஆற்றை திசைதிருப்புவதா?" என்றான். “பொன்னிருந்தால் கங்கையையே திசைதிருப்பலாம் இளைஞனே” என்றார் ஸ்ரீதமர் சிரித்தபடி. “அதன்பொருட்டே யாதவர் இங்கே தங்கியிருக்கிறார். இன்று உன்னை சந்தித்தால் அவர் மார்புறத்தழுவிக்கொள்வார்.” சாத்யகியின் உடல் குளிர்போல சிலிர்த்தது. “நான் அவரை பார்த்திருக்கிறேன் அமைச்சரே. காம்பில்யத்தில் திரௌபதியின் மணத்தன்னேற்புக்கு சென்றிருந்தேன். அவர் தன் தமையனுடன் அங்கே வந்தார். நான் சென்று அவரை வணங்கினேன்.” தன் தோளைத்தொட்டு “இதோ இங்கு அவர் தொட்டார். என்னுடன் வா என்றார். அவர் தொட்ட அந்த இடத்தில்தான் அவருக்கு நானும் என் குலமும் தொழும்பர் என சான்றுக்குறி வைத்திருக்கிறேன்...”

தன் அறைக்குள் சென்ற ஸ்ரீதமர் அங்கிருந்த பீடத்தில் அமர்ந்துகொண்டு “அமர்க!” என்றார். சாத்யகி ஒரு கணம் தயங்க “இளையோனே, நீ அமரவேண்டிய இடம் மட்டும் அல்ல இது. உன் சொல் ஆளவேண்டிய இடமும்கூட” என்று அவர் சொன்னார். சாத்யகி அமர்ந்ததும் “இங்கு என்ன நிகழ்கிறதென்று நீ அறிந்திருப்பது நன்று. உனது உறவுகளால் நிறைந்துள்ளது இந்நகர். அறிந்திருக்கமாட்டாய்” என்று ஸ்ரீதமர் தொடர்ந்தார்.

“துவாரகையின் நிலம் நாற்புறமும் விரிந்துகொண்டிருக்கிறது இளையோனே. வசுதேவரின் தந்தை சூரசேனர் இப்போது யமுனைக்கரையில் மதுவனத்தில் இருக்கிறார். அவரது இரண்டாவது மைந்தர் காவுகர் அங்கே அரசாள்கிறார். மதுராவை வசுதேவர் ஆள்கிறார். உத்தரமதுராபுரியை தேவகரின் முதல்மைந்தர் தேவாலர் ஆள்கிறார். தேவகர் இப்போது இங்குதான் தன் மகளுடன் தங்கியிருக்கிறார்.”

“தேவாலரை நான் காம்பில்யத்தில் இளைய யாதவருடன் சந்தித்தேன்” என்றான் சாத்யகி. “என்னிடம் அன்புடன் பேசினார். இளைய யாதவரின் அணுக்கத்தவர் போல் அருகிருந்தார்.” ஸ்ரீதமர் புன்னகைத்து “ஆம், அவர் இதுநாள் வரை மன்னரின் மெய்க்காவலராக இருந்தார். தேவகர் ஓய்வுகொள்ள விழைந்தமையால் உத்தரமதுராபுரிக்கு அரசராக ஆனார்... .அவரது இளையோர் உபதேவரும் சுதேவரும் அவருக்கு துணையாக இருக்கிறார்கள். மகதத்திற்கும் யாதவமண்ணுக்குமான எல்லைகள் அவர்களால் காக்கப்படுகின்றன” என்றார்.

"கோகுலத்தையும் பதினெட்டு ஊர்களையும் நந்தகோபர் ஆள்கிறார். அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரருக்கும் தேவகரின் மகள் சுருதைக்கும் மைந்தரான சுசரிதர் அவருக்கு உதவுகிறார். கோகுலத்தின் அரசராக சுசரிதரே தொடரவேண்டுமென அரசர் விழைகிறார்” என்றபடி ஸ்ரீதமர் ஒரு நூலை எடுத்தார். ஃபூர்ஜமரப்பட்டைகளை பட்டுநூலில் தொடுத்து உருவாக்கப்பட்ட அதில் பன்னிரண்டாவது சுவடியை விரித்து “இதோ உமது குலவரிசை உள்ளது” என்றார்.

“மதுராவை ஆண்ட ஹேகயகுலத்து மாமன்னர் கார்த்தவீரியரில் இருந்து மது பிறந்தார். மதுவிலிருந்து விருஷ்ணி. அவர் மைந்தர் யுதாஜித்தில் இருந்து விருஷ்ணிகுலம் எழுந்தது. யுதாஜித்தின் மைந்தர் ஸினி. ஸினியின் மைந்தர் சுகதி. அவரது குருதிவரி நக்தர், ஜயர், உபஜயர், குனி, அனமித்ரர், பிரஸ்னி என நீள்கிறது. பிரஸ்னியின் இருமைந்தர்களில் ஸ்வல்கரின் மைந்தர் அக்ரூரர். சித்ரதரரின் மைந்தர் உனது தந்தை சத்யகர். ஸ்வபால்கரின் மைந்தர் முதியவரான அக்ரூரர் இங்குதான் இருக்கிறார். உனக்கு அவர் சிறியதந்தை முறையாவார். அவரது பதினெட்டு ஆயர்குடிகளையும் மைந்தன் தேவகர் ஆள்கிறார்.”

சாத்யகி புன்னகைசெய்து “இந்தக் குலவரிசையை நான் நினைவுகொள்வதே இல்லை அமைச்சரே. நான் சத்யகரின் மைந்தன். விருஷ்ணிகுலத்து யாதவன். அதைமட்டுமே அறிவேன்” என்றான். ஸ்ரீதமர் “இனிமேல் நினைவில் கொண்டாகவேண்டும் இளையோனே. நீ இன்று எளிய யாதவனல்ல. பாரதவர்ஷத்தின் .மாமன்னர் ஒருவரின் மருகன். வாளேந்தி அவர் வலப்பக்கம் காக்கும் பொறுப்பு கொண்டவன்...” என்றார். சாத்யகி “அது என் கடமை மட்டுமே” என்றான்.

சுவடியை மூடிவைத்துவிட்டு “யுயுதானனே, நீ நீராடி புத்தாடை அணிந்து வருகையில் அரசரை சந்திக்க ஆவன செய்கிறேன்” என்றார். “மூத்தவர் பலராமர் இங்கில்லை. அரசமுறையாக அவர் மதுராவிற்கு சென்றிருக்கிறார். இருவரில் ஒருவர் மட்டுமே இங்கிருப்பது வழக்கம்.”

சாத்யகி “நான் அன்னை தேவகியையும் யசோதையையும் சந்திக்க விழைகிறேன் அமைச்சரே. அவர்களை கதைகளாகக் கேட்டறிந்தவன். கண்களால் கண்டேன் என்றால் என் குலத்து அன்னையரும் அகநிறைவடைவர்” என்றான். ஸ்ரீதமர் “இது உனது நகரம், உனது அரண்மனை யுயுதானனே. இனி நீ இங்கு எனக்கும்கூட ஆணையிடலாம்” என்றார்.

பகுதி 8 : பெருவாயில்புரம் - 4

சாத்யகி மிக விரைவாகக் குளித்து உடைமாற்றிக்கொண்டு தனக்கு அளிக்கப்பட்ட அறையில் பதற்றத்துடன் காத்திருந்தான். அவனால் அமரவோ அசையாது எங்கும் நிற்கவோ முடியவில்லை. நிலையழிந்தவனாக அறைச்சதுரத்திற்குள் சுற்றிவந்தான். மூன்று பெரிய சாளரங்களுக்கு வெளியே துவாரகையின் கடல்சூழ்ந்த துறைமுகப்பு தெரிந்தது. முதலையின் முகமென கடற்பாறைகளாலான முனம்பு கடலுக்குள் நீட்டியிருக்க மூன்றுதிசைகளிலும் கடல் அலைகள் வெண்பட்டாடையின் நுனிச்சுருள்கள் போல வளைந்து அலையடித்துக்கொண்டிருந்தன. அப்பால் கடல் இளநீல நிறமாக கண்கூசும் ஒளியுடன் வானில் எழுந்திருந்தது. அதில் நூற்றுக்கணக்கான நாவாய்கள் அசைந்தன.

துறைமுகப்பின் மூன்றுபக்கங்களிலும் நாவாய்கள் கரையணைந்திருந்தன. மேற்கு நோக்கி நீண்டிருந்த கூர்முகப்பின் முன்னால் மிகப்பெரிய பீதர்கலங்கள் நின்றன. வடக்குத்திசையில் யவனர், சோனகர், காப்பிரிகளின் கலங்களும் தெற்குத்திசையில் பாரதவர்ஷத்தின் சிறிய கலங்களும் அணைந்திருந்தன. ஒவ்வொன்றிலும் தொலைவிலேயே தெரியும்படி மிகப்பெரிய கொடிகள் பறந்தன. அனைத்துக்கொடிகளும் செந்நிறமோ மஞ்சள்நிறமோ கொண்டிருந்தன. அவை பறக்கும்போது பாய்களுக்குமேல் தழல் எழுந்தாடுவதுபோல தோன்றியது.

சோனகக் கலங்களின் கொடிகளிலும் விலாவிலும் பிறைவடிவம் இருந்தது. யவனக்கலங்களில் சூரியன். அப்பால் நின்ற பீதர்கலங்களில் அவர்களின் பறக்கும் தழல்நாகம். பீதர்கலங்கள் அனைத்தும் அமரமுகப்பில் வாய்திறந்து தழல்நாக்கு பறக்க வெண்பற்களும் உருண்டவிழிகளுமாக கூருகிர் கைகளை நீட்டி நிற்கும் சிம்மமுகம் கொண்டிருந்தன. மலைக்கொடி துவண்ட மேலைப்பாண்டியர்களின் கலங்களும் மீன்கொடி பறந்த கீழைப்பாண்டியர்களின் கலங்களும் மாகாளைக்கொடி பறந்த சதகர்ணிகளின் கலங்களும் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன. சிம்மக்கொடியுடன் ஏழு கலிங்கக்கலங்கள் ஒன்றுடன் ஒன்று பெரிய வடங்களால் பிணைக்கப்பட்டு ஆடின.

நீருக்குமேல் ஏழடுக்குகள் தெரிய மூன்று கொடிமரங்களில் சுருக்கி இறக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாய்களுமாக நின்ற யவனநாவாயின் கொடியில் நடுவே மானுடமுகம் அமைந்த கதிர்கள் எழும் சூரியவட்டம் வரையப்பட்டிருந்தது. அருகே நின்ற இன்னொரு யவனக் கலத்தின் கொடியில் மானுடத்தலையும் கைகளும் மானின் கால்களும் கொண்ட விலங்கின் உருவம் அலையடித்தது. அதற்கப்பால் ஓநாய்தலை கொண்ட கொடி. அதற்கப்பால் சிறகுவிரித்த செம்பருந்தின் தலைகொண்ட கொடி. இருபக்கமும் சிறிய இலைகள் கொண்ட கொத்துகளால் வளைக்கப்பட்டு நடுவே குத்துவாள் அமைந்த கொடி பறந்த பெரிய நாவாய் ஒவ்வொன்றாகப் பாய்களை விரிக்கத் தொடங்கியிருந்தது.

வாய்திறந்த சிம்மத்தலை பக்கவாட்டில் வரையப்பட்ட கொடி துவண்ட பெரிய யவன நாவாய் ஒவ்வொரு பாயாக அணைத்தபடி பிளிறிக்கொண்டு துறைமுகப்பு நோக்கி வந்தது. அதன் முகப்பில் மூன்றுகூர் கொண்ட சூலம் ஏந்தியபடி சுருள்தாடியும் குழல்அலைகளும் கொண்ட முதியதெய்வம் நின்றிருந்தது. கலம் அணுகிவரும்தோறும் அச்சிலை பேருருக்கொண்டது. துறைமுகப்பை அடைந்தபோது அதன் தலை அங்கிருந்த ஏழடுக்கு மாளிகைக்குமேல் ஓங்கி நின்றதைக்கண்டான். அருகே அசைந்தாடிய நாவாயின் முகப்பில் ஏழுதலைகொண்ட நீர்நாகத்துடன் போர்புரியும் மணிமுடியணிந்த தெய்வம் நின்றிருந்தது.

அப்பால் சோனகர் கலத்தின் முன்னால் மீனுடலும் தாடியும் முடியும் நீண்ட முகமுமாக முதியகோலம் கொண்ட கடல்தெய்வம் கையில் ஓங்கிய கோலுடன் நின்றிருந்தது. அலையெனப்பறக்கும் தலைமுடிகொண்ட நீர்மகளின் சிலை பொறிக்கப்பட்ட அமரமுகத்துடன் பக்கவாட்டில் தெரிந்த சோனகக்கலத்தினுள் சென்ற பெரிய மரப்பாலம் வழியாக சாரிசாரியாக பொதிவண்டிகள் சென்றுகொண்டிருந்தன. அங்கிருந்து ஓசையேதும் மேலே வரவில்லை. மனிதர்கள் எறும்புகள்போல வண்ணத்தலைப்பாகைகளும் மெய்ப்பைகளுமாக துறைமேடை முழுக்க பரவி அலைந்துகொண்டிருந்தனர். யானைகளேதும் கண்ணுக்குப்படவில்லை.

மூன்று சாளரங்களிலும் மாறிமாறி நோக்கியபடி அவன் நிலையழிந்து நின்றிருந்தான். ஒவ்வொரு காலடியோசைக்கும் பரபரப்புடன் வாயிலை நோக்கினான். வெளியே ஒரு காப்பிரிக் கலம் சங்கொலி எழுப்பியபோது ஓடிச்சென்று நோக்கினான். பெரியபற்களுடன் ஆமைமேல் அமர்ந்திருந்த அன்னைதெய்வம் கொண்ட கலத்தின் கொடிமரத்தின்மேல் முதல்பாய் பக்கவாட்டில் விரிந்து புடைத்தது. அத்தனை தொலைவிலிருந்து பார்த்தபோது ஓர் இமை விரிவதைப்போலத்தோன்றியது அது.

வாயிலில் ஏவலன் வந்து வணங்கி “தங்களுக்கு அழைப்பு இளவரசே” என்றான். சாத்யகி தன் கச்சையை மீண்டுமொருமுறை இறுக்கியபடி அவனுடன் இடைநாழிக்கு சென்றான். “அரசர் அவைமண்டபத்தில் இருக்கிறார்” என்றான் ஏவலன். சாத்யகியின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. என்ன கேட்கப்போகிறார் யாதவர்களின் பேரரசர்? அவனுடைய தந்தையையும் தாயையும் நலம் கேட்பார். முகமன் சொற்கள் சொல்லி அவனை வரவேற்பார்.

முகமன் சொற்களேதும் அவனுடைய சிறிய ஊரில் சொல்லப்படுவதில்லை. காம்பில்யத்தில் நிமித்திகர்கள் சொன்ன விரிவான குலமுறைகிளத்தலையும் முகமனையும் கேட்டு அவன் திகைத்திருந்தான். அவன் சொல்லவேண்டியது என்ன? தன் குலவரிசையைச் சொல்லி தலைவணங்கவேண்டுமா? அவனுக்கு அந்த வரிசையே நினைவில் இல்லை.

எது இங்கே மதிப்பின்மையாகக் கருதப்படும்? எந்தச் சொல்? எந்த அசைவு? கண்டதும் செய்யவேண்டியதென்ன என அவன் அறிவான். தாள்பணிந்து வணங்கவேண்டும். வாள்மேல் கைவைத்து என் வாழ்வும் இறப்பும் சிந்தையும் செயலும் இவ்வுலகும் அவ்வுலகும் உங்களுக்காக என்று சொல்லவேண்டும். தோளில் பதிந்திருக்கும் அவரது அச்சுக்குறியை சுட்டிக்காட்டி இதை நெஞ்சில் கொண்டிருக்கிறேன் என்று சொன்னாலென்ன? மிகைநாடகமாக ஆகிவிடுமா?

பெரிய வாயிலில் பீதர்களின் பறக்கும் நாகத்தின் வெண்கலச்சிலை பொறிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த சிறிய துளையில் ஏவலன் தன் வாயை அணுக்கி மெல்ல “விருஷ்ணிகுலத்து சத்யகரின் மைந்தர் யுயுதானர்” என்று சொன்னான். உள்ளிருந்து ஒரு மணியோசை வெளியே கேட்டது. சிறிய கிளி ஒன்றின் ஒலியென அது இனிமைகொண்டிருந்தது. கதவு மெல்லத் திறந்தது. ஏவலன் “நீங்கள் உள்ளே செல்லலாம் இளவரசே” என்றான். சாத்யகி உள்ளே நுழைந்ததும் அங்கே அந்தப்பெருங் கதவைத்திறக்க காவலர் எவருமில்லை என்பதைக் கண்டு ஒருகணம் திகைத்தான்.

மண்டபத்தின் மறுபக்கம் பெரிய சாளரத்தருகே நின்றிருந்த இளைய யாதவன் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். முதன்முதலாக அப்புன்னகையை காம்பில்யத்தில் பார்த்தபோதே சாத்யகி மெய்மறந்திருந்தான். பேரழகுகொண்ட புன்னகை. புன்னகைக்கென்றே உருவான எழில்முகம். முட்டைவிட்டு இறங்கிய காக்கைக்குஞ்சின் அலகின் மெருகு கொண்டது அவன் நிறம். அக்கருமையில் பூத்த செம்மலர். செவ்விதழ்நடுவே எழுந்த வெண்சரம். அந்தப்புன்னகையில் இருந்து மீண்ட மறுகணமே அவன் உணர்ந்தான், எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் அதற்கு அடிமை என. அவன் கைகளை கூப்பினான். ஆனால் சொற்களேதும் எழவில்லை.

கிருஷ்ணன் அவனிடம் “நீர் காம்பில்யத்தின் போரைப்பற்றி என்ன அறிந்தீர்?" என்றான். சாத்யகி ஒருகணம் திகைத்தபின் “அதைப்பற்றி சூதர்கள் சொன்னதைத்தான் கேட்டேன். பாண்டவர்களின் சூதன் அது அஸ்தினபுரியின் இளவரசர்களின் களிப்போர் என்றே சொன்னான். ஆனால் ஆயிரம் பேருக்குமேல் இறந்திருக்கிறார்கள் என்று காம்பில்யத்திற்கு நெய்கொண்டுசெல்லும் யாதவர்களிடமிருந்து அறிந்தேன். யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் அஸ்வத்தாமரும் கடுமையாக புண்பட்டிருக்கிறார்கள். அது உண்மையான போர்தான்” என்றான்.

கிருஷ்ணன் தலையை அசைத்தான். “துரியோதனரும் வசுஷேணரும் திட்டமிட்டு அப்போரை நிகழ்த்தியிருக்கிறார்கள். காம்பில்யத்தை கைப்பற்றுவதை விட யுதிஷ்டிரரை கொல்லும் நோக்கமே அவர்களிடம் மிகுந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “அக்கொலையால் அவர்களுக்கு என்ன நலன்?" என்றான். “வாரணவதத்தில் எரிமாளிகையை அமைத்தது துரியோதனர்தான் என்று யுதிஷ்டிரர் வழியாக குடிகளுக்குத்தெரியவந்தால் அவர்கள் கிளந்தெழுவார்கள். அதற்கு முன்னரே அவரைக் கொன்றுவிட்டால் துரியோதனர் அப்பழியிலிருந்து தப்பமுடியும்.”

“இது விழியிழந்த மாமன்னரின் திட்டமென்றே நினைக்கிறேன். தன் மைந்தனை அரசுக்கட்டிலில் அமர்த்த அவர் விழைகிறார்” என்று சாத்யகி தொடர்ந்தான். கிருஷ்ணன் “அதை அவர் பாண்டவர்கள் இறந்ததாகத் தெரியவந்தபோதே செய்திருக்கலாமே?" என்றான். “அவர்கள் இறந்ததை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் மீண்டுவந்தால் அவரது வஞ்சம் வெளிப்பட்டிருக்கும். அதை அஸ்தினபுரியின் குடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்றான் சாத்யகி. “அவர் இப்போது பாண்டவர்களை அஞ்சுகிறார். அவர்கள் வல்லமை வாய்ந்த பாஞ்சாலத்தின் உறவினர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்.”

கிருஷ்ணன் “யுயுதானரே, மூன்றுதிசைகளிலும் தாக்கியும் கௌரவர் ஏன் போரில் வெல்ல முடியவில்லை?” என்று கேட்டான். சாத்யகி “பார்த்தரை வெல்லும் திறன் கொண்ட போர்வீரர் இம்மண்ணில் தாங்கள் மட்டுமே” என்றான். “கர்ணர் பெருந்திறல்வீரர் என்பதனால்தான் பார்த்தரை சற்றேனும் புண்படுத்த முடிந்தது. அதற்காகவே அவர் சூதர்களால் பாடப்படுவார்.”

கிருஷ்ணனின் புன்னகையை பார்த்தபின் சாத்யகி விரைவாக தொடர்ந்து பேசினான். “போர் நிகழ்ந்த முறையை நான் சூதர்களிடமிருந்து விரிவாகவே கேட்டறிந்தேன். வசுஷேணரும் பார்த்தரும் வில்லேந்தி நேருக்கு நேராக களம்நின்றனர். நிகர்நிலையில் போர் நெடுநேரம் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் துலாக்கோல் சற்றே பார்த்தரின் பக்கம் தாழ்ந்தது, கௌரவப்படைகள் இனி வெல்லமுடியாதென்று அறிந்தன. அவை அஞ்சி குரலெழுப்பியபடி பின்வாங்கின.”

“பாஞ்சாலப்படைகள் அவற்றை துறைமேடைவரை துரத்திவந்தன. மேலும் செல்லவேண்டாமென்று யுதிஷ்டிரர் ஆணையிட்டமையால் நின்றுவிட்டன. களத்திலிருந்து வசுஷேணரை வெளியேறும்படி யுதிஷ்டிரர் ஆணையிட்டார். தோல்வியின் சுமையால் தலைதளர்ந்து பிணம்போல வசுஷேணர் நடந்தார். கோட்டைக்குவெளியே செல்லும்போது அவர் விழப்போனதாகவும் பால்ஹிகவீரன் பூரிசிரவஸ் அவரை தாங்கிக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்” என்று சாத்யகி தொடர்ந்தான்.

“வசுஷேணருக்கு பெரிய அளவில் புண் ஏதும் படவில்லை. ஆனால் படகில் திரும்புகையிலேயே கடுமையாக நோயுற்றுவிட்டார். வெம்மைநோய்கண்டு உடல் கொதிக்க கைகால்கள் இழுத்துக்கொண்டு அதிர தன்னினைவில்லாமல் படகில் கிடந்த அவரை மரப்பலகையில் வைத்து சுமந்துகொண்டுதான் தசசக்கரத்தின் மாளிகைக்குமேல் ஏற்றியிருக்கிறார்கள்.”

“ஆம், நானும் அறிந்தேன்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி ”பன்னிருநாட்கள் அவர் நினைவழிந்து நோயில்கிடந்ததாக சொல்கிறார்கள். தோள்கள் மெலிந்து எலும்புக்குவை என மாறிவிட்டார் என்று மருத்துவர் ஒருவர் சொன்னதாக என்னிடம் தசசக்கரத்திற்குச் சென்ற யாதவர் ஒருவர் சொன்னார்” என்றான். “அவரைக் கண்டவர்கள் இறந்த உடல் மெல்ல மட்கிக்கொண்டிருப்பதைப் போல தோன்றியது என்றனர். அவர் இறந்துவிட்டார் என்றுகூட படைகளிடம் செய்தி பரவியது. அதைத்தவிர்க்கவே அவரைக் கொண்டுவந்து சாளரத்தருகே அமரச்செய்தனர்.”

“அவரது விழிகளிலும் உதடுகளிலும் தோல் கருகி காய்ந்து உரிந்துவிட்டது. விரல்நகங்கள்கூட உதிர்ந்துவிட்டன. பெருங்களிமகன் போல விழிகள் பழுத்து கைகால்கள் நடுங்க சொல்லிழந்து அமர்ந்திருந்த அவரை தன் விழிகளால் கண்ட இன்னொரு யாதவரிடமிருந்து இதை அறிந்தேன். தொடர்ந்து அகிபீனாவாலும் சிவமூலிப்புகையாலும் அவர் துயிலவைக்கப்படுகிறார். எங்கிருக்கிறார் என்றும் என்ன செய்கிறார் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை இந்நோயில் இருந்து மீளாமலேயே அவர் உயிர்துறக்கவும்கூடும்” என்றான்.

”அத்தனை பெருந்துயர் ஏன் அவருக்கு?" என்று அவனை நோக்காமலேயே கிருஷ்ணன் கேட்டான். சாத்யகி சற்றே தயங்கியபின் “அவர் மயிரிழையிடையில் ஆவம்பிழைத்து இழந்த துருபதன்கன்னி அங்கே போர்க்களத்தில் காவல்மாடமொன்றின் மேல் அமர்ந்திருந்ததாக சொல்கிறார்கள். அவர் தோற்று தலைகுனிந்து பின்னகர்ந்தபோது அவர் காணவேண்டுமென்று அவள் தன் செந்நிறப் பட்டுமேலாடையை பறக்கவிட்டிருக்கிறாள்” என்றான். “அது எந்த ஆண்மகனுக்கும் இறப்பின் கணம் என்று நினைக்கிறேன் அரசே.”

புன்னகையுடன் ”காட்டுக்குள் கன்றுமேய்த்து வாழ்பவரென்றாலும் அனைத்தையும் அறிந்திருக்கிறீர்” என்று கிருஷ்ணன் சொன்னான். ”நீர் அறிந்திருப்பதில் சிறிது பிழை உள்ளது. அந்தப்போரில் வென்றது பார்த்தனல்ல, ஊழ்.” சாத்யகி “எந்தப்போரிலும் ஊழே வெல்கிறது என்று எந்தை சொல்வதுண்டு” என்றான். கிருஷ்ணன் நகைத்து “அது வளைகோல் ஏந்திய யாதவரின் வழக்கமான எண்ணம் மட்டுமே” என்றான். “எந்தப்போரிலும் ஊழ் தன்னுருவில் வந்து நிற்பதில்லை. நம் பிழைகள் வழியாகவே அது செயல்பட முடியும். நம் அறியாமையை ஐயத்தை ஆணவத்தை அது தன் கருவியாக எடுத்துக்கொள்கிறது.”

”இந்தப்போரில் அனைத்தும் தார்த்தராஷ்டிரர்களுக்கு உகந்தனவாகவே அமைந்தன. பாஞ்சாலர்களைவிட இருமடங்கு பெரிய படைகள். நான்கு பெருவீரர்களால் அவை தலைமைதாங்கப்பட்டு மூன்று முனைகளில் காம்பில்யத்தை தாக்கின. பாஞ்சாலர் வெல்வதற்கு எந்த வழியும் இருக்கவில்லை” என்று கிருஷ்ணன் தொடர்ந்தான். “ஆயினும் அவர்கள் வெல்லவில்லை. அங்கே ஊழ் வந்தமைந்த பிழைகள் இரண்டு. ஒன்று தார்த்தராஷ்டிரன் செய்தது. கர்ணன் யாதவப்பேரரசியின் திறன்மிக்க ஒற்றர்களைப்பற்றி அறிந்திருந்தான். படைகிளம்பியதை அவள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணினான். அவனுடைய நுண்திறனை நானும் அறிவேன்.”

”வசுஷேணன் காம்பில்யத்தை பதுங்கும்புலியென எச்சரிக்கை கொண்ட காலடிகளுடன்தான் அணுகினான். இருளில் கோட்டையை தாக்க அவன் விழையவில்லை. அவன் எண்ணப்படி புலரிவெளிச்சம் வரும்வரை கௌரவப்படகுகள் காத்திருந்தன என்றால் இப்போரே பிறிதொன்றாக நிகழ்ந்திருக்கும். கங்கைநீரில் மிதக்கவிடப்பட்ட எரிகலங்களை முன்னரே கண்டிருப்பார்கள். படகுகளை காம்பில்யத்தின் கரையருகே கொண்டுசென்று குறுங்காடு வழியாக சென்றிருந்தால் கோட்டையை மிக எளிதாக கைப்பற்றியிருக்கமுடியும். கௌரவர்களின் சதக்னிகளின் வல்லமை மும்மடங்கு பெரியது. காம்பில்யம் அதை எதிர்கொண்டிருக்கமுடியாது” கிருஷ்ணன் சொன்னான்.

“ஆனால் செறுகளத்தில் காத்திருத்தல் என்பது எளியதல்ல. பெருஞ்செயலுக்கு முன் பொறுமையை கைவிடாதவனே வெற்றிகளுக்குரியவன். ஏனென்றால் செயல்முனையில் காத்திருக்கையில் காலம் விரிந்து நீண்டு விடுகிறது. ஒவ்வொரு கணமும் ஒருமுனையில் இருந்து மறுமுனைவரை நீண்டு கிடக்கிறது. ஆயிரம் கோடி எண்ணங்கள் எழுகின்றன. ஐயங்களும் அச்சங்களும் பன்மடங்காக பெருகிவிடுகின்றன. எளிய உள்ளங்கள் காத்திருப்பதை அஞ்சியே ஏதேனும் ஒரு முடிவை உடனே எடுத்துவிடுகின்றன. கர்ணன் காத்திருந்தான். தார்த்தராஷ்டிரனால் முடியவில்லை.”

“தார்த்தராஷ்டிரனின் எல்லைமீறிய ஆணையால்தான் அவர்களின் படகுகள் எரிகலங்களில் சிக்கிக்கொண்டன. அந்நிலையிலும் கர்ணனின் போர்சூழ்ச்சி அவர்களுக்கு உதவியது. அந்த எரிதலையே தனக்குகந்த முறையில் அவன் பயன்படுத்திக்கொண்டான். அந்த ஒளியில் குறுங்காடுகளுக்குள் ஒளிந்திருந்த பாஞ்சால வில்லவர்களை அடையாளம் கண்டான். எஞ்சிய கலங்களை கரையணையச்செய்ததும் சரி குறுங்காட்டுக்குள் வீரர்களை இறக்காமல் கங்கையின் கரைநீரோட்டம் வழியாகவே படகுகளை கொண்டுசென்றதும் சரி மிகச்சிறந்த போர்சூழ்ச்சிகளே. வசுஷேணன் அவற்றை செய்யாமலிருந்தால்தான் வியந்திருப்பேன்” கிருஷ்ணன் தொடர்ந்தான்.

”சூழ்ச்சிகளில் முதன்மையானது காம்பில்யத்தின் சதக்னிகளால் எரியூட்டப்பட்ட படகுகளைக்கொண்டு அதன் படகுத்துறையை எரித்ததுதான். எரியால் கோட்டைவாயிலை உடைத்தது பாரதம் இதுவரை காணாதது. ஆனால் அத்தனை நுண்ணிய போர்சூழ்ச்சியை வகுத்தபோது அவன் ஒரு கணம் தன்னுள் தருக்கியிருக்கவேண்டும். பார், என் திறனைப்பார் என எவரிடமோ அவன் அகம் கூறியிருக்கவேண்டும். ஆகவே அவன் பெரும்பிழை ஒன்றை செய்துவிட்டான்.”

கிருஷ்ணன் சாத்யகியை கூர்ந்து நோக்கி “என்ன பிழை அது என சொல்ல முடியுமா?” என்றான். சாத்யகி சித்தத்தை துழாவியபின் இல்லை என தலையசைத்தான். “அந்த எரிந்த படகுகளை கங்கையில் செல்லவிட்டிருக்கலாகாது. அவற்றை மூழ்கடித்திருக்கவேண்டும்” என்றான் கிருஷ்ணன். “அவை கங்கையில் சென்றதை ஜயத்ரதனின் ஒற்றர்கள் கண்டனர். தார்த்தராஷ்டிரர்கள் தோற்றுவிட்டனர் என்று அவர்கள் செய்தியனுப்பினர். படை எழுந்து கிழக்கு வாயிலைத் தாக்கி உடைக்கும் தருவாயில் அச்செய்தியை ஜயத்ரதன் கேட்டான். பின்வாங்கும்படி தன் படைகளுக்கு ஆணையிட்டான்."

"ஜயத்ரதன் பின்வாங்கிய கணம் முதன்மையானது. இரு வில்லவர்களும் நிகர்நிலையில் தங்கள் விசைகளின் உச்சத்தில் நின்றிருந்தனர். வானில் தெய்வங்கள் வந்து களம்நோக்கும் தருணம் அது. களத்தில் நின்ற அனைவரும் படைக்கலம் தாழ்த்தி அந்தப்போரை நோக்கினர். அர்ஜுனன் ஒரு கணம், ஒருகணத்தின் துளி பின்னடைந்ததாகவே நான் அறிந்தேன். அக்கணத்தில் கிழக்குக்கோட்டைமேல் பாஞ்சாலர்களின் வெற்றிமுரசு கொட்டத்தொடங்கியதையே ஊழ் என்கிறேன். அந்தக் கணம் அத்தனை நொய்மையானது. அணையுடையும் இறுதிப்புள்ளி அது. கௌரவர்கள் அறியாமல் ஓர் எட்டு பின்னடைந்தனர். அதுபோதும் போரின் வெற்றியை முடிவுசெய்ய. அதன்பின் செய்வதற்கேதுமில்லை. நதிவெள்ளம் கரையுடைத்துவிட்டது.”

சாத்யகி பெருமூச்சுவிட்டான். கிருஷ்ணன் சொல்லச்சொல்ல அவன் அந்தத் தருணத்தை கண்டுவிட்டான். அத்தகைய நுண்மைகளால் ஆளப்படும் களம் என்பதைப்போல தெய்வங்களுக்கு உகந்த இடம் பிறிது என்ன என எண்ணிக்கொண்டான். கர்ணனாக அக்களத்தில் நின்றிருப்பதாக எண்ணியதும் அவனுள் அச்சம் நிறைந்தது. “அஞ்சுகிறீரா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “ஆம்” என்றான் சாத்யகி. “அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”

அப்போதுதான் சாத்யகி தானிருக்கும் நிலையை உணர்ந்தான். எந்த முகமனும் இல்லாமல் யாதவப்பேரரசனின் மந்தண அறையில் அவனுடன் அரசு சூழ்தலில் ஈடுபட்டிருந்தான். அது ஒரு கனவு என அவன் உள்ளம் மயங்கியது. கிருஷ்ணன் புன்னகைத்தபடி “நீர் அரசு சூழ்தலை கற்கமுடியும். அதற்கு முன் உமது கைகள் படைக்கலங்களை அறியவேண்டும்” என்றான். சாத்யகி மெல்லிய குரலில் “நான் இன்னமும் படைக்கலப்பயிற்சி எதையும் எடுக்கவில்லை அரசே” என்றான்.

“இல்லை, நீர் படைக்கலம் பயின்றிருக்கிறீர். இல்லையென்றால் நான் இப்போது சொன்னவற்றை புரிந்துகொண்டிருக்க மாட்டீர்” என்றான் கிருஷ்ணன். “எதை வைத்திருக்கிறீர்?" சாத்யகி தயங்கி “வளைதடி” என்றான். கிருஷ்ணன் “அதுபோதும்... நீர் வில்லை ஏந்த முடியும். பாரதத்தின் பெருவீரன் ஒருவனையே உமக்கு ஆசிரியனாக அமைக்கிறேன்” என்றான். சாத்யகி வியப்பு தெரியும் விழிகளால் நோக்க “வளர்பிறை எழுந்தபின் நான் காம்பில்யத்திற்கு செல்கிறேன். மதுராபுரியிலிருந்து தமையனாரும் வந்துசேர்ந்துகொள்கிறார். நீரும் எங்களுடன் வருக! அங்கே உம்மை பார்த்தனிடம் மாணாக்கனாக சேர்த்துவிடுகிறேன்” என்றான்.

உளம் மலர்ந்து சாத்யகி கைகூப்பினான். “அவனிடமிருந்து கற்பதற்கு அப்பால் பாரதவர்ஷத்தில் விற்கலை ஏதும் எஞ்சாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், நான் செய்த நல்லூழ் அது” என்றான் சாத்யகி. ”நலம் திகழ்க!” என்று வாழ்த்திய கிருஷ்ணன் “உம்மை சந்திக்கையில் என் தமையனார் ஒன்றுதான் சொல்வார். வில்லேந்துவது வீரனுக்குரியதல்ல, கதாயுதமே ஆண்மைகொண்டது என்பார். அவரை வெல்வதில் உள்ளது உமது முதல் அரசுசூழ்தல்” என்றான். சாத்யகி புன்னகைத்து “அவரை வெல்வது எளிது என்கிறார்கள்” என்றான். கிருஷ்ணன் நோக்க “வில்லேந்துவது தங்கள் ஆணை என்பேன்” என்றான். கிருஷ்ணன் உரக்க நகைத்து “திறன்கொண்டவராக இருக்கிறீர்” என்றான்.

அவன் தோளில் கையை வைத்தபடி “இங்கு நதிநீரைக் கொணர்வதற்கு நாங்கள் பெரிய திட்டமொன்றை வகுத்துள்ளோம்” என்றான் கிருஷ்ணன். “ஆம், ஸ்ரீதமர் சொன்னார். கோமதியின் திசையை திருப்புவதாக. மிக அரிதானது” என்றான் சாத்யகி. “பெண்களின் திசையைத் திருப்புவதை விட எளிதானது ஏதுமில்லை யுயுதானரே” என்றான். “அதன் வாஸ்துபுனிதமண்டலம் வரையப்பட்டுவிட்டது. அதற்கான பணிகளை தொடங்கிவிட்டால் நான் இங்கிருந்து கிளம்ப முடியும்.”

”தாங்களில்லாமல் எப்படி இங்கே பணிகள் நடக்கும்?” என்று சாத்யகி கேட்டான். “இளையோனே, நான் எதையுமே செய்வதில்லை என்பதை அறிவீரா?” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு செயலாற்றி சோர்ந்து போவதற்காக வரவில்லை. களியாடிச்செல்லவே வந்திருக்கிறேன். நூல்களும் இசையும் கலைகளுமாக இங்கே நிறைவுற்று அமர்ந்திருக்கிறேன். பகல்களில் ஒளியையும் இரவில் இருளையும் சுவைக்கிறேன். மானுடரின் அறியாமையையும் விலங்குகளின் அறிவையும் கண்டு நகைக்கிறேன். மகளிரின், மழலையரின், முதியவர்களின் அழகில் மயங்கி அமைகிறேன். ஒவ்வொரு கணமும் விழித்திருக்கிறேன். விழிப்பை முழுக்க உவகையாக மாற்றிக்கொள்கிறேன். இங்கு நிகழ்வன எதிலும் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் வேறெங்கோ இருப்பவன்.”

அவனுடைய திகைத்த முகத்தை நோக்கி சிரித்தபடி “உமது வியப்பு புரிகிறது. இங்குள்ளவை அனைத்தும் நான் இயற்றுபவை என எண்ணுகிறார்கள். என் பெயர்சொல்லி செய்யப்படுபவை அனைத்திலும் நான் உள்ளேன் என்பது உண்மை. ஆனால் அச்செயல்களே நான் என்பவன் என்னை வந்தடைவதேயில்லை” என்றான் கிருஷ்ணன்.

அவன் முதுகில் கையை வைத்து “என் தோழர்கள் ஸ்ரீதமனும் சுதாமனும் தாமனும் வசுதாமனும் இந்நகரின் குடிமன்றுகளை ஆள்கிறார்கள். விகதரும் பத்ரசேனரும் சுபலரும் துறைமுகத்தை நடத்துகிறார்கள். கோகிலரும் சனாதனரும் வசந்தரும் புஷ்பாங்கரும் ஹசங்கரும் காவல்பணிகளை செய்கிறார்கள். சுபத்ரரும் தண்டியும் குண்டலரும் மண்டலரும் நீதியை நிலைநிறுத்துகிறார்கள். பத்ரவர்த்தனரும் வீரபத்ரரும் மகாகுணரும் கருவூலத்தை காக்கிறார்கள். மதுமங்கலர் வைதிகப்பணிகளை ஆற்றுகிறார். இருபதுமுகம் கொண்டு இந்நகரில் நானே நிறைந்திருக்கிறேன். இங்குள்ள பல்லாயிரம் கைகளால் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறேன்.”

இனி அக்கைகளில் என்னுடையவையும் இருக்கும் என சாத்யகி எண்ணிக்கொண்டான். ”நீர் செய்யவேண்டியதை ஸ்ரீதமர் சொல்வார். நீர் விழையும்போது என்னை காணலாம்” என்று கிருஷ்ணன் சொன்னான். சாத்யகி தலைவணங்கி திரும்பியபோது கரனை பார்த்தான். வெண்ணிற மெய்ப்பையும் மஞ்சள்நிறமான கச்சையும் செந்நிறத் தலைப்பாகையும் அணிந்து அவன் எதிரேவந்தான். சாத்யகியைக் கண்டதும் வணங்கி சுவரோரமாக விலகி வழிவிட்டான்.

“நீர் இவரை அறிவீரா?” என்றான் கிருஷ்ணன். "இவர் பெயர் கரன். தட்சிணமாளவத்தின் வராலத மலைக்குடியை சேர்ந்தவர்.” சாத்யகி வியப்புடன் “இவரை தாங்கள் எப்படி அறிவீர்கள்?” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்தான். “நான் இவருடன்தான் உள்ளே நுழைந்தேன்” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் ”இனியவர். இவருக்கு ஐந்நூறுவகை பறவைகளின் குரல்களைக் கேட்டு பெயர்சொல்லத் தெரியும். நூறுவகை பூச்சிகளின் ஒலிகளையும் அறிந்திருக்கிறார். மாளவத்தின் காடுகளில் இவருடன் ஒரு பயணம் செல்லவேண்டுமென எண்ணியிருக்கிறேன்” என்றான்.

கரன் புன்னகையுடன் சாத்யகியை பார்த்தான். “இங்கு வருபவை பெரும்பாலும் கடற்பறவைகள். கரர் அவற்றை இன்னமும் அறியவில்லை. ஆனால் மூன்றுமாதத்தில் கற்றுக்கொள்வார் என்று சொன்னார்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் அவருடன் கடல்முகம் செல்லவிருக்கிறேன். உம்மை நாளை பார்க்கிறேன். வராலதரே, செல்வோமா?அங்கே உமக்கு அழகிய இளம்பெண் ஒருத்தியை நான் சுட்டிக்காட்டுகிறேன். அவள் நூறுவகை நாணயங்களை ஒலியாலேயே சொல்லிவிடுவாள்...”

சாத்யகி மீண்டும் தலைவணங்கினான். கரனின் தோளில் கைவைத்து புன்னகையுடன் உரையாடியபடி செல்லும் கிருஷ்ணனை சாத்யகி நோக்கி நின்றான். கரன் ஏதோ சொல்ல கிருஷ்ணன் உரக்கச் சிரிக்கும் ஒலி கேட்டது.

சாத்யகி வெளியே வந்து நின்றபோதுதான் முதல்முறையாக அந்தப் பெருவாயிலை அண்மையில் கண்டான். முதலில் அது ஒரு மலையுச்சியின் பாறை என்றே எண்ணினான். அதன்பின்னரே அது சதுரவடிவில் இருப்பது தெரிந்தது. விழிதூக்கி நோக்கியபோது அரண்மனையின் குவைமாடங்களுக்கு மேல் அதன் தூண்சுவர் மேலெழுந்து செல்வதைத்தான் காணமுடிந்தது.

பின்னால் சென்று நோக்கியபோது வானைத் தொடும்படியாக அது வளைந்து மேலெழுந்து நிற்பது தெரிந்தது. அதன் மேற்குபக்கத்து அடித்தளத்தில் இருந்த பெருஞ்சிற்பத்தின் கால்களைத்தான் அவனால் பார்க்கமுடிந்தது. நரம்புகள் ஓடிய பெரிய கால்கள். பத்து நகங்கள். கால்களைச்சுற்றி இலைகளுடனும் மலர்களுடனும் கொடிகள் பின்னிப்படர்ந்திருந்தன. அவற்றில் மயில்களும் கிளிகளும் எருதுகளும் பசுக்களும் மான்களும் சிம்மங்களும் ஊடாக செதுக்கப்பட்டிருந்தன.

கால்களுக்குமேல் ஏறிச்சென்ற உடலின் ஆடைவளைவுகள் கல்லலைகளாக தெரிந்தன. முகம் வானில் என தெரிந்தது. சுருண்டதாடி. கூரிய மூக்கு எழுந்து நின்றது. கீழிருந்து நோக்கியபோது கண்கள் பாதிமூடியவை போலிருந்தன. சற்று நேரம் கழித்தே அவன் அது விஸ்வகர்மனின் சிலை என்று அறிந்துகொண்டான். மறுபக்கத்து அடித்தளத்தில் இருப்பது குபேரனின் சிலை என அவன் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்தான்.

பகுதி 8 : பெருவாயில்புரம் - 5

விடியற்காலையில் துவாரகையின் விண்ணளந்தானின் பேராலயத்தில் இருந்து தர்மகண்டம் என்னும் பெருமணியின் ஓசை முழங்கியபோது சாத்யகி ஆடையும் அணிகளும் பூண்டு பயணத்துக்கு சித்தமாகியிருந்தான். பதினெட்டுமுறை தர்மகண்டம் ஓம் ஓம் என்று முழங்கி ஓய்ந்ததும் சிம்மக்குரல்போல துறைமுகப்பின் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து அனைத்துக் காவல்கோட்டங்களிலும் முரசுகள் ஒலித்தன. நகரின் மரக்கூட்டங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் கலைந்தெழுந்து காற்றில் சிறகடித்துச் சுழன்று குரலெழுப்பின. வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்த ஆநிலைகளில் இருந்து பசுக்களின் குரல்கள் எழுந்தன.

ஏவலன் வந்து பணிந்து “படைத்தலைவர் துறைமுகத்திற்கு சென்றுவிட்டார்” என்றான். சாத்யகி தன் கச்சையை இறுக்கி அதில் பொற்பூணிட்ட தந்தப்பிடிகொண்ட குத்துவாளைச் செருகி தலைப்பாகையை சீரமைத்துக்கொண்டு அவனுடன் வெளியே நடந்தான். அரண்மனையின் விரிந்த இடைநாழிகளிலும் உப்பரிகைமுகப்புகளிலும் நெய்ப்பந்த ஒளியில் யவனக்காவலர்கள் ஒளிவிடும் வேல்களுடன் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடந்தபடி காவல்காத்தனர். அவனைக் கண்டதும் தலைவணங்கி விலகினர்.

அரண்மனை முற்றத்தில் அவனுடைய வெண்புரவி உடல்நீவப்பட்டு அணிகள் பூட்டப்பட்டு மெருகேறிய தோலைச் சிலிர்த்தபடி நின்றுகொண்டிருந்தது. அவனுடைய மணம் கிடைத்ததும் மூக்கைச்சுளித்தபடி தலையை ஆட்டி மெல்ல கனைத்தது. அவன் அருகே சென்றதும் அதன் செந்நீலநாக்கு வெளியே வந்து சுழன்றது. சாத்யகி அதன் நீண்டமுகத்தின் இருநரம்புகளிலும் கழுத்திலும் கையால் வருடிவிட்டு சேணத்தை ஒருமுறை தட்டிவிட்டு ஏறிக்கொண்டான். அது வாலைச்சுழற்றி காலால் கருங்கல்தரையை தட்டியது.

கூழாங்கற்கள் உதிரும் ஒலியெழுப்பி அவன் கற்தரையில் குதிரையில் விரைந்தான். சுழன்று இறங்கிய பாதையில் இருபக்கமும் இருந்த மாளிகைகளின் பந்தவெளிச்சங்கள் நீள்சதுரங்களாக செம்பட்டுவிரித்தது போல விழுந்துகிடந்தன. அவன் அவற்றைக் கடந்து சென்றபோது அவன் நிழல் எழுந்து சுவர்களின் மேல் பரவி சுழன்றது. மாளிகைமுகப்பில் நின்றிருந்த யவனவீரர்கள் அவனுக்கு தலைவணங்கினர். முதற்கோட்டை வாயிலை அணுகியதும் அங்கு நின்றிருந்த நூற்றுவனிடம் “நான் துறைமுகப்பில் இருக்கிறேன் என்று அமைச்சரிடம் சொல்க!” என்றபின் கடந்துசென்றான்.

பன்னிருநாட்களில் அவனுக்கு துவாரகையின் பதினெட்டு அரசப்பெருஞ்சாலைகளும் அச்சாலைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்த நூற்றுக்கணக்கான ஊடுபாதைகளும் அங்காடியின் வழிகளின் வலைப்பின்னலும் தெரிந்துவிட்டிருந்தன. பதினெட்டு அரசபாதைகளையும் சுற்றி இறங்கி வெளிக்கோட்டையை ஒட்டி இடப்பக்கமாக வளைந்து சென்ற கணிகர்சாலையைக் கடந்து சிறிய குறுக்குப்பாதை வழியாக உணவுப்பொருட்களும் கள்ளும் விற்கும் சிற்றங்காடிக்குள் நுழைந்தான்.

அங்காடியின் அத்தனை கடைகளும் பெரிய மரவுரிகளாலும் மரப்பட்டைகளாலும் மூடப்பட்டிருந்தன. கற்பாளங்களிட்ட சாலைமுழுக்க இரவெல்லாம் நிகழ்ந்த வணிகத்தின் எச்சமாக பொதியிலைகளும் இலைத்தொன்னைகளும் கூலச்சிதறல்களும் பலவகையான உணவுமிச்சிலும் இறைந்து கிடந்தன. அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் வால்சுழல மேய்ந்துகொண்டிருக்க இரண்டு அத்திரிகள் ஒற்றைக்காலைத் தூக்கியபடி தலைதாழ்த்தி நின்று துயின்றன. கடைகளின் ஓரமாக ஆடையவிழ்ந்த களிமகன்கள் படுத்துத் துயின்றனர். யவனர் சோனகர் காப்பிரிகள் பீதர் தென்னாட்டார் கலிங்கர் என அத்தனை பேரையும் அதில் காணமுடியும் என அவன் நினைத்துக்கொண்டான்.

அப்பால் மட்கிய மாவின் மணத்துடன் கூலக்கடைவீதியும் உலர்ந்த மீன் நெடி அடித்த மீன்கடைவீதியும் வந்தன. கூலக்கடைவீதியில் வாலை வளைத்து கையூன்றி நிமிர்ந்து கண்மூடி அமர்ந்திருந்த பூனைகளை காணமுடிந்தது. கூலவணிகர்கள் அவற்றை நூற்றுக்கணக்கில் கொண்டுவந்து வளர்த்தனர். அத்தனை பூனைகளிருந்தும் சாலைகளிலிருந்து பெருச்சாளிகள் பாய்ந்து ஓரங்களை நோக்கி ஓடுவதை தடுக்கமுடியவில்லை.

அவற்றைக்கடந்த சங்குவீதியில்தான் அனைத்துக் கடற்பொருட்களும் விற்கப்பட்டன. தூண்டில்கள், மீன்வேட்டைக்கருவிகள் முதல் சிப்பிகளிலும் சங்குகளிலும் செய்யப்பட்ட பொருட்கள் வரை விற்கும் சிறியகடைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. இரவில் அப்பகுதியில் தோளோடு தோள் முட்டாமல் நடக்கமுடியாது. உச்சக்குரலில் கூவாமல் அருகே நிற்பவர்களிடம் பேசமுடியாது.

அங்கு வந்த முதல்நாள் சாத்யகி மீன்முள்ளால் ஆன பீதர்களுக்கான கொண்டை ஊசி ஒன்றை வாங்கினான். அதன் சிறிய பரப்புக்குள் நுணுகி நோக்கினால் மட்டுமே தெரியும்படி ஏழு சிம்மங்கள் செதுக்கப்பட்டிருந்தன. “இதை கொண்டையில் செருகிக்கொண்டால் சிம்மங்கள் தெரியாதே?” என்று அவன் கேட்டான். பீதன் செம்மொழியில் “இளவரசே, சிம்மங்களைச் சூடியவனை தீயூழ் அஞ்சும்” என்றான். அவன் அதை மறுப்பதற்குள் மரப்பெட்டிக்குள் வைத்து அவனிடம் அளித்து மூன்று பொற்காசுகளை பெற்றுக்கொண்டான்.

கொண்டையூசியுடன் வந்தவனைக் கண்டு ஶ்ரீதமர் நகைத்தார். “இந்த எலும்புக்கு மூன்று பொற்காசுகளா? இப்படி வாங்கப்போனால் துவாரகையின் செல்வம் போதாது” என்றார். சாத்யகி “அழகாக இருந்தது” என்றான். “இந்த நகரின் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களில் மிகச்சிலவே பயனுள்ளவை. பெரும்பாலானவை அகம் மயக்கும் அழகு மட்டுமே கொண்டவை” என்றார் ஶ்ரீதமர். “பெண்கள் அங்கே சென்றால் அணங்குகளால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். கணவனின் செல்வத்தை அங்கே அள்ளி இறைக்காமல் மீளமாட்டார்கள்.”

சாத்யகி அங்கே ஒவ்வொருநாளும் சென்று அதை உணர்ந்துகொண்டிருந்தான். குதிரைவாலால் ஆன பொய்முடிகள். கொம்புகளில் நுணுக்கமாக செதுக்குவேலைகள் செய்யப்பட்ட குறுவாளுறைகள். சந்தனத்திலும் வெண்கலத்திலும் மரத்திலும் செய்யப்பட்ட காலணிகள். எத்தனை தள்ளினாலும் படுக்க மறுத்து தலையாட்டிக்கொண்டிருக்கும் பீதர்களின் வெண்களிமண் பாவைகள். கவிழ்த்தாலும் சிந்தாத யவனநாட்டு மதுச்சிமிழ்கள். கைகளைப்பிடித்து சுழற்றினால் இசையெழுப்பிப் பாடும்படியாக மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள்.

துதிக்கையைத் தூக்கி பிளிறும் காப்பிரிநாட்டு யானைப்பாவையை அவன் வாங்கியபோது ஶ்ரீதமர் சற்று சினத்துடன் “இவற்றை வாங்கி என்ன செய்யவிருக்கிறாய்? வீண் விளையாட்டுப் பொருட்கள்” என்றார். “விளையாடும்போது மட்டுமே மானுடன் பொருள்பொதிந்த ஒன்றை செய்கிறான் ஶ்ரீதமரே” என்றான் சாத்யகி. “நான் விளையாடவே விழைகிறேன். ஏனென்றால் என் தலைவனும் விளையாடிக்கொண்டிருப்பவனே.” ஶ்ரீதமர் தலையில் அடித்தபடி திரும்பிச்சென்றார்.

துறைமுகத்தை ஒட்டி இருந்த பன்னிரு பெருவீதிகளும் பெருங்கடல் வணிகர்களுக்குரியவை. பீதர்களும் யவனர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தென்னவர்களும் கலிங்கர்களும் வேசரத்தவர்களும் தனித்தனியான வணிகவீதிகளை கொண்டிருந்தனர். ஒவ்வொரு கடைவீதியின் நுழைவிலும் அவர்களுக்குரிய தெய்வங்களின் ஆலயங்கள் இருந்தன. பீதர்களின் தெய்வமான பறக்கும் நாகம் உடல்வளைத்துச் சுருண்டிருந்த ஆலயமுகப்பின் இருபக்கமும் இரு சிம்மங்கள் பிடரிச்சுருள்கள் உடலின் பாதியை மறைத்திருக்க வாய்திறந்து நின்றன. ஆண்சிம்மம் வலக்கையால் ஓர் உருண்டையை பற்றியிருந்தது. பெண்சிம்மம் அமுதகலசத்தை வைத்திருந்தது.

யவனர்களின் செல்வதேவனாகிய புளூட்டகனின் கோயில் அவர்களின் சாலையின் முகப்பில் இடப்பக்கமாக நகரை நோக்கியவடிவில் இருந்தது. அதனுள் கருவறையில் அமைந்திருந்த வெண்கலச் சிற்பத்தை சாத்யகி பார்த்திருந்தான். விழியற்றவனும் முடவனுமான புளூட்டகன் சுருண்டு தோளில் தழைந்த கூந்தலுடன் மண்டியிட்டு கையில் பொற்குடுவையுடன் அமர்ந்திருந்தான். அவன் தோளின் இருபக்கமும் விரிந்த சிறகுகள் அறையை நிறைத்திருந்தன. யவனர்களின் ஆலயங்கள் பின்மதியம்வரை மூடியே இருக்கும்.

பாண்டியர்களின் தெய்வமான குமரியன்னை வலக்கையில் அமுதகலசமும் இடக்கையில் முப்பிரிவேலுமாக வெண்கழல்களணிந்த கால்களுடன் நின்றிருந்த கருங்கல் ஆலயமும் கலிங்கர்களின் சிம்மமுகத்தெய்வம் யானைமேல் அமர்ந்திருக்கும் செந்நிறக்கல் ஆலயமும் வங்கர்களின் பதினாறுகைகள் கொண்ட கொற்றவை ஆலயமும் தொடர்ச்சியாக இருந்தன. காலையில் அவ்வாலயங்களில் நெய்ச்சுடர் ஏற்றப்பட்டு பூசனைகள் தொடங்கிவிட்டிருந்தன. மணிகளும் முழவுகளும் முழக்கும் துணைப்பூசகர்களும் பூசகர்களுமன்றி வழிபடுவோர் எவரும் அங்கே தென்படவில்லை.

கடல்வணிகர்களின் நிலைக்களஞ்சியங்கள் நகருக்கு மேற்கில் கடலை ஒட்டி விரிந்து மேலேறிச்சென்ற பாலைநிலத்தில் பிறிதொரு நகர் என பதினெட்டு அடுக்குகளாக அமைந்திருந்தன. அது குபேரம் என அழைக்கப்பட்டது. துறைமுகப்பிலிருந்து அங்கே செல்ல கற்பாளங்களிடப்பட்ட பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெருங்கலங்களில் இருந்து படகுகளில் கொண்டுசெல்லப்படும் பொதிகளை இறக்குவதற்கென கல்லால் ஆன நூற்றெட்டு துறைமேடைகள் அங்கிருந்தன.

அங்காடியில் நின்று நோக்கியபோது கடலலைகள் மேல் பளிங்குக்குழாய் விளக்குகள் எரிய மிதந்துசென்ற நூற்றுக்கணக்கான சுமைப்படகுகள் விளக்குகளின் நீர்ப்பாவைகளுடன் இணைந்து செம்மலர் ஆரம் போல வளைந்தாடின. களஞ்சியத் துறைமேடைகள் அனைத்திலும் நெய்ப்பந்தங்கள் எரிய பல்லாயிரம் வினைவலரும் விலங்குகளும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வெயிலெழுந்ததும் சுமைப்பணியாளரும் பொதிப்படகுகளும் ஓய்ந்து விலக பண்டசாலைகளிலிருந்து பொருள்கொள்ளச்செல்லும் சிறுவணிகர்களின் படகுகள் நீரில் அணிவகுக்கத் தொடங்கும்.

பெருங்கலங்களில் வந்திறங்கிய பொருட்களை பண்டசாலைகளில் இருந்து வாங்கி வண்டிகளிலும் விலங்குகளிலும் ஏற்றிக்கொண்டு செல்லும் வணிகர்கள் நகருக்குள் நுழைவதில்லை. கூர்ஜரத்திற்கும் சப்தசிந்துவுக்கும் மாளவத்திற்கும் செல்லும் மூன்று பெரிய சாலைகள் பண்டசாலை முகப்பிலிருந்தே கிளம்பின. இரவெழுந்ததும் அனலுருகி வழிவதுபோல அவர்களின் விளக்குகளின் ஒளிவரிசை செல்லத்தொடங்கும். இருளில் மூன்று கிளைகளாகப்பிரிந்து அவை வானிலெழுந்த விண்மீன்களை நோக்கி ஏறிச்செல்வதுபோல விழிமயக்கு தோன்றும்.

கலங்களில் வந்த அயல்நிலத்து மாலுமிகள் தங்கள் கூலியை பொருட்களாகப் பெற்று தங்கள் சந்தைகளில் கொண்டு வைத்து விற்றனர். பெரும்பாலும் மதுவும், துணிகளும், படைக்கலக்கருவிகளும், வெண்களிமண் கலங்களும்தான் யவனர்களாலும் சோனகர்களாலும் விற்கப்பட்டன. காப்பிரிகள் கொண்டுவந்த நால்வகைப்பொன்னும் கலங்களிலேயே யாதவ அரசால் பொருள்கொடுத்து கொள்ளப்பட்டன. எஞ்சியவற்றை வணிகர்கள் பெற்றுக்கொண்டனர். சோனகர்கள் கொண்டுவந்த புரவிகள் நகருக்குக் கிழக்காக கடலை ஒட்டி இருந்த புரவிநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே வணிகம் செய்யப்பட்டன.

பொற்குடுவைகளும் மணிநகைகளும் விற்கும் யவனர்கடைகளும் பாண்டிய முத்துக்கள் விற்கும் கடைகளும் படைக்கலமேந்திய வீரர்களால் காக்கப்பட்டன. கோல்விழும் முரசென ஒலிக்கும் அங்காடி நடுவே அந்தத்தெருக்களில் மட்டும் அமைதி நிறைந்திருக்கும். அங்கிருக்கும் வணிகர்களும் அரசர்களைப்போல அகம்படியும் ஏவலரும் கொண்டிருப்பார்கள். பட்டாடை அணிந்து தலைப்பாகையில் தங்கள் குடியின் குறிபொறிக்கப்பட்ட மணிமலரை சூடியிருப்பார்கள். அவர்களின் வண்ணப்பல்லக்குகள் பொன்னூல் ஒளிரும் பட்டுத்திரைச்சீலைகளுடன் நின்றிருக்கும்.

சாத்யகி மேற்குப்பக்கத்து துறைமேடையை அடைந்தபோது அங்கே துவாரகையின் நான்கு அணிநாவாய்கள் சித்தமாகி நின்றிருப்பதை கண்டான். கருடனின் சிறகுவிரித்த வடிவம் நாவாய்களின் விலாவில் வரையப்பட்டிருந்தது. நாவாய்களின் கீழுதடுகள் போல நீண்டிருந்த நடைப்பாலங்கள் வழியாக அத்திரிகளும் கழுதைகளும் பொதிகளை உள்ளே கொண்டுசென்றன. சிறிய சகடங்களில் ஏற்றப்பட்ட தேர்களும் வண்டிகளும் வினைவலரால் தள்ளி உள்ளே கொண்டுசெல்லப்பட்டன. அவர்களின் பணிக்கூவல்களும் பணிமேலாளர்களின் ஆணைகளும் உரக்க எழுந்துகொண்டிருந்தன.

மேற்குப்பக்கத்தில் இரண்டு பாண்டியநாட்டு நாவாய்களில் இருந்து பொதிகள் இறங்கிக்கொண்டிருந்தன. துவாரகையில் பொதிகளை ஏற்றவும் இறக்கவும் காற்றையே பயன்படுத்தியிருந்தனர். கரையில் அச்சுத்தூண்களின் மேல் அமைக்கப்பட்டிருந்த துலாமரங்களின் முனை சுழன்று கலங்களுக்குள் சென்று இறங்கும்போது அவற்றில் பொதிகளை வடங்களால் இணைத்துக் கட்டினர். மறுமுனையில் கட்டப்பட்ட நீண்ட வடம் கடலில் நின்றிருக்கும் ஏழுபாய்கள் கொண்ட அம்பிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அவை பாய் விரித்து காற்றில் செல்கையில் துலாக்கோல் மேலே எழுந்து பொதியை தூக்க வினைவலர் அச்சைச்சுழற்றி பொதியை கரைக்குக் கொண்டுவந்து இறக்குவார்கள்.

துறைமுனம்பில் பீதர்களின் மூன்று பெருநாவாய்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து பொதியிறக்கும் துலாத்தடிகளும் பாய்மரக் கலங்களும் மிகப்பெரியவை. அங்கிருந்து வினைவலரின் கூச்சல்கள் வெடித்து வெடித்து எழுந்தமைந்தன. சாத்யகி புரவியை நிறுத்தி இறங்கி அதை அமைதிப்படுத்த முதுகில் இருமுறை தட்டினான். அவனை நோக்கி வந்த முதன்மை மாலுமி “பொதிகளனைத்தையும் ஏற்றிவிட்டோம் இளவரசே. படைவீரர்கள் அணிவகுத்துவிட்டனர் என்றனர். அரசர் எழுந்தருளும்போது கிளம்பவேண்டியதுதான்” என்றான்.

துறைமேடையின் நான்கு மூலைகளிலும் கல்லால் ஆன பெரிய காவல்மாடங்கள் எழுந்து நின்றன. அவற்றின் உச்சியில் எரிந்த பெரிய நெய்விளக்குகள் பீதர்நாட்டு பளிங்குப்பலகைகளால் மூடப்பட்டு கடற்காற்றிலிருந்து காக்கப்பட்டன. கீழே கற்தூண்களுக்கு நடுவே குவளைமலர் கவிழ்ந்தது போன்ற வடிவில் கண்டாமணிகள் தொங்கின. நீண்ட உலக்கைகளை அசைத்து அவற்றில் ஒலியெழுப்பினர். காவல்மாடங்களின் மேல் பெருமுரசுகள் காத்திருந்தன.

சாத்யகி நாவாய்களை நோக்கி சென்றான். ஒப்புநோக்க துவாரகையின் கலங்கள் சிறியவையாக இருந்தன. துவாரகை கடல்கடந்து வணிகமேதும் செய்யவில்லை. பொருட்களை தேவபாலபுரிக்கும் சிந்துவழியாக உத்தரகூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் கொண்டுசெல்வதற்காக மட்டுமே கலங்களை பயன்படுத்தியது. ஆற்றில் செல்வதற்குரிய அடிப்பக்கம் தட்டையான கலங்கள் அவை. நீருக்குள் அவை ஆழமாக இறங்குவதில்லை என்பதனாலேயே நீருக்குமேல் நிலைகள் குறைவாக இருந்தன. கொடிமரங்களின் நீளமும் பாய்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை அகலமாக்குவதும் உகந்ததல்ல. சிந்து மேலேறிச்செல்லும்தோறும் ஒடுங்கியபடி வரும் நதி.

முதல் நாவாயில் அரசரும் அகம்படியினரும் அமைச்சரும் செல்வதற்கான அனைத்தும் ஒருக்கப்பட்டிருந்தன. துயிலறையில் வெண்பட்டு விரிக்கப்பட்ட இறகுச்சேக்கைகளும் சாளரங்களில் செந்நிறத் திரைசீலைகளும் இருந்தன. யவனநாட்டு புல்நாரால் ஆன திரைச்சீலைகள் குதிரையின் முடிப்பரப்பு போல மென்மையான பளபளப்புடன் காற்றில் படபடக்காமல் மெல்ல நெளிந்தன. யானைத்தந்தங்களால் கால்கள் அமைக்கப்பட்ட பீதர்நாட்டு குறுபீடங்கள். புலித்தோல் போடப்பட்ட சாய்வுப்பீடங்கள். செம்மையும் நீலமும் மஞ்சளும் கலந்து நீரரமகளிரின் சித்திரங்கள் வரையப்பட்ட பீதர்நாட்டு பளிங்குக்கலங்கள். வெண்ணிற ஆடையும் செந்நிறக் கச்சையும் அணிந்த ஏவலர் பளபளக்கும் பொன்னால் ஆன சுட்டியை தலைப்பாகை முகப்பில் அணிந்தபடி நிரைவகுத்து நின்றனர்.

இரண்டாவது நாவாயில் வினைவலரும் ஏவலரும் தங்கும் அறைகளும் ஏழு அடுமனைகளும் இருந்தன. அனலடுப்புக்குரிய விறகும் கரியும் கூலமும் உலர்ஊனும் அடித்தளத்திலிருந்த களஞ்சியங்களில் நிறைக்கப்பட்டிருந்தன. நெய்யும் அக்காரமும் பிறவும் மேலடுக்கின் அறைகளில் இருந்தன. ஒவ்வொரு அறைக்கும் கொள்வதை குறித்துக்கொள்ள ஒரு கணிநாயகம் இருந்தார். அடுமடையர்களும் விளம்பர்களும் மஞ்சள்நிறமான ஆடைகள் அணிந்திருந்தனர்.

மூன்றாவது நாவாய் பெரியது. அதில் அடித்தளத்தில் தேர்களும் வண்டிகளும் நடுத்தளத்தில் அவற்றை இழுக்கும் புரவிகளும் எருதுகளும் அத்திரிகளும் கழுதைகளும் ஏற்றப்பட்டிருக்க மேல்தளத்தில் அவற்றுக்கான உலர்புல்லும், கொள், கம்பு முதலிய கூலங்களும் நிறைக்கப்பட்டிருந்தன. வண்டியோட்டிகளும் புரவிக்காரர்களும் பெரும்பாலும் யவனர்களாக இருந்தனர். அத்திரியோட்டுபவர்கள் மட்டும் மலைமகன்கள்.

நான்காவது நாவாயின் அமரமுகப்பில் பெரிய ஆவசக்கரம் நிறுவப்பட்டிருந்தது. அதன் இருவிலாக்களிலும் இரு ஆவசக்கரங்களும் பின்பக்கம் மூன்று சதக்னிகளும் இருந்தன. ஐநூறு படைவீரர்கள் தங்கள் படைக்கலங்களுடன் தங்க அங்கே இடமிருந்தது. ஒவ்வொருவருக்குமான படுக்கையும் உணவுக்கலமும் ஆடைகளை வைக்கும் சிறிய புரையும் எண்ணிடப்பட்டு வகுக்கப்பட்டிருப்பதை சாத்யகி பார்த்தான்.

சாத்யகி வெளியே வந்தபோது ஸ்ரீதமர் புரவியில் வந்து இறங்கியபடி “இளையோனே, அனைத்தையும் சீர்நோக்கினாயல்லவா? பிழையென ஏதும் நிகழலாகாது” என்றார். “இங்கு பிழையென எதையுமே நான் கண்டதில்லை அமைச்சரே” என்றான் சாத்யகி. “பிழை என்பது தெய்வங்களின் ஆடல். நாம் இந்நாற்களத்தில் எப்போதும் தோற்பவர்கள்தான்...” என்றார் ஸ்ரீதமர். “நான் அனைத்துக்கும் ஆணைகளையிட்டுவிட்டு நேற்று பின்னிரவில்தான் என் மாளிகைக்குச் சென்றேன். எதற்கும் பிறிதொருமுறை அனைத்தையும் சீர்நோக்கிவிடுகிறேன்” என்றபின் உள்ளே சென்றார்.

விரிந்த கல்முற்றத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் நடமாடிக்கொண்டிருந்தபோதிலும் அது தன் விரிவினாலேயே ஒழிந்துகிடப்பதாக விழிமயக்கு அளித்தது. கடலில் இருந்து எழுந்த காற்று வந்து அவன் சால்வையை பறக்கச்செய்தது. ஆனால் கடலில் அலைகளே இல்லை. ஏரியைப்போல சிற்றலைகள் மட்டும் எழுந்து பெரிய கற்பாளங்களால் கட்டப்பட்ட துறைவிளிம்பை மோதிக்கொண்டிருந்தன. துவாரகையில் கடல் மாலையானதும் சீறத்தொடங்கும். பின்னிரவில் உச்சத்தை அடைந்து மெல்ல அடங்கி காலையில் அமைதிகொண்டிருக்கும்.

அன்றுடன் வளர்பிறை தொடங்கிவிட்டது என சாத்யகி எண்ணிக்கொண்டான். முழுநிலவு நாளில் அலைகள் எழுந்து துறைமேடையின் மேல் பரவி மறுபக்கம் செல்லும் என்று சொன்னார்கள். கடலில் நிற்கும் மரக்கலங்களின் உயர்ந்த விளிம்புக்குமேலேகூட அலைகள் கொந்தளித்து எழும். “அன்னைப்பறவை குஞ்சுகளை சிறகுகளால் பொதிவதுபோலிருக்கும்” என்றார் ஸ்ரீதமர். அவன் அதை தன் அகக்கண்ணில் கண்டுவிட்டான். “அலைகள் நாவாய்களை ஒன்றும் செய்வதில்லை. ஏனென்றால் யுகயுகங்களாக அலைகளுடன் ஆடி உருவான வடிவம் கொண்டவை அவை” ஸ்ரீதமர் சொன்னார்.

சாத்யகி நிமிர்ந்து துறைமுகமேடைக்கு மேல் எழுந்திருந்த பெரிய ஒற்றைக்கல் மலைமுடியின் உச்சியில் நின்ற பெருவாயிலை நோக்கினான். துவாரகையில் எங்கு நின்றாலும் அதை முழுக்க காணமுடியாது. பாலைவனப்பாதையில் வரும்போது மிகச்சிறியதாகத் தெரியும் அது தோரணவாயிலை அணுகும்போது முழுமையாகவே மறைந்துவிடும். நகரின் எந்தச்சாலையிலும் அங்கிருக்கும் மாளிகை முகடுகள்தான் பார்வையை நிறைக்கும். அரண்மனைமுற்றத்தில் நின்றால் கிழக்குப்பக்கம் இணையாக எழுந்த குன்றின் மேல் அவ்வாயிலின் அடித்தளத்தின் மேற்குக்கால் மட்டும் தெரியும்.

அதைப்பார்க்கவேண்டுமென்றால் துறைமுகப்புக்குத்தான் வரவேண்டும். அங்கு நின்றிருக்கையில்தான் துவாரகையின் உண்மையான அமைப்பே கண்ணில்தோன்றும். கடலை நோக்கி எழுந்து நின்றிருந்த ஒன்றுடன் ஒன்று இணைந்த இரு குன்றுகளால் ஆனது துவாரகை. சங்கம் என அழைக்கப்பட்ட மேற்குப்பக்கத்துக் குன்று மண்ணால் ஆனது. அதில்தான் துவாரகைநகரம் அமைந்திருந்தது. பெரியபாறைகளின் குவியலாக எழுந்து உச்சியில் கரிய உருளைப்பாறையுடன் நின்றிருந்த குன்று சக்கரம் என்றழைக்கப்பட்டது. அதன் உச்சிப்பாறைமேல் அந்த பெரிய அணிவாயில் கட்டி எழுப்பப்பட்டிருந்தது.

இரு குன்றுகளுக்கு நடுவே எழுந்து கடலுக்குள் நீண்டிருந்த பாறைநிலமே துறைமுகப்பு. அதை அஸ்வமுகம் என்று சூதர்கள் சொன்னார்கள். குதிரையின் இரு காதுகளே சங்கமும் சக்கரமும். அஸ்வமுகத்தில் கடற்பாறைகளைத் தூக்கி அமைத்து சீரான விளிம்பை கட்டியிருந்தனர். அஸ்வமுகம் கடலுக்குள் சென்றிருந்த ஒரு பெரிய மலையின் உச்சி. அவ்விளிம்புக்கு அருகே கடல் ஆயிரம் வாரைக்குமேல் ஆழமிருந்தது. எனவே சீனத்துப்பெருநாவாய்கள் கூட மிக அண்மையில் வந்து நிற்கவும் அவற்றிலிருந்து நேரடியாகவே பொதிகளை கரையிறக்கவும் முடிந்தது.

பாரதவர்ஷத்தில் சீனப்பெருநாவாய்கள் நேரடியாக அணையும் துறைமுகங்கள் தென்மதுரையும் துவாரகையும் மட்டுமே என்றார் ஸ்ரீதமர். ”தென்மதுரை இதைப்போலவே கடலுக்குள் நீண்டிருக்கும் பெரும்பாறைநீட்சியால் ஆனது. அதை கன்யாபாதம் என்கிறார்கள். கரையெனும் கன்னிஅன்னை தன் கால் ஒன்றை கடலுக்குள் நீட்டியிருக்கிறாள் என்று தென்னகத்துப் பாணர்கள் பாடுகிறார்கள். அவ்வன்னையை அவர்கள் குமரித்தெய்வமாக அங்கே பெரும்பாறை ஒன்றின்மேல் நிறுவியிருக்கிறார்கள். அச்சிலையை விடப் பெரியது இங்குள்ள அணிவாயில்.”

சாத்யகி “அதனூடாக காற்று மட்டுமே செல்கின்றது” என்றான். “ஆம், துவாரகையின் தெய்வம் காற்றே. வடபுலத்துக் காற்றுகளால் அள்ளிக்கொண்டு வரப்படும் மரக்கலங்களே இங்கு பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. காற்றன்றி பிறிது எதுவும் நுழையமுடியாததாக அவ்வாயில் இருப்பதனாலேயே அது தெய்வ வடிவமாக இங்கே வணங்கப்படுகிறது.”

கீழிருந்து நோக்கியபோது அந்த வாயில் கரும்பாறை சூடிய மணிமுடி போல தோன்றியது. சற்றுதொலைவுக்கு நடந்து பக்கவாட்டில் நோக்கினால் யானைமேல் அமைந்த அம்பாரிமாடம் போலிருக்கும். அதன் சிற்பங்களில் இருபக்கமும் அமர்ந்திருக்கும் விஸ்வகர்மனும் குபேரனும் மட்டுமே கீழிருந்து நோக்கினால் தெளிவாகத் தெரிபவர்கள். மேல் வளைவின் இருபக்கமும் பறந்த நிலையில் நின்றிருக்கும் வருணனும் வாயுவும் மிகச்சிறிய பாவைகள் போல தெரிவார்கள். பருத்த அகிடுகளும் விரித்த சிறகுகளும் கொண்டு நின்றிருந்த இரண்டு பசுக்களின் நடுவே யாதவர்களின் குலக்குறியான பன்னிரு ஆரங்கள் கொண்ட வெண்சக்கரம் அமைந்திருக்கும்.

மாலையில் வெயில் அமைந்து இருள் எழுவதற்கு முன்பு வானம் குளிர்ந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே அவ்வாயிலை நன்கு பார்க்கமுடியும். துவாரகையின் வானம் வெள்ளிவெளியென ஒளிகொண்டிருப்பது. “மழைக்காலத்தின் மணிவெளிச்சத்தில் ஒவ்வொரு சிற்பத்தையும் தொட்டுவிடலாமென்பதுபோல மிக அண்மையில் பார்க்கலாம். விழிகள் நம் விழிகளை சந்திக்கும்” என்றார் ஸ்ரீதமர். “இந்த மழைக்காலத்தில் நான் இதைப்பார்ப்பதற்கென்றே இங்கு வருவேன்” என்று சாத்யகி சொன்னான்.

அணிவாயிலுக்கு அப்பால் வானத்தில் ஒளிபரவத் தொடங்கியது. அதன் வளைந்த முகடுக்குமேலிருந்து புறாக்கள் எழுந்து வானில் வட்டமிட்டுச் சுழன்றன. முகில்களற்ற வானில் ஒளி வெண்பட்டாடையில் எண்ணை ஊறுவதுபோல பரவியது. ஸ்ரீதமர் வெளியே வந்து “மணியோசை எழட்டும்... அரசர் கிளம்பலாம்” என்றார். அவருக்குப்பின்னால் நின்ற ஏவலன் ஓடிச்சென்று கைகாட்ட மணி இரட்டை ஒலிகளாக முழங்கத் தொடங்கியது. தொடர்ந்து முதற்காவல்மாடத்தின் மேலிருந்த பெருமுரசமும் இரட்டையொலி எழுப்பியது. அதைக்கேட்டு துவாரகையின் காவல்மாடங்களில் இருந்து பெருமுரசுகள் ஒலித்தன.

சற்றுநேரம் கழித்து அரண்மனை முகடில் இருந்து எரியம்பு எழுந்து வானில் வெடித்தது. அங்கே எழுந்த கொம்பொலி சிறிய பறவை ஒன்றின் குரல் என கேட்டது. ஸ்ரீதமர் “அரசர் கிளம்பிவிட்டார்” என்றார். அவர் கைதூக்கியதும் அனைத்து நாவாய்களிலும் கொம்பொலிகளும் முரசொலிகளும் எழுந்தன. வீரர்களும் வினைவலர்களும் சீரமைந்து காத்து நின்றனர். ஸ்ரீதமர் “இங்கு அரசர் இல்லை என்பதைப்போல பதற்றமளிப்பது பிறிதில்லை. ஒவ்வொன்றுக்கும் முடிவுகளெடுக்கவேண்டியிருக்கிறது” என்றார்.

“அரசர் முடிவுகளை எடுப்பதில்லை என்றார்களே?” என்றான் சாத்யகி. “ஆம், அவர் முடிவுகளை சொல்வதில்லை. ஆனால் அவரது முடிவுகளை நோக்கி நம் உள்ளங்கள் செல்வதை அவர் இருக்கையில் உணரமுடியும்” என்றார் ஸ்ரீதமர். குன்றின் மேலே இருந்த அரண்மனைமுற்றத்திலிருந்து கிருஷ்ணனின் அணிமுகப்பினரும் அகம்படியினரும் படைகளும் கிளம்பி வருவதை அங்கிருந்தபடியே ஓசைகள் வழியாக அறியமுடிந்தது. “முதற்காவல்மாடத்தை கடந்துவிட்டனர்” என்ற ஸ்ரீதமர் திரும்பி நாவாய்களை பார்த்தார். “அனைத்தும் பிழையில்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றே நம்புகிறேன்” என்றார்.

அரசரின் அணிப்படையினரின் வண்ணங்களை தொலைவில் சாத்யகி பார்த்தான். பொன்னிறத்தில் சங்குசக்கரக் குறிகள் எழுதப்பட்ட இளஞ்சிவப்புக் கொடிகளை ஏந்தியபடி ஏழு வெண்புரவி வீரர்கள் சீரான விரைவில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் மங்கலஇசை கேட்டது. மேலும் ஒளிபெற்ற கீழ்வானத்தின் பின்னணியில் பெருவாயிலின் சிற்பங்கள் புடைத்தெழுந்து வந்தன.

பகுதி 9 : சொற்களம் - 1

கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை பன்னிரண்டு நாட்களில் சென்றடைந்தன. தெற்கிலிருந்து மழைக்காற்று வடக்குநோக்கி வீசத்தொடங்கியகாலம் என்பதனால் பாய்களை விரித்ததுமே கலங்கள் சிந்துவின் எதிரொழுக்கின் அலைகள் மேல் தாவித்தாவி ஏறி முன்னால் சென்றன. கலங்களுக்குள் இருந்த அனைத்துப்பொருட்களையும் கட்டிவைக்கவேண்டியிருந்தது.

“நூற்றுக்கணக்கான முறை நான் சிந்துவுடன் இணைந்து நடனமிட்டிருக்கிறேன்... அவள் கட்டற்றவள்” என்று கிருஷ்ணன் நகைத்தபடி சொன்னான். சாத்யகி “சிந்துவை எளிதில் நீந்திக்கடக்க முடியாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். கிருஷ்ணன் “ஆம், ஆனால் கடந்துவிடலாம். நீந்திக்கடக்க முடியாதது கிழக்கே காமரூபத்தில் ஓடும் பிரம்மவாகினிதான். அதைக்கடந்தாகவேண்டுமென நான் அதன் கரையில் தங்கியிருந்து பயிற்சி எடுத்தேன். ஒருவருடம் தவம்செய்து அதை வென்றபின்னரே ஊர்திரும்பினேன்” என்றான்.

நான்கேநாட்களில் அவர்கள் மூலத்தான நகரியைச் சென்றடைந்தனர். தேவபாலநகரி கூர்ஜரத்தின் சக்ரதனுஸாலும் மூலத்தானநகரி சிந்துமன்னன் ஜயத்ரதனாலும் ஆளப்பட்டு வந்தது. அவர்கள் யாதவர்களின் எதிரிகள் என்றாலும் வணிகப்பாதைகளை அரசுகள் பகையின்றிப் பொதுவாகப்பேணவேண்டுமென்ற பொதுப்புரிதல் ஷத்ரியர்களுக்குள் இருந்தது. அவர்கள் நுழையும் நாடுகளனைத்திற்கும் முன்னரே செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன. தேவபாலபுரியின் துறைமுகப்பில் சக்ரதனுஸின் வணிக அமைச்சர் பிரசீதர் மங்கலப்பொருட்களுடன் வந்து துவராகையின் அரசனை வணங்கி வரவேற்றார்.

சிந்துவழியாக பருஷ்னிக்குள் சென்று மூலத்தானநகரியின் துறைமுகத்தை அடைந்தபோது ஜயத்ரதனின் மாதுலரும் அமைச்சருமாகிய ஜயசேனர் வந்து வரவேற்று நதிக்கரையிலேயே அமைக்கப்பட்டிருந்த இளவேனிற்மாளிகையில் தங்கச்செய்தார். அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின்னர் கலங்களை அங்கேயே விட்டுவிட்டு சப்தசிந்துவையும் கடந்துசெல்லும் பெரிய வண்டிச்சாலையான சிந்துபதத்தினூடாக அவர்களின் அணி கிளம்பியது.

ஏழு புரவிவீரர்கள் ஏற்றப்பட்ட விற்களுடன் துவாரகையின் கொடிகளை ஏந்தி முன்னால் செல்ல இரண்டுபுரவிகள் பூட்டப்பட்டு சிறிய ஆவசக்கரங்கள் ஏற்றப்பட்ட மூன்று விரைவுத்தேர்களில் காவலர்கள் தொடர்ந்தனர். கிருஷ்ணனும் அமைச்சர் சுதாமரும் அமர்ந்திருந்த தேர் அதைத் தொடர்ந்து சென்றது. அடுத்த தேரில் அரண்மனைப்பெண்கள் எழுவர் சென்றனர். தொடர்ந்து சாத்யகியும் மூன்று படைத்தலைவர்களும் ஒரு தேரில்சென்றனர். உணவுப்பொதிகளையும் படைக்கலங்களையும் சுமந்த நான்கு வண்டிகள் அதைத் தொடர்ந்து சென்றன. அவற்றின் பின் காம்பில்யத்திற்கான வணக்கச்செல்வங்கள் அடங்கிய பெட்டிகளுடன் ஏழு வண்டிகள் சென்றன. குதிரைகளுக்கான புல்சுமைகளுடன் இருபது அத்திரிகளும் கூடாரப்பொருட்களைச் சுமந்த முப்பது கழுதைகளும் பின்னால் நடந்தன. இறுதியாக இருபத்தைந்து குதிரைகளில் வேல்களும் விற்களும் ஏந்திய வீரர்கள் சென்றனர்.

இளவேனிற்காலம் முதல் முதுவேனிற்காலம் வரையிலான பருவம்தான் சிந்துவில் செல்லும் வணிகர்களுக்குரியது. வேனில் முதிர்ந்து மழைக்காலம் தொடங்கியபின்னர் சப்தசிந்துவின் வழியாக வண்டிகள் பயணம்செய்ய முடியாது. வண்டல்மண்ணால் ஆன ஊர்களும் பாதைகளுமெல்லாம் சேறாகி நுரைத்து புதையும். நதிகளிலெல்லாம் செந்நிறமான மழைப்பெருக்கு சுழித்தோடும். தெப்பங்களும் படகுகளும் நிறுத்தப்பட்டிருக்கும். சிந்துவின் மழைக்காலம் புகழ்பெற்றது. வானத்தின் திரையால் ஊர்கள் முழுமையாகவே மூடப்பட்டுவிடும். வயல்களும் குளங்களும் நதிகளுமெல்லாம் இணைந்து ஒன்றாகி செந்நிறநீர்ப்பரப்பே எங்கும் தெரியும். ஊர்கள் நாவாய்கள் போல தங்கள் நீர்ப்பாவைகள் தலைகீழாகத் தொங்கிக்கிடக்க தனித்து விடப்பட்டிருக்கும். ஊற்றிக்கொண்டிருக்கும் புற்கூரைகளுக்கு அடியில் மீனையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி உழவர்கள் மழைமுடிவதற்காகத் தவமிருப்பார்கள்.

சாலைகள் முழுக்க வண்டிகளின் பின்பக்கங்கள் முன்பக்கங்களுடன் தொட்டுக்கொண்டு வணிகக்குழுக்கள் சென்றுகொண்டிருந்தன. அவர்களுடன் சென்ற சூதப்பாடகர்கள் பாடிச்சென்ற பாடல்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலித்தன. சுமைவண்டிகளும் பொதிவிலங்குகளுமாக சிந்துவில் இருந்து எழுந்த வணிகக்குழுக்கள் யமுனையிலும் கங்கையிலும் மீண்டும் படகுகளில் ஏறிக்கொண்டு கங்காவர்த்தத்தின் ஊர்களை நோக்கிச் செல்லத்தொடங்கின.

சாலை முழுக்க சுட்டசெங்கற்களும் கற்பாளங்களும் பரப்பப்பட்டிருந்தமையால் விரைவாகவே செல்லமுடிந்தது. எட்டு காதத்திற்கு ஒருமுறை வணிகச்சாவடிகளும் சுமைவிலங்குகளுக்கான நீர்த்தேக்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இளவேனில் முடிந்த காலமென்பதனால் விடியும்போதே கிளம்பி வெயிலேறுவது வரை சென்றபின் சோலைகளில் இளைப்பாறி மீண்டும் மாலையில் கிளம்பி இரவு அடர்வதுவரை பயணம்செய்தனர். சுதுத்ரியையும் திருஷ்டாவதியையும் பெரிய மரக்குடைவுத் தெப்பங்களில் ஏறிக்கடந்தனர். அசோகவனி என்னுமிடத்தில் யமுனையைக் கடந்து பிரமாணகோடியில் கங்கையைக் கடந்து உசிநாரர்களின் காடுகளை வகுந்துசென்ற பாதைவழியாக காம்பில்யத்தைச் சென்றடைந்தனர்.

காம்பில்யத்தின் எல்லையிலேயே பாஞ்சால இளவரசர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் வந்திருந்தனர். அமைச்சர் கருணரும் படைத்தலைவர் ரிஷபரும் துணைவந்தனர். பாண்டவர்களில் நகுலனும் சகதேவனும் வந்திருந்தனர். வெயில் முறுகி வந்த பிற்பகலில் கிருஷ்ணனின் படைகள் குறுங்காடுகளுக்குள் சென்றதுமே பறவைகளை விண்ணில் அனுப்பி வந்துகொண்டிருப்பதை செய்தியறிவித்தனர்.

குறுங்காட்டைக் கடப்பதற்குள்ளேயே தொலைவில் எரியம்பு எழுந்து அவர்களை வரவேற்றது. அவர்களும் எரியம்பு எய்து வருகையறிவித்தனர். துவாரகையின் கொடி தட்சிணபாஞ்சாலத்தின் எல்லையாக அமைந்த முதற் காவல்கோட்டத்தை அடைந்ததும் பெருமுரசம் முழங்கத்தொடங்கியது. தொடர்ந்து யானைநிரை போல காவல்கோட்டங்கள் ஒலியெழுப்பின. இறுதியில் காம்பில்யத்தின் கோட்டைவாயிலின் பெருமுரசம் முழங்கியது.

கிருஷ்ணனை எதிர்கொண்டழைத்த சுமித்ரன் வணங்கி “துவாரகை அதிபராகிய இளையயாதவரை காம்பில்யம் தலைவணங்கி வரவேற்கிறது. பேரரசர் துருபதரும் இளையமன்னர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் தங்கள் முன் பணிகிறார்கள். தங்கள் தூயகால்களால் எங்கள் நிலம் வளம்பெறட்டும். தங்கள் நிறைசொற்களால் எங்கள் குலம் மேன்மை பெறட்டும். தங்கள் வணக்கங்களால் எங்கள் மூதாதையர் மகிழ்வுறட்டும். தங்களை தொட்டு எங்கள் தெய்வங்கள் வாழ்த்தட்டும். ஆம், அவ்வாறே ஆகுக” என்று சொல்லி தன் வெள்ளிக்கோலைத்தாழ்த்தினான். அவனுடன் வந்த மங்கலச்சூதர் இசைமுழக்கினர்.

நகுலனும் சகதேவனும் வந்து முகமன் சொல்லி வணங்கியபோது கிருஷ்ணன் முகம் கனிந்து “பார்த்தன் நலம்பெற்றுவிட்டானா?” என்றான். “ஆம் யாதவரே. அவரது புண் சற்றுப் பெரியதாக இருந்தாலும் காம்பில்யத்தின் சிறந்த மருத்துவர்கள் அதை ஆற்றிவிட்டனர்” என்றான் நகுலன். கிருஷ்ணன் சகதேவனின் தோளைத் தன் கையால் வளைத்து சாத்யகியை நோக்கித் திரும்பி “இவன் என் மருகன் சாத்யகி. உங்கள் அன்னைவழியில் உங்களுக்கு இளையோன். என்றும் உங்களுடன் இவனும் இருப்பான்” என்றான்.

நகுலன் சாத்யகியின் கைகளைப்பற்றிக்கொண்டு “வருக யாதவரே. தங்களால் எங்கள் குடி மகிழ்வடையட்டும்” என்றான். சாத்யகி “நான் அன்னையை இதுவரை பார்த்ததில்லை. அவர்களைப்பற்றிய கதைகளைத்தான் இளமையிலேயே கேட்டிருக்கிறேன்” என்றான். “இங்குதான் இருக்கிறார்கள். தங்களைச் சந்திப்பது அவர்களுக்கு மகிழ்வளிக்கும்” என்ற நகுலன் “யாதவர்கள் எவராயினும் அவர்கள் மகிழ்வு கொள்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “யாதவர்களின் பேரன்னை இன்று அவர்களல்லவா?" என்றான்.

படைத்தலைவர் ரிஷபர் தன் வாளை உருவி கிருஷ்ணன் முன் தலைவணங்கினார். கருணர் மலர்கொண்டு அவனை வாழ்த்தி காம்பில்யத்திற்குள் அழைத்துச்சென்றார். உருவிய வாளுடன் சுமித்ரன் முன்னால் செல்ல அவனுக்குப்பின்னால் அவன் தம்பியர் சென்றனர். தொடர்ந்து கிருஷ்ணனும் படைகளும் சென்றனர். செல்லும் வழிமுழுக்க காவல்கோட்டங்களில் இருந்து முரசுகள் அவர்களை வரவேற்றன.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலில் பொன்முகபடாமணிந்த ஏழு களிறுகள் அவர்களை வரவேற்க நின்றிருந்தன. கோட்டைமேலிருந்து மலர்க்குவைகள் கிருஷ்ணன் மேல் பொழிந்தன. களிறுகள் நிரையாக அசைந்தாடி நின்றன. அவற்றுக்குப்பின்னால் நின்றிருந்த மங்கலப்பரத்தையர் தாலங்களுடன் முன்னால் வர மங்கல இசை முழக்கி சூதர்கள் தொடர்ந்தனர். பொன்னாலான சிறிய யானைச்சிலை ஒன்றை நான்கு வைதிகர்கள் எடுத்துவந்தனர். அதை கிருஷ்ணன் முன் காட்டி அவனுக்கு மஞ்சள்விழுதால் நெற்றிக்குறியிட்டு நீரும் மலரும் அரிசியும் இட்டு வாழ்த்தி வரவேற்றனர்.

“ஏழரைப்பொன் யானை எழுந்தருளல் என்று இச்சடங்கைச் சொல்கிறார்கள். பாஞ்சாலர்களின் தொன்மையான வரவேற்பு இது. முழுமங்கலம் நிகழும்போது மட்டுமே இவ்வரவேற்பளிக்க வேண்டுமெனச் சொல்வார்கள். கல்யாணக்கோலத்தில் விண்ணளந்தோன் எழுந்தருள்கையிலும் சத்ரமும் சாமரமும் சூடி உலகாளும் பெருமன்னர் வருகையின்போதும் மட்டுமே இவ்வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் அஸ்தினபுரியின் பிரதீபர் காம்பில்யத்திற்கு வருகையளித்தபோது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது” என்றார் கருணர்.

அவர்கள் கோட்டைக்குள் நுழைந்தபோது நகர்வீதிகளில் நிறைந்திருந்த குடிகளின் வாழ்த்தொலி பெருமழை என ஒலித்துச் சூழ்ந்துகொண்டது. பாஞ்சாலத்தின் திறந்த பொற்தேரில் கிருஷ்ணன் ஏறிக்கொண்டதும் திரும்பி “மருகனே, நீரும் ஏறிக்கொள்ளும்” என்றான். சாத்யகி தயங்க “விரைவில்” என ஆணையிட்டான். சாத்யகி கால்கள் நடுங்க பொற்படிகளில் கால்வைத்து ஏறி நின்றான். அவன் மேல் மலர்மழை பொழிந்து பார்வையை மறைத்தது.

சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவன் தன் தந்தையுடனும் இளையோராகிய சம்விரதன், சம்பிரதீகன், உத்தவன் ஆகியோருடனும் காம்பில்யத்திற்குள் முதல்முறையாக நுழைந்தான். அவர்கள் பிலக்‌ஷவனம் வந்து யமுனையைக் கடந்து பிரமாணகோடி வந்து அங்கிருந்து படகில் காம்பில்யத்தை அடைந்தனர். அவன் பார்த்த முதல் பெருந்துறைமுகம் அது. முதல்பெருநகரமும் அதுவே. துறைமேடையருகே ஒரேசமயம் நின்ற ஏழு நாவாய்களை அவன் கட்டடங்கள் என்றுதான் எண்ணினான். அவற்றில் ஒன்றின்மேல் பாய்கள் ஒவ்வொன்றாகப்புடைத்து ஏறக்கண்டபோதுதான் அவை கலங்களெனத் தெளிந்தான்.

யானைகள் போலிருந்தன அக்கலங்கள். அவற்றில் சுமையேற்றும் யானைக்கூட்டங்களையும் நேரடியாகவே கலங்களுக்குள் சென்ற பாலங்களையும் கோட்டைச்சுவர் இடிந்து பரவியது போல விழிதொடும் தொலைவுவரை கிடந்த பொதிகளையும் கண்டு அவன் விழிமயங்கி நின்றிருக்க காம்பில்யத்தின் சிற்றமைச்சர் ஒருவர் புன்னகையுடன் அவர்களை வரவேற்று சிற்றரசர்கள் தங்குவதற்காக கங்கைக்கரையில் அமைக்கப்பட்டிருந்த மரவீடுகளில் ஒன்றுக்கு இட்டுச்சென்றார். அங்கே அவர்களுக்கு உதவ ஒற்றை ஏவலாள் மட்டும் பணிக்கப்பட்டிருந்தான்.

அன்றுமாலை அவன் நீராடி நல்லுடை அணிந்து நகர்நோக்குக்காக சாலைக்குச் சென்றான். பலவண்ண உடைகளும் ஒளிவிடும் அணிகளுமாக மக்கள் நெரிந்த காம்பில்யத்தின் தெருக்களில் மக்களின் தோள்களில் முட்டிமோதித் தவித்துக்கொண்டிருந்தபோது புரவியில் சென்ற வீரன் ஒருவன் “யாதவரே. சாலையோரமாகச் சென்று நில்லுங்கள். மகதமன்னரின் அணிகள் செல்கின்றன...” என்று கூவினான். அவன் விலகி சாலையோரத்து மாளிகை முகப்பின் முன்னால் ஏறி நின்றான். அவனைச்சூழ்ந்து காம்பில்யத்தின் மக்கள் நின்று எட்டிநோக்கி “மகதர்! மகத மன்னர் ஜராசந்தர்” என்று கூவினர்.

ஏழு யானைகள் பட்டுப்போர்வையும் முகபடாமும் பொன்னணிகளும் தந்தக்கூரும் ஒளிர மாபெரும் பொன்வண்டுகள் என அசைந்து நடந்து வந்தன. முதல் யானையின்மேல் முரசுடன் கோல்காரன் அமர்ந்திருந்தான். அடுத்த யானையில் மகதத்தின் துதிக்கை தூக்கிய யானைக்கொடியுடன் கொடிக்காரன் அமர்ந்திருந்தான். தொடர்ந்து வந்த மூன்று யானைகளில் பொன்னகையும் பட்டுமாக அணிப்பரத்தையர் கோல்களுடன் அமர்ந்திருந்தனர்.

ஆறாவது யானையில் மகதமன்னன் ஜராசந்தன் திறந்த பெருந்தோள்களில் வைரங்கள் பதிக்கப்பட்ட ஆரங்களும் மணிக்குண்டலங்களும் வைரச்சரங்கள் சுற்றப்பட்ட பட்டுத்தலைப்பாகையும் கதாயுதமுமாக அமர்ந்து இருபக்கங்களையும் நோக்கி தன்னை வாழ்த்திய மக்களை வணங்கியபடி சென்றார். அவருக்குப்பின்னால் வந்த யானையில் அவர் ஆலயத்திற்கு அளிக்கப்போகும் வணக்கச்செல்வம் பெரிய மரப்பெட்டிகளில் கொண்டுசெல்லப்பட்டது.

“ஆயிரம் பொற்கலங்களை அவர் இன்று துர்க்கையன்னைக்கு அளிக்கவிருக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “ஒவ்வொன்றும் எருதுத்தலையளவு பெரியவை. அவற்றை அவர்கள் எடுத்துவைப்பதை என் மருகன் தன் விழிகளால் கண்டான்.” எருதுத்தலையளவுள்ள பொற்கலன்கள்! அவன் அந்த மணத்தன்னேற்புக்குக் கிளம்பும்போது அவனுடைய தந்தை தங்கள் மரவீட்டின் அடித்தளத்தில் இருந்த கருவூலத்தில் இருந்து எடுத்துவந்து புளிப்புச்சாறும் பின்னர் சுண்ணக்குழம்பும் இட்டு துலக்கி அளித்த சிறிய பொன்னணிகளை எண்ணிக்கொண்டான்.

அவன் அதுவரை காதுகளில் வெள்ளிக்குண்டலங்கள்தான் அணிந்திருந்தான். பொற்குண்டலங்கள் எடையற்றவையாக வேப்பம்பழங்கள்போலிருந்தன. மெல்லிய நீளாரம் ஒன்றை அவன் கழுத்திலணிவித்த அவன் அன்னை “அங்கே அத்தனை அரசகுலத்தவரும் பொன்னணிந்துதான் வருவார்கள். நாம் எவ்வகையிலும் தாழ்ந்துபோகக்கூடாது" என்றாள். அன்று அதை எண்ணி அந்தச் சாலையோரத்தில் நின்று அவன் புன்னகைசெய்தான்.

அணிவலம் நகர்மையத்திலிருந்த காம்பில்யத்தின் அரண்மனைத் தொகுதியை நோக்கிச் சென்றது. சாலைகளின் இருபக்கமும் கூடியிருந்தவர்களில் பெண்கள்தான் கூடுதல் என அவன் கண்டான். பாரதவர்ஷம் முழுக்க பெண்கள் இளைய யாதவனைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர் என அவன் அறிவான். அவர்களின் விழைவுகளே ஒருங்கு திரண்டு அவராக மாறியது என சூதர்கள் பாடுவதுண்டு. நூறுதலைமுறைக்காலம் கன்னியர் கனவில் வாழ்ந்த கந்தர்வர்களனைவரும் நீர்ப்பாவைகளாக மாறி இமயத்தின் பிரம்மமானசம் என்னும் சுனையில் விழுந்தனர். அதன் ஆழத்தின் சுழியில் அவர்கள் சுழன்று கரைந்து ஒன்றாகி ஒற்றைப்பாவையாக ஆயினர். குனிந்து அவ்வுருவைக் கண்ட பிரம்மன் ‘அதுவே ஆகுக’ என்றார். அச்சொல்லே அன்னை தேவகியின் வயிற்றில் கருவாகியது என்றார் சூதர்.

அன்று அவையில் கதைகேட்டு அமர்ந்திருந்த அன்னையரும் கன்னியரும் சிறுமியருமான அத்தனை பெண்களும் விழிமின்ன மெல்ல உடல் ஒசிவதை அவன் கண்டான். அவனைச்சுற்றி பெண்விழிகள் மலர்ந்த பெரும் தோட்டம் இருந்தது. மணிச்சரங்களாக நீளும் விழிகள். வண்ணத்துப்பூச்சிகளாகச் சிறகடிக்கும் விழிகள். விழிகளில் எரிவது காமமா? இல்லை முலைசுரக்கும் அன்னையின் கனிவா? களித்தோழனைக் கண்ட சிறுமியின் சிரிப்பா?

அரண்மனைக்கோட்டை வாயிலில் சத்யஜித்தும் சித்ரகேதுவும் கிருஷ்ணனை எதிர்கொண்டு வரவேற்றனர். சத்யஜித் அவனை மார்புறத்தழுவி “இன்றுதான் பாஞ்சாலம் தன் அச்சத்தை வென்றது. இனி பாரதவர்ஷத்தில் எங்கும் யாதவர்களின் கொடியுடன் எங்கள் கொடிகளும் பறக்கும்” என்றார். “அவ்வண்ணமே ஆகுக” என்று கிருஷ்ணன் சொன்னான். சித்ரகேது “தாங்கள் தங்கி இளைப்பாற அரண்மனை ஒருக்கப்பட்டுள்ளது யாதவரே. ஓய்வெடுத்து வருக. மாலையில் அரண்மனையின் அணியவையில் தங்களுக்கு அரசரும் ஐங்குலத்தவரும் அரசவையினரும் முறைவணக்கம் செய்கிறார்கள். ஏற்றருள்க” என்றான்.

காம்பில்யத்தின் பெரிய அரண்மனையை அவர்களுக்காக அணிசெய்திருந்தனர். துவாரகையின் கருடக்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் முகப்பில் பறந்தன. பெரிய மரத்தூண்களில் செம்பொன்னிற நூல்பின்னல்கள் செய்யப்பட்ட பாவட்டாக்கள் தொங்கின. ”நூறாண்டுகளுக்கு முன் இங்குதான் மாமன்னர் பிரதீபர் தங்கிய அரண்மனை இருந்தது. அவர் நினைவாக அதை விரிவாக்கி கட்டப்பட்ட இம்மாளிகைக்கு பிரதீபம் என்று பெயர்” என்றார் கருணர்.

மங்கலப்பரத்தையர் மஞ்சள் நீர்காட்டி அவர்களை எதிரேற்றனர். அவர்களுக்கு பணிசெய்ய நிறுத்தப்பட்ட ஏவலர்களும் சமையர்களும் மருத்துவர்களும் அடுமனையர்களும் காவலர்களும் அவர்களின் தலைவராகிய கருடருடன் வந்து வணங்கி நின்றனர். கருடர் “தங்கள் பணிக்கென இங்குள்ளோம் அரசே” என்று சொல்லி வணங்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.

சாத்யகி தனக்கென அளிக்கப்பட்ட அறைக்குச் சென்று அமர்ந்தபோது எங்கிருக்கிறோம் என்ற மயக்கத்தை அடைந்தான். பழையநினைவுகளும் புதியநிகழ்வுகளும் ஒன்றுடனொன்று கூடிக்கலந்து சித்தத்தை தேனீக்கூடு என ரீங்கரிக்கச்செய்தன. கண்களை மூடியபடி அப்படியே மஞ்சத்தில் படுத்துவிட்டான். மெல்ல துயில்வந்து எண்ணம் குழைந்தபோது ரிஷபவனத்தில் காட்டுமாடத்தில் மரவுரித்தூளியில் கிடப்பதுபோலத் தோன்றியது. கீழே கன்றுகளின் குரல்கள். அவர்களுக்கு பன்னிரண்டாயிரம் பசுக்களிருந்தன. அவனுடைய மாதுலர்கள் மேய்த்துவந்த மந்தை நான்காயிரம் மாடுகள் கொண்டது. நான்காயிரம் காதடி ஓசைகள். குளம்போசைகள்.

எழுந்தபோது அந்த ஓசை அரண்மனைமுற்றத்தின் ஓசை என உணர்ந்தான். அங்கே தேர்கள் வந்து நின்றன, கிளம்பிச்சென்றன. வீரர்கள் புரவிகளில் கடந்துசென்றனர். பல்லக்கு பொறுத்தோர் உரக்கக் கூவியபடி ஓடும் ஓசை. காம்பில்யத்தின் அரண்மனையில் அவன் இருப்பதை உணர்ந்ததும் எழுந்து விரைந்து நீராட்டறைக்குச் சென்றான். பிறரால் நீராட்டப்படுவதற்கு துவாரகையிலேயே பழகியிருந்தான். ரிஷபவனத்தில் அச்செய்தியை அறிந்தால் ஒவ்வொருவரும் முகம் சுளிப்பார்கள்.

உடையணிந்து வெளியே வந்து ஏவலனிடம் “மன்னர் என்ன செய்கிறார்?" என்று கேட்டான். “சற்றுநேரம் ஓய்வெடுத்தார். நீராடி உணவருந்திவந்து செய்திகளை கேட்டறிந்தபடி சிறுகூடத்தில் அமர்ந்திருக்கிறார்” என்றான். சாத்யகி சிறுகூடத்திற்குச் சென்று வாயிலில் நின்றான். கிருஷ்ணனின் அணுக்கப் பணியாளாகிய மாருதன் உள்ளே சென்று அவன் வருகையை அறிவித்தான். அவன் உள்ளே சென்று வணங்கினான். சுதாமர் கிருஷ்ணன் முன் அமர்ந்து அவன் சொல்வதை ஏட்டில் குறித்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணன் விழிதூக்காமலேயே அமரும்படி கைகாட்டினான்.

சாத்யகி அமர்ந்து கொண்டு அவர்கள் எழுதுவதை கூர்ந்தான். காம்பில்யத்திற்கு வந்துசேர்ந்ததைப்பற்றிய வழக்கமான அரசாணை என்று முதலில் தோன்றியது. ஆனால் தொடர்ச்சியான சுழலும் சொற்களிலிருந்து அவனறியாத மந்தணம் ஏதோ அதிலிருப்பதை உணர்ந்தான். ஓலையை முடித்ததும் சுதாமர் எழுந்து “நான் இதை இன்றே அனுப்பிவிடுகிறேன். அஸ்தினபுரியிலிருந்தும் தசசக்கரத்திலிருந்தும் வந்துள்ள ஓலைகளைத் தொகுத்து இரவு தங்களிடம் செய்தியறிவிக்கிறேன்” என்றபின் வெளியே சென்றார்.

கிருஷ்ணன் கால்களை நீட்டியபடி சாத்யகியிடம் “இங்கு இனிமேலும் பாண்டவர்கள் இருக்கமுடியாத நிலை அணுகிவிட்டது இளையோனே” என்றான். சாத்யகி நிமிர்ந்து நோக்க “என்னைப் பார்க்க அர்ஜுனன் எல்லைக்கு வந்திருக்கவேண்டும். இது அஸ்தினபுரியாக இருந்திருந்தால் அவன் வந்துமிருப்பான். இங்குள்ள முறைமைகளுக்குக் கட்டுப்பட்டுதான் வராமலிருக்கிறான்” என்ற பின்னர் பெருமூச்சுடன் “வராமலிருந்ததும் நன்றே” என்றான். சாத்யகி “ஏன்?” என்றான். ”வந்திருந்தால் நான் அவனை முதலில் நோக்கியிருப்பேன். அது பாஞ்சால இளவரசர்களின் முறைமூப்பை மீறியதாக ஆகும்” என்றான் கிருஷ்ணன்.

சாத்யகி பாஞ்சால இளவரசர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக நினைவில் மீட்டெடுத்தான். அப்போது அந்த ஒவ்வொரு முகமும் பாண்டவர்கள் வரவில்லை என்பதைக் காட்டுவதாகவே தோன்றியது. “திறல்வீரர்கள் பிறரை எளியவர்களாக ஆக்குகிறார்கள் இளையோனே. பார்த்தனையும் பீமனையும் இங்குள்ள இளவரசர் எவரும் விரும்ப வழியில்லை” என்றான்.

“அவர்கள் இங்கு வரவும் தடைகள் இருக்குமோ?” என்று சாத்யகி கேட்டான். “ஆம், அவர்கள் முறைமைப்படி இந்நாட்டின் விருந்தினர்கள். நானும் விருந்தினனே. அரசரிடமும் அவையிடமும் முறைப்படி ஒப்புதல் பெறாது நாங்கள் சந்தித்துக்கொள்ளமுடியாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “இன்றுமாலை அரசவையில் முகமன் சொல்லி தழுவிக்கொள்ள மட்டுமே முறைமை ஒப்புகிறது. அதன்பின் அந்த அவையிலேயே நாங்கள் மேலும் சந்திக்க அரசரிடம் சொல் பெறலாம். அதற்கும் உரிய வழமைகளும் சொற்றொடர்களும் வகுக்கப்பட்டிருக்கும்.”

“ஆனால் இங்கிருக்கையில் அவர்கள் இதற்கெல்லாம் கட்டுப்பட்டுதானே ஆகவேண்டும்?” என்று சாத்யகி கேட்டான். கிருஷ்ணன் “ஆம். கௌரவப்படைகளை வென்றபின்னர் இங்கே அவர்களின் மதிப்பு பெருகியிருக்கும். ஆனால் அரசமுறைமையில் அவர்களுக்கென எந்த இடமும் இல்லை. பெண்கொண்டவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கும் நிகழ்வு இதற்கு முன்னர் நிகழ்ந்திருக்காது” என்றான். “இவர்கள் தொல்குடியினர். ஐங்குலம் ஒன்றானவர்கள். குலங்களை இணைத்திருப்பது முறைமை. அதை சற்றும் மீறமாட்டார்கள். மீறாமலிருப்பதும் நன்று. ஆனால் அம்முறைமையில் எந்த இடமும் இல்லாமல் இங்கிருப்பதென்பது இல்லாமலிருப்பதேயாகும்” என்றான்.

சாத்யகி அவன் சொல்வதைப்புரிந்துகொள்ளாமல் வெறுமே நோக்கியிருந்தான். “இன்றுமாலை அரசவையில் யுதிஷ்டிரன் எங்கிருப்பான் என்று நோக்கும். அரசருக்கு நிகரான முகமன்கள் அவருக்குச் சொல்லப்படும். ஆனால் இளவரசர்களுக்கும் ஐங்குலத்தலைவர்களுக்கும் அவர்களின் மைந்தர்களுக்கும் பின்னரே அவர் அவை நுழையமுடியும், மன்றமரமுடியும். அவரது சொற்கள் கேட்கப்படும், எந்தக்கருத்தும் குலங்களால் ஏற்கப்படாது” என்று கிருஷ்ணன் சொன்னான்.

சாத்யகி “அவர்கள் துவாரகைக்கு வரட்டும்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “குலங்களை இணைப்பவர் எவரும் முறைமைகளை மீறமுடியாது இளையோனே” என்றான். சாத்யகி “அவர்களும் யாதவர்களல்லவா?” என்றான். கிருஷ்ணன் “இல்லை, நம்மவர் விழிகளில் அவர்கள் ஷத்ரியர்களே. யாதவர்களுக்குரிய எந்தக் குலச்சடங்கும் செய்யப்படாதவர்கள் அவர்கள்” என்றான்.

சாத்யகி வெறுமே நோக்க “வேறுவழியே இல்லை, அவர்கள் தங்கள் நாட்டை அடைந்தாகவேண்டும். அஸ்தினபுரியின்மேல் படைகொண்டுசெல்வதாக இருப்பினும் அது முறையே. நாடற்ற ஷத்ரியன் நீரை இழந்த முதலையைப் போன்றவன் என்கின்றது பராசரநீதி” என்றான் கிருஷ்ணன். சாத்யகி “ஆம், நானும் அதையே எண்ணுகிறேன். அவர்கள் கௌரவப்படைகளை வென்றிருக்கிறார்கள். ஆகவே இன்று அவர்கள் கோரிப்பெறும் இடத்தில் இருக்கிறார்கள்” என்றான். கிருஷ்ணன் தனக்குள் என “அது எளிதாக இருக்கப்போவதில்லை” என்றான்.

சாத்யகி “நாம் பாண்டவர்களைப் பார்க்க விழைவதை அரசருக்குத் தெரிவித்தாலென்ன?” என்றான். “எப்படியும் இன்னும் மூன்றுநாழிகைக்குள் பார்க்கப்போகிறோம். அப்போது தெரிவிப்போம்...” என்ற கிருஷ்ணன் சற்று அசைந்தமர்ந்து “துவாரகையிலிருந்து கிளம்பும்போதே அவன் நினைவாகத்தான் இருந்தேன் இளையோனே” என்றான்.

மாருதன் உள்ளே வந்து “இளையபாண்டவர் பார்த்தர்” என்றபோது சாத்யகி தன் உள்ளம் அதை எதிர்நோக்கியிருந்ததை உணர்ந்தான். கிருஷ்ணன் முகம் மலர்ந்து எழுந்து வாயிலை நோக்கி விரைவதை சாத்யகி சற்று திகைப்புடன் நோக்கினான். அவன் கதவைத்திறந்து வெளியே சென்றதை நோக்கியபின் மாருதன் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். சாத்யகி எழுந்து கதவைத்திறந்து வெளியே நோக்க கிருஷ்ணன் நீண்ட இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கி பெருங்கூடம் நோக்கிச் சென்றான். சாத்யகி தயக்கமான காலடிகளுடன் தொடர்ந்து சென்றான்.

பெருங்கூடத்தில் பீடமொன்றில் அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டு விரைந்து எழுந்து திரும்பினான். காலடியோசையிலேயே கிருஷ்ணனை அர்ஜுனன் அறிந்துவிட்டதை முகத்தின் மலர்வு காட்டியது. கிருஷ்ணன் கூச்சலிட்டபடி இரு கைகளையும் விரித்தபடி ஓடிச்சென்று அர்ஜுனனை தழுவிக்கொண்டான். இருவரும் சிறுவர்களைப்போல பற்கள் தெரிய ஓசையிட்டு சிரித்தபடி தோள்களில் அறைந்துகொண்டு மீண்டும் மீண்டும் தழுவிக்கொண்டனர். சாத்யகி விலகிநின்று அதை நோக்கினான்.

கிருஷ்ணன் “அவள் பெயரென்ன, பிரீதையா? அவளைத்தான் நான் பார்க்க விழைகிறேன்” என்றான். அர்ஜுனன் “உன்னைக்கொண்டுபோய் அவளிடம் காட்டுமளவுக்கு நான் மூடனல்ல” என்றான். கிருஷ்ணன் ”அவளைக் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய வேலை அல்ல. என்னால் விழிகளை மட்டும் பார்த்தே சொல்லிவிடமுடியும்” என்றான். "போ, போ, போய்ப்பார்... இங்குள்ள பெண்களுக்கு தோளைச்சுற்றிக் கைகள்” என்றான். கிருஷ்ணன் சிரித்தபடி மெல்லிய குரலில் ஏதோ கேட்க ”போடா” என்று சொல்லி அர்ஜுனன் அவன் தோளில் அறைந்தான். கிருஷ்ணன் அவன் தோளில் கிடந்த சால்வையை பிடித்து இழுத்து “நில், சொல்லிவிடு” என்றான். “போடா” என்று அர்ஜுனன் ஓங்கி மீண்டும் குத்தினான். பின் இருவரும் இணைந்து வெடித்துச் சிரித்தனர்.

படிகளுக்குமேல் நின்ற சாத்யகி அவர்கள் பார்வையில் படவேண்டியதில்லை என சற்றுப் பின்னகர்ந்தபோது மாருதன் அங்கே நிற்பதைக் கண்டான். “பிரீதை என்பவள் யார்?” என்று கேட்டான். “காம்பில்யத்தின் அணிப்பரத்தையரில் ஒருத்தியாக இருப்பாள். இருவரும் வேறென்ன பேசிக்கொள்ளப்போகிறார்கள்?” என்றான் மாருதன். சாத்யகி "அவர்...” என்று வாய் திறந்து பின் சொல்லடக்கி புன்னகைத்தான். "அவர்கள் பேசிமுடிக்கையில் எனக்கு சொல்லியனுப்புங்கள் மாருதரே. நான் அரசருடன் அவைபுக விழைகிறேன்” என்றபின் திரும்பிநடந்தான்.

பகுதி 9 : சொற்களம் - 2

மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும் பாதை முழுக்க மலர்த்தோரணங்களாலும் பட்டுப்பாவட்டாக்களாலும் வண்ணத்திரைச்சீலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அகன்ற வழியின் இருபக்கமும் பாஞ்சாலத்தின் ஐங்குடியினரும் நின்று கிருஷ்ணனை வாழ்த்தி மலர்தூவி குரலெழுப்பினர். அவர்கள் வீசிய மலர்களில் பெரும்பகுதி சாத்யகியின் உடலில்தான் விழுந்தது. அரண்மனைமுகப்பை அடைந்தபோது அவன் உடலை மலர்ப்பொடி மூடியிருந்தது.

அணிமுற்றத்தில் மங்கலச்சேடியரும் இசைச்சூதரும் வைதிகரும் நின்றிருந்தனர். வைதிகர் வந்து நிறைகுடத்து கங்கைநீரை மாவிலையில் தொட்டு அவர்கள் மேல் தூவி வேதம்ஓதி வாழ்த்தினர். கொம்பரக்கு, கோரோசனை, புனுகு, குங்கிலியம், வைரம், சந்தனம், அகில், யானைத்தந்தம், புலிப்பல், கூழாங்கல், மலைச்சுனை நீர், தேன் என பன்னிரண்டு மலைமங்கலப்பொருட்களையும் அரிசி, மலர், சுடர், ஆடி, நிறைகலம், மணி, பட்டு எனும் ஏழு மனைமங்கலங்களையும் ஏந்திய சேடிகள் அவர்களை எதிர்கொண்டழைத்து வாழ்த்தினர்.

தொடர்ந்து வெண்குடை, கவரி, செங்கோல், வாள், மணிமுடி என்னும் ஐந்து அரசமங்கலங்களை ஏந்திய ஏவலர் துணைவர ஐம்பேராயத்தின் தலைவர்கள் சூழ்ந்துவர துருபதன் தன் அரசியரான அகலிகையும் பிருஷதியும் இருபக்கமும் துணைவர எதிர்வந்து வரவேற்றார். கிருஷ்ணனை எதிர்கொண்டதும் மணிமுடி சரிய தலைவணங்கி “யாதவகுலத்தலைவரை பாஞ்சாலம் வணங்கி வரவேற்கிறது. இன்று என் மன்றமர்ந்து எங்களுக்கு நல்வழிகாட்டுக!” என்றார். கிருஷ்ணன் “பாஞ்சாலத் தொல்குடியின் அனைத்து மூதாதையரையும் அடிபணிகிறேன்” என்று மறுவணக்கம் புரிந்தான்.

நால்வேதமோதும் நான்கு குலங்களைச் சேர்ந்த வைதிகர்களும், செல்வம் செய்தி முறைமை என முத்தொழிலாற்றும் மூன்று அமைச்சர்களும், பாஞ்சாலப்பழங்குடியின் ஐந்து குலத்தலைவர்களும், தேர் யானை காலாள் புரவி எனும் நால்வகைப்படையின் நான்குதலைவர்களும், உளவு கணிப்பு காவல் என்னும் முத்தொழிலாற்றும் மூன்று ஒற்றர்குழுக்களின் தலைவர்களும் என ஐம்பேராயமும் அவனை முறைமைப்படி வணங்கி அரசவைக்குள் அழைத்துச்சென்றனர். அவை வாயிலில் பாஞ்சால இளவரசர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் நின்று அவனை வணங்கி வரவேற்றனர்.

பாஞ்சாலத்தின் பேரவைக்கூடம் நிறைந்திருந்தது. கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் முரசுகளும் கொம்புகளும் முழங்க அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தி குரலெழுப்பினர். அவையில் இருந்த துருபதனின் அரியணையை இருபக்கமும் காத்து நின்றிருந்த சத்யஜித்தும் சித்ரகேதுவும் கிருஷ்ணனை வாழ்த்தி வரவேற்று அவனுக்கென போடப்பட்டிருந்த பெரிய பொற்பீடத்தில் அமரச்செய்தனர். கிருஷ்ணன் அமர்ந்தபின்னர் துருபதன் தன் அரியணையில் அமர்ந்தார். அவையினர் மன்னனையும் விருந்தினரையும் வாழ்த்தி குரல் பெருக்கினர்.

சாத்யகி பாண்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று நோக்கினான். அவைநோக்கிய அரைவட்ட வளைவான பீடநிரையில் நடுவே அரசனின் வெண்குடை சூடிய அரியணையும் அதற்கு வலப்பக்கமாக சத்யஜித்தும் சித்ரகேதுவும் பிற இளவரசர்களும் அமரும் பீடங்களும் போடப்பட்டிருந்தன. மறுபக்கம் அரசியரின் அரியணையும் இளவரசிக்குரிய பீடமும் இருந்தன. அவ்வரிசைக்குப் பின்னால் ஏவலரும் அடைப்பக்காரர்களும் நின்றிருந்தனர். கீழே வலப்பக்கம் இசைச்சூதரும் இடப்பக்கம் அணிப்பரத்தையரும் சென்று அமைந்தனர்.

அரசபீடங்களால் ஆன வில்லுக்கு முன்னால் விரிந்திருந்த பெரிய நீள்வட்ட அரங்கின் வலப்பக்கமாக ஐங்குலத்தலைவர்களும் தங்கள் மைந்தர்களுடன் பீடங்களில் அமர்ந்திருந்தனர். நடுவே முதுவைதிகர், நால்வகை குடித்தலைவர்கள் இருந்தனர். இடப்பக்கமாக பிறநாட்டு விருந்தினர்களுக்குரிய பீடங்களில் பாண்டவர்கள் ஐவரும் அமர்ந்திருந்தனர். அவர்களைச் சூழ்ந்து வெவ்வேறுநாடுகளில் இருந்து செய்தியும் பரிசுகளுமாக வந்த தூதர்கள் தங்கள் நாட்டுக் கொடிக்குறிகள் பதிக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருந்தனர். பாண்டவர்களின் பீடங்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமுதகலசக் குறி பொறிக்கப்பட்டிருந்தது.

அரசகுழுவினர் அமர்ந்திருந்த வளைவின் வலப்பக்கத்தின் நீட்சியில் அரண்மனைப்பெண்களுக்கான பீடங்கள் இருந்தன. அதனருகே இருந்த வெண்திரைக்கு அப்பால் குந்தி இருக்கிறாள் என சாத்யகி உய்த்தறிந்தான். அவன் கிருஷ்ணனின் வலப்பக்கம் போடப்பட்ட பெரிய பொற்பீடத்தில் அமர்ந்தான். இடப்பக்கம் சுதாமர் அமர்ந்தார். அவர்களுக்குமேல் செம்பட்டுப் பூக்குலைகள் தொங்கிய மூங்கிலால் ஆன பெரிய தொங்குவிசிறி பட்டுச்சரடால் இழுக்கப்பட்டு ஆடி காற்றை அசைத்துக்கொண்டிருந்தது. அதன் வண்ணத்தால் அவை அலையடிப்பதுபோல தெரிந்தது. துருபதன் தன்னருகே நின்ற ஒற்றர்தலைவர் சிம்மரிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் ஓடிச்சென்று கையசைத்தார். அவையெங்கும் மெல்லிய உடலசைவுகள் உடைகளின் வண்ண ஒளிமாற்றமாகத் தெரிந்தன.

நிமித்திகன் எழுந்து சங்கொலி எழுப்ப முரசுகளும் கொம்புகளும் மணிகளும் முழங்கின. அவைக்கு வலப்பக்கத்தில் தொங்கிய சித்திரப்பணிகள் செறிந்த பெருந்திரை அசைந்து விலக மங்கலச்சேடியர் தாலமேந்தி முன்னால் வந்தனர். தொடர்ந்து அணிச்சேடியர் இரு பக்கமும் சாமரங்கள் வீசி வர முழுதணிக்கோலத்தில் திரௌபதி உள்ளே வந்தாள். அவையிலிருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். பாண்டவர்களும் எழுந்து வாழ்த்தி நிற்பதைக் கண்டதும் சாத்யகி திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். கிருஷ்ணனின் கண்கள் சித்திரத்தின் விழிகளில் நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதுபோல பொருளற்ற ஒளியுடன் தெரிந்தன.

சாத்யகி திரௌபதியை முதல்முறையாக மணத்தன்னேற்பு அரங்கில் பார்த்தபோது அடைந்த அதே அகஎழுச்சியை அடைந்தான். விழிகளை அவளிலிருந்து சிலகணங்களுக்கு விலக்க முடியவில்லை. தன்னுணர்வுகொண்டதும் விழிகளை விலக்கி அவையை நோக்கியபோது அத்தனை பேரும் அந்நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை கண்டான். மீண்டும் அவளை நோக்கி விழிதூக்க அவன் துணியவில்லை. இமைகளைச் சரித்து இருக்கையின் இடப்பக்கம் தொங்குவிசிறியின் காற்றில் ஆடிய ஒரு பட்டுநூலையே நோக்கிக்கொண்டிருந்தான். அது நெளிந்தது. குழைந்தது. மரவுரியின் பின்னல்களில் இருந்து விடுபட்டு எழப்போவதுபோல தவித்தது.

திரௌபதி அமர்ந்ததும் அவையும் அமர்ந்தது. நிமித்திகன் முன்னால் வந்து கோல்தூக்கி பாஞ்சாலத்தின் குலவரிசையைச் சொல்லி துருபதனை வாழ்த்தினான். கிருஷ்ணனை குலவரிசை சொல்லி வாழ்த்தி பாஞ்சாலத்தின் அரசரின் சொல்லாலும் ஐங்குலத்தலைவர்களின் சொல்லாலும் அவனை வரவேற்றான். அவன் கோல்தாழ்த்தி விலகியதும் மீண்டும் மங்கலஇசை எழுந்து விரிந்து அமைந்தது.

துருபதன் எழுந்து அவையை வணங்கி “வெல்லற்கரிய ஐங்குலத்தால் வாழ்த்தப்பட்டது இக்குடி. இங்கு நூறாண்டுகளுக்கு முன் வந்த குருகுலத்து மாமன்னர் பிரதீபருக்கு சூட்டப்பட்ட அதே பொன்மணி அணிமுடி எங்கள் கலவறையில் இதுநாள் வரை பூசனை ஏற்று அமர்ந்திருந்தது. இன்று இந்நகருக்குள் தன் தூயபாதங்களை வைத்துள்ள துவாரகையின் தலைவரை வணங்கி அவருக்கு அதை அணிவிக்க இந்த ஐங்குலத்தவர் அவை ஒப்புதலளிக்கவேண்டும்” என்றார்.

ஐந்துகுலத்தலைவர்களும் தங்கள் கைக்கோல்களைத் தூக்கி ”ஆம் ஆம் ஆம்” என்று ஒப்புதலை அளித்தனர். சத்யஜித் கைகாட்ட பெரிய பொற்தாலத்தில் மூன்று அடுக்குகளாக பொன்னிதழ்களால் செய்யப்பட்டு சுற்றிலும் செம்மணிக்கற்கள் பதிக்கப்பட்ட அணிமுடி வந்தது. மங்கல இசை எழ அணிப்பரத்தையர் குரவையோசை எழுப்ப வைதிகரின் வேதக்குரலும் அவையினரின் வாழ்த்தொலிகளும் இணைந்துகொள்ள அதை துருபதன் தன் கைகளால் எடுத்து கிருஷ்ணனின் தலையில் அணிவித்தார். வைதிகர் கங்கைநீரை தெளித்து வேதமோதி அவனை வாழ்த்தினர். அவையினர் மஞ்சளரிசியும் மலரும்தூவி ஏத்தினர்.

”இன்றுமுதல் பாஞ்சாலம் யாதவப்பேரரசரின் நாடுமாகும். அவரது கையின் செங்கோலுக்கு இம்மக்களும் கடன்பட்டவர்கள். எங்கள் ஐவகைச் செல்வங்களும் அவருக்குரியவை. எங்கள் குலங்கள் உள்ளவரை அவருடைய சொல் இங்கு திகழும்” என்றார் துருபதன். “அவரது புகழ் இந்நாள் என எந்நாளும் வளர பாஞ்சாலத்தைக் காத்தருளும் பேரன்னையரை தொழுகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக!”

சாத்யகி மீண்டும் திரௌபதியை பார்த்தான். அனைத்தையும் அறிந்தவளாகவும், எதையும் பாராதவளாகவும் அமர்ந்திருக்கும் அவளுடைய தோரணையை அவன் மணத்தன்னேற்பு அறையிலேயே கண்டிருந்தான். அது கருவறைகளில் அமர்ந்திருக்கும் தெய்வங்களின் தோரணை. அவளுடைய மூக்கின் கோணலே இல்லாத துல்லியமான நேர்வளைவும் தோள்களின் முழுநிகர்நிலையும்தான் அவளை தெய்வச்சிலையென எண்ணத் தூண்டுகின்றனவா? அந்த கன்னங்கரிய நிறமா? அவன் மீண்டும் அவளைப்பார்ப்பதில் ஆழ்ந்துவிட்டதை உணர்ந்து தன்னை மீட்டுக்கொண்டான். உடலை அசைத்து தன் உள்ளத்தைக் கலைத்தவன் அவ்வசைவாலேயே உள்ளம் வெளிப்பட்டுவிட்டதை உணர்ந்து திரும்பி நோக்கினான். அவையிலிருந்த அனைவரும் அணிமுடி சூடிய கிருஷ்ணனை நோக்கிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் எழுந்து அவையை நோக்கி கைகூப்பி முகமன்களைச் சொல்லி “பாஞ்சாலத்தின் மண்ணை என் மண்ணாகவும் ஐந்துகுலங்களை என் குலமாகவும் கொள்கிறேன். இங்குள்ள அத்தனை அன்னையரின் நற்சொற்களும் என்னைத் தொடர்வதாக! அவர்கள் தங்கள் மைந்தர்களுக்கு அள்ளி வைக்கும் நல்லுணவில் ஒரு துளியை எனக்கெனவும் அளிக்கட்டும். இங்குள்ள தந்தையர் தங்கள் மைந்தரை நல்வழிப்படுத்தும் சொற்களில் ஒன்றை எனக்கெனவும் கருதட்டும். என் தலை என்றும் இந்நிலம் நோக்கி வணங்கியிருக்கட்டும். அருள்க விசும்புநிலம் நிறைத்து நின்றாளும் நெடுமாலின் பெரும்புகழ்!” என்றான். அவையினர் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

சாத்யகி திடீரென்று அனைத்திலும் ஆர்வமிழந்தான். அங்கிருந்து உடனே எழுந்து விலகிச்செல்லவேண்டுமென்று தோன்றியது. அது ஏன் என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். அவனைப்போன்ற எளிய யாதவன் கனவுகாணுமிடத்தில் இருந்துகொண்டிருக்கிறான். பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரியர் அவையில் பொன்னணிந்த இருக்கையில் அரசுமுறைமைகளை ஏற்றுக்கொண்டு. ஆனால் அவனுடைய சலிப்பு மேலும் மேலும் ஏறிவந்தது. ஏன்?

ஏனென்றால், அங்கு பேசிய அனைத்துமே வெறும் அணிச்சொற்கள். அவற்றிலிருந்தவை உணர்ச்சிகளல்ல, வெறும் அரசுசூழ்ச்சிகள். நெஞ்சிலிருந்து வரும் சொற்கள் மலர்கள். இவை பொன்மலர்கள். பெருமதிப்புள்ளவை, உயிரற்றவை. நான் உயிர்ததும்பும் பெரும்புல்வெளிகளில் வாழ்ந்தவன். பொன்னணிகள் சூடியதில்லை. ஆனால் என்றும் என் குடுமியில் புதுமலர்கள் இருந்தன. இளவேனிலில் என் நெஞ்சை தளிர்மாலைகள் அணிசெய்தன. அணிகளைப்போல பொருளற்றவை எவை? அணிகள்சூடுவதைப்போல மலர்களை ஆக்கிய தெய்வங்கள் வெறுக்கும் செயல் பிறிது எது?

கிருஷ்ணன் அவன் கொண்டுவந்திருந்த பரிசில்களை துருபதனுக்கும் பாஞ்சாலத்தின் ஐங்குடித்தலைவர்களுக்கும் அளித்தான். காப்பிரிநாட்டு மணிகள், ஆடகப்பொன் அணிகள். பீதர்நாட்டுப் பட்டாடைகள், உடைவாட்கள். யவனர்களின் நறுமணப்புட்டிகள், நீலநிறமான மதுக்குடுவைகள். தென்தமிழ்நாட்டு முத்துக்கள். ஒவ்வொன்றும் அரியவை. ஒவ்வொன்றும் முற்றிலும் பயனற்றவை. அவன் எழுந்து விலக விழைந்தான். இது என் இடமல்ல. இந்த அவையில் எந்த இடத்திலும் நான் இருக்கமுடியாது. எழுந்தே விட்டான் என ஒருகணத்தில் உணர்ந்து எழவில்லை என அறிந்து ஆறுதல்கொண்டான்.

நான் ஏன் இதையெல்லாம் கேட்கவேண்டும்? என் கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளலாம். நான் பார்க்கவேண்டியது இப்பாதங்களை மட்டுமே. நான் கேட்கவேண்டியது இவன் சொற்கள். நான் சூடவேண்டியவை இவன் எண்ணங்கள். பிறிது எவையும் எனக்கு அயலவையே. நான் இங்கிருக்கிறேன், அவன் அணிந்திருக்கும் உடைவாள் போல. அவன் பாதங்கள் பதிந்திருக்கும் காலணிகள் போல. அதற்கப்பால் எதுவுமல்ல நான். அவன் நெஞ்சு எளிதானது. அவ்விடுதலையை அவன் அடைந்ததுமே இறுகிநின்ற அவன் தோள்கள் தளர்ந்தன.

சொற்களும் மறுசொற்களும் முறைமைகளும் மறுமுறைமைகளுமாக நிகழ்வுகள் சென்றுகொண்டிருந்தன. சரிந்த மேலாடையை இழுத்து அமைத்தபடி சற்று திரும்பிய சாத்யகி அப்பால் பீமனை கண்டான். ஒருகணம் விழிதொட்டு விலகிக்கொண்டாலும் பீமனின் விழிகளில் இருந்தவை தான் எண்ணிய அனைத்துமே என அறிந்து புன்னகை செய்தான். எத்தனை அவைகளில் முற்றிலும் இல்லாதவராக அவர் இருந்திருப்பார் என எண்ணிக்கொண்டான். பாண்டவர்களின் வல்லமையே அந்தபெருந்தோள்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவை ஏந்தும் அந்த பெரிய இரும்புக் கதை அறிந்ததையே அவரும் அறிந்திருக்கிறார்.

பாஞ்சாலத்தின் ஐங்குடித்தலைவர்களும் தங்கள் மைந்தர்களுடன் நிரையாக வந்து கிருஷ்ணனுக்கு பரிசில்களை வழங்கி வாழ்த்தினர். மலைநிலத்தின் குத்துவாட்கள், சந்தனமரம் கடைந்த சிற்பங்கள், தந்தச்சிலைகள், மலைமணிகள், புலிக்குருளைகள். அதன்பின் பாஞ்சாலத்து வணிகர்களும் குடித்தலைவர்களும் பரிசில்களை அளித்தனர். அவர்கள் வாழ்த்தி முடிந்ததும் அவன் காம்பில்யத்தில் சவிதாவை வாழ்த்தி ஒரு பெருவேள்விசெய்வதற்கான பொன்னை வைதிகர்தலைவருக்கு வழங்கி வணங்கினான்.

நிமித்திகர் எழுந்து வணங்கி அவைநிறைவை அறிவித்ததும் பீமனின் உடலில் வந்த விரைவான அசைவை விழிதிருப்பாமலேயே சாத்யகி கண்டான். அவனால் புன்னகையை அடக்கமுடியவில்லை. பெருவிருந்துக்குச் செல்வதற்காக துருபதனின் சார்பில் அனைவரையும் சத்யஜித் அழைத்தார். மீண்டும் முரசுகள் முழங்கியதும் அனைவரும் எழுந்தனர். துருபதன் கிருஷ்ணனை கைகாட்டி அழைத்து உண்டாட்டகத்திற்கு கூட்டிச்சென்றார். சாத்யகி கருணரால் அழைக்கப்பட்டு அவர்களுடன் சென்றான்.

பேரவைக்கூடத்திற்கு அப்பால் விரிவான இடைநாழியால் இணைக்கப்பட்டதாக இரு உண்டாட்டகங்கள் இருந்தன. ஆண்களுக்கான உண்டாட்டகம் வலப்பக்கமாகச் சென்றது. பெண்களுக்கான சற்று சிறிய உண்டாட்டகம் இடப்பக்க இடைநாழிக்கு அப்பாலிருந்தது. அரசியரும் திரௌபதியும் முதியசேடியால் வழிகாட்டப்பட்டு பெண்களுக்கான உண்டாட்டகம் நோக்கி விலகிச் சென்றனர். அவையைச் சூழ்ந்திருந்த மான்கண் சாளரங்களுக்கு அப்பால் அரண்மனைப் பெண்டிர் இருந்தனர் என சாத்யகி அறிந்திருந்தான். வெண்பட்டுத்திரைச்சீலைக்கு அப்பாலிருந்து அரண்மனைப் பெருஞ்சேடியால் குந்தி உண்டாட்டறைக்கு கூட்டிச்செல்லப்படுவதை அவன் கண்டான்.

ஆயிரம் பேர் உணவுண்ணக்கூடிய அளவுக்கு பெரிய கூடம். நடுவே இரண்டு நிரைகளாகச் சென்ற மரத்தூண்களால் தாங்கப்பட்ட உயரமான மரப்பட்டைக்கூரைக்குக் கீழே வெண்ணிறத் துணியாலான பந்தல் இழுத்துக்கட்டப்பட்டிருந்தது. தொலைவில் சுவர்களில் பெரிய நெய்விளக்குக்கொத்துக்கள் பதிக்கப்பட்டு சுடரேற்றப்பட்டிருந்தன. அவற்றுக்கு அருகே பலகோணங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய உலோக ஆடிகள் அவ்வொளியை வாங்கி அந்தத் திரைச்சீலைகளில் வீழ்த்திச் சிதறடித்து மென்மையாக கூடமெங்கும் பரப்பின. கூடமெங்கும் சீரான ஒளியிருந்தாலும் சுடர்கள் மிகத்தொலைவில் இருந்தமையால் பூச்சிகள் பறக்கவில்லை.

கூடத்திலிருந்த சாளரங்களில் எல்லாமே மரவுரிநாராலான வலைகள் போடப்பட்டிருந்தன. தென்மேற்குமூலையில் ஐந்து அன்னையரும் மேலே சண்டிகையும் அமர்ந்த சிற்பம் நிறுவப்பட்ட மரத்தாலான சிறிய ஆலயம் இருந்தது. அன்னையருக்குக் கீழே ஐந்து சிறிய உருளைக்கற்களாக மூதாதையர் நிறுவப்பட்டிருந்தனர். மறுஎல்லையில் அடுமனை நோக்கியதிறப்பில் அடுமடையர்கள் இடையில் கச்சைகளை இறுக்கியபடி உணவை விளம்புவதற்குச் சித்தமாக நின்றனர்.

மரத்தாலான உணவுப்பீடங்கள் நீண்ட நான்கு நிரைகளாகப்போடப்பட்டு அமர்வதற்கு இளஞ்சிவப்பு வண்ணமேற்றப்பட்ட ஈச்சையோலைப்பாய்கள் நீளமாக விரிக்கப்பட்டிருந்தன. அடுமனைத்தலைவரான முதியசூதர் வந்து துருபதனையும் கிருஷ்ணனையும் வரவேற்று முகமன் சொல்லி அழைத்துச்சென்று உண்டாட்டகத்தின் மையத்தில் இருந்த தந்தத்தாலான கால்கள் கொண்ட பீடத்தின் அருகே விரிக்கப்பட்ட புலித்தோலில் அமரச்செய்தார். முறைப்படி வலக்கால் இடக்கால்மேல் மடித்து இருவரும் அமர்ந்துகொண்டதும் பிறரை அழைத்து அமரச்செய்தனர் அடுமனையாளர்கள்.

சாத்யகி கிருஷ்ணனின் வலப்பக்கம் அமர்ந்தான். தொடர்ந்து சுதாமர் அமர்ந்தார். அதன்பின் சத்யஜித்தும் பாஞ்சால இளவரசர்களும் அமர்ந்தனர். பாஞ்சாலஅரசகுலத்தவர் அனைவரும் அமர்ந்தபின் கருணர் ஐங்குலத்தலைவர்களையும் குடிமூத்தாரையும் அழைத்து அமரச்செய்தார். ஒவ்வொருவரையும் அவர்களின் குலம், இடம், நிலை என்னும் மூவகை இயல்புகளையும் சொல்லி முறைப்படி அழைத்து வலக்கை பிடித்து கொண்டுவந்து முறைமைப்படி அமரச்செய்தனர். பாண்டவர்கள் அயல்நாட்டினர் வரிசையில் அமர்ந்தனர். அங்கே ஒரு சிரிப்பொலி கேட்பதை சாத்யகி அறிந்தான். அது பீமன் உண்ணப்போவதைப்பற்றியது என சொற்களில்லாமலேயே அவனுக்குப் புரிந்தது.

அடுமடையர்கள் கங்கைநீரில் வீசப்படும் வலைபோல ஒருபுள்ளியிலிருந்து நாற்புறமும் விரிந்து கூடத்தில் பரவினர். களிமண்ணால் செய்யப்பட்ட ஊண்கலங்கள் அனைவருக்கும் வைக்கப்பட்டன. அருகே மண்குடுவையில் இன்னீர் விளம்பப்பட்டது. அடுமனைத்தலைவர் அவரது கைகளால் முதல்துளி உப்பை துருபதனுக்கு வைத்ததும் அடுமடையர்கள் அனைவருக்கும் உப்பை வைத்தனர். அதன்பின் அக்காரக்கரைசலில் வறுக்கப்பட்ட பழத்துண்டு. அதன்பின் வேம்பின் கொழுந்தை உப்புடன் அரைத்த துவையல். இன்புளிக்காய்த் துண்டுகள். துவர்க்கும் நெல்லிக்காய். இறுதியாக வறுக்கப்பட்ட பாகற்காய்த்துண்டுகள்.

அறுசுவையும் பரிமாறப்பட்டதும் நிமித்திகன் எழுந்து உரத்தகுரலில் போஜன மந்திரத்தை சொன்னான். அனைவரும் வணங்க  சாந்திமந்திரத்தைச் சொல்லி வணங்கியபின் நிமித்திகன் அமர்ந்தான்.

அடுமனைத்தலைவர் அரிசிமாவில் செய்யப்பட்ட சிறிய மான் உருவம் ஒன்றை கொண்டுசென்று மூத்த குலத்தலைவரின் முன்வைத்தார். அவர் அதை தொன்மையான மலைமொழியில் நுண்சொல் ஒன்றை வாய்க்குள் சொன்னபடி தன் சிறிய கத்தியால் ஏழாக வெட்டினார். முதல்துண்டை அடுமனைத்தலைவர் கொண்டுசென்று அந்த உண்டாட்டறையின் தென்மேற்கு எல்லையில் நிறுவப்பட்டிருந்த சின்னஞ்சிறிய அன்னையர் ஆலயத்தின் முன் பலிபீடத்தின் மேல் வைத்தார்.

இரண்டாவது துண்டு துருபதனுக்கு படைக்கப்பட்டது. மூன்றாவது துண்டு கிருஷ்ணனுக்கும் நான்காவது துண்டு ஐங்குலத்தின் முதுதலைவருக்கும் ஐந்தாவது துண்டு குடித்தலைவருக்கும் ஆறாவது துண்டு விருந்தினருக்கும் படைக்கப்பட்டபின் ஏழாவது துண்டு பறவைகளுக்கும் விலங்குகளுக்குமாக வெளியே கொண்டுசெல்லப்பட்டது.

“ஓம், இனிய உணவாக வந்த அன்னையரே!

உங்கள் முலைகளை உண்கிறோம்.

உங்கள் குருதி எங்களில் நிறைக!

உங்கள் வாழ்த்துக்களால் நாங்கள் பொலிக!

எங்கள் வழியாக உங்கள் வழித்தோன்றல்களுக்கு

சென்றுசேருங்கள்

ஆம் அவ்வாறே ஆகுக!”

என முதுகுலத்தலைவர் சொன்னதும் அனைவரும் வலக்கையை எடுத்தனர். சாத்யகி உண்ணப்போனபின்னர்தான் அனைவரும் காத்திருப்பதைக் கண்டான். துருபதன் முதலில் உப்பைத் தொட்டு நாவில் வைத்து “ஓம்” என்றார். அதன்பின் அறுசுவைகளையும் ஒவ்வொன்றாகத் தொட்டு நாவில் வைத்தார். அதன்பின் அனைவரும் அதையே செய்ய அவ்வரிசையை ஓரக்கண்ணால் நோக்கியபடி சாத்யகி அதையே செய்தான். துருபதனில் தொடங்கி அனைவருக்கும் அரிசியாலான அப்பங்கள் விளம்பப்பட்டன. தொடர்ந்து மூங்கில்குவளைகளில் ஈச்சமரத்துக் கள் இனிய கடும் மணத்துடன் நுரைக்க நுரைக்க ஊற்றப்பட்டது.

சங்கின் ஓசையில் தொடங்கும் மங்கலப்பேரிசை போன்றிருந்தது உணவு. கள்ளுடன் உண்பதற்காக மண்தட்டுகளில் உப்பும் மிளகும் புளிங்காய்விழுதும் பூசப்பட்டு தீயில் புரட்டிச் சுடப்பட்டு நீளமான சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட இளங்கன்றின் ஊன் வந்தது. மானிறைச்சியும் முயலிறைச்சியும் அவற்றின் தழைமணம் எழாமலிருக்கும் பொருட்டு சுக்கும் கிராம்பும் இட்டு மண்சட்டியில் கரிச்சூட்டில் வறுக்கப்பட்டிருந்தன. ஆட்டின் இறைச்சி நீளமான நார்களைப்போல கீறி கடுகெண்ணையில் பொரித்து மிளகிட்டுச் சுருட்டப்பட்டிருந்தது. பன்றியிறைச்சி உப்பும் காரமுமாக இலைகளில் சுருட்டி சூளையடுப்பில் சுடப்பட்டு நெய் ஒழுகும் இலைப்பொதிகளாக கொண்டுவந்து வைக்கப்பட்டது.

அரிசி புளித்த கள், அக்காரம் புளித்த கள், மலைக்கிழங்கு புளித்த கள், மலைக்குளவிகளை தேனிலிட்டு ஊறவைத்து எடுக்கப்பட்ட மதுகரம் என்னும் மது, மஹுவா மலர்நீர், அகிபீனத்தின் இலையிட்டு காய்ச்சப்பட்ட புல்சாறு, ஊனைப் புதைத்துவைத்து மூன்றுமாதகாலம் நொதிக்கவிட்டு எடுக்கப்பட்ட துர்வாசம் என ஏழுவகை மதுக்கள் விளம்பப்பட்டன. களிமண்ணால் மூடப்பட்டிருந்த துர்வாசத்தின் கலம் உண்டாட்டுப் பந்தியின் நடுவே கொண்டுவந்து உடைக்கப்பட்டபோது அதன் கடும்நாற்றம் சாத்யகியின் குடலை அதிரச்செய்தது. ஆனால் கூடவே நாவில் நீரும் ஊறியது.

உணவுண்ணும் ஒலிகள் மட்டும் உண்டாட்டறையில் எழுந்துகொண்டிருந்தன. விளம்பர்களை அழைப்பதற்காக கையசைவுகள் மட்டுமே எழுப்பப்பட்டன. மூன்றாமவர் கேட்காமல் இதழசைவால் உணவை கேட்டனர். இதழ்விரியாமல் ஊனை மென்றனர். ஒலியெழுப்பாமல் மதுவை குடித்தனர். மேலாடையால் மூடி நீள்மூச்சை எழுப்பினர். ஒவ்வொருவரும் தனித்தனியாக உண்டு குடித்துக்கொண்டிருப்பதாக ஒருகணமும் அத்தனைபேரும் இணைந்து ஓருடலாக உண்பதாக மறுகணமும் தோன்றியது.

ஷத்ரியர்களின் உண்டாட்டுகளில் உணவை இடக்கையால் தொடலாகாது, விரல்கள் வாயைத் தொடலாகாது, கட்டைவிரலில் உணவு படக்கூடாது, உண்ணும்போது உடலோசைகள் எதுவும் எழலாகாது, உணவை முறைமை மீறி ஒன்றுடன் ஒன்று கலந்துகொள்ளலாகாது, உணவுப்பொருள் கலத்துக்கு வெளியே சிந்தலாகாது, கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டலாகாது, ஊனுணவுக்குப்பின் கள்ளருந்தலாகாது, பிறிதொருவர் கலத்தை நோக்கலாகாது என்னும் ஒன்பது ஒடுக்குநெறிகளும் அனைவரும் ஒரே உணவையே உண்ணவேண்டும், உணவை ஏழுமுறை மெல்லவேண்டும், அனைவரும் இணைந்து எழவேண்டும் என்னும் மூன்று செலுத்துநெறிகளும் உண்டு என சாத்யகி அறிந்திருந்தான்.

அவற்றை முழுக்க நினைவு வைத்திருந்து உண்பதென்பது உண்டாட்டு அல்ல பிறிதொரு அரசச்சடங்கு மட்டுமே என்று தோன்றியது. யாதவர் குலவிழவுகளின் உண்டாட்டு என்பது யானையை வீழ்த்திய நரிகளின் கொண்டாட்டம்போலத்தான் இருக்கும். களியாட்டும் கூச்சலும் உண்பதும் குடிப்பதும் பூசலும் கூடலும் சிரிப்பும் அழுகையும் என அங்கே ஒரு முழுவாழ்க்கையும் நிகழ்ந்து முடியும். விழிகளைத் திருப்பாமல் ஓரக்கண்ணால் நோக்கியபடி அருகே அமர்ந்திருந்தவர் செய்ததையே அவனும் செய்தான். ஒவ்வொருவரும் உண்டு முடித்த கலங்களையும் தொன்னைகளையும் குடுவைகளையும் அடுமடையர்கள் அவ்வப்போது வந்து எடுத்துச்சென்றனர்.

உப்புகோள் என்னும் முதற்சடங்குக்குப்பின் ஊன்கோள் என்னும் இரண்டாவது ஊண்முறை. அதன்பின் அன்னவரிசை என்னும் மூன்றாவது ஊண்முறை. அரிசி, கோதுமை, வஜ்ரதானியம், சோளம், கேழ்வரகு, வால்வரகு, தினை என்னும் ஏழு கூலமணிகளால் ஆன அப்பங்கள் வந்தன. அவற்றுடன் பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்னும் ஏழு பருப்புகளால் ஆன கூட்டுகள், பசலி, கொடுப்பை, மணத்தக்காளி, அகத்தி, செங்கீரை எனும் ஐவகைக்கீரைகளுடன் கலந்து சமைக்கப்பட்டு வந்தன. வழுதுணை, பூசணி, கும்பளை, புடலை, சுரை என்னும் ஐந்து நீர்க்காய்களைக்கொண்டு சமைக்கப்பட்ட களிக்கூட்டுகள். வெண்டைக்காய், பாகற்காய், அவரைக்காய், பயறுக்காய், கோவைக்காய் என்னும் ஐந்து நார்க்காய்களை சிறுதுண்டுகளாக்கி எள்ளெண்ணையில் வறுத்தெடுத்த உலர்கூட்டுகள் தொடர்ந்தன.

கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, முக்கிழங்கு, நனைகிழங்கு என ஐவகைக் கிழங்குகள் வேகவைக்கப்பட்டு வெண்ணையிட்டு மாவுக்கூட்டுகளாக வந்தன. மாங்காய், தேம்புளிங்காய், நெல்லிக்காய் என மூவகை அமிலக்காய்களை மோருடன் சேர்த்து சமைத்தெடுத்த புளிக்கறிகள் அவற்றுடன் இணைந்துகொண்டன. மேலும் மேலும் என உணவுவகைகள் வந்தபடியே இருந்தன.

நான்காவதாக அக்காரவரிசை வரத்தொடங்கியதும் பந்தியெங்கும் உண்ணும் விரைவு மிகவும் குறைந்துவிட்டதை சாத்யகி கண்டான். நான்கு நிரையாக இனிப்புகள் வந்தன. முதலில் இன்சோறுகள். அரிசியும் கோதுமையும் பாசிப்பயறு, துவரையுடனும் கலந்து நெய்யிட்டுச் செய்யபப்ட்டவை. பசும்பாலுடன் வஜ்ரதானியம் கலந்து சமைக்கப்பட்ட வெண்கஞ்சி. அடுத்து இன்னுருளைகள். சோளத்துடன் ஈசலை இட்டு வெல்லம் சேர்த்து இடித்து உருட்டியவை. தேனுடன் கலந்து பிசையப்பட்ட தினையுருளைகள். வஜ்ரதானியப்பொடியுடன் மலைக்கிழங்குகளைக் கலந்து இடித்து உருட்டி வெல்லப்பாகிலிட்டு உலரச்செய்த மாவுக்காய்கள்.

பின்னர் இன்களிகள். கேழ்வரகுப்பொடியுடன் அக்காரமிட்டுக் காய்ச்சி வற்றச்செய்து அறுத்து அடுக்கிக் கொணரப்பட்ட களித்துண்டுகள். இன்வள்ளிக்கிழங்குடன் அக்காரமிட்டு காய்ச்சப்பட்ட கூழ். பச்சரிசிமாவை வாழையிலையில் வைத்து சுட்டு அடைத்துண்டுகளாக்கி வெல்லம் கலந்த பாலில் இட்டு வற்றவைத்து எடுக்கப்பட்ட அடைக்கூழ். இறுதியாக இன்பழக்கூழ்கள். மாம்பழ விழுதுடன் வெல்லமிட்டு இறுக்கி எடுத்தவை. அக்காரவிழுதில் ஊறவைத்து ஆவியில் வேகவைக்கப்பட்ட பலாச்சுளைகள். அக்காரமும் பருப்பும் கலந்து உள்ளே வைத்து தீயில் சுடப்பட்ட வாழைப்பழங்கள். புளிப்புக்காய்களுடன் வெல்லம் கலந்து சமைத்த விழுது. ஈச்சங்கள்ளிட்டுக் காய்ச்சி எடுக்கப்பட்ட தினைக்கூழ். பேரீச்சைப்பழத்தை நெய்யிலிட்டு வறுத்து மாவுடன் சேர்த்துச்செய்த நெடுங்கூழ்.

இறுதியாக மூன்றுவகையான இன்கடுநீர் விளம்பப்பட்டது. சுக்கும் மிளகும் திப்பிலியும் வறுத்துப் போடப்பட்டு கொதிக்கவிடப்பட்ட நீர். நெல்லிக்காய் தானிக்காய் கடுக்காய் கலந்து கொதிக்கவிடப்பட்ட முக்காய்நீர். மோருடன் சுக்கும் பசுமிளகாயும் காயமும் போட்டு குளிரச்செய்யப்பட்ட நீர்.

அனைத்து உணவுகளும் முடிந்ததும் மூத்தகுலத்தலைவர் கைகூப்பி

“ஐங்குலத்து அன்னையரே,

ஐந்து பருப்பொருட்களாக வந்தீர்.

எங்களுக்கு அன்னமாக ஆனீர்.

இதோ எங்கள் உடலாக மாறினீர்.

எங்கள் ஆன்மாவாக ஆகுக!

எங்கள் மைந்தர்களில் உயிராக எழுக!

எங்கள் குலமாகப் பெருகிச் சென்று

காலத்தை வெல்க!

உங்கள் வற்றாமுலைகளை வணங்குகிறோம்.

ஊழி கருக்கொள்ளும்

உங்கள் கருவறைகளை வணங்குகிறோம்.

மங்கலம் ஊறும் யோனிகளை வணங்குகிறோம்.

உங்கள் மலர்ப்பாதங்களை

எங்கள் எளிய தலைகளில் சூடுகிறோம்.

உங்கள் கருணை என்றுமிருப்பதாக!

ஆம், அவ்வாறே ஆகுக!”

என்று வணங்கினார்.

'ஓம் ஓம் ஓம்' என அவை முழங்கியது. குலமூத்தவர் முதலில் எழுந்து உண்டாட்டகத்தின் நிலத்தைத் தொட்டு வணங்கி இடப்பக்கம் திரும்பி நீரறை நோக்கி சென்றார். அதன்பின் துருபதனும் கிருஷ்ணனும் எழுந்தனர். சீரான வரிசையாக ஒருவர் மேல் ஒருவர் தொடாமல் அவர்கள் கைகழுவச்சென்றனர். அத்தனைபேரும் மதுமயக்கில் கால்கள் தளர்ந்து ஆடிக்கொண்டிருந்தாலும் சீராக அடிவைத்து நிரைவகுத்து முன் சென்றனர்.

சாத்யகி எழுந்து அவர்களைப்போலவே சீரான அடிகள் வைத்து நடந்தான். கீழே பரவியிருந்த கலங்கள் எதிலும் கால்படலாகாதென்ற எச்சரிக்கையே அவனில் நிறைந்திருந்தது. பெருமூச்சுடன் உண்டாட்டறை விட்டு அகலும்போது முடிந்துவிட்டது என்ற ஆறுதலையும் எதையுமே உண்ணவில்லை என்ற நிறைவின்மையையும் அடைந்தான். அறைக்குச் சென்றதும் சேவகனிடம் உணவுகொண்டுவரச்சொல்லி ஓசையுடன் கடித்து இழுத்து மென்று தின்னவேண்டுமெனத் தோன்றியது.

பகுதி 9 : சொற்களம் - 3

உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன.

நடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர அமைச்சர்கள் இடப்பக்கம் அமர உண்டாட்டகத்தில் இருந்த அதே முறைமைப்படி அனைவரும் அமைந்தனர். எதிர்ப்பக்கம் தனியாக அமைந்த சேக்கையில் இரு அரசியரும் திரௌபதியும் அமர அவர்களுக்குப்பின்னால் அரண்மனை மகளிர் அமர்ந்தனர். பெண்கள் உட்பட அனைவருமே மதுமயக்கில் மெல்லிய ஆட்டத்துடன் இருந்தாலும் எவரும் உரக்கப்பேசவில்லை. உடைகளின் அசைவுகளும் மெல்லிய குரல்கள் இணைந்த முழக்கமும் மட்டுமே கேட்டன.

மறுபக்கம் இடைநாழியில் சங்கொலி எழுந்தது. அங்கிருந்த பட்டுத்திரை இரண்டாக விலக நீலவண்ணத்தலைப்பாகையும் கரிய பெருமார்பில் மகரகண்டியும் மணிக்குண்டலங்களும் அணிந்த இசைச்சூதன் கையில் குறியாழுடன் வந்தான். அவனைத்தொடர்ந்து நந்துனியுடன் விறலியும் குறுமுழவும் கைத்துடியும் பயிற்றும் இரு இணைச்சூதரும் வந்தனர். சூதன் வந்து முப்புறமும் திரும்பி அவையை வணங்கியபின் அவனுக்கெனப் போடப்பட்டிருந்த சிறிய மரமேடையில் மான்தோலிருக்கைமேல் அமர்ந்தான். அவனுக்கு இடப்பக்கம் விறலியும் வலப்பக்கம் முழவுப்பாணரும் அமர துடியர் பின்னால் அமர்ந்தார்.

அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை முன்னரே மீட்டி இறுக்கியிருந்தனர். சூதன் திரும்பி விழிகளாலேயே முழவரிடம் பேசிவிட்டு விறலியிடம் ஓரிரு சொல் பேசினான். அவள் தலையில் தொங்கிய மலர்ச்சரம் அசைந்து அழகிய கழுத்தை வருடி அசைய தன் நீண்ட கருவிழிகளை சற்றே சாய்த்து ஆமென்பதுபோல் தலையசைத்து தன் நந்துனியை விரல்களால் மீட்டிக்கொண்டாள். யாழ் முனகியது. முழவும் ஆம் ஆம் ஆம் என்றது. சூதன் மமகாரத்தில் வண்டு இமிழ்வதுபோல இசையின் மண்டலத்தை பாடிக் காட்டினான்.

துருபதன் வேறேதோ எண்ணத்தில் திரும்புவதுபோல கருணரை நோக்கி சற்றே சாய்ந்தார். கிருஷ்ணன் “மருதப் பெரும்பண்ணில் செய்திறம் என்ற தென்னக வடிவம். அவர்களின் இசைநூலில் நான்காம் திறத்தின் எண்பத்திரண்டாவது புறநிலையின் சிறுதிறம்” என்றான். “ஆம், இரவுக்குரியது” என்று துருபதன் சொல்லி தலையசைத்தார். கருணர் கிருஷ்ணனை நோக்கி புன்னகைசெய்தார். “இங்கே இந்தப்பண் இல்லை” என்றார் துருபதன். கிருஷ்ணன் எதையும் சொல்லாமல் புன்னகைசெய்தான். கருணர் ஏதோ சொல்ல துருபதர் "ஆம், இருக்கிறது. ஆனால் அதன் அளவுகள் வேறு” என்றார்.

சூதன் பாடத்தொடங்கினான். வாக்தேவி வாழ்த்துக்குப்பின் பாஞ்சாலத்தின் குலமரபை கிளத்தி ஐந்தன்னையரை வணங்கினான். யாதவகுலமரபை பாடி வாழ்த்தியபின் கிருஷ்ணனை புகழ்பாராட்டி முடித்து தலைவணங்கினான். யாழ்மட்டும் சற்றுநேரம் முனகிக்கொண்டிருந்தது. பின்னர் கைகூப்பி கண்மூடி தைத்ரிய பிராமணத்தின் முதல்செய்யுட்களை சந்தத்துடன் சொல்லி கதையை தொடங்கினான்.

“தேவர் வணங்கும் சொற்கள் கொண்ட தேவபாகசிரௌதார்சரை வணங்குவோம். சிருஞ்சயர்களும் குருக்களும் சென்னியில் சூடும் அவரது பாதங்கள் வாழ்க! தாக்‌ஷாயண யாகத்தில் கனிந்த அவரது எண்ணங்கள் வெல்க! ஐதரேயபிராமணத்தின் அழகிய சொற்களால் சொல்லப்பட்ட இக்கதையை எளியவனின் இசைச்சொற்களும் அணிசெய்வதாக! ஓம், அவ்வாறே ஆகுக!”

தைத்ரிய குருமுறையின் தொல்முனிவர் நாநூற்றுவர் வழிவந்தவரும் நால்வேத முறையறிந்தவருமான சுருதமுனிவரின் ஒரே மைந்தராகிய தேவபாகசிரௌதார்சர் மொழியறியும் முன்னரே வேதமறிந்தவர். எழுதாச் சொல்பயின்று தேர்ந்தமையால் மூச்சிலேயே வேத சந்தங்கள் ஒலிப்பவர். அவரது கால்தொட்ட மண்ணில் மலர்கள் எழுந்தன. நிழல் தொட்ட காற்றில் பறந்த பறவைகள் இசை வடிவாயின. வேதவடிவர் என்று அவர் வாழ்த்தப்பட்டார். அவரது நாவுதிர்க்கும் எச்சொல்லும் வேதமென்றே அமையும் என்றனர் வைதிகர். பல்லாயிரமாண்டுகளுக்கு முன் அவரது குலமூதாதையரின் சொல்லில் எழுந்தது சவிதாவை போற்றும் காயத்ரி என்றனர் வேதமரபறிந்த அறிஞர்.

வேதச் சொற்களைக் கடைந்து வெறும் சித்தமெனும் சமித்தில் சவித்ராக்னியை எழுப்பி தழலாடிப்பெருகச்செய்யும் பெருந்திறன் கொண்டிருந்த சுருதரின் காலத்தில் மண்ணில் வாழ்ந்த பல்லாயிரம் பறவைகளும் வேதங்களை அறிந்திருந்தன. பசுக்கள் அறிந்திருந்தன. ஞானியர் சொல்லில் முளைத்து வேரூன்றி விழுதுபரப்பி பாரதவர்ஷமெங்கும் பரவியது வேதம். நூற்றெட்டு வைதிகர் குலங்களும் நாற்பத்தொரு ஆசிரியமுறைகளும் உருவாயின. ஆண்டுக்கு நான்குமுறை வேதம் பிறந்த ஐதரேயம், கைகௌஷிதகம், தளவகரம், சௌனகம், தைத்ரியம் என்னும் ஐந்து தூய காடுகளில் வைதிகர் கூடி வேதத்தை முற்றோதும் வழக்கம் உருவாகியது. மரங்களில் உறங்கும் மலைச்சீவிடுகள் என பல்லாயிரம் தொண்டைகள் ஒற்றைக்குரலில் பாடியபோது வேதம் உருகி இணைந்து ஒன்றாகியது. எம்மானுடர்க்கும் உரியதாகியது.

தூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.

அத்தனை வைதிகரவைகளுக்கும் பொதுவாக வேள்விப்பசுவை பங்கிடுவதென்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டே சென்றது. குளம்புகள் முதல் கொம்புவரை பசுவைப்பங்கிடுவதன் கணக்கு தொல்குடிவைதிகரான சுருதருக்கே தெரிந்திருந்தது. வேள்விக்குடியினர் பெருகியபோது ஒன்று நூறாகப் பெருக அவிபங்கிடும் கணக்கு ஒன்றை நூற்றுப்பதினெட்டு வரிகளும் அறுநூறு சொற்களும் கொண்ட செய்யுளாக யாத்து தன் மைந்தனாகிய சிரௌதார்சனுக்கு கற்பித்தார். அந்தக்கணக்கு அவனிடமன்றி பிறரிடம் செல்லக்கூடாதென்று ஆணையிட்டார். அக்கணக்கை அறிந்தவன் வைதிகத்தலைமையை ஆள்கிறான், அதை இழந்தால் வைதிகம் தலைமையின்றி சிதறும் என்றார்.

அகவை முதிர்ந்து அவர் தேவபாகசிரௌதார்சர் என அழைக்கப்பட்டபின்னரும் வேள்விப்பசுவை பங்கிடும் கலையை பிறர் அறியவில்லை. வேதகுலங்கள் பெருகி ஒரு பசு பன்னிரண்டாயிரம் துண்டுகளாக பங்கிடப்பட்டபின்னரும் கூட அவரே தலைமை அவிபாகராக இருந்தார். வலக்கழுத்தின் பெருங்குழாய் வெட்டப்பட்டு பசுங்குருதி எரிகுளத்தில் அவியாக்கப்பட்டு விழி நெருப்பை நோக்கி ஒளிவிட்டுக்கிடக்கும் வெண்பசுவை நோக்கியதுமே அதை பன்னிரண்டாயிரம் துண்டுகளாக அவர் தன் நெஞ்சுக்குள் பார்த்துவிடுவார் என்றனர். ஒவ்வொரு வேதகுலத்திற்கும் உரிய தேவர்களும் துணைத்தேவர்களும் எவரென அவர் அறிந்திருந்தார். கபிலமரபு கால்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு பசுவின் கண்ணிலும் உரிமை இருந்தது. கௌண்டின்ய மரபு பசுவின் கொம்புக்கு உரிமை கொண்டது. பசுவின் அகிடில் ஒரு துளியிலும் அதற்கு உரிமை இருந்தது. சாண்டில்ய மரபு பசுவின் கண்களையும் நெஞ்சையும் உரிமைகொண்டிருந்தது. பிருகு மரபுக்கு மட்டுமே உரியது எரிவடிவான நாக்கு. அதை பிருகுமரபில் இணைந்த பன்னிரு மரபுகள் பங்கிட்டுக்கொண்டன.

தேவபாகசிரௌதார்சர் தொட்டு பங்கிட்டால் ஒருதுளியும் குன்றாமல் கூடாமல் ஒவ்வொருவரும் பசுவைப்பெறுவர் என்று அனைவரும் நம்பினர். ஆனால் அவர் முதிர்ந்து விழிமங்கி சொல்தளர்ந்தபோதும் தந்தை தனக்களித்த அச்சொல்லை கைவிடவில்லை. காட்டெரி என வேதம் பாரதவர்ஷத்தில் படர்ந்தது. தண்டகாரண்யத்திலும் வேசரத்தின் அடர்காடுகளிலும் தெற்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் அது வேரூன்றியது. காந்தாரமும் காமரூபமும் வேதம் கொண்டன. அங்கெல்லாம் வேள்விக்குப்பின் அவிபாகம் கொள்வதில் பூசல்கள் எழுந்தன. எனவே தேவபாகரிடம் இருந்து பசுவைப்பங்கிடும் செய்யுளைக் கற்க பன்னிரு மாணவர்களை வைதிகரவை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் தேவபாகரிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து பன்னிரு ஆண்டுகாலம் பயின்றனர். ஆனால் ஒரு சொல்லையேனும் அவர்களுக்குச் சொல்ல தேவபாகர் உளம் கனியவில்லை.

தேவபாகர் அகவை முதிர்ந்து வருவதை வைதிகரவை அறிந்து அஞ்சியது. அவர் அச்செய்யுளை மறப்பாரென்றால் பின்னர் வைதிகர்களை ஒருங்கிணைக்க முடியாமலாகும், தூயகாடுகளில் வேதம் எழாமலாகும் என்று அஞ்சினர். அந்நிலையில் ஒருநாள் முதுவைதிகரான பிரஹஸ்பதி தண்டகக் காட்டுக்குள் செல்கையில் மலைச்சிறுவன் ஒருவன் புதருக்குள் ஓசையின்றி ஒளிந்திருக்கும் பூனையை அம்பெய்து வெல்வதை கண்டார். பூனை தெரியாமல் கேளாமல் எவ்வண்ணம் அதை அவன் செய்தான் என்று கேட்டார். அதன் மூச்சிலாடும் இலைகளைக்கொண்டு அதன் இடத்தை அறிந்ததாக அவன் சொன்னான். அவன் காட்டின்சரிவில் கன்று மேய்த்த மலைமகள் ஒருத்திக்கு பெருவைதிகரான பத்ருவில் பிறந்தவன் என அறிந்தார். அவனுக்கு கிரிஜன் என்று பெயரிட்டு தன்னுடன் அழைத்துக்கொண்டார். அவனுக்கு வேதம் அளித்து வைதிகனாக்கி தேவபாகரிடம் அனுப்பினார்.

முதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் இதழசைவை எவரும் காணலாகாதென நீர்வெளி நோக்கி திரும்பி அமர்ந்திருப்பார். அவருக்குப்பின்னால் புதருக்குள் அமர்ந்திருந்த கிரிஜன் ஒரு மென்பஞ்சுத்துகளை காற்றில் விட்டு அது அவர் முன் வாயருகே பறக்கச்செய்தான். அவரது உதட்டசைவில் மென்பஞ்சுப்பிசிறு கொண்ட அசைவைக் கண்டு அச்சொற்களை உய்த்தறிந்தான். நுண்மொழியைக் கற்ற மறுநாளே ஆசிரியரின் அடிபட்ட மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டபின் திரும்பி தண்டகாரண்யம் சென்றான்.

தானில்லாமல் பெருவேள்விகள் நிகழ்வதையும் பிழையில்லாமல் வேள்விப்பசு பங்கிடப்படுவதையும் அறிந்த தேவபாகர் சினம்கொண்டு சடைமுடியை அள்ளிச்சுழற்றிக் கட்டி கிளம்பி தண்டகத்திற்கு சென்றார். அங்கே அவர் சென்றுசேரும்போது வேள்விமுடிந்து அவிபாகம் நிகழ்ந்துகொண்டிருந்தது. தன் இளம் கைகளால் கிரிஜன் பசுவை குளம்பில் கூரிய கத்தியால் தொட்டு ஓவியத்தூரிகை எனச் சுழற்றி நெஞ்சு வளைவுக்குக் கொண்டு சென்று கழுத்தை வளைத்து வயிற்றை வகுந்து அகிடைப் பகுந்து யோனியைச் சுற்றி வால் நோக்கி சென்று வளைத்து இணைத்து மென்மலரிதழைப் பிரிப்பதைப்போல வெண்தோலை அகற்றி செவ்வூன் அடுக்குகளை இனிய நூலின் ஏடுகளைப் புரட்டுவதுபோல மறித்து உள்ளே அப்போதும் அதிர்ந்துகொண்டிருந்த இதயமுகிழை கையில் எடுப்பதைக் கண்டார். தீச்சொல்லிட கையில் எடுத்த நீர் ஒழுகி மறைய நோக்கி நின்றார். துளிசிந்தாமல் பசுவைப் பங்கிட்டு விழிதூக்கிய கிரிஜனைக் கண்டு கனிந்து புன்னகைத்து “ஓ கிரிஜனே, உன்னால் அனைத்தும் பங்கிடப்படட்டும். சிறந்த பங்குகளால் வாழ்கிறது அன்பு. அன்பில் தழைப்பது வேதச்சொல். ஆம், அவ்வண்ணமே ஆகுக!" என வாழ்த்தினார்.

“வேதம் தழைக்கவந்த மலைமகன் அமைத்தவையே ஆரண்யகங்கள் என்றறிக! அவை வேதங்களை வினைகளாக்குகின்றன. வினைகள் பழுதறப் பங்கிடச்செய்கின்றன. வாழும் சொல்லென வேதங்களை மண்ணில் நிறுத்துகின்றன. கிரிஜனை வாழ்த்துக! அவன் சொல்லில் வாழும் தேவபாகசிரௌதார்சரை வாழ்த்துக! அவர்கள் நெஞ்சில் வாழும் சுருதரை வாழ்த்துக! அவர்களிடம் ஞானமாக வந்த சவிதாவை வாழ்த்துக! சவிதா குடிகொண்ட காயத்ரி என்றும் இவ்வுலகை ஒளிபெறச்செய்க! ஓம் ஓம் ஓம்!” சூதன் பாடி முடித்து தன் யாழ்தொட்டு வணங்கி எழுந்தான். அவை கைதூக்கி வாழ்க! என்று அவனையும் அவன் அழியாச்சொல்லையும் வாழ்த்தியது.

அவையில் பெரும்பாலானவர்கள் கண்ணயரத் தொடங்கிவிட்டிருந்தனர். துருபதனின் மோவாய் மார்பில் அழுத்தமாகப் படிந்திருக்க அவர் குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். வாழ்த்தொலி கேட்டு விழித்தெழுந்து கைதூக்கி வாழ்த்தியபின் திரும்பி கருணரை நோக்கினார். கருணர் திரும்பி நோக்க ஏவலன் பெரிய தாலத்தில் மங்கலப்பொருட்களுடன் பொன்முடிப்பை வைத்து கொண்டுவந்து அவரிடம் அளித்தான். அவர் கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து அதை வாங்கி சூதனுக்கு அளித்து "இனிய சொல். உள்ளனல் எழுந்த சொல். வாழ்க!” என்றார். அவன் எந்த முகமாற்றமும் இல்லாமல் முறைமைச்சொல் சொல்லி அதை பெற்றுக்கொண்டான்.

திரௌபதி எழுந்து "சூதரே, எங்கு எழவேண்டுமோ அங்கு மட்டும் எழுவதே தேவர்களுக்குரிய அனல் என்பார்கள் முன்னோர். இங்கு ஒலித்தவை உம்மில் விளைந்த தேவர்களின் சொற்கள் என அறிகிறேன். உம்மையும் உம் குலத்து மூதாதையரையும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்” என்று சொல்லி தன் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி விறலியை நோக்கி நீட்டினாள். “தேவி, இப்பரிசை என் ஆன்மாவும் ஏற்றுக்கொள்கிறது. என் விறலியின் கழுத்தில் அந்நகை அணிசெய்யட்டும், என் சொற்கள் இந்த அவையை என” என்று சொல்லி சூதன் தலைவணங்கினான். அவன் விறலி வந்து மணியாரத்தைப் பெற்றுக்கொண்டு திரௌபதியை வாழ்த்தினாள். பிற சூதரும் பரிசில்கள் பெற்று வணங்கியபின் திரௌபதி அமர்ந்தாள்.

நிமித்திகன் எழுந்து தன் கைக்கோலை சுழற்றித்தூக்கி "இனிய இரவு. ஞானமும் உவகையும் உறவும் நிறைந்த இரவு. ராத்ரிதேவியால் சுமக்கப்பட்ட நித்ராதேவி நம் இல்லங்களை அணிசெய்க!” என்றான். ஓம் ஓம் ஓம் என அவை முழங்கியது. அனைவரும் ஆடைகள் ஒலிக்க மெல்லிய முனகல்கள் போல குரல்கள் சேர்ந்து முழங்க முழங்கால்களில் கையூன்றியும் துணைவரால் கைகொடுக்கப்பட்டும் எழுந்தனர். கிருஷ்ணன் எழுந்து துருபதனுக்கு தலைவணங்கி முகமன் சொல்லி விடைபெற்றான். சத்யஜித்திடமும் சித்ரகேதுவிடமும் பிற இளவரசர்களிடமும் விடைபெற்றான். முதலில் துருபதன் தன் தேவியருடன் கூடம் விட்டு சென்றார். அதன்பின் கிருஷ்ணன் பாஞ்சாலத்தின் அரண்மனைச் செயலனால் வழிநடத்தப்பட்டு வெளியே சென்றான். அனைவரும் கலைந்து செல்லும் ஒலி பின்னால் கேட்டது.

சாத்யகி சூதன் பாடிய வாழ்த்துச்செய்யுளுக்கு அப்பால் எதையுமே கேட்கவில்லை. அவன் இமைகள் நனைந்த சிறகுகள் போல எடைகொண்டு தாழ்ந்து வந்தன. சிந்தை தொலைதூரத்து அங்காடியின் ஓசை போல பொருளில்லாத சொற்களின் மங்கலான கலவையாக ஆகியது. அனைவரும் சேர்ந்து எழுப்பிய வாழ்த்துரைகளைக் கேட்டே அவனும் விழித்துக்கொண்டான். கிருஷ்ணனின் பின்னால் நடக்கையில் அவன் கால்கள் துவண்டன. சுவர் அசைந்தாடி அருகே வந்தது. படகில் செல்கிறோம் என்ற உணர்வை சிலமுறை அடைந்தான். ஏப்பம் விட்டபோது அவன் சற்று மிகுதியாக அருந்திய துர்வாசத்தின் இழிமணம் தொண்டையைக் கடந்து எழுந்தது.

கிருஷ்ணனின் அறையை அடைந்ததும் செயலன் தலை வணங்கி கை காட்டினான். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும் திரும்பி சாத்யகியை நோக்கினான். அதை புரிந்துகொண்ட சாத்யகி உள்ளே சென்று சுவரோரமாக நின்றான். கிருஷ்ணன் பீடத்தில் அமர்ந்து தன் சால்வையை மடிமேல் போட்டுக்கொண்டு திரும்பி அருகே இருந்த ஒரு தாலத்தில் இருந்து சுக்குத்துண்டுகளை எடுத்து சாத்யகியிடம் நீட்டினான். அதை கைநீட்டி வாங்க சாத்யகி தயங்கி பின் கிருஷ்ணனின் புன்னகையால் துணிவடைந்து வாங்கி வாயில்போட்டான். சுக்கின் இனிய மணம் உகந்ததாக இருந்தது. துர்வாசத்திற்கு மறுமருந்தே சுக்குதானா என எண்ணிக்கொண்டான். அதையும் மிதமிஞ்சிக் குடித்துநோக்கி கற்றிருக்கக்கூடும் அவர் என்று எண்ணியபோது புன்னகை வந்தது. விருந்தில் மிகுதியாகக் குடித்தவன் கிருஷ்ணன்தான். சாத்யகி ஒரு கட்டத்தில் கிருஷ்ணனை கையில்தூக்கிக்கொண்டு செல்லவேண்டுமென்றே எண்ணினான். ஆனால் அப்போதுதான் நீராடி வந்து அமர்ந்திருப்பவன் போல அவன் தெரிந்தான்.

வாயிலில் காலடியோசை கேட்டதும் சாத்யகி வியப்புடன் நோக்கினான். தருமனும் பீமனும் பின்னால் வந்தனர். தொடர்ந்து அர்ஜுனன் வந்தான். நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றனர். கிருஷ்ணன் எழுந்து முறைப்படி தலைவணங்கி முகமன் சொல்லி தருமனை வரவேற்று பீடத்தை சுட்டிக்காட்டி அமரும்படி கோரினான். பீமனையும் முறைமைப்படி வரவேற்று அமரச்செய்தான். அர்ஜுனன் எதிரில் பீடத்தின் பின்னால் நிற்க கிருஷ்ணனுக்குப் பின்னால் சாத்யகியின் அருகே நகுலனும் சகதேவனும் வந்து நின்றனர். கிருஷ்ணன் அவர்களை நோக்கி புன்னகை செய்து ”சற்று தடித்துவிட்டனர்” என்றான். சகதேவன் நாணத்துடன் புன்னகைசெய்து ”ஆம், இங்கே நான் படைக்கலப்பயிற்சி செய்வது சற்று குறைவே” என்றான்.

தருமன் பெருமூச்சுடன் “நீயே அறிவாய் கிருஷ்ணா, நாங்கள் இங்கு இனிமேல் நெடுநாள் தங்க முடியாது” என்றான். “இன்று திரைக்குள் இருந்த அன்னையின் முகம் எப்படி இருந்திருக்குமென கணிக்கமுடிகிறது. நாளை அன்னையை சந்திக்கவேண்டியிருப்பதை எண்ணி நான் அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “ஆம், துருபதர் அனைத்து செய்திகளையும் மிகத்தெளிவாகவே தெரிவித்துவிட்டார்” என்றான். தருமன் “துருபதர் என்னிடம் கூட எதையும் சொன்னதில்லை. ஆனால்…" என்றபின் “கிருஷ்ணா, இது அவளுடைய திட்டம் அல்லவா?” என்றான். கிருஷ்ணன் “ஆம், மிகச்சிறந்த முறையில் மந்தணத்தைச் சொல்ல அவையே உகந்த இடம். சொல்லியும் சொல்லாமலும் சொல்லத் தெரிந்தால் போதும்” என்றான்.

”என்ன சொன்னாள்?” என்றான் பீமன். “மூத்தவரே, இதைக்கூட உணரமுடியாதவரா நீங்கள்? நாம் இங்கு விருந்தினர், நாடற்றவர் என்றாள்” என்றான் அர்ஜுனன் சினத்துடன். “ஆம், அப்படியென்றால் அவளும் நாடற்றவள் அல்லவா?” என்று பீமன் சினத்துடன் கேட்டான். “இல்லை, அவளுக்கு இந்த நாடு இருக்கிறது. நாம் மட்டுமே நாடற்றவர்கள்” என்று சொன்ன தருமன் “கிருஷ்ணா, ஷத்ரியர்களுடன் போர்முனையில் நிற்கவைக்கிறாள் உன்னை” என்றான். “எங்கனம்?” என்று பீமன் கேட்டான். ”மந்தா, இன்று பிரதீபரின் மணிமுடியை இளைய யாதவனின் தலையில் வைத்தது எளிய செயல் அல்ல. இந்நேரம் ஷத்ரியர் அனைவருக்கும் செய்தி சென்றிருக்கும். ஒருபோதும் அதை அவர்கள் எளிதாகக் கொள்ளமாட்டார்கள்” என்று தருமன் திரும்பி நோக்காமலேயே சொன்னான்.

பீமன் பெருமூச்சுவிட்டு தன் திரண்ட தோள்களை தளர்த்தி “என்னால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. பாஞ்சாலியின் அகமென்ன என என்னால் அறிய முடிந்ததில்லை. நானறிந்த பாஞ்சாலி எளிய விளையாட்டுப்பெண் மட்டுமே” என்றான். “நாம் ஐவரும் ஐந்து பாஞ்சாலிகளை அறிந்திருக்கிறோம். ஆறாவது பாஞ்சாலி எங்கோ தன் தனிமையில் அமர்ந்திருப்பதையும் உணர்கிறோம்” என்றான் அர்ஜுனன். “கிருஷ்ணா, வடக்குப்போர்முனையில் அஸ்வத்தாமனை எதிர்கொண்டவன் திருஷ்டத்யும்னன். போரில் அஸ்வத்தாமனின் சதசரங்களால் புண்பட்டு அவன் இறப்புமுனையில் கிடந்து இப்போதுதான் மீண்டிருக்கிறான். அவன் அருகேதான் திரௌபதி சென்ற ஒருமாதமாக அமர்ந்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் அவளுக்குள் ஊறித்தேங்கிய வஞ்சம் என்ன என்று நாமறியோம். அந்த நஞ்சைத்தான் இன்று அவையில் கண்டேன்.”

கிருஷ்ணன் சிரித்து “ஒருதுளி நஞ்சில்லாமல் பாற்கடல் நிறைவடைவதில்லை" என்றான். “என்னசெய்வதென்று தெரியவில்லை” என்றான் தருமன். “அதைத்தானே கதையினூடாக கிருஷ்ணனுக்கு ஆணையிட்டிருக்கிறாள்” என்று அர்ஜுனன் முணுமுணுத்தான். தருமன் திகைப்புடன் திரும்பிப்பார்த்தான். “நான் அஸ்தினபுரிக்குச் சென்று திருதராஷ்டிரரிடம் பேசவிருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். "அதை நான் இப்போதே உங்களிடம் கேட்டு முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.” தருமன் மெல்ல “எதைப்பற்றி?” என்றான். “நிலமில்லாமல் நீங்கள் இனிமேல் வாழமுடியாது” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க “வெற்று அறச்சொற்களுக்கு இனிமேல் இடமில்லை யுதிஷ்டிரரே. அஸ்தினபுரியின் மணிமுடியை நாம் கோரிப்பெற்றே ஆகவேண்டும்” என்று கிருஷ்ணன் இடைமறித்தான்.

தருமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “நான் அத்தையிடம் பேசுகிறேன். இப்போது நமக்குத்தேவை அஸ்தினபுரியின் மணிமுடி” என்று கிருஷ்ணன் சொல்ல “இல்லை, அதை துரியோதனனுக்கு அளிக்கவே தந்தையின் நெஞ்சம் விழையும். அதை முறைமை பேசி பிடுங்கினால் அவரது உள்ளத்தின் வஞ்சம் எங்கோ ஓர் ஆழத்தில் என்னை நோக்கி திரும்பும். நான் ஒருபோதும் அதற்கு ஒப்பேன்” என்றான். அர்ஜுனன் சினத்துடன் ஏதோ பேச முன்வர கைகாட்டி நிறுத்திய கிருஷ்ணன் “சரி, முழு மணிமுடியும் தேவையில்லை. பாதிநாட்டை கேட்டுப்பெறுகிறேன். மணிமுடியை நீங்களிருவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றான். "கிருஷ்ணா, தன் செல்வத்தை மைந்தர்கள் பகிர்ந்துகொள்வதை எந்த தந்தையும் உண்மையில் விழைவதில்லை” என்று தருமன் சொன்னான்.

"ஆம், உண்மை. ஆனால் கண்முன் தன் மைந்தர் செல்வத்தின்பொருட்டு போரிட்டு அழிவதைக்கண்டால் தந்தையர் நெஞ்சில் வாழும் மூதாதையர் கண்ணீர் வடிப்பார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். “நான் தந்தையின் நிலத்தை விழையவில்லை” என்றான் தருமன். “அப்படியென்றால் என்ன செய்யலாம்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அஸ்வத்தாமனை வெல்லலாம். உத்தரபாஞ்சாலம் நம் நிலமாக அமையட்டும்” என்றான் தருமன். “அது என் ஆசிரியரின் ஆணைக்கு மாறானது. நான் வில்லேந்த மாட்டேன்” என்று அர்ஜுனன் சொல்லி எழுந்துகொண்டான். “மகதத்தை வெல்லமுடியாது. அதற்கான படை நம்மிடம் இல்லை. உசிநாரர்களை வெல்லலாம். ஆனால் அவர்கள் மகதத்தின் துணைநாடு” என்றான் பீமன். தருமன் இருவரையும் மாறி மாறி நோக்கியபின் “எனக்கு ஒன்றும் தோன்றவில்லை” என்றான்.

”யுதிஷ்டிரரே, உங்கள் பெரியதந்தைக்கு சற்றும் அகக்குறை எழாமல் பாதி நாட்டை நான் கோரிப்பெறுகிறேன். தங்கள் ஒப்புதல் மட்டும் போதும்” என்றான் கிருஷ்ணன். “அது இயல்வதல்ல…” என்றான் தருமன். “பங்கிடத்தெரிந்தவனே ஒருங்கிணைக்கத்தெரிந்தவன் என்று ஆரண்யகம் சொன்னதை  கேட்டீர்கள். நான் அதை செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “நாடு பிரியவேண்டியதில்லை. நீங்கள் இருவரும் மணிமுடி சூடி ஆளலாம். இருவருமே மாமன்னர் திருதராஷ்டிரரின் கீழே அமைவீர்கள். அஸ்தினபுரி அவர் கோல் கீழ் நின்றிருக்கும்.” தருமன் தலையை அசைத்தான். “மூத்தவரே, இன்று இதைவிட மிகச்சிறந்த வழி என ஏதும் இல்லை" என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் “இவ்வழியைத்தான் அவளும் உணர்த்தியிருக்கிறாள் மூத்தவரே. நாம் தெய்வத்தை அதன் இருப்பிடம் விட்டு இறக்கி விட்டோம். ஆலயமின்றி அது அமையாது” என்றான். தருமன் தத்தளிப்புடன் கண்மூடி அமர்ந்திருந்தான். விழிகள் இமைக்குள் ஓடுவது தெரிந்தது. “என்ன செய்வேன்?” என அவன் மெல்ல முனகினான். “ஒன்றும் தெரியவில்லை. கிருஷ்ணா, நான் எப்போதும் என்னைச்சூழ்ந்தவர்களின் விருப்புகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்.” கிருஷ்ணன் “அதுவே அறமறிந்தோனின் ஊழ் யுதிஷ்டிரரே. அதை வெல்ல வழி ஒன்றே. பிறர் விருப்புகளை நாமே வகுத்தல். நான் செய்வது அதையே” என்று சிரித்தான்.

“கிருஷ்ணா, இதுவே என் இறுதிச்சொல். துரியோதனன் தன் தம்பியருடன் வந்து என்னைக் கண்டு பாதி நாட்டை எனக்கு உவந்தளிக்கவேண்டும். அவனே தன் கைகளால் மணிமுடி தொட்டு எனக்கு சூட்டவேண்டும். அவ்வாறெனில் அதை கொள்வேன். இல்லையேல் மாட்டேன்” என்று தருமன் சொன்னான். ”உறுதி சொல்கிறேன். அவ்வண்ணமே நிகழும்” என்றான் கிருஷ்ணன். அர்ஜுனனும் பீமனும் உடலிறுக்கம் தளர்ந்து புன்னகைசெய்தனர்.

பகுதி 9 : சொற்களம் - 4

சூரியன் குந்தியின் மாளிகைக்குப் பின்னால் இருந்தமையால் முற்றம் முழுக்க நிழல் விரிந்து கிடந்தது. கிருஷ்ணனின் தேர் முற்றத்தில் வந்து நின்றபோது காவலர்தலைவன் வந்து வணங்கி “யாதவ அரசி பின்பக்கம் அணிமண்டபத்தில் இருக்கிறார்கள். தங்களை அங்கே இட்டுவரும்படி ஆணை” என்றான். கிருஷ்ணன் இறங்கி சால்வையை சீராகப்போட்டபடி நிமிர்ந்து நிழலுருவாக நின்ற மூன்றடுக்கு மாளிகையை நோக்கினான். மரத்தாலான அதன் மூன்று குவைமுகடுகளில் மையத்தில் துருபதனின் விற்கொடி பறக்க அருகே இடப்பக்கம் மார்த்திகாவதியின் சிம்மக்கொடி சற்று சிறிய கொடித்தூணில் தெரிந்தது.

கிருஷ்ணன் ஏவலனிடம் ”செல்வோம் சூரரே” என்றான். சூரன் திகைத்து “அடியேன் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான். “வரும்போதே கேட்டுத்தெரிந்துகொண்டேன்...” என்றான் கிருஷ்ணன். “உமது மைந்தர் அக்ஷர் லாயத்தில் நூற்றுக்குதிரையாளர் என்றும் அறிந்தேன். ஒரு மகள் தெற்குக்கோட்டை நூற்றுவர்தலைவனுக்கு மனைவி. அவள் பெயர் சம்பா...” புன்னகையுடன் “சரிதானே?" என்றான்.

சூரன் மகிழ்ச்சியுடன் “தாங்கள் இத்தனை எளியோர் பெயர்களை அறிந்திருப்பதை எண்ணி வியக்கிறேன்” என்றான். “நான் அனைவரையும் அறிந்துகொள்ள விழைகிறேன் சூரரே...” என்றான் கிருஷ்ணன். “அனைவரையும் என்றால்?...” என்றான் சூரன். ”அனைவரையும்தான்....” சூரன் சிரித்து “தாங்கள் சந்திக்கும் அனைவர் பெயரையும் வாழ்க்கையையும் அறிந்திருப்பது இயல்வதா என்ன?” என்றான்.

“சூரரே, துவாரகையில் ஒவ்வொரு படைவீரரையும் ஒவ்வொரு வணிகரையும் நான் நன்கறிவேன். அவர்களின் குலங்களையும் குடிகளையும் அறிவேன். வந்தது முதல் இந்தப் பாஞ்சாலநகரியில் அனைவரையும் அறிந்துகொண்டிருக்கிறேன். இங்கிருந்து செல்கையில் இப்படைகள் குடிகள் அனைவரையும் அறிந்திருப்பேன்.” சூரன் “மறக்கமாட்டீர்களா?” என்றான். “இல்லை, நான் எதையும் மறப்பதில்லை.”

சூரன் சற்று நேரம் சொல்மறந்து நடந்தபின் சற்று தயங்கி பின் கிருஷ்ணனை நோக்கி அவன் புன்னகையால் அண்மையை உணர்ந்து துணிவுகொண்டு “அரசே, தாங்கள் இத்தனை மானுடரையும் அறிவது எதற்காக?” என்று கேட்டான். கிருஷ்ணன் உரக்க நகைத்து “விளையாடுவதற்காகத்தான், வேறெதற்கு? சூரரே, மானுடரைப்போல சிறந்த விளையாட்டுப்பாவைகள் எவை?” என்றபின் தனக்குத்தானே என "மானுடரைக்கொண்டு விளையாடத் தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை...” என்றான்.

சூரன் வியந்து நோக்கி நடக்க கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே நடந்தான். “காமகுரோதமோகங்களின் விசைகள். நன்மை தீமையின் கருவெண் களங்கள். என்னென்ன என்னென்ன ஆடல்கள்!... ஆட ஆட முடிவடையாத ஆயிரம்கோடி புதிர்கள்... என்ன சொல்கிறீர்?” சூரன் “உண்மைதான் அரசே... எளியவர்கள் நாங்கள்” என்றான். கிருஷ்ணன் மேலும் சிரித்தபோது அவர்கள் நுழைந்த மாளிகையின் முகப்புக்கூடம் எதிரொலி எழுப்பியது. “ஆம், மிக மிக எளியவர்கள்.” அவன் சொற்களை அக்கூடமும் திருப்பிச் சொன்னது. ”அற்பர்கள். ஆகவே ஆணவம் கொண்டு இறுகிவிரைத்திருப்பவர்கள்...”

சூரன் “தங்களுக்கு ஆணவம் இல்லையா அரசே?” என்றான். கிருஷ்ணன் அவன் தோளை தன் கையால் வளைத்து “உண்மையை சொல்லப்போனால் சற்றும் இல்லை. ஆகவே எனக்கென எந்தத் தன்னியல்பும் இல்லை. அந்த முற்றத்தில் வந்திறங்கிய நான் அல்ல இப்போது உம்முடன் பேசுவது. உள்ளே அரசியிடம் பேசப்போகிறவன் இன்னும் பிறக்கவில்லை” என்று ஆழ்ந்த தனிக்குரலில் சொன்னான். சூரன் “நம்புகிறேன்...” என்றான். “எதை?” என்றான் கிருஷ்ணன். “நீங்கள் விளையாடுகிறீர்கள். இப்போது என்னிடமும்.” கிருஷ்ணன் சிரித்து “என்னை அறியத்தொடங்கிவிட்டீர்... என்னிடம் வந்து சேர்வீர்” என்றபின் “வசுதை காத்திருக்கிறாள். அழகி...” என்றான்.

குந்தியின் சேடியான வசுதை வந்து வணங்கி “அரசே, தங்களை அழைத்துவரும்படி ஆணை” என்றாள். “நீ அழகி என சூரரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் வசுதை” என்றான் கிருஷ்ணன். வசுதையின் விழிகள் விரிந்து புன்னகையில் கன்னங்கள் குழிந்தன. “ஆம்... நான் அறிவேன்” என்றாள். சூரன் வியப்புடன் இருவரையும் நோக்க கிருஷ்ணன் அவர் தோளில் தட்டி “உம்மைப்போலவே அவளையும் நான் அறிவேன்... வருகிறேன்” என்றான்.

வசுதையுடன் நடக்கையில் அவள் “நீங்கள் என் கனவில் வந்து இச்சொற்களையே சொன்னீர்கள்... நான் அழகி என்றீர்கள். நான் பிற ஆண்களின் விழிகளுக்கு அழகியெனத் தெரியவில்லையே கண்ணா என்றேன். என்விழிகள் போதாதா என்றீர்கள். நான் போதும் போதும் என்றேன்” என்றாள். முதிரா இளமங்கை என கிளர்ச்சியடைந்திருந்தாள். முலைகள் எழுந்தமைந்து மூச்சிரைக்க கைகள் ஒன்றை ஒன்று பின்னியும் விலகியும் பதைக்க ”இதே சிரிப்பை நான் கண்டேன்” என்று தழுதழுத்து இறங்கிய குரலில் சொன்னாள். “அதன் பின் நான் உன் கூந்தலை புகழ்ந்து அதிலொரு செம்மலரை சூட்டினேன்” என்றான் கிருஷ்ணன். “ஆம் ஆம்” என்றாள்.

“நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான் கிருஷ்ணன். “சந்திப்போம் கண்ணா...” என்றாள் வசுதை. அவள் குழல்சுருளைத் தொட்டு “இதுதான் அணிமண்டபமா?” என்றான். “ஆம்... இங்குதான் தங்களைச் சந்திக்க அரசி விழைந்தார்.” அவள் காதோரக்கற்றையைப் பற்றி மெல்ல இழுத்து “வருகிறேன்” என்றான். “ஆ” என செல்லமாகச் சிணுங்கி அனல்கொண்ட முகத்துடன் “என்ன இது? இங்கு எங்கும் விழிகள்...” என்றாள் வசுதை. கிருஷ்ணன் ”விழிகள் எல்லாம் என்னுடைய விழிகளெனக் கொள்... அச்சமிருக்காது” என்றபின் நீண்ட ஒடுங்கிய இடைநாழி வழியாக நடந்து உள்ளே சென்றான்.

மைய மாளிகையுடன் இடைநாழியால் இணைக்கப்பட்டு தனியாக நின்றிருந்த அணிமண்டபம் பன்னிரு சிற்பத்தூண்களால் தாங்கப்பட்ட உட்குவைக்கூரை கொண்ட வட்டமான கூடம். அதன் வட்டமான மரச்சுவரில் ஏழு அணிச்சாளரங்கள் இருந்தன. திரைகளற்ற சாளரங்கள் வழியாக மறுபக்கம் பிறைவடிவாக வளைந்து ஒழுகிச்சென்ற கங்கையையும் அதன்மேல் ஒளியுடன் கவிந்திருந்த வானையும் காணமுடிந்தது. வெண்பட்டு விரிக்கப்பட்ட நான்கு பீடங்கள் ஒழிந்து கிடந்தன. ஒரு சாளரம் வழியாக வெண்கதிர் விரித்து மேலெழுந்துவிட்டிருந்த காலைச் சூரியனை நோக்கியபடி குந்தி நின்றிருந்தாள்.

கிருஷ்ணன் தலைவணங்கி “மார்த்திகாவதியின் அரசியை வணங்குகிறேன்” என்றான். குந்தி விழிதிருப்பி அவனை நோக்கி “வா” என்று பீடத்தை சுட்டிக்காட்டினாள். கிருஷ்ணன் சென்று அவளருகே ஒரு சாளரத்தின் மேல் சாய்ந்து நின்று “சூரியனை நோக்க காம்பில்யத்திலேயே சிறந்த இடம் இது என எண்ணுகிறேன்...” என்றான். “ஆம், பிற இடங்களில் எல்லாம் மேற்கேதான் கங்கை. இங்கு ஆறு வளைந்து செல்வதனால் மேற்கிலும் கிழக்கிலும் கங்கைக்குமேல் கதிரவனை நோக்க முடிகிறது” என்று குந்தி சொன்னாள். கிருஷ்ணன் சூரியனை நோக்கிக்கொண்டு கைகளை மார்பில் கட்டியபடி நின்றான்.

குந்தி பெருமூச்சுவிட்டு தன் மேலாடையை சீரமைத்து திரும்பி ஏதோ கேட்க முனைவதற்குள் “அஸ்தினபுரியில் இருந்து என் ஒற்றர்கள் செய்திகொண்டுவந்தனர். அங்கமன்னன் நலமடைந்து வருகிறான்...” என்றான் கிருஷ்ணன். குந்தியை நோக்காமல் கங்கையில் விழிநட்டு “அவனுடைய நலம் நமக்கு முக்கியம் அத்தை. அஸ்தினபுரிக்காக நம்முடன் போர் புரிந்தவன் அவன். அவன் மேல் துரியோதனன் பெரும்பற்று கொண்டிருக்கிறான். அவன் நலமடையாமல் நாம் கௌரவர்களிடம் எதையும் பேசமுடியாது. ஆகவே நான் பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த மருத்துவர் நால்வரை அஸ்தினபுரிக்கு அனுப்பினேன்” என்றான்.

குந்தியின் மெல்லிய மூச்சொலியை அவன் கேட்டான். “அவர்களை நான் அனுப்பியதை அங்கே எவரும் அறியாதபடி பார்த்துக்கொண்டேன். நால்வரும் தனித்தனியாக வெவ்வேறு பயணங்களின் பகுதியாக அங்கே சென்றனர். அவர்களை துரியோதனன் உடனே அங்கநாட்டரசனுக்கு மருத்துவர்களாக அமைத்தான். அவர்கள் ஒவ்வொருநாளும் எனக்கு செய்தியனுப்புகிறார்கள். இன்னும் சிலநாட்களில் அங்கன் எழுந்துவிடுவான்.”

குந்தி “முன்னிலும் வஞ்சம் கொண்டவனாக, இல்லையா?” என்றாள். கிருஷ்ணன் “அவ்வஞ்சம் தெய்வங்கள் ஆடும் நாற்களத்தின் விசைகளில் ஒன்றல்லவா?” என்றான். குந்தி “ஆம்” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள். “அவன் சூதமைந்தன் என்பதல்ல அவன் தீயூழ் அத்தை. தான் கடக்கவேண்டியதென அவன் எண்ணுவது சூதமைந்தன் என்னும் சொல்லை மட்டுமே என அவன் எண்ணுவதுதான். கொடுத்துக் கொடுத்து செல்வமெனும் தளையை அவன் கடக்கிறான். அதேபோல விளையாடி விளையாடி வீரமென்பதையும் கடந்துவிட்டான் என்றால் அவன் விடுதலை பெறுவான். தெய்வங்கள் திருவுளம் கொள்ளவேண்டும் அதற்கு.”

“இன்று அவனை வைத்துத்தான் கௌரவர்களின் ஆடல் என்பதனால்தான் நாம் அவனைப்பற்றி இவ்வளவு பேசநேர்ந்திருக்கிறது” என்று கிருஷ்ணன் சொன்னான். சற்று பதறிய குரலில் “உண்மை” என்று குந்தி சொன்னாள். “அவனுடைய வஞ்சத்தில் இருந்து மூத்தகௌரவனை சற்றேனும் பிரிக்க முடிந்தால் நன்று... அதுவே இப்போது நாம் விழையக்கூடியது” என்ற கிருஷ்ணன் திரும்பி அவளை நோக்கி “தாங்கள் துர்வாசமுனிவரை மீண்டும் கண்டதை அறிந்தேன்” என்றான்.

குந்தியின் முகம் மேலும் இறுக விழிகள் சற்று சுருங்கின. “ஆம், அவரிடம் பேசவேண்டுமென தோன்றியது. இங்கு என்னால் அமைந்திருக்க இயலவில்லை. ஒவ்வொன்றும் என் கைகளை விட்டு நழுவிக்கொண்டே செல்வதாக என் நெஞ்சு கலுழ்ந்தது. அவரிடம் என்ன செய்யலாமென்று கேட்டேன்.” கிருஷ்ணன் “முந்தையநாள் திரௌபதியும் அவரை சந்தித்திருக்கிறாள்” என்றான். குந்தி சற்று சினத்துடன் “உனக்கு என்னென்ன தெரியும்? முதலில் அதை சொல்” என்றாள். கிருஷ்ணன் சிரித்து “அண்டமும் பிண்டமும் அருவும் உருவும் ஆன அனைத்தும் தெரியும்” என்றான். குந்தி “போடா” என்றாள். “இப்படிக் கேட்டால் பின் என்ன விடை சொல்வேன்? நானும் அனைத்தையும் நோக்கிக்கொண்டிருக்கிறேன். அதை மட்டுமே சொன்னேன்...” என்றான்.

“ஆம், அவள் துர்வாசரை சந்தித்தாள் என அறிந்ததனால்தான் நான் அவரைப்பார்க்கச்சென்றேன். அவள் என்ன பேசினாள் என அவரிடமிருந்து அறியமுடியாது என நான் நன்கறிவேன். ஆனால் நான் என்ன செய்யமுடியும் என அவர் சொல்வார் என எதிர்பார்த்தேன். நான் மண்கொள்ளவேண்டும், வேறுவழியே இல்லை என்று அவர் சொன்னார். அதற்கு கௌரவர்களிடம் பேச உரியவர்களை அனுப்புவதே நன்று என்றார். ஆகவேதான் நான் உன்னை வரும்படி சொல்லி செய்தி அனுப்பினேன்” என்று குந்தி சொன்னாள். “உண்மையில் அவர் சொல்லச் சொல்ல நான் உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். அவரும் உன்னைத்தான் சொன்னார் என புரிந்தது.”

“வாளுடன் செல்பவன் வெல்ல முடியாத இடங்களுக்கு குழலுடன் செல்பவனை அனுப்பலாம் என்று துர்வாசர் சொன்னார்” என்று குந்தி தொடர்ந்தாள். “உனக்கு செய்தி அனுப்பியதுமே அதை அவளும் அறிந்திருப்பாள் என உய்த்துக்கொண்டேன். உன்னிடம் அவள் சொல்லப்போவதென்ன என்று எண்ணி எண்ணி காத்திருந்தேன். நேற்று அவைநிகழ்ச்சிகளிலும் உண்டாட்டிலும் அதை சொல்லிவிட்டாள்.” கிருஷ்ணன் சிரித்து “ஆம், ஐயத்திற்கிடமில்லாமல்” என்றான். “எத்தனை கூரிய பெண். கிருஷ்ணா, நான் அவளை நினைத்து அஞ்சுகிறேன். அமுதமும் நஞ்சும் நிறைந்தவள் என தேவயானியைப்பற்றி சூதர் பாடுகிறார்கள். இவள் தேவயானியின் மறுவுரு.”

கிருஷ்ணன் “அவளை அஞ்சுவது நன்று” என்றான். குந்தி “அவள் என் குலமகளாக வந்தபின் ஒவ்வொரு கணமும் என் அகவிழி அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. அவளிடம் ஒரு சிறு பிழைகூட தெரியவில்லை. என்னிடம் அன்பையன்றி எதையும் அவள் காட்டவில்லை. என் கனவில்கூட அவள் இன்முகத்துடன்தான் வருகிறாள். குலமுறைமை குடிமுறைமை எதிலும் அணுவிடை தவறில்லை. ஆனாலும் மணிப்பொன் உறைக்குள் வைக்கப்பட்ட குருதிச்சுவை விழையும் வாள் என்றே என் அகம் அவளை எண்ணுகிறது” என்றாள்.

“நேற்றைய நிகழ்வின்போது ஒவ்வொரு கணமும் நான் கொதித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது முற்றிலும் முறைமைசார்ந்தது என்றும் அறிந்திருந்தேன். அவள் அதை ஒழுங்கு செய்யவில்லை. அதில் எதிலும் அவளுக்கு பங்கில்லை. ஆனால் அது அவள் விழைவு நிகழ்வது என அறிந்தது என் அகம். எப்படியோ தன் விழைவை பிறரிடம் தெரிவிக்க, அதை அவர்கள் ஆணையெனக் கொள்ளச்செய்ய அவளால் முடிகிறது. நேற்று நிகழ்ந்த ஒவ்வொன்றும் முற்றிலும் சரியானதே. எங்களுக்குத்தேவையான அறிவுறுத்தலே. மேலும் என் மைந்தரை நான் விழையும் இடம் நோக்கி கொண்டுவர நேற்றைய நிகழ்வுகள் உதவின. ஆயினும் என் அகம் அவளை எண்ணும்போதெல்லாம் எரிகிறது” என்றாள் குந்தி.

“அது இயல்பானதே” என்று கிருஷ்ணன் சொன்னான். “முதல்நாள் இரவு விடிந்ததுமே நீங்கள் மைந்தனைக் காண பதைத்துச் சென்றீர்கள்.” குந்தி கடும் சினத்துடன் மூச்சாக மாறிய குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றாள். “அவளுடைய சொற்களால் மூத்தவர் மண்ணை மறந்துவிடலாகாதென எண்ணினீர்கள் அத்தை. அது இயல்பானதே. ஒவ்வொருநாளும் நீங்கள் மைந்தர்களைக் கண்டு பேசி பதைபதைத்தீர்கள். விதுரர் வந்தபோது முதல்முறையாக அவர்முன் உடைந்து அழுதீர்கள்...” குந்தி அவனை விழி சுருக்கி நோக்கிக்கொண்டு நின்றாள். “மைந்தர்கள் நாடாளவேண்டும் என்ற உங்கள் பெருவிழைவை அறிகிறேன்...”

கால்தளர்ந்தவள்போல நடந்து சென்ற குந்தி பீடத்தைப் பற்றி மெல்ல தலைகுனிந்து அமர்ந்தாள். கிருஷ்ணன் “உங்கள் விழைவுகளுடன் தெய்வங்கள் ஒழிந்த விண்ணுக்குக் கீழே நீங்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறீர்கள் அத்தை” என்றான். தடைமீறி வந்த உரத்த கேவலுடன் அவள் தன் தலையாடையை முகத்தின் மேல் இழுத்துவிட்டுக்கொண்டு அழத்தொடங்கினாள். அவன் கைகளைக் கட்டியபடி அவள் அழுவதை நோக்கி நின்றான்.

அழுகையில் அவள் தோள்கள் குலுங்கின. அழும்தோறும் அவள் மேலும் மேலும் உடைந்துகொண்டே சென்றாள். ஒன்றன் மேல் ஒன்றென எழுந்த அழுகையோசைகள் மெல்ல அடங்கி விசும்பல்களும் கேவல்களுமாக மாறி ஓய்ந்து அடங்கும் கணத்தில் மீண்டும் அழுகை வெடித்தெழுந்தது. பின்னர் முகத்தின் மேல் திரையை நன்கு இழுத்து விட்டுக்கொண்டு அவள் பீடத்தில் நன்றாகவே குனிந்து ஒடுங்கிக்கொண்டாள்.

கிருஷ்ணன் அணுகி வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்து அவள் கைகளைப்பற்றினான். அவை மெலிந்து குளிர்ந்து மீன்களைப்போல அதிர்ந்துகொண்டிருந்தன. “அத்தை, நான் உங்கள் அகத்தை நன்கறிவேன்” என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நானிருக்கும்வரை நீங்கள் தனித்திருக்கப்போவதில்லை.” அவன் கைகளுக்குள் இருந்த தன் விரல்களை அவள் இழுக்க முனைந்தாள். “உங்கள் மைந்தர்கள் அஸ்தினபுரியின் முடியை அடையவேண்டும் என நீங்கள் கொண்டிருக்கும் வேட்கையை அணுகியறிகிறேன் அத்தை... அதற்காக நானும் உறுதிகொள்கிறேன்.”

குந்தி பெருமூச்சுவிட்டு “ஆம், இப்புவியில் நான் விழைவதென பிறிதொன்றும் இல்லை” என்றாள். “அதை நானும் அறிவேன்” என்றான் கிருஷ்ணன். “ஆனால் அது இவள் சக்ரவர்த்தினியாகவேண்டும் என்பதற்காக அல்ல” என்றாள் குந்தி. “அதையும் நானறிவேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். "யாதவனாக நானல்லவா உங்கள் வழித்தோன்றல்? உங்கள் குருதியல்லவா நான்?”

அவள் கைகளை உருவிக்கொண்டு தன் மேலாடையால் கண்களைத் துடைத்தாள். பின்பு அந்த வெண்பட்டாடையை கூந்தல்மேல் சரித்து தன் முகத்தை வெளிக்காட்டினாள். மூக்கும் கன்னங்களும் கழுத்தும் காதுகளும்கூட சிவந்திருந்தன. கீழிமை சிவந்து தடித்திருக்க கன்னத்தில் இமைமயிர் ஒன்று ஒட்டியிருந்தது. வெண்சங்கில் விழுந்த கோடுபோல. அவன் தன் சுட்டுவிரலால் அதை ஒற்றி எடுத்தான். “என்ன செய்கிறாய் மூடா?” என்றாள். “உங்கள் இமைப்பீலி இத்தனை நீளமானதா?” என்றான் கிருஷ்ணன். “ஆகவேதான் இத்தனை அழகிய விழிகள் கொண்டிருக்கிறீர்கள்.”

“சீ, மூடா. என்ன பேச்சு பேசுகிறாய்?” என்று குந்தி அவன் கையை தட்டினாள். புன்னகையில் அவள் கன்னங்கள் மடிய செவ்விதழ்களுக்குள் நான்கு வெண்மணிப்பற்கள் தெரிந்தன. “தேவகி மதுராவிலா இருக்கிறாள் இப்போது?” என்றாள். கிருஷ்ணன் ”ஆம், மூத்த அன்னை ரோகிணி என்னுடன் துவாரகையில் இருக்கிறார்கள். கோகுலத்தில் யசோதை அன்னை இருக்கிறார்கள். மூன்று வாட்களை ஓர் உறையில் வைக்கமுடியாதல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஒருவழியாக அஸ்தினபுரியை அடைந்தால் நான்காவது வாளை அங்கே வைத்துவிடலாம்.” குந்தி நகைத்து அவன் தலையைத் தட்டி “போடா...” என்றாள்.

“அத்தை, நான் நூற்றெட்டு பெண்களை மணந்துகொள்ளலாம் என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். ”என்ன சொல்கிறாய்?” என்று குந்தி உண்மையிலேயே குழம்பிப்போய் கேட்டாள். “மூன்று அன்னையரை ஆளக் கற்றுக்கொண்ட நான் மூவாயிரம் மனைவியரை எளிதில் கையாளலாம் என்கிறார்கள்.” குந்தி சிரித்து ”உனக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் என்று இங்கே ஒரு நாகினி சொன்னாள். நீ செல்லும் விரைவைக் கண்டால் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது” என்றாள். கிருஷ்ணன் அவள் ஆடையைப்பிடித்து தன் கைகளால் சுருட்டியபடி “அத்தை, கன்னியரெல்லாம் என் காதலியர் என எண்ணத் தோன்றுகிறது. இதோ உங்கள் சேடி வசுதை. அவள் கனவுக்குள் சென்று நேற்று ஒரு மலர் சூட்டி வந்தேன்” என்றான்.

“எப்படி?” என்று குந்தி கண்களைச் சுருக்கி கேட்டாள். “உள்ளத்தை வெல்லும் கலைகள் மூன்று. ஜாக்ரத்தை ஊடுருவும் கலையை மனோஹரம் என்கிறார்கள். கனவுகளுக்குள் செல்லும் கலைக்கு ஸ்வப்னோஹரம் என்று பெயர். சுஷுப்திக்குள் நுழையும் கலைக்கு சேதோஹரம் என்று பெயர். மூன்றையும் நான் கற்றிருக்கிறேன்.” குந்தி கேலியாகச் சிரித்து “சரிதான், அப்படியென்றால் இனிமேல் நீ போருக்கே செல்லவேண்டியதில்லை. எதிரியின் சித்தத்தில் நுழைந்தால் போதும்” என்றாள். “அப்படி சென்றால் நான் முதலில் என்னை கொன்றுவிடுவேனே அத்தை. ஏனென்றால் என்னை முழுதறிந்தவன் நான் அல்லவா?”

“என்ன அறிந்தாய்?” என்றாள் குந்தி. “பெரும் கொலைகாரன். பரசுராமரின் மழுவை தலைமுறை தலைமுறையாக ஷத்ரியக் குருதியைக் குடித்து ஒளிகொண்டது என்பார்கள். நான் நூறுமடங்கு ஒளிகொண்ட மழு.” குந்தி “உளறாதே” என்றபின் “எப்போது கிளம்புகிறாய்?” என்றாள். “நாளை...” என்றான் கிருஷ்ணன். “நேராக அஸ்தினபுரிக்கே செல்கிறேன். நான் செல்லவிருப்பதை இன்றிரவே பறவைச்செய்தியாக அனுப்புவேன்.”

“என்ன பேசப்போகிறாய்?” என குந்தி கேட்டாள். ”யுதிஷ்டிரருக்கு அஸ்தினபுரியின் மணிமுடி தேவை என்பதே என் கோரிக்கை” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், அதிலிருந்து இறங்காதே. அது பாண்டுவின் முடி. என் மைந்தரின் தந்தையின் நிலம். அதை அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.” கிருஷ்ணன் “விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே என் எண்ணமும்” என்றான். “ஆனால் சொற்களம் என்பது எப்போதும் முன்னும் பின்னும் செல்லும் மையத்தால் ஆனது.” குந்தி “அதை நானும் அறிவேன்” என்றாள். “ஆனால் எதன்பொருட்டும் நான் இழக்கமுடியாத சில உள்ளன. அஸ்தினபுரியும் பாண்டுவின் மணிமுடியும் எனக்குத்தேவை...”

கிருஷ்ணன் “நான் அதைத்தான் கோருவேன்” என்றான். குந்தி “கௌரவர்கள் விழைந்தால் யமுனைக்கு அருகே இருக்கும் எல்லைநகர்களில் சிலவற்றை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்கள் அங்கே தட்சிணகுருநாட்டை உருவாக்கிக்கொள்ளட்டும். அதற்குரிய நிதியை அஸ்தினபுரியின் கருவூலத்தில் இருந்தே அளிக்கலாம். துரியோதனனுக்குத் தேவை அவன் ஆணவம் நிறைவுறும் ஒரு முடி அல்லவா? அதை அளிப்போம். அவன் தந்தை உயிருடன் இருக்கும்வரை தட்சிணகுரு நமக்கு நட்புநாடாக இருக்க விடுவோம். அதன்பின் அது அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டும்படி சொல்வோம்” என்றாள்.

“ஆம், அது சிறந்த திட்டம்” என்றான் கிருஷ்ணன். குந்தி எழுந்து சென்று “நான் இதை விரிவாக எண்ணி வரைந்தே வைத்திருக்கிறேன். அதை உன்னிடம் அளிக்கவே உன்னை வரச்சொன்னேன்” என்று மரச்சுவரில் இருந்த பேழையறையைத் திறந்து சந்தனப்பெட்டி ஒன்றை எடுத்தாள். அதைத் திறந்து மூங்கிலில் சுருட்டப்பட்டிருந்த கன்றுத்தோல் சுவடியை கையில் எடுத்து விரித்தாள். ”அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டிய நகர்களும் ஊர்களும் இதில் செந்நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன... பார்” என்று நீட்டினாள்.

கிருஷ்ணன் அதை வாங்கி கூர்ந்து நோக்கி தலையை அசைத்தான். “மிகச்சிறந்த திட்டம் அத்தை. நெடுநாட்களாக இதை எண்ணியிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது” என்றான். குந்தி மகிழ்வுடன் “ஆம், நான் இதை ஏகசக்ரபுரியிலேயே வரைந்துவிட்டேன்” என்றாள். “கௌரவர்களுக்கு ஒப்புநோக்க கூடுதல் நிலமும் ஊர்களும் அளிக்கப்பட்டிருப்பதாக வரைபடத்தை நோக்கினால் தோன்றும். ஆனால் அந்த நிலம் யமுனையின் பல துணையாறுகளால் வெட்டப்பட்டிருக்கிறது. ஆகவே படைநகர்வு எளிதல்ல. அத்துடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நகர்கள் அனைத்தும் யாதவகுடிகளால் சூழப்பட்டவை. அவர்களின் வணிகம் வளரவேண்டுமென்றால் யாதவர்கள் உதவவேண்டும்.”

”ஆம், அவர்கள் வணிகத்தில் உதவமாட்டார்கள். போரில் நமக்கு உதவுவார்கள்” என்றாள் குந்தி. “போர் நிகழுமென உறுதியுடன் இருக்கிறீர்கள்.” குந்தி “வேறுவழியில்லை. மூத்த அரசரின் மறைவுக்குபின் போர் வழியாக நாம் தட்சிணகுருவை வென்றாகவேண்டும்” என்றாள். “உண்மை, வரலாறு அப்படித்தான் எப்போதும் நிகழ்கிறது” என்றபின் கிருஷ்ணன் அதை சுருட்டினான். “அது உன்னிடம் இருக்கட்டும். அதை உன் திட்டமாக அங்கே முன்வைத்து வாதிடு” என்றாள் குந்தி .கிருஷ்ணன் “ஆணை அத்தை” என்றான்.

“முதல்நாளிலேயே இதை கையில் எடுக்கவேண்டியதில்லை. முதலில் சிலநாட்கள் முழு முடியுரிமையையும் கேட்டு வாதிடு. விட்டுக்கொடுத்து பின்னகர்ந்து பாதிநாடு என அவர்களும் ஒப்புக்கொண்டபின் இதை நீயே உன் கையால் பிறிதுரு எடுத்து கொண்டுசென்று அவைமுன் வை... அவர்களால் மறுக்க முடியாது” என்றாள் குந்தி. “இதை நோக்கினால் இந்தத் திட்டம் நமக்குக் கீழே யாதவகுடிகள் திரள்வதைத் தடுக்கும் என்றும் யாதவர்களை இரு நாடுகளிலாக பிளந்து வலிமையைக் குறைக்கும் என்றும் கணிகரும் சகுனியும் எண்ணவேண்டும். அத்திசை நோக்கி உரையாடல் சென்றபின் இதை முன்வைத்தால் அவர்கள் இதை ஏற்பார்கள். ஐயமே இல்லை.”

“ஆனால் உண்மையிலேயே இது யாதவர்களை பிளக்கிறதே” என்றான் கிருஷ்ணன். “நீ இருக்கையில் எவராலும் யாதவர்களை பிளக்க முடியாது” என்றாள் குந்தி. கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்துகொண்டு “நான் வருகிறேன்... பயணத்திற்கான ஒருக்கங்கள் செய்யவேண்டும். துருபதரை இன்று பிற்பகலில் சந்திக்கிறேன். மாலையில் அவைக்கூட்டமும் உள்ளது” என்றான். “நீ செல்லும்போது வழியனுப்ப நானும் வருகிறேன்” என்று குந்தியும் எழுந்தாள். ”உகந்தது நிகழும் அத்தை... மூதாதையர் யாதவர்நலனை நாடி நிற்கும் காலம் இது” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான். “அவ்வாறே ஆகுக!” என்றாள் குந்தி.

அவன் கிளம்பும்போது “கிருஷ்ணா” என அவள் பின்னிருந்து அழைத்தாள். அவன் நின்று திரும்ப அவள் இதழ்கள் இருமுறை தயங்கி வீணே அசைந்தன. “உண்மையிலேயே உன் அன்னையருக்குள் பூசல் உள்ளதா என்ன?” என்றாள். கிருஷ்ணன் “உண்மையிலேயே உள்ளது அத்தை. ஒவ்வொருவரும் பிற இருவரைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பொறாமையையும் கசப்புகளையும் உருவாக்கி வளர்க்கிறார்கள்” என்றபின் புன்னகைத்து “அது விந்தையும் அல்ல” என்றான். குந்தி சிரித்து “ஆம், நான் அங்கிருந்தால் என் உள்ளமும் அப்படித்தான் இருக்கும்” என்றாள்.

கிருஷ்ணன் “நான் சற்றுமுன் எண்ணிக்கொண்டேன், நாம் இந்த நிலப்பகுப்பை முடித்தபின் நம் அனைத்துத் திறன்களையும் கொண்டு அங்கநாட்டரசனை வென்றெடுக்கவேண்டும் என்று. அவனை கௌரவர்களிடமிருந்து பிரித்து நம்முடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்…” என்றான். குந்தி முகம் மலர்ந்து ஓரடி முன்னால் வந்து “ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றாள். "ஏனென்றால் அவன் அவர்களுடன் இருக்கும்வரை அவர்களை நம்மால் எளிதில் வெல்ல முடியாது” என்றபின் “அஞ்சவேண்டாம் அத்தை, நானே அதையும் முடிக்கிறேன்” என்றான். குந்தி “அது மட்டும் போதும். நாம் அஞ்சவே வேண்டியதில்லை” என்றாள். அவள் முகத்திலும் உடலிலும் முதுமை முழுமையாகவே அகன்று சிறுமியைப்போல ஆகிவிட்டதாக தோன்றியது.

முன்னால் வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “இதுவரை என் நெஞ்சில் இருந்த சுமை முழுக்க அகன்றது கிருஷ்ணா. நீ அளிக்கும் நம்பிக்கைக்கு எல்லையே இல்லை” என்றாள் குந்தி. ”திடீரென இளமைக்கு மீண்டுவிட்டீர்கள்” என்று அவள் தலையை தொட்டு சொன்னான் கிருஷ்ணான். முகம் சிவந்து “போடா” என்றாள் குந்தி. கிருஷ்ணன் நகைத்தபடி வெளியே சென்றான்.

பகுதி 9 : சொற்களம் - 5

குந்தியின் மாளிகையிலிருந்து காம்பில்யத்தின் மையச்சாலை சற்று தொலைவில் இருந்தது. கங்கைக்கரையில் துருபதனின் இளவேனில் உறைவிடமென கட்டப்பட்டது அது. அதிலிருந்து எழுந்த தேர்ச்சாலை வளைந்து வந்து கோட்டையை ஒட்டி துறைமுகம் நோக்கிச்சென்ற வணிகச்சாலையில் இணைந்தது. வணிகச்சாலையில் அவ்வேளையில் குறைவாகவே பொதிவண்டிகளும் சுமை கொண்ட அத்திரிகளும் சென்றன. அவை இரவில்தான் பெரும்பாலும் சாலைநிறைத்து ஒழுகிக்கொண்டிருக்கும்.

தேர்ப்பாகன் மணியை ஒலித்தும் சவுக்கை காற்றில் சுழற்றியும் வழி உருவாக்கி முன்னால் சென்றான். கிருஷ்ணன் தேர்த்தட்டில் கைகட்டி நின்று இருபக்கமும் கிளைவிட்டுப் பிரிந்து சென்ற நகர்த்தெருக்களை நோக்கிக்கொண்டிருந்தான். விடிகாலையில் தொடங்கி வெயிலுடன் இணைந்து விரைவுகொண்ட நாளங்காடியின் பரபரப்பு வெயில் அனல்கொள்ளத்தொடங்கிய பின்னரும் நீடித்தது. காம்பில்யத்தின் பெரிய மரக்கட்டடங்களின் நிழல் சிறிய சாலைகளில் விழுந்திருந்தமையால் அங்கே சிறுவணிகர்கள் கடை விரித்திருந்தனர். பலவகையான மக்கள் அங்கே தோளோடு தோள் நெரித்துநின்று கூவியும் சிரித்தும் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணன் தேரை நிறுத்தச்சொல்லி இறங்கி தன் சால்வையை தேரிலேயே விட்டுவிட்டு இடையில் கச்சையாகக் கட்டிய செம்பட்டை உருவி காதுகளின் மணிக்குண்டலங்கள் மறையும்படி கட்டிக்கொண்டு தெருவில் நடந்தான். கழுத்தில் அணிந்திருந்த முத்தாரத்தைக் கழற்றி கச்சை மடிப்புக்குள் வைத்துக்கொண்டான். அலையடிக்கும் நதியொன்றில் கால் குளிர இறங்கி மூழ்கி நீந்தத் தொடங்கியதுபோல அந்த மக்கள்பெருக்கில் சென்றான்.

அங்கு பெரும்பாலும் அன்றாடப்பொருட்களே விற்கப்பட்டன. உப்பிட்டு உலர்த்தப்பட்ட கடல்மீன்கள் அந்தத் தெருமுழுக்க நிறைந்திருந்தன. திரைச்சி மீனின் உப்பிட்ட ஊன் பிளந்து பரப்பப்பட்ட வெண்ணிறமான பாறையைப் போல தெரிந்தது. தாழைமடல்கள் போன்ற வாளைகள். மாவிலைச்சருகு போன்ற சாளைகள். துருவேறிய குறுவாள்களைப்போன்ற குதிப்புகள். குத்துவாள்களைப்போன்ற முரல்கள். காய்ந்த ஆலிலைகளைப்போன்ற நவரைகள். வெப்பஞ்சருகுக் குவியல்களைப்போன்ற பரல்கள். கங்கையில் பசுமீன் கிடைத்தாலும் காம்பில்யத்தினர் கடலின் உலர்மீனை விரும்பி உண்டனர் என்று தெரிந்தது.

கிருஷ்ணன் உலர்ந்த செங்கூனிப்பொடியைக் குவித்து வைத்திருந்த வணிகன் முன் நின்று கூர்ந்து நோக்கினான். “இது வங்கத்து செங்கூனி. தினையுடன் கலந்து இடித்து உருட்டி உண்பவன் பீமனுக்கு நிகரான தோள் பெறுவான். பீமன் கைச் சமையலை வெறுப்பான்” என்றான் வணிகன். “வாங்குக... கொண்டுசெல்ல உயர்ந்த கமுகுப்பாளையாலான தொன்னையை நாங்களே தருகிறோம். இப்போது வாங்காதவர் எப்போதும் இதைப்பெற முடியாது… ஆம்!”

