Venmurasu V

05-பிரயாகை

ஜெயமோகன்



Prayagai is the story of Draupadi's birth, youth and marriage with the Pandavas. In parallel it describes the rise of Krishna and his city of Dwaraka.!

பகுதி ஒன்று : பெருநிலை - 1

விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை. பிரம்மனின் குலத்து உதித்த சுயம்புமனுவின் மைந்தன் உத்தானபாதன் தன் இரண்டாம் மனைவி சுருசியை விரும்பினான். முதல்மனைவி சுநீதியை வெறுத்தான். ஏன் வெறுக்கிறேன் என்று கேட்டுக்கொள்ளும்போதெல்லாம் ஏன் விரும்புகிறேன் என்ற விடையின்மையையே சென்றடைந்தான். விளக்கமுடியாமையே அவ்வுணர்ச்சிகளுக்கு அச்சம்தரும் விரிவை அளித்து அவனை அதிலிருந்து விலகமுடியாமல் கட்டிப்போட்டது.

சுருசியும் சுநீதியும் இரட்டைப் பேரழகிகள். ஆகவே உத்தானபாதன் ஒருத்தியுடன் இருக்கையில் இன்னொருத்தியின் நினைவாகவே இருந்தான். சுருசியின் காமத்தில் இருக்கையில் சுநீதியை நினைத்து கசந்தான். அக்கசப்பால் அவளுடன் மேலும் நெருங்கினான். அவளுடைய உடலின் மறைவுகளுக்குள் புதைந்துகொண்டான். அதன் வழியாக அவள் உள்ளத்தை மேலும் நெருங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டான். சுநீதியுடன் இருக்கையில் சுருசியை எண்ணி ஏங்கினான். அந்த ஏக்கத்தால் அவளை மேலும் வெறுத்து அவளுடைய காதல்கரங்களை தட்டி விலக்கினான். சினமெழுந்த சொற்களைச் சொல்லி அவள் கண்ணீரைக் கண்டு அடங்கினான்.

விலக்குவதன் வழியாக சுநீதியை தவிர்க்கமுடியாமல் தன்னைத் தொடரச்செய்தான் உத்தானபாதன். முற்றிலும் ஆணவமழிந்து தன்னுணர்வின் இறுதித் துளியையும் அவன் முன் படைத்து அவள் சரணடைந்தாள். ஆகவே வென்று கடந்துசெல்லப்பட்டவளாக ஆனாள். திரும்பிப்பார்க்கப்படுபவளாக அவனருகே நின்றாள். அடைக்கலமாவதன் வழியாக சுருசியை பெரியவளாகச் செய்தான். வழிபடுவதன் வழியாக அவளுடைய ஆணவத்தை ஒவ்வொரு கணமும் ஊதிவளர்த்தான். அந்தப் பேருருவின் முன் மனம் பதைத்து மேலும் சிறுமைகொண்டான். வெல்லவேமுடியாததன் மீது எழும் தவிர்க்கமுடியாத பெரும்பித்தை தன்னுள் நிறைத்துக்கொண்டான். எண்ணி எண்ணி கனவுகாணப்படுபவளாக, மீளமீள வந்து சேருமிடமாக சுருசி அவன் முன் நின்றிருந்தாள்.

சுநீதியை வெறுப்பதன் வழியாகவே அவளை நெருங்கமுடிந்தது. வெறுப்பை வளரச்செய்து குரூரமாக ஆக்கி அதை குற்றவுணர்ச்சியாகக் கனியச்செய்து அதன்பின் கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டான். அத்தருணத்தைத் தாண்டாத அவ்வுணர்வெழுச்சியாலேயே அவளுடன் உறவுகொள்ள முடிந்தது. மாறாக சுருசியின் மீதான விருப்பத்தால் அவள்முன் சிறுமைகொண்டு அதனால் புண்பட்டான். அதைச் சீற்றமாக ஆக்கி அவளை வெறுத்துத் தருக்கி எழுந்து நின்றிருக்கையில் அவள் அளிக்கும் மிகச்சிறிய காதலால் முற்றிலும் உடைந்து அவள் காலடியில் சரிந்தான். சுநீதியின் முன் ஆண்மகனாக நிமிர்ந்து நின்றான். சுருசியின் முன் குழந்தையாகக் கிடந்தான்.

தன் தந்தையான சுயம்புமனுவின் முன் சென்று அமர்ந்து உத்தானபாதன் கேட்டான் “எந்தையே, விருப்பு வெறுப்பின் லீலையை அறிந்த மானுடர் எவரேனும் உள்ளனரா இப்புவியில்?” சுயம்புமனு புன்னகை செய்து “மானுடர் அனைவரும் அந்த லீலையை அறிவர். அதை ஏற்கமறுத்து பதறி விலகிக்கொண்டும் இருப்பர்” என்றார். திகைத்து கைகூப்பிய உத்தானபாதன் “நான் தவிக்கிறேன் தந்தையே. இந்த இருமுனை ஆடலால் என் வாழ்வே வீணாகிறது” என்றான்.

சிரித்தபடி “அந்த இருமுனையாடல் இல்லையேல் உன் வாழ்வில் எஞ்சுவதுதான் என்ன?” என்று சுயம்புமனு கேட்டார். ”உணர்ச்சிக்கொந்தளிப்புகள் கொண்ட வாழ்க்கை அமைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு வேறேதும் தேவைப்படுவதில்லை வாழ்க்கையை நிறைக்க.” “இந்தவதையே என் வாழ்க்கையாகுமா?” என்றான் உத்தானபாதன். “வதையற்ற வாழ்க்கை நிகழ்வுகளுமற்றது. காற்று வீசாதபோது காற்றுமானி பொறுமையிழந்து காத்திருக்கிறது” என்றார் சுயம்புமனு.

நெடுமூச்சுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்த உத்தானபாதன் நீண்டநேரம் கழித்து எழுந்து தந்தையின் கால்தொட்டு வணங்கிக் கிளம்பும்போது “உன் ஒரு பக்கம் சிறந்த நீதி. இன்னொருபக்கம் அழகிய சுவை. அத்தனை ஆட்சியாளர்களும் நீதிக்கும் ருசிக்கும் நடுவே நிறுத்தப்பட்டவர்களே. அவர்களின் இயல்புக்குரியதை தேர்வுசெய்கிறார்கள். வரலாற்றை வெல்கிறார்கள், அல்லது வரலாற்றால் நசுக்கப்படுகிறார்கள்” என்றார் சுயம்புமனு.

திகைத்த விழிகளால் நோக்கிய உத்தானபாதனிடம் “நீதி ஆளும்படி கோருகிறது. ருசி அடிமையாகும்படி சொல்கிறது. நீதி ஆறுபக்கத்தையும் முழுமையாகப் பார்க்கமுடிவது. ருசியோ முடிவில்லாத பக்கங்கள் கொண்ட வைரம். ருசியின் மாயமே பிரம்மத்தின் படைப்புத்திறனுக்கு முதல்சான்று” என்றார் சுயம்புமனு. “சென்றுவருக! ஒருவன் கொண்டுவராத எதையும் இப்புவியில் அடையமுடியாது.”

அச்சொற்களை தன்னுள் ஓட்டியபடியே மீண்டுவந்தான் உத்தானபாதன். புரவியை நிறுத்தி அரண்மனை களமுற்றத்தைக் கடந்து மகளிர்மாட முற்றத்தில் நின்று இருபக்கத்தையும் நோக்கினான். அவன் எண்ணிமுடிவெடுப்பதற்குள்ளாகவே அவன் உடல் வழக்கம்போல இடப்பக்கம் திரும்பி சுருசியின் அரண்மனையை நாடியது. எந்த மானுடனாவது உடலின் வலம் இடத் தேர்வை அவனே செய்யமுடியுமா என அவன் வியந்துகொண்டான். அது அன்னைக் கருவுக்குள் உடல் ஊறத்தொடங்கும்போதே ஒருவனில் கூடுவதல்லவா?

உத்தானபாதன் பாதிவழியில் உடலின் கடிவாளத்தை உள்ளத்தால் இழுத்து நிறுத்தி நின்று திரும்பி சுநீதியின் அரண்மனை நோக்கி சென்றான். அவ்வேளையில் அவனை எதிர்பாராத அவள் ஏவல்சேடியின் சொல்கேட்டதுமே சிரிப்பும் பதற்றமுமாக ஓடிவந்து மூச்சிரைக்க அவன் முன் நின்றாள். அவளுடைய வியர்த்த முகத்தையும் மூச்சிரைப்பில் அசைந்த முலைகளையும் காதல்நிறைந்த விழிகளையும் கண்டதும் அவன் பெரும் இரக்கத்தை அடைந்தான். அவ்விரக்கம் அவனுள் காமம் எழாது செய்தது. இரக்கம் பனிப்புகைபோன்றது, காமத்தைப்போல பளிங்குப்பாறை அல்ல என அவன் அறிந்திருந்தான்.

“எண்ணவே இல்லை, இன்று நான் கருணைக்குரியவளானேன்” என்றாள் சுநீதி. எங்கோ எழுதிவைக்கப்பட்ட சொற்கள். “அடியவளின் அறைக்கு வரவேண்டும்” என்று அவன் கைகளைப் பற்றினாள். காலகாலமாக சொல்லப்பட்டு வரும் சொற்கள். இந்தச் சொற்களின் ஓரத்தில் சற்று வஞ்சம் இருந்திருந்தால், புன்னகையில் எங்கோ வன்மம் கலந்திருந்தால், விழிகளுக்குள் குரூரம் மின்னியிருந்தால் இவளுக்கு இக்கணமே அடிமையாகியிருப்பேன். எத்தனை குரூரமான விதியை இப்புவி இயற்றியவன் ஆக்கியிருக்கிறான். இப்புவியில் பேரன்பைப்போல சலிப்பூட்டுவது என ஏதுமில்லை.

அவளுடன் இருக்கையில் எல்லாம் சுருசியையே எண்ணிக்கொண்டிருந்தான். இவளுடன் இருப்பது இதமாக இருக்கிறது. இவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சென்று கச்சிதமாக அமர்வதற்கான பள்ளம் என் உள்ளத்தில் முன்னரே இருக்கிறது. இவளை விரும்புவதற்கு இனியொரு காரணத்தையும் நான் கண்டடையவேண்டியதில்லை. சுநீதி உள்ளே ஓடிச்சென்று தன் சிறுமைந்தன் துருவனை அழைத்துவந்தாள். “மைந்தா, உன் தந்தையை வணங்குக. அவரது அருளால் நீ அழியாப்புகழ் கொண்டவனாக ஆவாய்” என்றாள்.

வெளிறிய சிறுமார்பும் ஒடுங்கிய தோள்களும் கூர்ந்த சிறுமுகமும் கொண்ட சின்னஞ்சிறுவன். அவன் முகமெங்கும் விழிகளெனத் தோன்றியது. ஒருமுறைகூட அவனை அத்தனை கூர்ந்து நோக்கியதில்லை என்று எண்ணிக்கொண்டான். “வணங்குகிறேன் தந்தையே” என்று மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டு துருவன் வந்து உத்தானபாதனின் கால்களைத் தொட்டான். சிறு பல்லிக்குஞ்சு ஒன்று காலில் ஏறமுயல்வதுபோல அந்தத் தொடுகை அவனை கூசவைத்தது. உடல் விதிர்க்க கைகளை நீட்டி அவன் மென்மயிர்க்குடுமியைத் தொட்டு ஆசியளிக்கையில் பார்வையை விலக்கிக்கொண்டான்.

மைந்தன் சென்றபின் அவன் மஞ்சத்தில் அமர்ந்தான். சுநீதி அவனருகே அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “தங்களை இறைவடிவமாகவே எண்ணுகிறான் மைந்தன். இவ்விளவயதிலேயே ஒவ்வொன்றிலும் அவனுக்கிருக்கும் முழுமையான ஈடுபாட்டை சொல்லிச்சொல்லி வியக்கிறார்கள் அவன் ஆசிரியர்கள்” என்றாள். உத்தானபாதன் ஒருகணத்தில் தன்னுள் எழுந்த சினத்தை வியந்துகொண்டு பற்களை இறுக்கி அவளை நோக்கினான். மைந்தனைப்பற்றிப் பேசுவது போல கணவனின் காமத்தைக் களையும் இன்னொன்று இல்லை என்றுகூட அறியாத பேதையா இவள்!

அல்ல என்று மறுகணம் அறிந்தான். காமத்தின் உள்வழிகளை அறியாதவளாக இருக்கலாம், ஆனால் அவன் அகத்தின் வேறு ஆழ்நகர்வுகளை அறிந்திருக்கிறாள். அவள் விழிகளை நோக்கியபடி “அவனுக்கென்ன உடல்நலமில்லையா? மெலிந்திருக்கிறானே?” என்றான். அவள் நகைத்து “அவனுக்கு பிற குழந்தைகளுடன் விளையாடுவதில் ஆர்வமில்லை. உணவிலும் சுவையில்லை. பெரியவர்களுடன் இருப்பதை மட்டுமே விழைகிறான்” என்றாள். அந்நகைப்பில் அவனுக்குத் தெரிந்தது, அவள் அவன் அகத்தை புரிந்துகொள்ளவில்லை. அவளுடைய பெண்ணியல்பால் அறியாமலேயே அதைத் தொட்டுவிட்டிருக்கிறாள், அவ்வளவுதான்.

அக்கணம் அவள் தன் ஆழத்தை அறிந்திருந்தால்கூட நல்லது என்று அவனுக்குப் பட்டது. மறைக்கவிரும்பும் ஏதோ ஒன்று அவளிடம் எஞ்சுகிறது என்று அதற்குப்பொருள். அந்தக் கூர்முனையுடன் அவன் சற்று விளையாடமுடியும். சலிப்புடன் “நன்றாகப் படிக்கச்சொல்” என்றான். அந்தச் சொல்லில் இருந்த முறைமையின் மனவிலக்கத்தைக்கூட உணர்ந்துகொள்ளாதவளாக அவள் அன்பு அவளை ஆக்கியிருந்தது. “ஆம், அவன் கற்று வல்லவனாவான்” என்றாள். அவன் உள்ளம் பதைப்புடன் அடுத்த சொல்லை அவள் சொல்லமாட்டாளா என ஏங்கியது. ஆனால் 'அவனே மூத்தவன், அரியணைக்குரியவன்' என்று அவள் சொல்லவில்லை. அந்தச் சிறுதுளி நஞ்சுகூட அவளில் இருக்கவில்லை.

அறிந்த வழிகள். அவை ஆறுதலை அளிக்கின்றன. ஆறுதலோ சலிப்பை அளிக்கிறது. காலம் நீண்டு நீண்டு கிடக்கிறது அப்போது. கொல்லும்புலியுடன் கூண்டிலிருப்பவனின் காலம் எத்தனை செறிவானது. இளமையில் சுழற்றி அலைக்கழிக்கும் பெண் முதுமையில் சலிப்பூட்டுவாள்போலும். இவளிடம் என் முதுமையில் நான் வந்துசேர்வேன். காமம் இன்றி மட்டுமே அணுகமுடியும் ஒரு பெண் இவள். எத்தனை அச்சம்தரும் உண்மை இது! காமத்தை எழுப்பாதவளின் அழகுபோல பயனற்றது ஏதுமில்லை. பயனற்ற ஒவ்வொன்றையும் புறக்கணிக்கிறது அகம். அது குறுக்கே வருமென்றால் சினம்கொள்கிறது.

மறுநாள் காலை உத்தானபாதன் நீராடி அரச உடைகள் அணிந்துகொண்டிருக்கையில் சேடி உள்ளே வந்து இளைய அரசி திருமுகம் கோரியிருப்பதைச் சொன்னாள். அவன் ஆணையிடுவதற்குள்ளாகவே சுருசி உள்ளே வந்தாள். அவன் விரும்பும் ஆடை அணிந்திருந்தாள். அவனை பித்தாக்கும் நறுமணமலர் சூடியிருந்தாள். ஆயிரம் கரங்களால் அள்ளிக்கொள்ள அழைத்த உடலை நோக்கி அவன் காமம் எழுந்ததுமே அவனை ஒருபொருட்டாக எண்ணாத விழிகளைக் கண்டு சீண்டப்பட்டு திகைத்து நின்றான். இனி அவள் அவன் அனைத்து வாயில்களிலும் முட்டி முட்டி தன் தலையை உடைத்துக்கொள்ளும் கற்கோட்டை மட்டுமே.

அவள் வந்திருப்பது எதற்காக என அவன் அறிந்திருந்தான். அதை அவள் அவனிடம் நேரடியாகக் கேட்கவேண்டுமென அவன் விரும்பினான். கேட்டால் அது அவளில் விழும் ஒரு விரிசல். ஒரு பாதை. ஆனால் “இன்று தங்கள் முடிகாண் விழவு அல்லவா?” என்றாள். அவள் நினைப்பதிலிருந்து சொன்னதற்கு இருந்த அந்தப் பெருந்தொலைவில் அவன் சித்தம் திகைத்து நின்றது. “நாம் புதியதாக வென்ற எல்லைப்பகுதிகளில் இருந்து நம் புதியகுடித்தலைவர்கள் வந்து கூடியிருக்கிறார்கள். இங்குள்ள குடிச்சபையில் அவர்களுக்கான இடமென்ன என்று நாம் முடிவுசெய்யவேண்டியிருக்கிறது.”

அக்கணம் அவன் விழைந்ததெல்லாம் வாளை உருவி அவள் தலையை வெட்டி மண்ணில் வீழ்த்துவதைத்தான். அதைச்செய்ய முடிந்தால் எடை இழந்து மேகத்தில் மிதித்து விண்ணகமேறமுடியும். ஆனால் “ஆம், சொன்னார்கள்” என்றான். நாலைந்து நாட்களாகவே அமைச்சரவையில் பேசப்பட்டது அதுதான். “இங்குள்ள குடிச்சபையில் சிலரையாவது கீழே இறக்காமல் அவர்களை நாம் உள்ளே கொண்டுவர இயலாது. அவர்கள் எவர் என முன்னரே முடிவுசெய்துவிட்டு அவை புகவேண்டும். அவர்கள்மீது அவையில் குற்றச்சாட்டுகள் எழவேண்டும்” என்றாள்.

அவன் அவள் விழிகளை நோக்கினான். அங்கே அவள் விளையாடுகிறாள் என்பதற்கான சிறிய ஒளி தெரிந்தால் கூட போதும் என அவன் அகம் தவித்தது. ஆனால் அமைச்சுப்பணியை விளக்கும் தலைமை அமைச்சரின் விழிகள் போலிருந்தன அவை. “அக்குற்றச்சாட்டுகளை நம் அரசவையில் எவரும் எழுப்பலாகாது. குடிமக்கள் அவையில்இருந்தே அவை எழுந்தால் நன்று.” அவள் மெல்ல சரியும் தலைச்சரத்தைச் சரிசெய்ய அவளுடைய இடது முலை மெல்ல அசைந்து அதில் தவழ்ந்த முத்தாரம் வளைந்து குவட்டுக்குள் விழுந்தது.

பட்டுக்கச்சின் விளிம்பில் முலைகளின் மென்கதுப்பின் பிதுங்கலை நோக்கியபின் அவன் திடுக்கிட்டு விழி விலக்கினான். அப்பார்வையை அவள் அறிந்தால் அவன் முழுமையாகத் தோற்றுவிடுவான். அவள் பார்க்கவில்லை என்று ஆறுதல் கொண்டான். ஆனால் மிக இயல்பாக அவள் “விலக்கப்படும் குடித்தலைவர்களுக்கு அப்போதே வேறு ஒரு பதவி அளிப்பதும் வேண்டும்... அந்தப்பதவி பொருளற்றது என அவர்கள் காலப்போக்கில் அறிந்தால்போதும்” என்றபோது அவன் அறிந்துகொண்டான், அவள் உணர்ந்திருக்கிறாள் என.

இரும்புக் காலணியால் மிதிபட்ட சிறுவிரல் போல அகம் துடிக்க அவன் தன்னை விலக்கிக்கொண்டான். இவளுடன் எத்தனை காலமாக ஆடிக்கொண்டிருக்கும் ஆடல் இது. வென்றதேயில்லை. வென்று விலகும் சூதாடிகள் உண்டு, தோற்றுவிலகுபவர்களே இல்லை. தோல்வி சூதாட்டத்தில் இருக்கும் முடிவின்மையை அவனுக்குமுன் மீண்டும் நிறுவி அறைகூவுகிறது. தோற்றவர்கள் விலகுவதே இல்லை, தோற்கடிக்கும் விசையால் முற்றாக அழிக்கப்படும் வரை அவர்கள் அதனுடன்தான் இருப்பார்கள்.

இப்போது நான் செய்யக்கூடுவது ஒன்றே. அப்பட்டமான காமத்துடன் அவளை அணுகுவது. வெறும் ஆணாக, எளிய மிருகமாக. அவள் அதை அஞ்சுகிறாள் என நான் அறிவேன். காமம் தன்னியல்பிலேயே பாவனைகள் அற்றது. அந்த வெளிப்படைத்தன்மையை மானுடர் அஞ்சுகிறார்கள். ஆகவேதான் அதன்மேல் பாவனைகளை அள்ளிஅள்ளிப் போர்த்துகிறார்கள். ஆனால் வீறுகொண்டெழும்போது அது அனைத்தையும் கிழித்துவிட்டு வெற்றுடலுடன் வந்து நிற்கிறது. இறப்பைப்போலவே மானுடனால் ஒருபோதும் வெல்லமுடியாதது. ஆகவே எந்தவகையான தந்திரங்களும் தேவையற்றது.

சூதாடிகள் எதிரே மாபெரும் சூதாடி வந்து அமர்ந்தால் ஊக்கம் கொள்வார்கள். மூர்க்கமான பாமரனையே அஞ்சுவார்கள். அவள் அவனுடைய காமத்துடன் விளையாடுவாள், அதை காலடியில் போட்டு மிதிப்பாள். ஆனால் எங்கோ ஓரிடத்தில் தீ அனைத்தின்மேலும் கொடியேற்றிவிடுகையில் மெல்ல தோற்று அமைவாள். காமம் அவளை வெறும் உடலாக ஆக்குகிறது. வெறும் உடலாக ஆகும்போது நான் வெல்கிறேன். அவள் தோற்கிறாள். அத்தனை சொற்களுடன் அத்தனை பாவனைகளுடன் அவள் தன்னை உடலல்ல என்று ஆக்கிக்கொள்ளத்தான் முயல்கிறாளா?

அவள் சொல்வதேதும் புரியவில்லை என்று பாவனைசெய்யவேண்டும். அவள் உடலன்றி வேறேதும் தேவையில்லை என்று கிளர்ந்தெழவேண்டும். அள்ளிப்பற்றி அவள் ஆடைகளை பாவனைகளை களைந்து உடலாக்கி கையிலெடுக்கவேண்டும். சற்றேனும் வென்றேன் என உணரும் ஒரே இடம் அது. அவனை அறியாமலேயே அவன் உடலில் சிறிய அசைவாக அந்த எண்ணம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அவள் எழுந்து தலைச்சரத்தை நளினமாக மீண்டும் சரிசெய்து “நான் அணியறைக்குச் செல்கிறேன். அமைச்சர்களிடம் அனைத்து ஆணைகளையும் பிறப்பித்துவிட்டேன்” என்றாள்.

அவன் தலையசைத்தான். எப்போதும் அவளே களத்தை வரைந்து ஆட்டவிதிகளையும் வகுத்துக்கொள்கிறாள். இந்த ஆடலில் அரசுசூழ்தலை கணவனிடம் பேசும் அரசியாக தன்னை வைத்துக்கொண்டிருக்கிறாள். அதுவன்றி ஏதும் இங்கே நிகழாது. அவன் அப்படி எண்ணிய கணமே அவள் “நம் இளவரசனை இன்று அவையில் புதியகுடிகளிடம் அறிமுகம் செய்யப்போகிறேன்” என்றாள். மிகநுட்பமாக ஒரே சொல்லில் இளையவனை முடிக்குரியவனாக்கினாள். அவன் பேச வாயெடுப்பதற்குள் காமம் நிறைந்த விழிகளால் அவனை நோக்கி புன்னகைத்துவிட்டு சென்றாள்.

அவன் அப்படியே தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்துவிட்டான். ஆட்டத்தை அமைத்தவள் அவன் கற்றுக்கொண்டிருக்கையிலேயே களத்தைக் கலைத்துவிட்டுச் சென்றாள். ஒருபோதும் அவன் அவளுடன் ஆடியதில்லை. ஆடமுனையும்போதே ஆட்டம் இன்னொன்றாக ஆகிவிட்டிருப்பதை உணர்வான். தோள்கள் மேல் பெரும் எடை அமைந்ததைப்போல சோர்ந்து கைகளில் தலையைத் தாங்கி அவன் அமர்ந்திருந்தான். அமைச்சர் வந்திருப்பதாக அணுக்கச்சேவகன் வந்து சொன்னபோது எழுந்துகொண்டான். இடைநாழியில் நடக்கும்போது தன் உடல் ஏன் இத்தனை எடைகொண்டு கால்தசைகளை இறுக்குகிறது என வியந்துகொண்டான்.

அவைநடைமுறைகளுக்கு பட்டத்தரசியாக சுநீதியையே குடிச்சபை ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் சுருசி பட்டத்தரசிக்குரிய அனைத்து அவைமுறைமைகளையும் மெல்லமெல்ல தனக்கென ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளுக்கும் குடையும் சாமரமும் அகம்படியும் நிமித்திகனும் இருந்தன. அவள் வரும்போதும் அமைச்சர்கள் தலைதாழ்த்தி வணங்க சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். குடிமூத்தவர்களும் அது அரசனின் எண்ணமென்று உணர்ந்தவர்களாக அதை ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டிருந்தனர்.

சுருசி அவைநுழைந்தபோது எழுந்த வாழ்த்தொலியில் சுநீதியின் உடல்பதறுவதை உத்தானபாதன் கண்டான். ஒவ்வொருமுறையும் இரண்டாவதாக வருவதற்கு சுருசி கொள்ளும் நுண்திறனை இவள் உணர்ந்திருக்கிறாளா என எண்ணினான். முற்றிலும் புறக்கணித்து அமர்ந்திருந்தால் சுருசியை அவள் வென்றுவிடமுடியும். பெருந்தன்மையுடன் புன்னகை புரிந்து அன்பைக் காட்டியிருந்தால் சுருசியை பற்றி எரியவைக்கக்கூட முடியும். ஆனால் ஒருபோதும் அதை சுநீதி உணர்பவள் அல்ல. அவளுடைய நேர்வழியில் இருந்து அந்த ஊடுவழிகள் பிரிவதில்லை.

அவை தொடங்கியதும் ஒவ்வொருமுறையும் போலவே மீண்டும் நிகழ்ந்தது. அவள் வெறுமொரு மகளிர்கோட்டத்து எளிய பெண் என்பதுபோல அமர்ந்திருந்தாள். அமைச்சர்களும் குடிகளும் அரசனை நோக்கி பேசினர். அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கும் ஆணைகோரல்களுக்கும் அவன் செவிசாய்த்து சிந்தித்தான். முறைப்படி பட்டத்தரசியிடம் மேற்கருத்து கோரினான். அவள் பரிவும் சமநிலையும் கொண்ட சொற்களில் தன் கருத்துக்களைச் சொன்னாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் அக்கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதுபோலிருந்தாள் சுருசி.

பின் மெல்ல உடலை அசைத்தாள். அவ்வசைவு எத்தனை மெல்லியதோ அத்தனை தூரம் அனைவராலும் அறியப்படும் என அறிந்திருந்தாள். விழிகள் சிலமுறை அவளை நோக்கித்திரும்பி விலகியதும் பணிவும் தயக்கமும் கலந்த புன்னகையுடன் “நான் ஒன்று சொல்லலாமா?” என்றாள். அவ்வினா எழுந்ததுமே சுநீதி முகம் சிவந்து சினம்கொண்ட அசைவுகளை அறியாமலேயே வெளிப்படுத்துவதை அணிகளின் ஓசைகள் வழியாக அறிந்த அவையினர் கண்கள் வந்து தொட்டுச்சென்றன.

“சொல்” என்று அவன் சொன்னதும் முதிரா இளம்பெண்ணின் பேதைமையும் நட்பும் நாணமும் கலந்த நளின அசைவுகளுடன் முகம் சிவந்து “இல்லை, ஒன்றுமில்லை” என்றாள் சுருசி. அப்போது அவளை முதிரா இளம்பெண்ணாகவே மனம் உணர்வதை எண்ணி வியந்தான். “சொல், அவையில் எல்லா கருத்தும் வரலாமே” என்றான். “இல்லை... நான்" என அவள் முகம் சிவந்து மூச்சிரைத்தாள். கையால் கூந்தலிழைகளை பின்னுக்கு நீவி “எனக்கு ஏதோ தோன்றியது... ஒன்றுமில்லை” என்றாள்.

“சொல்லுங்கள் அரசி. தாங்கள் எப்போதுமே சிறந்த கருத்துக்களைச் சொல்பவரல்லவா?” என்றார் அமைச்சர். அந்தப்புகழ்ச்சிக்கு நாணி “அய்யோ... அதெல்லாமில்லை” என்றாள் சுருசி. எல்லா அவையிலும் இதையே செய்கிறாள். ஒருமுறைகூட இது நடிப்பு என எவரும் உணராமல் அதை முழுமையாக நிகழ்த்துகிறாள். ஒவ்வொருமுறையும் தன் பாவனையில் புதிய ஒன்றை சேர்த்துக்கொள்கிறாள். இப்போது உதட்டை நாணத்தால் கடித்துக்கொண்டிருக்கிறாள்.

பலர் சொன்னபின் நாணத்தால் கனத்து திரிந்து உடைந்த சொற்களில் சுருசி பேச ஆரம்பித்தாள். திடமும் கூர்மையும் கொண்ட சொற்களை ஏந்தி அவள் நிற்பதை வருடக்கணக்காக கண்ட அவனுக்கே அம்மழலையே அவள்மொழி என அப்போது தோன்றியது. அவையில் ஒரு குலமூதாதை சொன்ன கருத்து ஒன்றை ஆதரித்துப்பேசினாள். அதை மெல்லமெல்ல விரித்து எடுத்து தன் கருத்தாக ஆக்கினாள். பின் மழலை விலகி அவள் குரலில் மதியூகிகளின் தெளிவான தர்க்கம் குடியேறியது. மிகமிகப் பொருத்தமான, மாற்றே இல்லாத தரப்பாக அதை அவள் நிலைநாட்டினாள். அப்போதுதான் அது சுநீதி சொன்னகருத்துக்கு முற்றிலும் மாறானது என அனைவரும் அறிந்தனர்.

வேறுவழியே இல்லாமல் உத்தானபாதன் அவளுடைய வெற்றியை ஏற்று பேசத் தொடங்கினான். “ஆம், அவள் சொல்வது ஒருவகையில் சரிதான், ஆனால்...” என்று தொடங்கினான். சுநீதியின் தரப்பை தான் எடுத்துப்பேசினான். அதைத்தான் அவன் ஆதரிப்பதாகக் கூறி ஆனால் அந்த அவையோர் முழுமையாக சுருசி சொன்னவற்றை ஆதரிப்பதனால் அவைக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி முடித்தான். அவன் பேசத்தொடங்கியதுமே சுநீதி பெருமூச்சுடன் உடல்தளர்ந்து இருக்கையில் அமைந்துவிட்டாள். அது எங்கு சென்றுமுடியுமென அவளறியாதது அல்ல.

அவையில் மீண்டும் பொறாமை மிக்க மூத்தவளாக சுநீதியும் எளிமையும் அறிவும் கொண்ட இளையவளாக சுருசியும் நிறுவப்பட்டுவிட்டனர். உத்தானபாதன் சட்டென்று புன்னகை செய்தான். எப்போதுமே இது இப்படித்தான் நிகழ்கிறதுபோலும். புவி தோன்றிய காலம் முதலே வேங்கைகளால் மான்கள் கொன்று உண்ணப்படுகின்றன. நீதியை சுவை வெல்வதன் வரலாற்றைத்தான் காவியங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அந்தப்புன்னகை அவனை எளிதாக தளர்த்திக்கொள்ளச் செய்தது. கால்களை நீட்டி அமர்ந்து அருகே நின்ற அடைப்பக்காரனிடமிருந்து ஒரு தாம்பூலத்தை எடுத்துக்கொண்டான்.

அவைச்சேவகன் வந்து இளவரசர்கள் வருவதாக அறிவித்தான். அவன் கையசைத்ததும் சங்கு முழங்கியது. வாயிலுக்கு அப்பாலிருந்து சுருசியின் மைந்தன் உத்தமன் கைகளை விரித்துக்கொண்டு ஓடிவந்தான். “தந்தையே நான்...” என்று கூவிக்கொண்டே வந்து கையிலிருந்த மரப்பாவையை போட்டுவிட்டு அரியணையை நெருங்கி அவனுடைய பட்டாடையின் நெளிவைப்பற்றி தொற்றி மேலேறி தொடையில் அமர்ந்துகொண்டு தலை நிமிர்த்தி அண்ணாந்து “நான் குதிரையை... ஒரு குதிரையை...” என்று சொல்லி கீழே பார்த்தான். “அந்தக்குதிரை இல்லை. பெரிய குதிரை” என்றான்.

அவை முழுக்க முகங்கள் மலர மெல்லிய மகிழ்வொலிகள் எழுந்தன. உத்தானபாதன் குனிந்து மைந்தனின் மலர்சூடிய சென்னியை முகர்ந்து “குதிரைமேல் ஏறினாயா?” என்றான். “கரிய குதிரை... பெரியது. யானையை விடப்பெரியது” என்று அவன் கையை விரித்தான். நகைத்தபடி திரும்பி சுருசியிடம் “அரசவையில் பொய்யைச் சொல்லும் பயிற்சியில் தேறிவருகிறான்” என்றான் உத்தானபாதன்.

அவள் நகைத்து “அதை அரசுசூழ்தல் என்பார்கள்” என்றாள். “முடிசூடிவிட்டால் அச்சொற்களெல்லாம் உண்மையாகிவிடும்.” ஒவ்வொருமுறையும் அவையில் தவறாமல் அவள் அச்சொற்களைச் சொல்கிறாள் என அவன் அறிந்திருந்தான். எப்போதும் விளையாட்டும் சிரிப்பும் நிறைந்த தருணத்தில்தான். மறுக்கமுடியாத இடத்தை அவள் எப்படி கண்டடைகிறாள்? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தருணம். ஒருமுறைகூட அது பிழையானதாகவும் இருப்பதில்லை.

தயங்கி அவைநுழைந்த துருவனை அவையின் விழிகளேதும் பார்க்கவில்லை. தாயின் கால்கள் நடுவே நின்று அவள் மேலாடையை எடுத்துக் கடித்துக்கொண்டு தந்தையையும் தம்பியையும் மாறிமாறி நோக்கிக் கொண்டிருந்தான். தாய் அவனை மெல்ல தந்தையை நோக்கித் தள்ளினாள். அவன் உதட்டைச்சுழித்து உடலை வளைத்துத் திரும்பி அவள் மடியிலேயே முகம் புதைத்துக்கொண்டான்.

சுநீதியின் உடலில் எழுந்த அசைவை ஓரக்கண்ணால் கண்டு திரும்பிய அரைக்கணத்தில் உத்தானபாதன் அவள் தன் மைந்தன் துருவனை தன்னை நோக்கி தள்ளிவிடுவதைக் கண்டான். அவனுள் கடும் சினம் நுரைத்து எழுந்தது. அந்தச் செயலில் உள்ள நேரடித்தன்மையே தன்னைச் சீண்டியது என்று அவன் மறுகணம் உணர்ந்தான். தன்னை இன்னொருவர் கையாளும்போது ஆணவம் உரசப்படுதல்தான் அது.

சுநீதி அல்ல, சுருசிதான் உண்மையில் தன்னை முழுமையாகக் கையாள்கிறாள். எப்போதும் வெல்கிறாள். சுநீதி ஒவ்வொரு முறையும் இரக்கமின்றி தோற்கடிக்கப்படுகிறாள். சுருசி மிகத்தேர்ந்த சதுரங்கத்தில் அவனை வைத்து ஆடுகிறாள். சுநீதி எளிய வட்டாட்டத்துக்கு அவனைக் கொண்டுசெல்கிறாள். ஆனால் அச்சொற்களும் அகம் நிகழ்த்தும் மாயமே என அவன் உணர்ந்தான். அவன் அந்த விளக்கமுடியாத ஆடலை எளிய தர்க்கங்களாக ஆக்கமுயல்கிறான்.

வலத்தொடையில் துருவனின் கைகள் படிந்தபோதுதான் அவன் அறிந்தான். குனிந்து நோக்கியபோது அடிபட்டுப் பழகிய நாய்க்குட்டியின் பாவனை கொண்ட கண்களைக் கண்டான். அத்தருணத்தை உணர்ந்து கூசிய ஒளியற்ற புன்னகை. அக்கணம் எழுந்த கடும் சினத்துடன் “சீ, விலகு” என்று அவன் துருவனை தள்ளி விட்டான். நிலைதடுமாறி பின்னால் சென்று மல்லாந்து விழப்போன துருவனை அருகே அமர்ந்திருந்த சுநீதி பதறி பற்றிக்கொண்டாள். அவன் மெல்லிய விம்மலோசையுடன் பாய்ந்து அன்னையின் மடியில் முகம் புதைத்து அவள் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டான்.

பகுதி ஒன்று : பெருநிலை - 2

மிகமெல்லிய ஒலிகளைப்போல துல்லியமாகக் கேட்பவை பிறிதில்லை. அன்னையின் மடியின் ஆடைமடிப்புக்குள் அழுந்தி ஒலித்த துருவனின் விம்மலோசையைக் கேட்டபோது அதை உத்தானபாதன் உணர்ந்தான். அவன் தலையில் சிறு பூச்சிகள் ஊர்வதுபோல உணரச்செய்தது அவ்வொலி. திரும்பி துருவனைப்பார்க்க எண்ணினான். ஆனால் கழுத்து இரும்பாலானதுபோல பூட்டப்பட்டிருந்தது. செயற்கையாகப் பெருமூச்சு விட்டு கால்களை நீட்டிக்கொண்டு அந்த இறுக்கத்தை வென்றான்.

உத்தமனின் தலையை மெல்ல வருடினான். “தந்தையே என் குதிரை!” என்று அவன் கையை விரித்து “எனக்கு அவ்வளவு பெரிய குதிரைவேண்டும்...” என்றான். உத்தமன் முழுக்கமுழுக்க சுருசியின் வார்ப்பு என்று உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். நினைவு தெளிந்த நாளிலிருந்தே அவன் கேட்டுக்கொண்டே இருக்கிறான். பெற்றுக்கொள்வது தன் உரிமை என்பதுபோல அடையும்தோறும் ஆசைகொள்கிறான்.

உத்தமனின் மென்மையான வியர்த்த உள்ளங்கைகளைப் பிடித்து முத்தமிட்டான். ஆனால் அச்செயல் அப்போது அவன் மேல் எழுந்த கடும் வெறுப்பை வெல்வதற்கான பாவனையா என்றும் ஐயுற்றான். இவனில் என்னுடைய ஒரு துளிகூட இல்லை. வாழ்நாளெல்லாம் என்னிடம் விளையாடும் மாயத்தின் சிறிய துளிதான் இது. அவன் சாயல் சுருசியைப்போல இல்லை. அவன் அனைத்திலும் உத்தானபாதனையே கொண்டிருந்தான். ஆனால் விழிகளில் சுருசியின் அந்தத் தீராவிழைவு இருந்தது. அந்த விழைவு மட்டும்தான் அவள். அவளுடைய அந்நெருப்பை எந்த உடலிலும் அவளால் பற்றிக்கொள்ளவைக்கமுடியும். அடைந்தவற்றுக்கு அப்பால் எப்போதும் கனவுகண்டுகொண்டிருப்பவர்கள் எதை நிரூபிக்க எண்ணுகிறார்கள்?

துருவனின் உடல் மெல்ல அசைந்ததை அவன் ஓரக்கண் அறிந்தது. சட்டென்று பெரும் கழிவிரக்கம் அவனுள் வந்து நிறைந்தது. துருவனாக ஒருகணம் நின்று உத்தானபாதன் அச்செயலின் குரூரத்தை முற்றிலும் உணர்ந்தான். ஏன் அதைச்செய்தான் என அவன் அகம் பிரமித்தது. துருவனை ஒருநாளும் கையில் எடுத்துக் கொஞ்சியதில்லை. உடலோடு அணைத்துக்கொண்டதேயில்லை. விழிகளைச் சந்திப்பதையே தவிர்ப்பான். மைந்தனின் தொடுகை உத்தானபாதனைக் கூசவைத்தது. ஏன் அந்த வெறுப்பு?

ஏனென்றால் அவனுடைய சொந்த ஆற்றலின்மைக்கும் அவன் தன்னுள் எப்போதும் உணரும் தன்னிழிவுக்கும் கண்முன் நின்றிருக்கும் சான்று அச்சிறுவன். அந்தச் சிறு உடல் அவன் முன்னால் நீட்டப்பட்ட சிறிய சுட்டுவிரல். அவனைப்பற்றிய ஒரு இழிவாசகம் பொறிக்கப்பட்ட ஓலை. அவன் சென்றபின் அவனைப்பற்றி பூமியில் எஞ்சியிருக்கும் கீழ்நினைவு. உண்மையில் அந்தச் சான்றை முற்றாக மண்ணிலிருந்து அழிக்கவே அவன் அகம் எழுகிறது. அது தன் குருதி என்பதனால் அதை தவிர்த்துச்செல்கிறது.

என் குருதி! அச்சொல் அப்போது நெஞ்சில் எழுந்ததை உத்தானபாதன் அச்சத்துடன் உணர்ந்தான். அப்போது தெரிந்தது, அந்த மெலிந்த பெரியவிழிகள் கொண்ட சிறுவனே உண்மையில் தன் முழுமையான வழித்தோன்றல் என்று. அவன் நானேதான். என் அச்சங்களும் ஐயங்களும் கூச்சங்களும் கொண்டவன். என்னைப்போலவே ஆற்றலற்ற உள்ளம் கொண்டவன். என்னைப்போல எஞ்சிய வாழ்நாள் முழுக்க விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் காரணங்கள் தேடி அலைபாயப்போகிறவன். அவனை வெறுத்தது நான் என்னை வெறுப்பதனால்தான்.

தலையைத் திருப்பாமல் விழியை மட்டும் திருப்பி உத்தானபாதன் துருவனை நோக்கினான். அன்னையின் மடியில் முகம்புதைத்து இறுக்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கருவறைக்குள் புகவிழைபவன் போல அவன் உடல் துடித்தது. சுநீதி அவன் தலையை மீண்டும் மீண்டும் கைகளால் தடவியபடி மெல்லிய குரலில் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொல்வாள்? எப்போதும் அத்தருணத்தில் சொல்லப்படுபவற்றை மட்டும்தான். அச்சொற்கள் ஒவ்வொன்றும் அவன் மேல் எரித்துளிகளாக விழும் என அறியமாட்டாள். அச்சொற்களில் உள்ள மாற்றமற்ற மரபார்ந்த தன்மை காரணமாகவே இப்போது அவன் அவளையும் வெறுத்துக்கொண்டிருப்பான்.

வெறுப்பும் விருப்பும் அவ்வயதிலேயே ஆழப்பதிந்து விடுகின்றனவா என்ன? நிலைபெற்ற மதிகொண்ட தந்தையிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டதா இந்நிலையின்மை? நான் விலக்கியவையும் நான் விரும்பியவையும் இணைந்துதான் மைந்தனாகி என் முன் வந்து நிற்கின்றதா? தன் மனம் உருகிக்கொண்டிருப்பதை உத்தானபாதன் உணர்ந்தான். என் மகன். என் சிறுவடிவம். ஆனால் நான் அவன் ஆன்மாவில் காறி உமிழ்ந்தேன்.

இறப்பின் கணம். அதன்பின் மானுடர் மறுபிறப்பு கொள்கிறார்கள். அதுவரை இருந்த அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்கிறார்கள். எரிந்து அழிகிறார்கள், அல்லது உருகி மறுவார்ப்படைந்து விடுகிறார்கள். அருகே அவன் அழலாகிக் கொண்டிருக்கிறான் என உத்தானபாதன் உணர்ந்தான். அங்கிருந்து உடல் கரைந்து விழிகளில் இருந்து மறைந்துவிட விழைகிறான். உலகத்தையே தனக்கு எதிர்தரப்பாக நிறுத்தி முழுமையான தனிமையில் இருக்கிறான். அவமதிக்கப்பட்ட மனிதன் தெய்வங்களால் பழிவாங்கப்பட்டவன்.

கைநீட்டி அவனைத் தொட்டாலென்ன? செய்யவேண்டியது அது அல்ல. அவனை அள்ளி எடுத்து மார்போடணைக்கவேண்டும். நெஞ்சில் அவன் நெஞ்சத்துடிப்பை அறியவேண்டும். நீ நான் என்று உடலாலேயே சொல்லவேண்டும். அதைத்தவிர எது செய்தாலும் வீணே. அவன் அதை நோக்கிச் சென்றான். நெடுந்தொலைவில் இருந்தது அந்தக்கணம். ஆனாலும் அவன் அங்கேதான் சென்றுகொண்டிருந்தான்.

ஒரு செருமலோசையால் கலைக்கப்பட்டு தலைதூக்கி அவையை நோக்கினான். அங்குள்ள அத்தனை கண்களுக்கும் முன்னால் ஒருபோதும் மீளமுடியாதபடி சிறுமைகொண்டுவிட்டதை உணர்ந்த கணமே அவனுக்கு தன்னை அங்கே கொண்டு நிறுத்திய துருவன் மீதுதான் கடும் சினம் எழுந்தது. எளிய புழு. மெலிந்த தோள்களும் வெளிறிய தோள்களும் கொண்டவன். அப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது. அவனை அத்தனை சினம் கொள்ளச்செய்தது எது என. அவன் மடியில் ஏற முயன்ற துருவனின் கண்களில் இருந்தது அன்புக்கான விழைவு அல்ல, ஆழ்ந்த சுயஇழிவு. உரிமை அல்ல, அவமதிக்கப்படுவேனோ என்ற அச்சம்.

அவையை மீட்டுச்செல்ல விரும்பிய அமைச்சர் சுருசி சொன்ன கருத்தில் ஒரு சிறு நடைமுறை இக்கட்டைச் சொன்னார். அவையிலிருந்த அனைவருமே அந்தத் தருணத்தைக் கடந்துசெல்ல விழைந்தனர் என்பதனால் அதை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு விரித்து விரித்துக் கொண்டு சென்றனர். ஒவ்வொருவரும் அந்த விவாதத்தை பாவனைதான் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் எதிர்ப்பு வந்தபோது அவர்களின் உணர்ச்சிகள் உண்மையாக மாறின. அவ்வுணர்ச்சிகள் வளர்ந்தன. சற்றுநேரத்தில் அங்கே அப்படி ஒரு நிகழ்வுக்கான சான்றே இருக்கவில்லை.

உத்தானபாதன் ஓரக்கண்ணால் சுருசியை நோக்கிக் கொண்டிருந்தான். ஒரு கணமேனும் அவளில் சிறு வெற்றிப்புன்னகை ஒன்று வரும் என அவன் எதிர்பார்த்தான். இன்று இச்செயலுடன் அவள் விழைந்தது முழுமை அடைந்துவிட்டது. மணிமுடிக்கும் செங்கோலுக்கும் உரியவன் எவன் என இனி எவருக்கும் ஐயமிருக்கப்போவதில்லை. ஆனால் அவள் மிகுந்த பரிவுடன் சிலமுறை துருவனை நோக்கினாள். ஒன்றுமே நிகழாததுபோல விவாதங்களில் கலந்துகொண்டாள். நினைத்ததை அடைந்த உவகையின் சாயல் கூட அவள் கண்களில், குரலில், உடலசைவுகளில் வெளிப்படவில்லை.

அவள் அறிவாள், மொத்த அவையும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதைத்தான் நோக்கிக்கொண்டிருக்கிறது என. கண்கள் இல்லாதபோதுகூட உடல்கள் நோக்கின. அவளுடைய ஒரு சிறு அசைவுகூட அதுவரையிலான பயணத்தை முறியடித்துவிடும். ஆகவே அவள் அங்கே சிறுமியாகவும் கனிந்த அன்னையாகவும் விவேகம் கொண்ட அரசியாகவும் மாறிமாறித் தோற்றமளித்தாள். ஆனால் எப்படி அத்தனை உணர்ச்சிகளையும் முழுமையாக வென்று செல்கிறாள்? எப்படி ஒரு சிறு தடயம் கூட வெளிப்படாமலிருக்கிறாள். உடலுக்கும் உள்ளத்துக்கும் நடுவே அத்தனை பெரிய இடைவெளியை எப்படி உருவாக்கிக்கொள்கிறாள்? அக்கணம் அவளை உத்தானபாதன் மிகவும் அஞ்சினான்.

மரக்குதிரையை கையில் வைத்து திருப்பித் திருப்பி நோக்கிக்கொண்டிருந்த உத்தமனை நோக்கினான். சுயம்புமனுவின் குருதிவழி இனி அவனில் நீடிக்கப்போகிறது. ஆனால் அவனுக்கும் அதற்கும் எத்தொடர்பும் இல்லை. ஒருவகையில் அவனும் அவன் அன்னையும் நிலைபேறு கொண்டவர்கள். ஊசலாட்டங்களேதும் அற்றவர்கள். சுயம்புமனு விண்ணில் கருத்தூன்றி அடைந்த நிலைப்பேற்றை மண்ணில் காலூன்றி அடைந்தவர்கள். விழைவதெல்லாம் இப்புவியில் பருப்பொருளாகவே காணப்பெற்றவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்!. அவர்களுக்கு சஞ்சலங்களே இல்லை.

சங்கும் பெருமுரசும் ஒலிக்க நிமித்திகன் மன்று எழுந்து முடிகாண் நிகழ்வு முழுமைகொண்டது என அறிவித்தான். குடிகள் வந்து உத்தானபாதனை வணங்கினர். ஓரிருவர் சென்று சுருசியிடம் சில சொற்கள் பேசினர். சுருசி பணிவும் நாணமுமாக அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குடியையும் மைந்தர்பெயரையும் அவள் அறிந்திருந்தாள். அவளிடம் பேசியவர்கள் அதன்பின்னர்தான் சுநீதியிடம் வந்து பேசினர் என்பதை உத்தானபாதன் கண்டான்.

ஆனால் ஒவ்வொருவராலும் திட்டமிடப்படவில்லை. முதலில் செய்தவர் வகுத்த நெறியை பிறர் இயல்பாகவே கடைப்பிடித்தனர். அது கூட்டத்தின் இயல்பு. அப்போதுதான் அதுவரை அவன் கருத்தூன்றாத ஒன்றை அறிந்தான். எப்போதும் சுருசிக்கு நெருக்கமான குடித்தலைவர்தான் முதலில் எழுந்துவந்து விடைபெற்றார். அதையும் அவள்தான் முன்னரே சொல்லிவைத்திருக்கிறாளா? சிலந்தி வலையைப் பார்க்கையில் எழும் பெரும் அச்சத்தை அவன் அடைந்தான். எளிய பூச்சிகளுக்காகவா இத்தனை நுட்பமான வலை?

வெண்குடை ஏந்திய வீரன் வந்து உத்தானபாதன் பின்னால் நிற்க, நிமித்திகன் முன்னால் சென்று அவன் அவை விலகுவதை அறிவித்தான். வாழ்த்தொலிகள் முழங்க உத்தானபாதன் நான்குபக்கமும் திரும்பி அவையை வணங்கி இடைநாழி நோக்கிச் சென்றான். அவனுக்குப்பின்னால் ஒவ்வொருவரிடமும் மென்னகையால் வணங்கி விடைபெற்று சுருசி வந்தாள். ஒவ்வொரு வேலையாளிடமும் ஓரிரு சொற்கள் பேசினாள்.

உத்தமனை இடைசேர்த்து அணைத்து அவனிடம் மிகமெல்ல ஏதோ பேசியபடி சுருசி வந்ததை அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் பின்னால் வருவதை அவன் உணர்ந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப் பேசுகிறாளா? மிகமெல்லப் பேசும்போது அவன் மேலும் செவிகூர்வான். அவன் சிந்தை முற்றிலும் அவள் மீதே இருக்கும். அப்போது அவன் அவளைப்பற்றி மட்டுமே எண்ண அவள் விழைகிறாள். அந்த மெல்லிய பேச்சில் ஒருவன் பெயரை சொல்லிவிட்டாளென்றால் அவன் அவளையன்றி பிற எதையும் என்ணமாட்டான். தன்னைச்சூழ்ந்தவர்களின் எண்ணங்களைக்கூட அவளே தீர்மானிக்கிறாள்.

சுருசிக்குப் பின்பக்கம் சுநீதி தலைகவிழ்ந்து வந்தாள். அவள் ஆடையைப்பற்றி முகத்தை அதற்குள் மறைத்தபடி துருவன் வருவதை உத்தானபாதன் எதிரே தெரிந்த வெண்கலத் தூண்கவசத்தில் பார்த்தான். கால்களில் தொற்றியிருந்த துருவனை இழுத்துக்கொண்டு வந்ததனாலோ, அகம் தளர்ந்திருந்ததனாலோ சுநீதி மெல்லத்தான் வந்தாள். அவளுடைய கால்கள் மரத்தரையில் இழுபட்ட ஒலியின் மாறுபாட்டை உணர்ந்தவனாக உத்தானபாதன் அனிச்சையாகத் திரும்பி அவளைப்பார்த்தான்.

அவன் உதடுகள் அசைவதற்குள்ளாகவே சுருசி திரும்பி சுநீதியின் சேடியிடம் “மூத்தவரின் ஆடையைப்பற்றிக்கொள்ளுங்கள்” என்றாள். சுநீதியின் முகம் சிவந்து கண்களில் ஈரம் படர்ந்தது. சுருசி குனிந்து துருவனை நோக்கி “என்ன, இன்னுமா அழுகிறான்?” என்றாள். துருவன் தாயின் ஆடையிலிருந்து தலைதூக்கி அவளை நீர்நிறைந்த பெரிய கண்களால் பார்த்தான். உத்தானபாதன் நெஞ்சு அதிர்ந்தது. அடுத்து அவள் என்னசெய்யப்போகிறாள்? மிகநுண்ணிய ஒரு சொல், எஞ்சியவாழ்நாள் முழுக்க சுநீதியின் நெஞ்சில் இருந்து அது சீழ்கட்டும்.

ஆனால் சுருசி முகமெங்கும் விரிந்த இளக்காரப்புன்னகையுடன் துருவனிடம் “அரசரின் மடியில் அமர விரும்புகிறாயா? அதற்கு நீ என் வயிற்றில் அல்லவா பிறந்திருக்கவேண்டும்?” என்றாள். அந்த நாணமில்லாத நேரடிப் பேச்சை ஒருபோதும் அவளிடம் கேட்டிருக்காத உத்தானபாதன் திகைத்து நின்றுவிட்டான். அவன் கைவிரல்கள் அதிரத் தொடங்கின. சுநீதியின் முகம் வெளுத்து தலை குளிரில் நடுங்குவதுபோல ஆடியது. “எது உன்னால் எட்டமுடிவதோ அதை எட்ட முயல்க! உனக்குரியதல்லாதவற்றை நோக்கி எழமுயன்றால் பாதாள இருளே உனக்கு எஞ்சும்” என்றாள் சுருசி.

மிச்சமின்றி அழித்துவிட்டாள் என உத்தானபாதன் எண்ணிக்கொண்டான். இந்த இறுதி அடிக்காகத்தான் அவள் இத்தனைநாள் காத்திருந்தாள். இந்தக்கணத்திற்குப்பின் ஒரு சிறு தன்மதிப்பும் சுநீதியிடம் எஞ்சலாகாது என்று விரும்புகிறாள். சட்டென்று மெல்லிய விம்மலுடன் வாயைப்பொத்திக்கொண்டு சுநீதி தோள்குறுக்கிக் குனிந்தபோது அது நிகழ்ந்துவிட்டது என்றும் அவன் அறிந்தான். சொற்களையே கத்தியாக்கி அடிவயிற்றில் செலுத்தி சுழற்றி இழுத்து எடுத்ததுபோல.

மேலும் விரிந்த புன்னகையுடன் “அன்பையும் மதிப்பையும் இரந்து பெறமுடியாது மைந்தா. அவை உன் தகுதியால் உனக்குக் கிடைக்கவேண்டும். உனக்கு உன் அன்னையின் அன்பும் உன்னைப்போன்ற சிலரின் மதிப்பும் அன்றி வேறேதும் எழுதப்பட்டிருக்கவில்லை. செல். நூல்களைப்படி. அகப்பாடமாக்கு. அதைச்சொல்லி சிறுபாராட்டுகளைப் பெறு” என்றபின் திரும்பி இனிய புன்னகையுடன் உத்தானபாதனிடம் “அவனுடைய நலனுக்காகவே சொன்னேன் அரசே. அவன் இதேபோல மேலும் ஏமாந்து துயரடையக்கூடாதல்லவா?” என்றாள். விரிந்த புன்னகையுடன் “செல்வோம்” என்று சொல்லி முன்னால் நடந்தாள்.

அது அவளுடைய உணர்ச்சிகளே அல்ல. அந்த ஏளனமும் ஆணவமும் அவளுடைய துல்லியமான நடிப்புகள். அவள் அதை முன்னரே திட்டமிட்டிருப்பாள். எப்படிச் சொல்லவேண்டும், எப்படி தலை திருப்பவேண்டுமென நூற்றுக்கணக்கான முறை ஒத்திகை செய்திருப்பாள். வெறுப்பாலோ ஏளனத்தாலோ சொல்லப்படும் சொற்களுக்கு இத்தனை கூர்மை இருக்காது. அப்படி இருக்கவேண்டுமென்றால் அவை உச்சகட்ட அழுத்தத்தை அடைந்திருக்கவேண்டும். இவை ஒரு கவிஞன் எழுதிய நாடகத்தில் நன்கு செதுக்கப்பட்ட சொற்கள் போலிருக்கின்றன.

சுநீதியை திரும்பிப்பார்த்த உத்தானபாதன் தவிப்புடன் விழி விலக்கிக்கொண்டான். அவள் சரிந்துவிழப்போகிறவள் போல மெல்லிய அசைவுடன் நின்றுகொண்டிருந்தாள். சேடியர் இருவர் அவளை நோக்கிச் சென்றனர். அவர்கள் அவளை கூட்டிச்சென்றுவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு அவன் முன்னால்நடந்தான். ஓரிரு அடி வைத்தபின்னர்தான் அவன் இறுதியாக நோக்கிய துருவனின் கண்களை நினைவுகூர்ந்தான். அவை அச்சிறுவனில் அதுவரை இருந்த விழிகள் அல்ல. நெஞ்சுநடுங்க தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டான்.

அதுவரை நடந்தவற்றை மீண்டும் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டபோதுதான் அந்த இறுதி நாடகத்துக்கும் சரியான இடத்தை சுருசி தேர்வுசெய்திருப்பதை உணர்ந்தான். குடிமக்கள் அவையினருக்கு அவள் அச்சொற்களைச் சொல்பவள் என்றே தெரிந்திருக்காது. ஆனால் அரண்மனைப்பணியாளர்களுக்கு அவளை நன்குதெரியும். அங்கு நிகழ்வதும் தெரியும். அவர்கள் முன் அது நிகழ்ந்தாகவேண்டும். அந்நிகழ்வு அவர்களின் கற்பனை வழியாக பெருகிப்பெருகிச் செல்லும். இனி எவராலும் அதை அழிக்க முடியாது. திரும்பத்திரும்ப அது சுநீதியிடம் வந்து சேரும். எத்தனை விலக்கினாலும் மறையாது. ஒவ்வொருமுறையும் மேலும் வளர்ந்திருக்கும்.

ஒன்றும் செய்வதற்கில்லை என்று உணரும்போது மட்டும் எழும் ஆழ்ந்த அமைதியை உத்தானபாதன் அடைந்தான். தன் தனியறைக்குச் சென்று ஆடையணிகளை கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டான். அவன் உள்ளத்தை உணர்ந்த அணுக்கச்சேவகன் ஊற்றித்தந்த மதுவை அருந்திவிட்டு படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். மது அவனுக்கு எதையுமே அளிப்பதில்லை. மது அருந்தியிருக்கிறோம் என்னும் உணர்வு மெல்லிய விடுதலையை அளிக்கும்.

அணுக்கச்சேவகனின் மெல்லிய குரலைக்கேட்டு அவன் கண்விழித்தான். திரைச்சீலை போல ஆடியபடி அவன் நிற்பதாகத் தோன்றியது. “சொல்” என்றான். “இளவரசர் வந்திருக்கிறார்.” அச்சொல்லைக் கேட்டதுமே அது துருவன்தான் என அவன் உணர்ந்தான். அன்னையின் ஆடைபற்றி நின்ற துருவனின் கண்களில் இறுதியாக அவன் பார்த்தது ஒரு எரிதலை. அவனைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்திருக்கிறது அகம்.

“வேண்டாம். நான் ஓய்வெடுக்கிறேன்” என்றான் உத்தானபாதன். தலைவணங்கி அவன் சென்றதுமே நான் அஞ்சுகிறேனா, என் மைந்தனையா என்ற எண்ணம் எழுந்தது. மறுகணம் ஒருபோதும் அவனை அஞ்சவேண்டியதில்லை என்று எண்ணிக்கொண்டான். துருவனைப்போன்ற மைந்தன் எந்நிலையிலும் தந்தையை அவமதிக்கத் துணியமாட்டான். தந்தை வருந்தும் ஒன்றைச்செய்ய நினைத்தாலும் அவனால் முடியாது. ஏனென்றால் அவன் சுநீதியின் மைந்தன். எழுந்து “வரச்சொல்” என்று சொல்லிவிட்டு தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டான்.

துருவன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். உத்தானபாதன் கைதூக்கி சொல்லில்லாமல் ஆசியளித்தபின் ஒருகணம் அவன் பார்வையைச் சந்தித்து திடுக்கிட்டு விலகிக்கொண்டான். அப்போதிருந்த அதே நோக்கு சித்திரத்தில் இருப்பதுபோல அப்படியே இருந்தது அவ்விழிகளில். ஒருவினா, அல்லது ஒரு பெரும் திகைப்பு, அல்லது ஓர் அறைகூவல். திருப்பும்தோறும் வண்ணம் மாறும் வைரம்போன்ற விழிகள்.

என்ன கேட்கப்போகிறான்? என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்றா? அவன் சுநீதியின் மைந்தன் என்றால் அதைத்தான் கேட்பான். மிகநேரடியாக. அந்த நேரடித்தன்மை காரணமாகவே திரும்பமுடியாத சுவரில் முட்டச்செய்து கடும் சினத்தை மூட்டுவான். அவனை அச்சினம் மேலும் சிறுமை கொள்ளச்செய்வதனால் அதை வெல்ல அவன் துருவனைத்தான் அவமதிப்பான். அதுவே நிகழவிருக்கிறது. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கியபோது அறிந்தான். அது வேறு சிறுவன் என. அந்த மெல்லிய உடலைக் கிழித்து வீசிவிட்டு உள்ளிருந்து முற்றிலும் புதிய ஒருவன் பிறந்து வந்து நின்றிருந்தான்.

“அன்னையிடம் கேட்டேன் தந்தையே, நான் இப்புவியில் அடைய முடியாதது எது என்று. மானுடர் அடையமுடிவது அனைத்தையும் நான் அடையமுடியும் என்றாள். இல்லை, அதுவல்ல பதில் என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். இப்புவியிலுள்ள அனைத்துமே மானுடர் அடையக்கூடுவதுதான். அதன்பொருட்டே அவை இங்கு உள்ளன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒருபோதும் அடையமுடியாத ஒன்று உண்டு என நான் உணர்கிறேன்.”

அதைச் சொல்பவன் ஐந்துவயதான சிறுவன் என்று நம்ப அவன் சிந்தை தயங்கியது, அதற்குள் உணர்ச்சி அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. காலகாலங்களுக்கு ஒருமுறைதான் மாபெரும் வினாக்கள் மானுட உள்ளங்களில் முற்றிலும் குவிகின்றன. அக்கணமே அவை தடுக்கவியலாத ஆற்றலாக ஆகிவிடுகின்றன. அவற்றால் மலைகளை அசைக்க முடியும். வானை துளைத்தேறமுடியும். படைத்து அழித்து விளையாடும் பரம்பொருளையே வரவழைத்து விடைசொல்லவைக்க முடியும். ககனவெளியில் எங்கோ கூர்மைகொள்ளும் அவ்வினா அங்கே ஒரு மானுட உடலை தேர்ந்தெடுக்கிறது. அது ஆணா பெண்ணா குழந்தையா பெரியவனா என்று பார்ப்பதில்லை.

“தந்தையே, இப்புவியில் அனைத்தையும் வெல்ல என்னால் முடியும் என நான் இன்று சற்றுமுன் உணர்ந்தேன்” என்றான் துருவன். “இளைய அன்னை என்னை அவமதித்தபோது என்னுள் இருந்து தடைகளைமீறிப் பொங்கி எழுந்த பேராற்றலைக் கண்டு நானே அஞ்சினேன். அந்த ஆற்றலுக்கு முன் நீங்கள் ஆண்டுகொண்டிருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய நாடும் இதன் அரியணையும் ஒரு பொருட்டே அல்ல. இந்தப் பாரதவர்ஷமேகூட என் காலடி மண்ணுக்கு நிகர்தான்.”

அவன் விழிகளை நோக்கி உத்தானபாதன் அகம் உறைந்து அமர்ந்திருந்தான். மிக மெல்லிய குரலில் அத்தனை ஆற்றல் திகழமுடியுமென்பதை உத்தானபாதன் அறிந்தான். துருவன் “ஏனென்றால் என்னால் எதையும் செய்யமுடியும். இதோ இந்த வாளை உருவி உங்கள் நெஞ்சில் பாய்ச்சிவிட்டு ஒரு கணம்கூட மீண்டும் உங்களைப்பற்றி நினைக்காமலிருக்க முடியும். லட்சக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் சங்கை சிறு நடுக்கமும் இல்லாமல் அறுக்க என் கைகளால் முடியும். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றுகுவித்து அச்சடலங்களின் நடுவே அவர்களின் மனைவியரின் சாபச்சொற்கள் சூழ சஞ்சலமின்றி என்னால் துயில முடியும்.”

உத்தானபாதன் விழிகளை நேருக்குநேர் நோக்கி துருவன் சொன்னான் “என் ஆணையை எளிய உயிர்கள் மீறமுடியாது. இப்போதே கைசொடுக்கி அழைத்து உங்களையும் உங்கள் இரு அரசிகளையும் மைந்தனையும் கொல்லும்படி உங்கள் படைத்தலைவனுக்கு ஆணையிடுகிறேன். அவன் தன் குலதெய்வத்துக்குப் பணிவதுபோல எனக்குப் பணிவான்.” தன்னையறியாமலேயே கைகூப்பி “ஆம்” என்றான் உத்தானபாதன்.

“தந்தையே, இப்புவியிலுள்ள எல்லாம் என் கையருகே என்றால் நான் ஒருபோதும் வெல்லமுடியாத அந்த ஒன்று எது? அதை என் அன்னையிடம் கேட்டேன். உங்களிடம் கேட்கும்படி சொன்னாள். ஆகவேதான் இங்கு வந்தேன். சொல்லுங்கள், அது எது?”

உத்தானபாதன் கூப்பிய கை நடுங்க “வேண்டாம் மைந்தா” என்றான். “அதுவன்றி அனைத்துமே உன்னால் அடையக்கூடுவது என்றால் அதை அறிந்து என்ன பயன்?” சொல்லநினைப்பதற்கெல்லாம் சொற்கள் அமையாத பெருந்தவிப்பு அவன் உடலில் அசைவாக அலைமோதியது.

எளிய புன்னகையில் துருவனின் இதழ்கள் வளைந்தன. “தந்தையே, மாமனிதர்களின் உள்ளம் செயல்படுவதை நீங்கள் உணரமாட்டீர்கள். நான் இப்புவியில் யுகயுகங்களுக்கொருமுறை பிறப்பவன். மானுடம் என்றும் நினைத்திருக்கும் பெயர் நான். மானுடமும் இப்புவியும் காலத்தில் ஒரு குமிழியாக வெடித்தழிந்தாலும் எஞ்சி என்றுமிருப்பவன். ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.”

“நீ யாராக இருந்தாலும் என் மைந்தன்” என்றான் உத்தானபாதன். “நீ நானேதான். நான் செல்லக்கூடும் எல்லையற்ற பாதையில் நெடுந்தொலைவில் எங்கோ நீ இருக்கிறாய் என்றாலும் உன்னில் நானே இருக்கிறேன். என்றும் நான் என்னுள் உணரும் எல்லையைத்தான் உனக்கும் இறைவல்லமைகள் அமைத்திருக்கும்.” கூர்ந்து நோக்கும் மைந்தனின் விழிகளைக் கண்டு “நீ அனைத்தையும் அடைவாய், நிலைபேறு ஒன்றைத்தவிர” என்றான்.

துருவனின் விழிகளில் மிகமெல்லிய அசைவொன்று நிகழ்ந்ததை அறிந்ததும் பெரும் களிப்பு உத்தானபாதன் நெஞ்சுக்குள் ஊறியது. இதோ நான் என் விராடவடிவையே வென்றுவிட்டிருக்கிறேன். ஒருகணமேனும் அவனைக் கடந்துவிட்டிருக்கிறேன். “மைந்தா, என்றும் நீ என்னைப்போல் அலைபாய்ந்துகொண்டுதான் இருப்பாய். நான் விருப்புவெறுப்புகளில் அலைபாய்ந்தேன். நீ அனைத்து இருமைகளையும் கடந்துசெல்லக்கூடும். காலத்தையும் வெளியையும், இருப்பையும் இன்மையையும் நீ ஒன்றாக்கிக்கொள்ளவும்கூடும். ஆயினும் உன்னில் ஓர் நிலையின்மை இருந்துகொண்டேதான் இருக்கும்.”

“நிலைபேறன்றி எதையுமே நான் நாடமுடியாது என்கிறீர்கள் தந்தையே. அதுவே உங்கள் அருள்மொழி என்று கொள்கிறேன். அறிக இவ்வுலகு! அறிக தெய்வங்கள்! அதுவன்றி பிறிது கொண்டு அமையமாட்டேன்” என்று சொல்லி தன் இடைசுற்றிய ஆடையை எடுத்தான். அதன் நுனியைக் கிழித்து கௌபீனமாக்கி கட்டிக்கொண்டு ஒரு விழியசைவால்கூட விடைபெறாமல் திரும்பி நடந்துசென்றான்.

அவன் பின்னால் ஓடவேண்டும் என்று பதைத்த கால்களுடன் அசையாத நெஞ்சுடன் உத்தானபாதன் அங்கேயே நின்றான். பின்னர் உரத்தகுரலில் “துருவா, மைந்தா” என்று கூவியபடி இடைநாழிக்குப் பாய்ந்தான். அவன் அரண்மனை முற்றத்துக்கு வரும்போதே எங்கும் செய்தி பரவிவிட்டிருந்தது. அரண்மனையின் மரத்தரை அதிர்ந்து பேரொலி எழுப்ப அமைச்சர்களும் தளகர்த்தர்களும் சேடிகளும் சேவகர்களும் முற்றத்தைச் சூழ்ந்தனர். திகைத்து சொல்லிழந்து நின்றிருந்த அவர்கள் நடுவே எவரையும் நோக்காமல் நடந்து சென்றான். அரண்மனை முற்றத்தில் நின்றிருந்த பட்டத்துயானை மட்டும் அவனைக் கண்டு துதிக்கை தூக்கி பிளிறியது.

நகைகளும் சிலம்பும் ஒலிக்க மூச்சிரைக்க ஓடிவந்த சுருசி முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் அவனைக்கண்டு நெஞ்சில் கைவைத்து திகைத்து நின்றாள். அவளுக்குப்பின்னால் வந்த உத்தமனை நோக்கி “என்னுடன் வா” என்று கூவி பின்னால் ஓடினாள். அவன் காவலர்முகப்பை கடக்கும்போது அவன் முன் வந்து “உத்தமரே, எளியவளாகிய என் மைந்தனுக்கு உங்கள் வாழ்த்துக்களை அளியுங்கள்” என்று கூவி மண்ணில் முழந்தாளிட்டு அவன் கால்களைத் தொட்டாள்.

புன்னகையுடன் திரும்பி உத்தமன் தலையைத் தொட்டு “நலம் பெறுக!” என்று வாழ்த்தினான். சுருசியின் தலையைத் தொட்டு “நிறைவடைக” என்று வாழ்த்திவிட்டு நடந்து சென்றான். நகரெங்கும் செய்திகேட்ட மக்கள் அவன் செல்லும் சாலையின் இருமருங்கும் நின்று கைகூப்பி வாழ்த்தொலி எழுப்பினர். அன்னையர் கண்ணீர் விட்டு அழுதனர். நகரெல்லை நீங்கி காட்டுக்குள் சென்று அவன் மறையும்வரை நகர்மக்கள் உடனிருந்தனர். காட்டுக்குள் அவன் சென்றதைக் கண்ட மலைவேடர் வந்து செய்தி சொன்னார்கள். பிறகு உத்தானபாதன் அவனைப்பற்றி கேள்விப்படவேயில்லை.

பகுதி ஒன்று : பெருநிலை - 3

“கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக!”

அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் தொடுவானுமாகியது. தன் சித்தத்தை முற்றாக அதில் உறையச்செய்து அங்கே அமர்ந்திருந்தான். அவன் அகம் தன் அனைத்துச் சிறகுகளையும் ஒவ்வொன்றாக மடித்து அச்சொல்லில் சென்றமர்ந்தது. பின் அவன் அகமே அச்சொல்லானது. அவன் இருப்பும் அச்சொல்லாகியது. அவ்வழைப்பு அங்கே அமர்ந்திருந்தது. ஓங்கி உரத்து அது ஓர் ஆணையாக மாறியது.

ஆலமரத்தின் கிளிகள் உதிர்த்தவற்றை உண்டான். பனித்துளிகளையே பருகினான். உணவும் துயிலும் இழந்த அவன் உடல் உருகியது. மெல்லியதோல் மண்நிறமாகி மரப்பட்டைபோல் செதில்கொண்டது. கைநகங்கள் வளர்ந்து ஒன்றுடனொன்று பின்னி வேர்முடிச்சுகள் போலாயின. அவன் பற்கள் பழுத்து கருமைகொண்டு உதிர்ந்தன. கருகி காய்ந்து நெற்றுபோலாகி அங்கிருந்தது துருவனென்று வந்த உடல்.

துருவன் அரண்மனை நீங்கிய செய்தி அறிந்த சுநீதி மயங்கிச் சரிந்தாள். பன்னிருநாட்கள் அவள் தன்னினைவின்றியும் நினைவெழுகையில் உடைந்து கூவியழுதபடியும் மஞ்சத்தறைக்குள் கிடந்தாள். பின் அகம் தெளிந்தபோது அதுவரை அவள் கைகளில் இருந்த மைந்தன் அகத்தில் பற்றி ஏறி எரிந்துகொண்டிருந்தான்.அவள் ஒவ்வொரு கணமும் வலிகொண்டு துடித்தது.அவனன்றி உலகில்லை என்றறிந்தாள். தேடிச்சென்று மீண்ட ஒற்றர்களை நோக்கி ஓடிச்சென்று அவர்களின் காலடியில் சரிந்து கண்ணீருடன் கைநீட்டி நல்ல செய்திக்காக மன்றாடினாள்.

அவள் விழிகள் நீர்மறந்து வெறிப்பு கொண்டன. கைவிரல்கள் நடுநடுங்கி ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டே இருந்தன. உதடுகள் ஓசையின்றி அசைந்து துருவனின் பெயரையே உச்சரித்தன. அவள் தோல் வெளுத்து உடல் மெலிந்தது. நடை மெலிந்து காற்றிலாடும் திரைச்சீலைபோலானாள். எந்நேரமும் சாளரத்தருகே நின்று சாளரக்கம்பிகளை நீலநரம்போடிய மெலிந்த கரங்களால் இறுகப்பற்றி மெல்ல நடுங்கியபடி வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள்.

சுநீதி வெளுத்துச் சோர்ந்து மெலிந்து கொண்டே செல்வதைக் கண்ட உத்தானபாதன் கனிவுடனும் கண்ணீருடனும் அவளைத் தேற்ற முயன்றான். அவள் அவனை அறியவேயில்லை. அவன் சொற்கள் அவளுக்கு முன் வீணே ஒலித்து அழிந்தன. ஒரு கணத்தில் அவள் அவனை உதிர்த்து வான்வெளியில் பல்லாயிரம்கோடிக் காதம் அப்பால் சென்றுவிட்டிருந்தாள். என்றுமே அவனை அவள் அறிந்திருக்கவில்லை என்பதுபோல. உயிரும் உள்ளமும் கொண்ட ஒரு மானுட உடல் சிலையென்றாகி விடும் விந்தை முன் அவன் சித்தம் திகைத்து நின்றுவிட்டது

இழக்கப்பட்டவை பேருருவம் எடுக்கும் கலை அறிந்தவை. அவள் விலகிச்சென்றபின் அவன் அறிந்தான், அவளே தன் அகத்தின் பெண்மைப்பேருருவம் என. அன்னை அருகிருக்கிறாள் என்ற உறுதியால் விளையாட்டுப்பாவை நோக்கிச் சென்ற குழந்தை தான் என. ஒருபோதும் அவளை அன்றி இன்னொருத்தியை அவன் உள்ளம் பொருட்படுத்தியதே இல்லை. அவளால் விரும்பப்படுபவன் என்பதையே தன் தகுதியாக எண்ணிக்கொண்டிருந்தது அவன் அகம். அவளிருக்கிறாள் என்பதையே தன் அடித்தளமாகக் கொண்டிருந்தது அதில் திகழ்ந்த அச்சம். பதற்றமும் பரிதவிப்புமாக தன் அத்தனை கரங்களாலும் அவளுடைய வாயில்களை முட்டிக்கொண்டிருந்தான். அவை முன்னரே சுவர்களாக ஆகிவிட்டிருந்தன.

அவளிடம் பேசமுடியாமலானபோது அவன் தன்னுள் பேசிக்கொள்ளத்தொடங்கினான். அவளிடம் மன்றாடும் முடிவற்ற சொற்களாக ஆகியது அகம். அவளுக்கு அவன் சொன்ன சொற்களெல்லாம் மெல்லமெல்ல கரைந்து உருண்டு அவள் பெயராகியது. சுநீதி சுநீதி என்று அவன் அகநா சொல்லிக்கொண்டே இருந்தது. அவள்பெயரின் அச்சம்தரும் பேருருவை அப்போதுதான் உணர்ந்தான். தக்க நீதி. ஒவ்வொன்றுக்கும் உரியதாக என எங்கோ காத்திருக்கும் மறுபக்கம். அழியாதது, மாறாதது, தேடிவருவது. முற்றிலும் நிகர் செய்வது.

அவள் கொண்டிருந்த பேரன்பு தன்னிடமல்ல, தன்னில் திகழ்ந்து தன் வழியாக துருவனிடம் சென்று முழுமைகொண்ட இன்னொன்றிடமே என்றறிந்தபோது பாம்பு உரித்துப்போட்ட சட்டையென தன்னை உணர்ந்தான். உயிரற்றது, காற்றில் நெளிந்து ஒருகணம் பாம்பாகி பின் மீண்டு வெறுமைகொள்வது.

அந்த வெறுமை வழியாக அவன் பெருகி நிறைந்துகொண்டிருந்தான். அனைத்து இடைவெளிகளையும் நிறைத்து எடைகொண்டான். அந்த மனநிலையில் சுருசியைக் காண்கையில் ஒவ்வொருமுறையும் திகைத்தான். எத்தனை எளிய பெண். எத்தனை சிறிய உலகத்தில் வாழ்பவள். தன் உடலை பிறர் நோக்குகையில் உள்ளத்தாலும் உள்ளத்தை அவர் நோக்குகையில் உடலாலும் திரையிட்டுக்கொள்வது என்ற மிக எளிய உத்தி ஒன்றை மட்டுமே அறிந்தவள். கொடியென எண்ணுகையில் பாம்பெனச்சீறி பாம்பென அணுகுகையில் கொடியெனச் சுருளும் வித்தை மட்டுமறிந்த விஷமற்ற பச்சைப்பாம்பு

இவளையா, இவளிடமா என்று எண்ணிஎண்ணி திகைத்து வியந்து பின் எண்ணுகையிலேயே விழியில் ஒரு நகைப்பை அடைந்தான். அவன் முன்வந்து விழிதூக்கி அந்நகைப்பைக் கண்டதுமே சுருசி தன் அத்தனை படைக்கலங்களையும் இழந்து குளிர்ந்து நின்றாள். அதுவன்றி எதையும் அவனிடம் காணமுடியாமலானாள். தனித்திருந்து அவனை எண்ணுகையில் அந்த நகைப்பின் ஒளியே அவனாக மாறுவதை அறிந்தாள். அவன் அவள் முன் பெருகி வளர்ந்து சென்றான். எட்டாதவனாக, தொடமுடியாதவனாக.

அவள் அவனை வெல்ல மீண்டும் மீண்டும் முயன்றாள். அவள் உடல் அவன் முன் கேலிக்குரிய அசைவுகளாக மாறி கூசி விலகியது. பாவனைகள் அனைத்தும் அக்கணமே அனைத்து உள்ளடுக்குகளையும் இழந்து நடிப்புகளாகத் தெரிந்தன. சொற்களுக்கு முன்னரே சொல்லின் உட்பொருட்கள் வெளியே வந்து தெறித்து சிதறின. ஆனால் ஒவ்வொரு முறை தோற்றுச் சுருண்டு மீள்கையிலும் தள்ளிவிடப்பட்ட பாம்புபோல மேலும் சீற்றத்துடன் அவள் எழுந்தாள்.

அவளது புண்பட்ட ஆணவம் தாளாமல் துடித்துக்கொண்டிருந்தது. மெல்லமெல்ல அது தன் எல்லையை அறிந்துகொண்டது. அதன்பின் இழப்பின் ஏக்கத்தால் அவள் நிறைந்தாள். கன்னியிளம் பெண்ணாக அவ்வரண்மனைக்கு வந்த நாள் முதல் அவள் அறிந்த உலகம் அவனே. அவனை வெல்வதற்காக அவள் கொண்ட படைக்கலங்களின் தொகையே அவளெனப்படுவதெல்லாம். அவள் அவனுக்கான ஓர் எதிர்வினை மட்டுமே.

கைவிட்டுச் சென்றுவிட்டதா என எண்ணியதுமே பதறுகிறது கை. அகம்பதறி அனைத்து நுட்பங்களையும் இழந்து அவள் பேதையானாள். பேதையாகும்தோறும் மேலும் மேலும் தோற்று சிறுமை கொண்டாள். இழக்கப்பட்டவை எடைமிகும் கலை அறிந்தவை. அவள் கணுக்கால்கள் தெறித்தன. நடை துவண்டது. நிற்க முடியாமல் சுவர்களைப்பற்றிக்கொண்டாள், இருக்கை கண்ட இடங்களில் அமர்ந்துகொண்டாள்.

அவன் முன் சென்று நின்றபோதெல்லாம் அகம் கொண்டிருந்த அனைத்தையும் அடி வைத்து கைகூப்பி கண்ணீர்மல்கினாள். அவள் விழிகளின் மன்றாட்டை அவன் கண்டான். அவன் அவள்மீது கழிவிரக்கம் கொண்டான். அக்கழிவிரக்கம் வழியாக அவளிடமிருந்து மேலும் விலகிச்சென்றான். அக்கழிவிரக்கத்தை அவள் சற்றேனும் பயன்படுத்திக்கொள்ள முயன்றால் கசப்பு கொண்டான். அவனுக்குப்பின்னால் நூறு நூறு பொருட்களில் விழுந்து பரிதவித்து வளைந்து நெளிந்து ஓடிச்செல்லும் நிழலாக இருந்தாள் சுருசி.

ஒருநாள் அவள் உத்தானபாதன் முன் மண்டியிட்டாள். அவன் முழங்காலில் முகம் சேர்த்து கண்ணீருடன் சொன்னாள் "என்னை விட்டுவிடாதீர்கள். என்னை வெறுக்காதீர்கள்." அவன் அவளை வெறுக்கவில்லை. அவள் அவனுக்குப் பொருளாகவில்லை, அவ்வளவுதான். அவளை அணைத்து அவள் விழியில் வழிந்த நீரைத்துடைத்தான். ஆறுதல் மொழி சொல்லி முத்தமிட்டான். ஆனால் அவள் அவன் உள்ளம் விலகியிருப்பதைத்தான் ஒவ்வொரு அசைவிலும் தொடுகையிலும் அறிந்தாள். உள்ளம் அமையாத அத்தொடுகை அவள் பெண்மையை கூசவைத்தது.

அதை அவனும் அறிந்தான். "உன் முடிவிலா மாயங்களெல்லாம் உன்னை எதிர்ப்பவர்களால் உனக்கு அளிக்கப்படுபவை. முற்றாக அடிமைகொள்ளப்பட்டவனும் முழுமையாக விலகிச்சென்றவனும் உன் சிற்றுருவை அறிகிறார்கள்" என்று அவன் சொல்லிக்கொண்டான். அவனில் எழுந்த இரக்கத்தை அறியும்தோறும் அவள் சிறுமைகொண்டு சுருங்கிக்கொண்டிருந்தாள்.

தன்னை எஞ்சவைக்க அவள் அவனிடமிருந்து விலகத் தொடங்கினாள். விலகுவதை எண்ணிக்கொண்டிருப்பதே மெல்லமெல்ல விலக்கத்தை உருவாக்குமென அறிந்தாள். பின்பொருநாள் விலகுவதைப்போல எளியசெயல் ஏதேனும் உண்டா என வியந்துகொண்டாள். இருவருக்குமே இதமளித்தது அந்த விலகல். யாரோ என்றானபின் விழிகள் இயல்பாக தொட்டுக்கொள்ள முடிந்தது. எளிய உலகியல் சொற்களால் தருணங்களை இயல்பாகக் கடக்கமுடிந்தது. வடுக்கள் ஆறிய இடங்கள் இனிய நினைவுகளாகும் விந்தையை இருவரும் அறிந்தனர்.

சுநீதியோ துயரத்தால் மேலும் மேலும் ஆற்றல் கொண்டவளானாள். அவள் விழிகளில் அனல் சிவந்தது. மொழிகளில் வெம்மை எழுந்தது.தழல்முடி சூடிய கொற்றவை என அந்தப்புரத்தை ஆண்டாள். உருவி பீடத்தில் வைக்கப்பட்ட வாள்போலிருந்தாள். ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அவளையே பணிந்தனர். ஆணைகளேற்று காடுகள் தோறும் அலைந்தனர். துருவன் அமர்ந்த ஆலமரத்தடியையே நூறுமுறை சுற்றிவந்தனர். மரத்தால் மூடி உள்ளிழுக்கப்ப்பட்ட மைந்தனை அவர்கள் காணவில்லை.

ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர். அவளறியாத ஏதும் எங்குமிருக்க இயலாதென்பதுபோல. ஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோல. உத்தானபாதன் அவள் கூர்மையை அஞ்சினான். பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதா என ஏங்கினான். இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்து நின்று கைகூப்பினாள்.

ஒருநாள் சுநீதி ஒரு கனவு கண்டாள். காட்டில் பிறந்த உடலுடன் குருதி வழியும் தொப்புள்கொடியை தன் வாயில் வைத்து சுவைத்தபடி நின்றிருக்கும் துருவனை. “மைந்தா” என அவள் கூவ அவன் சிரித்துக்கொண்டே காட்டுக்குள் ஓடினான். அவள் கைநீட்டிப்பதறியபடி அவன் பின் ஓட அந்தக்காட்டின் அத்தனை இலைகளிலிருந்தும் குருதி ததும்பிச் சொட்டியது.

விழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உடைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டு ஓடினாள். அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும் சிந்திக்கிடந்தன. அரசியல்லாமலானாள். குலமகளல்லாமலானாள். பின் பெண்ணென்றே அல்லாமலானாள். பேதை அன்னை மட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்.

மைந்தனைக் கண்டடைய தன் விழியும் மொழியும் உதவாதென்று உணர்ந்தபின் பித்தியானாள். அது அவளை பறவைகளிடம் பேசவைத்தது. பறவைகள் அவளை அவனிருக்கும் இடத்துக்கு இட்டுவந்தன. அங்கே ஆலமரத்தின் சருகுகளும் மண்ணும் மூடி எழுந்த புற்றுக்குள் கருகி ஒடுங்கிய உடலாக அமர்ந்திருந்தவனே தன் மகன் என்று கண்டு அலறியபடி ஓடிச்சென்று அவன் காலடியில் விழுந்து கதறினாள். அவன் சடைகளும் ஆலமரத்தின் விழுதுகளும் பின்னிப்பிணைந்திருந்தன. அவன் சித்தமேயாகி எழுந்து கிளைவிரித்த ஆலமரம் பல்லாயிரம் நாக்குகளால் “வருக வருக” என விண்ணுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தது.

அவள் அவன் கால்களில் தன் தலையால் அறைந்தாள். அடிவயிற்றில் ஓங்கி ஓங்கி அறைந்து அவன் பெயர்சொல்லிக் கூவினாள். அவன் அவளுடைய ஒலிகள் கேட்பதற்கு நெடுந்தொலைவுக்கு அப்பாலிருந்தான். அவன் எதை எண்ணி எங்கிருக்கிறான் என அவள் அறியவில்லை. அவனில் அவள் உணர்ந்த அம்மைந்தனின் உடலோ உள்ளமோ எஞ்சியிருக்கவில்லை. ஆனாலும் அவள் அடிவயிறு அவனை தன் மைந்தனென்றே அறிந்தது.

பன்னிருநாட்களுக்குப்பின் விழிவிரித்து அவன் அவளை நோக்கியபோது ஆலமரவிழுதுக்கும் அவளுக்குமான வேறுபாட்டையே அவன் அறியவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். கைகூப்பி நின்றிருந்த அவள் தன் அகம் முழுக்க அவன் பெயர் மட்டுமே நிறைந்திருப்பதைக் கண்டாள். அதுவே தன் வழி என உணர்ந்து அதில் தன் அகத்தைக் குவித்தவளாக அவனருகே அமர்ந்துகொண்டாள். அவர்கள் மேல் காலம் சருகுகளாக உதிர்ந்து மூடியது. அவர்கள் மண்ணுக்குள் முற்றிலும் புதைந்துபோனார்கள்.

பிறகெப்போதோ துருவனை பிரம்மம் வந்து தொட்டது. விதைகீறி எழும் முளைபோல அவன் ஆன்மா விழித்தெழுந்து நின்றது. அது இது என்றிலாத ஒன்றாக அவன் முன் எழுந்த பரம்பொருள் அவனிடம் கேட்டது “நீ விழைவது என்ன?”

“நிலைபெயராமை” என்று அவன் சொன்னான். “மானுடனே, இப்பெருவெளியில் நிலைபெயாராத எதுவும் இல்லை என்றறிக. நீ நின்றிருக்கும் மண் ஒவ்வொரு கணமும் நிலையழிந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு மணல்பருவும் நிலைபெயர்கிறது. விண்ணை நிறைத்துள்ள முடிவிலா விண்மீன்திரள் நிலைமாறுகிறது. நிலைபெயராதது ஒன்றே. அதுவும் கூட தன்னை மாயையாக்கி நிலைபெயர்தலை நடிக்கிறது.”

“நிலைபெயராமை அன்றி பிறிதொன்றில் அமையேன்” என்றான் துருவன். “உன் கோரிக்கைக்காக இப்பிரபஞ்சப்பெருவெளியை நெய்து நிலைநிறுத்தி ஆட்டுவிக்கும் நெறிகளை அவிழ்த்துக் கட்ட முடியாதென்று உணர்க. அதுவன்றி நீ கோரும் நிலை எதையும் பெற்று நிறைக” என்றது அது. “நான் அமர்ந்தது அதற்காகவே. அதைப்பெற்றால் ஒழிய எழுவதில்லை. அது இயலாதென்றால் இங்கே முடிவிலி வரை அமர்ந்திருக்கவும் சித்தமே” என்றான் துருவன்.

ஆயிரம் வினாக்களால் அது அவனுக்கு அனைத்தையும் அளித்துப்பார்த்தது. அதுவன்றி பிறிதில்லை என அவன் சொன்னான். அதுஅங்கே நின்று தன்னையே நோக்கிக் கொண்டது. அதுவும் தன் ஆடலே என்று உணர்ந்து புன்னகை செய்தது. “அவ்வாறே ஆகுக” என்றது.

அப்போது விண்வெளி இடைவெளியின்றி நிறைத்திருந்த கோடானுகோடி ஆதித்யர்களும் அவர்களின் மைந்தர்களும் ஒருகணம் மின்னி அணைந்தனர். மண்ணிலுள்ள ஒவ்வொரு அணுவும் தன்னுள் ஏதோ ஒன்று நிகழ்ந்து மறைந்ததை உணர்ந்தது. புழுக்கள் ஒருகணம் எதிர்த்திசையில் நெளிந்து மீண்டன. பூச்சிகளின் சிறகுகள் அதிர்விழந்து எழுந்தன. துயில்பவர்கள் கனவொன்றைக் கண்டு மேனி சிலிர்த்தனர். கருக்குழந்தைகள் புரண்டன. பிரபஞ்சத்தை ஆக்கிய விதிமுறைகள் அனைத்தும் அக்கணத்தில் முழுமையாக மாறியமைந்தன.

“விண்ணிலுள்ள விஷ்ணுபதம் என்னும் புள்ளியில் நீ ஒளிமிக்க விண்மீனாக அமைவாய்” என்றது அது. “மையமற்றிருந்தது விண்ணகம். இக்கணம் முதல் நீயே அதற்கு மையமாவாய். உன்னைச்சுற்றி முடிவிலி சுழலும். ஒவ்வொன்றும் உன்னிலிருந்தே தொலைவை அறியும். உன்னைவைத்தே மாறுதலை உணரும். நிலைபேறு கொண்டவன் என்பதனாலேயே நீ காலமற்றவன். பிறிதென ஏதுமற்றவன். பிரம்மமும் உன்னையே இனி பற்றுக்கோளாகக் கொள்ளும். உனைத்தொட்டே இனி மாயையும் அளக்கப்படும். ஆம், அவ்வாறே ஆகுக” என்றது அது.

அதன்பின் அவனருகே அவனைநோக்கிக் கைகூப்பி நின்றிருந்த சுநீதியை நோக்கியது. “நீ வேண்டுவதை அளித்தேன். என்றென்றும் உன் மைந்தனருகே நீயும் ஒரு ஒளிர்விண்மீனாய் நின்றிருப்பாய். அவன் நிலைபேறுகொண்டவன் என்பதனாலேயே நீயும் அதை அடைந்தாய்” என்றது. விண்ணைக் கடந்து சென்ற இடியோசை ஒன்று ஆம் ஆம் ஆம் என அதை ஆமோதித்தது. தாங்கள் வாழ்ந்த பிரபஞ்சம் முற்றிலும் மாறிவிட்டதை அறியாமல் உயிர்கள் காலத்தில் திளைத்தன. விண்ணகப்பேரிருப்புகள் காலமின்மையில் சுடர்விட்டன.

தௌம்ரர் துருவனின் கதையைச் சொல்லி முடித்தார். ”வடமீனாக எழுந்த சிறுவனை வணங்குக. அவன் அடைந்த நிலைபேற்றையே ஊழ்கத்திலமர்வோர் ஒவ்வொருவரும் இலக்காக்குக. கன்னியர் அவன் பெயர் சொல்லி கற்பில் அமைக! கற்றறிந்தோர் அவனை எண்ணி விவேகத்தில் அமைக. படைக்கலம் கொண்டோர் அவனைநோக்கி விழிதூக்கி அறம் உணர்க!” அவரைச் சூழ்ந்திருந்த சீடர்கள் கைகூப்பி வணங்கினர்.

தௌம்ரர் தொடர்ந்தார். பின்னர் நெடுங்காலம் கழித்து இமையமலை மடிப்பின் வெண்பனி அலைகளில் முற்றிலுமாகத் தொலைந்துபோன ஏழு முனிவர்கள் மண்ணில் இனி வழியேதுமில்லை என்று உணர்ந்து விண்ணை நோக்கினர். விண்ணின் ஆதித்யகோடிகள் ஒவ்வொரு கணமும் நிலைமாறி திசையழிந்துகொண்டே இருப்பதையே கண்டனர். அவர்களில் ஒருவரான பிரஸ்னர் தன் இறுதி தவவல்லமையை விண்ணின் விழியாகச் செலுத்தியபோது கண்டுகொண்டார், அவற்றில் ஓர் ஆதித்யன் நிலைமாறுவதே இல்லை என. திகைத்தெழுந்து கைகூப்பி பெருங்குரலெடுத்துக் கூவி தோழர்களை அழைத்து அதைச் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவராக அதை உணர்ந்ததும் அவர்கள் அங்கேயே பிரமித்து அமர்ந்து விட்டனர். அவர்களின் முன்னோர் அறிந்த பிரபஞ்சம் அல்ல அவர்களுக்குரியது என்று உணர்ந்தனர். அந்த ஒற்றை ஒளிப்புள்ளி விண்ணிலும் மண்ணிலுமுள்ள அனைத்தையும் திட்டவட்டமாக்கிவிட்டது. ஒவ்வொன்றும் காலத்தாலும் தூரத்தாலும் அளக்கப்படுவனவாக ஆகிவிட்டிருந்தன. “வானம் கனிந்து விட்டது. தன்மேல் ஏறிவிளையாட சிறுவரை அனுமதிக்கும் மதயானை போல நம் சித்தம் அதை அளக்க தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டது” என்றார் பிரஸ்னர்.

அன்றுவரை மானுட ஞானம் மாறுதலையே பிரபஞ்சமென அறிந்திருந்தது. ஒன்றின் மாறுதல் பிறிதொன்றின் மாறுதலால் மட்டுமே கணிக்கமுடிவதாக இருந்தமையால் நிலையான அளவுகள் எவையும் உருவாகவில்லை. சூரியனும் சந்திரனும் ஒவ்வொருநாளும் நிலைமாறின. ஆகவே திசைகள் அன்றன்று பிறந்து வந்தன. பருவங்கள் வந்தபின்னரே அறியப்பட்டன. வானம் நிலையற்றது, ஆகவே பூமியும் நிலையற்றது என்றே ரிஷிகள் எண்ணினர். “எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே. நிலையான ஞானம் என்பது விண்ணில் இல்லை என்பதனால் மண்ணிலும் இயல்வதல்ல” என்று பிருஹஸ்பதி ரிஷி சொன்ன வரிகளே ஞானத்தின் முதல் விதியாக இருந்தது.

“இதோ இந்த ஒற்றைவிண்மீன் மட்டும் நிலையானது என்றால், இதை வைத்து நாம் வகுத்து அறியும் ஞானமும் இதைப்போல நிலையானதாகவே இருக்கும். இது காலத்தாலும் இடத்தாலும் மாறாதது என்றால் நாம் உருவாக்கும் ஞானமும் எதிர்காலத்தின் முடிவின்மை வரை நீடிக்கக்கூடியதே” என்றார் பிரஸ்னர். “இதோ மானுடனுக்கு விண்ணகம் ஒரு பேரருளை வழங்கியிருக்கிறது. இன்று நாம் நாளைக்கான ஞானத்தை உருவாக்கமுடியும். நாளையை இங்கிருந்தே வகுக்க முடியும். நாளை என்ற ஒன்றை மானுடன் கைப்பற்றிவிட்டான்.”

பசிதாகத்தை அவர்கள் அறியவில்லை. அந்தப்பனிவெளியிலிருந்து மீளும் வழியறியாதிருப்பதை மறந்தனர். தன் இடையில் இருந்த மான்தோல் சுருளை எடுத்து அதன் வலதுமேல் மூலையில் சிவந்த மையால் ஒரு சிறு சுழியைப்போட்டு “மாறாதது” என்றார் பிரஸ்னர். அதற்கு பிந்து என்று பெயரிட்டார். “முதல்ஞானமே நீ என்றும் எங்கள் ஏடுகளில் வாழ்வாயாக!” என்றார்.

“சீடர்களே. அந்தப்புள்ளியில் பிறந்ததே வானியல்ஞானம். லட்சம் மந்திரங்களைக் கொண்ட பிரஹதாங்கப் பிரதீபம் என்னும் வானியல்நூல் அந்த ஒற்றைப்புள்ளியில் தொடங்கியது” என்றார் தௌம்ரர். “அந்தக் கடுங்குளிரில் பனிமேல் அமர்ந்து முகிலற்ற துல்லியமான நீல வானில் ஒளிவிட்ட விண்மீன்களை அவர்கள் அடையாளப்படுத்தினர். மாற்றமில்லாத துருவவிண்மீனுக்கு மிக அருகே இன்னொரு விண்மீன் அதைச் சுற்றிவருவதைக் கண்டனர். அது சுநீதி. அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைநோக்கி விண்மீன்கூட்டங்களை கணக்கிட்டனர்.”

மறுநாள்காலையில் பனிவெளியில் அமர்ந்து விண்ணைநோக்கி கண்ணீருடன் வணங்கினார் பிரஸ்னர். மானுடனுக்கு அளிக்கப்பட்ட அப்பெருங்கருணையை எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழ்ந்து மேலும் மேலும் அழுதார். இரவில் கண்டு ஏட்டில் பொறித்த விண்மீன்கூட்டங்களை பகலில் ஒற்றைத்தோலில் எழுதிக்கொண்டனர். அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.

துருவன் ஒளிவிட்ட விஷ்ணுபதம் வடக்கின் மையம் என வகுத்தனர். அதிலிருந்து தெற்கு உருவாகியது. கிழக்கும் மேற்கும் உருவாயின. திசைகள் ஒன்றை ஒன்று வெட்டி வெட்டி விரிந்து பாதைகளை உருவாக்கின. அதைப் பற்றிக்கொண்டு அவர்கள் அந்தப்பனிவெளியில் இருந்து மீண்டு வந்தனர்.

இருபத்தைந்து வருடம் இமயமலைச்சாரலில் ஒரு சிறுகுடிலில் தன் மாணவர்களுடன் அமர்ந்து விண்ணை நோக்கிக் கணக்கிட்டார் பிரஸ்னர். சூரியரதம் உருளும் பாதையை ஒவ்வொருநாளுக்கும் துல்லியமாக வகுத்துரைக்க அவரால் முடிந்தது. சூரியனின் வழியறிந்தவர் என்பதனால் அவரையும் சூரியர் என்றே அழைத்தனர். தீதிலா வடமீனின் திறம் என்ன என்று நிமித்திகர் கண்டு சொன்னார்கள். தன் தவத்திறத்தால் விண்ணில் நிலைபேறடைந்த துருவனின் கதை அனைவருக்கும் தெரியவந்தது.

துருவனை மையமாக்கிக் கணிக்கப்பட்டமையால் சூரியதேவரின் வானியல் துருவகணிதம் என்று அழைக்கப்பட்டது. அது விண்ணக இருப்புகளின் திசைவழிகளை வகுத்தது. வான்மழையை வகுத்தது. வெள்ளத்தையும் வெயிலையும் வரையறைசெய்து சொன்னது. பயிர்களில் பூச்சிகளில் மிருகங்களில் திகழும் காலத்தின் தாளத்தைக் காட்டியது. அன்றுவரை நிலையில்லாத பெரும்பெருக்காக, கட்டற்ற கொந்தளிப்பாக இருந்த பிரபஞ்சம் தாளம் கைகூடிய பெருநடனமாக மாறித் தெரிந்தது. சிவனின் உடுக்கொலியைக் கேட்டவர் என்றனர் சூரியதேவரை.

துருவனை பிந்து என்றார் சூரியதேவர். அதை சூனியபிந்து என விரிவாக்கினார். அதை அடையாளப்படுத்த அச்சுழியையே குறித்தார். அதிலிருந்து முன்னகர்ந்து முடிவிலியை நோக்கிச்சென்றன எண்கள். அதிலிருந்து பின்னகர்ந்து முடிவிலியை நோக்கிச் சென்றன. சுழி வடிவில் எண்களின் மையமாக அமைந்த துருவனுக்குப்பின்னரே கணிதக்கலை பிறந்தது.

“நம் நூல்கள் அனைத்திலும் நாம் எழுத்தாணியால் வடமூலையில் ஒரு புள்ளிவைக்கிறோம். அது நம் முதல்பெருந்தெய்வம் துருவனுக்கு. இடதுகீழ்மூலையில் ஒரு புள்ளி வைக்கிறோம். அது நம் முதல்குருநாதராகிய சூரியதேவருக்கு. அவர்கள் அழியாப்புகழ்கொண்டவர்கள். அவர்களை வணங்குக” என்றார் தௌம்ரர். “பிரஹதாங்கப்பிரதீபம் சூரியதேவரால் ஆயிரம் பாடல்களில் இயற்றப்பட்டது. அதன்பின்னர் ஆயிரம் ரிஷிகள் அதை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். தன்னைத் தானே உண்டு பெருகும் உயிர்போல ஞானத்தை அளித்து ஞானத்தைப் பெற்று அது வளர்ந்துகொண்டிருக்கிறது.”

“துருவனின் வம்சம் இன்றும் உள்ளது” என்றார் தௌம்ரர். “அவர்களின் குலக்கதைகளின்படி நிலைபேறடைந்த துருவன் அவர்கள் குலத்திலேயே மீண்டும் வந்து பிறந்தார். சிருமாரன் என்ற பிரஜாபதியின் மகளாகிய பிராமியை மணம்புரிந்தார். கல்பன் வத்ஸரன் என்னும் மைந்தர்களுக்குத் தந்தையானார். வாயுவின் மகளாகிய இளா என்ற பெண்ணை மீண்டும் மணம் முடித்து உத்கலன் என்னும் மைந்தனைப்பெற்றார். மூன்றாவதாக சம்பு என்ற பெண்ணை மணந்து சிஷ்டி, பவ்யன் என்னும் மைந்தரை அடைந்தார்.

சிஷ்டியின் மனைவியாகிய ஸுச்சாயா என்பவள் ஐந்து மைந்தர்களைப் பெற்றாள். ரிபு, ரிபுஞ்சயன், விப்ரன், விருகலன், விருகதேஜஸ் என்ற ஐந்து மைந்தர்களும் துருவனின் புகழை ஓங்கச் செய்தனர். ரிபுவின் மனைவியாகிய பிருஹதி சாக்‌ஷுஷன் என்ற மைந்தனைப் பெற்றாள். வீராணப்பிரஜாபதியின் மகளாகிய புஷ்கரணியை மணந்த சாக்‌ஷுஷன் மனுவைப் பெற்றான். வைராஜபிரஜாபதியின் மகளாகிய நட்வலையை மணந்த மனு பத்து மைந்தர்களுக்குத் தந்தையானான்.  குரு, புரு, சதத்துய்மனன், தபஸ்வி, சத்யவான், சுசி, அக்னிஷ்டோமன், அதிராத்ரன், சுத்யும்னன், அபிமன்யூ என அவர்கள் அறியப்பட்டார்கள்.

தௌம்ரர் சொன்னார் “குருவின் மனைவி ஆக்னேயிக்கு அங்கன், சுமனஸ், கியாதி, கிருது, அங்கிரஸ், சிபி என ஆறு மைந்தர்கள் பிறந்தனர். அங்கனின் மனைவி சுநீதைக்கு வேனன் பிறந்தான். வேனனுக்கு வைன்யன் பிறந்தான். வைன்யனின் மைந்தனே பிருது. பூமியை அவன் வென்று தன் மகளாக்கினான். ஆகவே பிருத்வி என பூமி அழைக்கப்படுகிறது என்று அறிக!”

அவர் முன் அவரது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். “விண்ணில் துருவன் அமர்ந்திருக்கும் இடத்தில் வெளிநிறைத்து விரிந்திருக்கும் விஷ்ணுவின் பாதத்தின் விரல்நுனி அமைந்திருக்கிறது என்கிறார்கள் ரிஷிகள். ஆகவே அதற்கு விஷ்ணுபதம் என்று பெயர். முன்பு மாபலியிடம் மூன்றடி மண்கேட்டு வாமனனாக வந்த விஷ்ணு விண்ணளாவ கால்தூக்கியபோது அந்த விரல்நுனி சென்று விஷ்ணுபதத்தை இங்கிருந்து தொட்டது என்று பராசரரின் புராணசம்ஹிதை சொல்கிறது.”

தௌம்ரர் புராணசம்ஹிதையை விளக்கினார் “சப்தரிஷி மண்டலத்துக்கும் மேலிருக்கிறது துருவ மண்டலம். அவன் வலப்பக்கம் அவன் அன்னை உறைகிறாள். இந்திரன், அக்னி, காசியபர், தருமன் ஆகியோர் அவனைச்சூழ்ந்துள்ளனர். அழிவற்றவனும் நிலைபெயராதவனுமாகிய துருவனே விண்மீன் வெளியின் ஆதார மையம். மேழியில் எருதுக்கள் கட்டப்பட்டிருப்பதைப்போல வான்கோள்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. வான்வெளியில் பறவைகளென அவை பறந்தலைகின்றன. விண்ணின் அழியா நியதிகளின்படி அவை இயங்குகின்றன.”

“ஒளிமயமான காலசக்கரம் குடைபோலக் கவிந்துள்ளது. குண்டலம் போல உருக்கொண்டு சுழல்கிறது. சக்கரத்தின் கீழ்நுனியில் துருவன் இருக்கிறான். மையத்தில் பிரம்மன். விளிம்புகளில் அக்னி, இந்திரன், யமன் இருக்கின்றனர். மறு விளிம்பில் தாதாவும் விதாதாவும். ஏழுமுனிவர்களும் சக்கரத்தின் இடைப்பட்டை. இடதுதோளில் தென்வலத் தாரகைகள். காலசக்கரமோ விண்வடிவோன் சுட்டுவிரலில் அமர்ந்துள்ளது. அவனை நினைத்து அமைந்துள்ளன அனைத்தும். அவை வாழ்க!” தௌம்ரரின் மாணவர்கள் 'ஓம் ஓம் ஓம்' என்று முழங்கி வணங்கினர்.

பகுதி ஒன்று : பெருநிலை - 4

இமய மலையடுக்குகள் நடுவே சாருகம்ப மலைச்சிகரமும், கேதாரநாத முடியும், சிவலிங்க மலையும், மேருமுகடும், தலசாகர மலையடுக்குகளும் சூழ்ந்த பனிப்பரப்பில் கட்டப்பட்ட யானைத்தோல் கூடாரத்தின் உள்ளே எரிந்த நெருப்பைச் சுற்றி தௌம்ரரும் அவரது பன்னிரு மாணவர்களும் அமர்ந்திருந்தனர். மலைகளாலான இதழடுக்குகளுக்குள் தாமரையின் புல்லிப்பீடம் போன்றிருந்தது அவ்விடம்.

பட்டுத்திரைக்கு அப்பால் விளக்கேற்றியதுபோல மேற்குவானில் சரிந்த சூரியனின் ஒளி ஊறிப்பரவிய மங்கிய பிற்பகல் ஒளியில் மென்பனி துகள்களாகப் பெய்து பொருக்குகளாக அடர்ந்து மேலும் குளிர்ந்து பளிங்குப்பரப்பாக மாறிக்கொண்டிருந்தது. அலையலையாகச் சென்ற காற்றில் பனித்தூறல் திரைச்சீலைபோல நெளிந்தது. கூடாரவாயில் வழியாக வெளிவந்த செந்நிற ஒளியில் பொன்னிறப்புகை போல நின்றது.

“பாரதவர்ஷத்தின் சகஸ்ரபிந்து என்று அழைக்கப்படும் இவ்விடம் மண்ணில் விண்ணுக்கு மிக அண்மையானது என்கின்றனர் ஞானியர். ஆகவே இதை தபோவனம் என்றனர். முன்பு இங்கேதான் சூரியதேவர் துருவனைக் கண்டடைந்தார். துருவன் இங்குபோல வேறெங்கும் ஒளிகொண்டிருப்பதில்லை” என்றார் தௌம்ரர். “துருவனை சூரியதேவர் கண்டடைந்த சித்திரை முதல் நாளே துருவகணிதப்படி நம் ஆண்டின் தொடக்கம். சூரியதேவர் தன் மாணவர்களுடன் அமர்ந்து பிரகதாங்கப் பிரதீபமெனும் பெருநூலை இயற்றியதும் இப்புனித நிலத்திலேயே.”

வெண்சாம்பல் நிறமான வானுக்குக்கீழே அமைதியின் விழித்தோற்றம் என வெண்ணிற அலைகளாகச் சூழ்ந்து தெரிந்தன பனிமலை அடுக்குகள். குளிர்காற்று ஒன்று ஓசையின்றிப் பெருகி வந்து தெற்குநோக்கி ஒழுகி இறங்கியது. விரிசலிடும் பனிப்பாளம் ஒன்று மிக மெல்ல எங்கோ உறுமியது. பனி உருகி வழிந்தோடிய சிற்றோடையின் ஒலியிலும் குளிரே பொருளாகியது.

“இதை கங்காஜனி என்கின்றனர். யுகங்களுக்கு முன் கங்கை அன்னை தன் நுரைக்கூந்தல் அலைபாய வலக்காலின் பெருவிரலைத் தூக்கிவைத்த இடம் இது. அன்று அவள் பாலருவியாக நுரைத்து இங்கே விழுந்து இந்த மலைமுகடுகளை வெண்பனியாக மூடினாள். இன்றும் இங்கு எஞ்சியிருப்பது அந்த பாலமுதேயாகும். தாமிரலிப்தியில் கங்கையின் கழிமுகத்தில் நீராடி பித்ரு கயை வழியாக ருத்ரகாசியையும் ரிஷிகேசத்தையும் கண்டு ஐந்து பிரயாகைகளில் நீராடி மலைமேலேறிவரும் முனிவர்கள் இங்கே விண்கங்கையை கண்டுகொள்கிறார்கள். இதன் ஒரு துளியைத் தொட்டவர் மண் அளித்த அனைத்து பாவங்களையும் இழந்தவராகிறார்” என்றார் தௌம்ரர்.

“இங்கிருந்து கீழே அன்னை பசுமுகம் கொண்ட சிறு ஊற்றாக வெளிப்படுகிறாள். செல்லும்தோறும் பெருகி பேருருவம் கொண்டு துள்ளிவிழுந்து இரைந்து ஒலித்து நிறைந்து கரைதொட்டு பாரதவர்ஷத்தை கழுவிச்செல்கிறாள். கங்காபதத்தின் ஒவ்வொரு மணல்துகளும் இங்கிருந்து வந்ததே. அஸ்தினபுரியும் ஆரியவர்த்தத்தின் அனைத்து நகர்களும் அன்னையின் சிலம்பு தெறித்த மணிப்பரல்கள். நம் கல்வியும் ஞானமும் குலமும் மரபும் அன்னையின் கொடை” என்றார் தௌம்ரர். “ஆகவேதான் கங்கையை அலகிலா விண்ணை ஆளும் பராசக்தியின் மண்வடிவம் என்று வணங்கினர் நம் முன்னோர்.”

“துருவனும் கங்கையும் உடன்பிறந்தார் என்கின்றன நம் வான்நூல்கள். கங்கை நீரை கையில் வைத்து துருவனை நோக்கி நின்று பேருறுதிகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர். நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்று உணர்க. செயலின்மையும் செயலூக்கமும் ஒன்றை ஒன்று நிறைப்பதே லீலை” தௌம்ரர் சொன்னார்.

துருவன் நிலைபேறுகொண்டு அமைந்த பின் யுகயுகங்கள் சென்றன. ஒரு நாள் அவன் பரம்பொருளிடம் கேட்டான் “விண்முடிவே. நிலைபெயராமை என்பது நிகழாமை என்றறிந்தேன். நிகழாமை என்பது இன்மை. எந்தையே என் இருப்பை நான் உணரவையுங்கள்.” பிரம்மம் புன்னகைத்தது. “அழியா ஒளியே, அவ்வாறே ஆகுக. இனி ஒவ்வொரு கணமும் உன் நிலைபெயராமையை நீயே உணர்வாய். அதையே இருப்பென அறிவாய். அதன்பொருட்டு விண்ணிலிருந்து இக்கணம் முடிவிலா நிலையின்மை ஒன்று பிறக்கும். கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையுமே அது தன் இயல்பெனக்கொண்டிருக்கும்.”

விண்முழுதானவன் பள்ளிகொண்ட பாற்கடலில் எழுந்த பேரலை ஒன்றின் துமி அறிதுயில்கொண்ட அவன் மணிமார்பில் தெறித்தது. அவன் கண்விழித்து எழுந்து புன்னகைசெய்தான். “உன் விழைவு என்ன? எதற்காக இங்குவந்தாய்?” என்றான். “எந்தையே, இந்த வெண்ணொளி பெருகிய எல்லையின்மையில் என் இருப்பு என்பது இன்மைக்கு நிகரானதென்றே உணர்கிறேன். அதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே துள்ளினேன்” என்றது அந்தப் பால்துளி.

அதை தன் சுட்டுவிரலால் தொட்டு எடுத்த விண்நிறைந்தோன் “முழுமையில் இருந்து பிரிப்பது அகங்காரம். அதன் மூன்று முகங்கள் ஆணவமும் கர்மமும் மாயையும். உன் ஆணவம் அடங்காத காமம் வழியாகவும் ஓயாத கர்மம் வழியாகவும் நிகழ்க. காமமும் கர்மமும் இணையென முயங்கிய நிலையே பேரன்பு. அதையே தாய்மை என்று அறிகின்றன உயிர்க்குலங்கள். இனி நீ அன்னையின் மண்வடிவாகவே கருதப்படுவாய். ஆவது ஆக்கி அணைவது அறிந்து எல்லை கண்டு அடங்காமல் இனி நீ பாலாழியில் அமைய இயலாது” என்றான். “ஆம் அதையே விழைந்தேன்” என்றது பால்துளி.

“நூறு மகாயுகங்கள் நீ உன் காமத்தில் அலையடிப்பாய். கர்மத்தில் சுழல்வாய். கருணையில் கனிவாய். கன்னியும் அன்னையுமாய் முடிவிலாது நடிப்பாய். உன் சுழற்சி முடிவுறும்போது மீண்டும் ஒரு துளியாக மீண்டு பாற்கடலில் உன்னை அழிப்பாய். ஓம் அவ்வாறே ஆகுக” என்று சொல்லி தன் சுட்டுவிரலை தன் வலக்காலடியில் வைத்து பால்துளியை அங்கே விட்டார்.

விஷ்ணுவின் விரல் நுனியில் இருந்து பாதத்தை நோக்கி ஒளிவிட்டு துளித்துத் ததும்பி அசைந்த இறுதிக்கணத்தில் அன்னை சொன்னாள். “எந்தையே நான் நதி, பெண், அன்னை. ஒருகணமும் ஒரு நிலையிலும் நிலைகொள்ள என்னால் இயலாது. என் திசைகளை நான் தேர்வதில்லை. நான் செல்லும் இடமே என் வடிவும் வழியுமாகிறது. என்னை நோக்கி வரும் எதையும் இருகரம் விரித்து எதிர்கொண்டு அணைத்து அள்ளிக்கொள்வேன். என் கைகள் தொடும் தொலைவில் வரும் அத்தனை வேர்களுக்கும் வாய்களுக்கும் அமுதாவேன். எங்கும் எதிலும் பேதமென ஏதுமில்லை எனக்கு. இங்கிருந்து இறங்கும் நான் என்னாவேன் என்று அறியேன். என் வினைவழிச் சுழலில் எங்கு இருப்பேன் என்றறியேன். என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?” என்றாள் அன்னை.

புன்னகையுடன் விண்ணுருவோன் தன் பாதங்கள் சூடிய ஒளிமணி ஒன்றைச் சுட்டினான். “அவன் பெயர் துருவன். அழியாதவன். பெருவெளி நிலைமாறினும் தான் மாறாதவன். எப்போதும் உன்னை நோக்கிக்கொண்டிருப்பவன் அவன். நீ அவனை நோக்கிக்கொண்டிரு. நிலைகொள்ளாமையே நீ. உன் நிலைபேறென அவனைக் கொள்!”

விண்ணில் கனிந்த பசுவின் அகிடு என கனத்து திரண்ட மேகம் ஒன்றில் இருந்து வெண்ணிற ஊற்றாக சுரந்தெழுந்த அன்னை அங்கே ஒளிவிட்டு அமர்ந்திருந்த இளமைந்தனைக் கண்டு வணங்கினாள். தீரா இளமைகொண்டவன், முழுமையான நிலைபேற்றில் அமர்ந்தவன். “மூத்தோனே, என் சஞ்சலங்களில் துணைநிற்பாயாக. என் வழிகளில் நான் திகைக்கும்போதெல்லாம் உன் விழி வந்து என்னைத் தொடுவதாக” என்றாள். துருவன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக” என்றான்.

ஆகாயகங்கை நான் இருக்கிறேன் என்று உணர்ந்தாள். அந்தத் தன்னுணர்வை கட்டுக்கடங்காத விடுதலைக் களிப்பாக மாற்றிக்கொண்டாள். நுரைத்துப் பெருகி கொந்தளித்துச் சுழன்று சுழித்து விண்வெளியெங்கும் பரவி நிறைந்தாள். மின்னும் ஆதித்யர்களை வைர அணிகளாக உடலெங்கும் சூடிக்கொண்டாள். அன்றுவரை விண்ணின் முடிவிலா ஆதித்யகோடிகள் அனைவரும் தங்கள் தனிமையிலேயே ஒளிவிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே நிறைந்து கனத்திருந்த இருண்ட வெறுமையை அன்னை வெண்பெருக்காக நிறைத்தாள்.

விண் நிறைத்த அந்தப்புதுப்புனலை ஆகாயகங்கை என்றனர் தேவர். பால்வழி என்றனர் முனிவர். தான் சென்ற ஒவ்வொரு இடத்தையும் நிறைத்து நுரைத்துப்பொங்கி எழுந்து மேலும் மேலும் விரிந்துகொண்டிருந்தாள். ஆயிரம் கோடி விமானங்கள் நிறைந்த அசுரயானத்தை நிறைத்தாள். அதன் விளிம்பில் அவள் நுரை எழுந்து அசைந்தது. பல்லாயிரம் கோடி விமானங்கள் எழுந்த தேவயானத்தை நிறைத்தாள். அதன் விளிம்பெங்கும் அவளில் திரண்ட அமுதம் ததும்பியது.

தேவகங்கை விண்ணில் மட்டும் இருந்தாள். ஞானம் கனிந்த முழுநிலையில் சகஸ்ரபிந்துவில் நிலவெழும்போது யோகியர் தங்கள் சித்தப்பெருவெளியை அவள் பால்பெருக்காக நிறைத்துப்பெருக்கெடுப்பதைக் கண்டனர். அவளை ஞானகங்கை என்றனர். அவள் பெருகி வழிந்தபின் ஒருசொல்லும் எஞ்சாத அகமணல்பரப்பில் ஒரு பெண்பாதத்தடம் படிந்திருக்கும் என்றன யோகநூல்கள். அந்த தேவதையை விஷ்ணுபதி என்றனர். அவள் யோகியரை அழிவின்மையின் பாற்கடலில் கொண்டு சேர்ப்பாள் என்று அறிந்தனர்.

தன்னுடன் ஆட துணையில்லை என்று உணர்ந்தமையால் அவள் தன்னை நான்காகப் பகுத்துக்கொண்டாள். சீதை, சக்ஷுஸ், அளகநந்தை, பத்ரை என்னும் நான்கு தோழிகளாக தானே ஆனாள். நான்காகப் பிரிந்து நான்கு திசைகளையும் நிறைத்தாள். ஆயிரம்கோடி விண்ணகங்களை நிறைத்தபின்னரும் அவள் தன்னில் தான் எஞ்சுவதை உணர்ந்து தவித்தாள். விண்ணில் துளித்துக் கனத்து தவித்து உதிர்ந்து கோடானுகோடி மண்ணகங்களில் சென்று விழுந்தாள்.

பூமியில் மேருமலைமீது சீதை விழுந்தாள். அங்கிருந்து கந்தமாதன மலைச்சிகரத்தில் பொழிந்து பத்ராஸ்வ வர்ஷமெனும் பெருநிலத்தில் பொங்கியோடி கிழக்குக் கடலில் இணைந்தாள். சக்ஷுஸ் மால்யவான் என்னும் மலைமுடியில் விழுந்து கேதுமால மலையுச்சிக்குச் சரிந்து மேற்குக்கடலில் கலந்தாள். ஹேமகூட மலையுச்சியில் விழுந்து சரிந்த அளகநந்தை பாரதவர்ஷத்தில் ஓடி தெற்குக்கடலில் இணைந்தாள். சிருங்கவான் என்னும் மலைமுடியில் பொழிந்த பத்ரை உத்தரகுருநிலத்தில் ஓடி வடக்குக் கடலில் கலந்தாள்.

சீதை எனப்பெயர் கொண்ட குளிரன்னை இங்கே துருவனுக்குக் கீழே மண்ணில் இறங்கினாள். வெண்பனிப் பெருவெளியாக ஆயிரம் மலைகளை மூடி விரிந்து கிடந்த அன்னையின் ஒளியைக் கண்டு சூரியன் விண்ணகத்தில் திகைத்து நின்றான். மானுடர் மீதுகொண்ட பெருங்கனிவால் அன்னையின் முலையூறியது. அது கோமுகம் முலைக்காம்பாகியது. பாகீரதி என்னும் நதியாகி மலைமடிப்புகளில் நுரைத்துப்பாய்ந்து கீழிறங்கிச்சென்றது. பாகீரதி தோழிகளுடன் முயங்கி தோள்சேர்த்துக் குதூகலித்து கங்கையென்றாகி பாரதவர்ஷத்தை அணைத்துக்கொண்டாள். அமுதப்பெருக்கானாள். ஆயிரம்கோடி நாவுகளால் அனுதினமும் வாழ்த்தப்படுபவளானாள்.

“பாரதவர்ஷத்தின் மேலாடையென வழியும் கங்கை கிழக்குக் கடற்கரைக்குச் சென்று சூரியனை வணங்கி நீர்வெளியில் கலந்தாள். மேகமென எழுந்து விண்நதியாகி ஒழுகி மீண்டும் இமயமலைகளின் மடியில் அமர்ந்து குளிர்ந்தாள். மீண்டும் மலைமடிப்புகளில் பேரருவிகளாக விழுந்து மலையிடுக்குகளில் கொப்பளித்து ஒழுகினாள் .தன் செயல்சுழலில் நின்றிருக்கிறாள் கங்கை. மண்ணின் பாவங்களை கடலுக்குக் கொண்டுசெல்கிறாள். கடலின் பேரருளை மண்ணில் பரப்புகிறாள். ஆயிரம் கரங்களால் அமுதூட்டுகிறாள். ஆயிரம்கோடி உயிர்களால் முலையுண்ணப்படுகிறாள்” தௌம்ரர் சொன்னார்.

“அன்னையின் முடிவிலாப்பெருஞ்சுழற்சி அவள் கருணையினால் விளைவது. ஓயாத அலைகளால் உயிர்களை தழுவித்தழுவி மகிழ்கிறாள். அளித்தலொன்றையே இருத்தலெனக்கொண்டவள். ஒருகணமும் நிலைக்காத கோடிக்கரங்கள் கொண்டவள். எங்கும் நில்லாதவள். ஆனால் அவளுக்குள் நின்றிருக்கிறது நிலைமாறாத வடமீன் என்றறிக” என்றார் தௌம்ரர். “இன்று சித்திரைமாதம் முதல்நாள். துருவன் சூரியதேவருக்கு அளித்த அதே ஒளியுருவை நமக்கும் அளிக்கவேண்டுமென வேண்டுவோம்!”

தௌம்ரர் எழுந்து வெளியே சென்று மேருவுக்குமேல் கவிந்த வானை நோக்கிக்கொண்டிருந்தார். அந்திசரிந்துகொண்டிருந்தது. மலிச்சரிவுகளின் மேற்குமுகங்கள் செங்கனலாக மாறின. கனல் கருகி அணைந்து இருளாகியது. வெண்சாம்பல் போல பனிமுடிகள் தெரிந்தன. தௌம்ரரின் மாணவர்கள் அவரைச் சூழ்ந்து விண் நோக்கி நின்றிருந்தனர். காற்று சீராகப் பெருகிச்சென்றுகொண்டே இருந்தது. பின்பு எங்கோ மலையிடுக்கில் காற்று பெருகிவரும் ஓசை எழுந்தது. அது வலுத்து வலுத்து பேரோலமாகி அவர்களை அடைவதற்குள் பனிமுடி ஒன்று உடைந்து பொழிவதுபோல குளிர்காற்று அவர்களை மூடிக் கடந்து சென்றது.

மென்மயிர் ஆடைகளிலும் இமைப்பீலிகளிலும் புருவங்களிலும் பனித்துருவல்களுடன் நடுங்கி உடலொட்டி நின்றவர்களாக அவர்கள் அதிலிருந்து மீண்டனர். தௌம்ரர் வானை நோக்கியபடி “அது மாருதனின் மைந்தன் சூசி. மண்ணில் உள்ள மூச்சுகளை எல்லாம் அள்ளிப்பெருக்கி தூய்மை செய்து இரவை நிகழ்த்துபவன்” என்றார். அவர்களைச் சுற்றி பனியுதிரும் ஒலியாலான இருள் நிறைந்திருந்தது.

வானத்தில் இருளலையில் குமிழிகள் கிளம்புவதுபோல ஒவ்வொரு விண்மீனாக கிளம்பி வந்தது. “அதோ” என்றார் தௌம்ரர். அவர்களும் அதே சமயம் பார்த்துவிட்டிருந்தனர். மேருவின் உச்சியில் கரிய வானில் உறுதியாகப் பதிக்கப்பட்டதுபோல துருவவிண்மீன் தெரிந்தது. அதனருகே சுநீதி சிறிய ஒளித்துளியாக நின்றிருந்தாள். சிலகணங்களுக்குள் அந்த ஒளிமையத்தைச் சுற்றி வானமும் திசைகளும் சுழல்வதையே காணமுடிந்தது. தௌம்ரர் “அலைகள் அனைத்தையும் அமையச்செய்க. நிலைபேறு என்னில் திகழ அருள்க” என்று கூவி வணங்கினார்.” ஓம் ஓம் ஓம்” என அவரது மாணவர்களும் கைகூப்பி வணங்கினர்.

கூடாரத்தின் முகப்பில் நெருப்பிட்டு அதைச்சூழ்ந்து அமர்ந்து அவர்கள் வானத்தை நோக்கினர். வடமுனையில் விஷ்ணுபதத்தில் சுடர்ந்த ஒளிவிழியை நோக்கி கண்களை நாட்டினர். ஒவ்வொருவரும் தங்கள் உறவை ஊரை குலத்தை சுயத்தை துறந்து வரச்செய்த உறுதியை எண்ணிக்கொண்டனர். அதை மீளமீளச் சொல்லியபடி நிலைபெயரா வான்புள்ளியை நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்தனர்.

அவர்களின் விழிமுன் கீழ்வானில் செம்மை மேலெழுந்து வந்தது. மலைமுடிகளின் கிழக்குப்பக்கங்கள் ஒளிகொள்ளத் தொடங்கின. பனிப்பரப்புகள் நெருப்பை பிரதிபலிக்கும் கண்ணாடிவெளியாகின. மின்னும் குளிர். வெண்நெருப்பென நின்றெரியும் கடுங்குளிர். வடக்கே வானில் எழுந்த நரைமுடித்தலை போல துலங்கிவந்த சிகரத்தைச் சுட்டி “குளிர்ந்தவள் எனப் பெயர்கொண்ட கங்கையின் முதல்காலடி பட்ட இடம் அது” என்றார் தௌம்ரர். “அதை மேரு என்கின்றனர் நூலோர். மானுடர் எவரும் அந்தப் பனிமுடியைத் தொடமுடியாது. அந்த முடிக்கு நேர்மேலே துருவனின் இடமென்பது வானியலாளர் கணிப்பு."

“கங்கை பிறந்த விஷ்ணுபதம் என்னும் விண்பிலம் மேருவுக்கு மேலே துருவனுக்கு அருகே உள்ளது. அதை நோக்கி அமர்ந்திருக்கிறது இந்த தபோவன பூமி. வான் தன்னை மண்ணுக்கு அறியத்தந்த இடம் இது. மண் தன்னில் வானை பெற்றுக்கொண்ட இடம். பாரதவர்ஷத்தில் இதற்கிணையான இன்னொரு புனிதமண் இல்லை” தௌம்ரர் சொன்னார். “கங்கை இங்கே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒருங்கே உரியவளாக இருக்கிறாள். இங்கு நீராடுபவர்கள் ஆகாய கங்கையில் நீராடும் தூய்மையை அடைகிறார்கள்.”

தபோவனத்தின் வெண்பனிப்பரப்பின் மேல் சூரியனின் கதிர்கள் நீண்டு வெண்சட்டங்களாகச் சரிந்து விழுந்தன. வானம் அப்போதும் இருண்டிருக்க பனித்தரை ஒளிவிட்டது. மரப்பட்டை பாதணிகள் உரசி ஒலிக்க தௌம்ரரின் பன்னிரு மாணவர்களும் குளிரில் உடலை இறுக்கி நடந்துவந்தனர். தௌம்ரர் மெல்லிய குரலில் கங்கையை வழிபடும் பாடலொன்றை முணுமுணுத்தபடி நடந்தார். பனிபொழிந்து உறைந்து படிக்கட்டுகள் போல ஆகியிருந்த சரிவு வழியாக இறங்கி வந்தனர். அங்கே வெண்பசுவின் முகம் போல நீண்டு தெரிந்த ஊற்றுக்கண்ணை நோக்கிச் சென்றனர்.

கோமுகத்தில் இருந்து உருகிச்சொட்டிய நீர் வெண்பனிப்பரப்பின் மீது இளநீலநிறத்தில் வழிந்தோடியது. அங்கே பனி உப்புத்துருவல் போல பொருக்குகளாகக் குவிந்திருந்தது. அதன் ஓரம் கரைந்து மெல்ல உடைந்து உருவழிந்த பனித்திவலைகளாகி ஒழுக்கில் மிதந்து சென்று ஒன்றுடன் ஒன்று முட்டித் தேங்கி நின்று பின்னர் ஒன்றை ஒன்று தள்ளி கடந்துசென்றன. பனிக்கட்டிகள் உரசும் ஒலி பட்டாடை குலைவது போல, மெல்லிய மந்திர உச்சரிப்பு போல கேட்டது. தௌம்ரர் குனிந்து அதில் ஒரு துளியை எடுத்து தன் தலைமேல் விட்டு வணங்கினார். அவரது மாணவர்களும் அதையே செய்தனர்.

தௌம்ரரின் நான்கு மாணவர்கள் அங்கே கொண்டு குவித்த விறகை எரியூட்டி நெய்க்கட்டிகளைப்போட்டு தழலெழுப்பினர். அதன் மேல் கலத்தைக் கட்டித்தொங்கவிட்டு அக்காரமும் மாவும் போட்டு கொதிக்கச்செய்தனர். பனிவெளியின் ஒளியில் தழல்கள் பெரிய மலரொன்றின் இதழ்கள் போல வெளிறித்தெரிந்தன. கிழக்கே கதிர் எழுந்தபின்னரும் தேன் நிறமான வானில் விண்மீன்கள் தெரிந்தன. நடுவே துருவன் சுடர்ந்துகொண்டிருந்தான். ஒளி எழ எழ சுநீதி வானில் புதைந்து மறைந்தாள். துருவன் ஒரு சிறிய செந்நிற காட்டுமலர் போல வடக்குமுனையில் நின்றான்.

“அன்னையே உன் கருணையால் என் உடல் தூய்மைபெறுவதாக. உன் தூய்மையால் என் அகம் தெளிவதாக. நிலைபெயரா வடமீன் உன்னில் திகழ்வதுபோல என்னில் ஞானம் விளங்குவதாக ஓம் ஓம் ஓம்” என்றார் தௌம்ரர். அவரது மாணவர்களும் அந்த மந்திரத்தைச் சொன்னார்கள். கோமுகத்தின் அருகே நீர் விழுந்து பனியில் உருவான சிறு தடாகத்தை அணுகி குனிந்து நோக்கினர். அதில் ஒற்றை விழிபோல வடமீன் ஒளிர்வதைக் கண்டதும் அவர்கள் “ஓம் ஓம் ஓம்” என்று கூவினர். “துருவனை தன்னிலேந்திய கங்கையைப்போல புனிதமான காட்சி வேறில்லை” என்றார் தௌம்ரர். நடுங்கும் குரலில் “அலையிலெழுந்த நிலையே. அடியவரை காத்தருளாயே” என்று கூவினார்.

அவர்கள் ஆறுபேர் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு ஒரு நீண்ட சங்கிலியாக ஆனார்கள். அதன் முனையில் நின்ற சீடன் ஆடைகளைக் களைந்து வெற்றுடல் கொண்டான். குளிரில் அவனுடைய வெண்ணிற உடலில் நீலநரம்புகள் புடைத்தெழுந்தன. அருவி விழும் மரக்கிளைபோல் அவன் உடல் நடுங்கியது. “தயங்கவேண்டாம்...” என்றார் தௌம்ரர். ஒருகணம் அவன் தயங்கி நின்று அதிர்ந்தான். பின் “கங்கையன்னையே” என்று கூவியபடி நீரில் குதித்தான். அக்கணமே அவன் உடல் கொதிக்கும் எண்ணையில் விழுந்த அப்பம் போல விரைத்து நெளிந்து அமிழ்ந்தது.

பிறர் உடனே சேர்த்து இழுத்து அவனை கரையிலிட்டனர். பனியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வேர் போல் உயிரற்றிருந்த அவன் மேல் கனத்த கம்பிளித்தோலாடையைச் சுற்றி சுருட்டி இழுத்துச்சென்று எரிந்துகொண்டிருந்த கணப்பருகே அமர்த்தினர். அதில் நெய்விழுதுகளையும் விறகையும் அள்ளிப்போட்டு தழலெழுந்து கொழுந்தாடச்செய்தனர். வெம்மை பட்டு மெல்ல உருகுபவன் போல அவன் அசைந்தான். சிறிய முனகலுடன் உயிர்கொண்டான். “கஙகையே அன்னையே கங்கையே அன்னையே” என்று சொல்லிக்கொண்டு நடுங்கினான்.

அதன்பின் அடுத்த சீடன் சுனைநீரில் குதித்தான். ஒவ்வொருவராக அதில் மூழ்கி எழுந்தனர். நீலம்பாரித்த உதடுகளுடன் துள்ளி அதிரும் உடல்களுடன் அவர்கள் நெருப்பருகே குவிந்து அமர்ந்திருந்தனர். செங்கொழுந்திலேயே நேரடியாக கைகளை நீட்டிக்காட்டி வெம்மையை அள்ளினர். அவர்களனைவருக்கும் சூடான பானத்தை மூங்கில் குவளைகளில் விட்டு வழங்கினான் ஒரு சீடன். இருகைகளாலும் வெம்மையைப் பொத்தியபடி அவர்கள் அருந்தினர். மெல்ல மெல்ல அவர்களின் குருதியில் அனல் படர்ந்தேறியது. காதுமடல்களிலும் மூக்கு நுனியிலும் விரல்களிலும் வெம்மை ஊறியது.

மீண்டும் காற்று வீசத்தொடங்கியது. ஒளி மறைந்து பனிவெளி இருண்டது. வானில் விண்மீன்களெல்லாம் அணைந்தன. இறுதியாக துருவன் மூழ்கி பின்னகர்ந்தான். “நாம் கிளம்பவேண்டியதுதான். இன்றிரவுக்குள் நாம் பாகீரதியின் முதல்வளைவை அடைந்துவிடவேண்டும். இங்கு இன்னொருநாள் தங்குமளவுக்கு நம்மிடம் உணவும் விறகும் இல்லை” என்றார் தௌம்ரர். அவரது மாணவன் ஒருவன் சிறிய தோல்சுருள் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுக்க அதை தரையில் விரித்து அதிலிருந்த திசைகள் மேல் கையோட்டி மலைமுடிகளை அடையாளம் கண்டார். வரைபடத்தில் கண்ட வழியை நினைவில் நிறுத்தியபடி எழுந்து மலைகளை நோக்கினார். பின்னர் தென்மேற்குதிசை நோக்கி கைநீட்டி “அவ்வழியே” என்றார்.

அவரது மாணவர்கள் விரைந்து கூடாரத்தை கழற்றிச் சுருட்டிக்கட்டினர். எஞ்சிய விறகையும் உணவுப்பொருட்களையும் கட்டி எடுத்துக்கொண்டனர். பனியில் ஊன்றி நடப்பதற்கான கோல்களை ஒருவன் அனைவருக்கும் அளித்தான். காற்று வலுவான, சீரான பெருக்காக தென்கிழக்கு நோக்கிச் சரிந்து சென்றது. “அன்னை கங்கையே” என்றார் தௌம்ரர். அண்ணாந்து கண்மீது கைவைத்து மங்கலாகி மெல்லிய வெண்தீற்றலாகத் தெரிந்த மேருமலையை நோக்கினார். ”வடமீன் துணைசெய்க!” என்றபின் திரும்பி நடந்தார்.