கிருஷ்ணன் அமர்ந்து அதை கையால் அள்ளி நோக்கினான். அதன்பின்னரே அது என்ன என்று புரிந்தது. அது தென்னாட்டில் பிடிக்கப்படும் ஓடுள்ள சிறியவகை மீன். மீன் என்பதைவிட கடற்பூச்சி என்றுதான் சொல்லவேண்டும். எறும்பு அளவுக்கு செவ்வெறும்பின் நிறத்தில் எட்டு கால்களும் கொடுக்குகளுமாக ஓடுகொண்ட கூன்முதுகுடன் இருக்கும். கூனிருப்பதனால் கூனி என நினைத்துக்கொண்டான். தென்னாட்டில் அதை உலரச்செய்து இடித்து போர்க்குதிரைகளுக்கு உணவாக அளித்தனர். மானுடர் உண்பது மிகக்குறைவு.

“என்ன விலை?” என்றான். ”ஒரு கல் அரைச்செம்பு...” என்றவன் “வேண்டுமென்றால் சற்று குறைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நான் இன்றே இதை விற்றுவிட்டு ஊர் செல்லவேண்டும்” என்றான். கிருஷ்ணன் “நீர் வங்கரா?” என்றான். “இல்லை. நான் பிரமாணகோடியை சேர்ந்தவன்...” என்றான் வணிகன். “ஒரு கல் போடும்” என்று சொல்லி வாங்கிக்கொண்டு கிருஷ்ணன் நடந்தான். ”இங்குதான் என் கடை… மீண்டும் வாங்க இங்கேயே வருக!” என்று வணிகன் பின்னால் கூவினான்.

நாளங்காடியில் பெரும்பாலும் பெண்களே பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். வற்றலாக ஆக்கப்பட்ட கோவைக்காயும் வழுதுணையும் வெண்டைக்காயும் சிறிய குன்றுகளாக குவிந்திருந்தன. மலையிலிருந்து வந்திறங்கிய பலாக்கொட்டைகள். கன்னங்கரிய பளபளப்புடன் காராமணி. சிப்பிக்குவியல்போல மொச்சை. ஒரு குவியலை அடையாளம் காணமுடியாமல் அவன் நின்றான். குனிந்து அது என்ன என்று நோக்கினான். பூசணி விதை. “வறுத்து உண்ணலாம் இளைஞரே. மழைக்காலத்தை சுவையானதாக ஆக்கலாம்.” கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்துகொண்டான்.

தொலைவிலேயே அவன் பீமனை கண்டான். தோலுடன் முழுதாகவே உலரவைத்து தொங்கவிடப்பட்டிருந்த பெரிய காட்டுப்பன்றிகளின் அருகே நின்று நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அருகே சென்று நின்றதும் இயல்பாகத் திரும்பி நோக்கிய பீமன் “நீரா இங்கே என்ன செய்கிறீர்?" என்றான். “இளவேனில் மாளிகைக்கு சென்றேன். திரும்பும் வழியில் இந்த அங்காடியை பார்த்தேன்” என்றான் கிருஷ்ணன். “நானும் அங்கு செல்லவேண்டும். அன்னை ஐவரையும் வரச்சொல்லியிருந்தார்கள். பிறர் சென்றுவிட்டார்கள். செல்லும் வழியில் நான் இங்கே புகுந்துவிட்டேன்” என்றான் பீமன். “அது என்ன கையில்?”

கிருஷ்ணன் “கூனிப்பொடி என்றான் வங்க வணிகன். அவனை ஏமாற்றவேண்டாமே என வாங்கினேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். பீமன் அந்த பாளைப்பையை வாங்கி திறந்து “சிறந்தது. அப்படியென்றால் இதை விற்றவன் பிரமாணகோடியின் வணிகனாகிய கருடன். அவன் என் நண்பன்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “நினைத்தேன்” என்றான். பீமன் அதை அள்ளி வாயிலிட்டு மென்றான். “பச்சையாகவா?” என்றான் கிருஷ்ணன். “நான் எதையும் பச்சையாகவே உண்ண விழைபவன். இங்கே பச்சையாகக் கிடைக்காது என்பதனால் உலரச்செய்ததை உண்கிறேன்” என்ற பீமன் “இது மிகவும் சுவையானது. இதை கடல்பொரி என்கிறார்கள். விலைதான் கூடுதல். வங்கத்தில் இருந்து வரவேண்டும். தாம்ரலிப்தியிலேயே இதற்கு மிகவும் விலை அதிகம். கீழே தென்பாண்டி நாட்டிலிருந்து வருகிறது...” என்றான்.

“வணிகர்களின் கொள்நிதி கூடுதல்...” என்று கிருஷ்ணன் சொன்னான். “உண்மையில் இதற்கு தென்பாண்டி நாட்டில் பெரிய விலை இல்லை. கௌடநாட்டில் மிகுதியாகவே கிடைக்கிறது.” பீமன் தின்று முடித்து அந்தப்பையை அருகே இருந்த ஒரு வணிகனிடம் அளித்தான். “என்ன செய்வது? சுவை என்றால் விலைகொடுத்தாகவேண்டும் அல்லவா?” என பீமன் சொன்னான். “அடுத்த மாதம் முதல் இங்கும் விலை குறையும். இதைவிட சுவையான கூனிப்பொடி கிடைக்கும்.” பீமன் திரும்பி நோக்கினான். “கௌடநாட்டிலிருந்து துவாரகை வழியாக இங்கே வரும்” என்றான் கிருஷ்ணன்.

அவர்கள் நெரிசலினூடாக நடந்தார்கள். “நாளங்காடியின் உணவுக்கடைகள் வழியாக உலவுவதைப்போல இன்பமளிப்பது அடர்காடு மட்டுமே” என்றான் பீமன். “புழுக்கள் நல்லூழ் கொண்டவை என நான் எண்ணுவதுண்டு. அவற்றுக்குத்தான் உண்பதும் உறங்குவதும் உறைவதும் உணவிலேயே என தெய்வங்கள் வகுத்துள்ளன. இங்கு வரும்போது உணவில் நெளியும் புழுக்கூட்டங்களில் ஒன்றாக ஆகி நெளியும் பேருவகையை அடைகிறேன்.” கைவிரித்து “எத்தனை உணவுகள். சமைக்கப்படாத உணவு என்பது சமையலுக்கான பல்லாயிரம் இயல்தகவுகளின் பெருக்கம்...” என்றான்.

“நீர் வாயால் உண்பதைவிட கூடுதலாக உள்ளத்தால் உண்கிறீர்” என்று கிருஷ்ணன் சிரித்தான். “ஆம், நாம் அறியும் அனைத்துச்சுவைகளும் அவ்வாறுதானே?” என்றான் பீமன். “உண்மை” என்றான் கிருஷ்ணன். “இங்கே ஏனித்தனை உலருணவுகள்?” பீமன் “மழைக்காலம் வரவிருக்கிறது. பாஞ்சாலர் பெரும்பாலும் மலைகளில் வாழ்ந்தவர்கள். அக்காலத்தில் மழைக்காலத்தில் இங்கே மலைப்பாதைகள் அழிந்துவிடும். மீண்டும் சாலைகள் உருவாகி வரும்வரை உணவை சேர்த்து வைப்பார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது” என்றான் பீமன்.

“இன்னும் மழைமுன் வணிகம் விரைவுகொள்ளவில்லை. உலர்ந்த ஊனும் மீனும் கொட்டைகளும் காய்களும் இங்கே குவியும். அத்தனை பாஞ்சாலரின் இல்லங்களும் உணவுக்கலவறைகளாக மாறும். மழைக்காலத்தில் காம்பில்யத்தில் மக்கள் வாழ்கிறார்களா என்ற ஐயம் எழும். மலைச்சாரல்களில் எங்கும் மானுடச்சாயலையே காணமுடியாது. வறுத்தும் சுட்டும் கொறித்தபடி மூதாதையர் கதைகளைக் கேட்டுக்கொண்டு மனைவிகுழந்தைகளுடன் ஒடுங்கி அமர்ந்திருப்பார்கள்.”

“இத்தனை ஒடுக்கமாக ஏன் அங்காடித்தெருக்களை அமைத்திருக்கிறார்கள்? சற்று அகன்ற தெருக்களை அமைக்கலாமே” என்றான் கிருஷ்ணன். பீமன் ”கருணர் அமைச்சராக வந்ததும் கங்கையை ஒட்டி பெருவீதிகளை அமைத்து அங்காடியை அங்கே கொண்டுசென்றார். அந்த அங்காடிவீதிகள் இன்றும் உள்ளன. அங்கு எளியமக்கள் செல்வதில்லை. அங்கு பெருவணிகம் மட்டுமே உள்ளது.”

கிருஷ்ணன் ”ஏன்?" என்றான். “எளியமக்கள் வாங்கும் அளவு மிகக்குறைவு. அத்துடன் அவர்கள் விலைப்பூசல் செய்து வாங்க விழைகிறார்கள். பெரிய கடைவீதியில் அவர்கள் தனித்து நிற்கும் உணர்வை அடைகிறார்கள். தாங்கள் பிறரால் பார்க்கப்படுவதாக எண்ணி கூசுகிறார்கள். இங்கே நெரியும் பெருங்கூட்டம் ஒவ்வொருவருக்கும் பெரிய திரையென ஆகிவிடுகிறது. தங்களைப்போன்றவர்கள் சூழ பெருங்கூட்டமாக இருக்கையில் தனியாகவும் உணர்கிறார்கள்” என்றான் பீமன். கிருஷ்ணன் நோக்கியபின் “உண்மை... இந்தப் பெண்கள் எவராவது நோக்குகிறார்கள் என எண்ணினால் இத்தகைய ஓசையை எழுப்ப மாட்டார்கள்” என்றான். “ஓசையும் பெரிய திரையே” என்றான் பீமன்.

”நல்ல அறிதல்” என்றான் கிருஷ்ணன் “அறியாதவை ஏதுமில்லை என உணரும் கணத்தில் ஒரு புதிய அறிதல் வந்து பேருருக் காட்டுகிறது... துவாரகையில் நெரிசலான மிகச்சிறிய தெருக்களே இல்லை. அவற்றை உருவாக்கவேண்டும். இந்தச் சிறிய தெருவில் சிறிய அளவில் நிகழும் வணிகம் ஒட்டுமொத்தமாக மிகக்கூடுதல்.” பீமன் “ஆம், இதை எறும்புப்புற்று என்கிறார்கள் வீரர்கள். இங்கே சில களஞ்சியங்களில் இப்பெருநகரை ஒருமாதம் ஊட்டும் அளவுக்கு உணவு குவிந்திருக்கிறது.”

மீண்டும் சாலைக்கு வந்து அங்கே ஒதுங்கி நின்ற தேரை நோக்கி செல்லும்போது பீமன் “உம்மிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்” என்றான். கிருஷ்ணன் நிமிர்ந்தான். “திரௌபதி உம்மை தனிமையில் சந்திக்க விழைகிறாள். உம்மிடம் சொல்லும்படி என்னிடம் சொன்னாள்.” “காம்பில்யத்தின் இளவரசியை யாதவ அரசன் சந்திப்பதற்கு என்ன?” என்றான் கிருஷ்ணன். பீமன் “அவ்வாறல்ல. இது அரசமுறை சந்திப்பு அல்ல. உம்மிடம் அவள் பேச விழைவது வேறு...” என்றான். ”அவள் தன் இளையோன் இருக்கும் ஆதுரசாலையில்தான் பெரும்பாலும் இருக்கிறாள். நீர் அங்கே சென்று அவனை நலம் கேட்பது மரபே. அங்கு அவளும் இருப்பாள்.” கிருஷ்ணன் “ஆகட்டும்” என்றான்.

”நீர் இப்போதே செல்வது நன்று. நீர் சென்று சேர்வதற்குள் நான் என் செய்தியை அவளுக்கு அனுப்பிவிடுவேன்” என்றான் பீமன். “ஏன்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “இன்று காலையில் நீர் அன்னையின் மாளிகைவிட்டு வெளியே வரும்போதே உம்மிடம் இதை சொல்லவேண்டுமென சொன்னாள். இந்த அங்காடியைக் கண்டதும் அதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன்” என்றான் பீமன். “நான் செல்கிறேன். நீங்கள் என்னிடம் முன்னரே சொல்லிவிட்டதையும் சொல்கிறேன்...” என்றான் கிருஷ்ணன்.

தேரில் ஏறிக்கொண்டதும் கிருஷ்ணன் “நீங்கள் அத்தையை பார்க்கச் செல்லவில்லையா?” என்றான். “செல்லவேண்டும். ஆனால் இன்னொரு சுற்று சுற்றிவிட்டு சற்று உணவருந்திவிட்டுத்தான் செல்லவேண்டும். அவர்கள் அரசமுறைப்பேச்சுகளை முடித்துவிட்டு இயல்பாக பேசிக்கொள்ளத் தொடங்கும்போது சென்றுவிடுவேன்.” கிருஷ்ணன் சிரித்தபடி தேரோட்டியிடம் செல்லும்படி ஆணையிட்டான். தேரோட்டியிடம் அரண்மனை ஆதுரசாலைக்கு செல்லும்படி சொல்லிவிட்டு அக்கணமே தன்னைச் சூழ்ந்து ஒழுகிச்சென்ற நகர்க்காட்சிகளில் மூழ்கினான்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப இயல்பாக எதிர்வினையாற்றியபடி அவன் சென்றான். நகரம் முழுக்க காலையின் பனிப்பொருக்கு முழுமையாக உலர்ந்து மென்புழுதி பறக்கத்தொடங்கிவிட்டிருந்தது. குதிரைகளின் சாணி குதிரைகளால் மிதிபட்டு மண்ணுடன் கலந்து உலர்ந்து ஆவிநிறைந்த மணமாக எழுந்த சாலையில் காலடிகள் விழுந்துகொண்டே இருந்தன. விலங்குகளும் மனிதர்களும் வியர்வையில் நனைந்த உப்புவீச்சம் மெல்ல தொங்குவிசிறி அசைந்தது போல் விசிய மென்காற்றை நிறைத்தது.

அவன் நேராகவே ஆதுரசாலைக்குச் சென்று இறங்கினான். ஆதுரசாலையின் காப்பாளரான உர்வரர் அவன் தேரைக்கண்டதும் ஓடிவந்து வணங்கி முகமன் சொல்லி வரவேற்றார். “இளவரசரை காண விழைகிறேன்” என்றான் கிருஷ்ணன். “வருக!” என அவர் அவனை இட்டுச்சென்றார். அங்கிருந்த காவலர்கள் மருத்துவர்கள் மாணவர்கள் அனைவரிலும் அவன் வருகை வியப்பை உருவாக்கியது. அவர்களின் விழிகள் தொட்டுக்கொண்டன. கிருஷ்ணன் உர்வரரிடம் “நலமடைந்து வருகிறார் அல்லவா?” என்றான். அவர் “ஆம் என்கிறார்கள் மருத்துவர்கள்” என்றார்.

மரத்தூண்கள் நிரைவகுத்த நீண்ட இடைநாழியில் இருந்து வலப்பக்கம் அறைகள் பிரியும் அமைப்பு கொண்ட கட்டிடம் அது. இடப்பக்கம் முற்றத்தில் மருத்துவர்களும் மாணவர்களும் உரல்களில் பச்சிலைகளையும் வேர்களையும் இடித்தும் உலரவைத்த காய்களையும் கொட்டைகளையும் திரிகல்லில் திரித்தும் கலுவங்களில் குழம்புகளைக் கலந்து அரைத்தும் மருந்துகளை செய்து கொண்டிருந்தனர். பெரிய வெண்கலத்தாழிகளில் கனலடுப்பில் பச்சிலை எண்ணைகள் குமிழிகள் வெடித்து சுண்டிக் கொண்டிருந்தன. அத்தனை மணங்களும் கலந்தபோது தசமூலாதி எண்ணையின் மணம் எழுவதை அவன் உணர்ந்தான்.

பெரிய சாளரங்கள் திறந்த அறைக்குள் அகன்ற கட்டிலில் மென்மையான மரப்பட்டைகளால் ஆன படுக்கையில் திருஷ்டத்யும்னன் கிடந்தான். உடல் மிகவும் மெலிந்து, நெடுநாள் பச்சிலை எண்ணையில் ஊறியதனால் கருமைகொண்டு மரப்பட்டை போல மாறிய தோலுடன் தெரிந்த அவன் உருவை நோக்கி கிருஷ்ணன் நின்றான். அந்த அறையில் பல்வேறு மருந்து மணங்கள் இருந்தாலும் அவற்றை மீறி மட்கும் மானுட ஊனின் வீச்சம் எழுந்தது.

திருஷ்டத்யும்னனின் கன்னம் நன்றாக ஒடுங்கியிருந்தமையால் மூக்கு புடைத்து எழுந்திருந்தது. வளையங்களை அடுக்கியது போலத் தெரிந்தது கழுத்து. ஒன்றுடன் ஒன்று பின்னியவை போன்ற கைவிரல்கள் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க மணிக்கட்டும் முட்டுகளும் புடைத்த மெலிந்த கரங்களை மார்பில் வைத்து நெஞ்சுக்குழியும் கழுத்துக்குழியும் அசைய வறண்ட கரிய இதழ்களுக்குள் இருந்து மூச்சு வெடித்து வெடித்துச் சீற துயின்றுகொண்டிருந்தான்.

பின்பக்கம் ரிஷபன் வந்து நின்றான். கிருஷ்ணன் திரும்பியதும் தலைவணங்கி “பின்பக்கம் இருந்தேன். தாங்கள் வந்திருப்பதாக சொன்னார்கள்...” என்றான். கிருஷ்ணன் தலையசைத்துவிட்டு பின்னால் சென்று இடைநாழியில் நின்றான். “மருத்துவரை சந்திக்கலாம்” என்றான் ரிஷபன். “திறன் மிக்கவர். காமரூபத்தில் இருந்து வரவழைத்தோம். அவர் வந்தபின்னர்தான் இளையவர் விழிதிறந்தார்.” கிருஷ்ணன் “எத்தனை புண்கள்?” என்றான். “ஆறு... ஆறும் விழுப்புண்கள். நெஞ்சில் இரண்டு. தோளில் மூன்று. விலாவில் ஒன்று... இரண்டு புண்கள் ஆழமானவை. அவை இன்னும் ஆறவில்லை” என்றான்.

கிருஷ்ணன் நடக்க “வடக்குவாயிலை அஸ்வத்தாமர் தாக்குவார் என முந்தையநாளே தெரிந்துவிட்டது. அவரை தானே எதிர்கொள்வேன் என்றார் இளவரசர். முன்வாயிலை அங்கநாட்டரசர் தாக்குவார் என்பதனால் அர்ஜுனர் அங்குசெல்லவேண்டியிருந்தது. இளைய மன்னர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் மேற்குவாயிலில் தாக்கவிருந்த ஜயத்ரதனை செறுக்கவேண்டியிருந்தது. ஆகவே வேறு வழியே இல்லை. மேலும் எங்கள் பக்கம் அர்ஜுனருக்கு நிகரான மாவீரர் என்றால் இளையவர்தான். துரோணரிடம் வில்கற்றுத்தேர்ந்தவர். அவரே அஸ்வத்தாமனை எதிர்கொள்ளமுடியும் என போரவையும் எண்ணியது” என்றபடி ரிஷபன் தொடர்ந்து வந்தான்.

“ஆம், அது உண்மை” என்றான் கிருஷ்ணன். ரிஷபன் “களத்தில் எங்கள் இளையமாவீரர் மட்டும் இல்லை என்றால் அரைநாழிகை நேரம்கூட போர் நீடித்திருக்காது யாதவரே” என்றான். “முகப்பில் கர்ணருக்கும் அர்ஜுனருக்கும் நிகழ்ந்த போரைப்பற்றியே உலகம் அறியும். அதைவிட மும்மடங்கு விரைவும் வெறியும் கொண்டதாக இருந்தது வடக்குவாயிலில் அஸ்வத்தாமருக்கும் இளவரசருக்கும் நிகழ்ந்த போர்” என்றான்.

கிருஷ்ணன் இடைநாழியில் நின்று ரிஷபன் சொன்னதை கேட்டான். போரைப்பற்றி பேசுகையில் வீரர்கள் கொள்ளும் அகஎழுச்சி எழுந்த குரலில் ரிஷபன் சொன்னான் “எங்கள் குலம் என்றும் அதை நினைவில் கொண்டிருக்கும். செறுகளத்தில் இளவரசருக்கு பக்கத் துணையாக ஏழு பாஞ்சால இளவரசர்கள் உடனிருந்தனர். இரும்புக் காப்புடையுடன் கோட்டைக்குமேல் நின்று வடதிசையை நோக்கிய இளவரசரை நான் இப்போதும் விழிகளுக்குள் காண்கிறேன். போர்த்தேவன் போலிருந்தார்.”

ரிஷபன் உணர்ச்சியுடன் தொடர்ந்தான் “நாங்கள் தொலைவில் புல்படர்ந்த மேட்டின்மேல் அஸ்வத்தாமர் தன் படைகளுடன் வந்து நிற்பதை கண்டோம். ஆவசக்கரங்களும் சதக்னிகளும் கோட்டையை நெருங்காமலிருக்க காவல்காடுகளை கோட்டையருகே வளர்ப்பது இங்குள்ள வழக்கம். அது குதிரைப்படை விரைந்து கோட்டையை அணுகுவதையும் தடுக்கும். ஆனால் அதையே அஸ்வத்தாமர் தனக்கு உகந்ததாகக் கொள்ளலாம் என்றார் இளவரசர். விரைந்து வந்து காட்டுக்குள் நுழைந்துவிட்டால் அவரது வில்லாளிகளை நம்மால் காணமுடியாது. மேலிருந்து அம்பெய்யவும் முடியாது.”

“ஆகவே நீண்ட பாஞ்சால வேல்களுடன் சிருஞ்சய குலத்தைச் சேர்ந்த ஆயிரம் காலாட்படையினரை காட்டுக்குள் அனுப்பலாம் என்றார் இளவரசர். நான் அது உகந்ததல்ல என்று எண்ணினேன். ஆனால் இளைய பாண்டவராகிய பீமசேனர் அதையே விரும்பினார். அவர் வில்லேந்துபவரல்ல. அணுகிப்போரிடும் அவரது முறைமைக்கு மிக உகந்தது இளவரசர் சொன்னமுறை. அவர்களிருவரும் சொன்னபோது என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.”

”கோட்டைவாயில் திறக்கப்படவில்லை. பிற இளவரசர்கள் அனைவரையும் கோட்டைமேல் அம்புகளுடன் நிறுத்திவிட்டு திட்டிவாயில் வழியாக வேல்வீரர் ஒவ்வொருவராக ஓசையேதும் இன்றி  காட்டுக்குள் சென்றனர். அவர்களுடன் வில்லேந்தி புரவியில் இளவரசரும் பீமசேனரும் நானும் சென்றோம். புதர்க்காடுகளுக்குள் மறைந்து காத்திருந்தோம். நான் அஸ்வத்தாமரை எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தேன் என்பதை மறுக்கவில்லை யாதவரே. அச்சுறுத்தும் கதைகள் வழியாக மட்டுமே அவரை அறிந்தவன் நான்.”

”நான் எண்ணியதுபோலவே அஸ்வத்தாமர் தன் புரவிப்படையில் வில்லவர்களுடன் அம்புக்கூட்டம் போல காட்டுக்குள் நுழைந்தார்” என ரிஷபன் சொன்னான். கண்டு நிகழ்த்தி அறிந்த போரையே அவன் சூதர்பாடல்கள் வழியாக மீண்டும் சொற்களாக ஆக்கிக்கொண்டிருந்தான் என தோன்றியது. ”கோட்டைமேலிருந்து அம்புகளைத் தொடுத்த ஆவசக்கரங்களையும் அனல் கொட்டிய சதக்னிகளையும் அவர் எதிர்பார்த்திருந்தார். விரைவைக்கொண்டே அவற்றைக் கடந்துவந்து காட்டுக்குள் நுழைந்தார். அங்கே எங்களை எதிர்பார்க்கவில்லை.”

“அவரது வில்லாளிகள் மிக அண்மையில் நீண்ட வேல்களுடன் வந்து தாக்கிய எங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. இளவரசரின் அந்தப் போர்சூழ்கைதான் காம்பில்யத்தை காத்தது. அஸ்வத்தாமரின் பின்படைகளை தொடர்ச்சியாக சதக்னிகளின் அனல்மழையால் துண்டித்துவிட்டோம். அதன்பின் நிகழ்ந்தது நேருக்கு நேர் போர். பீமசேனர் அவரது கதையால் உடைத்து வீசிய மூளையும் நிணமும் குருதியும் இலைகளில் இருந்து மழையென சொட்டின."

”அஸ்வத்தாமரை எதிர்கொள்ள அர்ஜுனராலும் கர்ணராலும் மட்டுமே இயலுமென ஏன் சொன்னார்கள் என அன்று கண்டேன். யாதவரே, என் விழிகளால் அவர் கைகளை பார்க்கவே முடியவில்லை. புதர்மறைவில் இருந்தவர்களை இலையசைவைக்கொண்டே அறிந்து வீழ்த்தினார். விண்ணிலெழுந்த அம்புகளை முறிக்கும் வில்லவர்களை கண்டிருக்கிறேன். அம்பெடுக்க எழுந்த கையை ஆவநாழியுடன் வெட்டி வீசும் வில்லவரை அன்று பார்த்தேன்.”

“பாஞ்சாலப்படை குறுகி வந்தது. இளவரசே, பின்வாங்கி கோட்டைக்குள் சென்றுவிடுவோம் என நான் கூவினேன். இல்லை, இப்போது பின்வாங்கினால் இனி எனக்கு போர் என ஏதும் இல்லை என கூவியபடி இளவரசர் வில்லுடன் அஸ்வத்தாமரை எதிர்கொண்டார். இருவரும் வல்லூறுகள் வானில் சந்திப்பது போல அம்புகோர்த்தனர். இருவருக்கும் நடுவே இலையுடன் கிளைசெறிந்த காடு இருந்தது. இலைகளும் கிளைகளும் வெட்டுண்டு சிதறின. பின்பு மரங்களே சரிந்தன. இறுதியில் வெட்டவெளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அம்புகளால் சூழ்ந்தபடி நின்றனர்.

இரு புரவிகளும் ஒன்றை ஒன்று நோக்கி பற்கள் தெரிய சிம்மங்கள் என ஓசையிட்டன. கால்களால் மண்ணை உதைத்து துள்ளிப்பாய்ந்தன. இரு முகில்களில் ஏறிக்கொண்டு தேவர்கள் போரிடுவதுபோல. இரு அலைகள் மேல் கடலரசர்கள் வில்லுடன் எழுந்தது போல. போர்புரிந்த அனைவரும் அவர்களை நோக்கி நின்றோம். அது கனவென்றே நான் எண்ணினேன். கனவில் மட்டுமே காலம் அப்படி துளித்துளியாக செல்லும். கணம் ஒன்று விரிந்து விரிந்து முடிவிலாது கிடக்கும்.”

“அஸ்வத்தாமர் எங்கள் இளவரசின் பேராற்றலை அன்றுவரை முழுதறியவில்லை என்பதை அவரது விழிகளின் திகைப்பைக்கொண்டே அறிந்தேன். பின்னர் அத்திகைப்பு கடும் சினமாக ஆகியது. சினம்கொண்டபோது அஸ்வத்தாமரின் ஆற்றல் குறைந்தது. அவரது இலக்குகள் பிழைத்தன. அவரது புரவியை இளவரசர் வீழ்த்தினார். அவர் காற்றில் தாவி எழுந்து பின்னால் வந்த புரவியில் ஏறிக்கொண்டு பெரும்சினத்துடன் நகைத்தபடி இளவரசரை பன்மடங்கு வெறியுடன் தாக்கினார். இளவரசரின் புரவியின் செவி ஒன்றை மட்டுமே அவரது அம்பு வெட்ட முடிந்தது. ஆனால் அஸ்வத்தாமரின் தோளில் இளவரசரின் அம்பு தைத்தது. அவரது தொடையில் அடுத்த அம்பு தைத்தது.

அதுவரை அரிய அம்புகள் எதையும் அஸ்வத்தாமர் வெளியே எடுக்கவில்லை. இரு புண்கள் பட்டதும் அவர் விரைவழிந்து பின்னகர்ந்தார். அவரது விழிகள் மாறுவதை நான் கண்டேன். இளவரசே, போதும் அவர்களை தடுத்துவிட்டோம். பின்னகர்ந்து கோட்டையை மூடிக்கொள்வோம் என்று கூவினேன். இன்று இவர் தலையுடன் மட்டுமே மீள்வேன் என கூவியபடி இளவரசர் நாணொலி எழுப்பி முன்னால் சென்றார்.”

“அஸ்வத்தாமர் முகம் யோகத்திலமர்ந்த முனிவருடையதென மாறியதைக் கண்டேன். அவர் போரிட்ட முறை நடனமாகியது. இனி அதில் ஒருபிழையும் நிகழாதென உணர்ந்தேன்.. ஒற்றைநாணிழுப்பில் ஒன்பது அம்புகளை தொடுத்தார். பின் பன்னிரு அம்புகள். பின்னர் இருபத்துநான்கு அம்புகள். இளவரசரின் புரவியின் உடலெங்கும் அம்புகள் தைத்தன. குருதி வழிய அது அலறியபடி விழுந்தது. நான் கூவியபடி சென்று இளவரசரை பின் துணைத்து என் புரவியில் ஏற்றிக்கொண்டேன்.

இன்னொரு புரவியில் ஏறியபடி இளவரசர் மீண்டும் அஸ்வத்தாமரை எதிர்கொண்டார். இளவரசே, அரிய அம்புகள் அவை. நம்மால் எதிர்கொள்ளத்தக்கவை அல்ல என நான் கூவியதை அவர் கேட்கவில்லை. கூகை போல குமுறியபடி வந்த அம்பு ஒன்று பறவைபோல எழுந்து பக்கவாட்டில் வளைந்து வந்தது. அதை நான் பார்த்து இளவரசே என கூவுவதற்குள் அது இளவரசரின் தோளில் பாய்ந்தது. இன்னொரு அம்பு அவரது இடையைத் தாக்கியது.”

”அந்த அம்புகள் ஒவ்வொன்றும் விந்தையானவை யாதவரே. நகைக்கும் ஒலியுடன் வந்த இன்னொரு அம்பு சுழன்று வந்தது. இளவரசர் அதை நோக்கி அம்பெய்தார். அது அவ்வம்பை சிதறடித்து எழுந்து மீண்டும் இலக்கை நோக்கியே வந்தது. அவரது விலாவை நொறுக்கியது அதுதான். நான் ஓடிச்சென்று அவரை பிடிப்பதற்குள் மேலும் மூன்று அம்புகள் அவர் மேல் பாய்ந்தன.”

”நான் அவரை காக்கச்சென்றேன். என் தோளிலும் நெஞ்சிலும் அஸ்வத்தாமரின் அம்புபட்டு மண்ணில் விழுந்தேன். என் குருதியின் மணத்தை நான் அறிந்த கணம். மேலும் சில கணங்களில் போர் முடிந்திருக்கும். ஆனால் பீமசேனர் என்னையும் இளவரசரையும் அள்ளி புரவியில் ஏற்றிக்கொண்டு ஆணைகளைக் கூவியபடி விரைந்து கோட்டைக்குள் நுழைந்துகொண்டார். குறுங்காட்டுக்குள் சென்ற எங்கள் படைகளில் உயிருடன் மீண்டவர்கள் நாங்கள் மூவர் மட்டுமே.

பீமசேனரின் பின்னால் அஸ்வத்தாமரின் எஞ்சிய படைகள் கூச்சலிட்டபடி துரத்திவந்தன. அவற்றில் பெரும்பகுதியை பீமசேனர் அழித்துவிட்டிருந்தார். ஆயினும் வெற்றிக்களிப்பு அவர்களை துணிவுகொள்ளச் செய்தது. நினைவழிந்திருந்த இளவரசரை ஆதுரசாலைக்கு கொண்டுசெல்ல ஆணையிட்டுவிட்டு பீமசேனர் கோட்டைக்குள் எங்கள் படைகளைத் திரட்ட ஓடினார். நான் என் புண் மேல் மெழுகுத்துணி வைத்துக்கட்டியபின் கோட்டைமேல் ஏறிச்சென்றேன்.

நாங்கள் உள்ளே நுழைந்ததும் கோட்டை வாயில் மூடியது. ஆவசக்கரங்கள் மழையென அம்பு பெய்து கோட்டைமுகப்பை காத்தன. அஸ்வத்தாமரின் முன்படையில் மிகச்சிலரே இருந்தனர். அவர்களால் கோட்டையை வெல்லமுடியாது. எரியம்பு எய்து பின்னணிப்படைகளை அணுகும்படி ஆணையிட்டனர்.”

”அது தெய்வங்கள் வகுத்த தருணம் யாதவரே. மேலும் கால்நாழிகைநேரமே எங்களால் கோட்டையை காத்திருக்கமுடியும். பின்னணிப் படைகள் அஸ்வத்தாமரின் வில்லவர்களை நோக்கி எழுந்த கணம் ஜயத்ரதனின் படைகள் பின்வாங்கும் எரியம்பு எழுந்தது. தெற்குவாயிலில் எங்கள் வெற்றிமுரசு ஒலிக்கத்தொடங்கியது. சத்ராவதியின் பின்படைகள் அப்படியே பின்வாங்கிச்செல்லத் தொடங்கின. இங்கிருந்து அஸ்வத்தாமர் விடுத்த எந்த செய்தியையும் அவர்கள் கேட்கவில்லை. மீளமீள கொம்புகளும் எரியம்புகளும் அழைத்தன. ஆனால் படைகள் பின்வாங்கத் தொடங்கிவிட்டால் பின்னால் நிற்கும் ஒருபடை மட்டுமே அவர்களை தடுக்கமுடியும்.”

“நான் உடனே வடக்கு வாயிலிலும் வெற்றிமுரசைக் கொட்ட ஆணையிட்டேன். சற்றுநேரத்தில் கோட்டைமுகப்பைத் தாக்கிய அஸ்தினபுரியின் படைகளும் பின்வாங்கிவிட்டன என எரியம்பு எழுந்தது. அதன்பின் அஸ்வத்தாமர் செய்வதற்கு ஏதுமிருக்கவில்லை. அவர் தளர்ந்த கைகளுடன் தன்னந்தனியாக தன் படைகளுக்கு மிகவும் பின்னால் செல்வதைக் கண்டேன். புண்பட்ட சிம்மம் போல தெரிந்தார்” என்றான் ரிஷபன். “அப்போது ஒரு சதக்னியால் அவரை எளிதில் கொன்றிருக்கலாம். உண்மையில் அவரும் அதையே விழைந்தார் என தோன்றியது. ஆனால் நான் தோள்புண்ணில் இருந்து குருதி வழிந்த கைகளைக் கூப்பி அவரை நோக்கி நின்றேன்.”

“அது ஒரு பிழையின் விலை” என்றான் கிருஷ்ணன். “நீர் சொன்னதுபோல எப்போதும் படைகளுக்கு மிகவும் பின்னால் முன்னணியுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு மூன்றாம் படை நிற்கவேண்டும். அந்தப்படை வழிநடத்தும் படைத்தலைவனுக்கு நிகரானவனால் நடத்தப்படவும் வேண்டும். அஸ்வத்தாமன் தன் பெரும்படைத்தலைவன் தலைமையில் ஆயிரம்பேரை அப்படி வரச்சொல்லியிருந்தால் தன் படைகளை ஒருநாழிகைக்குள் மீண்டும் தொகுத்து திருப்பித்தாக்கியிருக்க முடியும்.”

“அவர் இளவரசரின் அந்தப் பெருவீரத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. பொதுவாகவே அவர்கள் மிக எளிதில் வென்றுவிடலாமென எண்ணியிருந்தார்கள்” என்றான் ரிஷபன். “இங்கே அர்ஜுனரும் பீமரும் இருக்கிறார்கள் என்றுகூட அவர்கள் எண்ணவில்லை என்பது விந்தையே.” கிருஷ்ணன் “படைத்தலைவர்கள் படையணியை படைகிளம்புவதற்கு சற்றுமுன்னரே முழுமையாகப் பார்க்கவேண்டும். முன்னரே பார்த்தார்கள் என்றால் மிகையான நம்பிக்கையை அடைவார்கள். அனைத்துத் திட்டங்களையும் அதைக்கொண்டே அமைப்பார்கள்... நல்ல படைத்தலைவன் மனிதர்களைக்கொண்டே களத்தை மதிப்பிடுவான், தளவாடங்களைக்கொண்டு அல்ல. அந்தப்பிழைதான் இந்தப்போரிலும் நடந்தது. கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரதன் மூவருக்கும்.”

“அவர்களுக்குத் தெரிந்திருக்கும் அல்லவா, இப்பக்கம் போரிடுபவர்கள் எவரெவரென்று?” என்றான் ரிஷபன். “அனைவரையும் அல்ல" என்றான் கிருஷ்ணன். ரிஷபன் சிலகணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் நீள்மூச்சுடன் “நான் அஸ்வத்தாமரை சதக்னியால் கொன்றிருக்கவேண்டும் என்றார்கள்” என்றான். “யார்?” என்று கிருஷ்ணன் கேட்டான். “இளவரசிதான். என்னை அதற்காக பழித்துரைத்தார்கள். தண்டிப்பதாக அச்சுறுத்தினார்கள்.” கிருஷ்ணன் “அதெப்படி முறையாகும்?” என்றான். “நான் அதை சொன்னேன். அவர் அதை கேட்கவில்லை. என்றோ ஒருநாள் இளவரசரை அஸ்வத்தாமர் போரில் எதிர்கொள்ளவிருக்கிறார். இன்று பிழைத்தது அன்று நிகழலாம். இப்போதே அவரை கொன்றிருந்தால் அது தடுக்கப்பட்டிருக்கும் என்கிறார். எனக்கு அந்த சொல்முறையே புரியவில்லை யாதவரே.”

கிருஷ்ணன் புன்னகை மட்டும் செய்தான். “இங்கு சற்று நேரத்தில் இளவரசி வருவார்கள். அவர்களிடம் என் தரப்பை சற்றுசொல்லுங்கள் யாதவரே. நான் சொல்வன அவர் செவிகளில் நுழையவில்லை” என்றான் ரிஷபன். “சொல்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

பகுதி 9 : சொற்களம் - 6

திரௌபதியின் வருகையை அறிவிக்கும் பெருமுரசு ஒலி எழுந்தது. அரசமுறைமையில்லாமல் அவள் எங்கும் செல்வதில்லை. எங்கும் மறைந்துசெல்லக் கூடிய தோற்றமோ இயல்போ அவளுக்கு இருக்கவுமில்லை. அவள் அரண்மனையில் இருந்து கிளம்பியதுமே பறவைச்செய்தி ஆதுரசாலைக்கு வந்தது. அண்மையில் உள்ள காவல்மாடத்தை அணுகியதும் அங்கே பெருமுரசு ஒலித்தது. ஆதுரசாலைக்குள் வந்ததும் வரவேற்பொலி எழுப்பி முகப்பு முரசு கொம்போசையுடன் இணைந்து அதிர்ந்தது.

அவன் அங்கு வந்து சேர்ந்ததை அறிந்த பின்னரே அவள் கிளம்புவாள் என கிருஷ்ணன் அறிந்திருந்தான். அவன் ரிஷபனிடம் பேசுவதை அறிந்தமையால் மேலும் சற்று பிந்துகிறாள். அவன் மருத்துவர் தபதரிடம் திருஷ்டத்யும்னன் உடல்நிலைபற்றி பேசுவதுபோல காலம் கடத்தினான். திருஷ்டத்யும்னன் நெஞ்சில்புகுந்த வாத்துமுக வாளி இரண்டு விலாவெலும்புகளை உடைத்து அவன் ஈரலை கிழித்துவிட்டிருந்தது. களத்தில் விழுந்த அவன் மூச்சுப்பைகள் கிழிந்து மூச்சு வெளியேறிக்கொண்டிருந்தது. பீமன் அதை உணர்ந்ததும் பறை ஒன்றைக்கிழித்து அதன் மெல்லிய தோலை அந்தப் புண்ணின் துளைமேல் வைத்து அழுத்தி உதிரபந்தனத்துக்கான வலைத்துணியால் அழுத்தி சுற்றிக்கட்டி ஆதுரசாலைக்கு கொண்டுவந்தான்.

“அதை உடனே செய்தமையால் பிழைத்துக்கொண்டார். இல்லையேல் அப்போதே மூச்சில்லாமல் இறந்திருப்பார். இங்கு வரும்போதே ஜீவப்பிராணன் அகன்று உபப்பிராணன் மட்டுமே எஞ்சியிருந்தது. மூச்சுப்பையை தைத்துவிட்டு தோல்துருத்தியை மூக்கில் பொருத்தி பன்னிரு நாட்கள் தொடர்ந்து மூச்சை உள்ளே அனுப்பினோம்” என்றார் தபதர். அவனுடைய ஆறு பெரும்புண்களையும் குதிரைவால்முடியால் தைத்து தேன்மெழுகுக் கட்டுபோட்டனர். உள்ளே உடைந்திருந்த விலா எலும்புகள் சூடான தங்கக் கம்பிகளால் சேர்த்து இறுக்கிக் கட்டப்பட்டன. ஊன் அழுகுவதைத் தடுக்கும் தைலங்கள் பூசப்பட்டு தேன்கலந்த மரப்பட்டைத்தொட்டியில் அவனை வைத்திருந்தனர். பதினெட்டு நாட்களுக்குப்பின்னர்தான் உயிர் உடலில் தங்குமென்பதும் புண்கள் வாய்மூடும் என்பதும் உறுதியாயிற்று.

“பீதர்கள் புண்களை கந்தக நீரால் கழுவும் மருத்துவமுறை ஒன்றை கொண்டிருக்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். அப்போது வெளியே திரௌபதி வந்திறங்கும் ஒலி கேட்டது. தபதர் அமைதியிழந்தார். “ஆம், அது சிறிய புண்களுக்கு நன்று. கந்தகம் குருதியில் கலக்கக் கூடாது” என்றார். “தேன் மிகச்சிறந்த ஊன்காப்பு மருந்து என சோனகர்களும் அறிந்திருக்கிறார்கள்” என கிருஷ்ணன் பேச்சை தொடர்ந்தான். தபதர் “உண்மை… கரியசோனகர்களான காப்தியர்கள் முன்பு இறந்த உடல்களைக்கூட தேனிட்டு பாதுகாத்திருக்கிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் அந்த உடல்களை மிகப்பெரிய கல்மாடங்களுக்குள் புதைக்கிறார்கள். நமது கோட்டைகளை விட உயரமானவை அந்த மாடங்கள். முக்கோணச்சதுர வடிவத்தில் கல்லால் அமைக்கப்பட்டவை.”

வெளியே சூத்ரகன் “ஐங்குலத்துச் செல்வி பாஞ்சால இளவரசி திரௌபதி வருகை” என அறிவித்தான். தபதர் எழுந்து கைகூப்பி உடல்பதற நின்றார். கிருஷ்ணன் அவர் எழுந்ததை அறியாதவன் போல “அவர்கள் இறப்பதில்லை, அந்த கற்கூடுகளுக்குள் வாழ்வதாக காப்தியர்கள் நம்புகிறார்கள்” என்றான். திரௌபதி உள்ளே வந்ததும் தபதர் “இளவரசியை வணங்குகிறேன். இங்கு யாதவ அரசர் இருந்தமையால்…” என தழுதழுத்த குரலில் சொல்ல கிருஷ்ணன் திரும்பி அமர்ந்தவாறே “அஸ்தினபுரியின் சிற்றரசிக்கு வணக்கம். தங்களை சந்திப்பது மகிழ்வளிக்கிறது” என எளிய முகமன் சொன்னான்.

திரௌபதியின் விழிகளில் இருந்த புன்னகை மறையவில்லை. அவள் “துவாரகையின் அரசரை வணங்குகிறேன். இங்கு தாங்களிருப்பதை எதிர்பார்க்கவில்லை” என்றாள். “இளவரசர் நோயுற்றிருக்கிறார் என்றார்கள். நலம் நோக்கிச்செல்லவேண்டியது முறைமை. ஆகவே வந்தேன். நலம் பெறுகிறார் என்பது நிறைவளிக்கிறது” என்றான். திரௌபதி “ஆம், இரண்டுமாதகாலம் இறப்பின் விளிம்பில் நின்றிருந்தார். இப்போது உடல்நலம் தேறிவருகிறது. இன்னமும் ஆறுமாதங்களில் எழுந்துவிடுவார் என்றார்கள்” என்றாள். திரௌபதி மெல்ல தலையை அசைத்ததைக் கண்டு தபதர் வெளியேறினார். பிறரும் வெளியேற அறைக் கதவு மெல்ல மூடியது.

கிருஷ்ணன் "நான் சென்றதும் துவாரகையின் மருத்துவர்களை அனுப்புகிறேன். அவர்கள் பீதர்களின் மருத்துவக்கலையையும் கற்றவர்கள். இறந்தவர்களையும் எழுப்புவார்கள் என்று அணிச்சொல் சொல்லப்படுவதுண்டு” என்றான். திரௌபதி "தங்கள் கருணை மகிழ்வளிக்கிறது” என்றாள். கிருஷ்ணன் “அவர்களில் நால்வரை அஸ்தினபுரிக்கும் அனுப்பினேன். அங்கமன்னர் நோயுற்று இறப்பின் விளிம்பில் இருந்தார். எழமாட்டார் என்றே சூதர்கள் சொன்னார்கள். எங்கள் மருத்துவர்கள் சென்றபின்னர் மெல்லமெல்ல எழுந்துவிட்டார். இப்போது ஊன்சாறும் அப்பமும் உண்கிறார். கண்களில் குருதியோட்டம் வந்துவிட்டது. கைகால்களில் நடுக்கம் மட்டும் எஞ்சியிருக்கிறது. ஓரிரு மாதங்களில் புரவியேறவும் பயிற்சிக்களம் புகவும் இயலும் என்றனர்” என்றான்.

திரௌபதி “நன்று. அவர் நலம்பெற்றாகவேண்டும். மாவீரர்கள் அப்படி நோயில் இறப்பது நல்லதல்ல” என்றாள். “அதுவும் ஒரு களப்பலியே என்றனர் சூதர். காம்பில்ய வாயிலில் இருந்து கொண்டுசெல்லப்பட்டது அவரது வெற்றுடலே என்று அறிந்தேன்.” முகத்திலும் கண்களிலும் எந்த மாறுதலும் இல்லாமல் “ஆம், மாவீரர்களால் களத்தோல்வியை ஏற்க முடிவதில்லை. அவர் பார்த்தரை மிக எளிமையாக மதிப்பிட்டிருக்கவேண்டும். மேலும் அந்தப்போரில் அவர் தோற்றது அவரது குறைவீரத்தாலும் அல்ல. அச்சூழல் அவ்வண்ணம் ஆகியது” என்றாள்.

கிருஷ்ணன் புன்னகையுடன் “போரில் வெற்றியும் தோல்வியும் பகடைப்புரளலின் நெறிகளை ஒத்தவை” என்றான். "பகடைகளை ஆடுபவர்கள் களத்திற்கு வெளியே நின்றிருக்கிறார்கள்.” திரௌபதி சில கணங்கள் அவனை விழி தொட்டு நோக்கியபின் விலக்கிக்கொண்டு “ஆம், நான் விளையாடினேன்” என்றாள். “அஸ்தினபுரியின் படகுகளில் பன்னிரு படகுகளே எரிந்தன. ஆனால் நீரில் சென்றவை நாற்பதுக்கும் மேற்பட்ட படகுகள். ஜயத்ரதனின் படைகளின் பின்பக்க அணி தெற்கே வளைந்துசென்ற கங்கையின் கரையில் இருந்தது. அஸ்தினபுரியின் அனைத்துப்படகுகளும் எரிந்துகொண்டு செல்வதைக் கண்டதும் அவர்கள் கர்ணன் தோற்றுவிட்டதாக எண்ணிவிட்டனர்” என்றான் கிருஷ்ணன்.

"கங்கைக்கரையில் சித்ரபதம் என்ற படகு சீரமைக்கும் இடம் எங்களுக்குண்டு. அங்கிருந்த அனைத்துப் படகுகளையும் எரியூட்டி நீரில் ஒழுக்க நான் ஆணையிட்டேன்” என்றாள் திரௌபதி. ”அப்படி அஸ்தினபுரியின் படகுகள் செல்வதை ஜயத்ரதனுக்கு சுட்டிக்காட்டிய படைத்தலைவனிடம் என் ஒற்றன் அணுக்கச்சேவகனாக பணிபுரிகிறான்.” கிருஷ்ணன் “அவன் பெயரையும் நான் கேட்டு அறிந்துகொண்டேன்” என்றான். “இந்தப்போரில் காம்பில்யம் தோற்றதென்றால் அதன்பின் ஐங்குலத்திற்கும் நிலமில்லாமலாகும். தோற்பதற்குரிய சூழலே இருந்தது. அதை ஐங்குலத்தவளாகிய நான் ஒப்ப முடியாது.”

“பிழையில்லை” என்றான் கிருஷ்ணன். “மேலும் இப்போரில் தோற்றிருந்தால் அனைத்து இலக்குகளையும் நீங்கள் இழக்கவேண்டியிருக்கும்.” அவர்களின் விழிகள் மீண்டும் சந்தித்தன. சில கணங்கள் அவை நிகர்வல்லமையுடன் அசைவற்று நின்றன. கிருஷ்ணன் விழிகளை விலக்கிக்கொண்டான். திரௌபதி “ஆம், என் இலக்கு முதலில் அஸ்தினபுரி. பின்னர் கங்காவர்த்தம். இறுதியாக பாரதவர்ஷம். நான் அதற்கென்றே பிறந்தவள்” என்றாள். கிருஷ்ணன் சாளரத்தை நோக்கியபடி “இளவரசி, அங்கே துரியோதனனையும் அவ்வாறு சொல்லியே வளர்த்திருக்கிறார்கள்” என்றான்.

“ஆம், ஆகவே என்றேனும் ஒருநாள் அவரை களத்தில் வென்றாகவேண்டும்” என்றாள் திரௌபதி. "அவரை வெல்வதென்பது கொல்வதுதான்” என்றான் கிருஷ்ணன். திரௌபதி ஒன்றும் சொல்லவில்லை. “அவரைக்கொல்வதற்குமுன் அங்கநாட்டரசரையும் கொல்லவேண்டியிருக்கும்.” திரௌபதியின் விழிகளை மீண்டும் அவன் விழிகள் தொட்டன. “ஆம், அதுவும் தேவையாகும்” என்றாள். “யாதவரே, பாரதவர்ஷத்தை ஆளும் கனவில்லாதவர் எவர்? ஜராசந்தன் அவையில் புலவர்கள் அவரை பாரதவர்ஷத்தின் தலைவன் என்றே அழைக்கிறார்காள். விராடனின் மைத்துனன் கீசகனும் அவ்வாறே அழைக்கப்படுகிறான். ஏன், ஜயத்ரதனின் கனவும் அதுவே."

“அத்தனைபேரின் குருதி வழியாகவே உங்கள் கனவு நிகழ முடியும் இல்லையா?” என்றான் கிருஷ்ணன். “அவர்களுக்கு தோல்வியை ஏற்பது என்னும் வழி உள்ளதே” என்றாள் திரௌபதி. கிருஷ்ணன் புன்னகைத்து “இறப்பு அல்லது அதைவிட இழிவான வாழ்வு... சரிதான்” என்றான். திரௌபதி கால்கள் மேல் கால் ஏற்றிவைத்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலை திருப்பி சாளரம் நோக்கி அமர்ந்தாள். அந்த அசைவின் உடையொலியை கேட்டபடி அவன் இன்னொரு சாளரம் நோக்கி அமர்ந்தான். இருவருக்கும் நடுவே காற்று கடந்து சென்றது.

“அரசி, இவ்வினாவுக்காக என்னை பொறுத்தருள்க” என்றான் கிருஷ்ணன். “பாரதவர்ஷத்தை ஆள தாங்கள் விழைவது எதற்காக?” திரௌபதி “முக்தியை நாடும் முனிவரிடம் இப்படியொரு வினாவை கேட்டால் அவர் என்ன சொல்வார்?” என்றாள். "அது அவரது இயல்பு என்று. அவர் எய்யப்பட்டுவிட்ட அம்பு என்று. அதுதான் என் மறுமொழியும். யாதவரே, கருவறைக்குள் பார்த்திவப்பரமாணுவாக எழுவதென்பது அம்பு ஒன்று நாணேற்றப்படுவதே. அம்பின் இலக்கை தொடுக்கும் கைகள் முடிவுசெய்துவிட்டன.”

“நான் அதுவன்றி அமைய முடியாது. பிறிதென எதை அடைந்தாலும் என் அகம் நிறைவை அறியாது. அது வெளியே இருந்து எனக்கு அளிக்கப்பட்ட பணி அல்ல. நான் இவ்வுடலுக்குள் ஆன்மாவுக்கு நிகராக அணிந்து வந்தது” என்று திரௌபதி சொன்னாள். “அதை நான் எய்துவேன் என தெளிவாகவே அறிகிறேன். தந்தை தமையர்கள் கொழுநர் மைந்தர் எவரும் எனக்கு முதன்மையானவர்கள் அல்ல. முறைமைகள், அறங்கள், தெய்வங்கள் எவையும் என்னை கட்டுப்படுத்துவதுமில்லை.”

மீண்டும் அவர்களிடையே அந்த ஆழ்ந்த அமைதி உருவாகியது. கிருஷ்ணன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து கால்களை நீட்டினான். மரத்தரையில் அந்த உரசலின் ஓசை எழுந்தது. அவள் இதழ்கள் மெல்ல பிரியும் ஒலி கேட்டது. அவன் நிமிர்ந்து அவளை நோக்கினான். கரிய வட்டமுகத்தில் விழிகள் ஓரம் நோக்க செறிந்த பீலிகளுடன் பெரிய இமைகள் சரிந்திருந்தன. மெல்லெனெ எழுந்து வளைந்த மேலுதடு. உள்ளே செம்மை தெரிய குவிந்த கீழுதடு. சிறிய குமிழ்மூக்கின் கீழே பொன்னிறப்பூமயிர். கன்னத்தில் பொன்பொடியென ஒழுகிய மென்மயிர். தன் நிழல்வளையத்தை தொட்டுத்தொட்டு ஆடிய குழல்சுருள். அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். தன் நெஞ்சுக்குள் ஆழத்து இருளில் இருந்த படைக்கலத்தின் கூர்முனையின் கருக்கைத் தொட்டு மெல்ல வருடினான்.

“துரியோதனனை நீங்கள் மணம்புரிந்திருந்தால் இருவர் கனவுகளும் இணைந்திருக்குமே என எண்ணினேன் அரசி” என்றான். அவள் இதழ்கள் சற்று மடிந்தன. இயல்பாக “அவரால் உங்களை வெல்ல முடியாது” என்றாள். கிருஷ்ணன் அந்த நேரடி மறுமொழியை எதிர்நோக்காததனால் தத்தளித்து பின் மீண்டு “ஆம், உண்மை” என்று நகைத்தான். “நீங்கள் பாரதவர்ஷத்தை ஆளவிரும்பவுமில்லை” என்றாள். “வெல்லலாம், ஆளமுடியாது அரசி. யாதவர்கள் ஷத்ரியர்களாக ஆக மேலும் சில தலைமுறைகள் தேவை. மண உறவுகள் வழியாகவும் வேள்விகளினூடாகவும் அவர்கள் அதை அடைவதுவரை காத்திருக்கவேண்டியதுதான்.”

திரௌபதி ”பாண்டவர்கள் வெல்வது யாதவர்களின் வெற்றி என்றே நீங்கள் எண்ணுகிறீர்கள்” என்றாள். கிருஷ்ணன் “பார்த்தன் என் நண்பன். அஸ்தினபுரி என் அத்தையின் மண்” என்றான். “உண்மை. ஆனால் துவாரகை பாரதவர்ஷத்தை கொள்ள நினைத்தால் மிக எளிதாக அஸ்தினபுரியை உரிமைகொள்ளமுடியும்” என்றாள். “அது நிகழாது” என்றான் கிருஷ்ணன். சற்றுதிகைப்புடன் “ஏன்?” என்றாள். “அவ்வண்ணம் நிகழாது என்பதே ஊழ்” என்ற கிருஷ்ணன் ”நான் நாளை அஸ்தினபுரிக்கு செல்கிறேன். அறிந்திருப்பீர்கள்” என்றான்.

“அதன்பொருட்டே உங்களை பார்க்க விழைந்தேன்” என்றாள் திரௌபதி. ”உங்களிடம் யாதவப்பேரரசி என்ன சொன்னார்கள் என்பதை அறிவதொன்றும் கடினமானதல்ல. அவர்கள் ஏங்குவது அஸ்தினபுரியின் மணிமுடிக்காக மட்டுமே. அது அவர்கள் இளமையில் என்றோ கொண்ட கனவு. மதுவனத்தில் கன்றுமேய்க்கும் எளிய யாதவப்பெண்ணாக இருக்கையில் அவர்கள் அதை கேள்விப்பட்டிருக்கலாம். அவர் அரசு சூழ்வதெல்லாம் அந்த ஒற்றை இலக்குக்காக மட்டுமே.” கிருஷ்ணன் “அது இயல்புதானே? அவருக்குரிய மணிமுடி அது என அவர் எண்ணுகிறார்” என்றான்.

“நான் அந்த மணிமுடியை விரும்பவில்லை” என்றாள் திரௌபதி. “அங்கு நீங்கள் பங்குபேசுகையில் சொல்லாடல் எத்திசையில் சென்றாலும் இறுதியில் அது பாதி நாட்டை அடைவதை நோக்கித்தான் வரும் என அறிவேன். எனக்கு அஸ்தினபுரி வேண்டியதில்லை. மறுபக்கம் யமுனைக்கரையில் யாதவர் சூழ்ந்த நிலத்தை கேட்டுப்பெறுக! அங்கே நானே எனக்கென ஒரு நகரத்தை அமைக்கவிழைகிறேன்.” கிருஷ்ணன் ”அஸ்தினபுரியின் மணிமுடி என்பது ஓர் அடையாளம். ஒரு பெருமரபு...” என்றான்.

“ஆனால் அதுவே எனக்கு தளையாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் அதை தேவயானியின் மணிமுடி என்கிறார்கள். நான் இரண்டாம் தேவயானியாக அறியப்பட விழையவில்லை. என்ன இருந்தாலும் அவள் அசுரகுலத்தவள். நெருப்பில் எழுந்து வந்த தபதியுடன் என்பெயர் இணைக்கப்படுவதையும் விரும்பவில்லை. நான் முதலாமவள். நிகரற்றவள். குடிகளிடையே நான் அவ்வாறுதான் அறியப்படவேண்டும்” என்றாள் திரௌபதி.

கிருஷ்ணன் புன்னகையுடன் “புரிந்துகொள்கிறேன்” என்றான். “அஸ்தினபுரி இனிமேல் வளரமுடியாது. நூற்றாண்டுகளுக்கு முன் ஹஸ்தி அதை அமைக்கையில் அங்கே கங்கை ஓடியது. இன்று அது முழுக்கமுழுக்க வண்டிப்பாதையால் மட்டுமே இணைக்கப்படுகிறது. ஹஸ்தியின் பெயருக்காகவே அங்கே அந்நகரை வைத்திருக்கின்றனர். யாதவரே, இனிமேல் பெருநகராக ஆகக்கூடியவை வணிகநிலைகளே. ஏனெனில் இனிமேல் போர்க்களங்கள் அல்ல அங்காடிகளே அரசியலை இயற்றப்போகின்றன. யமுனைக்கரையில் நான் அமைக்கவிருக்கும் தலைநகர் பெருந்துறைமுகமாகவே இருக்கும். அங்கே அங்காடிகளே முதன்மையாக திகழும்.”

“மேலும் மக்கள் புதியனவற்றை விழைகிறார்கள். புதிய நிகழ்வுகள் புதிய இடங்கள் புதிய கதைகள்... அவற்றை அவர்களுக்கு அளிக்கவிழைகிறேன். இனிமேல் சிலகாலம் பாரதவர்ஷம் அந்தப்புதிய நகர்குறித்து மட்டுமே பேசவேண்டும். சூதர்கள் வழியாக பாரதவர்ஷம் முழுக்க அதன் புகழ் சென்றுசேரவேண்டும். அதனூடாக நான் பாரதவர்ஷத்தை ஆளத்தகுதியானவள் என அனைவரும் அறியட்டும். அதன் பின்னர் என் படைகள் எழுகையில் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் என்னை வாழ்த்துவார்கள்” என்ற திரௌபதி இருமுறை காலால் தரையை தட்டினாள். வாயில் திறந்து ஏவலன் எட்டிப்பார்த்தான். அவள் தலையை அசைத்தாளா விழியை மட்டும் அசைத்தாளா என்று கிருஷ்ணன் ஐயுற்றான்.

ஏவலன் கொண்டுவந்த இரு வெள்ளிக்குழாய்களில் ஒன்றைத் திறந்து உள்ளிருந்து சுருட்டப்பட்ட பட்டுத்துணிச்சுருள் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். ”நகர் அமைய நான் கோரும் இடம் இது யாதவரே. சூழ இருக்கும் நிலங்களை மஞ்சள்நிறத்தில் குறித்திருக்கிறேன். தட்சிணகுருநிலமாக அவை அமையட்டும்.” கிருஷ்ணன் அந்த வரைபடத்தை கூர்ந்து நோக்கினான். "சூழ நாநூற்றி எழுபத்தாறு யாதவர் ஊர்கள் உள்ளன. பன்னிரு படித்துறைகள். மையமாக அமையும் இடம் இது. இங்கிருந்து கங்கைக்கு யமுனை வழியாக எட்டுநாழிகையில் சென்றடைய முடியும்” என திரௌபதி சொன்னாள்.

“ஆனால் இந்த இடத்தை நான் அறிவேன். இது யமுனைக்கரையின் மிகப்பெரிய மண்மேடு. நீர்விளிம்பில் இருந்து நூற்றைம்பது வாரைக்குமேல் உயரமுள்ளது.” என்றான் கிருஷ்ணன். “நூற்றி எழுபத்தெட்டு வாரை” என்றாள் திரௌபதி. “ஆனால் நீர்விளிம்பை ஒட்டி இருபது துறைமேடைகள் அமைக்கவும் முந்நூறு வாரை அகலமும் அறுநூறுவாரை நீளமும் கொண்ட அங்காடிமுற்றம் ஒருக்கவும் இடமிருக்கிறது. இருபக்கமும் இரு பெரும் சாலைகளை அமைத்தால் குன்றுக்குப்பின்னால் உள்ள பெரிய செம்மண் நிலம் நோக்கி செல்லமுடியும். அங்கே பண்டகசாலைகளை அமைக்கலாம்” என்று திரௌபதி சொன்னாள்.

"நகரம் குன்றின்மேல் அமையும் போலும்” என்றான் கிருஷ்ணன். அவள் இன்னொரு வெள்ளிக்குழாயைத் திறந்து பட்டுச்சுருளை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி விரித்து நோக்கி “ஆம், எண்ணியவாறே” என்றான். “கலிங்கச் சிற்பியான கூர்மர் அமைத்த வாஸ்துபுனிதமண்டலம்” என்றாள் திரௌபதி. ”என் விழைவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. கருங்கல்பாறைகள் அல்ல என்பதனால் குன்றின் அமைப்பை சீராக்குவது எளிது. ஏழு அடுக்குகளாக நகர் அமைந்திருக்கும். ஒவ்வொரு அடுக்கும் தனித்தனிக் கோட்டைகளால் சூழப்பட்டிருக்கும்.”

வரைவை கூர்ந்து நோக்கியபடி கிருஷ்ணன் “நன்று... மிக நுண்மையானது” என்றான். “கற்களை மேலே கொண்டுசெல்லவேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. "இக்குன்றின்மேல் உள்ளவை செந்நிறமான மென்பாறைகள். முந்தைய மகாயுகத்தில் சேறாக இருந்து அழுந்தி பாறையானவை. செஞ்சதுரமாக வெட்டி எடுக்க ஏற்றவை, கட்டடங்களுக்கு மிக உறுதியானவை என்றார் கூர்மர். சில இடங்களில் பாறையைக் குடைந்தே கோட்டைவழிகளையும் கட்டடங்களையும் அமைக்க முடியும்.”

கிருஷ்ணன் வரைபடத்தை சுருட்டியபடி புன்னகையுடன் “அதை பார்க்கமுடிகிறது. செந்நிற நகரம்” என்றான். அவள் முகம் மலர்ந்து ”ஆம், எங்கும் செந்நிறக்கற்கள் மட்டுமே பதிக்கப்படவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறேன்” என்றாள். முதல்முறையாக அவளிடமிருந்த நிமிர்வு அகன்று சிறுமிக்குரிய துள்ளல் உடலில் கூடியது. அதை மீண்டும் விரித்து அவனிடம் காட்டி சுட்டுவிரலால் சுட்டி “இங்கு நான்கு பெரிய காவல்மாடங்கள். நான்கும் செந்நிறக்கற்களால் ஆனவை. இங்கே படிகள் மேலேறும். படிகளுக்கு வலப்பக்கம் தேர்ப்பாதை. இடப்பக்கம் யானைப்பாதை. வளைந்து செல்லும் பாதைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளும் இடங்களில் அவை ஒன்றுக்கு அடியில் ஒன்றென செல்லும்படி பாறையைக் குடைந்து அமைக்க முடியும். ஒவ்வொரு உட்கோட்டைவாயிலிலும் காவல்கோட்டங்களும் வீரர் தங்குமிடங்களும் உண்டு” என்றாள்.

அவளுடைய எழுச்சியை நோக்கி அவன் புன்னகைசெய்தான். "மாடங்கள் குவைமுகடுகள் கொண்டவை. ஆனால் மரத்தாலானவை அல்ல. அனைத்தும் செந்நிறமான கல்லாலும் செந்நிற ஓடுகளாலும் ஆனவை. பீதர்களின் செந்நிற ஓடுகள் சிறந்தவை என்கிறார்கள். துவாரகையில் அவையே முகடுகளாக உள்ளன என்று அறிந்தேன்” என்றாள். “ஆம், நானே சிறந்தவற்றை அனுப்புகிறேன்” என்றான் கிருஷ்ணன். “செந்நிறச் சுவர்களுக்கு பொன்னிறமான கதவுகள் சிறந்தவை. ஆகவே மரத்தாலான கோட்டைக்கதவுகள் முழுக்க வெண்கலக் காப்புறை போடப்படவேண்டும். இந்தக்குன்றின் செறிந்த செம்மண்ணில் சிறந்து வளர்பவை வேம்பும் புங்கமும் மட்டுமே. அவற்றை பல்லாயிரக்கணக்காக கொண்டு வந்து நட்டு வளர்க்கவேண்டும்” என்றாள்.

“ஆம், அவை சிறப்பான தோற்றம் கொண்டிருக்கும்” என்று அவன் அவள் முகத்தை பக்கவாட்டில் நோக்கியபடி சொன்னான். அவள் முகம் கருமைக்குள் செம்மை கொண்டிருந்தது. நாணம் கொண்டவள் போல. “இந்த வழியாகத்தான் அரண்மனைப்பெண்கள் ஆற்றிலிறங்கும் சிறியதேர்ச்சாலை” என்று தன் விரலை வைத்து சுட்டிக்காட்டினாள். காகத்தின் அலகு போல கருமையும் மெருகும் கொண்ட நீண்ட விரல். “இங்கு சில கலவறைகளை அமைக்கலாம். இங்குள்ள பாறை கடினமானது. வெட்டி அமைக்கும் கலவறைகளுக்குள் நீர் செல்லாது என்றார்கள்.”

கிருஷ்ணன் அவள் முகத்தை அத்தனை அண்மையில் பார்ப்பதன் கிளர்ச்சியால் எண்ணங்கள் அழிந்தவனாக இருந்தான். அவளுடைய உடலில் இருந்து இளம்சந்தனமும் செம்பஞ்சும் மணத்தன. கூந்தலில் அகிலும் மல்லிகையும் கலந்த மணம். வியர்வையின் மென்மணம். அதற்கும் அப்பால் மெல்லிய எரிமணம். ”அரசி, தாங்கள் இந்த நிலத்திற்கு நேரில் சென்றீர்களா?" என்றான் கிருஷ்ணன். “இல்லை. ஆனால் இருநூறுமுறைக்கு மேல் சிற்பிகளையும் ஒற்றர்களையும் அனுப்பினேன்.” கிருஷ்ணன் “எப்போது?" என்றான். “நான்காண்டுகளாக” என்றாள் திரௌபதி. “இந்த இடம்தான் குன்றின் உச்சி. இந்தக்குன்று இந்திரகிரி என அழைக்கப்படுகிறது. நெடுங்காலமாக இங்கே உள்ள உச்சிப்பாறையில் இந்திரனுக்கு வருடம்தோறும் வெண்பசுவை பலிகொடுத்து வணங்கியிருக்கின்றனர் யாதவர். யாதவர்களின் அவ்வழக்கத்தை இளமையில் நீங்கள்தான் நிறுத்தியதாக சொல்கிறார்கள்.”

கிருஷ்ணன் “ஆம், ஆனால் பலியின்றி இந்திரவிழா இன்னமும் நிகழ்கிறது” என்றான். திரௌபதி “அதை நாமும் கொண்டாடவேண்டும். இந்த மலைமுடியின் உச்சிப்பாறையில் இந்திரனுக்கு ஓர் ஆலயம் அமைக்கவேண்டும். செந்நிறமான ஆலயம்" என்றாள். “ஏழடுக்குகளாக அது அமையும். அதன் உச்சியில் பறக்கும் கொடியை யமுனையில் வரும் கலங்கள் அனைத்தும் நெடுந்தொலைவிலேயே பார்க்கமுடியும்.”

“அரசி, இதில் உள்ள சிறிய இடர் என்பது குன்றின்மேல் அமைக்கப்படும் நகர்களுக்கு குடிநீர் கொண்டுசெல்வதுதான்” என்று கிருஷ்ணன் சொன்னான். ”துவாரகைக்கும் குடிநீர் போதவில்லை. ஆகவே கோமதிநதியை திசைதிருப்பி கொண்டுவர சிற்பிகளை செலுத்திவிட்டு வந்தேன்.” திரௌபதி எழுச்சியால் உரத்து ஒலித்த குரலில் “ஆம், அதையும் நான் அறிந்தேன். அந்த இடர் இங்கில்லை. இப்பகுதியிலேயே மிகைமழை பெய்யும் இடம் இக்குன்றுதான். முகில்சூழ்ந்த இடம் இது என்பதனால்தான் இதை இந்திரகிரி என அழைத்தார்கள். இங்கே குன்றின் மேல் இந்திரனின் வில்லின் கீழ்நுனி பதிவதாக சொல்கிறார்கள். நூறுமுறைக்குமேல் இங்கே இந்திரவில்லை எங்கள் சிற்பிகளே கண்டிருக்கிறார்கள். இங்கு பெய்யும் மழையை குன்றின்மேல் வெட்டப்படும் நூற்றிப்பன்னிரண்டு சிறிய குளங்களில் தேக்கினாலே போதும். ஒருமுறை அவை நிறைந்தன என்றால் மூன்றாண்டுகாலம் மழை பெய்யாமலிருந்தாலும் மேலே வாழமுடியும்” என்றாள்.

“எங்கள் சிற்பிகள் அங்கே சென்றபோது செந்நிற மண்பாறையின் இடுக்குகள் அனைத்தும் ஊற்றெடுத்து சிற்றோடைகளாக ஆகி யமுனை நோக்கி வழிந்துகொண்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகள். அந்த ஓடைகளை முழுமையாகவே வரைந்திருக்கிறார்கள். அவை சென்று இணையும் முடிச்சுகளில் இந்த சிறுகுளங்கள் அமையும்...” திரௌபதி அதை சுருட்டி தன் கைகளில் வைத்துக்கொண்டாள். “நகர் அமையும் இடத்தை காணச்சென்ற அனைவருமே சொன்னது ஒன்றே. முகில்கள்மூடிய குன்று அது. குன்றின் உச்சியை முகில்களில் மிதந்து நிற்பதாகவே அவர்கள் விவரித்தார்கள். அவ்வண்ணமென்றால் இந்நகரமும் வெண்முகில்களின் மேல் அமைந்ததாகவே தெரியும். ஆகவே நகருக்கு நான் பெயரிட்டுவிட்டேன். இந்திரப்பிரஸ்தம்.”

கிருஷ்ணன் “உகந்த பெயர். அப்பெயரையே நானும் எண்ணினேன்” என்றான். “பாரதவர்ஷத்தில் இந்திரனுக்குரிய பெருநகர் இதுவே” என்றாள் திரௌபதி. “இங்குள்ள ஒவ்வொருவரும் அரசன் என்றால் எண்ணுவது இந்திரனின் பெயரை மட்டுமே. இந்திரனின் நகர் என்பது அவர்களை ஆளும் இடம் என்ற எண்ணமே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் எழும்.” அவள் விழிகளின் கனவை நோக்கியபடி கிருஷ்ணன் “உண்மை" என்றான். அவள் “நகரின் தோரணப்பெருவாயில் யமுனை நோக்கி அமைந்திருக்கும். வலப்பக்கம் காமதேனுவும் இடப்பக்கம் ஐராவதமும் அதை ஏந்தி நிற்கும். உச்சி வளைவின் இடப்பக்கம் அஸ்தினபுரியின் அமுதகலசமும் வலப்பக்கம் பாஞ்சாலத்தின் வில்லும் அணிசெய்ய நடுவே இந்திரனின் மின்னல்படையின் வடிவம் இருக்கும். தட்சிணகுருநாட்டின் முத்திரை அதுவே” என்றாள்.

“அரசி, இதற்கான செல்வத்தையும் குறித்துவிட்டீர்களா?” என்றான். “ஆம், அத்துடன் இந்நகரை மிக விரைவாக அமைக்க எண்ணுகிறேன். விரைவென்பது மும்மடங்கு செலவுகளை கோருகிறது. பாஞ்சாலம் எனக்களிக்கும் பெண்செல்வம் என்னிடம் உள்ளது. அஸ்தினபுரியின் கருவூலத்தில் பாதியை அடையமுடியும். அவையே நகருக்கு போதுமானவை. விஞ்சும் எனில் துவாரகை அதை கடனாக அளிக்கட்டும். பத்துவருடத்தில் அதை திருப்பி அளிக்க முடியும்.”

“மொத்தச்செல்வத்தையும் ஒரு நகரை அமைக்கச் செலவிடுவதை அரசர்கள் செய்வதில்லை” என்றான் கிருஷ்ணன். அவள் சொல்லப்போவதை அறிந்திருந்தான். “இப்போது பாண்டவர்களுக்கு படைகள் தேவையில்லை யாதவரே. முதியமன்னரும் பிதாமகரும் உயிருடன் இருப்பதுவரை போர் நிகழாது. இந்நகரை நான் மூன்றாண்டுகளில் கட்டி முடிக்கவேண்டும். எத்தனை விரைவாக அமைக்கிறேனோ அத்தனை நன்று. பிந்தும்தோறும் இதை அமைக்கும் வாய்ப்பு குறைகிறது…” என்றாள் திரௌபதி. “இது யாதவர்களின் இன்னொரு பெருமிதக்குறியீடு. எனவே அவர்களிடமிருந்தும் செல்வத்தை திரட்டமுடியும்.”

“பங்குச்செல்வத்தைக்கொண்டு படைதிரட்டாமல் நகர் அமைப்பதை என் வீண் ஆணவம் என்றே துரியோதனர் எண்ணுவார். அந்நகரை எப்படியானாலும் அவர்தான் அடையப்போகிறார் என கற்பனைசெய்வார். இந்நகரத்துக்கான செல்வம் செலவல்ல, முதலீடு. இதன் புகழே இதைநோக்கி வணிகர்களை ஈர்க்கும். உண்மையில் வணிகர்கள் எவரும் ஒரு துறைநகரின் நல்வாய்ப்புகளை எண்ணிக்கணக்கிட்டு அங்கே செல்வதில்லை. அதன் புகழே அவர்களை ஈர்க்கிறது. அது வணிகமையமாக ஆகிவிட்டால் அதுவே ஈர்ப்பாக ஆகும். அதன்பின் வாய்ப்புகள் இயல்பாகவே பெருகும். வணிகச்செல்வத்தால் பத்தாண்டுகளில் நகரை அமைக்கும் செலவை மீட்டுவிடமுடியும். அதைக்கொண்டு படைகளையும் அமைக்கமுடியும். அப்போது உண்மையில் படைகள் தேவைப்படும்.”

கிருஷ்ணன் புன்னகையுடன் “நன்று. மெல்ல துவாரகையின் சங்குசக்கரத்தையும் கருடனையும் மக்கள் மறக்கக் கூடும்” என்றான். இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தன. கிருஷ்ணன் எழுந்தபடி “உண்மையில் அது யாதவர்களுக்கு நன்றே என்பேன். இந்திரன் யாதவர்களின் ஆழ்நெஞ்சில் வாழும் பண்டைப்பெருந்தெய்வம். இந்திரன் மைந்தனால் காக்கப்படும் இந்நகரம் மக்களால் விரும்பப்படும். அதை சூரியனும் வாழ்த்தட்டும்” என்றான்.

திரௌபதி மிக இயல்பாக “சூரியன் விண்ணுக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா?" என்றபடி தானும் எழுந்து “நான் விழைவதை சொல்லிவிட்டேன் யாதவரே. தங்களிடம் இதையே கோருகிறேன்” என்றாள். “அவ்வண்ணமே ஆகட்டும்” என்று கிருஷ்ணன் தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன்” என்றான். அவன் நடந்து சென்றபோது ”துவாரகையில் இந்திரனுக்குரிய ஆலயங்கள் எத்தனை உள்ளன?" என்றபடி திரௌபதி பின்னால் வந்தாள். “ஏதுமில்லை. இந்திரன் அங்கே ஆலயங்களின் திசைத்தேவன் மட்டுமே” என்றபடி கிருஷ்ணன் வெளியே சென்றான். அவளும் தொடர்ந்தாள்.

பகுதி 10 : முதற்தூது - 1

புலரிமுரசு எழுந்ததுமே காம்பில்யத்தின் அரண்மனைப் பெருமுற்றத்தில் ஏவலரும் காவலரும் கூடத்தொடங்கிவிட்டனர். ஏவலர்கள் தோரணங்களையும் பாவட்டாக்களையும் இறுதியாகச் சீரமைத்துக்கொண்டிருக்க காவலர் முற்றத்தின் ஓரங்களில் படைக்கலங்களுடன் அணிவகுத்தனர். கருணர் பதற்றத்துடன் மூச்சிரைக்க உள்ளிருந்து ஓடிவந்து “அனைத்தும் முழுமையாக இருக்கவேண்டும். இன்னொரு முறை சரிபாருங்கள். எங்கே சுக்ரர்? ரிஷபர் வந்தாரா?” என்றார்.

அவரது அத்தனை கேள்விகளுக்கும் விடையாக “அரண்மனையிலிருந்து உங்களைத்தேடி ஏவலன் ஒருவன் வந்தான் அமைச்சரே” என்றார் ஏவலர் தலைவரான சுஃப்ரர். “என்னையா? யார்?" என்று திகைத்த கருணர் “யார் அழைத்தார்கள்?” என்றார். “இளவரசியின் அணுக்கச்சேடி மாயை தங்களைச் சந்திக்கவிழைந்தார்” என்றார் சுஃப்ரர். கருணர் விரைந்து உள்ளே ஓடியதும் அவர் திரும்பி “இவரது பதற்றத்தால்தான் இங்கே அனைத்துமே பிழையாக ஆகின்றன. சற்றுநேரம் தொல்லையில்லாமல் நமது பணியை முழுமைசெய்வோம்” என்றார்.

“ஆனால் மாயை அழைக்கவில்லையே?” என்றான் அவரது உதவியாளனாகிய தாலன். “ஆம், ஆனால் அழைத்திருக்கலாம் என்றே மாயை நினைப்பாள். நான் இதில் ஐம்பதாண்டுகால பயிற்சி உடையவன்” என்றார். “தோரணங்கள் கட்டப்பட்டிருப்பதை இன்னொருமுறை சரிபார். அனைத்து முடிச்சுகளுக்கும் இரண்டாம் முடிச்சு இருக்கவேண்டும்... தருணத்தில் ஏதேனும் ஒரு அணித்தோரணமோ பாவட்டாவோ அவிழ்ந்துவிழுமெனில் அதுவே தீக்குறியாகக் கருதப்படும். நம் தலை அடிபடும்.”

சுஃப்ரர் திரும்பி இன்னொருவனிடம் “இப்பகுதியில் குதிரை யானை அன்றி எந்த விலங்கும் வரலாகாது. அத்திரிகளும் கழுதைகளும் எழுப்பும் ஒலி தீக்குறி என்பார்கள்...” என்றபின் ”அத்துடன் பொருந்தாத் தருணத்தில் குரலெழுப்பும் தனித்திறன் கழுதைக்கு உண்டு” என்றார். “மூத்தவரே” என ஒரு ஏவலன் கூவ “நான் சொன்னேனே” என்றபின் “என்னடா?” என்றார்.

“இங்கே ஒரு பெரிய நிலவாய் இருக்கிறது… அது அகற்றப்படவேண்டுமா?” என்றான். “அதைத்தூக்கி என் தலைமேல் போடு” என்றார் சுஃப்ரர். அவன் திகைக்க “போட்டாலும் போடுவாய்... மூடா, அவர்கள் கிளம்பும்போது கால்கழுவ மஞ்சள் நீர் கரைக்கவேண்டிய நிலவாய் அது... மஞ்சள் நீருக்கு ஜலஜனிடம் சொல்லியிருந்தேன். எங்கே அவன்?” என்றார்.

ஜலஜன் அப்பால் நீருடன் வந்துகொண்டிருந்தான். “முன்னரே கொண்டுவந்து வைத்தாலென்ன மூடா?” என்றார் சுஃப்ரர். “முன்னரே வைத்தால் அதில் ஏதேனும் குப்பை விழுந்து விடும். நீரை நிரப்பிவிட்டு செம்புக்குவளைகளுடன் அருகிலேயே நிற்க நீங்கள்தான் சொன்னீர்கள்” என்றான் ஜலஜன். “எதைக்கேட்டாலும் ஏதாவது விளக்கம் சொல்லுங்கள்” என்றபின் சுஃப்ரர் “அத்தனை விளக்குகளிலும் நெய் நிறைந்திருக்கவேண்டும்... விளக்குகள் அணையக்கூடாது. தீக்குறி ஏதும் நிகழாமல் இந்த சடங்கு முடிந்தது என்றால் நேராகச் சென்று கொற்றவை ஆலயத்தில் வாள்கீறி குருதிசொட்டி வேண்டுதல் முடிப்பேன்... மூதாதையரே, நான் நேற்றுமுதல் ஒருகணமும் துயிலவில்லை” என்றார்.

விடியத் தொடங்கியது. மெல்லிய வெளிச்சத்தில் அரண்மனையின் வெண்சுவர்பரப்புகள் இளநீலம் கலந்தவை போலத் தெரிந்தன. மாடமுகடுகளில் பறவைகளின் ஒலி எழுந்தது. “கைவெளிச்சம் வந்துவிட்டது. இன்னும் வேலைகள் முடியவில்லை” என்றார் சுஃப்ரர். “என்ன வேலை?” என்றான் தாலன். “மூடா, ஏவலன் வேலை எப்போதுமே முடியாது” என்றார் சுஃப்ரர். “நானெல்லாம் அந்தக்காலத்தில் எந்த வேலையையுமே முடித்துச் செய்ததில்லை.”

சங்கொலி கேட்டது. “யார்?” என்றார் சுஃப்ரர். “பாண்டவர்கள்” என்றான் பிரபன் என்ற ஏவலன். “மூத்தவர் என எண்ணுகிறேன்.” சுஃப்ரர் “தேவையற்ற அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்... போ... அரண்மனைச் செயலகரிடம் சென்று சொல்” என்றார். பிரபன் “எதை?” என்றான். “சுஃப்ரன் செத்துவிட்டான் என்று... மூடா” என்று சுஃப்ரர் சீறினார். “அடேய், பாண்டவர்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்.” பிரபன் “ஆனால் அவர்கள் அனைவரும் இன்னமும் வரவில்லையே...” என்றான். சுஃப்ரர் சீற்றத்துடன் “அனைவரும் வந்தபின் போய் சொல் மூடா. இதையும் நானே உனக்குச் சொல்லவேண்டுமா? மூடர்கள் முழுமூடர்கள்” என்றார்.

அமுதகலசக்கொடியுடன் இருதேர்கள் வந்து நின்றன. முதல்தேரில் யுதிஷ்டிரனும் நகுலனும் இருந்தனர். யுதிஷ்டிரன் இறங்கியதும் சுஃப்ரர் அருகே சென்று “அஸ்தினபுரியின் இளவரசுக்கு அடியேன் வணக்கம். அரண்மனை தங்களை வரவேற்கிறது” என்று முகமன் சொன்னார். தருமன் முகத்தில் உளச்சுமை தெரிந்தது. அவரை நோக்கிய விழிகள் எதையும் நோக்கவில்லை. “யாதவர் வந்துவிட்டாரா?” என்றான். “அவர் விடியலிலேயே கிளம்பி ஆழிவண்ணன் ஆலயத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அரசரும் இளையவரும் பட்டத்து இளவரசரும் சிற்றவை மண்டபத்தில் இருக்கிறார்கள்” என்று சுஃப்ரர் சொல்ல அதை கேட்டானா என்று தெரியாத முகத்துடன் யுதிஷ்டிரன் முன்னால் சென்றான். நகுலன் தொடர்ந்தான்.

பின்னால் வந்த தேரிலிருந்து இறங்கிய அர்ஜுனனும் எதுவும் கேளாமல் முகமன்களுக்குச் செவிகொடுக்காமல் சகதேவன் தொடர உள்ளே சென்றான். அவன் முகமும் கவலை கொண்டிருந்தது. அவர்கள் உள்ளே சென்றதும் சுஃப்ரர் “சுட்ட காய் போல முகத்தை வைத்திருக்கிறார்கள். என்ன நிகழ்கிறதென்று எவருக்குத்தெரியும்?” என்றார். “இன்று இளையயாதவர் அஸ்தினபுரிக்குத் தூது செல்கிறார் அல்லவா?” என்றான் ஜலஜன். “ஆகா, மிகச்சிறப்பான கண்டுபிடிப்பு. மிக நுட்பமானது. டேய், நான் அருகே வந்தால் உன் மண்டை உடையும். வேலையைப்பார் மூடா” என்றார் சுஃப்ரர். ஜலஜன் “வேலைதான் நடக்கிறதே" என்று முணுமுணுத்தான்.

“முணுமுணுக்காதே... நான் கடும்சினம் கொண்டிருக்கிறேன்” என்று சொன்ன சுஃப்ரர் திரும்பும்போது தாலன் “மதம்கொண்ட யானை” என்றான். “எங்கே?” என்றார் சுஃப்ரர். “வடக்குக் கொட்டிலில் காரகன் நேற்றுமுதல் மதம் கொண்டிருக்கிறது என்றார்கள்” என்றான். “அப்படியா தெரியவில்லையே?” என்றார் சுஃப்ரர். ஜலஜன் சிரிப்பை அடக்க “என்னடா சிரிப்பு? அடேய், என்ன சிரிப்பு? மங்கலநாளும் அதுவுமாக என் கையால் அடிவாங்காதே“ என்றார். திரும்பி பிரபனிடம் “போய்ச்சொல்வதற்கு என்ன நீசா? உன்னிடம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டாயா?” என்றார்.

“இளையபாண்டவர் பீமசேனர் இன்னமும் வரவில்லை மூத்தவரே” என்றான் பிரபன். “அவர் மடைப்பள்ளியில் தின்றுகொண்டிருப்பார். தின்றுமுடித்து கிளம்பிவரும்போது இவர்கள் கிளம்பிவிட்டிருப்பார்கள். நால்வரும் வந்தால் அவர் வந்ததுபோலத்தான். நீ நேராகச் சென்று சொல், நால்வரும் வந்துவிட்டனர் என்று.” பிரபன் கிளம்பி பின் நின்று “அரண்மனைச்செயலகர் அரசருடன் இருந்தால்...” என்றான். “ஏன்? அருகே சென்று சொல்லமாட்டாயா நீ?” என்றார் சுஃப்ரர். “அருகேதான் பாண்டவர்கள் நிற்பார்கள்” என்றான் பிரபன்.

“அவர்கள் கேளாமல் சொல் மூடா” என்று சீறியபின் பிற விழிகளை பார்த்து எதோ பிழையாகச் சொல்லிவிட்டதை உணர்ந்து “எதையாவது செய்து என் தலையில் கல்லைத்தூக்கிப்போடுங்கள் போங்கள்... நான் உங்களிடம் பேசியே என் மூச்சை இழந்துவிட்டேன்” என்றவாறு அப்பால் சென்றார். அவருக்குப்பின்னால் சிரிப்புகள் எழுந்தன. அவர் திரும்பிப்பார்ப்பதை முழுமையாகத் தவிர்த்தார். என்ன பிழை என்று சிந்தித்து ஏதும் எட்டாமல் சரி ஏதோ ஒன்று என அப்படியே விட்டுவிட்டார்.

பெருந்திண்ணையில் வெற்றிலைச் செல்லம் இருந்தது. அதனருகே அமர்ந்து நறும்பூவுடன் வெற்றிலைபோட்டுக்கொண்டதும் அவரது பதற்றம் அடங்கியது. பாக்கும் சுண்ணமும் வெற்றிலையுடன் இணைந்து எழுந்த மணம் நறும்பூவுடன் கலந்து இளமயக்கை உருவாக்க சற்றே வியர்வை ஊறி காற்றில் குளிர்ந்து கைகால்களில் இனிய களைப்பு எழுந்ததும் இரு விரல்களை உதட்டில் அழுத்தி மண்கோளாம்பிக்குள் நீட்டித் துப்பி, நாவால் பாக்குத்துகளை துழாவி எடுத்து உதிர்த்துவிட்டு “அடேய் சுந்தா, இவர்கள் எந்த வழியாகச் செல்கிறார்கள்?" என்றார்.

“நீங்கள் மூத்தவர். நூற்றுவர். நீங்களறியாததையா எளியவன் சொல்லப்போகிறேன்?" என்றான் சுந்தன். “அடேய், அடேய், பணிவைச் சற்றே குறை. உன்னை உருக்கி ஊற்றிய உன் தந்தை பத்ரனின் கொம்பையே நான் பார்த்திருக்கிறேன்” என்றார் சுஃப்ரர். “சொல், எந்த வழியாகச் செல்கிறார்கள்?” சுந்தன் “கங்கைவழியாகத்தான். தசசக்கரம் சென்று அங்கிருந்து ஷீரபாத்ரம். அதன்பின் அஸ்தினபுரி...” என்றான். சுஃப்ரர் “அப்படியென்றால் படகுகளில் தேர்களையும் வண்டிகளையும் ஏற்றிக்கொள்ளவேண்டும் அல்லவா? அஸ்தினபுரி கங்கைக்கரையில் இருந்து அப்பால் அல்லவா உள்ளது?“ என்றார். தாலன் “எதற்கு? அஸ்தினபுரியில் தேர்கள் இல்லையா என்ன?” என்றான்.

“கேட்டாயா சுந்தா, இவன் அன்னையை நான் அறிவேன். அவள் முந்தானையை நாலைந்து முறை அவிழ்த்திருக்கிறேன்” என்று சொல்லி சுஃப்ரர் குலுங்கிச்சிரித்தார். “அவளைப்போன்ற முழுமூடப்பெண் மட்டுமே இவனைப்போன்ற ஒரு மைந்தனைப்பெற முடியும்.” மீண்டும் சிரித்து “அடேய், இது ஓர் அரசன் இன்னொரு அரசனை பார்க்கச்செல்லும் தூது. அரசமுறை வரவேற்பு அளிக்கப்படும். இங்கிருந்து அஸ்தினபுரியின் அரசருக்கு பொன்னும் மணியும் பட்டும் தந்தமுமாக ஏராளமான பரிசுப்பொருட்கள் கொண்டுசெல்லப்படும். அவற்றை அவர்களின் வண்டிகளிலா கொண்டு செல்ல முடியும்?” என்றார்.

“ஆனால் யாதவர் பரிசுகள் எதையும் கொண்டுவரவில்லையே” என்றான் சுந்தன். “நீயும் இவனைப்போல மூடன்தானா? அடேய், நேற்றுமாலையே மதுராபுரியில் இருந்து மூத்த யாதவர் பரிசுக்குரிய பொருட்களுடன் வந்துவிட்டார். அவை படகுகளிலேயே துறைமுகத்தில் நிற்கின்றன” என்றார் சுஃப்ரர். “அவர் பெயர் பலராமர். ராகவராமனின் பெயரை அவரது தந்தை அவருக்கிட்டிருக்கிறார். நிகரற்ற தோள்வல்லமையால் அவர் பலராமர் என அழைக்கப்படுகிறார். பால்வெண்ணிறம் கொண்டவர். அவரது கொடிக்குறி மேழி. நேராகச்சென்று துறைமுகத்தைப்பார். மேழிக்கொடியுடன் நான்கு பெரும் படகுகள் நின்றிருக்கும். யமுனை வழியாக வந்தவை அவை.”

இன்னொரு நறும்பூவை எடுத்து வாயிலிட்டு இன்னொன்றை எடுத்தபடி “இளவரசியின் மணத்தன்னேற்புக்கு அவரும்தான் வந்திருந்தார். அவர் ஒரு முறை மூச்சுவிட்ட விசையிலேயே சல்லியரும் பீமசேனரும் இருபக்கமும் பறந்து சென்று விழுந்துவிட்டனர். என்ன ஒரு பெருங்காட்சி அது. கனவென நினைத்தேன்” என்றார் சுஃப்ரர். சுந்தன் சினத்துடன் “நீங்கள் பார்த்தீர்களா?” என்றான். சுட்டுவிரலில் நறும்பூ மொட்டுடன் ”பார்க்காமலா சொல்கிறேன்? நான் என்ன பொய் சொல்கிறேன் என்றா சொல்கிறாய்?” என்று சுஃப்ரர் கேட்டார். சுந்தன் “அப்படிச்சொல்லவில்லை. ஆனால் மூச்சுக்காற்று என்றால்...” என்றான்.

“அடேய் மூடா, கதாயுதப்போரில் மகிமா என்னும் வித்தை உண்டு தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத்தெரிந்துகொள். மகிமா என்றால் உடலை பேருருவம் கொள்ளச்செய்தல். வெளிவிடும் மூச்சை உள்ளே நிறுத்தி உடலின் அணுகோசங்களை எல்லாம் துருத்தி போல உப்பவைப்பார்கள். அப்படியே உடல் பெருக்கத் தொடங்கி யானைபோல ஆகிவிடும். தலை மேலெழுந்து சென்று கூரையை முட்டும். அந்தக்காற்றை அப்படியே உமிழ்ந்தால் சுவர்கள் உடைந்துவிடும்... தெரியுமா?” தாலன் “இது நம்பும்படி இருக்கிறது” என்றான். சுந்தன் “மொத்தக்காற்றும் வெளியேறினால் மீண்டும் பழையபடி சிறிதாக ஆகிவிடுவார்களா?” என்றான். “இல்லை” என்று இயல்பாகச் சொன்ன சுஃப்ரர் இன்னொரு நறும்பூவை எடுத்தார்.

தாலன் ஏதோ சொல்ல இன்னொரு ஏவலனாகிய கலுஷன் மூங்கில் கிழியும் ஒலியில் சிரித்தான். “என்னடா அங்கே சிரிப்பு?" என்றார் சுஃப்ரர். "ஒன்றுமில்லை மூத்தவரே” என்றான் கலுஷன். “என்னடா?” கலுஷன் சிரிப்பை விழுங்கி “காற்றை மூச்சாக மட்டும்தான் வெளிவிட முடியுமா என்கிறான்” என்றான். “எப்படி வேண்டுமானாலும் வெளிவிடலாம். மகிமா என்றால் அப்படிப்பட்ட கலை. பன்னிரு வருடம் தவமியற்றிக் கற்கவேண்டியது” என்றார் சுஃப்ரர். ”இளைய பாண்டவர் பீமசேனர் உணவுண்ணும்போது மகிமா முறைப்படி பேருருவம் கொள்கிறார் மூத்தவரே” என்றான் தாலன். “இருக்கும்... இவரும் கதைப்போர் கற்றவர்தானே?” என்றார் சுஃப்ரர்.

நீள்சதுர வெயில்பரப்பு ஒன்று இளஞ்செந்நிறத்தில் முற்றத்தில் விழுந்தது. அது ஏதோ பட்டு என சற்றே பார்வை மங்கிய சுஃப்ரர் எண்ணினார். பின்னர் ”வெயில்...” என்றபடி தலையை அசைத்தார். காவல் வீரர்களின் படைக்கலங்கள் அகல்சுடர்கள் போல வெயிலொளி சூடி நின்றன. புரவிகளின் குஞ்சிமயிர் நுனிகள் ஒளியுடன் சிலிர்த்தன.

ஜலஜன் உள்ளிருந்து வந்து “மூத்தவரே, எல்லைப்புற ஒற்றர்தலைவர் சுக்ரரை உடனே செல்லும்படி அமைச்சர் ஆணையிட்டார்” என்றான். “செல்லட்டும், சிறப்பாகச் செல்லட்டும். அவர் இங்கு இல்லை என்பதனால் எனக்கு அதில் மாற்றுச்சொல்லே இல்லை” என்றார் சுஃப்ரர். அந்த நகைச்சுவையை தானே விரும்பி சிரித்தார். “சுக்ரரைத்தானே சற்றுமுன்னர் தேடினார்” என்றான் தாலன். ”ஆம், காலைமுதலே தேடுகிறார்” என்றான் கலுஷன்

“இங்கே ஒவ்வொருவரும் இன்னொருவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியில் அனைவரும் அனைவரையும் கண்டடைவார்கள்” என்றான் தாலன். அந்தச் சொற்களில் ஆழ்ந்த தத்துவப் பொருளிருப்பதைப்போல அனைவருமே உணர்ந்து அவனை திகைத்து நோக்க “நான் அப்படி எண்ணினேன்” என அவன் தடுமாறினான். அதன் பின் எவரும் ஏதும் சொல்லவில்லை.

கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து முரசு. “பலராமர்!" என்றான் தாலன். “எப்படித்தெரியும்?” என்றான் ஜலஜன். “தோன்றியது” என்றபின் “இதே ஒலி நேற்று இரவு அவர் அரண்மனைக்குச் சென்றபோதும் கேட்டது” என்றான். “அப்படி முன்னரே தெரிந்தால் தோன்றுவதற்கென்ன நுண்ணறிவா தேவை? மூடன்” என்றபடி சுஃப்ரர் எழுந்தார்.

மேழிக்கொடி பறந்த வெள்ளிப்பூச்சுள்ள அணித்தேர் ஒரு புரவிவீரன் வில்லுடன் முன்னால் வர வந்து முற்றத்தில் ஏறியது. முரசுகள் முழங்கி அமைந்தன. அதிலிருந்து வெண்பருத்தி அரையாடையும் மேலாடையும் அணிந்து அணியேதும் இல்லாத வெண்ணிற உடலுடன் பரசுராமர் இறங்கினார். அவருடன் அதேபோன்ற ஆடையுடன் பீமனும் வந்தான்.

சுஃப்ரர் சென்று தலைவணங்கி “மதுராபுரியின் அரசர் பலராமரை பணிந்து வரவேற்கிறேன். தங்கள் பாதங்களால் இந்த அரண்மனை மங்கலம் கொள்கிறது” என்றார். “எப்படி?” என்று பலராமர் புருவம் தூக்கி கேட்டார். சுஃப்ரர் திகைத்து “அதாவது... தங்கள் பாதங்கள்” என்றபின் “அறியேன் அரசே. நான் அவைப்புலவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றார்.

உரக்க நகைத்து சுஃப்ரரின் தோளை வளைத்த பலராமர் “முதியவரே, நீரும் கிளியும் ஒன்று. சொல்வதென்ன என்று அறியாதவர்கள்” என்றார். "ஆனால் வருந்தவேண்டியதில்லை. அறிந்தபின் இதையெல்லாம் சொல்வதற்கு இது மேல்” சுஃப்ரர் புரியாமல் “ஆணை” என்றார்.

“என் இளையோன் வந்துவிட்டானா?” என்றார் பலராமர். "இன்னும் இல்லை. அவர் ஆலயத்திற்குச் சென்று...” என்று தொடங்க பலராமர் திரும்பி பீமனிடம் “இவர்கள் சொன்னார்கள் என்று சென்றிருப்பான். உண்மையில் அவன் வழிபடும் தெய்வமென ஒன்றில்லை. அவனுடைய அறிவுமரபு தன்னை வேதமுடிபு என அழைத்துக்கொள்கிறது. அவர்கள் நானே பிரம்மம் என சொல்லிக்கொண்டு ஊழ்கத்தில் அமர்பவர்கள்” என்றார்.

“ஆம், அறிவேன்” என்றான் பீமன். “அவர்கள் ஊழ்கநிறைவை எளிதில் எய்துவார்கள் என எண்ணுகிறேன். அவர்கள் தங்கள் அகச்சொல்லை சொல்லச்சொல்ல இல்லை இல்லை என ஐந்துபருவெளியும் சூழ நின்று சொல்லும். இவர்கள் பிடிவாதமாக அதையே சொல்லச்சொல்ல அவை சோர்வுற்று பொறுமையிழந்து சரி, சரி என்று சொல்லும்போது முழுவிடுதலை அடைவார்கள்.”

பலராமர் புரியாமல் சில கணங்கள் வாய் திறந்திருக்க நோக்கிவிட்டு வெடித்துச் சிரித்து “ஆம்” ஆம்” என்று கூவினார். பீமன் “என் இளையோனும் அந்த அறிவுமரபை கற்றுக்கொண்டிருக்கிறான். நான்கு மெய்ப்பொருட்கள் என்று அதை அவன் சொன்னான். அன்னமே பிரம்மம், அறிவுணர்வே பிரம்மம், அதுவே நான், நானே பிரம்மம். அதனூடாக இவையனைத்திலும் அது உறைகிறது என அறிந்தால் முழு விடுதலை. நான் முதல்வரியில் இருந்து இறுதிவரிக்கு வந்தேன்” என்றான். பலராமர் தன் கைகளை விரித்து அவனை ஓங்கி அறைந்து நகைத்தார். திரும்பி “புரிகிறதா என்ன சொல்கிறான் என்று? ஆகா!” என்றார். சுஃப்ரர் “நுண்ணிய பொருள்” என்றார்.

"உமது பெயர் என்ன?” என்றபடி பலராமர் நடந்தார். “சுஃப்ரன்” என்றார் சுஃப்ரர். “நான் இங்கே நூற்றுவர்தலைவன். ஏவலர் நூறுபேர் என் ஆணைக்கு கீழே இருக்கிறார்கள்.” பீமன் “நூற்றுவர்களுக்குக் கீழே அப்படி இருப்பதே வழக்கம்” என்றான். சுஃப்ரர் “உண்மை இளவரசே” என்றார். பலராமர் மீண்டும் வெடித்துச் சிரித்து ”உன்னிடம் பேசினால் என் வயிறு வலிக்கத் தொடங்கிவிடுகிறது” என்றபின் “சுஃப்ரரே என் இளையோன் வந்தால் உடனே அவைக்கு வந்து என்னைப்பார்க்கச் சொல்லும். நேரமாகிக்கொண்டே இருக்கிறது” என்றார். “ஆணை" என்றார் சுஃப்ரர். “நீர் இனியவர்..." என்று அவர் தோளை மீண்டும் வளைத்துவிட்டு பலராமர் உள்ளே சென்றார்.

சுஃப்ரர் ஜலஜனிடம் ”அடேய் மூடா, அவர்கள் சொன்னதென்ன என்று தெரிகிறதா?” என்றார். ஜலஜன் ”மகிமா பற்றித்தானே?” என்றான். “தாழ்வில்லை. நீயும் சற்று அறிந்திருக்கிறாய்” என்றார் சுஃப்ரர். “அவர் சொன்ன சொற்கள் ஆழம் நிறைந்தவை. அந்நான்கு வரிகளையும் அறிந்தவன் இறப்பதில்லை. அவனை படைக்கலங்களோ விலங்குகளோ இயற்கைவிசைகளோ அழிக்கமுடியாது. ஆகவே அவை மிருத்யுஞ்சன மந்திரம் என அழைக்கப்படுகின்றன.” சற்றே ஐயத்துடன் தாலன் “மிருத்யுஞ்சய மந்திரம் அல்லவா?” என்றான். “அது வேறு இது வேறு” என்றார் சுஃப்ரர்.

சுஃப்ரர் இன்னொருமுறை வெற்றிலை போடலாமா என எண்ணுவதற்குள் கருணர் உள்ளிருந்து ஓடிவந்தார். “அம்புபட்ட பன்றிபோல“ என்று தாலன் முணுமுணுத்தது கேட்டது. கருணர் “என்ன செய்கிறீர்கள்? சுக்ரர் எங்கே? மூடர்களே, இளையயாதவர் ஆலயத்தில் இருந்து திரும்பி விட்டார்” என்றார். சுஃப்ரர் ”இங்கு இனி செய்வதற்கேதுமில்லை அமைச்சரே” என்றார். “பணியாற்ற சோம்பல்கொள்பவர்கள் இங்கே நிற்கவேண்டியதில்லை” என்று சொன்னபின் கருணர் விரைந்து திரும்பிச்சென்றார்.

சினத்துடன் திரும்பிய சுஃப்ரர் பிறரிடம் “கேட்டீர்களல்லவா? அடேய், நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் சினம்... பணியாற்ற சோம்பல்கொள்பவர்கள் தண்டிக்கப்படுவீர்கள். சொல்லிவிட்டேன்” என்றார். “பணிமுடிந்துவிட்டதே” என்றான் ஜலஜன். “அதெல்லாம் எனக்குத்தெரியாது” என்று சொல்லி சுஃப்ரர் திரும்பினார். “அனைத்தையும் கழற்றி மீண்டும் மாட்டுகிறோம்” என்றான் தாலன். சுஃப்ரர் “தேவையில்லை” என்று சொன்னபடி முற்றத்தின் முகப்பை நோக்கி சென்றார்.

சற்றுநேரத்தில் கொம்புகளும் முரசுகளும் ஒலித்தன. கிருஷ்ணனின் கருடக்கொடி கொண்ட பொன்னிறத்தேர் ஓசையே இல்லாமல் வந்து நின்றது. அதன் சகடங்கள் பீதர்முறைப்படி மெல்லிய இரும்புவளையங்களால் ஆனவையாக இருந்தன. சகடங்களுக்குமேல் அமைக்கப்பட்டிருந்த அடுக்குவிற்கள் சகடத்தின் அசைவை விழுங்கியமையால் தேர் நீரலைகளில் அன்னம் என மிதந்து வந்தது. அது வந்தணைந்தபோதுதான் விரைவு தெரிந்தது. முற்றத்தில் நின்றபின் இரட்டைக்குதிரைகளில் வெண்ணிறமானது தும்மியது. கரியநிறப்புரவி குனிந்து பெருமூச்சு விட்டது.

தேரின் படிகளில் இறங்கி வந்த கிருஷ்ணன் சுஃப்ரரிடம் “சுஃப்ரரே, இன்னும் அரைநாழிகைக்குள் நான் கிளம்பவேண்டும். அனைத்தும் சித்தமாக இருக்கட்டும்” என்றபின் திரும்பி தாலனிடம் “தாலரே, நீர் உடனே கிளம்பி துறைமுகத்திற்குச் சென்று முதல்பெரும்படகின் தலைவன் சரிதனிடம் நான் இன்னும் ஒருநாழிகையில் படகில் இருப்பேன் என்று சொன்னதாக சொல்லும்” என்றான். தாலன் "ஆணை" என்றான்.

கிருஷ்ணன் நிலவாய் அருகே செம்புடன் நின்ற ஜலஜனை நோக்கி "ஜலஜரே, என்ன இது, அரண்மனை முற்றத்திலா நீராடுகிறீர்?" என்றபடி படிகளில் ஏறினான். "நீராடவில்லை யாதவரே. இது மஞ்சள்நீர்” என்றான் ஜலஜன் சிரித்தபடி. “மஞ்சள்நீராட நீர் என்ன பூப்படைந்த பெண்ணா? கலுஷரே, இதையெல்லாம் கேட்கமாட்டீரா?” என்று சொல்லிக்கொண்டே அவன் உள்ளே சென்றான்.

குதிரையில் விரைந்து வந்து நின்ற யாதவ வீரன் மூச்சிரைக்க “உள்ளே சென்றுவிட்டாரா?” என்றான். “ஆம், நீர் யார்?" என்றார் சுஃப்ரர். “நான் அவரது அகம்படியன்.” சுஃப்ரர் குதிரை கனைப்பது போல சிரித்து “சிறப்பான பணி” என்றார். “என்ன செய்ய? இப்படியா தெருவில் தேரை ஓட்டுவது? இரண்டுபுரவிகள் கொண்ட தேர். நான் அஞ்சி அஞ்சி வந்தேன். புரவிக்காலடியில் குழந்தை ஏதேனும் விழுந்தால் நான் கழுத்தை அறுத்துக்கொண்டு சாகவேண்டும் அல்லவா?” என அவன் இறங்கி கால்களை உதறிக்கொண்டான்.

தாலன் “அவரது குதிரைக்காலடியில் குழந்தைகள் விழாது. அவர் குதிரைகளை சவுக்கால் செலுத்துவதில்லை. உள்ளத்தால் செலுத்துகிறார்” என்றான். அரண்மனைக் கோட்டைமேல் எழுந்த காவல்மாடத்தில் பெருமுரசம் முழங்கத் தொடங்கியது. “அதற்குள் கிளம்புகிறாரா? உள்ளே சென்று உணவருந்தி ஓய்வெடுத்து செல்வார் என எண்ணினேன்” என்றபடி அகம்படியன் மீண்டும் தன் புரவியில் ஏறிக்கொண்டான்.

கருணர் உள்ளிருந்து துரத்தப்பட்டவர் போல பாய்ந்து வந்து “என்ன செய்கிறீர்கள்? இதோ கிளம்பிவிடுவார். அரசரே வந்து வழியனுப்புகிறார். சுக்ரர் எங்கே? அடேய், சுக்ரரை பார்த்தீர்களா?” என்றபடி மறுமொழி நோக்காமல் மீண்டும் உள்ளே ஓடினார். சுஃப்ரர் “எனக்கு பதற்றமாக இருக்கிறது. தீக்குறி என்பது தெய்வங்களின் ஆணை. அதைத்தடுக்க எளிய ஏவலர்களை அமைப்பதென்பது மூடத்தனம்” என்றார்.

“அரசர்கள் முழுமூடர்கள்” என்றான் தாலன். “அடேய்” என திகைத்த சுஃப்ரர் “வாயை மூடு... நீ போ, உன் ஊழ் அது. என் தலையையும் கொண்டு போய்விடாதே” என்றார். உள்ளே சங்கொலி எழுந்தது. “வருகிறார்கள்” என்றான் ஜலஜன். “நான் அந்தத் தூணுக்கு அப்பால் நின்றுகொள்கிறேன்” என்று சுஃப்ரர் விலகிச்சென்றார். தாலன் “நான் என்னை நூற்றுவன் என சொல்லிக்கொள்ளவா?” என்றான். ”எதைவேண்டுமானாலும் சொல். மூதாதையரே, என்ன செய்வதென்றே தெரியவில்லையே” என்றபடி சுஃப்ரர் தூணுக்கு அப்பால் சென்று நின்றுகொண்டார்.

கொம்பும் முழவும் சங்கும் மணியுமாக மங்கல ஓசையுடன் சூதர்குழு முதலில் வந்தது. தொடர்ந்து பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் ஒருவன் வந்தான். கருடக்கொடியும் மேழிக்கொடியுமாக இரு வீரர்கள் பின்னால் வந்தனர். அதன்பின் மங்கலத்தாலமேந்திய அணிப்பரத்தையர் வந்தனர். துருபதனும் சத்யஜித்தும் சித்ரகேதுவும் முன்னால் வர அவர்களுக்கிணையாக கிருஷ்ணனும் பலராமரும் வந்தனர். பின்னால் யுதிஷ்டிரன் வர அவனுக்குப்பின்னால் பாண்டவர்கள் நால்வரும் வந்தனர். துருபதனுக்கு சற்று அப்பால் தோள்களை வளைத்து கருணர் வந்தார்.

அவர்கள் முற்றத்தை அடைந்ததும் முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த காவல்படையினர் கொம்புகளை ஊதினர். காவல்மாடங்களில் இருந்து பெருமுரசுகள் முழங்கின. வெயிலின் நீளம் குறுகி செம்மை குறைந்திருந்தது. அரண்மனைக்கு அப்பால் நின்றிருந்த வைதிகர் வேதமுழக்கமிட்டபடி வந்து கிருஷ்ணனுக்கும் பலராமருக்கும் நிறைகுடநீர் தூவி வாழ்த்தளித்தனர். அவர்கள் வணங்கி நற்சொல் பெற்று முற்றத்தில் இறங்கினர். துருபதன் அணிச்சேடி நீட்டிய தாலத்தில் இருந்து செந்நிறமான சந்தனத்தைத் தொட்டு இருவர் நெற்றியிலும் மங்கலம் இட்டு வாழ்த்தினார். சத்யஜித்தும் சித்ரகேதுவும் வாழ்த்தியபின் யுதிஷ்டிரனும் வாழ்த்தினான்.

கிருஷ்ணன் திரும்பி அர்ஜுனனை நோக்க அவன் புன்னகைசெய்தான். கிருஷ்ணன் தன் கைகளை நீட்ட அவன் அருகே வந்து அவற்றை பற்றிக்கொண்டான். இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. கிருஷ்ணன் சென்று ஜலஜன் கையில் இருந்து செம்புக்குவளையை வாங்கி மஞ்சள்நீரால் கால்களை கழுவிக்கொண்டான். பலராமரும் கழுவிக்கொண்டதும் இருவரும் சென்று தனித்தனியாக தங்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். இருவரும் திரும்பி தலைவணங்க சத்யஜித்தும் சித்ரகேதுவும் மட்டும் கைதூக்கி வாழ்த்தினர். வாழ்த்தொலிகளும் கொம்போசையும் முரசொலியும் இணைந்த முழக்கம் நடுவே தேர்கள் அசைந்து எழுந்து விலகிச்சென்றன.

அவற்றின் கொடியசைவு மறைவது வரை நோக்கிவிட்டு துருபதன் திரும்பிச் சென்றார். தொடர்ந்து பிறரும் சென்றனர். அர்ஜுனன் மட்டும் மேலும் சற்று நேரம் தேர்கள் சென்ற திசையை நோக்கி நின்றுவிட்டு திரும்பிச் சென்றான். வைதிகர் மெல்லிய குரலில் பேசியபடி திரும்பிச்சென்றனர். காவல்படையினருக்கு நூற்றுவன் ஆணையிட அவர்கள் அணிவகுத்து திரும்பினர். சற்று நேரத்தில் முற்றம் ஒழிந்தது.

சுஃப்ரர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து “அடேய், அந்த செல்லத்தை இப்படி கொண்டுவா” என்றார். “ஒரு நிகழ்ச்சியை முழுமையாக முடிப்பதென்பது எளியதல்ல. என் பணிவாழ்க்கையில் இன்றுவரை ஒரு பிழையும் நிகழ்ந்ததில்லை” என்றார். ஜலஜன் வெற்றிலைச்செல்லத்தை அவர் அருகே வைத்தபடி “நாமறிந்த தீக்குறி ஏதும் இல்லை. நாம் அறியாதவை எங்கேனும் இருக்கலாம் அல்லவா?” என்றான். சுஃப்ரர் கையில் பாக்குடன் நிமிர்ந்து அவனை நோக்கி சிலகணங்கள் அசைவற்ற முகத்துடன் இருந்தபின் “உன் நச்சு வாயை மூடு” என்றார்.

உள்ளிருந்து மலைச்சரிவில் உருளும் பாறை என சுக்ரன் ஓடிவந்து “அமைச்சர் கருணர் இங்குள்ளாரா? காலையில் இருந்தே தேடுகிறேன்” என்றபின் மறுபக்கம் சென்றான். சுஃப்ரர் திரும்பி தாலனை நோக்கினார். அவன் ஏதேனும் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பவர் போல. தாலன் “தூது கிளம்பிச்செல்கிறது” என்றான். அதை எதிர்பாராத சுஃப்ரர் சற்றே குழம்பி, "ஆம், இளைய யாதவனை பெருந்தூதன் என்கிறார்கள்” என்றார்.

பகுதி 11 : முதற்தூது - 2

அஸ்தினபுரியின் நுழைவாயிலை படகிலிருந்தபடியே சாத்யகி பார்த்தான். அது நீரிலாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கப்பால் மெல்லிய காலையொளி வானில் பரந்திருந்தமையால் தெளிவாக அதன் வடிவம் தெரிந்தது. கிருஷ்ணன் பாய்மரக்கயிற்றை பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நின்றான். சாத்யகி அவனருகே வந்து நின்று “அதுதான் அஸ்தினபுரியா?” என்றான். “இல்லை, நகரத்திற்கு மேலும் மூன்றுநாழிகைநேரம் சாலைவழியாக செல்லவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.

சாத்யகி “பெரிய தோரணவாயிலாகத்தான் கட்டப்பட்டபோது கருதப்பட்டிருக்கும்” என்றான். கிருஷ்ணன் “ஆம், மாமன்னர் குருவால் மரத்தால் அமைக்கப்பட்டது அது. பின்னர் பிரதீபரால் கல்லில் சமைக்கப்பட்டது. அமுதவாயில் என அதை சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். அந்தப்பெருவாயிலின் முகப்பிலிருந்த அமுதகலசத்தை சாத்யகி அப்போதுதான் பார்த்தான். ஒரேகணத்தில் கேட்டிருந்த அத்தனை கதைகளும் நினைவிலெழும் பேருவகையை அடைந்தான்.

படகுத்துறை புதிதாக விரிவாக்கப்பட்டிருந்தது. மரத்திற்கு மாற்றாக கற்களை செதுக்கி அடுக்கி கட்டப்பட்டிருந்த துறைமேடையில் படகுகளின் விசை தாங்கும் சுருள்மூங்கில்கள் செறிந்திருந்தன. அங்கு பன்னிரு படகுகள் பாய்சுருக்கி நின்றிருந்தன. அவற்றில் பலவற்றில் பீதர்நாட்டு பளிங்குக்கல விளக்குகள் அப்போதும் அணைக்கப்படவில்லை. நான்கு படகுகளில் இருந்து சுமைகள் இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருபக்கமும் பொதிசுமந்த அத்திரிகள் நடைபாலம் வழியாக இறங்கி பண்டகசாலைக்குச்செல்லும் கற்சாலைகளில் குளம்புகள் ஒலிக்க நிரையாக சென்றன. அவற்றை ஓட்டிச்செல்லும் ஏவலர் குரல்களுடன் வணிகர்களின் குரல்கள் கலந்து ஒலித்தன.

காவல்மாடங்களிலும் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. கிருஷ்ணனின் படகுகளைக் கண்டதும் துறைமுகத்தின் தென்முனைக் காவல்மாடத்தில் இருந்து கொடியசைந்தது. தொடர்ந்து மும்முறை கொம்பு பிளிறியது. முதல்படகு கொடியசைத்து மும்முறை கொம்பூதியதும் படகுத்துறைநோக்கி உள்ளிருந்து வினைவலர் வருவது தெரிந்தது. தோளில் சரியும் மேலாடை என பாய்கள் சுருங்கி கீழிறங்க முதல் காவல்படகு மெல்ல நெருங்கி சுருள்மூங்கில்களில் முட்டி மெல்ல அதிர்ந்து நின்றது. அதன் வடங்களை இழுத்துக்கட்டி அசைவழியச்செய்தனர். அதிலிருந்து துவாரகையின் காவலர்கள் இறங்கி துறைமேடையில் பரவினர்.

துறைமேடையில் வழக்கமான துறைக்காவல்படையினர் அன்றி எவரும் தென்படவில்லை. பந்தங்கள் எரிந்த தூண்களின் அடியில் சில காவலர் துயில்கலையாதவர்கள் போல நின்றிருந்தனர். துவாரகையின் படையினர்தான் படகு அணைவதற்கான இடத்தை அமைத்தனர். கிருஷ்ணனின் அணிப்படகு துறைமேடையை அணுகியதும் அதன் பாய்கள் நடனவிரல்கள் என நுட்பமாக திரும்பிக்கொண்டு எதிர்க்காற்று விசையை அமைத்து விரைவழிந்தது. மிகச்சரியாக துறைமேடையின் அருகே வந்து முட்டாமல் அசைவற்று நின்றது. துறைக்காவலர் திகைப்புடன் அதன் பாய்களையும் கலவிளிம்பையும் வந்து நோக்கினர்.

நடைபாலம் நீட்டப்பட்டபோது அப்பாலிருந்த துறைக்காவலன் “யாதவரே, சற்று பொறுங்கள். அமைச்சர் கனகர் தங்களை வரவேற்க வந்துள்ளார்” என்றான். கிருஷ்ணன் புன்னகையுடன் தலையசைத்தான். “அமைச்சரா? நம்மை வரவேற்க அரசகுலத்தவர் எவரும் இல்லையா?” என்றான் சாத்யகி. கிருஷ்ணன் புன்னகையுடன் ”அதற்குள் காட்டுக்குள் கன்றுமேய்த்த யாதவனை கடந்துவந்துவிட்டீர், நன்று” என்றான். சாத்யகி “அதை புரிந்துகொள்ள இச்சிலநாட்களே போதுமானவை அரசே” என்றான். கிருஷ்ணன் “அமைச்சர் வருகை நமக்கு சொல்வது ஒன்றே. இது அரசமுறைப்பயணம் அல்ல, வெறும் அரசியல்தூது” என்றான்.

கனகர் அரண்மனை நிலையமைச்சருக்குரிய பொற்குறி சூடிய தலைப்பாகையையும் பொன்னூல் பின்னல் செய்த பட்டுச்சால்வையையும் அணிந்தவராக கையில் பொற்கோலுடன் சுங்கமாளிகையில் இருந்து நடந்து வருவது தெரிந்தது. அவருக்கு முன்னால் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியை ஏந்திய கொடிக்காவலன் வந்தான். முகப்பில் முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் ஒலிக்க ஏழு இசைச்சூதர் மங்கல ஒலியெழுப்பி வந்தனர் . கனகருக்குப் பின்னால் ஏழு மங்கலத் தாலங்ளை ஏந்திய ஏவலர் வந்தனர். அவர்கள் நீண்ட கற்பாதை வழியாக வந்து அத்திரிப்பாதையை கடந்து துறைமேடையில் ஏறி நின்றபின்னர் துறைக்காவலன் கையசைத்தான்.

கிருஷ்ணனின் படகிலிருந்து கொடிகள் வீசப்பட்டன. முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. துவாரகையின் கருடக்கொடியுடன் ஒரு காவலன் முன்னால் இறங்கிச்செல்ல ஏழு இசைச்சூதர்கள் மங்கல இசையுடன் தொடர்ந்தனர். சாத்யகி சற்று தயங்கி “மூத்தவர் இன்னமும் சித்தமாகவில்லை அரசே” என்றான். அதற்குள் சிற்றறையில் இருந்து பலராமர் எந்த அணிகலன்களும் இல்லாமல் பட்டுச்சால்வையை அள்ளி தோளில் போட்டபடி துயில் கலையாத கண்களுடன் வந்து கிருஷ்ணன் அருகே நின்றார். “அஸ்தினபுரி இத்தனை விரைவில் வந்துவிட்டதா?” என்று கைகளை தூக்கி சோம்பல்முறித்து ”நீ எழுந்ததுமே என்னை அழைத்திருக்கவேண்டும்...” என்றார்.

“நீங்கள் நேற்று வழியிலேயே படகுகளை அவிழ்த்துவிட்டு மாமரச் சோலையில் இறங்கி அமர்ந்து ஏவலருடனும் காவலருடனும் சேர்ந்து மதுவருந்தினீர்கள். நெடுநேரம் குகர்களுடன் இணைந்து துடுப்பும் வலித்தீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம், அரிய இரவு. விண்மீன்கள் மிக அருகே இருந்தன” என்றார் பலராமர். “அவன் யார்? ஏன் இவன் கொடியை ஆட்டுகிறான்?” என்று கொட்டாவியுடன் கேட்டார். “அஸ்தினபுரியின் அமைச்சர். நம்மை வரவேற்க வந்திருக்கிறார்.” பலராமர் முகம் மலர்ந்து “நன்று. அமைச்சரையே அனுப்பி வரவேற்கிறார்களா? அப்படியென்றால் அனைத்தும் எளிதில் முடிந்துவிடும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் “இறங்குவோம் மூத்தவரே” என்றான்.

நடைபாலம் வழியாக அவர்கள் இறங்கியபோது துவாரகையின் வீரர்களும் கரையில் நின்றிருந்த துறைக்காவலர்களும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். பலராமர் “அஸ்தினபுரிக்கு நான் வரும்போதெல்லாம் சினத்துடன் மட்டுமே வந்திருக்கிறேன். இம்முறை அப்படி அல்ல” என்றார். “சினம் கொள்ளும் தருணங்கள் இனி வரலாமே” என்றான் கிருஷ்ணன். “சினம் கொள்வதை தாங்களும் விரும்புவீர்கள் அல்லவா?” பலராமர் உரக்க நகைத்து “ஆம், நான் முந்துசினம் கொண்டவன் என்கிறார்கள் மூடர்கள்” என்றார். “நான் எப்போதும் உரியமுறையிலேயே சினம் கொள்கிறேன். சினம் கொள்ளாமலிருக்க நானென்ன மூடனா?”

அஸ்தினபுரியின் கொடிவீரன் முன்னால் வந்து கொடிதாழ்த்தி அவர்களை வரவேற்றான். கனகர் தலைவணங்கி “அஸ்தினபுரி யாதவகுலத்து இளம்தலைவர்களை வரவேற்கிறது. முன்பு தங்கள் தந்தையாகிய சூரசேனர் இந்நகரத்திற்கு குலமுறை வருகைதந்திருக்கிறார். அவரது நலமறிய அஸ்தினபுரி விழைகிறது” என்றார். “சூரசேனர் மதுவனத்தில் நலமாக இருக்கிறார். அஸ்தினபுரியின் பேரரசரையும் அரசியையும் நலம் வழுத்த துவாரகைப் பேரரசு விழைகிறது” என்றான் கிருஷ்ணன்.

விழிகளில் எந்த மாறுதலும் இல்லாமல் கனகர் “நலமே” என்றபின் திரும்பி அஸ்தினபுரியின் பெருங்குலத்தவரின் ஏழு மங்கலங்களான யானைத்தந்தம், கூழாங்கல், கங்கைநீர், சுடர், பொன், மணி, நெல் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணன் தன் ஏவலரிடமிருந்து யாதவ குலமங்கலங்களான பால், நெய், சாணி, சுடர், மலர், யமுனை நீர் ஆகியவற்றுடன் பொன், மணி, குறுவாள் ஆகியவை கொண்ட அணித்தாலம் ஒன்றை வாங்கி கனகரிடம் அளித்தான். மங்கல இசை ஓங்கி எழுந்து அமைந்தது.

“தாங்கள் செல்வதற்கு அஸ்தினபுரியின் தேர்கள் சித்தமாக உள்ளன” என்றார் கனகர். “நாங்கள் எங்கள் தேர்களை கொண்டுவந்துள்ளோம் அமைச்சரே” என்றான் கிருஷ்ணன். “இது அரசமுறைப்பயணம் அல்ல என்பதனால் நகர்வலம் தேவையில்லை என்பது பேரமைச்சர் எண்ணம்” என்று கனகர் சொன்னார். “மேலும் தங்கள் வருகை அரசுசூழ்தல் சார்ந்தது. அது மக்களால் அறியப்படவேண்டுமா என்பதும் அமைச்சரின் ஐயம்.” கிருஷ்ணன் “எப்படியானாலும் நாங்கள் அஸ்தினபுரியின் கிழக்கு வாயில் வழியாகத்தானே செல்லமுடியும்? அரசப்பெருவீதிகளை தவிர்க்கவும் முடியாது. அணித்தேர்களில் செல்வதனால் அறியப்படும் மந்தணம் ஏதுமில்லை” என்றான். கனகர் “அவ்வாறெனில் ஆகுக!” என்றார்.

நடைபாதையில் செல்லும்போது சற்று தொலைவில் கங்கையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றாலயங்களை கிருஷ்ணன் நோக்கினான். முந்தைய மழைக்காலத்தில் கல்மேல் படர்ந்த பசும்பாசிப்படலம் கருகி முடிப்பரவல் போல தெரிய அவை மேலே எழுந்த ஆலமரத்தின் சருகுகள் பொழிந்து மூடியிருக்க தனித்து நின்றிருந்தன. அம்பை ஆலயத்தின் உள்ளே சிற்றகலின் தனிச்சுடர் அசைந்தது. செம்பட்டாடை சுற்றி வெள்ளியால் ஆன விழிகளும் செவ்விதழ்களுமாக பலிபீடத்திற்கு அப்பால் அம்பாதேவி அமர்ந்திருந்தாள். மறுபக்கம் மேலும் சிறிய ஆலயத்தில் தொழுத கைகளுடன் நிருதனின் சிறிய சிலை. அங்கும் சிறிய விளக்குகள் எரிந்தன.

“அவை அம்பையின் ஆலயமும் அணுக்கனின் ஆலயமும் அல்லவா?” என்றான் சாத்யகி. “கதைகளில் கேட்டிருக்கிறேன்.” கிருஷ்ணன் “ஆம்” என்றான். “நான் சென்று அணுக்கனைத் தொழுது மீள விழைகிறேன்” என்றான் சாத்யகி. “நாம் அரசவிருந்தினர். அரசகுடிகளின் தெய்வங்கள் அல்ல அவை. படகுக்காரர்களின் தெய்வங்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். பலராமர் உரக்க “விடிந்துவிட்டதே, நாம் எப்போது உணவுண்போம்?” என்றார். “நமது தேர்கள் விரைவு கூடியவை. ஒன்றரை நாழிகையில் நாம் நகரை அடையமுடியும்” என்று கிருஷ்ணன் சொன்னான். “மேலுமொரு நாழிகையில் நாம் அரண்மனையை அடையலாம்.” பலராமர் “சொல்லியிருந்தால் நான் படகிலேயே சற்று உணவருந்தியிருப்பேன்” என்றபடி தன் தேரில் ஏறிக்கொண்டார்.

தன் தேரில் ஏறிய கிருஷ்ணன் “இளையோனே, நீரும் என்னுடன் வாரும்” என்றான். பொற்தேரில் கிருஷ்ணன் அருகே ஏறி நின்ற சாத்யகி இளவெயில் பரந்துகிடந்த அஸ்தினபுரியின் சாலையை நோக்கி “நாம் சென்று சேர்கையில் அஸ்தினபுரியின் காலை முதிர்ந்திருக்கும். நகர்மக்களனைவரும் தெருக்களில் இருப்பார்கள்” என்றான். “ஆம், அவர்களின் தேரில் சென்றால் உச்சிவெயில் எழுந்தபின்னர்தான் செல்வோம்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி “நாம் நேற்றிரவே வந்திருக்கலாம். மூத்தவரை மாமரச்சோலையில் இறங்கத் தூண்டியதே தாங்கள்தான். அது ஏன் என இப்போது தெரிகிறது” என்றான்.

அஸ்தினபுரியின் சாலை கருங்கற்பாளங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதன்மேல் துடிதாளமென குளம்புகள் ஒலிக்க கிருஷ்ணனின் தேர் விரைந்தது. அதைத் தொடர துவாரகையின் தனிப்புரவிக் காவலர்களாலேயே முடியவில்லை. கனகரின் தேர் சற்று நேரத்திலேயே பிந்திவிட்டது. வெயிலில் தேர்கள் எழுப்பிய புழுதி பொற்திரையென சுருண்டது. சாலையோரக் காடுகளுக்குள் குளம்பொலி எதிரொலித்தது. சாலையைக் கடந்த மான் ஒன்று அம்பு போல துள்ளி மறைந்தது.

கிழக்குக் கோட்டைவாயிலின் நிழல் வெண்ணிற நடைவிரிப்பு போல நீண்டுகிடந்த சாலையினூடாக அவர்களின் தேர்கள் சென்றன. அவர்களை நெடுந்தொலைவிலேயே கண்டுவிட்ட காவல்கோபுரத்து பெருமுரசம் முழங்கியது. கொம்புகளும் சங்குகளும் ஒலித்தன. கோட்டைக்காவலன் தன் வீரர்களுடன் வந்து வாயிலில் நின்றிருந்தான். வாயிலில் விரைவை குறைக்காமல் கோட்டைக்குள் சென்றனர். பொன்வண்டுபோல ரீங்கரித்தபடி பறந்து உள்ளே நுழைவதாக சாத்யகிக்கு தோன்றியது.

அவர்களைக் கண்டு வாள்தாழ்த்திய கோட்டைக்காவலனும் படையும் புழுதியால் மூடப்பட்டனர். அவர்களைக் கடந்து தேர்களும் புரவிகளும் சென்றுகொண்டே இருந்தன. புழுதி விலகியபோது தொலைவில் பிற தேர்கள் வருவதற்கான அறிவிப்புடன் எரியம்பு எழுவது தெரிந்தது. அவன் கோட்டைமேல் ஏறிச்சென்று முரசுகளை முழங்கச்செய்து திரும்பிப்பார்த்தான். பொற்புழுதி சுருண்டு சிறகுகள் போல தெரிய பறப்பது போல கிருஷ்ணனின் பொற்தேர் அஸ்தினபுரியின் மைய அரசச்சாலையில் சென்றது. அதற்குப்பின்னால் வெள்ளியாலான பலராமனின் தேர் தெரிந்தது.

கோட்டைக்குள் நுழைந்ததுமே கிருஷ்ணன் தேரின் விரைவை குறைத்தான். முதலில் தேரைப்பார்த்தவர்கள் அதன் பொன்னிறத்தால் திகைப்புண்டு சிந்தை ஓடாமல் நின்று பின் “யாதவன்! இளையயாதவன்! துவாரகைமன்னன்!” என்று கூச்சலிட்டனர். சிலகணங்களில் சாலையின் இருபக்கமும் அஸ்தினபுரியின் மக்கள் கூடி நெரித்து எம்பி துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். “யாதவர் வாழ்க! துவாரகைத் தலைவன் வாழ்க! வெற்றித்தலைவன் வாழ்க!” என்ற ஒலிகள் எழும்தோறும் மாளிகைகளில் இருந்தும் அங்காடிகளில் இருந்தும் மக்கள் சாலைகளை நோக்கி ஓடிவந்தனர். சாலையோரங்களில் முகங்கள் பெருகி நெரிந்தன.

இல்லங்களின் அறைகளுக்குள் இருந்து பெண்கள் குழந்தைகளுடன் பாய்ந்துவந்து உப்பரிகைகளில் நிறைந்தனர். குழந்தைகள் கூவியார்த்தபடி தெருக்களுக்கு ஓடிவந்தன. வாழ்த்தொலிகள் பெருகப்பெருக அவை கரைந்து ஒற்றைப்பெருமுழக்கமாக ஆயின. தலைப்பாகைகளையும் மேலாடைகளையும் தூக்கி வீசி துள்ளிக்குதித்தனர். களிவெறிகொண்ட முகங்களை சாத்யகி நோக்கியபடியே வந்தான். ஒவ்வொன்றும் வெறித்த விழிகளும் திறந்த வாயுமாக கந்தர்வர்களை போலிருந்தன.

மேலும் செல்லச்செல்ல செய்திபரவி பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றி வாயிலுக்கு கொண்டுவந்துவிட்டனர். இல்லங்களின் பூசையறைகளில் இருந்து தெய்வங்கள் சூடிய மலர்மாலைகளை பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து மலர்களாக ஆக்கி உப்பரிகைகளிலிருந்து அவன்மேல் வீசினார்கள். சாலையோர ஆலயக்கருவறைகளுக்குள் புகுந்த சிலர் அங்கே தெய்வங்களுக்கு சூட்டப்பட்டிருந்த மாலைகளை அள்ளி மலர்களாக ஆக்கிக்கொண்டுவந்து வீசினர். சாலைகளில் பூத்து நின்ற மரங்கள் மேல் ஏறி உலுக்கி மலர் உதிரச்செய்தனர்.

முதலில் களிவெறிகொண்டவர்கள் யாதவர்கள் என்பதை சாத்யகி பார்வையிலேயே புரிந்துகொண்டான். ஆனால் பின்னர் அத்தனைபேருக்கும் அந்த அக எழுச்சி பரவியது. தொடக்கத்தில் திகைத்தவர்கள் போல நோக்கி நின்ற காவலர்களும் ஷத்ரியர்களும் கூட பின்னர் முகம் மலர்ந்து படைக்கலங்களைத் தூக்கி வாழ்த்துகூவத் தொடங்கினர். அவன் பொற்தேரில் வராமலிருந்தால் அந்த வரவேற்பு இருக்குமா என்று எண்ணிய சாத்யகி அந்த எண்ணத்தை உடனே கடிந்து விலக்கினான். ஆனால் மீண்டும் அந்தப் பொற்தேர் ஒரு பெரிய அறிவிப்பாக பதாகையாக விளங்குவதாகவே தோன்றியது அவனுக்கு.

கிருஷ்ணன் தன் மேல் விழுந்த மலர்களை எடுத்து திரும்ப பெண்களை நோக்கி வீசினான். அவர்கள் நாணமும் உவகையுமாக கூச்சலிட்டனர். ஒருகணத்தில் தன் சக்கரத்தை எடுத்து வீசினான். அது வெள்ளிமின்னலென சென்று மேலேறி அங்கே நின்றிருந்த இளம்பெண் ஒருத்தியின் கூந்தலில் இருந்த மலரைக் கொய்து அவனிடம் திரும்பி வந்தது. பெண்கள் கூச்சலிட்டு துள்ளிக்குதித்தனர். மீண்டும் மீண்டும் என்றனர். மீண்டும் சக்கரம் சென்று ஒருத்தியின் மேலாடை நுனியை வெட்டிக்கொண்டு வந்தது. சிறுவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு துள்ளிக்குதிக்க ஒரு சிறுவனின் தலைமயிரை கொய்து வந்தது.

சாத்யகி உடல் கூச சற்றே பின்னகர்ந்தான். அது நாணிலாமை என்றே அவனுக்குத் தோன்றியது. அத்தனை வெளிப்படையாக பெருவீதியில் நின்று பெண்களுடன் குலவுகிறான். அவர்களுக்காக கழைக்கூத்தாடி போல் வித்தை காட்டுகிறான். முதிரா சிறுவனைப்போல் விளையாடுகிறான். ஆனால் அப்படி நாணத்தை இழந்த ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் போல. ஆனால் அதுவும் உண்மை அல்ல. நாணிலாதவனை குலப்பெண்கள் அருவருக்கிறார்கள். அந்த அருவருப்பு எழாமல் நாணத்தை இழக்க முடிந்தவன் அவர்களின் அரசன். சாத்யகி அவ்வெண்ணங்களை நோக்கி புன்னகை செய்துகொண்டான்.

அவன் பெண்முகங்களையே நோக்கிக்கொண்டு சென்றான். நாணிலாதவையாகவே அவையும் இருந்தன. சிவந்த விழிகள். குருதி கொப்பளித்து துடித்த முகங்கள். செவ்விதழ்கள் நீர்கொண்டு மலர்ந்திருந்தன. கைகள் வீசி அலையடித்தன. முலைக்கச்சைகள் நெகிழ்ந்து மென்தசைவிளிம்புகள் ததும்பின. அங்கே பிற ஆண்களென எவருமில்லாததுபோல. அவனுடன் ஒவ்வொருவரும் தனித்திருப்பதுபோல. பெண்களின் நாணமென்பது ஓர் ஆடை. ஆடையென்பது கழற்றப்படுகையில் மேலும் பொருள்கொள்வது. என்ன வீண் எண்ணங்கள் இவை!

பாரதவர்ஷம் முழுக்க பெண்களின் அகக்காதலனாக ஒருவன் ஆனதெப்படி? வெற்றி எனலாம். கல்வி எனலாம். நிகரற்ற கலைத்திறன் எனலாம். சூதர்சொற்கள் எனலாம். அவற்றுக்கும் அப்பாலுள்ளது பிறிதொன்று. இக்கருமணி ஒளியுடல். இந்த நீள்முகம். குழந்தையுடையவைபோன்ற நீலச்சுடர்விழிகள். வாடாமலரெனும் புன்னகை. அவற்றுக்கு அப்பால் ஒன்று. இதோ என்னருகே நிற்பவனுக்கு வயதாவதே இல்லை. இவன் முதிரா சிறுவன். அனைத்தறிந்தும் ஒன்றுமறியாதவனாகும் கலையறிந்தவன். அன்னையரும் கன்னியரும் சிறுமியரும் விழையும் தோழன். இதோ அத்தனை முதிரா சிறுவர்களும் அவனை தங்களில் ஒருவராகவே காண்கிறார்கள்.

அந்த அகஎழுச்சி சற்றே அணைந்தபோது சாத்யகி மேலும் தெளிவான சொல்முறையடுக்கை அடைந்தான். இளமையிலேயே சூதர் பாடலெனும் யானைமேல் ஏறிக்கொண்டவன். கம்சரைக் கொன்று மதுராவை அவன் வென்றது ஒரு பெரிய தொடக்கம். அதன்பின் அவனுக்கும் ராதைக்குமான கதைகள் பெருக்கெடுத்தன. இளவேனிலும் இளங்குளிரும் வாழும் நறுமணமலர்ச்சோலை. நிலவு. விழியொளி. குழலிசை. அழியாக்காதலன் ஒருவன். அவன் இசையையும் இதழ்மலர்ந்த நகைப்பையும் கேட்டு பிச்சியான பேரழகி ஒருத்தி. பாடிப்பாடியே மண்ணில் வாழும் காமனாக இசையுருவான கந்தர்வனாக அவனை ஆக்கிவிட்டனர் சூதர். இனி அவன் சக்கரம் இலக்குபிழைக்க முடியாது. இனி அவன் பொருளில்லாத சொற்களை சொல்லமுடியாது. இனி எங்கும் அவன் தோற்கமுடியாது.

அணுவணுவாகவே தேர் முன்னகர முடிந்தது. இருபக்கமிருந்தும் தேருக்கு முன்னால் மக்கள் பிதுங்கி வந்து விழுந்துகொண்டிருந்தனர். காவலர் அவர்களை அள்ளி விலக்கி வழியமைத்தனர். அரண்மனை முகப்பை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்குப்பின்னால் திரண்ட மக்கள்நிரை கிழக்குக் கோட்டைவரை நீண்டிருந்தது. வாழ்த்தொலிகளின் பெருமுழக்கம் எழுந்து அலையலையாக சூழ்ந்திருக்க அரண்மனை முகப்பின் காவல்மாடத்தின் பெருமுரச ஒலி அதில் மூழ்கி மறைந்தது. உள்கோட்டை வாயிலில் காவலர்கள் இருபக்கமும் நிரைவகுத்து நின்று வாள்தாழ்த்தி வணங்கினர்.

முகப்பில் நின்ற காவலர்தலைவன் “அரசே, மீண்டும் தங்களருகே நிற்கும் பேறுபெற்றேன்” என்றான். “சக்ரரே, தங்கள் தோள்புண் வடுவாகிவிட்டதல்லவா?” என்றான் கிருஷ்ணன். திரும்பி சாத்யகியிடம் “என்னுடன் மதுராவுக்கு வந்த படையில் இருந்தார். நாங்கள் தட்சிண கூர்ஜரத்தை சேர்ந்து தாக்கினோம்” என்றான். சக்ரன் “நான் அங்கே புண்பட்டேன். அதை பதக்கமாக என் தோளில் அணிந்திருக்கிறேன்” என்றான். “அரசே, போர் என்றால் என்ன என்று அன்று அறிந்தேன். அடுத்த போரில் தங்கள் காலடியில் நின்றிருக்க அருளவேண்டும்.” கிருஷ்ணன் “நாம் தோளிணைவோம் சக்ரரே” என்றான்.

கோட்டைக்காவலரால் கிருஷ்ணனைத் தொடர்ந்து வந்த பெருங்கூட்டம் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வாழ்த்தொலிகள் எழுந்து கொண்டிருந்தன. அரண்மனையின் பெருமுற்றத்தின் மறுஎல்லையில் பேரமைச்சர் சௌனகரும் இசைச்சூதரும் அணிச்சேவகரும் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியுடன் நின்றிருந்தனர். கிருஷ்ணன் தேரை நிறுத்தி இறங்கியதும் மங்கல இசை முழங்கியதென்றாலும் குரல்முழக்கத்தில் அது ஒலிக்கவில்லை. சௌனகரின் பின்னால் நின்றவர்கள் கைகள் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.

பின்னால் வந்து நின்ற தேரில் இருந்து இறங்கிய பலராமர் உடலை நீட்டி கைகளை நெளித்து “என்ன ஓசை! பேச்சு எதுவுமே கேட்கவில்லை” என்றபின் “கரியவனே, நான் இன்னமும் காலையுணவு அருந்தவில்லை. விரைவில் வந்துவிடலாம் என்று நீ சொன்னாய்” என்றார். “வந்துவிட்டோம் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். “அதை நானும் அறிவேன்” என்றார் பலராமர். “அவர் யார்?” கிருஷ்ணன் “பேரமைச்சர் சௌனகர்” என்றான். ”நன்று” என்றார் பலராமர்.

சௌனகர் தலைமையில் வரவேற்பு அணியினர் அவர்களை அணுகினர். சௌனகர் சொன்ன முகமன் சொற்களும் உதட்டசைவாகவே இருந்தன. கிருஷ்ணன் “அஸ்தினபுரியின் மண் என் அன்னையின் மடி” என்று சொன்னான். சௌனகர் பலராமர், கிருஷ்ணன் இருவர் நெற்றியிலும் மங்கலக்குறியிட்டு வரவேற்றார். அணித்தாலங்களை கைமாற்றிக்கொண்டனர். “தாங்கள் நேற்று இரவே வருவீர்கள் என நினைத்தோம்” என்றார் சௌனகர். அதை வாயசைவால் புரிந்துகொண்ட கிருஷ்ணன் “படகு மெதுவாகவே வந்தது” என்றான். “இளைப்பாறி நீராடி உணவருந்த மாளிகைகள் சித்தமாக உள்ளன” என்றார் சௌனகர்.

பலராமர் உரக்க “எங்கே துரியோதனன்?” என்றார். “இளவரசர் அங்கே படகுத்துறைக்கே வர விழைந்தார் யாதவரே. ஆனால் அரசமுறைமைப்படி...” என சௌனகர் சொன்னதும் பலராமர் உரக்க “அரசமுறைமை எனக்கு பொருட்டல்ல. அவன் உடனே என்னை வந்து பார்க்கவேண்டும்” என்று திரும்பி சௌனகரின் பின்னால் நின்றிருந்த ஏவலனிடம் “இப்போதே அவன் என் முன் வந்தாகவேண்டும். இல்லையேல் அவன் மண்டையை உடைப்பேன் என்று போய் சொல்” என ஆணையிட்டார். அவன் சௌனகரை அரைக்கண்ணால் நோக்கியபின் அவரது விழி அசைந்ததும் திரும்பி விரைந்தான்.

”நான் அவனை அங்கேயே எதிர்பார்த்தேன்... மூடன்” என்று பலராமர் சொன்னார். “உணவு அருந்தியதும் சற்று கதைமுட்ட விழைகிறேன். இந்நகரில் அவனன்றி வேறு எவர் எனக்கு இணையாக?” பெரியகைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தசை திரள முறுக்கியபடி “காம்பில்யத்தில் பீமனுடன் கதைமுட்டினேன். அது நல்ல ஆட்டமாக அமைந்தது. அவனையும் கூட்டிவந்திருக்கலாம்” என்றார். “அவர்கள் விரைவில் இங்கே வந்துவிடுவார்கள் மூத்தவரே” என்றான் கிருஷ்ணன். சாத்யகி புன்னகை செய்தான்.

சௌனகர் “இவர் பெயர் சுநீதர். முன்பு இங்கு அமைச்சராக இருந்த பலபத்ரரின் மைந்தர். இப்போது அவையமைச்சராக இருக்கிறார். தங்களுக்கு இவர் ஆவன செய்வார்” என்றார். ”எனக்கு உடனே உணவு தேவை. ஊனுணவை மட்டுமே நான் உண்பது” என்று பலராமர் சொன்னார். ”காம்பில்யத்தின் உண்டாட்டை நான் தவறவிட்டுவிட்டேன். பெரிய உண்டாட்டு. அவர்கள் ஊனுணவு சமைப்பதில் திறம் கொண்டவர்கள். இங்கு உண்டாட்டு உண்டல்லவா?” சுநீதர் “ஆம், உண்டு யாதவரே, வருக” என்றார்.

அவர்கள் அரண்மனையின் இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டனர். “என்னுடன் வந்துள்ள தேர்களை ஒருங்கு செய்யுங்கள். அவற்றில் நான் அரசருக்கு கொண்டு வந்திருக்கும் பரிசில்கள் உள்ளன” என்றான் கிருஷ்ணன். ”மதுராவிலிருந்து நான் கொண்டுவந்தவை அவை. உங்கள் பேரரசரே திகைக்கும் அரும்பொருட்கள்” என்று பலராமர் உரக்க சொன்னார். “இன்று துவாரகைக்கு வரும் பொருட்களை பாரதவர்ஷத்தில் எங்கும் காணமுடியாது அமைச்சரே.”

சாத்யகி உடல்பதறினான். பலராமரை தடுத்து பின்னால் அழைக்க விரும்பினான். ஆனால் கிருஷ்ணன் அவரை ஊக்குவிப்பதுபோல தோன்றியது. “உங்கள் அஸ்தினபுரிக்கு ஒரு விலை சொல்லுவீர்கள் என்றால் யாதவர்கள் வாங்கிக்கொள்கிறோம்” என்றபின் கைகளை தட்டிக்கொண்டு பலராமர் உரக்க சிரித்தார். சுநீதரும் பிறரும் தயங்கியபடி சிரிக்க பலராமர் திரும்பி “என்ன சொல்கிறாய் இளையோனே? ஒரு விலை? என்ன?” என்றார். கிருஷ்ணன் புன்னகை செய்தான்.

அப்போதும் வெளியே வாழ்த்தொலிகள் எழுந்துகொண்டிருந்தன. அரண்மனையின் அறைகளுக்குள் அந்த முழக்கம் நிறைந்திருந்தது. கிருஷ்ணன் ”பேரரசரின் உடல்நிலை எப்படி உள்ளது?” என்றான். “நலமாக இருக்கிறார்” என்றார் சுநீதர். ”காந்தார இளவரசரும் நலமென எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன். சுநீதரின் விழிகளில் சிறிய மாறுதல் வந்துசென்றது. “அவருக்கும் ஓர் அரிய பரிசை வைத்திருக்கிறேன். அவரை நான் இன்று பின்மதியம் பார்க்க விழைகிறேன்.”

சுநீதர் தயங்கி “மாலையில் அரசருடன் முகம்காட்டல். சிற்றவையில் சந்திக்கலாமென அமைச்சரின் ஆணை” என்றார். “ஆம், அதற்கு முன் நான் காந்தாரரை சந்திக்கவேண்டும். வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான் கிருஷ்ணன். “அவ்வண்ணமே” என்றார் சுநீதர். “நீ சென்று அந்த பாலைவன ஓநாயை சந்தித்துக்கொள் இளையவனே. நான் என் மாணவன் உடல் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன்” என்றார் பலராமர். கிருஷ்ணன் “காந்தாரருக்கு செய்தி அனுப்பிவிடுங்கள் சுநீதரே” என்றான்.

பகுதி 11 : முதற்தூது - 3

கிருஷ்ணனும் பலராமரும் தங்கள் அறையை அடைவதற்கு முன்னரே துரியோதனன் துச்சாதனன் தொடர விரைந்த காலடிகளுடன் ஓடிவந்தான். அவ்வொலியைக்கேட்ட பலராமர் “அவன்தான், அவனுக்குத்தான் காட்டெருமையின் காலடிகள்” என்று முகம் மலர்ந்து திரும்பி நின்றார். வந்த விரைவிலேயே பலராமரின் காலடிகளில் பணிந்த துரியோதனன் “என் பிழை பொறுத்தருள்க ஆசிரியரே, அரசமுறைமையை மீறலாகாது என்றனர். தாங்களும் அரசமுறைமையையே விழைவீர்கள் என்றார் விதுரர். ஆகவே தங்களை கங்கைக்கரையிலேயே வரவேற்காமல் நின்றுவிட்டேன்” என்றான்.

“மூடா, நான் என்றைக்கு முறைமைகளை பேணியிருக்கிறேன்?” என்று சொன்னபடி பலராமர் அவன் தோள்களைப்பற்றித் தூக்கி அணைத்துக்கொண்டார். “தாழ்வில்லை, உன் தோள்கள் இறுகியிருக்கின்றன. மீண்டும் வல்லமை கொண்டவன் ஆகிவிட்டாய். முந்தைய முறை பார்த்தபோது தோல்பை என தெரிந்தாய்” என்றார். “நாளும் நான்கு நாழிகை நேரம் பயிற்சி செய்கிறேன் ஆசிரியரே” என்றான் துரியோதனன். “இன்று தங்களை இங்கே பார்க்க முடிந்தது நான் செய்த நல்லூழ்.”

துச்சாதனன் வந்து பலராமரை வணங்கினான். அவனை வாழ்த்தி தூக்கியபடி “இவன் என்ன உன் நிழலாகவே தெரிகிறான்?” என்றார் பலராமர். “என் நிழலேதான்” என்று துரியோதனன் புன்னகைத்தான். “பார்த்துக்கொள், அந்திவேளையில் நிழல் தன் உருவை கடந்து நீளும்” என்ற பலராமர் “இவனும் கதாவீரன்தான். ஆனால் முறையான பயிற்சி எடுக்கவில்லை. பயின்ற கதாவீரனின் இடையில் இத்தனை தசை இருக்காது” என அவன் விலாவை தொட்டார். “பசுவின் அகிடு போல அல்லவா தொங்குகிறது? உன் ஆசிரியர் யார்?”

துச்சாதனன் “துரோணர்தான்” என்றான். “அவர் எதற்கு கதாயுதம் கற்பிக்கிறார்? நான் இதுவரை எவருக்காவது வில்வித்தை கற்பித்திருக்கிறேனா என்ன?” என்ற பலராமர் கிருஷ்ணனிடம் “வலுவான இளையோர். இவர்கள் இன்னமும் நாடாளவில்லை என்பது துயர் அளிக்கிறது இளையோனே. இவர்களுக்குரிய நாட்டை பாண்டவர்கள் கோரினார்கள் என்றால் அதை நான் ஒப்பமுடியாது. என் மாணவன் அஸ்தினபுரியை அடைவதை பார்த்தபின்னரே நான் இந்நகர் விட்டு மீள்வேன்” என்றார்.

கிருஷ்ணன் புன்னகையுடன் “அனைத்தையும் பேசிவிடுவோம் மூத்தவரே” என்றான். “என்ன பேச்சு? பேசி நிலத்தைப்பெற நாமென்ன வைசியர்களா? கதையைத் தூக்கி மண்டைகளை உடைத்தால் நமது மண் நமக்கு வருகிறது. இதிலென்ன மந்தணமும் மாயமும் உள்ளது? நான் சொல்கிறேன், நாம் இன்றே பேரரசரிடம் பேசுகிறோம். அவர் நிலத்தை அளிக்க மறுத்தால் அவரையே நான் மற்போரிட அழைக்கிறேன்...” என்றார். கிருஷ்ணன் மீண்டும் புன்னகை புரிந்தான்.

துரியோதனன் “தங்களுடன் இன்று களம்பயில முடிந்தால் நான் நிறைவடைவேன் ஆசிரியரே” என்றான். “நான் இன்னமும் உணவருந்தவில்லை. நல்ல முதிர்பன்றி ஊனை உண்ண விழைகிறேன்” என்றார் பலராமர். “இப்போதே ஆணையிடுகிறேன். நீராடி வாருங்கள்” என்று துரியோதனன் சொன்னான். “ஊனை ஊனாகவே சமைக்கச் சொல்லுங்கள். பெருநகர்களில் சமையல்ஞானிகள் ஊனை காய்கறியாக ஆக்குகிறார்கள். காய்கறியை ஊன் போல மாற்றுகிறார்கள். மூடர்கள்” என்றார். துரியோதனன் பணிந்து “முறைப்படி சமைக்க ஆணையிடுகிறேன்” என்றான். “சமைக்காமலிருக்க” என்றார் பலராமர்.

கிருஷ்ணன் நீராடி வருவதற்குள் சாத்யகி தன்னை சித்தமாக்கிக்கொண்டான். பலராமர் ஏற்கனவே சென்றுவிட்டிருந்தார். கூடத்தில் அவன் அமர்ந்திருக்கையில் சுநீதரின் ஏவலன் வந்து செய்தி சொன்னான். “காந்தார இளவரசர் சகுனி அவரது கோடைமாளிகையில் யாதவ அரசரைக் காண ஒப்புவதாக சொல்லியிருக்கிறார் யாதவரே” என்றான் சேவகன். “ஆனால் அரசச்செய்திகள் எதையும் பேச அவர் ஒப்பவில்லை. அரசரின் முன்னிலையிலன்றி அவற்றைப் பேசுவது முறையல்ல என எண்ணுகிறார். இது காந்தாரர்களின் அணுக்கநாடாகிய யாதவபுரியின் அரசருடன் அவர் நிகழ்த்தும் நட்புசாவல் மட்டுமே.” சாத்யகி “நான் அரசரிடம் அறிவிக்கிறேன்” என்றான்.

கிருஷ்ணன் கிளம்பும்போது இயல்பாக “நீரும் என் தேரில் வாரும்” என்றான். சாத்யகி ஒரு கணம் தயங்கியபின் கிருஷ்ணனின் தேரில் ஏறிக்கொண்டான். அஸ்தினபுரியின் எளிய தேரில் கிருஷ்ணன் ஏறி அமர்ந்ததுமே திரைகளை போட்டுக்கொண்டான். சாத்யகி அருகே அமர்ந்ததும் “அங்கே கணிகரும் இருப்பார்” என்றான் கிருஷ்ணன். சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. “நான் உம்மை அழைத்துச்செல்கிறேன். நீர் ஒருபோதும் வாய்திறந்து ஒரு சொல்லும் சொல்லலாகாது. ஆனால் உம் விழிகளை கணிகர் மீது மட்டுமே நிலைநாட்டியிருக்கவேண்டும். ஒரு கணம் கூட விழிகள் விலகலாகாது” என்றான். “ஆணை” என்றான் சாத்யகி .

சிலகணங்கள் கழித்து கிருஷ்ணன் சிரித்தபடி “யானையை வெல்ல மதத்துளையில் அங்குசம் ஏற்றுவார்கள். கணிகரை வெல்ல அவர் விழிகளை நம் விழிகளால் தொட்டால் போதும்” என்றான். “எவரும் தன்னை நோக்காத இடத்தை தேர்வு செய்து அமர்ந்துகொள்வது அவரது இயல்பு. பெரும்பாலும் அவையின் இருளான இடங்கள். அவர் அவையில் இருப்பதை ஒவ்வொருவரின் ஆழமும் உணர்ந்திருக்கும். ஆனால் விழிகளும் உள்ளமும் அவையில் எழும் சொற்களில் மிக விரைவில் அவரை மறந்துவிடும். இல்லாமல் இருப்பதே அவரை வல்லமைகொண்டவராக ஆக்குகிறது.”

“அதிலும் அவரது நுட்பம் மிகக்கூரியது. அவையில் மறைந்து அமர்பவர்கள் எவரும் நோக்காத எளியவர்களுடன் அமர்வது வழக்கம். ஆனால் அவை முதல்வர்கள் அவர்களை நோக்கி பேசத் தொடங்கினால் அவையின் விழிகளனைத்தும் அவர்கள் மேல் திரும்பிவிடும். அதன்பின் தப்ப முடியாது. ஆகவே கணிகர் அவைமுதல்வர் எவரோ அவருக்கு நேர்பின்னால் நிழலிருளுக்குள் அமர்ந்துகொள்கிறார். அவை முதல்வர் அவரை பார்க்கவேண்டுமென்றால் தலையையும் உடலையும் நன்றாக திருப்பவேண்டும். அது அடிக்கடி நிகழ்வதில்லை” என கிருஷ்ணன் தொடர்ந்தான்.

“அவையின் முழுஉள்ளமும் அவைமுதல்வர் மீதும் அவரால் நோக்கப்படுபவர்கள்மீதும்தான் இருக்கும். அத்துடன் மொத்த அவையும் அவைமுதல்வரை நோக்கி அமைந்திருக்குமென்பதனால் கணிகர் அவர் விழைவதைப் பேச எழும்போது அவையின் அனைத்துவிழிகளையும் தன்மேல் ஈர்த்துக்கொள்ளவும் முடியும். அப்போது அவர் புதிதாகப்பிறந்தெழுபவர் போலிருப்பார். அவையில் அப்படி அவர் தோன்றுவதே அதிர்ச்சியை ஊட்டி அவர் சொல்லும் சொற்களை எடைமிக்கவையாக ஆக்கிவிடும்.”

சாத்யகி அவன் மேலே சொல்ல எதிர்பார்த்து நோக்கினான். “இல்லாமல் இருப்பவரை வெல்லும் வழி நம் நோக்கு வழியாக இடைவிடாத இருப்பை அவருக்கு அளிப்பதே. இளமைமுதலே குறையுடல் கொண்டவர். என்பிலதனை வெயில் என விழிகள் அவரை வருத்தியிருக்கலாம். அவ்விழிகளுக்கு எதிரான சமரையே இன்றுவரை அவர் நிகழ்த்தி வருகிறார். ஏளனம் தெரியும் விழிகளை தன் மேல் இருந்து தவிர்க்க அவர் கண்டடைந்த வழி அவற்றை வஞ்சமும் வெறுப்பும் கொண்டவையாக மாற்றிக்கொள்வதே. பிறரது கடும் வெறுப்பின் முன் நச்சுமிழும் நாகத்தின் பேராற்றலை அடைகிறார். நம் விழியால் அவரை புழுவாக ஆக்குவோம்” என்றான் கிருஷ்ணன்.

சாத்யகி சில கணங்களுக்குப்பின் “அவரை நீங்கள் நோக்கும்போது உங்கள் விழிகளில் எதை நிறைப்பீர்கள்?” என்றான். கிருஷ்ணன் “இளையோனே, எவரை நான் நோக்கினாலும் என் விழிகள் ஒன்றையே சொல்கின்றன, உன்னை நான் அறிவேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அதை உணர்கிறார்கள். கணிகர் கூசி தன்னுள் சுருங்கிக்கொள்கிறார்” என்றான்.

காந்தாரமாளிகை முன்பு தேர் நின்றதும் மாளிகை செயலகன் வந்து வணங்கி இளவரசர் சகுனி மேலே தன் தென்றலறையில் காத்திருப்பதாக சொன்னான். அவர்களை வழிகாட்டி அழைத்துச்சென்றான். பெரிய மரமாளிகை முழுக்க காந்தாரத்தின் பொருட்களால் ஆனவையாக இருந்தன. ஒட்டக எலும்பால் பிடியிடப்பட்ட காந்தாரத்து வேல்கள், செங்கழுகின் இறகுகளால் அணிசெய்யப்பட்ட தலைக்கவசங்கள், ஈச்சையோலையால் செய்யப்பட்ட சிறிய பெட்டிகள். முகப்புச்சுவரில் இருந்த பாலைவனநரியின் பாடம்செய்யப்பட்ட தலையின் விழிகளுக்கு செந்நிறமான பவளங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

ஓசையெழுப்பாதபடி தடித்த பலகையால் செய்யப்பட்ட படிகளின் வழியாக அவர்கள் ஏறி மேலே சென்றனர். ஏவலன் உள்ளே சென்று வரவறிவித்தபின் வெளிவந்து உள்ளே ஆற்றுப்படுத்தினான். உள்ளே நுழைந்ததும் சாத்யகி மெல்லிய குளிர் ஒன்றை உணர்ந்தான். கங்கைக்கரைக் காற்று சாளரங்கள் வழியாக வந்தமையால் அவ்வறை குளிர்ந்துதான் இருந்தது. ஆனால் அந்தக்குளிர் உள்ளத்தால் அறியப்பட்டது என அவனுக்குத்தெரிந்தது. திரௌபதியின் மணநிகழ்வில் அவன் சகுனியை பார்த்திருந்தான். அப்போது அவர் நோயுற்ற முதியவராக மட்டுமே தோன்றினார். அங்கே அவர் பிறிதொருவராக இருந்தார்.

சகுனி மெல்ல எழுந்து “யாதவரை வரவேற்கிறேன். தங்கள் மாநகர் குறித்த அத்தனை செய்திகளையும் அறிவேன். ஒவ்வொரு நாளும் அதைப்பற்றிய ஒற்றர்கூற்று வந்துகொண்டிருக்கும் எனக்கு.... ஒருநாள் அதை பார்க்கவேண்டுமென விழைவதுண்டு. இன்று தங்களை சந்தித்தது அந்நகரையே கண்டதுபோலிருக்கிறது” என்றார். “தங்களை துவாரகைக்கு வரவேற்கிறேன் காந்தாரரே. துவாரகையும் யாதவரும் தங்கள் வருகையைப் பெறும் பெருமையை அடைய அருள்புரியவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.

அறைக்குள் கணிகர் இருப்பதை அதன்பின்னர்தான் சாத்யகி கண்டான். கிருஷ்ணன் சொன்னதுபோல அது மிகநுட்பமாக தேர்வுசெய்யப்பட்ட இடம் என தெரிந்தது. சகுனியைப் போன்ற ஒருவர் முன்னால் நிற்கையில் எவரும் பார்வையைத் திருப்பி அங்கே நின்ற உடல் ஒடிந்த குள்ளமான மனிதரை நோக்கப்போவதில்லை. கணிகர் “யாதவப்பேரரசரின் வருகையால் காந்தாரம் மகிழ்கிறது. காந்தாரக்குடிகளும் பெருமைகொள்கிறோம்” என்றார். கிருஷ்ணன் “தங்கள் இன்சொற்கள் இன்று தெய்வங்கள் அளித்த நற்கொடை கணிகரே” என்றான்.

முகமன்களுக்குப்பின் அவர்கள் அமர்ந்துகொண்டனர். சகுனி கிருஷ்ணனுக்கும் சாத்யகிக்கும் இன்கடும்நீர் கொண்டுவரும்படி ஏவலனுக்கு ஆணையிட்டார். “நான் துவாரகைபற்றிப் பேசுவது என் இயலாமையினாலேயே” என்றார் சகுனி. “நான் காந்தாரபுரியை கட்டத்தொடங்கியது நாற்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னர். வலுவான ஒரு கோட்டை கட்டவேண்டுமென எண்ணினேன். அதை இன்னும்கூட என்னால் முடிக்கமுடியவில்லை.” கிருஷ்ணன்  “ஆம், அதைப்பற்றி நானும் அறிவேன். நானே வந்து அக்கோட்டையை பார்த்தேன்” என்றான். சகுனி திகைப்புடன் “உண்மையாகவா? காந்தாரபுரிக்கு சென்றீரா?” என்றார்

“ஆம், வணிகர்குழுவுடன் சென்று நோக்கினேன்” என்றான் கிருஷ்ணன். “அது ஏன் முடிக்கப்படவில்லை என்று பார்ப்பதற்காகவே சென்றேன்.” சகுனி அவன் சொல்லப்போவதென்ன என்று நோக்கினார். “கற்களை நெடுந்தொலைவிலிருந்து கொண்டுவருகிறீர்கள். கற்களைக் கொண்டுவர இங்கே ஆறுகளையே பயன்படுத்துகிறோம். அங்கே நீரோடும் பேராறுகள் இல்லை. புதைமணல்பாதையில் எடைமிக்க வண்டிகள் வருவதும் கடினம். கல்லுக்காகவே பெரும்நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. கல்லைக்கொண்டுவரும் வண்டிகள் செய்யப்பட்டன. கல்வரும் வழி முழுக்க பாலைமணல்மேல் கற்பாதை அமைக்கப்பட்டது.”

“வேறுவழியில்லை. பாலையில் தொலைவிலுள்ள மலைகளில் மட்டுமே பெரிய கற்கள் உள்ளன. ஆற்றங்கரைக் கற்கள் உருளைவடிவு கொண்டவை. எங்கள் நிலம் நிலையற்று உருமாறும் மணலால் ஆனது. ஆகவே அடித்தளம் உறுதியாக நிற்பதில்லை. உருளைக்கற்களால் ஆன எங்கள் அரண்மனைகள் அனைத்துமே ஒருதலைமுறைக்குள் விரிசல் விட்டுவிடுகின்றன. எத்தனை ஆழமாக அடித்தளம் தோண்டினாலும் அதுவே நிலை” என்றார் சகுனி. கிருஷ்ணன் “ஆம், பாலைநிலம் முழுக்க இந்த இடர் உள்ளது. ஆகவேதான் முற்காலத்தில் தோல்கூடாரங்களை மட்டுமே அமைத்து வாழ்ந்தனர். அல்லது பாறைகளைக் குடைந்து குகைகளை அமைத்தனர்” என்றான்.

“நான் சிற்பிகளிடம் கலந்தபின் சோனகர்நாட்டிலிருந்து பெரியகற்களை வைத்து கட்டும் முறையை கொண்டுவந்தேன்” என்று சகுனி தொடர்ந்தார். “ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பெருங்கற்கள் தங்கள் எடையாலேயே ஒன்றை ஒன்று கவ்விக்கொள்ளும். கல்லால் ஆன தெப்பம் போல மொத்தக்கட்டடமும் மணல் மேல் மிதந்து கிடக்கும். அடித்தளம் அசைந்தால் அக்கற்கள் நகர்ந்து அவ்வசைவை வாங்கிக்கொள்ளும். கட்டடம் இடிந்துவிடாது. சோனகர்நாட்டில் அப்படி கட்டப்பட்ட மாபெரும் சதுரக்கூம்பு வடிவக் கட்டடங்கள் மணல்மேல் மிதந்து நின்றிருப்பதாக சோனகச் சிற்பிகள் சொன்னார்கள்.”

“காப்திகரின் கலை அது, மானுடகுலம் காணாத மாபெரும் சதுரக்கூம்பு கோபுரங்களை தங்கள் அரசர்களுக்காக அவர்கள் அமைத்துள்ளார்கள்” என்றான் கிருஷ்ணன். “அந்த முறையிலேயே நீங்கள் காந்தாரத்தை அமைக்கமுடியும். ஆனால் கல்லைத்தேடிச்சென்றது மட்டுமே பிழை. அங்கேயே மிக அருகிலேயே கல் உள்ளது. அதை தேடியிருக்கவேண்டும்.” சகுனி அவன் சொல்லட்டும் என நோக்கினார். “பாலைநிலத்துக்கு அடியில் பெரும்பாறைவெளி இருக்கும். அதை உங்கள் ஆறு அரித்துச்சென்ற தடத்திலேயே காணமுடியும்.”

சகுனி “மிக ஆழத்தில்” என்றார். “எத்தனை ஆழமாக இருந்தாலென்ன? தோண்டி உள்ளே சென்று வேண்டிய வடிவில் கல்லை வெட்டியபின் மணலைப்போட்டு குழியை மூடியே கற்களை மேலே எடுத்துவிடமுடியுமே? எந்த ஆற்றலும் தேவையில்லை” என்றான் கிருஷ்ணன். “நான் காற்றை பயன்படுத்தினேன். நீங்கள் எடைதூக்க மணலை பயன்படுத்தியிருக்கலாம்.” சகுனி சிலகணங்கள் திகைத்த விழிகளுடன் நோக்கியபின் முகம் மலர்ந்து “உண்மை... மிக எளியது. ஆனால் இது தெரியாமல் போய்விட்டது” என்றார்.

“மிக எளிய ஒரு வழி அருகே உண்டு என்பதை அறிஞர்கள் உணர்வதில்லை. குழந்தைகள் கண்டுபிடித்துவிடும்” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆகவே நான் எப்போதும் குழந்தையாக இருக்கவும் முயல்கிறேன்.” சகுனி சிரித்தபடி “ஆம், உமது தலையில் அந்த மயிற்பீலியைக் கண்டதுமே எண்ணினேன். முதிர்ந்த ஆண்மகன் எவனும் அதை சூடிக்கொள்ளமாட்டான்” என்றார். “நான் முதிரப்போவதில்லை காந்தாரரே” என கிருஷ்ணன் சிரித்தான்.

சாத்யகி அவர்களின் உரையாடலைக் கேட்டபடி கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தான். கணிகர் அவனுடைய பார்வை பட்டதும் முதலில் சற்று திகைத்தார். அவரது உடலிலேயே அந்தப்பார்வைபடும் உணர்வு தெரிந்தது. அவரது உடல்மேல் ஒரு சிறு பொருள் வைக்கப்பட்டு அது கீழே விழாமல் அவர் அமர்ந்திருப்பதுபோல. அவன் விழிகளை அவர் முதல்முறைக்குப்பின் சந்திக்கவில்லை. தன் விழிகளை பக்கவாட்டில் திருப்பி கிருஷ்ணனை நோக்குவதுபோலவும் பின்னர் சகுனியை நோக்குவதுபோலவும் நடித்தார். அது நடிப்பு என்றும் அவரது உள்ளம் முழுக்க தன் மீதுதான் இருக்கிறது என்றும் சாத்யகிக்கு தெளிவாகவே தெரிந்தது.

சற்றுநேரம் கடந்ததும் அவரது உடல் மெல்ல அசைந்தது. அந்தச் சிறுபொருளின் எடையை தாளமுடியாமல் தோள்மாற்றிக்கொள்வதுபோல. அப்போதும் அவர் சாத்யகியை பார்க்கவில்லை. அத்தனை பிடிவாதமாக அவர் இருப்பதே அந்தப்பார்வை அவரை எந்த அளவுக்கு துன்புறுத்துகிறது என்பதைக்காட்டுகிறது என எண்ணினான். அவர் பெருமூச்சு விட்டார். மடித்துவைக்கப்பட்ட கால்களை மெல்ல நீட்டிக்கொண்டார். அவன் அதன்பின்னர்தான் அவரது கைவிரல்களை பார்த்தான். வலது கையின் இரு விரல்களில் சிறிய பாசி மணி ஒன்றை இறுகப்பற்றியிருப்பதுபோல வைத்திருந்தார்.

அது அவரது உள்ளமா என சாத்யகி எண்ணிக்கொண்டான். அதைநோக்கியதும் அந்தப்பிடி இறுகுவதை கண்டான். பின் அவர் அறியாமலேயே இரு விரல்களும் நெகிழ்ந்தன. மீண்டும் பெருமூச்சுடன் அவர் அசைந்து அமர்ந்தார். அவர் தன் விழிகளை சந்தித்தார் என்றால் அதுவே அவரது தோல்வி என சாத்யகி எண்ணினான். அதை அவரும் அறிந்தமையால்தான் முழு உளஆற்றலாலும் அதை தவிர்க்கிறார். ஆனால் அவரது உச்சஎல்லை என்று ஒன்று வரும். அதுவரை செல்லவேண்டும்.

கிருஷ்ணன் சகுனியை முழுமையாகவே கட்டமைவுக் கலைக்குள் இழுத்துவிட்டதை சாத்யகி உணர்ந்தான். சகுனி அவர் இயல்பாக இருப்பதாக காட்டும்பொருட்டு அந்தப்பேச்சை எடுத்தார். ஆனால் அதற்குள் இருந்த அவரது உண்மையான ஆவலை உணர்ந்து அதைத்தொட்டு விரித்து விரித்து வலையாக்கி அவரை முழுமையாகவே அதில் சிக்கவைத்துவிட்டான். காந்தாரநகரியை எப்படி கட்டி எழுப்பலாமென்று அவன் விரிவாக சொல்லிக்கொண்டிருந்தான்.

காந்தாரநகரிக்கு மிக அண்மையில்தான் வெண்ணிறக்கற்கள் கிடைக்கும் குன்றுகள் உள்ளன. வெண்கற்களை வெட்டிக்கொண்டுவந்து வெண்மாளிகைகளை அமைக்கலாம். ஆனால் பெரிய கற்களை கொண்டுவருவது கடினம். அதற்கு எளிய வழி உண்டு. அக்கற்களை பெரிய உருளைகளாகவே வெட்டி உருட்டிக்கொண்டு வருவது. மணலில் வருவதனால் அவை மேலும் மெருகேறித்தான் வந்து சேரும். முற்றிலும் உருளைத்தூண்களால் ஆன மாளிகைகள் பெண்மையின் அழகுடன் இருக்கும். அந்த மாளிகைகளால் ஆன உள்நகரை தவளபுரி என அழைக்கலாம். நகரம் என்றால் அதற்கு ஒரு தனித்தன்மை இருக்கவேண்டும். அந்தத்தனித்தன்மையே அதன் பெயருமாக இருக்கவேண்டும்.

கணிகரின் விழிகள் வந்து சாத்யகியைத் தொட்டு விரல்பட்ட புழு என அதிர்ந்து விலகின. சாத்யகி புன்னகை புரிந்தான். கணிகர் வீழ்ந்துவிட்டார். அப்போது அவரை மெல்ல தொடமுடிந்தால் அவர் அழுவார் என்று தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில் கனிவு தோன்றியது. கனிவா என அவனே வியந்துகொண்டான். ஆனால் அவனை மீறியே அக்கனிவு பெருகியது. எளிய மனிதர். பெரும் உளவல்லமையும் கல்வித்திறனும் கொண்டவர். ஆனால் இப்புவியில் மானுடர் உடலால்தான் அறியப்படுகிறார்கள். பிற அனைத்துமே நிலையற்றவை. மாறக்கூடியவை. மாறாதது, திட்டவட்டமானது உடல். அனைவரும் அறிவது அதையே.

உடல் ஓர் அறிவிப்பு. ஓர் அடையாளம். சிதைந்த உடல்கொண்டு பிறந்த இம்மனிதன் தன்னை அறிந்த முதற்கணம் முதல் ‘இல்லை நான் சிதைந்தவனல்ல’ என்று மட்டுமே கூவிக்கொண்டிருக்கிறார். இப்புவியை நோக்கி. விண்ணகத்தேவர்களை நோக்கி. ஆனால் அமைதியாக குனிந்து நோக்கி அத்தனை விழிகளும் அவரது உடலை மட்டுமே நோக்குகின்றன. அவன் சென்று அவரை தொடவிழைந்தான். அவர் தேடுவது எதுவாக இருக்கும்? அழகிய இளம்மனைவியையா? தோள்நிறைக்கும் குழந்தைகளையா? தோள்திரண்ட ஒரு மைந்தன் அவர் கலியை தீர்ப்பானா என்ன? அல்லது அவரை ஞானம் மட்டுமேயாக பார்க்கும் ஒரு மாணவனையா அவர் தேடுவது?

ஆனால் அவரை அணுகவும் முடியாது என சாத்யகி எண்ணிக்கொண்டான். அணுகுவதையே அவர் அவமதிப்பாக எண்ணிக்கொள்ளலாம். மதிப்பையே பிச்சையாக கருதலாம். அவன் தன் உள்ளத்தால் அவரை தழுவினான். அவரது ஒடிந்து மடங்கிய மெல்லிய உடலை தொட்டு வருடினான். அவரது பாதங்களைத் தொட்டு ‘உத்தமரே, உங்களுக்கு பிழையிழைத்த தெய்வங்களை பொறுத்தருளுங்கள்’ என்றான். ஆனால் விழிகளை அவர்மேலேயே நிலைநிறுத்தியிருந்தான்.

"இன்று அவையில் நான் பேசப்போவதை தங்களிடம் சொல்ல விழைந்தேன் காந்தாரரே. ஆனால் அதைப்பற்றி அவையில் மட்டுமே பேசவிழைவதாக சொல்லிவிட்டீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம், அதுவே முறை. நாம் முன்னரே பேசிக்கொண்டு அவைசென்றால் அதை எவ்வகையிலும் மறைக்கமுடியாது. விதுரர் நம் விழிகளைக் கொண்டே அனைத்தையும் அறிந்துவிடுவார். பிறிதொரு நாட்டின் மணிமுடியைக்குறித்து இரு அரசர்கள் பேசிக்கொள்வதை சதி என்றே சொல்வார்கள்” என்று சொல்லி சகுனி புன்னகையுடன் தாடியை நீவினார்.

“உண்மை, ஆனால் நான் தங்களிடம் பேச விழைந்தது காந்தாரத்தைக் குறித்தே” என்றான் கிருஷ்ணன். “அஸ்தினபுரியின் நட்புநாடாகவே என்றும் இருக்கப்போகிறது துவாரகை. காந்தாரமோ மணநாடு. நம்மிருவருக்குள் என்ன உறவு இருக்கமுடியும்?” என்றான் கிருஷ்ணன். “ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மையே. இங்கு நாம் அதைக்குறித்துப் பேசுவது அஸ்தினபுரியின் மணிமுடியைப்பற்றிய பேச்சேயாகும்...” நெய் பற்றிக்கொள்வதுபோல சிரித்தபடி “ஆகவே ஒரு முறை பகடை உருட்டி மீள்வதே நான் செய்யக்கூடியதாக இருக்கும்” என்றான்.

“ஆம், அதைச்செய்வோம்” என்று சகுனி பகடைகளை எடுத்தபடி கைதட்டினார். சேவகன் ஓடிவந்து அவரது புண் கொண்ட காலைத்தூக்கி சிறிய பீடச்சேக்கை மேல் நீட்டி வைத்தான். குறுபீடத்தை எடுத்துப்போட்டு அதன்மேல் மென்மரத்தாலான நாற்களப்பலகையை வைத்தபின் தந்தத்தாலான காய்களும் கருக்களும் கொண்ட பொற்பேழையை எடுத்து வலப்பக்கம் சிறிய பீடத்தின்மேல் வைத்தான். “காந்தாரரின் வலக்கைப் பக்கம் எப்போதும் நாற்களப்பகடை இருக்கும் என நான் அறிவேன்" என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், என்னசெய்வது? இங்கு நான் எப்போதும் தனிமையில் இருக்கிறேன். முப்பத்தேழு வருடங்களாக...” என்று சொன்ன சகுனி தன் பகடையை கையில் எடுத்தா.ர்

“அந்தப் பகடை எலும்புகளால் ஆனது என்று சொன்னார்கள்” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆம், கதைகளை நானும் அறிவேன். ஆனால் இது பாலைவனத்து ஓநாயின் எலும்பு” என்று சகுனி சிரித்தார். “ஓநாய் இறுதிவரை நம்பிக்கை இழக்காது. உயிரின் துளி எஞ்சும்வரை போராடும்” என்றபடி “தொடங்குவோமா?” என்றார். கிருஷ்ணன் பகடைகளை எடுத்து “இது யானைத்தந்தத்தால் ஆனதாக இருக்கவேண்டும் என எண்ணுகிறேன்” என்றான். “நான் யானையை விரும்புகிறேன். காட்டை ஆளும் வல்லமை கொண்டதென்றாலும் அது தனித்திருப்பதில்லை. குலம் சூழும் நிறைவாழ்வு கொண்டது.”

சகுனி தாடியை நீவியபடி “என்ன ஆட்டம்?” என்றார். “ஒருவாயில் கோட்டை” என்றான் கிருஷ்ணன் . சகுனி புன்னகைத்து “நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றபடி கருக்களை சீராகப்பரப்பி நாற்கோண வடிவில் கோட்டையை அமைத்தார். காய்களை எடுத்தபடி “யார் காப்பு?” என்றார். “நீங்கள்தான்” என்றான் கிருஷ்ணன். “நான் மீறல்.” சகுனி உரக்க நகைத்து “பார்ப்போம்” என்றார். அவரது விழிகள் மெல்ல மாறத்தொடங்கின. மெல்ல ஒவ்வொரு காயாக எடுத்து அடுக்கி வைத்தார்.

ஒன்றன்பின் ஒன்றாக காலாட்களும் குதிரைவீரர்களும் அணிவகுத்தனர். வழக்கமாக குதிரைகளையும் வீரர்களையும் வைக்கையில் அவற்றின் எண்ணிக்கையை மட்டுமே ஆட்டக்காரர்கள் நோக்குவார்கள். சகுனி ஒவ்வொரு வீரனையும் குதிரையையும் தனித்தனியாக நோக்கி மலர்தொடுப்பதுபோல இணைத்து இடம் அமைத்தார். காலாள் வளையம் முன்னால் ஒருவன் பின்னால் இருவன் என்ற அமைப்பில் அமைந்தது. முன்னால் நின்ற வீரன் எளிதில் பின்னகர்ந்து பின்னால் நின்றிருக்கும் இரு வீரர்கள் நடுவே நுழைந்துவிடமுடியும் வகையில்.

குதிரைவளையத்திற்குப் பின்னால் யானைகளின் வளையம். அதன்பின்னால் தேர்களின் வளையம். ஒவ்வொரு வளையமும் தனித்தனி தலைவர்களால் நடத்தப்பட்டன. அவர்கள் தனியாக தூதர்களால் இணைக்கப்பட்டனர். புரவிகள் யானைகள் நடுவேயும் யானைகள் தேர்கள் நடுவேயும் பின்வாங்கவும் முன்னால் செல்லவும் வழி விடப்பட்டிருந்தது. அவர்களால் பாதுகாக்கப்பட்ட கோட்டையின் நடுவே ஒருவாயில் மட்டும் திறந்திருந்தது.

வாயிலின் மேல் கோபுரமுகப்பில் ஏழு படைத்தலைவர்கள் நின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக நான்கு தொடர்புகொண்டிருந்தனர். உள்ளே அரண்களுக்குள் மூன்று அமைச்சர்களுக்கு மேல் அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். கோட்டை மேரு வடிவில் இருந்தது. முதல் வீரனில் இருந்து தொடங்கிய மேருவின் உச்சியில் அரசன் தன் பொன்முடியுடன் நின்றிருந்தான். சகுனி அரசனை அமைத்து முடித்ததும் மீண்டும் பொறுமையாக அரசனில் தொடங்கி இறுதி வீரன்வரை தொட்டு கணக்கிட்டார்.

கணிகர் அமைதியிழந்து எழுவதைப்போல அசைந்தார். கிருஷ்ணன் கணிகரை நோக்கி புன்னகைசெய்தபின் மீண்டும் உருவாகி வந்து நின்ற நகரை நோக்கினான். உள்ளே செல்லும் வழி மட்டுமே கொண்டது. வென்றவனும் பின்வாங்காமல் மீளமுடியாதது. சகுனி அதன் அரசனை கீழிருந்து நோக்கியபின் வீரனை மேலிருந்து நோக்கினார். தாடியை வருடியபடி விழிக்குள் அமிழ்ந்து மறைந்ததுபோன்ற நோக்குடன் அதை நோக்கு கூர்ந்தார்.

பின்னர் நிமிர்ந்து கிருஷ்ணனை நோக்கி மெல்லிய புன்னகையுடன் “நீங்கள் களம் அமைக்கலாம் யாதவரே” என்றார். கிருஷ்ணன் “வல்லமை வாய்ந்த கோட்டை காந்தாரரே” என்றான். “எளிமையானது. ஆகவே முடிவில்லாமல் தன்னை மாற்றிக்கொள்ளும் அமைப்புகொண்டது. வல்லமைகளில் முதன்மையானது அதுவே” என்றான்.

பகுதி 11 : முதற்தூது - 4

சகுனி காய்களை நிரப்பியபின் அதுவரை தன்னிலிருந்த இறுக்கத்தை முழுமையாக தளர்த்திக்கொண்டு புண்பட்ட காலை மெல்ல நீவியபடி நிமிர்ந்து அமர்ந்து கிருஷ்ணனை நோக்கினார். அவர்முன் அவரது ஏழடுக்குக் காவல்கொண்ட கோட்டை மெல்லத்திறந்த ஒற்றைவாயிலுடன் அத்தனை காய்களும் ஒன்றுடன்ஒன்று நுணுக்கமாக இணைக்கப்பட்டு ஒற்றை உடலாக மாறி நின்றது. பசித்தது போல அஞ்சியது போல சலிப்புற்றது போல ஒரேசமயம் தோற்றமளித்தது அது.

அதன் அமைப்பை நோக்கி அவரே வியந்துகொண்டார். ஒவ்வொருநாளும் அமர்ந்து ஆடி ஆடி கற்றுக்கொண்ட அனைத்தும் அவரது கைவிரல்களிலேயே குடியேறிவிட்டிருந்தன. காய்தொட்டு எடுத்துக் கோத்து அதை அவர் அமைத்தபோது பெரும்பாலும் சிந்தையற்றிருந்தார். கூடைமுடைவதைப்போல விரல்களே அதை சமைத்தன. இல்லை, சிலந்திவலை. உள்ளிருந்து எழுந்த நச்சு ஊற்றைத் தொட்டு விரல்கள் பின்னிப்பின்னி விரித்தது. மெல்லிய ஒளியால் ஆனது. இருப்பதா இல்லாததா என விழிமயக்குவது. அதன் நடுவே முடிசூடி அவர் அமர்ந்திருந்தார்.

மறுகணம் அவர் மென்மையாக எழுந்து வலுத்துப்பரவிய ஐயத்தை அடைந்தார். உள்ளத்தால் கிருஷ்ணன் பக்கம் சென்று நின்று அதை உடைக்கும் வழிகளை நோக்கினார். ஒவ்வொரு வழியையும் அவர் முன்னரே கண்டு மூடிவிட்டிருந்தார். எத்திசையில் இருந்து கிருஷ்ணன் உள்ளே வந்தாலும் கோட்டைவாயிலில் கொலைப்படை காத்திருந்தது. இருபக்கமும் நண்டின் கொடுக்குகளாக நின்ற இரு குதிரைப்படைகள் வெளித்தெரிந்தவை. ஆனால் அவற்றை வென்று உள்ளே வருபவனை ஏழு வழிகளினூடாக வந்து சூழ்ந்துகொள்ளும் சிறியபடைகள் உள்ளே பெரிய படைகளுக்குள் எப்போதுவேண்டுமென்றாலும் பிரிந்து எழுவதாக கரந்திருந்தன. அவையே மேலும் ஆபத்தானவை.

பெரியபடைகளை அவை பெரிதென்பதனாலேயே எதிரி கூர்ந்து நோக்குவான். அவற்றை நோக்கி அவன் எச்சரிக்கை கொண்டிருப்பதனாலேயே சிறிய உண்மையான கொலைக்கருவிகளை காணமாட்டான். அதை நண்டு என்றனர் சதுரங்கத்தில். நண்டின் பெரிய முன்கொடுக்குகள் எழுந்து அசைய உள்ளே சிறிய கூர்க்கொடுக்குகள் பசித்த வாயிலிருந்து நீண்டிருந்தன. மீண்டும் மீண்டும் அதை உடைக்கும் வழிகளை நோக்கி நோக்கி அவரது உள்ளம் சலித்தது.

கிருஷ்ணன் அவரது கண்களை சிலகணங்கள் நோக்கியபின் புன்னகையுடன் தன் கருக்களை கையில் எடுத்தான். சகுனி அவன் செய்வதை பாராதவர் போல தாடியை நீவிக்கொண்டு சாளரத்தினூடாக வந்த ஒளியை நோக்கியபடி அமர்ந்திருந்தார். கிருஷ்ணன் மிகவிரைவாகவும் உளம்நிறுத்தாமலும் பன்னிரு காய்களை மட்டும் வைத்து ஒரு சிறிய குதிரைப்படையை அமைத்தான். அவனுடைய பெரும்பாலான காய்கள் களத்திற்கு வெளியே வெறும் குவியலாகக் கிடந்தன. தாறுமாறாக அள்ளிவைப்பவன் போல மிகவிரைவிலேயே படையை அமைத்தபின் நிமிர்ந்து கைகளை உரசிக்கொண்டபடி “சித்தமாகிவிட்டேன் காந்தாரரே” என்றான்.

சகுனி நிமிர்ந்து அவனை நோக்கியபோது புருவங்களில் ஒரு முடிச்சு விழுந்து விலகியது. குனிந்து காய்களை நோக்கிய பச்சைவிழிகள் எதையும் காட்டவில்லை. “ம்” என தலையசைத்தார். அவனுடைய உத்தி என்ன என அவருக்குப்புரியவில்லை. தனக்கு ஆடவே தெரியாதென அவரை ஏமாற்ற எண்ணுகிறானா? அவர் அவன் விழிகளை மீண்டும் நோக்குவதைத் தவிர்த்து உதடுகளை இறுக்கியபடி அவன் அமைத்த மிகச்சிறிய படையை மட்டுமே நோக்கினார். அவை ஒருபோதும் அவரது பெரிய கோட்டைக்காவல் அமைப்பை வந்து தொடமுடியாது என தெரிந்தது. என்ன நினைக்கிறான்? ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அப்படி என்ன நினைக்கிறான் என குழம்பவைத்துவிட்டான். அதுவே வெற்றிதான்.

கிருஷ்ணன் பகடைகளை எடுத்து உருட்டினான். மூன்று விழுந்ததும் இரு விரல்களால் மூன்றுகாய்களை நகர்த்திவைத்தான். மூன்று புரவிகள் அம்புபோல நீண்டு கோட்டையின் முகப்பை நோக்கி வந்தன. சகுனி பகடைகளை உருட்டினார். பகடைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மெல்லிய நகைப்பொலியுடன் உருள ஏழு விழுந்தது. ஏழு காய்களைக்கொண்டு என்ன செய்வதென்று அவரால் முடிவெடுக்கமுடியவில்லை. யானையை நெருங்கும் எலி என அவரை நோக்கி வந்த அவனுடைய சிறிய படையை புறக்கணிப்பதுதான் நல்லது. ஆனால் ஆடியாகவேண்டும்.

சிலகணங்களுக்குப்பின் அவர் காய்நீக்கம் செய்தார். காலாட்கள் கிளம்பி கிருஷ்ணனின் குதிரைகளை சூழ்ந்துகொண்டனர். கிருஷ்ணன் நான்கு நகர்வுகள் மூலம் தன் சிறியபடையை மேலும் மேலும் பின்னிழுத்து தன் பின்எல்லை நோக்கி கொண்டுசென்றான். சகுனி கிருஷ்ணனை நோக்குவதை முற்றிலும் தவிர்த்து மீண்டும் பகடை உருட்டி ஆறு நகர்வுகளை அடைந்து மேலும் காலாட்களைக் கொண்டுவந்து கிருஷ்ணனின் குதிரைகளை வளைத்தார். மும்முறை கிருஷ்ணன் பின்னகர்ந்து தன் இறுதி எல்லையை அடைந்தான். அஞ்சிய குழந்தை என அவனுடைய சிறுபடை சுவரோடு ஒட்டி நின்றது.

சகுனி செய்வதற்கு ஒன்றே இருந்தது, அச்சிறு படையை தொடர்ந்து துரத்திச்சென்று வளைக்க முயல்வது. ஆனால் அதுதான் அவன் விரும்புவதா? நாயை விரும்பிய இடத்திற்கு கொண்டுசெல்வதுபோல தன்னை உசுப்பி கூட்டிச்செல்கிறானா என எண்ணிக்கொண்டார். ஆனாலும் அதையே செய்தார். அங்கே தயங்குவது அச்சம்கொள்வதாக ஆகும். அச்சத்தை ஆட்டத்தின் தொடக்கத்தில் வெளிக்காட்டுவது பிழை. எச்சரிக்கையாக இருப்பதும் அச்சத்தையே காட்டும்.

அதேசமயம் தன் காலாட்களை மையப்படையிலிருந்து அறுபட்டுச்செல்ல விடமுடியாது என உணர்ந்த சகுனி தொடர்ச்சியாக காலாட்களை ஒருவருடன் ஒருவர் எனத் தொடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தார். கிருஷ்ணனுக்கு மூன்றும் ஆறும் விழுந்தன. அந்நகர்வுகள் மூலம் அவன் படைகள் முழுமையாக பின்வாங்கி பரவி தனித்தனிக் காய்களாக மாறி ஒடுங்கிவிட்டன. நால்வர் மட்டும் எஞ்சிய அவனுடைய சிறியபடை பொந்தில் இருக்கும் முயலென அமர்ந்திருக்க நரிக்கூட்டம் போல அவரது காலாட்கள் அதைச் சூழ்ந்து நின்றிருந்தனர். முற்றிலும் தனக்குரிய இடம். ஆட்டமே முடியலாமெனத் தோன்றும் தருணம். ஆனால் அத்தனை எளிதாக அவன் தோற்கமாட்டான். அவர் அவனை உள்ளூர அறிந்திருந்தார்.

கணங்களின் எடை மிகுந்தபடியே சென்றபோது சட்டென்று சகுனி உணர்ந்தார். இருவருமே பன்னிரண்டுக்காக காத்திருப்பதை. பன்னிரண்டு விழாமல் சகுனியால் கிருஷ்ணனின் குதிரைப்படையை முழுமையாக வெல்லமுடியாது. ஏனென்றால் அது சிதறியது. ஆனால் பன்னிரண்டை அளிப்பது பகடை உருளும்போதெல்லாம் வந்து விண்ணகத்தை நிறைத்திருக்கும் தெய்வங்களின் கணக்கு மட்டுமே. பகடையை முழுவாழ்க்கையாகவும் முடிவற்ற பிரபஞ்சநாடகமாகவும் ஆக்கும் உள்ளாழத்தை அவர்களே உருவாக்குகிறார்கள்.

பொறுமையை இழக்காமலிருக்க அவர் தன் கைகளால் களத்தை சீரான தாளமாக தட்டிக்கொண்டு காய்களை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தார். அவரது அகம் எதிர்நோக்கித்தவித்த அந்த கணத்தில் கிருஷ்ணன் பன்னிரண்டை அடைந்தான். அவர் ஒருவகையான விடுதலையை அடைந்ததுபோல உடல் தளர்ந்தார். அவனுடைய படை வலையென மாறி சூழ்ந்து கொண்டது. அவரது இருபத்தேழு காலாட்களை வென்று அள்ளிக் குவித்தான் கிருஷ்ணன். பின்பு இயல்பாக பகடையை வைத்தபடி “தாங்கள்” என்றான்.

சகுனி புன்னகையுடன் நிமிர்ந்து அவனை நோக்கியபடி பகடையை உருட்டினார். அவனுடைய ஆட்டமுறையை அவர் கற்றுக்கொண்டுவிட்டார். அவனுடையது குழியானை முறை. மென்மையான மண்சுழலில் சிக்கவைத்து தாக்குவது. இவ்வளவுதான் உன் உத்தியா? நான் இதிலிருந்து என் ஆட்டத்தை ஆடத்தொடங்கியவன். அவர் தாடியை நீவி தலையை அசைத்தபடி காய்களை நீக்கினார். அவனுடைய முறைமையை தான் கற்றுக்கொண்டதை அவன் அறியக்கூடாதென எண்ணினார்.

பின்னர் தன் காலாட்களை நீண்டு செல்ல அவர் விடவில்லை. அவரது படை பெரிய வலை போல ஒட்டுமொத்தமாக மெல்ல விரிந்தது. ஆனால் இம்முறை கிருஷ்ணன் தன் குதிரைகளை அம்புபோல குவித்து விரைந்து அவரது காலாட்படைப்பரப்பின் மையத்தைத் தாக்கி உடைத்து கோட்டையின் வாயில்வரை சென்றுவிட்டான். அவர் தன் முழுப்படைகளையும் அவனை நோக்கிக் குவிக்க நான்குமுறை பகடையுருட்டவேண்டியிருந்தது. அதற்குள் அவரது ஏழுகுதிரைகளையும் ஆறுகாலாட்களையும் வீழ்த்திவிட்டு தனக்கு ஒரே ஒரு குதிரையிழப்புடன் கிருஷ்ணனின் படை மீண்டும் தன் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டது.

சகுனி மெல்ல முனகினார். அவனுடைய தாக்குதலை வல்லூறு முறை என்பார்கள். கூரிய பாய்ச்சலால் ஒற்றைப்புள்ளியை தாக்குவது. அவனுடைய ஆட்டமுறை என்பது எந்த வரையறைக்குள்ளும் அடங்காமல் தொடர்ந்து பலகோணங்களில் தாக்கி தன்னுடைய அணியை உடைத்துக்கொண்டே இருப்பதுமட்டுமே என தோன்றியது. அவனுடைய வலக்கையருகே கிடந்த காய்க்குவியலை ஓரவிழியால் நோக்கினார். எந்த உருவைவேண்டுமானாலும் எடுக்கக்கூடிய பாதாளமூர்த்திகள் போல அவை அங்கே கிடந்தன. அவற்றைப் புரிந்துகொள்ள அவன் உள்ளத்தை புரிந்துகொள்ளவேண்டும். அவனோ தன் உள்ளமென ஒரு குழந்தைவிளையாட்டை உருவாக்கி இக்களத்தில் வைத்திருக்கிறான்.

மேலும் மூன்றுமுறை காய்களை நீக்கியபோது அவர் தன்னுள் கணக்கிட்டுக்கொண்டே இருந்தார். அவனுடைய உள்ளம் நோக்கி செல்ல முயல்வதைப்போல வீண்வேலை ஏதுமில்லை. முடிவெடுக்கப்படாததும் அறியப்படாததும் எல்லையற்ற ஆழம் கொண்டவை. எல்லையின்மையை தன் படைக்கலமாக வைத்திருப்பவன் பேருருக்கொண்டவன். அவர் அவனை நிமிர்ந்து பார்க்க அப்போது அஞ்சினார். அவன் களத்தில் பல்லாயிரம் காய்கள் பெருகலாம். அவை மழைபோல அவரது களத்தில் பெய்து நிறையலாம். எதுவும் நிகழலாமென்பதுபோல அச்சமூட்டுவது பிறிதேது? அதை வைத்து விளையாடுபவன் இவன்.

அவன் களத்தில் முன்வைக்கும் காய்களை மட்டும் நோக்குவதே சிறந்தது என சகுனி கண்டடைந்தார். அது அவரது ஆற்றல் சிதறாமல் தடுக்கும். ஓரிரு ஆட்டங்களுக்குள் அதன் பெரும்பாலான வழிகள் தெரியத்தொடங்கிவிடும். எப்படியானாலும் களம் கண்முன் திடமாக உள்ளது. காய்களும் விழிதொடக்கூடியவையாக உள்ளன. எத்தனை அருவமானதாக இருந்தாலும் உள்ளம் அவற்றில்தான் நிகழ்ந்தாகவேண்டும். அவனை எதிர்கொள்ளும் ஒரே வழி அதுதான். அவன் தன் பேருரு சுருக்கியாகவேண்டும்.

இம்முறை அவனுடைய முன்னகர்வை அவர் இயல்பாக முறியடித்தார். உள்ளே நம்பிக்கை மேலெழுந்தது. மீண்டும் அவனை தோற்கடித்தார். அவன் முழுமையாக பின்வாங்கி தன்னை மீண்டும் தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. அவர் நிமிர்ந்து அவனை நோக்கி புன்னகை செய்தார். நம்பிக்கையிழப்பவனை முழுமையாக தோற்கடிக்க அப்புன்னகை உதவும். அது அவன் நெஞ்சில் நஞ்சாகக் கலக்கும். அவன் கைகள் நடுங்கத்தொடங்கும். அவர் பின்னர் அவனை முழுமையாகவே தவிர்த்து காய்களை நோக்கினார்.

கிருஷ்ணன் தன்னை முழுமையாக கலைத்துக்கொண்டு களத்தில் பொருளற்ற காய்களாக சிதறிக்கிடந்தான். மலைச்சரிவில் விழுந்து உடைந்து பரவிய உச்சிப்பாறை. அவர் தன் குதிரைகளை வெறுமனே நகர்த்தினார். காலாட்களை ஒருவரோடொருவர் வெறுமனே இணையவும் பிரியவும் செய்தார். நீ பொருளற்றவனாக இருக்கையில் நான் உன்னுடன் மோதமாட்டேன், கரியவனே. நீ கொள்ளும் பொருளை மட்டுமே என்னால் கையாளமுடியும். அப்பொருளாக நீ உன்னை குவித்தாகவேண்டும் என்னும்போது நீ என் களத்திற்குள் அடங்கும் எளிய எதிரி. உன் உள்ளமெனும் களமல்ல, என் கையும் கண்ணும் கருத்துமறிந்த இக்களத்தில் நிகழும் போர் இது.

அவனுடைய கருக்கள் மீண்டும் உருவாகி வந்தன. நீர்ப்பாம்பு போல அவை உருக்கொண்டு தயங்கித்தயங்கி நீந்தி வந்து அவரது கோட்டையைத் தாக்கி உடனே கலைந்து மீண்டன. மறுகணமே உருக்கொண்டு அவரது கோட்டைக்காவல்முனை ஒன்றை தாக்கி நான்கு குதிரைகளை சிதறடித்தன. அவர் தாக்க முனைந்தபோது பின்வாங்கி தன்னை தொகுத்துக்கொண்டான். பின்னர் அவன் ஒன்றையே செய்யத்தொடங்கினான். அஞ்சும் கைவிரல் நுனி என அவன் படை வந்து அவர் கோட்டையை தொட்டது. அவரது படை எழுந்ததும் விரைந்து பின்வாங்கியது. மீண்டும் வந்தது.

விளையாடத்தொடங்குபவர்களின் எளிய உத்தி. எதுவும் நிகழாமல் நெடுநேரம் விளையாட இளையோர் அதை கையாள்வதுண்டு. குழந்தைகளின் விளையாட்டு. ஆனால் மீண்டும் மீண்டும் அவன் சலிக்காமல் அதையே விளையாடினான். ஒரு கணத்தில் சகுனியின் அகம் திகைத்தது. இவன் யார், குழந்தையேதானா? ஒரு கோப்பையையும் கரண்டியையும் வைத்துக்கொண்டு சலிக்காமல் விளையாடும் கைக்குழந்தை என அவன் அதையே திரும்பத்திரும்ப செய்துகொண்டிருந்தான். மாறுதல் இல்லை. வளர்ச்சி இல்லை. மீண்டும் மீண்டும் மீண்டும்.

சலிப்படையாதே என சகுனி தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். இது இவன் எனக்கு விரிக்கும் வலையாக இருக்கலாம். என்னை சோர்வடையச்செய்கிறான். என் பொறுமையை அழிக்கிறான். நிலைகுலைந்து நான் கூரிழக்கையில் தன் கரவுக்கொலைக்கருவியை வெளியே எடுப்பான். இப்போது இவனை பொறுமைவழியாகவே வெல்லமுடியும். இவனுடைய வலையில் சிக்கப்போவதில்லை. சிறியமீன்களுக்குத்தான் வலை. பெரியவற்றுக்கு ஒவ்வொரு மீனுக்கும் தனித்தனியாக அமைக்கப்படும் கோடரித்தூண்டில் வேண்டும் கரியவனே!

ஆனால் மெல்லமெல்ல அவர் பொறுமை அழிந்துகொண்டிருந்தது. மானுடனின் அறிவு சற்றேனும் ஒரு புதுமையை எதிர்பார்க்கிறது. உள்ளம் கொஞ்சமேனும் உணர்வை விழைகிறது. ஆனால் அங்கே மீளமீள ஒன்றே நிகழ்ந்துகொண்டிருந்தது. சிறியகுதிரைப்படையாக வந்து தாக்கிச்சென்றவன் அதேபோன்று அதே எண்ணிக்கை குதிரைகளுடன் மீண்டும் வந்தான். மீண்டும் வந்தான். மீண்டும் வந்தான்.

இல்லை, இவன் குழந்தையேதான். முதிர்ந்த உள்ளம் இத்தனை முறை ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாது. அவர் அவன் கண்களை நோக்கினார். அவற்றில் சற்றும் சலிப்பில்லை என்பதைக் கண்டு திடுக்கிட்டு விழிவிலக்கிக்கொண்டார். புதுவிளையாட்டைக் கண்டடைந்த குழந்தையின் உவகை மட்டுமே அவற்றில் இருந்தது. ஒவ்வொருமுறையும் பெருஞ்செயலை செய்யப்போகும் எழுச்சி, செய்வதன் துடிப்பு, செய்துவிட்டதன் களிப்பு. மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். அப்படியே…

தெய்வங்களே, என்ன செய்துகொண்டிருக்கிறேன்! இல்லை முடியாது. இப்படி திரும்பத்திரும்பச் செய்தால் நானும் இயற்கைப்பருப்பொருட்களில் ஒன்றாக ஆகிவிடுவேன். என் சித்தம் இதோ உறைந்து பொருளிழக்கிறது. இதை ஆட என் கைகளே போதும்… என் அறிவு தேவையில்லை. நான் கற்றவை தேவையில்லை. நானே தேவையில்லை. புல்லும் புழுவும் புள்ளும் புன்விலங்கும் செய்யும் அதுவேதான் இதுவும்...

ஒரு கணத்தில் பெருந்திகைப்புடன் அவர் உணர்ந்தார். தன்னைச்சுற்றி அனைத்துமே அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று. பொருளற்ற சுழற்சி. மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். தெய்வங்களே, பொருளென நான் காண்பதெல்லாம் நானே உருவாக்கிக்கொள்வதா என்ன? இப்பொருளற்ற பெருஞ்சுழற்சியை வெல்ல ஒவ்வொன்றிலும் என்னைப்பெய்து நான்தான் வேறுபடுத்திக்கொள்கிறேனா? நானறியும் வேறுபாடென்பது நானெனும் துளி மட்டும்தானா? என்ன எண்ணங்கள் இவை? எப்போது இத்தகைய வீண்சிந்தைகளை அடையத்தொடங்கினேன்? ஏதோ ஆகிவிட்டிருக்கிறது எனக்கு. இவன் தன் மாயத்தால் என் அகத்தை மயக்கிவிட்டிருக்கிறான். விழித்துக்கொள்ளவேண்டும். இப்போதே…

என்னை சலிப்பூட்டிவிட்டான். ஆம், அதுதான் இவன் வழி. சலிப்பை வெல்வது வழியாகவே இவனை கடப்பேன். இந்த வீண்சுழற்சியில் என் கற்பனையை பெய்கிறேன். என் பொருள்கோடலை நிகழ்த்துகிறேன். இந்தக்குதிரைப்படை ஒரு அம்பு. இந்தக் காலாள் ஓர் அலை. குதிரையின் அலை. அலையிலெழும் குதிரை. குதிரையில் ஏறிவருகிறது ஒரு மலர். ஐந்து கைகள் கொண்ட மலர். என் காய்களால் குதிரைகளை மலருக்குள் அடைக்கிறேன். மலரிதழ்களை இறுக்கி மூடுகிறேன். மலர்வட்டம் சிலந்திவலையானதென்ன? சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து வந்து நின்றது. புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டியது. நீண்ட அல்லிவிரித்து கொட்டியபின் நண்டாக மாறி பக்கவாட்டில் நடந்தகன்றது.

இல்லை, இது சரியான வழி அல்ல. இதற்கு முடிவே இல்லை. இது நுரையெனப்பெருகி என்னை சூழ்கிறது. முடிவிலா பொருளிலிச் சுழற்சியை வெல்ல இந்த பொய்ப்பொருள்கொண்ட முடிவிலிச்சுழற்சி என்பது ஒரு நல்ல வழி அல்ல. இது ஆடி முன் ஆடி. முடிவிலியில் நின்றிருக்கிறேன். ஆயிரமெனப்பெருகி. ஆயிரத்திலும் ஒன்றே நிகழும் பொருளிலியின் பொருளாகி. என் சித்தம் திகைத்துச் சலிப்பது ஏன்? வானமென விரிந்த என் சலிப்பின் வெளியில் எப்படி நான் ஒரு அணுத்துளியாக சிறுத்தேன்?

என்ன செய்கிறான்? என்னை மூடன் என எண்ணுகிறான். என் பொறுமையை இழந்து நான் இவன் முன் சிதறுவேன் என திட்டமிடுகிறான். இத்தனை சிறிய உத்தி வழியாக என்னை வென்றுவிடலாமென எண்ணுகிறான் என்றால் என்னை என்னவென்று எண்ணினான்? என் உளத்திறனையும் பயிற்சியையும் இவன் மதிக்கவில்லை. என்னையும் ஓர் எளிய விலங்கென்றே மதிப்பிட்டிருக்கிறான். நான் சுபலமைந்தனாகிய சகுனி. நான் காந்தாரன். அழிப்பவன். அழிவில் திளைத்து முளைத்தெழுந்து விரிந்து கிளையிலைத்தளிர்மலர்மகரந்தமென நிறையும் நஞ்சு நான்.

சினம் கொண்டிருக்கிறேன். சினமே நான் இவனுக்களிக்கும் கடைத்திறப்பு. சினமில்லை. சினத்தை அழுத்தி அழுத்தி இறுக்குகிறேன். குளிரச்செய்கிறேன். கல்லாக்குகிறேன். இதோ நான் கல்லென்றாகிவிட்டிருக்கிறேன். என்னிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. இதோ என் கரங்கள் இதை செய்துகொண்டிருக்கின்றன. என்னை சூழ்ந்திருக்கும் வெளியில் அனைத்தும் எவ்வண்ணம் நிகழ்கின்றனவோ அவ்வாறு பொருளிலாது. மீண்டும் மீண்டும். இதற்கு அறிவு தேவையில்லை. உணர்வுகள் தேவையில்லை. இதில் மிதப்பது. இதில் பொருத்திக்கொள்வது. இதில் இருந்துகொண்டிருப்பது.

இவ்வளவுதான். இதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுதான் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்ன? இக்குழந்தை என் முன் அமர்ந்து ஒருதுளியும் குன்றாத பேருவகையுடன் விளையாடுகிறது. நான் அதன் துல்லியமான ஆடிப்பாவையென அமர்ந்திருக்கிறேன். பொருளற்று ஆடும் குழந்தை நான். குழந்தை அறியும் குழந்தை அவன். குழந்தைகளின் நடுவே குழந்தைகள் மட்டுமே அறியும் வெளியென இக்களம்.

ஆனால் நான் பிரிந்துவிட்டிருக்கிறேன். ஆடுபவனை அப்பால் நின்று செயலற்று நோக்கிக்கொண்டிருக்கிறேன். களம் என்னை மீறி நிகழ்கிறது. என் விழிகளன்றி எதனாலும் அதை நான் தீண்டமுடியாமலாகிவிட்டிருக்கிறது. பேரச்சத்துடன் சகுனி நோக்கினார். அவன் விரியத்தொடங்கினான். நான்கு எட்டு பதினாறு முப்பத்திரண்டு அறுபத்துநாலு நூற்றுஇருபத்தெட்டு இருநூற்று ஐம்பத்தாறு என விரியும் கரங்களின் காடு. நெஞ்சப்பெருவெளி. கண்களின் கடுவெளி.

அவன் கையில் விழுந்தவை அனைத்தும் பன்னிரண்டுகள். அவன் காய்களனைத்தும் இடி முழங்கும் கருமுகில்குவைகளாக மாறின. அவற்றை அள்ளிவந்த புயல் அவரது கோட்டைகளை முழுமையாக சூழ்ந்துகொண்டது. அவர் தன் கோட்டையின் காவலரண்களனைத்தும் நுரைக்குமிழிகளென உடைந்து சரிவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றாக சரிந்தது. ஒன்றுகூட எஞ்சாமல். ஏன் நான் பார்த்திருக்கிறேன்? ஏதாவது செய்யவேண்டும். பகடைகளை உருட்டி பன்னிரண்டுகளாக அள்ளவேண்டும். என் காவலரண்களுக்குச் சுற்றும் புரவிகளை நிறுத்தவேண்டும். என் கோட்டையை நோக்கி முன்னேறும் இப்படைவெள்ளத்தை அரண்கட்டி அடக்கவேண்டும்.

ஆனால் நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன். கனவைக் காண மட்டுமே முடியும். கனவை மாற்றியமைக்கும் வல்லமை அதை காண்பவனுக்கு அளிக்கப்படவில்லை. பதைபதைக்க அதை வெறுமேனே பார்த்திருப்பதனாலேயே அதன் வதை பெருகிப்பெருகி சூழ்ந்து அள்ளிக்கொள்கிறது. கடலில் தனிமீன் என அதில் திளைக்கும் என்னைச்சூழும் ஆயிரம் ஆயிரம் அலையெண்ணப்பெருக்குகளின் நுரைகளை தொடுகிறேன். அத்தனை குளிராக. அத்தனை அமைதியாக. அத்தனை மென்மையாக. அத்தனை நுணுக்கமாக. துளித்துளியென விரியும் பெருங்கடல்.

ஒருகணம் எஞ்சியிருந்தது. சகுனி தன்னை அரக்கிலிருந்து மீட்டுக்கொள்ளும் ஈயென விடுவித்துக்கொண்டு மொத்த ஆற்றலாலும் பகடையை உருட்டி பன்னிரண்டை அடைந்தார். பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு. அவர் அள்ளக்கூடிய அத்தனைகுதிரைகளையும் கொண்டு தன் கோட்டைவாயிலை வெளியே இருந்து மூடினார். மீண்டுமொரு எட்டு. தன் அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும்கொண்டு வாயிலை உள்ளிருந்து மூடினார். உள்ளே அவரது அரசன் நடுங்கியபடி தனித்து அமர்ந்து செவிகூர்ந்தான்.

அவனிடம் எஞ்சியது ஒரு பகடை. அதுவும் பன்னிரண்டு. உச்சங்களில் ஏன் பன்னிரண்டுகள் இத்தனை எளிதாக நிகழ்கின்றன. அவன் படையின் அலை எழுந்து வந்து அவரது கோட்டைவாயிலை அடைந்தது. மீண்டுமொருமுறை அவன் பகடையை உருட்டமுடியும். ஆனால் அவன் பகடைகளை கீழே போட்டுவிட்டு சிரித்தபடி “இனி ஆடியும் பயனில்லை சௌபாலரே. பிறிதொரு களம், பிறிதொரு தருணம்” என்றான்.

நூறுகல் எடையை இறக்கி வைத்ததுபோல சகுனியின் உடல் தளர்வுற்றது. பெருமூச்சுடன் தாடியை நீவியபடி சற்று அசைந்து அமர்ந்து கணிகரை நோக்கினார். கணிகர் ஆட்டத்தை சற்றும் நோக்கவில்லை என்பதை அவரது விழிகளில் கண்டு திகைத்து சாத்யகியை நோக்கினார். அந்த யாதவ இளைஞன் கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தான். அப்படியென்றால் அவரும் அவனும் மட்டுமே அறிந்ததாக ஓர் ஆட்டம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. “ஆம், அடுத்த ஆடல்” என்றார்.

“நிகரியில் முடிந்தது உவகை அளிக்கிறது” என்று கிருஷ்ணன் சொன்னான். “வெற்றியோ தோல்வியோ நம் முதல் சந்திப்பை சோர்வுறச்செய்திருக்கும்.” சகுனி இதழ்களை புன்னகை போல நீட்டி “ஆம்” என்றார். அவர் திரும்பி நோக்க ஏவலன் வந்து காய்களையும் கருக்களையும் எடுத்து பேழையில் அடுக்கத் தொடங்கினான். அவர் வலியுடன் தன் காலை எடுத்து கீழே வைத்து “ஏதேனும் அருந்துகிறீர்களா?” என்றார். “ஆம், எதையாவது” என்றான் கிருஷ்ணன். “தாங்கள் விரும்பியதை அருந்தலாம்” என்றார் சகுனி. கிருஷ்ணன் “நான் விழைவது குருதியை” என்றான்.

சகுனி திடுக்கிட்டு அவனை நோக்க அவன் நகைத்து “அஞ்சிவிட்டீர்களா?” என்றான். “துவாரகையில் திராட்சைமதுவை நாங்கள் குருதி என்போம். முன்பு நான் என் மாதுலர் கம்சரைக் கொன்றபோது அவரது குருதியைக் குடித்ததாக சூதர்கள் பாடத்தொடங்கினர். அதுவே நீடிக்கட்டும் என விட்டுவிட்டேன்... அன்றுமுதல் இப்பெயரை சூட்டியிருக்கிறோம்.” சகுனியும் நகைத்து “ஆம், நல்ல பெயர்தான்” என்றபின் திரும்பி ஏவலனிடம் செம்மது கொண்டுவரச்சொன்னார். அந்த ஒரு கணநேர நடுக்கம் ஏன் வந்தது என வியந்துகொண்டார். அதை வெளிக்காட்டிவிட்டேனா என்ன?

செம்மதுவை அருந்தியதும் கிருஷ்ணன் எழுந்துகொண்டு “மாலை அவையில் சந்திப்போம் காந்தாரரே. அனைத்தும் இந்த விளையாட்டைப்போல எளிதாக முடியுமென நினைக்கிறேன்” என்றான். “முடியவேண்டும். ஏனென்றால் இது நம் வாழ்வல்ல. பாரதவர்ஷத்தின் மக்களின் வாழ்க்கை” என்ற சகுனி திரும்பி கணிகரிடம் “என்ன சொல்கிறீர்?” என்றார். எங்கிருந்தோ மீண்டு வந்து “ஆம் ஆம்” என்றார் கணிகர்.

அவர்கள் கிளம்பியபோது அவர் எழுந்து வாயில்வரை வந்து வழியனுப்பினார். அவர்கள் பேசிச்சிரித்தபடி தேரில் ஏறிக்கொள்வதை வாயிலில் நின்று நோக்கிக்கொண்டிருந்தார்.

பகுதி 11 : முதற்தூது - 5

கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் சாத்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில் அமரச்செய்தார். “பேரமைச்சர் சௌனகர் அரசருடன் அவையமர்ந்திருக்கிறார் யாதவரே. தங்களை அவர் வந்து சந்திப்பார்” என்று சொல்லி கனகர் தலைவணங்கினார்.

“அவையில் என்ன பேசப்படுகிறது?” என்று பலராமர் உரத்த குரலில் கேட்க சாத்யகி திடுக்கிட்டான். கனகர் குழப்பம் கொண்டு கிருஷ்ணனை நோக்கியபின் மெல்ல “அரசவை பேச்சுக்கள்தான் மூத்த யாதவரே” என்றார். “சரி, நடக்கட்டும்” என்று சொன்ன பலராமர் பீடத்தில் கால்மேல் கால்போட்டு கைகட்டி அமர்ந்து உட்குழைவான கூரையை அண்ணாந்து நோக்கி “பெரிய கூடம்... இப்போதுதான் இதைபார்க்கிறேன். பழங்காலத்திலேயே இதை கட்டிவிட்டார்கள் என்பது வியப்பளிக்கிறது” என்றார். “மாமன்னர் ஹஸ்தியின் காலத்திலேயே இதை கட்டிவிட்டனர் மூத்த யாதவரே” என்றார் கனகர். அவர் குரலில் சற்று சிரிப்பு இருப்பதை சாத்யகி உணர்ந்தான்.

“நன்று. அவர் மாமல்லர் என்கிறார்கள். இன்றிருந்திருந்தால் கதைமுட்டியிருக்கலாம் அவருடன்” என்று சொன்ன பலராமர் “நாங்கள் நெடுநேரம் காத்திருக்கவேண்டுமோ?” என்றார். “இதோ அமைச்சர் வந்துவிடுவார்” என்றார் கனகர். “வருவதற்குள் எனக்கு குடிப்பதற்கு இன்கடுநீர் கொண்டுவருக... நெய்யூற்றிய அப்பம் ஏதேனும் இருந்தாலும் கொண்டுவரச்சொல்லும்.” கனகர் தலைவணங்கி உள்ளே சென்றார். சாத்யகி பலராமருக்காக சற்று நாணினான். ஆனால் கிருஷ்ணன் அதை விரும்புவதுபோல தோன்றியது.

பலராமர் இன்கடுநீர் அருந்தி ஏப்பம் விட்டு “நன்று, இவர்கள் சிறப்பாக இன்கடுநீர் அமைக்கிறார்கள். இங்குள்ள அடுமடையனை நாம் துவாரகைக்கு அழைக்கலாம் இளையவனே” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் “அழைப்போம்” என்றான். உள்ளே வந்து வணங்கிய சௌனகர் “அமைச்சர்களின் உரைகளை அரசர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசுமுறைத்தூதர்களை இங்கே இறுதியாக சந்திப்பதே வழக்கம்” என்றார். கிருஷ்ணன் “ஆகுக!” என்றான். பலராமர் “நாங்கள் நெடுநேரமாக காத்திருக்கிறோம். அரசுமுறைச்செய்திகள் அவ்வளவு கூடுதலா என்ன? நான் மதுராவில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைகூட அமைச்சர்களை சந்திப்பதில்லை” என்றார்.

சௌனகர் மீண்டும் தலைவணங்கி “இது தொன்மையான நகரம், மூத்த யாதவரே” என்றார். “ஆம், அதை அறிவேன்” என்ற பலராமர் “நான் வந்திருப்பதை துரியோதனனிடம் சொல்லும். அவனுடைய தந்தையிடமும் அவனைப்பற்றி சில சொற்கள் பேசவிழைகிறேன்” என்றார். “முன்னரே சொல்லிவிட்டேன்” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார். பலராமர் “அவன் நாடாள விழைகிறான். கன்னிப்பெண்கள் காதலனை எண்ணி உருகுவதுபோல அவன் உடல் அழிந்துகொண்டிருக்கிறது” என்று சொல்லி உரக்க சிரித்தார்.

மாளவத்திலிருந்து அதன் பேரமைச்சரின் இளையோன் தேவசர்மன் தூதனாக வந்திருந்தான். அவனுடன் வந்திருந்த எழுவரையும் கனகர் உள்ளே அழைத்து கூடத்தில் அமரச்செய்தார். அவன் கிருஷ்ணனையும் பலராமரையும் நோக்கி தலைவணங்கி முகமன் சொன்னபின் மேற்கொண்டு ஒரு சொல்லும் பேசாமல் அமர்ந்துகொண்டான். அவனுடன் வந்தவர்கள் அதன்பின் யாதவர்களை நோக்கவில்லை.

சிற்றமைச்சர் பிரமோதர் வந்து வணங்கி மாளவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். பலராமர் “இளையோனே, இந்த மாளவர்களுக்கு முன்பு அஸ்தினபுரியிலிருந்து ஒரு யானை அளிக்கப்பட்டது. அன்புப்பரிசு. அற்புதமான பரிசு அது. இதற்குள் அது பதினெட்டுபேரை கொன்றுவிட்டது. அதற்கு கண் தெரியவில்லை என ஒரு சாரார். காது கேட்பதில்லை என இன்னொரு சாரார். அதன் மத்தகத்திற்குள் சனி தேவன் குடிகொள்கிறான் என நிமித்திகர்கள். நான் நேரில் சென்று அதன் மத்தகத்தை அறைந்து அமரச்செய்ய விழைகிறேன்” என்றார். “அதன் பெயர் என்ன தெரியுமா? அஸ்வத்தாமன்... என்ன சொல்கிறாய்” என உரக்க நகைத்தார்.

சாத்யகி தயக்கத்துடன் “இங்கே நகைக்கலாமா மூத்தவரே?” என்றான். “நான் எங்கும் நகைப்பேன். அரசவையே நகைப்புக்குரிய இடம்தானே?” என்றார் பலராமர். ”ஐயமிருந்தால் கேட்டுப்பார் உன் தலைவனிடம்.” கிருஷ்ணன் திரும்பி “இளையோனே, என் சிரிப்பைத்தான் அவர் ஒலிக்கிறார்” என்றான். பலராமர் அதற்கும் வெடித்துச்சிரித்து “ஆம், ஆம்” என்றார். “என் காதலை அவன் ஆடுகிறான்...” சாத்யகியே புன்னகைசெய்துவிட்டான்.

மாளவர்கள் போனபின்னர் சௌனகர் வந்து “தங்களுக்கு அழைப்பு” என்றார். அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர். பலராமர் முன்னால் சென்று “ஹஸ்தினபுரியின் பேரரசரை வணங்குகிறேன். யாதவர்களும் மதுராவின் மக்களும் இந்நாளை நினைத்து பெருமைகொள்ளட்டும்” என்றார். திருதராஷ்டிரர் தலையை ஓசைக்காக திருப்பியபடி “யாதவர்களின் வருகை அஸ்தினபுரிக்கு நலம் நிறைக்கட்டும். அமர்க!” என்றார்.

கிருஷ்ணன் மிக விரிவாக பல சொற்களில் முகமன் சொன்னான். "மாமன்னர் யயாதியின் குருதி நீடூழி வாழும் அஸ்தினபுரியை வாழ்த்துகிறேன். அவரது மைந்தர் யதுவின் குலத்தில் வந்த மக்களின் வாழ்த்துக்கள் அதை மேலும் வலிமையுறச்செய்யட்டும். நிகரற்ற புயம் கொண்ட ஹஸ்தியை வெல்லப்படாத குருவை பேரழகனாகிய பிரதீபரை வணங்குகிறேன். அரியணை அமர்ந்த மதவேழத்தின் காலடிகளை என் சென்னி சூடுக!” சாத்யகி அப்போதுதான் கிருஷ்ணன் சொன்னதில் உள்ள யது பற்றிய குறிப்பை உணர்ந்தான்.

விழியிழந்த மன்னர் அந்த உட்குறிப்பை உடனே உணர்ந்துகொண்டதை சாத்யகி அறிந்தான். “ஆம், நெடுநாட்களுக்கு முன்னரே விலக்கப்பட்ட யாதவகுலம் இன்று மையப்பெருக்கில் வந்து சேர்ந்திருப்பதை எண்ணி நிறைவுகொள்கிறேன். நம் உறவு என்றும் வாழ மூதாதையர் வாழ்த்தட்டும்” என்றார். ”அவர்களின் வாழ்த்துக்களே இங்கே இனிய மூச்சுக் காற்றென நிறைந்துள்ளன. நம் முகங்களின் புன்னகைகளாக ஒளிவிடுகின்றன” என்றான் கிருஷ்ணன்.

மேலும் மேலுமென முகமன்களினாலான ஆடல் சென்றுகொண்டிருக்க சாத்யகி சலிப்படைந்தான். இன்னீரும் இனிப்பும் வந்தன. அவற்றை அவர்கள் உண்டனர். தூதுக்கு வந்த பாவனையே கிருஷ்ணனிடம் இருக்கவில்லை. அதை அறிந்த தோரணை அவர்கள் எவரிடமும் இருக்கவில்லை. அந்த இனிப்புகளை உண்ணவந்தவர்கள் போல அவர்கள் நடந்தனர், நடத்தப்பட்டனர். இனிப்பைப்பற்றி கிருஷ்ணன் ஏதோ சொல்ல அதை பேருவகையுடன் பலராமர் எடுத்துக்கொண்டு மேலே சென்றார்.

திருதராஷ்டிரர் “இந்நாளில் கதைச்சூதர்களின் சிறு குழு ஒன்று இங்கே வந்துள்ளது நல்லூழே” என்றார். “அவர்களை கதைசொல்ல ஆணையிடுகிறேன்.” கிருஷ்ணன் சிரித்து “ஆம், சூதர்கதை இந்த அவையை நிறைக்கட்டும். நாம் அனைவருமே கதைகளின் வழியாக வாழ்பவர்கள் அல்லவா?” என்றான். “கதைகளில் நம் மூதாதையர் நிறைந்திருக்கிறார்கள். அது புகழுலகு. அவர்களின் மூச்சுக்கள் வாழும் ஃபுவருலகு” என்றார் திருதராஷ்டிரர்.

சாத்யகி கதைகேட்பதை வெறுத்தான். ஆனால் இசைச்சூதர் எழுவர் வந்து அவையில் அமர்ந்தனர். சிறிய நந்துனியுடன் முன்னால் அமர்ந்த சூதர் பெரிய செந்நிறத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் ஆரமும் அணிந்து பட்டுச்சால்வை போர்த்தியிருந்தார். பின்னால் அமர்ந்திருந்த முழவரும் யாழரும் பச்சைநிறத்தலைப்பாகை அணிந்திருந்தனர். யாழ் முனகியது. வண்டு போல சுழன்று சுற்றிவந்தது. ஒரு சொல் வந்து அதனுடன் இணைந்துகொண்டது.

தெய்வங்களை வாழ்த்தி அஸ்தினபுரியின் குலமுறை கிளத்தி நகராளும் மாமன்னரை வணங்கி சூதன் கதையை சொல்லத்தொடங்கினான். “அனைத்துச் செல்வங்களுக்கும் காப்பாளனாகிய குபேரனை வாழ்த்துவோம். வடதிசைக்குத் தலைவனின் அருளால் பொலிக இவ்வுலகு!” என்று அவன் தொடர்ந்தான். அவன் குரலுடன் இணைந்து யாழும் முழவும் தங்கள் மொழியில் அக்கதையை பாடின.

பிரம்மனின் பொன்னொளி ஒரு முகில்வெளியாகியது. அதை பிரஜாபதியாகிய புலஸ்தியர் என்றனர் வேதமறிந்த விண்மைந்தர். விண்ணின் கழுத்திலணிந்த பொற்சரமாகிய புலஸ்தியர் கனிந்து மழையாகிப்பொழிந்தபோது மண்ணின் ஆழத்தில் உறங்கிய புல்விதைகள் முளைத்தெழுந்தன. பசும்புல்லின் பெருவெளியாக எழுந்தவர் ஆழத்தின் மைந்தராகிய திருணபிந்து என்னும் பிரஜாபதியே என புலஸ்தியர் உணர்ந்தார்.

திருணபிந்துவின் புல்லரிப்பென எழுந்த பல்லாயிரம்வகையான புற்களில் நெருப்பை தன்னுள் கொண்ட தர்ப்பை மட்டும் வேள்விக்கு உரியதாகியது. ஹவிர்ஃபூ என அதை வாழ்த்தினர் முனிவர். ஹவிர்ஃபூ விடிகாலைப்பனியில் நெஞ்சு துளித்து விண்முகிலின் பொன்னொளியில் ஒளிபூத்து நின்றாள். தன் அழகை தான் எண்ணி நாணிய அவளின் பெண்மைபாவனையே பெண்ணாகியது. அவளைக் கண்டு மகிழ்ந்த புலஸ்தியரின் ஒளிக்கரம் வந்து அவளை தொட்டெடுத்தது. மானினி என பெயரிட்டு அவளை தன் மனைவியாக ஆக்கிக்கொண்டார்.