அவரது மாணவர்களில் ஒருவன் “சுனைக்குள் ஏதோ மின்னுகிறது” என்றான். “மீனாக இருக்கும்” என்றான் இன்னொருவன். “இப்பனிச்சுனையில் மீன்கள் இல்லையே” என்றபடி இன்னொருவன் சற்று முன்னால் சென்று நோக்கி “அது வடமீன்...” என்றான். தௌம்ரர் திகைப்புடன் வானை நோக்கினர். இன்னொரு சீடன் “விண்ணில் இல்லாத மீன் சுனையில் எப்படித் தெரியும்?” என்றான். அதற்குள் சீடர்கள் கோமுகச் சுனை நோக்கி ஓடத்தொடங்கினர். அருகே சென்ற ஒருவன் “குருநாதரே, அது வடமீனேதான்” என்றான். நடுங்கும் காலடிகளை விரைந்து வைத்து தௌம்ரர் கோமுகச்சுனை அருகே வந்து நின்றார்.

வெண்நுரைப் பனிசூழ நீலநீர் நிறைந்து மெல்லிய அலைகளுடன் கிடந்த கோமுகச்சுனையில் அவர்கள் விடியற்காலையில் கண்ட வடமீன் அசைவற்று நின்றிருந்தது. தௌம்ரரின் மாணவர்கள் அனைவரும் வானை நோக்கினர். அங்கே பனிப்பிசிறுகள் பொழிந்த வானம் மங்கலான வெண்ணிறத்தில் விரிந்து வளைந்து மூடி நின்றிருந்தது. அவர்கள் திகைப்புடன் தௌம்ரரை நோக்கினர். அவர் கைகளைக்கூப்பி “ஆம்” என்றார். அவர்கள் அவர் சொல்லப்போவதை எதிர்நோக்கி அருகணைந்தனர்.

“அன்னையின் ஆடல்” என்றார் தௌம்ரர். “அவளில் ஒரு துளி மண்ணிலொரு மகளாகப் பிறக்கவிருக்கிறது. முடிவிலாக் காமமும் முடிவிலா செயலூக்கமும் கொண்ட அன்னை ஒருத்தி எழவிருக்கிறாள். பெருஞ்சினமும் பெருங்கருணையும் ஏந்தி உலகுபுரக்கப்போகிறாள்.” ஒரு மாணவன் மெல்லிய குரலில் “எங்கே?” என்றான். “அதை நானறியேன். அவள் இம்முறை ஆடவிருப்பதென்ன என்றும் நாம் அறிய முடியாது. அவள் வருகை நிகழ்வதாக. இந்த மண் நலம் கொள்வதாக!” என்றார். குழம்பியவர்களாக மாணவர்கள் கைகூப்பினர்.

மலைச்சரிவிறங்கி தென்மேற்கு நோக்கிச் செல்லும்போது தௌம்ரர் ஒரு சொல்லும் பேசவில்லை. பாகீரதி வளைவுகளில் விரைவழிந்து நிலைத்த சுழிகளிலெல்லாம் வடமீன் அதில் விழுந்திருப்பதை அவர்கள் கண்டனர். மெல்ல துணிவை திரட்டிக்கொண்ட ஒரு மாணவன் “கங்கை அன்னையல்லவா? பெருங்கருணை கொண்ட அன்னையாக அவள் வருவதை எண்ணி நாம் மகிழ்வதல்லவா முறை?” என்றான். தௌம்ரர் தலைதூக்கி நோக்கி “ஆம், அன்னையின் வருகைக்கு நாம் மகிழ்ந்தேயாகவேண்டும். கரைமீறி எழுந்து நகரங்களை இடித்து காடுகளை மூடி பெருக்கெடுக்கும் வெள்ளமும் அவள் கருணையே. அவளை நாம் ஒருபோதும் முற்றறிய முடியாது” என்றார்.

அச்சொல் கேட்டு நடுங்கி அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “எங்கோ அவள் வருகைக்காக பாதைகள் அமைகின்றன. அவள் ஆடும் களங்கள் ஒருங்குகின்றன. பாரதவர்ஷம் மீது முகில்திரள் பரவி இடியோசை எழுகிறது. மின்னல் ஒளிவிடுகிறது” என்றார். பின்னர் மலையிறங்கி ரிஷிகேச தவச்சாலையை அடைவது வரை அவர் ஒரு சொல்லும் பேசவில்லை.

பகுதி இரண்டு : சொற்கனல் - 1

அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச் சொன்னபடியே இருளுக்குள் நடந்துசென்று அருகே ஓடிய சிற்றோடையில் கைகால்களை சுத்தம்செய்துவிட்டு வந்து துரோணரின் அடுமனைக்குள் புகுந்து அடுப்பு மூட்டி அவருக்குரிய வஜ்ரதானிய கஞ்சியை சமைக்கத் தொடங்கினான். அவனுடைய காலடியோசையைக் கேட்டுத்தான் காட்டின் முதல் கரிச்சான் துயிலெழுந்து குரலெழுப்பியது. அதைக்கேட்டு எழுந்த அஸ்வத்தாமன் ஓடைக்கரைக்குச் செல்வதை அர்ஜுனன் கண்டான்.

துரோணரின் படுக்கையருகே சென்று நின்று 'ஓம் ஓம் ஓம்' என்று மூன்றுமுறை அர்ஜுனன் சொன்னான். அவர் கண்விழித்து எழுந்து வலப்பக்கமாகப் புரண்டு அங்கே பூசனைப்பலகையில் இருந்த அக்னிவேசரின் பாதுகைகளை தொட்டு வணங்கிவிட்டு கைகளை நீட்டி வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு எழுந்தார். அர்ஜுனனிடம் ஒன்றும் சொல்லாமல் இருளுக்குள் நடந்து வெளியே சென்றார். அவர் ஓடையில் முகம் கழுவி மீளும் வரை அர்ஜுனன் காத்து நின்றிருந்தான். அவர் திண்ணையில் அமர்ந்துகொண்டு கிழக்கை நோக்கி ஊழ்கத்திலாழ்ந்தபோது அவன் அவர் அருகே தூபத்தை வைத்தான்.

அஸ்வத்தாமன் வந்து தந்தையின் வலப்பக்கம் நிழல்போல நின்றிருந்தான். அர்ஜுனன் குளியலுக்கான பொருட்கள் அடங்கிய கூடையுடன் வந்து இடப்பக்கம் நின்றான். தூபத்தின் கனல்பொடிகள் உடைந்து சுழன்று மேலேறி வளைந்து இருளில் மூழ்கின. தொலைவில் புகைமணம் பெற்ற யானை ஒன்று மெல்லப்பிளிறியது. மரக்கூட்டங்களில் பறவைகள் சிறகடித்து விழித்தெழத்தொடங்கின. முதலில் விழித்தவை சிறுகுஞ்சுகள். அவை புதியநாளை நோக்கி ஆவலுடன் கூவ அன்னையர் சலிப்புடன் அவற்றை அதட்டினர்.

சென்ற பகலில் இருந்தே குருகுலத்தை கௌரவர்களும் பாண்டவர்களும் சேவகர்களும் சேர்ந்து அலங்கரித்திருந்தனர். குருகுலமுகப்பில் மாந்தளிர்த் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கின. மாலையின் மொட்டுகள் விரியத் தொடங்கிய வாசனை காலையின் கனத்த குளிர்காற்றில் பரவியிருந்தது. குடில்முற்றங்கள் முழுக்க கங்கையின் வெண்மணல் விரிக்கப்பட்டு மலர்க்கொத்துகளும் தளிர்க்குலைகளும் தொங்கவிடப்பட்டு அணிசெய்யப்பட்டிருந்தன. குடில்சுவர்கள் புதிய களிமண்ணும் சுண்ணமும் சேர்த்து பூசப்பட்டு செம்மண்ணாலும் வெண்சுண்ணத்தாலும் சித்திரக்கோலமிடப்பட்டு கூரையில் பொன்னிறப்புல் வேயப்பட்டு புதியதாகப்பிறந்து வந்திருந்தன. சுண்ணமும் கொம்பரக்கும் குங்கிலியமும் கலந்த வாசனையுடன் தளிர்வாசனையும் மலர்வாசனையும் கூடி அங்கே எழுந்தது.

குருவந்தன நிகழ்ச்சிக்காக குருகுலம் முந்தையநாள் காலை முதல் ஒருங்கிக்கொண்டிருந்தது. மதியம் முதல் இரவெல்லாம் யானைகளையும் குதிரைகளையும் குளிப்பாட்டி அலங்கரித்துக்கொண்டிருந்தனர் சேவகர். படைக்கலங்கள் தீட்டப்பட்டு ஒளிகொண்டன. ஒவ்வொருவரும் அவர்களுக்கான நல்ல அணிகளையும் ஆடைகளையும் எடுத்து வைத்துக்கொண்டனர். அவற்றை பிறரிடம் காட்டி ஆடிகளில் அழகு பார்த்துக் கொண்டனர். இளங்கௌரவர்களும் பாண்டவர்களும் கொண்டிருந்த பகைமை முழுக்க அந்தக் கொண்டாட்டத்தில் கரைந்து மறைந்தது. நகுலனிடம் குண்டாசி தன் நகைகளை காட்டிக்கொண்டிருப்பதை அவ்வழியாகச் சென்ற அர்ஜுனன் கண்டான். இருவரும் எழுந்து வெட்கிய நகைப்புடன் உடலை வளைத்து வேறெங்கோ நோக்கி நின்றனர். அவன் குண்டாசியை நோக்கி புன்னகைபுரிந்தபடி கடந்து சென்றான்.

மரத்தடியில் அமர்ந்திருந்த தருமன் அதை ஏற்கனவே கண்டிருந்தான். எழுந்து அவனருகே வந்து “விழவுக்கொண்டாட்டங்களை குழந்தைகளே நன்கறிகின்றனர் இல்லையா?” என்றான். மூத்தவர் உடனே ஏதாவது தத்துவ விசாரத்துக்குள் இழுத்துவிடுவாரோ என்று எண்ணிய அர்ஜுனன் உதடுக்குள் புன்னகை செய்துகொண்டான். தருமன் “குழந்தைகளாக நாம் மாறமுடிந்தால் விழவுகளில் மகிழமுடியும். பெண்களுக்கு அது ஓரளவு முடிகிறது” என்றபின் “ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமைதான் மானுடர்களிடமுள்ளவை எல்லாம் என்று மூத்தவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்” என்றார். இதோ சரியான சொற்றொடரை அமைத்துவிட்டார் மூத்தவர் என்ற எண்ணம் எழவும் அர்ஜுனன் புன்னகை மேலும் பெரிதாகியது.

பிதாமகரும் கிருபரும் மாதுலர் சகுனியும் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிவிட்டதாக புறாச்செய்தி வந்தது. அவர்கள் மதியத்துக்குள் வந்துசேர்ந்துவிடுவார்கள்” என்றான் தருமன். “வழியெங்கும் மக்களின் வாழ்த்துக்களைக் கொள்ளாமல் அவர்களால் இங்கு வரமுடியாது.” அவன் விழிகள் சற்று கூர்மைகொண்டன. “துரியோதனன் கர்ணனுடன் வருவதாகச் செய்தி. அவர்கள் நேராக இங்கே வரவில்லை. பிதாமகர் வந்தபின்னர் வரவேண்டுமென்று நினைப்பார்கள்” என்றான். பகைமையையாவது நீங்கள் மறப்பதாவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். புன்னகையுடன் “ஆம், அவர்கள் வருவதைச் சொன்னார்கள்” என்றான்.

“நாளையுடன் இந்த குருகுல வாழ்க்கை முடிந்தது. குருவந்தனம் முடிந்ததும் திரும்பி ஒரு பெருமூச்சுவிட்டு கிளம்பவேண்டியதுதான்” என்றான் தருமன். “நான் உன்னிடம் சொல்வதற்கென்ன, இந்த வாழ்க்கை எனக்குச் சலித்துவிட்டது. ஒவ்வொருநாளும் ஒரே செயல்கள். ஒரே பாடங்கள். திரும்பத்திரும்ப ஒன்றைச் செய்து அதை நம் உடலுக்குப்பழக்கும் எளிய வித்தைதான் படைக்கலப்பயிற்சி என்பது. வில்வித்தைக்கும் மத்து கடையும் ஆய்ச்சியின் கைத்திறனுக்கும் என்ன வேறுபாடு? வில்லாளியின் விரலைவிட குரங்கின் வாலில் உள்ளது நுட்பம்” என்றான்.

“ஆம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆனால் இன்றைய அரசியல்சூழலில் நமக்குப் படைக்கலப்பயிற்சி தேவையாக இருக்கிறதல்லவா?” தருமன் பெருமூச்சுடன் “ஆம், என்று படைக்கலத் திறனுக்கு சொல்திறன் மாற்றாகிறதோ அன்றுதான் மானுடம் பண்படுகிறது என்பேன்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் 'படைக்கலங்களுக்கு ஒற்றை இலக்கும் ஒரேபொருளும் அல்லவா?' என்று எண்ணிக்கொண்டான். “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான் தருமன். “நான் எண்ணுவதே இல்லை. என் கைகள் அனைத்தையும் எண்ணட்டும் என்று வில்யோகம் பயில்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

“நாளைமறுநாள் நாம் அஸ்தினபுரியில் இருப்போம். கொற்றவை ஆலயத்தில் பூசனைக்குப்பின் நமக்கு இளவரசுப்பட்டங்கள் சூட்டப்படும். வேறு செயல்சூழலுக்குச் செல்கிறோம். நாம் அதன்பின் தனிமனிதர்கள் அல்ல. அஸ்தினபுரியின் குடிமக்களின் நாவாகவும் கைகளாகவும் சித்தமாகவும் செயல்படவேண்டியவர்கள்” என்று தருமன் சொன்னான். “அதற்கான பயிற்சியை நீ இன்னும் அடையவில்லை. அதை நீ விதுரரிடமிருந்தே அறியமுடியும். அவருடன் ஒவ்வொருநாளும் அமைச்சு அலுவலகத்துக்கு வா. அவருடன் இரு. அவர் சொற்களையும் செயல்களையும் கவனி. சொல்லுக்கும் செயலுக்கும் இடையே என்ன நிகழ்கிறது என்று உனக்கு எப்போது புரிகிறதோ அப்போதுதான் நீ அரசனாகத் தொடங்குகிறாய்.”

“மூத்தவரே, இந்த குருகுலத்தை விட்டு நீங்குவதுபோல எனக்கு துயர்மிக்க ஒன்று பிறிதில்லை” என்றான் அர்ஜுனன். “இனி என் வாழ்க்கையில் இதற்கிணையான இனிய காலகட்டம் ஒன்று வருமென்று நான் எண்ணவில்லை. என் குருவின் காலடிகளில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டிருந்தேன். கணம்தோறும் வளர்ந்துகொண்டிருந்தேன். எதை தெய்வங்கள் மானுடருக்குப் பணித்துள்ள முதற்கடமை என்று சொல்லலாமோ அதைச் செய்துகொண்டிருந்தேன். ஞானத்தை அடைதலை. இனி அந்த வாழ்க்கை எனக்கில்லை என எண்ணும்போது இறப்பை நெருங்குவதாகவே உணர்கிறேன்.”

“மூடத்தனம்” என்றான் தருமன் சினத்துடன். “நீ என்ன நினைக்கிறாய்? இந்த வில்லும் அம்புமா கல்வி என்பது? மூடா, இது வெறும் பயிற்சி. கல்வி என்பது நூலறிவும் நூலை வெல்லும் நுண்ணறிவும் மட்டுமே. இந்த வானைப்பற்றி உனக்கென்ன தெரியும்? விண்ணகக் கோள்களை அறிவாயா? மண்ணை அறிந்திருக்கிறாயா? இதோ செல்லும் இந்தச் சிறு பூச்சியின் பெயரென்ன சொல்லமுடியுமா? நீ எதை அறிந்தாய்? உன்னை எவரும் கொல்லாதபடி இருக்கக் கற்றாய். பிறரைக் கொல்லும் கலையும் கற்றாய். இதுவா கல்வி என்பது? அப்படி எண்ணினாயென்றால் நீ உன்னையே சிறுமைப்படுத்துகிறாய்.”

தலைவணங்கி “ஆம் மூத்தவரே, தாங்கள் சொல்வது உண்மை” என்று சொல்லி விலகுவதன்றி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். அப்பால் புல்வெளியை வெட்டிச்செதுக்கி உருவாக்கிய திறந்த மடைப்பள்ளியில் வண்டிகளில் வந்திறங்கிய பெரிய சமையல்பாத்திரங்களை கயிறுகட்டி மூங்கிலில் சுமந்து இறக்கிக்கொண்டிருந்த சேவகர்களின் எடைஏறிய குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பெரிய உருளைக்கற்களை கொண்டுவந்து அடுப்புகள் செய்துகொண்டிருந்தனர். அங்கே பீமன் தலையில் ஒரு பெரிய முண்டாசுக்கட்டுடன் நின்றிருப்பதைக் கண்டான். அவ்வழி செல்லாமல் திரும்பி மீண்டும் துரோணரின் குருகுடிலுக்கே வந்தான்.

முன்மதியம் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மரும் சகுனியும் வந்தனர். துரோணர் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று குருகுலத்தின் பெரிய விருந்தினர்குடிலில் தங்கவைத்தார். பின்மதியம் துரியோதனனும் கர்ணனும் தனி ரதத்தில் வந்தனர். அவர்களைக் கண்டதும் இளம்கௌரவர்கள் ஓடிச்சென்று மொய்த்துக்கொண்டனர். கர்ணனைக் கண்டு புன்னகையுடன் விலகிநின்ற நகுலனையும் சகதேவனையும் அவன் கை நீட்டி அழைத்தான். மேலும் ஒரு கணம் தயங்கிவிட்டு இருவரும் ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டனர். அவன் உரக்க நகைத்தபடி அவர்கள் இருவரையும் தூக்கி தன் தோளில் வைத்துக்கொண்டான்.

அவர்கள் இருவரும் வளைந்து இறங்க முயன்றனர். துரியோதனன் அவர்களை நிமிர்ந்து நோக்கி ஏதோ கேட்பதையும் அவர்கள் வெட்கியபடி மெல்லிய தலையாட்டலுடன் பதில் சொல்வதையும் அர்ஜுனன் கண்டான். நல்லவேளையாக அங்கே பீமன் இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். யானைகளுடன் அவன் கங்கைக்குச் சென்றிருந்தான். நகுலனும் சகதேவனும் வளர்ந்துவிட்டனர் என்று அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். குண்டாசி துச்சாதனனிடம் தன்னை தூக்கும்படி சொன்னான். அவன் சிரித்துக்கொண்டே குதிரைச்சம்மட்டியை ஓங்கினான்.

துரோணர் விழிதிறந்து “ஓம்” என்றபடி எழுந்து தன் வில்லை எடுத்துக்கொண்டு கங்கைநோக்கி நடக்கத்தொடங்கினார். அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் அவரைப் பின்தொடர்ந்தனர். அன்று துரோணர் எதையும் கற்பிக்கமாட்டார் என்று அர்ஜுனன் எண்ணினான். அவருக்கும் மாணவர்கள் பிரிந்துசெல்வதில் துயர் இருக்கும். குறிப்பாக அவனைப்போன்ற ஒருவன். அவனை தன் முதல்மாணவன் என்று அவர் உலகுக்கு அறிவித்துவிட்டார். அது பாரதவர்ஷமே அறிந்த செய்தியாகிவிட்டது. ஒருவேளை அவர் அவனுக்கு ஏதேனும் அறிவுரைகள் சொல்லக்கூடும். அத்தனைநாள் கற்பித்தவற்றைத் தொகுத்துக்கொள்ள உதவும் சூத்திரங்களை சொல்லக்கூடும்.

ஆனால் துரோணர் நேராக முந்தையநாள் இரவில் அவர் சொல்லிவிட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்கினார். “ஓர் அம்பு என்பது நம்மிடமிருந்து இப்பருவெளி நோக்கிச் செல்வது என்று நேற்று சொன்னேன். இலக்குகளாக நம் முன் நின்றிருக்கும் அனைத்தும் பருவெளியே என்று உணர்க! அம்பு நமக்குள் எழுந்து நம்மைச்சூழ்ந்திருக்கும் அதைச் சென்று தொடுகிறது. அவ்வழியாக நாம் அதனுடன் தொடர்புகொள்கிறோம். விழியிழந்தவனின் விரல் பொருளைத் தொட்டுப்பார்ப்பதுபோல அம்பு இலக்குகளை அறிகிறது. சொல் பொருளில் சென்று அமைவதுபோல அம்பு இலக்குடன் இணைகிறது. அம்பு இப்புடவியை அறியும் கலையேயாகும்.”

அந்த இயல்புத்தன்மை அளித்த வியப்பைக் கடந்ததுமே, துரோணர் அவனுள் ஓடிக்கொண்டிருந்த ஐயத்துக்குத்தான் விடையளிக்கிறார் என்றும் புரிந்துகொண்டான். ஆனால் அதில் வியக்க ஏதுமில்லை. அவன் உள்ளம் எப்போதுமே அவருக்குத் தெரியும். ஒருபோதும் வினாவை அவன் கேட்டு அவர் பதில்சொல்லும்படி நிகழ்ந்ததில்லை. “அலகிலாதது பரம்பொருள். அதை மானுடன் அறிய ஒரு உருவம் தேவைப்படுகிறது. ஓர் இடம், ஒரு அடையாளம், ஒரு சொல் தேவையாகிறது. அது பரம்பொருளின் இயல்பு அல்ல. மானுடனின் எல்லையின் விளைவு” என்றபடி துரோணர் நடந்தார்.

“அதையே கல்விக்கும் சொல்லமுடியும். இப்பிரபஞ்சமென்பது என்ன? இது ஞானம். இதை அறிபடுபொருள் என ஒற்றைச்சொல்லில் வகுத்துரைக்கிறது நியாயசாஸ்திரம். பரம்பொருளே ஓர் அறிபடுபொருள்தான் அதற்கு. ஆம், அந்தத் துணிபை நாம் ஏற்றேயாகவேண்டும். மானுடன் அறிந்தது மிகச்சிறிய துளியாக இருக்கலாம். ஆனால் அறியக்கூடுவதுதான் அனைத்தும் என்ற தன்னுணர்வே அறிவை நிகழ்த்தும் ஆற்றலாக இருக்கமுடியும். அவன் என்றோ ஒருநாள் அறியப்போவதுதான் இங்குள்ள அனைத்தும். ஞானமோ முடிவிலி. ஞாதா என நின்றிருக்கும் மானுட உள்ளம் எல்லைக்குட்பட்டது. எல்லையற்றதை எல்லையுள்ளது அள்ளமுடியுமா?”

“முடியும்” என்று துரோணர் சொன்னார். “அறிபடுபொருளுக்கு எல்லையில்லை என்பதனாலேயே அறியும் முறைக்கு எல்லையை அமைத்துக்கொள்க! உனக்கான ஒரேயொரு அறிபடுமுறை வழியாகவே நீ அனைத்தையும் அறிந்துகொள்ளமுடியும். இந்த கங்கையில் தோணியோட்டும் ஒருவன் துடுப்பின் வழியாக பரம்பொருளை அறியமுடியும். பாலில் மத்து கடையும் ஆய்ச்சி அதன்மூலம் மெய்ஞானத்தை அறியமுடியும். கழனியில் மேழிபற்றி அறியக்கூடுவன அனைத்தையும் அறிந்து ஆன்றவிந்த சான்றோரை நீ காணமுடியும். வானம் எத்தனை விரிந்ததானாலும் உன் விழிகளால் அல்லவா அதைக் காண்கிறாய்?” என்றார் துரோணர்.

இடைவரை நீரில் இறங்கி நின்று “அன்னையே காப்பு” என்று கூவி மூழ்கி எழுந்தார். அருகே நீரில் நின்ற அஸ்வத்தாமன் அவருக்கான மரவுரியை கையில் வைத்திருந்தான். நீர்த்துளிகள் தெறிக்க உடலை இறுக்கிக்கொண்டு அர்ஜுனன் நின்றான். துரோணர் நிமிர்ந்து வானை நோக்கினார். “அதோ தெரிகிறான் துருவன். பரம்பொருளுக்கும் கிடைக்காத நிலைபேறு அவனுக்குக் கிடைத்தது என்கிறார்கள் ரிஷிகள். அவனை மையமாக்கியே வானமும் பூமியும் இயங்குகின்றன. ஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருக்கிறான். யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனை பார்த்தாகவேண்டும். கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கவேண்டும். படைக்கலமேந்திய வீரன் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.”

“ஏனென்றால் படைக்கலம்போல சஞ்சலம் தருவது பிறிதில்லை. காமம் சஞ்சலம் அளிப்பது. கல்வி மேலும் நிலையின்மையை அளிப்பது. ஆனால் படைக்கலமேந்தியவனின் அதிகார விழைவு அளிக்கும் சஞ்சலத்துக்கு எல்லையே இல்லை. விண்ணகத்து எழுந்த துருவனைப்பார். எங்கு நின்றிருக்கிறாய் என அது உனக்குக் காட்டும்” அர்ஜுனனிடம் சொன்னார். “இன்று காலை குருபூசை நிகழ்ச்சிகள் முடிந்ததும் நீ அஸ்தினபுரிக்குக் கிளம்புவாய். இனி உன்னுடன் நான் இருக்கமாட்டேன். எப்போதும் என் வடிவாக துருவன் உன்னுடன் இருப்பானாக!” என்றார் துரோணர். “ஆணை!” என்று அர்ஜுனன் கைகூப்பினான்.

நீராடி முடித்து கரையேறும்போது அர்ஜுனனிடம் அம்புகளைப்பற்றி சொல்லத்தொடங்கினார். “மலர்களைப் பறித்து காற்றில் வீசிப்பார். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வகையில் மண்ணில் விழும். மரமல்லி மலர் பம்பரம்போலச் சுழலும். செண்பகத்தின் காம்பு வந்து மண்ணில் தைக்கும். ஒவ்வொரு மலர்தலிலும் காற்று விளையாடும் அமைப்பு ஒன்று உள்ளது. அதன் அடிப்படையில் அம்புகளின் அடிச்சிறகை அமைக்கும் கலையை புஷ்பபாண சாஸ்திரம் என்கிறார்கள். வழக்கொழிந்துபோன கலை அது. மன்மதன் அந்த மலரம்புகளைக் கையாள்கிறான் என்ற கதையாக மட்டுமே அது எஞ்சியிருக்கிறது.”

“போருக்கான கலை அல்ல மலரம்புக்கலை, அலங்காரத்துக்கானது. விழாக்காலங்களில் விண்ணில் இலக்கை வீழ்த்தியபின் அம்புகள் தரையிறங்கும் அழகுக்காக கண்டடையப்பட்டது. நூற்றெட்டு மலர்களின் இதழமைப்புகள் அதில் வகுக்கப்பட்டுள்ளன. வில்லவனின் கையில் அம்பும் மலராகவேண்டும். மலரிலும் அவன் அம்பையே காணவேண்டும்.” துரோணர் வழக்கம்போல தன் சொற்களில் மூழ்கியவராக சொல்லிக்கொண்டே சென்றார். “நொச்சிமலர் மிக மெல்ல உதிர்வது. அது ஓர் எல்லை. அங்கிருந்து தொடங்குகின்றது மலரம்புகளின் பட்டியல்...”

அவரது சொற்களை விழிகளாலும் செவிகளாலும் உடலாலும் உள்வாங்கியபடி அவர்கள் நடந்தனர். குடிலை அடைந்து துரோணர் மான்தோலாசனத்தில் ஊழ்கத்தில் அமர்ந்ததும் அர்ஜுனன் ஓடிச்சென்று அடுமனையில் அவருக்கான உணவை சமைக்கத் தொடங்கினான். நகுலனும் சகதேவனும் குளித்து புத்தாடை அணிந்து தலையில் சூடிய மல்லிகைமலர் மணக்க வந்தனர். சகதேவன் “மூத்தவரே நான் கங்கையில் நடுப்பகுதி வரை நீந்தினேன்” என்றான். “நானும்” என்றான் நகுலன்.

அப்பால் குண்டாசியின் தலை தெரிந்தது. “வா” என்று அர்ஜுனன் அழைத்தான் குண்டாசி புன்னகையுடன் வந்து “பாதி வரைக்கும் நீந்தவில்லை மூத்தவரே, சற்று தூரம்தான்” என்றான். “போடா... நீதான் பயந்துபோய் திரும்பினாய்” என்று சொல்லி குண்டாசியின் குடுமியைப் பற்றினான் சகதேவன். “சண்டை போடக்கூடாது... மூவருமே நீந்தினீர்கள். நான் நம்புகிறேன்” என்றபடி அர்ஜுனன் விறகை ஏற்றிவைத்தான். “பிதாமகர் நீராடி வந்துவிட்டாரா?” என்றான். நகுலன் “பிதாமகரும் கிருபரும் மூத்தவர் இருவரும் நீராடச்சென்றனர். மாதுலர் சகுனியும் கௌரவமூத்தவரும் கர்ணரும் தனியாகச் சென்றனர். அப்போதுதான் பேரமைச்சர் ஸௌனகரும் விதுரரும் வந்தார்கள்” என்றான்.

“விதுரர் வந்துவிட்டாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். "ஆம், அவர்கள் நள்ளிரவில் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பினார்களாம். வழியில் ஒரு புலி குறுக்கே வந்தது. வீரர்களின் பந்த வெளிச்சம் கண்டு அஞ்சி விலகிச்சென்றுவிட்டது என்றார்கள்” என்றான் சகதேவன். “மூன்று புலிகள்!” என்று கிரீச்சிட்ட குரலில் சொன்னபடி குண்டாசி குறுக்கே புகுந்தான். “என்னிடம் அமைச்சர் அவரே சொன்னார்.” சகதேவன் அவன் குடுமியை மீண்டும் பிடித்துக்கொண்டான். “போடா... பொய் சொல்கிறான். மூத்தவரே, புலியைப்பற்றி சற்று முன்பு நான்தான் இவனிடம் சொன்னேன்.”

துரோணர் உணவருந்தியதும் அர்ஜுனனிடம் “நீ சென்று ஆடையணிகளுடன் வா!” என்றார். தலைவணங்கி தன் குடிலுக்கு ஓடி புலித்தோல் ஆடை அணிந்து பட்டுக்கச்சை கட்டி குழலை பட்டுநூலால் சுற்றிக்கட்டி அதில் பாரிஜாதமலர் சூடி அணிகொண்டான் அர்ஜுனன். தன் வில்லுடன் அவன் வெளியே வந்தபோது வெளியே இசை முழங்கத் தொடங்கியிருந்தது. மலைச்சரிவில் யானைத்தோல் கூடாரங்களில் தங்கியிருந்த சூதர்கள் குளித்து புத்தாடை அணிந்து தங்கள் வாத்தியங்களுடன் மையமுற்றத்தில் தோரணத்தூண்களுக்குக் கீழே நின்று இசைத்துக்கொண்டிருந்தனர். மணியும் சங்கும் முழவும் கொம்பும் இணைந்த இசை கானக ஒலிகளில் இருந்து கடைந்து எடுத்த இசை போன்றிருந்தது.

அர்ஜுனன் சென்று முற்றத்தில் நின்றுகொண்டான். ஸௌனகர் ஆணைகளைப் பிறப்பித்தவாறே விருந்தினர்குடில் நோக்கி ஓடுவது தெரிந்தது. அவருக்குப்பின் அமைச்சர்கள் வைராடரும் பூரணரும் ஓடினார்கள். அவர் சென்றதும் அவர்கள் திரும்பி வந்து ஆணைகளை கூவத்தொடங்கினர். தருமன் நீலப்பட்டாடை அணிந்து மலர்சூடி வந்தான். “மந்தன் எங்கே பார்த்தா? காலையில் இருந்தே அவனைத் தேடுகிறேன். அவன் துரியோதனனை தனியாக எங்கேனும் சந்தித்து பூசலாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்” என்றான். மூத்தவர் அதை விரும்புகிறாரா என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

உடல் வலிமையற்றிருக்கையில் உள்ளம் அச்சம் கொள்கிறது, அச்சம் அனைத்து சிந்தனைகளையும் திரிபடையச்செய்துவிடுகிறது, எனவே உடலில் ஆற்றலற்ற ஒருவனால் நேரான சிந்தனையை அடையவே முடியாது என்று துரோணர் சொன்னதை அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். ஆனால் நேரான சிந்தனைதான் வெல்லும் என்பதில்லை. நேரான சிந்தனையே பயனுள்ளது என்றுமில்லை. சிந்தனையில் வளைவு என்பது எப்போதும் முக்கியமானதே. வேறுபாடே அதன் வல்லமையாக ஆகமுடியும் என்றார் துரோணர். “அஷ்டவக்ரர் என்னும் ஞானியை நீ அறிந்திருப்பாய். எட்டு வளைவுகள் கொண்ட உடல் அவருடையது. எட்டு வளைவுகளும் அவரது சிந்தனையிலும் இருந்தன. ஆகவே அவர் வேறு எவரும் கேட்காத வினாக்களைக் கேட்டார்.”

“வருகிறார்கள்” என்று தருமன் மெல்லியகுரலில் சொன்னான். குடிலில் இருந்து துரியோதனனும் கர்ணனும் பேசிச்சிரித்தபடி வருவதை அர்ஜுனன் கண்டான். பின்னால் துச்சாதனன் வந்தான் அதற்கப்பால் பெருந்திரளாக மூத்த கௌரவர்கள் வந்தனர். “நம்மைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்களோ?” என்றான் தருமன். அர்ஜுனன் பதில் சொல்லவில்லை. அவன் கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். எப்போதும் போல எத்தனை உயரம் என்று முதலில் வியந்தது சிந்தை. பின் எவ்வளவு பேரழகன் என்று பிரமித்தது. அவன் தோள்களை புயங்களை மார்பை இடையை கண்களை மென்மீசையை நோக்கிக்கொண்டே நின்றான்.

“என் கனவுகளில் அவன் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் அணிந்தவனாகவே வருகிறான்” என்றான் தருமன். “ஒவ்வொரு முறை நேரில் காணும்போதும் அவன் மேல் எல்லையற்ற அச்சத்தை அடைகிறேன். அவன் நினைவே என்னை நடுங்கச் செய்கிறது. ஆனால் என் கனவுகளில் அவன் என் தேவனாக இருக்கிறான். அவன் சொல்லுக்குச் சேவை செய்கிறேன். அவன் அளிக்கும் சிறுபுன்னகையை பெருநிதியென பெற்றுக்கொள்கிறேன். அவன் என்னைத் தொட்டானென்றால் கண்ணீருடன் கைகூப்புகிறேன்.” அர்ஜுனன் திரும்பி தருமனைப் பார்த்தான். பாண்டவர் ஐவரும் கொள்ளும் உணர்வு அதுவே மூத்தவரே என்று சொல்ல எழுந்த நாவை அடக்கிக்கொண்டு விழிகளை விலக்கிக்கொண்டான்.

இளவரசர்கள் களமுற்றத்தில் கூடியதும் கொம்புகளும் முரசுகளும் சுதிமாறி ஓங்கி ஒலித்தன. ஸௌனகர் பீஷ்மரையும் கிருபரையும் சகுனியையும் அழைத்துக்கொண்டு வந்தார். சற்றுப்பின்னால் பிற அமைச்சர்களுடன் பேசியபடி விதுரர் வந்தார். “மந்தன் எங்கே?” என்றான் தருமன். அர்ஜுனன் சுற்றும்பார்த்தான். பீமனைக் காணவில்லை. “இங்கிதமும் முறைமையும் அறியா மூடன். இந்நேரம் அடுமனையிலோ யானைக்கொட்டிலிலோ இருப்பான்...” என்று தருமன் மெல்ல சொன்னான். “அவனை அழைத்துவர எவரையாவது அனுப்புகிறேன், இரு” அதற்குள் அப்பால் வேங்கைமரங்களுக்குப்பின்னாலிருந்து பீமன் வருவது தெரிந்தது. எளிய தோலாடை மட்டும் அணிந்து விரிந்த தோள்களில் நீர்த்துளிகள் நிறைந்திருக்க யானைநடையில் வந்தான்

குண்டாசி பீமனைச் சுட்டி ஏதோ சொல்ல இளைய கௌரவர்களும் நகுலனும் சகதேவனும் சிரிப்பை அடக்கினர். பீமனை நோக்கிய தருமன் “அவனைப்பார்த்தால் அரசகுமாரன் போலவா இருக்கிறது? காட்டிலிருந்து வந்தவன் போலிருக்கிறான்” என்றான். அர்ஜுனன் துரியோதனனைப் பார்த்தான். அவன் விழிகள் பீமனின் உடலில் ஊன்றியிருப்பதைக் கண்டு புன்னகைசெய்தான். அப்புன்னகையை அறிந்ததுபோல விழிகளை விலக்கிய துரியோதனன் அரைக்கணம் அர்ஜுனன் விழிகளை சந்தித்த்து விலகிக்கொண்டான். திரும்பி பீமனை நோக்கிய அர்ஜுனன் அவன் துரியோதனனைத்தான் பார்க்கிறான் என்று கண்டான்.

“துரியோதனன் கண்களில் தெரியும் அச்சம் மகிழ்ச்சி அளிக்கிறது பார்த்தா” என்றான் தருமன். இங்கு ஒவ்வொருவரும் தங்கள் எதிரியைத்தான் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். கர்ணன் ஒருவன் மட்டிலும் எவரையும் பார்க்காமல் தான் மட்டுமே இருப்பதுபோல தருக்கி நிமிர்ந்திருக்கிறான். உண்மையிலேயே இப்புவியில் எதிரிகளற்றவனா அவன்? என் வில் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லையா? அர்ஜுனனின் உடல் பதறத் தொடங்கியது. அக்கணமே வில்லெடுத்து கர்ணனை போருக்கழைக்கவேண்டும் என்று அவன் அகம் பொங்கியது.

என்ன இழிசிந்தை என அவன் தன்னையே கடிந்துகொண்டான். அத்தனை கோழையா நான்? என்னுள் இருப்பது இச்சிறுமைதானா? அவனுக்குள் அது சிறிதும் இல்லையா என்ன? ஏனென்றால் அவன் எதையும் விழையவில்லை. நாட்டை, வெற்றியை, புகழை. எதை இழக்கவும் அவனுக்குத் தயக்கம் இல்லை. ஆகவே அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளே இல்லாதவனைப்போல விடுதலை பெற்றவன் யார்?

பீஷ்மரும் கிருபரும் சகுனியும் களம் வந்து அமர்ந்தபோது அனைவரும் தலைவணங்கி வாழ்த்து கூவினர். விதுரர் பீஷ்மரை நோக்கிவிட்டு தலையசைக்க ஸௌனகர் சென்று துரோணரின் குடில் வாயிலில் நின்றார். சற்றுநேரத்தில் அஸ்வத்தாமன் துணைவர துரோணர் மான் தோலாடையும் மென்மயிர் கச்சையும் அணிந்து உச்சியில் சுருட்டிக்கட்டிய குடுமியில் மலர்சூடி சந்தன மிதியடி ஒலிக்க நிமிர்ந்து நடந்துவந்தார். மங்கல இசை எழுந்து அப்பகுதியை நிறைத்தது.

பீஷ்மரும் சகுனியும் சென்று துரோணருக்குத் தலைவணங்கி அவரை அழைத்துவந்தனர். கிருபரும் விதுரரும் அவரை வணங்கி ஆசனத்தில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகள் சூழ்ந்து ஒலிக்க துரோணர் இறுகிய முகத்துடன் எதையும் பாராதவர் போல இருப்பதை அர்ஜுனன் கண்டான். துரோணரின் காலடியில் ஒரு வெண்பட்டு விரிக்கப்பட்டது. மலர்க்குவைகள் கொண்டுவந்து இருபக்கமும் வைக்கப்பட்டன. அவருக்கு வலப்பக்கம் குங்குமமும் களபமும் இட்டு அலங்கரிக்கப்பட்ட படைக்கலங்கள் வைக்கப்பட்டன.

பீஷ்மர் எழுந்து கைகூப்பியதும் இசை அவிந்து அவை அமைதிகொண்டது. அனைவரையும் வணங்கி முகமன் சொன்னபின்னர் “உத்தமர்களே, இன்று குருவந்தனம் செய்து கல்விநிறைவுகொண்டு அஸ்தினபுரியின் இளவரசர்கள் அரண்மனைக்கு மீளவிருக்கிறார்கள். அவர்களுக்கான உலகியல் கடன்கள் காத்திருக்கின்றன. ஊனுடல்களாக இங்கு வந்தவர்கள் அவர்கள். குருவருளால் ஞானமும் விவேகமும் கொண்டவர்களாக ஆகி விட்டிருக்கிறார்கள். அஸ்தினபுரியின் பிதாமகனாகிய நான் என் மைந்தர்கள் சார்பில் அதற்காக குருநாதர் துரோணரை வணங்கி நன்றி சொல்கிறேன்” என்றார்.

“ஓம் ஓம் ஓம்” என அனைவரும் முழங்கினர். பீஷ்மர் எழுந்துவந்து தன் இடையிலிருந்த வாளை உருவி துரோணர் முன் தாழ்த்தி வணங்கினார். அதன்பின் கிருபர் எழுந்து வந்து முகமன் சொல்லி “வடமீன் பகலிலும் தெரியும் நாளில் குருகுலநிறைவு கொண்டாடப்படவேண்டும் என்பது ஆன்றோர் முறை. இன்று அதோ விண்ணில் துருவன் தெரிகிறான். ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன் அருளால் அது கைகூடுவதாக! ஆசிரியரையும் துருவனையும் வணங்கி அருள்கொள்ளுங்கள்” என்றார்.

அதன்பின் அவரது வழிகாட்டலில் குண்டாசியும் நகுலனும் வந்து மஞ்சள்நீர் அள்ளி துரோணரின் காலில் மும்முறை விட்டு கழுவி மூன்றுமுறை மலர்தூவி ஐந்து அங்கங்களும் மண்ணில் பட விழுந்து எழுந்தனர். அவர் ஒரு மலர் எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அருகிலிருந்த படைக்கலங்களில் அவர்களுக்குரியதை எடுத்து அவர் காலடியில் அதைத் தாழ்த்தி வணங்கிவிட்டு திரும்பி மேலே மங்கலான வானில் முகிலற்ற நீலப்பரப்பில் உப்புப்பரல்போலத் தெரிந்த துருவனை நோக்கி கங்கை நீரை மும்முறை மலருடன் அள்ளி விட்டு வணங்கி புறம் காட்டாமல் பின் வாங்கினர்.

அஸ்வத்தாமன் வணங்கிய பின் அர்ஜுனன் வணங்கினான். துரியோதனனுக்குப்பின் கர்ணனும் இறுதியாக தருமனும் வணங்கினர். அனைவரும் படைக்கலங்களுடன் அவர் முன் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றிருந்தனர். பீஷ்மர் எழுந்து வணங்கி “குருநாதரே நிகரற்ற செல்வமாகிய கல்வியை இவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அதன்பொருட்டு என் நாடும் குலமும் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம். இத்தருணத்தில் நீங்கள் கோரும் குருகாணிக்கையை உங்கள் பாதங்களில் வைக்க என் மைந்தர் கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

துரோணரின் உடலெங்கும் மெல்லிய அலை ஒன்று கடந்துசெல்வதை அர்ஜுனன் கண்டான். நிமிர்ந்து தாடியை மெல்ல நீவியபடி அவர்களைப் பார்த்தார். அவர் விழிகள் அர்ஜுனனை வந்து தொட்டு நிலைத்தன. மெல்லிய குரலில் “நான் கோரும் குருகாணிக்கை ஒன்றே. பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து என் காலடியில் கொண்டுவந்து போடுங்கள்” என்றார்.

திகைத்து முன்னகர்ந்த விதுரர் “குருநாதரே பாஞ்சாலம் நமது நட்புநாடு. அது...” என ஆரம்பிக்க பீஷ்மர் “மறுசிந்தனைக்கே இங்கு இடமில்லை. அது குருநாதரின் ஆணை” என்றார். “ஆணையை ஏற்கிறேன் குருநாதரே” துரியோதனன் சொன்னான். கர்ணனும் அர்ஜுனனும் பீமனும் துச்சாதனனும் “ஆம்” என்று சொல்லி தலைவணங்கினர்.

பகுதி இரண்டு : சொற்கனல் - 3

முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான். சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போது சால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் கைகளை விரித்து சோம்பல்முறித்தபடி புன்னகைசெய்தான். வெளியே படகின் அமரமுனையில் தருமன் ஆடைபறக்க நின்றிருந்தான். பெரிய வெண்பறவை அமர்ந்திருப்பதைப்போல. அவனருகே சென்று "மூத்தவரே, தாங்கள் துயிலவில்லையா?" என்றான்.

"இல்லை" என்று சுருக்கமாகச் சொன்ன தருமன் “அற்புதமான விடியல். இருளுக்குள் விடிவெள்ளி எழுவதை சதசிருங்கத்திற்குப்பின் இப்போதுதான் பார்க்கிறேன்” என்றான் பெருமூச்சுடன் அமர்ந்தபடி. “அப்போது எந்தை என்னை தோளில் சுமந்திருப்பார். விடியற்காலையில் ஏரிக்கரைக்குக் கொண்டுசென்று சுட்டிக்காட்டுவார். ஏன் அது கீழே விழாமலிருக்கிறது என்று கேட்பேன். அதற்குச் சிறகுகள் இருக்கின்றன என்பார். அது ஒரு ஒளிவிடும் செவ்வைரம் என்று ஒருமுறை சொன்னார். எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனலுருளை என்று இன்னொருநாள் சொன்னார். ஒருமுறை அது விண்ணில் வாழும் தெய்வமொன்றின் விழி என்று சொன்னார்.”

“அது சூரியனின் தூதன் என ஒருநாள் சொன்னார்” என்றான் தருமன். “அவன் வந்து மண்ணைப்பார்க்கிறான். சூரியன் உதிக்குமளவுக்கு பூமி அறத்துடன் இருக்கிறது என்றால் அச்செய்தியை அறிவிப்பான். அதைக்கேட்டபின்னரே கிழக்கின் ஆழத்தில் கடலுக்குள் இருக்கும் தன் அணியறையில் சூரியன் ஆடையணிகள் பூணத்தொடங்குவான். மணிக்குண்டலங்களும் பொற்கவசமும் அணிவான். அவன் புரவிகள் மணிகளைச் சூடி அழகு கொள்ளும். அவன் சாரதி மாதலி தன் மின்னல்சவுக்கைச் சொடுக்கியதும் ஏழு புரவிகளின் இருபத்தெட்டு குளம்புகளும் மேகங்களில் ஓசையின்றி பதியத்தொடங்கும்.”

“என்றோ ஒருநாள் மண்ணில் அறம் முற்றாக அழியும். விடிவெள்ளியாக வந்த தெய்வம் சூரியனுக்கு வரவேண்டியதில்லை என்ற செய்தியை அனுப்பும். அந்தக்காலையில் சூரியன் எழமாட்டான். மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் பரிதவிக்கும். அஞ்சி அழுது முறையிட்டு இறைஞ்சும். ஆனால் ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர் பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாது. மண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர் முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள். அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்று கூவுவார்கள். ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான். ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வங்களிடம் மன்றாடுவார்கள். அத்தெய்வங்களோ விண்ணளக்கும் சூரியன் இல்லையேல் நாங்களும் இல்லாதவர்களே என்றுதான் பதில் சொல்வார்கள். பூமி அழியும். இருளில் அது அழிவதை அதுகூட பார்க்கமுடியாது” என்றான் தருமன்.

“பார்த்தா, நீ நம் தந்தை கதை சொல்வதைக் கேட்டு அறியும் நல்லூழ் அற்றவனாகப்போய்விட்டாய். அவரது குரல் உன் நினைவில் இருக்கின்றதா என்றே தெரியவில்லை. என் செவிகளில் ஒருநாளும் அழியாமலிருக்கும் குரல் அது” என்றான் தருமன். “அவர் கதைசொல்லும்போது அதிலேயே மூழ்கிவிடுவார். நமக்காக அவர் கதைசொல்வதாகத் தோன்றாது, அவருக்காகவே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றும். விடிவெள்ளியைப்பற்றிய இந்தக்கதையை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொருமுறை அதிகாலையில் என்னைத் தூக்கிக்கொண்டு ஏரிக்கரைக்குச் செல்லும்போதும் இந்தக்கதையை சொல்லிக்கொண்டே வருவார். நான் அஞ்சி அவர் தலையைப்பற்றிக்கொள்வேன். விடிவெள்ளி அங்கே இருக்கவேண்டுமே என்று வேண்டிக்கொள்வேன். சிலசமயம் என் உடல் நடுங்கும். கண்ணீர் பெருகி கன்னங்களில் வழியும்.”

“மரங்களில்லாத ஏரிக்கரைக்குச் சென்றதுமே விடிவெள்ளியைத்தான் தேடுவேன். என் பதற்றத்தில் நான் அதை கண்டுபிடிக்கமுடியாது பதறுவேன். தந்தையே காணவில்லை தந்தையே என அழுவேன். சிரித்துக்கொண்டு அதோ என்பார். விடிவெள்ளியைக் காணும்போது என்ன ஒரு ஆனந்தம். உடல் எங்கும் பரவசம் கொந்தளிக்க எம்பி எம்பி குதிப்பேன். கைநீட்டி சுட்டிக்காட்டிக் கூவுவேன். மண்ணில் வாழும் அறத்தின் சான்றாகவே அது விண்ணில் நின்றிருக்கும்” தருமன் சொன்னான். “ஒவ்வொருநாளும் மண்ணில் அறம் வாழ்கிறது என நானும் என் தந்தையும் உறுதிசெய்துகொண்டோம். ஒவ்வொருநாள் புலரியையும் அறத்தரிசனத்துடன் தொடங்கினோம்.”

“நான் ஒருமுறை அவரிடம் கேட்டேன், எது அறம் என்று, எப்படி அறிவது என்று. அவர் எனக்கு துருவனைச் சுட்டிக்காட்டினார். விண்ணிலிருந்து மின்னும் அந்த ஒற்றைவிண்மீனை அச்சாகக் கொண்டுதான் இப்புவியே சுழல்கிறது என்றார். அறம் அதைப்போன்றது. எது நிலைபெயராததோ அதுவே அறம் என்றார். ஒன்று இப்போது இச்சூழலுக்குச் சரி என்று தோன்றலாம். அது எப்போதும் எச்சூழலுக்கும் சரியென்று நிலைகொள்ளுமா என்று பார், நிலைகொள்ளுமென்றால் அதுவே அறம் என்றார்.”

தருமன் பெருமூச்சுவிட்டான். “அறத்தில் வாழ நினைப்பவன் முடிந்தபோதெல்லாம் துருவனைப் பார்க்கவேண்டும் என்பார் என் தந்தை. அறக்குழப்பம் வரும்போதெல்லாம் தனித்துவந்து வான் நோக்கி நின்றால்போதும், துருவன் அதைத் தெளியச்செய்வான் என்றார். இவ்விரவில் நான் துருவனின் ஒளிமிக்க விழியை நோக்கிக்கொண்டு இங்கே நின்றேன். நான் என்ன நினைக்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் விடிவெள்ளியைக் கண்டதும் நிறைவடைந்தேன்.”

தருமன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான். கங்கையின் நீர் படகின் விலாவை அறைந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் அதை நோக்கி அமர்ந்திருந்தான். தருமன் சொன்னான் “பார்த்தா, நம் தந்தை நூல்களை அதிகம் கற்றவரல்ல. அவரது ஆர்வமும் பயிற்சியும் ஓவியத்தில்தான். ஆனால் சதசிருங்கம் வந்தபின் ஓவியம் வரைவதை விட்டுவிட்டார். எனக்கு அரண்மனையில் வானும் பூமியும் மரங்களும் மலர்களும் இல்லை. ஆகவே நான் அவற்றை வரைந்து உருவாக்கினேன். இங்கு நான் பிரம்மத்தின் தூரிகை வரைந்த மாபெரும் ஒவியத்திற்குள் அல்லவா வாழ்கிறேன் என்று சொல்வார்.”

“அவரது அன்னை அவரை குழந்தையாகவே வளர்த்தாள். அவர் வளர அவள் ஒப்பவே இல்லை. அவளை மீறி சதசிருங்கம் வந்ததனால்தான் அவருக்கு வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சிலநாட்களேனும் கிடைத்தது. மைந்தர்களாக நாம் அமைந்தோம்.” அவன் குரல் உணர்ச்சியால் தழைந்தது. “நமக்கு இப்புவியில் எந்த நற்செயலுக்கான பலன் கிடைக்காவிட்டாலும் நம் தந்தையின் வாழ்க்கையை நிறைவடையச்செய்தமைக்கான பலன் உண்டு. அதன்பொருட்டே நாம் விண்ணுலகு செல்வோம்.”

தன்னை அடக்கிக்கொள்ள அவன் சற்றுநேரம் கங்கைநீரை நோக்கினான். பாய் அவிழ்ந்த படகுகள் விரைவழிந்து மெதுவாக கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. நிழல்குவைகளாகத் தெரிந்த காடுகள் அசைந்தாடி நெருங்கி வந்தன. “இன்று எண்ணும்போது என் தந்தையின் வெளிறிய நோயுற்ற முகம் நினைவில் எழுகிறது. அவரைப்பற்றி இங்கு எவருக்கும் உயர்ந்த கருத்து இல்லை. அவரைப்போன்ற வலிமையற்றவர் அஸ்தினபுரியின் குலத்தில் உதித்ததை இழுக்கு என்றே அவர்களின் ஆழம் எண்ணுகிறது. ஆகவேதான் அவர் மறைந்ததுமே சூதர்களைக்கொண்டு கதைகளை உருவாக்கத்தொடங்கிவிட்டார்கள். அவர் மாவீரர் என்றும் அங்கத்தையும் வங்கத்தையும் கலிங்கத்தையும் மகதத்தையும்கூட போரில் வென்றவர் என்றும் சூதர்களைக்கொண்டு பாடவைத்தார்கள். அவர் எவரோ அந்நிலையில் அவரை மதிக்கவோ ஏற்கவோ அவர்கள் சித்தமாக இல்லை.”

“பாவம், எந்தை. அதை அவர் அறிந்திருந்தார். மீண்டும் வரவேகூடாது என்று உறுதிகொண்டு இந்த அஸ்தினபுரி விட்டு அவர் கிளம்பிச்சென்றதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அது ஒருவகையான தற்கொலை. சதசிருங்கத்தில் அவர் உயிர்த்தெழுந்தார். அங்கே வாழ்ந்த அவரை பிதாமகரோ விதுரரோ அறியமாட்டார்கள். அஸ்தினபுரியில் எவரும் அறியமாட்டார்கள். பாண்டு என அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு புராணத்தை வரலாற்றில் நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதையே நினைத்துக்கொள்ளவும் தொடங்கிவிட்டார்கள். பாண்டு முழுமையாகவே மறக்கப்பட்டுவிட்டார்” என்றான் தருமன். “இப்புவி இறந்தவர்களை மறப்பதில் இருக்கும் ஈவிரக்கமற்ற தன்மை அச்சமூட்டுகிறது பார்த்தா. நம் அன்னையின் உள்ளத்தில்கூட அவர் இல்லை. அவள் சதசிருங்கத்தில் இருந்த நாட்களிலேயே கணவனை நினைத்திருந்தவள் அல்ல. அவளுடைய அகம் அஸ்தினபுரியிலேயே இருந்தது.”

“தந்தை அதை அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் ஒருநாள் கூட இல்லத்தில் இருந்ததில்லை. விடிவெள்ளியைக் காண என்னைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் சென்றாரென்றால் இரவில் விண்மீன்கள் எழுந்தபின்னரே திரும்பிவருவார். சற்றேனும் அவரை அறிந்தவர்கள் சிற்றன்னை மாத்ரியும் நானுமே. இன்று நான் மட்டுமே இருக்கிறேன். பாண்டு என்ற மனிதர் இப்புவியில் வாழ்ந்தார் என்பதற்கு எஞ்சியிருக்கும் சான்று நான் மட்டுமே” என்றான் தருமன். அவன் முகம் இருளிலிருந்தாலும் நிழலுருவிலேயே உணர்ச்சிகளை தெளிவாகக் காணமுடிந்ததை அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான்.

“பார்த்தா, சற்றுமுன் விடிவெள்ளியை நோக்கியபடி அதை எண்ணிக்கொண்டேன். அகம் ஏக்கம் தாளாமல் தவித்தது. அதன்பின் தோன்றியது, நான் ஒருவன் இருக்கிறேன் என்பதே எத்தனை மகத்தானது என. பார்த்தா, நான் ஒருநாள்கூட அவரை எண்ணாமலிருந்ததில்லை. அவரில்லாத உலகில் அரைநாழிகை நேரம்கூட வாழ்ந்ததில்லை. தன் மைந்தனின் உள்ளத்தில் அப்படி ஓர் அழியா இடம்பெற்றவன் அல்லவா இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவன்? அவனல்லவா அமரன்?” தருமன் அச்சொற்களின் எழுச்சியால் முகம் சிவந்து மூச்சிரைத்து அதைவெல்ல முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“பார்த்தா, இங்கே தட்சிணவனம் என்னும் ஓர் இடமிருக்கிறது, அறிவாயா?” என்றான் தருமன். “இல்லை” என்று அர்ஜுனன் தலையசைத்தான். “முழுக்கமுழுக்க துரோணவனத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டாய். ஒருநாள் தட்சிணவனம் செல்வோம்” என்றான் தருமன். “அங்கே ஒரு சிறிய பாறை உச்சியில் குஹ்யமானசம் என்னும் சுனை ஒன்று உள்ளது. நம் மூத்தபாட்டனாரான சித்ராங்கதர் அந்த சுனைக்குள் விழுந்து இறந்துவிட்டார் என்கிறார்கள். அந்தச்சுனையில் குனிந்து தன் முகத்தை நோக்கியபோது அவரைப்போன்றே இருந்த சித்ராங்கதன் என்னும் பெயருள்ள கந்தர்வன் அவரை நீருக்குள் இழுத்துச்சென்றுவிட்டான் என்கிறார்கள். அவரது சடலம் கிடைக்கவில்லை.”

அர்ஜுனன் “மலைச்சுனைகள் பலசமயம் மிகமிக ஆழமான பிலங்களின் வாயில்களாக இருக்கும். உள்ளே பல நாழிகைதொலைவுக்கு ஆழம் இருக்கலாம்” என்றான். “தெரியவில்லை. ஆனால் அந்த மலைச்சுனை மிக வியப்புக்குரியது. அங்கே சுற்றிலும் மரங்களோ பாறைகளோ இல்லை. ஆனால் தூரத்துப்பாறைகள் முழுமையாகவே மறைத்திருப்பதனால் அங்கே காற்றே வீசுவதில்லை. ஆகவே அந்தச்சுனைநீர் அசைவதில்லை. ஒரு மாபெரும் ஆடிபோல அப்படியே கிடக்கிறது” என்றான் தருமன். அர்ஜுனன் வியப்புடன் “தாங்கள் பார்த்தீர்களா?” என்றான்.

“ஆம், அசைவற்ற அந்த நீரை நோக்கினேன். அதில் முகம் நோக்கினால் நாம் யார் என்று நமக்குக் காட்டும் என்றனர். நான் பார்க்கவில்லை. அது விரும்பத்தகாத எதையோதான் காட்டும் என்று தோன்றியது. அதைத்தான் சௌனகரும் சொன்னார். அங்கே முகம் பார்த்த எவரும் மகிழ்ச்சியுடன் எழுந்துகொண்டதில்லை என்றார்” தருமன் சொன்னான். “அப்படித்தான் இருக்கமுடியும். இங்கு நாம் மாபெரும் மாயையால் கட்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உறவாக, உணர்ச்சிகளாக நம்மைச் சூழ்ந்திருப்பது மாயையின் அலைகளே. நம் தெய்வங்களும் மாயையின் தோற்றங்களே. மாயை இல்லையேல் நாம் வெட்டவெளியில் நிற்கவேண்டியிருக்கும். தெய்வங்களின் துணைகூட இல்லாமல் தனித்து நிற்கவேண்டியிருக்கும். யோகிகள் மாயையைக் களைந்து வெறும்வெளியில் நிற்கலாம். நம்மைப்போன்ற எளியோர் நிற்கலாகாது. நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த மாயையைக் களைந்து உண்மையை நமக்குக் காட்டும் ஒவ்வொன்றும் இந்த வாழ்க்கையில் தீங்கையே அளிக்கும்.”

அர்ஜுனன் “ஆம்” என்றான், அவனுக்கு அந்த இடத்தைக் கற்பனைசெய்தபோது நெஞ்சில் புரியாத ஓர் அச்சம் எழுந்தது. தருமன் “பார்த்தா, நான் சொல்லவந்தது வேறு. அங்கே கீழே ஒரு குடிலில் ஸ்தானகர் என்னும் ரிஷி வாழ்கிறார். நம் பாட்டனார் விசித்திரவீரியரின் அணுக்கச்சேவகராக இருந்தவர். ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் விசித்திரவீரியர் இறப்பதற்கு முந்தையநாளில் அங்கே வந்தாராம். அவரை அங்கே இருக்கச்சொல்லிவிட்டுச் சென்றாராம். ஸ்தானகர் அங்கேயே அமர்ந்துவிட்டார். அவர் இறுதியாகப்பேசியது விசித்திரவீரியரிடம்தான். அவரைச்சென்று பார்த்தேன். முதிர்ந்து பழுத்துவிட்டார். கண்கள் எவரையும் பார்ப்பதில்லை. பலநாட்களுக்கு ஒருமுறை அவரை வழிபடுபவர் அளிக்கும் எளிய உணவைமட்டும் அருந்துகிறார். அவர் காலடியில் பணிந்தபோது அவர் புன்னகை செய்தார். ஆம், என்னை நோக்கியல்ல, ஆனால் புன்னகைசெய்தார்.”

“நான் அதைப்பற்றி முதுசூதர்களிடம் கேட்டேன்” என்றான் தருமன். “விசித்திரவீரியருக்கு அவர் நகைப்புத்தோழர் என்றார்கள். எந்நேரமும் ஒருவரை ஒருவர் கேலிசெய்து நகைத்துக்கொண்டிருப்பார்களாம். வாழ்க்கையை, அரசை, நோயை, இறப்பை. அங்கே அப்படி அவர் அமர்ந்திருப்பதை விசித்திரவீரியர் எங்கோ இருந்து கேலிசெய்திருக்கலாம். அவர் பதிலுக்கு நகைத்திருக்கலாம். அப்படி ஒரு மனிதரை தனக்கென விட்டுச்சென்ற விசித்திரவீரியர் எத்தனை மாமனிதர். இன்று அத்தனைபேரும் அவரை மறந்துவிட்டனர். வருடம்தோறும் நீர்க்கடன் அன்றுமட்டும் பிதாமகரும் மூத்த தந்தையாரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் அவரைத்தவிர வேறெதையுமே நினையாமல் ஒரு மனம் அங்கே அமர்ந்திருக்கிறது. நானும் அவரல்லவா என எண்ணிக்கொண்டேன். அதை எண்ணித்தான் ஸ்தானகர் நகைத்தாரா என்றும் தோன்றியது.”

சட்டென்று திரும்பி அர்ஜுனனை நோக்கி வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து தருமன் சொன்னான் “நீ எண்ணுவது சரி. போர் நிகழவிருக்கிறது. நாம் காணப்போகும் முதல்போர். அந்த அச்சத்தால் என் அகம் நிலைகுலைந்திருக்கிறது. ஆகவேதான் ஏதேதோ எண்ணங்கள் எழுகின்றன. நான் பேசுவதில் ஒன்றுடனொன்று தொடர்பே இல்லாமலிருக்கிறது. ஆனால் இச்சொற்களுக்கு நடுவே ஏதோ ஒன்று உள்ளது. மையச்சரடாக... அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.” தருமன் சிலகணங்கள் விழிகள் அலைபாய அமர்ந்திருந்தான். பின்பு “நான் இரண்டு நிலைகளில் உறுதியாக இருக்கிறேன். ஒன்று என் உடன்பிறந்தார். இன்னொன்று அறம். இரண்டுமே என் தந்தை எனக்குக் காட்டியவை. என் உடன்பிறந்தாரில் எவர் இறந்தாலும் நான் உயிர்தரிக்கமாட்டேன். அறம் பிழைத்த எதை நாம் செய்ய நேர்ந்தாலும் வாழமாட்டேன்” என்றான்.

“ஆம் மூத்தவரே, அவ்வுறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, இந்தப்போர்முனையில் நாம் நின்றிருக்கையில் எனக்கு தெளிவாகவே தெரிகிறது, இது ஒரு பெரும் தொடக்கம். நாம் பல போர்களில் ஈடுபடப்போகிறோம். ஒருவேளை..." என்று தயங்கியபின் “என் மனமயக்காக இருக்கலாம் அது. நேற்றிரவு எப்போதோ அந்த எண்ணம் வந்து என்னுள் குடியேறியது. இரவெல்லாம் ஒரு தீயதெய்வம் போல என்னுடன் இருந்தது. அதன் இருப்பை என்னருகே உணர்ந்து என் மயிர்க்கால்கள் சிலிர்த்து நின்றன. ஆம் பார்த்தா, இப்புவியில் நிகழ்ந்த எவற்றையும் விடப்பெரிய போர் ஒன்றை நாம் நிகழ்த்தவிருக்கிறோம்.”

அர்ஜுனன் ஒருகணம் மயிர்சிலிர்த்துப்போனான். உடனே என்ன மூடத்தனம் இது என அவன் அகம் நகைத்தது. “நீ உள்ளுக்குள் நகைக்கிறாய். நகைப்புக்குரியதுதான். ஆனால் இது என் உண்மையான உணர்வு” என்றான் தருமன். “அந்தப்போர் விதியின் விளையாட்டாக இருக்கலாம். நம்மால் தடுக்கமுடியாததாக இருக்கலாம். நான் இப்போது சொல்லும் இவ்விரு விதிகளும் இந்தப்போருக்கு மட்டும் அல்ல.” எழுந்து சால்வையைப் போர்த்திக்கொண்டு தருமன் நடந்து உள்ளே சென்று மறைந்தான்.

படகுகள் கரையை நெருங்கிவிட்டிருந்தன. கரையில் நாணலும் கோரையும் செறிந்த பெரிய சதுப்பு நிலம் நெடுந்தூரத்திற்கு தெரிந்தது. கங்கையில் இமயம் நோக்கி மேலே செல்லுந்தோறும் கரை நீருக்கு மிக அண்மையானதாகவும் மரங்களடர்ந்ததாகவும் இருக்கையில் கீழ்நோக்கி வர வர விரிந்த கரைச்சதுப்பும் மணற்பரப்பும் கொண்டதாக ஆவதை அர்ஜுனன் கண்டான். படகுகள் கரையை அணுகியதும் படகோட்டிகள் கழிகளை விட்டு நீரில் ஆழம் நோக்கினர். அடித்தட்டு மணலில் சிக்காத எல்லைவரை சென்றதும் நெய்விளக்குகளை ஆட்டி படகுகளை நிறுத்தினார்கள்.

படகுகளுக்குள் இருந்து மிதவைகள் கட்டப்பட்ட கயிறுகள் வீசப்பட்டன. அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கிச்சென்ற சூத்ராகிகள் நீரில் மிதந்தபடி நின்றனர். மேலிருந்து படகுகளை கயிற்றில் கட்டி ஒன்றன் பின் ஒன்றாக இறக்க அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கட்டியபடி சதுப்புக்கரைவரை சென்றனர். அவற்றின் மேல் பலகைகள் இறக்கி அடுக்கப்பட்டு துறை கட்டப்பட்டது. சிலந்திவலைபோலப் பின்னிய மெல்லிய கயிறுகளில் கட்டப்பட்ட ரதங்களும் புரவிகளும் பறந்து இறங்குபவை போல படகுகளாலான அந்தத் துறைமேல் இறங்கி கரைநோக்கிச் சென்றன.

அருகே வந்து நின்ற நகுலன் “யானையை இறக்கமுடியுமா மூத்தவரே?” என்றான். “மிக எளிதாக இறக்கமுடியும். கயிறுகளின் பின்னல் சரிவர அமையுமென்றால் அச்சக்கரத்தைச் சுழற்றி ஒரே ஒருவர் யானையை தூக்கி மேலே எடுக்கவும் முடியும்” என்றான். “அவர்கள் கலிங்கத்துச் சூத்ராகிகள். கயிற்றால் எடையை தூக்கும் கலை கலிங்கத்தில் ஆயிரமாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. தாம்ரலிப்தி பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகம். அங்கே பெரும் எடைகொண்ட தாமிரக்கற்களை தூக்கி கப்பல்களில் ஏற்றுகிறார்கள் என்று சூதர்கள் சொல்கிறார்கள்.”

துணைப்படைத்தலைவன் பிரதீபன் வந்து வணங்கி “படைகளை இறக்கத் தொடங்கிவிட்டோம்” என்றான். “பீமசேனர் முன்னின்று இறக்குகிறார்.” அர்ஜுனன் பாத்துவிட்டு “பிரதீபரே, நம் படைகள் சற்று மெதுவாகவே கரையிறங்கினால் போதும்” என்றான். பிரதீபனின் விழிகள் ஒருகணம் மின்னியபின் “ஆணை” என்று தலை வணங்கி நடந்தான். மறைந்த தளகர்த்தர் சத்ருஞ்சயரின் மைந்தன் பிரதீபன். அவனுக்கு அவருடைய உடலசைவுகளும் விழிமொழியும் இருந்தன.

அவன் சென்ற சற்று நேரத்திலேயே தருமன் வந்து “நாம் பின்னால் சென்றால்போதுமென நினைக்கிறாயா?” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “அல்ல, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்” என்றான். தருமன் தத்தளிப்புடன் “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். படகிலிருந்து கர்ணனும் துரியோதனும் கயிறுவழியாக இறங்கினர். தொடர்ந்து கௌரவர்கள் இறங்கிக்கொண்டிருந்தனர். “அவர்களின் படைகள் அணிவகுத்துவிட்டன” என்றான் தருமன் “அவர்களின் தேர்களும் குதிரைகளும் நிரைகொண்டுவிட்டன. எக்கணமும் அவர்களால் கிளம்ப முடியும்... இத்தனை விரைவாக அவர்களால் கிளம்பமுடியுமென நான் எண்ணவேயில்லை.”

கௌரவர்கள் இறங்கி முடிப்பதற்குள் கரையிறங்கிய வீரர்கள் கடலாமை ஓடுகளாலும் யானைத்தோலாலும் எருமைத்தோலாலும் ஆன மார்புக்கவசங்களையும் இரும்பாலான தலைக்கவசங்களையும் அணிந்தபடி மேலேறி சென்றனர். பத்துபத்துபேராக படைக்கலங்களுடன் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டே இருந்தனர். ஒவ்வொரு பத்துபேருக்கும் கையில் கொடியுடன் ஒருவன் தலைமைதாங்கினான். பத்து குழுக்கள் இணைந்து நூற்றுவர் குழுவாக அதற்கு ஒரு கொடிவீரனும் ஒரு கொம்பூதியும் நடுவே தலைவனும் நின்றனர். தலைவனுக்குப்பின்னால் அவன் களத்தில் விழுந்தால் தலைமை ஏற்கும் வரிசைகொண்ட மூன்று துணைத்தலைவர்கள் நின்றனர். கொடிவீரனுக்கும் கொம்பூதிக்கும் பின்னால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் நின்றனர். மூன்று நூற்றுவர்குழுவுக்கு ஒரு முரசும் கொடிவீரனும் கொம்பூதியும் தலைவனும் நின்றனர். ஒன்பது நூற்றுவர் குழுக்கள் இணைந்த படை மெல்ல உருவாகி ஓருருவாகி நின்றது.

எண்பது குதிரைகள் குஞ்சிமயிர் சிலிர்த்து அசைய குளம்புகள் மணலைக் கிளற வால்சுழற்றி நடந்துசென்று நின்றன. சதுப்பு உலர்ந்த மணலில் பலகைகளைப்போட்டு அதன்மேல் ரதங்களை உருட்டிக் கொண்டுசென்று காலாள்படைகளுக்கு முன்னால் நிறுத்தி குதிரைகளைப்பூட்டினர். இரட்டைக்குதிரைகள் பூட்டப்பட்ட இருபது ரதங்கள் வலப்பக்கமும் இருபது ரதங்கள் இடப்பக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன. “கடக வியூகம்” என்றான் நகுலன். “நான் இதை படித்திருக்கிறேன். ரதங்கள் வில்லாளிகளுடன் நண்டின் முன்கொடுக்குகளைப்போல முதலில் சென்று எதிரிப்படையைத் தாக்கும். எதிரிகள் சிதறியதும் நடுவே செல்லும் காலாள்படையினர் நேருக்கு நேராக தாக்கி சிதைப்பார்கள்.”

சகதேவன் நகுலனை பிரமிப்புடன் பார்த்தான். நகுலன் அர்ஜுனனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்தபின் “நண்டு தன் கொடுக்குகளை கால்களாக ஊன்றி எழமுடியும். பக்கவாட்டிலும் செல்லமுடியும்” என்றான். தருமன் மேலே வந்து “நம்முடைய படைகளும் இறங்கிவிட்டன பார்த்தா” என்றான். அர்ஜுனன் தலையசைத்து பார்த்துக்கொண்டு நின்றான். “துரோணரும் அஸ்வத்தாமனும் படகிலேயே இருக்கிறார்கள்” என்றான் தருமன்.

நண்டின் வலக்கொடுக்கில் துரியோதனன் முதல் ரதத்தில் அமர்ந்தான். அவனுக்குப்பின்னால் வந்த ரதத்தில் துச்சாதனனும் அவனுக்குப்பின்னால் விகர்ணனும் அமர்ந்துகொண்டனர். துரியோதனன் ரதத்தை துச்சலன் ஓட்டினான். துச்சாதனன் ரதத்தை சுவீரியவான் ஓட்டினான். விகர்ணனின் ரதத்தை அப்ரமாதி ஓட்டினான். இடப்பக்க கொடுக்கில் கர்ணன் முதலிலும் ஜலசந்தனும் சுரோசனனும் பின்னாலும் ரதங்களில் ஏறினர். கர்ணனின் ரதத்தை தீர்க்கபாகுவும் ஜலசந்தனின் ரதத்தை தீர்க்கரோமனும் ஓட்டினர். இளைய கௌரவர்கள் ஒரு ரதத்தில் நால்வர் வீதம் ஏறிக்கொண்டனர்.

துச்சாதனன் எழுந்து தன் இடையிலிருந்த சங்கை ஊதியதும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு ரதங்களின் சக்கரங்கள் திடுக்கிட்டன. ரதங்களாலான ஒற்றை உடல் உயிர்கொள்வதுபோலிருந்தது. கொக்குக்கூட்டம்போல ரதங்கள் பாய்ந்தோடின. அவற்றின் கொடிகள் தழல்கள் போல படபடத்துச் செல்வதை அர்ஜுனன் நோக்கி நின்றான். அவை புல்வெளியில் சென்ற வடுக்களின் மேல் காலாள்படை பெருநடையில் விரைந்தது. ஆயிரம்காலட்டை போல அது ஒரே உடலாகச் சென்று மரங்களுக்கப்பால் மறைந்தது.

பீமன் மேலே வந்தான். “இளையவனே, சற்றுப்பொறுத்தால் நாங்களும் வருவோமே என ஒரு செய்தியை துரியோதனனுக்கு முறைப்படி அனுப்பினேன்” என்றான் பீமன் உரக்க நகைத்தபடி. “அந்த வரியை மீண்டும் சொல்லவேண்டும், நினைவுபடுத்து” என்றபின் மேலும் நகைத்து குரலை மாற்றி “என்ன விரைவு? சற்று பொறுத்திருந்தால் நாங்களும் வந்திருப்போமே” என்றான்.

“மந்தா, நம்மிடமிருப்பவர்கள் இருநூறு காலாள்படையினர், இருபது ரதங்கள்” என்றான் தருமன். பீமன் “போதும். அதிகம்பேர் வந்தால் அவர்களையும் சேர்த்து நான் பாதுகாக்கவேண்டியிருக்கும்” என்றான். தருமன் “அவர்களுக்கு சிருஞ்சயர்களிடமிருந்து ஓலைவந்திருக்கிறது. அவர்கள் போரில் கலந்துகொள்ளமாட்டார்கள். அப்படியென்றால் இன்னும் சற்று நேரத்தில் துரியோதனன் துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டுவருவான்” என்றான். “மூத்தவரே, துருபதன் அக்னிவேசரின் மாணவன்” என்றான் அர்ஜுனன். தருமன் கவலையுடன் திரும்பிப் பார்த்தான். பீமன் நகைத்து “ஆம், அதைத்தான் நானும் நம்பியிருக்கிறேன்” என்றபின் உரக்க நகைத்தான்.

கரையில் பாண்டவர்களின் படைகள் அணிவகுத்து நின்றன. “நம்முடையது கஜராஜ வியூகம்” என்றான் அர்ஜுனன். தருமன் “ஆம், நானும் அதையே எண்ணினேன். நானும் நீயும் யானையின் கொம்புகள். மந்தன் துதிக்கை. போரை அவன் நடத்தட்டும். நாம் அவனை மட்டும் பாதுகாத்தால் போதும்” என்றான். அர்ஜுனன் “தம்பியர் நம் ரதச்சக்கரங்களைக் காக்கட்டும்” என்றான். பீமன் தன் கதாயுதத்தை எடுத்து ஒருமுறை சுழற்றிக்கொண்டான். “இந்தக் கதாயுதம் உடைக்கப்போகும் முதல் மண்டை எது என இப்போது எமனுக்குத்தெரியும்” என்றான். தருமனின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான்.

பகுதி இரண்டு : சொற்கனல் - 4

தன் சிறியபடையுடன் புல்வெளியினூடாகச் செல்லும்போது அர்ஜுனன் முன்னால் நெடுந்தூரம் புகை எழுவதைக் கண்டான். “தீ வைத்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “ஆம், அதுவே சிறந்த வழி. நம்மிடம் யானைகள் இல்லாதபோது நம்மால் காம்பில்யத்தின் கோட்டையை தாக்கமுடியாது. குறுங்காட்டைக் கடந்துசெல்வதும் ஆபத்து. அவர்களை நம்மை நோக்கி வரச்செய்வதே நாம் செய்யக்கூடுவது” என்றான் அர்ஜுனன். “அவர்கள் வராவிட்டால்?” என்றான் தருமன். “இந்தச் சிறுபடையைக் கண்டு வராமலிருந்தால் அவர்கள் ஆண்களே அல்ல. வருவார்கள்” என்றான் அர்ஜுனன்.

கௌரவர்கள் செல்லுமிடமெல்லாம் வைக்கோல் போர்களையும் கூரைகளையும் காய்ந்த புல்வெளியையும் எரித்துக்கொண்டே சென்றிருந்தனர். தீ செந்நிறமாக தலைக்குமேல் எழுந்து வானை நக்குவதுபோல அசைந்தாடியது. நாய்கள் வெறிகொண்டவை போல குரைத்தபடியும் ஊளையிட்டபடியும் எரியும் வீடுகளைச் சுற்றிவந்தன. அவிழ்த்துவிடப்பட்ட பசுக்கள் உள்ளுணர்வால் நெருப்புக்கு எதிர்திசையில் வயிறுகுலுங்க ஓடிக்கொண்டிருந்தன.

காம்பில்யத்தின் மக்கள் நெடுங்காலமாக போரை அறியாதவர்கள் என்பதனால் நடப்பது எதையும் அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. எரியும் வீடுகளை அணைக்கமுயன்றவர்கள் அத்தனை வீடுகளும் எரிவதனால் சேர்ந்து அணைப்பது நடவாதது என உணர்ந்து உள்ளே புகுந்து தேவையான பொருட்களை மட்டும் அள்ளி வெளியே வீசிக்கொண்டிருந்தனர். பெண்களும் கிழவிகளும் மார்பில் அறைந்து ஒப்பாரியிட்டு கதற சிறு குழந்தைகள் அஞ்சி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.

புகையும் அழுகையும் கலந்து நிறைந்த கிராமங்கள் வழியாக அவர்களின் படை சென்றபோது இருபக்கமும் பெண்கள் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி பழித்துக் கூவினர். பாஞ்சாலத்தின் மொழி சிறிதளவே புரிந்தமையால் தருமன் “என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டான். “நாம் அறியவேண்டுபவற்றை அல்ல” என்று அர்ஜுனன் பதில் சொன்னான். “பார்த்தா, போர் என்றால் வீரர்களுக்குள் நிகழ்வது அல்லவா? இந்த எளிய மக்களை நாம் ஏன் வதைக்கிறோம்?” என்றான் தருமன். “எந்தப்போரும் நாடுகளுக்குள் நடப்பதே. நாடு என்றால் மக்கள்” என்றான் அர்ஜுனன்.

கையில் மண்வெட்டியை எடுத்து ஆவேசத்துடன் ஓங்கியபடி ஓடிவந்த ஒரு முதியவரை வாளின் பின்பக்கத்தால் அறைந்து உதைத்து அப்பால் தள்ளினான் பிரதீபன். “அய்யோ” என்றான் தருமன். அர்ஜுனன் “மூத்தவரே, போரும் காட்டுத்தீயும் ஒன்று. அழிவு உண்டு. ஆனால் போர் நிகழ்ந்தால்தான் நாடு துடிப்பாக இருக்கும். காட்டுத்தீ எழாவிட்டால் காடு நோயுற்று அழியும்” என்றான். “நாம் அழிக்கிறோம். நம்முடைய படைவல்லமை இந்த எளிய மக்களைச் சூறையாடவே உதவுகிறது” என்றான் தருமன். “ஓநாய்கள் வாழவேண்டுமல்லவா? இறைவன் அதற்கும் சேர்த்துத்தான் ஆடுகளைப்படைத்திருக்கிறான் அரசே” என்றான் தருமனின் தேரை ஓட்டிய கார்க்கன்.

செல்லும்வழியெங்கும் கிராமங்கள் எரிந்துகொண்டிருந்தன. எரியம்புகளை நான்குபக்கமும் வீசிக்கொண்டே சென்றிருந்தனர். சில இடங்களில் தைலப்புல் எரிந்து மூச்சடைக்கவைக்கும் நெடி எழுந்தது. சிறிய மரங்கள் தளிர்பொசுங்கும் வாசனையுடன் எரிந்து அணைந்துகொண்டிருந்தன. “புகையை இந்நேரம் பார்த்திருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். ”அவர்களின் படைகள் வெளியே இறங்கி குறுங்காட்டை விட்டு வெளியே வர அதிகம்போனால் ஒருநாழிகை நேரமாகும்.” பீமன் “பார்த்தா, காம்பில்யத்தின் மொத்த படைபலமே ஐந்தாயிரம்பேர்தான் என்கிறார்கள். நகரத்தின் படையில் மூவாயிரம்பேருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.

அவர்கள் ஒரு மேட்டின் விளிம்பை அடைந்தபோது அப்பால் இன்னொரு மேட்டின்மேல் காம்பில்யத்தின் கோட்டை தெரிந்தது. அரக்குபூசப்பட்ட மரத்தாலான கூரைமுகடுகள் பின்காலையின் பளிச்சிடும் வெயிலில் கருமையாக மின்னிக்கொண்டிருந்தன. அவற்றின் மேல் கொடிகள் கங்கைக்காற்றில் துவண்டன. கோட்டை மழைக்கறையில் கருமைகொண்டு நாகம்போல வளைந்து நகரைச் சுற்றியிருந்தது. அவர்கள் நகரின்வடக்கு வாயிலை நோக்கி வந்திருந்தனர். மேற்குப்பக்கம்தான் மையவாயில் கங்கையை நோக்கித் திறந்திருந்தது. அங்கே துறைமுகப்பில் நின்றிருந்த பெரிய நாவாய்களின் கொடிகள் வண்ணப்பறவைகள் போல கூட்டமாகப் பறப்பது தெரிந்தது.

கௌரவர்களின் படை ஈராயிரம் கால்கள் கொண்ட ஒற்றை மிருகம்போல பாய்ந்து கோட்டையை நோக்கிச் செல்வது தெரிந்தது. நண்டின் கொடுக்குகள் இருபக்கமும் விரிந்து கோட்டையைக் கவ்வ எழுந்தவை போல சென்றன. “கௌரவர்களின் மிகப்பெரிய குறைபாடு நண்டின் உடல் வலுவற்றது என்பதே” என்று பீமன் உரக்கச் சொன்னான். “இரு கொடுக்குகளையும் மீறி எவர் உள்ளே வந்தாலும் பின்னாலிருக்கும் காலாள்படையை சிதறடித்துவிட முடியும்.” அர்ஜுனன் 'ஆம்' என தலையசைத்தான். அந்த வியூகமே கர்ணனிடமும் துரியோதனனிடமும் இருந்த மிகுந்த தன்னம்பிக்கையைக் காட்டியது. அவர்களை மீறி எவரும் வந்துவிடமுடியாதென்று அவர்கள் எண்ணுவது தெரிந்தது.

எச்சரிக்கை அடைந்த யானை போல கோட்டை உறுமத் தொடங்கியது. வடகிழக்கிலும் வடமேற்கிலும் இருந்த மரத்தாலான காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்க எரியம்புகள் எழுந்து வானில் வெடித்து பொலிந்தன. கிழக்கே துறைமுகப்பின் நாவாய்கள் பாய்களை கீழிறக்கத் தொடங்கின. கோட்டைக்குள் பல இடங்களில் ஒலித்த முரசுகளும் கொம்புகளும் கலந்து ஒற்றைப்பேரிரைச்சலாக ஒலித்தன. அத்துடன் மக்களின் ஆரவாரமும் கலந்துகொண்டது.

கோட்டைக்குள் இருந்து கொம்பொலிகள் எழுவதை அர்ஜுனன் கேட்டான். ஒரு எரியம்பு வானில் வெடித்தது. “கதவு திறக்கிறது!” என்றான் தருமன். குறுங்காட்டின் இலைத்தழைப்புக்குள் படை நுழைந்த அசைவு மேலே தெரிந்தது. நாணல்பரப்புக்குள் நாகம் செல்வதுபோல அந்தப்படை வருவதைக் காணமுடிந்தது. “நமது படை பின்வாங்கட்டும்” என்று அர்ஜுனன் சொன்னான். “இந்த மேட்டுக்குக் கீழே நின்றால் நம்மை அவர்கள் பார்க்கமுடியாது.” கொடிகள் அசைந்ததும் பாண்டவர்களின் படைகள் பின்வாங்கி மேட்டின் மறுபக்கச் சரிவில் இறங்கி நின்றன. பின்னால் எழுந்த புகையை காற்று கொண்டுவந்து அவர்கள்மேல் பரப்பி திரையிட்டு மூடியது.

அர்ஜுனன் ரதத்தின் தூண்மேல் தொற்றி மேலேறி ரதமுகட்டில் நின்றுகொண்டு நோக்கினான். குறுங்காட்டைக் கடந்து பாஞ்சாலத்தின் படையின் முகப்பு வெளிவரத் தொடங்கியது. கர்ணன் அவர்கள் முழுமையாக வெளிவருவதற்கான இடத்தை விட்டு மிகவிலகி தன் படைகளை நிறுத்தியிருந்தான். பாஞ்சாலத்தின் படையின் அளவு தெரியாமல் அவன் போரைத் தொடங்கமாட்டான் என்று அர்ஜுனன் எண்ணினான். கர்ணன் செய்யப்போகும் ஒவ்வொன்றும் தனக்கு முன்னரே தெரிவதுபோல தான் செய்யப்போவது அனைத்தும் கர்ணனுக்கும் முன்னதாகவே தெரியுமா என்று நினைத்துக்கொண்டான்.

செந்நிற மழைநீர் ஊறி வருவதுபோல காட்டிலிருந்து பாஞ்சாலப்படை வெளியே வந்துகொண்டிருந்தது. கிராமங்களிலிருந்து கோட்டைக்குச் செய்தியனுப்பும் ஏதோ முறைமை இருக்கிறதென அர்ஜுனன் எண்ணினான். வந்திருப்பது எந்தப்படை என்றும் எத்தனைபேர் என்றும் அறிந்திருக்கிறார்கள். தலைமைவகித்து வருவது அவர்களில் முக்கியமான தளபதியாகவே இருக்கவேண்டும். படைகளின் முகப்பில் வெண்கொடி பறக்கும் செந்நிறமான ரதத்துடன் அவன் வந்து நின்றான்.

தன் ரதத்தின் முடிமீது நின்றிருந்த பீமன் “இளையவனே, அவன் கொடியில் தெரிவது என்ன இலச்சினை?” என்றான். அர்ஜுனன் நோக்கி “விருச்சிகம்” என்றான். “அப்படியென்றால் அவன் சத்யஜித். துருபதனின் தம்பி” என்றான் பீமன். “அவனும் அக்னிவேசரின் மாணவன்தான். சத்ராவதியை அவன் ஆண்டுகொண்டிருக்கிறான். இங்கு அவன் இருப்பது துருபதனுக்கு உதவியானதே” என்றான். “ஆம் அவனுடைய தோரணையில் தன்னம்பிக்கை நிறைந்துள்ளது” என்றான் அர்ஜுனன்.

பீமன் நகைத்தபடி “துரியோதனனுக்கு சத்யஜித்தைத் தெரியாது. ஆகவே சற்று அதிக நம்பிக்கையுடன் போருக்குச் செல்வான். அவனுக்கு சிறிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றான். தருமன் முன்னால் வந்து “இளையோனே, அவன் துருபதனைப் போலிருக்கிறானே?” என்றான். “துருபதனின் இளையோன், பெயர் சத்யஜித்” என்றான் அர்ஜுனன். “அவரை நாம் கொல்லவேண்டியதில்லை மூத்தவரே. நல்லவரெனத் தெரிகிறார்” என்றான் பின்பக்கம் சக்கரக்காவலனாக நின்ற நகுலன். “நம்மை அவர் கொல்லலாமா?” என்றான் அர்ஜுனன் நகைத்தபடி.

சத்யஜித்தின் படைகள் மெல்ல ஒருங்கிணைந்து ஒரு கழுகுவடிவில் வியூகமிட்டன. கழுகின் இரு சிறகுகளிலும் ரதங்கள் நின்றன. அவற்றில் பறந்தகொடிகளிலிருந்து துருபதன் முதன்மையான வீரர்களையே அனுப்பியிருக்கிறான் என்று தெரிந்தது. நடுவே சத்யஜித் கழுகின் அலகு என நின்றிருந்தான். பாஞ்சாலப்படை கொடிகளை வீசி முரசுகளையும் கொம்புகளையும் முழக்கியது. தங்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி சொல்லும் எச்சரிக்கை அது என அர்ஜுனன் உணர்ந்தான். நூற்றுக்கணக்கான முறை பயிற்சிக்களத்தில் கேட்ட ஒலி. ஆனால் களத்தில் கேட்கையில் அது உடலை சிலிர்க்கச்செய்தது. கொம்புகுலுக்கி எச்சரிக்கும் மதயானையுடன் பேச முடிவதுபோல.

கௌரவர்களின் படை திரும்ப முரசொலி எழுப்பி கொடிகளை ஆட்டியது. அந்த அறைகூவல் எழுந்ததுமே சத்யஜித்தின் கொடிவீரன் விண்ணில் கொடியை ஆட்டினான். பாஞ்சாலப்படை பாய்ந்து முன்னால் வந்தது. கழுகின் இருசிறகுகளும் வீசி முன்னால் வர இணையான விரைவுடன் அதன் அலகு பாய்ந்துவந்தது. நண்டின் கொடுக்குகள் எழுந்து முன்னோக்கி விரைந்தன. இருபடைகளும் நெருங்கும் கணத்தை அர்ஜுனன் உடலெங்கும் பரவிய எழுச்சியுடன் பார்த்து நின்றான். கணம் கணமாக உணர முடிந்தது. ஒவ்வொரு தேரையும் குதிரையையும் பார்க்கமுடிந்தது. மௌனமாக மிகமெல்ல நிகழ்வதுபோல, இரு வெள்ளங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதுபோல, இருபடைகளும் கலந்தன.

ஓங்கி அறைந்து நுரைக்கும் அலைகளிலிருந்து துமி தெறிப்பதுபோல அம்புகள் விண்ணிலெழுந்து வளைந்து சரிந்தன. எரியம்புகள் சீறிச் சுழன்று விழுந்தன. சத்யஜித்தை துரியோதனன் எதிர்கொண்டான். அவர்களின் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி உறுமுவதை அவற்றின் கால்கள் மண்ணில் அறைவதை இங்கிருந்தே காணமுடிந்தது. விகர்ணனும் கர்ணனும் இருபக்கங்களிலும் எழுந்து வந்த கழுகின் சிறகுகளை எதிர்கொண்டனர். உச்சகட்ட அழுத்தத்தில் இருபடைகளும் ஒன்றையொன்று மோதி அழுத்தின. மெல்ல ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவின.

துரியோதனன் சத்யஜித்தை நோக்கி செலுத்திய அம்புகளை அவனுடைய சாரதி மிக எளிதாக ரதத்தைத் திருப்பி தவிர்த்தான். அதேசமயம் சத்யஜித் வலுவான அம்புகளால் துரியோதனனை இடைவெளியில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தான். துரியோதனனின் வில் தளர்வதை அர்ஜுனனால் காணமுடிந்தது. கர்ணன் எதிர்கொண்டு சென்ற கழுகின் வலச்சிறகு மெல்ல பின்னடைந்தது. ஒடிந்ததுபோல சிதறியது. அவனுடைய அம்புகள் பட்டு அங்கே வீரர்கள் அலறி மண்ணில் விழுவதை அர்ஜுனன் கண்டான். அம்புகள் மீன்கொத்திகள் போல எழுந்து குப்புற விழுந்து இறங்கி நின்றன. அம்புபட்ட குதிரைகள் விரைவழியாமலேயே சரிய ரதங்கள் மண்ணில் விழுந்து மேல் சக்கரம் காற்றில் சுழல கீழ்ச்சக்கரம் மண்ணில் உருள சற்றுதூரம் ஓடின. அவற்றிலிருந்த வீரர்கள் சிதறிவிழுந்து எழுவதற்குள் கர்ணனின் அம்புகள் அவர்களை துளைத்தன.

துரியோதனனின் கொடியை சத்யஜித் உடைத்தான். மேலே நோக்கிய துரியோதனன் சினத்துடன் கூச்சலிட்டு தன் வில்லால் ரதமோட்டியை அறைந்தான். துரியோதனன் சத்யஜித்தை வெல்லமுடியாதென்று அர்ஜுனன் அறிந்துகொண்டான். அவனை சினமூட்டிவிட்டான். கதாயுதப்போரில் மட்டுமே சினம் ஓர் ஆற்றலாக ஆகும். வில்வித்தையில் அது அத்தனை இலக்குகளையும் தவறச்செய்யும். “சினம்கொள்ளச் செய்துவிட்டான்... அவ்வளவுதான். இனி அவன் சத்யஜித்தை வெல்லமுடியாது” என்றான் பீமன். உரக்க நகைத்து தன் தோளில் தட்டியபடி “சர்ப்பக்கொடியை மிக விரும்பி அமைத்தான்... அவனுடைய இலச்சினையில் கார்க்கோடகன் இருக்கவேண்டும் என்று நிமித்திகன் சொன்னானாம்.”

பச்சைக்குருதியின் வாசனையை அர்ஜுனன் கற்பனை செய்துகொண்டான். இது போர். இங்கே குருதி உண்மை. கதறல் உண்மை. மரணமும் உண்மை. அவனுக்கு கர்ணனை நினைத்து சிறிய அச்சம் எழுந்தது. கர்ணனுக்கும் இது முதல் போரே. சற்றும் தயக்கமில்லாமல் கொன்று வீழ்த்துகிறான். அவன் அம்புகள் ஒவ்வொன்றிலும் அவனுடைய அகத்தின் உறுதி தெரிந்தது. குருதிச்சுவை அறிந்த கொலைப்பறவைகள்போல அவன் அம்புகள் எழுந்து விழுந்தன. கழுகின் சிறகுகளை உடைத்து சிதறடித்துக்கொண்டு அவன் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டான். அவனுடைய யானைச்சங்கிலி சுருள் கொண்ட கொடி பாஞ்சாலர்களின் நடுவே தெரிந்தது.

மறுபக்கம் விகர்ணனின் ரதம் கழுகின் இன்னொரு சிறகுடன் இணைப்போரில் இருந்தது. கௌரவர்களின் வீரர்கள் அம்புகள் பட்டு விழுந்தனர். அவர்கள் விழுந்த இடங்களில் நெருப்பில் கல் விழுந்த தடம் போல படை சற்று விலகி மீண்டும் இணைந்துகொண்டது. படை முன்னகர்ந்து செல்ல பின்பக்கம் அம்புபட்டு விழுந்து துடித்துக்கொண்டிருந்த வீரர்களை காணமுடிந்தது. தைத்த அம்புகளுடன் சிலர் எழுந்தும் விழுந்தும் ஓடி விலகினர். அத்தனை தொலைவிலேயே அலறல் ஒலிகள் கேட்டன. குதிரைகள் கனைப்பதும் ரதச்சகடங்கள் அதிர்வதும் அதனுடன் இணைந்துகொண்டன.

கர்ணனால் சிதறடிக்கப்பட்ட கழுகின் சிறகிலிருந்து கொம்பின் ஓசை அழுகை போல எழுந்தது. துரியோதனனுடன் போர் புரிந்துகொண்டே சத்யஜித் இடக்கையை காட்டினான். அவனருகே நின்ற பெருமுரசு அதிர கழுகின் உடலில் இருந்து புதுச்சிறகு ஒன்று முளைத்து நீண்டு சிதறிய சிறகின் எச்சங்களை அணைத்துக்கொண்டு இணைந்து வலுவாகி கர்ணனை நோக்கி வந்தது. கர்ணன் கை தூக்க அவனுக்குப்பின்னால் கொடியசைந்து கொம்புகள் கூவின. கௌரவப்படையில் ஒருபகுதி கிளம்பி கர்ணனுடன் சென்று சேர்ந்தது.

மிகவும் பின்வாங்கிச்சென்றிருந்த பாஞ்சாலப்படையின் வலச்சிறகு வலிமைபெற்று முழுவீச்சுடன் தாக்கியபடி முன்னால் வந்தது. கௌரவ வீரர்கள் அம்புகள் பட்டு சரிந்தார்கள். வீரர்கள் விழ விழ நண்டின் இடக்கொடுக்கு விரைவிழந்தது. மெல்ல அது சிதறி பின்வாங்கியது. நண்டுக்கொடுக்கில் இருந்த கௌரவப் படைகளுக்கும் கர்ணனுக்குமான தொடர்பு முற்றிலுமாக அறுபட கர்ணன் கழுகின் சிறகால் அள்ளி எடுக்கப்பட்டு பின்னால் கொண்டுசெல்லப்பட்டான். “பிடித்துவிட்டனர்!” என்று தருமன் கூவினான். “அது சிலந்தி வலையில் வண்டு சிக்கியதுபோல. வலையை அறுத்து அதை அவர்களே அனுப்பிவிடுவார்கள்” என்றான் பீமன்.

சத்யஜித் துரியோதனனின் ரதத்தின் தூணை உடைத்தான். ரதமுகடு துரியோதனன் மேல் சரிந்தது. அவன் சினம் கொண்டு அதை தன் காலால் ஓங்கி அறைந்தான். அதற்குள் அவனுடைய கவசங்களின் இடைவெளிகளைத் தாக்கிய சத்யஜித் சில அம்புகளில் அதை உடைத்துப் பெயர்த்து விழச்செய்தான். கடும் சினத்தால் நிலைமறந்த துரியோதனன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி வில்லைத் தூக்கியபடி ரதத்தட்டின் முன்னால் வந்தான். அந்தத் தருணத்தை அறிந்த சத்யஜித் அவன் புரவியை அம்பால் அடித்தான். அது அலறியபடி சுழன்று விலா மண்ணிலறைய விழுந்தது. ரதம் நிலைகுலைந்து அதன் முன் தட்டில் நின்றிருந்த துரியோதனன் சமநிலை இழந்தான். அதே விரைவில் சத்யஜித் துரியோதனனின் வில்லை உடைத்தான்.

உடைந்த வில்லை வீசிவிட்டு சரிந்த தேரிலிருந்து மண்ணில் குதித்தான் துரியோதனன். திகைத்து வெறும்கையுடன் நின்ற அவனுடைய தலைக்கவசத்தை அம்பால் அடித்துச் சிதறடித்தான் சத்யஜித். துச்சாதனன் தன் ரதத்தைத் திருப்பிக்கொண்டு துரியோதனன் அருகே வந்து கூவ துரியோதனன் ஓடிப்போய் அதில் பாய்ந்தேறிக்கொண்டு அதிலிருந்த வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். அதற்குள் அவனையும் பாஞ்சாலப்படைகள் முழுமையாகவே சுற்றிவளைத்துக்கொண்டன. “அவன் கொன்றிருக்கலாம். ஆனால் அஸ்தினபுரியின் இளவரசனைக் கொன்றால் எழும் விளைவுகளை அஞ்சுகிறான்” என்றான் பீமன்.

பார்த்துக்கொண்டிருக்கையில் சிலகணங்கள் போரே முடிந்துவிட்டதுபோல தோன்றியது. நண்டின் இருகொடுக்குகளையுமே கழுகு உடைத்து சிறகுகளுக்குள் கொண்டுசென்றுவிட்டிருந்தது. “பார்த்தா, நாம் செல்லவேண்டிய நேரமா இது?” என்று தருமன் கூவினான். இல்லை என்று அர்ஜுனன் கைகாட்டினான். அவன் எதிர்பார்த்ததுபோலவே கழுகின் வலச்சிறகின் நடுவே ஒரு சுழி எழுவதுபோல கர்ணனைக் காணமுடிந்தது. நான்குபக்கமும் அம்புகளைவிட்டுக்கொண்டு அவன் தன்னந்தனியாக ரதத்தில் நின்றான். அவனுடைய சாரதி தன் முதுகின் மேல் கனத்த ஆமையோட்டுக்கவசத்தை போட்டுக்கொண்டு முழங்கால்மேல் முகம்வைத்து வளைந்து அமர்ந்து ரதத்தைத் திருப்பினான். குதிரைகள் அந்த உச்சகட்டப்போரில் ஊக்கமடைந்தவைபோல சுழன்றுவந்தன.

முன்காலை ஒளியில் கர்ணன் அணிந்திருந்த இரும்புக்கவசம் பொன்னாலானதுபோல ஒளிவிட்டது. அவன் திரும்புகையில் அவன் காதுகளில் இரு நீலவைரங்கள் மின்னுவதை அர்ஜுனன் அங்கிருந்தே கண்டான். அந்தக்கவசமும் குண்டலமும் அவனிடம் எப்போது வந்தன என்று அவன் சித்தம் பிரமித்தது. கர்ணனின் அம்புபட்டு அவனைச்சூழ்ந்திருந்த பாஞ்சாலவீரர்கள் விழவிழ அவனைச்சூழ்ந்த வலை விலகியபடியே வந்தது. அவன் அம்பால் அடிபட்ட புரவி ஒன்று துள்ளி காலுதைத்து அலறி மறிந்துவிழ அதன் ரதம் காலாள்படையினரின் தலைமேல் விழுந்து உருண்டோடியது. கர்ணன் அம்புகளை விட்டுக்கொண்டே பாஞ்சாலர்களின் வளையத்தை உடைத்து துரியோதனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலர்களுக்குப்பின்னால் வந்துவிட்டான். “காப்பாற்றிவிட்டான்!” என்றான் தருமன். “ஆனால் சத்யஜித்துடன் சற்று போர்புரியநேரும் அவர்கள்” என்றான் பீமன்.

சத்யஜித் துரியோதனனிடமும் கர்ணனிடமும் மாறிமாறி போர் செய்தான். கர்ணனின் அம்புகள் அவன் கொடியையும் தேர்முடியையும் உடைத்தன. அவன் இடையில் அம்பு பாய்ந்து சமநிலை இழந்து தூணில் சாய்ந்துகொண்டான். தனக்கும் அவனுக்கும் நடுவே வந்தவர்களை அம்புகளால் சாய்த்தபடி கர்ணன் நெருங்கிவந்தான். சத்யஜித் கையை தூக்கிக்காட்ட அவனுடைய கொடிக்காரன் கொடியை அசைத்தான். பாஞ்சாலத்தின் பெருமுரசு கூகை போல விட்டுவிட்டு ஒலிக்கத் தொடங்கியது. பாஞ்சாலப்படைகள் போரை அப்படியே விட்டுவிட்டு ஒருங்கிணைந்து பின்வாங்கின.

சத்யஜித் தன் ரதத்தைத் திருப்பி பின்வாங்கி காட்டுக்குள் விரைந்தான். முன்னரே சிதைவுற்றிருந்த கழுகின் உடல் ஒன்றுடன் ஒன்று இணைந்து பலவாறாக உருவம் கொண்டு பின்வாங்கிச்சென்றது. ஒவ்வொரு பாஞ்சாலவீரனும் அருகே நின்ற பாஞ்சாலவீரனுடன் இணைய அக்குழுக்கள் மேலும் இணைய ஒரு வலை பின்னுக்கு இழுபட்டு குறுகுவதைப்போல அவர்கள் குறுங்காட்டை நோக்கிச் சென்றனர். துரியோதனன் தன் வில்லைத் தூக்கி கூவியபடி ரதத்தில் கர்ணனை நோக்கி வந்தான். கைசுட்டி அவன் கூவுவதைப்பார்த்தபோது பாஞ்சாலப்படையை பின் தொடரும்படி சொல்கிறான் என்று தெரிந்தது. ஆனால் கர்ணன் கைகளை விரித்து அவனை அமைதிப்படுத்தினான்.

சிலகணங்களுக்குப்பின் கர்ணன் கைகளை அசைத்தான். அதற்கேற்ப கொடிக்காரன் கொடிகளை ஆட்ட முரசும் கொம்புகளும் முழங்கின. கௌரவப்படை பின்வாங்கி பதின்மர் குழுக்களாக இணைந்து மீண்டும் நண்டுவடிவை அடைந்தது. எட்டு ரதங்கள் உடைந்து விழுந்திருந்தன. எஞ்சியவர்கள் அணிவகுத்துக்கொண்டிருக்கையிலேயே ஏன் கர்ணன் சத்யஜித்தை பின் தொடரவேண்டாமென்று சொன்னான் என்று புரிந்தது. குறுங்காட்டுக்குள் இருந்து துருபதன் தன் விற்கொடி பறக்கும் தேரில் எழுந்துவந்தான். அவனுக்குப்பின்னால் நூற்றுக்கணக்கான தேர்களும் தனிப்புரவிகளும் வில்லேந்திய காலாள்படையினரும் வந்தனர். சத்யஜித்தின் படை அதனுடன் இணைந்திருந்தது.

கழுகின் வலச்சிறகில் சத்யஜித்தும் துருபதனின் மைந்தன் சித்திரகேதுவும் வந்தனர். இடப்பக்கச் சிறகில் துருபதனின் மைந்தர்கள் சுமித்திரனும் பிரியதர்சனும் வந்தனர். இருபக்கமும் மைந்தர்கள் காவல்காக்க பின்பக்கம் இளையமைந்தன் துவஜசேனன் சக்கரம் காக்க துருபதன் கழுகின் அலகாக வந்தான். கழுகு சிறகுகளை வீசி பேருருவம் கொண்டு கௌரவர்களை நோக்கி வந்தது. பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்.

கர்ணன் தன் சங்கை எடுத்து ஊதியபடி வில்லுடன் பாய்ந்து நண்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றான். அவனுடைய சைகைக்கு ஏற்ப அசைந்த கொடிகளைக் கண்டு அவனுடைய இடத்துக்கு விகர்ணனும் துச்சலனும் ரதத்தில் பாய்ந்துசென்றனர். நண்டுவியூகம் மெல்லக்கலைந்து ராஜாளியாகியது. ராஜாளியின் அலகாக கர்ணன் நின்றிருந்தான். துருபதனின் படை சரிவிறங்கிவந்தது. கொடிகள் கொழுந்தாட புரவிக்கால்கள் நிலத்தில் அறைய அலையலையாக எழுந்தமைந்து நெருங்கியது. கர்ணனின் அம்பில் முதல் பாஞ்சால வீரன் விழுந்ததும் துருபதன் அம்பில் முதல் கௌரவ வீரன் விழுந்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தது.

சிலகணங்களில் இருபடைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. “வெல்வார்களா பார்த்தா?” என்றான் தருமன். “ஒரே ஒருவன்... அவன் இல்லையேல் சிலநொடிகளில் போர் முடிந்திருக்கும்” என்றான் அர்ஜுனன். “அவன் இப்போரை வெல்வான்...” தருமன் பெருமூச்சுவிட்டான். “என்றோ ஒருநாள் அவன் நமக்கு எதிராக வில்லுடன் நிற்கப்போகிறான்” என்றான். அர்ஜுனன் உத்வேகத்தில் சற்று உடலைக் குனித்து போரைப்பார்த்தான். இருபடைகளும் இரு யானைமத்தகங்கள் போல அறைந்துகொண்டன. அலறல்களும் போர்க்கூச்சல்களும் எழுந்து காற்றில் மிதந்துவந்தன.

கர்ணனின் கையிலிருப்பது வில்லா சக்கரமா என்ற ஐயமெழும்படி இருந்தது அவனுடைய போர். அம்புகள் பட்டு பாஞ்சாலர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். துருபதனின் மகன் சுகேது அம்புபட்டு தேர்த்தட்டில் இருந்து அலறியபடி விழுந்தான். அரைக்கணம் திரும்பி நோக்கிய துருபதனின் வில்லில் இருந்து வந்த அம்புகள் பட்டு கௌரவர்கள் விந்தனும் சுபாகுவும் தேரில் இருந்து விழுந்தனர். “கர்ணன் எளிதில் துருபதனை வெல்லமுடியாது பார்த்தா. அவனை நிலையழியச் செய்யத்தான் அவன் மைந்தனைத் தாக்கினான். ஆனால் அவன் ஒருகணமும் சமநிலை இழக்கவில்லை” என்றான் பீமன்.

துருபதனும் கர்ணனும் நேருக்குநேர் போர்புரியத்தொடங்கினர். அர்ஜுனன் அதற்கிணையான ஒரு நேர்ப்போரை அதுவரை கண்டதில்லை. இருவரையும் சூழ்ந்து சிறுபறவைகள் பறந்து நடமிடுவதாகத் தோன்றியது. பொங்கும் அருவிக்குக் கீழே துள்ளிக்குதித்து நீராடுவதாகத் தோன்றியது. நூற்றுக்கணக்கான மெல்லிய சரடுகளால் கட்டப்பட்டு வேறேதோ கரங்களால் பாவைகளென ஆட்டுவிக்கப்படுவதாகத் தோன்றியது. ஒவ்வொருகணமாக நீடித்த நடனம் முடிவற்றது என்ற பிரமை எழுந்தது.

கழுகின் இடப்பக்கச் சிறகை துரியோதனனும் துச்சாதனனும் தாக்கி முன்னால்சென்றனர். கழுகின் வலச்சிறகு சத்யஜித்தின் தலைமையில் கௌரவர்படைகளை அறைந்து அழுத்திக்கொண்டு வந்தது. அங்கே விகர்ணனும் துச்சலனும் சத்யஜித்தின் அம்புகளுக்கு முன் நிற்கமுடியாமல் பின்வாங்கிக்கொண்டே இருந்தனர். விகர்ணன் சட்டென்று அம்புபட்டு தேர்த்தட்டில் விழ அவனுடைய சாரதி ரதத்தைத் திருப்பினான். அந்த இடைவெளியை ஜலகந்தனின் ரதம் உடனே நிறைத்தது.

போரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஓர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர். அவர்கள் ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும் இருந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றன. இப்புடவியின் அத்தனைகோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றை நிகழ்வாகத் தெரியுமோ?

கௌரவர்களின் காலாள்படையினர் நிலத்தில் மண்டியிட்டமர்ந்து விற்களை நிலத்தில் ஊன்றி அம்புகளைத் தொடுத்தனர். ரதங்கள் முன்னேறும் வழியில் அந்த அம்புகள் சென்று விழுந்து அங்குள்ள வீரர்களை விலகச்செய்தன. ரதங்கள் அங்கே ஓடிச்சென்றதும் ரதங்களுக்குப்பின்னால் அவற்றையே மறைவாகக் கொண்டு காலாள்படையினர் முன்னேறினர். எங்கு அம்புகள் செல்லவேண்டுமென்பதை கொடிகளும் முரசுகளும் சைகைகளாலும் ஒலியாலும் சொல்லிக்கொண்டே இருந்தன. தன் உடலுக்கு தானே ஆணையிட்டுக்கொண்டு போர் புரிந்தது ஆயிரம் கால்கள்கொண்ட விலங்கு.

படைக்குப்பின்பக்கம் உடைந்த சக்கரங்களும் கைவிடப்பட்ட விற்களும் மண்ணில் தைத்தும் விழுந்தும் கிடந்த ஆயிரக்கணக்கான அம்புகளும் சடலங்களும் துடிக்கும் உடல்களும் தவழ்ந்து எழுந்து ஒதுங்கும் காயம்பட்ட வீரர்களுமாக புயல்கடந்த நிலம்போலிருந்தது புல்வெளி. எரியம்புகள் விட்ட புகையின் திரையை காற்று அள்ளி விலக்க அப்பால் பல்லாயிரம் அசைவுகள் கொந்தளிக்க குமிழிகளும் பாசிகளும் அசையும் நீர்ப்பரப்பு போலவோ காற்றிலாடும் திரைச்சீலை போலவோ போர்க்காட்சி தெரிந்தது.

துருபதனின் கைத்திறன் வியக்கச்செய்வதாக இருந்தது. அவனுடைய தளர்ந்த கனத்த உடலைக்கொண்டு போர்புரியமுடியுமென்பதே வியப்பூட்டியது. அவன் கைகளும் கண்களுமே அசைந்தன. கண்பட்ட இடத்தை மறுகணமே அம்பு சென்று தொட்டது. அவனுக்குப்பின் இரண்டு வீரர்கள் நின்றுகொண்டு அம்புகளை மாறிமாறிக்கொடுத்தனர். அவன் அம்புபட்டு கௌரவர்கள் நந்தனும் சுநாபனும் விழுந்தனர். அடுத்தகணமே மகாபாகுவும் சுஷேணனும் விழுந்தனர். ஓர் இளவரசன் விழுந்த அதிர்ச்சியை படைகள் எண்ணுவதற்குள் இன்னொருவன் அம்புபட்டு அலறி வீழ்ந்தான். பீமவேகனும் அயோபாகுவும் துர்மதனும் சித்ராக்‌ஷனும் விழுந்தனர்.

கர்ணனின் அம்புபட்டு சுமித்ரன் விழுந்தான். அதை அரைக்கணம்கூட திரும்பி நோக்காமல் துருபதன் போரிட்டான். துருபதனின் ஆற்றல் கர்ணனை மேலும் மேலும் ஊக்கமடையச்செய்வதுபோலிருந்தது. அதை அவன் எண்ணியதுமே தருமன் சொன்னான் “நெருப்பை காற்று ஊதிப்பெருக்குவதுபோலிருக்கிறது பார்த்தா... அவன் வீரியம் இவனை மேலும் ஆற்றல்கொண்டவனாக்குகிறது.” கர்ணனின் கரங்களை பார்க்கவே முடியவில்லை. அம்புகளால் துருபதனின் தேர் முற்றிலும் சூழப்பட்டிருந்தது. கவசமெங்கும் துளைத்து நின்று அதிர்ந்த அம்புகளுடன் துருபதன் முள்ளம்பன்றிபோல சிலிர்த்தான்.

போரில் தலைவனின் இடமென்ன என்பதை அர்ஜுனன் கண்கூடாகக் கண்டான். ஒரு மனிதன்தான் அவனும். ஆனால் அவனுடைய ஒவ்வொரு அகநிகழ்வையும் அசைவுகள் வழியாக அந்தப்படை அறிந்தது. அவர்கள் எவரும் அவனை நோக்கவில்லை. தங்கள் போர்க்கணத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். உடல்கள் வழியாக அவர்கள் அனைத்தையும் பார்த்தனர். அவனுடைய உடலே அந்தப்படையாக விரிந்ததுபோலிருந்தது. அத்தனை உடல்களுக்கும் சேர்த்து ஒற்றைமனம் தலைவன் உடலில் இயங்குவதாகத் தோன்றியது.

கர்ணன் வீரியம் கொள்ளக்கொள்ள கௌரவப்படை வீறுகொண்டது. ராஜாளியின் சிறகுகள் கழுகுச்சிறகுகளை தள்ளிச்சிதைத்துக்கொண்டு முன்னால் சென்றன. துருபதன் அகத்தில் குடியேறிய மெல்லிய திகைப்பை அவன் படை உடனே அடைந்தது. அவன் ஒருகணம் சலித்து வில்தாழ்த்தியபோதே அந்தச் சலிப்பை மொத்தப்படையும் அடைந்தது. அவன் அகம் கொண்ட களைப்பை உணர்ந்ததுபோல அவன் ரதம் மெல்ல பின்னடையத் தொடங்கியது.

ஒரு படை எங்கே பின்வாங்க முடிவுசெய்கிறது என்பதை அர்ஜுனன் கண் முன் கண்டான். அது அந்தத் தலைவனின் கண்ணில் கையில் அவன் படைக்கலத்தில் அவன் தேர்ச்சக்கரத்தில் என படர்ந்து கண்ணெதிரே ஓர் அலைபோல படைகளை முழுக்க தழுவிச்சென்றது. மொத்தப் பாஞ்சாலப்படைகளும் மெல்ல பின்வாங்கத்தொடங்கின.

பகுதி இரண்டு : சொற்கனல் – 5

நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவரையே அவை மேலும் துரத்தும். பாஞ்சாலப்படை பின்வாங்கத் தொடங்கியதுமே கௌரவப்படையில் விரைவு கூடியது.

அவர்கள் பின்வாங்குகிறார்கள் என்பதே கௌரவர்களை களிவெறியும் கொலைவெறியும் கொள்ளச்செய்ய போதுமானதாக இருந்தது. தாக்குதலும் இறப்பும் முன்னைவிட அதிகரித்தன. பாஞ்சாலப்படையை முழு விரைவுடன் தாக்கி பின்னுக்குத்தள்ளிச்சென்றது கௌரவப்படை. அதுவரை வில்லேந்திப் போரிட்ட காலாள்படையினர் வேல்களும் வாள்களுமாக பாஞ்சாலப்படைமேல் பாய்ந்து தாக்கத் தொடங்கினர்.

பாஞ்சாலப்படை அஞ்சிய கணமே அதன் போரிடும் விரைவு குறைந்தது. அதன் விரைவு குறையக்குறைய அதன் அழிவு கூடியது. கூடிவரும் அழிவு அச்சத்தை மேலேற்றியது. கோபுரம் இடிந்துவிழும்போது இடிபாடுகளே மேலும் இடிப்பதைப்போல அதன் தோல்வியே மேலும் தோல்வியை கொண்டுவந்தது. பிணங்களை முன்னால் விட்டுவிட்டு பாஞ்சாலர்கள் பின்வாங்கிக்கொண்டே இருந்தனர்.

தோல்வியில் மனிதர்கள் விதியாகி வந்திருக்கும் பிரபஞ்சத்தை அறிகிறார்கள். வெற்றியில் தன்னை மட்டுமே அறிகிறார்கள் என்று துரோணர் முன்பொருமுறை சொன்ன வரிகளை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அக்கணம் வரை ஒவ்வொரு கௌரவப் படைவீரனும் தன் படைக்காகப் போரிட்டான். வெற்றியின் முகப்பில் அவர்கள் தங்களுக்காகப் போரிட்டனர். வாளைத்தூக்கியபடி அமலை ஆடினர். எம்பிக்குதித்து கூச்சலிட்டனர். அம்புபட்டு கைதூக்கி விழுந்தவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தினர்.

ரதங்களைத் திருப்பி பின்வாங்குவது என்பது தன் படைகளுக்கு ஓடும்படி ஆணைகொடுத்ததாக ஆகிவிடும் என்பதனால் துருபதனும் சத்யஜித்தும் முன்னோக்கி நின்று தொடர்ந்து போரிட்டனர். ஆனால் காலாள்படையிலிருந்து துண்டுபட்டு கௌரவர்களிடம் சிக்கிவிடலாகாது என்பதையும் அறிந்திருந்தமையால் சக்கரங்களை பின்னோக்கி உருட்டியபடியே சென்றனர். குதிரைகள் பின்னோக்கி காலடி எடுத்துவைத்தபோது நடைதடுமாறி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு கனைத்தன.

திரும்பும்படி ஆணைவருகிறதா என்று சத்யஜித் தமையனை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டே இருந்தான். தோல்வி நிகழ்ந்துவிட்டது என்று துருபதன் அறிந்திருந்தான். ஆனால் அதை ஏற்க அவன் மனம் ஒப்பவில்லை. மைந்தனுக்கு நிகரான இளையோரிடம் தோற்றபின் அவனுக்கு ஷத்ரிய சபையில் இளிவரலே எஞ்சுமென அவன் அறிந்திருந்தான். அங்கே சாகவே அவன் எண்ணினான்.

ஆனால் அவனைமீறி பாஞ்சாலப்படை பின்னால் சென்றுகொண்டே இருந்தது. நதி மணல்கரை இடிந்துவிழுந்து பின்னகர்வதுபோல சடலங்கள் விழ படை விளிம்பு பின்வாங்கியது. துருபதன் பின்னால் திரும்பி நோக்கினான். அவன் பின்னால் நோக்குவதே ஒரு தோல்வி என்பதுபோல பாஞ்சாலப்படை மேலும் பின்வாங்கியது. தன் சிறகுமுனையை கைவிட்டுவிட்டு துரியோதனன் கை நீட்டி உரக்க நகைத்தபடி துருபதனை நோக்கி வந்தான்.

“இளையவனே, போர் முடிந்துவிட்டதா?” என்றான் பீமன். “இன்னும் ஒன்றை எதிர்பார்க்கிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். அவன் சொற்கள் முடிவதற்குள்ளாகவே கௌரவப்படைகளின் பின்பக்கம் வடக்கிலிருந்து பேரொலி எழுந்தது. முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க நூறு ரதங்கள் கொடிகள் பறக்க விரைந்துவந்தன. அவற்றை இழுத்த குதிரைகளின் பிளந்த வாய்கள் துல்லியம் அடைந்தபடியே வருவது தெரிந்தது. அவற்றுக்குப்பின்னால் ஐநூறு புரவிகள் பிடரி பறக்க வந்தன. அவற்றில் நீளமான மூங்கில் ஈட்டியை ஏந்திய வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

“யார் அவர்கள்?” என்று தருமன் கூவினான். “சிருஞ்சயர்கள்… கருஷரின் தலைமையில் வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் திகைத்து "அவர்கள் துரியோதனனை ஆதரிப்பதாக செய்திவந்தது என்றார்களே?” என்றான். “மூத்தவரே, இந்த மலைநிலத்தை அவர்கள் ஆயிரம் வருடங்களாக காத்துவருகிறார்கள். எத்தனை ஆதிக்கப்படைகளைக் கண்டிருப்பார்கள்! அத்தனை எளிதாக குலத்தையும் மண்ணையும் விட்டுக்கொடுப்பவர்களாக இருந்தால் அவர்கள் இதற்குள் அழிந்திருப்பார்கள். அப்படி அழிந்த பல்லாயிரம் குலங்கள் இங்குள்ளன” என்றான் அர்ஜுனன்.

“ஏன் முரசுகளை முழக்குகிறார்கள்?” என்று தருமன் குழம்பியபடி கேட்டான். “துருபதன் சரணடையப்போகிறான் என்று எண்ணிவிட்டார்கள். ஆதரவுக்கு வந்துகொண்டிருப்பதை தெரிவிக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். "அந்த ஒலியின் விளைவை இப்போது பார்ப்பீர்கள்."

பீமன் “ஆம், இனி கௌரவர் தப்பமுடியாது” என்றான். “ஏன், அவர்களின் படைகள் இன்னும் வீரியத்துடன்தானே இருக்கின்றன?” என்றான் தருமன். “மூத்தவரே, நம்பிக்கையிழப்பின் இறுதிக் கணத்தில் கிடைக்கும் நம்பிக்கை மாபெரும் ஆற்றலுடையது. அது ஒவ்வொரு பாஞ்சாலனையும் நூறுபேராக்கும். பாருங்கள்” என்றான் பீமன்.

கண்ணெதிரில் அந்த அற்புதம் நிகழ்வதை அர்ஜுனன் கண்டான். பாஞ்சாலர்கள் விற்களைத் தூக்கி ஆட்டியபடி பெருங்கூச்சலுடன் முன்னால் பாய்ந்து வந்தனர். கௌரவர்கள் பின்னால் படைகள் வரும் செய்தியாலேயே நிலைகுலைந்துவிட்டிருந்தனர். அதேசமயம் எழுந்து வந்த பாஞ்சாலர்களின் கட்டுக்கடங்காத வெறியை எதிர்கொள்ளவும் முடியவில்லை.

சிருஞ்சயர்களின் புரவிப்படை கௌரவர்களின் பாதுகாப்பற்ற காலாள்படைக்குள் புகுந்தது. நீண்ட மூங்கில் ஈட்டிகளால் மீன்களைக் குத்துவதுபோல கௌரவர்களை குத்திப்போட்டனர். அதில் அவர்களுக்கு தனித் தேர்ச்சியிருப்பதை அர்ஜுனன் கண்டான். மார்புக்கவசத்துக்கும் தலைக்கவசத்துக்கும் நடுவே தெரிந்த கழுத்துஎலும்புகளின் குழி மேலே இருந்து பார்க்கையில் வசதியான இலக்கு. அதில் ஈட்டிகள் சிக்கிக் கொள்வதுமில்லை. ஒரே ஒருமுறை குத்தி அதிகம் இறக்காமல் உடனே ஈட்டியை எடுத்தனர். குத்துபட்டவனின் மூச்சு நெஞ்சுக்குள் இருந்து வெளியேற அவன் துளைவிழுந்த தோல் பானைபோல துவண்டு முழந்தாளிட்டான்.

அவர்களின் ஈட்டிகள் இருமுனைகொண்டவை. குத்திய ஈட்டியை மேலே தூக்கி எடுப்பதற்குப்பதில் சுழற்றி மறுமுனையால் குத்துவது எளிது. ஈட்டிகள் அலையலையாகச் சுழன்றன. அவர்கள் சென்றவழிகளில் கௌரவர்கள் விழுந்து குதிரைக்குளம்புகளால் மிதிபட்டுத் துடித்தனர். சிலகணங்களிலேயே கௌரவர்களிடமிருந்த வெற்றிவெறி மறைந்தது.

பாஞ்சாலப்படை முழுமையாகவே கௌரவர்களை வளைத்துக்கொண்டது. காலாள்படையினர் சிருஞ்சயர்களை நோக்கித் திரும்பியபோது தேர்களுடன் கர்ணனும் துரியோதனனும் கௌரவர்களும் பாஞ்சாலர்கள் நடுவே சிக்கிக்கொண்டனர். “பார்த்தா, செல்வோம்” என்றான் தருமன். “இன்னும் சற்று நேரம்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, கௌரவர்கள் எவரேனும் இறந்துவிடக்கூடும். பலருக்கு கடுமையான காயமிருக்கிறது” என்றான் தருமன். “இறக்கட்டும்… ஆனால் அவர்கள் நம்மை ஒருகணமேனும் இறைஞ்சவேண்டும்” என்றான் அர்ஜுனன். பீமன் தன் கதையை உயர்த்தி “ஆம் பார்த்தா… அதுதான்” என்று கூவி நகைத்தான்.

ஒருகணம் அங்கிருந்து வந்து சுழன்றுபோன காற்றில் பச்சைரத்த வாசனை இருந்தது. அது கௌரவர்களின் ரத்தம் என நினைத்தபோது அர்ஜுனன் சிலிர்த்துக்கொண்டான். அவன் கைகால்கள் அதிரத்தொடங்கின. இந்தக்கணத்தை எப்படிக்கடப்பேன் என்பதுதான் என் முன் உள்ள அறைகூவல். என் முதல் தேர்வு. இதை நான் கடந்தால் வென்றேன். “பார்த்தா, தீராப்பழி வந்துசேரும்… அவர்கள் நம் குருதி” என்றான் தருமன். அர்ஜுனன் விழிகளை நிலைக்கவிட்டு இறுகி நின்றான்.

கௌரவர்கள் முழுமையாக சூழ்ந்துகொள்ளப்பட்டனர். நதிக்கரைச்சேற்றில் செல்வதுபோல பிணங்களின் மேல் சிருஞ்சயர்களின் ரதங்கள் ஏறிச்சென்றன. கர்ணனும் துரியோதனனும் சிருஞ்சயர்களின் ரதங்களால் சூழப்பட்டனர். துரியோதனனை விட்டு விலகாதவனாக துச்சாதனன் போரிட்டான். களத்தில் அம்புபட்டு துச்சலன் சரிவதைக் கண்டு “துச்சலன்… அந்தக் காயம் பலமென்று நினைக்கிறேன்… நீ வராவிட்டால் போ. நான் போய் அவர்களுடன் இறக்கிறேன்” என்றான் தருமன்.

“மூத்தவரே, அவர்கள் நம்மை அழைக்கட்டும்” என்றான் அர்ஜுனன். மேலும் மேலும் சூழ்ந்துகொள்ளப்பட்ட துரியோதனனை நோக்கி சினத்துடன் நகைத்தபடி துருபதன் முன்னேறினான். "இல்லை, இனிமேல் இங்கிருப்பதில் பொருள் இல்லை. அவர்கள் நம்மவர்" என்றான் தருமன். "மூத்தவரே, கடைசிக்கண உதவி என்பதன் ஆற்றலை நமது படைகளுக்கும் அளிப்போமே" என்றான் அர்ஜுனன்.

தன்னைச்சூழ்ந்த வில்லாளிகளை எதிர்கொண்டபடி துரியோதனனை நோக்கிச்செல்ல முயன்றான் கர்ணன். அதைக்கண்டதும் கருஷனும் சத்யஜித்தும் அவனை இருபக்கமும் சூழ்ந்துகொண்டு தடுத்தனர். துருபதனின் அம்புபட்டு துச்சாதனன் தேர்த்தட்டில் சரிந்தான். அவனை சாரதி விலக்கிக்கொண்டு செல்ல துருபதன் துரியோதனனின் ரதசக்கரத்தை பிறையம்பால் உடைத்தான். கோடரியம்பால் அதன் அச்சை விடுவித்தான். ரதம் உடைந்து உருண்டோட துரியோதனன் களத்தில் விழுந்தான்.

கர்ணன் தன் சங்கை எடுத்து ஊத கௌரவர்களின் எரியம்பு ஒன்று வானிலெழுந்தது. அர்ஜுனன் புன்னகையுடன் “கிளம்புவோம் மூத்தவரே” என்றான். இருகைகளையும் தூக்கி “அனைத்து முரசுகளும் முழங்கட்டும். அனைவரும் முடிந்தவரை பேரோசையிட்டுச் செல்லவேண்டும்” என்றான். "ஆணை" என்றான் பிரதீபன்.

முரசும் கொம்பும் முழங்கியதும் பிரதீபன் “வெற்றி!” என்று கூவியபடி ரதத்தில் முன்னால் பாய்ந்தான். ”சந்திரகுலம் வாழ்க! அஸ்தினபுரி வாழ்க!” என்று கூவியபடி பாண்டவர்களின் படை புல்சரிவில் பாய்ந்து விரைந்தது. எரியம்புகளைத் தொடுத்தபடியும் முரசுகளை முழக்கியபடியும் அவர்கள் சென்றனர்.

அந்தப்பேரோசை சிருஞ்சயர்களை திகைக்கச்செய்தது. அதேகணம் கௌரவப் படை முழுக்க ஒரு துடிப்பை உருவாக்கியது. ஒரு படையின் உடல் சிலிர்ப்பதை அர்ஜுனன் கண்டான். வில்நுனிகளில் வேல்முனைகளில் கவசங்களில் அந்த அசைவு ஓடிச்சென்றது. இழந்த நம்பிக்கை நுரைத்தெழ அவர்கள் உரக்கக் கூச்சலிட்டு ஒருவரோடொருவர் இணைந்துகொண்டனர். அவன் நெருங்கிச்செல்லச் செல்ல கௌரவர்களின் திரள் இறுகி மீண்டும் வடிவம் கொண்டது.

மொத்த நாடகமும் மறுபக்கமாகத் திரும்புவதை அர்ஜுனன் புன்னகையுடன் கண்டான். சிருஞ்சயர்கள் திகைத்துக்கலங்கி பின்னால் திரும்பினர். அவன் எண்ணிய எல்லைவந்ததும் வில்லை எடுத்து முதல் தொடுப்பிலேயே கருஷனின் வாய்க்குள் அம்பைச் செலுத்தி தொண்டைக்குள் இறக்கினான். வாயும் கண்ணும் மட்டுமே கவசத்துக்குமேல் திறந்திருந்த கருஷன் அந்த அம்பை இருகைகளாலும் பற்றியபடி தேரில் சரிந்தான்.

அர்ஜுனனின் அடுத்த அம்பு அவன் கண்ணில் பாய்ந்தது. அவன் குனிந்து தேர்த்தட்டில் சரிய தலைக்கவசம் விலகிய இடைவெளியில் அடுத்த பிறையம்பு புகுந்து தலையை வெட்டியது. அடுத்த அம்பு அந்தத் தலையை மேலே தூக்கியது. அடுத்தடுத்த அம்புகள் அதை விண்ணில் தூக்கிச் சுழற்றின. முதல் அம்பு தன் கையிலிருந்து இயல்பாக எழுந்து சென்றதை அதன் பின்னர்தான் அறிந்தான். அந்த எண்ணம் அவன் அகத்தை துள்ளச்செய்தது.

அர்ஜுனன் போருக்கும் பயிற்சிக்கும் வேறுபாட்டை உணரவில்லை. இங்கும் இலக்குகள்தான். இலக்குகள் மட்டும்தான் இருந்தன. அவன் இருக்கவில்லை. அவன் இல்லாததனால் இறப்பு குறித்த அச்சமும் எழவில்லை. பிறர் போர் வேறுபட்டது என உணர்வதற்கான காரணம் ஒன்றே, அது உயிரச்சம். அவன் கைகளிலிருந்து அம்புகள் சென்று அந்த தலையை தொட்டுத் தொட்டு மேலேற்றிக்கொண்டிருந்தன.

மேலே எழுந்த கருஷனின் தலையைக் கண்டு சிருஞ்சயர்கள் திகைத்து ஓலமிட்டனர். தலை மண்ணில் விழுந்த இடத்தில் வீரர்கள் அஞ்சி விலகி ஓடினர். சிருஞ்சயர் குலத்தின் அடுத்த தலைவனாகிய சபரனின் தலை அடுத்து வானிலெழுந்ததும் ஓலங்கள் கூடின. இன்னொரு தலைவனாகிய பத்மனின் தலை சுழன்று மேலெழுந்து சென்று சபரனின் தலைமேலேயே விழுந்தது.

அர்ஜுனன் சிருஞ்சயர்களின் தலைவர்களை மட்டும் தொடர்ந்து தாக்கினான். இன்னொரு தலைவனாகிய பிருஹத்பாலன் தலை மேலெழுந்து சுழன்றதைக் கண்டதும் சிருஞ்சயர்கள் அனைவருமே தளர்ந்து ஒருவரோடொருவர் முட்டிமோதினர். இறப்பைக்குறித்த அச்சம் ஒவ்வொருவரையும் தனியாளாக்கியது. அவர்கள் படையாக அல்லாமல் ஆயினர்.

சிருஞ்சயர்களின் அழிவை ஓரக்கண்ணால் கண்ட துருபதன் தன் அம்புகளால் சுற்றி வளைத்து வைத்திருந்த துரியோதனனை விட்டுவிட்டு தன் படைகளை நோக்கித் திரும்பி ஒன்றுகூடும்படி கட்டளையிட்டான். கொடிகள் அக்கட்டளையை வானில் சுழன்று கூவின. ஆனால் அதற்குள் அவர்களின் வியூகம் சிதறிவிட்டிருந்தது.

“இளையவனே, முதல் அடியிலேயே அவர்களின் நம்பிக்கையை நொறுக்கிவிட்டோம்” என்று தருமன் கூவினான். அவன் ரதத்துக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் அம்புகளை விட்டபடி ஒற்றைக் குதிரை ரதங்களில் தொடர்ந்து சென்றனர். பின்மதியத்தின் சாய்ந்த வெயிலில் படைக்கலங்கள் நதியலைகள் போல மின்னி கண்களைக் கூசச்செய்தன.

பீமன் சிருஞ்சயர்களை நெருங்கி சென்றவேகத்திலேயே கதாயுதத்தால் மண்டைகளை உடைக்கத் தொடங்கினான். அவனுடைய கதாயுதத்தின் அளவும் விசையும் எவராலும் எதிர்க்கக்கூடுவதாக இருக்கவில்லை. அவனுடைய ஒரு அடிக்குமேல் வாங்கும் உடலை எவரும் கொண்டிருக்கவில்லை. எடைமிக்கவற்றுக்கு இருக்கும் மூர்க்கம் அவனிடமிருக்கவில்லை. மிகநளினமாக அவன் கதாயுதம் சுழன்றது.

தொலைவிலிருந்து நோக்கியபோது ஒரு மலர்ச்செண்டு என்றே தோன்றியது. எப்போதும் அது பின்னந்தலையையே தாக்கியது. மண்டையோடு இளகித்தெறிக்க சிதறிய மூளையுடன் வீரர்கள் தள்ளாடி நின்று சரிந்து துடித்தனர். யானை கிளைகளை ஒடிப்பதை தொலைவிலிருந்து நோக்கினால் மலர்கொய்வதுபோலிருக்கும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

அந்த விரைவிலும் தான் இரண்டாகப்பிரிந்திருப்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். ஒரு பார்த்தன் போர்புரிந்துகொண்டிருந்தான். இன்னொருவன் அந்தக்களத்தை நுணுக்கமாக நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அம்புகள் சென்று தொடுவதற்குள்ளேயே இலக்கின் இறப்பை கண்டுவிட்டிருந்தான். கொந்தளிக்கும் உடல்களின் அலையடிக்கும் படைக்கலங்களின் நடுவே அவன் அகம் அசையாமல் நின்றுகொண்டிருந்தது.

அதற்குள் தன் படைகளை திரும்பச்செய்த சத்யஜித் புரவிகள் பின்னால் வர ரதத்தில் பீமனை நோக்கி வந்தான். ரதத்தில் கதையுடன் அமர்ந்து போரிடுபவனை அவன் முதன்முதலாகப்பார்த்தான். பீமன் அம்புகளுக்கு அஞ்சவில்லை. அவன் அணிந்திருந்த கனத்த இரும்புக்கவசத்தை மீறி அம்புகள் அவனை ஒன்றும் செய்யவில்லை. தன் கதாயுதத்தை கையில் இரும்புச்சங்கிலியால் கட்டியிருந்தான். தேவைப்படும்போது கதை அவன் கரங்களிலிருந்து பறந்தும் சுழன்றது.

அதை சத்யஜித் உணர்வதற்கு முன்னரே பீமன் தன் கதையால் ஓங்கி அறைந்து அவன் ரதத்தை நொறுக்கி மரச்சிம்புகளாக தெறிக்கவிட்டான். இரண்டாவது அடியில் ஒரு குதிரை தலையுடைந்து தெறிக்க எஞ்சிய ஒற்றைச்சக்கரத்தை இன்னொரு குதிரை இழுத்துக்கொண்டே சென்றது. அதிலிருந்து பாய்ந்து இறங்கிய சத்யஜித் தன் துணைத்தளபதியின் ரதத்தை நோக்கி ஓடினான்.

பீமனிடமிருந்து சத்யஜித்தைக் காப்பதற்காகச் சூழ்ந்துகொண்ட புரவிப்படையினர் அவனை நோக்கி ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவன் குனிந்து அவர்களின் குதிரைகளின் தலைகளை கதையால் அறைந்து உடைத்தான். அவை அலறியபடி கீழே விழுந்து காலுதைக்கையில் நிலத்தில் தெறித்து நிலைகுலைந்து ஈட்டியை ஊன்றி எழும் வீரன் தலையை இரும்புக்கவசத்துடன் சேர்த்து உடைத்தான்.

சற்றுநேரத்தில் பீமன் உடல்கவசம் முழுக்க குருதி சொட்டத் தொடங்கியது. கதாயுதத்தைச் சுழற்றியபோது மூளைச்சதையும் நிணமும் குருதியும் வளைந்து தெறித்தன. அவன் கண்ணற்ற காதற்ற கொலையந்திரம் போலிருந்தான். அவன் நெருங்க நெருங்க படைவீரர்கள் பின்வாங்கி சிதறி ஓடினர். கதாயுதத்துடன் முன்வந்த பாஞ்சாலத்தளபதி கிரீஷ்மனின் கதை முதல் அடியில் உடைந்தது. அவன் தலை அடுத்த அடியில் குருதிக்குமிழியாக உடைந்து காற்றில் சிதறித் தெறித்தது. மானுட உடலென்பது எத்தனை அற்பம் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

துரியோதனனைச் சூழ்ந்திருந்த படைகளை தன் அம்புகளால் வீழ்த்தி அச்சடலங்களாலேயே ஒரு வேலியை அவனைச்சுற்றி உருவாக்கியபடி அர்ஜுனன் நெருங்கிச்சென்றான். வேலிக்குப் பின்னால் நின்ற பாஞ்சால வீர்ர்கள் துரியோதனனை நோக்கி அம்புகளை ஏவிக்கொண்டிருந்தனர்.

சத்யஜித் தன் வில்லை எடுத்தபடி இன்னொரு தேரில் ஏறி அவன் பின்னால் வர துருபதன் முன்னால் வந்தான். இருவரின் அம்புகளாலும் சூழப்பட்டு அர்ஜுனன் தேர்த்தட்டில் நின்றான். அகல்நுனியில் தீத்தழல்போல அவன் உடல் நெளிந்து நடனமிட்டது. அவனை அம்புகள் நெருங்க முடியவில்லை. அவனை வீழ்த்திவிடலாமென்று எண்ணி மேலும் மேலும் பாஞ்சாலர்கள் அவனைச் சூழ்ந்தனர்.

மறு எல்லையில் போரிட்டுக்கொண்டிருந்த பிரதீபன் அர்ஜுனனை சத்யஜித்தும் துருபதனும் சூழ்ந்துகொண்டதைக் கண்டு நாணொலியுடன் விரைந்து வந்தான். அவனுடைய அம்புகள் துருபதனைத் தாக்க அவன் திரும்பி அவன்மேல் அம்புகளை தொடுத்தான். ஒரு அம்பு அவன் தலைக்கவசத்தை மேலேற்றியது. அர்ஜுனன் அந்த ஆபத்தை உணர்ந்து சங்கை எடுத்து ஊதுவதற்குள் துருபதனின் அம்பால் பிரதீபனின் தலை வெட்டுண்டு தெறித்தது.

உச்ச விரைவில் வந்த ரதத்தில் அவன் தலையில்லாத உடலில் கைகள் வில்லுடன் அசைந்தன. பிரதீபனின் தலையற்ற உடல் சாரதிமேல் சரிய அவன் கடிவாளத்தை இழுத்ததும் ரதம் குடைசாய்ந்து உருண்டோடியது. கீழே விழுந்தபின்னரும் பிரதீபன் போரிடும் அசைவுடன் இருந்தான்.

பாஞ்சாலப்படையிடமிருந்து துரியோதனனை மீட்டு தேரிலேறச்செய்த கர்ணன், விகர்ணனை அப்பகுதியை பார்க்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நாணொலியுடன் அர்ஜுனனை நோக்கி வந்தான். கர்ணனின் உரத்த குரலைக்கேட்ட சத்யஜித் திரும்பி அவனை எதிர்கொண்டான். காலால் தேர்த்தட்டை ஓங்கி அறைந்தபடி அம்புகளை விட்டான்.

கர்ணனின் அம்பால் சத்யஜித்தின் கவசம் பிளந்து தெறித்தது. அவன் அம்பு நெஞ்சில் படாமல் குனிந்தபோது அவன் தலைக்கவசத்தை கர்ணன் உடைத்தெறிந்தான். அடுத்த அம்பு அவன் தோளைத்தாக்கியது. மார்பில் தாக்கிய அம்புடன் சத்யஜித் தேர்த்தட்டில் விழுந்ததும் அவனுடைய சாரதி ரதத்தைத் திருப்பி படைகளுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தான்.

கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே துருபதன் நின்றான். இறுதிக்கணத்தில் துருபதனில் கூடிய வெறி அர்ஜுனனை வியப்படையச்செய்தது. வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான். அப்போது துருபதனின் அகமும் ஆழத்தில் அசைவற்ற நிலைகொண்டிருந்ததா என எண்ணிக்கொண்டான்.

துருபதனின் இரு கரங்களும் புயல்தொட்ட காற்றாடியின் கரங்கள் போல கண்ணுக்குத்தெரியாதவை ஆயின. அவன் அம்புகள் கர்ணனின் ரதத்தின் தூணிலும் முகட்டிலும் இடைவெளியில்லாமல் தைத்தன. கர்ணனின் தோள்கவசம் உடைந்து தெறித்தது. அதை அவன் உணரும் முன்னரே இடது தோளில் அம்பு தைத்தது. கர்ணன் கையை குருதியுடன் உதறினான். குருதிவழியும் விரல்களுடன் அம்புகளை எடுத்து தொடுத்தான். அவன் அம்பு பட்டு துருபதனின் மைந்தன் துவஜசேனன் ரதத்தில் இருந்து தெறித்து மண்ணில் உருண்டான்.

அர்ஜுனன் துருபதனின் கவசத்தைப் பிளந்தெறிந்தான். அவன் திரும்பி இன்னொரு கவசத்தை எடுப்பதற்குள் தலைக்கவசத்தை உடைத்தான். இன்னொரு அம்பு துருபதனின் சிகையை வெட்டிவீசியது. இரு சிறு அம்புகளால் அவனுடைய குண்டலங்களை அறுத்தெறிந்தான். துருபதனின் வில்லும் அம்பறாத்தூணியும் உடைந்து தெறித்தன. தேர்த்தட்டில் அவன் வெறும் கைகளுடன் திகைத்து நின்றான்.

அப்பால் நாணொலியுடன் தந்தையின் துணைக்கு வந்த மைந்தன் சித்ரகேது கர்ணனின் அம்புபட்டு தேர்த்தட்டிலிருந்து விழுந்தான். அவன்மேல் அவன் தம்பி பிரியதர்சனின் ரதத்தின் குதிரைகள் ஏறி இறங்கின. பிரியதர்சன் தரையிலிருந்து எழுவதற்குள் அவன் கவசத்தின் இடைவெளியில் புகுந்த கர்ணனின் அம்பு அவனை வீழ்த்தியது.

துருபதனின் இன்னொரு மைந்தன் உக்ரசேனனை கர்ணனின் அம்பு இரு துண்டுகளாக்கியது. தலையும் ஒருகையும் ரதத்தில் இருந்து உதிர்ந்தன. எஞ்சிய பகுதி தேர்த்தட்டில் கிடந்து துள்ளியது. குருதி கொப்பளித்த கழுத்தில் இருந்து குமிழிகள் வெடிக்க மூச்சு ஒலித்தது.

துருபதன் திரும்பி தன் மகனை நோக்கினான். அவனை இறுக்கி நிறுத்தியிருந்த அனைத்தும் தெறித்தன. ‘ஆ!’ என்ற ஒலியுடன் அவன் இடத்தோள் அதிர்ந்தது. தள்ளாடி தேர்த்தட்டின் தூணில் சாய்ந்துகொண்டு கைகளைத் தூக்கினான். கொடிக்காரன் அவனை இன்னொரு முறை நோக்கி உறுதிப்படுத்திக்கொண்டபின் வெள்ளைக்கொடியைத் தூக்கி ஆட்டினான். கொம்பு ஒன்று மூன்று குறுகிய ஒலிகளை எழுப்பியது.

அதுவரை அங்கே அத்தனை பேரையும் அவர்களின் உயிராற்றலின் உச்சகட்டத்தில் ஆட்டுவித்த தெய்வம் ஒரே கணத்தில் விலகிச்சென்றது. ஆட்டுவிக்கும் விரல் ஓய்ந்து பாவைகள் தளர்வதுபோல ஓங்கிய வேல்களையும் வாள்களையும் தாழ்த்தி வில்களை கீழே சரித்து அனைவரும் அடங்கினர். அருவி நிலைத்ததுபோல ஓசையின்மை எங்கும் நிறைந்தது.

மறுகணம் கௌரவப் படையினரும் பாண்டவப்படையினரும் தங்கள் படைக்கலங்களை வானுக்குத் தூக்கி வீசிப்பிடித்து கைகளை வீசி எம்பிக்குதித்து ஆர்ப்பரித்தனர். “அஸ்தினபுரி வென்றது! குருகுலம் வென்றது!” என்று கூச்சலிட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். பின்னர் ஓடிச்சென்று பாஞ்சாலர்களையும் தழுவிக்கொண்டனர். குருதி வழியும் தோள்கள் வழுக்கி வழுக்கி தழுவிப்பிரிந்தன. அழுகையும் சிரிப்பும் கலந்து எழுந்தன.

பாஞ்சாலர்கள் இறுக்கமழிந்து மெல்ல நகைத்து அந்தக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். சிலகணங்களில் அஸ்தினபுரியின் படைகளும் பாஞ்சாலப்படைகளும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டாடி கூவிச் சிரித்து ஆர்ப்பரித்தனர்.

அந்த ஒலியின் நடுவே அர்ஜுனன் தன் இடைக்கச்சையை ஒரு கையால் அவிழ்த்தபடி தன் ரதத்திலிருந்து பாய்ந்து இரு புரவிகளின்மேல் கால்வைத்து தாவிச் சென்று துருபதனின் ரதத்தட்டை அடைந்தான். துருபதன் அவன் வருவதை எதிர்பார்க்காமல் “பாண்டவரே” என்று ஏதோ சொல்லவருவதற்குள் அவன் கையைப்பற்றி முறுக்கி பின்னால் கொண்டுசென்றான். தோளில் ஓங்கி அறைந்து குனியச்செய்து இன்னொரு கையைப்பற்றிப் பிடித்து முறுக்கி இரு கைகளையும் இணைத்து தன் கச்சைத்துணியால் சேர்த்துக்கட்டினான்.

“பாண்டவரே, என்ன இது?” என்று துருபதன் கூவினான். அர்ஜுனன் அவன் முழங்காலை உதைத்து அவனை மடியச்செய்து கட்டை இறுக்கினான். "பாண்டவரே!" என்று நம்பமுடியாதவனாக துருபதன் கூவினான். “இளைய பாண்டவரே, இப்படி எவரும் செய்வதில்லை. இது முறையல்ல” என்று கர்ணன் தன் ரதத்தில் நின்றபடி கூவினான். “அரசருக்குரிய மதிப்பை நாம் அவருக்களிக்கவேண்டும்…” என்றான்.

தருமன் ரதத்தில் பாய்ந்துவந்தபடி "அர்ஜுனா, விடு" என்றான். மூச்சிரைக்க “இது என் குருநாதரின் ஆணை…” என்றபடி துருபதனைப் பிடித்து ரதத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றான் அர்ஜுனன். தேரிலிருந்து மண்ணில் விழுந்து கால்கள் பின்ன எழுந்து அவனை தொடர்ந்துசென்றான் துருபதன்.

“தம்பி வேண்டாம்… நாம் அவரை ரதத்தில் கொண்டுசெல்லலாம்… இது என் ஆணை” என்று கூவியபடி தருமன் தன் ரதத்தில் இருந்து குதித்து ஓடிவந்தான். “மூத்தவரே, விலகுங்கள். இல்லை என்னுடன் போர் புரியவாருங்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் திகைத்து நின்றான். பாஞ்சாலர்களும் அஸ்தினபுரியின் வீரர்களும் மெல்ல ஓசையடங்கி திகைத்த முகங்களுடன் அசைவற்று நின்றனர்.

துருபதனை இழுத்துச்சென்று தன் தேரின் கடைக்காலில் கட்டினான் அர்ஜுனன். தேரிலேறி சாரதியிடம் “செல்க” என்றான். பதைத்து நின்ற பல்லாயிரம் விழிகள் நடுவே அவன் தேர் கீழே நெளிந்த உடல்கள் மேல் ஏறி இறங்கி உருண்டுசென்றது.

பகுதி இரண்டு : சொற்கனல் – 6

ரதத்தின் தட்டில் நின்ற அர்ஜுனன் தனக்குப்பின்னால் எழுந்த ஒலிகளை முதுகுத்தோலே செவிப்பறையாக மாற கேட்டுக்கொண்டிருந்தான். மெல்ல ஓசைகள் அடங்கி படைகள் ஆழ்ந்த அமைதிகொண்டன. ரதச் சகடங்களின் ஒலியும் குதிரைகளால் மிதிபட்ட காயமடைந்தவர்களின் முனகல்களும் ஒலித்தன. காயம்பட்ட ஒரு குதிரை செருக்கடித்து காலால் தரையை உதைத்து மூச்சு சீறியது. எங்கோ ஒரு குதிரையின் சேணத்தின் மணி ஒலித்தது.

சகடத்தில் கட்டப்பட்டிருந்த துருபதன் அது அசைந்ததும் நிலைதடுமாறி முன்சரிந்து விழுந்து முழங்காலை ஊன்றி எழுந்துகொண்டான். தோளை சகடத்தில் ஊன்றி நிமிர்ந்து பின்னால் திரும்பிப்பார்த்தான். அதுவரை நிகழ்வதென்ன என்றே உணராதபடி அவன் அகம் பிரமித்திருந்தது. சட்டென்று திகைத்தவன் போல “பாண்டவரே, இது பெரும்பாவம்... அஸ்தினபுரிக்கே பழி!” என்று கூவினான்.

அந்தச்சொற்கள் பொருட்களைப்போல வந்து தன் மேல் விழுவதாக உணர்ந்தான் அர்ஜுனன். அவன் தலையை திருப்பாமல் உடலை இறுகச்செய்துகொண்டான். தன் கரங்களால் வில்லின் நாணை நீவிக்கொண்டு சாரதியிடம் “செல்!” என்றான். சகடம் மேலும் உருண்டு இரு பிணங்கள் மேல் ஏறி மறுபக்கம் விழுந்து சென்றது. கால்தடுமாறி பிணங்கள் மேல் விழுந்த துருபதன் எழுந்து கொண்டபோது சக்கரம் அவன் மேல் உரசிச்செல்ல அவன் வலியுடன் முனகினான்.

“பார்த்தா, இது அநீதி. நீ நம் குலத்தையே அவமதிக்கிறாய்” என்று தருமன் நடுங்கும் குரலில் கூவியபடி பின்னால் ஓடிவந்தான். அர்ஜுனன் திரும்பாமல் நின்றிருக்க ரதம் சென்றுகொண்டிருந்தது. “மந்தா, அவனைப்பிடி. அவனை நிறுத்து!” என்று தருமன் உடைந்த குரலில் பதறிய கையை நீட்டி கூவினான். “என்ன நிகழ்கிறது இங்கே? பார்த்தா... பீமா நிறுத்துங்கள்!”

கதையைச் சுழற்றி நிலத்தில் ஊன்றியபடி “களத்தில் நெறியென ஏதுமில்லை மூத்தவரே, நாம் வெறும் விலங்குகள் இங்கு” என்றான் பீமன். அவன் உடலில் இருந்து உறைந்து கருமைகொண்ட குருதி சிறிய கட்டிகளாக இரும்புக் கவசத்தில் வழுக்கி உதிர்ந்தது. சளிபோல வெண்ணிறமாக மூளைத்திவலைகள் ஒட்டியிருந்தன.

அப்போது ஒரு முதிய பாஞ்சாலவீரன் “பழிகொள்பவர்களே! வீணர்களே!” என்று கூவியபடி தன் ஈட்டியைத் தூக்கி வீசும்பொருட்டு ஓடிவந்தான். திரும்பாமலேயே பீமன் தன் கதாயுதத்தால் அவன் மண்டையை சிதறடித்தான். குருதி வெடித்து தெறிக்க அவன் நின்று ஆடி கீழே விழுந்து துடிக்க அவனைத் தொடர்ந்து ஓடிவந்த பாஞ்சால வீர்ர்கள் கால்கள் உறைந்து அசையாமல் நின்றனர்.

தன் கதையைச் சுழற்றி இடையுடன் கட்டியபடி தேரில் ஏறிக்கொண்டான் பீமன். “மூத்தவரே, போரென்றால் போர். அங்கே வெற்றிமட்டுமே அறம். வெற்றியும் வேண்டும், அதில் அறமென்ற பாவனையும் வேண்டும். இந்த மூடத்தனம்தான் எனக்குப்புரியவில்லை” என்றான்.

“தம்பி...” என்றான் தருமன். பீமன் கண்களில் கசப்புடன் உரக்க நகைத்து “இன்று காலையில் உங்கள் விடிவெள்ளிப் பேச்சை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். அறத்தைப்பற்றிய அந்த பெரும் நாடக உரை. இதோ நம் வாழ்வின் முதல் போர் தொடங்கி நான்குநாழிகை ஆகவில்லை. கடைசி அறமும் பறந்துவிட்டது” என்றான். தருமன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நீங்கள் இன்னும் உங்கள் வாளை நெஞ்சில் பாய்ச்சிக்கொள்ளவில்லை மூத்தவரே” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் கூவினான். “மாட்டீர்கள். அதுதான் நீதிநூல்கள் அனைத்திலும் உள்ள பொய்மை.”

சொற்களில்லாமல் இரு கைகளையும் விரித்த தருமனிடம் பீமன் சொன்னான் “மூத்தவரே, இதோ மூளை சிதறிக்கிடக்கிறார்களே இவர்களை விடவா அதிக துயரை அறிகிறார் பாஞ்சால மன்னர்? இவர்களை இப்படி உடைத்துப்போடுவது அறம் என்றால் அவரை அப்படி இழுத்துச்செல்வதும் அறமே.” மூக்கிலிருந்து ஒழுகி உதட்டில் பட்ட கொழுங்குருதியை துப்பிவிட்டு சாரதியிடம் அர்ஜுனனைத் தொடர ஆணையிட்டான். ரதம் குலுங்கி முன்னகர்ந்தது.

“மந்தா, எப்போது வந்தது இந்த மூர்க்கம் உனக்கு?” என்று பின்னால் நின்ற தருமன் கூவினான். “சற்றுமுன் மூர்க்கமாக இவர்களைக் கொன்று போட்டேனே, அப்போது அது வீரம் என்றல்லவா உங்களுக்குப்பட்டது?” என்று இகழ்ச்சியுடன் திரும்பக் கூவினான் பீமன் . ரதமோட்டியின் முதுகை தன் காலால் தொட அவன் சவுக்கைச் சுண்டினான். ரதம் அசைந்து முன்னகர்ந்தது. திரும்பி நோக்கிய பீமனின் முகத்தில் சிரிப்பா அழுகையா என்று சொல்லமுடியாத உணர்ச்சி தெரிந்தது.

“மூத்தவரே, இதோ இவர்களைக் கொன்றதற்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னைக்கொன்றிருந்தால் நான் அதில் பிழைகண்டிருக்கமாட்டேன். ஆனால் நான் தலை உடைத்துக்கொன்ற அத்தனைபேரிடமும் மன்னிப்பு கோருவேன். அவர்களை எங்காவது விண்ணுலகில் சந்திக்க நேர்ந்தால் காலைத் தொட்டு வணங்குவேன். நானும் அவர்களில் ஒருவன் என்பதனால் அவர்கள் என்னை மன்னித்து புன்னகை செய்வார்கள். அவர்களை அள்ளி மார்போடு அணைத்துக்கொள்வேன். ஆனால் எந்த மன்னனிடமும் எனக்கு கருணை இல்லை” என்றபின் திரும்பிக்கொண்டான். அவன் ரதம் அர்ஜுனன் ரதத்தைத் தொடர்ந்து ஓடியது.

அவன் சென்றதும் பெருமூச்சுடன் இயல்பான துரியோதனன் திரும்பி “காயமடைந்தவர்களை ரதங்களில் ஏற்றுங்கள்” என்று ஆணையிட்டான். “துருபதரின் மைந்தர்களை உடனடியாக தூக்கி ரதத்திலேற்றுங்கள். காயங்களுக்கு கட்டுபோட்டு காம்பில்யத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.” கௌரவப்படையினர் அவன் ஆணையை ஏற்று கீழே விழுந்து கிடந்த சுமித்ரனையும் சித்ரகேதுவையும் பிரியதர்சனையும் தூக்கினர். பிரியதர்சனின் நெஞ்சில் அம்பு பாய்ந்திருந்தது. கடினமான எருமைத்தோல் கவசத்தில் அது பெரும்பாலும் தைத்திருந்தமையால் உயிர் போகும் காயம் இருக்கவில்லை. சித்ரகேதுவின் தொடை எலும்பு சகடம் ஏறி முறிந்திருந்தது.

கர்ணன் “கௌரவர்களை ரதத்தில் ஏற்றுங்கள்” என்றான். காயம் பட்டவர்கள் முனகியபடி கைகளை அசைத்து அவர்கள் உயிரோடிருப்பதைக் காட்டினர். குருதி கருகி உறையத்தொடங்கிய உடல்கள் தோள்களைப்பற்றிக்கொண்டு எழுந்தன. காயம்பட்டதுமே அவர்கள் வீரத்தையும் வெறியையும் இழந்து நோயாளிகளாக ஆகி ஆதரவு தேடினர். ஆதரவளித்துத் தூக்கியவர்களையே வசைபாடினர்.

வீரர்கள் சிலர் வாள்களுடன் சென்று காயம்பட்டு துடித்துக்கொண்டிருந்த குதிரைகளின் மோவாயைப்பிடித்து கழுத்தை வளைத்து குரல்குழாயின் இறுக்கத்தில் ஓங்கி வெட்டி அவற்றைக் கொன்றனர். துருத்தி அணைவதுபோல குருதித்துளிகள் சிதற பீரிட்டு வெளிவந்த மூச்சுடன் அவை குளம்புக்கால்களை உதைத்து மண்ணிலேயே ஓடுவதுபோல துடித்தன. வால்கள் புழுதியில் கீரிப்பிள்ளைகள் போலப் புரண்டன. அக்குதிரைகளை வளர்த்த ரதமோட்டிகள் அதைப் பார்க்கமுடியாமல் திரும்பிக்கொண்டனர்.

சுற்றிச்சுற்றி நோக்கியபடி திகைத்து நின்றபின் தருமன் தன் ரதத்தில் ஏறி அர்ஜுனனைப் பின்தொடர்ந்துசெல்லும்படி ஆணையிட்டான். ரதமோட்டி அர்ஜுனனை மறிக்கவா என்று கண்களால் கேட்க அவன் பார்வையை விலக்கிக்கொண்டான். கர்ணனும் துரியோதனனும் அவனுக்குப் பின்னால் ரதங்களில் ஏறிக்கொண்டனர். அவன் திரும்பியபோது துரியோதனனின் விழிகளைச் சந்தித்தான். தளர்ந்து தலைகுனிந்து தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டான்.

புல்வெளிப்பாதையில் அர்ஜுனன் ரதம் மெதுவாகச் சென்றது. சக்கரங்களில் கால்சிக்கி தடுமாறி மண்ணில் விழுந்த துருபதன் சிறிதுதூரம் புழுதியிலும் புல்லிலும் இழுபட்டுச் சென்றான். அவன் முனகியதை அர்ஜுனன் கேட்கவில்லை. துருபதன் மீண்டும் முழங்காலை ஊன்றி எழுந்தான். மண்ணில் உரசிய அவன் தோல் உரிந்து குருதி வழிந்து மண்ணுடன் கலந்து சேறாகியது. அவன் எழுந்து ஆரக்காலை ஒட்டியபடி ஓடத்தொடங்கினான். ரதம் மேடேறுகையில் மீண்டும் விழுந்தான்.

புல்மேடேறியபின் அர்ஜுனன் திரும்பி நோக்கினான். பாஞ்சால வீரர்கள் அப்போதும் அசையாமல் அவனையே நோக்கி நிற்பதைக் கண்டான். விதவிதமான முகங்கள். திகைப்பும் பதற்றமும் உருக்கமும் சினமும் கொண்டவை. நெஞ்சில் கைவைத்து ஏங்கியவை. தலையில் கை வைத்து உடைந்தவை. காற்றில் விரித்த கைகளுடன் இறைஞ்சுபவை. அவன் பார்வையை திருப்பிக்கொண்டபோதுதான் அவற்றில் பாஞ்சாலர்களுடன் அஸ்தினபுரியின் வீரர்களும் இருந்தனர் என்பதை உணர்ந்தான். இதுவும் எனக்கு ஆசிரியர் வைத்த தேர்வு, இங்கும் நான் ஒன்றைமட்டுமே நோக்குவேன்.

அவனுக்குப்பின்னால் மொத்தப்படையும் ஒற்றை ஒலியுடன் உடல்தளர்வதை அவனால் கேட்கமுடிந்தது. புண்பட்ட விலங்கொன்றின் பெருமூச்சு போல அதன் ஒலி எழுந்து வந்தது. தனக்குப்பின்னால் ரதங்கள் வரும் ஒலியைக் கேட்டான். அவை வரும் ஒலியிலேயே எவரும் தன்னை மறிக்க எண்ணவில்லை என்று உணர்ந்தான். ரதத்தில் நிமிர்ந்து தொடுவானை நோக்கியபடி நின்றான். இது வரலாறு. சூதர்களின் சொல்வெளி. இங்கே அர்ஜுனன் எப்போதும் ஐயமற்றவனாகவே நின்றிருப்பான். ஒருபோதும் தலைகுனியமாட்டான்.

அவன் ரதம் புல்வெளியைத் தாண்டி கிராமங்களின் நடுவே நுழைந்தது. நாய்கள் குரைத்தபடி பாய்ந்து ஓடிவந்தன. அணைந்து கருகி அப்போதும் புகைவிட்டுக்கொண்டிருந்த வீடுகளின் முன்னால் கூடி அமர்ந்து அழுதுகொண்டிருந்த மக்கள் அஞ்சி எழுந்தனர். அவர்களில் ஒருவன் சற்றுநேரம் கழித்துத்தான் தேர்க்காலில் கட்டப்பட்ட துருபதனை நோக்கினான். அவன் கைசுட்டி கூவ பிறர் நோக்கி திகைத்தனர். அமர்ந்திருந்தவர்கள் ஓடிவந்து கூடினர்.

சிலகணங்களுக்குப்பின்னர்தான் என்ன நடக்கிறதென்று அவர்களுக்குத் தெரிந்தது. ஒருபெண் கூவி அலறியபடி ஓடிவந்து அப்படியே மண்ணில் விழுந்து மண்ணை அள்ளி வீசி மார்பிலறைந்துகொண்டு கதறினாள். அந்த ஒலி தீக்காயம்பட்ட விலங்கொன்றின் ஓலம் போல எழுந்தது. அதைக்கேட்டு ஒருகணம் உறைந்த கிராமத்தினர் பின்னர் ஒரேகுரலில் கதறி அழுதபடி பின்னால் ஓடிவந்தனர். அதற்குப்பின்னால் வந்த ரதங்களைக் கண்டு அஞ்சி அமர்ந்துகொண்டு மார்பிலும் வயிற்றிலும் அறைந்துகொண்டு கதறினர்.

ரதசக்கரத்தில் கட்டப்பட்டிருந்த துருபதன் எப்போதோ விழுந்து பின் எழமுடியாமல் மண்ணில் இழுபட்டுக்கொண்டே வந்திருந்தான். ரதம் விரைவுகுறைந்தபோதுகூட அவனால் எழமுடியவில்லை. அவன் ஆடைகள் விலகிப்போய் போருக்காகக் கட்டப்பட்ட தோலாலான அடிக்கச்சை மட்டும் உடலில் இருந்தது. அவன் உடல் களைத்து தரையில் இழுபட்டு தோலுரிந்து புழுதியும் சேறும் மண்ணும் கலந்து மூடி சடலம்போல ஆகிவிட்டிருந்தது. அவன் உடலில் உயிர் இருப்பதாகவே தோன்றவில்லை. இருமுறை அவன் கால்கள் மீதே ரதசக்கரம் ஏறிச் சென்றபோதுகூட அவனிடமிருந்து ஒலி ஏதும் எழவில்லை.

குரல்வளை உடைய எழுந்த தீச்சொற்களைக் கேட்டுக்கொண்டே சென்றான் அர்ஜுனன். ஒரு கிழவர் கற்களை எடுத்து அர்த்தமில்லாமல் ரதத்தை நோக்கி வீசியபடி பின்னால் ஓடிவந்து முழங்கால் மடிந்து விழுந்து கூச்சலிட்டார். பின்னால் நெருங்கிவந்த பீமனின் குதிரைகளின் குளம்புகள் அவரை சிதறடிப்பதற்குள் அவன் தன் கதையால் மெல்லத்தட்டி அவரை பக்கவாட்டில் தெறிக்கச் செய்தான்.

தூரத்தில் கங்கையின் ஒளி தெரிந்தபோது அர்ஜுனன் மெல்ல தளர்ந்தான். அதுவரை ஒலித்த பழிச்சொற்களை சுமக்கத்தான் தன் தோள்கள் அத்தனை இறுகியிருந்தனவா என எண்ணிக்கொண்டான். தீச்சொற்களின் எடை. சரிந்திருந்த சால்வையை இழுத்துபோட்டான். மீண்டும் உடலை நிமிர்த்தி தொடுவானை நோக்கும் பார்வையை அடைந்தான். சாரதியிடம் “மென்னடை” என ஆணையிட்டான். சீரான தாளத்துடன் குதிரை சென்றது.

அவன் கங்கைக்கரையை அடைந்தபோது அங்கே துரோணர் அவன் வரும் ஒலியைக்கேட்டு படகிலிருந்து இறங்கிவந்து கரையில் நின்றிருப்பதைக் கண்டான். அவரருகே அஸ்வத்தாமன் வில்லுடன் நின்றான். அவரை நோக்கியதுமே அவனில் அதுவரை பேணப்பட்ட சமநிலை மறையத் தொடங்கியது. அவன் கால்கள் தளர்ந்தன. அவர் விழிகளில் என்ன நிகழ்கிறது என்பதையே அவன் நோக்கிக்கொண்டிருந்தான்.

துரோணர் கண்கள்மேல் கையை வைத்து நோக்கினார். அவரது இன்னொரு கை நிலையழிந்து தாடிக்கும் தொடைக்குமாக அலைமோதியது. அவர் சில எட்டுக்கள் எடுத்து முன்வைத்தார். ரதம் நெருங்க நெருங்க மேலும் அருகே வந்தார். அவரது விழிகளை தொலைவிலேயே அர்ஜுனன் கண்டான். அவரது கண்கள் மெல்லச் சுருங்கின. தலை ஆடிக்கொண்டிருந்தது.

அவன் தனக்குப்பின்னால் கௌரவர்களும் கர்ணனும் பீமனும் தருமனும் ரதங்களில் வருவதை கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் துரோணர் துருபதனை மட்டும்தான் நோக்கினார். அஸ்வத்தாமனின் விழிகள் அர்ஜுனனையே நோக்கின.

துரோணரின் முகம் சுருங்குவதை, தாளமுடியாத வலிகொண்டதைப்போல இழுபடுவதை அர்ஜுனன் கண்டான். ஒரு கணம் அவனுள் ஐயம் ஒன்று எழுந்து கடும்குளிர் போல உணரச்செய்தது. அவர் உளம் கொதித்து தன்னை தீச்சொல்லிடப்போவதாக எண்ணினான். துருபதன் இறந்துவிட்டிருக்கிறானா என்ற எண்ணம் வந்து சென்றது. அக்கணத்தில் வாய்திறந்து கண்கள் வெறித்துக்கிடக்கும் துருபதனை அவன் கண்டுவிட்டான். மறுகணமே அவன் இறக்கவில்லை என அவனறிந்திருப்பதையும் அகத்தால் அறிந்தான்.

ஆனால் துரோணரின் முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. முதல்கணம் அர்ஜுனன் அதை நம்பவில்லை. அப்புன்னகையை அவன் அகம் அறிந்துகொண்டதும் கடும் கசப்பு ஒன்று எழுந்தது. தாளமுடியாத சினம் கொண்டவன் போல, அடியற்ற ஆழத்தில் விழுந்துகொண்டிருப்பவன்போல உணர்ந்தான்.

அவர்கள் நெருங்க துரோணரின் புன்னகை மேலும் விரிந்தது. நடுங்கும் கைகளுடன் அவர் தன் தாடியை நீவுவதை அர்ஜுனன் கண்டான். இவரா? இவர்தானா? அச்சொற்களை தன் அகமாக உணர்ந்தபின் அதை மேலும் தெளிவான சொற்களாக ஆக்கிக்கொண்டான். இதோ இக்கணத்தில் துரோணரின் பாதம் என் நெஞ்சிலிருந்து அகல்கிறது. இதோ அவர் இறந்து என்னிலிருந்து உதிர்கிறார். இதோ நான் இறந்து மீண்டும் பிறக்கிறேன். உடனே என்ன பொருளற்ற சொற்கள் என அகம் எண்ணியதும் அலை அடங்கியது. பெருமூச்சுவிட்டு ரதத்தை நிறுத்த உறுமலால் சாரதியிடம் ஆணையிட்டான்.

முதியவர் நடுங்கும் நடையுடன் அருகே வந்தார். கையை தூக்கி செயற்கையான ஆணவத்துடன் துருபதனை அவிழ்த்துவிடும்படி சைகை காட்டினார். அவரது ஒவ்வொரு அசைவையும் அர்ஜுனன் வெறுத்தான். அவரை நோக்கி பார்வையைத் திருப்பவே அவனால் முடியவில்லை. நடிக்கிறார். ஆம். இது வரலாற்றுத்தருணம். அதில் அவர் நடிக்கிறார்.

அவன் ரதத்திலிருந்து குதித்தான். அப்போது தோன்றியது அவனும் நடிப்பதாக. கால்தளர்ந்திருந்ததை மறைக்கவே அவன் குதித்தான். இத்தகைய தருணங்களில் இயற்கையாக இருப்பவர்கள் உண்டா? அத்தனைபேரும் நடிக்கத்தானே செய்கிறார்கள்? இயல்வதே அதுமட்டுமல்லவா? அப்படியென்றால் வரலாற்றுத்தருணங்களெல்லாமே இப்படிப்பட்ட நாடகங்கள்தாமா? யாருக்காக நடிக்கப்படுகின்றன அவை? சூழ்ந்திருக்கும் இவ்விழிகளுக்காக. பாடப்போகும் சூதர்களுக்காக. பொய்யை நம்ப விரும்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்காக.

உள்ளே எண்ணங்கள் சிதறி ஓடிக்கொண்டிருக்க அவன் எதையும் காட்டாதவனாக மிடுக்குடன் நடந்து சென்று ரதச்சகடத்தை அணுகி குனிந்து துருபதனின் கட்டுகளை அவிழ்த்தான். எழமுடியாமல் துருபதன் புழுதியில் குப்புறக்கிடந்தான். சேற்றில் புதைந்து மீட்கப்பட்ட மட்கிய சடலம் போலிருந்தான். அர்ஜுனன் அமர்ந்து அவன் கையின் கட்டுகளை அவிழ்த்தான். அவிழ்க்கப்பட்ட கைகள் இருபக்கமும் விழுந்தன.

அவனுக்குப் பின்பக்கம் வந்து நின்ற ரதங்களில் இருந்து பீமனும் தருமனும் துரியோதனனும் கௌரவர்களும் இறங்கி வந்து நின்ற ஒலி கேட்டது. அர்ஜுனன் நடந்து வந்த அவர்களின்  முழங்கால்களைக் கண்டு விழிதூக்கினான். அவர்களுக்குப்பின்னால் ரதங்களில் வந்த பாஞ்சாலத்தின் இரு தளபதிகள் விழிகளில் நீர் வழிய கைகளைக் கூப்பியபடி தள்ளாடும் கால்களுடன் நடந்து நெருங்கிவந்தனர்.

துருபதனின் தலையருகே தன் கால்கள் அமையுமாறு துரோணர் வந்து நின்றார். “யக்ஞசேனா, எழுக! நான் உன் பழைய தோழன் துரோணன்” என்றார். துருபதன் உயிரற்றவை போல துவண்டிருந்த கைகளைத் தூக்கி ஊன்றி தலையைத் தூக்கி அவரை நோக்கினான். அவன் முகத்தை மூடிய புழுதியைக் கரைத்தபடி கண்ணீர் வழிந்தது. உதடுகள் மரணமூச்சை வெளியிடுபவை போல இழுபட்டு வலிப்பு கொண்டன. கிட்டித்த பற்களும் இறுகிய கழுத்துச்சதைகளுமாக அவன் வெறுமனே நோக்கினான். இருபுண்கள் போல சிவந்து நீர்வழிந்தன கண்கள்.

“அன்று ஏந்திய கரங்களுடன் உன் வாசலில் நான் வந்து நின்றேன் யக்ஞசேனா. ஆணவத்துடன் என்னை உன் நண்பனல்ல என்று சொன்னாய்” என்றார் துரோணர். “ஆனால் நான் உன்னை என்றும் என் நண்பனாகவே எண்ணுகிறேன்.” அவர் உதடுகளின் புன்னகை கோணலாகியது. “ஆகவேதான் நீ உயிருடன் திரும்பிச்செல்லப்போகிறாய்.”

துருபதன் நடுநடுங்கும் கைகளை இறுக்கி ஊன்றி முனகியபடி எழுந்து அமர்ந்தான். ரதசக்கரத்தில் சாய்ந்து கொண்டு கண்களை மெல்ல மூடித்திறந்தான். நெடுந்தூரம் இழுபட்டமையால் அவன் தலையின் சமநிலை குலைந்துவிட்டிருந்தது. தளர்ந்து பின்னோக்கி விழப்போனவன் இரு கரங்களாலும் சக்கரத்தை இறுகப்பற்றி கண்களை மூடிக்கொண்டான். தலைகுனிந்தபோது மயிர்க்கற்றைகள் முகத்தில் விழுந்தன. மார்பு ஏறியிறங்கியது.

“நீ சொன்ன வார்த்தையை நம்பி உன் வாசலுக்கு வந்தேன். என் மகனுக்கு பால் கொடுக்க ஒரு பசுவை வாங்குவதற்காக. நீ என்னை அவமதித்தாய். கொடைகொள்ள நான் பிராமணனா என்று கேட்டாய். நான் ஷத்ரியன் என்றால் படைகொண்டுவந்து உன் நாட்டை வெல்லும்படி சொன்னாய்” என்றார் துரோணர். “எதைச் சொன்னால் நான் அக்கணமே பற்றி எரிவேன் என நீ அறிந்திருந்தாய். ஏனென்றால் நீ என் நண்பனாக இருந்தாய்... அந்த நட்பையே படைக்கலமாக்கி என்னை தாக்கினாய்.”

அர்த்தமே இல்லாத சொற்கள். துருபதன் அதைக்கேட்கிறானா என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. அவன் மூடிய இமைகள் துடித்தன. நெற்றியின் இருபக்கமும் நரம்புகள் புடைத்து அசைந்தன. துரோணர் உரக்க “விழி திறந்து பார் நீசா. இதோ...” என்று அர்ஜுனனை நோக்கி கைவீசி சொன்னார் “இதோ நான் உன் நாட்டை வென்றிருக்கிறேன். இவன் என் மாணவன். பாஞ்சாலத்தை என் காலடியில் கொண்டு போட்டிருக்கிறான்.”

துரோணரின் குரலில் உண்மையான உணர்ச்சிகளே இல்லை என அர்ஜுனன் எண்ணினான். அவர் அந்தக்காட்சியை எத்தனையோ முறை அகத்தில் நடித்திருக்கவேண்டும். அச்சொற்களை பல்லாயிரம் முறை சொல்லிக்கொண்டிருக்கலாம். வன்மத்துடன், கண்ணீருடன், ஆங்காரத்துடன்.

ஆனால் அச்சொற்கள் இப்போது ஏன் இத்தனை ஆழமற்றிருக்கின்றன, ஓர் எளிய கூத்துக்காட்சி போல? சொல்லிச்சொல்லி அவற்றின் அனைத்து உண்மையான உணர்வுகளும் காலப்போக்கில் உலர்ந்துவிட்டிருக்கலாம். தொன்மையான ஒரு காவியத்தின் பழகிப்போன காட்சியாக அது ஆகிவிட்டிருக்கலாம். இப்போது துரோணர் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அவரை அல்ல. அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தக் காட்சியை நிறைவுசெய்துகொண்டிருக்கிறார். சூழ்ந்து நின்றிருக்கிறது எதிர்காலம்.

“நிமிர்ந்து பார் யக்ஞசேனா, பாஞ்சாலத்தின் அரசனும் ஷத்ரியனுமாகிய துரோணனை பார்” என்றார் துரோணர். “நான் என்றும் உன்னை என் நண்பனாகவே நினைத்தேன். இப்போதும் அப்படியே எண்ணுகிறேன். ஆனால் நீ அன்று சொன்னாயே அது உண்மை. நிகரானவர்களே நட்புகொள்ளமுடியும். இப்போது நீ நாடற்றவன். பாஞ்சால மன்னனாகிய என்னுடன் நட்புடனிருக்கும் தகுதியற்றவன்.”

அவர் வெண்பற்கள் தெரியும் புன்னகையுடன் குனிந்து அவன் தோளில் கையை வைத்தார். “ஆனால் நீ என் நண்பனாகவே நீடிக்கவேண்டுமென எண்ணுகிறேன். அதற்கு நீ எனக்கு சமானமானவன் ஆகவேண்டும். எனவே பாஞ்சாலத்தின் பாதியை உனக்கு அளிக்கிறேன். கங்கை முதல் சர்மாவதி வரையிலான தட்சிணபாஞ்சாலத்தை உனக்குரிய நாடாகக் கொள். காம்பில்யமும் மாகந்தியும் உனக்குரியவை. சத்ராவதியும் உத்தரபாஞ்சாலமும் எனக்குரியவை. என் மகன் அதற்கு அரசனாவான். என்ன சொல்கிறாய்?”

துருபதன் அவரை நிமிர்ந்துநோக்காமல் கைகளைக் கூப்பினான். துரோணர் நிமிர்ந்து அகன்று நின்ற பாஞ்சாலத் தளபதிகளை நோக்கி கையசைத்து துருபதனை வந்து பிடிக்கும்படி சொன்னார். “துருபதனே, உன் நகர் கொடி நாடு அனைத்தையும் நான் உனக்களிக்கிறேன். நாமிருவரும் இளைஞர்களாக மகிழ்ந்து வாழ்ந்த அந்த நன்னாட்களின் நினைவுக்காக.” துருபதன் நிமிர்ந்து நோக்கினான்.

பார்வையை விலக்கிக்கொண்ட துரோணரின் குரல் தழுதழுத்தது. “என் வாழ்க்கையில் இனி அதைப்போன்ற மகிழ்ச்சியான நாட்கள் எனக்கு அமையப்போவதில்லை... அக்னிவேசரின் குருகுலமும் கங்கைக்கரையின் இனிய நிழல்சோலைகளும். அங்கே நாம் அமர்ந்து இரவு முழுக்க பேசிய சொற்களும்...” குரல் உடைய நிறுத்திக்கொண்டார்.

அந்த உண்மையான உணர்ச்சியில் அவர் சூழ்ந்திருப்பவர்களை மறந்து தான் மட்டுமானார். “மானுடம் மீது நம்பிக்கை இருக்கும் வரைதான் மனிதன் வாழ்கிறான்.” அவரை மீறி அவர் சொன்ன சொற்கள் அவை. அதை அவரே முழுதுணர்ந்ததும் சினம் கொண்டு பற்களைக் கடித்து “நீ என்னைக் கொன்றுவிட்டாய்” என்றார். அந்த உண்மையான உணர்ச்சியும் அந்தத் தருணத்தின் நாடகத்தின் பகுதியாகவே ஆவதை அர்ஜுனன் உணர்ந்தான்.

வருடக்கணக்காக அவரை ஆண்ட அந்த பேய்த்தெய்வம் அவரிலிருந்து மெல்ல விலகுவதை அசைவுகள் காட்டின. அவரது தோள்கள் தொய்ந்தன. கைகால்கள் தளர்ந்தன. திரும்பி அவனை நோக்கி தளர்ந்த மென்குரலில் “எனக்கு நண்பனென நீ ஒருவன்தான் துருபதா. உன்னை ஒருகணமேனும் என்னால் மறக்கமுடியவில்லை” என்றார்.

“துரோணரே, அப்படியென்றால் ஏன் இதை எனக்குச் செய்தீர்கள்?” என உடைந்து வெளிவருவதுபோன்ற குரலில் துருபதன் கேட்டான். சக்கரத்தைப்பிடித்த கைகள் அதிர தலைதூக்கி “ஆம், நான் செய்ததெல்லாம் பிழை... நான் இழிமகன். ஆணவமும் சிறுமதியும் கொண்டவன். நீங்கள் கற்காத கல்வியா? உங்களுக்குத் தெரியாத நெறியா? ஆசிரியரான நீங்கள் இதைச்செய்யலாமா?”

அந்த நேரடி வினா துரோணரை வலிமையான காற்றுபோல தள்ளி பின்னடையச்செய்தது. துடிக்கும் உதடுகளுடன் தரையை கையால் அறைந்தபடி துருபதன் கூவினான் “ஏன் இதைச்செய்தீர்கள் உத்தமரே? சொல்லுங்கள்!” அடக்கப்பட்ட அகவிரைவால் அவன் தோள்கள் அதிர்ந்தன.

நீர்த்துளிகள் நின்ற இமைமுடிகளுடன் துரோணர் ஏறிட்டு நோக்கினார். முகம் சுருங்கி விரிந்தது. உதடுகள் இறுக பற்களை கிட்டித்து சீறும் ஒலியில் சொன்னார் “ஏன் என்றா கேட்கிறாய்? உன் அரண்மனை வாயிலில் நான் நின்று உடல் பற்றி எரிந்தேன் தெரியுமா? உள்ளமும் ஆன்மாவும் கொழுந்துவிட்டு எரிந்தபடியே ஓடினேன். என் அன்னைமடியில் முகம் புதைத்து கதறி அழுதேன்.”

அதைச் சொன்னதுமே அச்சொற்களுக்காக அவர் கூசியதுபோல தயங்கினார். பின்னர் அகத்தை உந்தி முன் தள்ளி மேலும் பேசினார் “துருபதா, இத்தனை ஆண்டுகளாக ஒருநாள் கூட நான் நிறைவுடன் துயின்றதில்லை. என் அகத்திலெரிந்த அந்த அனலில் ஒவ்வொரு கணமும் வெந்துருகிக்கொண்டிருந்தேன்... இதோ...” என தன் நெஞ்சில் கைவைத்தார். “இதோ, என் அனல் அடங்கியிருக்கிறது. ஆனாலும் நான் எரிந்த அந்த வருடங்களை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது.”

அவர் குற்றவுணர்வுகொண்டு தன்னை நியாயப்படுத்த முயல்கிறார் என்று அர்ஜுனன் நினைத்தான். துருபதனே உணர்ந்துகொண்டு தன் செயலை ஏற்கவேண்டுமென எண்ணுகிறாரா என்ன? “நீ என்னை அவமதித்தாய். என் ஆன்மாவைக் கொன்றாய். நீ... நீ...” என துரோணர் மூச்சிரைத்தார்.

“ஆம், அவமதிப்பின் கொடுந்துயரை இப்போது நானும் அறிகிறேன். உங்களைவிடவும் அறிகிறேன்” என்றான் துருபதன். “துரோணரே, அத்தனை பெரும் துயரை அடைந்த நீங்கள் அதை மறந்தும் இன்னொருவருக்கு அளிக்கலாமா? உங்கள் நண்பனாகிய எனக்கு அதை அளித்துவிட்டீர்களே. இனி எஞ்சிய வாழ்நாள் முழுக்க நான் எரிந்துகொண்டிருப்பேன் அல்லவா? இனி ஒருநாளேனும் என்னால் துயிலமுடியுமா?”

துரோணர் திகைத்தவர் போல நின்றபின் ஏதோ சொல்லவந்தார். “வணங்குகிறேன் துரோணரே” என்றபின் துருபதன் வலக்காலை ஊன்றி அதன் மேல் கையை வைத்து முழு மூச்சால் உந்தி எழுந்தான். தேரைப்பற்றியபடி நின்று சிலகணங்கள் கண்களை மூடிக்கொண்டான். நீர்த்துளிகள் நின்ற இமைகளைத் திறந்து பெருமூச்சுவிட்டு கைகூப்பினான். “எனக்கு கற்றுத்தந்துவிட்டீர்கள் துரோணரே. நீங்கள் என் குரு.”

திரும்பி தன் படைத்தலைவர்களை நோக்கினான். அவர்கள் ஓடிவந்து அவன் தோள்களைப்பிடித்தார்கள். அவன் எவரையும் நோக்காமல் திரும்பி தள்ளாடும் கால்களுடன் நடந்தான். அவர்கள் அவனை மெல்ல ஏந்தி கொண்டுசென்று தேரில் ஏற்றினர். ரதம் அவன் அமர்ந்தபோது அச்சு ஒலிக்க அசைந்தது. அந்த ஒலி அமைதியில் உரக்க ஒலித்தது.

துரியோதனன் பொருளற்ற நோக்குடன் துருபதனையே பார்த்திருந்தான். கர்ணனின் விழிகள் பாதி மூடியதுபோல தெரிந்தன. பீமன் ஏளனப்புன்னகையில் வளைந்த உதடுகளுடன் துருபதனை நோக்கியபின் அருகே நடந்துவந்தான். அர்ஜுனன் தன்னருகே அசைவை உணர்ந்து நோக்கினான். அஸ்வத்தாமன் வந்து துரோணரின் அருகே நின்றான். அவரும் விழப்போகிறவர் போல அவன் தோள்களை பற்றிக்கொண்டார்.

பகுதி மூன்று : இருகூர்வாள் - 1

கதவுகளும் சாளரங்களும் முழுமையாக மூடப்பட்டு இருள் அடர்ந்துகிடந்த ஆயுதசாலைக்குள் அர்ஜுனன் வில்பயிற்சி செய்துகொண்டிருந்தான். எதிர்மூலையில் ஆட்டிவிடப்பட்ட ஊசலில் உள்ளே விதைகள் போடப்பட்ட சிறிய மரக்குடுக்கைகள் தொங்கி ஆடின. அவற்றின் ஒலியை மட்டுமே குறியாகக் கொண்டு அவன் அம்புகளால் அடித்து உடைத்துக்கொண்டிருந்தான். ஊசலருகே இருளில் நின்றிருந்த இருவீரர்கள் மேலும் மேலும் குடுக்கைகளைக்கட்டி வீசி விட்டுக்கொண்டிருந்தனர்.

நூறு குடுக்கைகளை அடித்து முடித்ததும் அவன் வில்லை தாழ்த்தினான். மர இருக்கையில் அமர்ந்து தன் கூந்தலை அவிழ்த்து தோளில் பரப்பினான். காற்றோட்டமில்லாத அறையின் வெப்பத்தால் அவன் தலை வியர்த்து நனைந்திருந்தது. ஒரு வீரன் சாளரத்தைத் திறக்கப்போனபோது 'வேண்டாம்' என்று கையால் தடுத்தான். வீரர்கள் உடைந்து சிதறிய குடுக்கைகளை பொறுக்கி சேர்க்கத் தொடங்கினர்.

கிரீச் என்ற பேரொலியுடன் கதவு திறந்தது. வீரர்கள் திகைத்து கதவை நோக்க அர்ஜுனன் கைகளால் கண்களை மூடிக்கொண்டான். பீமனின் பெரிய உருவம் இடைவெளியை மறைத்து நின்றது. பின் எதிர்ச்சுவரில் ராட்சத நிழல் விழுந்து அசைய அவன் நடந்து உள்ளே வந்தான். “சாளரங்களை திறவுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டான். வீரர்கள் சாளரங்களைத் திறக்கத் தொடங்கினர். பீமன் அர்ஜுனன் அருகே வந்து அவன் வழக்கப்படி மார்பில் பெரிய கைகளைக் கட்டியபடி நின்றான்.

வீரர்கள் சாளரங்களைத் திறந்தபின் ஒரு கணம் தயங்கினர். திரும்பாமலேயே அவர்களை போகும்படிச் சொல்லி பீமன் கையசைத்தான். அவர்கள் சென்றதும் அமர்ந்திருந்த அர்ஜுனனின் அருகே அமர்ந்து அவன் முகத்தை நோக்கினான். “மூத்தவர் சொன்னார், நீ இரவுபகலாக படைக்கலப்பயிற்சி செய்வதாக... அவருக்கு உன் மனநிலை புரியவில்லை. எனக்குப்புரிந்தது” என்றான். “நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்... இது...” என அர்ஜுனன் ஆரம்பிக்க “நான் பிதாமகரை சிறுவயது முதலே கண்டு வருகிறேன். அகம் நிலைகொள்ளாதபோதுதான் அவர் இடைவிடாத பயிற்சியில் இருப்பார்” என்றான்.

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “என்ன ஆயிற்று உனக்கு?” என்றான் பீமன். “ஒன்றுமில்லையே” என்று சொல்லி பொருளில்லாமல் அர்ஜுனன் சிரித்தான். “நான் உன்னை எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பவன். உன் இந்த சஞ்சலம் தொடங்கியது நாம் துருபதனை வென்று திரும்பியபோது” என்றான் பீமன். “இல்லை” என சொல்லப்போன அர்ஜுனனை இடைமறித்து “அது ஏன் என்றும் நானறிவேன்” என்றான் பீமன். ”துரோணர் முன் துருபதனை கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான் நோக்கினேன். நீ துரோணர் கண்களையே நோக்கினாய். அவர் புன்னகை செய்ததை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.”

நிமிர்ந்து நோக்கி “ஆம்” என்றான் அர்ஜுனன். “அந்த ஒரு கணத்தில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.” பீமன் உரக்கநகைத்து “இளையவனே, உலகைப்பற்றிய நம்பிக்கைகள் உடைவதன் வழியாகவே சிறுவர்கள் ஆண்மகன்களாகிறார்கள். நீ முதிரத்தொடங்கிவிட்டாய்” என்றான். அர்ஜுனன் “நான் தத்துவம் பேச விரும்பவில்லை” என்று சிடுசிடுத்தான். “அவநம்பிக்கையையும் கசப்பையும் வெளிப்படுத்த தத்துவத்தைப்போல சிறந்த கருவியே வேறில்லை” என்று மேலும் நகைத்தான் பீமன்.

“மூத்தவரே, எப்போதும் உங்களிடமிருக்கும் கசப்பைக் காண்கிறேன். அரசவை நிகழ்ச்சிகள், சடங்குகள் எதிலும் நீங்கள் மனமுவந்து கலந்துகொள்வதில்லை. எப்போதும் சேவகர் நடுவே இருக்கிறீர்கள்...” என்றான் அர்ஜுனன். “என்ன ஆயிற்று உங்களுக்கு? நான் அதை முதலில் கேட்க விரும்புகிறேன்.” பீமன் கோணலாகச் சிரித்து “ஒரு குமிழி உடைந்த துயரில் நீ இருக்கிறாய். அத்தனை குமிழிகளும் ஒரு பெரிய குமிழியாக ஆகி அது உடைந்ததை நான் அறிந்தேன்.”

சிலகணங்கள் நோக்கியபின் அர்ஜுனன் கேட்டான் “நான் எப்போதும் உங்களிடம் கேட்கவிரும்பிய வினா இது. மூத்தவரே, அன்று கங்கைக்கரையில் என்ன நடந்தது? கௌரவர்களுடன் விருந்துண்ட பின் நீங்கள் மறைந்தீர்கள். பின்னர் திரும்பிவந்த நீங்கள் இன்னொருவர்...” என்றான்.

பீமன் சிரித்து “கங்கைக்கரையில் நடந்தது வரலாற்றில் எப்போதும் நடப்பது. நம்பிக்கையும் துரோகமும்” என்றான். “பார்த்தா, நான் ஒரு நல்ல புராணக்கதை வைத்திருக்கிறேன். சுஜலன் என்னும் சூதன் அதைச் சொன்னான். கதைசொல்லி சூதனல்ல, சமையற்காரச் சூதன். பிரம்மன் அனைத்து மிருகங்களையும் படைத்தபின் அவற்றை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நெஞ்சில் ஒரு நகைப்பு எழுந்தது. சிவனும் விஷ்ணுவும்கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு பிறவியைப்படைக்க எண்ணினார். அவர்கள் யுகயுகமாக அப்பிறவியுடன் ஆடி சலிக்கவேண்டும். அப்பிறவியை தாங்களும் அடைந்தாலாவது அதைப்புரிந்துகொள்ளமுடியுமா என்று முயலவேண்டும். அப்போதும் புரிந்துகொள்ள முடியாமல் பிரம்மனை எண்ணி வியக்கவேண்டும்.”

“அதன்பொருட்டு அவர் உருவாக்கியவன் மனிதன்” என்றான் பீமன். “மானில் ஒருபகுதியையும் வேங்கையில் ஒருபகுதியையும் இணைத்து அவனைப்படைத்தார். பாம்பில் ஒருபகுதியையும் பறவையில் ஒருபகுதியையும் அதிலிணைத்துக்கொண்டார். ஆகவேதான் எப்போதும் வேட்டையாடுகிறான், வேட்டையாடவும் படுகிறான். சேர்ந்து வாழ விழைகிறான். உடனிருப்பவர்களை உண்ணவும் எண்ணுகிறான். விண்ணில் பறந்து விட்டு மண்ணிலிறங்கி பொந்துக்குள் சுருண்டுகொள்கிறான்." புன்னகையுடன் “குழந்தைக்கதை என நீ எண்ணுவது தெரிகிறது. எனக்கு நூல்கள் சொல்லும் நுட்பமான கதைகள் புரிவதில்லை. சமையற்காரர்களின் கதைகளே பொருள் அளிக்கின்றன” என்றான்.

“அன்று அவர்கள் உங்களுக்கு விஷம் வைத்துவிட்டார்கள் என்று அறிந்தேன்...” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றான் பீமன். பின் அவன் முகம் மாறியது. கண்கள் தழைய கைகளால் மரப்பலகையின் நுனியை நெருடியபடி சொன்னான். “இப்புவியில் ஒவ்வொரு மனித உடலும் அறியும் நிறைவின்மை ஒன்றுண்டு பார்த்தா. அது தனியாக நின்றால் தவித்துக்கொண்டே இருக்கிறது, இன்னொரு உடலுக்காக. முழுமைக்காக. நான் தேடிய அந்த இன்னொரு உடல் துரியோதனன். நான் சேர்ந்து என்னை முழுமையாக கரைத்துக்கொள்ள விழைந்த மந்தை கௌரவர்கள். இளமையிலேயே நான் அதை அறிந்ததை பெரும் நல்லூழாகக் கருதினேன். பிறிதெதையும் நான் விழையவில்லை."

பீமனின் குரல் மேலும் இறங்கி அவன் தனக்குத்தானே சொல்வதுபோல பேசினான் “துரியோதனன் என்னைவிட்டு விலகிச்செல்லத் தொடங்கியதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவ்விலகலை சரிசெய்ய ஒவ்வொருமுறை முயல்கையிலும் அம்முயற்சியே மேலும் விலகலை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவனையே நினைத்துக்கொண்டிருந்தேன். அவன் என்னை எப்படி வெறுக்கமுடியும் என்று எண்ணி எண்ணி மருகினேன். அவனிடம் நட்புக்காக கையேந்தி இறைஞ்சி நின்றேன். நான் அவன் உயிரைக்காப்பாற்றினேன்.”

“ஆகவேதான் அவர்கள் என்னை உணவுண்ண அழைத்தபோது உவகையில் மலர்ந்தேன். மனிதர்களுக்கிடையேயான அவநம்பிக்கைகளும் கசப்புகளும் மேலோட்டமானவை என்றும் ஆழத்தில் அன்பும் பாசமும்தான் உள்ளன என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு புன்னகையில் அல்லது கண்ணீரில் எல்லாம் கரைந்துபோகுமென கற்பனை செய்துகொள்கிறோம். அந்த மாயை கலையாமல் ஒருவன் விவேகம் அடைவதில்லை.” பீமன் பற்களைக் கடித்து கண்களைச் சுருக்கி முகத்தை திருப்பிக்கொண்டான். அவன் பெரியதோள்கள் மூச்சில் அசைந்தன. “அன்று அவர்கள் என்னை அழைக்கும்போது, எனக்கு உணவு பரிமாறும்போது நான் ஒரு துளியும் ஐயப்படவில்லை என்பதுதான் இன்றும் என்னை வாட்டுகிறது. இப்போது அவர்களின் அன்றைய கண்களை மீண்டும் எண்ணிப்பார்க்கையில் அவற்றில் எல்லாமே அப்பட்டமாகத் தெரிவதைக் கண்டு திகைக்கிறேன். அப்படியென்றால் ஏன் அப்போது எதுவுமே தெரியாமல் போயிற்று? எனக்களித்த உணவை அவர்கள் எவருமே தொடவில்லை என்றுகூட என்னால் ஏன் அறியமுடியவில்லை?”

“ஏனென்றால் என்னுள் இருந்தது அன்பு. இப்புவியில் மிகப்பெரிய மாயை அதுவே. அது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கனிவையும் அகத்தில் நிறைக்கிறது. அதனூடாக சித்தத்தை முழுமையாகவே மாயையால் மூடிவிடுகிறது. அன்புகொண்டவன் ஒருபோதும் மெய்மையைத் தீண்டமுடியாது. யோகி என்பவன் அன்பைக் கடந்தவன். ஞானி என்பவன் முற்றிலும் அன்பற்றவன்” என்றான் பீமன். “அன்று விஷத்துடன் கங்கையில் விழுந்தேன். விஷநாகங்களால் கடிபட்டேன். விஷம் விஷத்தை முறித்தது. வாழ்வின் சாரமான பேரறிவு ஒன்றை பாதாள நாகங்கள் எனக்கு அளித்தன. இப்புவியில் எங்கும் நிறைந்துள்ள விஷத்தை வெல்ல ஒரே வழி நம்மை விஷத்தால் நிறைத்துக்கொள்வதுதான்.” சட்டென்று மீண்டும் நகைத்து “உனக்குத்தேவைப்படுவதும் விஷம்தான். நான் வேண்டுமென்றால் உன்னைத் தீண்டுகிறேன்.”

அர்ஜுனன் மெல்ல நகைத்தான். “நீ எண்ணுவதை என்னிடம் சொல்லலாம். நான் உனக்கு நல்ல விடைகளைச் சொல்லி வழிகாட்டுவேன் என்பதற்காக அல்ல. சஞ்சலங்களை சரியான சொற்களில் சொல்லிவிட்டாலே நம் அகம் நிறைவடைந்துவிடுகிறது. அந்தப்பெருமிதத்தில் அதற்குக் காரணமான இக்கட்டை மறந்துவிடுவோம். அந்தச் சொற்றொடரை முடிந்தவரை சொல்லிச்சொல்லி பரப்பி நிறைவடைவோம். இக்கட்டுகளின் நிகர விளைவு என்பது சிந்தனையாளர்களை உண்டுபண்ணுவதுதான்” என்றன் பீமன். அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இத்தனை பகடியாக உங்களால் பேசமுடியுமென நான் எண்ணியிருக்கவேயில்லை” என்றான். “நான் சிந்தனையாளன் அல்லவா?” என்றான் பீமன்.

அர்ஜுனன் நகைப்புடன் “சரி, நீங்கள் சொன்னபடி என் இக்கட்டைச் சொற்களாக ஆக்கிப்பார்க்கிறேன்” என்றான். “மனிதர்களுக்கு சிறுமை ஏன் இத்தனை இயல்பாகக் கைவருகிறது? பெருந்தன்மையையும் கருணையையும் வெளிப்படுத்தி ஒளிவிடவேண்டிய மகத்தான தருணம் அமையும்போது ஏன் அது அவர்களின் கண்களுக்கே படுவதில்லை? எத்தனை நூல்கற்றாலும் எத்தனை சிந்தனை செய்தாலும் வாழ்க்கையின் இக்கட்டான தருணத்தில் எளிய உணர்ச்சிகள்தான் மேலோங்கி நிற்கும் என்றால் கல்வியும் ஞானமும் எதற்காக?” அதை அவன் உணர்ச்சிமிக்க கண்களுடன் கேட்டாலும் கேட்டு முடித்ததுமே புன்னகை செய்து “சரியான சொற்றொடராக ஆக்கிக்கொண்டுவிட்டேனா?” என்றான்.

“அழகான கேள்வி. ஆகவே அதற்கு விடைகூட தேவையில்லை” என்று பீமன் சிரித்தான். “நீ கேட்பதற்கு ஒரே பதில்தான். புழுக்கள் ஏன் நெளிகின்றன, ஏன் அவை பறப்பதில்லை?” என்றான் பீமன். “பறக்கமுடியாததனால்தான் அவை சிறகுகளைப்பற்றி கனவு காண்கின்றன. சிறகுகளை கலையாகவும் தத்துவமாகவும் ஆன்மீகமாகவும் சமைத்து வைத்திருக்கின்றன.”

அர்ஜுனன் தலையசைத்து “இல்லை மூத்தவரே. மானுடகுலத்தைப்பற்றிய உங்கள் கணிப்பை என்னால் ஏற்கமுடியாது. அது வெறும் புழுக்கூட்டம் அல்ல. அல்லது...” என்றான். அவனால் சரியாகச் சொல்ல முடியவில்லை. பீமன் அத்தனை சரியான சொற்களால் பேசுவதை அவனால் வியப்புடன்தான் எண்ணிக்கொள்ள முடிந்தது. சிலகணங்கள் தத்தளித்தபின் அவன் கேட்டான் “அன்று அந்த இடத்தில் நம் மூத்த தந்தையார் துருபதனை எதிர்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?”

பீமன் புன்னகையுடன் “அவர் கண்ணீருடன் ஓடிச்சென்று துருபதனை ஆரத்தழுவி மார்போடு இறுக்கியிருப்பார். அவனிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடியிருப்பார். அவன் மனமுருகி அவர் காலில் விழுந்திருப்பான்” என்றான். “ஆனால் அவர் அத்தனை நாள் அந்த வஞ்சத்தை நெஞ்சுக்குள் வைத்திருக்கவும் மாட்டார். தன் சினங்களை அந்தந்தக் கணங்களிலேயே உடலால் வெளிப்படுத்துபவர் அவர். அவர் அவமதிக்கப்பட்டால் அவமதித்தவன் தலையை உடைப்பார். முடியவில்லை என்றால் அவன் கையால் இறப்பார். அவமதிக்கப்பட்டவராக வாழமாட்டார்.”

“ஆம், நான் சொல்வது அதைத்தான் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “அவரைப் போன்றவர்கள் எந்தத் தருணத்திலும் தங்கள் மாண்பை விட்டுக்கொடுப்பதில்லை. இக்கட்டுகளில் எப்போதும் பறந்தெழுவதையே தேர்ந்தெடுக்கிறார்கள்.” அவன் குரலில் ஊக்கம் ஏறியது. உடலில் படர்ந்த பரபரப்புடன் எழுந்துகொண்டு “அவர் நம் தந்தைக்கு தன் மணிமுடியை அளித்த தருணத்தை எப்போது கேட்டாலும் என் உடல் சிலிர்க்கும்... குருவம்சத்தின் மகத்தான தருணங்களில் ஒன்று அது.”

பீமன் புன்னகையுடன் தலையை ஆட்டினான். “ஆம், இதுவரை அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். இதுவரை...” என்றான். “மீண்டும் உங்கள் விஷத்தையே உமிழ்கிறீர்கள் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம்....என்னுள் இருப்பது அதுதான். என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. அவர் தன் சிறகுகளை எல்லாம் இழந்து மண்ணில் தவழும் தருணம் எது? இப்போது தெரியவில்லை, ஆனால் அதை நாம் காண்போம்.” அர்ஜுனன் சீற்றத்துடன் “அதை விரும்புகிறீர்களா? அதற்காக காத்திருக்கிறீர்களா? என்ன சிறுமை!” என்றான். “ஆம், அதை என்னுடைய சிறுமை என்றே கொள்” என்றான் பீமன்.

இருவரும் சற்றுநேரம் தங்களுக்குள் ஆழ்ந்து அமைதியாக இருந்தனர். பீமன் தன் கைகளால் அந்த இருக்கையின் மரப்பலகையை பெயர்த்து எடுத்தான். அதை சிறிய சிம்புகளாக பிய்த்து வீசிக்கொண்டிருந்தான். அர்ஜுனன் அகத்தில் அந்த மெல்லிய ஐயம் எழுந்தது. அதை அவன் நோக்கியதுமே அது பெருகி பேருருவம் கொண்டு நின்றது. “மூத்தவரே, இப்போது இந்த ஐயத்தை தாங்கள் சொல்வதற்குக் காரணம் உண்டா?” என்றான். பீமன் கண்களைச் சுருக்கி “உன் வினா புரியவில்லை” என்றான். “பெரியதந்தையார் தன் பெருந்தன்மையை இழக்கும் கணம் வரும் என்றீர்கள்!”

பீமன் உடனே புரிந்துகொண்டு கண்களில் நகைப்புடன் “ஆம்” என்றான். “அதை ஏன் சொன்னீர்கள்? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” பீமன் “நீ எண்ணுவதென்ன என்று சொல்” என்றான். அர்ஜுனன் பார்வையை விலக்கியபடி “இந்த முழுநிலவுநாளில் இளவரசுப்பட்டம் சூட்டப்படவேண்டும்” என்றான். “ஆம்” என்றான் பீமன். “மூப்பு முறைப்படி நம் தமையனுக்குரியது அந்தப்பட்டம். குலமரபுப்படி வரும் முழுநிலவுநாளில் தமையனார் இளவரசாக ஆகிவிடவேண்டும்..." என்றான் அர்ஜுனன். பீமன் மேலும் சிரித்து “சொல்” என்றான்.

அர்ஜுனன் சினத்துடன் தலைதூக்கி “என்னிடம் விளையாடுகிறீர்களா மூத்தவரே? நான் என்ன கேட்கிறேன் என உங்களுக்கே தெரியும். இந்த அஸ்தினபுரியே அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது” என்றான். பீமன் தலையசைத்தான். “ஆனால் இன்னொரு முறைப்படி துரியோதனனே இம்முடிக்குரியவர் என்று ஒரு சாரார் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். காந்தார இளவரசர் சகுனி அதை இந்நகரில் பரப்பியிருக்கிறார்.”

பீமன் “இளையவனே, அவர்களின் கோணத்தில் அதுவும் சரிதானே? இந்த மணிமுடி பதினெட்டு வருடம் நம் தந்தையார் பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. இதோ பதினெட்டு வருடம் ஆகிவிட்டிருக்கிறது. அஸ்தினபுரியின் அரியணையும் செங்கோலும் இத்தனை வருடமாக கருவூலத்தில் காத்திருக்கின்றன” என்றான். அர்ஜுனன் சீற்றத்துடன் “என்ன சொல்கிறீர்கள்? இன்று குருகுலத்தில் மூத்தவர் யார்? மூத்தவரே இளவரசர் என்று தெரியாதவர்கள் பாரதவர்ஷத்தில் யார் இருக்கிறார்கள்?” என்றான். “அற்ப விவாதங்களால் நம்மை சிறுமைப்படுத்தி அகற்ற காந்தாரத்து ஓநாய் முயலுமென்றால் என்ன செய்வதென்று எனக்குத்தெரியும்” என்றான்.

பீமன் “அதை நாம் சேர்ந்தே செய்வோம்” என்றான். “ஆனால் நீ உன் பெருந்தன்மை, அறம் பற்றிய கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு எளிய மானுடனாக மீண்டு வந்திருப்பது உவகை அளிக்கிறது” என்றான். அர்ஜுனன் “என்னை சிறுமை செய்கிறீர்கள்” என்றான். “இல்லை இளையவனே. எளிய மிருகத்தைப்போல வேட்ட உணவுக்காக உறுமி முண்டியடித்து பல்லையும் நகத்தையும் கொண்டு போராடி வென்று உண்ணும்போதுதான் நாமெல்லாம் இயல்பாக இருக்கிறோம். நடுவே இந்த நீதிநூல்கள் வந்து நம்மை வார்த்தைகளால் நிறைத்து குழப்பியடிக்கின்றன” என்றான்.

அர்ஜுனன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல வந்து நிறுத்திக்கொண்டான். “நம் மூத்தவர் அஸ்தினபுரிக்கு பட்டத்து இளவரசர் ஆகவேண்டும். நாமெல்லாம் பட்டத்து இளவல்களாக இங்கே ஆளவேண்டும். அதற்காக நாம் போராடுவோம். அவ்வளவுதான் நீதி. அந்தத் தெளிவுடன் இருப்போம்” என்றபின் பீமன் வெளியே சென்றான். அர்ஜுனன் பல்லைக் கடித்து சிலகணங்கள் நின்று பின் மெல்லத் தளர்ந்தான். “இந்தக் கசப்புப் பாவனை வழியாக நீங்களும் உங்கள் ஆசைகளை மறைத்துக்கொள்கிறீர்கள் மூத்தவரே” என்றான். சென்றபடியே “இதைக்கேட்டு நான் புண்படுவேன் என்று நினைத்தாயா?” என்றான் பீமன்.

அர்ஜுனன் பீமனின் பின்னால் நடந்தபடி “சரி, அவர்கள் சொல்வதில் உள்ள நியாயம்தான் என்ன? அதைச்சொல்லுங்கள்” என்றான். “மிக எளிய நேரடியான நியாயம்தான் பார்த்தா. எந்த முறைப்படி நீ நம் தமையனுக்கு முடியுரிமை கோருகிறாயோ அந்த முறைப்படி இந்த நாட்டுக்கு முற்றுரிமை உடையவர் பெரிய தந்தையார் திருதராஷ்டிரர். பதினெட்டாண்டுகளுக்கு முன் குலச்சபை ஒப்பவில்லை என்பதனால் அவரே மனமுவந்து நம் தந்தைக்கு பதினெட்டு ஆண்டுக்கால ஆட்சியுரிமையாக அளித்தது இம்மணிமுடி. அவரது மைந்தன் இளைஞனாக ஆவது வரை மட்டுமே இது நம் தந்தை பாண்டுவுக்குரியதாக இருக்க முடியும்” என்றான் பீமன்.

“தன் இளவல் பாண்டுவுக்கு இம்மணிமுடியை அளித்த ஒரே காரணத்தாலேயே பாண்டுவின் மரணத்துக்குப்பின் நம் பெரியதந்தையார் மீண்டும் மணிமுடிசூடவில்லை. அஸ்தினபுரியின் அரியணையில் அமரவோ செங்கோலைத் தொடவோ செய்யவில்லை. அரசு இன்றுவரை அவரும் பிதாமகர் பீஷ்மரும் விதுரரும் இணைந்து ஆளும் கூட்டுப்பொறுப்பு கொண்டதாகவே இருக்கிறது. அவர் மதிக்கும் அந்த வாக்கையும் முறைமையையும் நாமும் மதித்தாகவேண்டும். பதினெட்டாண்டு காலமாகியதும் பாண்டுவின் மணிமுடியுரிமை முழுமையாகவே இல்லாமலாகிவிட்டது. அதன்பின் அதை எப்படி நாம் உரிமைகொள்ளமுடியும்?”

அர்ஜுனன் “இருங்கள் மூத்தவரே, நான் சொல்கிறேன்” என அவனைத் தடுத்தான். “முதலில் நாம் கொள்ளவேண்டியது ஒன்றை. இந்த மணிமுடியை திருதராஷ்டிரருக்கு மறுத்தவர்கள் இங்குள்ள குலச்சபையினர். பெரியதந்தையாருக்கு விழியில்லை என்பதனால் அவரை ஏற்கமுடியாதென அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காகத்தான் நம் தந்தையார் அரசரானார். இம்மணிமுடி எவராலும் நம் தந்தைக்கு கொடையளிக்கப்பட்டது அல்ல. இது நூல் நெறிப்படி எவர் மணிமுடியை அளிக்க முடியுமோ அவர்களால் அளிக்கப்பட்டது, நம் குடிமக்களால். மன்னன் என்பவன் குலசேகரன். குலம் ஆணையிட்டால் எவனும் மன்னனாகலாம் என்கின்றது பராசரநீதி."

“ஆகவே இது திருதராஷ்டிரரால் பாண்டுவுக்கு பதினெட்டாண்டுகாலம் தற்காலிகப் பொறுப்பாக அளிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றான் அர்ஜுனன். “இம்மணிமுடியின் உரிமை பாண்டுவிடமிருந்து விலகினால் அது சென்று சேர்வது மீண்டும் குலத்திடமே ஒழிய திருதராஷ்டிரரிடம் அல்ல. குலம் மீண்டும் அதை தருமருக்கு அளிக்கலாம். திருதராஷ்டிரரின் மைந்தருக்கும் அளிக்கலாம். இதுவே முறைமை.”

பீமன் புன்னகை செய்தான். “அத்துடன் பதினெட்டாண்டுகாலம் மட்டுமே பாண்டுவுக்கு மணிமுடி உரிமை உள்ளது, அதன்பின் திருதராஷ்டிரரின் மைந்தன் மணிமுடி சூடலாமென்ற வாக்குறுதியை அளித்தவர் யார்? பாண்டு அதை அளித்தாரா? இல்லை. அவ்வாக்குறுதியைச் சொன்னவர் பீஷ்மபிதாமகர். அவர் அப்போது திருதராஷ்டிரரை ஆறுதல்படுத்தும்பொருட்டு சொன்னது அது” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, நமக்கெல்லாம் அவர்தான் பிதாமகர். ஆனால் அவருக்கும் அஸ்தினபுரியின் மணிமுடிக்கும் என்ன உறவு? அவர் எப்படி இம்மணிமுடியை வாக்குறுதியளிக்க முடியும்?”

பீமன் நகைத்து “பார்த்தா, தேவைப்பட்டால் நீயும் யுதிஷ்டிரனே என நான் அறிவேன்” என்றான். “பிதாமகர் பீஷ்மருக்குரியதல்லவா இந்த மணிமுடி? அவரிடமிருந்து நம் மூதாதையர் பெற்றுக்கொண்டதல்லவா அஸ்தினபுரி?” என்றான் . அர்ஜுனன் “ஆம், அதையே நான் சொல்கிறேன். இந்த மணிமுடியை துறப்பதாக தன் தந்தை சந்தனுவுக்கு வாக்களித்தவர் பிதாமகர். அப்படியென்றால் இதில் அவர் எவ்வகையிலும் உரிமை அற்றவர். அவர் வாக்குறுதி அளித்ததே சந்தனு மன்னருக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.”

“தெளிவாகப்பேசினாய். இத்தெளிவை உன் தமையனிடம் சொல். அள்ளி அணைத்து உச்சி முகர்வார்” என்றான் பீமன். “நான் காட்டுக்குச் செல்கிறேன். உள்காட்டில் சில மலைப்பாம்புகளை பார்த்து வைத்திருக்கிறேன்.” அர்ஜுனன் அந்தப் புறக்கணிப்பால் சினமடைந்து ஏதோ சொல்ல முயல்வதற்குள் “நீ சொன்னவை வலுவான வாதங்கள் பார்த்தா. எனக்கு அவற்றில் ஆர்வமில்லை. அந்த வாதங்களை வாதத்தால் எதிர்கொள்வதை விட அவ்வாதங்கள் நிறைந்திருக்கும் தலைகளையும் நெஞ்சுகளையும் கதையால் அடித்து உடைப்பதே எனக்கு எளிது” என்றபடி பீமன் தன் ரதம் வருவதற்காக கைகாட்டினான்.

ரதத்தில் ஏறிக்கொண்டு “எங்கு எப்போது எவரது தலைகளை உடைக்கவேண்டும் என்று மட்டும் எனக்குச் சொல்லுங்கள். வந்துவிடுகிறேன்” என்றான்.  அவன் கைகாட்ட ரதம் சகட ஒலியுடன் கிளம்பிச்சென்றது. அவன் செல்வதை நோக்கி நின்ற அர்ஜுனன் மெல்ல தோள் தளர்ந்து திரும்பினான். யாரிடம் வாதிடுகிறேன்? மண்ணில் உரிமைகளுக்காகப் பேசும் அனைவரும் சகமனிதர்களிடம் சொல்வதைவிட அதிகச் சொற்களை ககனவெளியிடம்தான் சொல்வார்கள் போலும். அங்கிருந்துதான் அவர்கள் தங்களுக்குரியதை அகழ்ந்து எடுத்தாகவேண்டும்.

அர்ஜுனன் மீண்டும் உள்ளே சென்று வில்லை எடுத்தான். கைநிறைய அம்புகளை அள்ளிக்கொண்டாலும் தொடுக்கத் தோன்றவில்லை. வீசிவிட்டு சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டு வெளியே வந்தான். சாரதி ரதத்தைக்கொண்டுவந்து நிறுத்த ஏறிக்கொண்டு “அரண்மனைக்கு” என்றான். குதிரைகளின் குளம்படியோசை கருங்கல் பரப்பிய சாலையில் ஒலிக்கத் தொடங்கியதும் அந்த ஓசை தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்தித் தொகுப்பதை உணர்ந்தான். பீமன் சொல்வது மட்டுமே உண்மை என்று தோன்றியது. இளவரசுப்பட்டத்தைப்பற்றிய விவாதத்தில் ஒவ்வொருவரும் அதன்மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்பதன் அடிப்படையிலேயே முடிவெடுத்தனர். அதற்கான நியாயங்களை உருவாக்கி முன்வைத்து வாதாடினர். ஒருவர் கூட நியாயத்திலிருந்து தொடங்கவில்லை. ஒருவேளை அப்படி எவரேனும் தொடங்கினால்கூட அதற்குப்பின் அவரது சுயநலம் உள்ளது என்றே எண்ணத்தோன்றும் என்று நினைத்துக்கொண்டான்.

தன் அரண்மனைக்குச் சென்றதும் சேவகனை அழைத்து “இளைய அரசியாரை நான் காணவேண்டுமென்று விரும்புவதாகச் சொல்” என்றான். நீராட்டறைக்குள் இளவெந்நீர் நிறைந்த செம்புக்கடகத்தில் அமர்ந்து கொண்டிருக்கையில் குந்தியிடம் எதைப்பேசுவதென்றே அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. அங்கே தருமனின் இளவரசுப்பட்டம் பற்றிய செய்திகள்தான் நிறைந்திருக்கும். அவள் அத்தனைகாலம் ஒவ்வொருநாளும் காத்திருந்த தருணம். அவளுடைய முழுத்திறனும் வெளிப்படவேண்டிய நேரம்.

அவள் அந்தத் தருணத்தை கொண்டாடிக்கொண்டிருப்பாள் என்று அவன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். ஆண்டுக்கணக்கில் படைக்கலப்பயிற்சி எடுத்த வீரன் களத்தில் அறியும் களிப்பு அது. இதுதான் அவள் களம். அவள் முழுவுருவம் கொண்டு எழும் பீடம். அவளைச் சந்திப்பது எப்போதுமே அவனுக்குள் தத்தளிப்பை நிறைக்கும் அனுபவமாகவே இருந்தது. அவளுடைய சதுரங்கக் களத்தில் ஒர் எளிய காயாக மாறிவிட்டோம் என்ற சிறுமையுணர்வு. தன் வீரமும் திறனும் எல்லாம் அந்தச் சதுரங்கத்தில் பொருளற்றவை என்ற உணர்வு அளிக்கும் அச்சம். சிலந்தி வலைபின்னுவதுபோல அவள் மெல்ல உருவாக்கும் உரையாடலை அறுத்துக்கொண்டு வெளியே பாய்ந்துசெல்லவே அவன் விரும்புவான்.

ஆனால் அப்போது தருமனைப்பற்றிய செய்திகளை அறியாமல் இருக்கமுடியாது என்று உணர்ந்தான். அவனை மீறி ஏதேதோ நிகழ்ந்துவிட்டிருக்கின்றன. தன் வில்லம்புகளுடன் எங்கோ புதைந்து வாழ்ந்துகொண்டிருந்துவிட்டான். அதை எண்ண எண்ண ஏதேதோ நிகழ்ந்துவிட்டன. இனி வாளாவிருக்கலாகாது. அவளைப்பார்த்து அனைத்தையும் பேசிவிடவேண்டியதுதான். எண்ண எண்ண அந்த இளவெந்நீரில் இருக்கவேமுடியாதென்று தோன்றியது. அவன் எழுந்து தன் முதுகை கடற்பஞ்சால் தேய்த்துக்கொண்டிருந்த சேவகனை விலக்கி மரவுரியை எடுத்துக்கொண்டான்.

ஆடையணிந்துகொண்டிருக்கையில் சேவகன் வந்து வணங்கி “மூத்தவர்” என்றான். வரச்சொல் என்று சைகை காட்டியபின் அர்ஜுனன் எதற்காக இப்போது வருகிறார் என எண்ணினான். முடியுரிமை பற்றிய பேச்சுக்கள் அவரை நிலைகொள்ளாது ஆக்கிவிட்டிருக்கவேண்டும். மண்ணாசையின் வதை. அவனுக்கு அப்போது ஓர் எரிச்சல்தான் வந்தது. தருமனிடம் காலையில் பீமனிடம் பேசிய எதையும் சொல்லக்கூடாது என்றும் அவரே அந்த நியாயங்களைப்பேசினால் உடனே மறுத்துரைக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.

அந்த மெல்லிய முகச்சுளிப்புடன் அர்ஜுனன் வெளியே வந்து தருமனை அணுகி தலைவணங்கினான். தருமன் கைகாட்டி அவனை அமரச்சொன்னான். சஞ்சலத்துடன் தருமன் இருப்பதை அவனுடைய கைவிரல்களின் அசைவு காட்டியது. அர்ஜுனன் அமர்ந்து சால்வையை சரிசெய்தபின் நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினான். கண்களுக்குக் கீழே துயிலின்மையின் நிழல் விழுந்திருந்தது. இதழ்களுக்கு இருபக்கமும் புதிய சுருக்கம் விழுந்திருந்தது. தருமன் “நான் தடுமாறிக்கொண்டிருக்கிறேன் தம்பி” என்றான்.

அச்சொற்றொடரை காதில்கேட்டதுமே அர்ஜுனன் அகம் நெகிழ்ந்தது. எழுந்து தருமனை தொடவேண்டும் போலிருந்தது. “மூத்தவரே, ஒருகணம்கூட தாங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை. என் வில்லும் உயிரும் தங்களுக்குரியவை. எல்லா நியாயங்களும் நம்முடன் உள்ளன. இக்குடிமக்களும் நம்மிடமே” என்றான்.

தருமன் நிமிர்ந்து “அதை நான் அறிவேன் தம்பி. நீ இருக்கையில் நான் இப்புவிக்கே அரசன்” என்றான். தலையை அசைத்து சஞ்சலத்துடன் “சற்றுமுன் அன்னையைப் பார்த்துவிட்டு வந்தேன். மணிமுடிக்கு நானே உரியவன் என்கிறார்கள்” என்றான். “ஆம், அதிலென்ன ஐயம்?” என்றான் அர்ஜுனன். தருமன் தலையை அசைத்து “இல்லை தம்பி, அதுவல்ல முறை. அதுவல்ல நெறி” என்றான். “என்ன நெறியைக் கண்டீர்கள் மூத்தவரே?” என்றபடி அர்ஜுனன் சினத்துடன் எழுந்துவிட்டான்.

“இளையவனே, அரசு என்பது என்ன? முதலில் அது அரசகுலத்தவரின் அதிகாரம். அடுத்த கட்டத்தில் அது குடிகளின் கூட்டுஅதிகாரம். ஆனால் அதற்கும் அடியில் அது குலமரபின் அதிகாரமேயாகும். மண்ணில் முதலில் உருவாகிவந்த அரசு என்பது குலமூத்தாரால் உருவாக்கப்பட்டது. பின்னர் அது குடிச்சபைகளுக்கு வந்தது. அதன்பின்னரே அரசகுலங்கள் தோன்றின. இன்றும் மச்சர்கள் போன்ற சிறிய அரசுகளில் குடிச்சபையே உள்ளது, அரசன் இல்லை. பழங்குடிகளிடம் குலமுறையே உள்ளது, குடிச்சபைகூட இல்லை" என்றான் தருமன். “ஆகவே அரசகுலமரபுகள் அனைத்தையும் குடிமரபுகள் மறுக்க முடியும். குடிமரபுகளை குலமுறைமைகள் மறுக்கமுடியும்.”

அவன் சொல்லவருவதென்ன என்று அர்ஜுனனுக்கு புரியவில்லை. அவன் பார்த்து அமர்ந்திருந்தான். “ஆகவே அடியாழத்தில் அரசதிகாரம் என்பது மூத்தோர் கொள்ளும் அதிகாரமே. மூத்தோர் வணக்கத்தையும் நீத்தோர் வழிபாட்டையும் ஒரு சமூகம் கைவிடுமென்றால் ஒரு தலைமுறைக்குள்ளேயே அங்கே ஒரு நல்லரசு இல்லாமலாகும். அங்கே படைக்கலங்களின் அதிகாரம் மட்டுமே எஞ்சியிருக்கும்” தருமன் சொன்னான். “ஒருபோதும் ஒருநாட்டில் மூத்தோர் சொல் மதிப்பழியலாகாது. அந்த மொத்தச்சமூகமே அச்சொல்லைக் காப்பதற்காக தன்னை இழக்க சித்தமாக இருந்தாகவேண்டும். அக்குலமே அழிந்தாலும் அதன் மூத்தார் சொல் நின்றாகவேண்டும்.”

புரிந்துகொண்டு அர்ஜுனன் மெல்ல கால்களை நீட்டி தளர்ந்தான். “அரசமுறைப்படி நான் அஸ்தினபுரிக்கு உரிமையானவன். குடிச்சபை முறைப்படியும் அப்படியே. ஆனால் பீஷ்மபிதாமகரின் சொல்லின்படி இம்மணிமுடி துரியனுக்குரியது. நானும் நீயும் இக்குடிகள் முழுதும் அச்சொல்லைக் காக்கவே உயிர்வாழவேண்டும். இதுவே முறை” என்றான் தருமன். அர்ஜுனன் தலையசைத்தான்.

“அதை நம் அன்னை புரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள்” என்றான் தருமன். “நீ எனக்காக இதை அவர்களிடம் சொல். என்னால் அவர்களை ஏறிட்டே நோக்கமுடியவில்லை. அவர்களை அவமதிக்கும் எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒருபோதும் பீஷ்மபிதாமகரின் எண்ணத்தை மீறி நான் இம்மணிமுடியை சூடப்போவதில்லை. அன்னை அவரது கருவறை உரிமையை என்மேல் செலுத்தினால் உடைவாளை கழுத்தில் வைப்பதைத்தவிர எனக்கு வேறுவழியில்லை” என்ற தருமன் எழுந்து “இதில் எந்த மறுவிவாதத்திற்கும் இடமில்லை என அன்னையிடம் சொல். உன் சேவகன் அன்னையிடம் சென்று நீ சந்திக்க விரும்புவதாகச் சொல்வதை என் சேவகன் கண்டுவந்து சொன்னான். உடனே கிளம்பிவந்தேன்.”

அர்ஜுனன் “தங்கள் ஆணை” என்றான். தருமன் திரும்பி நோக்கி பின் பெருமூச்சு விட்டு “ஆம், ஆணை. நீயும் உன் உடன்பிறந்தார் நால்வரும் தலைமேல் சூடிக்கொள்ளவேண்டிய ஆணை இதுவே. நாம் நம் மூதாதையரின் குருதி. மூதாதையர் மண்ணில் நம்மை விட்டுச்செல்வது அவர்களின் சொல் வாழவேண்டும் என்பதற்காகவே” என்றான்.

அர்ஜுனன் தருமனுக்கு முடியாசை இல்லையா என எண்ணிக்கொண்ட அதே கணம் தருமன் “நீ எண்ணுவது புரிகிறது. எனக்கு முடியாசை உள்ளது. முடியை இழப்பதில் துயரமும் கொள்கிறேன். ஆனால் நெறி நம் அனைவரை விடவும் மேலானது” என்றான். பின் வெறுமைகலந்த புன்னகையுடன் “இவர்களை நான் அறிவேன். முடியுரிமை இல்லையேல் நமக்கு இந்நாடு இல்லை. சரி, அதனாலென்ன? மீண்டும் சதசிருங்கம் செல்வோம். மரவுரி அணிந்து வேட்டையாடி உண்டு வாழ்வோம். நம் தந்தை அங்குதானே இருக்கிறார்? அவர் நமக்கு சதசிருங்கத்தையே அளித்துச்சென்றார் என கொள்வோம்” என்றான். ”அன்னையிடம் பேசு” என்றபின் வெளியே சென்றான்.

பகுதி மூன்று : இருகூர்வாள் - 2

குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி சாளரத்துக்கு அப்பால் தெரிந்த வானத்தை சிலகணங்கள் நோக்கிவிட்டு மேலே சென்றான். அந்தத் தயக்கத்தைப்பற்றி எண்ணிக்கொண்டதும் அவ்வெண்ணத்தின் விரைவை கால்கள் அடைந்தன.

குந்தியை அவன் பெரும்பாலும் தவிர்த்துவந்தான். அவளை மாதம்தோறும் நிகழும் கொற்றவைப்பூசையன்று மட்டுமே கண்டு வணங்குவான். அரண்மனைக்குச்சென்றது ஆறுமாதம் முன்பு தருமனுடன். அன்று அவள் தருமனுடன் பேசிக்கொண்டே இருந்தாள், அவன் பக்கம் பார்வை திரும்பவேயில்லை. அவன் பார்வை அவளை தொட்டுத்தொட்டு திரும்பியது. அந்த அலைக்கழிப்பை வெல்வதற்கு ஒருவழியை உடனே கண்டுகொண்டு அவன் தருமனை நோக்கத் தொடங்கினான். ஆனால் அவள் தன்னை அகக்கண்ணால் நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் உணர்வுகளை அவளும் அறிவாள் என்றும் உணர்ந்திருந்தான்.

அவள் கௌரவர்களைப்பற்றியும் சகுனியைப்பற்றியும்தான் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு காந்தார அரசியர் ஒரு பொருட்டாக அல்லாமல் ஆகி நெடுநாட்களாகிவிட்டிருந்தன. அவள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தவன் சகுனி. சகுனியின் அரண்மனை முழுக்க அவளுடைய ஒற்றர்கள் இருந்தனர். நூறு தொலைதூரவிழிகளால் அவள் சகுனியை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளூர அத்தனை முக்கியமான ஒருவரை அதன்பின்பு நம்மால் பெயர்சொல்லி குறிப்பிடமுடியாமலாகிறது.

அந்த விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகை செய்துகொண்டான். குந்தி சகுனியை ஓநாய் என்றுதான் சொன்னாள். முதலில் கசப்புடனோ எரிச்சலுடனோ அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் மெல்லமெல்ல அச்சொல்லில் அவள் எல்லா அர்த்தங்களையும் ஏற்றிவைத்துவிட்டிருந்தாள். ஓநாயின் தோற்றமும் அசைவுகளும் அதன் கூர்மையும் விரைவும் அனைத்தும் சகுனிக்கு மட்டுமே பொருத்தமானவை என்று ஆயின. பின்னர் அவள் அது என்று அச்சொல்லை மேலும் சுருக்கினாள். “அது சற்று மோப்பம் கண்டுவிட்டது. ஒரு குருதித்துளி. ஓடையில் அது ஒழுகிச்சென்றிருக்கும். அமைதியிழந்துவிட்டது என்று தெரிகிறது... நேற்று அதன் பாதத்தடங்களை அரண்மனைக்குள் பார்த்ததாகச் சொன்னார்கள்” என்றாள்.

ஓடை என்றால் ஒற்றர்கள் என அவன் புரிந்துகொண்டான். அரண்மனை என்றால் திருதராஷ்டிரனின் இடம். புன்னகையுடன் மெல்ல உடலை அசைத்து எவருடன் சதுரங்கமாடுகிறார்கள் இவர்கள், ஒருவருடன் ஒருவர் ஆடுகிறார்களா, இல்லை விதியுடனா என்று எண்ணிக்கொண்டான். அவனுடைய மெல்லிய அசைவுக்கு ஏற்ப உடனே குந்தியின் நகைகளில் ஒலி எழுந்தது. அப்போதுதான் அவள் உடல் தன்னை நோக்கிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் அறிந்தான். தன் உடல் அவளை நோக்கிக்கொண்டிருப்பதைப்போல. அவன் மேலும் முன்னகர்ந்து கைகளை அசைத்துவைத்தான். அக்கணமே அவள் வளையல்களின் ஒலி எழுவதைக் கேட்டதும் அவன் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அங்கே அமரமுடியவில்லை. மேலிருந்து கூரை விழுந்துவிடும் என உடலின் உணர்வு அறிந்துவிட்டதுபோல பதற்றமாக இருந்தது.

அவளுடைய சொற்களுக்கு அடியில் அவள் அவனிடம் பேசுவதுபோல ஏதோ ஒன்றை அவன் உணர்ந்துகொண்டே இருந்தான். அந்த உரையாடலுக்கு அவள் சொற்களை அளிக்கவில்லை. அது அவள் உடல் வழியாக கசிகிறது. அணிகளின் ஒலிகளில் தன் சொற்களை கண்டுகொள்கிறது. அவன் எழப்போவதுபோல அசைந்ததுமே அவள் உடலின் அணிகள் அமைதியிழந்து ஒலித்தன. உடல் தளர அவன் மீண்டும் அமர்ந்துகொண்டான். அவளும் அவனும் பேசுவதை உணராமல் அவள் உதடுகள் பேசுவதை கூர்ந்து கேட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் தருமன்.

“அவர்களுடைய வலிமை என்பது கரும்பாறை போன்றது தருமா. அது இங்கே இருக்கும் அவர்களின் படை. நம் கருவூலத்தில் இருக்கும் காந்தார நிதி. அதை நாம் எத்தனைமுறை கண்களை மூடிக்கொண்டாலும் மறைக்கமுடியாது. அஸ்தினபுரியின் அத்தனை எதிரிகளுக்கும் தெரியும், காந்தாரமே நம் உண்மையான வல்லமை என்று. ஆகவே அதை வெளியே விட்டு நாம் கதவுகளை மூடிக்கொள்ளவே முடியாது” என்றாள் குந்தி. தருமன் “ஆனால் இங்குள்ள மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்லவா? ஏனென்றால் மேலே தெரியும் அரசுகள் எல்லாம் மரக்கலங்கள் போல. சுமந்துசெல்வது பாரதவர்ஷத்தின் மக்களாகிய கங்கை. அதுதான் முற்றாக முடிவெடுக்கப்போகிறது.”

குந்தி கையை வீசி அதை மறித்தாள். அவள் இதழ்கள் சுழித்தன. “நீ கற்ற நீதிகளால் ஆனதல்ல அதிகாரப்போர். மக்கள் என எவரும் இல்லை. குலங்கள் இருக்கின்றன. குடும்பங்கள் இருக்கின்றன. உதிரிமனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவரும் நீதியை நம்பி வாழவில்லை. அரசாங்கத்தை நம்பி வாழ்கிறார்கள். நீதி என்பது அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஓர் ஆறுதல் மட்டுமே. மக்கள் நீதியை உள்ளூர நம்புவதுமில்லை. ஆகவேதான் அதைப்பற்றி திரும்பத்திரும்ப பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் குந்தி.

“மக்கள் என்றால் யார்? இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள். அவர்களுக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்து உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியை அளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும். மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளை சூறையாடச்செய்யும் பெரும் விசை எது? மக்களின் ஆசைதான். அப்படி கொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீ கற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.”

“அப்படியென்றால் எந்த நீதியும் வேண்டாமா? வாள் எதையும் செய்யலாமா?” என்று தருமன் சினத்துடன் கேட்டான். “போதும். ஆனால் வாளுக்குமேல் ஒரு வெண்பட்டுத்துணி மூடியிருக்கவேண்டும். அதைத்தான் நீதி என்கிறோம்” என்றாள் குந்தி. அவள் முகத்தை அனிச்சையாக ஏறிட்டு நோக்கிய அர்ஜுனன் அங்கே திகழ்ந்த அழகிய புன்னகையைக் கண்டு மனம் மலர்ந்தான். எச்சரிக்கைகளை இழந்து அவளுடைய விரிந்த செவ்விதழ்களையும் மிடுக்குடன் நிமிர்ந்த முகத்தையும் நோக்கிக் கொண்டிருந்தான்.

ஒருகணம் அவனை வந்து நோக்கிய குந்தியின் முகம் சிவந்தது. விழிகளை விலக்கி உடனே திரும்பி நோக்கினாள். கண்களுக்குள் மலைச்சுனையில் வெயில்போல ஒளி நிறைந்திருந்தது. “என்ன நினைக்கிறாய் பார்த்தா?” என்று கேட்டாள். அக்கேள்வியை எதிர்பாராத அர்ஜுனன் உடல் விதிர்த்து 'இல்லை' என தலையசைத்தான். “அவன் என்ன நினைக்கப்போகிறான்? வில்லெடுத்தால் வெற்றி என்றுதானே கற்றிருக்கிறான்?” என்று தருமன் சொன்னான்.

அர்ஜுனன் “இல்லை மூத்தவரே. சாதாரணமாகப் பார்த்தால் அன்னை சொல்வது சரி. மக்கள் நீதியை நம்பிவாழவில்லை. ஆனால் அவர்கள் நீதிமான்களை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நாம் அறம் மீறி இவ்வரியணையை வென்று மக்களுக்கு தீனிபோட்டு நிறைவடையச் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நீதிமான் எழுந்து நம்மை நோக்கி கைநீட்டினால் மக்களுக்கு இரு தேர்வுகள் வந்துவிடுகின்றன. நாமா அவரா என. அவர்கள் ஒற்றைப்பெருந்திரளாக அந்த நீதிமானை நோக்கிச் சென்றுவிடுவார்கள். நாம் உலர்ந்த மரம் போல ஒடிக்கப்படுவோம்” என்றான்.

“இல்லை...” என சொல்லவந்த குந்தியை நோக்கி கைநீட்டி உரக்க “அன்னையே, உங்கள் விழைவு ஒருபோதும் உலக நெறியாக ஆகாது” என்றான். “என் விழைவா? இந்த எளிய மானுடக்கூட்டமா நம்மை எதிர்க்கப்போகிறது?” என்றாள் குந்தி. “அன்னையே, மக்கள் தங்களை நீதிமான்களென நம்பவே விழைவார்கள். ஆகவே நீதிமானை கைவிட அவர்களால் முடியாது. அத்துடன் அவர்களின் உள்ளம் ஒருகணத்தில் எது வலிமையான தரப்பு என்றும் உணர்ந்துகொள்ளும். அறம்பிழைத்த நாம் கொள்ளும் குற்றவுணர்வையும் அறவோனிடமிருக்கும் நிமிர்வையும் அவர்கள் கண்டுகொள்வார்கள். அக்கணமே அவனை நோக்கிச் செல்வார்கள்... பெருந்திரளாக ஆகும்போது மக்களுக்கு வரும் ஆற்றலுக்கு அளவே இல்லை. பெருந்திரளாக இருக்கிறோமென்ற உணர்வு அளிக்கும் துணிவே அவர்களை மாவீரர்களாக ஆக்கும்...” என்றான் அர்ஜுனன்.

தொடர்ந்து “நாம் மக்களை அஞ்சவேண்டியதில்லை. ஆனால் அவர்களில் இருந்து திடீரென எழுந்துவரும் ஓர் அறவோனை அஞ்சியே ஆகவேண்டும்” என்றான். தருமன் முகம் மலர்ந்து “நன்று சொன்னாய் தம்பி” என்றான். குந்தியின் முகம் ரத்தம் கலங்கிச் சிவந்தது. கண்களில் நீர்படர காதுகள் அனலடித்தவைபோல தெரிந்தன. “இதெல்லாம் இளவயதின் வெட்டிப்பேச்சு” என அவள் தொடங்கியதுமே அர்ஜுனன் “அன்னையே, இதை பெண்கள் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அந்தப்புரம் அரியணையை ஆட்டிவைக்கலாகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்.

அதைச் சொன்னதுமே அவன் அகம் அச்சொற்களை உணர்ந்து நடுங்கியது. மறுகணம் பெரும் களிப்பொன்று அவன் உடலெங்கும் பொங்கி நிறைந்து விரல்நுனிகளை அதிரச் செய்தது. குந்தி செயலற்று சிலகணங்கள் அமர்ந்துவிட்டு “என்ன சொல்கிறாய்?” என கிசுகிசுத்தாள். தருமன் “பார்த்தா, நீ சொன்னது பிழை. தேவயானி முதல் சத்யவதி வரை பேரரசியர் ஆண்ட அரியணை நம்முடையது” என்றான். “ஆம்” என்று சொல்லி எழுந்துகொண்டான் அர்ஜுனன். “முற்றிலும் பிழையாக ஆண்டனர். சின்னஞ்சிறு காரணங்களால் பெரிய முடிவுகளை எடுத்தனர். உடனடியான தீர்வுகளை மட்டுமே கண்டடைந்தனர். அவை ஒவ்வொன்றும் தொலைதூரத் தவறுகளாக ஆயின” என்றான்.

“நீ என்னை அவமதிக்க எண்ணினால் அவ்வாறே ஆகுக” என்றாள் குந்தி. அவள் குரலில் இருந்த நடுக்கத்தைக் கேட்டு அவன் உள்ளம் பரவசம் கொண்டது. “இல்லை அன்னையே. நீங்கள் என் அன்னை. என் அரசி. நான் வழிபடும் தெய்வமும் கூட. ஆகவேதான் உங்களிடம் நான் அறிந்த உண்மையைச் சொன்னேன்” என்று அர்ஜுனன் சொன்னான். குந்தி மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பு வழியாக அவள் அந்தத் தருணத்தை கடந்துசென்றாள். “உன் அறிதல் உன்னுடன் இருந்து வழிகாட்டட்டும்” என்றாள். அச்சொற்களில் இருந்தது எள்ளலா எச்சரிக்கையா என அவன் எண்ணியதுமே அதுவரை கொண்டிருந்த மிடுக்கை இழந்தான்.

மேலும் சற்றுநேரம் பேசிவிட்டு அவர்கள் திரும்புகையில் தருமன் “பார்த்தா, நீ சொன்னது முற்றிலும் உண்மை” என்றான். “ஆண்கள் அதிகாரத்தை நாடுவது விதைகள் நீரை நாடுவதுபோல. பெண்கள் நாடுவது குறைகுடம் நீரை நாடுவதுபோல.” அர்ஜுனன் மெல்லிய நிந்தையுடன், இதோ இன்னொரு சொற்றொடரைப்பிடித்துவிட்டார் என நினைத்துக்கொண்டான்.

“நான் நூல்களைப் பார்த்துவிட்டேன். மாபெரும் அரசியர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெண் என்பதனாலேயே அவர்களை ஒருவகை பாதுகாப்பின்மை சூழ்ந்திருக்கிறது. தாழ்வுணர்ச்சி வாட்டுகிறது. ஆகவே அதிகாரத்தை மிகையாக நாடுகிறார்கள். அதில் கூச்சமில்லாமல் திளைக்கிறார்கள். சத்யவதிதேவி அவையில் அமைச்சர்கள் அவரை மிகையாகப் புகழ்ந்து வாழ்த்துவதை மலர்ந்த முகத்துடன் நோக்கியிருப்பார் என்றார் விதுரர். பேரரசியிடம் பேசும்போது புகழ்மொழிகளை எந்த அளவுக்குச் சொல்கிறோமோ அந்த அளவுக்கு அவரது ஆதரவு இருக்குமென அனைவரும் அறிந்திருந்ததனால் இரவுபகலாக அவரைச்சுற்றி புகழ்மொழிகள் ஒலிக்குமாம்” தருமன் சொன்னான்.

“எந்த மறுகருத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை. பிதாமகர் பீஷ்மரோ நம் பாட்டனார் விசித்திர வீரியரோகூட அவரை எதிர்த்துப்பேசியதில்லை. ஆணைகளிடுவதையே ஆட்சி என நினைத்திருந்தார். இந்த அஸ்தினபுரியின் அத்தனை இக்கட்டுகளையும் மெல்லமெல்ல உருவாக்கினார். அவர் மிகப்பெரிதாக கனவுகள் கண்டார். ஆனால் அவரது காலம் அவரது கண்ணுக்கு முன்னால் மட்டும் உள்ளதாகவே இருந்தது.” தருமன் சொன்னபோது திடீரென்று தான் குந்தியிடம் சொன்னவற்றிலிருந்து விலகிவிடவேண்டுமென அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

குந்தியின் அவை முன் நின்றிருந்த சேடி வணங்கி “தங்களுக்காகக் காத்திருக்கிறார்” என்றாள். மேலாடையை சரிசெய்து தலையை சற்று தூக்கி அர்ஜுனன் உள்ளே சென்றான். அவள் உள்ளே சென்று அவன் வரவை முறைப்படி சொல்கோர்த்து அறிவித்துவிட்டு வந்து “உள்ளே” என்றாள். உள்ளே நுழைந்த அர்ஜுனன் “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம்” என்றான். “வாழ்க” என்று சொன்ன குந்தி அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டான். குந்திக்குப்பின் சாளரத்திரைச்சீலை நெளிந்தாடிக்கொண்டே இருந்தது. நறுமணத்துக்காக உள்ளே வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணதுளசிச்செடிகளின் இலைகளில் நீர் துளித்து நிற்பதை அர்ஜுனன் நோக்கினான்.

“மார்த்திகாவதியில் இருந்து செய்தி வந்துள்ளது” என்றாள் குந்தி. அர்ஜுனன் நிமிர்ந்தான். “அரசர் குந்திபோஜர் இறுதிப்படுக்கையில் இருக்கிறார். என்னைப் பார்க்கவேண்டுமென விழைகிறார்.” அர்ஜுனன் “உடனே பயண முறைமைகளைச் செய்கிறேன்” என்றான். “இல்லை, முழுநிலவுநாள் கடக்காமல் நான் செல்லமுடியாது” என்றாள் குந்தி. அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கினான். “இந்த முழுநிலவுநாளில் அறிவித்தாகவேண்டும், அஸ்தினபுரியின் இளவரசன் யாரென்று. அதை முடிவுசெய்யாமல் நான் இங்கிருந்து கிளம்பமுடியாது” என்றாள்.

“ஆனால் அவர் உங்கள் தந்தை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் சதசிருங்கத்தில் இருந்திருந்தால் வந்துசேர்வதற்கே அத்தனை நாட்களாகியிருக்கும் அல்லவா?” என்று சொன்னாள். ஒருகணம் அவள் கண்களைச் சந்தித்து விழிதிருப்பிய அர்ஜுனன், இது என்ன தர்க்கம் என நினைத்துக்கொண்டான். “இந்தத் தருணத்தில் நான் இங்கு இல்லாமலிருப்பது என் மைந்தனைக் கைவிடுவது. அதை நான் செய்யப்போவதில்லை... முழுநிலவு அறிவிப்பு நிகழ்ந்ததும் மறுநாள் கிளம்பிவிடுவேன்.”

“ஆனால் இன்னும் ஒன்பதுநாட்கள் உள்ளன” என்றான் அர்ஜுனன். “ஆம், ஒன்பதுநாட்கள்...” என்ற குந்தி குரலைத் தாழ்த்தி “மூன்றுநாட்களுக்குமேல் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று செய்திவந்தது. உடனே வரவேண்டுமென்று மீண்டும் அமைச்சர் செய்தி அனுப்பினார். அதன்பின் அரசி தேவவதியே செய்தியனுப்பினார். என்ன ஒரு இக்கட்டு” என்றாள். தலையை அசைத்துக்கொண்டு “ஒரு பெரிய இலக்கை நாம் குறிவைக்கையில் எல்லா பக்கங்களில் இருந்தும் இடர்கள் எழுகின்றன. எதிரிகள் மட்டுமல்ல, வேண்டியவர்களும் எதிர்க்கிறார்கள். அத்துடன் இயற்கையும் இணைந்துகொள்கிறது.”

அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி மீண்டும் முகம் தூக்கினான். நம்பித்தான் சொல்கிறாளா என்று எண்ணியவன் அவை குழந்தைகளின் விழிகள் போல தெளிந்திருப்பதைக் கண்டான். “நம்மால் அது முடிகிறதா என்று இயற்கையை ஆட்டிவைக்கும் பேராற்றல் எண்ணுகிறது. நம் தகுதியை நாம் நிறுவவேண்டுமென எதிர்பார்க்கிறது” என்றாள். “இத்தருணம் அதுவே. பார்ப்போம். நான் முழுநிலவுக்கு மறுநாள் இங்கிருந்து அரசஅன்னையாக சத்ரமும் சாமரமும் கொண்டு மார்த்திகாவதிக்கு கிளம்புவேன். அது யாதவர்குலத்துக்கும் பெருமைதானே?”

“ஆம்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, நாம் யாதவர்கள். தந்தைவழியில்தான் இங்கே குலமுறை பார்க்கப்படுகிறது. தந்தைவழியே நதி. அன்னையர் அதில்வந்துசேரும் ஓடைகள் என்று குலநீதி. ஆனால் எப்போதேனும் குலத்தூய்மை பற்றிய கணிதம் வந்தால் உடனே தாய் யார் என்ற வினாவே எழுகிறது. இந்த அஸ்தினபுரியின் குலம்தான் என்ன? அசுர இளவரசி சர்மிஷ்டையின் குருதி அல்லவா இது? அசுர குருவின் மகள் தேவயானி அமர்ந்த அரியணை அல்லவா? மச்சர்குலத்து சத்யவதியின் மைந்தர்களின் உதிர வரி.”

அவள் செல்வதெங்கே என அர்ஜுனன் அறிந்திருந்தான். “ஆனால், இப்போது ஒப்பீட்டில் நம்மைவிட கௌரவர் மேலானவர்களாகிவிட்டார்கள். அவர்கள் ஷத்ரியரான திருதராஷ்டிரருக்கும் ஷத்ரியப் பெண்ணாகிய காந்தாரிக்கும் பிறந்தவர்களாம். நீங்கள் யாதவப்பெண்ணாகிய என் வயிற்றில் பிறந்தவர்களாம். குலக்கலப்பு நிகழ்ந்து மூன்று தலைமுறைக்காலம் ஆனால் அது மறைந்துவிடும் என்று அதற்கு யமஸ்மிருதி விலக்கு கொடுக்கிறதாம். அதைச் சொல்லும் வைதிகர்கள் ஆயிரக்கணக்கில் நம் நாட்டின் கிராமங்கள் தோறும் சென்றிருக்கிறார்கள். கங்காவர்த்தமெங்கும் அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.”

குந்தியின் குரல் சீற்றத்துடன் ஓங்கியது. “பாரதவர்ஷம் அதை மெல்லமெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது. முன்னர் தருமன் சொன்னானே, பாரதவர்ஷத்தின் மக்கள்திரள் கங்கை என்று. ஆம், கங்கைதான். நூற்றுக்கணக்கான மலைகளில் இருந்து வழிந்தோடி ஒன்றாகிச்சேர்ந்த நதி அது. எக்கணமும் கரையுடைத்து மீண்டும் கிளைகளாகப்பிரியத் துடிப்பது. பல்லாயிரமாண்டு காலமாக பல்லாயிரம் தொல்குடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான பெருந்திரள் இது. இப்பெருந்திரளுக்குள் ஒவ்வொரு குலமும் தன் அடையாளத்துடன் தனித்திருக்கவும் செய்கிறது. பிறரை ஐயத்துடன் நோக்கிக்கொண்டிருக்கிறது.”

“இந்த மக்கள் நீதியை அல்ல, குலத்தைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதையும் நூறாயிரம் முறை விளக்கிச் சொல்லவேண்டும். குலப்பிரிவினையை மட்டும் கோடிகாட்டினாலே போதும். இதோ வெறும் இரண்டு மாதங்களில் நம் நாடெங்கும் என்னை இளைய அரசி என்பதற்குப் பதில் யாதவ அரசி என்று சொல்லத் தொடங்கிவிட்டனர். உங்களை பாண்டவர் என்பதற்குப்பதில் யாதவ இளவரசர் என்று சொல்கிறார்கள். அச்சொல் இனி அவர்களிடம் இருக்கும். அதை நம்மால் கரைத்தழிக்கவே முடியாது” குந்தி சொன்னாள். “நீ அன்று சொன்னாயே, ஆண்களின் அரசநோக்கு என்று. அதைக்கொண்டு அவர்களை வேறுவகையில் சொல்ல வை பார்ப்போம்!”

அவள் அச்சொல்லை மறக்கவில்லை என்பது அர்ஜுனனை புன்னகை நோக்கி கொண்டுசென்றது. அப்புன்னகையை உணர்ந்ததுமே குந்தி எச்சரிக்கை அடைந்தாள். அதை சொல்லியிருக்கலாகாது என அவள் உணர்வதை உணர்ந்ததும் அவன் தலைதூக்கி அவள் கண்களை நோக்கி “அன்னையே, அவ்வாறு அவர்கள் எண்ணுவதை ஓர் அறைகூவலாகவே எண்ணுகிறேன். நாங்கள் உண்மையான ஷத்ரியர் என அவர்களை எண்ணவைக்க என்னால் முடியும்” என்றான்.

அதுவே அப்போதைக்கு சரியான பதில் என உணர்ந்ததும் அவள் முகம் சிவந்தது. கண்களில் சீற்றம் மின்ன “எப்படி? வெற்றியின் வழியாகவா? துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி நீ கொண்டுவந்தபின்னர்தான் இந்தப் பேச்சு மேலும் வலுப்படுத்தப்பட்டது, தெரியுமா?” என்றாள். அவள் சீற்றம் அவனை உடலெங்கும் பரவிய உவகையை நோக்கி கொண்டுசென்றது. “ஆம், அதைப் பரப்புபவர்கள் அளிப்பதும் பெரிய அறைகூவலே. அறைகூவல்கள் வழியாகவே ஷத்ரியன் உருவாகிறான்” என்றான்.

அவள் தலையை சற்று திருப்ப அவள் முடியை மறைத்திருந்த வெண்பட்டாடை சரிந்தது. அவளுடைய வெண்ணிற ஒளிகொண்ட முகத்தையும் கருங்குழலையும் நோக்கி அவன் ஒருகணம் எத்தனை பேரழகி என்றுதான் எண்ணிக்கொண்டான். அந்தச் சொற்களில்லாமல் அவளை நோக்கவே முடிந்ததில்லை. பின்னர் தோன்றியது, அவ்வழகை அவள் அறிந்திருக்கிறாள் என்பதனால்தான் அரியணையை விரும்புகிறாள் என்று. மறுகணம் அவன் கர்ணனை நினைத்துக்கொண்டான். எத்தனை பேரழகன் என எண்ணாமல் அவனையும் நினைத்துக்கொண்டதில்லை. அவனும்தான் அரசை விரும்பலாம். அதற்கான தகுதி உடையவன் அவன்.

அந்த எண்ணத்தின் தொடர்ச்சி போல குந்தி சொன்னாள். “தேரோட்டி மைந்தனை அவன் வீரத்துக்காக ஷத்ரியன் என எண்ணுகிறார்களா என்ன?” அர்ஜுனன் ஒருகணம் நடுங்கி தன் குளிர்ந்து அதிர்ந்த கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். நெஞ்சின் ஓசை அடங்க நெடுநேரமாகியது. அவன் அகத்துக்கு அத்தனை அண்மையில் அவள் நிற்கிறாள். மறுகணம் அவள் அகத்திற்கும் அவனால் செல்லமுடிகிறது என்று கண்டான். அவனை வெல்ல கர்ணனைப்பற்றி பேசவேண்டுமென அறிந்திருக்கிறாள்.

“தேரோட்டிமைந்தனை விட நீ வீரன் என்று இன்னும் நிறுவப்படவில்லை பார்த்தா. அதுவரை கௌரவர்கள் அடங்கமாட்டார்கள்” என்று குந்தி சொன்னாள். அவள் சிவந்த இதழ்கள் மெல்ல வளைந்து விஷம் ததும்பும் புன்னகையாக மாறின. “அவன் உன்னைவிட வீரன் என்று சொல்பவர்களே அவன் குலத்தை எண்ணி அரசனாக ஏற்கவும் மறுக்கிறார்கள். அங்கநாட்டுக்கு அரசனாகிவிட்டான். ஆனால் இன்னும் அஸ்தினபுரியிலேயே அமர்ந்திருக்கிறான். அங்கே ஒரு ஷத்ரியத்தளபதிதான் நாடாள்கிறான்” என்றாள்.

அர்ஜுனன் அவள் விழிகளை சந்திக்காமல் திரும்பிக்கொண்டு “நான் ஒன்றை மட்டும் சொல்லவே வந்தேன் அன்னையே. நம் மூத்தவர் முடிசூடவேண்டும். அதற்காக தங்களுடன் வில்லேந்தி நிற்க நான் சித்தம். ஆனால்...” குந்தி கையசைத்து “நான் அதை அறிவேன். அதை தருமன் தூதனிடம் சொல்லி அனுப்பியிருந்தான். அது முடியாது. அவன் மன்னனாகப் பிறந்தவன். அதற்காகவே நான் அவனைக் கருவுற்றேன். மன்னனாக முடியாதென்றால் அவன் இறப்பதே மேல் என நினைப்பேன்.”

“அவர்...” என்று அவன் சொல்லத்தொடங்குவதற்குள் அவள் மேலும் முந்திக்கொண்டு “ஆம், அவன் வாளை கழுத்தில் பாய்ச்சுவதாகச் சொன்னான். செய்யட்டும். நான் அதன்பின் எதையும் எண்ணமாட்டேன். நான் சஞ்சலங்களற்ற பீமனை மட்டுமே நம்பியிருக்கிறேன். அக்கணமே அவனை அனுப்பி துரியோதனனையும் அவன் கூட்டத்தையும் கொன்றுவிட்டு இவ்வரசை கைப்பற்றுவேன். தார்மீகம் தோற்றுவிட்டால் பைசாசிக வழிமுறைகளை ஷத்ரியர் கடைப்பிடிக்கலாம் என்கிறது லகிமாதேவியின் விவாதசந்திரம்” என்றாள். மெல்லிய குரலில் நகைத்து “அது பெண் அமைத்த ஸ்மிருதி. அவளுக்குத்தெரியும் எது அரசின் அடிப்படை என்று” என்றாள்.

அர்ஜுனன் உடல் முழுக்கத் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான். “நீ என்ன சொல்கிறாய்? உன் வில் உடன் வருமா?” என்றாள் குந்தி. “அன்னையே, நான் என்றும் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்” என்றான். “உன் தமையனிடம் சொல். அவன் அஸ்தினபுரியை ஆளாமல் இம்மண்ணில் வாழமுடியாதென்று. பாண்டவர்கள் பைசாசிக வழியில் செல்லாமல் தடுக்கவேண்டுமென்றால் அவன் உயிர்வாழ்ந்தே ஆகவேண்டும் என்று” என்றபின் குந்தி அவனை நோக்கி “தேரோட்டிமைந்தனை நீ அஞ்சவேண்டியதில்லை. அவன் இந்தப்போருக்குள் நுழைய மாட்டான்” என்றாள்.

“ஏன்?” என்று அர்ஜுனன் விழிதூக்கினான். “அவன் வரமுடியாது” என்ற குந்தி சரிந்த ஆடையை மீண்டும் தலையில் இழுத்துவிட்டாள். “அவனை எப்படி தடுப்பதென நான் அறிவேன். பீமன் மூத்த கௌரவனைக் கொல்வான். நீ பிதாமகரை வென்றால் போதும். அதன்பின்..." என்ற குந்தி உச்சகட்ட வெறுப்புடன் உதட்டைச் சுழித்து “ஓநாயை நீ கொல்லவேண்டும்” என்றாள்.

அர்ஜுனன் அவளுடைய வியர்வை அரும்பிய முகத்தை நோக்கினான். அந்தக்குரோதத்தில் அவள் மீண்டும் எளிய பெண்ணாக, சிறுமியாக ஆகிவிட்டதை உணர்ந்தான். புன்னகை அரும்பிய மனத்துடன் முகத்தை திடமாக வைத்துக்கொண்டு “அப்படியென்றால் நாம் திருதராஷ்டிரரை கொல்லவேண்டியிருக்கும்” என்றான். “ஆம். பைசாசிகப்போர் என்றால் அங்கே பிசாசின் நெறி மட்டுமே உள்ளது” என்றாள். “அதை விதுரர் ஏற்பாரா?” என்றான் அர்ஜுனன்.

குந்தி அவளை நோக்கி அவன் எதையோ விட்டெறிய அதை பிடிக்கத்தவறியவள் போல தடுமாறி “விதுரரா?” என்றாள். உடனே அவள் முகம் நெய்விழுந்த அனலாகச் சிவந்தெழுந்தது. “அவர் என்ன நினைத்தால் என்ன?” என மெல்லிய குரலில் சொன்னாள். “இல்லை, அவர் நம் தந்தையருக்கு நிகரானவர்” என்றான் அர்ஜுனன். “சூதர், வெறும் அமைச்சர். அவருக்கு இதில் என்ன?” என்று உரத்த உடைந்த குரலில் சொன்னாள் குந்தி. “இல்லை அன்னையே, எண்ணிக்கொண்டேன்” என்றான் அர்ஜுனன். “அவர் நம் நட்புத்தரப்பா என உறுதிசெய்யவேண்டுமே என்பதற்காகச் சொன்னேன்.”

“உம்” என்று சொல்லி பெருமூச்சுடன் தளர்ந்தாள் குந்தி. அவள் கண்களைப்பாராமல் “நான் தமையனாரிடம் சொல்கிறேன் அன்னையே. தாங்கள் ஆணையிடுகையில் என் வில் துணையிருக்கும்” என்று எழுந்துகொண்டான். அவள் “ம்” என மீண்டும் சொன்னாள். “விடைகொடுங்கள்” என்றான் அர்ஜுனன். “அவ்வாறே ஆகுக” என்று அவள் கைகாட்டினாள். அர்ஜுனன் அவள் கால்களைத் தொட்டு வணங்க தலைதொட்டு ஆசியளித்தாள்.

திரும்பி நடக்கும்போது அர்ஜுனன் அவள் அணிகளின் ஒலிக்காக முதுகில் செவிகளை வைத்திருந்தான். அவன் கூடத்தை விட்டு விலகி வெளியே செல்லும்வரை அவை ஒலிக்கவேயில்லை. அவன் வெளிவந்து நீண்ட இடைநாழியில் நின்றபோது அதுவரை இறுகியிருந்தவை போல தோள்கள் தொய்ந்தன. மொத்த எடையும் குதிகால்களை அழுத்தியது. கண்கள் கூசுவதுபோலவும் தாகம் எடுப்பதுபோலவும் உணர்ந்தான்.

பகுதி மூன்று : இருகூர்வாள் - 3

பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள் சுற்றி நடந்துகொண்டிருந்தவன் ஏன் இப்படி நடக்கிறோம் என்று உணர்ந்ததும் அமர்ந்துகொண்டான். பின்னர் தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு கண்களை மூடி கண்ணுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒளிப்பொட்டுகளை நோக்கிக்கொண்டிருந்தான். தொடைகளை அடித்தபடி எழுந்து “சுடுகாட்டுக்குப்போகட்டும் அனைத்தும்” என்றான். என்ன சொல் அது என அவனே செவிகூர்ந்தபின் சலிப்புடன் தலையை அசைத்தான்.

சேவகன் வந்து நின்றான். அவன் விழிதூக்கியதும் “தங்களை அழைத்துவரச்சொன்னார் மூத்தவர்” என்றான். “ம்” என்றபின் அவன் பெருமூச்சு விட்டு உடலைத் தளர்த்தினான். பின்பு கடுங்குளிருக்கு இறுகியவை போலிருந்த முகத்தசைகளை தளர்த்துபவன்போல கைகளால் கன்னங்களை வருடிக்கொண்டான். சட்டென்று சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டு “செல்வோம்” என்றான். சேவகன் “தாங்கள்...” என்று ஏதோ சொல்லவந்தபின் சரி என்று தலையை அசைத்தபடி முன்னால் ஓடினான்.

இடைநாழியில் சாளரங்கள் வழியாக காற்று உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தது. அது சால்வையையும் தலைமுடியையும் அசைத்தது. அர்ஜுனன் மெல்ல அகம் எளிதாவதை உணர்ந்தான். வெறும் காற்றே அகச்சுமையை குறைக்கமுடியுமா என எண்ணிக்கொண்டான். ஏதாவது ஒன்றை அகமே எதிர்பார்த்திருந்திருக்கலாம். எண்ணங்களை வேறெங்காவது செலுத்தமுடிந்தால் நன்று. ஆனால் எங்கே? அம்புக்குவியல்கள் அன்றி அவனறிந்தது ஏதுமில்லை. பீமனைப்போல யானைகளிலும் சமையலிலும் காட்டிலும் அவன் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கலாம். அம்புகள் சலிப்பூட்டுகின்றன. அவை அளவுகள் கொண்டவை. உயிரற்றவை. புதியதாகி வியப்பூட்ட அவற்றால் முடிவதில்லை. தங்களைத் தாங்களே அவை கடந்துசெல்வதில்லை.

என்ன எண்ணங்கள் இவை என அவனே வியந்துகொண்டான். ஓர் அழுத்தமேறிய அகத்தருணத்தை சந்திக்கையில் உள்ளே சொற்கள் உருகிவளைந்துவிடுகின்றனவா என்ன? சுடுகாட்டில் சிதையில் வைக்கப்பட்ட படைக்கலங்கள் உருகி வளைந்து போயிருப்பதைக் கண்டிருக்கிறான். அவை அதுவரை சொல்லிக்கொண்டிருந்த ஒன்றை இழந்துவிட்டிருக்கும். இல்லை, அதுவரை சொன்னவற்றை அவையே கேலிசெய்துகொண்டிருக்கும். படைக்கலங்களுக்கு பித்தெடுத்து நடமிடுவதுபோல.

தன்னுள் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணங்களை அவன் அக்கணம் வெறுத்தான். அவனுக்குள் இருந்தபடி அவை தங்களுக்கான தனிப்பாதை ஒன்றில் சென்றன. அவன் திரும்பி நோக்கினால் அனைத்தும் அடங்கி அசைவற்று காத்திருந்தன. அவன் திரும்பிக்கொண்டதும் உயிர்கொண்டெழுந்தன. எண்ணங்களெனும் பேய்வெளி ஒன்று தன்னுள் உறைவதை மனிதன் எப்போது காணத் தொடங்கினானோ அப்போதுதான் பாதாளத்தையும் கண்டிருப்பான். மீண்டும் பொருளற்ற சொற்றொடர். சூதர்கள்தான் பொருளற்ற சொற்களை கவிதை என்பார்கள். ஆனால் தெற்குவாயிலில் அவர்களின் தெருக்களில் அப்படி பேசிக்கொண்டிருக்கமாட்டர்கள்.

தருமன் அறைக்கு வெளியே பீமனின் பாதுகைகளைக் கண்டான். சேவகன் தலைவணங்கி உள்ளே அழைத்துச்சென்றான். உள்ளறைக்குள் பீமன் கால்களை அகலவிரித்து மஞ்சத்தில் அமர்ந்திருக்க தருமன் அவனைக்கண்டதும் எழுந்து வந்தான். “அன்னையைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?” என்றான். “நீங்கள் எதிர்பார்த்ததைத்தான் மூத்தவரே. நீங்கள் உயிர்வாழ்வதென்றால் அஸ்தினபுரியின் மன்னராகவே இருந்தாகவேண்டும் என்கிறார் அன்னை. இல்லையேல் நீங்கள் உயிர்துறப்பதே மேல் என்கிறார்.”

தருமன் திகைத்த விழிகளைத் தூக்கினான். “நீங்கள் உயிர்துறந்தால் எஞ்சிய பாண்டவர்களை பைசாசிக வழிக்கு இட்டுச்செல்கிறீர்கள் என்றார் அன்னை. பெரியதந்தையையும் பிதாமகரையும் கௌரவர்களையும் கொன்று ஆட்சியை கைப்பற்றும்படி சொல்கிறார்” என்று சொன்னபோது தன்னுள் எழுந்த கசப்பை அர்ஜுனன் உணர்ந்தான். தன்னை வதைத்துக்கொள்பவர்களே பிறரையும் வதைக்கிறார்கள் என்று எண்ணியதுமே தருமன் மேல் கனிவு எழுந்தது அவனுள்.

தளர்ந்து தருமன் இருக்கையில் அமர்ந்தான். அர்ஜுனன் அமர்ந்தபடி “அதை அவர் வெறுமனே சொல்லவில்லை என நீங்கள் அறிவீர்கள்” என்றான். தருமன் “ஆம், அவர் வீண் சொல் சொல்பவரல்ல” என்றான். சிலகணங்கள் பீமனை நோக்கியபின் “நான் செய்யவேண்டியது ஒன்றே. நான் உன்னிடம் சொன்னது” என்றான். பதற்றத்துடன் “மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “வேண்டாம். நான் வாழ்வதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இறந்தபின் சிலநாட்களிலேயே மறக்கவும்படுவேன். ஆனால் மூத்தோரை மீறி வாழ்வதன் பெருவதையை நான் தவிர்க்கமுடியும்” என்ற தருமன் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான்.

பீமன் வாயை சப்புக்கொட்டியபடி அசைந்து அமர்ந்தான். அவன் மதுவருந்தியிருப்பது வாசனையால் தெரிந்தது. “மூத்தவரே, இம்முறை நீங்கள் இறப்பீர்கள் என்றுதான் தோன்றுகிறது” என்று எடைமிகுந்த நாக்குடன் சொல்லி கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “அதில் நான் செய்வதற்கேதுமில்லை.” தருமன் “மந்தா, இந்தத் தருணத்தில் நீ என்னை கைவிடலாமா?” என்றான். “நான் எப்போதும் பிறரது அரசியலில் கருவிதானே மூத்தவரே” என்றான் பீமன் நகைத்தபடி.

தருமன் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாதவனாக அமர்ந்திருந்தான். பீமன் “நீங்கள் இப்போது அவசரப்படவேண்டியதில்லை மூத்தவரே. இதெல்லாம் எங்கு சென்று முடிகிறது என்று பார்ப்போம்” என்றான். “பெரும்பாலான உலகநிகழ்வுகள் அவையே முட்டிமோதி ஒரு சமநிலையை கண்டடைந்துவிடும். நாம் பொறுமையாகக் காத்திருந்தாலே போதும்.” தருமன் பெருமூச்சுடன் “அறமென்றால் உடனே உங்கள் இருவரிடமும் உருவாகும் கசப்பு ஏன் என்றே எனக்குப்புரியவில்லை” என்றான்.

பீமன் கனத்த கைகளை மடியில் ஊன்றி முன்னால் சரிந்தான். “ஏனென்று உங்களுக்குத் தெரியவில்லையா மூத்தவரே? உண்மையிலேயே உங்கள் அகம் அதை அறியாதா?” என்றான். தருமன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “சரி, உங்களுக்குத் தெரியவில்லை என்றே கொள்கிறேன். மூத்தவரே, நாம் பேடியின் மைந்தர்கள். நீங்கள் ஓயாமல் அறம்பற்றிப்பேசுவதும் நானும் இவனும் ஆற்றலைப்பற்றிப் பேசுவதும் அதனால்தான்.”

“மந்தா, என்ன சொல்கிறாய்?” என்றான் தருமன் சினத்துடன். பீமன் சிரித்து “அதுதான் உண்மை. நமது தந்தை ஆண்மையற்றவர் என்பதை இந்த நாடே அறியும். நாம் எப்படிப்பிறந்தோம் என்றும் அனைவரும் அறிவர்.” தருமன் “மந்தா...” என்று ஏதோ சொல்லவர பீமன் கையை நீட்டி “நம் தந்தையின் வலிமையில்லாத வெளிறிய உடலை நாம் மூவருமே கண்டிருக்கிறோம். அந்தச் சித்திரம் நமக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும். எனக்குள் ஒரு கணமும் அது ஓய்ந்ததில்லை. என் தோள்களை மேலும் மேலும் வலிமைகொண்டதாக ஆக்குவது அதுதான். வலிமை ஒன்றைத்தவிர வேறெதையும் நான் நாடவில்லை. இவனுடைய கண்களில் கூர்மையாகவும் கைகளில் விரைவாகவும் திகழ்வதும் அதுவே.”

தருமன் பார்வையை திருப்பிக்கொண்டான். “அது உலக இயல்பு மூத்தவரே. எங்கும் வல்லமையற்ற தந்தையரின் மைந்தர்களே வாழ்க்கையை வெல்கிறார்கள். அது இப்புவியை இயக்கும் ஆதிவல்லமைகள் வகுத்த விதியாக இருக்கலாம். அதன்மூலம் அவை எதையோ சமன்செய்துகொண்டிருக்கலாம். எளியோனின் மைந்தர்கள் பிறப்பிலேயே அறைகூவலை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு கணமும் போராடவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதன் வழியாக அவர்களின் ஆற்றல் வளர்கிறது. தடைகளை கடந்து செல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வென்றாக வேண்டும். தங்களை நிறுவிக்கொண்டாகவேண்டும். நம்முள் இருப்பது அந்த விழைவே. அது இருக்கும்வரை நாம் உலகையே அள்ளிக்கொள்ளத் துடிப்போம். எதை அடைந்தாலும் நிறைவுறமாட்டோம்” என்றான் பீமன்.

“நான் அப்படி நினைக்கவில்லை” என்றான் தருமன் மெல்லிய குரலில். பீமன் உரக்க “அந்த விடிவெள்ளிப் பேச்சை நினைவுறுகிறேன் மூத்தவரே. இளமையிலேயே அறிந்துவிட்டீர்கள் உங்களால் ஆற்றலை அடையமுடியாதென்று. ஆகவே அறத்தைப்பற்றிக்கொண்டுவிட்டீர்கள். அன்று நம் தந்தையை ஓர் அறச்செல்வனாக பேசிப்பேசி உருவாக்கினீர்கள். அவரது வழித்தோன்றலாக உங்களை வைத்துக்கொண்டீர்கள். மிகவிரிவான ஒரு அகநாடகம் வழியாக அன்று நீங்கள் நடிக்கவேண்டிய வேடத்தை வகுத்துக்கொண்டீர்கள்.”

“நீ என்னை அவமதிக்க விரும்பினால் அதை நேரடியாகவே செய்யலாம்” என்றான் தருமன். “உங்களை அவமதிப்பது என்னை அவமதிப்பதேதான்” என்றான் பீமன். “நான் உங்களை அறியமுயல்கிறேன். அது என்னை அறிவதற்குச் சமம்” என்றபடி எழுந்து தருமன் அருகே வந்து ஓங்கிய உடலுடன் நின்றான். கனத்த கைகளை நீட்டி “இப்போது இந்தப்பாவனை எதற்கு? அரசைத் துறந்து அறத்தில் நிலைப்பதன் வழியாக நீங்கள் பாண்டுவின் மைந்தன் என்ற சிறுமையை வென்று செல்ல நினைக்கிறீர்களா?” என்றான்.

தருமன் ஏதோ சொல்வதற்குள் பீமன் “அது மூடத்தனம் மூத்தவரே. நீங்கள் அரசு துறந்து காட்டுக்குச் சென்றால் நீங்களும் ஒரு பாண்டுவாகவே அறியப்படுவீர்கள். இறந்தால் அஞ்சி மறைந்தவராகவே நினைவுகூரப்படுவீர்கள்” என்றான். தருமன் உரக்க “வேறென்ன செய்யவேண்டும்? உங்கள் இருவரைப்போல கொலைவெறிகொண்டு எழவேண்டுமா?” என்றான். “ஆம், பேடியான பாண்டுவின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை நாங்கள் எங்கள் ஆற்றலால் வெல்வோம். எங்கள் தமையன் என்பதன் வழியாக நீங்களும் அதை வெல்வீர்கள். அதுவே உண்மை” என்றான் பீமன்.

தருமன் சீறி எழுந்து விரல்சுட்டி “மந்தா” என்று கூவினான். அவன் உதடுகள் துடித்தன. அர்ஜுனன் “மூத்தவரே, இதென்ன அர்த்தமில்லாத பேச்சு?” என்றான். “இந்தப்பூசலுக்காகவா என்னை வரச்சொன்னீர்கள்?” என்று தருமனின் தோள்களைப்பற்றினான். “இவனை எனக்குத்துணையாக வரச்சொன்னேன். என்னை அவமதித்துக்கொண்டே இருக்கிறான். என்னை வேடதாரி என்கிறான். பொய்யன் என்கிறான்” என்று தழுதழுத்த குரலில் தருமன் சொன்னான்.

“நான் அப்படிச் சொல்லவில்லை” என்றான் பீமன். “மூத்தவரே, நான் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. நாங்கள் எங்கள் பிறப்பின் அடையாளத்தைக் கடக்க எங்கள் வழியில் முயல்கிறோம். நீங்கள் உங்கள் வழியில் முயல்கிறீர்கள். இருசாராருமே தத்தளிக்கிறோம். அதையே சொன்னேன்.” தருமன் சலிப்புடன் தலையசைத்தான்.