புலஸ்தியர் மானினி மேல் கொண்ட பேரன்பு விஸ்ரவஸ் என்னும் மதலையாகியது. விஸ்ரவஸ் தன் தாயின் பொன்னிறம் கொண்ட பெண்ணைத்தேடி புவியிலும் புவியைச் சூடிய வெளியிலும் அலைந்தார். முதல்கதிர் எழுந்த காலையில் காட்டுச்சுனை ஒன்றில் நீராடி நின்றிருந்த அழகி ஒருத்தியை கண்டார். அவள் பெயர் இளிபி. அவளை தேவவர்ணினி என பெயரிட்டு அவர் தன் மனைவியாகக் கொண்டார்.

விஸ்ரவஸ் ஒவ்வொரு நாளும் தன் தந்தையின் பொன்னொளிப்பெருக்கை கனவுகண்டார். அக்கனவை தவமாக்கினார். அத்தவம் தேவவர்ணினியில் கருவாகிப்பிறந்த குழந்தை பொன்னுக்குத் தலைவனாகியது. அவனை குபேரன் என்றழைத்தார் தந்தை. எண்ணமும் சொல்லும் பொன்னொளிகொண்டவனை வாழ்த்துவோம். இம்மண்ணிலுள்ள அத்தனை பொன்னிலும் புன்னகைப்பவனை வணங்குவோம். பொன்னாகி வந்து நம் கைகளில் அவன் தவழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!

சூதர் வணங்கியபோது அவை “ஓம் ஓம் ஓம்” என ஒலியெழுப்பியது. “பொன்னெனப் பூத்தது பேராசை அல்ல. பொன்னென மண்ணுள் புதைந்திருப்பது ஆணவமும் அல்ல. பொன்னில் எழுந்தது புவிசமைத்தவனின் இனிய கனவென்று உணர்க! அக்கனவு கட்டற்றவனில் பேராசையாகிறது. கருமைகொண்டவனில் ஆணவமாகிறது. காட்டுவழியில் துணையாகும். காவலனில் வல்லமையாகும். கனிந்தவனில் கொடையாகும். காமம் துறந்துவிட்டால் விடுதலைக்கு படியாகும். பொன்னை வாழ்த்துவோம். பொன்னனை வாழ்த்துவோம்” என்று சூதர் தொடர்ந்தார்.

“பாதாளத்தை ஆளும் பெருநாகமாகிய வாசுகியே நிகரற்ற வல்லமை கொண்டவன் என்பது தெய்வங்கள் வகுத்தது. ஆனால் வீங்கி எழும் விசையால் வாயுவும் அவனை வெல்லக்கூடுமென்பதும் தெய்வங்களின் விளையாட்டே. பெரும்புயலென கடந்துசென்ற வாயுவும் தன் வழிமறித்துக்கிடந்த பாதாளனின் வாலைத்தூக்கி அகற்றி கடந்துசென்றான். ஆணவம் புண்பட்ட கரியோன் சினந்தெழுந்தான். வாயு செல்லும் வழியை அடைத்து ஒரு பெருஞ்சுருளானான். சுருள்பாதையில் சுழற்றிவிடப்பட்ட வாயு குவிந்தெழுந்து மேலே சென்று விண்ணில் பரவி வழியிழந்தான்.

சினம்கொண்ட வாயு வாசுகியை துரத்தினான். வாசுகி பாதாளத்தில் இருள்வடிவாக நிறைந்திருந்த மாமேருவின் அடியில் பலகோடிமுறை சுற்றி இறுகிக்கிடந்தான். வாயுவின் கண்ணறியா கோடிக்கரங்கள் அவனைப்பற்றி இழுக்க இழுக்க அவன் மேலும் மேலும் இறுகிக்கொண்டான். மேரு இறுகி முனகியது. அதன் உச்சியில் வெடிப்புகள் விழுந்தன. விண்ணவர் வந்து கூடி திகைத்தனர். மேருவின் முனையில் அமர்ந்திருந்த பிரம்மன் தன் இடக்காலால் வாசுகியின் நெற்றியை அழுத்த அவன் ஒரு சுருள் இளகினான். அவ்விடைவெளியில் புகுந்த வாயு மேருவை உடைத்தான். மேருவின் துளியொன்று தென்கடலில் விழுந்தது.

உருவற்றவனுடன் போராட உருவம் கொண்டவனால் முடியாதென்று உணர்ந்த வாசுகி வழிந்தோடி இருளுக்குள் மறைந்து பாதாளத்தில் ஒடுங்கினான். தன் உருசுருக்கி காற்று தென்றலாகி மலர்ப்பொடிகளை அள்ளி விளையாடத்தொடங்கியது. கடலில் விழுந்த மேருவின் துளியே ஒரு தீவாகியது. அதன் உச்சியென அமைந்தது மூன்று முகப்புள்ள பெருமலை. அதை திரிகூடம் என்றனர் முன்னோர்.

'நிகரற்ற நகரொன்றை ஆக்குக!' என்று இந்திரனால் ஆணையிடப்பட்ட விஸ்வகர்மன் அங்கே மும்மலை உச்சியில் பெருநகர் ஒன்றை படைத்தான். அதை இலங்கை என்று பெயரிட்டழைத்தான். பொன்னில் வடித்தெடுத்த புதுநகரம் மண்ணில் இணையற்றதென்றனர் தேவர். தானறிந்த சிற்பக்கலையை முழுக்க அந்நகரை அமைப்பதில் காட்டிய விஸ்வகர்மனின் ஆணவம் அங்கே மெல்லிய நாற்றமொன்றை பரவச்செய்தது. ஆகவே அதை இந்திரன் புறக்கணித்தான்.

கைவிடப்பட்ட பெருநகரம் காலமெனும் கன்னியின் காலில் இருந்து உதிர்ந்து கண்டெடுக்கப்படாது கிடக்கும் பொற்சிலம்பென அங்கே இருந்தது. காலையெழும் கதிரவனின் முதற்தொடுகையில் அது அருணனின் ஒளியை வெல்லும் பொன்னொளியை விண்ணோக்கி ஏவியது. அந்த ஒருசில கணங்கள் மட்டுமே அது விண்ணில் நினைக்கப்பட்டது. பல்லாயிரம் கோடி வருடம் அது அங்கே கிடந்தது.

உணவில் பிறந்து உண்பதே வாழ்வாகி உணவில் மறைகின்றன புழுக்கள். பொன்னெனும் கனவில் பிறந்தவன் குபேரன். பொன்னே நினைவாக ஆயிரமாண்டுகாலம் அவன் பிரம்மனை எண்ணி தவம் செய்தான். ஐம்பிழம்பின் நடுவே அவன் ஆற்றிய அருந்தவம் கண்டு கனிந்து வந்த பிரம்மன் விழைவதென்ன என்று கேட்டபோது பொன் என்ற ஒற்றைச் சொல்லை மும்முறை சொன்னான் குபேரன்.

மகிழ்ந்த பிரம்மன் அவனுக்கு சங்கநிதி பதுமநிதி என இருபக்கமும் நிறைந்த பெருஞ்செல்வத்தை அளித்தான். வெண்பொன் சங்கு. செம்பொன் தாமரை. அவனுக்கு எட்டுத்திசைகளில் வடக்கை அளித்தான். கட்கத்தை படைக்கலமாகவும் பொற்தாமரையை மாலையாகவும் பொன்மலர் விமானத்தை கலமாகவும் அளித்து வாழ்த்தி அமைந்தான்.

தன் பெருஞ்செல்வத்துடன் வாழ ஓர் இடம்தேடினான் குபேரன். தந்தையிடம் சென்று தனக்கொரு நகர் தேடித்தரும்படி சொன்னான். விஸ்வகர்மனிடம் கோரும்படி விஸ்ரவஸ் சொன்னார். விஸ்வகர்மனிடம் சென்று தனக்கொரு பெருநகர் உடனே தேவை என்றான் குபேரன். அங்கே நிலமென ஏதுமிருக்கலாகாது. தரையும் தங்கமாகத் திகழவேண்டும் என்று கோரினான்.

விஸ்வகர்மன் தான் அமைத்த பெருநகரைப்பற்றி சொன்னான். அங்கே தனக்கு நிகழ்ந்த பிழையென்ன என்பதை அவன் அப்போது கண்டுகொண்டிருந்தான். அவன் கட்டக்கட்ட அந்தப்பெருநகர் சிற்பக்கலையின் முழுமை நோக்கி சென்றுகொண்டிருந்தபோதுதான் அம்முழுமையை அழிப்பதென்ன என அவன் கண்டான். அங்குள்ள மண் சிற்பக்கலைக்கு அப்பாலிருந்தது. அதில் கணந்தோறும் புது உயிர் முளைத்தது. புதுமுளை எழுந்தது. சிற்பமென்பது இலக்கணத்தின் பருவடிவம். மண்ணோ இலக்கணத்தை மீறும் உயிர்ப்பெருவிசை.

ஆகவே மண்ணை முழுமையாகவே அகற்றினான் விஸ்வகர்மன். பொன்னன்றி பிறிதேதும் அங்கில்லாதபடி செய்தான். மண்விலகி சிற்பக்கலை முழுமையடைந்தபோது நகரம் இறந்துவிட்டதை உணர்ந்தான். அதிலிருந்து மெல்லிய நாற்றமெழத்தொடங்கியது. அது எதன் நாற்றமென தேடினான். சிலசமயம் குருதி. பிறிதொருசமயம் அது சீழ். அவ்வப்போது உப்பு. அந்த இழிமணமென்ன என்று கண்டறிய முடியவில்லை. ஆயிரமாண்டுகாலம் ஊழ்கத்திலாழ்ந்து அறிந்தான் அது தேங்குவதன் நாற்றம் என. தேங்கும் நீரும் தேங்கும் தழலும் இழிமணமாகும். தேங்கும் பொன்னும் அவ்வண்ணமே.

பொன்னன்றி பிறிதற்ற நகரங்களில் இருந்து அந்த இழிமணத்தை விலக்கமுடியாது இளையோனே என்றான் விஸ்வகர்மன். பொன்மணமென்றால் அது எனக்கு உவப்பானதே. நான் அதையே விழைகிறேன் என்றான் குபேரன். அவ்வண்ணமே ஆகுக என்று விஸ்வகர்மன் அருளினான். குபேரன் இலங்கைநகருள் நுழைந்தான். பொன்மணம் அவன் நெஞ்சை நிறைத்தது. இதை இழிமணம் என்றவன் எவன் என வியந்தான். பொன்னொளியா விழியொளியா என மயங்கும் நகர்த்தெருக்களில் கைவீசி ஓடிக்களித்தான்.

பொன்னில் ஓடும் புதுவரியை பெண்ணாக்கி மணந்தான் குபேரன். புதுவெள்ளம் நெளியும் கங்கையின் உடலழகு கொண்ட சித்ரரேகையுடன் அந்நகரியில் குடியேறினான். அவள் இனிது பெற்ற மைந்தன் நளகூபரனுடன் அங்கே இனிது வாழ்ந்தான். மண் தொடாத கால்கள் குறுகின. பொன்னமர்ந்த உடல் பெருத்தது. ஆனால் தன்னுள்ளும் வெளியும் பொன்னேயாக அங்கே அவன் நிறைந்து இருந்தான்.

அவையோரே, அவைநிறைந்த அரசே, கேளுங்கள். அன்றொருநாள் படைப்புக்குத் தேவையான அகவிழி ஒளி பெறும்பொருட்டு வேள்விச்செயலில் ஈடுபட்டிருந்தான் பிரம்மன். நான்முகத்தில் ஒன்றில் ரிக்கும் இன்னொன்றில் யஜுரும் மூன்றாவதில் சாமமும் நான்காவதில் அதர்வமும் ஒலிக்க அனலெழுப்பினான். வேள்வித்தீ எழுந்து விண் நிறைந்து கிடந்த வெண்முகில் வெளியை செம்பிழம்புகளால் நிறைத்தது. நான்குவேதமும் இணைந்த ஒற்றைப்பெருநாதத்தில் ஒரு தந்தி தொய்ந்தது. பிறழிசை எழுந்தது.

திகைத்து ஏனென்று நோக்கினான் ஆக்கும் கடவுள். தன் வயிற்றிலெழுந்த பசியால் வேதஒலி பிழைத்ததை அறிந்து சினம்கொண்டெழுந்தான். வேதம் மறந்த தன் நான்காம் முகம் சிவக்க முகிலாடியை நோக்கியபோது அம்முகத்திலிருந்து ஹேதி என்னும் செந்நிற பேரரக்கன் தோன்றினான். தன் முகத்தை தான்கண்டதும் பிரம்மன் தணிந்தான். தன் பசியைத் தொட்டு அதை பிரஹேதி என்னும் யட்சனாக ஆக்கினான். சினமும் பசியும் அவன் முன் பணிந்து நின்றனர். உடன்பிறந்தவர்களே எப்போதும் பிரியாதிருங்கள் என வாழ்த்தினான் படைப்போன்.

பிரஹேதி தன்னுடன் தனித்திருந்தான். தனித்த பசியே தவமென்றறிக. அவன் தவம் கனிந்து முனிவனானான். ஹேதியோ தழலாடும் சினம். தன் உடல் விழைவு அறிவு உணர்வு உள்ளொளி ஐந்தையும் அவியாக்கி அவன் நின்றெரிந்தான். அவன் பயாவை மணந்தான். அவர்களுக்கு மின்னல்புரிகளென பெருங்கூந்தல் கொண்ட அனல்நிற அரக்கமைந்தன் பிறந்தான். வித்யுகேசன் வளர்ந்ததும் சாலகடங்கையை துணைகொண்டான். அவர்களுக்கு அழகிய பொற்கூந்தலுடன் பிறந்தான் சுகேசன். அக்குழந்தையை அடர்கானகத்தில் விட்டுவிட்டு காமக் களியாடச்சென்றனர் பெற்றோர்.

விண்ணகத்தில் பெண்ணில்நல்லாளோடு சென்ற பெருமான் குனிந்து நோக்கியபோது அழகிய பொற்குழல் கொண்ட மைந்தனை நோக்கினார். உளம் கனிந்த முதற்றாதை முனிவனாக வந்து அவனை தன் அழல்வாழும் கைகளால் ஏந்தினார். அன்னை அருகே நின்று அவன் பாதங்களில் முத்தமிட்டு இன்று பிறந்த மலர் இவன் என்று நகைத்தாள். நம்முடன் இவனும் கயிலைக்கு வரட்டும் என்றார் அப்பன். அழகன் ஆயினும் இவன் அரக்கன் என்றாள் அன்னை.

சற்றே சிந்தனைசெய்து செம்பொன்மேனியன் சொன்னான். ஏழுவிண்ணிலும் ஏழு ஆழங்களிலும் துளித்துளியென எடுத்துக்கலந்து இம்மண்ணின் உயிர்களை ஆக்கியிருக்கிறோம். தெய்வத்தில் பிறந்து அரக்கரும் யட்சரும் கலந்து உருவான இப்புதிய மானுடன் இங்கு வாழட்டும். இவன் கந்தர்வப்பெண்ணை மணந்து மைந்தரைப்பெறட்டும்.அரக்கனின் ஆற்றலும் யட்சனின் மாயமும் கந்தர்வனின் இசையும் கலந்த இவன் மைந்தர் நிகரற்றவர்கள் ஆகக்கூடும்.

தெய்வங்களால் புரக்கப்பட்ட சுகேசன் சொல்முதிர்ந்து தோள்தழைத்து இளைஞனானான். சுகேசன் மணிமயன் என்ற கந்தர்வனின் இனிய மகள் தேவவதியை மணம்கொண்டான். அரக்க உடலும் யட்சர்களின் விழிகளும் கந்தர்வர்களின் உள்ளமும் கொண்ட மூன்று மைந்தரை அவர்கள் பெற்றெடுத்தனர். மால்யவான், சுமாலி, மாலி என்னும் மூவரும் மூன்று தெய்வங்களாலும் குனிந்து பார்க்கப்பட்டனர். தேவர்களின் புன்னகை இளவொளியென அவர்கள் மேல் எப்போதுமிருந்தது. அவர்களின் ஒவ்வொரு நாளும் விண்ணகத்தில் பேசப்பட்டது.

அவர்கள் தவம்செய்கையில் உடல் அரக்கர்களைப்போல பசியும் விடாயும் காலமும் மறந்து அமைந்தது. சித்தம் கந்தர்வர்களைப்போல விண்ணை அறிந்தது. யட்சர்களைப்போல உள்ளம் நுண்சொல்லில் மூழ்கியிருந்தது. ஆயிரமாண்டுகாலம் தவத்தில் அமைந்து அவர்கள் கண்முன் பிரம்மனை வரச்செய்தனர். தாங்கள் வாழ நிகரற்ற பொன்னுலகு ஒன்றை அளிக்கும்படி கோரினர். விஸ்வகர்மனை சென்று பார்க்கும்படி பிரம்மன் ஆணையிட்டார்.

விஸ்வகர்மன் அவர்களிடம் இலங்கைநகர் பற்றி சொன்னான். மண்ணற்ற விண்ணகரம் அது. அங்கே ஆளும் குபேரனை வென்று அதை வென்றெடுக்கும்படி அவன் ஆற்றுப்படுத்தினான். அரக்கர் மூவரும் தங்கள் முடிவிலா மாயத்தால் ஒன்றுபத்துநூறுஆயிரம்லட்சம்கோடி என பெருகிப்பெருகிச் சென்று இலங்கையை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பெருவல்லமையை எதிர்க்கமுடியாமல் குபேரன் இலங்கையைக் கைவிட்டு தன் பிறிதொரு நகரான அளகாபுரிக்கு ஓடி அங்கே அமைந்தான்.

பொன்நாறும் பெருநகரில் மூவரும் நறுமணத்தை மட்டுமே அறிந்தனர். அங்கே அவர்கள் உண்ட உணவில் அருந்திய அமுதில் முகர்ந்த மலரில் ஆடிய நீரில் எங்கும் பொன்நாற்றமே நிறைந்திருந்தது. நர்மதை என்னும் தேவகுலப்பெண்ணின் மூன்று மகள்களான வசுதை கேதுமதி சுந்தரி ஆகியோரை வென்று கொண்டுவந்து அங்கே மனைவியராகக் குடியிருத்தினர். மணம் கொண்டு வந்த முதல் நாள் பொன் அழுகும் புன்மணம் கொண்டு குமட்டிய அப்பெண்கள் அன்றிரவே அவை தங்கள் கணவர்களின் நாற்றமென உணர்ந்தனர். நாள் விடிந்து கதிர் கண்டபோது அது அவர்களுக்கு நறுமணமாக ஆகிவிட்டிருந்தது.

மால்யவான் வசுதையில் நிறைந்து அனிலன் அனகன் ஹரன் சம்பாதி என்னும் நான்கு மைந்தரைப்பெற்றான். சுமாலி கேதுமதியில் பிரஹஸ்தன் அகம்பனன் விகடன் காலகாமுகன் தூமாக்ஷன் தண்டன் சுபார்ஸ்வன் சம்க்ஹாதன் பிரக்வாதன் பாசகர்ணன் என்னும் பத்து மைந்தரை அடைந்தான். மாலி சுந்தரியில் வேகை, புஷ்போல்கடை, கைகசி, கும்பீநதி என்னும் நான்கு மகளிருக்கு தந்தையானான். பொன்னில் திளைத்து புதல்வரோடாடி அவர்கள் அங்கிருந்தனர்.

நூறாண்டுகாலம் அங்கே மைந்தருடன் வாழ்ந்தபோது ஒருநாள் மால்யவான் விண்ணிலொரு இழிமணத்தை அறிந்தான். இளையோன் சுமாலியிடம் அது என்ன என்று கேட்டான். அது விண்ணில் எவரோ செல்லும் நாற்றம் என்றான் அவன். அவர்களின் பெண்டிரும் மைந்தரும் அந்த இழிமணம் பொறாது குமட்டி ஓங்கரித்தனர். 'இளையோனே, அந்தக் கீழ்மணத்தின் ஊற்றென்ன என்று கண்டுவா' என்று ஆணையிட்டான் மால்யவான். மாலி தன் கதையுடன் விண்ணில் எழுந்து அது என்னவென்று நோக்கி சென்றான்.

சித்ரவனத்தில் வாழ்ந்த காருண்யர் என்னும் முனிவரின் இறுதிக் கணத்தில் அவரது விழிகள் காண்பதற்காக பாரிஜாத மலருடன் சென்றுவிட்டு வைகுண்டத்துக்கு சென்றுகொண்டிருந்த கருடனின் மணம் அது. அவர் காலில் இருந்த மலரிலிருந்து எழுந்த மணம் என அறிந்த மாலி பறவைக்கரசனை மறித்து 'இக்கீழ்மணத்துடன் எங்கள் நகர்மீது எப்படிப் பறந்தாய் இழிபறவையே' என்று கூவி தன் கதையால் தாக்கினான்.

'மூடா, உன் குருதியில் ஓடும் கந்தர்வனின் இசையையும் யட்சனின் மாயத்தையும் வென்றிருக்கிறது அரக்கனின் ஆணவம். இது தன் கையிலிருந்த இறுதித்துளி நீரை பெரும்பாலையில் விடாய்கொண்டு சாகக்கிடந்த மான்குட்டிக்கு அளித்த பெருங்கருணை கொண்ட முனிவர் தன் இறுதிக்கணத்தில் பார்த்த மலர். ஏழு விண்ணுலகங்களிலும் நறுமணம் கொண்டது இதுவே' என்றார். 'இதுவா? இந்த கீழ்மணத்தையா சொல்கிறாய்?' என நகைத்தபடி கருடனை கதையால் அடித்தான் மாலி. அவனை தன் இடக்கால் உகிர்களால் அறைந்து தெறிக்கச்செய்தபின் கருடன் வைகுண்டம் சென்றார்.

நான்கு உகிர்களால் கிழிக்கப்பட்டு குருதி கொட்ட மீண்டு வந்த இளையோனைக் கண்டு கொதித்தனர் மால்யவானும் சுமாலியும். படைகிளம்பும்படி ஆணையிட்டனர். தங்கள் உடல்பெருக்கி விண்ணிலேறிச்சென்று வைகுண்டத்தை சூழ்ந்தனர். இடியோசை என போர்க்குரலெழுப்பி வைகுண்டவாயிலை முட்டினர். அங்கே காவல்நின்றிருந்த ஜயவிஜயர்களை வென்றனர். அவர்கள் அஞ்சி ஓடி உள்ளே சென்று விண்வடிவோன் கால்களில் விழுந்தனர்.

செஞ்சிறகு பறவை மேல் ஏறி ஆழிவண்ணன் அவர்களை எதிர்த்துவந்தான். ஆயிரமாண்டுகாலம் ஒருகணமென்றாக அங்கு ஒரு போர் நிகழ்ந்தது. ஆழிக்கூர்மை அவர்கள் மூவரையும் துண்டுகளாக வெட்டி பாதாள இருளுக்குள் தள்ளியது. அவர்கள் இறந்த அக்கணத்தில் இலங்கையின் அத்தனை சுடர்விளக்குகளும் அணைந்தன. அரக்கர்குலத்துப் பெண்கள் எரிசிதை மூட்டி அதில் பாய்ந்து உயிர்துறந்தனர். அவர் மைந்தர் அஞ்சி ஓடி பாதாள இருளுக்குள் மறைந்துகொண்டனர்.

மீண்டும் பொன்னகரம் தனிமை கொண்டது. ஒவ்வொருநாளும் கதிரவன் கிழக்கே எழும்போது அதன் மாளிகைமுகடுகள் ஒளிவிடும் ஒரு கணம் மட்டும் விண்ணவரும் தெய்வங்களும் அந்நகரைப்பற்றி எண்ணினர். பல்லாயிரமாண்டுகளுக்குப்பின் அங்கே அரக்கர்கோமான் ராவணன் வந்து குடியேறுவான் என்று அந்நகரின் அரண்மனைகளின் பொன்னொளி படர்ந்த ஆழம் அறிந்திருந்தது."

சூதன் மும்முறை கைகூப்பி தலைவணங்கினான். அவையில் எழுந்த மெல்லிய உடலசைவை சாத்யகி கண்டான். திரும்பி புன்னகை தளும்பாமல் நின்றிருந்த கிருஷ்ணனின் முகத்தை நோக்கினான்.

பகுதி 11 : முதற்தூது - 6

சூதர் பரிசு பெற்று எழுந்ததும் சற்றுநேரம் அவையில் அமைதி நிலவியது. சாத்யகி அந்த அமைதியை உணர்ந்ததும் ஒவ்வொரு முகத்தையா பார்த்தான். சூதர்பாடலில் ஏதோ உட்பொருள் இருந்தது என்றும் அதை அவையமர்ந்திருந்த எவருமே விரும்பவில்லை என்றும் அக்காரணத்தாலேயே சூதருக்கு மேலும் அணிச்சொற்களும் மேலும் பரிசில்களும் வழங்கப்பட்டன என்றும் அவன் உய்த்துக்கொண்டான்.

அனைத்து முகங்களும் செயற்கையான அமைதியுடன் இருந்தாலும் துரியோதனன் முகம் மட்டும் கொந்தளிப்பை காட்டியது. அவன் கர்ணனை பலமுறை விழிதொட முயல்வதையும் கர்ணன் அதை முற்றிலும் தவிர்த்து இரும்புச்சிலை என அமர்ந்திருப்பதையும் கண்டான். சிந்தையிலாழ்ந்தவராக திருதராஷ்டிரர் அமர்ந்திருக்க அருகே சஞ்சயன் நின்றிருந்தான். அவருக்குப்பின்னால் கணிகர் அமர்ந்திருக்க முன்னால் வலப்பக்கம் விதுரரும் இடப்பக்கம் சௌனகரும் அமர்ந்திருந்தனர்.

திருதராஷ்டிரர் அந்த இறுக்கத்தை வென்று ”மீண்டும் ஒரு இன்னீர் பரிமாறப்படலாமே” என்றார். பலராமர் உரக்க “ஆம், நன்று, நானும் அதையே எண்ணினேன்” என்றார். “உண்மையில் நான் ராவண மகாப்பிரபுவைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். பத்து பெரும்புயங்கள். அவருடன் ஒரு மற்போரிடுவது எத்தனை பேருவகையை அளிப்பதாக இருக்கும்!” அது அங்கிருந்த இறுக்கத்தை தளர்த்தியது. அதைப்பற்றிக்கொண்ட திருதராஷ்டிரர் “அதையே நானும் எண்ணினேன். மற்போரில் கைகள் போதவில்லை என்று உணராத மல்லன் உண்டா என்ன?” என்றார். “நாம் நாளை இருக்கும் இரண்டு கைகளால் பொருதுவோம் அரசே” என்றார் பலராமர். “நன்று நன்று” என்றார் திருதராஷ்டிரர்.

இன்னீர் வெள்ளிக்கோப்பைகளில் அனைவருக்கும் வந்தது. அதை அருந்தியபடி ஒவ்வொருவரும் அருகமர்ந்தவர்களிடம் பேசிக்கொண்டனர். மெல்ல அவை இயல்படைந்தது. சௌனகர் எழுந்து “மதுராபுரியின் அரசரும் இளையவரும் இங்கு வந்தது நிறைவளிக்கிறது. மதுராபுரி அஸ்தினபுரியின் எல்லையை ஒட்டியதென்பதனாலேயே நமக்கு அண்மையானது. நமது படைகளால் அது மகதத்தின் தாக்குதலில் இருந்து தன்னை காத்துள்ளது. என்றும் இந்த நட்பு இருநாடுகளுக்கும் நடுவே இருக்குமென இங்குள்ளோர் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

அதன் உட்குறிப்பை சாத்யகி உடனே உணர்ந்துகொண்டான். கிருஷ்ணன் “ஆம், அமைச்சரே. அந்தவெற்றியால்தான் துவாரகை அமைந்தது. பாரதவர்ஷத்தின் நிகரற்ற கருவூலமும் கலநிரையும் படைப்பெருக்கும் அங்கு உருவாகியது. இன்று கூர்ஜரமும் மாளவமும் மகதமும் கூட துவாரகையைக் கண்டு அஞ்சுகின்றன. அந்தத் தொடக்கத்தை அளித்தது இளையபாண்டவராகிய பார்த்தனின் வில். பார்த்தனுக்கும் அவன் மணந்த பாஞ்சாலன் கன்னிக்கும் துவாரகை கொண்டிருக்கும் கடன் அளப்பரியது” என்றான்.

சௌனகரின் முகம் மாறியதை காணாதவன் போல “இங்கு நான் வந்ததும் அதன்பொருட்டே. அவர்களின் சொல்கொண்டு வந்து அரசரை சந்திப்பது என் கடன் என்று கொண்டேன்” என்றான் கிருஷ்ணன். திருதராஷ்டிரர் “சொல்லுங்கள் யாதவரே” என்றார். “நான் கிளம்பும்போது என்னிடம் யுதிஷ்டிரர் சொன்னதையே முறைமையான சொல்லென கொள்வேன்” என்றான் கிருஷ்ணன். “பாஞ்சாலமகளை மணந்து அங்கே தங்கியிருக்கும் யுதிஷ்டிரர் அஸ்தினபுரியின் மணிமுடியை விழையவில்லை. அனைத்து முறைமைகளின்படியும் அவருக்குரியதென்றாலும் அதை தன் இளையோனும் தார்த்தராஷ்டிர முதல்வனுமாகிய துரியோதனனுக்கே வழங்க எண்ணுகிறார்... அதை முறைப்படி தெரிவிக்கவே நான் வந்தேன்.”

“அதை ஏன் அந்த மூடன் தூதென அனுப்பினான்?” என்றார் திருதராஷ்டிரர். “இது அவன் நாடென்றால் வந்து என்னிடம் அவை நின்று அல்லவா சொல்லவேண்டும்?” கிருஷ்ணன் “இதையே நானும் சொன்னேன். ஆனால் அவர் இங்கு வர விரும்பவில்லை. தங்கள் முன் நின்று சொல்லும் விழி தனக்கில்லை என நினைக்கிறார். ஏனென்றால் தாங்கள் அவரிடம் அரசு ஏற்கவே ஆணையிடுவீர்கள் என்றார். அதை மறுக்க அவரால் முடியாது. ஆனால் தங்கள் உள்ளம் அதை சொல்லவில்லை என அவர் உள்ளம் அறியும். ஏனென்றால் எந்தத் தந்தையும் ஆழத்தில் வெறும் தந்தையே. தன் மைந்தனின் நலனை அன்றி பிறிதை அவர் விழையமாட்டார்.”

ஒருகணம் அவை உறைந்தது போலிருப்பதை சாத்யகி கண்டான். தன் இருகைகளையும் ஒங்கி அறைந்தபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “அவன் சொன்னானா? அவனா சொன்னான்? பாண்டுவின் மகன் என்னைப்பற்றி அப்படியா சொன்னான்?” என்று உரத்த குரலில் கேட்டபடி அவர் முன்னால் வந்தார். “சௌனகரே, படைகளை கிளம்பச்சொல்லும். அவனை பிடித்துவந்து என் முன்னால் போடுங்கள். என் கைகளால் அவனை நெரிக்கிறேன்... மூடன் மூடன்.” படீரென்று தலையில் அறைந்துகொண்டு அவர் மெல்ல அமர்ந்தார். “என்ன சொல்லிவிட்டான்!” என்றார். அவரது முகம் நெளிவதை விழிகள் புண்ணெனச் சிவந்து நீரூறி வழிவதை சாத்யகி திகைப்புடன் நோக்கினான்.

“விதுரா, மூடா... அடேய் மூடா!' என அவர் வீறிட்டார். “எங்கிருக்கிறாய்? அருகே வா!” விதுரர் எழுந்து அருகே சென்று அவர் கைகளைப்பற்றிக்கொண்டார். “என்ன சொற்கள் அவை... மூடா உண்மையிலேயே அவன் அவற்றை சொன்னானா? மூடா... அப்படியென்றால் என் அன்பை அவன் அறியவே இல்லையா? அவனை என் நெஞ்சோடு அணைத்தபோதுகூட என் அகம் அவனை அடையவில்லையா?” உடைந்த குரலில் மெல்லிய கேவலுடன் அவர் முகத்தை மூடிக்கொண்டார். “நான் எப்படி சொல்வேன்...? என் இளையோனும் இன்று என்னை வெறுக்கிறானா என்ன?

விதுரர் “அரசே, முதல்செவிக்கு அப்படித் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல” என்றார். “சற்று எண்ணிப்பாருங்கள். அவன் தங்கள் இளையோனின் குருதி. ஆகவேதான் அதை சொல்கிறான். அறியாமல்கூட தங்கள் உள்ளம் வருந்தலாகாது என எண்ணுகிறான். இன்றல்ல நாளை, என்றோ ஒருநாள் தாங்கள் சற்று உளம் வருந்த சிறு வாய்ப்பு இருக்கிறது என்றால் அதற்காக இன்றே தன் மணிமுடியைத் துறக்க சித்தமாக இருக்கிறான். நாளை ஃபுவர்லோகத்தில் உங்களை வந்தடையும் முதல் கங்கைநீர் அவனளிப்பதே. ஐயமே தேவையில்லை.”

திருதராஷ்டிரர் கண்ணீர்வழியும் விழிகளுடன் நிமிர்ந்து நோக்கினார். “ஆம், என்றும் அவனை அப்படித்தான் எண்ணியிருக்கிறேன். என் குலத்தின் அறச்செல்வனின் கையால் நீர் பெறுவதன்றி நான் அடையும் முழுமை என பிறிதில்லை.” கைகளை வீசி தலையை மெல்ல உருட்டியபடி அவர் சொன்னார். “அந்த மைந்தனுக்கன்றி எவருக்கு இவ்வரியணை மேல் உரிமை உள்ளது? யாதவா, சென்று சொல். அவனுக்குரியது இம்மணிமுடி. இந்நாடு அவனுக்காக காத்திருக்கிறது. எத்தனை ஆண்டுகளானாலும். நான் இறந்தால் என் மைந்தர் அவனுக்காக காத்திருப்பார்கள்.”

கையை ஓங்கித்தட்டியபடி பலராமர் எழுந்து முழங்கும் குரலில் “என்ன நீதி இது? திருதராஷ்டிரரே, ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். அரசு என்பது அரசனின் உடைமை அல்ல. அரசை வேள்விக்களம் என்கின்றன நூல்கள். நால்வகை மக்களும் ஐவகை நிலங்களைக் கறந்து அவியூட்டுபவர்கள். கோலேந்தி அருகேநிற்கும் வேள்விக்காவலன்தான் அரசன். வேள்வி என்பது அதற்குரிய முறைமைகள் கொண்டது. வேள்விமேல் அரசனுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை” என்றார். மிகச்சிறப்பாக பேசிவிட்டோம் என்ற பெருமிதம் அவருகே ஏற்பட அவையை நோக்கி பலராமர் புன்னகை செய்தார். ”ஆகவே இந்நாட்டை எவருக்களிப்பதென்று முடிவெடுக்கவேண்டியவர் நீங்கள் அல்ல. எதுமுறைமையோ அது செய்யப்பட்டாகவேண்டும்.”

சாத்யகி பதைப்புடன் கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகைப்பதுபோல தோன்றியது. இல்லை அவன் முகத்தின் தசையமைப்பே அப்படித்தானா என்றும் ஐயமாக இருந்தது. பலராமர் அவையை நோக்கிச் சுழன்று கைகளை வீசி “என் மாணவன் இங்கே இருக்கிறான். இந்த பாரதவர்ஷம் கண்டவர்களில் அவனே நிகரற்ற கதைவீரன். ஆண்மையே அணியெனக்கொண்டவன். அவன் உள்ளம் என்ன விழைகிறதென நான் அறிவேன். பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தி என அவனை பெற்றெடுத்தீர்கள். சொல்லிச்சொல்லி அவனை வளர்த்தீர்கள். இன்று சில மழுங்கிய சொல்லணைவுகளால் அவனை வெறும் அரியணைக்காவலனாக ஆக்குகிறீர்கள் என்றால் அது நெறியோ முறையோ அல்ல” என்றார்.

“அவரது அரியணையை பறித்தவர் மானுடரல்ல யாதவரே” என்றார் விதுரர் எரிச்சலுடன். “அவரை இளையோனாக பிறக்கவைத்த தெய்வங்கள்.” “தெய்வங்களைப்பற்றி நாம் பிறகு பேசுவோம். எந்த தெய்வம் வந்தாலும் நான் என் கதாயுதத்துடன் முகமெதிர் நின்று போரிடவே விழைவேன்” என்றார் பலராமர். “சரி, மூத்தவன் அரியணையை மறுத்துவிட்டானே. அப்படியென்றால் இளையோனுக்கு மணிமுடி உரியதென்பதுதானே நூல்நெறி?”

விதுரர் “இங்கு இறுதிச்சொல் என்பது அரசருடையேதேயாகும்” என்று கசப்புடன் சொல்லி விழிதிருப்பினார். “ அதை நான் ஒப்பமாட்டேன்” என்றார் பலராமர். “ஒப்பாமலிருக்க நீங்கள் யார்?” என்று தன்னை மீறிய சினத்துடன் விதுரர் கேட்டார். “நான் அவன் ஆசிரியன். நூல்முறைப்படி ஆசிரியன் தந்தைக்குரிய அனைத்து உரிமைகளும் கொண்டவன். நான் சொல்கிறேன், என் மாணவனுக்குரிய நிலம் அளிக்கப்பட்டாகவேண்டும். அதை அவனிடமிருந்து பறிக்கும் எந்தச்சதியையும் நான் எதிர்கொள்கிறேன். அவன் விழைந்தாலும் இல்லாவிட்டாலும் என் படைகளுடன் வந்து இந்நகரைச் சூழவும் சித்தமாக இருக்கிறேன்.”

பலராமர் அத்துமீறிவிட்டார் என்று எண்ணி சாத்யகி அவனை அறியாமலேயே எழப்போனான். ஆனால் கிருஷ்ணன் உடலிலும் முகத்திலும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அங்கு நிகழாத ஏதோ ஒன்றை நோக்குபவை போன்ற விழிகள். கடந்துபோன இனியதொன்றை எண்ணி மலர்ந்தது போன்ற முகம். சாத்யகி படபடப்புடன் அவையை நோக்கினான். அத்தனை விழிகளும் மாறுதலடைந்திருந்தன. விதுரர் “நீங்கள் அஸ்தினபுரியின் பேரரசரின் அவையில் நின்று பேசுகிறீர்கள் என்பதை உணருங்கள் யாதவரே” என்றார். “ஆம் அதை நன்குணர்ந்தே பேசுகிறேன். நாளும் என் மாணவன் நலிந்து வருவதை பார்க்கிறேன். அதை நோக்கியும் நான் அரசமுறைமை பேசி வாளாவிருந்தால் நான் கோழையோ மூடனோ என்றே என் முன்னோர் எண்ணுவர்” என்றார் பலராமர்.

“யாதவரே, நீர் என் மைந்தனின் ஆசிரியர். ஆகவே இந்த அவையில் நீர் சொல்லக்கூடாததாக ஏதுமில்லை. என்றும் என் முடி உங்களுக்குப் பணிந்தே இருக்கும்” என்றார் திருதராஷ்டிரர். அவரது குரல் அடைத்தது போலிருந்தது. “ஆனால் அது என் மைந்தனின் விழைவு அல்ல. அவன் என் சொற்களை மீறி எதையும் எண்ணப்போவதில்லை.” பலராமர் கைகளைத்தட்டியபடி திருதராஷ்டிரரை நோக்கி சென்று வெடிக்குரலில் “அதை அவன் சொல்லட்டும். அவையெழுந்து அவன் சொல்லட்டும், அவனுக்கு மணிமுடி தேவையில்லை என்று” என்றவர் திரும்பி துரியோதனனை நோக்கி “மூடா, சொல். உன் ஆசிரியன் நான். என்னிடம் நீ மறைப்பதற்கேதுமில்லை. இப்போதே சொல். உனக்கு இந்த மணிமுடி தேவையில்லையா? சொன்னால் நான் அமர்ந்துவிடுகிறேன்” என்றார்.

எழுந்து நின்று கைகூப்பி விழிதாழ்த்தி தாழ்ந்த குரலில் “ஆசிரியர் அறியா அகமில்லை” என்று துரியோதனன் சொன்னான். “என் அகம் முழுக்க நிறைந்திருப்பது மண்ணாசையே. அஸ்தினபுரியின் மண்ணையும் முடியையும் விழையாமல் நினைவறிந்த நாள் முதல் இன்றுவரை ஒருகணம்கூட சென்றதில்லை.” பலராமர் ஏதோ சொல்ல கையை தூக்குவதற்குள் “ஆனால் என் தந்தை மண்ணில் என் இறைவன். நீங்கள் அவருக்கிணையானவர். உங்கள் ஆணையின்பொருட்டு நான் எதையும் துறப்பேன். எந்தை விழைந்தால் எஞ்சிய வாழ்நாளெல்லாம் யுதிஷ்டிரனுக்கு வாளேந்தி அரியணைக்காவல் நிற்கவும் தயங்கமாட்டேன்” என்றான்.

“உன் தந்தையின் ஆணையை மீறவேண்டும், இந்த நாட்டின் மணிமுடியை சூடவேண்டும் என நான் ஆணையிட்டால்?” என்றார் பலராமர். “வாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சுவதன்றி வேறு வழியில்லை” என்றான் துரியோதனன். பலராமர் திகைத்து திரும்பி கிருஷ்ணனை நோக்க அவன் ”வீண்சொற்களால் ஏன் நாம் விளையாடவேண்டும் மூத்தவரே? தாங்கள் ஆணையிடப்போவதுமில்லை, அவர் வாள்பாய்ச்சிக்கொள்ளப் போவதுமில்லை. நாம் தேவையானவற்றைப்பேசுவதே நன்று” என்றான். சினத்துடன் திரும்பிய பலராமர் ”வீண்சொல்லா? இதோ நான் ஆணையிடுகிறேன். துரியோதனா, நீ அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டிக்கொண்டாகவேண்டும். எவர் தடுத்தாலும் சரி. என் படைகளும் நானும் உன்னுடனிருப்போம்” என்று கூவினார்.

அவர் சொல்லி முடிப்பதற்குள் துரியோதனன் தன் இடையிலிருந்த வாளை உலோகம் உரசும் உறுமலோசையுடன் உருவி தன் கழுத்தில் பாய்ச்சப்போக துச்சாதனன் அதை பற்றிக்கொண்டான். அவ்வொலி சவுக்கடி போல திருதராஷ்டிரர் மேல் விழும் துடிப்பை காணமுடிந்தது. அரியணைவிட்டு இறங்கி தடுமாறும் காலடிகளுடன் துரியோதனனை நோக்கி சற்று தூரம் ஓடிய அவரை தொடர்ந்தோடிய சஞ்சயன் ”அரசே, பீடங்கள்...” என்று கூவினான். அவர் தள்ளாடி நிற்க அவரது வலக்கரத்தை அவன் பற்றிக்கொண்டான். “துரியோதனா...” என உடைந்த குரலில் அழைத்த திருதராஷ்டிரர் தன் கைகளை நீட்டினார்.

நடுங்கும் கைகளுடன் அதிரும் உதடுகளுடன் ”வேண்டாம், நான் என் ஆணையை மீட்டுக்கொள்கிறேன்” என்று சொன்னபின் திருதராஷ்டிரர் அங்கேயே அமரப்போகிறவர் போல கால்தளர்ந்தார். சௌனகர் முன்னகர்ந்து அவரைப்பற்றிக்கொள்ள இரு தோள்களால் தாங்கப்பட்டு தன் அரியணை நோக்கிச்சென்று விழுவதுபோல அமர்ந்துகொண்டார். அவை கடுங்குளிரில் உடல் இறுக்கி அமர்ந்திருப்பதுபோலிருந்தது. அவையின் சாளரங்களின் திரைச்சீலைகள் அசையும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. எவரோ இருமினர். திருதராஷ்டிரர் மூக்கை உறிஞ்சிய ஒலி உரக்க எழுந்தது.

அங்கு நிகழ்ந்தவை எதையும் எதிர்பாராத பலராமர் மீண்டும் திரும்பி கிருஷ்ணனை பார்த்துவிட்டு சிலகணங்கள் நீர்த்துளி போல தத்தளித்தார். மேற்கொண்டு அவரது சித்தம் செல்லவில்லை. திரும்ப வந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெண்பளிங்குத்தூண் போன்ற பெரிய கைகளை பீடத்தின் கைப்பிடிகள் மேல் வைத்தார். துரியோதனன் தளர்ந்த தோள்களுடன் நின்றபின் தன் பீடத்தில் விழுந்து தலையை கைகளால் ஏந்திக்கொண்டான். குழல்கற்றைகள் சரிந்து விழுந்து அவன் முகம் மறைந்திருந்தது. அவையிலிருந்த அனைவரும் அவனையும் திருதராஷ்டிரரையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தனர்.

சாத்யகி கர்ணனை நோக்கினான். அவன் விழிகளில் தெரிந்த கூரிய இடுங்கலை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. திரௌபதியின் மணநிகழ்வில் அவன் கண்ட கர்ணனாக அவன் தெரியவில்லை. அன்று அவன் உடலில் இருந்த கரியபொலிவு முழுமையாகவே மறைந்திருந்தது. முகம் ஒடுங்கி தாடியும் அடர்ந்திருந்தமையால் அவனை முதலில் அடையாளம் காணவே சாத்யகியால் முடியவில்லை. குழிந்த கண்களின் ஒளிதான் அவன் கர்ணன் என்று காட்டியது. அவன் ஒரு சொல்லும் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் விழிகள் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தன.

மீண்டும் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து அவையில் அமைதி நிலவியது. அதன் எடை தாளாமல் தன் உடலை சாத்யகி மெல்ல அசைத்தான். பலராமர் ஏதோ சொல்லி அதை உடைக்கப்போகிறார் என எண்ணினான். ஆனால் அவர் சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் எதிர்பாராத கணத்தில் கிருஷ்ணன் எழுந்து “அப்படியென்றால் நாம் இந்த அவைவிவாதத்தை முடித்துக்கொள்வோம். நான் யுதிஷ்டிரரின் தரப்பாக சொல்லவந்ததற்கு இணையாகவே அரசரும் முடிவெடுத்திருக்கிறீர்கள்” என்றான். “யுதிஷ்டிரர் முடிதுறக்கிறார். துரியோதனர் முடிசூட விழைகிறார். அரசருக்கு அதில் எதிர்ப்பில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டது. மேற்கொண்டு பேசவேண்டியதில்லை. இந்த அவையிலேயே துரியோதனர் முடிசூடட்டும்.”

கிருஷ்ணனின் விழி ஒருகணம் தன்னை வந்துதொட்டதும் சாத்யகி புரிந்துகொண்டு கணிகரை நோக்கினான். அவன் நோக்குவது அவருக்குத்தெரியவேண்டுமென்பதற்காக தலையை சற்றுத் திருப்பி அவ்வசைவை அவர் பார்த்தபின் அவர் விழிகளை சந்தித்தான். அவர் திகைத்து விழிவிலக்கி நிலத்தை பார்த்தார். அவரது உடல் பதைக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை அவர் நிமிர்ந்து நோக்கியபோது சாத்யகி புன்னகைசெய்தான். அவர் நாகம் தீண்டியதுபோல விதிர்த்து திரும்பிக்கொண்டார்.

திருதராஷ்டிரர் உடல்தவிக்க யானைச்செவி போன்ற தன் கைகளை விரித்து “நான் என்ன செய்வேன்...? நான் செய்வதென்ன என்று எனக்குத்தெரியவில்லை... விதுரா... மூடா, என்ன செய்கிறாய்? அங்கே என்னதான் செய்கிறாய்...? அருகே வாடா... உன் மண்டையை பிளக்கிறேன்” என்றார். விதுரர் “இங்கிருக்கிறேன் அரசே, சொல்லுங்கள். தாங்கள் உணர்வதென்ன?” என்றார். “நான் என்ன செய்வேன்? என் இளையோன் பாண்டுவுக்கு நான் வாக்களித்த மண்ணல்லவா இது? அவனோ தன் மைந்தன் முடிசூடுவான் என்ற எண்ணத்துடன் இவ்வுலகுநீங்கியவன். அவன் மைந்தன் மறுத்தமையால் முடியை என் மைந்தனுக்கு அளித்தேன் என்று நான் சொன்னால் அவன் ஏற்றுக்கொள்வானா?”

“ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்று விதுரர் சொன்னார். “அரசே, முடிதுறப்பவன் மூன்று அடிப்படைகளிலேயே அதை செய்யமுடியும். துறவுபூண்டு காடேகும்பொருட்டு முடிதுறப்பது உத்தமம். உடல்நலமில்லாமல் முடிதுறப்பது அநிவார்யம். அச்சத்தாலோ ஐயத்தாலோ முடிதுறப்பது அதமம். இங்கே பாண்டுவின் மைந்தன் துறவுபூணவில்லை. ஆகவே அவர் முடிதுறப்பதை பிற இரண்டிலேயே சேர்ப்பார்கள் சூதர். அவர் துறவுகொள்ளப்போகிறாரா என்று தூதர் சொல்லட்டும்.”

“இல்லை. அவர் பாஞ்சாலன் மகளை மணந்திருக்கிறார், நன்மைந்தரைப் பெறவும்போகிறார் என நாடறியும்” என்றான் கிருஷ்ணன். “இனிமேல் அவர் எந்த நாட்டையும் வென்று அரசமைக்கமாட்டாரா?’ என்றார் விதுரர். “அவர் அரசர். அரசியின் கணவர். நாடாள்வார் என்பதில் ஐயமே இல்லை. துவாரகையின் நிலத்தை அவருக்கு அளிக்கவும் எங்களுக்கு எண்ணமுள்ளது” என்று கிருஷ்ணன் சொன்னான். விதுரர் “அரசே, அவ்வண்ணமென்றால் அவர் நாடுதுறப்பது ஏற்கத்தக்கதல்ல. அது அஸ்தினபுரிக்கும் தங்களுக்கும் தீராப்பழியையே அளிக்கும்” என்றார்.

“அரசே, இளையோனின் மைந்தனிடமிருந்து அவனுக்குரிய நாட்டை தாங்கள் கீழ்முறைகளின்படி கொண்டதாகவே இச்செயல் பொருள்படும் அவர் பிறிதொரு நாட்டை ஆளும்போது அது உறுதிப்படும். அவரது வழித்தோன்றல்கள் அதை நம்புவார்கள். நாளை நம் கொடிவழிமேல் தீராப்பகையும் கொள்வார்கள். தங்களுக்குரிய அரியணையென அவர்கள் அஸ்தினபுரியை எண்ணுவார்கள். படைகொண்டுவருவார்கள். அஸ்தினபுரியின் மண்ணில் உடன்பிறந்தார் போரிட்டு குருதி சிந்துவர்... ஐயமே தேவையில்லை” என்றார் விதுரர். “யுதிஷ்டிரனே முடிதுறந்தான் என நாம் சூதர்களை பாடச்செய்யலாம். ஆனால் நாம் சொல்லும் எதுவும் நிலைக்காது.”

“ஆம், உண்மை” என்று திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “அஸ்தினபுரியின் முடி யுதிஷ்டிரனுக்குரியது என நீங்கள் அறிவித்ததை நாடே அறியும். இன்று அதை நீங்கள் எப்படி மாற்றினாலும் அது உங்கள் மைந்தருக்காக செய்யப்பட்டது என்றே பொருள்படும்...“ என்று சௌனகர் சொன்னார். “மேலும் இந்த அவையில் யுதிஷ்டிரரின் சொற்களாக யாதவர் சொன்னதை அது நிறுவுவதாகவும் ஆகும். அரசே, அவையில் சொல்லப்படும் எச்சொல்லும் நாட்டுமக்களிடம் சொன்னதாகவே ஆகும். வழியில் எங்கும் அது தங்குவதில்லை.”

”நான் என்ன செய்வேன்...? எனக்கு ஒன்றுமே தெரியவில்லை சௌனகரே” என்று மீண்டும் திருதராஷ்டிரர் கைகளை விரித்தார். வான் நோக்கி இறைஞ்சுவதுபோல. சகுனி பெருமூச்சுடன் உடலை மெல்ல அசைத்து அமர்ந்து “அரசே, இது அஸ்தினபுரியின் மணிமுடி குறித்த பேச்சு. காந்தாரனாகிய நான் இதில் பேசலாகாது. ஆனால் என் மருகனின் குரலாக சில சொல்லலாம் என நினைக்கிறேன்” என்றார். “விதுரர் அஞ்சும் அனைத்தும் ஒரே செயலால் மறைந்துவிடும். யுதிஷ்டிரன் இங்கு வரட்டும். அவனுடைய கைகளாலேயே துரியோதனன் தலையில் மணிமுடி எடுத்து வைக்கட்டும். துரியோதனன் தன் தந்தையையும் ஆசிரியரையும் பணிந்தபின் தமையனைப் பணிந்து வாழ்த்துகொள்ளட்டும். அந்நிகழ்வைப்போற்றி ஒரு காவியம் எழுதச்செய்வோம். அதை சூதர் பாடித்திரியட்டும்” என்றார்.

சகுனி கணிகரை நோக்க அவர் மெல்ல உடலை அசைத்தார். கண்ணுக்குத்தெரியாத கட்டுகளை அறுத்து எழமுயல்பவரைப்போல. சாத்யகி அவரிடமிருந்து விழிகளை விலக்கவில்லை. மீண்டும் மீண்டும் சகுனி கணிகரை நோக்கினார். கணிகர் எழப்போகிறார் என சாத்யகி எண்ணினான். ஆனால் அவர் அறியாமல் திரும்பி சாத்யகியை பார்த்துவிட்டு உடல் தளர்ந்தார்.

சினத்தில் மூச்சடைக்க ”தருமன் வருவதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடும்? அவன் அறச்செல்வன் என்பதை நாடறியும். அவனிடம் நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள் அதை அவன் மீறவில்லை என்றே அதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார் விதுரர். “அல்லது மக்களிடம் நீங்கள் அப்படி சொல்வீர்கள்” என்று சகுனி சினம் கொண்ட ஓநாய் போல வெண்பற்கள் தெரிய சிரித்தபடி சொன்னார்.

“அரசே, இங்கு மூத்த யாதவர் சொன்னது என்ன? அவரது மாணவனுக்கு மண் வேண்டும் என்பதுதானே? அதை அளிப்போம். நாட்டை இரண்டாகப்பிரிப்போம். தட்சிணகுருநாட்டை இளவரசர் துரியோதனர் ஆளட்டும். அது அங்க்நாட்டுக்கும் அண்மையானதென்பதனால் அவர் அதை விரும்புவார். தங்கள் சொல் பிழைக்காமல் அஸ்தினபுரியை யுதிஷ்டிரனே ஆளட்டும்” என்றார் விதுரர் “அவன் அஸ்தினபுரியை ஏற்காமலிருப்பது தங்களுடைய உள்ளம் வருந்தலாகாது என்பதற்காகவே. உங்கள் மைந்தனுக்கு பாதிநாட்டை கொடுக்கும்படி சொல்லுங்கள். அதை மகிழ்ந்து அளித்தபின் அவன் அஸ்தினபுரியின் முடியை ஏற்பான். அனைத்தும் நிறைவாக முடிந்துவிடும்.”

மலர்ந்த முகத்துடன் “ஆம், அதுவே உகந்தது. என் மைந்தர் இருவருமே நாடாளட்டும். எவர் விழைவும் பொய்க்கவேண்டியதில்லை” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “அஸ்தினபுரியை என் அறச்செல்வன் ஆளட்டும். அவன்கீழ் என் மைந்தர் நாடாள்வதும் நன்றே.” சகுனி சினத்துடன் “அரசே, மண் என்றால் அவர்களுக்கு விரிந்த காந்தாரமே இருக்கிறது. படைகொண்டு சென்று விரும்பிய நாட்டை வெல்லும் ஆற்றலும் எனக்கிருக்கிறது. என் மருகன் விழைவது ஹஸ்தி ஆண்ட நகரை. குரு சூடிய முடியை” என்றார். மீண்டும் சகுனி கணிகரை நோக்க அவர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். சாத்யகியின் விழிகளை நோக்கி சற்று திடுக்கிட்ட சகுனி மீண்டும் கணிகரை நோக்கியபின் விழிகளை விலக்கினார்.

”அஸ்தினபுரியை தருமனுக்கு அளித்தவர் பேரரசர், அவரது சொல் அழியாது வாழவேண்டுமென்பதைப்பற்றித்தான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் விதுரர். கர்ணன் எழுந்த அசைவை உணர்ந்து அவையே அவனை நோக்கி திரும்பியது “அஸ்தினபுரியின் மணிமுடியை பேரரசர் யுதிஷ்டிரருக்கு அளிக்கட்டும். அதை இளவரசர் யுதிஷ்டிரர் தன் இளையோனாகிய துரியோதனனுக்கு அளிக்கட்டும். அவ்வண்ணமென்றால் அனைவர் சொற்களும் நிலைநிற்கும். அதற்குமுன் பாதிநாட்டை துரியோதனர் தன் தமையன் யுதிஷ்டிரரின் கால்களில் காணிக்கையாக வைத்து வாழ்த்துபெறட்டும்.”

பலராமர் உரக்க கைகளைத் தட்டியபடி “ஆம், ஆம், அதுவே உகந்தது. அனைவருக்கும் மகிழ்வு தருவது” என்றார். சாத்யகி அவரை எதற்காக கிருஷ்ணன் கூட்டிவந்தான் என்ற வியப்பை அடைந்தான். கர்ணன் “யுதிஷ்டிரர் தட்சிணகுருவின் முடிசூடியபின் அவரே வந்து நின்று முடிசூட்டியளிக்க அஸ்தினபுரியின் அரசை துரியோதனர் ஏற்பாரென்றால் எந்த எதிர்ப்பேச்சும் எழப்போவதில்லை. மாறாக தன் நாட்டை இளையோனுக்குப் பகிர்ந்தளித்தவன் என்று யுதிஷ்டிரர் புகழ்பெறுவார். தமையனுக்கு உகந்த இளையோன் என்று துரியோதனரும் அறியப்படுவார்” என்றான்.

சில சொற்கள் உடனே அவையின் முழு ஒப்புதலை அடைவதை சாத்யகி முன்னரே நோக்கியிருந்தான். கர்ணன் அதுவரை பேசாமலிருந்ததா அல்லது அவனுடைய ஆழ்ந்த குரலா எழுந்து பேசும்போது அவையனைத்தும் நிமிர்ந்து நோக்கும்படி ஓங்கிய அவன் உயரமா எது அதை நிகழ்த்தியதென்று தெரியவில்லை. எவரும் ஏதும் சொல்லவில்லை. அறிந்துகொள்ளும்படி எந்த ஒலியோ அசைவோ நிகழவில்லை. ஆனால் அவை அம்முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டதென்பதும் மேலும் ஒரு சொல்லும் சொல்லமுடியாதென்பதும் தெரிந்தது. சாத்யகி கணிகரை நோக்கினான் அவரது விழிகள் மின்னிக்கொண்டிருந்தன. அவர் ஏதோ சொல்வதற்காக இதழெடுத்தபின் சாத்யகியை நோக்கினார். சாத்யகி புன்னகைத்ததும் விழிதிருப்பி மெல்ல உடற்தசைகள் இறுகியபின் மீண்டும் தளர்ந்து உடைந்த உடலின் இருபகுதிகளும் தனித்தனியாக தரையில் அமைவதுபோல அமர்ந்துகொண்டார்.

பகுதி 11 : முதற்தூது - 7

என்ன நடக்கப்போகிறது என்று சாத்யகி பார்த்துக்கொண்டிருந்தான். கணிகர் எழமுடியாமலிருந்தது அவனுக்கு உவகை அளித்தது. முதலில் எவர் பேசப்போகிறார் என ஒவ்வொருவரும் கூர்ந்த விழிகளுடன் அமைதியாக இருந்தனர். அவையில் ஒரு கருத்து அனைவராலும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் அந்த அமைதி எழுவதை அவன் குலச்சபைகளிலேயே கண்டிருந்தான். தான் ஏற்ற கருத்துக்கு வலுவான மாற்றுக்கருத்து ஒன்று வரக்கூடும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். வந்தால் எப்படி மறுமொழி சொல்வது என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

துச்சாதனன் மெல்ல அசைந்ததும் மொத்த அவையின் விழிகளும் அவனை நோக்கின. அவன் அறியாமல் உடலை அசைத்திருந்தமையால் திகைத்து குழப்பத்துடன் தலைசரித்து காலால் தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தை நெருடத்தொடங்கினான். எங்கோ எவரோ செருமியது அவை முழுக்க மெல்லிய அலையை கிளப்பியது. சாத்யகி உள்ளூர புன்னகை செய்தான். எவர் பேசப்போகிறார் என்று, எது சொல்லப்படப்போகிறது என உய்த்துணரவே முடியவில்லை. ஆனால் அத்தருணத்தில் ஏற்றோ மறுத்தோ சொல்லப்படும் ஒற்றை வரி பெரும் வல்லமை கொண்டது என்று தெரிந்தது.

குடித்தலைவர் ஒருவர் அந்த இறுக்கத்தை வெல்லும்பொருட்டு உடலை எளிதாக்கினார். விழிகள் அவரை நோக்கியதும் திகைத்து உடனே எழுந்து கைகூப்பி உரத்தகுரலில் “ஆம், அங்கநாட்டரசர் சொல்வதே உகந்த வழி என நான் நினைக்கிறேன். இத்தனை மண்ணாசையுடன் நம் இளவரசர் வாளேந்தி நிற்க முடியாது. தருமருக்கு அஸ்தினபுரியை அளிக்காமலும் இருக்கமுடியாது... எனவே...” என்று சொல்லி அருகே இருந்தவரை நோக்கினார். அவர்தான் இவரது மாறா எதிரி என சாத்யகி எண்ணினான். அவன் எண்ணியது சரி என்பது போல அவர் எழுந்து “அனைத்தும் சரிதான். ஆனால் என்னதான் இருந்தாலும் அஸ்தினபுரியின் அரசனே குருகுலத்தை தொடர்பவன். தருமர் வெளியே நிற்பவரே” என்றார்.

அவை பறவைகள் நிறைந்த குளத்தில் கல்லெறிந்தது போல கலைந்து சலசலக்கத் தொடங்கியது. “ஆனால் அஸ்தினபுரியின் மணிமுடியை ஏற்பதில்லை என்று தருமர் உறுதிகொண்டிருக்கிறார்” என்றது ஒரு குரல். ”அந்தக் கூற்று ஒரு மங்கலக்கூற்றே. துரியோதனர் சென்று மணிமுடியை தருமருக்குக் கொடுத்தால் மறுக்கவா போகிறார்?” என்றார் இன்னொருவர். “ஏன் கொடுக்கவேண்டும்? கொடுப்பதாக எங்காவது துரியோதனர் சொன்னாரா?” என்றார் வேறொருவர். “கொடுத்தாலென்ன? தருமர் கொடுக்கிறாரே? தருமர் அளித்த அஸ்தினபுரியை துரியோதனர் மீண்டும் தருமருக்கே அளிக்கட்டுமே” என்றார் மற்றொருவர். “மணிமுடியை எவரேனும் விட்டுக்கொடுப்பார்களா?" என ஒருவர் கேட்க ”வெல்வதல்ல விடுவதே சான்றோரின் வழி” என்றார் பிறிதொருவர்.

“ஆம், அஸ்தினபுரியை அளித்தால் துரியோதனரை அயோத்தியை ஆண்ட ராகவராமனின் இளையோன் என சூதர் பாடுவார்களே!” “ராகவபரதனுக்கு மணிமுடி உரிமையே இல்லை... அதை தெரிந்துகொள்ளும்!” “எவருக்கு மணிமுடி உரிமை இல்லை? அரசகுலத்தில் அத்தனை பேருக்கும் மணிமுடி உரிமை உள்ளது என்பதே நூல்நெறி. இக்கட்டுகளில் எவரும் மணிமுடிசூடலாம்.” ”அப்படியென்றால் பீமன் முடிசூடட்டுமே. அவரல்லவா தருமனுக்கு இளையோன்?” “இதென்ன பேச்சு? அப்படி பார்க்கப்போனால் மணிமுடிக்குத் தகுதியானவர் பார்த்தர். அவர் முடிசூடட்டும்.” “மிகைப்பேச்சு எதற்கு? நாம் இங்கு இருவரில் எவருக்கு அஸ்தினபுரி உரிமை என்றே பேசிக்கொண்டிருக்கிறோம்.”

யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாமல் அவை அருவியென கொப்பளித்தது. பின்னர் அதன் விசை மெல்ல குறைந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் பேசியதன் பொருளின்மையை எங்கோ உணர்ந்து மீண்டு வந்து தாங்கள் கொண்ட முதற்கருத்தையே அடைந்ததுபோல அமைதியடைந்தனர். ஒரு குடித்தலைவர் “அங்கமன்னரின் திட்டத்தை ஏற்கவேண்டியவர் தருமரின் தூதராக வந்துள்ள யாதவர். அவர் பேசட்டும். நாம் பேசுவதனால் எப்பொருளும் இல்லை” என்றார். அனைவரும் கிருஷ்ணனை நோக்க அவன் புன்னகையுடன் சகுனியை நோக்கினான்.

அந்தச் சலசலப்பு அவையிலிருந்த அனைவரையும் எளிதாக்கிவிட்டிருந்ததை சாத்யகி கண்டான். கர்ணன் சொன்னதை நோக்கி சென்றதும் அம்முடிவை எளிதில் அடைந்துவிட்டோமோ என்று ஐயம் கொண்டிருந்தனர். அத்தனை குரல்களும் ஒலித்தடங்கியதும் அனைத்தும் பேசப்பட்டுவிட்டன என்றும் அதன்பின்னரும் கர்ணன் சொன்னதே வலுவாக நீடிக்கிறது என்றும் தெரிவதாக உணர்ந்தமை அவர்களை நிறைவடையச்செய்தது. கிருஷ்ணன் சொல்லும் ஓரிரு சொற்களுடன் அவைக்கூட்டமே முடிந்துவிடுமென உணர்ந்தபோது அவன் எழாமலிருந்தது திகைப்பை அளித்தது. அவன் சகுனியை நோக்க மொத்த அவையும் சகுனியை நோக்கி திரும்பியது.

சகுனி கணிகரை நோக்கி சிலகணங்கள் தயங்கியபின்னர் “எந்தெந்த ஊர்களை யாதவ அரசியின் மைந்தருக்கு அளிப்பது என்பதும் சிந்திப்பதற்குரியது...” என்று தொடங்கியதுமே கோல்பட்ட முரசென அவை உறுமி எழுந்தது. ஒரு முதிய குடித்தலைவர் உரக்க “இதில் பேச்சே இல்லை. அஸ்தினபுரியின் முடியை தருமரே இளையவருக்கு அளிப்பாரென்றால் அவர் கேட்கும் அத்தனை ஊர்களையும் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்... அதைப்பற்றி பேசுவதே இழிவு” என்றார். “ஆனால்” என்று சகுனி சொல்வதற்குள் அனைத்து குடித்தலைவர்களும் எழுந்துவிட்டனர். “நாம் சூதாடவில்லை காந்தாரரே, அறம்பேசுகிறோம்” என்று ஒருவர் கைநீட்டி கூவினார். “இது அஸ்தினபுரி. பாலைநிலத்தில் கூடிவாழும் கொள்ளையர் நகரமல்ல” என்று இன்னொருவர் கூவினார். “அறம் தானாகவே நெஞ்சில் தோன்றவேண்டும்...” “பாலைவன ஓநாயின் பசியடக்க யானையின் ஊனும் போதாது” என்றெல்லாம் குரல்கள் கலைந்து எழுந்தன. அத்தனை முகங்களிலும் எழுந்த கடும் வெறுப்பைக் கண்டு சகுனி திகைத்துப்போய் கணிகரை நோக்கியபின் கிருஷ்ணனை நோக்கினார். அவரது புண்பட்ட கால் துடித்தது. அவர் எழுந்துசெல்லவிழைந்தது போல உடல் சற்றே அசைந்தது. ஆனால் எழமுடியவில்லை.

”அஸ்தினபுரியின் முடியுரிமையை விட்டுக்கொடுப்பதாக இன்னமும் யுதிஷ்டிரர் முடிவு சொல்லவில்லை” என்று விதுரர் சொன்னார். “நாம் இன்னமும் பேசி முடிக்கவில்லை.” கர்ணன் எழுந்து உரக்க “என்ன பேச்சு அது அமைச்சரே? அஸ்தினபுரியின் முடியுரிமையைத் துறப்பதாக யுதிஷ்டிரர் சொன்ன பேச்சுடன்தான் இந்த அவையே கூடியது. எவர் சொன்னது அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று? ஒப்புக்கொள்ளவில்லை என்றால் யாதவர் சொல்லட்டும்” என்றான். மீண்டும் அனைத்து விழிகளும் கிருஷ்ணனை நோக்கி திரும்பின.

சாத்யகியின் விழிகளிடம் கணிகரை விட்டுவிடும்படி சொல்லிவிட்டு கிருஷ்ணன் “இத்தனை சிக்கலானதாக இது ஆகுமென நான் எண்ணவில்லை அவையீரே. நான் வந்தது இந்த அஸ்தினபுரியில் உடன்பிறந்தோர் குருதிசிந்தலாகாது, அவர்களின் வழித்தோன்றல்கள் வாளெடுக்கலாகாது என்பதற்காகவே. அதற்காகவே தான் முடிதுறப்பதாகவும் இளையோனுக்கு அரசை அளிப்பதாகவும் யுதிஷ்டிரர் சொன்னார். ஆனால் பாதிநாட்டை அளிக்கையில் இரண்டாமிடத்தை அவர் ஏற்பாரா என்பதை நான் எப்படி சொல்லமுடியும்?” என்றான். அதுவரை இருந்த அனைத்து அக எழுச்சிகளும் அடங்கி அமைந்தது அவை. அனைத்தும் முதல்புள்ளிக்கே சென்றுவிட்டன என்று தோன்றியது.

“இது வெறும்பேச்சு. யுதிஷ்டிரரின் நோக்கம் அமைதி என்றால் இதையன்றி எதையும் ஏற்கமுடியாது. இருசாராரும் நிலத்தை அடைகிறார்கள். இருவரும் அரசரின் பெருங்குடைக்கீழ் மைந்தராகவும் இருக்கப்போகிறார்கள். வேறென்ன விழைவதற்கு?” என்று கர்ணன் சொன்னான். “இரண்டாமிடத்தில் அமையக்கூடாதென்று யுதிஷ்டிரர் எண்ணுவாரென்றால் அவரே இங்கு போரை தொடங்குகிறார் என்றுதான் பொருள். இங்கு எவரும் அவரை இரண்டாமிடத்திற்கு செலுத்தவில்லை. இந்த நாட்டின் மணிமுடியை அவருக்குத்தான் அளிக்கிறோம். வென்று அதை ஈந்து அவர் செல்கிறார். அவர் குடி முதல்வராக அல்ல அதற்கும் மேலே குலச்சான்றோராக வணங்கப்படுவார்.”

“அது உண்மை” என்று கிருஷ்ணன் சொன்னான். “அவ்வண்ணமே பிற பாண்டவர்களும் உணர்வார்களா என்பதே நான் கொள்ளும் ஐயம்.” கர்ணனின் விழிகளை நோக்கியபடி “அத்துடன் அதை பாஞ்சாலர் ஏற்கவேண்டும். அவர் மகள் ஏற்கவேண்டும்.” கர்ணன் உடலில் எழுந்த விதிர்ப்பை சாத்யகியால் அத்தனை தொலைவிலேயே காணமுடிந்தது. அவன் திருதராஷ்டிரரை நோக்கிவிட்டு மீண்டும் கிருஷ்ணனை நோக்கினான். அவனால் பேசமுடியவில்லை என உதடுகளின் பொருளற்ற சிறு அசைவு காட்டியது. அதை உணர்ந்தவன் போல துரியோதனன் “அப்படி பலகுரல்களில் அவர்கள் பேசுவதாக இருந்தால் நீர் தூது வந்திருக்கலாகாது யாதவரே... தூதன் ஒற்றைச்செய்தியுடன் மட்டுமே வரமுடியும்” என்று உரத்த குரலில் இடைபுகுந்தான்.

“நான் ஒற்றைக்குரலைத்தானே முன்வைத்தேன்? யுதிஷ்டிரர் அரசை துறக்கிறார் என்று... ஆனால்...” என்று கிருஷ்ணன் சொல்வதற்குள் ஓங்கி தன் இருக்கையின் பிடியில் அடித்து ஓசையிட்டபடி பலராமர் எழுந்து கைகளை விரித்து “என்ன ஓசை இது? எத்தனை நேரம்தான் பொருளில்லாமல் பேசிக்கொண்டிருக்க முடியும்? எனக்கு பசியே வந்துவிட்டது” என்று கூவினார். குடித்தலைவர் இருவர் வெடித்துச்சிரித்துவிட்டனர். “நாம் அங்கநாட்டரசர் சொன்னதுமே முடிவெடுத்துவிட்டோம். அதற்கு மாற்றான அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன... இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை... போதும்” பலராமர் தொடர்ந்தார்.

“அஸ்தினபுரியின் முடியுரிமையை அரசர் யுதிஷ்டிரனுக்கு அளிப்பார். அவன் அதை என் மாணவனுக்கு அளித்து அவனே வந்து முடிசூடுவான். என் மாணவனும் நானும் சென்று யுதிஷ்டிரனை வணங்கி பாதிநாட்டை ஏற்றருளும்படி அவனிடம் மன்றாடுவோம். அவன் ஏற்பான். அவன் விரும்பும் ஊர்களெல்லாம் அளிக்கப்பட்டு தட்சிணகுரு நாடு பிறக்கும். இருநாடுகளும் அரசரின் குடைக்கீழ் ஒன்றாகவே இருக்கும் என்றும் வருங்காலத்திலும் எந்நிலையிலும் இருநாட்டுப்படைகளும் போர் புரியாது என்றும் இருசாராரும் கொற்றவைமுன் வாள்தொட்டு சூளுரைப்பார்கள். நீத்தாரும் வேதியரும் குலமூத்தாரும் குடித்தலைவரும் சான்றாக அச்சொல்லை ஓலையில் பொறித்துக்கொள்வார்கள். அவ்வளவுதான். அவை முடிந்தது. அரசர் அறிவிக்கட்டும். நாம் உணவுண்ண செல்வோம்.”

அவை நகைத்தது. அதன் நடுவே மெல்ல கணிகர் எழுந்ததை எவரும் காணவில்லை. “கணிகர் சொல்ல வருவதை கேட்போம்” என்று கிருஷ்ணன் சொன்னபின்னரே அனைவரும் திரும்பினர். கணிகரை நோக்கி திரும்பிய அனைத்து விழிகளிலும் இருந்த சினத்தைக் கண்டு சாத்யகியே அஞ்சினான். கணிகர் மெல்லியகுரலில் “அஸ்தினபுரி தட்சிணகுருவுக்கு அளிக்கும் நிலத்தில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும் இப்போதே பேசிவிடலாம். அவர்கள் போர்க்கோட்டையாக ஒரு நகரத்தை எழுப்புவார்கள் என்றால்...” என்று சொல்லத் தொடங்கவும் ஒரு குடித்தலைவர் “அவர்கள் அதை சுட்டு தின்பார்கள். அல்லது சுருட்டி இடுப்பில் ஆடையாகக் கட்டுவார்கள். நாம் அதை பேசவேண்டியதில்லை” என்று கூச்சலிட்டார்.

அதுவரையில் அந்த அவையில் நிகழ்ந்த அனைத்து முறைமைகளும் விலகிச்சென்ற அந்தத் தருணத்தை அவையே விரும்பியதென்பதையும் சாத்யகி கண்டான். கணிகர் மெல்லிய குரலில் “இல்லை, அவர்கள் யமுனையின் கரையில்...” என தொடங்கவும் “அவர்கள் அங்கே குடிலமைத்து தவம் செய்யவேண்டும் என்கிறீர்களா? என்ன பேசுகிறீர்கள்?” என்றார் இன்னொருவர். இளம்குடித்தலைவர் ஒருவர் “பேசுவதற்கு இந்த திரிவக்கிரர் யார்? இவருக்கு இங்கு அமரும் உரிமையை அளித்தவர் எவர்? முதலில் இந்த முடம் அவைவிட்டு வெளியேறட்டும். அதன்பின் பேசுவோம்” என்று கூச்சலிட்டார். இரண்டு குடித்தலைவர்கள் எழுந்து “இவரும் காந்தாரரும் இக்கணமே வெளியேறவேண்டும்... இல்லையேல் நாங்கள் வெளியேறுகிறோம். எங்கள் நாட்டைப்பற்றி எவரோ ஒருவரிடம் பேசும் நிலையில் நாங்களில்லை” என்று கூவினார்கள்.

துரியோதனன் சினத்துடன் கைதூக்கி “அவர்கள் என் தரப்பினர். என் மாதுலர்” என்று சொல்லி எழுந்தான். அதனால் சீண்டப்பட்டு உரத்தகுரலில் “அப்படியென்றால் நீங்களும் வெளியேறுங்கள். நாங்கள் அரசரிடம் பேசிக்கொள்கிறோம். இளவரசர் அரசரின் ஆணையை கடைபிடிப்பவர் மட்டுமே...” என்றார் முதிய குடித்தலைவர். “இப்போதே இந்த அயலவர் அஸ்தினபுரியின் மேல் கோல் செலுத்த முயல்கிறார்கள் என்றால் நாளை என்ன நிகழும்? வேண்டாம், அஸ்தினபுரியை தருமரே ஆளவேண்டும். இளையவர் ஆள நாங்கள் ஒப்பமாட்டோம்...” என்று இன்னொருவர் அவர் அருகே எழுந்து கூவ பிறர் ”ஆம், வேண்டாம்... யுதிஷ்டிரர் ஆளட்டும்” என்று சேர்ந்து குரலெழுப்பினர்.

கணிகர் திறந்த வாயுடன் பதைபதைத்த விழிகளுடன் நின்றார். அவர் முன் வெறுப்பு ததும்பும் முகங்களாக அவை அலையடித்தது. “முதலில் இந்த முடவனை கழுவிலேற்றவேண்டும்... இளவரசர் அதை செய்துவிட்டு வந்து எங்களிடம் பேசட்டும்... அதுவரை அவரை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார் ஒருவர். “இருமுடவர்களும் கழுவிலேற்றப்படவேண்டும்” என பின்னாலிருந்து ஒருகுரல் எழுந்தது. சாத்யகி என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் திரும்பி கிருஷ்ணனை பார்க்க அவன் அதே புன்னகை முகத்துடன் திருதராஷ்டிரரை நோக்கிக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரர் கைகளை உரக்கத்தட்ட அவை அப்படியே பேச்சடங்கியது.

“அவையினரே, எவர் அவையிலிருக்கவேண்டுமென முடிவெடுப்பவன் நான். நான் முடிவெடுக்கவேண்டியதில்லை என எண்ணுவீர்கள் என்றால் அதை சொல்லுங்கள். நான் முடிதுறக்கிறேன்” என்றார். “இல்லை, அதை சொல்லவில்லை” என்றார் மூத்த குடித்தலைவர். “சொல்லுங்கள், இங்கே உங்கள் ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான் நான் அமர்ந்திருக்கவேண்டுமா?” இன்னொரு குடித்தலைவர் “இல்லை அரசே. இது உங்கள் நாடு. உங்கள் அரியணை. நாங்கள் உங்கள் குடிகள்” என்றார். “அவ்வண்ணமெனில் அமருங்கள்... என் பேச்சை கேளுங்கள்.” அனைவரும் அமர்ந்துகொண்டனர்.

“சகுனி என் மைத்துனர். இந்த அரசின் அவையில் என் மைந்தனின் கோலுக்குக் காவலாக அவர் என்றுமிருப்பார். அது என் விழைவு” என்றார் திருதராஷ்டிரர். “தங்கள் சொற்கள் இவ்வரசில் ஆணை என்றே கொள்ளப்படும் அரசே” என்றார் விதுரர். 'ஆம் ஆம்' என்று அவை ஓசையிட்டது. “கணிகர் காந்தாரரின் அமைச்சர். அவர் இனிமேல் இந்த அவையில் இருக்கமாட்டார். காந்தாரரின் தனிப்பட்ட அமைச்சராக மட்டும் அவர் பணியாற்றுவார்” என்ற பின்னர் திரும்பி “கணிகரே, அவை நீங்கும். இனி எப்போதும் அஸ்தினபுரியின் அவைக்கு நீர் வரவேண்டியதில்லை” என்றார்.

கணிகர் கையை ஊன்றி எழுந்து ஒன்றன் மேல் ஒன்றென உடல் மடிய நின்று பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு எவரையும் நோக்காமல் தவழ்வது போல நடந்து வெளியேறினார். அவர் செல்வதை அவை அமைதியாக நோக்கியது. அவர் செல்லும் ஒலி மனிதர் நடப்பதுபோல கேட்கவில்லை. எதுவோ ஒன்று இழுத்துச்செல்லப்படும் ஒலியென கேட்டது. அவ்வொலியின் வேறுபாடே அங்கிருந்தவர்களை குன்றச்செய்தது. அவர்களின் விழிகளில் அருவருப்பு நிறைந்திருந்தது. அதை உணர்ந்தவர் போல கணிகரும் முடிந்தவரை விரைவாக கடந்துசெல்ல முயன்றார்.

அவர் தன்னையோ கிருஷ்ணனையோ நோக்குவார் என்று சாத்யகி எதிர்பார்த்தான். அவர் நோக்காமல் வாயிலைக் கடந்ததும் அவ்வாறுதான் நிகழும் என்ற உணர்வையும் ஒரு நிறைவையும் அடைந்தான். அவர் சென்றபின் வாயில் வாய் போல மூடிக்கொண்டதும் அப்பால் இடைநாழியில் தவழ்வதுபோல செல்லும் குறுகிய உருவத்தை அகக்கண்ணில் கண்டான். ஆழ்ந்த இரக்கவுணர்வு ஏற்பட்டது. திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அங்கே எதுவும் நிகழவில்லை என்பதைப்போல அவன் கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தான்.

”பிறகென்ன? முடித்துக்கொள்வோம்” என்றார் பலராமர். “அந்த முதியவர் சொல்வதென்ன என்று கேட்டிருக்கலாம். இத்தனைபேருக்கு இங்கே பேச இடமளிக்கப்பட்டது. ஆனால் அரசரின் ஆணை முடிவானது. ஆகவே அதை முடித்துக்கொள்வோம்.” கிருஷ்ணன் “நான் ஐயம்கொள்வது ஒன்றைப்பற்றி மட்டுமே. என் அத்தை யாதவ அரசி அஸ்தினபுரியின் மணிமுடியை தன் மைந்தன் சூடவேண்டுமென விழைந்தவர். அது இல்லையென்றாவதை அவர் விழைவாரா என தெரியவில்லை” என்றான். எரிச்சலுடன் கர்ணன் “எந்த உறுதியும் இல்லாமலா இங்கு தூதென வந்தீர்?” என்றான். “அவளிடம் நான் பேசுகிறேன். ஒரு அதட்டு போட்டால் கேட்கக்கூடியவள்தான்” என்றார் பலராமர்.

“இல்லை மூத்தவரே, அத்தை அப்படி பணிபவர் அல்ல. அது உங்களுக்கும் தெரியும்...” என்றான் கிருஷ்ணன். “நான் இங்கு வரும்போது என்னிடம் அத்தை சொன்னது இதைத்தான். அஸ்தினபுரியின் அரியணையில் தன் மைந்தன் அமரவேண்டுமென்பது அவர் கொண்ட சூள். அது மறைந்த மன்னர் பாண்டுவுக்கு அவரளித்த வாக்கு. அதை அவர் விடமாட்டார்.” பலராமர் சினத்துடன் “அப்படியென்றால் என்னதான் செய்வது? போரை ஆரம்பிக்கிறார்களா என்ன? வரச்சொல். நான் இவர்களுடன் நிற்கிறேன். நீ உன் தோழனுடன் படைக்கலமெடுத்து வா. உடன்பிறந்தாரின் போர் துவாரகையிலும் நிகழட்டும்” என்றார்.

விதுரர் “ஒன்று செய்யலாம். யாதவ அரசியின் விருப்பத்தை நிறைவேற்றலாம். தருமனே இங்கு அஸ்தினபுரியில் முடிசூடட்டும். அரியணை அமர்ந்து கோலேந்தி அன்னையிடம் வாழ்த்துபெறட்டும். அன்னையின் சொல்லும் நிலைபெறட்டும். அதன் பின் அவ்வரியணையை அவர் தன் இளையோனுக்கு அளித்தால் போதும். அதை அளிக்கமுடியாதென்று சொல்ல யாதவ அரசிக்கும் உரிமை இல்லை” என்றார். அவையில் இருந்து “ஆம், அதுவே வழி” என்று இருவர் சொன்னார்கள்.

சகுனி ஏதாவது சொல்வார் என சாத்யகி எதிர்பார்த்தான். ஆனால் மெல்லிய மீசையை முறுக்கியபடி அவர் பச்சைவிழிகளின் கனலை சாம்பல் மூடியிருக்க அமர்ந்திருந்தார். அவையினர் அவைகூடி நெடுநேரமானதனாலேயே முடித்துக்கொள்ள விழைந்தனர் என்று தோன்றியது. அந்தச்சலிப்பினாலேயே ஏதாவது ஒரு முடிவை அவர்கள் விழைந்தனர் என்றும் அத்தருணம் வரை அவர்களை கொண்டுவந்து சேர்ப்பவன் அவர்களைக்கொண்டு எதையும் செய்யலாம் என்றும் அவன் எண்ணிக்கொண்டான்.

கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்த கிருஷ்ணனை சாத்யகி கண்டான். எவரையாவது பேசவைக்க விரும்பினால் கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்குவதை அப்போதுதான் புரிந்துகொண்டான். கர்ணன் அமைதியற்று சற்று அசைந்தபின் “யுதிஷ்டிரர் அவையமர்வதென்றால்...” என்று தொடங்கியதும் கிருஷ்ணன் “ஆம், அது திரௌபதி அஸ்தினபுரியின் முடிசூடுவதேயாகும். அஸ்தினபுரியின் முடியை அவள் துரியோதனனுக்கு அளித்ததாகவும் பொருள்படும்” என்றான். துரியோதனன் சினத்துடன் ஏதோ சொல்ல எழுவதற்குள் கர்ணன் “அப்படியென்றால்...” என்று சொன்னதுமே திருதராஷ்டிரர் திரும்பி “அவள் அரியணை அமர்வதில் உனக்கு வருத்தமா அங்கநாட்டானே?” என்றார்.

தளர்ந்தவனாக “இல்லை, நான் இதில் முற்றிலும் அயலவன்” என்றான். “பிறகென்ன? துரியோதனா, உனக்கு அதில் எதிர்ப்புள்ளதா?” துரியோதனன் “இல்லை தந்தையே” என்றான். “அப்படியென்றால் யாருக்கு அதில் எதிர்ப்பு? திரைக்கு அப்பாலிருக்கும் உன் அன்னைக்கும் தங்கைக்குமா?” என்று திருதராஷ்டிரர் உரத்தகுரலில் கேட்டார். அவைக்கு அப்பாலிருந்த திரைக்குள் இருந்து துச்சளை உறுதியான குரலில் “பாஞ்சாலத்து இளவரசி அஸ்தினபுரியின் அரியணை அமர்வது நமக்கு பெருமையேயாகும் தந்தையே. அவர் பாரதவர்ஷத்தை ஆளப்பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். அவர் காலடிபட்டால் இந்த நகரம் ஒளிகொள்ளும்” என்றாள். அவை அதை ஏற்று ஒலியெழுப்பியது.

“நானே கோட்டைமுகப்புக்குச் சென்று அவரை வரவேற்று அழைத்துவருவேன். அரியணை அமரச்செய்து அருகே நிற்பேன்” என்று துச்சளை சொன்னாள். “ஆம், அவள் நம் முதற்குலமகள். அவள் இந்நகர் புகட்டும். தேவயானியின் மணிமுடியை சூடட்டும். அவள் கையால் என் மைந்தன் பெறும் மணிமுடி என்றும் நிலைக்கட்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். விதுரர் “தங்கள் சொற்களாலேயே சொல்லிவிட்டீர்கள். அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். திரும்பி அவையினரிடம் “எவரேனும் மாற்று சொல்லவிழைகிறீர்களா? முடிவெடுப்போமா?” என்று கேட்டார்.

“முடிவைத்தான் மும்முறை எடுத்துவிட்டார்களே... நாம் உணவுண்ணவேண்டிய நேரம் இது” என்றார் பலராமர் கையால் இருக்கையின் பிடியை பொறுமையில்லாது தட்டியபடி. விதுரர் புன்னகைத்து ”முடித்துவிடுவோம் யாதவரே” என்றார். “ஆக , இங்கே அரசரின் முடிவாக எட்டப்பட்டுள்ளது இது. அரசர் அஸ்தினபுரியின் முடியுரிமையை பாண்டுவின் மைந்தர் யுதிஷ்டிரருக்கு அளிப்பார். அதை அவரது மைந்தர்களே சென்று யுதிஷ்டிரருக்குச் சொல்லி அவரை அழைத்துவந்து அரியணையில் அமரச்செய்வார்கள்.”

”யுதிஷ்டிரரும் திரௌபதியும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்வார்கள். குருவின் முடியை யுதிஷ்டிரரும் தேவயானியின் முடியை திரௌபதியும் சூடுவார்கள். அன்னையிடமும் அரசரிடமும் வாழ்த்து பெறுவார்கள். அதன்பின்னர் அவர்கள் தங்கள் இளையோனாகிய துரியோதனனுக்கு அஸ்தினபுரியின் முடியையும் கோலையும் உவந்தளித்து வாழ்த்துவார்கள்.”

விதுரர் தொடர்ந்தார் “தன் தமையனை அடிபணிந்து ஆட்சியை அடையும் துரியோதனர் தட்சிணகுருநிலத்தை அவர் காலடியில் வைத்து வணங்கி ஏற்கும்படி கோருவார். அவர்கள் விரும்பிய நிலமும் ஊர்களும் அளிக்கப்படும். அவர்கள் நகர் அமைப்பது வரை அஸ்தினபுரியிலேயே தங்குவார்கள். அவர்கள் நகரமைத்து தனிமுடி கொண்டபின்னரும் மாமன்னர் திருதராஷ்டிரரின் மைந்தர்களாக அவரது ஆணைக்குக்கீழேதான் அமைவார்கள். இருநாடுகளும் என்றும் எந்நிலையிலும் போர்புரிவதில்லை என்றும் ஒருநாடு தாக்கப்பட்டால் இன்னொருநாடு முழுப்படையுடன் வந்து உதவும் என்றும் நீத்தார் வைதிகர் மூத்தார் முன்னிலையில் முடிவெடுக்கப்படும்.”

அவை கைதூக்கி “ஆம், ஆம், ஆம்” என்றது. பலராமர் “ஒருவழியாக முடித்துவிட்டோம். இந்த முடிவை எடுக்க இத்தனை சொற்களா? ஒரு மற்போர் முடிந்த களைப்பு வந்துவிட்டது” என்று சிரித்து கிருஷ்ணனிடம் “நான் என்றால் வந்ததுமே இந்த முடிவை அறிவித்து ஊண்களத்துக்கு சென்றுவிட்டிருப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகைத்தான். திருதராஷ்டிரர் “விதுரா, அந்த ஆணையை எழுதிவிடு. என் அரசகுறி அதற்குண்டு” என்றார். “அவ்வண்ணமே” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் கைகூப்பி “அவையமர்ந்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அஸ்தினபுரியின் சான்றோரவை சிறந்தமுடிவையே வந்து அடையும் என மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வவைக்கூடத்தில் அரசனென்ற முறையில் நான் ஆணையிடும் சொற்களை சொல்லியிருந்தால் அவை என் சொற்களல்ல என் முன்னோரின் சொற்களென்று கொள்ளும்படியும் அவை எவர் உள்ளத்திலேனும் துயர் அளித்திருக்குமென்றால் என்னை பொறுத்தருளவேண்டும் என்றும் கோருகிறேன். எளியேன் இந்த அரியணை அமர்ந்து சொல்லும் ஒரு சொல்லும் என் நலன் குறித்ததாக அமையலாகாதென்றே எண்ணியிருந்தேன். இம்முறையும் அதுவே நிகழ்ந்தது என நம்புகிறேன்” என்றார்.

“குருகுலவேழம் வாழ்க!" என்று ஒரு குலமூத்தார் கூவ பிறர் “வாழ்க” என்று வாழ்த்தினர். “எப்போதும் என் மைந்தர் பூசலிடலாகாது என்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. என் வாழ்வின் எஞ்சும் ஒரே விழைவும் என் மைந்தருக்கு நானிடும் இறுதி ஆணையும் இதுவே. நான் நிறைவுடன் மண் மறைய தென்புலத்தாரும் தெய்வங்களும் அருளவேண்டும்” என்றபோது திருதராஷ்டிரர் தொண்டை இடறி குரல்வளை அசைய அழத்தொடங்கினார். சஞ்சயன் அவர் தோளை தொட்டான். அவர் கன்னங்களில் வழியும் நீருடன் மீண்டும் அவையை வணங்கி அவன் கைகளைப்பற்றியபடி நடந்து சென்றார்.

தளர்ந்த நடையுடன் அவர் செல்வதை அவை நோக்கி நின்றது. குடித்தலைவர் பலர் கண்ணீர் விட்டனர். பலராமர் கண்ணீருடன் திரும்பி “ஒரு தந்தை அதை மட்டுமே விழையமுடியும் இளையோனே. அவருக்காக நான் வஞ்சினம் உரைக்கவேண்டும் என என் அகம் பொங்கியது. இனி குருகுலத்தார் பூசலிட்டுக்கொண்டால் அத்தனைபேர் மண்டையையும் உடைப்பேன்” என்றார். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான். விதுரர் “அவைகூடிய அனைவரையும் வணங்குகிறேன்” என்றதும் சௌனகர் கைகாட்ட நிமித்திகன் முன்னால் வந்து வலம்புரிச்சங்கை ஊதினான். வெளியே பெருமுரசம் முழங்கி அவை நிறைவடைந்ததை அறிவித்தது.

அவைக்குத் தலைவணங்கி தனித்து தலைகுனிந்து சகுனி விடைகொண்டு சென்றார். துரியோதனன் கர்ணனின் தோளைத்தொட்டு மெல்ல ஏதோ சொன்னபடி வெளியேறினான். துச்சாதனனும் பிறரும் அவனை தொடர்ந்தனர். விதுரர் சௌனகரிடம் ஏதோ பேசத்தொடங்க குலத்தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு விலகிச்சென்ற முழக்கம் கூடத்தை நிறைத்தது.

கிருஷ்ணன் எழுந்தான். சாத்யகி அதுவரை அங்கே பேசப்பட்டவற்றை தொகுத்துக்கொள்ள முயன்றான். சகுனியுடன் கிருஷ்ணன் ஆடிய நாற்களப்பகடை போலவே எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாததாகத் தோன்றியது. நீர்ப்பெருக்கு போல எந்தவிதமான ஒழுங்கும் அற்றதாகவும் நீருக்குள் உறையும் பெருவிழைவால் இயக்கப்படுவதாகவும். என்னென்ன பேச்சுகள்! என்னென்ன உணர்வுகள்! எங்கெங்கோ சென்று எதையெதையோ முட்டி முடிவுமட்டும் முற்றிலும் கிருஷ்ணனுக்குச் சார்பாக வந்து நின்றது.

அவன் ஓரக்கண்ணால் கிருஷ்ணனை நோக்கினான். அதை அவன் இயற்றவில்லை. அவன் வெறுமனே அமர்ந்திருந்தான். அத்தனைபேரும் கூடி அதைச் செய்து அவன் காலடியில் படைத்தனர். அங்கு பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் அவன் விழைந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் அவன் திட்டமிட்டு வந்தவை. ஆனால்... பலராமர் உரக்க “அனைத்தும் நிறைவாக முடிந்தது இளையோனே” என்றார் . “ஆம்” என்றான் கிருஷ்ணன்.

பகுதி 12 : நச்சுமலர்கள் - 1

திருதராஷ்டிரரின் அணுக்கச்சேவகரான விப்ரர் மெல்ல கதவைத்திறந்து கிருஷ்ணனையும் சாத்யகியையும் அவர்களை அழைத்துவந்த கனகரையும் தன் பழுத்த கண்களால் பார்த்துவிட்டு ஆழ்ந்தகுரலில் “யாதவர் மட்டும் வருவதாகத்தான் அரசர் சொன்னார்” என்றார். “நான் என் மருகனுடன் வந்துள்ளதாக சொல்லும்” என்றான் கிருஷ்ணன். விப்ரர் மூச்சு ஒலிக்கத்திரும்பி கதவை மூடிவிட்டு சென்றார். மூடியகதவின் பொருத்தை நோக்கியபடி அவர்கள் காத்து நின்றனர். மீண்டும் கதவு திறந்து விப்ரர் “உள்ளே செல்லுங்கள்” என்றார்.

கிருஷ்ணனுடன் அறைக்குள் செல்லும்போது விப்ரர் விழியிழந்தவர் என்ற எண்ணம் ஏன் தனக்கு முதலில் ஏற்பட்டது என்று சாத்யகி வியந்துகொண்டான். அவரது விழிகள் எதையும் பாராதவை போலிருந்தாலும் அவை நோக்கிழந்தவை என தோன்றவில்லை. அவரது அசைவுகளில் விழியின்மை இருந்தது. புருவச்சுளிப்பில் உதடுகளின் கோடலில் தலையை சற்றே திருப்பிய விதத்தில் அதுவே வெளிப்பட்டது. விப்ரர் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். அறையில் நெய்விளக்குகளுடன் அவர்கள் மட்டும் நின்றிருந்தனர்.

அந்த நீண்ட அரையிருட்டான அறையில் நெய்விளக்குக் கொத்துகளின் செவ்வெளிச்சம் தேன்மெழுகுபூசப்பட்டு மின்னிய கரியமரத்தரைப்பரப்பில் குருதி போல சிந்திப்பரவியிருந்தது. உலோகத்தாலானவை என மின்னிய மரத்தூண்களின் வளைவுகளில் அச்செவ்வொளி விளக்கேற்றியிருந்தது. எரியும் நெய்யுடன் சேர்க்கப்பட்ட தேவதாருப்பிசின் மணத்தது. சாளரத்துக்கு வெளியே நின்றிருந்த மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கம் சிறிய அறைவாயில் பாதி திறந்திருக்க அப்பாலிருந்து வந்த வெளிச்சம் நீண்டு தரையில் விழுந்து சுவரில் மடிந்து எழுந்து கூரையில் சிதறித்தெரிந்தது.

மிகப்பழைமையான மரக்கட்டடம் அது என சாத்யகி நினைவுகூர்ந்தான். அவ்வரண்மனை பாரதவர்ஷத்தின் தொடக்ககால கட்டடங்களில் ஒன்று. அதன்பின் குரு அதை மீளக்கட்டினார். பிரதீபர் பழுதுபார்த்தார். அதைக்கட்டியதன் கதைகளை அவன் இளமையிலேயே கேட்டிருந்தான். காட்டில் எந்தெந்த பெருமரங்களின் கனியை பல்லுதிர்ந்த முதுகுரங்கு தேடிச்சென்று உண்கிறதோ அவை மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு வெட்டிக்கொண்டு வரப்பட்டன. இலைகுறுகி கனிஅருகி இனிமைபெருகிய முதிர்மரங்கள் நூறாண்டுவாழ்ந்து நிறைந்தவை. அம்மரங்களுடன் வந்த மலைத்தெய்வங்கள் அனைத்தும் அஸ்தினபுரியின் அருகே புராணகங்கையின் மலைக்காடுகளுக்குள் குடியிருத்தப்பட்டன.

இயல்பான நடையில் சென்ற கிருஷ்ணன் அந்தச்சாளரத்தின் அருகே விரிந்த மரப்பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி தலைதாழ்த்தி வணங்கி “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன்” என்றபின்னர்தான் அவரை சாத்யகி கண்டான். அவர் அங்கிருப்பதை ஏன் தன்னால் காண முடியவில்லை என வியந்தான். ஒருவர் அறைக்குள் இருப்பது அளிக்கும் புலன்கடந்த இருப்புணர்வுகூட எழவில்லை. அவர் விழியிழந்தவர் என்பதனாலா? விழிதான் ஒருவரை இருப்புணர்த்துகிறதா? அல்லது விழியிழந்தவர்கள் அப்படி இருளுடன் கலந்து இன்மையென இருக்கும் இயல்புகொண்டவர்களா?

திருதராஷ்டிரர் “அமர்க யாதவரே” என்றபின் “உமது மருகன் இன்னும் களப்பயிற்சி கொள்ளவில்லை இல்லையா?” என்றார். “ஆம்” என்றான் கிருஷ்ணன். “அவன் காலடியோசை சீராக இல்லை. மேயும் விலங்கின் காலடியோசை“ என புன்னகைத்து “வேட்டைவிலங்கின் சீர்நடையை அடைந்தவனே வீரன்” என்றார். கிருஷ்ணன் “அவனை பார்த்தனுக்கு மாணவனாக ஆக்கலாமென எண்ணுகிறேன்” என்றான். “ஆம், அது நன்று. பார்த்தனுக்கு உகந்த மாணவன் இன்னமும் அமையவில்லை. நல்ல மாணவனை அடைந்தவன் தான் கற்றவற்றை மேலும் அணுகிக்கற்கிறான்” என்றார் திருதராஷ்டிரர்.

சாத்யகி விளக்கொளியை தூண்டலாமா என எண்ணி திரும்பப் போகையில் கிருஷ்ணன் வேண்டாம் என விழிகாட்டினான். அவன் கிருஷ்ணன் அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டான். “நீண்ட அவைநிகழ்வுக்குப்பின் ஓய்வெடுக்க விழைந்திருப்பீர்கள். உடனே வரச்சொன்னமைக்கு வருந்துகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாளை சந்திக்கலாமென்றே எண்ணினேன். ஆனால் இன்றிரவு முழுக்க நான் பேசப்போவதை எண்ணி எண்ணி துயிலழிவேன். ஆகையால் வரச்சொன்னேன்.” கிருஷ்ணன் “அரசரை சந்திக்கும் நல்வாய்ப்பை முந்திப்பெறவே விழைந்தேன்...” என்றான். திருதராஷ்டிரர் புன்னகைத்து “ஆம், நீர் விளையாட விழைபவர்... இன்னொரு களம் என எண்ணியிருப்பீர்” என்றார்.

கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை. திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கிக்கொண்டார். அவரது பெரிய தசைகள் இறுகி அசைவதை சாத்யகி வியப்புடன் பார்த்தான். மானுட உடலின் உச்சநிலை என்று தோன்றியது. பல்லாயிரம் கொண்ட மந்தையில் ஒரே ஒரு எருது மட்டுமே மாடு என்னும் வடிவின் உச்சத்தை அடைந்திருக்கும் என யாதவர் சொல்வதுண்டு. ஒன்றென ஆகிவிட்டதனாலேயே மாடுகளை ஆளும் அனைத்து தெய்வங்களும் அதில் குடியேறிவிடும். கொம்புகளில் இந்திரனும், கண்களில் அக்னியும், வாயில் வருணனும், மூக்கில் வாயுவும், புள்ளிருக்கையில் குபேரனும், இரு விலாக்களிலும் வான்மருத்துக்களும், வாலில் வாசுகியும் குளம்புகளில் தாளமென கைலாயநந்தியும் அமைவர். அதன் ஒவ்வொரு உறுப்பும் முழுமையடைந்திருக்கும். முழுமையின் உச்சத்தில் அது முகில்களில் ஏறி விண்ணகம் செல்லும்...

“நான் உம்மிடம் சில வினாக்களை கேட்க விழைந்தேன்...” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நீர் உள்ளே வந்தகணம் தெரிந்தது அவை வினாக்களே அல்ல. நானே அறிந்தவை. நான் உம்மிடம் பேசவிழைவது அவற்றையும் அல்ல. அவை பொருளிழந்து நிற்பதை உணர்ந்து திகைத்து விட்டேன்... இப்போது என்னிடம் சொற்களில்லை.” கிருஷ்ணன் “நீங்கள் எதையாவது சொல்லத்தொடங்கலாம் அரசே. எதைச்சொன்னாலும் அங்குதான் வந்து சேர்வீர்கள்” என்றான். “ஆம், அது உண்மை” என்ற திருதராஷ்டிரர் “ஆனால் எங்கு தொடங்குவது...?” என்றார்.

“நான் உள்ளே நுழைந்த கணம் நீங்கள் எண்ணிக்கொண்டிருந்ததை” என்றான் கிருஷ்ணன். “நான் என் மைந்தனைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இன்று அவையில் அவன் உடைவாளை தன் கழுத்தை நோக்கி எடுத்தகணம் மின்னலென என் மீது இறங்கி என்னை எரிய வைத்த புத்தம்புதிய அறிதல் ஒன்றை...” அவர் மரக்கட்டை உரசும் ஒலிகளுடன் கைகளை உரசிக்கொண்டார். பற்கள் கடிபட தாடை இறுகி அசைந்தது. “யாதவரே, இப்புவியில் எனக்கு அவனன்றி எதுவும் பொருட்டல்ல. குலம், குடி, அறம், தெய்வம் எதுவும். அவனில்லாமலான பின்னர் என் வாழ்வில் எஞ்சும் பொருளென ஏதுமில்லை...”

பக்கவாட்டில் கிருஷ்ணனின் விழிகளில் சுடரொளி தெரிந்தது. “அதிலென்ன வியப்பிருக்கிறது கௌரவரே? என்றும் இங்கு வாழும் அழியாத உண்மை அல்லவா அது?” திருதராஷ்டிரர் கையை விரித்து “ஆம், மீளமீள நூல்கள் சொல்லி அறிந்த ஒன்றுதான் அது. ஆனால் நாம் அதை நம்புவதில்லை. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் நாமும் இம்மண்ணிலுள்ள பிற தந்தையருக்கு நிகராகிவிடுகிறோம். தன்னை சற்று மாறுபட்டவன் என நம்பாத எவருண்டு?” வெற்றுவிழிகள் அதிர உதடுகளை இறுக்கினார். கழுத்துத் தசைகள் இழுபட்டு தளர்ந்தன. “ஆக, நானும் வெறுமொரு தந்தையே. என் குலமும் நான் கற்ற கல்வியும் அமர்ந்திருக்கும் தொல்பெரும் அரியணையும் அனைத்தும் பொருளற்றவை.” கிருஷ்ணன் “உண்மை” என்றான். அச்சொல் அவரை கூர்முனையால் தாக்கியது போல அவர் சற்று விதிர்த்து மீண்டும் பெருமூச்சு விட்டார்.

“யாதவரே, நீர் கற்ற வேதமுடிபு கொள்கையில் மனிதன் இறைவடிவென்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், காமகுரோதமோகங்களும் இறைவடிவே. ஆக்கமும் அழகும் மெய்மையும் மட்டுமல்ல அழிவும் இழிவும் பொய்மையும் கூட முழுமுதன்மையின் வடிவங்களே” என்று கிருஷ்ணன் சொன்னான். அவர்கள் வேறு எதையோ சுற்றிவருவதைப்போல தோன்றியது. அதை மட்டுமே உணர்ந்து அதை சொல்லாமல் பிறவற்றைச் சொல்லி ஆனால் அதுவே சொல்லப்படுகிறதென்று ஆழத்தில் அறிந்து. திருதராஷ்டிரர் எதுவரை செல்லப்போகிறார் என்று சாத்யகி வியந்தான்.

“காம்பில்யப்போரைப்பற்றி என்னிடம் விரிவாகவே சொல்லப்பட்டது” என்று மறுகணமே திருதராஷ்டிரர் சொன்னார். சாத்யகி அதிர்ந்து கிருஷ்ணனை நோக்கி பின் திருதராஷ்டிரரை நோக்கினான். திருதராஷ்டிரர் தன் விழிகளை நோக்கமுடியாதவர் என்பது அவனை அமைதியிழக்கச்செய்வதாகவே இருந்தது. வேறு ஏதோ வழியில் அவர் அவனை நோக்கக் கூடும். அவர் உடனே அதைச்சொல்லத் தொடங்கியது கிருஷ்ணனை வியப்பிலாழ்த்தவில்லை. சாத்யகி திருதராஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கினான். அவர் சொல்தேர்வது தெரிந்தது.

“காம்பில்யத்தில் ஒரு களிப்போர் நிகழ்ந்தது என்றார்கள் என் மைந்தர்கள். பாண்டவர்கள் தங்களுடனிருப்பதனால் சற்றே தருக்கு கொண்ட பாஞ்சாலப்படைகள் நம் எல்லைக்குள் மீறிவந்திருக்கின்றன. என் மைந்தரும் அங்கநாட்டரசனும் படைகொண்டு சென்று அவர்களை துரத்தியிருக்கின்றனர். துரத்திய விரைவில் கோட்டையருகே சென்றுவிட்டனர். அஸ்தினபுரியின் படையினர் கோட்டையை தாக்குகிறார்கள் என்றெண்ணி பாண்டவர்கள் படைகொண்டு எதிர்வர ஒரு சிறு பூசல் நிகழ்ந்திருக்கிறது. நமது படகுகள் கோட்டையின் சதக்னிகளால் எரிக்கப்பட்டன... தருமன் சொல்லால் போர் நின்றது. நம் இளையோர் மீண்டனர்.”

திருதராஷ்டிரர் கிருஷ்ணன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தபின்னர் ”இதுவே உண்மையா என விதுரனிடம் கேட்டேன். ஆம் என்றான். அதன்பின்னரும் ஐயம் எஞ்சியது. என் ஒற்றர்களை அனுப்பி நேரடியாகவே உசாவியறிந்தேன். ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு வந்திருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்தது காம்பில்யக்கோட்டையை வெல்வதற்கான முழுப்போரேதான். என் சிறுவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, காம்பில்யத்தை வென்று அஸ்தினபுரிக்கு ஆவதொன்றும் இல்லை. இந்தப்போர் அதை வெல்வதற்காக அல்ல.”

தலையை மெல்ல அசைத்து “இது உடன்பிறந்தாரின் போர்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “அந்தக்களத்தில் நிகழ்ந்தது அதுதான். அது மீண்டும் நிகழலாகாதென்ற பதைப்பிலேயே என் நாட்கள் கழிகின்றன... வேறு ஒரு சிந்தை என் நெஞ்சில் வந்து நீணாளாகிறது.” கிருஷ்ணன் “இன்று அவையில் உடன்பிறந்தார் பூசல் குறித்து சொன்னதுமே நீங்கள் விம்மி அழுததைக் கண்டதும் நான் அதை அறிந்துகொண்டேன் கௌரவரே” என்றான். திருதராஷ்டிரர் அவனை நோக்கி தன் முகத்தைத் திருப்பி “அதை எப்போது எண்ணினாலும் என் நெஞ்சு பதறுகிறது. மிக அண்மையில் அது வந்துவிட்டதென்பதுபோல... யாதவரே, என்றேனும் அது இம்மண்ணில் நிகழுமா? நீர் என்ன நினைக்கிறீர்?” என்றார்.

சாத்யகி திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவன் தன் அணிகள் மெல்லென ஒலிக்க “வாழ்க்கைக்கு என பொருள் ஒன்று இருக்குமென்றால் அது இதை எவ்வகையிலும் முன்னரே வகுத்துவிட முடியாது என்பதே” என்றான். அவன் சொன்னதற்கு என்ன பொருள் என சாத்யகியின் உள்ளம் வியந்தது. திருதராஷ்டிரர் சிலகணங்கள் செவிகூர்ந்துவிட்டு “நீர் சொல்வது எனக்கு பொருளாகவில்லை. நிகழலாமென நீர் சொல்வதாகவே எடுத்துக்கொள்கிறேன். யாதவரே, என்னால் முடிந்தவரை அதைத் தடுக்க இயன்றதை செய்துவிட்டுச் செல்வேன்” என்றார்.

பின்னர் தன்னிலை திரும்பி “இன்று அவையில் பேசிக்கொண்டிருந்தபோது நான் உணர்ந்த மேலுமொன்று என் அச்சத்தை வளர்த்தது. என் இரு தரப்பு மைந்தர் மட்டும் அல்ல, மொத்த அவையினரே இந்நாட்டை தங்கள் உள்ளத்தால் பலநூறு முறை பகிர்ந்து பகிர்ந்து ஆடிப்பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அதில் தரப்பும் எதிர்தரப்பும் உள்ளன. எதையும் உணராத விழியற்றவனாக நான் இருந்திருக்கிறேன்...” என்றார். “யாதவரே, கைநழுவிவிட்ட அரியபொருள் ஒன்று நிலத்தைத் தொடும் ஒற்றைக்கணம் நீண்டு நீண்டு சென்றதாகவே இந்த அவைகூடல் அமைந்தது எனக்கு. அப்பொருள் மென்மணலில் உடையாது சென்றமைந்தது போல முடிந்தது... நான் கண்ணீர்விட்டது அந்த நிறைவினாலும் கூடத்தான்.”

“இந்தக் குடியும் நிலமும் ஏற்கெனவே பிளந்து விட்டன யாதவரே. இன்று உண்மையில் அது மேலும் பிளக்காதபடி செய்துவிட்டோம். சற்றுமுன்புவரை நான் அந்தப்புரத்தில் காந்தாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீர் இக்குலத்தை பிளந்துவிட்டீர் என்றாள். அவள் நோக்கில் இருதரப்பு மைந்தரையும் ஓர் ஊட்டவையில் அமரச்செய்து அவள் கையால் அமுதூட்டி பேசச்செய்தால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும். அன்னையென அவள் அப்படி நினைப்பதை நான் தடுக்கவும் விரும்பவில்லை” திருதராஷ்டிரர் சொன்னார்.

“ஆனால் அவள் பேசப்பேச மறுபக்கம் என் உள்ளம் உறுதிகொண்டபடியே வந்தது. அனைத்தும் சிதறுவதிலிருந்து நீர் இக்குடியை காத்திருக்கிறீர். அதற்கு மறுகொடையாக நீர் அடையப்போவது குலத்தைப்பிளந்தவர் என்ற பழியை மட்டுமே. இருந்தும் இத்தொலைவு வந்து இன்று அவையை நடத்திச்சென்று முடிவை அடைந்தமைக்காக அஸ்தினபுரியும் நானும் உமக்கு கடன்பட்டிருக்கிறோம்" என்றார் திருதராஷ்டிரர். “நீர் எவரென என் நெஞ்சு சிலசமயம் துணுக்குறுகிறது. நானறியாத எவரோ என. நான் அறியவே முடியாத எவரோ என... உள்ளம் கொள்ளும் ஆடல்களுக்கு அலகில்லை.”

புன்னகையுடன் கிருஷ்ணன் “அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்ததை எண்ணி நானும் மகிழ்கிறேன்” என்றான். ”ஆம், இம்முடிவு எனக்கு முதலில் நிறைவை அளித்தது. இருதரப்பினரும் விழைந்தவை அடையப்பட்டுவிட்டன என்று எண்ணினேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அப்படியல்ல என்று தோன்றத்தொடங்கியது. யாதவரே, இப்பூசல் நிலத்தின்பொருட்டு அல்ல.” கிருஷ்ணன் சிலகணங்கள் கழித்து “ஆம்” என்றான். “நிலத்தின் பொருட்டென்றால் மட்டுமே அது நிலத்தால் முடியும்...” என மீண்டும் திருதராஷ்டிரர் சொன்னார். கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை.

“பாஞ்சாலன் மகள் பேரழகி என்றனர்” என்று திருதராஷ்டிரர் சற்றுநேரம் கழித்து மெல்லியகுரலில் சொன்னார். “அவள் எவ்வகை அழகி?” கிருஷ்ணன் புன்னகைத்து “விளங்கவில்லை அரசே” என்றான். “யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள்? அகந்தை கொண்டவளா? ஆட்டிவைப்பவளா? கடந்துசென்று அமைபவளா? இல்லை அன்னைவடிவம்தானா?” கிருஷ்ணன் “ஏன், அவையனைத்தும் கொண்ட அன்னைவடிவாக அமையக்கூடாதா?” என்றான். திருதராஷ்டிரர் சற்று திகைத்து “ஆம், அதுவும் இயல்வதே. அதுவும்கூடத்தான்” என்றார்.

பின்னர் மெல்லியகுரலில் “அவள்பொருட்டு குருதிசிந்தப்படுமா?” என்றார். கிருஷ்ணன் “குருதி சிந்துவதை அவளால் நிறுத்தமுடியுமா?” என்றான். ”யாதவரே, அவள் எவளென என்னால் உய்த்துணரவே முடியவில்லை. நூறு கோணங்களில் என் சிந்தை திரும்பியும் என் அகம் அவளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நேற்று அவள் நகர்நுழைவதை, அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்து தேவயானியின் மணிமுடியை சூடுவதை எண்ணிக்கொண்டபோது அச்சத்தால் என் அகம் நடுங்கியது. அது அவள் மேல் கொண்ட அச்சம் அல்ல. அதற்கும் அப்பால். மேலும் பெரிய ஒன்றைப்பற்றிய அச்சம். அச்சமென்றுகூட சொல்லமுடியாது. ஒருவகை நடுக்கம் மட்டும்தான் அது.”

சாத்யகி அவரது உணர்வை தன்னால் துல்லியமாக புரிந்துகொள்ளமுடிவதை உணர்ந்தான். ஒருவேளை அத்தனைபேராலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உணர்வுதானா அது? மிக அடிப்படையான ஓர் உள்ளுணர்வு? “நான் உம்மை அழைத்தது, இதைச் சொல்லவே. அவள் இந்நகர்புகுவதும் சரி, அரியணை அமர்வதும் சரி, இனிமேல் தவிர்க்கக்கூடுவது அல்ல. ஆனால் அவள் இங்கு மிகச்சிலநாட்கள் மட்டுமே இருக்கவேண்டும். அனைத்தும் சேர்ந்து ஒருவாரகாலத்திற்குள் முடிந்தால் மிக நன்று. ஏனென்றால்...” திருதராஷ்டிரர் சொல்லுக்காக தத்தளித்து “ஏனென்றால் அனைவரும் இணைந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது” என்றார்.

சொன்னதுமே அச்சொற்றொடர் மிகத்தட்டையானது என உணர்ந்தாலும் அது தொடர்புறுத்திவிட்டதையும் அவரால் அறியமுடிந்தது. பெருமூச்சுடன் “அதை நீர் எனக்காக செய்யவேண்டும். இங்கே அவள் முடிசூடியதுமே துவாரகைக்கு அவளை ஒரு விருந்துக்காக அழையும். அல்லது... அல்லது வேறு ஏதோ ஓர் அழைப்பு. அவள் உம்முடன் வரட்டும். அஸ்தினபுரியில் அவள் இருக்கலாகாது. அவர்கள் அடையும் புதுநிலத்தை ஓரிருமாதங்களுக்குள் பங்கிட்டு எல்லை வகுக்க நான் விதுரனிடம் ஆணையிடுகிறேன். அந்நிலத்தில் அவர்கள் புதுநகர் ஒன்றை அமைப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் “ஆம்” என்றான். “அங்கே அவர்கள் குடியேறட்டும். அவள் அங்கே கோலேந்தி அமரட்டும். எப்போதேனும் குடிவிழவுகளில் மட்டுமே அவர்கள் சந்தித்துக்கொள்ளட்டும்.” கிருஷ்ணன் “அதை செய்வேன் என நான் உறுதியளிக்கிறேன் கௌரவரே” என்றான். “ஆனால்...” என சிலகணங்கள் தயங்கி “அண்மையை விட சேய்மை உணர்வுகளை விரைவுடையதாக ஆக்கும் அல்லவா?” என்றான். திருதராஷ்டிரரால் அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலகணங்கள் உறைந்து அமர்ந்திருந்துவிட்டு புரிந்துகொண்டதும் தலை அறியாமல் முன்னால்நீள “ஆம், எண்ணத்திலிருந்து விலக்குதல் எளிதல்ல. ஆனால் கண்முன்னிருக்கும் உருவம் மேலும் மேலும் வளரக்கூடியது. அதன் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அசைவும் கொல்லும் நஞ்சாகக்கூடும்” என்றார்.

“அதை தவிர்ப்பதைப்பற்றியே நான் பேசுகிறேன் யாதவரே. இப்போது நான் செய்யக்கூடுவதென பிறிதொன்றுமில்லை.” மேலும் எழுந்துவந்த சொற்களை அவர் உள்ளேயே அடுக்கியமைப்பது தெரிந்தது. “அங்கநாட்டரசனை அவன் நாட்டுக்கே செல்லும்படி ஆணையிட்டேன். அங்கே அவன் அவனுக்குரிய இளவரசியை மணக்க ஆவன செய்ய விதுரனிடம் சொன்னேன். என் மைந்தன் முடிசூடுவதற்குள் அவனுக்கும் உரிய மணமகளை தேடவேண்டும். காசிநாட்டு இளவரசி உகந்தவள் என்று முன்னரே சொன்னார்கள். அவன் அரியணைக்குரியவன் அல்ல என்பதனால் காசிநாட்டரசன் தயங்கினான். இப்போது தடையிருக்கப்போவதில்லை.”

“ஆம், அது மிகச்சிறந்த முடிவு. பெண்களுக்கு நம்மைவிட இவ்வகையில் கூர்மை மிகுதி” என்றான் கிருஷ்ணன். “தருமனுக்கும் பிறபாண்டவருக்கும்கூட தனித்தனியாக மனைவியர் அமைந்தாகவேண்டும்...” என்றார் திருதராஷ்டிரர். கிருஷ்ணன் “அதை அவர்களின் அன்னை அல்லவா முடிவெடுக்கவேண்டும்?“ என்றான்..”அவளிடம் நீர் இதைப்பற்றி பேசும். நான் உம்மை வரவழைத்தது அதற்காகவும்தான்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, அத்தனை பெருந்தெய்வங்களும் பலவகையான துணைத்தெய்வங்களால் சூழப்பட்டுள்ளன. ஏனென்றால் பெருநதி கரைகடக்காமலிருக்க அமைக்கும் அணைகள் அவை.” கிருஷ்ணன் புன்னகைத்து “இதையே நான் அத்தையிடம் சொல்கிறேன். அவர் புரிந்துகொள்வார்” என்றான்.

திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் “இதுவரை கொண்டுவந்து சேர்த்த உம்மால் இவற்றையும் முடிக்கமுடியுமென அறிவேன். உம்மீது கொண்ட நம்பிக்கையால்தான் நான் இனி உறங்கச்செல்லவேண்டும்” என்றார். கிருஷ்ணன் சிரித்தபடி “நான் உறங்கமுடியாமல் செய்துவிட்டீர்கள் அரசே” என்றான். “யாதவரே, நகர் பற்றி எரிந்தாலும் உறங்கக்கூடியவர் நீர். நான் அறிவேன்” என்றார் திருதராஷ்டிரர். “என்னைப்பற்றிய கதைகளுடன் போராடுவதே என் வாழ்க்கையாக அமைந்துவிட்டது” என்றான் கிருஷ்ணன். "இத்தனை காவல்களுக்கும் அப்பால் ஒன்று கூர்கொண்டு நின்றிருக்கிறது அரசே, நாம் அதைப்பற்றி பேசவேயில்லை.”

“சொல்லும்” என்றபோது திருதராஷ்டிரரின் உடலில் வந்த எச்சரிக்கையின் அசைவு சாத்யகியை வியப்படையச்செய்தது. “இங்கே காந்தாரர் இருக்கிறார்...” என்றான் கிருஷ்ணன். “ஆம், அவர் நெடுநாட்களாக இங்கிருக்கிறார்” என்று திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் சொன்னார். “அதையே நானும் சொல்கிறேன். நெடுநாட்களாக இருக்கிறார். அந்த அளவுக்கு பெருவிழைவுடன் இருக்கிறார். பாதிநாட்டால் அமையும் பசி அல்ல அது.” திருதராஷ்டிரர் மேலும் எச்சரிக்கையுடன் “யாதவரே, நிலவிழைவு நிறையாத ஷத்ரியநெஞ்சு எது?” என்றார். “உண்மை. ஆனால் தீங்குசெய்வதற்கான அகத்தடை ஷத்ரியர்களை கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் இழிபுகழ் என்பதுதான் அவர்கள் சென்றடையும் முடிவிலா இருளுலகு.”

இலைநுனிபோல மெல்ல நடுங்கியபடி திருதராஷ்டிரர் “ஆம். அறமே ஷத்ரியர்களை கட்டுப்படுத்தும் தெய்வம்” என்றார். கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்கியபடி “காந்தாரரை இயக்குவது மண்ணாசை மட்டுமே” என்றான். “முன்னரும் அவர் அறத்தின் எல்லைக்கோட்டை கடந்திருக்கிறார்.” திருதராஷ்டிரரின் கைவிரல்கள் நடுங்குவதை காணவே முடிந்தது. ”அறத்தின் கோடென்பது நீர் தனக்கென வகுத்துள்ள விளிம்புபோல. ஓரிடத்தில் ஒருவர் அதை மீறினால் நீர்வெளியே அதை கண்டுகொள்ளும்.” திருதராஷ்டிரர் பெருமூச்சென ஒலித்த குரலில் “ஆம்” என்றார். “தார்த்தராஷ்டிரர்களை அவர் வழிநடத்துவாரென்றால்...” என்று கிருஷ்ணன் தொடங்குவதற்குள் திருதராஷ்டிரர் மறித்து பதறிய குரலில் “என் மைந்தர் என்னால் வளர்க்கப்பட்டவர்கள். நான் வெறுக்கும் ஒன்றை செய்யமாட்டார்கள்” என்றார்.

எங்கோ செல்வதுபோன்ற உடலசைவுடன் எழுந்துகொண்டு தூணைப்பற்றி நின்று திருதராஷ்டிரர் “வாரணவதத்தின் மாளிகை மகதர்களால் எரியூட்டப்பட்டபோது என்னிடம் ஒற்றர்கள் சொன்னார்கள், அது காந்தாரரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று. என் மைந்தர் அதற்கு துணைநின்றனர் என்று ஒற்றர்தலைவர் கோமுகர் சொன்னார். நான் சினந்து அவரை அடித்தேன். என் மைந்தர் ஒருபோதும் இழிசெயல் எண்ணார் என்றேன். இறுதியில் என்ன ஆயிற்று? மகதம் செய்த வஞ்சம் அது என தெளிந்தது...” என்றார். இருளை நோக்கி அறியாமலேயே நடந்து மெல்லப்புதைந்து திரும்பிப்பாராமல் திருதராஷ்டிரர் சொன்னார் “என் மைந்தர் இழிபிழை செய்யார். என்னை அவர்கள் ஒருபோதும் இருளில்தள்ளமாட்டார்கள்.”

சிலகணங்கள் அவரையே நோக்கி இருந்துவிட்டு கிருஷ்ணன் தன் கைகளால் கால்முட்டுகளை மெல்லத் தட்டிக்கொண்டு “ஆம், நானும் அதையே சொல்கிறேன். வாரணவதத்தில் நிகழ்ந்தது போல மீண்டும் ஒரு அயலவரின் வஞ்சச்செயல் நிகழலாம். அதன் பழி கௌரவர்கள் மேல் விழலாம்... பழிசுமத்தப்பட்டவர்கள் மேலும் வஞ்சம் கொள்கிறார்கள். வஞ்சம் வளரக்கூடியது...” திருதராஷ்டிரர் உடல்தளர்வதை இருளின் அசைவாக காணமுடிந்தது. “ஆம், யாதவரே. அவ்வாறு நிகழலாம். நான் நம்பியிருப்பது உம்மை மட்டுமே. உமது சொல் பாண்டவருக்கு நிகராக என் மைந்தருக்கும் துணை நிற்கவேண்டும்.”

“முதல்முறையாக பாண்டவர் என்மைந்தர் என்னும் வகைப்பாட்டை உங்கள் சொல்லில் காண்கிறேன்” என்றான் கிருஷ்ணன். திருதராஷ்டிரர் ஏதோ சொல்லமுயல்வது அவரது உடலசைவால் தெரிந்தது. அவன் தொடர்ந்து “அது உங்கள் அச்சத்தையே காட்டுகிறது அரசே. அவ்வச்சம் தேவையற்றது. தார்த்தராஷ்டிரர்கள் பிழைசெய்யாமல் தடுக்கும் காவலாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களின் அன்னையின் சொல்லும் இருக்கிறது. பாண்டவர்களும் நெறியாலும் குலத்தாலும் கட்டுண்டவர்கள். தீதென ஏதும் நிகழாது” என்றான். திருதராஷ்டிரர் உரத்த பெருமூச்சுடன் “நிகழலாகாது... தெய்வங்கள் துணைநிற்கவேண்டும்” என்றார்.

“ஆம், நாம் வேண்டிக்கொள்வோம்” என்ற கிருஷ்ணன் “தங்கள் விழைவுகளை ஆணையென கொள்கிறேன். நான் விடைகொள்ளலாமா?” என்றான். “உம்முடன் பேசியபின் நான் துயிலலாம் என்னும் நம்பிக்கையை அடைந்துள்ளேன்” என்றார் திருதராஷ்டிரர். “எப்போது கிளம்புகிறீர்?” கிருஷ்ணன் “நாளைமறுநாள் கிளம்பலாமென நினைக்கிறேன். கிருபரையும் துரோணரையும் குருகுலத்தில் சென்று சந்தித்து நிகழ்ந்தவற்றை சொல்லவேண்டும். பீஷ்மபிதாமகர் சுதுத்ரியின் கரையில் ஹஸ்தவனம் என்னும் காட்டில் இருப்பதாக சொன்னார்கள். அவரிடமும் சென்று அனைத்தையும் சொல்லவேண்டும்” என்றான்.

“நான் சௌனகரை துரோணர்குருகுலத்திற்கு அனுப்பினேன். விதுரனிடம் நாளையே ஹஸ்தவனம் செல்லும்படி ஆணையிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் சென்று அரசச்செய்தி அறிவித்தபின் நீர் சென்று முறைமைச்சந்திப்பை நிகழ்த்தலாம். அவர்களுக்கு ஐயமேதும் இருப்பின் களையலாம்.” கிருஷ்ணன் “ஆம், அதன்பின்னரே நான் மீண்டும் பாஞ்சாலம் செல்லவேண்டும்" என்றான். “நகர்நுழைவுக்கான செய்தியை அனுப்பும்படி ஆணையிடுகிறேன்” என்றபோது திருதராஷ்டிரர் முற்றிலும் மீண்டுவிட்டார் என தெரிந்தது. "அனைத்திலிருந்தும் முழுமையாக விலகிவிட்டிருக்கிறார் பீஷ்ம பிதாமகர். அதைப்போல நானும் ஆகமுடியுமெனில் மட்டுமே எனக்கு விடுதலை.”

“ஒவ்வொருவிடுதலையும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது குருகுலமூத்தவரே” என்ற கிருஷ்ணன் சிரித்து “ஆனால் அத்தனை துயர்களும் நிகரானவை” என்றான். தலைவணங்கி முகமன் சொல்லி அவன் திரும்பியதும் வாயில் திறந்து விப்ரர் தோன்றினார். அவர்கள் வாயில் நோக்கி நடக்கையில் சாத்யகி இயல்பாக திரும்பிப்பார்த்தான். திருதராஷ்டிரர் செவிகளைத் திருப்பி அசைவற்று நின்றிருந்தார். கிருஷ்ணனை செவிகளாலேயே அவர் உற்று நோக்குவதுபோல அவனுக்குத் தோன்றியது.

பகுதி 12 : நச்சுமலர்கள் - 2

காலையில் எழுந்ததுமே முதல்நினைவாக கிருஷ்ணன் தன் நெஞ்சுள் வருவது ஏன் என்று சாத்யகி பலமுறை வியந்ததுண்டு. அந்த எண்ணம் நிலம்போல எப்போதுமென இருக்க அதன்மேல் அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாக தோன்றும். தன்னுணர்வெழும்போது அதில் இருந்துகொண்டிருப்பான். நாளெல்லாம் எங்கிருந்தாலும் எதைச்செய்தாலும் அடியில் அது இருந்துகொண்டிருக்கும். செயல் சற்று ஓயும்போது அது மட்டும் எஞ்சியிருக்கும்.

அல்லது இரவில் துயிலச்செல்கையில் எப்போதும் அவனைப்பற்றிய எண்ணத்துடன்தான் செல்கிறான் என்பதனால் அது நிகழலாம். துயில்வந்து சிந்தையைமூடும்போது எஞ்சும் இறுதி எண்ணம் அவன். விழிக்கையில் அதுவே நீடிக்கிறது. துயிலென்பது ஒரு கணநேர மயக்கம்தான் என்பதுபோல. கணம்கூட அல்ல. அது இன்மையேதான். அப்படியென்றால் அவன் கிருஷ்ணனிலிருந்து விலகுவதேயில்லை. கிருஷ்ணன் எனும் எண்ணத்தின் நீட்சியே அவனது உள்ளம் என்பது. அதை ஒற்றைப்பெருஞ்சொல்லாக திரட்டிக்கொள்ளமுடியும்போலும்.

ஆனால் பின்னர் அவன் நோக்கியபோது ஒன்று தெரிந்தது. முந்தையநாளின் எண்ணம் அறுபட்ட புள்ளியிலிருந்துதான் எப்போதும் மறுநாளின் எண்ணம் தொடங்குகிறது, ஆனால் மிகநுட்பமான ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. திசை சற்று மாறியிருக்கும். உணர்வெழுச்சி மெல்லிய திரிபு கொண்டிருக்கும். பெரும்பாலும் கலங்கிக்குழம்பியவை தெளிவுகொண்டிருக்கும். ஒவ்வொருமுறையும் அறிந்து வியப்பதொன்றுண்டு, மையம் திரண்டிருக்கும். அப்படியென்றால் இரவு முழுக்க உள்ளே ஆன்மா தவித்துத் துழாவுகிறது. குடல் உணவை என உட்செல்வதை எல்லாம் அது செரித்துக்கொள்கிறது. கருதிரட்டி கனிவுகொள்கிறது. துயிலில் அவன் கிருஷ்ணனின் செயல்களைத் தொகுத்து கிருஷ்ணனை மட்டும் எடுத்துக்கொண்டு காலையில் எழுகிறான்.

நீராட்டறையில் அமர்ந்திருக்கையில் அவன் முந்தையநாளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாளில் நிகழ்ந்தவை முழுவாழ்க்கையைப்போல நீண்டு கிடந்தன. மலையடிவாரத்து யாதவக்குடிகளில் அத்தனை நிகழ்வுகள் நினைவில் தேங்க பற்பல ஆண்டுகள் ஆகும். நகர்நுழைந்தது முதல் காந்தாரரை அவர் அரண்மனையில் சந்தித்து அவைக்களம் பேசி அரசரை இரவில் சந்தித்து மீண்டது வரை தொட்டுத்தொட்டு மீட்டெடுத்தபோது காலையில் படகில் விழித்தெழுந்து நின்றது நெடுநாள் முன்னர் எப்போதோ என்றே உள்ளம் திகைப்புகொண்டது.

இரவில் தேரில் திரும்பும்போது கிருஷ்ணன் திருதராஷ்டிரரைப்பற்றி சொல்வான் என்று சாத்யகி எண்ணினான். ஆனால் கிருஷ்ணன் தேர்வலனிடம் களிச்சொல் உரைத்து அவன் குடுமியைப்பிடித்து இழுத்தான். தேரிலேறிக்கொண்டதும் இருமருங்கும் எழுந்து ஓடத்தொடங்கிய சாலைக்காட்சிகளில் மூழ்கினான். அவன் முகம் ஆடி என அக்காட்சிகளுக்கு எதிர்வினையளித்தபடியே வந்தது. கடைகளை மூடிக்கொண்டிருந்தனர். மூடியகடைகளுக்கு முன்னால் இரவுக்களிமகன்கள் கூடி குப்பைகளுக்குத் தீயிட்டு மதுக்குவளைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வணிகச் சாலைகளில் இரவு அவிழ்த்துவிடப்பட்ட அத்திரிகளும் கழுதைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மரங்களுக்குமேல் இருந்து கூரைகளை நோக்கி விசிறியொலியுடன் வௌவால்கள் பறந்தன.

சாத்யகி பேச்சைத்தொடங்க விழைந்தான். “திருதராஷ்டிரர் வாரணவத நிகழ்ச்சியை அறிந்திருக்கிறார்” என்றான். “முன்பு அறிந்திருந்தார், ஆனால் நம்பவில்லை. இப்போது நம்புகிறார், ஆகவே அஞ்சுகிறார்” என்றான் கிருஷ்ணன். "ஒவ்வொருவரிலும் உறையும் தெய்வம் வெளிவரும் கணமொன்றுண்டு. சித்தம் அறிந்த சொல்வெளியை திரைவிலக்கி தெய்வம் பேசத்தொடங்குவதைக் கேட்கையில் அச்சம் எழுகிறது.” அதே குரலில் “இந்த வணிகனைப்பார். தன் கடைக்கு முன் களிமகன்கள் அமரலாகாதென்பதற்காக முற்றமெங்கும் உப்பைக் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறான்” என்றான்.

“உப்பு என்ன பெருந்தடையா? அதை சற்று விலக்கிவிட்டு அமரலாமே” என்றான் சாத்யகி. “களிமகன்கள் அதைச்செய்யுமளவும் பொறுமைகொண்டவர்கள் அல்ல. இடம்தேடி வருகையில் உப்பு காலில் குத்தக்கண்டு இயல்பாகவே விலகிச்சென்றுவிடுவார்கள்” என்றான். சாத்யகி திரும்பி அந்தக்கடையை நோக்கினான். “அந்தக்கடையில் மட்டும்தான் அதை செய்திருக்கிறார்கள்... அல்லது அது இயல்பாக விழுந்திருக்கலாம்” என்றான். “இல்லை. அது கூலக்கடை. அங்கே உப்பிருக்க வழியில்லை” என்றான் கிருஷ்ணன். “களிமகன்கள் அனல்மூட்டுவது கூலக்குவையை எரிமூட்டிவிடுமென அஞ்சி அதை செய்திருக்கிறான்.” சாத்யகி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “அரிய எண்ணம்” என்றான்.

“மிக அரியது” என்றான் கிருஷ்ணன். “இளையோனே, அந்த வணிகனின் பெயரையும் குடியையும் கேட்டுச்சொல்ல ஆணையிடும். அவன் துவாரகைக்கு வரட்டும். அங்கே அவன் பொன்கொய்து களஞ்சியம் நிறைக்க முடியும்.” சாத்யகி “செய்கிறேன்” என்றான். “அவன் எண்ணிச்செய்பவன் இளையோனே. களிமகன்கள் அமரலாகாது. அதற்கு என்னதேவையோ அதை எவ்வளவு போதுமோ அவ்வளவே செய்கிறான். எச்சரிக்கையாலோ அளவுக்குமீறி மதிப்பிடுவதாலோ உப்பில்கூட ஊதாரித்தனம் காட்டவில்லை. தன் எதிரி எவரென்று நோக்கி துல்லியமாக மதிப்பிட்டிருக்கிறான்.”

“அவன் சற்று அளவுமீறினால்கூட களிமகன்கள் அவன் உத்தியை கண்டுகொண்டிருப்பார்கள். அதை அவர்கள் ஓர் அறைகூவலென எடுத்துக்கொண்டுவிட்டால் அதன்பின் அவர்களை எதைக்கொண்டும் தடுக்கமுடியாது. ஏனென்றால் களிமகன்கள் தங்களை ஒட்டுமொத்த நகருக்கும் எதிரிகளாக எண்ணுபவர்கள். நகரின் முகமென தெளிந்துவரும் ஒருவனை அவர்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள்” என்றான் கிருஷ்ணன். “விழைவில் கையடக்கம் கொண்டவன் அறிஞன். வெறுப்பில் கையடக்கம் கொண்டவன் பேரறிஞன். இளையோனே, அச்சத்திலும் கையடக்கம் கொண்டவன் ஞானி. இவ்வணிகன் அவன் கை அறிந்த கூலத்திலும் பொன்னிலும் புடவியின் நெறியை கண்டுகொண்டவன்.”

அரண்மனைக்கு வந்ததுமே கிருஷ்ணன் “நான் துயிலவேண்டும்... மூத்தவர் விடியலில் வந்து என்னை மற்போருக்கோ கதைப்போருக்கோ அழைக்கப்போகிறார். ஒவ்வொருநாள் இரவும் அவரை எண்ணிக் கலங்கியபடி துயிலச் செல்கிறேன். இளமைமுதல் இதுவே வழக்கம்” என்றபின் விலகிச்சென்றான். சாத்யகி ஒற்றர்களை அழைத்து மூன்று ஆணைகளை இட்டான். அந்த உப்பிட்ட வணிகரை மறுநாள் கிருஷ்ணனை சந்திக்க வரச்சொன்னான். அந்தக்கடைமுன் கிடக்கும் உப்பு வெறும் உப்புதானா என ஒரு துளி கொண்டுவந்து உய்த்தறிந்துசொல்ல அணுக்கமருத்துவரிடம் கொடுக்க ஆணையிட்டான். நகரெங்கும் வேறெவரேனும் உப்பு தூவியிருக்கிறார்களா என்று பார்த்துவரப் பணித்தான்.

தன் அறைக்குச் செல்லும்போது அவன் கிருஷ்ணனையே எண்ணிக்கொண்டிருந்தான். அத்தனை நிகழ்வுப்பெருக்கின் நடுவே உப்பை எப்படி நோக்கினான்? அதற்கும் அன்றைய செயல்களுக்கும் நடுவே ஏதேனும் பொருத்தம் உள்ளதா? சுழன்று சுழன்று அவன் சிந்தை கிருஷ்ணன் மேலேயே வந்து நின்றது. இறுதியாக எண்ணம் கரையும்போது பொற்படிகளில் பதிந்து மேலேறிச் சென்ற செம்மலர் அடிவிளிம்பும் மான்விழியென மின்னும் நகங்களும் கொண்ட வாழைப்பூநிறப் பாதங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

கிருஷ்ணனின் அறைக்குமுன் பெருவணிகர் நின்றுகொண்டிருந்தார். சாத்யகியைக் கண்டதும் அவர் பெரிய பாகை இறங்க தலைவணங்கி வாழ்த்துரைத்து “சந்திக்கும்படி ஆணைவந்தது” என்றார். சாத்யகி முகமன் சொன்னபின் உள்ளே சென்றான். கிருஷ்ணன் உள்ளே சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி நின்றிருந்தான். பூவரசுப்பூ போல புதிய இளமஞ்சளாடை விரிந்திருந்தது. சாத்யகி அருகே சென்று நின்றான். கிருஷ்ணன் திரும்பி “காகங்கள்...” என்றான். “இந்தமரத்தில் பன்னிரு காகங்கள் வாழ்கின்றன. காலையில் ஒரு புதியகாகம் வழிதவறி வந்தது. அதைத் துரத்திச்சென்று எல்லைகடக்கச்செய்தபின் வந்து அமர்ந்திருக்கின்றன. அன்னைப்பெருங்காகம் ஒன்று அதோ இருக்கிறது. அதற்கு நான் காளிகை என்று பெயரிட்டிருக்கிறேன். முதுமை வந்து தூவல்கள் பொழியத்தொடங்கிவிட்டன. ஆயினும் இன்னமும் தன் குலத்தை தன் சிறகுகளுக்குள்ளேயே வைத்திருக்கிறாள்.”

சாத்யகி புன்னகைசெய்தான். “வணிகரை வரச்சொல்லும்” என்றபடி கிருஷ்ணன் வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான். சாத்யகி கதவைத்திறந்து பெருவணிகரை உள்ளே அழைத்தான். கிருஷ்ணன் எழுந்து அவரை வரவேற்று முகமன் சொல்லி பீடத்தில் அமரச்செய்தான். அவர் திகைத்து அஞ்சி சாத்யகியை நோக்கினார். அத்தகைய வழக்கமே அஸ்தினபுரியில் இல்லை என சாத்யகி உய்த்தறிந்தான். கிருஷ்ணன் தன்னை கேலிசெய்கிறார் என்றும் அதைத்தொடர்ந்து கடுமையான சில வரப்போகின்றன என்றும் எண்ணிய பெருவணிகர் கூப்பிய கைகளும் நடுங்கும் சொற்களுமாக முகமன் சொல்லி மெல்ல இருக்கைவிளிம்பில் அமர்ந்தார். அவரது கால்களின் நடுக்கம் ஆடைக்குக் கீழே தெரிந்தது.

மிக இயல்பாக கிருஷ்ணன் அவரது கூலவணிகம் பற்றி கேட்டறிந்தான். அவருக்கு நூறு படகுகள் கங்கையில் ஓடின. கூலத்தை கங்கைத்துறைகளில் கொள்முதல் செய்து தாம்ரலிப்திக்கு படகில் கொண்டுசென்று பீதர்களுக்கும் சோனகர்களுக்கும் விற்றார். ”துவாரகைக்கு கொண்டுவாருங்கள்... மேலும் விலைகிடைக்கும்” என்றான் கிருஷ்ணன். “ஆனால் துவாரகைக்கான நீர்வழிக்கு நான் சப்தசிந்துவை கடக்கவேண்டுமே” என்றார் பெருவணிகர். “ஆம், ஆனால் சோனகரும் யவனரும் பாரதவர்ஷத்தையே சுற்றி வஞ்சியையும் மதுரையையும் கடந்து மறுபக்கம் வரவேண்டுமே. கலங்களை அவிழ்த்து மீண்டும் பூட்டவேண்டும் என்பதே பெருஞ்செலவு. அச்செலவில் பாதியை நீர் மிகைப்பொருளெனப் பெற்றாலே அது பெரும்செல்வம்.”

பெருவணிகர் மிகச்சிலகணங்களிலேயே அக்கணக்கை போட்டுவிட்டார். “அத்துடன் பீதர்கள் கோதுமை, அரிசி அன்றி பிற கூலங்களை விரும்புவதில்லை. சோனகர் அனைத்தையும் வாங்குவர். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடும் அவர்களுக்குத்தெரியாது. புஞ்சைமணிகளைக்கூட மேலும் விலைகொண்டவை என்று சொல்லி அவர்களிடம் விற்கமுடியும்...” பெருவணிகர் “ஆனால் உண்ணத்தொடங்கும்போது தெரியுமே” என்றார். “தெரியாது. பீதர் தங்கள் உணவை சூடாக உண்பவர்கள். சோனகர் உணவை சமைத்து நெடுநாள் வைத்திருந்து உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். சுவைவேறுபாடுகள் மறைந்துவிடும்.”

விரைவிலேயே பெருவணிகர் தன் அனைத்துத் தயக்கங்களையும் இழந்து இன்னொரு வணிகரிடம் என பேசத் தொடங்கினார். சுதுத்ரியில் ஓடுவதற்குரியிய சிறுகலங்கள், வணிகப்பாதையின் காவல்தேவைகள், துவாரகையின் அரசமுறைமைகள், சுங்கநெறிகள் என அனைத்தையும் பேசி தெளிவுகொண்டபின் வணங்கி கிளம்பினார். அவர் முகத்தில் உவகையோ கிளர்ச்சியோ தெரியவில்லை. சற்று ஐயம் கொண்டவராகவே தெரிந்தார். கிருஷ்ணன் திரும்பி “பெரிய வணிகர் இவர். நானே அழைத்தபின்னரும் என் நாவால் உறுதிமொழிகளைப் பெறாமல் முடிவெடுக்க மறுக்கிறார். உள்ளம் நிறைய நம்பிக்கையும் உவகையும் வந்தபின்னரும் முகத்தில் ஐயத்தையே எனக்குக் காட்டுகிறார்” என்றான்.

“இங்கு வணிகர்களை இப்படி நடத்துவதில்லை போலும்” என்றான் சாத்யகி. “ஆம், அது பழைய நெறிகளின் கூற்று. ஷத்ரியர் வணிகர்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கவேண்டும். வணிகர்கள் அரசுடன் நிகர்நின்று வணிகம் பேசும்நிலை ஒருபோதும் வரக்கூடாது. அவ்வாறு விடப்பட்டால் வணிகர்கள் இழப்பின் கதையை மட்டுமே சொல்வார்கள். அவர்களிடமிருந்து அரசுக்கு துளிகூட செல்வம் வந்துசேராது” என்றான் கிருஷ்ணன். “இதோ இந்த வணிகர் எனக்கு எதுவுமே தரத்தேவையிருக்காது என எண்ணிக்கொண்டு செல்கிறார். ஏனென்றால் என்னை வணிகப்பேச்சால் வென்றுவிடலாமென திட்டமிடுகிறார். ஷத்ரியர்களை வைசியர்கள் வெல்வது மிக எளிதும்கூட.”

“அத்தனைபேரிடமும் நீங்களே வணிகம்பேசமுடியுமா என்ன?” என்றான் சாத்யகி. “முடியாது. ஆகவேதான் நான் வணிகர்களுக்கு நண்பனாக இருக்கிறேன். என் அரசு ஒருகையில் வாளும் மறுகையில் தராசுமாக நின்று அவர்களிடம் பேசுகிறது. அஸ்தினபுரியில் ஷத்ரியர் வைசியர்களை அச்சுறுத்துகிறார்கள். அரசமைப்பு அவர்களை விளையாடவிடுகிறது. துவாரகை நேர்மாறானது” என்றபின் “நாம் இன்று காந்தாரியை காணச்செல்கிறோம்” என்றான். சாத்யகி விழிகளால் வியப்பைக் காட்ட “காந்தாரியும் என்னிடம் வாக்குறுதிகளைப் பெற விழைகிறார்கள் என நினைக்கிறேன். நான் வாக்குறுதிகளை அளிக்கும் கனிமரம் என எண்ணிவிட்டார்கள்” என்றான்.

“நேற்று திருதராஷ்டிரர் பேசியதென்ன என அறியவிழைகிறார்களா?” என்றான் சாத்யகி. “இல்லை. உளவறியும் அரசியலறிவு அவருக்கில்லை. அவர் நேரடியாகவே என்னிடம் பேசுவார். உடன் அவரது தங்கையரும் இருப்பார்கள்.” சாத்யகி ”அவர்கள் கல்வியோ முறைமையோ இல்லாத பாலைநிலப்பெண்கள் என்றே சொல்லப்பட்டது” என்றான். ”ஆம், ஆனால் அன்னையரிடமிருக்கும் உயிர்விசை அளப்பரியது. அதை எதிர்கொள்ள எட்டுகைகளிலும் படைக்கலங்களும் கேடயங்களும் தேவை” என்ற கிருஷ்ணன் “ஆனால் பார்ப்பது நமக்கு நலமே பயக்கும். ஏனென்றால் பேசுவதை எல்லாம் பேசிமுடித்துக் கிளம்பினால் அத்தையிடம் தெளிவுரைக்க முடியும்” என்றான்.

காவலர்தலைவனுக்கும் ஏவலர்தலைவனுக்கும் ஆணைகளை அளித்துவிட்டு கிளம்பி தேரில் சாலைகளில் செல்லும்போது கிருஷ்ணன் மீண்டும் சாலையில் ஒன்றிவிட்டதை சாத்யகி கண்டான். காந்தாரி அவன் சித்தத்தில் சற்றும் இல்லை என்பதையும் காந்தாரியை நேரில்காணும் கணம் மட்டுமே அவள் அவனுள் தோன்றப்போகிறாள் என்பதையும் அவன் உணரமுடிந்தது. அப்படி எதைத்தான் பார்க்கிறான் என்று அவன் விழிகளையும் சாலையையும் நோக்கினான். பீதநாட்டுப் பட்டு வந்து இறங்கியிருந்தது. செந்நீலம், குருதிச்செம்மை, வெண்மை என மூன்றே நிறங்கள். பெண்கள் கூடிநின்று சிரித்து உரையாடி கூவி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் ஒவ்வொரு பெண்ணையாக நோக்கிக்கொண்டு வந்தான்.

அவன் கண்கள் எந்த அழகியால் பற்றிக்கொள்ளும் என அவன் கூர்ந்தான். அவை மாறவேயில்லை. அவன் எந்தப்பெண்ணாலும் கவரப்படவில்லை. இல்லை, அத்தனைபெண்களாலும் கவரப்பட்டிருக்கிறான் என்று உடனே தோன்றியது. பெண்மை என்பதே பேருவகை என எண்ணும் முதிராஇளமையை அவன் கடக்கவேயில்லை போலும். ஆனால் அதே பேருவகையுடன் பறவைகளையும் சாலைகளில் நின்ற விலங்குகளையும் கூடத்தான் நோக்குகிறான் என்றும் அவனுக்கு தெரிந்தது. அவன் விழிகள் பறந்தெழும் காகத்தை, அதைநோக்கிச் சென்று ஏமாந்து நாசுழற்றி அமர்ந்து வாலை மடித்துக்கொண்ட பூனையை, கடந்துசெல்லும் காலுக்கு சற்றே இடம் விட்டு பறந்தமைந்த இன்னொரு காகத்தை என தொட்டுத்தொட்டுச் சென்றன. எதைத்தான் அவன் நோக்குகிறான்?

அதை உணர்ந்தவன் போல அவன் திரும்பி “வேடிக்கைபார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி, இல்லையா?” என்றான். என்ன சொல்வதென்று தெரியாமல் தலையசைத்தான் சாத்யகி. “ஆனால் பொருள் தேடலாகாது. அழகு அழகின்மை நன்று தீதெனும் இருமை காணக்கூடாது. அனைத்தையும் விட முதன்மையாக நேற்று நாளையால் இக்கணத்தை கறைபடச்செய்யக்கூடாது” என்றான் கிருஷ்ணன். அவன் விழிகள் மாறுபட்டன. “ஒவ்வொரு கணமும் முழுமைகொண்டு நம் முன் நிற்கையில் பெரும் திகைப்பு நெஞ்சில் எழுகிறது இளையோனே. அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்.” சாத்யகி முழுமையாகவே விலகிவிட்டிருந்தான். ஆம் என்றோ இல்லை என்றோ அன்றி மையமாக தலையசைத்தான்.

அவர்கள் அந்தப்புரத்தின் வாயிலை அடைந்ததும் தேர்க்காவலர் வந்து புரவிகளை பற்றிக்கொண்டனர். “ஊஷரரே, உமது மைந்தன் அல்லவா இங்கே வடபுலக்கோட்டைக்காவலன் கலதன்?” என்றபடி கிருஷ்ணன் இறங்கினான். “அரசே, என்னை எப்படி அறிவீர்?” என்றார் ஊஷரர் வியப்புடன். சிரித்தபடி. “நான் அனைவரையும் அறிவேன்” என்றான் கிருஷ்ணன். “சதுஷ்கரே, நீர் என்ன சொல்கிறீர்? அனைவரையும் அறிந்திருத்தல் எளியது அல்லவா?” சதுஷ்கன் திகைப்புடன் “ஆம்... ஆனால்...” என்றான். ”மனிதர்கள் இங்கே மிகச்சிலரே இருக்கிறார்கள் சதுஷ்கரே. அவர்களின் முகங்கள் குறைவு. அகங்கள் அதைவிடக்குறைவு” என்ற கிருஷ்ணன் “அரசியைச் சந்திக்கவந்தேன், வருகிறேன்” என்று ஊஷரரின் தோளைத் தொட்டுவிட்டுச் சென்றான்.

“இங்கு வருவதற்குள் ஒற்றர்களை அனுப்பி பெயரை தெரிந்துகொண்டுவிட்டீர்கள் அல்லவா?” என்றான் சாத்யகி. “ஆம், அதிலென்ன பிழை? இந்த அரண்மனையை, நாம் சந்திக்கவிருக்கும் அரசியரை தெரிந்துகொண்டுதானே வருகிறோம்?” என்றான் கிருஷ்ணன். “ஆனால்...” என்றான் சாத்யகி. “இளையோனே, நான் பயன்கருதி இவர்களை அறிந்துகொள்ளவில்லை. இவர்களை அறிவதிலிருக்கும் பெருமகிழ்ச்சிக்காகவே செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “முடிவிலா வண்ணங்களை ஒவ்வொரு கணமும் காணாதவன் விழியளித்த தெய்வங்களை புறக்கணிக்கிறான்.”

காந்தாரியின் முதன்மைச்சேடி தீர்த்தை வந்து வணங்கி முகமன் சொன்னாள். “தங்களை சந்திக்க அரசியர் துணைமண்டபத்தில் சித்தமாக இருக்கிறார்கள் அரசே” என்றாள். இடைநாழியில் நடந்தபடி “பத்து ஆடிப்பிம்பங்கள் இல்லையா?" என்றான் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “பதினொன்று” என்றாள் அவளும் சிரித்தபடி. அவள் கண்கள் மின்னின. கன்னங்களில் குழிகள் தெளிந்தன. “துச்சளை ஆடிநோக்கி அணிசெய்ய விழைபவளா என்ன?” என்று அவன் கேட்டான். “ஆடி நோக்காத பெண்கள் உண்டா?” என்றாள் அவள். “காலையில் நெடுநேரம் நீ ஆடியை நோக்கியிருக்கிறாய்...” என்ற கிருஷ்ணன் “அதன் விளைவும் அழகுடனிருக்கிறது” என்றான்.

அவள் முகம் சிவந்து மேலுதடை இழுத்துக்கடித்தபடி “நீங்கள் ஒருவரையும் நோக்காமல் விடுவதில்லை என்றனர். ஆகவேதான்...” என்றாள். “ஆம், நோக்காமல் விடும்விழிகளை எனக்களிக்கவில்லை ஆழிவண்ணன்” என்ற கிருஷ்ணன் “உன் அன்னை இங்கே அணுக்கத்தியாகப் பணிபுரிந்தாள் அல்லவா? நலமாக இருக்கிறாளா?” என்றான். “ஆம், அவள் இப்போது இல்லத்தில் பேரக்குழந்தைகளுடன் இருக்கிறாள்... நான் அவளிடத்திற்கு வந்தேன்...” கிருஷ்ணன் “எத்தனை மைந்தர் உனக்கு?” என்றான். “மூவர்... என் கணவர் குதிரைக்காவலர்.” ”தெரியும் அவன் பெயர் கம்றன்” என்றான். அவள் விழிவிரித்து “எப்படி தெரியும்?” என்றாள். “அவன் நானே அல்லவா தீர்த்தை?” அவள் உடல் நெளித்து “அய்யோ” என்றபின் திரும்பி சாத்யகியை நோக்கினாள்.

அங்கிருந்து ஓடி முன்னால்சென்றுவிடவேண்டும் என சாத்யகி விழைந்தான். உள்ளம் கூசி பற்களைக் கடித்து கைகளை இறுக்கிக்கொண்டிருந்தான். தீர்த்தை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல கிருஷ்ணன் அதற்கு ஏதோ மறுமொழி சொல்ல அவள் மெல்ல அவன் கையை அடித்தாள். துணைமண்டபத்தை அணுகியதும் கதவைத் திறந்து “உள்ளே செல்லுங்கள் அரசே” என்றபோது அவள் விழிகளில் செவ்வரி ஓடியிருப்பதை, முகம் சிவந்து இதழ்கள் கனிந்திருப்பதை சாத்யகி கண்டான். “ஆடிகளில் என்னை நோக்க முடிந்தால் வென்றேன் தீர்த்தை” என்றபின் கிருஷ்ணன் உள்ளே சென்றான்.

துணைமண்டபத்திற்குள் அவர்கள் நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த துச்சளை எழுந்து வந்து முகம் மலர வணங்கி “வருக யாதவரே. தங்களைப்பற்றி பேசாமல் இவ்வரண்மனையில் ஒருநாளும் அடங்கியதில்லை” என்றாள். “அது என் நல்லூழ்” என முறைச்சொல் சொன்ன கிருஷ்ணன் “இங்கு தங்கள் அன்னையை சந்திக்கப்போவதாக சொல்லப்பட்டது” என்றான். ”ஆம், அன்னை தங்களைச் சந்திக்கவிழைந்தார்... அதைவிட நான் சந்திக்கவிழைந்தேன்” என்றாள். அவள் இளநீலப்பட்டாடையும் நீலநிற மணிகள் மின்னும் முலையாரமும், நீலமணிக் காதுமலர்களும் செந்நீல மணிகள் மின்னிய குழைகளும் அணிந்திருந்தாள்.

“நெஞ்சுக்கு உகந்த சான்றோர் எப்போதுமே விழிக்கும் அழகுகொள்கிறார்கள் இளவரசி. அவர்களை பெண்ணழகுடன் காண்பதென்பது பெரும்பேறு. அஸ்தினபுரியின் மதவேழத்தை பேரழகியாகக் காணும் இக்கணம் என் வாழ்க்கைச்சரத்தின் மணி” என்றான் கிருஷ்ணன். அவள் கரிய முகம் நாணத்தில் கன்ற “நான் எந்தையின் பெண்வடிவுதான். பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். இத்தனை அழகாகச் சொன்னதில்லை... வருக அரசே” என்றாள்.

“எங்கு?” என்றான் கிருஷ்ணன். “அன்னையின் மஞ்சத்தறைக்கு. அவருக்கு காலைமுதல் உடல்நலமில்லை. அதன்பொருட்டு தங்கள் சந்திப்பை தவிர்க்கவேண்டாமே என எண்ணினேன். மேலும் அவருடைய நலக்குறைவுக்கும் தங்களை சந்திப்பது நன்று.” கிருஷ்ணன் “அகத்தறையில் என்றால் முறைமை அல்ல” என்றான். “அன்னை அழைத்துவரச்சொன்னபின் முறைமை என்பது என்ன?” என்ற துச்சளை திரும்பி சாத்யகியிடம் “தங்களைப்பற்றியும் அறிந்துள்ளேன் யாதவரே. வருக” என்றாள். சாத்யகி “பெருமைபடுத்தப்பட்டேன் இளவரசி” என்றான். அவன் குரல் உடைந்து தாழ்ந்து ஒலித்ததைக்கேட்டு அவனே நாணினான்.

“அன்னையர் திரௌபதியை அஞ்சுகிறார்கள்” என்று துச்சளை விரைந்த குரலில் சொன்னாள். “அன்னை நேற்று இதயத்தைத் துளைத்து குருதி சொட்டும் நுனி கொண்ட கூர்வேல் அவள் என்றார். அத்தனை அழகாக அவர் எதையும் சொல்வதில்லை. அது அவர்கள் குலத்தின் பாலைவரியில் இருந்து எடுக்கப்பட்ட சொற்கள். அன்னை எண்ணி எண்ணிச் சலித்த கணத்தில் அச்சொற்களைச் சென்றடைந்ததுமே அதுவே உண்மை என உறுதிகொண்டுவிட்டார். இனி அதிலிருந்து விலக அவரால் இயலாது.”

தாழ்ந்த குரலில் தொடர்ச்சியாக “அன்னை என்ன கோரப்போகிறாரென நானறியேன். ஆனால் நான் உணர்வதை முன்னரே சொல்லிவிடவேண்டும் என்பதற்காகவே இங்கு முன்னரே வந்து நின்றிருந்தேன். நான் திரௌபதியை அஞ்சவில்லை, வெறுக்கவுமில்லை. அவளை கொல்வேல்கொண்ட கொற்றவை என்கிறார்கள். நான் கொற்றவையை வழிபடுபவள். இந்நகரின் அரியணை அமர்ந்து அவள் கோல்கொள்வாள் என்றால் அது ஒரு பொற்கணம் என்றே எண்ணுகிறேன். அவள் அருகே ஆடைதாங்கி நிற்பேனென்றால் அது என் வாழ்க்கையின் பெரும்பேறு என்றே கொள்வேன்” என்றாள்.

துணைமண்டபத்தின் மறுவாயில் அண்மையில் இருந்தமையால் அவர்கள் மிகமெல்ல நடந்தனர். நடையில் துச்சளையின் அணிகள் மெல்ல குலுங்கின. பறக்கமுனைந்த மேலாடைநுனியை இடக்கையால் இயல்பாகப் பற்றி உடலுடன் அணைத்துக்கொண்டாள். அவளிடம் சொற்களிலோ உடலிலோ குழைவோ தயக்கமோ இருக்கவில்லை. ஆனால் கரியபெரிய உடலின் அனைத்து அசைவுகளிலும் பெண்மையும் மென்மையும் இருந்தது. அவள் குரல் குடம் நிறைந்த பெருத்த பேரியாழின் கார்வையுடன் இருந்தது. அதற்கிணையான இசைகொண்ட பெண்குரலை கேட்டதேயில்லை என சாத்யகி எண்ணினான்.

அதையே கிருஷ்ணன் சொன்னான் “திருதராஷ்டிரர் கேட்ட இசையெல்லாம் உங்கள் குரலாக திரண்டுவிட்டது இளவரசி.” அவள் வெண்பல்நிரை மின்னச் சிரித்து “புகழ்வதற்கு நீங்கள் தயங்குவதேயில்லை. ஏன் சந்தித்தபெண்களெல்லாம் உங்களை மறக்காமலிருக்கிறார்கள் என இப்போது தெரிகிறது” என்றாள். “உண்மையைச் சொல்ல அஞ்சாதவனைத்தானே வீரன் என்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். “போதும்” என்று சொல்லி அவள் கைவீசி நகைத்தாள்.

மிக இயல்பாக ஒருமைக்குச்சென்று “உன் தமையரின் எண்ணமென்ன என்று அறிவாயா?” என்றான் கிருஷ்ணன். “அறிவேன். அவருடைய ஆணவம் புண்பட்டிருக்கிறது. அதைவிட அங்கரின் பெருங்காதல் புண்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் எரியும் வஞ்சம் அதனாலேயே. ஆனால் ஆணைச்சாராமல் தன்னுள் முழுமை கொண்ட எந்தப்பெண்ணும் ஆண்களை புண்படுத்தியபடியே முன் செல்லமுடியும். இன்றுவரை தேவயானியை அன்றி எந்த அரசியையும் பற்றி அஸ்தினபுரி பேசவில்லை. ஏனென்றால் அவள் மட்டுமே தன்முழுமை கொண்டவள்” என்றாள் துச்சளை. “இது ஒரு களம் அரசே. இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் அல்லவா?”

அவள் விழிகள் நிமிர்ந்தன. “மேலும், பெண் வெற்றிகொள்ளும்போது மட்டும் ஏன் அனைவரும் அமைதியிழக்கவேண்டும்? பெண்களே அதைக்கண்டு ஏன் அஞ்சவேண்டும்? திரௌபதியைப்போன்ற ஆண் ஒருவன் இருந்தால் பாரதவர்ஷமே அவனை வழிபடுமே” என்றாள். ”நான் அவளை வழிபடுகிறேன், அவள் அழகை, நிமிர்வை, விழைவை, ஆணவத்தை அனைத்தையும் வாழ்த்துகிறேன்.”

கிருஷ்ணன் புன்னகைத்து “இது சூதர்சொற்களால் அடையப்பட்ட சித்திரம் அல்லவா? நீ இன்னமும் அவளை நோக்கவில்லை” என்றான். துச்சளை “அவளை இங்குள்ள ஆண்விழிகள் வழியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். தசசக்கரம் சென்றதுமே என் தமையன் விழிகளிலும் அங்கநாட்டரசர் விழிகளிலும் அவளைக் கண்டேன். அது உண்மையான தோற்றம்தானா என்றறிவதற்காகவே பால்ஹிகநாட்டு இளவரசரை சென்று கண்டேன். அவள் பெயரை சொன்னதுமே அவர் விழிகள் எரிவதைக் கண்டதும் உறுதிகொண்டேன். ஐயமே இல்லை, சூதர் சொன்னதெல்லாம் செம்பட்டு, அவள் அனல்.”

கிருஷ்ணன் புன்னகையுடன் “கௌரவகுலத்தில் ஒருவரிடம் கவிதை இருப்பது நிறைவளிக்கிறது இளவரசி” என்றான். “இதுவும் காந்தாரத்து பாலைவரியின் சொற்கள்தான் இளவரசே. எங்களுக்கு சொல்லில் கூர் வைக்கவில்லை குலமூத்தார்” என்றாள் துச்சளை. “ஆனால் சிரிப்பில் வைத்திருக்கிறார்கள்.” துச்சளை மேலும் சிரித்து “அய்யோ... நானே உங்களை பாடத் தொடங்கிவிடுவேன் போலிருக்கிறதே” என்றபின் மெல்ல வாயிலைத் திறந்து "வருக” என்று உள்ளே அழைத்துச்சென்றாள்.

வாயிலைக் கடந்து உள்ளே எடுத்துவைக்கப்பட்ட கிருஷ்ணனின் வலக்காலடியை சாத்யகி நோக்கினான். அதன் அடிச்செம்மை. மெல்ல மலரால் ஒற்றி எடுக்கப்பட்டது போல முத்தம்பெற்று மீண்ட கருந்தரை. வைத்த அடிக்கு இணையாக எடுத்து வைக்கப்பட்ட இடக்காலடி. முதல் முறையாக அவன் ஒன்றை அறிந்தான். கிருஷ்ணனின் இரு காலடிகளும் நிற்கையிலும் நடக்கையிலும் முற்றிலும் இணையானவையாக, ஒன்றின் ஆடிப்பாவை இன்னொன்று என தெரியும். மானுடர் எவரிலும் அதை அவன் கண்டதில்லை.

பகுதி 12 : நச்சுமலர்கள் - 3

காந்தாரி தன் வெண்பட்டு இறகுமஞ்சத்தில் எழுந்து அமர்ந்திருக்க அவள் காலடியில் சத்யசேனை அமர்ந்திருந்தாள். சத்யவிரதையும் சுதேஷ்ணையும் சம்ஹிதையும் அருகே தாழ்வான பீடங்களில் அமர்ந்திருக்க, தேஸ்ரவையும், சுஸ்ரவையும், நிகுதியும், சுபையும், தசார்ணையும் சுவர் சாய்ந்து நின்றனர். காலடிகளைக் கேட்டதும் காந்தாரி முகம்தூக்கினாள். சத்யசேனை “யாதவரும் மருகரும்” என அறிவித்தாள். துச்சளை “அன்னையே, யாதவரிடம் தாங்கள் நோயுற்றிருப்பதை சொல்லிவிட்டேன்” என்றாள். “நோயென ஏதுமில்லை, உள்ளம் தளர்ந்தது உடலுக்கு வந்தது” என்ற காந்தாரி “அமர்க யாதவரே” என்றாள்.

இருவெண்பட்டுப்பீடங்கள் இருந்தன. கிருஷ்ணன் சென்று காந்தாரியின் அருகே சேக்கையில் அமர சாத்யகி திகைத்து முகங்களை நோக்கினான். ஆனால் காந்தாரியின் முகம் மலர்ந்துவிட்டது. அவள் தன் வெண்ணிறமான பெரிய கைகளை நீட்டி அவன் கைகளைப்பற்றி பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்து “பாரதவர்ஷத்தில் உன்னை நெஞ்சோடு சேர்த்து முலையூட்டமுடியாது போயிற்றே என ஏங்கும் அன்னையர் பலர். நானும் அதில் ஒருத்தி யாதவனே” என்றாள். கிருஷ்ணன் சிரித்து “இங்கே பலகோடிப் பிறவிகள் எடுத்து அத்தனை அன்னையர் கைகளிலும் தவழ எண்ணியிருக்கிறேன்” என்றான். “மூடா” என்று சிரித்து அவள் அவன் தலையை வருடினாள்.

”நீ சென்றமுறை வந்து உடனே திரும்பிவிட்டாய் என்று சொன்னார்கள். என்னை சந்திக்க அழைத்துவந்திருக்கலாமே என விதுரரிடம் சொன்னேன்... அதன் பின் ஒவ்வொருநாளும் உன்னைப்பற்றிய கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆண்டுகள் செல்லச்செல்ல நீ வளர்ந்துவிடுவாயே என ஏங்கினேன்” என்றாள் காந்தாரி. “இல்லை அன்னையே, வளரவேயில்லை...” என்றான் கிருஷ்ணன். “ஆம், அப்படித்தான் சொன்னார்கள். உனக்கு முதிர்ச்சியே வரவில்லை. வழியெங்கும் பெண்களைப்பார்த்தால் வாய் நிறையும் பற்களுடன் நின்றுவிடுகிறாய் என்று...” அவள் சிரிக்க முகம் சிவந்து குருதி நிறம் கொண்டது.

பதறிய குரலில் கிருஷ்ணன் “அய்யோ, அதெல்லாம் அவதூறு... நான் பெண்களின் நகைகளை மட்டுமே பார்க்கிறேன்” என்றான். “எதற்கு?” என்றாள் காந்தாரி சிரித்தபடி. “துவாரகையில் எந்த நகையை விற்கமுடியும் என்றுதான்.” “சரிதான், பொய்சொல்வதிலும் இன்னும் முதிரவில்லை” என்று சத்யசேனை சிரித்துக்கொண்டே சொன்னாள். பத்து அன்னையரும் காந்தாரியின் அதே முகத்தை அடைந்து சிவந்து சிரித்துக்கொண்டிருப்பதை சாத்யகி கண்டான்.

துச்சளை “அவருக்கு பெண்களிடம் அணியுரை சொல்ல நன்றாகவே தெரிந்திருக்கிறது அன்னையே” என்றாள். “ஆம், அதையும் அறிவேன். நீ சொன்ன அத்தனை அணிச்சொற்களும் இங்கு அனைவருக்கும் தெரியும். அதைக்கேட்ட பெண்கள் எங்கும் அவர்களே அதை பரப்பிவிடுகிறார்கள்” என்றாள் காந்தாரி. “நேற்று அவையில் நான் உன்னையன்றி எவர் பேசியதையும் கவனிக்கவில்லை. நீ மெல்லமெல்ல உன் வளைதடியால் தட்டி மந்தையைக் குவித்து கொண்டுசென்று சேர்ப்பதை உணர்ந்தேன்.” கிருஷ்ணன் “என்ன சொல்கிறீர்கள் அன்னையே? நான் என்ன கண்டேன்?” என்றான். “நீ கன்றோட்டத்தெரிந்த யாதவன்... நான் அதை மட்டும்தானே சொன்னேன்?” என்றாள் காந்தாரி.

”நடந்தது உங்களுக்கு நிறைவளித்ததா அன்னையே? வேறுவழியில்லை. அனைவரும் விரும்பும் தீர்வென்பது பங்கிடுவது மட்டுமே” என்று கிருஷ்ணன் சொன்னான். காந்தாரி “ஆம், வேறுவழியில்லை என நானும் உணர்ந்தேன். என் மைந்தன் அரியணை இன்றி அமையமாட்டான். அவனுள் ஓடும் காந்தாரத்தின் குருதி அத்தகையது. அதற்கென்றே என் இளையோன் இங்கு அமர்ந்திருக்கிறான். அஸ்தினபுரியை அவன் அடைந்தது நன்று” என்றாள். “பாண்டவர்களுக்கு நிகர்ப்பங்கு கிடைப்பதும் நன்றே. என் மைந்தன் பழிசூழாமல் நாடாளமுடியும். தமையனும் இளையோனும் இணைந்தால் பாரதவர்ஷத்தையே வென்று இரு பேரரசுகளை இருவருமே ஆளமுடியும். அந்த எண்ணம் இருவரிலும் திகழ மூதாதையர் அருளவேண்டும்.”

“நன்று சூழ்க!” என்று கிருஷ்ணன் சொன்னான். “ஆனால் பாஞ்சாலன் மகள் வந்து அஸ்தினபுரியின் அரியணையில் அமர்வாளென்பது எனக்கு அச்சமூட்டுகிறது கண்ணா. அவள் கையிலிருந்து என் மைந்தன் அரியணையை அறக்கொடையென பெறவேண்டும். அது அவன் நெஞ்சில் வேல்பாய்வது போன்றது.” கிருஷ்ணன் ஒன்றும் சொல்லாமல் நோக்கியிருந்தான். “அவள் எப்படி அதை கொடுத்தாலும் அவனால் அந்தப் புண்ணை ஆற்றிக்கொள்ளமுடியாது. அத்துடன் அவளும் அப்படி கனிந்து கொடுப்பவள் அல்ல” என்றாள் காந்தாரி. “அதற்கு என்னசெய்யவேண்டுமென எனக்குத்தெரியவில்லை. ஆனால் என் நெஞ்சு விம்மிக்கொண்டே இருக்கிறது.”

“நீங்கள் துரியோதனரை நேற்று கவனீத்தீர்கள் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஆம், நேற்று அவைமுடிந்ததும் அவன் இடைநாழியில் என்னை கண்டான். அப்போது அவன் குரலில் மகிழ்வு தெரிந்தது. 'அன்னையே, முடிசூட எந்தையின் ஆணைவந்துவிட்டது. அதுபோதும். முடியை பெருக்கி வையத்தலைமைகொள்வது இனி என் திறன். காணட்டும் புவி' என்றான். ஆனால் அங்கிருந்து சகுனியை பார்க்கச்சென்றுவிட்டு மீண்டும் இரவில் என்னைக் காணவந்தபோது அவன் குரல் மாறியிருந்தது. சகுனியின் அரண்மனையில் அங்கநாட்டரசனும் இருந்திருக்கிறான்."

“நான் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டேன், என்ன நிகழ்ந்தது என்று. அவன் சொல்லவில்லை. மணிமுடியை தமையனின் அறக்கொடையாகப் பெற கூசுகிறாயா என்றே கேட்டேன். ஆம், அது கூச்சமளிப்பதே, ஆனால் என் வெற்றியாலும் கொடையாலும் அதை வென்றுசெல்ல என்னால் முடியும் என்றான். பின் என்ன என்றேன். மீண்டும் மீண்டும் ஏதோ சொல்லவந்தான். பின்னர் எழுந்து வெளியேறினான். அவன் சென்றபின்னரே அவன் சொல்லவந்ததென்ன என்று உணர்ந்தேன். அவளை அவனால் ஒருகணமும் நெஞ்சிலிருந்து நீக்கமுடியாது கண்ணா. அவள் அவனுள் சென்றுவிட்ட நஞ்சு.”

“அவர் காதல்கொண்டார் என நினைக்கிறீர்களா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அது காதலல்ல. ஆம், அதை அன்னையென நான் அறிவேன். காதலுக்கு அப்பால் ஒன்றுள்ளது. அது...” என்று குழம்பிய காந்தாரி தன் மேலாடையை இழுத்து தோளிலிடும் அசைவின் வழியாக உறைந்து நின்ற சொற்களை மீட்டுக்கொண்டு “அதை வழிபாடு என்பதே பொருத்தம்” என்றாள். கிருஷ்ணன் அவளை நோக்கியபடி விழி அசையாமல் அமர்ந்திருந்தான். "கண்ணா, மிகமிக அரியதோர் உணர்வு இது. பெண்ணை தாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்று நிகழ்கிறது. அந்த ஆண் ஒரு பெண்ணை வழிபடுகிறான். அவள் காலடிமண்ணையும் போற்றும் பெரும் பணிவை அடைகிறான்” என்றாள் காந்தாரி.

“அது மிக ஆபத்தானது யாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அது புரிந்துகொள்ளப்படாது போகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகலாம்” காந்தாரி தொடர்ந்தாள். நெடுநாட்களாக அவள் எண்ணியிருந்த சொற்களென்றாலும் அவளால் அவற்றை பொருள்திகழ கோத்தெடுக்க முடியவில்லை. “அன்னையின் புறக்கணிப்பும் காதலியின் புறக்கணிப்பும் கொடுநஞ்சாக ஊறக்கூடியவை. அதற்கும் அப்பாலுள்ள இப்பெரும்புறக்கணிப்போ ஆலகாலம்...” மேலும் சொல்ல விழைந்து சொற்களுக்காக தவித்து “அங்கன் அகம் கொண்ட புண் ஆறிவிடும்...” என்றாள்.

“அன்னையே, நானும் அதை அறிவேன். தாய்மைக்குள்ளும் காமம் உள்ளது என்பர் முனிவர். சற்றும் காமம் இன்றி பெண்ணை கண்டுகொண்டவன் அடைவது பெருங்காட்சி ஒன்றை. அவன் மீளமுடியாது.” காந்தாரி அவன் சொற்களால் அதைக்கேட்டதும் அதிர்ச்சி கொண்டு முன்னால் நகர்ந்து அவன் கைகளை தன் கைகளால் பற்றி மீண்டும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். “ஆம், அதையே நானும் எண்ணினேன்” என்றாள். “எளிய பலவற்றை நீங்கள் அறிந்ததில்லை அன்னையே. கூர்மதியாளர்கூட அறியாத இதை மட்டும் அறிந்துவிட்டீர்கள். அது ஏன் என்றும் தெரிகிறது.”

காந்தாரியின் கை தளர கிருஷ்ணனின் கை மெத்தைமேல் விழுந்தது. “உங்கள் மேல் இதே வழிபாட்டுணர்வுகொண்ட ஒருவரை நீங்கள் அறிவீர்கள். உங்கள் இளவல் சகுனி” என்றான் கிருஷ்ணன். அதிர்ந்து உடலில் மெல்லிய விரைப்பு எழ இல்லை என்பது போல தலையாட்டிய காந்தாரி “ஆம்” என்றாள். “என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று அது. நான் எளியபெண். இளமையில் என் பாலைநகரின் ஆற்றல்மிக்கபெண்களில் முதன்மையானவளாக இருந்தேன். ஆனால் இளையோனின் விழிகளில் நான் காணும் என் வடிவம் என்னை அச்சுறுத்துகிறது.”

“உங்களை இவ்விழியிழந்த அரக்கன் தடையுடைத்து வந்து கைப்பற்றிக் கொணர்ந்தபோது மகிழ்ந்தீர்கள். நீங்கள் விழைந்தது சகுனியிடமிருந்து விடுதலையை மட்டுமே. இதோ விழிகளைக் கட்டி அமர்ந்திருப்பதுகூட அதன்பொருட்டே. சித்தத்தால் மட்டுமல்ல விழிகளாலேயே உங்கள் முழு அர்ப்பணிப்பும் திருதராஷ்டிரருக்கு உரியது என்று காட்டுகிறீர்கள். உங்களை செதுக்கி ஆலயமுகப்பில் நிறுத்தப்பட்ட சிலை என ஐயத்துக்கிடமின்றி ஒன்றை மட்டுமே சொல்லும் தோற்றமாக ஆக்கிக்கொண்டீர்கள்.” காந்தாரி தலைகுனிந்து கைகளைக் கோத்து அமர்ந்திருந்தாள். பின் பெருமூச்சுடன் "நானறியேன். நான் எதையும் எண்ணிச்செய்யவில்லை” என்றாள்.

”அதன்பின் உங்கள் மைந்தன் பிறந்தான். அவனைநோக்கி உங்கள் விழியின்மையின் பெருக்கை திசை திருப்பியதும் அதனாலேயே. ஆனால் மெல்ல அறிந்தீர்கள், ஒருபோதும் நீங்கள் மீளப்போவதில்லை என.” காந்தாரி மெல்ல “ஆம், யாதவனே. நேற்று என் மைந்தன் சகுனியைக் கண்டுமீண்டதும் அதையே எண்ணினேன்” என்றாள். “அவன் என் மைந்தனுக்குள் தன்னுள் எரியும் தீராத விடாயை செலுத்தி அனுப்பிவிட்டிருந்தான். என் மைந்தன் எங்கும் அமர அவன் விடமாட்டான்.”

”அன்னையே, உங்கள் இளையோனை வழிபடச்செய்வது எதுவென நீங்கள் அறியவில்லையா?” என்றான் கிருஷ்ணன்.  “எது இப்படி ஒரு கணத்தில் விழிகளைக் கட்டி இருளைத் தேர்வுசெய்யும் உறுதியை உங்களுக்கு அளிக்கிறதோ அது. அன்னையே, சகுனியில் திகழ்வதும் அந்த உறுதியின் மறுவடிவம் அல்லவா? நாற்பதாண்டுகாலம் ஒற்றைநினைப்புடன் அங்கே பகடை கையிலேந்தி அவர் செய்யும் தவமும் இதுவேதானே?” காந்தாரி பெருமூச்சுடன் “ஆம், அவ்வாறே இருக்கலாம். சிந்தித்துப்பார்த்தால் மிகமிக எளியவற்றை பெரிதாக்கிக்கொள்கிறோம் என்று படுகிறது. நம் ஆணவம் பெரிதை விரும்புகிறது. துயரைப்பெருக்கி ஆணவத்தை நிறைவடையச்செய்கிறோம்” என்றாள்.

“துரியோதனர் திரௌபதியிடம் பார்ப்பதும் நிகரான ஒன்றையே” என்றான் கிருஷ்ணன். “யாதவரே, அவளும் என் தமையனைப்போல முற்றிலும் நிகர்த்த தோள்களைக் கொண்டவள் என்கிறார்களே” என்றாள் துச்சளை. கிருஷ்ணன் “சற்று உண்மை. சற்று மிகை. நாம் வாழ்வது சூதர்கள் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்காவியத்தில்...” என்றான். கரியமுகத்தில் வெண்பற்கள் ஒளிர சிரித்து “ஆம், அதுதான் அச்சமாக இருக்கிறது. நானும் என் அன்னையரும் அக்காவியத்தில் எவரென்று இருப்போம்?” என்றாள்.

”நேற்று இங்கே ஒரு சூதன் பாடினான், அவர்களெல்லாம் தேனீக்கள் என. பாரதவர்ஷம் முழுக்க அலைந்து அவர்கள் கொண்டுசென்று தேன்சேர்க்கும் கூடு தெற்கே வியாசவனத்தில் உள்ளது என்று...” கிருஷ்ணன் சிரித்தபடி “நாம் விழைந்து போராடி வென்று தோற்று கண்ணீரும் செந்நீரும் சிந்தி அந்தக்கூட்டை நிறைத்துக்கொண்டிருக்கிறோம். எளிய எண்ணம். ஆனால் அவ்வளவுதான் என நினைக்கையில் ஒரு நிறைவும் அமைதியும் நெஞ்சில் ஏற்படுவதை உணரமுடிகிறது” என்றான்.

காந்தாரி “என் சிறுவனுக்காக நான் அஞ்சுகிறேன் யாதவனே... என்ன நிகழுமென என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை” என்றாள். அவள் உதடுகள் நடுங்குவதை சாத்யகி கண்டான். “என்ன செய்யக்கூடுமென நீ எண்ணுகிறாய்?” கிருஷ்ணன் “அன்னையே, மிக எளிய விடை. வழிபடுவதன் முன் முழுமையாகப் பணிவதை அல்லவா மூதாதையர் காட்டியிருக்கிறார்கள்?” என்றான். காந்தாரி “அது நிகழப்போவதில்லை. என் மைந்தனின் அகம் நிகரற்ற ஆணவத்தால் ஆனது. அதை இழப்பதென்பது அவன் தன் குருதியை இழப்பதுபோல. அவன் எஞ்சமாட்டான்” என்றாள்.

“கற்பூரம் காற்றை அஞ்சுவதுபோல என்று வேதமுடிபில் ஒரு ஒப்புமை உண்டு” என்றான் கிருஷ்ணன். “ஆக, இது நாம் கையாளும் களமே அல்ல. இப்புவியில் என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெருநாடகத்தின் ஒரு பகுதி. அதை அவ்வாறே விட்டுவிடுவோம்.” காந்தாரி சற்றே சினத்துடன் “அதை நீ எளிதில் சொல்லிவிடலாம். நான் அன்னை. ஒருபோதும் என்னால் விலகியிருக்கமுடியாது” என்றாள். “ஆம், நாங்கள் எங்கள் மைந்தர்களை விட்டு விலகமுடியாது” என்றாள் சத்யசேனை.

சிரித்துக்கொண்டு “அதுவும் இந்தப் பெருநாடகத்தின் பகுதியே” என்றான் கிருஷ்ணன். “நாம் செய்வதற்கென்ன உள்ளது என்று தெரியவில்லை அரசி. நேற்று அரசர் சில ஆணைகளை இட்டார். அது சிறந்தவழியென எனக்கும் பட்டது. அப்பால் என்ன என்று அறியேன்.” காந்தாரி “திரௌபதி நகர்நுழைவதையும் முடிசூடுவதையும் பெருநிகழ்வென கொண்டாடலாகாது. அயல்நாட்டரசர்களும் தூதர்களும் அந்நிகழ்வுக்கு வரவேண்டியதில்லை. குலத்தலைவர் குடிமூத்தார் முன்னிலையில் மிக எளியதோர் அடையாளநிகழ்வாக அது நடந்தால்போதும்” என்றாள்.

“ஆம், அது சிறந்ததே” என்றான் கிருஷ்ணன். காந்தாரி “ஆனால் இதை நான் சொல்லமுடியாது. நான் சொன்னால் என் அரசர் தன் இளையோன்மைந்தருக்குச் செய்யும் இழிவென அதை எண்ணி சினந்தெழுவார். மும்மடங்கு ஒருக்கங்களைச் செய்யவே முயல்வார்” என்றாள். கிருஷ்ணன் ”நான் அவரிடம் சொல்கிறேன் அரசி” என்றான். “அதுவும் பிழையாகலாம். அதை தருமன் தன் கோரிக்கையாக முன்வைக்கவேண்டும். அதை மறுக்கமுடியாதநிலை என் அரசருக்கு வரவேண்டும். தருமனின் ஆணை என்றால் குந்தியும் பாஞ்சாலமகளும் ஒன்றும் சொல்லமுடியாது” என்றாள் காந்தாரி. “அதை நீயே தருமனிடம் சொல்லி ஏற்கவைக்கவேண்டும்.”

“தங்கள் ஆணையை செய்கிறேன் அரசி” என்றான் கிருஷ்ணன். “அவள் மிகுந்து எழுவாளென்றால் அதை தன் செயல்களால் தருமன் முழுமையாக ஈடுகட்டவேண்டும் என அவனிடம் சொல். ஓடு நீக்கப்பட்ட ஆமைபோன்றவன் ஆணவம் கொண்டவன் என்றொரு காந்தாரத்து முதுமொழி உண்டு. சிறுதூசும் முள்ளாகக்கூடும்... என் மைந்தனின் உள்ளம் எனக்குத்தெரிகிறது. ஒன்றும் நிகழாமல் அந்த ஒருநாள் கடந்துசெல்லும் என்றால் நான் அஞ்சுவது நிகழாமலிருக்கும்.” கிருஷ்ணன் பெருமூச்சுடன் “செய்கிறேன்” என்றான்.

துச்சளை “அன்னையே, நீங்கள் செய்வது பிழை. அவ்வாறு திரௌபதி நகர்நுழைவாள் என்றால் அதுவே அவளை மேலும் தருக்கி நிமிரச்செய்யும். அவளுடைய பெருந்தன்மையை நம்புவதே நன்று என நான் நினைக்கிறேன். அவளை அணிவாயிலில் சென்று நான் வரவேற்று கொண்டுவருகிறேன். நகரம் அவளை வாழ்த்தி கொண்டாடட்டும். அவள் அரியணை அமர்ந்து கோலேந்தியபின் முடியை அளிக்கட்டும். அவள் நெஞ்சு நிறைந்து அங்கே கருணை ஊறட்டும்... அது ஒன்றே வழி” என்றாள்.

”நீ சிறியவள். இன்னும் நீ அரியணை எதிலும் அமரவில்லை, மணிமுடி அளிக்கும் மதிமயக்கை உணரவில்லை” என்றாள் காந்தாரி. “நகர்மக்களின் கொண்டாட்டம் என்று சொன்னாய் அல்லவா? அது வெறும் முகக்கொந்தளிப்பும் ஓசைக்கொப்பளிப்பும் அல்ல. அதில் ஓர் உள்ளடக்கம் எப்போதும் உண்டு. அது எந்த ஊமைச்செவிக்கும் புலப்படும்படி வெளிப்படவும் செய்யும்... அதைத்தான் நான் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறேன்.” துச்சளை “இதெல்லாம் வெறும் பேச்சு” என்றாள். கையசைத்து அவளைத் தடுத்து “நீ அறியமாட்டாய். இந்நகரமே பேருருக்கொண்டு எழுந்து அவளை விண்வடிவாக ஆக்கி அவள் காலடிப்பொடியாக என் மைந்தனை போடக்கூடும்” என்றாள் காந்தாரி.

“இந்த நகரே அவள் நகர்நுழைவதை எண்ணி காத்திருக்கிறது என நான் நன்கறிவேன்” என்று கிருஷ்ணனை நோக்கி காந்தாரி தொடர்ந்தாள். “அவர்கள் முன் அவள் மணிமுடிசூடி செங்கோலேந்திச் சென்று நிற்கக்கூடாது. அவள் தேவயானியின் முடியை சூடுவதை சூதர்பாடக்கூடாது. தருமனின் கொடையைப் பாடட்டும். உடன்பிறந்தார் அன்பையும் இணைவையும் போற்றட்டும்....” கிருஷ்ணன் “ஆம், அவ்வண்ணமே நிகழவேண்டும்” என்றான். “அது உன்னிடம் இருக்கிறது யாதவனே. நீ சென்று தருமனை உடன்படச்செய்...” “ஆணை” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான்.

துச்சளை விருப்பின்மை தெரிய தலையை திருப்பிக்கொள்ள மற்ற காந்தாரியர் முகங்களில் ஆறுதல் தெரிந்தது. “யாதவனே, என் நெஞ்சில் உன்னை சந்தித்ததும் நிறைவு ஏற்பட்டது. இப்போது அது முழுமை அடைந்துவிட்டது. உன் கைகளைத் தொடும் பேறெனக்கு வாய்த்தது. புவியெங்கும் உனக்கு அன்னையர் இருப்பார்கள். இங்கு இந்த அந்தப்புரத்து இருளிலும் பத்துபேர் இருக்கிறோம் என்பதை மறவாதே” என்றாள். “என்றும் என் அன்பும் அர்ப்பணமும் தங்களுக்குண்டு அன்னையே. நூற்றுவர் பெருகி பிறிதொருவன் சேர்ந்தான் என்றே எண்ணுங்கள்” என்ற கிருஷ்ணன் எழுந்து அவள் காலடியைத் தொட்டு வணங்கினான். “நலம்திகழ்க!” என அவள் அவனை வாழ்த்தினாள்.

முறைமைச்சொற்கள் சொல்லி விடைபெற்று மீண்டும் வெளிவந்ததும் துச்சளை “அதை செய்யவிருக்கிறீர்களா யாதவரே?” என்றாள். “ஆம், அது ஆணை அல்லவா?” என்றான் கிருஷ்ணன். “ஆனால்...” என அவள் சொல்லத்தொடங்க கிருஷ்ணன் “நான் வீண்வாக்குறுதிகள் அளிப்பதில்லை” என்றான். அவள் பெருமூச்சுடன் அமைதியானாள். “நான் கிளம்புகிறேன். இன்றுமாலை குருகுலம் சென்று கிருபரையும் துரோணரையும் பார்க்கவேண்டும்” என்றான். துச்சளை “அவர்கள் இங்கு வருவது குறைவு. மாணவர்களுடன் இருப்பதையே விழைகிறார்கள்” என்றாள்.

“காந்தாரத்து அன்னையரில் ஒருவர் நோயுற்றிருக்கிறார் என்றார்களே” என்றான் கிருஷ்ணன். “ஆம், இளைய அன்னை சம்படை. பல்லாண்டுகளுக்கு முன் அவரை அணங்கு கொண்டது. அன்றுமுதல் அவ்வண்ணமே அமர்ந்திருக்கிறார்... இளமையில் அவரே பதினொருவரில் பேரழகி என்றனர். தேய்ந்து நிழலுருவாக ஆகிவிட்டார். என் நினைவறிந்த நாள் முதல் அவ்வாறே இருக்கிறார்.”

“நான் அவரை பார்க்க விழைகிறேன்” என்றான் கிருஷ்ணன். துச்சளை “அவர் எவரையும் அடையாளம் காண்பதில்லை. அவர் விழிகளில் திகழும் அணங்கு மானுடரை நோக்க விழைவதில்லை. அவர் பேசி நான் கேட்டதுமில்லை” என்றாள். “அவரைப்பாராமல் நான் செல்லமுடியாது” என்றான் கிருஷ்ணன்.

அவள் மேலும் ஒரு சொல்லில் தயங்கி “வருக!” என அழைத்துச்சென்றாள். நீண்ட இடைநாழியினூடாக நடக்கும்போது ஏன் என்று தெரியாமல் சாத்யகியின் நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கியது. அரியதோ ஒவ்வாததோ ஒன்று நிகழவிருப்பதாக தோன்றியது. அதைத் தவிர்த்து திரும்பிச்செல்லவேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான். அந்த எண்ணம் வேறு எவருடையதோ என அப்பாலிருந்தது. அவன் சென்றுகொண்டுதான் இருந்தான்.

“இந்தச் சாளரத்திலேயே அன்னை அமர்ந்திருக்கிறார்” என்றாள் துச்சளை. “இரவும்பகலும் இங்குதான் இருப்பார். வெளியே பார்த்துக்கொண்டே இருப்பதாகத் தோன்றும். ஆனால் வெளியேயும் எதையும் பார்ப்பதில்லை.” அவன் அதன்பின்னரே அவளை கண்டான். இளமஞ்சள் பட்டாடையும் மணிப்பொன் நகைகளும் அணிந்த பெண்ணுருவம். அந்த அணிகளாலேயே அதை பெண்ணென காணமுடிந்தது. சாளரமேடையில் கால்தூக்கி வைத்து அமர்ந்து கைகளை மடிமேல் வைத்தபடி மான்கண் அழிப்பரப்பினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள்.

ஒரு மனித உடல் அத்தனை மெலியமுடியும் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. கூந்தல் உதிர்ந்து மெல்லிய மயிர்ப்பிசிறுகள் கொப்பரைபோன்ற தலையில் பரவியிருந்தன. வற்றி உலர்ந்து சுருங்கிச்சிறிதான முகத்தில் மூக்கு எலும்புப்புடைப்பாக எழுந்திருக்க கண்கள் இரு காய்ந்த சேற்றுக்குழிகளென தெரிந்தன. பற்களில்லாத வாய்க்குள் உதடுகள் உட்புதைந்திருந்தன. கழுத்து புயங்கள் கைகள் என அனைத்துமே முற்றிலும் நீரற்று மரப்பட்டைகள் போல செதில்கொண்ட தோலும் எலும்பும் மட்டுமாக எஞ்சியிருந்தாள்.

முன்னரே துச்சளை கால்தயங்கி நின்றுவிட்டாள். சாத்யகி மேலுமிரு அடி வைத்தபின் திரும்பி துச்சளையை நோக்கியபின் தானும் நின்றான். கிருஷ்ணன் பிறரை உணராதவனாக அவளை நோக்கிச்சென்று இயல்பாக அவளருகே அமர்ந்தான். அவள் அவன் வந்தமர்ந்ததையே அறியவில்லை. அவன் அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு ஏதோ சொன்னான். அவள் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் மெல்லியகுரலில் புன்னகையுடன் பேசிக்கொண்டே அவளுடைய இன்னொரு கையையும் எடுத்து தன் கைகளால் பற்றிக்கொண்டான். அவளிடம் எந்த மாறுதலும் நிகழவில்லை.

சாத்யகி பெருமூச்சுவிட்டான். எதுவும் நிகழாதென்றுதான் உண்மையில் நினைத்தோம் என்றும் நிகழவேண்டுமென்பது வெறும் விழைவே என்றும் தோன்றியது. கிருஷ்ணன் அவளருகே அமர்ந்து மென்சிரிப்புடன் பேசிக்கொண்டே இருந்தான். சாத்யகி கால் தளர்ந்து எங்காவது அமர விழைந்தான். துச்சளை அவனிடம் “அவருக்குள் வாழும் அணங்குக்கு மானுடரை நோக்கும் ஆணை இல்லை” என்றாள். அவளும் எதையேனும் பேசவிழைந்தாள் என அவன் உணர்ந்தான். ஏதோ நிகழுமென அவள் எதிர்பார்த்திருக்கலாம்.

சாத்யகி பொறுமை இழந்தான். எதையும் கேளாதவளிடம் என்னதான் சொல்லிக்கொண்டிருக்கிறான்? அதுவும் இத்தனைநேரம்? அவனை மட்டும் நோக்கினால் அவளிடம் இனிய உரையாடலொன்றில் ஆழ்ந்திருப்பதாகவே தெரிந்தது. அவன் முன்னால் சென்று கிருஷ்ணனிடம் “செல்வோம்” என்று சொன்னான். பின்னர் அவன் அதை செய்யவில்லை என உணர்ந்தான். அவள் விழிகளில் அசைவுகூட இல்லை. பிணத்தின் நிலைவிழிகள். அல்லது ஆழத்தை அறிந்த மீனின் விழிகள்.

மேலும் ஏதோ சொல்லி சிரித்து அவள் கால்களைத் தொட்டு தலையில் சூடி வணங்கியபின் கிருஷ்ணன் எழுந்துகொண்டான். துச்சளையின் உடல் இயல்பாவது நகைகளின் ஒலியாக வெளிப்பட்டது. கிருஷ்ணன் அருகே வந்து “செல்வோம்” என்றான். “நாம் நாளை மறுநாள் பீஷ்மபிதாமகரை பார்க்கவேண்டும். அதன்பின் மீண்டும் பாஞ்சாலம். ஆறாம் நிலாவன்று திரும்பி வருவதாக பார்த்தனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றான். துச்சளை பெருமூச்சுடன் “தங்கள் வருகையால் நிறைவுற்றோம் யாதவரே” என்றாள். “ஆம், இம்முறை பல இனிய சந்திப்புகள்” என்று அவன் சொன்னான்.

தேர்முற்றத்திற்கு வந்ததும் கிருஷ்ணன் “இளையோனே, அந்த வணிகரிடம் இன்னொருமுறை பேசும். அவரது உறவினர்களையும் நான் அழைத்ததாக சொல்லும்... சுங்கக்கணக்குகளை அவரிடம் நானே சொல்லியிருக்கிறேன். பிறிதொருமுறை நம் அமைச்சர்களும் பேசுவார்கள் என்று தெரிவித்துவிடும்” என்றபடி தேரில் ஏறிக்கொண்டான். சாத்யகி அவனருகே அமர்ந்தான். கிருஷ்ணன் “யானைச்சாலை வழியாக செல்க கூர்மரே! நான் யானைகளை காணவிழைகிறேன்” என்றான்.

பகுதி 12 : நச்சுமலர்கள் - 4

ஹஸ்தவனம் என்றபெயர் அதற்கு ஏன் வந்திருக்கும் என்று பார்த்ததுமே தெரிந்தது. சுதுத்ரியின் கிளைச்சிற்றாறுகளால் அந்தக்காடு பகுக்கப்பட்டு ஐந்து பசும்விரல்களென நீண்டிருந்தது. உயரமான மருதமரங்கள் நீரெல்லையில் கற்கோட்டை என எழுந்து குறுங்கிளைகள் விரித்து நின்றன. அப்பால் பச்சைக்குவைகளாக இலுப்பையும் அத்தியும் வேங்கையும் கடம்பும் செறிந்த காடு காற்றில் குலுங்கியது. அதனுள்ளிருந்து பறவையொலியும் நீரொலியும் கலந்த முழக்கம் எழுந்துகொண்டிருந்தது.

சுதுத்ரியின் கரையில் அமைந்த பெரிய படகுத்துறையில் இருந்து பரிசலில் ஏறிக்கொண்டு நீரோட்டத்திற்கு எதிராக துழாவிச்சென்று பின் பாய்ந்துவரும் சிற்றாறின் வெண்பெருக்கில் மரங்களில் கட்டப்பட்ட கயிற்றைப்பற்றி இழுத்தபடி பரிசலை சுழற்றி சுழற்றி பாறைகளினூடாக மெல்லமெல்ல உள்ளே செல்வதே காட்டுக்குள் செல்வதற்கான வழி. சிற்றாற்றில் வந்துசேரும் ஓடைகள் பாறைகளை ஓசையுடன் அறைந்து வெண்நுரையெழுந்து பளிங்கு என வளைந்து குமிழிகளும் நுரைவலைப்பிசிறுகளும் சருகுகளும் மிதந்து சுழித்து எதிரே வர பரிசலில் சுழன்று மேலேறும்போது ஏறுகிறோமா விழுகிறோமா என ஒரு கணம் விழிமயக்கு ஏற்பட்டது.

நீர்பெருகிய மலையோடை வழியாகச் சென்று பரிசலில் இருந்து இறங்கியபோது சாத்யகி தலைசுழன்று பேருருவ நாரையின் கால்கள் என வேர் விரித்து நீருள் இறங்கி நின்ற மருதமரத்தை பற்றிக்கொண்டு நின்றுவிட்டான். சூழ்ந்த காடு சுழல்வதுபோலவும் மண் நீரலைகளாக மாறிவிட்டதுபோலவும் தோன்றியது. கிருஷ்ணன் இடையில் கைவைத்து நின்று “இங்கிருந்தால் சிந்தையில் ஏதும் நிலைக்காது. செவிநிறைக்கும் இந்தப் பேரோசை அமைக்கும் தாளத்தில் சொற்கள் மீள மீள ஒழுகிக்கொண்டிருக்கும்” என்றான். சாத்யகி விழிகள் பஞ்சடைய நிமிர்ந்து காட்டை நோக்கியபின் குமட்டி ஓங்கரித்தான்.

காட்டுக்குள் இருந்து பீஷ்மரின் இளம் மாணவனாகிய ஓஜஸ் இலைகளை ஊடுருவி வந்து தலைவணங்கினான். ”பீஷ்மபிதாமகரின் சார்பில் தங்களை வரவேற்கிறேன் யாதவரே” என முகமன் சொன்னான். “வங்கத்து இளவரசனை வாழ்த்துகிறேன். நலம் சூழ்க!” என்று மறுமொழி சொன்ன கிருஷ்ணன் “பிதாமகர் என்ன செய்கிறார்?” என்றான். “பிதாமகர் பேசாநெறியில் ஒழுகுகிறார். தங்கள் வரவை சொன்னேன். தலையசைத்தார்” என்றான் ஓஜஸ். கிருஷ்ணன் “செல்வோம்” என்று சாத்யகியை நோக்கி சொல்லிவிட்டு காட்டுக்குள் நடந்தான்.

சிற்றோடை உருவாக்கிய இடைவெளி மட்டுமே அக்காட்டுக்குள் செல்லும் வழியாக இருந்தது. நீரில் நனைந்து நின்ற பாறைகள்மேல் தாவித்தாவி சென்றனர். சில இடங்களில் நீரைக்கடந்து செல்ல கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பசும்புதருக்குள் ஒட்டுக்கொடிகள் படர்ந்தேற படுத்திருக்கும் யானைபோல் தெரிந்த பாறைக்குமேல் பீஷ்மரின் சிறிய குடில் அமைந்திருந்தது. மூங்கில்தட்டிகளால் கட்டப்பட்டு களிமண் பூசப்பட்ட சுவர்களும் ஈச்சஇலைமுடைந்து வேய்ந்த கூரையும் கொண்டது. அதன்மேல் காவிக்கொடி பறந்துகொண்டிருந்தது.

கொடிஏணி வழியாக அவர்களை மேலே கொண்டுசெல்கையில் ஓஜஸ் “பிதாமகர் பெரும்பாலும் காட்டுக்குள்தான் இருப்பது வழக்கம். இன்று உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். பாறையை சுற்றியிருந்த மரங்களின் இலைகள் அதன்மேல் நீரலைகள் என வந்து மோதி அசைந்துகொண்டிருந்தன. காற்று மேலே அலையடித்துக்கொண்டிருக்க குடில் வானில் பறந்துகொண்டிருப்பதுபோல தோன்றியது.

குடிலின் முன்னால் மூங்கில்பரப்பி செய்யப்பட்ட திண்ணையில் பீஷ்மர் கைகளை இருபக்கமும் போட்டு கால் நீட்டி அமர்ந்திருப்பதை சாத்யகி கண்டான். மூன்று முதல்தெய்வங்களில் ஒருவரை நேரில் காண்பதுபோன்ற உளஎழுச்சி அவனுக்கு ஏற்பட்டது. இளமையில் மீளமீள கேட்டு மயங்கிய கதைகளில் வாழும் மீமானுடன். விழிகள் அவரைப்பார்ப்பதை உள்ளம் ஏற்காதது போன்ற தத்தளிப்புடன் அவன் கால்தடுமாறினான்.

பீஷ்மர் மிக மெலிந்திருந்தமையால் அவரது உயரமான உடல் மேலும் நீண்டு தெரிந்தது. கால்களும் கைகளும் உடலில் இருந்து ஒழுகி ஓடியவை என தோன்றின. வெண்தாடி நீண்டு மார்பில் விழுந்திருக்க நரைத்த குழல்கற்றைகள் தோளில் ஒழுகி முதுகில் இழைந்தன. அவர்களின் காலடியோசை கேட்டும் அவர் திரும்பிப்பார்க்கவில்லை. பேசாநோன்பினால் நெஞ்சுள் அலைவது மிகுதியாகி அவ்வொழுக்கிலிருந்து விலகி மீள்வது அவருக்கு கடினமாகிவிட்டிருக்கிறது என்று சாத்யகி உய்த்துக்கொண்டான்.

ஓசையற்ற காலடிகள் வைத்து அவர் அருகே சென்று நின்ற கிருஷ்ணன் குனிந்து நிலம்தொட்டு வணங்கி “பிதாமகர்முன் எட்டுறுப்புகளும் ஐம்புலன்களும் சித்தமும் ஆன்மாவும் பணிய வணங்குகிறேன்” என்றான். அவருடைய தோளில் தொடங்கி மலையோடை என இறங்கி கைகளை அடைந்து கிளைகளாகப்பிரிந்த நீல நரம்பு அசைந்தது. வெண்ணிறக் கல்போல நரைத்திருந்த விழிகள் அவனை வியந்தவை என, பொருள்கொள்ளாத ஒன்றென நோக்கின. கரித்துண்டு பற்றிக்கொள்வதுபோல மெல்ல நுனிகனன்று பின் எரிந்து அவரது விழிகள் நோக்குகொண்டன. மூச்சின் ஒலியுடன் அசைந்து அமர்ந்து வலக்கையை நீட்டி அவன் தலையைத் தொட்டு வாழ்த்தினார்.

அவரை வணங்கும்போது சாத்யகி உடலெங்கும் மெல்லிய நடுக்கமாகப் பரவிய அகஎழுச்சியை உணர்ந்தான். அவரது கை அவன் தலையைத் தொட்டபோது விழிநீர் துளிர்த்து கைவிரல்கள் குளிர்ந்தன. கிருஷ்ணன் அவர் காலடியில் மூங்கிலில் அமர்ந்தான். சாத்யகி பின்னால் தூண்சாய்ந்து நின்றான். கிருஷ்ணன் பணிந்த குரலில் “அஸ்தினபுரியின் செய்திகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” என்றான். அவர் இல்லை என விழியசைத்தார். “பாண்டவர்கள் பாஞ்சாலன் மகளை மணம்கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள். நிலமின்மை மெல்லமெல்ல குலமின்மையென பொருள்கொள்ளத்தொடங்குவதைக் கண்டு என்னை திருதராஷ்டிர மாமன்னரிடம் தூதென அனுப்பினர்” என கிருஷ்ணன் சொல்லத்தொடங்கினான்.

”பிரிந்து பிரிந்து பரவும் உள்விழைவு நிலத்திற்குள் குடிகொள்கிறதா என ஐயம்கொண்டிருக்கிறேன் பிதாமகரே. முழுமைகொண்டு திரண்டிருக்கும் நிலம் ஒவ்வொருநாளும் தன்னை பகுத்துக்கொள்கிறது. எழுந்து நின்று வரலாற்றை நோக்கினால் ஏரியின் அடிச்சேற்றுப்பரப்பு உலர்ந்து வெடிப்பதைப்போல நிலம் பிரிந்துகொண்டே செல்வதையே காணமுடிகிறது. மானுடர் அதன் கருவிகள் மட்டுமே. அஸ்தினபுரி மட்டுமல்ல பாரதவர்ஷமே பிரிந்துசிதறுவதை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால் புவியின் இயக்கத்திலேயே அதற்கான தேவை ஒன்று உள்ளது. பிரிவதனூடாகவே அது மேலும் திறம்படச்செயல்படமுடியுமென அது அறிந்திருக்கிறது.”

“பாரதவர்ஷம் பிரிவுபடும் பிதாமகரே. ஆனால் அப்பிரிவுகளுக்குள் ஓர் உயிரிணைவு இருக்குமென்றால் அப்படி பிரிந்திருப்பதே அதன் ஆற்றலாக அமையமுடியும். வேட்டையாடும் சிறுத்தையின் உடற்கட்டங்கள் போல இங்குள்ள நாடுகள் இணைந்து இயங்க முடியும். ஒருநாள் இப்புவியே அப்படி வெளிப்பிரிந்தும் உள்ளிணைந்தும் செயல்படமுடியும்” கிருஷ்ணன் சொன்னான். “நானியற்றும் பணி என்பது அதுவே. இப்பேரியக்கத்தின் விசைக்கு எதிராக ஏதும் செய்யலாகாது என எண்ணுகிறேன். இந்நாடுகள் என்பவை இந்த மதகளிறின் மேல் படிந்த மண்தீற்றல் மட்டுமே. மானுடம் அதன்மேல் வாழும் சிற்றுயிர்கள். அதை நாம் செலுத்தமுடியாது. அதனுடன் இணைந்து வாழமுடியும்.”

அவன் சொல்லி முடிப்பதுவரை பீஷ்மர் விழிகள் பாதிமூடியிருக்க கேட்டுக்கொண்டு அசையாமல் இருந்தார். பின்பு நிமிர்ந்து இடக்கையால் தாடியை நீவியபடி வலக்கையை தூக்கி வாழ்த்து சொன்னார். எழப்போகிறவர் என அவர் அசைய கிருஷ்ணன் “அஸ்தினபுரியை இரண்டாக ஆக்கியமை எனக்கும் துயரமளிக்கிறது பிதாமகரே. யயாதியால் உருவாக்கப்பட்டு ஹஸ்தியாலும் குருவாலும் வளர்க்கப்பட்ட தொல்குடி அதன் பிதாமகராகிய தங்கள் விழிநோக்கவே பிளவுபட நான் நிமித்தமாக ஆகிவிட்டேன். ஆனால் வேறுவழியில்லை. இதன்வழியாக குடியொருமை காக்கப்படுமென்றே நினைக்கிறேன்” என்றான்.

அச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை என சாத்யகி எண்ணினான். மிகத்தேர்ந்த பொதுவான சொற்களால் அனைத்தையும் அவன் ஏற்கெனவே சொல்லிவிட்டிருந்தான். அவர் தன் வாழ்த்தை தெரிவித்தும் விட்டார். விடைபெற்று மீள்வதொன்றே செய்யக்கூடுவது. கிருஷ்ணன் இலக்காக்குவதென்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. ”ஆனால், அணையாநெருப்பென விடாய் நிறைந்த உள்ளத்துடன் சகுனி அங்கிருக்கிறார். உடன்பிறந்தார் தங்களுக்குள் ஒருமைகொண்டமைய அவர் ஒருபோதும் ஒப்பமாட்டார். மறுபக்கம் அத்தையின் விழைவும் நிறைவடையப்போவதில்லை. அனைத்துக்கும் மேலாக துருபதன் மகள். அவள் கொல்வேல் கொற்றவை என குருதிவிதைத்துச்செல்பவள்.”

பீஷ்மரின் விழிகளில் எந்த மாறுதலும் தெரியவில்லை. சொல்லி முடி என்ற சொல்லே அவற்றில் துளித்திருந்தது. “இறுதியாக என்னை அமைதியிழக்கச்செய்தது நான் திருதராஷ்டிர மாமன்னரிடம் கண்ட மாற்றம். பிதாமகரே, பால் மோரென மாறத்தொடங்கும் முதற்கணம் எது என்று அஸ்வினிதேவர்கள் மட்டுமே அறிவர் என்று யாதவர் சொல்வதுண்டு. முதல் மணம் எழுவதை இல்லத்தரசி அறிவாள். நான் அந்த முதல்மணத்தை அறிந்துவிட்டேன். உண்மையில் அவரும் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் நதி திசைமாறிவிட்டது. பெருகப்பெருக விலகிச்செல்லும் விசை அது.”

பீஷ்மரின் விழிகளில் எதுவும் தெரியவில்லை என சாத்யகி கண்டான். அச்சொற்களை அவர் கேட்கிறாரா என்றே ஐயமாக இருந்தது. “நேற்றுமுன்தினம் நான் குருகுலம் சென்று கிருபரையும் துரோணரையும் பார்த்தேன். திருதராஷ்டிரமாமன்னரிடம் உருவாகும் அகமாற்றத்தை இருபக்கமும் கரைகளென நின்று அவர்கள் கட்டுப்படுத்தவேண்டுமென்று சொல்லவே நான் சென்றேன். துரோணர் மும்முறை பழுத்த திருதராஷ்டிரர் என மாறியிருந்தார் பிதாமகரே” என்றான் கிருஷ்ணன். “அவர் என்னிடம் அஸ்வத்தாமனைப்பற்றி மட்டுமே பேச விரும்பினார். நான் அவரை மீளமீள அஸ்தினபுரியைப்பற்றிய பேச்சுக்கு இழுத்தேன். அவர் நீர்தேடும் விடாய்கொண்ட கன்று என என்னை தன் முழுவிசையாலும் இழுத்துச்சென்றார். சலித்துப்போய் மீண்டேன்.”

”காம்பில்யத்தை தாக்கி தோற்று மீண்ட அஸ்வத்தாமன் இரவுபகலாக குடித்துக்கொண்டிருக்கிறார். தன்னினைவு என்பதே அரிதாகிவிட்டது. அவரது உடல் பழுத்துவிட்டது. உள்ளம் இருளில் புதைந்துவிட்டது” என கிருஷ்ணன் தொடர்ந்தான். ”ஆனால் துரோணர் காம்பில்யத்தை அஸ்வத்தாமன் பெரும்பாலும் வென்றுவிட்டதாகவும் கர்ணனும் துரியோதனனும் செய்த பிழையால் அவர் பின்வாங்கநேரிட்டதாகவும் என்னிடம் நிறுவ முயன்றார். அனைத்து அரசப்பொறுப்புகளிலும் இருந்து விலகி தன் மைந்தன் கடுந்தவம் செய்வதாகவும் விரைவிலேயே காம்பில்யத்தை தன்னந்தனியாகத் தாக்கி வெல்லவிருப்பதாகவும் சொன்னார்.”

“படைக்கருவிகளில் களிம்புபடியும் விதத்தை நெடுநாட்களாக கூர்ந்துநோக்கிவருகிறேன் பிதாமகரே” என்றான் கிருஷ்ணன். “அவற்றின் ஆணிப்பொருத்தில்தான் முதலில் களிம்பு செறிகின்றது. அவ்வாறு முதலில் அவற்றை அசைவில்லாமலாக்குகிறது. அசைவின்மை களிம்பின் பரவலை மேலும் விரைவுகொள்ளச்செய்கிறது. மானுட உள்ளங்களில் பாசம் படிவதும் அவ்வண்ணமே.” பீஷ்மர் மிகமிக விலகிச்சென்றுவிட்டார் என அவரது விழிகளைக்கண்டு சாத்யகி அறிந்தான். ஆயினும் ஏன் கிருஷ்ணன் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று அவன் உள்ளம் வியந்தது.

“கிருபர் போர்க்கருவிகளை அன்றி எதையும் அறியாதவராக மாறிவிட்டிருக்கிறார். மானுட உள்ளம் எந்தக் கொலைக்கருவியிலும் முழுமையாக ஒன்றலாகாது பிதாமகரே. ஏனென்றால் அவற்றை முதன்முதலில் அறியாப்பெருவெளியிலிருந்து கண்டடைந்து திரட்டி எடுத்தவன் உச்சகட்ட கொலைமனநிலையில் இருந்திருப்பான். பின்னர் அந்தக் கருவியை மேம்படுத்திய ஒவ்வொருவரும் அது செய்யவேண்டிய கொலையைக் குறித்தே அகம்குவித்திருப்பார்கள். அதை கையிலெடுக்கையில் அந்தக் கொலைவிழைவின் உச்சத்தை நாமும் சென்றடைகிறோம். அது அந்த அகநிலையின் பருவடிவம். விழிதொட்டு கைதொட்டு அதைமட்டுமே அது தொடர்புறுத்துகிறது.”

“படைக்கலம் பயில்பவன் அக்கருவியைக்கொண்டே தன் உணவை வெல்லவேண்டும். மண்ணைக்கிளறவேண்டும். விளையாடவேண்டும். தன் உடலை சொறிந்துகொள்ளவும் அவன் அதையே கையாளவேண்டும். அப்போதுதான் அது கொலையெனும் பொருளை இழக்கிறது. தன் கருவியை இழிவுபடுத்தாதவன் அதை வெல்லமுடியாது” என்றான் கிருஷ்ணன். “கருவியை அடிமையாக்கியவனே திறல்வீரன். படைக்கலப்பயிற்சியாளராகிய கிருபர் கருவிகளை வழிபட்டார். அவை தெய்வங்களெனப்பெருகி அவரை அள்ளி தம் இடையில் வைத்திருக்கின்றன.”

“இன்று பாரதவர்ஷத்தில் கொலைக்கென காத்திருப்பவர் அவரே. எவர் இறந்தாலும் அவருக்கு அது பொருட்டல்ல. நான் உடன்பிறந்தாரிடையே போர் தவிர்க்கப்படவேண்டுமென பேசிக்கொண்டிருந்தபோது இயல்பாக அவர் போர் நிகழ்ந்து முடிவு எட்டப்படுவதே சிறந்தது என்றார். மேற்கொண்டு சொல் இன்றி நான் வணங்கி எழுந்துகொண்டேன்” என்று கிருஷ்ணன் சொன்னான். சாத்யகி அவன் சம்படையிடம் ஒருதலையாக பேசிக்கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தான்.

கிருஷ்ணன் “தங்களை நான் சந்திக்கவந்தது அஸ்தினபுரியில் குருதிசிந்தப்படாமல் காக்கும் வல்லமை தங்களுக்குண்டு என்பதனாலேயே” என்றான். “அது பிதாமகர் என்னும் முறையில் தங்கள் கடமை. இன்றுவரை அஸ்தினபுரியை இணைக்கும் மையமாக தாங்களே இருந்துள்ளீர்கள். தாங்கள் அமைதிகொள்ளும்போது அந்நகர் கொந்தளிக்கத் தொடங்கிவிடுகிறது. தாங்கள் நாடுதிரும்பும் தருணம் இது என்று உணர்கிறேன். அதைச்சொல்லவும்தான் நான் வந்தேன்.”

பீஷ்மர் அவனை சிலகணங்கள் பொருளில்லா வெறிப்புடன் நோக்கியபின் திரும்பி வானை சுட்டிக்காட்டினார். ஒளிதேங்கிய வெளியில் ஒரு சிறிய பறவை சுழன்று சுழன்று விளையாடிக்கொண்டிருந்தது. “ஆம், நானறிவேன், தாங்கள் மெல்ல ஓடுக்குள் சுருங்கி வருகிறீர்கள். உதிரவிழைகிறீர்கள். ஆனால் எந்தக் கனியும் உதிரும் கணத்தை தான் முடிவுசெய்வதில்லை” என்றான் கிருஷ்ணன். ”பற்று என எஞ்சுவது செயல்களின் விளைவுகளே. அதை தாங்களும் அறிவீர்கள்.”

பீஷ்மர் கைகூப்பிவிட்டு எழுந்து திரும்பிச் செல்லப்போனார். கிருஷ்ணன் அவருடன் எழுந்து கூடவே ஒரு அடிவைத்து “இவர்கள் எவரும் திரௌபதியை வெல்லமுடியாது பிதாமகரே. தருமனின் அறநூலும் பீமனின் கதையும் பார்த்தனின் வில்லும் நகுலனின் சம்மட்டியும் சகதேவனின் வாளும் ஏந்தி அடைக்கலமும் அருளுமென கைகள் காட்டி அமர்ந்திருக்கும் பன்னிருபுயத் தெய்வம் அவள் என்கின்றனர் சூதர். அஸ்தினபுரியின் மண் அவளுடைய தட்டகம்” என்றான்.

சொல்லிகொண்டே பீஷ்மரின் பின்னால் கிருஷ்ணன் சென்றான். “மண்ணிலிறங்கும் விண்விசைகள் பெண்ணுருக்கொள்வதையே விரும்புகின்றன. அஸ்தினபுரியின் கங்கைக்கரை நுழைவாயிலில் அம்பையன்னை கொடுவிழிகளும் கொலைவேலுமாக காத்திருக்கிறாள் என்கின்றனர் சூதர். இவள் அனலுருக்கொண்ட அம்பையின் ஆழிவடிவம் என்று இப்போதே பாடத்தொடங்கிவிட்டனர்.” சாத்யகி அறியாமல் தூண்மூங்கிலை பற்றிக்கொண்டான். பிதாமகரின் முதுகில் தோள்களில் கால்களில் எங்கும் எந்த அசைவும் தெரியவில்லை. ஆனால் கிருஷ்ணன் விரும்பியது நிகழ்ந்துவிட்டதென்று புரிந்தது.

“ஐவரும் மணம்கொள்ளவேண்டும். தார்த்தராஷ்டிரர்களுக்கும் துணைவியர் தேவை. தங்கள் கைதொட்டு மங்கலநாண் எடுத்தளித்தால் அவர்கள் நிறைவாழ்வுகொள்ள முடியும். அவர்களுக்குரிய மகளிரையும் தாங்களே கண்டடைந்து ஆணையிடவேண்டும் என்று திருதராஷ்டிரரும் அத்தையும் விரும்பினர். அச்செய்தியை சொல்லவே வந்தேன். சொல்லடக்கி சிந்தை வென்று விடுதலைகொள்ள தாங்கள் விழைவதைக் கண்டபின் அதை அழுத்த நான் விரும்பவில்லை. என் கடன் சொல்வது. அது ஆனது” என்று கிருஷ்ணன் தலைவணங்கினான். "அருள் விழைகிறேன் பிதாமகரே” என்றபின் பணிந்தபடி திரும்பி விலகிச்சென்றான்.

சாத்யகி பீஷ்மரை ஒருகணம் நோக்கி தத்தளித்தபின் கிருஷ்ணன் பின்னால் சென்றான். கொடிஏணியில் இறங்கியபோது மூங்கில்குடில் வலிகொண்டதுபோல முனகியது. இலைதழைத்த காட்டுக்குள் கிருஷ்ணன் மூழ்கி மறைந்தான். அவனைத்தொடர்ந்து சாத்யகியும் இறங்கிக்கொண்டான். பசுமையில் புதைந்ததும் அகம் விடுதலையை அறிந்தது. கைகால்களை அதுவரை எடையுடன் அழுத்திப்பற்றியிருந்த காற்று விலகிச்சென்றதைப்போல. பெருமூச்சுடன் அவன் ஓடையினுள் எழுந்த பாறைமுகடுகளில் தாவித்தாவிச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணனைத் தொடர்ந்து சென்றான்.

பச்சை இலைகளால் ஆன குகைபோலிருந்தது அப்பாதை. இருபக்கமும் தளிர்களும் மகரந்தம் செறிந்த மலர்களும் பல்லாயிரம் நாநுனிகளால் அவன் தோளையும் இடையையும் கால்களையும் தொட்டுத்தொட்டு அசைந்தன. காட்டுக்குள் இருந்து பெருகிய காற்று அந்த இடைவெளியில் திகைத்து சற்றே சுழிந்து மீண்டும் காட்டுக்குள் சென்றது. பாறைகளில் மோதிச்சிதறிய நீரின் துளிகளை அள்ளி இலைகள் மேல் வீழ்த்தி அவை ததும்பிச்சொட்டச்செய்தது. பாறைகள் அனைத்தும் பசும்பாசிப்பரப்பு கொண்டிருந்தன. அவற்றின் மென்மயிர்ப்பரப்பில் துளித்த நீர்ச்சிதர்களால் புல்லரித்திருந்தன.

எங்குசெல்கிறான் என சாத்யகி வியந்துகொண்டான். அவன் வந்த பணியனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இனி துவாரகைக்கு மீளலாம். அல்லது தருமனுக்கு முடிசூட்டி அழைத்துச்செல்வது அவன் இலக்காக இருக்கலாம். ஒவ்வொன்றிலும் வெற்றியை மட்டுமே அடைபவனின் உள்ளம் எத்தகையதாக இருக்கும்? அவன் வெற்றிகளில் மகிழவில்லை. அடைந்த மறுகணமே விலகிவிடுகிறான். இப்போது அஸ்தினபுரியோ பாண்டவகௌரவர்களோ மட்டுமல்ல பீஷ்மரேகூட அவன் சிந்தையில் எஞ்சியிருக்க வழியில்லை. அங்கே என்னதான் இருக்கும்? ஒன்றுமே இருக்காது என்ற எண்ணத்தை சாத்யகி அடைந்தான். ஒரு எண்ணத்துளிகூட இல்லாமல் வெட்டவெளி நிறைந்திருக்கும். இன்மையின் நீலநிறம். எதையும் தொடாத ஒளி நீலநிறம் கொண்டுவிடும்போலும்.

ஓடை கரியஅடுக்குக் கலம்போல அமைந்த பாறைகளின் நடுவே சிற்றருவியாக நுரைபெருகி சிதர்பரப்பி விழுந்து முயல்செவிகள் போல இலைகுவித்து நின்ற நீர்ப்புதர்களுக்குள் மறைந்து மிகவிலகி வேறு பாறையிடுக்குகளின் நடுவே இருந்து பலகிளைகளாக எழுந்து மீண்டும் இணைந்து வளைந்தது. அவ்வளைவு ஒரு சுனையென தேங்கிச் சுழிக்க அதில் சருகுகளும் நீர்நுரைப்பிசிறுகளும் வட்டமிட்டன. அவற்றுக்குமேல் சிறிய பூச்சிகள் நீர்த்திவலைகள் போல மெல்லிய ஒளிவிட்டபடி சுழன்றன. கிருஷ்ணன் அதனருகே சென்றதும் இடையில் கைவைத்து சற்றுநேரம் நோக்கியபடி நின்றான். பின்னர் ஒரு பாறையில் மலரமைவென கால்கோட்டி அமர்ந்தான்.

சாத்யகி சற்று விலகி வேங்கைமரத்தின் வேர்களில் அமர்ந்தான். கிருஷ்ணன் கைகளை மடியில் வைத்து தலைநிமிர்ந்து முதுகு நேர்நிற்க அமர்ந்தான். விழிமூடி ஊழ்கத்தில் மூழ்கவிருக்கிறான் என சாத்யகி எண்ணினான். ஆனால் அவன் விழிகள் மலர்ந்திருந்தன. தன்முன் பறந்த சிற்றுயிர்களை நோக்கிக்கொண்டிருந்தான். அவற்றின் சுழற்சிக்கேற்ப அவன் விழிகள் அசைந்தன. காற்றில் தவழ்ந்திறங்கிய இலை ஒன்று மெல்ல வந்து நீர்ச்சுழியில் அமைந்தபோது அவன் அதை நோக்கி அது அலைக்கழிந்து துணிபிழியப்படுவதுபோல சுழன்று மறைந்த ஓடைப்பெருக்கில் சிக்கி விரைவுகொண்டு விழிமறைவது வரை நோக்கினான். விழி தூக்கி சிறகொளிர சென்ற தட்டாரப்பூச்சி ஒன்றை நோக்கத் தொடங்கினான்.

என்னதான் பார்க்கிறான் என எண்ணியபடி சாத்யகி நோக்கியிருந்தான். ஒவ்வொன்றிலும் அவன் காணும் அந்த விந்தைதான் என்ன? அவன் முன் கலைநடமாக, புதிராடலாக விரிந்து தன்னைக் காட்டுவதுதான் எது? இது அடர்காடு. தூய உயிரின் செறிவு. ஆனால் காமகுரோதமோகம் அலையடிக்கும் துவாரகையிலும் அதுவே அவன் முன் வந்து நிற்கிறது. அவன் விழிகளிலிருப்பது காமம். ஒவ்வொருகணமும் பொங்கிப்பொங்கி புணர்ந்துகொண்டிருக்கும் பொன்றாப் பெருவிழைவு. எரிந்து எரிந்து தீராத கந்தகமலை. தன் வாலைதானுண்டு முடியாத காலப்பாம்பு.

என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன்? எத்தனை நேரம் ஆகியிருக்கும்? இந்தக் காட்டிலைக்குகைக்குள் காலமில்லை. பகலிரவுகளின் சுழற்சி காலமற்ற வெளியில் மடிந்து மடிந்து சென்றுகொண்டிருக்கிறது. இங்கிருக்கையில் இறப்பில்லை. முதுமையில்லை. ஆனால் இப்படியே இங்கேயே இருக்கவேண்டும். ஏதுமின்றி. எச்சமின்றி. வாழ்வும் முதுமையும் இறப்பும் ஒன்றே. அவை அறிதல் என்பதன் மூன்று முகங்கள். அறிய ஏதுமில்லாத அமைதலில் அவை இல்லை. இங்கிருக்கும்வரை நான் காலத்தை அறிவதில்லை. காலம் என்னையும் அறிவதில்லை. ஆனால் இவ்வெண்ணங்கள் காலமல்லவா? இவற்றின் ஒன்றுமேல் ஒன்றென ஆகும் அடுக்கில் திகழ்வது காலமல்லவா? என் காலைச்சுற்றி பற்றி சுருண்டேறி சித்தத்தில் படர்ந்து கொடிவிரிப்பது காலம்தானே?

ஆணிப்பொருத்துகளில்தான் காலம் வந்து படிகிறது. வாழ்வும் முதுமையும் இறப்புமான காலம். மலைப்பாம்பு போல கவ்விச்சுழற்றி இறுக்கி நொறுக்கி அசைவிழக்கச்செய்து பின் மெல்ல வாய்திறக்கிறது. விழுங்கி நீண்டு தானும் அசைவற்று ஊழ்கத்திலாழ்கிறது. ஊழ்கத்தில் அமைந்திருக்கும் மலைப்பாம்பு விழிமூடுவதில்லை. அதன் விழிமணிகளில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சித்துளிகளுக்கு அப்பால் அதன் அகம் எதை நோக்கிக்கொண்டிருக்கிறது? உண்ணப்பட்டவை உள்ளே உழல்கின்றன. நெளிந்து உடைந்து மெல்ல தங்களை கரைத்துக்கொண்டிருக்கின்றன. மலைப்பாம்பின் அமைதி. பல்லாயிரம் வேர்களால் மண்ணை உறிஞ்சி உண்ணும் பெருங்காட்டின் குளிர்பரவியது அதன் உடல். மலைப்பாம்பு ஒரு காடு. காடு ஒரு மலைப்பாம்பு.