“நான் தத்தளிக்கவில்லை” என்றான் தருமன். “எந்தையின் அடையாளத்தை ஒருபோதும் நான் துறக்கப்போவதில்லை. எங்கும் எவரிடமும் அவரது மைந்தனென்றே நான் சொல்லிக்கொள்வேன்.” பீமன் “நாம் சொல்லாவிட்டாலும் அப்படித்தானே?” என்றான். “நீ விஷமயமாகிவிட்டாய் மந்தா. உன் ஆன்மா முழுக்க விஷம் நிறைந்துவிட்டது” என்றான் தருமன். “ஆம், அந்த விஷத்தின் ஆற்றலே நான். அதைக்கொண்டுதான் நீங்கள் விரும்பியதையெல்லாம் அடைகிறீர்கள்” என்றான் பீமன்.

“போதும், எதற்காக இப்படி பூசலிடுகிறோமென்றே புரியவில்லை” என்றான் அர்ஜுனன். தருமன் பெருமூச்சுடன் “என்னை எவருமே புரிந்துகொள்வதில்லை. இப்புவியில் என்னைப்போல தனியன் எவருமில்லை” என்றான். “தர்மம் தனித்துத்தானே செல்லவேண்டும்?” என்றான் பீமன். “மூத்தவரே, தாங்கள் சற்று பேசாமலிருக்கமுடியுமா?” என்றான் அர்ஜுனன். “அவ்வளவுதானே, நான் இனி பேசவேபோவதில்லை. இளையவனே, நான் பேசவிழைபவனே அல்ல” என்றபின் பீமன் அமர்ந்துகொண்டான்.

அறைக்குள் அமைதி நிலவியது. ஒருவரை ஒருவர் உடலால் உணர்ந்தபடி விழிதாழ்த்தி அமர்ந்திருந்தனர். பேசாமலிருக்கையில் பிறரது இருப்பு எத்தனை அழுத்தம் கொண்டுவிடுகிறது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அந்த அழுத்தத்தை வெல்லத்தான் பேசிக்கொள்கிறார்களா? மனிதர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுமில்லை. பேச்சு என்பது பிறருடன் இருக்கையில் அந்த இடத்தை இயல்பாக வைத்திருக்கும் வழிமுறை மட்டுமே. அதற்கப்பால் ஒன்றுமில்லை.

தருமன் மெல்ல அசைந்தபோது பீமனும் அர்ஜுனனும் விழிதூக்கி நோக்கினர். அவன் பெருமூச்சுடன் தன் சால்வையை இழுத்துப்போட்டபடி பொதுவாக “அமைச்சரை வரச்சொல்லியிருந்தேன்” என்றான். இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. “அவர் ஏதேனும் வழியைச் சொல்லட்டும். எப்போதும் வெளியே நிற்பவர் என்பதனால் அவரால் உகந்ததைச் சொல்லமுடியும்” என்றான் தருமன். “ஆம், அவர் நம்மவர் என்பதனால் நமக்குகந்ததைச் சொல்வார். ஆகவே அது சரியாகத்தானே இருக்கும்?” என்றான் பீமன். தருமன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.

மீண்டும் அமைதி ஏற்பட்டது. பீமன் தன் கைவிரல்களை சொடுக்கெடுத்தான். அந்த ஒலி சுள்ளிகள் ஒடிவதுபோல உரக்கக் கேட்டது. ஒவ்வொருமுறையும் அந்த அதிர்வை வாங்கியபடி தருமன் முகம் சுளித்தான். சேவகன் வந்து “அமைச்சர் விதுரர்” என்று சொன்னதும் அர்ஜுனன் பெரிய விடுதலையை உணர்ந்தான். தருமன் எழுந்தான். அர்ஜுனனும் எழுந்துகொண்டான். பீமனைநோக்கி “மந்தா, அவர் நம் தந்தைக்கு நிகரானவர். நீ எழுந்து நின்று அவரை வரவேற்கவேண்டும்” என்றான். “அவர் வரும்போது எழுந்தால்போதாதா?” என்றபடி பீமன் எழுந்தான்.

உள்ளே வணங்கிக்கொண்டே வந்த விதுரரின் கண்களை அர்ஜுனன் கவனித்தான். ஒருகணத்தில் மூவரையும் தொட்டு அங்கே நிலவும் மனநிலையை அவர் உணர்ந்துகொண்டார். இளநரை ஓடிய சுருள்தாடியும் பிடரியில் சரிந்த குழல்கற்றைகளும் குறுகிய கரிய உடலும் கரியவைரங்கள் போல ஒளிவிட்ட கண்களும் கொண்டவர். கிருஷ்ணதுவைபாயன மகாவியாசரின் தோற்றம் அது என்று சூதர்கள் பாடுவதுண்டு. ஆனால் சூதர்களின் தெற்குத்தெருவுடன் அவருக்குத் தொடர்பில்லை. மதுராவின் அரசனின் மகளை மணந்தவர். ஒருமுறையேனும் அவர் தெற்குத்தெருவுக்குச் சென்றிருக்கிறாரா?

சீரான சிறிய வெண்பற்கள் மின்னும் இனிய புன்னகையுடன் வந்தார். தருமன் “வணங்குகிறேன் அமைச்சரே” என்றான். அர்ஜுனனும் பீமனும் வணங்கினர். அவர் ஆசியளித்தபின் அமர்ந்துகொண்டார். அவரது பார்வை அர்ஜுனனை வந்து தொட்டு மீண்டது. எப்போதும் போல அதில் ஓர் அச்சம் மின்னி அணைந்தது.

“நான் சொன்னதை அன்னை ஏற்றுக்கொள்ளவில்லை அமைச்சரே” என்றான் தருமன். விதுரர் புன்னகைத்து “நான் அதை அப்போதே சொன்னேன்” என்றார். “ஆம், அவர்...” என்று தருமன் சொல்லத் தொடங்க விதுரர் மறித்து “அவர் என்னசொல்வார் என நான் நன்கறிவேன்” என்றார். "நீங்கள் இறப்பினும் அவர் பொருட்படுத்தப்போவதில்லை என்றார் அல்லவா?” தருமன் தத்தளிப்பு நிறைந்த விழிகளுடன் “ஆம்” என்றான்.

“உண்மையிலேயே அவர் சற்றும் பொருட்படுத்தமாட்டார். அவரது உள்ளம் இலக்குகொண்டுவிட்டது. இனி அதை மாற்றமுடியாது” என்றார் விதுரர். “பெண்கள் அப்படித்தான். சின்னஞ்சிறுமியரில்கூட அதைக் காணலாம். அவர்கள் ஒன்றை விரும்பிவிட்டால் அதை அவர்கள் அடையவேண்டும், இல்லையேல் இறக்கவேண்டும்.” புன்னகையுடன் “அந்த விழைவு நீடிக்கட்டும். அது உங்களுக்கு பெரும் படைக்கலமாகவே ஆகும்” என்றார். தருமன் ஒருகணம் அர்ஜுனனை நோக்கியபின் மீண்டான்.

“நான் என்ன செய்வது அமைச்சரே?” என்றான் தருமன். “இக்கணம் அனைவரும் செய்யக்கூடுவது ஒன்றே, காத்திருப்பது” என்றார் விதுரர். பீமன் தன்னையறியாமல் நகைக்க விதுரர் அவனை திரும்பி நோக்கியபின் புன்னகையுடன் “இளையவர் அவ்வழியையே சொல்லியிருப்பார் போலும்” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “எந்த ஒரு ஆடலிலும் நிகழ்வுகளை நாம் நமக்குகந்த வகையிலேயே புரிந்துகொள்கிறோம். அதையொட்டி உணர்வுக்கொந்தளிப்பை அடைகிறோம். அக்கொந்தளிப்புகள் சற்று தணிவதற்காகக் காத்திருந்தபின் சிந்திப்போம் என்றால் மாற்றுவழிகள் தென்படும். ஆகவே, அரசு சூழ்தலின் முதல் விதியே பொறுத்திருத்தல், காத்திருத்தல்தான்.”

“நான் அதை வேட்டையிலிருந்து கற்றுக்கொண்டேன்” என்றான் பீமன். “இதுவும் வேட்டைதான்” என்றார் விதுரர். “ஆனால் அன்னை...” என தருமன் சொல்லத்தொடங்கியதும் விதுரர் “முடிவு எடுக்கவேண்டியவர் மாமன்னர் திருதராஷ்டிரர். அவர் என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம். அவரது முடிவை ஒட்டி நாம் மேலே சிந்திப்போம்” என்றார். “அதற்குமுன் நாம் பேசிக்கொள்பவை எதற்குமே பொருளில்லை. அவை நம் கற்பனைகள் மட்டுமே.”

“நான் பீஷ்மரின் வார்த்தையை மீறி முடிசூட விழையவில்லை” என்றான் தருமன். “தேவையில்லை. மாமன்னர் நீங்கள் இளவரசாகவேண்டுமென முடிவெடுத்தால் அதை ஏற்றுக்கொள்வதில் பிழையில்லை. ஏனென்றால் அங்கே நீங்கள் பீஷ்மபிதாமகரின் வாக்கை மீறவில்லை. முடியை பாண்டுவுக்கு அளித்தவரே உங்களுக்கு அளிக்கிறார். மாறாக தன் மைந்தன் முடிசூடவேண்டுமென அவர் முடிவெடுக்கலாம். அதை நாமனைவருமே ஏற்றாகவேண்டியதுதான். ஏனென்றால் அவரே அஸ்தினபுரிக்கு அதிபர். நம் குலமூதாதை.”

“அன்னை ஏற்கமாட்டார்” என்றான் அர்ஜுனன். “ஆம். அது இன்னொரு வினா. இதனுடன் தொடர்புடையது அல்ல. அதை தனியாக சந்திப்போம். அன்னை விழைவதென்ன என்று கேட்போம். அவர் சந்திக்கவேண்டியிருக்கும் தடைகளை விளக்குவோம். இருபக்கத்தையும் சுட்டிக்காட்டியபின் ஒரு சமநிலைப்புள்ளியை நோக்கிச் செல்வோம்.” அர்ஜுனன் வியப்புடன் விதுரரை நோக்கினான். இரு தனி பேசுபொருட்களாக அவற்றைப்பிரித்ததுமே அவை மிக எளிமையாக ஆகிவிட்டன. அவன் எண்ணத்தை அறிந்ததுபோல விதுரர் “இக்கட்டுகளை தனித்தனி வினாக்களாகப் பிரித்துக்கொள்வதே அவற்றைப் புரிந்துகொண்டு கையாள்வதற்கான முதல் வழி” என்றார்.

அதுவரை சூழ்காற்றில் இருந்த அனைத்து அழுத்தமும் விலக எதற்காக அத்தனை உணர்வெழுச்சிகள் என்று அர்ஜுனன் எண்ணினான். இளையவர்களாக இருப்பதன் விளைவா அது? அவன் புன்னகையுடன் “இத்தனை நேரம் இந்த இக்கட்டைப்பற்றி பேசும்பொருட்டு இதனுடன் தொடர்பில்லாத உணர்ச்சிகளை அடைந்துகொண்டிருந்தோம் அமைச்சரே” என்றான். “ஆம், அதுதான் இளையோரின் வழி. புரிந்துகொண்டபின் உணர்வுகளை அடையமாட்டார்கள். உணர்வுகள் வழியாகவே புரிந்துகொள்ள முயல்வார்கள்” என்று விதுரர் மெல்ல நகைத்தார்.

“அமைச்சரே, அவர்கள் என்னதான் செய்கிறார்கள்?” என்றான் தருமன். “நேற்று முன்தினம் காந்தார இளவரசர் வந்து திருதராஷ்டிர மாமன்னரைச் சந்தித்தார். அனைத்து முறைமைகளின்படியும் துரியோதனனே இளவரசாக பட்டம்சூட்டப்படவேண்டும் என்றும் அதுவே பீஷ்மரின் வாக்கு என்றும் விளக்கினார். பீஷ்மபிதாமகர் எண்ணுவதென்ன என்று திருதராஷ்டிர மாமன்னர் கேட்டார். முடிவெடுக்கும் உரிமை திருதராஷ்டிரரின் கைகளுக்கு வந்தபோதே மணிமுடியும் வந்துவிட்டது. அதை அவர் எவருக்கு வேண்டுமென்றாலும் அளிக்கலாம் என்றார் பிதாமகர் என்று சகுனி சொன்னார்" என்றார் விதுரர்.

“உங்களிடம் அவர் என்னசெய்வதென்று கேட்கவில்லையா?” என்றான் பீமன். அந்த நேரடிக் கேள்வியால் தருமன் மட்டுமல்லாமல் அர்ஜுனனும் திகைக்க விதுரர் புன்னகை மாறாமல் “கேட்டார். ஏனென்றால் நான் அவரது அமைச்சன். நான் சொன்னேன், அவர் முறைமையை மட்டுமே நோக்கவேண்டும். துரியோதனன் அவர் மைந்தன் என்பதனால் பரிவு காட்டலாகாது. மைந்தனுக்கே மணிமுடியைக் கொடுத்துவிட்டார் என்று எவரேனும் சொல்லிவிடுவார்களோ என்றெண்ணி கடுமையும் காட்டலாகாது என்று” என்றார். “அனைத்து அமைச்சர்களிடமும் அவர் பேசலாம் என்றேன். இன்று இரவில் அவர் பேசவிருக்கிறார். அனேகமாக நாளை முடிவெடுப்பார்.”

நாளை என்ற சொல் தனியாக வந்து விழுந்தது. அதுவரை பேசியவை அனைத்தும் பொருளற்றுப்போய் அச்சொல் மட்டுமே நின்றது. அதைச்சுற்றி நால்வரும் அமைதியாக நின்றனர். “நாளைவரை காத்திருப்போம், வேறென்ன?” என்றான் பீமன். விதுரர் எழுந்துகொண்டு “நான் அமைச்சகம் செல்லவேண்டும். எல்லைப்புற பொறுப்பாளர் தம்ஷ்ட்ரர் எனக்காகக் காத்திருக்கிறார்” என்றார்.

“எல்லையில் ஏதேனும் தாக்குதலா?” என்றான் தருமன். “ஒருநாட்டில் அதிகாரப்பரிமாற்றம் நிகழும்போதெல்லாம் எல்லையில் சிறிய பூசல்கள் வெடிக்கும்” என்றார் விதுரர். “நாம் நமது ஒற்றர்களை அங்கே அனுப்பும்போது நாட்டுக்குள் உளவறிவதில் தளர்வு ஏற்படும். மாற்றார் தங்கள் ஒற்றர்களை இங்கே நிறைக்கமுடியும்.” புன்னகையுடன் “இதெல்லாம் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் ஒரு சடங்குபோல செய்துவருகிறோம்” என்றபின் வெளியே சென்றார்.

பீமன் “இளையவனே, நான் சற்று ஓய்வெடுக்கவிருக்கிறேன். நீ என்னுடன் வருகிறாயா?” என்றான். அர்ஜுனன் தலையசைத்துவிட்டு எழுந்தான். தருமனை வணங்கிவிட்டு வெளியே சென்றார்கள். காலைமுதல் தன்னை நிலைகொள்ளாமல் அலைக்கழியச்செய்த இக்கட்டுகளெல்லாம் பொருளிழந்துவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் நிம்மதிக்கு மாறாக உள்ளம் ஏமாற்றமே அடைந்தது. ஏனென்றால் அந்த இக்கட்டுகள் என்பவை அவற்றுக்கும் அடியில் இருந்த ஒன்றின் விளையாட்டுக்கருவிகள். இக்கட்டுகள் விலகியபோது அது மேலும் திடமாக எழுந்து வந்து நின்றது. அவன் உள்ளம் மேலும் நிலையழியத் தொடங்கியது.

பீமன் “நான் காட்டுக்குச்செல்கிறேன்” என்றான். “ஓய்வெடுப்பதாகச் சொன்னீர்கள்?” என்றான் அர்ஜுனன். “ஓய்வெடுக்கத்தான். காட்டில் நான் ஒரு நல்ல தொட்டில் கட்டிவைத்திருக்கிறேன். அங்கே படுத்துத் துயின்றால்தான் நாளை நான் புதியமனிதனாக எழமுடியும்...” என்றபின் கண்களைச் சிமிட்டியபடி “என்னை குரங்கின் மைந்தன் என்கிறார்கள். கிஷ்கிந்தையின் அனுமனுக்கு இளையவன் நான் என்று ஒரு சூதன் பாடினான். அவனை அழைத்து பத்துகழஞ்சு பொன் கொடுத்தேன். கனிகளை உண்டு மரங்களில் வாழ்வதுபோல் பேரின்பம் ஏதுமில்லை.”

பீமன் திரும்பி அரண்மனையை நோக்கினான். “இளையவனே, இந்தக் கட்டடங்கள்! இவற்றைப்போல நான் வெறுப்பது பிறிதில்லை. சதுரங்கள் செவ்வகங்கள்... பார்க்கப்பார்க்க சலிப்பேறுகிறது. எத்தனை செயற்கையான மடத்தனமான வடிவங்கள். அங்கே காட்டில் இந்த வடிவங்கள் எவற்றையுமே காணமுடியாது. மலைகள் மரங்கள் எல்லாமே அவற்றுக்கான முழுமையில்தான் உள்ளன. இங்குள்ளவர்களின் அகமும் இதேபோல குறைபட்ட வடிவங்களாகவே உள்ளன பார்த்தாயா? இவர்கள் ஆடும் ஓலைகளும் சதுரங்கக் கட்டங்களும் எல்லாம் சதுரங்கள்தான்.” மீண்டும் கண்களைச் சிமிட்டி “அங்கே உன் தமையன் சதுரங்கப்பலகையை விரித்து வைத்து அமர்ந்திருப்பார் இந்நேரம்... இளைப்பாறலுக்காக” என்றான்.

அர்ஜுனன் புன்னகைசெய்தான். “வருகிறாயா? நல்ல காற்றில் படுத்துத் தூங்கு. அங்கே அரைநாழிகை இருந்தால் இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த அற்பச்சதிகள் சிறுமைத்தந்திரங்கள் அனைத்தையும் மறந்துவிடுவாய். நம் மேல் இந்த அரண்மனையும் நகரமும் பொழிந்த அத்தனை சொற்களும் காற்றில் பறந்துபோய் அகம் வெறுமைகொள்ளும். நீயும் ஒரு ஆற்றல்மிக்க குரங்காக ஆகிவிடுவாய்!”

“நான் ஆயுதசாலைக்குச் செல்கிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்து “ஆம், வேறெங்கு நீ செல்லமுடியும்? பார்ப்போம்” என்றபின் விரைந்து இறங்கி ஓடி முற்றத்தை நோக்கிச் சென்றான். அவன் அங்கே குதிரைமேல் ஏறிக்கொள்ளும் ஒலி கேட்டது. அர்ஜுனன் மெல்ல நடந்து சென்று முற்றத்தில் நின்றான். ரதம் வந்து நின்றது. ஒருகணம் சிந்தனைசெய்தபின் “புரவி” என்றான். வெண்புரவியைக் கொண்டு நிறுத்திய சூதன் சம்மட்டியை நீட்டினான். அர்ஜுனன் ஏறிக்கொண்டு மெல்லத் தட்டியதுமே புரவி பெருநடையில் முகவீதி நோக்கிச் சென்றது.

அவன் ஆயுதசாலைக்குத்தான் செல்ல நினைத்தான். ஆனால் புரவியைச் செலுத்த மறந்து அமர்ந்திருந்தான். அது வழக்கமாகச் செல்லும் பாதையில் சிறுநடையில் தலையை அசைத்தபடி சென்றது. நகர்த்தெருவில் மாலை சிவந்து இருண்டுகொண்டிருந்தது. இருபக்கமும் மக்கள் தோளோடு தோள்முட்டி சென்றுகொண்டிருந்தனர். சந்தைகளில் இருந்து திரும்புபவர்கள், கோயில்களுக்குச் செல்பவர்கள். நான்கு யானைகள் வரிசையாக ஈரமான கரிய உடலுடன் கைகளில் சங்கிலியை எடுத்துக்கொண்டு அசைந்தாடிச்சென்றன. ஒரு பல்லக்கு சிவந்த திரைச்சீலைகள் நெளிய மிதந்துசென்றது. அதற்குள் இருந்த வணிகனின் கொடி முன்னால் பறந்தது. கதிர் அடையாளம். கூலவணிகன்.

மாலையில் ஒவ்வொருவரும் துடிப்புடன் இருப்பதுபோலத் தோன்றுவதைப்பற்றி எண்ணிக்கொண்டான். உவகையளிக்கும் எதையோ எதிர்நோக்கிச் செல்பவர்கள் போலிருந்தனர். ஒருவரோடொருவர் கூவிப்பேசினர். சகடங்கள் கூட உரக்க ஒலித்தன. அத்தனை சுவர்களிலிருந்தும் நகரோசை எதிரொலி செய்தது. கண்ணில்பட்ட அத்தனை வண்ணங்களும் அடர்ந்து கொண்டே சென்றன. மாடமுகடுகளில் பொன்னொளி வழிந்தது. கடந்துசென்ற ரதம் ஒன்று எழுப்பிய புழுதி பொன்னிறப்புகையாக தயங்கியது. புரவியின் தோல் மாந்தளிர் போல் ஒளிவிட்டது.

கூடணையும் பறவைகள் வானில் கூவியபடி வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. முச்சந்தியின் பெரிய வாகைமரம் துயின்றுவிட்டிருந்தது. அதில் அணைந்திருந்த காகங்கள் கலைந்து எழுந்து பூசலிட்டன. கரிய புள்ளிகளாக வடக்கிலிருந்து வௌவால்கூட்டம் ஏறி வானை நிரப்பியது. இருண்டதும் அவை ஓசையின்றி நகர்மேல் பரவி அத்தனை மரங்களையும் சூழ்ந்துகொள்ளும்.

அவனை சிலரே அடையாளம் கண்டனர். அவர்களின் வணக்கங்களை அவன் சற்றே தலைதாழ்த்தி ஏற்றுக்கொண்டான். கிழக்குக்கோட்டை முகப்பு நோக்கிச் செல்லுமிடத்தில் அவன் தயங்க அவன் உள்ளத்தை அறிந்து புரவியும் தயங்கியது. அவன் கோட்டையை நோக்கிக்கொண்டு நின்றான். அதன்மேல் பந்தங்கள் ஒவ்வொன்றாக எரியத்தொடங்கின. செம்மைபடர்ந்த வானில் பந்தங்கள் கலந்துவிட்டன என்று தோன்றியது. அரண்மனைமுகப்பில் காஞ்சனத்தின் ஒலி எழுந்தது. தொடர்ந்து கிழக்குக்கோட்டை முகப்பில் பெருமுரசு ஒலித்தது. காவல்கோபுரங்கள் தோறும் முரசுகளும் கொம்புகளும் ஒலியெழுப்பின.

பெருமூச்சுடன் அவன் மீண்டான். ஆயுதசாலைக்குச் செல்ல நினைத்தபோதே அகம் திமிறிப் பின்வாங்கியது. வேறெங்கே செல்வது என எண்ணி துழாவியபோது துரோணரின் குருகுலம் நினைவிலெழுந்து ஒருகணம் அகம் மலர்ந்தான். மறுகணமே கசப்புடன் விலக்கிக்கொண்டான். குதிரையை அவனை அறியாமலேயே குதிமுள்ளால் குத்தினான். அது கனைத்தபடி கால்தூக்கி எழுந்து வால்சுழற்றியபடி குளம்புகள் ஒலிக்க பாய்ந்து சென்றது. உண்மையில் அதன் விரைவு அவன் அக இறுக்கத்தை எளிதாக்கியது. அந்தத் தாளத்தில் அகம் பொருந்திக்கொண்டது.

என்னுள் என்னதான் இருக்கிறது என எண்ணிக்கொண்டான். எதை அஞ்சுகிறேன்? அல்லது எதை வெறுக்கிறேன்? அகத்தைத் திரும்பி நோக்கினால் ஏதுமில்லை. எண்ணிக்கொள்ளக்கூட ஏதுமில்லை. ஆனால் அவன் பார்வை அகன்றதுமே அங்கு ஒன்று வந்தமர்ந்துகொண்டது. எடைமிக்கது, கசப்பானது. அதை ஒருநாளும் திரும்பி நோக்க முடியாது என்று பட்டது. அங்கிருந்து என்னை ஆட்டிவைக்கும் பாதாளநாகம். அதன் வளைவுகளின் கரிய நெளிவு. அதன் மின்னும் விழிகள்.

அவனறிந்திராத இடமொன்றுக்கு வந்து விட்டிருந்தான். அந்தி நன்றாக இருட்டிவிட்டிருந்தது சற்று அப்பால் பெருஞ்சாலையில் மக்கள் தொடர்ச்சியாக சென்றுகொண்டிருப்பதன் ஒலியும் பந்தங்களின் ஒளியில் எழுந்த அவர்களின் நிழல்கள் ஆடும் சுவர்களும் தெரிந்தன. ஆனால் அவன் நின்றிருந்த சிறிய துணைச்சாலை கைவிடப்பட்டதுபோல அரையிருளில் கிடந்தது. சாலையில் எங்கும் விளக்குத்தூண்கள் இல்லை. உயரமற்ற கூரைகளுடன் கூடிய சிறிய புற்கூரைவீடுகளுக்கு முன்னால் சுவரில் பிறைகளில் ஏற்றிவைக்கப்பட்ட அகல்விளக்குகளின் மெல்லிய ஒளிமட்டும் கசிந்து ஊறி நீண்டு கிடந்தது.

அவன் மெல்ல குதிரையை நடத்தி அந்த வீடுகளை நோக்கிக்கொண்டு சென்றான். அது தெற்குக் கோட்டைவாயிலுக்குச் செல்லும் பாதை. வலப்பக்கம் சிற்பியர் வீதிகளும் சூதர்வீதிகளும் வரும். அப்பால் தென்கிழக்கு மூலையில் இந்திரவிழாக்களம். அந்தச் சிறிய தெரு சூதர்வீதிகளுக்கும் நிமித்திகர் வீதிகளுக்கும் நடுவே ஒளித்துவைக்கப்பட்டதுபோல இருந்தது. அங்குள்ள சிலவீடுகளிலேயே அகல்விளக்குகள் எரிந்தன. எரியாத வீடுகளுக்கு முன்னால் குதிரைகள் நின்றிருந்தன. அதைக் கண்டபின்னர்தான் அகல்விளக்குகளுக்கு அப்பால் பாதி திறந்த கதவுகளினூடாகத் தெரிந்த பெண்முகங்களை அவன் கண்டான்.

அவன் பார்வை தொட்டதும் கதவைத்திறந்து இடையாடை மட்டும் அணிந்த ஓர் இளம்பெண் திண்ணைக்கு வந்தாள். அவன் கை கடிவாளத்தை இழுக்க குதிரை மூச்சு சீறியபடி தலையை வளைத்தது. அவள் அவனைநோக்கியபடி வந்து அகல்விளக்கு எரிந்த பிறையருகே இடை வளைத்து நின்றாள். கரிய கூர்முனைகளுடன் கனத்த மாந்தளிர் நிற மார்பகங்கள் ஒசிந்தன. இறுக்கமான சிறிய இடையின் வளைவும் வயிற்றின் குழைவும் செவ்வொளியில் மின்னின. வெண்ணிறப்பற்களும் வெண்விழிகளும் அரை இருளில் ஒளிவிட அவள் அவனை நோக்கி புன்னகை செய்தாள்.

அவன் புரவியில் இருந்து இறங்கியதும் அவள் ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “உள்ளே வருக!” என்றாள். அர்ஜுனன் “நான்...” என்று ஏதோ சொல்லத்தொடங்க “உள்ளே அன்னையன்றி எவருமில்லை. தங்களுக்காக அனைத்தும் சித்தமாக உள்ளன” என்று சொல்லிக்கொண்டே தன் மென்மையான இடது மார்பால் அவன் தோளை உரசினாள். அவன் அவள் இடையை தன் கைகளால் சுழற்றிப்பிடித்துக்கொண்டான். அவள் மெல்லிய பறவை ஒலியுடன் நகைத்து “இது தெரு... வாருங்கள்... உள்ளே மஞ்சமே இருக்கிறது” என்று அவனிடமிருந்து திமிறி விடுவித்துக்கொண்டாள். கதவை விரியத்திறந்து “வாருங்கள்” என்றபின் அகல் விளக்கை ஊதியணைத்தாள். அவன் கைகளைப்பற்றி உள்ளே கொண்டுசென்றாள்.

பகுதி மூன்று : இருகூர்வாள் - 5

அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது மந்திரசபை முழுமையாக கூடிவிட்டிருந்தது. அவனை நோக்கி வந்த அவைக்கள அமைச்சர் சபரர் வணங்கி மெல்லிய குரலில் “பிந்திவிட்டீர்கள் இளவரசே” என்றார். அது ஒரு கண்டனம் என அர்ஜுனன் உணர்ந்தான். “பிதாமகர் பலமுறை கேட்டார்” என்றார் சபரர் மீண்டும். அர்ஜுனன் “சற்று உடல்நலமில்லை” என்றுசொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

மந்திரசபையின் சிறியகூடத்தில் பீடங்களில் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் திருதராஷ்டிரர் அமர்ந்திருந்தார். அவரது வலப்பக்கம் சகுனி. மறுபக்கம் விதுரர். அருகே சௌனகர் நின்றிருந்தார். அவர்களுக்குப்பின்னால் இருந்த வரிசையில் திருதராஷ்டிரரின் பின்பக்கம் துரியோதனனும் கர்ணனும் அமர்ந்திருக்க பிற கௌரவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

பீஷ்மருக்குப்பின்னால் தருமன் அமர்ந்திருக்க பீமன் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். நகுலனும் சகதேவனும் இளைய கௌரவர்களுடன் சேர்ந்து நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டு புன்னகை செய்தான். அவனைக் கண்டு சகதேவன் புன்னகை செய்து குண்டாசியை தொட்டு ஏதோ சொன்னான். குண்டாசி எஞ்சிய சிரிப்பு ஒளிரும் கண்களுடன் நிமிர்ந்துநோக்கிவிட்டு பதறி விழிகளை திருப்பிக்கொண்டான். அவர்கள் அதுவரை தன்னைப்பற்றித்தான் ஏதோ கேலியாக பேசிக்கொண்டிருந்தனர் என்று அர்ஜுனன் உணர்ந்தான்.

வெண்பட்டுத்திரைச்சீலை மறைத்த பகுதியில் குந்தியும் காந்தார அரசியரும் இருப்பதை அர்ஜுனன் அறிந்துகொண்டான். திரையிடப்பட்டதனாலேயே அவர்களின் இருப்பு மிக அழுத்தம் மிக்கதாக ஆகிவிட்டிருந்தது. அவர்களின் மூச்சு அந்த அறையை முழுமையாக நிறைத்திருப்பதாகவும் ஒவ்வொருவரையும் அவர்கள் நோக்கிக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது.

சாளரங்களின் திரைச்சீலைகள் காற்றில் மெல்ல அசைந்துகொண்டிருந்தன. வெளியே நின்ற காவல் வீரர்கள் மெல்ல குறடுகள் ஒலிக்க நடந்துகொண்டிருக்கும் ஓசை கேட்டது. இடைநாழிக்கும் உள்ளரங்கத்துக்கும் அப்பால் பெருங்குடிச்சபையில் இருந்து எழுந்த மக்களின் பேச்சொலியின் முழக்கம் அருவியோ கடலோ போல வந்து காற்றின் அலைகளுக்கேற்ப எழுந்தமைந்தது.

“குலமுறைகள் என்பவை எப்போதுமே...” என்று பீஷ்மர் சொல்லிக்கொண்டிருந்த சொற்றொடரின் நடுவேதான் அர்ஜுனன் உள்ளே புகுந்திருந்தான். அனைவரும் திரும்பி அவனை நோக்க பீஷ்மர் “...விதிவிலக்குகளின் வழியாக புரிந்துகொள்ளப்படவேண்டியவை” என்று தொடர்ந்தார். “ஏனென்றால் குலங்கள் என்பவை குடிகளின் தொகுதிகள். குடிகளோ குடும்பங்களின் தொகுதிகள். ஒவ்வொரு குடியும் குடும்பமும் அதற்கே உரிய வழிமுறைகளைக் கொண்டுள்ளது. விதிவிலக்குகளை உருவாக்கி அவற்றை விலக்கி விலக்கி எஞ்சுபவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட விதிகளால் ஆனதே குலநீதி என்பது.”

“ஆம் பிதாமகரே. நாம் விதிவிலக்குகளைத்தான் முதலில் நோக்கவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆணை பிறப்பிக்கப்படுகையிலும் விதிவிலக்குகளைக் கோரியபடி பலர் கிளம்பி வருகின்றனர். நம் எல்லைப்பழங்குடிகளில் ஒன்றில் குடித்தலைவன் மறைந்தால் அவனுடைய வயதடைந்த இறுதி மைந்தனே அரசனாகவேண்டும் என்று நெறி உள்ளது” என்றார் சௌனகர். “எப்போதும் அவர்களின் அரசியலை தனியாகவே அணுகவேண்டியிருக்கிறது.”

“அது ஏன் என்பதை அவர்களை நோக்கினால் உணரலாம்” என்று பீஷ்மர் தாடியை நீவியபடி சிப்பிகள் போல நிறம் மங்கியிருந்த வெண்பற்கள் தெரிய நகைத்தார். “அவர்களுக்கு பதினைந்துவயதிலேயே முதல் மைந்தன் பிறந்துவிடுகிறான். எண்பது வயதுவரை மைந்தர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். தந்தை மறையும்போது மூத்தமைந்தனும் முதியவனாகவே இருப்பான். அவனை மன்னனாக்கினால் சிலவருடங்களிலேயே அடுத்த மன்னனை தேடவேண்டியிருக்கும். நாலைந்து வருடத்திற்கு ஒரு மன்னன் வீதம் வந்துகொண்டே இருப்பார்கள். மன்னன் பதவியேற்பதே ஒரு அன்றாடச்சடங்காக ஆகிவிடும்.” சபையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. “இளையோனை தேர்ந்தெடுத்தால் ஒரு தலைமுறைக்கு ஒரு மன்னனே இருப்பான்.”

“அது நல்ல வழக்கமென படுகிறதே” என்றார் கிருபர் “இங்கே சில குலங்களில் வருடம்தோறும் கிழவர்கள் அரசராகிறார்கள்.” பீஷ்மர் “ஆசிரியரே, அப்படி ஒரு முறை உருவாவதற்கு அதற்கான காரணம் இருக்கும். இந்த எல்லைப்பழங்குடியினர் வெறும் வேடர்கள். மலைகளில் பலநூறு காதம் பயணம்செய்து கொண்டே இருப்பவர்கள். ஆகவே உடலூக்கம் கொண்ட அரசன் அவர்களுக்குத்தேவை. பல்வேறு குடிகளும் குடும்பங்களும் கலந்து உருவான பழங்குடிக்குலங்களில் அனைவரையும் அணைத்துச்செல்ல வேண்டியிருக்கும். அதற்கு அனுபவமும் முதிர்ச்சியும் உடைய மூத்த தந்தைவடிவமே அரசனாக தேவைப்படும்” என்றார்.

அவர்கள் பொதுவானவற்றைப் பேசி தங்களை எளிதாக்கிக்கொள்வதாக அர்ஜுனன் நினைத்தான். ஆனால் அந்தப்பேச்சுமே அவர்கள் அறியாமல் அரசுரிமை சார்ந்ததாகவே ஆகிக்கொண்டிருந்தது. எங்கு தொட்டாலும் அங்குதான் வந்து சேரும் என்று தோன்றியது. “இளையோரால் ஆளப்பட்டு முதியோரால் வழிநடத்தப்படும் அரசே வலிமையானது” என்றார் கிருபர். “ஆசிரியரே, ஓர் அரசு யானையா இல்லை பூனையா என்பதைப்பொறுத்தது அது” என்றார் விதுரர்.

தருமன் அர்ஜுனனிடம் “எங்கு சென்றாய்? உன்னை பலமுறை பிதாமகர் கேட்டார்” என்றான். “நான் சற்று உடல்நலமில்லாமல்...” என ஆரம்பித்த அர்ஜுனனை நோக்கி பீமன் புன்னகைசெய்தான். அர்ஜுனன் கர்ணனை நோக்கினான். கர்ணன் நீண்ட குழலை கட்டிச்சுருட்டி அதில் ஒரு நீலமலரைச் சூடியிருந்தான். அவனுடைய விழிகள் இமைசரிந்து பாதி மூடியிருக்க அவன் உயரம் காரணமாக கீழிருந்து நோக்குகையில் நீளமான முல்லைமலர்கள் போலத் தெரிந்தன.

பீஷ்மர் அர்ஜுனனை நோக்கி திரும்பவேயில்லை. ஆனால் அவன் அமர்ந்ததும் அவனுக்காகவே காத்திருந்தது போல “நாம் இப்போது முதன்மையான முடிவுகளை எடுத்தாகவேண்டிய இடத்தில் இருக்கிறோம்” என்றார். “பேரமைச்சரே, அறைவாயில்கள் மூடப்படட்டும். முடிவு எடுக்கப்பட்டபின்னர் நாம் ஒன்றாக வெளியே பெருங்குடி சபைக்குச் சென்று முடிவை அறிவிப்போம். எந்த முடிவாக இருந்தாலும் அஸ்தினபுரியின் அரசகுலத்தின் ஒரேகுரலிலான முடிவாக அது இருந்தாகவேண்டும். அத்தனை மாற்றுக்கருத்துக்களும் இங்கேயே பேசி முடிக்கப்பட்டுவிடவேண்டும்” என்றார். துரோணர் “ஆம்” என்றார்.

விதுரர் “இறுதி முடிவெடுக்கவேண்டியவர் மாமன்னர் திருதராஷ்டிரர். நாம் இங்கு நம் விருப்புகளையும் வாதங்களையும் ஆலோசனைகளையும்தான் சொல்லவந்துள்ளோம்” என்றார். “ஆம், சௌனகரே, இங்கு நாம் பேசப்போகும் பொருளை அறிவித்து சபையை துவக்கிவையும்” என்றார் பீஷ்மர்.

திருதராஷ்டிரர் மெல்ல அசைந்து அமர்ந்து தன் கனத்த கரங்களைக் கோர்த்து மார்பின் மேல் வைத்து தலையை கோணலாக திருப்பிக்கொண்டார். அவரது காது அவையை நோக்கி இருந்தது. மெல்வதுபோல கனத்த தாடை இறுகி அசைந்தது. இருகைகளிலும் விரல்கள் பின்னி அசைந்தன. விதுரர் குனிந்து ஏதோ கேட்க அவர் வேண்டாம் என்று தலையசைத்தார். வெண்பட்டுத்திரைக்கு அப்பால் மெல்லிய பேச்சொலி கேட்டது. காந்தார அரசியரின் அணிகளின் ஒலியும் பேச்சொலி போலவே ஒலித்தது.

சகுனி சுண்ணத்தால் செய்யப்பட்ட சிலை போல அசைவோ உணர்ச்சியோ இல்லாதவராக அமர்ந்திருந்தார். அர்ஜுனன் அவரது முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். செந்நாய் பிடரிபோலச் சுருண்ட தாடியில் நரை கலந்திருந்தது. தோளில் விழுந்த குழலிலும் ஓரிரு கற்றைகளில் நரை தெரிந்தது. தொடர்பயிற்சியினால் இறுகிப்போன தோள்கள் அவரது உடலமைப்புக்கு ஏற்ப சற்றே முன்னோக்கி வளைந்திருந்தன. வெண்ணிறமான தோளில் நீலநரம்பு ஒன்று இறங்கி முழங்கைகளை அடைந்து புறங்கையில் விரிவது தெரிந்தது. மலைமேலிருந்து நோக்கினால் தெரியும் நதிபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

ஆனால் நினைவறிந்த நாள்முதலே அவரது முகம் மாறாமலிருப்பதுபோலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தமுகத்தின் உணர்ச்சிகூட சித்திரம் போல அப்படியே நிலைத்திருந்தது. சினம் எழுப்பும் எதையோ எண்ணிக்கொண்டு அதை முழுமையாக மறைத்து அமர்ந்திருப்பதுபோல. எதையோ சொல்லவருபவர் போல. அச்சொல்லை அவன் அறிந்திருப்பதாகக்கூட எண்ணிக்கொண்டான் “அவர் முகத்தைப் பார்த்தாயா? வெண்பட்டால் மூடப்பட்ட வாள் போல” என்றான் தருமன். அர்ஜுனன் புன்னகைத்தான். உடல்கள் நெருக்கமாக இருந்தால் உள்ளங்களும் ஒன்றாகிவிடும் என்று நினைத்ததும் பீமன் திரும்பி புன்னகை செய்தான்.

சௌனகர் “புண்ணியபூமியான பாரதவர்ஷத்தின் பதாகைச்சின்னமும் தெய்வங்களுக்கு உகந்ததுமான சந்திரகுலத்தின் புகழ் நீடூழி வாழ்க! மாமன்னர் ஹஸ்தியால் அமைக்கப்பட்ட அஸ்தினபுரி வாழ்க! அவைகொண்டு அமர்ந்து நம்மை வாழ்த்தும் பிதாமகரும் அசிரியர்களும் வாழ்க! முடிகொண்ட மாமன்னர் திருதராஷ்டிரர் வாழ்க!” என்று வாழ்த்தி வணங்கியதும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். அவைக்கூட முகட்டில் அந்த ஓங்காரம் எழுந்து அடங்கியது.

“அவையோரே, நாம் இங்கே நமது அரசின் முடிக்குரிய இளவரசரை தெரிவுசெய்வதற்காக கூடியிருக்கிறோம்” என்றார் சௌனகர். “இளவரசுப்பட்டம் கட்டுவதைப்பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் இங்கே இருப்பதனால்தான் நாம் கூடியிருக்கிறோம். அனைவருக்கும் உகந்த முறையில் அவற்றை விவாதித்து முடிவெடுப்போம். குருவருள் துணையிருப்பதாகுக!” என்று அவர் வணங்கியதும் திருதராஷ்டிரர் கைகூப்பினார்.

சௌனகர் கைகாட்டியதும் சேவகன் ஒருவன் நீதிநூல்களின் சுவடிக்கட்டுகள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய மூங்கில்தாலத்தை கொண்டுவந்து அவைநடுவே பீடத்தில் வைத்தான். அதன்மேல் உருவிய ஒரு வாளும் மலர்ந்த ஒரு தாமரையும் வெண்சங்கும் வைக்கப்பட்டது.

“அவையோரே, இங்கு நம்மை ஆளும் நீதிநூல்கள் அவைகொண்டிருக்கின்றன. துணிக்கவும் வாழ்த்தவும் அறைகூவவும் திறன்கொண்ட முன்னோரின் சொற்கள் அவை. அவை வாழ்க!” என்றார் சௌனகர். “அவையோரே, இச்சபையினர் அறியாதது அல்ல என்றாலும் இங்கே இக்குலமரபின் நீதியையும் நெறிமுறையையும் வகுத்துரைக்க ஆணையிடப்பட்டுள்ளமையால் உரைக்கிறேன்” என்றார்.

“தொன்றுதொட்டு வரும் முறைப்படி இச்சந்திரகுலத்தின் மரபுரிமை என்பது யமஸ்மிருதியின் அடிப்படையிலும் பராசரநீதியின் அடிப்படையிலும் முடிவாகிறது. இவ்விரு நூல்களும் சொல்லாத ஒன்றுக்காக மட்டுமே பிற நூல்கள் கருத்தில்கொள்ளப்படும். பாரதவர்ஷத்தின் ஐந்து பெரும் குருமரபுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், வேதங்களை சுருதியாக ஏற்றுக்கொண்டதும், முன்னரே இச்சபையால் ஏற்கப்பட்டுவிட்டதுமான நூலே இங்கே வழிகாட்டு நூலாக அமைய முடியும். புதுநூல் நெறிநூலாகக் கொள்ளப்படவேண்டுமென்றால் அது குலக்குழுக்கள் அனைவரும் கூடிய அவையில் விவாதித்து ஏற்கப்பட்டிருக்கவேண்டும். இச்சபையில் எட்டு ஸ்மிருதிகளும் இருபத்திநான்கு நெறிநூநூல்களும் ஏற்கனவே ஏற்கப்பட்டவை.”

“அவையினரே, அந்நெறிநூல்கள் விடை சொல்லாத வினா என்றால் சந்திரகுலத்து மூதாதையரின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு நீதி பெறப்படும். மூதாதையர் வாழ்விலும் விடை இல்லை என்றால் ரிஷிகளின் வாழ்க்கையில் விடை தேடப்படும். அங்கும் விடை இல்லை என்றால் அவைமூத்தார் பெரும்பாலானவர்களின் கருத்தே முடிவாகக் கொள்ளப்படும் என்றறிக” என்றார் சௌனகர்.

“அவையினரே, யமஸ்மிருதியின்படியும் பராசரநீதியின்படியும் அரசுரிமையின் முதல் விதி இதுதான். அரியணையில் அமர்ந்து செங்கோலேந்தி வெண்குடைகவித்து முடிசூடியிருக்கும் அரசரின் பட்டத்தரசிக்குப் பிறந்த முதல் மைந்தனே அடுத்து முடிசூடும் உரிமை கொண்டவன். அவனுடைய முடியுரிமையானது ஆதிதெய்வீகம் எனப்படுகிறது. தெய்வங்களால் அளிக்கப்பட்டதும் பிறப்பிலேயே அடையப்பெற்றதுமான அவ்வுரிமையை அவன் அடைவதற்கு வேறெந்த நெறியும் முறையும் தடையாக இருக்கமுடியாது. அவரது மரணம் மட்டுமே அப்பதவியில் இருந்து அவரை விலக்கமுடியும்” சௌனகர் சொன்னார்.

“அவரது முடியுரிமை இறைவிதி என்பதனால் அவர் முடிசூடமுடியாமலிருப்பதும் இறைவிதியினால் மட்டுமே அமையமுடியும். அவ்வாறு முடிசூடமுடியாமல் ஆவதற்கு மூன்று காரணங்களை மட்டுமே பராசரநீதி சொல்கிறது. சித்தம்பிறழ்தல், அரசாட்சி செய்யமுடியாதபடி புலன்கள் பழுதடைதல், தெய்வங்கள் தீச்சொல்லிடும் பெரும்பாவத்தைச் செய்து நால்வகைக் குடிகளாலும் கைவிடப்படுதல். நம் மாமன்னர் திருதராஷ்டிரர் இதில் இரண்டாவது விதியின் அடிப்படையில்தான் தன் முடியுரிமையை துறக்க நேரிட்டது. அவரது விழியின்மை ஒரு குறைபாடாகச் சுட்டப்பட்டதை அவைப்பதிவுகள் சொல்கின்றன.”

அர்ஜுனன் திருதராஷ்டிரரை நோக்கினான். கனத்த தாடையை அசைத்துக்கொண்டு விரல்களால் எதையோ துழாவிக்கொண்டு அவர் அமர்ந்திருந்தார். பார்வை இல்லாததனாலேயே முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படவில்லை. அல்லது பிழையாக வெளிப்பட்டன. கண்கள் அமைந்த குழிகள் ததும்பிக்கொண்டே இருப்பது அவர் கொந்தளிப்பதாக ஒரு மனச்சித்திரத்தை அளித்தது.

சௌனகர் தொடர்ந்தார் “அவைக்களத்தோரே, அத்தகைய பிறப்புரிமை இல்லாத நிலையில் வெவ்வேறு காரணங்களுக்காக ஓர் அரசர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால் அது ஆதிமானுஷிகம் எனப்படுகிறது. மனிதர்களால் அளிக்கப்பட்ட அந்த முடியுரிமை மனிதர்களாலேயே நீக்கப்படவும் கூடியது. நான்கு பேர் ஆதிமானுஷிக முறைப்படி முடியுரிமையை அளிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். முடிக்குரியவர் தன் முடியுரிமையை உவந்து இன்னொருவருக்கு அளிக்கலாம். அரசகுடி மூத்தார் தங்கள் ஒத்த கருத்தின்படி அரசகுலத்தார் ஒருவருக்கு முடியுரிமையை அளிக்கலாம். குலச்சபைகள் தங்கள் பெரும்பான்மைக் கருத்தின்படி தங்களில் ஒருவருக்கு முடியுரிமையை அளிக்கலாம். ரிஷிகள் எவரையும் ஷத்ரியராக நீர்முழுக்காட்டி அரசை அளிக்கலாம். மாமன்னர் பாண்டு முதல் மூன்று முறைப்படியும் முடியுரிமையைப் பெற்றார் என்பதை அவைக்குறிப்புகள் காட்டுகின்றன.”

“இம்முடியுரிமையை நீக்கவும் நான்கு தரப்பினர் அதிகாரம் கொண்டவர்கள் என்கிறது பராசரநீதி. முடியுரிமை எவரால் அளிக்கப்படுகிறதோ அவரால் அது அளிக்கப்பட்ட முறையிலேயே நீக்கப்படலாம். முடியுரிமை அளிக்கப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் இல்லாதுபோனால் குலச்சபையினர் கூடி முடியுரிமையை விலக்கிக் கொள்ளலாம். முடியுரிமை கொண்டவர் முடியுரிமை அளிக்கப்படுகையில் அவருக்குச் சொல்லப்பட்ட நெறிகளையும் வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்கவில்லை என்றால் குலச்சபை கூடி முடியுரிமையை விலக்கிக் கொள்லலாம். ரிஷிகள் தாங்கள் அளித்த ஷத்ரியநிலையை முறையாக விலக்கிக்கொண்டால் அரசன் பதவியிழந்தவனாவான்.”

சௌனகர் தொடர்ந்தார் “மூன்றாவது முடியுரிமை பைசாசிகம் எனப்படுகிறது. வெறும் வலிமையை மட்டுமே கொண்டு அரசை வெல்வது அது. அது மூன்று வகை. படைபலத்தைக் கொண்டு நாட்டை வென்று அரசனைக் கொன்று மணிமுடியைக் கைப்பற்றி அணிவது ஷாத்ரம் எனப்படுகிறது.. அரசனை அல்லது அரசன் தன் சார்பில் அனுப்பும் வீரனை பொதுச்சபையில் ஒற்றையாள் போருக்கு அழைத்து அப்போரில் வென்று அதன் பரிசாக மணிமுடியை அடைவது வீரியம் எனப்படுகிறது. அரசனை சதியால் கொன்று மணிமுடியைக் கவர்வது மிருகீயம் எனப்படுகிறது.”

“முதல்முறை ஷத்ரியர்களுக்கு உகந்தது, எனவே உத்தமம். இரண்டாவது முறை மத்திமம். அந்தமுறைக்கு குலச்சபை அனுமதி இருந்தாகவேண்டும். மூன்றாவது அதமம். அதைச்செய்தவனைக் கொல்ல வாளேந்திய அத்தனை ஷத்ரியருக்கும் உரிமையும் கடமையும் உண்டு. அவன் தன்னை காத்துக்கொள்ளும் வரை வேறுவழியில்லாமல் அரசனாக இருப்பான்” என்றார் சௌனகர்.

“அவையோரே, அஸ்தினபுரியின் முடியுரிமையை ஆதிமானுஷிக முறைப்படி பெற்ற மாமன்னர் பாண்டு விண்ணேகியபோது இளவரசர்கள் வயதடையாமலிருந்தமையால் மணிமுடியும் செங்கோலும் காத்திருக்கலாமென மூத்தோர் முடிவெடுத்தனர். அதன்பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளாக மாமன்னர் திருதராஷ்டிரர் மணிமுடியும் செங்கோலும் இல்லாது அரசரின் பொறுப்பில் இருந்து அஸ்தினபுரியை ஆண்டுவருகிறார். அவரது இளவலும் பேரமைச்சருமான விதுரரின் ஞானமும் மூத்தவரான பீஷ்மபிதாமகரின் அருளும் அவருக்கு மணிமுடியாகவும் செங்கோலாகவும் அமைந்துள்ளன” என்றார் சௌனகர்.

“இப்போது மூத்த இளவரசர்கள் வயதடைந்துவிட்டனர். படைக்கலப்பயிற்சியும் குருகுலவாழ்வும் முடித்து குண்டலம் அணிந்து விட்டனர். இனி அவர்களில் ஒருவருக்கு இளவரசுப்பட்டம் அறிவிக்கப்படவேண்டும். வரும் முழுநிலவுநாளில் பட்டத்து இளவரசர் குடியரங்கில் தோன்றி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பது முறை. மன்னருக்கான ஏழுவகைப் பயிற்சிகளைப் பெற்றபின்னர் அவர் முடிசூடி அரியணை அமர்ந்து செங்கோலேந்தி அஸ்தினபுரியை ஆளலாம்” என்று சௌனகர் சொன்னதும் அதுவரை இயல்பாக அமர்ந்திருந்த அவையில் ஓர் அசைவு கடந்துசென்றது. ஓர் எண்ணத்தை கண்ணால் பார்க்கமுடியும் என்று அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். “அதன்பொருட்டே நாம் இப்போது இங்கே கூடியிருக்கிறோம்.”

சிலகணங்கள் அமைதி நிலவியது. சௌனகர் சொன்னார் “அவையோரே, முடிசூடி இந்த அரியணையில் அமர்ந்திருந்தவர் மாமன்னர் பாண்டு. அவரது முதல்மைந்தரும் மார்த்திகாவதியின் யாதவர் குலத்தின் குலமுறையில் வந்தவருமான யுதிஷ்டிரர் ஐப்பசி மாதத்தின் ஐந்தாவது வளர்பிறை நாளில், கேட்டை நட்சத்திரம் சந்திரலக்னத்தில் அமைந்திருந்த விருச்சிகராசியில், சிம்மலக்னத்தில் பிறந்தவர். நிமித்திகர் அவரது பிறவிநூலைக் கணித்து முடிகொண்டு நாடாளும் நல்லூழ் கொண்டவர் என்றும் அவரது குடைக்கீழ் மானுடரும் உயிர்க்குலங்களும் தாவரங்களும் செழிக்கும் என்றும் பாதாளமூர்த்திகளும் தேவர்களும் மகிழ்வர் தெய்வங்கள் அருள்வர் என்றும் குறியுரைத்துள்ளனர். தருமபுத்திரர் என்று அவரை அவர்கள் வாழ்த்தினர். இவ்வரியணையில் பிறப்புரிமையாக அமரவேண்டியவர் தருமரே.”

“அவையோரே, ஆனால் அந்தப் பிறப்புரிமையை இந்த அவையில் காந்தார இளவரசரும் அரசரின் மைத்துனர் முறைகொண்டவருமான சகுனித்தேவர் மறுத்திருக்கிறார். திருதராஷ்டிர மாமன்னரின் முதல்மைந்தரும், காந்தார அரசரின் கொடிவழியில் தாய்முறைமை கொண்டவரும் ஆங்கிரீச வருடம் ஐப்பசி மாதம் தேய்பிறை பத்தாவது நாளில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவருமாகிய துரியோதனரே முடியுரிமைக்குரியவர் என்று அவர் கூறுகிறார். அதற்குரிய காரணங்களை அவர் முன்வைப்பார்” என்றபின் தலைவணங்கி அமர்ந்துகொண்டார் சௌனகர்.

அனைவரும் சகுனியை நோக்க அந்தப்பார்வைகளை உணர்ந்தவராக அவர் குனிந்து தன் கைகளை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் மெல்ல பெருமூச்சுவிட்டபடி எழுந்தார். தாடியை வருடிக்கொண்டு எவரையும் நோக்காமல் தரையில் பதிந்த விழிகளுடன் சிலகணங்கள் நின்றபின் மெல்லிய குரலில் பேசத்தொடங்கினார். “அவையோரே, மூத்தோரே, அரசே, வணங்குகிறேன். ஆதிமானுஷிக முறைப்படி பாண்டு அஸ்தினபுரியின் அரசைப்பெற்றார் என்று நாம் அறிந்துள்ளோம். ஆகவே அவரது முடிப்பொறுப்பு இறையுரிமை கொண்டது அல்ல. எனவே அவரது மைந்தரின் முடிப்பொறுப்பும் இறையுரிமை கொண்டது அல்ல. அது மானுடரால் அளிக்கப்படுவதும், மானுடரால் நீக்கப்படுவதும் ஆகும்.”

சகுனியின் கைகள் தாடியை வருடிக்கொண்டே இருந்தன. அந்த அசைவு மாறுபட்டிருந்தது. கழுத்திலிருந்து தாடியின் மென்மயிர்ச்சுருளை மேல் நோக்கி நீவினார். அர்ஜுனன் பீஷ்மரை ஓரக்கண்ணால் ஒருகணம் நோக்கினான். இடுங்கிய விழிகளுடன் அவர் கைகளை மார்பில் கட்டியவராக நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவன் விழிகள் திரும்பி கர்ணனை நோக்கின. அவனும் மார்பில் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்த நோக்குடன் சிலையென நின்றிருந்தான். அங்குபேசப்படுபவை எப்படி அமைந்தாலும் பொருட்டில்லை என்ற உடல்மொழி அவர்கள் இருவரிலும் இருந்தது.

“பாண்டுவுக்கு அளிக்கப்பட்ட முடியுரிமையானது ஒரு முன்நெறி கொண்டது. அவரது மூத்தவரான திருதராஷ்டிரர் விழியிழந்தவர் என்பதனால் ஆதிதெய்வீக முறைப்படி அவர் பதவி ஏற்கமுடியாமலானார். அவரது முடி அவரால் இளையோனாகிய பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. அப்போது பதினெட்டாண்டுகாலத்திற்கு பாண்டு ஆட்சி செய்யவேண்டும் என்றும் அவ்வாட்சிக்காலம் முடிந்ததும் மணிமுடி திருதராஷ்டிரரின் கொடிவழிக்கே மீண்டுவரவேண்டும் என்றும் வாக்கு சொல்லப்பட்டது. திருதராஷ்டிரரின் மைந்தர் வயதடைவதற்காகவே அந்த பதினெட்டாண்டுகாலம். அந்த வாக்கின்படி பதினெட்டாண்டுகாலத்தில் மணிமுடி மீண்டும் திருதராஷ்டிரருக்கே வந்துவிட்டது. அது திருதராஷ்டிரரின் மைந்தராகிய துரியோதனனுக்கே உரியது.”

சகுனி தொடர்ந்தார் “அவையோரே, இருமுனையிலும் பாண்டுவின் முடியுரிமை அகன்றுவிட்டது. அவருக்கு எக்காரணத்தால் மணிமுடி அளிக்கப்பட்டதோ அக்காரணம் இன்றில்லை. விழியிழந்தவரான திருதராஷ்டிர மாமன்னருக்கு இன்று இரு ஒளிமிக்க விழிகளாக மைந்தர் இருக்கிறார். அவருக்கு மணிமுடியை அளித்தவர்கள் அன்றே சொன்ன வாக்கின்படி இன்று அது திரும்பப்பெறப்பட்டுவிட்டது. ஆகவே இன்று யுதிஷ்டிரர் மணிமுடிக்கு எவ்வகையிலும் உரிமைகொண்டவர் அல்ல. அஸ்தினபுரியின் முடி கௌரவமூத்தாரான திருதராஷ்டிரரிடம் வந்துவிட்டது. ஆகவே முடிக்குரியவர் இயற்கையாகவே இளவரசர் துரியோதனர்தான்.” சகுனி வணங்கி அமர்ந்துகொண்டார்.

சிலநொடிகள் அவை அமைதியாக இருந்தது. ஒருசில கங்கணங்கள் அசைந்தன. கிருபர் செருமிக்கொண்டார். காற்றில் திரைச்சீலைகள் எழுந்து அமைய முற்பகல்வெயில் பட்ட தழைகளின் வாசனை எழுந்தது. விதுரர் “பிதாமகர் பீஷ்மரின் எண்ணத்தை அறியவிரும்புகிறோம்” என்றார். பீஷ்மர் பெருமூச்சுடன் கலைந்து “அமைச்சரே, பாண்டுவுக்கு மணிமுடியை அளிக்கையில் நான் சகுனிக்கு ஒரு வாக்கு அளித்தேன். இம்மணிமுடி பதினெட்டாண்டுகாலத்துக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது, அவரது மருகன் வயதடைந்ததும் அவனே மன்னனாவான் என்றேன். அந்த வாக்கை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்” என்றார்.

சௌனகர் ஒருகணம் விதுரரை நோக்கிவிட்டு “ஆனால் நம்முடைய குடிக்கே மூத்த இளவரசர் யுதிஷ்டிரர். அவரையே குடிகளும் விழைகிறார்கள். இங்கு நாம் அவற்றை கருத்தில்கொள்ளவேண்டும். நாம் நூல்நெறியையும் குலச்சபையையும் மீறலாகுமா?” என்றார்.

சகுனி அவரை திரும்பி நோக்காமல் மெல்லிய குரலில் “சௌனகரே, குடிக்கு மூத்த இளவரசருக்கு பட்டம்கட்டும் வழக்கம் எங்குமில்லை. முடியுடைய மன்னனின் மூத்த மைந்தன் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளது” என்றார். “அத்துடன் முடிமன்னரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நேரடி உரிமை குலச்சபைக்கு இல்லை. முடிக்குரியவரை நாம் தேர்ந்தெடுத்தபின் அவர்களிடம் அறிவிப்போம். அவர்களுக்கு ஏதேனும் மறுப்பு இருக்குமென்றால் அவர்கள் அதை நம்மிடம் தெரிவிக்கலாம். அதற்கான காரணங்கள் முறையானவையாக இருக்குமென்றால் நாம் அதை பரிசீலிக்கலாம். என்னென்ன காரணங்களின்படி குலச்சபை ஓர் அரசனை மறுக்கலாம் என்பதற்கு நூல்நெறிகள் உள்ளன. அந்தக் காரணங்களில் ஒன்றை அவர்கள் முறையாக அவையில் வைத்தாகவேண்டும்” என்றார்.

பீஷ்மர் “சகுனி சொல்வதே நூல்முறையாகும்” என்றபின் “இதற்கப்பால் நான் இச்சபையில் எதையும் விரிவாகப்பேச விழையவில்லை. என் வாக்கை இச்சபையில் முன்வைத்தாகவேண்டும், அது சகுனிக்கு நான் பட்ட கடன். என் வாழ்நாளின் இறுதிவரை அவ்வாக்குக்கு நான் கட்டுப்பட்டவன். முடிசூடினாலும் இல்லையென்றாலும் நான் திருதராஷ்டிரனையே மன்னனாக ஏற்பேன். அவன் மைந்தனையே வழித்தோன்றலாகக் கொள்வேன்” என்றார்.

மீண்டும் இறுகிய அமைதி அவையில் நிறைந்திருந்தது. அர்ஜுனன் விதுரரையே நோக்கினான். அவரது விழிகள் பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் தொட்டுச் சென்றன. “தங்கள் எண்ணத்தைச் சொல்லலாம் துரோணரே” என்றார் சௌனகர் . “என் கருத்து என்பது எப்போதும் பிதாமகரின் கருத்தே. இவ்வாழ்வில் அவர் எண்ணுவதற்கு மாறாக எதையும் எண்ண நான் சித்தமாக இல்லை” என்றார் துரோணர். கிருபர் “நானும் அவ்வண்ணமே” என்றார்.

விதுரர் துரோணரை நோக்கியபடி எழுந்து கைகூப்பியபடி “பிதாமகர் என்னைப் பொறுத்தருளவேண்டும். இக்குடியின் மூத்தோராக நீங்கள் இருக்கிறீர்கள். அஸ்தினபுரியின் அரியணைக்கு முதற்காவலனாக உயிருள்ளவரை இருப்பேன் என்பது தாங்கள் தங்கள் தந்தை சந்தனுவுக்கு அளித்த வாக்கு. அஸ்தினபுரியின் மணிமுடியைச்சூடிய எவரும் சந்தனுவின் பெயரைச்சொல்லி அக்கடமையை தங்களிடம் கோர உரிமை கொண்டவரே” என்றார்.

“ஆம், என் வாள் அஸ்தினபுரியின் அரசனுக்கே. அவன் யாராக இருந்தாலும். ஆனால் என் நெஞ்சு திருதராஷ்டிரனையே அரசனாகக் கொள்ளும். துரியோதனனையே இளவரசாகக் கொள்ளும். அதை நான் மாற்றிக்கொள்ளமுடியாது. என் சொல்லாக வந்தது நான் வணங்கும் தெய்வமென்றே அறிகிறேன்” என்றார் பீஷ்மர்.

விதுரர் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் சகுனி சினத்துடன் எழுந்து சற்று உரத்த குரலில் “அமைச்சரே, நீங்கள் பிதாமகரின் உள்ளம் எப்படி செயல்படவேண்டுமென வகுக்க முயல்கிறீரா என்ன?” என்றார். “அஸ்தினபுரியின் குலமூத்தவர் பிதாகமரே. மண்மீதிருக்கும் மூதாதை வடிவம் அவர். அவரது சொல் இங்கே வாழ்ந்தாகவேண்டும். இளையோர் அவர் சொல்லை மீறினர் என்ற பழி நிகழலாகாது. அதுமட்டுமே என் விண்ணப்பம்” என்றார். விதுரர் கைகூப்பி “ஆம், இக்குலம் உள்ளவரை பிதாமகரின் சொல்லே நின்றாளவேண்டும். அதுவே முறையாகும்” என்றார்.

அவையெங்கும் எழுந்தோடிய அசைவை அர்ஜுனன் கண்டான். அவைக்கூட்டம் முடிந்துவிட்டது என்ற உணர்வு அவ்வசைவில் தெரிந்தது. கிருபர் குனிந்து அவர் கொண்டுவந்திருந்த சிறிய மான் தோல் பையை எடுத்துக்கொண்டார். தருமன் குனிந்து அர்ஜுனனிடம் “விதுரர் சொன்னது எவ்வளவு சிறப்பு பார்த்தாயா? அனைத்தும் இயல்பாக முடிந்துவிட்டன” என்றான். அர்ஜுனன் நிமிர்ந்து தருமன் விழிகளை நோக்கினான். அவை உண்மையான மகிழ்வுடன் மலர்ந்திருப்பதைக் கண்டு சஞ்சலத்துடன் விழிகளை திருப்பிக்கொண்டான். அப்படியென்றால் முடியையும் நாட்டையும் விழைபவன் நானா? என் உள்ளம் ஏன் ஏமாற்றம் கொள்கிறது?

“பிதாமகரை வணங்கி வாழ்த்துகொள்கிறேன் பார்த்தா. நான் அவர் சொல்லைமீற ஒருகணமும் எண்ணவில்லை என்பதை அவர் அறியவேண்டும்” என்றான் தருமன். மிகமெல்ல உதடுகள் மட்டுமே அசைய சபையை நோக்கி நிமிர்ந்து நின்று அவன் பேசுவது துல்லியமாக தனக்குக் கேட்பதை அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். விதுரர் சௌனகரின் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க திருதராஷ்டிரர் தனக்கு பானம் கொண்டுவரச்சொல்லி கைகாட்டினார். சௌனகர் சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டதைக் கண்டு அவர் எழுந்து அவையின் இறுதிமுடிவை கோரப்போகிறார் என்று நினைத்ததும் அவன் நெஞ்சு ஒலிக்கத் தொடங்கியது.

பகுதி மூன்று : இருகூர்வாள் - 6

அர்ஜுனன் ஈரமான கைகளை முன்னாலிருந்த இருக்கையின் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டில் துடைத்துக்கொண்டபடி சௌனகர் மேல் விழி ஊன்றி காத்து நின்றான். அவன் நினைத்ததைவிட அவர் எழுவதற்கு தாமதமாகியது. சால்வையைச் சுற்றியபின் மீண்டும் விதுரரிடம் எதையோ கேட்டார். அவர் அதனாலொன்றுமில்லை என்பதுபோல தலையசைத்து பதில் சொன்னார்.

ஆனால் அக்கணம் விதுரரின் விழிகள் வெண்திரையை நோக்கிச் சென்று மீண்டதை அர்ஜுனன் கண்டான். மீண்டும் சௌனகர் ஏதோ கேட்டபின் எழப்போகும்போது திரைக்கு அப்பாலிருந்து “அவையை வணங்குகிறேன்” என்று குந்தியின் குரல் கேட்டது. “பிதாமகரின் சொல் வாழவேண்டும் என்றே எளியவள் விரும்புகிறேன். அச்சொல்லை இறைநெறியாகக் கொள்வதும் அதன்பொருட்டு உயிர்துறப்பதும் என் மைந்தரின் கடன்.” அச்சொற்களில் இருந்த உறுதியே அதை உடனே அவள் மறுக்கப்போகிறாள் என்பதற்கான ஆதாரம் என எண்ணி அர்ஜுனன் புன்னகைசெய்த கணமே பீமனும் புன்னகை செய்தான்.

“ஆனால் அனைத்தையும்விட முதன்மையானது இந்நாட்டுக்கும் தங்கள் முன்னோருக்கும் அவர்கள் கொண்டிருக்கும் கடன். ஷத்ரியர்களென அவர்கள் பிறந்திருப்பதே அக்கடனை நிறைவேற்றத்தான். அவையினரே, பராசர ஸ்மிருதியின்படி ஷத்ரியனின் கடமைகள் மூவகை. ஜன்மம், பைத்ருகம், ஸ்வார்ஜிதம். பிறப்பால் அவன் அடையும் கடமைகளே ஜன்மம். அவன் ஷத்ரியனாக இருப்பதனாலேயே நிறைவேற்றியாகவேண்டியவை அவை. குலமுறையாக வந்த பொறுப்புகளை கொண்டு குடிகளைக்காத்து அறத்தின்படி நிற்றல் எனப்படும்.”

குந்தி தொடர்ந்தாள் “மூத்தார் அளித்த ஆணைகள் பைத்ருகம் எனப்படுகின்றன. அவை இரண்டாமிடத்திலேயே வருகின்றன. தானே அளித்த வாக்குறுதிகள் ஸ்வார்ஜிதம். தன்னேற்புக் கடன்களுடன் மூத்தார்கடன்கள் முரண்படுமென்றால் மூத்தார்கடனையே கொள்ளவேண்டும். மூத்தார்கடனுடன் பிறப்புக்கடன் முரண்படுமென்றால் பிறப்புக்கடனையே கொள்ளவேண்டும். இங்கு என் மைந்தர் அவர்களுக்கு பிறப்பால் அளிக்கப்பட்ட கடனையே முதன்மையாகக் கொள்வார்கள். அதுவே முறை.” அவள் குரலில் இருந்த திடமான அமைதி அங்கிருந்தவர்களின் முகங்களையும் தீவிரமாக ஆக்கியது. அனைவரும் திரையை நோக்க சகுனி மட்டும் தன் முன்னாலிருந்த தரையை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

குந்தி மெல்லிய திடமான குரலில் சொன்னாள். அச்சொற்கள் முகமில்லாது ஒலித்தமையாலேயே மறுக்கமுடியாத தன்மை கொண்டிருந்தன. “ஆதிமானுஷிகமாக கிடைக்கும் அரியணை என்பது தலைமுறைதலைமுறையாக அப்படியேதான் இருக்கும் என்று நீதிநூல்கள் சொல்லவில்லை. பராசரநீதி அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் சந்திரதேவநீதி அதைப்பற்றி தெளிவான விளக்கத்தை சொல்கிறது. ஆதிமானுஷிகமாக கிடைத்த அரசை ஒருவன் பன்னிரண்டாண்டுகாலம் ஆண்டுவிட்டான் என்றால் அவன் அரியணை நிலைத்துவிடுகிறது. அவனுடைய மைந்தன் ஆதிதெய்வீகமாகவே அம்முடியுரிமையைப் பெறுகிறான். ஆகவே என் மைந்தன் தருமன் இறையாணையால் இவ்வரசைப் பெற்றிருக்கிறான்.”

அந்த ஐயமே அற்ற சொல்லாட்சிகளை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். எத்தனைமுறை தனக்குள் அக்காட்சியை நடித்து அச்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தால் அது கைவந்திருக்கும்! தருமன் பிறந்த மறுகணம் முதல் குந்தி அச்சொற்களை கோர்க்கத் தொடங்கியிருப்பாள். மறுபக்கம் சகுனியும் தனக்கான சொற்களை கோர்த்திருப்பார். இருபக்கமும் பதினெட்டாண்டுகாலம் ஊறித் தேங்கி புடமிடப்பட்ட சொற்கள். நிகரான எடைகொண்டவை. நடுவே துலாக்கோலின் முள் அசைவற்று நிற்கும்.

“பிதாமகரை வணங்குகிறேன்” என்று குந்தி தொடர்ந்தாள். “அவரது சொற்களை என் மைந்தர் வைரமுடி என தலைமேல் சூடிக்கொள்வார்கள். ஆனால் நான் அறியவிழைவது பிதாமகர் அளித்த அந்தச் சொல் காந்தார இளவரசருக்கு அளிக்கப்பட்டதா, அன்றி என் கணவரான மறைந்த மன்னர் பாண்டுவுக்கு அளிக்கப்பட்டதா?" அவள் சால்வையை சரிசெய்தபடி இருக்கையில் சற்று முன்னால் சாய்ந்து செவிகூரும் மெல்லிய ஒலியைக்கூட கேட்கமுடிந்தது.

அந்த வினாவை சிலகணங்களுக்குப்பின்னரே அனைவரும் முழுமையாக உணர்ந்தனர். எங்கோ அகம் அலைந்துகொண்டிருந்தமையால் அதைக்கேட்டதும் சிலகணங்கள் தடுமாறிய பீஷ்மர் “அன்று அந்தச் சூழலில் எவரிடம் அதைச் சொன்னேன் என்று நினைவில்லை... நான் அதை சகுனியிடம் சொன்னேன் என்பது உறுதி” என்றார். “அவனை நான் நெஞ்சோடு அணைத்தேன். மைந்தன் என என் எஞ்சியநாளெல்லாம் அவனையும் சொல்லிக்கொள்வேன் என்று சொன்னேன். அவன் விழிநீரை என் தோள்கள் உணர்ந்தன. அவன் தோள்களை இறுக்கியபடி அவனிடம் அச்சொற்களை சொன்னேன்.”

“பிதாமகரே, எளியவளை பொறுத்தருளுங்கள். அந்த வாக்குறுதியை மீண்டும் என் கணவர் பாண்டுவிடம் சொன்னீர்களா?” என்றாள் குந்தி. பீஷ்மரின் தலை முதியவர்களுக்குரிய முறையில் மெல்ல நடுங்கியது. வளைந்த விரல்கள் கொண்ட வலக்கையை உதடுகள் மேல் வைத்து சிந்தனை செய்து “இல்லை, நான் இருமுறை கூறியதாக நினைவில்லை” என்றார். குழப்பத்துடன் தாடியை தடவியபடி “நெடுங்காலமாகிறது” என முனகினார்.

“பிதாமகரே, தங்கள் பாதங்களைப் பணிகிறேன். அந்த வாக்குறுதியை நீங்கள் சகுனித்தேவருக்கு அளித்தபோது அருகே மாமன்னர் பாண்டு இருந்தாரா?” என்றாள் குந்தி. சிலகணங்கள் அமைதிக்குப்பின் “இல்லை, அவ்வறையில் அவன் இல்லை” என்றார் பீஷ்மர். மீண்டும் தயங்கி தன் பழுத்த விழிகளைத் திருப்பி “விதுரா, அந்த அவையில் எவர் இருந்தார்கள்?” என்றார்.

விதுரர் எழுந்து வணங்கி “பிதாமகரே, அந்த அவையில் பேரரசி சத்யவதி இருந்தார். நானும் தாங்களும் காந்தார இளவரசரும் இருந்தோம். பேரமைச்சரான காலம்சென்ற யக்ஞசன்மர் இருந்தார். தாங்கள் காந்தார இளவரசருக்கு வாக்களித்தீர்கள். தங்கள் சொற்களை அப்படியே அன்றே சென்று ஏட்டில் பதிவுசெய்தேன். அதை நானும் யக்ஞசன்மரும் முத்திரையிட்டு அரச ஆவணமாக ஆக்கினோம்.”

விதுரர் எழுந்து ஒரு ஓலையை பீடத்திலிருந்து எடுத்து “இதுதான் தாங்கள் சொன்ன வரிகள் பிதாமகரே” என்றபின் குரலை மாற்றி “அந்த வஞ்சினம் அவ்வாறே இருக்கட்டும் மகனே! இங்கே நீ பதினெட்டு வருடம் காத்திரு. வெறும் பதினெட்டே வருடங்கள். உன் தமக்கையின் வயிற்றில்பிறந்த மைந்தன் முடிசூடியதும் நீ நாடு திரும்பலாம். இது என் வாக்கு” என்று வாசித்து நிமிர்ந்தார். அவையினர் முகங்களை நோக்கியபின் “அப்போது பேரரசி சத்யவதி சொன்ன சொற்களையும் குறித்திருக்கிறோம்” என்று மீண்டும் வாசித்தார். “சௌபாலரே, இந்த நாட்டில் என் மைந்தனின் வாக்கு என்பது ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துவது. அது அஸ்தினபுரியின் தெய்வங்களின் வாக்குறுதி.”

விதுரர் அமர்ந்ததும் குந்தி “தாங்கள் அளித்த வாக்குறுதி சகுனித்தேவருக்கு மட்டுமே. அதையே பேரரசி உறுதிசெய்திருக்கிறார். அமைச்சர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அச்செய்தி மாமன்னர் பாண்டுவுக்கு சொல்லப்பட்டதா என்றே நான் கேட்கிறேன்” என்றாள். பீஷ்மர் மெல்லியகுரலில் “நான் சொல்லவில்லை” என்றார். “தங்கள் சொற்களை அவ்வண்ணமே அவை கொள்ளட்டும். வணங்குகிறேன் பிதாமகரே” என்றாள் குந்தி.

உள்ளக்கிளர்ச்சியால் அர்ஜுனன் ஒழுக்குமிக்க நீரோடையில் நிற்பவனைப்போல கால்கள் மண்ணில் நிலைக்காமல் தவித்து முன்னகர்ந்து முன்னாலிருந்த இருக்கையின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டான். பீமன் திரும்பி நோக்கி புன்னகை செய்தான். சகுனி எழுந்து “எவரிடம் சொல்லப்பட்டாலென்ன? அது பிதாமகரின் சொல்” என்று உரக்கக் கூவினார். “அவரது சொல் இந்நாட்டின் தெய்வங்களின் சொல் என்று சொன்னவர் பேரரசி. அவர் அளித்த மணிமுடி இது. இந்நாட்டில் பிதாமகரும் பேரரசியும் சொன்ன சொல்லுக்கு என்ன மதிப்பு என்றே நான் அறிய விழைகிறேன்” என்றார்.

சகுனியை முதல்முறையாக சினம்கொண்ட நிலையில் அர்ஜுனன் கண்டான். சிவந்து பழுத்த நிலையில் அவரில் எப்போதுமிருக்கும் உயிரற்ற வெளிறல் மறைந்து அவர் அழகனாக தோற்றமளித்தார். அவரது முகத்தில் எப்போதும் இறுகியே தெரியும் தசைகளெல்லாம் உருகி வழிபவை போல இளகின. கைகளை வீசி “எனக்களித்த சொல்லுக்கு பிதாமகர் மட்டும் பொறுப்பா? இல்லை, அஸ்தினபுரியின் மைந்தரும் அதற்குப்பொறுப்பா? அதைச்சொல்லுங்கள்” என்றார்.

அவையை நோக்கி நடந்து நடுவே நின்று மூச்சிரைக்க “அவையோரே, அச்சொற்களுக்கு அவர் மட்டும் பொறுப்பென்றால் இக்கணமே அவர் இங்கிருக்கும் பிதாமகர் நிலையை உதறவேண்டும். மரவுரி அணிந்து காடேகவேண்டும். மீண்டும் இந்நகரில் அவர் நுழையக்கூடாது. அவருக்கான நீர்க்கடன்களை இங்குள்ள மைந்தர் எவரும் செய்யலாகாது” என்று கூவினார். அகவிரைவெழுந்த உடல் படபடக்க சொற்களும் பதறின.

அர்ஜுனன் சபையைச் சூழ்ந்து நோக்கிக்கொண்டிருக்கையில் அவனருகே இருந்து “சபையோரே” என்று தருமனின் நடுங்கும் குரல் எழுந்தது. அவன் கைகளைக் கூப்பியபடி முன்னகர்ந்தான். “மூத்தோர் இருக்க நான் பேசுவதற்கு என்னை பொறுத்தருள்க. எனக்கும் என் தம்பியருக்கும் இறைச்சொல்லுக்கு நிகரானது பிதாமகரின் சொல். பிதாமகர் அளித்தவாக்கின் ஒவ்வொரு சொல்லும் இக்குலத்தினருக்கு எண்ணத்திலும் மீறமுடியாத ஆணையே ஆகும்” என்றான்.

சகுனி அவனை நோக்கி திரும்பினார். தருமன் “பிதாமகர் காந்தார இளவரசருக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என்றால் நான் அதை சிரமேற்கிறேன். இம்மணிமுடியை நான் கோரவில்லை. அவரது சொல்லை மீறி அதை நான் ஏற்றாகவேண்டுமென எவரேனும் சொன்னால் இச்சபைக்கு வெளியே சென்று தர்ப்பைமேல் வடக்கிருந்து உயிர்விடுவேன். அறம் மீது ஆணை. எந்தை மேல் ஆணை” என்றான். அவன் உடலிலும் முகத்திலும் நடுக்கமோ தயக்கமோ இருக்கவில்லை. குரல் உறுதியுடன் ஒலித்தது.

தருமன் எண்ணத்தை முன்னரே அறிந்திருந்தும்கூட அதை அப்போது கேட்கையில் அர்ஜுனன் மேனிசிலிர்த்தான். அவனை அறியாமலேயே தருமனை நோக்கி மெல்ல நகர்ந்தான். அவன் தோளின் வெம்மை தன் தோளில் படும்விதமாக. சபையெங்கும் தருமனின் சொல் உருவாக்கிய மெல்லிய விதிர்ப்பை கண்டான். சகுனியேகூட வியந்தபடி சற்றுத்திறந்த வாயுடன் நோக்கியிருந்தார். துரியோதனன் விழிகள் தருமன் மேல் திகைத்தபடி நிலைத்திருந்தன.

“இளையவரே, நீங்கள் சொல்வதென்ன?” என்றார் விதுரர் பீமனிடம். “நான் என் அன்னைக்கு இன்னொரு வாக்கை அளித்திருந்தேன்” என்றான் பீமன். “ஆனால் இன்று என் தமையன் இச்சபையில் எழுந்து என்னையும் தானென்றே உணர்ந்து சற்றும் ஐயமின்றி சொன்ன அச்சொல் எனக்கு இம்மண்ணில் தெய்வங்கள் அளித்த வரம். அவரது எண்ணமும் சொல்லும் இப்பிறவி முழுக்க என்னை கட்டுப்படுத்தும். அவரது விருப்பமேதும் எனக்கு ஆணையே. அதை மீற என் அன்னையோ நான் வழிபடும் தெய்வமோ எனக்கு ஆணையிடுவாரென்றால் அவர் முன் என் கழுத்தை அறுத்துவிழுவேன். அறிக என்னை ஆளும் கொடுங்காற்றுகள்” என்றான்.

விதுரர் விழி தன்னை நோக்கி திரும்புவதற்குள் அர்ஜுனன் தன் நெஞ்சில் கைவைத்து முன்னகர்ந்து “என் சொற்கள் ஒவ்வொன்றையும் இளையதமையன் பீமசேனரே சொல்லிவிட்டார் அமைச்சரே. அவரைவிட சொல்லறிந்தவன் அல்ல நான்” என்றான். “அறமெனப்படுவதும் நெறியெனப்படுவதும் இறையெனப்படுவதும் என் தமையனே. பிறந்து நெறிநின்று மறையும் இச்சிறு வாழ்வில் எங்கும் எவரிடமும் கடன் என பிறிதேதும் எனக்கில்லை. அறிக என் வில்!”

பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. முதுமையின் விளைவான தயக்கமின்மையால் அவர் அதை மறைக்கவோ நிறுத்தவோ முயலவில்லை. சுருங்கிய கன்னங்களில் வழிந்து வெண்தாடி மயிர்களில் பரவி துளித்து நின்ற கண்ணீருடன் நெஞ்சில் கைசேர்த்து அவர் விசும்பி அழுதார். அவர் தொண்டையை கனைக்கும் ஒலியும் மூக்கை உறிஞ்சும் ஒலியும் அமைதி கனத்து நிறைந்த கூடத்தில் ஒலித்தன.

பட்டுத்திரைக்கு அப்பால் குந்தி மெல்லச் செருமும் ஒலி கேட்டு அத்தனை தலைகளும் அத்திசை நோக்கி திரும்பின. திரைச்சீலையை அவள் மெல்லத் தொட்டு அலையெழுப்பினாள். அது அவர்கள் தன்னை முற்றிலும் விழியும் செவியும் கூர்வதற்காக என அவன் அறிந்தான். “இச்சொற்களைக் கேட்பதற்காகவே நான் உயிர்வாழ்ந்தேன் என எண்ணுகிறேன்” என்று அவள் மெல்லிய குரல் எழுந்தது. “என் மைந்தர் என்றும் அவர்களின் தந்தையின் இடத்தில் தமையனை கொண்டிருக்கவேண்டுமென்று வேண்டுகிறேன். அவர்களுக்கு அனைத்து நலன்களும் சூழ்வதாக! விண்ணுலகிலிருந்து மாமன்னர் பாண்டு அவர்களை வாழ்த்தட்டும்!”

அவள் சொல்லவருவதென்ன என்று தெரியாமல் அவை திகைப்பதை அர்ஜுனன் கண்டான். குந்தி பெருமூச்சுவிட்டாள். “ஆனால் நான் சொல்வது ஒன்றே. மாமன்னர் பாண்டுவுக்கு ஓர் மணிமுடி அளிக்கப்பட்டது. அது பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே என்ற நெறி அவரிடம் சொல்லப்படவில்லை. அதை பிதாமகர் காந்தார இளவரசருக்கு அளித்ததை மாமன்னர் பாண்டு அறியவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? தனக்கு அரசுப்பட்டம் அளிக்கப்பட்டது என்றும் மைந்தன் அரியணை ஏறுவான் என்றும் நம்பியவராக அவர் இவ்வுலகை நீத்தார் என்றால் நாம் இறந்தவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றை மீறுகிறோம் அல்லவா?”

அந்த வினாவிற்குப் பின்னாலிருந்த திட்டத்தை நன்கறிந்திருந்தபோதும் அர்ஜுனன் அதைக்கேட்டு படபடப்படைந்தான். “அவையோரே, மாமன்னர் பாண்டுவின் ஆன்மா அந்த விழைவைக்கொண்டிருந்தது என்றால் அது ஃபுவர்லோகத்தில் நிறைவின்மையை அடையும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” குந்தியின் குரல் ஒலி எழாமலேயே ஓங்கியது. “தென்புலத்தார், தெய்வம், மூத்தோர், முனிவர் என்றல்லவா நூல்கள் மானுடர் கடன்பட்டிருப்போரின் வரிசையை வகுக்கின்றன? தென்புலம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கை மீற மண்ணில் எவருக்கும் உரிமை இல்லை அவையினரே. உண்டென்று நூல் சொல்லுமென்றால் சொல்லுங்கள். நான் அவை விட்டு எழுகிறேன். இந்நகர் விட்டு நீங்குகிறேன். நீத்தோரைக் கைவிடும் நிலத்தில் என் கால் பதியாமலாகட்டும்.”

அவை கடும்குளிரில் விரைத்தது போல அமர்ந்திருந்தது. கிருபரும் சௌனகரும் கைகூப்பினர். குந்தியின் குரல் தணிந்தது. “நான் இங்கே பேசுவது என் மைந்தனுக்குரிய மணிமுடிக்காக அல்ல. அவன் சதசிருங்கம் சென்று மரவுரி அணிந்து வாழ்ந்தால் எனக்கொன்றும் இல்லை. மானுடர் தங்கள் வாழ்வை தாங்கள் தேர்வுசெய்யலாம். நான் வாதிடுவது உலகுநீத்த என் கணவருக்காக. அவரது நெஞ்சில் நிறைந்த விழைவு புறக்கணிக்கப்பட்டு அவர் நிறைவழியக்கூடாதென்பதற்காக. மண்ணில் வாழும் மக்களின் அதிகார விழைவால் விண்ணேறிய என் கொழுநருக்கு வஞ்சம் இழைக்கப்படலாகாது என்பதற்காக. ஏனென்றால் மண்ணில் அவருடைய குரலாக எஞ்சியிருப்பவள் நான் மட்டுமே. நான் அவருக்காகப் பேசியாகவேண்டும்.”

குந்தியின் குரல் உடைந்தது. மெல்லிய தேம்பலை வாயை ஆடையால் மூடி அவள் அடக்குவதை கேட்கமுடிந்தது. சௌனகர் எழுந்து உரக்க “நான் அமைச்சன்! ஆணையை நிறைவேற்றவேண்டியவன். ஆனால் இச்சபையில் நான் என் தரப்பை சொல்லியாகவேண்டும். மாமன்னர் பாண்டுவிடம் வாக்கு சொல்லப்படவில்லை என்றால் அவர் விழைந்ததே நிகழவேண்டும். தருமர் அரசாளவேண்டும். இக்குலத்தின்மேல், இவ்வரியணைமேல் நீத்தார் சொல் விழலாகாது... அதை வெளியே அவைகொண்டிருக்கும் என் குலமும் ஏற்காது” என்றார். விதுரர் ஏதோ சொல்வதற்கு முன் அவர் கைதூக்கி மறித்து “அவ்வாறு நிகழுமெனில் நீத்தார் சொல் மறுக்கப்பட்ட இந்நிலத்தை விட்டு நானும் என்குலமும் விலகிச்செல்வோம். காட்டிலோ பாலையிலோ எங்கள் வாழ்க்கையை கண்டடைவோம். அறிக என் குலதெய்வங்கள்!” என்று கூவினார்.

சகுனி ஏதோ சொல்வதற்காக எழுவதற்குள் திரையைக் கிழிப்பதுபோல விலக்கியபடி சத்யசேனையும் சத்யவிரதையும் பாய்ந்து வெளியே வந்தனர். சத்யவிரதை கைகளை நீட்டியபடி உடைந்த குரலில் “இது சதி! முன்னரே தீர்மானிக்கப்பட்ட நாடகம் இது. இங்கே நெறிநூல்கள் இல்லையா? இந்தப் பழிகாரியின் பசப்பைக் கேட்டா இந்த அவை முடிவெடுக்கப்போகிறது?” என்று கூவினாள். “அமைச்சருடன் சேர்ந்து நாடகமாடுகிறாள்... இவள் யாதவப்பெண்ணா சூதப்பெண்ணா?” என்று கூவ மற்ற காந்தாரியரும் வெளியே வந்து “சதி. இதை ஒப்ப மாட்டோம்” என்று கூச்சலிட்டனர்.

திடமான தாழ்ந்த குரலில் திருதராஷ்டிரர் “துரியோதனா” என்றார். “அடுத்த சொல் பேசி திரைக்கு வெளியே நின்றிருக்கும் பெண் எவளாக இருந்தாலும் அவள் தலையை வெட்டி வீழ்த்து.” துரியோதனன் அக்கணமே தன் இடையில் இருந்த வாளை உலோக ஒலியுடன் உருவியபடி முன்னால் செல்ல காந்தாரியர் பதறியடித்து திரைக்குப்பின் சென்று மூடிக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி திரையைப்பிடித்திருந்தாள். அவள் கையுடன் சேர்ந்து திரை நடுங்கியது. துரியோதனன் “வெளியே எவரும் இல்லை தந்தையே” என்றபின் தலை தாழ்த்தி பின்னகர்ந்தான்.

திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் மெல்ல எழுந்து நின்று தன் கைகளை கூப்பினார். “அவையோரே, இங்கு மாமன்னர் ஹஸ்தி அமர்ந்த அரியணைக்கு அருகே நான் அமர்ந்திருக்கிறேன். என்றும் வாழும் நெறியும் அறமும் எதுவோ அது இங்கு வாழவேண்டுமென என் மூதாதையர் இட்ட ஆணையை என் குருதியில் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர எனக்கு முதன்மையானது பிறிதில்லை” என்றார்.

“இது பிதாமகரின் நாடு. அவரது சொல் நின்றாகவேண்டும். ஆகவே பாண்டுவின் மணிமுடியை முறைப்படி என் மைந்தன் பெற்றுக்கொள்ளட்டும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் அரசியார் இங்கே சொன்னபடி என் இளையோனிடம் இம்மணிமுடி என்னிடம் மீளுமென்று சொல்லப்படவில்லை என்றால் அவன் வாழும் விண்ணுலகில் அவன் அமைதியிழக்கக் கூடும். அவையோரே, நாம் ஏதறிவோம் அவ்வுலகை? அங்கே என் பொருட்டு ஒருகணமேனும் என் இளையோன் துயர்கொள்வான் என்றால் இங்கே மானுடனாக நான் வாழ்ந்துதான் என்ன பயன்? இந்தப் பேருடலும் தலையும் மண்ணிலிருப்பதுபோல இழிவென்ன?”

இருகைகளையும் வானோக்கி தூக்கி செஞ்சதை விழிகள் கலங்கி வழிய திருதராஷ்டிரர் சொன்னார் “இங்கே வாழ்ந்தபோதெல்லாம் நிறைவிலாது உழன்றவன் என் தம்பி பாண்டு...” குரல் இடற அவர் நிறுத்திக்கொண்டார். குரல்வளை ஏறி இறங்கியது. செருமியபடி “இவ்வைந்து மக்களைப் பெற்றதன்றி வாழ்க்கையின் இன்பமெதையும் அறியாதவன் என் சிறுவன். அங்கே விண்ணக போகங்கள் சூழ இருந்தாலும் குனிந்து இம்மைந்தரைத்தான் நோக்கிக் கொண்டிருப்பான். அவன் உளம் வாட நான் ஒருநாளும் ஒப்ப மாட்டேன். அதை எவரும் எந்நெறியையும் சுட்டி என்னிடம் சொல்லவேண்டியதில்லை.”

உரத்த குரலில் திருதராஷ்டிரர் சொன்னார் “நான் நூலறிந்தவனல்ல. நான் காட்டுமிருகம். என் இச்சைகளின்படி செல்பவன், என் தசைகளால் வாழ்பவன். எதையும் நான் கருத்தில் கொள்ளப்போவதில்லை. எடுத்து வீசுங்கள் உங்கள் நூல்களை... நான் சொல்வது என் குருதியில் எழுந்த சொற்களை...” மேலும் சொற்கள் வராமல் கைகளை விரித்து ஆட்டினார். பின் மெல்ல அடங்கி பெருமூச்சு விட்டார். பெருமூச்சுகள் அவரது பெரிய நெஞ்சை அசைத்தன.

“அவையோரே, என் தம்பியின் தலையில் ஹஸ்தியின் மணிமுடியை முழுமனத்துடன்தான் வைத்தேன். அன்று நான் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நினைவுறுகிறேன்.” திருதராஷ்டிரர் அச்சொற்களைச் சொன்னார் “நான் அஸ்தினபுரியின் அரசாட்சியை, ஹஸ்தியின் அரியணையை, குருவின் செங்கோலை உனக்கு அளிக்கிறேன். உன் புகழ்விளங்குவதாக! உன் குலம் நீள்வதாக! நீ விழைவதெல்லாம் கைகூடுவதாக! ஓம் ஓம் ஓம்! நான் சொன்ன சொற்கள் இவை.”

“ஆம், இம்மண்ணின் அனைத்து உரிமையும் அவனுக்கே என்று சொல்லி மண்ணுள்ளவரை அவன் குலம்வாழ்கவென்று வாழ்த்தி அளித்த என் அன்புக்கொடை இம்மணிமுடி. என் சிறுவனுக்களித்த கொடையில் ஒரு முன்விதியைச் சேர்க்கும் அற்பனா நான்? மண்ணில் ஒவ்வொருநாளும் அவனை எண்ணி ஏங்க என்னை விட்டுவிட்டு அவன் சென்றான். இங்கிருந்து அவனிடம் நான் வணிகம் பேசவேண்டுமா... எவரிடம் சொல்கிறீர்கள் அதை?” திருதராஷ்டிரர் தன் மார்பில் ஓங்கி அறைந்துகொண்ட ஒலி அவையை அதிரச்செய்தது. ”நான் விசித்திரவீரியரின் மைந்தன். ஹஸ்தியின் தோள்களைப்பெற்றவன். ஒருபோதும் சிறுமையை என் நெஞ்சு அறியாது.”

கைகளைத் தூக்கி திருதராஷ்டிரர் அழைத்தார் “மைந்தா!” துரியோதனன் வணங்கி “தந்தையே” என்றான். “இந்நாட்டின் இளவரசுப்பட்டத்தை நான் என் இளையோனின் மைந்தனும் குலமூத்தோனுமாகிய யுதிஷ்டிரனுக்கு அளிக்கிறேன். அவனுக்குரியது இம்மண். அவனும் அவன் குலமும் இதை ஆளட்டும். அவர்களின் புகழ் பாரதவர்ஷமெங்கும் பரவட்டும். விண்ணகத்தில் என் இளையோன் உளம் நிறையட்டும்” என்று சொல்லி கைகூப்பினார்.

துரியோதனன் சற்று முன்னகர்ந்து தலைவணங்கி “தந்தையே, உங்கள் ஆணை என் கடமை” என்றான். அவன் முகமும் உடலும் அமைதியாகவே இருந்தன. “ஆம், என் குருதி நீ. சிறியன உன் சிந்தையில் எழாது. மைந்தா, தருமனை கைப்பற்றி அழைத்துச்சென்று அங்கே கூடியிருக்கும் நம் குலமூத்தார் முன் நின்று நீயே என் முடிவை அறிவி. உன் கையால் இளவரசுக்கான மணிமுடியை அவன் தலையில் சூட்டு. இதோ, இது என் ஆணை. நீ உன் வெல்லமுடியாத கதாயுதத்துடன் அவன் அரியணைக்குக் காவலாக நின்றிருக்கவேண்டும். உன் ஆற்றலால் அஸ்தினபுரி என்றும் வெல்லவேண்டும்.”

“தங்கள் ஆணை தந்தையே” என்றான் துரியோதனன். கண்ணீருடன் துச்சாதனன் கைகூப்பினான். கௌரவர்கள் கைகூப்பி தலை தாழ்த்தினர். தன்னருகே தருமன் கண்ணீர் மார்பில் வழிய நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். திருதராஷ்டிரர் கைநீட்டி மகனை அழைத்தார். துரியோதனன் அவர் அருகே சென்றதும் அவன் தலைமேல் கையை வைத்து “மைந்தா, இந்த மண் மீது உனக்கு விருப்பிருந்ததா? இம்மணிமுடியை இழந்தமைக்காக வருந்துகிறாயா?” என்றார்.

துரியோதனன் “ஆம் தந்தையே. நான் நாடாள விழைந்தேன். என் மாமன் அவ்விழைவை இளவயதிலேயே என்னுள் விதைத்தார். இந்நாடு என்னுடையதென்றே நான் வளர்ந்தேன். இம்மணிமுடியை இழந்த துயரை எளிதில் என்னால் வெல்லவும் முடியாது. ஆனால் உங்கள் ஆணைக்கு அப்பால் என் எண்ணத்தில் ஒரு சொல்லும் எஞ்சாது” என்றான். “பணிந்திரு மைந்தா, உனக்கு தெய்வங்கள் அருள்செய்யும்” என்றார் திருதராஷ்டிரர்.

திருதராஷ்டிரர் திரும்பி “எங்கே என் மைந்தன் தருமன்?” என்று கை விரித்தார். தருமன் உதடுகளை இறுக்கி அழுகையை அடக்கியபடி அருகே சென்றான். அவர் தன் பெரிய கரங்களால் யானை துதிக்கையால் அள்ளுவதுபோல அவனைச் சுருட்டி அள்ளிக்கொண்டார். “மேலும் மெலிந்திருக்கிறாய். அரசனுக்குரிய தோள்களா இவை? மூடா... என் மைந்தன் தோள்களைப்பார்” என்று சொன்னபடி துரியோதனனையும் தருமனையும் இருகைகளால் ஒரேசமயம் மார்புடன் அணைத்தார். அவரது அரசமரத்தின் அடித்தூர் போன்ற மார்பில் அவர்கள் இரு சிறு செடிகள் போலிருந்தனர். முகம் விரிய கண்கள் உருள அண்ணாந்து நோக்கி “மேலிருந்து பார்க்கிறானா என் இளையோன்? விதுரா மூடா, விண்ணுலகமென்று ஒன்றுள்ளது உண்மைதானா?” என்றார்.

“அரசே, அது நம் கற்பனையாகவும் இருக்கலாம். அங்கொரு உலகம் தேவையாவது நமக்கல்லவா?” என்றார் விதுரர். “ஆம், ஆம்” என்றபடி இருவரின் முதுகிலும் தன் பரந்த கைகளால் படீர் படீரென்று அறைந்து உரக்க நகைத்தார். “இளையவன் எங்கே? என் மல்லன்?” பீமன் மெல்ல நடந்து அருகே சென்றான். அவன் முகம் மலர்ந்திருந்தது. துரியோதனனையும் தருமனையும் விட்டுவிட்டு திருதராஷ்டிரர் கைகளை விரித்தார். அவர்கள் விலகி மேலாடையையும் குழலையும் சரிசெய்துகொண்டனர். பீமன் அருகே சென்றதும் திருதராஷ்டிரர் அவனை அப்படியே அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டார்.

“பெருந்தோள்கள்... ஆம்” என்று அவன் தோள்களை அறைந்தார். மீண்டும் அள்ளித்தழுவிக்கொண்டார். “நாளை... நாளையே என் களத்துக்கு வா! நாம் தோள்பொருதவேண்டும்... விதுரா மூடா!” விதுரர் “அரசே” என்றார். “மறக்காதே. நாளைக்காலை நான் இவனுடன் களம்பொருதுகிறேன்...” விதுரர் புன்னகையுடன் “ஆணை” என்றார்.

பீமனை இருகைகளாலும் மீண்டும் மீண்டும் தடவியபடி “மைந்தரைப் பார்க்கும் விழியை அளிக்காத தெய்வங்கள் தொட்டுத்தீண்டும் உடலையாவது அளித்தனவே” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, ஒவ்வொரு விரல்நுனியிலும் விழிகளை அளித்து தெய்வங்கள் உங்களை வாழ்த்தியிருக்கின்றன” என்றார் விதுரர். “ஆம் ஆம், உண்மை” என்று அவர் நகைத்தார். “எங்கே வில்லாளன்?” என்று கைநீட்டினார்.

அர்ஜுனன் திருதராஷ்டிரரை அணுகியதும் அவரது கனத்த கரங்கள் வந்து அவன் தோளில் விழுந்தன. யானைத்துதிக்கையளவுக்கே எடை கொண்டவை. அவரது வியர்வையின் வாசம் பழமையான குளத்தின் படிகளின் பாசிபோலிருந்தது. அவர் அவனை அணைத்து தலையை முகர்ந்தபின் வெடித்து நகைத்து “விதுரா, மூடா, அறிவாயா, உன் மைந்தன் ஆண்மகனாகிவிட்டான். பெண்ணை அறிந்துவிட்டான்... ஆஹாஹாஹா!” என்று கூவினார். அர்ஜுனன் உடல் கூசி விதிர்க்க அவர் மார்பிலேயே முகத்தை அழுத்திக்கொண்டான்.

“என்ன வெட்கம்... எந்தமரமாவது பூத்ததற்காக நாணுமா?” என்று சொல்லி திருதராஷ்டிரர் அவனைப்பிடித்து திருப்பி சபைநோக்கி நிறுத்தினார். “அவையோரே, என் மைந்தன் முகத்தைப்பாருங்கள். அவன் இந்திரனின் மைந்தன். லீலையைத் தொடங்கிவிட்டான்.” பீஷ்மர் வேறுபக்கம் திரும்பி புன்னகையை உதட்டை இறுக்கி அடக்கியபடி துரோணரிடம் ஏதோ சொல்ல கண்களில் சிரிப்பு மின்ன அவர் தாடியைத் தடவியபடி மெல்லியகுரலில் ஏதோ சொன்னார். பீமன் நகைத்துக்கொண்டே பார்த்தான். அர்ஜுனன் தலையைத் தூக்காமல் நின்றான்.

“அது அவர் கடமைதானே அரசே?” என்றார் விதுரர். "இளவரசுப்பட்டம் பெற்றபின் ஐவகை நிலங்களையும் நால்வகை குடிகளையும் மூவகை அறங்களையும் அறிந்துவரவேண்டும் என்றுதானே நூல்கள் சொல்கின்றன?” திருதராஷ்டிரர் “ஆம், ஐவரும் கிளம்பவேண்டியதுதான்... நலம் திகழட்டும்” என்றபின் அர்ஜுனன் தோளில் அறைந்து “மைந்தா, நீ என்னை வென்று காட்டு” என்று நகைத்தார். விதுரர் “அது எளிய பணி அல்ல அரசே” என்று சொல்ல திருதராஷ்டிரர் மார்பில் அறைந்துகொண்டு மேலும் உரக்க நகைத்தார்.

அவையிலிருந்த அனைவரும் எழுந்து முகம் மலர்ந்து வட்டமிட்டு நின்றதை அர்ஜுனன் கண்டான். கௌரவர் முகங்களும் சிரிப்பில் விரிந்திருந்தன. ஆனால் சகுனி மட்டும் தன் இருக்கையில் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார்.

பகுதி நான்கு : அனல்விதை - 1

நிமித்திகரான பத்ரர் அரண்மனைக்குச் சென்றபோது துருபதனின் அறையில் மருத்துவர் கிரீஷ்மர் இருப்பதாக சேவகன் சொன்னான். அவர் பெருமூச்சுடன் கூடத்திலேயே அமர்ந்துகொண்டார். தலைமைச்சேவகன் அஜன் வந்து வணங்கி நின்றான். அவர் விழிதூக்கியதும் “அனைத்தும் அமைந்துவிட்டன நிமித்திகரே” என்றான். பத்ரர் தலையை மெல்ல அசைத்தார். “அரசர் பயணத்துக்குரிய நிலையில் இருக்கிறாரா என்று பார்க்கவேண்டும் என்றார் மருத்துவர்” என்றான் அஜன்.

பத்ரரால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. துருபதன் உடல்நிலை நகரமே அறிந்த செய்தி. ஆனால் வைத்தியர்கள் ஒவ்வொருநாளும் அச்செய்தியை அவர்களே சொல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அனைத்து விடைகளும் இறந்தகாலத்தில் உள்ளன என்ற பாவனை நிமித்திகர்களுக்கு. அனைத்து விடைகளும் உடலிலேயே உள்ளன என்பது மருத்துவர்களின் பாவனை. நிமித்தியமும் மருத்துவமும் ஞானங்கள். பாவனைகள் வழியாகவே அவற்றை தொழில்களாக ஆக்கமுடியும்.

கிரீஷ்மர் வெளியே வந்தார். கவலை தோய்ந்த முகத்துடன் பத்ரரை நோக்கி வணங்கி “மன்னர் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் உள்ளது. அவரால் நான்குநாழிகை நேரம் வரை அமர்ந்திருக்கமுடியும்” என்றார். பத்ரர் தலையசைத்தார். “அவருடன் எப்போதும் ஒரு மருத்துவரும் இருந்தாகவேண்டும். இரவில் அகிபீனா கொடுப்பதை மருத்துவர்தான் செய்தாகவேண்டும்” என்றார் கிரீஷ்மர். “ஆம், அதற்கான முறைமைகளை செய்துவிட்டேன்” என்றார் பத்ரர்.

“இந்தப்பயணம் இன்றியமையாததா நிமித்திகரே?” என்றார் கிரீஷ்மர். ”நான் சில புதியமூலிகைகளை தென்னகத்தில் இருந்து வரவழைத்திருக்கிறேன். தொடர்ந்த மருத்துவத்தில் விரைவிலேயே மன்னரை குணப்படுத்திவிடமுடியுமென நினைக்கிறேன். நீங்கள் சற்று பொறுக்கலாம்.” பத்ரர் “ஆம், தங்கள் மருத்துவம்தான் மன்னரை மீட்கவேண்டும் கிரீஷ்மரே. ஆனால் துர்வாசமுனிவர் குளிர்காலம் முடிந்ததும் மலையேறிச் சென்றுவிடுவார். அதற்குள் ரிஷ்யசிருங்க மலையடிவாரம் சென்று அவரைச் சந்திக்கவேண்டுமென்பதே என் திட்டம்” என்றார். “அவ்வண்ணமே ஆகட்டும்” என தலைவணங்கி கிரீஷ்மர் நடந்தார்.

பத்ரர் இடைநாழியில் நடந்து துருபதனின் படுக்கை அறைக்குள் சென்றார். காவலன் வணங்கி கதவைத்திறக்க மூலிகைவாசனை அவரை தாக்கியது. வாசனையை தூசிபோல ஒரு பருப்பொருளாகவே அறியமுடிந்தது. மரக்கூரை கொண்ட விரிந்த அறைக்குள் மூலிகைகள் புகைந்த தூபக்கலம் ஓரமாக இருந்தது. அறைமுழுக்க பல்வேறு வேர்களும் வாடிய செடிகளும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. சாளரங்கள் நன்றாக மூடப்பட்டு மெல்லிய இருள் நிறைந்திருந்தது.

பத்ரர் சாளரத்தை திறந்தார். “சாளரங்களை திறக்கவேண்டாம், மூலிகைக்காற்று அவருக்குள் நிறையவேண்டும் என்றார் மருத்துவர்” என்றான் காவலன். “அவரது மூலிகைக்காற்றைவிட உயிர்நிறைந்தது வெளிக்காற்று” என்றார் பத்ரர். ஒளி அறைக்குள் நிறைந்தது. புகையை வெளிக்காற்று அள்ளி திறந்த கதவின் வழியாக வெளியே கொண்டுசென்றது. மஞ்சத்தில் சுருண்டு படுத்து வாய்திறந்து துயின்ற துருபதனை பத்ரர் பார்த்தார். ஒளிபட்டு அவர் விழிகள் சுருங்கி அதிர்ந்தன. முனகியபடி திரும்பிப்படுத்தார். பத்ரர் மார்பின்மேல் கட்டிய கைகளுடன் தன் சதுரங்கத்தோழனான மன்னனை நோக்கியபடி நின்றார்.

ஆறுமாதங்களில் துருபதன் தொடர்ந்து உடல்மெலிந்து ஒடுங்கி குறுகி சிறுவனைப்போல ஆகிவிட்டிருந்தார். கன்னங்கள் குழிவிழுந்து பற்களுடன் வாய் தனியாக முன்னகர்ந்திருந்தது. கண்கள் சேற்றில் குளம்புகள் பதிந்த குழிக்குள் நீர்தேங்கியதுபோல தெரியும். ஒருகணம்கூட நில்லாமல் விழிகள் தத்தளிக்கும். கைவிரல்கள் எப்போதும் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டு காற்றை பின்னிக்கொண்டே இருக்கும். கண்ணுக்குத்தெரியாத ஏதோ சரடை நெய்வதுபோல. உதடுகள் ஒலியற்ற சொல் ஒன்றை உச்சரித்துக்கொண்டே இருக்கும். உதடுகளைச்சுற்றி அழுத்தமான கோடுகள் விழுந்திருந்தன. முடி முழுமையாகவே நரைத்து கலைந்து தோள்களில் விழுந்து காற்றிலாடியது.

அவர் துயில்கையிலும் மூடிய இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருக்கும். துயிலிலும் விரல்கள் பின்னி விலகிக்கொண்டிருக்கும். உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும். துயில் கலைந்து அமையும் இடைவெளியில் புரண்டுபடுக்கும்போது வெளிப்படும் அந்த மிகமெல்லிய முனகலைக்கேட்டு அவர் நெஞ்சைப்பொத்திக்கொண்டு கண்ணீர் மல்கியிருக்கிறார். எங்கிருந்து வருகிறது அந்த வலிமிக்க ஒலி என எண்ணிக்கொள்வார். அவரது உணர்ச்சியற்ற விழிகளை நோக்கும்போது அவற்றின் ஒலி அது என்று தோன்றும்.

துருபதன் அனேகமாக உணவுண்பதே இல்லை. ஆகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் அவருக்கு பால்கஞ்சியை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென பத்ரர் சொல்லியிருந்தார். முதலிரு மிடறுகளுக்கு அப்பால் அவர் அருந்துவதில்லை. சிலசமயம் கையில் கோப்பையுடன் நாழிகைக்கணக்கில் அசையாது அமர்ந்திருப்பார். உணவுண்டதையோ உண்ணாததையோ அவர் அறிவதில்லை. கடும் காய்ச்சல் போல அவரது உதடுகள் உலர்ந்து கருகியிருந்தன. தொண்டை உலர்ந்திருப்பதுபோல எச்சிலை விழுங்கிக்கொண்டிருப்பார். மெலிந்து அடுக்கடுக்காக ஆகிவிட்டிருந்த கழுத்தில் குரல்வளை ஏறியமையும்.

எப்போதாவது அவர் உணவு விக்கியதுபோல ஒலியெழுப்பி மூச்சுத்திணறி கைகால்கள் உதற பக்கவாட்டில் விழுந்துவிடுவார். இருகைகளும் இழுத்து அசைய பாதங்கள் இழுபட்டு விரைத்து அதிரும். எச்சில்நுரை கடைவாயில் வழியும். சற்று நேரம் கழித்து மெல்ல தசையின் இறுக்கங்கள் அவிழ உடல் தொய்ந்து கைகள் இருபக்கங்களிலும் மல்லாந்து சரியும். மூச்சு சீரானதும் கண்களைத் திறந்து செவ்விழிகளால் நோக்குகையில் அவர் அக்கணத்தில் எங்கிருந்தோ முற்றிலும் அறியாத அவ்வுலகில் வந்து விழுந்திருப்பதாகத் தோன்றும்.

அவர் விழுந்ததுமே பத்ரர் கையில் வைத்திருக்கும் தோல்பட்டையை அவர் வாய்க்குள் செலுத்தி பற்களுக்கிடையே வைப்பார். இருமுறை உதட்டைக்கடித்து அதில் வழிந்த குருதியை மூச்சாக உறிஞ்சி உள்ளிழுத்து அது நெஞ்சில் சிக்கி மூச்சடைத்துப்போயிருக்கிறார். வலிப்புவந்து துடிப்பவரின் தலையை மேலே ஏற்றிப்பிடித்தபடி பத்ரர் “தெய்வங்களே தேவர்களே” என்று கூவிக்கொண்டிருப்பார். பின்னர் கண்விழித்து பேதையாக கிடப்பவர் அக்னிவேசரிடமிருந்து அம்புகளைப்பெற்றுக்கொண்ட பெருவீரன் அல்ல என்று தோன்றும். மழையில் கைவிடப்பட்டு மானுடரின் வாசம் தேடி தள்ளாடி நடந்துசெல்லும் கண் திறக்காத நாய்க்குட்டி.

துரோணரின் முன்னாலிருந்து தளபதிகளால் தூக்கப்பட்டு ரதத்தில் ஏறுகையில் துருபதன் விம்மியழுதுகொண்டிருந்தார். “என்னைக் கொன்றுவிடுங்கள்... இது என் ஆணை! என்னைக் கொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். தளபதிகள் கண்களில் நீர் வழிய ஒரு சொல்லும் சொல்லாமல் ரதத்தில் ஏற்றினர். ரதப்படிகளில் அவரால் ஏறமுடியவில்லை. கைகளை ஊன்றி தொற்றி ஏறி ரதத்தட்டில் படுத்துவிட்டார். அவரைத் தூக்கி அமரச்செய்து தோல்கம்பளத்தால் போர்த்தியபின் ரதம் செல்ல ஆணையிட்டான் தளபதி ரிஷபன்.

ரதம் காம்பில்ய நகரை அடைவதுவரை அந்தப்போர்வைக்குள் குவிந்து சுருண்டு கிடந்தார் துருபதன். கடும் வலி கொண்ட நோயாளி போல மெல்லிய முனகலுடன் அழுதுகொண்டே வந்தார். அவ்வப்போது தாளமுடியாத விசும்பலோ கேவலோ எழுந்தபோது ரிஷபன் போர்வையை சரிசெய்யும் பாவனையில் அவரைத் தொட்டான். இருபக்கம் ஓடிக்கூடி நின்ற குடிகள் கொடியுடன் ரதம் திரும்புவதைக்கண்டு கூவி அழுதபடியும் சினத்துடன் வாழ்த்தொலி எழுப்பியபடியும் பின்னால் ஓடிவந்தனர். புல்மேட்டில் ரதம் எழுந்ததைக் கண்டதும் பாஞ்சால வீரகள் படைக்கலங்களை தூக்கி ஆட்டியபடி பேரொலி எழுப்பி மன்னரை வாழ்த்தினர்.சிலர் தாளமுடியாமல் அணிகளை விட்டுவிட்டு ஓடி அருகணைந்தனர்.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலிலேயே காவல்படைகளும் குடிமக்களும் செய்தியறிந்து கூடி நின்றனர். அலையோசை போல முழங்கி கொந்தளித்த அவர்களை படைவீரர் வேல்களால் வேலியமைத்து தள்ளித்தள்ளி விலக்க நடுவே ஊர்ந்து சென்ற ரதம் அரண்மனையை அடைந்ததும் நின்றது. அதிலிருந்து போர்வையுடன் துருபதனை தூக்கி கொண்டுசென்றனர். அரண்மனைப்பெண்கள் அலறியழுதபடி பின்னால் ஓடிவர ரிஷபன் “பின்னால் எவரும் வரலாகாது....மன்னரைப்பார்க்க எவருக்கும் அனுமதி இல்லை...” என்று கூவினான்.

படுக்கையறைக்கு துருபதனை தூக்கிக் கொண்டுசென்று மஞ்சத்தில் படுக்கவைத்தான். அவர் தன்னுணர்வு கொண்டு நீர் வழியும் சிவந்த கண்களால் ஏறிட்டு நோக்கி “எங்கே? என் மைந்தர் எங்கே?” என்றார். “எவரும் உயிர்நீக்கவில்லை அரசே” என்றான் ரிஷபன். “ஆதுரசாலைக்கு கொண்டுசெல்லுங்கள். சீழ்கட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அமைதிகொண்டு கண்களை மூடிய கணமே அனைத்தையும் நினைவுகூர்ந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தார். கைகால்கள் உதற அவருக்கு முதல்முறையாக வலிப்பு வந்து உடல் இழுத்துக்கொண்டது.

ரிஷபன் கிரீஷ்மரை வரச்சொன்னான். கிரீஷ்மர் வந்து நாடிபற்றி நோக்கியதுமே அவருக்கு அகிபீனா கொடுக்கச் சொன்னார். அதற்குள் பத்ரர் வந்துவிட்டார். “நரம்புகள் இறுகி விட்டன. சுதிமீட்டப்பட்ட வீணைத்தந்திகளை தொட்டதுபோல இருக்கிறது” என்றார் கிரீஷ்மர். சற்றுநேரத்தில் துருபதனின் குரட்டை ஒலி கேட்கத்தொடங்கியதும் பத்ரர் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.

கிரீஷ்மர் தலைமையில் ஏழு வைத்தியர்கள் கூடி அவர் உடலை தூய்மைசெய்தனர். தோல் உரிந்து தசைதெரிந்த இடங்களில் மூலிகைத்தைலமிட்டு பச்சிலை காப்பு ஒட்டினர். வெளியே வந்த கிரீஷ்மர் “தோல் உரிந்துவிட்டது பத்ரரே... பன்னிருநாட்களாவது ஆகும் தோல் மீள்வதற்கு” என்றார். “அதுவரைக்கும் அரசர் அகிபீனத்தின் மயக்கத்திலேயே இருக்கட்டும்” என்றார். “ஆம். அதுவே உகந்தது. தோல் உரிந்த வலியை தாள இயலாது” என்றார் கிரீஷ்மர். பத்ரர் கசப்பு படிந்த புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.

கண்விழிக்கையில் துருபதனுக்கு என்னதான் ஆறுதலும் விளக்கமும் சொல்வது என்று பத்ரருக்குப்புரியவில்லை. துருபதனின் உளமறிந்த தோழர் அவர்தான். பதினெட்டுவயதில் இளம் நிமித்திகராக அரண்மனைக்கு வந்தவர். துருபதனின் இளமை முழுக்க துணையாக இருந்தவர். விழித்ததும் அவர் தேடும் முதல் முகம் அவருடையதாகவே இருக்கும். “நான் என்னசெய்வேன்? என்ன ஆறுதல் சொல்வேன்?” என்று நெஞ்சில் கைவைத்து புலம்பினார்.

“என்ன ஆறுதல்? படைகொண்டுசென்று அஸ்தினபுரியைத் தாக்குவோம். ஆம், நாம் சிறிய நாடு. நம்மை அழிப்பார்கள். மானத்துடன் அவர் கோட்டைவாயிலில் செத்துவிழுவோம்...” என்றான் ரிஷபன் “நான் சொல்வது இதையே. மன்னர் ஆணையிடவேண்டியதில்லை. அமைச்சர் ஆணையிடட்டும்” என்று கூவினான். பத்ரர் “பொறுங்கள்” என்றார். “பொறுப்பதென்ன... இதற்காக ஆயிரம் பாஞ்சாலர் உயிர்விடாவிட்டால் நம் குலம் அழிந்ததென்றே பொருள்” என்றான் ரிஷபன்.

ஆனால் பேரமைச்சரான தேவசன்மர் “மன்னன் மக்களின் நலனுக்காகவே போரிடவேண்டும். தன் வஞ்சத்துக்காக போரிடுபவன் அதமன் எனப்படுவான். பாஞ்சாலமக்கள் வாழவேண்டும். அவர்கள் இதை நினைவில் நிறுத்தட்டும். அவர்களின் வழித்தோன்றல்கள் என்றாவது இதற்கு வஞ்சம் தீர்க்கட்டும்” என்றார். “இன்று வாளாவிருப்பவர்களா நாளை வஞ்சம் தீர்க்கப்போகிறார்கள்? அமைச்சரே, கழிவிரக்கம் குடியேறிவிட்டால் பின்னர் அந்நெஞ்சங்களில் வீரம் விளையாது” என்றான் ரிஷபன். “நான் என் மக்களை கொலைக்களம் நோக்கி செலுத்தமாட்டேன்” என்றார் தேவசன்மர். சட்டென்று உடைந்து ரிஷபன் விம்மி அழுதான்.

பதினாறுநாட்கள் அகிபீனாவின் மயக்கத்தில் இருந்தார் துருபதன். அன்றுமுதல் அகிபீனா நிறுத்தப்படும் என்றும் தோல் திடமாகிவிட்டதென்றும் கிரீஷ்மர் சொன்னார். அமைச்சரும் பத்ரரும் பதற்றத்துடன் அவையில் காத்திருந்தனர். தேவசன்மர் “உண்மையான வலியை இனிமேல்தான் அளிக்கப்போகிறோம் பத்ரரே” என்றார்.

காலையில் ஒளி எழுந்தபின்னர் துருபதன் கண்விழித்தார். எழுந்ததுமே தன்னை குளிப்பாட்டும்படி ஆணையிட்டதாக அணுக்கச்சேவகன் வந்து சொன்னான். அவர்கள் எழுந்து பதற்றத்துடன் காத்து நின்றனர். சற்றுநேரத்தில் முழு அரச உடையுடன் துருபதன் மந்திரஅவைக்கு வந்தார். முகத்தில் கலக்கமோ துயரோ இருக்கவில்லை. உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்ததே ஒழிய விழிகளும் மொழியும் தெளிந்தே இருந்தன. வந்து அமர்ந்து முகமன்களைச் சொல்லி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டதுமே அன்றைய சந்திப்புகளைப்பற்றித்தான் கேட்டார். ரிஷபன் திகைத்து தேவசன்மரை நோக்கினான். தேவசன்மர் ஒருகணம் குழம்பியபின் தன்னை மீட்டுக்கொண்டு இயல்பாக பணிகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.

அன்று மதியத்திற்குள் அலுவல்களை முடித்துக்கொண்டு உணவருந்தச்சென்றார் துருபதன். மது அருந்திவிட்டு அவர் துயிலறைக்குச் சென்றதாக சேவகன் சொன்னான். மாலையில் மீண்டும் நீராடி அரங்கத்துக்கான ஆடைகளை அணிந்து வந்தார். அன்றைய நடனத்தையும் நாடகத்தையும் பார்த்தார். புலவர் ஒருவர் கொண்டுவந்த நான்கு நீண்ட செய்யுட்களைக் கேட்டு பரிசில் அளித்தார். வழக்கம்போல பின்னிரவில் மதுவருந்திவிட்டு துயிலறைக்குச் சென்றார்.

தேவசன்மரும் மருத்துவர்களும் நிமித்திகரும் கூடி பேசிக்கொண்டனர். “என்ன நிகழ்கிறது? நடிக்கிறாரா?” என்று பத்ரர் கேட்டார். “இல்லை அவர் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தேன். நடிக்கவில்லை” என்றார் மருத்துவரான தீர்க்கர். “அவர் அகத்திலிருந்து அந்நிகழ்வு முழுமையாகவே மறைந்துவிட்டது. இலைகளின் அமைப்பில் உள்ள ஒரு தனித்தன்மை போன்றது அது. எல்லா இலைகளும் அவற்றின் எல்லைவரை எடைதாங்கும். அதன்பின் எடையை சரித்து விழச்செய்துவிடும். ஆகவே எடைமிகுந்து எந்த இலையும் உதிர்வதில்லை. அதைப்போன்றதே மானுட உள்ளமும். மன்னரால் தாளமுடியாத எடைகொண்டது அந்நிகழ்ச்சி. அதை அவர் உதிர்த்துவிட்டார்.”

கிரீஷ்மர் “தீர்க்கரே, எடையை சரித்து உதிர்த்துவிட்டது உண்மை. ஆனால் அந்த எடை எப்பக்கம் விழுந்தது என்பது முதன்மையான வினா. முன்பக்கம் விழுந்தால் நாமெல்லாம் வாழும் இந்த ஜாக்ரத்தின் உலகில் அது வெடித்துச் சிதறியிருக்கும். அது விழுந்திருப்பது பின்பக்கம் ஓடும் ஸ்வப்னத்தின் உலகில் என்றால் அங்கே அது வளர்ந்துகொண்டே இருக்கும். ஜாக்ரத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஸ்வப்னத்தில் நூறுமடங்கு எடை கொள்கின்றன. ஆயிரம் மடங்கு உருசிறுக்கின்றன. அவர் நாமறிய உடைந்து சிதறவில்லை. அப்படியென்ரால் அவர் நெஞ்சில் விழுந்த அப்பாறாங்கல் சிறிய கடுகென அவர் ஸ்வப்னத்தில் எங்கோ விழுந்து கிடக்கிறது.”

“ஆம்” என்றார் தீர்க்கர் “ஆனால் நாம் செய்யக்கூடுவதொன்றுமில்லை. இப்போது நிகழ்ந்திருப்பதை ஆயுர்வேதம் ஆஸ்லேஷணம் என்கிறது. அனைத்தும் உள்ளே செறிவாகின்றன. அவை வெளிப்படும் கணம் வரவேண்டும். அதை நாங்கள் விஸ்லேஷணம் என்கிறோம். அதற்காகக் காத்திருப்போம். ஸ்வப்னத்தில் உள்ளவை இலைநுனியில் ததும்பும் நீர்த்துளிபோல திரண்டுகொண்டே இருப்பவை என்கிறார்கள். ஒருகட்டத்தில் அவை உதிர்ந்து சிதறவேண்டும். மேலும் சிலநாட்களாகலாம்.” கிரீஷ்மர் “ஸ்வப்னத்தில் இருந்து ஒரு கூழாங்கல் விழுந்தால் ஜாக்ரத்தின் மாளிகைகள் நொறுங்கிச்சரியும் என்கிறார்கள்” என்றார்.

ஆனால் துருபதன் அப்படியேதான் இருந்தார். அந்த ஒருநாள் அவரது எண்ணங்களில் இருந்து உதிர்ந்துவிட்டிருந்தது. இயல்பான அன்றாட அலுவல்களும் கேளிக்கைகளுமாக வாழ்க்கை நீடித்தது. நடுவே உத்தரபாஞ்சாலத்தை அஸ்தினபுரியின் படைகளுடன் வந்து அஸ்வத்தாமன் கைப்பற்றி சத்ராவதியில் முடிசூட்டிக்கொண்டான். அதற்கு அஸ்தினபுரியின் அனைத்து நட்பு மற்றும் துணைநாடுகளும் தூதர்களை அனுப்பி வாழ்த்து தெரிவித்தன. தட்சிணபாஞ்சாலத்தில் இருந்து துருபதனின் மைந்தர்கள் சித்திரகேதுவும் சுமித்திரனும் விழாவுக்குச் சென்றனர். பிரியதர்சனும் துவஜசேனனும் களப்புண் ஆறி ஆதுரசாலையில் இருந்து மீளவில்லை. பாஞ்சாலம் பிளவுண்ட செய்தியை அமைச்சர்கள் துருபதனிடம் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஒவ்வொருநாளும் துருபதர் மெலிந்தபடியே வருவதை மருத்துவர் கண்டனர். அவர் உணவுண்பதில்லை என்பதை சேவகர்கள் சொன்னார்கள். பின்னர் அவரது தேவியர் அவர் உறங்குவதுமில்லை என்றனர். அவரது பேச்சும் நடத்தையும் மாறத்தொடங்கின. கைகளில் அந்த ஓயாத அசைவும் இதழ்களில் ஒலியற்ற சொல்லும் குடியேறியது. அவரது உடல் பதுங்கியிருக்கும் காட்டுமிருகத்தைப்போல எந்நேரமும் எச்சரிக்கைகொண்டு சிலிர்த்து நின்றது. “அணங்கு கூடியவர் போலிருக்கிறார்” என்றார் எல்லைக்காவல் அமைச்சரான சப்தமர். “சப்தமரே, அணங்காவது ஒன்றாவது. அவரது நோய் என்னவென்று நாம் அறிவோம்” என்றார் ரிஷபர்.

ஆனால் அவர் மற்றபடி தன்னினைவுடன்தான் இருந்தார். அரசப்பணிகளை முழுமையான விழிப்புணர்வுடன் ஆற்றினார். செய்திகளை நினைவில் அடுக்கி மீட்டெடுத்தார். அனைத்துக் கோணங்களிலும் சிந்தித்து முடிவுகளை எடுத்தார். அவரது நிலைபற்றி அவரிடம் சொல்லவேண்டியதில்லை என்றனர் மருத்துவர். “நாம் காத்திருப்போம், வேறுவழியில்லை” என்றார் கிரீஷ்மர். “எதற்காகக் காத்திருக்கிறோம்? எந்தை மடிவதற்காகவா?” என்று சித்ரகேது கூவினான். “இளவரசே, உடலில் பட்ட நோய்க்கு மருந்துண்டு. உளம் அடைந்த நோய்க்கும் மருந்துண்டு. ஆன்மாவில் பட்ட புண்ணுக்கு விதியே மருந்தாகி வரவேண்டும். அது இறப்பென்றால் அதுவும் விதியே” என்றார் நிமித்திகர் தலைவர் ஹரிதர்.

ஏதோ ஒன்று நிகழுமென அனைவரும் காத்திருந்தனர். எங்கோ ஒரு இலை உதிரும். அந்த ஒலியில் எங்கோ ஒரு மலைச்சிகரம் இடிந்து சரியும். ஆனால் ஆறுமாதகாலம் ஒவ்வொரு நாளும் மறுநாளே என நீண்டது. அஸ்வத்தாமன் சத்ராவதியில் நிலைகொண்டுவிட்டதாக செய்திகள் வந்தன. அங்கிருந்த பாஞ்சாலக்குடிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளுடன் எல்லை தாண்டி தட்சிணபாஞ்சாலத்துக்கு வந்தனர். ஆனால் அஸ்வத்தாமன் அஸ்தினபுரியின் வெளியே வடபுலக்காட்டில் நெருக்கியடித்து வாழ்ந்திருந்த காந்தார மலைக்குடிகளை கொண்டுவந்து உத்தர பாஞ்சாலத்தில் குடிவைத்தான்.

பாலைநிலமக்கள் புராணகங்கையின் காட்டில் வாழ நன்றாகவே பழகிவிட்டிருந்தனர். அவர்களுக்கு வேட்டைநிலமும் மேய்ச்சல்நிலங்களும் வழங்கப்பட்டன. சத்ராவதிக்கு வணிகத்திற்கு வரும் வணிகர்களுக்கு பத்து வருடங்களுக்கு முழுமையாகவே சுங்கவிலக்கு அளிக்கப்பட்டது. கருவூலத்துக்கான செல்வத்தை காந்தார இளவரசரே அளித்துவிட்டதாக சொன்னார்கள். சிலமாதங்களிலேயே சத்ராவதி வணிகர்படகுகளால் நிறைந்தது. சித்ரகேது “அவன் ஆட்சி செய்யத்தெரிந்தவன்” என்றான். அவன் தம்பி சுமித்ரன் “மூத்தவரே, அவர் ஆளவில்லை. நாடாள்வது அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர்” என்றான்.

நாட்கள் செல்லச்செல்ல துருபதனின் நினைவு பிறழத் தொடங்கியது. பிறர் சொல்லும் சொற்கள் அவரை சென்றடையவில்லை. அவர் சொல்லிக்கொண்டிருந்த ஓசையற்ற சொல்லே அவர் சித்தத்துக்கான வழியை அடைத்துவிட்டதென்று தோன்றியது. அரியணையில் நிழல்போல அமர்ந்து மெல்லிய கைகால்களை சுருட்டி ஒடுக்கிக்கொண்டு சரியும் இமைகளுடன் துயில்கிறாரா என்ற ஐயமெழும்படி அமர்ந்திருந்தார். இன்னொருவரால் எழுப்பப் படாதவரை எங்கு அமர்ந்திருக்கிறாரோ அங்கேயே நாளும் இரவும் இருந்துகொண்டிருந்தார். உதிரிச்சொற்களில் பேசினார். அப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதை அச்சொற்கள் வழியாக கணிக்கமுடியவில்லை.

அவர் உடல் உருகத்தொடங்கியது. சேற்றுப்பரப்பில் மூழ்கி மறையும் மரம்போல அவர் தெரிவதாக பத்ரர் நினைத்தார். ஒவ்வொருநாளும் அவர் மேலும் ஆழத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது பின்னும் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு அருகே அமர்ந்திருந்தார் பத்ரர். தன் பார்வையும் குரல்களும் அரசருக்குள் செல்லவில்லை என்றாலும் அத்தொடுகையை உள்ளே எங்கோ இருந்து அவரது ஆன்மா அறிகிறது என்று எண்ணிக்கொண்டார். என்ன சொல் அது என்று அவ்வுதடுகளை நோக்கிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் ஒரு சொல் எனத் தோன்றியது. ஒரே சொல்லே என்றும் தோன்றியது. ஒருவேளை பாதாளதெய்வங்களில் ஒன்றுதான் வந்து குடியேறிவிட்டதா? இருண்ட ஆழங்களில் வாழும் மொழியின் சொல்லா அது?

கண்ணெதிரே மட்கிக்கொண்டிருந்த துருபதனைக் கண்டு மைந்தர்கள் தென்திசை மருத்துவர்களையும் தாம்ரலிப்தியில் இருந்து யவன மருத்துவர்களையும் வரவழைத்து நோக்கினர். அவர்கள் அவரது உடலில் எந்தக் குறையும் இல்லை, வாதமும் பித்தமும் கபமும் சமநிலையை பேணுகின்றன என்றனர். நிமித்திகர்களை வரவழைத்து குறிதேர்ந்தனர். அவர்கள் முன்வினையும் நிகழ்வினையும் வருவினையும் தெளிந்துள்ளன என்றனர். பூசைகள் செய்யப்பட்டன. நோன்புகள் ஆற்றப்பட்டன. ஒவ்வொரு கணமும் அவர் இறந்துகொண்டிருந்தார்.

ரிஷ்யசிருங்கத்தின் அடிவாரத்தில் கணாதரின் குருகுலத்தில் துர்வாசர் வந்திருப்பதாக பத்ரர் அறிந்தார். துருபதனை துர்வாசரிடம் அழைத்துச்சென்றாலென்ன என்று அவையில் சொன்னார். ஆனால் உத்தரபாஞ்சாலம் வழியாக செல்லவேண்டும் என்று சொல்லி சித்ரகேது தயங்கினான். நான் அனுமதி கேட்கிறேன் என்றார் அமைச்சர் தேவசன்மர். கொந்தளிப்புடன் “அமைச்சரே, எந்தை மீண்டும் அவமதிக்கப்பட்டாரென்றால் அதன்பின்னர் பாஞ்சாலம் அழிவதைக்கூட நான் எண்ணப்போவதில்லை” என்றான் சித்ரகேது. பத்ரர் “பயணத்துக்கான வழியை எதிரிக்கும் அளிக்க வேண்டுமென்பதே முறை” என்றார். “ஆம், ஆனால் முறைமைகள் இன்று பாரதவர்ஷத்தில் வாழ்கின்றனவா என்ன? பீஷ்ம பிதாமகரின் கண்முன்னால் நிகழ்ந்த அறக்கொலையை நாம் கண்டோமே?” என்றான் சித்ரகேது.

தேவசன்மரின் ஓலைக்கு பதிலாக உத்தர பாஞ்சாலத்தில் இருந்து அமைச்சர் பூர்ணர் தலைமையில் ஒரு தூதுக்குழுவே வந்தது. துருபதனை அனைத்து முறைமைகளுடனும் வரவேற்று அழைத்துச்செல்லவேண்டுமென அஸ்வத்தாமன் ஆணையிட்டிருப்பதாக சொன்னார்கள். “துருபத மாமன்னரை பணிந்து சத்ராவதியின் அரசன் எழுதிக்கொண்ட திருமுகம்” எனறு தொடங்கிய ஓலையைக் கண்டு சித்ரகேது “இதில் ஏதேனும் சூதிருக்குமோ அமைச்சரே?” என்றான். தேவசன்மர் “நானும் அவ்வாறே ஐயுறுகிறேன்” என்றார். பத்ரர் “அவ்வாறு நிகழுமென நான் எண்ணவில்லை. இது அவர்கள் தங்களின் நேர்மையை அறிவித்துக்கொள்ளும் ஒரு வழிமுறை மட்டுமே” என்றார்.

காம்பில்யத்தில் இருந்து கிளம்பும்போது எங்கே செல்கிறோம் என்று துருபதன் அறிந்திருக்கவில்லை. அவரை பல்லக்கில் வைத்து கங்கைக்கு கொண்டுசென்று படகில் ஏற்றியபோது அகிபீனாவின் மயக்கத்தில் இருந்தார். கங்கைவழியாக படகில் வடபுலம் நோக்கிச் சென்றபோது அமரத்தில் அமர்ந்து நீர்வெளியை வெறித்துக்கொண்டு அசைவிழந்து அமர்ந்திருந்தார். மெலிவு கூடிக்கூடி கன்ன எலும்புகள் தோலைக்கிழிப்பவை போல உந்தி ஒளியுடன் தெரிந்தன. கைகளிலும் விரல்களிலும் முட்டுகள் பெரிதாக வீங்கியவை போலிருந்தன. தான் இருக்குமிடத்தையும் அறியாதவராகிவிட்டிருந்தார் என்று பத்ரருக்கு தோன்றியது.

மறுநாள் சத்ராவதியில் படகுகள் அணைந்தபோது கோட்டையில் பெருமுரசம் முழங்கியது. தட்சிணபாஞ்சாலத்தின் கொடி கோட்டைக்கொடிமரம் மீது ஏறியது. அமைச்சர்குழாமுடன் அஸ்வத்தாமனே சத்ரமும் சாமரமுமாக வந்திருந்தான். அதை எதிர்பாராத காம்பில்யத்தின் வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபடி தடுமாறினர்.

அஸ்தினபுரியில் இருந்து வந்திருந்த அமைச்சர்களும் வீரர்களும் முன்னரே துருபதன் நிலையைப்பற்றியும் அவரது வருகையின் நோக்கம் பற்றியும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் துருபதனின் அந்தத் தோற்றத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அவரைக் கண்டதும் வினாவுடன் அஸ்வத்தாமனின் புருவங்கள் சுருங்கின. அருகே நின்றிருந்த அமைச்சரிடம் அவன் ஏதோ கேட்பதும் அமைச்சர் பதிலிறுப்பதும் தெரிந்தது. திகைப்புண்ட அஸ்வத்தாமனின் வாய் திறந்தது. கைகள் அறியாமல் கூப்பி மார்பில் படிந்தன.

கூப்பிய கைகளுடன் வந்து மணிமுடி தாழ்த்தி வணங்கிய அஸ்வத்தாமனை யாரென்றே துருபதன் அறிந்திருக்கவில்லை. திகைத்த விழிகளுடன் நோக்கியபின் திரும்பி பத்ரரை நோக்கினார். “அரசே வாழ்த்துங்கள்” என்று பத்ரர் சொன்னதும் “ம்?” என்றார். “அரசே, வாழ்த்துங்கள்...” என்றார் பத்ரர். துருபதன் கைதூக்கி உரக்க “முடியும் கொடியும் வாழ்க! மூதாதையர் பெருமைகொள்க!” என்றார். அதன்பின் மெலிவு காரணமாக ஈறுகளிலிருந்து எழுந்து தெரிந்த பெரிய பற்கள் தோன்ற புன்னகைசெய்தார்.

அஸ்வத்தாமன் அக்கணத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்தான். கண்ணீர்பெருக மீண்டும் அவர் பாதங்களைத் தொட்டு “இப்பிறவி முழுமையும் இருக்கிறது எனக்கு அரசே” என்றான். அவன் என்ன சொன்னானென்று பத்ரருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அரண்மனை நோக்கிச்செல்கையில் அஸ்வத்தாமன் தலைகுனிந்து முகம்பொத்தி ரதத்தில் அமர்ந்திருப்பதை பத்ரர் கண்டார். அஸ்தினபுரியின் அமைச்சர்களும் சிலர் கண்ணீருடன் இருந்தனர். பத்ரர் நீள்மூச்சுடன் “ஆன்மாவில் சுமைகளை தூக்கி வைத்துக்கொள்வதுதான் எத்தனை எளிது” என்று சொல்லிக்கொண்டார்.

பகுதி நான்கு : அனல்விதை - 2

சத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான். பத்ரர் நாள்முழுக்க அஸ்வத்தாமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவன் கிளம்பிச்செல்லும்போதிருந்த அந்த முகத்தை அவரால் தன் எண்ணங்களிலிருந்து விலக்கவே முடியவில்லை.

கிளம்பிய அன்று இருள் விலகிய காலையில் அவர்கள் தங்கியிருந்த அரண்மனையின் முற்றத்தில் குதிரைகளும் கழுதைகளும் ஒருங்கிக்கொண்டிருந்தபோது அஸ்வத்தாமனும் அமைச்சர்களும் வழியனுப்பும்பொருட்டு வந்திருந்தனர். மங்கலமுரசின் ஒலி கேட்டதும் பத்ரர் சால்வையை சரிசெய்துகொண்டு அஸ்வத்தாமனை வரவேற்பதற்காக ஓடிச்சென்று முற்றத்தின் முகப்பில் நின்றார். அப்பால் பெரிய அரண்மனையில் இருந்து அமைச்சர்களும் தளபதிகளும் சூழ வெண்குடைக்கீழ் மெல்ல நடந்துவந்த அஸ்வத்தாமனைக் கண்டு பத்ரர் திடுக்கிட்டார். அவன் மெலிந்து தோல்வெளுத்து இருள்சூழ்ந்த கண்களுடன் தெரிந்தான்.

பத்ரர் கைகூப்பி அருகே சென்றார். என்ன சொல்வதென்று அவர் அகம் ஒருபக்கம் திகைக்க மறுபக்கம் அவரே சொல்லிக்கொண்டிருந்தார் “அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

அஸ்வத்தாமன் தலைகுனிந்து பெருமூச்சுவிட்டு “நான் அனைத்தையும் அறிவேன் பத்ரரே. ஆனால் அத்தனை எளிதல்ல அது... நான் இனி என்று நிறைவான துயிலையும் சுவையான உணவையும் அறிவேன் என்றே தெரியவில்லை” என்றான். “உள்ளத்தை வென்றவனே ராஜயோகி எனப்படுகிறான். அரசப்பொறுப்பு என்பது எந்நிலையிலும் ஒரு யோகமே” என்றார் பத்ரர். “ஆம், ஆனால் மானுட அறத்தை வெல்வது யோகம் அல்ல. அதை யோகமெனக் கொள்ள நான் மதுராபுரியின் கம்சனும் அல்ல” என்றான் அஸ்வத்தாமன்.

பத்ரர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். பின்னால் சேவகன் வந்து நின்ற ஒலிகேட்டு திரும்பினார். “அரசர் வருகிறார்” என்றான் சேவகன். பத்ரர் அவனிடம் தலையசைத்துவிட்டு திரும்பி அஸ்வத்தாமனிடம் “களத்தில் இறப்பு நிகழ்கிறது அரசே. பின் ஆதுரசாலையிலும் இறப்பு நிகழ்கிறது” என்றபின் துருபதன் வரும் திசையைச் சுட்டி “இந்த இறப்பு சற்று மெல்ல நிகழ்கிறது என்று கொள்ளுங்கள் அரசே. களத்தில் எதிரியைக் கொன்றமைக்காக வீரன் வருந்தவேண்டியதில்லை” என்றார்.

அஸ்வத்தாமன் தலையை அசைத்து “சொற்களால் என்னை ஆற்றமுடியாது நிமித்திகரே. வீரன் படைக்கலத்தால் கொன்றவர்கள் விண்ணுலகு செல்வார்கள். அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல நீறும் நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்...” என்று சொல்லி நெஞ்சு விம்ம நிறுத்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “எவராக இருந்தாலும்... இது...” என்றபின் மூச்சை இழுத்துவிட்டு நோக்கைத் திருப்பி “நான் பாஞ்சால அரசரைக்கூட எண்ணவில்லை. அறம் மீறி இச்செயலைச் செய்தவன், அவன் என் எதிரி, ஆயினும் இன்று அவனுக்காக வருந்துகிறேன். என் தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக இதை அவன் செய்தான். அவன் உள்ளம் அத்தகையது. ஒன்றை மட்டுமே நாடும் அம்புதான் அவன். எய்த வில் எந்தை. ஆனால்...”

பத்ரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அஸ்வத்தாமன் “பத்ரரே, நான் நூல்களை நோக்கினேன். அவை சொல்வது ஒன்றே. இச்செயலுக்காக என்றோ ஒருநாள் அவன் குருதியில் முளைத்த வழித்தோன்றல்கள் அறமிலாமல் கொல்லப்படுவார்கள். நூறாயிரம் முறை நீரள்ளி விட்டாலும் நிறையாமல் ஃபுவர்லோகத்தில் தவித்தலைவார்கள். மண்ணில் அவன் இரவும்பகலும் அதை எண்ணி எண்ணி நீறி எரியப்போகிறான். அக்கண்ணீர் உலராமல்தான் விண்ணகம் ஏகுவான்...” என்றான். “கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது.”

பத்ரர் “அரசே, நான் எளிய நிமித்திகன். விதியை வேடிக்கை பார்ப்பவன். நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அஸ்வத்தாமன் “நான் இன்றுவந்தது அதற்காகத்தான் பத்ரரே. நான் மன்னரின் பாதங்களைப் பணிகிறேன். அவர் என்னை தீச்சொல்லிடட்டும். என் தலைமுறைகள் அந்த நெருப்பில் உருகட்டும். விதிமூலம் என் கைக்கு வந்த இந்நகர் மீதும் என் குடிகள் மீதும் அவரது பழி விழலாகாது” என்றான். அவனது விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டு பத்ரர் பெருமூச்சுவிட்டார்.

பரிவட்டச்சேவகன் சங்கு ஊத முரசுகள் மெல்ல முழங்கின. உள்ளிருந்து இரு சேவகர் இருபக்கமும் கைகளைக் கோர்த்து தோள்தாங்க ஆலமர விழுதுக்கொடிகள் போல தரைதொட்டு ஆடிய தளர்ந்த கால்களுடன் துருபதன் இடைநாழி வழியாக வந்தார். விழிகள் எங்கோ நோக்கி வெறிக்க உதடுகள் விரைந்து உச்சரித்துக்கொண்டிருந்தன. அஸ்வத்தாமன் அவரை நோக்கியதுமே கண்கள் கலங்கி கைகூப்பினான்.

துருபதன் மலையேறுவதற்காக பெரிய கருங்குதிரை ஒன்றின்மேல் மூங்கிலால் ஆன கூடைப்பல்லக்கு கட்டப்பட்டிருந்தது. அதில் மெத்தையும் தோல்வார் பட்டைகளும் இருந்தன. சேவகர் அவரை அதில் அமரச்செய்து பட்டைகளால் கட்டினர். அவர் ஒரு பட்டையை இது என்ன என்பதுபோல இழுத்து நோக்கியபின் நெடுமூச்சுடன் கைகளை மார்புடன் சேர்த்துக்கொண்டார். சேவகர்கள் அவரது கால்களை கம்பளிகளால் போர்த்தி மூடினர். அவருக்கான இரண்டாவது குதிரை அருகே நின்று சிறிய செவிகளை முன்கூர்ந்து அவர்கள் செய்வதை நோக்கிக்கொண்டிருந்தது.

அஸ்வத்தாமன் கைகளைக்கூப்பியபடி துருபதனின் அருகே செல்ல பத்ரர் சற்று பதறியவராக அவனுக்குப் பின்னால் சென்றார். மெல்லிய குரலில் “அரசே, அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதை நினைவுறுத்தவேண்டாம். நினைவு மீளும் கணத்தின் அதிர்ச்சியில் அவர் உயிர்துறக்கவும் கூடும்” என்றார். அஸ்வத்தாமன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அருகே நெருங்க நெருங்க அவன் உடலும் துருபதன் உடல்போலவே நடுங்கத் தொடங்கியது. குதிரையருகே சென்று மூங்கில் பல்லக்கின் விளிம்பைப் பற்றிய கை நடுங்கியது.

“அரசே, நான் அஸ்வத்தாமன். என் தந்தை துரோணர்” என்றான். “உங்களை அவமதித்து ஆன்மாவை கொன்றவர் என் தந்தை. அவர் மேல் நீங்கள் விடுக்கும் அனைத்து தீச்சொற்களுக்கும் நானே உரிமையானவன்” என்றபின் பல்லக்கில் நீட்டப்பட்டிருந்த துருபதனின் கால்கள் மேல் தன் தலையை வைத்து “என் தலை உங்கள் காலடியில் உள்ளது அரசே. அனைத்துப்பழிகளையும் நானே ஏற்கிறேன்” என்றான்.

துருபதன் புரியாதவர் போல அவனை நோக்கிவிட்டு பத்ரரை நோக்கினார். பத்ரர் மூச்சை மெல்ல இழுத்து விட்டார். இதுதான் அத்தருணம். ததும்பித் துளித்து நிற்கும் அது கனத்து உதிர்ந்து விழுந்து வெடித்துச் சிதறுவதென்றால் அதுவே நிகழட்டும். ஊழ் அந்தத் தருணத்தை உருவாக்கியிருக்கிறதென்றே பொருள். வாழ்வெனும் வதையில் இருந்து இவ்வுயிர் விலகுமெனில் அதுவே நிகழ்க. அதுவே அவரது விடுதலையாகக்கூட இருக்கலாம். வாழ்க்கையைவிட இறப்பு இனிதாகும் தருணங்கள். பத்ரர் பெருமூச்சு விட்டு முன்னால் சென்றார்.

“அரசே, இவர்தான் அஸ்வத்தாமன். துரோணரின் மைந்தர்” என்றார். அச்சொற்களை அவர் தேவைக்குமேல் உரத்து கூவிவிட்டதாகப் பட்டது. வியர்த்த கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டார். “யார்?” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்... துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்?” என்றார். “துரோணரின் மைந்தர். அக்னிவேசகுருகுலத்தில் தங்கள் தோழர் துரோணரின் ஒரே மைந்தர்... சத்ராவதியின் அரசர்” என்றார்.

அக்னிவேசகுருகுலம் என்ற சொல் துருபதனைத் தொடுவதை உடலிலேயே பார்க்கமுடிந்தது. முகம் சுருக்கங்கள் இழுபட விரிந்தது. திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “ஆம், முதல்முறையாக உன்னைப்பார்க்கிறேன்” என்றார். மேலும் இதழ்கள் விரிய திரும்பி பத்ரரிடம் “துரோணர் கரியவர். சிறிய உடல்கொண்டவர். அந்தத் தன்னுணர்வும் அவருக்கு உண்டு. இவர் பொன்னுடல் கொண்டிருக்கிறார். அழகிய தோள்கள் கொண்டிருக்கிறார்...” துருபதன் கைகளை நீட்டி அஸ்வத்தாமனின் தோள்களைத் தொட்டார். மட்கிய சுள்ளிகள் போன்ற விரல்கள் தோளில் வழுக்கி முழங்கை மடிப்பில் சரிந்தன. “அழகன்... உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.

அஸ்வத்தாமன் “நான் வேண்டுவது வாழ்த்து அல்ல அரசே. தங்கள் தீச்சொல்லை” என்றான். துருபதனின் கழுத்துத் தசைகள் பெரும் எடையைத் தூக்குவதுபோல இறுகின. அடைத்த குரலில் “தீச்சொல்லா?” என்றார். “ஆம் அரசே” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்?” என்றார் துருபதன். “என் தந்தை தங்களை அவமதித்தார். தன் மாணவனைக்கொண்டு தேர்க்காலில் கட்டி இழுக்கச்செய்தார். தங்கள் தலையை தன் காலடியில் வைத்தார். உங்கள் நாட்டைக் கிழித்து பாதியை உங்கள் முகத்தில் வீசினார்” பற்கள் கிட்டித்திருக்க அஸ்வத்தாமன் தாழ்ந்து மந்தணம்போல ஆன குரலில் சொன்னான். “அந்தப் பழியை முழுமையாக நான் சுமக்கக் காத்திருக்கிறேன். இந்த நாட்டையும் மணிமுடியையும் கூட துறக்கிறேன். தாங்கள் ஆணையிடும் எந்த நிகர்ச்செயலையும் செய்கிறேன்.”

துருபதன் நடுங்கும் கைகளால் தன் கன்னங்களை அழுத்திக்கொண்டார். அவர் வழியாக கொந்தளித்துக் கடந்துசெல்லும் பெருநதியை பத்ரர் உணர்ந்தார். சற்றுநேரம் நடுநடுங்கியபடி துருபதன் அமர்ந்திருந்தார். பின்னர் கைகளால் தலையைப்பிடித்துக்கொண்டு “ஆம்... அப்போது... முன்பு” என்றார். பெருமூச்சு விட்டு “பத்ரரே” என்றார். “அரசே” என்றார் பத்ரர். துருபதன் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் வாசனை எழுந்தது. பத்ரர் உணர்வதற்குள் அதை சேவகன் உணர்ந்தான். கண்களால் மெல்ல அதை அவன் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். மெத்தையை நனைத்து குதிரையின் விலாவில் சிறுநீர் வழிந்தது.

துருபதனின் இடக்காலும் கையும் வலிப்பு கொண்டன. வாய்கோணலாகியது. அவர் விழப்போகிறார் என்று பத்ரர் நினைத்தார். ஆனால் அவர் இருகைகளாலும் பல்லக்கின் விளிம்பைப்பற்றியபடி முன்னால் குனிந்து “ஆம், அதெல்லாம் நடந்தது... அப்போது” என்றார். “என்னை அவமதித்தார்கள். நான் அழுதுகொண்டிருந்தேன்... ஆனால் அதன்பின்னர்..." திரும்பி பத்ரரிடம் “பத்ரரே, காம்பில்யத்தை இப்போது ஆள்வது யார்?” என்றார்.

“தங்கள் மைந்தர் சித்ரகேது...” என்றார் பத்ரர். அரசரின் அந்தச் சமநிலை அவருக்கு பெருவியப்பை அளித்தது. “ஆம், அவன் ஆள்வான்” என்றார் துருபதன். திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “நீ ஆள்வது சத்ராவதியை அல்லவா?” என்றார். “ஆம் அரசே...” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று...” என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது... முன்பு... நீ அங்கே இருந்தாயா?” என்றார்.

“ஆம் அரசே இருந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “நீ சிறுவன். அங்கெல்லாம் உன்னை ஏன் கொண்டுவருகிறார் உன் தந்தை?” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காதுகளுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே!” பத்ரர் “நாம் சென்றுவிடுவோம் அரசே” என்றபின் அஸ்வத்தாமனிடம் விலகும்படி கண்களைக் காட்டினார். அஸ்வத்தாமன் கைகளைக் கூப்பியபடி பின்னகர குதிரை ஒரு அடி முன்வைத்தது.

குதிரை காலெடுத்துவைத்த அதிர்வில் சற்றே மீண்டவர் போல “நீ துரோணரின் மைந்தன் அல்லவா?” என்று துருபதன் கைநீட்டினார். “நீ என் மைந்தனுக்கு நிகரானவன்” என்று சொல்லி அருகே வந்த அஸ்வத்தாமனின் தோள்மேல் மீண்டும் தன் கரத்தை வைத்தார். ”அழகன்... நல்ல தோள்களைக் கொண்டவன்.” புதியதாக கண்டதுபோல முகம் மலர “நோயில் இருக்கையில் மைந்தரின் வலுவான தோள்களைக் காண்பது நிறைவளிக்கிறது” என்றார். அஸ்வத்தாமன் விசும்பியபடி மீண்டும் துருபதன் கால்களை பற்றிக்கொண்டான். “அரசே, நான் சொல்வதற்கேதுமில்லை. என் ஆன்மாவை உணருங்கள். எனக்குரிய தண்டனையை அளித்து என்னை வாழச்செய்யுங்கள்."

பலமுறை வாயைத் திறந்தபின் மெல்லிய குரலில் துருபதன் சொன்னார் “மைந்தா, எந்தத் தந்தையும் மைந்தர்கள்மேல் தீச்சொல்லிடுவதில்லை. என் வாயால் நீ வெற்றியும் புகழும் நிறைவும் கொண்டு நீடூழி வாழ்கவென்று மட்டுமே சொல்லமுடியும்... அச்சொற்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.” அஸ்வத்தாமனின் தலைமேல் கைகளை வைத்தபின் செல்லலாம் என்று கையசைத்தார். பத்ரர் மேலாடையால் முகத்தைத் துடைத்தபின் திரும்பி கைகாட்ட குதிரை முன்னகர்ந்தது. தொழுத கையுடன் அஸ்வத்தாமன் பின்னகர்ந்தான்.

துருபதன் அப்போதுதான் அவரது உடலை உணர்ந்தார். “பத்ரரே” என்றார். பத்ரர் செல்வதற்கு முன்னரே சேவகன் சென்று புரவியை அப்பால் கொண்டுசென்று அவரது ஆடைகளை மாற்றினான். முரசுகள் ஒலித்து வழியனுப்ப அவர்கள் கிளம்பினர். சத்ராவதியை ஒட்டியே மலைப்பாதை தொடங்கியது. குளம்புகளும் குறடுகளும் எழுப்பிய ஒலி அன்றி வேறில்லாமல் அவர்கள் சென்றனர். துருபதன் வழிநெடுக தலைகுனிந்து தன்னுள் அமர்ந்திருந்தார். அவரை நிமிர்ந்து நோக்க அஞ்சி பத்ரர் பின்னால் வந்தார். ஒருமுறை சாலைவளைவில் அவர் முகத்தை நோக்கியபோது அவர் உள்ளம் அச்சம் கொண்டது. வெளுத்து சடலத்தின் முகம் போலிருந்தது அது. அது ஒரு சவ ஊர்வலம் என்ற எண்ணம் வந்ததுமே பத்ரர் அதை அழித்தார்.

நான்குநாள்பயணத்தில் ஒருமுறைகூட துருபதன் பேசவில்லை. காற்றைப்பின்னிக்கொண்டிருந்த கைகளின் விரைவு கூடிக்கூடி வந்தது. உதடுகளில் அச்சொல் பிதுங்கி நசுங்கியது. இல்லை இல்லை என தலையை ஓயாமல் அசைத்துக்கொண்டிருந்தார். அத்துடன் அவ்வப்போது தன்னிச்சையாக குதிரைமேலேயே சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். பலமுறை அவரை உடைமாற்றி தூய்மைசெய்யவேண்டியிருந்தது. அதை அவர் உணர்கிறாரா, நாணுகிறாரா என்று பத்ரர் நோக்கினார். அவர் தன்னை ஒரு பாவையாக ஆக்கி சேவகன் கையில் அளித்துவிட்டிருந்தார்.

கங்கைக்கரையோரமாகவே அவர்கள் பயணம்செய்தனர். மலைப்பொருட்கள் திரட்டும் வேடர்களால் அமைக்கப்பட்ட கழுதைப்பாதை அது. உருளைக்கற்களும் வேர்களும் மறித்த ஒற்றைச்சரடில் வரிசையாக குதிரைகளும் கழுதைகளும் வீரர்களும் சென்றனர். வழிகாட்டி அழைத்துச்சென்ற காவலன் “அங்கே கங்கை ரிஷ்யசிருங்க மலையிறங்கி சமநிலத்தைத் தொடும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. அங்குதான் துர்வாசர் தங்கியிருக்கும் குருகுலம்” என்றான். பத்ரர் “குளிருமா?” என்றார். “ஆம் நிமித்திகரே. மலையிறங்கி வரும் காற்று இமயப்பனிமலைகளின் மூச்சு என்பார்கள்” என்றான் சேவகன்.

கணாதரின் குருகுலம் கங்கையின் கரையில் இருந்தது. அங்கே கங்கை உருளைப்பாறைகள் நடுவே சீறிப்பெருகி வந்து வெண்மயிலின் தோகை போல நுரைவெளியாக விரிந்தது. நீரோட்டம் வழியாக மலையிறங்கி வந்த வெண்ணிறமான உருளைக்கற்கள் பரவிய பரப்பில் நுரையும் கலக்க பனிப்பரப்பு போல ஒளியுடன் விழிகளை நிறைத்தது கங்கை. நூற்றுக்கணக்கான புலிகள் சேர்ந்து உறுமியதுபோல அங்கே நீரின் ஓசை நிறைந்திருந்தது. நெடுந்தொலைவிலேயே அவ்வொலி கேட்கத்தொடங்கியது. சேவகன் “கங்கையின் நகைப்பு” என்றான். பத்ரர் சற்று நேரத்திலேயே சாலமரங்களுக்கு அப்பால் வெண்ணிற ஒளியைக் கண்டார்.

சாலவனம் என்னும் சோலைக்குள் இருந்தது கணாதரின் குருகுலம். குருகுலத்துக்கான வழியை சுட்டும் காவிநிறக்கொடி தொலைவிலேயே தெரிந்தது. குருகுலத்தை அண்டிவாழும் மைனாக்கள் அங்கே ஒலித்த வேதநாதத்தை தாங்களும் கற்றுக்கொண்டு கிளைகள்தோறும் பறந்து கூவிக்கொண்டிருந்தன. மாலைவேளையில் பிரம்மசாரிகள் மேய்ப்பதற்குக் கொண்டுசென்ற பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு குருகுலத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சேவகன் முன்னால் சென்று துருபதனின் வருகையை தெரிவித்தான். பிரம்மசாரிகளில் ஒருவன் வந்து “பாஞ்சால மன்னருக்கு நல்வரவு. குருநாதரும் மூத்தமுனிவரும் இருக்கிறார்கள்” என்றான்.

குருகுலத்துக்குடிலில் அவர்கள் தங்கி இளைப்பாறினார்கள். பத்ரர் துருபதனின் சேவகனிடம் “அரசருக்கு இடையில் தோல்பையை கட்டிவைத்து சபைக்குக் கொண்டுவா” என்றார். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவன் “ஆம்” என்றான். பத்ரர் அவன் பிழையாக புரிந்துகொண்டுவிட்டானோ என்ற எண்ணத்தை அடைந்து “அது குழந்தைகளின் இயல்பு... நம் பரிவுக்காக அவை அவ்வாறு செய்யும். அரசரும் இப்போது குழந்தைபோலத்தான் இருக்கிறார்” என்றார். சேவகன் அதற்கும் உணர்ச்சியின்றி “ஆம்” என்றான்.

அந்தி இருட்டியபோது குருகுலத்தின் வேள்விச்சாலையில் வேதசபை கூடியது. துருபதனை புத்தாடை அணிவித்து தோள்களில் ஏற்றிக்கொண்டுசென்று வேதசபையில் அமரச்செய்தனர். புலித்தோலிடப்பட்ட தேக்குமர மணைமேல் அவர் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். வைதிகர்கள் வேள்விக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தனர். கணாதரும் மாணவர்களும் வந்து அமர்ந்ததும் ஹோதாக்கள் அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பெடுத்து எரிகுளத்தில் நெருப்பை எழுப்பினர். இரு மாணவர்கள் இருபக்கமும் தோள்களைத் தாங்கி வழிநடத்த துர்வாசர் மெலிந்த கால்களை மெல்ல எடுத்து நடந்து வந்து மான்தோல் இருக்கையில் கையூன்றி அமர்ந்தார்.

பத்ரர் புராணங்களில் அறிந்த துர்வாசரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று நிமித்திகநூல்கள் சொல்லின. முதுமையில் குறுகி வற்றிய உடலில் மட்கிய மரப்பட்டைபோல செதிலோடிய தோல் மடிப்புகளாக பரவியிருந்தது. நகம் நீண்ட விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறியிருந்தன. தோள்களில் நரைத்த சடைத்திரிகள் விழுந்து பரவியிருந்தன. அவரது தாடியும் சடைக்கொத்தாக மார்பில் விழுந்திருந்தது. வெண்ணிறமான புருவமயிர்கள் கண்கள்மேல் விழுந்திருக்க அவர் பார்வையற்றவர் போல தோன்றினார். பீடத்தில் அமர்ந்ததும் இருகைகளையும் கூப்புவதுபோல மார்பின்மேல் வைத்துக்கொண்டார். மெல்வதுபோல பற்களற்ற வாயை அசைத்துக்கொண்டு ஆடும் தலையுடன் அமர்ந்திருந்தார்.

கணாதரும் மாணவர்களும் வேதநாதம் எழுப்பி ஆகுதியை தொடங்கினர். சிறிய செம்மலர்போல புகையுடன் நெருப்பு எழுந்ததும் துருபதன் சற்று முன்னகர்ந்து அதையே நோக்கிக்கொண்டிருந்தார். நெருப்பு தழலாடத் தொடங்கியதும் அவரது நோக்கு அதிலிருந்து விலகவேயில்லை. அவரது முகத்தில் செந்தழலின் ஒளி அலையலையாக தெரிந்தது. விழிகளுக்குள் செம்புள்ளிகளாக சுடர் ஆடியது.

வேள்வி முடிந்து அவிபாகத்தை பங்கிட்டு மாணவர்களுக்கு அளித்ததும் கணாதர் தலையசைக்க அவரது முதன்மை மாணவர்கள் தவிர பிறர் எழுந்து அகன்றனர். கணாதர் பத்ரரிடம் “நிமித்திகரே, உங்கள் தூது வந்தது. மன்னரின் நிலையை நாங்கள் முன்னரே அறிந்துமிருந்தோம். இந்த குருகுலத்தில் துர்வாச மாமுனிவர் வந்து தங்கியிருப்பது தங்கள் நல்லூழே. அவரது அருட்சொற்கள் மன்னரின் துயருக்கு மருந்தாகுமென எண்ணுகிறேன்” என்றார். அந்த முறைமைப்பேச்சு பத்ரருக்கு அப்போது சலிப்பாக இருந்தது. அவர் துருபதனை நோக்கினார். அவர் முன்னும்பின்னும் அசைந்தாடி நெருப்புக்குளத்தில் நிறைந்திருந்த செங்கனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.

“மன்னர் தன் அகத்துயரை முனிவரிடம் சொல்லலாம்” என்றார் கணாதர். “முனிவரே, அவர் எதையும் சொல்லும் நிலையில் இல்லை” என்றார் பத்ரர். திகைத்து துருபதனை நோக்கியபின் “பேசுவாரா?” என்றார் கணாதர். “ஆம், ஆனால் சமீபகாலமாக பேச்சில் முன்பின் தொடர்பு குறைந்துவருகிறது.” கணாதர் ஒருகணம் துர்வாசரை நோக்கிவிட்டு “அப்படியென்றால்...” என்றார். “எப்போதாவது தெளிவுடன் பேசுகிறார். பெரும்பாலான தருணங்களில் அவர் தன்னுள் எங்கோ இருக்கிறார்” என்றார் பத்ரர்.

கணாதர் திரும்பி துருபதனிடம் “அரசே, தங்கள் துயரை தாங்கள் மாமுனிவரிடம் சொல்லலாம். யுகங்கள் தோறும் வாழும் அழியாத ஞானபீடம் அவர்” என்றார். துருபதன் “ம்?” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே?” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா?” என்றார் துருபதன். “ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது?” என்றார்.

“தங்கள் உள்ளத்தின் துயரை. வஞ்சத்தை” என்றார் பத்ரர். “என்ன துயர்?” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்?” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்?” என்றார். பத்ரர் கணாதரை நோக்கினார். “பத்ரரே, எனக்கு மிகவும் குளிரடிக்கிறது” என்றார் துருபதன். அப்போதும் அவரது கரங்கள் பின்னிக்கொண்டே இருந்தன. ஒரு சொற்றொடரை பேசிமுடித்தபின் உடனே அவரது உதடுகள் உச்சரிப்பை தொடர்ந்தன.

கணாதர் “நிமித்திகரே, ஞானத்தை பெற்றுக்கொள்ள அவர் அகம் திறந்திருக்கவில்லை என்றால் குருநாதர் என்னசெய்யமுடியும்?” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்?” என்று கணாதரை விரல் சுட்டினார். “முனிவர், கணாதர்.” துருபதன் “ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். நைஷதகுருகுலம்” என்றபின் “எனக்கு குளிர்கிறதே” என்றார்.

“இவரிடம் பேசவே முடியவில்லை என்றால் நாங்கள் என்னசெய்யமுடியும்?” என்றார் கணாதர். துருபதனை நோக்கிவிட்டு “ஒன்றுசெய்யலாம். இவரை இங்கே சிலகாலம் விட்டுவைக்கலாம். கங்கையின் நீரும் இமயக்காற்றும் அவரை தெளியவைக்கலாம். அந்த நகரில் இருந்தால் அவரது உள்ளம் அடைந்த புண் ஆறாது. இங்கே மெல்லமெல்ல அவர் அந்நகரையும் அங்கே அடைந்த அவமதிப்பையும் மறந்து மீண்டு வரமுடியும். கானகவாழ்க்கை ஆற்ற முடியாத துயரமேதும் மானுடர்க்கில்லை” என்றார். பத்ரர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கணாதர் சொல்வது மட்டுமே உண்மை என்று தெரிந்தது.

“ஆம், அவ்வண்ணமே செய்கிறோம்” என்றார் பத்ரர். “நான் சேவகர்களை திருப்பி அனுப்புகிறேன். நானும் அரசருடன் இங்கு தங்கிவிடுகிறேன்.” கணாதர் தலையை அசைத்தார். “அரசே, நாம் எழுவோம்...” என்று துருபதனை தொட்டார் பத்ரர். துருபதன் எழுந்து “எனக்கு மிகவும் குளிர்கிறது... என் கால்கள்...” என்று பேசத்தொடங்கியதும் கண்களைத் திறந்த துர்வாசர் “துருபதா, நில்!” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்?” என்றார் துருபதன்.

அருகே வந்த துர்வாசர் முற்றிலும் எதிர்பாராத கணத்தில் தன் கையில் இருந்த யோகதண்டால் துருபதனை ஓங்கி அறைந்தார். தலையில் அடிவிழுந்த ஓசை நரம்புகளை கூசவைக்கும்படி கேட்டது. துருபதன் “யார்?” என்று கூவியபடி பின்னகர்வதற்குள் மீண்டும் அவர் ஓங்கி அறைந்தார். “பத்ரரே” என்று கூவி துருபதன் தலையை பற்றிக்கொண்டார். குருதி ஊறி விரல்களை மீறியது. “என் விழிகளைப்பார் மூடா. உன் நாடகத்தை நான் அறிவேன்” என்றார் துர்வாசர். கைகளால் தலையின் காயத்தைப் பொத்தியபடி துருபதன் நடுங்கிக்கொண்டு நின்றார். துர்வாசர் அவரது விழிகளை கூர்ந்து நோக்கி மிக மெல்ல “மானுடர் என்னிடமிருந்து மறைக்கக்கூடியதாக ஏதுமில்லை” என்றார்.

துருபதன் கேவி அழுதபடி அப்படியே மடிந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதார். அழும்தோறும் அழுகை வலுத்து வந்தது. தோள்களும் கால்களும் அதிர்ந்து இழுபட்டன. பின் பக்கவாட்டில் சரிந்து பசுஞ்சாணி மெழுகப்பட்ட தரையில் விழுந்து கருக்குழந்தை போல சுருண்டுகொண்டார். அவரது அழுகையை நோக்கியபடி அருகே நின்ற துர்வாசரின் தாடை அசைந்தபோது தாடியும் அசைந்தது. தன் மெல்லிய வலக்காலைத் தூக்கி அவர் துருபதனின் தலையில் வைத்தார். துருபதன் தீ பட்டதுபோல துடித்து விழிதூக்கி நோக்க கால்கட்டைவிரலை அவர் நெற்றிப்பொட்டில் அழுத்தினார். நடுங்கும் கைகளால் அவர் துர்வாசரின் பாதத்தை பற்றிக்கொண்டார்.

துருபதனின் அழுகை அடங்கியது. மூடிய இமைகளின் இடுக்கு வழியாக நீர் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. விசும்பல்கள் அவ்வப்போது எழுந்து மெலிந்த நெஞ்சை உலுக்கின. “எழுந்து அமர்க அரசே!” என்றார் துர்வாசர். துருபதன் எழுந்து அமர்ந்து தன் சால்வையால் கண்களை துடைத்துக்கொண்டார். “நெடுந்தூரம் சென்றுவிட்டீர்” என்றார் துர்வாசர். “இன்னும் சில அடிதூரம் எடுத்துவைத்தால் ஒருபோதும் திரும்ப முடியாது. நல்லூழாக நீர் இங்கே வந்தீர்.” துருபதன் “நான் ஒன்றும் அறியேன் முனிவரே” என்றார்.

“ஆம், நீர் அறியமாட்டீர். உம்முள் வாழும் ஆன்மா ஆடும் நாடகம் இது” என்றார் துர்வாசர். “ரதசாலையில் செல்ல நாணுபவன் ஊடுவழிகளில் புகுந்து காட்டில் மறைவதுபோல ஆன்மா புதுவழிகளை கண்டுபிடிக்கிறது. இழப்பிலும் அவமதிப்பிலும் அக உலகம் சிதறிப்பரக்கிறது. அதை மீண்டும் தொகுத்துக்கொள்ள ஆன்மா படும் பதைப்பையே நாம் துயரம் என்கிறோம். தொகுத்துக்கொள்ளவே முடியாது என அது எண்ணும் கணத்தில் சிதறவிடுவதையே தன் வழியாக கண்டுகொள்கிறது. அந்த விடுதலை பெரும் ஆறுதலை அளிக்கிறது. அதை அறிந்தபின் ஆன்மா திரும்பிவரமறுக்கும். மேலும் மேலும் தன்னை சிதறவைத்துக்கொண்டே இருக்கும்.”

துருபதன் “நான் ஒன்றும் அறியவில்லை மாமுனிவரே...” என்றார் “மெல்லிய நினைவு போல அந்தச் சிலநாட்கள். அன்று என்ன நிகழ்ந்தது என்றே இன்று தெளிவாக இல்லை. சில காட்சிகள் கனவா என்பதுபோல.” துர்வாசர் “அந்நாளை இல்லை என்று ஆக்க நீ முயன்றாய். அனைவரும் செய்வது அதையே. இழப்பை அனைவருக்கும் அறிவிப்பார்கள். எண்ணியும் சொல்லியும் வளர்ப்பார்கள். அது வெடித்துச் சிதறி பின் அழியும். அவமதிப்பை வெளியே தெரியாமல் புதைத்துவைப்பார்கள். வீட்டு அறைக்குள் பிணத்தை ஒளித்துவைப்பதுபோல.”

“ஏனென்றால் இழப்பில் உன் அகங்காரம் சீண்டப்படுவதில்லை. அவமதிப்போ அகங்காரத்தின் வதை” என்றார் துர்வாசர். துருபதன் அவரை புதியவரை பார்ப்பதுபோல திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்திருந்தார். சிலமுறை நீள்மூச்சு விட்டபின் “நான் என்ன செய்யவேண்டும் மாமுனிவரே?” என்றார். “புண்பட்டு அழுகிய உறுப்புகளை வெட்டி வீசுவதே மருத்துவமுறை. உன் அகங்காரத்தை அகற்றுக. அது ஒன்றே உன்னை மீட்கும்” என்றார் துர்வாசர். “நான், என்னை...” என்று துருபதர் சொல்லத்தொடங்க “உன்னை நீ அதிலிருந்து மீட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை. அகங்காரத்தைக் குளிரச்செய்யும் எதையாவது செய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வல்ல” என்றார் துர்வாசர்.

“செய்கிறேன்” என்று தலைகுனிந்து துருபதன் சொன்னார். “அப்படியென்றால் இப்படியே மலையேறிச்செல். மேலே தேவப்பிரயாகை என்னும் புனிதநீர்ச்சந்திப்பு உள்ளது. அங்கே உன்பாவங்களை களையவேண்டுமென வேண்டிக்கொண்டு நீராடு” என்றார் துர்வாசர். “அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும். அங்குள்ள படித்துறையில் சமஸ்தாபராதபூசை செய். நீ உன் அகங்காரத்தால் துரோணருக்கு இழைத்த பிழைக்கு கழுவாய்தேடு!”

துருபதன் அடிவாங்கியவன் போல நிமிர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க “அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை. அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன். நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே. அவர் உன் வாயிலில் வந்து இரந்து நின்று அவமதிக்கப்பட்ட அத்தருணத்தை நீ ஒருகணம்கூட மறக்கவில்லை. அதை உன் அகங்காரத்தின் கனத்த திரையால் மூடி பன்னிரு ஆண்டுகாலம் வாழ்ந்தாய். அந்த அகங்காரம் கிழிபட்டபோது அது பேருருவம் கொண்டு எழுந்தது. துருபதா, உன்னை வதைத்தது உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டும் அல்ல. உன்னுள் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும்கூடத்தான்” என்றார்.

“ஏனென்றால் நீ இப்புவியில் விரும்பும் முதல் மானுடன் துரோணரே” என்றார் துர்வாசர். “உன் குற்றவுணர்வை நீ வென்றால் உன் அகங்காரம் தணியும். உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பை நீ எளிதாக கடந்துசெல்வாய்.” துருபதன் கைகூப்பி “முனிவரே” என்றார். “இதுவன்றி பிறிதெதையும் நான் மானுடர் எவருக்கும் சொல்லமுடியாது. நீராடுக, உன் உலகு தூய்மையாகும்” என்றபின் துர்வாசர் திரும்பி தன்னை தூக்கும்படி மாணவர்களுக்கு கைகாட்டினார். கைகூப்பியபடி துருபதன் அமர்ந்திருந்தார்.

அவர் செல்வதை நோக்கியபடி அமர்ந்திருந்த துருபதன் திரும்பி “பத்ரரே” என்றார். “ஆம், அரசே. அவர் சொல்வதே முறை. உங்கள் ஆன்மாவின் தோழர் துரோணரே. துரோணரின் மைந்தரின் தோள்களைத் தழுவி நீங்கள் முகம் மலர்ந்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டார். “நாம் தேவப்பிரயாகைக்கு செல்வோம்” என்றார் பத்ரர்.

பகுதி நான்கு : அனல்விதை - 3

பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே வந்து கையெட்டும் தொலைவில் நின்றுகொண்டார். துருபதன் கைகளைக் கட்டி நின்றபடி இருபது வாரை ஆழத்தில் தெரிந்த நதிகளை நோக்கிக்கொண்டிருந்தார். சருகு ஒன்று பாறைமேல் ஒட்டியிருப்பது போலிருந்தார். இளங்காற்றில் கீழே விழுந்துவிடுபவர் போல.

பாகீரதியின் பெருக்கு அருவியொன்றை கிடைமட்டமாக பார்ப்பதுபோலிருந்தது. பேரோசையுடன் பாறைக்கரைகளில் அலையறைந்து உருளைப்பாறைகளில் ஏறிக்குதித்து நுரையெழுப்பி வந்தாள். பொன்னிற இளந்தோளில் சரிந்த நீலக்குழல்கற்றை போலிருந்தாள் அளகநந்தை. ஒளிவிட்ட சிற்றலைகளுடன் பாறைகளில் ஏறிவளைந்து ஓசையின்றி வந்து மெல்லிய நாணத்துடன் வளைந்தாள். பாகீரதி வெறிகொண்டவள் போல வந்து அளகநந்தையை அள்ளித்தழுவி இறுக்கிச் சுழன்று ஆர்ப்பரித்தாள். இரு நதிகளும் கலக்கும் நெளிகோடு மேலிருந்து நோக்கியபோது தெளிவாகத் தெரிந்தது. நெடுந்தூரத்துக்கு நீர்ச்சரடுகள் ஒன்றுடன் ஒன்று தோளுரசி முட்டி மோதி முன் சென்றன.

அந்தியின் செவ்வொளியில் பாறைகள் மின்னிக்கொண்டிருந்தன. நதி நோக்கி மடிந்த செங்குத்தான கரைவிளிம்பின் உடைந்த பாறைப்பரப்புகள் வாள்முனைகள் போல சுடர்ந்தன. பகலில் எழுந்த நீராவி குளிர்ந்து வழிந்து ஈரமாகிவிட்டிருந்த பாறைகளில் இருந்து சிறிய பறவைகள் மலர்கள் உதிர்ந்தது போல கூட்டமாக சரிந்திறங்கி நீர்மீது விரிந்து வளைந்து கீழே பாறைவிரிசல்களில் மறைந்தன. வடகிழக்கிலிருந்து குளிர்ந்த காற்று பெருகிவந்து சூழ்ந்து சுழன்று கீழிறங்கிச் சென்றது. மங்கலடைந்துகொண்டிருந்த வானில் தொலைவில் நீலமலையடுக்குகள் மயிற்பீலிக்கற்றையை தூக்கி வைத்ததுபோல தெரிந்தன.

பின்பக்கம் பாஞ்சாலப்படையினர் கூடாரங்களை கட்டிக்கொண்டிருந்தனர். தறிகளை அறையும் ஒலியும் யானைத்தோலை இழுத்துக்கட்டுபவர்கள் சேர்ந்து எழுப்பிய கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. கழுதைகள் பொதிகளை இறக்கிவிட்டு குளம்புகள் சரளைகற்களில் பட்டு ஒலிக்க நடந்து விலகிச்சென்று முட்செடிகளின் இலைகளைக் கவ்வி மெல்லத் தொடங்கின. குதிரைகள் செருக்கடித்து கால்களால் நிலத்தை உதைத்தன. விறகுக்காக மரங்களைவெட்ட சிலர் கிளம்பி மலைச்சரிவில் ஏறிச்சென்றனர்.

ரிஷிகேசத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு முன் கழுதைகளில் சுமைகளுடன் கிளம்பி மலையேறி மதியம்தான் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய மலைப்பாதை செம்மண் கரைந்து சுழன்றுவழிந்து வந்த நீரோடை போலத் தெரிந்தது. அப்பால் இமயத்தின் முடிகளுக்குமேல் ஆவணிமாத வெண்மேகங்கள் அசையாது நின்றன. நெடுந்தொலைவில் எங்கோ. வாழ்க்கையின் அலைகளுக்கு அப்பால். புவனத்தை ஆளும் அமைதியின்மைக்குமேலே எழுந்த நீலநிறப் பேரமைதிக்குவைகள். துருபதன் பாதைக்குக் கீழே மிக ஆழத்தில் அலைகொந்தளித்துச் சென்றுகொண்டிருந்த கங்கையை நோக்கிக்கொண்டு குதிரைமேல் குளிருக்குச் சுருண்டவர் போல அமர்ந்திருந்தார்.

உருளைக்கற்களாலான சிறிய கழுதைப்பாதை அது. ஒருபக்கம் செங்குத்தாக மேலெழுந்த மலைச்சரிவு. அங்கே மலையுச்சியில் இருந்து உருண்டுவந்த பெரும்பாறைகள் பல்வேறு நிலைகளில் தொக்கி நின்றிருந்தன. உடைந்து சரிந்த பாறைநொறுங்கல் குவியலாக மாறி பாதையை மறித்தது. பாறைத்துண்டுகளாலான அருவி சில இடங்களில் பொழிந்து கூம்பாக மாறிக்கொண்டிருந்தது. மறுபக்கம் செங்குத்தாக வெட்டுண்டு பல மடிப்புகளாக இறங்கிச்சென்று நுரை எழுந்த கங்கையில் முடிந்தது மலைச்சரிவு. அங்கே கங்கை ஓசையின்றி நெளிந்தது. மறுபக்கம் எழுந்து சரிந்தும் உருண்டும் நின்ற பாறைகளாலான மலைகளில் இருந்து அதன் ஓசை அலையலையாக காற்றில் ஏறி வந்தது.

ஒரு கூழாங்கல் புரண்டால்கூட நிலைவழுக்கி கீழே விழுந்து கங்கையில் சிதறிப்பரக்கவேண்டியதுதான். அவ்வப்போது அவர்களின் கால்களில் தட்டுப்பட்ட சில கற்கள் உருண்டு சென்று சரிவிறங்கி ஆழத்தை நோக்கி சென்றன. ரிஷிகேசத்தில் இருந்து கிளம்பிய இரண்டாம்நாழிகையிலேயே ஒரு வீரன் அலறியபடி விழுந்து விழுந்து சென்றுகொண்டே இருந்தான். அவர்கள் வாய்திறந்து விழிபிதுங்கி நின்று அவன் கீழே சென்று தலையுடைந்து துடித்து ஒய்வதை நோக்கினர். மணலில் குருதி ஊறி நனைந்து பரவுவதை காணமுடிந்தது.

வழிகாட்டிவந்த மலைவேடர் “கழுதையின் கால்களில் உங்கள் கண்கள் இருக்கட்டும். பிற காட்சிகளை சிந்தையில் வாங்காதீர். கழுதை மட்டுமே இங்குள்ள மண்ணை அறியும்” என்று கூவினார். மீண்டும் காலெடுத்து வைத்தபோது வீரர்களின் கால்கள் நடுங்குவதை பத்ரர் கண்டார். மலைவேடர் “இங்குள்ள பாறைகள் உறுதியானவை அல்ல. ஆயிரம் மகாயுகங்களுக்கு முன் விண்ணிலிருந்து இமயம் பெரும் மண்மழையாகப் பெய்து மலையாகக் குவிந்தது என்கிறார்கள். இன்னும் அது உறுதிப்படவில்லை. அதன் பாறைகளனைத்தும் சரிந்துகொண்டேதான் இருக்கின்றன. எத்தனை பெரிய பாறையானாலும் சரியக்கூடுமென்பதை மறக்கவேண்டாம்” என்றார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே பெரிய பாறை ஒன்றை உந்தி ஏறிய ஒருவன் அப்பாறையுடன் உருண்டு கீழிறங்கினான். அவன் அலறல்கூட ஒலிக்கவில்லை. இரண்டாம் முறை உருண்ட பாறையில் அவன் ஒரு குருதிப்பூச்சாக படிந்திருந்தான். யானை போல மெல்ல நடந்து சென்ற கரும்பாறை கீழே ஒரு பாறையில் முட்டி அதிர்ந்தது. பின் இருபாறைகளும் முனகல் ஒலியுடன் கீழிறங்கின. மிக ஆழத்தில் அவை பல பாறைகளாகப் பெருகி ஓர் அருவி போல சென்று கங்கையில் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து வெண்மலர்போல அலை எழுப்பின. பெரிய பாறை மணல்கரையிலேயே உருண்டு சிக்கி நின்றுவிட்டது.

மலைச்சரிவின் மேலிருந்து விழுந்த கற்களால் மூன்றுநாட்களிலேயே ஏழுபேர் இறந்தனர். சடலங்களை உருட்டி சரிவில் விட்டுவிட்டுச் செல்லும்போது அங்கே சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளை வீரர்கள் கண்டனர். “தேவப்பிரயாகைக்குச் செல்லும் வழியில் உயிர்துறந்தாலும் அது முழுமையை அளிக்கும் என்பது நம்பிக்கை” என்றார் பத்ரர். இரவில் மலைச்சரிவில் கூடாரம் கட்டி தங்கியிருக்கையில் தொலைவில் நரிகளின் ஊளையோசையைக் கேட்டனர். “அவை இப்பாதையை நம்பியே வாழ்பவை” என்றார் வேடர். மறுநாள் தொலைதூரத்தில் பாறைகளில் ஒளிந்தபடி அவை அவர்களைத் தொடர்ந்து வருவதை காணமுடிந்தது.

தேவப்பிரயாகையை குதிரைமீதிருந்த துருபதன் முதலிலேயே கண்டுவிட்டார். இருநதிகளும் இணைந்த இடத்தில் நீர்த்துளிகள் மதிய வெயிலில் கண்கூசும் ஒளியுடன் எழுந்து தெறித்தன. “அதுதானா?” என்றார். “ஆம்” என்றார் வேடர். பத்ரர் கண்மேல் கைவைத்து நோக்கியபடி “அங்குதான்... அதோ பாறைகளுக்கு அப்பால் தெரிவதுதான் ரகுநாதர் ஆலயம். அயோத்திராமனுக்காக அவனுடைய இக்‌ஷுவாகு வம்சத்து இறுதி அரசன் அக்னிவர்ணன் கட்டியது அது.” துருபதன் அதன்பின்னர்தான் அந்தக்கோயிலை பாறைகளிலிருந்து பிரித்தறிந்தார். பத்தாள் உயரத்தில் கூம்புவடிவ கோபுரத்துடன் இரும்புநிறமான பாறையால் கட்டப்பட்டிருந்தது. அதன்மேல் ஒரு வாடிய மலரிதழ் போல காவிநிறக்கொடி துவண்டு நின்றது.

“தேவப்பிரயாகை ஹிமவானின் பாதங்களில் அமைந்த ஐந்து பிரயாகைகளில் முதன்மையானது. அனைத்துப் பாவங்களையும் கழுவும் புண்ணிய நதிமுனை அது” என்றார் பத்ரர். நதிமுனையை நோக்கி நின்றிருந்த துருபதனை மேலும் நெருங்கிவந்தவராக “ராவணமகாப்பிரபுவைக் கொன்ற பாவத்தை வசிட்டரின் ஆணைப்படி அயோத்திராமன் இங்கு வந்து முறைப்படி நோன்பிருந்து கழுவாய்ப்பூசை செய்து தீர்த்ததாக நூல்கள் சொல்கின்றன” என்றார். மேலும் நெருங்கி அவர் அரசனின் அருகே நின்றுகொண்டார்.

“ஐந்து பிரயாகைகளும் ஊழ்கத்தின் ஐந்து நிலைகள் என்று சொல்கின்றன யோகநூல்கள்” பத்ரர் தொடர்ந்தார். “தேவப்பிரயாகை முதல்நிலை. இங்கே கொந்தளிக்கும் ஜாக்ரத் வந்து அமைதியாக ஓடும் ஸ்வப்னத்தை சந்திக்கிறது. பாகீரதியை ஜாக்ரதி என்றும் நூல்கள் சொல்கின்றன. அளகநந்தை ஸ்வப்னை எனப்படுகிறது.” கீழே நோக்கியபோது அவருக்கு நெஞ்சு நடுங்கியது. அத்தனை விளிம்பில் துருபதன் நின்றிருந்தார். அவரது காலுக்கு இரண்டு அங்குலம் கீழே செங்குத்தாக பாறைவிளிம்பு இறங்கிச்சென்றது. அந்தப்பாறை அவரது எடையைத் தாங்குமா என பத்ரர் ஐயப்பட்டார். ஆனால் அரசனைத் தொட்டு பின்னுக்கு இழுக்க அவர் துணியவில்லை.

“அரசே, சடங்குகள் தெளிவாகவே வகுக்கப்பட்டுள்ளன. பாபநாசத்துக்கு வருபவர்கள் பாகீரதியின் கரையில்தான் தங்கவேண்டும். பாகீரதியில் நீராடி ஈரத்துடன் மேலேறிச்சென்று ரகுநாதனை வணங்கவேண்டும். சமஸ்தாபராதபூசையும் பிராயச்சித்தபூசையும் பித்ருசாந்தி பூசையும் இறுதியாக ஆத்மசாந்தி பூசையும் செய்யவேண்டும். பலிபிண்டத்தையும் மலரையும் எடுத்துக்கொண்டு நீரில் இறங்கி மீண்டும் பாகீரதியில் இறங்கவேண்டும். பாகீரதியின் கொந்தளிக்கும் நீர்வழியாகவே சென்று ஆழத்தில் ஓடும் அளகநந்தையின் அமைதியான நதியை தொட்டறியவேண்டும்.”

“பாகீரதியின் நீர் வெம்மை கொண்டிருக்கும். அளகநந்தையின் நீர் குளிர்ந்து கனமாக இருக்கும். அந்த வேறுபாட்டை உடல் உணரமுடியும்” என்று பத்ரர் தொடர்ந்தார். “அளகநந்தைக்குள் சென்று முழுமையாக மூழ்கி திரும்ப பாகீரதிக்குள் வந்தால் அனைத்து அலைகளும் அடங்கி அகம் நீலவானம் போலிருக்கும். கொந்தளிக்கும் பாகீரதி அமைதியான அளகநந்தையின் ஒரு தோற்றமே என்று தோன்றிவிடும். அவை ஒன்றை ஒன்று தழுவிச்செல்லும் பெருக்குகள். பிரியமுடியாத தோழிகள். கீழே கங்கையெனச் செல்வது அவையிரண்டும் கொண்ட முயக்கமேயாகும் என்று உணர்வதே துயரங்களில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விடுபடுதலாகும்.”

அவர் பேசுவதை துருபதன் கேட்கவில்லை என்று தோன்றியது. பத்ரர் “அரசே” என மெல்ல அழைத்தார். துருபதன் அதை அறியவில்லை. “அரசே” என்று அவர் உரக்க அழைத்ததும் திடுக்கிட்டு விழித்து அந்த அதிர்ச்சியில் கைகால்கள் நடுங்க “என்ன? என்ன?” என்றார். “குளிர் ஏறிவருகிறது. கூடாரமும் அமைந்துவிட்டது. தாங்கள் சென்று படுத்துக்கொள்ளலாமே?” என்றார் பத்ரர். “ம்” என்றபின் துருபதன் உடலை குறுக்கிக் கொண்டார். பத்ரர் அரசனின் அருகிலேயே நின்றிருந்தார்.

காற்றின் குளிர் ஏறிஏறி வந்தது. விரைவிலேயே வானொளி அவியத் தொடங்கியது. “வெயில்மறைந்த பின்னர் வெளியே நிற்கலாகாது அரசே” என்றார் பத்ரர். துருபதன் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. அந்தி மேலும் மேலும் செம்மைகொண்டு பின் இருண்டு நதியின் ஓசைமட்டுமாக ஆகியது. அந்த இரைச்சல் எழுந்து வந்து சூழ்ந்தது. கணம்தோறும் பெருகியது. தெளிந்த வானில் விண்மீன்கள் எழத்தொடங்கின. வடக்கே துருவ விண்மீன் தெரிகிறதா என்று பத்ரர் நோக்கினார். கண்டுபிடிக்கமுடியவில்லை. அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.

துருபதன் திரும்பி கூடாரத்தை நோக்கி நடந்து அங்கே போடப்பட்டிருந்த மூங்கில் பீடம் மீது அமர்ந்து உடலை குறுக்கிக் கொண்டார். “அரசே, தாங்கள் ஓய்வெடுக்கலாமே” என்றார் பத்ரர். துருபதன் அசைவற்று அமர்ந்திருந்தார். பத்ரர் சற்றுநேரம் நின்றபின் சென்று கம்பளிமீது மான்தோல்களைச் சேர்த்துத் தைத்த பெருங்கம்பளத்தைக் கொண்டுவந்து மெல்ல துருபதனைப் போர்த்தினார். அவர் அதையும் அறிந்ததுபோலத் தெரியவில்லை. அவர் நெஞ்சுக்குள் என்னதான் செல்கிறது என்று பத்ரர் எண்ணியதுமே அழுகையின் முடிவில் எழுவதுபோன்ற ஒரு நீள்மூச்சு துருபதன் நெஞ்சில் இருந்து வந்தது. அவர் அதைக்கேட்டு ஒவ்வொருமுறையும் உடல் விதிர்ப்பது வழக்கம். பெருமூச்சுடன் துருபதன் அசைந்து அமர்ந்தார்.

சேவகர் விறகுகளை அடுக்கி அதன்மேல் விலங்குக் கொழுப்புக்கட்டிகளைப்போட்டு நெருப்பெழுப்பியிருந்தனர். துருபதன் நெருப்பருகே அமர்ந்து தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே நின்றுகொண்டார். வானில் சிறியபறவைகள் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவை கங்கையின் மேல் இருளில் பறந்து பூச்சிபிடிப்பவை என அவர் அறிந்திருந்தார். இந்நேரம் அங்கே கங்கை எனும் ஒலிப்பெருக்கே இருக்கும் என்று தோன்றியது. பாகீரதியின் ஒலி பிளிறும். அளகநந்தை அகவும். அவர் அந்நேரம் கங்கைக்கரைக்குச் சென்று தனித்திருக்க விழைந்தார்.

சேவகர்கள் முயலிறைச்சியும் கீரையும் நொறுக்கிய கோதுமையும் சேர்த்து காய்ச்சிய ஊன்கஞ்சியை மரக்கோப்பையில் அள்ளி கொண்டுவந்து அவருக்குக் கொடுத்தனர். கடும் பசி இருந்தமையால் அவர் அதை வாங்கி ஆவலுடன் அருந்தத் தொடங்கினார். சில மிடறுகளுக்குப்பின்னர் மேலே குடிக்கமுடியவில்லை. திருப்பி நீட்டினார். சேவகன் அதை வாங்காமல் அசையாமல் நின்றான். அவர் தலையைத் தூக்கி அவனை தன் பழுத்த விழிகளால் நோக்கி “ம்” என்றார். அவன் பெருமூச்சுடன் வாங்கிக்கொண்டான். அவர் மீண்டும் தலைகுனிந்து நெருப்பை நோக்கத் தொடங்கினார். அவரது தலை நடுங்கிக்கொண்டே இருந்தது.

அவரது விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி அசைகின்றனவா, உதடுகள் உச்சரிக்கின்றனவா என்று பத்ரர் நோக்கினார். இல்லை. ஆனால் அந்த செயலற்ற நிலை மேலும் அச்சத்தை அளித்தது. அறிந்த ஒன்றில் இருந்து அறியாத ஒன்றை நோக்கி சென்றுவிட்டதைப்போல. மேலும் ஆழமும் இருளும் கொண்டவராக துருபதர் ஆகிவிட்டதைப்போல.

நெருப்பு அணையப்போனது. பத்ரர் கையசைக்க சேவகர்கள் சென்று விறகும் கொழுப்பும் கொண்டுவந்து போட்டு தழல் மூட்டினர். துருபதன் “மேலே” என்றார். பத்ரர் “அரசே” என்று கேட்க “இன்னும் மேலே” என்றார் துருபதன். மேலும் விறகும் கொழுப்பும் இட பத்ரர் சொன்னார். தீ ஆளுயரத்துக்கு எழுந்தது. “இன்னும்... இன்னும் பெரிய தீ” என்று துருபதன் கைகளை நீட்டி உறுமுவதுபோல சொன்னார். “அரசே” என்று பத்ரர் ஏதோ சொல்லப்போக “இன்னும் தீ... மேலும்” என்று துருபதன் கூவினார்.

பத்ரர் கைகாட்ட வீரர்கள் மேலும் விறகைக்கொண்டுவந்து குவித்து நெருப்பை எழுப்பினர். நெருப்பு தலைக்குமேல் எழுந்து கரிப்புகை சுழற்றி நடமாடியது. “மேலும் பெரிய நெருப்பு...” என்று துருபதன் ஆணையிட்டார். பத்ரர் துயின்றுகொண்டிருப்பவர்கள் அனைவரையும் எழுப்ப ஆணையிட்டார். அவர்கள் எழுந்து சிறிய அணிகளாக மாறி மலைச்சரிவில் ஏறி அங்கே நின்ற தைலமரங்களை முறித்து சுமந்துகொண்டுவந்து அடுக்கி நெருப்பெழுப்பினர். மேலும் மேலும் என்று துருபதன் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நெருப்பு எழுந்துகொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் செந்தழலால் ஆன கோபுரம் போல அதன் அடிவிரிவு விறகடுக்குமேல் எழுந்து நின்றது. அதன் தழல்நுனிகள் இருளுக்குள் நெளிந்து துடித்தன. அருகே இரு கைகளையும் விரித்து மெல்ல ஆடியபடி துருபதன் நின்றார். நெருப்பருகே அவர் உடலும் செந்நிறமாகச் சுடர்விட அவரும் தழல்போல தெரிந்தார். வீரர்கள் அனைவருமே சற்று அஞ்சிவிட்டது அவர்களின் விழிகளில் தெரிந்தது. தலைமைச்சேவகன் சக்ரசேனர் பத்ரரிடம் “நிமித்திகரே இது என்ன?” என்றார். பார்ப்போம் என அவர் கையசைத்தார்.

இரவெல்லாம் அவர்கள் நெருப்பிட்டுக்கொண்டே இருந்தனர். நெருப்பு சற்று தழைந்தபோதுகூட துருபதன் கைகளைத் தூக்கி ஆவேசமாக கூச்சலிட்டார். வீரர்கள் களைத்துச் சோர்ந்தபின்னரும் அவரது வெறி தளரவில்லை. சக்ரசேனர் பத்ரரை நோக்க அவர் கையசைத்து நெருப்பிட்டுக்கொண்டே இருக்கும்படி சொன்னார். அதிகாலையில் கிழக்கே செம்மை எழுந்தது. நெருப்பின் ஒளி குறைந்து வந்தது. ஒரு கணம் சாதாரணமாகத் திரும்பி நோக்கிய துருபதன் கீழ்த்திசை சிவப்பை நோக்கி திகைத்து மீண்டும் நெருப்பை நோக்கினார்.

பத்ரர் அருகே வந்து “அரசே, நாம் சடங்குகளைச் செய்ய கங்கைக்கு செல்லவேண்டும்” என்றார். துருபதன் சிவந்த வரியோடிய கண்களால் சற்று நேரம் நோக்கிவிட்டு “ஆம்...” என்றார். கைகளால் முகத்தை பலமுறை உரசிவிட்டு “சமஸ்தாபராத பூசை அல்லவா? அனைத்து பிழைகளையும் நான் கங்கைக்கு அறிக்கையிடவேண்டும், இல்லையா?” பத்ரர் “ஆம்” என்றார். “பாவங்களை எல்லாம்... ஆம்” என்று துருபதன் சொல்லிக்கொண்டார். பின்னர் எழுந்து “செல்வோம்” என்றார்.

பாறையை வெட்டி உருவாக்கப்பட்டிருந்த செங்குத்தான படிக்கட்டுகளில் மேலிருந்து தொங்கவிடப்பட்ட கனத்த வடத்தைப்பற்றிக்கொண்டு இறங்கவேண்டியிருந்தது. துருபதனால் இறங்க முடியவில்லை. இருவீரர்கள் முன்னும் பின்னும் நின்று அவரை ஒவ்வொரு படியாக கொண்டுசென்றனர். “என்ன செய்யவேண்டும் பத்ரரே?” என்றார் துருபதன். “அரசே கங்கையில் நீராடிவிட்டு குடத்தில் நீரள்ளி மேலே கொண்டுவரவேண்டும். ராமனின் ஆலயமுகப்பில் அமர்ந்து சமஸ்தாபராத பூசை. பின்னர் மலர்களுடன் சென்று நீராடி பாவங்களை முழுதும் அழித்து மீளவேண்டும்.” துருபதன் புன்னகையுடன் “இப்படிகளில் ஏறி இறங்கினால் நான் உயிரையும் சேர்த்தே விடவேண்டியிருக்கும்” என்றபின் “இறங்குவோம்” என்றார்.

அவரது சமநிலை பத்ரரை ஆறுதல் படுத்துவதற்குப்பதில் மேலும் அச்சமூட்டியது. மூச்சிரைக்க நதிக்கரையை அடைந்ததும் துருபதன் நின்றார். உருளைக்கற்களால் ஆன படுகையில் கால்கள் தடுமாற நடந்தார். அருகே சேவகர்கள் மெல்ல அவரை பிடித்துக்கொண்டுசென்றனர். பாறைகள் பரவிய அடித்தட்டு மேலே துல்லியமாக தெரிந்தது. பாறைகளின் வளைவுகளில் காலையின் வெளிச்சம் அலையடித்தது. “குளிருமா?” என்றபடி துருபதன் நின்றார். “கங்கை எப்போதும் குளிரானவள். ஆனால் பாகீரதியின் நீரில் குளிர் குறைவு” என்றார் பத்ரர்.

துருபதரின் ஆடைகளை சேவகர்கள் கழற்றினர். அவர் ஒரு சேவகனைப்பற்றிக்கொண்டு நீரில் இறங்கினார். குளிருக்கு உடல் குறுக்கியபடி முழங்காலளவு நீரில் நின்றபின் சட்டென்று சில எட்டுகள் முன்னால் சென்று அப்படியே மூழ்கி நடுங்கியபடி எழுந்தார். “போதும் அரசே...” என்றார் பத்ரர். சிறிய மண்குடத்தில் நீர் அள்ளி தோளிலேற்றிக்கொண்டு துருபதன் நடந்தார். ஒவ்வொருபடிகளிலாக நின்று நின்று மேலே வரவேண்டியிருந்தது.

ரகுநாதனின் ஆலயத்தின் முன் சமஸ்தாபராத பூசைக்கான களம் வரையப்பட்டிருந்தது. ஒன்றையொன்று சுற்றி வளைந்த நாகங்களின் உடல்களின் பரப்பு. அதன்மேல் ஏழு அகல்விளக்குகள் நெய்யிட்டு ஏற்றப்பட்டிருந்தன. மலர்களும் அரிசிப்பொரியும் மஞ்சள்பொடியும் தாலங்களில் இருந்தன. துருபதன் அந்தக்களத்தின் முன் போடப்பட்டிருந்த தர்ப்பைப்புல் தடுக்கில் கால்களை மடித்து அமர்ந்துகொண்டு கங்கைநீர் நிறைந்த குடத்தை களத்தில் வைத்தார். அவரது உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. தலைமயிரில் இருந்து நீர் சொட்டியது. ஏறிவந்த வெப்பத்தில் உடல் நன்றாகவே காய்ந்துவிட்டிருந்தது.

வைதிகர் அதர்வ மந்திரத்தைச் சொல்லி சடங்குகளை நடத்திவைத்தார். அவர் சொன்ன சொற்களை திருப்பிச் சொன்னபடி துருபதன் மஞ்சள் பொடியையும் மலர்களையும் அள்ளி நீர்க்குடத்துக்குள் போட்டார். மந்திரம் முடிந்ததும் பொரியை ஏழு குவைகளாக பிரித்து வைத்தார். வைதிகர் வழிகாட்ட துருபதன் முதல் குவையைத் தொட்டபடி “விண்ணில் வாழும் தெய்வங்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார். இரண்டாவது குவையைத் தொட்டு “விண்நிறைந்த தேவர்களே உங்களுக்கு நான் செய்தபிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க. உங்கள் முன் பணிகிறேன். என் பிழை. என் பிழை. என் பெரிய பிழை” என்றார்.

மூன்றாவது குவை பாதாளமூர்த்திகளுக்கு. நான்காவது குவை மண்மறைந்த மூதாதையருக்கு. ஐந்தாவது குவை கண்ணுக்குத்தெரியாத உயிர்க்குலங்களுக்கு. ஆறாது குவை அறியாது அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு. ஏழாவது குவையைத் தொட்டு வைதிகர் சொன்னார் “அரசே, நீங்கள் அறியாமையாலும் ஆணவத்தாலும் ஆசையாலும் இழைத்த பாவங்களுக்காக பிழை சொல்லி வணங்குங்கள். வெறும் சொற்களால் அல்ல. அந்தப்பாவத்தை நீங்கள் இழைத்த கணத்தை நினைவில் நிறையுங்கள். அப்போது இருந்த அவர்களின் முகத்தை அகக்கண்ணில் விரியுங்கள். அந்த முகத்தை நோக்கி மனம் உருகி கண்ணீர் மல்கி பொறுத்தருளும்படி சொல்லுங்கள். அவர்கள் பொறுத்துவிட்டனர் என்று உங்கள் அகம் அறிந்தாகவேண்டும்” என்றார்.

துருபதர் கையில் மலருடன் அந்த பொரிக்குவையை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தார். பிறகு மெல்ல “துரோணரே, உங்கள் துயரை அறிகிறேன். உங்கள் அனல் அவியவேண்டுமென்று பாதங்களைப் பணிந்து கோருகிறேன். உங்களுக்கு நான் இழைத்த அவமதிப்புக்காக என்னை பொறுத்தருளுங்கள். என் மீதிருக்கும் எஞ்சிய வெறுப்பையும் விலக்கி என்னை வாழ்த்துங்கள்” என்றார். “என் பிழை என் பிழை என் பெரிய பிழை” என்று சொன்னபோது குரல் இடறி கண்ணீர் வடித்தார். வைதிகர் மலரை போடும்படி சொன்னார். துருபதர் அதைக் கேட்கவில்லை. வைதிகரே மலரைப் பற்றி பொரிக்குவையில் போட்டார்.

மீண்டும் கலத்து நீரை எடுத்துக்கொண்டு கங்கை நோக்கிச் சென்றனர். பெருமூச்சுடன் திரும்பி ரகுநாதனின் ஆலயத்தை நோக்கிய துருபதன் கேட்டார் “பத்ரரே, ராமன் ஏன் பாவ உணர்வை அடைந்தான்? ராவணனைக் கொன்றது அவன் அவதார நோக்கம் அல்லவா? அவனை பரம்பொருள் மண்ணில் வந்த வடிவம் என்று சொல்கிறார்கள். அவனுக்கேது பாவம்?”

பத்ரர் “இதெல்லாம் ரிஷிகளின் கூற்று. நாமென்ன அறிந்தோம்? விண்ணாளும் கதிரவன் மண்ணில் பளிங்குத்துண்டுகளில் தெரிவதுபோல பரம்பொருள் மானுடனில் எழுந்ததுதான் ராமனின் பிறப்பு என்கிறார்கள். பளிங்கும் சூரியனே. ஆனாலும் அது மண்ணில் அல்லவா கிடக்கிறது. அழுக்கும் பாசியும் அதன்மேலும் படியும் அல்லவா? பாவத்தின் மாபெரும் வல்லமையைச் சுட்ட இந்தக்கதையை உருவாக்கியிருப்பார்களோ என ஐயுறுகிறேன்” என்றார்.

“ராமன் இங்கு வந்திருக்கிறானா?” என்றார் துருபதன். “வந்திருக்கலாம். அயோத்தியில் இருந்து கங்கைக் கரைக்கு வந்து அவர் பலகாலம் தங்கியிருந்தார் என்று நூல்கள் சொல்கின்றன, கதையாகவே இருந்தாலும் அவர் வராமல் அதை உருவாக்கியிருக்க முடியாது” என்றார் பத்ரர். “அவர் ஏன் பாவ உணர்வுகொண்டார் என்று சித்ரகரின் ராமசதகம் என்னும் நூல் சொல்கிறது. ராவணமகாப்பிரபுவை நேரில் கண்டதும் அவரது பத்து தலைகளின் நிமிர்வையும் இருபது கைகளின் வீரத்தையும் கண்டு ராமன் வியந்தாராம். “பத்து தலைகளில் ஒன்றுகூட பிறர் முன் தாழவில்லை. தன்னை எண்ணி குனியவுமில்லை. இருபது கரங்களில் ஒன்றில்கூட தன்னிரக்கத்தையோ தாழ்வையோ சுட்டும் விரல்குறி எழவில்லை. முழுமனிதன் இப்படித்தான் இருக்கமுடியும்” என அவர் தம்பியிடம் சொன்னாராம்.”

“ராவண மகாபிரபுவைக் கொன்றபின்னர் அயோத்தி மீண்டு அரியணை ஏறி தனிமையில் இருக்கையில் ராமர் தன் உடலின் சமநிலை அழிந்திருப்பதை உணர்ந்தார். இளமையில் அவரது தோள்மேல் அணிந்த உத்தரீயம் ஒருமுறைகூட நழுவாது. ஆனால் முடிசூடியபின் அது நழுவிக்கொண்டே இருந்தது. அது ஏன் என பலவாறாக எண்ணிக்கொண்டார். அவரது அணுக்கமருத்துவன் உடலின் சமநிலை உள்ளத்தால் காக்கப்படுவது என்றார். அவர் உள்ளக்குறி தேர்பவனை வரவழைத்து வினவியபோது அவன் ராமனிடம் கண்களை மூடிக்கொண்டு என்ன தெரிகிறது என்று சொல்லச்சொன்னான். கண்களுக்குள் சிவந்த வானில் இரு பருந்துகள் வட்டமிடுவதைக் கண்டதாக ராமன் சொன்னார். உங்கள் ஆயுதசாலையை சோதனையிடுக. அங்கே நிரபராதியின் குருதிபட்ட ஒரு படைக்கலம் உள்ளது என்று குறிதேர்வோன் உரைத்தான்.”

“தன் படைக்கலங்கள் அனைத்தையும் எடுத்து ராமர் குறிசொல்வோன் முன் வைத்தார். அவன் ஒவ்வொன்றாக வாங்கி நோக்கி நெற்றிமேல் வைத்தபின் இது அல்ல என்று திரும்பக்கொடுத்தான். அனைத்துப்படைக்கலங்களும் முடிந்தன. பின் ஒன்றுதான் எஞ்சியது. முன்பு ராவணமகாப்பிரபுவின் நெஞ்சைத் துளைத்த அந்த அம்பை அயோத்திப்படைகள் எடுத்து வந்திருந்தனர். அது அயோத்தியின் குலதெய்வக் கோயிலில் இருந்தது. ராமர் அந்த அம்பை எடுத்துவரச்சொன்னாராம். அதன் கூர்மை மழுங்கவில்லை. ஒளி குறையவில்லை. ஆனால் அதன் பரப்பில் ஒரு சிறிய பொட்டுபோல துரு தெரிந்தது. குறிசொல்வோன் அதைக் கண்டதுமே பாவத்தின் கறைகொண்ட படைக்கலம் என்று கூவினான்.”

“பன்னிருவர் கொண்ட நிமித்திகர் குழாம் அதை நோக்கி கணித்துச் சொன்னது. இந்த அம்பு மாவீரன் ஒருவனால் அவனுக்கு நிகரான மாவீரன் மேல் விடப்பட்டிருக்கிறது. ஆகவே ஒருநாளும் இதன் ஒளியும் கூர்மையும் அழியாது. ஆனால் இதை தொடுத்தபோது நாணை காதளவு இழுத்த கணத்தில் கொல்லப்பட்டவன் மேல் ஒரு துளி பொறமை வென்ற மாவீரன் நெஞ்சில் எழுந்து உடனே மறைந்தது. ஆகவே தேவர்களுக்கு உணவளிக்கும் வேள்விக்கு நிகரான போர் என்னும் செயல் மாசடைந்தது என்றார்கள்.”

“ராமன் அது உண்மை என்று உணர்ந்தார். மாசடைந்த அகத்துடன் ஆற்றும் எச்செயலும் பாவமே. அது குற்றவுணர்வையே உருவாக்கும். அப்பாவத்தைக் கழுவ என்ன செய்யவேண்டுமென வசிட்டரிடம் கேட்டார். அவரும் வசிட்டரும் தம்பியருடன் மலையேறி தேவப்பிரயாகைக்கு வந்தனர். இங்கே நாற்பத்தொருநாட்கள் தங்கி பூசைகள் செய்து பாவத்திலிருந்து விடுபட்டனர். அதன்பின் அவரது உத்தரீயம் தோளிலிருந்து நழுவவேயில்லை” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இறைவனே பாவத்தையும் குற்றவுணர்ச்சியையும் அடைந்தானென்றால்...” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். “அதிலிருந்து எவருமே தப்பமுடியாது அரசே” என்றார் பத்ரர்.

துருபதன் தலையை அசைத்தார். தனக்குள் மூழ்கியவராக படிகளில் நின்று நின்று இறங்கினார். பாகீரதியின் உருளைக்கல்பரப்பில் சென்றதும் “இம்முறை இருநதிகளும் சந்திக்கும் முனையில் நீராடவேண்டும் அரசே” என்றார். “ஆம்” என்று துருபதன் சொன்னார். அவரை அவர்கள் பற்றி அழைத்துச்சென்றனர். பாகீரதி பாறைகளில் நுரைததும்ப பேரோசையுடன் சென்றது. “நெருப்பு போல ஓசையிடுகிறாள்” என்றார் துருபதன். அச்சொற்களைக் கேட்டதும் நதி வெண்ணிற ஒளி கொண்ட பெருந்தழலாக பத்ரருக்கும் தெரியத் தொடங்கியது.

“அரசே, முறைப்படி நீங்கள் பாகீரதியில் மும்முறை மூழ்கி எழவேண்டும். பாகீரதி வழியாகச் சென்று அளகநந்தையின் குளிர்நீரை உங்கள் உடல் தீண்டவேண்டும்” என்றார் பத்ரர். “ஆம்” என்றபடி துருபதன் நீரில் இறங்கி இடையளவு ஆழத்திற்குச் சென்றார். “அரசே, 'அனைத்து வஞ்சங்களும் என்னைக் கைவிடுக. அனைத்து வஞ்சங்களையும் நானும் கைவிடுவேனாக' என்றபடி மூழ்குங்கள்” என்றார் வைதிகர். “அந்தக் கலத்தை அப்படியே நீரில் விட்டுவிடுங்கள். அளகநந்தையில் நீராடியதும் ஆடையையும் நீர்ப்பெருக்கில் விட்டுவிட்டு மீண்டும் பிறந்தவராக மேலெழுந்து வாருங்கள்.”

மெல்ல முணுமுணுத்தபடி துருபதன் மூழ்கினார். மண்கலம் நீரில் விழுந்து பாகீரதியின் கொந்தளிப்பில் மறைந்தது. நீர் வழியும் முகத்துடன் எழுந்து மீண்டும் அதைச் சொன்னபடி மூழ்கினார். மூன்றாம் முறை எழுந்ததும் திரும்பி கரை நோக்கி வரத்தொடங்கினார். “அரசே, அப்படியே அளகநந்தை நோக்கிச் செல்லுங்கள்” என்று பத்ரர் கூவினார். “இல்லை, என்னால் முடியவில்லை. என்னால் வஞ்சத்தை கரைக்க முடியவில்லை” என்று கிட்டித்த தாடை இறுகி அசைய துருபதர் சொன்னார். “என்னுள் நெருப்பே எழுகிறது.... என் அகத்தில் பாகீரதி மட்டுமே உள்ளது.”

நீர் வழியும் உடல் நடுங்க துருபதர் கரையேறி நடக்க பின்னால் சென்ற பத்ரர் “அரசே” என்றார். துருபதன் திரும்பி “கொழுந்துவிட்டெழும் நெருப்பு, என் அகத்தில் உள்ளது அதுவே. அதை அணைக்கமுடியாது பத்ரரே” என்றார்.

பகுதி நான்கு : அனல்விதை - 4

எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல” என்றார். உருளைப்பாறைப்பரப்பின் சரிவில் கங்கை பெருகி ஓடும் ஒலி இருளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஆயிரம் கைநீட்டி அன்னமிட்டுச்செல்லும் இக்கங்கையும் தன்னில் முற்றிலும் தனித்திருக்கிறாள்.”

நெருப்பைச் சுற்றி அவரது மாணவர்கள் சற்று விலகி அமர்ந்திருந்தனர். புலித்தோலிருக்கையில் துருபதன் அமர்ந்திருக்க அருகே சற்று பின்னால் பத்ரர் அமர்ந்திருந்தார். இமயமிறங்கி வந்த குளிர்காற்று அவர்கள் போர்த்தியிருந்த கம்பளியாடையின் மென்மயிர்ப்பரப்பை சிலிர்க்கச் செய்தபடி கடந்துசென்றது. பத்ரர் துருபதனை ஓய்வெடுக்க அழைத்துச் செல்லவேண்டுமென்பதைப்பற்றிதான் எண்ணிக்கொண்டிருந்தார். துருபதன் தொடர்ந்து இரண்டுநாழிகை துயில்வதே அரிதாகிவிட்டிருந்தது. இரவில் எழுந்து விண்மீனை நோக்கியபடி அவர் நின்றிருப்பதை பலமுறை கண்டிருக்கிறார். அவர் நோக்கி நிற்பது மேலே வானின் மையமாக நிலைகொண்ட துருவனைத்தான் என்று அவர் அறிந்திருந்தார்.

நான்குநாட்களுக்கு முன்னர் தேவப்பிரயாகையில் இருந்து திரும்பும் வழியில் ரிஷ்யசிருங்க மலையின் அடியில் அமைந்த தேவதாரு வனத்தில் தன் சீடர்களுடன் குடிலமைத்துத் தங்கியிருந்த தௌம்ரரை அவர்கள் சந்தித்தனர். மலைப்பாதையில் அவர்களின் வழிகாட்டியாக வந்த வேடன் கால்தவறி கங்கையில் விழுந்து இறந்தபின் அவர்களின் வழி தவறிவிட்டிருந்தது. ஒருநாள் கூடுதல் ஆகியும்கூட ரிஷிகேசத்தின் கங்கையிறக்கத்தை அவர்கள் அடையமுடியவில்லை. உணவு தீர்ந்துகொண்டிருந்தது. அனைவரும் பதறிவிட்டிருந்தனர். வழிதவறி இமயமலைச்சரிவில் இறந்து வெள்ளெலும்புக்குவியல்களாக காணக்கிடைத்த நூற்றுக்கணக்கானவர்களின் நினைவுகள் அவர்களை அலைக்கழித்தன. ஆனால் துருபதன் எதையும் எண்ணியவராக தெரியவில்லை. வரும்போதிருந்த சோர்வெல்லாம் விலகி அவருள் வற்றாத ஊக்கம் குடியேறிவிட்டதைப்போல தோன்றியது.

மலைச்சரிவில் ஆழத்தில் கங்கையோரமாக காட்டுக்குள் எழுந்த புகையைக் கண்டு பத்ரர் “அது ஒரு குருகுலமாக இருந்தால் கங்கை நம் மீது கனிவுடன் இருக்கிறாள் என்று பொருள். காட்டுத்தீ என்றால் இன்னும் சிலநாழிகை நேரத்தில் நாம் சாம்பலாவோம்” என்றார். துருபதன் ஒன்றும் சொல்லாமல் புகையை நோக்கிக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து “ஆம், அது வேள்விப்புகைதான். தேவதாருக்காட்டில் நெருப்பு இத்தனைநேரம் தங்காது” என்றார் பத்ரர். புகையை இலக்காக்கி அவர்கள் நடந்தனர். அந்திசாயும் நேரத்தில் தௌம்ரரின் குடிலை கண்டுகொண்டனர்.

“கங்கையில் எவருமே தொடமுடியாத ஆழத்து நீரோட்டம் ஒன்றுண்டு என்பார்கள்” என்றார் பத்ரர். தன் சிந்தனை அறுபட்டு திகைத்தவர் போல தௌம்ரர் திரும்பிப் பார்த்தார். பின்பு தலையசைத்தபடி “ஏழுமாதங்களுக்கு முன் நாங்கள் மேருவின் மடித்தட்டில் இருந்தோம். கோமுகத்தில் ஊறிப்பெருகும் கங்கையின் அருகே. பல்லாயிரம் கரங்கள் கொண்டு பெருகிச்செல்லும் அன்னையை ஒரு கைக்குழந்தையாக அங்கே கண்டோம்.” அவர் முகம் அந்நினைவில் மலர்ந்தது. அவரது மாணவர்களில் யாரோ பெருமூச்சுவிடும் ஒலி கேட்டது. “அங்கே அன்னை தன் நெஞ்சில் ஒரு தனி வைரம்போல துருவனை சூடியிருப்பதைக் கண்டோம். அலைகளில் ஆழத்தில் அமைந்த நிலை விண்ணில் மறைந்தபின்னும் நீரில் எஞ்சியிருந்தது.”

பத்ரர் வியப்புடன் கைகூப்பி “அரிதான காட்சி. விண்ணவரும் உகக்கும் காட்சி” என்றார். “முனிவரே, அதன் பொருளென்ன என்று எண்ணுகிறீர்கள்?” என்றார் துருபதன். தௌம்ரர் “ஒரு பெருநிகழ்வின் குறியடையாளம் அது. என் உள்ளுணர்வு சொன்னது, அது மண்ணில் பிறக்கவிருக்கும் கங்கையின் மகள் என” என்றார். பத்ரர் தரையில் கோடுகளை இழுத்து அவற்றின் சந்திப்புகளில் கூழாங்கற்களை வைத்தபடி “அது நிகழ்ந்த நேரம் மிகச்சரியாக எதுவென்று சொல்லமுடியுமா?” என்றார்.

தௌம்ரர் மாணவனை நோக்கித் திரும்ப அவன் எழுந்து சென்று ஓர் ஓலையை கொண்டுவந்து கொடுத்தான். பத்ரர் அதை வாங்கி அந்த நேரத்தின் அடிப்படையை கணித்து அதற்கேற்ப கூழாங்கற்களை இடம் மாற்றிவைத்தார். பலமுறை சிறிது சிறிதாக மாற்றி துல்லியமாக்கியபின் நிமிர்ந்து கவலையுடன் “முனிவரே, அது நற்குறி என எப்படி சொல்கிறீர்கள்?” என்றார். “அறியேன். என் ஆன்மாவை நம்பி சொன்னேன்” என்றார் தௌம்ரர். “நிமித்தங்கள் நன்மை நிகழுமென சொல்லவில்லை. பேரழிவை அல்லவா அறிவுறுத்துகின்றன?” என்றார் பத்ரர்.

“நிமித்திகரே, நன்மையும் தீமையும் நமது எளிய மானுட அறிவைக்கொண்டு அறியற்பாலதா என்ன? ஆம், ஒருவேளை மானுடகுலத்திற்கு பேரழிவாக இருக்கலாம். கோடானுகோடி பிற உயிர்க்குலங்களுக்கு பெருநன்மையாக இருக்கலாம். நாம் ஏதறிவோம்?” என்றார். “இருந்தாலும்...” என்று பத்ரர் தொடங்க “எது வகுத்துரைக்க ஒண்ணாததோ அதுவே லீலை எனப்படும் நிமித்திகரே. நீர் நுனியைக்கொண்டு முழுமையை கற்பனைசெய்பவர்” என்றார் தௌம்ரர். “அன்னையின் ஆடை நுனிபோதும் மகவுக்கு, அன்னையை அறிய” என்றார் பத்ரர். தௌம்ரர் புன்னகைசெய்தார்.

நெடுநேரம் அசைவிழந்திருந்த துருபதன் உடலசைவும் வாயசைவும் ஒலிக்க மீண்டு, "அந்த இடம் எது?” என்றார். “அது கங்காமுகம். விஷ்ணுபாதத்திற்கு நேர்கீழே உள்ளது. யுகயுகங்களுக்கு முன்னர் கங்கை மண்ணுக்குப் பெருகிவந்த இடம் அதுவே” என்றார் தௌம்ரர். “புராணகதாமாலிகையில் கங்கை மண்ணுக்குவந்த கதையை பரமேஷ்டிமுனிவர் சொல்கிறார். அன்று கோசலத்தை ஆண்ட சூரியவம்சத்தைச் சேர்ந்த பகீரதன் என்னும் அரசன் கங்கையை மண்ணுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். ஆகவேதான் மண்ணிலிறங்கிய கங்கை பாகீரதி என்றழைக்கப்படுகிறாள்.”

“மகத்தான தவங்களே மகத்தானவை மண்ணிலிறங்க படிக்கட்டுகளாகின்றன” என்று தௌம்ரர் சொல்லத் தொடங்கினார். கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு குலத்து மன்னன் பகீரதன் இளையோனாகவே அரியணை அமர்ந்தவன். பல்லாண்டுகாலமாக எந்நேரமும் மதுமயக்கில் இருந்த அவன் தந்தை ஒருநாள் இரவில் அரண்மனையின் மஞ்சத்து அறையிலிருந்து எழுந்தோடி ஏழ்மாடத்தில் இருந்து களமுற்றம் நோக்கி குதித்து உடல் சிதறி இறந்தார். குலச்சபையின் தேர்வுக்கு ஏற்ப அவரது முதல் மைந்தனாகிய பகீரதன் அரசகட்டிலேறியபோது நெடுங்காலமாக மன்னனால் கைவிடப்பட்ட அரசு சீர்குலைந்திருந்தது. கருவூலம் ஒழிந்திருந்தது. பகைவர்கள் பெருகியிருந்தனர். மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.

பகீரதன் இளமையிலேயே அறிவில் உறுதிகொண்டவன் என அறியப்பட்டிருந்தான். அவனுக்கு மூத்தோர் சொல் துணையிருந்தது. சொல்லை அறியும் அடக்கமும் அமைந்திருந்தது. அறிந்து தெளிந்து அறமும் ஆண்மையும் துணைவர நெறி விலகாது ஆட்சி செய்து அனைத்தையும் சீரமைத்தான். கோசலம் மீண்டும் தன் பெருமையை அடைந்தது. அதன் கருவூலம் மழைக்கால ஊருணி போல நிறைந்தது. அதன் குடிகள் வசந்தகாலப்பறவைகள் போல மகிழ்ந்தனர். அங்கே விண்ணகத்தேவர்கள் வந்திறங்கி விளையாடிச்சென்றனர். விலங்குகளும் சிற்றுயிர்களும் நிறைவடைந்தன.

அரியணை அமர்ந்த நாள் முதல் பகீரதன் தன் அரண்மனை முற்றத்தில் அதிகாலையிலேயே வந்து குழுமும் துயருறும் குடிமக்களின் குரல்களையே கேட்டுவந்தான். அவன் முடியேற்றபின் பன்னிரண்டாண்டுகளில் அக்குரல்கள் மெல்ல மெல்ல இல்லாமலாயின. அவன் செய்வதற்கேதுமில்லாமால் ஆகியது. பகலில் அரியணையைச் சுற்றி ஒலிக்கும் அக்குரல்கள் மறைந்தபின் இரவில் அவன் தன் மஞ்சத்தைச் சூழ்ந்து ஒலிக்கும் குரல்களைக் கேட்கலானான்.

இனம்புரியாத மிக மெல்லிய குரல்கள். ஆனால் நெடுந்தொலைவிலெங்கோ ஒலிக்கும் கதறல்கள் அவை என அவன் அறிந்தான். ஒன்றுடன் ஒன்று கலந்து பெருந்திரளின் ஓலமாக அவை ஒலித்தன. துயில் வந்து இமை கனக்கும்போது அவை ஒலிக்கத்தொடங்கும். அவன் அவற்றை கூர்ந்து கேட்கும்தோறும் மங்கலடைந்து பின்வாங்கும். துயில் எழுந்து சித்தம் கரைகையில் அலைபோல பெருகிப்பெருகி வந்து கனவை அறைந்து உடல் விதிர்க்க விழித்தெழச்செய்யும். எழுந்து நெடுநேரம் உடல் நடுங்குவான்.

தொன்மையான மதுவும் சிவமூலிகைப்புகையும்கூட அவனை துயில்கொள்ளச்செய்யவில்லை. ஒவ்வொருநாளும் துயிலின்மையால் எரியும் கண்களுடன் உலர்ந்த உதடுகளுடன் விழித்தெழுந்தான். தன் அமைச்சர்களிடமும் மருத்துவர்களிடமும் அக்குரல்களைப்பற்றி சொன்னதும் அவர்கள் திகைத்து ஒருவர் விழியை ஒருவர் நோக்குவதைக் கண்டான். மூத்த அமைச்சரான பீதர் அழுகையை அடக்கியபடி திரும்பிக்கொண்டார். தளகர்த்தரான பிங்கலர் “ஆவன செய்வோம் அரசே” என்றார்.

பகீரதனின் அரண்மனையைச் சுற்றிலும் இரவில் மெல்லிய பேச்சொலிகூட எழலாகாது என வகுத்தனர் அமைச்சர்கள். மருத்துவர் அவன் செவிகளை தூய்மை செய்தனர். சித்தம் கரைக்கும் மருந்துகளை அளித்தனர். ஆனால் குரல்கள் மேலும் வலுப்பெற்றன. இரவில் அரசன் முற்றிலும் துயில் இழந்து படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அவன் உடல் மெலிந்து வெளிறியது. கண்கள் நிழல் சூழ்ந்து சிவந்து பழுத்தன. எந்நேரமும் இமைகனக்கும் துயில்சோர்வை அறிந்தான். பகலிலும் அரைத்தூக்கத்தை அடைந்தான். விழிப்பினூடாக கனவு எழுந்தது. பின்னர் விழிப்பென்பதே கனவுக்குள் நிகழும் ஒரு சிதறலாக ஆகியது.

“சித்தம்கலைதலின் ஒரு நிலையா இது? மருத்துவர்களே, நான் பித்தனாகிவிட்டேனா?” என்று மீண்டும் மீண்டும் மருத்துவர்களிடம் கேட்டான் பகீரதன். “அரசே, நீங்கள் உங்கள் இருப்பை உணரும்வரை சித்தத்துடனேயே இருக்கிறீர்கள். இது உங்கள் அகம் கொள்ளும் ஒரு நடிப்பு. அதற்கான காரணங்களை கண்டுசொல்கிறோம்” என்றார் மருத்துவரான சுஃப்ரர். “ஏன் இந்தக் குரல்கள்? எங்கிருந்து எழுகின்றன இவை?” என்று தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அவன் கூவினான்.

“அரசே, மானுட உள்ளத்தை ஆயிரம்தலைகொண்ட நாகம் என்றே நூல்கள் சொல்கின்றன. ஈராயிரம் விழிகள். ஆயிரம் நாவுகள். ஆயிரம் தலைக்குள் ஆயிரம் எண்ணங்கள். அதன் ஒற்றை உடல் அவற்றையெல்லாம் இணைத்து ஒன்றாக்கி வைத்திருக்கிறது. எனினும் எவருக்குள்ளும் அவை ஒன்றுடன் ஒன்று முட்டிமோதிக்கொண்டுதான் இருக்கும்” என்றார் சுஃப்ரர். “ஆயினும் அது நாகம். மகுடிக்கு மயங்கியாகவேண்டும்...”

ஒருநாள் அரியணையில் அவன் சோர்ந்து அரைத்தூக்கத்தில் சரிந்திருக்கையில் காதில் மிகத்தெளிவாக ஒரு குரல் “இளையோனே” என்றது. உடல் அதிர அவன் விழித்தெழுந்து பதைத்து நோக்கினான். “அழைக்கிறது!” என்றான். அச்சத்துடன் “அது என்னிடம் உரையாடுகிறது...” என்று கூவியபடி எழுந்துகொண்டான். அவன் சபையினர் திகைத்து நோக்கி அமர்ந்திருந்தனர். “அழைப்பு! அழைப்பு!” என்று அவன் கைநீட்டி கூவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருக்க எழுந்து வெளிமுற்றம் நோக்கி ஓடி திறந்த வான் கீழே நின்று கைவிரித்தான். கண்கள் கூச மேகங்களை நோக்கி “யார்? யாரது?” என்று கூவினான். அவன் பின்னால் ஓடிவந்த அமைச்சரும் சபையினரும் பதைப்புடன் நின்றனர்.

பின்னர் அவன் காதில் எந்நேரமும் அக்குரல்கள் கேட்கத்தொடங்கின. கலைந்து எழுந்த ஓலங்கள் மெல்ல இழைபிரிந்து தனிக்குரல்களாயின. வலியிலும் துயரிலும் கதறும் ஒலிகள் அவை. தன்னை நோக்கி கை நீட்டி அவை கதறுகின்றன என்று அவன் உணர்ந்தான். இருளில் அவை மிக அருகே என கேட்டன. கைநீட்டி அவ்வொலியை தொட்டுவிடலாம் என்பதுபோல. “எங்கோ அவர்கள் பெருந்தனிமையில் துயருறுகிறார்கள். யார் அவர்கள்? கண்டு சொல்லுங்கள்” என தன் அமைச்சர்களுக்கு ஆணையிட்டான். அவர்களின் ஒற்றர்கள் நாடெங்கும் அலைந்து ஏதும் அறியாது மீண்டு வந்தனர். “நம் தேசத்துக்குள் துயருறுவோர் என எவருமில்லை அரசே” என்றனர். “இல்லை, நாமறியாது எங்கோ பெரும் வதை நிகழ்ந்துகொண்டிருக்கிறது...என் செங்கோல் சென்றெட்டாத எங்கோ” என்று பகீரதன் சொன்னான்.

ஆனால் அவன் செவிக்குரல்கள் தெளிவடைந்தபடியே வந்தன. ஒருநாள் அவன் துயின்று விழிக்கும் கணத்தில் மெல்ல தோளைத்தொட்டு “இளையோனே, நாங்கள் சிறைபட்டிருக்கிறோம்” என்றது ஒரு குரல். அதன் குளிர்ந்த விரல்நுனி அவனை துள்ளி விழச்செய்தது. “இங்கே முடிவே இல்லாத இருள்” என்றது இன்னொரு குரல். “எத்தனை காலம்!” என ஒரு குரல் உடைந்து அரற்றியது. “யார்? யாரென்று சொல்லுங்கள்!” என்று கூவியபடி எழுந்து நின்றான். ஓடிச்சென்று வாளை உருவி இருளுக்குள் அதைச் சுழற்றியபடி அறைக்குள் சுற்றிவந்து மூச்சிரைக்க நின்றான். அவனைச்சுற்றி இருளுக்குள் மூச்சொலிகள் நிறைந்திருந்தன.

நூலோரையும் நிமித்திகரையும் வரவழைத்து அக்குரல்களைப்பற்றி கேட்டான் பகீரதன். அவர்களும் ஏதுமறியாதவர்களாக இருந்தனர். “அது வேறுலகங்களின் ஒலிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களே கனிந்து நம்மிடம் பேசாதவரை நாம் அவற்றை அறிவதே இயலாது அரசே” என்றார் நிமித்திகரான பர்வர். சுஃப்ரர் “அரசே, அக்குரல்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். அவை உங்கள் கனவுலகிலிருந்து எழுபவை. ஸ்வப்னஃபாஷணம் என்று சொல்லப்படுகின்றன...” என்றார். “ஸ்வப்னத்தில் இருந்து அவை சுஷுப்திக்கு சென்றாகவேண்டும். அங்கிருந்து துரியத்தின் முடிவிலியில் உதிர்ந்து மறையவேண்டும். அலையடிக்கும் ஸ்வப்னத்தின் கடலில் சில துமிகள் இவ்வாறு திசைமாறி ஜாக்ரத்தில் வந்து தெறித்துவிடுகின்றன.”

ஓர் இரவில் தன் தலைக்குள் ஒலிக்கும் அக்குரல்களைக் கேட்டு தாளாது நிலையழிந்து சுற்றிவந்த பகீரதன் தலையால் சுவரை ஓங்கி முட்டினான். குருதி வழிய எழுந்தபோது “இளையோனே, எங்குளாய்?” என ஒரு குரல் தலைக்குள் அலறியது. எழுத்தாணியை எடுத்து செவிகளுக்குள் குத்தி இறக்கப்போனான். உள்ளே இருந்து இன்னொரு குரல் “இளையோனே” என்றது. கைகள் நடுங்க அமர்ந்திருந்தவன் ஓர் அலறலுடன் ஓடி ஏழ்மாடத்து உப்பரிகைக்குச் சென்று கீழே விரிந்த இருள் நிறைந்த முற்றம்நோக்கி குதிக்கப்போனபோது இன்னொரு குரல் “நில் இளையோனே, எங்களுக்கு எவருமில்லை” என்றது.

அன்று காலை பகீரதன் தன் அரசைத் துறந்தான். தன் இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகினான். காட்டுக்குள்ளும் அக்குரல்கள் அவனுடன் இருந்தன. அவற்றிடமிருந்து தப்ப அவன் மரக்கூட்டங்களிலும் புல்வெளிகளிலும் பாறைச்சரிவுகளிலும் ஓடினான். பின் உடல்களைத்து ஓரடியும் முன்வைக்கமுடியாமல் ஒரு மலைச்சுனை அருகே நின்றபோது அவன் தன் துயருக்கான காரணத்தை உணர்ந்தான். அதுவரை அக்குரல்களை அவன் அஞ்சினான். அவற்றைத் தவிர்க்கவும் விலகவுமே முயன்றான்.

அங்கே நின்ற ஆலமரத்தின் அடியில் கண்மூடி அமர்ந்து அக்குரல்களை கேட்க ஆரம்பித்தான். வெளிக்குரல்களை முழுமையாகவே அகற்றி அவற்றை நோக்கிச் சென்றான். “வருக இளையோனே” என்றது ஒருகுரல். “தலைமுறைகளாக நாங்கள் தேடியலைந்தவன் நீ” என்றது இன்னொருகுரல். இருளை விலக்கி விலக்கி அவன் சென்றான் “இளையோனே, நூற்றியெட்டு தலைமுறைகளாக ஒவ்வொரு கோசல மன்னனிடமும் நாங்கள் முறையிடுகிறோம். எங்கள் குரலைக் கேட்டு இங்கே வரும் முதல் மன்னன் நீ. நீ வாழ்க!” என்றது குரல்.

"நீங்கள் யார்? நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் பகீரதன். “கீழுலகின் முடிவிலா இருளில் வாழும் நாங்கள் உன் முன்னோர். இங்கிருந்து எங்களுக்கு மீட்பு வேண்டும்” என்றனர். “நான் என்ன செய்யவேண்டும் மூதாதையரே? வேண்டுமென்றால் நானும் உங்களுடன் அவ்விருள்வெளியில் முடிவிலி வரை வாழ்கிறேன்” என்றான். “தன் முன்னோருக்குச் செய்யவேண்டியதே மானுடனின் முதல்கடமை. அவன் பிறப்பதற்குள்ளாகவே உருவானவை அவை. பிறந்தபின் உருவானவையே பிற என்று கற்றிருக்கிறேன். எதை ஆற்றவும் நான் சித்தமே” என்றான்.

மைந்தா, நீ எங்கள் குருதியின் துளி. மண்ணில் நீ அள்ளி விடும் நீர் மட்டுமே எங்களை வந்தடையும்” என்றனர் முன்னோர். “நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் பகீரதன். “நீ செய்யக்கூடுவது ஒன்றே. முடிவிலா காலம் மடிந்து மடிந்து சுருண்ட இவ்விருளில் விடாயும் பசியும் எரியும் சிதைமேல் ஒவ்வொரு கணமும் நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு அன்னமும் நீரும் அளி அது ஒன்றே இயல்வது” என்றனர். “எந்தையரே, நானிருக்கும் காலம் வரை அதைச்செய்கிறேன். ஆனால் அதன்பின்னரும் காலம் அப்படியேதானே இருக்கும். உங்களை விண்ணுலகுக்குச் செலுத்த நான் செய்யவேண்டியது என்ன?” என்றான் பகீரதன்.

“இளையோனே, கோசலத்தை ஆண்ட சூரியகுலத்து இக்ஷுவாகுக்களின் மாமன்னன் சபரரின் நூறு மைந்தர்கள் நாங்கள்” என்று மூதாதையர் சொல்லத்தொடங்கினர். நெடுங்காலம் முன்பு எங்கள் தந்தை சபரர் நூறு அஸ்வமேத வேள்விகள் செய்து பாரதவர்ஷத்தை முழுமையாகவே வென்று தன் செங்கோலை நிலைநாட்டினார். தோல்வியடைந்தவன் இரங்கத்தக்கவன். தகுதிக்குமேல் வெற்றிபெற்றவன் மேலும் இரங்கத்தக்கவன். வெற்றி எங்கள் தந்தையின் விழிகளை மறைத்தது. நூறாவது அஸ்வமேத நிறைவுநாளில் ஆணவத்துடன் “இனி நான் வெல்வதற்கேதுள்ளது?” என்று சொல்லி நகைத்தார்.

அப்போது வெளியே அன்னசாலையில் உணவு உண்டுகொண்டிருந்த கன்னங்கரிய திராவிடநாட்டு யோகி ஒருவன் உரக்க நகைக்கத் தொடங்கினான். அவனருகே இருந்தவர்கள் அவனை அடக்க முயல அவன் மேலும் மேலும் வெடித்து நகைத்தான். நகைத்தபடி எழுந்து எச்சில் கையை உதறியபடி நடந்தான். அவன் காணிக்கை கொள்ளாமல் செல்வதைக் கண்ட அமைச்சர் பின்னால் ஓடிச்சென்று அவனைத் தடுத்து வணங்கி பரிசில்பெற்று வாழ்த்திச்செல்லும்படி கோரினார்.

சடைக்கற்றைகளை அள்ளி தோளுக்குப்பின்னால் வீசி திரும்பி வெறிமின்னிய கண்களுடன் அவன் சொன்னான் “உங்கள் அரசன் ஒரு மூடன். அடுப்பிலிருக்கும் பாத்திரத்தை மட்டுமே அறிந்தவன். அதனுள் நிறைந்த அமுதை அறியமாட்டான். அதன் அடியில் எரியும் அனலையும் அறியமாட்டான். அவன் பரிசிலை நான் பெற்றால் என் ஞானமும் கறைபடும். விலகுக!” அவன் நகர் நீங்கிச் செல்வதற்குள் அச்செய்தியை சபரருக்கு ஒற்றர்கள் அறிவித்தனர்.

மாமன்னர் சபரர் குதிரையில் விரைந்தோடி அந்த யோகியை வழிமறித்தார். “நீ சொன்னதற்கு பொருள் சொல்” என்றார். “மூட மன்னா, நீ செய்தது மண்ணை மட்டும் வெல்வதற்கான அஸ்வமேதம். மண்ணில் நிறைந்துள்ளது விண். அடியில் எரிகிறது பாதாளம். அவற்றை வென்றபின் ஆணவம் கொண்டு நகைத்தபடி எனக்கு பரிசில்கொடு. பெற்றுக்கொள்கிறேன்” என்றான். சபரரை நோக்கி கைநீட்டி நகைத்தபடி விலகிச்சென்றான்.

பின்னால் ஓடிச்சென்று அவன் சடையைப்பற்றி நிறுத்தி சபரர் கூவினார் “என்னால் இயலாதென்று சொல்கிறாயா? மூவுலகையும் வெல்லும் ஆற்றல் எனக்கில்லை என்கிறாயா?” அவன் மேலும் நகைத்து அவர் கையை தட்டினான். “முயற்சிசெய். தலைமுறைக்கொருமுறை ஒருவனை இறைசக்திகள் தேர்வுசெய்கின்றன. மானுடத்தின் ஆற்றலையும் எல்லைகளையும் தாங்களே சோதித்து அறிந்துகொள்வதற்காக” என்றபின் நடந்து விலகினான்.

மாமன்னர் சபரர் வெறிகொண்டவரானார். பாரதவர்ஷத்தின் அத்தனை வைதிகர்களையும் வரவழைத்தார். மூவுலகையும் வெல்லும் அஸ்வமேதம் ஒன்றை அமைக்க ஆணையிட்டார். வைதிகர் திகைத்து பின் வணங்கி அப்படி ஒரு வேள்வியை மானுடன் செய்யவியலாது என்றனர். “செய்தாகவேண்டும்... முடியாதென்று சொல்பவர்கள் எனக்குத் தேவையில்லை” என்று சபரர் கூவினார். “அதற்கு வேண்டுவதென்ன? இவ்வுலகின் அனைத்து நதிகளையும் நெய்யாக்கி அவியூட்டுகிறேன்... அனைத்து மலைகளையும் சமித்தாக்குகிறேன்....” வைதிகர் “ஆனால் வேதம் எல்லையுள்ளது அரசே. விண்ணில் வாழும் வேதத்தின் ஒருதுளியே மண்ணுக்கு இதுவரை வந்திருக்கிறது” என்றனர்.

ஒருநாள் வேசரநாட்டிலிருந்து கனகர் என்னும் பெருவைதிகர் தன் மாணவர்களுடன் அரசரைத் தேடிவந்தார். மூவுலகையும் வெல்லும் அஸ்வமேதத்தை அவர் இயற்றியளிப்பதாக சொன்னார். “நான் கேட்பவை அனைத்தும் வரவேண்டும். மறுசொல் சொல்லப்படுமென்றால் அக்கணமே நான் எழுந்து தென்திசை நோக்கி செல்வேன்” என்றார் கனகர். “அவ்வண்ணமே” என்றார் சபரர். அமைச்சர்களை அழைத்து கருவூலநிதிக்குவையை முழுக்க அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கச் சொன்னார். தன் நால்வகைப்படைகளையும் கனகருக்கு சேவகர்களாக ஆக்கினார். தானே காவலனாக வேள்விமுகத்தில் தண்டேந்தி நின்றார்.

கனகர் வெள்ளிக்கால்களும் பொன்னாலான உடலும் வைரங்கள் பதிக்கப்பட்ட வாலும் கொண்ட இயந்திரக்குதிரை ஒன்றைச் செய்யும்படி சிற்பிகளிடம் ஆணையிட்டார். நூற்றெட்டு நாள் செய்த யாகாஸ்வ பூசையின் இறுதியில் அந்த சிற்பக்குதிரை செங்கனல் போன்ற வைரங்களால் ஆன விழிகளைத் திறந்தது. கனகர் அதன் சரடை வேள்வித்தூணில் பிணைத்திருந்த பொன்வாளால் அறுத்தார். பொற்பிடரி குலைத்து மும்முறை கனைத்து காலெடுத்துவைத்து நடக்கத் தொடங்கியது. அதன் கால்பட்ட இடங்களில் எல்லாம் மண் குழிந்தது. “இந்த ஒவ்வொரு குழியும் பச்சைமானுடக் குருதியால் நிறையவேண்டும்” என்றார் கனகர். குருதித்தடங்களால் பூமியைத் தைத்தபடி அது நடந்துசென்றது.

அங்கே வேள்விச்சாலையில் இருந்த வைதிகர் நெருப்பில் அக்குதிரை செல்லும் வழியைக் கண்டனர். மன்னரின் நால்வகைப் படைகளும் அதன் கால்தடங்களை தொடர்ந்து சென்றனர். அந்தப் பொற்குதிரை மும்முறை உலகை வலம் வந்தது, விந்தியமலையில் இருந்த ஒரு பெரும் பிலம் வழியாக பாதாளத்தை அடைந்தது. ஏழு உலகாக விரிந்த இருள்வெளி வழியாக ஓடிக் கடந்து வந்தது. பின் இமயத்தின் பனிமுடிகளில் ஏறியது. மேகங்களில் தாவி விண்ணில் நுழைந்து ஒளிமிக்க ஏழுலகங்களையும் கடந்து மறைந்தது.

சபரர் எழுந்து நின்று கூத்தாடினார் “வென்றேன்! வென்றேன்!” என கூவினார். “அந்த யோகி எங்கிருந்தாலும் இழுத்துவாருங்கள். அவன் என் பாதங்களைப் பணிந்து என் பரிசிலைப் பெறட்டும்” என்றார். “பொறுங்கள் அரசே, நம் குதிரை மீண்டுவந்து இந்த வேள்வித்தூணில் மீண்டும் கட்டப்படும்போதுதான் அஸ்வமேதம் முடிவடைகிறது” என்றார் கனகர். விண்ணுலகம் ஏழையும் ஒவ்வொன்றாக அந்தக் குதிரை வெல்வதை வைதிகர் நெருப்பின் திரையில் கண்டனர். ”இதோ...இதோ” என்று சபரர் கூவிக்கொண்டே இருந்தார். அவரது மெய்சிலிர்த்து கண்களில் நீர்வழிந்தது.

ஆனால் விண்ணிலிருந்து இமயச்சரிவுக்கு இறங்கிய குதிரை அங்கேயே நின்றுவிட்டது. அது மீண்டு வரவில்லை. அது இருக்குமிடமும் தெரியவில்லை. “மறைந்துவிட்டது அரசே” என்றனர் வைதிகர். “எங்கே? மூவுலகையும் காட்டுங்கள்” என்று சபரர் கூவினார். “அரசே, மூவுலகங்களுக்கு அப்பாலும் பேருலகங்கள் உள்ளன. மாமுனிவர்களின் தவ உலகங்கள். பெருங்கவிஞர்களின் கனவுலகங்கள்...” என்றார் கனகர். சினந்து தோள்தட்டி எழுந்த சபரர் வெறிகொண்டு கூவினார். “சென்று அப்புரவி எங்குள்ளதோ அந்த இடத்துக்கு உரிமையாளனைக் கொன்று அதை கொண்டுவருக!”

“மன்னரின் ஆணைப்படி நூறு மைந்தர்களான நாங்கள் இமயமலையின் பல்லாயிரம் அடுக்குகள்தோறும் சென்று ஆராய்ந்தோம்” என்றனர் மூதாதையர். “ இறுதியில் மலைச்சரிவில் ஒரு மூங்கில் குடில் அருகே முளையில் அந்தப்புரவி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம்.” அவர்களின் குரலில் இருந்த துயரத்தைக் கேட்டு பகீரதன் பெருமூச்சுடன் அமர்ந்திருந்தான்.

அக்குடிலில் தன் மாணவருடன் இருந்தவர் கபிலர் என்னும் முனிவர். மெலிந்த கரிய உடலும் சடைமுடி செறிந்த தலையும் கொண்டவர். நாங்கள் சென்று குதிரையை அவிழ்த்தோம். அவர் கைநீட்டி எங்களைத் தடுத்தார். “இளையோரே, கோடைகாலத்தில் எனக்கு நீர் கொண்டுவரும்பொருட்டு ஒரு புரவிக்காகத் தேடியபோது தானாக வந்தது இது. இதை நான் விடமுடியாது” என்றார். “இது வேள்விக்கான பொற்குதிரை. இதுவா உங்களுக்கு நீர் கொண்டுவரவேண்டும்?” என்றோம். “மானுடனோ விலங்கோ அவர்கள் எடுத்த வடிவை வாழ்ந்தாகவேண்டும்” என்றார் கபிலர். “இப்புரவி இன்று உயிருடன் இருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகாலம் நீரள்ளினால் மட்டுமே இதன் புரவிவாழ்க்கை நிறைவடைந்து இது விண்ணகம் செல்லமுடியும்.”

சினம் கொண்டு கூவியபடி வாளுடன் அவர் தலையை வெட்ட பாய்ந்து சென்றோம். “மைந்தர்களே, நீங்கள் யாரென நானறிவேன். மூவுலகையும் வெல்லலாம். தவ உலகங்களை வெல்ல அரசர்களால் இயலாது. என் உலகில் நீங்களும் உங்கள் தந்தையும் சிற்றெறும்புகள். விலகிச்செல்லுங்கள்” என்றார் கபிலர். நாங்கள் அவரை வெட்டினோம். எங்கள் வாள்கள் அவர் காலடியில் புல்லிதழ்களாக மாறி விழக்கண்டோம். ஒரு கையசைவில் எங்களை அவர் சிற்றெறும்புகளாக ஆக்கினார். அள்ளி ஒரு சிறு குழிக்குள் போட்டார். அந்த இருண்ட பாதை வழியாக இருள் விலகாத பாதாள உலகுக்குள் வந்து விழுந்தோம்.

“வேள்வி முறிந்தமையால் கனகர் திரும்பி தங்கள் நாடுசேர்ந்தார் நாங்கள் மறைந்ததை அறிந்த எந்தை பித்தரானார். எங்களை உலகமெங்கும் தேடினார். பாதாள உலகை அவரது பார்வை வந்தடைய முடியவில்லை. இருள் வெளியில் வாழ்ந்த நாங்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அழைத்தோம். எங்களை மீட்கும்படி மன்றாடினோம். எங்கள் குரல்களால் அலைக்கழிக்கப்பட்ட எந்தை எங்களுடன் பேச விரும்பி தவித்து பதைத்து அலைந்தார். துன்பம் தாளாமல் ஒருநாள் தன் உடைவாளை நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டு மறைந்தார். அதன்பின் நாங்கள் அழைக்கும் கோசல மன்னர்களெல்லாம் பித்தானார்கள். உச்சத்தில் உளமுடைந்து உயிர்விட்டார்கள். எங்கள் குரலை முழுதாகக்கேட்கும் முதல் மன்னன் நீ. எங்களை விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும்” என்றனர் முன்னோர்.

“நான் உங்களை விண்ணேற்றுகிறேன்” என்றான் பகீரதன். ”அது அவ்வளவு எளிதல்ல இளையோனே. எங்கள் பெரும்பாவத்தை விண்கங்கையின் நீர் படாமல் கழுவமுடியாது. நீ விண்ணேறி கங்கையை அடையலாம். ஆனால் அங்கே நீ விடும் நீர்க்கடன் எங்களுக்கு பயனற்றது. இந்த இருள்வெளியில் எங்களுக்கு அந்த நீர் வந்து சேர முடியாது. மண்ணில் விடும் நீரே பாதாளத்தை அடையமுடியும்” என்றனர். “அப்படியென்றால் விண்ணக கங்கையை மண்ணுக்குக் கொணர்கிறேன். அந்த நீரால் உங்களுக்கு கடன் முடிக்கிறேன்” என பகீரதன் சொன்னான். “இயல்வதல்ல அது. இறையும் அஞ்சும் பணி” என்றனர் முன்னோர்.

“அது நிகழ்ந்தாகவேண்டும் மூத்தோரே.” தலைதூக்கி தன் கண்முன் ஒளிவிட்ட துருவ விண்மீனை நோக்கி பகீரதன் சொன்னான் “நிலைபேற்றின் ஒளியே, என்னில் திகழ்க!” அச்சொல்லுடன் அவன் ஆலமரத்தடியில் அமர்ந்தான். அந்த ஒற்றைவிண்மீனின் மாற்றமில்லாமை அன்றி அவன் நெஞ்சில் ஏதுமிருக்கவில்லை. அவனைச்சுற்றி காலம் கடந்து சென்றது. பருவங்கள் மாறின. மலைப்பாறைகள் பொடியாகி மணலாகி மறைந்தன. கடல்கள் வற்றி மீண்டும் ஊறின. விண்ணில் ஆயிரம் தூமகேதுக்கள் வந்து சென்றன. அவன் அப்புள்ளியிலேயே இருந்தான்.

தன்னுள் விரிந்த சித்தப்பெருவெளியில் அவன் பிரம்மனைக் கண்டான். திசைமுகங்களுடன் தோன்றிய முதற்கவிஞன் “மைந்தா நீ வேண்டுவதென்ன?” என்றான். “விண்கங்கை மண்ணில் நிகழவேண்டும்” என்றான். “நீ கேட்பதென்ன என்றறிவாயா? கோடானுகோடி விண்மீன்களை தன் அலையொளிமின்னல்களாகச் சூடி பெருகியோடுபவள் அவள். அவளுடைய துளியினும் துளி கூட மண்ணுலகை கூழாங்கல் போலச் சுருட்டி விண்ணில் வீசிவிடும்...” என்றான் பிரம்மன். “நீ முழுமையை கேள். அழியாத நிலையை கேள். விண்ணளந்தோனின் பதம் கேள். அளிக்கிறேன்.” “கங்கையன்றி எதையும் ஏற்கமாட்டேன்” என்றான் பகீரதன்.

“கங்கையின் தலைவன் விண்ணளந்த பெரியவன். அவனிடம் கேள்” என்று சொல்லி பிரம்மன் மறைந்தான். மீண்டும் ஊழி உதித்து ஆழிவிரிந்து குமிழியென புவி எழுந்து உயிர்தழைக்கும் காலம்வரை பகீரதன் தவமிருந்தான். ஆழியும் வெண்சங்குமாக இறைவன் அவன் முன் தோன்றினான். “கங்கையை அருள்க இறைவா, அதுவன்றி நீயே ஆயினும் வேண்டேன்” என்றான் பகீரதன். “அழிவற்ற வினாவுக்கு விடை அளிக்கப்பட்டாகவேண்டும். மைந்தா, உன் நாட்டில் கங்கை பெருகியோடுக” என்றது பரம்பொருள்.

பாற்கடலோனின் ஆணைப்படி விண்ணில் வந்து பெருகி நின்றாள் கங்கை. இடியோசையென மேகங்களைத் தழுவிப்பெருகிய குரலில் “பகீரதனே, என் ஒரு துளியை உன் மண்ணுக்கு அளிக்கிறேன். ஆனால் அவளை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் உன் மண்ணுக்கில்லை என்றுணர்க. வெற்புகள் இடிந்து தூளாகும். புவிக்கோளம் தன் அச்சுவிட்டுச் சிதறி இருள்வெளியில் மறையும்” என்று சொன்னாள். பகீரதன் “நீ இறங்க நான் தர்ப்பைப்பீடம் அமைக்கிறேன்” என்றான். நகைத்து “அமைத்ததும் என்னை அழை” என்று சொல்லி மறைந்தாள் விண்கங்கை.

மீண்டும் காலத்தை தன்னுள் மடிக்கத் தொடங்கினான் பகீரதன். சுழன்று சுழன்று சென்ற அம்முடிவிலியின் ஒருபுள்ளியில் மானும் மழுவும் நாகமும் நிலவும் ஏந்தி செந்நெருப்புவண்ணன் தோன்றினான். “இறைவ, கங்கையை மண்ணிறக்கும் தர்ப்பைப்பீடம் ஒன்றே நான் வேண்டுவது” என்றான் பகீரதன். அவ்வண்ணமே ஆகுக என்றான் இறைவன்.

“தென்திசைகொண்ட தெய்வம் தன் விரிசடையை தர்ப்பைப்புல் இருக்கையாக விரித்தது. அதில் விண்ணக கங்கை பல்லாயிரம்கோடி அருவிகள் போல பொங்கி விழுந்தாள் என்கின்றது புராணம்” என்றார் தௌம்ரர். “அவளுடைய பெருவிசையில் விண்ணகம் அதிர்ந்து விண்மீன்கள் திசைமாறின. ஆனால் செந்தழலோனின் சடையில் ஒரு நீர்த்துளியாக மறைந்தாள். கங்கையை நோக்கி கைவிரித்து கண்விழித்து அமர்ந்திருந்த துருவன் கண்டது விண்ணையும் மண்ணையும் கருமேகக்குவைகள் போல மூடிநிறைத்திருந்த சடைவிரிவைத்தான்.”

“மறுகணமே மீண்டும் ஊழ்கத்தில் அமர்ந்து ஏழு ஊழிக்காலத்தை அவன் கடந்தான் என்கிறது புராணம்” தௌம்ரர் சொன்னார். “தவமுடிவில் அவன் பிறைசூடியபெருமானின் இடப்புறம் அமைந்த பிராட்டியை எழுப்பினான். தன்னெதிரே குளிர்நகை விரிய வந்து நின்ற தேவியிடம் கங்கையை மண்ணிலிறங்கச்செய்யவேண்டுமென சொல்கேட்டான். கங்கையைக் கரந்ததை தன்னிடமிருந்து மறைத்தான் என்றுணர்ந்த அன்னை அவனிடம் சடைக்கூந்தல் விரித்து ஆடும் கொடுகொட்டியை ஆடும்படி கோரினாள். அப்பனும் அன்னையும் ஆடிய ஆடல் மின்னல்கதிர்களென விண்ணை நிறைத்து இடியோசையென திசைகளை சூழ்ந்தது. அவிழ்ந்த விரிசடையில் இருந்து சரிந்து கங்கை மண்ணில் மேருமலைமேல் விழுந்தாள்.”

“கங்கை நீரில் தன் மூதாதையருக்கு நீர்க்கடன் செய்து அவர்களை இருள்வெளியில் இருந்து மூதாதையர் உலகத்திற்கு அனுப்பினான் பகீரதன். அவன் தவத்தால் மண்ணில் இறங்கிய பெருக்கையே பாகீரதி என்கிறோம். அலைகளாக எழுந்தவள். ஆயிரம் கோடி கரங்களாக விரிந்து அமுதூட்டுபவள். வேரில் நீராகவும் கனியில் அமுதாகவும் மலர்களில் தேனாகவும் நிறைபவள். இப்பாரதவர்ஷம் அவள் முலையூட்டிப் புரக்கும் மகவு” தௌம்ரர் சொன்னார். “அன்னையின் பெருவிரல் நகம் முதலில் பட்ட இடம் மேருமலையுச்சி. அவள் பாதம் பதித்து நின்ற இடம் கோமுகச் சுனை. அங்கேதான் நாங்கள் துருவனை கண்டோம். அன்னையின் அலைகளுக்குள் அணையா விழைவொன்று குடியேறியதென்று அறிந்தோம்.”

தன் மாணவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “இப்புராணக்கதையின் பொருளை அறிய யோகநூலை கற்றுத்தெளியவேண்டும். பரம்பொருளின் ஒருதுளியே பெருவெளி. அகண்டாகாசம் என அதைச் சொல்கின்றன யோகநூல்கள். அதை நிறைக்கும் பாலொளிப்பெருக்கு மண்ணில் இறங்குவது மானுடனின் அகவெளியிலேயே. அதை சிதாகாசம் என்கின்றன யோகநூல்கள். விண் நிறைத்து சித்தம் நிறைத்து பின் மண் நிறைத்துப் பெருகும் பேரன்பையே கங்கை என வணங்குகின்றன உயிர்க்குலங்கள்.”

பத்ரர் துருபதனின் முகத்தை எரியும் நெருப்பின் ஒளியில் கண்டார். அவர் விழிகள் தழலை ஏற்று ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.

பகுதி நான்கு : அனல்விதை - 5

கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக் கடந்ததும் கங்கை மேலும் மேலும் அகன்று மறுகரை தெரியாத விரிவாக ஆகியது. அதன் நீல அலைவிரிவில் பாய் விரித்துச்சென்ற வணிகப்படகின் அமரமுனையில் நின்று துருபதன் கரையை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே வந்து “இன்னும் நான்குநாழிகைநேரத்தில் கல்மாஷபுரி வந்துவிடும் என்றனர் அரசே” என்றார்.

இமயமலையடிவாரத்தில் இருந்து மீண்டதும் துருபதன் முற்றிலும் மாறிவிட்டிருந்தார். அவரது மாற்றம் தௌம்ரரின் தவச்சாலையில் நிகழ்ந்தது என்று பத்ரர் அறிந்திருந்தார். பகீரதனின் கதையைக் கேட்டு அமர்ந்திருந்த அந்த இரவில் அவர் கண்ணெதிரே துருபதன் உருமாறிக்கொண்டிருந்தார். நாடக அரங்கத்தில் ஒரு திரை சரிந்து இன்னொன்று எழுவதுபோல அவர் உடலில் இருந்த நோயும் துயரும் கொண்ட துருபதன் மறைந்து அவர் அறிந்திருக்காத இன்னொருவர் எழுந்தார்.

அன்றிரவு அவர் குடிலில் இரவில் துயில் கலைந்து எழுந்தபோது அருகே துருபதனைக் காணாமல் திடுக்கிட்டு பதறி வெளியே ஓடிவந்தார். “அரசே, அரசே” என்று அழைத்தார். முற்றத்தில் மலைக்காற்று விரித்த மென்மணல் அலைகள்மேல் அவர் காலடியைக் கண்டார். அதைத்தொடர்ந்து ஓடி மூச்சிரைக்க கங்கைக்கரையை அடைந்தார். இருளுக்குள் கங்கையின் நுரைவெண்மையின் ஒளியில் நிழலுருவாக துருபதன் நிற்பது தெரிந்தது.

அருகே சென்றபோதே பத்ரர் துருபதனில் மாறுதலை உணர்ந்தார். அசைவற்று நின்ற அவரது உடலை பின்னாலிருந்து நோக்கியபோதே அந்த வேறுபாடு தெரிந்தது. வேறு எவரோ என்பது போல முழுமையான மாறுதல். மெல்ல அருகே சென்று பத்ரர் மூச்சிளைப்பாறினார். மூச்சொலியால் அவரை அறிந்து துருபதன் திரும்பி நோக்கினார். பத்ரர் என்ன சொல்வதென்று தெரியாமல் “குளிர் ஏறிவருகிறது அரசே” என்றார்.

துருபதன் “குளிரா? இல்லையே. என் உடல் கொதிக்கிறது. வியர்வை எழுவதுபோலத் தெரிகிறது. ஏனென்றால் இதோ பேருருக் கொண்டு நின்றிருப்பது ஆறல்ல. நெருப்பு. வெண்ணெருப்பு. பத்ரரே, நெருப்பின் ஒலியல்லவா அது? நெருப்பின் பசிக்கு அளவே இல்லை. அதை உணவு அணைக்கமுடியாது. உண்ணும்தோறும் வளரும் பசி என்றால் நெருப்பு மட்டுமே. நெருப்பைவிட ஆற்றல்மிக்க ஏதும் இப்புவியில் இல்லை. பிரம்மத்தின் புன்னகை ஒளி என்றால் அதன் சினமே நெருப்பு... வெண்ணிற நெருப்பு இன்னும் அழுத்தமானது. செந்நிற நெருப்பு தன்னை நெருப்பென காட்டிக்கொள்கிறது. வெண்ணிற நெருப்பு அதில் எரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் வெம்மைகொண்டது...”

சிலகணங்கள் அது துருபதனா ஏதேனும் மாயத்தோற்றமா என்றே பத்ரர் ஐயுற்றார். துருபதன் பேசிக்கொண்டே இருந்தார். உள்ளே ஓடும் சொல்லோடை அப்படியே இதழ்கள் வழியாக வெளிவருவதுபோல. ஏதேனும் கானகத்தெய்வம் அவரில் குடியேறிவிட்டதா என்று தோன்றியது. சொற்களின் பெருக்கு. ஆனால் பொருளற்ற சொற்களாக அவை இருக்கவில்லை. பேசிப்பேசி அவர் தன்னை முழுமையாக மீண்டும் உருவாக்கிக்கொள்கிறார் என்று தோன்றியது. முந்தையகணம் வரை இருந்த துருபதனை முழுமையாக அழித்து வெண்சுவராக்கி அதன்மேல் அவர் தன்னை வரைந்து எடுத்துக்கொண்டிருந்தார். துளித்துளியாக.

“நான் பேசுவதை நீங்கள் வியக்கிறீர்கள் என அறிகிறேன் பத்ரரே. பேசப்பேச என்னுள் சொற்கள் ஊறிக்கொண்டே இருக்கின்றன. பேசாதுபோனால் அவை எடைகொண்டு என் அகத்தை அடைத்துவிடும் என தோன்றுகிறது” என்றார் துருபதன். “நான் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தேன். குரலில்லாமல் என்னை கேட்டுக்கொண்டிருந்தேன். பேசும்போது குரல் எழுகிறது. அது துணையாக ஒருவர் அருகே நின்றிருக்கும் உணர்வை அளிக்கிறது. தன்குரலைக் கேட்கவே மானுடர் பேசுகிறார்கள்.”

இரவெல்லாம் துருபதன் பேசிக்கொண்டிருந்தார். “இரவு எவ்வளவு மகத்தானது. இருட்டைப்போல அழகுள்ளது எதுவும் இல்லை. அது நம்மை தனித்துவிட்டுவிடுகிறது. நம் உடலை நாம் பார்க்கும் வதையை வெல்கிறோம். நம் நெஞ்சு நேரடியாகவே இருளில் கரையமுடியுமெனத் தோன்றுகிறது. அங்கே விண்மீன்கள் இருளில் வெறும் உணர்வுகளாக எண்ணங்களாக ஆன்மாவாக நின்றிருக்கின்றன. நானும் இங்கே அவ்வாறுதான் நின்றிருக்கிறேன். எங்களை இணைத்திருக்கிறது பிரபஞ்ச இருள்... முடிவிலியை நிறைக்க இருளால் மட்டுமே முடியும்.”

கைநீட்டி துருபதன் கூவினார் “அங்கே விண்ணில் நின்றிருக்கும் துருவனைத்தான் நோக்கிக் கொண்டிருந்தேன். எத்தனை பெரிய தனிமை. அதை நம்மிடம் சொன்னது யார்? ஆம்... தௌம்ரர்... அவர்தான் சொன்னார். துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை. வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது? தெரியவில்லை. ஆனால் மண்ணில் தனித்திருப்பதைக் கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியும். பத்ரரே, துருவனைத்தவிர நான் இன்று அருகிருக்க விழைவது வேறேதுமில்லை. விடிந்தபின்னரும் என் விழிகளில் துருவன் எஞ்சியிருப்பான். கங்கையில் துருவனைக் கண்டதை நம்மிடம் சொன்னது யார்? ஆம், தௌம்ரர்தான் சொன்னார்.”

மறுநாள் முதல் துருபதன் வெறியுடன் உணவுண்ணத் தொடங்கினார். மீண்டும் மீண்டும் குடிப்பதற்கும் தின்பதற்கும் எதையாவது கேட்டுக்கொண்டிருந்தார். “சக்ரசேனா, மூடா, என்னசெய்கிறாய்? உணவு கொண்டுவா” என்று கூவினார். அவர் உணவை உண்பதைக் காண பத்ரருக்கு மேலும் அச்சமெழுந்தது. பலமுறை தயங்கியபின் “அரசே, நீங்கள் அதிகமாக உணவுண்ணுகிறீர்கள். அது நல்லதா என்று ஐயுறுகிறேன்” என்று அவரிடம் சொன்னார். துருபதன் “பத்ரரே, நான் உண்ணும் உணவெல்லாம் அக்கணமே எரிந்தழிகின்றன. என்னுள் இருக்கும் நெருப்புக்கு உணவு போதவில்லை” என்றார். “ஆனால்... இப்படி இடைவெளியில்லாமல்...” என்று பத்ரர் சொல்லத் தொடங்க “நானும் மருத்துவநூலை அறிவேன் பத்ரரே, உண்ட உணவு எஞ்சியிருந்தால்தான் நஞ்சாகும்... உணவில்லை என்றால் என் உடலின் அனலில் குருதிகூட எரிந்தழியக்கூடும்.”

மிகச்சில வாரங்களிலேயே அவர் உடல்கனத்து வலுப்பெற்றுவிட்டார். இமயமலைப்பயணமும் தேவப்பிரயாகையின் பூசையும் அவரை மீட்டுவிட்டன என்று அவர் மைந்தர்கள் நம்பினார்கள். குலதெய்வத்திற்கு நன்றிக்கடன் பூசனைகள் செய்யப்பட்டன. ஆனால் துருபதனிடமிருந்த வேறுபாடு மெல்லமெல்ல அவர்களுக்கும் தெரியத்தொடங்கியது. திரும்பிவந்தபின் அவர் அரசப்பொறுப்பை ஏற்கவேயில்லை. ஒருநாள் கூட மணிமுடி சூடி அரியணையில் அமரவில்லை. பகல்முழுக்க தன் அறைக்குள்ளேயே இருந்தார். அவைநிமித்திகர்களை வரவழைத்து நிமித்தச்சுவடிகளை வரவழைத்து வாசித்தார். அந்தியில் வெளியே சென்று கங்கைக்கரையில் வானளாவ நெருப்பெழச்செய்து அதனருகே நின்றிருந்தார். நெருப்பைச் சுற்றிவந்து கைகளை விரித்து “எழுக எழுக” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

பத்ரரிடம் மட்டுமே அவர் பேசினார். பத்ரர் அங்கிருக்காததுபோல அவரது சொற்கள் வந்துகொண்டே இருந்தன. அத்தனை நேரம் பேசியும்கூட பேசப்பட்டவை மீளமீள வரவில்லை என்பதை உணர்ந்ததும் பத்ரர் துருபதனின் உள்ளம் செயல்படும் வீச்சை எண்ணி வியந்தார். பித்தில் ஒருவரின் ஞானம் விரியமுடியுமா? அதுவரை துருபதனில் அவர் சிந்தனையை கண்டதில்லை. வெளிநோக்கி விரியும் அகத்தை அறிந்ததில்லை. “சித்தம் மீது புறவுலகத்தை ஏற்றி வைத்திருக்கிறோம் பத்ரரே. அது விலகினால் அடையும் விடுதலை அது” என்றார் மருத்துவர் கிரீஷ்மர்.

துருபதன் எப்போதும் நெருப்பைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். நெருப்பைக்கொண்டு அனைத்தையும் விளக்கிவிடமுயல்பவர் போல. “எண்ணியிருக்கிறோமா பத்ரரே? இப்புவியில் உள்ள அனைத்தும் இருத்தல் கொண்டவை. ஒன்றே ஒன்றுதான் அழிதலே இருப்பாகக் கொண்டது. காலத்தையும் வெளியையும் சுமந்துகொண்டிருக்கின்றன அனைத்தும். நெருப்போ அவற்றை ஒவ்வொரு கணமும் உதறிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்றால் என்ன என்று எண்ணினீர்கள்? நெருப்பென்றால் நெளிவு. மாட்டேன் மாட்டேன் என உதறும் விரைவு. வேண்டாம் வேண்டாம் என மறுக்கும் திமிறல்.”

அப்படியே அவர் சொல்லிக்கொண்டே செல்வார். “நெருப்பென்றால் இவ்வனைத்தும் அழியும் கணத்தின் காட்சிவடிவம். பிரம்மத்திற்கு எதிராக பொருள்கள் கொண்ட சினமல்லவா நெருப்பு? நான் இல்லை நான் இல்லை என்று சொல்லும் இருப்பு அல்லவா அது? நெருப்பு ஒரு நாக்கு. விண்ணை நோக்கி அது மண்ணின் அழியாத சொல் ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறது. நெருப்பென்பது மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் தெய்வங்களின் ஒளிமிக்க பாதை. ஒவ்வொரு கணமும் இப்புவியை அழித்துக்கொண்டே இருக்கும் ஒன்றை நம்பி இங்கு நாமெல்லாம் வாழ்கிறோம் என உணர்ந்திருக்கிறோமா?”

“பத்ரரே, நெருப்பென்பது அழிவு. ஆக்கத்தை விட ஆயிரம்கோடி மடங்கு பெரியது. ஆக்கத்தைவிட இறைச்சக்திகளுக்கு விருப்பமானது. ஆகவேதான் வேள்விக்குளங்கள் தோறும் அது நின்றெரிகிறது. சொல்லப்போனால் இங்கே உள்ளவை இரண்டே. நெருப்பும் நெருப்பு அல்லாதவையும். நெருப்பல்லாத அனைத்தையும் உண்ணுவதே நெருப்பின் இயல்பென்பதனால் பசியும் உணவுமன்றி இங்கு ஏதும் இல்லை என்று சொல்வேன். நெருப்பை அன்றி மானுடன் அறிவதற்கேதுமில்லை இங்கே.” பத்ரர் திகைத்த விழிகளுடன் நோக்கியிருப்பார். “நெருப்பை வளர்ப்பதுபோல புனிதமானது ஏதுமில்லை. நெருப்புக்கு அவியிடுவதைப்போல மகத்தானது ஏதுமில்லை. நெருப்பில் மூழ்கி அழிவதுபோல முழுமையும் வேறில்லை.”

வெறித்த விழிகளுடன் கைகளை நீட்டி துருபதன் கூவினார் “ஸ்வாகா! அன்னையே ஸ்வாகா! இப்புவியை ஒரு கவளமாக உண்டு பசியாறுக. ஸ்வாகா! அனைத்தையும் அழித்து நடமிடுக. மண்ணை விண்நடனமாக ஆக்கும் பெருவல்லமையே ஸ்வாகா!” அப்படியே வெறிகொண்டு கைகளை ஆட்டியபடி நடனமிட்டார். இரவெல்லாம் அங்கே நெருப்பைச்சுற்றி ஆடிச் சோர்ந்து விடிகாலையில் அப்படியே கரியும் புகையும் படிந்த உடலுடன் விழுந்து துயில்வார். அவரை மெல்ல தூக்கி மஞ்சத்துக்கு கொண்டுசெல்வார்கள்.

ஒருநாள் பின்காலையில் பத்ரர் அரண்மனைக்கு வந்தபோது ஒரு சுவடியுடன் ஓடிவந்த துருபதன் சொன்னார் “நான் தேடிய விடை கிடைத்துவிட்டது. பத்ரரே, நான் காத்திருந்தவர்கள் இவர்களே” பத்ரர் சுவடியை வாங்கி அதை வாசித்தார். “இவர்கள்...” என அவர் சொல்லத் தொடங்கும்போதே “அதர்வ வைதிகர்களான யாஜரும் உபயாஜரும். எண்ணியன எய்தும் பூதவேள்வியின் கலையறிந்தவர்கள். பத்ரரே, நான் ஆணையிட்டுவிட்டேன். வணிகக்கலம் ஒன்று ஒருங்குகிறது. நாம் இப்போதே வணிகர்களாக வேடமிட்டுச் செல்கிறோம்” என்றார்.

“அரசே, நீங்கள் வேண்டுவதென்ன?” என்றார் பத்ரர். “நான் பகீரதன். மண்ணில் ஒரு பெருநதியை இறக்கவிருக்கிறேன்” என்றார் துருபதன். “இதோ என் சிதாகாசத்தில் அந்த நதி நிறைந்து கொந்தளிக்கிறது. அதை இம்மண்ணிலிறக்கியாகவேண்டும்.” முகம் விரிந்து கண்கள் ஒளிர நகைத்து “அமுதநதி அல்ல அது, நச்சுப்பெருக்கு. இப்புவியை அழிக்கும் ஆலகால கங்கை... அதைத்தான் இவர்களைக்கொண்டு இங்கு கொண்டுவரப்போகிறேன்” என்றார்.