இளநீலச்சிறகும் செம்பட்டுவாலும் கோதுமைமணி என மின்னிய சிற்றலகும் கொண்ட சின்னஞ்சிறு குருவி மரத்திலிருந்து தன்னைத்தானே தூக்கிவீசிக்கொண்டு நீர்நோக்கிப் பாய்ந்தது, கூர்வாள் முனையை கூர்வாளால் உரசியது போன்ற மெல்லிய ஒலியுடன். நீரைத்தொடாமல் சுழன்றுமேலேறி காற்றில் அலைக்கழிந்து மீண்டது. மீண்டும் சுழன்றிறங்கி நீரை சிறுசிறையால் வருடி மேலெழுந்தது. அது தொட்டு உருவான நீர்வளையம் கரைந்து மறைய மீண்டும் வந்து தொட்டுச்சென்றது. மீண்டும் மீண்டும் ஒன்றையே செய்துகொண்டிருந்தது அது. அதைச்செய்வதற்கென்றே ஆக்கப்பட்டு அனுப்பப்பட்டதுபோல.

கிருஷ்ணன் அதை முகம் மலர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். இமைகள் துடிதுடிக்க பறக்கும் நீலவிழி. அதை விழிக்குத்துலங்காத நீர்ப்பெருக்கு ஒன்று அள்ளிச் சுழற்றி வீசிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது. மறுகணம் அதை ஒரு பட்டுச்சரடின் முனையில் கட்டி எவரோ சுழற்றிவிளையாடுகிறார்கள் என்று தோன்றியது. என்ன ஒரு களியாட்டு! கட்டின்மை என்பதே அசைவுகளான கொண்டாட்டம். மலர்களுக்கு உயிரசைவு வருமென்றால் அவை பறக்கவே விழையும். சாத்யகி தன் எண்ணங்களின் அழகிய பொருளின்மையை நோக்கி புன்னகை செய்துகொண்டான்.

குருவி வீசப்பட்டதுபோல காட்டைநோக்கிச் சென்று அப்படியே பச்சை இருளில் மறைந்தது. கிருஷ்ணன் அது சென்ற வழியை சற்றுநேரம் நோக்கியபின் எழுந்துகொண்டு சாத்யகியை வெற்றுவிழிகளால் பார்த்துவிட்டு திரும்பி நடந்தான். மீண்டும் காட்டினூடாக பாறைகள்மேல் தாவித்தாவிச் சென்றனர். காட்டின் ஒளி மாறுபட்டிருப்பதை சாத்யகி கண்டான். நீர் இன்னும் சற்று கருமைகொண்டிருந்தது. இலைநுனிகளில் எரிந்த வெண்சுடர்கள் செம்மையையும் கலந்துகொண்டிருந்தன. நினைத்திருக்காமல் வந்த எண்ணமென ஒரு காற்று இலைத்தழைப்புகளை குலுங்கச்செய்தபடி கடந்துசென்றது.

மீண்டும் குடிலருகே வந்தபோது ஓஜஸ் அவர்களுக்காக காத்திருந்தான். “தங்களுக்கான குடில் ஒன்று அப்பால் பன்றிப்பாறைமேல் அமைக்கப்பட்டுள்ளது யாதவரே” என்றான். “நீராடி வந்தீர்களென்றால் உணவருந்தி ஓய்வெடுக்க ஆவனசெய்கிறேன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் “இந்தக்காட்டில் செய்வதெதுவும் ஓய்வே” என்றான். ஓஜஸ் “ஆம்” என்றபின் “தாங்கள் எப்போது கிளம்புகிறீர்கள்? பிதாமகருடன் அஸ்தினபுரிக்கே செல்ல எண்ணமுண்டா?” என்றான். கிருஷ்ணன் வியப்பின்றி “பிதாமகர் எப்போது கிளம்புகிறார்?” என்றான்.

“நாளை காலை இருள்வடியும்போது” என்று ஓஜஸ் சொன்னான். “அஸ்தினபுரியிலிருந்து சற்றுமுன்னர்தான் பறவைத்தூது வந்தது. இன்றுகாலை காந்தார அரசியரில் ஒருவரான சம்படை விண்புகுந்துவிட்டார். முறைமைச்சடங்குகளுக்கு பிதாமகர் அங்கிருக்கவேண்டும், கிளம்புவதற்குரியனவற்றை செய்யும்படி சொன்னார்.” கிருஷ்ணன் “நன்று” என்றான். ஓஜஸ் “தன் சொல்லடங்கலை கலைத்துக்கொண்டுவிட்டார். ஆகவே மீண்டும் இங்கு வரப்போவதில்லை என நினைக்கிறேன். நாங்களும் அவருடன் கிளம்புகிறோம்” என்றான்.

“நாங்கள் பாஞ்சாலநகரி செல்லவிரும்புகிறோம். சுதுத்ரியை கடக்கும்வரை அவருடன் வருகிறோம்...” என்றான் கிருஷ்ணன். திரும்பி சாத்யகியிடம் “நாளை காலையே நாமும் கிளம்பிவிடுவோம் இளையோனே” என்றபின் புன்னகைத்தான்.

பகுதி 13 : பகடையின் எண்கள் - 1

தூமபதத்தை கடப்பதுவரை பிறிதொருவனாகவே பூரிசிரவஸ் தன்னை உணர்ந்தான். புரவிகள் மூச்சிரைக்க வளைந்துசென்ற மேட்டுச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் உள்ளம் எங்கிருக்கிறோம் என்பதையே அறியவில்லை. ஒன்றுடன் ஒன்று இணையாத சிந்தனைகளாக உள்ளம் இயங்கிக்கொண்டிருக்க அவ்வப்போது துயில் புகைப்படலம் போல படர்ந்து மூடி விலகியது. ஆனால் எங்கோ ஓர் ஆழத்தில் அவன் தேடிக்கொண்டிருந்தான் என்பது தூமபதத்தின் முதல் குளிர்காற்று உடலைத்தொட்ட கணமே அனைத்துப்புலன்களும் விழித்துக்கொண்டதில் தெரிந்தது.

வாயைத்துடைத்துக்கொண்டு புரவியின்மேல் நிமிர்ந்து அமர்ந்து இருபெரும்பாறைகள் நடுவே தொங்கும் நீள்சதுரமென துண்டுபட்டு நின்றிருந்த விடிகாலையின் சாம்பல்நிற வானத்தை நோக்கி நெடுமூச்செறிந்தான். வானிலென பாறைமுடிமேல் காவல்கோட்டத்தின் முரசுகள் முழங்கத்தொடங்கின. இருள் வழியாகவே அந்த ஒலி ஊறிவந்து மலைச்சரிவில் நிழலுருக்களாக நின்ற மரக்கூட்டங்கள்ளின்மேல் பரவியது. புரவிகளின் குளம்போசைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டவை போல தயங்கின. அவனுடைய காவலன் எரியம்பை வானிலெழுப்பினான். பாறைமுடியில் வரவேற்புக்காக எரியம்பு எழுந்து சுழன்று இருளுக்குள் விழுந்தது.

தூமபதத்தின் மேல் ஏறிச்சென்று பாறைப்பிளவு வாயிலுக்கு அப்பால் விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது விடிந்துவிட்டிருந்தது. நகரைநோக்கி செல்லும் சாலையில் பால்ஹிகர்கள் சிலர் பருத்த கம்பளியாடைகளுடன் கரடிகளைப்போல ஆடியபடி மாடுகளை ஓட்டி வந்துகொண்டிருந்தனர். நகரின் மேல் எழுந்த எரியம்பை நோக்கியபடி அவன் புரவியில் சில கணங்கள் நின்றான். கன்றைத்தேடும் பிடி போல நகரம் முரசொலியெழுப்பி உறுமியது. அவன் குதிரையின் விலாவை காலால் உதைத்து அதை கனைத்தபடி முன்னங்கால் தூக்கி பாய்ந்தெழச்செய்தான். குளம்போசை உருண்டு பெருகித் தொடர்ந்து வர மலைச்சரிவில் விரைந்தான்.

ஏழன்னையர் ஆலயத்தின் முன்னால் பெரிய பலிபீடத்துடன் பால்ஹிகபிதாமகரின் ஆலயம் புதியதாக கட்டப்பட்டிருந்தது. மரக்கூரைக்குமேல் வெண்களிமண் பூசப்பட்டு உருளைக்கற்களால் கட்டப்பட்ட சிற்றாலயத்தின் கருவறைக்குள் தோளில் காட்டாடு ஒன்றை ஏந்தியபடி திரண்ட பெரும்புயங்களுடன் பால்ஹிகபிதாமகரின் சிலை நின்றது. புரவியில் அமர்ந்தவாறே ஒருகணம் நோக்கி தலைதாழ்த்தியபின் அவன் நகரத்திற்குள் நுழைந்தான். குளிர்காலத்தின் விளிம்பு எட்டிவிட்டிருந்தமையால் சாலைகளிலோ இல்லமுகப்புகளிலோ மனிதர்கள் எவரையும் காணவில்லை. மாடுகள் கூட தொழுவங்களின் வெம்மையை நாடியிருந்தன.

பனியின் ஈரத்தால் சதுப்பாக மாறிய செம்மண் சாலையில் புரவிக்குளம்புகள் பதிந்து செல்ல அவன் தெருக்கள் வழியாக சென்றான். குளம்போசை சந்துகளுக்குள் சென்று சுவர்களில் பட்டு திரும்பி வந்தது. காவலர்கள் கூட கண்ணுக்குப்படவில்லை. நகரம் மானுடரால் கைவிடப்பட்டு கிடப்பதுபோலிருந்தது. அரண்மனை முகப்பை அவன் கடந்தபின்னர்தான் காவல்கோட்டத்திற்குள் இருந்த காவலன் எட்டிப்பார்த்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டதும் ஓடிச்சென்று காவல்மேடை மேல் ஏறி அங்கிருந்த முரசறைவோனை எழுப்பினான்.

பூரிசிரவஸ் முற்றத்தில் புரவியை நிறுத்திவிட்டு அரண்மனையின் படிகளில் ஏறி உள்ளே செல்லும்போதுதான் அவன் பின்னால் முரசொலி எழுந்தது. அவனுடய வீரர்கள் அதன்பின்னர் வந்து சேர்ந்தனர். அரண்மனைக்குள் நுழைந்ததுமே பெரும் களைப்பை கைகளிலும் கால்களிலும் எடையென உணர்ந்தான். நெடுந்தூரம் நெடுங்காலம் சென்று மீண்டதுபோல தோன்றியது. அரண்மனையின் ஒவ்வொன்றும் மாறிவிட்டிருந்தன. பிறரால் ஆளப்பட்டு பிறர்தடங்களைச் சுமந்து அயலாகத் தெரிந்தன. அங்கே தூசியும் இருளும் படிந்திருப்பதுபோல, அறைகளும் இடைநாழியும் மிகமிகக் குறுகிவிட்டதுபோல தோன்றியது.

மூச்சுத்திணறல் போன்ற அமைதியின்மையுடன் அவன் தன் அறைக்குச் செல்லும்போது எதிரே வந்த பணியாள் முந்தையநாளிரவின் மதுமயக்கில் இருப்பதைக் கண்டான். அவன் இளவரசனை அடையாளம் காணாமல் “யார்?” என்றபின் “அரண்மனை மணி இன்னமும் ஒலிக்கவில்லை” என்றான். பூரிசிரவஸ் அவனை முற்றிலும் புறக்கணித்து கடந்து தன் அறைக்குள் சென்ற பின்னர் அவன் விழித்துக்கொண்டு ஓடிவந்து அறைக்குள் எட்டிப்பார்த்து “இளவரசே, தாங்களா? அதுதான் முரசம் ஒலிக்கிறதா? நான் என்னவென்றே தெரியாமல்...” என்றபின் “தாங்கள் நீராடி உணவருந்தி...” என தடுமாறினான். உடனே மதுவாடை எழுவதை உணர்ந்து வாயைமூடிக்கொண்டான். ”அரசரிடம் நான் வந்துவிட்டதை சொல்” என்றான் பூரிசிரவஸ்.

அறைக்குள் சென்று காலணிகளை மட்டும் கழற்றிவிட்டு அப்படியே படுத்துக்கொண்டான். கண்களை மூடியபோது தசசக்கரத்தில் இருப்பது போலிருந்தது. துரியோதனனும் கர்ணனும் அஸ்தினபுரிக்கு கிளம்பிச் செல்வதுவரை அவன் அங்குதான் இருந்தான். பின்னர் துரியோதனனின் ஆணையின்படி கிளம்பி வங்கம், கலிங்கம் என அரசர்களைக் கண்டு துரியோதனன் அளித்த செய்திகளை சொல்லிவிட்டு அஸ்தினபுரிக்குத் திரும்ப எண்ணியிருந்தபோது அவன் உடனே வரவேண்டும் என பால்ஹிகக்கூட்டமைப்பில் இருந்து செய்தி வந்தது. தன் மறுமொழியை பறவைத்தூதாக அனுப்பியபின் நேராக மலைகடந்து பால்ஹிகபுரிக்கு திரும்பினான்.

தசசக்கரத்துடன் துச்சளையின் தோற்றம் இணைந்திருந்தது. அவளுடைய கரிய பெருமுகத்தில் விரியும் வெண்புன்னகை. தடித்தஉடலின் அசைவுகளில் கூடும் பெண்மையின் அழகசைவுகள். அவன் விழிமூடி அவளையே நோக்கிக்கொண்டு கிடந்தான். வானிலிருந்து மண்ணில் இறங்கும் புள் என அவளுடைய முகம் மீது சென்றமர்ந்து அது கடலென மாற மூழ்கி இருளாழத்திற்குள் மறைந்தான். வெளியே விடியலின் முரசொலி கேட்டது. தசசக்கரத்தின் படைகள் கிளம்பும் ஒலி. பறவைகள். இருளில் சிறகடிக்கும் பறவைகள்.

துச்சளையின் முகத்தை எண்ணியபடி அவன் கண்விழித்தபோது உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது. சாளரம் வழியாக வந்து விழுந்திருந்த வெண்ணிற வெயில்கற்றையை நோக்கியபடி எழுந்தபோது உடலெங்கும் நல்ல தூக்கத்திற்குப்பிறகான இனிய சோர்வு நிறைந்திருந்தது. பார்வைகூட தெளிவாகிவிட்டிருந்தது. அரண்மனையின் ஒவ்வொரு இடத்தையும் அகம் சென்று தொட்டுத் தொட்டு அடையாளம் கண்டு மீட்டெடுத்தது. சற்றுநேரத்தில் அவன் அங்கே பிறந்து வளர்ந்து அதனுள்ளேயே பெரும்பாலான நாட்களைக் கழித்த பால்ஹிகச் சிறுவனாக மாறிவிட்டான். அரண்மனையை வெறுமனே ஒருமுறை சுற்றிவரவேண்டும் என தோன்றியது. அவன் அதுவரை பார்த்த பெரிய அரண்மனைகள் உயிரற்றவையாக தெரிந்தன. அணைக்கும் கையின் உயிர்வெம்மை கொண்டிருந்தது அவனுடைய அரண்மனை.

உச்சியுணவுக்குப் பின்னர்தான் அவன் சோமதத்தரை அரசவையில் சந்தித்தான். அவை கூடியபோது அமைச்சர் கர்த்தமரும் கருவூலநாயகமான பிண்டகரும் மட்டுமே இருந்தார்கள். இருவர் கண்களிலும் மதுவின் களைப்பும் ஆர்வமின்மையும் தெரிந்தன. பிண்டகர் அப்போதுதான் அன்றைய அவைக்குரிய கணக்குகளை குறித்துக்கொண்டிருந்தார் என தெரிந்தது. இருவரும் எழுந்து அவனுக்கு முகமனும் வாழ்த்தும் சொல்லிவிட்டு மீண்டும் அவர்கள் ஆராய்ந்துகொண்டிருந்த சுவடிகளை பார்க்கத் தொடங்கினர். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டு சோமதத்தருக்காக காத்திருந்தான். அரசவை வழக்கமாகவே உச்சி சாய்ந்தபின்னர்தான் தொடங்குகிறது என்று தெரிந்தது. அரசரைப் பார்க்க குடிகள், வணிகர் என எவருமே வந்திருக்கவில்லை. கோலைச் சுழற்றியபடி இயல்பாக வந்த நிமித்திகன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்ததும் திகைத்து ஓடிவந்தான்.

அரண்மனையின் உள்மாடம் ஒன்றில் பெருமுரசு மெல்ல முழங்கியது. நீரில் மரத்தொட்டிகளை போடுவதுபோன்ற அடைத்த ஒலி. நிமித்திகன் சொல்மேடை ஏறி நின்று கோலைத் தூக்கி சோமதத்தரின் வருகையை தூண்நிழல்கள் சரிந்துகிடந்த குளிர்ந்த வெறும் கூடத்திற்கு அறிவித்தபோது பீடத்தில் அமர்ந்து சுவடிகளை அடுக்கிக்கொண்டிருந்த அமைச்சரும் கருவூலரும் எழுந்து நின்றார்கள். வெளியே இடைநாழியில் சோமதத்தர் அணுக்கனும் அடைப்பக்காரனும் இருபக்கமும் தாலங்களுடன் தொடர வெண்குடை ஏந்தி ஒருவன் பின்னால்வர கையில் செங்கோலுடன் மெதுவாக நடந்துவந்தார். அமைச்சர்களும் இரு சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பி வணங்கினர்.

சோமதத்தர் மெல்லிய தள்ளாட்டத்துடன் தெரிந்தார். அவருக்குப்பின்னால் வந்த ஃபூரி அரைத்துயிலில் வந்தான். அவனுடைய ஊன்குழிவிழிகள் எவரையுமே நோக்கவில்லை. பெருமூச்சுடன் சோமதத்தர் அரியணையில் அமர்ந்து தன் மடிமீதும் கால்மீதும் தடித்த கம்பளிப்போர்வையைப் போட்டு உடலை ஒடுக்கிக்கொண்டார். ஃபூரி பீடத்தில் அமர்ந்ததுமே துயிலத்தொடங்கினான். சோமதத்தர் நீளமாக கொட்டாவி விட்டார். அவர் கண்கள் நன்றாகக் களைத்துச் சுருங்கியிருந்தன. அவருக்கு தலைவலி இருப்பது தெரிந்தது. ஈரத்துணியை கழுத்தைச்சுற்றிக் கட்டி அதன் மேல் மேலாடையை போர்த்தியிருந்தார். வாயில் நறும்பூத்துண்டை போட்டு மென்று மதுவின் புளித்த அமிலமணத்தை வெல்ல முயன்றார்.

மலைநாடுகளில் குளிர்காலம் என்பது இரவும்பகலும் குடித்து எங்கிருக்கிறோமென்றே தெரியாமல் ஒடுங்கிக்கிடப்பதற்குரியது. குழியணில்கள், கீரிகள், முயல்கள் அனைத்துக்கும் விழிகளில் இருந்த ஆன்மா விலகி உள்ளே சென்று ஒடுங்கியிருக்கும். நிமித்திகன் முறைமைச்சொற்களைச் சொல்லி வணங்கி சென்றதும் கர்த்தமர் அன்றைய செய்திகளை சொன்னார். அவை செய்திகளே அல்ல, வழக்கமான சொற்கள். பிண்டகர் கருவூலக்கணக்கை சொன்னார். வழக்கமான எண்கள். சோமதத்தர் முகம் சுளித்து தலையை அசைத்தபின் சாளரத்தை நோக்கி அதை மூடும்படி ஆணையிட்டார். ஒளி அவரது மயக்குநிறைந்த கண்களை கூசச்செய்தது என்று தெரிந்தது. அவை இருட்டாக ஆனது. குளிர் கூடுவதுபோல தோன்றியது. ஆனால் பூரிசிரவஸ் அந்த இருளில் ஓர் அணைப்பை உணர்ந்தான்.

முறைமைகள் முடிந்தபின் பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி முகமன் சொல்லி அரசரை வாழ்த்தினான். பிண்டகர் மீண்டும் சுவடிகளை அடுக்கத்தொடங்க கர்த்தமர் சால்வையால் நன்றாகப்போர்த்தியபின் உடலை ஒடுக்கி பீடத்தில் அமர்ந்தார். மழையில் அமரும் முதிய பறவைகளைப்போல அவரது உடற்குவியலில் இருந்து மூக்கு மட்டும் வெளித்தெரிந்தது. ”நான் பயணச்செய்திகளை இரண்டுநாட்களுக்கொருமுறை பறவைத்தூதாக அனுப்பிக்கொண்டிருந்தேன் அரசே. அவை முறையாகக் கிடைத்தன என்பதையும் மூத்தவரிடமிருந்து வந்த செய்திகள் வழியாக அறிந்தேன். நான் சொல்வதற்கென ஏதுமில்லை. சுருக்கமாக என் பயணம் குறித்து சொல்கிறேன்” என்றான்.

சோமதத்தர் ஏப்பம் விட்டபடி நெளிந்து அமர்ந்து “நீ காலையிலேயே வந்துவிட்டாயென்று ஏவலன் சொன்னான்... சென்றபணி நிறைவுற்றதென எண்ணுகிறேன்” என்றார். “ஆம், அஸ்தினபுரியில் நமக்கு உகந்தவையே நிகழ்கின்றன” என்றான் பூரிசிரவஸ். ”அங்கே நாம் இன்று விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறோம். நம்மை அவர்களின் முதன்மைத்தோழர்களாக அறிவிப்பார்கள். துரியோதன மன்னருக்காக நான் நான்கு நாட்டரசர்களை சந்தித்தேன். ஒவ்வொருமுறையும் அஸ்தினபுரியின் தூதனாகவே நடத்தப்பட்டேன்.” சோமதத்தர் வாயை சப்புகொட்டி ”ஏன்?” என்றார். அதற்கு என்ன மறுமொழி சொல்வதென திகைத்தபின் “தெரியவில்லை” என்று சொல்லி பூரிசிரவஸ் அமரப்போனான்.

விரைந்த காலடிகளுடன் உள்ளே வந்த சலன் அவன் வணக்கத்தை ஏற்று அமர்ந்தபடி “பறவை வந்தது. அதனால் பிந்திவிட்டேன். பிதாமகர் பீஷ்மர் மீண்டும் அஸ்தினபுரிக்கு சென்றுவிட்டதாக செய்தி இளையவனே. இளைய யாதவன் பாஞ்சாலநகரிக்குச் சென்றான் என்பதை அறிந்திருப்பாய். அங்கே நிகழ்வுகள் என்ன என்பதை நம் ஒற்றன் விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நான்குநாட்களில் யாதவன் மீண்டும் துவாரகைக்கு செல்வான் என்றார்கள்” என்றான்.

“நான் கிளம்பும்போதே பிதாமகர் அஸ்தினபுரிக்கு மீள்வதாக சொல்லப்பட்டது. இளைய காந்தாரி ஒருத்தியின் இறப்புக்காக வருகிறார் என்றனர். ஆனால் அவர் வருவது முடிநிகழ்வுகளை நடத்தத்தான் என அனைவரும் அறிவர்” என்றான் பூரிசிரவஸ். “முடிசூட்டுவிழவை குளிர்காலத்தின் முடிவில் ஃபால்குன மாதத்தில் வைக்கலாமென்று அங்கே பேச்சு இருந்தது.” உடலை நெளித்து அமர்ந்து சோமதத்தர் “எவருடைய முடிசூட்டுவிழா?” என்று ஆர்வமில்லாமல் கேட்டார். தன்னை அடக்கிக்கொண்டு பூரிசிரவஸ் “அரசே, அஸ்தினபுரியை இரண்டாக பகுக்கவிருக்கிறார்கள். அதற்குமுன் அஸ்தினபுரியின் அரசராக முறைப்படி யுதிஷ்டிரர் முடிசூடுவார். பின் தன் முடியை இளையவனுக்கு அளித்துவிட்டு தட்சிணகுரு நாட்டை பெற்றுக்கொள்வார்” என்றான்.

"இப்போது தட்சிணகுருவை ஆள்வது யார்?” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் சலிப்புற்று “இப்போது அது திருதராஷ்டிரரால்தான் ஆளப்படுகிறது அரசே. அங்கே ஒரு பெருநகரை பாண்டவர்கள் அமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.” சோமதத்தர் அதற்கும் எந்த ஆர்வமும் இல்லாமல் “ஓ” என்றபின் மெல்ல திரும்பி ஏவலனிடம் கைகாட்ட அவன் சிறிய பொற்குவளையை அவரிடம் நீட்டினான். அதைநோக்கி சலன் திரும்பியதும் சோமதத்தர் புன்னகையுடன் “சுக்குநீர். தலைவலிக்கு நல்லது” என்றார். கர்த்தமர் புன்னகைசெய்தார். சலன் பார்வையை திருப்பிக்கொண்டு அவனிடம் ”முடிப்பகுப்பு முற்றுறுதியாகிவிட்டதா?” என்றான்.

“ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அதற்கு உடன்படாதிருக்கக்கூடியவர்கள் என்றால் துரியோதனரும் சகுனிதேவரும்தான். இருவரும் ஏற்றுக்கொண்டுவிட்டநிலையில் அது சிறப்புற நிகழவே வாய்ப்பு. ஆனால் அனைத்துநாட்டு அரசர்களையும் அழைத்து பெருநிகழ்வாக அதை நடத்த வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அரசகுலத்தில் உள்ள உளப்பிளவு தெரியவரும். ஆகவே சிறிய குலச்சடங்காகவே செய்து முடிப்பார்கள். நாம் அழைக்கப்படுவோம். என்னிடம் அதை துரியோதனரே சொன்னார்” என்றான். சலன் பொறுமையிழந்து தலையை அசைத்து “இளையோனே, உன்னை அழைக்கக்கூடுமா இல்லையா என்பதல்ல என் ஐயம். பால்ஹிகக் கூட்டமைப்பை ஒரு நாடாக அஸ்தினபுரியின் இரு அரசுகளில் ஏதேனும் ஒன்றாவது ஏற்றுக்கொள்ளுமா என்பது மட்டுமே” என்றான்.

பூரிசிரவஸ் சில கணங்கள் நோக்கிவிட்டு “நம்மை அழைப்பதென்பது....” என தொடங்க “இளையோனே, நம்மை மட்டும் அழைப்பதே பால்ஹிகக்கூட்டமைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான அறிவிப்பாக ஆகலாம். இப்போது நம்முடைய இனக்கூட்டு என்பது நாம் கொண்டுள்ள பொதுப்புரிதல் மட்டும் அல்ல. இனி அனைவராலும் இது ஒரு நாடாகவே கருதப்படவேண்டும். இனி அரசத்தூதர்கள் இந்த குலக்கூட்டில் இருந்தே அழைக்கப்படவேண்டும். அஸ்தினபுரியையோ மற்ற வெளியரசர்களையோ பொருத்தவரை இனி இங்கு தனியரசர்கள் இல்லை. பால்ஹிகக்கூட்டின் தலைவர் எவரோ அவரே அரசரென எண்ணப்படவேண்டும்...” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். மெல்லிய குறட்டையொலியுடன் சோமதத்தர் துயிலத்தொடங்கிவிட்டிருந்தார். ஃபூரியும் அவருடன் இணைந்து குரட்டை ஒலித்தான்.

“அவ்வாறுதான் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னை பால்ஹிக நாட்டுக்குரிய தூதன் என்று சொல்லவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதன் என்றே சொன்னேன்.” சலன் கனிவுடன் சிரித்து “நீ சொல்வதில் ஏதுமில்லை இளையவனே. அவர்கள் அதை அரசமுறைப்படி ஏற்றுக்கொண்டார்களா, ஏதேனும் குறிப்பில் அதை சொன்னார்களா?” என்றான். பூரிசிரவஸ் பேசாமல் இருந்தான். “நீ செல்லுமிடங்களில் உனக்கென அளிக்கப்பட்ட கொடி என்ன்?” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “பால்ஹிகக்கொடி” என்றான். “பால்ஹிகக்கூட்டமைப்புக்கான கொடியும் உன்னுடன்வந்தது. அது எங்காவது அவர்களால் அளிக்கப்பட்டதா?” பூரிசிரவஸ் தலைதாழ்த்தி “இல்லை” என்றான். சலன் பெருமூச்சுவிட்டான்.

“நாம் இன்னமும்கூட அதை அவர்களுக்கு தெளிவுபடுத்தமுடியும் மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். "முடிசூட்டுவிழாவுக்கு நாம் பால்ஹிகக்கூட்டமைப்பின் சார்பாக செல்வோம்.” சலன் “இளையோனே, நாம் என்ன செய்வோம் என்பது ஒரு பக்கம் மட்டுமே. நாம் சிரிக்கலாம் அழலாம் வஞ்சினம் கூறலாம். நாம் செய்வதை அவர்கள் பார்க்கவேண்டுமே. அதை அவர்கள் அறிந்ததாகக்கூட நாம் அறியமுடியாது” என்றான். அவன் தோளைத் தொட்டு “அவர்கள் நமக்கு ஒரு கொடியோ ஏடோ கொடுக்காதவரை பால்ஹிகக் கூட்டமைப்பு என ஏதுமில்லை. இதுவே உண்மை” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

“ஒன்றுசெய்யலாம், பால்ஹிகக்கூட்டமைப்பை பிறநாடுகள் ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம். பின் அந்நாடுகளுடன் உறவை முறித்துக்கொண்டு அஸ்தினபுரியை அணுகலாம். அந்நிலையில் நம்மை பால்ஹிகக்கூட்டமைப்பாக மட்டுமே அஸ்தினபுரியால் அணுகமுடியும்... ஆனால் அது இடர் நிறைந்தது. நம்முடன் உறவை முறித்துக்கொள்ளும் அந்த நாடு நமது என்றென்றைக்குமான எதிரியாக ஆகிவிடும்.. அதன் பின் நாம் வாழமுடியாது.”

பூரிசிரவஸ் சோர்வுடன் “நான் இந்த அளவுக்கு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “நீ இளையவன். அரசமுறைமைகள், முகமன் சொற்கள், கட்டித்தழுவல்கள் ஆகியவற்றை உண்மை என நம்பிவிட்டாய். இளையோனே, இங்கு மலைகளுக்கு அடியில்தான் சொற்களுக்கும் பொருளுக்குமான உறவு நேரானது. அங்கே சொற்கள் பொருளை வைத்து விளையாடுவதற்குரியவை. அவர்கள் சொல்லெனும் பகடைகளை உருட்டி விளையாடி நம்முன் போடுகிறார்கள். நாம் அவற்றை எடுத்து உருட்டி நமது பன்னிரண்டை அடையவேண்டும்.”

சலன் சொன்னான் “உன்னை அவர்கள் தழுவிக்கொள்ளலாம், இன்சொல் சொல்லி மகிழ்விக்கலாம். அருகிருத்தி அமுதூட்டலாம். ஆனால் உன் அரசியல் விருப்புகளை ஒருபோதும் வளர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் அரசியலில் எதிரியும் அடிமையும் மட்டுமே இருக்கமுடியும். நீ ஆற்றலற்றவனாக அடிபணிந்திருக்கவே விழைவார்கள். பால்ஹிகக்கூட்டு வழியாக நீ ஆற்றல்பெற ஒப்பவே மாட்டார்கள். அது இயல்பானதும்கூட. இணையாக வளரும் அடிமை தன் ஆசையால் எதிரியாவான். இணையாக வளரும் நண்பன் தன் ஆணவத்தால் எதிரியாவான். உன்னை அவர்கள் அணைத்து இன்சொல் சொன்னதுகூட பால்ஹிகக்கூட்டை உடைப்பதற்காக இருக்கலாம்.”

பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்க “இப்போதே செய்தி சென்றிருக்கும். சல்லியர் என்ன எண்ணுவார்? நீ துரியோதனனுடன் அணுக்கமாகிவிட்டாய்,. ஆகவே பால்ஹிகநாடு நேரடியாகவே அஸ்தினபுரிக்கு நட்புநாடாகிவிட்டது. அதன் உட்பொருளென்ன இளையவனே? நாம் படைதிரட்டி பிற பால்ஹிகநாடுகளை வென்று நம்மை இப்பகுதிக்கு தலைவர்களாக ஆக்கிக்கொள்ளப்போகிறோம் என்பதுதானே? முதல் தாக்குதல் மத்ரநாட்டின்மீதாகத்தானே அமையும்? எண்ணிப்பார்!” பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.

“ஆகவேதான் உன்னை திரும்பச்சொன்னேன். நீ அங்கிருந்தால் உன்னை மேலும் மேலும் அஸ்தினபுரியின் அரசவைப்பணிகளில் ஈடுபடுத்துவார்கள். நீ அஸ்தினபுரியின் தூதனாகச் சென்றதே பெரும் பிழை.” பூரிசிரவஸ் “மூத்தவரே, நான் துரியோதனரின் அணுக்கனாக ஆனேன் என எண்ணி...” என சொல்லத்தொடங்க பூரிசிரவஸ் சினத்துடன் “மூடா, நீ துரியோதனனின் தூதனாக எப்படி  செல்லமுடியும்? நீ பால்ஹிகர்களின் தூதனாக மட்டுமே எங்கும் பேசமுடியும்...” என்றான். பூரிசிரவஸ் விழிகளை தாழ்த்திக்கொண்டான். ”சரி விடு, இனி அதைப்பற்றிப்பேசி பயனில்லை. நீ உடனே கிளம்பி மத்ரநாடு செல். சல்லியரின் எண்ணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்துவா!”

“ஆணை” என்றான் பூரிசிரவஸ். “அவர் உளம் திரிபடைந்துள்ளார் என்றனர். அவ்வண்ணம்தான் நிகழுமென நான் முன்னரே உய்த்திருந்தேன். அதை அவர் சிலநுண்ணிய செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். வணிகவழிக்கான ஒப்புதல்கள் கோர பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதர்களை கூர்ஜரத்துக்கும் துவாரகைக்கும் அனுப்பினோம் . அதில் மத்ரநாட்டவர் எவரும் கலந்துகொள்ளவில்லை. துவாரகையின் அரசுமதியாளனுக்கு அந்த உட்குறிப்பே போதும். அவன் மத்ரநாட்டின் உள்ளத்தை மேலும் பிளப்பான். பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்து மத்ரர்களை தனியாக தன்பக்கம் இழுப்பான்... ஐயமே இல்லை.” பூரிசிரவஸ் “நான் என்ன செய்யமுடியும்?” என்றான்.

“நீ இன்னமும்கூட மத்ரநாட்டில் விரும்பப்படுபவன். நீயே செல்வதும் சல்லியரைப் பணிவதும் மத்ரர்களின் உள்ளத்தை மாற்றக்கூடும். மேலும் நீ சல்லியரின் இளையவர் த்யுதிமானரின் விஜயையை மணக்கக்கூடுமென அங்கே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடனே வலுப்படுத்தவேண்டும். நீ சென்ற மறுநாளே உனக்காக விஜயையை மகள்கொடை கோரி எங்கள் முறைமைச்செய்தியும் த்யுதிமானரை சென்றடையும். மத்ரநாட்டு இளவரசியின் விழைவு கைகூடுவதனால் அரசரும் குடிகளும் மகிழக்கூடும். நாம் பால்ஹிகக்கூட்டை விட்டு விலகினாலும் மத்ரநாட்டை எதிரியாக கொள்ளமாட்டோம் என்பதாவது உறுதியாகும். இப்போதைக்கு அதுவே போதும்...” என்றான் சலன்.

“மூத்தவரே, முன்னரே இது பேசப்பட்டதுதானே? நான் விஜயைக்கு சொல் அளித்திருக்கிறேன். அவளும் எனக்கு சொல்லளித்தாள்....” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நீ அதிலிருந்து விலகிவிட்டாயென மத்ரர் நம்ப வாய்ப்புள்ளது.” பூரிசிரவஸ் திகைப்புடன் “ஏன்?” என்றான். “நீ துரியோதனன் தங்கை துச்சளையை மணம்புரிந்துகொள்ளப்போவதாக இங்கே செய்தி இருக்கிறது” என்றான் சலன். “இல்லை, அவ்வண்ணமேதும்...” என பேசத்தொடங்கிய பூரிசிரவஸ் பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.

“இளையோனே, அவளே உன்னிடம் உதவிகோரியதை நீ எழுதியிருந்தாய். நெறிகளின்படி இளவரசியர் எந்த இளவரசனிடமும் நேரிலோ முத்திரைவழியாகவோ உதவிகோரலாமென்றாலும் அவ்வாறு கோரப்படுபவனுக்கு அவள்மேல் ஓர் உரிமை உருவாவதை மறுக்கமுடியாது. நீ அவளுக்கு உதவியிருக்கிறாய். அதன்பொருட்டே களம்புகுந்திருக்கிறாய். உன்னை அவ்வண்ணம் காண்பதனால்தான் துரியோதனர் உன்னை அவரது தூதராக அனுப்பினார் என நம்மவர் எண்ணுவதில் என்ன பிழை?” பூரிசிரவஸ் தோள் தளர்ந்து “ஆம், அரசர்கள் என்னை வரவேற்றதை எல்லாம் நினைத்துப்பார்க்கிறேன். இப்போது தெரிகிறது, அத்தனைபேரும் அப்படித்தான் எண்ணியிருக்கிறார்கள்.”

“அவ்வெண்ணமும் ஒருவகையில் நமக்கு நல்லதே” என்றான் சலன். “அஸ்தினபுரியின் இளவரசியை நீ மணம்புரிவது நம் குலத்திற்கு பெரும்பரிசு. அவ்வெண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வாய்ப்பு உனக்குள்ளது என்றாலே இங்குள்ள பத்து தலைமைகளில் நம் இடம் முதன்மையானதாகிவிடும். இப்போது அந்த ஐயத்தையே நாம் படைக்கலமாக பயன்படுத்திக்கொள்வோம். உண்மையில் அப்படி நிகழ்ந்தால் அதன் பின் இந்த பால்ஹிகக்கூட்டமைப்பே நமக்குத்தேவையில்லை. உண்மையாகவே நாம் இப்பத்துகுலங்களையும் நமக்கு சிற்றரசர்களாக ஆக்கிக்கொண்டு பால்ஹிகப்பேரரசின் அடித்தளத்தை அமைப்போம்.”

எதோ சொல்லத் தொடங்கிய பூரிசிரவஸ்ஸை கையமர்த்தி “நீ சொல்ல வருவது புரிகிறது. நாம் இப்போது விஜயையை நீ மணம்புரியவிருப்பதாக ஒரு செய்தியை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறோம். மணம் நிகழப்போவதில்லை. அஸ்தினபுரியில் துச்சளைக்கு மணம் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். அதுவரை காத்திருப்போம்” என்றான். “நான் கேட்டறிந்தவரை நீயே அஸ்தினபுரியின் மருகன் என்றே தோன்றுகிறது. உன்னளவுக்கு இன்று அக்குடியுடன் நெருங்கிய பிற இளவரசர்கள் இல்லை.” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “இன்னமும் அங்கநாட்டரசரும் மணம்புரியவில்லை” என்றான். பூரிசிரவஸ் “மூடா, முடிசூடினாலும் அவன் சூதன். அவனை அஸ்தினபுரியின் ஒரே இளவரசிக்கு மணமகனாக ஆக்கமாட்டார்கள். அவை ஒருபோதும் அதை ஒப்பாது” என்றான்.

“நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்றே கிளம்பு. நமக்கு நேரமில்லை. யாதவனின் கணக்குகள் மின்னல்போல கணத்தில் கோடித்தொலைவை எட்டுபவை என்கிறார்கள். இதற்குள் அவன் மத்ரரை தொடர்புகொண்டிருக்கவில்லை என்றால் நல்லது” என்று சலன் சொன்னான். “அவ்வழியாகச் சென்று சௌவீரர்களையும் பார்த்துவிட்டு வா. எதையும் ஒளிக்கவேண்டாம், அவர்களும் அறிந்திருப்பார்கள். துச்சளையைப்பற்றி மட்டும் சொல்லாதே. விஜயையிடம் நீ பெருங்காதலுடன் இருப்பதாக சொல்” பூரிசிரவஸ் தலையசைத்தான்.

சலன் திரும்பி அரசரை நோக்கினான். அவர் நன்றாகத் துயின்று வாழைக்குலை போல அரியணையில் இருந்து தொங்கிக்கிடந்தார். “சிலதருணங்களில் நான் முற்றிலும் நம்பிக்கையை இழக்கிறேன் இளையோனே. இந்த மலைநாடு கரும்பாறை, இதை கரியென எண்ணி எரியவைக்க முயல்கிறேன் என்று தோன்றும். அனால் மகதம் இதைவிட கீழ்நிலையில் ஆடையணியாத பழங்குடிகளின் தொகுதியாக இருந்திருக்கிறது. மாளவமும் கூர்ஜரமும்கூட அப்படி இருந்த காலங்கள் உண்டு” என்றான் சலன். “ஒரு போர் வந்து இந்த வீண்தலைகள் சீவி எறியப்பட்டால்கூட நன்று என தோன்றிவிடுகிறது.”

“போரில் வீரர்களின் தலைகளே உருளும். சோம்பேறிகள் எஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் வருத்தமான புன்னகையுடன் “ஆம். உண்மை” என்றபின் “துச்சளை அழகியா? உனக்குப்பிடித்திருக்கிறதா?” என்றான். “அழகிதான்..." "அரசிளங்குமரிகளில் அழகிகள் அல்லாதவர் இல்லை இளையோனே” என்றான் சலன் சிரித்தபடி. இங்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் கூர்ந்தே செய்யவேண்டும். துரியோதனருக்கு உன்னை தங்கைகணவனாகக் கொள்ளும் எண்ணம் இருந்தது என்றால் நம் செயல்களால் அவ்வெண்ணம் தவறிவிடக்கூடாது. நாம் பால்ஹிகக்கூட்டமைப்பில் குறிப்பாக இருந்தால் அவர் நம்மை ஐயுறலாம். பால்ஹிகக்கூட்டமைப்பை நாம் பேணாவிட்டால் நாம் சிறுமலைக்குடியினராக மதிப்பிழப்போம்... நடுவே நூல்பாலம் வழியாக செல்லவேண்டிய காலம் இது.”

தலைவணங்கி “பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். சலன் திரும்பி கருவூலரிடம் “இளையோன் இன்று மாலையே செல்கிறான். அவன் கொண்டுசெல்ல பரிசுப்பொருட்களை அமையுங்கள். அவன் அரசரின் ஓலையுடன் முழுமையான அரசமுறைப்படி செல்லட்டும்” என்றான். அவர் தலையை தாழ்த்தி “ஆணை” என்றார். சலன் “நான் உன்னையே நம்பியிருக்கிறேன் இளையோனே. இங்கு எவரும் நம்மை புரிந்துகொள்ளவில்லை. தூங்கும் ஓநாயின் செவி மட்டும் விழித்திருப்பதுபோல நாம் இருக்கிறோம்” என்றான்.

பகுதி 13 : பகடையின் எண்கள் - 2

புலரியின் இருளும் குளிரும் எஞ்சியிருக்கையிலேயே பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். முதல் எண்ணம் அவன் ஒரு படுகளத்தில் கிடப்பதாகத்தான். அவனிடம் மெல்லிய குரலில் எவரோ “இளவரசே இளவரசே” என்று சொல்லிக்கொண்டிருந்தனர். துயரம் நிறைந்த பெண்குரல். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அவன் கால்கள் துண்டுபட்டு அப்பால் மழையில் நனைந்தபடி கிடந்தன. அவை பனிக்கட்டி என குளிர்ந்திருப்பதை உணரவும் முடிந்தது.

எங்கோ அருவி விழும் ஓசை. பின்னர் அது காற்றின் ஓசை என தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்தமர்ந்தபோது சற்று அப்பால் இருளில் ஒருவன் நிற்பதை உணர்ந்தான். அவன் கையில் ஒளிவிடும் வாள் இருந்தது. சற்று முன்னர் அவனை வெட்டி வீழ்த்தியவன் அவன் என உணர்ந்ததும் அச்சத்துடன் அவன் எழுந்து விலகமுயன்றபோது இடுப்புக்குக்கீழே கடும் குளிர் என உணர்ந்தான். அவனுடைய கண்கள் நீர்த்துளிகளென மின்னின. உதடுகள் மெல்ல அசைந்தன. அவன் வாளை ஓங்கி மீன்கொத்தி காற்றிலிறங்கும் ஒலியுடன் சுழற்ற அவன் கழுத்தை குளிரலை வந்து தொட்டது.

பூரிசிரவஸ் மூச்சுக்குள் அலறியபடி மீண்டும் எழுந்தமர்ந்தான். முன்னர் எழுந்தமரவில்லையா என எண்ணியபடி நோக்கியபோது கையில் தாலத்துடன் நின்ற ஏவலன் “இன்று மத்ரநாட்டுக்கு பயணம் செய்கிறீர்கள் இளவரசே” என்றான். அவன் எழுந்து நின்று தன் கைகால்களை நீட்டினான். கால்கள் குளிரில் விரைத்திருந்தன. கம்பளிப்போர்வையை சரிவர போர்த்தாமல் துயின்றிருக்கிறான். மேலும் சிலகணங்களில் அவன் மீண்டுவிட்டான். "நீராட்டறை சித்தமாக உள்ளதா?” என்றான். “ஆம் இளவரசே” என்றான் ஏவலன். “புரவிகளும் சித்தமாகிவிட்டன.புதிய ஏவலர்களும் வந்து நின்றிருக்கிறார்கள்.”

அவன் பெருமூச்சுடன் “நான் வந்துவிடுகிறேன். அமைச்சர் கர்த்தமரிடம் எனக்குரிய ஓலை சித்தமாகிவிட்டதா என்று கேட்டுவா” என்றான். முந்தையநாள் இரவு நெடுநேரமாகியும் அவரது ஓலைக்காக காத்திருந்ததை நினைவுகூர்ந்தான். அந்நினைவினூடாக தேவிகையின் நினைவெழுந்தது. இருநினைவுகளும் ஒன்றுடனொன்று ஊடாடின. அப்போதுதான் கனவுக்குள் அவனை அழைத்தவள் தேவிகை என தெளிவடைந்தான். தேவிகையைப்பற்றி அவன் எண்ணியே நெடுநாட்களாகின்றன என நினைத்துக்கொண்டதும் தலை இருபக்கமும் வலிக்கத்தொடங்கியது.

முந்தையநாள் அவனும் சலனுடன் அமர்ந்து மலைக்கிழங்கு நொதித்து வாற்றி எடுத்த ஹாஸம் என்னும் மதுவை சற்றே சூடுபடுத்தி அருந்தினான். புகையிடப்பட்ட கன்றின் ஊனும், சோளமாவில் பொதிந்து இலையில் வைத்து ஆவியில் அவித்த காளான்களும் பால்கலந்த அப்பங்களுமாக அவன் நெடுநாள் எண்ணி ஏங்கியிருந்த ஓர் இரவு. சலன் சொன்னான் “நாம் இங்கே மலையெலி போல வாழ்வதற்குக்கூட பூனைகளுடன் களமாடவேண்டியிருக்கிறது இளையோனே. படைப்பை ஆற்றியவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு எளியோரிடம் கனிவில்லை என்பது தெளிவு.”

பயண உடையுடன் அவன் அரண்மனைமுகப்பை நோக்கி சென்றபோது ஏவலன் வந்து “அமைச்சர் இன்னமும் அலுவல்நிலை வரவில்லை இளவரசே. அங்கே சுவடிநாயகமும் இல்லை. ஏவலன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவனிடம் கேட்டேன். அவனும் களிமயக்கு தீராமலிருக்கிறான்...” பூரிசிரவஸ் சினம் கொண்டு “நான் மத்ரநாட்டுக்கு அரசரின் ஓலையுடன் செல்லவேண்டும், தெரிகிறதா? அரச ஓலை சித்தமாகிவிட்டதா என்று கேட்டேன்... தெரிகிறதா?” என்று கூவினான். நான் என்ன செய்வது அதற்கு என்ற சொல் ஏவலனின் விழிகளில் தெரிந்தது. அவனிடம் சொல்லி என்ன பயன் என்ற எண்ணம் வந்ததும் பூரிசிரவஸ் திரும்பி அலுவல்நிலை நோக்கி சென்றான்.

அலுவல்கூடங்களில் எவருமே இல்லை. அமர்ந்து எழுதுவதற்கான கம்பளித்திண்டுகள் வழக்கமாக அவற்றில் அமர்ந்தவர்களுக்கான குழிகளுடன் காத்திருக்க எழுத்தாணிச்சுவடுகளுடன் மைக்கறைகளுடன் எழுத்துப்பீடங்கள் விளக்கொளி பளபளக்க கிடந்தன. அவனைக்கண்டதும் மீண்டும் படுத்துவிட்டிருந்த அலுவலன் எழுந்து நின்றான். “அமைச்சர் எங்கே?” என்றான் பூரிசிரவஸ். “மாளிகையில்... இல்லை, வேறெங்காவது...” என்ற அவன் ”நானறியேன் இளவரசே” என்றான். பூரிசிரவஸ் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு தன்னை வென்று கீழே பரவியிருந்த சுவடிப்பேழைகளை நோக்கினான். “அமைச்சர் நேற்று இரவு ஏதேனும் சுவடிகளை எழுதினாரா?” என்றான். “அறியேன் இளவரசே.”

“அமைச்சரின் சுவடிப்பேழை எது?" என்றான் பூரிசிரவஸ். “அது அறைக்குள் உள்ளது. அறை பூட்டப்பட்டுள்ளது” என்றான் ஏவலன். “உடை அதை” என்றான் பூரிசிரவஸ். “உடைக்கவேண்டுமென்றால் தச்சன் வரவேண்டும் இளவரசே... அத்துடன்...” பூரிசிரவஸ் பொறுமை இழந்து “நிறுத்து” என்று கூவிவிட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஓர் எண்ணம் வந்தது. ஓலை ஒன்றை அவனே எழுதி அரசரின் முத்திரையைப்பெற்று கொண்டுசெல்வதே செய்யக்கூடுவது. அரசர் துயின்றுகொண்டிருந்தால்கூட கையில் இருந்த முத்திரைமோதிரத்தை ஒற்றி எடுத்துக்கொள்ள முடியும். வேறுவழியில்லை.

பூரிசிரவஸ் ஓலைநாயகத்தின் பீடம் என தெரிந்த ஒன்றில் அமர்ந்துகொண்டு பேழையை திறந்தான். அது மூடியிருந்தது. குறுவாளை உள்ளே செலுத்தி அதன் தாழை உடைத்து இழுத்தான். உள்ளே ஓலைச்சுருட்களும் தோல்சுருட்களும் மண்டியிருந்தன. கையால் அளைந்து ஏற்கெனவே அமைச்சுமுத்திரைகள் உள்ள சுவடிகள் கிடக்கின்றனவா என்று பார்த்தான். அந்தப்பேழை அவன் எண்ணியதைவிட மிகப்பெரியதென்று தெரிந்தது. அவன் கையால் துழாவத்துழாவ நூற்றுக்கணக்கான சுவடிகளும் தோல்சுருட்களும் ஃபூர்ஜமரப்பட்டைகளும் செம்புச்சுருட்களும் வந்தபடியே இருந்தன. சௌவீரர்களும் மத்ரர்களும் யவனர்களும் கூர்ஜரர்களும் அனுப்பியவை. பலவகையான ஒற்றுச்செய்திகள். பெரும்பாலானவை உடைத்துப்பார்க்கப்படாதவை.

அவன் கை அறியாமல் நின்றது. ஏன் என உள்ளம் திகைத்தது. அவன் எதையோ ஒன்றை கண்டுவிட்டிருந்தான். எதை? அதை உடனே மீண்டும் துழாவி எடுத்துவிட்டான். சிபிநாட்டிலிருந்து வந்த பறவைத்தூது. இறுகச்சுருட்டிய தோல்சுருள் சிபிநாட்டு நூல்முடிச்சு முத்திரைகளுடன் அவிழ்க்கப்படாமலே இருந்தது. அவன் விரல்கள் நடுங்கத்தொடங்கின. அதில் விரும்பத்தகாத செய்திதான் உள்ளது என எப்படி உள்ளம் உணர்ந்துகொண்டது? அதை உடனடியாக தவிர்க்கவேண்டுமென்று எண்ணியபடி அதை நோக்கினான்.

நிலையற்ற விழிகளுடன் அவன் அதை விரல்களில் வைத்து நெருடிக்கொண்டே இருந்தான். சற்று பழைய செய்தி என தோன்றியது. அது ஆறுதலளித்தது. அந்த ஆறுதலில் உள்ள மூடத்தனம் உடனே வியப்பையும் கொடுத்தது. ஆனால் காலம்கடந்த கெட்டசெய்தி அதன் வீச்சை இழந்துவிடுகிறது. துயரம்தாங்கி கடக்கவேண்டிய அந்தக் காலம் அறியாமலே கடக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது ஓர் உளமயக்கு மட்டுமே. அறிதலே அடைதல். இல்லை. உண்மையிலேயே காலம் கடந்துவிட்டதென்றால் அதை நெஞ்சு அறிகிறது. கடந்துசெல்லவே ஒவ்வொரு உள்ளமும் விழைகிறது. ஆனால்...

தன் தயக்கத்தைக்கிழிப்பது போல பல்லைக்கடித்தபடி நடுங்கும் கைகளுடன் அவன் அதை திறந்தான். மஞ்சள்பூசப்பட்ட தோற்சுருள். முகப்பில் சிபிநாட்டரசனின் முத்திரை. ஸ்வஸ்தி சுழிக்குப்பின் "சிபிநாட்டரசரும் கஜபாகுவின் மைந்தருமான கோவாசனரின் ஆணைப்படி ஓலைநாயகம் எழுதிக்கொண்ட செய்தி” என எந்த முறைமைகளும் இல்லாமல் நேரடியாகவே தொடங்கியது ஓலை. அவன் எழுத்துக்களை தொட்டுத்தொட்டுச் சென்று மையச்செய்தியை வாசித்தான். “அரசரின் மகளும் தொன்மையான சிபிநாட்டுக்கு முதன்மை இளவரசியுமான தேவிகைக்கு அஸ்வினி மாதம் வளர்பிறை பன்னிரண்டாம் நாள் திருமணத்தன்னேற்பு விழா நிகழவிருப்பதனால்...”

ஒரு கணம் அவன் உள்ளம் சொல்லிழந்து நின்றது. மீண்டும் அச்சொற்களை வாசித்தான். எத்தனைநாள் எத்தனைநாள் என சித்தம் தவித்தது. கீழே விழுந்துகொண்டே இருப்பவன் கைநீட்டிப் பற்றுவதுபோல அவன் எதையோ பிடித்துக்கொண்டான். “இன்னும் ஒன்பது நாட்கள்” என எவரோ உரக்கக்கூவுவது போல் உணர்ந்தான். “ஒன்பது நாட்களா? ஒன்பதா? ஒன்பதா?” என அவன் கூவினான். யாரோ ஓடிவரும் ஒலி. காதில் ஒரு மெல்லிய ரீங்கரிப்பு ஒரு வெடிப்புபோல அச்சொல் ஓசையின்றி அவனுள் பரவியது. ஒன்பது நாட்கள். ஒன்பது நாட்களில் குதிரையில் நில்லாமல் சென்றால்...

சலன் உள்ளே வந்து “என்ன செய்கிறாய்?” என்றான். எடைமிக்க ஒன்றை என பூரிசிரவஸ் அந்தச் சுருளை நீட்டினான். சலன் வாங்கி வாசித்துவிட்டு “இது வந்து பலநாட்களாகியிருக்கும் போலிருக்கிறது. குளிர்காலம் இன்னமும் வரவில்லை அதற்குள் குடித்துவிட்டு துயிலத்தொடங்கிவிட்டனர் மூடர்கள்” என்றான். பூரிசிரவஸ் அவன் உதடுகளையே பொருளின்றி பார்த்துக்கொண்டு நின்றான். ”இத்தனை சிறிய அரசு என்ன நினைத்து மணத்தன்னேற்புக்கு அழைப்புவிடுகிறது? இளையோனே, இதில் ஏதோ சூதிருக்கிறது” பூரிசிரவஸ் உள்ளம் அச்சொற்களை கேட்கவில்லை. “அவர்கள் எதையோ விரைந்துசெய்ய முயல்கிறார்கள்...” என்றான் சலன். “நாம் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணியதேயில்லை. ஆகவே அங்கு நமக்கு ஒற்றர்களும் இல்லை.”

ஏதோ ஒரு எண்ணத்தில் முட்டி தீச்சுட்டு எழுந்தவன் போல பூரிசிரவஸ் திரும்பி வாயிலை நோக்கி ஓடினான். “மூடா, என்ன செய்கிறாய்?” என்று சலன் கூவியதை அவன் கேட்கவில்லை. அவனுடைய காலடியோசையே இடைநாழியில் அவனை துரத்திவந்தது. அரண்மனை முற்றத்தில் இறங்கி செங்கல் பரவிய தரையில் குறடுகள் ஒலிக்க ஓடிச்சென்று தன் புரவிமேல் ஏறி அதை உதைத்து விரையச்செய்தான். கனைத்துக்கொண்டு முன்கால் தூக்கிப்பாய்ந்து அது இன்னமும் ஒளி வராத நகரத்தெருக்களில் ஓடியது. அவனைத்தொடர்ந்து வரவிருந்த படைவீரர்கள் எவரும் அவன் வந்து புரவியில் ஏறிக்கொண்டதை பார்க்கவில்லை. அவன் கிளம்பிய ஒலிகேட்டு அவர்கள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு அவனை தொடர்ந்து வந்தனர்.

தூமபதத்தை கடப்பதுவரை பூரிசிரவஸ்ஸின் உள்ளம் முன்னால் முன்னால் முன்னால் என்னும் ஒற்றைச்சொல்லாகவே இருந்தது. சுழல்பாதையில் விரைந்து இறங்கிக்கொண்டிருந்தபோதுதான் மெல்ல அச்சொல் எண்ணங்களின் ஒழுக்காக மாறியது. என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என அவனால் உய்த்தறிய முடியவில்லை. சலன் சொன்னதுபோல ஒரு மணத்தன்னேற்பு நிகழ்த்துமளவுக்கு சிபிநாட்டுக்கு செல்வவளம் இல்லை. குலப்பெருமையும் இல்லை. அவன் அகவிழியால் அந்தச் சுருளை மீளமீள வாசித்தான். ஒவ்வொரு எழுத்தாக, தோலின் ஒவ்வொரு புள்ளியாக. பொருள் அழிந்தபின் வெறும் அடையாளமாக. அப்போது அது இன்னமும் தெளிவாகப்புரிவதுபோலிருந்தது.

சற்று நேரத்திலேயே அவன் அனைத்தையும் பார்க்கத்தொடங்கிவிட்டான். அந்தத்திருமணத்தன்னேற்பு என்பது எவருக்கோ சிபிநாடு சொல்லும் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே. ஒரு மன்றாட்டு. மணத்தன்னேற்பில் எவரும் வந்து வென்று பெண்கொண்டு மீளலாம். எவருக்கோ தேவிகையை அளிக்க கோவாசனர் விழைகிறார். அதனால் வேறுஎவரோ சினம் கொள்ளாதிருக்கவும் முயல்கிறார். யார்? இன்று வடபுலப் பாலைநிலத்தின் படைக்கல ஆட்டக்களத்தில் அமர்ந்திருப்பவர்கள் இருவர் மட்டுமே. துவாரகையின் யாதவனும் சிந்துநாட்டின் ஜயத்ரதனும். அச்சொற்கள் எழுந்ததுமே அனைத்தையும் அவன் கண்டுவிட்டான். சிபிநாட்டு கோவாசனர் தன் மகளை அளிக்கப்போவது ஜயத்ரதனுக்குத்தான்.

ஒருகணம் அவன் உள்ளம் சோர்வுகொள்ள அதற்கேற்ப குதிரையும் விரைவழிந்து மெல்லடி வைத்தது. அவனுக்கும் சிபிநாட்டுக்குமிடையே நெடுந்தொலைவு இருந்தது. அடிவைக்க அடிவைக்க அந்தத்தொலைவு பெருகிச்சென்றது. சென்றுசேரவே முடியாதென்று தோன்றியது. தொலைவிலெழுந்த தொடுவான் வளைவு கடக்கமுடியாத கோட்டை. வெண்ணிற அனலால் கட்டப்பட்டது. வாயில்கள் அற்றது. பின்பு தன் அனைத்து அகவிசைகளையும் திரட்டிக்கொண்டான். புரவியின் விலாவை ஓங்கி மிதித்து அதை அலறிப்பாயச்செய்து மரக்கூட்டங்கள் நடுவே கிளைகள் உடலைக்கீற காற்று அறைந்து பின்தள்ள விரைந்தான்.

ஆனால் அகத்தின் விரைவை உடலுக்குக் கொண்டுவருவதற்கு ஓர் எல்லை உண்டு என ஒருநாளுக்குள்ளாகவே தெரிந்தது. அவன் உடலறிந்த விரைவை புரவி அறியவில்லை. புரவியறிந்த விரைவை அவனைத்தொடர்ந்த வீரர்கள் அடையவில்லை. முதல்நாள் கடந்த தொலைவில் முக்கால்பங்கைக்கூட மறுநாள் கடக்கமுடியவில்லை. அதற்கடுத்தநாள் மேலும் விரைவுகுறைந்தது. சகலபுரியை சென்றடையவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. அசிக்னியில் படகில் குதிரைகளுடன் ஏறிக்கொண்டபோது சற்று ஓய்வெடுக்கமுடிந்தது. மூலத்தானநகரி வரை நீரொழுக்குடனேயே சென்றமையால் விரைவும் கைகூடியது.

ஆனால் ஓய்வெடுத்த புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடங்கமுடியுமென அவன் எண்ணியிருந்தது நிகழவில்லை. படகில் அமர்ந்து ஒழுகிச்செல்லும் கரையின் மெல்லிய அசைவை பார்க்கப்பார்க்க அக எழுச்சி வழிந்தோடியது. காலம் பிறிதொரு பெருக்காக தெரியத்தொடங்கியது. அதை நோக்கிய நெஞ்சு தன்னை அசைவின்மையென உணர்ந்து சிலைத்தது. பின்னர் எந்த உணர்ச்சிகளைக்கொண்டும் அதை முன்னகர்த்த முடியவில்லை.

மூலத்தானநகரியில் இறங்கியபோது படுத்து ஓய்வெடுக்கவேண்டுமென்றே உடல் விழைந்தது. அவன் தன்னை தன்னிலிருந்தே பிய்த்து எடுத்துக்கொண்டான். சென்றாகவேண்டும். இல்லையேல்... அந்த எண்ணத்தை தொடவே அகம் நடுங்கியது. சீற்றத்துடன் சவுக்கைச்சுழற்றி ஏவலருக்கு ஆணையிட்டான். உரக்க வசைபாடி மிரட்டினான். அவையனைத்தும் அவன் தன்னை செலுத்தும்பொருட்டு சொன்னவை. அதை அவர்களும் உணர்ந்திருந்தனர். சொற்களுக்கு உள்ளத்தை தொட்டு அசைக்கும் விசை இருந்தது. ஒருநாழிகைநேரத்திற்குள் உணவையும் புல்லையும் சேர்த்துக்கொண்டு மீண்டும் கிளம்பினார்கள்.

முதல்நாள் உடல் சித்தமாக இருந்தும் உள்ளம் ஓய்ந்துகிடந்தது. அதை பற்றவைத்து எரியச்செய்ய ஒருநாள் முழுக்க தேவைப்பட்டது. சொற்களை கொட்டிக்கொட்டி அந்த அடுப்பை எரியச்செய்தான். விரைவு. விரைவு. இன்னும். இன்னும். சிந்துவின் வண்டல்கரைகள் பின்னடைந்தபோது மீண்டும் விரைவு குறையத்தொடங்கியது. இன்னும் இரண்டுநாட்கள் என பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். வழக்கத்திற்கு சற்று மீறிய விரைவில்சென்றால்கூட அவனால் சென்றுவிடமுடியும்.

ஆனால் கனவில் ஓடுவதுபோல கால்கள் எத்தனைதொலைவுக்கு மண்ணைத்துழாவினாலும் சுற்றிலும் காற்று அசைவழிந்து நின்றது. வானம் மாறாமல் இருந்தது. உள்ளம் கட்டுண்டு படபடத்து தவித்தது. ஒவ்வொன்றையாக எண்ணி அகம் சலித்தது. உணவும் நீரும் கொண்டுவரும் புரவிகள் தொடராமலிருந்தால் மேலும் விரைவு கொண்டிருக்கலாம். தனியாகச்சென்றால் மேலும் விரைவு கொண்டிருக்கலாம். இரவில் ஓநாய்களை அஞ்சி ஓய்வெடுக்காமல் சென்றால் எளிதில் சென்றடைந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றாலும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது பயணம். நத்தை சுமந்துசெல்வது அதன் அச்சத்தை.

சென்றுகொண்டே இருந்தான். மேலிருந்து விழுந்துகொண்டே இருப்பதைப்போல குதிரைக்காலடிகளால் ஆன காலம். நிழல்களால் ஆன காலம். மணல் பொருபொருக்கும் ஒலியாலான காலம். நாட்கள் என்பவை எண்ணங்களாலேயே பகுக்கப்படுகின்றன. காலமில்லாததுபோல நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒற்றை எண்ணத்தின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு சென்று சேர்ந்தபோது எத்தனை பகலிரவுகள் கடந்திருக்கின்றன என்பதையே அவன் அறியவில்லை. ஒவ்வொருநாளும் ஐங்களத்தை நோக்கித்தான் நாள் குறித்தான். இன்னும் ஒருநாள். ஒருநாள் என்பது அறுபது நாழிகை. அறுபது நீண்ட வாழ்க்கைகள். மீண்டும் காலமின்மை. வெளித்து வெறித்துக்கிடந்த செம்மண் பாலை. மாற்றமில்லாமை எனும் தோற்றம் கொண்ட பாறைமுகங்கள். காற்று கடந்துசெல்லும் புதர்க்குவைகளின் நடுக்கம். காற்றின் ஓலம். தொடுவானத்தின் கண்கூசும் வெண்வெயில்.

எட்டாவது நாள் சைப்யபுரி மேலும் ஒருநாள் பயணத்தில் இருக்கின்றது என்றான் வழிகாட்டி. பகல் முழுக்க வெயிலில் நடந்திருந்த புரவி மிகவும் களைத்திருந்தது. அதன் முதுகின்மேலிருந்தபடி குனிந்து குளம்புகளை நோக்கியபோது அவை கணுவுக்குக்கீழே வளைந்தவை போலத்தெரிந்தன. இறங்கி முன்னங்காலைப்பற்றி நோக்கினான். குளம்பின் வளைவின் பின்பக்க இடைவெளி விலகியிருந்தது. பின்னால் வந்த பாலைநில வழிகாட்டி “இளவரசே, இன்றிரவு ஓய்வு தேவை. இனிமேலும் சென்றோமென்றால் நாளை புரவி காலெடுத்து வைக்கமுடியாமல் ஆகிவிடும்” என்றான். ஏவலன் “இன்னும் அரைநாழிகை தொலைவிலேயே சோலை உள்ளது, நீரும் இருக்கலாம் என்கிறான்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

சாம்பல்நிற வெளிச்சம் பரவியிருந்த வானில் விண்மீன்கள் முழுமையாகத் தெளிவதுவரை பாலையில் சென்று கண்டடைந்த முட்புதர்க்காட்டில் தங்கலாமென முடிவெடுத்தார்கள். சோலையின் நடுவே இருந்த சிறுகுழியில் செம்மண் கலங்கிய நீர் இருந்தது. குடிப்பதற்கான நீரை அள்ளியபின் புரவிகளுக்கு நீர் காட்டினர். குடிநீரை மணல்சல்லடையில் சலித்து முருங்கைவிதைத்தூள் போட்டு தெளியவைத்து குடித்தபின் உப்பிட்டஊனும் அப்பமும் தின்றுவிட்டு சருகுமெத்தைமேல் படுத்துக்கொண்டனர்.

இரவில் கிளம்பிய சிற்றுயிர்கள் சருகுமேல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒலியைக் கேட்டபடி பூரிசிரவஸ் படுத்திருந்தான். எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அவனால் எந்தவகையிலும் கட்டுப்படுத்தமுடியாதபடி அவை பெருகிச்சென்றன. எங்கெங்கோ சென்று அலையடித்தன. அவ்வப்போது மீண்டு வந்து அப்படி என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என நோக்கியதும்தான் அவற்றின் பொருளற்ற பெருக்கு அச்சுறுத்தியது. தனக்குள் இப்படி ஒரு பெரும் கட்டின்மை திமிறிக்கொண்டிருப்பதை எண்ண அச்சம் பெருகி அவன் தலையை அசைத்து விடுவித்துக்கொண்டான்.

இரவு செல்லச்செல்ல காட்டின் சிற்றுயிர் ஒலிகள் பெருகின. படைவீரர்களின் குறட்டை. குதிரைகளின் மூச்சொலி. புதரின் முட்கள் வழியாக கிழிபட்டுச் செல்லும் காற்றின் ஓசை. ஒருகணம் கூட துயிலவில்லை என அவன் உணர்ந்தான். அறைமூலையில் இரவெல்லாம் அணையாத கணப்பு போலிருந்தது உடலுக்குள் சித்தம். புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து அமர்ந்து காட்டை நோக்கினான். துயிலவில்லை என்றாலும் படுத்திருந்தாலே மறுநாள் களைப்பின்றி சென்றுவிடலாமென்று தோன்றியது. வெள்ளிமுளைப்பதற்குள் கிளம்பினால் முதற்கதிர் எழும்போது சைப்யபுரிக்கு சென்றுவிடமுடியும். மணத்தன்னேற்பு. எத்தனை அரசர்கள் வந்திருப்பார்கள்? ஜயத்ரதன் வந்திருப்பான். உறுதியாக அவனுக்காகத்தான் இந்தத் தன்னேற்பு. யாதவன் அதற்கு என்ன செய்யப்போகிறான்?

தான் செய்யவிருப்பது என்ன என அதுவரை சிந்திக்கவில்லை என அப்போதுதான் பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனை மணமகன்களின் நிரையில் பார்த்ததுமே அவள் முடிவெடுத்துவிடுவாள் என்று தோன்றியதுமே அப்படி நிகழுமா என்ற ஐயமும் வந்தது. அவள் அம்முடிவை எடுப்பாள் என நம்புவதற்கான அடிப்படை என்ன? அவள் அவனுடன் பேசிய சில சொற்களா? மிகச்சில சொற்கள். ஓரவிழி நோக்குகள். அவற்றைக்கொண்டு அவளை முழுமையாக கணித்துவிடமுடியுமா? பெண்கள் அத்தனை எளியவர்களா என்ன? ஒவ்வொருகணமும் சூழலுக்கேற்ப உருமாறிக்கொண்டிருக்கும் மானுட உள்ளம். அச்சம் விழைவு கனவு என அகச்சரடுகளாலும் குலம் குடி முறைமை என புறச்சரடுகளாலும் இயக்கப்படும் எளியபாவை.

எண்ண எண்ண அந்த ஐயம் பெருகிப்பெருகிச் சென்றது. அவள் ஓர் அரசியாகவே விழைந்தாள். அந்தச்சின்னஞ்சிறு கற்சிறையில் இருந்து வெளியேறி விரிந்தவானையும் மண்ணையும் பார்க்கவிழைந்தாள். அவள் கண்ட முதல் சாளரவெளிச்சம் அவன். ஆகவே அவனிடம் கோரினாள். இன்று அவள்முன்னால் விரிந்திருப்பது மாபெரும் தோரணவாயில். ஜயத்ரதனின் துணைவியாக அவள் ஆவாள் என்றால் நாளையே அவன் அவள் காலடியில் தலைவணங்கி நிற்கக்கூடும். அவளுடைய கருணையில் அவனும் அவன் நாடும் வாழக்கூடும். பால்ஹிகர்கள் சிபிநாட்டை ஒருநாளும் தங்கள் குலத்தொகையில் சேர்த்துக்கொண்டதில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பு அமையும் செய்தியையே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

எவ்வகையில் சிந்தனைசெய்தாலும் அவள் ஜயத்ரதனையே தெரிவு செய்யமுடியும். அவளுடைய நாட்டுக்கு அது பெரும்பாதுகாப்பு. சிபிநாட்டின் வணிகம் பெருகும். வறுமை அகலும். ஓர் இளவரசியாக அது அவள் கடமை. அவளுடைய தந்தையும் குலமும் அமைச்சும் அதை எண்ணியே அம்முடிவை எடுத்திருக்கமுடியும். அதை அவள் தட்டமுடியாது. அரசியரும் இளவரசியரும் பெண்கள் அல்ல, அரண்மனைப்பாவைகள். அரசியல் நாற்களத்தில் ஆண்களின் கைகளால் ஆடப்படுபவர்கள். வெட்டுண்டு சரிபவர்கள். விழிநீரையும்கூட அகத்தளத்து இருட்டில் மட்டுமே அவர்கள் சிந்தமுடியும்.

ஆனால் அதற்கும் அப்பால் அவள் ஒருபோதும் அவனை விட்டுவிடமாட்டாள் என்று அவன் அகம் சொல்லிக்கொண்டிருந்தது. அந்த உறுதியை அவனுக்களித்தவை அவளுடைய கண்கள். அவை இளவரசியின் விழிகளல்ல. பெண்ணின் விழிகள், காதலியின் விழிகள். இரு அழகிய சிறு கருங்குருவிகள் அக்கண்கள். மெல்லிய சிவந்த பட்டுத்திரையை என அவள் உடலை அவை பற்றிக்கொண்டு பறக்கின்றன. அவை அவனை எப்போதும் தொடர்பவை. ஒவ்வொருமுறையும் அக்கண்களை அவன் அகக்கண்ணில் பார்க்கையிலும் அவை மேலும் அண்மைகொண்டன. ஒவ்வொருமுறையும் அவற்றில் புதிய சொல் பூத்திருந்தது. கனிந்த சொல். இதழ்வெம்மை கொண்ட மென்முத்தம்போன்ற சொல். ஆம், ஐயமே இல்லை.

விடிவெள்ளியை அது எழுந்ததுமே அவன் பார்த்தான். விண்மீன்களின் பெருவெளியில் அது எப்படி கண்ணுக்குத்தெரிந்தது? அதையே நோக்கிக்கொண்டிருந்தது அவனுள் ஒரு தனிவிழி என்று தோன்றியது. உடலெங்கும் காற்று கொண்டு வந்து மூடிய மென்மணலை உதறிவிட்டு எழுந்ததுமே அவன் தன் குதிரைச்சவுக்கை மும்முறை சொடுக்கிவிட்டு சென்று புரவிமேல் ஏறிக்கொண்டான். ஓசைகேட்டு அவன் வீரர்கள் ஓடிவந்து புரவிகளைப் பற்றி ஏறினர். எவரும் காலைக்கடன்களைக் கழிக்கவோ நீரருந்தவோகூட நேரமில்லை. இன்னும் சற்றுநேரம், இன்னும்... இதோ இந்தப்பாலைவெளிக்கு அப்பால்...

ஆனால் அவன் மிக வியப்புக்குரிய ஒன்றை தன்னுள் உணர்ந்தான். அனைத்தும் முடிந்துவிட்டன என்ற வெறுமையுணர்வு அவன் புரவியில் பாய்ந்தேறியதுமே ஒரு துளி எண்ணமென உருவாகியது. புகை இறுகி பாறையாகியது. அசைக்கமுடியாமல் அமைதியின் குளிருடன் அங்கே இருந்தது. ஏன்? எதை உணர்ந்தேன்? எதை? அவன் அகம் தவித்தபடியே இருந்தது. சித்தம் எதையும் தொடமுடியவில்லை. சித்தத்தின் ஆழம் தொட்டுவிட்டது. பார்த்திவம் முளைத்த திரவத்தில் ஆணவம் விழித்த வெளியில் ஒரு நிழல் அசைந்தபடியே இருந்தது.

இரண்டுநாழிகை கழித்து எதிரே தொலைவில் ஒருவணிகர்குழு வருவதை கண்டான். அவர்களைக் கண்டதுமே அவர்களை அவன் அவ்வாறு காணும் அந்நிகழ்ச்சி முன்னரே நடந்திருக்கிறது என்று தோன்றியது. அப்படியே அங்கே நின்று அவர்கள் அணுகுவதை பார்த்திருக்கிறான். சாம்பல்நிறமான விடிவெளிச்சத்தில் நிழல்கள் என புரவிகளின் கால்கள் அசைந்தன. வானப்பின்னணியில் பிடரி மயிர்கள் சிலிர்த்தசைந்தன. குளம்படி அணுகி அவர்களைச் சூழ்ந்து நெடுநேரமாகியும் அவர்கள் வந்துசேரவில்லை.

நீண்ட தாடியுடன் முன்னால் வந்த வெண்பளிங்குநிற வணிகரைக் கண்டதும் மேலும் அகம் உறுதிகொண்டது. முன்னரே பார்த்த முகம். குதிரையூர்ந்த வணிகர்களும் அத்திரிகளும் கொண்ட குழு கொடியில் காற்றில் தவழும் ஆடைகள் போல வானில் நின்று அசைந்தது. பின்னர் அது முப்பரிமாணம் கொண்டது. ஒன்றன் பின் ஒன்றாக வந்த பன்னிரண்டு புரவிகள் இருபத்தைந்து அத்திரிகள். முன்னால் வந்த இரு காவலர்களுக்கு நடுவே அந்தப்பெருவணிகர் புரவியில் அமர்ந்து அசைந்தாடி வானில் தவழ்பவர் என வந்தார்.

அணுகியதும் பெருவணிகர் தன் இளநீலவிழிகளால் நோக்கி புன்னகைசெய்து தலைவணங்கினார். ஒருகணம் அவன் நெஞ்சில் ஓர் அதிர்வு போல தேவிகையின் முகம் எழுந்து மறைந்தது. மீளாது தொலைத்துவிட்ட ஒன்றை நினைவுகூர்வதுபோல. அவரிடம் ஏதும் கேட்கலாகாதென எண்ணினான். ஆனால் கேட்காமல் கடக்கமுடியாதென்றும் தோன்றியது. ஏனென்றால் அதை அவன் முன்னரே அவ்வண்ணமே கேட்டிருந்தான். “நாங்கள் உத்தரகங்கை நிலத்து சிசிரகுடியினர் பெருவணிகரே, தங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றான்.

வணிகர் மீண்டும் தலைவணங்கி “நான் உத்தர யவனநாட்டவன். செங்கழுகுக்குலம். பெயர் ஊர்த்வன். சிபிநாட்டு வணிகம் முடித்துமீள்கிறேன். சோலையில் மீண்டும் நீர் ஊறியிருக்குமென எண்ணுகிறேன்” என்றார். “நாங்கள் இன்று நீர் எடுத்துக்கொள்ளவேயில்லை. சைப்யபுரிக்கு காலையொளி எழுகையிலேயே சென்றுவிடவேண்டுமென எண்ணுகிறேன்.” அவன் நெஞ்சு அதிரும் ஒலி உடலெங்கும் கேட்டது. “அங்கே இளவரசியின் மணத்தன்னேற்புக்கு சென்றுகொண்டிருக்கிறோம். சென்றுவிடமுடியும் அல்லவா?”

அவரது புருவங்கள் சுருங்கியதுமே அவன் தளரத்தொடங்கினான். “மணத்தன்னேற்பு நிகழவேயில்லையே” என்றார். பூரிசிரவஸ் தன்னால் இயல்பான முகத்துடன் எப்படி “ஏன்?” என்று கேட்கமுடிகிறது என்று தானே வியந்துகொண்டான். ஊர்த்வன் “நீங்கள் எச்செய்தியையும் அறியவில்லையா?” என்றார். ”நாங்கள் வந்தவழியில் எவரையும் சந்திக்கவில்லை வணிகரே” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அதற்கு வாய்ப்பில்லை” என்றபின் “கோவாசனர் தன் மகளுக்கு இன்று முற்பகலில் மணத்தன்னேற்பு ஒருக்கியிருந்தது உண்மை. அவளை சிந்துமன்னர் ஜயத்ரதன் மணக்கக்கூடும் என நகர்மக்கள் பேசிக்கொண்டனர். பால்ஹிக இளவரசர் ஒருவருடன் இளவரசி உளஒப்புதல் கொண்டுவிட்டதாகவும் பேசப்பட்டது” என்றார்.

“ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னரே அஸ்தினபுரியில் இருந்து ஆயிரம்பேர்கொண்ட படை ஒன்று இளவரசர் பீமசேனர் தலைமையில் வந்தது. அவர்கள் வருவதை சிபிநாட்டுப்படைகள் கண்டன. ஆனால் அவர்கள் ஜயத்ரதனின் படைகள் என எண்ணிவிட்டார்கள். கோட்டைக்காவல் படைகள் அவர்களைக் கண்டதும் ஓடிச்சென்று தங்கள் அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். எதிர்க்கவேண்டாம், கோட்டையையும் கருவூலத்தையும் அரண்மனையையும் திறந்துவிடுங்கள் என கோவாசனர் ஆணையிட்டார். அவரே படைக்கலமேதுமில்லாமல் அரண்மனைமுற்றத்திற்கு வந்து பீமசேனரை வணங்கி வரவேற்றார்.”

ஊர்த்வன் சொன்னார் “வெட்டுக்கிளிகள் வயலில் இறங்குவதுபோல அவர்கள் வந்து நிறைந்தனர். பீமசேனர் அரண்மனைக்குள் புகுந்து மகளிர்மாளிகைக்குள் சென்று இளவரசியைக் கண்டு வண்டியில் ஏறிக்கொள்ளும்படி ஆணையிட்டார். இல்லையேல் நகரம் அழிக்கப்படும் என்றார். இளவரசி ஒன்றும் சொல்லாமல் தலையாடையால் முகம் மூடி தலைகுனிந்து ஏறிக்கொண்டார். அப்போதே திரும்பி நகரை விட்டு விலகிச்சென்றுவிட்டனர். இப்போது அவர்கள் மூலத்தானநகரியை அடைந்திருக்கலாம்...”

பூரிசிரவஸ் கடிவாளத்தைப்பற்றிய கைகள் மடிமீது விழ தோள்கள் தளர அவரை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். “நாங்கள் வழியிலெங்கும் அவர்களை எதிர்கொள்ளவில்லையே” என்றான் காவலன். “அவர்கள் மணலில் ஓடும் அகன்ற பரப்புகொண்ட சகடங்கள் பொருத்தப்பட்ட மூங்கில்வண்டிகளில் வந்திருந்தனர். துவாரகைக்கு சோனகநாட்டிலிருந்து வந்திறங்கும் அவை மிகவிரைவாக செல்லக்கூடியவை. புரவிகளின் கால்களிலும் அவர்கள் அகன்ற குளம்புக்காப்பை மாட்டிவிடுவதனால் அவையும் பாலையில் புதையாமல் கால்வைத்து விரைந்துசெல்லமுடியும். நீங்கள் மூலத்தானநகரியை அடைவதற்குள் அவர்கள் கடந்து சென்றிருப்பார்கள்” என்றார் பெருவணிகர்.

”அவர்கள் சைப்யபுரியில் நான்கு நாழிகைநேரமே இருந்தனர். அவர்கள் வருகை படையெடுப்புபோலத்தான் இருந்தது. ஆனால் நகர்மக்கள் தெருக்களின் இருபக்கமும் கூடி வாழ்த்தொலி எழுப்பி அவர்களை வரவேற்றனர். கோவாசனர். அவர்களை மலர்ந்த முகத்துடன் வந்து பணிந்தார். அவர்கள் இளவரசியுடன் சென்றபின் அரண்மனையிலும் நகர்த்தெருக்களிலும் பெரும்கொண்டாட்டம் தொடங்கியது. அரண்மனையில் பெருவிருந்து நிகழப்போவதை அறிவித்தபடி நகர் முழுக்க முரசுகள் முழங்கத்தொடங்கின. தெருக்களெங்கும் மக்கள் சிரித்துக்கொண்டு வண்ணங்களை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசி நடனமிட்டனர்.”

“அஸ்தினபுரிக்கு அரசியாகச் செல்லும் இரண்டாவது சிபிநாட்டுப்பெண் இவள் என்றனர் மக்கள். முன்பு சந்தனு மன்னரின் அன்னை சுனந்தை இங்கிருந்துதான் சென்றிருக்கிறாள். அனைவரும் கொண்டாடியே ஆகவேண்டிய நிலை. வணிகர்கள் மதுக்குடங்களை வாங்கிக்கொண்டு வந்து அனைவரும் அருந்துவதற்காக தெருவோரங்களில் வைத்தனர். நானும் நூறுகுடம் அரிசிமதுவை வாங்கி அனைவருக்குமாக திறந்துவைத்தேன். இருபது வெள்ளிக்காசுகளை அதற்காக செலவிட்டேன். இரண்டுநாட்கள் கொண்டாட்டம் நீடித்தது. அதன்பின்னர் அரசருக்கு முகம் காட்டி என் வாழ்த்துக்களைத் தெரிவித்து மணப்பரிசுகளை அளித்தேன். அதற்கு நூறு பொற்காசுகள் செலவாயின. இந்தப்பயணம் மொத்தத்தில் எனக்கு பெரிய பொருள்மிகையை அளிக்கப்போவதில்லை...”

அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே பூரிசிரவஸ் புரவியை திருப்பிவிட்டான். வழிகாட்டி “இளவரசே” என்று கூவ அவன் குதிரையின் விலாவை உதைத்து சவுக்கால் சொடுக்கி பாலைநிலத்தில் மணல் தெறிக்க விரைந்தான். “இளவரசே, எல்லைக்குள் வந்தபின் அரசரை சந்திக்காமல் செல்வது முறையல்ல” என்று கூவியபடி தலைமை ஏவலன் பின்னால் வந்தான். பூரிசிரவஸ் மேலும் மேலும் என புரவியை சவுக்கால் அடித்துக்கொண்டும் குதிமுள்ளால் குத்திக்கொண்டும் இருந்தான். எதிர்க்காற்றில் அவன் பார்வை முழுமையாகவே மறைந்தது. காலமின்மையில் வெளியின்மையில் அவனும் புரவியும் நின்று துழாவிக்கொண்டிருந்தனர்.

பகுதி 13 : பகடையின் எண்கள் - 3

தூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு நெஞ்சை அடைக்க அதன் கழுத்தின் மேல் முகம் பதிய விழுந்துவிட்டிருந்தான். அவன் உடலெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நரம்புகள் அதிர்ந்தன. பல்லாயிரம் ஓடைகளும் அருவிகளும் ஒலிக்கும் மழைக்கால மலைபோல தன் உடலை உணர்ந்தான். மெல்லமெல்ல உடல் வெம்மையாறி அடங்கியபோது கூடவே உள்ளமும் அடங்குவதை உணர்ந்தான். புரவியை நடக்கவைத்து ஒரு பாறையின் நிழலை அடைந்து இறங்கி அப்படியே மண்ணில் விழுந்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.

அவனுடைய வீரர்கள் அணுகிவந்தனர். அவர்களுடன் ஒருசொல்பேசாமல் மீண்டும் இணைந்துகொண்டான். மூலத்தானநகரிக்கு வந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொள்ளும்போது அவன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் ஆழ்ந்துவிட்டிருந்தான். சொல்லின்மை என்பது ஒரு புகைமூட்டம். அது சூழத்தொடங்கும்போது மூச்சுத்திணறுகிறது. விடுபடுவதற்காக அகம் தவிக்கிறது. அப்புகைமூட்டம் மெல்லமெல்ல திரவமாக ஆகி குளிருடன் அனைத்து அணுக்களையும் பற்றிக்கொள்கிறது. உறைந்து பளிங்குப்பாறையாகிறது. பளிங்குப்பாறையாக மாற்றுகிறது. பின்னர் மீளவேமுடிவதில்லை. படகில்செல்லும்போது பூரிசிரவஸ் ஏவலரிடம் பேச முயன்றபோதுகூட சொல் நெஞ்சிலிருந்து எழவில்லை. சித்தம் சென்றுமுட்டிய சொற்களஞ்சியத்தில் அத்தனை சொற்களும் துருவேறி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன.

தூமபதத்தின்மேல் ஏறிநின்று கீழே விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது நெஞ்சுள் ஒரு விம்மல் எழுந்தது. மலைச்சரிவில் ஒன்றால் ஒன்று தடுக்கப்பட்டு எடைகொண்டு நின்றிருந்த பெரும்பாறைகள் அனைத்தும் அச்சிறிய ஒலியால் அசைந்தன. பின் பேரொலியுடன் பொழியத்தொடங்கின. அவன் கண்கள் உள்ளிருந்து நிறைந்து குதிரைசெல்லும் விரைவில் காற்றில்தெறித்துச் சிதறி பின்னுக்குச் சென்றன. மூச்சிரைப்பில் விம்மல்கள் உடைந்து பறந்தன. ஏழன்னையர் ஆலயமுகப்பில் நின்றபோது அவன் சுமந்துவந்தவை அனைத்தும் பின்னால் பறந்து செல்ல அவன் மட்டும் எஞ்சியிருந்தான். அங்கிருந்து அரண்மனை நோக்கி செல்லும்போது இறகுபோலிருந்தான்.

சலன் அவனை எதிர்கொண்டான். அவன் தோளில் கையிட்டு “வா” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். ஒரு மெல்லிய தொடுகை என்னென்ன சொல்லமுடியுமென்று தெரிந்தது. சலன் அவன் முகத்தை நோக்காமல் “இளையோனே, அரசகுலத்தவனின் வாழ்க்கை அரசியல்வலையால் எட்டுதிசையிலும் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்றான். ”நீ கிளம்பிய அன்றே நான் செய்தியை அறிந்துவிட்டேன். ஆனால் உனக்கு செய்தியனுப்ப முடியவில்லை. நீயே மீளட்டும் என காத்திருந்தேன்.” “நான் சென்றது ஒரு நல்ல பயிற்சி மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். சலன் புன்னகையுடன் “நீ அரசனாக ஆக இன்னும் நிறைய பயிற்சிகள் தேவை” என்றான்.

“இளையோனே, இன்று நிகழ்ந்துகொண்டிருப்பது ஒரு பெரிய அரசியல் நாற்கள விளையாட்டு. அஸ்தினபுரி இரண்டாகப்பகுக்கப்படவிருக்கிறது. மாறிமாறி தூதர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தூதும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் கொண்டுசெல்கிறது. அவற்றை பலமடங்கு பெருக்கி மீள்கிறது. தட்சிணகுருநாட்டுக்கான எல்லைகள் வரையறைசெய்யப்படுகின்றன. ஆளில்லாத ஒரு மலைக்காக, நீர் நிறைந்த ஒரு சதுப்புக்காக இறுதிக்கணம் வரை பூசலிடுகிறார்கள்.” சலன் சிரித்து “மறுதரப்பினர் செய்பவற்றுக்கு எவரும் எதிர்வினையாற்றவில்லை. செய்யக்கூடுமென இவர்கள் நினைப்பவற்றுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆகவே ஒன்று நூறாகி நூறு பத்தாயிரமென பெருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.

அவர்கள் சலனின் அலுவல்கூடத்தை அடைந்து அமர்ந்துகொண்டனர். சலன் பூரிசிரவஸ்ஸுக்கு இன்னீரும் மெல்லுணவும் கொண்டுவர ஆணையிட்டான். “இருதரப்பினரும் தங்கள் நட்புகளை பெருக்கிக்கொள்கிறார்கள். பகைகளை வகுத்துக்கொள்கிறார்கள். போர்க்களத்தில் நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். ஆனால் அப்படித்தான் நிகர்நிலை உருவாகமுடியும் என்றும் முழுமையான நிகர்நிலையே சிறந்த நட்பை நிலைநாட்டமுடியும் என்றும் யாதவன் எண்ணுகிறான் என்று சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது அதை. அரசியல் ஆற்றலின் விசைகள் நிகர்நிலைக்காகக் கொள்ளும் தொடர்ந்த இயக்கத்தால் ஆனது” சலன் சொன்னான்.

“பாண்டவர்தரப்பு பாஞ்சாலத்தாலும் துவாரகையாலும்தான் வல்லமையுடன் நிறுத்தப்படுகிறது. ஆகவே பாஞ்சாலத்தையும் துவாரகையையும் தன் நட்புநாடுகளால் சூழ்ந்துகொள்ள துரியோதனன் எண்ணுகிறான். அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தை ஆள்வது துரியோதனனுக்கு மிக உகந்தது. பாஞ்சாலத்தின் மறுபக்கம் உசிநாரர்களையும் கோசலத்தையும் நட்புக்குள் வென்றெடுக்க சகுனியே நேரில் சென்றிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது. மேற்கே துவாரகைக்கு எப்போதுமே கூர்ஜரம் எதிரிநாடு. கூர்ஜரம் என்றும் காந்தாரத்தை அஞ்சி வந்தது. ஆனால் துவாரகைமீதான அச்சம் அதை காந்தாரத்தை அணுகச்செய்கிறது.”

“சிந்துநாட்டு மன்னன் ஜயத்ரதன் நெடுங்காலமாக கூர்ஜரத்தை வெல்ல கனவுகண்டிருப்பவன். அவனும் துவாரகைமீதான அச்சத்தால் துரியோதனனுடன் இணைந்துகொண்டிருக்கிறான். அப்படியென்றால் திருஷ்டாவதியின் கரை முதல் மேற்கே சோனகப்பாலைவனம் வரை ஒரே பெரும்பரப்பாக நிலம் கௌரவர்தரப்புக்கு வந்துவிடுகிறது. அதில் உள்ள சிறிய இடைவெளி சிபிநாடு. அதை வெல்ல ஜயத்ரதன் எண்ணியது இயல்புதான்” என்றான் சலன். ”அரசியலில் எப்போதும் நடுவே இருக்கும் நாடு மிகமுதன்மையானது இளையோனே. அது முதலையின் இரு தாடைகள் நடுவே நட்டுவைக்கப்பட்ட குறுவாள் போன்றது.”

“பெண்கேட்டு சிபிநாட்டரசர் கோவாசனருக்கு ஜயத்ரதன் தூதனுப்பினான்” என சலன் தொடர்தான். “ஆனால் துவாரகையின் பகையை அஞ்சியக கோவாசனர் அதை ஒரு மணத்தன்னேற்பு நிகழ்வாக ஒருங்குசெய்தார். போட்டி அமைத்தால் துவாரகை மன்னன் வெல்வான் என்பதனால் இளவரசியின் தெரிவு மட்டுமே முறைமை என வகுக்கப்பட்டது. துவாரகைக்கும் செய்தியனுப்பப்பட்டது. இளையோனே, சிபிநாட்டை அஸ்தினபுரி வெல்வதென்பது கூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுவே ஒரு நட்புநாட்டை துவாரகை வென்றெடுப்பதுமட்டும்தான். கிருஷ்ணன் உடனே பீமனை அனுப்பிவிட்டான். அதிலும் பீமனை மட்டும் துவாரகைக்கு வரச்சொல்லி துவாரகையின் புதுவகை வண்டிகளுடனும் புரவிகளுடனும் ஒரே வீச்சில் வந்து சிபியை வென்றதென்பது ஜயத்ரதன் கணக்கிட்டே இருக்கமுடியாத செயல். அனைத்தும் முடிந்துவிட்டன."

பெருமூச்சுடன் பூரிசிரவஸ் எழுந்துகொண்டான். “இனி பேச ஏதுமில்லை மூத்தவரே” என்றான். “ஆம், பொதுவாக இத்தகைய ஆட்டங்களில் பெண்களுக்கு குரலென ஏதுமில்லை. ஆடவர் களத்தில் படுதுபோல பெண்கள் அகத்தறையில் மடியவேண்டுமென்பதே ஷத்ரிய குலநெறி” என்ற சலன் “நீ சென்றபின் இந்த ஓலையை கண்டெடுத்தேன். உடன்பிறந்தானாக இதை உன்னிடம் காட்டலாகாதென்றே எண்ணினேன். ஆனால் காட்டாமலிருப்பது பிழை என இளவரசனாக எனக்குத் தோன்றியது...” என்றான்.

பூரிசிரவஸ் அவன் விழிகளை நோக்கியபின் அதை வாங்கி சுருள்நீட்டி வாசித்தான். பெருமூச்சுடன் சுருட்டி மீண்டும் சலனிடமே அளித்தான். “நான் இதை எரித்துவிடுகிறேன் இளையோனே. இத்தகைய உணர்ச்சிகளுக்கு தூமப்புகையின் வாழ்நாள்தான். விழிக்கு சற்றுநேரம், மூக்குக்கு மேலும் சற்றுநேரம், நெஞ்சில் மேலும் சற்றுநேரம்... காற்று எட்டுத்திசைகளிலிருந்தும் சுழன்று வீசிக்கொண்டே இருக்கிறது.” பூரிசிரவஸ் தலையசைத்தபின் விடைகொண்டு திரும்பி நடந்தான். எடைகொண்டு குளிர்ந்த கால்களுடன் படுக்கையை விழையும் உடலுடன் தன் அறையை அடைவது வரை அவனிடம் அந்த நீண்டபயணத்தின் நினைவுகளே உதிரிக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

படுக்கையில் படுத்ததும் தேவிகையின் முகம் மிக அண்மையிலென தெரிந்தது. எழுந்து ஏவலனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கடுமையான மலைமது. மூன்றுமுறை குடித்தபின் மெல்லிய குமட்டலில் உடல் உலுக்கிக்கொண்டிருக்க மீண்டும் படுத்துக்கொண்டான். இம்முறை மலைபோல அவள் முகம். அவன் அதை நோக்கி அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்தான். அவள் அவனை கடந்து தொலைவில் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் எழுதிய கடிதத்தை அவனுக்குப்பின்னால் நின்று எவரோ வாசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவனை உடனே கிளம்பி திருமணத்தன்னேற்புக்கு வரும்படி அவள் அழைத்திருந்தாள். மணமேடையில் ஜயத்ரதனுக்கு மாலையிடுவதாக தந்தையிடம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஆனால் அவன் வந்து நின்றால் அவனுக்கே மாலையிடுவதாகவும் அவள் சொன்னாள். “இச்சொற்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றே எனக்குத்தெரியவில்லை. என்னை நினைவுறுகிறீர்களா என்றே ஐயம்கொள்கிறேன். ஆனால் நான் ஒருகணம்கூட மறக்கவில்லை. ஒவ்வொரு பார்வையையும் விரித்து விரித்து மிகநீண்ட நினைவுப்பெருக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இங்கே இந்த இருண்ட கல்மாளிகைக்குள் நான் காணும் வானம் அதுவே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.”

அவன் துயின்று விழித்தபோதும் அந்தமலை அப்படியே இருந்தது. ஆனால் அதைச்சூழ்ந்து மெல்லிய ஒலியுடன் மழை பொழிந்துகொண்டிருந்தது. அவன் எழுந்தமர்ந்தபோது அறைக்கு அப்பால் ஒலித்த காற்றை கேட்டான். மலைக்காற்று இலைகளை துடிக்கவைத்தபடி மாளிகையின் சுவர்களில் முட்டி சாளரங்களை அடிக்கச்செய்து கடந்துசென்றது. நள்ளிரவு ஆகியிருந்ததை ஒலிகள் காட்டின. கடும் விடாயை உணர்ந்ததும் எழுந்து சென்று நீர்க்குடுவையை எடுத்து நேரடியாகவே குடித்தான். நீர்வழிய அமர்ந்திருந்தபோது உடல் முழுக்க ஓர் இனிய களைப்பை உணர்ந்தான். எண்ணங்கள் ஏதுமில்லாத நிலை. கடுமையான உடல்வலி விலகி நிற்பதன் உவகை.

எழுந்து இடைநாழி வழியாக சென்றான். இரவுக்குரிய ஓரிரு பிறைவிளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. இடைநாழியின் மறுபக்கத்தில் இருந்த விளக்கொளியில் அமர்ந்தபடி துயிலும் படைவீரனின் இழுபட்ட நிழல் தெரிந்தது. அவன் பக்கவாட்டில் திரும்பி வெளியே திறக்கும் வாயில் வழியாக மண்டபத்துத் தோட்டத்திற்குள் சென்றான். அத்தனை செடிகளும் குளிருக்காக உள்ளே இழுக்கப்பட்டிருந்தன. பல செடிகளுக்குமேல் மரவுரியாலான கம்பளம் போர்த்தப்பட்டிருந்தது. அவை குளிரில் ஒடுங்கி விரைத்திருப்பதாக தோன்றியது. அவன் அவற்றின் நடுவே மெல்ல நடந்தான். அவற்றின் மூச்சுக்காற்றின் நீராவி மேலே சென்று மண்டபத்தின் கூரையில் குளிர்ந்து சொட்டிக்கொண்டிருக்கும் ஒலி அவற்றின் இதயத்துடிப்பென கேட்டது.

செடிகளனைத்தும் குளிரில் சுருங்கி தங்களை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டிருந்தன என்று நினைத்தான். அப்போது அவற்றின் கிளைகளும் இலைகளும் தளிர்களும் எவையும் வெளிநோக்கி வளரவில்லை. மலர்கள் இதழ்களை சுருக்கிக்கொண்டு தேனையும் மணத்தையும் உள்ளேயே தேக்கிக்கொண்டிருந்தன. மண்ணுக்கு அடியில் வேர்களுக்குள் அவற்றின் தேனும் மணமும் நிறைந்திருக்கலாம். அங்கே அவை மெல்ல வளர்ந்து நீண்டுகொண்டிருக்கலாம். மெல்லிய முணுமுணுப்பாக அவை அங்கே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கலாம். விரல்நுனிகளால் தொட்டு பிணைத்துக்கொண்டிருக்கலாம்.

விடியும் வரை அவன் அங்குதான் இருந்தான். நீர்சொட்டும் ஒலியின் ஒழுங்கின்மையை மெல்லமெல்ல ஒழுங்காக அவன் அகம் ஆக்கிக்கொண்டபோது அனைத்தும் சீரடைந்துவிட்டிருந்தன. அறைக்குச் சென்று குளிராடையை எடுத்து அணிந்துகொண்டு வெளியே சென்றான். இரவுப்பனியில் நனைந்து கிடந்த செம்மண்பாதையில் காலடிகள் புதைய தெருக்களில் நடந்தான். கன்றுகள் மனிதர்கள் நாய்கள் பெருச்சாளிகள் எவையும் தென்படவில்லை. புறாக்களின் குறுகல் ஒலி மட்டும் கடைகளின் மரக்கூரைகளுக்குள் கேட்டது. காற்றில் அம்மரக்கட்டடங்கள் முனகியபடி அசைவதுபோல அது உளமயக்களித்தது.

ஏழன்னையர் ஆலயம் வரை சென்றான். பூசகர் முந்தையநாள் ஏற்றிவைத்த நெய்விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. அப்பால் பால்ஹிகப்பிதாமகரின் ஆலயத்தின் சிலைக்கு எவரோ செம்பட்டு ஆடை ஒன்றைச் சார்த்தி மாலையிட்டு வழிபட்டிருந்தனர். அவருக்கு பலியிடப்பட்ட மலையாட்டின் கொம்புகள் மட்டும் பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தன. அவன் புன்னகைசெய்தான். அவர் மலையாட்டை தோளில் சுமந்துகொண்டிருப்பதனாலேயே அவருக்குரிய பலியாக அது மாறிவிட்டது. அவன் பால்ஹிகர் தோளில் ஆடுடன் நடந்துவந்த காட்சியை நினைவுகூர்ந்தான்.

ஒளி ஏறிஏறி வந்தது. மலையடிவாரத்தில் காலையொளி தேன் போல தித்திப்பானது. மென்மையாக கைகளால் அதை அள்ளமுடியும். உடம்பெங்கும் அதை பூசிக்கொள்ள முடியும். தோலைக்கடந்து குருதியைத் தொட்டு ஒளிபெறச்செய்யும். அனலாக ஆன குருதி உடம்பெங்கும் இளவெம்மையுடன் சுழித்தோடும். எண்ணங்களிலும் இளவெயில் பரவுவதை அறிய மலைநாட்டுக்குத்தான் வரவேண்டுமென எண்ணிக்கொண்டான். வியர்வை உடலுக்குள் கனியத்தொடங்கியதும் தடித்த தோலாடையை கழற்றி தோளிலிட்டு திரும்பி நடந்தான்.

சாலைகளில் மக்கள் நடமாடத்தொடங்கினர். மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றவர்கள் கம்பளியாடை அணிந்து தலையணியால் பாதிமுகத்தையும் மூடியிருந்தனர். பால்பசுக்களின் முலைக்காம்புகளை மூடி கம்பளியாடை அணிவித்திருந்தனர். காலைநடை பசுக்களின் குளிரில் உறைந்த உடலை இளகச்செய்ய அவை தலையை ஆட்டியபடி விரைந்து நடந்தன. புறாக்கள் எழுந்து சாலையில் அமர்ந்து ஆர்வமில்லாமல் சிந்திய மணிகளை பொறுக்கிக்கொண்டு கூழாங்கற்களை உரசிக்கொண்டது போல ஒலியெழுப்பின. ஒரேஒரு கடையை உரிமையாளன் திறந்துகொண்டிருந்தான். அது மலைமது விற்கும் கடை என்று கண்டதும் பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.

ஓர் எண்ணம் எழ அவன் திரும்பி நகரின் வடக்கெல்லை நோக்கி நடந்தான். சாலையில் வெயில்பட்டதும் ஈரமான குதிரைச்சாணியும் பசுஞ்சாணியும் கலந்த மணம் எழத்தொடங்கியது. வீடுகள் திறக்கப்பட்டு குழந்தைகள் எச்சில் உலர்ந்த வாய்களும் வீங்கிய கண்களுமாக வந்து வெயிலில் நின்றன. அவற்றின் செந்நிறமான கன்னமயிர்கள் ஒளிவிட்டன. சிலர் சருகுகளை குவித்துப்போட்டு தீமூட்டி கைகளை சூடாக்கிக்கொண்டிருந்தனர். இரண்டு எருமைகள் மிக மெதுவாக நடந்துவந்தன. வானிலிருந்து ஒரு செம்பருந்து மெல்லசுழன்று மண்ணை நெருங்கி மேலெழுந்தது. அதன் நிழல் சாய்ந்த மரக்கூரைகள் மேல் வளைந்தேறிச்சென்றது.

சிபிரரின் இல்லம் முன்பு வந்தபோதுதான் அங்கு வந்திருப்பதை உணர்ந்தான். வீட்டின் முகப்பு மூடியிருந்தது. அவன் இளவெயிலில் மின்னிய அதன் மரக்கூரையை நோக்கியபடி நின்றிருந்தான். வேட்டைவிலங்குகளின் தோல்கள் மூங்கில்சட்டங்களில் இழுத்துக்கட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தன. பெரிய உருளைக்கற்களால் ஆன சுவர்களும் தேவதாருத்தடிகளால் ஆன கூரையுமாக ஓடுதடித்த ஆமைபோல அந்த இல்லம் நின்றிருந்தது. காலமற்றது. வரலாற்றை ஒரு இமைப்பாக உணர்வது. இல்லத்தின் பின்னாலிருந்து கிழவி எட்டிப்பார்த்து “யார்?” என்றபின் “இளவரசே” என்றாள். “சிபிரர் இருக்கிறாரா?” என்றான்.

“நேற்றுதான் மீண்டும் மலைக்குச் சென்றார். என் மைந்தன் சேயன் இருக்கிறான். மதுமயக்கில் இன்னும் விழிக்கவில்லை” என்றாள் கிழவி. “அழைக்கிறேன்.” பூரிசிரவஸ் “வேண்டாம்” என்றான். “சிபிரர் மலைமேலா இருக்கிறார்?” கிழவி “ஆம் இளவரசே. பிதாமகருக்கு அணுக்கமாக அங்கே இருக்கிறார். என் மைந்தன் சேயனை பிதாமகரின் அதே முகம் கொண்டவன் என்பதனால் இங்கே விட்டிருக்கிறார்கள்” என்றாள். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சிபிரர் வந்தால் நான் பிதாமகரை கேட்டதாகச் சொல்லுங்கள்” என்றபின் திரும்பி நடந்தான்.

திரும்பும்போது நகரம் விழித்துக்கொண்டுவிட்டது. கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஊன்கடைகளில் பெண்கள் கூடைகளுடன் வந்து நின்றிருந்தனர். மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய காளான்கள் விற்பதற்காக குவிக்கப்பட்டிருந்தன. சித்தமயக்கு அளிக்கும் நீலநிறக் காளான்களும் மருந்துக்குரிய பல்வேறுவகையான நச்சுக்காளான்களும் தனித்தனியாக பகுக்கப்பட்டிருந்தன. மண்ணைத் தோண்டி பிடிக்கப்பட்ட பல்வேறு பெரிய பூச்சிகளும் மரப்பட்டைகளைப் பெயர்த்து பிடிக்கப்பட்ட வெண்புழுக்களும் மூங்கில்கூடைகளில் விற்பனைக்கிருந்தன. அவை கோடைமுழுக்க உணவுண்டு குளிருக்காக உடல்வளர்த்து குழிகளுக்குள் சுருண்டு கனவுக்குள் சென்று வாழத்தொடங்கிவிட்டிருந்தன. குழிகள் திறக்கப்பட்டு பட்டைகள் உரிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதைக்கூட அவை கனவென்றே அறிந்திருக்கும். சூடான நீரில் விழும்போதுகூட அவை கனவிலிருந்து விழிக்கப்போவதில்லை.

மத்யகீடம் என்னும் சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை இளம்சூடான மதுவில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்கத்தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள். இனிய இசை எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதுபோல களிமயக்கை நாளெல்லாம் நிலைநிறுத்தச்செய்யும் உணவு அது.

அவன் அரண்மனைக்கு வந்து நீராடி உடைமாற்றி சலனை சந்திப்பதற்காக சென்றான். சலன் அலுவற்கூடம் சென்றுவிட்டதாக தெரிந்தது. அலுவற்கூடத்தில் கர்த்தமர் மட்டும் வந்திருந்தார். அமைச்சுப்பணியாளர் எவரும் அப்போதும் வந்திருக்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த பீடங்களின் குழிவைக்கொண்டே அங்கே அவர்கள் வருவதை உய்த்தறியமுடிந்தது. கர்த்தமரிடம் பேசிக்கொண்டிருந்த சலன் “உன்னை அழைக்க ஆளனுப்ப எண்ணினேன்...” என்றான். பூரிசிரவஸ் “நகரை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்” என்றான். “இவ்வருடம் குளிர் கூடுதலாக இருக்குமென சொல்கிறார்கள். வடக்குமுடிகளின் மேல் வெண்ணிறமான முகில்வளையங்களை பகலில் பார்க்கமுடிகிறது.”

கர்த்தமர் “பனிவிழுந்து ஷீரபதம் முழுமையாகவே மூடிவிடுமென சொல்கிறார்கள். ஆகவே மலைக்குடிகள் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். போதிய உணவும் பிறவும் வந்துசேரவில்லை.” பூரிசிரவஸ் “ஏன்?” என்றான். “துவாரகையின் படகுகள் இப்போது அசிக்னியின் எல்லைவரை வருகின்றன. கடலுப்பு நிறையவே கிடைப்பதனால் மலையுப்பின் விலை குறைந்துகொண்டே செல்கிறது. நமக்கு மலையுப்புதான் முதன்மையான வணிகப்பொருள்.” பூரிசிரவஸ் பீடத்தில் அமர்ந்துகொண்டு “மலையுப்பைத்தானே தெய்வங்களுக்கு படைக்கவேண்டும்? கடலுப்பு சமைக்கப்பட்டதல்லவா?” என்றான். “ஆம், ஆனால் உணவுக்கு கடலுப்பு மேலும் நல்லது என்கிறார்கள்” என்றார் கர்த்தமர்.

பிண்டகர் விரைந்து உள்ளே வந்தார். அவரது உடலின் வியர்வை மணத்திலேயே மது கலந்திருந்தது. “நான் எழுந்தபோது ஒரு சிறு சிக்கல். வடபுலத்து ஒற்றன்...” என அவர் தொடங்க சலன் “நான் ஏதும் கேட்கவில்லை” என்றான். அவர் தலைவணங்கி பூரிசிரவஸ்ஸை பார்த்தார். “காலையிலேயே அலுவலர்களை வரச்சொல்லி ஆணையிட்டாலென்ன?” என்றான் பூரிசிரவஸ். “சொல்லலாம். எழுந்து மதுமயக்கில் வந்தமர்ந்து துயில்வார்கள். அவர்கள் முறையாகத் துயின்று மீண்டால்தான் இங்கே ஏதேனும் பணிகள் நடக்கும்” என்றார் கர்த்தமர். “மலைமக்கள் கொள்வதற்காக பொருட்களை வாங்குவதற்கு அரசு கடனுதவிசெய்தாலென்ன என்ற எண்ணம் நேற்று எழுந்தது. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.”

“கருவூலம் என்ன நிலையில் உள்ளது?” என்றான் பூரிசிரவஸ். “ஒருவருடம் அதை செய்யலாம்” என்றார் பிண்டகர். “ஒருவருடம் செய்யும் ஒரு செயலை பிறகெப்போதும் நிறுத்தமுடியாது இளையோனே. அதுதான் முதன்மை இடர். அதைப்பற்றித்தான் ஐயம்கொண்டிருக்கிறோம்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “மூத்தவரே, நாம் அவர்களிடமிருந்து உப்பை வாங்குவோம்” என்றான். “வாங்கி என்னசெய்வது? இங்கே நகரில் உப்பை சேர்த்துவைக்க நமக்கு என்னசெலவாகுமென நினைக்கிறாய்? குளிர்காலமழைகளில் அதைக் காப்பதும் பெரும்பாடு” என்றான் சலன்.

“சேர்த்துவைக்கவேண்டியதில்லை. அவற்றுக்கு ஒரு பணி உள்ளது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நான் சத்திராவதி அருகே ஒரு நெடுஞ்சாலை விடுதியில் வங்கம் செல்லும் பீதநாட்டு வணிகர்களிடம் அவர்களின் கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவன் ஒரு நிகழ்ச்சியை சொன்னான். அவர்கள் நாட்டு வணிகர்களில் ஒருசாரார் வடபுலத்தில் எங்கோ செல்லும்போது கடல் கடுங்குளிரால் உறைந்துவிட்டது. கலம் அதில் சிக்கிக்கொண்டது. அங்கு கடல் கடுங்குளிரால் உறைந்தாலும் வெயில் விழிமூட விரிந்திருக்குமாம். அவர்கள் தங்கள் கலத்திலிருந்த கருங்கந்தகப்பொடியை கடல்மேல் விரித்திருக்கிறார்கள். வெண்மையைவிட கருமை வெயில் வெப்பத்தை உண்ணக்கூடியது. அது பனியை உருக்கி கலத்தை விடுவித்தது.”

“வெறும் கதை” என்றான் சலன். “கடல் ஒருபோதும் உறையாது. ஏனென்றால் அது அலையால் ஆனது.” பூரிசிரவஸ் ”நானும் அதையே எண்ணினேன். ஆனால் அந்தக் கதையில் ஒரு நடைமுறை உண்மை இல்லையேல் அதை இத்தனைபேர் நினைவில் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றான். “அதற்கு என்ன பொருள் இப்போது?” என்றான் சலன். “மலையில் பல இடங்களில் கன்னங்கரிய மண் உள்ளது. நம் மலைமக்களிடம் அதை வெட்டிக்கொண்டுவந்து ஷீரபதத்தின் மீது விரிக்க இப்போதே ஆணையிடுவோம். நம் நாட்டில் குளிர்காற்றால்தான் பனி உருவாகிறது. வானிலிருந்து பனி விழுவதில்லை. குளிரில் வானம் வெளுத்திருப்பதனால் வெயில் சுடும்படி பொழியும் என நாமறிவோம்.” சலன் “ஆம், தோல் வெந்துவிடும் வெம்மை கொண்டது” என்றான்.

“அக்கரிய மண்ணை கரியுடன் கலந்து ஷீரபதத்தில் விரித்தால் பகலில் வெயிலே பனியை உருக்கி அகற்றி பாதையை அமைத்துவிடும்.” அவன் ஏன் அதை சொல்கிறான் என்று புரியாமல் கர்த்தமர் சலனை நோக்கிவிட்டு “ஆனால் நாம் உப்பை வாங்கவேண்டும் என்கிறீர்கள்” என்றான். “கர்த்தமரே, நமது மலைச்சரிவில் அமைவது மேலே இமையமுடிகளில் உள்ளது போன்ற பனிப்பாறை அல்ல.மெல்லிய கூழ்ப்பனி அது. கீழே ஷீரபதத்தில் பனியுருகியதென்றால் மேலிருந்து பனி வழிந்து வந்து அதை உடனே மூடிவிடும். அதைவெல்லும் வழி என்பது மலைச்சரிவுகளில் உப்பைத்தூவுவதுதான். உப்புடன் இணைந்த பனி உறுதியாகிவிடும். பாதைநோக்கி கீழிறங்காமல் அதை நிறுத்திவிடமுடியும்.”

மூவர் விழிகளிலும் நம்பிக்கை வரவில்லை. .”இதை வெற்றிகரமாக செய்யமுடியும் மூத்தவரே. குளிர்காலத்தில் மலைப்பாதை மூடியிருப்பதனால் இந்நகரத்தின் வணிககாலம் பாதியாகிவிடுகிறது. மலைப்பாதைகள் திறக்கப்படுமென்றால் குளிர்காலத்துக்குரிய பல பொருட்களை கொண்டுவர முடியும். இன்றுகாலை குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் கண்டேன். மேலும் பல பொருட்கள் அவ்வாறு கிடைக்கலாம். பனியை பெட்டிகளில் அடைத்து அவற்றில் உயிர்ப்பொருட்களை வைத்து நெடுந்தூரம் அழுகாமல் கொண்டுசெல்லமுடியும். அசிக்னி வரை கொண்டுசெல்ல முடிந்தாலே அவை பெருமதிப்புள்ளவையாகும். அவற்றை நாம் இரண்டாவது வணிகமாக ஆக்கினால் நம் கருவூலமும் நிறையும்.”

சலன் ”நான் இதை நம்பவில்லை. இவையனைத்தையும் வெறும் கனவென்றே எண்ணுகிறேன். செய்துபார்த்தால் மட்டுமே இதன் நிறைகுறைகள் தெரியும். ஆனால் மலைமக்களுக்கு கடனாகக் கொடுப்பது என்பது செல்வத்தை தூக்கி வீசுவது மட்டுமே. அச்செல்வத்தை உப்பின் பேரால் கொடுத்தால் அவர்களை பணியாற்றச்செய்யமுடியும். மேலும் அது கடனாக கருதப்படாது. அடுத்தவருடம் கருவூலச்செல்வம் போதவில்லை என்றால் உப்பு தேவையில்லை என்று சொல்லிவிடலாம். பணியாற்றாமல் இருப்பதை விரும்பும் மலைமக்கள் அதை வற்புறுத்தவும் மாட்டார்கள்...” என்றான். கர்த்தமர் புன்னகைசெய்தார். “ஆகவே, இதை செய்துபார்க்கலாமென எண்ணுகிறேன்” என்றான் சலன்.

”குளிர்காலப் பாதை திறந்தால் மட்டும் போதாது மூத்தவரே. துணிச்சலான வணிகர்களை அழைத்து அவர்களிடம் மலைவணிகத்தை குளிர்காலத்திலும் செய்யும்படி ஆணையிடவேண்டும். குளிர்கால வணிகத்திற்கு வரி இல்லை என அறிவிக்கலாம்.” சொன்னதுமே அவனுள் அடுத்த எண்ணம் வந்தது “குளிர்கால வணிகர்களுக்கு நமது அத்திரிகளையும் குதிரைகளையும் அளிக்கலாம். ஏனென்றால் குளிர்காலத்தில் வணிகம்செய்யமுற்பட்டு விலங்குகளுக்கு நோயோ இடரோ நிகழ்ந்துவிட்டதென்றால் கோடைவணிகம் அழிந்துவிடும் என அவர்கள் அஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் “ஆம், அது நன்று” என்றபின் சிரித்து “பெருநகர்களுக்கு நீ சென்றது வீணாகவில்லை” என்றான்.

“மூத்தவரே, இன்று நகரங்களனைத்துமே வணிகர்களையே நம்பியிருக்கின்றன. போரை நம்பி நாடுகள் அமைந்த காலம் முடிந்துவிட்டது. வணிகத்தை நம்பியே இனிமேல் முடிகளும் கொடிகளும் அமையும்” என்றான். சலன் பெருமூச்சுடன் “ஆம், அதற்கு நீரும் நிலமும் தேவை. வேளாண்மையும் தொழிலும் தேவை” என்றான். “இல்லை மூத்தவரே. பொருட்கள் பெருமளவுகிடைப்பது என்பது கங்கைநிலத்தின் வல்லமை. நம் வல்லமை என்பது நமது பொருட்கள் அரிதாகவே கிடைப்பது. அவை அனைத்துமே குளிர்காலத்தில் கிடைப்பவை. அவற்றை நாம் கோடைவரை வைத்திருந்து விற்றாகவேண்டும் என்பதனால்தான் நம் வணிகம் குறுகியிருக்கிறது. குளிர்காலப்பாதைகள் உருவாகுமென்றால் நம் வணிகமும் வலுப்பெறமுடியும்.” சலன் “பார்ப்போம்” என்றான். கர்த்தமர் அசைந்தமுறையில் நம்பிக்கையின்மை தெரிந்தது.

சலன் “நீ விட்டுச்சென்ற பணி எஞ்சியிருக்கிறது” என்றான். “மதரநாட்டுக்கு சென்றாகவேண்டும். அங்கே சல்லியரின் உள்ளத்தை அறியவேண்டும். விரைவிலேயே நாம் உபமத்ரருக்கு நம் சொல்லை அளித்துவிடவேண்டும்.” பூரிசிரவஸ் தயங்கி “உடனே...” என்று தொடங்க “அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை இளையோனே. நீ இன்றே கிளம்பிச்செல். மத்ரரை சந்திப்பதற்குள் விஜயையை சந்திக்கவேண்டும் நீ. அவள் உனக்காக அவையில் சொல்வைக்கவேண்டும்” என்றான் சலன். “பால்ஹிகக்கூட்டமைப்பு ஒவ்வொரு கணமும் உடைந்துகொண்டிருக்கிறது என்ற அச்சம் இரவுகளில் என்னை துயில்மறக்கச்செய்கிறது. இது அமையுமென்றால் ஓர் உறுதிப்பாட்டை அடைந்தவனாவேன். அது உன் கையிலேயே உள்ளது.”

“தந்தையிடம் சொல்லிவிட்டு...” என்று பூரிசிரவஸ் மேலும் தயங்க “அவர் விழிப்பிலும் மயக்கிலிருக்குமளவுக்கு குடித்துவிட்டார்” என்றான் சலன். “சென்ற மாதம் ஒரு கூர்ஜரத்துச் சூதன் இங்கு வந்தான். மத்யகீடம் ஒன்றின் கதையை சொன்னான். அதை இன்னொரு மத்யகீடம் வாயிலேயே கடித்துவிட்டது. ஆகவே அதன் ஒலி மாறுபட்டு ரீரா என்பதற்கு மாறாக சிவா என்று ஒலிக்கத்தொடங்கியது. வாழ்நாளெல்லாம் சிவன் பெயரைச் சொன்னமையால் அது மறுபிறயில் ஓர் அரசனாகப் பிறந்தது. அவ்வரசனுக்கு மத்யகீடன் என்று பெயர். மத்யகீட குலம் நூறு தலைமுறை ஆட்சிசெய்தது. அதன் இறுதி அரசன் மதுவில் கால்வழுக்கி மதுக்குடத்திற்குள் தலைகீழாக விழுந்து உயிர்துறந்தான். அதனால் அவன் மீண்டும் தன் இறுதிவிருப்பின்படி மீண்டு மத்யகீடமாக மலைப்பட்டை ஒன்றுக்குள் பிறந்தான்.”

கர்த்தமர் சிரிக்க பிண்டகர் புரியாமல் அவரை நோக்கினார். பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டு “அரியகதை. அவர்கள் புதியகதைகளை அவையிலேயே உருவாக்க வல்லவர்கள்” என்றான். சலன் “நமது புகழ் கீழே தாழ்நிலங்களில் பரவட்டும். அங்கே நமது மதுவை விரும்பத்தொடங்குவார்கள்” என்றான். பூரிசிரவஸ் “நான் நாளை காலையிலேயே கிளம்புகிறேன் மூத்தவரே” என்றான்.

பகுதி 13 - பகடையின் எண்கள் - 4

மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில் வந்ததும் இருபக்கமும் செறிந்திருந்த மரக்கூட்டங்களை நோக்கியபடி கம்பளிக்குவைக்குள் சேடியின் மடியில் சுருண்டு அமர்ந்திருந்ததும் மட்டும் சற்று நினைவிலிருந்தன. சௌவீரமும் மத்ரமும் எல்லைப்புறச்சாலைகளை அமைப்பதற்கு முந்தைய காலம் அது. அன்று மத்ரநாடே பால்ஹிகர்களுக்கு நெடுந்தொலைவு.

மத்ரநாட்டு அரசர் சல்லியரின் முதல்மைந்தன் ருக்மாங்கதனை பட்டத்து இளவரசராக அறிவிக்கும் விழா அது. பால்ஹிகநாடுகள் பத்தும் அதில் பங்கெடுத்தன. மலைக்குடிகளை தன் குடைக்கீழ் தொகுக்க சல்லியர் செய்த முதல்முயற்சி. அஸ்தினபுரியிலிருந்து பீஷ்மபிதாமகர் தன் படைகளுடன் வந்து அவ்விழாவில் கலந்துகொண்டார். பீஷ்மர் வருவதை பலமாதங்களுக்கு முன்னரே சல்லியர் சூதர்களைக்கொண்டு மலைநாடுகளெங்கும் பாடவைத்தார். மத்ரநாட்டு அடையாளத்துடன் அஸ்தினபுரியின் முத்திரையும் இடப்பட்டு எழுதப்பட்ட அழைப்பை புறந்தள்ள பால்ஹிகர்களால் முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நாட்கணக்கில் எண்ணியபின் வரமுடிவெடுத்தனர்.

நூறாண்டுகளுக்கும் மேலாக மத்ரர்களும் சௌவீரர்களும் பிற பால்ஹிகர்களுடன் பகைமைகொண்ட அரசியலையே செய்துவந்தனர். அவர்களின் உறவு ஐயங்களாலேயே முடிவுசெய்யப்பட்டு வந்தது. பால்ஹிகர்களில் எவருக்கும் சிந்துவெளிநோக்கி இறங்கும் மையப்பாதை ஒன்றை அமைப்பதென்றால் சௌவீரமோ மத்ரமோ கைக்கு வந்தாகவேண்டும். மத்ரர்களுக்கும் சௌவீரர்களுக்கும் அவர்களுடைய எல்லைக்கு அப்பால் ஏதேனும் நிலத்தை கைப்பற்றவேண்டுமென்றால் அது பால்ஹிகமண்ணிலேயே இயல்வது. சிந்துவெளி, கங்காவர்த்த நாடுகள் அவர்களின் வாயில் அடங்குபவை அல்ல. ஆகவே விழிகோத்து உடல் சிலிர்த்து மெல்ல உறுமியபடி தாக்கப்பதுங்கியிருக்கும் காட்டுவிலங்குகள் போல அசைவற்றிருந்தன பால்ஹிகநாடுகள்.

எச்செயலும் மற்றவர்களுக்கு எதிரானதாக உடனடியாக விளக்கம் கொண்டது. எல்லைப்புறத்தில் ஒரு காவல்மாடம் அமைப்பது, பத்துவீரர்கள் எல்லைவழியாக கண்காணிப்பில் ஈடுபடுவது, ஒரு வணிகத்தூதுக்குழு அரசரை சந்திப்பது அனைத்துமே மற்ற நாடுகளில் நிகரான மறுசெயலை உருவாக்கின. அத்தனை நாடுகளிலும் பிறநாடுகளின் ஒற்றர்கள் நிறைந்திருந்தனர். பத்து நாடுகளிலும் ஒரேவகையான மக்கள் வாழ்ந்தனர். அவர்களுக்கு நாடு என்னும் எல்லைகள் இல்லை. பால்ஹிகநாடுகள் முழுக்க மேய்ச்சல் மக்கள் காற்றுபோல சுழன்றலைந்துகொண்டிருந்தனர். ஆகவே ஒற்றர்களை கண்டுபிடிப்பதோ கண்காணிப்பதோ எளிதாக இல்லை.

சௌவீரம் பாண்டவர்களால் தாக்கப்படும் வரை பால்ஹிகர்கள் பிறநாட்டு எதிரிகளைப்பற்றி எண்ணிப்பார்க்கவேயில்லை. அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது. பொது எதிரி என்பது பால்ஹிகமூதாதையர் எண்ணிக்கூட பார்க்கமுடியாத ஒற்றுமையை உருவாக்கியது. சலன் சொன்னான் “மத்ரர் பாண்டுவுக்கு தங்கையை அளித்தபோது பால்ஹிகநாடுகளை தன் குடைக்கீழ் கொண்டுவரும் கனவு கொண்டிருந்தார் இளையோனே. அன்று அவர் அஸ்தினபுரியின் படைகள் தன் உதவிக்கு வருமென எண்ணினார். ஆனால் பாண்டு காடேகியதும் அவரது திட்டங்கள் கலைந்தன. மீண்டும் அஸ்தினபுரி எழவேயில்லை. படைகளை தங்கள் எல்லைகளைவிட்டு விலக்கும் நிலையில் அவர்கள் எப்போதும் இருக்கவில்லை.”

“பாண்டவர்கள் முடிசூடும் நிலைவந்தபோது எவரும் எண்ணியிராதபடி துவாரகை எழுந்து வந்தது. பாண்டவர்களின் வெற்றி துவாரகையின் வெற்றி என்றே இன்று பொருள்படுகிறது.” சலன் மெல்ல நகைத்து “சௌவீரத்தை பாண்டவர்கள் தாக்கியதை மத்ரரால் நம்பவேமுடியவில்லை. அரசியலாடலில் படைவல்லானுக்கு சிறியோர் அடிமைகள் மட்டுமே என அவர் புரிந்துகொள்ள இத்தனை பிந்தியிருக்கிறது” என்றான். பூரிசிரவஸ் புன்னகைத்தான். “அவர் பால்ஹிகக்கூட்டமைப்பை அமைக்க முன்வந்தபோது தெரிந்தது அவரிடம் மேலாண்மை கனவு இன்றில்லை. அவர் தன் நாட்டை காத்துக்கொள்ளும் அச்சத்தில் மட்டுமே இன்றிருக்கிறார்.”

கோட்டைவாயில் வரை அவனுடன் சலனும் குதிரையில் வந்தான். “நீ அவர்களிடம் அரசியலேதும் பேசவேண்டியதில்லை. நடந்தவற்றை மட்டும் சொல். சல்லியரை எந்த வகையிலும் குறைத்து எண்ணாதே. அவர் அரசு சூழ்தலில் எல்லாவகையிலும் பீஷ்மருக்கு நிகரானவர் என்கிறார்கள்” என்றான். “அரசு சூழ்தலென்பது அறிவை முதன்மையாகக் கொண்டது அல்ல இளையோனே. அது பெரும்பாலும் வாழ்வறிவையே சார்ந்திருக்கிறது. ஆகவே முதியோரை இளையோர் அரசுசூழ்தலில் மட்டும் பெரும்பாலும் வெல்லமுடிவதில்லை. சொற்களை எண்ணிப்பேசாதே. நீ எண்ணுவதையும் சேர்த்தே அவர் கேட்டுக்கொண்டிருப்பார். உன்னை முழுமையாகவே திறந்து அவர் முன் வை...”

மலைப்பாதை வழியாக குதிரைகளில் செல்லும்போது வணிகர்கூட்டங்கள் நிறைய சென்றிருப்பதை பூரிசிரவஸ் பாதையில் படிந்திருந்த குளம்படித்தடங்கள் வழியாக அறிந்தான். அவ்வப்போது கம்பளிஉருளைகள் போல வணிகர்கள் வண்டிகளில் அமர்ந்து எதிரே வந்தனர். குளிர்காலம் அணுகிவிட்டது. இன்னும் சிலநாட்களுக்குப்பின் வணிகப்பாதைகள் அனைத்தும் ஓய்ந்துவிடும். சாலைகளில் கூலம் சிதறியதைப்பொறுக்க காட்டுப்பறவைகள் கூட்டமாக அமர்ந்திருந்தன. வண்டிச்சகட ஒலிகேட்டு அவை மெல்ல எழுந்து விலகி மீண்டும் அமர்ந்தன. வணிகர்கள் வீசும் உணவை உண்ண சாலையோரங்களில் நின்ற காட்டுநாய்கள் நாசுழற்றி வாயை நக்கி வாலாட்டின. நடுப்பகலிலும் வானம் கன்றுத்தோலை இழுத்துக்கட்டியதுபோல மங்கலான ஒளியுடன் இருந்தது. பேருடல் விலங்கொன்றின் நான்குகால்களுக்கு அடியில் சென்றுகொண்டிருப்பதுபோல.

காற்றில் கம்பளிகளையும் ஊடுருவிவந்து மயிர்க்கால்களை எழச்செய்யும் குளிர் நிறைந்திருந்தது. மலையிலிருந்து பனிக்காற்று இறங்கிக்கொண்டிருந்தமையால் இரவுகளில் பயணம் செய்யமுடியவில்லை. உத்தரபால்ஹிக நாடுகளில் தொடங்கி மத்ரநாடு வழியாக கங்காவர்த்தம் நோக்கி செல்லும் அந்தப்பாதை முதன்மையான வணிகத்தடம் என்பதனால் பயணிகள் தங்குவதற்கான விடுதிகள் வழி முழுக்க அமைக்கப்பட்டிருந்தன. அவை வணிகர்களின் பொற்கொடையாலும் அரசர்களின் நிலக்கொடையாலும் மலைக்குடிகளின் உணவுக்கொடையாலும் வாழ்ந்தன. எப்போதும் வற்றாத சுனையொன்றின் கரையிலேயே அமைந்த அந்த விடுதிகளை சுனைவீடுகள் என்றனர்.

சாலையை ஒட்டியே அமைந்திருந்த மணிபத்ரனுக்கான சிறிய சுதைக்கோயிலின் மேல் பறக்கும் காவிக்கொடியே சுனைவீடு இருப்பதன் அடையாளம். சாலைவணிகரின் தெய்வமான மணிபத்ரன் வலக்கையில் பொற்குவையும் இடக்கையில் அடைக்கலச்சின்னமுமாக நின்றிருந்தான். அருகே மண்ணாலான நான்கு கருநிறச்சிலைகளாக அமண அருகர்கள் அமர்ந்த நீளமான சிற்றாலயம் இருந்தது. ஆடைகளும் அணிகளும் ஏதுமின்றி கால்களை மலர்மடிப்பென அமைத்து அதன் மேல் கைகளை தாமரைக்குவையென வைத்து விழிமூடி தம்முள் தாம் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்த நீர்க்கரைப்படிவர்கள். நடுவே புள்ளிருக்கை பெருத்த மாகாளை பொறிக்கப்பட்ட காளையர். வலப்பக்கம் தலைக்குப்பின்னால் ஐந்துதலை நாகம் பத்திவிரித்து நின்ற பக்கவர். அமுதகல முத்திரையுடன் முல்லையர். அவர் அருகே இளம்பிறை முத்திரையுடன் சந்திரர்.

அப்பால் மூங்கில் கால்கள் மேல் அமர்ந்த பெரிய மரக்கட்டடங்களால் ஆன விடுதிகள் அதற்குரிய குடியால் புரக்கப்பட்டன. புரவிகளுக்கும் வெப்பமூட்டப்பட்ட கொட்டகைகள் இருந்தன. உலர்புல் உணவும் மரத்தொட்டிகளில் நீரும் காத்திருந்தன. இரும்பாலான கணப்பில் செங்கனல் சீறிக்கொண்டிருக்கும் சிறிய மரச்சுவர் அறைகள். புல்லடைத்த மெத்தைகள். வறுத்த உலர்ஊனும் தணலில் சுட்ட அப்பமும் இளஞ்சூடான மலைமதுவும். வணிகர்கள் மயக்கில் தடித்த இமைகளுடன் உடல்குறுக்கி அமர்ந்து குரல் குழைய பேசிக்கொண்டிருந்தனர். குளிர்காலம் போல மனிதரின் அண்மை இனிதாக ஆகும் காலம் பிறிதொன்றில்லை.

இரவுமுழுக்க வெளியே கடுங்குளிர்க்காற்று மரங்களை சுழற்றியபடி ஊளையிட்டது. காலையில் தரைமுழுக்க சருகுகள் பரவிக்கிடந்தன. முதல் புலரிக்கதிர் மெல்லிய நிணநீர்க்கசிவாக வானத்தோல்பரப்பில் ஊறி வரும்போது விழிதொடும் மலைவெளிகளனைத்தும் ஊசிமுனையால் தொட்டு வரையப்பட்டவை போல துல்லியம் கொண்டன. ஒவ்வொரு மலைவிளிம்பையும் ஒவ்வொரு பாறைக்குவடையும் விழிகளால் தொட்டறியமுடிந்தது. தொலைவில் காற்றுப்பரப்பில் சுழலும் செம்பருந்தின் இறகுகளின் பிசிறுகளைக்கூட நோக்க இயன்றது. அதன் நிழல் வருடிச்சென்ற மலைச்சரிவில் எங்கும் கீரிகள் இரைதேடி பாறைகளுக்கு அடியிலிருந்து இடுக்குகளை நோக்கி நாணல்பூக்குலை வால்குலைத்து சுழன்றோடின.

மெல்லிய ஒளியில் செல்லும்போது விழிகள் துல்லியம் கொண்டன. விழிகள் தெளிந்தபோது அகமும் தெளிவதாகத் தோன்றியது. குளிர் செறிந்து வானத்து நீரெல்லாம் மண்ணில் பனியாகப் படிவதுவரை அந்த இளவெயிலே பகல் முழுக்க இருக்கும். அதன்பின் காற்றுவெளி பளிங்காலானதாக மாறிவிடும். வெயில் உருகிய வெள்ளிவிழுதுகளாக மாறும். வெறுந்தோலில் வெயில்படும் இடம் அக்கணமே கன்றிச்சிவந்து தொட்டால் தோலுரிந்துவிடும். நீரூற்றி குளிரச்செய்தால் சீழ்கட்டும். மெல்லிய ஆடையால் மறைத்துக்கொள்வதன்றி வழியே இருக்காது.

அந்தப்பயணத்தில் பூரிசிரவஸ் அதுவரையிலான அனைத்தையும் மறந்துவிட்டான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு முகத்துடன் அவனை குனிந்து நோக்கியது. ஒவ்வொரு மலைமுடிக்குமேலும் வெண்புகைச்சுருள்கள் என முகில்கள் திரண்டிருந்தன. சூரியன் மேலெழுந்து ஒளிமிகுந்தபோது அவற்றின் வெண்மையான வடிவம் துலங்கி முப்பரிமாணம் கொண்டு தொங்கும் பளிங்குமலைகளாக மாறி உச்சிகடந்ததும் மீண்டும் மங்கலாகத் தொடங்கி மெல்ல கரைந்து சாம்பல்பரப்பாக மாறிய வானத்தில் முழுமையாக மறைந்தது.

உச்சி கடந்த வேளையில் அசிக்னியின் மூன்று வேராறுகளில் ஒன்றான பிரகதியின் கரையில் அமைந்த மத்ரநாட்டின் வடபுலத்து எல்லையை அவர்கள் கடந்தபோது முதல்காவல்கோட்டத்திலேயே அவனுக்கு அரசமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. கலப்பைக்கொடி ஏந்திய ஏழுவீரர்கள் அணிவகுத்து வர முரசும் கொம்பும் துணைசேர்த்தன. அவர்கள் கொடிதாழ்த்தி வாழ்த்துக்கூவி வணங்கி அவனை எல்லைக்குள் அழைத்துச்சென்றனர். எல்லைக்காவல் மாடத்தில் இளைப்பாறி நீரும் உணவும் கொண்டு பின்னர் வீரர் மூவர் துணைவந்து வழிகாட்ட மத்ரநாட்டின் தலைநகரான சகலபுரி நோக்கி கிளம்பினர்.

எல்லையில் இருந்து சகலபுரிக்குச் செல்ல சேற்றுமண்ணில் மரப்பட்டைகள் பதிக்கப்பட்ட புரவிப்பாதை இருந்தது. நூற்றுக்கணக்கான சிற்றாறுகளும் மலையோடைகளுமாக இமையத்திலிருந்து இறங்கும் நீரும் வண்டலும் மத்ரநாட்டை ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டுவதனால் அங்கே கற்கள் பரப்பி சாலையிடுவது இயல்வதல்ல என்று தெரிந்தது. மரத்தாலான சாலையை ஒவ்வொருமுறையும் சேற்றுக்குள் இருந்து மேலே தூக்கி அமைத்துவிடலாம். அசிக்னியின் கரையோரமாகவே மலையிறங்கிச் சென்ற சாலை ஒரு பெரிய ஏணிப்படி போல தோன்றியது. முன்னும் பின்னும் செல்லும் குளம்படிகளால் முழங்கிக்கொண்டிருந்தது. சினந்து துடித்துக்கொண்டே இருக்கும் கொலைவிலங்குபோல.

“இது வணிகர்களுக்கு இறுதி வாரம் பால்ஹிகரே. வரும் கருநிலவுடன் மலையிறங்கி வரும் அனைத்து வணிகவழிகளும் மூடிவிடும்” என்றான் துணைவந்த காவலன். “ஆகவே வணிகர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். வணிகவாரம் முடியும்போது மணிபத்ரனுக்கும் குபேரனுக்கும் ஊன்கொடை அளித்து வழிபடுவார்கள். அருகநெறி கொண்ட வணிகர்கள் அரிசிமாவில் வெல்லம் சேர்த்து செய்த மண்டையப்பம் படைப்பார்கள். இரவெல்லாம் நகரில் மதுவும் உணவும் நகையும் களியாட்டும் நிறைந்து வழியும். அதன்பின் கங்காவர்த்தத்தில் இருந்தும் சிந்துதடங்களில் இருந்தும் நகருக்குள் வந்துள்ள அத்தனை பரத்தையரும் திரும்பி சென்றுவிடுவார்கள்... நகர் முழுக்க குளிர்பரவும்.”

பூரிசிரவஸ் “இங்கே வெண்பனி விழுவதுண்டா?” என்றான். “ஒவ்வொருமுறையும் வருவதில்லை. ஆனால் குளிர் முதிர்ந்த காலத்தில் சிலநாட்கள் காலையில் வீட்டைச்சுற்றி வெண்பனிப்பொருக்குகள் நிகழ்ந்திருக்கும்” என்றான். அசிக்னி அங்கே சிறிய ஓடை போலிருந்தது. அஞ்சி ஓடும் செம்மறியாட்டுக்கூட்டம் போல நீர் கொப்பளித்துச் செல்ல நீரின் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அசிக்னி விரைவழிந்து அலைத்தொடராக மாறி ஒளிகொண்டு செல்லத்தொடங்கியது. மலைப்பாதை சீர்நிலத்தில் அமைந்தது. புரவிகள் மூச்சிரைக்க நடைமாற்றிக்கொண்ட ஓசை எழுந்தது.

அசிக்னியில் அதன் கிளையாறான தலம் வந்து கலக்கும் முனையில் இருந்தது சகலபுரி. தொலைவிலேயே அதன் பெரிய காவல்மாடத்தின் மேல் பறந்த கலப்பைக்கொடியை பூரிசிரவஸ் பார்த்துவிட்டான். சற்று நின்று கைகளைத் தூக்கி உடலைநெளித்தபின் புரவியை பெருநடையில் செல்லவிட்டான். சற்றுநேரத்திலேயே காவல்கோட்டத்தைப்பற்றிய ஐயம் வந்தது. அது மரத்தாலான கோபுரமேடை என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அது ஒரு பசுங்குன்றின்மேல் அமைந்திருப்பதாக தோன்றியது. சிந்துவின் கரைகளில் எங்கும் பெரிய குன்றுகள் இல்லை என அவன் அறிந்திருந்தான். அதையே விழி நிலைத்து நோக்கியபடி சென்றான்.

மெல்ல அது எப்படி கட்டப்பட்டது என்று தெரிந்தது. உயரமாக வளரும் மரங்களை நட்டு அவற்றின் உச்சிக்கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டப்பட்டிருந்தது அந்தக் காவல்மாடம். உயிருள்ள கோபுரம் என எண்ணியபோதே விந்தையாக இருந்தது. அதை நோக்கியபடியே சென்றுகொண்டிருந்தான். அவை தேவதாரு மரங்கள் என தோன்றின. ஆனால் இமயமலைச்சரிவின் தேவதாருக்களைவிட இருமடங்கு உயரம் கொண்டிருந்தன. தடிகள் கல்லால் ஆன தூண்கள் என்றே தோன்றின. காவலன் “அவை மணிதேவதாருக்கள் பால்ஹிகரே. அவை இந்த சேற்றுமண்ணில் மட்டுமே இத்தனை உயரமாக வளரும்” என்றான்.

மரத்தின் பசுமையிலைக்கூம்புகளுக்குமேல் முகிலில் எழுந்த மண்டபம் போல தெரிந்த காவல்மாடத்தை நோக்கியபடி சென்றமையால் பூரிசிரவஸ் சகலபுரியின் கோட்டையைக் காண சற்று பிந்திவிட்டான். அவனுக்குப்பின்னால் வந்த வீரன் “மரத்தாலான கோட்டை” என்றபோதுகூட மரப்பட்டைகளால் கட்டப்பட்டது என்ற எண்ணம்தான் இயல்பாக எழுந்தது. மறுகணம் அதை உள்ளம் கண்டதும் குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி அதை நோக்கி அமர்ந்துவிட்டான். அவன் முகம் மலர்ந்துவிட்டது.

சாலமரங்களையும் தேக்குமரங்களையும் நெருக்கமாக நட்டு அவற்றின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து கட்டப்பட்ட பச்சைமரங்களாலான பெருங்கோட்டை பன்னிரண்டு ஆள் உயரமிருந்தது. அதன் அடித்தூர்கள் கற்தூண்கள் போல நிரைவகுத்து நின்றன. யானைமத்தகங்களோ தண்டுகளோ அவற்றை அசைக்கமுடியாதென்று தெரிந்தது. “பன்னிரு அடுக்குகளாக இந்த மரங்கள் நடப்பட்டுள்ளன பால்ஹிகரே... கோட்டையின் சுவரை வாயில் வழியாகக் கடக்கவே அரைநாழிகை நேரமாகும்” என்றான் காவலன். நெருங்கிச்சென்றபோது அடிமரங்களின் இடைவெளியில் செறிவாக முட்செடிகள் நடப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று வலையாக பின்னப்பட்டிருப்பது தெரிந்தது.

“முன்பு இங்கிருந்தது மண்கோட்டை. அசிக்னியின் களிமண்ணைக்கொண்டு கட்டியது. அதை ஒவ்வொருவருடமும் மழைக்குப்பின் பழுதுபார்க்கவேண்டும். அசிக்னி சினந்தால் கோட்டை இருந்த இடம் தெரியாமல் கரைந்துசென்றுவிடும். இங்கே கற்கோட்டைகள் கட்டமுடியாது. அசிக்னியின் உருளைக்கற்களை சேறால் இணைத்துக் கட்டவேண்டும். நீர்ப்பெருக்கை அவை தாங்காது. இருநூறாண்டுகளுக்கு முன் மத்ரநாட்டை ஆண்ட கஜபதிமன்னரின் அமைச்சர் கிருஷ்ண ஃபால்குனரால் இந்தக்கோட்டை அமைக்கப்பட்டது. தேவதாருக்களும் சாலமரங்களும் தேக்குமரங்களும் தடிமுழுத்து எழ நூறாண்டுகளாகின. இன்று இக்கோட்டையை அசிக்னியால் ஏதும் செய்யமுடியாது” காவலன் சொன்னான்.

நகருக்குள் செல்ல பெரிய கொடிப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அசிக்னியின் இருபக்கமும் தேவதாருமரங்களும் தேக்குமரங்களும் செறிவாக நடப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான மரங்களில் இருந்து தடித்த வடங்கள் கிளம்பிச்சென்று ஒன்றுடன் ஒன்று நுட்பமாகப் பின்னி சிலந்தி வலையென மாறி பின்னர் குவிந்து நீண்டு அசிக்னியின் அலைநீர்வெளிக்குமேல் பாலமாக அமைந்தன. அசிக்னியின் நடுவே இருந்த சேற்றுமேடுகளில் நடப்பட்டிருந்த மரக்கூட்டங்களில் அவை மீண்டும் வேர்ப்பரவலாக இறங்கின. மீண்டும் வலையாகி எழுந்து பாலமாக குவிந்து நீண்டன.

அவ்வாறு ஏழு கட்டங்களாக சென்ற பாலம் சகலபுரியின் கான்கோட்டையின் அருகே ஒரு குறுங்காட்டுக்குள் சென்று புதைந்து மறைந்தது. பாலத்தில் சென்ற வண்டிகளும் புரவிகளும் அக்காட்டுக்கு அப்பால் மீண்டும் தோன்றி அங்கே சென்ற மரப்பாதை வழியாக கான்கோட்டை நோக்கி மெல்ல ஏறிச் சென்றன. கோட்டைநோக்கி செல்வதற்கு ஒருபாலமும் வருவதற்கு இன்னொருபாலமுமாக இணையாக அமைந்திருந்தன. இருபாலங்களையும் இணைக்கும் சிறிய கொடிவழிகளால் பாலங்கள் ஆங்காங்கே கைகோர்த்துக்கொண்டன. அவற்றில் பாலத்தை கண்காணிக்கும் காவலர் படைக்கலங்களுடன் நின்றிருந்தனர்.

மரப்பட்டைகள் பரப்பப்பட்ட பாலத்தில் ஒரேசமயம் பத்து வண்டிகளும் ஐம்பது புரவிகளும் மட்டுமே செல்லவேண்டுமென அதன் நுழைவாயிலில் நின்ற சுங்க மண்டபத்தின் பலகை அறிவித்தது. காவலர் ஒவ்வொரு வண்டியையும் புரவியையும் எண்ணி ஏற்றிவிட்டனர். மறுபக்கம் ஒருவண்டி பாலத்தைவிட்டு இறங்கியதும் அங்கிருந்த காவலர் ஒரு சரடை இழுக்க நுழைவாயிலில் மணி ஒன்று அடித்தது. அதைக்கேட்டபின்னரே காவலன் இன்னொரு வண்டியை பாலத்தில் நுழைய விட்டான்.

கொடிப்பாலத்தில் ஏறியதுமே குதிரை சற்று மிரண்டு கனைத்தது. படகில் நிற்பதுபோல ஓர் அசைவு இருந்துகொண்டே இருந்தது. கீழே பெருகிச்சென்ற அசிக்னியை நோக்கியபோது அடிவயிற்றை அச்சம் கவ்விக்கொண்டது. ஆற்றின் நடுவே பாலம் ஊசல்போலவே ஆடியது. காவலர் முகங்களில் அச்சமும் உவகையும் கலந்த கிளர்ச்சி தெரிந்தது. மீண்டும் தேவதாருக்காட்டுக்குள் நுழைந்து இருண்ட தழைச்செறிவைக் கடந்து அடுத்த பாலத்தில் ஏறிக்கொண்டனர். ஏழாவது பாலத்தைக் கடந்து குறுங்காட்டுக்குள் நுழைந்து மறுபக்கம் உறுதியான மண்மேல் அமைந்த மரச்சாலையில் ஏறியபோது உள்ளத்தில் ஆட்டமிருந்தமையால் உடல் திகைத்தது.

மரப்பாதை வடக்குக் கோட்டைவாயிலை நோக்கி சென்றது. அங்கிருந்து நோக்கியபோது அசிக்னி வடக்கிலிருந்து வழிந்து வளைந்து கிழக்காக கோட்டையை வளைத்துப் போவதை காணமுடிந்தது. அதன் நீர்ப்பெருக்கின் மேல் சகலபுரியின் துறைமுகம் கால்கள் ஊன்றி நீட்டி நின்றது. ஆழமற்ற நீரில் செல்லும் சிறிய படகுகள் துறைமேடையை ஒட்டி கொடிகள் படபடக்க நின்றிருந்தன. அங்கிருந்து எழுந்த ஒலிகள் மூட்டமாக இறங்கியிருந்த வான்குளிருக்குள் அழுந்தி ஒலித்தன.

சகலபுரியின் வடக்குக் கோட்டை முகப்பு அணுகும்தோறும் அதன் பேருருவம் கண்முன் எழுந்து வந்தது. மரங்களின் முதல் கிளைப்பிரிவே தலைக்கு மிக உயரத்தில் எங்கோ இருந்தது. மாலையாகிக்கொண்டிருந்தமையால் அங்கே பறவைகளின் ஒலிகள் சேரத்தொடங்கியிருந்தன. கோட்டை வாயிலில் பெரிய அகழி இருந்தது. சகலபுரியின் மண் மென்மையான வண்டலால் ஆனது என்பதனால் அதன் கரைகள் செங்குத்தாக இல்லாமல் சதுப்புபோல கரைந்து சரிந்து சென்றிருந்தன. அகழிக்குள் நிறைந்திருந்த நீரின் கரைகளில் முதலைகள் கரையொதுங்கிய காட்டுமரச்செத்தைகள் போல நெருக்கமாக படுத்திருந்தன. சேற்றுநிறம் கொண்ட அவற்றின் சரல்முதுகின்மேல் சிறிய பறவைகள் எழுந்தும் அமர்ந்தும் சிறகடித்தன.

அகழிக்குள் மரங்களை நட்டு அவற்றை பலகைகளால் இணைத்து பாலம் கட்டியிருந்தனர். அந்தப்பாலத்துக்கு அப்பால் திறந்திருந்த கோட்டைவாயில் தடித்துருண்ட பெருமரங்களின் இடைவெளி வழியாகச் சென்ற பாதையை காட்டியது. கோட்டைக்கு வாயிலென ஏதுமிருக்கவில்லை. “இதை மூடுவதில்லையா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஒவ்வொருநாளும் மூடுவதில்லை இளவரசே. போர் என்றால் பெரிய மரங்களைக்கொண்டு விரைவில் மூடிவிடமுடியும்” என்றான் காவலன்.

காட்டுக்குள் நுழைவதுபோலவே பசுமையின் குளிரும் ஈரத்தின் மணமும் வந்தன. மரங்களின் அடித்தடிகளில் படிந்த பாசியின் மணமும் பூசணத்தின் மணமும் எழுந்தன. கோட்டைக்காவலரின் மாடங்கள்கூட மரங்களுக்குமேல் இரண்டாள் உயரத்தில்தான் அமைந்திருந்தன. மூங்கிலேணிகள் வழியாகவே அவர்கள் ஏறி இறங்கினர். உள்ளே இருளாக இருந்தமையால் பந்தங்கள் எரிந்தன. கீழே பெருகிச்சென்ற நீரில் செவ்வொளி அலையடித்தது. காவலர் நோக்கி அனுப்புவதற்காக காத்திருந்த புரவிகளில் ஒன்று பொறுமையிழந்து கால்களை மிதித்து கனைத்தது. ஓர் அத்திரி சிறுநீர் கழித்தது.

கோட்டைக்காவலர்தலைவன் தன் மாடத்திலிருந்து இறங்கிவந்து பூரிசிரவஸ்ஸை வாழ்த்தினான். “இளவரசே, தங்கள் வருகைக்காக அரண்மனை காத்திருக்கிறது. இளவரசர் ருக்மரதரும் அமைச்சர் சுதீரரும் அரண்மனை முற்றத்தில் தங்களை வரவேற்பர்” என்றான். பூரிசிரவஸ் இருண்டிருந்த கோட்டைவாயில் வழியாக சென்று மறுபக்கம் திறந்த நகர்முற்றத்தை அடைந்தபோது கண்களுக்குள் ஒளி பெருகியதைப்போல் உணர்ந்தான். ஆனால் விரைந்து அந்தி சரிந்துகொண்டிருந்தது. தரை நீர் பரவி வானை காட்டியமையால்தான் அந்த வெளிச்சம் என அவன் உணர்ந்தான்.

நகர் முழுக்க மரப்பட்டைகளால்தான் சாலை அமைக்கப்பட்டிருந்தது. நகரெங்கும் ஊறிப் பெருகிய சிற்றோடைகள் இணைந்து ஒளியாக வழிந்தோடி கான்கோட்டையை ஊடுருவி மறுபக்கம் அசிக்னி நோக்கி சென்றன. அப்போதுதான் அந்த கான்கோட்டையின் பணி அவனுக்குப்புரிந்தது. வேறெந்த கோட்டையாக இருந்தாலும் நகரில் பெருகும் அந்த நீரை தடுக்கமுயன்று வலுவிழக்கும். கட்டடங்கள் அனைத்தும் வலுவான மரங்களை நட்டு அதன்மேல் இரண்டாள் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தன. மூங்கில் ஏணிகளில் மக்கள் ஏறியிறங்கிக்கொண்டிருந்தனர். அரசப்பெருவீதி ஒரு காட்டுப்பாதை போல இருபக்கமும் எழுந்த மரங்களின் கிளைகள் வந்து கூரையிட நீண்டு சென்றது.

அங்காடித்தெருவும் சாலமரங்களுக்கு மேல்தான் அமைந்திருந்தது. தரைத்தளத்தில் மரப்பட்டைக்கூரைகள் இடப்பட்ட சிறிய விற்பனை நிலைகள் மட்டுமே இருந்தன. பண்டகசாலைகள் மரங்களுக்குமேல் மரப்பட்டைக் கூரைகளுடன் கோட்டைபோல சூழ்ந்து வளைந்து சென்றன. பூரிசிரவஸ் வியப்புடன் அந்தக் கானகநகரை நோக்கியபடி சென்றான். பெருமழைக்காலத்தில் அசிக்னி பெருகி நகரில் நிறையும் என உணரமுடிந்தது. அப்போது படகுகள் வழியாக தொடர்புகொள்வார்கள் என எண்ணியதுமே மென்மரங்களில் குடையப்பட்ட சிறிய படகுகள் ஒவ்வொரு வீட்டிலும் மரக்கிளைகளில் கட்டிவைக்கப்பட்டிருப்பதை கண்டான். அப்போது சகலபுரி மிதக்கும் நகரமென நீருக்குமேல் நின்றிருக்கக்கூடும்.

இறுதிவணிகவாரம் என்பதனால் அங்காடித்தெருவெங்கும் அத்திரிகளும் கழுதைகளும் சுமைவண்டிகளும் நிறைந்திருந்தன. வணிகம் முன்னரே முடிந்துவிட்டிருந்தது. விலங்குகள் கொண்டுவந்த பொருட்களை மேலே கொண்டுசென்றுகொண்டிருந்தனர். அதற்கும் விலங்குகளையே பயன்படுத்தினர். விலங்குகள் வடங்களை இழுக்க சகடை வழியாக சென்ற அவற்றை மறுபக்கம் சாய்வான பாதையாக மேலேறிச் சென்ற மரப்பாதையில் உருளைச்சகடங்களுடன் இருந்த பொதிவண்டிகள் தூக்கி மேலேற்றிக்கொண்டுசென்றன. மேலே நின்ற வீரர்கள் கூச்சலிட்டபடி தூக்கி பண்டகசாலைக்குள் உருட்டிச்சென்றனர். ஒழிந்த பொதிவண்டிகள் மறுபக்கம் சகடங்கள் தடதடக்க இறங்கி வந்தன.

இருள் விரைவிலேயே கவிந்துவிட்டது. இல்லங்களும் அங்காடிகளும் பந்தங்களாலும் விளக்குகளாலும் ஒளிகொண்டன. நகரமே மரக்கூட்டங்களுக்குள் இருந்தமையால் குளிர்காற்று பெரும்பாலும் தடுக்கப்பட்டிருந்தது. மரங்களின் தழைப்புக்குள் இருள் குளிருடன் கலந்து தேங்கி எடைகொள்ளத்தொடங்கியது. சகலபுரத்தின் ஆலயங்கள் கூட மரங்களுக்குமேல்தான் அமைந்திருந்தன. நூற்றுக்கணக்கான வெண்கல மணிகள் சூழ்ந்து தொங்கிய ஏழன்னையர் ஆலயத்தில் பூசகர் சுடராட்டு செய்யத்தொடங்கினார். மணிகளின் பேரொலி சூழ அன்னையர் விழியொளிர நோக்கி அமர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து நகரமெங்கும் பல்வேறு ஆலயங்களில் மணிகள் முழங்கத்தொடங்கின.

அரசப்பெருவீதியின் முடிவில் ஓங்கிய தேவதாருக்கூட்டத்தின் மேல் அரண்மனைகள் அமைந்திருந்தன. அவற்றின் அத்தனை சாளரங்களும் நெய்விளக்குகளாலும் பந்தங்களாலும் ஒளிபெற காலைவானில் எழுந்த செம்முகில் போலிருந்தது அரண்மனைத்தொகை. அண்ணாந்து நோக்கியபடியே செல்லச்செல்ல அது எப்படி இயன்றது என்ற வியப்பே அவனுள் நிறைந்திருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட மரக்கட்டடங்கள் தேவதாரு மரங்களுக்குமேல் அமைந்திருந்தன. முதன்மையாக இருந்த மாளிகை ஏழடுக்கு கொண்டது. இருபக்கமும் மூன்றடுக்கு மாளிகைகள் இரண்டு இருந்தன.

அரண்மனைக்குக் கீழே சாலமரங்களை இணைத்துக்கட்டப்பட்ட உட்கோட்டைவாயிலின் முன்னால் ருக்மரதனும் சுதீரரும் அவனுக்காக காத்திருந்தனர். நெய்ப்பந்தங்கள் ஏந்திய காவலர் இருபக்கமும் வர முரசுகளும் கொம்புகளும் மணிகளும் முழங்க அவர்கள் வந்து அவனை எதிர்கொண்டனர். காவலர்களும் ஏவலர்களும் அவனை வாழ்த்தி குரலெழுப்பினர். அவன் புரவியிலிருந்து இறங்கியதும் ருக்மரதன் வந்து “வருக! பால்ஹிகரின் வருகையால் சகலபுரி உவகைகொள்கிறது” என்று முகமன் சொல்லி அணைத்துக்கொண்டான். அவன் சுதீரரை வணங்கி முகமன் சொன்னான். அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு மரப்படிகளில் ஏறி மேலே மாளிகைமுகப்புக்கு சென்றனர்.

அத்தனை மாளிகைகளும் கயிறுகளால் கட்டி இணைக்கப்பட்ட மரப்பலகை இடைநாழியால் இணைக்கப்பட்டிருந்தன. மரங்கள் காற்றிலாடுவதற்கு இடமளிப்பதற்காக அவை நெகிழ்வாகவே கட்டப்பட்டிருந்தமையால் பெரிய மரக்கலமொன்றில் நின்றுகொண்டிருக்கும் உணர்வையே பூரிசிரவஸ் அடைந்தான். “மேலே முதன்மை மாளிகையின் பெருமண்டபத்தில் அரசவை கூடியிருக்கிறது. தந்தையார் தங்களை தூதர்மாளிகைக்கு கூட்டிச்சென்று நீராடி உணவருந்தவைக்கும்படி என்னிடம் ஆணையிட்டார்” என்றான் ருக்மரதன். “தாங்கள் விரும்பினால் இன்றே அவையில் கலந்துகொள்ளலாம். இல்லையேல் நாளை காலை நிகழும் பொதுக்குடியவையில் கலந்துகொள்ளலாம்.”

“நான் இன்றே வந்துவிடுகிறேன். அரைநாழிகையில் நீராடி உடைமாற்றிவிடுவேன்” என்றான் பூரிசிரவஸ். “நான்குநாட்களாக அரண்மனை களிவெறியில் இருக்கிறது இளவரசே. இரவும் பகலும் மறைந்துவிட்டன” என்றார் சுதீரர். “இந்த நாட்கள் மத்ரவரலாற்றில் என்றும் நினைக்கப்படும். அஸ்தினபுரிக்கு மத்ரநாட்டு இளவரசி மணமகளாகச் செல்வதென்பது நல்லூழ் அன்றி வேறென்ன?” அத்தனை ஒலிகளும் நின்று செவிகளை உள்ளிருந்து அழுத்தும் அமைதி ஒன்று தன்னுள் எழுந்ததை உணர்ந்த பூரிசிரவஸ் அதை தன்னுள் அடக்கி முகத்தை இயல்பாக வைத்தபடி “நல்ல செய்தி... இளவரசி என்றால் யார்?” என்றான்.

“இதென்ன வினா பால்ஹிகரே? மத்ரநாட்டின் முதன்மை இளவரசி உத்தரமத்ரத்தை ஆளும் தியுதிமானரின் மகள் விஜயை அல்லவா?” என்றார் சுதீரர். “அஸ்தினபுரியில் இருந்து விதுரரே அரசப்படைகளுடனும் மங்கலப்பரிசுகளுடனும் நேரில் வந்து பாண்டுவின் மைந்தர் சகதேவனுக்காக விஜயையை மகற்கொடை கேட்டார். மறுசொல் சொல்ல என்ன இருக்கிறது. அவரது முறைப்பெண் அல்லவா விஜயை? கவர்ந்துசெல்லவும் உரிமை உண்டென்றல்லவா நூல்கள் சொல்கின்றன?" என்றார் சுதீரர். “செய்தியைக் கேட்டதுமே அரசர் அரியணைவிட்டு எழுந்து இரு கைகளையும் விரித்துக்கொண்டு விதுரரை நோக்கிச் சென்று மத்ரம் மூதாதையரால் வாழ்த்தப்படுகிறது என்று கூவினார். அப்போதே இடப்பக்கம் திரும்பி அடைப்பக்காரனின் கையில் இருந்து வெற்றிலையையும் மஞ்சளையும் வாங்கி விதுரருக்கு கையளித்து மணவுறுதியும் செய்துகொண்டார்.”

சுதீரர் மிகநுட்பமாக அச்சொற்களை அமைக்கிறார் என பூரிசிரவஸ் உணர்ந்தான். இயல்பாக எழும் சொற்களென ஒலித்தாலும் அவை சொல்லவேண்டிய அனைத்தையும் முன்வைத்தன. “செய்தியறிந்த கணம் முதல் மத்ரநாட்டில் அடுப்புகள் தோறும் இனிப்புகள் வேகின்றன. மதுக்குடங்கள் அனைத்தும் வெளிவந்துவிட்டன. அடுத்த முழுநிலவுநாளில் மணம்கொள்ள சகதேவர் வரப்போவதாக இன்று செய்தி வந்திருக்கிறது. அதற்கு பால்ஹிக நாட்டரசர்கள் அனைவரும் வரவேண்டுமென அரசர் விழைகிறார். மணச்செய்தி வந்த நாளிலேயே தாங்களும் வந்திருக்கிறீர்கள் என்பதைப்போல நன்னிமித்தம் இருக்கமுடியாது” என்றார் சுதீரர். “வருக இளவரசே, தங்களுக்காக அவை காத்திருக்கிறது.”

“பால்ஹிகநாடுகள் அனைத்தும் பெருமைகொள்ளும் தருணம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இது எங்கள் அனைவருக்கும் காப்பாகவும் மதிப்பாகவும் அமையும். இளவரசி நம் குடிகளைக் காக்க பிறந்த திருமகள். அவர்களைக் கண்டு முதல் வாழ்த்துரைக்க எனக்கு நல்லூழ் அமைந்தது உவகையளிக்கிறது. பால்ஹிகர்களின் சார்பாக ஒரு நற்பரிசையும் அவருக்கு அளிக்க விழைகிறேன்.” சுதீரர் “அவைக்குப்பின் தாங்களே இளவரசியை சந்திக்கலாம் இளவரசே” என்றார்.

பகுதி 13 : பகடையின் எண்கள் - 5

படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன் அவனுடைய வருகையை சொன்னதும் சுதீரர் அவனை அவைக்கு அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே அவைபுகுந்து தலைவணங்கினான். அவைநடுவே சல்லியர் அரியணையில் அமர்ந்திருக்க அருகே இடப்பக்கம் அவரது பட்டத்தரசி விப்ரலதை அமர்ந்திருந்தாள். வலப்பக்கம் நிகரான அரியணையில் த்யுதிமான் இருக்க அவருக்கு மறுபக்கம் அவரது பட்டத்தரசி பிரசேனை அமர்ந்திருந்தாள். அவைமுகப்பில் ருக்மாங்கதனும் ருக்மரதனும் இருந்தனர். சுவடிகளை ஏந்திய இரு எழுத்தர் இருபக்கமும் நிற்க நடுவே பேரமைச்சர் திரயம்பகர் அமர்ந்திருந்தார். நாற்குடித்தலைவர்களும் வணிகர்களுமாக முழுமையாகவே அவை நிறைந்திருந்தது.

பூரிசிரவஸ் சல்லியருக்கு முறைப்படி வாழ்த்துக்களை தெரிவித்து தலைவணங்கினான். சல்லியர் நகைத்து மீசையை நீவியபடி “அஸ்தினபுரியின் அணுக்கம் உன்னை வாழ்த்துரைகளிலும் வணக்கங்களிலும் தேர்ச்சிகொள்ளச் செய்துள்ளது இளையோனே. விரைவிலேயே நீ ஒரு சூழ்மதியாளனாக அங்கே அமர்ந்திருப்பாய் என எண்ணுகிறேன்” என்றார். அந்தச் சொற்களிலிருந்த மென்மையான நஞ்சை உணர்ந்தாலும் பூரிசிரவஸ் புன்னகையுடன் “மலைமகன் ஒருவன் அடைவது அனைவரும் அடைவதல்லவா? அரசரின் வாழ்த்துரை என்னை முன் செலுத்தட்டும்” என்றான். சல்லியர் “என் வாழ்த்து உன்னுடன் எப்போதுமுண்டு பால்ஹிகனே” என்றார்.

”நான் அஸ்தினபுரியின் அரசகுடியிடம் செய்துகொண்ட சொல்லொப்புதலை முறைப்படி அறிவிக்கும்பொருட்டு வந்தேன் அரசே” என்றான் பூரிசிரவஸ். “நான் சென்றது பால்ஹிகக்கூட்டமைப்பின் பொருட்டு என்பதனால் அதை தலைவராகிய உங்களுக்கு அறிவிப்பது என் கடமை.” சல்லியர் கண்களில் சிரிப்புடன் “சொல்” என்றார். பூரிசிரவஸ் முறைமைசார்ந்த சொற்களில் சந்திப்பையும் புரிதல்களையும் சொல்லிமுடித்தான். “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் என்பதையும் அவருக்கே பால்ஹிகக்குடிகள் கட்டுப்பட்டவை என்பதையும் அவரிடம் நான் தெரிவித்தேன். மலையரசுகள் பத்தும் அவருக்குக் கரங்களாக அமையும் என்றேன். அது முன்னரே தாங்கள் தலைமை அமர்ந்து எனக்கிட்ட கட்டளை.” அவன் கைகூப்பி அமர்ந்துகொண்டான்.

மீசையை நீவியபடி சற்றே விழிசரிய த்யுதிமான் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து “புதிய செய்திகளை அறிந்திருப்பீர்” என்றார். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அது மத்ரநாட்டுக்கு நலம் பயப்பது”. சல்லியர் விழிகள் இடுங்கின. “பால்ஹிகக்குடிக்கே நலம் பயப்பது என்பது என் எண்ணம். நம் குடிகளில் ஒன்றில் அஸ்தினபுரி மீண்டும் மணம் கொள்வதைப்போல மதிப்புமிக்கது பிறிதென்ன?” திரும்பி அவையை நோக்கியபின் “ஆகவே மலைக்குடிகள் பத்தும் பாண்டவர்களுக்கு கடன்பட்டுள்ளன. நாம் அஸ்தினபுரியின் குடிகள் அல்ல, இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள்” என்றார்.

பூரிசிரவஸ் ”தங்கள் ஆணைப்படி அமைந்த பால்ஹிகக்கூட்டமைப்பின் குரலாக நான்...” என்று தொடங்க “இளையோனே, பால்ஹிகக்கூட்டமைப்பு இன்றில்லை. நான் அதைவிட்டு விலகிய செய்தியை அறிவித்துவிட்டேன். சௌவீரம் என் தலைமையை ஏற்றுக்கொண்டதாக இரண்டுநாட்களுக்கு முன்னரே தெரிவித்துவிட்டது. சகர்களும் துஷாரர்களும் ஒப்புக்கொண்டசெய்தி இன்று வந்தது. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். எஞ்சியிருப்பவற்றில் பெரிய நாடு பால்ஹிகமும் யவனமும்தான். யவனர்களுக்கு வேறுவழி இல்லை. அவர்கள் கரபஞ்சகம் கலாதம் குக்குடம் துவாரபாலம் ஆகிய நான்கு பால்ஹிக மலைக்குலங்களை நம்பி வாழ்பவர்கள். அந்த மலையூர்களுக்கெல்லாம் எனது வீரர்களை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் பணிந்தாகவேண்டும்” என்றார் சல்லியர்.

புன்னகையுடன் “ஆகவே எஞ்சியிருப்பது பால்ஹிகநாடு மட்டுமே. உங்களுக்கும் வேறுவழியில்லை. அதை தெளிவாக சலனிடம் சொல்ல எங்களுக்கு தூதன் தேவைப்பட்டான். எவரை அனுப்பலாமென்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் நீயே கிளம்பிவரும் செய்தி வந்தது. உனக்காகத்தான் காத்திருக்கிறோம். நிலைமையை நீ உன் மூத்தவனிடம் உரிய சொல்கோத்து விளக்கு. பால்ஹிகர் ஒன்றாக ஆவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இனி வாய்க்கப்போவதில்லை” என்றார் சல்லியர். பூரிசிரவஸ் அவையை நோக்கினான். அத்தனை முகங்களிலும் இருந்த மெல்லிய புன்னகையைக் கண்டு திரும்பி “தாங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கைக்கு பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் மத்ரரே. தாங்கள் என் தந்தைக்கு நிகரானவர். ஆகவே இது என் கடமை” என்றான்.

“பால்ஹிகக்குடிகள் ஒன்றாவது நிறைவளிக்கிறது. ஆனால் சிம்மத்தால் உண்ணப்படும் ஆட்டுக்குட்டிகள் சிம்மங்களாகின்றன என்ற கதையை பால்ஹிகநாட்டுச் சிறுவர்கள் நம்பமாட்டார்கள்.” அவையெங்கும் படர்ந்த மெல்லிய அதிர்ச்சியை பூரிசிரவஸ் கண்டான். அவன் உள்ளத்தில் உவகை எழுந்தது. “ஆம், நான் என் தமையனிடம் இவையனைத்தையும் சொல்லவிருக்கிறேன். ஆனால் அவர் பால்ஹிகநாட்டை ஆள்பவர். என் தந்தைக்கு நிகரானவர். அவர் ஒருபோதும் சொல்பிழைக்கமாட்டார். பால்ஹிகநாட்டின் பொருட்டு நான் அளித்த சொல் என் தந்தையின் சொல்லும் என் தமையனின் சொல்லும் ஆகும். மலைகளில் சொல் பொன்னுக்கு நிகரானது என்பார்கள். எங்கள் கருவூலச்சேமிப்பு வெறும் களிமண்ணாக ஆகிவிடுவதை எந்தை விரும்பமாட்டார்.”

சல்லியர் கண்கள் இடுங்கி விழிகளே தெரியாமலாயின. அவையினர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. “இளையோனே, நீ சொல்வதை நான் ஏற்கிறேன். சொல்லை முதன்மையாகக் கருதுவது உயர்பண்பு. ஆனால் இங்கே நாங்கள் வில்லையும் இணையானவையாக எண்ணுகிறோம்” என்றார் சல்லியர். அவையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. ”ஆம், மத்ரநாட்டு விற்களும் அம்புகளும் மிகச்சிறந்தவை என அறிவேன். நெடுங்காலம் அவற்றைத்தான் நாங்கள் வாங்கிக்கொண்டிருந்தோம். இப்போது அவற்றைவிடக் கூரிய வில்லம்புகளை கூர்ஜரத்திலும் சிந்துவிலும் செய்கிறார்கள். நாங்கள் அங்கிருந்து வாங்குவது மேலும் எளிது.”

“நேராக அசிக்னி வழியாகவே கூர்ஜரம் செல்லமுடிகிறது. சிந்துவை அடையமுடிகிறது. நட்பின்பொருட்டே இன்னமும் அப்பாதையை தெரிவுசெய்யாமலிருந்தோம்” பூரிசிரவஸ் சொன்னான். “ஆனால் வணிகமென்பது இருவழி அல்லவா? அவ்வழியைத் தெரிவுசெய்தால் எங்களுக்கு அஸ்தினபுரி மேலும் அண்மையாகிவிடுகிறது. ஏனென்றால் கூர்ஜரமும் சிந்துவும் அஸ்தினபுரிக்கு அண்மையானவை. அவற்றின் வழியாகவே நாங்கள் அஸ்தினபுரிவரை வணிகப்பாதையை கண்டடையமுடியும். எல்லாவகையிலும் அது பால்ஹிகநாட்டுக்கு ஏற்றது..”

சல்லியரின் இடுங்கிய விழிகளை நோக்கி அவன் தொடர்ந்தான் “துஷாரர்களையும் யவனர்களையும் அசிக்னியுடன் இணைக்கும்பாதைகள் அனைத்தும் பால்ஹிகமண்ணில்தான் உள்ளன. அவர்களின் வணிகம் எங்களிடம்தான் சிறப்பாக நிகழமுடியும். பால்ஹிகமலைக்குடிகள் குருதிவழியில் எங்களுக்கு மிக அண்மையானவர்கள். எங்கள் வழியாக அஸ்தினபுரியிடம் வணிகம் செய்யவே அவர்கள் விழைவார்கள். பிற வணிகங்களை நாங்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள்.” அவன் தலைவணங்கி அவையை நோக்கி “வணிகம் என்பது குடிமக்களின் பொருட்டே என பால்ஹிகர் நம்புகிறார்கள். ஆகவே மத்ரநாட்டிடமும் எங்கள் வணிகம் இனிதாக அமையவேண்டுமென்பதே எங்கள் எண்ணம் “ என்றான்.

அவை விரைத்ததுபோல் அமர்ந்திருந்தது. சல்லியர் எந்த அசைவும் இல்லாமல் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் சற்று நிமிர்ந்தபோது அவ்வொலி அவை முழுக்க கேட்டது. ”ஆகவே வணிகத்தை கூர்மையாக்கவே முயல்கிறீர்கள் அல்லவா?” என்றார். ”ஆம், அரசே. வணிகம் என்பது எப்போதும் இருசாராருக்கும் நலம் பயக்க வேண்டும் அல்லவா?” தலைவணங்கி “சிம்மத்திடம் வணிகம்செய்ய ஆடுகள் முன்வரா என்பது உண்மையே. ஆனால் சிம்மம் புதருக்குள் நின்றிருக்கும் வேங்கையை ஆடாக எண்ணிவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?” என்றான்.

சல்லியர் சட்டென்று புன்னகை மலர்ந்து “இளையோனே, நீ சொல்வல்லவன். ஏற்கிறேன். நேரடியாகவே கேட்கிறேன். என் இளையோன் மகளை பாண்டவன் மணக்கிறான். குருதியுறவு இது. என் படைகளைத் துணைக்க படையனுப்பக் கடமைகொண்டவர்கள் அவர்கள். உங்களுக்கு ஏன் அஸ்தினபுரியின் கௌரவர் படையனுப்பி உதவ வேண்டும்? உன்னை மூத்த கௌரவன் தழுவிக்கொண்டான் என்பதனாலா? இல்லை அவன் ஊணறையில் உனக்கு ஊனுணவும் யவன மதுவும் தன் கைகளாலேயே பரிமாறினான் என்பதற்காகவா?” என்றார்.

விரைந்தோடிக்கொண்டிருக்கையில் கால்தடுக்கப்பட்டதுபோல பூரிசிரவஸ் உணர்ந்தான். விழுந்து உருண்டு நெடுந்தொலைவுக்குச் சென்று எழுந்து திகைத்து நின்றான். மதிசூழ்மொழி அதற்குரிய உள்ளொழுங்கை அடைந்ததும் மிக எளிதாக ஆகிறது. அடிப்படையான சில சொற்குறிகளைக் கொண்டு ஒரு தனிமொழியாக அதை வளர்த்து வளர்த்து பேசிக்கொண்டே செல்லமுடிகிறது. அதை அடைந்ததுமே வரும் தன்னம்பிக்கையாலும் அதை கையாளும் உவகையாலும் நெடுந்தொலைவுக்கு தன்னை மறந்து சென்றுவிட்டோம் என அறிந்தான். அந்த விரைவின் நடுவே நேரடியான வினாவை வைத்து சல்லியர் எளிதில் தன்னை வீழ்த்திவிட்டிருக்கிறார்.

“சொல் இளையோனே, எதற்காக உன்னைக் காக்க அஸ்தினபுரி வரவேண்டும்?” என்று சல்லியர் மேலும் கேட்டார். அவை நகைக்கத் தொடங்கியது. அந்த ஒலியலையை தன்னைச்சூழக் கேட்டபடி பூரிசிரவஸ் ஏதோ சொல்ல வாயெடுத்தான். எண்ணங்கள் முழுமைகொள்ளவில்லை. “நீ அவர்களுக்கு உதவுவாய், அல்லது கப்பம் கட்டுவாய் என்பதற்காகவா?” உண்மையில் அதைத்தான் அவன் சொல்வதாக இருந்தான். சல்லியர் தந்தைக்குரிய கற்பிக்கும் குரலில் “நீ இன்னும் முதிராதவன். கேள், பேரரசுகள் ஒருபோதும் தங்கள் சிற்றரசுகளின் பூசல்களில் தலையிடாது. அப்படி தலையிடத்தொடங்கினால் அவற்றின் படைகள் நாடெங்கும் சிதறிப்பரந்துவிடும். சிற்றரசுகள் தங்களுக்குள் மோதி அவற்றில் ஒன்று வல்லமை கொள்ளும் என்றால் அதையே அவை விரும்பும். ஏனென்றால் அதை மட்டும் வெல்வதும் கப்பம் கொள்வதும்தான் எளிது” என்றார்.

அவை இப்போது வாய்விட்டு சிரிக்கத் தொடங்கியது. ஆனால் சல்லியரின் முகம் மாறிக்கொண்டே சென்றது. குரல் ஓங்க “ஆகவே, பால்ஹிகர்களுக்கு தலைவன் யாரென்பது முடிவாகிவிட்டது. ஒரு கோட்டைகூட இல்லாத பூர்வபால்ஹிகம் எங்களை எதிர்த்து ஒருநாள்கூட போரிடமுடியாது. உன் தமையனிடம் சொல், அனைத்தும் முடிவாகிவிட்டது என்று” என்றார். அவை அமைதியாகியது அவரது விழிகளில் வந்த ஒளியைக் கண்டு பூரிசிரவஸ் அஞ்சினான். “இன்னும் எட்டுநாட்களில் இங்கே இளவரசிக்கு கன்யாசுல்கம் அளிக்க இளையபாண்டவர் வருகிறார். அப்போது பால்ஹிகர்கள் உரிய திறைகளுடன் வந்து அவைபணியவேண்டுமென ஆணையிடுகிறேன்” என்றார் சல்லியர்.

“இளையோனே, அந்த ஆணை இன்றே பறவைத்தூதாக பால்ஹிகபுரிக்கு அனுப்பப்படும். அதற்குப் பணிவதாக உன் தந்தையின் ஓலை நாளை மறுநாள் பறவைவழியாக இங்கு வந்தாகவேண்டும். எந்த அரசனின் ஆணையும் வாளுடன் பிணைக்கப்பட்டது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. உன் தந்தையின் தலையை சகலபுரியின் கோட்டைவாயிலில் கட்டித்தொங்கவிட நேர்ந்தால் மிக வருந்துபவன் நானாகவே இருப்பேன்.” அச்சொற்களுக்குப்பின் அவர் அவற்றை மீண்டும் தன் சித்தத்தில் ஓட்டி சற்று தணிந்தார்.

“அவர் என் நண்பராக சென்ற நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருபவர். முதன்முறையாக என் இருபத்திரண்டுவயதில் பால்ஹிகர்களின் எருதுவிழாவுக்குச் சென்றபோது அவரும் நானும் அறிமுகமானோம். புரவியில் ஏறி மலைச்சரிவுகளில் விரைந்திறங்குவதில் எங்களுக்கிடையே போட்டி இருந்தது. அன்றைய சோமதத்தரை நான் இன்றும் நினைத்திருப்பதனாலேயே இத்தனை மென்மையான சொற்கள். பொதுவாக இது என் இயல்பல்ல.” சல்லியரின் இதழ்கள் கேலியாக வளைந்தன. ”உன் தந்தைக்கும் பட்டத்து இளவரசனுக்கும் நான் இங்கிருந்து ஐம்பது பீப்பாய் உயர்தர மதுவை அனுப்புகிறேன். எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவர்கள் குடிக்கட்டும்” என்றபின் மெல்ல எழுந்துகொண்டார். அரசியரும் தியுதிமானும் எழுந்துகொண்டனர்.

அரியணையருகே நீண்டு கிடந்த மேலாடையை இழுத்து தோளில் அணிந்தபடி மீண்டும் தந்தைக்குரிய புன்னகை மலர்ந்த முகத்துடன் “ஆனால் நீ பயின்று சொன்ன மதிசூழ்சொற்களை விரும்பினேன். அவற்றை நீ இந்த அவையில் சிற்றரசனாக அமர்ந்துகூட சொல்லலாம். உரியமுறையில் பரிசும் பெறமுடியும்” என்றபின் திரும்பினார். அவை மீண்டும் சிரிக்கத்தொடங்கியது. சல்லியர் சுதீரரிடம் “ஓலையை இப்போதே எழுதிவிடுங்கள் அமைச்சரே. என் அறைக்குக் கொண்டுவாருங்கள், முத்திரையிடுகிறேன்” என்றார்.

பூரிசிரவஸ் பதற்றத்துடன் எழுந்து திரும்பி மத்ரநாட்டு அவையை நோக்கிவிட்டு உடல் துடிக்க விழிதிருப்பிக்கொண்டான். “அரசே” என அழைத்தபின்னரே சொல்லப்போவதென்ன என அவனே அறிந்தான். “பாண்டவர்களில் இளையவரின் இரண்டாம் துணைவியாக தங்கள் மகள் ஆவது அனைத்துவகையிலும் தங்கள் தகுதிக்குரியது. அதற்காக பால்ஹிகனாக நானும் மகிழ்கிறேன். இளவரசிக்கு நான் கொண்டுவந்திருக்கும் பரிசில்களை அளிக்க எனக்கு அனுமதியளிக்கவேண்டும்” என்றான். சல்லியரின் விழிகள் சுருங்கின. “இளவரசி இங்கே கற்றுக்கொண்ட கல்வியும் கலைகளும் பாஞ்சாலன் மகளை மகிழ்விக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.”

சல்லியர் அந்தச் சொற்களால் புண்பட்டது முகம் சிவந்ததில் தெரிந்தது. ஆனால் அதன்மேல் ஒரு புன்னகையை பற்றவைத்துக்கொண்டபடி “உண்மை, பால்ஹிகப்பெண் குருகுலத்தின் அரசியாக ஆவது என்பது நல்லூழே. ஏனென்றால் அவள் இங்கே பேரரசியாவாள். அவள் காலடியில் தங்கள் முடிவைத்து வணங்கி பால்ஹிக மன்னர்கள் திறைசெலுத்துவார்கள். பால்ஹிகநாடுகளை இணைக்கும் மையவிசையாக அவள் திகழவேண்டுமென்பதே இறையாணை போலும்” என்றார். பூரிசிரவஸ் “ஆனால் அவர்கள் அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் அல்லவா இருந்தாகவேண்டும்? எளியவர்கள் அவர்களை சந்திக்க முடியாதல்லவா?” என்றான். சல்லியர் கைவீசி ”வந்துசெல்லலாம்... உன் கோரிக்கையை அவளிடம் சொல்கிறேன்” என்றார்.

“ஆம், அது நன்று. இதற்காகத்தான் பேரரசுகளின் இளவரசிகளை வெளியே மணம் புரிந்து அனுப்புவதில்லை. அவர்கள் தங்கள் பிறந்தநாட்டிலேயே வாழ்கிறார்கள். அரசாள்கிறார்கள். அதன்பொருட்டுத்தான் அவர்களுக்கு மிகச்சிறிய சிற்றரசிலிருந்துகூட மணமகனை பார்க்கிறார்கள்...” என்றான் பூரிசிரவஸ். அவை முழுமையாகவே உறைந்துவிட்டதை அவன் திரும்பாமலேயே அறிந்தான். சல்லியரின் முகம் அவரை மீறி கோணலாக இழுபட்டது. பூரிசிரவஸ் “தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அரசே. குருதியுறவுக்காக மட்டுமே பேரரசர்கள் உதவுவார்கள். ஆனால் குருதியுறவுகள் எங்கே எப்படி மலருமென அறியமுடியாதல்லவா?” என்றான்.

அனைத்தும் முடிந்துவிட்டது என உணர்ந்ததும் பூரிசிரவஸ் ஆறுதலையும் பதற்றத்தையும் ஒருங்கே உணர்ந்தான். அவன் விழிகள் சல்லியரின் ஒவ்வொரு மயிர்க்காலையும் என கூர்ந்து நோக்கின. சல்லியர் அரைக்கணம் தன் இளையவனை நோக்கினார். பின்பு “ஆம், அதை புரிந்துகொண்டேன். அனைத்தையும் நோக்கி முடிவுசெய்வோம்” என்று சொல்லி புன்னகைசெய்தார். பூரிசிரவஸ் தலைவணங்க “நீடூழி வாழ்க” என்று வாழ்த்தியபின் திரும்பி நடந்துசென்றார். அவர் செல்வதை அறிவிக்கும் முரசுகளும் கொம்புகளும் முழங்கின. அகம்படியர் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர் செல்லும் வழியை ஒருக்க வீரர்கள் ஓடினார்கள். தியுதிமான் “நலம்பெறுக” என பூரிசிரவஸ்ஸை வாழ்த்திவிட்டு திரும்பிச்சென்றார்.

அவை கலைவதை பூரிசிரவஸ் வெறுமனே நோக்கி நின்றான். அவன் உடலும் உள்ளமும் ஓய்ந்திருந்தன. ஒவ்வொருவராக அவனை வணங்கி முகமன் சொல்லி பிரிந்துசென்றனர். ருக்மரதன் அவனருகே வந்து “பால்ஹிகரே, இரவு நெடுநேரமாகிறது. தாங்கள் துயிலாமல் வந்திருக்கிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “துயில் இனிமேல் வருமென நினைக்கிறேன்” என்றான். ருக்மரதன் “நீங்கள் பேசிக்கொண்டது என்ன என்றே எனக்குப்புரியவில்லை. ஆனால் தந்தைக்கு நிகராக நீங்கள் நின்றுபேசியதைக் கண்டு திகைத்தேன். அஸ்தினபுரியினரிடம் சென்று நிறைய கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் புன்னகையுடன் “நாளை காலை அவைகூடுவதற்கு முன்னதாக நான் இளவரசியைக் கண்டு என் பரிசில்களை வழங்கவேண்டும். அவைக்கு வந்து விடைபெற்று நான் பால்ஹிகபுரிக்கு மீள்கிறேன்” என்றான். திரும்பி சகனை நோக்கி போகலாமென தலையசைத்தான்.

மாளிகைக்குச்செல்லும் மரப்பாதையில் நடந்தபோது மதுமயக்கிலிருப்பதாகத் தோன்றியது. காற்றிலாடும் மரங்களின் மேல் பாதை ஆடுவதனால்தான் என விளங்க சற்றுநேரமாகியது. செல்லச்செல்ல உடலின் எடை கூடிக்கூடி வந்தது. அறைக்குச் சென்று அப்படியே படுக்கையில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். உடலெங்கும் ஓடிய குருதி விரைவழிந்து மெல்ல அடங்குவதை உணர்ந்தபோது எங்கோ சிட்டுக்குருவி சிறகடிப்பதை கேட்டான். சிட்டுக்குருவியா என வியந்து கொண்டாலும் அவன் படுத்தபடியேதான் இருந்தான். மீண்டும் சிட்டு சிறகடித்தது. அவனருகே வந்து சிறகொதுக்கி அமர்ந்து மணிமூக்கைத் தூக்கி மெல்ல ரீக் ரீக் என்றது.

”பாலையில் சிறிய சிட்டுக்கள் உண்டு” என்று தேவிகை சொன்னாள். அவள் அறைக்குள் நின்றிருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். எழுந்தமர முடியாமல் உடல் எடைகொண்டு குளிர்ந்திருந்தது. “அவை விடியற்காலையில் மட்டுமே வெளிவரும். விரைவிலேயே புல்மணிகளை உண்டுவிட்டு முள்மரங்களின் நிழலுக்குள் சென்று ஒடுங்கிவிடும். இரவும் பகலும் பெரும்பாலான நேரம் அங்குதான் இருக்கும். நீங்கள் கேட்டிருக்கலாம். அவை இடைவெளியின்றி பூசலிட்டு ஒலித்துக்கொண்டிருக்கும்.” அவன் “ஆம், ஒருமுறை பார்த்திருக்கிறேன்” என்றான். “சிலசமயம் ஓநாய்கள் காற்றில் எம்பி எழுந்து அவற்றை கவ்விக்கொள்வதுண்டு. ஓநாய் அவற்றை வேட்டையாடுவது வெறும் சுவைக்காக மட்டுமே. ஓநாயின் ஒருவாய் உணவாகக்கூட அவை அமைவதில்லை.”

“ஆம், மிகச்சிறியவை” என்று அவன் சொன்னான். “நான் மூத்தவளை அழைத்துக்கொண்டு வந்தேன். அவள் உங்களிடம் ஏதோ பேசவிழைகிறாள்” என்றாள் தேவிகை. “யார்?” அவன் படுத்தபடியே கேட்டான். தேவிகை திரும்ப அங்கே துச்சளை நின்றுகொண்டிருந்தாள். ”படுத்துக்கொள்ளுங்கள்” என்று அவள் சொன்னாள். “வாள்புண் மிக ஆழமானது. ஆறுவதற்கு நெடுநாளாகும்.” பூரிசிரவஸ் “வாள்புண்ணா? எங்கே?” என்று கேட்டதும்தான் தன் வலதுகை வெட்டுண்டிருப்பதை கண்டான். “எங்கே?” என்று அவன் கேட்டன். “இங்கு போரில் கையை வெட்டும் வழக்கம் உண்டு. ஆனால் விரைவிலேயே கைகள் முளைத்துவிடும்....” துச்சளை சிரித்தபடி வந்து கட்டிலில் காலடியில் அமர்ந்தாள். “அறிந்திருப்பீர்கள், கார்த்தவீரியரின் ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டிக்குவித்தார்.”

பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “அதன்பின் யாதவர்கள் அனைத்துப்போர்களிலும் கைகளை வெட்டுவதை ஒரு பழிதீர்த்தலாகவே கொண்டிருக்கிறார்கள்.” “ஏன்?" என்றான். “அவர்கள் பழிதீர்ப்பது தெய்வத்தை“ என்று அவள் கரியமுகத்தில் வெண்பற்கள் தெரிய சிரித்தாள். “நான் விரைவில் நலமடைய விழைகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நலமடைந்தாகவேண்டும் இளவரசே. நமது மணநிகழ்வுக்கு ஓலை எழுதப்பட்டுவிட்டது. மூத்தவர் அதை விதுரரிடம் அளித்துவிட்டார். ஆனால் அங்கநாட்டரசர் அதை ஏற்கவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பினர் ஒருங்குகூடி வந்து கேட்டாலொழிய மகற்கொடை அளிக்கலாகாது என்கிறார்.” பூரிசிரவஸ் “அவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். மத்ரநாட்டுடன் அல்ல. அவர்களை நான் அழைத்துவரமுடியும்” என்றான்.

“இல்லை இளவரசே, சௌவீரநாட்டு சுமித்ரர் தங்கள் ஒருமை மத்ரநாட்டுடன்தான் என அறிவித்துவிட்டார். சகநாட்டு அரசர் பிரதீபனும் கலாத குடித்தலைவர் சுக்ரரும் துவாரபால குடித்தலைவர் துங்கரும் இன்னமும் மறுமொழி கூறவில்லை.” பூரிசிரவஸ் "அது எளியதே. நான் என் தூதர்களை நேரடியாக சென்று பேசவைக்கிறேன்” என்றான். “அதை விரைந்துசெய்யுங்கள்” என்றாள். “இங்கிருந்த சிட்டுக்குருவி எங்கே?” என்றான் பூரிசிரவஸ். “சிட்டுக்குருவியா? இது இரவு. சிட்டுகள் வருவதில்லை.” “தேவிகை அதைப்பற்றித்தானே சொன்னாள்?” என்றான். “இளவரசே, தேவிகை என்பவள் யார்?” என்று துச்சளை கேட்டாள். “நான் இறந்துவிட்டேனா?” என்றான் பூரிசிரவஸ் தொடர்பின்றி. “இல்லை. நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள். படைக்கலத்தால் உங்கள் தலை வெட்டுண்டிருக்கிறது.”

பூரிசிரவஸ் திகைத்து “தலையா?” என்றான். “ஆம் தலைமட்டுமே இப்போது படுக்கையில் இருக்கிறது.” பூரிசிரவஸ் தன் முழு உடலும் குளிர்ந்து நடுங்குவதை தலை தனியாக அமர்ந்து பார்ப்பதை உணர்ந்தான். சிட்டுக்குருவி சிறகடித்தது. ரீக் ரீக் என்றது. அது எவரோ மரப்பலகை முனக மெல்ல காலெடுத்துவைக்கும் ஒலி. அவன் புலனுணர்வுகள் ஒரே கணத்தில் விழித்துக்கொண்டன. எழுந்து படுக்கையில் அமர்ந்து வலக்கையை வாள் நோக்கி நீட்டி “யார்?” என்றான்.

கதவு மெல்ல ரீக் என்ற ஒலியுடன் திறந்தது. அங்கு நின்றிருந்த பெண்ணின் ஆடைநுனி மெல்ல காற்றில் படபடத்தது. “இளவரசே, நான் அணுக்கச்சேடி கனகை. தங்களிடம் இளவரசி பேச விழைகிறார்.” “யார்?” என்றதுமே உணர்ந்துகொண்டு பூரிசிரவஸ் எழுந்து நின்றான். “இவ்வேளையிலா?” என்றான். “அவர் அருகே சிற்றறையில் இருக்கிறார். தங்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார்.” பூரிசிரவஸ் தன் வாயை துடைத்துக்கொண்டு “இதோ” என்றான். நெகிழ்ந்திருந்த கச்சையை முறுக்கிக்கொண்டு குவளையிலிருந்து நீர் அருந்திவிட்டு “செல்வோம்” என்றான்.

இடைநாழி காற்றில் மிதந்துகொண்டிருந்தது. மரங்களின்மேல் நகரம் அமைவதற்கான இன்னொரு பொருத்தப்பாடும் தெரிந்தது. இலைகளிலிருந்து எழுந்த நீராவியால் கீழிருந்து மெல்லிய வெம்மை வந்துகொண்டிருந்தது. பனிக்காற்றை மரக்கிளைச்செறிவு பெரும்பாலும் தடுத்துவிட்டது. தாய்ப்பறவையின் சிறகுச்செறிவுக்குள் என அரண்மனைத்தொகை அமைந்திருந்தது. காற்றில் மாளிகைகளும் படிகளும் அசைந்து முனகிக்கொண்டிருந்தன. குறட்டைவிட்டு அவை துயில்வதுபோல தோன்றியது. பெரும்பாலான சாளரங்கள் அணைந்து இடைநாழிகளில் மட்டும் சிறிய நெய்விளக்குகளின் ஒளி எஞ்சியிருந்தது. செந்நிற விண்மீன்கள் என அவை நிழல்முகில்குவைகளாகத் தெரிந்த காட்டுக்குள் இமைத்துக்கொண்டிருந்தன.

சிற்றறைக்குள் அவன் சென்றதும் கனகை மரப்பட்டைக்கதவை மூடினாள். உள்ளே சாளரத்தின் அருகே நின்றிருந்த விஜயை திரும்பி “இளவரசே” என்றாள். ”நலமா இளவரசி?” என்றான். “அவையில் திரைக்குள் நானும் இருந்தேன். தாங்கள் பேசியதை கேட்டேன். நான் அங்கு பேச அவையொப்பு இல்லை. தங்களிடம் பேசியாகவேண்டுமென விழைந்தேன். நள்ளிரவுக்குப்பின் இப்படி சந்திப்பது முறையல்ல. இதைநான் செய்வேன் என எவரும் இங்கு எதிர்பார்க்கமாட்டார்கள். ஆகவே எவருமறியாமல் சந்திக்கமுடியும் என நினைத்தேன்.” பூரிசிரவஸ் “ஆம், இளவரசி. இது முறையானதல்ல. பிறர் அறிந்தால் இருவருக்கும் இழிவே” என்றான். “என் நெறிபற்றி எவருக்கும் நான் விளக்கமளிக்கவேண்டியதில்லை. அதைப்பற்றி முதல் ஐயக்குரல் எழுமென்றால் இரண்டாம்குரல் ஒலிக்க நான் உயிருடனிருக்கமாட்டேன்” என்றாள் விஜயை. பூரிசிரவஸ் பதறி “அவ்வாறல்ல” என்றான்.

மெல்லிய நெய்யகல் ஒளியில் அவளை நன்கு பார்க்கமுடியவில்லை. அவளுடைய மிகச்சிறிய மூக்கும் கொழுவிய கன்னங்களும் கோடுவளைவுகளாக தெரிந்தன. செந்நிறமான பட்டாடை படபடத்தபடியே இருந்தது. அறைக்குள் ஒரு சிட்டுக்குருவி அஞ்சி நிலையழிந்து சுற்றிவருவதைப்போலவே பூரிசிரவஸ் உணர்ந்தான். “நான் தங்களிடம் அன்று பேசியதை நினைவுறுகிறீர்களா?” என்று விஜயை கேட்டாள். “நினைவுறமாட்டேன் என எண்ணுகிறீர்களா இளவரசி?”. என்றான் பூரிசிரவஸ். “மறக்கவே வாய்ப்பு. அஸ்தினபுரியின் இளவரசிக்கு தாங்களே அணுக்கமானவர் என்று அறிந்தேன். அதை இன்று தங்கள் சொல்லால் உறுதியும் செய்துகொண்டேன்.” பூரிசிரவஸ் “இல்லை, அது...” என தடுமாறி “இளவரசி, உண்மையில் அது நான் மிகையாகச் சொன்னது. மத்ரநாட்டின் ஓலை பால்ஹிகநாட்டுக்கு இன்று சென்றிருந்தால் அனைத்தும் முள்முனைக்குச் சென்றுவிடும். அதைத்தடுக்க எண்ணினேன்” என்றான்.

“ஆனால் அது உங்கள் உள்விழைவே. அது உண்மையும்கூட. அது எதுவோ ஆகட்டும்” என்று விஜயை சொன்னாள். “ஆனால் நான் என் சொல்லை விட்டுவிட விரும்பவில்லை. ஏனென்றால் எத்தனையோ இரவுகளில் அச்சொல்லை நெஞ்சோடு சேர்த்து நான் துயின்றிருக்கிறேன்.” பூரிசிரவஸ் “இளவரசி...” என சொல்ல வாயெடுக்க “நான் வாதிட வரவில்லை. என் நெஞ்சை உரைத்துச்செல்லவே வந்தேன். நான் உங்களை எண்ணி நெஞ்சுருகிவிட்டேன். இனி பிறிதொருவர் தீண்டுவதை எண்ணவும் முடியவில்லை. இந்த அரசு சூழ்தலும் நிலக்கணக்குகளும் எனக்குத்தேவையில்லை. நான் வெறும் பெண். வெறும் காதலி. மனைவியாகவும் அன்னையாகவும் மட்டுமே விழைபவள். நான் இளவரசியே அல்ல. இந்தப் பட்டும் பொன்னும் சத்ரமும் சாமரமும் ஏதும் எனக்குத்தேவையில்லை” என்றாள்.

“நான் கேட்பது என் அன்புக்கான மறுமொழியை மட்டுமே” என்று விஜயை படபடத்த குரலில் சொன்னாள். “பிறிது எச்சொல்லையும் நான் கேட்கவே விரும்பவில்லை.” பூரிசிரவஸ் “இளவரசி, இந்நிலையில் நான் என்ன செய்யமுடியும்?” என்றான். “நீங்கள் வீரர். வீரருக்குரிய வழியொன்றுள்ளது” என்று விஜயை சொன்னாள். “நாளை குடிப்பேரவையில் எங்கள் மலைக்குடியின் மூத்தார் அனைவரும் வந்திருப்பார்கள். அங்கே எழுந்து நின்று என்னை அழைத்துக்கொண்டு போகப்போவதாக அறிவியுங்கள். நான் உடன்படுகிறேனா என்று அவை என்னிடம் கேட்கும். எழுந்து நின்று அன்னைதெய்வங்கள் மேல் ஆணையிட்டு ஆம், உடன்படுகிறேன் என்று நான் சொல்வேன்."

“அதன்பின் அவர்களிடம் இரண்டு வழிகளே உள்ளன. மண ஒப்புதல் அளிப்பது அல்லது எங்கள் குடியில் எவருடனேனும் நீங்கள் இறப்புவரை தனிப்போர் புரியவேண்டுமென கோருவது. எங்கள் குடி இன்னமும் தொன்மையான மலைமக்கள்தான். மலைநெறிகளைக் கடந்து எதையும் செய்ய மூத்ததந்தையாலும் முடியாது. அவர் குடித்தலைவர்களுக்கு கட்டுப்பட்டாகவேண்டும்... இன்று மத்ரநாட்டில் தங்களுடன் போரிட்டு நிற்க இளையோர் எவருமில்லை. வென்று என் கைகளைப்பற்றிக்கொண்டு நகர் நீங்குங்கள். உங்களை எங்கள் குலமே பாதுகாக்கும்...” என்றாள் விஜயை. “எங்கள் குடியிளைஞர்கள் தங்களை கொண்டாடுவர். நாங்கள் இன்னமும் வீரத்தை வழிபடும் பழங்குடியினர்தான்.”

பூரிசிரவஸ் “இளவரசி, சல்லியர் வாளெடுத்தால் அவரை நான் வெல்லமுடியாது” என்றான். “வாளெடுக்க மாட்டார். இளையோனிடம் வாள்பூட்டி அவர் வென்றால் அதைவிட குலத்திற்கு இழிவு பிறிதில்லை. அதை குடிமூத்தார் ஒப்பமாட்டார்கள். பிற எவரும் உங்களுக்கு ஈடில்லை” என்றாள் விஜயை. “ஆம்” என்றான் பூரிசிரவஸ். மேலும் சொல்ல சொற்கள் எஞ்சியிருப்பதுபோலிருந்தது. “அத்துடன் மூத்ததந்தை வாளெடுத்து உங்களை வென்றால் நானும் உங்கள் உடல்மேல் விழுந்து உயிர்துறப்பேன். என் ஆடைக்குள் குறுவாளுடன்தான் அவைக்கே வருவேன். அதையும் நான் அவையில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.”

அவளுடைய ஆடையின் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “அவ்வண்ணமே செய்கிறேன் இளவரசி. நாளை தங்களை அவையில் சந்திக்கிறேன்” என்று சொன்னான். “இளவரசே, நான் பெண்ணாக என்னை எண்ணிய நாள்முதல் அறிந்த பெயர் தங்களுடையது. தங்கள் உருவத்தை ஒரு சூதன் வழியாக பட்டில் வரையவைத்து கொண்டுவந்து வைத்திருக்கிறேன். அதை நோக்கி நோக்கி நான் வளர்ந்தேன்...” என்றபோது அவள் குரல் இடறியது. “என் விழைவை இரு தந்தையரும் அறிவார்கள். சென்றமுறை அங்கே வரும்போது அதை தெளிவாகவே சொன்னேன்.”

“அரசியலில் பெண்களின் விழைவுகளுக்கு இடமில்லை இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “நான் அரசியலை அறியேன். நான் இளவரசி அல்ல. இந்த முடியையும் குடியையும் எப்போது வேண்டுமென்றாலும் துறக்கிறேன். மலைச்சரிவில் மண்குடிலில் உங்களுடன் ஆடுமேய்த்து வாழவும் சித்தமாக இருக்கிறேன்” என்று சொன்னதும் அவள் விசும்பி அழத்தொடங்கினாள்.

அவ்வொலியை கேட்டபடி பூரிசிரவஸ் செயலற்று நின்றான். அவளைத் தொட்டு அணைத்து ஏதேனும் சொல்லவிழைந்தான். ஆனால் அதை முறைமீறலாகவே அவன் நெஞ்சு உணர்ந்தது. பெருமூச்சுடன் “இளவரசி, தாங்கள் நெஞ்சாறவேண்டும். அனைத்தும் செம்மையாக முடியும்” என முறைமைச்சொல் சொன்னான். அவள் தன் மேலாடையால் முகத்தை மூடியபடி நீண்ட பெருமூச்சுகள் விட்டு தன்னை ஆற்றிக்கொண்டாள். “அன்னையர் சொல் துணையிருக்கட்டும்” என்றபின் திரும்பி வாயில் வழியாக வெளியே சென்றாள்.

பகுதி 13 : பகடையின் எண்கள் - 6

காலையில் ஏவலனின் மெல்லிய ஓசை கேட்டு பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். அவன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு தலைவணங்கியபோதுதான் மத்ரநாட்டில் இருப்பதை உணர்ந்தான். தலை கல்லால் ஆனது போலிருந்தது. எழுந்தபின் மீண்டும் அமர்ந்து சிலகணங்கள் கண்களை மூடி குருதிச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். கீழே விழுந்துகொண்டிருப்பதைப்போலவும் வானில் தொங்கி ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் தோன்றியது.

முந்தையநாளிரவு வந்து படுத்தபோது அறைமுழுக்க நீராட்டறைக்குள் இருப்பதுபோல நீராவி நிறைந்திருந்தது. கணப்புக்குள் எரிந்த கனல்துண்டுகளின் ஒளியில் நீராவியை நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சுத்திணறுவதுபோல தோன்றியதனால் காற்றை இழுத்து இழுத்து நெஞ்சை நிரப்பிக்கொண்டான். பின்னர் மெல்ல விழியடங்கி அகம் மயங்கியபோது கீழே விழுந்துகொண்டிருப்பதுபோன்ற கனவு வந்து திகைத்து எழுந்தமர்ந்தான். நீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்தான். மீண்டும் கீழே விழும் கனவு. மாளிகைகள் மரத்தின்மேல் அமைந்திருப்பதனால்தான் அக்கனவு வருகிறதா?

விழித்து மேற்கூரையை நோக்கியபடி படுத்திருந்தான். நீராவி செம்புகை போல கூரைக்குக் கீழே பரவி மறுபக்கம் இறங்கிக்கொண்டிருந்தது. தேவிகையின் நினைவு வந்தது. அவளை துவாரகைக்குத்தான் பீமன் கொண்டுசென்றதாக சொன்னார்கள். பாண்டவர்களும் குந்தியும் முன்னரே துவாரகைக்குச் சென்று காத்திருந்தனர். திரௌபதி மட்டும் காம்பில்யத்திலேயே தங்கிவிட்டாள். பிறந்த நகர் நீங்கி அவள் கால்பதிவது புகுந்த நகராகவே இருக்கவேண்டும் என நிமித்திகர் சொன்னார்கள். தேவிகையை தருமன் மணக்கவேண்டுமென குந்தி ஆணையிட்டதாகவும் துவாரகையின் மணிவண்ணன் ஆலயத்தின் முன்னால் நிகழ்ந்த மணச்சடங்கில் அவளுக்கு தருமன் மாலையிட்டதாகவும் ஒற்றர் செய்தி வந்தது.

கவர்ந்துகொண்டுவரப்பட்ட பெண்ணுக்கு தந்தை கைப்பிடித்துக்கொடுக்கவேண்டிய தேவையில்லை. அவளுக்கு மூதாதையராகவும் கந்தர்வர்களே அமைவார்கள். மணிவண்ணன் ஆலயத்தின் முகப்பிலிருந்த அணிமண்டபத்தை நூற்றெட்டு கந்தர்வர்கள் அலங்கரித்தனர். அங்கே மணம் நிகழட்டுமென யாதவன் சொன்னான். யாதவமூத்தாரும் நகர்ப்பெருமக்களும் சூழ மணம் நிகழ்ந்தது. பின்னர் நகர் முழுக்க விருந்துண்டு களியாடியது. இரவு முழுக்க அனைவருக்கும் வணிகர்களே ஊனும் மீனும் மதுவும் அளித்தனர்.

தேவிகைக்கும் அவனுக்குமான உளத்தொடர்பை பாண்டவர்கள் அறிவார்களா? அவளுக்கு அவன் சொல்லளித்ததை சிபிநாட்டு குலப்பாடகர்கள் சந்தைகளில் பாடுவதுண்டு என்றனர் ஒற்றர். அஸ்தினபுரிக்கு மேலும் திறன் வாய்ந்த ஒற்றர்கள் இருப்பார்கள். அவள் உள்ளத்தை அவள் தந்தையும் தாயும் குலமும் நாடும் பொருட்டாகக் கருதவில்லை. ஷத்ரியர்களுக்கு அது நாற்களத்தின் எளிய காய் மட்டுமே. அவன் நெஞ்சு நெகிழ்ந்தது. என்ன எண்ணியிருப்பாள்? பீமனின் படைகள் சூழ கூண்டுவண்டியில் பிறந்து வளர்ந்த நகரையும் நாட்டையும் விட்டுச் செல்லும்போது திரும்பி நோக்கி ஏங்கியிருப்பாளா?

அவளுடைய நாட்டையே அவள் கண்டதில்லை. சிபிநாட்டின் விரிந்த பாலை நிலத்தைக் கண்டு விழிகள் விரிய வண்டியின் சாளரத்தருகே அமர்ந்திருப்பாள். தொலைதூரத்து பாறைக்குன்றுகள் மெல்லச் சுழன்று மறுபக்கம் செல்வதை, காற்று புழுதியை புகையென பட்டென பறக்கவிடுவதை, இலைகூர்த்த முள்மரங்கள் மணல்காற்றுக்குப் பணிந்து சீறுவதை, அலையலையாக விரிந்த மென்மணல் கதுப்பை நோக்கியிருப்பாள். அள்ளிவிடலாமென அருகே தெரியும் விண்மீன்கள் கீழ்வானில் தோன்றி மெல்ல வானமெங்கும் நிறைந்து கனிந்து கனிந்து உதிர்வன போல நின்று அதிர்வதைக் கண்டபடி வெந்த மணம் வீசும் புழுதிக்காற்றில் தன்னந்தனியாக வண்டியில் அமர்ந்திருக்கையில் அவள் உளமுருகி விம்மியழுதிருப்பாள். அப்போது அவனை நினைத்திருப்பாள்.

அவன் அந்தக்கடிதத்தை ஒருமுறைக்குமேல் வாசிக்கவில்லை. அதை முழுமையாக மறந்துவிடவே அவன் உள்ளம் விழைந்தது. அது எண்ணமாக எழுந்ததுமே அவன் நிகழ்காலத்தின் இருமுனைகளையும் இழுத்து அதை முழுமையாக மூடிக்கொண்டான். அகப்பட்ட அனைத்தையும் அள்ளி அதன்மேல் போட்டுக்கொண்டே இருந்தான். ஆழத்திற்குச்செல்லும்தோறும் அது இறுகி விதையாகியது. ஒளிகொண்டு மணியாகியது. எங்கோ ஏதோ ஓர் அரண்மனை அறையில் அவளும் அப்போது துயிலாமல் அவனை எண்ணிக்கொண்டிருக்கிறாள் என எண்ணியதும் அவனுடைய தடைகளை மீறி கண்ணீர் வழியத்தொடங்கியது. உடல்திரவம் முழுக்க கண்ணீராக வெளியேறுவதுபோலிருந்தது.

விசும்பல்களுடன் அழுது முடித்தபோது அவன் இருளுக்குள் சுருண்டு தன்னை எண்ணி நாணினான். அந்த ஒலியை எவரேனும் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் என எண்ணியதுமே கூசி அதிர்ந்த உடலுடன் எழுந்து அமர்ந்துகொண்டான். பீடத்தில் இருந்த தன் வாளை எடுத்து உறையிலிருந்து உருவி அதன் கூர்முனையை நீவி நோக்கினான். நாளை இதன்மேல் குருதிபடியலாம். அல்லது நாளையுடன் அவன் வாழ்க்கை முடியலாம். சல்லியர் களமிறங்கமாட்டார் என்றே அவனுக்கும் தோன்றியது. ஆனால் அவனை வெல்ல பிறரால் முடியாதென்றும் அவர் அறிந்திருப்பார்.

ஏவலன் விழிகளை நோக்காமல் “என் வாளை கூர்செய்து வைக்கச்சொல்” என்றபின் நீராட்டறைக்குச் சென்றான். நீராட்டறைகளும் பிறவும் தரைத்தளத்தில் அமைந்திருந்தன. இரவில் அவன் துயின்றபின்னர் மழைபெய்திருந்தமையால் தரை நனைந்து நீரூறிக்கொண்டிருந்தது. குளிர்காற்று காடுகளுக்கு அப்பாலிருந்து பொழிந்து மரங்களால் சீவப்பட்டு மென்மையாகச் சுழன்றது. வானில் கதிர் எழுந்திருக்கவில்லை என்றாலும் நகரம் முழுக்க மென்மையான ஒளி நிறைந்திருந்தது. நகரெங்கும் ஓடிய நீரிலிருந்து அவ்வொளி எழுவது போல தோன்றியது.

ஆடைமாற்றிக்கொண்டிருக்கையில் கூர்வாளுடன் முதன்மை ஒற்றன் சகன் வந்து வணங்கினான். அவன் விழிகளை நோக்கியதுமே செய்தி ஏதோ உள்ளது என பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். “புலரிக்கு முன் புறா செய்தியுடன் வந்தது” என்றான். பூரிசிரவஸ் நோக்கினான். அவன் கரியநூல் கட்டிய தோல்சுருளை எடுத்து நீட்டினான். பூரிசிரவஸ் அதை வாங்கி அதில் சலனின் அடையாளத்தை கண்டுகொண்டான். கட்டுகளை அவிழ்த்து சுருளை விரித்து மந்தண எழுத்துக்களில் இருந்த கடிதத்தை வாசித்தான்.

சலன் அவனுடைய வழக்கப்படி சுருக்கமாகவும் ஆணையிடும் தோரணையிலும் எழுதியிருந்தான். அஸ்தினபுரியிலிருந்து துரியோதனனின் நேரடியான கடிதம் பால்ஹிகபுரிக்கு வந்திருக்கிறது. சோமதத்தருக்கு எழுதப்பட்டது. பால்ஹிகபுரியின் அஸ்தினபுரிக்குரிய தூதரை துரியோதனனே நேரில் அரண்மனைக்கு அழைத்து சொல்லி அனுப்பிய அக்கடிதம் பூரிசிரவஸ் உடனடியாக அஸ்தினபுரிக்குச் செல்லும்படி கோரியது. அரசகுல மணநிகழ்வின்பொருட்டு அச்சந்திப்பு என்றும் பிதாமகர் பீஷ்மர் பூரிசிரவஸ்ஸை காணவிழைவதாகவும் துரியோதனன் சொல்லியிருந்தான்.

"இளையோனே, அதன் நோக்கம் தெளிவு. உன்னைப்பற்றி அறிய பிதாமகர் விழைகிறார். அவர் உன்னைப்பார்த்தபின் நீ அஸ்தினபுரியின் மணமகனாவாய். நாம் எதிர்பார்த்திருந்த தருணம். ஆகவே எந்த சொல்லையும் மத்ரர்களுக்கு அளிக்கவேண்டியதில்லை. அனைத்துச் சொல்மாற்றுகளையும் அப்படியே நிறுத்திவிட்டு கிளம்பி அங்கிருந்தே அஸ்தினபுரிக்கு சென்றுவிடு. மீண்டும் இங்குவந்து செல்வது நாள் பிந்தச்செய்வது. மேலும் நீ அங்கிருந்தே அஸ்தினபுரிக்குச் செல்வது அனைத்துவகையிலும் தேவையான ஒன்று” என்று சலன் எழுதியிருந்தான். காய்ந்த மலரிதழ்போன்ற மென்மையான தோலில் நான்குபக்கங்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அனைத்து ஆணைகளும் உறுதியாக இருந்தன.

பெருமூச்சுடன் ஓலையை திரும்பக்கொடுத்துவிட்டு பூரிசிரவஸ் ”தந்தைக்கு நான் ஒரு கடிதம் அளிக்கிறேன். மூத்தவரின் ஆணையை தலைக்கொண்டேன். இன்றே அஸ்தினபுரிக்குக் கிளம்புகிறேன் என்பது செய்தி. துரியோதனரின் அழைப்பு பால்ஹிகபுரிக்குக் கிடைத்ததும், அது அரசமணமுறைக்கானது என்பதும், அதற்கு அவரது வாழ்த்துக்களைக் கோருவதகாவும் அதில் இருக்கவேண்டும். அது பால்ஹிக அரசச்செய்திகளுக்குரிய பொதுவான மந்தணமொழியில் இருக்கட்டும்.” சகன் தலைவணங்கினான். அவன் புரிந்துகொண்டான் என்று தோன்றியது. "எழுதிக்கொண்டுவருகிறேன் இளவரசே. தாங்கள் முத்திரையிட்டதும் புறா உடனே கிளம்பும்" என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

சகன் சென்றபின் பூரிசிரவஸ் படுக்கையிலேயே அமர்ந்துகொண்டு உடைவாளை எடுத்து உருவி அதன் கூரை நோக்கினான். விழிகளாலேயே அதன் முனையை வருடிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு கணத்தில் அப்படியே அதை எடுத்து கழுத்தில் வைத்து இழுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தைக் கண்டு திகைத்து அதை உறையிலிட்டான். ஆனால் அத்தனை எண்ணங்களையும் விலக்கி மீண்டும் அவ்வெண்ணம் எழுந்து வந்து நின்றது. அதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிலமுறை விலகி விலகிச் சென்றுவிட்டு சலிப்புடன் நின்று அதை திரும்பி நோக்கினான். எதற்காக? அவனால் அப்படி செய்துகொள்ள முடியுமா என்ன? போரில் தோல்வியடைந்தால் தன் கழுத்தை தானே வெட்டிக்கொள்ளவேண்டுமென்பது பால்ஹிகக்குடிகளின் நெறி. அதை சுகண்டம் என்று சொல்வார்கள். சுகண்டம். நன்றாக வெட்டப்பட்டது. நல்ல கழுத்து. நன்று... சுகண்டத்தில் இறந்தவன் தன்னை தோற்கடித்த தெய்வங்களை வென்றுவிட்டவன். ஆகவே அவன் களப்பலிவீரனுக்கு நிகரான பலிவழிபாட்டை பெறும் தகுதிகொண்டவன். அதை செய்துகொள்வதற்கான பயிற்சியை பால்ஹிககுலத்தின் படைக்கலப்பயிற்சிகள் அனைத்திலும் அளிப்பார்கள். செய்துகொள்ளமுடியும்தான். ஆனால் அதற்கு அவன் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் வாளை மீண்டும் எடுத்தான் பால்ஹிகநாட்டு வாள்களின் உறைகளுக்குமேல் மலைமுகில்வளைவுகள் செதுக்கப்பட்டிருக்கும். அவன் அவ்வளைவுகள் மேல் விரலோட்டினான். மிகமென்மையான வளைவுகள். முகில்களின் மேல் பறந்தது விரல். ஒருகணத்தில் வாளை ஓசையுடன் உருவி பளபளக்கத் திருப்பி தன் கழுத்தில் வைத்தான். வலப்பக்கப் பெருங்குழாயை தொட்டு அது நின்றது. கட்டைவிரலால் ஒருமுறை அழுத்திக்கொண்டால் போதும். இமையசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். காலடியோசை கேட்டது. அவன் வாளை தாழ்த்தி கட்டிலில் வைத்துவிட்டு கண்களை மூடி தலைகுனிந்தான்.

சகன் சுருள் எழுதிக்கொண்டு வந்திருந்தான். அதை வாங்கி வாசிக்காமலேயே முத்திரையிட்டு திரும்ப அளித்தான். சகன் ஒருகணம் மெத்தைமேல் கிடந்த உருவிய வாளை நோக்கினான். “அரசவை இரண்டுநாழிகைக்குப்பின் கூடுகிறது. அதற்குள் இக்கடிதத்தின் படிவை அவர்கள் எடுத்து படித்திருப்பார்கள்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்து “அவைகூடி ஒருநாழிகை கடந்தபின்னர் நாம் அவைபுகுவோம்” என்றான். சகன் அடுத்து அவன் சொல்லப்போவதற்காக காத்திருந்தான். “நமது படைகள் சித்தமாக உள்ளன அல்லவா?" சகன் ஆம் என தலைவணங்கினான். “அவைக்குச் சென்றதும் நாம் உடனே கிளம்பவேண்டும்.” சகன் “ஆணை" என்றான். அவன் உடலெங்கும் கேள்வி துடித்தது. “அஸ்தினபுரிக்கு" என்றான் பூரிசிரவஸ். அப்போது அவன் குரல் அடைத்தது போலிருந்தது.

சகன் உடல் மெல்ல தளர்ந்ததைக் கண்டதும்தான் அவன் அப்பதிலை எதிர்நோக்கியிருந்தான் என பூரிசிரவஸ் அறிந்துகொண்டான். விழிதூக்கி நோக்கினான். சகன் அப்பதிலால் ஏமாற்றமடைந்ததையும் புரிந்துகொண்டான். “நமக்கு வேறுவழியில்லை” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அஸ்தினபுரியின் ஆணைக்கு பொருள் என்ன என்று எவருக்கும் தெரியும். நான் இங்கு வந்ததும் என்ன செய்யவிருக்கிறேன் என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதை விட்டுவிட்டு செல்லும்படிதான் துரியோதனரின் ஆணை வந்திருக்கிறது.” சகன் விழிகள் மாறவில்லை. “பீஷ்மபிதாமகர் என்னைப் பார்ப்பதுதான் முதன்மையானது என்றால் ஏன் உடனே வரும்படி ஆணையிடவேண்டும்?” சகன் தலையசைத்து “ஆம்” என்றான்.

ஓர் எண்ணம் மின்னிச்செல்ல பூரிசிரவஸ் தலைதூக்கி “நாம் இளவரசியுடன் அஸ்தினபுரிக்கு செல்வோம்” என்றான். சகன் திகைப்படைந்து நோக்கினான் “மத்ரநாட்டு இளவரசியை சகதேவன் கொள்வதைத் தடுக்க எனக்கு வேறுவழி தெரியவில்லை என்று சொல்கிறேன். அதை துரியோதனர் புரிந்துகொள்வார்.” சகன் தெளிந்து புன்னகைசெய்து “ஆம், இளவரசே” என்றான். “இவள் என்ன இருந்தாலும் எளிய மலைமகள். துச்சளைக்கு இரண்டாம் அரசியாக இருக்க இவள் நாணப்போவதில்லை. சிலநாட்களுக்குப்பின் மத்ரநாட்டுடன் பேசி அனைத்தையும் முடிவுசெய்தபின் அவளை இங்கேயே இருக்கச் சொல்லவும் முடியும்.”

சகன் புன்னகையுடன் “ஆம், அது அனைத்துவகையிலும் நல்லதே” என்றான். ”பால்ஹிகக்கூட்டமைப்பு உடையாமல் காப்பது துரியோதனருக்கு தவிர்க்கமுடியாதது. அதைக் காக்கவேண்டுமென்றால் சகதேவன் விஜயையை மணப்பது தடுக்கப்பட்டாகவேண்டும்” என்று மீண்டும் பூரிசிரவஸ் சொன்னான். அதை தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறோம் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சொல்ல எழுந்த உள்ளத்தை கட்டுப்படுத்திக்கொண்டு “அவைபுகும்போது என்னருகே நீர் நின்றிருக்கவேண்டும். உம்மிடமும் வாள் இருக்கட்டும்” என்றான். சகன் தலைவணங்கினான்.

சகன் செல்லும்போது பின்னாலிருந்து அழைத்து “இந்த வாளும் உம்முடன் இருக்கட்டும்” என்றான். சகன் நிமிர்ந்து நோக்க “நான் வாளுடன் செல்வது அவர்களுக்கு வேறுவகையில் பொருள் அளிக்கக்கூடும்” என்றான். சகன் “ஆம்” என்றபின் வாளை வாங்கிக்கொண்டு நடந்தான். அவன் செல்வதையே சிலகணங்கள் நோக்கி நின்றபின் பூரிசிரவஸ் சாளரத்தருகே சென்று கீழே விரிந்த நகரத்தை நோக்கிக்கொண்டிருந்தான். பசுமையாலான நகரம். அப்பால் அசிக்னியில் படகுகள் வெண்பாய்கள் இளவெயிலில் ஒளிவிட மெல்ல சென்றுகொண்டிருந்தன. நகரெங்கும் இருந்து மக்களின் ஒலி எழுந்துகொண்டிருந்தது. இளவெயிலில் மின்னியபடி சில செங்கழுகுகள் நகருக்குமேல் வட்டமிட்டன.

சகன் வந்து வணங்கியபோது பூரிசிரவஸ் ஒரு சொல்பேசாமல் கூடவே சென்றான். அவைபுகுந்தபோதே அனைவர் முகங்களிலும் இருந்த மாறுபாட்டை கண்டுகொண்டான். சுதீரர் வந்து வணங்கி “தங்களுக்காக அவை காத்திருக்கிறது பால்ஹிகரே” என்றார். “அவைச்செயல்பாடுகள் முடியட்டுமே என்று பார்த்தேன் அமைச்சரே. நான் இன்றே பால்ஹிகபுரிக்கு கிளம்புகிறேன். விடைகொள்ளவே அவைக்கு வருகிறேன்” என்றான். அவரது விழிகளில் வந்த மெல்லிய ஒளிமாறுபாட்டைக் கண்டதும் பூரிசிரவஸ் உள்ளூர புன்னகைத்துக்கொண்டான். அவனுடைய புறாச்செய்தி மறிக்கப்பட்டு வாசிக்கப்பட்டுவிட்டது.

அவையில் அவன் நுழைந்தபோது முந்தையநாள் இருந்த ஆரவாரமான வாழ்த்தும் வரவேற்பும் இருக்கவில்லை. அது முன்னரே சொல்லி ஒருங்கமைக்கப்பட்டது. அதனுள் ஒரு மெல்லிய கேலி இருந்தது. இப்போதிருப்பது திகைப்பும் குழப்பமும். பூரிசிரவஸ் சல்லியருக்குத் தலைவணங்கி வாழ்த்துரைத்தான். அவர் முகமனும் வாழ்த்தும் சொன்னார். பிறருக்கும் வாழ்த்துரைத்துவிட்டு அவையின் தென்மேற்குமூலையில் கன்னியர் மாடத்தின் வெண்ணிறத்திரையை ஒருமுறை நோக்கிவிட்டு அமர்ந்துகொண்டான். சுதீரர் அவனுக்கு முறைமைசார்ந்த வாழ்த்துக்களை சொன்னார்.

சல்லியர் “இளையோனே, நீ இன்று பால்ஹிகபுரிக்கு திரும்புகிறாய் என்று நினைக்கிறேன்” என்றார். “உனக்குரிய முறைமைகளை எல்லாம் செய்ய ஆணையிட்டிருக்கிறேன். மத்ரநாட்டின் பரிசுகளை உனக்கு அளிக்கிறோம். என் நண்பர் சோமதத்தரிடம் என் உசாவல்களையும் உன் தமையன் சலனிடம் நான் சொன்ன செய்திகளையும் அறிவி. நலம் திகழட்டும்!” அவரது விழிகள் அவன் விழிகளை சந்தித்தபோது பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் விலகிக்கொண்டு ஒரு பாக்கை எடுத்து வாயிலிட்டார்.

“அரசே, நான் உடனே பால்ஹிகபுரிக்கு செல்லவில்லை. அஸ்தினபுரிக்குத்தான் செல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். சல்லியர் “விந்தையாக உள்ளதே...” என்றார். “நேற்று என் தமையனிடமிருந்து செய்திவந்தது. அஸ்தினபுரியின் இளவரசரின் ஆணை. அரசப்பணி ஒன்றுக்காக நான் விரைந்துசெல்லவேண்டியிருக்கிறது. மீண்டும் பால்ஹிகபுரிக்குச் சென்று திரும்புவது நாள் விரயம்.” சல்லியர் “ஆம், அது உண்மை” என்றார். “அஸ்தினபுரியின் இளவரசரிடம் என் அன்பை தெரிவி. என்ன இருந்தாலும் நானும் அவரும் குருதியுறவு கொண்டவர்கள். அவ்வுறவு மேலும் இறுகவும்போகிறது.” பூரிசிரவஸ் “குருதியுறவுகள் பல திசைகளில் விரிந்துகொண்டிருக்கின்றன அரசே” என்றான். சல்லியர் மீசையை நீவியபடி விழிசுருங்க நோக்கி “ஆம், அது தெய்வங்களின் பகடை” என்றார்.