படகு கரையணைந்தது. மூட்டைகளுடன் துருபதனும் பத்ரரும் இறங்கிக்கொண்டனர். கல்மாஷபுரி எப்போதாவது சிறுவணிகர்கள் மட்டும் வந்துசெல்லும் சந்தை கொண்ட சிற்றூர். ஊரின் தென்கிழக்கு எல்லையாக ஓடிய கங்கைக் கரையில் சிறு கோயில்களும் அவற்றை ஒட்டி அன்ன சத்திரங்களும் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி இளைப்பாறிவிட்டு கூலவணிகர்கள்போல நகர்வீதியிலும் சந்தையிலும் அலைந்தனர். அதர்வ வைதிகர்களான யாஜர், உபயாஜர் சகோதரர்களைப்பற்றி நேரடியாக விசாரித்தபோது வைதிகர் எவரும் அவர்களின் பெயர்களையே கேள்விப்பட்டிருக்கவில்லை என்று தெரிந்தது. வணிகர்களும் அவர்களை அறிந்திருக்கவில்லை.

பின்னர் மதுக்கடைகளில் விசாரித்தனர். மூன்றுநாட்களுக்குப்பின் கங்கையோரத்தில் சதுப்புக்குழி ஒன்றுக்குள் நின்ற பேராலமரத்தின் அடியில் இருந்த தொழுநோயாளிகளுக்கான மதுக்கடை ஒன்றில் அவர்கள் சந்தித்த வேளாப்பிராமணன் ஒருவன் யாஜரைப்பற்றி சொன்னான். மெலிந்து உள்நோக்கி வளைந்த உடலும் பெரிய மஞ்சள்நிறப் பற்களும் தெறித்துவிழுவதுபோன்ற தவளைக் கண்களும் உருகி அழிந்த மூக்கும் வளைந்து குறுகிய விரல்களும் கொண்டிருந்த பீதாகரன் “ஆம், நானறிவேன்” என்று சொல்லி நகைத்து “ஆனால் நான் அதை தங்களுக்கு ஏன் சொல்லவேண்டும்?” என்றான்.

பத்ரர் அவனுக்கு கள் வாங்கி அளித்தார். “மீன்... மீனில்லாமல் கள் உண்பது வைதிகருக்கு அழகல்ல” என்று அவன் கைதூக்கி சொன்னான். அப்பால் இருந்த தொழுநோயாளிகள் நகைத்தபடி மின்னும் கண்களால் அவனை நோக்கினர். ”தாங்கள் விழைவதை உண்ணலாம் வைதிகரே” என்றார் பத்ரர். “நன்று, வேள்வியை நான் மறந்தாலும் வேள்வி என்னை மறக்கவில்லை. எரிகுளத்தை வயிற்றில் ஏந்தியிருக்கிறேன்” என்றான் பீதாகரன்.

அவர்களின் முகங்கள் எல்லாம் ஒன்றே போல இருப்பதாக பத்ரர் எண்ணினார். பின்னர்தான் அது மூக்கு இல்லாமலிருப்பதனால் தோன்றுவது என்று புரிந்துகொண்டார். அவர்களனைவருமே பிச்சை எடுத்து வாழ்பவர்கள். தொழுநோயாளி குபேரனின் வடிவம் என்று வணிகர் நம்பினர். ஆகவே அவர்களைக் கண்டதுமே பார்வையை விலக்கிக்கொண்டு நாணயங்களை விட்டெறிந்து விலகிச்சென்றனர். அனைவரிடமும் மடிச்சீலைகளில் நாணயங்கள் குலுங்கின. கள்விற்றவனும் தொழுநோயாளியாக இருந்தான். அவன் மூங்கில் குழாய்களில் ஊற்றி அளித்த கள்ளை வாங்கிக்கொண்டு மணல்மேல் கூடி அமர்ந்து பேசிச்சிரித்தபடி அவர்கள் குடித்தனர்.

பத்ரர் பீதாகரனுக்கு சுட்டமீனும் கள்ளும் வாங்கிக்கொடுத்தார். அவன் மூங்கில்கோப்பையை விரலற்ற கைகளால் பொத்தி எடுத்து ஒரே மூச்சில் குடித்து காய்ந்த புல் போன்ற தாடிமயிரில் கள்வழிய நகைத்து “அருமையான கள். அதோடு இணைந்த மீன். ஆகவே நீங்கள் விரும்பும் தகவலைச் சொல்லி விரைவில் உங்களை நரகத்துக்கு அனுப்புவது என் கடமை” என்று சொல்லி கண்சிமிட்டினான். தொழுநோயாளிகள் உரக்க நகைக்க “ஆம், அவர்கள் கைகளும் குறுகட்டும். முகம் எழில் பெறட்டும்” என ஒரு முதிய தொழுநோயாளி சொன்னார். “உத்தமரே, மூக்கு என்பது மானுடருக்கு தேவையற்ற உறுப்பு. பாருங்கள், நாங்களெல்லாம் அதை தவம் செய்து இழந்திருக்கிறோம்.” மீண்டும் நகைப்புகள்.

மஞ்சள்நிறப் பற்கள். பீளைபடிந்த கண்கள். கருகிய மரக்கிளைகள் போன்ற கைகால்கள். “எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளும் அனைத்துச்செய்திகளும் உங்கள் உலகில் பொருள்மிக்கவையே” என்றார் கிழவர் ஒருவர். “ஏனென்றால் நாங்கள் உங்கள் உலகிலிருந்து உதிர்ந்திருக்கிறோம். உங்கள் நகரங்களின் வேர்களில் மட்கிக்கொண்டிருக்கிறோம்.” இன்னொருவர் “எங்களுக்கு காமமும் குரோதமும் மோகமும் இல்லை. அவற்றை எங்கள் உடல் தாங்குவதில்லை. நாங்கள் யோகிகள்” என்றார்.

பீதாகரன் மேலும் ஒரு கோப்பை கள்ளை குடித்தபின் “மாமனே, அவர்கள் தேடுவது யாஜ உபயாஜர்களின் ஊரை மட்டுமே” என்றான். “ஆம், அவர்கள் வழியாக மிக விரைவில் எங்களை வந்தடையலாம்” என்றார் கிழவர். “அனைத்துச் செல்வங்களையும் அடையும் அதர்வ வேதத்தை அறிந்தவர்கள் யாஜர்கள். முன்பு ஒருமுறை ஒருவன் அப்படி அதர்வம் வழியாக அனைத்தையும் அடைந்தான்.” விரல்கள் உதிர்ந்த இருகைகளையும் தூக்கிக் காட்டி “முடிவிலாக் கருவூலம் கொண்டவன். எங்கள் குலதெய்வம் அவனே” என்றார். பீதாகரன் உரக்க நகைத்து “இந்த எளிய வணிகர்களையும் வடதிசைக் காவலனாகிய குபேரன் வாழ்த்துவானாக” என்றான். அங்கிருந்த அனைவரும் உரக்க நகைத்தனர்.

அவர்கள் வேண்டுமென்றே நகைத்துக்கொண்டிருப்பதாக பத்ரர் எண்ணினார். அவர்கள் அங்கே வந்திருப்பது அவர்களுக்கு உள்ளே எங்கோ அமைதியின்மையை அளிக்கிறது. அதை வெல்ல நகைப்பு எனும் பாவனையை பூணுகிறார்கள். தங்கள் ஊனம் மீது தொட்டுத்தொட்டுச் செல்லும் பிறர் பார்வையை வெல்லும் வழி அந்த ஊனத்தையே ஏளனத்துடன் தூக்கிக் காட்டுவதுதான் என்று கற்றவர்கள்.

கிழவர் எழுந்து அவர்களின் அருகே வந்து நின்றார். கையில் மூங்கில் கோப்பையுடன் சற்று ஆடியபடி நின்று “திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான்” என்றார். “வடதிசையை ஆள்பவர் எங்கள் தெய்வம் குபேரனே. வணிகர்களே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். என்றும் மாறாத நிலைபேறுள்ளவர் இருவரே. துருவனும் அவன் திசையை ஆளும் குபேரனும்.” அங்கிருந்துகொண்டே ஒருவன் உரக்க “மாமனே, துருவனுக்கும் அங்கம் குறையும் அரியநோய் உண்டா?” என்றான். அவர்கள் மீண்டும் உரக்கநகைத்தனர்.

“இவர்களுக்கெல்லாம் களி ஏறிவிட்டது. இனி இரவெல்லாம் குடித்துக்குடித்துச் சிரிப்பார்கள். நான் அதிதூய வைதிகக் குலப்பிறப்புடையவன், இந்த இழிசினருடன் நான் இணையமுடியாது. அதற்கு இன்னமும் மும்மடங்கு நான் குடித்தாகவேண்டும்” என்றான் பீதாகரன். “ஆகவே நீங்கள் இன்னும்கூட தாராளமாக நாணயங்களை எடுத்து வைக்கலாம்.” பற்களைக் காட்டி நகைத்து “வைதிகனுக்கு கள்ளையும் தானமாக அளிக்கலாம் என்று ஒரு ஸ்மிருதி சொல்கிறது. அது எந்த ஸ்மிருதி என்று நான் சொல்லமுடியும். ஆனால் அதற்கும் நான் மூக்குவழிய கள் அருந்தியாகவேண்டும்” என்றான்.

கள்ளில் முழுமையாக மூழ்கி தலைதொங்கி முன்னும்பின்னும் ஆடியபடி பீதாகரன் யாஜரும் உபயாஜரும் இருக்கும் ஊரைப்பற்றி சொன்னான். “அதன்பெயர் மிருண்மயம்... அதாவது அவர்கள் இருக்குமிடத்துக்கு மிக அருகே உள்ள ஊரின் பெயர் மிருண்மயம், அவர்கள் காட்டுவாசிகள்” என்றான். “வணிகர்களே, நான் மேலும் கள்ளருந்த முடியும். நான் ஆடும் விசையிலேயே கள்ளை செரித்துவிடுவேன்... ஆகவே...” பத்ரர் எழுந்து கொண்டதும் அவன் பதறி கையை விரித்து “நான் மேலும் உங்களுக்கு உதவமுடியும் உத்தமர்களே. நீங்கள் அங்கே சென்றதும் பார்த்தேயாகவேண்டிய பத்து பரத்தையரை உடல்விவரணையுடன் நான் சொல்வேன்...“ அவர்களின் பின்னால் அவன் குரல் ஒலித்தது “அவர்கள் என்பெயரைச் சொன்னால் மட்டுமே வாயிலைத் திறப்பார்கள்...”

மிருண்மய கிராமத்தில் மகாவைதிகர்கள் வாழும் வேதியமங்கலத் தெருவில் அவர்கள் நுழைந்து, முதல் வேதியரிடம் யாஜர்களைப்பற்றி விசாரித்தபோதே அவர் முகம் பீதியில் நெளிவதைக் கண்டார்கள். தெருவோரத்து வீட்டு வரிசைகளில் திண்ணைகள் மீது அமர்ந்திருந்த மற்ற வைதிகர்கள் எழுந்து உள்ளே செல்ல, விசாரிக்கப்பட்ட வைதிகர், “வழி சொன்னால் அந்தப்பாவமும் என் சிரசில் ஏறும் வணிகர்களே. ஆபிசாரம் செய்யும் அதர்வ வைதிகனைப்பற்றி நினைப்பதும்கூட நெறி தவறுவதே என்பார்கள்…” என்றார்.

கோயிலைச் சுற்றிவந்த பிறகும் எவரும் அவர்களுக்கு உதவவில்லை. பத்ரர் “எப்படியும் அவர்கள் இந்த ஊரில்தான் இருக்கிறார்கள். வேதியர் இடங்களுக்கு அப்பால் அவர்கள் வாழவும் வாய்ப்பில்லை. சுற்றி வந்து பார்ப்போம்” என்றார். துருபதன் “இம்மண்ணில் ஒளித்துவைக்கமுடியாதது நெருப்பு ஒன்றே. அவர்களை நாம் ஒருபோதும் தவறவிடமுடியாது. கண்களை நோக்குவோம். கனல் உள்ள கண் என்றால் அது அவர்களை அறிந்திருக்கும்” என்றார். பத்ரர் தலையசைத்தார்.

கங்கையை நோக்கி செல்லும் சிறு சந்து ஒன்றில் மக்கள் நடந்து செல்வதனால் உருவாகும் தடம் இருந்தது. மழைக்காலத்தில் தெருவின் நீர் கங்கையை அடையும் அந்த ஓடை மற்ற நாட்களில் பாதையாக இருக்கிறது என்று பத்ரர் எண்ணினார். அவர்கள் அதில் இறங்கி நடந்து சென்றபோது வலப்பக்கம் கரிய கற்களால் கட்டபட்ட வீடு ஒன்றை கண்டார்கள். மற்ற வேதியர் வீடுகளெல்லாம் புல்வேய்ந்ததாக இருக்க அதன் கூரையும் கல்லால் ஆனதாக இருந்தது. முற்றமெங்கும் புல் அடர்ந்து சருகுகள் குவிந்து அது வாழ்விடம்போலவே தெரியவில்லை. ஆனால் முற்றத்தின் ஓரமாக வேதியர் அணியும் மரக்குறடுகள் கிடந்தன.

பத்ரர் “இதுதான் அவர்களின் இடம் என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். “இதுவா?” என்று துருபதன் தயங்க “அவர்கள் இவ்வூரில் வாழ்கிறார்கள் என்றால் அது இந்த இடமாகவே இருக்க முடியும்" என்றார் பத்ரர். தயங்கியபடி துருபதனும் பத்ரரும் அந்த வீட்டை நெருங்கியபோது “யார்?” என்று பிளிறல் போன்ற குரல் கேட்டது. அவர்கள் நின்றுவிட்டனர். ஏழடிக்குமேல் உயரம்கொண்ட பேருடல் மனிதன் ஒருவன் அவர்களை நோக்கிவந்தான். அவன் முகம் பலவகைகளில் சிதைந்து கோரமாக இருந்தது. நாசியே இல்லை. மயிர்மண்டிய இரு துளைகள். தொங்கும் கனத்த உதடுத்துண்டுகள்.

“வணங்குகிறோம் காவலரே. காஸ்யபகுலத்தின் மகாவைதிகரான யாஜ மகாபாதரை தரிசிக்க வந்தவர்கள் நாங்கள்” என்றார் பத்ரர். அவன் ஐயத்துடன் சிலகணங்கள் நோக்கியபின் “எது குறித்து” என்றான். “ஒரு பூதவேள்வி குறித்து அவரிடம் பேசவேண்டும்…” அவன் முகம் சதையாலான பிண்டம்போல உணர்வற்று இருப்பதைக் கண்டு பத்ரர் தன் மடியிலிருந்து ஒரு வைரமணியை எடுத்துக் காட்டினார். “நாங்கள் பாஞ்சால நாட்டு பெருவணிகர்கள்.”

அவன் கண்களின் ஐயம் விலகியது. “உள்ளே வாருங்கள்...” என்று அழைத்துச் சென்றான். அந்த வீட்டிற்கு கல்லாலேயே கதவுகள் இருந்தன. அவன் அந்த கனத்த கற்கதவை எளிதாகத் தூக்கி விலக்கி தலைகுனிந்து உள்ளே சென்று “வருக” என்றான். உள்ளே சென்றதும் துருபதன் மலைத்துப்போய் பத்ரரை பார்த்தார். அது ஒரு அரண்மனையின் உள்ளறைபோல இருந்தது. அங்கிருந்த பொருட்களில் பெரும்பாலானவை பொன்னால் ஆனவை என்பதையும் அவற்றில் மின்னிய கற்கள் தூய மணிகள் என்பதையும் பத்ரர் கண்டார். கருவூல அறைக்குள் செல்லும்போது எழும் உள்ளக்கிளர்ச்சியும் அச்சமும் கலந்த நிலைகொள்ளாமையை அடைந்தார்.

அவர்கள் அந்த அறையில் நின்றிருக்க அந்த அரக்கமனிதன் உள்ளே சென்று மறைந்தான். உள்ளே எங்கோ அவன் ஏதோ மொழியில் அவர்களின் வருகையை சொல்வது கேட்டது. பத்ரர் அங்கிருந்த பொருட்களை திரும்பத்திரும்ப நோக்கினார். மாமன்னர்களின் கருவூலங்களில் மட்டுமே இருந்திருக்கக்கூடியவை. ஒரு பொற்பீடத்தின் அடியில் பக்கவாட்டில் சரிந்து கிடந்த மணிமுடி ஒன்றைக் கண்டு அவர் திகைத்த கணம் மின்னலில் நகரை பார்ப்பவர் போல அவர் அனைத்தையும் கண்டுவிட்டிருந்தார்.

“அரசே, வேண்டாம். நாம் திரும்பிவிடுவோம்” என்று அவர் துருபதனின் கைகளை பற்றினார். “ஒருபோதும் இச்செயல் நலம் பயக்கப்போவதில்லை. பேரழிவை அன்றி எதையும் இது அளிக்காது. அதை இப்போது மிகத்தெளிவாகவே காண்கிறேன். வேண்டாம், திரும்பிவிடுவோம்” என்றார்.

துருபதன் கையை உதறி “ஆம், அதை நானும் அறிவேன். என் நெஞ்சில் எரியும் அனலால் இப்புவியே எரிந்தழியட்டும். அதைப்பற்றி நான் எண்ணப்போவதில்லை” என்றார். “அரசே, நம்மை அந்த தொழுநோயாளிகளிடம் இட்டுச்சென்ற ஊழின் வழியை நான் உணர்கிறேன். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் வேதமென பொருள் கொள்கிறது இப்போது” என்றார் பத்ரர்.

“அவர்களுடன் இருக்கையிலேயே அப்பொருளை முழுமையாகவே நான் உணர்ந்துவிட்டேன்” என்று துருபதன் சொன்னார். “வடதிசையில் வாழும் துருவனின் நிலைமாறாமை பற்றி தௌம்ரர் சொன்னதைத்தான் அவர்களும் சொன்னார்கள். பத்ரரே, நான் செய்வதும் தவமே” என்றார். பத்ரர் தவிப்புடன் “அரசே” என்றபின் மேலே சொல்லெழாமல் தவித்தார்.

துருபதன் பெருமூச்சுடன் “பத்ரரே, துர்வாசர் எனக்களித்ததே நான் மீள்வதற்குரிய சிறந்த வழி. அது எனக்கு உதவவில்லை என்றால் நான் இங்கு வந்துதான் ஆகவேண்டும். ஊழின் நெறி அதுவே. அவ்வண்ணமே ஆகுக” என்றார்.

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 1

விடிகாலையில் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து நின்று கண் எட்டா தொலைவுவரை விரிந்துகிடந்த செந்நிறமான வறண்ட நிலத்தைப்பார்த்தபோது சகுனி தன்னுள் ஆழ்ந்த விடுதலையுணர்வை அடைந்தார். நெஞ்சின் மேல் அமர்ந்திருந்த கனத்த எடைகொண்ட ஒன்று சுழன்றடித்த காற்றில் உடைகளைப்போலவே படபடத்து பறந்து விலகிச் செல்வதுபோலிருந்தது.

சூரியன் எழ இன்னும் நெடுநேரமிருக்கிறது என சகுனி உணர்ந்தார். பாலையின் பிரம்மாண்டமான தொடுவான் கோட்டில் இருந்து கசிந்த ஒளியால் செம்மண் நிலம் கனல்பரப்பு போல தெரிந்தது. சிவந்த துகிலின் அலைபோல அப்பால் செம்மண்காற்று சுழன்று சென்றது. அதன் ஒலி அவரை அடையவில்லை. இல்லை என்பதுபோல எப்போதும் என்பதுபோல அமைதிகொண்டு கிடந்தது பெரும்பாலை நிலம்.

சிபிநாட்டின் எல்லைக்கு அவரும் சிறிய மெய்க்காவல்படையினரும் முந்தையநாளே வந்திருந்தனர். சிந்துவையும் அதன் நிலத்தையும் கடந்ததுமே மெல்லமெல்ல நிலம் வறண்டு பாலையாகத் தொடங்கிவிட்டிருந்தது. அவர் அகவிழிகள் புறத்தைக் காணவில்லை. சீராகக் காலெடுத்து வைத்து நடந்த குதிரைமேல் தலையைத் தூக்கி தொடுவானை நோக்குபவர்போல அமர்ந்திருந்தார். குதிரையின் நடைக்கு ஏற்ப அவர் உடல் இயல்பாக அசைந்ததைத் தவிர அவரிடம் உயிர்ச்சலனமே இருக்கவில்லை.

அஸ்தினபுரியில் இருந்து அவர் தனியாகக் கிளம்பத்தான் எண்ணினார். தருமனுக்கு இளவரசுப்பட்டம் கட்டும் முடிவை அவைகளில் அறிவித்த அன்றே அவர் கிளம்ப முடிவெடுத்துவிட்டார். திருதராஷ்டிரரின் ஆணையுடன் பேரமைச்சரான சௌனகர் குலமூத்தார் சபை நோக்கி சென்றார். அவருக்கு இருபக்கமும் துரியோதனனும் பீஷ்மரும் சென்றனர். பின்னால் தருமனை அழைத்துக்கொண்டு விதுரர் சென்றார். அவர்தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

பீஷ்மர் திரும்பி “காந்தாரனே, என்னுடன் வருக! நீயும் அங்கே நின்றாகவேண்டும். உன் படையினரும் இன்று அஸ்தினபுரியின் குடிகளே” என்றார். சகுனி நிமிர்ந்து அவர் விழிகளை நோக்க அவர் “வருக!” என்று மீண்டும் மெல்லிய அழுத்தமான குரலில் சொன்னார். சகுனி எழுந்து “ஆணை, பிதாமகரே” என்று தலைவணங்கிவிட்டு அவருடன் நடந்தார். பாதக்குறடுகள் மரத்தரையில் ஒலிக்க அவர்கள் சென்றனர்.

இடைநாழியில் செல்லும்போது பீஷ்மர் தன் கைகளை அவர் தோளில் வைத்தார். அவரது தோளுக்குக் கீழேதான் சகுனியின் தலை இருந்தது. அந்த உயரவேறுபாடு காரணமாக எப்போதுமே பீஷ்மரின் கைகளின் முழு எடையும் தன் தோள்மேல் இருப்பதாக சகுனி உணர்வதுண்டு. நெடுநாட்களுக்குப்பின் அவரது கைகளை உணர்ந்தபோது அவை எடையற்றவை போல இருப்பதாகத் தோன்றியது. தோளில் ஒரு பறவை அமர்ந்திருப்பதைப்போல. மெல்லிய வெம்மை, நடுக்கம், தோள்தசையைத் தொட்ட முதிய நகங்கள் பறவையின் பழுத்த உகிர்கள்.

குலமூத்தார் சபைக்குள் அவர்கள் நுழைந்தபோது உள்ளே நிமித்திகன் அவர்களின் வரவை அறிவித்து முடித்திருந்தான். மங்கலஇசையும் வாழ்த்தொலிகளும் எழுந்து முகட்டுக்குவையில் முழங்கிக்கொண்டிருந்தன. அந்தக் கார்வை எடைமிக்கதாகத் தோன்றியது. குளிர்ந்து சூழ்ந்து அழுத்தி மூச்சுத்திணறச்செய்தது. உடலெங்கும் அழுத்தி கணுக்கால்களை தெறிக்கச் செய்தது. முட்டைவடிவமான பெருங்கூடத்தில் சாளரத் திரைச்சீலைகள் காற்றிலாடிக்கொண்டிருந்தன. பாவட்டாக்கள் மெல்லத் திரும்பி மீண்டன.

இந்தத் தருணம் என் வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று. இங்கும் காந்தாரத்தின் தலை நிமிர்ந்தே இருக்கும். என்னைச்சூழ்ந்திருக்கும் இத்தனை விழிகளின் கூர்நுனிகளுக்கு மேல் நான் சமன் குலையாமல் நின்றிருப்பேன். சொற்களையே மூச்சாக உள்ளும் புறமும் ஓடவிட்டு தன்னைத் திரட்டிக்கொண்டு சகுனி நின்றார். வீரர்கள் வழிவிட கூடத்திற்குள் நுழைந்தபோது அவர் முகம் இறுகி சிலையாகிவிட்டிருந்தது.

அவர்கள் அவை நடுவே வந்து நின்றதும் அமைதி உருவாகியது. சில செருமல்கள். சில படைக்கல ஒலிகள். பாவட்டா ஒன்று திரும்பித்திரும்பி தூணில் உரசும் ஒலி. யாரோ அங்கே கண்ணுக்குத்தெரியாமல் நடப்பதைப்போல அது கேட்டது. யாரோ ஏதோ மெல்லிய குரலில் சொல்வது அறியாத்தெய்வமொன்றின் ஆணைபோல ஒலித்தது.

நிமித்திகரின் அறிவிப்பு முடிந்ததும் பீஷ்மர் அஸ்தினபுரியின் அரசகுலத்தின் ஒருங்கிணைந்த முடிவை துரியோதனனே தன் தந்தையின் பொருட்டு அறிவிப்பான் என்றார். அப்போதே அனைவருக்கும் முடிவு புரிந்துவிட்டதை சகுனி கண்டார். அந்த புரிதல் கூட்டத்தில் ஓர் உடலசைவாக நிகழ்ந்தது. முகங்கள் மலர்ந்தன. எங்கும் வெண்பற்கள் ஒளிவிட்டன.

துரியோதனன் கைகூப்பி தலைவணங்கி முறைமை மீறாத தேர்ந்த சொற்களில் தருமன் அஸ்தினபுரியின் இளவரசனாக திருதராஷ்டிர மாமன்னரால் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அறிவித்தான். அவன் சொல்லி முடித்து தலைவணங்கியபின்னரும் சபை விழிகள் நிலைத்து அப்படியே அமைந்திருந்தது. அவர்கள் அதை அப்போதும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளாததுபோல. பின்னர் எங்கோ ஒரு தொண்டை செருமலுடன் உயிர்கொண்டது. உடல்பெருந்திரள் ஒற்றைப்பெருமூச்சுடன் மெல்ல தளர்வதை சகுனி கண்டார்.

அக்கணம் ஓர் உண்மை அவருக்குத் தெரிந்தது. அந்தத் திரள் ஏமாற்றம் கொள்கிறது. ஆம், அது ஏமாற்றமேதான். எடைமிக்க ஒன்றை கைகளில் வாங்கியது போல அப்புரிதல் அவரை நிலை தடுமாறச்செய்தது. மாறிமாறி கூட்டத்தின் விழிகளையே நோக்கி அவ்வெண்ணத்தை மேலும் தெளிவாகக் கண்டடைய முயன்றார்.

இல்லை, நான் அவ்வெண்ணத்தை மறுக்கும் சான்றுகளையே தேடுகிறேன். அது என்னை, ஒட்டுமொத்த ஷத்ரியர்களை, அரசை, வீரத்தை அனைத்தையும் கேலிக்குரிய கேளிக்கையாக ஆக்கிவிடுகிறது. பல்லாயிரம் பல லட்சம் களமரணங்களை மூடத்தனமாக ஆக்குகிறது. அது என் அகம் கொள்ளும் மாயத்தோற்றமாக இருந்தால்மட்டுமே நான் என் படைக்கலங்களுடன் என் பீடத்தில் மீண்டும் அமர்ந்துகொள்ளமுடியும்.

ஆனால் கண்மூடி மறுக்கமுடியாத கற்பாறை போல அந்த உண்மை அங்கே முகங்களில் திகழ்ந்து நின்றது. அவர்கள் ஏமாற்றம் கொள்கிறார்கள். ஒரு பெரிய பூசலை, குருதிச்சிதறலை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். அங்கே ஒரு உச்சகட்ட நாடகத்தருணம் வெடிக்குமென எண்ணியிருந்தார்கள். பல்லாண்டுகளாக அதை அவர்கள் எண்ணியும் பேசியும் வந்திருக்கிறார்கள். அங்கே அவர்கள் எதிர்நோக்கியது மானுடக்கீழ்மையின் ஒரு தருணத்தையா என்ன?

ஆம், ஏனென்றால் அவர்கள் அந்தப்பேச்சுக்கள் வழியாக தங்கள் அகக்கீழ்மையையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். அத்தனை பேச்சுக்களிலும் அவர்கள் பிறரது கீழ்மையை தேடிக்கண்டடைவது தங்கள் சுயக் கீழ்மையால்தான். துரியோதனன் சிறுமையின் படிகளில் இறங்க இறங்க அவர்களின் அகம் உவகை கொள்ளும், ஏனென்றால் அவர்களும் அவனுடன் சேர்ந்து இறங்குகிறார்கள்.

சகுனி புன்னகைத்தார். துரியோதனன் செய்யவிருப்பவை என அவர்கள் தங்களுக்குள் கற்பனைசெய்துகொண்ட பல்லாயிரம் செயல்களை ஒரு காவிய ஆசிரியன் தொகுப்பான் என்றால் அதிகாரத்துக்காக மானுடன் எவற்றையெல்லாம் செய்வான் என்பதை முழுமையாகவே எழுதிவிடலாம். இம்மானுடர் நாடுவது அதைத்தானா? வரலாற்றிடம் அவர்கள் கோருவது அவர்களை கொப்பரைகளாக ஆக்கி அரைத்து குருதியும் கண்ணீருமாகப்பிழிந்து காய்ச்சி வடித்தெடுக்கப்படும் ஒரு காவியத்தை மட்டும்தானா?

அவர்கள் முகத்தில் முதலில் இருந்தது ஒருவகை எரிச்சல், ஆற்றாமை. பின் அது ஏளனமாக ஆகியது. பல்லாயிரம் முகங்கள் சேர்ந்து உருவாகி வந்த அந்த விராடமுகம் கொள்ளும் மெய்ப்பாடுகள் சகுனியை அச்சம் கொள்ளச்செய்தன. அதன் ஏளனம் வெயில்போல, மழைபோல ஒரு பருவடிவ நிகழ்வாக அக்கூடத்திற்குள் நிறைந்து நின்றது. கணம் தோறும் அது வளர்ந்தது. மேகங்கள் மலைத்தொடர்களாக உருவெடுப்பதுபோல. அதன்முன் சிற்றெறும்பாக அணுவடிவம் கொண்டு நின்றிருப்பதாகத் தோன்றியது.

துரியோதனனின் அறிவிப்பைத் தொடர்ந்து சௌனகர் அவ்வறிவிப்பை அரசகட்டளையாக முன்வைத்தார். இளவரசாக அறிவிக்கப்பட்டுள்ள தருமனுக்கு முடிகொண்டு நாடாள்வதற்கான அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார். அறிவிப்பு முடிந்ததும் முரசுகள் முழங்கின. கொம்புகளும் சங்குகளும் ஓசையெழுப்பின. அவையினர் எழுந்து அஸ்தினபுரியையும் சந்திரகுலத்தையும் திருதராஷ்டிரரையும் தருமனையும் வாழ்த்தி கூவினர்.

தருமன் முன்வந்து நிற்க நிமித்திகர் அவனுடைய குலவரிசையைச் சொல்லி அவன் அஸ்தினபுரியின் இளவரசனாக பட்டமேற்கவிருப்பதை அறிவித்தார். தருமன் தலைகுனிந்து வணங்க அவை அவனை வாழ்த்தி குரலெழுப்பியது. மலர்களும் மஞ்சளரிசியும் அவன் மேல் பெய்தன.

இடைநாழி வழியாகத் திரும்புகையில் தளர்ந்த கால்களுடன் சகுனி பின்னால் வந்தார். அதை உணர்ந்த பீஷ்மர் சற்று நின்று அவருடன் சேர்ந்துகொண்டு “காந்தாரரே, அவையில் நிற்கையில் நான் எப்போதும் நடிகனாகவே என்னை உணர்கிறேன்” என்றார். அச்சொற்கள் சகுனியை சற்று திகைக்கச் செய்தன. அப்படியென்றால் அது தன்னுடைய உள்ளம் கொள்ளும் பாவனைகள் அல்ல, அது ஒரு பொதுவான உண்மை. விழிமூடி மறுக்கமுடியாத பருப்பொருள்.

“பூனைக்கு முன் காலொடித்துவிடப்பட்ட எலியாகவும் உணர்வதுண்டு” என்றார் பீஷ்மர். புன்னகைத்து, “அந்த எலியைப்போல இரங்கத்தக்க நடிகன் யாருண்டு? ஒடிந்த காலுடன் அது செய்யும் அனைத்து உயிர்ப்போராட்டங்களும் நடனமாக மாறி பூனையை மகிழ்விக்கின்றது. இறுதியில் மனநிறைவுடன் பூனை அந்நடிகனை உண்கிறது. நல்ல பூனை. அழகியது, நுண்ணுணர்வு மிக்கது. நடனக்கலையை நாவாலும் சுவைக்கிறது அது.” சகுனி பீஷ்மரை விழிதூக்கி நோக்கினார். அவர் விழிகளில் கசப்பில்லை. அந்நகைப்பு குழந்தைகளின் எளிய மகிழ்ச்சியுடன்தான் இருந்தது.

மீண்டும் திருதராஷ்டிரரை வணங்கி அரசமுறைமைகளை முடித்துக்கொண்டு சகுனி தேர்முற்றம் நோக்கி சென்றபோது துச்சாதனன் அருகே வந்தான். அவரை அணுகுவதற்காக உள்ளறையில் இருந்து விரைந்தவன் அவர் பார்வையை உடலால் உணர்ந்ததும் மெல்ல நடந்து அருகே வந்து கைகூப்பி தலைவணங்கியபின் பார்வையை பக்கவாட்டில் திருப்பி “கிளம்பிவிட்டீர்களா மாதுலரே?” என்றான். “ஆம். களைத்திருக்கிறேன்” என்றார் சகுனி.

“இவ்வண்ணம் ஆனதற்காக நீங்கள் வருந்துவீர்கள் என்று தெரியும் மாதுலரே” என்றான் துச்சாதனன் “எந்தையின் ஆணை அது. அதற்கு என் தமையனும் நானும் முழுமையாகவே கட்டுப்பட்டவர்கள்.” சகுனி “ஆம்” என்றார். “அதற்காக தங்கள் உள்ளம் ஒருகணமும் என் தமையன் மேல் சினம் கொள்ளலாகாது. அதை மன்றாடி கேட்டுக்கொள்ளவே நான் வந்தேன். எனக்கு என் தமையன் இறைவடிவம். அவருக்கு தந்தை இறைவடிவம். இவ்வுலகில் எதுவும் இந்த அர்ப்பணிப்பை விட மேலானதல்ல எங்களுக்கு.”

சகுனி முகம் மலர்ந்தார். அருகே சென்று தன் தலைக்குமேல் இருந்த துச்சாதனனின் தோள் மீது கையை வைத்து “இச்சொற்களுக்காக நான் உன்னை வாழ்த்துகிறேன் மருகனே. உன்னை வீரர்களின் மேலுலகுக்குக் கொண்டுசெல்வது இந்தப் பற்றேயாகும்” என்றார்.

துச்சாதனன் தலைதாழ்த்தி உதடுகளை அழுத்திக்கொண்டு “ஆனால் இன்று என் தமையன் அவை நின்றபோது அவரைச்சூழ்ந்திருந்த அத்தனை முகங்களிலும் தெரிந்த ஏளனம் என்னைக் கொல்கிறது மாதுலரே. அந்த சபை ஒற்றை முகம் கொண்டு அவரை நோக்கி நகைப்பதாக எனக்குத் தோன்றியது. எங்கும் தலைவணங்காத என் தமையன் அங்கும் ஒருகணம்கூட குன்றவில்லை. தன் உள்ளத்தின் விரிவால் அவர் அச்சிறுமையை வென்று அங்கே நின்றார். ஆனால்...”

சகுனி “மருகனே, அரசு சூழ்பவன் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டே இருப்பான். மானுடர் என்ற பேரில் பேருருவம் கொண்டு இப்புவியை நிறைத்திருக்கும் காமகுரோதமோகங்களின் பெருந்தொகையை. அதன் அளப்பரிய சிறுமையை. அதன் பெரும் சலிப்பை. பேராசையும் நன்றியின்மையும் கோழைத்தனமும் நிறைந்தது அது. எங்கும் தீயதையே நோக்கும். எதிலும் தன் சிறுமையையே பேருருவாக்கி கண்டுகொண்டிருக்கும்...”

துச்சாதனனின் பெருந்தோள்களில் மேலும் ஒருமுறை தட்டி “அவர்களை ஆள்பவன் வெல்கிறான். ஆட்படுபவன் அதனால் அவமதிக்கப்பட்டு அழிகிறான்” என்றார் சகுனி. “அவர்களை வெறுப்பவன் அவர்களை வதைக்கத்தொடங்குவான். அவர்களை வழிபடுபவன் அவர்களால் ஆட்டிப்படைக்கப்படுவான். அவர்களை புரிந்துகொள். அவர்களிடமிருந்து விலகியே இரு” என்றார்.

திரும்பி தன் அரண்மனைக்கு வந்ததுமே அருகே வந்த முதுசேவகர் கிருதரிடம் “என் பயணப்பைகள் சித்தமாகட்டும். நான் சற்றுநேரம் கழித்து காந்தாரம் திரும்புகிறேன்” என்றார். கிருதர் “இளவரசே” என்று தொடங்க “என் பணி இங்கே முடிந்துவிட்டது கிருதரே” என்றார் சகுனி. பெருமூச்சுடன் “ஆம்” என்றார் கிருதர். பின்னர் “படைகள்...” என்றார். “நான் மட்டும்..” என்றபின் “என் மெய்க்காவலர்களும் உடன்வரட்டும்” என்றார் சகுனி.

மாலையில் அவர் கிளம்பிக்கொண்டிருக்கும்போது கௌரவர்கள் சூழ துரியோதனன் வந்தான். சகுனி கூடத்தில் அமர்ந்து யவன மதுவை அருந்திக்கொண்டிருந்தார். மாளிகைமுற்றத்தில் பன்னிரு குதிரைகளும் பன்னிரு அத்திரிகளும் நின்றிருந்தன. தோல்பைகளில் பயணத்துக்கான உணவுப்பொருட்களும் பிறவும் அத்திரிகள் மீது ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. துரியோதனன் அவற்றை நோக்கியபடியே குதிரையில் இருந்து இறங்கி மாளிகைப்படிகளில் ஏறி கூடத்துக்கு வந்து வாயிலில் நின்றான். பின்னால் துச்சாதனன் நின்றான்.

“வருக மருகனே, நான் கிளம்பும்போது செய்தி அறிவிக்கலாமென்றிருந்தேன்” என்றார் சகுனி. “தாங்கள் அன்னையிடமும் அரசரிடமும் முறைப்படி விடைபெற்று அல்லவா செல்லவேண்டும்?” என்றான் துரியோதனன். “அவர்களை சந்தித்தபின் என்னால் செல்லமுடியாது. மாமன்னர் என்னை ஒருபோதும் கிளம்ப அனுமதிக்க மாட்டார். அதை நான் உறுதியாக அறிவேன்” என்றார் சகுனி. துரியோதனன் “ஆம், அது உண்மை. தாங்கள் கிளம்பிய செய்தி அறிந்தால் அவர் கண்ணீர் விடுவார்” என்றான்.

“ஆம், இத்தனைநாள் அவரது பேரன்பின் நிழலில் வாழும் நல்லூழ் பெற்றிருந்தேன். கடன் நிறைவாக அவருக்கு ஓர் மாவீரனை மைந்தனாக உருவாக்கி அளித்திருக்கிறேன். நன்று, வந்த பணி நிறைவுற்றது” என்றார் சகுனி. “நீ இப்போது காந்தாரம் வரமுடியாதென்று அறிவேன். இங்கு உன் பணிகள் முடிந்தபின்னர் அங்கே வா. நாம் அங்கே பாலைவனவேட்டையை கற்போம்.”

துரியோதனன் வந்து பீடத்தில் அமர்ந்தபடி “நான் இப்போதேகூட வந்துவிடமுடியும் மாதுலரே” என்றான். “பிதாமகர் ஒவ்வொருவருக்கும் ஆணைகளை பிறப்பித்திருக்கிறார். மாமன்னர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதனால் தருமன் முடிசூட விரைவுகொள்ளவேண்டியதில்லை என்கிறார். தருமன் தன் தம்பியருடன் நால்வகை மக்களையும் ஐவகை நிலங்களையும் கண்டு தெளிந்து திரும்பிவரவேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார்.”

சகுனி புன்னகை செய்து “பிதாமகர் விரைவு கொள்ளமாட்டார் என நான் அறிவேன்” என்றார். துரியோதனன் ஏறிட்டு நோக்க “மருகனே, அவர்கள் யாதவக் குருதி கொண்டவர்கள். அஸ்தினபுரியின் குடிகளில் பெரும்பாலானவர்கள் யாதவர்களும் மலைக்குடிகளும்தான். அவர்கள் தருமனை ஏற்கலாம். இங்குள்ள ஷத்ரியர்களிலும் சிலர் ஏற்கலாம். ஆனால் முதன்மையாக ஏற்றாகவேண்டியவர்கள் ஆரியவர்த்தத்தின் ஷத்ரிய அரசர்கள். அங்குள்ள உயர்குடியினர்” என்றார்.

“அத்துடன் அஸ்தினபுரியின் சமந்த அரசுகளும் சிற்றரசுகளும் துணையரசுகளும் தருமனை ஏற்கவேண்டும். அது எளிதில் நிகழக்கூடியது அல்ல. பாண்டவர்கள் யாதவ அரசியின் மைந்தர்கள் என்பதை ஒருபோதும் அவர்கள் மறக்க மாட்டார்கள். தருமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்பட்ட செய்தி அவர்களை சினம் கொள்ளச்செய்யும். அதையே காரணமாகக் காட்டி அஸ்தினபுரிக்கு எதிரான மனநிலையை உருவாக்கவும் அணிதிரட்டவும் முயல்வார்கள். இப்போதே செய்திகள் பறக்கத் தொடங்கியிருக்கும்” சகுனி சொன்னார்.

“ஆகவேதான் பிதாமகர் தருமனை காடேகச் சொல்கிறார். அது போதிய காலத்தை பிதாமகருக்கு அளிக்கும். அவர் ஒவ்வொரு நாட்டுக்காக தூதர்களை அனுப்புவார். ஷத்ரியர்களை தேற்றி வாக்குறுதிகள் அளித்து தன் வயப்படுத்துவார். அவர்கள் தருமனை ஏற்றபின்னரே அவன் முடிசூடுவான்” என்றார் சகுனி. “ஆம், அது விதுரரின் திட்டமாகவும் இருக்கலாம்” என்றான் துரியோதனன்.

“இந்த காடேகலே ஒரு சிறந்த சூழ்ச்சி. இந்தப்பயணத்தில் தருமன் முனிவர்களையும் வைதிகர்களையும் கண்டு வாழ்த்து பெறுவான். அவன் எந்தெந்த முனிவர்களை சந்தித்தான் என்பதும் எவர் அவன் மணிமுடியை வாழ்த்தினார் என்பதும் சூதர்கதைகளாக நாடெங்கும் பரப்பப்படும். அவை மெல்லமெல்ல அவனுக்கு மக்களின் ஒப்புதலை பெற்றுத்தரும்.”

சகுனி புன்னகைத்து “கூடவே பீமனின் வீரச்செயல்களும் அர்ஜுனனின் வெற்றிச்செய்திகளும் சூதர்கள் வழியாக மக்களிடம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்” என்றார். “அவர்கள் எளியவர்களைக் காத்த செய்திகள். தீயவர்களை அழித்த மெய்சிலிர்ப்பூட்டும் கதைகள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கதைகளை விரும்புகிறார்கள். கதைகளில் வாழ முந்துகிறார்கள். எனென்றால் வாழ்க்கையில் எதற்கும் விடைகள் இல்லை. கதைகள் திட்டவட்டமான முடிவுகொண்டவை.”

“இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் பாரதவர்ஷம் போற்றும் அறச்செல்வர்களாகவும் மாவீரர்களாகவும் காவியப்புகழ் பெற்றுவிடுவார்கள். அதன்பின் குலம் பற்றிய கசப்புகள் எஞ்சியிருக்காது” என்றார். “அத்துடன் இப்பயணத்திலேயே தருமன் ஒரு பெரும் சுயம்வரத்திற்குச் சென்று முதன்மையான ஷத்ரிய குலம் ஒன்றில் இருந்து இளவரசியை மணப்பான்... அதற்கும் பிதாமகர் திட்டமிட்டிருப்பார்.”

“எதுவேண்டுமானாலும் நிகழட்டும். நான் ஆர்வமிழந்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “நான் இங்கிருக்கப்போவதில்லை. அவர்கள் கிளம்பியதும் நானும் கிளம்பலாமென்றிருக்கிறேன். கதாயுதப் பயிற்சியை முழுமையாக அடையவேண்டுமென விரும்புகிறேன். துரோணரிடமிருந்து நான் கற்றவை அடிப்படைகள் மட்டுமே. இப்போது என்னிடமிருப்பது நானே அடைந்த பயிற்சி. மேலும் கற்றாகவேண்டும்.”

“நீ செல்லவேண்டியது மதுராபுரிக்கு” என்றார் சகுனி. “அங்கே யாதவராகிய வசுதேவரின் மைந்தர் பலராமரை நாடிச்செல். இன்று இப்பாரதவர்ஷத்தில் அவரே முதன்மையான கதாயுத வீரர்.” துரியோதனன் தயங்கி “ஆனால் அவர் யாதவர். அவர் எனக்கு...” என்றான். “மருகனே, நல்லாசிரியர்கள் குலம் இனம் என்னும் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு மாணவர்களை மதிப்பிடுபவர்கள். பலராமர் அத்தகையவர் என நான் உறுதியாகவே அறிவேன்” என்றார் சகுனி.

“அவ்வண்ணம் ஆகுக!” என்றான் துரியோதனன். “ஆசிரியன் தெய்வங்களுக்கு நிகர். தவத்தால் தெய்வங்களை கனியச்செய்து கல்வி என்னும் வரத்தைப் பெறவேண்டும். தவத்தால் அடையப்பெறாத கல்வி பயனற்றது” என்றார் சகுனி. துரியோதனன் “நான் அவரிடம் பயில்வேன், இது உறுதி” என்றான்.

துச்சாதனன் “நானும் தம்பியரும் இங்கே இருந்தாகவேண்டும் என்கிறார் தமையன்” என்றான். “ஆம், என் இடத்தில் இவன் இருந்து தம்பியரை நடத்தவேண்டும் என ஆணையிட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். ”மேலும் நான் இல்லாதபோது நானாக இருக்கவும் அவன் கற்றாகவேண்டும்."  சகுனி நகைத்தார்.

“கர்ணன் வில்வித்தை  கற்பதற்காக செல்கிறான். பரசுராமரையே தேடிச்செல்லவிருப்பதாக சொல்கிறான்” என்று துரியோதனன் சொன்னான். சகுனி “அதுவும் உகந்ததே. இனி அவனுக்கு அவரன்றி எவரும் கற்பிக்கமுடியாது” என்றார். “குடம் நிறைவதை அதுவே அறியும் என ஒரு பழமொழி உண்டு. அவன் தனக்குரிய கல்வி கிடைக்கும் வரை அமையமாட்டான்.”

பின் பெருமூச்சுடன் எழுந்து “மருகனே என் விடைபெறல் ஓலைகளை உங்களிடமே அளிக்கிறேன். உங்கள் அன்னையிடமும் அரசரிடமும் பிதாமகரிடமும் விதுரரிடமும் அளியுங்கள்” என்றார் சகுனி. துரியோதனனும் கௌரவர்களும் கண்களில் கண்ணீர் வழிய சகுனியின் கால்களைத் தொட்டு வணங்கினர். அவர்கள் ஒவ்வொருவரையாக கட்டித்தழுவி சகுனி விடைபெற்றார்.

அஸ்தினபுரியை இருளில் கடக்கவேண்டும் என்பது சகுனியின் திட்டமாக இருந்தது. அது ஏன் என அவர் அகம் உணர்ந்திருந்தது. அந்தத் தன்னுணர்வு அவரை கூசவும் வைத்தது. அஸ்தினபுரியின் மக்களின் விழிகளில் நிறைந்திருந்த ஏளனத்தை அவர் அஞ்சினார். அந்த ஏளனம் கழுத்தைத் தொட்ட கூர்வாள் முனைபோல எப்போதும் உடனிருந்தது.

நகரைவிட்டு விலகும்போதும் அஸ்தினபுரியின் எல்லைகளை கடக்கும்போதும் எவரும் காணாமல் விலகிவிடவேண்டுமென்ற எச்சரிக்கையும் பதற்றமும் மட்டுமே இருந்தன. அது நல்லது என்றுகூட தோன்றியது. அந்தக்கணத்தில் மேலோங்கிவிடக்கூடும் என அவர் அஞ்சிய துயரத்தையும் கசப்பையும் அந்த மேலோட்டமான உணர்ச்சிகள் மறைத்து ஒத்திப்போட்டன. பந்தங்கள் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருளுக்குள் குளம்படி ஓசைகள் மட்டுமே ஒலிக்க நகர் நீங்கி நாடு நீங்கினார். ஒளிமிக்க பல்லாயிரம் பந்தங்களுடன் வந்தவன் இருளில் திரும்பிச்சென்றான் என்று சூதர்கள் பாடுவார்கள்.

காலையில் சப்தசிந்துவை அடைந்தபோது எழுந்த விடுதலை உணர்வை அவரே வியந்துகொண்டார். அவரது இறுகிய உடல் நெகிழ்ந்தது. குதிரையில் உடலை எளிதாக்கி அமர்ந்துகொண்டு காலை ஒளி பரவிய வயல்வெளிகளை நோக்கிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு சொல்லும் பேசவில்லை. அந்த விடுதலை உணர்வின் நிம்மதி திரும்பிச்செல்வதன் கசப்பை எழாமலாக்கியது. மிகப்பெரிய உணர்வு ஒன்று அகத்தில் திரண்டு நின்றிருந்தது. அதை சின்னஞ்சிறிய உணர்ச்சிகளால் மறைக்கமுடிந்தது. அலைகள் மறைக்கும் கடல்போல அப்பால் இருந்தது அகம்.

இரவெல்லாம் வீசிய காற்றில் செம்மணல்பரப்பு அலையலையாக படிந்திருந்தது. எப்போதும் அசைந்து உருமாறிக்கொண்டிருக்கும் பாலைமணல் உயிருள்ளது. எதையோ உச்சரித்துக்கொண்டே இருக்கும் உதடு போல. அதன்மேல் முட்புதர்கள் இரவின் காற்றில் சுழன்று பதித்த அரைவட்டங்கள் தெரிந்தன. சிற்றுயிர்கள் ஊர்ந்து சென்ற கோடுகள். சிறிய குழிக்குள் காலடிக்கு அஞ்சி மூழ்கி மறைந்த பூச்சிகள்...

அப்போதுதான் சகுனி அந்தக் காலடித்தடத்தைக் கண்டார். குனிந்து அதை நோக்கி அது முதிய ஓநாய் என்று அறிந்தார். இரவெல்லாம் அந்த சிறிய மணல்மேட்டில் அது அமர்ந்திருக்கிறது என்று தெரிந்தது. பசித்த ஓநாய். குருதிவாசனைதேடி வந்திருக்கிறது. அது அருகில் எங்கோதான் இருக்கும். ஒரு சோலைப்புதருக்குள் மென்புழுதியில் ஒடுங்கி இரவுக்காகக் காத்திருக்கும். பசித்து தனித்து...

சகுனி அந்தக் காலடித்தடத்தைத் தொடர்ந்து நடக்கத்தொடங்கினார். அதன் விழிகளை நோக்கவேண்டும் போலிருந்தது. அதனுடன் ஒரு சொல்லேனும் பேசிவிடலாமென்று தோன்றியது.

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 2

சகுனி அந்த காலடிச்சுவடுகளை கூர்ந்து நோக்கியபடி நடந்தார். முதல் சிலகணங்களுக்கு அது மிக அயலானதாக, அறியமுடியாத குறிகளால் ஆனதாகத் தோன்றியது. மெல்லமெல்ல அவர் அகத்தில் நினைவுகள் விழித்துக்கொண்டன. அந்த காலடிச்சுவடுகள் அவர் அறிந்த மொழியின் எழுத்துக்களாக ஆயின. பெரும் பரவசத்துடன் அவர் அதை வாசித்தறிந்தார். மேலும்மேலும் பொருள்கொண்டு விரிந்தபடியே சென்றது அது.

அது ஒரு முதிய ஓநாய். அதன் முன்னங்கால்கள் சற்று வளைந்து பாதங்கள் வெளிப்பக்கமாக திரும்பியிருந்தன. பின்னங்கால்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதுபோல ஒடுங்கியிருந்தன. ஒரு கால் சற்று உயிரற்றது என்று தெரிந்தது. அக்காலை அது இழுத்து இழுத்து வைத்திருந்தது. முன்னங்காலின் விசையிலேயே அது சென்றிருந்ததை நோக்கினால் நெடுநாள் பசியில் அது வயிறு ஒட்டி மெலிந்து போயிருப்பது தெரிந்தது.

ஓநாயின் எச்சில் விழுந்து மணலில் மெல்லச் சுருண்டு உலர்ந்து பொருக்குத்தடமாக கிடந்தது. அவர் குனிந்து மூக்கை வைத்து அதன் வாசத்தை உணர்ந்தார். சீழ்நாற்றம் இருந்தது. ஓநாயின் நெஞ்சு பழுத்துவிட்டது. அது உயிர்விட்டிருந்தால்கூட வியப்பில்லை. பின்னர் அவர் அதன் மெல்லிய முனகலை கேட்டார். நெடுநேரம் முன்னரே அவரது மணத்தை அது அறிந்துவிட்டிருக்கும்.

ஆனால் அது முனகுகிறது. அழைக்கிறது. ஓநாய்கள் பொதுவாக அயலவரை அறிந்தால் பகலில் ஓசையின்றி புதர்களுக்குள் ஒண்டிக்கொள்ளும். அப்படியென்றால் அவரை அது அழைக்கிறது. சகுனி நிமிர்ந்து நின்றார். தொலைவில் ஒரு சிறிய முட்புதர்த்தொகை தெரிந்தது. அங்கேதான் அது கிடக்கிறது. புழுதிக்குள் சுருண்டு. அவரை உணர்ந்ததும் முன்காலை ஊன்றி தலையைத் தூக்கி ஈர நாசியை கூர்த்து பழுத்த விழிகளால் நோக்கி அழைக்கிறது.

அவர் அந்த முட்காட்டை நோக்கி மணலில் இறங்கிச்சென்றார். மென்மணலில் நாகம் ஒன்று சென்ற தடம் தெரிந்தது. மணல்கதுப்பில் எலும்புகள் பாதிபுதைந்து கிடந்தன. நெடுங்காலமாக வெயிலில் கிடந்து வெண்களிமண் ஓடுகளாக ஆகிவிட்ட தலையோடுகள், விலாவெலும்புகள். காற்று மணலை அள்ளி புதர்மேல் பொழியும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

பாலைநிலம் பெருந்தனிமையின் விழிவெளி. ஆனால் அங்கே நின்றிருக்கையில் பல்லாயிரம் விழிகளால் பார்க்கப்படுவதாகவும் உணரமுடியும். அங்கே விடாயில் பசியில் அச்சத்தில் தனிமையில் இறந்தவர்களின் ஆவிகள் இருக்கும் என்று இளவயதிலேயே கேட்டிருக்கிறார். ஆனால் அங்கே ஆவிகளும் உயிர்வாழ முடியாது என்று படும். சூரியனின் கடும்வெம்மை அவற்றையும் உறிஞ்சி எடுத்துவிடும்.

அப்படியென்றால் எஞ்சியிருக்கக்கூடியவை அந்த இறக்கும் உயிர்களின் விழிகளின் இறுதிப்பார்வை ஒளிகள். எவராலும் பார்க்கப்படாதவை. எவரையும் பார்க்காதவை. அத்தகைய பெருந்தனிமையை தெய்வங்கள் பின்னர் ஒருபோதும் நிறைத்துவிடமுடியாது. அவற்றை காலத்தால் அழித்துவிடமுடியாது. எவ்வகையிலோ அவை அங்கே நிறைந்திருக்கின்றன.

ஒருவர் தன்னுள் எழும் வீண் எண்ணங்களை வெல்வதே பாலையை எதிர்கொள்வதற்கான முதல்பயிற்சி என சிறுவயதிலேயே சகுனி கற்றிருந்தார். நம்பிக்கையை இழக்காமலிருக்க, இறுதிக்கணம் வரை போராட உடலால் முடியும். உள்ளத்தால் அது வதைக்கப்படாமலிருக்கவேண்டும். வழிதவறச்செய்யாமலிருக்கவேண்டும். பாலையில் பிறந்து வளர்ந்து மறையும் பழங்குடிகளான லாஷ்கரர்களுக்கு அது இயலக்கூடியதாக இருக்கலாம். பாலைக்கு அப்பால் அவர்கள் எதையும் அறிந்திருக்கமாட்டார்கள். அப்பால் ஒரு கணமேனும் விழிசெலுத்தியவர்களால் அது இயலாது.

அவர் ஓநாயின் வாசத்தை நன்கு அறிந்தார். மண்ணில் மட்கிய முடியும் தோலும் கலந்த வீச்சம் அது. ஓநாய் முனகலை நிறுத்திவிட்டு அவருக்காகக் காத்திருந்தது. அவர் நெருங்க நெருங்க அதன் நோக்கை தன் முகத்தில் அவரால் உணரமுடிந்தது.

அவர் அதன் விழிகளைத்தான் முதலில் பார்த்தார். இரு கூழாங்கற்கள் போல ஒளியற்ற பழுப்புநிற விழிகள் அவர்மேல் படிந்திருக்க ஓநாய் தன் முன்னங்கால்கள் மேல் முகத்தை வைத்து முள்மரத்தின் தாழ்ந்த இலைகளுக்கு அடியில் சிறிய மணல்குழிக்குள் கிடந்தது. அவர் அசையாமல் நின்று அதை நோக்கினார். ஓநாய் துயரத்துடன் புன்னகை செய்தது.

புன்னகையா? “ஏன், புன்னகை செய்யக்கூடாதா? என்றும் நாங்கள் உன்னை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறோம்” என்றது ஓநாய். அவர் திகைத்து “ஓநாய் பேசுவதா?” என்றார். “நாங்கள் உன்னிடம் பேசாத சந்திப்புகளே இல்லை. நீ அப்போது அவற்றை கேட்பதில்லை. உன்னுள் ஓடும் எண்ணங்கள் எங்கள் குரலை மறைக்கும். ஆனால் பின்னர் உன் கனவில் எங்கள் சொற்களை நீ மீட்டெடுப்பாய்.”

“ஆம்” என்றார் சகுனி. “நீங்கள் என்னிடம் பேசியவை ஏராளம். எந்த நூலைவிடவும் எந்த ஆசிரியரைவிடவும்.” மெல்ல அதனருகே அமர்ந்து “உங்களை அன்றி எவரையும் நான் பொருட்படுத்தி சிந்தித்ததும் இல்லை.” ஓநாய் பெருமூச்சுடன் “உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. என் பெயர் ஜரன். நான் இறந்துகொண்டிருக்கிறேன். அறிந்திருப்பாய்.”

“ஆம்...உன் நெஞ்சு பழுத்துவிட்டது” என்றார் சகுனி. “அதற்கு முன் என் வயிறு உலர்ந்துவிட்டது. என் குடல்கள் எல்லாம் எரிந்து கருகிவிட்டன. எங்கள் வயிறுகளுக்குள் ஜடரை என்னும் அக்னி வாழ்கிறாள். நூறு சிவந்த நாக்குகளும் கரிய நிறக்கூந்தலும் கொண்டவள். அவளுக்கு நாங்கள் அவியிட்டபடியே இருக்கவேண்டும். ஊனும் குருதியுமாக. அவி கிடைக்காவிட்டால் அவள் எங்கள் குடல்களை உண்ணத்தொடங்குவாள். எங்கள் உடலை உண்டு இறுதியில் ஆன்மாவை குடிப்பாள்.”

“நான் உணவுண்டு ஒருமாதமாகிறது. இந்தப் பாலையின் வெளியில் பலநூறு காதம் நான் நடந்து அலைந்தேன். அவ்வப்போது இங்குள்ள சிறுபூச்சிகளை நக்கி  உண்டேன். என் ஜடரையை அச்சிறு ஆகுதி மேலும் பொங்கி எழச்செய்தது. சிலநாட்களுக்குப்பின் என் வாலையே கடித்து உண்டேன். அச்சுவையில் மயங்கி பின் என் பின்னங்காலை கடித்தேன். வலியையே சுவைக்கமுடியும் என்று கண்டுகொண்டேன்...”

“நேற்று என் கூடாரத்துக்கு வெளியே நீ அமர்ந்திருந்தாய் அல்லவா?” என்று கேட்டார் சகுனி. ஜரன் விட்டமூச்சில் மணல்துகள்கள் பறந்தன. “ஆம், உண்மையில் நான் அங்கே நாலைந்துநாட்களாகவே அமர்ந்திருக்கிறேன். ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. அங்கே உணவு வந்துசேரும் என்ற நம்பிக்கை எனக்குள் முதலில் எழுந்தது. பின்னர் நான் உணவை கற்பனைசெய்யத் தொடங்கினேன். வகைவகையான உணவுகளை. நான் உண்ட அனைத்து உணவுகளையும் கற்பனையில் உண்டேன்.”

“நாவிலிருந்து எச்சில் சொட்ட அங்கே வந்து அமர்ந்திருக்கலானேன். உணவைத்தேடுவதை விட்டுவிட்டேன். பின்னர் அந்த இடத்தை எண்ணிக்கொண்டாலே எனக்கு எச்சில் சுரக்கத் தொடங்கியது. பசுங்குருதி. குரல்வளையைக் கடித்துக் கிழிக்கையில் கொப்பளித்து இளம்சூடாகவும் உப்புச்சுவையுடனும் ஊன்வாசத்துடனும் எழுந்துவந்து நாவை நனைத்து வயிற்றை நிறைக்கும் அமுது...”

“என் வாழ்நாளில் மிகச்சிறந்த உணவுகளை அறிந்திருக்கிறேன். இளமையில் நாங்கள் ஒருமுறை ஒரு வழிதவறிய குதிரையைக்கிழித்து நாட்கணக்கில் உண்டோம். ஓர் எருதை நான் மட்டுமே உண்டிருக்கிறேன். ஆனால் இந்த பாலைமணல்குவையில் அமர்ந்து நான் உண்ட உணவை எப்போதுமே உண்டதில்லை. இந்த உணவு உண்ண உண்ணக் குறையாதது. எத்தனை உண்டாலும் நிறையாததும்கூட.”

“அப்போதுதான் நீங்கள் வருவதைக் கண்டேன்” என்றது ஜரன். “நெடுந்தொலைவில் குதிரைகளின் காலடி ஓசை கேட்டது. கழுதைகளின் காலடிகள் தனித்துக்கேட்டன. குதிரைகளின் வியர்வை மணம். மிக இனியது அது. ஆனால் அப்போது என் ஊன்சுவையை கலைக்கின்றன அவை என எரிச்சலே கொண்டேன். நீங்கள் நெருங்கி வந்து அப்பால் கூடாரமடித்தீர்கள். உன்னை நான் கண்டேன்.”

“உன்னைக் கண்டதும் நானறிந்தேன், நான் காத்திருந்தது உனக்காக என்று” என்றது ஜரன். “நீ யாரென்று நான் நன்றாகவே அறிவேன். காந்தார இளவரசன். என் மூதாதையர் உன்னுடன் வேட்டைவிளையாட்டில் மறுபக்கம் நின்று ஆடியிருக்கிறார்கள். உன்னைப்பற்றிய சொற்கள் எங்கள் குலத்தில் வழங்கி வருகின்றன. உன்னை நாங்கள் பீதன் என்று பெயரிட்டு அழைக்கிறோம். சுண்ணம் போல வெளுத்தவன் நீ.”

“நான் அறிந்தேன், அங்கே நான் இருப்பது என் இறுதிக்காகத்தான் என்று. என்னால் ஒரு சிறிய கழுதையைக்கூட பிடிக்க முடியாது. அவற்றின் ஒரு சிறிய உதையை என் உடல் தாளாது. இரவெல்லாம் அங்கே இருந்தேன். வியப்பு என்னவென்றால் நான் ஆற்றலற்றவன் என்று குதிரைகளும் கழுதைகளும் அறிந்திருந்தன என்பதே. அவை என்னை பொருட்படுத்தவில்லை. மூத்தபெண்குதிரை என்னைப்பற்றிய அறிவிப்பை அளித்ததும் ஒரு இளம்கழுதை நகைத்தது.”

“உன்னை எண்ணியா?”என்றார் சகுனி. “ஆம், என்னைப்பற்றி சொல்லித்தான். நான் நெருங்கமாட்டேன் என்று அவை அறிந்திருந்தன. ஒரு குதிரை பின்பக்கத்தை என்னை நோக்கித் திருப்பியது. அது சூடு அடைந்து கருக்குருதி வழிந்துகொண்டிருந்தது. ஓநாய்களுக்கு மிக உகந்த மணம் அது. அது என்னை சீண்டியது. வந்துபார் என்றது. வழக்கமாக ஓநாய்கள் சீண்டப்படும். சென்று தாக்கி உதைவாங்கி சாகும். ஆனால் நான் அதை பொருட்படுத்தவேயில்லை.”

“நான் உன்னை கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பெருமூச்சுவிட்டுக்கொண்டு புலித்தோல் மஞ்சத்தில் புரண்டுபுரண்டு படுத்தாய். பின்னர் துயிலில் ஆழ்ந்தாய். உன் மூச்சை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். மெல்ல நடந்து உன் கூடாரத்துக்குள் வந்து உன்னை முகர்ந்து நோக்க விரும்பினேன். ஆனால் வாயிலில் காவலிருந்தது. விடியும் வரை காத்திருந்த பின் திரும்பிவந்தேன்.”

“இங்கே வந்து படுத்துக்கொண்டதும் தெரிந்தது நீ தேடி வருவாய் என்று. உனக்காக செவிகூர்ந்து காத்திருந்தேன்... நீ என் மணல்மேட்டில் வந்து நின்றதுமே உணர்ந்துவிட்டேன். என் செவிகள் எழுந்தன. என் பிடரி சிலிர்த்தது. நான் முனகி உன்னை அழைக்கலானேன்.”

“சொல்” என்றார் சகுனி. “நீ என்னிடம் சொல்லவிருப்பதென்ன?” ஜரன் அவரை நோக்கி “நீ ஒரு ஓநாய்... அதை மறந்துவிட்டாயா? அதைமட்டுமே கேட்கவிரும்பினேன்” என்றது. “தோல்வியை ஒப்புக்கொண்ட முதல் ஓநாய் என்று உன்னை நாங்கள் தலைமுறைகள் தோறும் சொல்லிக்கொள்ள விழைகிறாயா என்ன?”

சகுனி திகைத்து “ஆனால்...” என்று சொல்லத்தொடங்கி தன் தலையை கையால் பிடித்துக்கொண்டார். “ஆம், தோல்வியை ஒப்புக்கொண்டுதான் திரும்பிவந்தேன். என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணினேன்.” ஜரன் சினத்துடன் “ஓநாயின் வாழ்க்கை உயிர்பிரியும் கணத்தில் மட்டுமே முடிய முடியும். நாம் பசியால் வாழ்பவர்கள்...” என்றது.

“ஆனால், நான் என்ன செய்யமுடியும். நெறிகள், முறைகள்...” என சகுனி தொடங்க “நமக்கு ஏது நெறிகள்? என் தெய்வம் ஜடரை. அவள்முன் கண்கூடாது தலைகுனியாது வந்து நிற்கும் ஒரு நெறியை என்னிடம் வந்து சொல்லச்சொல் உங்கள் தெய்வங்களிடம். சொல்..” என்றது ஜரன். “ஒருவருடம் முன்பு அங்கே தெற்குப்பாலைச்சரிவில் ஒரு பயணியர்குழு கைக்குழந்தை ஒன்றை விட்டுவிட்டுச் சென்றது. இனிய சிறு குழந்தை. ஆனால் கடும் வெயிலில் நோயுற்றுவிட்டது. உணவை உண்ண அதனால் முடியவில்லை. உண்டால் அக்கணமே அது இறக்கும் என தெரிந்துவிட்டது.”

“பாலையின் நெறிகளின்படி அதை அவர்கள் மணலில் விட்டுவிட்டு திரும்பி நோக்காமல் சென்றனர். அதன் அன்னையின் பாதங்கள் மட்டும் ஒருமுறை இடறின. அதன் தந்தை அவளை அள்ளி அணைத்து இழுத்துச்சென்றான். அழுவதற்கு ஆற்றலில்லாத குழந்தை மணலில் கிடந்து பெரிய விழிகளால் அவர்கள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தது. பின்னர் இறுதி உயிராற்றலுடன் எழுந்து கைகளை ஊன்றி மெல்லிய கால்களை இழுத்துக்கொண்டு அந்தப்பாதத் தடங்களைப்பின்பற்றி தவழ்ந்து சென்றது.

“தளர்ந்து அது மணலில் விழுந்து முகம் புதைத்து மூச்சிரைத்தபோது நான் சென்று அதனருகே நின்றேன். பாலையின் நெறியை நானும் கடைபிடிக்கவேண்டும் என்று அதனிடம் சொன்னேன். “இன்னும் சற்று நேரம், இன்னும் ஒரு கணம்” என்று அது என்னிடம் விழிகளால் இறைஞ்சியது. அவ்வாறே ஆகுக என நான் அதனருகே கால்மடித்து நாவால் வாயை நக்கியபடி அமர்ந்துகொண்டேன்.

அது மேலும் மேலும் தவழ்ந்தது. காலடித்தடங்கள் காற்றில் மறைந்தன. திசைகளில்லாத வெறுமை அதைச் சூழ்ந்தது. நான் அதனிடம் “போதுமா?” என்று கேட்டேன். “இன்னும் ஒருகணம்... ஒரே ஒரு கணம்” என்று அது கெஞ்சியது. உயிரின் ஆற்றலை எண்ணி வியந்தபடி அமர்ந்திருந்தேன். என் வாயிலிருந்து எச்சில் விழுந்து மணலில் உலர்ந்துகொண்டிருந்தது.

அப்பால் இரண்டு பாலைவனக்கழுகுகள் வந்து சிறகுமடித்து அமர்ந்து இறகற்ற கழுத்துக்களை நீட்டின. அவர்களில் பக்‌ஷன் என்பவனை நான் அறிவேன். “ஏன் பொறுத்திருக்கிறாய்? நாங்கள் உணவுண்டு பலநாட்களாகின்றன” என்றான். “அது இன்னும் ஒரு கணம் என்கிறது” என்றேன். “எதற்காக?” என்று அவன் தோழன் கேட்டான். “தோழர்களே ஒருகணமே ஆயினும் வாழ்க்கை இனியது” என்றேன்.

அவர்கள் கழுத்து புதைத்து அமர்ந்துகொண்டார்கள். பின்னர் பக்‌ஷன் தலைதூக்கி “முடிவெடு” என்றான். நான் குழந்தையிடம் “என்ன சொல்கிறாய்?” என்றேன். அது மேலும் ஒரு முறை கையை எடுத்துவைத்து “ஒரேமுறை... ஒரேகணம்” என்றது. “இல்லை. இனி பாலையில் கருணைக்கு இடமில்லை” என்று சொல்லி அதை அணுகி அதன் கழுத்தை கவ்வினேன். “ஒரே கணம்...” என்று அது சொன்ன சொல்லையே கடித்தேன். காற்றாக அது என் வாய்க்குள் சென்றது.

அந்தப்பசுங்குருதியை உண்டு என்னுள் ஜடரை நடமிட்டாள். அதற்குள் அவர்களும் நெருங்கிவிட்டனர். சிறிய இதயத்தை எனக்காக பக்‌ஷன் விட்டுக்கொடுத்தான். “துடிக்கிறது” என்றேன். “ஆம், அதில் நிறைய கனவுகள் இருக்கும் என்று என் தாய் சொல்வாள்” என்று பக்‌ஷன் சொன்னான். “அவற்றை பறவைகள் உண்ணலாகாது. ஏனென்றால் கனவுகளுடன் பறக்கமுடியாது.” நான் நகைத்தேன். “என் தாய் கனவுகளைத்தான் முதலில் உண்ணச்சொல்வாள். அவை காத்திருப்பதற்கான ஆற்றலை எங்களுக்கு அளிக்கின்றன” என்றேன்.

சகுனி பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றார். “பாலையில் நாம் பசித்தும் தனித்தும் விழித்தும் இருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள்...” ஜரன் தலைதூக்கிச் சீறியது. “நீ காத்திருக்கவில்லை. நீ திரும்பி வந்தாய்!” சகுனி “நான் பதினெட்டாண்டுகாலம் காத்திருந்தேன்” என்றார். “பதினெட்டு யுகங்கள் காத்திரு. உன் உடல் கல்லாகி பாறையாகி அங்கே இருக்கட்டும்.”

“ஆம், அதைத்தான் நான் செய்திருக்கவேண்டும்... என்னால் இயலவில்லை” என்றார் சகுனி. “ஏன்?” என்றது ஜரன். “நான்... நான் நெறிகளை...” ஜரன் கடும் சினத்துடன் “நெறிகளையா? நீயா? நெறிகளுக்கும் பாலைவனத்துக்கும் என்ன உறவு? அவை நிழலில் ஈரத்தில் உருவாகக்கூடியவை. கடும் வெயிலில் அவை உலர்ந்து ஆவியாகிவிடும்.”

சகுனி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “நான் சொல்கிறேன், நீ ஏன் வந்தாய் என்று. நீ பீஷ்மரை மட்டுமே எண்ணினாய். அவரை துயருறச்செய்யலாகாது என்பதற்காகவே திரும்பினாய்!” சகுனி விழிநீருடன் தலைதூக்கி ஜரனை நோக்கி “உண்மை” என்றார்.

“நீ ஓநாய் என்றால் திரும்பிச்செல். அவரது சங்கைக்கடித்து குருதியைக்குடி” என்றது ஜரன். “இல்லை, என்னால் முடியாது” என்றார் சகுனி. “அப்படியென்றால் இங்கே உலர்ந்து இறந்துபோ! நாங்கள் உன்னை இழிமகனாக தலைமுறைகள் தோறும் நினைவுகூர்கிறோம்.” சகுனி உடல் சிலிர்க்க தலைகுனிந்தார்.

சிலகணங்கள் கழித்து சகுனி “நான் என்ன செய்வது?” என்றார். “நீ ஓநாய். உன் பசிக்கு மட்டுமே அவியளிக்கவேண்டியவன். வேறெந்த தெய்வத்திற்கும் ஆன்மாவை அளிக்காதே” என்றது ஜரன். “நன்றி பாசம் கருணை நீதி அறம் என ஆயிரம் பதாகைகளை அத்தெய்வங்கள் ஏந்தியிருக்கின்றன. நீ ஏந்தவேண்டிய பதாகை இதுதான்....”

“ஒருபோதும் நிகழாது என்று தோன்றியபின்னரும் நான் எதற்காக காத்திருக்கவேண்டும்?” என்றார் சகுனி. “ஏன் அப்படித் தோன்றுகிறது? ஓநாய்க்கு அப்படித் தோன்றலாகாது. கடைசிக்கணம் வரை அது வேட்டையாடிக்கொண்டிருக்கும்” என்றது ஜரன்.

“நீ அதைச் சொல்லமுடியுமா? உன் பிரமைகளுக்கு உன்னை நீயே ஓப்படைக்கவில்லையா? வேட்டையைத் துறந்து இங்கு வந்து இறப்பைக் காத்துக் கிடக்கிறாய் அல்லவா?” என்றார் சகுனி. இளித்த புன்னகையுடன் மெல்ல எழுந்து “அவ்வாறு உன்னிடம் சொன்னது யார்?” என்றது ஜரன். அவர் அதன் சொல்லை விளங்கிக்கொள்ளும் முன் “நான் என் இரையை இங்கே வரவழைத்திருக்கலாம் அல்லவா? இதுவே கூட வேட்டையாக இருக்கலாம் அல்லவா?” என்றது.

சகுனி எழுவதற்குள் உறுமியபடி பாய்ந்து அவரது குதிகாலை ஜரன் கவ்விக்கொண்டது. நெருப்பு எழுந்து வருவது போலிருந்தது அதன் விரைவு. அதன் பற்கள் அவரது தசைக்குள் நன்கு இறங்கி கவ்வியிருந்தன. அவர் தன் இடையிலிருந்த குறுவாளை எடுத்து அதன் குரல்வளையை அறுத்தார். அதன் கால்கள் துடித்தன. பற்களின் இறுக்கம் குறையவில்லை.

கழுத்தினூடாக அதன் மூச்சு முழுமையாக வெளியேறியது. கத்தியால் அதன் தலையை நன்றாகவே வெட்டி துண்டித்தார். குறுவாளை அதன் பற்களுக்கிடையே வைத்து நெம்பி அதன் கவ்வலை விடுவித்தார். அதன் விழிகள் வெறித்திருந்தன, ஒரு புன்னகையுடன். துண்டித்த தலையை அவர் மணலில் வீச அதன் நாக்கு மெல்லச் சுழன்று பற்களில் சொட்டிய பசுங்குருதியை நக்கிச் சுவைத்தது.

சகுனி குனிந்து நோக்கினார், அவரது குதிகால் தசையின் ஒருபகுதி அதன் வாய்க்குள் இருந்தது. அதை கையால் தொட்டு எடுத்து முகத்தருகே நோக்கினார். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. அதை மீண்டும் ஜரனின் வாய்க்குள்ளேயே வைத்தார்.

கடிபட்ட வலதுகால் அதிர்ந்துகொண்டே இருந்தது. குனிந்து நோக்கியபோதுதான் புண் எத்தனை ஆழமானது என்று புரிந்தது. குருதி வழிந்து மணலில் ஊறி மறைந்துகொண்டிருந்தது. மணலில் குருதியை உறிஞ்சி உண்ணும் கணாத்தெய்வம் ஒன்றின் குவிந்த உதடு உருவாகி வந்தது.

கால் மரத்து உறைந்துவிட்டிருந்தது. முற்றிலும் உயிரற்றது போல. அதில் முதன்மையான நரம்பு ஏதோ அறுபட்டிருக்கவேண்டும். கச்சையைக் கிழித்து புண்ணை இறுக்கிக் கட்டினார். வலது காலை இழுத்து இழுத்து நடந்து மேடேறினார். இருமுறை மணலில் விழுந்து பின் எழுந்தார். திரும்பிச்செல்லவேண்டிய தொலைவு கூடிக்கூடி வந்தது. காலில் இருந்து வலி உடலெங்கும் பரவியது

மேடேறியபின் திரும்பி நோக்கியபோது ஜரனின் சடலத்தருகே ஒரு இளம் ஓநாய் வந்திருப்பதைக் கண்டார். அது கால்களைத் தழைத்து வயிற்றை மண்ணில் அழுத்தி மூக்கை முன்னால் நீட்டி மெல்ல முன்னகர்ந்தது. அதன் நாக்கு தழைந்து தொங்கி ஆடியது.

மேலிருந்து ஒரு கழுகு மெல்ல சரிந்து காற்றின் பாதையில் சறுக்கி வந்துகொண்டிருந்தது. ஓநாய் தலைதூக்கி அதை நோக்கியபின் ஜரனை அணுகி அதன் உடலை எச்சரிக்கையுடன் முகர்ந்து நோக்கியது. துண்டுபட்டுக் கிடந்த அதன் தலையில் இருந்து வழிந்த குருதியை நாவால் நக்கியது. அப்படியே சரிந்து பின்னங்கால்களின் மேல் அமர்ந்து நாசி தூக்கி வானைநோக்கி ஊளையிடத் தொடங்கியது.

கூடாரம் கண்ணில் பட்டதும் சகுனி கையைத் தூக்கி ஆட்டினார். அங்கே நின்றிருந்த அவரது காவலன் அவரைக் கண்டு ஓடிவந்தான். சரிந்து விழுந்து எழுந்து வந்த அவரை பிடித்துக்கொண்டான். கச்சைத்துணி நனைந்து குருதி வந்த வழியெங்கும் சொட்டியிருந்தது.

“நாம் உடனே கிளம்புவோம்” என்றார் சகுனி. “காந்தாரத்துக்கு அல்ல. மீண்டும் அஸ்தினபுரிக்கு” காவலன் இமைக்காமல் அவரை நோக்கினான். சகுனி “புண்ணுக்கு மருந்திடுவதை போகும் வழியில் செய்யலாம்... நான்குநாட்களில் நாம் அஸ்தினபுரியை அடைந்தாகவேண்டும்” என்றார். "ஆணை இளவரசே!” என்றான் காவலன்.

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 3

சிபிநாட்டின் பாலைநிலத்தை கடப்பதற்குள் சகுனியின் கால் மிகப்பெரியதாக வீங்கிவிட்டது. அவரது உடலருகே இன்னொரு சிறிய உடல்போல அது கிடந்தது. கிளம்பிய முதல் நாழிகையிலேயே வலிதாளாமல் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அவர் தன்னையறியாமல் முனகத்தொடங்கிவிட்டிருந்தார். காய்ச்சல் கண்டவர் போல அவர் உடல் நடுங்கியது.

அவரை நோக்கிய காவலர்தலைவன் அவரது வெண்ணிற உடல் சிவந்து கனல் கொண்டிருப்பதை கண்டான். அவரால் குதிரையில் அமர முடியவில்லை. ஒருமுறை குதிரையிலிருந்து அவர் சரிந்து விழப்போனபோது அதை எதிர்பார்த்திருந்த வீரன் அவரைப்பிடித்துக்கொண்டான். அவரது உடலின் வெம்மையை உணர்ந்து அவன் திகைத்தான். அவரை கையில் தாங்கிக்கொள்ள முடியாதபடி கைகள் தகித்தன.

அவர்களிடம் வண்டிகள் இல்லையென்பதனால் அவரை படுக்கவைக்க முடியவில்லை. காவலர்தலைவன் அவரை குதிரைமேலேயே நீளவாட்டில் அமரச்செய்தான். குதிரையின் கழுத்துடன் அவர் இடையை சேர்த்துக்கட்டி காலை பின்பக்கம் நீட்டி துணியால் குதிரைச்சேணத்துடன் சேர்த்துக்கட்டினான். குதிரை அதை புரிந்துகொண்டது. பெருநடையில் அது ஓடியபோதுகூட சகுனி ஒருமுறையும் சரியவில்லை.

பாலைநிலத்தின் கொதிக்கும் வெயிலில் அவர்கள் தங்கள் குறுகிய நிழல்களின் மேல் பயணம் செய்தனர். தொலைவில் தெரிந்த மொட்டைப்பாறை மலைகள் அசைவில்லாமல் அப்படியே நின்றன. அவற்றின் காற்றால் அரிக்கப்பட்ட சரிவுகளில் யோகியின் கையில் உருளும் ஜபமாலை என மணல் மெல்ல பொழிந்துகொண்டிருந்தது. தங்களைச் சூழ்ந்து பசியுடன் நோக்கியபடி அசையாமல் காத்திருக்கும் செந்நிற ஓநாய்கள் அந்த மலைச்சிகரங்கள் என காவலர்தலைவன் எண்ணிக்கொண்டான். காற்று திசைமாறி வீசியபோது தொலைவில் ஓநாயின் ஓலம் போலவே மணல் அறைபடும் ஒலி எழுந்தது.

“நாம் வழிதவறிவிட்டோமா? என்று காவலர்தலைவன் கிருதரிடம் கேட்டான். “இல்லை. என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்” என்றார் கிருதர். “மலைகள் மாறவே இல்லை. நாம் நெடுநேரம் பயணம் செய்துவிட்டோம்” என்றான் காவலர்தலைவன். “அக்‌ஷரே, மானுடனின் ஆயுள்காலம் மலைகளுக்கு ஒரு நாள். அவனுடைய ஒருநாள் அவற்றுக்கு ஒரு கணநேர அசைவு” என்றார் கிருதர். காவலர்தலைவன் பெருமூச்சுவிட்டு “நேரம் செல்லச்செல்ல இளவரசரின் உடல் வீங்கி வருகிறது. கால் கனலில் காய்ச்சப்பட்ட இரும்புத்தூண்போல ஆகிவிட்டது” என்றான்.

“ஓநாயின் வாயில் வாழும் ஜடரை அவருக்குள் குடியேறிவிட்டாள். அனல் வடிவமானவள் அவள். நாம் காண்பது அவளுடைய வெம்மையைத்தான். அவளுக்கு நாம் அவியளித்துப்பேணவேண்டும். இல்லையேல் அவள் அவ்வுடலை உண்பாள். எஞ்சியதை இன்னொரு உடலுக்கு உணவாக்குவாள். அவள் அன்னத்தில் இருந்து அன்னத்துக்கு படர்ந்தேறிக்கொண்டே இருக்கிறாள். அன்னத்தாலான இவ்வுலகை முழுமையாக உண்டாலும் அவள் பசி தணியாது” என்றார் கிருதர். “அக்‌ஷரே, உயிர் என்றால் என்ன? அன்னம் ஜடராதேவியுடன் கொள்ளும் ஓயாத போர் அல்லவா அது?”

பாலையின் எல்லையில் முதல் சிற்றூர் தெரிந்ததும் கிருதர் “அங்கே மருத்தவர் இருப்பார்” என்றார். “எப்படித்தெரியும்?” என்றான் காவலர்தலைவன். “பசித்த விலங்குகள் வந்து காத்திருக்கும் இறுதி எல்லை இது. எனவே மறுபக்கம் நோயாளியை எதிர்பார்த்து மருத்துவரும் காத்திருப்பார்” என்றார் கிருதர். உயரமான மரத்தின் மீது கட்டப்பட்ட மூங்கிலில் பச்சை நிறமான பாலைவன அழைப்புக்கொடி காற்றில் துடித்துக்கொண்டிருந்தது. அந்த செந்நிற விரிவில் எழுந்த ஒற்றை இலை போல அது தெரிந்தது.

ஊரை அவர்கள் நெருங்கியபோதே நாய்கள் கூட்டமாக குரைத்தபடி ஓடிவந்தன. “ஓநாய்களுக்கு எதிராகவே வாழ்க்கையை கட்டி எழுப்பியிருக்கிறார்கள்” என்றார் கிருதர். நாய்கள் வெறியுடன் குரைத்தபடி அவர்களை நோக்கி வந்தன. குதிரைகள் சீறும்மூச்சுடன் தயங்கின. வீரர்கள் கடிவாளத்தை இழுத்தபடி திரும்பி நோக்கினர் கிருதர் “செல்லலாம். அவை தங்கள் எல்லைக்கு அப்பால் நாம் சென்றால் மட்டுமே தாக்கும். அதற்குள் எவரேனும் வந்துவிடுவார்கள்” என்றார்

நாய்கள் குரைப்பதில் இருந்த வெறியை காவலர்தலைவன் கண்டான். “அவை அரசரின் காலில் உள்ள சீழின் வாசனையை அறிந்துவிட்டன. அது ஓநாயின் கடி என்றுகூட அவை அறிந்திருக்கும்” என்றார் கிருதர். அவர்கள் மேலும் நெருங்கியபோது நாய்கள் ஒரு பெரிய நாயின் தலைமையில் மெல்ல இணைந்து அணிவகுத்தன. அவற்றின் குரைப்பொலி அடங்கியது. தலைவன் தலையை நன்றாகத் தாழ்த்தி, செவிகளை கூர்மையாக்கி ,கண்கள் சுடர்விட நோக்கி நின்றது. பிற ஓநாய்களும் அதைப்போலவே தலைகளை தாழ்த்தி காதுகளை குவித்தன

பின்பக்கம் குதிரையில் வந்த இருவர் உரக்கக் கூவி நாய்களை பின்னுக்கு அழைத்தனர். காவலர்தலைவன் காந்தாரத்தின் கொடியை தூக்கி ஆட்டினான். அவர்களில் ஒருவன் இளம்பச்சை நிறமான கொடியை வீசி அவர்கள் வரலாம் என்று தெரிவித்தான். குதிரைகள் நெருங்கி வந்தபோது நாய்கள் எரிச்சலுடன் முனகியபடி அணிவிலகின. உறுமியபடி அகன்று சென்று ஊர்முகப்பின் மண்ணாலான சுவர்களுக்கு அப்பால் மறைந்தன

முன்னால் வந்தவன் தன்னை பகன் என அறிமுகம் செய்துகொண்டான். ஊர்க்காவலர்படையின் தலைவன். அவனுடன் இருந்தவன் துணைத்தலைவனாகிய சக்ரன். “வாருங்கள்...என்ன ஆயிற்று?” என்றான் பகன். “எங்கள் இளவரசரை ஓநாய் கடித்துவிட்டது” என்றான் காவலர்தலைவன். “ஓநாயா? தனியாகச் சென்றிருந்தாரா?” பகன் கேட்டான். “ஆம், காலையில்” என்றான் காவலர்தலைவன்

பகன் வந்து சகுனியை நோக்கினான். அவருக்கு நினைவே இல்லை. அக்‌ஷனுக்கு அவரைப்பார்க்க அச்சமாக இருந்தது. அவரது உடல் சிவந்து நீலநிறமான நரம்புகள் பின்னிப்பிணைந்து விரைத்து நின்றிருந்தது. “இறுதிக்கணம்” என்றான் பகன் “ஓநாய் கடித்தவர்கள் பிழைப்பதில்லை...அத்துடன் ஓநாய் இவரது காலைக் கடித்திருக்கிறது. அது மிக அரிது”

“ஏன்” என்றார் கிருதர். அவர்கள் ஊருக்குள் குளம்படிகளின் எதிரொலி சூழ நுழைந்தன. செம்மண்ணால் ஆன குடில்களில் இருந்து அதேமண்ணால் ஆனவர்கள் போன்ற சிறுவர்களும் கிழவர்களும் எட்டிப்பார்த்தனர். தலைமேல் முக்காடு போட்டிருந்த பெண்கள் சிறிய சாளரங்கள் வழியாக நோக்கி அவர்களின் மொழியில் கூவிப்பேசிக்கொண்டனர்.

“இவர் எங்காவது அமர்ந்திருந்தாலோ படுத்திருந்தாலோ மட்டும்தான் ஓநாய் தாக்கும். அப்போது அது நேராக கழுத்துநரம்பையே கவ்வும். அவர் திருப்பித்தாக்க தருணமே கொடுக்காது. காலைக்கடித்திருக்கிறது என்றால்...” என்று அவன் இழுக்க “அது இறக்கும் நிலையில் இருந்த ஓநாய். இவர் அருகே சென்றிருக்கிறார்” என்றார் கிருதர்.

“ஆம், அப்படி மக்கள் செல்வதுண்டு” என்றான் பகன். “இறக்கும் ஓநாயின் கண்களில் எவருமே மீறமுடியாத ஒரு தெய்வ ஆணை உண்டு. அதை நோக்கி ஈர்க்கப்பட்டு இறுதிக்கடியை வாங்கி இறந்தவர்கள் பலர்.அதன் வயிற்றில் வாழும் அந்த தெய்வம் பசிகொள்ளும்போது கண்களில் வந்து கோயில் கொள்கிறது, அதை நாங்கள் இங்கே ஜடரை என்று வழிபடுகிறோம்” அருகே தெரிந்த சிறிய கோயிலைச் சுட்டிக்காட்டி “அதோ அதுதான் ஜடராதேவியின் ஆலயம்” என்றான்

உருளைக்கற்களை தூக்கி அடுக்கி உருவாக்கப்பட்ட ஆளுயரக் கோயிலுக்குள் மண்ணால் செய்யப்பட்ட சிறிய செந்நிறச்சிலையாக ஜடராதேவி தெரிந்தாள். நான்குகைகளிலும் வாள், வில், சக்கரம், கோடரி என படைக்கலங்கள் ஏந்தி காலைமடித்து அமர்ந்திருந்தாள். ஓநாயின் நீள்முகத்தில் வாய் திறந்து சிவந்த நாக்கு தொங்கியது. வெண்ணிறக்கூழாங்கற்கள் பற்களாக அமைக்கப்பட்டிருந்தன. செந்நிறமான படிகக் கற்கள் விழிகளாக சுடர்விட்டன.

“எங்கள் குலதெய்வம். ஒவ்வொருநாளும் ஒருதுளி உதிரமாவது அவளுக்குப் படைத்து வழிபடவேண்டும். உணவே இல்லாத நாட்களில் எங்கள் உடலில் இருந்து ஒரு துளிக்குருதியை விடுவோம்” என்றான் பகன். கிருதர் கைகூப்பி வணங்கினார். காவலர்தலைவன் “பசித்த ஒநாயின் பார்வையை அப்படியே கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றான். கிருதர் “தலைமுறைதலைமுறையாக அவர்கள் கண்டுவரும் பார்வை. தங்கள் கனவில் இவர்கள் ஒவ்வொருவரும் அதைக் கண்டிருப்பார்கள்” என்றார் கிருதர்

மருத்துவரின் இல்லம் ஊரின் நடுவே இருந்தது அதைச்சூழ்ந்திருந்த முள்மரங்களில் ஒரு இலைகூட இல்லை. கீழே சருகுகளும் இல்லை. மாலைவெயிலில் முட்களின் நிழல் தரையில் வலையெனப் பரவியிருந்தது. கடந்துசெல்லும் காற்றில் மரங்களின் முட்கள் மெல்லச் சீறிக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான பழுத்த இரும்பு ஊசிகள் மேல் நீர் விழுந்ததுபோல

சக்ரன் ஓடிச்சென்று கதவைத்தட்டி வைத்தியரை அழைத்தான். பின்னர் கதவை அவனே திறந்தான். மென்மரப்பட்டைகளால் ஆன கதவுக்கு அப்பால் இருட்டு நிறைந்திருந்தது. அந்த ஊரிலேயே அதுதான் பெரிய வீடு. ஆனால் அதற்குச் சாளரங்களே இருக்கவில்லை. இருட்டுக்குள் இருந்து ஒரு கிழவர் கண்களைச் சுருக்கி மூடியபடி தள்ளாடி வந்தார். கைநீட்டி கதவைத் தொட்டபடி “என்னைக்கேட்காமல் திறக்காதே என்று சொன்னேனா இல்லையா?” என்றான்

“நீங்கள் துயில்கிறீர்கள் என நினைத்தேன் ஊஷரரே” என்றான் சக்ரன் “இவர் காந்தார இளவரசர் என்கிறார்கள். இவரை ஓநாய் கடித்துவிட்டது. இறக்கும் ஓநாய்...” ஊஷரர் “இவன் எதற்கு ஜடரையிடம் போனான்?” என முனகியபின் “யார் என்று சொன்னாய்?” என்றார். “...காந்தார இளவரசர்” என்றார் கிருதர். “சகுனித்தேவரா? சௌபாலர்?” என்று ஊஷரர் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். ஊஷரர் கண்களில் வழிந்த நீருடன் ஆடும் தலையுடன் சகுனியை நோக்கிவிட்டு “பெரும்பாலும் விடைபெற்றுவிட்டார்...ஜடரை என்ன நினைக்கிறாள் என்று பார்ப்போம்” என்றார்

“கொண்டுவந்து படுக்கவையுங்கள்..” என்றபடி ஊஷரர் உள்ளே சென்றார். அவர்கள் உள்ளே வந்ததும் “கதவுகளை மூடுங்கள்...வெளிச்சத்தில் என்னால் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி ஒரு துணியை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டார். கதவுமூடப்பட்டதும் அறைக்குள் இருட்டு பரவியது. அவர் ஒரு சிறிய துளையை சுவரின் மரப்பட்டையில் போட்டிருந்தார். அது எதிர்பக்கம் ஒரு சிறிய ஆடியில் விழுந்தது. அவ்வ்விரு ஒளியில் அறை மெல்லிய ஒளியில் துலங்கியது

ஊஷரர் குனிந்து சகுனியின் கைகளைப்பற்றி நாடியை நோக்கினார். “நெருப்பின் நடனம்” என்றார் “ஜடரை கூத்தாடுகிறாள். இவ்வுடலை பெரும்பாலும் அவள் உண்டுவிட்டாள்” என்றார். சகுனியின் தொண்டையில் கைவைத்து அழுத்தினார். அவரது வயிற்றிலும் தொடையிலும் அழுத்தி நோக்கிவிட்டு “உயிர் குளிர்ந்து வருகிறது...ஒன்றைமட்டுமே இப்போது நோக்கவேண்டும். இது உணவையும் நீரையும் ஏற்கிறதா? ஒரு துளி நீரையேனும் இவ்வுடல் ஏற்றுக்கொண்டதென்றால் இதை நான் மீட்டுவிடுவேன்..

தலையை ஆட்டி உதட்டை பிதுக்கி “.ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே” என்றார் ஊஷரர். “இப்போது இவ்வுடலுக்கு அளிக்கப்படும் உணவு ஜடரை எனும் நெருப்பை அணைக்கும் நீர். அவள் அதை விரும்பமாட்டாள்” அவர் ஒரு சிறு சுரைக்காய்க் குடுவையை எடுத்துவந்தார். அதிலிருந்த குளிர்ந்த நீரில் அக்காரக்கட்டிகளைப்போட்டு மரக்கரண்டியால் கலக்கினார். அதை நீளமான மூக்கு கொண்ட இன்னொரு கொப்பரைக்குள் விட்டார். அதை தூக்கி சகுனியின் வாயருகே கொண்டுவந்தார்

அவரது கைகள் நடுங்கியமையால் அக்காரநீர் சிந்தியது. சகுனியின் உதடுகள் கருகி பற்கள் கிட்டித்திருந்தன. அவர் மரக்கரண்டியால் பற்களை விலக்கி குடுவையின் மூக்கை உள்ளே விட்டு நீரை உள்ளே ஊற்றினார். தடித்த நாக்கில் பட்டு நீர் வெளியே வழிந்தது. தொண்டையிலோ உதட்டிலோ அசைவு நிகழவில்லை. ஊஷரர் “அவ்வளவுதான்” என்றார்

அவர் குடுவையை விலக்குவதற்குள் சகுனி கண்களைத் திறந்தார். நாவால் அந்த நீரை நக்கியபின் ஒரு கையை ஊன்றி மெல்ல உடலைத் தூக்கி “நீர்” என்றார். “நீர்...” என்றும் மீண்டும் கேட்டார். குடுவையை அவர் வாய்க்குள் வைத்தார் ஊஷரர். சகுனி குடிக்கும் ஒலி இருண்ட அறைக்குள் ஒலித்தது. கிருதர் “உடனடியாக இவ்வளவு நீர் குடிப்பதனால்..” என்று சொல்ல ஊஷரர் “அருந்துவது ஜடரை. அவளுக்குக் கடல்களும் போதாது...” என்றார்

சகுனி குடுவையை முழுமையாக குடித்துவிட்டு மல்லாந்து படுத்தார். உதடுகள் மெல்ல அசைய “மேலும் நீர்...மேலும்” என்றார். “நாம் மருத்துவத்தைத் தொடங்கலாம்” என்றார் ஊஷரர். “மேலும் கேட்கிறாரே” என்று கிருதர் சொல்ல “இனிமேலும் கொடுக்கலாகாது. ஜடரை ஏங்கட்டும். கெஞ்சட்டும்...அப்போதுதான் அவளை நாம் கையாளமுடியும்” என்றார் ஊஷரர்

ஊஷரர் நடுங்கும் கால்களுடன் எழுந்து சென்று தன் கருவிகள் கொண்ட மென்மரப் பெட்டியை எடுத்துவந்தார். அதைத்திறந்து அதிலிருந்து மெல்லிய சிறிய கத்திகளையும் ஊசிகளையும் எடுத்துப்பரப்பினார். திரும்பி கிருதரிடம் “நீர் அந்த அடுப்பைப் பற்றவையும். அதில் நாம் மெழுகையும் அரக்கையும் உருக்கவேண்டியிருக்கும்” என்றார்.

கிருதர் எழுந்துசென்று அந்த அறையின் மூலையில் இருந்த அடுப்பில் அருகே இருந்த பெட்டியில் இருந்து கரித்துண்டுகளை அள்ளிப்போட்டு நிறைத்துவிட்டு சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பெடுத்து மென்சருகில் பற்றவைத்து அதிலிட்டு ஊதினார். கனல் சிவந்து எழத்தொடங்கியது. திறந்த பெரிய புண்போல அடுப்பின் வாய் மாறியதும் ஊஷரர் “அந்த இரும்பு வாணலியில் கனல்துண்டுகளை போட்டு கொண்டு வா” என்றார்

கிருதர் வாணலியில் அலையலையாக சிவந்து கொண்டிருந்த கனல்துண்டுகளைக் கொண்டு சென்று ஊஷரர் முன் வைத்தார். ஊஷரர் ஒரு நீளமான கத்தியை எடுத்ததும் அவர் புரிந்துகொண்டு “மருத்துவரே, அகிபீனா அளித்துவிட்டு அறுவைமருத்துவத்தைச் செய்யலாமே” என்றார். “தேவையில்லை. ஜடரைக்கு கடும் வலி பிடிக்கும்” என்றபின் இரண்டு கரிய பற்கள் மட்டும் எஞ்சிய வாயைத் திறந்து நகைத்து “வலிக்கு வலியே மருந்து” என்றார்.

கத்தியையும் ஒரு நீளமான கம்பியையும் நெருப்பில் இட்டு சிறிய பாளைவிசிறியால் வீசிக்கொண்டு மறுகையால் சகுனியின் காலில் இருந்த காயத்தைப் பிரித்தார். கச்சைத்துணியை சுழற்றி விரித்தபோது வெந்து தணிந்ததுபோல புண் தெரிந்தது. “தசையை அள்ளி எடுத்திருக்கிறது. ஊன்சுவைத்து இறந்திருக்கிறது...” என்றார் ஊஷரர் மேலும் புன்னகைத்தபடி. “ஆண்மையுள்ள ஓநாய்...இந்த பாலையில் ஆண்மை உள்ள ஓநாய்கள் மட்டுமே முதுமை அடையும் பேறுபெற்றவை”

கத்தி சிவந்து பழுத்து செந்தாழை மலரிதழ் போல ஆகியது. கம்பி உருகி வழிந்தது போலத் தெரிந்தது “கிருதரே, அந்தக்கனலின் மேல் சிறுவானலியை வைத்து அரக்குருளைகளைப்போடும். அவை உருகி கொதிக்கும்போது மேலே சிற்றறையில் இருக்கும் துணிச்சுருளை அதிலிட்டு நன்றாக புரட்டி எடுத்து சற்றே ஆறவைத்து என்னிடம் கொடும்” என்றார். “படிகாரம் கலந்த அரக்கு அது. உருகும்போது வரும் வாசனையைக் கண்டு அஞ்சிவிடாதீர்”

விரல்களில் மரத்தாலான குவை உறைகளை அணிந்தபின் வலக்கையில் அந்த கத்தியை எடுத்தார். இடக்கையில் ஊசியை எடுத்துக்கொண்டு “இளவரசரை பிடித்துக்கொள்ளுங்கள். இருகைகளுக்கு இருவர். இரு கால்களுக்கு இருவர். இடைக்கு ஒருவர், தலைக்கு ஒருவர்” என்றார் ஊஷரர். வீரர்கள் அமர்ந்து சகுனியை பிடித்துக்கொண்டனர் “நீர்!” என்று சகுனி முனகினார் “நீ கொடுங்கள் மூடர்களே....உணவு வேண்டும் எனக்கு”

வாடிய மலர்போலத் தெரிந்த சதைக்கதுப்பில் கம்பியால் தொட்டபோது சகுனி இரண்டாகக் கிழிபடும் உலோகத்தகடு போல ஒலியெழுப்பி அதிர்ந்து எழுந்தார். ஊஷரர் கத்தியால் அந்தத் தசைக்குழியை வெட்டி எடுத்தார். அலறல் இறுகி ஓசை அழிய சகுனியின் உடல் எழுந்து வளைந்து நாண் இறுகிய வில்லென நின்றது. ஊஷரர் வெட்டி எடுக்க எடுக்க அதில் மெல்லிய அதிர்வு மட்டுமே நிகழ்ந்தது.

பிடித்திருந்தவர்களில் எவரும் அதை நோக்கவில்லை. அவர்களின் கைகளும் உடலும் நடுங்கிக்கொண்டிருந்தன. குருதி வழிய கத்தியும் கம்பியும் கருகின. புண்ணை நன்றாகத் தோண்டி எடுத்தபின் அருகே இருந்த சிறிய படிகச் சிமிழில் இருந்து அரக்குநிறமான திரவத்தை எடுத்து புண்மேல் ஊற்றினார்.

அடைத்த குரலில் அலறியபடி சகுனி சற்றே தளர்ந்திருந்த பிடிகளை உதறிவிட்டு விடுபட்டு எழுந்தார். அக்கணம் மருத்துவர் ஓங்கி அவன் காதுக்குப்பின்னால் அறைந்தார். சகுனி கழுத்துநரம்புகள் இருமுறை இழுபட்டு அதிர வாய் திறந்து தவித்துவிட்டு தளர்ந்து பின்னால் சரிந்தார். பிடித்துக்கொள்ளுங்கள் மூடர்களே” என்றார் ஊஷரர். பிடித்திருந்த வீரர்களில் ஒருவன் விம்மி அழத்தொடங்கினான்.

அது யவனமது என்று கிருதர் வாசனை மூலம் உணர்ந்தார். புண்ணில் இருந்து சோரியுடன் கலந்து அது வழிந்தது. “கொண்டு வாருங்கள்...” என்றார் ஊஷரர். அரக்கில் புரட்டப்பட்டு சற்றே ஆறி விட்டிருந்த துணிச்சுருளை கிருதர் வாணலியுடன் கொண்டுவந்து அருகே வைத்தார்.

ஊஷரர் சிறிய கிண்ணம் ஒன்றில் இருந்து சாம்பல்நிறமான பொடி ஒன்றை எடுத்து சேற்றுக்குழி போல ஊறி வழிந்துகொண்டிருந்த புண்மேல் அப்பினார். தூக்கத்தில் பேசுபவர் போல சகுனி “அணையாதது” என்றார். கிருதர் புரியாமல் ஊஷரரை நோக்கினார் “ஜடரையின் சொற்கள் அவை” என்றார் ஊஷரர் சகுனி “எப்போதும்...என்றும்” என்றார்.

அந்தப்பொடி சோரி வழிவதை நிறுத்தி புண்ணை இறுகச்செய்தது. “அது இங்கே பாலையில் கிடைக்கும் மண். கொதிக்க வறுத்து சேமிப்போம்” என்றார் ஊஷரர். கிடுக்கியால் சூடான அரக்குத்துணியை எடுத்து அந்தப்புண்மேல் வைத்து சுற்றிக்கட்டினார். துணி அரக்குடன் சேர்ந்து நன்றாக இறுகி விட்டது

அது இறுகுவதை நோக்கியபின் திரும்பி “மீண்டுவிடுவார். ஆனால் இனி அவருக்கு நேர்நடை இல்லை. வலதுகால் என்றும் ஊனமாகவே இருக்கும்” என்றார் ஊஷரர். “உயிர் எஞ்சினால் போதும் ஊஷரரே” என்றார் கிருதர். “உயிர் ஆற்றவேண்டிய பணி நிறையவே எஞ்சியிருக்கிறது.ஆகவேதான் அது ஜடரையை வென்றிருக்கிறது”

எழுந்து இடையில் கையை வைத்து நெளிந்து “அன்னையே” என்று கூவியபின் “என்னிடம் அரசகுலத்தார் அனைவரின் கதையும் இருக்கிறது. சகுனியைப்பற்றி சிலநாட்களுக்கு முன்னர்தான் வாசித்தேன். சுவடியைத் தேடி எடுக்கிறேன்” என்றார். இடையில் கையூன்றியபடியே நடந்து சென்று ஒரு பெரிய பெட்டியைத் திறந்தார். தூசியில் வீரர் இருவர் தும்மினர். அவர் அதற்குள் இருந்த காலத்தால் கருகிப்போன சுவடிக்கட்டுகளை எடுத்து வெளியே வைத்து அவற்றைச் சேர்த்துக் கட்டியிருந்த சரடில் கோர்க்கப்பட்டிருந்த குறிப்புகளை படித்தார்

ஒவ்வொன்றாக நோக்கி இறுதியில் ஒரு சுவடிக்கட்டை எடுத்தார் “இதுதான்...துர்வசுவின் குலத்தின் கதை முழுமையாகவே இதில் உள்ளது” என்றபடி நடந்து வந்தார். சுவடியை கண்களை சுருக்கி வாசித்தார்.”சந்திரனில் இருந்து புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் யயாதி துர்வசு.... அவர்களிடமிருந்து வர்க்கன், கோபானு,திரைசானி, கரந்தமன்,மருத்தன் துஷ்யந்தன், வரூதன், கண்டீரன்... அவ்வரிசையில் காந்தாரன்...அவன் குலத்தில் சுபலன். சகுனியாகிய இவர் சுபலனின் மைந்தர்”

அமர்ந்துகொண்டு அந்தச்சுவடியை பிரித்து ஊஷரர் வாசிக்கலானார் “சகுனி கிதவன் என்றும் பர்வதீயன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருடன் பிறந்தவர்கள் நூறுபேர்” கிருதர் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள் ஊஷரரே? மன்னர் சுபலருக்கு இரு மைந்தர்கள்தானே?” என்றார். “எங்கள் புலவர்கள் செவிச்செய்திகளை கேட்டு எழுதிவைத்த ஏடுகள் இவை. எங்கள் வரலாறு இதுதான். இதன்படி சுபலரின் மைந்தர்கள் நூறுபேர். மூத்தவர் அசலர்” என்றார் ஊஷரர்,

“ஆம்” என்றார் கிருதர். “இரண்டாமர் சகுனி. மூன்றாமர் விருஷகர்”. “அது உண்மை” என்றார் கிருதர். “இவர்களுடன் பிறந்த நூறுபேரின் பெயர்களும் இந்நூலில் உள்ளன” கிருதர் “எனக்குப்புரியவில்லை. அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா?” என்றார். சுவடிகளை நோக்கிவிட்டு “இல்லை” என்றார் ஊஷரர். “அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டனர்”

சிலகணங்களுக்குப்பின் கிருதர் பெருமூச்சுவிட்டு “உங்கள் சுவடிகளில் உள்ளதை முழுமையாகச் சொல்லுங்கள் மருத்துவரே” என்றார். “சுபலருக்கு பதினொரு மகள்கள். மூத்தவள் காந்தாரி. அவளை வல்லமை வாய்ந்த பேரரசனுக்கு மனைவியாக்கவேண்டுமென சுபலர் எண்ணினார். ஆனால் நிமித்திகர்கள் ஊழ்வினையால் அவளுக்கு சுமங்கலையாக வாழும் விதி இல்லை என்றனர். அவள் மணக்கும் கணவன் வாளால் இறப்பான் என்று கணித்துச் சொன்னார்கள்”

கிருதர் திரும்பி தன் வீரர்களை நோக்கினார் . அவர்கள் மெல்ல அமர்ந்துகொண்டு அரையிருளில் மின்னிய கண்களுடன் கேட்டிருந்தனர். “அப்போது அஸ்தினபுரியில் இருந்து பிதாமகர் பீஷ்மரின் தூது வந்தது. அவரது பெயரன் திருச்தராஷ்டிரனுக்கு காந்தாரியைப் பெண்கேட்டிருந்தார். மிகச்சிறந்த வாய்ப்பு என்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆனால் காந்தாரி விதவையாவது உறுதி என்றனர் நிமித்திகர்”

“அப்போது மூத்த அமைச்சர் ஒரு வழி சொன்னார்” என்று ஊஷரர் தொடர்ந்தார் “ஒரு செம்மரியாட்டுக்கு முதலில் காந்தாரியை மணம்புரிந்து வைத்து அதை பலிகொடுத்துவிடலாம். அவள் விதவையாவாள் என்ற விதி நிறைவேறிவிடும். அதன்பின் அவளை திருதராஷ்டிரனுக்கு மணம்செய்துகொடுத்தால் அஸ்தினபுரியில் காந்தார குலத்து மைந்தர்கள் பிறப்பார்கள் என்றார் அமைச்சர். முதலில் தயங்கினாலும் அமைச்சரின் வற்புறுத்தலால் அதற்கு சுபலர் ஒத்துக்கொண்டார்”

அதன்படி ஓர் அமாவாசை இரவில் எவருமறியாமல் முறைப்படி காந்தாரியை ஒரு செம்மரியாட்டுக்கு மணம்புரிந்து வைத்தனர். அதை பாலைவனத் தெய்வங்களுக்குப் பலிகொடுத்தனர். அச்செய்தியை மறைத்து அவளை அஸ்தினபுரியின் இளவரசன் திருதராஷ்டிரனுக்கு மணம்புரிந்து வைத்தனர். பெரும் செல்வத்தை சீராகக் கொடுத்து அஸ்தினபுரிக்கு அனுப்பிவைத்தனர்

பின்னர் திருதராஷ்டிரர் மணிமுடி சூடும் வேளை வந்தது. விழியிழந்தவர்களின் ஊழ்வினையை சரிவர கணிக்க முடியாதென்றனர் நிமித்திகர். எனவே காந்தாரிக்கு பேரரசியாகும் ஊழ்நெறி உண்டா என்று பீஷ்மர் நிமித்திகர்களிடம் கேட்டார். அவர்கள் நோக்கியபின் “அரசி காந்தாரியின் முதல்கணவர் மறைந்துவிட்டார். இரண்டாவது கணவனாக அவள் திருதராஷ்டிரரை மணந்திருக்கிறாள். விதவை மறுமணம் செய்தால் பட்டத்தரசியாக அமரமுடியாது . இதுவே குலநெறியாகும்” என்றனர்

பீஷ்மர் சினம் கொண்டு வாளை உருவி நிமித்திகரை வெட்டப்பாய்ந்தார். “யாரைப்பற்றி பேசுகிறாய்? யாரடா விதவை ? “ என்று கூவினார். நிமித்திகர் தன் சொல்லில் ஊன்றி நின்று “என் சிரமறுந்து விழுந்தாலும் விழட்டும். நான் சொல்வது உண்மை. இவ்வரசியின் இரண்டாவது கணவர் இவர்” என்றார்.

சினம் தலைமீறிய பீஷ்மர் வாளால் நிமித்திகன் கழுத்தை வெட்டப்போனபோது அங்கே நின்றிருந்த இளைய அரசியான குந்தி “விரைவுகொள்ளவேண்டாம் பிதாமகரே. உண்மை என்னவென்று அறிந்த ஒருவர் இங்கிருக்கிறார், நம் மூத்த அரசி காந்தாரிதான் அவர். சுடர்கொண்டு வரச்சொல்லுங்கள். மூத்த அரசி அதைத்தொட்டு ஆணையிடட்டும், இந்நிமித்திகன் சொல் பொய் என்று. அவ்வண்ணம் ஆணையிட்டால் நாம் இந்நிமித்திகன் தலையை வெட்டுவோம்” என்றாள்

“ஆம் அதுவே வழி...கொண்டுவாருங்கள் சுடரை” என்றார் பீஷ்மர். சுடர் கொண்டு வைக்கப்பட்டது. “சுடரைத்தொட்டு ஆணையிடுங்கள் அரசி” என்றார் பீஷ்மர். “ஆம், ஆணையிடு” என்று திருதராஷ்டிரரும் சொன்னார். நிமித்திகர் “அரசி, தெய்வங்களுக்கு நிகராக அரசகுலத்தை நம்புபவர்கள் நாங்கள். எங்கள் வாழ்வும் இறப்பும் உங்கள் நெறிகளை நம்பியே” என்றார்.

காந்தாரி அழுதபடி நிமித்திகரை நோக்கியபின் “ஆணையிடவேண்டாம் பிதாமகரே, அவர் சொன்னதெல்லாம் உண்மையே” என்றார். பீஷ்மர் கையில் இருந்து வாள் ஒலியுடன் உதிர்ந்தது. “என்ன சொல்கிறாய்?” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார். நடந்ததை எல்லாம் காந்தாரி அழுதபடியே சொன்னாள். பீஷ்மர் “அப்படியென்றால் திருதராஷ்டிரர் மணிமுடி சூடவேண்டியதில்லை. பாண்டுவே அரசாளட்டும்” என்று ஆணையிட்டார். பாண்டு அரசராக குந்தி அரசியானாள்.

பீஷ்மர் அந்த வஞ்சத்தை மறக்கவில்லை. தன்னை சிறுமைசெய்துவிட்டார்கள் என்று அவர் நெஞ்சுலைந்துகொண்டிருந்தார். பாண்டுவின் முடிசூட்டுவிழா அறிவிப்புக்கு முன்னர் திருதராஷ்டிரருக்கு முடிசூட்டுவதாக பொய்யான செய்தியை அனுப்பி சுபலரையும் அவரது நூறு மைந்தர்களையும் அஸ்தினபுரிக்கு வரவழைத்தார். அவர்கள் ஆயிரம் அத்திரிகளில் சீர்வரிசைகளுடன் வந்தனர்

அவர்களைக் கொல்லத்தான் பீஷ்மர் எண்ணினார். ஆனால் உறவினர்களைக் கொல்வது மூதாதையர் பழியை கொண்டுவந்து சேர்க்கும் என்று நிமித்திகர் சொன்னார்கள். ஆகவே அவர்கள் நூற்றியொருவரையும் கொண்டுசென்று மண்ணுக்குள் ஆழமான குகை ஒன்றுக்குள் சிறையிட்டார் பீஷ்மர்.

அவர்களுக்கு ஒருவருக்கு மட்டுமே போதுமான அளவு உணவும் நீரும் அளிக்கலாம், பசி மீதூறும்போது உணவுக்காக அவர்கள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள். அவர்களைக் கொன்ற பாவம் பீஷ்மருக்கு எஞ்சாது, அவர்களுக்கே அப்பழியும் சேரும் என்று பலபத்ரர் என்ற அமைச்சர் பீஷ்மரிடம் சொன்னார்.அதை பீஷ்மர் ஏற்றார்

அதன்படி அவர்களுக்கு ஒவ்வொருநாளும் ஒருவருக்குரிய உணவு மட்டும் அளிக்கப்பட்டது. பீஷ்மரின் எண்ணத்தை காந்தார மன்னர் சுபலர் உணர்ந்தார். “மைந்தர்களே, இது அஸ்தினபுரியின் பிதாமகர் நம்மை நாமே கொன்றழிப்பதற்காகச் செய்யும் சதி.நாம் பசிதேவதை குடிகொள்ளும் பாலைநிலத்து ஓநாய்கள். நாம் அச்சதிக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. நம்மில் அறிவாற்றல் மிக்கவன் சகுனி. இளையவன். இவ்வுணவை அவன் மட்டும் உண்ணட்டும். நாமனைவரும் பட்டினி கிடந்து இறப்போம்” என்றார்

“ஆணை” என்று தொண்ணூற்றொன்பது மைந்தர்களும் தலைவணங்கினர். “சகுனி இங்கே வாழட்டும். ஒருநாள் அவன் வெளியே செல்லும் தருணம் வாய்க்கும். அப்போது அவன் பீஷ்மரிடம் தன் வஞ்சத்தைத் தீர்க்கவேண்டும். இது என் ஆணை.” என்றார் சுபலர் “ஆணை” என்றனர் நூற்றுவர்

“சகுனி, என் மகனே இதைக்கேள்” என்றார் சுபலர் “நாம் ஒருவரை ஒருவர் கிழித்துக்கொண்டு குருதிசிந்திச் சாவோம் என்று பீஷ்மர் நினைக்கிறார். அவர் நினைத்த அதே செயலை அவரது குலம் செய்யவேண்டும். அவரது கண்முன் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து அழியவேண்டும். அதைக்கண்டு அவரது நெஞ்சு உருகி விழிநீர் வழியும்போது காற்றுவெளியில் நின்றபடி நானும் உன் உடன்பிறந்தாரும் சிரித்துக்களிப்போம். இந்த வஞ்சம் அப்போதுதான் தீரும்”

“ஆணை தந்தையே. நான் அதைச்செய்கிறேன்” என்றான் இளமைந்தனாகிய சகுனி. “மைந்தா, பீஷர் பெருவீரர். அவரது குலத்தில் மாவீரர்கள் தோன்றுவர். அவர்களை நீ களத்தில் வெல்லமுடியாது. ஆகவே சூதில் வெல்” என்றார் சுபலர் “சூதின் அழகிய வடிவம் பகடையே. விதியை எவ்வகையிலேனும் உணர்ந்த ஒருவனால் பகடையின் ஈர்ப்பை புறந்தள்ள முடியாது. அவனை உனக்கு அடிமையாக்கு. அவனை வெல். அவன் வழியாக உன் குறிக்கோளை அடை”

முற்றிலும் எதிர்பாராத கணத்தில் சுபலர் சீறியபடி வாய்திறந்து பாய்ந்து சகுனியின் வலது குதிகாலைக் கடித்து தசையைப் பிய்த்து எடுத்துவிட்டார். சகுனி அலறியபடி குருதி வழியும் காலைப்பிடித்துக்கொண்டான். நிணத்தசையை துப்பியபின் “உன் கால் நரம்பை அறுத்துவிட்டேன். இனி உன்னால் இயல்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு முறை உன் வலக்காலை தூக்கி வைக்கும்போதும் கடும் வலியை உணர்வாய். அந்த வலி என்னையும் இந்த வஞ்சத்தையும் உனக்கு நினைவூட்டியபடியே இருக்கும்

தன் இரு கைகளை விரித்துக்காட்டி சுபலர் சொன்னார். மைந்தா இந்த பத்துவிரல்களையும் பார். விரைவில் நான் செத்து இக்குகைக்குள் மட்கி எலும்புக்கூடாக ஆவேன். அப்போது இந்த பத்து எலும்புகளையும் எடுத்து வைத்துக்கொள். அவற்றை அழகிய பகடைக்காய்களாகச் செதுக்கிக்கொள். எப்போதும் உன் இடையில் அவற்றை வைத்துக்கொள். நீ பகடையாடும்போது அக்காய்களில் பேய்வடிவமான நான் வந்து அமைவேன். அனைத்து ஆட்டங்களையும் நீயே வெல்லச்செய்வேன்

சகுனி அக்குகைக்குள் நான்கு வருடங்கள் கிடந்தான். வனுடைய தந்தையும் தொண்ணூற்றொன்பது உடன்பிறந்தவர்களும் குகைக்குள் மௌனமாக பசித்துக்கிடந்து உயிர்துறந்தனர். அவர்களின் உடல்கள் மட்கி வெள்ளெலும்புக்குவையாக ஆயின. அவனைச்சுற்றி அவர்களின் மண்டையோடுகளின் துயரம் மிக்க புன்னகையே நிறைந்திருந்தது

சகுனி அவன் அந்த உணவை துளித்துளியாக சுவைத்து உண்டு உடலை வலுவாக்கிக் கொண்டான். அந்த எலும்புகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி உடைத்துக் கூராக்கி குகையின் பாறைகளின் இடுக்குகளில் அறைந்து இறக்கினான். அவற்றை மிதித்து மேலேறிச்சென்று தப்பினான். தன்னந்தனியனாக நடந்து காந்தார நாட்டை அடைந்து உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக்கொண்டபின் மீண்டும் அஸ்தினபுரிக்குச் சென்றான். அவனை பீஷ்மருக்கோ திருதராஷ்டிரருக்கோ அடையாளாம் தெரியவில்லை. நூற்றுவருடன் இருந்த மெலிந்த வெளுத்த சிறுவனை அவர்கள் சரியாகப் பார்த்திருக்கவில்லை

“சகுனி காத்திருக்கிறார்” என்றார் ஊஷரர் “பசிகொண்ட ஓநாய் காத்திருப்பதைப்போல...இதுதான் இச்சுவடியில் உள்ள கதை” கிருதர் சிலகணங்கள் கழித்து பெருமூச்சுவிட்டு “வியப்புக்குரிய கதை. இதற்கும் உண்மைக்கும் தொடர்பே இல்லை. இளவரசர் சகுனித்தேவரின் தந்தை சுபலர் காந்தாரத்தை இன்றும் ஆள்கிறார். இரு உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள்” என்றார்

“கிருதரே உண்மை என்றால் என்ன? இந்தத் தகவல்கள் மட்டும் தானா?” என்றார் ஊஷரர் “ஒருவேளை எங்கள் மூதாதையர் வேறேதும் உண்மையைச் சொல்கிறார்களோ என்னவோ” கிருதர் “ஆம், நாம் ஏதறிவோம்” என்றார். படுத்திருந்த சகுனி மெல்ல முனகி “உணவு” என்றார். “ஜடரை எழுந்துவிட்டாள்...இன்னும் சில நாட்களில் இளவரசர் எழுந்துவிடுவார். நீங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றார் கிருதர்.

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 4

சிந்துநிலத்தில் இருந்த மூலஸ்தானநகரிக்கு சகுனியும் அவரது படைகளும் ஒன்பதுமாதம் கழித்துத்தான் வந்துசேர்ந்தார்கள். மருத்துவர் ஊஷரர் சொன்னதுபோல ஒருவாரத்தில் சகுனியின் உடல்நிலை மேம்படவில்லை. அறுவைமருத்துவம் முடிந்தபின் ஒருமாதத்துக்கும் மேல் அவர் தன்னினைவில்லாமலேயே கிடந்தார். அஞ்சிப் பதுங்கியிருக்கும் மிருகம் போல உடம்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது முனகியபடி ஏதோ சொன்னார். அவை சொற்களாக உருப்பெறவில்லை. அவரது உடலில் இருந்து எழுந்த வெம்மையை அருகே நிற்கையிலேயே உணரமுடிந்தது.

“புண்மேல் நான் தூவியது பாலைவனத்தின் விஷமணல். ஓநாயின் கடிவிஷத்துடன் அந்த ரசவிஷம் மோதுகிறது. இந்த உடல் இன்று ஒரு சமர்க்களம்” என்றார் ஊஷரர். கிருதரின் எண்ணத்தை அறிந்தவர்போல “எதுவெல்லும் என எண்ணுகிறீர்கள்... அந்த ஐயம் எனக்கும் உள்ளது. ஆனால் உடலே வெல்லும் என்பதற்கான சான்று இதுவே” என்றபின் குடுவையில் அக்கார நீரை அள்ளி சகுனியின் வாயருகே கொண்டுசென்றார். அன்றுபிறந்த ஓநாய்க்குட்டி அன்னைமுலைக்குத் தாவுவதுபோல உதடுகளைக் குவித்து சகுனியின் தலை மேலெழுந்தது. சிதைந்த குரலில். “நீர்! அன்னம்!” என்றார். “பார்த்தீர்களா? ஜடரை இவ்வுடலில் வாழ விரும்புகிறாள்” என்றார் ஊஷரர்.

சிலநாட்களுக்குள் சகுனியின் வெண்ணிறமான உடல் சிவந்து பருத்தது. அவரது கைவிரல்கள் வெண்பசுவின் காம்புகள் போல சிவந்து உருண்டன. புறங்கை நீரில் ஊறிய நெற்றுபோல உப்பியது. தோள் எலும்புகள் மறைந்து கழுத்தில் மடிப்புகள் விழுந்து மார்புகள் திரண்டு அவரது உடல் வீங்கிக்கொண்டே சென்றது. கன்னங்கள் பருத்து கண்கள் இடுங்கி உள்ளே சென்றன. மூக்கின் நீளம் கூட மறைந்தது. கண்ணெதிரே சகுனியின் உடல் மறைந்து அங்கே அறியாத பீதன் ஒருவனின் உடல் கிடப்பதுபோல கிருதருக்குத் தோன்றியது.

“அதெப்படி ஓர் உடல் இன்னொன்றாக ஆகமுடியும்?” என்றார் கிருதர் சகுனியை நோக்கியபடி. “துளியாக இருக்கும் நீர் வழியும்போது வேறொரு வடிவம் கொள்கிறதல்லவா? நீரில் வடிவங்களை உருவாக்குவது அதனுள் வாழும் நீர்மை. மானுட உடலை உள்ளே வாழும் ஆத்மன் உருவாக்கிக் காட்டுகிறான்” என்றார் ஊஷரர்.

“இருந்தாலும்...” என்று தத்தளித்த கிருதரை நோக்கி புன்னகைத்து “மனிதன் கொள்ளும் மாயைகளில் முதன்மையானது இதுவே. உடல் என்பது மனிதனல்ல. நம்முடன் பழகுபவன் உடலுக்கு உள்ளிருக்கும் ஆத்மன். நாமோ அவன் அவ்வுடலே என்று நம்புகிறோம். மீண்டும் மீண்டும் உள்ளிருப்பவன் அந்நம்பிக்கையை தோற்கடித்தபின்னரும் அதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் உள்ளிருப்பவன் மாறிக்கொண்டே இருக்கிறான் என நாமறிவோம். கணம் தோறும், தருணத்துக்கு ஏற்ப அவன் உருப்பெறுகிறான். ஆகவே கண்முன் மாறாது தெரியும் பருப்பொருளாகிய உடலை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.”

“ஆனால் உடலும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது” என்றார் ஊஷரர். “அந்த மாற்றம் மெல்ல நிகழ்வதனால் நாம் அதை மறக்க முடிகிறது. கிருதரே, ஒரு மனிதன் என்பவன் யார்? அந்த இருப்புதான் உண்மையில் என்ன? நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் உடலின் மாற்றங்களை நம் கற்பனைமூலம் தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஒரு பொதுவான புறவடிவமே அவனுடைய தோற்றம். அந்தப்புறவடிவத்தின் ஒன்றோடொன்று தொடர்பற்ற பல்லாயிரம் செயல்களை நம் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டு நாம் அடையும் ஓர் அகவடிவமே அவனுடைய ஆளுமை. இவ்விரண்டுக்கும் நடுவே நாம் உருவாக்கிக்கொள்ளும் சமநிலையே அவன் என்னும் அறிதல். அவ்வளவுதான். நாம் மானுடரை அறிவதே இல்லை. நாமறிவது மானுடரில் நாம் உருவாக்கி எடுக்கும் சித்திரங்களை மட்டுமே.”

தனியே வாழ்பவராதலால் ஊஷரர் அவருக்குள்ளே பேசிக்கொள்வதுபோல நிறுத்தாமல் பேசிச்செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். “சகுனி என இங்கே கிடப்பது ஓர் உடல். இது இளமையில் இருந்த சகுனி அல்ல. இங்கே வரும்போதிருந்த சகுனியும் அல்ல. உள்ளே வாழ்வது ஒரு ஆத்மன். அவன் நீர்ப்பெருக்கு போல உருமாறுவதன் வழியாகவே முன்னேறிச்செல்பவன், உருமாறாதபோது தேங்கி அழிபவன்.”

பேசிப்பேசி அந்த வரியை கண்டடைந்ததும் ஊஷரரின் குரல் எழுந்தது “நீரோடைதான் மானுட அகம். ஒவ்வொரு தடையையும் ஒவ்வொரு தடத்தையும் அது தன்னை மாற்றிக்கொள்வதன் வழியாகவே எதிர்கொண்டு கடந்து செல்கிறது. பாறைகளில் துள்ளுகிறது. பள்ளங்களில் பொழிகிறது. சமவெளிகளில் நடக்கிறது. சரிவுகளில் விரைகிறது. நாம் நமது மாயையால் அதை நதி என்கிறோம். ஓடை என்கிறோம். கங்கை என்கிறோம். யமுனை என்கிறோம். கிருதரே, அது ஒவ்வொரு கணமும் ஒன்று என  நாம் அறிவதே இல்லை.”

“எத்தனையோ ஞானிகள் இதை சொல்லிவிட்டார்கள். நாம் இதை அறிவோம், ஆனால் உணர்வதில்லை. ஏனென்றால் உணரும்போது நாமறியும் வாழ்க்கையின் அனைத்து உறுதிப்பாடுகளும் இல்லாமலாகின்றன. நம்மைச்சுற்றியிருக்கும் இயற்கை நீர்ப்பாவை போல நெளியத்தொடங்குகிறது. நாம் வாழும் நகரங்கள் மேகங்கள் போல கரைந்து உருமாறத்தொடங்குகின்றன. மானுடரெல்லாம் ஆடிப்பாவைகளாக மாறிவிடுகின்றன. சொற்கள் அத்தருணத்துக்கு அப்பால் பொருளற்றவையாகின்றன. மானுட ஞானம் என்பதே இல்லாமலாகிறது. ஏனென்றால் ஞானம் என்பது உறுதிப்பாடுக்காக மானுடன் உருவாக்கிக்கொண்டது.”

திடீரென்று அவர் திரும்பி கிருதரை நோக்கி நகைத்தார். “என்னை உளம் பிறழ்ந்தவன் என நினைக்கிறீர்கள். நினையுங்கள். அது உண்மைதான். என்னால் வெயில் பொழியும் வெளியுலகை நோக்கவே முடிவதில்லை. அது என் கட்டுப்பாட்டில் இல்லை. அதன் பெருவிரிவை நான் எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் அதற்குரிய முழுமைஞானம் என்னிடம் இல்லை. ஆகவே இரவில் மட்டும் வாழத்தொடங்கினேன். பகலில் துயில்வேன், இரவில் விழித்தெழுந்து வாழ்வேன்.”

ஊஷரர் பித்தனைப்போன்ற கண்களுடன் உரக்க நகைத்து “இரவில் என் கைவிளக்கின் ஒளியில் தெரியும் உலகை மட்டும் நான் எதிர்கொண்டால் போதும். கருணையற்றது சூரியன். அதன் விரிந்த ஒளிவெள்ளம் கட்டற்றது. என் கைவிளக்கோ சிறியது, எளியது, என்னை அறிந்தது. நான் விரும்பாததை அது எனக்குக் காட்டாது. நான் அறியாததை அதுவும் அறியாது. நான் காணவிரும்புவதை என் கண்ணுக்கேற்ப சிறிது சிறிதாக நறுக்கிக் கொடுக்கும்... எனக்குப் பிடித்தமான என் கைவிளக்கே என் தெய்வம்...”

ஊஷரர் திரும்பி சகுனியை நோக்கி “இவர் முழுமையாக மாறிவிட்டார். உடலுக்குள் வாழும் ஆத்மன் வேறு உடலை நாடுகிறான். ஆகவே இதை உருக்கி இன்னொன்றை கட்டிக்கொண்டிருக்கிறான். பாம்புபோல சட்டை உரித்துவிட்டு கடந்துசெல்லக் கற்றவன்தான் மானுடனும்...” என்றார். கிருதர் படுக்கையில் கிடந்த சகுனியை திரும்பி நோக்கவே அஞ்சினார். அந்தக் கூட்டின் உள்ளே அவர் அறியாத ஒன்று வாழ்கிறது. அவர் அறிந்த உடல் இதோ மட்கி மறைகிறது. அவர் பெருமூச்சுவிட்டார்.

சகுனி இரண்டுமாதம் வாய்மட்டும் உயிருட எஞ்சிய சடலமாகக் கிடந்தார். பின்னர் மெல்ல கருமைகொள்ளத் தொடங்கினார். தீப்பற்றி அணைந்த மரம்போல அவரது தோல் மாறியது. சுருங்கி வெடித்து மரப்பட்டைச்செதில்கள் போல உரிந்து எழுந்தது. உதடு கருமையான வடுவாக மாறி பின்னர் சிறிய புழுபோல தோலுரிந்து செந்நிறம் கொண்டது. தலைமுடி கொத்துக்கொத்தாக உதிர்ந்தது. இமைமுடிகளும் உதிர்ந்தன. சகுனியை சேவகர் பிடித்துத் தூக்கி அமரச்செய்து உடைமாற்றும்போது அவர்களின் கைகளில் அவரது தோலும் முடியும் கழன்று வந்து ஒட்டியிருந்தது. கைகால்களின் நகங்கள் உதிர்ந்தன. தசை முழுமையாகவே வற்றி உலர்ந்து எலும்புகள் புடைத்துக் கிடந்த அவரைப்பார்க்கையில் புதைக்கப்பட்டு மண்ணில் மட்கிய உடலொன்றை பாதியில் அகழ்ந்தெடுத்தது போலிருந்தது.

அதுவரையிலும் சகுனி அக்காரநீரையே குடித்துக்கொண்டிருந்தார். குடித்ததை உடனே சிறுநீர் கழித்து மீண்டும் வாய் திறந்து நா துழாவி விக்கல் ஓசை எழுப்பினார். உடனே சேவகர்கள் குடுவையிலிருந்த அக்கார நீரை அவருக்கு அளித்தனர். மென்மணலை குவித்துப்பரப்பி அதன் மேல் ஈச்சமரத்தின் ஓலை முடைந்து செய்த பாய் விரித்து அதில் அவரை படுக்கச்செய்திருந்தனர். சிறுநீர் மணலில் ஊறி வற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் மணலை உப்புடன் சேர்த்து அள்ளி அகற்றி புதுமணல் பரப்பினர். அவரது உடலில் புல்தைலத்தை மெல்லிய இறகால் தொட்டு பூசினார் ஊஷரர். “உயிரற்ற தோல் சிற்றுயிர்களுக்கு உணவு. புல்தைல வாசனை இல்லையேல் அவரை அவை உண்டுவிடும்” என்றார்.

சகுனி முனகிக்கொண்டே இருந்தார். முதலில் அச்சொற்கள் ஏதும் கிருதருக்கு விளங்கவில்லை. ஒவ்வொருநாளும் கேட்டுக்கேட்டு அவரால் பின்னர் அதை உள்வாங்க முடிந்தது. “இருட்டு... இங்கே இருட்டு” என்றார் சகுனி. பின்னர் “பசி...” என்றார். பசி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். “பசிக்கும். ஆனால் குடல் இப்போது உணவைத் தாளாது” என்றார் கிருதர். “வெள்ளெலும்புகள்” என்று ஒருமுறை சகுனி சொன்னார். “எல்லாம் வெள்ளெலும்புகள்.”

இரண்டுமாதம் கழித்து அவர் கண்களைத் திறந்து நோக்கியபோது கிருதர் அருகே இருந்தார். “அரசே” என்று குனிந்தபோது சகுனி அவரை அடையாளம் காணாமல் “யார்?” என்றார். “அரசே, நான் தங்கள் அணுக்கச்சேவகன், கிருதன்” என்றார் கிருதர். “யார்?” என்று சகுனி மீண்டும் கேட்டார். “என் தந்தையும் உடன்பிறந்தவர்களும் எங்கே?” என்றார். கிருதர். “அவர்கள் காந்தாரத்தில் உள்ளனர். தாங்கள் ஆணையிட்டால் நாம் திரும்பி காந்தாரத்துக்கே செல்லலாம்” என்றார் கிருதர். “இல்லை... அவர்கள் பசித்து இறந்தனர்... நூறுபேரும். பசித்து மெலிந்து...” கண்களை மூடியபடி “வெள்ளெலும்புகள்..” என்றார்.

கிருதருக்கு அவர் சொல்வது என்ன என்று புரிந்தது. அப்படியென்றால் போதமில்லாத நிலையில் கிடந்த சகுனி ஊஷரர் சொன்ன கதையை கேட்டிருக்கிறார். ஒருவேளை அவர்கள் அனைவரைவிடவும் துல்லியமாக. அவை அவரது உள்ளுக்குள் உண்மையெனவே நிகழ்ந்திருக்கும். சகுனி கண்விழித்து “உணவு கொண்டுவாருங்கள் கிருதரே” என்றார். கிருதர் “அரசே” என்று தத்தளித்துவிட்டு இருளில் வெளியே ஓடி பாலைமணலில் நின்றிருந்த ஊஷரரிடம் சொன்னார். “நினைவு வந்துவிட்டதென்றால் இனி உணவை அளிக்கலாம்... உடல் அதை உண்ணும்” என்றார் ஊஷரர்.

வெறிகொண்டவரைப்போல சகுனி உண்ணத்தொடங்கினார். நாழிகைக்கு ஒருமுறைவீதம் ஊனும் புல்லரிசியும் சேர்த்துச் சமைத்த சோறை கூழாக்கி அவருக்கு அளித்துக்கொண்டிருந்தனர் சேவகர். அவர் உண்ணும் விரைவைக் கண்டு கிருதர் விழிதிருப்பி ஊஷரரை நோக்கினார். “கூட்டுப்புழு” என்று சொல்லி ஊஷரர் புன்னகைத்தார். “இன்னும் சிலநாட்களில் சிறகு முளைத்துவிடும்.” குனிந்து சகுனியின் புண்ணைத் தொட்டு “உள்ளே நெருப்பு அணைந்துவருவதைக் காண்கிறேன்” என்றார்.

மேலும் ஒருமாதம் கழித்துத்தான் கட்டை அவிழ்த்தார் ஊஷரர். உள்ளே தசைகள் உருகி பொருந்தியிருந்தன. இறுகமூடப்பட்ட ஒரு வாய்போலிருந்தது புண். அதைச்சுற்றி தோல் வெண்ணிறமாக உரிந்து நின்றது. “இனி கட்டுப்போடவேண்டியதில்லை. வெளிக்காற்றை உண்டு தோல் வளரட்டும்” என்றார் ஊஷரர். “என்ன நிகழ்ந்தது?” என்று சகுனி கிருதரிடம் கேட்டார் “இந்தப் புண் ஏது?” கிருதர் ஓரக்கண்ணால் ஊஷரரை நோக்க “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார் ஊஷரர். “என்னால் தெளிவாக நினைவுகூர முடியவில்லை. ஒரு ஆழ்ந்த இருட்குகைக்குள் என் காலை என் தந்தை கடித்து தசையை அள்ளி எடுப்பதைக் கண்டேன்... அவரது வாயின் குருதி வாசனையைக்கூட உணர்ந்தேன்” என்றார் சகுனி. ஊஷரர் புன்னகையுடன் “அதுவும் உண்மையே” என்றார்.