அவை மெல்ல நெகிழ்ந்தது. அந்த ஒலியை அவன் கேட்டாலும் தலைதிருப்பவில்லை. அவர்கள் காலையிலேயே கேட்டிருந்த செய்தியை உறுதிசெய்துகொண்டுவிட்டார்கள். மேலும் ஒரு சொல் வழியாக முன்னகரலாமா என பூரிசிரவஸ் எண்ணினான். எப்படியாவது துச்சளை என்ற சொல்லை அங்கே உச்சரிக்கலாமா? எண்ணுவதற்குள் சொல்லத்தொடங்கிவிட்டான் “இளவரசர் துரியோதனர் பதவி ஏற்கும்போது தார்த்தராஷ்டிரர் அனைவரும் உடனிருக்கவேண்டுமென்பது காந்தாரியன்னையின் ஆணை. நூற்றுவருக்கும் ஒரே தங்கை இளவரசி துச்சளை. அவளை மணம்புரிந்து மறுநாடு அனுப்புவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.”

அவர்கள் அனைவரின் விழிகளும் அவனை நோக்கி வெறித்திருந்தன. அச்சொற்கள் பொருத்தமின்றி ஒலிக்கின்றன என்று உணர்ந்தான். அவற்றை எப்படி மையப்பேச்சுடன் இணைப்பது என்று புரியவில்லை. “இளவரசர் துரியோதனருக்கும் மணநிகழ்வு ஒருங்குசெய்யப்படுகிறது. அதுகுறித்த பேச்சுக்களில் சொல்கேட்டு துணைநிற்கும் ஒருவனுக்காக அவர் என்னை நாடுகிறார். பால்ஹிகர்களை இறுதிவரை நம்பமுடியுமென அவர் அறிவார்.”

அடுத்த பிடி கிடைத்ததும் அவன் தெளிவடைந்தான். “மேலும் இன்று குருகுலத்தின் முதல்பிதாமகர் எந்தை பால்ஹிகர்தான். அவர் எந்த மலையில் இருக்கிறார் என நானே அறிவேன். பால்ஹிகப்பிதாமகரின் நற்சொல் இன்றி மணநிகழ்வுகளை செய்ய அஸ்தினபுரியின் குடிகள் விரும்பமாட்டார்கள்.” அவன் அகம் உவகையால் எழுந்தது. மிகச்சரியான இடம் என நினைத்துக்கொண்டவனாக “இன்று அஸ்தினபுரியின் இளவரசர்களில் பிரதீபரின் நேரடிக்குருதி என்பது இளவரசர் துரியோதனரே. இன்னொரு கிளைக்குருதி பால்ஹிகருடையது. சந்தனுவின் பெயர்மைந்தரான திருதராஷ்டிரர் பால்ஹிகரை அழைத்துவந்து அஸ்தினபுரியில் நிறுத்த விரும்பியிருக்கலாம். அதன்வழியாக எவர் உண்மையான கொடிவழி என்பதும் நிறுவப்படுகிறதல்லவா?” என்றான்.

சல்லியர் புன்னகை செய்தார். அவனுடைய விளையாட்டை அவர் நன்கு புரிந்துகொண்டதற்கு அடையாளமாக இன்னொரு பாக்கை வாங்கி வாயிலிட்டபடி “ஆம், பால்ஹிகரைத் தேடவே உன்னை வரச்சொல்லியிருப்பார்கள். அவர்களிடம் சொல், பால்ஹிகர் மத்ரபுரிக்கும் முதற்பிதாமகர் என்று” என்றபின் “அஸ்தினபுரிக்கு நீ செல்வதற்கான அனைத்து ஒருக்கங்களும் நிகழட்டும். உனக்கு அனைத்து நலன்களும் கைகூடட்டும்” என்று வாழ்த்தினார். பூரிசிரவஸ் தலைவணங்கி திரும்பி அவையை நோக்கினான். அவர்கள் அவனை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் இறுதியாக ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு செல்வான் என்பதுபோல. எவருக்கும் விஜயையை அவன் சந்தித்தது தெரியவில்லை என்பது தெளிவாக இருந்தது.

“அரசே, என் சொல் பிழை எனில் பொறுத்தருள்க! செல்வதற்கு முன் தங்களிடமும் தங்கள் இளையவர் த்யுதிமானரிடமும் ஒரு சொல் சொல்லவேண்டியிருக்கிறது.” அவையில் இருந்து மூச்சொலியையே கேட்கமுடிந்தது. த்யுதிமானரின் பெயர் சேர்க்கப்பட்டதை அவையில் அனைவருமே கண்டுவிட்டனர். “சொல்” என்றார் சல்லியர். ”சென்றமுறை தாங்களும் இளையோரும் இளவரசியுடன் பால்ஹிகபுரிக்கு வந்தபோது நான் அவரை தனியாக சந்தித்தேன். அப்போது நான் அவருக்கு மணச்சொல் அளிக்க நேர்ந்தது.” அவை முழுக்க எழுந்த கலைந்த குரல்களின் முழக்கத்தில் த்யுதிமானரின் திகைப்பையும் அரசிகளின் பதற்றத்தையும் பார்த்தபடி பூரிசிரவஸ் நின்றான். தன் முகத்தை உணர்ச்சிகளற்றதாக வைத்துக்கொள்ள பற்களை கிட்டித்துக் கொண்டான்.

“சொல்” என இடுங்கிய கண்களுடன் சல்லியர் சொன்னார். அப்போதுதான் பூரிசிரவஸ் ஒன்றை உணர்ந்தான். த்யுதிமானர் முகத்திலும் உடலமைப்பிலும் பீதர்குலத்தவர் போலிருந்தார். சல்லியர் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கூரிய மூக்கும் கொண்டிருந்தார். வேறு எங்கோ அவரை பார்த்திருப்பதாக தோன்றிக்கொண்டே இருந்தது. ”நான் இந்த அவையில் பால்ஹிக குலமுறைப்படி இளவரசிக்கு நானளித்த மணச்சொல்லை நிறைவேற்ற ஒப்புதல் கோருகிறேன்.” சல்லியர் மீசையை வருடியபடி அவனையே நோக்கிக்கொண்டிருந்தார். அவரது விழிகள் இல்லையென்றானதுபோலிருந்தது. “இளவரசியை கைப்பற்றி அழைத்துக்கொண்டு இந்த அவை நீங்கவிருக்கிறேன். குலமூத்தார் பால்ஹிக வழக்கமென்ன என்பதை சொல்லலாம்.”

ருக்மாங்கதன் எழுந்து “அதை நீர் சொன்னால் போதாது பால்ஹிகரே. எங்கள் இளையோள் சொல்லவேண்டும்... இந்த அவை வந்து அவள் சொல்லட்டும்” என்றான். திரைக்குப்பின் இருந்து உரத்தகுரலில் விஜயை “நான் இளவரசரின் சொல் பெற்றது உண்மை. இந்த அவை முன்பு அதை ஆணையிடுகிறேன்” என்றாள். அவை முழுக்க திரும்பி வெண்திரையை நோக்கியது “நான் அவர் கரம்பற்றி அவைநீங்க சித்தமாக இருக்கிறேன்” என்று விஜயை உறுதியான குரலில் மீண்டும் சொன்னாள்.

அவை உறைந்து அமர்ந்திருந்தது. திரைக்கு அப்பால் வளையல் ஒலித்த ஓசை அனைவருக்கும் கேட்டது. அரசி த்யுதிமானின் கைகளை மெல்ல தொட அவர் திரும்பி புருவத்தால் அவளை அடக்கினார். முதியவரான பால்ஹிககுடித்தலைவர் எழுந்து “இளவரசே, நாசிக குலத்தின் தலைவனாகிய நானே இங்குள்ள பால்ஹிக குடிமூத்தாரில் முதியவன். பால்ஹிகமுறைமையை நீரும் அறிவீர். இங்குள்ள குடிகளில் முதன்மை வீரனை நீர் போரில் வெல்லவேண்டும். போர் நிகழும் இடத்தையும், படைக்கலத்தையும் அவனே முடிவுசெய்வான். அவனை வெல்லமுடிந்தால் நீர் எங்கள் குலமகளை கொண்டுசெல்லமுடியும்” என்றார்.

“உங்கள் குடிகளில் போர் அறிந்த இளையோர் பலர் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனக்கிணையான இளவல் ஒருவனை தெரிவுசெய்யுங்கள்” என்றான் பூரிசிரவஸ். உடனே திரும்பி சல்லியர் விழிகளை நோக்கினான். அவர் ஏதோ சொல்லவருவதற்குள் முதியவர் “இளையபால்ஹிகர் வாள்வீரர் என்று அறிந்திருக்கிறேன். வாட்கலை தேர்ந்த வீரர் எம்மிடமும் உண்டு. நினைவுகொள்க இருவர் போரென்பது இறப்பு வரை” என்றபின் திரும்பி அவையை நோக்கி “வாளேந்தப்போவது யார்?” என்றார். அவை முழுக்க அசைவுகள் ஓடின. முதியவர் திரும்பி நோக்க பின்நிரையிலிருந்து ஒருவன் எழுந்தான். உடனே ஏழெட்டுபேர் எழுந்தனர். ருக்மரதனும் எழுந்தான். சகன் வாட்களுடன் பூரிசிரவஸ் அருகே வந்து நின்றான்.

சல்லியர் “இளையோனே, இந்த அவையில் உள்ள அனைவருமே உன்னை வெல்லும் திறன்கொண்டவர்களே” என்றார். “ஆனால் உனது பெயர் பால்ஹிகக்குடியின் தொன்மையான மூதாதை ஒருவருடையது.” அவர் எங்கே செல்லவிருக்கிறார் என்று பூரிசிரவஸ் சித்தத்தால் துழாவினான். தேடாதது சிக்குவதுபோல அவனுள் மின்னலென அது யாரென தெரிந்துவிட்டது. அக்கணமே அவன் “அங்கநாட்டரசர் கர்ணன் ஒருமுறை என்னிடம் இதை சொன்னார்” என்றான். சல்லியரின் உடல் அதிர்வதை மிக அண்மையிலென காணமுடிந்தது. “என்னை அவர் முதிய பால்ஹிகர் என்றே அழைப்பது வழக்கம். இதை அவர் சொன்னபோது அவர் முகமும் இப்படியே இருந்ததை நினைவுகூர்கிறேன்.” சல்லியர் தளர்ந்து மீண்டும் அரியணையில் அமர்ந்தார். நடுங்கும் கைகளை கோர்த்துக்கொண்டார்.

திரும்பி அவையிடம் “என்னிடம் வாள்கோர்ப்பவர் எவரென அவை அறிவிக்கட்டும்” என்றான். ருக்மரதன் “நாம் போர்புரிவோம் இளவரசே” என்று தன் வாளை உருவி முன்னால் வந்தபோது சல்லியர் எழுந்தார். அத்தனை விரைவில் அவர் மீண்டுவிடுவார் என பூரிசிரவஸ் எண்ணவில்லை. திகைப்புடன் திரும்பினான். “இளவரசே, தாங்கள் என் மகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கா செல்லவிருக்கிறீர்கள்?” என்றார் சல்லியர். “ஆம், சிலநாட்கள் நான் அங்கிருக்க எண்ணுகிறேன்.” சல்லியர் அவனை கூர்ந்து நோக்கி இரு அடிகள் எடுத்துவைத்து “அவளை அழைத்துச்செல்ல அவள் முதற்தந்தையாக நான் ஒப்புதலளிக்கிறேன்” என்றார். அவையெங்கும் எழுந்த ஒலியைக் கேட்டு தலைதிருப்பாமல் என்ன நடக்கப்போகிறது என்று பூரிசிரவஸ் சிந்தை கூர்ந்தான்.

“அங்கே அவள் தங்கள் முதன்மை மனைவியாக அமர்வது சகலபுரிக்கு பெருமைசேர்ப்பதென்பதில் ஐயமில்லை” என்றார் சல்லியர். “தாங்கள் ஒரு சொல்லை மட்டும் இந்த அவைக்கு அளித்தால்போதும். எங்கள் குலமகள் உங்கள் அரசியாக அமையவேண்டும். பிறிதொருத்தி அவளுக்குமேல் அமையக்கூடாது.” பூரிசிரவஸ் “அதை நான் இப்போது சொல்லமுடியாது” என்றான். “ஏன் சொல்லமுடியாது?” என உரக்கக் கூவினார் சல்லியர். “நான் இங்கிருந்து சென்று...” என பூரிசிரவஸ் தொடங்க “ஏன் உன்னால் முடியாது என்று நான் சொல்கிறேன். நீ செல்வது அங்கே அஸ்தினபுரியின் இளவரசியை மணமுடிப்பதற்காக. அதன்பொருட்டு பீஷ்மபிதாகமர் உன்னை பார்க்க விழைகிறார். இல்லையென்றால் சொல்” என்றார்.

ஏதும் பேசமுடியாமல் பூரிசிரவஸ் நின்றான். “செல்லும்போது எங்கள் குலமகளை அவளுக்கு சேடியாக அழைத்துச்செல்ல எண்ணுகிறாய். அதற்கு ஒருபோதும் நான் ஒப்பமாட்டேன். இதோ பால்ஹிகக் குடிகளின் பெருஞ்சபை உள்ளது. இவர்கள் சொல்லட்டும். விஜயையை நீ அழைத்துச்செல்ல அவர்கள் ஒப்புவார்களென்றால் அதை நானும் ஏற்கிறேன்.” பூரிசிரவஸ் “ஒப்பவேண்டியதில்லை அரசே. என்னுடன் வாள்போரிட வீரன் எழட்டும். வென்று கொண்டுசெல்ல ஒப்புதல் தேவையில்லை” என்றான்.

சல்லியர் சினத்துடன் சிரித்து “அந்த நெறி என்பது அரசன் ஒருவன் எங்கள் குலமகளை மணந்து தன் அரசியாக கொண்டுசெல்வதற்கு மட்டுமே. அரக்கனோ வணிகனோ அவளை கொள்ளையிட்டுச்செல்லும்போது அந்த நெறி ஒப்புதல் அளிக்காது. எங்கள் குலமகள் தொழும்பச்சியென செல்ல அந்நெறி ஆதரவு கொடுக்காது. அதை எங்கள் அத்தனை படைக்கலங்களும் ஒன்றுசேர்ந்து எதிர்த்து நிற்கும்...” என்றார். அவை முழுக்க எழுந்து தங்கள் வாள்களையும் கத்திகளையும் உருவி மேலே தூக்கி “ஆம் ஆம்” என்று கூவியது.

“இதோ, அவையில் ஒரே உறுதியைத்தான் நாங்கள் கேட்கிறோம். எங்கள் இளவரசிக்கு நீயளித்த சொல் என்ன? அவளை உன் அரசியாக ஆக்குவாய் என்றுதானே?” பூரிசிரவஸ் தலையசைத்தான். “அந்தச்சொல்லை இங்கு மீண்டும் சொல்லி அவளை அழைத்துச்செல்.” பூரிசிரவஸ் மூச்சுத்திணறியவன் போல அவை முன் நின்றான். முதியவர் “அச்சொல் அளிக்கப்படாமல் இங்கிருந்து இளவரசியை கொண்டுசெல்லமுடியாது” என்று கூவினார். அவை முழுக்க அதை ஏற்று கூவியது. “இல்லையேல் ஒன்று செய். சென்று அஸ்தினபுரியின் படையுடன் வா. எங்களை வென்று அவளை கொண்டுசெல். ஆனால் அதற்கு முன் செருகளத்தில் நாங்கள் அனைவரும் குருதிசிந்தி விழுந்திருப்போம்.”

அவை வெறிகொண்டதுபோல கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. சிலர் அவனை நோக்கி வரத்தொடங்க ருக்மரதன் அவர்களை கைவிரித்து தடுத்தான். உருவிய வாளுடன் சகன் அவனுக்கு முன்னால் சென்று அவையை எதிர்கொண்டான். ருக்மாங்கதன் ஆணையிட வீரர்கள் சென்று கன்னிமாடத்தை சூழ்ந்துகொண்டனர். உள்ளிருந்து விஜயை அழைத்துச்செல்லப்பட்டாள். அரசியர் அரியணையிலிருந்து எழுந்து வெளியேறினர். சல்லியர் “அவனை செல்லவிடுங்கள்” என கை காட்டினார். திரும்பி பற்கள் தெரிய சீற்றமா சிரிப்பா என தெரியாத முகத்துடன் “மீண்டும் சந்திப்பது சமர்களத்திலாக இருக்கட்டும் இளையோனே” என்றபின் உள்ளே சென்றார்.

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 1

அஸ்தினபுரியை அணுகுவது வரை முற்றிலும் சொல்லின்மைக்குள் ஒடுங்கியிருந்தான். அவன் புரவி அதையறிந்தது போல எந்த ஆணையையும் அவன் உடலில் இருந்து எதிர்பார்க்காமல் உள்ளத்திலிருந்தே பெற்றுக்கொண்டு முன்னால் சென்றது. முதலிரண்டுநாட்கள் புரவியின் குஞ்சிமயிர் பறப்பதை அதன் இரு செவிகளுக்கு நடுவே இருந்த சதுரம் வழியாகத்தெரிந்த பாதையை மட்டுமே அவன் பெரும்பாலும் பார்த்தான். சப்தசிந்துவின் பச்சைவெளி வந்தபோது அவனையறியாமலேயே தெளிந்து இருபக்கமும் நோக்கத்தொடங்கினான்.

சிந்தையற்று அமர்ந்திருந்தமையால் அவன் உடல் புரவியின் உடலுடன் இணைந்து ஒருமையை அடைந்து பயணம்செய்வதையே உணராமலாகிவிட்டிருந்தது. பகலெல்லாம் சென்றும் அவன் களைப்படையவில்லை. அவனுடைய உடலின் ஒருமையால் புரவியும் களைப்படையவில்லை. நுரைதள்ளிய புரவிகளுடன் வீரர்கள் மூச்சிரைப்பதைக்கண்டு சகனே விடுதிகளில் புரவிகளை நிறுத்த ஆணையிட்டான். பூரிசிரவஸ் அதையும் அறிந்ததாகத் தெரியவில்லை. சத்திரத்தை அடைந்ததும் உணவருந்திவிட்டு அப்படியே படுத்து அக்கணமே அவன் துயிலில் ஆழ்ந்தான். ஆனால் பின்னிரவில் எழுந்த சகன் அவன் படுக்கையில் இருளில் விழிகள் தாழ்த்தி அமர்ந்திருப்பதை கண்டான்.

குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்தமையால் சாலையிலெங்கும் வெயில் தெரியவில்லை. வானம் முகில்படலத்தால் மூடியிருக்க மரங்களின் அடியில் குளிர்ந்த நிழல்கள் பெருகிக்கிடந்தன. சப்தசிந்துவின் மாபெரும் வண்டல்நிலம் ஒற்றைப்பெருவயல்வெளியாக இருந்தது. ஆங்காங்கே வந்த சிறிய உழவர் ஊர்களில் களிமண்ணையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்ட வீடுகளின் மூங்கிலால் ஆன புகைக்குழல்கள் வழியாக எழுந்த அடுமனைப்புகை முகில்மரம் போல கிளைவிரித்து வானில் நின்றது. ஊர்க்காவல்நாய்கள் காவல்தெய்வத்தின் சிற்றாலயங்களில் இருந்து சீறி எழுந்து குரைத்தபடி குதிரைகளைத் தொடர்ந்தோடிவந்து தங்கள் எல்லைகளில் நின்று உறுமி வால்தாழ்த்தி திரும்பிச்சென்றன.

வயல்வெளிகளுக்கு நடுவே வானம் வெளித்துக்கிடந்த நீலச்சுனைகளில் குளிர்காலத்திற்கு வரும் வெண்ணிறமான சாரசப்பறவைகள் வந்திறங்கத் தொடங்கியிருந்தன. நீண்ட கழுத்தும் கரியகூரலகுமாக அவை ஒற்றைக்கால்களில் வரப்புகளில் நின்றிருந்தன. சிவந்த பெரிய கால்களும் வளைந்த அலகுகளும் கொண்ட செங்கால்நாரைகள் சிலவற்றையும் வயல்களில் காணமுடிந்தது. “இம்முறை பறவைகள் முன்னரே வந்துவிட்டன. சாரசங்கள் இமயமுடிகடந்து அப்பால் பீதர்நாட்டிலிருந்து வருபவை. அவை முன்னரே வந்துவிட்டன என்றால் அவ்வருடம் குளிர் மிகையாக இருக்கும் என்பார்கள்” என்றான் சகன். பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை.

சகலபுரியில் இருந்து ஐராவதியைக் கடந்து திரிகர்த்தர்களின் பிரஸ்தலத்திற்கு வந்து தங்கினர். அங்கிருந்து சரஸ்வதியையும் திருஷ்டாவதியையும் யமுனையையும் கடந்து காட்டுப்பாதை வழியாக வாரணவதம் வந்தனர். வாரணவதத்திலிருந்து புரவிகளுடன் வணிகப் படகிலேறிக்கொண்டு ஒரே இரவில் அஸ்தினபுரியை அடைந்தனர். படகில் வணிகர்கள் அவர்கள் அஸ்தினபுரிக்கு செல்கிறார்கள் என்று கேட்டதுமே மகிழ்விழந்தனர். “ஆம், இப்போதெல்லாம் ஏராளமான படைவீரர்கள் பல திசைகளிலும் இருந்து அஸ்தினபுரிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். கேட்டீரா மச்சரே, வேலிபோடத்தொடங்கிவிட்டவனுக்கு காட்டில் முள் போதாமலாகும்” என்றார் ஒருவர்.

சகன் “ஏன்?” என்று அவரிடம் கேட்க “அஸ்தினபுரிக்கு சென்றிறங்கியதுமே அறிந்துகொள்வீர் வீரரே. அங்கே போர் ஒருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த பாரதவர்ஷம் உடன்பிறந்தார் போரைக்கண்டு நீணாள் ஆகிறது. உள்ளிருந்து அழிக்கும் அரசப்பிளவை நோய் அது” என்றார். “அங்கு திருமணம் அல்லவா நிகழ்கிறது?” என்றான் சகன். “நீர் எளிய படைவீரர் என நினைக்கிறேன். வீரரே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். அரசகுடிகளில் போரை உருவாக்கவும் போரைத்தவிர்க்கவும் திருமணமே ஒரே வழி” என்றார் அவர். “என் பெயர் திரிதன். நான் இந்த கங்கைமேல் வணிகம் செய்யத்தொடங்கி ஐம்பதாண்டுகளாகின்றன. என் தாடியின் ஒவ்வொரு மயிரும் ஒரு பெரிய அறிதல். பெரிய அறிதல்கள் அனைத்தும் குருதியோ கண்ணீரோ சிந்தி பெறப்பட்டவை.”

சகன் தன்னுள் மூழ்கி நதிக்கரை காடுகள் நிழலென ஒழுகிச்செல்வதை நோக்கியிருந்த பூரிசிரவஸ்ஸை ஒருகணம் நோக்கிவிட்டு “என்ன நிகழ்கிறது அங்கே?” என்றான். “நீர் சொன்னீரே அதுதான், திருமணங்கள்” என்றார் திரிதர். “சிபிநாட்டு இளவரசி தேவிகையை பீமசேனர் சென்று கவர்ந்துவந்திருக்கிறார். அவளை தருமர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மத்ரநாட்டு இளவரசி விஜயையை சகதேவர் திருமணம் செய்துகொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.” திரிதர் குரல்தாழ்த்தி “பீமசேனருக்கும் நகுலருக்கும் சேதிநாட்டு இளவரசிகளை கேட்டிருக்கிறார்கள். சேதிநாட்டு தமகோஷருக்கு மகள்களை பாண்டவர்களுக்குக் கொடுப்பதில் தயக்கமேதுமில்லை. ஆனால் சிசுபாலர் துரியோதனருக்கு அணுக்கமானவர். அவர் தன் தங்கைகளை துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் மணமளிக்க விழைகிறார்” என்றார்.

சகன் உண்மையிலேயே திகைத்துப்போய் “வணிகர்கள் அறியாத செய்தி ஏதும் அரசவையில் இல்லையென்றல்லவா தோன்றுகிறது?” என்றான். “இன்னும் இருக்கிறது வீரரே. காசிநாட்டரசரின் மகள்களை மணக்க பீமசேனரும் அர்ஜுனரும் விழைகிறார்கள். துரியோதனருக்கும் துச்சாதனருக்கும் அந்த இளவரசிகளை பாண்டவர்கள் மணக்கலாகாதென்ற எண்ணம் இருக்கிறது. உண்மையில் எந்த இளவரசியை எவர் மணக்கப்போகிறார் என்பதில்தான் நாளைய அரசியல் இருக்கிறது. அரசியலை நம்பிதான் வணிகமும் இருக்கிறது. ஆகவே எங்களுக்கு இவற்றையெல்லாம் தெளிவாக அறிந்துவைக்காமல் வேறுவழியும் இல்லை” திரிதர் சொன்னார்.

சகன் சற்று நேரம் கழித்து “என்ன நிகழும்?” என்றான். “எதுவும் நிகழலாம். சிபிநாட்டு இளவரசியை ஜயத்ரதன் மணந்திருக்கவேண்டும். இறுதிக்கணத்தில் பீமசேனர் கவர்ந்துசென்றுவிட்டார். அதை எண்ணி எண்ணி அவர் குமுறிக்கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசியை அவருக்கு அளித்து அவரை அமைதிப்படுத்தலாமென்று காந்தார இளவரசர் சகுனி சொல்கிறார்.” பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். “அதற்கு வாய்ப்புள்ளதா?” என்றான் சகன். “உண்டு. ஆனால் துச்சளையை மணக்க சிசுபாலரும் விழைகிறார். நடுவே ஒரு நிகர்நிலையை உருவாக்குவது மிகக்கடினம். ஆகவே பால்ஹிகநாட்டு இளவரசர் பூரிசிரவஸ் அவளை மணக்கலாமென்று ஒரு சொல்லிருக்கிறது. பூரிசிரவஸ்ஸையே இளவரசி விழைவதாகவும் அஸ்தினபுரியில் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார் திரிதர்.

சகன் பெருமூச்சுவிட்டான். திரிதர் “நடுவே துவாரகை உள்ளது. துவாரகையின் ஆதரவை தங்களுக்கு உறுதிசெய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் பாண்டவர்கள். யாதவ இளவரசி சுபத்ரையை தருமருக்கு அரசியாக்கலாமென்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் யாதவர்கள் பாண்டவர்களின் அரசில் முதன்மைபெறுகிறார்கள் என்ற பேச்சுக்கு அது வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டது. ஆகவேதான் தேவிகையையே அவர் மணக்கட்டும் என அரசி குந்திதேவி முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார்.

சகன் புன்னகையுடன் “அனைத்தும் முழுமையாகக் குழம்பி ஒன்றன் மேல் ஒன்றாகிவிட்டன வணிகரே. நன்றி” என்றான். ”இதை நீர் ஒரு அமைப்பாக பார்க்கவேண்டியதில்லை வீரரே. ஒரு நாற்களத்தில் வைக்கப்பட்டிருக்கும் காய்களாக பாரும். ஆகவேதான் எந்தக்காய் எந்த திசைநோக்கி செல்கிறது என்று விளக்கினேன்” என்றார் திரிதர். ”ஒவ்வொன்றுடனும் மோதும் எதிர்விசை என்ன என்று பார்ப்பது வணிகரின் வழக்கம். அரசியலும் அவ்வாறே புரிந்துகொள்ளத்தக்கது. என் இத்தனைநாள் வாழ்க்கையில் நானறிந்த ஒன்றுண்டு. அரசியலை அரசியலாடும் ஷத்ரியரைவிட வணிகரே நுட்பமாக புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் ஷத்ரியர் தங்கள் மறுபக்கத்தை ஒருபோதும் சரிவர மதிப்பிடுவதில்லை. ஆனால் வைசியர் மறுபக்கத்தின் ஆற்றலைத்தான் முதலில் கருத்தில்கொள்கிறார்கள். மழையை நன்கறிந்திராத உப்புவணிகனை பார்த்திருக்கிறீரா?” சகன் சிரித்துவிட்டான்.

அஸ்தினபுரியின் துறைமுகப்புக்கு சகன் முன்னரே வந்திருந்தான். பூரிசிரவஸ் முதல்முறையாக அதை பார்த்தமையால் விழி வியந்து அண்ணாந்து அமர்ந்திருந்தான். துலாத்தடிகளால் தூக்கப்பட்ட பெரிய பொதிகள் வானிலெழுந்து சுழன்று சென்றன. யானைகள் போல உடலாட்டியபடி பெரிய கலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருக்க அவற்றின் மேல் செம்பருந்துகள் அமர்ந்து சிறகடிப்பதுபோல கொடிகள் பறந்தன. பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்ட பெருங்கலங்களின் தட்டில் சிந்திய மணிகளுக்காக பறந்தமைந்த புறாக்களின் குரல்கள் வடங்கள் இறுகி நெகிழும் ஒலியுடன் இணைந்து ஒலித்தன.

மாலை வந்துகொண்டிருந்தமையால் நீர் கருமை கொள்ளத் தொடங்கியிருந்தது. பொதி ஒன்று தலைக்குமேல் பறந்துசெல்வதைக்கண்டு பூரிசிரவஸ் முதல்முறையாக வாய்திறந்து “கருடன் மலைகளை தூக்கிக்கொண்டு செல்வதைப்போல” என்றான். “இளவரசே, துவாரகையில் இதைப்போல நூறுமடங்கு பெரிய பொதிகளைத் தூக்கும் துலாக்கள் உள்ளன. நானே கண்டிருக்கிறேன்” என்றான் சகன். “கலங்களையே தூக்கிவிடுவார்களா?” என்றான் பூரிசிரவஸ் கேலியாக. “இளவரசே, உண்மையிலேயே கலங்களைத் தூக்கி மறுபக்கம் வைக்கிறார்கள்” என்று சகன் மறுமொழியுரைத்தான். பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்கிவிட்டு மீண்டும் துலாக்களை நோக்கினான்.

அவர்கள் கரையிறங்கியபோது துறைக்காவலர்தலைவனும் சுங்கநாயகமும் வந்து வணங்கி வரவேற்றனர். பூரிசிரவஸ் கங்கையின் விளிம்பிலமைந்திருந்த இரு சிற்றாலயங்களை நோக்க “அவை அம்பை அன்னையின் ஆலயமும் அவள் அணுக்கன் நிருதனின் ஆலயமும். குகர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். அவர்களில் அம்பை, நிருதன் போன்ற பெயர்களை நீங்கள் நிறையவே காணமுடியும்” என்றார் சுங்கநாயகம். “காசிமன்னன் மகள் அம்பை அல்லவா?” என்றான் பூரிசிரவஸ். “அவர்களேதான். இங்கு குகர்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு முடியிறக்கி காதுகுத்துகிறார்கள். குகர்களின் ஊர்களில் எல்லாம் இவ்விருவரின் இறைப்பதிட்டைகள் உண்டு” என்றார் காவலர்தலைவன்.

அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட தோரணவாயிலைக் கடந்து புரவிகளில் செல்லும்போது பூரிசிரவஸ் மீண்டும் அமைதிகொண்டான். சாலையைக் கடந்து இரு கீரிகள் ஒன்றையொன்று துரத்திச்சென்றன. ”இருள்வதற்குள் சென்றுவிடமுடியுமா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “இருட்டிவிடும், குளிர்காலம் அல்லவா?” என்றான் சகன். அவர்கள் அஸ்தினபுரியை அடைந்தபோது இருட்டு பரவிவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பை முதலில் நோக்கியபோது பூரிசிரவஸ் ஏமாற்றத்தை அடைந்தான். அது உயரமற்றதாகத் தெரிந்தது. அதன் மரத்தாலான காவல்மாடங்களில் பந்தங்கள் எரிந்தன. கோட்டைவாயிலுக்குள் நிரைநிரையாக வணிகவண்டிகளும் தேர்களும் காவல்புரவிகளும் சென்றுகொண்டிருந்தன.

கோட்டை கரியபாறையடுக்குபோல தோன்றியது. அவன் எண்ணத்தைப்புரிந்துகொண்ட சகன் “மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. அன்று பாரதவர்ஷத்தின் உயரமான கோட்டை இதுவே. தலைமுறைகள் கடந்துவிட்டன. இன்று இதைவிடப்பெரிய கோட்டைகள்தான் அனைத்து பெருநகர்களிலும் உள்ளன” என்றான். பூரிசிரவஸ் கோட்டையை நோக்கியபடியே அதன் நுழைவாயிலை நோக்கி சென்றான். பெருமுரசு முழங்கியதும் நகருக்குள் வெவ்வேறு காவல்மாடங்களில் முரசுகள் முழங்கும் ஒலி கேட்டது. “இது கட்டப்படும்போது கங்கை இங்கே ஒழுகியது. இன்று அந்தத்தடம் புராணகங்கை என்று அழைக்கப்படுகிறது” என்றான் சகன்.

“இங்குமட்டும் எப்படி கோட்டை களிமண்மேல் நிற்கிறது?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “தெரியவில்லை. இந்தக் கோட்டைக்கு அடியில் உறுதியான பாறை இருக்கலாம். அல்லது வேறேதேனும் அமைப்பு இருக்கலாம். ஆனால் அஸ்தினபுரி ஏழு ஆமைகளால் மண்ணுக்கு அடியில் தாங்கப்படுகிறது என்பது இங்குள்ள நம்பிக்கை” என்றான் சகன். அவர்கள் நெருங்கிச்சென்றபோது கோட்டைக்கு மேல் காவலர்தலைவன் தோன்றி அவர்களை நோக்கினான். பால்ஹிகர்களின் மறிமான் கொடி கோட்டைமேல் ஏறியது. அணிமுரசு முழங்க கொம்புகள் பிளிறத்தொடங்கின.

கோட்டைவாயிலில் காவலர்தலைவன் வந்து அவர்களை வாழ்த்தும் முகமனும் சொல்லி வாள்தாழ்த்தி வரவேற்றான். ”இளவரசே, தாங்கள் தேரில் செல்லலாம்” என்றான். “இல்லை, நான் அங்கிருந்தே புரவியில்தான் வந்தேன்” என்றான் பூரிசிரவஸ். அவன் தலைவணங்கினான். நகர்த்தெருக்களில் அந்தி மூடிவிட்டிருந்தது. அங்காடிகளிலும் இல்லமுகப்புகளிலும் நெய்விளக்குகளும் ஊன்நெய்விளக்குகளும் மீன்நெய் விளக்குகளும் எரிந்தன. “அஸ்தினபுரியின் தெருக்களில் என்றும் திருவிழாதான் என்பார்கள்” என்றான் சகன். “இங்கு மக்களே பெரும்பாலான பொருட்களை வாங்கிவிடுகிறார்கள். சற்று மாறுபட்ட எதைவேண்டுமானலும் இங்கு கொண்டுவந்து விற்றுவிடலாம் என்று வணிகர் சொல்வதுண்டு.”

“அதற்கான பணத்தை எங்கிருந்து அடைகிறார்கள்?” என்றான் பூரிசிரவஸ். “கருவூலம் நிறைந்திருக்கிறது. ஆகவே அரண்மனைப்பணியாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் ஊதியம் மிகை. வேள்விகளும் வழிபாடுகளும் நிகழாத நாளில்லை. ஆகவே வைதிகர் கொழிக்கிறார்கள். அவர்களிடமிருந்து செல்வமெல்லாம் வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் யாதவர்களுக்கும் வருகிறது” என்றான் சகன். “கருவூலத்தை அஸ்தினபுரியின் அண்டைநாடுகள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆம், அது எப்போதும் அப்படித்தானே? மலையில் பெய்யும் மழையெல்லாம் ஊருக்குத்தான் என்பார்கள்” சகன் புன்னகைத்தான்.

அவனை பெரும்பாலும் எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தெருவில் சென்ற சிலர் மட்டும் நின்று கூர்ந்து நோக்கி அவன் சென்றபின் அறிந்து மெல்லியகுரலில் “பால்ஹிகர்... இளவரசர் பூரிசிரவஸ்” என்று சொல்லிக்கொண்டார்கள். அரண்மனைக் கோட்டைமுகப்பில் காவலன் அவன் கொடியை அடையாளம் கண்டதும் பந்தம் சுழற்ற ஏழு படைவீரர்கள் முறைமைக்காக அவனை நோக்கி வந்து எதிர்கொண்டு வாழ்த்தி வாள்தாழ்த்தினர். அவனை முறைமைசார்ந்து வரவேற்று கோட்டைக்குள் அழைத்துச்சென்றனர். அவையனைத்துமே முடிகொண்ட அரசனுக்குரியவை என்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.

அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்திருந்த மாளிகைகளில் எரிந்த பந்த வெளிச்சம் அங்கே செந்நிறப் புகையென சூழ்ந்திருந்தது. முற்றத்தை நிறைத்திருந்த தேர்களும் பல்லக்குகளும் மஞ்சல்களும் பட்டுத்திரைகள் ஒளிகொண்டு நெளிய உலோகப்பரப்பில் சுடர்கள் தோன்ற இருளுக்குள் பாதியென அமைந்திருந்தன. புரவிகளின் தோல்பரப்புகள் ஒளிவிட்டன. அரண்மனைக்குமேல் அமைந்திருந்த பெருமுரசின் தோல்வட்டம் ஒரு செந்நிலவென பந்த ஒளியில் தெரிந்தது. அரண்மனை இடைநாழிகள் முழுக்க ஏவலர் விரைந்து முன்னும் பின்னும் சென்றுகொண்டிருக்க உள்ளே அவர்கள் பேசிய ஒலி முழக்கமாக எழுந்து சாளரங்கள் வழியாக முற்றத்தில் பரவியது.

உள்ளிருந்து இருபக்கமும் நெய்ப்பந்தங்கள் ஏந்திய வீரர்கள் சூழ அணிப்படை அவனை நோக்கி வந்தது. முன்னால் வந்த இசைச்சூதர்கள் முழவும் கொம்பும் மணியும் முழக்கினர். பொன்வண்டுகளென உடலணிகள் மின்ன வந்த மூன்று அணிப்பரத்தையர் தாலங்களில் ஐந்து மங்கலங்கள் ஏந்திவந்தனர். நடுவே வந்த இளைஞன் அவனை அணுகி வணங்கி “நான் பிரதீபன். என் தந்தை சத்ருஞ்சயர் இங்கு பெரும்படைத்தலைவராக இருந்து மறைந்தார். நான் தென்படைத்தலைவன்” என்றான். “பால்ஹிக இளவரசரை வரவேற்பதில் நான் பெருமைகொண்டேன்.” பூரிசிரவஸ் “தங்களால் எங்கள் குடியும் பெருமைகொண்டது பிரதீபரே” என்றான். “தங்களை அரசமாளிகையில் தங்கவைக்க ஆணை. தாங்கள் விழைந்தால் இரவே பட்டத்து இளவரசர் துரியோதனரை சந்திக்கலாம்.”

“நான் இரண்டுநாழிகையில் சித்தமாகிவிடுவேன்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வாறே சென்று அறிவிக்கிறேன்” என்று பிரதீபன் சொன்னான். அவனே பூரிசிரவஸ்ஸை அரசமாளிகைக்கு அழைத்துச்சென்றான். செல்லும் வழியெங்கும் ஏவலர்கள் தலைவணங்கி அவனுக்கு வாழ்த்துரைத்தனர். அவனுக்கான அறை அரசர்களுக்குரிய பெரிய மஞ்சத்துடன் விரிந்து பூந்தோட்டத்தைக் காட்டிய சாளரங்களுடன் இருந்தது. பிரதீபன் தலைவணங்கி “தங்களுக்கு நீராடவும் உணவருந்தவும் ஓய்வுகொள்ளவும் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன” என்றான். “நான் படகில் முழுமையான ஓய்வில்தான் இருந்தேன்” என்றான் பூரிசிரவஸ்.

அவன் சித்தமானதும் ஏவலனிடம் செய்தி அனுப்பியபின் காத்திருந்தான். துரியோதனன் அவனிடம் பேசப்போவதென்ன என்று தெரியவில்லை. பீஷ்மபிதாமகர் அவனிடம் என்ன கேட்கப்போகிறார்? படபடப்புடன் எழுந்து சாளரம் வழியாக இருண்டு நின்றிருந்த மரக்கூட்டங்களை நோக்கினான். பெருமூச்சுடன் நிலையழிந்து அறைக்குள் உலவினான். ஆனால் அந்தப்பதற்றம் உவகையுடன் கலந்திருந்தது. எதற்கான உவகை? இந்த நாட்டின் மணமகன் என்ற எண்ணமா? அதுவல்ல. ஆனால் உவகை உடலெங்கும் நிறைந்திருந்தது. விரல்களை நடுங்கச்செய்தது. பெரிய பரிசை எதிர்நோக்கி நின்றிருக்கும் சிறுவனின் உளநிலை.

இடைநாழியின் மரத்தரையில் எடைமிக்க காலடியோசைகள் கேட்டன. அவன் நின்று வாயிலை நோக்கி சென்றான். துச்சலனும் சுபாகுவும் உள்ளே வந்தனர். துச்சலன் தலைவணங்கி ”தமையன் தங்களுக்காக காத்திருக்கிறார் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் நகைத்தபடி “இருவரும் வருவதற்கு மாற்றாக ஒருவர் பின்னால் ஏவலன் ஒரு பேராடியை தூக்கிவந்தால் போதுமானது அல்லவா?” என்றான். துச்சலனும் நகைத்து “எண்ணிக்கை என்பது முறைமையின்பாற்பட்டது பால்ஹிகரே. வருக!” என்றான்.

இடைநாழி வழியாக செல்லும்போது பூரிசிரவஸ் தன் உவகையை அடையாளம் கண்டுகொண்டான். துரியோதனனை சந்திக்கப்போவது மட்டும்தான் அந்த உவகையை உருவாக்குகிறது. துச்சளையிடம் அவன் கண்டதும் அதுவே. பெண்வடிவுகொண்ட துரியோதனன் அவள். ஆரத் தழுவிக்கொள்ளும் துரியோதனனின் பெருந்தோள்கள் நினைவில் எழ அவன் புன்னகைத்துக்கொண்டான்.

புஷ்பகோஷ்டத்தை அரண்மனை உள்ளிணைப்பு வழிகளினூடாகவே அடைந்து மாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக நடந்து துரியோதனனின் சரத்மண்டபத்திற்குள் நுழைந்தான். உள்ளே கர்ணனும் துச்சாதனனும் துச்சகனும் இருந்தனர். அவன் வருகையை துச்சலன் உள்ளே சென்று அறிவித்ததுமே துரியோதனன் உரக்க நகைத்தபடி எழுந்து வாயிலைத் திறந்து வெளிவந்து அவனை தன் பெரிய கைகளால் அள்ளி அணைத்து உடலுடன் சேர்த்துக்கொண்டான்.

”இளைத்துவிட்டீர் பால்ஹிகரே” என்றான் துரியோதனன். “ஆம், நீண்ட பயணங்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசனைக் கண்டதும் சொல்லவேண்டிய முறைமைச்சொற்கள் எவற்றையும் சொல்லவில்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் துரியோதனன் அவனை அள்ளி அணைத்து கிட்டத்தட்ட தூக்கி உள்ளே கொண்டுசென்று நிறுத்தி “குழந்தை போலிருக்கிறார். பால்ஹிகர்கள் பேருருக்கொண்டவர்கள் என்கிறார்கள் சூதர்கள்...” என்றான். கர்ணன் தன் தொடையில் அடித்து நகைத்து “பால்ஹிகர்களை மலையிலிருந்து இறங்கிய பீதரினப்பெண்கள் கவர்ந்து குலக்கலப்பு செய்துவிட்டனர்” என்றான்.

வெடித்துச்சிரித்த துரியோதனன் “அதுவும் நன்றே... இவர் சலிக்காமல் மலைகளில் பயணம்செய்கிறார்” என்றபடி அவனை பீடத்தில் அமரச்செய்து தோள்களில் கையூன்றி நின்று “ஆயினும் நீர் அழகானவர் பால்ஹிகரே. இளம்பெண்களைப்போன்ற நீள்விழிகளும் செந்நிறமான இதழ்களும் கொண்டவர்” என்றான். பூரிசிரவஸ் நாணத்துடன் “நற்சொற்களுக்கு நன்றி இளவரசே” என்றான். “அடடா நாணுகிறார். அற்புதமாக நாணுகிறார்” என்று துரியோதனன் கைகளைத் தட்டி நகைத்தான். அவன் உடன்பிறந்தவர்களும் நகைப்பில் சேர்ந்துகொண்டனர். பூரிசிரவஸ் தன் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்துவிட்டதை உணர்ந்தான். அங்கு அன்றி எங்கும் அத்தனை உள்ளம் நிறையும் இன்பத்தை அவன் அடைந்ததில்லை.

“அறிந்திருப்பீர் பால்ஹிகரே, நாங்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குள் இளவரசிகளை மணந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான் துரியோதனன். “நேற்றுவரை ஒவ்வொரு ஷத்ரிய மன்னரும் தயங்கினர். இன்று முற்றிலும் மாறுபட்ட நிலை. எவருக்கும் தயக்கமில்லை. அஸ்தினபுரியின் அரசியாக தன் மகளை அனுப்பவே ஒவ்வொருவரும் விழைகின்றனர். ஆனால் அனைத்தும் மிகச்சிக்கலாகிவிட்டன. இளவரசிகளுக்காக பாண்டவர்களும் நாங்களும் போட்டியிடுகிறோம். எங்களுக்கு பெண்ணளித்தால் அவர்களுக்கு எதிரியாகிவிடுவோம் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.” பூரிசிரவஸ் புன்னகைத்து “அது இயல்பே” என்றான். துரியோதனன் “அத்துடன் நாங்கள் இளவரசிகளை அவர்களுக்காக மணக்க முடியாது. இங்கிருக்கும் அரசியல்களத்தில் அந்த நாடு ஆற்றும் பங்குதான் முதன்மையானது” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

“சிபிநாட்டு இளவரசியை பீமன் கவர்ந்துசென்றதை அறிந்திருப்பீர்” என்று துரியோதனன் சொன்னான். “இப்போது காந்தாரத்திற்கும் கூர்ஜரத்திற்கும் நடுவே ஒரு பெரிய கத்தியை செருக அவர்களால் முடிந்திருக்கிறது. நாம் அங்கே தோற்றுவிட்டோம். மத்ரநாட்டை அடைந்தது வழியாக அவர்கள் பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களுடனிருப்பதன் வழியாக அதை ஈடுகட்டிவிடலாம்.” பூரிசிரவஸ் ”சல்லியர் பால்ஹிகர்களை வென்று அடக்கிவிடலாமென எண்ணுகிறார். அதை ஒப்பமாட்டோம். அவருக்கு அஞ்சுவதைவிட பால்ஹிகக்கூட்டமைப்பில் நிகர்நிலையில் நீடிப்பதையே எங்கள் மக்கள் விழைவார்கள்” என்றான். “ஆம், அதையே நானும் எண்ணினேன். முடிசூடியதுமே நான் அங்கே வந்து பால்ஹிகர்களை சந்திக்கிறேன்” என்றான் துரியோதனன்.

தன் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு பருத்த தோள்களில் தசைகள் புடைத்தசைய துரியோதனன் சற்று நேரம் எண்ணத்திலாழ்ந்தபின் திரும்பி மீசையை நீவியபடி சிறிய கண்களால் நோக்கினான். பின்னர் “நமக்கு இன்று முதன்மை இலக்கு சேதிநாடுதான் பால்ஹிகரே. பலவகையிலும் அது தவிர்க்கமுடியாதது. அது மகதத்திற்கு மிக அருகே உள்ளது. சேதிநாட்டரசர் தமகோஷர் மகதமன்னன் ஜராசந்தனுடன் நல்லுறவுடன் இருக்கிறார். பட்டத்து இளவரசர் சிசுபாலருக்கும் ஜராசந்தனுடன் நட்பு இருக்கிறது. நாம் வென்றெடுக்காவிட்டால் நம் எதிரிகள் அவர்கள். நமக்கு வேறு வழியே இல்லை” என்றான்.

கர்ணன் “பால்ஹிகரே, பாண்டவர்கள் யமுனைக்கரையில் அமைக்கவிருக்கும் தட்சிணகுரு நாடும் அவர்களின் துணைநாடான பாஞ்சாலமும் மதுரா உள்ளிட்ட மூன்று யாதவநிலங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வல்லமைமிக்க ஒரு ஜனபதமாக உள்ளன. அவை காலப்போக்கில் ஒற்றைநாடாக ஆனாலும் வியப்பதற்கில்லை. அந்த நிலத்தொகுதிக்கு மிக அண்மையிலுள்ள பெரியநாடு சேதிதான். சேதியை நம் நட்புநாடாக்கினால் பாண்டவர்களின் பெருநிலத்தொகுதிக்கு தெற்கே நமக்கு ஒரு களம் அமைகிறது. அவர்களை நாம் சூழ்ந்துகொள்ள முடியும். சூழ்ந்தாகவேண்டும்” என்றான்.

அந்த உரையாடல் பூரிசிரவஸ் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால் அவன் மாறி மாறி முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். “சேதிநாட்டு தமகோஷருக்கு இரு பெண்கள், அறிந்திருப்பீர்கள்” என்றான் துரியோதனன். “மூத்தவள் பிந்துமதியும் இளையவள் கரேணுமதியும் கல்வியும் கலையும் பயின்ற அழகிகள் என்று சூதர்கள் பாடுகிறார்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “சூதர்கள் பாடாத இளவரசிகள் எவர்?” என்றான். துரியோதனன் வாய்விட்டு நகைத்து “ஆம், அவர்கள் கல்வியும் அழகும் அற்றவர்கள் என்றாலும் நமக்கு அது பொருட்டல்ல. நானும் துச்சாதனனும் அவ்விரு பெண்களையும் மணந்தாகவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “அதற்கு என்ன தடை?” என்றான்.

“நீர் அதை அறிந்திருக்கமாட்டீர் பால்ஹிகரே” என்றான் கர்ணன். “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் ஓர் உறவுண்டு. மதுவனத்தின் அரசரும் வசுதேவருக்கும் குந்திதேவிக்கும் தந்தையுமான சூரசேனரின் தந்தை ஹ்ருதீகருக்கு தேவவாகர், கதாதன்வர், கிருதபர்வர் என மூன்று மைந்தர்களும் உண்டு.. அவர்களில் மூன்றாமவரான கிருதபர்வரின் மகள் சுருதமதியைத்தான் சேதிநாட்டரசர் தமகோஷர் மணம்புரிந்திருக்கிறார். அவர் முறைப்படி யாதவ அரசி குந்தியின் தமக்கை. அவர்களின் மைந்தனே சிசுபாலன். தமகோஷரின் பிற இரண்டு மனைவியரும் கலிங்கநாட்டவர். மூத்தவர் சுனிதையின் மகள் பிந்துமதி. இளையவர் சுனந்தையின் மகள் கரேணுமதி. அவ்வழியில் சேதிநாட்டவரும் பாண்டவர்களும் உறவினர். தாய்வழியில் பெண்கொள்ளும் முறைமையும் யாதவர்களிடமிருக்கிறது.”

பூரிசிரவஸ் “அவர்களுக்கு யாதவர்களிடம் நல்லுறவு உள்ளதா?” என்றான். “இருந்தது” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி. “சூதர்கள் அதற்கொரு கதை சொல்கிறார்கள். சிசுபாலனை சுருதமதி கருவுற்றிருந்தபோதுதான் மதுராவில் கம்சன் தன் மருகனால் கொல்லப்பட்டார். அது சேதிநாட்டை அன்று பதறச்செய்தது. யாதவர்களில் தாய்மாமன் என்பவர் தந்தைக்கு நிகரானவர். தந்தைக்கொலை புரிந்தவன் என்று சுருதமதி கிருஷ்ணனை ஒவ்வொருநாளும் வெறுத்தாள். எங்கோ ஒரு மூலையில் அவள் கிருஷ்ணன் கருவிலிருக்கும் தன் மகனுக்கு முறைத்தமையன் அல்லவா என்று எண்ணியிருக்கலாம். குழந்தை பிறந்ததும் அதன் பிறவிநூலைக் கணித்த நிமித்திகர் அஞ்சி அதற்கு நூல்குறிகளின்படி மூன்று கண்களும் நான்கு கைகளும் இருந்தாகவேண்டும் என்றார்கள்.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “நிமித்தக்குறிகளின்படி அவை ஆழ்பொருள் கொண்டவை இளையோனே” என்று கர்ணன் சொன்னான். “நான்கு கைகள் என்பவை அவன் எளிதில் வெல்லமுடியாத தோள்வல்லமை கொண்டவன் என்பதை காட்டுகின்றன. குறிப்பாக சொல்லப்போனால் எவரையோ கொல்லும்பொருட்டு பிறந்தவர்களுக்குத்தான் நான்கு கரங்கள் உண்டு என்கின்றன நிமித்தநூல்கள். அவை பிற எவற்றையும் தொடாமல் அவனுக்குள் காத்திருக்கின்றன. மூன்றாம் விழி என்பதும் அப்பொருள் கொண்டதே. தீராத வஞ்சம் என அதை சொல்வார்கள்.” பூரிசிரவஸ் “கிருஷ்ணன் மீதா அவ்வஞ்சம்?” என்றான்.

“ஆம், குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும்நாளில் பலராமரும் கிருஷ்ணனும் அங்கே சென்றதாகவும் குழந்தையை அவர்கள் மடியில் ஏந்தியபோது அதன் நான்கு கைகளும் வெளித்தெரிந்ததாகவும் நெற்றியில் மூன்றாம் விழிதிறந்ததாகவும் சொல்கிறார்கள்.” பூரிசிரவஸ் “எதை ஏற்பதென்றே தெரியவில்லை” என்றான். “நிமித்தநூல் நாமறியாத ஓர் உச்சியில் நின்று மானுடவாழ்க்கையை நோக்கிக்கொண்டிருக்கிறது இளையோனே” என்றான் துரியோதனன். “நான் அதை நம்புகிறேன். சிசுபாலரை நானறிவேன். கிருஷ்ணன் மீது அவர் கொண்டுள்ள சினம் இம்மண்ணில் வைத்து புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. இரும்புருக்கும் உறையடுப்பு போல அவருள் எரிந்து கொண்டிருக்கும் வஞ்சம் என்னை எப்போதும் அச்சம் கொள்ளச்செய்திருக்கிறது” என்றான்.

கர்ணன் “கம்சனின் பகை முழுக்க சிசுபாலரில் குடிகொண்டு மண்ணில் நீடித்து வாழ்கிறது என்கிறார்கள். வரலாறு காட்டும் உண்மை ஒன்றே, பெரும் பகைகள் மண்ணிலிருந்து மறைவதே இல்லை. மானுடர் மறைந்தால் அவை உடல்நீங்கி தெய்வ வடிவுகொண்டு காற்றில் வாழ்கின்றன. பிறிதொருவரைக் கண்டுகொள்கின்றன” என்றான்.  பூரிசிரவஸ் மெல்லிய நடுக்கம் ஒன்றை தன்னுள் உணர்ந்தான். அதை அனைவரும் உணர்ந்தது போல அங்கே சற்று நேரம் இயல்பான அமைதி உருவாகியது.

பூரிசிரவஸ் முகங்களை மாறி மாறி நோக்கியபின் “சேதிநாட்டு இளவரசர் இளைய யாதவர் மேல் கடும்பகை கொண்டிருக்கிறார் என்றால் அவர் பாண்டவர்களுக்கு தங்கையரை அளிக்க ஒப்ப மாட்டார். அவருக்கு வேறு வழியும் இல்லையே” என்றான். “ஆம், நமக்கும் வேறுவழியில்லை என அவர் எண்ணுகிறார். இளவரசர்கள் தன் தங்கையரை மணக்க அவர் ஒரே ஒரு மறுசொல்லை கோருகிறார்” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் காத்திருந்தான். “அவருக்கு அஸ்தினபுரியின் இளவரசியை அளிக்கவேண்டும் என்கிறார்.”

பகுதி 14 : நிழல்வண்ணங்கள் - 2

ஓர் உச்சதருணத்தில் உணர்வுகளை விழிகளில் காட்டாமலிருப்பதற்கு கற்றுக்கொள்வதுவரை எவரும் அரசு சூழ்தலை அறிவதில்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்த கணம் அது. அவன் விழிகளில் ஒருகணம் முழுமையாகவே அவனுடைய உள்ளம் தெரிந்தது. உடனே அதை வெல்ல அச்சொற்களை புரிந்துகொள்ளாதவன் போல நடித்து “சிசுபாலரா?” என்றான். ஆனால் அந்த நடிப்பு பெரும்பாலானவர்களால் பெரும்பாலான தருணங்களில் செய்யப்படுவதே என அறிந்து “அவரது கோரிக்கையில் பொருள் உள்ளது என்றே படுகிறது” என்றான். அது தன் விழிச்சொல்லுக்கு மாறானது என்று உணர்ந்து மேலும் ஏதோ சொல்ல முயன்றபின் நிறுத்திக்கொண்டான்.

துரியோதனன் "இளையோனே, ஒன்று தெரிந்துகொள்ளும். சிசுபாலர் எளியதோர் ஷத்ரிய அரசர் அல்ல” என்றான். “எது பாண்டவர்களை இயக்குகிறதோ அவ்விசையால் இயக்கப்படுபவரே அவரும். அவர் யாதவக்குருதி கலந்தவர். அக்காரணத்தாலேயே அவருக்கு வங்கனும் கலிங்கனும் மகற்கொடை மறுத்தனர். இழிவை உணர்பவனின் ஆழத்தில்தான் எல்லைமீறிய கனவுகள் இருக்கும். அவர் பாரதவர்ஷத்தை குறிவைக்கும் அரசர்களில் ஒருவர். அவருக்கு துச்சளையை ஒருபோதும் அளிக்கமுடியாது.” பூரிசிரவஸ் கர்ணனை நோக்கி பின் துரியோதனனை நோக்கி “அவ்வண்ணமென்றால்...” என்றான்.

கர்ணன் ”மேலும் அவர் பிறந்த நாள் முதல் எதிரியென அறிந்துவருவது இளைய யாதவனைத்தான். படிப்படியாக துவாரகை இன்று பேரரசாக எழுந்து நிற்கிறது. அதைப்போல சிசுபாலரை எரியச்செய்யும் பிறிதொன்றில்லை. ஒருநாள்கூட அவர் மதுவின்றி துயில்வதில்லை என்கிறார்கள்” என்றான். சிரித்துக்கொண்டு “சூதர்கள் சொன்னது இது. நம்பமுடியவில்லை, ஆனால் ஒற்றர்கள் உறுதிப்படுத்தினார்கள். சேதிநாட்டில் எங்கும் மயில்களே இல்லை. அவற்றின் தோகை கிருஷ்ணனை நினைவுறுத்துகிறது என்று அனைத்தையும் கொல்ல ஆணையிட்டார். ஆனால் அவ்வப்போது மயில்களை பிடித்துக்கொண்டு வருகிறார்கள். அவற்றை அவர் வதைத்துக்கொல்கிறார். கொளுத்தியும் எரிதைலங்களில் ஆழ்த்தியும் இறகுகளை முழுக்கப்பிடுங்கி வெயிலில் கட்டியிட்டும் அவற்றை துடிக்கவைத்து மகிழ்கிறார்” என்றான்.

“தன் கனவுகளுக்குரிய களமாகவே அவர் அஸ்தினபுரியை காண்பார்” என்றான் துரியோதனன். “அதை நாம் ஏற்கமுடியாது. நமக்குத்தேவை நம் களத்தில் நின்றிருக்கும் காய்கள் மட்டுமே.” பூரிசிரவஸ் மெல்ல அசைந்து “அப்படியென்றால்கூட நாம் அவரை நம் துணைவனாகத்தானே கொள்ளவேண்டும்? அவர் கொண்டுள்ள அப்பகைமை நமக்கு உகந்தது அல்லவா?” என்றான். “ஆம், அவருடைய பகைமையாலேயே அவர் கட்டுண்டுவிடுகிறார். அவர் ஒருபோதும் பாண்டவர்தரப்புக்கு செல்லமுடியாது. ஆனால் மகதத்தின் தரப்புக்கு செல்லமுடியும். அதுதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய இடம்.”

பூரிசிரவஸ் “இளைய யாதவனுக்கும் மகதத்திற்கும்தானே பகைமை? நமக்கென்ன? நாம் அவர்களை நமக்கு நட்புநாடாக கொண்டாலென்ன?” என்றான். “இளையோனே, மகதத்திற்கும் என் மாதுலருக்கும் தீர்க்கப்படவேண்டிய ஒரு சிறு கணக்கு இருக்கிறது. ஒரு குதிரைச்சவுக்கு அங்கே காந்தாரபுரியில் காத்திருக்கிறது” என்றான் துரியோதனன். “அது இளமையிலேயே நான் மாதுலருக்குக் கொடுத்த வாக்கு. மகதத்தின் அரியணையில் அப்பழைய குதிரைச்சவுக்கை வைப்பது என் கடமை.” பூரிசிரவஸ் அதை புரிந்துகொள்ளாமல் நோக்க “என் தாயை மகதனுக்கு மணமுடித்தளிக்க மாதுலர் விழைந்தார். அவரது கணக்குகளின்படி மகதமும் காந்தாரமும் இணைந்தால் பாரதவர்ஷத்தை ஆளலாம் என்று அன்று தோன்றியிருந்தது” என்றான் துரியோதனன்.

“அன்று புரு வம்சத்து உபரிசரவசுவின் குலத்தில் வந்த விருஹத்ரதர் மகதத்தை ஆண்டுகொண்டிருந்தார். குலமூதாதைபெயர் கொண்டிருந்தமையால் அவரை குடிகளும் புலவரும் சார்வர் என்றும் ஊர்ஜர் என்றும் ஜது என்றும் அழைத்தனர். அவருடைய மைந்தருக்கு மகதத்தின் பெருமன்னர் பிருஹத்ரதரின் பெயர் இடப்பட்டிருந்தமையால் அவரை சாம்ஃபவர் என்று குடிகள் அழைத்தனர். பிருஹத்ரதரின் தோள்வல்லமையையும் சித்தத்தின் ஆற்றலையும் சூதர்வழியாக மாதுலர் அறிந்திருந்தார். காந்தாரத்தின் மணத்தூதை பேரமைச்சர் சுகதரே மகதத்திற்கு கொண்டு சென்றார். காந்தாரம் தன் அனைத்து மிடுக்குகளையும் களைந்து இறங்கி வந்து இறைஞ்சுவதாகவே அதற்குப் பொருள். ஆனால் அன்று காந்தாரத்தவர்களுக்கு அரசுசூழ்தலின் முறைமைகள் அத்தனை தெரிந்திருக்கவில்லை.”

”அன்று விருஹத்ரதர் பெண்ணிலும் மதுவிலும் பகடையிலும் பாடல்களிலும் ஆழ்ந்திருந்தார். அரசை முழுக்க நடத்திவந்தவர் மகதத்தின் பேரமைச்சராகிய தேவபாலர். காந்தாரத்தின் அமைச்சராகிய சுகதருக்கு அரசு சூழ்தலின் நுட்பங்கள் தெரியவில்லை. தேவபாலரை அவர் ஓர் அமைச்சராக மட்டுமே எண்ணினார். அரசவையில் அவர் தேவபாலர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் அரசரை நோக்கியே மறுமொழி உரைத்தார். தேவபாலர் அவையில் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார். அவையில் அவருக்கு எதிரிகள் இருந்தனர். அவர்கள் புன்னகை பூத்தனர் என அவர் நினைத்தார். அரசரின் எண்ணத்தை காந்தாரத்திற்கு எதிராகத் திருப்ப அவரால் முடிந்தது.”

“தேவபாலரின் வழிகாட்டுதலின்படி சுகதர் கிளம்பும்போது அரசர் ஒரு பொற்பேழையை காந்தாரத்து அரசர் சுபலருக்கு பரிசாக அளித்தார். அந்தப்பரிசு என்ன என்று செல்லும்வழியில் திறந்து நோக்கவேண்டும் என்றுகூட சுகதருக்கு தெரியவில்லை. அவையில் அதைத் திறப்பதற்கு முன்னர் ஒருமுறை திறந்து நோக்கியிருக்கவேண்டும் என்று காந்தாரத்தில் எவருக்கும் தோன்றவில்லை. அன்று காந்தாரநகரியில் மாதுலர் சகுனி இல்லை. அவையிலேயே பெருமிதத்துடன் பேழையைத் திறந்த அரசர் சுபலர் அதற்குள் ஒரு பழைய குதிரைச்சவுக்கு இருப்பதைக் கண்டார். அயல்நாட்டு வணிகர்களும் சூதர்களும் நிறைந்த அவை அது. காந்தாரத்தை கங்காவர்த்தம் இழிவுபடுத்தியது என்றே மாதுலர் உணர்ந்தார். மாதுலர் அடைந்த முதல் இழிவும் அதுவே.”

”காந்தாரர் வேடர்குலம் என்பதைச் சுட்டும் செயல் அது. ஆனால் அது நிகழ்ந்ததும் நன்றே. மாதுலர் சகுனி அடைந்த பெருவஞ்சம் அங்கிருந்து தொடங்கியது. இன்று பதினாறு கைகளிலும் படைக்கலம் ஏந்திய காவல்தெய்வமாக நமக்கு அவர் அருள்புரிகிறார்” என்றான் துரியோதனன். “ஆனால் இன்று பிருஹத்ரதரின் மைந்தர் ஜராசந்தருக்கு எந்தக்குலச்சிறப்பும் இல்லையே. அவர் அசுரகுலத்து ஜரை என்ற அன்னையின் மைந்தர் அல்லவா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அது ஊழ்விளையாட்டு. ஆனால் அந்தக்குதிரைச்சவுக்கு அங்கே காத்திருக்கிறது. அது தன் ஆடலைமுடித்தாக வேண்டும்” என்று துரியோதனன் சொன்னான்.

“அத்துடன் இன்னொன்றும் உள்ளது” என்று கர்ணன் சொன்னான். “நீர் சொன்ன குல இழிவு இருப்பதனாலேயே ஜராசந்தரும் பாரதவர்ஷத்தை வெற்றிகொள்ளாமல் அமையமுடியாது. நாம் அவரை எங்கேனும் ஓரிடத்தில் களத்தில் சந்தித்தாகவேண்டும். வேறு வழியில்லை.” மீண்டும் அமைதி எழுந்தது. பல சிறிய கட்டங்களாக அது நீடித்தது. பூரிசிரவஸ்ஸே அதைக்குலைத்து “நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றான். துரியோதனன் “நாங்கள் இளவரசிகளை மணப்பதை தமகோஷர் ஏற்றுக்கொள்கிறார்” என்றான். “ஆகவே ஒரு சிறியபடையுடன் சேதிநாட்டின் சூக்திமதிக்குள் ஊடுருவி இளவரசிகளைக் கவர்ந்து வரலாமென்று எண்ணுகிறோம்.”

என்ன சொல்வதென்று பூரிசிரவஸ்ஸுக்கு தெரியவில்லை. அவனுடைய திகைப்பை பார்த்துவிட்டு துரியோதனன் கர்ணனை நோக்கி புன்னகைசெய்தான். கர்ணன் “முதலில் இது ஒரு முழுமையான பெண்கவர்தல் அல்ல பால்ஹிகரே. தமகோஷர் நம்மை ஆதரிப்பவர் என்பதனால் சூக்திமதியின் முதன்மைப்படைத்தலைவர்கள் அனைவருக்கும் நம் வருகை அறிவிக்கப்பட்டிருக்கும். நகரைச்சுழித்தோடும் சூக்திமதியின் கரையில் அமைந்திருக்கும் கொற்றவை ஆலயத்திற்கு பூசனைசெய்வதற்காக இளவரசிகள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் இருக்குமிடத்தை நம் ஒற்றர்கள் நமக்கு தெளிவாகவே அறிவிப்பார்கள். அவர்களுக்கு பெரிய காவலும் இருக்காது. சொல்லப்போனால் அரசரே அவர்களை நமக்கு அளிக்கிறார் என்றுதான் பொருள்” என்றான்.

“கருஷகநாடு நம்முடன் நட்பில் உள்ளது. யமுனைக்கரையில் உள்ள அவர்களின் தலைநகர் வேத்ராகியத்திற்கு நாம் முன்னரே சென்றுவிடுவோம். யமுனை வழியாக வணிகப்படகுகள் போல உருகரந்து சென்று காத்திருப்போம். எரியம்பு தெரிந்ததும் சூக்திமதி ஆற்றுக்குள் நுழைந்து இளவரசியரைக் கவர்ந்து மீண்டும் யமுனைக்கு வந்து நேராக யமுனையின் ஒழுக்கிலேயே சென்று வத்ஸபுரியை அடைந்து அங்குள்ள துறையில் கரையேறி புரவிகளில் ஏறிக்கொண்டு இரவிலேயே கங்கையை அடைந்துவிடுவோம். ஃபர்கபுரியில் மீண்டும் கங்கைப்படகில் ஏறிக்கொண்டு காம்பில்யத்தைக் கடந்து தசசக்கரத்தை அடைவோம். அங்கேயே இளவரசிகளை மணமுடித்தபின்னர்தான் அஸ்தினபுரிக்கு திரும்புவோம்.”

“சிசுபாலர்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “அவர் மதுராவின் எல்லைக்கு அரசரால் அனுப்பப்பட்டிருப்பார். செய்தியறிந்ததும் உடனே அஸ்தினபுரியை தொடர்புகொள்வார். அங்கு தந்தைக்கும் விதுரருக்கும் உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரிந்திருக்காது” என்று துரியோதனன் சொன்னான். “திட்டங்கள் அனைத்தையும் நேற்றே முழுமையாக வகுத்துவிட்டோம். இன்றிரவே வணிகப்படகுகளில் நாம் கிளம்புகிறோம்” என்றான் கர்ணன். பூரிசிரவஸ் நிமிர்ந்து நோக்கினான். கர்ணன் “இளவரசரும் இளையோனும் நானும் செல்கிறோம். உடன் நீரும் வரவேண்டுமென்பது இளவரசரின் விருப்பம்” என்றான். "அதை என் நல்வாய்ப்பென்றே கொள்வேன்” என்று  சொல்லி பூரிசிரவஸ் தலைவணங்கினான்.

“இன்று இரவு பிந்திவிட்டது. அறைக்குச்சென்று துயிலும். நாளை முதற்புள் ஒலிக்கும்முன் நாம் அஸ்தினபுரியை கடந்துவிட்டிருக்கவேண்டும்” என்றான் துரியோதனன். “ஆனால் பகல் முழுக்க நாம் படகில் துயிலமுடியும்... நிறைய நேரமிருக்கிறது.” பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி “அவ்வண்ணமே” என்றான். “இளையோனே, நீர் கவரப்போகும் முதல் இளவரசி என நினைக்கிறேன். இது நல்ல தொடக்கமாக அமையட்டும்” என்று சொல்லி துரியோதனன் சிரிக்க கர்ணனும் மெல்ல சிரித்தான். விழிகளாலேயே இளைய கௌரவர்களிடம் விடைபெற்றுவிட்டு பூரிசிரவஸ் திரும்பி வெளியே நடந்தான். உண்மையிலேயே துயில் வந்து உடலை ஒருபக்கமாக தள்ளியது. அறைக்குச் சென்று படுத்ததைக்கூட அவன் அரைத்துயிலில்தான் செய்தான்.

படகில் அவன் தேவிகையுடன் விரைந்து கொண்டிருந்தான். புடைத்த பாய்கள் கருக்கொண்ட வயிறுகள் போல அவனை சூழ்ந்திருந்தன. கொடியின் படபடப்பு கேட்டுக்கொண்டிருந்தது. எரியம்புகள் எழுந்து வந்து பாய்களின் மேல் விழுந்தன. பாய் எரியத்தொடங்கியது. அவன் பாய்மீது படுத்திருந்தான். அது ஓரத்தில் இருந்து எரிந்தபடியே அனல் கொண்டது. தீ நெருங்கி வந்தது. எழுந்துவிடவேண்டும். வெளியே சகலபுரியின் மரங்களின் சலசலப்பு. தீ மரங்களை எரிப்பதில்லை. வெளியே குதித்துவிட்டால் தீயிலிருந்து தப்பிவிடலாம். அவன் எழுந்துகொண்டபோது அறைக்குள் கூரியவாளுடன் கடுமையான விழிகளுடன் ஒருவன் நின்றிருந்தான். ‘யார் நீ?' என்று பூரிசிரவஸ் கூவினான். அவன் 'என்னை அறியமாட்டாய் நீ. நான் உன்னை அறிவேன்' என்றான்.

'அறிவேன், நீ சிசுபாலன்’ என்றான் பூரிசிரவஸ். அவன் நகைத்து ’ஆம், உன்னைக் கொல்லும்பொருட்டு அறைக்குள் புகுந்தேன்’ என்றான். பூரிசிரவஸ் கைநீட்டி தன் வாளை எடுத்தான். அவன் தன் வாளை வீசிய மின்னல் கண்களை கடந்துசென்றது. வாளுடன் பூரிசிரவஸ்ஸின் கை கீழே விழுந்து துள்ளியது. அவன் எழுவதற்குள் சக்கரம் ஒன்றால் தலைவெட்டப்பட்டு சிசுபாலன் அவன் முன் குப்புற விழுந்தான். சக்கரம் சுழன்று சாளரம் வழியாக வெளியே சென்றது. தலை அறைமூலையில் சென்று விழுந்து இருமுறை வாயைத்திறந்தது. வாயில் வழியாக உள்ளே வந்த சலன் 'கிளம்பு' என்று அவன் கையை பிடித்தான். 'என் கை, எனது வாள்கொண்ட கை' என்று பூரிசிரவஸ் கூவினான். 'விடு, இனி உனக்கு அது இல்லை...' என்று சலன் அவனை இழுத்தான். 'இங்கே நீ இனிமேல் இருக்கமுடியாது. உன்னை கொன்றுவிடுவார்கள்.'

பூரிசிரவஸ் 'தேவிகை? அவளை நான் கவர்ந்துவந்தேன்' என்றான். 'அவளை நான் மணமுடித்துவிட்டேன். பால்ஹிக அரசி அவள்தான்... வா' என்றான் சலன். அவன் எழுந்து அவனுடன் சென்றபடி 'என் கை அறுந்துவிட்டது' என்றான். 'குன்றில் மாடுமேய்ப்பதற்கு ஒரு கையே போதும், வா' என்றான் சலன். ’விடுங்கள் என்னை’ என்று திமிறியபடி பூரிசிரவஸ் புரண்டு எழமுயன்றான். அஸ்தினபுரியின் படுக்கை அது. அவன் கதவை எவரோ தட்டிக்கொண்டிருந்தனர். மிகத்தொலைவில் ஏதோ உலோக ஒலி கேட்டது. தாழின் ஒலி. அல்லது வாளுரசும் ஒலி. அவன் எழுந்து அமர்ந்தான். வாயில் உண்மையிலேயே தட்டப்பட்டுக்கொண்டிருந்தது.

எழுந்துசென்று அவன் வாயிலை திறந்தான். அங்கே ஏவலன் ஒருவன் நின்றிருந்தான். “என்ன?” என்றான் பூரிசிரவஸ். “ஓலை” என்று அவன் ஒரு மூங்கில்குழாயை நீட்டினான். தலைவணங்கி கதவை உடனே மூடிவிட்டான். பூரிசிரவஸ் சிலகணங்கள் அது உண்மையிலேயே நிகழ்ந்ததா என்று வியந்தபடி நின்றபின் கையை பார்த்தான். குழல் கையில்தான் இருந்தது. அறைக்குள் திரும்பி அகல்விளக்கைத் தூண்டியபின் குழாயை உடைத்து உள்ளிருந்து தாலியோலைச்சுருளை எடுத்தான். அதில் மெல்லிய மணம் இருந்தது. துச்சளையின் மணம் அது. மூக்கருகே கொண்டு வந்து கூர்ந்தான். அது உளமயக்கல்ல, உண்மையிலேயே அவள் மணம்தான் அது. எப்படி அது ஓலையில் வந்தது?

‘இந்த மணம் என்னை எவரென சொல்லும்' எனத் தொடங்கியது கடிதம். அவன் பிடரி புல்லரித்தது. எவரோ நோக்கும் உணர்வை அடைந்து சுற்றும் பார்த்தான். எழுந்துசென்று கதவைமூடிவிட்டு வந்து அமர்ந்துகொண்டான். அந்த மணம் எந்த மணப்பொருளாலும் வந்தது அல்ல. அது அவளுக்கு மட்டுமே உரிய மணம். அவள் அதை கழுத்திலோ முலைகளுக்கு நடுவிலோ வைத்திருக்கக்கூடும் என அவன் எண்ணிக்கொண்டான். மீண்டும் உடல் சிலிர்த்து கண்கள் ஈரமாயின. பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். 'என் மணநிகழ்வு அரசியலாக்கப்பட்டுவிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.' அவனால் வாசிக்கமுடியவில்லை. அத்தனை நொய்மையானவனாக இருப்பதைப்பற்றிய நாணம் ஏற்பட்டதும் தன்னை இறுக்கி நிமிர்ந்து அதை நீட்டி வாசிக்கத் தொடங்கினான்.

'நான் இளவரசி என்பதாலேயே இந்த அரசியலின் ஒரு பகுதி. ஆகவே எதையும் பிழை என மறுக்கவில்லை. ஆனால் இந்த ஆடலில் இறங்கி நான் விழைவதை அடையவேண்டுமென எண்ணுகிறேன். அதன்பொருட்டே இக்கடிதம்' என்று துச்சளை எழுதியிருந்தாள். 'சேதிநாட்டு சிசுபாலருக்கு நான் அரசியாவதை மூத்தவர் விரும்பவில்லை. ஆகவே இளவரசிகளை கவர்ந்துவர எண்ணுகிறார்கள். ஆனால் அதன்பின் சிசுபாலருக்கு நிகரான ஓர் எதிரியை தங்கள் அணிக்குள்ளேயே நிலைநிறுத்தும்பொருட்டு என்னை ஜயத்ரதருக்கு அரசியாக ஆக்கலாமென அவர் எண்ணக்கூடும். அதையும் நான் விரும்பவில்லை. ஏனென்றால் இதில் எந்த அரசரை நான் மணந்தாலும் என்றாவது ஒருநாள் நான் அஸ்தினபுரிக்கு எதிர்நாட்டின் அரசியாக ஆகக்கூடும். அது என் மூதன்னையரால் விரும்பப்படுவதல்ல.'

'நான் இங்கே அஸ்தினபுரியிலேயே இருக்க விழைகிறேன். என் தமையனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பகை நிகழாது காப்பதே வாழ்நாள்முழுக்க என் பணியாக இருக்கக் கூடும். சொல்லப்போனால் என் தந்தைக்கும் தமையனுக்கும் இடையேகூட நான் எப்போதும் இருந்துகொண்டிருக்கவேண்டியிருக்கும். ஆகவே அஸ்தினபுரியின் இளவரசியாகவே நான் நீடிக்க உதவும் மணவுறவையே நாடுகிறேன்.' பூரிசிரவஸ் அச்சொற்களை அவள் சொல்வதுபோலவே உணர்ந்து எவரேனும் அதை கேட்டுவிடுவார்களோ என அஞ்சி திரும்பிப்பார்த்தான்.

'சேதிநாட்டு இளவரசியரைக் கவர்ந்து வரும்போது தமையன் உவகையுடன் இருக்கும் கணத்தில் என் கையை பரிசாக அளிக்கும்படி நேராகவே கோருங்கள். தமையன் சினக்கக்கூடும். அப்போது அருகே அங்கநாட்டரசர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அவர் என் தமையனைவிட எனக்கு அண்மையானவர். ஒரு நிலையிலும் நான் உகக்காத எதையும் அவர் செய்யமாட்டார். அவர் என் விழைவு என்ன என்று கேட்பார். இந்த ஓலையை அவரிடம் அளியுங்கள். அவர் என்னிடம் நேரில் கேட்டாரென்றால் நான் ஒப்புக்கொள்வேன். அவர் முடிவெடுத்துவிட்டாரென்றால் அஸ்தினபுரியில் அதற்கு மறுமொழி இருக்காது. அவர் அரசநலனைவிட குடிநலனைவிட தன்நலனைவிட என் நலனையே முதன்மையாகக் கொள்வார் என நான் உறுதியாக எண்ணுகிறேன்.'

'ஆகவேதான் தங்களை பிதாமகர் சந்திக்கவேண்டுமென நான் விழைந்தேன். அவரிடம் உங்களைப்பற்றி சொன்னேன். என் எண்ணத்தை சொல்லவில்லை. வடமேற்கின் படைத்தலைவராக தாங்கள் அமையமுடியும் என்றும் தங்களை நேரில் பார்த்தால் அதை அவரே உணர்வார் என்றும் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். மணவுறவின் வழியாக அஸ்தினபுரியின் வலுவான துணைவராக தங்களை ஆக்குவது நன்று என்றபோது முதியவர் புன்னகைசெய்தார். அவரது உள்ளம் என்ன என்று அறியேன். அவர் என்னை அறிந்துவிட்டாரென்றால் அது என் நல்லூழ்.'

நெஞ்சு நிறைந்து விம்மியமையால் அவனால் அமரமுடியவில்லை. எழுந்து நின்றான். பின் மீண்டும் அமர்ந்துகொண்டான். சுவடியின் ஒவ்வொரு வரியையும் மீளமீள வாசித்தான். மெல்ல அவன் குருதியோட்டம் அடங்கியதும் எழுந்து அறைக்குள் உலவினான். எங்கும் நிற்கவோ எதையும் நோக்கவோ முடியவில்லை. எண்ணங்கள்கூட எதிலும் அமையவில்லை. அந்த ஓலையை கைவிட்டு இறக்கத் தோன்றவில்லை. அதை மார்பின்மேல் போட்டுக்கொண்டு படுத்தான். புரண்டபோது தலைமேல் வைத்தான். எழுந்து அரைஇருளிலேயே அதை மீண்டும் வாசித்தான். விரல்களால் தொட்டே அதன் எழுத்துக்களை அறியமுடியுமென தோன்றியது. கூர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தமையால் அந்த எழுத்துக்கள் சுவடிவிட்டு எழுந்து காற்றில் மிதப்பதுபோல விழிமயக்கு எழுந்தது.

மீண்டும் மீண்டும் அவள் முகம் நினைவுக்கு வந்து சென்றது. அவளை அத்தனை கூர்மையாக நோக்கினோமா என்ன என்று வியந்துகொண்டான். பெண்களை நோக்கும்போது குலமுறைமை விழிகளை தாழ்த்தச் சொல்கிறது. அகம் இன்னொரு கூர்விழியை திறந்துகொள்கிறது. அவள் காதோர மயிர்ப்பரவலை, இடக்கன்னத்தில் இருந்த சிறிய வெட்டுத்தழும்பை, நெற்றிவகிடில் இருந்த முடிப்பிசிறை, இடப்புருவம் ஒரு சிறு தழும்பால் சற்று கலைந்திருந்ததை, கண்ணிமைகளை, இதழ்களின் வளைவுக்குக் கீழிருந்த குழியை, மோவாயின் கீழே மென்தசை மெல்ல வளைந்து சென்றதை, கழுத்தின் மெல்லிய கோடுகளை, மிக அருகே என நோக்கமுடிந்தது. உடனே அகம் துணுக்குற்றது, அவன் நோக்கிக்கொண்டிருப்பது பாரதவர்ஷத்தின் பேரரசி ஒருத்தியை. அந்த ஓலை மிகுந்த எடைகொண்டதாக ஆகியது. அதை நழுவவிடப்போவதாக உணர்ந்தபின் மீண்டும் பற்றிக்கொண்டான்.

இரவு ஓசைகளாக நீண்டு நீண்டு சென்றது. இரவில் மட்டும் ஏன் ஓசைகள் அத்தனை துல்லியமான ஒத்திசைவுகொள்கின்றன? ஒவ்வொன்றும் ஒரு பெரிய ஒழுக்கின் சரியான இடத்தில் சென்று அமைந்துவிடுவது எப்படி? ஏன் எந்த ஒலியும் தனிப்பொருள்கொள்ளாமல் இரவென்று மட்டுமே ஒலிக்கின்றன? அவன் பெருமூச்சுகளாக விட்டபடி படுக்கையில் விழித்துக்கிடந்தான். படுத்திருப்பதுகூட உடலை வலிக்கவைக்கும் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டான். எழுந்து அமர்ந்தபோது துயிலின்மையும் பயணக் களைப்பும் உள்ளத்தின் எழுச்சியும் கலந்து உடலை எடையற்றதாக ஆக்கின. மென்மையான அகிபீனாவின் மயக்கு போல. எதையாவது அருந்தவேண்டுமென எண்ணினான். ஆனால் எழுந்துசெல்ல எண்ணிய எண்ணம் உடலை சென்றடையாமல் உள்ளுக்குள்ளேயே சுற்றிவந்தது.

தொலைவில் முதல்கரிச்சானின் ஒலி கேட்டதும் அவன் எழுந்து வெளிவந்தான். ஏவலன் அவனுக்காக காத்து நின்றிருந்தான். பயணத்திற்கு சித்தமாகி வந்ததும் ஏவலனிடமும் சகனிடமும் அவன் இளவரசருடன் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினான். புரவியில் ஏறி இருளுக்குள்ளாகவே விரைந்தான். விடியற்காலைக்குளிர் சாலையை தடித்த திரையென மூடியிருந்தது. அதைக்கிழித்து ஊடுருவிச்செல்லவேண்டியிருந்தது. சற்றுநேரத்திலேயே மூக்குநுனியும் காதுமடல்களும் உயிரற்றவைபோல ஆயின.

படகுத்துறையை சென்றடைந்தபோது அங்கே ஓரிரு பந்தங்கள் மட்டும் எரிவதையும், ஒளியில் துறைமுற்றத்தில் நின்ற புரவிகளையும் கண்டான். இறங்கி கடிவாளத்தை கையளித்தபின் சேவகனை நோக்கினான். அவன் ”இளவரசரும் பிறரும் முதற்படகில் ஏறிக்கொண்டுவிட்டனர்” என்று உதடசைக்காமல் சொன்னான். பூரிசிரவஸ் தலையசைத்தபின்னர் சென்று முதற்படகில் இணைந்த நடைபாலத்தை அடைந்தான். அங்கு காவல்நின்றிருந்த வீரன் தலைவணங்கி “உள்ளே அறைக்குள் இருக்கிறார்கள்” என்றான். படகில் அறைக்குள் நெய்விளக்கு எரிந்த ஒளி கதவின் இடுக்கு வழியாக தெரிந்தது. மற்றபடி அனைத்துப்படகுகளும் முழுமையாகவே இருளுக்குள் மூழ்கிக்கிடந்தன.

அறைவாயிலில் நின்ற ஏவலன் உள்ளே சென்று அறிவிக்க கதவுக்கு அப்பால் துரியோதனன் உரக்க எதிர்ச்சொல்லிட்டுக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது. “உள்ளே வருக பால்ஹிகரே.” பூரிசிரவஸ் உள்ளே சென்று தலைவணங்கினான். கர்ணனும் துச்சாதனனும் அறைக்குள் அமர்ந்திருந்தனர். அவனை அமரும்படி கைகாட்டியபடி “நாம் இன்று சூக்திமதிக்கு செல்வதாக இல்லை பால்ஹிகரே” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்தான். “நாம் நேராக காசிக்கு செல்லவிருக்கிறோம். நமது ஒரு சிறியபடைப்பிரிவை தசசக்கரத்திலிருந்து காசிக்கு வரச்சொல்லிவிட்டேன். காசியைத் தாக்கி காசிமன்னனின் மகள் பானுமதியையும் பலந்தரையையும் சிறைகொண்டுவரப்போகிறோம்.”

பூரிசிரவஸ் திகைப்புடன் கர்ணனை நோக்கிவிட்டு “ஏன்?” என்றான். “நேற்று பின்னிரவில் கிடைத்த ஒற்றர்செய்திகளின்படி பீமனும் நகுலனும் இப்போது காசிநாட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அவ்விரு இளவரசிகளையும் அவர்கள் சிறையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். உண்மையில் அது காசிமன்னனின் திட்டமேதான். அதை நாம் தடுத்தாகவேண்டும்” துரியோதனன் சொன்னான். “காசி நமக்கு இன்றியமையாதது. மகதத்தின் ஒருபக்கம் அங்கமும் மறுபக்கம் காசியும் இருந்தால் மட்டுமே அதை நாம் கட்டுப்படுத்த முடியும். காசி பாண்டவர் கைகளுக்குச் செல்லும் என்றால் அதன்பின்னர் கங்காவர்த்தத்தில் அவர்களுடைய கொடிதான் பறக்கும். ஒருபோதும் நாம் அதை ஏற்கமுடியாது.”

“ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். அவர்களின் திட்டமென்ன என்று அவனுக்கு அப்போதும் புரியவில்லை. “அத்துடன், காசிமன்னனின் இந்தத் திட்டத்தை நமக்கு அறிவித்தவர் காசிநாட்டு மூத்தஇளவரசி பானுமதியேதான்” என்று கர்ணன் சொன்னான். “அவளுக்கு புயவல்லமை மிக்க ஓர் அரசனை கணவனாக அடையவேண்டும் என்ற விழைவு உள்ளது.” துரியோதனன் புன்னகைத்து “ஆம், இந்த ஆட்டத்தில் பெண்களின் விழைவும் ஒரு கையே” என்றான். பூரிசிரவஸ் அவனுக்கு துச்சளையின் கடிதம் பற்றி தெரிந்திருக்குமோ என்ற ஐயத்தை அடைந்தான். ஆனால் துரியோதனனின் விழிகளை ஏறிட்டு நோக்கி அதை அறியும் துணிவு அவனுக்கு வரவில்லை.

“பானுமதியே அனைத்து செய்திகளையும் அறிவித்துவிட்டாள்” என்று துரியோதனன் சொன்னான். “அவர்கள் விஸ்வநாதர் ஆலயத்திற்கு நாளை புலரியில் வழிபட வருவார்கள். அவர்கள் அங்கே வரும் நேரம் பீமனுக்கும் நகுலனுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு நெடுநேரம் முன்னரே அவர்கள் கிளம்பிவிடுவார்கள். கங்கைக்கரையில் உள்ள மூன்று அன்னையர் ஆலயத்தின் முன்னால் அவர்களின் பல்லக்குகள் வந்ததும் நமக்கு செய்தி அனுப்பப்படும். நாம் அவர்களை அங்கிருந்து கவர்ந்துகொண்டு வந்து படகில் ஏற்றி கங்கையில் பாய்விரித்த பின்னர்தான் பீமனுக்கும் நகுலனுக்கும் அவர்கள் ஆலயத்திற்கு சென்று சேரவில்லை என்று தெரியவரும். தசசக்கரத்திலிருந்து வரும் நமது படகுப்படை நம்மைச்சூழ்ந்துகொண்டபின் அவர்களால் நம்மை தொடரவும் முடியாது.”

பூரிசிரவஸ் உடலை அசைத்து அமர்ந்தான். “ஐயங்கள் உள்ளனவா இளையோனே?” என்றான் துரியோதனன். “இது நம்மை திசைதிருப்பச்செய்யும் சூழ்ச்சியாக இருக்காதா?” என்றான் பூரிசிரவஸ். “இல்லை, பானுமதியின் தனிப்பட்ட செய்தி இது. பெண்கள் இதில் சூழ்ச்சி செய்யமாட்டார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “சிசுபாலரின் தங்கைகளை நாம் எப்போது கொள்கிறோம்?” என்றான் பூரிசிரவஸ். “முதலில் இது முடியட்டும். அந்த இளவரசிகளையும் கவர்வோம்.” பூரிசிரவஸ் சிலகணங்கள் எண்ணியபின் “காசிநாட்டு இளவரசி அஸ்தினபுரியின் பட்டத்தரசியாக ஆவாரா?” என்றான். துரியோதனன் “ஆம், அவள் இந்தத் தூதை அனுப்பியபின் அவளை என்னால் ஒருநிலையிலும் தவிர்க்கமுடியாது” என்றதும் அவன் கேட்கப்போவதை அவனே உய்த்துக்கொண்டு “சேதிநாட்டு இளவரசிகள் பட்டத்தரசிகளாக ஆகமுடியாது” என்றான்.

“அதை தமகோஷர் ஏற்கமாட்டார் என நினைக்கிறேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “இன்று அவர் நம்மை ஏற்கிறார் என்றால் அது அவரது மகள் அஸ்தினபுரியின் அரசியாக ஆவார் என்பதனால்தான். காசிநாட்டு இளவரசியை நீங்கள் மணந்ததை அறிந்தால் அவரது எண்ணம் மாறக்கூடும்.” கர்ணன் “ஆம், அதை நானும் எண்ணினேன்” என்றான். “அதைத்தான் நான் பேசிக்கொண்டிருந்தேன். இளவரசரின் எண்ணத்தை மாற்ற என்னால் முடியவில்லை. நாம் இன்னமும்கூட இதைப்பற்றி சிந்திக்கலாமென எண்ணுகிறேன்.”

துரியோதனன் உரக்க “எனக்கு தன் கணையாழியை அனுப்பிய பெண்ணை இன்னொருவன் கொண்டான் என்றால் நான் வாழ்வதில் பொருளில்லை” என்றான். “இது அத்தனை எளிதாக முடிவுசெய்யப்படவேண்டியதல்ல. இதில் நாம் பலவற்றை எண்ணவேண்டியிருக்கிறது” என்று கர்ணன் சொன்னான். “தமகோஷர் சிசுபாலரை நகரைவிட்டு அனுப்பவில்லை என்றால் நாம் இளவரசிகளை கவரமுடியாது ... அதில் ஐயமே தேவையில்லை.”

துரியோதனன் ”நான் முடிவுசெய்துவிட்டேன். காசிநாட்டு இளவரசியை நாம் கவர்ந்தாகவேண்டும்” என்றான். விழிகளை விலக்கிக்கொண்டு “இன்னும் அவள் முகத்தைக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால் அவளையன்றி எவரையும் என் பட்டத்தரசியாக என்னால் ஏற்கமுடியாது” என்றான். பூரிசிரவஸ் “அப்படியென்றால் சேதிநாட்டு இளவரசியர்?” என்று கேட்டதும் துரியோதனன் எழுந்து கைகளை விரித்து உரத்த குரலில் “அவர்கள் எனக்குத்தேவையில்லை” என்றான். உரக்க “தார்த்தராஷ்டிரரே, சேதிநாடு நமக்கு காசியை விட முதன்மையானது” என்றான் கர்ணன். “ஆம், நாம் துச்சளையை சிசுபாலருக்கு அளிப்போம், அவ்வளவுதானே? சேதிநாடு நம்மைவிட்டுப்போகாது. அவருடைய பெருவிழைவுகளை பின்னர் பார்த்துக்கொள்வோம்.”

கர்ணன் ஏதோ சொல்லமுனைவதற்குள் துரியோதனன் “இனி இதில் பேச்சுக்கு இடமில்லை. நான் படகுகளை காசிக்குச் செல்ல ஆணையிடப் போகிறேன்...” என்றபின் திரும்பி துச்சாதனனிடம் “புறப்படுக!” என்று கைகாட்டினான். துச்சாதனன் தலைவணங்கி வெளியே சென்றான்.

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 3

கங்கையின் ஒழுக்குடன் வடகாற்றின் விசையும் இணைந்துகொள்ள பகல்முழுக்க படகு முழுவிரைவுடன் சென்றது. இருபக்கமும் அனைத்துப்பாய்களையும் விரித்து பெரிய கழுகுபோல அது சென்றபோது கங்கையின் அலைநீர்வெளி அதற்கு அடியில் சுருண்டு மறைந்தது. பூரிசிரவஸ் அமரத்தில் நின்று நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான். கொந்தளித்துக்கொண்டிருந்த உள்ளம் நீரின் சீரான ஓட்டத்தை நோக்க நோக்க மெல்ல அமைதிகொண்டது. விழி அறியும் சீரான அசைவுகள் எண்ணங்களையும் சீரமைப்பது எப்படி என்று எண்ணிக்கொண்டான். வெளியே தெரிபவற்றுக்கு உள்ளம் அறியாமல் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறது. உள்ளம் என்பதே அந்த எதிர்வினை மட்டும்தானா? நினைவுகளுக்கும் புறவுலகுக்குமான ஓர் ஓயா உரையாடல்.

ஆனால் எங்கோ புறம் வென்றுவிடுகிறது. நினைவுகளை அது தன் ஒழுங்கில் அடுக்கத்தொடங்கிவிடுகிறது. விழிகளை இழந்தவர்கள் நினைவுகளை எப்படி கையாள்கிறார்கள்? அவனுக்கு திருதராஷ்டிரர் ஓயாது இசைகேட்பது நினைவுக்கு வந்தது. இந்த வானை ஒளியை அலைநீர்வெளியை வண்ணங்களை நிழலாட்டங்களை நிகர்செய்ய எவ்வளவு இசை தேவை? அப்போது இசைகேட்டால் நன்று என்று தோன்றியது. ஆனால் உடனே அதை நோக்கி உள்ளம் செல்லாது என்ற எண்ணமும் வந்தது. படகுப்பாய்கள் முறுகி உறுமும் ஒலியும் வடங்கள் இறுகிநெகிழும் ஒலியும் மர இணைப்புகளின் நெரிபடும் ஒலியும் இணைந்து காற்றின் ஓசையுடன் கலந்து அவனை சூழ்ந்திருந்தன. அதன் தாளத்தை உள்ளமும் அடைந்துவிட்டிருப்பதை சற்று கழித்து அவன் உணர்ந்தான்.

அறியாமலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். விழித்தபோது அவன்மேல் வெயில் சரிந்திருந்தது. அரைத்துயிலில் சென்று உள்ளறைப்பீடத்தில் படுத்தான். மீண்டும் விழித்தபோது குளிர்ந்தது. எழுந்து அமர்ந்து சரிந்துகிடந்த ஆடையை அள்ளிச்சுற்றியபடி வெளியே வந்தான். படகு அரையிருளில் சென்றுகொண்டிருந்தது. அந்தி கடந்துவிட்டிருந்தது. குகனிடம் எந்த இடம் என்று கேட்டான். ”அருகே இருக்கும் துறைநகர் ஃபர்கபுரி. ஆனால் நாம் எங்கும் நிற்கப்போவதில்லை இளவரசே” என்றான். ”காசியை எப்போது அடைவோம்?” என்றான் பூரிசிரவஸ். “விரும்பினால் நள்ளிரவுக்குள் சென்றுவிடமுடியும். இனிமேல் செய்திகளைப்பெற்றுக்கொண்டு முன்னால் செல்லலாம் என்று இளவரசரின் ஆணை” என்றான் குகன்.

செந்நிறமலர்கள் பூத்த புதர்போல பந்தங்களும் விளக்குகளும் ஒளிரும் ஃபர்கபுரி அப்பால் தெரிந்தது. கரையொதுங்கும் படகுகள் பாய்மடித்து விரைவழிந்து மூக்கு திருப்பின. சங்கொலியுடன் பெரும்படகு ஒன்று அங்கிருந்து சிறகுகளை ஒவ்வொன்றாக விரித்தபடி மையப்பெருக்கு நோக்கி வந்தது. கலிங்கத்துக்கொடி அதில் பறந்தது. பூரிசிரவஸ் இடையில் கைவைத்து ஃபர்கபுரி கடந்துசெல்வதை நோக்கி நின்றான். “இளவரசர் இன்னும் எழவில்லையா?” என்றான். “இல்லை, அவர்கள் மதுவருந்திவிட்டு படுத்திருக்கிறார்கள்” என்றான் குகன். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். துயின்று எழுந்ததனாலேயே உள்ளம் தெளிந்து அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் மாறிவிட்டிருந்தன. அவன் சென்றுகொண்டிருப்பது ஒரு போருக்கு என்பதையே நினைத்துப்பார்க்கமுடியவில்லை.

“தாங்கள் உணவருந்தலாமே” என்றான் குகன். “இல்லை, அவர்களும் எழட்டும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். நன்றாக பசித்தது. படகின் அடியிலிருந்து சுட்டமீனும் அப்பமும் மணத்தன. சற்றுநேரத்தில் துச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து பெரிய கைகளை தலைக்குமேல் தூக்கி சோம்பல்முறித்துக்கொண்டு அவனை நோக்கினான். அவன் உடலின் வியர்வை நாறியது. “நன்கு துயின்றுவிட்டேன் இளையோனே” என்றான். “இளவரசரை எழுப்புங்கள். நாம் ஃபர்கபுரியை கடந்துவிட்டோம்.” துச்சாதனன் திகைப்புடன் “கடந்துவிட்டோமா? ஃபர்கபுரியில்தானே நமக்கு பறவைத்தூது வரவேண்டும்?” என்று சொன்னபின் திரும்பி உள்ளே சென்றான்.

கர்ணனும் துரியோதனனும் வெளியே வந்தனர். துரியோதனன் “பால்ஹிகரே, ஃபர்கபுரியில் இருந்து செய்தி எதையாவது பெற்றீரா?” என்றான். “இல்லை, செய்தியை எனக்கு அனுப்பமாட்டார்களே” என்றான் பூரிசிரவஸ். “அறிவிலி போல துயின்றுவிட்டேன். நேற்றிரவு முழுக்க நான் துயிலவில்லை. விடியலில் கண்ணயர்ந்தபோது காசிநாட்டு இளவரசியின் செய்தி வந்தது. அதன்பின் ஏது துயில்?" என்று துரியோதனன் சொன்னான். நிலைகொள்ளாமல் "ஃபர்கபுரியின் ஒற்றனிடம் பருந்து வந்து சேரும். அவனிடம் தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்...” என்றான். பூரிசிரவஸ் என்ன என்பதுபோல நோக்கினான். “அனைத்தும் காசியில் சித்தமாக இருக்கவேண்டுமல்லவா? நான் வரும் செய்தியை பானுமதிக்கு அளித்துவிட்டேன். அவர்களின் செய்தி எனக்கு வரவேண்டும்.”

என்ன சொல்வதென்று பூரிசிரவஸ்ஸுக்கு தெரியவில்லை. ஆனால் உள்ளூர எங்கோ புன்னகை எழுந்தது. அதை துரியோதனன் எப்படியோ உணர்ந்தவன் போல தானும் சிரித்துக்கொண்டு “இத்தனைக்கு நடுவிலும் துயின்றிருக்கிறேன்” என்றான். “அது தங்கள் துணிவைக்காட்டுகிறது” என்றான் பூரிசிரவஸ். "நன்று, நீர் அவைப்பாடகராக இருக்கலாம்” என்று துரியோதனன் சொன்னான். முதல்முறையாக பூரிசிரவஸ் உள்ளூர புண்பட்டான். ஏன் என்று சிந்திக்கமுடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. ஆனால் சினத்தில் உடலெங்கும் வெங்குருதி ஓடியது. மூச்சை இழுத்து நீர்த்துளிகள் நிறைந்த காற்றை இழுத்துவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான்.

கர்ணன் வானை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “செம்பருந்து உங்களை தேடித்தான் வருகிறது இளவரசே” என்றான். துரியோதனன் "எங்கே?" என்றான். வானை நோக்கியபோது எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. “அது தங்களைத்தேடி நம் படகுக்கு மேலேயே பறந்துகொண்டிருந்திருக்கிறது. இப்போதுதான் கண்டுகொண்டது” என்று சொல்வதற்குள் சிறகோசையுடன் செம்பருந்து வந்து காற்றிலாடியபடி இறகுகளைக் கலைத்து வடத்தில் அமர்ந்தது. துரியோதனன் கைநீட்டியதும் எழுந்து பறந்து வந்து அவன் கைவளைமேல் அமர்ந்தது. அதன் கால்களில் தோல்சுருள் சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. துரியோதனன் சுருளை எடுத்ததும் துச்சாதனன் அதைப்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றான்.

துரியோதனன் செய்தியை வாசித்துவிட்டு சுருளைச் சுருட்டி நீரிலிட்டான். திரும்பி “கர்ணா, அனைத்தும் சித்தமாக இருக்கின்றன. நாளை விடியல் முதல்நாழிகை மணி அடிக்கையில் அவர்கள் வரும் தேர் அன்னையர் ஆலயத்தை கடக்கும்” என்றான். அவன் உடலெங்கும் சிறுவனைப்போன்ற துள்ளல் குடியேறியது. “அவளே அனுப்பிய செய்தி இது. அவள் அங்கு வந்ததும் ஒரு சுடர் இடவலமாக இருமுறை சுழற்றப்படும்.” கர்ணன் “மிக எளிதாகத்தான் தோன்றுகிறது” என்றான். “ஆனால் பீமன் என்ன செய்யப்போகிறான் என நமக்கு இன்னமும் தெரியாது.” துரியோதனன் “அவன் செய்யப்போவது தெளிவாகவே இருக்கிறது... அவர்கள் மேலும் ஒருநாழிகைக்குப்பின் விஸ்வநாதரின் ஆலயத்த்தின் முன்பு அவளுக்காக காத்திருப்பார்கள்” என்றான்.

கர்ணன் “ஆம், ஆனால் முன்னெச்சரிக்கையாக ஒரு வீரனை அரண்மனையிலிருந்து அவர்கள் கிளம்பியதுமே அவன் கூடவே அனுப்பியிருந்தால்?” என்றான். “அவ்வீரன் செய்தியனுப்பினால் நாம் அவளைக் கவர்ந்ததுமே அவன் நம்மை வந்தடைந்துவிடமுடியும். இரு இடங்களுக்கு நடுவே விழிதொடும் தொலைவே உள்ளது.” “வரட்டும், இம்முறை நீரில் போர்நிகழும்” என்றான் துரியோதனன். “போரிடலாம். ஆனால் நம்மிடம் இளவரசியர் இருக்கிறார்கள். அதை அறிந்தபின் காசிமன்னன் நம்முடன் போருக்கு வராமலிருக்கமுடியாது. நாம் தனியர், அரைநாழிகைக்குள் போர்முடியவில்லை என்றால் சிறைப்படநேரிடும்.” கர்ணன் புன்னகைத்து “அதன்பின் நீங்கள் எந்த ஷத்ரியகுலத்திலும் மணம்புரிந்துகொள்ள முடியாதென்பதை எண்ணுங்கள்” என்றான்.

“தசசக்கரத்திலிருந்து நமதுபடைகள் நமக்குப்பின்னால் வணிகப்படகுகளாக வந்துகொண்டிருக்கின்றன. அவை நம்மை சூழ்ந்துகொள்ளும்” என்றான் துரியோதனன். “ஆனால் காசியின் முழுப்படையும் வந்தால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது” என்றான் கர்ணன். எரிச்சலுடன் துரியோதனன் “அப்படியென்றால் என்ன செய்யலாம் என்கிறாய்? திரும்பலாமென்று சொல்ல வருகிறாயா?” என்றான். கர்ணன் “இல்லை, நாம் இளவரசியரை கொண்டு செல்வது உறுதி. ஆனால், இந்தத் திட்டமே மிக விரைந்து அமைக்கப்பட்டது. அனைத்து வழிகளிலும் எண்ணி நோக்கப்படவில்லை” என்றான். “எண்ணுவதற்கு நமக்கு நேரமில்லை” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “இப்போது இவளையும் பீமன் கொண்டுசென்றான் என்றால் அதன்பின் என் வாழ்க்கையில் பொருளே இல்லை.”

கர்ணன் முகம் சற்று சுளித்ததை பூரிசிரவஸ் கண்டு வியந்து விழிகளை ஏறிட்டான். அப்போதுதான் தொடக்கம் முதலே கர்ணனுக்கு அந்தப் புறப்பாடு பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அது சரியாக திட்டமிடப்படவில்லை என்பதல்ல அது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு துச்சாதனனை நோக்கியதும் அதே உணர்ச்சியை அங்கும் கண்டான். புரிந்துகொள்ளமுடியாமல் மீண்டும் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் எரிச்சலும் சினமுமாக “நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல வருகிறாய்?” என்றான். அந்த நேரடியான சினம் கர்ணனை தணியச்செய்தது. “சற்று எச்சரிக்கையாக இருப்போம், ஏற்கெனவே வென்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம், அவ்வளவுதான் நான் சொன்னது” என்றான்.

கர்ணனின் குரல் தாழ்ந்ததுமே பூரிசிரவஸ் அவன் உள்ளத்தை புரிந்துகொண்டான். புன்னகையுடன் இருண்ட நீர்வெளியை நோக்கினான். பொறாமை கொள்ளும் ஒரு தோழன் தனக்கு அமைந்ததே இல்லை என்ற எண்ணம் வந்தது. ஒரு இளையோனும் அமையவில்லை. பானுமதியை எண்ணிக்கொண்டான். அவள் வந்த முதற்கணமே இவ்விருவரையும் அடையாளம் கண்டுகொள்வாள். அப்போதுதான் திகைப்புடன் ஒன்றை அவன் நினைவுகூர்ந்தான், பெரும்பாலான தருணங்களில் துச்சாதனனை அவன் துரியோதனனின் படுக்கையறையில் தமையனின் மஞ்சத்திற்குக் கீழே தரையில் மரவுரி விரித்து துயில்பவனாகவே பார்த்திருக்கிறான்.

துரியோதனன் “நமக்கு இன்னமும் நேரமிருக்கிறது. நம் திட்டங்களில் என்ன இடர் ஏற்பட முடியுமென அமர்ந்து சிந்திப்போம்” என்றான். “அதற்கு முன் நாம் உணவுண்ணவேண்டும்” என்றான் கர்ணன். அவன் பேச்சை சற்று எளிதாக்க விழைவது தெரிந்தது. ஆனால் துரியோதனன் தேவையற்ற உரத்த நகைப்புடன் “ஆம், உண்போம். போருக்கு முன்னும் பின்னும் உண்டாட்டு தேவையல்லவா?” என்றான். திரும்பி குகனிடம் “உணவு! உணவு கொண்டுவருக!” என்று கூவினான். அந்த நிலையழிந்த நிலை பூரிசிரவஸ்ஸுக்கே சற்று ஒவ்வாமையை அளித்தது. காலால் சிறியபீடம் ஒன்றைத் தட்டி இழுத்துப்போட்டு அமர்ந்தபடி “பானுமதி என்றால் என்ன பொருள் இளையோனே?” என்றான் துரியோதனன்.

சற்று தயங்கியபின் “சூரியஒளிகொண்டவள்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் தொடையில் அடித்து நகைத்து “நன்று, ஒருபக்கம் சூரியமைந்தன். மறுபக்கம் சூரிய ஒளி. அஸ்தினபுரிக்கு இனி இரவே வரப்போவதில்லை” என்றான். "அமர்ந்துகொள்ளும் பால்ஹிகரே” என்று பீடத்தை தட்டினான். பூரிசிரவஸ் அமர்ந்தான். அப்பால் கர்ணன் அமர துச்சாதனன் கயிற்றைப்பற்றியபடி நின்றான். துரியோதனன் ”பிறவி நூல் கணிக்காமல் நேரம் குறிக்காமல் மணநிகழ்வு அமைவதில்லை. ஆனால் காந்தருவத்தில் அது தேவையில்லை. ஏனென்றால் கந்தர்வர்கள் அனைத்தையும் அமைக்கிறார்கள்” என்றான். நிமிர்ந்து வானை நோக்கி “விண்மீன்களாக நம்மை நோக்குபவர்களில் கந்தர்வர்களும் இருப்பார்கள் இல்லையா?” என்றான். ”ஆம்” என்றான் பூரிசிரவஸ். “கந்தர்வர்கள் மானுட உள்ளங்களை வைத்து விளையாடுகிறார்கள்” என்று சொல்லி துரியோதனன் பெருமூச்செறிந்தான்.

“தார்த்தராஷ்டிரரே, உம்மை மணம்கொள்ள காசி இளவரசி எதை கோரினாள்?” என்றான் கர்ணன். “அந்தக் கடிதத்தையே நீதானே படித்தாய்?” என்றான் துரியோதனன். “ஆம், படித்தேன். ஆனால் நானறியாத செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று நோக்கினேன்.” துரியோதனன் சற்று புண்பட்டு “நீயறியாத மந்தணம் எனக்கு ஏது?” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. ”சொல், ஏன் அப்படி கேட்டாய்?” என்றான் துரியோதனன். “இல்லை, எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான். மணம்புரிந்தபின்னரும்கூட பெண்களுக்கு சொல்லளிப்பதில் ஆண்மகனுக்கு முழு எச்சரிக்கை தேவை.” துரியோதனன் சிரித்து “மூடா, நான் அவள் காமத்திற்கு அடிமையாகி விடுவேன் என எண்ணுகிறாயா?” என்றான்.

கர்ணன் அமைதியாக நின்றான். ”சொல்” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். துச்சாதனன் நின்றிருந்த கயிறு முனகி ஆடியது. “மூடா” என்று கூறி துரியோதனன் உரக்க சிரித்தான். “நான் என்னை அறிவேன். அதைவிட நீ என்னை அறிவாய்... பெண்கள் விளையாடும் பகடை அல்ல நான்.” கர்ணன் மறுமொழி சொல்லாமல் இதழ்கள் வளைய நோக்கினான். “உன் உள்ளம் புரிகிறது. நான் நிலையழியவில்லை. ஆனால் என் உள்ளம் முழுக்க களிப்பு நிறைந்துள்ளது. அதை விலக்கவோ மறைக்கவோ நான் நினைக்கவில்லை. அதை முழுமையாக நிறைத்துக்கொள்ள என்னால் முடியவில்லையே என்றுதான் என் அகம் தவிக்கிறது.” துரியோதனன் தன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் இந்தக்கைகள் பெரியவை. கதைபயின்று இறுகியவை. அவற்றால் உவகையில்கூட நெகிழமுடிவதில்லை” என்றான்.

“மணம்கொள்ளும்போது ஆண்கள் நிலையழிகிறார்கள்” என்று கர்ணன் சொன்னான். “ஏனென்றால் அதுவரை அவர்களை சூழ்ந்திருந்த தனிமை ஒன்று கலைக்கப்படுகிறது.” பூரிசிரவஸ் அவன் முகத்தை நோக்க விழைந்தான். ஆனால் கர்ணன் இருண்ட ஆற்றைநோக்கி திரும்பியிருந்தான். ”தனிமையா... எனக்கா?” என்றான் துரியோதனன். “நான் பிறந்தநாளிலிருந்து தனிமையை அறிந்ததில்லை. இவன் என்னுடன் எப்போதும் இருக்கிறான். உன்னை சந்தித்த நாளுக்குப்பின் நீயும் என் உள்ளே உடனிருக்கிறாய்.” கர்ணன் ஏதும் உரைக்கவில்லை. குகர்கள் உணவுடன் வந்தனர். வேகவைத்த பெரிய மீன்கள், அப்பங்கள், ஊன். பூரிசிரவஸ் “மது தேவையில்லை. விடியலில் அது நம்மை சோர்வுறச்செய்துவிடும்” என்றான். “அஞ்சவேண்டாம், இல்லை” என்று சொல்லி மீசையை நீவியபடி துரியோதனன் சிரித்தான்.

உணவுத்தட்டுகள் அகல்வது வரை அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து உண்டுகொண்டிருக்க மெல்லும் ஓசை மட்டும் உரையாடல் போலவே ஒலித்தது. துரியோதனன் எழுந்து இடையில் கைவைத்து விண்மீன்களை நோக்கி நின்றான். “எத்தனை விண்மீன்கள். கோடிக்கணக்காக இருக்கும் என நினைக்கிறேன். அவை இம்மண்ணில் வாழ்ந்த முனிவர்கள் என்கிறார்கள்” என்றான். “ஆதித்யர்கள்” என்றான் கர்ணன். “முனிவர்கள் அல்லவா ஆதித்யர்களாக ஆகிறார்கள்?” என்று துரியோதனன் கேட்க கர்ணன் மொழியில்லாமல் குவளையில் கை கழுவினான். “என்னை அவர்கள் நோக்குகிறார்கள் என்று எண்ணத்தான் நான் விரும்புகிறேன்... அவை வெறும் ஆதித்யவெளிச்சங்கள் என்று எண்ண விரும்பவில்லை.”

அவர்கள் அங்கே நிற்பதையே அவன் உணரவில்லை என்று தோன்றியது. அவன் முகமே விண்மீன் ஒளியில் மலர்ந்து தெரிந்தது. "எத்தனை விழிகள்! அவை என்னை அறியுமா? என் இந்தக்கணத்தை?" கர்ணன் துச்சாதனனின் விழிகளை நோக்கியபின் “நாங்கள் உள்ளே சென்று சற்றுநேரம் இத்திட்டத்தை சரிபார்க்கிறோம். நீங்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். துரியோதனன் புன்னகையுடன் பூரிசிரவஸ்ஸிடம் “அவர்கள் என் உள்ளத்தை உணரமுடியாது பால்ஹிகரே. நீர் அறிவீரா? நீர் பெண்கள் மேல் காதல்கொண்டிருக்கிறீரா?” என்றான்.

பூரிசிரவஸ்ஸின் நெஞ்சு படபடத்தது. இதுதான் தருணம். இப்போதுதான் சொல்லவேண்டும். ஆம் எனும் ஒரு சொல். அனைத்தும் மாறிவிடும். இத்தருணத்தில் துரியோதனனால் அதை ஒருபோதும் மறுக்கமுடியாது. ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்... ஆனால் அவன் தலைகுனிந்து “இல்லை” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். “தெரியவில்லை” என்றான் பூரிசிரவஸ். “எனக்கும் அது புதிராகவே உள்ளது. பெண்கள் விரும்பும் இளையோன் நீர்.” பூரிசிரவஸ் மீண்டும் தொண்டைக்குள் அந்தச் சொல்லை உணர்ந்தான். “ஆனால் நான் அப்படி அல்ல. அஞ்சும் பெண்களை அன்றி நான் கண்டதில்லை.வெறும் அரண்மனைப்பெண்கள்...”

துரியோதனன் மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “ஒரு பெண் என்னை விரும்பும்படி நான் இருக்கிறேன் என்றால்...” என்றபின் சிரித்தபடி திரும்பி “என்னிடம் மென்மையானவை சில எஞ்சியிருக்கின்றன. அவை என்னை தோற்கடிக்கவும்கூடும். ஆனால் அது எனக்கு பிடித்திருக்கிறது. நெடுநாளாயிற்று என் ஆழங்களில் வெளிக்காற்று பட்டு” என்றான். சட்டென்று அவன் முகம் மாறியது. “இப்போது உமது நெஞ்சுக்குள் கடந்து சென்றதென்ன என்று அறிவேன். அவள் என்னை விரும்பாமல் என் அரியணையை விரும்பியிருக்கலாம் அல்லவா என்றுதானே நினைத்தீர்?”

உண்மையில் அவன் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். “இல்லை அரசே” என்றான். “குலப்பெண்கள் அரியணைக்கணக்குகளுக்காக அப்படி ஒரு கடிதத்தை ஓர் ஆண்மகனுக்கு எழுதமாட்டார்கள்.” துரியோதனன் தலையை அசைத்து “இல்லை, அதுவே உண்மையாக இருக்கலாம். நான் பெண்கள் விரும்பாத கற்பாறையாகவே இருக்கலாம். அவள் விழைவது என் மணிமுடியும் செங்கோலுமாக இருக்கலாம். ஆனால் அதை நான் நம்ப மறுக்கிறேன். இன்னும் கொஞ்சநேரம்தான். நாளை அவளை நான் பார்த்துவிடுவேன். பார்த்த முதற்சிலகணங்களிலேயே அவள் எவரென அறிந்துகொண்டும் விடுவேன். இத்தனை விடாயுடன் தேடும் விழிகளுக்கு முன் அவள் எதையும் ஒளிக்கமுடியாது. வஞ்சமும் விழைவும் கொண்ட பெண் அவள் என்றால் அங்கேயே அனைத்தும் கலைந்துவிடும், அதை நான் அறிவேன். ஆனால் பால்ஹிகரே, இந்த இரவை அந்த ஐயத்தின்பொருட்டு நான் இழக்கவேண்டுமா என்ன? இதுபோன்றதோர் இரவு ஒருவேளை எனக்கு மீண்டும் வராமலேயே போகலாம்” என்றான்.

பூரிசிரவஸ் புன்னகைசெய்து “இளவரசே, காதல்கொண்ட உள்ளம் தன் கரவுகளை இழந்துவிடுகிறது. குழந்தையைப்போல கைநீட்டுகிறது. அதற்கு அன்புள்ள விழிகளையும் கைகளையும் தெரியும். தாங்கள் அறியாத உள்ளுணர்வொன்றால் அறிந்தது முற்றிலும் உண்மையாகவே இருக்கும். அன்னையும் தோழியும் ஆசிரியையுமாக அமையும் ஒரு குலமகளையே நீங்கள் அடையவிருக்கிறீர்கள்” என்றான். துரியோதனன் “உமது சொல் நிகழட்டும் இளையோனே” என நெகிழ்ந்த குரலில் சொன்னான். பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கி “எத்தனை அதிர்வுகள்... ஒவ்வொரு அதிர்வுக்கும் மண்ணில் அவை எதையோ ஒன்றை அறிகின்றன என்கிறார்கள். இங்குள்ள மானுடன் ஒருவனின் முழுவாழ்க்கை அவற்றில் ஓர் அதிர்வுக்கு நிகரானது என்று என் செவிலி சொல்லியிருக்கிறாள்” என்றான்.

மீண்டும் பெருமுச்சு விட்டு “எளிய கற்பனைகள். குழந்தைத்தனமானவை. ஆனால் அனைத்து கல்வியையும் உதறி அக்கதைகளுக்கு திரும்பிச்செல்லும்போது அதுவரை அறியாத பலவும் புரிகின்றன” என்றான் துரியோதனன். கைகளை விரித்தபடி படகில் மெல்ல நடந்தான். “இந்த விண்மீன்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கையில் நாள்தோறும் பார்த்திருந்தேன். ஆனால் இளமையடைந்தபின் இன்றுதான் பார்க்கிறேன். குழந்தைக்கதைகளை நோக்கி செல்ல ஒரு தருணம் தேவைப்படுகிறது.” பூரிசிரவஸ் “காதலின் தருணத்தை அழகுறச்செய்ய குழந்தைக்கதைகளுக்கும் இசைக்கும் மட்டுமே திறனுள்ளது இளவரசே” என்றான்.

துரியோதனன் நின்று “நீர் காதலித்துள்ளீரா?” என்றான். “உண்மையைச் சொல்லும். நீர் சொல்லும் சொற்கள் எனக்கு ஐயத்தை அளிக்கின்றன.” பூரிசிரவஸ் “இளவரசே, நான் நிறைவேறாக்காதல் ஒன்றை நெஞ்சில் நிறைத்துள்ளேன்” என்றான். வாய்தவறி அச்சொல் வந்து விழுந்துவிட்டதென உணர்ந்தான். “நிறைவேறாக்காதல் என்றால், முறையிலாக் காதலா?” என்றான் துரியோதனன் இடையில் கைவைத்து அவனை முழுமையாக மறைத்து தலைக்குமேல் முகம் எழுந்து நின்றவனாக. “இல்லை, அரசே. முறையானதுதான். நான் விரும்பும் பெண்ணை அடைவது எளிதல்ல.” அவன் கால்கள் நடுநடுங்கியதில் விழப்போவதாக உணர்ந்தான். கைநீட்டி வடம் ஒன்றை பற்றிக்கொண்டான்.

“அவள் உம்மைவிட குலமும் அரசும் கொண்டவளா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வளவுதானே இளையோனே! இப்பாரதவர்ஷத்தை ஆளப்போகும் அரசனின் துணைவன் நீர். ஒரு சொல் மட்டும் சொல்லும், எவளென்று. என் முழுப்படைகளைக்கொண்டும் வென்று வந்து உமக்களிக்கிறேன். எவளென்றாலும் சரி.” பூரிசிரவஸ் நெஞ்சுள் நிறைந்த சுமையை மூச்சாக வெளிவிட்டான். “இல்லை” என்றான். “எவளென்று மட்டும் சொல்லும்...” துரியோதனன் முகம் மாறியது. “இது என் அழியாச்சொல் எனக் கொள்ளும். நீர் சொல்லும் பெண் யாராக இருப்பினும் அவள் உமக்குரியவள். என் உடன்பிறந்தாரும் நாடும் உயிரும் அதற்குரியவை.”

பூரிசிரவஸ் தன் காதுகளில் வெம்மையான காற்று படுவதுபோல உணர்ந்தான். “தருணம் வரட்டும் இளவரசே, சொல்கிறேன்” என்றான். “ஏன், இப்போது சொன்னால் என்ன?” என்றான் துரியோதனன். “நீங்கள் பெண்கொள்ளப்போகும் தருணம் இது. அதன்பின்னர் சொல்கிறேன்.” துரியோதனன் சிரித்து அவன் தோளை தன் கையால் எடையுடன் தட்டி “இது முடியட்டும், நாம் படையுடன் கிளம்புவோம்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். அவன் உடல் மெல்ல தளர்ந்தது. மென்மையான காற்று ஒன்று அவன் உள்ளத்தைத் தழுவிச்செல்வது போலிருந்தது.

துரியோதனனின் உள்ளம் திசைமாறியது. மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “எதிலும் பொருளில்லை என்று சொல்கின்றன” என்றான். “நீடித்து நிற்பவை என ஏதுமில்லை. விண்மீன் சிமிட்டல்கள் கணம் கணம் கணம் என்றே சொல்கின்றன. இக்கணத்தில் இங்கே மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ்வதைவிட மேலான பொருள்கொண்ட எதுவுமில்லை வாழ்க்கையில்.” அவன் தனக்குள் என ஏதோ முனகினான். காற்றில் கையால் கதை ஒன்றை வீசினான். “நான் என் ஆசிரியரை நினைவுறுகிறேன். அவரிடமிருந்து நான் கற்றிருக்கவேண்டியது இதுதான். கற்க என்னால் முடியவில்லை. அவர் சிட்டுக்குருவிகளைப்போல அந்தந்த கணத்தில் வாழ்பவர். நேற்றும் நாளையும் அற்றவர். இளையோனே, என் நெஞ்சு முழுக்க வஞ்சத்துடன் அவர் முன் சென்றேன். அவரிடமிருந்து போர்க்கலையை கற்றேன். அவரிடமிருந்து எதை கற்கவேண்டுமோ அதை கற்கவில்லை. அதை இப்போது உணர்கிறேன்.”

மீண்டும் கதையை சுழற்றியபின் திரும்பி “ஆனால் என்னால் அது முடியுமென்றே தோன்றவில்லை. இந்த நாடு மணிமுடி அனைத்தையும் துறக்கலாம். ஆனால் தீராததும் அழியாததுமான ஒன்று...” துரியோதனன் மேலே சொல்லாமல் நிறுத்தி கைகளை கட்டிக்கொண்டான். திரும்பி அறைக்குள் நோக்கி “என்ன செய்கிறார்கள்?” என்றான். “வரைபடத்தை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “காசியை வரைபடத்தில் நோக்க என்ன இருக்கிறது? விடிகாலையில் காற்று நன்றாகவே வீசும்....” என்றபின் அவன் வடத்தின்மேல் அமர்ந்தான். அவன் உடல் எடையால் அது வளைந்தது. மேலே பாயில் ஓர் அலையெழுந்தது.

“காசிநாட்டு இளவரசியை முன்பு பீஷ்மர் கவர்ந்து வந்தார் என்று அறிந்திருப்பீர். நம் கிழக்குக்கோட்டைக்கு வெளியே அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. அங்கு கருநிலவுநாட்களில் அவளுக்கு குருதிக்கொடை கொடுத்து வணங்குகிறோம்” என்று துரியோதனன் தொடர்ந்தான். பூரிசிரவஸ் ”அறிவேன்” என்றான். “அவள் கொற்றவையென உருவெடுத்துச் சென்றபோது அவளுடைய மேலாடை முதலில் விழுந்த இடம் அது. அங்கிருந்து அவள் ஆடைகள் விழுந்த பன்னிரு இடங்களில் பன்னிரு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. செந்தழலி அன்னை என அவளை வணங்குகிறார்கள்...” பூரிசிரவஸ் தலையசைத்தான். “காசிநாட்டு இளவரசி. மீண்டும் அதேகதை. அதே பெண்கவர்தல்...” துரியோதனன் தலையை அசைத்து “எண்ண எண்ண விந்தை” என்றான்.

பூரிசிரவஸ் ”ஆனால், இப்போது இளவரசியின் விருப்பப்படி செல்கிறோம்” என்றான். “ஆம், எப்படியோ இது நிகர்செய்யப்படுகிறது” என்றபின் “அவளை இன்னொரு அம்பை என்கிறார்கள். எரிகண்ணீர் உதிர்த்துச்சென்றவள் எரிகுழலுடன் மீள்கிறாள் என்று ஒரு சூதன் பாடக்கேட்டேன்” என்றான் துரியோதனன். அவன் அதுவரை அந்த ஒரு பெயரைச்சுற்றித்தான் வந்துகொண்டிருந்தான் என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டன். அதைச் சொன்னதும் விடுதலையை அறிகிறான். அல்லது மேலும் பதற்றம் கொள்கிறான். பூரிசிரவஸ் ஏதேனும் மறுமொழியாக சொல்ல நினைத்தான். ஆனால் எதிரே அமர்ந்திருந்த கரியபேருருவை அவனால் மதிப்பிடமுடியவில்லை.

“காட்டெரி எழுந்து வருவதை சிறிய குளிரோடை தடுக்குமா என்று சொல்வார்கள்” என்று துரியோதனன் தனக்குள் என சொல்லிக்கொண்டான். “வீண்சொற்கள்... பொருளே இல்லை.” எழுந்து கைகளை விரித்து “ஆனால் எல்லாம் எப்படியோ ஈடுகட்டப்படுகின்றன. எங்கிருந்தோ இன்னொன்று கிளம்பி வருகிறது...” என்றவன் திரும்பி “இவள் குளிர்ந்தவள் என்று என் நெஞ்சு சொல்கிறது. அம்பையன்னையின் அகத்தில் அஸ்தினபுரிக்கென எஞ்சிய கனிவு இவளாக வருகிறது என்று தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “ஆம், ஆகவேண்டும்... விழைவாக இருக்கலாம். ஏக்கமாக இருக்கலாம். ஆனால் விண்மீன்களுக்குக் கீழே நிற்பவன் வெறும் தனியன். வெறும் வேண்டுதலை மட்டுமே வெளிமுன் வைக்கமுடிந்தவன்.” அவன் கைகளை மீண்டும் கட்டிக்கொண்டு வானை நோக்கினான். பூரிசிரவஸ் அவன் பேசுவதற்காக காத்து நின்றான். ஆனால் துரியோதனன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் சென்றுவிட்டிருந்தான்.

துச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து “நேரமாகிவிட்டது மூத்தவரே” என்றான். துரியோதனன் திகைத்ததுபோல நோக்கி “ம்?” என்றான். “முதற்சாமம். நாம் காசியில் அன்னையர் ஆலயங்களுக்கு நேராக கங்கைக்குள் நின்றிருக்கிறோம்.” பூரிசிரவஸ் திகைத்ததுபோல திரும்பி நோக்கினான். காசியின் விளக்குகள் மின்னும் படிக்கட்டுகளை தொலைவில் காணமுடிந்தது. மணிகர்ணிகா கட்டமும் அரிச்சந்திரகட்டமும் அனலெழுந்து தெரிந்தன. அணையா சிதைகள். வரணாவையும் அசியையும் இரு மாலைகளென தோளிலிட்ட நகரின் இரு செவ்விழிகள். “நம் படைகளுக்கு சித்தமாக இருக்கும்படி செய்தி அனுப்பு” என்றான் துரியோதனன் மெல்லிய குரலில். தன் கச்சையை இறுக்கியபடி வந்து படகுவிளிம்பில் கால் வைத்து வானை நோக்கி எரியம்புக்காக காத்து நின்றான்.

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 4

தொலைதூரத்தில் கங்கையின் கரையில் அன்னையர் ஆலயத்தின் விளக்குகள் ஒளித்துளிகளாகத் தெரிவதை நோக்கியபடி கங்கையின் மையப்பெருக்கில் அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் பெருமூச்சுடன் திரும்பி “உறுதியாகவே தோன்றுகிறது, அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்” என்றான். “உன் வீண் ஐயங்கள் அவை. இந்தத்திட்டத்தில் எந்தப் பழுதையும் நான் காணவில்லை” என்று துரியோதனன் சினத்துடன் சொன்னான். “இளவரசே, நீங்கள் அந்த இளவரசியுடன் கற்பனையில் வாழ்ந்துவிட்டீர்கள். ஆகவே அனைத்தும் முடிந்துவிட்டதென்ற உளமயக்குக்கு ஆளாகிறீர்கள். இன்னும் எதுவும் தொடங்கவில்லை” என்றான் கர்ணன்.

அது எத்தனை உண்மையான சொல் என்று பூரிசிரவஸ் வியந்துகொண்டான். துரியோதனன் சலிப்புடன் கைகளை அசைத்துக்கொண்டு விலகிச்சென்றான். துச்சாதனன் அருகே வந்து “என்ன செய்யலாம் என்கிறீர்கள் மூத்தவரே?” என்றான். “அவர்கள் காத்திருக்கிறார்கள்... நமக்கான ஒளியடையாளத்தை அவர்களும் பார்க்கமுடியும்” என்று சொன்ன கர்ணன் பெருமூச்சுடன் “இந்த இருளில் அவர்கள் எத்தனைபேர், எங்கிருக்கிறார்கள் என எப்படி அறிவது? இருளுடன் போர்புரிவதைப்போல இடர் பிறிதொன்றுமில்லை. இருள் முடிவற்றபொருள் கொண்டது” என்றான்.

கைகளால் படகின் விளிம்பைத் தட்டியபடி நின்றபின் திரும்பி “நம்மிடம் உள்ள மிக விரைவாக படகுகொண்டுசெல்லும் குகன் ஒருவனை அழை” என்றான். துச்சாதனன் காலடிகள் ஒலிக்க ஓடி படகின் மறு எல்லைக்குச் சென்று அங்கிருந்து கயிறுவழியாக இருளுக்குள் சென்று மறைந்தான். கர்ணன் நிலையற்று அலைந்தபடி கரையையே நோக்கிக்கொண்டிருந்தான். துச்சாதனன் திரும்பி வந்தபோது ஓரு குகன் அவனுடன் இருந்தான். மிக இளையவன். “உன்னால் அரைநாழிகைக்குள் கரைசெல்ல முடியுமா?” என்றான் கர்ணன்.

“அதற்கு முன்னரே செல்வேன் அரசே” என்றான் குகன். “என்னிடம் மெல்லிய தக்கைப்படகு இருக்கிறது, கங்கைநீரை எனக்கு நன்றாகத்தெரியும்.” கரைக்குச் சென்று அங்கிருந்து ஒரு சுடர் அசைவைக் காட்டும்படி கர்ணன் ஆணையிட்டான். “எதற்கு?” என்றான் அப்பால் நின்ற துரியோதனன் ஐயத்துடன். கர்ணன் மறுமொழி சொல்லாமல் “நீ செல்லவேண்டிய இடம் அது... “ என சுட்டிக்காட்டினான். அது அன்னையர் ஆலயத்திற்கு முன்னால் விஸ்வநாதர் ஆலயத்தருகே ஓர் இடம். “அந்த தூண்வெளிச்சம் தெரியும் இடம்... அதனருகே இருண்டிருக்கிறது. அது காடு என நினைக்கிறேன்.”

குகன் தலையசைத்தான். “சுடர் காட்டியதும் நேராக நீரில் குதித்து மீண்டும் நம் படகை நோக்கி வந்துவிடு...” என்றபின் அவனை போகும்படி சொல்லிவிட்டு கர்ணன் “இளையோனே, அந்த ஒளி தெரிந்ததும் நமது படகுகளில் இரண்டு கரைநோக்கி விரைந்துசெல்லவேண்டும். ஓரிரு விளக்குகள் மட்டும் போதும்” என்றான். துச்சாதனன் அவன் சொன்னதைப்புரிந்துகொண்டு தலையசைத்தான். “அரைநாழிகைநேரம் சரியாக இருக்கும்” என்று விண்மீன்களை நோக்கியபடி கர்ணன் சொன்னான்.

துரியோதனன் எதையும் நோக்காமல் படகின் மரத்தரையில் குறடு ஓசையிட நடந்தபின் திரும்பி “என்ன செய்யப்போகிறோம்? ஏன் இங்கே நிற்கிறோம்? கரையணையலாமே?” என்றான். “இளவரசே, நாம் கரைநோக்கி சென்றால் நம்மை எவரேனும் பார்ப்பார்கள்” என்றான் கர்ணன். “எவர்? நம்மை இங்கே எவரும் எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று துரியோதனன் உரக்க சொன்னான். கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுகப்பற்றி பிசைவது போல அழுத்தியபடி “நேரமாகிக்கொண்டே இருக்கிறது. எக்கணமும் கரையில் இருந்து ஒளியழைப்பு வரும்” என்றான்.

கர்ணன் அவனை நோக்காமல் கரையையே நோக்கியபடி “ஆம்” என்றான். “அழைப்பு வந்தபின் நாம் கிளம்பினால் கரைசேரவே நெடுநேரமாகிவிடும்” என்றான் துரியோதனன். “ஆம், அதைத்தான் நான் சிந்திக்கிறேன். பெரியபடகு கரையணைய சில நெறிகள் உள்ளன. கங்கையின் இப்பகுதியில் கரையோர எதிரோட்டம் இருக்குமென்றால் பெரிய படகுகள் சற்று தயக்கம் கொள்ளும். மேலும் நாம் பாய்களை சுருக்கவேண்டியிருக்கும். மீண்டும் விரிக்கவும் விரைவைக்கொள்ளவும் மேலும் காலம் தேவை.” அவன் கைகளால் படகின் விளிம்பை தட்டிக்கொண்டே இருந்தபின் திரும்பி “சென்றுசேர்ந்துவிட்டானா?” என்றான். “அரைநாழிகை ஆகவில்லை மூத்தவரே” என்றான் துச்சாதனன்.

துரியோதனன் “நாம் கரைக்கு செல்வோம்... அதைத்தவிர வேறுவழியில்லை. மேலும் இங்கே இப்படி காத்திருப்பது பொறுமையிழக்கச் செய்கிறது” என்றான். கர்ணன் அவனை திரும்பிப்பார்க்கவில்லை. இருளை நோக்கி நின்றவன் திரும்பி “இருவர் மட்டும் செல்லும் சிறியபடகுகள் இவர்களிடம் உள்ளனவா? இந்த குகன் சென்றதுபோன்றவை?” என்றான். “அது மென்மரம் குடைந்தபடகு... இருவர் செல்லமுடியுமென்றே நினைக்கிறேன்... இதோ கேட்டுவருகிறேன்” என்றான் துச்சாதனன்.

துரியோதனன் எரிச்சலுடன் “என்ன செய்யவிருக்கிறாய்? சிறுபடகில் கரைசேரலாமென்றா? மூடா, எப்படி இளவரசியரை நாம் அவற்றில் கூட்டிவரமுடியும்? சிறியபடகுகள் என்றால்...” என்றான். இடைமறித்து “பெரியபடகுகள் சித்தமாக கங்கைப்பெருக்கிலேயே நிற்கட்டும். வேறுவழியில்லை” என்றான் கர்ணன். “ஏன்? நாம் கரைக்குச்சென்றால்...” என்று சொன்ன துரியோதனன் தன் கைகளை ஓங்கி முட்டிக்கொண்டு “உன் வீண் அச்சத்தால் ஏதோ நாடகம் ஆடுகிறாய்... இங்கே எவர் இருக்கிறார்கள்?” என்றான். கர்ணன் தலையை தனக்குத்தானே என அசைத்தான்.

துச்சாதனன் இரண்டு குகர்களுடன் விரைந்து வந்தான். “மூத்தவரே, மூவர் செல்லமுடியும் என்கிறார்கள். இருவர் துழாவ வேண்டும்... மிகவிரைவாகவே கரையை அடைந்துவிடமுடியும்...” கர்ணன் முகம் மலர்ந்து “ஆம், அதுதான் நமக்குத்தேவை. மூன்று படகுகளை கொண்டுவரச்சொல். மூன்று குகர்கள் அவற்றை துழாவட்டும்” என்றான். பூரிசிரவஸ்ஸிடம் “நாம் மூவரும் அவற்றில் செல்வோம். துச்சாதனன் இங்கே படகுகளை நடத்தட்டும். நான் அம்புகளால் அளிக்கும் ஆணையை அவனால் புரிந்துகொள்ளமுடியும்” என்றபடி ஓடிச்சென்று தன் அம்பறாத்தூணியையும் வில்லையும் எடுத்துக்கொண்டான். “விற்கள்... அவை மட்டும் போதும்” என ஆணையிட்டபடி “செல்வோம்” என்றான்.

துரியோதனன் அவன் பெரிய உடலில் வழக்கமாக நிகழாத விரைவுடன் ஓடிச்சென்று வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். வடங்கள் வழியாக மூன்று தக்கைப்படகுகள் கங்கையில் இறக்கப்பட்டன. உடலை ஒடுக்கி கால்களை மடித்து அமருமளவுக்கே அவற்றில் குடைவு இருந்தது. அமரமுனையில் அமர்ந்த குகன் பெருந்துடுப்பை வைத்திருந்தான். துரியோதனன் அமர்ந்ததும் படகு சற்று அமிழ்ந்தது. குகன் மேலும் நுனி நோக்கி சென்றான். மூவரும் அமர்ந்ததும் கர்ணன் மேலே நின்ற துச்சாதனனை நோக்கி “ஆணைகளை நோக்கு” என்றபின் கிளம்பலாம் என்று கைகாட்டினான்.

குகர்கள் துடுப்பால் பெரும்படகை ஓங்கி உந்தி சிறுபடகுகளை முன்செலுத்தினர். வில்லில் இருந்து அம்புகள் என அவை நீரில் பீறிட்டன. இருபக்கமும் மாறிமாறி துடுப்பிட்டபோது எடையற்ற படகுகள் கரைநோக்கி செல்லத்தொடங்கின. நீரில் துடுப்பு விழும் ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. பெரிய படகுகள் நிழல் என மாறி கரைந்தழிந்தன. கரையின் வெளிச்சம் பெரிதாகிவருவதிலிருந்து படகுகளின் விரைவு தெரிந்தது. அலைகளை கிழிக்காமல் ஏறிக் கடந்து நீர்ப்படலத்தின் மேல் வழுக்கியதுபோல சென்றன அவை. பூரிசிரவஸ் தொலைவில் கரையில் சுடர் சுழல்வதை கண்டான்.

அவனுக்குப்பின்னால் வந்த படகில் கர்ணனும் அதற்குப்பின்னால் வந்தபடகில் துரியோதனனும் இருந்தனர். சுடர்சுழற்சியைக் கண்டதும் கங்கைப்பெருக்கில் நின்றிருந்த அஸ்தினபுரியின் இரு பெரியபடகுகள் பாய்விரித்தபடி அலைகளில் தாவி கரைநோக்கி சென்றன. உடனே கங்கைக்குள் நின்றிருந்த மூன்று வணிகப்படகுகளில் விளக்குகள் எரிந்தன. அவை எழுந்து அஸ்தினபுரியின் படகுகளை நோக்கி சென்றன. அருகே வந்த படகிலிருந்த துரியோதனன் “பீமன்! அவன் காத்து நின்றிருக்கிறான்” என்று கூவினான். “ஆம், நமது படகுகளை அவன் தாக்குவான். ஆனால் அவற்றில் இளவரசியர் இல்லை என்று தெரிந்துகொள்ள சற்றுநேரமே ஆகும்” என்றான் கர்ணன்.

அதற்குள் கரையில் அன்னையர் ஆலயத்தின் முகப்பில் எரிப்புள்ளி சுழன்றது “இளவரசியர் வந்துவிட்டனர்” என்று துரியோதனன் கூவினான். “நீங்களிருவரும் கரைக்குச்சென்று அவர்களை படகிலேற்றிக்கொள்ளுங்கள். நான் நீர்காக்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “விரைவு விரைவு" என்று துரியோதனன் குகனிடம் கூவினான். அவர்களின் படகுகள் கரைநோக்கி சென்றன. அப்பால் பீமனின் படகுகளில் இருந்து எழுந்த எரியம்புகள் அஸ்தினபுரி படகின் பாய்கள் மேல் விழுந்து எரிக்கத் தொடங்கின. அதன் வீரர்கள் பாய்களை இறக்கி அணைத்தபடி கூச்சலிட்டனர். மாறி மாறி எரியம்புகள் எழுந்தன.

அந்தப்படகுகளில் ஏதேனும் ஒன்று முழுமையாக எரியத்தொடங்குமென்றால் கங்கைவெளி ஒளிகொண்டுவிடும், அனைத்தும் தெளிவாக தெரியத்தொடங்கும் என பூரிசிரவஸ் எண்ணினான். கரையில் அன்னையர் ஆலயம் பெரிதாக மாறி ஆடிக்கொண்டே வந்தது. அங்கே ஒரு சிறியபடித்துறை இருந்தது. சேற்றுப்படுகை இல்லாமலிருந்தது நன்று என பூரிசிரவஸ் நினைத்தான். “விரைவு விரைவு" என்று துரியோதனன் கூவிக்கொண்டே இருந்தான். இருபடகுகளும் கரையோரத்து எதிரலைகள் மேல் எழுந்து விழுந்து மேலும் எழுந்து விழுந்து படித்துறை நோக்கி சென்றன.

படித்துறை அலைபாய்ந்தபடி எழுந்து அவர்களை முட்ட வந்தது. அதன் மேல் வெண்ணிற உடை இருளுக்குள் மின்ன ஓடியிறங்கிய ஐந்து காவலர்களை இருவரும் அம்பெய்து வீழ்த்தினர். படகுகள் படித்துறையை அணுகியதும் குகர்கள் துடுப்புகளை அதன் மேல் ஊன்ற அவை வளைந்து விலாவை படிமேல் முட்டி நின்றன. துரியோதனன் இறங்கி படிக்கட்டு மேல் ஓடினான். அவனை நோக்கி வாளுடன் ஓடிவந்த இருவரை பூரிசிரவஸ் அம்புகளால் வீழ்த்தினான். துரியோதனன் படிகளுக்குமேல் அன்னையர் ஆலயத்து சிறுமுற்றத்தில் நின்றிருந்த பல்லக்குகளை நோக்கி சென்றான்.

தன்னை நோக்கி ஓடிவந்த இருவரை இடக்கையால் அறைந்து நிலத்தில் வீழ்த்தி ஒருவனை உதைத்துச்சரித்து பல்லக்கை அணுகி துரியோதனன் கூவினான் “இளவரசிகளுக்கு வணக்கம். நான் அஸ்தினபுரியின் இளவரசன் தார்த்தராஷ்டிரனாகிய துரியோதனன்... இறங்கி படகுகளில் ஏறுங்கள்” என்று உரக்கக் கூவினான். போகிகள் பல்லக்குகளை வைத்தபின் அஞ்சி பின்னால் நின்றனர். பூசகர் “என்ன நிகழ்கிறது? யார்?” என்று கூவியபடி ஓடிவர “விலகுங்கள்...” என்று அம்பை ஓங்கியபடி பூரிசிரவஸ் சொன்னான்.

பல்லக்கின் திரைகள் விலகி அன்னையர் ஆலயத்து நெய்விளக்கின் ஒளியில் பானுமதியின் முகம் தெரிந்தது. “இளவரசி” என்று துரியோதனன் திகைத்தவன் போல மெல்ல சொன்னான் “நான் பானுமதி... இவள் என் தங்கை பலந்தரை” என்று அவள் மெல்லியகுரலில் சொன்னாள். “படகில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் கூவினான். தன்னை நோக்கி வந்த ஒருவனை அம்பை கையால் வீசி வீழ்த்தினான். பானுமதி “நிறுத்துங்கள்... போரிடவேண்டாம்” என்று தன் வீரர்களுக்கு உரத்தகுரலில் ஆணையிட்டாள். அவர்கள் கையில் படைக்கலங்களுடன் பின்னகர்ந்தனர்.

“விரைந்துவருக இளவரசி...” என்று பூரிசிரவஸ் கூவினான். திரும்பிப்பார்க்கையில் அஸ்தினபுரியின் பெரும்படகொன்று பாய் எரிந்து எழுவதையும் கங்கைநீர்வெளி ஒளியலையாக ஆவதையும் கண்டான். பானுமதியும் பலந்தரையும் ஆடையை கையால் தூக்கியபடி சிற்றடிகளுடன் ஓடி படித்துறைக்கு வந்தனர். “ஏறிக்கொள்ளுங்கள்” என்றான் துரியோதனன். சிறிய படகைக் கண்டு அவர்கள் தயங்கினர். அப்பால் இரண்டு பெரிய படகுகள் எரியம்புகள் விடுத்தபடி அவர்களை நோக்கி வரத் தொடங்கின. “விரைவு... விரைவு” என்று துரியோதனன் கூவினான். துரியோதனன் படகில் பானுமதி ஏறிக்கொண்டாள்.

பலந்தரை தடுமாற பூரிசிரவஸ் “ஏறுங்கள் இளவரசி... நான் உடனிருப்பேன்” என்றான். பலந்தரை அதன் மேல் கால்வைத்து ஏறி அதன் அசைவால் நிற்கமுடியாமல் தடுமாறி உடனே அமர்ந்துகொண்டாள். குகன் படித்துறையை துடுப்பால் உந்தி நீருள் செலுத்தினான். இரு படகுகளும் அலைகளில் எழுந்தன. “குனிந்து படகுக்குள் ஒடுங்கிக்கொள்ளுங்கள்” என்று பூரிசிரவஸ் கூவினான். நெருங்கிவந்த பீமனின் படகுகளில் இருந்து எரியம்புகளும் அம்புகளும் எழுந்து வந்தன. மறுபக்கமிருந்து அஸ்தினபுரியின் படகுகள் அவர்களை நோக்கி வந்தன. “விரைவு... விரைவு” என்று துரியோதனன் கூவினான்.

அப்பால் கங்கைக்குமேல் அலைகளில் தன்னந்தனியாக ஆடி நின்ற படகில் கர்ணன் எழுந்து நின்றிருந்தான். அவன் வில் விம்மும் ஒலி கேட்டது. விரைந்து வந்த பீமனின் முதல் படகின் அமரத்தில் அமர்ந்தவன் அலறியபடி விழ படகு நிலைமாறி விரைவழிந்தது. பின்னால் வந்த படகு அதன் மேல் முட்டப்போய் திருப்பப்பட்டது. சுக்கானைப்பிடிக்க ஓடிவந்த இன்னொருவனையும் கர்ணன் கொன்றான். தொடர்ந்து மீண்டும் ஓடிவந்தவனையும் கொன்றதும் சுக்கானை நோக்கி எவருமே வராமல் படகு தயங்கி அலைமேல் அமைந்து நின்றது. பின்னால் வந்த படகிலிருந்து கர்ணன் மேல் அம்புகள் தொடுக்கப்பட்டன. அவன் இருளுக்குள் இருளின் அசைவாக மட்டுமே தெரிந்தான். அவ்வப்போது காற்றில் எரிந்தபடகின் தழல் எழும்போது மட்டும் செந்நிறக் கோட்டுருவாக அவன் முகம் தெரிந்து மறைந்தது.

இருளில் துள்ளும் மீன்கள் போல அம்புகள் மின்னி மின்னி மறைந்தன. தொலைவில் அஸ்தினபுரியின் படகுகள் தெரிந்தன. அவை அசையாமல் அங்கே நிற்பதைப்போல தன் படகும் அலைகளில் ஊசலாடிக்கொண்டு நின்றிருப்பது போல விழிமயக்கு ஏற்பட்டது. இன்னும் எத்தனை தொலைவு? எத்தனை அலைவளைவுகள்! நிலையழிந்த பீமனின் படகின் அமரத்தில் ஒருவன் அமர்ந்து படகை திருப்பிவிட்டான். அதன் விலா கர்ணனை நோக்கிதிரும்பியது. அதிலிருந்து அம்புகள் எழ அவன் குனிந்து படகுக்குள் ஒண்டிக்கொண்டான். படகுக்குள் முதுகில் ஆமையோட்டு கேடயத்துடன் குனிந்திருந்த குகன் துடுப்பைத்துழாவி கர்ணனின் படகை விலக்கிச்சென்றான்.

துரியோதனன் தன்னை முந்திச்சென்றுவிட்டதை பூரிசிரவஸ் கண்டான். அவன் பெரிய படகை அணுகிவிட்டான். பெரியபடகில் இருந்து அவர்களை மேலே தூக்க வடம் கீழிறக்கப்பட்டது. மேலும் மேலும் அம்புகள் விழ கர்ணன் பின்னகர்ந்துகொண்டே இருந்தான். அவன் எரியம்பு ஒன்றை எய்ததும் அஸ்தினபுரியின் படகுகளில் ஒன்று எரியம்புகளை எய்தபடி பீமனின் படகை நோக்கி வந்தது. அதன் பாய் எரியத்தொடங்கியது. அதனுள் குகர்கள் கூச்சலிட்டபடி அதை அணைக்க முயல்வதும் பெரிய விற்களுடன் நின்றிருக்கும் வில்லவர்கள் குறிவைப்பதும் நெருப்பொளியில் தெரிந்தது.

அஸ்தினபுரியின் படகுகள் விரைந்து வந்து எரிந்து கனலெழுந்த பீமனின் முதல் படகை விலாவில் முட்டியது. அந்தப்படகு நிலையழிந்து அதை முந்தி வரமுயன்ற பீமனின் அடுத்த படகை தாக்கியது. துரியோதனன் பெரிய படகை அணுகிவிட்டான். அவன் படகின் மீது விழுந்த இரு வடங்களை அதன் கொக்கிகளில் இட்டதும் மேலிருந்து அப்படியே படகுடன் மேலே தூக்கிவிட்டனர். அதை நிமிர்ந்து நோக்கி ஒரு கணம் வியந்த பூரிசிரவஸ் பார்வையை தவறவிட்டுவிட்டான். அதற்குள் எரிந்துகொண்டிருந்த பீமனின் படகின் பின்னாலிருந்து வந்த விரைந்து செல்லும் சிறிய படகு பாய்விரித்து வல்லூறு போல அவனை நோக்கி வந்தது.

அவன் வில்லுடன் எழுவதற்குள் அவன் தொடையில்அம்பு பாய்ந்தது. அவன் படகை அந்த விரைவுப்படகு முட்டி புரட்டியது. பூரிசிரவஸ் நீருள் விழுந்தான். அவன் தலைதூக்கியதும் இன்னொரு அம்பு அவன் தோளைத் தாக்கியது. அவன் நீரில் மூழ்கும் போது விரைவுப்படகில் ஒருகையால் பாய்மரக்கயிற்றில் பிடித்துத் தொங்கியபடி மறுகையால் நீரில் விழுந்து ஆடை மிதக்கும் சுழிக்குள் இருந்து மூச்சுக்காக மேலே வந்த பலந்தரையை கூந்தலை அள்ளித் தூக்கி இடைசுற்றிப்பற்றி தன் படகில் ஏற்றிக்கொண்ட பீமனைக் கண்டான். அந்தப்படகு சுழன்று திரும்பி பாய்கள் வடிவம் மாற மேலும் விரைவுகொண்டு அலைகளில் ஏறிச்சென்று அதே விரைவில் எரிந்துகொண்டிருந்த பெரிய படகுக்கு அப்பால் மறைந்தது.

பூரிசிரவஸ்ஸின் வலத்தொடையும் இடது தோளும் அசைவிழந்திருந்தன. அவன் கைகளை நீட்டி நீட்டி படகின் விளிம்பைப்பற்ற முயன்றான். குகனின் வலிய கரம் அவன் தோளைப்பற்றியது. குகன் மறுகையால் படகை நிமிரச்செய்து அதில் அவனை தூக்கிப்போட்டான் நீரில் மிதந்த துடுப்பை எட்டி எடுத்துக்கொண்டு துழாவத் தொடங்கினான். குருதி வழியும் வெம்மையை பூரிசிரவஸ் உணர்ந்தான். அவனைச்சுற்றி அனல் வெளிச்சம் நீரில் அலையடித்தது.

கையை ஊன்றி எழுந்தமர்ந்து அப்பால் கர்ணன் பீமனின் படகை துரத்திச்செல்வதை பூரிசிரவஸ் நோக்கினான். ஆனால் அவ்விரு படகுகளுக்கும் நடுவே பீமனின் எரிந்துகொண்டிருந்த பெரிய படகு குறுக்காக வந்ததும் கர்ணன் விரைவை இழந்து தயங்கினான். அவன் மேல் தொடுக்கப்பட்ட அம்புகளைத் தவிர்த்து படகைத் திருப்பி பின்னால் வந்தான். அப்பால் காசியின் பெரும்படித்துறையில் முரசொலி எழுந்தது. எரியம்புகள் எழுந்து வானில் வெடித்தன. அங்கிருந்து மூன்று பெரிய படகுகள் பாய்விரித்து நீரில் எழுவதை எரிந்துகொண்டே சென்ற அஸ்தினபுரியின் படகின் ஒளியில் காணமுடிந்தது.

குகன் அவனை அஸ்தினபுரியின் படகை நோக்கி கொண்டுசென்றான். கொக்கியில் மாட்டப்பட்ட படகில் எழுந்து மேலே சென்ற பூரிசிரவஸ் படகின் மேல் விழுந்து மரத்தரையில் உருண்டு நீரும் குருதியும் வழிய ஒரு கணம் அசைவற்றுக் கிடந்தான். நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்த துரியோதனன் “இனிமேல் நம்மால் போரிடமுடியாது. காசியின் படகுகள் கிளம்பிவிட்டன, திரும்பிவிடுவோம்” என்றான். படகின் உள்ளறைக்குள் நின்றிருந்த பானுமதி “பலந்தரை எங்கே? பலந்தரை என்ன ஆனாள்?” என்று கூவினாள். “இளவரசி... பீமசேனர்” என்று பூரிசிரவஸ் மூச்சிரைக்க கைகாட்டினான். முழங்காலை ஊன்றி எழுந்து நின்று கயிற்றைப்பற்றிக்கொண்டு நோக்கினான்.

கர்ணன் பீமனின் எரியும் படகை சுற்றிக்கொண்டு செல்ல முயன்றான். ”அவனால் முடியாது. அவர்கள் நெடுந்தொலைவு சென்றுவிட்டனர். இன்னும் சிலகணங்களில் அவன் பெரியபடகில் ஏறிவிடுவான்” என்று துரியோதனன் கூவினான். ”திரும்பி வரும்படி சொல்... அவனிடம் திரும்பி வரும்படி சொல்!” துச்சாதனன் திரும்பிவரும்படி ஒளிக்குறி காட்டினான். அதற்குள் மேலும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கர்ணனே உணர்ந்துகொண்டு படகைத்திருப்ப ஆணையிட்டான். அஸ்தினபுரியின் படகுகளுக்கு நடுவே துரியோதனனின் படகு நுழைந்துகொண்டது. அப்பால் பீமனின் இருபடகுகள் முழுவிரைவில் செல்வது தெரிந்தது. நீர்ப்பரப்பில் இரு படகுகள் வானிலும் நீரிலுமாக எரிந்தபடி மிதந்து சென்றன.

“முழுப்பாய்களும் விரியட்டும்” என்று துரியோதனன் ஆணையிட்டான். கர்ணனின் படகு வந்தணைந்ததும் அதை மேலே தூக்கினர். மூச்சிரைத்தபடி அவன் நீர் சொட்ட வந்து கயிற்றில் அமர்ந்தான். அவன் தோளில் அம்பு ஒன்று தைத்திருந்தது. இன்னொருபடகிலிருந்து வந்த மருத்துவர்கள் ”உள்ளே வாருங்கள் அங்கரே” என்றனர். “இங்கே காற்று இருக்கிறது...” என்றான் கர்ணன். துரியோதனன் திரும்பி “இளையோனே, நீர் நலம் அல்லவா? மூச்சிலோ நெஞ்சிடிப்பிலோ ஏதேனும் மாறுபாட்டை உணர்கிறீரா?” என்றான். “நலம் மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் நான்..” அவனால் பேசமுடியவில்லை. “நான் தவறவிட்டுவிட்டேன்.”

“நீர் அதற்கு வருந்தவேண்டியதில்லை. நாம் இளவரசர் விழைந்த பெண்ணை கைவிட்டுவிடவில்லை. அதை எண்ணி மகிழ்கிறேன்” என்றான் கர்ணன். ”அவர்கள் இப்படி மூன்றாம் கட்டத்திட்டத்துடன் வந்திருப்பார்கள் என்பதை என்னால் எதிர்பார்க்கமுடியவில்லை. அந்த விரைவுப்படகை இதற்கென்றே கொண்டுவந்திருக்கிறார்கள்.” மருத்துவர் பூரிசிரவஸ்ஸிடம் “உங்கள் காயங்கள் சற்று மிகை இளவரசே. படுக்க வைத்து ஒளியில்தான் மருத்துவம் பார்க்கவேண்டும்” என்றார். துச்சாதனன் தோளைப்பற்றியபடி பூரிசிரவஸ் எழுந்தான். கல்லால் ஆனதுபோல தோன்றிய காலை இழுத்துவைத்து நடந்தான். அவன் காலில் இருந்து குருதி நீருடன் கலந்து வழிந்தது.

துரியோதனன் "இளவரசி உள்ளே இளைப்பாறுக!” என்றான். பானுமதி ஒரு வீரனுடன் அடித்தள அறைக்குள் சென்ற மரப்படிகளில் இறங்கினாள். உள்ளறைக்குள் சென்ற பூரிசிரவஸ் அங்கே மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மருத்துவர் சிறிய கூரிய கத்தியால் அவன் ஆடைகளைக் கிழித்து அகற்றினார். தொடையில் பாய்ந்த அம்பு சற்று ஆழமாகவே சென்றிருந்தது. தோளில் அதன் உலோகமுனை மட்டுமே புதைந்திருந்தது. ஒரு வீரன் கொதிக்கவைக்கப்பட்ட நீரை கொண்டுவந்தான். மருத்துவர் அதில் வெண்ணிறத்துணியை முக்கி அவன் குருதியைத் துடைத்தார். பின்னர் அம்பு தைத்த இடத்தின் இருபக்கமும் கத்தியால் மெல்லக்கிழித்து அகற்றி அம்பை உருவி எடுத்தார். பூரிசிரவஸ் மெல்ல முனகினான்.

“அகிபீனா தேவையா இளவரசே?” என்றார் மருத்துவர். ”இல்லை” என்றான் பூரிசிரவஸ் பற்களைக் கடித்தபடி. அருகே வீரன் ஒருவன் கொண்டுவந்து வைத்த தாலத்தில் மூலிகைத்தைலத்தில் ஊறிய பஞ்சு இருந்தது. அதை எடுத்து அம்பு உருவப்பட்ட காயத்தில் வைத்து அழுத்தி அதன்மேல் சூடாக்கப்பட்ட காரையிலையை வைத்து அழுத்தி மரவுரியால் கட்டு போட்டார். கட்டுபோட்டதும் வலி குறைந்து அனல் பட்டதுபோன்ற எரிச்சலுடன் அந்தத் தசை துடிக்கத் தொடங்கியது. தோளில் பட்ட அம்பையும் பிடுங்கி கட்டிட்ட பின்னர் “பெரிய புண்ணல்ல இளவரசே, இரண்டுவாரங்களில் தழும்பாகிவிடும்” என்றார் மருத்துவர். பூரிசிரவஸ் கண்களை மூடிக்கொண்டு “ம்” என்றான்.

அதுவரை உடல் வலியும் போர்நிகழ்வுகளுமாக நிறைந்திருந்த உள்ளம் மெல்ல அமைதிகொண்டது. காற்றடங்கிய புல்வெளி என அது அமைதிகொண்டு பரந்தது. அவன் பெருமூச்சுகள் விட்டான். அம்புபட்டு நீரில் விழுந்த முதற்கணம் போரும் இலக்கும் அனைத்தும் மறைந்துபோய் உயிர் பற்றிய அச்சம் மட்டும் நெஞ்சில் எழுந்ததை பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். இறந்துவிடுவோமா என்ற அச்சம். இறக்கமாட்டோம் என்ற நம்பிக்கை. ஏன் இதெல்லாம் என்ற திகைப்பு. இருக்கிறோம் என்னும் பேருவகை. மலைமுடிகளில் இருந்து மலைமுடிகளுக்குத் தாவுவதுபோல அந்த உச்சகட்ட உளநிலைகள் வழியாக சென்றுகொண்டே இருந்த ஒற்றைக்கணம். அதற்கிணையான ஓர் உச்சம் அவன் வாழ்வில் நிகழ்ந்ததில்லை. ஒரு வாழ்க்கை முழுக்க ஒரேகணத்தில் நிகழமுடியும். ஒருகணத்திலேயே அறிவதை எல்லாம் அறிந்து அடையக்கூடுவதனைத்தையும் அடைந்து அமையமுடியும்.

மீண்டும் ஒரு போர் என்றால் அவன் அஞ்சி நிற்பானா இல்லை அந்த கணத்திற்கான தவிப்புடன் முன்னெழுவானா என்று கேட்டுக்கொண்டான். அவனால் விடைசொல்லமுடியவில்லை. அந்த கணம் வரும்வரை அதை சொல்லிவிடமுடியாது என்று தோன்றியது. ஆனால் இதுதான் மானுடவாழ்க்கையின் உச்சம். முழுமைக்கணம். இதற்காகவே போர் என்றாலே மானுடர் தோள் தினவுகொண்டு எழுகிறார்கள். இதன்பொருட்டே பிறந்த கணம் முதல் படைக்கலம் பயில்கிறார்கள். இதற்காகத்தான் விழைவுகளைப் பெருக்கி வஞ்சங்களைத் திரட்டி செறித்துக்கொள்கிறார்கள். மானுடவாழ்வென்பதே இந்த ஒரு கணத்தை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களை மானுடன் முகத்தோடுமுகம் காணும் இடம்.

அனைத்து கூர்முனைகளிலும் தெய்வங்கள் குடிகொள்கின்றன என்பார்கள் என எண்ணிக்கொண்டான். அது கொல்லர்களின் நம்பிக்கை. பருவடிவ படைக்கலத்தை கொல்லன் கூராக்கிக் கூராக்கிக் கொண்டுசெல்கிறான். கூரின் ஒரு புள்ளியில் அவ்வுலோகம் முடிவடைந்துவிடுகிறது. மேலும் கூர் எஞ்சுகிறது. அங்கே வாழ்கின்றன உலோகத்தை ஆளும் தெய்வங்கள். குருதியால் மட்டுமே மகிழ்பவை. ஊசி முனையோ வேல்முனையோ குருதிக்காக விடாய்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது. அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

அவன் அந்த எண்ணங்களை விலக்க விரும்பினான். அவை அவனை அச்சுறுத்தும் ஆழ்சுழி ஒன்றை நோக்கி சுழற்றிக்கொண்டுசென்றன. உள்ளே வந்த ஏவலன் “தாங்கள் சற்று மதுவருந்தவேண்டும் என்று மருத்துவர் சொன்னார்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். மரக்கோப்பையில் ஏவலன் அளித்த மது இளம்சூடாக இருந்தது. குடித்ததும் நெஞ்சுக்குள் அதன் ஆவி நிறைந்தது. அது குருதியில் கலப்பதற்காக அவன் கண்களை மூடிக்கிடந்தான். மெல்லமெல்ல அது ஊறி ஊறி உடற்தசைகள் தளர்ந்தன.

எடைமிக்க காலடிகளுடன் துரியோதனன் உள்ளே வந்தான். “இளையோனே, நலமாக இருக்கிறீர் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பூரிசிரவஸ் பெருமூச்சுடன். துரியோதனன் அவன் அருகே பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி அதன்மேல் முழங்கைகளை ஊன்றி அமர்ந்தான். “நாம் காசியின் எல்லையை கடந்துவிட்டோம்” என்றான். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “வென்றுவிட்டோம் என்றுதான் பொருள். ஆனால் வெற்றி...” தன் கைகளைக் கோர்த்து மடிமேல் வைத்தபடி துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “வெற்றியை முழுமையாக நான் சுவைக்கவே போவதில்லை என்று படுகிறது பால்ஹிகரே.”

“தாங்கள் விரும்பியது மூத்த இளவரசியை மட்டும் அல்லவா? அங்கர் சொன்னதுபோல நாம் அவரை விட்டிருந்தால் அதுவல்லவா உண்மையான தோல்வி?” என்றான் பூரிசிரவஸ். “இன்று அவர் நம்முடன் இருக்கிறார். அஸ்தினபுரியின் பட்டத்தரசியாகப்போகிறார். அவர் சொல்தான் காசியை ஆளும்.” துரியோதனன் மெல்லிய குரலில் “ஆம்” என்றான். பின்பு “அவளை பீமன் மணம் கொள்வான். ஆம், உறுதியாக அவன்தான் மணம்புரிவான். ஏனென்றால் அது என்னை என்ன செய்யும் என்று அவன் அறிவான். என் கையிலிருந்து வென்று...” என்றபடி எழுந்துகொண்டான்.

பெருமூச்சு விட்டு எடைதூக்கிய கைகளை எளிதாக்குவது போல உடலை நெளித்தபின் “நிறைவின்மை அன்றி எதையும் நான் அடையக்கூடாதென்பதே தெய்வங்கள் வகுத்தது போலும்” என்றான் துரியோதனன். ”நான் உன்னிடம் ஒன்று சொல்லவே வந்தேன் இளையோனே. என் சொல் இன்னும் எஞ்சியிருக்கிறது. உன் உள்ளத்தில் இருக்கும் இளவரசியை சொல். நான் அவளை உன்னிடம் சேர்க்கிறேன்." பூரிசிரவஸ் கண்களைத் திறக்காமல் பெருமூச்சுவிட்டு “நாளை சொல்கிறேன் இளவரசே” என்றான்.

பகுதி 15 : யானை அடி - 1

துரியோதனன் தன் உள்கூடத்தில் சாய்ந்த பீதர்நாட்டுப்பீடத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டிருந்தான். அவனெதிரே சிறியபீடத்தில் வரைபடத்தை விரித்துப்போட்டு கர்ணன் கூர்ந்து நோக்க அருகே துச்சாதனன் நின்றிருந்தான். கர்ணன் “நெடுந்தூரம் இளவரசே” என்றான். “ஓரிரவில் கடக்கமுடியலாம். ஆனால் கடந்துவிடலாமென்று உறுதிகொண்டு ஒரு திட்டத்தைப்போடுவது பிழையாக முடியும்.” துச்சாதனன் “முடிந்தவரை நீரில் செல்வோம். நீரில் விரைந்துசெல்லும் பீதர்நாட்டுப் பாய்களை அமைப்போம்” என்றான்.

“ஆம், ஆனால் அதை முழுமையாக நம்பக்கூடாது என்கிறேன். காற்றும் ஒழுக்கும் நம் கையில் இல்லை.” துச்சாதனன் “பகலில் நாம் தங்கவேண்டுமென்றால் அதற்குரிய இடம் தேவை. நமது நட்புநாடுகள் என இப்பகுதியில் இருப்பது ஒன்றே. ஆனால் நாம் படை கொண்டுசெல்கிறோம். படை தமது மண்ணில் தங்க அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றான். “அதற்கொரு வழி இருக்கும்... பார்போம்” என்ற கர்ணன் நிமிர்ந்து “இளவரசே, தாங்கள் இச்சொற்களை செவிகொள்ளவில்லை” என்றான். துரியோதனன் “கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றான். “இல்லை. நீங்கள் கேட்கவில்லை. உங்கள் உள்ளம் இங்கில்லை.”

துரியோதனன் எழுந்து கைகளை விரித்து உடலை நெளித்து “காலையில் இருந்தே மணநிகழ்வுகள், குலச்சடங்குகள், அரசமுறைமைகள்... சலித்துவிட்டேன் கர்ணா” என்றான். கர்ணன் புன்னகைத்து “அரசநிலை என்பதே ஒரு மனிதனை இறைவடிவமாக ஆக்குவதுதானே? தெய்வங்கள் சடங்குகளால்தான் மண்ணில் வாழ்கின்றன” என்றான். துரியோதனன் எழுந்து சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்று “அவனும் இன்று அவளை மணந்துவிட்டான் என்றான் ஒற்றன்” என்றான். இருவரும் ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

“நேராக பாஞ்சாலத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே திரௌபதியே அரண்மனை முகப்புக்கு வந்து எட்டுமங்கலம் காட்டி அவர்களை வரவேற்றிருக்கிறாள். இசைச்சூதரும் வைதிகர்களும் அரண்மனைப்பெண்களும் உடனிருந்திருக்கிறார்கள். அவர்களை திரௌபதியின் அன்னையிடம் அழைத்துச்செல்ல அவர் பலந்தரையின் கை பற்றி இல்லம் புகச்செய்திருக்கிறார். அரண்மனையில் பெருவிருந்துக்கு ஒருங்குசெய்யப்பட்டிருக்கிறது. மூன்றுநாட்கள் நகரில் விழவும் களியாட்டும் நிகழுமென அறிவித்திருக்கிறார்கள். அரண்மனைப்பெருமுற்றத்தில் பந்தலிட்டு சூதர்களின் பாடல்நிகழ்வுகளுக்கும் நாடகங்களுக்கும் ஒருங்குசெய்திருக்கிறார்கள்.”

கர்ணன் மெல்லிய குரலில் “இயல்புதானே?” என்றான். துரியோதனன் சினத்துடன் திரும்பி “என்ன இயல்பு? சொல்! எதை இயல்பு என்கிறாய்?” என்றான். கர்ணன் ”இங்கும் அவையெல்லாம் நிகழ்ந்தன. நாமும் மூன்றுநாள் குடிவிழவுக்கு ஆணைபிறப்பித்திருக்கிறோம்... உண்டாட்டும் களியாட்டுமாக அஸ்தினபுரம் மயங்கியிருக்கிறது” என்றான். துரியோதனன் பற்களைக் கடித்தபோது அவன் தாடை அழுந்தியது. ”பானுமதி அஸ்தினபுரியின் பட்டத்தரசி. அவள் தங்கை அப்படியல்ல. அவள் பட்டத்து இளவரசனின் இளையோனின் இரண்டாவது மனைவி. பட்டும் பொன்னும் அணியும் அரண்மனைச்சேடி. அவ்வளவுதான்.” கர்ணன் “ஆனால் அவர் காசிநாட்டுக்கு இளவரசி. காசிமன்னருக்கு பாஞ்சாலம் ஓலையனுப்பி மகளை கவர்ந்தமையை முறைப்படி அறிவித்திருக்கிறது என்கிறார்கள். அக்கொண்டாட்டங்கள் காசியிளவரசி இந்திரப்பிரஸ்தத்தில் அரசிக்கு நிகராகவே கருதப்படுவாள் என்பதைக் காட்டுவதற்காக என்றே நான் எண்ணுகிறேன்” என்றான்.

துரியோதனன் உரக்க “இல்லை இல்லை“ என்று கூவினான். அவன் கழுத்துநரம்புகள் புடைத்தன. முகம் சிவந்து மூச்சிரைத்தது. “அவன் உள்ளம் எனக்குத்தெரியும். மிகமிக அண்மையில் என அவனை நான் காண்கிறேன். இது அவன் எனக்களிக்கும் செய்தி.” கர்ணன் “நாம் இதை மிகைப்படுத்தவேண்டாமென்றே நினைக்கிறேன்” என்றான். “நான் மிகைப்படுத்தவில்லை. கர்ணா, தேவிகை பட்டத்து இளவரசன் யுதிஷ்டிரனின் துணைவி. அவளுடைய மணநிகழ்வு இத்தனை பெரிதாக கொண்டாடப்பட்டதா என்ன?” கர்ணன் “கொண்டாடினர்” என்றான். ”இல்லை அது ஒருநாள் நிகழ்வு. அது எந்த அரசமணத்திற்கும் உரியது. மூன்றுநாள் மணம் என்பது அப்படி அல்ல. அது பட்டத்தரசனுக்கும் அரசிக்கும் உரிய முறைமை... இது அவன் எனக்களிக்கும் அறைகூவல். எங்கோ அவன் அமர்ந்துகொண்டு என்னை நோக்கி நகைக்கிறான் இந்நேரம்...”

துச்சாதனன் கர்ணனை நோக்கி பேசாமலிருக்கும்படி கண்காட்டியதை துரியோதனன் கண்டான். சற்று தணிந்து “நான் மிகைப்படுத்தலாம். ஆனால் என்னால் அவ்வாறு எண்ணாமலிருக்கமுடியவில்லை. கர்ணா, இன்று காலை மணநிகழ்வுகள் தொடங்கிய கணம் முதல் நான் எண்ணிக்கொண்டிருப்பது இதைமட்டுமே” என்றான். துரியோதனன் தோள் தளர எடைமிக்க காலடிகளுடன் நடந்து மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்தான். “என் வாழ்நாளில் இனிய தருணங்களில் ஒன்று. நான் உவகையும் பதற்றமுமாக காத்திருந்த நாள். நேற்றிரவு முழுக்க நான் அவனை எண்ணியபடி துயிலாமலிருந்தேன். அமரவோ படுக்கவோ முடியாமல் அரண்மனை அறைகளுக்குள் நடந்துகொண்டிருந்தேன். புலரி எழுந்தபோது ஏதோ கசப்புதான் எனக்குள் குமட்டி எழுந்தது. புரவிஏறி காட்டுக்குள் சென்று மறைந்துவிடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.”

“அணிகொண்டபோது ஒருமுறைகூட நான் என்னை ஆடியில் பார்த்துக்கொள்ளவில்லை. அவளருகே மணமேடையில் அமர்ந்தபோது ஒருமுறைகூட அவளை திரும்பிப்பார்க்கவில்லை. அவள் கழுத்தில் மங்கலநாணிட்டு மலர்மாலை மாற்றியபோதுகூட அவளைப்பற்றி எண்ணவில்லை.” அவன் எரிச்சலுடன் கையை வீசினான். “இந்தநாளில் நான் அடைந்த துன்பத்தை சமீபத்திலெங்கும் அறிந்ததில்லை. என் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. தசைகள் அனைத்தும் நொய்மையாகிவிட்டிருந்தன. ஒவ்வொரு ஓசையும் என்னை எரிச்சல்கொள்ளச்செய்தது. மங்கல முழவு என் தலையிலேயே அடிப்பது போல் உணர்ந்தேன்... வேதநாதம் புகை தெய்வங்கள் மூத்தார் குடிகள் அன்னையர் பெண்கள்... கர்ணா, ஏதோ ஒரு தெய்வத்தால் நான் கட்டுப்படுத்தப்பட்டிருந்தேன். இல்லையேல் வாளை உருவி அத்தனை பேரையும் சீவி எறிந்திருப்பேன்...”

அவன் கண்களை மூடிக்கொண்டு தலையை பின்னால்சாய்த்து அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் ஓசையின்மை அவர்களை சூழ்ந்தது. துரியோதனன் எழுந்து உரக்க “மூடா! என்ன செய்கிறான் அந்தச்சூதன். விசிறியிழுக்கத்தெரியாது என்றால் அவன் தலையை கொய்யச் சொல்” என்றான். துச்சாதனன் வெளியே ஓடினான். தொங்குவிசிறி முன்னும்பின்னும் விரைந்தாடத் தொடங்கியது. தோலால் ஆன வரைபடம் பீடத்திலிருந்து எழுந்து தரையில் விழுந்தது. கர்ணன் அதை எடுத்து சுருட்டினான். துரியோதனன் கண்களை மூடியபடி “எவ்வளவு ஓசைகள்... ஏன் நாம் ஒவ்வொரு சடங்குக்கும் இத்தனை ஓசையிடுகிறோம்? இங்கே இப்படி இருக்கிறோம் என விண்வாழும் தெய்வங்களுக்கு கூவிச்சொல்கிறோமா? தவளை ஓசையிட்டு நாகத்தை அழைப்பதுபோல?” என்றான்.

கால்களை தரையில் தட்டிக்கொண்டான். எழுந்து சிவந்த விழிகளுடன் கோணலாகச் சிரித்து “இந்தப் பெண்ணை அடைந்ததுதான் வாழ்க்கையில் நான் இதுவரை அடைந்த பெரிய வெற்றி அல்லவா? அதிலும் பாதிவெற்றி” என்றான். கர்ணன் “நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள விழைகிறீர்கள்” என்றான். “என்ன?” என்றான் துரியோதனன். “ஏனென்றால் நீங்கள் ஆணவம் மிக்கவர். ஆணவம் மிக்கவர்களின் வழி தங்களைத்தாங்களே துன்புறுத்திக்கொள்வது” என்றான் கர்ணன். “அது அவர்களுக்கு ஒருவகை இன்பம்.” துரியோதனன் மீண்டும் கோணலாக நகைத்து “நீயும் அப்படி செய்வதுண்டு அல்லவா?” என்றான். “ஆம், ஒவ்வொருநாளும். நான் அடையும் உச்சகட்ட உணர்ச்சி என்பது தன்வருத்தமே” என்று சொன்ன கர்ணன் சிரித்தபடி “ஆகவே தெய்வங்களும் என்னுடன் ஒத்துழைத்து மேலும் துயர்களை அளிக்கின்றன” என்றான்.

துரியோதனன் அந்த நகைச்சொல்லை உளம்கொள்ளாமல் நிலையில்லாமையுடன் பார்வையைச் சுழற்றி பின் உரக்க “ஏன் இப்படி விசிறியை இழுக்கிறான்? அந்த மூடனிடம் மெல்ல இழுக்கச் சொல்!” என்றான். துச்சாதனன் வெளியே ஓட கர்ணன் “நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் இளவரசே” என்றான். துரியோதனன் நிமிர்ந்து நோக்கி “ஆம், நான் சற்று மதுவருந்தி துயிலவே விழைகிறேன்” என்றான். “இன்றிரவு உங்கள் மதுபர்க்கச் சடங்கு உள்ளது...” என்று தயங்கியபடி கர்ணன் சொன்னான். அவன் விழிகளை நோக்கிய துரியோதனன் அவன் தனது சினத்தையும் எரிச்சலையும் எவ்வகையிலேனும் விரும்புகிறானோ என்ற எண்ணத்தை அடைந்தான். “மதுபர்க்கம், ஆம்” என்றான். “அதை நீங்கள் தவிர்க்கமுடியாது” என்றான் கர்ணன். துரியோதனன் எழுந்துகொண்டு “நான் ஓய்வெடுக்கவேண்டும்” என்று வெளியே சென்றான். தன்னை கர்ணன் பின்னால் நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

படுக்கையறைக்குள் சென்று பீடத்தில் அமர்ந்ததும் ஏவலன் வந்து நின்றான். “மது” என்றான். அவன் விழிகளில் ஒரு சிறிய அசைவாக வியப்பு தோன்றி மறைந்தது. ”ம்” என்றதும் தலைவணங்கி வெளியே சென்று அவனுக்குப்பிடித்தமான யவனமதுவை கொண்டுவந்து வைத்தான். ஒருகணம் அது செங்குருதி என்ற திடுக்கிடலை அடைந்தபின் துரியோதனன் புன்னகைத்தான். யவனர் அதை சிறுத்தைத்தோலணிந்தவனின் குருதி என்று சொல்வதுண்டு. அவர்களின் மதுவுக்குரிய தெய்வம் சிறுத்தைத்தோலணிந்து கையில் திராட்சைக்குலையுடன் நின்றிருக்கும்.

சோனகர்நாடுகளிலும் உயர்தரமான திராட்சை விளைவதுண்டு. ஆனால் யவனமதுவில் நிறைந்திருக்கும் கனவுகளை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறுத்தைத்தோலணிந்தவனின் உடலில் ஓடுவது விண்ணுலகின் தூயநஞ்சு. அவனுடைய ஒருதுளிக்குருதி ஒருமுறை திராட்சைப்பழச்சாறில் விழுந்து அது மதுவாகியது. அந்த முதல் நச்சுமதுக்கிண்ணத்தில் எஞ்சியதுளியை அடுத்த மதுக்குடத்தை உறையிடும்போது கலந்தனர். தலைமுறை தலைமுறையாக அந்த நஞ்சு அவர்களின் மதுவில் வாழ்கிறது. மும்முறை கிண்ணத்தை நிறைத்தபின் துரியோதனன் விழிகளை மூடிக்கொண்டான். கண்களுக்குள் செம்மஞ்சள்நிற சிறுத்தைத்தோல் அசைந்ததை கண்டுகொண்டிருந்தான். சென்னியின் இருபக்கமும் மண்புழு போல நரம்புகள் தெறித்தன. பின் எழுந்து மஞ்சத்தில் கால்நீட்டி படுத்தான்.

என்னுள் நஞ்சு ஓடுக என எண்ணிக்கொண்டான். ஏன் சிறுத்தை? பதுங்கி விழியொளிர அமர்ந்திருப்பதனால். மெல்ல மெல்ல அணுகிவருவதனால். இல்லை, செந்நிறமான நாக்கால். நாக்கெனும் தழலால். தழல் குளிர்ந்த தழல். என்னை நக்கியுண்ணும் தழலில் நான்... வியர்வையில் உடல் நனைய அவன் விழித்துக்கொண்டபோது அறைக்குள் துச்சாதனன் நின்றிருந்தான். “மூத்தவரே, மதுபர்க்கச் சடங்குக்கு உங்களை சித்தமாக சொன்னார்கள்.” துரியோதனன் நாக்குழற “அது நாளைக்கு...” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன். “போடா” என்று கூவியபடி துரியோதனன் எழுந்து அமர்ந்தான். துச்சாதனன் பணிந்த உடலுடன் அப்படியே நின்றான். துரியோதனன் அவனை நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் “சரி... ஏவலரை வரச்சொல்” என்று விழிகளை விலக்கிக் கொண்டான்.

ஏவலர் இருவர் உள்ளே வந்தனர். அவனை நீராட்டறைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவன் “நீராட்டுக்கு சமையர் கிருபையும் மாணவிகளும் வந்துள்ளனர்” என்றான். துரியோதனன் “ம்” என்றான். நீராட்டறை வாயிலில் இருபாலினத்தவராகிய கிருபை வந்து வணங்கி அவனை வரவேற்றார். “இவர்கள் எதற்கு?” என்றான் துரியோதனன் சினத்துடன். “இளவரசே, இதுவும் மங்கலமுறைமைகளில் ஒன்றே” என்றார் கிருபை. “இவர்கள் என் மாணவிகளான துருவையும் சம்பையும். தங்கள் அருள் அவர்களுக்கும் தேவை.” துரியோதனன் “எந்த ஊரை சேர்ந்தவர்கள் நீங்கள்?” என்றான். “கலிங்கத்தைச்சேர்ந்தவர்கள். சமையக்கலையை நாங்கள் காமரூபத்தில் சென்று பயின்றோம்.” துரியோதனன் “ஏன் அங்கு?” என்றான். “எங்காவது வெளியே சென்று படித்தால்தானே மதிப்பு?”

துரியோதனன் புன்னகைத்து அவர் தோளை தொட்டான். “நான் நிலையழிந்திருக்கிறேன் சமையரே. அதை உம்மிடம் சொல்லவும் முடியாது” என்றான். “அதற்காகவே சமையம். நம் உடலிடம் நாம் சொல்கிறோம், நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று. அது நம் உள்ளத்திடம் சொல்லும்” என்ற கிருபை “வருக” என உள்ளே அழைத்துச்சென்றார். நீராட்டறையின் முத்துச்சிப்பி வடிவ பெரிய வெய்யநீர் தொட்டியில் ஆடைகளில்லாமல் அவனை அமரச்செய்தார். “அசையாது நின்றிருக்கும் துலாக்கோலின் முள் போன்றிருக்கிறது உங்கள் மூக்குநுனி இளவரசே” என்றார். “இன்றுவரை இருபக்கமும் முழுமையாக சமன்செய்யப்பட்ட ஓர் உடலை நான் பார்த்ததில்லை.” சம்பை “பாஞ்சால இளவரசி இத்தகையவள் என்றனர்” என்றாள்.

துரியோதனன் உடலில் ஒரு துடிப்பு ஓடியது. அதை கைகளாலேயே அறிந்த கிருபை “ஆம். ஆனால் நேர்நிலை ஆண்மைக்கும் வளைதல் பெண்மைக்கும் அழகு” என்று சொல்லி அதே ஒழுக்கில் பேச்சை முன்கொண்டுசென்றார். “காசிநாட்டு இளவரசியை சற்றுமுன்னர்தான் கண்டோம். அணிகளில் அழகியதை அணிந்திருக்கிறார்கள். அக்கண்களில் உள்ள கருணை என்றும் உங்களை மகிழ்விப்பது இளவரசே” என்றார். “கருணையைக் கண்டு காதல்கொள்ளமுடியுமா என்ன?” என்றான் துரியோதனன் புன்னகையுடன். அந்தப்பேச்சு கிருபை எண்ணியதைப்போலவே அவனை எளிதாக்கியது.

கிருபை “பிழையாக நினைக்கிறீர்கள் இளவரசே. இளமையில் சிலநாட்கள் மட்டுமே பெண்ணின் உடலழகும் சொல்லழகும் ஆணை கவர்கிறது. பின்னர் வாழ்நாளெல்லாம் அவனை காமம் கொள்ளச்செய்வது அவள் கண்களில் உள்ள கருணைதான்” என்றார். துரியோதனன் நிமிர்ந்து அவரை நோக்கினான். அவர் மெல்லிய கடற்பஞ்சால் அவன் உடலை தேய்த்தபடி “ஆம், என்னை நீங்கள் நம்பலாம். உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் அவர் விழிகளைக் கண்டு மட்டுமே காமம் கொள்ளப்போகிறீர்கள். மைந்தருக்கு அன்னையாகி அவர் உடல் தளர்ந்தபின் மேலும் காமம் கொள்வீர்கள். ஒருபோதும் அவரது விழிகளிடமிருந்து விடுபட மாட்டீர்கள்” என்றார்.

துரியோதனன் உரக்க நகைத்து “நான் எங்கும் கட்டுப்படுவேன் என நினைக்கவில்லை கிருபையரே” என்றான். “கட்டுப்படுவீர்கள் இளவரசே. நீங்கள் என்றும் கட்டுப்பட்டுத்தான் இருந்திருக்கிறீர்கள்...” துரியோதனன் நிமிர்ந்து நோக்கி மீசையை வருடினான். “முதலில் உங்கள் தந்தைக்கும் பின்னர் ஆசிரியருக்கும். அதை மானுடனின் கடமை எனலாம். நிகராகவே நீங்கள் இளையோன் துச்சாதனருக்கு கட்டுப்பட்டவர்.” துரியோதனன் “நானா?” என்றான். “சொல்லுங்கள், இதுநாள்வரை எத்தனைமுறை அவரிடம் சினந்திருக்கிறீர்கள்?” துரியோதனன் தலைதாழ்த்தி “ஆம், அவனிடம் என்னால் சினம் கொள்ளமுடியாது. அவன் முகம் எனக்குள் கனிவை சுரக்கச்செய்கிறது. ஆகவே அவன் விழிகளையே நான் பார்ப்பதில்லை” என்றான்.

பெண்களைப்போல மணியொலியுடன் நகைத்து கிருபை சொன்னார் “அவர் சொன்ன எதையும் தட்டியதில்லை நீங்கள். அதைப்போல அங்கர். அவர் உங்களை ஆள்கிறார்.” துரியோதனன் “ஆளட்டும், அதனால் நான் வாழ்வேன்” என்றான். “இது இன்னொரு கட்டு. இளவரசே, காட்டிற்கு பேரரசன் யானை. அது குடிசூழ வாழும் பெருவாழ்க்கை கொண்டது.” துரியோதனன் “நற்சொற்கள் கிருபையரே. என் உளநிலையை மாற்ற உம்மால் முடிந்தது” என்றான். அவன் உடலை துணியால் துடைத்து தாழம்பூ மலர்ப்பொடி கலந்த வெண்நறுஞ்சுண்ணமும் சந்தனப்பொடியும் பூசினர். மீசையில் புனுகு பூசி அணில்வால் தூரிகையால் நீவினர். தலைமுடிக்கு குங்கிலியப்புகையிட்டு உலரச்செய்து சீவி பின்னால் கோதி வைத்தனர்.

துரியோதனன் ”நான் என் உடலுக்குள் இருந்து ஒரு அடியை வெளியே எடுத்துவைத்துவிட்டதாக உணர்கிறேன்” என்றான். “அப்படியே நடந்து வெளியேறிவிடுங்கள் இளவரசே... நெடுந்தூரம் செல்லமுடியும்” என்றார் கிருபை. “நெடுதொலைவிருக்கிறது செல்ல, அறிய, தொலைந்துபோக.” துரியோதனன் “சொல்வலர் சொல் கேட்கலாகாது என்பார் என் தந்தை... அவர்கள் நம் சிந்தையை சொற்களால் நிறைத்துவிடுவார்கள்” என்று சிரித்தபின் “நன்று கிருபையரே... உங்களுக்கு நன்றி” என்றான். “நலம் திகழ்க!” என்றார் கிருபை.

ஆடைமாற்றிக்கொண்டிருந்தபோது அவனை அழைத்துச்செல்ல அரண்மனை ஏவலன் வந்திருந்தான். “இளையவன் சித்தமாகிவிட்டான் அல்லவா?” என்றான் துரியோதனன். “இல்லை” என்றான் ஏவலன். “ஏன்? கர்ணன் எங்கே?” அவன் வணங்கி “இளவரசே, இது மதுபர்க்க நிகழ்வு. நீங்கள் மகளிரறை புகுதல். அவர்கள் கலந்துகொள்ளலாகாது” என்றான். துரியோதனன் “ஏன்?” என்றான். ஏவலன் பேசாமல் நின்றான். துரியோதனன் அவனை நோக்கி எரிச்சலுடன் ஏதோ சொல்ல வந்து அவனைக் கடந்து முன்னால் நடந்தான். அவன் பின்னால் வந்தான். அருகே நெருங்கி மெல்லிய குரலில் “மெல்ல செல்லுங்கள் இளவரசே” என்றான். துரியோதனன் விரைவைக் குறைத்து தலையை விரைப்பாக்கிக்கொண்டான்.

மகளிர்மாளிகை வாயிலில் மங்கல இசைக்கருவிகளுடன் விறலியர் நின்றனர். அவனைத் தொடர்ந்துவந்த ஏவலன் கைகாட்டியதும் அவர்கள் இசைக்கத்தொடங்கினர். யாழ், குழல், மணி ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே கொண்ட மென்மங்கல இசை. தாலத்தில் விளக்கு, பொன், பழம், மலர், மஞ்சள் எனும் ஐந்து மங்கலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் முன்னால் வந்து அவனை வரவேற்றனர். அவர்களுக்குப்பின்னால் வந்த துச்சளை சிரித்தபடி “வருக இளவரசே, உங்கள் வருகையால் நலமும் மங்கலமும் நிறைக!” என்று சொல்லி தன் கையிலிருந்த பொற்தாலத்தில் இருந்து செங்குழம்பைத் தொட்டு அவன் நெற்றியில் இட்டாள். குனிந்து அதை பெற்றுக்கொண்ட துரியோதனன் “நீ ஏன் இதை செய்கிறாய்?”என்றான்.

சிரித்தபடி “மதுபர்க்கம் என்பது மணப்பெண்ணின் பெற்றோர் செய்வது. கவர்ந்து வரப்பட்ட பெண்ணுக்கு இங்கு நாங்கள்தான் எல்லாம்” என்றாள் துச்சளை. அவன் புன்னகைத்து “அவள் பெற்றோரையும் கவர்ந்துவர ஆணையிடுகிறேன்...” என்றான். “அவர்களே ஓரிருநாட்களில் வந்துவிடுவார்கள். விதுரர் நேற்றே விரிவான திருமுகம் அனுப்பிவிட்டார். அஸ்தினபுரியின் அரசி என்பது எளிய வெற்றியா என்ன? காசியில் கொண்டாட்ட மனநிலை நிலவுவதாக சொன்னார்கள்” என்றாள் துச்சளை. “இன்று படையெடுப்புகளைப்பற்றி பேசவேண்டாம். இன்று நீங்கள் வெல்லவேண்டியது ஒரு பெண்ணின் உள்ளத்தை மட்டுமே.”

உள்ளே பெருங்கூடத்தில் அணிகளும் ஆடைகளும் மின்ன பெண்கள் நிறைந்திருந்தனர். யார் யாரென்று துரியோதனனால் முதல் நோக்கில் அடையாளம் காணமுடியவில்லை. பெண்களை அப்படி ஒரு தொகை மட்டுமாக அதற்கு முன் பார்த்ததில்லை என எண்ணிக்கொண்டான். பெண்களில் ஒருத்தி வந்து “உள்ளே வா” என்று சொன்னபோதுதான் அது அவன் இளைய அன்னை தசார்ணை என்று தெரிந்தது. அவன் புன்னகைசெய்தான். அவள் அவன் கைகளைப்பற்றி அழைத்துச்சென்று உள்ளே மஞ்சள் பட்டு போர்த்தப்பட்டிருந்த பீடத்தில் அமரச்செய்தாள். "இது என்ன சடங்கு அன்னையே?” என்றான்.

“இதுவா? இதை மதுபர்க்கம் என்பார்கள். உன்னை மணமகள் வீட்டார் இனிப்பு அளித்து வரவேற்கிறார்கள். இனிமையான பெண்ணை உன்னிடம் ஒப்படைக்கிறார்கள்” என்றாள் தசார்ணை. பதின்மரில் இறுதியானவள் என்பதனால் எப்போதுமே அவளிடம் ஒரு குழந்தைத்தன்மை உண்டு. துரியோதனன் அவளிடம் மட்டுமே கேலியும் கிண்டலுமாக பேசுவது வழக்கம். “இனிமையானது என நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?” என்றான் சிரித்தபடி. “அப்படித்தான் எண்ணுகிறேன். இல்லை என்றால் எனக்கு நீயே நாளை சொல்” என்றாள்.

அருகே நின்றபெண்கள் கூட்டமாக சிரிக்க துரியோதனன் நாணி தலையை தாழ்த்திக்கொண்டான். அவர்கள் ஒவ்வொருவரும் அவன் அதுவரை பார்த்திராத விடுதலையுணர்வுடன் இருப்பதை கண்டான். சொற்களிலும் உடல்மொழிகளிலும் நாணத்தை இழந்துவிட்டவர்கள்போல. சிவந்தமுகமும் மிதக்கும் விழிகளும் மெல்லிய வியர்வையும் துள்ளல் குடிகொண்ட உடலுமாக அனைவருமே காமம் கொண்டவர்களென தோன்றினர். ஒருவருக்கொருவர் மெல்லியகுரலில் பேசி கூட்டமாக உரக்கச்சிரித்து ஒருவரை ஒருவர் அடித்தனர். பிடித்து தள்ளிக்கொண்டனர்.

சத்யசேனை உள்ளிருந்து ஒரு பெரியதாலத்துடன் வந்தாள். அவளுடன் விதுரரின் மனைவி சுருதையும் மலர்த்தாலத்துடன் வந்தாள். சத்யசேனையை விழிகளால் சுட்டிக்காட்டி ஒருத்தி ஏதோ சொல்ல கூட்டமாக சிரிப்பு எழுந்தது. சுதேஷ்ணை “என்னடி சிரிப்பு? மங்கலநிகழ்வுக்கு வந்தால் சிரிப்பதா? தள்ளிச்செல்லுங்கள்” என்று அதட்டினாள். வாயைப்பொத்தி கண்கள் ஒளிர ஒருத்தி “ஆணை அரசி” என்றாள். உடனே மீண்டும் சிரிப்பு. அணிப்பரத்தையரும் அரண்மனை மகளிரும் பிரித்தறியமுடியாதபடி கலந்துவிட்டிருந்தனர். அவர்களை எப்போதும் வேறுபடுத்தும் வெவ்வேறு உடல்மொழிகள் மறைந்துவிட்டிருந்தன.

தேஸ்ரவை அவன் அருகே வந்து “உன்னை அணிக்கோலத்தில் இன்றுதான் பார்க்கிறேன் மைந்தா. அழகாக இருக்கிறாய்” என்றாள். பின்னிருந்து ஒருத்தி “இருபக்கமும் நிகரானவர் அல்லவா?” என்றாள். அவனுக்குக் கேட்காமல் எவரோ ஏதோ சொல்ல அத்தனைபெண்களுக்கும் அது கேட்டு கூட்டச்சிரிப்பு அலையாக பரவியது. துரியோதனன் எழுந்து ஓடிவிடவேண்டுமென எண்ணினான். “சற்று வெறுமனே இருங்களடி... பித்தெடுத்த பெண்கள்” என்று தேஸ்ரவை திரும்பி கூவியபோது அவள் விழிகளிலும் சிரிப்பு இருந்தது. ஒரு சேடி “அரசி, வேழத்தின் வல்லமையை எதைவைத்து மதிப்பிடுவது?” என்றாள். தேஸ்ரவை “வந்தால் ஒரே அடியில் தலைகளை பிளந்துவிடுவேன்” என்றாள்.

பெண்கள் சிரித்துக்கொண்டே இருக்க “துதிக்கை என்று இவள் சொல்கிறாள்” என்றாள் அந்தப்பெண். அவர்களின் நகைப்பொலி பெருகி அவனை சூழ்ந்தது. ”போதும், செல்லுங்கள்" என்று சத்யவிரதை அவர்களை அதட்டியபடி உள்ளறையிலிருந்து வந்தாள். நிகுதியும் சம்ஹிதையும் சுஸ்ரவையும் அவளுடன் வந்தனர். ” இறுதியாக ஒரே இரு வினா. பிடியானைக்கு எப்போது மதம்சுரக்கும்?” என்றாள் ஒருத்தி. சத்யவிரதை சினத்துடன் கையை ஓங்கி “இங்கே எவரும் நிற்கக்கூடாது. செல்லுங்கள். குரவையிட ஆள்வேண்டும் என்று கூட்டிவந்தால்...” என்று சீற பெண்கள் சிரித்து குழைந்தனர். விழிகள் மின்னி மின்னி அவனை சூழ்ந்திருந்தன. உடல்கள் காற்றிலாடும் நாணல்களென குழைந்தன. இப்பெண்கள் எவரையும் முன்னர் பார்த்ததே இல்லை என அவன் எண்ணிக்கொண்டான். அணங்கு உடற்கூடியவர்கள். இதோ நின்று நெளிவது விண்ணிலிருந்து பெண்மேல் இறங்கும் பித்து.

சுபை உள்ளிருந்து ஓடிவந்து “அக்கா, மூத்தவர் மைந்தனை பார்க்கவேண்டும் என்கிறார்” என்றாள். யாரோ மெல்லிய குரலில் ஏதோ சொல்ல பெருஞ்சிரிப்பு எழுந்தது. “பார்த்தபின் மதுபர்க்கம் செய்யலாமா?” என்றாள் சத்யவிரதை. “எப்போதுவேண்டுமானாலும் செய்யலாம். இனிப்புதானே?” என்றாள் ஒருத்தி. அந்த எளிய வரிக்கே ஏன் அத்தனை சிரிப்பு என்று துரியோதனனுக்கு புரியவில்லை. சத்யவிரதை அவன் கையைப்பற்றி “நாம் அன்னையரசியைப் பார்த்து வாழ்த்து பெற்று வருவோம்” என்றாள். அவன் எழுந்து அவளுடன் நடக்க “பார்த்து, வாயில் இடிக்கும்” என்றாள் பின்னால் ஒருத்தி. சிரிப்பொலிகள் நடுவே “வாயில் இடிந்தால் பெரிதாக்கிவிடலாமடீ” என்ற குரல் எழுந்தது.

அறைக்குள் காந்தாரி மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். அவன் காலடியை முன்னரே கேட்டிருந்தமையால் அவள் கிளர்ச்சிகொண்டு நன்றாக சிவந்திருந்தாள். வெண்ணிறமான தடித்த பெருங்கைகள் கூட சிவப்போடியிருந்தன. அவனை நோக்கி கைகளை நீட்டியபடி “வருக துரியா...” என்றாள். அவன் அருகே சென்று அவள் கால்களைத் தொட்டு வணங்க அவள் கைநீட்டி அவன் தலையைத் தொட்டாள். மெல்லியவிசும்பல் கேட்டு அவன் நிமிர்ந்து நோக்கினான். அவள் அழுதுகொண்டிருந்தாள். நீலக் கண்கட்டுக்கு அடியில் நீர் ஊறி கன்னத்தில் வழிந்து துளிகள் மோவாயில் தொங்கி ஆடி மார்பு மேல் உதிர்ந்தன.

அவன் திரும்பி சத்யவிரதையை பார்க்க அவளும் கண்கலங்கியிருந்தாள். பின்னால் நின்றிருந்த சுபை ஒன்றும் கேட்காதே என விழியசைத்தாள். அவன் காந்தாரியின் உள்ளங்கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டான். நீர்நரம்பு ஓடும் தூய வெண்ணிறத்தில் ஒரு பெரிய மலரிதழ் போலிருந்தது. குளிர்ந்த மென்மையான மலரிதழ். அவள் எப்போதும் அவன் தொடுகையை விழைபவள். அவனுடைய பெரிய கையை தன் இருகைகளாலும் பொத்தி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். மீண்டும் விம்மினாள். விழிநீர்த்துளிகள் அவன் கைமேல் விழுந்தன. அவன் மீண்டும் திரும்பி அன்னையரை நோக்க சுபை விழியால் ஒன்றும் பேசாதே என்று சொன்னாள்.

காந்தாரியின் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. சுபை மெல்ல கனைத்து “மதுபர்க்கத்திற்கு நேரமாகிறது” என்றாள். “ஆம், நேரமாகிவிட்டது, கிளம்பு” என்று சொல்லி காந்தாரி அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள். ஒருகையால் கண்ணீரைத்துடைத்தபடி “அவள் வந்திருக்கிறாளா?” என்றாள். “யார்?” என்று துரியோதனன் அறியாமல் கேட்டான். “அவள்தான் வைசியப்பெண்...” சத்யசேனை “இல்லை மூத்தவளே, எந்தச்சடங்குக்கும் அவளை அழைக்கவில்லை" என்றாள். ஆனால் காலையில் திருமணச்சடங்குகளில் பிரகதியைக் கண்டதை துரியோதனன் நினைவுகூர்ந்தான். சுபை "போகலாம்” என்று வாயசைத்தாள். அவன் தலையை அசைத்து ‘ஆம்’ என்றபின் மீண்டும் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கி திரும்பிநடக்கும்போது அறைவிட்டு வெளியே செல்வதற்குமுன் அவளை மீண்டும் நோக்கினான். அவன் செல்லும் ஓசையைக் கேட்பதற்காக அவள் சற்று தலைதிருப்பியிருந்தாள்.

துரியோதனன் மீண்டும் பெருங்கூடத்திற்கு வந்தான். “கொற்றவையின் காணிக்கைப்பெட்டியில் போடப்பட்ட பொற்காசு அல்லவா?” என்றாள் ஒருத்தி. யாரோ “உஸ்” என அவளை அடக்க யாரோ சிரித்தனர். அவனை பீடத்தில் அமரச்செய்தபின் சத்யசேனை திரும்பி “பேசாதீர்கள்...” என்றாள். “இல்லை” என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பு. சத்யசேனை “எங்கே துச்சளை?” என்றாள். துச்சளை “இதோ” என்று தாலத்துடன் வந்தாள். அன்னையர் கூடி நின்றனர். ஒரு பசுந்தாலத்தில் ஐந்துமங்கலம் நடுவே பொற்கிண்ணத்தில் இருந்த திரவத்தை சத்யவிரதை எடுத்தாள். துரியோதனன் “என்ன அது?” என்றான். “ஐந்தினிமை என்பார்கள். தேன், பால், நெய், பழம், வெல்லம் கலந்தது” என்றாள் சத்யசேனை. “நீ இதை அருந்தியாகவேண்டும்.” துரியோதனன் “நான் இனிப்பு உண்பதில்லை” என்றான். பெண்களில் ஒருத்தி ஏதோ சொல்ல சிரிப்பு வெடித்தது. சத்யசேனை திரும்பி விழிகளால் அவர்களை அதட்டிவிட்டு “ஒருதுளி அருந்தினால் போதும்... இது ஒரு சடங்கு” என்றாள்.

ஆம்பல்கொடிக்கொத்துக்களைப்போல அத்தனை பெண்களும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு அவனைச்சூழ்ந்து நின்றனர். முலைகள் விதவிதமாக அசைந்தன. கழுத்துகள் வளைந்தன. விழிகளிலும் இதழ்களிலும் சிரிப்பு ஒளிவிட்டது. அவன் கைகள் நடுங்கின. விழிகளை ஏறிடாமல் தரைநோக்கி அமர்ந்திருந்தான். “வாங்கிக்கொள்” என்றாள் சத்யசேனை. “இனிமை நிறையட்டும். இங்கு மைந்தர் திகழட்டும். இக்குடி பெருகட்டும். மூதாதையர் மண்ணிலிறங்கும் பாதைகளில் மலர் விரியட்டும்!”

துரியோதனன் அவளிடமிருந்து வாங்கி ஒரு மிடறு விழுங்கினான். மலைத்தேனின் கசப்பு கலந்த இனிப்பு. அவன் அதை வாங்கியதுமே பெண்கள் குரவையிடத் தொடங்கினர். விறலியரின் மங்கலஇசையும் இணைந்து எழுந்தது. அவன் இனிப்பை விழுங்கியதும் பெண்களில் ஒருத்தி ஏதோ சொல்ல சிரிப்பொலி கூடத்தை நிறைத்தது.

பகுதி 15 : யானை அடி - 2

பள்ளியறைக்குள் துரியோதனன் சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றிருந்தான். அமைதியிழக்கும்போது எப்போதும் செய்வதுபோல மீசையை நீவிக்கொண்டிருந்தவன் நேரத்தை உணர்ந்து திரும்பி நோக்கினான். நெடுநேரம் ஆகவில்லை என்று தெரிந்தது. பெருமூச்சுடன் மீண்டும் வெளியே நோக்கினான்.

பூங்கா மிகவும் இருட்டியிருந்தது. இருள்வடிவாக தெரிந்த மரக்கிளைகளுக்குள் நூற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன என்று அப்போது நம்பமுடியாது. மரங்களின் உள்ளம் அவை, காலையில் விழிப்பு கொண்டதும் சூரியனை நோக்கி எழுகின்றன என்ற சூதர்களின் வரி நினைவுக்கு வந்தது. சற்று மதுவருந்தியிருக்கலாமென நினைத்துக்கொண்டான். ஐயினிமையின் சுவை நாவில் புளிப்பாக மாறிவிட்டிருந்தது.

காலடியோசைகள் கேட்டன. இப்போது என்ன செய்யவேண்டும் என்று அவன் ஒருகணம் உடல்தவித்து பின் மீண்டும் சாளரம் நோக்கியே திரும்பிக்கொண்டான். சிரிப்பொலிகளும் அடக்கப்பட்டபேச்சுகளும் கேட்டன. கதவு திறந்து மூடும் ஒலியும் மெல்லிய சொற்களும் உரத்த சிரிப்பொலிகளும் எழுந்தபின் அமைதி நிலவியது.

அவன் வெளியே நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தான். எக்கணமும் திரும்பிப்பார்க்கக்கூடும் என்று தோன்றியதை வெல்ல இருள்நோக்கி தன் விழிகளை ஆழமாக பதித்தான். இருளுக்குள் மரங்கள் அசைவதை காணமுடிந்தது. இருண்டநீரில் நிழல்கள் போல பார்க்கப்பார்க்க அவற்றின் முப்பரிமாணச்சித்திரம் தெளிந்து வந்தது.

பின்னர் அவன் ஒரு சிறிய பறவையை நோக்கினான். சிறுகிளைச்சந்திப்பில் அது வெண்ணிறமாக தெரிந்தது. ஒரு சங்கை அங்கே வைத்ததுபோல. என்ன பறவை? புறாவல்ல. புறா மரங்களில் அமைவதில்லை. கொக்கா? கொக்கு அந்தத் தோட்டத்தில் வருவதில்லை. எந்தப்பறவை? அவன் அதையே கூர்ந்து நோக்கினான். எதையாவது எடுத்து எறிந்து அதை பறக்கவிட்டால் அறிந்துவிடலாமென்ற எண்ணம் வந்ததுமே அதை இறுக்கி தவிர்த்தான்.

இருளுக்குள் மீண்டும் மீண்டும் விழிகூர்ந்தான். ஆனால் ஓர் எல்லைக்குமேல் அதன் சித்திரம் தெளியவில்லை. இல்லை ஏதாவது நிழலா? பறவை எடுத்துச்சென்ற துணி அங்கே கிடக்கிறதா? பறவை இத்தனை அசைவில்லாமலிருக்குமா?

அவன் பெருமூச்சுடன் விழிதிருப்பி அதே அசைவில் திரும்பிப் பார்க்கவிருந்தான். உடனே தன்னை மீண்டும் தடுத்துத் திரும்பி அந்தப் பறவையை நோக்கியதும் அதை கண்டறிந்தான். பகுளம். அத்தனை உயரமான மரத்தில் வந்தமருமா அது? புராணகங்கைக்குள் புல்வெளிகளில்தான் அதை கண்டிருந்தான்.  துணைவந்த வேடன் அதற்கு ஒரு பெயர் சொன்னான். என்ன பெயர் அது?

புராணகங்கையின் புல்வெளிகளில் எருமைகளைத்தான் கூடுதலாக பார்க்கமுடியும். ஈரமும் பசுமையும் கலந்த அந்தச் சூழலில் அவற்றை புகையென சிற்றுயிர்கள் மூடியிருக்கும். குருகு. அதை உண்ணிக்குருகு என்றான் வேடன். எருமைகளின் மேல் அவை அமர்ந்திருக்கும். கரியபாறைக்குமேல் வெண்ணிறக்கொடி பறப்பதுபோல.

வெண்சங்கில் கரிய கால்களும் கழுத்தும் எழுந்ததுபோல. கொக்குபோல அத்தனை நீளமான கழுத்தும் காலும் கொண்டவை அல்ல. மிக அமைதியானவை அவை என்றான். மணமற்றவை என்பதனால் அவை புதருக்குள் இருப்பதை வேட்டைநாய்கள் உணரமுடியாது. புதருக்குள் அவை இருக்கையில் அருகிலேயே அவற்றை காணாமல் நாள்முழுக்க செலவிடமுடியும்.

பகுளம்! அதன் பெயர் பகுளம். பிறை நிலவு போன்றது. அழகிய பெயர். பறவைகளில் ஒரு வெண்முத்து அது. அவன் புன்னகையுடன் திரும்பி அவளை நோக்கினான். வாயிலருகே எரிந்த நெய்யகலின் ஒளியில் அவள் நின்றிருந்தாள். அவன் திரும்பிய ஓசையில் அவள் விழிகள் நிமிர்ந்து அவனை நோக்கின. விழிதொட்டதும் அவள் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

“இங்கே வா” என்று துரியோதனன் அழைத்தான். அவள் நிமிர்ந்தாள். “அருகே வா” என்றான். அவள் மெல்ல வளையல்களும் மேகலைமணிகளும் சரப்பொளி அடுக்குகளும் குலுங்க சிலம்பு ஒலிக்க அருகே வந்தாள். சற்று தடித்த வெண்ணிற உடல். உருண்டையான பெரிய புயங்களில் தோள்வளைகள் அழுத்திக் கவ்வியிருந்த மென்தசை பிதுங்கியிருந்தது. கழுத்தெலும்புகள் தெரியாதபடி திரண்டிருந்த தோள்களின்மேல் சரப்பொளி நன்றாக பதிந்திருந்தது.

வட்டமுகம். அவன் அத்துணை துல்லியமான வட்டமுகத்தை அதற்கு முன் பார்த்ததில்லை. மிகச்சிறிய மூக்கு. மிகச்சிறிய செவ்வுதடுகள் சிறிய குமிழ்மொட்டுகள்போல. சிறிய மலரிதழ்கள்போன்ற காதுகள். கொழுவிப்பூரித்த கன்னங்களில் சிறிய பருக்களின் செம்மொட்டுகள். எப்படியோ அவள் மிக குளிர்ந்திருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. கடற்சங்கின் குளுமை. அந்த நிறத்தால் அப்படி தோன்றியதா?

அவள் அருகே வந்து சற்று தள்ளி நின்றாள். “இந்தத் தோட்டத்தில் ஒரு பறவையை நான் பார்த்தேன்... எங்கே சொல்!” அவள் கைகளை சாளரவிளிம்பில் ஊன்றி வெளியே நோக்கினாள். திரும்பி “அதோ அந்த மாமரத்தின் சிறுகிளையில்... பகுளம்” என்றாள். “காசியில் நிறையவே உண்டு இது. இதை அங்கே சங்குக்குருகு என்று சொல்வோம். பார்ப்பதற்கு வெண்சங்கு போலவே இருக்கும்” என்றாள். துரியோதனன் அவளை நோக்கி “சற்று முன் உன்னைப்பார்த்ததும் அப்படித்தான் நினைத்தேன், சங்கு போலிருக்கிறாய் என்று” என்றான்.

அவள் சட்டென்று சிரித்து “ஆம், எனக்கு இடையே இல்லை என்று காசியில் சொல்வார்கள். இளமையில் எப்போதும் செவிலி இடையில் அமர்ந்து உண்டுகொண்டே இருப்பேன்” என்றாள். துரியோதனன் சிரித்து “இங்கும் உனக்கு உணவுக்கு குறைவிருக்காது. முடிந்தால் பேரரசரிடம்கூட நீ உணவுண்ணும் போட்டியில் இறங்கலாம்” என்றான். பானுமதி சிரித்தபோது அவளுடைய பற்களும் மிகச்சிறியவை என்பதை துரியோதனன் கண்டான். அவள் தோளில் கைவைத்ததும் அவள் விழிகள் மாறின. அந்தக் கையை அவள் ஒரக்கண் வந்து தொட்டுச்சென்றது.

அவன் குனிந்து “உன் உடல் பெரிதாக இருக்கிறது. ஆனால் விழிகளும் மூக்கும் சிறியதாக இருக்கின்றன” என்றான். “பிடிக்கவில்லையா?” என்று அவள் கேட்டாள். அவள் விழிகளுக்கு சிரிக்கத்தெரிகிறது என்று அவன் நினைத்துக்கொண்டான். “சொல்லுங்கள்!” அவன் தடுமாறி “பிடித்திருக்கிறது என்றல்லவா சொன்னேன்?” என்றான். “பெண்ணை நலம்பாராட்டுவதை இப்படியும் செய்யமுடியும் என்று இன்றுதான் அறிந்தேன்” என்று சிரித்தாள். சுடர் ஏற்றப்பட்ட வெண்கலப்பாவைவிளக்கு போல தோன்றினாள். அதை சொல்லலாமா, இழிவானதாக போய்விடுமா என்று அவன் எண்ணினான்.

”என்ன எண்ணம்?” என்று அவள் அவன் மேல் மெல்ல சாய்ந்தபடி கேட்டாள். அவள் அத்தனை அருகில் வந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். எந்தப்பெண்ணிடமும் அவன் அப்படி நடுங்கியதில்லை. அவன் தொடை ஆடிக்கொண்டே இருந்தது. மூச்சுத்திணற “இல்லை” என்றான். “சொல்லுங்கள்!” துரியோதனன் “இல்லை, நான் எண்ணினேன்... நீ சிரிக்கையில் சுடர் ஏற்றப்பட்ட பாவை விளக்குபோலிருக்கிறாய்  என்று” என்றான்.

அவள் நிமிர்ந்து “இதுதான் நலம் பாராட்டல்” என்றாள். “இதை சொல்வதற்கென்ன?” துரியோதனன் “நான் எவரிடமும் இதையெல்லாம் சொன்னதில்லையே” என்றான். “என்னிடம் சொல்லுங்கள்.” துரியோதனன் அவள் இடையை வளைத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டான். “சரிதான்” என்று அவள் சொன்னாள். “என்ன?” என்றான். “இடை பெரிது என்றார்கள். போதவில்லை என்று தோன்றுகிறது” என்றாள்.

அவன் உரக்கச்சிரிக்க அவள் அவன் வாயில் கையை வைத்து "என்ன சிரிப்பு?” என்றாள். “ஏன், சிரித்தால் என்ன?” பானுமதி “என்ன நினைப்பார்கள்?” என்றாள். “யார்?” அவள் புருவங்களை சுளித்து “கேட்பவர்கள்” என்றாள். “கேட்பவர்களா? இங்கே எவர் கேட்கிறார்கள்?” என்று கேட்டான். “கேட்பார்கள். வெளியே நின்றிருப்பார்கள்” என்றாள். “யார்?” என அவன் தன் இடையில் கைவைத்தான் . அங்கே வாள் இல்லாதது கண்டு திரும்பினான்.

அவள் “சேடியர் விறலியர்... அங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தெரியும்? நாளை என்னை கேலிசெய்யவேண்டும் அல்லவா?” என்றாள். “உடனே வாளுக்குக் கைநீட்டுவது... என்ன பழக்கம் இது?” துரியோதனன் “அப்படியே பழகிவிட்டது” என்றான். “வாருங்கள்” என அவள் அவன் கைகளைப்பிடித்து மஞ்சத்தை நோக்கி கொண்டுசென்று அமரச்செய்தாள்.

அவளும் அருகே அமர்ந்துகொண்டு “ஏன் நடுங்குகிறீர்கள்?” என்றாள். “இல்லையே. நான்...” என்றான் துரியோதனன் தடுமாறியபடி. “உண்மையில்...” என்று சொல்லி முடிக்காமல் புன்னகைத்தான். “மது அருந்தவில்லை என்பதனாலா?” அவன் அந்த சொல்லை பிடித்துக்கொண்டான். “ஆம்” என்றான். “வேண்டுமென்றால் அருந்துங்கள், ஏவலனை வரச்சொல்கிறேன்.” துரியோதனன் அவள் கைகளைப்பிடித்து “வேண்டாம்” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்டாள். “மதுவைவிட உளமயக்குடன் இருக்கிறேன். அகிபீனாவைவிட சிவமூலியைவிட.” அவள் அவன் மேல் சாய்ந்து விழிகளில் சிரிப்புடன் “எது?” என்றாள். அவன் அவள் விழிகளை அப்போதுதான் அண்மையில் பார்த்தான். கருணைகொண்ட விழிகள் என்று கிருபை சொன்னது நினைவுக்கு வந்தது. “நீ” என்றான். “உன் கண்கள் கருணை நிறைந்தவை என்றார் கிருபை.”

பானுமதி சிரித்து “ஆம், என்னிடமும் சொன்னார்” என்றாள். “அந்தக் கருணையில் இருந்து நான் தப்பவே முடியாது என்றார்.” அவள் அவன் மேல் முகத்தைவைத்து மெல்லியகுரலில் “தப்ப விழைகிறீர்களா?” என்றாள். “இல்லை” என்று அவனும் மெல்லியகுரலில் சொன்னான். மலர்மணத்துக்கு ஆடைமணத்துக்கு அப்பாலிருக்கும் உடல்மணம். ”என்ன சொன்னார்கள்?” என்றான். “யார்?” என்றாள். “இப்போது உன்னை உள்ளே விட்டுச்சென்ற பெண்கள்.”

அவள் சிரித்து ”உள்ளே அங்கநாட்டரசரும் துச்சாதனரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள் என்றார்கள்” என்றாள். துரியோதனன் உரக்க நகைத்தான். அது அவனை அந்தத் தருணத்தின் அத்தனை செயற்கையான இறுக்கங்களிலிருந்தும் விடுவித்தது. சேக்கையில் மல்லாந்து படுத்தபடி “உண்மையை சொல்லப்போனால் நான் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இளையோன் இன்றி இருந்த நாட்கள் மிகமிகக்குறைவு. நான் பாதியாகி விட்டதுபோல தோன்றும்” என்றான்.

பானுமதி “அங்கநாட்டரசர் நீண்டநாள் தெற்கே சென்றிருந்தாரே” என்றாள். “ஆம், ஆனால் அவனை நான் எண்ணாமலிருந்ததில்லை. என் இளையோன் யுயுத்ஸு பலவகையிலும் கர்ணனைப்போன்றவன். அவனை ஒவ்வொரு நாளும் வரவழைத்து பேசிக்கொண்டிருப்பேன்.” பானுமதி “அவர்களுக்கு என்மேல் சினமிருக்கும்” என்றாள். “சினமா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றாள் பானுமதி. “ஏன் சினம்? நீ என் மனைவி. அவர்கள் என் அணுக்கத்தினர்.” பானுமதி “அதெல்லாம் சொற்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் நிறைத்துள்ள இடத்தை நான் சற்று பறித்துக்கொள்கிறேன் அல்லவா?” என்றாள்.

துரியோதனன் சிரித்து “அத்தனை குழந்தைகள் அல்ல அவர்கள்” என்றான். “அன்பை பொறுத்தவரை அத்தனைபேரும் குழந்தைகளே” என்றாள். துரியோதனன் சிலகணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் “ஆம், அவர்களிடம் அந்த மாற்றத்தைக் கண்டேன்” என்றான். “அது சில நாட்களில் அகன்றுவிடும்” என்றாள். “எப்படி?” என்றான் துரியோதனன். “நான் மிகச்சிறிய இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளப்போகிறேன். மலர்நுனியில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சிறிய இடம்” என்றாள் பானுமதி.

“சூதர்களைப்போல பேசுகிறாய்” என்றான் துரியோதனன். பானுமதி “சற்றுமுன் சூதர்களைப்போல பேசியது நீங்களும்தானே?” என்றாள். அவன் அவளை அடித்து “சொல்லிக்காட்டுகிறாயா?” என்றான். அடி அவளுக்கு வலித்தது. “எவ்வளவு பெரிய கை... இனிமேல் விளையாட்டுக்குக் கூட அடிக்கவேண்டாம்” என்றாள். துரியோதனன் சிரித்தபடி “இல்லை” என்றான்.

அவள் எழுந்து அறையிலிருந்த பழத்தாலத்தை எடுத்து வந்து அவன் முன் வைத்தாள். “உண்கிறீர்களா?” என்றாள். அவன் கைக்கு ஒன்றாக பழங்களை எடுத்தபடி “நான் பதற்றத்தில் நெடுநேரமாக உணவுண்ணவில்லை. பசிக்கிறது” என்றான். “அதை விழிகளிலே கண்டேன்” என்றாள் பானுமதி. “உண்மையாகவா? எப்படி?” என்றான். “சொல்லத்தெரியாது. ஆனால் தெரிந்துகொள்கிறேன்.” துரியோதனன் “பொய் சொல்கிறாய்” என்றான். “இல்லை, இனிமேல் ஒருமுறையேனும் உங்கள் பசியை நான் அறியாவிட்டால் நான் சொல்வது பொய் என்று கொள்ளுங்கள்” என்றாள்.

அவன் பழங்களை மிகவிரைவாக உண்டான். தாலம் ஒழிந்தபோது “நீ? உனக்கு வேண்டுமல்லவா? நான் எண்ணவேயில்லை” என்றான். “ஆனால் உண்ணும்போது துச்சாதனர் உண்டாரா என எண்ணிக்கொண்டீர்கள்.” துரியோதனன் சிரித்து “ஆம், அவனை எண்ணாமல் நான் எப்போதுமே எதையும் உண்பதில்லை” என்றான். “உன்னை எண்ணவேயில்லை. நீயும் பசிமிகுந்தவள் என்றாய்.” பானுமதி “நான் உண்டுவிட்டுத்தான் வந்தேன்” என்றாள் “எனக்குத்தேவை என்றால் தயங்காமல் உண்பேன், அப்படி பழகிவிட்டேன்.”

துரியோதனன் அவள் கைகளைப்பற்றிக்கொண்டு “இந்த அரண்மனை உனக்கு பிடித்திருக்கிறதா?” என்றான். “ஆம், ஹஸ்தி கட்டிய அரண்மனை. பழையது, ஆனால் முதுகளிறுபோல நிமிர்வு கொண்டது.” துரியோதனன் “நான் அரண்மனையில் வாழ்பவர்களை கேட்டேன்” என்றான். “அவர்களை நான் இன்னும் அறியத் தொடங்கவில்லை அல்லவா?” என்றாள்.

“துச்சளை? அவளைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” பானுமதி “அவளைத்தான் என் வாழ்நாள் முழுக்க அன்புடன் நினைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஏனென்றால், அவள் பெண்ணாகிவந்த நீங்கள்தான்” என்றாள். துரியோதனன் சிரித்து “அதை பலர் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “என் கைகளை பற்றிக்கொண்டு அஸ்தினபுரியின் வழித்தோன்றல்களிடையே எந்தப்பூசலும் வராமல் பார்த்துக்கொள்வதே அவள் பணியென்றும் அதற்கு நான் உதவவேண்டும் என்றும் சொன்னாள்.”

துரியோதனன் “நீ என்ன சொன்னாய்?” என்றான். “நான் அவள் அடிமை என்றேன்.” துரியோதனன் “சிறப்பாக பேசக் கற்றிருக்கிறாய்” என்றான். “அன்னையை பார்த்தாயல்லவா?” “ஆம், அவர்களைப்பற்றி சூதர்கள் பாடியது நினைவுக்கு வந்தது.” துரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “என்ன?” என்றான். ”அனைவரையும் பெற்று அமைந்திருக்கும் அன்னைத்தேனீ” என்றாள் பானுமதி. “அவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒரு சலிப்பைக் கண்டேன். அதுதான் அன்னை தெய்வங்களின் இயல்பு என்று தோன்றியது.”

துரியோதனன் “ஆம், அன்னை மிகவும் உளம் சலித்துவிட்டார். விழியின்மையால் அவர் அகம் நோக்கி நெடுந்தொலைவு சென்றுவிட்டார்" என்றான். “அவர்களின் புறம்தான் தங்கையராக அவர்களை சூழ்ந்திருக்கிறதே” என்றாள் பானுமதி. “ஒவ்வொரு சிற்றரசியும் ஒவ்வொரு பாங்கு. ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றாகவும் தெரிகிறார்கள்.”

துரியோதனன் “அன்னை என்னை நோக்கி விழிநீர் சிந்தினார்” என்றான். “எப்போது?” என்றாள் அவள். “மதுபர்க்கத்திற்கு வந்தபோது.” பானுமதி புன்னகைசெய்து “அது இயல்புதானே?” என்றாள். “ஏன்?” “அவர்கள் நெஞ்சுக்குள் பொத்திவைத்திருந்த வைரம்.” துரியோதனன் எச்சரிக்கையுடன் “எது?” என்றான்.

அவள் அவன் நெஞ்சில் தொட்டு “இது” என்றாள். துரியோதனன் “அதற்கு ஏன் அழவேண்டும்? நான் எப்போதும் அவர் மைந்தன் அல்லவா?” என்றான். “அதை மைந்தருக்கு சொல்லி புரியவைக்க அன்னையரால் இயலாது.” துரியோதனன் “நீ பேசுவதை புரிந்துகொள்ள நான் இன்னொரு குருகுலம் செல்லவேண்டும் போலிருக்கிறது” என்றான்.

”இளையோனைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா?” என்றாள் பானுமதி. “பலந்தரையை இழந்தது அவர் உள்ளத்தை வருத்துகிறது போலும்.” துரியோதனன் சிலகணங்களுக்குப்பின் “அதை அவன் சொல்லவில்லை. ஆனால் வருந்துகிறான் என்றே நான் உணர்கிறேன்” என்றான். “பலந்தரைக்கு ஒரு தங்கை இருக்கிறாள். எந்தையின் இரண்டாவது அரசியின் மகள் அவள். சுபலை என்று பெயர். அவளை இளையவருக்கு மணம்கொள்வோம்.”

துரியோதனன் சற்று சலிப்புடன் “மீண்டும் படையெடுப்பா?” என்றான். “தேவையில்லை. நானே எந்தையிடம் பேசுகிறேன். அவர் ஒப்புக்கொள்ளாமலிருக்கமாட்டார். ஏனென்றால் நான் இங்கிருப்பதனால் என்னுடன் அவளும் இருப்பதே சிறப்பு என எண்ணுவார். இன்னொரு நாட்டுக்குச்சென்றால் இந்த மதிப்பு அவளுக்கிருக்காது.”

துரியோதனன் மலர்ந்து “ஆம், அதை செய்யலாம்... அதுவே உகந்தது” என்றான். “நான் நாளையே எந்தையிடம் தூதனை அனுப்புகிறேன். அவரது ஒப்புதல் வந்ததும் அஸ்தினபுரியின் முறைமைத்தூதர்கள் செல்லட்டும்.” துரியோதனன் “விதுரரிடமே சொல்கிறேன். அவர் சென்று பேசினால் அனைத்தும் முடிந்துவிடும்னென்றான். பானுமதி “அத்துடன் அங்கநாட்டரசருக்கும் துணைவியை தேடவேண்டும்” என்றாள்.

துரியோதனன் முகம் சற்று மாறியது. “நீ அதை அறியமாட்டாய். அவன் பிறப்பால்...” என தொடங்க “அறிவேன்” என்றாள் பானுமதி. “அவர் இன்று அங்கநாட்டுக்கு அரசர். அஸ்தினபுரியின் அரசனின் முதற்துணைவர். நாம் கோருவது பெண் மட்டும் அல்ல. நட்பும் கூட. அதை மறுப்பவர் பகையை தேடிக்கொள்கிறார் . அதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்.”

“மெல்லமெல்ல அரசு சூழ்தலுக்குள் வருகிறாய். பேரரசியின் மொழிகளை பேசுகிறாய்” என்றான் துரியோதனன். “நானும் ஓர் அரசின் அவையில் பத்துவருடங்கள் அமர்ந்தவள்தான்” என்றாள் பானுமதி. “புளிந்தநாட்டு இளவரசி சுப்ரியையை அவருக்காக கேட்டுப்பார்ப்போம்.” துரியோதனன் “கேட்கலாம்...” என்றான். ”நான் அவளை மூன்றாண்டுகளுக்குமுன் குடப்பெருக்கு விழாவில் கண்டிருக்கிறேன். தன் தந்தையுடன் கங்கைநீராட வந்திருந்தாள். எங்கள் அரண்மனையில்தான் என்னுடன் தங்கியிருந்தாள். அவள் பேசியதெல்லாம் வசுஷேணரைப்பற்றித்தான்.”

துரியோதனன் முகம் மலர்ந்து “அவனை பெண்கள் விரும்புவர் என்று நன்கறிவேன்...” என்றான். “புளிந்தர்கள் அவந்திநாட்டின் கீழ்க்குடியினராக இருந்தவர்கள். தனிநாடாக மாறி மூன்றுதலைமுறை ஆகவில்லை. அவர்களை மீண்டும் அவந்தி அடிமைகொண்டுவிடும் என அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். நர்மதைக்கரையின் அடர்காடுகளுக்குள் அவர்களின் சிறுநகர் இருப்பதனால்தான் இன்னமும் அவர்கள் வெற்றிகொள்ளப்படவில்லை. ஆனால் அவர்கள் நர்மதை வழியாக செய்துவந்த வணிகம் முழுமையாகவே நின்றுவிட்டது. அவர்களுக்கு வசுஷேணரின் மணத்தூது மூழ்குபவன் முன்னால் நீட்டப்பட்ட கையாகவே இருக்கும்” என்று பானுமதி சொன்னாள்.

“ஆனால் புளிந்தர்கள் மலைமக்கள் அல்ல. அவர்கள் மகதத்திற்கு இணையான தொல்குடியினர். மகதத்தின் கிளைவழிகளில் ஒன்று தாயாதிகளால் துரத்தப்பட்டு காடுகளுக்குள் சென்று அந்நகரை அமைத்ததாகச் சொல்லப்படுகிறது... இன்று வசுஷேணருக்குத்தேவை வல்லமை வாய்ந்த நாட்டின் உறவல்ல. குலத்தொன்மை வாய்ந்த வலிமையற்ற ஒருநாட்டின் உறவுதான்”

துரியோதனன் உளம் விம்ம ”இதை முடித்துவிடுகிறேன். நாளையே...” என்றான். பானுமதி “இரு மணங்களும் முடிந்தால் தாங்களும் சற்று விடுபடமுடியும்” என்றாள். அவன் அவளை மீண்டும் அடிக்க கையோங்கி பின் தாழ்த்தி “சரிதான். அதற்காகத்தான் இந்தத் திட்டமா?”என்றான்.

பானுமதி விழிகள் மெல்ல மாறுபட்டன. “நான் ஒன்று கேட்கலாமா?” என்றாள். “சொல்” என்றான் துரியோதனன். ”நாளை காலை நான் சேடியருடன் சென்று கோட்டைக்கு அப்பாலிருக்கும் அம்பையன்னையின் ஆலயத்தில் ஒரு பலிவழிபாடு செய்து வரலாமா?” துரியோதனன் விழிகள் சுருங்க “அதற்கு முறைமையுண்டா என்று தெரியவில்லையே” என்றான்.

“இல்லை, அரசகுலத்தவர் எவரும் செய்வதில்லை. ஆனால் ஏவலரையும் பூசகரையும் அனுப்பி பூசை செய்கிறார்கள்.” துரியோதனன் “அதை பீஷ்மபிதாமகர் விரும்புவாரா என்று தெரியவில்லையே...” என்றான். “நான் அவரிடம் அதைப்பற்றி கேட்கமுடியாது. வேண்டுமென்றால் உனக்காக நான் ஹரிசேனரிடம் பேசுகிறேன்.”

“வேண்டாம், நானே நாளை நேரில்சென்று பிதாமகரிடம் பேசுகிறேன்” என்றாள் பானுமதி. “நீயா? பிதாமகரிடமா?” என்றான் துரியோதனன் திகைப்புடன். “இங்குள்ள பெண்கள் எவரும் அவர் முன் செல்வதில்லை.” பானுமதி சிறிய பற்கள் ஒளிவிட சிரித்து ”நான் செல்லலாம். நான் காசிநாட்டு இளவரசி” என்றாள். துரியோதனன் புரியாமல் “ஏன்?” என்றான். “அதை நாளை சொல்கிறேன்” என்றாள் பானுமதி.

அவன் பெருமூச்சுடன் படுத்துக்கொண்டு “விடியவிருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம்” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். ”எவ்வளவு அரசியல் நடவடிக்கைகளை பேசி முடித்திருக்கிறோம்!” துரியோதனன் சிரித்து “அரசு சூழ்தலை இனி உன்னிடமே விட்டுவிடலாம் என நினைக்கிறேன்” என்றான். “விடுங்கள் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் பானுமதி.

அவன் அவள் இடையில் கையை வைத்து “நீ அஸ்தினபுரியின் அரசியாக விழைந்தாயா?” என்றான். “இல்லை” என்று பானுமதி சொன்னாள். “உங்கள் துணைவியாக ஆகவேண்டும் என்று மட்டுமே எண்ணினேன்.” துரியோதனன் அவள் விழிகளை நோக்கி “என் துணைவியாகவா? ஏன்?” என்றான். “அது நான்காண்டுகளுக்கு முன்பு நான் எடுத்த முடிவு.”

துரியோதனன் புன்னகைத்தபடி “நான்காண்டுகளுக்கு முன்பா? எப்படி?” என்றான். “இளைய யாதவர் சொன்னார்” என்றாள் பானுமதி. அச்சொற்களை அவன் செவிகொள்ளவில்லை. “துவாரகையை கட்டிமுடித்ததும் குடமுழுக்காட்ட கங்கைநீர் கொள்வதற்காக இளைய யாதவர் காசிக்கு வந்திருந்தார். எங்கள் அரண்மனையில் தங்கினார். அப்போதுதான்” என்று அவள் சொன்னதும் அவன் தோள் அதிரத்தொடங்கியது. புளிப்புண்டவன் போல தானாகவே சுருங்கிய விழிகளுடன் அவளை நோக்கினான்.

“அவர் அங்கிருந்த ஏழுநாட்களும் நான் என் களித்தோழனுடன் இருந்ததாகவே உணர்ந்தேன்” என்று சிறுமிக்குரிய துள்ளலுடன் பானுமதி சொன்னாள். “நான் அதுவரை ஆண்களின் உலகுக்குள் சென்றதே இல்லை. என் தமையனுக்கும் எனக்கும் இருபது வயது வேறுபாடு. அவர் என்னிடம் பேசியதேயில்லை. சிரிக்கும் ஆண் என நான் கண்டது அவரை மட்டுமே. அந்த ஏழுநாட்களும் நானும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.”

அவன் முகமாறுதலை காணாமல் அவள் சொல்லிக்கொண்டே சென்றாள். “அந்த ஏழுநாட்களில் நான் கற்றவையும் உணர்ந்தவையும் முழு வாழ்நாளுக்கு நிகர். அவர் துவாரகைக்கு விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரைக்கும் சென்று இனி எப்போது பார்ப்பேன் கண்ணா என்று கேட்டேன். ஒரு மயிற்பீலியை எடுத்துப்பார் நான் தெரிவேன் என்று சொல்லி சிரித்துவிட்டுச் சென்றார்” என்றாள் பானுமதி. “அன்று முதல் எப்போதும் என்னிடம் மயிற்பீலி இருக்கும்.”

“அவனா என்னைப்பற்றி சொன்னான்?” என்றான் துரியோதனன் உணர்ச்சியற்ற குரலில். “ஆம், அவரும் நானும் என் அன்னையும் காலபைரவர் ஆலயத்தருகே கங்கைப்படிக்கட்டில் அமர்ந்திருக்கையில் என் அன்னை அவரிடம் எனக்குரிய மணமகன் எங்கிருக்கிறான் என்று சொல்லும்படி கோரினார். அவர் அனைத்தும் அறிந்தவர் என அவர் நம்பத்தொடங்கியிருந்தார்” என்றாள் பானுமதி. உடலில் கூடிய துள்ளலுடன் அவனருகே மேலும் நெருங்கி அமர்ந்து அவன் கைகளைப்பற்றிக்கொண்டு சொல்லலானாள்.

“கண்ணன் என்னை நோக்கியபின் என் தலையில் இருந்து மலர்ச்சரம் ஒன்றை எடுத்து ஏழு சிறிய மலர்களை ஒவ்வொன்றாக நீரிலிடும்படி சொன்னார். நான் ஒவ்வொரு மல்லிகையாக எடுத்து நீரிலிட்டேன். ஏழாவது மல்லிகையை நீரிலிடும்போது மேலே யானை பிளிறியது. திரும்பிப்பார்த்தேன். எங்கள் பட்டத்துயானை அப்பால் விஸ்வநாதர் ஆலயத்தின் படியேறிச்செல்வதை கண்டேன். இளைய யாதவர் என் அன்னையை நோக்கி வேழம் என்றார். வேழத்திற்கு மனைவியாகி பேரரசியாக அரியணை அமர்வேன் என்றார்.”.

“அன்னை யாரவர் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்” என்றாள் பானுமதி. கிளுகிளுத்துச்சிரித்தபடி “ஆனால் யாதவர் புன்னகையுடன் அதை அவளே கண்டடையட்டும் என்று சொல்லிவிட்டார். நான் திகைத்து உளம் மயங்கியிருந்தேன். வெறும் தற்செயல், யாதவர் விளையாடுகிறார் என்று ஒருபக்கம் தோன்றினாலும் மறுபக்கம் ஏதோ பொருளுண்டு என்றும் எண்ணிக்கொண்டேன். ஆனால் உண்மையில் எங்கோ உள்ளத்தில் தோன்றிவிட்டது என்று இப்போது தெரிகிறது” என்றாள்.

“அன்று மாலையே ஒரு சூதனும் விறலியும் வந்திருந்தனர். அரண்மனை மகளிர்கூடத்தில் அவர்கள் பாடியபோது அஸ்தினபுரியின் கதை வந்தது. மதவேழமான ஹஸ்தியைப்பற்றி பாடினர். பேரரசர் திருதராஷ்டிரர் பற்றி பாடினர். அதன்பின் தங்கள் புயங்களைப்பற்றி பாடத்தொடங்கினர். உங்கள் தோள்களில் வாழும் தெய்வங்களைப்பற்றி கேட்டபோது நான் கண்ணீர்வடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் உறுதிகொண்டுவிட்டேன்.”

“அவர் அனைத்துமறிந்தவர். அனைத்துடனும் விளையாடும் மாயன்” என்றாள் பானுமதி விழிகளைச் சரித்து, கனவுடன். “சொற்கள் நிகழாது போகாதென்று எனக்குத்தெரியும்.” அவள் மார்பு ஏறியிறங்கியது. ”அவர் என் மெய்யாசிரியன், என் தந்தை, என் இறைவடிவம்.” அக்கணம் அவள் எங்கோ இருந்தாள். அவன் முன்னாலிருந்தது ஓர் ஓவியம்.

துரியோதனன் விழிகளை மூடியபடி படுத்திருந்தான். அவள் நீர்ப்பாவை விரல்பட்டு என கலைந்து பெருமூச்சுடன் “இதை முதல்நாளே உங்களிடம் சொல்லலாகாதென்றும் எனக்குத்தெரியும். ஆனால் என் அகத்தே உள்ள இந்த மயிற்பீலியை என்னால் மறைக்கமுடியாது” என்றாள்.

துரியோதனன் கண்களை மூடியபடி கிடந்தான். பானுமதி தயங்கியபடி கைநீட்டி அவனை மெல்ல தொட்டு தணிந்த குரலில் "என் மேல் சினம் கொண்டிருக்கிறீர்களா?” என்றாள். அவன் விழிகளைத் திறந்தான். அவள் அவன் சிவந்த முகத்தை நோக்கி “என்னை வெறுக்கிறீர்கள் என்றாலும் அது முறையே. நான் மகளிரறை இருளுக்குள் செல்லவும் சித்தமாக இருக்கிறேன்” என்றாள்.

துரியோதனன் சட்டென்று உரக்கச் சிரித்து “சரிதான். இங்கே எல்லா பெண்களும் இப்படித்தான் இருக்கிறீர்கள். அங்கே என் அன்னையை எழுப்பி அவள் உள்ளமென்ன என்று நோக்கினால் அவள் மடியில் கைக்குழந்தையாக அந்த யாதவனை வைத்து குலவுவது தெரியும்” என்றான். ”பத்து அன்னையரும் அவனை மைந்தனாக எண்ணுகிறார்கள். துச்சளை அவனை உன்னைவிட வழிபடுகிறாள்.”

பானுமதி உளம் எளிதாகி நகைத்து “கிருஷ்ணன் என பெயரிட ஒரு மைந்தனை நானும் கனவுகாண்கிறேன்” என்றாள். துரியோதனன் உதடுகளில் மெல்லிய புன்னகையுடன் “பெண் என்றால் கிருஷ்ணை என்று பெயரிடுவோம்” என்றான்.

பகுதி 15 : யானை அடி - 3

துரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம் தூக்கியதிலும் மெல்லிய செயற்கைத்தனம் இருந்ததை அவன் பார்த்தான். ஆனால் சிரித்தபடி சென்று பீடத்தில் அமர்ந்து “மன்னியுங்கள், சற்று பிந்திவிட்டேன்” என்று அவன் சொன்னது அதைவிடவும் செயற்கையாக இருந்தது. “சிசுபாலரிடமிருந்து மீண்டும் ஓர் ஓலை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். “என்ன?” என்று துரியோதனன் விழிதூக்கி கேட்டான்.

கர்ணன் ”ஓலையில் ஒன்றுமே இல்லை. நம்மை சந்திக்கவேண்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்” என்றான். ”சந்தித்தால் என்ன?” என்றான் துரியோதனன். “சந்தித்தால் ஒன்றை மட்டுமே பேசமுடியும். அவர் துச்சளையை கோருவார்” என்றான் கர்ணன். துரியோதனன் முகவாயை தடவியபடி “ஆம்” என்றான். துச்சாதனன் “அவருக்கே மணமுடித்துக்கொடுத்தாலென்ன? அவர் என்ன நம்மை மீறியா சென்றுவிடுவார்?” என்றான். துரியோதனன் சினத்துடன் முகம் தூக்கி “எந்நிலையிலும் சிசுபாலருக்கு துச்சளையை நாம் கொடுக்கப்போவதில்லை. அந்தப்பேச்சே தேவையில்லை” என்றான்.

கர்ணன் வியப்புடன் நோக்க “அதை துச்சளை விரும்பமாட்டாள். இளைய யாதவனின் எதிரியை மணக்க பாரதவர்ஷத்தின் எந்தப்பெண்ணும் விரும்பப்போவதில்லை" என்றான் துரியோதனன். “பானு அதை சொல்லும் வரை நானும் உணரவில்லை” என விழிகளை திருப்பிக்கொண்டு சொன்னான். அடக்கப்பட்ட சினத்துடன் “காசிநாட்டு இளவரசி அப்படி சொன்னார்களா? இதில் அவர்களின் விருப்பத்திற்கு என்ன இடம்?” என்றான் கர்ணன். “கர்ணா, அவள் உண்மையிலேயே விழையாத எதையும் இனி என் வாழ்நாளில் என்னால் செய்யமுடியாது” என்றான் துரியோதனன். சற்றுநேரம் அமைதி நிலவியது. கர்ணன் அதைவெல்ல வெறுமனே தன் ஏடுகளை புரட்டிக்கொண்டான்.

பட்டாடை சரசரக்க சௌனகர் உள்ளே வந்தார். துரியோதனன் எழுந்து அவரை வணங்கினான். அவனை வாழ்த்தியபின் “வந்துவிட்டீர்களா?” என்றார். “இவர்களிருவரும் காலைமுதலே காத்திருக்கிறார்கள்.” துரியோதனன் “காலைமுதலா? ஏன்? நான் வழக்கமாக விடிகாலையில் வருவதில்லையே” என்றான். கர்ணன் “இல்லை, முதன்மையான அரசச்செய்திகள் இருந்தமையால்...” என்றான். “என்ன செய்திகள்? சிசுபாலரின் ஓலை மட்டும்தானே?” என்றான் துரியோதனன். “ஆம், அது முதன்மையாக...” என கர்ணன் சொல்ல ”அதில் எந்த முடிவையும் எடுக்கவேண்டியதில்லை என்றல்லவா நீயே சொன்னாய்?” என்றான் துரியோதனன்.

“ஆம், ஆனால் அந்தமுடிவையே விரைந்து எடுத்தாகவேண்டும். அவர் விதுரரின் அழைப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு வந்துவிட்டாரென்றால் நாம் சந்தித்தேயாக வேண்டியிருக்கும்” என்றான் கர்ணன் எரிச்சலுடன். அவனை திகைப்புடன் நோக்கிய சௌனகர் ”யார் சிசுபாலரா? அவர் எப்படி அவ்வாறு வரமுடியும்? அவர் அரசர். அவருக்கென சில முறைமைகள் இங்குள்ளன. அங்கர் அவற்றை அறிந்திருக்கமாட்டார்” என்றார். கர்ணன் சிவந்த முகத்துடன் உரக்க “ஆம், நான் முறைமைகளை அறியமாட்டேன். ஆனால் எனக்கு அரசு சூழ்தல் தெரியும்...” என்றான்.

துரியோதனன் புன்னகையுடன் “சரி, இதை ஏன் நாம் இத்தனை பேசவேண்டும்? இப்போது எது முதன்மையானதோ அதைப்பற்றி பேசுவோம்” என்றான். சௌனகர் “காசி அரசியிடமிருந்து எனக்கு இரண்டு ஆணைகள் வந்துள்ளன இளவரசே. ஒன்று, இளவரசர் துச்சாதனருக்காக காசிநாட்டு இளவரசி சுபலையைக்கேட்டு தூதனுப்பலாமா என நான் மாமன்னரிடம் கேட்டு சொல்லவேண்டும். இரண்டு, அங்கநாட்டரசருக்கு புளிந்தர் நாட்டு இளவரசி சுப்ரியையை கோரலாமா என்று அங்கரிடமும் அரசரிடமும் நான் கேட்டு சொல்லவேண்டும்” என்றார். “ஆம், அவள் நேற்று என்னிடமும் அதைப்பற்றி சொன்னாள்” என்றான் துரியோதனன்.

கர்ணனின் முகம் மிகவும் சிவந்துவிட்டதை துரியோதனன் கண்டான். துச்சாதனனிடம் நிமிர்ந்து “நீ என்ன சொல்கிறாய் இளையோனே?” என்றான். “ஆணை என்பதற்கு அப்பால் நான் என்ன சொல்லப்போகிறேன்?” என்றான் துச்சாதனன். துச்சலன் முகம் மலர்ந்து “சிறியவருக்கு உள்ளூர உவகைதான் மூத்தவரே” என்றான். “நீ எப்படி அறிவாய்?” என்றான் துரியோதனன் சிரித்தபடி. “அவரது கை அறியாமல் மீசை நோக்கிச் சென்று கீழே தழைந்தது” என்று துச்சலன் சொல்ல அவனை துச்சாதனன் அறைந்தான். மூவரும் நகைத்தனர்.

சௌனகர் “அரசர் இன்றும் அவை வரப்போவதில்லை. நேராக இசைமண்டபம் சென்றுவிட்டார். நான் அங்கு சென்று இவற்றை அவர் செவிகளில் வைக்கிறேன்” என்றார். “அவை கூடியாகவேண்டும். பல முடிவுகளை எடுக்கவேண்டும்” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் மாமன்னர் இப்போதெல்லாம் அவை வருவதே இல்லை. முடிவுகளனைத்தையும் விதுரரே எடுக்கலாமென்று சொல்லிவிட்டார். விதுரர் இல்லாதபோது மாமன்னரின் சார்பில் யுயுத்ஸு முடிவெடுக்கலாமென்றார்.” துரியோதனன் “ஆம், அவன் இந்த நாட்டை ஆளும் வல்லமை கொண்டவன்...” என்றான்.

சௌனகர் தலைவணங்கி “நான் சொல்லிவிடுகிறேன்” என்று திரும்ப கர்ணன் உரத்தகுரலில் “நில்லும் சௌனகரே” என்றான். அவர் திகைத்து திரும்பினார். “அங்கநாட்டரசன் அஸ்தினபுரியின் அடிமை அல்ல. அரசி ஆணையிட்டு மன்னர் வழிகாட்டும்படி வாழவேண்டுமென்ற தேவையும் எனக்கில்லை” என்றான். சௌனகர் திகைத்து துரியோதனனை நோக்கினார்.

துரியோதனன் அந்தத் தருணத்தை எளிதாக்குவதற்காக “என்ன சொல்கிறாய்? அடிமையா? சரி, நீ ஆணையிடு. சௌனகர் சென்று அரசரிடம் பேசுவார், இவ்வளவுதானே?” என்றான். “இளவரசே, நான் எவரை மணம்புரியவேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை அஸ்தினபுரியின் அரசருக்கு இல்லை. உங்களுக்கோ உங்கள் மனைவிக்கோ இல்லை. அந்த முடிவை எடுக்கவேண்டியவள் ஏழை சூதப்பெண்ணான ராதை. என் அன்னை” என்றான். “அது உண்மை. ஆனால் ராதை ஏழை சூதப்பெண் என்றாய் அல்லவா? அது பிழை. அவர் இன்று அங்கநாட்டுக்கு பேரரசி” என்றான் துரியோதனன். “நான் அவர்களிடம் பேசுகிறேன்.”

தொடையில் தட்டி உரத்த குரலில் “வேண்டியதில்லை“ என்றபடி கர்ணன் எழுந்துகொண்டான். “அதை நீங்கள் முடிவுகளை எடுப்பதற்கு முன் எண்ணியிருந்தால் அது முறை. என்னையும் என் தாயையும் மதிக்கிறீர்கள் என்று பொருள். இனிமேல் நான் சொல்லித்தான் என் அன்னையிடம் கேட்பீர்கள் என்றால் முன்னரே என் முடிவை சொல்லிவிடுகிறேன், நான் உங்கள் ஆணைக்கோ வழிகாட்டலுக்கோ ஆட்படப்போவதில்லை.” கர்ணன் தலைவணங்கி வெளியே சென்றான்.

“என்ன சொல்கிறான்?” என்றான் துரியோதனன். “அவர் நேற்றுமுதல் சினந்திருக்கிறார் மூத்தவரே. நேற்று அவர் தன் ஏவலனை அடித்திருக்கிறார்” என்றான் துச்சலன். துரியோதனன் ”எதற்கு?” என்றான். "நேற்றிரவு முழுக்க மதுவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். நள்ளிரவின் ஏவலன் துயின்றிருக்கிறான்” என்றான் துச்சலன். “என்ன ஆயிற்று அவனுக்கு?" என்ற துரியோதனன் ஒருகணம் விழி விலக்கி சாளரத்தை நோக்கியபின் “பால்ஹிகன் உடல்நிலை எப்படி உள்ளது?” என்றான். “நேற்று மாலை பார்த்தேன். நலமாகவே இருக்கிறார்” என்றான் துச்சாதனன். “தொடைப்புண் ஆழமானது. அது முழுமையாக ஆறி அவர் இயல்பாக நடக்கத் தொடங்க ஆறுமாதம்கூட ஆகலாம். அம்பு எலும்பில் பாய்ந்திருக்கிறது. தோள்புண் இன்னும் ஒருமாதத்தில் வடுவாகிவிடும்.”

“அவனை சென்று பார்க்கவேண்டும்” என்றான் துரியோதனன். “இன்று காலையில் பிந்திவிட்டேன். பணிகள் ஒவ்வொன்றாக கூடிக்கூடி செல்கின்றன.” சௌனகரிடம் “அமைச்சரே, இனிமேல் அரசமுறைமைகள் மணச்சடங்குகள் என ஏதுமில்லை அல்லவா?” என்றான். “இல்லை இளவரசே, நீங்கள் இன்னொரு மணம்கூட செய்துகொள்ளலாம்.” துரியோதனன் புன்னகைத்தான். “மூத்தவரே, அங்கரை என்ன செய்வது?” என்றான் துச்சாதனன். “ஒன்றும் செய்யவேண்டியதில்லை. அவனே திரும்பி வருவான். அவன் என்னிடம் சினம் கொள்வது புதிதா என்ன?" துச்சாதனன் “ஆம், சினம் கொள்வதுண்டு. ஆனால் ஒருபோதும் உங்களை அவமதிப்பதுபோல பேசிவிட்டு சென்றதில்லை” என்றான்.

“இளையோனே, என்னை அவமதிப்பதற்கும் கொல்வதற்கும்கூட உரிமைகொண்டவன் அவன்” என்றான் துரியோதனன். “அவன் விரும்பும்படி மட்டுமே என் வாழ்க்கை அமையும்... நான் என் ஆசிரியருக்கும் தந்தைக்கும் பின் அவனுக்கே என்னை முழுதளித்திருக்கிறேன்.” துச்சாதனன் “அதை அறியாதவர் எவரிருக்கிறார்கள் அஸ்தினபுரியில்?” என்றான் புன்னகையுடன். “அவனுடைய சினம் எனக்கும் நேற்று மாலைவரை புரியவில்லை. இன்று புரிகிறது.” துச்சாதனன் “ஏன்?” என்றான். “காசிநாட்டு இளவரசியை மணமுடித்த மறுநாள் நீயும் புரிந்துகொள்வாய்” என்றான் துரியோதனன்.

“விடைகொள்கிறேன்” என்று சௌனகர் சென்றபின் துச்சாதனன் “மூத்தவரே, சேதிநாட்டு இளவரசிகளை நாம் கைப்பற்றியாகவேண்டும் என கர்ணர் உறுதியாக இருக்கிறார். சேதிநாடு நம்முடன் இல்லை என்றால் அங்கநாடு மகதத்தாலும் யூதர்களாலும் சூழ்ந்ததாக ஆகிவிடும் என்பது அவரது எண்ணம். சேதிநாட்டுக்கு நாம் இன்றே கிளம்பவேண்டும் என்றார். இன்று எப்படி கிளம்பமுடியும், நேற்றுதானே மதுபர்க்கம் முடிந்திருக்கிறது மூத்தவருக்கு என்றேன். சுவடியைத் தூக்கி வீசி அப்படியென்றால் உன் தமையனுக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு அன்னமூட்டல் முடிந்தபின் போவோம் என்று கூவினார்” என்றான்.

துரியோதனன் சிரித்து “ஆம், அதுவும்கூட நல்ல எண்ணம்தான்” என்றான். பின் மீசையை நீவியபடி உடலை எளிதாக்கி பீடத்தில் சாய்ந்தமர்ந்து “இளையோனே, இதுதான் உண்மை. நான் இனிமேல் சேதிநாட்டுப் பெண்களை மணமுடிக்க விரும்பவில்லை. இனி ஒரு பெண் என் வாழ்க்கையில் நுழைவதை எண்ணினாலே ஒவ்வாமை உருவாகிறது” என்றான். துச்சாதனன் “ஆனால் எப்படியும் தாங்கள் பல இளவரசிகளை மணம் கொண்டாகவேண்டும்... அஸ்தினபுரியின் ஒருமை...” என தொடங்க “எனக்கு நீங்கள் நூறுபேர் இருக்கிறீர்கள். உங்கள் அரசிகள் அனைவரும் அஸ்தினபுரியில் நிகர்தான். நூறுநாடுகளை கண்டடைவதுதான் கடினம்” என்றான் துரியோதனன்.

“இல்லை மூத்தவரே, அரியணையமர்பவரின் மனைவியர்...” என்று துச்சாதனன் மேலும் பேசப்போக துரியோதனன் கைகாட்டி “நாம் இனி அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான். துச்சாதனன் “எவர் மணமுடித்தாலும் சரி, சேதிநாட்டு இளவரசிகள் இங்கிருந்தாகவேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன். சேதிநாட்டை மையமாகக் கொண்டே இனிமேல் நம்முடைய அரசியல் இருக்கப்போகிறது” என்றான்.

துரியோதனன் “பார்ப்போம்” என்றான். கைகளை உரசிக்கொண்டபடி எழுந்து “நான் கர்ணனிடம் பேசி மகிழச் செய்து அழைத்துவருகிறேன். நான் செல்ல எத்தனை நேரமாகிறது என்பதை வேறு அவன் கணக்கில் வைத்துக்கொண்டிருப்பான்” என்றான். துச்சாதனன் சிரிப்பை அடக்கினான். “நீ வேண்டுமென்றால் சென்று பார். நாழிகைமணிக்குடுவைகளின் அருகில்தான் அமர்ந்திருப்பான். கையில் ஒரு சுவடி இருக்கும். அதை வாசிக்கமாட்டான்” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம் மூத்தவரே” என்றான்.

துரியோதனன் தன் சால்வையை அணிந்தபடி திரும்பி “கர்ணனிடமே கேட்டுவிடுவோம். முடிந்தால் இன்று அல்லது நாளை காலை சேதிநாட்டுக்கு செல்வோம்” என்றான். துச்சாதனன் தயங்கி “சேதிநாட்டு தமகோஷர் உதவியில்லாமல் நம்மால் மகளிரை கவர முடியாது. முன்பு அவர் ஒப்புக்கொண்டார் என்றால் அது அவர்கள் இந்நாட்டு அரசியர் ஆவார்கள் என்பதனால். இனிமேல்...” என்றான். “இளையோனே, அந்த இளவரசிகள் விரும்பாமல் அவர்களைக் கவர்வதை நான் ஒப்பவில்லை. அவர்கள் கோருவதென்ன என்று தூதனுப்பி கேட்போம். தமகோஷர் என்ன எண்ணுகிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அவ்விளவரசிகளின் எண்ணமே எனக்கு முதன்மையானது.”

“அவர்கள் அரியணை கோருவார்கள். அரசனின் மனைவியராக ஆள விழைவார்கள். வேறென்ன?” என்றான் துச்சாதனன். “அவ்வாறென்றால் அதை செய்வோம். மூத்தவளை நீ மணம்புரிந்துகொள். உனக்கு அஸ்தினபுரியின் பாதிநிலத்தை நான் தனிநாடாக அளிக்கிறேன். செங்கோலேந்தி அமர்ந்துகொள்” என்றான் துரியோதனன். “சுபலையும் அவளும் உன் இருபக்கமும் அமர்ந்து நாடாளட்டும்.”

“என்ன பேசுகிறீர்கள்?” என்று துச்சாதனன் கூவினான். “பேசுவதற்கோர் அளவிருக்கிறது.” “இல்லை இளையோனே...” என துரியோதனன் தொடங்க “நிறுத்துங்கள் மூத்தவரே. நான் என்றும் உங்கள் காலடியில் கிடப்பவன். பிறிதொரு வாழ்க்கை எனக்கில்லை” என்றான் துச்சாதனன். அவன் குரல் இடற கண்களில் நீர் கசிந்தது. ”சரி, விடு. நான் ஓர் எண்ணம் தோன்றியதை சொன்னேன்” என்ற துரியோதனன் பார்வையை விலக்கிக்கொண்டு “என்ன செய்யலாம் என்று கர்ணனிடம் கேட்கிறேன். என்னால் பெண்களை கவர்ந்து வருவதையே இழிவெனத்தான் எண்ணமுடிகிறது” என்றான்.

வெளியே வந்தபோது அதுவரை இருந்த நெஞ்சின் எடை குறைய பெருமூச்சு விட்டான். அரண்மனை முகப்புக்கு வந்து தேர்வலனிடம் “அங்கமாளிகை” என்றபின் தேரில் அமர்ந்துகொண்டான். அன்று காலைமுதலே தன் உள்ளம் நிறைந்து வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அப்போது யுதிஷ்டிரன் வந்து நாட்டை கேட்டால்கூட கொடுத்துவிடுவோம் என எண்ணியதும் புன்னகைத்துக்கொண்டான். விடியற்காலையில் விழிப்பு வந்ததும் முதலில் எழுந்த எண்ணம் அந்த பகுளம்தான். உள்ளம் மலர்ந்தது. இருள் நிறைந்த விழிகளுக்குள் அதை மீண்டும் பார்க்கமுடிந்தது. மெல்ல எழுந்து சென்று சாளரத்தருகே நின்று அதை பார்த்தான். அசையாமல் இருளுக்குள் அப்படியே அமர்ந்திருந்தது. அவன் அதைநோக்கிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.

நெய்ச்சுடர் அணைந்திருந்தமையால் அறைக்குள் இருள் நிறைந்திருந்தது. ஆனால் மெல்லமெல்ல விழியொளி துலங்கி மஞ்சள்பட்டு சேக்கைமேல் படுத்திருந்த பானுமதியை பார்க்கமுடிந்தது. அவள் ஆடையின்றி கிடந்தாள். அவன் அவள் உடலை நோக்கிக்கொண்டிருந்தான். ஆடையின்றி ஒரு அயலவனிடம் தன்னை ஒப்படைக்கையில் பெண் உணரும் விடுதலை என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். உடலென உணர்ந்த நாள் முதல் எப்போதும் அவளுக்குள் ஆடை இருந்துகொண்டிருக்கிறது. ஆடைகுறித்த அச்சமே அவள் உடலசைவுகளை அமைக்கிறது. ஆடைசார்ந்த அசைவுகளே அவள் அழகை வெளிப்படுத்துகின்றன. ஆடையணிவதை அவள் தன்னை சமைப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறாள். பெண்கள் காலம் மறந்து ஆடையை தேர்வுசெய்கிறார்கள். தெய்வத்தின் முன் என ஆடியில் தெரியும் ஆடையணிந்த தன்னுருவைக் கண்டு நிற்கிறார்கள். ஆனால் பெருங்காதலின் உச்சத்தில் துறப்பதற்கென்றே அணிந்தவர்கள் என அதை ஒரே கணத்தில் களைந்துவிடுகிறார்கள்.

முந்தைய நாள் அவன் அவளிடம் மேலாடையை நீக்கும்படி சொன்னான். அவள் “ம்” என தலையசைத்து மறுத்துவிட்டாள். இருமுறை சொன்னபின் அவன் அவள் மேலாடையை நீக்கினான். அவள் பெரிதாக எதிர்க்கவில்லை. கைபடப்போகும் இடம் சிலிர்க்கும் பசுவின் தோல் என அவள் உடலில் அவன் கண்பட்ட இடம் புல்லரித்தது. ஆடைகளை களையக்களைய அவள் அவற்றிலிருந்து மிக இயல்பாக வெளியேறினாள். விறகிலிருந்து நெருப்பென ஆடைகளிலிருந்து எழுந்து வந்தாள்.

அவளை அணைத்துக்கொண்டு காதுக்குள் “ஏன் ஆடைகளைவது பிடிக்கவில்லையா?” என்றான். “அவற்றை நீங்கள் உங்கள் கைகளால் களையவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றான். “அதை நீங்கள் செய்வதில்தான் பொருள் செறிந்த ஏதோ ஒன்று உள்ளது.” “என்ன?” என்றான். “ஏதோ ஒன்று... ஒருவேளை...” என்றாள். “என்ன ஒருவேளை?” பானுமதி சிரித்து “சிம்மத்தால் உண்ணப்படும் மான் அடையும் நிறைவாக இருக்கலாம் அது” என்றாள். அவன் சிரித்தான்.

துரியோதனன் அப்போது முதல் கதைப்போருக்கு அவன் சென்று நின்றபோது பலராமர் அவன் ஆடைகளைக் களைந்து தோளையும் இடையையும் தொடைகளையும் தொட்டுத்தொட்டு நோக்கியதை நினைவுகூர்ந்தான். அவர் அவனை ஒரு பொருளென நடத்தினார். அவரது கைகள் தயக்கமில்லாமல் அவனை தொட்டும் அழுத்தியும் பிசைந்தும் நோக்கின. அவனுடைய விதைகளை அவர் கைகளால் தொட்டு அளைந்தபின் “இளவயதில் விதைகளில் அடிபட்டவன் உச்சகட்ட கதைப்போர் செய்யமுடியாது” என்றார். “தொடைநரம்பு ஒன்று அதனுடன் தொடர்புடையது. உன் இடத்தொடை வலுவற்றிருப்பது போலிருந்தது நீ வருகையில். ஆனால் ஒன்றும் தெரியவில்லை.”

துரியோதனன் மூச்சடக்கி நின்றான். பலராமர் “இடத்தொடையில் என்றேனும் அடிபட்டதுண்டா?” என்றார். “இல்லை” என்றான் துரியோதனன். அவரது முதல் தொடுகை அவனை திகைக்கச்செய்தது. உடல்கூசி சிலிர்த்து அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து பின் மெல்ல தளர்ந்தான். அவர் பேசத்தொடங்கியபோது முழுமையாகவே தன்னை அவர்முன் வைத்துவிட்டதாகத் தோன்றியது. ஏதும் எஞ்சியில்லை. ஒரு துளிகூட. “நான் பலராமர் முன்னால் இப்படி ஆடை இழந்திருக்கிறேன்” என்றான். பானுமதி “ம்” என மூச்சோ குரலோ என தெரியாமல் சொன்னாள். “அது முதல் நான் அவருக்குரியவன் ஆனேன். அவர் என்னைக் கொல்வதும் நன்றே என நினைக்கத் தொடங்கினேன்.” பானுமதி “ம்” என்றாள்.

அவன் பகுளத்தை நோக்கிக்கொண்டு புன்னகைத்தான். பெண்கள் நல்லூழ் கொண்டவர்கள். உடலாக அவர்களின் உள்ளம் அமைந்துள்ளது. உடலைக் கொண்டு உள்ளத்தை அவர்களால் கையாளமுடிகிறது. உடனே இன்னொரு எண்ணம் வந்தது. அவர்களின் உடலை கைப்பற்றுபவன் உள்ளத்தை கைப்பற்றிக்கொள்ள முடியும். உடலை அவமதித்தும் ஊடுருவியும் உள்ளத்தை சிதைக்கமுடியும். முதல்முறையாக அவன் சேதிநாட்டு இளவரசியரை தூக்கிவர எண்ணியமைக்காக நாணினான். அவர்களுக்கு அவனைப்பிடிக்கவில்லை என்றால் அதற்கிணையான இழிசெயல் வேறு என்ன? அவன் அரக்கர்கோன் ராவணனை நினைத்துக்கொண்டான். அரசர்களனைவருமே ராவணன்கள்தான் போலும்.

அவள் உடலை மீண்டும் நோக்கினான். சங்கு என்று தோன்றியது. அவள் இடையின் மெல்லிய தோல்வரிகளைத் தொட்டு “சங்கு” என்றான். அவள் சிரித்தாள். அப்போது விழிகள் மாறிவிட்டிருந்தன. மதம்கொண்ட விழிகள். மதம் கொண்ட சிரிப்பு. அவள் விழிகள் அவனுக்கு ஆணையிட்டன. அவன் செய்யப்போகும் ஒவ்வொன்றையும் அவள் உடலே முடிவெடுத்தது. ஒரு பெண் முழுமையாக ஆணை வென்று சூழ்ந்துகொள்கிறாள். உடலால். அவன் அர்ஜுனனை எண்ணிக்கொண்டான். பெண்கள் வழியாக சென்றுகொண்டே இருப்பவன் எப்போதாவது பெண்ணை அறிந்திருக்கிறானா?

விடிந்து வந்தது. விழிகள் ஒளிகொண்டபடியே செல்வதுபோல. ஒவ்வொரு இலையும் திரவப்பரப்பின் அடியிலிருது எழுந்து வருவதுபோல. திரையொன்றில் ஒவ்வொன்றாக தீட்டப்பட்டு தெளிவு கொள்வதுபோல. பகுளம் நன்றாகத் துலங்கியது. அதன் சங்குபோன்ற உடலுக்குள் இருந்து கழுத்து மெல்ல நீண்டு வெளியே வந்தது. முதுகை நீட்டி சிறியவாலை அடித்தது. கால்கள் கருமையாக நீண்டன. அமர்ந்தவாறே இருமுறை சிறகுகளை அடித்தபின் மெல்ல காற்றால் ஏந்தப்பட்டதுபோல வானில் எழுந்தது. அந்தக்கணம் அவன் உணர்ந்த ஒன்றை எப்போதுமே அறிந்ததில்லை. அந்தப்பறவையுடன் இணைந்து அவனும் வானில் ஏந்தப்பட்டதுபோல. எடையற்றவனாக ஆகிவிட்டதுபோல. வானில் கரைந்துவிட்டதுபோல. உடல் கூசி குளிர்ந்து நரம்புகள் எல்லாமே அதிர்ந்து கண்களில் நீர்பரவி ஓர் உலுக்கல். சிலகணங்கள் எங்கிருக்கிறான் என்றே அவன் அறியவில்லை.

திரும்பி அவளைப்பார்த்தான். மஞ்சம் நோக்கி சென்றபோது கால்கள் தளர்ந்திருந்தன. அவள் இடையைச்சுற்றி அணைத்தபோது அவளுடைய துயிலுக்குள் அவன் சென்றிருப்பானா என்ற ஐயம் எழுந்தது. அவள் திடுக்கிடவில்லை. துயிலிலேயே புன்னகைத்து அவனுடன் உடலை இணைத்துக்கொண்டு “அஸ்தினபுரியின் அரசருக்கு இரவு மட்டும் போதுமா?" என்றாள். அவன் அவள் காதில் “இன்னும் நெடுநேரமிருக்கிறது” என்றான். காற்றில் மிதந்து செல்லும் பகுளத்தை கண்டுகொண்டிருந்தான் அப்போது.

கர்ணனின் இல்லத்தின்முன் தேர் நின்றது. துரியோதனன் இறங்கி சால்வையை போட்டபடி நிமிர்ந்தபோது முற்றக்காவலன் ஓடிவந்தான். அப்போதுதான் அங்கே நின்றிருந்த அரண்மனைப்பல்லக்கை கண்டான். ஏவலன் “காசியரசி” என்றான். அவன் வியப்புடன் உள்ளே சென்றபோது முதிய ஏவலர்தலைவன் வந்து வணங்கி “காசியரசியும் அங்கநாட்டரசரும் அரசரின் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வரவை அறிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் தலையசைத்தான். அவனால் புன்னகையை அடக்க முடியவில்லை.

ஏவலர்தலைவனுடன் அதிரதனும் கர்ணனும் வந்தனர். இருவருமே சற்றுமுன் நகைத்த விழியொளிகளுடனும் மலர்ந்த முகத்துடனும் தெரிந்தனர். அதிரதன் “நான் இப்போதுதான் சொல்லிக்கொண்டிருந்தேன் தங்களைப்பற்றி. எடைமிக்க புரவிகள் தங்கள் கால்களுக்கு நடுவே விடும் இடைவெளியை வைத்து அவற்றின் இயல்பை சொல்லிவிடமுடியும். பின்னங்கால்கள் நடுவே மேலும் இடைவெளி இருந்தால் அவை விரையமுடியாது” என்றார். கர்ணன் “வருக இளவரசே” என்றான். “நான் இங்குவந்தபோது காசியரசி பானுமதி இங்கே அன்னையிடம் அனைத்தையும் பேசி முடித்துவிட்டார்கள்.” துரியோதனன் “அவள் வந்தால் பேசி முடித்துவிடுவாள் என்பதில் என்ன ஐயம்?” என்றபடி உள்ளே சென்றான்.

பானுமதி அவனை நோக்கி சிரித்து “நான் இவர் வந்ததுமே சொன்னேன், பின்னாலேயே நீங்களும் வந்துவிடுவீர்கள் என்று” என்றாள். துரியோதனன் “எங்கள் உறவு அப்படிப்பட்டது. இவனை நான் வாரம் ஒருமுறை அமைதிப்படுத்தி திரும்ப கூட்டிச்செல்வேன். சினமடங்காத மலைத்தெய்வம் போன்றவன்” என்றபடி அமர்ந்துகொண்டான். ராதை “என்னைப்போலவே இவளும் இளைய யாதவனை வணங்குகிறாள் அரசே. அதைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருந்தோம். மகிழ்ச்சியாக இருந்தது” என்றாள். பானுமதி “அன்னையின் பெயரே ராதை என்றிருக்கிறது” என்றாள். ராதை முதியமுகத்தில் நாணத்துடன் “ஆம், அதை அனைவரும் கேலியாக சொல்வதுண்டு” என்றாள்.

“ஆனால் அன்னை இதுவரை யாதவரை நேரில் கண்டதில்லை” என்றாள் பானுமதி. “நேரில் ஏன் காணவேண்டும்? நான் வழிபடும் மாதவன் மிக மிக இளையவன். என் மடியில் இருக்கும் குழந்தை” என்றாள் ராதை. கர்ணன் கைகட்டி உயர்த்திய தலையுடன் நின்றபடி சிரித்துக்கொண்டு “இந்தச்சூதர்கள் கதைகள் வழியாக யாதவனை நூறு ஆயிரமாக பிரித்துப்பரப்பிவிட்டிருக்கிறார்கள்” என்றான்.

துரியோதனன் “நீ சினம் கொள்வது ஏன் என்று எனக்கு இன்று காலைதான் தெரிந்தது” என்றான். “நானாக இருந்தாலும் சினம்கொள்வேன்.” பானுமதி சிரித்து “உண்மையில் எனக்கு இருவர் மேலும் கடும் சினம் இருந்தது. இருவரையும் வெல்லமுடியாதென்பதனால் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டேன்” என்றாள். “என்ன ஒப்பந்தம்?" என்றான் துரியோதனன். “ஆளுக்குப்பாதி” என்றாள் பானுமதி. ”எப்பக்கம் பகிர்ந்தாலும் நீங்கள் நிகரானவர். ஆனாலும் நான் இடப்பாதியை தெரிவுசெய்தேன். அதுதானே முறை?”

அவளுடைய சிறிய பற்களை நோக்கிய துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “நேற்றுமுழுக்க இவளுடைய சிறிய பற்களின் சிரிப்பைத்தான் நோக்கினேன் கர்ணா. விந்தையானவை” என்றான். கர்ணன் ஏறிட்டு நோக்கிவிட்டு “ஆம், சிறுகுழந்தையாக நடிக்க அவை உதவுகின்றன இவளுக்கு” என்றான். ஒருகணம் கடந்து “ஆனால் இளவரசி” என்று தொடங்க “இவள் என்றே சொல். என்றும் இவள் உனக்கு அணுக்கமானவளாக இருக்கட்டும்” என்றான் துரியோதனன். “நேற்று உன்னைப்பற்றியும் எண்ணிக்கொண்டேன் கர்ணா. நான் உனக்கு அண்மையானவன் என்றாலும் ஒருபோதும் உன் உள்ளாழத்தின் புண்களை என்னால் தொடமுடியவில்லை. மூடிய அறைகளுக்குள் காற்று மட்டுமே செல்லமுடியுமோ என நினைத்துக்கொண்டேன். இவளைப்போன்ற இனிய தோழி ஒருத்தியே உன்னை அணுகமுடியும்.”

கர்ணன் நாணத்துடன் முகம் சிவந்து “அப்படியெல்லாம் இல்லை” என்றான். பானுமதி “நான் அவரிடம் புளிந்த இளவரசி பற்றி பேசிவிட்டேன். அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றாள். “நான் எங்கே ஒப்புக்கொண்டேன்? இவள் ஆணையிட்டாள், நான் ஏற்றுக்கொண்டேன்” என்றான் கர்ணன். “பெண்கள் ஆணையிட்டால் பொதுவாக நம்மால் மீறமுடியவில்லை” என்றான் துரியோதனன். ராதை “நானே இதை நினைத்தேன். இவனுக்குத் தேவையாக இருந்தது ஒரு தங்கை மட்டும்தானோ என்று....” என்று சொல்ல அதிரதன் “நான் சொல்லவா? பொதுவாக மிக உயரமான உடல்கொண்டவர்கள் பெண்களுக்கு முழுமையாக கட்டுப்படுவார்கள். கழுத்து நீண்டபுரவிகளும் பெண்களுக்கு முழுமையாகவே கட்டுப்படும். ஏனென்றால்...” என்றார்.

ராதை எழுந்து “அவர்கள் அரசமந்தணம் ஏதேனும் பேசக்கூடும். நாம் ஏன் இங்கிருக்கவேண்டும்?” என்றாள். “அதாவது பெரிய புரவிகள்...” என்று சொல்லத்தொடங்கிய அதிரதன் ராதையின் விழிகளை நோக்கியபின் “நான் விளக்கமாக ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அஸ்வினீயம் என்று பெயர். எழுபது சர்க்கங்களிலாக பன்னிரண்டாயிரம் பாடல்கள்” என்றார். “பன்னிரண்டாயிரமா? என்ன சொல்கிறீர்கள் தந்தையே? அவற்றை எப்படி குதிரைகளால் நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்?” என்றாள் பானுமதி. “தவறாகப்புரிந்துகொண்டாய். இது குதிரைகளுக்கு அல்ல... குதிரைக்காரர்களுக்கு... நீ நாளைக்கு வா. உனக்கு நான் வாசித்துக்காட்டுகிறேன்.”

ராதை “வருகிறீர்களா இல்லையா?” என்றாள். “நான் யானைநூல்தான் கற்க விழைகிறேன்” என்றாள் பானுமதி. “யானைநூலா? சொல்லப்போனால் யானையும் ஒருவகை குதிரையே” என அதிரதன் சொல்லத் தொடங்க “போதும்” என்றாள் ராதை. “சரி” என அவர் அவளுடன் சென்றார். அவர்களுக்குப்பின் கதவு மூடியதும் கர்ணனும் பானுமதியும் சேர்ந்து சிரிக்க “சிரிக்க என்ன இருக்கிறது? நீ அவரை கேலிசெய்யலாகாது. குதிரைபற்றிய அவரது பல அறிதல்கள் நுட்பமானவை” என்றான் துரியோதனன். “அப்படியென்றால் நீங்கள் ஏன் நகைத்தீர்கள்?” துரியோதனன் “நானா? இருவர் சிரித்தால் நம் முகமும் அப்படி ஆகிவிடுகிறது” என்றான்.

பகுதி 15 : யானை அடி - 4

திருதராஷ்டிரரின் அறைநோக்கி செல்லும்போது துரியோதனன் “தந்தையை நான் சந்தித்தே நெடுநாட்களாகின்றது” என்றான். துச்சாதனன் “அவர் அவைக்கு வருவதில்லை” என்றான். துரியோதனன் “ஆம், சிறிய அன்னை சம்படையின் இறப்புடன் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார். அவளுடைய எரியூட்டல் முடிந்த அன்று மாலை தொடங்கிய உடல்நடுக்கம் பன்னிருநாட்கள் நீடித்தது” என்றான். சௌனகர் “ஆனால் சிறிய அரசியைப்பற்றி அவர் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சொல்கூட பேசியதில்லை” என்றார். அச்செய்தியை புதியதாக கேட்பவர்கள் போல அவர்கள் அனைவரும் திரும்பி அவரை நோக்கினர்.

பின்பக்கம் காலடியோசை கேட்டது. கைதட்டி அழைத்தபடி குண்டாசி ஓடிவந்தான். “எங்கே செல்கிறீர்கள்? நானும் அரசரைப்பார்க்கத்தான் வந்தேன். அவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து நான்குநாட்கள் ஆகின்றன” என்றான். துரியோதனன் முகத்தை சுளித்தபடி “விலகிப்போ” என்றான். குண்டாசி “ஏன்? நானும் கௌரவன்தான். இந்நாட்டு இளவரசனுக்குரிய எல்லா உரிமையும் எனக்குண்டு. நானும் அரசு சூழ்தலில் பங்கெடுப்பேன்” என்றான். “விலகு” என்று சொல்லி துச்சாதனன் கையை ஓங்கியபடி அருகே செல்ல குண்டாசி தயங்கி “இதெல்லாம் முறையல்ல. நான்...” என்றபின் நகைத்து “நீங்கள் என்னை அழைத்துச்செல்லாவிட்டாலும் நான் அனைத்தையும் அறிந்துகொள்வேன்” என்றான்.

சௌனகர் “நான் பார்த்துக்கொள்கிறேன் இளவரசே, நீங்கள் சென்று பேசுங்கள்” என்று சொல்லி குண்டாசியின் தோள்களை பற்றிக்கொண்டார். “வருக இளவரசே, நான் சொல்கிறேன் என்னவென்று” என்றார். “அவர்கள் உள்ளே செல்லும்போது நான்... குண்டாசி” என அவன் சுட்டிக்காட்ட “வருக, நானே சொல்கிறேன்” என்று அவனை தள்ளிக்கொண்டு சென்றார். துரியோதனன் பெருமூச்சுடன் “உளம்குலைந்துவிட்டான். இனி அவனை மீட்கமுடியுமென நான் நினைக்கவில்லை” என்றான். கர்ணன் திரும்பி இடைநாழியின் மறுமுனையில் மறைந்த குண்டாசியை நோக்கியபின் “அவனை என் தோள்கள் இன்னும் மறக்கவில்லை இளவரசே” என்றான்.

திருதராஷ்டிரரின் அறைவாயிலில் விப்ரர் விழி நோக்கா பார்வையுடன், ஓசையின்றி குடுமியில் சுழன்ற பெருங்கதவைத் திறந்து “உள்ளே வரச்சொல்கிறார்” என்று மெல்லியகுரலில் சொன்னார். “ஆனால் அவரிடம் நெடுநேரம் பேசவேண்டியதில்லை. அவரது உள்ளம் நிலையில் இல்லை. முதன்மையான எதையும் விவாதிக்கவேண்டியதில்லை. கால்நாழிகைநேரம் மட்டும் செலவிடுங்கள்.” துரியோதனன் “அவ்வளவுதான் விப்ரரே, ஓரிரு சொற்கள் மட்டுமே” என்றான். திரும்பி துச்சாதனனையும் கர்ணனையும் நோக்கிவிட்டு உள்ளே சென்றான்.

கூடம் அரையிருளில் இருந்தது. மறுபக்கத்தின் சிற்றறையிலிருந்து வந்த சுடர்வெளிச்சத்தில் அதன் கரிய உருண்ட பெருந்தூண்கள் நீர்நாகங்கள்போல மின்னி நெளிந்தபடி நின்றிருந்தன. இருண்ட குளிர்ந்த நீருக்குள் மூச்சடைக்க துழாவிச் செல்வதுபோல அவர்கள் உள்ளே சென்று பெரிய பீடத்தில் சற்று சரிந்து அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை பார்த்தனர். அவர்களின் காலடிகளுக்காக திரும்பிய அவரது காதுகளுக்கு அப்பால் முகம் சுளித்திருந்தது. “என்ன செய்தி?” என்று முழங்கும் குரலில் தொலைவிலேயே அவர் கேட்டார்.

“தங்களிடம் அமைச்சர் சொல்லியிருப்பார்” என்றான் துரியோதனன். “ம்” என்றார். “காசிநாட்டரசருக்கு தன் மகளை இளையோனுக்கு அளிப்பதில் உவகையே.” திருதராஷ்டிரர் “ஆம், அச்செய்தியையும் அமைச்சர் சொன்னார்” என்றார். “காந்தராத்து பட்டத்து இளவரசர் அசலருக்கு ஏழு மகள்கள் இருக்கிறார்கள். விருஷகருக்கு எட்டு மகள்கள். பதினைந்துபேரையுமே நம் இளையோருக்கு மணம்செய்துவைக்கலாமென அன்னை விழைகிறார்கள். மாதுலர் சகுனியும் அந்த எண்ணம் கொண்டிருக்கிறார்” என்றான் துரியோதனன். “நாம் காந்தாரத்துடனான உறவை எந்நிலையிலும் இழக்கமுடியாது.” திருதராஷ்டிரர் “அதுவும் நன்று... மணநிகழ்வுகள் நடக்கட்டும்” என்றபின் பெருமூச்சு விட்டார்.

“பிற இளையோருக்கும் மணமக்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கோசலம், வங்கம், மச்சம், மாளவம் என பல நாடுகளிலிருந்து பெண்களைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரரின் தலை எடைமிகுந்து வருவதுபோல தாழ்ந்தபடியே வந்தது. வலிகொண்டவர் போல முகத்தை சுளித்தபடி “அவர்களின் மணச்செய்திகள் என்னவாயின?” என்றார். துரியோதனன் ஒருகணம் தயங்கி உடனே புரிந்துகொண்டு ”தருமன் சிபிநாட்டு இளவரசி தேவிகையை மணந்திருக்கிறான்” என்றான். திருதராஷ்டிரர் உறுமல் போன்ற ஒலியில் “அதை அறிவேன்” என்றார். “பீமன் காசி இளவரசி பலந்தரையை மணந்துகொண்டிருக்கிறான்.” திருதராஷ்டிரர் “ம்ம்” என்றார்.

அவரிடம் என்ன சொல்வதென்று துரியோதனனுக்கு தெரியவில்லை. “சகதேவனுக்கு மத்ரநாட்டு இளவரசியைப் பேசி முடித்திருக்கிறார்கள். நகுலனுக்கு சேதிநாட்டரசர் தமகோஷரின் மகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” திருதராஷ்டிரர் “ம்” என்றார். “சிசுபாலர் இளைய யாதவனை வெறுக்கிறார். எனவே அவர் தன் தங்கையை பாண்டவர்களுக்கு அளிக்க விரும்பமாட்டார். சேதிநாட்டு இளவரசிகளை நம் இளையோர் அடைந்தால் நமக்கு நல்லது. தமகோஷருக்கும் பெண்களை நமக்களிப்பதில் தயக்கமில்லை”. திருதராஷ்டிரர் ஒன்றும் சொல்லாமல் தலையை உருட்டினார். “சிசுபாலரை நாம் விட்டுவிட முடியாது தந்தையே. அவர் துவாரகை மீதுகொண்ட வஞ்சத்தால் மகதத்துடன் சேர்ந்துகொண்டார் என்றால் நம் எதிரிகள் வலுப்பெறுவார்கள். அங்கம் சூழப்பட்டுவிடும்.”

அவர் மறுமொழி சொல்வார் என எண்ணி சிலகணங்கள் தயங்கியபின் “ஆகவே இளையோர் சேதிநாட்டு மகளிரை மணமுடித்தேயாகவேண்டும். அவர்களை சென்று கைப்பற்றி வருவது இனிமேல் நிகழக்கூடியதல்ல. அரசமுறைத் தூதாக பெண்கேட்டுச்செல்வது ஒன்றே வழியாக உள்ளது” என்றான். திருதராஷ்டிரர் “ம்” என்றார். “அதற்கு தங்களின் ஆணை தேவை. தங்கள் கைப்பட எழுதிய ஒருவரி கொண்ட ஓலை இருந்தால் போதும், தமகோஷர் மறுக்கமுடியாது. சேதிநாட்டு இளவரசியர் இங்கே என் இளையோருக்கு மனைவியராக அமைவர்.”

அவன் பேசிமுடிப்பதற்குள் கர்ணன் “அரசே, தமகோஷர் உறுதியாக இருக்கிறார் என்றால் சேதிநாட்டு மகளை பட்டத்து இளவரசரே மணப்பார். சேதிநாட்டரசி காசியரசிக்கு இணையான இடத்தில் இங்கே இருப்பார்” என்றான். திகைத்துத் திரும்பிய துரியோதனன் கையைப்பிடித்து அழுத்தி அவனை கட்டுப்படுத்தியபின் கர்ணன் தொடர்ந்தான் “நமக்கு வேறு வழியேதும் இப்போதில்லை. சேதிநாடு நம்முடனிருந்தால் தென்கிழக்கைப்பற்றிய எந்த அச்சமும் தேவையில்லை. கலிங்கம் வரை நமது படகுகள் தடைகளின்றி செல்லவும் முடியும்.” திருதராஷ்டிரர் “ம்ம்” என்றார்.

துரியோதனன் திரும்பி துச்சாதனனை நோக்க அவன் இரு ஓலைகளை எடுத்து அவனிடம் நீட்டினான். அவற்றை வாங்கிக்கொண்டு அவன் மெல்ல சென்று திருதராஷ்டிரரின் அருகே பீடத்தில் வைத்தான். “என்ன அவை?” என்றார். “ஓலைகள் தந்தையே” என்றான் துரியோதனன். “சௌனகர் பலமுறை அளித்தும் தாங்கள் கைச்சாத்திட மறுத்தீர்கள் என்றார்...” திருதராஷ்டிரர் “சேதிநாட்டான் சகதேவனுக்கு பெண்கொடுக்க விழைவதாகத்தானே சொன்னாய்?” என்றார். “ஆம், ஆனால்...” என அவன் சொல்லிமுடிப்பதற்குள் திருதராஷ்டிரர் தன் பெருங்கரங்களால் பீடத்தை ஓங்கி அறைந்தார். அது உடைந்து இரு துண்டுகளாக விழ அவர் எழுந்து தன் இரண்டு கைகளையும் தேள்கொடுக்கு போல விரித்தபடி மதமெழுந்த யானை போல பிளிறினார்.

“அடேய், இழிமகனே! அவர்களுக்குரிய பெண்களை நீ எப்படி கவர நினைக்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். கர்ணன் புரிந்துகொண்டு துரியோதனனை பிடிக்கப் போவதற்குள் திகைத்து நின்ற துரியோதனனை திருதராஷ்டிரர் ஓங்கி அறைந்தார். அந்த ஓசை அறையெங்கும் அதிர்ந்தது. சரிந்து தசைக்குவியலாக அவர் காலடியில் விழுந்த துரியோதனனை அவர் குனிந்து இரு கைகளால் அள்ளிக்கொண்டார். அவனைத் தூக்கி தூண்மேல் அறைந்தார். தூண் அதிர மொத்த மரக்கூரையே அதிர்ந்து அதன் இடுக்குகளில் இருந்து சுதைமண் கொட்டியது. மீண்டும் உறுமியபடி தூணில் அவனை முட்டியபோது முனகலுடன் தூண் விரிசலிட்டு முறிந்தது.

கர்ணன் அவரைப்பிடிக்கப்போக அவர் ஒருகையால் அவனைத் தூக்கி அறைமூலைக்கு வீசினார். துச்சாதனன் பாய்ந்துசென்று அவர்மேல் விழுந்து பிடிக்கமுயல அவர் அவனை ஓங்கி அறைந்து தரையில் வீழ்த்தினார். துச்சாதனன் கால்கள் இருமுறை இழுத்துக்கொள்ள நினைவழிந்தான். கர்ணன் எழுந்து நோக்க கொலைவெறிகொண்ட யானையின் துதிக்கையில் கிடப்பதுபோல நினைவிழந்து மூக்கிலும் வாயிலும் குருதி வழிய துரியோதனன் அவர் கையில் கிடந்தான்.

யானைபோலவே இருந்தன அவரது அசைவுகள். உரக்க உறுமியபடி காலால் நிலத்தை உதைத்தபடி அவர் தன்னைத்தானே சுற்றினார். அவனை நிலத்தில் ஓங்கி அறைந்து காலைத்தூக்கி அவனை மிதிக்கப்போகும் கணத்தில் கர்ணன் பாய்ந்து அவர் காலை பிடித்துக்கொண்டான். அவர் கர்ணனைத் தூக்கி தூணில் அறைந்து சுழற்றி வீசினார். அவன் இன்னொரு தூணில் முட்டி கீழே விழுந்து வாயில் குருதியுடன் மங்கலாகிவந்த பார்வையுடன் நோக்கியபோது அவர் இருகைகளையும் விரித்து பேரொலி எழுப்பியதைக் கண்டான்.

கீழே கிடந்த துரியோதனனுக்காக தேடி கண்டுகொண்டு குனிந்து அவனைத்தூக்கி தன் முழங்காலில் வைத்து அவன் உடலை ஒடிக்கப்போகும் கணத்தில் கதவைத்திறந்து உள்ளே வந்த விப்ரர் “நிறுத்துங்கள் அரசே” என்றார். தோள்தசைகள் இறுகி துடிதுடிக்க திருதராஷ்டிரர் உறைந்தார். “நிறுத்து திருதா... மூடா. நீ என்ன, மறுபிறவியிலும் தீரா இருளுக்கா செல்லவிருக்கிறாய்?" என்றபடி விப்ரர் ஓடிவந்து திருதராஷ்டிரர் கைகளைப்பிடித்து முறுக்கினார். மரத்தரை ஒலிக்க திருதராஷ்டிரர் மைந்தனை கீழே போட்டுவிட்டு மூச்சு வாங்கியபடி குனிந்து நின்றார். அவரது பெரிய கைகள் தேள்கொடுக்கென மெல்ல தாழ்ந்தன.

“மூடா... என்ன செய்யவிருந்தாய்? அவன் உன்மகன். அவன் செய்ததெல்லாம் நீ செய்த பிழை. உன் பிறவிப்பெருங்கடன் அவன். அதை தீர்த்துவிட்டுச்செல் இழிமகனே. அன்றி அவனைக் கொன்றால் நீயிருக்கும் இருளிலிருந்து உனக்கு விடுதலை வந்துவிடுமா? விழியிழந்தது உன் ஊழ். மதியையுமா இழக்கப்போகிறாய்?” என்று உடல்நடுங்க விப்ரர் கூவினார். ஒரு கை மட்டும் உயிருடன் எஞ்ச துரியோதனன் அதை ஊன்றி உடலை இழுத்து இழுத்து நகர்ந்துகொண்டு மேலே நோக்கினான். ”இனி இவன் என் முன் வரக்கூடாது. இனி என் அறைக்குள் இவர்கள் இருவரும் நுழையக்கூடாது” என்று திருதராஷ்டிரர் கூவினார்.

“வரமாட்டார்கள்... வரமாட்டார்கள், நான் சொல்கிறேன்... நீ உன்னை அடக்கு. வேண்டாம். உன்னில் இருண்ட உலகத்து தெய்வங்கள் குடிகொண்டிருக்கின்றன” என்று விப்ரர் அழுகையுடன் சொன்னார். திருதராஷ்டிரரின் கைகளைப்பிடித்துக்கொண்டு “அமர்ந்துகொள்... அமர்ந்தாலே நீ மாறிவிடுவாய். அமர்ந்துகொள் திருதா” என்றார். திருதராஷ்டிரரின் உடல் தளரத்தொடங்கியது. இறுகி நின்ற அத்தனை தசைகளும் எலும்புகளிலிருந்து விடுபட்டு சுருண்டன. நூறுபெருநாகங்கள் பிணைந்து உருவானதுபோன்ற அவரது உடல் அலையிளகும் சுனை என அசைந்து தன் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டது.

அவரைப்பற்றி பீடத்தில் அமரச்செய்தார் விப்ரர். அவர் அமர்ந்ததும் தன் தலையில் கைகளால் ஓங்கி அறைந்தபடி விலங்குபோல பெருங்குரல் எழுப்பி அழத்தொடங்கினார். அவரது கழுத்துத்தசைகள் அதிர்ந்து இழுபட்டன. கண்ணீர் முகம் முழுக்க பரவி மார்பில் சொட்டியது. கைகளால் தன் தலையை ஓங்கி ஓங்கி அறைந்தார். ஒவ்வொரு அடியின் ஓசையும் தூண்களை அதிரச்செய்தன “வேண்டாம், திருதா. சொல்வதைக்கேள்! வேண்டாம்” என அந்தக்கரங்களைப்பிடித்த விப்ரர் அவற்றுடன் தானும் ஊசலாடினார்.

கர்ணன் எழுந்து தூணைப்பிடித்து நிற்கமுயன்று நிலைதடுமாறி முகம் மரத்தரையில் அறைய விழுந்தான். கையூன்றி எழுந்து காலை உந்தித் தவழ்ந்து துரியோதனனை அணுகினான். துரியோதனன் “இளையவன்... இளையவனுக்கு என்னாயிற்று பார்” என்று விக்கலுடன் சொல்வதற்குள் குருதி அவன் வாயை நிறைத்தது. அதை இருமுறை கக்கிவிட்டு “அவனுக்கு நினைவே இல்லை... கர்ணா, அவன் இறந்துவிட்டான்” என்றான். அவன் மார்பு விம்மியது. மீண்டும் குருதி வாயில் பொங்கி வந்தது. முகம் நிறைந்த குருதிமேல் கண்ணீர் வழிய “இளையோன்... அவனைப்பார்” என்றான்.

கர்ணன் “அஞ்சவேண்டாம், அவன் இறக்கவில்லை” என்றான். “எழமுடியுமா என்று பாருங்கள். அறை வாயிலுக்கு சென்றுவிடுங்கள். ஏவலனை அழைக்கிறேன்.” துரியோதனன் எழமுயன்றபோது அவன் உடல் நடுங்கி அதிர்ந்தது. முகம்பதிய தரையில் விழுந்து ஒருமுறை துடித்தான். கர்ணன் மேலும் ஓர் உந்தலில் அவனிடம் வந்து “இளவரசே” என்றான். துரியோதனன் முகத்தை உந்தித்தூக்கி “ஒன்றுமில்லை... அவனைப்பார்” என்றான்.

திருதராஷ்டிரர் தன் இரு கரங்களையும் நீட்டி துழாவி விப்ரரின் தலையைத் தொட்டார். “விப்ரா, நாம் இன்றே இங்கிருந்து கிளம்புவோம். என்னால் இங்கிருக்க முடியாது. நாம் காட்டுக்குச் சென்றுவிடுவோம். நீ மட்டும் என்னுடன் வந்தால் போதும்.” விப்ரர் “சென்றுவிடுவோம் அரசே” என்றார். “உடனே. இப்போதே... உள்ளே சென்றதுமே என் ஆடைகளை எடு... நாம் காட்டுக்குச்செல்வோம். சப்தகோடிக்கு செல்வோம். சிறுவர்களாக விளையாடினோமே அங்கேயே சென்றுவிடுவோம்.” அவர் திருதராஷ்டிரரை கிட்டத்தட்ட தூக்கி கொண்டு சென்றார். இரு கைகளையும் ஆட்டி “சென்று விடுவோம்... இனி இங்கிருக்கமாட்டேன்... நீயும் நானும் சென்றுவிடுவோம்” என்றபடி திருதராஷ்டிரர் சென்றார்.

கர்ணன் உரத்தகுரலில் “சௌனகரே, சௌனகரே” என்று கூவினான். தரையை தன் காலால் அடித்தான். மீண்டும் கூவியபோது கதவு மெல்ல திறந்து வெளியே நின்ற சௌனகர் எட்டிப்பார்த்தார். உள்ளே ஓடிவந்து “இளவரசே” என்று கூவினார். “உடனே மருத்துவர்களை அழையுங்கள். நாங்கள் மூவருமே அடிபட்டிருக்கிறோம். இளையோன் இறப்பின்நிலையில் இருக்கிறார். மருத்துவர்கள் வரட்டும், ஆனால் அரண்மனையில் வேறு எவருக்கும் தெரியவேண்டியதில்லை” என்றான். “ஆம், இதோ” என்று சௌனகர் வெளியே ஓடினார்.

துரியோதனன் கைகளை ஊன்றி உந்தி உடலை இழுத்து துச்சாதனன் அருகே சென்று அவன் தோளைத் தொட்டு “இளையோனே இளையோனே” என்று அழைத்தான். பிணம் போல துச்சாதனன் உடல் அசைந்தது. அவன் தோள்மேல் தலைவைத்து துரியோதனன் சாய்ந்துவிட்டான்.

கதவு திறந்து மருத்துவர்கள் உள்ளே வந்தபோது துரியோதனன் மட்டும்தான் தன்னினைவுடன் இருந்தான். கர்ணன் மயங்கி சோரி வழியும் வாயும் மூக்குமாக மல்லாந்து கிடந்தான். “எனக்கு ஒன்றுமில்லை... அவர்களைப்பாருங்கள்” என்றான் துரியோதனன். கதவு திறந்து மேலும் வீரர்கள் உள்ளே வந்தனர். மேலும் ஒருமுறை கதவு திறந்து குண்டாசி வந்தான். திகைத்தவன்போல அறையை நோக்கியபின் கறைபடிந்த பற்களைக் காட்டி சிரித்தான்.

அவனுடைய முன்பல் இரண்டும் உதிர்ந்திருந்தமையால் சிரிப்பு ஒரு காற்றொலியுடன் பீறிட்டது. “ஆ! போர்க்களக் காட்சி. தெய்வங்கள் பழிவாங்கிவிட்டன” என்றான். துச்சாதனனை நோக்கி “செத்துவிட்டானா? படுத்திருப்பதைப்பார்த்தால் முதுகெலும்பு முறிந்திருக்கும் என்றல்லவா தோன்றுகிறது” என ஓடிவந்து தன் சுள்ளி போன்ற கால்களால் துச்சாதனனை தட்டிப்பார்த்தான். “சாகவில்லை. ஆனால் எஞ்சிய வாழ்நாளில் எழுவானா என்பது ஐயம்தான்” என்றான்.

துரியோதனன் “ம்ம்” என்று முனகினான். குண்டாசி ஓடி வந்து அவனருகே அமர்ந்து “என்னை கொல்லவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? இதோ என் கழுத்து கொல்லுங்கள். கொல்லுங்கள் அஸ்தினபுரியின் அரசே. ஏன் முதுகெலும்பு முறிந்துவிட்டதா?” என்றான். துரியோதனன் வாயிலிருந்த குருதியைத் தொட்டு “ஆ, குருதி! என்ன அநீதி இது? அரசனின் குருதியை வீழ்த்துவது என்றால்...” என்றான்.

சௌனகர் “இளவரசே, வெளியே செல்லுங்கள்” என்றார். “நீ அமைச்சன். நாகப்புற்றில் வாழும் வெள்ளை எலி நீ. நீ சொல்லாதே. டேய் பிராமணா, முறைப்படி நீ என்னை வணங்கினால் உன்னை கொல்லாமல் விடுவேன்” என்றான் குண்டாசி கோணலாக சிரித்தபடி. “ஆ, இளவரசர் சினம் கொள்கிறார். என்னை கொல்ல ஆணையிடப்போகிறார். யானைக்காலில் வைத்து... ஆனால் இவர்களைத்தான் யானைக்காலில் போட்டு அடித்ததுபோல தெரிகிறார்கள்...”

இரு மருத்துவர்கள் துணிமஞ்சலில் துச்சாதனனை உருட்டி ஏற்றி தூக்கினார்கள். “யானைச்சாணியை அள்ளிச்செல்வதுபோலிருக்கிறது... கூ கூ கூ யானைச்சாணி ஆ யானைச்சாணி” என்று குண்டாசி கை நீட்டி சிரித்தான். சௌனகர் கடும் சினத்துடன் “அழைத்துச்செல்லுங்கள் அவரை” என்று ஆணையிட்டார். “அடேய், என் மேல் கைவைப்பீர்களா? நான் அஸ்தினபுரியின் இளவரசன். பாண்டவர்களைப்போல உங்களையும் எரித்து..." அவன் துரியோதனனை நோக்கி கண்களைச் சிமிட்டி “அச்சம் வேண்டாம். சொல்லமாட்டேன்” என்றான். குரலைத் தாழ்த்தி மந்தணம் போல “நாம் அந்தக் கிழட்டு அரசனையும் அரக்கு மாளிகையில் போட்டு கொளுத்திவிடலாம்" என்றான். துரியோதனன் பற்களைக் கடித்தபடி கண்களை மூடினான். கர்ணனை மஞ்சலில் கொண்டுசென்றார்கள். அவனருகே வந்த இரு மருத்துவர் மஞ்சலை விரிக்க “தேவையில்லை” என்று சொல்லி துரியோதனன் கைநீட்டினான்.

“அய்யய்யோ, அதெப்படி? செல்லும் வழியெல்லாம் கரைந்த மலம் விழுந்தால் அரண்மனையை தூய்மைசெய்யவேண்டுமே” என்றான் குண்டாசி. அவனே அதை மகிழ்ந்து நகைத்து “இல்லை, மஞ்சலை மட்டும் தூய்மைசெய்வதுதானே எளிது? அதற்காக சொன்னேன்” என்றான். சௌனகர் பொறுமையிழந்து “அடேய், இவரை பிடித்துக்கொண்டு சென்று அறைக்குள் அடையுங்கள்” என்று கூவினார். அப்போதும் வீரர் தயங்க குண்டாசி மிடுக்குடன் “தேவையில்லை. நானே பெரும்பாலும் அறைக்குள்தான் இருக்கிறேன்” என்றான்.

உள்ளிருந்து விப்ரர் வருவதைக்கண்டு “ஆ, வந்துவிட்டது நிழல். குருட்டு நிழல். ஆ” என்றான். துரியோதனனை வீரர் தூக்க அவன் “ஆ” என வலியுடன் அலறினான். குண்டாசி திகைத்து திரும்பி நோக்கியபின் “அஸ்தினபுரிக்கு நான் அரசனாக வேண்டியிருக்கும் போலிருக்கிறதே” என்று சொல்லி துணி கிழியும் ஒலியில் மீண்டும் சிரித்தான். சௌனகர் “எப்படி இருக்கிறார்?” என்றார். “துயிலட்டும்... இப்போது அவர் தனிமையிலிருப்பதே நன்று” என்றார் விப்ரர். துரியோதனனை மஞ்சலில் போட்டு தூக்கிக்கொண்டுசெல்ல அவனுடைய பெரிய கை ஒன்று தொங்கி தரைதொட்டு ஆடியபடி சென்றது.

“எவ்வளவு பெரிய கை... இதைவைத்து பீமனுக்கு உடல் வலி தீர சிறப்பாக உழிச்சில் செய்துவிடலாம்” என்ற குண்டாசி திரும்பி சௌனகரிடம் கண்சிமிட்டி “உடல் வலிக்கு நல்லது” என்றான். விப்ரரிடம் “ஆடியை அடித்துடைக்க முயன்ற அறிவாளி என்ன செய்கிறார்? குருடன். அகமிருண்ட குருடன். நீ நட்ட விதை நஞ்சாக முளைத்தால் நீ அதை வெட்டவேண்டும்... இதோ போய் கேட்டுவிட்டுவருகிறேன்” என்று கீழே விழுந்து கிடந்த தன் சால்வையை குனிந்து எடுக்கப்போய் தள்ளாடி தூணை பற்றிக்கொண்டான்.

சௌனகர் “கூட்டிச்செல்லுங்கள் அவரை” என்று உச்சகட்ட சினத்தில் முகம் சிவந்து உடல்நடுங்க கூவினார். விப்ரர் “இல்லை சௌனகரே, அவர் செல்லட்டும். முதியவருக்கு அது தேவைதான்" என்றபின் “உள்ளே செல்லுங்கள் இளவரசே” என்றார்.

“நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. சில எளிய வினாக்கள்... ஏன் இப்படி ஆயிற்று? உறைகுத்தாமல் மோர் புளிக்குமா? உறைமோர் உன்னுடையது அல்லவா? அதைமட்டும் கேட்டுவிட்டு வருகிறேன்” இளித்து “அத்துடன் என் உடலில் குருதியில் மது குறைந்தபடி இருக்கிறது. கிழவர் முன்னால் என்னால் மதுவருந்த முடியாது. என்ன இருந்தாலும் அவர் என் தந்தை. மறைந்த சம்படை என் அன்னை. இவர் என் அன்னையை கவர்ந்து வந்து...” என்றான்.

அவன் ஒருமுறை விக்கி வாயில் வந்த கோழையை தரையில் துப்பிவிட்டு “அவளை அரசியாக்கி அரியணைமேல் அமரச்செய்தார் அல்லவா? பட்டும் பொன்னும் மணியும் அணிந்து அவள் அமர்ந்திருக்கும் அழகை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்? என்னை அவள் அள்ளிக்கொஞ்சி நெஞ்சோடு சேர்ப்பாள் அப்போதெல்லாம். ஆனால் அவளுக்கு நான் அவளுடைய மேலாடை என்றுதான் நினைப்பு...” என்றான்.

அவன் பற்களைக்காட்டி நகைத்து “இன்று சம்படைக்காக ஒரு நல்விருந்து. கண்ணற்ற யானைக்கு மதமெழுந்தமைக்காக இன்னொரு நல்விருந்து. கருந்தேள்கள் மிதிபட்டமைக்காக இன்னொரு நல்விருந்து” என்றான். மீண்டும் விக்கலெடுத்து காறித்துப்பி விட்டு அவன் உள்ளே சென்றான்.

வீரர்கள் அனைவரும் சென்றபின் கூடத்தில் சௌனகரும் விப்ரரும் மட்டும் நின்றிருந்தனர். சௌனகர் “இத்தனை ஆற்றல் மானுடனுக்கு இயல்வதுதானா? எப்படி இதெல்லாம் உடைந்தது?” என நிமிர்ந்து துண்களின் விரிசல்களை, உத்தரத்தின் உடைவை நோக்கினார். “இருமுறை இதை சீர்செய்திருக்கிறோம்.” விப்ரர் “அதற்கென்ன! மீண்டும் சீரமையுங்கள். இனிமேல் அடிக்கடி சீரமைக்கவேண்டியிருக்கும்” என்றார்.

சௌனகர் “நீங்கள் மேலும் மேலும் கசப்பு கொண்டவராக ஆகிவருகிறீர்கள் விப்ரரே” என்றார். “நான் நானல்ல. இப்போது சிறியவன் சொன்னதுபோல வெறும் நிழல்” என்ற விப்ரர் “நாங்கள் இன்று மாலையே சப்தகோடிக்கு செல்கிறோம். அங்கு ஒரு சிறு தங்குமிடம் அமையவேண்டும்” என்றார். “நீங்கள் என்றால்?” என்றார் சௌனகர். “அதாவது, நீங்களிருவரும் அரச அகம்படியினரும் அல்லவா?” விப்ரர் “இல்லை, நானும் அவரும் மட்டும்” என்றார்.

“விப்ரரே, இருவருமே முதியவர்கள். அரசர் பெருந்தீனிக்காரர்.” விப்ரர் “ஆம், ஆனால் அவரது உணவை என்னால் ஈட்டமுடியும். நாங்கள் இளமையில் அங்கே பல்லாண்டுகாலம் இருந்திருக்கிறோம்” என்றார். “அங்கே பிறிதொருவர் இருந்தால்கூட அரசரின் உள்ளம் அமைதிகொள்ளாது அமைச்சரே.” சௌனகர் தலையசைத்து “எவரும் அறியாமல் அனைத்தையும் ஒருக்குகிறேன்” என்றபின் “அவரது மைந்தரின் திருமணங்கள் வருகின்றன. அவரின்றி...” என தொடங்கினார். ”அவர் இருந்தால் மேலும் துன்புறுவார். பீஷ்மபிதாமகர் இருக்கிறார் அல்லவா? அவரே போதும்” என்றார் விப்ரர்.

“எப்போது மீள்வதாக எண்ணம்? பாஞ்சாலி நகர்புகும்போதா?” என்று சௌனகர் கேட்டார். “சொல்லமுடியாது. இருக்கலாம்” என்றார் விப்ரர். “விப்ரரே, அங்கு என்னதான் செய்யப்போகிறீர்கள்?” என்றார் சௌனகர். “அமைச்சரே, அறுபதாண்டுகளுக்கு முன் அங்கே இரு சிறுவர்களாக நாங்கள் விளையாடினோம். நான் அவரை திருதா என்று அழைப்பேன். என் உணவை அவர் திருடி உண்பார். சினம்கொண்டு அடிப்பேன். தலைகுனிந்து வாங்கிக்கொள்வார். அந்த இளமைக்கு திரும்பச்செல்லப்போகிறோம்.”

சௌனகர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “அமைச்சரே, மானுடனைப்போல இரக்கத்திற்குரிய உயிர் இப்புவியில் இல்லை” என்றார் விப்ரர் கசப்பான புன்னகையுடன். பின்பு விழியிழந்தவருக்குரிய நடையுடன் தலையை ஆட்டியபடி விலகிச்சென்றார்.

பகுதி 15 : யானை அடி - 5

மருத்துவர் உடலை தொட்டதும் துரியோதனன் விழித்துக்கொண்டான். நண்பகல் என்று தெரிந்தது. ஆதுரசாலைக்குள் வெயிலொளி நிறைந்திருந்தது. அவன் கண்கள் கூசி கண்ணீர் நிறைந்து வழிந்தது. அவர் அவன் நெஞ்சைத்தொட்டு மெல்ல அழுத்தி “வலி எப்படி இருக்கிறது?” என்றார். “இருக்கிறது” என்று அவன் முனகியபடி சொன்னான். “இளையோன் எப்படி இருக்கிறான் மருத்துவரே?”  மருத்துவர் “உயிர்பிழைத்துவிட்டார். ஆனால் எழுந்து நடமாட மேலும் ஒருமாதம் ஆகலாம்” என்றார். துரியோதனன் விழிகளை மூடிக்கொண்டு “அது போதும்” என்றான்.

அவர் தன் கைகளால் அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டே சென்றார். “தாளமுடியாத வலி இருக்கையில் சொல்லிவிடுங்கள்.” அவன் முனகியபடியே இருந்து ஓர் இடத்தில் அலறினான். அவர் கையை எடுத்து “நுரையீரல் கிழிந்திருக்கிறது. நெஞ்சுக்குள் இரண்டு எலும்புகள் உடைந்துவிட்டன” என்றார். துரியோதனன் பற்களால் உதடுகளை கடித்துக்கொண்டான். “எப்படி முதுகெலும்பு முறியாமல் போயிற்று என்பதுதான் வியப்பு” என்றார் மருத்துவர். “தசைகளனைத்தும் கட்டுடைந்து இழுபட்டுவிட்டன. எத்தனைநேரம் அவரிடம் மற்போரிட்டீர்கள்?” துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை.

மருத்துவர் பெருமூச்சுடன் எழுந்து “உண்பதற்கான மருந்துகளை தவறாமல் அளிக்கச் சொல்லியிருக்கிறேன். உடலெங்கும் மருந்து ஓடிக்கொண்டிருக்கவேண்டும். உள்ளே சீழ்கட்டினால் பின்னர் ஒன்றும் செய்யமுடியாது. உடல்வெப்பு வராமலிருக்கவேண்டும். ஒவ்வொரு நாழிகைக்கும் உங்களை வந்து நோக்கி செய்திகளை எனக்கு அளிக்கும்படி சொல்லியிருக்கிறேன்” என்றார். துரியோதனன் “கர்ணன் எப்படி இருக்கிறான்?” என்றான். “அவருக்கு பெரிய அடி இல்லை. நுரையீரலுக்குள் புண் வந்திருக்கலாம். நாலைந்துநாட்கள் மூச்சில் குருதி வந்தது. இப்போது தேறிவிட்டார். ஆனால் எழுந்தமர இன்னும் ஒரு வாரமாகலாம்.” துரியோதனன் அவர் போகலாம் என்று தலையசைத்தான்.

அவரது காலடிகளை கேட்டுக்கொண்டு கண்மூடிக்கிடந்தான். மூச்சுவிடுவது அத்தனை கடும் பணியாக ஆகுமென எண்ணவே முடியவில்லை. பெருமூச்சு விடவேண்டும் என்ற உந்துதல் நெஞ்சுக்குள் இருந்தபடியே வந்தது. ஆனால் தும்மலும் பெருமூச்சும் வரவேகூடாதென்று வைத்தியர் சொல்லியிருந்தார். நெஞ்சு விம்மும்போதெல்லாம் வலிகுறித்த எச்சரிக்கை எழுந்து அவன் மெல்ல மூச்சை குறைத்து விட்டான். புரண்டுபடுக்கவேண்டும் என்று தோன்றியதுமே வலி குறித்த அச்சம் வந்து உடலை இறுகச்செய்தது. பின்னர் உடலின் ஒவ்வொரு தசையையும் அசைத்து மிகமெல்ல நெஞ்சைத் தூக்கி புரண்டான். நெஞ்சு அன்றி எதுவுமே உடலில் இல்லை என்பதுபோல.

நெஞ்சை சுற்றியிருந்த பெரிய கட்டுக்குள் தோலில் சிறிய வண்டுகள் ஊர்வதுபோல நமைச்சல் எடுத்து அது பெருகிப்பெருகி வரும். கைகள் துடித்து விரல்களை இறுக்கிக்கொண்டு அந்த எழுச்சியை வெல்லவேண்டியிருக்கும். ஒவ்வொரு வண்டையாக உணரமுடிவதுபோலிருக்கும். கட்டை பிய்த்து வீசி... ஆனால் அந்த எண்ணமே வலியளிக்கும். பின்னர் அந்த நமைச்சலை கூர்ந்து நோக்க பயின்றான். தவிக்கும் கைகளை அடக்கிக்கொண்டு ஒவ்வொரு வண்டையாக கூர்வான். ஒவ்வொன்றுக்கும் ஒருதிசை. ஒரு முறை. பின்னர் அவை மெல்ல அமைந்து மறையும். வண்டுகளுக்காக ஏங்கியபடி அவன் தோல் காத்துக்கிடக்கும்.

எப்போதும் சற்று அகிபீனாவின் மயக்கில்தான் இருந்தான். ஆகவே முழுமையான துயில் ஒருபோதும் அமையாவிட்டாலும் சிறிய துயில்களின் தொடராக சென்றுகொண்டிருந்தன நாட்கள். விழிக்கும்போது ஒவ்வொருமுறையும் இப்போது என்ன நேரம் என்ற எண்ணம் வரும். பகலா இரவா என்ற திகைப்பே நெடுநேரம் நீடிப்பதுண்டு. எங்கிருக்கிறோம் என்பது மட்டும் மயங்குவதில்லை. துயில்கையில் நெஞ்சுகுறித்த பதற்றத்துடன் விழிதளர்ந்து விழிக்கையில் முதல் உணர்வாக அது தன்னுடனிருப்பதை உணர்வான். துயிலுக்குள் கூட அந்த தன்னுணர்வு அவனுடனிருந்தது. கனவுகளுக்குள் கூட அவன் நெஞ்சுக்கட்டுடன்தான் நீந்திக்கொண்டிருந்தான்.

மீண்டும் விழித்தபோது வாயும் தொண்டையும் நன்கு வறண்டிருந்தன. மஞ்சத்தை கைகளால் தட்டினான். ஏவலன் ஓடிவந்து வணங்கி நிற்க “நீர்” என்றான். ஏவலன் கொண்டுவந்து தந்த நீரை அருந்திவிட்டு குவளையை திருப்பிக்கொடுத்தான். “இளையோன் என்ன செய்கிறான்?” என்றான். “துயில்கிறார்.” துரியோதனன் “ம்” என்றான் மார்பில் சொட்டிய நீரை துடைத்துக்கொண்டே. ”இப்போது என்ன நேரம்" என்றான். “மாலையாகிறது...” என்றான் ஏவலன்.

வெளியே இருந்து காவலன் வந்து வணங்கி நின்றான். அவன் விழிதூக்கியதும் “காசியிளவரசி” என்றான். துரியோதனன் தலையசைத்ததும் அவன் சென்றான். அந்தத்திசையையே நோக்கியபடி துரியோதனன் கிடந்தான். அவளுடைய உருவம் வாசலில் தெரிந்ததும் நெஞ்சில் ஏற்பட்ட அதிர்வில் உடலெங்கும் வலி பரவியது. முதல்முறையாக வலி இனிமையாக இருந்தது. அவள் அருகே வரும் ஒலி இனிய சொற்கள் போல. கைவளை அணிந்தபெண் யாழில் விரல்மீட்டுவதுபோல. மேலும் அவள் அருகே வர அவ்வொலியை கூர்வதற்காக அவன் விழிமூடினான். காதுக்குள் ஆடையின் சரசரப்பு ஒலித்தது. சிலம்புகளின் தண்ணொலி. மெல்லிய மணம். மலர்மணம், ஆடைமணம், அவளுடைய கழுத்தின் முலையிடுக்குகளின் மணம்.

“எப்படி இருக்கிறார்?” என்றாள். அவன் விழிதிறந்தான். “துயில்கிறீர்களோ என நினைத்தேன்” என்றாள். “இல்லை, உன் காலடிகளை கேட்பதற்காக விழிமூடினேன்” என்றான். அவள் சிரித்துக்கொண்டே அமர்ந்தாள். “மிக நுட்பமாக அவற்றை கேட்கவிரும்பினேன்” என்றான். “ஏன்?” என்று மெல்லியகுரலில் கேட்டாள். “அந்த ஓசையை நான் கனவிலும் கேட்கமுடியும்.” அவள் அவன் கைகளை தொட்டாள். கண்கள் கனிய “என்ன இது? உங்களைப்பற்றி நான் இப்படி நினைக்கவில்லை” என்றாள். “என்ன நினைத்தாய்?” என்றான். “அஸ்தினபுரியின் இளவரசர் கல்லினும் கடினமானவர் என்றார்கள்.” துரியோதனன் “ஆம், உண்மை. இல்லையேல் இப்போது உயிருடனிருப்பேனா என்ன?” என்றான்.

பானுமதி பெருமூச்சுவிட்டு “அரசரும் விப்ரரும் சப்தகோடிக்கு சென்றுவிட்டார்கள் என்று செய்தி வந்தது” என்றாள். "தனியாகவா?” என்றான் துரியோதனன். “ஆம், வேறு எவரும் உடன் வரலாகாது என்று அவர் சொல்லிவிட்டார். இருவரையும் சப்தகோடியின் சிறுதுறை அருகே கொண்டுசென்று இறக்கிவிட்டார்கள். அவர்கள் தங்க அங்கே ஒரு குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.” துரியோதனன் கண்களை மூடி “நான் இனிமேல் அவர் முன் செல்லக்கூடாது என்று அவர் சொல்வதை கேட்டேன்” என்றான். பானுமதி “அது எந்தத் தந்தையும் சினமெழுகையில் சொல்வதுதானே? அவர் இங்கு வராமலா இருக்கப்போகிறார்?” என்றாள்.

“வருவார்” என்ற துரியோதனன் “அதுகூட உறுதியில்லை. ஒருவேளை வராமலும் போகலாம். இளையதந்தை செல்லும்போது அவர் மீண்டுவருவார் என்றுதான் தந்தை எதிர்பார்த்தார். இல்லையேல் அவரே கிளம்பிச்சென்றிருப்பார். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்திற்கு முன் வருவார் என்று எண்ணி காத்திருப்பார். மழைக்காலம் முடிந்தபின் வரமுடியாது போனமைக்காக ஒரு செய்தியை இளையதந்தை அனுப்புவார். அப்படியே வருடங்கள் சென்றன.” வலியுடன் பெருமூச்சுவிட்டு “அஸ்தினபுரியின் அரசர்களுக்கு காட்டுக்குள் சென்று மறைய ஒரு விருப்பம் உள்ளே எங்கோ இருக்கிறது. மூதன்னையர் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் காடுபுகுந்து மறைந்தனர். காடு அவர்களுடைய இடம் என்றும் இங்கு நகருக்கு வந்து வாழ்ந்து மீள்வதாகவும் எண்ணிக்கொள்கிறார்கள்” என்றான்.

“அரசர் அங்கே நெடுநாள் இருக்க முடியாது” என்றாள் பானுமதி. “அவர் தன் மைந்தர்களின் முடிசூடலை தவிர்க்கலாம். பாண்டவர்களின் முடிசூடலை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. அவர் வந்தாகவேண்டும், இல்லையேல் அது பிழையாகவே பொருள்படும்.” துரியோதனன் “அதைத்தான் நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர் தருமனின் முடிசூடலை தவிர்க்கமாட்டார்” என்றான். பானுமதி “அன்னைதான் துயர்கொண்டிருக்கிறார். நேற்று பகல் முழுக்க அவருடன்தான் இருந்தேன். தானும் அவருடன் வனம்புகுந்திருக்கவேண்டும் என எண்ணுகிறார். அவர் தனித்துச்சென்றது தன்னை விலக்கவே என்கிறார். அவரை ஆறுதல்படுத்தவே முடியவில்லை” என்றாள்.

அவன் முகம் மாறியதைக் கண்டதும் அவள் உடனே புன்னகைசெய்து “என்னை விட அன்னையை துச்சளை நன்கறிவாள். அவள் துவாரகையில் யாதவ அரசி என்னசெய்கிறார் என்று பேசத்தொடங்கிவிட்டாள். அங்கே யாதவ அரசிதான் குலமுதல்வியாக கருதப்படுகிறாள் என்றதும் முகம் குருதியென சிவந்துவிட்டது. அவள் குலம் என்ன என்று நான் அறிவேன் என்று சொன்னபோது அன்னை முழுமையாகவே மீண்டு வந்துவிட்டார் என்று தோன்றியது” என்றாள். துரியோதனன் புன்னகைசெய்தான். “குண்டாசி என்ன செய்கிறான்?” என்றான். “இங்கு என்னை பார்க்க வந்தான். என் காலடியில் தலைவைத்து கதறி அழுதான். இனிமேல் மதுவை தொடமாட்டேன் என்றான்.”

பானுமதி சிரித்து “அன்று மாலைதான் முழுமையாக களிகொண்டு என்னை பார்க்கவந்தார். நான் வந்தபின்னர்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது, உடனே காசிக்கு திரும்பிச்செல்லவேண்டும் என்று சொல்லி வசைபாடினார்” என்றாள். “அவன் மீளமாட்டான்” என்றான் துரியோதனன். “ஆம், அவர் தாயும் மீளவில்லை அல்லவா?” என்றாள் பானுமதி. அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். அவள் புன்னகையுடன் “அரண்மனையிலிருந்து அணங்கை தாங்கிய உடல் ஒன்று அகன்று சென்றுவிட்டது. அணங்கு இன்னமும் அப்படியே உலவுகிறது என்று சொல்கிறார்கள் சேடிப்பெண்கள். மணமுடித்து நகருக்கு வரும் அரசகுலமகளிரில் எவரை அது பற்றிக்கொள்ளும் என்று அவர்களுக்குள் சொல்லாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள்.

துரியோதனன் கண்களை மூடிக்கொண்டு “அன்னையை நான் ஓரிருமுறை சென்று பார்த்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. அவர்களை பார்க்காமலிருக்கத்தான் இன்றுவரை முயன்றிருக்கிறேன் என்று படுகிறது. அவர்கள் அப்படி இருப்பதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு என்று உள்ளம் சொல்லியிருக்கிறது” என்றான். பானுமதி “பார்த்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது?” என்றாள். “இந்த வெறுமை இருந்திருக்காது. இத்தனை உளச்சுமை இருந்திருக்காது” என்றான்.

பானுமதி பேசாமலிருந்தாள். துரியோதனன் “தந்தை சம்படை அன்னையின் எரிசடங்குக்கு வந்ததை நினைவுறுகிறேன்” என்றான். “அவர் குருதியனைத்தையும் இழந்தவராக நடுங்கிக் கொண்டிருந்தார். சஞ்சயன் அவரை தாங்கிக்கொண்டு வருவதுபோல தோன்றியது. சஞ்சயனிடம் மீண்டும் மீண்டும் எதையோ கேட்டுக்கொண்டிருந்தார். என்ன கேட்டார் என்று அவனிடம் பின்னர் கேட்டறிந்தேன். தருமனுக்கும் குந்தியன்னைக்கும் சொல்லிவிட்டீர்களா என்றே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்."

”அவர் உள்ளத்தில் ஏதோ நினைவு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “எரியூட்ட குண்டாசியை கொண்டுவந்தபோது அவர் திரும்பிக் கொண்டார். குண்டாசி மதுமயக்கில் உடல் தொய்ந்து போயிருந்தான். ஏவலர் அவனை தூக்கிக்கொண்டு சென்று சிதைமுன் நிறுத்தியபோது விழித்துக்கொண்டு சிவந்த கண்களால் என்ன என்று பார்த்தான். எரியூட்டச் சொன்னபோது வியக்கத்தக்க நிலையுறுதியுடன் எரியூட்டினான். அனைத்துச்சடங்குகளையும் இறுகிய முகத்துடன் சீராக செய்தான். அனைவருக்கும் வியப்பும் ஆறுதலும் ஏற்பட்டது.”

”பீஷ்மபிதாமகர் மட்டும் எங்கோ இருந்தார். அவர் எங்களவரே அல்ல என்று தோன்றியது. மறுஎரி போட தந்தையை அழைத்தபோது அவர் கைகளை தலைக்குமேல் அசைத்து மறுத்துவிட்டார். விதுரர் அருகே சென்று அழைத்தபோது கைகளால் முகத்தை மூடி உடலை குறுக்கிக்கொண்டார். பீஷ்மபிதாமகர் அதைக் கண்டபின் விதுரரை விலக்கிவிட்டு மறுஎரியை அவரே போட்டார். அதன்பின்னர்தான் நானும் தம்பியரும் எரியூட்டினோம்.”

“நல்லூழ் கொண்டவர். எத்தனை தீ அவருக்கு” என்றாள் பானுமதி. அவள் முகத்தை ஏறிட்டு நோக்கிய துரியோதனன் “நீ என்ன சொல்கிறாய் என்று புரிகிறது” என்றான். “நான் அவளை நினைத்ததே இல்லை. நான் எதையுமே நினைத்ததில்லை. நான் வாழ்ந்த உலகமே வேறு” என்றான். பின் குரல் தாழ்த்தி “சரி, நீ சொல், நான் என்ன செய்திருக்க முடியும்?” என்றான்.

“செய்வதற்கு ஒன்றுதான் உள்ளது அரசே. அனைத்தையும் நிகழாமலாக்கவேண்டும். அவர் இங்கு வந்ததை. அதற்கு முன் இங்கே அணங்கு கொண்டிருந்த ஒவ்வொரு அரசியும் அரசியாக ஆனதை... அப்படியே பின்னால் பின்னால் என்று சென்று இந்த அரண்மனை கட்டப்பட்ட காலம் வரை செல்ல வேண்டும். இங்கு முதல்முறையாக அணங்குகொண்டு அமர்ந்திருந்த முதல் அன்னையை அஸ்தினபுரிக்கு கொண்டுவந்திருக்கக்கூடாது.”

துரியோதனன் சிரித்துவிட்டான். “என்ன சொல்கிறாய்? நான் என்ன தெய்வமா, காலத்தை திருப்பிக்கொண்டுசெல்ல?" பானுமதி “முடியாதல்லவா? பிறகென்ன? விடுங்கள்” என்றாள். அவள் முகம் சிவந்திருப்பதைக் கண்ட துரியோதனன் “என்ன?” என்றான். “ஒன்றுமில்லையே” என்றாள் சிரித்தபடி. “ஏன் மூச்சிரைக்கிறாய்?” பானுமதி “வழக்கமாக இவ்வளவு நீளமாக நான் பேசுவதில்லை” என்றாள்.

துரியோதனன் சற்றுநேரம் நோக்கிவிட்டு “ஒன்று சொல், உனக்கு அணங்கு கூட வாய்ப்புள்ளதா?” என்றான். பானுமதி “எனக்கா?” என்றாள். பின்னர் தலைமுடிப்பிசிறுகளை நெற்றியிலிருந்து ஒதுக்கிவிட்டு “நான் என்ன சொல்லமுடியும்? தெய்வங்கள் அல்லவா அந்தத்தேர்வை நிகழ்த்துகின்றன?” என்றாள். “ஆனால் ஓர் இளவரசி அணங்கு கொள்வாள் என்று நீயும் உறுதியாக எண்ணுகிறாயா?”

பானுமதி “அது வெறும் நம்பிக்கை என்றுதான் எனக்கும் பட்டது. ஆனால் பிறகு எண்ணியபோது அப்படி அல்ல என்று உணர்ந்தேன். அன்னை மறைந்தபின்னர்தான் நான் இங்கு வந்தேன். அன்னை மறைந்ததும் அவருடைய ஆடைகள் அணிகள் அனைத்தையும் அவருடன் சேர்த்து சிதையில் வைத்துவிட்டார்கள்” என்றாள். துரியோதனன் "அவர் அணிகளையுமா? ஏன் அவற்றை எவருக்கேனும் கொடுத்திருக்கலாமே?” என்றான். “எவராவது அதை வாங்குவார்களா என்ன?” என்றாள்.

“அணங்கு அவருடைய உடலின் ஏதேனும் ஒரு பகுதியில்தான் வாழமுடியும். அதில் எஞ்சியிருந்து இப்புவியில் அதற்குரிய ஊர்தியை தேடிக்கொண்டிருக்கும். ஆகவே அவரிருந்த அறையை ஏழுமுறை நீர்விட்டு கழுவினார்களாம், அவருடைய ஒரு தலைமுடி எஞ்சியிருக்காமல் பார்த்துக்கொண்டார்களாம். ஆனால் நான் இங்குவந்த முதல்நாளே அவரைப்பற்றிதான் கேட்டேன். சேடிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்றேன். மறைத்து மறைத்து அவர்கள் பேசியதைக்கேட்டு சினம் கொண்டு ஒருத்தியை அழைத்து அதட்டினேன். அவள் அன்னையைப்பற்றி சொன்னாள். அன்னை அமர்ந்திருந்த மேடையை அவள்தான் காட்டினாள்.”

“அங்கே அவரிருந்த தடம் ஏதுமில்லை. முதல்நாள் அந்த சாளரமேடை எனக்கு எதையும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் காலை எழுந்ததுமே அதை பார்க்கவேண்டுமென தோன்றியது. அங்கே செல்லும் வழியில் என் நெஞ்சு படபடத்து கால்கள் தளர்ந்தன. அங்கே அன்னை அமர்ந்திருப்பார் என்ற விந்தையான கற்பனை இருந்தது என் உள்ளத்தில். அங்கு அவரில்லை என்று கண்டதும் எனக்குள் ஒரு நிம்மதியும் ஏற்பட்டது. அவரையே எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தபின் அவ்வெண்ணத்தை நெஞ்சிலிருந்து விரட்ட முயன்றேன். அவரையன்றி வேறெதை எண்ணினாலும் எண்ணம் அங்கேயே சென்று நிற்பதை கண்டேன்.”

“மெல்ல அனைத்தும் சீரடைய நாட்களாயின. ஆனால் அதன்பின் அச்சாளரமே அன்னையாகிவிட்டிருந்தது. அதை அன்னையென எண்ணவும் செல்லும்போது அதை நோக்கி புன்னகைசெய்யவும் பயின்றிருந்தேன்” பானுமதி சொன்னாள். “இப்போது என்னால் சம்படை அன்னையை மிக அண்மையில் பார்க்கமுடியுமென தோன்றுகிறது. அழைத்தால் வந்துவிடுவார் என நினைத்துக்கொள்வேன்.”

துரியோதனன் உண்மையான அச்சத்துடன் “வேண்டாம்” என்று அவள் கையை பற்றினான். “வேண்டாம் பானு. அந்த அணங்கு உண்மையிலேயே அங்கே இருக்கக்கூடும்.” பானுமதி நகைத்து “அவள் என்னைப்பிடிக்க முடிவுசெய்துவிட்டால் நான் என்ன செய்யமுடியும்?” என்றாள். அவன் கைமேல் தன் கையை வைத்து “அஞ்சவேண்டாம். ஒன்றும் நிகழாது. என்னை எனக்குத்தெரியும்” என்றாள்.

துரியோதனன் பெருமூச்சுவிட்டு “எப்போது அஸ்தினபுரியின் அரசன் நான் என முடிவாகியதோ அப்போதே என் அச்சங்கள் தொடங்கிவிட்டன. மன்னன் செய்யும் தவறுகள் அருகம்புல் போல் பெருகிப்பெருகி காட்டைநிறைப்பவை என்பார்கள் சூதர்கள்... அது தெய்வங்களிழைக்கும் பிழை. மன்னனும் மானுடனே. அவன் மேல் அத்தனை பெரிய சுமையை தூக்கி வைக்க தெய்வங்களுக்கேது உரிமை?" என்றான்.

பானுமதி புன்னகைசெய்து “தந்தையர் பிழைகள் மைந்தர்களுக்கும் அவர்களின் கொடிவழிகளுக்கும் விளைகின்றன என்கிறார்கள். நாம் வாழும் ஒவ்வொரு கணமும் இன்னமும் பிறக்காத பல்லாயிரம் பேருக்கு கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?” என்றாள். துரியோதனன் உடல் நடுங்கத் தொடங்கியது. அவன் அதை வெல்ல கைகளை கோத்துக்கொண்டான்.

“ஏன், என்ன செய்கிறது?” என்றாள் பானுமதி. "குளிரடிக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். அவன் பற்கள் கிட்டித்துக்கொண்டிருந்தன. “இப்போது குளிர் இல்லையே. காய்ச்சல் இருக்கிறதா என்ன?” என்றபடி அவள் அவனைத் தொட்டு “காய்ச்சல் இல்லை... நான் சூடாக ஏதேனும் தரச்சொல்கிறேன்” என்று திரும்பினாள். “இல்லை பானு, வேண்டாம்” என அவன் அவள் கைகளை பற்றினான். “வைத்தியரை அழைக்கிறேன்” என அவள் மேலும் திரும்ப அவன் உரக்க “வேண்டாம் என்றேன்” என்றான். அவள் திகைத்து நோக்கினாள். “நீ அருகே இருந்தால் போதும்.”

அவள் அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு “ஆம், அருகே இருக்கிறேன்” என்றாள். துரியோதனன் அவள் கைகளை இறுகப்பற்றிக்கொண்டான். “நான் இறந்திருக்கலாம். மிகச்சிறந்த முடிவாக அது இருந்திருக்கும்” என்றான். “தந்தையிடம் மற்போரில் இறப்பதா? நல்ல கதை” என்றாள். துரியோதனன் “மற்போரா?” என்றான். “சௌனகர் என்ன சொன்னார்?”

பானுமதி “மற்போருக்கு அவர் உங்களை அழைத்தார் என்றார். களிப்போர் நிகழ்ந்து உச்சம்கொண்டபோது தந்தையால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மதம்கொண்டதைக் கண்டு அங்கரும் இளையோனும் தடுக்கவந்தனர். அவர்களையும் அவர் தாக்கினார்...” துரியோதனன் கண்களை மூடி “இல்லை” என்றான். பானுமதி “ஏன்?” என்று மெல்லியகுரலில் கேட்க “அவருள் கூடியது ஓர் அறத்தெய்வதம்” என்றான். அவள் “ம்” என்றாள். “ஏன் என்றால்...” என அவன் தொடங்க “வேண்டாம்” என்றாள். “இல்லை, நான்...” என துரியோதனன் சொல்லத்தொடங்க அவள் “வேண்டாம்” என்று அழுத்தமாக சொன்னாள்.

“சரி” என்று சொல்லி துரியோதனன் பெருமூச்சுவிட்டு வலியால் முனகினான். “நான் அவர் கையால் இறந்திருக்கவேண்டும். அதுதான் அனைத்துக்கும் ஈடு.” பானுமதி “அதெல்லாம் வீண்பேச்சு. நீங்கள் வாழ்கிறீர்கள், அரசாள்வீர்கள்” என்றாள். துரியோதனன் விழிகளை விலக்கிக்கொண்டு “பானு, நான் எப்படி பிழையீடு செய்யமுடியும்?” என்றான்.

அவள் “கொன்றபிழை தின்றால் போகும் என்பார்கள். அரியணைக்காகத்தானே? அரியணையில் அமருங்கள். அரியணைக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் தந்தையாக இருங்கள். உங்கள் கோல்கீழ் புழுவும் புள்ளும் விலங்குகளும் மானுடரும் மூதாதையரும் தெய்வங்களும் மகிழ்ந்திருக்கட்டும்” என்றாள். அவன் அக எழுச்சியுடன் அவளை நோக்கி “உண்மையாகவே சொல்கிறாயா? நூல்கள் அதை சொல்கின்றனவா?” என்றான்.

“ஆம், பராசரநீதியும் பிங்கலநீதியும் அஸ்வினிதேவஸ்மிருதியும் அதை சொல்கின்றன. அரசன் அனைத்தையும் அரசநீதி வழியாக ஈடுகட்டிவிடமுடியும். வளையாத கோலேந்தியவனை தெய்வங்கள் நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும்.” துரியோதனன் கண்களிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. “என்ன இது?” என்றாள் பானுமதி. அவன் மெல்லிய ஓசையுடன் விசும்பி அழுதான். “என்ன இது அரசே?” என்று அவள் மெல்லியகுரலில் சொன்னாள். “நான் ஏன் உயிர்வாழவேண்டும் என்று சொன்னாய்... இதற்காக நான் கடன்பட்டிருக்கிறேன். என் ஞானாசிரியை நீதான்.”

“இதென்ன பேச்சு?” என்று அவள் அவன் கைகளை இறுக்கினாள். “மிகவும் இறங்கிவந்து பேசவேண்டாம். பின்னர் அகம் நாணுவீர்கள்.” துரியோதனன் “நாண ஏதுமில்லை” என்றான். அவன் உடல் குறுகுவதுபோல அசைந்தது. “நான் அகம் நாணத்தொடங்கி நீண்டநாளாகிறது. அதில் உச்சமென்பது முதல் விழிப்பில் நான் கண்ட கனவுதான்.” பானுமதி விழிகளால் என்ன என்றாள்.

“கரிய உருவுடன் ஒருவன் நீரிலிருந்து எழுந்து வந்து என் கைகளை பற்றினான். நான் அஞ்சி திமிறினேன். அவன் குளிர்ந்து பிணம்போலிருந்தான். வா என்றான். இல்லை அந்த நீர் இருண்டிருக்கிறது, குளிர்ந்திருக்கிறது என்றேன். ஆம் அது எப்போதும் அப்படித்தான். வந்துவிடு என்றான். நான் திமிறிக்கொண்டிருக்கையில் அவன் திரும்பி அருகே நின்றிருந்த என் இளையோனை பார்த்தான். அவன் கையைப்பற்றிக்கொண்டு நீரில் இறங்கி மறைந்தான். ஒருகணம் என் நெஞ்சில் ஆறுதல் நிறைந்தது. அந்த ஆறுதலுடன் விழித்துக்கொண்டேன். இடமறிந்ததும் பதறிப்போய் கூவி இளையோன் நலமாக இருக்கிறானா என்று கேட்டேன். நலம் என அறிந்தபின்னர்தான் உள்ளம் அமைதிகொண்டது.”

துரியோதனன் உதடுகளைக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டான். அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் இதை வேறு எவரிடமும் சொல்லமுடியாது. என் அகம் முழுக்க நிறைந்திருக்கும் இந்த இருளை...” அவள் அவன் வாய் மேல் கைவைத்து “அது இருள் அல்ல. இருள் என்றால் அது இல்லாத எந்த உள்ளமும் இல்லை” என்றாள். துரியோதனன் நீர் நிறைந்த விழிகளுடன் ஏறிட்டு நோக்கி “அவன் என் மைந்தன் என்றால் அப்படி நினைப்பேனா?” என்றான். “ஆம்” என்றாள்.

துரியோதனன் சிலகணங்கள் வாய் திறந்து உறைந்திருந்தான். “அவன்...” என சொல்லி தத்தளித்து தலையை அசைத்தான். “இதை ஏன் விரித்து விரித்து பேசவேண்டும்? மானுடவாழ்க்கையை விரித்துப்பேசலாகாது, வெறுமையே எஞ்சும் என்பார்கள் முதுபாட்டிகள். வேண்டாம்” என்றாள். “ஆம்” என்று துரியோதனன் சொன்னான். பின்னர் “ஒன்றுமட்டும் கேட்கிறேன். அதைக் கேளாமலிருக்க முடியாது” என்றான். “என் தந்தையும் அப்படித்தானா?”

பானுமதி “பாம்பு கடித்த விரலை சீவி எறியத்தானே அவரும் முயன்றார்?” என்றாள். துரியோதனன் பெருமூச்சுவிட்டான். மீண்டும் மீண்டும் பெருமூச்சு வந்தபடியே இருந்தது. சட்டென்று புன்னகைத்து “என் நுரையீரல் கிழிந்திருக்கிறது. இந்த மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பெருமூச்சுகளை நான் இப்போதே விட்டுவிட்டேன்” என்றான். பானுமதி புன்னகை செய்து “இந்த நோயும் நல்லதே. நோய் என்பது கண்ணுக்குத்தெரியாத எவருக்கோ நாம் செய்யும் பிழையீடு” என்றாள்.

துரியோதனன் அவள் சிறிய பற்களை நோக்கியபின் “நீ இல்லையேல் நான் என்னவாகியிருப்பேன்!” என்றான். பானுமதி கண்கள் கனிய புன்னகைசெய்தாள். அவள் அருகிருக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்தவனாக அவன் சற்றுநேரம் சொல்லிழந்து அமர்ந்திருந்தான். பின்னர் மெல்ல எண்ணம் மாறுபட்டு “சம்படை அன்னை விதுரரின் அன்னையை எப்போதேனும் பார்த்திருக்கிறாரா?” என்றான்.

“அதை நான் கேட்டேன். சம்படையன்னை ஒருமுறை விதுரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். விதுரர் சுருதை அன்னையை மணமுடித்து வந்தபோது. அவர்களின் இன்னிரவு முடிந்த மறுநாள். சிவை அன்னை அழுதுகொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அருகே அமர்ந்து பேசமுயன்றாராம் ஆனால் சிவை அன்னை பேசவே இல்லை. எழுந்தபோது சிவை அன்னையின் மாலையிலிருந்து உதிர்ந்த ஒரு சிறிய சரப்பொளி கிடந்ததாகவும் அதை சம்படை அன்னை எடுத்துக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். இப்போது இவர்கள் உருவாக்கிக்கொள்ளும் கதையாகவும் இருக்கலாம். தெரியவில்லை.”

துரியோதனன் “நாம் சற்றும் அறியாதது இந்த ஆடல். தெய்வங்களையேகூட மேலும் பெரிய தெய்வங்கள் களக்கருக்களாக ஆட்டிவைக்கின்றனவோ என்னவோ?” என்றான். பானுமதி “நான் வருகிறேன். சென்று காந்தாரியன்னைக்கு உங்கள் உடல்நிலை பற்றி சொல்லிவிட்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும். விதுரர் இப்போது அனைத்து முடிவுகளையும் என்னிடமும் கேட்டுக்கொள்கிறார்” என்றாள்.

துரியோதனன் “அது நன்று” என்றான். “ஒரு பெண்ணின் குரல் இல்லாமலிருந்ததே அஸ்தினபுரியின் அரண்மனை இந்த அளவுக்கு நோயுற்று இருள்வதற்கு வழிகோலியது” என்றான். பானுமதி எழுந்ததும் துரியோதனன் மீண்டும் முகம் இருண்டு “பானு” என்றான். அவள் திரும்பியதும் “இளையோன் வாழவேண்டும். அவன் வாழாவிட்டால் நான் வாழமுடியாது” என்றான்.

பகுதி 15 : யானை அடி - 6

நோயில் படுத்திருந்தபோது இருந்த உளநிலைகளும் எழுந்தமரும்போது உருவாகும் உளநிலைகளும் முற்றிலும் வேறானவை என்று துரியோதனன் அறிந்துகொண்ட நாட்கள் அவை. படுக்கையில் எழுந்து அமர்ந்திருக்கத் தொடங்கியபின் அயலவர் எவரையும் சந்திக்க அவன் விழையவில்லை. ஆனால் படுத்திருக்கையில் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்க எவரெல்லாம் வருவார்கள் என்பதையே எண்ணிக்கொண்டிருந்தான். படுத்திருக்கையில் எழுந்து நிற்கும் உலகிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டவனாக, உதிர்க்கப்பட்டவனாக உணர்ந்தான். மரங்கள், மனிதர்கள், மலைகள், கட்டடங்கள் என அனைத்துமே எழுந்து நின்றுகொண்டிருந்தன. எழுந்து நிற்பவையே வாழ்கின்றன. அவன் அவற்றை கீழிருந்து கையறுநிலையில் நோக்கிக்கொண்டிருந்தான்.

அந்த எண்ணம் முதலில் பெரும் கழிவிரக்கத்தை அளித்தது. நெஞ்சு நெகிழ்ந்து உருகி விழிநீராக வழியத் தொடங்கியபின் அதுவே ஒரு விடுதலையை உருவாக்கியது. நின்றிருக்கும் உலகின் வஞ்சங்கள், விழைவுகள், திட்டங்கள் அனைத்தையும் பிறிதொருவனாக நின்று நோக்கமுடிந்தது. அவற்றின் பொருளின்மையும் வெறுமையும் ஒவ்வொரு கோணத்திலும் தெரிந்தது. படுத்திருப்பவன் ஒரு குழந்தை என அவன் பானுமதியுடம் சொன்னான். அவன் பிறரால் ஊட்டப்பட்டு நீராட்டப்பட்டு கொஞ்சப்பட்டு வாழவேண்டியவன். பிறரது கைகளால் கையாளப்படுபவன். பிறர் கைகள் தொடுவதென்பதே மனிதனை மெல்லியலாளன் ஆக்கிவிடுகிறது. அவனுள் உறைந்திருந்த அனைத்தையும் கரைந்தோடச்செய்து நீர்வடிவினனாக ஆக்கிவிடுகிறது.

ஒவ்வொருநாளும் அவனை முதலில் தொடும் இளையமருத்துவனின் மென்மையான கைகளுக்காக விழிப்பு வந்ததுமே அவன் காத்திருந்தான். அந்த இளைஞன் தன்னை மென்மையாகத் தூக்கி புரட்டி ஆடைகளை மாற்றத்தொடங்கும்போது உள்ளம் இளகி இனிய இளவயது நினைவுகள் எழுவதை அவன் சிலநாட்களுக்குள்ளாகவே கண்டுகொண்டான். அவனுடைய தொடுகை இளமையின் தொடுகையாக ஆகியது. வலியோ துயரோ எழும்போது ஏதாவது ஒன்றின்பொருட்டு அவனை அழைத்து தன்னை தொடவைத்தான். அங்குள்ள ஒவ்வொருவரும் தன்னை தொடவேண்டுமென விழைந்தான். மனிதர் தொடும்போது உண்மையிலேயே வலி குறைந்தது. எனவே ஒருகட்டத்தில் எப்போதும் எவரேனும் தன்னை தொட்டுக்கொண்டிருக்கவேண்டுமென விழைந்தான். தனிமையில் கணநேரம்கூட இருக்கமுடியாதவனானான்.

அங்கிருந்த அத்தனைபேரையும் அவன் தனிப்பட்டமுறையில் அறிந்துகொண்டான். கைகளால் ஆன உயிர்கள். மனிதர்களின் கைகளைப்போல அவர்களின் உள்ளத்தை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை வேறில்லை. அவன் அதற்கு முன் கைகளை நோக்கியதே இல்லை. கைகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. தவிக்கின்றன, உரைக்கின்றன. பதைக்கின்றன. கண்டுகொள்கின்றன. மீண்டும் மீண்டும் கைகள் உடலை தொட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏன் மனிதர்களின் கைகள் அவர்களின் உடலையே மீண்டும் மீண்டும் தொடுகின்றன? கைகள் தாங்கள் பிற ஏதோ இருப்பு என்பதுபோல அவ்வுடலை தொட்டுத்தொட்டு கண்டடைகின்றன. உறுதிப்படுத்திக்கொள்கின்றன.

பிறரிடம் பேசும்போது மனிதர்களின் கைகள் விழைவுகொண்ட நாகங்கள் போல எதிர்தரப்பை நோக்கி நீள்வதை நோக்கிக்கொண்டிருந்தான். இருவர் கைகளும் பிணைந்துகொண்டால் அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களும் பொருளற்றவையாகிவிடும். ஆனால் மனிதர்கள் கைகள் மேல் முழுச் சித்தத்தாலும் கட்டுப்பாடு கொண்டிருக்கிறார்கள். கைகளை அவர்கள் நீளவே விடுவதில்லை. படுத்திருக்கையில் பார்க்கும் உலகம் மனிதர்களின் கைகள் அசையும் உயரத்தில் அமைந்திருந்தமையால் கைகள் பறக்கும் ஒரு காற்றுவெளியை அவன் எப்போதும் தலைதிருப்பி நோக்கிக்கொண்டிருந்தான். அவன் நன்கறிந்த கைகள் அனைத்தும். அவன் கனவில் அக்கைகளின் மெல்லிய தொடுகைகள் வந்தன. வியர்வையின் ஈரம் கொண்ட அச்சுதனின் கை. குட்டையான விரல்கள் கொண்ட ஜலதனின் கை. உள்ளங்கை காய்ப்பு தட்டிய கரமனின் கை. அல்லித்தண்டு போல எப்போதும் குளிர்ந்திருக்கும் பானுமதியின் கை.

படுத்திருக்கையில் இருந்த உலகம் அனைத்துப்பகுதிகளிலும் கனிந்திருந்தது. கனிந்த மொழிகள். கனிந்த விழிகள். அது தொழில் உளநிலை அல்ல. இரக்கம் அல்ல. மானுடர் அனைவரும் ஐயமின்றி புரிந்துகொள்ளும் ஒன்று வலிதான். வலிக்கு மட்டுமே அனைத்து மானுடரும் ஒரே எதிர்வினை காட்டுகிறார்கள். அவன் சிலநாட்களில் இரவில் வலியுடன் விழித்துக்கொள்வான். பகலில் வலி சிதறி அந்தக்கூடம் முழுக்க பரவிச்சென்றுவிடும். இரவில் இருள் வலியை எதிரொலித்து அவன் மீதே பொழியும். வலி எப்போதும் துயிலில் ஒரு பொருள்கொண்டிருப்பதை அவன் அறிந்தான். ஒரு நிகழ்வின் உச்சியாகவே வலியை அறிந்தான். துரத்தி வந்த களிறு அதன் கொம்பை அவன் நெஞ்சுக்குள் பாய்ச்சியது. அவன் கீழே விழுந்த இடத்திலிருந்த மரக்கிளை அவன் அடிவயிற்றுக்குள் குத்திச் சென்றது. அவன் மல்லாந்து விழ அவன் மேல் ஒரு பாறை உருண்டு விழுந்தது. பேருருக்கொண்ட கதாயுதம் ஒன்று அவன் தோளை அறைந்து உடைத்தது.

உடலின் வெவ்வேறு பகுதிகளில் வலியை உணர்ந்து விழித்துக்கொள்கையில் அவன் உடல் நடுநடுங்கிக்கொண்டிருக்கும். வலி குளிராக நடுக்கமாக அச்சமாக மாறி தெரியும். சில கணங்களுக்குள் வலி அனைத்து பொருள்களையும் இழந்து வெறும் அதிர்வாக மாறிவிடும், போதும் போதும் என்பதை அன்றி எந்தப்பொருளையும் வலிக்கு மேல் ஏற்றமுடியாது. கல்வியை எண்ணக்குவையை நினைவுகளை உணர்வுகளை அனைத்தையும் அழித்து தான் மட்டுமாக நின்றிருக்க வலியால் முடியும். ஆண்மையை தருக்கை இல்லாமலாக்கி புழுவென நெளிய வைக்கும் வல்லமை கொண்ட கொடுந்தெய்வம் அது. கைகளை படுக்கையில் அறைந்து அவர்களை அழைப்பான். அவர்களில் எவரேனும் வந்து அருகே நின்றதும் வயிற்றை அழுத்தச் சொல்வான். அவர்களின் கைபடும்போது சூழ்ந்துவந்த ஏதோ ஒன்று விலகிச்சென்றிருக்கும்.

ஆனால் உள்புண் சற்று ஆறி எழுந்தமர்ந்ததுமே அனைத்தும் மாறிவிட்டன. மருத்துவர் அவன் எழுந்தமரவேண்டுமென வற்புறுத்தினார். அவன் அதை அஞ்சினான். எழுந்தமர்வதையே அவன் உடல் மறந்துவிட்டிருந்தது. எழுந்து அமரமுயன்றபோது தசைகள் தொடர்பின்றி அசைந்து உடல் ததும்பியது. “நுரையீரல் என்பது தொங்கவேண்டிய உறுப்பு இளவரசே. படுத்திருந்தீர்கள் என்றால் அது தரைதொட்ட பலாப்பழம்போல ஆகிவிடும்” என்றார் மருத்துவர். அவரே அவனை தூக்கி படுக்கையில் அமரச்செய்தார். அவன் எழுந்தமர்ந்ததும் மூச்சுத்திணறி “படுக்கிறேன்... படுக்கிறேன்” என்றான். “இல்லை, அது ஒரு உளமயக்கே. சற்று நேரம்... சற்று நேரம்” என்றார் அவர். இல்லை, முடியவில்லை என்று அவன் கையசைத்தான். “எனக்குத்தெரியும்... நானே சொல்கிறேன்” என மருத்துவர் கடும் சொல் சொன்னதும் கையூன்றி உடல் வளைத்து அமர்ந்துகொண்டான்.

நுரையீரலின் எடை. பூசணிக்கொடி கூரையில் படர்ந்தது போல. அவன் மூச்சிரைத்தான் விலா எலும்புகள் அதிர்ந்து வலியில் நெற்றி நரம்புகள் இழுபட்டன. பின்னர் மெல்ல உடலெங்கும் குருதி வழிந்து கீழே சென்றது. “தலை சுழல்கிறது” . ”பலநாட்களாக படுத்தே இருக்கிறீர்கள் அல்லவா?” என்றார் மருத்துவர். “பழகவேண்டும், இனிமேல் முடிந்தபோதெல்லாம் அமருங்கள்.” உடனே படுத்துவிட்டான். படுத்ததும் வந்த ஆறுதலில் விழிமூடி திளைத்தான். எஞ்சிய வாழ்நாளெல்லாம் படுத்தே இருக்கப்போகிறேனா என்ன? ஆனால் நின்றிருக்கும் உலகம் எங்கோ இருந்தது. அதில் இனிமேல் சென்று இணைய முடியாதென்று தோன்றியது.

மறுபடியும் மருத்துவரின் காலடிகள் மாலையில் அணுகிவந்தபோது எழவேண்டுமே என்றுதான் அஞ்சினான். அவர் மீண்டும் வற்புறுத்தினார். “எழுந்து அமர்ந்திருக்கிறீர்கள். ஒன்றுமே ஆகவில்லை. நாடி தெளிவாகச் செல்கிறது. எழுந்தமருங்கள்.” .எழுந்து அமர்ந்ததும் தலைசுழலவில்லை. சுழல்கிறதா என நோக்கியபோது சுழல்வதுபோலிருந்தது. பின்னர் அப்படியல்ல என்று தெரிந்தது. எழுந்து அமர்ந்துவிட்டேன். அவ்வளவுதான், முடிந்துவிட்டது. அந்த எண்ணம் அளித்த ஏமாற்றத்தை அவனே வியப்புடன் நோக்கினான்.

மறுநாள் காலை அவனே எழுந்தமர விழைந்தான். கையை ஊன்றி உடலை தூக்கி மெல்ல மெல்ல பின்னால் சாய்ந்து தலையணைமேல் சாய்ந்து அமர்ந்துகொண்டான். இளையமருத்துவன் அவனைக்கண்டு சிரித்து “அடடா, இளவரசே, எழுந்தமர்ந்துவிட்டீர்கள்... நன்று” என்று சொன்னபோது ஒருகணத்தில் சினம் பற்றிக்கொண்டது. அதை அடக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். பின்பு அந்தச் சினத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். அந்தநாள் வரை அவர்கள் அவனை குழந்தையென நடத்தினர். கேலிசெய்தனர். கண்டித்தனர். உணவருந்தும்போது அளவு மிஞ்சிவிட்டால் பாதியிலேயே பறித்துச்சென்றனர். அப்போதெல்லாம் சினம் எழவில்லை. எழுந்தமரும்போதுதான் சினம் வருகிறதா?

எழுந்தமர்ந்த பின் நின்றிருக்கும் உலகை அடைந்துவிட்டான். அதில் அவன் நிற்கமுடியாதவனாக இருந்தான். ஒவ்வொரு கணமும் நடக்க விழைந்தவனாக, நின்றிருக்கும் நடக்கும் ஒவ்வொருவருடனும் உளத்தால் போட்டியிட்டு தோல்வியை சினமாக மாற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒருநாளுக்குள் அவனுக்குள் சினம் பெருகத்தொடங்கியது. விரைந்து நடந்துசென்ற ஒரு மருத்துவனை நோக்கி “மூடா, உன் காலடிகளைக் கேட்டு நான் விழித்துக்கொள்ளவேண்டுமா?” என்று கூவினான். அவன் விழிகளில் வந்த மாறுதலை அவர்கள் உடனே புரிந்துகொண்டார்கள். “பொறுத்தருள வேண்டும் இளவரசே...” என்றான் அவன்.

அந்தக்கணம் முதல் அவர்கள் அத்தனை பேரும் முழுமையாகவே மாறினர். அவர்கள் எத்தனையோ நோயாளர்களை கண்டிருப்பார்கள். அந்த மாறுதலே இயல்பானதென்பதுபோல. அவன் தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். ஏன் இந்தமாறுதல்? என் அகத்தை நான் இழந்துசெல்கிறேனா? ஆனால் குளிருக்கு போர்த்திகொண்ட அழுக்குக் கம்பளியை ஒளியில் கூசுவதுபோல அந்த மருத்துவநிலையை அந்தப்படுக்கையை அங்கிருந்த மணங்களை ஒலிகளை வெறுத்தான். அங்கே அதுவரை கிடந்த துரியோதனனின் உள்ளிருந்து உடைத்துத் திறந்து எழுந்து அகன்றுவிட முயன்றான். அந்தச்சினத்தை அனைத்து மருத்துவர்களிடமும் காட்டினான்.

துரியோதனன் எழுந்து படுக்கையில் அமர்ந்து இளைய மருத்துவன் அள்ளி ஊட்டிக்கொண்டிருந்த உணவை உண்டுகொண்டிருந்தபோது ஏவலன் வந்து வணங்கி நின்றான். அவன் நோக்கியதும் "பால்ஹிகர்" என்றான். அவன் கைகாட்ட திரும்பிச்சென்றான். துரியோதனன் அப்போது பூரிசிரவஸ்ஸை சந்திப்பதை விரும்பவில்லை. ஆனால் ஒரு கணம் கடந்ததும் அவன் வந்து தன்னிடம் அரசு சூழ்தலை பேசுவதனூடாக அந்த நோய்ப்படுக்கையிலிருந்து மீண்டுவிடலாமென்று எண்ணினான். பூரிசிரவஸ் வந்து தலைவணங்கியதும் அவன் தன் உடல்நிலை பற்றி ஏதும் கேட்கக்கூடாதென்று விழைந்தான். ஆனால் அவன் “நலம்பெற்றுவிட்டீர்களா மூத்தவரே” என்றான். அவன் கைகாட்ட அமர்ந்தபடி “தாங்கள் இன்னும் ஓரிருநாட்கள் இங்கே தங்கி முழுமையாக உடல்நலம் தேறுவது நன்று” என்றான்.

“நீர் நலம் பெற்றுவிட்டீரா?” என்றான் துரியோதனன் .“நலமாகத்தான் உணர்கிறேன். புரவியேறும்போதுமட்டும் தொடையில் மெல்லிய வலி இருக்கிறது. ஆறுமாதமாகும் அது முழுமையாகச் சீரடைய என்றனர் மருத்துவர்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கிளர்ச்சியடைந்திருப்பதை உடலில் மெல்லியநடுக்கமாகவும், முகத்தில் வந்து வந்துபோகும் செம்மையாகவும் பார்க்கமுடிந்தது. “நான் கேள்விப்பட்டேன்” என்று அவன் திக்கிக்கொண்டு சொன்னான் “ஆனால் நான் அதைப்பற்றி பேசலாமா என்று எனக்குத்தெரியவில்லை. பேசலாமென்று தோன்றியது. ஆனால்...”

துரியோதனன் அவனை எரிச்சலுடன் நோக்கினான். அவன் சொல்லவருவது என்ன என்று அவனுக்குத்தெரியவில்லை. ”சேதிநாட்டுச் செய்திதான்.. சேதிநாட்டில்” என்றவன் “நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை” என்றான். துரியோதனன் திகைப்புடன் “சேதிநாட்டிலா?” என்றான். அவனுடைய திகைப்பைப் புரிந்துகொண்ட பூரிசிரவஸ் வியப்புடன் “தாங்கள் அறியவில்லையா?. தங்கள் உடல்நலம் கருதி சொல்லாமல் விட்டிருப்பார்கள். நான் முந்திவிட்டேன். மூடன் நான்” என்றான். “என்ன என்று சொல்லும்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “இல்லை...” என்று தயங்க “சொல்லும்” என துரியோதனன் உரத்தகுரலில் ஆணையிட்டான்.

பூரிசிரவஸ் “சேதிநாட்டுக்குள் நேற்று இரவு, இல்லை, இன்று விடிகாலையில் பீமனும் நகுலனும் படைகளுடன் புகுந்து அந்தப்புரத்தைத் தாக்கி இளவரசியர் கரேணுமதியையும் பிந்துமதியையும் கவர்ந்து சென்றுவிட்டனர்” என்று அவன் சொன்னான். துரியோதனன் “நீர் எப்படி அறிந்தீர்?” என்றான். பூரிசிரவஸ் பதைப்புடன் “என் ஒற்றன்...” என்றபின் அமைதியானான். “நீர் ஓர் அரசமகனாக இருக்கலாம். ஆனால் என் நாட்டில் நீர் தனியாக உளவறிவதை நான் ஏற்கமுடியாது” என்றான் துரியோதனன். “இல்லை இளவரசே, இங்கு நான் ஒற்றறியவில்லை. இது எங்கள் ஒற்றனால் எனக்கு இன்று சொல்லப்பட்டது.” துரியோதனன் “அவன் இங்கிருக்கிறான் அல்லவா?” என்றான் துரியோதனன்.

பூரிசிரவஸ் தத்தளிப்புடன் “ஆம்” என்றான். “அவனை உடனடியாக என் படைகளிடம் ஒப்படைத்துவிடும். அவன் இனிமேல் நகருக்குள் நடமாடக்கூடாது. அவனை நாங்கள் விசாரித்தபின் பால்ஹிகநாட்டுக்கே அனுப்பிவிடுகிறோம்.” பூரிசிரவஸ் பேசாமல் நின்றான். “இது என் ஆணை” என்றான் துரியோதனன். “என்னை பொறுத்தருள்க இளவரசே. நான் என்னை நம்பியவனை காட்டிக்கொடுக்கமுடியாது. ஈடாக நான் சிறைசெல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். அவன் விழிகளில் நீர் நிறைந்தது.

துரியோதனன் அதைக் கண்டதும் விழிகளை திருப்பிக்கொண்டான். அவன் உள்ளம் கரைந்தது. “கண்ணைத்துடைத்துக்கொள் மூடா. நீ என்ன சிறுவனா?” என்றான். “சொல்மேல் கடிவாளமில்லாமல் நீ எப்படி இந்த அரசியல் களத்தில் வாழப்போகிறாய்? என்னிடம் பேச வருவதற்கு முன்னரே நான் கேட்கக்கூடியவற்றை உய்த்து விடைகளுடன் வரவேண்டுமென்றுகூட தெரியாதவனா நீ?” பூரிசிரவஸ் கண்களை துடைத்துக்கொண்டு புன்னகைசெய்தான். “நான் அப்படித்தான் செய்வேன். தங்களிடம் அப்படி எண்ணி வரவில்லை.”

துரியோதனன் “என்னிடம் இன்னமும் சேதிநாட்டின் செய்திகள் வந்துசேரவில்லை. நீர் சொன்னதுபோல எதையும் என்னிடம் இவர்கள் இப்போது உடனுக்குடன் தெரிவிப்பதில்லை. சிசுபாலன் என்ன செய்தி அனுப்பியிருக்கிறான் என்று தெரியவில்லை” என்றான். பூரிசிரவஸ் “என் பிழை பொறுத்தருளவேண்டும் மூத்தவரே. நான் எதையும் எண்ணாமல் மூடத்தனமாக வந்து பேசிவிட்டேன்” என்றான்.

துரியோதனன் அவனை கூர்ந்து நோக்கி “அப்படி பேசுவதாக இருந்தால் உமக்கு அதற்குரிய நோக்கங்கள் உண்டு என்று பொருள்” என்றான். பூரிசிரவஸ் பதறி “இல்லை, எந்த நோக்கமும் இல்லை” என்றான். “நோக்கமில்லாமல் ஒரு செயலைச்செய்யும் அளவுக்கு முதிர்ச்சியற்ற சிறுவனா நீர்?" பூரிசிரவஸ் “மூத்தவரே எனக்கு எப்படி பேசுவதென்றே தெரியவில்லை. உங்கள் முன் என் சொல்வன்மைகள் அழிகின்றன. நான் தனித்தவன்... அறியாதவன்” என்றான். பின்னர் “நோக்கம் இல்லை. ஆனால்...” என்றான்.

துரியோதனன் சிரித்துக்கொண்டு அவன் தோளில் தட்டி “நோக்கம் என்ன என்று எனக்குத்தெரிகிறது. நீர் அன்று சொன்னதுதானே அது? நீர் விழையும் மணப்பெண்?” என்றான். அப்போது ஏவலன் வந்து அப்பால் நின்றான். “யார்?” என்றான் துரியோதனன். “அங்கநாட்டரசரும் இளையவர் துச்சலரும் வந்திருக்கிறார்கள். உடனே பார்க்கவேண்டும் என்கிறார்கள்.” துரியோதனன் “உன் மணமகளைப்பற்றி கேட்டுக்கொள்கிறேன் இரு” என்றபின் “வரச்சொல்” என்றான்.

பூரிசிரவஸ் தவிப்புடன் அமர்ந்திருந்தான். கர்ணனும் துச்சலனும் வந்ததும் எழுந்து நின்றான். “இளையோனே நீரும் இரும். அவர்கள் சொல்லவருவதைத்தான் நீரும் அறிந்திருக்கிறீரே” என்றான். “நான் சற்று முன்னர்தான் அறிந்தேன்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், எங்கள் ஒற்றர்கள் உமது ஒற்றர்களைவிட எவ்வகையிலும் திறன் மிக்கவர்களாகவே இருப்பார்கள்” என்றான் துரியோதனன். கர்ணனும் துச்சலனும் அருகே வந்தனர்.

கர்ணன் அருகே வந்ததும் பூரிசிரவஸ்ஸை நோக்க “அவரும் இருக்கட்டும். அவர் நீ சொல்லப்போகும் செய்தியை என்னிடம் முன்னரே சொல்லிவிட்டார். நாம் எண்ணுவதுபோல பால்ஹிகர்கள் எளியவர்கள் அல்ல. அவர்களுக்கும் உளவுப்படைகள் உள்ளன” என்றான். கர்ணன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கி சிரித்து “உடல்நலம் தேறியிருக்கிறது. ஆனால் இங்குள்ள கோடையில் மிகவும் சிவந்துவிட்டார்” என்றான்.

துச்சலன் “மூத்தவரே, செய்தி இதுதான். சேதிநாட்டு இளவரசிகள் கரேணுமதியையும் பிந்துமதியையும் பீமனும் நகுலனும் கவர்ந்து பாஞ்சால நகரிக்கு கொண்டு சென்றுவிட்டனர்” என்றான் “அது தமகோஷரின் எளிய சூழ்ச்சி என்று அறிவதற்கு அரசியலறியவேண்டியதில்லை. சூக்திமதி நகரின் கன்னியர் மாடத்திற்குள் நுழைந்து இளவரசியரைக் கவர்ந்து தேரிலேற்றிக்கொண்டுசென்று சூக்திமதிப்பெருக்கில் இறங்கி படகிலேறி கங்கை வழியாக தப்பிச்சென்றுவிட்டனர். போர் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரு வீரர்கள் புண்பட்டிருக்கிறார்கள். எவரும் இறக்கவில்லை.”

துரியோதனன் “அந்தவகையில் நல்லது. நாடகத்தில் எவரும் இறக்கமுடியாது” என்றான். “சிசுபாலரின் செய்திக்காக காத்திருந்தேன். சிசுபாலர் மதுராவின் எல்லைக்கு அனுப்ப்பட்டிருந்தார். செய்தியறிந்ததும் அவர் சூக்திமதி நோக்கி படகில் கிளம்பிச்சென்றுகொண்டிருக்கிறார். அவர் நமக்கு செய்தி ஏதாவது அனுப்புவார் என்று நான் எண்ணினேன். செய்தி ஏதும் இல்லை என்றதும் அவரை உளவறிய ஆணையிட்டேன். அவர் செய்தி அனுப்பியது ஜராசந்தருக்கு" என்றான் கர்ணன்.

துரியோதனன் நிமிர்ந்து நோக்கினான். “அவர் உள்ளம் செல்லும் வழி அதுதான்...” என்றான் கர்ணன். துரியோதனன் மீசையை நீவிவிட்டு விழிகளை சரித்தான். “தெளிவாகவே நம் கையைவிட்டு சேதிநாடு சென்றுவிட்டது மூத்தவரே” என்றான் துச்சலன். “அது மகதத்துடன் சேரும் என்றால் நமக்கு அவர்களைவிடப்பெரிய எதிரிகள் பிறரில்லை.” துரியோதனன் “நம்மை இன்று எதிரிகளாக மகதம் எண்ணாது. தருமனும் நானும் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கும்” என்றான்.

“இல்லை இளவரசே, மகதம் அப்படி நினைக்கலாம். ஆனால் நம்மை நன்கறிந்தவர் சிசுபாலர். அவர் அவர்களுக்கு வழிகளை சொல்லிக்கொடுக்க முடியும். இன்று நாம் படைபலமற்றவர்கள். துணைகள் இன்னமும் உருவாகவில்லை. இருகுருதிவழிகளாக பிரிந்துமிருக்கிறோம். நீங்கள் முடிசூடியதுமே ஜராசந்தரின் படைகள் அஸ்தினபுரிமேல் திரண்டு வருமென்றால் அதில் வியப்பதற்கேதுமில்லை.”

துரியோதனன் விழிதூக்கி கர்ணனை நோக்கி மீசையை நீவிக்கொண்டிருந்தான். “ஆகவேதான் நானும் அங்கரும் வரும் வழியிலேயே ஓர் எண்ணத்தை சென்றடைந்தோம். நமக்கு வேறுவழியில்லை. நமக்கு இன்று தேவை நம்முடன் இறுதிவரை ஒன்றாக நின்றிருக்கும் ஒரு பெரியநாடு. ஒரு பெருவீரன்” என்று துச்சலன் சொன்னான். “நம் இளவரசியை சிந்துநாட்டரசர் ஜயத்ரதருக்கு அளித்தாலென்ன?”

துரியோதனன் “அதற்கு பானு..” என்று சொல்ல கர்ணன் “அரசியலில் இது என்ன பேச்சு? நான் அவளிடம் சொல்லிக்கொள்கிறேன். துச்சளையிடமும் நானே சொல்கிறேன். சிசுபாலருக்கு அவளை கொடுப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் யாதவனின் நேர் எதிரி. ஆனால் ஜயத்ரதர் அப்படி அல்ல” என்றான். துச்சலன் “ஜயத்ரதருக்கு இதில் மிகுந்த ஆர்வமிருக்கிறது மூத்தவரே. உண்மையில் சிந்துநாட்டின் தூதர் வந்து ஒருவாரமாக இங்கே தங்கியிருக்கிறார்” என்றான்.

கர்ணன் “நம் கையைவிட்டு சிபிநாடு சென்றுவிட்டது. நாம் காந்தாரத்தில் இருந்து முழுமையாகவே துண்டிக்கப்பட்டிருக்கிறோம். சிந்துநாடு நம்மிடமிருந்தால் காந்தாரம் வரை நாம் ஒரே நிலம் என்றே சொல்ல முடியும். பால்ஹிகக்கூட்டமைப்பும் நம்முடன் இருந்தால் மேற்குப்புலம் முழுமையாகவே நம் கையில் இருக்கும். துவாரகையை அசையாமல் நிறுத்திவிடமுடியும்” என்றான். துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம், அது சிறப்பாகவே தோன்றுகிறது” என்றான். “பிறிதொரு வழியே இல்லை. இன்று இளவரசிக்குரிய இளவரசனுக்கு நாம் எங்கு போவோம்?” என்றான் துச்சலன்.

துரியோதனன் மீசையை நீவியபடி எண்ணத்திலிருந்து விட்டு பூரிசிரவஸ்ஸிடம் “பால்ஹிகரே, நீர் எண்ணுவதென்ன?” என்றான். பூரிசிரவஸ் “ஆம், அதுவும் ஒரு நல்ல வழிதான்” என்றான். துரியோதனன் சிரித்தபடி “இவர் சேதிநாட்டு கரேணுமதியையோ பிந்துமதியையோ உள்ளத்தில் கண்டிருக்கிறார். அவர்களை நகுலனும் பீமனும் கவர்ந்துசென்றுவிட்டனர் என்றறிந்ததும் பதறியடித்து என்னிடம் ஓடிவந்தார். நிற்கமுடியவில்லை. நாவில் சொல்லெழவில்லை. நான் சேதிநாட்டுக்கு பாண்டவர்கள் சென்றசெய்தியை அறிந்திருக்கிறேனா என்றுகூட எண்ணவில்லை...” என்றான்,

கர்ணன் திரும்பி நோக்கி புன்னகைசெய்து “துயரம் கொண்டிருக்கிறார்” என்றான். “ஆனால் அரசியலில் பெண்களை அடைவதும் இழப்பதும் எவ்வகையிலும் ஆண்மகன்களுக்கு ஒரு பொருட்டல்ல... இளையோனே, இதற்குமேல் நீ துயரத்தை காட்டினாய் என்றால் உன் மண்டையை உடைக்கவேண்டியிருக்கும்” என்றான். துரியோதனன் “சேதிநாட்டு இளவரசியரைப்பற்றித்தான் என்னிடம் சொல்ல முயன்றிருக்கிறார். சொல்லியிருந்தால் படைகளை அனுப்பியே கவர்ந்து வந்திருப்பேன். இப்போது இவர் ஏன் இப்படி ஓடிவருகிறார் என்று எண்ணியபோதுதான் எனக்கே புரிந்தது” என்றான்.

பூரிசிரவஸ்ஸை நோக்கி சிரித்துக்கொண்டு துரியோதனன் “இன்னமும் முதிரா இளைஞராகவே இருக்கிறார். அவர் கண்களில் உள்ள துயரத்தைப்பார்” என்றான். அவர்கள் அவனை நோக்கி சிரிக்க பூரிசிரவஸ் தானும் சிரித்து முகம் சிவந்து தலைகுனிந்தான். துரியோதனன் “எண்ணிப்பார்க்க இனி நேரமில்லை. ஜயத்ரதருக்கே சிசுபாலருக்கே துச்சளையை அளித்துவிடுவோம்” என்றான். “விதுரரிடம் பேசிவிட்டு தூதரிடம் என் சொல்லை சொல்லிவிடுங்கள்.”

கர்ணன் “நான் காலையிலேயே விதுரரிடம் இதுபற்றி சொன்னேன். அவரும் சிறந்த எண்ணம் என்றார்” என்றான். துரியோதனன் “பிறகென்ன? பானுமதியிடமும் துச்சளையிடமும் நீயே சொல்லிவிடு..” என்றான். மெல்ல தலையணைமேல் சாய்ந்துகொண்டு வலியுடன் பெருமூச்சுவிட்டு “ஒவ்வொன்றும் பகடைகள் போல மாறி மாறி விழுந்துகொண்டிருக்கின்றன கர்ணா” என்றான்.

“பகடைகளில் தெய்வங்கள் இருக்கின்றன. கருக்களிலும் காய்களிலும் நம் மதி இருக்கிறது” என்றான் கர்ணன். “இப்போது உடனடியாக நாம் இதை அறிவித்தாகவேண்டும். நாளை காலை சிசுபாலர் சூக்திமதிக்கு செல்வார். நாளைமாலை கிளம்பி மறுநாள்காலையோ மாலையோ மகதத்தை அடையக்கூடும். அவர் ஜராசந்தரை பார்ப்பதற்கு முன் ஜயத்ரதர் அஸ்தினபுரியின் மணமகனாக வரும் செய்தி அவரிடமிருக்கவேண்டும். அதுவே நாம் அவருக்களிக்கும் மறுமொழி. அது பாண்டவர்களுக்கும் உரிய மறுமொழியாகும்” என்றான்.

துரியோதனன் “ஆம், பாண்டவர்களை ஏவிய யாதவனுக்கும் அதுவே மறுமொழியாக அமையும்” என்றான். .கர்ணன் “அதை பேசிவிட்டுச்செல்லலாம் என்றுதான் வந்தேன். மேலும் சில உடனடியான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது” என எழுந்தான். துரியோதனன் ஒரு கணம் தயங்கியபின் “கர்ணா, இந்த இளவரசிகளை எவர் மணக்கப்போகிறார்கள்?” என்றான்.

கர்ணன் “கரேணுமதியை நகுலன் மணக்கவிருப்பதாக செய்தி. அவர்களுக்கிடையே முன்னரே ஏதோ ஓலைத்தொடர்புகள் இருந்திருக்கின்றன என்கிறார்கள். இன்னமும் உறுதியான செய்திகள் இல்லை. அப்படியென்றால் பிந்துமதியை பீமன் மணக்கக்கூடும்” என்றான். துரியோதனன் தலையசைத்து “இதுவும் என் மீதான தன் வெற்றி என அவன் எண்ணுவான்” என்றபின் சிரித்து “இதை நான் தோல்வியென நினைக்கவில்லை என்பதனால் அவன் வெல்லவில்லை என அவனிடம் சொல்வது யார்?” என்றான்.

கர்ணன் புன்னகைத்தபடி “இதெல்லாம் நாற்களத்தில் காய்களைப் பரப்புவது மட்டுமே. ஆட்டம் இனிமேல்தான்” என்றபின் பூரிசிரவஸ்ஸின் தோளை தட்டியபடி கிளம்பினான். “இளையோனே, நீ நேரில் சென்று அன்னையரிடம் சொல்லிவிடு” என்றான் துரியோதனன். “ஆணை” என துச்சலன் தலைவணங்கினான்.

அவர்கள் சென்றபின் துரியோதனன் திரும்பி “உன் உள்ளம் எனக்குப்புரிகிறது இளையோனே. அதில் முதற்பிழை உன்னுடையது. நீ அன்றே சொல்லியிருக்கவேண்டும். ஒருபோதும் நீ சேதிநாட்டு இளவரசியரை இழக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன்” என்றான். “ஆனால் இதெல்லாம் ஆண்மகனின் வாழ்க்கையில் கடந்துசெல்லும் சிறிய நிகழ்வுகள், கங்கையில் கொப்புளங்கள் போல. அதை நீயும் உணர்ந்திருப்பாய் என நினைக்கிறேன்...”

பூரிசிரவஸ் “ஆம்” என்றதுமே விழிநீர் எழ தலைகுனித்துக்கொண்டான். “வா” என்று துரியோதனன் கையை நீட்டினான். பூரிசிரவஸ் அருகே சென்று அமர்ந்தான். துரியோதனன் தன் எடைமிக்க கையால் அவன் தோளை வளைத்து “சிலநாட்கள் இந்த ஏக்கம் இருக்கும் இளையோனே. நான் உன் மூத்தவன், என் சொல் அப்படியே இருக்கிறது. உனக்கு இந்த பாரதவர்ஷத்தில் எந்த இளவரசி தேவை? சொல். அவள் உன்னிடமிருப்பாள்” என்றான்.

அவன் தலைகுனிந்து முகத்தை துடைத்தான். “இல்லையேல், நானே உனக்கு மணமகள் பார்க்கிறேன். பாரதவர்ஷத்தின் பேரரசு ஒன்றின் இளவரசியாகவே அவள் இருப்பாள். அவளை நீ பால்ஹிகநாட்டுக்கு கொண்டுசெல்லும்போது உன் மக்கள் மகிழ்ந்து கொந்தளிப்பார்கள்.” பூரிசிரவஸ் கண்களை துடைத்துக்கொண்டு அடைத்த குரலில் “நான் தங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் மூத்தவரே” என்றான்.

பகுதி 16 : தொலைமுரசு - 1

புலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது.

அவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே வந்து பணிந்து “காம்பில்யத்தின் துறை நெருங்கிவிட்டது இளவரசே. அங்கு துறைமுகப்பில் வணிகப்படகுகள் சில பொதி ஏற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் படகுகள் உள்ளன. நமக்கு சற்று நேரமாகும்” என்றான். ”அரசப்படகுகளுக்கும் ஒரே வரிசையா?” என்றான் சாத்யகி. “அனைத்தும் குழம்பி சிக்கலாகிக் கிடக்கின்றன. இத்தனை படகுகளை இந்தச் சிறிய துறை தாளாது” என்றான் குகன்.

சாத்யகி எழுந்து துறைமேடையை நோக்க அவர்களுக்கு முன்னால் பாய் சுருக்கிய படகுகள் நிரைநிரையாக வாத்துக்கூட்டங்கள் போல நீரில் ததும்பி ஒன்றை ஒன்று முட்டியபடி நின்றிருந்தன. வாத்துக்களைப்போலவே அவற்றில் பின்னால் நின்றவை அடிக்கடி சங்கொலி எழுப்பின. முன்னால் நின்ற ஏதோ படகிலிருந்து இன் நீர் கொதிக்கும் இனியமணம் எழுந்தது. சாத்யகி ”ஏன் இத்தனை நெரிசல்?” என்றான்.

"காம்பில்யத்தில் இளவரசிக்கு மணநிகழ்வு நடந்ததுமுதல் இப்படித்தான் ஒவ்வொருநாளும் இரவெல்லாம் படகுகள் வந்தணைகின்றன. இளவரசி அஸ்தினபுரிக்கு செல்வதுவரை இங்கே படகுகள் காத்துநின்றுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “நான் படகிலேயே நீராடிவிடுகிறேன்” என்றான். அவன் நீராடி ஆடைமாற்றிவந்தபோதும் படகு கங்கையிலேயே நின்றிருந்தது. “சிறுபடகு ஒன்றில் என்னை மட்டும் கரையணையச்செய்யுங்கள்” என்றான். குகன் தலைவணங்கினான்.

சிறுபடகில் கரையணைந்து காம்பில்யத்தில் காலை வைத்ததுமே அவன் உள்ளம் மலர்ந்தது. கோட்டைவாயிலில் காற்றிலாமல் துவண்டுகிடந்த கொடிகளையும் வெளிறத்தொடங்கிய வானிலெழுந்து அமைந்த புறாக்களையும் இலைகுலைத்து நின்ற மரங்களின் முகடுகளையும் புதியவிழிகளுடன் நோக்கினான். முரசுகளின் தோல்வட்டங்கள் மிளிர்ந்தன. கொம்புகளின் வெண்கலப்பூண்களில் விண்ணொளி விளக்கேற்றியிருந்தது. ஆனால் படைவீரர்கள் எவரும் தெரியவில்லை.

கோட்டைவாயிலில் அவன் காத்து நின்றான். கம்பளியால் உடல் சுற்றிய காவலன் கண்களில் அழுக்குடன் வந்து “ம்?” என்றான். அவன் தன் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றான். காவலன் எதையுமே நோக்கவில்லை. திரும்ப உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டான். சாத்யகியின் புரவி இரவெல்லாம் படகிலேயே நின்றிருந்ததனால் கால்களை உதறிக்கொண்டு ஓடவிழைந்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்தினான்.

காலையின் தேனொளி நிறைந்த சாலைவழியாக சென்றபோது அவன் அகம் அறியா உவகையால் நிறைந்திருந்தது. பார்க்கும் ஒவ்வொன்றும் அழகுடனிருந்தன. காலைக்கே உரிய சருகுகளும் குப்பைகளும் விழுந்து கிடந்த தெருக்கள்கூட மங்கலமாக தோன்றின. குளிர்காலத்தில் தெருக்கள் காலையில் நெடுநேரம் துயின்றுகொண்டிருக்கின்றன. இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்.

இல்லத்துமுற்றங்களில் பெண்கள் இன்னமும் எழவில்லை என தெரிந்தது. மாளிகைமுகப்புகளில் காவலர்கள் காவல்கூண்டுகளுக்குள் துயின்றனர். காவல்மாடங்களில் கூட வெளியே எவரும் தென்படவில்லை. நகரில் வாழ்பவர்கள்தான் குளிருக்கு மிகவும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மலைக்குளிர் பழக்கமில்லை. புல்வெளிக்காற்றுகள் தெரியாது. காற்றென்பதே சாளரம் கடந்து வரவேண்டும் போலும்.

காம்பில்யத்தைவிட்டு அவன் கிளம்பும்போது அந்நகரத்தில் மணக்கோலம் எஞ்சியிருந்தது. மக்களின் முகங்களிலும் இல்ல முகப்புகளிலும் எங்கும் அதையே காணமுடிந்தது. அப்போது அந்த மங்கலக்குறிகள் அனைத்தும் மறைந்திருந்தாலும் ஒவ்வொரு இடமும் அந்நிகழ்வுகளின் நினைவுகளை கொண்டிருப்பதுபோல தோன்றியது. சற்று நின்றால் அந்த கொண்டாட்டநாட்களின் ஏதேனும் ஓர் அடையாளத்தை கண்டுவிடலாமென்பதுபோல.

அவன் வேண்டுமென்றே ஓர் இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டு நோக்கினான். சிலமுறை விழி துழாவியபோதே சுவரில் படிந்திருந்த செங்குழம்பை கண்டுகொண்டான். விழவின்போது களியாட்டமிட்ட இளைஞர்களால் அள்ளிவீசப்பட்டது. ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான். அதன்பின் நகரெங்கும் அவை மட்டுமே கண்ணில்பட்டன. கூரைமேல் மட்கி காய்ந்து கிடந்த மலர்மாலைகள். மரக்கிளையில் சிக்கியிருந்த பொற்கொடி. வீடுகளின் முகப்பில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணங்கள்.

துர்க்கையின் ஆலய முகப்பில் அவன் நின்றான். உள்ளே மணியோசை கேட்டது. இறங்கி உள்ளே சென்று வணங்கலாமா என எண்ணினான். குதிரையை முன்னால் செலுத்தி உள்ளே நோக்கினான். விழிகள் விரித்து வெறிக்கோலத்தில் அமர்ந்திருந்த அன்னையை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் கைகளை நோக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். கருமலரிதழில் எழுந்த அனலென உள்ளங்கை. அவள் பாதங்களை நோக்கினான். அங்கே செம்மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவன் கைகூப்பி வணங்கினான்.

கொம்போசையும் மணியோசையும் எழுந்தன. அவன் திடுக்கிட்டான். ஆலயத்திற்குள் ஏதோ சிறுதெய்வத்திற்கு பூசனை நிகழ்கிறது. மங்கல இசையெல்லாம் அன்னைக்கானவை என்று எண்ணிக்கொண்டான். கால்களிலிருந்து விழிதூக்கி கைகளை நோக்கினான். பதினாறு தடக்கைகளில் பதினான்கிலும் படைக்கலங்கள். அஞ்சலும் அருளலுமென இரு எழிற்கரங்கள். அவன் அவள் முகம்நோக்கி ஏறிட்ட விழிகளை தாழ்த்திக்கொண்டு இன்னொரு முறை வணங்கி புரவியை தட்டினான்.

செல்லும் வழியில் நெடுந்தொலைவுக்கு அந்த மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அது செவிகளில் ஓய்ந்தபின்னரும் உள்ளத்தில் நீடித்தது. நகரமெங்கும் மணியோசை என தோன்றியது. காலையொளியில் தோல்பரப்பென மென்மையாக எழுந்த சுவர்ச்சுதைகளில் அந்த இன்மணியோசை பரவிச்சென்றது. வளைவுகள் மிளிர்ந்த மாடக்குவைகளில் வழிந்தது. அந்த மணியோசையில் சுழன்றன சிலந்திவலைச்சரடில் சிக்கிய இலைச்சருகுகள். ஓர் கடையின் முகப்பில் இருந்த தோரணம் அந்த ஒலியாக அசைந்தது.

அரண்மனையை அடைந்ததும் உள்கோட்டை காவலர்தலைவன் அவனை அடையாளம் கண்டு வணங்கி வரவேற்புரை சொன்னான். சற்று விழிப்புடன் இருக்கிறான், சரியானவனையே தெரிவுசெய்திருக்கிறார்கள் என அவன் நினைத்துக்கொண்டான். காவலன் தானே முன்வந்து சாத்யகியை அரண்மனைக்குள் அழைத்துச்சென்றான். ஒளி வந்துவிட்டிருந்த போதும் பேரமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்கவில்லை. அரண்மனை செயலகர் மித்ரர் அவனை வணங்கி தங்குதற்கு மாளிகையை அமைத்துக்கொடுத்தார். பேரமைச்சர் வந்ததும் செய்தியறிவிப்பதாக சொன்னார். ”அவர் உண்மையில் காலையில்தான் தன் மாளிகைக்கே சென்றார். அனைவரும் அவருக்காகவே காத்திருக்கிறோம்.”

“நான் இளவரசியையும் இளையபாண்டவர்களையும் யாதவ அரசியையும் சந்திக்கவேண்டும். முறைமைக்காக அரசரையும் இளையஅரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்திக்கவேண்டும். துவாரகையின் வணக்கச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். மித்ரர் “அவர் வந்ததும் சொல்கிறேன் இளவரசே. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லி அவனை அறையில் விட்டுவிட்டு சென்றார்.

சற்று நேரம் பீடத்தில் அமர்ந்தான். இன்னும் கொஞ்சம் நகரில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமென தோன்றியது. எல்லா சாளரங்களும் ஒளிகொண்டுவிட்டன. ஆனால் அரண்மனையே ஓசையின்றி துயிலில் இருந்தது. அவன் எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மிகத்தொலைவில் எவரோ யாழ் மீட்டினர். மஞ்சத்தில் காதமைத்துக்கிடந்தால் மட்டுமே அதை கேட்கமுடிந்தது. அந்த மெல்லிய இசை அவன் உள்ளத்தை நிறைவிலும் நிறைவுடன் இணைந்த தனிமையிலும் ஆழ்த்தியது. இனிய மயக்கம். இனிய துயரம். அவன் விழிகள் தாழ்ந்தன. காம்பில்யத்தில் அவன் காலடிவைத்தபோது எழுந்த அந்த பொருளறியா இனிமை நெஞ்சில் நிறைந்தது.

அவன் துவாரகையின் சுழல்சாலையில் ஏறி ஏறி சென்றுகொண்டிருந்தான். ஆனால் மாளிகைக்கு மாறாக அந்தப்பெருவாயிலை சென்றடைந்தான். சுற்றும் எவருமில்லை. அவனும் அப்பெருவாயிலும் மட்டும்தானிருந்தனர். பேருருக்கொண்ட அந்த வாயில் விண் நோக்கி திறந்திருந்தது. நகரம் அதன் காலடியில் சிலம்பெனச் சுருண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.

அவனால் அந்த நீள்சட்டகத்திற்குள் நின்ற நீலவானத்தை முழுமையாக காணமுடிந்தது. வானிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுவானம். ஒரு துண்டு நீலம். அவன் நோக்கியிருக்கவே பெருவாயில் முழுமையாக மறைந்தது. வானத்தின் தூயநீலம் மட்டும் எஞ்சியிருந்தது. நீலம் விழிகளை நிறைத்தது. அவன் அதை நோக்கிக்கொண்டே இருந்தான். ”இளவரசே” என்று ஏவலன் அழைத்த ஒலியில் எழுந்துகொண்டான். அமைச்சர் கருணர் அவனைப்பார்க்கச் சித்தமாக இருப்பதாக அவன் சொன்னான்.

அவன் எழுந்து முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு சிவந்த விழிகளுடன் வீங்கியதுபோல தோன்றிய முகத்துடன் நடந்து சென்றான். விழித்தகணம் அந்த இனிமை வந்து நெஞ்சில் நிறைந்திருப்பதை வியந்தான். அமைச்சுநிலையின் பெரிய மாளிகைக்குள் தன் பெருங்கூடத்தில் எழுத்துப்பீடத்திற்குப் பின்னால் கருணர் திண்டின் மேல் அமர்ந்திருந்தார். அவரைச்சூழ்ந்து பல்வேறு சிற்றமைச்சர்களும் ஓலைநாயகங்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமாக பேசியபடியும் அவர்கள் அளித்த ஓலைகளை புரட்டி வாசித்து குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த ஓலைநாயகத்திற்கு சொற்களை சொன்னபடியும் இருந்தார். ஏவலன் அவர் அருகே சென்று அவன் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து “வருக இளவரசே” என்றார்.

சாத்யகி அருகே சென்று வணங்கினான். “சற்று நேரம் பொறுங்கள், இவர்களை அனுப்பிவிடுகிறேன், காலையில் துயில்களைந்து இதற்காகவே வந்தேன்” என அவர் ஓலைகளை வாசித்து கைகளால் குறிப்புகளை எழுதி பக்கத்திலிருந்த செயலகனிடம் கொடுத்துக்கொண்டே பேசினார். “இங்கே திடீரென வணிகம் பெருகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. இளவரசி ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள் என்று கதைகள் உருவானதனால் இருக்கலாம். கருவூலப்பொன் முழுக்க கடைத்தெருவுக்கு வரப்போகிறது என்று உவகைகொண்டிருக்கிறார்கள் வணிகர்கள்” என்றார். “ஆனால் பொருட்கள் வந்திறங்கினாலே விற்கப்பட்டுவிடும். இன்றுவரை நாங்கள் எதையுமே வாங்கவில்லை. எங்கள் கருவூலத்திற்கு சுங்கம் வந்துகொண்டிருக்கிறது.”

சாத்யகி அமர்ந்துகொண்டு “துவாரகையிலும் இதன் எதிரொலி இருக்கிறது. அங்கும் திடீரென வணிகம் கூடியிருக்கிறது. துவாரகையின் வணிகம் இந்திரப்பிரஸ்தம் வந்தால் குறைந்துவிடும் என்று ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் ஒரு வணிகநகரம் இன்னொன்றை வளர்க்கவேசெய்யும் என்கிறார் யாதவர்” என்றான். கருணர் “அது எனக்குப்புரியவில்லை. துவாரகையின் கணக்குகளே வேறு. சுங்கத்தைக் குறைத்து கருவூலவரவை பெருக்கமுடியும் என்று துவாரகையின் அமைச்சர் ஒருவர் சொன்னார். பெரும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினால் அரசுக்கு வரவு கூடும் என்றார். எல்லாமே புதிய செய்திகள்” என்றார்.

சாத்யகி ”அதை துவாரகையில் காணவே முடிகிறது” என்றான். கருணர் சிரித்தபடி “நான் பழைய மனிதன். எனக்கு துவாரகை ஒரு புதிர்நகரம். துவாரகையை நன்கறிந்த ஒருவர்தான் இங்கிருக்கிறார். எங்கள் இளவரசி” என்றார். சாத்யகி “ஆம், அவர் ஒரு துவாரகையைத்தான் உருவாக்க எண்ணுகிறார் என்றார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் துவாரகைக்கு முற்றிலும் மாறான ஒரு நகரை உருவாக்க நினைக்கிறார்கள். உருவளவுக்கே ஆடிப்பாவையும் பெரிதானது அமைச்சரே என்று என்னிடம் சொன்னார்கள். துவாரகை செய்யாமல் விட்டவற்றால் ஆன நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றார்கள்.”

பேசிக்கொண்டே அவர் ஒவ்வொருவருக்கான ஆணைகளையும் சொல்லி அனுப்பியபின் “திருமகள் ஓர் இல்லத்தில் கால்வைத்தாள் என்றால் நடனமிடத்தொடங்கிவிடுவாள். இங்கு இளவரசியின் மணநிகழ்வு நடந்தபின் ஒவ்வொருநாளும் மணநிகழ்வுகளே. சேதிநாட்டு இளவரசியரின் மணநிகழ்வு சென்றவாரம்தான். ஒவ்வொரு இளவரசருக்காக மணநிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

“இளவரசர்களுக்கு இன்னமுமா மணம் நிகழவில்லை?” என்றான் சாத்யகி வியப்புடன். "மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன? இளவரசர் சித்ரகேதுவுக்கு மட்டுமே முன்னர் மணமாகியிருந்தது. சிருஞ்சயகுலத்து எளிய குலமகள் அவள். மூத்த இளவரசர் ஐங்குலத்தலைவர்களின் மகளை மட்டுமே மணக்கவேண்டுமென இங்கு நெறியுண்டு. பிற இளவரசர்களுக்கும் இங்கேயே மணமகள்களை நோக்கியிருக்கலாம். ஆனால் அரசர் ஷத்ரிய நாடுகளிலிருந்து இளவரசிகளை தேடினார். அவர்களுக்கு பெண்கொடுக்க தயக்கம்.”

கருணர் சிரித்து ”சொல்லப்போனால் அனைவருமே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொடுப்பதற்காக பெண்களுடன் காத்திருந்தனர். இப்போது யாருக்கு என்ன அரசு என்பதும் எவருக்கு எவர் மணமகள் என்பதும் முடிவாகிவிட்டது. அத்துடன் பாண்டவர்களுடன் பாஞ்சாலம் கொண்டுள்ள உறவும் துவாரகையுடன் கொண்டுள்ள புரிதலும் இன்று பாரதவர்ஷம் முழுக்க தெரிந்துவிட்டது. அரசர்கள் பெண்களின் பட்டுச்சித்திரங்களுடன் ஒவ்வொருநாளும் தூதர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

சாத்யகி புன்னகைத்து “இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதவர்ஷமே இரண்டாக பிரிந்துவிடுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாளவனுக்கு மூன்றுபெண்கள். இளவரசர்கள் சுமித்ரர், ரிஷபர், யுதாமன்யு மூவருக்கும் அவர்களை முடிவுசெய்திருக்கிறோம். சால்வருக்கு ஒருமகள். அவளை விரிகருக்கு பேசிவிட்டோம். பாஞ்சால்யருக்கும் சுரதருக்கும் கோசலத்து இளவரசியரை கேட்டிருக்கிறார்கள். எங்கள் தூதர் அவர்களை நேரில்பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.”

"அனைத்து மணங்களையும் ஒரே விழவாக எடுப்பீர்களா?” என்றான் சாத்யகி. “ஆம், அதுவே எண்ணம். ஆனால் உத்தமௌஜருக்கும் சத்ருஞ்ஜயருக்கும் ஜனமேஜயருக்கும் துவஜசேனருக்கும் பாஞ்சாலப் பெருங்குலங்களில் இருந்தே பெண்களைக் கொள்ளலாம் என்பது அரசரின் விருப்பம். ஏனென்றால் அரசியரவையில் பாஞ்சாலர்களே எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும்” என்று கருணர் சிரித்தார். சாத்யகியும் சிரித்தான்.

சாத்யகி “இளவரசர் திருஷ்டத்யும்னர் நலமடைந்துவிட்டாரா?” என்றான். “எழுந்துவிட்டார். இன்னமும் முழுமையாக நடமாடத் தொடங்கவில்லை. அவரது மணத்தைத்தான் அரசர் முதன்மையாக எண்ணிக்கொண்டிருக்கிறார். வங்கம் கலிங்கம் இரண்டில் ஒன்றிலிருந்து இளவரசியரை கொள்ளவேண்டும் என்பது அவரது எண்ணம். இந்திரப்பிரஸ்தம் அமையும்போது அதற்கு ஒரு கடல்துறைமுகம் தேவையாக இருக்கும். தாம்ரலிப்தியுடனான உறவு அதற்கு இன்றியமையாதது என நினைக்கிறார்.”

சாத்யகி “அதை அனைவரும் நினைப்பார்கள். இன்று திடீரென்று வங்கமும் கலிங்கமும் முதன்மைநாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான். கருணர் “ஆம், இந்த திருமண ஆட்டம் முடிந்தபின்னர்தான் எவர் எங்கிருக்கிறார் என்பதையே சொல்லமுடியும்” என்றார். ”போர் ஒன்று நிகழுமென்று பேசிக்கொள்கிறார்களே?” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா?” என்றார் கருணர். “போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள்.”

“ஏன்?” என்றான் சாத்யகி. “அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. நாமெல்லாம் அதை நுண்வடிவில் அன்றாடம் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” கருணர் நகைத்து “இளவரசியின் மணம் முடிந்ததுமே மீண்டும் போர்குறித்த பேச்சுக்கள் வலிமை கொண்டன. இப்போது இளவரசர்களின் மணப்பேச்சுக்கள் அதை அழுத்தி வைத்திருக்கின்றன. அரசு என்பது மக்களுக்கு கேளிக்கையூட்டுவதும்கூட. அரசகுலத்தவர் மேடைநடிகர்கள். போரே அவர்கள் விழையும் பெரும்கேளிக்கை. நாடகத்தின் உச்சம் அல்லவா அது?" என்றார்.

சாத்யகியால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் இளவரசிக்கு துவாரகையின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது. யாதவப் பேரரசியையும் இளையபாண்டவர்களையும் பார்த்து இளவரசர் தருமரின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அரசவை இன்று மாலையில்தான் கூடுகிறது. நீங்கள் அரசரையும் இளைய அரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்தித்து முறைமைசெய்ய அதுவே தருணம். நேற்று இரவு நெடுநேரம் இங்கே அரசுசூழ் அவை கூடியிருந்தது. காலைப்பறவைக் குரல் கேட்டபின்னரே முடிந்தது. மணநிகழ்வுகளை பேசிப்பேசி முடியவில்லை” என்றார் கருணர்.

சாத்யகி “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இப்போது நீர் இளவரசியை சந்திக்கலாம். நான் செய்தி அனுப்புகிறேன். அவர் துயிலெழுந்து சித்தமானதும் செல்லலாம். அதற்கு முன் என்னுடன் உணவருந்தும்” என்றார் கருணர். சாத்யகி தலைவணங்கினான். “இதோ இந்த கூட்டத்தை அனுப்பிவிடுகிறேன். அனைத்துமே சுங்கச்செய்திகள்...” என ஓலைகளை வாங்கத் தொடங்கினார்.

அவருடன் அவன் உணவருந்திக்கொண்டிருக்கையில் பாஞ்சாலி அழைப்பதாக செய்தி வந்தது. கருணர் ஆணையிட ஒரு பணியாளன் அவனை மகளிர்மாளிகைக்கு அழைத்துச்சென்றான். அவன் அவளை நோக்கி செல்லச்செல்ல கால் தளர்ந்தான். இடைநாழியில் நடக்கும்போது திரும்பிவிடலாமென்ற எண்ணமே வந்தது. எண்ணங்கள் மயங்கி எங்கென இல்லாது சென்றவன் ஏவலன் கதவைத்திறந்து தலைவணங்கியதும் திகைத்தான். குழலையும் கச்சையையும் சீரமைத்துவிட்டு உள்ளே சென்றான்.

விருந்தினர் கூடத்தில் போடப்பட்டிருந்த பீதர்நாட்டு பீடத்தில் பாஞ்சாலி அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து முகமன் சொன்னாள். “துவாரகையின் இளவரசருக்கு நல்வரவு.” அவளுடைய செம்பட்டாடையும் அணிகளும் மெல்லிய ஒலியெழுப்பி ஒளிவிட்டன. கைகள் தழைந்தபோது வளையல்கள் குலுங்கின. சாத்யகி “நான் துவாரகையின் இளவரசன் அல்ல. வெறும் யாதவன்” என்றான்.

“அதை நீங்கள் தன்னடக்கத்திற்காக சொல்லலாம். இளைய யாதவர் உள்ளத்தில் உங்களுக்கான இடமென்ன என்று பாரதவர்ஷமே அறியும்.” அவள் புன்னகைத்தபோது மலைகள் நடுவே சூரியன் எழுந்தது போலிருந்தது. “அவருக்காக அடிமைக்குறி பொறித்துக்கொண்டவர் நீங்கள் என்கிறார்கள்.” சாத்யகி தலை நிமிர்ந்து “ஆம், உண்மை. என் தகுதி அது மட்டுமே” என்றான். அவள் மீண்டும் புன்னகைத்து “அடிமைக்குறியை நெஞ்சில் பொறித்துக்கொண்ட பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் அவருக்கு...” என்றபின் ”அமருங்கள்” என்றாள்.

அவள் கைநீட்டியபோது உள்ளங்கையின் செம்மையை நோக்கி அவன் உளம் அதிர்ந்தான். அவன் நன்கறிந்த கை. நன்கறிந்த விரல்கள். “துவாரகையின் செய்தி இருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் தன் கச்சையிலிருந்து வெள்ளிக்குழலை எடுத்து அவளுக்களித்தான். அவள் கைநீட்டி அதன் மறுநுனியை பற்றியபோது அவன் கைகள் நடுங்கின. அக்குழாய்க்குள் இருந்த செப்புத்தகடுச்சுருளில் சிறிய புள்ளிகளாக பொறிக்கப்பட்டிருந்த மந்தண எழுத்துக்களை அவள் விரல்களால் தொட்டுத்தொட்டு வாசித்து விட்டு புன்னகையுடன் “நன்று” என்றாள்.

சாத்யகி “என்னிடம் அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை யாதவர்” என்றான். “இருசெய்திகள். ஒன்று, நகர் புனைய நான் கோரிய செல்வத்தை துவாரகை அளிப்பதற்கு யாதவர் ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல முதன்மையானது” என்று புன்னகைத்து “வங்கனின் மகளை திருஷ்டத்யும்னனுக்காக பார்க்கிறோம் என்ற செய்தியை அறிந்திருக்கிறார் இளைய யாதவர். மூத்தவள் சுவர்ணையை திருஷ்டத்யும்னனுக்கு முடிவுசெய்தால் அவள் தங்கை கனகையை உங்களுக்காக பேசும்படி சொல்லியிருக்கிறார்” என்றாள்.

அவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. அவள் புன்னகையுடன் “மணநிகழ்வு என்றதுமே தாங்கள் கனவுக்குள் சென்றுவிடவேண்டியதில்லை” என்றாள். சாத்யகி விழித்து “யாருக்கு மணம்?” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா?” என்றாள். சாத்யகி திகைத்து உடனே தன்னைத் திரட்டிக்கொண்டு “நான் தங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை இளவரசி” என்றான்.

"வங்க இளவரசியை உங்களுக்கு பேசிமுடிக்கும்படி உங்கள் இறைவனின் ஆணை” என்றாள். சாத்யகி “வங்க இளவரசியா? திருஷ்டத்யும்னருக்கு...” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா?” என்றாள்.

அவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியபடி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான். “அப்படியென்றால் என் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். அந்த உரிமையை இந்த ஓலையின்படி எனக்களித்திருக்கிறார் இளைய யாதவர்.” சாத்யகி தலைவணங்கினான். அவளை ஏறிட்டுப் பார்க்கலாகாதென்று எண்ணிக்கொண்டான். அவள் சிரிப்பு வேறுவகையானது. நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. மணமான பெண்ணின் சிரிப்பு. ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.

”சமுத்ரசேனரின் மைந்தர் பகதத்தர் பீமசேனருக்கு நிகரான தோள்வல்லமை கொண்டவர் என்று புகழ்பெற்றிருக்கிறார். பீமசேனருடன் ஒரு மற்போர் புரிவதை எதிர்நோக்கியிருப்பதாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள் திரௌபதி. “சந்திரசேனரின் மைந்தர் கஜபாகு தன்னை இளைய யாதவருக்கு நிகரானவர் என நினைக்கிறார். தன் பெயரையே சூதர்கள் புண்டரிக வாசுதேவர் என அழைக்கவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார் என்றார்கள்.” சாத்யகி புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் அவ்விழைவுகளின் உண்மையான சுவையை நாம் அவர்களுக்கு காட்டிவிடவேண்டியதுதான்” என்றான். திரௌபதியும் “ஆம்” என்று புன்னகைத்தாள்.

”வங்கர்களுக்கு நெடுங்காலமாகவே எந்தவிதமான மதிப்பும் கங்காவர்த்தத்தில் இருந்ததில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கங்கைக்கரையின் நாணல்மக்களிடமிருந்து உருவானவர்கள். கௌதம குலத்து முனிவரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் என்ற புராணத்தை ஓரிரு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆகவே தொன்மையான பெருங்குடிகள் அவர்களுடன் மணவுறவு கொண்டதுமில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் வங்கத்தின் தாம்ரலிப்தி பெருந்துறைமுகமாக எழுந்துவிட்டது. இன்று அவர்களை சாராமல் எந்த நாடும் நீடிக்கமுடியாதென ஆகிவிட்டிருக்கிறது.”

சாத்யகி “எனக்கு இந்தக் கணக்குகள் புரிவதில்லை” என்றான். “ஆகவே இவற்றை என் நினைவில் நிறுத்திக்கொள்வதுமில்லை.” பாஞ்சாலி “அப்படியே இருங்கள். எளிய போர்வீரராக இருக்கும்போதுதான் உங்கள் ஆற்றல் முழுமையாக வெளிப்பட முடியும்” என்றபின் “நானே கனகையைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் உங்களுக்கு உற்றதுணைவியாக இருப்பாள் என நினைக்கிறேன்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தலையை அசைத்தான்.

“இளவரசர்களை சந்தித்தீர்களா?” என்றாள் திரௌபதி. அவள் பாஞ்சால இளவரசர்களை சொல்கிறாள் என எண்ணி சாத்யகி “இல்லை, மாலையில்தான் அரசவை கூடுகிறது என்றார்கள்” என்றான். திரௌபதி “இல்லை, நான் பாண்டவர்களை சொன்னேன்” என்றாள். அவள் அவர்களை அப்படி சொல்வாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. “இல்லை, தங்களை சந்தித்தபின்னர்தான் அவர்களை சந்திக்கவேண்டும். அவர்களுக்கு முதன்மைச்செய்தி என ஏதுமில்லை. எளிய முறைமைச்செய்தி மட்டுமே” என்றான்.

திரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி “இளையபாண்டவர் பீமசேனர் இரண்டு துணைவிளுடன் கங்கைக்கரை வேனல் மாளிகையில் இருக்கிறார். நகுலன் அவரது துணைவியுடன் மறுபக்க மாளிகையில் இருக்கிறார். யாதவ அரசியின் மாளிகை நீங்கள் அறிந்ததே” என்றாள்.

“ஆம்” என்றான் சாத்யகி. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பெரிய வெண்கல மணியின் ரீங்கரிக்கும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. அந்த இசையைத்தவிர உள்ளத்தில் ஏதும் எஞ்சவில்லை. எண்ணங்களனைத்தும் அதனுடன் இணைந்துகொண்டன. “அங்கே முதற்பாண்டவர் தன் துணைவியுடன் நலமாக இருக்கிறார் அல்லவா?” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்?” சாத்யகி “அவர் துவாரகையில்தான்... எப்போதும் இளைய யாதவருடன் இருக்கிறார்” என்றான்.

“ம்” என்றாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் சாத்யகி “அங்கே கோமதி ஆற்றை திருப்பி துவாரகைக்கு அருகே கொண்டுவருகிறார்கள். அந்தப்பணிகளைத்தான் இளையபாண்டவரும் செய்துவருகிறார்” என்றான். திரௌபதி அவன் விழிகளை கூர்ந்து நோக்க சாத்யகி பார்வையை திருப்பிக்கொண்டான். ”அவர் எப்போது இங்கு வரப்போகிறார் என்று சொன்னார்?” என்றாள். சாத்யகி “சொல்லவில்லையே” என்றான். அவள் விழிகளை மீண்டும் நோக்கியபோது அவை முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை.

“எனக்கென ஓர் உதவிசெய்ய முடியுமா?” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா?” என்றான். உடனே “ஆணையிடுங்கள் தேவி” என்றான். "நீங்கள் அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும்” என்றாள். சாத்யகி “ஆணை” என்றான். “அங்கே பானுமதியை சந்திக்கவேண்டும். நான் அவளிடம் மட்டும் சொல்லவிழைவது ஒன்றுண்டு. அதை சொல்லவேண்டும்.” சாத்யகி “ஓலை அளியுங்கள், சென்று வருகிறேன்” என்றான். “ஓலையில் சொல்லக்கூடியது அல்ல” என்றாள் திரௌபதி.

அவள் விழிகள் மீண்டும் மாறின. அவன் திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தான். அவள் பிறிதொருத்தியாக மாறியிருந்தாள். ”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” சாத்யகி “ஆம், சொல்கிறேன்” என்றான். அச்சொற்களை அவன் மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டான்.

“அவள் என்றோ ஒருநாள் என்னுடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பாள் என்று நினைக்கிறேன். அப்போது தெரியவில்லை என்றே நானும் மறுமொழி சொல்வேன். அதை இப்போதே சொல்கிறேன் என்று சொல்லுங்கள். இப்புவியில் நான் அணுக்கமாக உணரும் முதல்பெண் அவள் என்றும், தங்கை என்று நான் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் என்றும் சொல்லுங்கள்.” அவள் தன் கையில் இருந்து ஒரு கணையாழியை கழற்றி அவனிடம் அளித்து “அவளிடம் இதை கொடுங்கள்” என்றாள்.

“அவளுக்கு எனது திருமணப்பரிசு இது” என்றாள் திரௌபதி. அப்போது அவள் முகம் மீண்டும் பழையபடி மாறியிருந்தது. “இதிலுள்ள வெண்ணிறமான மணி ஐந்து அன்னையரில் இரண்டாமவளான லட்சுமியின் உருவம் என்கிறார்கள். எங்கள் குலத்து மூதன்னை ஒருத்தியின் கையில் இருந்து வழிவழியாக வந்தது. என் அன்னை எனக்களித்தாள். நான் அவளுக்கு அளிக்கிறேன்.” சாத்யகி அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.

பகுதி 16 : தொலைமுரசு - 3

விடியற்காலையில் காம்பில்யத்தின் தெருக்கள் முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தன. பெரியதோர் சிலந்திவலையை கிழிப்பது போல பனிப்படலத்தை ஊடுருவிச்சென்றுகொண்டே இருக்கவேண்டியிருந்தது. அணிந்திருந்த தடித்த கம்பளி ஆடையைக் கடந்து குளிர் வந்து உடலை சிலிர்க்கச்செய்தது. முன்னால் குந்தியின் தேர் சென்றுகொண்டிருக்க பின்னால் சாத்யகி தன் புரவியில் சென்றான். சகட ஒலி மிக மெலியதாக எங்கோ என கேட்டது. வளைவுகளில் அலைபோல திரும்பி வந்து செவிகளை அறைந்தது.

படித்துறையை அடைந்ததும் குந்தியின் தேர் விரைவிழந்து சரிந்து பின்கட்டை ஒலியுடன் மெல்ல இறங்கி பலகைப்பரப்பில் ஏறி அதிர்வோசையுடன் உருண்டு சென்று வளைந்து நின்றது. குதிரைகள் கடிவாளம் இழுபட கழுத்துக்களை தூக்கி குளம்புகளால் மரத்தரையை உதைத்தன. ஏவலர் வந்து அவற்றின் கடிவாளத்தை பற்றிக்கொள்ள இருவர் தேரின் வாயிலை திறந்தனர். நீட்டப்பட்ட மரப்படியில் கால்வைத்து இறங்கிய குந்தி திரும்பி அவனை நோக்கிவிட்டு பனித்திரைக்குள் பந்த வெளிச்சம் தீயாலான சிலந்திவலை போல தெரிந்த சுங்க மாளிகை நோக்கி சென்றாள்.

சாத்யகி தன் புரவியை நிறுத்தி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு அவளை பின்தொடர்ந்து சென்றான். அவர்களுக்கான பன்னிரு பாய்கொண்ட பெரிய படகு துறைமேடையில் காத்து நின்றிருந்தது. பதினெட்டு பாய்களுடன் பெரிய காவலர்படகு முன்னரே கங்கைக்குள் சென்று காத்து நின்றது. இருபடகுகளும் வெண்சாம்பல்நிறமான பனித்திரையில் அருகருகே வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தன. துறைமேடையை அறையும் நீரின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

சுங்கத்தலைவன் வந்து குந்தியை வணங்கி உள்ளே அழைந்த்துச் சென்றான். அவள் அங்கே பெரியபீடத்தில் கம்பளியாடையை போர்த்தியபடி உடல்குறுக்கி அமர்ந்தாள். விடியற்காலையில் விழியிமைகள் சற்று தொங்கி முகம் சுருங்கி அவள் மேலும் முதுமைகொண்டுவிட்டதுபோல தோன்றியது. சாத்யகி அருகே சென்றதும் நிமிர்ந்து பீடத்தை சுட்டிக்காட்டினாள். அவன் அமர்ந்ததும் அவள் உடலை சற்று அசைத்து “இந்தப்பெண்கள் என்றுமே பணிந்துதான் வாழ்ந்தாகவேண்டும் மைந்தா” என்றாள். சாத்யகி நிமிர்ந்தான். அவன் எண்ணிக்கொண்டிருப்பதையே அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அவர்களுக்கு வேறுவழியில்லை. இவள் ஒரு வேங்கை. இவளிருக்கும் காட்டில் பிறருக்கு இடமில்லை. அதை எவ்வளவு விரைவாக இவர்கள் உணர்ந்துகொள்கிறார்களோ அந்த அளவுக்கு இவர்களின் வாழ்க்கை இனிதாகும்.” சாத்யகி தலையசைத்தான். ”இவர்களின் எண்ணங்களில் பிறபெண்கள் நுழையவேயில்லை. அதை முதல்நாளே இவர்கள் புரிந்துகொண்டும்விட்டார்கள்.” சாத்யகி அந்தப்பேச்சை தவிர்க்க விழைந்தான். ஆனால் அதை எப்படி சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. ”இவர்கள் அவளை எதிர்க்கமுடியாது. தேக்கப்பட்ட நீர் விரிசல்களில் ஊறுவதுபோல சிறுமையாக அது வெளியாகிவிடக்கூடாது. அதை இப்போது விட்டுவிட்டால் பின்னர் இங்கும் சில இளைய காந்தாரிகள்தான் இருப்பார்கள்.”

சாத்யகி “ஆம்” என்றான். “எளிய அரண்மனை பணிப்பெண்ணாக இருக்குமளவுக்கு இவர்களின் ஆணவம் சுருங்குமென்றால் இவர்களுக்கு வாழ நிறைய இடம் கிடைக்கும். இல்லையேல் ஒவ்வொருநாளும் புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்” என்றாள் குந்தி. “நான் சிபிநாட்டிலும் மத்ரநாட்டிலும் மகள்கொள்ள ஒப்புக்கொண்டதே இதனால்தான். அவர்கள் சிற்றரசர்களின் எளிய பெண்கள். காசிநாடும் சேதிநாடும் பெரியவை. அவர்களால் எளிதில் வளையமுடியவில்லை.” “அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்றான் சாத்யகி.

குந்தி “ஆகவேதான் இவர்கள் இங்கேயே இருக்கட்டுமென முடிவுசெய்தேன். பாஞ்சாலத்தின் மண்ணில் திரௌபதியின் இளையோள்களாக இருக்கட்டும். அனைத்து அரண்மனைநிகழ்வுகளிலும் பங்கெடுக்கட்டும். மெல்லமெல்ல அவர்களின் ஆணவம் வளையலாம்...” என்றாள். சாத்யகி புன்னகைத்து “வளைந்தால் நன்று” என்றான். “வளையும். ஏனென்றால் பெண்கள் மைந்தரைப்பெற்று வாழவிழைபவர்கள். வளையாமல் வாழமுடியாதென்றாலே வளையத்தொடங்கிவிடுவார்கள்...” என்றாள் குந்தி. “தேவிகையையும் விஜயையையும் நான் கூடுதல் அணுகியறியமுடியவில்லை. இவர்களுடன் இங்கே வரவேண்டியிருந்தது. பீமன் சேதியிலும் காசியிலும் மகள்கொள்ளப்போவதை சொன்னபோதே எனக்கு தெரிந்தது, வேறு வழியில்லை என. மணநிகழ்வுக்கு நான் இங்கே இருந்தாகவேண்டும்.”

வெளியே சகடஒலி எழுந்தது. “நகுலன், அவனை வரச்சொல்லியிருந்தேன்” என்றாள் குந்தி. “அவன் உன்னை தனிமையில் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு சேதிநாட்டுக்கும் இளையயாதவனுக்கும் இருக்கும் உட்பகைபற்றி இன்னமும் முழுமையாகத்தெரியாது. சுருதகீர்த்தியின் வஞ்சம் அவள் மைந்தன் உள்ளத்தில் மட்டும் அல்ல மகள்களின் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. ஆண்களைப்போலன்றி பெண்களால் வஞ்சத்தை எளிதில் மறைத்துக்கொள்ள முடியும். நகுலனிடம் நீ அதை சொல்லவேண்டும்” என்றாள். “நானா?” என்றான் சாத்யகி. “ஆம், நீ இளைய யாதவனின் குரல் என அனைவரும் அறிவர். உன் சொற்களுக்கிருக்கும் வல்லமையை நீ அறியமாட்டாய்.”

ஏவலன் வந்து நகுலன் வருகையை அறிவிக்க அவனை வரும்படி சொல்லிவிட்டு குந்தி “அவனிடம் சொல்.பெண்ணிடம் அன்புகொள்வது அவளை புரிந்துகொள்வதும் வேறுவேறு என்று” என்றாள். நகுலன் உள்ளே வந்து வணங்கினான். “உன்னைத்தான் எதிர்நோக்கிக்கொண்டிருந்தேன். நீ காலையில் எழாமலிருந்துவிடுவாயோ என எண்ணினேன்” என்றாள் குந்தி. சாத்யகி அதிலிருந்த முள்ளை உடனே உணர்ந்துகொண்டான். நகுலன் அதை இமையசைவுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டதும் அவனுள் ஒரு புன்னகை மலர்ந்தது. “யாதவரே, தங்களை நேற்று அவையில் கண்டு முறைமைச்சொல் சொன்னாலும் தனியாக பேசமுடியவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆகவேதான் வந்தேன்” என்றான்..”ஆம், அவையில் நான் உங்களிடம் பேசமுடியாது” என்றான் சாத்யகி.

“துருபதர் ஐயமும் கலக்கமும் கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். “ஒவ்வொன்றும் கௌரவர்களுக்கு உவப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார். சேதிநாட்டு இளவரசிகளை வென்றால் சிசுபாலன் நம்முடன் வந்துவிடுவான் என எண்ணினார். ஆனால் அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டிருக்கிறான். கோசலத்திலிருந்து இளையகௌரவர்களுக்கு மகள்கொள்கிறார்கள். அங்கம் அவர்களுடன் இருக்கிறது. வங்கத்தின் இருநாடுகளும் யாதவர்கள் மேல் சினம்கொண்டிருக்கின்றன. துவாரகை எழுந்ததுமே தாம்ரலிப்தியின் வணிகம் சரிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது கங்காவர்த்தத்தின் தென்திசை முழுக்கவே நமக்கு எதிராகிவிட்டது என எண்ணுகிறார்.”

“அதையெல்லாம் இப்போது எண்ணுவதில் பொருளில்லை” என்று சாத்யகி சொன்னான். “இன்னமும் எதுவும் முடிவாகவில்லை. அஸ்தினபுரியின் முடிசூட்டு விழா முடிந்து ஆறுமாதங்கள் கடந்தபின்னர்தான் சித்திரம் தெளிவடையும். அதுவரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்." நகுலன் புன்னகைத்து “அப்படி காத்திருக்க அரசர்களால் முடியாதே... அவர்கள் காலத்தைக் கடந்து நோக்கித்தானே வாழமுடியும். துருபதர் இரவும்பகலும் துயில்வதில்லை. அவையிலிருப்பவர்கள் பகல் முழுக்க துயில்கிறார்கள்” என்றான். சாத்யகி சிரித்து “முடிசூட்டுவிழாவுக்குப்பின் இவரை நேரடியாகவே காந்தாரருடன் பகடை ஆட அமரச்செய்யலாம்” என்றான். நகுலனும் உரக்க நகைத்தான்.

சாத்யகி “நாம் படகுக்குச் சென்று அங்கே அனைத்தும் சித்தமாக உள்ளனவா என்று பார்ப்போம்” என எழுந்தான். நகுலன் குந்தியை வணங்கிவிட்டு தொடர்ந்து வந்தான். “நேற்று தங்கள் துணைவியையும் பார்த்தேன்” என்றான். நகுலன் “தெரியும், சொன்னாள்” என்றான். சாத்யகி சிலகணங்கள் தயங்கியபின் “நான் சற்று கூரிய சொற்களை சொல்லவேண்டியிருந்தது” என்றான். “ஆம், நீங்கள் சொன்னதையும் அவளே சொன்னாள்” என்றான் நகுலன். “அது இயல்பே. அவள் தன்னை யாதவகுலத்தவளாக எண்ணவில்லை. தமகோஷரின் ஷத்ரிய குலத்தவளாகவே சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். தன் கொடிவழி கௌதமம் என்று முதல்நாள் என்னிடம் சொன்னாள். எப்படி என்றேன். கௌதம தீர்க்கதமஸின் குருதி அவள் என்றாள்.”

சிரித்துக்கொண்டே நகுலன் சொன்னான் “பெண்ணை நான் அணுகியறியாதவன். ஆகவே அது ஒரு புராணக்குறிப்பு மட்டும்தானே என்று சொல்லிவிட்டேன். அன்றிரவு அனைத்துச் சொற்களாலும் பிழைபொறுக்கக் கோரி முடித்து இணக்கமாகும்போது விடிந்துவிட்டிருந்தது.” சாத்யகி “பெரும்பாலானவர்கள் முதல்நாள் அந்தப்பிழையை செய்வதுண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான். “ஆம், ஆனால் மறுநாள் அவளிடம் அவளுடைய கூந்தல் போதிய அளவுக்கு நீளமில்லை என்று ஏதோ சொன்னேன். அவ்வளவுதான். மும்மடங்கு கொதித்தெழுந்துவிட்டாள். அவளை மண்ணில் இறக்க நான் எனக்குத்தெரிந்த எல்லா சூதர்பாடல்களையும் பாடவேண்டியதாயிற்று.”

“கூந்தல் என்றால் இங்கு பொருளே வேறல்லவா?” என்றான் சாத்யகி. “ஆம், அதை மறுநாள்தான் என் உள்ளம் உணர்ந்தது” என்று சொன்ன நகுலன் “என்னைவிட மேம்பட்ட புரிதல் பெண்களைப்பற்றி உங்களிடமிருக்கிறது யாதவரே” என்றான். “எனக்கா?” என்று சாத்யகி சிரித்தான். “நான் இப்போது வெறும் அரசியல் சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கிறேன்.” நகுலன் “அதுதான் சரியான பார்வையோ என்னவோ” என்றான். சாத்யகி “பாண்டவரே, நான் தங்களிடம் யாதவர்களுக்கும் சேதிநாட்டுக்கும் இடையேயான பகையைப்பற்றி சொல்லவிரும்புகிறேன்” என்றான்.

“உம்” என தலையசைத்து கங்கையை நோக்கி நடந்தான். கங்கையிலிருந்து வந்த காற்றில் இளவேது கொண்ட நீராவியை உணரமுடிந்தது. பாசிமணமும் மீன்மணமும் கலந்த நீர்மணம். ”சேதிநாட்டு யாதவ அரசி அன்னை சுருதகீர்த்தி இளைய யாதவர்மீது பெருவஞ்சம் கொண்டவர்... அறிந்திருப்பீர்.” நகுலன் “ஆம்” என்றான். “சிலவற்றை குறுக்குவழியாகச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் இளவரசே, அதிலொன்று இது” என்று சாத்யகி தொடர்ந்தான்.

“மதுராபுரிக்கு அரசராக உக்ரசேனர் இருக்கையிலேயே இளவரசர் கம்சர் பெருவீரர் என்று புகழ்பெற்றிருந்தார். ஆனால் உக்ரசேனரை பன்னிரு யாதவப்பெருங்குலங்களும் முழுமையாகவே ஒதுக்கிவைத்திருந்தன. அவரது மூதாதை குங்குரர் தன் தமையன் விடூரதரை மதுராபுரியை விட்டுத் துரத்தி ஆட்சியை கைப்பற்றியதை யாதவர் குலங்கள் ஏற்கவில்லை. உக்ரசேனர் எதையும் பொருட்படுத்தாமல் மதுராபுரியை மகதத்தின் படைகளைக்கொண்டு அடக்கி ஆண்டார். யாதவ குலங்கள் வேறுவழியின்றி மதுராபுரியுடன் வணிகம் செய்துவந்தன. ஆனால் எந்தவகையிலும் அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.”

“விருஷ்ணிகுலத்து ஹ்ருதீகரின் மைந்தர் கிருதபர்வரின் மகள் அன்னை சுருதகீர்த்தி. இளமையிலேயே கம்சரின் புகழைக்கேட்டு அவரை தன் கொழுநராக நெஞ்சில் வைத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய விழைவை அறிந்த தமையன் தந்தையிடம் சொல்ல கிருதபர்வர் யாதவர்களின் குலச்சபையில் மதுராபுரியின் இளவரசர் கம்சருக்கு தன் மகளை மணம்புரிந்து கொடுக்க ஒப்புதல் கோரினார். கிருதபர்வரின் இளையவராகிய சூரசேனர் அதை கடுமையாக எதிர்த்தார். யாதவகுலச்சபையின் முதல்வராக இருந்த அக்ரூரரும் எதிர்த்தார். கிருதபர்வர் பணிந்தார். குலச்சபை சுருதகீர்த்தியை அவைக்கு வரவழைத்து ஆழிதொட்டு சொல்லுறுதி பெற்றுக்கொண்டது, மதுராபுரியுடன் எவ்வுறவும் கொள்வதில்லை என்று.”

“அதன்பின்னர்தான் சேதிநாட்டு தமகோஷர் மணவிழைவுடன் வந்தார். அன்று சேதிநாடும் அங்க வங்க நாடுகளும் ஷத்ரியப்பெருங்குலங்களால் ஏற்கப்படவில்லை. சேதிநாடு மகதத்தை அஞ்சியிருந்த காலம். ஆகவே அவர்களுக்கு யாதவர்களின் உறவு பெரிதெனப்பட்டது. தமககோஷர் சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்தி கம்சர் மீதான தன் விழைவை முழுமையாகவே தன்னுள் அழுத்தி அழித்துக்கொண்டார்” சாத்யகி சொன்னான் “ஆனால் கம்சர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது அவருள் விதையாக அணுவாக மாறி புதைந்துகிடந்த பெருங்காதல் பொங்கி எழுந்தது. கம்சரைக்கொன்ற இளையயாதவர் மேல் தீராப்பெருவஞ்சம் கொண்டார்.”

”புரிந்துகொள்ளக் கடினமானது அவ்வஞ்சம் பாண்டவரே” என்று சாத்யகி தொடர்ந்தான். “நான் அதை என் தந்தையிடமிருந்து கேட்டிருக்கிறேன். அவள் கம்சரை மணந்து மைந்தரைப்பெற்று அதன்பின் இளைய யாதவர் கம்சரைக்கொன்றிருந்தால் இந்த வஞ்சத்தில் நூறில் ஒருபங்குகூட இருந்திருக்காது. சுருதகீர்த்தி மணம் கொண்டு சென்ற மறுமாதமே தன் குலத்துடனும் குடியுடனும் அனைத்து உறவுகளையும் வெட்டிக்கொண்டார். அவர் ஒருமுறைகூட யாதவநாட்டுக்கு வந்ததில்லை. யாதவகுலக்குறிகளை சூடுவதோ யாதவச் சடங்குகளை செய்வதோ இல்லை. யாதவர்களின் விஷ்ணுவழிபாட்டை உதறி மகதர்களின் சிவவழிபாட்டுக்குச் சென்றாள். யாதவ குலத்தையே அவள் வெறுத்தாள். இன்று இளைய யாதவர்மீது குவிந்துள்ள அவளுடைய வஞ்சம் அதுதான்.”

“நீர் சொல்வது புரிகிறது. அவ்வஞ்சத்தை நான் கரேணுமதியில் உணர்ந்துமிருக்கிறேன்” என்றான் நகுலன். “ஆனால் எதிரியிடம் மகள் கொண்டுவிட்டு அவளை எதிரியின் கூறாகவே எண்ணி மணவாழ்க்கையில் ஈடுபடமுடியுமா என்ன?” சாத்யகி “அதை நான் அறியேன்” என்றான். “ஆனால் இப்படி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவேண்டும்.” நகுலன் “அந்த உணர்தலுக்கு மணவாழ்க்கையில் எந்த இடமும் இல்லை இளையோனே” என அவன் தோளில் கை வைத்தான். “இச்சிலநாட்களில் நான் உணர்ந்த ஒன்றுண்டு. மணமான முதல்நாள்முதல் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் மாற்றமுயல்கிறார்கள். அவர்களைப்போல அத்தனை அணுக்கமானவர்கள் பிறர் இல்லை என்பதனால் அந்த மாற்றத்தை இருசாராரும் தடுக்கமுடியாது.”

சாத்யகி “நீங்கள் வெல்லவேண்டுமென விழைகிறேன். வேறேது நான் சொல்லமுடியும்?” என்றான். ”சிசுபாலர் தன் உள்ளத்தில் இளைய யாதவருடன் எப்போதும் போரிலிருக்கிறார் என்றார்கள்” என்றான் நகுலன். ”ஆம், அந்தப்போரில் ஒவ்வொருமுறையும் தோற்கிறார். அது அவரை மேலும் வஞ்சம் கொண்டவராக ஆக்குகிறது. இளமைமுதல் இருக்கும் சினம்தான்... ஆனால் எட்டாண்டுகளுக்கு முன்பு விதர்ப்ப மன்னர் பீஷ்மரின் மகள் ருக்மிணியை இளையயாதவர் காந்தருவ மணம் கொண்டபோது அது பெருகிவளர்ந்தது” என்றான் சாத்யகி. “அங்கிருந்தபோது கதைகளை கேட்டிருப்பீர்”

“விதர்ப்ப மன்னருக்கு தன் மகளை இளையயாதவருக்கு மணம்புரிந்தளிப்பதில் விருப்பிருந்தது என்றும் அவரது மைந்தர் ருக்மி விரும்பவில்லை என்றும் அறிந்தேன்” என்றான் நகுலன். “ஆம், துவாரகை அப்போதுதான் எழுந்து வந்துகொண்டிருந்தது. அதன் வல்லமையை அவர் அறிந்திருந்தார். ஆனால் இளவரசர் ருக்மி விதர்ப்பம் இயல்பாகவே மகதத்துடன் இணைந்திருக்கவேண்டிய நாடு என்று எண்ணினார். மகதத்தின் படைகளின் துணையுடன் தெற்கே விந்தியமலையைக் கடந்து சதகர்ணிகளின் நாட்டின்மேல் பரவும் திட்டம் இருந்தது அவருக்கு. ஆனால் அதைவிட முதன்மையானது, அவருக்கு இளைய யாதவர் மேல் இருந்த பொறாமைதான்.”

“பாரதவர்ஷத்தில் கனவுகளும் இலக்குகளும் கொண்டிருக்கும் அத்தனை இளவரசர்களுக்கும் இளைய யாதவர் மேல் வஞ்சம் உள்ளது யாதவரே” என்றான் நகுலன். “ஏனென்றால் அவர்கள் உள்ளூர வழிபடுவது இளைய யாதவரை மட்டுமே. அவர்கள் கனவுகண்டதை நிகழ்த்திக்காட்டியவர் அவர். ஒருபோதும் அவரை அவர்கள் அணுகவும் முடியாது. அவர் இருக்கும்வரை இவர்களின் புகழ் ஒளிராதென்பதும் உறுதி. ஆகவே வேறு வழியே இல்லை, அவர்கள் வஞ்சம் கொண்டுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “ஆம், அதை அவரும் அறிவார்” என்றான். மெல்ல அவன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது.

“என்ன?” என்றான் நகுலன். “இல்லை” என்றான் சாத்யகி. “சொல்லும்!” சாத்யகி சிரித்து “இளைய யாதவர் உண்மையில் அஞ்சவேண்டிய வஞ்சம் என்றால் அது பார்த்தருடையதாகவே இருக்கும். அதனால்தான் அவரை தன்னுடன் சேர்த்துக்கொண்டாரா என எண்ணிக்கொண்டேன்” என்றான். நகுலன் சிரித்து “நீர் நெடுந்தூரம் செல்கிறீர். அந்த அளவுக்குச் சென்றால் மண் மிகமிகக்கீழே போய்விடும்” என்றான். பின்னர் உள்ளத்தை மாற்றும் முகமாக சால்வையைத் திருத்திவிட்டு “நீர் அன்னையிடம் பேசினீரல்லவா? அன்னை என்ன நினைக்கிறார்?” என்றான். “எதைப்பற்றி?” என்றான் சாத்யகி. “இந்த எல்லைப்பிரிவினை பற்றி?”

“எல்லைகள் எளிதாகவே பிரிக்கப்பட்டுவிட்டன. ஆனால் படைகள் பிரிக்கப்படும்போது அவ்வாறு எளிதாக இருக்காது என அஞ்சுகிறார்கள்...” என சாத்யகி சொல்ல “அஞ்சவில்லை, விழைகிறார்கள்" என்றான் நகுலன். “எல்லைகள் இத்தனை எளிதாக பூசலேயின்றி பிரிக்கப்படும் என அவர்கள் நம்பவில்லை. அது அவர்களுக்கு ஏமாற்றம். ஆகவே இனிமேல் படைகள் பிரிக்கப்படுவதில் இறங்கி பகடையுருட்ட விழைகிறார்கள். படைகளும் எளிதாகப்பிரிக்கப்பட்டால் கருவூலம் பிரிக்கப்படுவதில் ஈடுபடுவார்கள். அதன்பின் குலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்பார்கள். உளமோதல் நிகழ்ந்து வஞ்சம் எழாமல் அவர்களுக்குள் திகழும் ஏதோ ஒன்று அமைதிகொள்ளாது.”

சாத்யகி ஏதோ சொல்ல வந்து அது சொல்லாக தன்னுள் எழாததை உணர்ந்து முகம் திருப்பிக்கொண்டான். “நாடு பிரிக்கப்பட்டு முடிந்த கணம் முதல் அஸ்தினபுரிமீதான போரைத்தான் திட்டமிடுவார். ஐயமே வேண்டியதில்லை. இந்த முதியவள் பாரதவர்ஷத்தில் குருதி பெருகாமல் அடங்க மாட்டாள்.” சாத்யகி திகைப்புடன் நோக்க குனிந்து மண்ணை நோக்கியபடி நகுலன் சொன்னான் “அவருக்குள் குடியேறியிருக்கும் அறியாபெருந்தெய்வம் ஒன்று பலி பலி என்று கூத்தாடிக்கொண்டிருக்கிறது. இன்று உள்ளே வந்ததும் அவர்களை நோக்கினேன். முதலில் எழுந்த எண்ணம் அதுதான். முதுமையின் வலிமையின்மை நிறைந்த முகம். துயர்நிறைந்த தனித்த முகம். ஆனால் அவருக்குள் இருந்துதான் அனைத்தும் தொடங்குகின்றன.“

“நீங்கள் கசப்படைந்திருக்கிறீர்கள் இளவரசே” என்றான் சாத்யகி. “அன்னை உண்மையில் விழைவது...” நகுலன் இடைமறித்து “எது என்றே அவருக்குத்தெரியாது. அவர் அந்த தெய்வத்தின் களக்கரு மட்டும்தான்” என்று சொல்லி நீள்மூச்செறிந்து “நடப்பது நடக்கட்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. இளையோனே, இவரிடம் நான் அறியாத பெரும் மந்தணம் ஒன்றிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நச்சுமுள் என அவருக்குள் அது சீழ்பிடித்திருக்கிறது. ஒவ்வொருநாளும் அதை எண்ணியபடி துயிலப்போகிறார். அதை எண்ணியபடி விழித்துக்கொள்கிறார்... இப்போது இந்த தேர்ப்பயணம் முழுக்க அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறார்” என்றான்.

“எதை?” என்றான் சாத்யகி. “தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று உள்ளது. அதை உறுதியாக இளைய யாதவன் அறிவான். ஆகவேதான் அவனிடம் மட்டும் இவர் அகம் திறந்து சிரிக்கமுடிகிறது. அதை ஒருவேளை நீரும் அறிந்திருக்கலாம். ஏனென்றால் நீரும் யாதவன்.” சாத்யகி “இல்லை” என்றான். “சரி” என்ற நகுலன் “அகத்தே நான் அதை அறிவேன், என் கனவுகளில் மட்டும் அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த நாகம் புற்றைவிட்டு எழாமலேயே பார்த்துக்கொள்கிறேன்” என்றான். சாத்யகி அவன் என்ன சொல்கிறான் என்று தெரியாமல் நோக்கினான். ”படகுகள் சித்தமாகிவிட்டன” என்றான் நகுலன் அவன் தோளில் கைவைத்தபடி.

படகின் சங்கு ஒலித்ததும் சுங்கத்தலைவன் சென்று சொல்ல குந்தி போர்வையை நன்றாகப்போர்த்தியபடி உடல் ஒடுக்கி வந்தாள். நகுலனிடம் “நான் அஸ்தினபுரியில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்தியனுப்புவேன்” என்றபின் திரும்பி சாத்யகியிடம் “செல்வோம்” என்றாள். சாத்யகி நகுலனிடம் தலைவணங்கி “சென்று வருகிறேன் இளவரசே” என்றான். “நலம் திகழ்க!” என அவன் வாழ்த்தினான். இருவரும் சென்று நடைபாலம் வழியாக படகில் ஏறிக்கொண்டனர்.

படகின் சங்கு ஒலித்தது. மும்முறை அதை ஏற்று காவல்படகும் சங்கொலி எழுப்பியது. புகைக்குவை எழுவதுபோல ஓசையில்லாமல் வெண்ணிறமான பாய்கள் மேலே எழுந்தன. காற்று அவற்றைத் தொட்டதும் படகு மெல்ல உயிர்கொண்டு தவிப்புடன் கட்டு வடங்களை இழுத்துக்கொண்டு ஆடியது. வடங்கள் அவிழ்க்கப்பட்டதும் மெல்ல கங்கைக்குள் சென்றது. சாத்யகி கரையில் நின்றிருந்த நகுலனை நோக்கினான். குந்தி திரும்பி கரையை நோக்காமால் நீர்வெளியை மூடிய பனிப்படலத்தை நோக்கிக்கொண்டிருந்தாள்.

நீருக்குள் சென்று முழுமையாகவே பனியால் மூடப்பட்டதும் சாத்யகி சென்று குந்தியின் அருகே அமர்ந்தான். “சொல்லிவிட்டாயா?” என்றாள். “ஆம்” என்றான் சாத்யகி. “இளமையில் இருவரையும் ஒருகணம்கூட நான் பிரிந்திருந்ததில்லை. இப்போது எப்படியோ மிக விலகிச்சென்றுவிட்டார்கள்...” குந்தியின் இதழ்கள் சற்று வளைந்து புன்னகைபோல் ஒன்றை காட்டின. “அது இயல்பும் கூட. நாம் செய்வதற்கென ஒன்றுமில்லை.” சாத்யகி “ஆம்” என்றான். “இளையோனும் இவனும் ஆடிப்பாவைகள் போல” என்ற குந்தி பெருமூச்சுடன் “மாத்ரி இருந்திருந்தால் அவளும் இப்படித்தான் அயலவளாக உணர்ந்திருப்பாள்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான்.

“அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லை” என்று குந்தி சொன்னாள். அவள் பேசவிழைவதை சாத்யகி உணர்ந்துகொண்டான். ஆனால் அவள் வெளிப்படுத்த விரும்பாத எதையோ ஒன்றிலிருந்து தன் அகத்தை விலக்கிக்கொண்டுசெல்லவே பேசுகிறாள் என்றும் தெரிந்தது. ”அங்குள்ள ஒற்றர்கள் சொல்லும் செய்திகள் மேலோட்டமானவை. ஒற்றர் செய்திகள் முற்றிலும் உண்மை என்றாலும்கூட அவற்றிலிருந்து நாம் அடையும் அகச்சித்திரம் பிழையாக இருக்க முடியும். ஏனென்றால் செய்திகளுடன் இணைந்த சூழல் முதன்மையானது. அச்செய்தி சொல்பவனின் முகம் உடல் மட்டுமல்ல அது ஒலிக்கும் அக்காற்றே கூட பலவற்றை நமக்கு சொல்லிவிடும்.”

“இங்கிருந்து வீணாக எண்ணங்களைத்தான் பெருக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நுரைபோல பொங்கி அவை நம் சித்தத்தை மூடிவிடுகின்றன. பயனற்ற அச்சங்கள். பொருளற்ற தயக்கங்கள்” என்று குந்தி சொன்னாள். “துவாரகையின் ஒற்றர்கள் என்ன சொன்னார்கள்?” சாத்யகி அவள் எதை கேட்கிறாள் என்று புரியாமல் “எதைப்பற்றி அன்னையே?” என்றான். “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது? ஏன் பேரரசர் காட்டுக்குச் சென்றார்?” சாத்யகி “தாங்கள் அறிந்ததற்கு அப்பால் ஒன்றும் இல்லை” என்றான். “அவர்கள் அன்று அவரை அவரது அறைக்கூடத்தில் சந்தித்திருக்கிறார்கள். எதிர்பாராதபடி பேரரசர் சினம் கொண்டுவிட்டார்.”

“சினம் கொண்டால் ஏன் அங்கநாட்டரசனை தாக்கவேண்டும்?” என்றாள் குந்தி. சாத்யகி திரும்பி அவள் முகத்தை நோக்கி ஓர் அதிர்வை அடைந்தான். அவனறியாத புதியவள் ஒருத்தி அங்கே அமர்ந்திருப்பதாக தோன்றியது. “அவர் அங்கரை தாக்கவில்லை. ஆனால்...” என அவன் சொல்லத்தொடங்க அவள் சீற்றத்துடன் “அவன் ஏழுநாட்கள் படுக்கையில் கிடந்திருக்கிறான். தட்சிணத்து மருத்துவர்களின் முயற்சியால் உயிர்பிழைத்திருக்கிறான். அவன் இறந்திருந்தால்....?” என்றாள். “அவரது மைந்தரை அவர் கொல்லட்டும். அவர்கள் செய்தபிழைக்கு அது உரியதுதான். கர்ணனை எப்படி அவர் தண்டிக்கமுடியும்?”

அவளே அவள் சொற்களை உணர்ந்தமை விழிகளில் தெரிந்தது. ஆனாலும் அவளால் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. “அவன் அங்கநாட்டின் அரசன். அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு அவன் அரசவிருந்தினன். அவன் நமக்கும் விருந்தினனே. நம் விருந்தினனை தாக்கியிருக்கிறார் விழியிழந்த மூடர்.” அவள் முகம் சிவக்க, கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர பற்களைக் கடித்தபடி சொன்னாள் “அவருக்குத்தெரியும்... வேண்டுமென்றே செய்யபப்ட்டது அது.” சாத்யகி வியப்புக்குரிய எச்சரிக்கை உணர்வொன்றை அடைந்தான். மெல்ல முன்னகர்ந்து “அவர்களின் அனைத்துத் தீமைக்கும் அங்கரே பின்புலம் என்கிறார்கள்” என்றான்.

“யார்?” என்றாள் குந்தி. “யார் அப்படி சொல்கிறார்கள்?” சாத்யகி “பெரும்பாலும்...” என்று சொல்லத்தொடங்க “பெரும்பாலும் என்றால்? வாரணவத மாளிகையை எரித்தது கர்ணனா? அப்போது அவன் அஸ்தினபுரியில் இருந்தானா என்ன? அவனை தங்கள் கருவியாக ஆட்டிவைக்கிறார்கள் காந்தாரத்து நச்சுக்கூட்டத்தினர்” என்றாள். அவள் மூச்சிரைப்பதை அவன் வியப்புடன் நோக்கினான். அவள் தன் கைவிரல்களை நோக்கிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். மெல்லமெல்ல அவள் அடங்குவது தெரிந்தது. “அங்குதான் இருக்கிறான். நாம் நேரில் பார்த்தால் அனைத்தும் தெளிவாகிவிடும்” என்றாள்.

பின்னர் திரும்பி பனிப்புகையை நோக்கிக்கொண்டு அமைதியில் ஆழ்ந்தாள். சற்றுநேரம் நோக்கியபின் சாத்யகி எழுந்து சென்று மறுபக்கம் கரையாக வந்து கொண்டிருந்த பனிநிழல் மரக்குவைகளை நோக்கிக்கொண்டிருந்தான். “மைந்தா, திருதராஷ்டிரர் முடிசூட்டுக்கு வருவாரல்லவா?” என்றாள். சாத்யகி “ஆம்” என்று சொன்னான். அணங்கு விலகிவிட்டது என்று எண்ணிக்கொண்டான். “அவர் வராமலிருந்தால் பிறகெப்போதாவது இந்த முடிமாற்றமே அவருக்கு ஒப்புதல் இல்லாதது என்றுகூட இவர்களால் சொல்லமுடியும்” என்றாள். சாத்யகி தலையசைத்து “வருவார் என்றார்கள்” என்றான். “அதை தெளிவாகவே பீஷ்மபிதாமகரிடம் பேசிவிடவேண்டும்" என்றாள் குந்தி.

பகுதி 16 : தொலைமுரசு - 4

பின்மாலையில் அஸ்தினபுரியின் துறைமுகப்பை அடைந்தபோது சாத்யகி எழுந்து படகின் விளிம்பில் சென்று நின்று நோக்கினான். துறைமுகப்பை பலவகையான படகுகள் மொய்த்திருந்தன. மேலும் படகுகள் கங்கைக்குள் நிரைநிரையாக நெடுந்தொலைவுக்கு நின்று அலைகளில் ஆடின. இறக்கி சுற்றிக்கட்டப்பட்ட பாய்கள் கொண்ட படகுக்கொடிமரங்கள் வள்ளிகள் சுற்றிய காட்டுமரங்கள் போல சூழச்செறிந்திருந்தன. பலபடகுகளில் அடுப்புகள் மூட்டப்பட்டிருந்தமையால் உணவுமணத்துடன் புகையெழுந்தது.

அப்பால் துறைமேடையில் நூற்றுக்கணக்கான வினைவலர்களும் அவர்களின் யானைகளும், அவற்றால் இழுக்கப்பட்ட துலாக்களும் பொதிகளை தூக்கி இறக்கிக்கொண்டிருக்க அப்பால் துறைமுற்றம் முழுக்க பொதிவண்டிகளும் அத்திரிகளும் புரவிகளும் தேர்களும் நிறைந்து அசைந்த வண்ணங்கள் கொந்தளித்தன. பெருமுழக்கமாக துறைமுகம் ஒலித்துக்கொண்டிருந்தது. தொலைவில் அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட வளைவைக் கடந்து மேலேறிச்சென்ற பாதையில் வண்டிகள் சென்றுகொண்டே இருந்தன.

“என்ன நிகழ்கிறது? ஏதாவது விழவா?" என்றான் சாத்யகி. குகன் “இளவரசே, அஸ்தினபுரியின் இளவரசர்களின் மணநிகழ்வுகள் ஒவ்வொருநாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே அஸ்தினபுரியில் துறையிறங்குவது கடினம் என்று என்று வரும்போதே சொன்னார்கள்” என்றான். சாத்யகி “மீண்டும் கூட்டத்தை நோக்கியபின் “அனைத்துமே அரசக்கொடி கொண்ட படகுகள்” என்றான். அப்பால் சிறிய கிண்ணப்படகில் வண்ணத்தலைப்பாகைகளும் கிணைப்பறைகளும் யாழ்களுமாக கிளம்பிச் சென்றுகொண்டிருந்த சூதர்களை சுட்டிக்காட்டி “அவர்களை அழைத்துவா” என ஆணையிட்டான்.

குகன் கயிறுகளைப்பற்றி படகிலிருந்து படகுக்குத் தாவி அவர்களை நோக்கி சென்றான். அவன் அவர்களை அழைப்பதும் அவர்கள் மேலே நோக்குவதும் தெரிந்தது. மார்த்திகாவதியின் கொடியைக் கண்டதும் அவர்கள் புரிந்துகொண்டனர். அவர்களின் படகு அணுகியதும் நூலேணி இறக்கப்பட்டது. பெரிய நீலத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் அணிந்த முதுசூதரும் இளையவர் இருவரும் நான்கு விறலியரும் மேலேறி வந்தனர்.

முதுசூதர் வணங்கி ”கடம்பநாட்டு வெண்புறாடி குலத்து முதுசூதன் நிஷங்கன் வணங்குகிறேன். இவர்கள் என் மைந்தர், மைந்தரின் விறலியர்” என்றார். ”காலையில் இன்மொழிச்சூதர் ஒருவரை சந்திக்கும் பேறுபெற்றேன்... அமர்க!” என சாத்யகி அவரை வணங்கி பீடமளித்தான். அவர்கள் அமர்ந்து இன்னீர் அருந்தினர். சாத்யகி “அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது சூதரே? உங்கள் வாயால் விரிவாக அறிந்துகொள்ளும்பொருட்டே அழைத்தேன்” என்றான்.

“அஸ்தினபுரி வசந்தம் வந்த மலர்த்தோட்டமாக ஆகிவிட்டது. வண்ணத்துப்பூச்சிகளென இளவரசிகள் சிறகடித்து வந்தமர்ந்தபடியே இருக்கிறார்கள். ரீங்கரிக்கும் வண்டுகளென சூதர். மணிதேடும் புறாக்களென வணிகர். அங்கே காகக்கூட்டங்களென ஓயாமல் கூச்சலிட்டு மொய்த்திருக்கின்றனர் களிமகன்கள்“ என்றார் முதுசூதர். “நான் காம்போஜநாட்டு சுதட்சிணரின் அவையிலிருந்து அவரது இளவரசியர் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் வந்த அணிநிரையுடன் இணைந்து இந்நகருக்கு வந்தேன். பத்துநாட்கள் இங்கே விழவுகொண்டாடிவிட்டு திரும்பிச்செல்கிறேன். செல்லும் வழியெல்லாம் இக்கதையை சொல்லிச்செல்வேன். இப்போது என் உள்ளம் சொல்லால் நிறைந்துள்ளது. சென்று சேரும்போது என் இல்லம் பொன்னால் நிறைந்திருக்கும்.”

சாத்யகி "காம்போஜநாட்டு இளவரசிகளை மணந்தவர் யார் யார்?” என்றான். முதுசூதர் திரும்பிப்பார்க்க இளைஞன் குறுமுழவை அவர் கையில் கொடுத்தான். அவர் அதை விரல்களால் தட்டியபடி கண்மூடி அமர்ந்துவிட்டு மெல்ல முனகினார். குருகுலத்தவரின் பெயர்வரிசையைப் பாடி கௌரவர்களை வந்தடைந்தார். ”கேளுங்கள் யாதவரே, பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியரின் கொடிவழி வந்த நிகரற்ற வீரர், திருதராஷ்டிரரின் மைந்தர், குருகுலத்து மூத்தவர் துரியோதனர் காசிநாட்டுச் செல்வி பானுமதியை மணந்தார். அஸ்தினபுரியை ஆளவந்த திருமகள் போன்றவள் அவள். இளையவர் துச்சாதனர் காசிநாட்டு இளவரசி அசலையை மணந்தார். இதோ பெரும்புகழ்கொண்ட திவோதாச மாமன்னரின் குருதியால் அஸ்தினபுரி வாழ்த்தப்பட்டது.”

“பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், அனேனஸ், பிரதிக்‌ஷத்ரர், சஞ்சயர், ஜயர், விஜயர், கிருதி, ஹரியஸ்வர், சகதேவர், நதீனர், ஜயசேனர், சம்கிருதி, க்‌ஷத்ரதர்மா, சுமஹோத்ரர், சலர், ஆர்ஷ்டிஷேணர், காசர், தீர்க்கதமஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதர், திவோதாசர், ஜயசேனர், சஞ்சயர், சுருதசேனர், பீமகர், சஞ்சயர், பீமதேவர், ஜயர், விஜயர் என நீளும் காசிநாட்டுக் கொடிவழியில் பிறந்தவர் விருஷதர்பர். அவரது புதல்விகள் தங்கள் பொற்பாதங்களை வைத்து நிலமகளும் நீர்மகளும் என அஸ்தினபுரிக்கு வந்தபோது கங்கையும் யமுனையும் கலப்பதுபோல பாரதவர்ஷத்தின் தொன்மையான இருகுலங்கள் கலந்தன. அந்தப்பெருமையால் அஸ்தினபுரியின் கரிய கோட்டைச்சுவர் இரையுண்ட மலைப்பாம்பு போல பெருத்ததை நான் கண்டேன். என் விழிகள் வாழ்க! என் சித்தம் வாழ்க!”

“இளையவர்களாகிய பதினைந்து பேருக்கும் காந்தாரத் தொல்குடியிலிருந்து இளவரசியர் வந்துள்ளனர்” என சூதர் பாடினார். “காந்தாரத்து பட்டத்து இளவரசர் அசலரின் ஏழு மகள்களான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை ஆகியவர்களை துச்சகர், துச்சலர், ஜலகந்தர், சமர், சகர், விந்தர், அரவிந்தர் ஆகியோர் மணந்தனர். இளைய காந்தாரரான விருஷகருக்கு எட்டு இலக்குமிகள் என அழகிய மகள்கள். ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகிய இளவரசிகளை துர்தர்ஷரும் சுபாகுவும் துஷ்பிரதர்ஷணரும் துர்மர்ஷணரும் துர்முகரும் துர்கர்ணரும் கர்ணரும் விகர்ணரும் மணந்தனர். காந்தாரநாட்டு இளவரசியர் நேற்றுமுன்தினம் துதிக்கை கோர்த்து செல்லும் பிடியானைக்கூட்டம் என நகர்நுழைந்தந்தைக் கண்ட என் கண்கள் அழகுகொண்டன”

“கௌரவர்களில் இளையவர்களான சலர், சத்வர், சுலோசனர், சித்ரர், உபசித்ரர், சித்ராக்‌ஷர் சாருசித்ரர் ஆகியோருக்கு கோசலநாட்டின் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகியோர் மணமகள்களாக ஆயினர். அவர்கள் தங்கள் பொற்பாதங்களை எடுத்துவைத்து ஹஸ்தியின் அரண்மனைக்குள் நுழைந்தபோது நான் என் பழைய முழவை மீட்டி அழியாத தொல்குடியின் கதையை பாடினேன். என் கைகளில் ஒளிவிடும் பொற்கங்கணத்தை பரிசாகவும் பெற்றேன். அன்றுதான் அவந்தி நாட்டு அரசர்களான விந்தர், அனுவிந்தர் இருவரின் மகள்களான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை. வித்யை முத்ரை ஆகியோரை சராசரனர், துர்மதர், துர்விகாகர், விகடானனர், விவித்ஸு, ஊர்ணநாபர், சுநாபர், நந்தர் உபநந்தர் சித்ரபாணர் சித்ரவர்மர் சுவர்மர் அகியோர் மணந்து நகருக்குள் கொண்டுவந்தனர்

“யாதவரே, அஸ்தினபுரியின் அரசர் பாதாளத்தை ஆளும் நாகங்களுக்கு நிகரானவர். அவரது அரசியர் அரவுக்குலங்களைப்போல மைந்தரைப்பெற்று நிரப்புகிறார்கள். துர்விமோசர், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கர், சித்ரகுண்டலர், பீமவேகர், பீமபலர், வாலகி, பலவர்தனர், உக்ராயுதர், சுஷேணர், குந்ததாரர் ஆகியோர் இன்று மகாநிஷாதகுலத்து மன்னர் கேதுமதனரின் இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோரை மணம் கொண்டு வந்திறங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய செந்நிறக்கொடிகளால் அஸ்தினபுரியின் துறைமுகப்பு செண்பகக் காடுபோல ஆகியிருக்கிறது.”