புண் ஆறியபின்னர் கிளம்பலாம் என்று ஊஷரர் உறுதியாகச் சொன்னதனால் மேலும் தொடர்ந்து அங்கே தங்கவேண்டியிருந்தது. மூன்று மாதங்களில் சகுனி எழுந்து அமர்ந்தார். அவரது உடல் மீண்டும் வெண்ணிறமான தோலுடன் மீண்டு வந்தது. அதே முகம், அதே கண்கள், அதே உடல். ஆனால் அது முற்றிலும் இன்னொருவர் என கிருதர் உணர்ந்தார். புன்னகையோ சொற்களோ கூட மாறவில்லை. ஆனாலும் சகுனி அல்ல அது என்று அவர் உள்ளம் மறுத்துக்கொண்டே இருந்தது.

எழுந்து நடக்கத்தொடங்கியநாளில் வலி தாளாமல் முனகியபடி சகுனி அமர்ந்துவிட்டார். “நரம்பு ஒன்று அறுந்துவிட்டது இளவரசே. அது இனி எப்போதும் இப்படித்தான் இருக்கும். எந்த மருத்துவமுறையாலும் அதை பொருத்தமுடியாது. இந்தவலியை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க அறிந்தாகவேண்டும்” என்றார் ஊஷரர் “ஆம், நான் அதை அறிவேன்” என்றபின் கண்களை மூடி “என் தந்தையின் ஆணை அது” என்றார் சகுனி.. “நீங்கள் இந்த வலியுடன் நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டியதுதான். புரவியில் அமரவும் போரிடவும் பயிலவேண்டும்... வேறுவழியில்லை.”

மேலும் ஆறுமாதங்கள் அவர்கள் அந்த பாலைவனச் சிற்றூரில் தங்கியிருந்தனர். நூறு குடும்பங்களிலாக முந்நூறுபேர் மட்டுமே வாழும் ஊர் அது. பாலைவனத்தில் வேட்டையாடுவதும் வழிப்போக்கருக்கு உணவளிப்பதுமே அவர்களின் தொழிலாக இருந்தது. அந்தச் சிற்றூரைச்சூழ்ந்து நூறு காதம் தொலைவுக்கு வெறும்பாலை விரிந்துகிடந்தமையால் அவர்கள் எவரும் அங்கிருந்து வெளியே சென்றதில்லை. அவ்வழிச்செல்லும் வணிகர்கள் அன்றி எவரையும் அவர்கள் கண்டதில்லை.

“அரசு, அறம், விண்ணுலகம் எனும் மூன்று மாயைகளும் இல்லாத எளிய மக்கள். ஆகவே மகிழ்ச்சியானவர்கள்” என்றார் ஊஷரர். “நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கே வந்தேன். இம்மக்களை விரும்பினேன். மானுட உள்ளம் அறிந்துகொள்ள முடியாத எதைப்பற்றியும் அவர்களுக்கு ஆர்வமில்லை. அதைப்போல வரமுள்ள வாழ்க்கை வேறில்லை. அவர்களில் ஒருவனாக வேண்டும் என்று இங்கேயே தங்கிவிட்டேன்.”

கிருதர் புன்னகைத்து “ஊஷரரே, அப்படியென்றால் அந்த மூன்று மாயைகளையும் ஏன் மானுடன் உருவாக்கிக்கொண்டான்?” என்றார். “கிருதரே, ஒவ்வொன்றையும் சிடுக்காக ஆக்கிக்கொள்ளும் மனநிலை ஒன்று மானுடனில் வாழ்கிறது. அவனுடைய பண்பாடும் ஞானமும் எல்லாம் அதற்காகப் படைக்கப்பட்டவையே." கிருதர் “ஏன்?” என்று மீண்டும் கேட்டார். “சிக்கலான ஒன்றைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” கிருதர் “அது என்னைச் சீண்டும். அதை அவிழ்க்கவும் புரிந்துகொள்ளவும் முயல்வேன்” என்றார். “புரிந்துகொண்டபின் உங்கள் ஆணவம் நிறைவுறும். உங்கள் அகம் மகிழும்” என்ற ஊஷரர் சிரித்து “அதற்காகத்தான்” என்றார்.

சகுனி நடக்கத்தொடங்கியபோது அவரை முற்றிலும் இன்னொருவராக கண்களாலும் பார்க்க கிருதரால் முடிந்தது. அவரது நடை ஒருபக்கம் சாய்ந்ததாகவும், வலதுகாலை இரும்பாலானதுபோல முயன்று இழுத்துவைப்பதாகவும் இருந்தது. வலதுகாலில் உடலை சுமத்தலாகாது என்பதற்காக எப்போதும் இடப்பக்கமே சரிந்தமையால் இடப்பக்கம் மட்டுமே அவரது உடலாக ஆகியது. இடதுகையால் அனைத்தையும் செய்தார். இடது கையால் புரவியைப்பிடித்து இடது காலைத்தூக்கிவைத்து ஏறிக்கொண்டார். பேசும்போதுகூட வலதுகண் உயிரற்றிருப்பதாகவும் இடதுகண்ணே சொற்களை தொடுப்பதாகவும் தோன்றியது. குரல் கூட இடதுபக்கமாக எழுவதாகவும் ஒலிகளை இடதுகாதால் அவர் கேட்பதாகவும் கிருதர் எண்ணினார்.

நேருக்குநேர் அவரை பார்த்துக்கொண்டிருக்கையில் அவரது பழக்கமான உருவம் சற்றே மயங்கச்செய்யும். அவரது நிழல் தோற்றத்தில் முற்றிலும் இன்னொருவராகவே தெரிந்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் விழி தூக்கி சுவரின் நிழலை நோக்கினால் அவருடன் கன்னங்கரிய இன்னொருவர் இணையாக அமர்ந்திருப்பதாகத் தோன்றி அகம் துணுக்குற்றது. அதை அவர் மட்டுமல்ல அத்தனை வீரர்களும் உணர்ந்திருந்தனர். அவர்கள் அவரிடம் பேசும்போது அந்த அச்சத்தை கிருதர் கண்டார். அவரில் ஒரு பாலைவன தேவன் குடியேறியிருப்பதாக அவர்கள் நம்பினர். அந்தத் தேவன் ஓநாய் முகம் கொண்டவன் என்று ஒருவன் கதை சொன்னபோது மரத்துக்கு அப்பால் நின்று கிருதர் அதைக்கேட்டார்.

சகுனியை அவரது குதிரை முழுமையாகவே ஏற்க மறுத்துவிட்டது. அவர் அருகே வந்தபோதும் சேணத்தைப்பற்றியபோதும் அது தலையசைத்து, செருக்கடித்து வரவேற்றது. அவர் ஏறியமர்ந்ததுமே அஞ்சி கனைத்தபடி துள்ளி அவரை கீழே வீழ்த்த முயன்றது. வீரர்கள் அதைப்பிடித்து நிறுத்தி சகுனியை மீட்டனர். பலவகையில் முயன்றபின்னரும் அதை பழக்க முடியவில்லை. “உங்கள் உடல் மாறிவிட்டது இளவரசே, ஆகவே உங்களை அதனால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்றார் கிருதர். இன்னொரு புரவியிடம் முற்றிலும் புதியவராக பழகி அதில் பயிற்சிசெய்தார் சகுனி.

ஆறுமாதம் கழித்து அவர்கள் ஊஷரரிடமும் அந்த ஊராரிடமும் விடைபெற்று கிளம்பினர். வழியெங்கும் சகுனி விழிகளால் சுற்றும் நோக்கியபடி அமைதியாகவே வந்தார். “இளவரசே, தாங்கள் ஏதோ சிந்திக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்றார் கிருதர். “என் பார்வையும் முழுமையாக மாறிவிட்டது போலிருக்கிறது கிருதரே. இந்தக் காட்சிகளை எல்லாம் நான் முற்றிலும் புதியதாகவே காண்கிறேன்” என்றார் சகுனி. “உங்கள் இடப்பக்கம் வலுப்பெற்றுவிட்டது” என்றார் கிருதர். “நாம் பார்ப்பதுதான் உலகா?” என்று சகுனி தனக்குள் என சொல்லிக்கொண்டார்”

மூலஸ்தானநகரியின் மாபெரும் சூரியதேவர் ஆலயத்தைச் சுற்றியிருந்த கடைத்தெருவில் ஒரு சத்திரத்தில் அவர்கள் தங்கினர். கிருதர் சத்திரத்துக் காவலனிடம் அவர்கள் அஸ்தினபுரிக்குச் செல்லும் காந்தாரத்து ஷத்ரியர்கள் என்று மட்டும் சொன்னார். பாலைவனப் பயணிகள் அதிகம் இல்லாத பருவம் அது என்பதனால் சூரியர்கோயிலைக் காணவந்தவர்களே சத்திரத்தில் இருந்தனர். வீரர்கள் குதிரைகளை பின்கட்டுக்குக் கொண்டுசென்று அங்கிருந்த பெரிய கல்தொட்டியில் நீர் காட்டிவிட்டு கொட்டிலில் கட்டினர். அவர்கள் தங்க அங்கேயே இடம் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உடனே உடைகளைக் களைந்து அங்கே நிறைக்கப்பட்டிருந்த கல்தொட்டிகளின் நீரில் குளிக்கத் தொடங்கினர்.

கிருதர் சகுனி நீராடவும் உடைமாற்றவும் வேண்டியவற்றை செய்துவிட்டு விரைந்துசென்று நீராடி உடைமாற்றிவந்தார். சகுனிக்கான உணவை சத்திரச் சேவகன் கொண்டு செல்வதைக் கண்டு “இவ்வளவு உணவு அவருக்குப் போதாது” என்றார் கிருதர். “இதுவே இருவருக்கான உணவு” என்று சேவகன் தயங்க “அவர் இதற்கு இருமடங்கு உண்பார்” என்றார் கிருதர். அவன் தலைவணங்கி திரும்பிச்சென்றான். சத்திரத்துச் சமையற்காரன் உள்ளே “அவன் என்ன மனிதனா ஓநாயா?” என்று சொல்வதைக்கேட்டு கிருதர் புன்னகை செய்துகொண்டார்.

அந்தியில் இளங்காற்று கோதுமைவயல்களின் நீர்ப்பாசிமணத்துடன் வீசத்தொடங்கியது. அறைக்குள் படுக்க சகுனி விரும்பவில்லை. கிருதர் அவருக்கு புறத்திண்ணையிலேயே ஈச்சம்பாய் விரிக்கச் சொன்னார். அங்கே காற்று நான்குபக்கமிருந்தும் சுழன்று வீசியது. கல்பலகைகள் பதித்த திண்ணை குளுமையாக இருந்தது. முன்னரே அங்கே பலர் படுத்திருந்தனர். சற்று அப்பால் கிருதர் தனக்கான பாயை விரித்துக்கொண்டார். மரக்கட்டைத் தலையணையைப்போட்டுக்கொண்டு சகுனி மெல்ல அமர்ந்து இரு கைகளையும் ஊன்றி வலியுடன் முனகியபடி பின்னால் சரிந்து படுத்தபின் மேலும் வலியுடன் வலதுகாலை நீட்டிக்கொண்டார்.

“வலி ஒரு நல்ல துணைவன்” என்றார் அப்பால் படுத்திருந்த ஒருவர். திண்ணையின் பிறையில் எரிந்த சிற்றகலின் ஒளி அவர்மேல் விழவில்லை. வெறும் குரலாகவே அவர் ஒலித்தமையால் அந்தப் பேச்சு கூரியதாக இருந்தது. “நாம் கெஞ்சினாலும் மிரட்டினாலும் விலகிச்செல்லாதது. வாழ்நாள் முழுக்க நீடிக்கும் பெரும்வலி கொண்டவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை. அவர்களின் வெற்றிடங்களை எல்லாம் அதுவே நிறைத்துவிடும்.”

சகுனி “உமது வலி என்ன?” என்றார். “பிறவியிலேயே என் முதுகில் சில எலும்புகள் இல்லை. என் உடலின் எடையை முதுகெலும்பால் தாங்கமுடியாது. ஆகவே எழுந்து நிற்பதே பெரும் வதை எனக்கு.” என்றார் அவர். “ஆனால் நான் எப்போதும் எழுந்து நிற்பேன். முடிந்தால் தூங்கும்போதுகூட நிற்கவே விரும்புவேன்...” சகுனி சிரித்து “வலியை நீர் என்னவாக உருவகித்திருக்கிறீர்?” என்றார். “யானையாக. என்னுடன் மிகப்பெரிய நிழலாக அந்தயானை வந்துகொண்டிருக்கிறது. அதன் எடைமிக்க துதிக்கையை என் தோள்மேல் போட்டிருக்கிறது. சிலசமயம் மத்தகத்தையே என் மேல் வைத்துக்கொள்கிறது” என்றபின் “நீங்கள்?” என்றார். “ஓநாயாக.... ஓசையற்ற காலடிகளுடன் எப்போதும் கூடவே வருகிறது” என்றார் சகுனி.

“காந்தார இளவரசே, என் பெயர் கணிகன். சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்த வைதிகன். மூன்றுவேதங்களையும் அவற்றின் வேதாங்கங்களுடன் கற்றேன். உபவேதங்களையும் வேதாந்தத்தையும் கற்றுத்தேர்ந்தபின் அதர்வவேதம் கற்பதற்காக கூர்ஜரத்துக்கு வந்தேன். கற்றுமுடித்தபின் திரும்புகிறேன்” என்றார் கணிகர். “நான் காந்தார இளவரசர் என எப்படித் தெரியும்?” என்று சகுனி கேட்டார். “தங்கள் வீரர்கள் பேசிக்கொள்ளமாட்டார்களா என்ன?” என்று கணிகர் சிரித்தார். கிருதர் “அவர்களிடம் சொல்லக்கூடாதென்று விலக்கினேனே” என்றார்.

கணிகர் சிரித்து “கிருதரே, பெரியவர்கள் தங்களை எளிமையாக ஆக்கி மறைத்துக்கொள்ளமுடியும். ஏனென்றால் அவர்கள் பெரியவர்கள் என்று அவர்களுக்குத்தெரியும். சிறியவர்கள் அப்படி செய்யமுடியாது. அவர்கள் வாழ்வதே பெரியவர்களின் அடையாளங்களுடன் ஒட்டிக்கொண்டுதான். படைவீரர்கள் தாங்கள் எந்த அரசரின் வீரர்கள் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்...அவர்களை எவராலும் தடுக்கமுடியாது...” என்றார்.

சகுனி சிலகணங்கள் கழித்து “நீர் எங்கு செல்கிறீர்?” என்றார். ”நான் இங்கே சிந்துநதிக்கரையில் உள்ள தொன்மையான சாம்பவ குருகுலத்தில் அதர்வம் கற்றேன். என்னுடன் அதர்வம் கற்ற யாஜர், உபயாஜர் என்னும் இரு வைதிகரும் அங்கநாட்டில் கல்மாஷபுரி என்ற ஊரில் பெரும்சிறப்புடன் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்களுடன் இருந்து நானும் செல்வமும் புகழும் பெறலாமென்று எண்ணி அவர்களை தேடிச்சென்றேன் அவர்கள் அங்கிருந்து துருபத மன்னரின் அழைப்பை ஏற்று பாஞ்சாலநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். நானும் பாஞ்சாலநாட்டுக்குச் சென்றேன். அவர்கள் அங்கிருந்தும் சென்றுவிட்டார்கள். நான் மீண்டும் சாம்பவரின் குருகுலத்துக்கே செல்கிறேன்” என்றார் கணிகர்.

“பாஞ்சாலத்திற்கு அதர்வ வைதிகர் ஏன் சென்றனர்?” என்றார் சகுனி இயல்பாக. “துருபதர் ஸௌத்ராமணி என்னும் பூதயாகம் ஒன்றை செய்திருக்கிறார்” என்றார் கணிகர். “அது பகைமுடிக்கும் மைந்தரைப் பெறுவதற்கான யாகம்.” சகுனி வலிமுனகலுடன் புரண்டுபடுத்து “பகை முடிக்கவா? எவருடன்?” என்றார். “காந்தாரரே, தாங்கள் அறிந்திருப்பீர்கள். துரோணர் தன் வஞ்சத்தைத் தீர்க்க தன் மாணவனாகிய அர்ஜுனனை அனுப்பி துருபதனை வென்றார். அவரை அர்ஜுனன் தேர்க்காலில் கட்டி இழுத்துச்சென்று துரோணரின் காலடியில் வீழ்த்தினான். அவர் தன் காலால் துருபதனின் தலையை எட்டி உதைத்து அவமதித்தார். பாஞ்சாலநாட்டின் பாதியை பறித்து தன் மைந்தன் அஸ்வத்தாமனுக்கு அளித்தார்.”

“ஆம்” என்றார் சகுனி. கணிகர் “அவமதிக்கப்பட்ட துருபதன் அமைதிகொள்வதற்காக கங்கைக்கரையோரமாகச் சென்று தேவப்பிரயாகையில் நீராடினார். அங்கே ஒரு கங்கையன்னை தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்.. பகைமுடிக்க வரம்வேண்டும், அகம் அடங்க அருளவேண்டும் என்று பாஞ்சாலர் கோரினார். கங்கை தானே மகளாக வந்து அவனுக்குப்பிறப்பதாகவும் அதற்காக ஸௌத்ராமணி என்னும் வேள்வியைச் செய்யும்படியும் சொன்னாள். அதைச்செய்யும் தகுதிபடைத்தவர்களைத் தேடிச்சென்று யாஜரையும் உபயாஜரையும் கண்டுபிடித்து அழைத்துச்சென்றிருக்கிறார். இதெல்லாம் பாஞ்சாலத்தின் கடைத்தெருவில் பேசப்படும் கதைகள்” என்றார்.

“வேள்வி நிறைவுற்றதா?” என்றார் சகுனி. கணிகர் “ஆம், அதை புத்ரகாமேஷ்டியாகம் என்றுதான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சில வைதிகர்களுக்கே அது என்ன என்று தெரியும்” என்றார். “வேள்வி முழுமையடைந்தபோது நெருப்பில் முதலில் இரு விழிகள் திறந்தன என்று சொல்கிறார்கள். பின்னர் கரிய நிறம் கொண்ட ஒரு பெண்முகம் தெரிந்து மறைந்தது. கங்கையே நெருப்பில் வந்து தோன்றியிருக்கிறாள் என்று யாஜர் சொன்னார்.”

“அவள் சத்வகுணம் கொண்ட கன்னியாக இருப்பாள் என்றும் அவளது சத்வகுணமே பாண்டவர்களின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்றும் யாஜர் சொன்னதும் துருபதன் ரஜோ குணம் கொண்ட ஒரு மைந்தன் தனக்கு வேண்டும் அவன் தன் கையால் துரோணரின் தலையை வெட்டி தன் காலடியில்போடவேண்டும் என்று கூவினார். அவ்வண்னமே ஆகுக என்று யாஜர் சொன்னார். நெருப்பில் மேலும் இரண்டு விழிகள் திறந்தன. பொன்னிறமான கவசகுண்டலங்கள் கொண்ட ஒரு முகம் தெரிந்தது” என்றார் கணிகர்.

“ஆனால் துருபதனின் சினம் அடங்கவில்லை. பீஷ்மரைக் கொன்று அஸ்தினபுரியின் அழிவை நிகழ்த்தும் தமோகுணம் கொண்ட ஒரு மைந்தன் தனக்கு வேண்டும் என்று மீண்டும் கேட்டார். துருபதனே, முன்னரே உன் தந்தை தமோகுணம் திரண்ட மாவீரன் ஒருவனை மைந்தனாக ஏற்றிருக்கிறான். அவன் பீஷ்மரைக் கொல்வான். அவனை நீயும் உன் மைந்தனாக இந்நெருப்பை ஆணையாக்கி ஏற்றுக்கொள்ளலாம். அப்போது முக்குணங்களும் கொண்ட மைந்தர் உன்னிடம் இருப்பார்கள்” என்றார் உபயாஜர். "அவ்வண்ணமே ஆகட்டும்" என்றார் துருபதன். நெருப்பைத் தொட்டு சிகண்டியையும் தன் மைந்தனாக ஏற்றுக்கொண்டார்” கணிகர் சொன்னார்.

சகுனி நெடுநேரம் இருட்டை நோக்கிக்கொண்டு கிடந்தார். கணிகர் சொன்னார் “சென்ற மாதம் பிருஷதரின் மகளும் துருபதனின் இளைய அரசியுமான கௌஸவி இரட்டைக்குழந்தைகளை பெற்றிருக்கிறாள். பெண்குழந்தை கரிய நிறத்தவள் என்பதனால் கிருஷ்ணை என்று பெயரிடப்பட்டாள். அவளை திரௌபதி என்றும் பாஞ்சாலி என்றும் அழைக்கிறார்கள்..ஆண்குழந்தைக்கு வெல்லமுடியாத கவசங்கள் கொண்டவன் என்ற பொருளில் திருஷடத்யும்னன் என்று பெயரிட்டார்கள்.” பின்னர் “அஸ்தினபுரியின் பாண்டவர்களின் அழிவு அங்கே இரு மகவுகளாக பிறந்துவிட்டிருக்கிறது இளவரசே” என்றார்.

சகுனி அதன்பின் ஒன்றும் பேசவில்லை. கிருதர் தன் நெஞ்சு அடித்துக்கொள்ளும் ஒலியை இருட்டுக்குள் கேட்டார். கணிகர் “காந்தார இளவரசரின் விருப்பத்தை விதியும் கொண்டிருக்கிறது” என்றார். சகுனி சினத்துடன் திரும்பி “என்ன விருப்பம்?” என்றார். “உங்கள் உடலே அந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறதே” என்று கணிகர் நகைத்தார். “வலியாக உடலை அறிந்துகொண்டே இருப்பவன் நான். ஆகவே என்னால் பிற உடல்களை அறியமுடியும். உடல் என்னும் தழல் உள்ளமெனும் நெய்யே. நானறியாத உள்ளம் என ஏதுமில்லை.”

“என்னால் பிறர் எண்ணங்களை வழிநடத்த முடியும்” என்றார் கணிகர். “எண்ணங்கள் ஆட்டுமந்தைபோல. அதில் முதன்மையான ஆடு எது என்று அறியவேண்டும்.. அந்த எண்ணத்தை நம் வசப்படுத்தி மெல்ல இட்டுச்செல்லவேண்டும். அனைத்து எண்ணங்களும் அதைத் தொடர்ந்து வரும்.” சகுனி மெல்ல நகைத்தார். வேண்டுமென்றே அந்த ஏளன ஒலியை அவர் எழுப்புகிறார் என்று கிருதர் அறிந்தார். “அதற்கு இப்போது நான் பாஞ்சாலம் பற்றி பேசியதே சான்று” என்றர் கணிகர். சகுனி ஆர்வம் தெரியாத குரலில் “எப்படி?” என்றார்.

கணிகர் “நான் யாஜரையும் உபயாஜரையும் அறியமாட்டேன். அவர்கள் என் குருகுலத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. நான் பாஞ்சாலத்துக்குச் செல்லவுமில்லை. நான் அதர்வவேதம் பற்றிச் சொன்னதுமே நீங்கள் யாஜரைப்பற்றி எண்ணினீர்கள். அவர்களை துருபதன் தேடிச்சென்ற செய்திதான் நீங்கள் இறுதியாக அறிந்தது. அந்த எண்ணத்தை நான் தொட்டேன். அதை என் கையில் எடுத்துக்கொண்டேன். நான் கேள்விப்பட்ட கதையைச் சொன்னேன்” என்றார். “இப்போது நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்து எண்ணங்களும் என்னால் உருவாக்கப்பட்டவை.”

சகுனி சிலகணங்கள் கழித்து “நாளை நீர் என்னுடன் வாரும்” என்றார். “என்னுடன் இரும். உமது பணி எனக்குத்தேவை” கணிகர் சிட்டுக்குருவி ஒலி போல மெல்ல நகைத்து “நான் விழைந்ததும் அதுவே” என்றார்.

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 1

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள்.

துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது. அரசாட்சியை துருபதனின் இளையவர் சத்யஜித்தும் மைந்தர் சித்ரகேதுவும் இணைந்து நடத்திவந்தனர். ஆனால் “அரசரிடமும் ஒருவார்த்தை சொல்லிவிடுங்கள்” என்று சத்யஜித் ஒவ்வொருமுறையும் சொல்வார். “அவர் கேட்பதே இல்லை அரசே” என்று அமைச்சர் கருணர் சொன்னபோது “ஆம், அதை நானும் அறிவேன். மூத்தவரின் உள்ளம் இப்போது பாஞ்சாலத்திலேயே இல்லை. ஆனாலும் அவரே அரசர். அவருடையது மணிமுடியும் செங்கோலும். அவர் வாயால் ஆம் என்று ஒரு சொல் சொல்லப்படாத எதுவும் இங்கே சட்டமாக ஆக முடியாது” என்று சத்யஜித் சொன்னார்.

அறைக்கதவு திறந்து துருபதன் வெளியே வந்ததுமே கருணர் சொல்லத்தொடங்கினார். “பாஞ்சாலபதியை வணங்குகிறேன். இன்று சில முதன்மைச்செய்திகளை தங்கள் செவிகளுக்கு கொண்டுவந்திருக்கிறேன்.” துருபதன் நடந்தபடியே “உம்” என்றார். குளித்து சரியாக தலைதுவட்டாததனால் அவரது கூந்தலிழைகளில் இருந்து நீர் சொட்டி மேலாடை நனைந்துகொண்டிருந்தது. நரையோடிய தாடியிலிருந்தும் நீர் சொட்டியது. “வணிகர்களை காம்பில்யத்துக்கு கவர்ந்திழுக்கும்படி சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறிய படகுகளின் சுங்கத்தை பாதியாகக் குறைத்திருக்கிறோம். கப்பல்காரர்களின் கிடங்குகளுக்கு குடிப்பணம் தேவையில்லை என்றும் அறிவித்திருக்கிறோம்.”

துருபதன் விழிகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் கண்டு கருணர் குரலை மாற்றி “முன்பு படகோட்டிகள் தனியாகக் கொண்டுவந்து விற்கும் பொருட்களுக்கும் சிறு சுங்கம் வாங்கிவந்தோம். படகுகளில் இருந்து அவர்கள் திருடி விற்பதை தடுப்பதற்காக. அதையும் தேவையில்லை என்று இளையவர் சொல்லிவிட்டார்” என்றார். மேலும் குரலைத் தாழ்த்தி “சற்று திருட அவர்களை விட்டுவிட்டால் வணிகர்களிடமும் வேளாளர்களிடமும் வேடர்களிடமும் பேசி படகுகளை இங்கேயே கொண்டுவந்துவிடுவார்கள். சத்ராவதியுடன் போட்டியிட்டு வெல்ல வேறு வழியே இல்லை அரசே” என்றார்.

அதற்கும் துருபதன் முகத்தில் எந்த அசைவும் இல்லையெனக்கண்டு “உத்தரபாஞ்சாலத்தில் அஸ்வத்தாமனின் அரசு இன்று நம்மால் அணுகக்கூட முடியாத இடத்தை அடைந்துவிட்டது அரசே. அவர்களின் சுங்கப்பணம் நாம் அடைவதைவிட பன்னிருமடங்கு அதிகம் என்கின்றனர் ஒற்றர்கள்” என்றார். துருபதன் அதற்கு தலையைக்கூட அசைக்கவில்லை. கருணர் “படைபலம் நம்மை விட இருமடங்கு” என்றார். துருபதன் அதைக்கேட்டதாகத் தெரியவில்லை. கருணர் சோர்வுடன் தலையசைத்துக்கொண்டு எஞ்சிய அரசமுடிவுகளை ஓரிருவரிகளில் சொல்லிக்கொண்டே சென்றார். துருபதன் தலையசைத்துக்கொண்டு நடந்தார்.

ஒற்றர்தலைவர் சிம்மர் வணங்கி நிற்க கருணர் அவரிடம் கண்காட்டினார். “அரசே உளவுச்செய்திகள் வந்துள்ளன. மையமானவற்றை மட்டும் சொல்கிறேன். மகத மன்னர் ஜராசந்தர் ஒரு பெரும் சபையொன்றை கூட்டவிருக்கிறார். ஆசுரநாட்டின் நூற்றெட்டு பழங்குடிகளும் அவருக்கு பின்துணை அளிக்கிறார்கள் எனறு சொல்லப்படுகிறது. அந்த சபைக்குப்பின் மகதத்தின் ஆதிக்கம் ஆசுரம் முழுக்க பரவிவிடும். தெற்கே விந்தியமலைவரை மகதக்கொடி பறக்கும்” என்றார் சிம்மர்.

துருபதன் ஒன்றும் சொல்லாமல் நடக்க கருணரின் கண்களை ஒருகணம் சந்தித்துவிட்டு “அந்தச்சபை கூட்டப்பட்டபின்னர் மேலும் ஆறுமாதம் கழித்து மகதத்தின் சிற்றரசுகளும் சமந்தமன்னர்களும் இணையும் ஒரு சபைகூட்டப்படுகிறது. அதற்கு எப்பக்கமும் சேராமல் தனித்து நிற்கும் பல சிற்றரசுகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமாம். அவர்கள் அந்த அழைப்பை மறுக்கமுடியாது. ஆசுரநாட்டு குடிகளின் பின்துணை இருக்கையில் ஜராசந்தர் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய படையை வைத்திருப்பார்” என்றார்.

துருபதனை நோக்கிவிட்டு “அதன்பின்னர் அவரிடம் ஒவ்வொரு சிறுநாடாக சென்று சேர்ந்துகொண்டிருக்கும். கலிங்கத்தையும் வங்கத்தையும் வெல்வதே அவரது உடனடி எண்ணமாக இருக்கும். ஏனென்றால் மகதம் இன்று நாடுவது துறைமுகங்களையே. அவர்களின் வணிகம் பெரிதாக வளர்ந்துள்ளது. அவர்களின் செல்வத்தில் பெரும்பகுதி தாம்ரலிப்திவரை செல்வதற்குள் சுங்கமாகவே பிறரிடம் சென்றுவிடுகிறது. தாம்ரலிப்தியை கைபற்றிக்கொண்டால் மகதம் ஓரிருவருடங்களில் பெரும் வல்லமையாக வளர்ந்துவிடும். அதன்பின்னரே அது அஸ்தினபுரியை எதிர்க்கமுடியும்...”

துருபதன் நின்று திரும்பி நோக்கி “அஸ்தினபுரியின் இப்போதைய படைத்தலைவர் யார்?” என்றார். கருணர் ஊக்கம் கொண்டு முன்னகர்ந்து “அரசே, இப்போதும் முறைமைகளின்படி நான்குவகைப் படைகளும் பீஷ்மரின் தலைமையில்தான் உள்ளன. ஆனால் அவர் இப்போது அஸ்தினபுரியில் இல்லை. வழக்கம்போல காடேகிவிட்டார். மாளவத்தில் இருந்து வேசரநாட்டுக்கு அவர் சென்றதை ஒற்றர்கள் சொன்னார்கள். வேசரத்திலோ தெற்கிலோ அவர் இருக்கக்கூடும். தண்டகாரண்யக் காட்டில் அவர் தவ வாழ்க்கை வாழ்வதாக எண்ணுகிறோம்” என்றார்.

துருபதன் கூரிய நோக்குடன் தலையை அசைத்தார். அவர் உள்ளம் முழுக்க கண்களில் குவிந்து நின்றது. “அஸ்தினபுரி முள்ளம்பன்றி பாறையாகத் தெரிவதுபோல மாயம் காட்டுகிறது. அங்கே ஒன்றுமே நிகழவில்லை. காந்தாரத்துக்குச் செல்வதாக கிளம்பிச்சென்ற இளவரசர் சகுனி ஒன்றரை வருடங்கள் கழித்து திரும்பி வந்து வழக்கம்போல தன் அரண்மனையில் பகடை ஆடிக்கொண்டிருக்கிறார். விதுரர் திருதராஷ்டிரரின் பெயரால் நாடாள்கிறார்” என்றார் கருணர்.

துருபதனுக்கு செய்திகள் நினைவிருக்கிறதா என்ற ஐயம் எழவே “துரியோதனன் சூரசேன நாட்டில் மதுவனத்தில் பலராமரிடம் கதாயுதப்பயிற்சி எடுக்கிறார். அங்கே இடையர்களுடன் கன்றுமேய்த்து குருவுக்கு பாதப்பணி செய்து வாழ்கிறார் என்று சொன்னார்கள். கர்ணன் பரசுராமரைத் தேடி வேசரநாட்டுக்கோ தெற்கேயோ சென்றிருப்பதாக செய்தி" என்று தொடர்ந்து சொன்னார்.

“ஆம் அச்செய்திகளை நான் அறிவேன்” என்றார் துருபதன். “பாண்டவர்கள் ஐவகை நிலங்களைக் காண அனுப்பப்பட்டனரே, அவர்கள் மீண்டு வந்துவிட்டார்களா?” என்றார். “ஆம், அரசே ஏழுவருட கானேகல் அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் சென்ற வாரம்ம் மீண்டும் அஸ்தினபுரிக்கே வந்துவிட்டிருக்கிறார்கள்.” அந்த இடத்தை பற்றிக்கொண்டு சிம்மர் உள்ளே நுழைந்தார். “மகதம் சில சிறிய படையெடுப்புகளை செய்யலாமென்று சொல்லப்படுகிறது. மச்சநாடும் மாளவமும் இப்போது அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைத் தாக்கி கப்பம் கொள்ள ஜராசந்தர் முயலலாம். அங்கநாட்டின் மீதுகூட படைகொண்டு செல்லலாம். அவரது நோக்கம் சிறிய அரசர்களை அச்சுறுத்துவதே.”

“ஆம், அணிதிரட்ட அச்சமே மிகச்சிறந்த வழி” என்றார் துருபதன். “அதைத் தடுக்க பாண்டவர்களை விதுரர் அனுப்பிவைப்பார் என்று அஸ்தினபுரியில் பேச்சிருக்கிறது. இளையபாண்டவன் வில்வித்தையில் முழுமை அடைந்துவிட்டான் என்று சொல்கிறார்கள். இதுவரை ஒரு பெரிய படையெடுப்பைச் செய்து அஸ்தினபுரிக்கு அவன் புகழ்சேர்க்கவில்லை. மச்சர்களையோ மாளவத்தையோ வென்று அவன் பெரும் செல்வத்துடன் அஸ்தினபுரிக்கு வந்தான் என்றால் அவர்கள் மேல் இன்றிருக்கும் குலக்குறை இல்லாமலாகும் என்று விதுரர் எண்ணுகிறார்” என்றார் சிம்மர்.

“குலக்குறை வெற்றிகளால் அகலாது சிம்மரே” என்றார் துருபதன். “குலக்குறையை நீக்கவேண்டியவர்கள் முதுவைதிகர் குலங்கள். அவர்கள் இதில் கூரிய கணக்குகள் கொண்டவர்கள். ராஜசூயமோ அதற்கிணையான ஒரு பெருவேள்வியோ செய்து அத்தனை வைதிக குருகுலங்களுக்கும் அரசுக்கருவூலத்தை திறந்துவிட்டாலொழிய அவர்கள் கனிய மாட்டார்கள். அஸ்தினபுரியின் கருவூலத்தில் இன்று நிறைந்திருப்பது காந்தாரத்தின் செல்வம். அதை எடுத்து ராஜசூயம் செய்ய முடியாது. ஆகவே பாண்டவர்கள் அவர்களே படைகொண்டுசென்று நிதிகொண்டு வந்தாகவேண்டும்.”

கருணர் “நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன் அரசே” என்று உள்ளே புகுந்தார். “இன்று பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் நடுவே பாண்டவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் மனக்குறைகள் தூதர்கள் வழியாக அஸ்தினபுரிக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மாளவன் மகதத்துக்கு கப்பம் கட்டியதுகூட அந்த மனக்கசப்பால்தான் என்கிறார்கள். ஆகவே பாண்டவர்கள் மாளவத்தை தாக்கக்கூடும். வரும் மாதங்களில் ஒரு பெரிய படையெடுப்பு நிகழலாம்.”

துருபதன் “அப்படி எளிமையாக நாம் உய்த்துணரும்படியா விதுரரின் எண்ணங்கள் ஓடும்?” என்றார். “இல்லை. மாளவன் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தியதுமே காத்திருக்கத் தொடங்கியிருப்பான். அவன் கோட்டைகளும் காவல்சாவடிகளும் படைக்கலங்கள் ஏந்தி நின்றிருக்கும் இந்நேரம்” என்றார். சிம்மர் “ஆம் அரசே,தண்டகாரண்யத்தின் மலைப்பழங்குடிகளைக்கூட மாளவம் படையில் சேர்த்துக்கொள்கிறது” என்றார். “அதோடு தனக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்ட ஒரு அரசை பாண்டவர்கள் தாக்கும்போது மகதம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு கப்பம் கட்டும் பிற சிற்றரசர்கள் அஞ்சுவார்கள். மகதம் களத்தில் இறங்கினால் அது நேரடியான பெரும்போராக ஆகும். அதை இன்றைய நிலையில் அஸ்தினபுரி விரும்பாது.”

“அப்படியென்றால்...” என்று கருணர் பேசத்தொடங்க “பாண்டவர்கள் சௌவீரநாட்டை தாக்குவார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் துருபதன். “அது அனைத்துவகையிலும் நல்லது. சௌவீரன் தனியரசன். நிதிநிறைந்த கருவூலமும் கொண்டவன். அவன் கருவூலம் பாண்டவர்களுக்குத் தேவை. அத்துடன் நடுநிலையில் தயங்கிக்கொண்டிருக்கும் பிற சிற்றரசர்களுக்கும் அது பெரிய எச்சரிக்கையாக அமையும்.” கருணர் பெருமூச்சு விட்டு “ஆம் அவ்வாறு நடக்கலாம்” என்றார். “நடக்கட்டும், பார்ப்போம்” என்றார் துருபதன்.

“சகுனி என்னசெய்கிறார் அஸ்தினபுரியில்? பாண்டவர்களின் இந்த வளர்ச்சியை அவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்?” என்று கருணர் சிம்மரிடம் கேட்டார். “அவர் ஒன்றுமே செய்யவில்லை அரசே. கணிகர் என்ற புதிய அமைச்சர் ஒருவரை காந்தாரத்துக்குச் சென்றபோது கூட்டிவந்திருக்கிறார். இடை ஒடிந்து ஒசிந்து நடக்கும் குறையுடல் கொண்ட மனிதர். தீமையே இயல்பாகக் கொண்டவர் என்கிறார்கள் அவரைப்பற்றி. அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பகடை ஆடுகிறார். பிற எவரும் அவரை அணுகுவதேயில்லை” என்றார் சிம்மர்.

“அதுதான் விளங்கவில்லை. ஏழாண்டுகால கானேகலே பாண்டவர்களை ஆரியவர்த்தம் முழுக்க மக்கள் பேசிக்கொள்ளும் கதைமாந்தராக ஆக்கிவிட்டிருக்கிறது. இந்தப் படையெடுப்புக்கும் அதன்பின்னான பெருங்கொடைக்கும்பின் பாண்டவர்கள் மெல்ல அரசகுலத்து ஒப்புதலையும் பெறத்தொடங்குவார்கள். அதன் பின் தருமன் முடிசூட்டிக்கொள்ளமுடியும்” என்றார் கருணர். “சகுனி சோர்ந்துவிட்டாரா? அப்படியென்றால் ஏன் அஸ்தினபுரியில் இருக்கிறார்?”

துருபதன் புன்னகையுடன் “சகுனி காத்திருக்கிறார்” என்றார். “அது ஓநாயின் இயல்பு. இரை பாலைவனத்தில் அதுவே சோர்ந்து விழும்வரை ஓநாய் காத்திருக்கும். ஏழாண்டுகாலம் என்பது மிக நீண்டது. பாண்டவர்கள் என்னதான் வீரச்செயல்கள் செய்தாலும், அறவோர்பணி செய்தாலும் பிழைகளும் செய்யக்கூடும். இந்தப்படையெடுப்பில் அல்லது அதற்குப்பிறகான கொடையாடலில் அல்லது அரசுசூழ்தலில் ஒரு பெரும்பிழை நிகழ்ந்தே திரும். அந்தப் பிழைக்காக சகுனி காத்திருக்கிறார்.”

“அக்காரணத்தால்தான் அவர் துரியோதனனை மறையவும் செய்திருக்கிறார். அவன் செய்யும் பிழைகள் எவரும் அறியாமல் போகும். பாண்டவர்கள் பாரதவர்ஷமே நோக்கும் மேடைமேல் நின்றிருக்கிறார்கள். களத்தில் யானைமேல் அமர்ந்திருப்பவனைப்போன்றவர்கள் புகழ்மிக்கவர்கள். அவர்கள் வீழ்வது மிக எளிது. அவர்களை அந்தக் களத்தின் அத்தனை படைக்கலங்களும் குறிவைக்கின்றன” என்றார் துருபதன். “சகுனி காத்திருப்பது திருதராஷ்டிரர் அவர்கள் மேல் சினம் கொள்ளும் ஒரு தருணத்துக்காக. ஆம் நான் அதை நான் உறுதியாக அறிவேன். அவரை என்னால் மிகமிக அருகே காணமுடிகிறது. இந்த பாரதவர்ஷத்தில் எனக்கு மிக அருகே இருக்கும் மனிதர் அவரே.”

துருபதன் அவர்கள் செல்லலாம் என்று தலையசைத்தபின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். தலைவணங்கியபின்னர் கருணரும் சிம்மரும் மெல்லியகுரலில் பேசியபடி திரும்பிச்சென்றனர். துருபதனுக்காக அந்தப்புரவாயிலில் காத்திருந்த சேடிப்பெண் தலைவணங்கி உள்ளே அழைத்துச்சென்றாள் . துருபதன் அந்தப்புரத்தின் முகப்புக்கூடத்தில் பீடத்தில் அமர்ந்துகொண்டு முகமலர்ச்சியுடன் உள்வாயிலை நோக்கிக்கொண்டிருந்தார்.

உள்ளே குரல்கள் கேட்டன. திருஷ்டத்யும்னன் திரைச்சீலையை விலக்கி அவரை நோக்கி ஓடிவந்தான். அவன் மேலாடை கீழே விழுந்தது. அதை திரும்பி நோக்கிவிட்டு வேண்டாம் என்று அவனே தலையசைத்துவிட்டு ஓடிவந்து அவர் முன் நின்று மூச்சிரைத்து “தந்தையே, நான் வாளேந்தத் தொடங்கிவிட்டேன். உண்மையான வாள். மூங்கில்வாள் அல்ல” என்றான். துருபதன் “ஆம், உன் ஆசிரியர் சொன்னார்” என்றார். ஆனால் அவரது செவிகள் உள்ளே ஒலிக்கும் மெல்லிய சிலம்பொலியையே செவிகூர்ந்தன.

மிகமெல்லிய ஒலி. நெஞ்சுக்குள் ஒலிக்கும் மந்திரம் போன்றது. இத்தனை மென்மையாக காலடிவைக்கும் ஒரு பெண்ணை அவர் அறிந்ததில்லை. ஒவ்வொரு காலடியையும் மண்மகள் மெல்ல கைதூக்கி ஏந்திக்கொள்கிறாள் என்பதுபோல. இடையணியும் கைவளையும் சேர்ந்து ஒலித்தன. இசையை வெல்லும் ஓசை. திரையை இடக்கையால் விலக்கி திரௌபதி வெளியே வந்து அவரை நோக்கி விரிந்த பெரியவிழிகளும் வெண்பற்களும் மின்ன புன்னகைத்தாள். அவர் கைகளை விரித்து “வருக என் தேவி!” என்றார்.

திரௌபதியின் உடலின் கருமைநிறத்தை அவள் பிறந்த அன்று கைகளில் ஏந்தி முகத்தருகே தூக்கி நோக்கிய கணம் முதல் ஒவ்வொரு முறை நோக்கும்போதும் அவர் வியந்தார். முதல் எண்ணமே “என்ன ஒரு கருமை!” என்பதுதான். மண்ணிலுள்ள எதனுடனும் ஒப்பிடமுடியாத நிறம். கருமுத்து என்றார் அவைக்கவிஞர் சித்ரகர். ஆனால் முத்தில் இந்த உயிரின் மென்மை திகழ்வதில்லை. மென்மை என்பதே கருமையானது போல. ஒளியென்பதே இருளென்றானதுபோல. அவள் நுழையும் அறையின் அனைத்து ஒளியும் அவளை நோக்கி தாவிச்சென்று சேர்ந்துகொள்கிறது என்று தோன்றும்.

ஒருபோதும் அவள் ஓடுவதை அவர் பார்த்ததில்லை. அவளுடைய ஓங்கிய குரலை கேட்டதில்லை. கைக்குழந்தையாக இருக்கையில்கூட அவள் வீரிட்டு அழுததில்லை. பசிக்கையிலோ ஈரமாகும்போதோ இருமுறை மெல்லச் சிணுங்குவாள். அது ஓர் ஆணை. அக்கணமே அது நிறைவேற்றப்பட்டாகவேண்டும். இல்லையேல் சினம் கொண்டு கரியில் கனல் ஏறுவதுபோல சிவந்து கைகளை ஆட்டி மேலும் அழுத்தமாக குரலெழுப்புவாள். “சக்கரவர்த்தினியாக ஆனவர்கள் உண்டு. சக்கரவர்த்தினியாகவே பிறந்தவள் இவள்” என்றார் நிமித்திகரான சோணர்.

கைக்குழந்தையின் நோக்கில் கூர்மை குடிகொள்ளமுடியும் என்பதை அவர் அவளிடம்தான் கண்டார். அவரை அறிந்தபின்னர் காலடியோசை கேட்டு தொட்டிலில் திரும்பி அவரை நோக்கி ஒருமுறை கைகால்களை அசைப்பாள். இதழ்கள் விரிந்து கன்னத்தில் ஒரு மென்மடிப்பு விழும். கண்களில் ஒளி மின்னும், அவ்வளவுதான். துள்ளுவதில்லை. கைநீட்டி எம்புவதில்லை. அவர் அவளை அள்ளி எடுத்து முகத்தோடு சேர்த்து முத்தாடுகையில் தலைமேல் வைத்து நடமிடும்போது கைகளை விரித்து மெல்ல அசைவாள். சிறிய சிரிப்பொலி எழுப்புவாள். எந்நிலையிலும் அவள் தன்னை மறந்து கூவி விடுவதில்லை. அவளிடமிருந்து எதுவுமே நழுவுவதும் சிந்துவதும் தெறிப்பதும் இல்லை.

திடமாகக் கையெடுத்துவைத்து கவிழ்ந்தாள். உறுதியான கால்களுடன் எழுந்து நடந்தாள். அமர்ந்த அக்கணமே கையில் மரப்பாவையை ஏந்தி அன்னையென அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ட கருணையைக் கண்டு துருபதன் “அன்னையே!” என்று கைப்பினார். “புடவியைப்புரக்கும் பேரருள் தன்னை அன்னையென்று காட்டி நம்மை வாழ்த்துகிறது அரசே” என்றார் சித்ரகர். அவள் இரண்டு வயதுக்குப்பின்னரே பேசத்தொடங்கினாள். அதுவரை ஒவ்வொரு சொல்லாக கற்றுக்கொண்டிருந்தாள் என்று பேசியபோது தெரிந்தது. குரலில் மழலை இருந்தாலும் ஒருமுறைகூட சொற்கள் பொருள்பிறழவில்லை. “எண்ணிக்கோர்த்த மணிகளால் ஆன நகை அவள் பேச்சு” என்றார் சித்ரகர். “யானை எடுத்துவைக்கும் அடி. மீன்கொத்தியின் குறி.”

அவள் ஓடிவிளையாடவில்லை. சிறுமியருடன் நகையாடிக் களிக்கவில்லை. பிள்ளைச்சிறுவிளையாட்டுகள் எதிலும் ஈடுபடவில்லை. “நீராடல், அம்மானை, ஊசல் என்று பெண்மகவுக்கான பருவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவே?” என்று துருபதர் சித்ரகரிடம் கேட்டார். “அரசே, அவையெல்லாம் பெரியவர்களின் வாழ்வை நடிக்கும் சிறுகுழந்தைகளுக்குரியவை. அரசி பெரியவளாகவே பிறந்தவள்” என்றார் சித்ரகர். பார்த்திருக்கையில் சிலபோது அவளுக்கு முலைகளும் விரிந்தகைகளும் இருப்பதாக அவர் எண்ணிக்கொள்வதுண்டு

“அன்னை என்ன செய்கிறாள்?” என்று துருபதன் கேட்டார். “அவர்களைக் காண கதைசொல்லும் சூதர்கள் வந்திருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் திரௌபதி. மெல்ல நடந்து வந்து பட்டுப்பாவாடையை இடக்கையால் பற்றி ஒதுக்கி வலக்கையால் நீண்ட கூந்தலை எடுத்து முன்னால் கொண்டுவந்து தொடைமேல் போட்டுக்கொண்டு பீடத்தில் அமர்ந்தாள். இளமையிலேயே அவளுடைய கூந்தல் கன்னங்கரிய நீரோடை போல ஒளியுடன் பெருகி தொடைகளை எட்டியிருந்தது. கூடவே வாழும் கருநாகத்தை கொஞ்சுவதுபோல அவள் அதைத் தொட்டு வருடிக்கொண்டிருப்பாள்.

“இது சூதர்கள் வரும் பருவம் அல்ல அல்லவா? அவர்கள் சித்திரையில்தானே திருவிழாக்களுக்கு வருவார்கள்?” என்றார் துருபதன். எப்போதுமே அவர் அவளிடம் எளிய அன்றாடப்பேச்சுக்களைத்தான் பேசுவார். அவள் அதை அறிந்தும் அதற்கு பதில் சொல்வாள். அவளுடன் பேசும்போது பக்கவாட்டில் விழிதிருப்பி வேறெதையாவது பார்ப்பது அவரது வழக்கம். “இவர்கள் வேறு சூதர்கள். வைதிகச்சூதர்கள் என்கிறார்கள். வேதங்களில் சிலபகுதிகளை பாடமாக்கியவர்கள். வேள்விகளின் கதைகளையே பெரும்பாலும் பாடுகிறர்கள்” என்றாள் திரௌபதி.

அவர் அவள் விழிகளை நோக்கிப் பேசுவது சிலவருடங்களுக்கு முன்னரே நின்றுவிட்டது. நான்கு வயதிலேயே அவள் விழிகள் விரிந்து கன்னியின் விழிகளாக ஆகிவிட்டிருந்தன. உள்ளங்களுக்குள் எளிதில் நுழையக்கூடியவை. அனைத்தையும் அறிந்தபின் கடந்து கனிந்தவை. அவள் நோக்காதபோது அவளை நோக்கி அவளுடைய நீலமலர் போன்ற கன்னங்களை கழுத்துச்சரிவின் நீர்வளைவு போன்ற ஒளியை , இளமூங்கில் போன்ற தோள்களை நோக்கி மனம் படபடக்க விழிவிலக்கிக் கொள்வார். அவர் நோக்குவதற்கென்றே அவள் தன் விழிகளை வேறுபக்கம் திருப்பிக்கொள்வாள்.

“நிறைய கதைகள் வைத்திருக்கிறார்கள் தந்தையே” என்றான் திருஷ்டத்யும்னன். ஒருசமயம் ஒரே வயிற்றில் கருக்கொண்டவர்கள். ஆனால் அவன் முற்றிலும் வேறுவகையில் இருந்தான். வெண்ணிறத் தோல். நீலவிழிகள். செந்நிறம் கலந்த தலைமயிர். சற்றே மலர்ந்த செவ்வுதடுகள். எப்போதும் பொங்கித் ததும்பிக்கொண்டே இருப்பான். அவனுடைய குரலை எங்கும் கேட்கமுடியும் என்று துருபதன் நினைப்பார். “அவர் மரங்கொத்தியைப்போல. அதன் ஒலியில்லாமல் காடு இல்லை” என்றார் சித்ரகர். “அவரது கொத்துகளுக்கு காடு நன்றாகவே பழகிவிட்டது.”

“தந்தையே” என்று திருஷ்டத்யும்னன் அவரைத் தொட்டுத்தொட்டு அழைத்தான். மரம்கொத்தி என்று துருபதன் புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். “தந்தையே, அவர்கள் வாள்வீரர்களின் கதைகளைச் சொன்னார்கள். நானும் இன்னும் சிலநாட்களில் வாளேந்தி போரிடுவேன். உடனே படைகளைக் கொண்டு காசிநாட்டுக்குச் சென்று அங்கே...” அவன் திகைத்து ஓரக்கண்ணால் தமக்கையை நோக்கியபின் “...இளவரசிகளை ஒன்றுமே செய்யமாட்டேன். அரண்மனையை மட்டும் பிடிப்பேன்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள். ”தந்தையே இவள் என்னை கேலி செய்கிறாள்” என்றான் திருஷ்டத்யும்னன். திரௌபதியின் விழிகளைச் சந்தித்து விலகிய துருபதன் “அதிலென்ன பிழை? உனக்கு இளவரசியர் தேவைதானே?” என்றான்.

“இளையவனே, நீ சென்று வெளியே ரதங்களைப்பார்” என்று திரௌபதி மெல்லிய உறுதியான குரலில் சொன்னாள். அக்குரலை அறிந்த திருஷ்டத்யும்னன் வணங்கிவிட்டு வெளியே சென்றதும் அவள் இயல்பான குரலில் “மூத்த அன்னை தங்களை சந்திக்கவேண்டுமென்று சொன்னார்கள்” என்று சொன்னாள். துருபதன் அவளை விழிதூக்கி நோக்கியபின் “ஏன்?” என்றார். “மூத்தவரின் பட்டம்சூட்டலைப்பற்றி தங்களிடம் அவர் பேசவிழைகிறார் என்று எண்ணுகிறேன்” என்றாள் திரௌபதி. “நான் அவளை சந்திக்கிறேன்....” என்ற துருபதன் மெல்ல “நாளை... முடிந்தால்... இல்லையேல் நாளைமறுநாள்” என்றார். “இப்போதே சந்திக்கலாமே. நான் அவர்களை இங்கேயே வரச்சொல்லியிருக்கிறேன்” என்றாள் திரௌபதி.

“இப்போதா?” என துருபதன் எழுந்துவிட்டார். “ஏன்? இது அவர்களின் அரண்மனை அல்லவா? மேலும் பேசும்போது என் அன்னையும் இருப்பது நல்லது” என்று திரௌபதி சொன்னாள். அவள் விழிகளை நோக்கியபின் துருபதன் தவிப்புடன் மீண்டும் அமர்ந்துகொண்டார். “தந்தையே, நீங்கள் இதற்கு உடனே முடிவெடுத்தாகவேண்டும். இத்தகைய இக்கட்டுகள் ஒத்திப்போடும்போது மேலும் வளரக்கூடியவை” என்றாள் திரௌபதி.

“ஒத்திப்போடுவது பல இக்கட்டுகளை இல்லாமலாக்கும்” என்றார் துருபதன். “தந்தையே. சினத்தாலோ பிழைபுரிதல்களாலோ உருவாகும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் சிறியவையாக ஆக்கிவிடமுடியும். பொறாமையாலும் ஆசையாலும் விளைவும் இக்கட்டுகளை ஒத்திப்போட்டால் அவை பெருகும் என்று சுக்ரநீதி சொல்கிறது” திரௌபதி சொன்னாள். "நீ சுக்ரநீதியை எவரிடம் படித்தாய்?” என்று துருபதன் கேட்டார். “நானாகவேதான் வாசித்தேன். சித்ரகரிடம் எல்லா சுவடிகளும் உள்ளன” என்றாள் திரௌபதி.

சோமககுலத்தலைவர் புருஜனரின் மகள் அகல்யையை துருபதன் மணந்து பட்டத்தரசியாக ஆக்கி அவளில் நான்கு மைந்தர்களையும் பெற்றார். பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களையும் ஒன்றாக்கி பாஞ்சாலத்தை வலுப்படுத்தியபோது குலமூத்தார் ஆணைப்படி சத்ராவதியை ஆண்ட பிருஷதரின் மகள் பிருஷதி என்னும் கௌஸவியை மணந்தார். அவளுக்குப் பிள்ளைகள் இல்லாமலிருந்தபோதுதான் ஸௌத்ராமணி வேள்வி நிகழ்ந்தது. வேள்வியை நிகழ்த்திய வைதிகரான யாஜர் “வலுவான கருப்பை கொண்ட இளைய மனைவியிடம் இக்குழந்தைகள் விளையட்டும் அரசே” என்றார். ஆகவே வேள்வியில் அவருடைய இணையரசியாக பிருஷதியே அமர்ந்தாள். வேள்வியன்னத்தை அவளே உண்டாள்.

ஸௌத்ராமணி வேள்விக்குப்பின் மெல்ல பிருஷதியே பட்டத்தரசியாக கருதப்படலானாள். அரண்மனையின் அனைத்து அதிகாரங்களும் அவள் கைகளுக்கே சென்றன. திரௌபதி பிறந்தபின்னர் துருபதன் இரண்டாவது அந்தப்புரம் விட்டு வெளியே செல்வதே குறைந்தது. பகல் முழுக்க அவர் இருகுழந்தைகளுடன்தான் இருந்தார். அகல்யையைப் பார்த்தே நெடுநாள் ஆகின்றது என்று அவர் எண்ணிக்கொண்டார்.

அவளை எண்ணிய கணமே வடக்குநோக்கி முள் காந்தத்தைக் கண்டதுபோல உள்ளம் விலகிக்கொள்வதை எண்ணி வியந்தார். அது அவளிடமுள்ள பிழையால் அல்ல. அவருள் இருக்கும் ஒன்றை, அவர் எதிர்கொள்ள விரும்பாத ஒன்றை அவள் நினைவூட்டுகிறாள் என்பதனால்தான். அந்த விலக்கத்தை வெறுப்பாக மெல்லமெல்ல வளர்த்துக்கொண்டால் இன்னும் எளிதாகக் கையாள முடியும் என்று அகம் அறிந்திருக்கிறது. ஆகவே வெறுப்புக்கான அனைத்துக் காரணங்களையும் கண்டுகொள்கிறது. அவளை அடிக்கடி சந்திக்காமலிருப்பதனால்தான் இன்னும் முழுமையாக வெறுக்காமலிருக்கிறோம் என்று அவர் எண்ணினார்.

“நாளை நாம் இந்தச் சந்திப்பை வைத்துக்கொள்ளலாமே” என்றார் துருபதன். திரௌபதி புன்னகையுடன் “மூத்த அன்னையை வரச்சொல்லி சற்றுமுன்னர்தான் சேடியை அனுப்பினேன்” என்றாள். “உன் அன்னையிடம் சொல்லிவிட்டாயா?” என்றார் துருபதன். “இல்லை. அவர் வந்ததும் சேடி சென்று சொல்வாள். அன்னையே வந்துவிடுவார்கள்.”

துருபதன் அவள் விழிகளை நோக்கியபின் சிலகணங்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் தலைதூக்கி “நான் உன்னைத்தவிர எவரையும் என்னைவிட முதிர்ந்தவராக எண்ணவில்லை அன்னையே. நான் என்ன செய்யவேண்டும்?” என்றார். “எது அறம் என்று நினைக்கிறீர்களோ அதை” என்றாள் திரௌபதி. “முறைப்படி அகல்யையின் மைந்தன் சித்ரகேதுதான் பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன். அவனுக்கு முடிசூட்டுவதே முறை. ஆனால் உன் அன்னை ஒரு தடை சொல்கிறாள். ஐந்து குலங்களையும் கூட்டி விவாதித்த பின்னர் பாஞ்சாலத்துக்கு பட்டத்து இளவரசரை அறிவிப்பதுதான் முறை என்கிறாள். அதற்குத்தான் தொல்மரபின் ஆணை உள்ளது.”

“தந்தையே, என் அன்னையின் எண்ணம் எளிமையானது. மூதன்னையின் சோமககுலம் தட்சிணபாஞ்சாலத்தில் தொன்மையான வல்லமைகொண்ட மக்கள். ஆனால் இப்போது சத்ராவதியில் வாழ்ந்த சிருஞ்சயர்களும் பிறரும் குடிபெயர்ந்து வந்து காம்பில்யத்தை நிறைத்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் சோமகர்களை விட கூடுதலாகிவிட்டிருக்கிறார்கள். சோமகர்களை அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தொல்குடிகளான சோமகர்கள் பிறரை அவமதிப்பதாகவும் செய்திகள் உள்ளன. இந்நிலையில் மணிமுடிசூடுவதை குலச்சபையில் விவாதமாக்கினால் பிற நான்கு குலங்களும் சோமககுலத்தைச்சேர்ந்த சித்ரகேதுவை எதிர்ப்பார்கள். இளவரசுப்பட்டம் சூட்ட முடியாது.”

“ஆம், அதை நானும் உய்த்துள்ளேன்” என்றார் துருபதன். “என் அன்னை சிருஞ்சய குலத்தவள். அவளை நான்கு குலங்களும் பின்துணைத்தால் அவள் மைந்தன் பின்னாளில் பட்டத்து இளவரசனாக ஆகமுடியும்... அன்னை கணக்கிடுவது அதையே” என்றாள் திரௌபதி. துருபதன் தலையசைத்தபின் “...அன்னையே, குலச்சபையால் பட்டம்கட்டப்படுவதுதானே நம் மரபு? முதல்மைந்தன் ஆதிதெய்வீகமாக முடிசூடுவது இங்கில்லையே” என்றார்.

“ஆதிதெய்வீகமாக முடிசூடுவது ஷத்ரியர்களின் வழக்கம். சந்திர, சூரிய, அக்னிகுல ஷத்ரியர்கள் அதை முறைமையாகக் கொண்டிருக்கிறார்கள். தொல்குலங்களில் அவ்வழக்கம் இல்லை. ஆதிதெய்வீக முடியுரிமை கொண்டவர்களையே முதன்மை ஷத்ரியர்களாக பாரதவர்ஷம் ஏற்கும்” என்றாள் திரௌபதி. அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதை துருபதன் நோக்கி இருந்தார். “ஏற்கனவே ஒரு பெருவேள்வியை செய்துவிட்டீர்கள் அரசே. மேலும் ஒரு வேள்வியைச்செய்து உங்களை சந்திரகுலத்தவராக அறிவியுங்கள்!”

“ஆம் அதைச்செய்யலாம். சந்திரகுலத்துக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் வரிசையும் உள்ளது” என்றார் துருபதன். “அதை சூதர்கள் பாடட்டும். பாரதவர்ஷம் அறியட்டும். அந்த வேள்வியிலேயே சித்ரகேதுவை உங்கள் பட்டத்து இளவரசராக ஆதிதெய்வீக முறைப்படி அறிவியுங்கள். நம் குலங்கள் அதை மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்கள் சந்திரகுலத்தவர் என்ற அடையாளத்தையும் மறுக்கவேண்டியிருக்கும். அதை குலத்தலைவர்கள் விரும்பமாட்டார்கள்.”

துருபதன் பெருமூச்சுடன் எளிதாகி கால்களை நீட்டிக்கொண்டு “ஆம், இதைவிடச் சிறந்த வழி என ஏதுமில்லை” என்றார். திரௌபதி “மேலும் ஒன்றுண்டு தந்தையே. தங்கள் இளையவர் சத்யஜித் இன்று நாடாள்கிறார். அவருக்கும் ஏழு மைந்தர்கள் உள்ளனர். குலமுறைப்படி அரசர்கள் முடிசூடப்படுவார்கள் என்றால் அவர்களும் அதை விரும்பலாமே?” என்றாள். “அவர்கள்...” என துருபதர் சொல்லத் தொடங்க “இன்று அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அரசியலில் நாளையைப்போல நிலையற்றது என ஏதுமில்லை” என்றாள்.

“ஆதிதெய்வீகமாக அரசுரிமையை அளிப்பது ஏன் என்று சுக்ரநீதி தெளிவாகவே விளக்குகிறது. அரசுரிமை ஒருபோதும் ஐயத்திற்குரியதாக, வாதிடுவதற்குரியதாக இருக்கலாகாது. அது மானுடரால் அளிக்கப்படுவதாக இருந்தால் மானுடரால் விலக்கவும் படலாம். அந்நிலையில் ஒவ்வொருவரும் மன்னரை விலக்க முயலமுடியும். ஒருபோதும் அரியணை நிலைத்திருக்காது. தெய்வங்களால் அளிக்கப்பட்ட மணிமுடியை மானுடர் விலக்கமுடியாதென்ற விதி இருக்கையிலேயே செங்கோல் அசைவற்றிருக்கிறது. பெரிய ஷத்ரிய நாடுகளின் வல்லமையே அவற்றின் உறுதியான மணிமுடியால் வருவதுதான்” திரௌபதி சொன்னாள்.

“ஆம், அதைச்செய்வோம். அது ஒன்றே வழி” என்றார் துருபதன். “இதைவிடச் சிறப்பாக எந்த அமைச்சரும் எனக்கு சொல்லளித்ததில்லை." திரௌபதி புன்னகையுடன் "நீங்கள் அறிந்த நீதிதான் இது. இதைச்செய்ய உங்களைத் தடுத்தது என் அன்னைமீதிருந்த விருப்பம். அவள் உங்களிடம் சொன்ன சொற்கள்..." என்றாள். "இல்லை" என்று துருபதன் சொல்லத் தொடங்கியதும் "ஆம், அதையும் நான் அறிவேன். என் அன்னை என்பதே அவளுடைய தகுதி. ஆகவேதான் நானே இதைச் சொன்னேன். இதுவே அறம். தந்தையே எந்தப் பேரன்பின்பொருட்டும் அரசன் அறம் மீறலாகாது."

"ஆம், ஆனால் உன்பொருட்டு எந்தப் பேரறத்தையும் நான் மீறுவேன்..." என்றார் துருபதன். திரௌபதி புன்னகைத்து "இப்போது இரு அன்னையரும் வருவார்கள். இதை உங்கள் சொற்களாக முன்வைத்து உங்கள் ஆணையை பிறப்பியுங்கள்" என்றாள். “உன் சொற்கள் என்று சொன்னால் என்ன?” என்றார் துருபதன் புன்னகைத்து. “அன்னையே ஆயினும் அவர்களும் பெண்களே” என்றாள் திரௌபதி மெல்ல நகைத்தபடி. துருபதன் உரக்க நகைத்தார்.

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 2

துருபதன் திரௌபதியிடம் விடைபெற்று அந்தப்புரத்தில் இருந்து மாலைநிகழ்ச்சிகளுக்காக கிளம்பியதும் அவரை வாயில் வரை கொண்டுசென்று விட்ட பிருஷதி சீற்றத்துடன் திரும்பி திரௌபதியை நோக்கினாள். தன் ஆடையை இடக்கையால் மெல்லத்தூக்கியபடி அவள் படியேறி உள்ளறைக்குள் சென்றுகொண்டிருந்தாள். அவள் நீண்ட பின்னல் பின் தொடையைத் தொட்டு அசைந்தாடியது.

அவள் படியேறுகையில் ஆடையைத் தூக்குவதை பிருஷதி பலமுறை கவனித்ததுண்டு. அது அத்தனை இயல்பாக ஒரு நடன அசைவுபோல அமைந்திருக்கும். அவள் குனிந்து பார்ப்பதில்லை, ஆனால் ஆடைநுனி மேலெழுந்து பாதங்கள் தெரியாமல் நிலத்திலும் தொடாமல் அசையும். அவள் ஆடையின் கீழ்நுனியில் ஒருபோதும் தரையின் அழுக்கு படிந்து பிருஷதி கண்டதில்லை. அவள் மேலாடை எப்போதும் உடலில் வரையப்பட்டதுபோலிருக்கும். உடலில் அணிகள் சிற்பத்தின் செதுக்கல்கள் போலிருக்கும்.

ஆனால் தன்னை பிழையின்றி வைத்துக்கொள்ள அவள் எதுவும் செய்வதுமில்லை. எதைச்செய்கிறாளோ அதிலேயே முழுமையாக இருக்கிறாள். அவள் பேசும்போது ஒவ்வொரு சொல்லும் எங்கோ பலமுறை சரிபார்க்கப்பட்டு கச்சிதமாக இணைக்கப்பட்டு வெளிவருவதை பிருஷதி உணர்ந்திருக்கிறாள். அவளைப் பேசவைக்கவோ பேச்சை நிறுத்தவைக்கவோ பிறரால் முடிவதேயில்லை. ஒவ்வொரு முறையும் அவள்தான் தான் பேசவேண்டிய இடத்தையும் பொருளையும் முடிவுசெய்கிறாள். நினைத்ததைப்பேசிவிட்டபின் அமைதியாகிவிடுகிறாள். அதன்பின் பேசப்படுவது எதுவும் அவளை சீண்டுவதில்லை.

இரு தட்டுகளும் முழுமையாக நிலைத்த துலாக்கோல் அவள் என்று ஒருமுறை நிமித்திகையான சம்பாதேவி சொன்னாள். “அத்தகையவர்களை கண்களாலேயே அடையாளம் கண்டுகொள்ளலாம் தேவி. அவர்களின் இரு தோள்களும் சமமாக இருக்கும். அவர்களின் நடை சீரானதாக இருக்கும். ஏனென்றால் மனித உடல் இருபக்கமும் சமமானது அல்ல. ஆகவே மனிதர்களின் நடையும் ஒருபக்கம் சாய்ந்ததே. இளையதேவி நடப்பதை நோக்குங்கள். தேர்ந்த கரகாட்டக்காரி தலையில் கனத்த கரகத்துடன் நடக்கும் பிசிரற்ற அசைவுகள்...”

அதை பிருஷதி இளமையிலேயே கண்டிருக்கிறாள். காலெடுத்து நடக்க ஆரம்பித்த நாள்முதல் ஒருமுறைகூட தடுக்கியோ தடுமாறியோ விழாதவள் திரௌபதி. “அந்தச் சமநிலை அவர்களின் உள்ளத்தில் இருக்கிறது. அதுவே விழியாகவும் சொல்லாகவும் உடலாகவும் அசைவாகவும் வெளிப்படுகிறது. அதோ பாருங்கள்!” என்று சம்பாதேவி சுட்டிக்காட்டினாள். திரௌபதி ஏடு ஒன்றை அப்போது வாசித்துக்கொண்டிருந்தாள். வாசித்து முடித்த சுவடிக்கட்டை பழைய சுவடிக்கட்டுகளின் அடுக்கின் மேல் திரும்பிநோக்காமல் கைபோக்கில் வைத்தாள். துல்லியமாக அடுக்கப்பட்டது போல அது சென்று அமைந்தது.

“பார்க்கவேண்டியதில்லை என்பது மட்டும் அல்ல, பார்க்கவேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இன்றுவரை அவர் எப்பொருளையும் பிழையாக வைத்து நான் அறிந்ததில்லை. அவர்களை மையமாகக் கொண்டு பொருள்வய உலகம் தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றும். அவர்களின் அகம் அந்தச் சமநிலையை இயல்பாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுடர் ஒளியை நிகழ்த்துவதுபோல!” சம்பாதேவி கைகூப்பி “கடம்பவனத்துக் கொற்றவையின் குகைகோயிலுக்குள் ஒரு சுடர் உள்ளது. அது அசைவதே இல்லை. இளையதேவிக்குள் அச்சுடர் எரிந்துகொண்டிருக்கிறது தேவி!” என்றாள்.

அவளை அறிந்த ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒன்று இருந்தது. திரௌபதியை வளர்த்த செவிலியான சிருங்கை அவள் திலகம் இட்டுக்கொள்வதை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுவாள். “நெற்றிக்குத் தேவையானதற்கு மேல் ஒரு துளியும் அவர் சுட்டுவிரலால் எடுப்பதில்லை தேவி. ஆடிநோக்காமல் ஒருமுறைகூட மையம் பிழைக்காமல் ஒவ்வொருமுறையும் வட்டம் பிசிறாமல் திலகம் வைத்துக்கொள்ளும் ஒரே பெண் இந்த பாரதவர்ஷத்தில் இளையதேவிதான். அவர் இப்புவியில் வாழவில்லை. இவ்வாழ்க்கையை நடனமாக ஆடிக்கொண்டிருக்கிறார்.”

அந்தப்புகழ்மொழிகள் ஒவ்வொன்றும் பிருஷதியை உள்ளூர அமைதியிழக்கச் செய்தன. எவராவது அப்படிப் பேசத்தொடங்கும்போது எரிச்சலுடன் அவர்களை அதட்டுவாள். பேச்சை திருப்பிக்கொண்டு செல்வாள். அது ஏன் என்று தனிமையில் அவளே எண்ணி வியந்துகொள்வாள். சொந்தமகள்மேல் அவள் பொறாமைகொண்டிருக்கிறாளா என்ன?ஐயமே இல்லை, அது பொறாமைதான். ஆனால் அதை தவிர்க்கவே முடியாது. அவள் அருகே செல்லும் ஒவ்வொருவரையும் குறையுடையவர்களாக, சமநிலையற்றவர்களாக ஆக்கிவிடுகிறாள். இப்புவியின் பெண்களை அளக்க பிரம்மன் உருவாக்கிய அளவுகோல் அவள்.

எந்தப்பெண்ணும் அவளை விரும்பமுடியாது என்று பிருஷதி நினைத்துக்கொள்வதுண்டு. அப்படி எண்ணியதுமே அவளுக்குள் அன்னை என்ற எண்ணம் எழுந்து அச்சமும் ஊறும். ஆண்கள் மட்டும் அவளை விரும்புவார்களா என்ன? அவளைக் காணும் எளிய ஆண் அகத்தின் ஆணவம் மடிந்து அவளை பணிவான். அவளை அஞ்சுவான், ஆகவே அவளிடமிருந்து விலகிச்செல்வான். ஆண்மையின் நிமிர்வுகொண்டவனுக்கு அவள் ஓர் அறைகூவல். அவளை வெல்லவும் அடையவும் விழைவான். அவளை எந்த ஆண்மகனும் முழுமையாக அடையமுடியாது. அவள் அளிப்பதை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். அதை உணர்ந்ததுமே அவனும் அவளை உள்ளூர அஞ்சுவான். அச்சம் என்பது வெறுப்பாக எக்கணமும் மாறத்தக்கது.

பிருஷதி அவளை அணுகும்போது எரிச்சல் கொண்டாள். அகன்றிருக்கையில் அன்னை என்று கனிந்தாள். அவள் அளிக்கும் அந்த ஓயாத ஊசலாட்டத்தால் அவள் மேல் எரிச்சல் கொண்டாள். ஸௌத்ராமணி வேள்வியில் நெருப்பில் கண்ட அந்த முகத்தை அவள் எக்கணம் கண்மூடினாலும் நினைவிலிருந்து எடுத்துவிடமுடியும். தழலேயான கருமுகம். வைரம் சுடர்ந்த விழிகள். வேள்வியன்னத்தை உண்ணும்போது “அன்னையே, என்னை ஆட்கொள்க!” என்று சொல்லிக்கொண்டாள். கண்கள் கலங்கி வழிய தொண்டை அடைத்து அன்னத்தை உள்ளே இறக்கமுடியவில்லை. நெஞ்சில் சிக்கி அது இறங்குவது தெரிந்தது. அக்கணமே அவள் தன்னுள் குடியேறிவிட்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

ஒன்பதுமாதம் அவள் அந்த முகத்தையே கனவுகண்டாள். “பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினி” என்று சொன்னாள் நிமித்திகையான சம்பாதேவி. “அந்த அரியணையன்றி வேறேதும் அவள் அமரும் தகுதிகொண்டதல்ல தேவி!” பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினி! அச்சொற்களை மீண்டும் மீண்டும் அவள் சொல்லிக்கொண்டாள். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அவள் உடல் புல்லரித்து கழுத்திலும் கன்னங்களிலும் மயிர்ப்புள்ளிகள் எழும். பாரதவர்ஷம், அது என்ன? அன்றுவரை அது வெறும் சொல்லாகவே இருந்தது. அன்றாடம் ஒலித்தாலும் பொருளிழந்த சொல். அதன்பின் அவள் வரைபடங்களை எடுத்து அதைப்பார்க்கலானாள். நதிகளும் மலைகளும் சமவெளிகளும் பாலைகளும் கொண்ட பெருநிலம். சூழ்ந்து அலையடிக்கும் கடல்கள்!

அது அவளுக்காகக் காத்திருந்ததா என்ன? அது இங்கிருக்கிறது. படைப்புக்காலத்தின் முதல்புள்ளி முதல். அதன் மண்ணில் பிறந்திறந்து மறைந்தவர் கோடானுகோடிகள். நினைவாகவோ சொல்லாகவோ எஞ்சாதவர்கள். அது என்றுமிருக்கும். அதில் அவளும் என்றுமிருப்பாளோ? அவள் அன்னை என்பதனாலேயே அவளும் என்றும் இருந்துகொண்டிருப்பாளோ? கருவுற்றிருந்த நாளில் ஒருமுறை அவள் அவ்வெண்ணத்தைத் தாளமுடியாமல் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள். சேடியர் வந்து 'என்ன? என்ன?' என்று கேட்டனர். துருபதன் அவளை அணைத்து மாறிமாறி முத்தமிட்டு முகத்தை கைகளில் ஏந்தி மேலே தூக்கி “என்ன துயரம்?” என்று கேட்டார். “என்னிடம் சொல், என் கண் அல்லவா? உன் உள்ளத்தில் என்ன வருத்தம்?”

துயரமா? ஆம். துயரம்தான். அதை வேறெந்த சொற்களில் சொல்வது? ஆனால் அத்துயரில் திளைக்கிறது அகம். மேலும் மேலும் அதை அள்ளி அள்ளி விழுங்க விடாய் கொள்கிறது. அடையாளம் காணப்படாத ஒரு ஓசையாக எங்கோ என் எண்ணம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அது அளிக்கும் பதற்றம் என் உடலை பதறச்செய்கிறது. அதை சொல்லாக மாற்றினால் நான் உங்களிடம் சொல்லக்கூடும். நான் முழுமைகொண்டிருக்கிறேன். அதுதான் அந்த எண்ணம். ஆம், அதுதான். நான் முழுமைகொண்டுவிட்டேன். என்னுள் நான் விழைவது அனைத்தையும் நிறைத்துக்கொண்டிருக்கிறேன். அழியாததை. அனைத்தும் ஆனதை. நான் என நான் எண்ணக்கூடிய அனைத்தையும்.

ஆனால் அது மட்டும்தானா? இல்லை. இந்த நிறைவை நான் மண்ணில் இறக்கி வைத்தாகவேண்டுமே. அதன்பின் அது நான் அல்ல. என்னிலிருந்து என் சாரம் இறங்கிச்சென்று கைகால்கள் கொண்டு சிந்தையும் சொல்லும் கொண்டு வாழும். அதன்பின் நீ நான், நீ என்னவள் என்று பதறியபடி நான் என்றும் ஓடிக்கொண்டிருப்பேன். இல்லை ஒருவேளை அவளை இம்மண்ணுக்கு அள்ளி வைத்து அளிக்கும் ஒரு தாலம் மட்டும்தான் நானா? ஒரு எளிய ஊன்வாயிலா? அவளை அளித்தபின் குருதிவழிய வெளுத்து இறந்து கிடப்பேனா?

விசும்பி அவன் மார்பில் முகம் சேர்த்து “நான் வாழமாட்டேன். இக்கரு என்னைக் கொன்றபின்னர்தான் வெளியே வரும்...” என்றாள் பிருஷதி. “என்ன பேச்சு இது? உன் கருவறை தூயது என்பதனால்தானே உன்னை யாஜர் தேர்வுசெய்தார்?” என்றார் துருபதன். சினந்து அவனைப் பிடித்துத் தள்ளி “அப்படியென்றால் நான் யார்? வெறுமொரு கருவறை மட்டும்தானா?” என்று சொல்லி அவள் விம்மியழுதாள். ”என்ன பேச்சு இது? இக்குழந்தைகள் உன்னுடைய உதிரம் அல்லவா?” என்றார் துருபதன்.

அதிகாலைப்பனித்துளியைச் சுமந்த புல்நுனி. கனத்து தலைகுனிந்து மெல்ல உதிர்த்து நிமிர்ந்து வான் நோக்கி புன்னகைசெய்து நன்றி சொன்னது. கையில் குழந்தையை எடுத்து வயற்றாட்டி அளித்தபோது எழுந்த முதல் எண்ணம் “கருமை!” என்பதுதான். ஒவ்வொருமுறை அவளை நோக்கும்போதும் கருமைதான் முதலில் எழும் அகச்சொல். ஒளிகொள்வதற்குரிய உரிமைகொண்டது கருமை மட்டுமே என எண்ணிக்கொள்வாள். பிற அனைத்தும் ஒளியை அப்படியே திருப்பி அனுப்பிவிடுகின்றன. ஒளிபட்டதுமே தங்களை முழுமையாக இழந்து ஒளியாக ஆகிவிடுகின்றன. கருமை ஒளியை உள்வாங்கிக்கொள்கிறது. எத்தனை குடித்தாலும் ஒளிக்கான அதன் விடாய் அடங்குவதில்லை.

அவள் தனியறையில் இருக்கையில் பிருஷதி ஓசையின்றி வந்து நோக்குவதுண்டு. அவ்வறையின் ஒளியனைத்தும் அவளை நோக்கிச்சென்று மறைந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். செவ்வெறும்புகள் சென்று இறங்கும் சிறிய துளைபோல. கரியகுழந்தைகள் வாழைப்பூ நிறம்கொண்டிருக்கும், வளர்கையிலேயே கருமைகொள்ளும் என்றாள் வயற்றாட்டி. அவளோ பிறந்தபோதே நீலக்கருமலர் போலிருந்தாள். நகங்களில் கூட மெல்லிய கருமை ஓடியிருந்தது. “நகங்கள் கருமையாக இருக்குமா என்ன?” என்றாள் பிருஷதி. “குவளை மலரின் அல்லி கூட நீலமே” என்றார் துருபதன். “செந்நிறம் என்பது நெருப்பு. எரிதல். இவளோ என்றோ எரிந்து முழுமையாக அணைந்தபின் பிறந்திருக்கிறாள்.”

“வெல்லும் சொல் மட்டுமே சொல்லி ஒரு பெண் இப்புவியில் இதற்கு முன் வாழ்ந்ததுண்டா? இவளுக்குப்பின் பெண்மை என்பதை புலவர்கள் மாற்றி எழுதுவார்களா?” சம்பாதேவி ஒருமுறை சொன்னாள். “ஆயிரமாண்டுகாலம் அடங்கி விழிநீர் சொரிந்த பெண்களின் அகம் சுடர்ந்து எழுந்த கருங்கனல். சொல்லப்படாது காற்றில் மறைந்த சொற்கள் வந்து குவிந்த சுழி. துவாபர யுகமெனும் சீதை வருங்காலத்திற்கு என கையிலிருந்து உருவி இட்டுச்செல்லும் கணையாழி.” சம்பாதேவி அவளைப்பற்றிச் சொல்லிச் சொல்லி தன் சொற்களின் எல்லையை அறிவாள். “ஆண்டாண்டுகாலம் பொருள்கொண்டாலும் எஞ்சி நிற்கும் சொல்” என்பாள்.

கூடத்தைக் கடந்து உள்ளறை வாயிலை அடைவதற்குள் பிருஷதியின் சீற்றம் அடங்கி தன்னிரக்கமாக ஆகியது. அவள் முன் செல்வது வரை நீடிக்கும் சினத்தை அவள் அறிந்ததில்லை. இரும்புப்பாவை போல கையில் வைத்திருக்க முடியாத எடை கொண்டிருந்தாள் திரௌபதி. இளமை முதல். “நீ விழைவதைச் செய்யும் ஏவல்பெண்ணா நான்? இப்புவி நோக்கி ஆணை மட்டும்தான் விடுப்பாயா? முடியாது. சேடிகளே, இதோ சொல்லிவிட்டேன். முடியாது. அவள் ஆவதைச் செய்துகொள்ளட்டும்” என்று சீறுவாள்.

ஆனால் சொன்ன சொல்லுக்குமேல் ஓர் இதழசைவுகூட இல்லாமல் முழுமையாக இறுகி அமர்ந்திருக்கும் திரௌபதியைக் கண்டபின் சிலகணங்களிலேயே அகம் கரைவாள். “என்னடி இது? ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்? நான் என்ன செய்வேன்? இப்படி ஒரு பேதை மனம் கொண்டவளாக ஆகிவிட்டேனே” என்று தன் தலையிலேயே அடித்துச் சலிப்பாள். குரல் தழுதழுக்க "ஆகட்டும், நீ சொன்னதே நிகழட்டும்... எழுந்துவா! எழுந்து வாடி என் அன்னையே” என்பாள். தான் சொன்னது நிகழும்போது அவளில் ஒரு சிறு வெற்றிக்குறிப்பும் எழுவதில்லை. இயல்பாக, அதுவன்றி இவ்வுலகுக்கு பிறிதொருவழியில்லை என்பதுபோல எழுவாள். “புன்னகையாவது செய்யமாட்டாயா? உனக்காக இதையெல்லாம் செய்கிறோமே?” என்பாள் பிருஷதி.

திரௌபதி உள்ளறைக்குச் சென்று தன் மஞ்சம் மீது அமர்ந்து சுவடிக்கட்டு ஒன்றை எடுத்து விரித்துக்கொண்டிருந்தாள். பிருஷதி அருகே சென்று நின்றாள். அவள் நிமிர்ந்து நோக்கிவிட்டு மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள். அவளே ஒருபோதும் ஏன் என்று கேட்கமாட்டாள் என்று நன்கறிந்திருந்தும் ஒவ்வொருமுறையும் அப்படிச்சென்று நிற்பதை அவளே உணர்ந்ததும் பிருஷதி சிறுமை கொண்டாள். அது உருவாக்கிய சீற்றம் அப்போதைக்குத் தேவையான விசையை அளித்தது. “நீ என்ன செய்தாய் என்று அறிவாயா?” என்றாள். திரௌபதி “சொல்லுங்கள் அன்னையே” என்று திரும்பி நோக்காமலேயே சொன்னாள்

“உன் நாவன்மையால் உன் இளையவனை நீ தோற்கடித்துவிட்டாய்” என்றாள் பிருஷதி. ”நான் அவனை இந்நாட்டின் மன்னனாக ஆக்கவேண்டுமென்று எண்ணினேன். இந்நாட்டை ஆளும் உரிமையும் ஆற்றலும் அவனுக்குத்தான் உண்டு. ஏனென்றால், அவன் வேள்வியில் பிறந்தவன். மாமன்னர்கள் வேள்வியில்தான் பிறக்கவேண்டும் என்று புராணங்கள் சொல்கின்றன” என்றாள். “மாமன்னர்கள் பிறக்கிறார்கள். ஆக்கப்படுவதில்லை” என்று திரௌபதி சொன்னாள். அந்த மூன்று சொற்களில் முழுப்பதிலும் இருப்பதைக் கண்டதுமே பிருஷதியின் சீற்றம் மேலும் பொங்கியது. “ஆம், அவன் இந்தப்பதர்களின் கழுத்தை வெட்டி வீசிவிட்டு பாஞ்சாலத்தின் அரியணையை வெல்வான். அதில் ஐயமே இல்லை. அந்த அழிவு வேண்டாமே என்றுதான் நான் முயன்றேன்.”

“சக்ரவர்த்திகளின் பாதையை நாம் தடுக்கவும் முடியாது அன்னையே” என்றாள் திரௌபதி. பிருஷதி “ஆம், தடுக்க முடியாது. நீ நினைத்தாலும் தடுக்கமுடியாது” என்றாள். அச்சொற்கள் திரௌபதியை ஒன்றும் செய்யவில்லை என்று கண்டு மேலும் கூரிய சொற்களுக்காகத் தேடி “நீ அவனை பேணவேண்டியதில்லை. உன் கருணையிலும் அவன் இல்லை” என்றாள். உடனே மேலும் கீழிறங்கும் வழியைக் கண்டுகொண்டு “நீ பொறாமைப்படுகிறாய். அவன் சக்ரவர்த்தியாக ஆனால் உன் புகழுக்கு குறைவு வருமே என்று எண்ணுகிறாய்” என்றாள்.

ஆனால் அசைவற்ற உடல் மூலமே அச்சொற்களுக்குப்பின்னால் இருந்த பிருஷதியின் கணிப்புகளை தான் உணர்ந்துகொண்டதை திரௌபதி காட்டினாள். அத்துடன் அனைத்து உரையாடலும் முடிந்துவிட்டது என்பதை பிருஷதி உணர்ந்தாள். என்ன செய்வதென்று அறியாமல் அவள் உடல் அணையப்போகும் சுடர்போல தத்தளித்தது. சட்டென்று தன்னை அபலையாக, அநீதி இழைக்கப்பட்டவளாக அவள் சித்தரித்துக்கொண்டாள். நெஞ்சில் ஓங்கி அறைந்து “நீ இதன் விளைவுகளை அனுபவிப்பாய். நான் சொல்கிறேன். இது என் நெஞ்சின் அனலில் இருந்து வரும் சொற்கள். நீ என் நெஞ்சில் கத்தியை இறக்கிவிட்டாய்... நீ...” என்று தவித்து பின் விம்மியழுதபடி திரும்பி ஓடினாள்.

தன் அறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறவிழுந்து தலையணையில் முகம்புதைத்து விம்மி அழுதாள். இப்போது இவ்வழுகையைப் பார்க்க எவருமில்லையே, ஏன் அழுகிறோம் என ஓர் எண்ணம் உள்ளூர ஓடியது. எத்தனையோ அரசிகள் எத்தனையோ முறை இதேபோல மஞ்சத்தில் விழுந்து தலையணையில் முகம் புதைத்து அழுதிருப்பார்கள். அனைவரும் செய்ததையே அவளும் செய்யவேண்டியிருக்கிறது. அவளுக்கென்று ஒரு செயல் இல்லை. அவள் மட்டுமே சொல்லும் சொல் என ஏதுமில்லை.

அவள் வாழ்நாள் முழுக்க எதையுமே புதியதாக செய்ததில்லை. சத்ராவதியின் அரண்மனையில் பிருஷதனின் மகளாகப் பிறந்தாள். எல்லா இளவரசிகளையும்போல செவிலி முலைகுடித்து வளர்ந்தாள். எல்லா இளவரசிகளுக்கும் அளிக்கப்படும் கல்வியை அடைந்தாள். எல்லா இளவரசிகளையும் போல சேடிகளுடன் நீருலா சென்றாள். கானூணுக்குச் சென்றாள். அரசியல் கணக்குகளுக்காக மணக்கொடை அளிக்கப்பட்டாள். அரசியானாள். அந்தப்புரத்தில் அடைபட்டாள். சத்ரமும் சாமரமும் சங்கும் மங்கலத்தாலமும் பெற்றாள். பட்டும் மணியும் அணிந்தாள். பெற்றாள், வளர்த்தாள். இனி மெல்ல முதிர்ந்து இறந்து சூதர்களின் பட்டியலில் ஒரு சொல்லாக எஞ்சுவாள்.

எண்ண எண்ண தன்னிரக்கம் பெருகி அவள் அழத்தொடங்கினாள். அழுகையின் இனிய வெதுவெதுப்பில் அவள் உள்ளம் ஒடுங்கிக்கொண்டது. அவள் உடல் முழுக்க இளம்சூடான கண்ணீரே நிறைந்திருப்பதுபோலவும் கண்கள் வழியாக அது வழிந்துகொண்டிருப்பது போலவும் தோன்றியது. அந்தக் கன்ணீரை பெருக்கிக்கொள்ளவேண்டிய தன்னிரக்கச் சிந்தனைகளை ஒவ்வொன்றாக உள்ளிருந்து எடுத்துக்கொண்டாள். பிருஷதனின் மகளாகப் பிறந்தவள் இங்கே துருபதனின் அரண்மனையில் ஆசைநாயகிக்கு நிகரான வாழ்க்கைக்குள் வந்தாள். அனைத்தும் இருந்தன, ஆனால் அவள் விழைந்த ஒன்று மட்டும் இருக்கவில்லை.

அவள் தந்தை சத்ராவதியின் அரசராக இருக்கையில் பெருங்குலத்தின் விழவுகளுக்கு பல்லக்கும் அகம்படியும் மணிக்குடையும் மங்கலநாதமுமாக அவள் வந்திருக்கிறாள். பாஞ்சாலகுலத்துப் பெண்கள் அவளை வணங்கி ஆற்றுப்படுத்துவார்கள். அவளுக்காக பட்டு விரிக்கப்பட்ட பீடம் காத்திருக்கும். தாம்பூலத்துடன் அடைப்பக்காரியும் தாலத்துடன் அகம்படிச்சேடியும் அருகே நிற்பார்கள். முதியவர்கள்கூட அவளிடம் தலைபணிந்து பேசுவார்கள். பெண்கள் அவளிடம் அணுக்கம் கொள்ள விழைவார்கள். அவர்களிடம் அவள் பொய்யான நிகர்நிலை காட்டிப் பேசுவாள். ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் நான் அரசி என்று குறிப்பிட்டபடி.

அந்தப்புரத்தின் சிறைவாழ்க்கையில் அவளடைந்த இன்பம் என்பது அது மட்டுமே. ஆகவே ஒவ்வொருமுறையும் விழவுகளுக்கும் கோயில்களுக்கும் செல்வதையும் அங்கே எளிய குடிகளை சந்திப்பதையும் அவள் விரும்பினாள். ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்ததை கனவுகாண்பாள். நாளெண்ணி எதிர்நோக்கி இருப்பாள். அந்நாட்களில் விழவில் அவள் கண்ட எத்தனையோ பெண்களில் ஒருத்தியாகவே அவள் அகல்யையை அறிவாள். பெருங்குலத்து உண்டாட்டு ஒன்றில் சோமககுலத்தைச்சேர்ந்த குலத்தலைவர் புருஜனரின் ஒரே மகள் என்று அகல்யையை ஒரு பெண் அவளுக்கு அறிமுகம் செய்தபோது பிருஷதி புன்னகை செய்து அவளை நோக்கி “அழகிய முகம்” என்றாள்.

அச்சொற்களை அகல்யை பெருநிதி போல இருகைகளும் பதற பெற்றுக்கொள்வாள் என அவள் நினைத்தாள். ஆனால் அச்சொற்களை அவள் சொன்னதிலிருந்த ஏதோ ஒன்று அகல்யையை சீண்டியது. அவளிடம் மிகமெல்லிய அசைவு ஒன்று வெளிப்பட்டு பிருஷதிக்கு அவள் அகம் கொண்ட கசப்பை அறிவுறுத்தியது. கண்ணில் அல்ல. முகத்திலும் அல்ல. உடலில். அதை பிருஷதி அத்தனை துல்லியமாக உணர்ந்தாள். அதன்பின் அவள் அகல்யையை பார்த்ததும் இல்லை. சத்ராவதிக்கும் காம்பில்யத்திற்கும் உறவே இல்லாமலாகியது.

பிருஷதரின் மறைவுக்குப்பின்னர் குலமூத்தார் ஆணைப்படி அவளை துருபதன் மணந்த அன்று பட்டத்தரசியாக துருபதன் அருகே அவள் நின்றிருப்பதைக் கண்டபோதுகூட அவள் அகல்யையை அடையாளம் காணவில்லை. அவள் தன் கையைப்பற்றி அரண்மனைக்குள் அழைத்துச்செல்லும்போது அவள் உடலில் வெளிப்பட்ட அந்த அசைவில் அவள் கண்டுகொண்டாள். அந்தச் சிறு அசைவு அத்தனை ஆண்டுகளாக தன் உள்ளே இருந்துகொண்டிருப்பதை அப்போது உணர்ந்தாள். உடலே கசந்து வழிவதுபோலிருந்தது. அவள் பிடித்திருந்த கையை உதறிவிட்டு ஓடவேண்டும்போலிருந்தது.

பின் ஒவ்வொருமுறை அகல்யையை காணும்போதும் அவ்வசைவைக் கண்டாள். அதன்பின் அவ்வசைவே அவளாக காணத் தொடங்கினாள். நினைவிலேயே அவ்வசைவாக அகல்யை நீடித்தாள். அகல்யையின் மைந்தர்களிடமும் அவ்வசைவு இருப்பதைக் கண்டாள். அகல்யையின் பெயரை துருபதன் சொல்லும்போது அவரிடமும் அவ்வசைவு மெல்ல வந்துசெல்வதைக் கண்டாள். ஒவ்வொரு கணமும் கசந்துகொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் ஸௌத்ராமணி வேள்வி ஒரு வரமாக வந்து சேர்ந்தது. திரௌபதி வழியாக அவள் துருபதனை வென்றாள். திருஷ்டத்யும்னனை இளவரசனாக ஆக்கிவிட்டால் அவள் அகல்யையையும் வென்றுவிடுவாள் என்று நினைத்தாள். அவளறிந்த அத்தனை சொற்களுடனும் பாவனைகளுடனும் துருபதனை அதை நோக்கி நகர்த்திச்சென்றாள்.

அன்று அகல்யை தன் அந்தப்புரத்திற்கு அரசரால் வரவழைக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்ததுமே அவள் பதற்றம் கொண்டாள். நேர்நடையாக மெதுவாகச் செல்லவேண்டும் என எண்ணினாலும் அவளால் ஓடாமலிருக்க முடியவில்லை. காலடி ஓசைகேட்டு அனைவரும் திரும்பி அவளை நோக்கினர். துருபதனின் கண்களை நோக்கியதுமே அவளுக்கு அவர் சொல்லப்போவதென்ன என்று புரிந்துவிட்டது. மூச்சுத்திணற வந்து நின்று முறைப்படி முகமன் சொல்லி வணங்கி அமர்ந்துகொண்டாள். துருபதன் எளிய நேரடிச் சொற்களில் தன் முடிவைச் சொன்னதும் அவள் இயல்பாகத் திரும்பி திரௌபதியை நோக்கினாள். அந்த விழிகள் வழியாக அவள் அறிந்துகொண்டாள் அவை எவருடைய சொற்கள் என்று.

அழுகை வறண்டு மூக்கைக் சிந்தியபடி பிருஷதி புரண்டு படுத்தாள். எத்தனை வீணான அழுகை! இவ்வுலகில் அழுகைகள் எல்லாமே வீண்தானோ? அழுகைகள் தனிமையிலேயே எழுகின்றன. பாலைவனத்து ஓடை போல எவருமறியாமல் வற்றி மறைகின்றன. பிறர் கண்ணீரைப் பார்க்கும் மானுடரென எவரும் உள்ளனரா என்ன? அவள் தன் கண்ணீரை எவரேனும் பார்த்துள்ளார்களா என எண்ணிக்கொண்டாள். அவள் அன்னையை அறிந்ததே இல்லை. செவிலிக்கு அவள் இளவரசி மட்டுமே. தந்தைக்கு அவள் ஒரு அடையாளம். துருபதன் அவளிடம் எப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார். அவர்களின் உறவு என்பது இருவரும் சேர்ந்து ஆடிய நுண்மையான நாடகம் மட்டுமே. எவராலும் பார்க்கப்படாமல் அவள் முதுமை எய்துகிறாள். எவரும் அறியாமல் உதிர்ந்து மறைவாள்.

வியப்பூட்டும்படி அந்த எண்ணம் ஓர் நிறைவை அளித்தது அவளுக்கு. அதிலிருந்த கவித்துவம்தான் காரணம் என நினைத்துக்கொண்டாள். ஒரு காவிய நூலில் வாசித்த வரி போலிருக்கிறது. அப்படி எண்ணும்போது அது மிகவும் பொருள்பொதிந்ததாகவும் முழுமை கொண்டதாகவும் இருக்கிறது. அவள் புன்னகை செய்தாள். எத்தனை பாவனைகள் வழியாக வாழ்ந்து முடிக்கவேண்டியிருக்கிறது இந்த நீண்ட வருடங்களை. கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் எழுந்தபோது அறைவாயிலில் நின்றிருந்த திரௌபதியைக் கண்டாள். திடுக்கிட்டவள் போல எழுந்துகொண்டாள். தன் கண்ணீரை அவள் கண்டுவிட்டாளா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது.

திரௌபதி அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். எட்டுவயதில் அவள் பிருஷதியளவுக்கே உயரம் கொண்டவளாக இருந்தாள். அவள் கைகளில் எப்போதும் ஒரு குளுமை இருப்பதை பிருஷதி உணர்வதுண்டு. ஆம்பல் மலரின் குளுமை அது. ஆனால் அவள் கை வியர்வையில் ஈரமாக இருப்பதுமில்லை. அந்தத் தண்மை எப்படி வந்தது என அவள் எண்ணிக்கொண்டாள். “அமர்க அன்னையே” என்றாள் திரௌபதி. அவள் அமர்ந்துகொண்டு பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். திரௌபதியின் பரிவு தன்னை நோக்குகிறது என நினைத்ததுமே மீண்டும் கண்கள் நிறைந்தன.

“நீங்கள் அழுவதைப் பார்த்தேன் அன்னையே. அழுகை தானாக அடங்குவது நல்லது. நடுவே வந்து பேசினால் அழுகை சீற்றமாக ஆகும். சீற்றத்தில் என்னை மேலும் தாக்குவீர்கள். உங்களை மேலும் கழிவிரக்கத்தில் தள்ளுவீர்கள். அதன்பின் அந்தச் சீற்றத்தில் கொட்டிய சொற்களைச் சமன்செய்யவே நேரமிருக்கும். ஆகவே நான் காத்திருந்தேன்” என்றாள் திரௌபதி. அந்தச் சமநிலையால் சீண்டப்பட்டு “நீ அரசு சூழ்தலின் மொழியில் பேசுகிறாய். அன்னையிடம் பேசுவதும் உனக்கு அரசியல் விளையாட்டுதான்” என்றாள். “நான் பேதை... எனக்கு உன் சொற்கள் புரியவில்லை. எழுந்து போ!” என்று சொல்லி அவள் கைகளை உதறினாள்.

“அன்னையே, உங்கள் உள்ளத்தை முழுமையாகவே நான் அறிவேன். பெரிய அன்னைமேல் உங்கள் நெஞ்சில் உள்ள கசப்புதான் அனைத்துக்கும் அடிப்படை. நீங்கள் அரசை விரும்பவில்லை, பெரிய அன்னையை வெல்ல விரும்பினீர்கள்” என்றாள் திரௌபதி. பிருஷதி “இல்லை” என்று வீம்புடன் சொல்லி முகம் திருப்பினாள். “அதில் பிழையில்லை அன்னையே. மனிதர்கள் அனைவரும் பிறர் மேல் கொண்ட விருப்பத்தாலும் வெறுப்புகளாலும்தான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்றிருக்கிறேன்.” பிருஷதி “உன் நூலறிவுப்பேச்சு சலிப்பூட்டுகிறது... எனக்கு வேறு வேலை இருக்கிறது” என எழுந்தாள்.

“அமருங்கள் அன்னையே” என்று சிரித்தபடி அவள் கையைப்பற்றி இழுத்து அமரச்செய்தாள் திரௌபதி. “பெரிய அன்னையை நீங்கள் வெல்லவேண்டும், அவ்வளவுதானே? அறம் மீறி நீங்கள் அரசை அடைந்திருந்தால் வென்றிருப்பீர்களா? அவர்கள் அநீதி இழைக்கப்பட்ட பாவனையுடன் இருப்பார்கள். அந்த முகத்தை நீங்கள் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது” என்றாள். பிருஷதி “அப்படியெல்லாம் இல்லை...” என்று முனகினாள். “இப்போது நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள். இன்று தந்தைமுன் இருந்து எழுந்துசென்றபோது அவர்களிடம் நீங்கள் கசப்பு கொள்ளும் அது இருந்ததா என்ன?”

“இல்லையடி!” என்று கூவியபடி பிருஷதி எழுந்துவிட்டாள். “அய்யோடி, அதைப்பற்றி நான் எங்கோ எண்ணிக்கொண்டேன். இந்த அலைபாய்தலில் அது அப்படியே மறந்துவிட்டது. அவள் முகத்தில், இல்லை உடலில் ஏதோ ஒரு அசைவு... எனக்கு கசப்பூட்டும். அது அவளிடம் இருக்கவில்லை... ஆமாம் அய்யோ!” தன் நெஞ்சைப்பற்றிக்கொண்டு “அதை அப்போதே நான் கண்டேன்... ஆமாம்” என்றாள். பரபரப்புடன் திரௌபதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்த அசைவை நீ பார்த்திருக்கிறாயா? அது இன்னதென்றே சொல்லமுடியாது” என்றாள். “அன்னையே, அதை நீங்கள் மட்டுமே பார்க்கமுடியும். நீங்கள் பார்ப்பதை நான் பார்த்தேன்” என்றாள் திரௌபதி.

“அதுமறைந்துவிட்டதடி! அது இல்லாமல் நான் அவளைப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று பிருஷதி சிரித்தாள். “இந்த ஒரு நாள் எனக்குப்போதும்!” திரௌபதி “இனி அது பெரிய அன்னையில் மீண்டே வராது அன்னையே” என்றாள். “ஏனென்றால் அரசை விட்டுக்கொடுத்தது வழியாக நீங்கள் அவர்களை வென்றுவிட்டீர்கள்.” பிருஷதி திரௌபதியின் கைகளைப்பற்றியபடி “இல்லை... அது அல்ல. அவளுக்குத்தெரியும். அரசை விட்டுக்கொடுத்தது நான் அல்ல. அவை உன் சொற்கள். அவள் உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்” என்றாள் பரபரப்புடன். “அவள் கண்களைப்பார்த்தேன். அவற்றில் இருந்தது பொறாமை. உன்னை நான் மகளாகப்பெற்றதன் பொறாமை அது!”

“மறுபடியும் கற்பனை செய்கிறீர்கள்” என்றாள் திரௌபதி. “இல்லை. அதை நீ புரிந்துகொள்ளமுடியாது. நீயும் அன்னையானால் அறிவாய். அவள் யார்? இந்தச் சிற்றரசின் எளிய அரசனின் அன்னை. நான் பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தினியைப் பெற்றவள். அதை அவள் உணர்ந்துகொண்டுவிட்டாள்... அது போதும் எனக்கு.” திரௌபதி நகைத்து “அன்னையே, தங்களை சூதப்பெண்களின் கதைகேட்க அழைக்க வந்தேன். வாருங்கள்” என்றாள்.

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 3

அந்தப்புரத்தை ஒட்டி அமைந்திருந்த சிறிய கூத்தரங்கில் சூதப்பெண்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் காத்திருந்தனர். முழவின் தோற்பரப்பின் மீது ஒரு விரல் மெல்ல மீட்ட அது ம்ம் என்றது. தட் தட் என்று கிணை ஒலித்தது. நாண் இறுக்கப்பட்ட மகரயாழை யாரோ தூக்கி வைக்க அத்தனை நரம்புகளும் சேர்ந்து தேனீக்கூட்டம் மலர்விட்டு எழுந்ததுபோல ஒலியெழுப்பின.

பிருஷதி திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு மன எழுச்சியுடன் “எனக்கு இசையை விட இந்த ஓசைகள்தான் மேலும் உவப்பானவை கிருஷ்ணை... இவை அளிக்கும் எதிர்பார்ப்பு இசையில் இல்லை. இசை கரைந்து அழிந்து இல்லாமலாகிறது. இந்த ஒலிகளோ வளரப்போகும் விதைகள் போலிருக்கின்றன” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள். அதற்கு 'நீ மிகவும் கற்பனையில் உலவுகிறாய்' என்று பொருள் என்று அவளுக்குப்பட்டது. “ஆம். இதெல்லாம் வெறும் கற்பனைதான். ஆனால் எனக்கு கற்பனைகள்தான் இன்றுவரை வாழ்க்கையாக இருந்திருக்கின்றன. நான் அறிந்த வெளியுலகம் இங்கே வரும் சூதர்களும் விறலியரும் சொல்லும் கதைகள் வழியாக கற்பனை செய்துகொண்டதுதானே?” என்றாள்.

அதற்கும் திரௌபதி புன்னகைத்தாள். அதிலிருந்த பரிவால் நிறைவடைந்த பிருஷதி “கற்பனை செய்வதில் ஒன்றும் பிழையில்லை. இங்கே வந்த வைஷ்ணவி ஒருத்தி சொன்னாள். நாம் புறவுலகமாக அறியும் அனைத்தும் நாம் செய்துகொள்ளும் கற்பனையே என்று...” என்றாள். திரௌபதி அதற்கும் புன்னகையையே விடையாக அளித்தாள். “அனைத்துக்கும் புன்னகைக்கிறாய்... நான் உன்னிடம் பேசியதைவிட உன் புன்னகையிடம் பேசியதே மிகுதி” என்று சொல்லிக்கொண்டே பிருஷதி அவளைத் தொடர்ந்து வந்தாள்.

அவர்கள் கூத்தரங்கில் நுழைந்ததும் அங்கிருந்த விறலியர் அனைவரும் எழுந்து வணங்கினர். சேடியர் அவர்கள் வருவதற்காக காத்து நின்றிருந்தனர். வண்ணப்பாயில் திரௌபதியும் பிருஷதியும் அமர்ந்ததும் சேடியரும் தாதியரும் தங்கள் இடங்களில் அமர்ந்துகொண்டனர். அவர்கள் மெல்லிய குரலில் பேசிய ஒலி கூத்தரங்கின் மரச்சாளரங்கள் வழியாக வந்த காற்றில் கலைந்து சுழன்றது. ஒலியை புகைச்சுருள்போல பார்க்கமுடிகிறது என்று பிருஷதி எண்ணிக்கொண்டாள்.

ஓரு முதியதாதி செருமிக்கொண்டாள். ஒருத்தியின் மேலாடைமேல் இன்னொருத்தி அமர அவள் மெல்லியகுரலில் அவளை எழுப்பி ஆடையை இழுத்துக்கொண்டாள். வெள்ளிநகைகளும் சங்குவளைகளும் ஒலித்தன. முன்னால் அமர்ந்திருந்த நடுவயது தாதி தன் முலைகள்மேல் அமைந்திருந்த பெரிய சரப்பொளிமாலையை சரிசெய்துகொள்ளும் ஓசை தனியாகக் கேட்டது. மெல்லமெல்ல உடல்கள் அசைவழிந்து ஓசைகள் காற்றில் கரைந்து மறைந்து கூத்தரங்கு இசைக்காக ஒருங்கியது.

திரௌபதியை ஓரக்கண்ணால் நோக்கியபின் பிருஷதி தாதிக்கு கண்காட்ட அவள் விறலியரிடம் ஆரம்பிக்கலாமென்று கைகாட்டினாள். அவர்கள் முன்னரே அமரும் இடங்களை வகுத்து அங்கே முழவுகளையும் யாழ்களையும் அமைத்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் இடங்களில் அமர்ந்து ஒருவருக்கொருவர் விழிகளாலேயே பேசினர். முழவு வாசிப்பவள் அதன் தோல்பரப்பின்மீது மெல்ல சுட்டுவிரலால் தட்டிப்பார்த்தாள். முதல் யாழினி மகரயாழை அங்குலம் கணக்கிட்டு சற்றே தள்ளி வைத்தாள்.

கதை சொல்லும் இளையவிறலி பெரியகொண்டையை இடப்பக்கமாகச் சரித்துக் கட்டி அதில் முல்லைச்சரம் சூடியிருந்தாள். மாநிறமான அழகிய கன்னிமுலைகள் மேல் வேப்பிலைவடிவ பொளிகள் அடுக்கிய சரம் வளைந்து எழுந்து வயிற்றை நோக்கித் தொங்கியது. மஞ்சள்பட்டாடைக்குமேல் இளஞ்சிவப்புநிறமான கச்சையைக் கட்டியிருந்தாள். அவளுக்குப்பின்னால் வலப்பக்கம் அவள் அன்னை தோளில் சரிந்த கொண்டையுடன் முலைகள் மேல் செந்நிறமேலாடை அணிந்து கையில் குறுமுழவுடன் அமர்ந்திருக்க இடப்பக்கம் தண்ணுமையுடன் தடித்த விறலி அமர்ந்திருந்தாள். அவளுடைய கனத்த கரிய முலைகள் மேல் மத்ததகத்தில் அணிந்த முகபடாம் போல வெள்ளிச்சரப்பொளி மாலை வளைந்து இறங்கியிருந்தது.

வெள்ளியாலான மணிக்கோலை வலக்கையில் எடுத்து நெற்றிமேல் வைத்து கண்மூடி வணங்கி “வெள்ளைக்கலையுடுத்தோள் தாள் போற்றி! அவள் உள்ளம் கவர்ந்தோன் எண்விழி போற்றி! வாரணமுகத்தோன் எழுதுகோல் போற்றி! சொல்கடந்த சொல்லன் கிருஷ்ணதுவைபாயனன் நா போற்றி போற்றி!” என்று வெண்கலமணிக்குரலில் பாடினாள். அக்கணம் வரை இருந்த கூத்தரங்கு மறைந்து முற்றிலும் இன்னொன்று உருவாகிவந்திருப்பதை பிருஷதி வியப்புடன் நோக்கினாள். சொல் ஒரு இடத்தை ஒளிகொள்ளச் செய்ய முடியும். பூக்களைப்போல.

“அன்னை கங்கையின் ஆயிரம் கரங்கள் போற்றி! அவள் மடியிலிட்டு தாலாட்டி முலையூட்டும் பாஞ்சால மண் போற்றி! அதிலெழுந்த விற்கொடி போற்றி! குலம்பேணி நெறிபேணி நிலம்பேணும் துருபதன் கோல் போற்றி! அவர் நெஞ்சம் அமைந்த பிருஷதியின் கொடைபோற்றி!” என்று சொல்லி கோல் தாழ்த்தி ஒருகணம் விழிவிரித்து அமர்ந்திருந்தபின் திரும்பி திரௌபதியை நோக்கி “மண்ணிலெழுந்த விண்பெருக்கே போற்றி! துர்க்கையும் சாரதையுமாக எழுந்தருளிய கருணையே போற்றி! பாரதவர்ஷத்தின் பேரரசியே உன் பாதங்கள் போற்றி!” என்றாள்.

குளிர்ந்த நீரை அள்ளி மேலே கொட்டியதுபோல பிருஷதிக்கு மெய்சிலிர்ப்பெழுந்தது. ஆனால் திரௌபதி கருவறையில் அமர்ந்த தேவி போல விழியும் அசையாமல் அமர்ந்திருந்தாள். விறலி தன் மணிக்கோலை இடதுகையால் தட்டி தாளமிட்டபடி “இன்று கார்த்திகை மாதம் வளர்பிறை ஏழாம் நாள். இளநிலவு அருள மலைமரங்கள் கனவுகாணும் கதை ஒன்றை சொல்ல ஆணைகொண்டுள்ளேன். என் நா வாழ்க! அதில் குடிகொள்ளும் என் மூதாதையரின் சொல் வாழ்க! அச்சொற்தேனீக்கள் தேடிச்சேர்த்த அமுதம் வாழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று பாடினாள்.

“அழியாப்புகழ்கொண்டது சந்திரவம்சம் என்று ஆன்றோர் அறிவர். அதன் கதை இது. அறிதலுக்கு அப்பால் குடிகொள்ளும் பிரம்மத்தில் இருந்து அறிவின் முதல் விதையென பிரம்மன் தோன்றினார். அவரிடமிருந்து மரீசி தட்சன் என்னும் இரு பிரஜாபதிகள் தோன்றினர். மரீசியின் மைந்தர் கசியபர். தட்சனின் மகளாகிய அதிதியை அவர் மணந்து ஆதித்யர்களை பெற்றார். ஆதித்யர்களில் ஒருவனாகிய சூரியனின் மைந்தன் மனு. அவன் மகள் இளை. சந்திரனின் மைந்தன் புதனுக்கு இளையில் பிறந்த மைந்தனே புரூரவஸ். அவனே சந்திரகுலத்தின் முதல் அரசன்.

“புரூரவஸ் பெற்ற மைந்தன் ஆயுஷ். ஆயுஷ் நகுஷனைப் பெற்றான். நகுஷன் யயாதியைப் பெற்றான். யயாதி சந்திரகுலத்தின் மாமன்னர். அவரது சொல்லும் குருதியும் முளைத்துப்பரவிய வயல்வெளியே பாரதவர்ஷம் என்கின்றனர் ஞானியராகிய சூதர்” விறலி சொன்னாள். குலவரிசைகளைச் சொல்வதற்கு அவர்களுக்கென ஒரு தாளமும் பண்ணும் இருந்தது. கேட்டுக்கேட்டுப்பழகிய வரிசை என்பதனால் அவள் சொல்லும்போதே அவையினர் உதடுகளும் அப்பெயர்களைச்சொல்லிக்கொண்டிருந்தன.

“அவையீரே, யயாதியின் கொடிவழி வந்த சந்திரகுலத்து மன்னன் விகுஞ்சனன். அவன் யதுகுலத்து அரசியாகிய சுந்தரையை மணந்தான். அவள் அஜமீடன் என்னும் அரசனைப் பெற்றாள். அஜமீடன் கைகேயி நாகை காந்தாரி விமலை ரிக்ஷை என்னும் ஐந்து மனைவியரை அரசியராக்கினான். அவன் மைந்தன் ருக்‌ஷன் சம்வரணன் என்னும் மாவீரனைப் பெற்றான். அவன் பெயரை வணங்கட்டும் பாரதவர்ஷம்! அவன் வீரத்தால் கங்கை உயிராகியது. மண் அன்னமாகியது. அவன் பெயர் கேட்டால் இன்றும் கங்கையில் அலைகள் எழுந்தமைகின்றன. என்றும் அவ்வாறே ஆகும்!”

“வெல்லும் வில்திறன் கொண்டிருந்த சம்வரணன் வேட்டையாடுவதில் பெருவிருப்புடன் இருந்தான். மருப்புயர்ந்த யானைகளையும் அறைகூவும் சிம்மங்களையும் காற்றில் தாவும் மான்களையும் அவன் அம்புகள் பொருட்டாக எண்ணவில்லை. வானில் சுழலும் பறவைகளையே அவன் வீழ்த்தினான். பின்னர் அவையும் எளிய இலக்குகள் என்று கண்டு சிறு பூச்சிகளை அம்புகளால் அடித்தான். தேனீக்கள் பறக்கும் ஒலியைக்கொண்டே அவற்றை அம்பால் அடித்தான். ஒற்றை அம்பில் பலதேனீக்களை கோர்த்து எடுக்கும் கலை அறிந்தவன் என்பதனால் அவனை மதுசரன் என்று அழைத்தனர்.

மதூகம் என்று பெயர்கொண்ட அவன் வில்லைப்பற்றி எண்ணியதுமே பகைவர் அஞ்சினர். எனவே அவன் ஆண்ட அஸ்தினபுரிக்கு எதிரிகளே இருக்கவில்லை. அச்சமில்லாத இடத்தில் யானைக்கூட்டத்தருகே மான்கள் மேயவருவதுபோல வணிகர்கள் கூடுகிறார்கள். ஆகவே அஸ்தினபுரியின் களஞ்சியத்தில் பொன்விளைந்தது. அள்ளிக்கொடுக்கும் கரங்கள் கொண்டவனாதலால் அவன் அரசில் அறம் விளைந்தது. அரசன் அறச்செல்வன் என்பதனால் அங்கே கல்வியும் கலைகளும் விளைந்தன. இந்திரனின் வில் அஸ்தினபுரியின் மீது பருவம் தவறாமல் வைக்கப்பட்டது. அங்குள்ள நிமித்திகர் மழையைக்கொண்டு நாளை கணக்கிட்டனர்.

இலைநுனி சொட்டும் நீர் வேர்ப்படர்ப்பு மேல் விழும் ஹரிதமயம் என்னும் பசுங்காடு ஒன்றில் அம்புகளால் வானை அளந்தபடி கால்போக்கில் அலைந்துகொண்டிருந்த சம்வரணன் ஆழ்காட்டில் எவரும் செல்லாத தொலைவுக்குச் சென்றான். வழிதவறி பின்னிப்பின்னி மாயம்காட்டிய கானகக் கால்தடங்களில் அலைந்தான். நெடுந்தொலைவு பயணம் செய்து களைத்துச் சோர்ந்த அவன் குதிரை விழுந்து இறந்தது. கால்நடையாக காட்டில் அலைந்த அவன் அறியாத வழிகளில் நெடுந்தூரம் சென்றான்.

ஒரு வேங்கை மரத்தடியில் வில் தாழ்த்தி வைத்து உடல் சாய்த்து ஓய்வெடுக்கையில் பசுஞ்சோலைக்கு அப்பால் தொலைதூரத்தில் மரங்கள் நடுவே நெருப்பு எழுந்து ஒளிர்வதைக் கண்டான். மரங்களின் நிழல்கள் மரங்களின் மேல் நடனமிட்டன. அதன்பின்னர்தான் வனநெருப்பெழுந்த பின்னரும் பறவைகள் கலைந்து வானிலெழவில்லை என்பதை அறிந்தான். கீரிகளும் பாம்புகளும் எலிகளும் புதர்களினூடாக அம்புகளென ஊடுருவி ஓடவில்லை. மான்களும் புலிகளும் விலகிப்பாயவில்லை. அன்னையானைகள் மகவுகளுக்கு எச்சரிக்கை அளிக்கவில்லை. என்ன நெருப்பு அது என வியந்து அவன் அதை நோக்கிச் சென்றான்.

அணுகியதும் அது நெருப்பல்ல என்று அறிந்தான். புதர்களுக்கப்பால் ஒரு செவ்வொளி நின்று அலைத்துக்கொண்டிருந்தது. இலைத்தழைப்பை விலக்கி ஊடுருவிச்சென்றபோது அங்கே ஒரு குளம் ஒளிநிறைந்து கிடப்பதைக் கண்டு வியந்தான். நீரலைகள் தழல்களாக நெளிந்தன. கரைவிளிம்புகளின் சேற்றையும் நாணலையும் எரித்து அழித்துவிடுபவை போல நாநீட்டின. எச்சரிக்கையுடன் காலெடுத்துவைத்துச் சென்று அந்த நீர்தழலை அடைந்து குனிந்து கைகளால் தொட்டான். நீரே என்று உறுதிகொண்டபின் அள்ளி முகத்தில் விட்டான்.

ஐயத்துடன் நிமிர்ந்து வானை நோக்கினான். கார்த்திகை மாதம் ஏழாம் வளர்நிலவு நாள். முகில் மூடியிருந்தமையால் சூரியனை காணமுடியவில்லை. அப்படியென்றால் இவ்வொளி எங்கிருந்து வருகிறதென்று எண்ணி அவன் சுற்றுமுற்றும் நோக்கியபோது நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன.

அவள் உடலொளியால் குளம் ஒளிகொண்டிருக்கிறதென்று அவன் அறிந்தான். அங்கே அசைவற்ற கற்பாறையென நின்று அவள் அழகை நோக்கவேண்டுமென்ற ஆசையும் அவளை அழைத்து தன்னை அறிவிக்கவேண்டுமென்ற ஆசையும் ஒரேசமயம் எழுவதை உணர்ந்தான். இரு தட்டுகள் நடுவே துலாமுள் என அவன் உடல் மெல்ல அசைந்தது. அவள் அதை விழிமுனையால் கண்டு திரும்பி நோக்கினாள். அவன் இதயம் அதிர பின்னகர்ந்த பின்னர்தான் உடல் நகரவில்லை என்று அறிந்தான். இதோ அஞ்சிய மான் என அவள் புதருக்குள் மறையப்போகிறாள் என்று எண்ணி அவன் கையெடுத்தான். ஆனால் அவள் நாணமென்று ஒன்றிலாதவளாய் அவனை புருவம் தூக்கி நோக்கினாள்.

பொன்னிறத்தில் விழிகளிருக்கமுடியும் என்று அவன் கதைகளிலும் அறிந்ததில்லை. நீலச்சிறகெழுந்த இரு பொன்வண்டுகள். செங்கனல்துண்டுகளென உதடுகள் மெல்ல வளைந்து ஏதோ வினவின. பின் அவள் அவனை நோக்கித் திரும்பி இளங்குதிரை என நடந்து வந்தாள். எழுபத்திரண்டு சுழிகளும் பொருந்தி ஐந்து அழகுகளும் அமைந்த புரவி இருபக்கமும் முற்றிலும் சமநிலைகொண்டிருக்கும் என்றும் இழுத்துக்கட்டிய கயிற்றின் மேல் அதனால் நிலைபிறழாது ஓடமுடியும் என்றும் அவன் அறிந்திருந்தான். அதை அப்போது நம்பினான்.

பெண்ணுடலைக் கட்டிப்போட்டிருக்கும் காணாச்சரடான நாணம் முற்றிலும் இல்லாதிருந்தமையால் அவள் உறுப்புகள் ஒவ்வொன்றும் முழுமை கொண்டிருந்தன. ஆடையை அமைக்க எப்போதும் கருத்துகொண்டிருக்கும் பெண்கைகளையே அவன் அதுவரை கண்டிருந்தான். இயல்பாக வீசிச்சுழலும் கரங்கள் பெண்ணுக்கு சிறகுகளாக ஆகமுடியுமென்று அன்று அறிந்தான். அவளை மண்மீது மிதந்து வருபவள்போல ஆக்கின அவை.

மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். அவள் அருகே வந்து உடலில் செம்பளிங்கில் விரிசல்கள் போல ஒட்டியிருந்த நனைந்த கூந்தலை நகத்தால் வருடி எடுத்து காதுக்குப்பின் சேர்த்தபடி சற்றே தலைசரித்து “யார் நீ?” என்றபின் பொன்னிறவிழிகளால் அவன் அணிந்திருந்த குண்டலங்களை நோக்கி “அரசனா?” என்றாள்.

நாணமில்லாத பெண்ணின் முழங்காலளவுக்கே ஆணின் உயரமென்று அன்று அவன் அறிந்தான். அவள் இடையில் கைவைத்து இடைவளைத்து நின்றபோது வலது தொடை சற்றே முன்னால் வந்தது. செந்நிறக் காம்புடன் வலது முலை சற்று கீழிறங்கியது. அவன் மூச்சுத்திணற ஏறிட்டு நோக்கி “ஆம்... நான்...” என்றான். “இந்தக்காட்டில் இவ்வேளையில் மானுடர் உலவலாகாது. விலகிச்செல்” என்றபின் திரும்பினாள். அவன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “நீ யார்?” என்றான். அவள் கழுத்தைத்திருப்பி நோக்கினாள். அவள் உதடுகள் விரிந்து வெண்ணிற ஒளிகொண்ட பற்கள் தெரிந்தன. ஏளனத்துடன் சிரித்து “நிற்காதே... ஓடு” என்றாள்.

“பெண்ணே, ஓடும் குலத்தில் பிறந்தவனல்ல நான். சந்திரகுலத்தில் அஜமீடனின் மைந்தனாகப்பிறந்த என்பெயர் சம்வரணன். அஸ்தினபுரியின் அரசன். இப்புவியில் உள்ள அழகிய பெண்களை எல்லாம் அடையும் விருப்பு கொண்டவன். அரசர்களை எல்லாம் வெல்லும் ஆற்றலும் கொண்டவன்.” சலிப்புடன் அவள் இடை மெல்ல ஒசிய வலது முலையின் பக்கவாட்டு வளைவு மீது நீர்த்துளி ஒன்று வழிந்தது. கூந்தல் நுனி சொட்டிய நீர்த்துளிகள் இணைந்து முதுகின் ஓடைக்குள் வழிந்து பின்னழகின் இடுக்கில் நுழைந்தன. “அரசனே, என்னைக் கண்டபின்னும் அச்சமின்றி நின்றதனால் மட்டுமே நீ கருகி இறக்காமல் இங்கிருக்கிறாய். உயிரை பேணிக்கொள்... விலகிச்செல்!” என்றாள்.

“உன்னை மறந்து சென்றால் என் படுக்கையே அனலாகிவிடும்...” என்று சொல்லி சம்வரணன் அவளை நெருங்கினான். “நீ யாரென்று அறியாமல் நான் செல்ல முடியாது. எரிந்து சாம்பலாகி மறைந்தாலும் உன்னை மறப்பதும் இயலாது” என்றான். அவள் வெண்ணிறப் பற்கள் தெரிய சீறியதும் புன்னகை போலவே இருந்தது. அப்போது அந்தக் குளத்தில் புயல்பட்ட கனல்படுகை போல செந்நிற ஒளி பொங்கி எழுந்தது. அவள் அதில் உருகிவழியும் பொற்பதுமைபோல நின்றாள். ஆனால் காதலால் நிறைந்திருந்த சம்வரணன் சற்றும் தயக்கமின்றிச் சென்று அவள் இடக்கையை பற்றிக்கொண்டான்.

அவள் அவன் பிடியை உதறி அவனை அறைய வலக்கையைத் தூக்க அவன் அக்கையையும் பற்றிக்கொண்டு அவள் கண்களை நோக்கி “உன்னை அடைய விழைகிறேன். அதற்கு நான் என்னசெய்யவேண்டுமென்று சொல்” என்றான். “என்னை நீ அடையமுடியாது மூடா... நீ என் வெம்மையை தாளமாட்டாய்” என்றாள் அவள். அக்கணம் அவள் விழிகள் தீக்கங்குகளாக உடல் பழுக்கக்காய்ச்சிய உலோகம் போல ஆகியது. சம்வரணனின் கைகளின் தசை வெந்து வழிந்தது. ஆயினும் அவன் பிடியை விடவில்லை. “உன்னால் எரித்தழிக்கப்படுவேன் என்றால் அதையும் என் நல்லூழ் என்றே கொள்வேன்” என்றான்.

அவன் துணிவு அவளை குளிரச்செய்தது. கண்கள் மீண்டும் பூவரசமலர்களாக பொன்னிறம் கொண்டன. “நான் மானுடப்பெண் அல்ல. சூரியனின் மகள். சாவித்ரிக்கு இளையவள். அதிகாலையின் இளம்பொன்வெயில் என் தமக்கை. முதல்மதியத்தின் வெம்பொழிவே நான். தாபம் கொண்டவளாதலால் என் பெயர் தபதி. என்னை மானுடர் தீண்டமுடியாது. நீ என்மேல் கொண்ட காதல் விட்டில் விளக்குமேல் கொண்ட விருப்புக்கு நிகர்” என்றாள். “ஆசைகொண்டபின் அடையாமல் செல்வது என் இயல்பல்ல” என்று சம்வரணன் சொன்னான். அவள் இருகைகளும் இரு எரிசிறகுகளாக எழுந்தன. அவனை ஓங்கியறைந்து வீழ்த்தியபின் அவள் எழுந்து மறைந்தாள்.

அவன் இமைமுடிகளும் கருகின. தோல் பொசுங்கி எரிந்தது. ஆனால் அவ்விடம்விட்டு  நீங்க அவன் எண்ணவில்லை. சுனைக்கரையிலேயே தன் வில்லை வைத்து அமர்ந்துகொண்டான். அவள் நினைவை ஆடாத அகல்சுடர் என தன் அகத்தறையில் நிறுத்தி அங்கே அமர்ந்திருந்தான். அவள் விண்ணிலெழவில்லை. ஒளிரும் சிறகுள்ள சிறிய பொன்வண்டாக மாறி அக்காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருந்தாள். யாழின் இசையுடன் பறந்துவந்து அவனை மீண்டும் மீண்டும் நோக்கிக்கொண்டிருந்தாள்.

பன்னிரு நாட்களுக்குப்பின் மெலிந்து இறப்பின் வாயிலை நெருங்கிக்கொண்டிருந்த அவனருகே வந்து நின்று பெருமூச்சுவிட்டாள். அவன் விழிகளைத் திறந்து நோக்கியபோது கன்னங்கள் மடிந்த புன்னகையுடன் குனிந்து நோக்கி “இறப்பதற்கு முடிவெடுத்துவிட்டாயா?” என்றாள். “இறப்பையும் அச்சத்தையும் வென்றபின்னரே நான் அரசனானேன்” என்றான்.

அவள் அவனருகே மண்டியிட்டு அமர்ந்து அவன் கரங்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டாள். “அரசனே, துணிந்து என் இடக்கையை நீ பிடித்தாய். என் விழிகளுக்குள் நோக்கி உன் காதலை சொன்னாய். அது ஒருபோதும் நிறைவேறாத காதலென்று அறிந்தேன். ஆயினும் உன்னை என்னால் மறக்க முடியாதென்று உணர்ந்தேன். இன்னொருவனை என்னால் எண்ணவும் முடியாது” என்றாள். அவன் “அவ்வண்ணமெனில் என்னை ஏற்றுக்கொள். என்ன தடை?” என்றான். “விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே அத்தனை தொலைவை வைத்தது பிரபஞ்சத்தை நெய்தவன் அல்லவா? நான் என் நெறிகளை மீறமுடியாது” என்றாள் தபதி.

“அதுவன்றி எதையும் நான் ஏற்கமாட்டேன்” என்றான் சம்வரணன். "இங்கே உன் நினைவால் என்னை இறக்க விடு. அதுவும் காதலின் நிறைவேற்றமேயாகும்.” அவள் அவன் கன்னங்களைத் தொட்டு “நான் என்ன செய்வேன்? உங்கள் இறப்பை நான் எப்படி தாங்கமுடியும்? ஒரே வழிதான் உள்ளது. என் தந்தையிடம் சென்று என்னை பெண்கேளுங்கள். அவர் உங்களுக்கு என்னை கன்னிக்கொடை அளிப்பாரென்றால் நான் உங்கள் கைகளைப்பற்றுவேன்” என்று சொன்னபின்னர் சுழலும் ஆடியில் பட்ட ஒளி பாய்வது போல காட்டில் விரைந்தோடி பூத்த வேங்கை ஒன்றை பொன்னொளி கொள்ளச்செய்து வானிலெழுந்தாள். வானில் ஒரு மேகம் சுடர்ந்து அவளை வாங்கிக்கொண்டது.

அவன் வெந்துருகிய கைகளுடன் அங்கே நின்றான். அவனைத்தேடிவந்த அமைச்சர்களும் படைகளும் அந்தக்காட்டில் பித்தனைப்போல அலைந்துகொண்டிருந்த அவனை கண்டுபிடித்தனர். அவனுடைய பார்வை மறைந்திருந்தது. அவர்கள் அவனை கைக்குழந்தையைக் கொண்டுவருவதுபோல அஸ்தினபுரிக்குக் கொண்டுவந்தனர். அவன் கண்களை மருத்துவர்கள் குளிரச்செய்து பார்வையை மீட்டனர்.

அவளைக் கண்டதைப்பற்றி அவன் சொன்னதைக்கேட்டு “அரசே, அது வீண்முயற்சி. தீமையைக் கொண்டுவருவதும் கூட. அவளை மறந்துவிடுங்கள்” என்றனர் அமைச்சர். “விரும்பியதை அடையாது இறந்தான் அஸ்தினபுரியின் சந்திரகுலத்து அரசன் என்ற சொல் எஞ்ச விண்ணுலகு சென்றால் என் மூதாதையர் கால்களைத் தொட்டு வணங்க அவர் ஒப்புவரா?” என்றான் சம்வரணன். “முன்னர் என் மூதாதை புரூரவஸ் விண்ணுலக மங்கை ஊர்வசியை மணக்கவில்லையா என்ன? அவர்கள் மண்ணவர் அறியாத பேரின்பத்தை அடையவில்லையா?”

“அரசே, விண்ணவளாயினும் ஊர்வசி காதலில் கனிந்தவள். சுனையில் மலர்ந்த தாமரைபோல குளிர்ந்தவள். இவள் வெம்மையின் வடிவாக இருக்கிறாள். இவளை எப்படி நீங்கள் அடையமுடியும்? உங்கள் மானுட உடல் அதை தாளாது. உங்களால் ஆளப்படும் இந்நகரும் அதை தாளாது” என்றனர் அமைச்சர்கள். “அமைச்சர்களே, கட்டற்ற பெருவிழைவும் அதை நோக்கி எழும் ஆற்றலுமே ஷாத்ரம் என்று சொல்லப்படுகின்றன. ஒரு நாட்டில் ஷாத்ர குணம் நிறைந்திருக்கையிலேயே அது செல்வத்தையும் வெற்றியையும் அடைகிறது. மரத்தின் இனிமை கனியில் முதிர்வு கொள்வதுபோல ஒரு நாட்டின் ஷாத்ரம் அதன் அரசனில் குவிந்து நிறையவேண்டும். என் விழைவை ஒடுக்கினேன் என்றால் நான் என் ஷாத்ரகுணத்தை இழந்தவனாவேன். அதன் வழியாக என் மக்களின் வெற்றிவேட்கையையும் அழித்தவனாவேன்.”

“அதைவிட இம்முயற்சியில் நான் அழிவதே மேல். என் கதை அவர்களுக்கு என்றும் ஊக்கமளிப்பதாக எஞ்சும். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் என்னைப்பற்றிச் சொல்லி வளர்ப்பார்கள். அவர்களும் தாங்கள் எட்டமுடிவதன் உச்சத்தை நோக்கியே எப்போதும் கைநீட்டுவார்கள். எது எப்போதும் அதன் கைத்தொலைவுக்கு அப்பால் கைநீட்டி எம்பிக்கொண்டிருக்கிறதோ அதுவே வெல்லும் நாடு என்கின்றன நூல்கள். என் நாட்டை பாரதவர்ஷத்தின் திலகமென ஆக்கி என்னிடம் அளித்துச்சென்றனர் மூதாதையர். என் நாளில் அதன் கொடி இறங்க நான் ஒப்பேன்” என்றான்.

நிமித்திகர்களை வரவழைத்து கணிக்கச்செய்தான். “நீங்கள் சூரியனின் உறவைப்பெற வாய்ப்புகள் உள்ளன என்றே நூல்கள் காட்டுகின்றன அரசே. ஆனால் அதன் மூலம் இந்நாடு அழிவையே அடையும்” என்றனர் நிமித்திகர். “ஒரு வனநெருப்பு அஸ்தினபுரிக்குத் தேவையாகிறது போலும். முதுமரங்கள் எரிந்தழியட்டும், புதுமுளைகள் எழட்டும்” என்றான் சம்வரணன். வைதிகர்களை வரவழைத்து சூரியனை வரவழைக்க என்ன செய்யவேண்டுமென்று கேட்டான். அவர்கள் சூரியனுக்காக ஒரு பெரும்வேள்வி ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்றனர். அவ்வண்ணமே ஆகுக என்றான் சம்வரணன்.

வேள்விக்கென பந்தல் எழுந்துகொண்டிருந்தபோது முதுநிமித்திகன் ஒருவன் அவனிடம் வந்தான். “அரசே, உங்களை நம்பியிருக்கும் குடிகளை நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை. விண்ணின் சூரியதாபம் மண்ணிலிறங்கினால் என்ன ஆகுமென்று அறியமாட்டீர்களா?” என்றான். “அப்பெண்ணை நீங்கள் கண்ட இடத்துக்கு மீண்டும் சென்று நோக்குங்கள்... விடை காண்பீர்கள்” என்றான். “ஆம், அதையும் கண்டுவருகிறேன்” என்றபின் சம்வரணன் தன் காவலர்களுடன் காட்டுக்குள் சென்றான். வழித்தடம் தேர்ந்து தபதி மண்ணிலிறங்கிய இடத்தை அணுகினான்.

செல்லும்தோறும் அந்தப்பசுங்காடு வாடிநின்றிருப்பதைக் கண்டான். பின்னர் மரங்களெல்லாம் கருகி விறகுக்குவியல்களாக நின்றன. அவள் இறங்கி நீராடிய சுனை வறண்டு வெடித்து மீன்கள் வெள்ளிமின்னி விரிந்துகிடக்க வெறுமைகொண்டிருந்தது. “அரசே, இதைவிடப்பெரிய எச்சரிக்கை வேறில்லை. அவள் நம் நகரை அழிப்பாள்” என்றனர் நிமித்திகர். ஒரு புள்கூட சிறகடிக்காமல் சிறுபூச்சிகளின் மீட்டலும் ஒலிக்காமல் பாழ்நிறைத்து நின்றிருந்தது அந்த இடம்.

சம்வரணன் திரும்பிவந்தான். அஸ்தினபுரியின் பன்னிரு குலப்பெரியோர்களைக் கூட்டி அவை நிறைத்து அவர்களிடம் சொன்னான் “விழைந்ததை விட்டவன் என்னும் பழியுடன் விண்ணேக நான் எண்ணவில்லை. ஆனால் என் விழைவின்பொருட்டு என் நாடும் குடிகளும் துயருறுதல் கூடாது. ஆகவே முடிதுறக்க எண்ணுகிறேன். அஸ்தினபுரியின் முடியை குலத்தலைவர்களிடமே அளிக்கிறேன். தங்கள் அரசனை அவர்கள் தேர்வுசெய்யலாம். நான் என் காதலைத் தொடர்ந்து ஆகும் தொலைவுவரை செல்லவிருக்கிறேன். அடிபின்னெடுக்கும் வழக்கம் அறியாத குலத்தவன் நான். அவ்வண்ணமே வாழ்ந்தேன், இறப்பேன்” என்றான்.