”பிற இளவரசர்கள் வெவ்வேறுநாடுகளில் மணமகள்களை கொள்ளும்பொருட்டு சென்றிருக்கிறார்கள். நாளை இளவரசர்கள் மகாதரரும் சித்ராயுதரும் நிஷங்கியும் பாசியும் விருந்தாரகரும் சாதகர்ணியின் மகள்களை மணம் கொள்கிறார்கள். திருடவர்மரும் திருதக்ஷத்ரர் சோமகீர்த்தி ஆகியோர் மூஷிகநாட்டு இளவரசியரை நாளை மறுநாள் மணக்கிறார்கள். அனூதரர், திருதசந்தர், ஜராசந்தர், சத்யசந்தர், சதாசுவாக், உக்ரசிரவஸ் ஆகியோர் ஒட்டர நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள். மணமகள்களுடன் அவர்கள் திரும்பி வருவார்கள். அஸ்தினபுரி ஒரு தேன்கூடு. நாற்புறமும் சென்று தேன் கொண்டு வருகின்றன கரிய தேனீக்கள். அவர்களின் ஒளிரும் சிறகுகள் வெல்க!”

“யாதவரே கேளுங்கள், ஒவ்வொருநாளும் இளவரசியர் அவர்களின் பெண்செல்வத்துடன் வந்திறங்குவதனால் அஸ்தினபுரியின் தெருக்களில் முத்தும் மணியும் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை புறாக்கள் நெல்மணிகள் என எண்ணி கொத்திக்கொத்தி ஏமாற்றம் கொள்கின்றன. நீருக்குள் சிந்திய வைரமணிகளை உண்ட மீன்கள் உடல் ஒளிவிட நீந்துவதனால் கங்கை பல்லாயிரம் விழிகள் கொண்டதாக மாறிவிட்டது” முதுசூதர் பாடினார். “மங்காப்புகழ்கொண்ட அஸ்தினபுரியே இத்தனை மகளிர் சூடிக்கழித்த மலர்மாலைகள்தான் இனி உன் காலைகளை நிறைக்கும் குப்பையா? பெருகிவரும் கங்கையே, இனி இம்மகளிர் குளித்த மஞ்சளால் நிறம் மாறுவாயா?”

”யாதவரே, கேளுங்கள். இதோ நீங்கள் காணும் படகுகள் அனைத்தும் அஸ்தினபுரிக்கு மகள்கொடைச் செல்வத்துடன் வந்து காத்து நிற்கின்றன. ஏனென்றால் அங்கே களஞ்சியம் நிறைந்து செல்வத்தை அள்ளி முற்றத்தில் குவித்திருக்கிறார்கள். அவற்றில் வெண்முத்துக்களை கொக்குகளும் காக்கைகளும் கொத்திச்செல்கின்றன. கழுகுகளும் பருந்துகளும் செம்பவளங்களையே நாடுகின்றன. ஏமாற்றமடைந்த பறவைகள் வானத்தில் அவற்றை உதிர்ப்பதனால் ஊர்கள் தோறும் பொன்மணிமழை பெய்துகொண்டிருக்கிறது. குளிர்காலம் முடிந்து இளவேனில் வந்துகொண்டிருக்கிறது. சித்திரைக்கு முன் அவற்றை பொறுக்கிக்கொள்ளவில்லை என்றால் கொன்றையின் ஒளியில் அவை கூசிமறைந்துவிடும்.”

பாடிமுடித்து முதுசூதர் வணங்கி முழவைத்தாழ்த்தினார். சாத்யகி எழுந்தபடி “ஆகவே, தங்களிடம் பொன்னும் மணியும் நிறைந்துள்ளது. நான் அளிக்கவேண்டியதில்லை, அல்லவா?” என்றான். கிழவர் சிரித்து “கங்கை நிறைந்தொழுகுகிறது என்றால் அதன்பொருள் நகரின் கூரைகள் மேல் மீன் நீந்துகிறது என்று அல்ல” என்றார். மீசையை நீவியபடி “அது வேறு கங்கை. அது ஒருபோதும் வற்றுவதில்லை.” சாத்யகி “விறலியர் கண்டதை அவர்கள் பாடட்டுமே” என்றான். முதுசூதர் திரும்பி நோக்கி இளவிறலி ஒருத்தியிடம் கைகாட்ட அவள் தலையசைத்து யாழை வாங்கி தன் தொடைமேல் வைத்துக்கொண்டாள். அவளுடைய நீள்விரல்கள் தந்திகள்மேல் ஓடின. யாழ் இதழ்மேல் அமர்ந்த ஈ என முனகியது

“நகர்களில் அரசியாகிய அஸ்தினபுரியை வாழ்த்துங்கள். அதன் நெற்றியான கோட்டைமுகப்பில் எழுந்த செவ்வண்ணப் பொட்டாகிய அமுதகலசக் கொடியை வாழ்த்துங்கள். புடைத்த படகுப்பாய்களென வெண்குவைமாடங்கள் எழுந்த மாளிகைகளுடன் எப்போதும் அது எங்கு செல்லத் துடிக்கிறது தோழிகளே? ஒளிவிடும் பெரிய வெண்குமிழிகளா அவை? தோழியரே, வெண்கள் நுரைத்த பெருங்கலமா இந்நகரம்? முகில்வெளியன்னையை நோக்கி பூஞ்சிறகு சிலிர்த்து எம்பும் வெண்குஞ்சுகளின் கூடா? சொல்லுங்கள் தோழியரே, இவ்வேளையில் எதை எண்ணி பூரித்திருக்கிறது இது?

“சொல்லுங்கள் தோழியரே, பல்லாயிரம் கொடிகள் நாவாக இந்நகரம் சொல்லத்துடிப்பது எதை? பல்லாயிரம் அனல்கொழுந்துகள். பல்லாயிரம் சிக்கிக்கொண்ட வண்ணத்துப்பூச்சி சிறகுகள். பல்லாயிரம் பதறும் இமைகள். தோழியரே தோழியரே, இந்நகரம் எவருடைய தோளில் அமர்ந்து படபடக்கிறது? எவரது கண்ணுக்கெட்டி, கைக்குச் சிக்காது மாயம் காட்டுகிறது?” அவளுடைய மெல்லிய குரல் பறக்கும் பொன்னூல் என நெளிந்து வளைந்தாடியது. “இந்நகரம் மீட்டுநர் எழுந்துசென்ற யாழ். விண்வடிவம் பெண்ணொருத்தி என்றோ நீராடுமுன் களைந்துவைத்த நகைக்குவை. அவள் கங்கைப்பெருக்கில் இருந்து மீளவேயில்லை.”

“அஸ்தினபுரியின் தெருக்களனைத்திலும் இன்று பெண்கள் தேர்க்கோலமிடுகிறார்கள். மாளிகைமுற்றங்களில் மலர்விமானக்கோலங்கள் எழுகின்றன. ஏழடுக்கு, பதின்நான்கடுக்கு கோலங்கள். தேர்களில் குதிரைகள் தூக்கிய கால்களுடன் உறைந்திருக்கின்றன. விமானங்களில் சிறகுகள் காற்றை அறியாமலிருக்கின்றன. விழித்த கண்களுடன் பறவைகள் அவற்றில் அமர்ந்திருக்கின்றன. மலர்விரிவதை கண்டவரில்லை. மாக்கோலம் விரிவதை காணமுடியும். இதோ அவற்றில் பின்னிப்பின்னி நெளிந்து செல்கின்றன மாவு தொட்ட செந்நிற மெல்விரல்கள். தேடித்தேடி சென்று சிக்கிச் சிக்கிக் கண்டடைந்த புதிர்ப்பாதைகள்.”

”மலர்நிறைந்த நகரம். தூண்களென மாலைகளை எண்ணி சாய்ந்து விழுபவர்களின் நகரம். வசந்தகாலச் சோலையென்று என்று எண்ணி வந்து மொய்க்கும் கருவண்டுகளின் நகரம். வண்டுகள் சென்றமரும் மலர்பூத்த குழல்கள். வண்டுகள் வழிதவறும் கனவெழுந்த விழிகள். வண்டுகள் மொழிமறக்கும் செவ்விதழ் எழுந்த பற்கள். தோழியரே, தோழியரே, ஒற்றை ஒரு வண்டை நான் கண்டேன். அது ஓசையெழுப்புவதில்லை. நிழலின் விதை என அது சுழன்று சுழன்று பறந்தது. அதன் விழிகளைக் கண்டேன். என் தோழியரே, கேளுங்கள். அவ்விழிகளிலும் சொல்லென ஏதுமில்லை. அந்த வண்டு எந்த மலரிலும் அமரவில்லை. நகரெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் அவ்வண்டைக் கண்டு நான் அஞ்சினேன்.”

“பல்லாயிரம் சாளரங்களின் நகரம். திரைச்சீலை ஆடும் சாளரங்கள். இமைவிரித்து நகரத்தெருக்களை நோக்கி சிந்தையழிந்தவை. வானத்தைத் தொட்டு கனவிழந்தவை. சாளரங்கள் வழியாக வானம் இம்மாளிகைகளை நோக்குவதே இல்லையா? தோழியரே, கருவூலங்களில் சாளரங்களை அமைப்பதே இல்லையா?” அவள் என்ன பாடுகிறாள் என்று தெரியாமல் சாத்யகி நோக்கியிருந்தான். அவள் வெண்கழுத்தில் நீலநரம்பொன்று புடைத்து அதிர்ந்துகொண்டிருந்தது. மறுகணம் அவள் வலிப்பு வந்து விழுந்துவிடுவாள் என்று தோன்றியது “கருவண்டே, நீ அமரும் மலரை கண்டுவிட்டாயா? இளையமலர். இன்றுகாலை பூத்த எழில்மலர்?”

அவள் விரல்கள் யாழைமீட்டிக்கொண்டே இருந்தன. பொருளமர்ந்த செவிச்சொற்கள் நின்றுவிட அவற்றை ஆடையெனக் கழற்றிவீசி சிந்தையறியும் சொற்கள் மட்டும் சென்றுகொண்டே இருப்பதுபோல யாழ் ரீங்கரித்தது. அவள் விழிகள் வெறித்திருந்தன. யாழுக்கும் அவளுக்கும் தொடர்பில்லை என்பது போல. அவளும் யாழைப்போல ஒரு இசைக்கருவி மட்டுமே என்பதுபோல.

முதுசூதர் தன் கையைத் தட்டி “குருகுலத்து கொடிபறக்கும் அஸ்தினபுரியை வாழ்த்துவோம். அஸ்தினபுரியை தன் கைகளில் ஏந்திய பாரதவர்ஷத்தை வாழ்த்துவோம். ஓம் ஓம் ஓம்" என்றார். அவள் திடுக்கிட்டு விழித்து அவர்களை சுற்றி நோக்கினாள். பின்னர் அஞ்சியவள் போல யாழை தன் மடியிலிருந்து விலக்கி கால்களை தழைத்தாள். முதுசூதர் விழிகாட்ட இன்னொரு விறலி அவள் தோள்தொட்டு பின்னால் அழைத்துக்கொண்டாள்.

சாத்யகி திரும்பி நோக்க ஏவலன் தாலத்தை நீட்டினான். அதில் பட்டும் பொன்நாணயங்களும் இருந்தன. அவற்றை வாங்கி தலைவைத்து வணங்கி சூதருக்கு அளித்தான். "தங்கள் சொல்வாழட்டும் சூதரே. என் குலம் வாழ நீங்கள் சொன்ன சொற்களுக்கு எளியேன் பரிசு இது.” முதுசூதர் “யாதவர் என்ற சொல்லுள்ளவரை வாழும் பெயர் கொண்டவர் நீங்கள் இளவரசே. என் விழிகள் காணும் நெடுந்தொலைவில் ஆழிமணிவண்ணன் அமர்ந்துபோகும் புள்ளரசன் என்றே உம்மை காண்கிறேன்" என்றார். அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டு வணங்கி பின்னகர்ந்தனர்.

சாத்யகி சற்று நேரம் படகிலேயே அமர்ந்திருந்தான். விரைந்து இருள் பரவிக்கொண்டிருந்தது. அவன் உள்ளம் ஏன் அத்தனை நிலையழிந்திருக்கிறது என்று அவனுக்குப்புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த இளம் விறலியின் விழிகள் நினைவுக்குவந்தன. அவளுக்கு பித்து இருக்கும் என்று தோன்றியது. அல்லது நகரில் பகலெல்லாம் மதுவும் ஃபாங்கமும் அருந்தியிருக்கலாம். அவள் விழிகள். அவளை நினைப்பதை ஏன் தவிர்க்கத் தோன்றுகிறது?

திரும்பி ஏவலனிடம் “அன்னை எழுந்துவிட்டார்களா?” என்றான். “ஆம், காத்திருக்கிறார்கள்.” சாத்யகி உள்ளே சென்றபோது சிறு சாளரத்தருகே குந்தி அமர்ந்திருந்தாள். வெளியே நின்றிருந்த படகுகளைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறாள் என சாத்யகி அறிந்துகொண்டான். “அன்னையே, இன்னும் நூறு படகுகளுக்கு மேல் காத்திருக்கின்றன என்று தெரிகிறது. அனைத்திலும் பொருட்கள் உள்ளன. அனைத்துமே அரசகுடியினருக்குரியவை” என்றான். “நாம் சிறுபடகில் இறங்கி கரை செல்லலாம். படகின் பொருட்களை பின்னர் இறக்கி கொண்டுவந்து சேர்க்கும்படி சொல்கிறேன்.”

குந்தி அவனை அசையாத விழிகளுடன் நோக்கி “இல்லை, நான் என் முழு அகம்படி இல்லாமல் அஸ்தினபுரிக்குள் செல்வதாக இல்லை” என்றாள். “இல்லை அன்னையே, நான் சொல்லவருவதென்னவென்றால்...” என்று சாத்யகி தொடங்க “மூடா, நான் எப்படி நகர்நுழையப்போகிறேன்?” என்றாள். “சுங்கத்தலைவரிடம் தேர்...” என்ற சாத்யகி நிறுத்திக்கொண்டான். “என் அகம்படிப்படகில் மார்த்திகாவதியின் கொடி கொண்ட அரசத்தேர் இருக்கும். எனக்குமுன் கொம்பும் முழவும் கொடியுமாகச் செல்லும் வீரர்களும் என்னைத் தொடரும் அணித்தேர்களும் அப்படகில் இருக்கின்றன”. சாத்யகி தலையசைத்தான். “பொறுத்தருள்க அன்னையே” என்றான்.

“இந்த நகரிலிருந்து நான் துரத்தப்பட்டேன். வாரணவதத்தில் எரிமாளிகைக்கு என்னை அனுப்பியபோது இங்கே சிலர் புன்னகைசெய்திருக்கக் கூடும். அவர்களுக்கு முன் நான் இதோ நகர்நுழையப்போகிறேன். இந்நகரின் பேரரசியாகத்தான் நுழைவேன்” என்று குந்தி சொன்னாள். “நான் வரும் செய்தியை விதுரருக்கு முன்னரே அனுப்பியிருந்தேன். இங்கு இப்போதிருக்கும் அரசடுக்கில் அவரது இடமென்ன என்று தெரியவில்லை. அவர் என்னை முறைப்படி வரவேற்க ஒருங்கு செய்திருந்தாலும் இந்தச் சந்தடியில் அவரால் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை.”

அவள் உள்ளம்செல்லும் திசையை உய்த்து அவன் மெல்ல “நான் நகருக்குள் சிலவீரர்களை கொடியுடன் அனுப்பமுடியும். அவர்களைக் கண்டால் யாதவர் தங்கள் வருகையை அறிந்து...” என்றான். சினத்துடன் விழிதூக்கிய குந்தி அவன் முகத்தை நோக்கியதும் கனிந்து புன்னகைத்து “ஆம், நான் அரசியாகவே உள்ளே செல்லவிழைகிறேன். பிறிதொரு நாள் என்றால் நீ செய்வது பயனளிக்கும். ஆனால் இப்போது நகரமிருக்கும் நிலை அதுவல்ல” என்றாள்.

சாத்யகி “நகரமே களிவெறிகொண்டிருக்கிறது என்றார் சூதர்” என்றான். குந்தி “ஆம், அவரது பாடலை இங்கிருந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்” என்றாள். “மக்கள் களிவெறிகொள்ள விழைபவர்கள். களிவெறியடைய ஒரு தொடக்கமாகத்தான் அரசகுடித் திருமணங்கள் அமையமுடியும். இத்தனை நாட்களாக இங்கே விழவுக்களியாட்டம் நீடிக்கிறதென்றால் இப்போது நகரம் தன்னை மறந்துவிட்டதென்று பொருள். இனி அதற்கு அரசகுலங்களும் திருமணங்களும்கூட தேவையில்லை இனி இது மீண்டும் உழைப்புக்கும் வாழ்வுக்கும் திரும்ப சற்று நாளாகும்.”

சாத்யகி அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று நோக்கிக் கொண்டிருந்தான். ”நான் காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை” என்றாள் குந்தி. சாத்யகி தலைவணங்கி வெளியே சென்றான். படகுகளில் பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத்தொடங்கின. அலையடிக்கும் பெருநகராக கங்கைப்பரப்பு மாறியது அவர்களுக்குப்பின்னால் மேலும் மேலும் படகுகள் வந்து இணைந்துகொண்டன. அவற்றில் இருந்து அடுமனைப்புகையும் மதுவுண்டவர்களின் பாடல்களும் எழுந்தன. எங்கோ ஒரு கொம்பு ஒலித்தது. அஞ்சிய குதிரை ஒன்று கனைத்தது. பாய்களின் படபடப்பு. காற்றிலாடும் படகுகளில் தாழ்களும் கொக்கிகளும் சங்கிலிகளும் அசையும் ஒலி. காதாட்டி சங்கிலி குலுக்கி அசைந்து நின்றிருக்கும் யானைகள்

சாத்யகி படகின் வெளிமுகப்பில் நின்றுகொண்டு துறைமேடையை நோக்கிக்கொண்டிருந்தான். துலாத்தடிகளை நீட்டி பொதிகளை எடுத்துக்கொண்டே இருந்த துறைமேடை துதிக்கையால் கவளம் பெறும் யானைக்கூட்டம் போல தோன்றியது. மீண்டும் மீண்டும் யானைகள். ஆனால் அஸ்தினபுரி அஸ்தியின் நகர். யானைகளால் கட்டப்பட்ட நகர். அந்நகரமே ஒரு யானை. அதன் பெருங்கோட்டைவாயிலை யானைநிரை என எண்ணியதை நினைவுகூர்ந்தான். அதன் அரசரை மதவேழம் என்கிறார்கள். அவர் காட்டிலிருக்கிறார். யானைகள் சாவதற்காக காட்டுக்குள் சென்றுகொண்டே இருக்கும் என்று அவன் கேட்டிருக்கிறான். அடர்காட்டுக்குள் ஒரு மரத்தை அவை இளமையிலேயே கண்டுவைத்திருக்கும். அங்கே உடலைச்சாய்த்து துதிக்கையை சுருட்டி கொம்பின்மேல் வைத்துக்கொண்டு காத்து நின்றிருக்கும். அதன் காது அசைந்து அசைந்து ஒலிகூரும். ஒலி பெற்றதும் நிலைக்கும். இறக்கும் யானையின் மத்தகத்தின்மேல் அதற்குரிய மலைத்தெய்வம் வந்து அமரும். சினமடங்காத மாதங்கன். பெருங்கருணை கொண்ட மாதங்கி. பேரன்னையாகிய கஜை. அந்த எடையால் அதன் மத்தகம் தாழ்ந்து தாழ்ந்துசெல்லும். துதிக்கை சுருண்டு மண்ணில் ஊன்றும். கொம்புகள் குத்தி ஆழ்ந்திறங்கும். வால் நிலைக்கும். யானை வலப்பக்காமகச் சரிந்தால் அது விண்ணேறி தேவர்களின் ஊர்தியாகும். இடப்பக்கம் சரிந்தால் மண்ணில் ஒரு மன்னனாக மீண்டும் பிறக்கும்... என்ன எண்ணங்கள். திருதராஷ்டிரரின் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது என்றுதான் உளவுச்செய்திகள் சொல்லின. அங்கே மலைக்காட்டில் தன் அணுக்கத்தொண்டர் விப்ரருடன் வேட்டையாடி உண்டும் இரவுபகலாக நீர்ப்பெருக்குகளில் நீந்தியும் அவர் உடல்நிலை மீண்டுவிட்டார். மாளிகைகளையும் அரசையும் அவர் மறந்துவிட்டார் என்றும் மீண்டும் நகருக்குத் திரும்பிவராமலேயே இருந்துவிடக்கூடும் என்றும் சொன்னார்கள். ஆனால் யானை எதையும் மறப்பதில்லை. காட்டை மட்டும் அல்ல நாட்டையும்கூடத்தான்.

அவன் அங்கேயே துயின்றுவிட்டான். அவன் கனவுக்குள் துறைமுகப்பின் ஓசைகள் கேட்டுக்கொண்டே இருந்தன. நூற்றுக்கணக்கான யானைகள் இணைந்து ஒரு நகரை கட்டுவதை அவன் கண்டான். ஆனால் மானுடரே இல்லை. அவையனைத்தும் மத்தத்தின் மேல் மண்படிந்து செடிமுளைத்த காட்டுயானைகள். குன்றுகள் போன்ற உடல்களுக்குள் கண்கள் வேல்முனை என ஒளிவிட்டன. யானை ஒரு பாறை. பாறையிடுக்கில் ஊறித்தேங்கிய நீர்த்துளி அதன் கண். யானையின் கண்ணை பார்க்காதே என்பார்கள்.

யானை பெருந்தன்மையானது. குலம்கூடி குடிசெழித்து வாழ்வது. வளம் கொண்ட மண்ணைக்கொண்டு பிரம்மன் யானையை சமைத்தான் என்பது யாதவர்களின் மொழி. ஆகவேதான் அதன் உடலிலேயே செடிகள் முளைக்கின்றன. அந்த யானைக்கூட்டத்தின் நடுவே உயர்ந்து தெரிந்த மண்மேடும் ஒரு யானை என திகைப்புடன் கண்டான். அதன் முதுகிலும் மத்தகத்திலும் நூற்றுக்கணக்கான சிறிய பறவைகள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. சிற்றொலி எழுப்பி சிற்றடி வைத்து நடந்து எழுந்து சுழன்றன. செவியசைவுடன் விளையாடின. வெண்பறவைகள். நீலப்பறவைகள். செந்நிறப்பறவைகள். பறவைகளா மலர்களா என ஐயம் வந்தது.

அதன் வெண்ணிறமான பெரிய தந்தங்கள் மேல் ஒரு சிறிய பறவை அமர்ந்திருந்தது. சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த அழகிய சிறுபறவை. வண்ணத்துப்பூச்சி வளர்ந்து பறவையானது போல. ஆனால் அது அசையவில்லை. கிளையில் ஒரே ஒரு மலர் பூத்து நிற்பதுபோல. அல்லது அது பறவைதானா? கொம்பில் ஏதாவது சிக்கியிருக்கிறதா? அதன் சிறிய கருநிற அலகையும் நெற்றிப்பூவையும் சிறகுவரிகளையும் காணமுடிந்தது. அதன் தளிர்க்கால்கள் தந்தத்தைப் பற்றியிருந்ததையும் பின்னர் கண்டான். அதன் அசைவின்மையை கண்டபின் அவன் அறிந்தான். அதற்கு விழிகள் இருக்கவில்லை. யானை துதிக்கையைத் தூக்கி சின்னம் விளித்தது. ஏழெட்டு யானைகள் சின்னம் விளித்து அதை சூழ்ந்தன.

அவன் விழித்துக்கொண்டான். மல்லாந்து கிடந்திருந்தமையால் வானத்தையே முதலில் பார்த்தான். விடியலின் நீர்மையொளி நிறைந்திருந்த வானம் ஒரு பெரிய அசைவற்ற ஏரிபோல தோன்றியது. எழுந்து அமர்ந்து நோக்கினான். அவனுக்கு முன்னால் நின்றிருந்த பெரிய படகுகள் சங்கொலியுடன் துறைமேடை நோக்கி சென்றன. அவற்றைச் செலுத்திய குகர்கள் சேர்ந்தொலி எழுப்பி கயிறுகளை வீசினர். பெருவடங்களை அக்கயிறுகளைக் கொண்டு இழுத்து கரைக்குற்றிகளில் கட்டினர். யானைகள் இழுத்த சகடங்களால் மெல்ல மெல்ல படகுகள் கரையணைந்தன. நடைபாலம் நீண்டு கரைநோக்கி வந்தது. அடுத்த படகு அதற்குப்பின்னால் பொறுமையிழந்து நீரிலாடியது.

குகன் “நமது முறை இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும் யாதவரே” என்றான். “விடிந்துவிட்டது. நாம் அணுகும்போது இளவெயில் இறங்கிவிடும்” என்றான் குகன். “இந்தப் பெரிய படகை பொதியிறக்கம் செய்யவே இரண்டுநாழிகைக்குமேல் ஆகலாம்.” “அன்னையை எழுப்பு. அவர்கள் சித்தமாகட்டும்” என்றான். குகன் தலைவணங்கினான். முன்னால் நின்றபடகின் மேல் பொதிகளை நோக்கி துலாவின் கொக்கி முனை இறங்கி வந்தது. விழியற்ற அரக்கனின் சுட்டுவிரல்.

சாத்யகி கீழே சென்று நீராடி உணவுண்டு மேலே வந்தான். கங்கையின் அலைகளின் வளைவுகள் காலையின் ஊமையொளியில் மிளிர்ந்தன. முதற்படகு பெரிய பொதிகளை இறக்கிவிட்டு மெல்ல முன்னால்செல்ல அடுத்த படகு அந்த இடத்தை நோக்கி சென்றது. அவனுடைய படகு துயில்கலைந்து அதை தொடர்ந்தது. குகன் வந்து வணங்கி “அன்னை நீராடுகிறார்கள்” என்றான். சாத்யகி கங்கையின் மேல் விரியத்தொடங்கிய ஒளியை நோக்கியபடி நின்றான். மரக்கூட்டங்களின் தளிர்களும் பாய்கயிறுகளில் வந்தமர்ந்த வெண்புறவுகளின் பிசிறிய இறகுகளும் ஒளிகொண்டன.

அவன் படகு மேலும் முந்திச்சென்று முதற்படகை ஒட்டியது. சிரிப்பொலி கேட்டு அவன் திரும்பிப்பார்த்தான். அந்தப்படகின் பின்பக்கம் இரு சிறுமிகள் கங்கையை நோக்கி சிரித்தபடி நின்றிருந்தனர். இருவருக்குமே பதினைந்து வயதுக்குள் இருக்கும். மூத்தவள் வட்டமான மாநிற முகமும் வைரத்துளி ஒளிவிட்ட சிறிய மூக்கும் பெரிய விழிகளும் குவிந்த இதழ்களும் கொண்டிருந்தாள். அவள் ஒரு கயிற்றை கங்கைக்குள் வீசி எறிந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அவளருகே நின்று படகைப்பற்றியபடி குனிந்து நோக்கி சிரித்த சிறியவள் நீளமுகமும் சுருண்ட கூந்தலும் சற்றுப்புடைத்த பெரிய மூக்கும் இரண்டு தெற்றுப்பற்கள் தெரிந்த புன்னகையும் கொண்டிருந்தாள்.

அவர்கள் தங்களுக்குத்தெரிந்தமுறையில் மீன்பிடிக்க முயல்கிறார்கள் என்று சாத்யகி எண்ணினான். புன்னகையுடன் நோக்கிக்கொண்டு நின்றான். "அதோ... அதோ அந்த மீன்” என்றாள் இளையவள். “அதுவே வந்து கொத்தவேண்டும்... துள்ளாதே” என்றாள் மூத்தவள். இளையவள் மூத்தவளின் தோளைப்பற்றி உலுக்கி “எனக்கு... நான் நான்” என்றாள். “அசைத்தால் ஓடிவிடுமடீ.” சிறியவள் கயிற்றைப்பிடித்து “நான் எடுத்த கயிறு... கொடுடீ” என்றாள். “கொக்கியை நான்தானே எடுத்தேன்..." என்றாள் மூத்தவள். சட்டென்று இளையவள் மூத்தவளை கிள்ளிவிட்டு ஓட மூத்தவள் அவளைத் தொடர்ந்து ஓட முடியாமல் கயிறுடன் நின்று தவித்து அவனை நோக்கினாள். திகைத்தபின் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு ஓடினாள்.

அவனருகே வந்து நின்ற குகன் “அவர்கள் மகாநிஷாதகுலத்து இளவரசிகள். அங்கே படகுகளிலிருந்து யானைத்தந்தங்களை இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அவர்களின் பெயரென்ன?” என்றான் சாத்யகி. “மூத்தவர் சந்திரிகை இளையவர் சந்திரகலை” என்றான் குகன். “நேற்றிரவு நான் அந்தப்படகுக்குச் சென்று அந்த குகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கே இந்த இரு இளவரசிகள் தவிர பிறர் துயின்றுவிட்டார்கள். இவர்கள் இருவரும் படகுகளில் இருந்து படகுக்கு வடங்கள் வழியாக செல்லவேண்டும் என்று அடம்பிடித்தார்கள். நிஷாதர்களுக்கு படகுக்கயிறுகள் பழக்கமில்லை. நான் மூன்றுமுறை அவர்களை அழைத்துச்சென்றேன்.”

முதற்படகு சங்கொலி எழுப்ப இரண்டாவது படகு ஏற்று ஒலியெழுப்பியது .”நாம் விடியலொளியில் நகர்நுழைவோம் இளவரசே” என்றான் குகன். “நம் படைகளுக்கு சொல்லுங்கள். யாதவ அரசி முழுதணிக்கோலத்தில் அணிநிரையாகவே நகர்புக விழைகிறார்” என்றான் சாத்யகி.

பகுதி 16 : தொலைமுரசு - 5

அஸ்தினபுரியின் கோட்டைவாயில் தொலைவில் தெரிந்தபோது சாத்யகி தேர்ப்பாகனிடம் “விரைந்துசெல், அன்னையின் தேருக்கு முன்னால் செல்லவேண்டும். அவர்கள் கோட்டைவாயிலை கடந்ததும் அவர்கள் தேருக்குப் பின்னால் மிக அருகே நாம் சென்றுகொண்டிருக்கவேண்டும்” என்றான். பாகன் தலையசைத்துவிட்டு புரவிகள்மேல் சவுக்கை சுண்டினான். புரவிகளின் குளம்படியோசை இருபக்கமும் அடர்ந்திருந்த காட்டுக்குள் எதிரொலித்தது.

அஸ்தினபுரியின் துறைமுகத்தில் இருந்து கோட்டைநோக்கிய பாதை வண்டிகளாலும் தேர்களாலும் புரவிகளாலும் நிறைந்து இடைமுறியாத நீண்ட ஊர்வலமெனச் சென்றுகொண்டிருந்தது. பொதிவண்டிகளுக்கு தனிநிரை என்பதனால் தேர்களும் புரவிகளும் முந்திச்செல்லமுடிந்தது. ஆயினும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி தேங்கிச் சுழித்து வழிகண்டடைந்துதான் சென்றன. அத்தனைபேரும் நெடுநேரம் காத்திருந்த சலிப்பிலிருந்து விடுபட்டு வில்லில் இருந்து எழுந்த அம்புபோல உணர்ந்தமையால் குந்தியின் அரசத்தேரையோ கொடியையோ விழிமடுக்கவில்லை. வீரர்கள் புரவிகளை உசுப்பியும் சவுக்கோசை எழுப்பியும் அவர்களை ஒதுங்கச்செய்ததும் பயனளிக்கவில்லை.

கோட்டை முகப்பை சாத்யகியின் தேர்தான் முதலில் சென்றடைந்தது. அவன் கோட்டைக்காவலனை நோக்கிச்செல்ல அவன் முகத்தையோ தேரையோ நோக்காமல் “வண்டிகள் எல்லாம் வலப்பக்கம், தேர்கள் மட்டும் இடப்பக்கம்...” என்று கூவினான். சாத்யகி இறங்கப்போனதும் “இறங்காதீர்கள். வண்டிகளையோ தேர்களையோ நிறுத்தவேண்டாம். காவல்நோக்கு இங்கே கோட்டைவாயிலில் அல்ல. பெருமுற்றத்தில் படைவீரர்களிடம் சுங்கம் அளித்த முத்திரைப்பலகையை அளியுங்கள்...” என்று கூவினான். சாத்யகி இறங்கியதும் அவன் ”இறங்கவேண்டாம் என்று சொன்னேனே?” என அருகே வந்தான்.

“வீரரே, நான் யாதவனாகிய சாத்யகி. பின்னால் அஸ்தினபுரியின் பேரரசி குந்திதேவி தேரில் வருகிறார்” என்றான் சாத்யகி. “பேரரசி என்றால்...” என்று சொன்னவன் திகைத்து “ஆனால்...” என்றபின் “நான் தலைவரிடம் சொல்கிறேன்” என்று உள்ளே சென்றான்.

அஸ்தினபுரி குந்தியை நினைவுகூரவில்லை என சாத்யகி வியப்புடன் எண்ணிக்கொண்டான். அவர்கள் அவளை ஒரு புராணமாக நினைவிலிருத்தியிருக்கலாம். உள்ளிருந்து தலைமைக்காவலன் வந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்களுடன் வந்தவர் எவரெனச் சொன்னீர்கள்?” என்றான். “யாதவப்பேரரசி குந்திதேவி. இந்நகரின் அரசி” என்றான் சாத்யகி. “நான் இந்நகரத்தின் பட்டத்து இளவரசி பானுமதிக்கு பாஞ்சாலத்து இளவரசியின் செய்தியுடன் வந்த யாதவனாகிய சாத்யகி.”

அப்போதும் அவன் விழிகளில் ஏதும் தோன்றவில்லை. “ஆனால்... இருங்கள்” என அவன் உள்ளே சென்றபின் முதியவராகிய ஆயிரத்தவர் ஒருவர் மெல்ல படியிறங்கிவந்தார். ஒட்டிய முகமும் உள்ளே மடிந்த வாயும் நீண்ட காதுகளில் தலைகுப்புறத் தொங்கிய கடுக்கன்களுமாக அவர் உதிரப்போகிறவர் போலிருந்தார். “குந்தி தேவி இப்போது அஸ்தினபுரியில் இல்லை. அவர் துவாரகையில் இருக்கிறார்" என்றார். “நீங்கள் யார்?”

சாத்யகி பொறுமையிழந்து “நீங்கள் யார்?” என்றான். “நான் ஆயிரத்தவனாகிய பிரகதன். இது என் ஆணைக்குக் கட்டுப்பட்ட கிழக்குக் கோட்டை வாயில்.” சாத்யகி உரக்க “நான் சாத்யகி. யாதவ இளவரசன். பட்டத்து இளவரசிக்கு முறைமைச்செய்தியுடன் வந்துள்ளேன். பின்னால் வந்திருப்பவர் யாதவ அரசி குந்திதேவி. அஸ்தினபுரியின் பேரரசி...” என்றான். “பேரரசி இங்கில்லை, துவாரகையில் இருப்பதாகப்பேச்சு.”

சாத்யகி சலிப்புடன் தலையை அசைக்க முதல் காவலனுக்கு அனைத்தும் புரிந்தது. “அது மார்த்திகாவதியின் கொடி... அப்படியென்றால் குந்திதேவி வந்திருக்கிறார்!” என்று கூவினான். கிழவர் “அவர் துவாரகையில்...” என சொல்லத்தொடங்க நூற்றுவனுக்கும் புரிந்தது. அவன் “சென்று மேலே மார்த்திகாவதியின் கொடியை ஏற்று. பெருமுரசு முழங்கட்டும்” என்றான். கிழவர் “இங்கே பாண்டவர்களும் இல்லை. அவர்களும் துவாரகையில் இருப்பதாகத்தான் சொன்னார்கள்“ என்றார்.

நூற்றுவர்தலைவன் குந்தியின் தேரை நோக்கி ஓடிச்சென்று பணிந்து “யாதவப்பேரரசியை பணிகிறேன். இங்கே முறையான அறிவிப்பு வரவில்லை. பெருங்கூட்டமாதலால் நாங்கள் இரவுபகலாக பணியாற்றுகிறோம். ஆகவே எங்கள் உள்ளங்கள் நிலையில் இல்லை” என்றான். குந்தி திரையை விலக்கி அவனை வாழ்த்திவிட்டு செல்லலாம் என்று கைகாட்டினாள். தேர்கள் கோட்டைக்குள் சென்றன. கிழவர் தேரை ஆர்வமில்லாத கண்களால் நோக்கி நின்றார். வாய் தளர்ந்து தொங்கி பல்லில்லாமல் சிறிய பொந்துபோல தெரிந்தது. “நான் வருகிறேன் ஆயிரத்தவரே” என்றபின் சாத்யகி தேரில் ஏறிக்கொண்டு குந்தியை தொடர்ந்தான்.

நகரம் பலமடங்கு மக்கள்தொகை கொண்டதுபோல தெரிந்தது. எங்கும் மனிதர்கள் நெரித்துக்கொண்டிருந்தனர். கொடிகள் தோரணங்கள் பாவட்டாக்கள் பரிவட்டாக்கள் மாலைகள் என நாட்கணக்காக பல திசைகளில் இருந்து பலர் சேர்ந்து அலங்கரித்து அலங்கரித்து அவை அனைத்து அழகையும் இழந்து விழிகூசும் வண்ணக்கொப்பளிப்பு மட்டுமென எங்கும் நிறைந்திருந்தன. தெருவில் நடந்த ஒவ்வொருவரும் தெய்வம் குடியேறிய விழிகொண்டிருந்தனர். எவரையும் நோக்காமல் தன் அகப்பித்து ஒளிர நகைத்தபடியும் கூச்சலிட்டபடியும் சென்றனர். சிலர் நடனமிட்டனர். கூட்டம்கூட்டமாக களிமகன்கள் கைகளில் மூங்கில்குழாய்களுடன் நின்று சிரித்து ஆடிக்கொண்டிருந்தனர்.

நகரம் துயின்று எழுந்தது போல தெரியவில்லை. அதே பித்துநிலையில் காலமில்லாமல் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. சவுக்கால் சொடுக்கியும் குதிரைகளைச்செலுத்தி உடல்களை விலக்கி வழியமைத்தும் செல்லவேண்டியிருந்தது. காவல்மாடங்களில் எவருமிருக்கவில்லை. முகப்பின் பெருமுரசை உள்ளிருந்த எந்தப்பெருமுரசும் ஏற்று ஒலிக்கவில்லை. தெருக்களில் திரிந்துகொண்டிருந்தவர்களில் அஸ்தினபுரியின் காவலர்களும் ஏராளமானவர்கள் இருந்தார்கள் என்பது தெரிந்தது. அனைத்து ஒழுங்குமுறைகளும் சிதைந்துபோய் நகரம் அதன் பலநூறாண்டுகால கால்பழக்கத்தாலேயே நடந்துகொண்டிருந்தது.

அரண்மனை முகப்பு வரை எவரும் அவர்களை பொருட்படுத்தவில்லை. கூட்டமாகக் கூடி நின்றிருந்த சிலர் தேரை நோக்கி கூச்சலிட்டனர். அவர்கள் குந்தியை ஏளனம் செய்வதாக சாத்யகி நினைத்தான். அதன்பின்னர்தான் அவர்கள் அனைத்து அரச ஊர்திகளையும் கூச்சலிட்டு ஏளனம் செய்வதை கண்டான். தேர்களுக்கு முன்னால் சென்ற கொடிவீரர்கள் அரண்மனைக்கோட்டையின் முகப்பை அடைந்தபோது உள்ளிருந்து காவலர்தலைவன் வெளியே வந்து திகைப்புடன் நோக்கினான். அதற்குள் அரண்மனைமுன்னாலிருந்து கனகர் கைவீசியபடி ஓடிவருவது தெரிந்தது.

கனகர் குந்தியை வணங்கி “அஸ்தினபுரிக்கு பேரரசி திரும்பி வந்தது ஆலயம் விட்டுச்சென்ற தெய்வம் மீண்டதுபோல” என்று முகமன் சொன்னார். ”அஸ்தினபுரி தங்களை வணங்குகிறது. அரசகுலம் வரவேற்கிறது.” குந்தியின் முகத்தில் ஏதும் வெளிப்படவில்லை என்றாலும் அவள் கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டிருப்பதை அவளருகே சென்று நின்ற சாத்யகி உணர்ந்தான். “விதுரர் இருக்கிறாரா?” என்றாள். “ஆம், நாளைமறுநாள் இளவரசி துச்சளைக்கு திருமணம். இங்கே ஒவ்வொருநாளும் ஏழெட்டு அரசத் திருமணங்கள். அமைச்சர்கள் எவரும் தன்னிலையில் இல்லை” என்றார் கனகர்.

“என் அரண்மனை ஒழிந்துதானே இருக்கிறது?” என்றாள். “ஆம் பேரரசி. தாங்கள் இங்கிருந்து சென்றபின்னர் அங்கே எவரும் குடியிருக்கவில்லை. தாங்கள் வரும் செய்திவந்ததுமே தூய்மைப்படுத்தி அலங்கரித்து சித்தமாக்க ஆணையிட்டேன். அனைத்தும் ஒருங்கியிருக்கின்றன.” குந்தி திரும்பி சாத்யகியை நோக்கி “மாலையில் அரசவை கூடுமென நினைக்கிறேன். நீ உன் பணிகளை முடித்து அவைக்கு வா” என்றாள்.

சாத்யகி தலைவணங்கி “ஆணை” என்றான். “நான் பாஞ்சால இளவரசியின் செய்தியுடன் காசிநாட்டு இளவரசியை சந்திக்கவேண்டும்.” குந்தியின் விழிகளில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவள் அச்சொற்களை குறித்துக்கொண்டாள் என்பதை சாத்யகி அறிந்தான். கனகர் “காசிநாட்டு இளவரசிதான் இங்கு மூத்தவர். ஆகவே அனைத்துச் சடங்குகளுக்கும் அவர்தான் முதன்மை கொள்ளவேண்டியிருக்கிறது. அனைத்து வரவேற்புகளும் அவர் பெயராலேயே நிகழ்கின்றன. இரவும்பகலும் அவருக்கு பணிகள் உள்ளன. தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றார்.

குந்தி மேலும் ஏதும் பேசாமல் தன் முகத்திரையை இழுத்துவிட்டுக்கொண்டு படிகளில் ஏறி இடைநாழி வழியாக சென்றாள். அவளை வழிகாட்டி அழைத்துச்சென்ற ஏவலன் கைகளால் பிறரிடம் ஏதோ ஆணையிட்டுக்கொண்டே சென்றான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து பெண்கள் எவரும் வந்து குந்தியை வரவேற்கவில்லை என்பதும் மங்கலத்தாலமும் இசையும் எதிரே வரவில்லை என்பதும் சாத்யகிக்கு தெரிந்தது.

கனகர் “தாங்கள் உறைய சிறுமாளிகையே உள்ளது யாதவரே. இங்கே மாளிகைகளை கண்டடைவதுபோல பெரும்சிக்கல் ஏதுமில்லை. உண்மையில் இருபது பாடிவீடுகளை மேற்குவாயிலுக்கு அப்பால் காட்டுக்குள் அமைத்திருக்கிறோம். இளவரசியின் மணநிகழ்வுக்காக அரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அத்தனைபேரையும் தங்கவைத்துவிட்டாலே நான் பாரதவர்ஷத்தின் திறன்மிக்க அமைச்சன் என எனக்குநானே சொல்லிக்கொள்வேன்” என்றார். சாத்யகி தலையசைத்து “நான் சற்று ஓய்வெடுக்கிறேன். அதற்குள் காசிநாட்டு இளவரசியிடம் செய்தியறிவித்து ஒப்புதலை எனக்கு அளியுங்கள்” என்றான்.

மதிய உணவருந்தியபின் அவன் காத்திருந்தான். கனகரின் பணியாளன் வந்து இளவரசி அவனை புஷ்பகோஷ்டத்தின் அரசியர் அறையில் சந்திக்க சித்தமாக இருப்பதாக சொன்னான். சாத்யகி இடைநாழியில் அவன் சொல்லவேண்டிய சொற்களை நினைவுகூர்ந்தபடி சென்றான். தூதுச்சொற்களை நினைவிலமைக்கும்போது அவற்றை ஒரு குறிப்பிட்ட தாளத்தில் ஒழுங்கமைத்துக்கொள்வதும் அவற்றிலுள்ள சொற்களை எண்ணிக்கொள்வதும் அவனுடைய வழக்கம். அறுபது சொற்கள். அறுபது என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

புஷ்பகோஷ்டத்தின் மாளிகைமுற்றம் முழுக்க தேர்களும் குதிரைகளும் நிறைந்திருந்தன. கிளம்பிக்கொண்டிருந்தன, வந்து சேர்ந்துகொண்டிருந்தன. பொறுமையிழந்த புரவிகள் குளம்புகளால் தரையை தட்டின. பணியாட்கள் எங்கிருந்தோ ஓடிவந்தனர். எங்கோ விரைந்தோடினர். எங்கோ மங்கலப்பேரிசை எழுந்தது. பெருமுற்றம் முழுக்க மலர்கள். அவற்றை அந்தக்கூட்டத்தின் நடுவே புகுந்து கூட்டி அள்ளிக்கொண்டிருந்தனர். சில குதிரைகள் தலைநீட்டி மலர்தார்களை நாசுழற்றிப் பற்றி மென்றுகொண்டிருந்தன. ஒரு மூலையில் அறுந்துவிழுந்த மலர்மாலைகளை அள்ளிக்குவித்திருந்தனர். எவரும் எவரையும் நோக்கவில்லை. எந்த முறைமைகளும் அங்குநிகழவில்லை என்று தோன்றியது. ஆனால் ஒவ்வொன்றும் தன் போக்கில் நிகழ்ந்துகொண்டிருந்தன.

இடைநாழியில் அவனை தள்ளிவிட்டுக்கொண்டு நான்கு ஏவலர் முன்னால் ஓடினர். பன்னிரண்டு அணிப்பரத்தையர் கசங்கிய பட்டாடைகளும் களைப்பு நிறைந்த விழிகளுமாக சென்றனர். அவர்களுக்குப்பின்னால் தாலங்களை அடுக்கி தலையிலேற்றியபடி ஏவலன் சென்றான். இடைநாழியின் வளைவில் இசைச்சூதர்க்குழு ஒன்று யாழ்களுடனும் முழவுகளுடனும் அமர்ந்திருந்தது. இருவர் தவிர பிறர் துயின்றுகொண்டிருந்தனர். படிகளில் உதிர்ந்துகிடந்தது சதங்கையின் வெள்ளிமணிகள் என்று சாத்யகி கண்டான். எங்கும் இருந்த ஒழுங்கின்மைக்கும் குப்பைகளுக்கும் அப்பால் ஒரு மங்கலத்தன்மையை உணரமுடிந்தது.

அது ஏன் என்று எண்ணிக்கொண்டே சென்றான். இடைநாழிக்கு அப்பால் பெருங்கூடத்தின் வாயிலை அடைந்தபோது தோன்றியது, தெரிந்த அனைத்து முகங்களிலும் இருந்த உவகையினால்தான் என்று. வேறெந்த தருணத்திலும் அரண்மனைகளில் அவன் மகிழ்ந்த முகங்களை கண்டதில்லை. அரண்மனையின் ஊழியர்களனைவருமே சலிப்புகொண்டு அதைமறைக்க ஒரு பாவைமுகத்தை பயின்று ஒட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். பழகியதடம்தேரும் மந்தைகள் போல. வேலுடன் வந்து வணங்கி அவனை அழைத்துவந்த ஏவலனுடன் பேசிய காவலன் நன்றாக களைத்திருந்தான். ஆனால் அவனிடமும் உவகையின் நிறைவு இருந்தது.

விழவுகளிலெல்லாம் எளியமனிதர்கள் உவகைகொள்கிறார்கள். அரசகுலத்தவரும் ஆட்சியாளர்களும் அப்படி மகிழ்வதில்லை. எளியமக்கள் அவர்களுக்கு மேலே இருக்கும் அனைத்தையும் விழிதூக்கி நோக்கிக்கொண்டிருப்பவர்கள். அரசுகளை, உயர்குடியினரை, முறைமைகளை, தெய்வங்களை. ஏதோ ஒன்று எங்கோ பிழையாகிவிடும் என்ற அச்சத்திலேயே அவர்களின் வாழ்க்கை செல்வதை முகங்களில் காணமுடியும். உண்மையில் அவ்வாறு பிழையாகி கழுவேறுபவர்களால் ஆனது அவர்களின் சூழல். அச்சம் அவர்களை தனிமைப்படுத்துகிறது. தானும் தன் சுற்றமும் மட்டும் பிழையிலாது கடந்துசென்றால்போதுமென எண்ணுகிறார்கள்.

விழவு அவர்களை அச்சத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் விடுவிக்கிறது. நாளையும் நேற்றுமில்லாத கணங்களை அளிக்கிறது. விழவென்பதே ஒரு களிமயக்கு. எந்த விழவிலும் கள்ளும் களிப்புகையும் முதன்மையானவை. கூடவே இசை. நடனம். நாடகங்கள். மழை வெயில் பனி. அனைத்துக்கும் மேலாக காமம். சில விழவுகளின் நினைவுகளன்றி இம்மக்கள் தங்கள் வாழ்நாளில் வேறெதையாவது உள்ளத்தில் சேர்த்துக்கொள்வார்களா? அவனை ஏவலன் ஒரு சிறுகூடத்தில் அமரச்செய்தான். அவன் அமர்ந்ததும் “நான் கேட்டுவிட்டு வருகிறேன் இளவரசே” என்று சொல்லி விலகிச்சென்றான்.

சாத்யகி கூடத்தில் இருந்தவர்களுடன் அமர்ந்து காத்திருந்தான். அவர்கள் அனைவரும் பட்டாடையும் அணிகளுமாக விழவுக்கோலத்தில் இருந்தனர். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசகுடிகள் என்பது தெரிந்தது. ஒருவரை ஒருவர் அவர்கள் அறிமுகம் செய்துகொள்ளாமை முறைமைகளைப்பற்றிய தயக்கத்தால் அல்ல மொழியறிவின்மையால்தான் என்று தோன்றியது. அவன் விழிகளை சந்தித்ததும் தலைவணங்கி புன்னகைத்தனர். அவர்களின் தலைப்பாகைகளும் தலைவணங்குதலும் மட்டுமல்லாது புன்னகைகளும்கூட மாறுபட்டிருந்தன. அவர்களிடம் பேசலாமா என சாத்யகி எண்ணிக்கொண்டிருக்கையில் வெளியே மங்கல இசை எழுந்தது.

அனைவரும் எழுந்து நிற்க வெளியே இருந்து மங்கல இசைக்குழு உள்ளே வந்தது. தொடர்ந்து பொலித்தாலங்களுடன் அணிப்பரத்தையர் வந்தனர். ஏழு மூதன்னையர் கைகளில் நெல், மலர், மஞ்சள், கனிகள், நிறைகுடம், பால், விளக்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளே நுழைய தொடர்ந்து பன்னிரு இளவரசிகள் கைகளில் நெய்விளக்குகளை ஏந்தியவர்களாக நிரைவகுத்து உள்ளே வந்தனர். ஒவ்வொருவரும் இடக்கையால் தங்கள் பட்டாடையை மெல்ல தூக்கி வலக்காலை எடுத்து படிக்குள் வைத்து நுழைய வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. மகாநிஷாதர் குலத்து இளவரசிகள் அவர்கள் என சாத்யகி அறிந்தான்.

”இளவரசியர் பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோரை விண்வாழும் மூதன்னையர் வாழ்த்தட்டும். அவர்களின் கால்கள் பட்ட இம்மண்ணில் அனைத்து வளங்களும் பெருகுக! தெய்வங்கள் இங்கு திகழ்க! ஓம் ஓம் ஓம்” என்று முதுநிமித்திகர் கோல்தூக்கி வாழ்த்தினார். இளவரசியருக்குப்பின்னால் ஒன்பது காந்தார அன்னையரும் வந்தனர். அவர்களுடன் கையில் மலர்த்தாலமேந்தி வருபவள்தான் பானுமதி என்று சாத்யகி புரிந்துகொண்டான். அவளுக்கு பலந்தரையின் சாயலிருந்தது.

அனைவரும் மலரும் மஞ்சளரிசியும் தூவி வாழ்த்துரைத்தனர். இளவரசியர் ஒவ்வொருவராக உள்ளே சென்று மறைய பின்னால் வந்தவர்கள் அந்தக் கூடத்தில் தலைகளாக நிறைந்தனர். தலைப்பாகையின் பசைமணம். வியர்வை வீச்சம். குரல்கள் உடல்கள்நடுவே கசங்கின. எவரோ “சாளரங்களை திறந்து வைக்கக் கூடாதா?” என்றனர். ”திறந்துதான் இருக்கின்றன” என எவரோ சொன்னார்கள்.

சாத்யகி பின்னால் சென்ற சந்திரிகையையும் சந்திரகலையையும் பார்த்தான். அவர்கள் அந்த இரைச்சலாலும் கொந்தளிப்பாலும் மிரண்டவர்கள் போல சுற்றிச்சுற்றி நோக்கினர். முகங்கள் களைத்து கன்றியிருந்தன. கண்மையும் நெற்றிக்குங்குமமும் காதோரப்பொன்பொடியும் வியர்வையில் கரைந்து வழிந்து தீற்றப்பட்டு தெரிந்தன.

மீண்டும் அனைவரும் அமரப்போகும்போது மங்கல இசை எழுந்தது. அவனருகே இருந்த சிறிய குழு எழுந்தது. “அவர்கள்தான். கொற்றவை ஆலயத்திலிருந்து வந்துவிட்டனர்” என்றார் ஒருவர். “அவர்கள் துர்க்கை ஆலயத்திற்கல்லவா சென்றார்கள்?” முதலில் சொன்ன வயோதிகர் “எல்லாம் ஒன்றுதான்” என்றபடி முன்னால் சென்றார். “இவர்கள் யார்?” என்று சாத்யகி அருகிலிருந்தவர்களை கேட்டான். அவர் “நான் கோசலநாட்டவன். இக்ஷுவாகு குலத்து மகாபாகுவின் இளையோன். எங்கள் அரசரை க்ஷேமதர்சி என்றுதான் சொல்கிறார்கள்” என்றார்.

“இல்லை, இவர்கள்” என்றான் சாத்யகி. ”இவர்கள் அவந்தி நாட்டினர் என நினைக்கிறேன். விந்தருடைய உறவினரும் அனுவிந்தருடைய உறவினரும் தனித்தனியாக நின்றிருக்கிறார்கள். நீங்கள் யார்?” சாத்யகி “யாதவன்” என்று சுருக்கமாக சொன்னான். அதற்குள் கூடத்திற்குள் வெளியிலிருந்து வந்த கூட்டம் புகுந்து அழுத்தி நெரிக்க அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டனர். வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன.

நடுவே சென்ற இளவரசிகளை சாத்யகி நோக்கினான். நிமித்திகர் குலப்பெயருடன் இணைத்து அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சமுத்ரை என அவர்களின் பெயர்களைக் கூவி வாழ்த்தினர். அனைவருமே நீளமான மூக்கும் சற்று ஒடுங்கிய முகமும் சிறிய உடலும் கொண்டிருந்தனர்.

அதற்குள் அடுத்த முழவொலி வெளியே எழுந்தது. கோசலர் “அவர்கள் எங்கள் இளவரசிகள்” என உரக்கக் கூவினார். "காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை. அவர்களை ஏழு கன்னியர் என்று எங்கள் சூதர் பாடுவதுண்டு. சீதையின் குலத்தில் வந்தவர்கள் அவர்கள்...” இளவரசிகள் ஒவ்வொருவராக உள்ளே வந்ததைக் கண்டபோது சாத்யகி விந்தையான ஒன்றை உணர்ந்தான். ஒரு குலத்தைச்சேர்ந்த இளவரசிகள் அனைவரும் ஏறத்தாழ ஒரே முகம் கொண்டிருந்தனர். ஏழாகவும் பன்னிரண்டாகவும் சென்றாலும் அவர்கள் ஒருவரே என்று தோன்றியது.

அவனருகே கூட்டத்தைப்பிளந்து வந்த ஏவலன் ”இளவரசே, தங்களை பட்டத்து இளவரசி அழைத்துவரச்சொன்னார்கள்” என்றான். “எப்படிச்செல்வது?” என சாத்யகி தயங்கினான். “இங்கே இப்போது முறைமைகளென ஏதுமில்லை. முட்டிமோதிச்செல்லவேண்டியதுதான். வருக!” என்றான் ஏவலன். ”அத்தனைபேரும் அரசர்கள் என்றால் எப்படி முறைமையை நோக்குவது?”

கூடத்தின் மறுஎல்லையில் வாயிலை அடைவதற்குள் சாத்யகி நூற்றுக்கணக்கான தோள்களை, தலைப்பாகைகளை, கைகளை, இடைகளை அறிந்திருந்தான். உள்ளறையில் பெண்களின் ஓசைகள் நிறைந்திருந்தன. இடைநாழி சற்று இருட்டாக இருந்தது. உள்ளிருந்து மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் குரவைகளும் கேட்டன.

வாயிலில் நின்றிருந்த சேடியிடம் அவனை ஏவலன் அறிவித்தான். மரத்தாலான சிறிய அறை. பழங்காலத்து உயரமற்ற கூரை. சிறிய வாயிலைத் திறந்து “உள்ளே செல்லுங்கள் இளவரசே” என்றாள் சேடி. அவன் குனிந்து உள்ளே சென்றான். சிறிய அலங்கரிக்கப்பட்ட அறை என்றாலும் பலவகையான பொருட்களால் அது நிறைந்திருந்தது. அவற்றினூடாக ஓர் மங்கலப்பொருள் போலத்தான் அவளும் தெரிந்தாள். சாத்யகி தலைவணங்கி வாழ்த்துரைத்தான்.

பீடத்தில் அமர்ந்திருந்த பானுமதி எழுந்து முகமன் சொல்லி அவனை வரவேற்றாள். “வருக யாதவரே. தங்களை சந்திப்பது இளையயாதவரை சந்திப்பது. நான் நல்லூழ் கொண்டவள். இந்நாள் வாழ்த்தப்பட்டதாயிற்று” என்றாள். சாத்யகி தலைவணங்கி “நற்சொற்களுக்கு மகிழ்கிறேன். ஆனால் நான் அலைகடலின் துமி மட்டுமே” என்றான். “காசிநாட்டு இளவரசியை வணங்குகிறேன். விஸ்வநாதரின் அருள் என்னுடன் இருக்கட்டும்.”

புன்னகையுடன் அவனை அமரும்படி கைகாட்டினாள். அதற்குள் கதவு திறந்து ஓர் இளவரசி உள்ளே வந்து திகைத்து நின்றாள். “வா...” என்றாள் பானுமதி புன்னகைசெய்து கை நீட்டியபடி. அவளுக்கு பதினெட்டு வயதுக்குள்தான் இருக்கும். முறைமைகள் எதையும் பயிலாத சிறுமி என அந்தத் திகைப்பு சொன்னது. “இவள் காந்தாரத்து அசலரின் மகள் ஸ்வஸ்தி... இளவரசர் சமர் இவளை மணந்திருக்கிறார்” என்று அவளை இடைவளைத்து அருகே இழுத்து தன் பீடத்தின் கைமேல் அமரச்செய்தாள். “இவர் யாதவ இளவரசர்...” என்றாள்.

அவள் சிறுமியென நாணத்துடன் உடல் வளைத்து தலையை திருப்பினாள். “அங்கே இளவரசியர் அவைபுகும் வழக்கமில்லை. ஆகவே இவளுக்கு எந்த அரசுமுறைமைகளும் தெரியாது” என்றபின் ”என்னடி செல்லமே?” என்றாள். அவள் பானுமதியின் தோளில் பூனை போல உடலை உரசியபடி “மூத்தவளே, என்னை பிரீதியுடன் போகச் சொல்கிறார்கள்” என்றாள்.

“ஏன் போனால் என்ன?” என்றாள் பானுமதி. அவள் தலையை நொடித்து “நான் அசலரின் மகள் அல்லவா?” என்றாள். “ஆம், ஆனால் இங்கே நீ கௌரவரின் மனைவி... ஒன்றும் ஆகாது. செல்!” அவள் தலையை மறுப்பாக ஆட்டி “நான் பிரீதியின் அருகே நிற்க மாட்டேன்” என்றாள். “சரி, நீ க்ரியையுடன் நின்றுகொள்... போ” என்றாள் பானுமதி.

“நீங்கள் வருவீர்களா?” என்று அவள் எழுந்து நின்று கேட்டாள். “இதோ வந்துவிடுவேன்” என்று பானுமதி சொல்ல அவள் வெளியே சென்றாள். பானுமதி சிரித்துக்கொண்டு “திடீரென்று அரண்மனை முழுக்க தங்கைகள். பெயர்களை நினைவில் பதிக்கவே ஒருவாரம் ஆகுமென நினைக்கிறேன்” என்றாள்.

”கௌரவ இளவரசியின் மணமும் நெருங்குகிறது என அறிந்தேன்” என்றான் சாத்யகி. “ஆம், அதுவும் பெரும்பணியாக எஞ்சியிருக்கிறது. இளவரசியர் பாதிப்பேர்தான் வந்திருக்கிறார்கள். அனைவரும் வந்துசேர்வதற்கு இன்னும் இரண்டுவாரமாகும்.” அதுவே தருணம் என உணர்ந்த சாத்யகி “பாஞ்சாலத்து இளவரசி நகர்புகும்போது இங்கே மங்கலம் முழுமைகொண்டிருக்கும் என நினைக்கிறேன்” என்றான். “ஆம், அவள் இளவேனிற்காலத்தின் முதல் மழைபோல வருவாள் என்று சூதர் ஒருவர் பாடினார்.” அவளுடைய சிரிப்பிலிருந்து அவளுக்கு திரௌபதிமேல் அன்பும் மதிப்பும் மட்டுமே உள்ளது என சாத்யகி புரிந்துகொண்டான்.

“என் தூதை சொல்லிவிடுகிறேன் இளவரசி” என்றான். “சொல்லுங்கள்!” சாத்யகி சொற்களை ஒருமுறை அகத்தில் கண்டுவிட்டு “பாஞ்சால இளவரசி தங்களிடம் சொல்லும்படி ஆணையிட்ட சொற்கள் இவை” என்றான். ஒப்பிப்பது போல “பெருஞ்சுழல் பெருக்கில் எதற்கும் பொருளில்லை. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.”

“நீங்கள் என்றோ ஒருநாள் அவருடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பீர்கள் என அவர் நினைக்கிறார். அப்போது தெரியவில்லை என்றே அவர் மறுமொழி சொல்வார். அதை இப்போதே சொல்லியனுப்பியிருக்கிறார். இப்புவியில் அவர் அணுக்கமாக உணரும் முதல்பெண் நீங்கள். தங்கை என்று அவர்கள் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவர் நீங்கள்” என்று அவன் சொல்லிமுடித்தான்.

பானுமதி எந்த முகமாற்றமும் இல்லாது அதைக் கேட்டு அமர்ந்திருந்தாள். சொல்லி முடித்து சாத்யகி அவள் மறுமொழிக்காக காத்திருந்தான். அவள் மெல்ல அசைந்து பின் புன்னகைத்து “அதற்கு மறுமொழி ஏதும் தேவையில்லை யாதவரே. அவர் இங்கு வரும்போது சென்று தழுவிக்கொள்வது மட்டும்தான் நான் செய்யவேண்டியது” என்றாள். சாத்யகி தலைவணங்கினான்.

“இத்தருணத்தில் நான் விழைந்த சொற்கள்தான் இவை. இந்தக் கொப்பளிப்புக்கு அடியில் என் அகம் மிகமிக நிலையழிந்திருந்தது. அச்சமோ ஐயமோ... தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இவ்வரண்மனைக்குள் இளவரசியர் வந்துகொண்டே இருக்க நான் அமைதியிழந்தபடியே சென்றேன்.” அவன் அவளை புரியாமல் நோக்கியிருந்தான். அப்போது அவள் ஏதோ ஒருவடிவில் காந்தாரி போலிருந்தாள். தடித்த வெண்ணிறமான உடல். சிறிய விழிகள். சிறிய மூக்கு. சிறிய இதழ்கள்.

“இச்சொற்களும் எனக்குப்புரியவில்லை. ஆனால் இதைப்பற்றிக்கொண்டு நீந்தலாமென நினைக்கிறேன். நான் இங்கு அடையும் இந்த நிலையழிவை அங்கிருந்து உணர்ந்து அவர் சொல்லியனுப்பியிருக்கிறார்” என்றாள் பானுமதி.

சாத்யகி “இளவரசி இந்தக் கணையாழியை அவரது அன்புக்கொடையாக தங்களுக்கு அளிக்கும்படி சொன்னார்கள்“ என்றான். தந்தப்பேழையில் இருந்த கணையாழியை அவன் அளிக்க அவள் எழுந்து அதை வாங்கிக்கொண்டு திறந்து அதன் மணியை நோக்கினாள். ”பால்துளி போலிருக்கிறது” என்றாள். அவனும் அதைத்தான் எண்ணினான். செம்பட்டுப்பேழைக்குள் மழலையுதடுகளில் எஞ்சிய பால்மணி போல தெரிந்தது.

“இளைய அன்னை எப்படி இருக்கிறார்கள்?” என்று பானுமதி கேட்டாள். “அவர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை. முறைமைப்படி சென்று பார்த்து வணங்கவேண்டும். ஒப்புதல் கேட்டு செய்தி அனுப்பியும் மறுமொழி வரவில்லை.” சாத்யகி மெல்லிய புன்னகையுடன் "அவர்கள் நகர்நுழைந்ததை நகர் இன்னும் அறியவில்லை. அவர்கள் யாதவப்பேரரசி என்பதை யாதவர் மறந்துவிட்டனர். அந்தச் சினத்துடன் இருக்கிறார்” என்றான்.

“இங்கே ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான நகர்நுழைவுகள்” என பானுமதி அந்த அங்கதத்தை புரிந்துகொள்ளாமல் சொன்னாள். “காந்தாரப்பேரரசிக்கு நிகராகவே யாதவப்பேரரசியும் வந்தமர்ந்து புதிய மணமகள்களை வாழ்த்தவேண்டும். அதுதான் மூதன்னையருக்கு உகந்தது. நீங்கள் அதை அவரிடம் சொன்னால் நன்று.” சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அவன் அமைதியை அவள் உடனே புரிந்துகொண்டு “சந்திக்கமுடிந்தால் நானே சொல்லிக்கொள்கிறேன்” என்றாள். ”ஆம் இளவரசி, அதுவே நன்று” என்றான் சாத்யகி.

பானுமதி எழுந்துகொண்டு “அன்னையை பார்க்க வாருங்கள்” என்றாள். "நான் அவர்களிடம் முறைமைப்படி ஒப்புதல் பெறவில்லை” என்றான். “ஒப்புதலா? அன்னை காய்த்த ஆலமரம்போலிருக்கிறார். மொய்த்திருக்கும் பறவைகள் ஒலியாலேயே அவரை நீங்கள் அடையாளம் காணமுடியும். வருக!” சாத்யகி “நான் சந்திப்பதில் முறைமைப்பிழை இல்லை அல்லவா?” என்றான். பானுமதி “யாதவரே, நீங்கள் இளைய யாதவரின் புன்னகையை கொண்டுவருபவர். நீங்கள் இங்கே செல்லக்கூடாத இடமென ஏதுமில்லை. அன்னை இன்று இங்கே ஒரே ஒருவரை மட்டும் சந்திக்க விழைவாரென்றால் அது உம்மையே” என்றாள்.

பகுதி 16 : தொலைமுரசு - 6

மலர்களும் தாலங்களும் பட்டாடைகளும் குவிந்துகிடந்த இரு சிறிய அறைகளுக்கு அப்பால் பெரிய கூடத்திற்குள் திறக்கும் வாயில் திறந்திருந்தது. அதற்குள் ஆடைகளின் வண்ணங்கள் ததும்பின. "அன்னை காலைமுதல் அங்கிருக்கிறார். வண்ணங்கள் நடுவே” என்ற பானுமதி “வாருங்கள்” என சாத்யகியை உள்ளே அழைத்துச்சென்றாள். கூந்தலில் இருந்து சரிந்த செம்பட்டாடையை எடுத்து சுற்றிக்கொண்ட அசைவில் அவள் புதிய எழில்கொண்டாள். அசைவுகளில் அவளிடம் அத்தனை விரைவும் வளைவும் எப்படி தோன்றுகின்றன என சாத்யகி எண்ணிக்கொண்டான். அசையும் பெண் உடலாகத் தெரிபவளல்ல, பிறிதொருத்தி. அசைவென்பது அவள் உள்ளம்.

மரத்தூண்களின் மேல் அலையலையாக வளைந்த உத்தரங்கள் கொண்ட வளைகூரையுடன் அமைந்திருந்த பெருங்கூடம் நிறைய பெண்கள் செறிந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் இளவரசியர். அனைவரும் ஒன்றுபோலிருப்பதாக முதலில் தோன்றியது. பின்னர் குலங்களாக முகங்கள் தெரிந்தன. பின்னர் அவன் சந்திரிகையையும் சந்திரகலையையும் அடையாளம் கண்டுகொண்டான். சந்திரிகையின் தோளில் சாய்ந்து சந்திரகலை துயின்றுகொண்டிருந்தாள்.

அன்னையரும் அரசகுலப்பெண்டிரும் சேடியரும் என எங்கும் பெண்ணுடல்கள். மின்னும் அணிகள். நெளியும் ஆடைகள். வளையல்களும் சதங்கைகளும் மேகலைகளும் குலுங்கின. பெண்குரல்கள் இணைந்தபோது ஆலமரத்தின் பறவைக்கூச்சல் போலவே கேட்டது. அதன் நடுவே காந்தாரி முகம் புன்னகையில் விரிந்திருக்க இரு கைக்குழந்தைகள் போல பெரிய வெண்கரங்களை மடிமேல் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் உடலே புன்னகைசெய்துகொண்டிருப்பதாக தோன்றியது.

சத்யசேனை கூட்டத்தை ஊடுருவி வந்து அமர்ந்துகொண்டிருந்த இளவரசிகளுக்கு அப்பால் நின்று ஏதோ சொன்னாள். ஓசைகளில் அது மறைய சத்யவிரதை ”என்ன?” என்றாள். “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மாலையில் வந்துவிடுவார்கள்.” அவளைக்கடந்துசென்ற சேடியின் கையிலிருந்த பெரிய பூத்தாலத்தால் அவள் முகம் மறைந்து மீண்டும் தோன்றியது.

“யார்?” என்றாள் காந்தாரி. அவளிடம் சொல்ல இருவரைக் கடக்க காலெடுத்து வைத்து முடியாமல் நின்று சத்யசேனை “சுஹஸ்தனும் திருதஹஸ்தனும் வாதவேகனும் சுவர்ச்சஸ்ஸும் ஆதித்யகேதுவும் மச்சநாட்டுக்கு சென்றிருந்தார்கள் அல்லவா? இளவரசிகளுடன் வந்துகொண்டு..." அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சுஸ்ரவை ஓடிவந்து “அக்கா, அமைச்சர் கனகர் தங்களை சந்திக்க வந்திருக்கிறார்” என்றாள். “என்னையா?” என்று சத்யசேனை திரும்பி ஓடினாள். காந்தாரி “இளவரசியர் எப்போது வருகிறார்கள்?” என்றாள்.

அதற்கு யாரும் மறுமொழி சொல்வதற்குள் தேஸ்ரவை மறுபக்கம் வந்து “சுதேஷ்ணை எங்கே? அங்கே கேட்கிறார்கள்” என்றாள். “இங்கில்லை” என்றனர். ஒரு பெண் எழுந்து பானுமதியின் அருகே வந்து “அக்கா, உங்களைத்தான் பேரமைச்சர் சௌனகரின் தூதர் கேட்டுக்கொண்டே இருந்தார்” என்றாள். பானுமதியைப்போலவே வெண்ணிறமான கொழுத்த உடலும் பெரிய கைகளும் உருண்ட முகமும் கொண்டிருந்தாள். சிறிய உதடுகளும் கண்களும் சேர்ந்து எப்போதுமே சிரித்துக்கொண்டிருப்பவள் போல காட்டின.

பானுமதி “என்னையா? நான்தான் அவரை மாலைக்குமுன் சந்திப்பதாக சொல்லியிருந்தேனே?” என்றபின் “இவள் என் தங்கை அசலை. இளவல் துச்சாதனரை மணந்திருக்கிறாள்” என்றாள். அசலை “வணங்குகிறேன் யாதவரே” என்றாள். “என்னை அறிவீர்களா?” என்றான் சாத்யகி. “மிக நன்றாகவே அறிவேன்" என்று சொன்ன அசலை சிரித்து “சற்று முன்புதான் நீங்கள் அந்தப் பெருங்கூடத்தில் நின்றிருப்பதை பார்த்தேன். கேட்டு தெரிந்துகொண்டேன்” என்றாள்.

“ஆம், நின்றிருந்தேன். உங்களை நான் பார்க்கவில்லை.” அசலை ”நீங்கள் ஒட்டுமொத்தமாக பெண்களை பார்த்தீர்கள். நாங்கள் எவரையும் தனியாக பார்க்காமலிருப்பதில்லை யாதவரே. உங்களைப்பற்றி நிறைய சொன்னார்கள். உங்கள் ஐந்து அடிமைமுத்திரைகளை அறியாத பெண்களே இங்கில்லை” என்றாள். பானுமதி “சும்மா இரடீ” என அதட்டி “இவள் சற்று மிஞ்சிப்போய் பேசுவாள்...” என்று சாத்யகியிடம் சொன்னாள். சாத்யகி “அது அவர்களை பார்த்தாலே தெரிகிறது” என்றான் “நான் அரசவையில் பேசுவதற்கு பயிற்சி எடுத்திருக்கிறேன்...” என்றாள் அசலை.

“போதும்” என்றாள் பானுமதி. “இங்கே எழுந்து வராதே, அங்கே அரசியின் அருகே அமர்ந்துகொள் என்று சொன்னேன் அல்லவா?” அசலை “எவ்வளவுநேரம்தான் அமர்ந்திருப்பது? பேரரசிக்கு தன் மைந்தரின் மணமக்களை எண்ணி எண்ணி கைசலிக்கவில்லை. என்னையே நாலைந்துமுறை எண்ணிவிட்டார்கள். எண்ணிக்கை தவறித்தவறி மைந்தர்களின் மணமகள்கள் இப்போது பெருகிப்போயிருப்பார்கள்...” என்றாள். பானுமதி “நீயும் மடிநிறைய மைந்தரைப்பெற்றால் தெரியும்” என்றாள். அசலை சாத்யகியை நோக்கியபின் நாணத்துடன் சிரித்து “பெற்றுக்கொள்ளவேண்டியதுதான். இங்கே அரண்மனையில் நமக்கென்ன வேலை?” என்றாள். “ஆ... பேரரசி நம் குரலை கேட்டுவிட்டார்கள்.”

சாத்யகியை பானுமதி பெண்களினூடாக காந்தாரி அருகே அழைத்துச்சென்றாள். “அன்னையே, இளையயாதவரின் அணுக்கர், சாத்யகி" என்றாள். காந்தாரி உரக்கச் சிரித்தபடி கைகளை நீட்டி “என் அருகே வா மைந்தா... இத்தருணத்தில் என்னருகே நீ அல்லவா இருக்கவேண்டும்? உன் குழலணிந்த நீலப்பீலியைத்தான் தொட்டுக்கொண்டே இருந்தேன்” என்றாள். “நான் சாத்யகி அன்னையே... இளைய யாதவரல்ல” என்றான். “நீங்கள் வேறுவேறா என்ன? வா!” என்று காந்தாரி அவன் தலையை இரு கைகளாலும் பற்றி முடியை வருடினாள். “என்னருகே இரு மைந்தா! நான் மகிழ்ச்சியால் இறந்தால் அது அவன் அருளால்தான் என்று துவாரகைக்குச் சென்று என் குழந்தையிடம் சொல்.”

பானுமதி “அன்னை துயின்றே பலநாட்களாகின்றன” என்றாள். “எப்படி துயில்வது? பெண்ணாகி வந்தால் அன்னையாகி பெருகவேண்டும். மைந்தர் சூழ அமையவேண்டும். நான் இனி எதை விழையமுடியும்? என் மைந்தர் அஸ்தினபுரியை நிறைத்துவிட்டனர். அவர்களின் மைந்தர்கள் பாரதவர்ஷத்தை நிறைத்துவிடுவார்கள்” என்றாள் காந்தாரி. “கேட்டாயா இளையோனே? நேற்றெல்லாம் இந்தக் கூடத்தில்தான் இருந்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. களைப்பு தாளமுடியாமல் படுத்தால் ஓரிரு சிறிய கனவுகளுக்குப்பின் விழிப்புவந்துவிடும். பின்னர் என்னால் துயிலமுடியாது. இங்கே கூடம் முழுக்க ஓசைகள். எப்படி துயில்வது?”

“என்ன சொன்னேன்?" என்று அவளே தொடர்ந்தாள். "நேற்று நான் ஒரு கனவு கண்டேன். பீமசேனன் இங்கே வந்து என்னை வணங்குகிறான். அவனுடைய உடல் மணத்தை என்னால் உணரமுடிந்தது. இந்தக்கூடம் முழுக்க பெண்கள். என் நூறு மைந்தர்களின் மணமக்கள். சிரிப்பும் பேச்சும் ஆடையணிகளின் ஓசையுமாக. நான் அவனிடம் மைந்தா என் மணமகள்களை வாழ்த்து என்று சொன்னேன். அவன் இவர்களை வாழ்த்தினான்.” சாத்யகி “அவரும் இன்னும் சிலநாட்களில் வந்துவிடுவார் அல்லவா?” என்றான்.

“நான் அதை விதுரரிடம் கேட்டேன், இங்கே துச்சளையின் திருமணம் நிகழும்போது பாண்டவர்களும் அவர்களின் மணமகள்களும் இருப்பதல்லவா நன்று என்று. அவர்கள் தங்கள் அரசியின் நகர்நுழைவை இந்த மணநிகழ்வுடன் கலக்க விழையவில்லை என்றார். இன்றுகாலைதான் யாதவஅரசி வந்திருப்பதை அறிந்தேன். அது மூதன்னையரின் அருள்தான். அவளும் என் மகளுக்கு அன்னை. அவளுடைய வாழ்த்தும் தேவை... அவளை என்னை வந்து சந்திக்கும்படி சொல்லி செய்தி அனுப்பினேன்... பானுவை அனுப்பி அவளை அழைத்துவரவேண்டும். என் மைந்தரின் மணமகள்களை அவளும் காணவேண்டும்..."  சாத்யகி “ஆம்” என்றான்.

காந்தாரி சிரித்து “இத்தனை பெண்களுடன் எப்படி இருக்கிறது அரண்மனை என்று சத்யையிடம் கேட்டேன். வண்ணத்துப்பூச்சிகள் வந்து குவிந்ததுபோலிருக்கிறது என்றாள். காதுகளாலேயே என்னால் வண்ணங்களை அறியமுடிகிறது” என்றாள். கைநீட்டி “அவள் எங்கே? அவந்திநாட்டு இளவரசி, அபயைதானே அவள் பெயர்?” என்றாள். பானுமதி “ஆம், இங்கிருக்கிறாள் அன்னையே” என்றாள். காந்தாரி கையை வீசி "நேற்று நான் கண்கட்டை அவிழ்க்கவேண்டும் என்று சொன்னாளே அவள்?” என்றாள். பானுமதி “அவள் இளையவள் மாயை” என்றபின் மாயையை நோக்கி எழுந்துவரும்படி கையசைத்தாள்.

மாயை எழுந்து வந்து அருகே நிற்க அவளை இடைவளைத்துப்பிடித்து “கணவனுக்காக ஏன் கண்களை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறாள். நான் சொன்னேன் எல்லா மனைவியருமே கணவனுக்காக கண்களை கட்டிக்கொண்டவர்கள் அல்லவா என்று” என்று சிரித்தாள் காந்தாரி. மாயை இடையை நெளித்து சாத்யகியை நோக்கி சிரித்தாள். “கணவனிடம் கண்ணை கட்டிக்கொண்டிருக்கலாம், வாயை கட்டிக்கொண்டிருக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னேன்... என்ன சொல்கிறாய்?” என்றாள் காந்தாரி. சாத்யகி ”நான் எதையும் அறியேன் அன்னையே” என்றான்.

“இவர்களெல்லாம் மாளவ குலத்தினர். அவந்தி அரசு மாளவத்தின் துணையரசாகத்தான் முற்காலத்தில் இருந்தது. மாளவத்தின் கொடிவழியில்தான் விந்தரும் அனுவிந்தரும் வந்திருக்கிறார்கள்” என்றாள் காந்தாரி. சாத்யகி “அனைவரும் பார்க்க ஒன்றேபோலிருக்கிறார்கள்” என்றான். காந்தாரி “அப்படியா? நான் தடவிப்பார்த்தே அதைத்தான் உணர்ந்தேன்” என்றாள். உடல் குலுங்கச் சிரித்து “ஆனால் இவர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள். அவந்தியே விந்தியமலையடிவாரத்தில் ஒரு சிறிய நாடு. அது தட்சிண அவந்தி உத்தர அவந்தி என இருநாடுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே இவர்கள் இருநாட்டினராக உணர்கிறார்கள்” என்றாள்.

சாத்யகி ”மாகிஷ்மாவதிதானே தலைநகரம்?” என்றான். ”தட்சிண அவந்திக்கு மாகிஷ்மாவதி தலைநகரம். அதை விந்தர் ஆட்சி செய்கிறார். உத்தர அவந்திக்கு புதியதாக ஒரு நகரை உருவாக்கியிருக்கிறார்கள். உஜ்ஜயினி. அது மாகாளிகையின் நகர். அதை அனுவிந்தர் ஆள்கிறார். நடுவே ஓடும் ஒரு ஆறுதான் இருநாடுகளையும் பிரிக்கிறது... என்னடி ஆறு அது?”

மாயை மெல்லியகுரலில் “வேத்ராவதி...” என்றாள். ”ஆம், வேத்ராவதி. அந்த ஆறு இவர்களுக்கு நடுவே ஓடுவதை ஒவ்வொரு பேச்சிலும் கேட்கலாம்” என்றாள் காந்தாரி. “ஐந்துபேர் விந்தரின் பெண்கள்.... யாரடி அவர்கள்?” ஒருத்தி புன்னகையுடன் “நாங்கள் ஐவர். அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை” என்றாள். “நீ யார்?” "நான் சுகுமாரி." “மற்ற எழுவரும் அனுவிந்தரின் பெண்கள்... மாயைதானே நீ? சொல் உங்கள் பெயர்களை” மாயை வெட்கத்துடன் சாத்யகியை நோக்கியபின் “கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை” என்றாள்.

“பார், இத்தனை பெயர்கள். எல்லாமே தேவியின் பெயர்கள்கூட. இவர்களை எப்படி நினைவில் நிறுத்துவது? இப்படி மீண்டும் மீண்டும் கேட்டு பயிலவேண்டியதுதான்... இப்போது மூத்த இருவரின் மனைவியர் பெயர்கள்தான் நினைவிலுள்ளன. பானுமதி, இளையவள் பெயர் வைசாலி” என்றாள். அசலை கைதூக்கி “அன்னையே, என் பெயர் அசலை. அசையாதவள். மலைபோன்றவள்... மலை! மலை!” என்றாள். பெண்கள் சிரிப்பை அடக்கினார்கள்.

“நீயா மலைபோன்றவள்? கொடிபோலிருக்கிறாய்” என்றாள் காந்தாரி. ”அஸ்தினபுரியின் மடைமகனின் திறனை நம்பியிருக்கிறேன் அன்னையே. அடுத்த சித்திரையில் மலையாக மாறிவிடுகிறேன்.” காந்தாரி ”சீ, குறும்புக்காரி... கேட்டாயா யாதவா, இந்தக் கூட்டத்திலேயே இவளுக்குத்தான் வாய் நீளம்” என்றாள். ”இத்தனை பெயர்களையும் சொல்லிக்கொண்டிருந்தால் எனக்கு தேவி விண்மீட்பு அளித்துவிடுவாள்.”

சத்யவிரதை உள்ளிருந்து வந்து “அப்படித்தானே இளவரசர்களின் பெயர்களையும் நினைவில் நிறுத்தினோம்...” என்றாள். காந்தாரி முகம் சிவக்கச் சிரித்து “ஆம்...” என்றாள். “எங்களைவிட அவர்களின் தந்தை எளிதில் அவர்களை அடையாளம் கண்டுகொள்வார். காலடியோசையே அவருக்குப் போதுமானது.” சாத்யகி “இப்போது படைகளாலும் இருநாடுகளாகவா இருக்கின்றது அவந்தி?” என்றான்.

“ஆம், அதுதான் இவர்களிடையே இத்தனை உளவேறுபாடு... ஒரு நிலம் இரண்டாக இருந்தால் உள்ளங்களும் அப்படியே ஆகிவிடும். நான் இவர்களிடம் சொன்னேன். வேத்ராவதியை மறந்துவிடுங்கள். உங்கள் நாட்டை சுற்றிச்செல்லும் பெருநதியாகிய பயஸ்வினியை நினைவில் நிறுத்துங்கள். உங்கள் நாட்டுக்குமேல் எழுந்து நிற்கும் விந்திய மலைமுடியான ரிக்‌ஷாவதத்தை எண்ணுங்கள். நீங்கள் ஒன்றாக இருக்கமுடியும். இந்த அரண்மனையில் இடமில்லை. இது மிகத்தொன்மையானது. நாங்கள் பத்து அரசியரும் ஒன்றாக இருந்தமையால்தான் இதற்குள் வாழமுடிந்தது.”

சாத்யகி தன்னுள் சம்படை பற்றிய எண்ணம் எழுவதை ஓர் உடல்நிகழ்வு போன்றே உணர்ந்தான். அதை அவன் வென்றது அவனில் அசைவாக வெளிப்பட்டது. பானுமதி அவனை நோக்கியபோது அவள் அதை புரிந்துகொண்டாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. மனிதர்கள் இத்தனை நுட்பமாக உள்ளங்களை புரிந்துகொள்ளமுடியுமென்றால் உள்ளம் என்பதுதான் என்ன?

காந்தாரி ”இங்கே இத்தனை செல்வங்களைக் கண்டதும் நான் நினைத்துக்கொண்டதெல்லாம் யாதவ அரசியைத்தான். அவள் என்னையும் என் மைந்தரையும் வெறுப்பவள் என அறிவேன். ஆனாலும் அவள் இங்கிருக்கவேண்டும் என விழைந்தேன். இவர்களைப் பார்த்தால் அவள் உள்ளமும் மலரும் என்றுதான் தோன்றியது” என்றாள்.

சாத்யகி “நான் அன்னையிடம் சொல்கிறேன். அவர் இங்கு வருவதில் மகிழ்வார் என்றே நினைக்கிறேன். இல்லையேல் நாளை இளைய யாதவர் வருகிறார். அவரிடம் சொல்லி அழைத்து வருகிறேன்” என்றான். காந்தாரி “இளைய யாதவன் நாளை வருகிறானா? ஆம், சொன்னார்கள்... நாளைதான்...” என்றாள். “அவன் வந்ததுமே இங்கு அழைத்துவரச்சொல். நான் பார்த்தபின்னர்தான் அவன் வேறு எங்கும் செல்லவேண்டும்” என்றாள். “ஆணை” என்றான் சாத்யகி.

பேச்சைமாற்ற விழைபவள் போல பானுமதி “பாஞ்சாலத்து இளவரசி எனக்கொரு பரிசு கொடுத்தனுப்பியிருக்கிறாள் அன்னையே” என்றாள். “ஒரு கணையாழி. வெண்கல் பொறிக்கப்பட்டது.” காந்தாரி “வெண்கல்லா? அது மிக அரிதானது அல்லவா? கொடு” என கையை நீட்டினாள். அவள் உள்ளங்கை மிகச்சிறியதாக இருப்பதை சாத்யகி வியப்புடன் நோக்கினான். சிறுமியருடையவை போன்ற விரல்கள். பானுமதி கணையாழியை கொடுத்ததும் அதை வாங்கி விரல்களால் தடவிநோக்கி “தொன்மையானது” என்றாள். “வெண்ணிற வைரம் நூறு மகாயுகம் மண்ணுக்குள் தவமியற்றியது என்பார்கள்.”

பானுமதி “ஆம் அன்னையே” என்றாள். “அந்தத்தவத்தால் அது இமய மலைமுடி என குளிர்ந்திருக்கும் என்று சொல்வதுண்டு.” காந்தாரி “சூதர் தீர்க்கசியாமர் இருக்கிறாரா பார். அவரை வரச்சொல்... இந்த வைரத்தைப்பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...” என்றாள்.

சத்யவிரதை வெளியே சென்றாள். சற்றுநேரத்தில் தீர்க்கசியாமர் சிறியமகரயாழுடன் நடந்து வந்தார். அவருடன் முதிய விறலி ஒருத்தியும் சூதச்சிறுவரும் வந்தனர். தீர்க்கசியாமர் உறுதியான கரிய சிற்றுடல்கொண்ட இளையவர் என்றாலும் முதியவர் போல மெல்ல காலெடுத்து வைத்து நடந்தார். அந்த நடையைக் கண்டபின் ஒரு கணம் கழித்தே அவருக்கு விழியில்லை என்று சாத்யகி அறிந்துகொண்டான். “இவரது சொற்கள்தான் எனக்கு மிகத் தெளிவாகத் தெரியக்கூடியவையாக உள்ளன... இங்கே நெடுங்காலமாக இவர்தான் அவைப்பாடகர்” என்றாள் காந்தாரி.

“தீர்க்கசியாமர் பிறவியிலேயே விழியற்றவர். முன்பு இங்கு பேரரசரின் ஆசிரியராக முதுசூதர் தீர்க்கசியாமர் என்பவர் இருந்தார். பீஷ்மபிதாமகருக்கே அவர்தான் ஆசிரியர் என்கிறார்கள். அவரது ஆலயம் தெற்குக் கோட்டைவாயிலருகே இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் கூடும் முனையில் உள்ளது. அவரைப்போலவே விழியற்றவராகவும் சொல்லில் ஒளி கொண்டவராகவும் இவர் இருந்தமையால் அப்பெயரை இவருக்கும் இட்டார்களாம்” என்றாள்.

தீர்க்கசியாமர் சிறுவர்களால் வழிகாட்டப்பட்டு வந்து பீடத்தில் அமர்ந்தார். காந்தாரி அவரை வணங்கி முகமன் சொன்னதும் கைதூக்கி வாழ்த்தினார். ஓசைக்காக அவர் செவி திருப்பியதனால் சாத்யகியின் முன் அவரது முகம் தெரிந்தது. விழியிழந்த முகத்தில் எவருக்கும் என்றில்லாத பெரும்புன்னகை ஒன்றிருந்தது.

காந்தாரி “இவருக்கு நுண்ணிய இசை தெரியவில்லை என்று பேரரசர் சொல்வார். இசை கேட்கும் செவிகளும் எனக்கில்லை. ஆனால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களின் குலவரிசைகளையும் இந்நிலத்தின் அனைத்து நதிகளையும் மலைகளையும் இவர் அறிவார். இவர் அறியாத மானுடர் எவருமில்லை என்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தீர்க்கசியாமர் மட்டும் தன்னந்தனிமையில் ஓர் உச்சிமலை முடியில் அமர்ந்து பாரதவர்ஷத்தை ஒட்டுமொத்தமாக நோக்கிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னாள். “நான் இங்கிருந்து இவரது கண்கள் வழியாக பாரதவர்ஷத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”

”தீர்க்கசியாமரைப்பற்றிய புராணங்களை கேட்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. “ஆம் இளவரசே. பாரதவர்ஷம் முழுக்க சூதர்களால் பாடப்படுபவர் தீர்க்கசியாமர். இன்று அவரை இங்குள்ள இசைச்சூதர்கள் சுவர்ணாக்‌ஷர் என்று வழிபடுகிறார்கள். பிறப்பிலேயே விழியற்றவராக இருந்தார். ஏழுமாதக்குழந்தையாக இருக்கும் வரை குரல் எழவில்லை. அவரது அன்னை அவர் இறப்பதே முறை என எண்ணி கொண்டுசென்று புராணகங்கையின் காட்டில் ஒரு தேவதாரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு வந்துவிட்டாள். அந்தமரத்தில் வாழ்ந்த கந்தர்வனாகிய தீர்க்கநீலன் குழந்தையைப் பார்த்து இறங்கி வந்து கையிலெடுத்து கொஞ்சி தன் இதழ் எச்சிலால் அமுதூட்டினான்.“

“விட்டுவிட்டுச் சென்ற அன்னை மனம்பொறாது திரும்ப ஓடிவந்தபோது குழந்தையின் அருகே ஒரு மகரயாழ்வடிவ களிப்பாவை இருந்தது. அதை யார் வைத்தார்கள் என்று அவளுக்குத்தெரியவில்லை. அதைக் குழந்தையுடன் சேர்த்து எடுத்துக்கொண்டுவந்தாள். அந்த யாழுடன் மட்டுமே குழந்தை விளையாடியது. அதனுடன் மட்டுமே பேசியது. அது வளரவளர யாழும் வளர்ந்தது. அதன் நரம்புகளுக்கேற்ப அதன் கைகளும் மாறின. இரவும்பகலும் அவருடன் அந்த யாழ் இருந்தது. கற்காமலேயே பாரதவர்ஷத்தின் அத்தனை கதைகளும் அவருக்குத் தெரிந்தன. பயிலாமலேயே அவரது விரல்தொட்டால் யாழ் வானிசையை எழுப்பியது.”

“அவர் சிதையேறியபோது உடன் அந்த யாழையும் வைத்தனர். அனல் எழுந்ததும் பொன்னிறமான புகை எழுந்தது. பொற்சிறகுகளுடன் வந்த தேவர்கள் அவரை விண்ணுக்குக் கொண்டுசென்றனர். அங்கே அவருக்கு பொன்னாலான விழிகள் அமைந்தன. கலைமகளை அவ்விழிகளால் நோக்கியபடி அவள் சபையில் அமர்ந்திருக்கிறார். என்பது புராணம். கலைமகளின் அவையில் அவருக்கு சுவர்ணாக்ஷர் என்று பெயர்” என்றார் தீர்க்கசியாமர். “இளமையிலேயே நானும் விழியிழந்திருந்தேன். செவிச்சொற்களாக உலகை அறிந்தேன். ஆகவே என்னை மூன்றுவயதில் அவரது ஆலயமுகப்பில் அமரச்செய்து அங்குலிசேதனம் செய்தனர்.”

அவர் தன் கைகளைக் காட்டினார். கட்டைவிரலை கையுடன் இணைக்கும் தசை வெட்டப்பட்டு விரல் முழுமையாக மறுபக்கம் விலகிச்சென்றிருந்தது. ”தீர்க்கசியாமரின் கைகளைப்போலவே கைகளை வெட்டிக்கொள்வதை நாங்கள் அங்குலிசேதனம் என்கிறோம். என் கை யாழுக்கு மட்டுமே உரியது யாதவரே. யாழின் அனைத்து நரம்புகளையும் கையை அசைக்காமலேயே என்னால் தொடமுடியும்.” சாத்யகி “இவ்வழக்கம் இங்கு பல சூதர்களிடம் உண்டு என்று கேட்டிருக்கிறேன்” என்றான். “அனைவரும் இதைச்செய்வதில்லை. பாடலன்றி வேறொரு வாழ்க்கையில்லை என்னும் இசைநோன்பு கொண்டவர்களுக்குரியது இது. இவர்கள் என் அன்னையும் இளையோரும். நான் இந்த யாழன்றி துணையில்லாதவன்.”

“என் அங்குலிசேதனம் நிகழ்ந்த அன்று நான் ஒருவனைக் கண்டேன்” என்றார் தீர்க்கசியாமர். “கண்டீரா?” என்று சாத்யகி கேட்டான். “ஆம், கண்டேன். மிக உயரமானவன். மார்பில் செம்பொற்கவசமும் காதுகளில் செவ்வைரக் குண்டலங்களும் அணிந்திருந்தான். அவன் முகமோ விழிகளோ உடலோ எனக்கு தெளிவாகத் தெரியவில்லை. அவன் கவசத்தையும் குண்டலத்தையும் அண்மையிலென கண்டேன். இன்றும் அக்காட்சி என்னுள் அவ்வண்ணமே திகழ்கிறது. அன்று நான் கண்டதை பிற எவரும் காணவில்லை என்று அறிந்துகொண்டேன். அன்றுமுதல் பிறர் காணாததைக் காண்பவனாக என்னை ஆக்கிக்கொண்டேன்.”

”அவனை மறுமுறை காணமுடிந்ததா?” என்றான் சாத்யகி. “இல்லை, அவனை நான் மறுமுறை காணும்போது என் பிறவிநோக்கமும் முழுமையடையுமென நினைக்கிறேன். அதுவரை காத்திருப்பேன்.” காந்தாரி “இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் கண்டது ஏதோ கந்தர்வனையோ தேவனையோதான் என்கிறார்கள்” என்றாள். தீர்க்கசியாமர் “இல்லை பேரரசி, அது சூரியன் என்கிறார்கள். அது சித்திரைமாதம். உத்தராயணத்தின் முதல்நாள். அன்று பிரம்மமுகூர்த்தத்தில் சூரியன் எழுந்தான். ஆயிரம் வருடங்களுக்கொருமுறை நிகழ்வது அது என்று நிமித்திகர் சொன்னார்கள்” என்றார். “அந்த நாளை இன்றும் நிமித்திகர் முழுமையாகவே குறித்து வைத்திருக்கிறார்கள்.”

“சூதரே, இந்த வெண்ணிற வைரத்தை தொட்டுப் பாருங்கள். இதைப்பற்றிய உங்கள் சொற்களை அறிய விழைகிறேன்” என்று நீட்டினாள் காந்தாரி. தீர்க்கசியாமர் அதை வாங்கி தன் விரல்களால் நெருடியபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். பெருமூச்சு விட்டபடி அதை தன் முன் வைத்தார். “அழகிய வெண்ணிற வைரம். பால்துளி போன்றது. முல்லைப்பூ போன்றது. இளமைந்தனின் முதல்பல் போன்றது. இனிய நறுமணம் கொண்டது. பஞ்சுவிதைபோல் மென்மையானது. இது லட்சுமியின் வடிவம் அல்லவா?”

“பரமனின் தூய சத்வகுணத்தின் வடிவமானவள் லட்சுமி. மகாபத்மை. மணிபத்மை. ஆகாயபத்மை. அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவி. அனைத்து அழகுகளுக்கும் அரசி. அனைத்து நலன்களுக்கும் இறைவி. இரக்கம். மென்மை, அமைதி, மங்கலம் ஆகியவற்றின் இருப்பிடம். விழைவு, சினம், சோம்பல், அகங்காரம் ஆகியவை துளியும் தீண்டாத தூய பேரிருப்பு. வைகுண்டத்தில் உலகாற்றி உறங்குபவனுக்கு பணிவிடை செய்யும் பத்தினி. கயிலையில் எரிவடிவோனின் இயற்பாதி. சொல்லாக்கி புடவி இயற்றுபவனின் சித்தத்தில் அமர்ந்தவள். சதி. விண்ணரசி. மண்மகள். நீர்களின் தலைவி. செல்வம், செறுதிறல், மறம், வெற்றி, வீரம், மைந்தர், வேழம், கல்வி என எண்வடிவம் கொண்டு இங்கு எழில்நிறைப்பவள். அவள் கையமர்ந்த மணி இது. அவள் வடிவாக எழுந்தருளும் ஒளி.”

“இதை வைத்திருக்கும் இளவரசி சத்வகுணம் கொண்டவள். பெண்களில் அவள் பத்மினி. வெண்தாமரை நிறமும் கொண்டவள். தாமரைத்தண்டுபோல குளிர்ந்தவள். அன்பும் பொறையும் கொண்டு இந்த அரசகுடி விளங்க வந்த திருமகள். அவள் குணமறிந்து அளிக்கப்பட்ட இந்த வெண்மணி என்றும் அவள் வலது சுட்டுவிரலில் இருக்கட்டும். கொற்றவையால் திருமகளுக்கு அளிக்கப்பட்ட செல்வம். இது வாழ்க” என்றார் தீர்க்கசியாமர். “ஒரு தருணத்திலும் இதை தேவி தன் உடலில் இருந்து விலக்கலாகாது. இது அவருடன் இருக்கும் வரை தீதேதும் நிகழாதென்று என் சொல் இங்கு சான்றுரைக்கிறது.”

“இங்கு பொலிருந்திருக்கும் பெண்களில் தேவியின் ஐந்து முகங்களும் நிறைவதாக! அவர்களின் அழகிய திருமுகங்கள் எழில்பெறட்டும். வீரத்திருவிழிகள் ஒளிபெறட்டும். அவர்களின் நெஞ்சில் அனலும் சொற்களில் பனியும் நிறையட்டும். அவர்கள் அள்ளிவைத்த விதை நெல் முளைவிடட்டும். அவர்கள் ஏற்றிவைத்த அடுமனைகளில் அன்னம் பொங்கட்டும். ஓம் அவ்வாறே ஆகுக!”

தீர்க்கசியாமர் பாடிமுடித்து தலைவணங்கினார். காந்தாரி உதடுகளை அழுத்தியபடி மெல்ல விசும்பி அழுதுகொண்டிருந்தாள். “அன்னையே... என்ன இது?” என்று பானுமதி அவள் கைகளை பற்றினாள். காந்தாரி அடக்கமுடியாமல் முகத்தை கைகளால் பொத்தியபடி பெரியதோள்கள் அதிர அழுதாள். பெண்கள் திகைப்புடன் நோக்கினர். அசலை அவளை தொடப்போக பானுமதி வேண்டாம் என கைகாட்டினாள். விசும்பல்களும் மெல்லிய சீறல்களுமாக காந்தாரி அழுது மெல்ல ஓய்ந்தாள். மேலாடையால் கண்ணைக்கட்டிய நீலத்துணி நனைந்து ஊற வழிந்த கண்ணீரை துடைத்தாள்.

”பேரரசி, தாங்கள் ஓய்வெடுப்பதாக இருந்தால்...” என பானுமதி சொல்ல வேண்டாம் என்று காந்தாரி கையசைத்தாள். “ஏனோ இதுதான் முழுமை என்று தோன்றிவிட்டதடி... இந்த இனிமை. இந்த நிறைவு. இதற்குமேல் இல்லை என்று தோன்றிவிட்டது. என்னுள் முகமற்ற பேரச்சம் நிறைந்தது. சொல்லத்தெரியவில்லை. அதன் பின் வெறுமை.” பானுமதி “அன்னையே, இன்பத்தின் உச்சத்தில் உள்ளம் அந்த நாடகத்தை போடுகிறது. சற்று பின்னால் வந்தபின் முன்னால் பாயும்பொருட்டு” என்றாள்.

காந்தாரி கண்ணீரைத் துடைத்தபின் பெருமூச்சுவிட்டு “இருக்கலாம்” என்றாள். “இருக்கலாம். அப்படித்தான் இருக்குமென எண்ணுகிறேன். என் மைந்தர்கள் இன்னும் வரவேண்டும். இன்னும் இளவரசிகளை நான் மடிமேல் வைத்து கொஞ்சவேண்டியிருக்கிறது.” அவள் முகம் மீண்டும் மலர்ந்தது. “இளையோனே” என்றாள். “அன்னையே” என்றான் சாத்யகி. “இளைய யாதவனை நான் பார்க்கவிழைகிறேன். உடனே...” சாத்யகி “நான் அழைத்துவருகிறேன்” என்றான். “நான் மட்டும் அல்ல. இங்குள்ள அத்தனை பெண்களும்தான் அவனை எண்ணி காத்திருக்கிறார்கள்...” என்று காந்தாரி சிரித்தாள்.

தீர்க்கசியாமர் எதையும் அறியாதவர் போல புன்னகை எழுதி பொறிக்கப்பட்ட முகத்துடன் இருந்தார். ”சூதர் எங்கே?” என்றாள் காந்தாரி. “இங்கிருக்கிறேன் அரசி.” காந்தாரி. “நன்று சொன்னீர். என் இல்லத்தில் லட்சுமி பெருகிநிறையவேண்டுமென வாழ்த்தினீர். நன்றி” என்றாள். சூதர் “நலம்திகழ்க!” என வாழ்த்தி எழுந்து வணங்கி பரிசில் பெற்று சென்றார்.

சாத்யகி “அன்னையே நான் கிளம்புகிறேன். மாலை அரசவைக்கு செல்லவேண்டும். அதற்கு முன் அன்னையையும் பார்க்கவேண்டும்” என்றான். காந்தாரி “இளைய யாதவனுடன் நாளை நீ வருவாய் என நினைக்கிறேன் மைந்தா” என்றாள். பின்னர் சற்று தயங்கி “நீ யாதவனை மட்டும் கூட்டிவந்தால் போதும். யாதவ அரசி இங்கு வரவேண்டியதில்லை. என் மகளிரை அவள் பார்க்கவேண்டியதுமில்லை” என்றாள். சாத்யகி “அது... முறைமைப்படி...” என்று சொல்லத்தொடங்க “வேண்டாம் மைந்தா” என்று காந்தாரி உறுதியான குரலில் சொன்னாள்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 1

பூரிசிரவஸ் துரியோதனனின் அறைவாயிலை அடைந்து தன்னை அறிவித்துக்கொண்டான். காத்திருந்தபோது அவன் அகம் சொல்லின்றி முற்றிலும் வெறுமையாக இருந்தது. அழைப்புவந்ததும் உள்ளே நுழைந்து சொல்லின்றி தலைவணங்கினான். துரியோதனன் கை காட்டி “அமர்க இளையோனே” என்றபின் “காலையில் இளைய யாதவன் வந்துவிட்டான்” என்றான். பூரிசிரவஸ் துரியோதனனுக்கு அருகே அமர்ந்திருந்த கர்ணனை நோக்கிவிட்டு தலையசைத்தான். காலையில் கண்விழித்தபோதே அவன் அதை அறிந்திருந்தான்.

“அரச முறைமைப்படி அவன் ஒருநாட்டின் அரசன். ஆகவே நம் அழைப்பு இல்லாமல் இந்நகருக்குள் வரக்கூடாது. ஆனால் யாதவ அரசியின் மருகனாக வந்து அவரது அரண்மனைக்கு அருகிலேயே தங்கியிருக்கிறான். அவர்களை இங்கே வரச்சொன்னதே அவன்தான். அவர்களுடன் வந்திருக்கும் யாதவ இளைஞன் சாத்யகி இளைய யாதவனுக்கு மிக அணுக்கமானவன். அவர்களிடம் தெளிவான திட்டங்கள் ஏதோ உள்ளன” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தவற்றுக்கு ஒரு இயல்பான நீட்சியை உருவாக்குவதற்காகவே துரியோதனன் அதை சொல்கிறான் என்று உணர்ந்த பூரிசிரவஸ் காத்திருந்தான். “இங்கு இப்போது வந்து யாதவ அரசி ஆற்றும் பணி என ஒன்றுமில்லை. இளைய யாதவன் செய்வதற்கும் ஏதுமில்லை. நாட்டைப்பிரிக்கும் வரைவு சித்தமாகி அனைவருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. துவாரகையில் பாண்டவர்கள் யாதவனுடன் அமர்ந்து ஒவ்வொரு ஊரையும் ஆற்றையும் ஓடைகளையும் கணக்கிட்டு நோக்கி அவ்வரைவை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அவர்கள் கோரிய அனைத்துத் திருத்தங்களையும் முறைப்படி செய்துவிட்டோம். படைகளை பிரிப்பதற்கான திட்டமும் முறையாக எழுத்துவடிவில் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.”

“காந்தாரப்படைகளின் பங்கென்ன என்பதைப்பற்றி ஒரு ஐயம் அவர்களுக்கிருக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் காந்தாரப்படைகளை இனிமேல் நாம் காந்தாரத்துக்கு திருப்பியனுப்ப முடியுமா என்ன? அவை இங்கே நமது மண்ணில் முளைத்தெழுந்தவை அல்லவா?” என்றான் துரியோதனன். “அவை பேரரசரின் ஆணைப்படி அஸ்தினபுரியில் இருக்கும் என்பதே பொதுப்புரிதல். அதுவன்றி வேறுவழியே இன்றில்லை.”

“அவை எல்லைக்காவல்படையாக விளங்குமென்றால் அஸ்தினபுரியை மட்டுமல்ல இந்திரப்பிரஸ்தத்தின் எல்லையையும் அவையே காவல் காக்கும். அவர்கள் அப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். “நாம் அவர்களுக்கு எங்கோ ஏதோ ஒரு முடிச்சை போட்டிருப்போம் என்றே அவர்கள் எண்ணுவார்கள். அனைத்துக்கோணங்களிலும் அதையே ஆராய்வார்கள். நான் அவர்களிடம் இருந்தால் காந்தாரப்படையின் இருப்பைப்பற்றியே பேசுவேன். ஏனென்றால் அவை இன்னமும் காந்தார இளவரசரின் நேரடி ஆட்சியில் உள்ளன.”

“அந்த ஐயம் அவர்களுக்கு எழுவது இயல்பானதே” என்று கர்ணன் சொன்னான். “ஆனால் அதையும் முறையாகக் களைந்துவிட்டோம். காந்தாரப்படைப்பிரிவுகள் முழுமையாகவே அஸ்தினபுரியின் மேற்கெல்லைக்காவலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். சப்தசிந்துவின் கரைகளில் இருந்து அவை விலகிச்செல்லாது. மேற்கெல்லையுடன் பாண்டவர்களுக்கு தொடர்பே இல்லை. அவர்கள் ஆளும் கிழக்கு எல்லையை அஸ்தினபுரியின் தொன்மையான படைகள்தான் காத்துநிற்கும்...”

பூரிசிரவஸ் “அஸ்தினபுரியின் படை என்பது ஷத்ரியர்களால் ஆனது. அதைப்பற்றியும் அவர்களுக்கு ஐயமிருக்கலாம்” என்றான். துரியோதனன் சினத்துடன் “என்ன பேசுகிறீர்? அப்படியென்றால் அஸ்தினபுரிக்கு படையே தேவையில்லையா? இங்குள்ள அனைத்தும் ஷத்ரியப்படைகளே. நூற்றாண்டுகளாக அஸ்தினபுரி ஷத்ரியப்படைகளால்தான் காக்கப்பட்டு வந்தது” என்றான்.

“அது ஐயமில்லாதபோது...” என்று கர்ணன் புன்னகைத்தான். ஏதோ பேச வாயெடுத்த துரியோதனனை கையமர்த்தித் தடுத்து “அந்த ஐயம் அவர்களுக்கிருக்கிறது என்றால் அவர்கள் அஸ்தினபுரியின் யாதவப்படைகளை மட்டும் கொண்டுசெல்லட்டும். அதற்கும் நாம் ஒப்புதல் அளிப்போம்” என்றான். “யாதவப்படை போதவில்லை என்றால் அங்குசென்றபின் இங்கு நாம் கொண்டுள்ள ஷத்ரியப்படைகளுக்கு நிகரான எண்ணிக்கையில் அவர்கள் யாதவர்களின் படை ஒன்றை உருவாக்கிக் கொள்ளட்டும். தெற்கெல்லைக் காவலுக்கு இங்குள்ள காந்தாரப்படைகளுக்கு நிகரான எண்ணிக்கையில் மதுராவின் யாதவப்படைகளை நிறுத்திக்கொள்ளட்டும்.”

“என்ன சொல்கிறாய் கர்ணா? நீ...” என்று சீற்றத்துடன் துரியோதனன் தொடங்க “இளவரசே, அவர்களுக்கு இன்று தேவை ஒரு பூசல். நாம் நம் நாட்டை அகமுவந்து அவர்களுக்கு பகிர்ந்துகொடுப்பதன் வழியாக மக்களிடையே நமக்கு செல்வாக்குதான் உருவாகும். அதை நானே அஸ்தினபுரியின் தெருக்களில் காண்கிறேன். அதை அழிக்க நினைக்கிறார் யாதவ அரசி” என்றான் கர்ணன். “அதை இப்போது நாம் வென்றாகவேண்டும். அதுதான் நமது உடனடித்திட்டமாக இருக்கவேண்டும்.”

துரியோதனன் தலையை நிறைவின்மையுடன் அசைத்தான். “இளவரசே, நாம் அஸ்தினபுரியின் அரசை ஆள்கிறோம். நால்வகைப்படைகளையும் கையில் வைத்திருக்கிறோம். அவர்கள் ஏதிலிகளாக அயல்நாடுகளில் வாழ்கிறார்கள். இந்நிலையில் எந்தப்பூசல் எழுந்தாலும் நாம் நம் நலனுக்காக அவர்களை ஏய்க்க முயல்வதாகவே பொதுவினர் விழிகளுக்குத் தோன்றும். அவர்கள் விழைவது அந்தச்சித்திரம்தான்...” துரியோதனன் தத்தளிப்புடன் “ஆனால் நானே மனமுவந்து கொடுத்தால்தான் நாட்டைப்பெறுவேன் என்று சொன்னவன் தருமன் அல்லவா?” என்றான்.

“ஆம், அது உண்மை. அது அவருடைய அகவிரிவைக் காட்டுகிறது. அவர் எதையும் கொடுக்காமல் கொள்ள விழையவில்லை. ஆனால் யாதவ அரசி அதிலுள்ள அரசியல் இழப்பை அறிந்துவிட்டார். இன்றுவரை தருமனின் வல்லமை என்பது அவருக்கிருக்கும் மக்களாதரவு. அதை அளிப்பது அவரது அறநிலைப்பாடு. அரசை உவந்து அளிப்பதன் வழியாக நீங்கள் ஒரு படி மேலே செல்கிறீர்கள். அது தருமனை சிறியவனாக்கிவிடும். அதைத்தான் யாதவ அரசி தடுக்க நினைக்கிறார்.”

“இப்போது அவர் தனியாக இங்கு வந்து தங்கியிருப்பதே அஸ்தினபுரியில் பேசப்படும் செய்தியாகிவிட்டது” என்று கர்ணன் தொடர்ந்தான். “அவர் தனியாக வந்திருக்கிறார். இங்கே அரசரும் இல்லை. இளைய யாதவன் அவருக்குத் துணையாக வந்திருக்கிறான். அதன் பொருளென்ன? நாம் பங்கீட்டில் பெரும் அறப்பிழைகளை செய்கிறோம், அவர் அதைத் தடுக்க வந்திருக்கிறார் என்றுதான். இன்னும் சிலநாட்களில் அவர் நம்மிடம் கண்ணீருடன் மன்றாடிய கதைகளை நீங்கள் அஸ்தினபுரியின் தெருக்களில் கேட்கலாம்.”

“சீச்சீ” என துரியோதனன் முகம் சுளித்தான். “இத்தனை சிறுமையான நாடகங்கள் வழியாகவா நாம் அரசியலாடுவது?” கர்ணன் புன்னகைத்து “எப்போதுமே அரசியல் இழிநாடகங்கள் வழியாகவே நிகழ்ந்துள்ளது. யானைகளை நரிகள் வேட்டையாடிக் கிழித்துண்ணும் கதைகளால் ஆனது வரலாறு” என்றான். “கர்ணா, என்னால் இதில் ஈடுபட முடியாது. அவருக்கு என்ன வேண்டும்? அரசா, நிலமா, படையா, கருவூலமா? எதுவானாலும் அவர் கோருவது அனைத்தையும் அளிக்கிறேன். உரையாடலே தேவையில்லை... அதை அவருக்கு சொல்” என்றான்.

“அவருக்குத் தேவை ஒரு பூசல் மட்டுமே” என்றான் கர்ணன் புன்னகையுடன். “அதைமட்டும்தான் நீங்கள் இப்போது அளிக்கமுடியும்.” துரியோதனன் தளர்ந்து “இதற்கு நான் என்ன செய்வது?” என்றான். ”முடிந்தவரை நாமும் அந்நாடகத்தை ஆடுவோம்” என்று கர்ணன் சொன்னான். “யாதவ அரசியை நாம் குலச்சபையினர் கூடிய பேரவையிலன்றி வேறெங்கும் சந்திக்கலாகாது. நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் பிழையாக பொருள் அளிக்கப்படலாம். அவையில் அவர் கோருவதை ஏற்பது நாமாகவும் மறுப்பது குலங்களாகவும் இருக்கவேண்டும்.”

“குலங்கள் மறுக்கவேண்டுமே?” என்றான் துரியோதனன். “மறுப்பார்கள்” என்று கர்ணன் சொன்னான். “நான் அவர்களின் உள்ளங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறேன். தெற்கு குருநாட்டில் யாதவர்களின் செல்வாக்கே இருக்கும் என்ற ஐயம் பிறகுடியினருக்கு உள்ளது. அத்துடன் புதியநகரில் சென்று குடியேறுவதை தொல்குடிகள் விழைவதில்லை. ஏனென்றால் ஒரு குடியின் பெருமை பழைமையிலேயே உள்ளது. புதிய இடம் எதுவாக இருந்தாலும் அதன் ஈர்ப்புக்கு நிகராகவே அச்சமும் ஐயமும் இருக்கும். ஆகவே இங்குள்ள எளியநிலை யாதவர் சிலர் மட்டுமே சென்று குடியேறுவார்கள்.”

“தொல்குடி யாதவர் அஸ்தினபுரியை விட்டு வெளியேற விழையவில்லை என்பதை நான் விசாரித்தும் அறிந்துகொண்டேன். அவர்கள் வெளியேறவில்லை என்பதற்கு பிறிதொரு பொருளும் உண்டு. வெளியேற விழையாதவர்களே தொல்குடியினர் என்னும் வரையறை உருவாகிறது. ஆகவே சற்றேனும் செல்வமோ புகழோ உடைய எவரும் அஸ்தினபுரியை விட்டு செல்ல வாய்ப்பில்லை.” கர்ணன் புன்னகைத்து “அஸ்தினபுரியைவிட்டு வெளியேற விழையவில்லை என்பதனாலேயே அவர்கள் நம்மவர்களாக ஆகிவிடுவார்கள். இதற்காக நிற்கவேண்டிய பொறுப்பை அடைகிறார்கள். நாம் சொல்வதை அவர்கள் ஆதரிப்பார்கள்” என்றான்.

“அவையில் யாதவப்பெருங்குடியினரே யாதவ அரசியை மறுத்துப்பேசட்டும். அவர் கோருவதை எல்லாம் அளிக்க நாம் சித்தமாக இருப்போம். அதற்கு யாதவக்குடிகள் மறுப்பு தெரிவிப்பார்கள். பூசலிடுவது யாதவ அரசி என்று அவையில் நிறுவப்படவேண்டும்” என்று கர்ணன் தொடர்ந்தான். துரியோதனன் சலிப்புடன் “இச்சிறுமைகள் வழியாகத்தான் நாடாளவேண்டுமா? நிமிர்ந்து நின்று நம் விழைவையும் திட்டத்தையும் சொன்னாலென்ன?” என்றான்.

கர்ணன் “பகடையாடுபவர்கள் நிமிர்ந்து அமர்ந்து ஆடி எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அது குனிந்தும் பிறர் விழிநோக்கியும் ஆடவேண்டிய ஒன்று” என்றான். துரியோதனன் ”அதை நீங்கள் ஆடுங்கள்” என்றான். "நான் இனி அதை ஆடுவதாக இல்லை. இதுதான் அரசு சூழ்தல் என்றால் இது என் இயல்பே இல்லை. இதிலெனக்கு உவகையும் நிறைவும் இல்லை.” கர்ணன் "அரசி வந்தபின் நீங்கள் மாறிவிட்டீர்கள் இளவரசே” என்றான்.

பூரிசிரவஸ் ”மூத்தவரே, குந்திதேவி இங்கு வந்தது இங்குள்ள மணநிகழ்வுகளில் பங்குகொள்ளத்தான் என்றுதான் விதுரர் சொன்னார். அது யாதவரின் ஆணை. அதை ஏன் நாம் நம்பக்கூடாது? மணநிகழ்வுகளில் பங்கெடுக்கும் கடமை அவர்களுக்கு உண்டல்லவா?” என்றான். அவன் துரியோதனனை நோக்கி “மேலும் இளைய யாதவர் இந்தப்பூசலை உருவாக்கும் செயலை திட்டமிட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். இங்கே இந்தப் பங்கீட்டை உருவாக்க அவர்தான் தூதுவந்தார். இப்புரிதல்களெல்லாம் அவரது ஆக்கம்... அதை அவரே குலைக்கமாட்டார்” என்றான்.

“ஆம், உண்மை. இளைய யாதவன் ஒருபோதும் பூசலை உருவாக்க எண்ணமாட்டான்” என்றான் துரியோதனன். “கர்ணா, நீ சொல்வது ஒருவேளை யாதவ அரசியின் திட்டமாக இருக்கலாம். கிருஷ்ணனின் திட்டம் அல்ல.” கர்ணன் மீசையை நீவியபடி விழிசரித்தான். பின்னர் நிமிர்ந்து “ஆம், அப்படியும் இருக்கலாம். இளைய யாதவனின் எண்ணம் யாதவ அரசி இங்கு வந்து விழவுகளில் கலந்துகொண்டு தன் மீது ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கவேண்டும் என்பதாக மட்டும் இருக்கலாம்” என்றான்.

“ஏழுவருடங்களில் இங்குள்ள யாதவக்குடிகள் அவர்களை மறந்துவிட்டார்கள். கதைகளில் வாழும் மானுடராகவே யாதவ அரசியும் பாண்டவர்களும் மாறிவிட்டார்கள். திடீரென்று முடிசூட்டு விழவில் வந்து நின்றால் இங்குள்ளவர்கள் அவர்களை தமராக ஏற்கத் தயங்கலாம், உடன் கிளம்புபவர்களும் பின்வாங்கலாம். அதன்பொருட்டே யாதவ அரசியை வரச்சொல்லியிருக்கிறான் இளைய யாதவன். ஆனால் யாதவ அரசி இங்கு வந்தபின் முயல்வது பூசலுக்காகவே. அதில் ஐயமில்லை...” கர்ணனை மறித்து பூரிசிரவஸ் “ஆனால்...” என்று சொல்லத் தொடங்க அவன் “பால்ஹிகரே, யாதவ அரசி பற்றி நான் நன்கு அறிவேன். அவரது உள்ளம் செல்லும் வழியை அறிந்துதான் சொல்கிறேன்” என்றான்.

“இப்போது என்ன செய்கிறார்கள்?” என்று துரியோதனன் கேட்டான். “காலையில் இளைய யாதவர் வந்ததுமே யாதவ அரசியை அழைத்துக்கொண்டு மகளிர் மாளிகைக்கு சென்றுவிட்டார். இப்போது பேரரசியுடன் இருக்கிறார்.” துரியோதனன் மெல்ல சிரித்து ”அவனைக் கண்டாலே அரண்மனைப்பெண்களுக்கு பித்து ஏறிவிடுகிறது” என்றான். “அன்னையும் துச்சளையும் பானுமதியும் அசலையும் எல்லாம் இப்போது உவகையுடன் இருப்பார்கள். பிற பெண்களுக்கும் இந்நேரம் களிமயக்கு ஏறியிருக்கும்.”

“இளைய யாதவனுடன் யாதவ அரசி சென்றிருப்பது நமக்கு நல்லதல்ல இளவரசே. யாதவ அரசியால் நம் அரண்மனை மணக்கோலம் கொண்டிருப்பதை தாளமுடியாது. அவரது முகம் அதை காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே அவர் அரண்மனைக்குச் செல்லட்டும் என நான் நேற்று எண்ணினேன். அவர் செல்ல மறுத்துவிட்டார். இன்று இளைய யாதவனுடன் செல்லும்போது அவனுடன் இருப்பதனாலேயே அவர் முகம் மலர்ந்திருப்பார். அவரது ஐயத்திற்கும் அச்சத்திற்கும் அடியிலுள்ள இனிய இயல்பு வெளியே வந்துவிடும். அவர்களை அரண்மனை மகளிருக்கு விருப்பமானவராக ஆக்கிவிட இளைய யாதவனால் முடியும்” என்றான் கர்ணன்.

“இதையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. பெண்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று திட்டமிடுவதெல்லாம் என் பணி அல்ல” என்று சொல்லி துரியோதனன் எழுந்தான். “இளையவனை வரச்சொன்னேன்... அவனால் மெல்ல நடக்கமுடிகிறது.” அவன் கைதட்ட ஏவலன் வந்து நின்றான். “இளையவன் வருகிறானா?” ஏவலன் “மெல்லத்தான் அவரால் வரமுடிகிறது. வந்துகொண்டிருக்கிறார்” என்றான்.

“நான் இப்போது குழம்பிவிட்டேன். இவர்களின் வரவின் நோக்கமென்ன என்று முழுதறியவே முடியவில்லை” என்றான் கர்ணன். “அதை கணிகர்தான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது.” துரியோதனன் “அவரையும் வரச்சொல்லியிருக்கிறேன். இதை நீங்களே திட்டமிடுங்கள். எனக்கு இந்த ஒவ்வொரு சொல்லும் கசப்பையே அளிக்கின்றது” என்று சொல்லி சாளரத்தருகே சென்று நின்றான். கர்ணன் பூரிசிரவஸ்ஸை நோக்கி புன்னகை செய்தான். அறைக்குள் அமைதி பரவியது. வெளியே மரக்கிளைகளில் காற்று செல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

துரியோதனன் திரும்பி “கர்ணா, என்னுடைய நாட்டை பகிர்ந்துகொள்ள நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதை என் கோழைத்தனமென்றா யாதவ அரசி எண்ணுகிறார்?” என்றான். கர்ணன் “இளவரசே, அவரது நாட்டை நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறார். அதை முழுமையாக வென்றெடுப்பது எப்படி என்று உள்ளூர கனவுகாண்கிறார். அதற்கு அன்று சொல்லவேண்டிய அனைத்து அடிப்படைகளையும் இன்றே உருவாக்கிக்கொள்ள திட்டமிடுகிறார். ஒருநாள் இந்திரப்பிரஸ்தம் நம் மீது படைகொண்டு வரும். அதை யாதவ அரசியே தூண்டுவார்” என்றான்.

“ஆனால் இன்று அவரது திட்டமென்பது முடிந்தவரை குடிகளை தன்னுடன் தெற்கு குருநாட்டுக்கு கொண்டுசெல்வது மட்டுமே. ஒரு பூசல் நிகழ்ந்தால் குடிகள் மீண்டும் இரண்டாவார்கள். இனப்பூசல் எழுந்தால் யாதவரனைவரும் ஒரேயணியில் நிற்பார்கள். அத்துடன் ஷத்ரியரல்லா சிறுகுடியினரில் அவர்மேல் கனிவு பெருகும்.” துரியோதனன் கசப்புடன் தலையை அசைத்து “இதைவிட நேரடியான தாக்குதலே மேல். அதை தெய்வங்கள் விரும்பும்” என்றான்.

ஏவலன் வந்து தலைவணங்க துரியோதனன் கையசைத்தான். கதவு திறந்து சகுனி உள்ளே வந்தார். கர்ணனும் பூரிசிரவஸ்ஸும் எழுந்து வணங்கினர். சகுனி துரியோதனனின் வணக்கத்தை ஏற்று வாழ்த்தி கையசைத்தபின் அமர்ந்தார். எலி நுழைவது போல ஓசையில்லாமல் கணிகர் உள்ளே வந்து கைகளால் காற்றைத்துழாவி நடந்து அறைமூலையில் இருந்த தாழ்வான இருக்கையில் சென்று அமர்ந்தார். மரக்கட்டை ஒலியுடன் துச்சாதனன் உள்ளே வந்தான். அவனைப்பிடித்து கூட்டிவந்த ஏவலர்கள் இருவர் மூச்சு வாங்கினர். அவன் உடல்பெருத்து வெளுத்திருந்தான். கன்னங்கள் சற்று பழுத்து தொங்கின. கண்களும் சாம்பல்நிறமாக இருந்தன. “அமர்ந்துகொள் இளையோனே” என்றான் துரியோதனன்.

துச்சாதனன் மூச்சுவாங்கியபடி உடல் கோணலாக நடந்துசென்று இருக்கையில் மெல்ல அமர்ந்து பெருமூச்சுவிட்டு வலிமுனகலுடன் கால்களை நீட்டிக்கொண்டு ஊன்றுகோல்களை ஏவலனிடம் நீட்டினான். அவன் அவற்றை ஓரமாக சாய்த்துவைத்துவிட்டு தலையணையை எடுத்து துச்சாதனனின் முதுகுக்குப் பின்னாலும் கையின் அடியிலும் வைத்தான். வலியில் பற்களை இறுக்கி கண்மூடி முனகியபின் துச்சாதனன் தலையை அசைத்து மீண்டும் பெருமூச்சுவிட்டான். கால்களை மிகமெல்ல அணுவணுவாக அசைத்து மேலும் நீட்டிக்கொண்டபின் விழிகளைத் திறந்தான். அவன் உடல் வியர்த்துவிட்டிருந்தது.

ஓர் உள்ளுணர்வு எழவே பூரிசிரவஸ் திரும்பி கணிகரை பார்த்தான். விழிகளை இடுக்கியபடி அவர் துச்சாதனனை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவன் நோக்குவதையே அறியவில்லை. அவர் பிறர் நோக்கை அறியாதிருக்கும் தருணங்களே இருப்பதில்லை என்பதை எண்ணியபோது அது வியப்பளித்தது. அவன் விழிகளை விலக்கி சகுனியை நோக்கினான். அவர் சாளரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். தாடியில் ஒளிபரவியிருந்தது.

“நாங்கள் யாதவ அரசியின் வரவைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம் கணிகரே” என்றான் துரியோதனன். கணிகர் “வந்திருப்பது இளைய யாதவன் மட்டுமே. பிறர் அவன் கையில் களிப்பாவைகள்” என்றார். “அவனைப்பற்றி மட்டும் பேசுவோம்.” கர்ணன் “சரி. அவர்கள் இங்கு என்னசெய்வதாக இருக்கிறார்கள்?” என்றான். “ஒன்றும் செய்யப்போவதில்லை. ஒன்றும் செய்யவும் முடியாதென்று அவன் அறிவான். ஏனென்றால் பிரிவினைக்கான பணிகளனைத்தும் முடிந்துவிட்டன. ஒவ்வொரு செயலுக்கும் அவர்களிடம் எழுத்துவடிவ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதை நான் காந்தாரரிடம் பலமுறை வலியுறுத்தியிருந்தேன்.”

“அப்படியென்றால் ஏன் அவனும் யாதவ அரசியும் முன்னரே வரவேண்டும்?” என்றான் துரியோதனன். “நான் சொன்னேனே, வெறுமனே இங்கு இருப்பதற்காக” என்றார் கணிகர். “ஆனால் பலசமயம் வெறுமனே இருப்பதே பெரிய செயல்பாடாக ஆகிவிடும்.” அவர் தன் பழுப்புநிறப் பற்களைக் காட்டி சிரித்து “நாம் இங்கு கூடியிருப்பதே ஒன்றும் செய்யாமல் அவர்களிருப்பதற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்பதை ஆராயத்தானே? இந்தக்குழப்பமும் அச்சமும்தான் அவர்கள் உருவாக்க எண்ணியது. இனி நாம் இயல்பாக எதையும் செய்யமுடியாது. நமது எண்ணங்களில்கூட எச்சரிக்கை எழுந்துவிடும். அவ்வெச்சரிக்கையாலேயே நாம் சூழ்ச்சிக்காரர்களின் விழிகளையும் மொழிகளையும் அடைவோம். பிழைகள் செய்வோம். அவன் எண்ணியது பாதி நிறைவேறிவிட்டது" என்றார்.

“நான் என் ஒற்றர்களிடம் இன்று பேசினேன். நேற்று யாதவ அரசி இங்கு வந்தபோது எவருமே அவரை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆனால் இன்று காலை அவர் வந்த செய்தி நகரெங்கும் பரவிவிட்டது. தெருக்களில் அதைப்பற்றிய பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. நாளைக்குள் அவை நுரையெனப்பெருகிவிடும்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாட்கணக்காக இங்கே மணவிழவுகள் நிகழ்கின்றன. அந்தக் களிமயக்கு மக்களை பிடித்தாட்டுகிறது. அதை அவன் அறிந்தான். மீண்டும் நாட்டுப்பிரிவினை பற்றி மக்கள் பேசவேண்டும் என திட்டமிட்டான். அதை நிகழ்த்திவிட்டான். ஏனென்றால் களியாட்டுக்கு நிகரான கேளிக்கைதான் வம்பாடலும். அதை அவனைவிட அறிந்தவன் எவன்?”

“இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? துச்சளையின் மணவிழா முடிந்த ஏழாவதுநாள் முடிசூட்டுவிழா அல்லவா? மணவிழவுக்கு வரும் மன்னரும் பெருங்குடியினரும் வணிகரும் முடிசூட்டு விழவு வரை இங்கிருப்பார்கள். ஆலயவழிபாடுகளும் மூத்தார் நோன்புகளும் தொடர்ந்து நடக்கும். அனைத்தும் இணைந்து ஒற்றைக் கொண்டாட்டமாகவே அமைந்துவிடும். பாண்டவர் நகர்புகுவதும் திரௌபதியின் வருகையும் அக்களியாட்டத்தின் பகுதிகளாகவே இருக்கும். அப்படியே நாடு பிரியும் நிகழ்வுக்குச் செல்லும்போது மக்கள் களைத்திருப்பார்கள். நாட்டுப்பிரிவினை குறித்த அரசரின் ஆணை இவ்விழவுகளின் எதிர்பார்த்த இறுதியாக அமையும். அது சோர்வூட்டும் ஒரு சிறு நிகழ்வுமட்டுமே. மிக எளிதாக அது நடந்துமுடியும். அதை யாதவன் விரும்பவில்லை.”

“ஏன்?” என்றான் துரியோதனன். “ஏனென்றால் அப்படி எளிதாகப்பிரிந்தால் பாண்டவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சிலருமன்றி எவரும் அவர்களுடன் செல்லப்போவதில்லை. யமுனைக்கரையில் இருக்கும் யாதவச்சிற்றூர்களுக்குச் சென்று குடிலமைத்துத் தங்குவதற்கு இங்குள்ள பெருங்குடியினர் செல்வார்களா என்ன?” என்றார் கணிகர். “ஆனால் அவர்கள் அங்கு ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள். துவாரகைக்கு இணையான நகர்” என்றான் பூரிசிரவஸ்.

“இளையோனே, துவாரகையில் இன்றும் பாதிக்குமேல் குடிகள் அயல்நாட்டு வணிகர்களே. அது கடல்துறைநகர். இந்திரப்பிரஸ்தம் ஆற்றங்கரையில் அமையும் நகரம். அது துறைமுகமாக எழுந்தபின்னரே வணிகர்கள் வருவார்கள். அந்நகரை கட்டுவது யார்? சிற்பிகள் தச்சர்கள் கொல்லர்கள் தேவை. அனைத்தையும் விட முதன்மையான ஒன்றுண்டு, ஒரு நகர் அமைக்கப்பட்ட பின் அங்கே சென்று குடியேற முடியாது. குடியேறியபின்பு அங்குள்ள தேவைகளுக்கு ஏற்பத்தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும். தேனீ கூடுகட்டுவதுபோல. அதற்கு அவர்களுக்கு குடிகள் தேவை.”

”செய்வதற்கொன்றே உள்ளது. அவர்கள் எதை தவிர்க்க நினைக்கிறார்களோ அது நிகழட்டும். இரவும் பகலும் நகரம் கொண்டாடட்டும். ஒருகணம் கூட காற்று ஓய்ந்து கொடி தொய்வடையலாகாது" என்றார் கணிகர். "ஆனால் ஏற்கெனவே யாதவ அரசியின் வருகை ஊரலரை உருவாக்கிவிட்டது என்றீர்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் அதை அவர்களைக் கொண்டே நாம் வெல்லமுடியும். இங்கு நிகழும் களியாட்டில் அவர்களையும் ஒரு பகுதியாக ஆக்குவோம். யாதவனும் யாதவ அரசியும் இங்கு வந்ததையே ஒரு கொண்டாட்டமாக ஆக்குவோம். ஒருநாளில் இந்த அலர் மறைந்துவிடும்.”

“இதுவும் ஒரு போர் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை” என்று கணிகர் தொடர்ந்தார். “இப்போரில் முதலில் நாம் வென்றிருக்கிறோம். அஸ்தினபுரியை நாம் அடைந்தோம். நம்மிடம் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படைகள் உள்ளன. சிந்து நாடும் நம்முடன் இணையும்போது நாம் நிகரற்றவர்கள். ஐயமே தேவையில்லை. அவர்கள் ஒரு நகரை உருவாக்கி அங்கே வணிகத்தைப்பெருக்கி படைகளை அமைத்து வலுப்பெறுவதென்பது ஒரு கனவு மட்டுமே. அதை அவர்கள் அடைவதை நம்மால் எளிதில் தடுக்கமுடியும். இப்போது நாம் செய்யவேண்டியது அவர்களுடன் செல்லும் குடிமக்களை முடிந்தவரை குறைப்பது மட்டுமே.”

”அப்படி நம்மால் குறைக்கமுடிந்தால் அவர்களுக்கு வேறுவழியில்லை. அங்கே பாஞ்சாலர்களையும் மதுராபுரி மக்களையும் குடியேற்றவேண்டும். அப்படிச்செய்தால் அதைக்கொண்டே தெற்கு குருநாடு அயலவரின் மண் என்னும் எண்ணத்தை இங்கே நம் மக்களிடம் உருவாக்கிவிடமுடியும். அந்நகரம் கட்டி முடிக்கப்படும்போது அவர்களின் முழுச்செல்வமும் செலவழிந்திருக்கும் கணத்தில் மிக எளிதாக ஒரு படையெடுப்பு மூலம் அவர்களை வென்றுவிடமுடியும். பாலூட்டும் வேங்கையைக் கொல்வது எளிது. பாலுண்ணும் குழந்தைகள் வளர்ந்து அன்னை அவற்றை உதறும் கணம் மிகமிக உகந்தது. அன்னை சலித்திருக்கும். உடல் மெலிந்திருக்கும். அன்னையைக் கொன்றபின் குழவிகளையும் நாம் அடையமுடியும்.”

அவர் முடித்தபின்னரும் அந்தச் சொற்கள் அகத்தில் நீடிப்பதாக பூரிசிரவஸ் எண்ணினான். அவர் சொன்ன விதத்தை எண்ணி வியந்துகொண்டான். ஒரு கருத்தைச் சொன்னபின் மிகச்சரியான உவமையை இறுதியில்தான் அமைக்கவேண்டும் என குறித்துக்கொண்டான். அங்கிருந்த அத்தனைபேரும் அந்த வேங்கையைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். உடனே பெண்வேங்கை என்பதில் உள்ள உட்குறிப்பு அவனுக்குத் தெரிந்தது. முதல்முறையாக அவனுக்கு ஒன்று தோன்றியது, கணிகர் உளம்திரிந்து அரசு சூழ்தலுக்குள் வந்த கவிஞர். கவிதையினூடாக ரிஷியாக ஆகியிருக்கவேண்டியவர்.

அவனால் அவரை நோக்காமலிருக்க முடியவில்லை. சொல்லி முடித்ததுமே முழுமையாக தன்னை அணைத்துக்கொண்டு ஒடுங்கிவிட்டிருந்தார் அவர். சகுனி தாடியை வருடி தன் புண்பட்ட காலை மெல்ல நீட்டி “கணிகர் சொல்வதையே செய்வோம் சுயோதனா. நாம் செல்லவேண்டிய சிறந்த பாதை அதுவே” என்றார். “பாண்டவர் நகர்புகுதலுக்கும் மணநிகழ்வுக்கும் பேரரசர் வந்தாகவேண்டுமெனச் சொல்லி செய்தி அனுப்பினேன். வர அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக விப்ரரின் செய்தி வந்தது” என்றார்.

பூரிசிரவஸ்ஸை நோக்கித் திரும்பி “நீர் இளைய யாதவனிடம் ஒரு செய்திகொண்டு செல்லும்” என்றார் சகுனி. “ஆணை” என்றான் பூரிசிரவஸ். “நாளை மறுநாள் சுக்லசதுர்த்தி. அவைகூட ஏற்றநாள். குலத்தலைவர்களுக்கு முறைப்படி அறிவிப்புசெல்லட்டும். அஸ்தினபுரியின் ஆட்சிப்பேரவையை கூடச்செய்வோம். அஸ்தினபுரியின் இளவரசிகளுக்கு வாழ்த்தளிக்க வந்துள்ள யாதவ அரசிக்கும் இளைய யாதவனுக்கும் அஸ்தினபுரியின் அரசவையும் குலச்சபையும் இணைந்து ஒரு பெருவரவேற்பை அளிக்கட்டும். அதையொட்டி களியாட்டு மேலும் தொடரட்டும்” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கினான். “இது அவர்கள் நமக்குச்செய்ததன் மறுமொழிதான். இச்செய்தி ஒன்றும் முதன்மையானது அல்ல. நீர் அவர்களுடனேயே இரும். அது அவர்களை கொஞ்சம் இயல்பழியச்செய்யட்டும்” என்றார்.

பெருமூச்சுடன் துரியோதனன் “இன்னும் எத்தனைநாள்? இச்சிறுமைகளைக் கடந்து எப்போது இந்நாட்டை ஆளப்போகிறேன்?” என்றான். "இளையோனே, நீ மதுவருந்தலாமா?” துச்சாதனன் “அருந்தலாம் மூத்தவரே” என்றான். துரியோதனன் கைகளைத் தட்டி ஏவலனை அழைத்தான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 2

கிருஷ்ணன் உள்ளே மஞ்சத்தறையில் பேரரசியுடன் இருப்பதாக சேடி சொன்னாள். பூரிசிரவஸ் அவளிடம் “என்ன செய்கிறார்?” என்றான். “குழலூதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைப்புடன் “என்ன செய்கிறார்?” என்று மீண்டும் கேட்டான். “வேய்குழல் ஊதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் அப்போதும் புரிந்துகொள்ளாமல் “சூதர் ஊதுகிறாரா?” என்றான். அவள் "இல்லை, கண்ணன் ஊதுகிறார். மகளிர் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான் பூரிசிரவஸ். “கண்ணன்” என்ற சேடி “பொறுத்தருளவேண்டும் இளவரசே. அனைவரும் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் வாய்தவறி...” என்று அச்சத்துடன் சொன்னாள்.

பூரிசிரவஸ் கையை வீசியபடி “அரசர்கள் இசைக்கருவிகளை இசைக்கலாகாது. படைப்பயிற்சி கொண்டவர்கள் அவற்றை தீண்டுவதும் தகாது” என்றான். “அதெல்லாம் அரசர்களுக்குத்தானே? இவர் யாதவர் அல்லவா?” என்றாள் சேடி. “யாதவர்தான்... “ என்ற பூரிசிரவஸ் “நீ என்ன சொல்லவருகிறாய்?” என்றான். “கண்ணன் ஆயர்குடியில் கன்றுமேய்ப்பவர் அல்லவா? அவர் அரசர் இல்லையே” என்றாள் சேடி. பூரிசிரவஸ் அறியாமலேயே புன்னகைசெய்து “யார் சொன்னது அப்படி?” என்றான். “அவரேதான் சொன்னார். நான் கேட்டேன், இத்தனை ஆடையணிகளுக்கு எங்கிருந்து செல்வம் என்று. எல்லாமே பெண்கள் கொடுத்தது என்று சொல்லி நீ நான் கேட்டால் அந்தத் தோடை கழற்றித் தரமாட்டாயா என்ன என்றார். தருவேன் என்று சொன்னேன். நேரம் வரும்போது கேட்கிறேன் பத்மை என்று சொல்லிவிட்டுச் சென்றார்.”

பூரிசிரவஸ் பற்களைக் கடித்து ஒருகணம் தன் எண்ணங்களை அடக்கியபின் “என்னால் இதைமட்டும்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்படி இத்தனை சிற்றுரையாடல்களில் ஓர் அரசரால் ஈடுபட முடிகிறது?” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். பூரிசிரவஸ் மறுமொழி சொல்லாமல் நடந்து இடைநாழியைக் கடந்தபோதுதான் மாளிகையறைகள் காற்றில்லாத உச்சிவேளை காடுபோல அமைதியாக இருப்பதை உளம்கொண்டான். தூண்கள், திரைச்சீலைகள், கொடித் தோரணங்கள், பட்டுப்பாவட்டாக்கள், பீடங்கள் அனைத்தும் அந்த அமைதியில் கடற்கரைப் பாறையில் பதிந்த சிப்பிகள் போல அமைந்திருந்தன.

அதன்பின்னர்தான் அவன் குழலிசையை செவிகொண்டான். அது குங்கிலியச்சுள்ளியின் புகை என சுருளாகி எழுந்து மெல்லப்பிரிந்து பரவிக்கொண்டிருந்தது. அவன் நடை தயங்கியது. நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம். நெடுநேரமென காலம் சென்றபின்னர் மீண்டபோது அவன் திகைப்புடன் உணர்ந்தான், அந்த இசையை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனருகே சேடி நின்றிருந்தாள். அவள் விழிகளை நோக்கி உளம் அதிர்ந்தான். அவை ஆலயத்தின் யக்‌ஷிகளின் நோக்கை கொண்டிருந்தன. அவன் மெல்ல நடந்து கூடத்தை அடைந்தான். இசை முடிவில்லாமல் சென்றுகொண்டே இருந்தது. ஒரே சுதியில் ஒரே சுவரக்கோவை. திரும்பத்திரும்ப அதுவே ஒலித்தது. அறியாக்குழந்தை ஒன்று கற்றுக்கொண்ட முதல் பண். ஓர் இலை. மீண்டுமொரு இலை. இலைப்பெருவெளி. ஒரு விண்மீன். இன்னொரு விண்மீன். ஓர் இருளலை. ஓர் ஒளிக்கதிர். பிறிதொரு ஒளிக்கதிர். அவனுக்கு சலிப்பதேயில்லையா? அறிவற்ற குழந்தை. அறிவுவிளையாத குழந்தை. அழகு மட்டும் கனிந்த குழந்தை. திரும்பத்திரும்ப. மீண்டும் மீண்டும்...

ஆனால் பின்னர் அறிந்தான், ஒருமுறைகூட இசைக்கோவை மீளவில்லை. ஒவ்வொரு முறையும் சற்றே மாறுபட்டது. மிகச்சிறிய மாறுதல். நுண்மையிலும் நுண்மை. செவிதொட்டு எடுக்கமுடியாத உளம் மட்டுமே தீண்டக்கூடிய நுண்மை. மலரிதழ் நுண்மை. மயிர்நுண்மை. மீண்டும் மீண்டும். பறக்கும் கருங்குழலில் ஒருமயிரிழைக்கும் இன்னொரு மயிரிழைக்கும் என்ன வேறுபாடு? அடுக்கியடுக்கி வைக்கும் இவற்றால் ஆவதென்ன அவனுக்கு?

நுண்மையை உளம் உணர்ந்துகொண்டபின் அது பெரியதாகியது. அது மட்டுமே தெரிந்தது. ஒவ்வொரு சுவரத்திற்கும் இடையே யுகங்கள் விரிந்து கிடந்தன. புடவிப்பெருக்கு அலையடித்தது. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்ல ஆயிரம் பிறவிகள் தேவையாக இருந்தது. இதிலிருந்து தாவி எழுந்து அப்பால் அப்பால் எனப்பறந்து அஞ்சி அலறி அச்சத்தால் ஆயிரம் முறை இறந்து பிறந்து கண்மூடி கைநீட்டி மறுமுனையைப் பற்றி உவகைகொண்டு கூவிச்சிரித்து மீண்டும் தாவி...

எங்கிருக்கிறேன்? எளிய குழலோசை. அதையா இப்படியெல்லாம் எண்ணங்களாக்கிக் கொள்கிறேன்? மீண்டும் அதே இசைச்சுருள். மாற்றமின்றி நிகழ்ந்துகொண்டிருந்தது. அது மலைகளைப்போல நதிகளைப்போல வான்வெளியைப்போல என்றும் இங்கிருக்கும். மானுடர் வந்து செல்வார்கள். மாநகர்கள் எழுந்து மறையும். காலம் வழிந்தோடிக்கொண்டே இருக்கும். ஒற்றைச்சுருள் மட்டுமே இங்குள்ள மானுடம். இங்குள்ள உயிர்த்தொகை. இப்புடவி. இக்கடுவெளி.

பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தான். எத்தனை மூச்சுவிட்டாலும் நெஞ்சுள் இறுகிய கடுங்குளிர்க்காற்று அழுத்தமிழக்கவில்லை. நெஞ்சைச் சுமந்து நடக்கமுடியாமல் கால்கள் உறைந்திருந்தன. கூடத்தை அணுகும் இடைநாழியின் இருபக்கமும் சுவர்சாய்ந்தும் தூண்தழுவியும் சாளரத்திண்ணைகளில் அமர்ந்தும் சேடிப்பெண்கள் இமைசரித்து கழுத்தும் இடையும் குழைத்து நின்றிருந்தனர். தரையில் முழங்கால் தழுவி அமர்ந்திருந்தனர். தோழிகளின் தோளில் தலைவைத்து கண்மூடியிருந்தனர். ஓரிருவர் மரத்தரையில் உடல் மறந்து படுத்திருந்தனர்.

அவன் அறைக்குள் நோக்கினான். காந்தாரியின் இறகுச்சேக்கை மேல் அமர்ந்து அவள் தலையணையை தன் முதுகுக்கு வைத்து சாய்ந்துகொண்டு விழிகள் ஒளிர கிருஷ்ணன் இசைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய வலக்காலை காந்தாரி தன் மடிமேல் வைத்திருந்தாள். மஞ்சத்தின் ஓரம் துச்சளை அதன் அணித்தூணைப்பற்றிக்கொண்டு விழிமூடி அமர்ந்திருக்க கீழே அவன் காலடியில் என பானுமதி இருந்தாள். அவள் தோளில் சாய்ந்தபடி அசலை. அந்த அறை முழுக்க இளவரசிகள் செறிந்திருந்தனர். அனைவர் விழிகளும் ஒன்றென தெரிந்தன.

அவன் வந்த அசைவை எவரும் அறியவில்லை. விழிதிறந்திருந்த பெண்கள்கூட அவனை நோக்கவில்லை. கண்ணுக்குத்தெரியாத தேவனாக அவன் அங்கே சென்றுவிட்டதுபோல உணர்ந்தான். இல்லை அவர்கள்தான் அப்பால் இருக்கிறார்களா? ஜலகந்தர்வர்கள் நீர்ப்பாவைகளாகத் தெரிவார்கள் என்று கதைகளுண்டு. தொட்டால் அலையிளகி கரைந்து மறைவார்கள். தன் அசைவால் அந்த பெரும் சித்திரம் மறைந்துவிடும் என்ற அச்சம் எழுந்தது.

அவன் விழிகளை கிருஷ்ணன் பார்வை சந்தித்தது. நலமா என்றது. புன்னகையுடன் இதோ ஒரு கணம் என்று சொல்லி மீண்டது. அவன் அனைத்தையும் அறிந்திருக்கிறான். இப்பெண்கள் எதையும் உணரவில்லை. அவன் உள்ளே நுழைந்தபோது கேட்ட அதே இசைக்கோவைதான் அப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது. மாற்றமேயில்லை. அப்படியென்றால் அவனுணர்ந்த நுண்வேறுபாடு அவனே எண்ணிக்கொண்டதா? அப்படி எண்ணியதுமே அது உருமாறியது. மெல்ல மீண்டும் மாறியது. மாறிக்கொண்டே சென்றது. மாறுதல் மட்டுமே இருந்தது. மாறுதலின் தகவுகள் முடிவிலாதிருந்தன. எண்ணமும் சித்தமும் சென்றடையா தகவுகளின் பெருவெளி.

அவன் அச்சத்தில் உறைந்து அதை நோக்கி நின்றான். ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாத முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன?

வெளியே. இங்கிருந்து வெளியே. வெளியேறு. தப்பு. நீ மீண்டும் கண்டடையாதவற்றாலான உலகில் வாழ்வதற்காக ஓடு. பிரத்யட்சம் அனுமானம் சுருதி. சுருதியென ஏதுமற்ற வெளியில் அனுமானமில்லை. அனுமானமில்லாத நிலையில் பிரத்யட்சமென்பதும் இல்லை. எஞ்சியிருக்காத நேற்றால் இன்றை அறியமுடியாது மூடா. ஓடித்தப்பு. உன் சித்தத்தின் எல்லைகள் சிதறி காற்றில் கற்பூரமென நீ ஆவதற்குள் பிடித்துக்கொள் அதை. மீளமீள. மாற்றமில்லாது. என்றுமென. எப்போதுமென. இங்கென. இப்போதென...

பூரிசிரவஸ் மீண்டு வந்து அந்த இசையை பற்றிக்கொண்டான். எந்தப்பண்? பெரும்பாலையின் மணல் அலைகளை காட்டும் பண் அது. காந்தாரத்திற்கு வடக்கே பால்ஹிகநாடுகளுக்கும் மேற்கே காம்போஜத்தில் உருவானது. ஆகவே அதை காம்போஜி என்றனர். தக்கேசி என்று அதை வகுத்தது தென்னக இசை மரபு. ஆனால் அது காம்போஜத்திற்குரியதுமல்ல. காம்போஜத்தில் அது முறைப்படுத்தப்பட்டது அவ்வளவுதான். அதற்கும் வடக்கே மானுடக்கால்கள் படாத மணல்விரிவில் கதிர்ச்சினம் பரவிய வெண்ணிறவெறுமையில் பசித்து இறந்த ஓநாய் ஒன்றின் இறுதிஊளையில் இருந்து உருவானது அது என்பது சூதர்களின் கதை.

அதைக்கேட்ட சூதன் பித்தானான். அவன் பித்திலிருந்து எழுந்தமையால் அதை பித்தின் பெரும்பண் என்றனர். மலையிறங்கும் நதியென அது பாரதவர்ஷம் மேல் பரவியது. ஓடைகளாயிற்று. ஒவ்வொரு கிணற்றிலும் ஊறியது. பசும்புல்வெளியில் துள்ளும்பண் ஆக மாறியது. யதுகுலத்திற்குரிய பண். செவ்வழி. சீர்கொண்ட பெருவழி. செம்மைவழியும் பாதை. குருதியின் வழிவு. குருதியைத் தேடிச்செல்கிறது விழியொளிரும் வேங்கை. மெல்லிய மூச்சு. மென்பஞ்சு காலடிகள். வேங்கையின் உடலில் எரியும் தழல். வேங்கையுடலாக ஆன காடு.

இசை எப்போதோ நின்றுவிட்டிருந்தது. அவன் உடலசைந்தபின்னர்தான் அறைக்குள் இருந்த ஒவ்வொருவராக அசைந்தனர். காற்று வந்த காடு போல உயிர்கொண்டு எழுந்து பெருமூச்சுவிட்டனர். உடலை உணர்ந்து ஆடை திருத்தி அணி சீரமைத்து குழல் அள்ளிச் செருகினர். அணிகளின் ஓசை. பெண்களின் உடலுறுப்புகள் உரசிக்கொள்ளும் ஓசையை அத்தனை தெளிவாக அவன் அப்போதுதான் கேட்டான். கிளர்ந்து துடித்த நெஞ்சின் ஒலியை எவரேனும் கேட்கிறார்களா என்பதுபோல பார்த்தான்.

அத்தனைக்கும் நடுவில் கிருஷ்ணன் தனித்திருந்தான். விழிகளில் சிரிப்புடன் “பால்ஹிகரே, நாம் இப்போதுதான் பார்க்கிறோம் இல்லையா?” என்றான். “நான் பலமுறை பார்த்திருக்கிறேன் இளவரசே” என்றான். “நானும் பார்த்திருக்கிறேன். நாம் இப்போதுதான் பேசிக்கொள்கிறோம்” என்றான். திரும்பி துச்சளையிடம் “மலைமகன் இந்நாட்களில் சற்றே சோர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன் இளவரசி” என்றான். பூரிசிரவஸ் ஒருகணம் துச்சளையை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். கிருஷ்ணனுக்கு அனைத்தும் தெரியும் என்று தோன்றிய எண்ணத்தை அதெப்படி என்று சித்தம் விலக்கியது.

காந்தாரி அப்போதுதான் விழித்துக்கொண்டவளாக “யார்?” என்றாள். “பால்ஹிகர். உங்கள் மைந்தனின் தோழர்” என்றாள் துச்சளை. அதற்கு ஏதேனும் பொருளிருக்குமா என்று பூரிசிரவஸ் குழம்பினாலும் அவளை நோக்கி திரும்பவில்லை. “பாவம்,போரில் புண்பட்டுவிட்டான்” என்று சொன்ன காந்தாரி அவனுக்காக கை நீட்டினாள். அவன் அருகே சென்றதும் அவன் தலையைத் தொட்டு வருடியபடி “இளையோன். இவனுக்கும் மணநிகழ்வு பற்றி செய்தியனுப்பியிருப்பதாக விதுரர் சொன்னார்...” என்றாள்.

துச்சளை “அவருக்குப் பிடித்த இளவரசியை அவரே சென்று தூக்கி வரக்கூடியவர் அன்னையே. மூத்தவருக்காக காசி இளவரசியை தூக்கிவந்ததே அவர்தான்” என்றாள். கிருஷ்ணன் நகைத்து “அவர் தூக்கிவந்தது பீமனுக்காக அல்லவா?" என்றான். பெண்களனைவரும் சிரித்தனர். பூரிசிரவஸ் அப்போது இளைய யாதவனை வெறுத்தான். முதிர்ச்சியோ சூழலுணர்வோ அற்ற பண்படாத சிறுவன். காந்தாரி “அவன் என்ன செய்வான்? அவனிடமிருந்து பலந்தரை நழுவிச்செல்லவேண்டுமென்பது ஊழ்” என்றாள். “நழுவிச்செல்வதெல்லாமே ஊழால்தான்” என்று சொன்ன கிருஷ்ணன் துச்சளையிடம் “அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?” என்றான்.

அங்கிருந்து கிளம்பிச்சென்றுவிடவேண்டும் என்று பூரிசிரவஸ் எண்ணினான். உளத்தால் எழுந்தும் விட்டான். ஆனால் உடலை அசைக்கமுடியவில்லை. தன் உடல் துச்சளையை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். விழிகளை பொருளில்லாமல் முன்னால் நிறுத்தியிருந்தான். அவள் முகமும் உடலும் மேலும் ஒளிகொண்டிருப்பதாக தோன்றியது. காதோரக் குறுமயிர்ச்சுருள் நிழலுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. கன்னத்தில் ஒரு புதிய பரு தோன்றியிருந்தது. இதழ்கள்... அப்படியென்றால் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். அவனைக் கடந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டாள்.

அவன் “சிந்துநாட்டரசரின் காவல்படைகள் பரிசுகளுடன் கிளம்பிவிட்டதாக அறிந்தேன்” என்றான். அவளிடமிருந்து வரும் அசைவொலிக்காக அவன் உடலே செவிப்பறையாக மாறி காத்திருந்தது. காந்தாரி “ஆம், அஸ்தினபுரி மக்கள் வியக்குமளவுக்கு பெருஞ்செல்வத்தை கன்யாசுல்கமாக அளிக்கவிருப்பதாக சொன்னார்கள். நாம் அதற்கு மும்மடங்கு கொடுக்கவேண்டும் என மைந்தனிடம் சொன்னேன். இன்றிருக்கும் நிலையில் கருவூலத்திலிருந்து அவ்வளவு செல்வத்தை எடுக்கமுடியாது என்றான்” என்றாள்.

“ஏன்? அந்தக்காலத்தில் காந்தாரத்திலிருந்து வந்த செல்வத்தைப்பற்றி இப்போதும் சொல்கிறார்கள். அதை வெல்லாவிட்டால் எனக்கென்ன மதிப்பு?” என்றாள் துச்சளை. பூரிசிரவஸ்ஸின் உள்ளத்தில் இறுகி நின்ற நரம்புகளெல்லாம் ஒவ்வொன்றாக தழைந்தன. ”கேள் யாதவா, இவள் கேட்பதைப்பார்த்தால் மொத்தக்கருவூலத்தையே கொடுக்கவேண்டும்” என்று காந்தாரி சிரித்தாள். ”நீங்கள் கொடுக்கவேண்டாம். என் இளையவளுக்காக நான் கொடுக்கிறேன். சிந்துநாட்டின் கருவூலத்தை நிறைத்து திணறவைக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். துச்சளை “பேச்சு மட்டும் பெரிது... உண்மையிலேயே கொடுப்பீர்களா?” என்றாள். கிருஷ்ணன் ”நீ சொல் என்ன வேண்டும் என்று...” என்றான். “சொல்கிறேன். நேரம் வரட்டும்” என்று அவள் சிரித்தாள்.

பானுமதி “பால்ஹிகரே, நீங்கள் வந்த செய்தியை சொல்லவில்லை” என்றாள். பூரிசிரவஸ் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அவன் சிவந்த விழிகளைத் தூக்கி “ஆம், இளவரசரின் செய்தி” என்றான். ”எனக்கா?” என்றாள் காந்தாரி. "இல்லை இளைய யாதவருக்கும் யாதவப்பேரரசிக்கும்” என்றான் பூரிசிரவஸ். “இளைய அரசி இத்தனைநேரம் இங்குதான் இருந்தாள். இவனுடன் வந்தாள். என் மணமகள்களைக் கண்டு திகைத்தே போனாள்.” காந்தாரி உடல் குலுங்கச் சிரித்து “நான் அவளிடம் சொன்னேன். உண்மையிலேயே அறுபத்தெட்டுபேர் இருக்கிறார்கள் குந்தி. நான் ஆடிகளை வைத்து மாயம் காட்டவில்லை என்று. சிரித்துவிட்டாள்” என்றாள்.

“ஒவ்வொருத்தியாக அறிமுகம் செய்தேன். பாரதவர்ஷத்தில் இத்தனை அழகிகளா என்றாள். ஏன் குந்தி என்றேன். என் இளையவன் பெண்களைப் பார்த்துமுடிப்பதற்குள் வயதாகிவிடுமே என்றாள். சிரித்துக்கொண்டே இருந்தோம். அவளுடன் இணைந்து அத்தனைதூரம் சிரிக்க என்னால் முடியும் என்று நேற்று சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன். அவளால் அத்தனை இனிதாகப் பழகமுடியும் என்பதும் என்னால் எண்ணிப்பார்க்கக் கூட முடியாததாகவே இருந்தது” காந்தாரி சொன்னாள். “அவளுக்கு என் மேலிருந்த வஞ்சமெல்லாம் வயதானபோது கரைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.”

”வஞ்சமா?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “நீ அதை முழுதாகப் புரிந்துகொள்ளமுடியாது இளையோனே. அடைந்தவர்களை அடையாதவர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை” என்ற காந்தாரி “அவளுக்கா செய்தி? மந்தணமா?” என்றாள். “இல்லை. முறைமைச்செய்திதான்” என்றான் பூரிசிரவஸ். "நாளை மறுநாள் சுக்லபட்ச சதுர்த்தி நாளில் பேரவை கூடுகிறது. அஸ்தினபுரியின் இளவரசிகளுக்கு வாழ்த்தளிக்க வந்துள்ள யாதவ அரசிக்கும் இளைய யாதவருக்கும் அஸ்தினபுரியின் அரசவையும் குலச்சபையும் இணைந்து ஒரு பெருவரவேற்பை அளிக்கும். அதையொட்டி களியாட்டு மேலும் தொடரும். அதற்கான முறையான அழைப்பை சௌனகர் அளிப்பார். அதுதான் செய்தி.”

“மிகநல்ல செய்தி. மிகநன்று” என்று காந்தாரி சொன்னாள். “ஒருவழியாக என் மைந்தனுக்கும் அரசனுக்குரிய முதிர்ச்சி வந்துள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து ஐயங்களும் அகலவேண்டும். நதிகள் கலப்பதுபோல இருகுடிகளும் கலக்கவேண்டும். அரசவையும் குலச்சபையும் கூடி யாதவ அரசியை வரவேற்பது ஒரு சிறந்த தொடக்கம்...” துச்சளையை நோக்கி “எங்கே அந்த பரிசுகள்?” என்றாள். துச்சளை “இங்கே இருக்கின்றன” என்று ஒரு பெரிய சந்தனப்பெட்டியை காட்டினாள். “அவள் கொண்டுவந்த பரிசுகள். இவற்றை அவையில் வைப்போம். குடிமூத்தார் முன்னால் அவள் என் மகளிரை வாழ்த்தட்டும்... என்ன சொல்கிறாய் யாதவனே?"

“அன்னை தன் மகளிரை வாழ்த்த அவை எதற்கு? ஆனால் அவர்கள் இனிமேல் இன்னொருநாட்டுக்கு பேரரசி என்பதனால்தான் கணிகர் அம்முடிவை எடுத்திருக்கக் கூடும். அது முறைமைசார்ந்ததுதான். நன்று.” பூரிசிரவஸ் அவன் ஒரு சொல் மிச்சமில்லாமல் அனைத்தையும் புரிந்துகொண்டதை உணர்ந்தான். அவன் விழிகளை நோக்க அவனால் முடியவில்லை. சற்றுமுன் மூடச்சிறுவனாகத் தோற்றமளித்தவன். படபடப்புடன் காந்தாரியை நோக்கி “இளவரசர் இம்முடிவை எடுத்தது தங்கள் விழைவால்தான் பேரரசி. அஸ்தினபுரியில் இதற்கிணையான நாட்கள் இதற்கு முன் வந்ததில்லை. இத்தனை மணநிகழ்வுகள்...” என்றான்.

அசலை ”அவையில் அத்தனை மணமகள்களுக்கும் யாதவப் பேரரசி தனித்தனியாக மங்கலப்பொட்டிட்டு மலர்சூட்டி மஞ்சளரிசி தூவி பரிசளித்து வாழ்த்துவார்கள் இல்லையா?” என்றாள். “அதெப்படி...” என்று பூரிசிரவஸ் சொல்லவந்ததுமே அவள் கண்களை சந்தித்து அதிலிருந்த சிரிப்பைக் கண்டு தானும் சிரித்துவிட்டான். ”அய்யோடி, நீ என்ன பேரரசியை கொல்லவா திட்டமிடுகிறாய்?” என்று துச்சளை கூவ பெண்கள் வெடித்துச்சிரித்தனர். காந்தாரியும் சிரித்தபடி “ஆமாம், நாளை வருபவர்களையும் சேர்த்தால் எண்பத்தெட்டுபேர் அல்லவா?” என்றாள்.

“இன்று மாலை கொற்றவை ஆலயத்தில் பூசெய்கை இருக்கிறது. அதற்கும் யாதவ அன்னையை அழைத்திருக்கிறேன்” என்று பானுமதி சொன்னாள். “அவர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணா நீயும் வருவாய் அல்லவா?” யாரோ ஒரு பெண் “அவருக்கென்ன? எங்கு பெண்களிருந்தாலும் அங்கே இருப்பார்” என்றாள். பெண்கள் சிரிக்க கிருஷ்ணன் “முத்ரை, எங்கு அவியுண்டோ அங்கு தேவர்கள் உண்டு என்றல்லவா வேதம் சொல்கிறது?” என்றான். மீண்டும் சிரிப்பு.

ஒருத்தி “கோமதிநதியை ஏன் துவாரகைக்கு கொண்டுவருகிறீர்கள் என்று இவள் சொன்னாள்” என்று சொல்ல அவளருகே இருந்தவள் “அய்யய்யோ, நான் சொல்லவில்லை. நான் ஒன்றுமே சொல்லவில்லை” என்றாள். “என்ன சொன்னாய் மாயை?” என்றான் கிருஷ்ணன். “நான் ஒன்றுமே சொல்லவில்லை கண்ணா.” “பிரபை, நீயே சொல்” அவள் “சொல்லமாட்டேன்” என்றாள்.

பூரிசிரவஸ்ஸால் அங்கே இருக்கமுடியவில்லை. அவன் விழிகளை சந்தித்த பானுமதி “இளவரசே, நீங்கள் சற்று வரமுடியுமா? என்னென்ன செய்யலாமென்று பேசுவோம்” என்றாள். பூரிசிரவஸ் எழுந்து கிருஷ்ணனுக்கு தலைவணங்கி விடைபெற்று அவளுடன் அடுத்த அறைக்குச் சென்றான். அவள் ஒரு பீடத்தில் அமர்ந்தபின் அவனிடம் அமரும்படி கைகாட்டி “முறைமைகளுக்காக யாதவ அரசியை நாம் நமது பேரரசியாக எண்ண வேண்டுமா இல்லை, பிறிதொரு நாட்டின் அரசியென எண்ணவேண்டுமா?” என்றாள். பூரிசிரவஸ் “இன்னும் அஸ்தினபுரி இருநாடாக பிரியவில்லை. ஆகவே அவர் பிறிதொரு நாட்டின் அரசி இல்லை” என்றான்.

“ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன். ஆனால் யாதவர் இன்னொருநாட்டின் அரசர். ஆகவே நாம் அவரை விருந்தினராகவே கொள்ளவேண்டும். அவருக்கு முறைமைப்படி நீங்கள் வரவேற்பளிப்பீர்கள். யாதவ அரசியை முதலில் மகளிர் அறைக்குக் கொண்டுவந்து அங்கிருந்து அன்னையுடன் சேர்த்து அவைக்குக் கொண்டுவருவோம். விருந்தினருக்குரிய பாதை அவருக்குத் தேவையில்லை” என்றாள் பானுமதி. அவள் அதை வெறுமனே பேசவேண்டுமே என்பதற்காகத்தான் சொல்கிறாள் என்று பூரிசிரவஸ் எண்ணினான்.

அவள் ஒரு சுவடியை எடுத்து “இதில் முறைமைகளை எழுதியிருக்கிறேன். வாசித்து சொல்லுங்கள், சரிதானா என்று... இங்கே இனிமேல் முறைமைகளை முழுமையாகவே கடைப்பிடித்தாகவேண்டியிருக்கிறது. இளவரசிகளின் வயதோ அவர்களின் அரசோ எதுவானாலும் அவர்களின் கணவர்களின் வயதின் வரிசைப்படியே அவர்கள் அவைக்கு அழைக்கப்படுவார்கள்” என்றாள். பூரிசிரவஸ் ஓலையை வாங்கிக்கொண்டான்.

அவன் குனிந்து எழுதத் தொடங்கியதுமே அவள் மெல்லிய குரலில் “பட்டத்து இளவரசருக்கு தெரியுமா? அவர் அனுமதிக்கவில்லையா?” என்றாள். அவள் குரலில் இருந்தே அவள் கேட்கவருவதென்ன என்று பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். கைகள் நடுங்க “நான்...” என்றான். “துச்சளையைப்பற்றித்தான் கேட்டேன்” என்று அவள் சொன்னாள். அவன் ஓலையை பீடத்தில் வைத்துவிட்டு “தெரியாது” என்றான். உடனே “தாங்கள் எண்ணுவது போல ஏதுமில்லை இளவரசி. உண்மையில்...” என தொடங்கினான்.

“நீங்கள் விரும்பினீர்கள். அவளும் விரும்பினாள்..." என்று தொடங்க பூரிசிரவஸ் பதற்றத்துடன் “உண்மையில் அவர்கள்தான். நான் ஒன்றும்...” என்றான். பானுமதி “சரி, அவள் விரும்பினாள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். அதை அவரிடம் சொல்லியிருக்கலாமே” என்றாள். ”இல்லை, நான்...” என்ற பூரிசிரவஸ் தலைகுனிந்து “சொல்வதற்கு என்னால் முடியவில்லை...” என்றான்.

“ஏன்?” என்றாள். “நான் மலைமகன். இளவரசி என்றால்...” பானுமதி “நீங்கள் உங்கள் விழைவைச் சொன்னால் அதை பட்டத்து இளவரசர் மறுப்பார் என எண்ணுகிறீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் உள்ளம் பொங்க பேசாமலிருந்தான். “இதோ இப்போது சொன்னால்கூட சிந்துமன்னரை வரவேண்டாம் என்று சொல்லிவிடக்கூடியவர் அவர். அவர் உள்ளத்தில் நீங்கள் கொண்டிருக்கும் இடமென்ன என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதே வியப்பாக உள்ளது பால்ஹிகரே.”

“தெரியும். அதனால்தான் சொல்லவில்லை” என்றான் பூரிசிரவஸ். “அந்தப் பேரன்பை நான் பயன்படுத்திக்கொள்ளலாகாது. அதற்கு நான் ஏதேனும் கைமாறு செய்யவேண்டுமென்றால் எதுவுமே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது. என் வாழ்வையும் உயிரையும் அவருக்கு முழுதாக அளிக்கவேண்டும். அதுவே நான் செய்யக்கூடுவது.” பானுமதி “மடமை” என்றாள். “இதை அறிந்தால் அவர் உள்ளம் எத்தனை வருந்தும் என என்னால் உணரமுடிகிறது. உம்மை இத்தனை மெல்லுணர்வு கொண்ட கோழை என்று நினைக்கவில்லை.”

பூரிசிரவஸ் உதடுகளை இறுக்கிக்கொண்டான். கண்களில் ஊறிய நீரை அடக்கமுடிந்தது. மேலே ஒரு சொல் பேசினாலும் அழுதுவிடுவோம் என்று அறிந்தான். ”சரி, அதை ஊழ் என எண்ணி கடக்க முயலுங்கள். இத்தருணம் என எண்ணாமல் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அகத்தில் கொண்டுவந்து பார்த்தால் மிகச்சிறியதாகவே அது தென்படும்... மறப்பதையும் கடப்பதையும்போல இவ்வுலகில் எளியது எதுவும் இல்லை.”

அவளுடைய குரலில் அவன் எந்தப்பெண்குரலிலும் அறிந்திராத இனிமை இருந்தது. “காதலை இழந்த ஆண்கள் இறுதிவரை உள்ளூர சற்று கனிவுடன் இருப்பார்கள் என்று முதுசெவிலியர் சொல்லி கேட்டிருக்கிறேன். உங்களை மணப்பவள் அதற்காகவே உங்களை விரும்புவாள்.” அவன் நிமிர்ந்து அவள் சிரிப்பைப் பார்த்து முகம் மலர்ந்து “ஏளனம் செய்கிறீர்கள்” என்றான். “இல்லை, உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள்.

அவள் முகமும் சிரிப்பும் கனிவுடனிருந்தன. அந்தக்கனிவு அவள் உடலெங்குமிருந்தது. பெண்மையின் குழைவும் நிறைவும் மட்டுமே கொண்டவள் போல. திரண்ட வெண்ணிறமேனி. பெரிய தோள்கள். ஆனால் கழுத்தும் உதடுகளும் மிகமெல்லியவை. அதனால்தான் அந்த இன்குரலா? அவளுடலில் எலும்புகள் கூட கடினமாக இருக்காது என எண்ணிக்கொண்டதும் அவன் சிரித்து “உங்கள் குரல் மிக இனிமையானது இளவரசி. அது ஏன் என்று இப்போது தெரிகிறது” என்றான்.

“நான் முறைப்படி இசை கற்றவள். நன்றாகவே பாடுவேன்” என்றாள் பானுமதி. “குரலை பயிற்றுவித்தால் எவரும் பாடமுடியும். பெரும்பாலான பாடகிகள் பேசும்போது இனிமையாக இருப்பதில்லை” என்றான் பூரிசிரவஸ். “புகழப்போகிறீர்கள். புகழுங்கள். ஓர் அரசியாக நான் புகழுரைகளைக் கேட்டு பழகவேண்டுமல்லவா?” என்று அவள் சிரித்தாள்.

பூரிசிரவஸ் “புகழுரை அல்ல. உண்மையாகவே உணர்ந்ததை சொல்கிறேன். உங்கள் உள்ளத்தில் அனைவர் மேலும் கருணை நிறைந்திருக்கிறது” என்றான். அவன் உள்ளம் பொங்கியது. கட்டுப்படுத்திச் சொல்லவேண்டுமென்ற தன்னுணர்வை இழந்து “சக்கரவர்த்தினி என்னும்போது ஏதேதோ சொல்கிறார்கள். நிமிர்வும் அறிவும் முழுதாட்சி செய்ய முடியாது. அனைத்தையும் அணைக்கும் கருணையின் கையிலேயே செங்கோல் அசையாது நிற்கமுடியும். நீங்கள் உங்கள் கைநிழல் அணையும் அனைவருக்கும் அன்னை” என்றான்.

பானுமதி உதடுகளைக் கூட்டி சிரித்து உடலை மெல்லக் குறுக்கினாள். புகழுரை கேட்டு அவள் இயல்பாக மகிழ்ந்ததுகூட அவளுடைய இயல்புக்கேற்ப இனிதாகவே தெரிந்தது. “நீங்கள் என்மேல் கருணையுடன் இருக்கிறீர்கள் என்பதே என் துயரை போக்கிவிட்டது” என்றான். “போதும்” என்று அவள் கையைக் காட்டி “ஓர் உறவு உடையும்போது ஆண்கள் பெரிதும் துயரமடைவது அதை பிறர் எப்படி கொள்வார்கள் என்று எண்ணிக்கொள்வதனால்தான்” என்றாள். “ஆனால் பெண்கள் அந்த ஆண்களை விரும்பவே செய்வார்கள். அதைத்தான் சொல்லவந்தேன்” என்றாள்.

“எப்படி அறிந்தீர்கள்?” என்றான் பூரிசிரவஸ். “அறிவதற்கென்ன அது பிரம்மமா? பெண்கள் கூடிய அவையில் ஓர் ஆண் ஒரு பெண்ணை மட்டும் பார்க்காதபடி அமர்ந்துகொண்டான் என்றால் அதற்கு என்ன பொருள்? அப்போதே தெரிந்துவிட்டது. உங்கள் உள்ளம் கலங்கியதை கண்களில் பார்த்ததும் உறுதியும் கொண்டேன்.” பூரிசிரவஸ் “பிறர் அறிவது கூச்சமளிப்பதுதான். ஆனால் நீங்கள் அறிந்தது ஆறுதலையே தருகிறது” என்றான்.

“அவளை வெறுக்கவேண்டாம்” என்றாள் பானுமதி. பூரிசிரவஸ் “நான் வெறுப்பேன் என எப்படி நினைக்கிறீர்கள்?” என்றான். “அது ஆண்களின் வழி. அந்தப்பெண்ணை வெறுக்கத்தொடங்கி அவ்வெறுப்பு வழியாகவே அவர்கள் வெளியேறிச்செல்வார்கள். ஆனால் அப்படி வெறுப்பை நிறைத்துக்கொண்டால் உங்கள் வாழ்நாளெல்லாம் ஆழ்ந்த கசப்பொன்றை சுமந்தலைவீர்கள். உங்கள் வாழ்க்கையின் இனிமையை இழப்பீர்கள். உங்களை நம்பிவரும் பெண்ணுக்கும் அந்தக் கசப்பையே பகிர்ந்தளிப்பீர்கள்.”

“இல்லை, எனக்கு கசப்பேதும் இல்லை” என்றான். “நன்று” என்று அவள் புன்னகைசெய்தாள். “ஆனால் உங்கள் நெஞ்சுக்குள் ஓடுவதை நான் அறிகிறேன். அவள் உங்களை எப்படி எளிதில் மறந்தாள் என்ற வியப்பு. அவள் மணக்கவிருப்பவரை அவள் உண்மையிலேயே விரும்புவதைக்கண்டு சினம்.” பூரிசிரவஸ் “இல்லை” என்று தொடங்க “ஆம்” என்றாள் அவள். “என்னால் அதை மிக அண்மையிலென பார்க்கமுடிகிறது. அவள் உங்களை விழைந்தது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இப்போது ஜயத்ரதரை விரும்புவதும். பெண்களில் உள்ளத்துள் இருப்பது தன் குழந்தைக்குத் தந்தையாக மாறி கனியும் ஒரு முகமற்ற காதலன் மட்டுமே.”

“ஆகவே ஒரு முகத்தை அழித்து இன்னொன்றை வைக்க அவர்களால் எளிதில் முடியும்” என்றாள் பானுமதி. “அக்காதலுக்கு தடையாக இருப்பதனால் உங்களை அவள் ஏளனத்துக்குரியவராக மாற்றி மெல்லமெல்ல சிற்றுருவமாக ஆக்கிக்கொள்வாள். இன்று அதைத்தான் துச்சளை அவையில் செய்தாள். அது அவள் கொழுநனின் குருதி அவளுக்குள் முளைப்பதுவரைதான். அதன்பின் நீங்கள் மீண்டு வருவீர்கள். அவளுடைய இனிய இறந்தகாலத்தின் பகுதியாக மாறுவீர்கள். தாய்மையின் சுமையை இறக்கிவைத்து அவள் வந்து இளைப்பாறவிரும்பும் பகற்கனவில் நீங்கள் வாழ்வீர்கள்.” உதட்டை மடித்துச் சிரித்து “அங்கே உங்களுக்கு என்றும் இளமைதான்” என்றாள்.

பூரிசிரவஸ் புன்னகைத்து “நன்று” என்றான். "அவ்வளவுதான். மிகமிக எளிய உயிர்கள். ஆணும் பெண்ணும். மிகமிக பழகிப்போன நாடகம். அதைமட்டும் உணர்ந்துகொண்டால் சினமும் வஞ்சமும் நெஞ்சில் எஞ்சியிருக்காது. இனிமை மட்டும்தான். அதைத்தான் இன்று கண்ணனின் இசையில் கேட்டுக்கொண்டிருந்தேன்.” பூரிசிரவஸ் சற்றுநேரம் சாளரத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தான். தன் முகம் மலர்ந்திருப்பதை உணர்ந்து அவளை நோக்கினான். “ஆயிரம் வயதான மூதன்னை வந்து சொன்னது போலிருக்கிறது இளவரசி” என்றான். “அய்யோ, எனக்கு அத்தனை வயது ஆகவில்லை” என்றாள் அவள்.

சிரித்துக்கொண்டே “நான் யாதவ அரசியை பார்க்கவேண்டும்” என்று பூரிசிரவஸ் எழுந்தான். அவள் “சென்று வருக! கொற்றவை பூசைக்கு அவர் கிளம்பவேண்டும். அதை அவருக்கு நினைவூட்டுக!” என்றாள். அவன் தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தபோது மீண்டும் குழலிசை தொடங்கியிருந்தது. அதே சொல். ஒற்றைச் சொல்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 3

அவைமுரசின் பேரொலி எழுந்ததும் அரண்மனைச்சுவர்கள் அன்னைப்பசுவின் உடலென சிலிர்த்துக்கொள்வதை பூரிசிரவஸ் கண்டான். இடியுருள்வதுபோல முரசு இயம்பி அமைந்ததும் ஒருகணம் ஆழ்ந்த அமைதி. பின் எங்கும் மானுடக்குரல்கள் முழக்கமாக எழுந்தன. பலநூறு குரல்கள் தாழ்ந்த ஒலியில் பேசியவை இணைந்த கார்வை கூரையை நிரப்பியது. முரசுக்குடத்திற்குள் நின்றிருப்பதுபோல செவிகளை மூடி சித்தம் மயங்கச்செய்தது. கனகர் அவனைக்கடந்து மூச்சிரைக்க ஓடி ஒரு கணம் நின்று “இளவரசே, அவை தொடங்கவிருக்கிறது. குலச்சபையினர் அமர்ந்துவிட்டனர்...” என்றார்.

“நான் அங்குதான் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்று யாதவ அரசி அவைபுகுகிறார்கள். ஆலவட்டம் வெண்சாமரத்துடன் அரசமுறை வரவேற்பு. அறிந்திருப்பீர்கள். பேரரசரே எழுந்து வரவேற்பளிக்கிறார். முன்னர் இங்கே அவைக்குவந்த விஸ்வாமித்திர முனிவருக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.” பூரிசிரவஸ் ஒரு கணம் கழித்து “பேரரசரா?” என்றான். “ஆம், நேற்றிரவே அவரும் விப்ரரும் வந்துவிட்டனர். அவர்கள் வந்தால் நல்லது என்று காந்தார இளவரசர் விரும்பினார். முறைப்படி செய்தியனுப்பினால் போதும் என்றனர். நான் சொன்னேன், பீஷ்மபிதாமகரிடமிருந்து செய்தி வாங்கி அனுப்பலாம், அதை அரசர் மீறமாட்டார் என்று. செய்தி சென்றதுமே கிளம்பிவிட்டனர்.”

பூரிசிரவஸ் புன்னகைத்து “நன்று” என்றான். கனகர் “பொறுத்தருளவேண்டும்... பணிகள்” என்று சொல்லிக்கொண்டே ஓடினார். பூரிசிரவஸ் அதே புன்னகையுடன் இடைநாழியில் நடந்தான். கணிகரைப்போன்ற பல்லாயிரம் பேர் இணைந்து அந்தச்சதிவலையை முன்னெடுக்கிறார்கள். அரண்மனையை அலங்கரிப்பவர்களில் இருந்து வேதமோதி குந்தியை அவையேற்றுபவர்கள் வரை. என்ன நிகழ்கிறது என்றே அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களெல்லாம் வெறும் நாற்களக் கருக்கள். தானும் அப்படித்தானா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. தானறிந்ததுதானா உண்மையில் நிகழ்வது?

இடைநாழியே பூத்த காடு என வண்ணம் பொலிந்தது. தோரணங்களும் பாவட்டாக்களும் சுருள்திரைகளும் தூண்தழுவிச்சென்ற பட்டு உறைகளும் புதியவையாக அமைக்கப்பட்டிருந்தன. அஸ்தினபுரியின் அரண்மனையில் அலங்கரிப்பது என்பது பழைய அலங்காரங்களைக் களைந்து புதியனவற்றை அமைப்பது மட்டுமே என்ற மிகைச்சொல் சூதரிடையே உண்டு. அவன் வந்தபோதெல்லாம் விழவுக்காலமாக இருந்தமையால் உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. தரையிலிட்ட மரவுரிக்கம்பளம் அப்போதுதான் செய்யப்பட்டு கொண்டுவந்தது போலிருந்தது. மரத்தூண்களும் மரச்சுவர்களும் புதிய மெழுகரக்கு பூசப்பட்டு மெருகிடப்பட்டு நீர்ப்பரப்பென பாவை காட்டின. கதவுக்குமிழ்களின் பித்தளை வளைவுகள் பொன்னாக மின்னின. சுவர்களில் சீராக கட்டப்பட்டிருந்த மயிற்பீலிகளின் மிரண்ட மான்விழிகள். துவளும் சாளரத்திரைச்சீலைகளின் தழல். எங்கும் ஒரு துளி அழுக்கில்லை. ஒரு சிறு பிசகில்லை. அங்கே நேற்றென ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அஸ்தினபுரி கங்கைப் பெரும்படகு போல காலத்தில் சென்றுகொண்டே இருந்தது.

ஆனால் இத்தகைய முற்றொழுங்குக்குப்பின் சவுக்குகள் உள்ளன. ஏனென்றால் மானுட மனம் ஒருங்கிணையும் தன்மை கொண்டது அல்ல. ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களின் செயல்களின் தனிப்பாதையில் செல்லவிழைபவர்களே. அவர்களின் கைகளும் கண்களும் சித்தமும் ஆன்மாவும் கட்டுப்படுத்தப்படவேண்டும். ஒடித்து மடித்து ஒடுக்கி உருவாக்கப்படுவதே மானுட ஒழுங்கென்பது. முற்றொழுங்கு. ஆயினும் எங்கோ ஒரு பிழை இருக்கும். அப்பிழையில்தான் மானுடத்தின் உண்மையான வேட்கை இருக்கிறது. படைப்பதற்கும் வென்றுசெல்வதற்குமான துடிப்பு இருக்கிறது. எங்கோ ஒரு பிழை. அவன் அதைத்தேடியபடியே சென்றான். ஒவ்வொரு மடிப்பிலும் இடுக்கிலும் விழிதுழாவினான். சற்றுநேரத்திலேயே அவன் அலங்காரங்களை மறந்துவிட்டான். அவற்றின் மறைவிடங்களை மட்டுமே தேடிச்சென்றது அவன் சித்தம் எழுந்த விழி.

இடைநாழிகள், பெருங்கூடங்கள், காத்திருப்பறைகள், குதிரைமுற்றத்தை நோக்கித் திறக்கும் புறத்திண்ணைகள். எங்கும் மானுடத்திரள். வண்ணத்தலைப்பாகையும் கச்சையும் அணிந்த அரண்மனை ஊழியர்கள். பதறிக்கொண்டே இருக்கும் நடிப்புக்கு அடியில் எதையும் ஒருபொருட்டென எண்ணாத அரண்மனைப் பணியாளர். பட்டு மேலாடைசுற்றி குண்டலங்கள் அணிந்த ஏவல்நாயகங்கள். தலைப்பாகையில் வெள்ளி இலச்சினைகள் அணிந்து கச்சையில் தந்தப்பிடியிட்ட குறுவாட்கள் செருகிய நூற்றுவர்கள். பொன்னூல் சுற்றிய தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் அணிந்த ஆயிரத்தவர். குடவயிறு அசைய வியர்வை சொட்ட மூச்சுவாங்கி நடந்த அமைச்சர்கள். பட்டாடையும் அணிகளும் மின்ன கூந்தலணிந்த பொற்சரங்கள் துவண்டு துவண்டசைய மேலாடை காற்றில் இறகெனப் பறக்க கழுத்தொசித்து கடைவிழிகளால் நோக்கி இளமுறுவல் காட்டியும் ஏளனச்சிரிப்பளித்தும் தங்களுக்குள் குறுமொழி பேசி கிளுகிளுத்தும் செல்லும் அணிப்பரத்தையர். எங்கிருந்தோ எங்கோ விரையும்போதும் ஓடும் நாகமென இடைநெளிந்து முலை நெளிந்து செல்லும் அரண்மனைச் சேடியர்.

சலித்து நின்று தன் மேலாடையை சீரமைப்பது போல சுற்றி நோக்கினான். ஒரு பிசிறுகூட இல்லாத முழுமை. அது மானுடருக்கு இயல்வதுதானா? அப்படியென்றால் இது உயிரற்ற வெளி. இங்கு தெய்வங்களுக்கு இடமில்லை. முன்நிகழாத கணத்தில், எதிர்நோக்கா திசையில் எழுந்தருள்பவை தெய்வங்கள். ஆகவே அவை பிழையில் வாழ்பவை. அவனைப்போல பிழைகளைத்தான் அவையும் நோக்கியிருக்கின்றன. நாகம் சுவர்விரிசலைத் தேடுவதுபோல மானுடத்தின் செயல்களை முத்தமிட்டு முத்தமிட்டு தவிக்கின்றன. அவன் பெருமூச்சுவிட்டான். அவைக்குச்செல்லாமல் அரண்மனையை சுற்றிவந்துவிட்டான். எங்கும் பிழை ஏதும் தெரியவில்லை.

அப்போதுதான் தெரிந்தது அங்கு அத்தனைபேர் பரபரத்துக்கொண்டிருப்பதே பிழைகளைக் கண்டடைந்து சீரமைப்பதற்காகத்தான் என்று. அனைத்துப்பணிகளும் முன்னரே முடிந்துவிட்டன. முந்தைய நாளிரவு முதல் ஒவ்வொருவரும் பிழைகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்டடைந்து கண்டடைந்து சீரமைக்கிறார்கள். அதற்குள் பலநூறுமுறை ஒவ்வொன்றும் சீரமைக்கப்பட்டிருக்கும். ஒரு பிழையேனும் இருக்க வாய்ப்பில்லை. அந்த உணர்வு அவனுக்கு சோர்வளித்தது. ஏவலர் வினைவலர் காவலர் நூற்றுவர் ஆயிரத்தவர் அமைச்சர் என விழிகளை நோக்கிக்கொண்டே சென்றான். அத்தனைபேரும் இடுக்குகளையும் கரவிடங்களையும்தான் கண் துழாவிச்சென்றனர். விதுரரும் அதைத்தான் நோக்குவார். துரியோதனன்கூட அதைத்தான் நோக்குவார். அப்படியென்றால் அத்தனை அணிகளும் எவருக்காக? அவற்றின் அழகை எவரேனும் பார்க்கிறார்களா? அதில் உவகை கொண்ட ஒருவிழியேனும் தென்படுகிறதா?

எவருமில்லை என்பதை விரைவிலேயே கண்டுகொண்டான். குலத்தலைவர்கள் தங்களுக்குரிய முறைமை மதிப்பு அளிக்கப்படுகிறதா என்றும் அது பிறருக்கு எப்படி அளிக்கப்படுகிறது என்றும் மட்டுமே நோக்கினர். வணிகர்கள் தங்கள் ஆடையணிகளை பிறர் நோக்குவதை மட்டுமே உளம்கொண்டனர். ஒவ்வொருவரையும் முறைமைசெய்து அவையழைத்து அமரச்செய்த அலுவல்நாயகங்களும் சிற்றமைச்சர்களும் அனலை கையாள்பவர்களென எச்சரிக்கையுடன் இருந்தனர். அப்படியென்றால் இவை எவரும் நோக்கி மகிழ்வதற்கானவை அல்ல. இங்கு பேரவை கூடுகிறது என்ற செய்தியை அறிவிப்பவை மட்டும்தான். நெடுங்காலமாக இவை செய்யப்படுகின்றன. மீண்டும் மீண்டும் செம்மைசெய்யப்பட்டு பிழையற்றவையாக ஆக்கப்படுகின்றன. இவை செய்யப்படுவதே அந்த உச்சத்தை எட்டுவதற்காகத்தான்.

அவைக்குள் முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. அவையினர் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அவன் பெருந்தூண் ஒன்றின் மறைவில் நின்று முற்றத்தைப்பார்த்தான். காந்தாரத்தின் ஈச்ச இலைக் கொடியுடன் சகுனியின் தேர் வந்து நின்றது. கனகர் அதை நோக்கி ஓடினார். நூற்றுவர்களும் ஆயிரத்தவர்களும் இருபக்கமும் நிரைவகுத்து நின்றனர். சகுனி தேரிலிருந்து இறங்க துச்சலனும் ஜலகந்தனும் விகர்ணனும் சமனும் அவரை நோக்கிச் சென்று தலைவணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். துரோணரும் கிருபரும் வந்திறங்க சுபாகுவும் துர்முகனும் சித்ரனும் உபசித்ரனும் அவர்களை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.

முதலில் அவன் அது உளமயக்கு என்றே எண்ணினான். இயல்பாகத் திரும்பிய அவன் முன் முட்டையோடென, பட்டென, தந்தமென தெளிந்த வெண்ணிறச்சுவரில் ஒரு ஐவிரல் கைக்கறை இருந்தது. விழிதிருப்பி அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று நோக்கினான். அனைவரும் விழிகளால் இண்டு இடுக்குகளைத்தான் நோக்கிச் சென்றனர். சற்று முன்பு வரை அவனும் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். பிழை என்பது மறைவான இடங்களில்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தெரியுமிடத்தில் இருந்திருந்தால் அதை உடனே கண்டு சீரமைத்திருப்பார்கள் என்ற எண்ணம். அவன் அதை மீண்டும் பார்த்தான். வேண்டுமென்றே செய்ததுபோலத் தோன்றியது. ஓர் இளைஞனாக இருக்கவேண்டும். அங்கே அலங்கரிக்கும் வேலையை அவன் செய்துகொண்டிருந்திருப்பான். மூத்தவரும் மேலவரும் நோக்காத ஒரு கணத்தில் எண்ணைபடிந்த கையை ஓர் அழுத்து அழுத்திவிட்டுச் சென்றிருப்பான்.

அதை அவன் அழிக்க முயன்றிருக்கிறானா என்று பார்த்தான். இல்லை என்று தெரிந்தது. புன்னகையுடன் இன்னொரு எண்ணம் வந்தது. அங்கே தன்னை பிறர் கண்டுபிடிப்பதற்கான ஒரு அடையாளத்தையும் அவன் விட்டுச்சென்றிருப்பான். மிக அரிதான ஓர் அடையாளம். மறுகணமே அப்படி எண்ணக்கூடாது என்று தோன்றியது. அது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் வழக்கமான பாதையில் செல்லும் உள்ளத்தை சிதறடிப்பது எளிதல்ல. சற்றுநேரத்திலேயே சித்தம் குவிந்து ஒரே வகையில் தேடத்தொடங்கிவிடுகிறது. அதை வெல்வதற்கான வழி என்பது வேறெவற்றிலாவது உள்ளத்தைத் திருப்பியபின் மீண்டுவருவது.

பீஷ்மபிதாமகர் ஹரிசேனருடன் தேரில்வந்திறங்கி சௌனகராலும் விதுரராலும் அழைத்துச்செல்லப்படுவதை கண்டான். அவர் மெலிந்து மேலும் உயரமானவர் போலிருந்தார். நீண்ட கால்களும் கைகளும் வெட்டுக்கிளி போல காற்றில் துழாவிச் சென்றன. நரைகுழல் தோல்வாரால் கட்டப்பட்டு முதுகில் தொங்கியது. எளிய மரவுரியாடை. மரவுரி மேலாடை. அணிகளேதும் இல்லை. தோலாலான இடைக்கச்சையில் இரும்புப்பிடியும் எருமைக்கொம்பு உறையும் கொண்ட எளிய குத்துவாள் மட்டும் இருந்தது. கர்ணன் உள்ளிருந்து வெளியே வந்து கனகரிடம் ஏதோ கேட்டு மீசையை முறுக்கி இருபக்கமும் நோக்கிவிட்டு உள்ளே சென்றான். திருதராஷ்டிரர் தவிர அனைவரும் வந்துவிட்டனர் என்று தோன்றியது. எவரும் அவனைப்பற்றி கேட்கவில்லை என எண்ணியதும் சற்று தனிமையுணர்வு கொண்டான்.

மீண்டும் விழிகளை ஓட்டினான். ஒரு குவளை சூடான இன்னீர் அருந்தவேண்டுமென எண்ணிக்கொண்டான். அங்கே ஒளிந்து நிற்பது அவன் எளிய மலைமகன் என்பதனாலா? அவைகளிலும் விருந்துகளிலும்தான் ஒருவனுக்குரிய உண்மையான இடமென்ன என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவன் துரியோதனனுக்கு எத்தனை அணுக்கமானவன் என்றாலும் அவையில் அவனுக்கான முறைமைசார்ந்த இடம் இன்னும் உருவாகவில்லை. சிற்றரசர்களின் வரிசையிலேயே பின் நிரையில்தான் அவனுக்கு இடமளிக்கப்படும். அந்த இடத்தில் அமர அவனுடைய ஆணவம் மறுக்கிறது. ஆனால் வேறுவழியே இல்லை. ஆகவே முடிந்தவரை அதை தவிர்க்க நினைக்கிறது. அவன் செய்யப்போவதென்ன என்று அவனுக்கே நன்றாகத் தெரிந்தது. கிருஷ்ணன் அவைநுழையும்போது உருவாகும் சந்தடியில் கலந்து உள்ளே சென்று தனக்கான பீடத்தில் எவருமறியாது அமர்ந்திருப்பான். அவை கலையும்போது வந்தது தெரியாமல் திரும்புவான்.

அதை அவன் பார்த்துவிட்டான். அந்தக் கையடையாளத்திற்கு மிக அருகே தூணுக்கு அப்பால் அசைந்த பாவட்டாவின் அடியில் ஒரு கச்சைத்துணி கிடந்தது. அவிழ்ந்து விழுந்ததை அப்படியே தூக்கிப் போட்டதுபோல. அவன் பலமுறை அந்தப் பாவட்டாவை நோக்கியிருந்தான். ஆனால் அப்போது பாவட்டாவின் செம்பொன்னிறத்துடன் இணைந்திருந்தது அதன் செந்நிறம். அதைப்பார்த்தபின்னர் அதுமட்டும் விழிகளை உறுத்தியது. அதை எடுத்துப்போடலாமா என எண்ணி முன்னால் சென்றபின் தயங்கி நின்றான். எவரேனும் தன்னை நோக்குகிறார்களா என்று பார்த்தான். மீண்டும் அதை பார்த்துக்கொண்டு நின்றான்.

இளைஞனுடையது என்று தெளிவாகவே தெரிந்தது. காவல்பணியில் கீழ்மட்டத்தில் உள்ளவன். இன்னமும் உலோக இலச்சினை ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. நெடுநேரம் உழைத்திருக்கிறான். கச்சையைக் கழற்றி முகத்தைத் துடைத்துவிட்டு அப்படியே போட்டுவிட்டான். திட்டமிட்டே போட்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஓர் உள்ளுணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் எங்கோ நின்று பார்த்துக்கொண்டிருக்கிறான். உடனே திரும்பினால் அவனை பார்க்க முடியாது. அவன் விழிகளால் மட்டுமே பார்ப்பான். ஒருவேளை ஆடியில். சுவர்மெழுகின் ஒளிப்பரப்பில். ஆனால் அவன் விழிகளை நோக்கினால் கண்டுபிடித்துவிடமுடியும்.

உள்ளிருந்து சராசனன் வெளியே ஓடிவந்தான். அவனைத் தொடர்ந்து சித்ராயுதன் வந்தான். சித்ராயுதன்தான் முதலில் அவனை கண்டான். “பால்ஹிகரே, இங்கிருக்கிறீர்களா? உங்களை மூத்தவர் பலமுறை கேட்டுவிட்டார்.” பூரிசிரவஸ் உள்ளம் படபடக்க “என்னையா?” என்றான். “ஆம், எங்கிருந்தாலும் அழைத்துவரச்சொன்னார். நாங்கள் உங்கள் அறைவரைக்கும்கூட சென்று பார்த்தோம். தந்தை அரியணைக்கு வரப்போகிறார்... வாருங்கள்.” சராசனன் “இங்கே என்ன செய்கிறீர்கள் பால்ஹிகரே? எங்கெல்லாம் தேடுவது?” என்றான். “நான் சற்று பிந்திவிட்டேன்” என்றான் பூரிசிரவஸ்.

”வாருங்கள்” என்று சராசனன் அவன் கையைப்பற்றி அழைத்துச்சென்றான். திரும்பும்போது பூரிசிரவஸ் அந்த இளம்காவலனின் கண்களை பார்த்துவிட்டான். அவன் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டு தன் வேலை கைமாற்றினான். பார்த்ததுமே தெரிந்துவிட்டது அவன்தான் என்று. ஐயமே இல்லை. அவனுக்குத் தெரிந்துவிட்டதா? தெரியாமலிருக்காது. அவன் அந்தக் கச்சையைக் கண்டதுமே அவனும் கண்டிருப்பான். அவன் உள்ளம் துள்ளி எழுந்திருக்கும். அவன் வாழ்க்கையின் உச்சதருணங்களில் ஒன்று.

அவனை அழைத்து அந்தக் கச்சையையும் கைக்கறையையும் சுட்டிக்காட்டி விசாரித்தாலென்ன என்று நினைத்தான். அவன் சில கணங்களுக்குக் கூட தாக்குப்பிடிக்கமாட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால் உடைந்து அழமாட்டான். கெஞ்சமாட்டான். வன்மத்துடன் தண்டனையை பெற்றுக்கொள்வான். எத்தனை தண்டித்தபின்னரும் அவன் உள்ளம் முழுமையாக பணிந்திருக்காது. அவனை தண்டிப்பவர்கள் அவனுடைய விழிகளை நினைவில் மீட்டெடுத்து அமைதியிழந்துகொண்டே இருப்பார்கள். அவனை கொன்றுவிட்டால் அவன் அந்த ஒளிவிடும் கண்களுடன் தெய்வமாகிவிடுவான். தெய்வம்தான். அதுதான் அவனை கண்டடைந்தது. அவன் சித்தத்தையும் கைகளையும் எடுத்துக்கொண்டது. அவனை பகடையாக்கி ஆடுகிறது.

“நெடுநாட்களாகின்றன பால்ஹிகரே, இப்படி ஒரு அணிப்பெரும் சபை இங்கே அமைந்து. தந்தை மட்டும்தான் மிகவும் சோர்ந்திருக்கிறார். நேற்று வந்தது முதலே அவர் எவரையும் சந்திக்கவில்லை. சற்றுமுன்னர்தான் துயிலில் இருந்து எழுந்தார். அவை அவருக்காகக் காத்திருக்கிறது. சௌனகர் அவரை அழைத்துவரச்சென்றிருக்கிறார்.” மீண்டும் அந்த இளைஞனின் விழிகளை பூரிசிரவஸ் சந்தித்தான். அவன் ஒரு மெல்லிய புன்னகையுடன் திரும்பிக்கொண்டான். புன்னகைக்கிறான்! அப்படியென்றால்... முழுக்குருதியும் தலையில் ஏற பூரிசிரவஸ் ஒருகணம் அவனை அறியாமலேயே திரும்பிவிட்டான். பற்களை இறுகக்கடித்து ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் அவை எதுவும் அவன் உடலில் நிகழவில்லை. அவன் ஏதும் செய்யப்போவதில்லை என அவனும் அறிந்திருக்கிறான். மூடனல்ல அவன். மூடர்களை தெய்வங்கள் தேர்ந்தெடுப்பதில்லை.

உள்ளிருந்து துரியோதனன் வெளியே வந்தான். “என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று கேட்டபடி அருகே வந்து “இளையோனே, உம்மைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். கர்ணன் வந்து நோக்கியபோது உம்மைக் காணவில்லை என்றான்... வருக!” என்று அவன் தோளை தன் பெரிய கைகளால் வளைத்துக்கொண்டான். சராசனனிடம் “சௌனகர் வந்ததும் அவை தொடங்கும். இளைய யாதவன் வந்துவிட்டானா?” என்றான். “இல்லை, அவர் அவைகூடியபின்னர் வருவதாகத்தானே சொன்னார்கள்?” துரியோதனன் “ஆம்” என்றான். “யாதவ அரசி வந்துவிட்டார். மகளிர்கோட்டத்திலிருந்து அன்னையும் பானுமதியும் அவரை அழைத்துவந்து மகளிர் அவையில் அமரச்செய்துவிட்டனர்” என்றான் சராசனன். “வாரும்" என்று சொல்லி பூரிசிரவஸ் தோளைப்பற்றியபடி மெல்ல நடந்தான்

“வலிக்கிறதா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நேற்று முழுக்க நின்றுகொண்டே இருந்தேன். நான் நெடுநேரம் நிற்கலாகாது என்பது மருத்துவர் விலக்கு” என்று துரியோதனன் அவனை தழுவியபடி நடந்தான். அவன் கைகளின் எடையால் பூரிசிரவஸ் நடக்கத் தடுமாறினான். “ஆனால் வேறுவழியில்லை. யாதவஅன்னை பூசலை எதிர்நோக்கியிருக்கிறார். என் பிழையால் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அனைத்தும் சிதறிவிடும்.” பூரிசிரவஸ் “நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றான். “அன்னை இங்கே அரச விருந்தினராகவே வந்திருக்கிறார். அவர் விரும்பும்படிதான் அனைத்தும் நிகழ்கிறது என இந்நகருக்கும் பாரதவர்ஷத்துக்கும் அறிவிக்கிறோம்” என்று துரியோதனன் சிரித்தான். “அது யாதவனுக்கும் தெரியும். ஆனால் வேறுவழியில்லை அவனுக்கு.”

“பீஷ்மபிதாமகரை நான் இன்றுதான் பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “எங்களூருக்கு வந்த ஓவியரிடமிருந்து பட்டுத்திரையில் வரைந்த அவரது படத்தை பார்த்திருக்கிறேன். அதில் அவர் நரையோடிய இளைஞர் போலிருந்தார்.” துரியோதனன் “இன்றும் அவரிடம் மற்போரிட்டு வெல்லும் வல்லமை பாரதவர்ஷத்தில் எந்த ஷத்ரியனுக்கும் இல்லை. பலாஹாஸ்வ முனிவரும் பரசுராமரும் பால்ஹிகபிதாமகரும் மட்டுமே அவருக்கு நிகர் நிற்க முடியும் என்கிறார்கள். தந்தையும் நானும் பீமனும் ஜராசந்தனும் கீசகனும் அவருடன் ஒருநாழிகை நேரம் மல்லிட்டு நிற்க முடியும்...” பூரிசிரவஸ் வியப்புடன் “புராணங்களில் வரும் மூதாதையர் போலிருக்கிறார்” என்றான். “இளையோனே, அவர் இப்போது வாழ்வதே புராணங்களில்தான். வானிலிருந்து குனிந்து நம்மைப்பார்க்கிறார். அவரது விழிகளை நோக்கும்போது என்னை அவருக்குத் தெரியுமா என்றே ஐயுறுகிறேன். நேற்று அவரை நானும் கர்ணனும் இளையோனுமாக சென்று பணிந்து நிகழவிருப்பதை சொன்னோம். இளையோன் வலிமிகுதியால் நத்தைபோல வந்தான். அவர் என்ன நிகழ்ந்தது என்று கேட்கவில்லை. அவ்வினா அவர் உள்ளத்தில் எழவே இல்லை. அனைத்தையும் சொன்னதும் கைதூக்கி அவ்வாறே ஆகுக என வாழ்த்தினார்."

அவர்கள் உள்ளே நுழைந்தனர். பூரிசிரவஸ் “நான் என் இருக்கைக்குச் செல்கிறேன்...” என்று விலக “என் அருகே உமக்கு இருக்கையிடச் சொல்லியிருக்கிறேன். வாரும்” என்றான் துரியோதனன். “பிதாமகர் இவ்வுலகில் இல்லை. அவர் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று விழியிழந்த சூதன் தீர்க்கதமஸ் சொன்னான். குழந்தை மண்ணுக்கு வந்தபின்னரும் தொப்புள் கொடி அதை கருவறையுடன் பிணைக்கிறது. அதுபோல அவர் மூதாதையர் உலகுக்கு சென்றுவிட்டபின்னரும் குருதிச்சரடு ஒன்றால் இம்மண்ணுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார். அது என்ன என்று அவரே அறிவார். அது அறுபடும் வரை அவர் இங்கிருப்பார்.”

பூரிசிரவஸ் துரியோதனனுடன் சென்று அவனுக்கு இடப்பட்டிருந்த பெரிய பீடத்தில் அமரும்போது கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தான். எவர் விழிகளையும் ஏறிட்டுப்பார்க்காமல் அமர்ந்தான். கால்களை நீட்டலாமா என்ற எண்ணம் வந்ததுமே உடல் ஒடுங்கியது. கர்ணன் அவனிடம் திரும்பி “எங்கு சென்றாய் மூடா? உன்னைத்தேடி நான் வரவேண்டுமா?” என்றான். பூரிசிரவஸ் விழிகளில் நீர்நிறைந்தது. அதை மறைக்க முகத்தை திருப்பியபடி “பொறுத்தருள்க மூத்தவரே” என்றான். துரியோதனன் அமர்ந்துகொண்டு “அவன் வெளியே நின்றிருந்தான். முறைமைகளை கண்காணித்துக்கொண்டிருந்தான் என நினைக்கிறேன். அவர்கள் ஊரில் அனைத்தையும் இவனேதான் செய்யவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது” என்றான்.

கர்ணன் “நேற்று எங்கு போனாய்? நான் பிதாமகரைப்பார்க்க உன்னை அழைத்துச்செல்லவேண்டுமென்று நினைத்தேன்” என்றான். “நேற்று அரண்மனை ஆலயத்தில்...” கர்ணன் திரும்பி துரியோதனனிடம் “இவன் என்ன மழலைபேசிக்கொண்டிருக்கிறான்? மூடன். இவனுக்கு ஏதேனும் ஒரு நிலப்பகுதியைக் கொடுத்து நீயே பார்த்துக்கொள், எதற்காகவாவது இங்கே வந்தால் மண்டை உடையும் என்று சொல்லவேண்டும்” என்றான். துரியோதனன் திரும்பிப்பார்த்து சிரித்தபடி “வலுவான ஓர் அரசியை தேடிவைப்போம். திருந்திவிடுவான்” என்றான். “பெண் போல இருக்கிறான்” என்றபடி கர்ணன் திரும்பி அவனிடம் “அவையை நோக்கு. இங்கே பேசப்பட்ட ஒவ்வொன்றையும் நீ திரும்ப என்னிடம் சொல்லவேண்டும். இல்லையேல் மண்டை உடையும். புரிகிறதா?” என்றான். பூரிசிரவஸ் தலையை அசைத்தான்.

அவை நிறைந்திருந்தது. தொல்குடியினர் ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய குலக்குறிகளுடனும் ஆடைகளுடனும் முறைப்படி நிரைவகுத்து அமர்ந்திருந்தனர். விதுரர் எழுந்து மறுபக்கச் சிறுவாயிலை நோக்கியபடி நின்றிருந்தார். கனகர் ஓடிவந்து அவரிடம் ஏதோ சொல்ல அவர் கைகளை அசைத்து பதற்றமாக எதிர்வினையாற்றினார். அவரது ஆணைகளைப்பெற்றுக்கொண்டு கனகர் திரும்பிச்சென்றார். துரோணரும் கிருபரும் தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க பீஷ்மர் தன் இருக்கையில் நிமிர்ந்த தலையுடன், அசைவற்ற விழிகளுடன் அமர்ந்திருந்தார். அவருக்குப்பின்னால் அமர்ந்திருந்த ஹரிசேனரும் பீஷ்மரைப்போலவே சிலைபோலிருந்தார்.

மேலே ஆடிய தூக்குவிசிறிகளின் காற்றில் திரைச்சீலைகள் சீராக அசைந்தன. பாவட்டாக்கள் திரும்பின. மயிற்பீலிகள் தேவதாரு இலைகள் போல சிலுசிலுத்தன. அவையில் மெல்லிய பேச்சொலிகளால் ஆன ஓங்காரம் நிறைந்திருந்தது. வெண்பட்டுத்திரைச்சீலைக்கு அப்பால் குந்தி அமர்ந்திருப்பதை பூரிசிரவஸ் அகத்தே கண்டான். அருகே காந்தார அரசியர். மணமுடித்துவந்த இளவரசிகள் அவைபுகுவதற்காக அப்பாலுள்ள சிற்றவையில் காத்திருக்கிறார்கள் போலும். அவைநடுவே எழுந்த அரசமேடையில் ஒழிந்த அரியணை இருந்தது.

வெளியே பெருமுற்றத்தில் முரசொலியும் மங்கலப்பேரிசையும் எழுந்தன. ”யாதவனா?” என்றான் துரியோதனன். “ஆம், அவனுக்கான இசைதான். சக்கரவர்த்திகளையும் மாமுனிவர்களையும் வரவேற்பதற்குரியது” என்று சொன்ன கர்ணன் புன்னகையுடன் “சென்றமுறை அவன் வந்தபோது நாம் அவனை வேண்டுமென்றே காக்க வைத்தோம்” என்றான். துரியோதனன் “இதுவும் நம்முடைய ஆட்டம்தான்” என்றான். “ஆம், ஆனால் நம்மை ஆடவைத்தே அவன் வெல்கிறானோ என்ற ஐயம் எனக்கு வந்தபடியே இருக்கிறது” என்றான் கர்ணன். மங்கல இசை வலுத்தது. விதுரர் துரியோதனன் அருகே வந்து “முறைப்படி தாங்கள் வந்து இளைய யாதவரை வரவேற்று அவைக்குக் கொண்டுவரவேண்டும் இளவரசே” என்றார். துரியோதனன் “ஆம்” என்றபடி எழுந்து “இளையோனே, நீரும் வருக!" என பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிவிட்டு நடந்தான்.

அவனுடன் துச்சலன், துச்சகன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன் என ஏழு கௌரவர்கள் சென்றனர். பூரிசிரவஸ் துரியோதனனின் வலப்பக்கம் சென்றான். இடப்பக்கம் விதுரரும் கனகரும் நடந்தனர். அவர்கள் அவையை விட்டு வெளியே சென்று அகன்ற பாதையாகச் சென்று தேர்முற்றத்தில் இறங்கிய இடைநாழியின் தொடக்கத்தில் நின்றனர். அங்கு முன்னரே பொற்கலத்தில் கங்கைநீருடன் நின்றிருந்த வைதிகரும் மங்கலத்தாலம் ஏந்திய அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் இயல்பாக அணிவகுத்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு சால்வையை சீராக்கினான். அவன் இடக்கை மீசையை நீவிக்கொண்டே இருந்ததைக் கண்டு அவன் அகம் நிலையழிந்திருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான்.

மறுபக்கம் இடைநாழியின் எல்லையில் வெட்டி வைத்த வானம் எனத் தெரிந்த ஒளிமிக்க நீள்சதுரத்தில் வண்ணங்கள் அசைந்தன. அங்கே கேட்ட ஓசைகள் நீண்ட குகைப்பாதைக்குள் என புகுந்து உருவற்ற முழக்கமாக வந்துசேர்ந்தன. சில கணங்களுக்குப்பின்னர் சித்தம் அவற்றை வாழ்த்தொலிகளும் முழவோசைகளும் கொம்போசைகளும் என பிரித்து எடுத்துக்கொண்டது. பூரிசிரவஸ் அந்த நீள்சதுரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதனுள் பக்கவாட்டிலிருந்து ஒரு வெண்மணிக்குடை அசைந்து தொங்கல்கள் குலுங்கியபடி நுழைந்தது. வாழ்த்தொலிகள் ஓடைவெள்ளமெனப் பெருகி அவர்களை நோக்கி வந்து அலையாக அறைந்தன.

முழவுகளும் கொம்புகளும் முழக்கிய இசைச்சூதர்களும் உருவிய வாள்களுடன் காவலர்களும் நுழைந்தனர். அவர்களுக்கு அப்பால் அணிப்பரத்தையரின் பட்டாடைகளின் ஒளியசைவு தெரிந்தது. பின்னர் வெண்குடைக்குக் கீழே கிருஷ்ணனை பூரிசிரவஸ் கண்டான். அவன் இருபக்கமும் சாமரங்களை வீசியபடி காவலர் வந்தனர். இளமஞ்சள் பட்டாடை அணிந்து தோளில் செம்பட்டுச் சால்வை போர்த்தி நீலமணிக்குண்டலங்களும் நெஞ்சில் செம்மலர் முத்துக்கள் என ஒளிர்ந்த மணிகளால் ஆன ஆரமும் அணிந்து அவன் நடந்து வந்தான். சத்ரமும் சாமரமும் அமைந்த அந்த வரவேற்பை அவன் அறியாதவன் போலிருந்தான்.

அவன் தன்னுடன் வந்தவர்களிடம் இயல்பாக பேசிக்கொண்டுவந்ததை பூரிசிரவஸ் கண்டான். அசைந்த தலைகளும் எழுந்த கொம்புகளும் முரசுகளை அறையும் கைகளும் காட்சியை மறைத்தன. ஒவ்வொருமுறை தோன்றும்போதும் ஒவ்வொரு தோற்றமாக அவன் தெரிந்தான். அத்தோற்றங்கள் ஒவ்வொன்றும் ஒரு நீலமணி. அவற்றைக் கோத்து உருவாக்கப்பட்ட சரம்தான் அவன். அதுவரை அவனைப்பற்றி அறிந்தவையும் நேரில் கண்ட ஒவ்வொரு தருணமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற கிருஷ்ணன்களையே அவனுக்குக் காட்டின. காந்தாரியின் மஞ்சத்தில் அவள் மடிமீது கால்வைத்தமர்ந்து குழலூதிய அவனை நினைத்துக்கொண்டான். அவன் ஒரு மனிதன் அல்ல. ஒவ்வொருவரும் பார்க்கும் சித்திரங்களை அவன் ஒவ்வொரு முறையில் நிறைத்துக்கொண்டிருக்கிறான்.

அவனுடன் வந்தவர்கள் கிருஷ்ணனின் தோழர்களோ அமைச்சர்களோ என்றுதான் முதலில் நினைத்தான். அவர்கள் நெருங்கியபோது ஒரு கணத்தில் இரு தலைகளின் இடைவெளியில் அந்த முகத்தைக் கண்டபோது எங்கே பார்த்தோம் என எண்ணினான். எளிய காவலன். அவன் ஒரு குதிரைச்சவுக்கை கையில் வைத்திருந்தான். விதுரர் கைகாட்ட அவர்களுடன் நின்றிருந்த சூதர் மங்கலப்பேரிசை எழுப்பியபடி முன்னால் சென்றனர். அடுத்து வேதியர் செல்ல அணிப்பரத்தையர் தொடர்ந்தனர். துரியோதனன் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு மீசையை முறுக்கியபடி கைவீசி மெல்ல நடந்து சென்றான்.

இடைநாழியில் கிருஷ்ணனை எதிர்கொண்ட இசைச்சூதர் இசைமுழக்கியபடி இடப்பக்கம் விலகினர். வேதியர் கங்கை நீர் தெளித்து வேதமோதி வாழ்த்திவிட்டு வலப்பக்கம் சென்றனர். அணிப்பரத்தையர் மங்கலத்தாலம் காட்டி வரவேற்று முகமன் சொல்லி வாழ்த்துப்பாடி வணங்கிவிட்டு பின்னால் நகர்ந்து துரியோதனனை கடந்து சென்றனர். துரியோதனன் மெல்லநடந்து அருகே சென்று இரு கைகளையும் கூப்பியபடி “வருக யாதவரே. அஸ்தினபுரி தங்கள் பொன்னடிகள் பட்டு பெருமைகொண்டது. தங்கள் வருகையால் என் மூதாதையர் உவகைகொள்கிறார்கள். என்குடிகள் வாழ்த்தப்பட்டனர்” என்றான்.

கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “அஸ்தினபுரி என் அத்தையின் மண். என் மூதாதையரின் வணக்கமாக அவள் இங்கிருக்கிறாள் இளவரசே. இந்த வரவேற்பை நான் என் குடிக்கு அஸ்தினபுரி அளிக்கும் மதிப்பாகவே கொள்கிறேன்” என்றான். துரியோதனன் தாலத்திலிருந்து மலரையும் பொன்னையும் அள்ளி கிருஷ்ணன் கையில் அளித்து “பொன்னொளிர்தருணம்” என்றான். “அவ்வாறே“ என்றான் கிருஷ்ணன். “வருக” என்று சொல்லி துரியோதனன் அவனை அழைத்துச்சென்றான். விதுரர் “அஸ்தினபுரியின் பேரவை தங்களை வணங்குகிறது இளையயாதவரே” என்றார். அவர்கள் அவை நோக்கி சென்றனர்.

பூரிசிரவஸ் அந்த இளைஞனை அடையாளம் கண்டான். அவனும் பூரிசிரவஸ்ஸை கண்டு விழிதாழ்த்தி சற்று விலகிக்கொண்டான். கிருஷ்ணன் திரும்பி அவனிடம் “நீலரே, அதை வைத்திரும். நான் செல்லும்போது வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி பூரிசிரவஸ்ஸை நோக்கி புன்னகை செய்தபின் அவைக்குள் நுழைந்தான். பூரிசிரவஸ் அந்த இளைஞனை நோக்க அவன் “யாதவ அரசர் தேரை அவரே ஓட்டிவந்தார். இறங்கியதும் காவல் நின்ற என்னை கைசுட்டி அழைத்து இதை அளித்து வைத்திருக்கும்படி சொன்னார்” என்றான். உன் கைத்தடத்தை அவர் பார்த்துவிட்டார் என்று சொல்ல எழுந்த நாவை பூரிசிரவஸ் அடக்கிக்கொண்டான்.

கிருஷ்ணன் பெருவாயிலைக் கடந்து அவைக்கூடத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த அவையும் எழுந்து வாழ்த்தொலி முழக்கியது. அவன் கைகூப்பி தலைவணங்கியபடி சென்றான். துரியோதனனும் விதுரரும் அவனுக்காக போடப்பட்டிருந்த அரியணை நோக்கி கொண்டுசென்றனர். வாழ்த்தொலிகள் எழுந்து அதிர்ந்து சுவர்களில் இருந்தும் கூரையிலிருந்தும் திரும்ப வந்தன. அவன் பின்னால் சென்ற பூரிசிரவஸ் அவன் நீலத்தோள்களும் புயங்களும் முதுகும் புன்னகைசெய்வதுபோல உணர்ந்தான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 4

அவை புகுந்த கிருஷ்ணன் கைகூப்பியபடி சென்று பீஷ்மரை அணுகி அவரது கால்களில் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவன் அருகே வருவதை அறியாதவர் போல அமர்ந்திருந்தவர் அவன் கால்களில் விழுந்ததும் துடித்து எழுந்துகொண்டார். அவரது நீண்ட கைகள் பதறின. “என்ன, என்ன இது?" என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது? நீ...” என்றார். “வாழ்த்துங்கள் பிதாமகரே” என்றார் விதுரர். “மண்ணுலகம் உன்னுடையது... அதை பேணுக” என்றார் பீஷ்மர். கிருஷ்ணன் எழுந்து மீண்டும் ஒருமுறை தலைவணங்கிவிட்டு தன் இருக்கை நோக்கி சென்றான்.

பீஷ்மர் முதியவர்களுக்குரியவகையில் முகவாயை சற்றே தூக்கி உதடுகளை உள்ளே மடித்து ஓசையின்றி அழுதுகொண்டிருப்பதை பூரிசிரவஸ் கண்டான். அவரை அவரது மாணவர் ஹரிசேனர் மெல்ல பற்றி அமரச்செய்தார். அவர் மேலும் அழுதுகொண்டிருக்க ஒரு சிறிய மரவுரியை அளித்து துடைத்துக்கொள்ளும்படி சொன்னார். பீஷ்மர் மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டு தலைநடுங்க அமர்ந்திருந்தார். அவர் அழுவதை எவரும் நோக்கவில்லை. அனைவரும் கிருஷ்ணனையே பார்த்தனர். அவன் உள்ளே நுழைந்த கணம் முதல் அவனையன்றி எவர்மேலும் எவர் விழியும் நிலைக்கவில்லை. அவன் தன்னைச்சுற்றி எவருமில்லாததுபோல இயல்பாக இருந்தான். இளமையிலேயே நீரலைகளில் மீன் என பிறர்நோக்குகளில் நீந்தி வாழப்பழகியவன்.

கிருஷ்ணன் தன் பீடத்தில் சென்று அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டான். அவையில் எவரும் அப்படி அமர்வதில்லை என்பதை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். அரியணை அமர்பவர்கள் இருகைகளையும் சிம்மத்தலைமேல் வைத்து நிமிர்ந்து அமர்வார்கள். அமைச்சர்கள் ஒருபக்கம் சற்றே சாய்ந்து தலைசரித்து அமர்வார்கள். அது கூர்ந்து கேட்பதான தோற்றத்தை அளிக்கும். குலத்தலைவர்கள் மடிமேல் கைகளை வைத்துக்கொள்வார்கள். எவரும் கைகட்டி அமர்வதில்லை. அது ஒதுங்கிக்கொள்வதுபோல தோன்றவைக்கிறது. எதுநிகழ்ந்தாலும் பேசப்போவதில்லை என்ற அறிவிப்பு போலிருக்கிறது. அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று பூரிசிரவஸ்ஸுக்கு புரியவில்லை. அவன் இயல்பா அது? இல்லை இந்த அவைக்காக அப்படி செய்கிறானா?

அவன் திரும்பி நோக்கினான். துரியோதனன் எப்போதும் எந்தப்பீடத்திலும் அரியணையில் என்பதுபோலவே அமர்பவன். எனவே அரியணைக்கு நிகரான பெரிய பீடமே அவனுக்கு போடப்படும். ஆனால் கர்ணனும் எந்தச்சிறிய பீடத்திலும் அரியணையில் போல்தான் அமர்கிறான் என்பதை அப்போது உணர்ந்து வியப்புடன் மீண்டும் பார்த்தான். அந்த அவையே தன் முன் சொல்கேட்க நிரைவகுத்திருப்பது என்னும் தோரணையில் அவன் செருக்கி நிமிர்ந்த முகத்துடன் நேரான தோள்களுடன் இரு கைகளையும் விரித்து கைப்பிடி மேல் வைத்து கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தான்.

கரிய தோள்வளைவு இரும்புப்பரப்பென மின்னியது. அதில் கூந்தல்சுருள்கள் விழுந்துகிடந்தன. மெழுகிட்டு முறுக்கிய கூரிய மீசையில் இடக்கை நெருடிக்கொண்டிருக்க விழிகள் சற்றே சரிந்து தன்னுள் ஆழ்ந்தவன் போல தெரிந்தான். அவன் விழிகள் பெரியவை என்பதனால் அந்தத் தோற்றம் ஏற்படுகிறது என்று பூரிசிரவஸ் எண்ணினான். அவனும் கிருஷ்ணனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உடலில் இருந்தே உய்த்துணர முடிந்தது. எங்கோ ஓர் ஆழத்தில் கர்ணனுக்கு கிருஷ்ணன் அன்றி எவருமே ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

முரசுகள் முழங்கின. கொம்புகள் பிளிறி இணைந்துகொண்டன. கனகர் ஓடிவந்து கையசைத்தார். பீஷ்மர் துரோணர் கிருபர் தவிர்த்து அவையினர் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். மங்கல இசைக்குழு முன்னால் வந்து வலப்பக்கமாக செல்ல வேதியர் வந்து நீர்தெளித்து அவையை வாழ்த்தி இடப்பக்கமாக சென்றனர். அணிப்பரத்தையர் முன்னால் வந்து மலரிட்டு நீட்டிய பாதை வழியாக திருதராஷ்டிரர் ஓங்கிய கரிய உடலுடன் சற்றே சரித்த தலையுடன் மெல்ல நடந்து வந்தார். அவரது கைகளைப் பற்றியபடி இடப்பக்கம் இளைஞனாகிய சஞ்சயன் வந்தான். அவருக்கு வலப்பக்கம் சௌனகர் வந்தார்.

விதுரர் அவரை எதிர்கொண்டு தலைவணங்கினார். அவர் முகத்தைச்சுளித்து ஏதோ சொன்னார். திரும்பி தன்னை வாழ்த்திய அவையை இருகைகூப்பி வணங்கினார். அது முறைமைச்செயல் போலிருக்கவில்லை. கூப்பிய கைகள் நடுங்க அப்படியே சற்றுநேரம் நின்றிருந்தார். வாழ்த்தொலி மேலும் எழுந்து உச்சம்கொண்டு மெல்ல அவிந்தது. அவை அவரை நோக்கி திகைத்தது போல அமைதியாக நின்றது. விதுரர் அவர் தோள் தொட்டு அழைக்க அவர் எண்ணம் கலைந்து தலையசைத்தபடி மெல்ல நடந்து வந்து பீஷ்மரை அணுகி குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார். பீஷ்மர் எழுந்து பெருமூச்சுடன் அவரை தலைதொட்டு வாழ்த்தினார். துரோணரையும் கிருபரையும் வணங்கிவிட்டு திருதராஷ்டிரர் மேடை மேலேறி அரியணையில் அமர்ந்தார்.

பூரிசிரவஸ் பெருவியப்புடன் அவரது உடலை நோக்கிக்கொண்டிருந்தான். வேர்புடைத்து கிளைதிமிறி வானுயர்ந்து நின்றிருக்கும் தொன்மையான கருவேங்கை மரம்போலிருந்தார். நிகரற்ற பேருடல் என்று அவரைப்பற்றி சூதர்கள் பாடுவதை எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு எலும்பும் ஒவ்வொரு தசையும் முழுமைகொண்டிருந்தது. தெய்வங்கள் மனித உடலை படைப்பதில் இனிமேல் ஆர்வமிழந்துவிடக்கூடும் என நினைத்ததும் உள்ளக்கிளர்ச்சியால் முகம் சிவந்தான். அரியணையில் அமர்ந்து இரு கைகளையும் சிம்மங்கள் மேல் வைத்தார். அங்கு உண்மையான சிம்மங்கள் இருந்தால் அவை அஞ்சியிருக்கும். மிகப்பெரிய கைகள். ஐந்து தலைகொண்ட கருநாகங்கள்.

திருதராஷ்டிரர் தலையை சற்று திருப்பியபடி ஏதோ கேட்க சஞ்சயன் அதற்கு மறுமொழி சொன்னான். அவன் திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவனும் அகஎழுச்சியுடன் அஸ்தினபுரியின் மதவேழத்தை நோக்குவதைக் கண்டான். அவர் காடேகியபின் மெலிந்திருக்கலாம் என்று அரண்மனையில் பேச்சிருந்தது. இரவில் அரண்மனைக்கு வந்தவர் எவரையும் சந்திக்க விழையவில்லை என்றபோது நோயுற்றிருக்கலாமென்றும் சொல்லப்பட்டது. ஆனால் காடு அவரை மேலும் உரம் கொண்டவராக்கியிருந்தது. அதை அவையினரெல்லாம் உணர்ந்தது அவர்களின் விழிகளில் தெரிந்தது.

இரண்டு வருடங்களுக்கொருமுறை போர்யானைகளை ஆறுமாதம் காட்டுவாழ்க்கைக்கு விட்டுவிடுவார்கள் என்று அவன் கேட்டிருந்தான். நோயுற்ற யானையை குணப்படுத்தியபின் ஓராண்டு காட்டுக்கு அனுப்புவார்கள். காட்டில் அவை அன்னைமடியில் பாலுண்டு வாழும் சேய்களென இருக்கும். உடல்நலம் மீண்டு கருங்குன்றுகளென ஆகும். மீண்டும் பிடிக்கச்செல்லும்போது அங்கிருப்பது நகரையும் மானுடரையும் முற்றிலும் மறந்த காட்டுயானையாக இருக்கும். அவற்றை பிடித்துக்கொண்டுவந்து சுவையான உணவுகள் வழியாக மீண்டும் நகரத்துயானையாக்குவார்கள்.

அவை முறைமைகள் நடந்தன. வைதிகர் திருதராஷ்டிரரின் வெண்குடையையும் செங்கோலையும் கங்கைநீரூற்றி மஞ்சளரிசியிட்டு வாழ்த்தினர். ஐவகை நிலங்களைச்சேர்ந்த ஏழு குடித்தலைவர்கள் சேர்ந்து செங்கோலை மலரிட்டு வணங்கி எடுத்து திருதராஷ்டிரர் கையில் அளித்தனர். அவர் அதை வாங்கிகொண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்து அவையின் காற்றுவெளியில் செறிந்தடர்ந்து நின்றன. ஆனால் திருதராஷ்டிரர் மணிமுடி சூடவில்லை. முறைமைப்படி அவர் முடிசூடும் அரசர் அல்ல என்று பூரிசிரவஸ் அறிந்திருந்தான். ஹஸ்தியின் மணிமுடியைப்பற்றி இளமையிலேயே கேட்ட கதைகளை எண்ணிக்கொண்டான். பாரதவர்ஷத்தின் நிகரற்ற வைரங்கள் அனைத்துமே அந்த ஒரு முடியில்தான் உள்ளன என்று சூதர்கள் பாடுவதுண்டு.

செங்கோல் ஏந்தி அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் மேல் பீஷ்மர் மலர்களையும் மஞ்சளரிசியையும் மும்முறை தூவி வாழ்த்தினார். துரோணரும் கிருபரும் வாழ்த்தியபின் அவை “வெற்றியும் புகழும் விழுச்செல்வமும் விளைக!" என்று வாழ்த்தி அரிமலர் தூவியது. பொன்மழை மெல்ல ஓய்ந்ததும் அவைக்களமெங்கும் கொன்றைமலர் உதிர்ந்த காடுபோல தெரிந்தது. சௌனகர் எழுந்து கையசைக்க சிற்றமைச்சர் பிரமோதர் ஓடிச்சென்று கன்றுத்தோலால் ஆன பெரிய அடுக்கேடுடன் வந்தார். அது அரசச்செய்திகளைப்பற்றிய அழியாநூல் என்று அவன் புரிந்துகொண்டான். பெரிய அரசுகளில் அத்தகைய நூல்களில் ஒவ்வொருநாளும் செய்திகள் சுருக்கமாக பதிவுசெய்யப்படும் என்றும் வருடத்திற்கொருமுறை அந்நூல்களின் சுருக்கம் ஒரு செப்பேடாக பதிவுசெய்யப்பட்டு இன்னொரு நூலில் கோக்கப்படும் என்றும் அவன் கேட்டிருந்தான்.

பிரமோதர் எடுத்துக்கொடுக்க சௌனகர் செய்திகளை வாசித்தார். அது ஒரு வெறும் சடங்குதான் என்பது தெரிந்தது. அவர் சொல்வது முடிவதற்குள் திருதராஷ்டிரர் நன்று என்று கையசைத்தார். திருதராஷ்டிரர் முந்தைய அவையில் கேட்ட செய்தியிலிருந்து அன்றையநாள் வரை வாசிக்கப்பட்டதும் அவர் கையசைக்க பிரமோதர் அவரிடம் தந்தத்தால் ஆன முத்திரை ஒன்றை கொடுத்தார். அதை உருகிய அரக்கில் முக்கி அந்தத் தோலேட்டில் அழுத்தியபின் கைகூப்பி முன்னோர்களை வணங்கினார். முரசு ஓம் ஓம் ஓம் என முழங்கியது. சௌனகர் அந்த நூலை தூக்கி அவைக்குக் காட்டிவிட்டு தன் இருக்கையில் சென்றமர்ந்தார்.

முரசுகள் முழங்கி அமைந்ததும் நிமித்திகன் தன் வெள்ளிக்கோலுடன் அவைமுன் எழுந்து நின்று “ஓம் ஓம் ஓம்” என்று விழிமூடிச் சொல்லி குருகுலத்து குலவரிசையை சொன்னான் “அனைத்துமாக விஷ்ணு இருந்தார். அவரே பிரம்மன் என தோன்றினார். அத்ரியானார். சந்திரனாக பிறந்தார். புதன் என மலர்ந்தார். சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் விழியறியும் விண்ணுருவோனே என அறிந்த என் மூதாதையருக்கு வணக்கம். அவர்கள் நாவில் எழுந்த கலைமகளுக்கு வணக்கம். அவர்கள்தொட்டு எழுதும் எழுத்தாணியின் தலைவனாகிய ஆனைமுகத்தவனுக்கு வணக்கம். அன்னையருக்கு வணக்கம்.” அவன் குரல் அவைமுழுக்க பரவியது. “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன் என நீளும் குலமூத்தார் மலைநிரை வந்து நின்ற ஹஸ்தி என்னும் பொன்முடியில் உதித்த சூரியனுக்கு வணக்கம்.”

“ஹஸ்தியின் மைந்தன் அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன் ஆகியோர் வாழ்க! அவர்களின் சொல் எழுந்து அனலென பெருகியதே மாமன்னர் குரு என்க!. குருகுலம் என்றும் வாழ்க! என் குலம் காக்கும் செங்கோலுடன் அமைக!” ”ஓம் ஓம் ஓம்” என்று அவை அதை ஏற்று ஒலித்தது. “குருவின் மைந்தர்நிரை வாழ்க. ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்‌ஷன், பீமன் என மாமன்னர்கள் அலையென எழுந்த கடல் வாழ்க. பிரதீபரை சந்தனுவை விசித்திரவீரியரை வணங்குவோம். அவர்கள் அஸ்தினபுரியெனும் எரிகுளத்தில் எழுந்த தழல்கள். அவர்களுக்கு அவியாகுக எங்கள் புகழ்மொழிகள்.” அவையின் ஓங்காரத்தை மீறி எழுந்தது அவன் குரல். “விசித்திரவீரியரின் மைந்தர் அரியணை அமர்ந்த வேழம் திருதராஷ்டிரரின் புகழ் என்றும் வாழ்க! அவர் நெஞ்சில் என்றும் வாழும் மாமன்னர் பாண்டுவின் பெயர் வாழ்க! அஸ்தினபுரியின் கோலும் முடியும் கொடியும் குடையும் வாழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!”

அவையை நோக்கி நிமித்திகன் சொன்னான் “சான்றோரே, இன்று நாம் வாழ்த்தப்பட்டவர்களானோம். நம் மூதாதையர் நம்மீது கருணைகொண்டிருக்கிறார்கள். நம் குலதெய்வங்கள் நமக்கு அருள்புரிகின்றன. ஐந்துபருப்பெருக்காகச் சூழ்ந்திருக்கும் பிரம்மம் நம்மை நோக்கி புன்னகைசெய்கிறது.” தலைவணங்கி “அஸ்தினபுரியின் வரலாற்றில் இந்த மாதம் போல உவகை நிறைந்த மாதம் நிகழ்ந்ததில்லை. மாமன்னரின் குருதியில் பிறந்த நூற்றுவரும் இந்த ஒருமாதத்திலேயே மணம் கொண்டுவிட்டனர். மாமன்னரின் மைந்தரும் பட்டத்து இளவரசருமான துரியோதனர் காசிநாட்டு இளவரசி பானுமதியை மணந்தார். இளையவர் துச்சாதனர் காசி நாட்டு இளவரசி அசலையை மணந்தார்” என்றான்.

"துச்சகர், துச்சலர், ஜலகந்தர், சமர், சகர், விந்தர், அனுவிந்தர், துர்தர்ஷர், சுபாகு, துஷ்பிரதர்ஷணர், துர்மர்ஷணர், துர்முகர், துர்கர்ணர், கர்ணர், விகர்ணர் ஆகியோர் மணந்த காந்தாரத்து இளவரசியரான ஸ்வாதா, துஷ்டி, புஷ்டி, ஸ்வஸ்தி, ஸ்வாகா, காமிகை, காளிகை, ஸதி, க்ரியை, சித்தை, சாந்தி, மேதா, பிரீதி, தத்ரி, மித்யா ஆகியவர்களை இந்த அவையினர் வாழ்த்தவேண்டுமென்று கோருகிறேன்.” அவையினர் “பதினாறு பேறுகளுக்குரியவராகுக!" என்று கூறி கைதூக்கி வாழ்த்த இளவரசிகள் கைகூப்பியபடி அவைக்கு முன் வந்து நின்றனர்.

"இளையகௌரவர்கள் சலன், சத்வர், சுலோசனர், சித்ரர், உபசித்ரர், சித்ராக்‌ஷர், சாருசித்ரர் ஆகியோரால் மணக்கப்பட்ட கோசலநாட்டின் காமிகை, கௌசிகை, கேதுமதி, வசுதை, பத்ரை, சிம்ஹிகை, சுகிர்தை ஆகிய இளவரசிகளை அவை வாழ்த்தட்டும். சராசனனர், துர்மதர், துர்விகாகர், விகடானனர், விவித்ஸு, ஊர்ணநாபர், சுநாபர், நந்தர், உபநந்தர், சித்ரபாணர், சித்ரவர்மர், சுவர்மர் ஆகியோர் மணந்த அவந்தி நாட்டு இளவரசிகளான அபயை, கௌமாரி, ஸகை, சுகுமாரி, சுகிர்தை, கிருதை, மாயை, வரதை, சிவை, முத்ரை, வித்யை, சித்ரை ஆகியோரை அவை வாழ்த்தட்டும்.” கைதூக்கி வாழ்த்திய அவையில் அந்த இளவரசியரின் நாடுகளிலிருந்து வந்த அரசகுடியினரும் தூதர்களும் இருந்தனர் என்று பூரிசிரவஸ் கண்டான். அவர்களின் முகங்களை தெளிவாக அடையாளம் காணமுடிந்தது.

”இளவரசர்கள் துர்விமோசர், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கர், சித்ரகுண்டலர், பீமவேகர், பீமபலர், வாலகி, பலவர்தனர், உக்ராயுதர், சுஷேணர், குந்ததாரர் மணந்த மகாநிஷாதகுலத்து இளவரசியரான பூஜ்யை, ஸுரை, விமலை, நிர்மலை, நவ்யை, விஸ்வகை, பாரதி, பாக்யை, பாமினி, ஜடிலை, சந்திரிகை, சந்திரகலை ஆகியோர் இங்கு அவைபுகுக! இளவரசர்கள் மகாதரரும் சித்ராயுதரும் நிஷங்கியும் பாசியும் விருந்தாரகரும் மணந்த வேசரநாட்டு இளவரசியரான குமுதை, கௌமாரி, கௌரி, ரம்பை, ஜயந்தி ஆகியோர் அவையினரின் அருள் பெறுக!”

ஒவ்வொரு இளவரசியாக வந்து அவைமுன் வணங்கி நின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அழகியர் என்று தோன்றியது. ஓர் அழகியை இன்னொருத்தியுடன் ஒப்பிட்டுக்கொள்வதுதான் ஆண்களின் உள்ளம் என அவன் எண்ணியிருந்தான். ஆனால் அதெல்லாம் ஓரிரு அழகிகள் முன்னால் வரும்போது மட்டுமே என்று தோன்றியது. நிரைநிரையென அவர்கள் வரும்போது ஒட்டுமொத்தமாக அங்கே அழகு மட்டுமே நிறைந்திருந்தது. அவைநிறைத்த அந்த அழகின் ஒளியில் ஒவ்வொருத்தியும் மேலும் அழகியானாள். மணிகள் கோத்த மாலையின் ஒவ்வொரு மணியும் அனைத்துமணிகளின் ஒளியை பெறுவதைப்போல. ஆம், அழகிய வரி. அதை ஒரு சூதன் பாட உறுதியான வாய்ப்புள்ளது. அவன் அவையை நோக்கியபோது அத்தனை முகங்களும் மலர்ந்திருப்பதை கண்டான். எவரும் எந்தப்பெண்ணையும் குறிப்பிட்டு நோக்கவில்லை. பெண்களென பூத்த அழகை மட்டும் விழிவிரித்து அறிந்துகொண்டிருந்தனர்.

"அனூதரர், திருதசந்தர், ஜராசந்தர், சத்யசந்தர், சதாசுவாக், உக்ரசிரவஸ் ஆகியோரின் துணைவிகளான ஒட்டர நாட்டுக் கன்னியர் விஸ்வை, பத்ரை, கீர்த்திமதி, பவானி, வில்வபத்ரிகை, மாதவி ஆகியோரை இந்த அவை வாழ்த்தட்டும். மூஷிகநாட்டு இளவரசியர் கமலை, ருத்ராணி, மங்கலை, விமலை, பாடலை, உல்பலாக்‌ஷி, விபுலை ஆகியோர் திருடவர்மர், திருதக்ஷத்ரர், சோமகீர்த்தி எனும் கௌரவ இளவரசர்களை மணந்து அவைபுகுந்துள்ளனர். அவர்கள் மங்கலம் கொள்க! இளவரசர்கள் உக்ரசேனன், சேனானி, துஷ்பராஜயன், அபராஜிதன், குண்டசாயி, விசாலாக்ஷன் ஆகியோர் மணந்த காமரூபத்து இளவரசியர் ஏகவீரை, சந்திரிகை, ரமணை, நந்தினி, ருக்மிணி, அபயை, மாண்டவி, சண்டிகை ஆகியோர் அவை பொலிக!"

“துராதாரர், திருதஹஸ்தர், சுஹஸ்தர், வாதவேகர், சுவர்ச்சஸ், ஆதித்யகேது, பகுயாசி ஆகியோர் மணந்த மச்சநாட்டு இளவரசியர் சிம்ஹிகி, தாரை, புஷ்டி, அனங்கை, கலை, ஊர்வசி, அமிர்தை ஆகியோர் வருக! நாகதத்தன், உக்ரசாயி, கவசீ, கிருதனன், கண்டி, பீமவிக்ரமன், தனுர்த்தரன், வீரபாகு என்னும் வீரமைந்தரால் மணக்கப்பட்ட ஔஷதி, இந்திராணி, பிரபை, அருந்ததி, சக்தி, திருதி, நிதி, காயத்ரி என்னும் திரிகர்த்தர்குலத்து இளவரசியர் வாழ்த்துபெறுக! அலோலுபர், அபயர், திருதகர்மர், திருதரதாசிரயர், அனாதிருஷ்யர், குண்டபேதி, விராவீ, சித்ரகுண்டலர் ஆகியோர் மணந்த உத்கலத்தின் இளவரசியர் திதி, சுரசை, பானு, சந்திரை, யாமி, லம்பை, சுரபி, தாம்ரை ஆகியோரை வாழ்த்துக இந்த அவை!”

”இளைய கௌரவர்கள் பிரமதர், அப்ரமாதி, தீர்க்கரோமர், சுவீரியவான் மணந்த விதேகநாட்டு இளவரசியர் துஷ்டி, வபுஸ், சாந்தி, ஸித்தி ஆகியோர் வாழ்த்துபெறுக! சிறியவர்களான தீர்க்கபாகு, சுவர்மா, காஞ்சனதுவஜர், குண்டாசி, விரஜஸ் ஆகியோரின் தேவியரான மல்லநாட்டு இளவரசியர் தேவமித்ரை, தேவபிரபை, தேவகாந்தி, தேவமாயை, தேவகி ஆகியோர் அவைக்கு வந்து வாழ்த்துபெறுக!” நிமித்திகன் கோலைச் சுழற்றித்தாழ்த்தி “நூற்றுவர் மணந்த நூறு இளவரசியரால் பொலிக இந்த அவை!” என்றான்.

விதுரர் வணங்கி “அவையோரே, தெய்வங்கள் கனியும் தருணம் இது. வான்திகழும் அன்னையர் அருள் சுரக்கும் நேரம். நாம் விழி நிறைந்தோம். நம் அகம் நிறைவதாக!” என்றார். “இந்த அவையில் குருகுலத்து இளவரசியரை வாழ்த்த யாதவப்பேரரசி அவைக்கு வந்திருப்பதை அன்னையரின் அருள், நமது பேறு என்றே சொல்லவேண்டும். அரியணை அமர்ந்திருக்கும் குருகுலத்துப் பேரரசரின் கோல் அன்னையின் கால்நோக்கி தாழ்கிறது” என்றார். அவையிலிருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் இணைந்து பேரொலி எழுப்ப திருதராஷ்டிரர் எழுந்து சஞ்சயன் கைபற்றி வலக்கையில் செங்கோலுடன் பீடம் விட்டிறங்கிச்சென்றார். வெண்குடை ஏந்திய இருவீரர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

குந்தி அமர்ந்திருந்த வெண்திரைக்கு முன் வந்ததும் திருதராஷ்டிரர் நின்று தன் கோலை மும்முறை நிலம் நோக்கித்தாழ்த்தி வணங்கினார். திரைக்கு அப்பால் குந்தி எழுந்து நிற்பதை நிழலுருவாக காணமுடிந்தது. அங்கிருந்து சேடியரின் குரவையொலி எழுந்தது. தலைவணங்கியபின் திருதராஷ்டிரர் பின்னால் விலகி மீண்டும் அரியணைக்கு வந்தார். குலத்தலைவர் எழுவர் சென்று அதேபோல தங்கள் கோல்களை மும்முறை தாழ்த்தி வணங்கினர். மங்கல இசை ஓய்ந்ததும் விதுரர் மீண்டும் எழுந்து “யாதவப்பேரரசி தன் கைகளால் மணமக்களை வாழ்த்தவேண்டுமென இந்த அவை கோருகிறது. மணமைந்தர்களுக்கு நீள்வாழ்வும் மணமகள்களுக்கு அழியாத மங்கலமும் அரசியின் அருளால் அமைவதாக!” என்றார். ஓம் ஓம் ஓம் என்று அவை முழக்கமிட்டது.

துரியோதனன் இருக்கையில் கையூன்றி எழுந்து சென்று பானுமதியின் அருகே நின்றான். துச்சலனால் தூக்கி நிறுத்தப்பட்ட துச்சாதனன் அவன் தோள்பற்றி நடந்து அசலையின் அருகே நின்றான். கௌரவர் ஒவ்வொருவரும் தங்கள் இளவரசியரின் அருகே நின்றனர். பானுமதியும் துரியோதனனும் பட்டுத்திரைக்குள் சென்று குந்தியைப் பணிந்து மறுபக்கம் வெளிவந்தனர். பானுமதியின் வகிட்டில் குங்குமமும் நெற்றியில் மஞ்சளும் இட்டு குந்தி வாழ்த்தியிருந்தாள். துரியோதனனின் தலையில் மஞ்சளரிசியிட்டு வாழ்த்தியது தெரிந்தது. கௌரவர் தங்கள் துணைவியருடன் உள்ளே சென்று வெளிவந்தனர்.

அவை வாழ்த்திக்கொண்டே இருந்தது. இளவரசியர் அவையை வணங்கியபின் நிரையாக நின்றனர். குண்டாசி அழுதுகொண்டே காஞ்சனத்துவஜனின் தோள்பற்றி வருவதை பூரிசிரவஸ் கண்டான். அவன் கள்மயக்கில் இருந்தான் என்று தோன்றியது. ஆனால் அழுகை உண்மையாகவும் இருந்தது. களிமகன்களின் அனைத்து முகஅசைவுகளும் கள்ளுண்டவைபோலவே மாறிவிடுகின்றன. கௌரவர் அனைவரும் தங்கள் துணைவியருடன் சென்று பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் வணங்கி வந்து நின்றனர். அவர்களின் நெற்றியிலும் குழலிலும் இருந்த மங்கலக் குறிகளுடன் அனைவருமே இனிய சிறுவர்களாக ஆகிவிட்டதாத் தோன்றியது.

முழவுகளும் கொம்புகளும் முழங்க அவையினர் வாழ்த்தி மலரும் மஞ்சளரிசியும் பொழிந்தனர். நெடுநேரம் ஒரு கனவில் இருந்துகொண்டிருப்பதைப்போல உணர்ந்து பூரிசிரவஸ் அசைந்து அமர்ந்தான். திரும்பி கர்ணனை நோக்கினான். அவன் முகம் மலர்ந்து கௌரவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். விண்ணில் ஒரு பீடத்தில் அமர்ந்து கீழே பார்ப்பவன் போல தெரிந்தான். பூரிசிரவஸ் திரும்பி கிருஷ்ணனை நோக்கியதும் நெஞ்சு படபடக்க "என்ன இது?” என்ற சொல்லாக தன் அகத்தை அறிந்தான். மீண்டும் நோக்கினான். அதிலிருந்த உணர்ச்சி என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை.

மங்கல இசை நடைமாறியது. இளவரசியர் ஒவ்வொருவராக மறுவாயிலுக்குள் சென்று மறையலாயினர். அவன் மீண்டும் கிருஷ்ணன் விழிகளை நோக்கினான். சற்று முன் அவன் கண்டது உண்மையா என்ற திகைப்பு ஏற்பட்டது. மென்முறுவலுடன் கிருஷ்ணன் சென்றுமறையும் பெண்களை நோக்கிக்கொண்டிருந்தான். இளவரசியர் அனைவரும் சென்றதும் கௌரவர் தங்கள் இருக்கைக்கு திரும்பினர். அவன் மீண்டும் கிருஷ்ணனை பார்த்தான். இயல்பான பார்வை, இனிய மென்னகை விரிந்த இதழ்கள். ஆனால் வந்தது முதல் கைகளைக் கட்டியபடியேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தான்.

விதுரர் எழுந்ததும் அவை மீண்டும் அமைதிகொண்டது. “அவையீரே, நூற்றுவரின் தங்கையும் அஸ்தினபுரியின் இளவரசியுமான துச்சளை தேவியின் மணநிகழ்வு வரும் முழுநிலவுநாளன்று நிகழவிருக்கிறது. வேதப்புகைபடிந்து தூய்மைகொண்ட நிலம் ஏழுசிந்து. அதன் கொடிவழியோ தொன்மையானது. மூன்று ராஜசூயங்கள் செய்தவர் அதன் மன்னராகிய பிருஹத்காயர். அவரது மைந்தராகிய ஜயத்ரதரோ பாரதவர்ஷத்தின் பெருவீரர்களில் ஒருவர். அவர் நம் இளவரசியை மணக்கும் செய்தி அறிந்து நாம் மகிழ்ந்திருக்கிறோம்.”

“அந்த மணநிகழ்வு குருகுலத்தின் நற்தருணங்களில் ஒன்று. அதில் பங்கெடுத்து இளவரசியை வாழ்த்தும்பொருட்டே யாதவப்பேரரசி மீண்டும் நகர்புகுந்துள்ளார். அவரது கருணைக்கு முன் குருகுலம் தலைவணங்குகிறது. யாதவப்பேரரசியின் மருகனாக துவாரகையின் அரசர் இளைய யாதவர் கிருஷ்ணர் இங்கு எழுந்தருளியிருப்பதை அஸ்தினபுரி பெருமிதத்துடன் ஏற்கிறது. சிந்துநாடும் துவாரகையும் எதிரிகள் என எண்ணுபவர்களுக்கான விடையே இளையயாதவரின் இவ்வருகை. அவரை அஸ்தினபுரி பேரரசருக்குரிய முறைமையை அளித்து வணங்குகிறது. இந்த அவையில் விஸ்வாமித்திரருக்கு முன்பு அளிக்கப்பட்ட முறைமை இது என்றறிக!”

அவையினரின் வாழ்த்தொலி அடங்குவதற்காக காத்துநின்றபின் விதுரர் தொடர்ந்தார். “அஸ்தினபுரியின் பெருமதிப்பை அறிவிக்கும் முகமாக யாதவ அரசரை குருகுலத்தில் ஒருவராக ஏற்கும் குருதிமுத்திரை கொண்ட கணையாழியை பேரரசர் அளிப்பார். அருள்க தொல்மூதாதையர்!” அவையின் வாழ்த்தொலி நடுவே கிருஷ்ணன் எழுந்து கைகூப்பி தலைவணங்கினான். சஞ்சயன் கைபற்றி நின்ற திருதராஷ்டிரர் தலையை அசைத்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணன் மேலேறிச்சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் அவனை அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். பின்னர் நீட்டப்பட்ட தாலத்திலிருந்து குருதிநிறமான வைரம் பதிக்கப்பட்ட குருகுலத்தின் இலச்சினைக் கணையாழியை எடுத்து அவன் கைகளில் அணிவித்தார். முரசுகளும் கொம்புகளும் அதிர்ந்தன. வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் சூழ்ந்தன.

கிருஷ்ணன் தலைவணங்கியபின் திரும்பி மீண்டும் அவையை மும்முறை வணங்கினான். துரியோதனன் எழுந்து சென்று கிருஷ்ணனை மார்புறத் தழுவிக்கொண்டான். அதன்பின் துச்சலன் தோளைப்பற்றியபடி துச்சாதனன் வர கிருஷ்ணன் அவனை நோக்கிச்சென்று தழுவிக்கொண்டான். கௌரவர் நூற்றுவரும் நிரையாக வந்து அவனைத் தழுவி வாழ்த்தினர். அவை வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டே இருந்தது. கிருஷ்ணன் விதுரரை வணங்கிவிட்டு அவை மேடையில் நின்றான்.

“ஹஸ்தியின் கொடிவழி சிறக்கட்டும். அஸ்தினபுரியின் கொடிசிறக்கட்டும். அதன் மணிமுடி ஒளிரட்டும்” என்றான். “ஓம் ஓம் ஓம்” என்றது அவை. “குருகுலத்து இளவரசியின் மணநிகழ்வு அஸ்தினபுரியின் வரலாற்றுத்தருணம். நூற்றைந்துபேரின் இளையோள் என எவருமில்லை இந்த பாரதவர்ஷத்தில். அவள் மணநிகழ்வில் உடன்பிறந்தார் அனைவரும் கலந்துகொண்டாகவேண்டுமென்பதே முறையாகும்” என அவன் சொன்னதும் அவையினர் முகம் மாறியது. “ஆகவே பாண்டவர் ஐவரும் நாளைமறுநாள் அஸ்தினபுரிக்கு வருவார்கள். பட்டத்து இளவரசர் யுதிஷ்டிரரும் இளையவர்கள் அர்ஜுனனும் சகதேவனும் மதுராவுக்கு நான்குநாட்களுக்கு முன்னரே வந்துவிட்டனர். இன்றுகாலை கிளம்பியிருக்கின்றனர். நாளை மாலை அவர்கள் அஸ்தினபுரிக்குள் நுழைவார்கள்.”

திகைத்து அமர்ந்திருந்த அவையை நோக்கி சௌனகர் கைதூக்கியதும் அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “அதற்கு மறுநாள் காம்பில்யத்திலிருந்து இளவரசர்கள் பீமசேனரும் நகுலனும் அஸ்தினபுரிக்குள் நுழைவார்கள். அவர்களுடன் அஸ்தினபுரியின் மூத்த பட்டத்து இளவரசி திரௌபதியும் நகர்நுழைவார்.” எதிர்பாராதபடி மொத்த அவையும் வாழ்த்தொலியெழுப்பி வெடித்தது. பின்னிருக்கைகளில் அமர்ந்த பலர் எழுந்து விட்டனர். “மணநிகழ்வுக்கு முந்தையநாளே திரௌபதி நகர்நுழைவது மறுநாள் குருகுலத்து இளவரசியின் மணநிகழ்வில் பங்குகொண்டு வாழ்த்தளிக்கவே. அனல்வடிவம் கொண்ட கொற்றவை என அன்னைவிறலியர் பாடும் இளவரசியின் வருகையால் இந்நகர் பொலிவுறுக!”

கிருஷ்ணன் சொன்ன இறுதிச்சொற்களை அவை கேட்கவே இல்லை. சுவர்களும் கூரைக்குவையும் அதிர அது கொந்தளித்துக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் இருகைகளையும் கூட்டி மார்பில் வைத்தபடி அவைமேடையில் புன்னகையுடன் நின்ற கிருஷ்ணனை நோக்கிக்கொண்டிருந்தான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 5

பூரிசிரவஸ் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் அருகே கர்ணன் பீடத்தில் அமர்ந்திருக்க கீழே துச்சாதனன் படுத்திருந்தான். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து நோக்க “ஒன்றுமில்லை, இளையோனால் நெடுநேரம் அமரமுடியவில்லை” என்றான் துரியோதனன். துச்சாதனன் புன்னகைசெய்தான். துரியோதனன் கையசைக்க பூரிசிரவஸ் அமர்ந்ததும் “அவர்கள் நேற்று வந்துவிட்டனர்” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரிந்து பூரிசிரவஸ் மேலே எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். “தருமனும் அர்ஜுனனும் சகதேவனும் மதுராவிலிருந்து கிளம்பி மாலையிலேயே வந்தனர். பின்னிரவில் பீமனும் நகுலனும் வந்திருக்கிறார்கள்.”

பூரிசிரவஸ் தலையசைத்தான். “அவர்களுடைய மாளிகைகளிலேயே அவர்களை தங்கவைக்க ஆணையிட்டிருந்தேன். அரசரை சந்திக்க ஒப்புதல் கேட்டிருக்கிறார்கள். விப்ரரிடம் செயதியை தெரிவித்துவிட்டேன். அரசர் நேற்றிரவு நெடுநேரம் துயிலவில்லை, காலையில் பிந்தியே விழிப்பார் என்றார். விழித்தெழுந்து பயிற்சி முடித்து உணவருந்தியபின் தெரிவிப்பதாக சொன்னார். நாங்களும் அந்த தருணத்திற்காகவே காத்திருக்கிறோம்” என்றான் துரியோதனன்.

”அவர்களை முறைப்படி முன்னரே நாம் சந்திக்கவேண்டும். ஆனால் அச்சந்திப்பில் என்ன நிகழுமோ என்ற குழப்பம் எங்கள் இருவருக்குமே இருக்கிறது. ஏதோ ஒரு மாயச்செயலால் நம் படைக்கலங்களை எல்லாம் இளைய யாதவன் அவனுடையதாக்கிக்கொண்டிருக்கிறான். ஏற்கெனவே இந்த ஆட்டம் நம் கையைவிட்டு சென்றுவிட்டது” என்றான் கர்ணன்.

“எனக்குப்புரியவில்லை மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “ஒருமுறை நகரத்தெருக்களில் சுற்றிவாரும், புரியும்” என்றான் கர்ணன். “யாதவ அரசியின் வருகை நமக்கெதிராக திரும்பக்கூடாதென்பதற்காக அவரை முன்னிலைப்படுத்தி அதை ஒரு பெருநிகழ்வாக்கினோம். அதை பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களின் நகர்திரும்புதலை ஒட்டுமொத்தமாக ஒரு பெருநிகழ்வாக ஆக்கிவிட்டான் யாதவன். அவையில் அவன் பாண்டவர் வருகையை அறிவித்தது முற்றிலும் எதிர்பாராதது. மிகச்சிறந்த அரசியல் சூழ்ச்சி. இன்று நகரில் அத்தனை பேரும் பாண்டவர்களின் வருகையைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.”

பூரிசிரவஸ் தலையசைத்தான். அது அத்தனை மையமானதா என்று அவனுக்குத் தோன்றியது. அவன் உள்ளத்தை அறிந்ததுபோல “மிகச்சிறிய நிகழ்வுகளுக்கெல்லாம் அரசியலில் பெரும்பொருள் உண்டு இளையோனே. ஏனென்றால் நாம் மக்களின் உள்ளத்தை வைத்து இவ்வாட்டத்தை நிகழ்த்துகிறோம். மக்கள்திரளின் உள்ளமென்பது மலையிறங்கும் நதி என்பர். அதற்கென இலக்கு ஏதுமில்லை. அதன் விசையே அதை முன்னெடுத்துச்செல்லும். ஒரு சிறிய பாறையே அதை திசைமாறச்செய்துவிடும்” என்று கர்ணன் சொன்னான்.

“பாண்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற இரக்கம் மக்களுக்கு வந்துவிடலாகாதென நாம் எண்ணினோம். அவர்களை போற்றினோம். அதைக்கொண்டே அவர்கள் வல்லமை மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள் என்ற சித்திரத்தை யாதவன் உருவாக்கிவிட்டான். இன்றுநகரமெங்கும் பேசப்படுவது பாண்டவர்கள் தங்கைக்கென கொண்டுவந்த பெருஞ்செல்வத்தைப்பற்றித்தான்.” பூரிசிரவஸ் “அவர்கள் இரவில் அல்லவா வந்தனர்?” என்றான். “ஆம், பகலில் வந்திருந்தால் மக்கள் இத்தனை கிளர்ச்சிகொண்டிருக்கமாட்டார்கள். அஸ்தினபுரி பல அணியூர்வலங்களையும் செல்வநிரைகளையும் கண்டது. அவர்கள் காணாத செல்வம் கண்டதை விட மேலானதாகத்தானே இருக்கமுடியும்?”

”அரசரை அவர்கள் பார்க்கும்போது என்ன நிகழும் என எத்தனை எண்ணியும் எங்களால் முடிவெடுக்கமுடியவில்லை” என்றான் துரியோதனன். “அரசர் கண்ணீர்விடுவார். தழுவிக்கொள்வார். மயக்கமடையலாம். அதெல்லாம் பெரியதல்ல. ஆனால் உணர்ச்சிமிகுதியால் பெரிய வாக்குறுதிகள் எதையேனும் அளித்துவிடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கிருக்கிறது.” பூரிசிரவஸ் “ஆனால் அனைத்தும் முடிந்துவிட்டபின் அவர் என்ன செய்யமுடியும்?” என்றான்.

”நம் கருவூலம் இன்னமும் பங்கிடப்படவில்லை. அஸ்தினபுரியின் கருவூலம் பாரதவர்ஷத்திலேயே தொன்மையானது. பாரதவர்ஷத்தின் மொத்தக்கருவூலத்திற்கும் நிகரானது என்பார்கள். அது ஓரளவு உண்மை. கருவூலத்தின் செல்வங்களில் பெரும்பகுதி வைரங்கள். அவை விழிகளால் தொடப்பட்டே தலைமுறைகள் ஆகின்றன. அவற்றை முழுமையாக பங்கிடுவது என்பது இயல்வதல்ல. அதைப்பற்றி அரசர் ஏதேனும் சொல்லிவிடுவார் என்றால் நாம் கட்டுப்பட்டவர்களாவோம்” கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.

“அவர்கள் அரசரை சந்திக்கையில் நாம் அருகே இருக்கமுடியாது. நம்மை சந்திப்பதையே அவர் விழையவில்லை. எங்கள் விழிகளாக நீர் உடனிருக்கவேண்டும். அவ்வகையில் பேச்சு சென்றது என்றால் உமது சொற்களால் அதை மறித்துக்கொண்டுவர முடியும்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “இளைய யாதவரிடம் மோதுவதற்காக என்னை அனுப்புகிறீர்கள். நீங்கள் அனுப்பவேண்டியது காந்தாரரை அல்லவா?” என்றான். “உம்மை அவர்கள் இளையோன் என எண்ணலாம். ஆகவே உம்மை மறுக்க முனையமாட்டார்கள்” என்றான் துரியோதனன்.

பூரிசிரவஸ் “தெரியவில்லை. யாதவரை கணிக்க எவராலும் இயலாது. ஆனால் நான் எனக்கிடப்பட்ட ஆணையை செம்மையாகச் செய்ய முயல்கிறேன்” என்றான். “நீர் அவர்களுடன் இருந்தாலே போதும். அதுவே அவர்களை கட்டுப்படுத்தும்” என்றான் கர்ணன். “மூத்தவரே, நாம் என்ன செய்ய முடியும்? எதை நீங்கள் எண்ணுகிறீர்கள்?” கர்ணன் “இதுபோல குழம்பிய நிலையில் நான் என்றும் இருந்ததில்லை. உண்மையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றான். “உடனடியாக என் கவலை என்பது பேரரசரை பாண்டவர் சந்திக்கும் தருணத்தை கடப்பது மட்டுமே.”

“அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் திரௌபதி நகர்நுழையும்போது அவர்கள் வருவார்கள் என எண்ணினேன். நாடு இரண்டாகப்பிரிவதன் சோர்வு நிறைந்திருக்கும் சூழலில் அரசமுறை சந்திப்பாக அதை கொண்டுசென்றுவிடலாமென திட்டமிட்டேன்” கர்ணன் சொன்னான். “இப்போது நாமே உணர்ச்சிமிக்க ஒரு சந்திப்புக்கு களம் அமைத்து அவர்களுக்கு அளித்திருக்கிறோம்.” துரியோதனன் சலிப்புடன் கைவீசியபடி எழுந்து சாளரத்தருகே சென்று “சொல்லப்போனால் தந்தை அறியக்கூடாதென எண்ணிய அனைத்தையும் அவர் அறிந்துகொள்ளட்டும் என்றுதான் இப்போது என் உள்ளம் விழைகிறது. இத்தனை ஆண்டுகளாக நெஞ்சில் எரியும் இந்த அனல் அடங்கட்டும்” என்றான்.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று கர்ணன் சொல்லவர சினத்துடன் இடைமறித்த துரியோதனன் துச்சாதனனை சுட்டிக்காட்டி “இதோ என் இளையோன் இன்னமும் சீரடையாத உடலுடன் கிடக்கிறான். நீயும் நானும் இறப்பைத் தொட்டு மீண்டிருக்கிறோம். இதற்குமேல் என்ன?” என்றான். கையை வீசி “அவர் அறியட்டும். அறிந்தால் நான் விடுபட்டவன் ஆவேன்” என்றான். துச்சாதனன் “தருமர் அறச்செல்வர் என்றே நான் எண்ணுகிறேன். அவர் ஒருபோதும் சொல்லமாட்டார். அவர் சொல்லை இளையோர் மீறமாட்டார்கள்” என்றான். துரியோதனன் திரும்பி துச்சாதனனை விழிகொட்டாமல் நோக்கினான். “உங்களுக்காக நான் எதையும் செய்வேன். ஆனால் அவரே இக்குடியின் மூதாதையருக்கு இனியவர். நம் குலத்தின் அறம் திகழ்வது அவரிலேயே. அதை சொல்லாமலிருக்க முடியாது” என்றான்.

துரியோதனன் “சொல். நானும் அதை மறுக்கப்போவதில்லை. இது போர், போரில் வெற்றி ஒன்றே கருதப்படுகிறது” என்றான். பூரிசிரவஸ் அவர்கள் சொல்வதென்ன என்றறியாமல் கர்ணனை நோக்க அவன் எரிச்சலுடன் “என்ன வீண்பேச்சு இது?” என்றான். துரியோதனன் ”வீண்பேச்சல்ல கர்ணா. இனி இந்த ஆட்டத்தைத் தொடர எனக்கு உள்ளமில்லை. அவர் அறியட்டும். அறிந்தபின் அனைத்தும் ஒரு தெளிவுக்கு வரட்டும்” என்றான். கர்ணன் “அவர் அறிவார்” என்றான். துரியோதனன் திகைப்புடன் நோக்கினான். “அவருக்குத்தெரியும். ஆகவேதான் அந்தக் கொந்தளிப்பு. அவருக்குத் தெரிந்தவை அனைத்தும் விப்ரருக்கும் தெரியும். அவர் அன்று சொன்ன சொற்களில் அனைத்தும் இருந்தன.”

சில கணங்கள் அமைதிக்குப்பின் துச்சாதனன் “ஆம், நான் அதை நோய்ப்படுக்கையில் கிடந்தபோது முழுமையாகவே உணர்ந்தேன். தந்தையின் முகம் என் கனவில் வந்தபோது எஞ்சிய ஐயமும் அகன்றது” என்றான். மீசையை முறுக்கிய துரியோதனன்  கை நடுங்கியது. தாழ்த்திவிட்டு சாளரம் நோக்கி திரும்பினான். அவன் உடலில் ஒரு விதிர்ப்பு இருப்பதை உணரமுடிந்தது. துச்சாதனன் “அவர் அவர்களைப்பார்த்ததும் காலில் விழுவார். அதுதான் நிகழும். நினைத்தால் அவர்கள் அவர் தலையில் கால்தூக்கி வைக்கலாம். அதை தருமர் செய்யமாட்டார். நான் அவரை நம்புகிறேன்” என்றான். கர்ணன் “ஆம், ஆனால் கிருஷ்ணன் செய்யக்கூடும்” என்றான். துரியோதனன் திரும்பி கைவீசி உரக்கக் கூவினான் “செய்யட்டும். அவன் விரும்பியதை கொண்டுசெல்லட்டும். இனி நான் எதையும் காக்கப்போவதில்லை.”

பூரிசிரவஸ் மாறிமாறி நோக்கினான். அவனுக்கு அப்போதும் ஏதும் புரியவில்லை. “இளையோனே, நீ அவர்களுடன் செல்லவேண்டியதில்லை. அவர்கள் அவரை சந்திக்கட்டும். வெல்லட்டும். நான் எதையும் செய்யவிரும்பவில்லை” என்று துரியோதனன் கூவினான். “வாயை மூடுங்கள் இளவரசே” என்று கர்ணன் அதற்குமேல் குரலெழுப்பினான். “போதும். மூடத்தனங்களுக்கும் எல்லை உண்டு.” திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “இது ஆணை. நீர் யுதிஷ்டிரனையும் பாண்டவர்களையும் சென்று பாரும். அவர்களை பேரரசரிடம் அழைத்துச்செல்ல உம்மை பொறுப்பாக்குகிறோம். அவர்களுடன் இரும்... புரிகிறதா?” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கி “ஆணை” என்றான். “நீர் செல்லலாம்.”

பூரிசிரவஸ் எழுந்து மீண்டும் தலைவணங்கிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றான். இடைநாழியில் ஓடிக்கொண்டிருந்த காற்று உடம்பைத் தொட்டதும் உடல் சிலிர்த்தது. உடனே அனைத்தும் விளங்கியது. அறியாமல் அறைவாயிலை திரும்பி நோக்கினான். தலையை அசைத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். புழுதிபடிந்த முகம்போல உள்ளம் ஒவ்வாமையை உணர்ந்தபடியே இருந்தது. சற்று நேரம் சென்றபின் அவன் நின்றான். திரும்ப அறைக்குள் செல்லவேண்டும் என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்டபோது துரியோதனனின் விரிந்த பெருங்கரங்களை அண்மையில் என கண்டான். புடைத்த நரம்பு கிளைவிரித்து இறங்கிய புயங்கள். அவன் வியர்வையின் மெல்லிய எரிமணம். விழிகளைத் திறந்தபோது தன் முகம் மலர்ந்திருப்பதை அவனே உணர்ந்தான்.

தன் மாளிகைக்குச் சென்று உடைமாற்றி உணவருந்திவிட்டு அவன் பாண்டவர்களின் மாளிகைக்கு மீண்டான். புரவியில் வரும்போது இருபக்கமும் முகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முகமும் பாண்டவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அதை உண்மையில் கணிக்கவேமுடியாது. உள்ளம் விழைவதையே விழிகள் எங்கும் காண்கின்றன. ஒற்றர்களும் விழிகளே. அவர்கள் அரசன் விழைவதையே காண்கிறார்கள்.

யுதிஷ்டிரனின் மாளிகையை அடைந்து தன் வருகையை ஏவலனிடம் அறிவித்துவிட்டு காத்திருப்பறையில் அமர்ந்தான். மேலே தொங்குவிசிறி மயிற்பீலிக்கற்றைகளுடன் ஆடிக்கொண்டிருந்தது. அந்த நிழலாட்டம் பதற்றத்தை அளித்தது. அதை நிறுத்தும்படி சொல்லலாம் என எண்ணினான். ஆனால் அதுவே அச்சத்தை காட்டிக்கொடுத்துவிடும் என்று எண்ணி தவிர்த்தான். உள்ளங்கை ஈரமாக இருந்தது. அதை கச்சையில் துடைத்துக்கொண்டான். இளவயதின் கதைகளில் கேட்டறிந்த யுதிஷ்டிரர். அவர் கருணையும் அமைதியும் கொண்டவராகவே இருப்பார். ஆனால் உடன் அர்ஜுனனும் பீமனும் இருக்கக் கூடாது. பிற இருவரையும் பற்றி அவனுள் சித்திரமே இல்லை.

ஏவலன் வந்து “அவைக்கு வருக!” என்று சொல்ல எழுந்ததும்தான் தேவிகையை நினைவுகூர்ந்தான். குளிர்ந்த அலையொன்று அடித்து பின்னால் சாய்த்தது போலிருந்தது. ஓர் எண்ணத்தை அப்படி பருண்மையான விசையாக உணரமுடியுமா என்ற வியப்பே மறுகணம் எழுந்தது. தன்னை நிறுத்திக்கொண்டான். ஏவலன் “வருக இளவரசே” என்று மீண்டும் சொன்னான். தலையசைத்துவிட்டு நடந்தான். ஒரே கணத்தில் உள்ளம் சீரடைந்த விந்தையையும் பார்த்தான். ஆனால் இடக்கால் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது.

அவளை நினைக்கவேயில்லை. ஒருகணம் கூட. பாண்டவர்களின் வருகை பற்றி அறிந்தபோதும் யுதிஷ்டிரரை சந்திப்பதைப்பற்றி பேசியபோதும். உள்ளம் அத்தனை நுட்பமாக அந்த நாடகத்தை போட்டிருக்கிறது. ஆனால் அலைகளுக்கு அடியில் கருநாகம் அந்த முத்துச்சிப்பியைத்தான் தன் உடலால் தழுவி நெளிந்து கொண்டிருந்திருக்கிறது. அந்த மாளிகையே சிபிநாட்டின் செந்நிறப் பாலைநிலம் சூழ இருப்பதுபோலிருந்தது. சாளரம் வழியாகப்பார்த்தால் மணல் மடிப்புகளின் வளைவுகளை பார்க்கமுடியும் என்று தோன்றியது. காதுகளில் கதிர்வெம்மையின் அலைகள்.

இருண்டு குளிர்ந்த குகைக்குடைவுப்படிகள். விழிக்கு மண் என்றும் கைகளுக்குப் பாறையென்றும் காட்டும் சுவர்கள். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்.” அவளுடைய விழிகள் சிரித்தன. சிரிப்பதற்கே உரியவை போன்ற விழிகள். சற்றே ஒடுங்கிய கன்னம். கூரிய நீண்ட மூக்கு. செவ்வுதடுகளுக்குள் சற்றே மங்கலான நிறம் கொண்ட பற்கள். “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்.” அவன் நின்று இன்னும் எத்தனை தொலைவு என்று பார்த்தான். ஏவலன் இடைநாழியின் மறு எல்லைக்குச் சென்று திரும்பிப்பார்த்தான். ”நீ இன்னும் பெரிய அரசை ஆளக்கூடியவள்… ஐயமே இல்லை.” என்ன குளிர். மண்ணுக்கு அடியில் செல்லச்செல்ல குளிர்தான். ஆனால் மேலும் சென்றால் அனல் என்கிறார்கள். மண்ணுக்குள் விண்ணை ஆளும் ஏழு பெருநெருப்புகளும் கூடுகட்டியிருக்கின்றன. “பெரிய அரசுடன் வருக!”

அறையின் பெரியவாயிலைத் திறந்த ஏவலன் உள்ளே செல்ல கைகாட்டினான். பூரிசிரவஸ் உள்ளே சென்றபோது பீடத்தில் அமர்ந்திருந்த முதியவர் எழுந்து “வருக பால்ஹிகரே” என்றார். ஒருகணம் கடந்ததும் அவர்தான் யுதிஷ்டிரன் என்று உணர்ந்தான். “குருகுலத்து மூத்தவருக்கு வணக்கம். நான் பால்ஹிகனாகிய பூரிசிரவஸ். தங்களை அரசரைக் காண அழைத்துச்செல்லும்படி அஸ்தினபுரியின் இளவரசரின் ஆணை.” யுதிஷ்டிரன் “அமருங்கள் பால்ஹிகரே. மிக இளையவராக இருக்கிறீர்கள். நான் சற்று முதியவரை எதிர்பார்த்தேன்" என்றான். பூரிசிரவஸ் அமர்ந்தான். ”தங்கள் தந்தை சோமதத்தரை நான் இளவயதில் ஒருமுறை மத்ரநாட்டில் கண்டிருக்கிறேன். தங்கள் மூத்தவர் சலன் நலமாக இருக்கிறார் அல்லவா?”

பூரிசிரவஸ் “அனைவரும் நலம். நான் இங்கே கௌரவர் கேண்மையில் உகந்திருக்கிறேன்” என்றான். “அது நன்று. துரியோதனனின் கைகளும் தோள்களும் பெரியதந்தைக்குரியவை. அவன் அணைப்புக்குள் சென்றவர்கள் மீளாமல் அங்கிருப்பார்கள்” என்றான் யுதிஷ்டிரன். “பெரியதந்தையை சந்திக்க நானும் விழைவுடன் இருக்கிறேன். இளையயாதவன் தானும் வருவதாக சொன்னான். அவனையும் உடனழைத்துச்செல்வதாகவே விதுரரிடம் சொல்லியிருந்தேன்.” “ஆம், அவரும் வருவதாக என்னிடம் சொன்னார்கள்.” இது காத்திருப்பதற்குரிய இடம்… அமைதியானது. அருகே எவரோ நின்று காதில் சொன்னதுபோல அச்சொற்றொடர் ஒலித்தது. அவன் உடல் விதிர்த்தான். “என்ன?” என்றான் யுதிஷ்டிரன். "இந்த அறைக்காற்று கொஞ்சம் குளிர்கிறது.” யுதிஷ்டிரன்  “ஆம், பெரிய சாளரங்கள்” என்றான்.

அவள் இருக்கிறாளா? இங்கே, உள்ளேதான் இருக்கிறாள். இந்த மரத்தரையில் அவளுடைய கால்களும் தொட்டுக்கொண்டிருக்கின்றன. அவளுடைய மூச்சு இக்காற்றில் கலந்திருக்கிறது. நான் அறிவேன். ”இன்று மாலை அரசவையில் எங்களை முறைமைப்படி அவையமர்த்துவதாக சொன்னார் விதுரர். அதற்குமுன் தந்தையை சந்திப்பது கடமை என்று நான் சொன்னேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னான். பூரிசிரவஸ் மெல்ல தன்னுள் ஒரு புன்னகையை உணர்ந்தான். அவனுள் நிகழும் எண்ணங்களை சற்றும் உணரக்கூடியவர் அல்ல அவர் என்று தெளிவாகத்தெரிந்தது. விழியிழந்தவர் முன் அமர்ந்திருக்கும் விடுதலையுணர்வு ஏற்பட்டது.

"இளையோர் இருவரும் இங்கில்லை” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “அர்ஜுனன் காலையிலேயே துரோணரை சந்திப்பதற்காக குருகுலத்திற்கு சென்றிருக்கிறான். பீமன் அவனை இளமையில் வளர்த்த செவிலி அனகை நோயுற்றிருப்பதை அறிந்து அங்கு சென்றிருக்கிறான். அரசரை சந்திக்க எப்படியும் உச்சி கடந்துவிடும் என்று எண்ணி நானும் ஒப்புதல் கொடுத்தேன்.” பூரிசிரவஸ் “ஆம், உச்சி கடந்துவிடும் என்றே எண்ணுகிறேன்” என்றான். “அதற்குள் இளைய யாதவனும் வந்துவிடுவான். அவன் கௌரவர்களிடம் சக்கரப்பயிற்சி செய்யச்சென்றிருக்கிறான்.”

”நகுலன் சூதர்களின் புரவிப்பயிற்சிச் சாலைக்குச் சென்றான்.“ யுதிஷ்டிரன் சிரித்து “நானும் சகதேவனும் மட்டுமே இங்கிருக்கிறோம். எங்களிருவருக்கும் மட்டுமே காலையில் நூல்பயிலும் வழக்கம் இருக்கிறது. ஷத்ரியர்களுக்கு உகக்காத வழக்கம்” என்றான். பூரிசிரவஸ் “நானும் நூல் பயில்வதுண்டு” என்றான். “என்ன நூல்கள்? அரசு சூழ்தலா?” என்றான் யுதிஷ்டிரன். “இல்லை, நான் பயில்வதெல்லாம் காவியநூல்கள்” என்றான். யுதிஷ்டிரன் "காவியம் நன்று. ஆனால் நான் அவற்றில்கூட வரலாற்றை மட்டுமே பார்ப்பது வழக்கம்” என்றான்.

ஏவலன் வந்து சகதேவனின் வருகையை அறிவித்தான். வரச்சொல்லிவிட்டு “இளையோன் இங்கு வந்ததில் இருந்தே நூல்களில்தான் மூழ்கி இருக்கிறான். இந்த இரண்டாவது வரவின் நிகழ்வுத்தொடர்களைப்பற்றி ஆராய்கிறான்” என்றான் யுதிஷ்டிரன். பூரிசிரவஸ் “அவர் கணிநூல் வல்லுநர் என்றனர்” என்றான். “ஆம், நாங்கள் ஐவருமே ஐந்து வல்லுநர்கள்...” என்றான் யுதிஷ்டிரன். “எதிலும் திறன் கொண்டவராக எங்கள் தந்தை இருக்கவில்லை. அவரது உள்ளம் ஒரு அறநூல் அறிஞனாகவும் மாமல்லனாகவும் விற்கலை மேதையாகவும் புரவிதேர்ந்தவனாகவும் கணிநூலாளனாகவும் தன்னை மாறி மாறி புனைந்துகொண்டது. அக்கனவுகள் எங்கள் வடிவில் உருவம்கொண்டன.”

கதவு திறந்தபோது சகதேவனுடன் பெண்களும் இருக்கும் அணியொலி கேட்டு பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்து உடனே விழிதிருப்பிக்கொண்டான். முரசை கோல்நீவியதுபோல ஒரு முழக்கம் அவனுள் எழுந்தது. தேவிகையும் விஜயையும் சகதேவனுடன் உள்ளே வந்தனர். “என்ன?” என்று யுதிஷ்டிரன் புன்னகையுடன் அவர்களை நோக்கி கேட்டான். “வந்ததிலிருந்தே காத்திருக்கிறோம். சலித்துவிட்டது. நாம் எங்கும் செல்வதில்லையா?” என்றபடி தேவிகை அருகே வந்தாள். இயல்பாக பீடத்தில் அமர்ந்து “வந்த கணம் முதல் நிகழ்வுகளாக இருக்கும் என எதிர்பார்த்தேன்” என்றாள்.

“அதுதான் சலிப்பூட்டுகிறது. இன்னமும் உச்சிவேளைகூட ஆகவில்லை. அரைநாள்கூட பொறுக்கமுடியாதா என்ன?” என்றான் யுதிஷ்டிரன். விஜயை அமர்ந்தபடி “அக்கா விடிகாலையிலேயே எழுந்து முழுதணிக்கோலம் கொண்டுவிட்டார்கள்” என்றாள். சகதேவன் பூரிசிரவஸ்ஸிடம் இரு கைகளையும் நீட்டியபடி “பால்ஹிகரே, உங்களைப்பற்றி அறிந்திருக்கிறேன்” என்றான். பூரிசிரவஸ் அவனுடைய புன்னகைக்கும் அழகிய முகத்தை நோக்கியபோது மேலும் பதற்றத்தைத்தான் அடைந்தான். “ஆம், நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் இங்கே...” என்றபின் நாவால் இதழ்களை ஈரப்படுத்தி “தங்களை...” என்றான்.

“இளையோனே, நம்மை தந்தையிடம் கூட்டிச்செல்பவர் இவர். துரியோதனனுக்கு அணுக்கமானவர்” என்ற யுதிஷ்டிரன் திரும்பி தேவிகையிடம் “உங்கள் குலத்திற்கு அணுக்கமானது இவர்களின் குலம். அறிந்திருப்பாய். உங்கள் குலமூதாதை பால்ஹிகர்தான் பால்ஹிகநிலத்தின் பத்து அரசுகளுக்கும் முன்னோடி. இன்றும் அவர் உயிருடன் இருக்கிறார்” என்றான். தேவிகை “ஆம், தெரியும். ஒருமுறை இவரை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள். பூரிசிரவஸ் அவள் அறியாமல் திரும்பி அவளை நோக்கினான். அவள் முகத்திலும் விழிகளிலும் இனிய சிரிப்பு மட்டும்தான் இருந்தது. “பால்ஹிக மூதாதையை அழைத்துச்செல்வதற்காக சிபிநாட்டுக்கு வந்திருந்தார்.”

“அப்படியா? அது எனக்குச் செய்தி” என்றவன் பூரிசிரவஸ்ஸை நோக்கித்திரும்பி ““மத்ரம், சௌவீரம், பூர்வபாலம், சகம், யவனம், துஷாரம், கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் பத்து அரசுகள் இல்லையா?” என்றான். “ஆம் மூத்தவரே. ஆனால் கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய நான்கும் நாடுகள் அல்ல. அவை குலக்குழுக்கள் மட்டும்தான். துவாரபாலம் என்பது ஒரு குடிகூட அல்ல. பன்னிரு குடிகளின் தொகுதி. உண்மையில் மலைக்கணவாயை காவல்காக்கும் குலம். அனைவருமே துவாரபாலர்கள் என்றும் பால்ஹிகரின் குருதி என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.”

“இதையே அன்று என்னிடமும் இவர் சொன்னார்” என்று தேவிகை சிரித்தாள். “இந்தக் குலக்கணக்குகளை விட்டு மலைக்குடிகள் மேலே எழுவதே இல்லை என்று என் தந்தை சொன்னார்.” பூரிசிரவஸ் அவளை ஒருகணம் நோக்கிவிட்டு விழிதிருப்பினான். அவன் உடல் முழுக்க குருதி வெம்மைகொண்டு ஓடியது. மூச்சிரைக்காமலிருப்பதற்காக அவன் வாயை மெல்லத்திறந்தான். திரும்பி விஜயையை நோக்கினான். விஜயை அவனை நோக்கி புன்னகை செய்து “எல்லா மலைக்குடிகளும் குடிப்பெருமையால் மட்டும் நிற்பவர்கள் அல்ல என்று சொல்லுங்கள் இளவரசே” என்றாள். “மத்ரநாட்டின் குருதி அஸ்தினபுரியை அடைந்து ஒருதலைமுறை கடந்துவிட்டது.”

யுதிஷ்டிரன் “ஆம், அன்னை மாத்ரியை எப்படி மறக்கமுடியும்?” என்றான். விஜயை “பால்ஹிக இளவரசர்கூட அஸ்தினபுரியின் இளவரசியை மணக்கவிருப்பதாக மலைநாடுகளில் ஒரு பேச்சிருந்தது” என்றாள். தேவிகை “இவரா? வியப்பாக இருக்கிறதே? பிறகென்ன ஆயிற்று?” என்றாள். “தெரியவில்லை. அவர்தான் சொல்லவேண்டும். துரியோதனருடன் மற்போரில் வெல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார்களோ என்னவோ?” என்றாள் விஜயை. தேவிகை உரக்க சிரித்துவிட்டாள். யுதிஷ்டிரன் சிரித்தபடி “பெண்கள் நகைக்க விரும்பினால் ஒருவரை பிடித்துக்கொள்கிறார்கள் பால்ஹிகரே. பொருட்படுத்தவேண்டியதில்லை” என்றான்.

பூரிசிரவஸ் திரும்பி சகதேவனை பார்த்ததும் அவனுக்கு ஏதாவது தெரியுமா என்று எண்ணிக்கொண்டான். அது அவன் தவிப்பைக் கூட்டியது. எழுந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. ”இளையவர் ஒருவரைக் கண்டால் நகையாடுவதில் என்ன பிழை? அவர் ஒன்றும் பிழையாக எண்ணமாட்டார்” என்றாள் தேவிகை. “மேலும் அவர் இங்கு நமக்கு பணியாற்ற அனுப்பப்பட்டவர்.  நம்மை மகிழ்விப்பது அவரது கடமை. என்ன சொல்கிறீர் பால்ஹிகரே?” பூரிசிரவஸ் “ஆம் இளவரசி” என்றான். விஜயை “அதற்காக அவரிடம் பாடச் சொல்லிவிடவேண்டியதில்லை” என்றாள். இருவரும் மேலும் சிரித்தனர்.

சகதேவன் “போதும்” என்றபின் பூரிசிரவஸ்ஸிடம் “நாம் எப்போது மூத்ததந்தையை பார்க்கிறோம்?” என்றான். “அவரது அணுக்கர் செய்தியனுப்பியதுமே சந்திக்கலாம். நான் இங்கிருப்பதை அறிவித்துவிட்டுத்தான் வந்தேன்” என்றான். "நாம் அரசரை சந்தித்தபின்னர்தான் இளவரசிகள் பேரரசியை சந்திக்கவேண்டும். அதற்காகவே காத்திருக்கிறார்கள்.” பூரிசிரவஸ் “நாம் கிளம்பியதுமே இவர்களும் செல்லலாம். மாலை அரசவைக் கூட்டம் கூடுவதற்குள் சந்திப்புகள் முடியவேண்டும் அல்லவா?” என்றான். “நம்முடன் யாதவரும் விதுரரும் வருவார்கள்” என்ற சகதேவன் “உண்மையில் மூத்த தந்தையை எப்படி  சந்திப்பது என்ற பதற்றம் எனக்கு இருக்கிறது. அவர் இந்நாட்களில் நினைவில் மறைந்து மூதாதையர் வரிசையில் ஒருவராக மாறிவிட்டிருக்கிறார்” என்றான்.

”நம் கடமை அது இளையோனே. நமக்கு அவரளித்த நற்கொடையே இந்திரப்பிரஸ்தமாக அமையவிருக்கும் மண் என்று கொள். அவரது பாதங்களைத் தொட்டு வணங்குவதன் மூலம் நாம் தந்தையின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்கிறோம்.” சகதேவன் “ஆம்” என்றான். தேவிகை “பால்ஹிகரே, நீங்கள் துச்சளையை பார்த்தீர்களா?” என்றாள். பூரிசிரவஸ் அவளை தன்னையறியாமல் பார்த்துவிட்டான். “பார்க்காமலா மணமுடிக்க எண்ணினார்?” என்றாள் விஜயை. அவன் திரும்பி விஜயையை நோக்க “அஸ்தினபுரியின் இளவரசியை மணமுடிக்க எண்ணுபவர்கள் அவளை பார்க்கவேண்டும் என உண்டா என்ன?” என்றாள் தேவிகை. பூரிசிரவஸ் தலைகுனிந்தான். “நான் கேட்பதற்கு நீங்கள் மறுமொழி சொல்லவில்லை பால்ஹிகரே.”

“பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ் குனிந்தபடி. “இந்த மணநிகழ்வில் அவளுக்கு மகிழ்ச்சியா என்ன?” என்று தேவிகை கேட்டாள். “இதென்ன கேள்வி? சிந்து அரசர்கள் தொன்மையான குலம். சிந்துநாடு ஏழுநதிகளின் படுகை. சிபிநாட்டை விட ஐந்துமடங்குபெரியது. பால்ஹிகநாட்டைவிட பன்னிருமடங்கு பெரியது” என்றாள் விஜயை. “பால்ஹிகநாடா? மலைகளையும் சேர்த்து சொல்கிறாயா?” என்றாள் தேவிகை. “மலைகளில் உள்ள இருபத்தேழு சிற்றூர்களைத்தான் பால்ஹிகநாடு என்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அவர்கள் பெருவிழவன்று ஒன்றாகக் கூடும்போது மொத்த பால்ஹிகநாட்டையும் ஒரே இடத்தில் கண்ணால் பார்த்துவிடமுடியும், இல்லையா பால்ஹிகரே?” பூரிசிரவஸ் தலைதூக்கி “ஆம் இளவரசி” என்றான்.

“பால்ஹிகநாடுகளை இணைத்து ஒன்றாக ஆக்கவேண்டுமென்பது எந்தையின் கனவு” என்றாள் விஜயை. ”இந்திரப்பிரஸ்தம் அமைந்ததுமே விஜயர் வில்லுடன் வருவதாக சொல்லிவிட்டார். யார்கண்டது, மறுமுறை வரும்போது பால்ஹிகர் நம் நாட்டுக்குள் அமைந்த சிற்றரசொன்றை ஆள்பவராகக் கூட இருப்பார்.” பூரிசிரவஸ் “ஆம், அவ்வாறு நிகழ்ந்தால் என் பேறு” என்றான். “நான் ஒருமுறை இமயமலையடுக்குகளில் பயணம்செய்ய விழைகிறேன். பால்ஹிகர் எனக்கு அகம்படி வந்தாரென்றால் அச்சமின்றி செல்லமுடியும்” என்று தேவிகை சொன்னாள். யுதிஷ்டிரன் “இமயமலைமுடிகளை நிலத்தில் வாழ்பவர்கள் எளிதில் அணுகமுடியாது, தேவிகை” என்றான்.

பூரிசிரவஸ் கால்களால் தரையில் போடப்பட்ட மரவுரி விரிப்பை நெருடிக்கொண்டிருப்பதை உணர்ந்து நிறுத்தினான். கீழிருந்து ஏவலன் வந்து வணங்கி “செய்தியாளன் வந்திருக்கிறான். இன்னும் ஒருநாழிகையில் பேரரசர் இளவரசர்களைப் பார்க்க சித்தமாக இருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரன் கையில் இருந்த சுவடியை வைத்துவிட்டு “நன்று. உச்சிப்பொழுதின் நான்காம் நாழிகை வரை நல்லநேரம்தான்” என்றபின் சகதேவனிடம் “செல்வோம் இளையோனே” என்றான். தேவிகை “நீங்கள் சென்றதுமே நாங்கள் கிளம்பலாமா?” என்றாள். ”நாங்கள் தந்தையை சந்தித்தசெய்தியை உங்களுக்கு அறிவிக்கச் சொல்கிறேன். உடனே நீங்கள் கிளம்பலாம்” என்றான் யுதிஷ்டிரன்.

”பால்ஹிகரே, எங்கள் தேர்கள் புஷ்பகோஷ்டத்திற்கு வரும்போது அங்கே முற்றத்தில் இடமிருக்கவேண்டும்” என்றாள் தேவிகை. அவன் திரும்பி அவளை நோக்க பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்தபடி “நீர் முன்னரே அதை ஒழுங்குசெய்திருக்கவேண்டும்” என்றாள். கட்டுக்குழலில் இருந்த மணிச்சரம் நழுவி முகத்தில் சரிய அதை விலக்கியபடி “காலை கொற்றவை ஆலயத்திற்குச் சென்றபோது முற்றத்தில் இடமில்லை என்று சற்றுநேரம் நிற்கவைத்துவிட்டனர். அது மீண்டும் நிகழலாகாது” என்றாள். பூரிசிரவஸ் “ஆணை இளவரசி” என்றான். சகதேவன் “பால்ஹிகரே, நாம் ஒன்றாகவே செல்வோம். நீர் கூடத்தில் காத்திருக்கலாம்” என்றான். பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கினான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 6

தேர்கள் புஷ்பகோஷ்டத்தின் முகப்பு முற்றத்தில் வந்து நிற்பதுவரை பூரிசிரவஸ் தவித்துக்கொண்டே இருந்தான். கூடத்தில் அமர்ந்திருக்கையில், பாண்டவர்கள் ஒவ்வொருவராக வந்தபோத, எழுந்து வரவேற்று முகமன் சொல்லும்போது, அவர்கள் சித்தமாகி வந்ததும் தருமனுடன் தேரில் ஏறிக்கொண்டபோதும் அவன் உள்ளே அந்த சிறிய சந்திப்பின் ஒவ்வொரு சொல்லும் மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டிருந்தது. முகத்தைச்சுற்றி பறக்கும் ஈக்களை துரத்துபவன் போல அவன் அவற்றை அகற்ற முயன்றான். விலகி மீண்டும் அணுகின.

வியப்பாக இருந்தது. அந்த உரையாடல் நிகழும்போது அவன் பெரும்பாலும் அவர்கள் இருவரையும் பார்க்கவேயில்லை. அவர்கள் சொல்லில் இருக்கும் முள்பட்டதும் தன்னை மறந்து விழிதூக்கிப்பார்த்த சிலகணங்கள்தான். ஆனால் அவர்களின் தோற்றத்தின் ஒவ்வொரு நுட்பமும் அவன் நினைவில் இருந்தது. விழிகளில் இருந்த கூர்மை, உதடுகள் சுழித்ததில் கன்னங்கள் மடிந்ததில் இருந்த ஏளனம், மூக்குத்திகளின் வைரங்களுடன் இணைந்த பற்களின் ஒளி, தலையை ஒசித்தபோது கன்னத்தை தொட்டுத்தொட்டு ஆடிய குழைகள், நெற்றியிலும் செவிமுன்னும் அசைந்த சுரிகுழல்கீற்றுகள். அப்போதும் அவர்கள் அவன் முன் அமர்ந்து அச்சொற்களை சொல்லிக்கொண்டிருப்பதுபோல. அவன் பார்க்காதபோது அவர்கள் சொன்ன சொற்களை பார்த்த விழி எது?

வலுக்கட்டாயமாக தன் நோக்கை கடந்துசெல்லும் காட்சிகளில் நிலைக்கவைத்தான். ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றுடன் இணைந்த நினைவுகளை மீட்டெடுத்தான். ஆனால் சிலகணங்கள் கூட அவை சித்தத்தில் நிற்கவில்லை. அள்ள அள்ள நழுவிச்சரிந்தபின் அச்சொற்களும் விழிகளும் சிரிப்புகளுமே எஞ்சின. அவற்றை கல்லில் பொறித்து எண்ணச்சுருள்களுக்குமேல் தூக்கி வைத்தது போல. இந்த எல்லைக்கு அப்பால் யானைக்கொட்டடிக்குச் செல்லும்பாதை. இதோ காவல்கோட்டம். புஷ்பகோஷ்டத்தில் இந்நேரம் இளவரசர் பதற்றத்துடன் காத்திருப்பார். ஆனால் மீண்டும் அந்த எண்ணம். அல்லது அவ்வெண்ணம் விலகவேயில்லை. அதன்மேல் இவையனைத்தும் வழிந்தோடுகின்றன.

இப்போது எங்குசெல்லப்போகிறேன்? இதோ நான் சென்றுகொண்டிருப்பது அஸ்தினபுரியின் ஒரு வரலாற்றுத்தருணம். நாளை சூதர்கள் பாடும் சந்திப்பு. ஆனால்... இல்லை, அதைப்பற்றியே எண்ணம்கொள். அதைப்பற்றி. அஸ்தினபுரியின் அரண்மனை முகப்பு. படிகள். இடைநாழி. உட்கூடம். மரப்படிகள் ஏறிச்சென்றடையும் இடைநாழி. அப்பால் தன் அறைக்குள் விப்ரருடன் பேரரசர் இருப்பார். விப்ரர் எப்போதும் அவருடன் இருக்கிறார். ஒரு சொல்கூட அவர் விப்ரரிடம் பேசுவதில்லை. பெரும்பாலும் தலையசைப்பும் விழியசைவும். என்ன நிகழும்? ஆனால் அவ்வெண்ணங்கள் நீடிக்கவில்லை. அவை வந்த விரைவிலேயே அழிந்தன. அந்தப்பேச்சு அந்தச்சிரிப்பு அந்தஉதட்டுச்சுழிப்பு அந்தப்புருவத்தூக்கல்...

புலிக்குருளைகள் தட்டித்தட்டி விளையாடிய காலொடிந்த முயல். அந்தத் தருணத்தை திரும்ப எண்ணியபோது உடல் பதறியது. ஏன் அப்படி இருந்தேன்? ஏன் என் ஆணவம் எழவில்லை? குத்தும் சொல் ஒன்றை சொல்லியிருந்தால்கூட அதன் நுனியில் எஞ்சும் குருதித்துளி இப்போது என்னை ஆறுதல்படுத்தியிருக்கும். ஆனால் விழிசரித்து உடல் வளைத்து அமர்ந்திருந்தேன். அசைவில் நோக்கில் சொல்லில் மன்றாடிக்கொண்டே இருந்தேன். அவர்கள் இருவரும் திட்டமிட்டே அங்கே வந்தார்கள். அவனை மட்டுமே நோக்கியபடி அவர்கள் உள்ளே நுழைந்தனர். வந்தமர்ந்ததுமே தேவிகை அவனுடன் சொல்லாடத் தொடங்கிவிட்டாள்.

பானுமதி துச்சளையைப்பற்றி சொன்னதை நினைவுகூர்ந்தான். ஏளனம் வழியாக கடந்து செல்கிறார்களா? கடந்தகாலத்தை உதறி தன் கணவனிடம் இணைந்துகொள்ள விழையும் பெண்ணின் மாயமா அது? இல்லை என்று உறுதியாகத்தெரிந்தது. அதற்குள் இருப்பது வஞ்சம்தான். வஞ்சமேதான். அவமதிக்கப்பட்டவர்கள்தான் வஞ்சம் கொள்கிறார்கள். அந்த நஞ்சு புளிக்கும்தோறும் கடுமையாவது. அவர்கள் நாகங்கள் என சூழ்ந்துகொண்டு அவனை மாறி மாறி கொத்தினார்கள். எந்த நரம்புமுடிச்சில் விரல் தொட்டால் அவன் துடிப்பான் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த காதலினாலேயே அவனை அணுகி நோக்கிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

அவன் அவர்களை அவமதித்தானா? இல்லை என்று தோன்றியதுமே ஒருவகையில் ஆம் என்றும் தோன்றியது. இல்லை, தேவிகையை நான் அவமதிக்கவில்லை என அவன் உடனே மறுத்துக்கொண்டான். நான் என்ன செய்யமுடியும்? அவளை பீமசேனர் கவர்ந்துகொண்டு சென்றது அவனைமீறியது. அவன் சிபி நாட்டுக்குச் சென்றான். பெரும்பாலையில் கண்ணீருடன் விரைந்தான். அவளுக்காக விண்மீன்களுக்குக் கீழே துயிலிழந்து தவித்திருந்தான். அப்படியென்றால் விஜயை? அவளுக்காகவும் அவன் சென்றான். இல்லை, அது அவமதிப்பேதான். அரசியலாடலில் அவன் கை செய்த பிழை. ஆனால் பெண்ணெனும் நோக்கில் அவமதிப்புதான். அவள் சினந்திருப்பாள். இரவுகள் தோறும் எரிந்து எரிந்து வஞ்சம் கொண்டிருப்பாள்...

அப்படியென்றால் தேவிகையையும் அவன் அவமதிக்கவே செய்தான். சிபிநாட்டிலிருந்து திரும்பியபின் ஒரு செய்தியைக்கூட அவளுக்கு அனுப்பவில்லை. அவள் தந்தையிடம் பால்ஹிகநாட்டின் சார்பில் ஒரு மணத்தூது அனுப்பியிருக்கலாம். விஜயைக்கும் மணத்தூது அனுப்பியிருக்கலாம். சொல்லுறுதி பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நிகழுமென நான் எப்படி எதிர்பார்த்திருக்கமுடியும்? ஒவ்வொன்றும் அவனை மீறி நிகழ்கிறது. அவனை திறனற்றவன் என்று சொல்லுங்கள். நேர்மையற்றவன் என்று சொல்லவேண்டாம். எவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் இந்த விளக்கங்களை? எவரை ஆறுதல்படுத்துகிறேன்?

தேர்கள் நின்றதும் அந்தக் கட்டற்ற எண்ணப்பெருக்கு அறுபட்டது. எரிபட்ட இடத்தில் குளிர்பட்டதுபோல ஆறுதல் கொண்டான். ஏவலர்கள் அணுகியதும் யுதிஷ்டிரன் “பால்ஹிகரே, இறங்குவோம்” என்றான். “எண்ணங்களில் வரும் வழியையே மறந்துவிட்டீர்.” பூரிசிரவஸ் நாணத்துடன் “ஆம், பழைய நினைவுகள்” என்றான். “உமது முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். பெருந்துயர் ஒன்று தெரிந்தது” என்றான் யுதிஷ்டிரன். “நான் சீர்செய்யக்கூடிய இடர் என்றால் என்னை உமது மூத்தவனாக எண்ணி நீர் சொல்லலாம். அது எதுவென்றாலும் செய்கிறேன். என் இரு இளையோர் நிகரற்ற ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் செய்யமுடியாதது என ஏதுமில்லை இப்புவியில்” என்றான்.

பூரிசிரவஸ் கண்களில் எழுந்த கண்ணீரை மறைக்க தலைகுனிந்து “இல்லை அரசே...” என்றான். “எவராலோ அவமதிக்கப்பட்டிருக்கிறீர். அதை உணரமுடிகிறது. எந்த அரசன் என்று மட்டும் சொல்லும். பீமனை அவனிடம் பேசச்சொல்கிறேன். அவனே வந்து உம்மிடம் பிழைபொறுக்கும்படி கோருவான்.” பூரிசிரவஸ் “அரசே, அப்படி ஏதுமில்லை” என்றான். அந்த ஒருகணத்தை உடைந்து மண்ணில் சரிந்து அழாமல் கடந்துசென்றால் போதும்.

அதை உணர்ந்தவன் போல யுதிஷ்டிரன் அவன் தோளை மெல்ல அணைத்து “சரி, உளமிருக்கையில் சொல்லும்... வாரும்” என்றான். பின்னால் வந்த தேரில் இருந்து சகதேவனும் நகுலனும் இறங்கினர். “சிறியவனே, அவர்கள் எங்கே?” என்றான் யுதிஷ்டிரன். “இளைய யாதவரை அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லி மூன்றாமவர் சென்றார். பீமசேனர் தனித்தேரில் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் நகுலன். ”அவர் வந்ததே பிந்தித்தான். அதன்பின்னர்தான் உணவுண்ணத் தொடங்கினார்.”

அவர்கள் இருவரும் உருவும் நிழலும் என வருவதைக் கண்டதும் ஒரே கணத்தில் உள்ளத்தைச் சூழ்ந்த அனைத்தும் விலக பூரிசிரவஸ் புன்னகை செய்தான். அதைக்கண்ட யுதிஷ்டிரன் “அவர்கள் இரவும்பகலும் என்பார்கள் பால்ஹிகரே” என்றான். பூரிசிரவஸ் ”அழகர்கள்” என்றான். “ஆம், ஆனால் நான் அவர்களை பார்ப்பதில்லை. தந்தையர் விழிகளே மைந்தருக்கு முதல் கண்ணேறு என்பார்கள்.” தொலைவில் புரவிகளின் ஒலியும் முரசும் கேட்டது. “அது பீமன்... இத்தனை மெதுவாக அவன் மட்டுமே தேரோட்டுவான்... மூடன்” என்றான் யுதிஷ்டிரன்.

பீமனின் தேர் வந்து நின்றது. தேர்த்தட்டிலிருந்து இறங்கி நின்றதுமே கச்சையை இறுக்கியபடி திரும்பி அவனை நோக்கி ”நீர்தான் பால்ஹிகரா?” என்றான். ”ஆம் பாண்டவரே. என்பெயர் பூரிசிரவஸ். சோமதத்தரின் மைந்தன்” என்றான் பூரிசிரவஸ். “உம்மை காசியில் நான் இருளில் சரியாகப்பார்க்கவில்லை” என்று புன்னகைத்தபடி பீமன் அருகே வந்தான். "மிக இளைஞராக இருக்கிறீர். தெரிந்திருந்தால் அம்புகளால் அடித்திருக்க மாட்டேன். கையால் மண்டையில் ஒரு தட்டு தட்டியிருந்தாலே போதும்.”

பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். பீமன் தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்து “ஆனால் அன்று அஞ்சாமல் போரிட்டீர்... நாம் முன்னரே சந்தித்திருக்கவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் “இப்போது சந்திப்பதில் பெருமகிழ்ச்சி” என்றான். “முறைமைச்சொல் சொல்வது எனக்குப் பிடிக்காது. பலந்தரையை நீர் மணப்பதாக இருந்ததா?” பூரிசிரவஸ் “இல்லை, இளைய கௌரவர்” என்றான். பீமன் நகைத்து “நன்று... இப்போது அவன் மேலும் இளையவளை மணந்திருப்பதாக சொன்னார்கள்... பெரும்பாலும் காசிநாட்டு இளவரசியர் மீதான ஆர்வத்தை இழந்திருப்பான்” என்றபின் யுதிஷ்டிரனிடம் “மூத்தவரே, நாம் செல்லலாமே?” என்றான்.

“விஜயன் வரவேண்டுமே” என்றான் யுதிஷ்டிரன். “இளைய யாதவன் உடனிருப்பது நன்று என எனக்குத்தோன்றியது, இளையோனே. என் கைகள் இப்போதே நடுங்கிக்கொண்டிருக்கின்றன.” பீமன் மீசையின் ஓரத்தைப் பற்றி நீவியபடி “அஞ்சவேண்டியது அவர்கள்” என்றான். அவனுடைய மீசை துரியோதனன் மீசைபோல அடர்ந்ததாக இல்லாமல் மெல்லிய முடிகளால் ஆனதாக இருந்தது. “என்ன பார்க்கிறீர்?” என்று பீமன் கேட்டான். “உங்களைப்பார்க்க பால்ஹிகர் போலிருக்கிறது.” பீமன் நகைத்து “ஆம், என்னை நான் பால்ஹிகநாட்டவன் என்றே சொல்லிக்கொள்வது வழக்கம். என் தோள்கள் முதுபால்ஹிகர் போலிருப்பதாக சூதன் ஒருவன் சொல்லி அறிந்திருக்கிறேன். அவருடன் ஒருநாள் நான் மற்போரிடவேண்டும்” என்றான்.

”முதல் தோல்வியை அங்கே அடைவீர்கள் இளவரசே” என்றான் பூரிசிரவஸ். “அவரது தோள்கள் நாள்தோறும் வலிமைகொண்டுவருகின்றன. நான் கிளம்பும்போது அவர் புதிய மனைவி கருவுற்றிருந்தாள். மேலும் மனைவியர் உண்டா என்பது சென்றால்தான் தெரியும்.” பீமன் சிரித்து “நான் அந்த அளவுக்கு இல்லை இளையோனே” என்றான். “அவருடன் பொருதி தோற்று தாள்பணிவதும் ஒரு நல்லூழ் அல்லவா? நான் இன்னமும் பரசுராமருடனும் போர் புரிந்ததில்லை” என்றான். யுதிஷ்டிரன் “எங்குசென்றான்? இருவருமே பொறுப்பற்றவர்கள். இங்கே ஒன்றாக வந்துசேரவேண்டுமென பலமுறை அவனிடம் சொன்னேன்” என்றான். “வருவார்கள்... இளையயாதவர் தெற்கே பீஷ்மரின் சோலைக்கு அப்பால் தங்கியிருக்கிறார்” என்றான் பீமன்.

சௌனகர் தலைமையில் வேதியரும் மங்கல இசைக்குழுவினரும் அணிப்பரத்தையரும் ஏவலரும் எதிரேற்புக்காக அரண்மனையின் படிகளில் காத்து நின்றிருந்தனர். சௌனகர் அருகே நின்றிருந்த கனகர் கையை அசைத்து என்ன நடக்கிறது என்று கேட்டார். கிருஷ்ணன் வருகிறான் என்று அவன் கைகாட்டினான். அவர் நேரமாகிறது என்று கைகாட்டினார். பூரிசிரவஸ் சற்று பொறுங்கள் என்றான். இளவேனிற்காலம் தொடங்கிவிட்டிருந்தமையால் உச்சி வெயில் வெம்மை காயத்தொடங்கிவிட்டிருந்தது.

“அவர்கள் வரட்டும். நாம் ஏன் இங்கே நிற்கவேண்டும்?” என்றான் பீமன். “நான் துரியோதனனை சந்திக்கநேரலாம். எனக்கு அத்தருணத்தைக் கடக்க யாதவன் அருகே இருக்கவேண்டும்” என்றான் யுதிஷ்டிரன். பீமன் பூரிசிரவஸ்ஸை ஒருகணம் நோக்கிவிட்டு சிரித்தபடி “அவன் உங்களை மற்போருக்கா அழைக்கப்போகிறான்? அழைத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றான். “விளையாடாதே மந்தா!” பீமன் “மூத்தவரே, நம்மைவிட அவர்களுக்குத்தான் கூச்சமிருக்கும். அவன் அவையிலன்றி உங்கள்முன் வரமாட்டான்” என்றான்.

அதற்குள் அப்பால் காவல்கோட்டத்தில் முரசு முழங்கியது. “அவன்தான்” என்றான் யுதிஷ்டிரன். தேர்முகடும் கொடியும் தெரிந்தன. யாதவர்களின் கருடக் கொடி படபடத்து அணுகுவதை பூரிசிரவஸ் உள்ள எழுச்சியுடன் நோக்கிக்கொண்டிருந்தான். தேர் திரும்பி நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தவன் கிருஷ்ணன் என்பதைக் கண்ட பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். “இவன் ஏன் எப்போதும் தேரை ஓட்டுகிறான்?” என்றான் யுதிஷ்டிரன். “புரவிகளை கட்டுப்படுத்தும் கலையை விரும்புவதாக என்னிடம் சொன்னார்” என்றான் நகுலன். “தேரோட்டுபவர்களை பெண்கள் விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்” என்று சகதேவன் சொல்ல நகுலன் “பேசாமலிரு” என்றான்.

தேரிலிருந்து கிருஷ்ணன் இறங்கினான். அர்ஜுனன் சவுக்குடன் இறங்கி நிற்க அந்தக் காவலன் ஓடிவந்து சவுக்கை வாங்கிக்கொள்வதை பூரிசிரவஸ் கண்டான். அவன் தன்னை பார்ப்பான் என்று அவன் நோக்கினான். சிலகணங்களுக்குப்பின் அவன் திரும்பி அவன் விழிகளை சந்தித்தபின் திரும்பிச்சென்றான். பின்முகமே அவன் புன்னகைக்கிறான் என்பதை காட்டியது. “செல்வோம்” என்றான் யுதிஷ்டிரன். பூரிசிரவஸ் கைகாட்ட மங்கல இசை எழுந்தது. அஸ்தினபுரியின் அமுதகலசப்பொற்கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வர பின்னால் இசைச்சூதர் முழங்கியபடி வந்தனர். பொலித்தாலங்கள் ஏந்திய அணிப்பரத்தையர் வர நடுவே சௌனகர் நடந்துவந்தார்.

வேதியர் கங்கைநீர் தூவி வேதமோதி வாழ்த்தினர். மங்கல இசை சூழ அணுகி வந்த சௌனகர் மங்கலத்தாலம் நீட்டி முகமன் உரைத்தார். யுதிஷ்டிரன் திரும்ப மலர்ந்த முகத்துடன் முகமன் சொன்னான். சௌனகரும் அவனும் பேசிக்கொண்டவை சூழ்ந்து ஒலித்த இசையிலும் வாழ்த்துக்களிலும் மறைந்தன. பூரிசிரவஸ் திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவன் கைகளை மார்பில் கட்டியபடி நிற்பதைக் கண்டதும் அவையை நினைவுகூர்ந்தான். கிருஷ்ணன் அவனைப் பார்த்து புன்னகைசெய்தான்.

பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் மங்கலம் காட்டி முகமன் சொன்ன சௌனகர் “இன்று ஐவரும் அவைநுழையும்போது அனைத்து முறைமைகளும் செய்யப்படவேண்டும் என்பது அரசாணை. ஆனால் இதுவே முதல் அரண்மனை நுழைவென்பதனால் இந்த வரவேற்பு” என்றார். “நாங்கள் முறைமைகளை இப்போது எதிர்பார்க்கவில்லை அமைச்சரே. தந்தையைப் பார்த்து வணங்கவேண்டுமென்பதற்காகவே வந்தோம்” என்றான் யுதிஷ்டிரன். “ஆயினும் அரண்மனையின் இந்தச் சடங்கு மூதன்னை கனிந்த புன்னகையுடன் வா என்பதுபோலிருக்கிறது.” சௌனகர் “மூதன்னைதான். மாமன்னர் ஹஸ்தியால் கட்டப்பட்டது. பாரதவர்ஷத்திலேயே தொன்மையானது. நீங்களனைவரும் உறங்கிய தொட்டில்” என்றபின் ”வருக!” என்றார்.

அவர்கள் படிகளில் ஏறி இடைநாழியை அடைந்தபோது கிருஷ்ணன் “நாம் ஏன் மூத்த கௌரவரை நோக்கியபின் தந்தையை பார்க்கச் செல்லக் கூடாது?” என்றான். “என்ன சொல்கிறாய்? தந்தை நமக்காகக் காத்திருக்கையில்...” என்று யுதிஷ்டிரன் பதறினான். “மூத்தவரே, இல்லத்தில் ஒருவர் நோயுற்றிருக்கையில் அவரை நோக்குவதே முதற்கடன் என்பதே குடிமுறைமையாகும். மேலும் நோயுற்ற உடன்பிறந்தாரை பார்க்காமல் தன்னைப்பார்க்கவந்தமை குறித்து தந்தையும் எண்ணக்கூடும் அல்லவா?”

யுதிஷ்டிரன் “ஆனால்...” என்றான். பீமனை நோக்கித்திரும்பி “இளையோனே, நாம் இப்போது கௌரவரை சந்திப்பதென்றால்...” என தவித்தபின் “நாம் சந்திப்பதை அவர்களிடம் சொல்லவுமில்லை” என்றான். “நோய்நலம்நாட அப்படி சொல்லிச்செல்லவேண்டுமென்பதில்லை. துச்சாதனர் இப்போதும் எழுந்து நடமாடமுடியாதவராகவே இருக்கிறார். மூத்தவராகிய நீங்கள் சென்று ஒரு சொல் கேட்டுவருவதில் குறையொன்றுமில்லை.” யுதிஷ்டிரன் அர்ஜுனனை நோக்க அவன் “ஆம், அங்கே காந்தாரரும் இருக்கமாட்டார்” என்றான். பூரிசிரவஸ் அப்போதுதான் அதிலிருந்த தெளிவான திட்டத்தை உணர்ந்தான்.

அதை அக்கணமே சௌனகரும் உணர்ந்தார். “ஆம், முறைப்படி ஓர் இல்லத்தில் நுழைகையில் நோய் உசாவிவிட்டே முதியோரை காணவேண்டும். அவர்கள் பெருங்கூடத்தில்தான் இருக்கிறார்கள். பார்த்துவிட்டுச்செல்வோம்” என்றார். “யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்றான் யுதிஷ்டிரன். “மூத்த கௌரவர் காலையிலேயே வந்தார். துச்சாதனரும் துச்சலரும் உடனிருக்கிறார்கள். அங்கநாட்டரசர் உணவுண்டு ஓய்வுக்குப்பின் மாலை அவைக்கு வருவதாக சொல்லிச் சென்றார்.” கிருஷ்ணன் “செல்வோம்” என்றான்.

சௌனகர் கனகரிடம் “பாண்டவர்கள் நோய் உசாவ வருவதாக இளவரசரிடம் சொல். இளைய யாதவரும் உடனிருக்கிறார்” என்றார். கனகர் உடல் குலுங்க ஓடினார். முனகலாக “எனக்கு இது உகந்ததா என்று தெரியவில்லை யாதவனே. அவர்களின் உள்ளம் என்ன என்று நாமறியோம்” என்றான் யுதிஷ்டிரன். அவர்கள் இடைநாழி வழியாக நடந்து கீழே உள்ள பெருங்கூடத்திற்குள் நுழைந்தனர். பூரிசிரவஸ்ஸின் உள்ளம் படபடத்தது. ஒரு கணம் விஜயையின் முகம் நினைவுக்கு வந்தபோது எங்கோ எப்போதோ என தோன்றியது.

பெருங்கூடத்தில் நின்ற கனகர் “உள்ளே வரச்சொன்னார்” என்றார். யுதிஷ்டிரன் திரும்பி கிருஷ்ணனை பார்த்தபின் சால்வையை சீரமைத்துக்கொண்டு உள்ளே செல்ல பீமன் சிறியவிழிகளை சற்றே தாழ்த்தியபடி வலக்கையால் இடத்தோளை நீவியபடி ஒருகணம் தயங்கி பின் தொடர்ந்தான். அர்ஜுனன் புன்னகையுடன் “வாரும் பால்ஹிகரே” என்றபின் உள்ளே சென்றான். நகுல சகதேவனும் கிருஷ்ணனும் உள்ளே சென்றபின் பூரிசிரவஸ் தொடர்ந்தான். அவனுக்குப்பின்னால் பெரிய வாயில் மூடிக்கொண்டது.

கூடத்தில் துச்சாதனன் தரையில் தோல்விரிப்பில் படுத்திருந்தான். துச்சலன் சாளரத்தருகே நின்றிருக்க அவர்களை வரவேற்பதற்காக துரியோதனன் எழுந்து நின்றிருந்தான். எதிர்பாராத அந்த வருகையால் அவர்கள் குழம்பிப்போயிருந்ததை முகங்களில் உடலசைவுகளில் உணரமுடிந்தது. கிருஷ்ணன் “மூத்தவரே, தாங்கள் உடல்நலமின்றி இருப்பதை பாண்டவ மூத்தவரிடம் சொன்னேன். முறைப்படி நோய் உசாவிச்செல்ல வந்திருக்கிறார்” என்றான். துரியோதனன் “ஆம், ஆனால் இப்போது நலமடைந்துவிட்டேன்” என்றான். துச்சாதனன் கையை ஊன்றி எழுந்து அமர முயல துச்சலன் குனிந்து அவனுக்கு உதவினான்.

யுதிஷ்டிரன் மெல்லிய குரலில் “இளையோன் இன்னமும் நலம்பெறவில்லையா?” என்றான். துச்சாதனனின் நிலை அவனை பதற்றமடையச்செய்திருப்பதை உணரமுடிந்தது. துரியோதனன் துச்சாதனனை நோக்கிவிட்டு “ஆம், இன்னும் இருமாதமாகலாம் என்றார் மருத்துவர்” என்றான். யுதிஷ்டிரன் மீண்டும் ஒரு முறை நோக்கி, தயங்கி “மருத்துவம் தொடர்கிறதல்லவா?” என்றான். “ஆம்... மருத்துவர் பார்க்கிறார்கள்” என்றான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொள்ளவில்லை. துரியோதனனின் பெரிய கரிய கைகள் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. தசைகள் இறுகி நெளிந்து நெகிழ்ந்து மீண்டும் இறுகின. அவன் தாடையில் பற்கள் இறுகுவது தெரிந்தது. பார்வையை இருபக்கமும் மாறி மாறி திருப்பியபடி கைகளைப் பிசைந்தபடி நின்றான். யுதிஷ்டிரன் “விரைவில் நலமடையவேண்டும்...” என்றான். “நன்றி மூத்தவரே” என்றான் துரியோதனன். துச்சாதனன் எழுந்து நின்று துச்சலனின் தோளை பற்றிக்கொண்டான்.

கிருஷ்ணன் தன் இடக்கையால் துரியோதனனின் வலக்கையைப் பிடித்து “மீண்டும் கதை ஏந்தும் தோள்களுடன் காணவிழைகிறேன், மூத்தவரே” என்றான். “அதைத்தான் வரும்போது பார்த்தனிடமும் சொன்னேன்.” இயல்பாக அவன் தன் மறுகையால் யுதிஷ்டிரன் கையைப் பற்றினான். “நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் ஒரு நோய் என்றே அதைக்கொள்ளவேண்டும் என்றேன்.” அவன் துரியோதனன் கையை யுதிஷ்டிரன் கையுடன் பிணைத்து “உடன்பிறந்தவர் நோய் உசாவுவதைப்போல மருந்து ஏதுமில்லை” என்றான்.

துரியோதனன் உதட்டைக் கடித்து பார்வையை இளையவனை நோக்கி திருப்பினான். யுதிஷ்டிரனின் கையில் இருந்த அவன் கை தளர்வதைக் காணமுடிந்தது. சட்டென்று ஒரு சிறிய விம்மல் கேட்டது. வேறெங்கோ எவரோ என பூரிசிரவஸ் திகைக்க துரியோதனன் திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம் “இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்” என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட...”

யுதிஷ்டிரன் துடித்த உடலுடன் முன்னால் பாய்ந்து துரியோதனனை அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். “என்ன இது? எதையாவது நான் சொன்னேனா?” என்றான். துரியோதனன் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. “தந்தையின் கையால் அடிவாங்கியபின்னர்தான் நான் நிறைவுடன் துயிலத் தொடங்கினேன் மூத்தவரே. நான்...”

யுதிஷ்டிரன் அவனை மெல்ல உலுக்கி “வேண்டாம், துரியா. நான் உன்னை அறிவேன். நீ வேழம். மத்தகம் தாழ்த்தலாகாது. அதை நான் விரும்பமாட்டேன்” என்றான். “இனி இதைப்பேசாதே. வானுறையும் முன்னோர் சான்றாகச் சொல்கிறேன். என் இளையோனாகிய நீ எப்பிழையும் செய்யவில்லை. எனக்கோ என் குடிக்கோ... மூத்தவனாகிய நான் அனைத்தையும் உன் பிள்ளை விளையாட்டென்றே கொள்கிறேன்...”

திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் தமையனின் காலடியை சென்னியில் சூடுக! அவர் அருளால் நீ வெற்றியும் புகழும் கொண்டவனாவாய்” என்றான். கண்களில் நிறைந்த நீருடன் நின்ற அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி முன்னால் சென்று குனிந்து துரியோதனன் கால்களைத் தொட்டான். துரியோதனன் அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். கண்கள் கலங்க சிரித்தபடி ”இத்தருணத்திற்காகவே இத்தனை துயரமும் என்றால் அது இன்னமும் வருக!” என்றான் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் வந்து தன்னை வணங்கியபோது துச்சாதனன் விழிகளில் இருந்து வழிந்த நீரை கையால் துடைத்தபடி பேசாமல் நின்றான். “வாழ்த்துங்கள், மூத்தவரே” என்றான் துச்சலன். துச்சாதனன் தலையை மட்டும் அசைத்தான். ”தங்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டேன், மூத்தவரே” என்றான் அர்ஜுனன். ஒரு பெரும் கேவலுடன் அவனை கைநீட்டி பற்றி இழுத்து அணைத்துக்கொண்ட துச்சாதனன் “என்னை கொடுநரகிலிருந்து காத்தாய் இளையோனே” என்று கூவினான். “என்னை இருளிலிருந்து காத்தாய்... என்னை வாழவைத்தாய்.”

ஒவ்வொரு உடலும் உருகி வழிந்துகொண்டிருப்பதாக தோன்றியது. கரைந்து உருவழிந்து ஒரேயுடலாக ஆகிவிடும் என. அனைத்து முகங்களும் ஒன்றுபோலிருந்தன. தன்னை வணங்கிய நகுலனையும் சகதேவனையும் இரு கைகளால் சுற்றிப்பிடித்து நெஞ்சோடு அணைத்து இருவர் தலையிலும் முகம் வைத்த துரியோதனன் “இளையோர்... வளர்ந்துவிட்டனர்” என்றான்.

“ஆம், மணமுடித்தும் விட்டனர்” என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன். துச்சலன் வந்து யுதிஷ்டிரன் கால்களை பணிந்தான். அவனைத் தூக்கி யுதிஷ்டிரன் அணைத்துக்கொண்டான். துச்சாதனன் யுதிஷ்டிரனை நோக்கி வந்தபடி கைநீட்டி அர்ஜுனனிடம் "இளையோனே, என்னைப்பிடி” என்றான். ”வேண்டாம் இளையோனே. உன் உடல்நிலை நோக்கவே வந்தோம். நீ பணியவேண்டாம்” என்று யுதிஷ்டிரன் கைநீட்டி சொன்னான். “தங்களை வணங்குவதனால் இறப்பேன் என்றால் அதுவல்லவா விண்ணுலகேகும் வழி?” என்றபடி அர்ஜுனனின் தோளைப்பற்றியபடி குனிந்து துச்சாதனன் யுதிஷ்டிரனை வணங்க அவன் அவனை கட்டிக்கொண்டான்.

பீமன் சென்று துரியோதனன் கைகளைப்பற்றிக்கொண்டு “நலம்பெறுக” என்றான். “ஆம். நலம்பெறவேண்டும். அதன்பின் ஒருமுறை நாம் தோள்பொருதவேண்டும்” என்றான் துரியோதனன். “அதையே நானும் விழைகிறேன். அதற்குமுன் பெரியதந்தையிடமும் ஒருமுறை தோள்கோக்கவேண்டும்” என்றான் பீமன். “உன் மைந்தனைப்பற்றி அறிந்தேன். இப்போதே அவனைப்பற்றிய கதைகள் பரவத்தொடங்கிவிட்டன.” பீமன் முகம் மலர்ந்து “கடோத்கஜனையா? அவனைப்பற்றி நானே ஊர்கள்தோறும் சூதர் பாடக்கேட்கிறேன்” என்றான். “பானைமண்டை என அவனுக்கு பெயரிட்டேன். கலங்களைப்போல நான் விரும்புவது வேறென்ன?”

துரியோதனன் பேரொலியுடன் நகைத்து “எனக்கும் ஒரு மைந்தன் பிறக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அவனுக்கு கதைமண்டையன் என்று பெயரிடுவேன்” என்றான். துச்சலன் யுதிஷ்டிரனின் கைகளைப்பற்றிக்கொண்டு “உங்களிடம் பீஷ்மபிதாமகரின் தோற்றம் வந்துவிட்டது மூத்தவரே” என்றான். “ஆனால் மனைவி இரண்டாகிவிட்டது” என்றான் துரியோதனன் நகைத்தபடி.

பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருப்பதை உண்ர்ந்தபோதுதான் கன்னங்களில் கண்ணீர் வழிந்து தாடைநுனியில் சொட்டிக்கொண்டிருப்பதை அறிந்தான். குளிர்ந்த கண்ணீரை கையால் துடைத்துக்கொண்டான். திரும்பி கிருஷ்ணனை பார்த்தான். அவன் புன்னகையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

அவர்கள் ஒருவருக்கொருவர் உள்ள எழுச்சி தெரியும் வெற்றுச்சொற்களும் சிரிப்புமாக பேசிக்கொண்டனர். துச்சாதனனைக் காட்டி “இளையோன் படுத்தபடியே உண்ணும் கலையை பயின்றிருக்கிறான்” என்றான் துரியோதனன். “அதை நானும் பயில விழைகிறேன். இரவு நேரம் உணவில்லாது வீணாகிறது. துயிலில் எவராவது ஊட்டினால் நன்று அல்லவா?” என்றான் பீமன்.

துச்சாதனன் ”இளையபாண்டவரே, நம் பால்ஹிகருக்கு ஒரு பெண்ணை கவர்ந்துகொடுங்கள். தனிமையில் இருக்கிறார்” என்றான். பீமன் திரும்பி நோக்கி “ஆம், இவருக்கு ஒரு கடன் இருக்கிறது. இவர் கையிலிருந்துதானே கவர்ந்தேன்” என்றான். “கடன் எனக்கு.... என் பெண்ணை நீங்கள் கவர்ந்தீர்கள்” என்றான் துச்சாதனன். “அப்படிப்பார்த்தால் சேதிநாட்டு இளவரசிகள் எனக்குரியவர்கள். கௌரவர்களுக்குரியவர்கள் அல்லவா?” என்றான் துரியோதனன். அவர்கள் மிகையாகவே ஒலியெழுப்பி சிரித்தனர். சிரிப்பதற்கான சிரிப்பு. உவகை என்பதற்கு அப்பால் வேறு பொருளே இல்லாதது.

சௌனகர் மெல்ல கதவைத் திறந்தார். சிரிப்பொலிகளை அவர் முன்னரே கேட்டிருந்தார் என முகம் காட்டியது. “இளவரசே, பேரரசர் காத்திருக்கிறார்.” துரியோதனன் “ஆம், தந்தை காத்திருக்கிறார். செல்லுங்கள்” என்றான். “அனைவரும் செல்வோம்...” என்றான் கிருஷ்ணன். “நாங்கள்...” என்ற துரியோதனன் “எங்களை அவர் சந்திப்பதில்லை” என்றான். “அவரை நான் பார்த்துக்கொள்கிறேன். வருக!” என்று கிருஷ்ணன் சொன்னான். துரியோதனன் தயங்கி பின் “உன்னை நம்புகிறேன் யாதவனே. நீ மானுட மனங்களை வைத்து விளையாடுபவன்” என்றான்.

அவர்கள் சிரித்துப்பேசிக்கொண்டே படிகளில் ஏறினர். அர்ஜுனன் “கண்ணா, இன்று நீ அளித்ததைப்போல் எதுவும் அளித்ததில்லை” என்றான். கிருஷ்ணன் ”இதை ஒன்றுமில்லை என்றாக்கும் சிலவற்றை நான் பின்னர் அளிப்பேன்” என்றான். “நீ என்ன நினைக்கிறாய்? மானுடர் எத்தனை சிறியவர்கள் என்றா?” என்று அர்ஜுனன் கேட்டான். கிருஷ்ணன் “இல்லை, மானுடம் எத்தனை இனியது என்று” என்றான். அர்ஜுனன் “சொல்லை வைத்து விளையாடுகிறாய்...” என்றான். “உண்மையை சொல்!” கிருஷ்ணன் புன்னகைசெய்தான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 7

திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது மிகவும் கடினம் யாதவனே” என்றான் யுதிஷ்டிரன். “நானும் அதனாலேயே அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் ”நாம் சென்றுகொண்டிருப்பது இக்குடியின் மூத்தவரை சந்திப்பதற்காக...” என்றான்.

பூரிசிரவஸ் “அவர் இளவரசர்களை தாக்கினாரென்றால் நாமனைவரும் இணைந்தாலும் அவரை தடுக்க முடியாது” என்றான். “அஞ்சவேண்டாம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் மட்டுமே அவரை அடக்கமுடியும்...” என்றான் கிருஷ்ணன். பூரிசிரவஸ் விளையாடுகிறானா என்று முகத்தைப்பார்த்தான். திரும்பி அர்ஜுனன் முகத்தை பார்த்தான்.

அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. துரியோதனன் “இளையோனே, நீ பின்னால் நின்றுகொள்” என்று துச்சாதனனிடம் மெல்லியகுரலில் சொன்னான். கிருஷ்ணன் “யுதிஷ்டிரரே, மூத்த கௌரவரையும் துச்சாதனரையும் இரு தோள்களால் தழுவியபடி பேரரசர் முன் சென்று நில்லுங்கள்” என்றான். யுதிஷ்டிரன் இருவர் கைகளையும் பற்றிக்கொண்டான்.

சௌனகர் கதவைத் தட்டியதும் மெல்லத் திறந்து விப்ரர் எட்டிப்பார்த்தார். முதலில் யுதிஷ்டிரன் முகம்தான் அவருக்குத்தெரிந்தது. அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்தன. கம்மியகுரலில் “இளவரசே” என்றபடி கதவை விரியத்திறந்ததும் துரியோதனனையும் துச்சாதனனையும் பார்த்தார். அவரது வாய் திறந்திருக்க தலை அதிர்ந்தது. திரும்பி அறைக்குள் நோக்கிவிட்டு அவர்களைப்பார்த்தார். பின்னர் திரும்பி ”அரசே” என்று கூவியபடி உள்ளே ஓடினார். யுதிஷ்டிரன் திரும்பி கிருஷ்ணனை நோக்க கிருஷ்ணன் “நாம் உள்ளே செல்வோம்” என்றான். “நம்மை இன்னமும் அழைக்கவில்லை” என்றான் யுதிஷ்டிரன். “செல்வோம்” என்றான் கிருஷ்ணன்.

அவர்கள் தோள்கள் முட்டிக்கொண்டு தயங்கி பின் கால்கள் தடுமாற ஒவ்வொருவராக உள்ளே செல்ல பூரிசிரவஸ் தொடர்ந்தான். தன் நெஞ்சில் எழுந்த அதிர்வை உணர்ந்தான். நீண்ட கூடத்தின் வளைந்த உத்தரங்கள் கொண்ட மரக்கூரையை கரிய பெருங்கைகள் எழுந்து தாங்கியதுபோல தூண்கள். தோலின் மென்மையும் வழவழப்பும் கொண்டவை. அரைவெளிச்சம் பரவி அது ஒரு மலைச்சுனை என குளிர்ந்திருந்தது.

மறுபக்கம் பெரிய பீடத்தில் திருதராஷ்டிரர் இரு கைகளையும் கைப்பிடிகள் மேல் விரித்து தளர்ந்தவர் போல அமர்ந்திருக்க அவரது காலடியில் அமர்ந்து விப்ரர் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருந்தார். திருதராஷ்டிரர் அச்சொற்களை கேட்காதவர் போல தலையை சுழற்றி கைகளை ஆட்டினார். சலிப்போ அச்சமோ அடைந்த யானையின் அசைவு அது. அவர்களின் காலடியோசை கேட்டு அவரது முகம் மறுபக்கமாகத் திரும்பி பெரிய காதுகள் தெரிந்தன. அவரது உடலின் தோல்பரப்பில் ஓசையின் எதிரதிர்வு எழுவது தெரிந்தது.

விப்ரர் எழுந்து கைகளை விரித்து வருக என தலையசைத்தார். தாடையின் அசைவில் அவரது தாடி நடுங்கியது. பின்னர் அவரே பாய்ந்து வந்து இரு கைகளையும் விரித்து மூவரையும் அணைத்துக்கொண்டு சீறிய விம்மலோசையுடன் அழுதார். துரியோதனன் கால்கள் தளர்ந்தது போல அவர் அணைப்பில் ஒடுங்க யுதிஷ்டிரன்தான் நடுங்காமல் நால்வருக்கும் கால்களாக நின்றான்.

பூரிசிரவஸ் சுவர் சாய்ந்து நின்றான். அவனருகே கிருஷ்ணனும் நின்று அவனை நோக்கி புன்னகைசெய்தான். விப்ரர் யுதிஷ்டிரன் துரியோதனன் இருவர் கைகளையும்பற்றி இழுத்துச்சென்று திருதராஷ்டிரர் அருகே நிறுத்தி “மைந்தர்... அரசே, நம் மைந்தர்” என்றார். திருதராஷ்டிரரின் கைகள் செயலிழந்தவை போலிருந்தன. அவரது கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. இரு சிறிய செந்நிறத்தவளைகள் துள்ளுவதைப்போல தசைக்குழிகளான விழிகள் அசைந்தன. செருமல் போன்ற ஓர் ஒலி எழுந்தது. அது அவர்தான் என சற்றுநேரம் கடந்தே பூரிசிரவஸ் உணர்ந்தான். மீண்டும் இருமுறை திருதராஷ்டிரர் செருமினார்.

யுதிஷ்டிரன் குனிந்து அவரது கால்களைத் தொட்டு “தந்தையே, தங்கள் மைந்தன் யுதிஷ்டிரன்” என்றான். அவரது கைகள் அப்போதும் அசைவிழந்தே இருந்தன. உடல்முழுக்க ஒரு வலிப்பு ஓடிச்செல்வது தெரிந்தது. “என் இளையோருடன் தங்கள் அடிபணிய வந்திருக்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னான். திருதராஷ்டிரர் மீண்டும் கனைத்தார். மூச்சு ஒலிப்பதுபோல ஒலிகள் எழுந்தன. பின்னர் அவர் மிக மெல்ல அழத்தொடங்கினார். கேட்க எவருமில்லாதபோது மட்டுமே எழும் தணிந்த அழுகை. மானுடன் வெளிப்படுத்துவதிலேயே தூய உணர்ச்சி என பூரிசிரவஸ் நினைத்தான்.

யுதிஷ்டிரன் திரும்பி துரியோதனனிடமும் துச்சாதனனிடமும் வணங்கும்படி கைகாட்ட அவர்கள் தயங்கியபடி முன்னால் சென்று வணங்கினர். துச்சாதனன் அவர் காலடியில் நிலத்தில் விழுவதுபோல அமர்ந்து அப்படியே விலாவை நிலத்தில் வைத்து படுத்துவிட்டான். அர்ஜுனனும் துச்சலனும் பீமனும் வணங்கும்போதும் அவர் அழுதுகொண்டேதான் இருந்தார்.

துரியோதனன் கண்ணீர் வழியும் முகத்துடன் திரும்பி நகுலனையும் சகதேவனையும் இரு கைகளால் அணைத்து அழைத்துச்சென்று வணங்கச்செய்தான். பின்னர் திரும்பி பூரிசிரவஸ்ஸை நோக்கி வருக என தலையசைத்தான். நானா என்று அவன் திகைப்புடன் விழியால் கேட்க வாயசைவால் துரியோதனன் வா என்றான். அவன் அருகே சென்றதும் வணங்கும்படி கைகாட்டினான். “இளையோரை வாழ்த்துக தந்தையே” என்றான் யுதிஷ்டிரன்.

திருதராஷ்டிரர் அங்கு நிகழ்வது எதையும் உணரவில்லை என்று தோன்றியது. அவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று நோக்கிக்கொண்டிருந்தனர். கண்ணீர்த்துளிகள் அவரது தாடிக்குள் ஊறி மார்பில் சொட்டின. பெரிய குரல்வளை தெரிய தலையை பின்னால் சாய்த்து மயங்கியவர் போல உடல்தளர்ந்தார். வாய்க்குள் எருமையுடையவை போல பெரிய பற்களும் மூக்குக்குள் முடிகளும் தெரிந்தன. இடது தோள் அதிர்ந்தது. யுதிஷ்டிரன் பதறி அவர் கையைப்பற்றி “தந்தையே, தந்தையே” என்றான்.

விப்ரர் ஓடிச்சென்று பெரிய மரக்குடுவையிலிருந்த நீரை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி குடம் மூழ்கி நிறையும் ஓசையுடன் முழுக்க குடித்துவிட்டு மடியில் கைதளர வைத்தார். விப்ரர் அதை வாங்கிக்கொண்டார். அவரது தாடியில் நீர்வழிந்தது. விப்ரர் அதை மரவுரியால் மெல்ல ஒற்றினார். “நம் மைந்தர் அரசே... பாண்டவரும் கௌரவருமாக வந்திருக்கின்றனர். கைகள் கோத்து வந்தார்கள். அனைத்தும் சீராகிவிட்டன. மைந்தர் அனைவரும் கைகள் பற்றிக்கொண்டு நுழைவதைக் கண்டேன். நம்மை ஏன் இன்னும் மூதாதையர் வாழவைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன்... இனி நாம் செல்லமுடியும். சிரித்துக்கொண்டே முகில்களை மிதித்து மேலேறிச் செல்வோம்” என்றார்.

“விதுரன்... அவன் எங்கே?” என்றார் திருதராஷ்டிரர். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் கிருஷ்ணன். திரும்பி சௌனகரிடம் கண்களால் ஆணையிட்டு “இதோ வருகிறார்” என்றான். “அந்த மூடனிடம் சொல்லுங்கள். சரியாகிவிட்டது என்று. இனி அவன் துயிலலாம் என்று சொல்லுங்கள்.” அவர் அப்படியே சிரிக்கத் தொடங்கினார். “மூடன்... உடலே கரைந்துவிட்டது அவனுக்கு. என் முன்னால் வருவதையே தவிர்க்கிறான்..." அவரது வெண்பற்களின் நிரை மிக அழகாக இருந்தது. கைகளைத் தூக்கி “விதுரனுக்குத்தான் தெரியவேண்டும்... அதன்பின் காந்தாரிக்கு... யாதவா, அவளிடம் சொல்லிவிடு... சௌனகரே, உடனே மகளிர்அரண்மனைக்கு செல்லுங்கள்” என்றார். கிருஷ்ணன் “சென்றுவிட்டார்” என்றான்.

திருதராஷ்டிரர் “தருமா...” என்றார். இரு கைகளையும் விரித்து “மைந்தா” என்றார். யுதிஷ்டிரன் அவர் அருகே மண்டியிட்டான். “தந்தையே” என்றான். “எங்களுக்கு தெய்வங்கள் விழிகளை அளிக்கவில்லை...” என்றார். மீண்டும் செருமினார். கண்கள் துள்ளின, முகத்திலிருந்தே தெறித்துவிடக்கூடும் என்பவை போல. கைகளால் துழாவி யுதிஷ்டிரனின் தலையை தொட்டார். “விழியிழந்தவர்கள் நாங்கள். மூடர்கள். கருணையுடன் இரு மைந்தா... இந்த எளியவர்கள்மேல் என்றும் கருணையுடன் இரு...”

“நான் என்றும் உங்கள் மைந்தன் மட்டுமே” என்றான் யுதிஷ்டிரன். “நீ பாண்டு... அவனுடைய மணம் கொண்டவன். என் தம்பி. அறம் அறிந்து அதிலமர்ந்தவன். இங்கே அவனுக்கு இன்பங்களை அளிக்கவில்லை கருணையற்ற தெய்வங்கள். ஆனால் நெஞ்சு நிறையும் மைந்தர்களை அளித்தன. உன்னை அவன் வடிவாக இவ்வுலகில் எஞ்ச வைத்தன... தெய்வங்களின் ஆடல்...” அவர் அவன் தலையைப்பற்றி தன்முகத்துடன் சேர்த்துக்கொண்டார். “இளமையில் அவனைத்தான் நான் முகர்ந்துகொண்டே இருப்பேன். இரவில் என்னருகே படுக்கவைப்பேன். விப்ரா, உனக்குத்தெரியுமல்லவா?”

விப்ரர் சிரித்தபடி “ஆம்...” என்றார். ”விதுரனையும் முகர்ந்துகொண்டிருப்பேன். ஆனால் பாண்டுவின் மணம் விதுரனுக்கு இல்லை. அவனுடலில் ஒரு நீர்ப்பாசிமணம்தான். பாண்டு தூய சுண்ணத்தின் மணம் கொண்டவன். விதுரா... விதுரன் எங்கே?” யுதிஷ்டிரன் “அவர் வந்துகொண்டிருக்கிறார் தந்தையே. மாலை அவைகூடுவதனால் அதற்கான பணிகளில் இருக்கிறார். இதோ வந்துவிடுவார்” என்றான். “அவன் இருக்கவேண்டும்... இப்போது அவனும் என்னுடன் இருக்கவேண்டும்.” அவர் காற்றில் கைகளால் துழாவி “எங்கே என் மைந்தர்?” என்றார்.

யுதிஷ்டிரன் திரும்ப பாண்டவர்கள் நால்வரும் திருதராஷ்டிரர் அருகே சென்று அமர்ந்தனர். அவர் அவர்களை மொத்தமாக அணைத்துக்கொண்டார். ஒவ்வொருவரையாக முகர்ந்தார். சிரித்தபடி கைகளால் தோள்களில் அறைந்தார். “இவன் சகதேவன் அல்லவா? இத்தனை பெரியவனாகிவிட்டான்.” அவன் தோள்களைப் பிசைந்து “ஆனால் இவன் தோள்கள் பஞ்சுபோலிருக்கின்றன. இவன் ஒருபோதும் களம்புகுந்து போர் புரியப்போவதில்லை... பீமன் எங்கே?” என்றவர் பீமனைத் தொட்டார். “இவன் ஹஸ்தியின் மைந்தன். இவன்தான்” என்றார். பீமனின் தோள்களை அவரது கைகள் வருடின. “நீ அரக்கியை மணந்து அரக்கமைந்தனைப் பெற்றாய் என அறிந்தேன். அவன் பெயர் என்ன?”

“கடோத்கஜன்” என்றான் துச்சாதனன். “ஆம், அரிய பெயர். அவன் என்னுடன் மல்நிகர் நிற்கமுடியும் என்றார்கள். அவனை இங்கே வரவழைக்கவேண்டும். நான் அவனுக்கு கற்பிக்கிறேன்.” துச்சாதனன் “வரச்சொல்கிறேன் தந்தையே” என்றான். “மைந்தரால் பொலிய எனக்கு அருங்கொடையளித்தன தெய்வங்கள். இனி நான் பெயரர்களால் பொலியவேண்டும்.” யுதிஷ்டிரன் “ஆம், நூற்றுவரும் மணம்கொண்டார்கள் என்று அறிந்தேன்” என்றான்.

அவர் முகம் மாறியது. உடனே மலர்ந்து “ஆம், நூறு இளவரசிகள் மகளிர்கூடத்தை நிறைத்துவிட்டார்கள். ஒவ்வொருத்தியையும் நான் தொட்டும் முகர்ந்தும் அறியவேண்டும்... நான் மகளிர்கோட்டத்திற்கே இதுவரை செல்லவில்லை” என்றார். “நீங்கள் மணமுடித்த இளவரசியரும் வந்துள்ளனர் அல்லவா?” யுதிஷ்டிரன் ”ஆம் தந்தையே. தேவிகையும் விஜயையும் பலந்தரையும் கரேணுமதியும் பிந்துமதியும் வந்திருக்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரர் அவர் உடலில் குடியேறிய மெல்லிய துடிப்புடன் “திரௌபதி... அவள் எப்போது வருகிறாள்?” என்றார்.

“நாளை காலை திரௌபதி நகர் புகுகிறாள். பாஞ்சாலத்திலிருந்து அணிப்படகுகள் கிளம்பிவிட்டன” என்று யுதிஷ்டிரன் சொன்னான். “அஸ்தினபுரிக்கு தேவயானி மீண்டும் வருகிறாள். அவள் நகர்புகுவது நிகரற்ற விழவாக இருக்கவேண்டும். படகுத்துறைக்கே என் மைந்தர்கள் செல்லவேண்டும். அமைச்சர்கள் செல்லவேண்டும். அங்கிருந்தே அணிவலம் தொடங்கட்டும். கோட்டைவாயிலில் அரண்மனைப்பெண்டிர் நின்று வரவேற்கவேண்டும். நகரம் அணிகொள்ளட்டும். கொற்றவை எழுந்தருள்வது அது... இது என் ஆணை. விதுரா? எங்கே அந்த மூடன்? அவன் மண்டையை உடைப்பேன். தேவையான நேரத்தில் இருக்கமாட்டான். மூடன்...”

“தங்கள் ஆணையை தலைமேல்கொள்வோம் தந்தையே” என்றான் துரியோதனன். “விதுரன் எங்கே? எங்கிருந்தாலும் அவனை இழுத்து வரச்சொல்லுங்கள். விப்ரா!" கதவு திறந்து மூச்சிரைக்கும் விதுரர் எட்டிப்பார்த்தார். “விதுரர் வந்துவிட்டார்” என்றான் கிருஷ்ணன். “விதுரா, மூடா, பார்த்தாயா? என் மைந்தர். என்னைச்சுற்றி என் மைந்தர்.” விதுரர் “ஆம்” என்றார். அவரும் அழத்தொடங்குவது போலிருந்தது. கிருஷ்ணன் “உங்கள் மண்டையை உடைக்க விரும்புகிறார்” என்றான். விதுரர் கண்களில் நீருடன் புன்னகைத்து “பல்லாயிரம் முறை உடைக்கப்பட்ட மண்டை இது” என்றார்.

“உடைத்துப்பார்த்தால் உள்ளே ஒரு பெரிய நீர்த்தவளை இருந்தது... திரும்ப வைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நூல்கற்று நூல்கற்று மூடனாகி விட்டான். சுருதையின் அறிவால்தான் ஏதோ செய்கிறான்... இவன் மைந்தன் உன்னுடன்தானே இருக்கிறான் யாதவா?” கிருஷ்ணன் “ஆம் அரசே” என்றான். “அவன் எப்படி? இவனைப்போல மூடனா, இல்லை அறிவுடையவனா?” கிருஷ்ணன் “அறிவை நாங்கள் அங்கே அளிக்கிறோம்” என்றான். கைகளால் இருக்கையின் கைப்பிடியை ஓங்கி அறைந்து திருதராஷ்டிரர் சிரித்தார். “நன்று, நன்று... அது நல்ல மறுமொழி...” மீண்டும் சிரித்து “வரிசையில் நின்று வாங்கிக்கொள்வார்கள் இல்லையா? இவனை அனுப்பினால் வேறு வரிசையில் போய் நிற்பான்” என்றார்.

கிருஷ்ணன் “நாளை பாஞ்சாலியின் வருகை அரசுமுறைக் கொண்டாட்டம் என அரசர் ஆணையிடுகிறார்” என்றான். “ஆம், அரசுமுறைக் கொண்டாட்டம். ஒரு நாட்டின் சக்கரவர்த்தினியை எப்படி வரவேற்போமோ அப்படி. நான் அரண்மனை முற்றத்திற்கே சென்று வரவேற்க விரும்புகிறேன். நால்வகைப் படைகளின் தலைவர்களும் அணிநிரக்கவேண்டும். பட்டத்து யானைமேல் அவள் நகருள் வரவேண்டும்.” விதுரர் “ஆணை” என்றார். “இந்நகரத்தை தெய்வங்கள் என்றும் தங்கள் ஆடல்களமாக கொண்டிருக்கின்றன விதுரா. ஆனால் ஒருபோதும் கைவிட்டதில்லை.”

கிருஷ்ணன் “இப்போது ஒரு சூதன் இங்கு வந்தாகவேண்டும். பாடல்சூதன் அல்ல. குலமுறைப் பதிவாளன்” என்றான். விதுரர் வியப்புடன் “நான் வரும்போது அப்படிபப்ட்ட ஒருவனிடம்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவன் தீர்க்கசியாமன். முன்பு பீஷ்மருக்கும் தமையனுக்கும் ஆசிரியராக இருந்த தீர்க்கசியாமரின் பெயர்தான் இவனுக்கும்” என்றார். ”வந்துவிட்டாரா? நான் அவரை நேற்று ஹிரண்யாக்‌ஷர் ஆலயத்த்தின் முகப்பில் சந்தித்தேன். இங்கு வரச்சொன்னேன்... அவரை அழைத்துவாருங்கள்.” திருதராஷ்டிரர் "பேரறிஞன். ஆனால் பாடினால்தான் பறவை ஒலி வருகிறது” என்றார். கிருஷ்ணன் “இனியகுரலால் வரலாற்றை பாடமுடியாது அரசே” என்றான். திருதராஷ்டிரர் மீண்டும் கைப்பிடியை ஓங்கி அறைந்து கூடமே அதிரும்படி நகைத்தார்.

”நாம் எதையோ ஒன்றை சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். எதை என்றே தெரியவில்லை. சிலசமயம் இப்படி ஆகும். நான் மணங்களைப் பின் தொடர்ந்துசென்றால் வழிதவறிவிடுவேன். மணம் சுழன்று சுழன்று அடிக்கும். ஒலிகளை மட்டுமே தொடரவேண்டும் என எண்ணிக்கொள்வேன். ஆயினும் சுவையோ அச்சமோ என்னை மணத்தை தொடரச்செய்யவைத்துவிடுவதுண்டு” என்றார் திருதராஷ்டிரர். “விப்ரா, மூடா, நான் இப்போது எங்கே வழிதவறினேன், சொல்!” விப்ரர் “காட்டில் ஒரு ஓநாய்க்கு குருளைகள் பிறந்த மணம் எழுந்ததை அறிந்து சென்றுவிட்டார். புதர்களுக்குள் சிக்கி நின்றவரை நான் சென்று மீட்டேன்” என்றார்.

"நானே மீண்டு வந்திருப்பேன், பெரிய சிக்கலெல்லாம் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். “குருளைகளுக்கே உரிய மணம். கருவறை மணம். அந்த ஓநாய் குட்டிகளை கவ்விக்கொண்டு என் முன்னால் சென்றது. ஆனால் மணம் என்னை வழிதவறச்செய்தது.” விப்ரர் “குட்டிகளை கொண்டுசெல்லும் செந்நாய் அப்படி காட்டுக்குள் வழிதவறியதுபோல சுற்றிச்சுற்றி வரும். உண்மையில் மணம் அறிந்துவரும் வேட்டைவிலங்குகளை குழப்பவே அது அப்படி செய்கிறது” என்றார். திருதராஷ்டிரர் “என்ன ஒரு மணம்! குருதியின் மணமே தூயது. கருவறைக்குருதி தெய்வங்களின் மணமேதான்...” என்று சிரித்தபடி மூக்கைச் சுளித்து அந்த மணத்தை நினைவுகூர்ந்தார்.

“அந்தக்குட்டிகளை எடுத்துவரச்சொன்னேன். என் குடிலிலேயே அவற்றை வளர்த்தேன். ஒவ்வொருநாளும் அன்னை வந்து என் கையால் உணவுண்டு குட்டிகளுக்கு அமுதூட்டிவிட்டுச் செல்லும்... அவை அன்னையுடன் காட்டுக்குள் செல்வதுவரை என்னுடன்தான் இருந்தன. இரவில் நான் துயிலும் தோல்தூளிக்கு அடியில்தான் அவை துயிலும். என்ன ஒரு பசி. நள்ளிரவில் எழுந்து கத்தத் தொடங்கிவிடும். மூத்தவனுக்கு துரிதகமனன் என்றும் இரண்டாமவனுக்கு திடவேகன் என்றும் மூன்றாமவனுக்கு திடஹஸ்தன் என்றும் பெயரிட்டேன். இன்னொன்று பெண். அவளுக்கு தீர்க்கநாசிகை என்று பெயர்.”

கதவு திறந்து சௌனகர் உள்ளே வந்து “வருக!” என்றார். தீர்க்கசியாமர் உள்ளே வந்து மூக்கைச்சுளித்து தலையைச் சுழற்றி “வணங்குகிறேன் அரசே” என்றார், “இங்கே இளைய யாதவரின் இருப்பை உணர்கிறேன்.” சௌனகர் “அனைவரும் இருக்கிறார்கள் சூதரே. பாண்டவர்கள் ஐவரும் மூன்று கௌரவரும் அவர்களின் தந்தையும். பால்ஹிக இளவரசர் பூரிசிரவஸ்ஸும் இருக்கிறார்” என்றார். தீர்க்கசியாமர் “இந்தநாள் இனியது. தூய வேதச்சொல் ஒன்றை பறவைகள் ஒலித்ததை காலையில் கேட்டேன். நலம் திகழ்க!” என்றார்.

”அதிலிருந்து தொடங்குக!” என்றார் விதுரர். தீர்க்கசியாமர் தன் யாழை விரலால் மீட்டிக்கொண்டிருந்தார். யாழ் கார்வைகொண்டு வேதநாதம் எழுப்பத்தொடங்கியது. ரிக்வேதமந்திரத்தை தீர்க்கசியாமர் பாடினார்.

“இந்தக் கற்கள் பேசுக!

பேசும் கற்களுடன் உரையாடுவோம்

வாழ்த்துங்கள் தோழர்களே!

விரையும் எடைமிக்க கற்கள் நீங்கள்

இந்திரனை வாழ்த்துங்கள்!

சோமச்சாறால் நிறையுங்கள்!”

”கற்கள்...” என்று தீர்க்கசியாமர் சொன்னார். “அப்போது மூதாதையர் கற்களை கண்டுகொண்டார்கள். அறிபடுபொருளாக நிற்பவை கற்கள். அறிவாகவும் அவை நிற்கும் விந்தைதான் என்ன? இது புராணங்கள் சொல்லும் கதை. தொல்பழங்காலம். புராணங்கள் நிகழ்ந்த காலம். அன்று தாரகாசுரன் தன் ஆயிரம் கைகளிலும் படைக்கலங்களுடன் கிழக்கே காலையில் கரிய கதிரவன் எழுந்ததுபோல தோன்றினான். மண்ணிலும் விண்ணிலும் இருள்நிறைத்தான்.”

அவனை அஞ்சின உயிர்கள். அஞ்சினர் மானுடர். அஞ்சி நடுங்கினர் தேவர்கள். அவனை வெல்லுமொரு ஆற்றல் விளையவேண்டுமென வேண்டினர். விண்ணளந்தோன் கால்களைப் பணிந்து இரந்தனர். எரியுடல் அண்ணலும் அவன் இடப்பாதியும் இணைந்து பிறக்கும் மைந்தனே தாரகனை வெல்லக்கூடும் என்றார் ஆழிவண்ணன். அவர்கள் வெள்ளிப்பனிமலை நோக்கி கைகூப்பி தவமிருந்தனர்.

அவர்களின் தவத்தால் விரிசடையன் உள்ளத்தில் காமம் எழுந்தது. அன்னை அதை கதிர்பட்டு கனலாகும் இமயமலைமுடி என ஏற்றுப் பொலிந்தாள். அவர்களின் லீலையில் விண்ணகம் நடுங்கியது. மண்ணகம் அதிர்ந்தது. ததும்பி கரைமீறின கடல்கள். இடிந்து சரிந்தன மலைமுடிகள். நதிகள் திசைமாறின. விண்ணில் எழுந்த இடியோசை முடிவிலியின் கரிய சுவரில் முட்டி அதிர்ந்தது.

அவன் விந்து அனலில் விழுந்தது. வெம்மையில் அது உருகி செறிந்த அனலாகியது. அனலோன் அதை அணைக்க கங்கையில் விட்டான். கங்கையில் ஆயிரம் யுகம் அது குளிர்ந்து குளிர்ந்து அணைந்தது. அதன் மஞ்சள் அனல்வடிவிலிருந்து பொன் உருவாகியது. அதன் வெண்கனல் வடிவம் வெள்ளியாகியது. அதன் செங்கனல் வடிவம் செம்பாகியது. அது குளிர்ந்து எரிந்தணைந்த கருங்கனல் வடிவம் இரும்பாகியது.

நால்வகை உலோகங்களும் உருகி உருமாறி படைக்கலங்களாயின. அன்னையும் தந்தையும் முயங்கி உருவான இளையோன் சுப்ரமணியனின் படைகளின் கைகளில் அவை அமைந்தன. விண்ணும் மண்ணும் நிறைத்து நிகழ்ந்தணைந்த பெரும்போரில் தாரகன் குருதி குடித்து அவை அமைந்தன.

தாரகனின் நெஞ்சின் குருதியை உண்டு தங்கம் குளிர்ந்தது. அவன் மூச்சின் குருதியை உண்டு வெள்ளி அணைந்தது. அவன் விழைவின் குருதியை உண்டு செம்பு அடங்கியது. ஆன்றோரே, அவன் வஞ்சத்தின் குருதியை உண்ணப்பெற்றது இரும்பு. அது அணையவேயில்லை.

ஆயிரம் பல்லாயிரம் யுகங்கள். யுகம்திரண்ட மகாயுகங்கள். காலமெனும் அழியாப்பெரும்பெருக்கு. அணையவில்லை இரும்பு. வஞ்சமுண்டு வஞ்சமுண்டு அது வஞ்சமாகியது. மண்ணுக்குள் ஊறி கருந்திரவமென தேங்கியது. இம்மண்ணை உண்ணும் வேர்களின் ஆவலுக்கு அடியில் மண்ணிலூறும் நீரின் கருணைக்கு அடியில் மண்ணிலுறங்கும் செந்தழலுடன் கலந்து உருகிப்பிழம்பாகியிருக்கிறது இரும்பு.

ஆயிரம்கோடி மகாயுகம் தவம்செய்த இரும்பு விண்வடிவான பரம்பொருளிடம் கேட்டது. நான் கரந்திருக்கும் ஆற்றலை என்ன செய்வது? என்னுள் ஊறும் பெருவஞ்சத்தை நான் எப்படி ஆற்றுவது? புன்னகைத்து பிரம்மம் சொன்னது. பொன்னெழுந்த கிருதயுகம் மறைந்தது. வெள்ளியின் திரேதாயுகம் மறைந்தது. செம்பின் யுகமான துவாபரம் மறையட்டும். கருமையுகம் எழும். கலியுகம் எழும். நீயும் எழுக!

”பேழைக்குள் நாகமென சுருண்டு அங்கே கிடந்தது இரும்பு. கண்ணொளிர்ந்த இரும்பு. நச்சுப்பல் கூர்ந்த இரும்பு. செந்நா அனல்பறக்கும் இரும்பு. அதுவாழ்க!” தீர்க்கசியாமர் பாடி முடித்தார். சற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தனர். விதுரர் “நன்று சூதரே. உங்கள் பரிசிலை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

திருதராஷ்டிரர் எழுந்து சௌனகர் நீட்டிய தாலத்திலிருந்து பொற்கிழியை எடுத்து தீர்க்கசியாமருக்கு அளித்தார். அவர் தலைவணங்கி அதைப்பெற்றுக்கொண்டு புன்னகைத்து “இனியநாள். வேதமெழுந்த நாள்” என்றார். “ஆம்” என்ற விதுரர் விழிகாட்டி அவரை கொண்டுசெல்லும்படி ஆணையிட்டார். சௌனகர் தீர்க்கசியாமரின் தோளைத் தொட்டு அழைத்துச்சென்றார்.

அவர் சென்றதும் அங்கிருந்த அனைவரும் மெல்ல உடல் நெகிழ்ந்தனர். அறைக்குள் இருந்து நிழல் ஒன்று விலகியதுபோலிருந்தது. விதுரர் “அறிஞர். ஆனால் இடம்பொருள் அறியாதவர். ஆகவேதான் அவரை அரண்மனைக்கு பெரும்பாலும் அழைப்பதில்லை” என்றார். திருதராஷ்டிரர் “அவனது முன்னோடி தீர்க்கசியாமர் இங்கிதமே உருவானவர், மேதை” என்றார். “இவரும் மேதைதான் அரசே, மேதைமை என்பது கனிவுடையதாக இருக்கவேண்டுமென்பதில்லை” என்றார் விதுரர்.

“அனைத்து ஒருக்கங்களும் தொடங்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர். “இளைய பாண்டவனே, மாலை என்னுடன் தோள்பொருதுகிறாயா?” பீமன் ”ஆணை, தாங்கள் முதல்முறையாக தோற்கும் நாளாகக் கூட இருக்கலாம்” என்றான். “நானா? என்னை வெல்லவேண்டுமென்றால் ஒரேவழிதான். விழிமூடி என்னுடன் பொருதவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர் சிரித்தபடி. “பாறைகளுடன் மோதி பயிற்சி எடுக்கவேண்டியதுதான்” என்று பீமன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“நாங்கள் விடைகொள்கிறோம் தந்தையே. ஓய்வெடுங்கள்” என்றான் யுதிஷ்டிரன். திருதராஷ்டிரர் "ஆம், மாலையில் அவைக்கூட்டம் உள்ளதல்லவா?” என்றார். கிருஷ்ணன் “அதற்குமுன் பாண்டவர்கள் காந்தார அன்னையையும் சந்திக்கவேண்டும்” என்றான். “அவள் தன் மைந்தர்மகளிரை எண்ணிப்பார்த்துக்கொண்டே இருக்கிறாள். எப்போதும் ஒரு எண்ணிக்கை குறைகிறது அல்லது கூடுகிறது” என்றார் திருதராஷ்டிரர். சிரித்தபடி யுதிஷ்டிரன் அவர் கால்களைத் தொட “வெற்றியும் புகழும் அமைக!” என வாழ்த்தினார். பாண்டவர்கள் அவரை வணங்கி வெளியே சென்றனர்.

கிருஷ்ணன் அவரை அணுகி வணங்க “அனைத்தும் உன் ஆடல் என அறிவேன் யாதவா” என்றார். “ஆம். அது நன்றாக முடிந்தது” என்றான் கிருஷ்ணன். “அவ்வாறே முடியும். ஏனென்றால் என் குருதி” என்றார் திருதராஷ்டிரர். அவன் பூரிசிரவஸ்ஸை நோக்கிவிட்டு வெளியே சென்றான். சௌனகர் அவர்களுடன் சென்றார். துச்சலன் துச்சாதனனைப் பிடித்து எழச்செய்தான். அவன் அப்போதும் கண்களில் நீர் வழியத்தான் தெரிந்தான். திருதராஷ்டிரர் கைகாட்ட விப்ரர் அவரை தூக்கினார். எழுந்து நின்று இடையாடையை சீரமைத்தபடி பெருமூச்சுவிட்டார்.

“வணங்குகிறேன் அரசே” என பூரிசிரவஸ் அவரை பணிந்தான். “நலம் திகழ்க!” என்றபடி திரும்பி ஒருகணம் தயங்கி பின் “எங்கே மூத்தவன்?” என்றார். “இங்குள்ளேன் தந்தையே” என்றான் துரியோதனன். அவர் கைநீட்டி அவன் தோளை தொட்டார். அவன் தலைகுனிந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். இன்னொரு கை நீண்டது. பூரிசிரவஸ் துச்சாதனனை நோக்கி கண்காட்டினான். அவன் உளஎழுச்சியால் நடுங்கும் உடலுடன் அருகே வந்தான். அவன் தோளைத் தொட்டபின் இருவரையும் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். இருவரும் அழத்தொடங்கினர்.

பூரிசிரவஸ் விழிகளை விலக்கி சாளரத்தை நோக்கினான். மெல்லிய அழுகையொலி கேட்டுக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் தொண்டையை கனைத்தார். சீறுவது போல மூக்குறிஞ்சினார். அவரது தோளுயரமே இருந்தனர் இருவரும். அவர் அவர்களின் தலையை முகர்ந்தார். மெல்ல “நெடிது வாழ்க!” என்றபின் கைகளை எடுத்துக்கொண்டார். “விப்ரா” என்றார். விப்ரர் அவர் கையை பற்றியதும் வழக்கத்திற்கு மாறான விரைவுடன் உள்ளறை நோக்கி நடந்து சென்றார்.

விதுரர் “செல்வோம்” என்றார். துச்சலன் வந்து துச்சாதனனை தாங்கிக்கொண்டான். அவன் துச்சலனின் தோள்களில் தலைசாய்த்து விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தான். துரியோதனன் பூரிசிரவஸ்ஸின் தோளில் கைவைத்து “நன்று இளையோனே. நீ செய்தது மிக நன்று” என்றான். “நான் ஒன்றும் செய்யவில்லை இளவரசே” என்றான். “நான் கர்ணனை பார்க்கவேண்டும். இவையனைத்தையும் அவனிடம் சொல்லவேண்டும்” என்றான் துரியோதனன்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 8

பூரிசிரவஸ் இரவு முழுக்க துயில்கொள்ளவில்லை. முந்தையநாள் மாலையிலேயே நகரெங்கும் விழாவுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருந்தன. நகரின் அனைத்து சந்திப்புமுனைகளிலும் யானைமேல் ஏற்றப்பட்ட முரசுடன் கொம்பூதிகள் துணைக்க நிமித்திகர்கள் வந்து நின்று மறுநாள் திரௌபதி நகர்புகுவதையும் அதை அரசப்பெருவிழாவாக கொண்டாட பேரரசர் ஆணையிட்டிருப்பதையும் அறிவித்தனர். முதலில் அச்செய்தி மக்களை குழப்பியது. ஆண்கள் அதன் அரசியல் உட்பொருளைப்பற்றி கூடிக்கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் உடனே திரௌபதியைப்பற்றி பேசத்தொடங்கினர்.

ஆனால் விழவுக்கான ஒருக்கங்கள் தொடங்கியதும் நகரம் களியாட்ட மனநிலையை அடைந்தது. புராணகங்கையிலிருந்து நூறு யானைகள் பெரிய ஈச்சைமரங்களை குலைகளுடன் பிடுங்கி அணிவகுத்து கிழக்குக் கோட்டைவாயிலுக்குச் சென்றபோது அதன்பின்னால் கள்ளுண்டு மயங்கிய இளைஞர்கள் கூச்சலிட்டு பாடியபடியும் நடனமாடியபடியும் தொடர்ந்தனர். சிறுவர்கள் கூவிச்சிரித்து மலர்களைச் சுழற்றி யானைகள் மேல் எறிந்தபடி சென்றனர். வணிகநிலைகளில் இருந்தும் அரண்மனை மலர்ச்சாலையிலிருந்தும் வண்டிகளில் மாவிலைகளும் மலர்க்கொத்துக்களும் வந்து குவிந்தன. பூக்கள் தொடுக்கத்தெரிந்த அனைவரும் உடனடியாக அரண்மனை அணிகள்நாயகத்தை சந்திக்கவேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கங்கைக்கரைத் துறைமுகத்தில் பெரும்படகுகளில் வந்திறங்கிய மலர்மாலைகளும் தோரணத்தொங்கல்களும் குலைவாழை மரங்களும் பொதிவண்டிகளில் நகருக்குள் வந்திறங்கத்தொடங்கியதும் அனைவரும் அணிபொலிந்த அஸ்தினபுரியை அகத்தே கண்டுவிட்டனர். இரவுமுழுக்க பணிகள் நிகழும் என்று தெரிந்த கோட்டைக்காவல் அமைச்சரான கைடபர் நகர்முழுக்க ஆயிரம் மீன்நெய் விளக்குகள் எரியும்படி ஆணையிட்டிருந்தார். இரவுசூழ்ந்ததும் நகரம் எரியெழுந்த காடுபோல தெரிந்தது. நகரின் ஒளி வானிலெழுந்து வானம் மெல்லிய செம்பட்டால் கூரையிடப்பட்டதுபோலிருந்தது.

பூரிசிரவஸ் புரவியில் தெற்குக்கோட்டை வாயில் நோக்கிச் செல்லும்போது எதிரே புரவியில் காவலர்தொடர வந்த கைடபர் “கோட்டைமுழுக்க பந்தங்கள் எரியும்படி ஆணையிட்டிருக்கிறேன் பால்ஹிகரே. இளவரசி கிழக்குக் கோட்டைவழியாக நுழைகிறார். நான்கு அரசவீதிகளிலும் அணியூர்வலமாகச் சென்று அரண்மனையை அடைகிறார். அப்படித்தானே?” என்றார். “ஆம், அதுவே இப்போதுள்ள திட்டம். தெற்கு வாயிலருகே பீஷ்மபிதாமகரின் குருகுலம் உள்ளது. அப்பால் இந்திரகோட்டத்தின் அருகே இளைய யாதவரின் மாளிகை. அவர்கள் வரும்வழிகள் முழுக்க நம்மால் அலங்கரிக்கப்படவேண்டும். காந்தார மாளிகைக்குச்செல்லும் வழியும் அணிசெய்யப்படவேண்டும். நகரின் அனைத்துத்தெருக்களிலும் அணிச்செயல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது அரசாணை.” .“ஒவ்வொரு குறுந்தெருவையும் அத்தெருவினரே அணிசெய்யவேண்டுமென ஆணையிட்டிருக்கிறோம். அதற்குரிய பொருட்களை நம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இல்லங்களை அணிசெய்யவேண்டியது பெண்களின் பணி...” என்ற கைடபர் “அணிசெய்து சலித்துவிட்டனர் அஸ்தினபுரியினர். ஆனாலும் திரௌபதியின் வருகை அவர்களை எழுச்சிகொள்ளச் செய்திருக்கிறது” என்றார். பூரிசிரவஸ் “அணிசெய்யத் தொடங்கினால் உவகையும் எழுச்சியும் வந்துவிடும்...” என்றான். “நான் கிழக்குக் கோட்டைவாயில் வரை சென்று பார்க்கிறேன்.”

கிழக்குக்கோட்டைவாயில் வரை கைதொடு தூரத்திற்கு ஒரு மூங்கில்கழி என நடப்பட்டிருந்தன. அவற்றில் அலங்காரத்துணியாலான தூண்தோரணங்களையும் அவற்றை இணைத்து கொடித்தோரணங்களையும் கட்டிக்கொண்டிருந்தனர். மலர்மாலைகளும் மலர்த்தொங்கல் செண்டுகளும் வாழையிலைகளிலும் கமுகுப்பாளைகளிலும் குவிக்கப்பட்டிருந்தன. ஒரு தாமரை மொட்டுக்குவியலை ஒருவன் நீரால் நனைத்துக்கொண்டிருந்தான். காவல்மாடங்களில் உச்சியில் கயிற்றில் தொங்கியபடி மலர்மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர்.

பூரிசிரவஸ் கிழக்குக் கோட்டை முகப்பை அடைந்தபோது கோட்டைச்சுவரின் பித்தளைக் குமிழ்களையும் பட்டைகளையும் தேய்த்துக்கொண்டிருந்தனர். கதவின் மேல் கயிற்றில் தொங்கிய ஏவலன் கீழே நின்றவனிடம் இருந்து அமிலத்தில் முக்கிய துணிகளை சிறிய கயிற்றால் தூக்கி மேலேவாங்கி துடைத்துவிட்டு கீழிறக்கினான். கோட்டைக்கு முன்னால் கங்கையை சென்றடைந்த அரசப்பெருவீதியிலும் மூங்கில்கள் நடப்பட்டு தோரணங்களை கட்டிக்கொண்டிருந்தனர். “கங்கைவரைக்கும் அணிசெய்கிறீர்களா?” என்றான். காவலர்தலைவன் வணங்கி “ஆம் இளவரசே, அரண்மனை ஆணை. நாலாயிரம் ஏவலர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“பொதி வண்டிகள் எங்கே?” என்றான். “நாளை உச்சிக்குப்பின்னரே கங்கைத் துறைமுகத்தில் வணிகப் படகுகள் அணையவேண்டுமென்பது கருவூலர் மனோதரரின் ஆணை.” பூரிசிரவஸ் புரவியில் கங்கை வரை சென்றான். வழிநெடுக அலங்காரப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பிற எந்தப்பணிகளைச் செய்யும்போதும் பணியாளர்களிடம் இருக்கும் சோர்வு அலங்காரப்பணிகளில் இருப்பதில்லை என்பதை அவன் கண்டிருந்தான். அவர்கள் சற்று நேரத்திலேயே அப்பணியின் அழகால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். பணியை முடிப்பதைப்பற்றி எண்ணவே மாட்டார்கள். ஆகவே அலங்காரவேலைகள் பெரும்பாலும் உரியநேரத்தில் முடிவதில்லை. நேரம் நெருங்கும்போது பணியாளர்களை அதட்டி விரைவுபடுத்தவேண்டும். நிறைவுறாமலேயே அவர்கள் முடித்துவிலகுவார்கள். கொண்டாட்டம் தொடங்கியபின்னரும்கூட எவருமறியாமல் சரிசெய்து கொண்டே இருப்பார்கள்.

துறைமுகப்பில் பெரிய மூங்கில் கோபுரங்களை அமைத்து அவற்றின்மேல் மீன்நெய் விளக்குகளை ஏற்றியிருந்தனர். அப்பகுதியே செவ்வொளியில் அசைந்துகொண்டிருந்தது. தோரணவாயில் முழுமையாகவே ஈச்சைத்தளிர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அணிப்படகு வந்து நிற்கும் துறையிலும் ஒரு பெரிய மலர்வாயிலை அமைத்துக்கொண்டிருந்தனர். காவலர்தலைவர் கிருதர் அருகே வந்து “இளவரசி படகிலிருந்து நடைபாலம் வழியாக அஸ்தினபுரியின் மண்ணில் காலெடுத்து வைக்குமிடம் மலர்ப்பாதையாக இருக்கவேண்டும் என்பது ஆணை. அங்கிருந்து தேர்வரைக்கும் மலர்ப்பாதை. அதன்பின் தேரில் கோட்டை நோக்கிச் செல்கிறார்கள்” என்றார்.

“மலர்ப்பாதை என்றால்?” என்றான் பூரிசிரவஸ். “மலராலான பாதையேதான். கீழே மரவுரி விரிப்பு உண்டு. அதன் மேல் மலர்கள். எளிதில் வாடாதவையும் முள்ளில்லாதவையுமான ஏழுவகை மலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.” பூரிசிரவஸ் புன்னகையுடன் தலையசைத்து “வண்டுகள் இருக்கக் கூடாது” என்றான். அவன் குரலில் இருந்த சிரிப்பை அறியாத கிருதர் “வண்டுகளை ஒன்றும் செய்யமுடியாது. தேனுள்ள மலர்களில்தான் மணம் இருக்கிறது...” என்றார். தலையசைத்துவிட்டு அவன் திரும்பி கோட்டை நோக்கி சென்றான்.

திரும்பிவந்தபோது கோட்டை மேலும் மலர்கொண்டிருந்தது. உள்ளே தெருக்களில் தோரணங்கள் மேலேறிக்கொண்டிருந்தன. இருபக்கமும் வீடுகள் முழுக்க நெய்விளக்குகள் எரிந்தன. குழந்தைகள் கூச்சலிட்டு முற்றத்தில் தங்கள் நிழல்களுடன் விளையாடிக்கொண்டிருக்க உப்பரிகை முகப்புகளிலும் கூரை முனைகளிலும் ஏறிநின்று தோரணங்களை கட்டிக்கொண்டிருந்த இளைஞர் அவர்களை கூவி அதட்டினர். சாலையோரமாக நான்கு யானைகள் நின்று குவிக்கப்பட்டிருந்த பழைய பூத்தோரணங்களை துதிக்கையால் அள்ளிச் சுழற்றி வாயில் செருகி தின்றுகொண்டிருந்தன.

அரண்மனை முற்றத்திலும் பூக்களே சிறிய குன்றுகளாக குவிந்திருந்தன. அவற்றின்மேல் ஊற்றப்பட்ட நீர் கசிந்து வழிந்தோடியிருந்த தடங்களில் விளக்குகளின் வெளிச்சம் அசைந்தது. பூரிசிரவஸ் புரவியை நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றான். அமைச்சகத்தில் மனோதரர்தான் இருந்தார். அவனைக் கண்டதும் “நாளை சித்திரை பதின்மூன்றாம் வளர்பிறைநாள், சரிதானே?” என்றார். “ஆம், வளர்பிறையின் இறுதிநாள்.” மனோதரர் “குடித்தலைவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஓர் ஒலை. நாளைகாலை மீண்டும் பேரவை கூடுகிறதல்லவா?” என்றார்,

”மீண்டுமா?” என்றான். “ஆம், அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்பதனால் வருவதில் சிக்கல் இல்லை. இளவரசியின் மணநிகழ்வும் துரியோதனர் முடிசூடலும் முடிந்தபின்னரே அவர்கள் திரும்புகிறார்கள். ஆயினும் முறைப்படி அழைக்கவேண்டும் அல்லவா? ஓலை வரவில்லை என்றே வராமலிருந்துவிடுவார்கள்.” மனோதரர் சிரித்து “அவர்கள் அப்படி இருப்பதும் நன்றே. இல்லையேல் இத்தனை பெரிய அமைச்சுநிலை எதற்கு? நானும் எதற்கு?” என்றார்.

“நான் சற்று ஓய்வெடுக்கிறேன்...” என்றான். “ஓய்வெடுங்கள். இளவரசியின் படகுகள் பிலக்‌ஷகட்டத்தை அடைந்ததும் எரியம்பு அனுப்புவதற்கு ஆணையிட்டிருக்கிறேன். அதன்பின்னர் இங்கிருந்து கிளம்பிச்சென்றால்கூட போதுமானது” என்றார் மனோதரர். “நீங்கள் துயிலவில்லையா?” அவர் நகைத்து “பணியாற்றுபவர்கள் துயின்றாலும் கணக்குபார்ப்பவன் துயிலமுடியாது இளவரசே...” என்றார். பூரிசிரவஸ் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.

அறைநோக்கி செல்லும்போது துயிலின் எடையில் கால்கள் தள்ளாடின. ஆனால் மஞ்சத்தில் கால்நீட்டியதுமே உள்ளம் விழித்துக்கொண்டது. காலையில் நிகழ்ந்தவை நெடுந்தொலைவில் என தோன்றின. ஒருநாள் அத்தனை நீளமானதா? சிலநாட்கள் நிகழ்வுகளால் செறிந்து முழுவாழ்வளவுக்கே பெரியதாகிவிடுகின்றன. தேவிகை, விஜயை நினைவின் அடித்தட்டில் கலங்கி கலங்கி மறையும் முகங்கள். ஆனால் அஸ்தினபுரியின் முற்றத்தில் பாண்டவர்களுடன் காத்து நின்றிருந்தது ஒவ்வொரு காட்சிநுணுக்கத்துடனும் அருகே தெரிவதுபோல தெரிந்தது.

யுதிஷ்டிரரின் நிழல் நகுலன் மேல் பாதியாக விழுந்து கிடந்தது. சகதேவனின் காதோர முடியின் நிழல் கழுத்தில் வளைந்திருந்தது. குதிரை ஒன்று செருக்கடித்து பெருமூச்சு விட்டது. அரண்மனையின் மீதிருந்து ஒரு புறா மெல்ல சிறகடித்து இறங்கி செங்கல் முற்றத்தில் மெல்ல நடந்தது. அருகே செம்பட்டுத்திரை ஆடிய ஒளியில் தருமர் முகம் அனல் முன் நிற்பதுபோல தெரிந்தது. தொலைவில் ஏதோ பலகை அடிபட்டது. குதிரை மீண்டும் மெல்ல தும்மியது.

அவன் கனவில் தேவிகையை கண்டான். தூமபதத்தில் அவன் அவளுடன் புரவியில் சென்றுகொண்டிருந்தான். “நம்மைத் துரத்தி வருகிறார்கள்” என்றாள். “இது பால்ஹிகநாடு. எல்லையை கடந்துவிட்டோம். இனிமேல் எவரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.” அவள் “இல்லை, புரவிகள் அணுகுகின்றன” என்றாள். “புரவிகளா? நான் எதையும் கேட்கவில்லையே” என்றான். அவள் அவன் கைகளை பிடித்துக்கொண்டு “எனக்கு அச்சம் ஏற்படுகிறது” என்றாள். வா என்று அவளை அவன் புரவியில் அழைத்துச்சென்றான்.

அவர்கள் பால்ஹிகபுரியில் அவனுடைய அறையில் இருந்தனர். மஞ்சத்தில் அவன் தேவிகையுடன் விலங்குபோன்ற விரைவுடன் உறவுகொண்டபோது அவள் “குதிரைகள்... குதிரைகள் வருகின்றன” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். கதவு தட்டப்பட்டது. அவன் எழுந்து சென்று திறந்தான். விஜயை நின்றிருந்தாள். அவள் வெற்றுடலுடன் கையில் ஒரு நெய்விளக்குடன் நின்றிருந்தாள். “அவர்கள் வந்துவிட்டார்கள்.” அவன் படபடப்புடன் “யார்?” என்றான்.

இருளில் இருந்து உருவிய கூர்வாள் வெளியே வந்தது. அதை ஏந்தியபடி கவசஉடை அணிந்த வீரன் முன்னால் வர தொடர்ந்து பாண்டவர்களும் கௌரவர்களும் வாட்களுடன் வந்தனர். பீமன் அர்ஜுனன் நகுலன் சகதேவன் மறுபக்கம் துரியோதனன் துச்சலன் துச்சாதானன். தலைமையேற்று வந்தவனை நோக்கி “அவர்கள் என் மனைவிகள்... அவர்களை விடமாட்டேன்” என்றான். “மூடா, நான் அவர்களுக்காக வரவில்லை” என்றபடி அவன் ஓங்கி வெட்ட தன் கை துண்டாகி தரையில் விழுவதை பூரிசிரவஸ் கண்டான்.

அதிர்ந்து நடுங்கும் உடலுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து நீர்க்குடுவையை எடுத்து தண்ணீர் குடித்தான். ஒலிகளைக் கொண்டு அவன் துயிலவேயில்லை என்பதை புரிந்துகொண்டான். அரைநாழிகைகூட ஆகவில்லை. கச்சையை எடுத்துக் கட்டி வாளைச்செருகிக்கொண்டு வெளியே சென்றான். இடைநாழி முழுக்க ஏவலர் விரைந்துகொண்டிருந்தனர். அரண்மனை தீப்பற்றி எரிவதுபோல விளக்குகள். எங்கெங்கோ ஒலிகள். போர் நிகழ்வதுபோல. புரவிக்குளம்போசைகள்.

நடந்து சென்று படியிறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன் நினைவுகூர்ந்தான், முன்னால் வந்த வாள்வீரனின் முகம் விழியிழந்த சூதர் தீர்க்கசியாமருடையது. ஆனால் அவர் விழிகள் அதில் கனலென எரிந்துகொண்டிருந்தன. வியப்புடன் அவன் நின்றுவிட்டான். பின்னர் பெருமூச்சுடன் முற்றத்தில் நடந்து தன் புரவியை அடைந்தான். அது நின்றபடியே துயின்றுகொண்டிருந்தது. அவன் அதை தட்டியதும் விழித்துக்கொண்டு சப்புகொட்டியது. அவன் ஏறிக்கொண்டு காலால் மெல்ல தட்டி செலுத்தினான்.

நகரம் மேலும் மாறியிருந்தது. ஒருகாட்டை பூக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். அத்தனை அலங்காரங்களும் மலர்க்காடுகளில் இருந்து பயின்றவையாகவே இருந்தன. மலர்மரங்கள். மலர்க்கொடிகள். மலர்க்குவைகள். மலர்த்தொங்கல்கள். எதிரே வந்த நூற்றுவனிடம் “விடிவதற்குள் அலங்காரங்கள் முடிந்து அத்தனை தெருக்களும் தூய்மை செய்யப்பட்டாகவேண்டும்” என்றான். “ஆம் இளவரசே. இவர்கள் இந்நேரம் முடித்திருக்கவேண்டும். நாங்கள் தூய்மைசெய்யத் தொடங்கியிருப்போம். இவர்கள் இப்போதுதான் பாதி முடித்திருக்கிறார்கள்.”

“விரைவு” என்றபடி அவன் கிழக்குக் கோட்டையைக் கடந்து சாலைவழியாக சென்றான். சாலையும் பூத்திருந்தது. மலர்கள். ஒருநகரத்தை பூக்கச்செய்ய எத்தனை காடுகளின் மலர்கள் தேவை? இன்று வண்டுகளும் தும்பிகளும் நிலையழியும். நாளை இந்நகரில் அவை தேடியலையுமா என்ன? துறைமுகப்பில் அலங்காரங்கள் முடிவடைந்திருந்தன. கிருதர் வந்து வணங்கி “அனைத்தும் முடிவடைந்துவிட்டன இளவரசே. மலர்த்தரையில் மலர்பரப்பும் பணியை மட்டும் எரியம்பைக் கண்டபின் தொடங்கலாமென எண்ணுகிறோம்” என்றார்.

சுங்கமாளிகைக்குச் சென்று அமர்ந்தான். சுங்கநாயகம் “சற்றுமுன்னர்தான் கனகர் வந்துசென்றார் இளவரசே” என்றான். “ஒவ்வொருவரும் எங்களை அதட்டுகிறார்கள். பணியாற்றுபவர்கள் விரைவாகச்சென்றால்தான் நாங்கள் முடிக்கமுடியும்.” பூரிசிரவஸ் புன்னகைத்து “அலங்காரப்பணிகள் மெல்லத்தான் முடியும்” என்றான். “ஆம், இங்கே தச்சுப்பணியும் மெல்லமெல்லத்தான் முடியும்” என்றான். “இன்கடுநீர் அருந்துகிறீர்களா? துயில்நீத்தலுக்காக கொண்டுவரச்சொன்னேன்."

அவன் அங்கிருந்து மீண்டும் ஒருமுறை கோட்டைக்குள் சென்றான். தெற்குவீதியில் சூதர்களின் தெருக்களில் நெய்விளக்கு ஒளியில் அவர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் சிறிய குழுக்களாக நின்றிருந்தனர். ஹிரண்யாக்‌ஷர் ஆலய முகப்பில் தீர்க்கசியாமர் நின்றிருக்கிறாரா என்று பார்த்தான். அத்தனை சூதரும் அவரைப்போல தெரிந்தனர். அவர்களனைவருமே பட்டாடை அணிந்து துலக்கப்பட்ட இசைக்கருவிகளுடன் சித்தமாக இருந்தனர். ஹிரண்யாக்ஷர் ஆலயத்தில் பூசனைகள் முடிந்ததும் கிளம்புவார்கள் என்று எண்ணினான்.

நிமித்திகர்களின் தெருவில் மையவிடுதியின் அருகே அஜபாகரின் ஆலயத்தின் முகப்பில் படையலிட்டிருந்தார்கள். வெள்ளை ஆடையை மார்புக்கு குறுக்காக அணிந்த நிமித்திகர்கள் கூடி நின்றனர். அவன் இளைய யாதவனின் மாளிகை வரை சென்று அலங்காரங்களை பார்த்துவிட்டு கோட்டைவழியாகவே நகரைச்சுற்றி சென்றான். தெற்குக்கோட்டைவாயிலில் அணிவேலைகள் பெரும்பாலும் முடிந்திருந்தன. பணியாளர்கள் அமர்ந்து வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தனர். தூய்மைப்பணியாளர்கள் உதிர்ந்த பூக்களையும் இலைகளையும் கூட்டிக்கொண்டிருந்தனர்.

மேற்குவாயிலருகே ஏரியின் கரையில் குளிப்பாட்டப்பட்ட யானைகளுக்கு நெற்றிப்பட்டமும் பட்டுப்போர்வையும் கொம்புப்பூணும் துதிக்காப்பும் காதுமணிகளும் அணிவித்துக்கொண்டிருந்தனர். பொன்மரங்கள் போல விளக்கொளியில் சுடர்ந்தபடி யானைகள் செவியாட்டி உடலசைத்து நின்றிருந்தன. நீருக்குள் நின்ற யானைகள் சீறும் ஒலியுடன் துதிக்கையால் நீரை அள்ளி முதுகில் பாய்ச்சின. நெடுந்தூரம் நீந்திச்சென்றுவிட்ட ஒரு யானையை பாகன் நீந்திச்சென்று அதட்டினான்.

வடக்குக் கோட்டைமுகப்பில் அனுமனின் ஆலயத்தில் விளக்கெரிந்தது. யானைக்கொட்டடிகள் ஒழிந்துகிடந்தன. கோட்டை வாயிலுக்கு மறுபக்கம் விரிந்துகிடந்த காந்தாரக்குடிகளின் தெருக்களில் இருந்து ஓசைகளும் வெளிச்சமும் எழுந்தன. காந்தாரப்படைவீரர்கள் சிறிய குழுக்களாக படைக்கலங்களுடன் அங்கிருந்து உள்ளே வந்துகொண்டிருந்தனர். அனைவருமே குளித்து புத்தாடை அணிந்து குழல்களில் மலர்சூடியிருந்தனர். இரவெல்லாம் பணியாற்றியபின் வீடுதிரும்பி குளித்து மீள்கிறார்கள் என்று தெரிந்தது.

அவன் கிழக்குக் கோட்டையை அங்கிருந்தே பார்த்தான். அரண்மனை முற்றம் வழியாக செல்லவேண்டாம் என்று திரும்பி மீண்டும் மேற்குக்கோட்டைமுகப்பு வழியாக தெற்குக் கோட்டைமுகப்புக்கு சென்றான். காவலர்களின் பேச்சொலிகள் கோட்டைக்குமேல் கேட்டன. கோட்டையை ஒட்டியபாதை ஒழிந்து கிடந்தது. எவரும் பாராத அலங்காரங்கள் தனியழகு கொள்கின்றன என்று நினைத்தான். காற்றில் மெல்ல திரும்பிய மலர்த்தூண்கள். வளைந்த மலர்மாலைகள் மலர்மிதக்கும் கங்கையின் அலைகள் போலிருந்தன.

அப்போதுதான் அந்த சார்வாகரை பார்த்தான். கையில் யோகதண்டுடன் பெருச்சாளித்தோல் ஆடை அணிந்து உடம்பெல்லாம் நீறுபூசி சடைமுடிக்கற்றைகள் தோளில் தொங்க அவர் சென்றுகொண்டிருந்தார். முதியவர் என்று தெரிந்தது. அவன் அவர் அருகே சென்றதும் இறங்கி “வணங்குகிறேன் சார்வாகரே” என்றான். அவர் யோகதண்டை தூக்கி வாழ்த்திவிட்டு நடந்தார். அவன் அவரை சிலகணங்கள் நோக்கியபின் கடந்துசென்றான்.

மீண்டும் தெற்குவாயிலை அடைந்தபோது அங்கே சௌனகரும் கனகரும் வந்திருந்தனர். அவர்களின் தேர்கள் தோரணவாயிலுக்கு முன்னதாகவே காடோரமாக நிறுத்தப்பட்டிருந்தன. படைத்தலைவர்கள் வந்திருப்பதையும் தேர்கள் காட்டின. அப்பால் காட்டுக்குள் உருவாக்கப்பட்ட முற்றத்தில் பந்த வெளிச்சத்தில் அணியூர்வலத்துக்கான தேர்கள் ஒருங்குவது தெரிந்தது. அவன் தன்புரவியை நிறுத்திவிட்டு நடந்து சுங்கமாளிகையை அடைந்தான். கிருதர் வெளியே வந்து “பேரமைச்சர் சௌனகரும் அமைச்சர் கனகரும் வந்திருக்கிறார்கள். உடன் படைத்தலைவர்கள் ஹிரண்யபாகுவும் வீரணகரும் வந்திருக்கிறார்கள்” என்றார். பூரிசிரவஸ் தலையசைத்து உள்ளே சென்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி ஏறிட்டு நோக்கினர். சௌனகர் “வருக இளவரசே!” என்றார். “அணிப்படகுகள் அணுகிக்கொண்டிருக்கின்றன என்று செய்தி வந்தது. எரியம்பு எப்போது வேண்டுமென்றாலும் எழலாம்." பூரிசிரவஸ் "அவர்கள் காலையில்தானே வருவதாக சொன்னார்கள்?” என்றான். “இப்போது நேரம் என்ன என்று நினைக்கிறீர்கள்? பிரம்மமுகூர்த்தம் கடந்துவிட்டது” என்று சௌனகர் சிரித்தார். “நான் அறியவில்லை. நகரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்.” கிருதர் “இன்னீர் அருந்துகிறீர்களா இளவரசே?” என்றார். பூரிசிரவஸ் ஆம் என்றபடி அமர்ந்தான்.

வீரணகரை தேடி ஒரு வீரன் வந்தான் அவர் எழுந்துபோய் ஆணைகளை இட்டுவிட்டு திரும்பி வந்து “நகருக்குள் ஒரு சார்வாகர் நுழைந்திருக்கிறார் என்கிறார்கள்” என்றார். சௌனகர் “சார்வாகரா? எங்கிருந்து?” என்றார். “தெற்குவாயிலில் நானும் அவரைப்பார்த்தேன்” என்றான் பூரிசிரவஸ். “இங்கே சார்வாகர்கள் இருப்பதாக அறிந்ததே இல்லை. முன்னர் ஒருவர் சுடுகாட்டில் இருந்தார். அவரை சிலர் பாத்திருக்கிறார்கள்.” பூரிசிரவஸ் “அவரேதான் என நினைக்கிறேன். மிக முதியவர்” என்றான்.

“என்னசெய்வது?” என்றார் வீரணகர். “ஒன்றும் செய்யமுடியாது. எந்த ஞானியும் நமக்கு மூதாதைவடிவம்தான்” என்றார் சௌனகர். வெளியே இருந்து கிருதர் உள்ளே வந்து “எரியம்பு எழுந்துவிட்டது” என்றார். “பூமுற்றம் விரிக்கப்படட்டும்... கோட்டைக்கு செய்தி அனுப்பிவிடுங்கள்” என்றார் சௌனகர். “உண்மையில் ஏன் இத்தனை ஒருக்கங்கள் என எனக்குப்புரியவில்லை. வருபவர் ஒரு மணமகள் மட்டும்தானே?”

பூரிசிரவஸ் “அரசரின் ஆணை” என்றான். “ஆம், அரசர்கள் ஆசாரங்களை அமைக்கிறார்கள்” என்றார் சௌனகர். “செல்வோம்... படகுகள் விரைவில் வந்துவிடும்.” இன்கடுநீர் வந்தது. செஞ்சந்தனமும் நெல்லிக்காயும் தேனும் கலந்து திரிகடுக மணத்துடன் சூடாக இருந்தது. அருந்தியதும் அவர்கள் வெளியே சென்றனர். “குளிர்காலம் முடிந்துவிட்டது. விடிகாலைக் குளிர் மறைந்துவிட்டது” என்றார் சௌனகர். பூரிசிரவஸ் கங்கையை நோக்கிக்கொண்டு நின்றான். இருளே அலைகளாக ஓடுவதுபோலிருந்தது. இருளில் ஒலி பளபளத்தது. அனல்வளைவுகள். அனல்பாவைகளால் ஆன மாளிகை ஒன்று நீருக்குள் தலைகீழாக பறந்தது.

பார்த்திருக்கவே வானம் சாம்பல்பூத்து மலரத்தொடங்கியது. நீருக்கும் வானுக்குமான வேறுபாடு தெளிந்தபடியே வந்தது. விழிகூர்ந்தபோது நீரை நோக்கமுடியும் என்று தோன்றியது. மேலே வானைநோக்கியபோது வானம் மேலும் தெளிந்திருந்தது. “விடிந்துவருகிறது” என்று சௌனகர் சொன்னார். திரும்பி துறைமுற்றத்தில் நின்றவர்களைப்பார்த்துவிட்டு “அனைத்தும் பிழையின்றி அமைக்கப்பட்டுவிட்டன. ஆயினும் இறுதியில் ஒரு பிழை எழுந்து நிற்கும்... அதை சனிதேவனின் குழந்தை என்பார்கள்” என்றார்.

அங்கே பதினாறு அணிப்பெருந்தேர்கள் செம்பட்டுத்திரைச்சீலைகளுடன் கொண்டுவரப்பட்டு நிரைவகுத்து நின்றன. பொன்னிற மலர்ச்செதுக்குகளில் செம்மணிக்கற்கள் பொறிக்கப்பட்ட அரசத்தேர் நடுவே மூன்றடுக்கு குவைமுகடுடன் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் பொற்கொடிமரத்துடன் நின்றது. அதில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் பறந்தன. ஏழு வெண்குதிரைகள் அதனருகே ஒன்றுடன் ஒன்று தோல்பட்டையால் பிணைக்கப்பட்டு நின்றிருந்தன.

பிற குதிரைகள் அனைத்தும் கருநிறமும் மாந்தளிர் நிறமும் கொண்டவை. அவற்றை ஓட்டும் பாகர்கள் செந்நிறத் தலைப்பாகையில் இறகு சூடி பொன்னாரமும் பொற்குண்டலங்களும் அணிந்து கையில் சவுக்குகளுடன் நின்றனர். ஒளிரும் வேல்முனைகளுடன் நீலப்பட்டுத் தலைப்பாகையும் நீலமேலாடையும் அணிந்த அகம்படிக் காவலர்கள். வெண்ணிறத்தலைப்பாகையும் வெண்ணிறமேலாடையும் பொன்னாலான இலச்சினைகளும் அணிந்த அமைச்சுப்பணியாளர்கள். துறைப்பணியாளர்கள் மஞ்சள்நிற ஆடையும் தலைப்பாகையும் அணிந்திருந்தனர். வலப்பக்கம் தாலங்கள் ஏந்தும் பதினாறு அணிப்பரத்தையர் நின்றிருந்தனர். தாலங்கள் அருகே மூங்கில்மேடையில் வைக்கப்பட்டிருந்தன. அருகே ஏழு முதுமங்கலைகள் புத்தாடைகள் அணிந்து மலரும் அணியும் சூடி மூங்கில் பீடங்களில் அமர்ந்திருந்தனர்.

இடப்பக்கம் சூதர் பதினாறுபேர் இசைக்கருவிகளுடன் நின்றனர். முழவுகளும் கொம்புகளும் மணிகளும் சங்குகளும் காத்திருந்தன. சுங்கக்காவலன் பதற்றத்துடன் மூங்கிலால் ஆன காவல்மாடத்தின் மேலேறி அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரிநோக்கினான். அவன் இறங்கும்போது விண்ணில் எரியம்பு எழுந்தது. அவன் திரும்பி விரைந்து மேலேறிச்சென்று நோக்கி கையசைத்தான். துறைமேடை முழுக்க ஆணைகள் ஒலித்தன. வீரர்கள் அங்குமிங்கும் ஓடினர். “வந்துவிட்டார்கள்” என்றார் சௌனகர்.

மூங்கில்களால் கட்டப்பட்டிருந்த முரசுமேடையில் முரசுக்காரர்கள் கோல்களுடன் எழுந்து நின்றனர். சரிந்திருந்த பெருமுரசின் தோற்பரப்பு காலையின் செந்நீல ஒளியில் நீள்வட்டமாக மின்னியது. பூரிசிரவஸ் நெஞ்சு படபடப்பதை உணர்ந்தான். அது ஏன் என அவனே புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். மேடைமேல் நின்றவன் கைகாட்டியதும் ஏவல்நாயகம் தன் வெள்ளிக்கோலை சுழற்றி ஆணையிட்டான். பெருமுரசின் தோற்பரப்பில் கோல்விழுந்த ஒலியை பூரிசிரவஸ் தன் வயிற்றுக்குள் என உணர்ந்தான். முரசு அதிரத்தொடங்கியதும் கங்கையின் அலைகளும் அருகே நின்ற ஆலமரங்களின் இலைகளும் நெய்விளக்குகளின் சுடர்களும் எல்லாம் அந்தத் தாளத்திற்கேற்ப அசைவதாகத் தோன்றியது.

முரசின் தாளமாக காலம் அலையடித்துச்சென்றுகொண்டிருந்தது. எவரோ எழுப்பிய வியப்பொலி அனைவரையும் குனியச்செய்தது. நீர்வெளியில் சிறிய செந்தழல் போல படகு ஒன்றின் பாய்கள் தெரிந்தன. காற்றுவெளியில் ஒளி ஊறிப்பரவியிருந்ததை பூரிசிரவஸ் அப்போதுதான் உணர்ந்தான். விழிதெளிந்தது போல விடிந்திருந்தது. கங்கைநீர் நீலமாகியது. விளக்குகளின் சுடர்கள் மலரிதழ்கள் போல எளிமை கொண்டன. பறவைக்குரல்களால் ஆலமரம் ஓசையிட்டது. வெண்கொக்குகள் எழுந்து கங்கைமேல் சுழன்று திரும்பவந்தன. காகங்கள் காற்றில் நீந்தி நீந்தி கடந்துசென்றன. கங்கைக்குமேல் வானில் மிக உயரத்தில் சிறகசைக்காமல் சென்றன வடபுலத்து சாரஸங்கள்.

ஏழு செந்நிறப்பாய்கள் கொண்ட பெரிய படகு தீச்சுடர்கள் படபடக்கும் அகல்விளக்கு போல தெரிந்தது. அதற்குப்பின்னால் இளநீலநிறப்பாய்கள் விரித்த ஏழு படகுகள் வந்தன. அவற்றில் மூன்றுபடகுகள் மிகப்பெரியவை என தொலைவிலேயே காணமுடிந்தது. அவை பெரிதாகிக்கொண்டே இருந்தன. பின்னர் நீரில் அவை எழுந்தமைவதை காணமுடிந்தது. சௌனகர் “பெரிய படகு. பாஞ்சாலம் நம்மைவிடப் பெரிய படகுகளை வைத்திருக்கிறது...” என்றார். பூரிசிரவஸ் “அவர்களின் துறை மிகப்பெரியது” என்றான். “ஆம், அவர்கள் எப்போதுமே நீர்வணிகர்கள்” என்றார் சௌனகர்.

படகின் முகப்பிலிருந்த பாஞ்சாலத்தின் வில் முத்திரை தெளிவாகத் தெரிந்தது. சௌனகர் திரும்பிப்பார்த்தார். கனகர் கையை அசைக்க சூதர் தங்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்தனர். அணிப்பரத்தையர் தாலங்களை எடுத்துக்கொள்ள ஏவலர் அவற்றின் அகல்களில் சுடரேற்றினர். துறைமேடை பரபரப்பு கொண்டு பின் மெல்ல அடங்கி அமைதியடைந்தது. முறுக்கப்பட்ட யாழ்நரம்புகள் என அனைவரும் காத்து நின்றனர்.

அன்னம்போல அலைகளில் ஏறி அமைந்து ஏறி வந்தது படகு. அதன் முகப்பு துள்ளிவரும் கன்றுக்குட்டியின் மூக்கு போல அசைந்தது. அதன் அமரத்தில் நின்றிருந்தவன் விற்கொடியை ஆட்டினான். அதன் விலாவிலிருந்த மேடையில் நின்றிருந்த சூதர் முரசுகளையும் கொம்புகளையும் இசைக்க கன்று அமறியபடி அன்னை மடியை முட்ட வருவதுபோல படகு அணுகியது. துறைமேடையின் பெருமுரசம் விரைவுகொண்டது. அணையும் தழல் போல படகு மெல்ல தன் பாய்களை ஒடுக்கியது. பின்னால் வந்த படகுகளும் பாய்சுருக்கி விரைவிழந்தன.

படகின் வில் இலச்சினை தன் தலைக்குமேல் எழுந்துசெல்வதை பூரிசிரவஸ் கண்டான். அதுவே அவனைவிட நான்குமடங்கு பெரிதாக இருந்தது. படகின் இருபக்கமும் விழிதிறந்த யாளியின் முகம் இரண்டாள் உயரமிருந்தது. சற்று நேரத்திலேயே படகின் விலா கோட்டைச்சுவர் என அவர்கள் விழிகள் முன் விரிந்தது. பலகைகளை இணைத்து பதிக்கப்பட்டிருந்த வெண்கல ஆணிகளும் பட்டைகளும் பொன்னென மின்னின. தலைக்குமேல் மிக உயரத்தில் அதன் பாய்கள் கொடிமரத்தில் அறைந்து ஓசையிட்டன.

கனகர் கைகாட்ட பெருமுரசம் கார்வையாக ஒடுங்கி ஓய்ந்தது. மங்கல இசை எழுந்து துறைமேடையை சூழ்ந்தது. சூதரும் பரத்தையரும் நிரை வகுத்து படகை நோக்கி வந்தனர். படகின் முகப்பில் திருஷ்டத்யும்னன் மணிச்சரம் சுற்றி செம்பருந்தின் இறகு சூடிய பட்டுத்தலைப்பாகையும் மணிபொறித்த பொற்கச்சையில் பொன்னுறையிட்ட குத்துவாளும் பட்டு அந்தரீயமும் அணிந்தவனாக தோன்றினான். வைரங்கள் ஒளிர்ந்த கங்கணங்கள் அணிந்த கைகளை கூப்பிக்கொண்டு நின்றான்.

இதழ்விரிவதுபோல படகின் வாயில் திறக்க துறைமேடையிலிருந்து நடைபாலம் நீண்டு அதன் விலாவுக்குள் நுழைந்தது. திருஷ்டத்யும்னன் அதன் வழியாக கைகூப்பியபடி இறங்கி வந்தான். சௌனகர் அவனை அணுகி “நான் அஸ்தினபுரியின் பேரமைச்சன் சௌனகன். பாஞ்சால இளவரசரை அரசரின் சார்பிலும் எண்குலங்கள் சார்பிலும் வரவேற்கிறேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “அஸ்தினபுரியின் மடியை மிதிக்கும் கணம் மூதாதையரால் வாழ்த்தப்பட்டது பேரமைச்சரே. தாங்களே வந்ததும் என்னை பெருமைப்படுத்துகிறது” என்றான்.

பூரிசிரவஸ் வணங்கி “நல்வரவு இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் அவனை பொருட்படுத்தாமல் மெல்ல தலையை மட்டும் அசைத்தபின் “இளவரசி இரவெல்லாம் துயிலவில்லை” என்றான். அவன் திரும்பி கைகாட்ட உள்ளிருந்த அறையின் பட்டுத்திரை விலகியது. நான்கு அணிப்பரத்தையர் கையில் பொற்தாலங்களுடன் பட்டும் பொன்னும் ஒளிவிட நடனம்போல மெல்ல அசைந்தபடி வந்தனர். அவர்களின் அசைவுகளுடன் இசையை இணைத்துக்கொண்டது உள்ளம். அவன் விழிகளில் முழுச்சித்தமும் இருந்தது. அங்கிருந்த அனைவரும் அப்படித்தான் இருந்தனர்.

அணிப்பரத்தையருக்கு அப்பால் திரௌபதியின் உயர்ந்த கொண்டை தெரிந்தது. கோபுரம் போலஎழுப்பி கட்டப்பட்ட கருங்குழல் சுருள்களின் மேல் நீலவைரங்களால் ஆன மணிமாலை சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. இரவிலெழுந்த விண்மீன்கள் என்பார்களா சூதர்கள்? நெற்றிச்சுட்டியில் நீலவைரம். காதுகளில் ஆடின விண்மீன் தொகுதிகள். தோள்களுக்கும் கொண்டைகளுக்கும் அப்பால் அவள் முகம் தெரிந்து மறைந்தது. கரும்பளிங்குச் சிலைமுகம். யுகயுகங்களாக ஒற்றை நோக்கும் உணர்வுமாக உறைந்த தெய்வமுகம்.

அணிப்பரத்தையர் இறங்கி வந்து மலர்ப்பாதையில் நடந்து இருபிரிவாக பிரிந்தனர். நடுவே அவள் நடைப்பாலம் வழியாக மெல்ல நடந்து வந்தாள், இழுத்துக்கட்டிய கம்பியில் நடப்பவள் போல. துவளாத பெருந்தோள்கள். இருபக்கமும் சீராக அசைந்த இடை. கைகளில் ஏந்திய பொற்தாலத்தில் எண்மங்கலங்கள் இருந்தன. அஸ்தினபுரியின் அணிப்பரத்தையர் தாலங்களுடன் சென்று அவளை எதிரேற்றனர். முதுமங்கலைகள் இருவர் பொற்தாலத்தை அவள் காலடியில் வைத்தனர். அவள் வலக்காலை அதில் வைத்ததும் சேடியர் குரவையிட்டனர். மங்கல இசை சூழ்ந்தொலிக்க பொற்குடங்களில் இருந்து மஞ்சள்நீரை ஊற்றி அவள் கால்களை கழுவினர்.

பின்னர் முதுமங்கலை “எங்கள் மண்மேல் உங்கள் பாதங்கள் பதியட்டும் அன்னையே” என்றாள். திரௌபதி புன்னகைசெய்து நிமிர்ந்த தலையுடன் கைகளில் ஏந்திய தாலத்தில் எண்மங்கலங்களுடன் தன் வலக்காலை எடுத்து மலர்பூத்த அஸ்தினபுரியின் மண்மேல் வைத்தாள்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 9

திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும் பின்வாங்கி தேர்களை நோக்கி சென்றனர். அப்பால் தேர்கள் அணிவகுப்பதற்கான ஆணை ஒலித்தது.

சௌனகர் வணங்கியபடி சென்று திரௌபதியை அணுகி “அஸ்தினபுரி தங்கள் பாதங்களை அன்னை என ஏற்று மகிழ்கிறது இளவரசி. இந்த நாள் இந்நகரின் வரலாற்றில் அழியாநினைவாக நீடிக்கும். பாஞ்சால ஐங்குலங்களின் மகளை, துருபதரின் செல்வத்தை, பாரதவர்ஷத்தின் திலகத்தை அரசகுலத்தின் சார்பில் அரசரின் சார்பில் அஸ்தினபுரியின் மக்களின் சார்பில் அடியேன் தலை கால்தொடப் பணிந்து வரவேற்கிறேன்” என்றார்.

திரௌபதி புன்னகையுடன் “எனக்குரிய மண்ணுக்கு வந்துள்ளதாக எண்ணுகிறேன் அமைச்சரே. நான் புல்லாகவும் புழுவாகவும் புள்ளாகவும் இங்கு முன்னரே பலமுறை பிறந்திருக்கிறேன். இன்று மீண்டுவந்துவிட்டேன்” என்றாள். பூரிசிரவஸ் அவளை நோக்கியபடி நின்றான். அவள் ஒவ்வொரு சொல்லையும் நூறுமுறை ஒத்திகைபார்த்தவள் போல தெளிவான உச்சரிப்புடன் அனைவருக்கும் கேட்கும்படி ஆனால் குரல் சற்றும் உயராமல் சொன்னாள்.

சௌனகர் மீண்டும் பணிந்து “அதை நிமித்திகர் சொல்லிவிட்டனர் இளவரசி. அஸ்தினபுரியின் மக்களும் உயிர்களனைத்தும் அவர்களை ஆளும் அரசிக்காகவே காத்திருக்கின்றனர் என்று. இந்த நகரம் இன்றுவரை இதற்கிணையான வரவேற்பை எவருக்கும் அளித்ததில்லை. இங்கிருந்து கோட்டைவரை அரசப்பெருந்தேர் தங்களுக்காக வந்துள்ளது. அணித்தேர்நிரையும் காவலர்களும் அகம்படி செய்வார்கள். அங்கிருந்து அரண்மனை வரை பட்டத்துயானைமேல் நகர்வலம் ஒருக்கப்பட்டுள்ளது” என்றார். திரௌபதி “அவ்வாறே ஆகுக!” என்றாள்.

”இவர் படைத்தலைவர் வீரணகர். அவர் படைத்தலைவர் ஹிரண்யபாகு. இருவரும் தங்களுக்கு காவல்துணை என உடன்வருவார்கள்” என்றார் சௌனகர். அவர்கள் இருவரும் வணங்கி முகமன் சொன்னார்கள். அவள் புன்னகையுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு இன்மொழி சொன்னாள். திருஷ்டத்யும்னன் திரும்பி பூரிசிரவஸ்ஸிடம் “இளவரசியின் தேருக்கு முன்னால் தேர்கள் செல்வதாக இருந்தால் புழுதியடங்கும் தொலைவுக்கு முன்னால்தான் செல்லவேண்டும்... போய் சொல்லும்” என்றான். பூரிசிரவஸ் தலைவணங்கி பின்னால் நகர்ந்தான்.

உண்மையில் அந்த இடத்தைவிட்டு விலகியது அவனுக்கு ஆறுதலைத்தான் அளித்தது. தேர்களை அணுகி பாகர்களுக்குரிய ஆணைகளை அளித்தபடி முன்னால் சென்றான். குதிரைகள் நுகங்களில் கட்டப்பட்டு வால்சுழற்றி கடிவாளத்தை மென்றுகொண்டிருந்தன. திரௌபதி கங்கைக்கரையில் இருந்து நடக்கத்தொடங்கியபோது மீண்டும் இசை முழங்கியது. அவள் வந்து பொற்தேரில் ஏறியதும் இசைச்சூதர்கள் முன்னால் சென்ற தேரில் ஏறினர். இசைமுழங்கியபடி நாற்புறமும் திறந்த அந்தத்தேர் முதலில் சென்றது. தொடர்ந்து அணிப்பரத்தையர் ஏறிய மூன்று தேர்கள் சென்றன.

புழுதியடங்கும் இடைவெளி உருவானபின் சௌனகர் கைகாட்ட பொற்தேர் அசைந்து கிளம்பியது. அதன் வெண்திரைகள் காற்றில் நெளிந்தன. அமுதகலசக்கொடி துவண்டது. மூங்கில்விற்களின் மேல் அன்னப்பறவை என அசைந்தபடி அது சாலையில் உருளத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் தன் தேரில் ஏறிக்கொண்டான். சௌனகர் அதன்பின்னால் வந்த தனது தேரை நோக்கி ஓடினார். ஹிரண்யபாகுவும் வீரணகரும் தங்கள் வெண்புரவிகளில் ஏறி தேரின் இருபக்கமும் வந்தனர். படைக்கலங்கள் ஏந்திய வீரர்கள் அதைத்தொடர்ந்து சீரான நடையில் புரவிகளில் சென்றனர்.

கிருதர் ஓடிவந்து “பொதிகளை இறக்கி தேர்களில் பின்னால் கொண்டுசெல்லும்படி அமைச்சர் சொன்னார்... பொதிகளை இறக்க நேரமாகும். அவர்கள் அதற்குள் கோட்டையை அடைந்துவிடுவார்கள்” என்றார். “அணியூர்வலம் மெதுவாகவே செல்லும் கிருதரே... மேலும் அவர்கள் படகுகளுக்குள் தேர்களில் முன்னரே பொதிகளை ஏற்றித்தான் வைத்திருப்பார்கள். நாம் தேர்களை உருட்டியே இறக்கமுடியும்” என்றான். கிருதர் படகுகளை நோக்கி ஓடினார்.

அவன் சொன்னதுபோலவே தேர்களில் முன்னரே செல்வப்பொதிகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றை வினைவலர் தள்ளி பாலம் வழியாக துறைமேடைக்கு கொண்டுவந்தனர். படகுகளின் அடித்தட்டில் இருந்து புரவிகள் வெளியே வந்து கால்களை உதறிக்கொண்டன. பாஞ்சால வீரர்கள் அவற்றை தேர்களில் விரைந்து கட்டத்தொடங்கினர் . நிலத்தை உணர்ந்த குதிரைகள் கால்களால் உதைத்து கனைத்தன. குனிந்து பூக்களைப் பொறுக்கி உண்ணமுயன்றன. புதிய மணங்களுக்காக மூக்கைத் தூக்கி பெரிய ஓட்டைகள் சுருங்கி விரிய மூச்சிழுத்தன. பிடரி குலைய தலையை வளைத்து தொலைவில் செல்லும் தேர்களை நோக்கின.

“பின்னால் தேர்கள் வரட்டும் கிருதரே... இளவரசி கோட்டைக்குள் நுழையும்போது இவை அவருடன் இணைந்துகொள்ளும் என எண்ணுகிறேன்” என்றபின் பூரிசிரவஸ் புரவியை செலுத்தினான். குறுங்காட்டுக்குள் நுழைந்து ஒற்றையடிப்பாதை வழியாகவே விரைந்தான். பக்கவாட்டில் மரங்களுக்குள் இசையும் வண்ணங்களுமாக அணியூர்வலம் செல்வதை பார்த்தபடி கடந்து சென்றான். கோட்டையை அடைந்தபோது அங்கே பெருங்கூட்டம் திரண்டிருப்பதை கண்டான். அவனுடைய புரவி வந்ததையே அவர்கள் கிளர்ச்சியொலியுடன் எதிர்கொண்டனர். பல்லாயிரம் பார்வைகளை அவன் கூச்சத்துடன் தவிர்த்தபடி கடந்து சென்றான்.

காவலர்தலைவன் “நெருங்கிவிட்டார்களா இளவரசே?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபடி உள்ளே சென்றான். கிழக்குவாயிலில் நூற்றெட்டு யானைகள் முகபடாம் அணிந்து தந்தக்காப்பும் பட்டுவிரிப்பும் காதுமணிகளும் மின்ன வேங்கைமரம்பூத்த நிரை போல அசைந்தாடி நின்றிருந்தன. அவற்றின் மேல் அம்பாரிகள் செம்பட்டு இருக்கைகளுடன் பொன்னிற பிடிகளுடன் விண்ணில் என அசைந்தன. யானைகளின் செவிகளைப்பிடித்தபடி பாகர்கள் நின்றனர்.

நகரில் அவன் கண்ட அத்தனை அலங்காரங்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது கூட்டம். அவர்களெல்லாம் யாதவர்களா என்று நோக்கிக்கொண்டே சென்றான். யாதவரும் வணிகரும் உழவரும் இணையாகவே கொந்தளித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வண்ண ஆடைகள் அணிந்து மலர்த்தாலங்களை ஏந்திய பெண்கள்தான் எங்கும் கண்ணுக்குப் பட்டனர். திரௌபதியிடம் பெண்களுக்கு உள்ள ஈர்ப்ப்பு அவனுக்கு வியப்பளித்தது. கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக பெண்களை திரௌபதிதான் கிளரச்செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.

அரசப்பாதையில் அரண்மனைத்தேர்கள் வந்தபடியே இருந்தன. நூற்றுக்கணக்கான தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் புரவியை சாலையோரமாக ஒதுக்கி வழிவிட்டான். நூறு இளவரசிகளும் நூறு தேர்களில் செல்கிறார்கள். அவர்களின் நாட்டிலிருந்து வந்து முடிசூட்டு நிகழ்வுக்காகக் காத்திருக்கும் இளவரசர்கள் அரசகுடியினர் செல்கிறார்கள். நகரில் மக்களுக்கு நிகராகவே அரசகுடியினரும் இருக்கிறார்கள் போலும். அரசமுறைமைகளனைத்தும் மறைந்துவிட்டிருக்கின்றன. அரசக்கொடி பறந்த தேர் ஒன்றை ஒரு குதிரைக்காவலன் தடுத்து ஒரு யானையை கடத்திவிட்டான்.

சாலையின் இருபக்கமும் அத்தனை இடங்களிலும் மனிதமுகங்களே தெரிந்தன. சாளரங்களில் உப்பரிகைகளில் கூரைவிளிம்புகளில். அவர்கள் விடிவதற்கு முன்னரே இடம்பிடித்திருக்கவேண்டும். திரௌபதியின் வருகை மட்டுமல்ல அவர்களுக்கு. அதன்பொருட்டு ஒட்டுமொத்த நகரமுமே தன்னை ஒரு கலையரங்காக ஆக்கிக்கொண்டிருந்தது. முகபடாமணிந்த யானைகளும் இறகணிசூடிய புரவிகளும் கவச உடையணிந்த காவலர்களும் வண்ணத்தலைப்பாகைகள் அணிந்த ஏவலர்களும் சூதர்களும் அயல்நாட்டினரும் அவர்களை மகிழ்விக்க நடித்துக்கொண்டிருந்தனர்.

அந்த எண்ணம் வந்ததுமே அனைத்தும் அப்படி தோன்றத்தொடங்கிவிட்டது. உண்மையிலேயே நடித்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவர்கள் மேல் நூற்றுக்கணக்கான விழிகள் படும்போது அவ்விழிகளுக்கு எதிர்வினையாற்றாமலிருக்கமுடியவில்லை. கீழே கிடந்த ஒரு தலைப்பாகைச்சுருளை ஒரு வீரன் வேல்நுனியால் சுண்டி எடுத்து சுழற்றி அப்பால் இட்டான். குதிரையில் சென்ற ஒருவன் தேவையில்லாமலே அதை வால்சுழற்றி தாவச்செய்தான். தானும் கேளிக்கையாளனாகி நடித்துக்கொண்டிருக்கிறோமோ என அவன் நினைத்துக்கொண்டான். அந்நினைப்பே அவன் அசைவுகளை செயற்கையாக ஆக்கியது.

அரண்மனை கோட்டை வாயிலை நோக்கி சென்றபோது காலைவெயில் சரிவாக பெய்யத்தொடங்கியிருந்தது. மாளிகைநிழல்கள் மாளிகைச்சுவர்களில் விழுந்து அவற்றின் நிறத்தை மாற்றின. அரண்மனைவளாகத்தின் அத்தனை மாளிகைகளும் மலர்சூடியிருந்தன. மக்கள்கூட்டம் குறையக்குறைய அலங்காரங்கள் வண்ணச்செறிவாக பார்வையை நிறைத்தன. மக்கள்திரளாக கொந்தளித்தபோது வண்ணச்சிதறல்களே அழகாகத்தெரிந்தன. ஆனால் அப்போது அலங்கரிக்கப்பட்ட சீரான வண்ணங்கள் உறுத்தின.

கோட்டைவாயிலில் அவனை நிறுத்தி புரவியை அங்கேயே விட்டுவிடவேண்டும் என்றார்கள். அவன் குலைவாழைகளும் ஈச்சங்குலைகளும் மலர்மாலைகளுமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வாயிலைக் கடந்து உள்ளே விரிமுற்றத்தை அடைந்தான். அங்கே அனைத்தும் சித்தமாக இருந்தன. தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் ஏதுமில்லை. இசைச்சூதர்களும் வைதிகர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் ஏவலர்களும் நிறைந்திருந்தனர். அங்கு அத்தனைபேர் இருந்தது அவர்களின் ஓசையின்மையால் திகைப்பை அளித்தது.

மனோதரர் மாளிகைப்படிகளில் இடையில் கைவைத்து நின்றிருந்தார். அவனைக் கண்டதும் “எத்தனை நாழிகையில் கோட்டையை அடைவார்கள்?” என்றார். “மூன்றுநாழிகை ஆகலாம்” என்றான். “சௌனகர் இல்லாததை உணரமுடிகிறது. என்னால் இவர்களை மேய்த்துவிடமுடிகிறது. அரசகுடியினரிடம் பேச எனக்கு சொல்லில்லை” என்றார் மனோதரர். “யாரிடம் பேசவேண்டும்?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பட்டத்து இளவரசரும் இளவரசர்களும் திரௌபதிதேவியை கோட்டைவாயிலில் வரவேற்பார்கள். அரசரும் விதுரரும் இளவரசியை இங்கே அரண்மனை வாயிலில் வரவேற்பார்கள். காந்தார அரசியர் இளவரசிக்கு நறுந்திலகம் இட்டு இல்லமேற்றுவார்கள். பாண்டவர்களும் யாதவஅரசியும் உடனிருப்பார்கள். இதுதான் எனக்கு சொல்லப்பட்டது. இளவரசர்கள் இன்னும் சித்தமாகவில்லை. பன்னிருவர் வந்து கூடத்தில் காத்திருக்கிறார்கள்.”

பூரிசிரவஸ் “விதுரர்?” என்றான். "அவர் அமைச்சுநிலையில் இருக்கிறார். அரசர் சித்தமாகிவிட்டார். காலையில் இருந்தே அவருக்கு அணிசெய்கை நடந்துகொண்டிருக்கிறது. சற்றுமுன் நினைத்துக்கொண்டு ஒரு பழைய மணியாரத்தை கேட்டார். அது கருவூலத்தில் பழைய நகைகளின் பெயர்நிரையில் சேர்ந்துவிட்டது. அதைத்தேடி எடுத்துக்கொடுப்பதற்குள் அடுத்த கணையாழிக்கான ஆணை வந்துவிட்டது. நகைகளால் அவரது எடை இருமடங்காகப் போகிறது.” பூரிசிரவஸ் “நான் விதுரரை பார்க்கிறேன்” என்றான்.

பூரிசிரவஸ் இடைநாழி வழியாகச்சென்று அமைச்சுமாளிகையை அடைவதற்குள் எதிரே குண்டாசி வந்தான். தொலைவிலேயே அவன் களிமயக்கில் இருப்பது தெரிந்தது. தூண்களின் கீழே காறித்துப்பியும் அவ்வப்போது சுவரைப்பற்றியபடி நின்றும் வந்தவன் அவனைப் பார்த்ததும் சுட்டிக்காட்டினான். அவன் உள்ளம் சற்று பிந்தித்தான் வந்து இணைந்துகொண்டது. “நீ பால்ஹிகன்... நீ...” என்றான்.

பூரிசிரவஸ் கடந்து செல்ல விழைந்தான். ஆனால் நின்றுவிட்டான். “என்னை விழியிழந்தவரிடம் கூட்டிக்கொண்டு செல்... இந்தத் தூண்கள் மிகவும் தள்ளித்தள்ளி இருக்கின்றன” என்றான் குண்டாசி. பூரிசிரவஸ் “இல்லை கௌரவரே, நான் உடனே சென்றாக வேண்டும்” என்றான். “நான் விழியிழந்தவரிடம் ஒன்று கேட்கவேண்டும். உன்னிடம் சொல்கிறேன். நீயே கேள். யானை ஏன் முட்டைகளிட்டு அடைகாப்பதில்லை? ஏன்?” அவன் அஹ் என்று சிரித்தபோது எச்சில் மார்பில் வழிந்தது. “ஏனென்றால் முட்டை உடைந்துவிடும்.” அவன் வாயைத்துடைத்தபடி சிரித்தான்.

பூரிசிரவஸ் கடந்து சென்றான். குண்டாசி கைநீட்டி “இல்லையேல் துரியோதனனிடம் கேள். மூத்த கௌரவரிடம் கேள்” என்றான். அவன் சென்றபோது பின்னால் குண்டாசியின் சிரிப்பின் ஒலி கேட்டது. அவன் விரைந்து நடந்து அமைச்சுமாளிகைக்குள் நுழைந்தான்.

ஏவல்நாயகங்கள் தொடர விதுரரே எதிரில் வந்தார். ”என்ன நிகழ்கிறது?” என்றார். “இளவரசி வந்துகொண்டிருக்கிறார்.” விதுரர் “பால்ஹிகரே, கர்ணன் இன்னும் வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரது அணுக்கர்களுக்கும் பாகனுக்கும் தெரியவில்லை. அவர் வராததனால் மூத்த இளவரசர்கள் அறையிலேயே இருக்கிறார்கள். அவர் வராதது தெரிந்துவிடக்கூடாது என துரியோதனர் நினைக்கிறார்...” என்றார். பூரிசிரவஸ் ”நான் தேடிப்பார்க்கிறேன்” என்றான்.

“ஒற்றர்கள் பலதிசைக்கும் சென்றிருக்கிறார்கள்... நீரும் பாரும்” என்றார் விதுரர். “என்ன சொல்ல? என் தலையெழுத்து... பேரரசர் கீழே இறங்கும்போது மைந்தர்களைத்தான் கேட்பார்.” விதுரர் ஒரு கணம் தயங்கி அவனை அருகே அழைத்தார். மெல்லிய குரலில் ”அங்கரும் துரியோதனரும் இணைந்து இளவரசியை நகருக்குள் அழைத்துவரவேண்டும் என்பது மூத்தவரின் ஆணை. ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக சொல்லிவிட்டார்” என்றார். பூரிசிரவஸ் “நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான்.

திரும்பி ஓடிச்சென்று புரவியில் ஏறி அங்கமாளிகை நோக்கி சென்றான். அவன் அங்கிருக்கமாட்டான் என்று தெளிவாகவே தெரிந்தது. புரவியை நிறுத்திவிட்டு நின்று எண்ணங்களை ஓடவிட்டான். எதுவும் புலப்படவில்லை. வெறித்த விழிகளுடன் கூட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றான். அவனை முட்டியபடியும் தள்ளியபடியும் கூட்டம் சென்றுகொண்டிருந்தது. வணிகத்தெருவிலிருந்து களிமகன்கள் ஒருவன் இன்னொருவனை தலைக்குமேல் தூக்கியபடி கூவியார்ப்பரித்துக்கொண்டு சென்றனர். அவன் குதிரையை இலக்கின்றி திருப்பியபோது அது வால்தூக்கி சாணிபோட்டது. அதன்மேலேயே சிறுநீர் கழித்தது. இயல்பாக ஓர் அகக்காட்சிபோல குதிரைச்சாலையில் இருப்பதை அவன் உணர்ந்தான்.

குதிரைச்சாலையை நெருங்கும்போது வந்த நாற்றம் சற்றுமுன் குதிரை சாணியிட்டு சிறுநீர் கழித்தபோது எழுந்தது என நினைத்துக்கொண்டு அவன் புன்னகைசெய்தான். புரவியை நிறுத்திவிட்டு இறங்கியதுமே அவன் அங்கே கர்ணன் இருப்பதை உணர்ந்துகொண்டான். அவனை நோக்கி வந்த சூதன் “தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அவர் இங்கே என்ன செய்கிறார்?” என்றான். “அவர் நாளும் வருவார். புரவிநூல் எழுதுவதற்காக குதிரைகளை ஆராய்கிறார்.”

சுமைதூக்கும் புரவிகள் மட்டுமே அப்போது அங்கிருந்தன. இரவெல்லாம் பணியாற்றிக் களைத்த அவை விழிமூடி தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி தூண்சாய்ந்து நின்று துயின்றன. அருகே ஒரு மூங்கில் மேல் கர்ணன் அமர்ந்திருந்தான். அவன் முன்னால் நின்று கையிலிருந்த சவுக்கை தூக்கித்தூக்கி அதிரதர் பேசிக்கொண்டிருந்தார். பூரிசிரவஸ் அருகே சென்றதும் கர்ணன் திரும்பி நோக்கினான். “மூத்தவரே, தங்களை தேடித்தான் வந்தேன்” என்றான். கர்ணன் முகத்தில் வந்து மறைந்த வலியை பூரிசிரவஸ் கண்டான். அதை அவன் தன்னுடையதென உணரமுடிந்தது.

“நான் இங்கில்லை என்று சொல்லமுடியுமா பால்ஹிகரே?” என தணிந்த குரலில் கர்ணன் கேட்டான். “ஏன் பொய் சொல்லவேண்டும்? அங்க மன்னன் வரவிரும்பவில்லை. போய் சொல்லும்” என்றார் அதிரதன். பூரிசிரவஸ் பேசாமல் நின்றான். கர்ணன் விழிகளைத் தாழ்த்தி மெல்லிய குரலில் “என்னால் மேலும் அவமதிப்புகளை தாளமுடியாது இளையோனே...” என்றான். ”இதில் அவமதிப்பு என்பது...” என்று பூரிசிரவஸ் தொடங்க கர்ணன் “உமக்குத்தெரியும்” என்றான். ”ஆனால் இது பேரரசரின் ஆணை மூத்தவரே. தங்களுக்காக மூத்த இளவரசர் அங்கே காத்திருக்கிறார். தாங்கள் செல்லவில்லை என்றால் அவரும் செல்லப்போவதில்லை. அதற்கான தண்டனையை அவரே அடைவார்.”

கர்ணன் சினத்துடன் விழிதூக்கி “அவர் ஏன் செல்லாமலிருக்க வேண்டும்?” என்றான். "நீங்கள் கொள்ளும் இதே உணர்வுகளால்தான்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் அவனை நோக்கிவிட்டு மீசையை முறுக்கத் தொடங்கினான். “அரசர் காம்பில்யப்போர் பற்றி அறிந்திருக்கிறார்” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் தலையசைத்தான். “ஆகவேதான் உங்கள் இருவரையும் வாளேந்தி அகம்படி வர ஆணையிடுகிறார்... அதைச்செய்யும் ஆண்மை உங்கள் இருவருக்கும் உள்ளதா என பார்க்க நினைக்கிறார்.” கர்ணன் “ம்” என மெல்ல உறுமினான். “செல்லாமலிருந்தால் அதற்கு ஒரே பொருள்தான், நீங்கள் அஞ்சுகிறீர்கள், நாணுகிறீர்கள். அதை பேரரசர் விரும்பமாட்டார்.”

கர்ணன் ஒரு சொல்லும் பேசாமல் மீசையை முறுக்கியபடி அமைதியாக இருந்தான். அதிரதன் “அங்கமன்னர் சிந்திக்கிறார் என்று பேரரசரிடம் சென்று சொல்லும்” என்றார். கர்ணன் எழுந்து “செல்வோம்” என்றான். “தாங்கள் ஆடையணிகள்...” என்று பூரிசிரவஸ் சொல்ல “தேவையில்லை” என்று சொல்லி அவன் ஒரு புரவியை அவிழ்த்தான். “நான் அரண்மனைக்குச் செல்கிறேன். பால்ஹிகரே, நீரும் வருகிறீரா?” பூரிசிரவஸ் "இல்லை நான் கோட்டைமுகப்புக்கு செல்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் இளவரசி வந்து விடுவார்” என்றான்.

கிழக்குக்கோட்டைவாயிலில் புன்னைமரப்பூக்கள் பரவிய பெருக்கு போல வண்ணத்தலைப்பாகைகளால் ஆன பரப்பு அலையடித்தது. ஓசைகள் இணைந்து முழக்கமாகி ஓசையின்மையாக மாறியிருந்தன. காவலர் செல்வதற்கான வழியினூடாக அவன் சென்றான். கோட்டைக்காவலர்தலைவன் அவனைக்கண்டு “நான் எங்காவது ஓடிவிடப்போகிறேன் இளவரசே. இத்தனை கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் படைகளுக்கு இல்லை...” என்றான். “கூட்டம் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளும்... அஞ்சவேண்டாம்” என்று அவன் சொன்னான். குறுகிய மரப்படிகள் வழியாக கோட்டைக்குமேல் ஏறிச்சென்று முதல் காவல்மாடத்தில் நின்று நோக்கினான்.

கோட்டையின் இருபக்கமும் மக்களின் தலைகளால் ஆன பெருக்கு சுழித்தது, தேங்கியது, அலையடித்து ஒதுங்கி மீண்டும் இணைந்தது. அதன் ஓசை கோட்டைச்சுவர்களில் மோதி பல இடங்களில் இருந்து வந்து சூழ்ந்துகொண்டது. அவன் விழியோட்டிக்கொண்டு திரும்பியபோது அஸ்தினபுரியின் மாபெரும் கைவிடுபடைகளை கண்டான். முறுக்கப்பட்ட இரும்புவிற்களில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான அம்புகளுடன் அவை முள்ளம்பன்றி போல உடல்சிலிர்த்து நின்றிருந்தன. அதன்பின் அவன் கைவிடுபடைகளை மட்டுமே நோக்கினான். நூற்றுக்கணக்கான சதக்னிகள், ஆவசக்கரங்கள், சகஸ்ராவங்கள், ஸ்தானபாணங்கள். அவையனைத்தும் ஒவ்வொரு நாளும் பேணப்பட்டு எண்ணைமின்ன அக்கணம் தொடுக்கப்பட்டவை போல மறுகணம் எழப்போகிறவை போல நின்றிருந்தன.

அவை விடுபடுமென்றால் மறுபக்கம் பெருகிக்கிடக்கும் பல்லாயிரம் பேரை ஓரிரு கணங்களில் கொன்றழிக்கமுடியும். அங்கே குருதிபெருகி மண் சேறாகும். என்ன எண்ணங்கள் என அவன் விழிதிருப்பிக்கொண்டான். ஆனால் மீண்டும் பார்வை அவற்றை நோக்கியே சென்றது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஓசைகள் வழியாக மேலும் பெருங்கூட்டத்தை அறிந்தான். ஆனால் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. மண்ணில் அதுவரை நிகழாத பெரும்போர். குருதியின் மணம். அவன் விழிகளை திறந்தபோது முதற்கணம் பெருதிரள் மாறிமாறி வெறியுடன் கொன்றுகொண்டிருப்பதை கண்டான். நடுக்கம் கடந்த மறுகணத்தில்தான் திரௌபதி கோட்டைமுகப்பில் வந்துவிட்டிருப்பதை உணர்ந்தான்.

இரண்டு ஆற்றுநீர்ப்பெருக்குகள் இணைவதுபோல திரௌபதியுடன் வந்த கூட்டமும் காத்து நின்ற கூட்டமும் இணைந்தன. மேலிருந்து பார்க்கையில் திரௌபதியின் பொற்தேர் விண்ணிலிருந்து விழுந்த ஒரு பெரிய காதணி போல இளவெயிலில் மின்னியது. கூட்டத்தின் அலைக்கழிப்பில் சுழன்றது. கோட்டைக்குள் மெல்லமெல்ல அது நுழைவதை கண்டான். கோட்டையின் பெருவாயிலுக்குள் அது நுழைந்ததும் ஓடிச்சென்று மறுபக்கம் பார்த்தான். அவனுக்குக் கீழே முரசு மாடத்தில் மூன்று பெருமுரசுகளையும் கோல்காரர்கள் வியர்வை வழிய தசைகள் இறுகி நெகிழ பெருங்கழிகளால் முழக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை விழிகளால்தான் பார்க்கமுடிந்தது. ஓசையை வானை நிறைத்திருந்த பெருங்கார்வை முழுமையாக உள்ளிழுத்து கரைத்துக்கொண்டது.

கோட்டைக்குக் கீழே திரௌபதியின் பொற்தேர் தோன்றியதும் அப்பகுதியே கொந்தளித்தது. வீசும் கைகளும் எம்பிக்குதிக்கும் தலைகளும் பொங்கியமையும் ஆடைகளுமாக வண்ணக்கடல் அலையடித்தது. அந்தத் திரள்பெருக்கின் மீது பொற்தேர் பொன்வண்டு போல மெல்ல ஊர்ந்தது. அது நின்றதும் எதிரே யானைநிரைக்கு முன்னால் வாளுடன் நின்றிருந்த கர்ணனும் துரியோதனனும் நடந்துவந்து தேர்வாயிலை அடைந்தனர். தலைவணங்கி தேர்க்கதவை அவர்கள் திறக்க திரௌபதி வெளிவந்தாள். கூப்பிய கைகளுடன் தேர்வாயிலில் நின்றாள்.

வாழ்த்தொலிகளும் பல்வேறு இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து உருவான அதிர்வால் அக்காட்சியே திரைச்சீலை ஓவியமென அலையடித்தது. பல்லாயிரம் கைகளிலிருந்து எழுந்து விழுந்த மலர்களும் மஞ்சளரிசியும் பொன்னிற அலைகளென தெரிந்தன. திரௌபதி நகரின் மண்ணில் கால்வைத்ததும் பதினாறு எரியம்புகள் ஒன்றாக வானில் எழுந்து வெடித்து எரிமலர்களாக விரிந்து விண்மீன்களாக மாறி பொழிந்தன.

திரௌபதியை கர்ணனும் துரியோதனனும் அழைத்துச்சென்று ஒரு பட்டுவிரிக்கப்பட்ட மரமேடைமேல் ஏற்றி நிறுத்தி இருபக்கமும் வாளுடன் நின்றனர். பானுமதியும் அசலையும் துச்சளையும் சேடியர் மங்கலத்தாலங்களுடன் இருபக்கமும் வர அவளை எதிர்கொண்டு வரவேற்று நெற்றியில் நறுந்திலகமிட்டு அரிமலர் தூவி வாழ்த்தினர். அவர்களுக்குப்பின்னால் நூற்றுவரின் இளவரசிகள் அனைவரும் முழுதணிக்கோலத்தில் நிரைவகுத்திருந்தனர். கௌரவ மணமகளிரும் இளவரசிகளும் அனைவரும் ஒன்றேபோல இளஞ்சிவப்பு நிறமான அரையாடைகளும் சால்வைகளும் தலையாடைகளும் அணிந்திருந்தனர். அத்தனை உயரத்திலிருந்து பார்க்கையில் இளஞ்செந்நிற மலர்மாலையின் நுனியில் நீலத்தாமரையை குச்சமாக கட்டியதுபோல திரௌபதியும் இளவரசிகளும் தெரிந்தனர்.

பொன்னால் ஆன அம்பாரியில் செம்பட்டு இருக்கையுடன் பட்டத்துயானை வந்து நின்றது. பொன்முகபடாமும் பொற்பட்டு தொங்கல்போர்வையும் பொன்தந்தக்காப்பும் பொற்குண்டுகள் கொண்ட காதுமலர்களுமாக பேருருவம் கொண்ட பொன்வண்டு போலிருந்தது. கர்ணனும் துரியோதனனும் திரௌபதியை அதனருகே அழைத்துச்சென்றனர். பட்டுநூலேணிவழியாக அவள் ஏறி அம்பாரியில் கைகளைக்கூப்பியபடி அமர்ந்தாள். முரசுகள் ஏற்றப்பட்ட முதல்யானை கிளம்பி எறும்புகளை வகுந்து கருவண்டு செல்வதுபோல கூட்டத்தை ஊடுருவிச்சென்றது. அதன்பின் கொம்புகள் ஏந்திய சூதர்களுடன் இரண்டாவது யானை. அணிப்பரத்தையர் ஏறிய மூன்று யானைகள் சென்றபின் பட்டத்து யானை திரௌபதியுடன் சென்றது.

களிவெறிகொண்ட மக்கள் கைகளை வீசி ஆர்ப்பரித்தனர். இருபக்கமும் உப்பரிகைகளில் இருந்து அவள்மேல் மஞ்சளரிசியும் மலர்களும் பொழிந்தன. முகில்களை காலால் அளைந்து வானில் நடப்பவள் போல அவள் அசைந்தசைந்து சென்றாள். அதைத்தொடர்ந்து பானுமதி ஏறிய யானை. அதன்பின் துச்சளையின் யானையும் அசலையின் யானையும் தொடர்ந்தன. கௌரவரின் மணமகளிர் ஒவ்வொருவரும் ஒரு யானைமேல் ஏறி நிரைவகுத்துச்சென்றனர். யானைகளின் நிரை கொன்றைமலர்ப்பரப்பில் வளைந்துசெல்லும் கரிய நாகம்போல மொய்த்து அலையடித்த தலைப்பாகைகளின் வண்ணக்கொந்தளிப்பின் நடுவே சென்றது.

பூரிசிரவஸ் அந்த வரிசை சென்று மறைவதை நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக்கூட்டத்தில் எங்கோ அந்த சார்வாகனும் இருப்பான் என்று தோன்றியது. ஆனால் திரள் தனியென எவருமில்லாமலாக்கிவிட்டிருந்தது. அவன் விழிகள் தேடித்தேடி சலித்தன. பின்னர் பெருமூச்சுடன் அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 10

சுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்குள் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி வழிவதுபோல சென்றது. கரையோரங்களில் சேறுபடிந்திருக்கவில்லை.

அவனுடைய புரவி விடாய்கொண்டிருந்தது. நீரின் மணத்தைப்பெற்றதும் அதுவும் விரைவுகொண்டு தலையை ஆட்டியபடி முன்னால்சென்றது. அவன் நதியின் அருகே சென்றதும் குளிரை உணர்ந்தான். நெருங்க நெருங்க உடல் சிலிர்த்தது. புரவியை விட்டு இறங்கியதும் அது நேராக நீரை நோக்கி சென்றது. கரைமரத்தில் கட்டப்பட்ட படகில் இருந்த முதியகுகன் உரக்க “வீரரே, நீரை குதிரை அருந்தலாகாது. பிடியுங்கள்” என்றான். அவன் குதிரையைப் பிடித்து கடிவாளத்தை இழுத்தான். அது தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து பெரிய பற்கள் தெரிய வாய் திறந்து கனைத்தது. விழிகளை உருட்டியபடி சுற்றிவந்தது.

“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு... அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா?” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”

குதிரையுடன் அணுகி “நான் மறுகரை செல்லவேண்டும்” என்றான். “நீர்ப்பெருக்கு வல்லமையுடன் இருக்கிறது. நான் துழாவிக்கொண்டுசெல்லமுடியாது. என் கைகள் தளர்ந்துவிட்டன” என்றான் குகன். “என் மைந்தர்கள் அதோ மறுகரையில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கச் சொல்கிறேன்.”

பூரிசிரவஸ் படகில் அமர்ந்தபடி “இங்கு பெரிய படகுகள் உண்டல்லவா?” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா? படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள்?”

பூரிசிரவஸ் “பால்ஹிகநாட்டுக்கு...” என்றான். “அப்படியென்றால் நீங்கள் ஆறு சிந்துக்களை கடக்கவேண்டுமே. நீங்கள் தெற்காகச் சென்று கடந்துசெல்வதே நன்று... பிற ஆறுகள் இன்னும் விரைவுள்ளவை.” பூரிசிரவஸ் “ஆம். அதைத்தான் செய்யவேண்டும்” என்றான்.

நீரில் படகு அணுகுவதை பார்த்தான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய குதிரை அசையாமல் தலைதாழ்த்தி நின்றது. அதன் கடிவாளத்தை பிடித்தபடி அவன் குறுக்குப்பட்டைப்பலகையில் தலைதூக்கி நீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அதனாலேயே அவனுக்கு அவனை பிடித்திருந்தது. பெரும்பாலான பயணிகள் படகிலிருக்கையில் கரைகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீரை நோக்குபவர்கள் இன்னும் ஆழமானவர்கள். கலைந்து பறக்கும் அவனுடைய குழல்கற்றையை நோக்கிக்கொண்டிருந்தான்.

அவன் பறந்து அணுகுவதுபோல தோன்றியது. அல்லது எதுவுமே நிகழாமல் நடுவே இருக்கும் காலமும் வெளியும் சுருங்கிச்சுருங்கி அவர்களை அணுகச்செய்வது போல. அவனுடைய விழிகள் தெரிந்தன. மேலும் அணுகியபோது அவன் யாதவன் என்பதை ஆடைகட்டப்பட்டிருந்ததில் இருந்தும் கழுத்தின் இலச்சினையிலிருந்தும் உணர்ந்தான்.

படகு மரங்களுக்குள் புகுந்தது. அதை ஓட்டிய இளம் குகர்கள் துடுப்பால் அடிமரங்களை உந்தி உந்தி அதை விலக்கியும் செலுத்தியும் நெருங்கி வந்தனர். படகு சரிந்துகிடந்த பெரிய மரத்தை அணுகியதும் அதைத் திருப்பி விலா உரச நிறுத்தினர். இளைஞன் எழுந்து தன் குதிரையின் கழுத்தை தட்டினான். அது நீரை நோக்கி தயங்கி உடலை பின்னால் இழுத்தது. அவன் நீரில் குதித்து முழங்காலளவு நீரில் நின்று அதை இழுத்தான். குதிரை விழிகளை உருட்டி பெருமூச்சுவிட்டபின் மெல்ல நீரில் இறங்கியது.

அதன் உடல் குளிரில் சிலிர்க்க வால் தூக்கி பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. அந்த மணமறிந்த பூரிசிரவஸ்ஸின் குதிரை தொலைவில் தலைதூக்கி கனைத்தது. இளைஞனின் குதிரை ஏறிட்டு நோக்கி விழியுருட்டி மறுமொழி சொன்னது. அவன் அதன் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வயலருகே மரத்தில் கட்டினான். பூரிசிரவஸ் அவனை நோக்க அவன் புன்னகை செய்தான். தோள்களில் சூடு போட்டது போன்ற தழும்புகள். அவன் தொழும்பனா என்ற வியப்பும் தொழும்பர்கள் புரவியேற முடியாதே என்ற எண்ணமும் ஏற்பட்டது.

“நான் மறுகரை செல்லவேண்டும் குகர்களே” என்றான் பூரிசிரவஸ். “வீரரே, நீரின் விசை மிகையாக உள்ளது. இக்கரை வருவதற்குள் கைசோர்ந்துவிட்டோம்” என்றான் ஒருவன். “தாங்கள் இங்கு தங்கி நாளை செல்லலாமே!" பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்...” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்...” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி "வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா?” என்றான். “ஆம்” என்றான் அவன்.

வீரன் அருகே வந்து வணங்கி “நான் யாதவனாகிய சாத்யகி. தாங்கள்?” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் "நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே... எங்கு செல்கிறீர்கள்?” என்றான். “தமையன் உடனே வரும்படி செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே நாடு திரும்புகிறேன்.”

சாத்யகி “தனியாகவா?” என்றான். “ஆம், நான் எப்போதுமே தனியாக புரவியில் செல்வதை விரும்புகிறவன்.” “நானும்தான்” என்றபடி சிரித்தான் சாத்யகி. “அமருங்கள்” என்றதும் படகின் விளிம்பில் அமர்ந்தான். இரு இளம் குகர்களும் சற்று விலகி அமர்ந்து வெற்றிலைமெல்லத் தொடங்கினர். முதியவன் அடுப்பு மூட்டி கலத்தை வைத்தான். “நீங்கள் இளையயாதவரின் அணுக்கர் என அறிவேன்” என்றான் பூரிசிரவஸ். சாத்யகி சிரித்தபடி "நான் இளைய யாதவரின் தொழும்பன். என் தோள்குறிகளை நீங்கள் பார்ப்பதைக் கண்டேன்” என்றான். “தொழும்பர் என்றால்...?” சாத்யகி “அவருக்கு அடிமைசெய்வேன்” என்றான்.

பூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின் “அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்” என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து ”உண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்” என்றான்.

“அஸ்தினபுரியில் மணிமுடிசூட்டுவிழா சிறப்புற நிகழ்ந்ததை அறிந்தேன். என்னை இளைய யாதவர் துவாரகையில் இருக்கச்செய்துவிட்டார். இப்போது அவர் துவாரகைக்கு கிளம்புகிறார். என்னை அர்ஜுனருடன் இருக்கச் சொன்னார். நான் அவரிடம் வில்வித்தை கற்கிறேன்.”

பார்த்ததுமே அவன் வெளிப்படையாகப் பேசத்தொடங்கியது பூரிசிரவஸ்ஸுக்கு பிடித்திருந்தது. “மிகச்சிறப்பான விழா. நீங்கள் இருந்திருந்தால் அழியா நினைவாக இருந்திருக்கும்” என்றான். “பாஞ்சால இளவரசியும் மூத்த பாண்டவரும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்தனர். துரியோதனரும் துச்சாதனரும் இருபுறமும் நின்று அவர்களை அழைத்துச்சென்று அமரச்செய்தனர். அதன்பின் துரியோதனருக்கே அஸ்தினபுரியின் மணிமுடியை மூத்தபாண்டவர் அளித்தார். அவர் தட்சிணகுருநாட்டை மூத்தபாண்டவருக்கு அளித்தார்.”

சாத்யகி “நாடு இரண்டாகியது இல்லையா?” என்றான். “ஆம், ஆனால் குடி ஒன்றாகியது. ஒவ்வொருவரும் மாறிமாறி தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டனர். எங்கும் உவகையும் சிரிப்பும்தான் நிறைந்திருந்தது. அரசகுடியினரிலிருந்து அது அவையினருக்கும் நகருக்கும் பரவியது... நகரமே சிரித்துக் களித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.”

சாத்யகி “பால்ஹிகரே, உள்ளங்கள் ஒன்றாயின என்றால் ஏன் நாடுகள் பிரியவேண்டும்?” என்றான். பூரிசிரவஸ் அந்த நேரடிவினாவின் முன் திகைத்து சொல்லிழந்தான். ”நாடுகள் பிரிகின்றன என்பது மட்டுமே உண்மை. பிற அனைத்தும் அவர்கள் அறியாமல் செய்யும் நடிப்புகள். அந்த உண்மையை தங்களிடமே மறைத்துக்கொள்வதற்காக மிகையுணர்ச்சி கொள்கிறார்கள். தெய்வங்கள் மானுடரை கண்கட்டி விளையாடச்செய்யும் தருணம் இது.”

பூரிசிரவஸ் சீண்டப்பட்டு “அப்படி உடனே சொல்லிவிடவேண்டியதில்லை... உண்மையில்...” என தொடங்க “அப்படியென்றால் நாட்டை பிரிக்கவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அத்தனை உணர்வெழுச்சியும் தலைகீழாக ஆகியிருக்கும். சிந்தித்துப்பாருங்கள். அப்படி எவரேனும் சொன்னார்களா? இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்றான் சாத்யகி.

பூரிசிரவஸ் “சொல்லவில்லை” என்றான். “அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவேதான் அவர்கள் சொல்லவில்லை.” பூரிசிரவஸ் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மைதான்” என்றான்.

அவர்களிடையே அமைதி நிலவியது. சாத்யகி அதை குலைத்து ”எப்போது இந்திரப்பிரஸ்தத்தின் பணிகள் தொடங்குகின்றன?” என்றான். “அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”

சாத்யகி “படகுகளை எடைதூக்கப் பயன்படுத்தும் கலையை துவாரகையின் சிற்பிகள் கற்பிப்பார்கள். விரைவிலேயே முடித்துவிடமுடியும்...” என்றான். “இந்திரனுக்குரிய நகரம் என்றார்கள். துவாரகையை விடப்பெரியது என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.” சாத்யகி புன்னகைசெய்தான். “இந்திரப்பிரஸ்தம் எழுவதைப்பற்றி கௌரவர்கள் கவலைகொள்ளவில்லை. ஜயத்ரதர்தான் சினமும் எரிச்சலுமாக பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ்.

சாத்யகி “அவருக்கென்ன?” என்றான். “அவருக்கு திரௌபதியின் மீது தீராத வஞ்சம் இருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா?” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா?” பூரிசிரவஸ் “அவரும் வஞ்சம் கொண்டிருக்கலாம்” என்றான்.

சாத்யகி புன்னகையுடன் “நீர் வஞ்சம் கொண்டிருக்கிறீரா?” என்றான். “நானா? எவரிடம்?” என்று பூரிசிரவஸ் திகைப்புடன் கேட்டான். சாத்யகி சிரிப்பு தெரிந்த விழிகளுடன் “நீர் இழந்த பெண்ணிடம். அவளை மணந்தவரிடம்” என்றான். அவ்வேளையில் முதியகுகன் இன்கடுநீர் கொண்டுவந்தான். மூங்கில்குவளைகளில் அதை எடுத்துக்கொண்ட அசைவில் பூரிசிரவஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். “நீர் விரும்பவில்லையேல் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாத்யகி.

“யாதவரே, உம்மிடம் நான் கொள்ளும் அணுக்கம் எவரிடமும் அறிந்திராதது” என்றான் பூரிசிரவஸ். “நான் இழந்தேன். துயர்கொண்டிருக்கிறேன். வஞ்சம் கொள்ளவில்லை.” சாத்யகி “அது நன்று” என்றான். “அந்த வஞ்சத்தால் எஞ்சியவாழ்நாள் முழுக்க நீர் அனைத்து இன்பங்களையும் இழந்துவிடக்கூடும்.” பூரிசிரவஸ் “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதை இவ்வேளையில் சொற்களாக கேட்கையில் அகம் உறுதிகொள்கிறது” என்றான்.

சாத்யகி “சில வேளைகளில் இழப்புகூட நமக்கு உகந்ததாக இருக்கலாம் பால்ஹிகரே. நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும். யாதவர்களின் ஒரு கதை இது” என்றான். பூரிசிரவஸ் திகைப்பு நிறைந்த கண்களுடன் சாத்யகியை பார்த்தான். அவன் அனைத்தும் அறிந்து சொல்வதுபோல தோன்றியது. ஆனால் எப்படி அறிந்தான்?

சாத்யகி சிரித்து “அஞ்சவேண்டாம். நான் எதையும் அறிந்து சொல்லவில்லை” என்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சாத்யகி மேலும் சிரித்து “ஆனால் ஜயத்ரதரைப் பற்றி சொன்ன உங்கள் விழிகளில் அறியவேண்டிய அனைத்தும் இருந்தன” என்றான். பூரிசிரவஸ்ஸால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சாத்யகி “நாம் இளைஞர்கள் ஏன் இத்தனை எளியவர்களாக இருக்கிறோம்?” என்றான். பூரிசிரவஸ் “நம்முடைய இடரே நம்மை சிக்கலானவர்கள் என்று மதிப்பிட்டு நம்மிடம் பழகும் பெரியவர்களால்தான்” என்றான். சாத்யகி தேவைக்குமேல் உரக்கச்சிரித்து “ஆம், அது உண்மை” என்றான்.

குகர்கள் எழுந்தனர். “கிளம்பலாம் வீரரே. இருட்டுவதற்குள் மறுகரை சென்றுவிடவேண்டும்” என்றான் ஒருவன். “நான் வருகிறேன் யாதவரே. நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.” சாத்யகி “நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம் என நினைக்கிறேன் பால்ஹிகரே. நீங்கள் எனக்கு மிக அண்மையானவர் என்று என் அகம் சொல்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரிக்க சாத்யகி அவனை தழுவிக்கொண்டான். “வருகிறேன்” என மீண்டும் சொல்லிவிட்டு பூரிசிரவஸ் சென்று படகில் ஏறினான். முதியகுகன் அவன் புரவியை அவிழ்த்து வந்தான்.

“இதே சிரிப்புடன் செல்லுங்கள்” என்று சாத்யகி கூவினான். பூரிசிரவஸ் “ஆம், இனி சிரிப்புதான்” என்றான். புரவி நீரில் நடந்து நின்று சிலிர்த்து சிறுநீர் கழித்தது. சாத்யகியின் புரவி திரும்பி கனைத்தது. குகன் புரவியின் புட்டத்தை அடிக்க அது பாய்ந்து படகில் ஏறி அதன் ஆட்டத்திற்கு ஏற்ப எளிதாக உடலை சமன் செய்துகொண்டு நின்றது. குகர்கள் இருவரும் ஏறி துடுப்புகளால் மரங்களை உந்தினார்கள். அந்திச்செவ்வெயிலில் சாத்யகியின் முகத்தை நோக்கி பூரிசிரவஸ் கையை தூக்கினான். “சென்றுவருக!” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க!” என்றான் பூரிசிரவஸ்.

[வெண்முகில்நகரம் நிறைவு]


Venmurasu VI

Venmugil Nagaram describes the background stories that led to the development of Indrprastha, the city of Pandavas. Its axis is Draupadi, The novel begins with her coming to Asthinapuri as the Queen and ends at the point when she orders the Indraprastha to be built. The novel's main foreground characters are Bhurishravas and Satyaki. While they played minor parts in the Mahabharata, Venmugil Nagaram expands them in great detail. It describes their lands, their clans and their politics and through it all, the subtle depth of their relationship.!