“அரசே, நாட்டை யானை என்றும் அரசனை அதன் துதிக்கை என்றும் சொல்கின்றன நூல்கள். யானையை உணவீட்டி ஊட்டுவதும் யானைக்காகப் போரிடுவதும் துதிக்கையே. யானையின் காமத்தை அறிவதும் அதுவே. யானையறிந்த ஞானமெல்லாம் துதிக்கையில் குடிகொள்கிறது. துதிக்கையில் காயம்பட்டபின் வாழும் யானை ஏதுமில்லை” என்றார் குலமூத்தாரான குவலயர். பிறர் “இறுதிச் சொல் அது அரசே. அதற்கப்பால் ஏதுமில்லை” என்றனர். “அவ்வாறெனில் இவ்வேள்வியை நான் முன்னெடுக்கிறேன். சூரியனிடம் ஆணைபெற்று அவளை மணப்பேன்” என்று சம்வரணன் சூளுரைத்தான். “ஓம் ஓம் ஓம்” என அவன் குடிகள் முழங்கினர்.

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 4

சூரியனுடன் பேசும் அர்க்கவேள்வியை அஸ்தினபுரியில் நிகழ்த்த தகுதியுள்ளவர் வசிட்டகுருமரபின் தலைவரே என்றனர் வைதிகர். ஆகவே சம்வரணன் நான்குதிசைகளிலும் தூதர்களை அனுப்பி விந்தியமலையின் உச்சியில் வசிட்டர் இருப்பதை அறிந்துகொண்டான். தூதர்களை அனுப்பாமல் அவனே நேரில் சென்று தகுந்த காணிக்கைகளை அவரது பாதங்களில் வைத்து வணங்கி தன்னுடன் வந்து அர்க்கவேள்வியை ஆற்றி அருளும்படி வேண்டினான். அவனுக்கு இரங்கிய வசிட்டர் தன் நூற்றெட்டு மாணவர்களுடன் அஸ்தினபுரிக்கு வந்து சேர்ந்தார்.

அஸ்தினபுரியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் சூரியதாபம் உச்சத்தில் இருக்கும் இடம் எதுவென்று வானியல் ஞானிகளை அழைத்து ஆராய்ந்தார் வசிட்டர். அதன்படி இமயமலைச்சரிவில் தேஜோமயம் என்னும் மலையின் உச்சி அடையாளம் காணப்பட்டது. வசிட்டரும் மாணவர்களும் வைதிகர்களும் அம்மலையின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். அங்கே காலைப்பொன்வெயில் முதல் மாலைச்செவ்வெயில் வரை முழுமையாகவே விழும் இடம் ஒன்று சூத்ராகிகளால் வரைந்தெடுக்கப்பட்டது. பன்னிரு களங்களும் நான்கு கைகளும் கொண்ட வேள்விக்களம் அங்கே வரையப்பட்டு அதன்மேல் எரிகுளங்கள் அமைக்கப்பட்டன.

சூரியனின் நேர்க்கதிர்கள் மண்ணில் ஊன்றும் சித்திரைமாதம் அக்னிநட்சத்திரத்தில் அர்க்கவேள்வி தொடங்கியது. மென்பஞ்சில் பளிங்குக்கோளத்தால் சூரியக்கதிரைக் குவித்துப் பற்றவைத்து எரிகுளங்களில் நெருப்பு எழுப்பப்பட்டது. அதில் சூரியனுக்கு உகந்த மலர்களும் தளிர்களும் அன்னமும் நெய்யும் அவியாக்கப்பட்டன. அவன் மகிழும் சோமம் சொரியப்பட்டது. மேஷராசியில் சூரியன் இருக்கும் நாட்கள் முழுக்க முதற்கதிர் முதல் இறுதிக்கதிர் வரை வைதிகர் எரிவெயிலில் அமர்ந்து வேதமோதி ஆகுதி செய்தனர். படைகள் கொண்டு குவித்த அவிகளை முழுக்க சூரியன் உண்டான். நெய்க்குடங்களையும் சோமக்கலங்களையும் வற்றச்செய்தான்.

வேள்வி நிறைவடைந்தபோது எரிகுளத்தில் மூன்றுநெருப்புகளும் அணைந்தன. சூரியவெம்மை நேரடியாகவே அவியை பெற்றுக்கொள்ளத் தொடங்கியது. வசிட்டர் வான்மையத்தில் ஒளிரும் கோடானுகோடி வாள்கரங்களுடன் நின்றிருந்த சூரியனை நோக்கி “இறைவனே, இந்த வேள்வியை உன் கருணையின் பொருட்டு செய்கிறோம். எங்களுக்கு அருள்க!” என்றார். அக்கணமே அவர்மேல் சூரியனின் கை ஒன்று தொட்டது. அவரது சடைமுடிக்கற்றைகளும் தாடியும் கருகி தீப்பற்றிக்கொண்டன. மூர்ச்சை அடைந்து அவர் எரிந்துகொண்டிருந்த தர்ப்பைப்புல்மேல் விழுந்தார். அவரது மாணவர்கள் அவர் ககனவெளியில் சூரியனுடன் உரையாடுவதாகச் சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டிய மேகம் கண்கூசும் வெண்ணிற ஒளியுடன் வானில் நின்றது. அதில் வசிட்டரின் வெண்தாடியை காணமுடிந்தது.

விண்ணுக்குச் சென்ற வசிட்டர் மேகத்தில் நின்று சூரியனை நோக்கி “எந்தையே, என் குரலைக் கேளுங்கள். நான் கோரும் வரத்தை அருளுங்கள்” என்றார். “வசிட்ட குருமரபு என்றும் எனக்கு இனியது. தலைமுறைகளாக நீங்கள் அளித்த சொல்லும் அவியும் கொண்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். என்னவேண்டும்? சொல்க!” என்றான் சூரியன். “ஒளியின் அதிபனே, நல்ல தந்தை என்பவன் தன் மகளுக்கு உகந்த மணமகனை கண்டுகொள்பவன். உன் மகள் தபதிக்கு உகந்த ஆண்மகன் சந்திரகுலத்து உதித்த சம்வரணனே” என்றார் வசிட்டர். “அவள் எப்படி ஒரு மானுடனை மணம் புரியமுடியும்? முன்மதியத்தின் வெம்மை அல்லவா அவள்?” என்றான் சூரியன்.

“தன் ஆண்மகனை கண்டடைவது வரை பெண்கள் கொண்டிருக்கும் குணங்களை நாம் நோக்கவேண்டியதில்லை. எரிவிண்மீன் மண்ணிலிறங்குவதுபோல அவர்கள் தங்கள் காதலர்களுக்காக சரிந்துவருவார்கள்” என்றார் வசிட்டர். “முனிவரே, நான் என் கரங்களால் தொட்டறியாத ஏதும் விண்ணிலும் மண்ணிலும் நிகழமுடியாது. என் மகள்களோ என் உள்ளங்கைகளைப்போன்றவர்கள். அவர்கள் ஒருபோதும் மானுடரை விழையமாட்டார்கள். என்னைப்போல விண்ணளந்து செல்லும் பேருருவை மட்டுமே அவர்கள் விரும்புவார்கள்” என்றான் சூரியன். வசிட்டர் புன்னகைத்து “எந்தத் தந்தையும் மகள் உள்ளத்தை அறியமுடியாது கதிரவனே. உன் மகளிடம் கேள்” என்றார்.

சூரியன் சினந்து “அவளிடம் நான் கேட்பதையே அவள் விரும்பமாட்டாள்” என்றான். “கேள்... அவள் இல்லை என்று சொன்னால் நான் திரும்பிச்செல்கிறேன்” என்றார் வசிட்டர். சூரியன் தன் கைகளை நீட்டி வானில் ஒரு வெண்மேகத்தில் விளையாடிக்கொண்டிருந்த தபதியைத் தொட்டு “மகளே, உன் உள்ளத்தில் காதல் நிறைத்த மானுடன் எவரேனும் உண்டா?” என்றான். அவள் நாணி தலைகுனிந்தாள். திகைத்து ஒருகணம் ஒளிமங்கி இருண்டு மீண்டான் சூரியன். “உன் உள்ளத்தில் சந்திரகுலத்து மன்னன் சம்வரணன் இருக்கிறானா?” என்றான். “ஆம் தந்தையே” என மெல்லிய குரலில் தபதி சொன்னாள்.

“என்ன சொல்கிறாய்? நீ விண்ணளக்கும் சூரியனின் மகள். ஒளிகொண்டவள். வெம்மை மிக்கவள்” என்றான் சூரியன். “ஓர் எளிய மானுடனை நீ எப்படி மணக்க முடியும்?” தபதி சினந்து விழிதூக்கி “விண்ணளப்போன் மகளாக இருந்து சலித்துவிட்டேன். சென்று மண்ணளந்து வாழ்கிறேன்” என்றாள். சூரியன் சொல்மறந்து அவளை நோக்கி நின்றபின் திரும்பி வசிட்டரிடம் “என் செவிகளை நம்பமுடியவில்லை வசிட்டரே. என் மகளா அதைச் சொன்னாள்?” என்றான். “எல்லா மகள்களும் சொல்வார்கள் கதிரவனே. நீ அவள் காதலனை சிறுமைப்படுத்திச் சொன்னதனால் அவள் அப்பதிலை சொன்னாள். உன்மேல் அவள் அன்பில்லாதவளல்ல” என்றார். “அவள் மேல் கொண்ட அன்பினால்தான் நீ அரசனை சிறுமைப்படுத்தினாய் என்றும் அவள் அறிந்திருப்பாள்.”

சூரியன் நீள்மூச்சுவிட்டு “அவ்வண்ணமே ஆகுக!” என்றான். “அப்படியென்றால் எனக்கு இவளை தாரைவார்த்துக்கொடுப்பாயாக! இவளை அரசனிடம் அளிப்பேன்” என்றார் வசிட்டர். “அவ்வண்ணமே” என்றான் சூரியன். அப்போதே பெருங்கடல் நீரை மொண்டு எடுத்து தன்மகள் தபதியை வசிட்டருக்கு தாரைவார்த்து மகள்கொடையாக அளித்தான். கீழ்த்திசையில் இடியோசையின் எக்காளம் எழுந்தது. தேவர்கள் விண்ணிலெழுந்து அவளை வாழ்த்தினர்.

அந்த தாரை நீர் வெள்ளிநிறமான வெயில்மழையாகப்பொழிந்து வேள்விக்களத்தை நனைத்தது. வெம்மையில் தகித்துக்கொண்டிருந்த வைதிகர் மகிழ்ந்தனர். முகத்தில் நீர்விழுந்ததும் வசிட்டர் விழிதிறந்து “அரசனே, உனக்காக தபதியை விண்ணிலிருந்து அழைத்துவந்தேன்” என்றார். அப்பால் பூத்த காட்டுக்குள் இருந்து செந்நிறமான பட்டாடை தழல் போல அலையடிக்க தபதி புன்னகைத்தபடி வந்தாள். அவள் பேரழகைக் கண்டு அங்கிருந்த அனைவரும் கைகூப்பினர். சம்வரணன் அவளை நோக்கி ஓடிச்சென்றான். அவள் கைகளை அள்ளி தன் கைகளில் எடுத்துக்கொண்டு கண்ணீர் மல்கினான்.

பொன்னிழைத்த ரதத்தில் தபதியை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரிக்கு வந்தான் சம்வரணன். அவன் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது நள்ளிரவு. முன்னரே அவன் வந்துகொண்டிருக்கும் செய்தி நகர்மக்களை அடைந்திருந்தது. அவர்கள் மஞ்சளரிசியும் பூக்களும் நிறைந்த தாலங்களுடன் நகர்த்தெருக்களின் இருபக்கமும் நிறைந்திருந்தனர். கோட்டைமேலிருந்த காவலர் தொலைவில் காட்டுத்தீ எழுந்ததுபோல வெளிச்சம் வானிலெழக்கண்டனர். காட்டுத்தீ அல்ல அது என்று ஓசைகள் கொண்டு தெளிந்தனர். சற்று நேரத்தில் அதிகாலை சூரியன் வடக்கில் எழுந்ததுபோல வானம் செந்நிறம் கொண்டது. நகர் மக்கள் வியந்து வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினர்.

மேலும் மேலும் ஒளி எழுந்து விரிய ரதங்கள் வரும் ஓசை கேட்கலாயிற்று. தபதி நகர் நுழைந்தபோது அவள் ஒளியால் நகரம் காலை போல ஒளி கொண்டது. கோட்டைவாயிலைக் கடந்து மேகம் மீறி எழும் இளஞ்சூரியன் என அவள் அஸ்தினபுரிக்குள் வந்தாள். கூடிநின்ற மக்கள் வாழ்த்தொலி எழுப்ப மறந்து திகைத்து நின்றனர். அவள் சென்ற ரதத்தைச் சுற்றி பெருநிழல்கள் வானில் சுழன்று சென்றன. அவள் தெருக்களில் சென்றபோது மக்களின் முகங்களெல்லாம் சிவந்து ஒளிவிட்டன. வீடுகளுக்குள் இருண்ட அறைகள் முழுக்க வெளிச்சம் பரவியது. மரங்களில் பறவைகள் சிறகடித்து விழித்துக்கொண்டு குஞ்சுகளை எழுப்பின. தொழுவத்துப் பசுக்கள் குரலெழுப்பின.

அவள் சென்று மறைந்தபின்னர்தான் மக்கள் விழித்தெழுந்தார்கள். பேச்சொலிகள் ஒரே முழக்கமாக எழுந்தன. அவர்கள் கிளர்ச்சியடைந்திருந்தார்கள். அச்சமும் கொண்டிருந்தார்கள். முதியவர்கள் நிமித்திகர்களை நாடிச்சென்று மீண்டும் அவள் வருகையின் விளைவென்ன என்று ஆராயத் தொடங்கினர். பெண்கள் அவள் அழகைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். “வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல்” என்று அவளைப்பற்றி சூதன் ஒருவன் சொல்லிய வரி ஒருநாழிகைக்குள் நகரெங்கும் அறியப்படலாயிற்று.

எரிந்துகொண்டிருக்கும் பெண்ணிடம் காமத்திலாடுவதன் முடிவில்லாத வதையையும் எல்லையற்ற இன்பத்தையும் அடைந்தான் சம்வரணன். அனல் விரிந்த பாலை நிலம் போலிருந்தாள் தபதி. அவன் அவள்மேல் மழையெனப் பொழிந்துகொண்டிருந்தான். மண்ணை அடையும் முன்னரே மறைந்தன நீர்த்தாரைகள். அணையாத விடாயுடன் வியர்த்தும் முனகியும் நெளிந்து மேலெழுந்துகொண்டிருந்தது நிலம். அவன் சொற்களெல்லாம் அனல் ஏறிய சுழல்காற்றில் பறந்து மறைந்தன. அவன் மீண்டும் மீண்டும் விழுந்து உடைந்து சிதறிப்பரந்தான். திரட்டிக்கொண்டு மீண்டும் எழுந்தான். ஒவ்வொன்றும் ஓர் இறப்பு, ஒரு மறுபிறப்பு.

நிறைவின்மை என்னும் கூரலகு கொண்ட மரங்கொத்தி ஆணின் காமம். முடிவின்மை கொண்டு அமைதிகொண்டிருக்கிறது காடு. முடிந்துவிடாத பெண்ணை அடைந்தவன் மீள்வதில்லை. அவன் கண்டடையும்தோறும் அவள் பெருகிக்கொண்டிருந்தாள். வாயில்களைத் திறந்து திறந்து சென்றுகொண்டிருந்தான். துள்ளித்திமிறி கீழே தள்ளி மிரண்டோடும் இளங்குதிரை. மத்தகம் குலுக்கி வரும் பிடி. கால்சுழற்றி இழுத்துச்செல்லும் மலைச்சரிவின் நதி. நகர் நிறைந்து பொழியும் பெருமழை. குவிந்த கருமேக மலைவெளியில் மின்னல்கள். இடியோசையின் முனகல். இருள்வெளியின் கோடி விழிகளின் தவிப்பு. ஒற்றை நிலவின் தனிமை. விடியலில் எஞ்சும் குளிர்காற்று. மென் பாதத்தடங்கள் கொண்ட புதுமணல். அதில் மெல்ல அலை வரைந்து தன்னைக்காட்டும் அடுத்த புயல்.

நகருக்கு வெளியே கங்கையின் கரையில் அவன் அவளுடன் வாழ்வதற்காக ஒரு மாளிகை கட்டப்பட்டது. அங்கே இசையறிந்த சூதர்களும், நடனவிறலியரும், காவியங்கள் சொல்லும் கவிஞர்களும் உடற்கூறு தேர்ந்த மருத்துவர்களும் காமநூல் கற்ற பேடியரும் தங்க துணைமாளிகைகள் அமைக்கப்பட்டன. லேபனக்கலை அறிந்த சேடியரும் தாடனக்கலை அறிந்த சேவகரும் முத்ரணக்கலை அறிந்த இளையோரும் அங்கே அமர்த்தப்பட்டனர். ஒவ்வொருநாளும் அவர்கள் அவன் உடலை நாணிழுத்து சுதிசேர்க்கப்பட்ட யாழென ஆக்கினர். ஒவ்வொரு காலையிலும் தன் உடலில் இருந்து அவன் புதுமுளை கொண்டு எழுந்தான். இமையா விழிகளுடன் புற்றுவாயிலில் காத்திருந்தது நாகம்.

இம்மண்ணின் அத்தனை காமத்தையும் அவர்கள் அறியச்செய்தனர் காமக்கலைஞர்கள். காற்றில் மிதந்து சிறகு துடித்துச் சுழலும் தேனீக்கள் போல இணைந்தனர். கிளைதோறும் துள்ளி அலையும் சிட்டுகுருவிகளாயினர். உச்சித் தனிமையில் கூடும் மலைக்கழுகுகளாயினர். இணைந்து துள்ளியோடி புணரும் மான்களாயினர். நாளெல்லாம் நீளும் நாய்களாக இருந்தனர். மலைப்பாறைகள் என மத்தகம் முட்டி துதிக்கைபிணைக்கும் யானைகளாயினர். பின்னிநெளிந்து ஒற்றைக்குவியலாக ஆகும் நாகங்களாயினர். மண்ணைத் துளைத்து ஆழத்திற்குச் சென்று மண்புழுக்களாயினர். ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறி ஒருவரை ஒருவர் விழுங்கினர்.

இப்புவியில் மூதாதையர் அடைந்த அனைத்துக் காமத்தையும் அவர்கள் அடைந்தனர். பேராண்மை ராமனுடன் சீதை கொண்ட காமம். கோகர்ணத்தின் கங்கை நீரெனத் தூயது அது. புரூரவஸ் ஊர்வசியிடம் அறிந்த காமம் விண்சுமந்து ஒளிர்வது. தேவயானியிடம் யயாதி பெற்ற காமம் பெருகி பேரொலிகொண்டு மலையிறங்குவது. ஆயிரம் மலையருவி போன்றது சந்தனு கங்காதேவியிடம் கொண்ட காமம். மழைக்கால கங்கையென சுழித்தோடுவது இந்திரன் அகலிகையிடம் நுகர்ந்த காமம். தன்னை கரைப்பது சந்திரன் ரோகிணியிடம் கொண்ட காமம். தானன்றி அது எஞ்ச மறைவது துர்க்கை மேல் மகிஷன் கொண்ட காமம். தன் தலையை தானரித்து தாளில் வைக்கும் குன்றாப் பெருங்காமம். அதுவாழ்க!

இதைக்கேளுங்கள் அரசியரே! கைலாய உச்சியிலே அன்னையுடன் கொடுகொட்டி ஆடி நின்றான் அப்பன். ஆடலில் பெருகுவதே பெண்மை என்று அன்று அவன் அறிந்தான். ஆள்பவளாக, ஒறுப்பவளாக, அளிப்பவளாக, விளையாடுபவளாக, பேதையாக அவள் ஒரேசமயம் தோன்றினாள். பேதையுடன் ஆடுகையில் பெருஞ்சினத்துடன் துர்க்கை என வந்தாள். அளிப்பவள் என அணுகினால் ஆள்பவள் வந்து நின்றாள். பின்னர் அவன் கண்டுகொண்டான், அவளை வெல்லும் வழியை. கயிலைப்பனிமலை அடுக்குகளில் தன் ஆடிப்பிம்பங்களை அமைத்தான். தன்னை ஐந்தாகப் பகுத்துக்கொண்டான். அறச்செல்வனாக வந்து ஆள்பவளை ஆண்டான். ஆற்றலாக வந்து ஒறுப்பவளிடம் சமர்கொண்டான். மைந்தனாக வந்து அளிப்பவளிடம் பெற்றுக்கொண்டான். இளஞ்சிறுவனாக வந்து களியாடினான். மழலைபேசி பேதையுடன் இருந்தான். அன்னையின் ஆழத்தில் எழுந்த புன்னகை அவனை அறிந்தது.

அவ்வருடம் அஸ்தினபுரியில் மழை பொய்த்தது. மன்னன் கோல் தொட்ட நாள் முதல் முறைபிறழாதது அது. மழைகொண்டுவரும் மழைப்பறவையை காணவில்லை என்று மக்கள் தேடியிருந்தனர். நிமித்திகர் அது வரும் நாட்களைக் குறித்தனர். இன்றுவரும் நாளை எழும் எனச் சொல்லி உழவர் காத்திருந்தனர். மழைமாதங்கள் நான்கும் கடந்துசென்ற பின்னரும் அது வரவில்லை. கோடை எழுந்தது. அணைந்தது. மீண்டும் வந்தது இரண்டாவது சிறுமழைமாதம். அப்போதும் விண்ணில் எரியே நின்றிருந்தது.

மூதன்னை சொன்னாள், அஸ்தினபுரியில் தபதி கால்வைத்த நாள்முதல் ஒருமுறைகூட ஒருதுளித்தூறலையும் அஸ்தினபுரி கண்டதில்லை என. காலையில் கோலமிட எழுந்து செல்கையில் முற்றத்தில் இளம்பனியின் பொருக்கை அவள் காண்பதேயில்லை என. நிமித்திகர் கூடி அது அவ்வாறே என்றனர். அம்முறையும் நகரில் மழையில்லாமலாயிற்று. குலமூத்தாரும் மூதன்னையரும் பூசகரும் புலவரும் செய்த வேண்டுதல்கள் அனைத்தும் பொய்த்தன. வேதியர் அளித்த அவியெல்லாம் வானில் கரைந்து மறைந்தன. வேதமந்திரங்கள் காற்றில் எழுந்து விலகிச்சென்றன.

மறுவருடம் அஸ்தினபுரியின் வற்றாத மேற்குத்திசை ஏரிகள் வறண்டு வெடித்து புழுதியாயின. மரங்கள் இலைபழுத்து உதிர்ந்து வெறுமை கொண்டன. பறவைகள் ஒவ்வொன்றாக வான்விட்டுச் சென்றன. காடுகளில் யானைகள் கரிய முகத்தில் புழுதியுடன் கலந்த கண்ணீர் வழிய மந்தைகளுடன் நீங்கின. விழிபழுத்த மான்கள் கால்கள் ஓய்ந்து படுத்தன. அவற்றின் குருதி உண்டு சிலநாள் வாழ்ந்த புலிகள் பின் உலர்ந்த கடைவாயுடன் நகத்தடங்கள் புழுதியில் எஞ்ச சென்று மறைந்தன. உயிரற்ற காடு சூழ்ந்த நகரில் மக்கள் வான் நோக்கி இறைஞ்சியபடி ஒவ்வொரு நாளும் விழித்தெழுந்தனர். இருளை நோக்கி கண்ணீர்விட்டபடி இரவை அடைந்தனர்.

மண்ணில் எஞ்சிய இறுதித்துளி நீரையும் உண்டபின் வான் வெப்பம் ஏறி ஏறிவந்தது. இல்லக்கூரைகள் உலர்ந்தன. முரசுத்தோல்கள் உலர்ந்து பொருக்குகளாயின. நகர் மக்கள் அழுத விழிநீரையும் அக்கணமே வானம் உண்டது. காலையென வந்ததே நடுப்பகலாக இருந்தது. முற்றத்தில் வெண்தழலென வெயில் நின்று அலையடித்தது. பின் சொற்களெல்லாம் உலர்ந்து மறைந்தன. எண்ணங்கள் உலர்ந்தழிந்தன. எஞ்சியது உலைத்துருத்தி என வெம்மை ஓடிய மூச்சு மட்டுமே. வெறித்த விழிகளுடன் உயிர்ப்பிணங்களென மக்கள் கூரைநிழல்களில் குவிந்து கிடந்தனர். அவர்களின் வெற்றுச் சித்தங்களில் அனல் பெருகி எழுந்த வெண்ணிற மணல்வெளியில் காற்று ஓசையின்றி அலையடித்துக் கொண்டிருந்தது.

அரசனிடம் சென்று சொல்லலாம் என்றனர் முதற்குடித் தலைவர்கள். அவன் பிறசொற்களை செவி வாங்கும் நிலையில் இல்லை என்றனர் சேவகர். “அரசியை அரசன் பிரிவதை எண்ணியும் பார்க்கமுடியாது. செம்பும் ஈயமும் உருகிக்கலந்து வெண்கலமாக ஆகிவிட்டனர். இனி அவர்களைப் பிரிப்பது இயல்வதல்ல. ஒன்று செய்யலாம். அரசனை குடிகள் இணைந்து முடிநீக்கம் செய்யலாம். அவனிடம் தன் மனைவியை அழைத்துக்கொண்டு நகர்விட்டுச் செல்லும்படி கோரலாம்” என்றார் அமைச்சர் தலைவர்.

மூத்தகுடித்தலைவன் தன் கோலைத் தூக்கிச் சொன்னான் “சந்திரகுலத்து ஹஸ்தியின் நகர் இது. அவர்களின்றி இந்நகர் இல்லை. அவர்களுடன் பிறந்தது அவர்களுடன் அழியட்டும். ஒன்று செய்வோம். இந்நகர்விட்டு விலகிச்செல்பவர்கள் செல்லலாம் என்று முரசாணை எழுப்புவோம். நானும் என் முதுகுடியும் இந்நகருடனும் இதன் சந்திரகுலத்துடனும் அமுதகலசக்கொடியுடனும் இங்கேயே இறந்து மட்குவோம். நாங்கள் உண்டது இம்மண்ணின் உப்பை. எங்கள் உப்பும் இங்கு எஞ்சியிருக்கட்டும். நாளை நல்லூழ் எழுந்து மழைபெய்யும்போது இங்கே முளைத்தெழும் புல்லில் எங்கள் உப்பு உயிர்பெற்று வரட்டும்.” அவன் குலத்தவர் கைகளைத் தூக்கி “ஆம் ஆம் ஆம்” என்றனர். அஸ்தினபுரியில் முரசறையப்பட்டது. அந்நகர்குடிமக்களில் ஒருவர்கூட நகர்விட்டு செல்லவில்லை.

“அவ்வண்ணமெனில் நாம் வசிட்டரையே சரண் அடைவோம். சூரியன் மகளை அரசியாக்கிய அவரே நமக்கொரு வழி சொல்லட்டும்” என்றார் முது நிமித்திகர். அதன்படி ஏழு தூதர்கள் சென்று விந்தியமலையடுக்கின் நடுவே காட்டுக்குள் இருந்த வசிட்டகுருகுலத்தைக் கண்டுபிடித்து அங்கே மாணவர்களுடன் இருந்த வசிட்டரிடம் அனைத்தையும் கூறினர். வசிட்டர் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அஸ்தினபுரிக்கு வந்தார். இடிநெருப்பு விழுந்ததுபோல் கருகிக்கிடந்த அஸ்தினபுரியைக் கண்டதும் அவர் கண்ணீர் விட்டார்.

கங்கைக்கரை அரண்மனைக்குச் சென்ற வசிட்டர் அங்கே ஆதுரசாலையில் மருத்துவர்களால் லேபனம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த சம்வரணனை பார்த்தார். சந்தனமும் மஞ்சளும் வேம்பும் கலந்த லேபனத்தை உடலெங்கும் பூசி பெரிய கமுகுப்பாளையில் படுக்கவைக்கப்பட்டிருந்த சம்வரணன் மிகவும் இளைத்திருந்தான். கண்களைச் சுற்றி கருமை நிறைந்த குழி விழுந்திருந்தது. கன்னங்கள் ஒட்டியமையால் மூக்கு புடைத்திருந்தது. மார்பிலும் தோளிலும் எலும்புகள் எழுந்திருந்தன. “அரசே, நான் வசிட்டன்” என்று வசிட்டர் சொன்னபோது கனத்த இமைகளைத் திறந்து “அமைச்சரிடம் அனைத்தையும் பேசிக்கொள்ளுங்கள் முனிவரே. தங்கள் சொற்கள் இங்கே ஆணையெனக் கொள்ளப்படும்” என்றான். சரிவில் விரைந்திறங்கும் ரதத்தில் நின்றபடி பேசுவதுபோலிருந்தது அவன் குரல்.

வசிட்டர் அந்தப்புரத்திற்குச் சென்று தபதியை சந்தித்தார். “அரசி துயில்கிறாள் என்றால் பின்னர் சந்திக்கிறேன்” என்றபோது முதியசேடி “அவர்கள் துயில்வதே இல்லை முனிவரே. இரவெல்லாம் வெள்ளை ஆடை அணிந்து வெண்மலர்கள் சூடி அரசருடன் இருக்கிறார். அவர்கள் இருக்கும் மலர்க்குடிலில் காலையொளி நிறைந்திருக்கும். பகலில் அரசர் ஆதுரசாலைக்குச் சென்றபின் அந்தப்புரம் வந்து நீராடி செவ்வாடை அணிந்து செம்மலர்கள் சூடி உப்பரிகையில் சென்று அமர்ந்திருக்கிறார். காலையில் கிழக்கையும் மதியம் உச்சியையும் மாலையில் மேற்கையும் நோக்கிக்கொண்டிருப்பார். அவர் முகம் சூரியனை நோக்கி நிமிர்ந்திருக்கும். கொதிக்கும் உலோகக்குழம்பு போன்ற வெயில் அவரை மேலும் அழகு கொள்ளச் செய்கிறது” என்றாள்

வசிட்டர் புன்னகைத்து “வெயில்பட்டு சூரியகாந்தி ஒளி கொள்கிறது அல்லவா?” என்றபின் அரசி அமர்ந்திருந்த உப்பரிகைக்குச் சென்றார். அங்கே நிலவில் சுடரும் சுனை என அமர்ந்திருந்த தபதியை அணுகி வணங்கினார். நலம்விசாரித்தபின்னர் அவளிடம் அவள் சம்வரணனை மணந்து எத்தனை காலமாயிற்று தெரியுமா என்றுகேட்டார். “சென்ற கோடைகாலத்தில் அல்லவா?” என்றாள் தபதி. “இல்லை, பன்னிரு வருடங்கள் கடந்துவிட்டன” என்றார் வசிட்டர். தபதி திகைத்து தன் நெஞ்சில் கைவைத்து “காலத்தை இப்படிக் குறுக்கியவர் யார்?” என்றாள். “காமம் காலத்தை உண்ணும் ஆற்றல்கொண்டது” என்ற வசிட்டர் “பன்னிரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் நான் இங்கு வந்தேன்” என்றார்.

வியந்து “யார்?” என்றாள் தபதி. சேடியிடம் ஒரு ஆடி கொண்டுவரச்சொல்லி அதை அவளிடம் காட்டி வசிட்டர் சொன்னார் “இதோ இவன்தான்.” அந்த ஆடிக்குள் சூரியஒளிபட்ட பளிங்குச்சிலை போல ஒரு குழந்தை தெரிந்தது. அது சம்வரணனின் அதே முகத்துடன் இருந்தது. “யார் இவன்? எங்குளான்?” என்றாள் தபதி. “அரசியே, மண்ணில் என்றும் நினைவுறப்போகும் பெருங்குலம் ஒன்றின் முதல்விதை இவன். இவனை குரு என்று அழைப்பார்கள் உலகத்தவர். சந்திரகுலத்தின் அடுத்த மைந்தன் இப்போது உங்கள் வயிற்றுக்குள் காத்திருக்கிறான்” என்றார் வசிட்டர்.

அந்த ஆடியை வாங்கி நோக்கியபடி தபதி உளம்விம்மி கண்ணீர்விட்டாள். அந்த நீர்த்துளிகள் கன்னங்களில் வழிந்து மண்ணில் விழுந்தபோது அஸ்தினபுரியின் நகர்மேல் கருமேகங்கள் குவிந்தன. மக்கள் கூவி ஆர்த்தபடி கைகளை விரித்து நடமிட்டுக்கொண்டு தெருக்களில் இறங்கினர். கண்ணீரும் சிரிப்புமாக மாறிமாறி கட்டித்தழுவிக்கொண்டனர். நகரின் வெம்மை நிறைந்த குவைமாடமுகடுகளை கூரைகளை கோட்டைகளை காய்ந்து வெறும்கோல்களாக நின்ற மரங்களை புழுதி நிறைந்த தெருக்களை கதறும் மக்களை தழுவி மென்மையாக மழைபொழியத் தொடங்கியது. பகலை நிறைத்து இரவை மூடி மறுநாள் சூரியனை முற்றிலும் விலக்கி மழை நின்றது. பதினைந்துநாள் ஒரு சூரியக்கிரணம்கூட அஸ்தினபுரியின்மேல் படவில்லை. பின்னர் மேகத்திரை வழியாக வந்த சூரியன் அன்னை முந்தானை விலக்கி நோக்கும் குழவி போலிருந்தான்.

தபதி குருவை கருவுற்றாள். கருவுற்ற நாள் முதல் அவள் உடல் குளிர்ந்து வந்தது. அவள் முலைகள் ஊறி தண்பால் வழிந்தது. அவள் தன் மைந்தனுடன் நகர் நுழைந்த அன்று கொந்தளிக்கும் நீர்த்திரையால் நகர் மூடியிருந்தது. அதன்பின் ஒருநாளும் அஸ்தினபுரியின் மண் ஈரம் காய்ந்ததில்லை. அரண்மனையின் மாடமுகட்டில் தவளைகள் முட்டையிட்டுப் பெருகின. நகரின் அத்தனைப் படைக்கலங்களிலும் பச்சைப்பசும் பாசி படிந்தது. விறலி தன் மணிக்கோலை கையில் தட்டி “குளிர்நீர் சுனையில் எழுந்த மலர் போல குரு வளர்ந்து அஸ்தினபுரியின் அரியணையை நிறைத்தார். அவர் பெயர் வாழ்க! குருகுலம் என்றும் இப்புவியில் வாழ்க! அவர்கள் செங்கோலில் ஒளிசேர்க்கும் அறம் வாழ்க! அவ்வண்ணமே ஆகுக! ஓம் ஓம் ஓம்” என்று பாடிமுடித்தாள்.

இணைந்து இசைத்த யாழ்களும் முழவுகளும் மேலும் மீட்டி அமைந்தன. மாபெரும் இசைக்கருவி போல கார்வை நிறைந்திருந்த கூத்தரங்கும் மெல்ல அமைதியாயிற்று. பிருஷதி முகம் மலர்ந்து “பலமுறை கேட்ட கதை. இன்று புதியதாக அதை மலரச்செய்தாய் விறலி. உன்னை வாழ்த்துகிறேன்!” என்றாள். விறலியின் அன்னை “தங்கள் அருள் அரசி” என்று வணங்கினாள். சேடியரும் செவிலியரும் மெல்லியகுரலில் உள்ளக்கிளர்ச்சியுடன் பேசும் குரல்கள் கலந்து ஒலித்தன. முதியசேடி பெரிய தாலத்தில் விறலிக்கான பரிசில்களை கொண்டுவந்து அரசியின் அருகே வைத்தாள். யாழினியர் திருகிகளையும் ஆணிகளையும் சுழற்றி தங்கள் யாழ்நரம்புகளை தளர்த்தினர். முழவுகள் மெய்ப்பை அணிந்தன.

திரௌபதி “விறலியே, தழல்வீரம் கொண்ட சூரியமைந்தன் ஒருவன் பிறந்துள்ளான் என்று நிமித்திகர் சொல்கிறார்களே, நீ அறிவாயா?” என்றாள். விறலியின் அன்னை “ஆம், இளவரசி. அச்செய்தி ஆரியவர்த்தம் எங்கும் பேசப்படுகிறது” என்றாள். “அவன் யார்?” என்றாள் திரௌபதி. “அது செவிச்செய்தியாகவே உள்ளது அரசி. குதிரைச்சூதன் ஒருவனுக்குப் பிறந்தவன் அவன் என்று சொல்கிறார்கள். அவன் பெயர் கர்ணன். துரோணரிடம் வில் கற்றான். சபையில் எழுந்து அர்ஜுனனை வென்றான். அங்கநாட்டுக்கு அரசனாக இன்றிருக்கிறான்.” திரௌபதி “அவனே சூரிய மைந்தன் என்று எவர் சொன்னது?” என்றாள். “அதை அறிய அவனை நோக்கினாலே போதும் என்கின்றனர். வில்குலைத்து அவன் அவை நின்றபோது அவனுடன் சூரியனும் நின்றதைக் கண்டதாக அஸ்தினபுரியினர் சொல்லிக்கொள்கிறார்கள்.”

திரௌபதி தலையசைத்தபின் உடையை ஒதுக்கிப்பற்றியபடி எழுந்துகொண்டாள். நீண்டகுழலை பின்னால் தூக்கிப்போட்டு விழிசரித்து அன்னையை நோக்கினாள். பிருஷதி பரிசில்களை எடுத்து விறலியருக்கு கொடுக்கத் தொடங்கினாள்.

பகுதி ஏழு : பூநாகம் - 1

காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர்.

நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி காற்றிலாடின. கொன்றையும் வேங்கையும் பூக்கும் காலமாதலால் தெருக்களெல்லாம் பொன்பொலிந்திருந்தன. இல்லங்களில் தோரணங்கள் கட்டி கோலங்கள் இட்டிருந்தனர். மாளிகைகளின் மேல் கொடிகள் பறக்கும் ஒலி சிறகுகளின் ஓசையென கேட்டுக்கொண்டிருந்தது. காலையின் குளிர்காற்றில் காத்திருந்தவர்களின் ஆடைகளும் குழல்களும் அசைந்தன. இனிய சூழல் நல்ல நினைவுகளை கிளர்த்தியது. முதியவர் ஒருவர் “முன்பொருநாள் இதேபோன்று பீஷ்மர் நகர் நுழைந்தார். அன்று நான் என் அன்னையின் இடையில் அமர்ந்து அந்த ஊர்வலத்தை நோக்கினேன்” என்றார். “பாண்டவர்கள் சதசிருங்கம் விட்டு வந்த ஊர்வலத்தை நான் பார்த்தேன்...” என்று ஓர் இளைஞன் சொன்னான். “அன்று இளையவர் தீப்பந்தம்போலத் தெரிந்தார் என்று சூதன் பாடினான்.”

அரண்மனைக்கோட்டை முகப்பில் காஞ்சனம் முழங்கியது. தேர்முற்றத்தில் காத்து நின்றிருந்த அணிப்பரத்தையரும் மங்கலச்சேவகர்களும் சூதர்களும் உடல் நிமிர்ந்து நின்றனர். சேவகர்கள் இடைநாழியை நோக்கி சென்றனர். விதுரரும் சௌனகரும் ஒருவருக்கொருவர் பேசியபடி விரைந்து வந்தனர். சௌனகர் “அனைத்தும் சித்தமல்லவா?” என்றார். சேவகர்தலைவன் “கிளம்பவேண்டியதுதான் அமைச்சரே” என்றான். அப்போது வலப்பக்க இடைநாழிவழியாக திருதராஷ்டிரரின் இளம் சேவகனான சுமித்ரன் ஓடிவந்தான். “அமைச்சரே, அரசரும் எழுந்தருள்வதாக சொல்கிறார்” என்றான். “அவைக்கூடம் விட்டு அவர் கிளம்பிவிட்டிருக்கிறார்.”

விதுரர் “அது வழக்கமில்லையே... அரசர் வந்து படைத்தளபதிகளை வரவேற்கலாகாது” என்றார். “அதை மூத்த அணுக்கச்சேவகர் விப்ரர் அரசரிடம் சொன்னார். அதற்கு நான் அரசனுமில்லை, அவர்கள் படைத்தலைவர்களுமில்லை என அரசர் மறுமொழி சொன்னார்” என்றான் சுமித்ரன். விதுரர் புன்னகையுடன் “அவ்வாறெனில் வரட்டும்” என்றார். சௌனகர் மெல்லியகுரலில் “மிகையாகிச் செல்பவை எதிர்த்திசைக்கு திரும்பக்கூடும் அமைச்சரே” என்றார். “அன்பு கூடவா?” என்று புன்னகையுடன் விதுரர் கேட்டார். “ஆம், முதன்மையாக அன்புதான் எல்லை மீறலாகாது. அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது.”

விதுரர் “அமைச்சர்கள் இருளை நோக்கவேண்டியவர்கள்... நீர் அமைச்சராகவே பிறந்தவர்” என்றார். “ஆம், நான் கற்ற கல்வியும் அதுவே. உலகாயதத்தையே என் தந்தை முதலில் கற்பித்தார். பின்னர் வேதமும் வேதாந்தமும் கற்றுத்தெளிந்து உலகாயதமே மெய்யறிவு என்பதை உறுதிசெய்துகொண்டேன்” என்றார் சௌனகர். விதுரர் “நல்ல கல்வி” என்று சொல்லி நகைத்தார். சௌனகர் திரும்பி காத்திருந்தவர்களிடம் கையசைத்து பொறுத்திருக்கும்படி சொன்னார். திருதராஷ்டிரர் செல்வதற்குரிய அரச ரதம் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் முற்றத்தின் நடுவே வந்து நின்றது.

சௌனகரின் சேவகன் சதுரன் வந்து பணிந்து உதடு மெல்ல அசைய “இளைய அரசி குந்திதேவியும் வாயிலுக்குச் செல்கிறார்கள்” என்றான். விதுரர் அதைக்கேட்டு புருவம் தூக்கி “இளைய அரசியா?”என்றார். “ஆம், அது மரபல்ல என்று சொல்லப்பட்டதும் வெண்திரையிடப்பட்ட பல்லக்குக்குள்தான் குந்திதேவி இருப்பார்கள் என்று அவர்களின் அணுக்கச்சேடி பத்மை சொல்லிவிட்டார்கள். ஆகவே...” என்றான் சதுரன். சௌனகர் திரும்பி “ஏதோ ஒன்று எங்கோ முறுகிக்கொண்டிருக்கிறது அமைச்சரே” என்றார். “நீர் வீண் எண்ணங்களை விட்டுவிட்டு நடக்கவேண்டியதைப் பாரும்” என்றார் விதுரர். “இங்கே தன் வளைக்குள் ஓநாய் ஒன்று காத்திருக்கிறது... அதனுடன் குள்ளநரி ஒன்று வாழ்கிறது” என்று சௌனகர் முணுமுணுத்தார்.

கொம்பும் குழல்களும் எழுந்தன. இளங்களிறின் பிளிறல்போல வலம்புரிச்சங்கின் ஓங்கிய ஓசை எழுந்தமைய குறுமுரசு ஒலியுடன் செம்பட்டுப் பாவட்டாக்களும் கொடிகளும் ஏந்திய எட்டு காவலர்கள் வந்தனர். அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிக்குப்பின்னால் திருதராஷ்டிரரின் அரவக்கொடியை ஏந்திய வீரன் நடந்து வர சஞ்சயன் கைபற்றி வந்த திருதராஷ்டிரரின் தலை அனைவருக்கும் மேலாகத் தெரிந்தது. “குருகுலத்தின் பெருங்களிறு” என்றார் சௌனகர். “நிகரென இனியொரு மத்தகத்தை பாரதவர்ஷம் காணப்போவதில்லை.” விதுரர் சற்றே சிடுசிடுப்புடன் “நாமே சொல்லக்கூடாது பேரமைச்சரே. மானுடன் தருக்குவதை தெய்வங்கள் விழைவதில்லை” என்றார்.

முற்றத்தை திருதராஷ்டிரர் வந்தடைந்ததும் விதுரர் அருகே சென்று பணிந்து “அரசே, பணிகிறேன்” என்றார். “விதுரா, மூடா, உன்னை நான் காலையில் இருந்தே தேடுகிறேன்...” என்றார் திருதராஷ்டிரர். “பணிகள்...” என விதுரர் முனகினார். “உன் இளைய மைந்தனுக்கு நான்குநாட்களாக உடல்நலமில்லை, தெரியுமா உனக்கு? சப்தசிந்துவுக்குச் சென்ற இடத்தில் அவனை சுரதேவதை பற்றிவிட்டது. சுருதை வருந்துகிறாள் என்று விப்ரன் சொன்னான். நானே என் மருத்துவரை அனுப்பிவைத்தேன். நேற்றுமாலை சென்று அவனைப் பார்த்தேன். நெற்றியில் தொட்டால் எரிகலம் போல வெம்மை அடிக்கிறது. என்னைக் கண்டதும் தந்தையே என்றான். கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் அவனருகே அமர்ந்திருந்தேன். அவன் உன்னை தேடுகிறான் என்று தோன்றியது.”

“அவர்கள் என்னைத் தேடுவதில்லை அரசே” என்றார் விதுரர் புன்னகையுடன். “தங்கள் கைகள் தொட்டால் கண்ணீர்விடாத மைந்தர் எவரும் இந்த நகரில் இன்றில்லை. தங்களுக்குமேல் ஒரு தந்தையை எவரும் இங்கு வேண்டுவதுமில்லை.” எரிச்சலுடன் கையை வீசி “அப்படி என்னதான் செய்தாய் நேற்றிரவெல்லாம்?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் மெல்லியகுரலில் “அனைத்தையும் நானே வந்து சொல்லலாம் என்றிருந்தேன். நம் மைந்தர்கள் சௌவீரநாட்டின் யவன அரசர்களை வென்று மீண்டிருக்கிறார்கள். அந்த வெற்றியின் விளைவுகளென்ன என்று பழைய சுவடிகளை ஆராய்ந்து மேற்குத்திசையெங்கும் ஒற்றர்களை அனுப்பியிருந்தேன். அனைத்து பருந்தோலைகளையும் வாசித்து முடிக்கையில் விடிந்துவிட்டது.”

“வெற்றியின் விளைவு என்ன என்று நீ சொல்லி அறியவேண்டுமா?” என்று திருதராஷ்டிரர் நகைத்தார். “உண்டாட்டு! வேறென்ன? பீமன் வருவதற்காகவே நான் காத்திருக்கிறேன்.” விதுரர் “அப்படியல்ல அரசே, தோல்விகூட சற்று கால இடைவெளியை அளிக்கும். வெற்றி அதை அளிப்பதில்லை. அது நம் முதுகுக்குப்பின் ஆயிரம் ஈட்டிகளை வரச்செய்கிறது. கணநேரம் தயங்கிநிற்கக்கூட நம்மை அது விடுவதில்லை” என்றார்.

திருதராஷ்டிரர் உதட்டைச்சுழித்து “அது விடுகிறதோ இல்லையோ, நீங்கள் விடுவதில்லை. அமைச்சர்களை கையாளத்தெரிந்தவனே நல்ல அரசன். நான் அதைக் கற்றிருக்கிறேன். சஞ்சயா, மூடா!” என்றார். சஞ்சயன் “அரசே” என்றான். “எவ்வாறு தெரியுமா?” என்றார் திருதராஷ்டிரர். “சொல்லுங்கள் அரசே!” திருதராஷ்டிரர் “அவர்கள் சொல்வதை கேட்பேன். ஆனால் ஒரு சொற்றொடரைக் கேட்கையில் முந்தைய சொற்றொடரை முற்றிலும் மறந்துவிடுவேன்” என்றபின் தோளில் ஓங்கி ஒலியுடன் அறைந்து உரக்க நகைத்தார். சஞ்சயன் புன்னகையுடன் விதுரரை நோக்க அவரும் புன்னகைசெய்தார்.

“செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் அவர் கைகளைப்பற்றி மெல்ல படிகளில் இறக்கினான். அவன் கண்ணும் நாவும் அவருடன் முழுமையாகவே இணைந்துவிட்டிருந்தன. அவனையறியாமலேயே அவன் அவரது பாதையை தன் விழிகளால் தொட்டு சொற்களாக்கிக் கொண்டிருந்தான். “நான்கு வாரை தொலைவில் உங்கள் கொடிரதம் நின்றுகொண்டிருக்கிறது அரசே. அதன் சாரதி வெண்பட்டாடையுடன் செந்நிறத்தலைப்பாகையுடன் கையில் சம்மட்டி ஏந்தி நின்றிருக்கிறான். வெண்குதிரைகள் நான்கு பூட்டப்பட்டிருக்கின்றன. வலக்குதிரை பொறுமையிழந்து வலது முன்னங்காலால் செங்கல்தரையை தட்டிக்கொண்டிருக்கிறது. கரியகுதிரையில் ஏழு காவலர்கள் முன்னால் நின்றிருக்கின்றனர். எழுவர் பின்னால் நின்றிருக்கின்றனர். உங்கள் கொடியேந்தியும் கொம்பூதியும் முழவுக்காரனும் அவர்களுக்கு முன்னால் தனி ரதங்களில் நின்றிருக்கின்றனர். விதுரரும் சௌனகரும் செல்வதற்கான ரதங்கள் தனியாக நின்றிருக்கின்றன....”

“விதுரா, மூடா, என் ரதத்தில் நீயும் ஏறிக்கொள்” என்றார் திருதராஷ்டிரர். ”நான் உன்னை கையால் தொட்டே நெடுநாட்களாகின்றன.” விதுரர் சௌனகரிடம் தலையசைத்துவிட்டு “ஆணை அரசே” என்றபின் அருகே வந்தார். திருதராஷ்டிரர் தன் பெரிய கையைத் தூக்கி விதுரர் தோள்மேல் வைத்து மெல்ல வருடி “எலும்புகள் தெரிகின்றன. ஏன் உன் உடலை இப்படி மெலியவைக்கிறாய்? நீ உண்பதில்லையா என்ன?” என்றார். “பசியளவுக்கு உண்கிறேன் அரசே” என்றார் விதுரர். "உடற்பயிற்சி செய்... நாள்தோறும் காலை என் ஆயுதசாலைக்கு வா... நான் உனக்குப் பசியை அளிக்கிறேன்.” விதுரர் சஞ்சயனை நோக்கி புன்னகை செய்தார். திருதராஷ்டிரர் ரதத்தில் ஏறிக்கொண்டு “சஞ்சயா” என்றார். “நாம் கிளம்பவிருக்கிறோம் அரசே” என்றான் சஞ்சயன்.

ரதங்கள் அரண்மனை எல்லையை கடந்ததும் “ஏதோ சொல்லவந்தாய் சொல்” என்றார் திருதராஷ்டிரர். “சௌவீரர்களை வெல்லலாம் என்று சொன்னவன் நீ அல்லவா?” சஞ்சயன் பேச்சை நிறுத்த “நீ சொல் மூடா. என்னால் காட்சிகளை உன் சொல்லில் பார்த்தபடி இவனிடம் உரையாடவும் முடியும்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அரசே, நான் சௌவீரர்களை வெல்லும்படி பாண்டவர்களை அனுப்பியது ஒரே காரணத்தால்தான். அவர்கள் பீதர்களின் வணிகப்பாதையை கட்டுப்படுத்துகிறார்கள். ஆகவே பிற மன்னர்கள் எவரைவிடவும் கருவூலத்தை நிறைத்திருக்கிறார்கள்” என்றார்.

“ஆனால் அதைக்கொண்டு அவர்களால் பெரிய படையை உருவாக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்களின் நாடு பாரதவர்ஷத்தின் வடமேற்கே இமயமலைகளின் அடியில் உள்ளது. அங்குள்ள குளிரையும் கோடையின் வெயிலையும் தாங்கும் ஆற்றல் பிறநிலத்து மக்களுக்கு இருப்பதில்லை. கொழுத்த மிருகமே எளிய இலக்கு. அது சிறந்த உணவு, அதேசமயம் விரைவற்றது” என்றார் விதுரர். “ஆனால் சௌவீரர்களை நாம் எளிதில் மதிப்பிட்டுவிடமுடியாது. அவர்கள் செந்தழல்நிறமும் செந்நிறக்குழலும் நீலக்கண்களும் கொண்டவர்கள். அவர்களின் தோன்றிடம் மேற்கே சோனகர்களின் பெரும்பாலை நிலங்களுக்கு அப்பால் வெண்பனி சூழ்ந்த யவனநாட்டில் என்கிறது ஜனகராஜரின் ராஷ்ட்ரநீதி.”

“அவர்கள் மாமன்னர் திலீபரின் காலகட்டத்தில் வடமேற்குமலையடிவாரங்களில் வந்து குடியேறியவர்கள். ரகுவாலும் பின்னர் ரகுகுலத்து தோன்றல் லட்சுமணனாலும் வெல்லப்பட்டவர்கள். யவனர்கள் என்பதனால் இன்றுவரை பாரதவர்ஷத்தின் பதினாறு ஜனபதங்களுக்கும் ஐம்பத்தாறு அரசுகளுக்கும் வெளியே எந்த உறவுமில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதுவரை மலைகளின் பாதுகாப்பை நம்பி தங்களைக் காத்துக்கொள்வதே அவர்களின் இலக்காக இருந்தது. இன்று அவர்களின் கருவூலங்கள் வீங்கிப்பெருக்கையில் பாரதவர்ஷத்தின் கீழ்நிலங்கள் மேல் அவர்களின் விழி பதிகிறது” என்றார் விதுரர்.

சஞ்சயன் “நாம் கிழக்குவீதியை அடைந்துவிட்டோம் அரசே. கொன்றையும் வேங்கையும் உதிர்த்த மலர்களின் பொற்கம்பளம் மீது கொடிகளின் நிழல்கள் ஆடும் செங்கல் தரையில் ரதம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்றான். “கோட்டைமேல் பாண்டவர்களின் கொடிகள் ஆடுகின்றன. பார்த்தனின் வானரக்கொடி நடுவே ஓங்கிப் படபடக்கிறது. அப்பால் எரியம்புகள் எழுந்து வானில் வெடிக்கின்றன. படைகள் நெருங்கிக்கொண்டிருப்பதை அவை காட்டுகின்றன.” திருதராஷ்டிரர் “என் மைந்தர்கள் எங்குள்ளனர்?” என்றார். "அவர்கள் துச்சாதனர் தலைமையில் கோட்டைக்கு அப்பால் முகமுற்றத்தில் நின்றிருக்கின்றனர் என்று வாழ்த்தொலிகளில் இருந்து தெரிகிறது” என்றான் சஞ்சயன்.

“சொல்” என்று விதுரரிடம் சொன்னார் திருதராஷ்டிரர். “சௌவீரர்களுக்குத் தேவையானது கடலைத் தொடும் ஒரு நிலம். ஆகவே கூர்ஜரத்தை வெல்ல எண்ணுகிறார்கள். சிந்துவை கைப்பற்றி தேவபாலபுரம் வரை கப்பல் செல்லும் பாதையை அவர்கள் அடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களை நாம் நெருங்கமுடியாது. சிந்துவின் கரைமுழுக்க காவல்படைகளை அமைத்துவிடுவார்கள்” என்றார் விதுரர். திருதராஷ்டிரர் “ஆம்” என்றார். “ஆகவேதான் அவர்களை இப்போதே வென்றுவிடவேண்டுமென எண்ணினேன்" என்றார் விதுரர்.

“யவனர்கள் என்றாலும் அவர்களுக்குள் இருவேறு இனங்கள் உள்ளன. தட்சிண சௌவீரத்தை ஆளும் ஹரஹூண குலத்தைச் சேர்ந்த விபுலன் மேற்கிலிருந்து வந்தவன். உத்தர சௌவீரத்தை ஆளும் தத்தமித்ரன் வடக்குப் பெரும்புல்வெளிகளில் வாழும் தார்த்தர்கள் என்ற இனத்தைச் சேர்ந்தவன். அவர்கள் நூறாண்டுகளாக ஒருவரை ஒருவர் விலக்கிவைத்திருக்கிறார்கள். விபுலன் தூதர்களை அனுப்பி மேற்கே பனிநாடுகளில் இருந்து தன் ஹரஹூண குலத்தைச் சேர்ந்த பெண்களைக் கொண்டுவந்தே இளவரசர்களுக்கு மணம்புரிவிக்கிறான். தத்தமித்ரன் வடக்கிலிருந்தே பெண் கொண்டு வருகிறான்.”

“இப்போது அவர்களின் அமைச்சர்கள் இருகுலங்களும் ஒன்றுடன் ஒன்று இணையவேண்டுமென பேசிவருகிறார்கள். இமயமலைச்சரிவில் பால்ஹிகநாட்டின் கபிசாபுரி என்னும் ஊரில் ஒரு சந்திப்பை ஒருங்குசெய்திருந்தார்கள். இருகுலங்களும் இணைவதற்கு முன் நான் பாண்டவர்களை அனுப்பினேன்” என்றார் விதுரர். “முதலில் தட்சிண சௌவீரநாட்டை வென்று விபுலனை களத்திலேயே கொன்றுவிடவேண்டுமென்று அர்ஜுனனிடம் சொல்லியிருந்தேன். விபுலனின் மைந்தன் இளையோன். அவன் வலுப்பெற்றுவர இருபதாண்டுகளாகும். அதன்பின் தார்த்தனாகிய தத்தமித்ரனை அர்ஜுனன் வென்றான்.”

“இனி அஞ்சுவதற்கேது உள்ளது?” என்றார் திருதராஷ்டிரர். “மகதம் இப்போது குல எல்லைகளை மீறி சௌவீரர்களுடன் மண உறவுகொள்ள முடியும். ஏனென்றால் ஜராசந்தன் ஆசுர குலத்தின் குருதி கொண்டவன். அவனை குலவிதிகள் கட்டுப்படுத்தாது. ஆகவே சௌவீரத்தின் இளவரசியர் அனைவரையும் கவர்ந்துவரச் சொல்லியிருக்கிறேன். இல்லையேல் அவர்களில் ஒருத்தியை ஜராசந்தன் மணம்புரிந்துகொள்வான். அதன்மூலம் சௌவீரத்தை தன்னுடன் சேர்த்துக்கொள்வான்... மாளவனும் கூர்ஜரனும் சௌவீரனுக்கு தெரியாத தூதுகள் அனுப்பக்கூடும்” என்றார் விதுரர். “ஆம், ஆனால் இதெல்லாமே கணிதங்கள். எண்ணி எண்ணி சிலந்தி கட்டும் வலைகள். சிறுபூச்சிகளுக்கானவை அவை. வண்டு வலையை அறுத்துச் செல்வது. என் கரியோன் ஆற்றல்மிக்க சிறகுகள் கொண்ட கருவண்டு அல்லவா?” என்றார் திருதராஷ்டிரர்.

“யாதவ அரசியின் வெண்ணிறப்பல்லக்கு முற்றத்தின் மறுபக்கம் நின்றிருக்கிறது. அங்குள்ள வெண் திரையிடப்பட்ட சிறு பந்தலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நமக்கு நேர்முன்னால் மார்த்திகாவதியின் கொடி பறக்கிறது. பந்தலுக்கு வெளியே அணுக்கச்சேடி பத்மை நின்றிருக்க அருகே முதியவளான மாலினி நின்றிருக்கிறாள்” என்றான் சஞ்சயன். “நன்று நன்று... அவள் உள்ளம் பொங்குவதை என்னால் உணரமுடிகிறது. மைந்தர் வென்றுவருவதைக் காண அவள் முறைமீறி வந்தது மிகச்சிறந்த செயல்... என்னாலேயே அரண்மனையில் அமர்ந்திருக்க இயலவில்லையே” என்றார் திருதராஷ்டிரர்.

குடிமக்களின் வாழ்த்தொலி சூழ்ந்து ஒலிக்க அவர்கள் இறங்கி அங்கே அமைக்கப்பட்டிருந்த பட்டுப்பந்தலில் சென்று நின்றுகொண்டனர். பந்தலில் முன்னதாகவே சகுனி வந்து நின்றிருந்தார். அவருக்குப்பின்னால் அணுக்கச்சேவகர் கிருதரும் அப்பால் சகுனியின் உடலின் நிழலுக்குள் ஒடுங்கியவராக கணிகரும் நின்றிருப்பதை விதுரர் கண்டார். திருதராஷ்டிரரை சகுனி முன்வந்து வணங்கி அழைத்துச்சென்றார். விதுரர் அரசருக்கு வலப்பக்கம் நின்றுகொள்ள சகுனி இடப்பக்கம் நின்றுகொண்டார். சகுனி “முறைமீறியதாக இருப்பினும் தாங்கள் வந்தது சிறப்பே” என்றார். கணிகர் மெல்லியகுரலில் “வென்றுவந்த சௌவீர நாட்டு மணிமுடியை அரசரின் கால்களில் பாண்டவர்கள் வைப்பதை அஸ்தினபுரியின் மக்களும் பார்க்கட்டுமே” என்றார். திருதராஷ்டிரர் உரக்க நகைத்து “நன்கு சொன்னீர் கணிகரே” என்றார்.

கோட்டைமேல் கொடிகள் மாறின. பெருமுரசின் தாளம் விரைவாகியது. மக்களின் வாழ்த்தொலிகள் உரத்தன. கோட்டையின் பெருவாயில் வழியாக முதலில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி ஏந்திய குதிரைவீரன் பெருநடையில் உள்ளே வந்தான். வாழ்த்தொலிகளாலும் வாத்தியமுழக்கங்களாலும் அவன் அடித்துவரப்படுவதுபோலத் தோன்றியது. அதைத்தொடர்ந்து பன்னிரு குதிரைவீரர்கள் அணிப்பட்டங்களும் பாவட்டாக்களும் கொடிகளும் ஏந்தி பாய்ந்துவந்தனர். தொடர்ந்து தருமனின் நந்தகியும் உபநந்தகியும் கொண்ட வெண்கொடியும் பீமனின் சிம்மக்கொடியும் அர்ஜுனனின் வானரக்கொடியும் ஏந்திய மூன்று குதிரைவீரர்கள் வந்தனர். நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் ஏந்திய இருவர் தொடர்ந்து வந்தனர். ஒவ்வொரு கொடி தெரியும்போதும் மக்கள் அவர்களின் பெயர்களைச் சொல்லி வாழ்த்தினர்.

பாண்டவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டதும் திருதராஷ்டிரர் தன் கனத்த பெருங்கைகளை தலைக்குமேல் தூக்கியபடி தலையை ஆட்டினார். “அரசே... அரசே” என்று அருகே நின்ற சௌனகர் மெல்லக்கூவியதை அவர் பொருட்படுத்தவில்லை. விதுரர் சௌனகரை நோக்கி புன்னகை செய்தார். “பீமன் எங்கே? எங்கே பீமன்?” என்று திருதராஷ்டிரர் திரும்பி சஞ்சயனிடம் கூவினார். “அரசே, அவர்கள் இன்னும் வாயிலை கடக்கவில்லை” என்றான் சஞ்சயன். “அங்கே என்னதான் செய்கிறார்கள்?” என்றார் திருதராஷ்டிரர் எரிச்சலுடன். “அரசே, அவர்கள் நகர்நுழையும் மங்கலச்சடங்குகள் சில உள்ளன. வெளியே கௌரவர்கள் அவற்றை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் விதுரர்.

“அவர்கள் சௌவீரர்களின் மணிமுடிகளுடன் வந்திருக்கிறார்களா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம் அரசே, அவ்வாறுதான் செய்திவந்தது.” திருதராஷ்டிரர் நகைத்தபடி “என் கன்னங்கரிய உடலுக்கு ஹரஹூணர்களின் மணிமுடி எப்படி பொருந்துகிறது என்று பார்க்கவேண்டும்... அவர்கள் செங்கழுகின் இறகை சூடிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டேன்” என்றார். விதுரர் “ஆம் அரசே” என்றார். “விதுரா, மூடா, இன்று மாலை ஒரு உண்டாட்டுக்கு ஒருங்கு செய். அதில் ஹரஹூணர்களின் மணிமுடியுடன் நான் தோன்றுகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் புன்னகைத்து “ஆணை” என்றார்.

கொம்புகள் வீரிட்டன. “வருகிறார்கள்!” என்றுகூவியபடி திருதராஷ்டிரர் பந்தலுக்கு வெளியே சென்று முற்றத்தில் நின்றார். இருகைகளையும் தூக்கி தலையைத் திருப்பியபடி “எங்கே? என் மைந்தர்கள் எங்கே?” என்று கூவினார். கோட்டைவாயில் வழியாக திறந்த தேரில் தருமன் இருபக்கமும் நகுலனும் சகதேவனும் நின்றிருக்க உள்ளே வந்தான். “எங்கே பீமன்? பீமனை இங்கே வரச்சொல்லுங்கள்!” என்றார் திருதராஷ்டிரர். அடுத்த ரதத்தில் பீமன் யானைத்தோல் கீழாடை மட்டும் அணிந்து மஞ்சள்நிறப் பெருந்தோள்களில் கூந்தல் வழிந்துகிடக்க இருகைகளையும் கூப்பியபடி நின்றான். அதைத் தொடர்ந்து அர்ஜுனனின் ரதம் வந்தது. செந்நிறப்பட்டால் கீழாடை அணிந்து வெண்பட்டு மேலாடை பறக்க அவன் தேர்த்தட்டில் நின்றிருந்தான். தலையில் செந்நிற வைரங்கள் ஒளிவிட்ட மணிமுடி சூடியிருந்தான்.

“பீமன் எங்கே?” என்று கேட்டபடி திருதராஷ்டிரர் முன்னால் நடந்து செல்லப்போக சஞ்சயன் அருகே சென்று “அவர்கள் இங்குதான் வருகிறார்கள் அரசே” என்றான். திருதராஷ்டிரன் “சௌவீரனின் மணிமுடி எவரிடமிருக்கிறது? அதை பீமனே என்னிடம் கொண்டுவரட்டும்” என்று சொல்லி “அர்ஜுனனையும் தருமனையும் பின்னால் வரச்சொல்லுங்கள்” என்றார். “ஆணை” என்றார் விதுரர்.

கோட்டைமுற்றத்தில் தருமனின் ரதம் மெல்ல நின்றது. அதிலிருந்து நகுலனும் சகதேவனும் இறங்கி குந்தி அமர்ந்திருந்த வெண்திரைப்பந்தல் நோக்கி ஓடினர். தருமன் இறங்கி அருகே நின்றிருந்த சேவகனிடம் ஏதோ சொல்வதை விதுரர் கண்டார். அவர் உள்ளம் படபடக்கத் தொடங்கியது. பொற்தகடுகளால் அணிசெய்யப்பட்ட செந்நிறமான பெட்டியை சேவகன் கையில் எடுத்தளிக்க தருமன் அதை இருகைகளிலும் வாங்கி நீட்டியபடி பந்தலை நோக்கிச் சென்றான். விதுரர் ஏதோ கூவிச்சொல்வதற்காக கைதூக்கிவிட்டார். பின்னர் திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினார். சஞ்சயனின் கண்களைச் சந்தித்து அங்கிருந்த வினாவைக் கண்டார். விழிகளை விலக்கிக் கொண்டார்.

“எங்கே பீமன்? சஞ்சயா, மூடா, நீ என்ன செய்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் தயங்கி விதுரரை நோக்கினான். அதற்குள் கணிகர் திருதராஷ்டிரரின் பின்னால் வந்து நின்று மெல்லியகுரலில் “அவர்கள் குந்திதேவியை நோக்கிச் செல்கிறார்கள் அரசே” என்றார். “யாதவ அரசியை நோக்கியா... ஆசிவாங்கவா?” என்றார் திருதராஷ்டிரர். “சஞ்சயா, என்ன நிகழ்கிறதென்று சொல்” என்று திடமான குரலில் ஆணையிட்டார். சஞ்சயன் மெல்லக் கனைத்தபடி அங்கே கண்டவற்றைச் சொன்னான். “ஆம், அதுவே முறை. அவர்கள் தங்கள் அன்னையை முதலில் வணங்கியாகவேண்டும்... அது அவள் வெற்றி பெறும் தருணம் அல்லவா? அதை அவர்கள் ஒருபோதும் இழக்கமாட்டார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.

தருமன் பந்தலை நெருங்கியதுமே கூட்டம் அமைதிகொண்டு அவனை நோக்கியது. ஒருவர் மேல் ஒருவர் எம்பி அவன் செய்வதைப்பார்க்க மக்கள் முண்டியடித்தனர். தருமன் வெண்திரையை விலக்கி குந்தியை வணங்கினான். அவள் பாதங்கள் வெளியே தெரிந்தன. கைகள் நடுங்க அவன் அந்தப் பெட்டியை சேவகன் கையில் வைத்து அதன் மூடியைத் திறந்து சௌவீரனின் மணிமுடியை வெளியே எடுத்தான். மெல்லிய பொற்கம்பிகளைக்கொண்டு பின்னி அதில் செங்கழுகின் இறகுகளை சீராகப் பொருத்தி செய்யப்பட்டிருந்த அந்த மணிமுடி எவரும் கண்டிராத ஒரு பறவை போலிருந்தது. அதை அவன் குந்தியின் கால்களில் வைத்தான். நகர்மக்கள் வெற்றிக்குரல் எழுப்பி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர்.

தேரிறங்கிய பீமன் ஒருகணம் திரும்பி திருதராஷ்டிரரை நோக்கியபின் குந்தியைச் சென்று வணங்கினான். அர்ஜுனன் திகைத்தவன் போல ரதத்தில் அங்கேயே நின்றிருந்தான். அதற்குள் கைவிரித்தபடி கூவி ஆர்த்து ஓடிவந்த மாலினி அவன் இரு கைகளையும் பற்றி தோள்களைத் தழுவி இழுத்துக்கொண்டு குந்தியின் பந்தலை நோக்கிச் சென்றாள். ஐந்து பாண்டவர்களும் திரைக்குப்பின் சென்றதைக் கண்டபின்னர்தான் விதுரர் திகைப்பிலிருந்து மீண்டார். திரும்பி சஞ்சயனை நோக்கியபின் அவர் குந்தியின் பந்தலை நோக்கி சென்றார்.

திருதராஷ்டிரரின் பந்தலுக்கும் குந்தியின் பந்தலுக்கும் நடுவே உள்ளே வந்துகொண்டிருந்த பாண்டவர்களின் அணிவரிசை சென்றுகொண்டிருந்தது. களிவெறிகொண்டு கூவி ஆர்ப்பரித்தும் நடனமிட்டும் சென்றுகொண்டிருந்த படையினர் விதுரர் எவரென அறியவில்லை. அவர் அவர்களை தள்ளிவிட்டு குதிரைகளுக்கு நடுவே புகுந்து மறுபக்கம் சென்றார். அவரை வெவ்வேறு தோள்கள் முட்டிமுட்டிச் சென்றன. குதிரையின் தலை ஒன்று அவரை மெல்ல தள்ள அவர் நிலைதடுமாறினார்.

தருமன் தன் அன்னையின் கரங்களைப்பற்றிக்கொண்டு திரையை விலக்கி வெளியே வந்தான். குந்தி அதை எதிர்பாராமையால் ஒருகணம் திகைத்து உடனே தன் வெண்ணிற மேலாடையை தலைமேல் இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். தருமன் தன் கையிலிருந்த சௌவீர மணிமுடியை குந்தியின் தலையில் சூட்ட அவள் கூச்சத்துடன் ஏதோ கூவியபடி அதை தள்ளிவிடமுயன்றாள். பீமன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தலைகுனிந்திருக்க ஆடையின்மேல் மணிமுடி இருந்தது. பீமன் உரக்க நகைத்தபடி அதை இன்னொரு கையால் பற்றிக்கொண்டான். அவர்கள் அவளை தூக்கிச்செல்பவர்கள் போல தேர் நோக்கி கொண்டுசென்றனர்.

விதுரர் திரும்பி திருதராஷ்டிரரை பார்க்கமுயன்றார். அவரை கடந்துசென்றுகொண்டிருந்த கொப்பளிக்கும் படைவரிசையையே கண்டார். அஸ்தினபுரியின் மக்கள் இந்திரவிழவின் உச்சத்தில் ஃபாங்கம் அருந்தி தன்னிலையழிந்தவர்கள் போலிருந்தனர். மலர்மாலைகள் சுழன்றுவந்து பாண்டவர்கள்மேல் விழுந்துகொண்டே இருந்தன. மஞ்சளரிசியின் மழையில் கண்களைப்பாதுகாக்க அவர்கள் முழங்கைகளால் முகம் மறைத்து குனிந்துகொண்டனர். கூட்டத்தின் களிப்பு அவர்களையும் நிலையழியச் செய்தது. ஓசைகளின் தாளத்துக்கு ஏற்ப உடல் நடனமிட தருமன் குந்தியை ரதத்தில் ஏற்றி நிறுத்தினான். அவள் முகத்தை மறைத்த வெண்மேலாடையை பிடித்து இழுத்தான். சினந்து கடிந்து அவன் கைகளைத் தட்டிய குந்தியின் கைகளைப்பிடித்து விலக்கி முகத்திரையை விலக்கினான் பீமன்.

அவள் முகம் தெரிந்ததும் சிலகணங்கள் அப்பகுதி பெருமுரசின் உட்பகுதிபோல கார்வையால் நிறைந்தது. ஓசைகள் இணைந்து உருவான அமைதி. செவிப்பறைகள் விம்மி ரீங்கரித்தன. விதுரர் குந்தியின் முகத்தை நோக்கியபடி மெல்ல பின்னால் நகர்ந்து அலையடிக்கும் கூட்டத்துடன் இணைந்துகொண்டார். அவளுடைய விரிந்த நீள்விழிகளை அப்போதுதான் முதலில் காண்பதாக எண்ணிக்கொண்டார். அதே செவ்வெண்ணிற வட்டமுகம். சூழ்ந்து பொங்கிய உணர்ச்சிப்பெருக்கால் அவளும் அள்ளிக்கொண்டு செல்லப்பட்டதை அவர் கண்டார். இருகைகளையும் தூக்கி சௌவீர மணிமுடியை நெற்றிமேல் நன்றாக அணிந்து நிமிர்ந்த தலையுடன் அவள் தேர்த்தட்டின்மீது நின்றாள். மழைக்கால கங்கைபோல கொப்பளித்துச் சுழலும் கூட்டத்தில் தேர்த்தட்டு அலைப்புண்டு எழுந்தமைந்து விலகிச்சென்றது.

விதுரர் நெடுந்தூரம் வரை தேரின் பின்பக்கத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். படைத்தலைவர்களின் கொடிகள் வரத்தொடங்கின. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் கொடிகளுடன் நின்று தங்களவரை வரவேற்று கூச்சலிட்டனர். விதுரரை கிருங்க குலத்துப் படைத்தலைவன் அடையாளம் கண்டான். “மறுபுறம்! மறுபுறம்” என்று விதுரர் கூவினார். அவன் உதடுகள் மட்டும் அசைய “எங்கே?” என்று கூவினான். அவர் கூவியபடி கைகளை அசைத்தார். அவன் அவர் அருகே வந்ததும் தேர்த்தட்டில் நின்றபடி ஒருகையால் அவரைப்பற்றித் தூக்கி குதிரைகள்மேல் கொண்டுசென்று இன்னொரு தேர்வீரரிடம் கொடுத்தான். அவர் பறந்து கடப்பவர் போல அந்தப் படைப்பெருக்கைக் கடந்து மறுபக்கம் வந்தார்.

திருதராஷ்டிரர் கடந்துசெல்லும் படைகளை கவனித்தபடி நின்றிருந்தார். அவரது தலை ஒருபக்கமாக சரிந்து மெல்ல அசைந்துகொண்டிருந்தது. சஞ்சயன் விதுரர் பெயரைச் சொன்னதும் திருதராஷ்டிரர் திரும்பி “விதுரா, பீமனை அழைத்துவந்துவிட்டாயா?” என்றார். “அரசே, தாங்கள் இங்கே வந்திருக்கும் செய்தி அவர்களுக்குச் சென்றிருக்காதென எண்ணுகிறேன்” என்றார் விதுரர். “சௌனகரே!” என்று திருதராஷ்டிரர் திரும்ப “முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது அரசே” என்றார் சௌனகர். “படைப்பெருக்கின் மறுபக்கம் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களால் அதைக்கடந்து இப்பக்கம் நோக்கமுடியவில்லை” என்றார் விதுரர்.

“எப்படியும் சொல்லலாம். நதிப்பெருக்கால் கரைக்கமுடியாத பாறையைப்போல எஞ்சும் உண்மை ஒன்றே” என்றார் கணிகர். “இது பாண்டவர்களின் நாடு. யாதவர்களின் அரசு. கௌரவர்கள் அதன் இரண்டாம்நிலை குடிகள் மட்டுமே.” விதுரர் கடும்சினத்தால் உடல்நடுங்க கணிகரை நோக்கி தன்னையறியாது ஒரு காலடி எடுத்துவைத்தார். சிறிய பெருச்சாளிக் கண்கள் கொண்ட இரண்டாக ஒடிந்து விட்டதுபோல கூன் கொண்ட கரிய மனிதர். காய்ந்தபுல் போல மெல்லிய மயிர்ப்பூச்சு கொண்ட உருளைமுகத்தில் பெரிய வெண்பற்கள் தெரிய புன்னகைத்து “உலகியல் கணக்குகள்மீதுதான் எப்போதும் சூரியன் விடிகிறது. காவியங்கள்மீது அல்ல” என்றார்.

திருதராஷ்டிரர் மெல்லிய கனத்தகுரலில் “என் ரதத்தை வரச்சொல்” என்றார். சகுனியின் கண்கள் ஒருகணம் விதுரரை வந்து தொட்டுச்சென்றன. சகுனி திருதராஷ்டிரரை அணுகி மெல்லியகுரலில் ஏதோ பேசியபடி முன்னால் செல்ல விதுரர் கால்களை பெயர்க்கமுடியாதவர் போல நின்றார். பின்னர் விழிகளைத் திருப்பியபோது சௌனகரின் வருத்தம் தோய்ந்த புன்னகையைக் கண்டார்.

பகுதி ஏழு : பூநாகம் - 2

விதுரர் தருமனின் அரண்மனைக்கூடத்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். பீடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கினார். அங்கே தெரிந்த சோலையில் ஒருகணமும் சிந்தை நிலைக்கவில்லை. மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார். தருமனின் அணுக்கச்சேவகன் விசுத்தன் வாயிலருகே அவரை நோக்கியவண்ணம் தவித்தபடி நின்றிருந்தான். விதுரர் சித்தம் குவியாத கண்களால் அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெழாமல் உதடுகளை அசைத்தபின் அவனுடைய அசைவைக்கண்டு விழித்தவர் போல உயிர்கொண்டு “என்னதான் செய்கிறார்கள்?” என்றார்.

“அன்னையும் மைந்தரும் நகையாடிக்கொண்டிருக்கின்றனர் அமைச்சரே” என்றான் விசுத்தன். “இப்போதுதான் அங்கிருந்த சேடியிடம் என் வேலையாள் கேட்டுவந்தான். அந்தப்புரத்துப்பெண்களுக்கெல்லாம் யாதவ அரசி பரிசில்கள் வழங்குகிறார். அவற்றை பட்டத்து இளவரசரே தன் கையால் அளிக்கிறார். அந்தப்புரமெங்கும் கொண்டாட்டம் நிறைந்திருக்கிறது.” விசுத்தன் புன்னகைத்து “பெண்களின் பேராசை அல்லவா? அளிக்கும் கை சலிக்குமே ஒழிய அடையும் கைகள் சலிப்பதில்லை.”

விதுரர் சற்று திகைத்து “படையெடுப்புச் செல்வத்தில் இருந்தா அப்பரிசில்களை வழங்குகிறார்?” என்றார். “ஆம், யாதவ அரசிக்கு எப்போதுமே தனிக் கருவூலம் என ஏதும் இருந்ததில்லை. அவர் எவருக்கும் பெரிய பரிசுகளை வழங்குவதில்லை என்பது சற்று கேலியாகவே அரண்மனையில் பேசப்படுவதுண்டு.” விசுத்தன் குரல் தாழ்த்தி “அதை ஈடு செய்கிறார்கள் போலும்” என்றான்.

“நான் காத்திருப்பதை சொன்னாய் அல்லவா?” என்றார் விதுரர். “முன்னரே சொல்லிவிட்டேன் அமைச்சரே... இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று பட்டத்து இளவரசர் சொன்னார். சொல்லி மூன்றுநாழிகை ஆகிறது.” விதுரர் பொறுமையிழந்து தலையை அசைத்தபின் “மீண்டும் சென்று தருமனிடம் சொல். உடனே நானும் அவர்களும் சேர்ந்துசென்று திருதராஷ்டிர மாமன்னரைப் பார்க்கவேண்டும் என்று. ஏற்கெனவே தருமன் முறைமீறிவிட்டான். பிந்துவதென்பது மேலும் இடர்களை அளிக்கும்” என்றார்.

விசுத்தன் தலைவணங்கி “அந்தப்புரத்திற்குள் பிற ஆண்கள் நுழைய முடியாது அமைச்சரே. நான் இச்செய்தியை அரசியின் சேடியிடம் சொல்லித்தான் அனுப்பவேண்டும். எளிய பெண்களிடம் அரசச்செய்திகளைச் சொல்வது நகர்நடுவே முரசறைவது போன்றது” என்றான். “நான் ஓர் ஓலையை கொடுத்தனுப்பலாமா என்று எண்ணினேன். ஆனால் அவை நடுவே ஓலை செல்வதும் அனைவரும் பார்ப்பதற்கிடமாகும். அலர் எழும்.”

விதுரர் அவரது இயல்பை மீறி “வேறு என்னதான் செய்வது?” என்று கூவி விட்டார். “இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது... தெரிகிறதா? அனைத்தும் இடிந்து சரிந்துகொண்டிருக்கிறது... அடித்தளத்தில் முதல் விரிசல் விழுந்துவிட்டது.” அவர் சினத்துடன் மூச்சிரைக்க விசுத்தன் அவரை நோக்கி வியந்த விழிகளுடன் நின்றான். “ஏதாவது செய் போ... எப்படியாவது அவர்களை உடனே கூட்டி வா!” விசுத்தன் “நான் சேடியை இளவரசர்களில் ஒருவரை வெளியே அழைத்துவரச் சொல்கிறேன்... ஏதேனும் பொய்யை சொல்கிறேன்...” என்றபின் வெளியே ஓடினான்.

விதுரர் கூடத்திற்குள் முன்னும் பின்னும் மூச்சிரைக்க நடந்துகொண்டிருந்தார். வாயில் அருகே காலடியோசை கேட்டதும் திரும்பிப்பார்த்தார். வந்தது தருமன் அல்ல, தன் துணையமைச்சர்களில் அண்மையானவனாகிய கனகன் என்று கண்டு சினத்துடன் அவனை நோக்கிச் சென்று “என்ன?” என்று உரக்கக் கூவினார்.

கனகன் அந்தச்சினத்திற்கான பின்புலம் புரியாமல் “அரசவை கூடியிருக்கிறது. மாமன்னர் பீடம் கொண்டிருக்கிறார். அவர்கள் இளவரசர்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான். “இளவரசர்கள் இறந்துவிட்டார்கள்... ஒழிந்துவிட்டார்கள்... புரிகிறதா? அவர்கள் இனி இல்லை!” என்று விதுரர் கைகளை ஆட்டியபடி கூவினார். கனகன் திகைத்து வாய்திறந்தான்.

பின்னர் நிலை மீண்டு மூச்சை அடக்கியபடி “அங்கே கணிகர் இருக்கிறாரா?” என்றார். “ஆம் அமைச்சரே, கணிகர்தான் அரசரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.” விதுரர் மீண்டும் கொந்தளித்து “ஒரு வீரனை அழைத்து அவனை வெளியே இழுத்து வந்து வெட்டி வீழ்த்தச் சொல்” என்றார். கனகன் வெற்றுவிழிகளுடன் நோக்கி நின்றான்.

விதுரர் மெல்லமெல்ல தன்னை அடக்கி “அவனை எவ்வண்ணமேனும் வெளியே இழுக்கமுடியுமா? அவன் அரசரிடம் பேசமுடியாமல் தடுக்கமுடியுமா?” என்றார். “அவர் கதைகளைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். நகைச்சுவைக்கதைகள்” என்றான் கனகன். “மூடா... அவன் விரிசலில் ஆப்பு ஏற்றிக்கொண்டிருக்கிறான்” என்றார் விதுரர்.

கனகன் புரிந்துகொண்டு “ஆனால் சகுனி அவர் சொல்வதை ஒப்புக்கொள்ளாமல்...” என்று சொல்லவும் விதுரர் மீண்டும் சினம் கொண்டு “அது நாடகம்... அவன் சொற்களை அரசரே ஆதரித்து வாதாடச்செய்கிறார் சகுனி...” என்றார். “மூடன்... நானே மூடன். அரசரை நேராக படுக்கையறைக்கு அனுப்பியிருக்கவேண்டும்... இந்த மூடர்களை உடனே அழைத்துச்செல்லலாம் என எண்ணினேன்.”

பலகாத தூரம் ஓடிக் களைத்தவர் போல விதுரர் சென்று தன் பீடத்தில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக்கொண்டு குனிந்து அமர்ந்தார். அவரது விலா அசைந்துகொண்டிருந்தது. கனகன் மெல்லிய குரலில் “ஒன்று செய்யலாம். சகுனியின் அரண்மனையை தீவைத்தபின் சென்று அச்செய்தியை சொல்லமுடியும்...” என்றான்.

விதுரரின் விழிகள் ஒருகணம் விரிந்தன. “ஆம்...” என்றபின் உடனே “தேவையில்லை. அதை தீயகுறி என்று சொல்லிவிடுவான் கணிகன். அவனுக்கு அனைத்து வித்தைகளும் தெரியும். இது பாண்டவர்களின் முதல்வெற்றி...” என்றார். “வேறுவழியில்லை. அவன் ஏற்றவேண்டிய விஷத்தை ஏற்றட்டும். ஏதேனும் முறிமருந்து உள்ளதா என்று பார்ப்போம்... அது ஒன்றே நாம் செய்யக்கூடுவது...” தலையை அசைத்து “ஊழின் பெருவெள்ளம்... நாம் அதனெதிரே துழாவுகிறோமா என்ன?” என்றார்.

விசுத்தன் உள்ளே வந்து சுவர் ஓரமாக நின்றான். “என்ன?” என்றார் விதுரர். “இளையவர் நகுலனை வெளியே அழைத்துவந்தேன். அவரிடம் அனைத்தையும் சொன்னேன். அவர் புரிந்துகொண்டார். அவர் உள்ளே சென்று தருமரிடம் சொன்னதாக என்னிடம் மீண்டு வந்து சொன்னார். தருமர் அதை யாதவ அரசியிடம் சொன்னபோது யாதவ அரசி சினத்துடன் கடிந்துகொண்டாராம்... தருமர் அடங்கிவிட்டார்.”

விதுரர் பெருமூச்சுடன் “இன்னும் நேரமாகுமா என்ன?” என்றார். “ஆம் அமைச்சரே. இப்போது நகரின் அனைத்து விறலியரும் சூதர்களும் அந்தப்புரம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்தப்புரத்தின் வெளிமுகப்பில் அரசி அமர்ந்துகொள்வதற்காக சௌவீரத்தில் இருந்து கொண்டுவந்த மயிலிருக்கையை போட்டிருக்கிறார்கள். பெருங்கொடை நிகழப்போகிறது என்ற செய்தி பரவிவிட்டது. நகரம் முழுக்க அச்செய்தி இன்னும் சற்று நேரத்தில் சென்றுவிடும். இனி பெருங்கொடை நிகழாமலிருக்க முடியாது. இன்று மாலைவரை அங்கிருந்து அரசியும் இளவரசர்களும் எழவும் முடியாது...”

கனகன் “சௌவீரனின் அரசியின் இருக்கை அல்லவா அது... அது படையெடுப்புச்செல்வம். அது இன்னும் பேரரசருக்கு காட்டப்படவில்லை” என்றான். “வாயை மூடு” என களைத்த குரலில் சொன்னபின் விதுரர் “நான் என் அமைச்சுக்குச் செல்கிறேன். இளவரசர்கள் எழுந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றபின் சால்வையை சுழற்றிப்போட்டபடி நடந்தார். கனகன் திரும்பி விசுத்தனை நோக்கியபின் அவருக்குப் பின்னால் சென்றான்.

தன் அறைக்குச் சென்றதும் விதுரர் சற்று நேரம் சுவடிகளை கைகளால் அளைந்துகொண்டிருந்தார். பின்னர் வியாசரின் காவியச்சுவடி ஒன்றை எடுத்துக்கொண்டு அதை வாசிக்கத் தொடங்கினார். வாசிக்க வாசிக்க அவர் முகத்தின் இறுகிய தசைகள் மெல்ல நெகிழ்ந்தன. தோள்கள் தொய்ந்தன. உடல் பீடத்தில் நன்கமைந்தது. மூச்சு சீரடைந்தது.

அது புரூரவசுக்கும் ஊர்வசிக்குமான காதலைப்பற்றிய ஊர்வசீயம் என்னும் காவியம் என்று கனகன் கண்டான். அவன் அவர் அருகிலேயே சற்று நேரம் நின்றான். பின்னர் ஓசையில்லாமல் வெளியே சென்று அரச சபையை அடைந்தான்.

அரசரின் முதுசேவகரான விப்ரர் புஷ்பகோஷ்டத்திற்கு வெளியே தன் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவரது ஆணைக்குட்பட்ட பிற சேவகர்கள் அவருக்கு செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தனர். விப்ரர் அவனைக் கண்டதும் புருவத்தைச் சுழித்து “இளவரசர்கள் எப்போது வருகிறார்கள்?” என்றார்.

“அங்கே யாதவ அரசியின் அந்தப்புரத்தில்..." என்று கனகன் பேசத்தொடங்க “அதை நான் நன்கறிவேன். சௌவீரநாட்டின் கருவூலத்தை அரசி அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கனகரே, அது யாதவக்கருவூலம் அல்ல. இன்னும்கூட இந்நாட்டுக்கு திருதராஷ்டிரரே அரசர். அவரது கருவூலம் அஸ்தினபுரிக்கு உரியது” என்றார்.

விப்ரரின் சொற்களை திருதராஷ்டிரரின் சொற்களாகவே கொள்ளவேண்டும் என்பது அஸ்தினபுரியில் நிலைபெற்றுவிட்ட புரிதல். அறுபதாண்டுகாலமாக ஒவ்வொருநாளும் இணைந்தே இருந்து விப்ரர் திருதராஷ்டிரராகவே மாறிவிட்டிருந்தார். அவரை தொலைவிலிருந்து நோக்கினால் அவர் பார்வையற்றவர் என்று தோன்றும். அவர் எவர் விழிகளையும் நோக்கி பேசுவதில்லை. பேசும்போது தலையை இடப்பக்கமாகத் திருப்பி மெல்ல சுழற்றிக்கொள்வதும் திருதராஷ்டிரரைப் போலவே.

கனகன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான். “விதுரர் இங்கு வந்திருக்கலாம்... அவருக்கும் அந்தப்புரமே பெரிதென்று படுகிறதா?” என்றார் விப்ரர். “அவர் சில அலுவல்களை...” என்று சொல்லத்தொடங்கியவனைத் தடுத்து “அவர் யாதவர்களுக்குரிய தனிக்கருவூலத்தை ஒழுங்குசெய்கிறார்... அதுதான். நான் அறிவேன்” என்றார் விப்ரர். கனகன் “நான் அரசவைக்குச் செல்கிறேன் விப்ரரே. நானறிந்ததை சொல்லிவிட்டேன்” என்றபின் உள்ளே சென்றான். அவனுக்குள் அச்சம் மெல்லமெல்ல ஏறிக்கொண்டிருந்தது. உள்ளே செல்லும்போது கால்கள் எடைகொண்டன.

திருதராஷ்டிரர் அரசுகூடத்தில் கணிகரின் பேச்சைக்கேட்டுக்கொண்டு பீடத்தில் வலப்பக்கம் சாய்ந்தவராக அமர்ந்திருந்தார். அவர் தலைக்குமேல் பட்டுவிசிறி அசைந்துகொண்டிருக்க அதன் நிழல் முகத்தில் அலையடித்தது. சகுனி நகைத்துக்கொண்டிருந்தார். கணிகர் அரசர் முன் சிறியபீடத்தில் அமர்ந்து மின்னும் சிறிய கண்களால் நோக்கி தலையை இருபக்கமும் திருப்பித்திருப்பி பேசிக்கொண்டிருந்தார்.

“கானகத்தில் வேட்டையாடும் செந்நாய்களிடம் இருக்கிறது அந்த அரசநீதி அரசே. அங்கே தலைவனாக இருக்கும் செந்நாயின் உடலே அந்தக் கூட்டத்தின் உடலாகும். அதன் எண்ணமே அந்தக்கூட்டத்தின் எண்ணமாகும். அது சிந்தனைசெய்தால் மட்டும்போதும். முடிவெடுத்தால் மட்டும் போதும். அதன் உடலே செய்தியாகும். அந்தக்கூட்டம் அதன் உடலின் பேருருவத் தோற்றம் மட்டுமே. ஆகவே அது ஆயிரம் வாய்களும் மூக்குகளும் கொண்டதாகிறது. ஈராயிரம் விழிகளும் நாலாயிரம் கால்களும் அமைகின்றன. அந்த ஒற்றைப் பெருவிலங்கின் முன் மதவேழம் அஞ்சியோடும்.” அவர் ஒரு குறிப்பிட்ட வகையில் வாயை உறிஞ்சும் வழக்கம் கொண்டிருந்தார். “அரசனும் அத்தகையவனே. அந்த வகையிலேதான் மாவீரனாகிய கார்த்தவீரியன் ஆயிரம் கரங்கள் கொண்டவன் என்று சொல்கின்றன புராணங்கள்.”

“ஒரு செவி பிறிதைக் கேட்டால், ஒருகரம் மாறுபட்டால், ஒரு கால் இடறினால் அந்த விராடவடிவச் செந்நாய் உதிரிகளின் கூட்டமாக ஆகிவிடுகிறதென்பதை எண்ணிக்கொள்ளுங்கள். ஒற்றைச்செந்நாய்களின் பெருங்கூட்டத்தை வெல்ல ஒரு புலியே போதும். செந்நாய்களை வெல்ல விழையும் சிம்மம் அதன் ஒருமையை அழிக்கவே முயலும். வெவ்வேறு திசைகளிலிருந்து முழங்குவதுபோல எதிரொலி எழும்படி கர்ஜனை செய்யும்...” கணிகர் வாயை உறிஞ்சி “ஆகவே அரசன் எதிர்க்குரல்களையே முதல் எதிரியாகக் கருதவேண்டுமென்று சொல்கிறது சாங்கிய அரசநூல்” என்றார்.

“பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவே வெளிப்படும். நடத்தைகளில். சொற்களில். பலசமயம் எளிய உடலசைவுகளில். ஏனென்றால் பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள். அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ள முயல்வார்கள். நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே.” திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் பெரிய கைகளை மெல்ல உரசிக்கொண்டு அசைந்து அமர்ந்தார்.

“அரசே, சாங்கிய ராஷ்டிரதர்ம சூத்திரம் வகுத்துள்ளதன் சாரத்தைச் சொல்கிறேன். அரசு என்பதை இரு கோணத்தில் பார்க்கலாம். அரசவீதியில் நின்று அரண்மனையை நோக்குவது ஒருகோணம். அரண்மனைக்குள் இருந்துகொண்டு நோக்குவது இன்னொரு கோணம்” கணிகர் சொன்னார்.

“முதல்கோணத்திலேயே அறம் என்பது முதன்மையாகப் பேசப்படுகிறது. ஓர் அரசு அமைவதும் நீடிப்பதும் அறத்தின்பொருட்டே என்று நூல்களும் சூதர்களும் நிமித்திகர்களும் குலமூதாதையரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அறத்தின் வழியில் அது செயல்படுகிறது என்றும் அறத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது என்றும் கற்பிக்கிறார்கள். அதை மக்கள் நம்பியாகவேண்டும். நம்பாவிட்டால் அரசு நீடிக்கமுடியாது. அதை நிலைநிறுத்த அரசன் தன் கருவூலத்தைச் செலவிட்டுக்கொண்டே இருந்தாகவேண்டும்.”

“அது பொய்யல்ல அரசே. அதுவும் உண்மை. ஆனால் அது எல்லைக்குட்பட்ட உண்மை. சிறிய நலங்களை அளிக்கும் உண்மை. பேருண்மை அரண்மனையில் இருப்பவர் அறிவது. அரசு என்பது முழுக்கமுழுக்க படைக்கலங்களால் உருவாக்கி நிலைநிறுத்தப்படுவதே. அரசநீதி என்பது தண்டநீதியே என்று அறிந்த மன்னனே நாட்டை ஆள்கிறான். அவனே உண்மையில் ஒரு நாட்டில் அறத்தையும் வாழச்செய்கிறான்” என்றார் கணிகர். “நூறு வரிகளில் அரசநீதியை வகுத்துரைக்கிறது சாங்கியநூல். அதைச் சொல்கிறேன்.”

அரசன் படைக்கலத்தால் சூழப்பட்டிருக்கவேண்டும். தண்டிப்பவனாக இருக்கவேண்டும். அவனை எவரும் நெருங்கலாகாது, அவனே பிறரை நெருங்கவேண்டும். அரசனின் பிழைகள் பிறர் அறியக்கூடாது, அவை விவாதிக்கப்படக்கூடாது. அரசன் உளவாளிகளை நேரில் சந்திக்கவேண்டும். உளவாளிகளை உளவறியவேண்டும். பொய்சொன்ன உளவாளியை பிற உளவாளிகள் அறிய கொன்றுவிடுதல்வேண்டும். அரசனுக்கு நெருக்கமானவர்களாக வலிமை வாய்ந்தவர்கள் இருக்கலாகாது. எளிய சேவகர்களுக்கே அந்த இடம் அளிக்கப்படவேண்டும். அரசனுக்கு நெருக்கமானவர் என்று எவரும் நெடுங்காலம் நீடிக்கக் கூடாது.

அரசன் தனிமையில் எவரையும் சந்திக்கக் கூடாது. ஆனால் அரசனின் சொற்களுக்குச் சான்றுகள் இருக்கக் கூடாது. அரசனின் அனைத்துச் சொற்களும் வாளால் எழுதப்பட்டவையே. அரசன் சொற்கள் அரசனாலேயே மாற்றப்படவேண்டும். அரசாணைகளில் காலம் கடந்து நிற்கப்படவேண்டியவை மட்டுமே எழுத்தில் அளிக்கப்படவேண்டும். பிற வாய்மொழியாகவே அளிக்கப்படவேண்டும். அவை பிழையாகப்போகுமென்றால் அவற்றின் பொறுப்பு அரசனுக்கு வந்துவிடலாகாது. அரசனின் சொற்களுக்கு விளக்கமளிக்க எவருக்கும் உரிமையளிக்கப்படலாகாது. ஓலைகளில் முதன்மைச்செய்திகளை அனுப்பலாகாது. அவை முகமறிந்து விளக்கக் கூடிய அறிஞரிடமே சொல்லி அனுப்பப்படவேண்டும். ஆனால் எச்செய்தியும் ஒருவரிடம் முழுமையாக சொல்லி அனுப்பப்படலாகாது.

அரசனின் எண்ணம் என்ன என்பது முதலிலேயே வெளிப்பட்டுவிடக்கூடாது. அரசன் விவாதங்களில் எப்போதும் கேட்பவனாக மட்டுமே இருக்கவேண்டும். அரசனின் கருத்தை இன்னொருவரே அவையில் சொல்லவேண்டும். அவற்றை எதிர்ப்பவர்களை அரசன் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அரச மன்றில் எல்லா தரப்பும் சொல்லப்படவேண்டும். ஒருதரப்புக்காக நெடுந்தூரம் வாதிடுபவனை குறித்துக்கொள்ளவேண்டும். அரச மன்றில் குழுசேர்பவர்கள் களைகள். அரசன் மன்றில் தன் இறுதி முடிவை அறிவிக்கலாகாது. அரசன் ஒருபோதும் தன் முடிவுக்கு காரணங்கள் சொல்லலாகாது. அரசன் வாதிடலாகாது.

அரசன் தன்னிடம் முகமன் சொல்பவர்களை ஊக்குவிக்கவேண்டும். முகமன் அரசனின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும். முகமன் சொல்பவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. அரசன் தன்னைக் கண்டிப்பவர்களை அவையில் பேச ஒப்பக்கூடாது. அரசனுக்கு அவனுக்குக் கீழானவர்கள் அவையில் அறிவுரை சொல்லக்கூடாது. அவ்வாறு சொன்ன உறவினரோ நிகர்மன்னரோ அந்த அவையிலேயே சிறிய அளவில் அவமதிக்கவும் பட்டாகவேண்டும். தன் நெறிமீது நம்பிக்கை உள்ளவன் ஆணவம் கொண்டிருப்பான். அந்த ஆணவத்தை பாராட்டி அரசன் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நெறிமீது ஊன்றியவனை அவமதித்து எதிரியாக்கக் கூடாது.

அரசன் எதிரிகள் உருவாவதற்கான வாய்ப்புகளைக் கண்டடைந்து அவற்றையே அழித்துக் கொண்டிருக்கவேண்டும். நண்பர்களையும் சீண்டிக்கொண்டே இருக்கவேண்டும், நட்பே பகையாகக்கூடியது. அவர்கள் எதிரிகளாகத் தொடங்கியதுமே அழித்துவிடல் வேண்டும். நீறுபூத்த நெருப்பை விசிறிக் கண்டுபிடிப்பதுதான் அது. எதிரிகளின் சிறிய எச்சத்தைக்கூட விட்டுவைக்கக்கூடாது. ஐயம்கொண்டு பின் குற்றமற்றவன் என்று ஒருவனை விட்டோமென்றால் அவன் குற்றம் செய்பவனாகவே மாறுவான் என்பது உறுதி. அவனை அழித்துவிடுவதே சிறந்தது. எதிரியிடம் எக்காரணத்தாலும் கருணை காட்டக்கூடாது. கருணைகாட்டப்பட்ட எதிரி அவமதிக்கப்பட்டவன். தோற்கடிக்கப்பட்டவன் ஒருபோதும் நண்பனல்ல. சரண் அடைந்தவன் வன்மம் கொண்டவன். அவனை மறைமுகமாகக் கொல்லவேண்டும்.

காத்திருப்பவனே சிறந்த சூழ்ச்சியாளன். குருடனாக நடிப்பவனைப்போல கூரிய பார்வையன் வேறொருவனில்லை. செவிதிருப்பிக்கொண்டவன் அனைத்தையும் கேட்கிறான். அணுக்கமாக இருப்பவர்களில் ஒருவனேனும் கசப்புகொண்டவனே. அவன் காட்டிக்கொடுப்பவனாக மாறத்தக்கவன். எதிரிகளை நமக்குக் காட்டிக்கொடுக்கும் அவர்களின் மனிதர்களை வென்றபின் அழித்துவிடவேண்டும். எதிரிகளை எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கவேண்டும். எதிரியிடம் எப்போதும் பேசிக்கொண்டும் இருக்கவேண்டும். எதிரிக்கும் நமக்கும் இடையே நம்பிக்கையான நடுநிலையாளர்கள் எப்போதும் தேவை.

எதிரியின் ஆற்றலின் ஊற்றுக்கண்ணை அறியாமல் தாக்கலாகாது. ஊற்றை அடைத்தபின்னரே பெருக்கை நிறுத்த முடியும். உடனடியாக அழிக்கமுடியாத எதிரியை நண்பனாக்கி தோளிலேயே வைத்துக்கொள்ளவேண்டும். எதிரிக்கு எதிரியை நண்பனாகக் கருதவேண்டும். முதல் எதிரியை அழித்ததும் இரண்டாம் எதிரி அழிக்கப்பட்டாகவேண்டும். எதிரியிடம் மண உறவு கொள்வது சிறந்த தாற்காலிக அமைதியை உருவாக்கும். எதிரியின் மகள் அரசனின் முழுமையான அரசியாக ஒருபோதும் ஆவதில்லை.

அரசனின் கீழ் ஒவ்வொருவரின் அதிகாரமும் இன்னொருவரின் அதிகாரத்தால் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அதிகாரம் மேலும் அதிகாரத்தை நோக்கி மனிதர்களைத் தள்ளக்கூடியது. ஒவ்வொரு முதியவரின் கீழேயும் நாளை அவரை இடநீக்கம் செய்யக்கூடிய இளையோன் ஒருவனை வளர்த்துவரவேண்டும். அதிகாரத்தில் இருந்த மூத்தவர்கள் போலிப்பதவிகளில் அமர்த்தப்படவேண்டும். அவர்கள் எதிரிகளிடம் சிக்கிவிடக்கூடாது. முதன்மைப்பதவி வகித்தவர்களின் மைந்தர்கள் பதவிக்குச் சிறந்தவர்கள். அரசனால் மட்டுமே தாங்கள் வாழமுடியுமென நினைப்பவர்கள் அரசனைச்சூழ்ந்திருக்கவேண்டும்.

ஐயத்திற்கிடமின்றி தன் வழித்தோன்றலை அரசன் அறிவிக்கவேண்டும். அந்த வழித்தோன்றலை தன் வாழ்நாள் வரை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் தன்னிடம் வைத்திருக்கவேண்டும். அரசு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டிருக்கவேண்டும். விழாக்களை நடத்தவேண்டும். மக்களின் தெய்வங்களை அரசன் வணங்கவேண்டும். குலக்குழுத்தலைவர்களாக வல்லமையற்றவர்களை அமைக்கவேண்டும். அவர்களை அரசன் வணங்கவும் வேண்டும். மக்களின் இக்கட்டுகளை மறக்கச்செய்பவை சிறிய போர் வெற்றிகள். அவற்றைத் தொடர்ந்து அடைந்துகொண்டிருக்கவேண்டும். உள்நாட்டுச்சிக்கல்களுக்கு எல்லைகளில் போரைத் தொடங்குவது சிறந்த தீர்வாகும்.

அரசனுக்கு வெற்றி ஒன்றே பொருட்படுத்தத் தக்கது. தோல்வி எத்தனை மகத்தானது எனினும் வெறுக்கத்தக்கதே. அரசன் ஆளும்போது மட்டுமே அரசன். நாடிழந்தவன் குடிமக்களைவிடக் கீழானவன். நாடுள்ளவனே அறம் செய்யமுடியும். எனவே நாட்டின் பொருட்டு அறம் மீறுதல் அரசனுக்கு உகந்ததே. அரசனின் புகழ் என்பது அரசனால் உருவாக்கப்படுவதேயாகும்.

திருதராஷ்டிரர் மீண்டும் பெருமூச்சுவிட்டார். கணிகர் “அரசே, அரசனின் பிழைகள் என்று நூறுபிழைகளை சாங்கிய அரசநீதி சொல்கிறது. அவற்றில் தலையாயது முழுமையான நம்பிக்கையை எவர் மீதேனும் வைப்பதுதான். அவ்வாறு நம்பிக்கை வைக்கும் அரசன் கருவுற்ற கோவேறு கழுதை போல தன் இறப்பை தன்னுள் சுமந்து வளர்க்கிறான் என்கிறது” என்றபின் தலைவணங்கினார்.

சகுனியின் கண்கள் திரும்பி கனகனை நோக்கின. கனகன் தலைவணங்க சகுனி “பாண்டவர்கள் வந்துவிட்டனரா? உள்ளே வரச்சொல்...” என்றார். அவர் தன் முகக்குறியை உணர்ந்தபின்னரே அவ்வாறு சொல்கிறார் என்று அறிந்த கனகன் அந்த நேரடித்தன்மையால் நிலைகுலைந்து “இன்னும் வரவில்லை... அங்கே அந்தப்புரத்தில்...” என்றான். அச்சொல்லாட்சி பிழையாகிவிட்டது என்று உணர்ந்து அவன் மேலே பேசுவதற்கு முன்னர் “ஆம், சௌவீர மணிமுடியை யாதவ அரசி சூடினார் என்று அறிந்தோம். மணிமுடிசூடினால் அதற்குரிய கொடைகளையும் அளித்தாகவேண்டும் அல்லவா?” என்றார் சகுனி. கனகன் பெருமூச்சுடன் அமைதியானான்.

“அரசே, பிரஹஸ்பதியின் நீதிசூக்தம் ஒரு கதையைச் சொல்கிறது. அதை இங்கே சொல்ல எனக்கு ஒப்பளிக்கவேண்டும்” என்ற பின் கணிகர் சொல்லலானார். முன்னர் காட்டில் அறநூல்களை கற்றறிந்ததும் அமைதியானது என்று பெயர்பெற்றதும் வேட்டையாடி தன் உணவை ஈட்டும் திறனற்ற கோழையுமாகிய ஒரு நரி வாழ்ந்துவந்தது. அது தன்னுடன் ஒரு விழியிழந்த புலியையும் காலிழந்த செந்நாயையும் கீரிப்பிள்ளையையும் எலியையும் சேர்த்துக்கொண்டது. அவை வேட்டையாடி உண்ணமுடியாதவையாக துயருற்றிருந்தன. நரி ஒரு சூழ்ச்சியைச் செய்தது. அங்குள்ள மான்கூட்டங்களில் கொழுத்து திரண்ட மான் ஒன்று தூங்கிக்கொண்டிருக்கையில் எலியை அனுப்பி அதன் காலை கடித்து புண்ணாக்கும்படி சொன்னது.

கால்புண்ணான மான் விரைந்தோட முடியாமல் நொண்டியபோது செந்நாய் அதை மறித்துத் துரத்தியது. கீரி அதை வழிமறித்து கண்ணற்ற புலியின் அருகே கொண்டுசென்றது. புலி அதை அடித்துக்கொன்றது. 'அனைவரும் நீராடி வாருங்கள். அதன்பின் உணவுண்போம். அதுவரை நான் இதற்குக் காவலிருக்கிறேன். எலி நீராடும் வழக்கமில்லாதது அது எனக்குத் துணையிருக்கட்டும்' என்றது நரி. புலி முதலில் நீராடி வந்து நரியிடம் 'நீ சென்று நீராடி வா, நாம் உண்போம்' என்றது. நரி பெருமூச்சுவிட்டு 'நீங்களில்லாதபோது ஒரு சிறிய விவாதம் எழுந்தது என்றது. இந்த மானைக் கொன்ற முதல்வேட்டையாளன் நானே, எனவே இதன் ஈரல் எனக்குரியது என்று எலி சொல்கிறது. நான் அதை ஏற்கவில்லை. இந்த மானைக்கொன்ற அரசர் நீங்களே என்றேன். எலி அதை ஏற்கமறுக்கிறது' என்றது.

சினம்கொண்ட புலி உறுமியபடி ஒரே அடியில் எலியைக் கொன்று தின்றுவிட்டது. பின்னர் 'ஆம், எலி சொல்வதே சரி. ஒரு சிற்றெலியைத் துணைகொண்டு நான் உணவுண்டால் என் குலத்திற்கு இழுக்கு. என்னால் முடிந்தவேட்டையை ஆடுகிறேன். இல்லையேல் பட்டினி கிடந்து இறக்கிறேன்' என்று சொல்லி அகன்றுசென்றது. அதன்பின் செந்நாய் அங்கே வந்தது. நரி அதனிடம் 'புலி தன் மனைவியை அழைத்துவருவதற்காகச் சென்றிருக்கிறது. இருவருக்கும் இந்த உணவு போதாது. எனவே செந்நாயையும் உண்ணலாம் என்று அது சொன்னதை நான் கேட்டேன்' என்றது. செந்நாய் அஞ்சி அக்கணமே ஓடி மறைந்தது.

இறுதியாக கீரி குளித்துவிட்டு வந்தது. கீரியிடம் நரி 'இப்போது இவ்வுணவுக்கு நாமிருவர் மட்டுமே போட்டியிடுகிறோம். கானக முறைமைப்படி நாம் ஒருவருக்கொருவர் போரிடுவோம். எவர் வெல்கிறார்களோ அவருக்குரியது இவ்வுணவு' என்றது. கீரி திகைத்தபின் 'நரியுடன் கீரி போரிடமுடியுமா என்ன? என் உயிரை காத்துக்கொள்கிறேன்' என்று சொல்லி விரைந்தோடி மறைந்தது. நரி அந்த மானை பலநாட்கள் வைத்திருந்து உண்டது." கணிகர் மெல்லிய குரலில் சொல்லி நிறுத்திவிட்டு “கதைகள் நினைக்கும்தோறும் வளர்பவை அரசே” என்றார்.

திருதராஷ்டிரர் திரும்பி கனகனிடம் “விதுரன் எங்குள்ளான்?” என்றார். “அவர் தன் சுவடியறையில்...” என்றான் கனகன். “நான் ஆணையிட்டேன் என்று அவனிடம் சொல். அவனும் பாண்டவர்களும் இப்போது இங்கே வந்தாகவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆணை” என்று தலைவணங்கிவிட்டு கனகன் வெளியே ஓடினான். இடைநாழியைக் கடந்து விதுரரின் அறையை அடைந்தான். விதுரர் ஏட்டில் மூழ்கி இருப்பதைக் கண்டான். அவர் முகம் மலர்ந்திருந்தது. சுவடியின் சொற்களுக்கேற்ப அவரது உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. காலடியோசை கேட்டு விழிதூக்கி “சொல்” என்றார். “அரசரின் ஆணை. பாண்டவர்களும் தாங்களும் உடனடியாக அவை அணையவேண்டும்” என்றான் கனகன்.

“இப்போது நான் மட்டுமே செல்லமுடியும்” என்றார் விதுரர் மேலாடையை எடுத்தபடி. “ஆனால்...” என்று கனகன் சொல்லத்தொடங்க “என்னசெய்வது? அவர்கள் இப்போது இங்கில்லை. நான் அனைத்தையும் ஊழின் ஆடலுக்கு விட்டுவிட்டேன்” என்றார். அவர் இடைநாழியில் நடக்க பின்னால் கனகன் சென்றான். “கணிகர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒரு புலிக்குகைபோல உறுமுவதைக் கேட்டேன்” என்றான் கனகன். “ஆம், குறைவாகச் சொல்லி கேட்பவரை மேலே சிந்தனைசெய்யவைப்பவன் அவன். அவ்வெண்ணங்கள் கணிகர் உருவாக்குபவை என்றறியாமல் அவர்கள் தங்கள் எண்ணங்கள் அவை என எண்ணிக்கொள்வார்கள். தாங்கள் அடைந்ததனாலேயே அவை சரியான எண்ணங்கள் என்று நம்புவார்கள்” என்றார் விதுரர்.

இடைநாழியில் அவர்கள் செல்லும்போது கனகன் “என்னசெய்வது அமைச்சரே?” என்றான். “முதல் விரிசல் நிகழ்வது எப்போதும் ஊழ்விளையாட்டு. சகுனி காத்திருந்தது அதற்காகவே. அங்கே அவர்கள் வேரோடிவிட்டனர். கரும்பாறையை பிளப்பதற்குள் நாம் நச்சுமரத்தை அழிக்கவேண்டும்... ஆனால் இப்போது விரைவுகொண்டு பயனில்லை. அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அந்த உளக்கொதிப்பில் அரசர் இருக்கையில் சென்று சந்திப்பதுகூட பிழையாகலாம். அவர் சென்று ஓய்வெடுக்கட்டும். சற்று இசைகேட்டால் யானை தன் கட்டுக்குள் மீண்டுவிடும். அதன் மத்தகம் குளிர்ந்துவிடும். அதன்பின் நாம் அதை அணுகுவது நலம் என்று எண்ணுகிறேன்.”

“அரசரின் பெருந்தன்மையும் கருணையும்...” என்று கனகன் பேசத்தொடங்க “ஆம், அதுவே இன்று நமக்கு பெரும் எதிரி. பால் எளிதில் திரிந்து விஷமாகும் என்பது இயற்கையின் நெறி” என்றார் விதுரர். பெருமூச்சுடன் “நீ சென்று பாண்டவர்களிடம் சொல், நல்லநேரம் கடந்துவிட்டது என்று. அவர்கள் தங்கள் அரண்மனைகளுக்குச் சென்று நீராடி ஓய்வெடுக்கட்டும். அரசர் மாலையில் இசைக்கூடத்தில் இருக்கையில் முறைப்படி ஆடையணிந்து அவர்கள் அரசரைக் காணவரட்டும். அப்போது நானும் அங்கிருப்பேன்” என்றார். “இப்போது அவர்கள் வரவேண்டியதில்லையா?” என்றான் கனகன். “வரலாகாது” என்றார் விதுரர்.

பகுதி ஏழு : பூநாகம் - 3

விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என நான் அறியேன். ஆனால் பாண்டவர்கள் தனக்கு அவமதிப்பை அளித்துவிட்டனர் என்று எண்ணுகிறார். அந்த எண்னத்தை விலக்குங்கள்” என்று விப்ரர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்பக்கம் விசுத்தன் ஓடிவந்தான். “அமைச்சரே, இளவரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“எங்கே?” என்றார் விதுரர் திகைத்தவராக. “அந்தப்புரத்தில் பெருங்கொடை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நகுலர் தருமரிடம் பேசி அரசாணையைச் சொல்லி வெளியே கூட்டிவந்துவிட்டார். நகுலரும் சகதேவரும் அரசியுடன் இருக்கிறார்கள். பிற மூவரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் விசுத்தன். விதுரர் திரும்பி விப்ரரிடம் “என் வரவை அரைநாழிகை தாண்டி அறிவியுங்கள் விப்ரரே” என்றார். திரும்பி ஓடி இடைநாழியில் வந்துகொண்டிருந்த பாண்டவர்களை நோக்கிச் சென்றார். அவர் ஆடைபறக்க ஓடுவதைக் கண்டு கனகன் திகைத்து நின்றான். விப்ரரை திரும்பி நோக்கினான். விப்ரர் “இளவரசர்கள் வருவதை என்னால் அறிவிக்காமலிருக்க முடியாது அமைச்சரே... சற்று பிந்துகிறேன்” என்றார்.

விதுரர் மூச்சிரைக்கச் சென்று தருமன் அருகே நின்றார். “என்ன ஆயிற்று அமைச்சரே?” என்றான் தருமன். சினத்தால் அடைத்த குரலுடன் கை நீட்டி, “நீ என்ன மூடனா? அரசவையின் முறைமைகளை அறியாதவனா? நீங்கள் கொண்டுசென்றது அஸ்தினபுரியின் படை. அதன் அதிபர் திருதராஷ்டிர மாமன்னர். படைமீண்டதும் நீங்கள் வந்து முதலில் பாதம் பணியவேண்டியவர் அரசரே. அத்தனை படைச்செல்வங்களையும் கொண்டுவந்து அவர் காலடியில் வைக்கவேண்டும். அவர் அவற்றிலிருந்து உங்களுக்கான கொடைகளை வழங்கவேண்டும். காட்டுநாய்களுக்குக் கூட இந்நெறியே உள்ளது” என்றார்.

“அமைச்சரே, நான் எந்தையின் அகவிரிவை நம்புகிறேன். சிறுமைகளுக்கு அங்கே இடமில்லை” என்றான் தருமன். பின்னர் சற்று குரல்தாழ்த்தி “சிறுமைக்கு இடமுள்ள ஒரு நெஞ்சு என் அன்னையுடையது. அவர் உள்ளம் கோருவதுதான் என்ன என்று நான் எண்ணியிருக்கிறேன். நான் கண்டது இதுதான். சூரசேனரின் மகளாக மதுவனத்தில் கன்றுமேய்த்து வாழ்ந்த யாதவப்பெண் அவர். கையளவு நிலம் கொண்ட மார்த்திகாவதியின் குந்திபோஜரின் இளவரசி. இந்த அஸ்தினபுரிக்கு அவர்கள் அரசியாக வந்தது அவரது தகுதியால் அல்ல, என் தந்தை பாண்டுவின் தகுதியின்மையால்தான். இந்த மாநகரை முதலில் கண்டதுமே அவருக்குள் சிறுமையும் பெருவிழைவும் ஒருங்கே தோன்றியிருக்கும்.”

“இங்கே அவரது இளமையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நான் என் எண்ணங்களைப்போலவே தெளிவாகக் காண்கிறேன். நுண்ணிய அவமதிப்புகளை அவர் ஒவ்வொருநாளும் அடைந்திருப்பார். ஆணவம் மிக்க பெண் என்பதனால் அவை அவரை பெரிதும் வதைத்திருக்கும். சதசிருங்கத்தில் அவர் வாழ்ந்ததை நான் அருகிருந்து கண்டிருக்கிறேன். என் தந்தை அங்கு சென்றதுமே அஸ்தினபுரியை மறந்துவிட்டார். ஆனால் அன்னை ஒருகணம்கூட இந்நகரை மறக்கவில்லை. இங்குதான் அவர் அகத்தால் வாழ்ந்தார்” என்றான் தருமன்.

“நகர்நுழைந்தபோது நான் எந்தையின் காலடியில் இந்த மணிமுடியை வைப்பதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அன்னை கோட்டைமுகப்புக்கே வந்ததை கண்டேன். அவர் உள்ளம் விழைவதென்ன என்று புரிந்துகொண்டேன். அக்கணம் என் உள்ளம் அந்த எண்ணத்தை அடைந்தது. எந்தையின் காலடியில் எத்தனையோ மணிமுடிகள் உள்ளன. அன்னை ஒரு மணிமுடியையும் சூடவில்லை. அஸ்தினபுரியின் அரசியென அவர் சிலநாட்கள்கூட வாழவில்லை. அஸ்தினபுரியின் அத்தனை குடிகளின் கண்முன்னால் அவர் சௌவீரநாட்டின் மணிமுடியை சூடட்டும் என்று எண்ணினேன். அஸ்தினபுரியின் மணிமுடி அவர்களுக்கு கொடையளிக்கப்பட்டது. இது அவர் மைந்தர்களால் வென்றுகொண்டுவரப்பட்டது. முற்றிலும் அவருக்கே உரியது. அதை அணிகையில் அவர் மறுக்கமுடியாத அரசபதவியை அடைகிறார்.”

தருமன் தொடர்ந்தான் “அதை நீங்களே கண்டிருப்பீர்கள் அமைச்சரே. அன்னைக்குத் தேவையாக இருந்தது ஒரு சிறிய வற்புறுத்தல் மட்டுமே. ரதத்தில் அவர்கள் தலைநிமிர்ந்து நின்றதைக் கண்டபோது மிகச்சரியானதையே செய்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன். அரண்மனையை நெருங்க நெருங்க அவர் எங்களை விட மேலெழுந்தார். வெற்றிகொண்டு நாடுமீளும் சக்கரவர்த்தினி போல ஆனார். அந்தத் தோற்றத்தை அவர் தன் பகற்கனவுகளில் பல்லாயிரம் முறை நடித்திருக்கக் கூடும். அது நிறைவேறாமல் அவர் அமைய மாட்டார். அதை அடையாமல் அவர் இறந்தால் விண்ணுலகும் செல்லமாட்டார்.”

“அன்னையின் கொண்டாட்டத்தை சற்று அச்சத்துடன்தான் நோக்கினேன் அமைச்சரே” என்றான் அர்ஜுனன். “அவர் அனைத்து அகக்கட்டுகளையும் இழந்துவிட்டார். பித்துகொண்டவை போலுள்ளன கண்கள். சொற்கள் அவரை அறியாமலேயே வெளிவருகின்றன. சொல்லெண்ணி பேசும் குந்திதேவி அல்ல அங்கிருப்பவள். கிளர்ச்சிகொண்ட பெதும்பைப்பெண் போல முகம் சிவந்து நகைக்கிறாள். துள்ளி ஓடியும் மூச்செறிந்து விரைவுமொழி பேசியும் கொஞ்சுகிறாள். தோழியரிடம் பொய்ச்சொல் பேசுகிறாள். சௌவீரநாட்டின் அரியணையைக் கொண்டுவந்து அந்தப்புர முகப்பில் போடச்சொன்னது அவள். அதில் அமர்ந்து பெருங்கொடை அளிக்கமுடிவெடுத்தவளும் அவளே!”

“எந்தையிடம் நான் பேசிக்கொள்கிறேன் அமைச்சரே” என்றான் தருமன். “அன்னை இனிமேலேனும் அகம் அடங்கட்டும். இந்த அரசை உள்ளிருந்து எரித்துக்கொண்டிருப்பது அன்னையின் நெருப்பே” என்றான். பீமன் நகைத்தபடி “காட்டுப்புலிக்கு மானுடக்குருதியின் சுவையைக் காட்டுவதுபோன்றது அது என்றேன். தமையன் சினந்தார்” என்றான். தருமன் “மந்தா... போதும்” என்றான். விதுரர் “இளையோன் சொல்வது உண்மை. நாளைக்காலை யாதவஅரசி இன்று அடைந்த அத்தனை உவகைகளையும் கடந்திருப்பார். இந்த மணிமுடியும் அரியணையும் என்றும் தன்னிடமிருக்கிறதென்று எண்ணத் தொடங்கியிருப்பார். நாளை அடையப்போவதென்ன என்று கனவுகாண்பார்...” என்றார்.

தருமன் “ஆனால்...” என்று சொல்லத்தொடங்க “நீ செய்ததை நான் புரிந்துகொள்கிறேன். முதிரா இளைஞனின் அரசுசூழ்தல் அது. அதன் விளைவுகளை நீ சந்திக்கவேண்டும்” என்றார். தருமன் அஞ்சிய முகத்துடன் “சொல்லுங்கள் அமைச்சரே” என்றான். “அங்கே கணிகர் என்ற அதர்வ வைதிகர் அரசருடன் இருக்கிறார். அவரது சொற்கள் அரசரின் அகத்தில் விதைக்கப்பட்டுள்ளன. களைகள் விரைவில் முளைப்பவை. அவற்றை நீ இப்போதே களைந்தாகவேண்டும்” என்றார். “ஆம், அதற்காகவே வந்தேன்” என்றான் தருமன். “சென்றதுமே அரசரின் கால்களைத் தொடு. அவரைத் தொட்டுக்கொண்டே இருங்கள் மூவரும்... உங்களைத் தொட்டபடி அவரால் உங்களை வெறுக்க இயலாது” என்றார் விதுரர்.

அவர்களை அழைத்துக்கொண்டு திருதராஷ்டிரரின் சபைக்குள் நுழைந்தபோது விதுரர் மெல்ல “நான் சற்று பின்னால் வருகிறேன். அரசர் ஏதும் சொல்ல இடம்கொடுக்கவேண்டாம். நேராகச் சென்று அவரை தொட்டுவிடுங்கள்” என்று மெல்லியகுரலில் சொன்னார். “உடனே உங்கள் அன்னையை விகடம் செய்து பேசத் தொடங்குங்கள். அவர்களின் சிறுமைநிறைந்த விருப்பை நிறைவேற்றினோம் என்று சொல்லுங்கள்... இப்போது என்னிடம் சொன்னவற்றையே சொல்லலாம்” என்றார். தருமன் “இப்போது சற்று அச்சம் கொள்கிறேன் அமைச்சரே” என்றான். “வேழம் மிக எளிதில் சினம் அடங்குவது” என்றார் விதுரர்.

அரசவையில் அவர்கள் நுழைவதைக் கண்டதுமே சகுனி எழுந்து உரத்த குரலில் “வருக, மருகர்களே! உங்களைத்தான் நோக்கியிருந்தேன்” என்றார். “அரசர் உங்களை தேடிக்கொண்டிருந்தார். படைச்செல்வத்தை அஸ்தினபுரியின் கருவூலத்தில் சேர்த்தபின்னர்தான் வருவீர்கள் என்று நான் சொன்னேன்” என்றார். அவர் திருதராஷ்டிரரிடம் தருமன் பேசிவிடாமலிருக்கத்தான் அதைச் சொல்கிறார் என்று உணர்ந்துகொண்ட விதுரர் “அரசரிடம் செல்லுங்கள்” என முணுமுணுத்தார்.

ஆனால் தருமன் திரும்பி நின்று “இல்லை மாதுலரே. படைச்செல்வத்தை வேறு கருவூலமாகச் சேர்க்கவே ஆணையிட்டோம்... ஏனென்றால்..." என்று பேசத்தொடங்குவதற்குள் சகுனி உரத்த குரலில் “தனிக் கருவூலமா? அஸ்தினபுரிக்குள் தனியரசா? அதுவா யாதவ அரசியின் ஆணை?” என்று கூவினார். திருதராஷ்டிரர் “என்ன சொல்கிறாய் தருமா? தனிக்கருவூலமா?” என்றார். “அரசே, அதை பொதுக்கருவூலத்தில் சேர்க்கமுடியாது. ஏனென்றால் அதைக்கொண்டு ராஜசூயம் செய்து வைதிகர்களுக்கு நாங்களே..." என்று சொல்வதற்குள் சகுனி “காந்தாரக் கருவூலம் என ஒன்று இன்றுவரை இங்கே உருவானதில்லை. இங்குள்ளது அஸ்தினபுரியின் கருவூலம் மட்டுமே... இன்னொரு கருவூலம் உருவாவதென்பது இன்னொரு அரசு உருவாவதற்கு நிகர்” என்றார்.

“அரசே” என்று சொல்லி தருமன் கைநீட்டினான். “அருகே சென்று அவரைத் தொடு” என்று விதுரர் முணுமுணுத்தார். அதற்குள் திருதராஷ்டிரர் எழுந்து தன் இருகைகளையும் சேர்த்து ஓங்கியறைந்துகொண்டார். அந்த ஒலியில் தருமன் அஞ்சி பின்னடைந்தான். “நான் இனி ஒரு சொல்லும் கேட்கவிரும்பவில்லை... எங்கே சஞ்சயன்?” என்று கூவினார் திருதராஷ்டிரர். “அரசே” என்று சஞ்சயன் ஓடிவந்து அருகே நின்றான். “என்னை என் படுக்கையறைக்குக் கொண்டுசெல்” என்று சொல்லி திருதராஷ்டிரர் கைநீட்டினார். “தருமா, அந்தக்கையைப்பிடி... அவரை நீயே அழைத்துச்செல்” என்று விதுரர் முணுமுணுத்தார். ஆனால் திருதராஷ்டிரர் சினந்த யானையைப்போல உறுமியதைக்கேட்டு தருமன் மீண்டும் பின்னடைந்தான்.

சஞ்சயனின் கைகளைப் பற்றியபடி திருதராஷ்டிரர் திரும்பி நடக்கத்தொடங்கினார். தலையைத் திருப்பி மோவாயை சுழற்றியபடி மெல்ல முனகிக்கொண்டே சென்றார். அவர் அறையின் மறுவாயிலை அடைந்ததும் அறையில் இருந்த அத்தனை பேர் உடல்களிலும் மெல்லிய அசைவு ஒன்று குடியேறியது. சகுனி புன்னகையுடன் எழுந்து தன் சால்வையைப் போட்டுக்கொண்டு “நான் அரண்மனைக்குச் செல்கிறேன்... விப்ரரே, அரசர் என்னைப் பார்க்கவிரும்பினால் செய்தி அனுப்புங்கள். எப்போதும் காத்திருப்பேன்” என்றபின் விதுரரை நோக்கி தலையசைத்தபடி வலக்காலை மெல்லத் தூக்கி வைத்து மெல்ல நடந்தார். அவரது அணுக்கச்சேவகர் கிருதர் அருகே வந்து அவரை அழைத்துச்சென்றார்.

கணிகர் மெல்லியகுரலில் “நீங்கள் சென்று அவரைத் தொட்டிருக்கலாம் இளவரசே. உங்கள் தீண்டலில் அவர் அனைத்தையும் மறந்துவிட்டிருப்பார்...” என்றார். விதுரர் திரும்பி நோக்க கணிகர் இயல்பான புன்னகையுடன் “ஏதோ பிழைபுரிதல். அதை சொற்களை விட அண்மை எளிதில் சீரமைத்துவிட்டிருக்கும்” என்றார். விதுரர் பெருமூச்சு விட்டு “இளவரசே, சென்று ஓய்வெடுங்கள். அரசர் ஓய்வெடுத்து முடித்ததும் பேசுவோம்” என்றார். கணிகர் “நீங்கள் மட்டும் தனியாகச் சென்று அரசரிடம் பேசுங்கள்... அரசவைப்பேச்சின் முறைமை இல்லாது பேசினாலே உள்ளங்கள் தெளிவாகிவிடும்” என்றார். “நன்றி கணிகரே”என்று விதுரர் தலைவணங்கினார்.

வெளியே சென்றதும் தருமன் கவலையுடன் “என்னசெய்வது அமைச்சரே?” என்றான். “ஒன்றும் செய்யமுடியாது. காத்திருப்போம். ஒவ்வொன்றும் எழுதிவைத்து நிகழ்வதுபோல ஒருங்கு குவிகின்றன...” என்றார் விதுரர். “எழுதிவைத்து நடத்துபவர் காந்தார இளவரசர்....” என்றான் அர்ஜுனன். “அவரது காந்தாரச்செலவுக்குப் பின் உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கின்றன. அவரது கண்கள் நாமறிந்தவை அல்ல” என்றான். “நாம் வீணே பேசிக்கொள்வதில் பயனில்லை. அரண்மனைக்குச் சென்று ஓய்வெடுங்கள். மாலையில் அரசர் இசைக்கூடத்துக்கு வருவதற்கு முன் அவரது படுக்கையறையிலேயே சென்று பேசுவோம். அவர் உள்ளம் உங்களை தன் இளையோனின் வடிவங்களாகவே காண்கிறது. பேசும்போது முதலிலேயே உங்கள் தந்தையின் பெயரை சொல்லிவிடுங்கள்...” என்றார் விதுரர்.

கனகனிடம் "விப்ரரிடம் பேசு. அரசர் மாலை இசைநிகழ்ச்சிக்கு கிளம்புவதற்கு முன்னதாகவே நாம் அவரை சந்தித்தாகவேண்டும். அரைநாழிகைநேரம் போதும். விப்ரரிடம் சொல்லி ஒருங்கமை. ஆனால் நாம் சந்திக்கச்செல்வதை அவரிடம் சொல்லவேண்டியதில்லை. அவர் அறைவாயிலில் நாம் சென்ற பின்னர் அறிவித்தால் போதும்” என்றார் விதுரர் நடந்தபடி. கனகன் “ஆனால் விப்ரர் அதைச்செய்வாரா?” என்றான். “விப்ரர் அரசரின் ஆத்மாவின் துணைவர். அவரது அகம் நாடுவதையே அவர் செய்வார். அரசரின் நெஞ்சு அவரது இளையோனின் மைந்தரை ஒருபோதும் விலக்காது” என்றார் விதுரர்.

பீமன் “இத்தனை பதற்றமும் எதற்கென்றே தெரியவில்லை அமைச்சரே. சொல்லிப்புரியவைக்க முடியாத பிழை என்ன நிகழ்ந்துவிட்டது? பெரியதந்தை எப்போதும் இச்சிறியவற்றுக்கு அப்பால்தான் இருந்துவருகிறார்” என்றான். “இளையவனே, மனிதர்கள் உடலுக்குள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதே அரசு சூழ்தலின் முதல் விதி” என்றார் விதுரர். “நல்லவர்கள் பிறரை நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரை கூர்ந்துநோக்குவதில்லை. ஆகவே பிறரை அவர்கள் அறிவதுமில்லை. தீயவர்கள் பிறரை அணுவணுவாக கூர்ந்து நோக்கி அறிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை நன்கறிந்த ஒருவர் நாம் அவரை சற்றும் அறியாமலிருக்கையில் மிக எளிதாக நம் அகத்தை மாற்றிவிடமுடியும். அரசருக்கு இப்போது அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று விதுரர் சொன்னார்.

அர்ஜுனன் மெல்லியகுரலில் “அமைச்சரே, நான் மூத்தவர் அன்னையை நோக்கி மணிமுடியுடன் சென்றதுமே அனைத்தையும் ஒரு கணத்தில் கண்டுவிட்டேன்” என்றான். "பெரியதந்தையை நான் சிறுவயது முதல் கூர்ந்து நோக்கி வருகிறேன். அவர் பெருங்களிறு. களிறு சிந்தையாலோ கல்வியாலோ ஆன உள்ளம் கொண்டது அல்ல. உடல்வல்லமையாலும் உறவாலும் ஆனது. எங்களை பெரியதந்தையார் விரும்புகிறார் என்றால் அது அவரது இளையோனின் மைந்தர்கள் நாங்கள் என்பதனால்தான். வெறும் குருதியுறவு அது. அப்படியென்றால் அவரது மைந்தர்களுடன் அவருக்கிருக்கும் உறவு இன்னும் ஆழமானது.”

“ஆம், அது உண்மை” என்றான் பீமன். “எங்களுக்கு இந்நாட்டை அளித்தபின் அரசர் மனம் உருகி அழுததை நினைவுகூர்கிறேன். ஏன் அந்தப் பேருணர்ச்சி? விதுரரே, அவர் கடந்தாகவேண்டியிருந்தது குருதியின் தடையை. அத்தனை உணர்ச்சிவல்லமை இல்லாமல் அதை அவர் கடந்திருக்கமுடியாது. அவரது கண்ணீரின் பொருள் ஒன்றே. அம்முடிவை அவர் தன்னுள் உள்ள ஆயிரம் கைகளைத் தட்டி அகற்றிவிட்டு சென்றடைகிறார்” என்றான். அர்ஜுனன் “அவரது ஆழத்தில் ஒரு விழி தவித்துத்தவித்து தேடிக்கொண்டிருக்கிறது. எங்களை உதறி தன் மைந்தர்களை நோக்கித் திரும்புவதற்கான நியாயங்களுக்காக. அவற்றை அவர் கண்டடைந்ததும் அங்குதான் செல்வார்” என்றான்.

“இளையவனே, வேண்டாம்” என்றான் தருமன். “பெரியதந்தையின் பெருந்தன்மையை எண்ணி நான் நம் குடியின் மேல் பெருமிதம் கொண்டிருக்கிறேன். அவர் நிழலில் வாழ்கிறேன் என்று எண்ணுகையிலேயே என் அகம் நிறைவடைகிறது. நீ எண்ணுவது பிழையோ சரியோ அப்படி எண்ணத்துணிவது பெரும்பிழை. நாம் நின்றிருக்கும் காலடிமண்ணை அவமதிப்பது அது.” “மூத்தவரே, இத்தருணத்தில் நாம் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று சிந்திக்கவேண்டியிருக்கிறது” என்றான் பீமன். “பெரியதந்தையார் அவ்வண்ணம் எண்ணுகிறார் என்பதற்கு என்ன சான்று உள்ளது இளையவனே?”

அர்ஜுனன் “அவர் அறிந்து அதைச் செய்யவில்லை. ஆனால் அறியாது செய்யும் செயல்களே மானுட இயல்பை நிகழ்த்துகின்றன” என்றான். விதுரர் “இந்த வாதங்களை நான் கேட்கவிரும்பவில்லை. இளையோரே, இளமையில் மானுட அகத்தை ஆராய்ந்து வகுத்துவிடமுடியுமென்ற அக எழுச்சி அனைவருக்கும் ஏற்படுகிறது. முதுமை நெருங்க நெருங்க அது திறந்த வெளியின் தீபச்சுடர் எவ்வாறெல்லாம் நெளியும் என்று கணிப்பதற்கு நிகரான வீண்வேலை என்று தெரியவரும். ஒரு சுடரை அசைப்பவை இப்புவியின் காற்றுவெளியின் திசைமாற்றங்கள். அதை நிகழ்த்துவது வான்வெளி. வானை அறிந்தாலொழிய சுடரை அறியமுடியாது” என்றபின் “சென்று ஓய்வெடுங்கள்” என்றார்.

தன் அறைக்குச் சென்றபின் சிலகணங்கள் கண்மூடி நின்றார். பின்னர் திரும்பி நீண்ட இடைநாழி வழியாக நடந்து உள்முற்றத்தில் இறங்கி துணைக்காடு வழியாக நடந்து தன் சிறிய அரண்மனையை அடைந்தார். அவர் வருவதை சேவகர் சொன்னதும் சுருதை வாயிலுக்கே வந்தாள். புன்னகையுடன் “நீராடுகிறீர்களா?” என்றாள். அவர் அங்கே வந்து எட்டுநாட்களுக்கும் மேல் ஆகிறதென்பதையே அறியாதவள் போலிருந்தாள். அந்த பாவனையை அவள் அங்கு வந்த சிலநாட்களிலேயே கற்றுக்கொண்டிருந்தாள். விதுரர் “சுசரிதனுக்கு வெம்மை கண்டிருக்கிறது என்றார் மூத்தவர்” என்றார்.

“ஆம், ஆனால் நேற்றே அவன் தேறிவிட்டான்” என்றாள் சுருதை. விதுரர் மேலாடையை அவள் தோளில் இட்டு விட்டு மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றார். உள்ளே தாழ்வான கட்டிலில் சுசரிதன் துயின்றுகொண்டிருந்தான். “மருத்துவர் பிழிசாறு கொடுத்திருக்கிறார்...” என்று பின்னால் நின்று சுருதை சொன்னாள். அவர் மெல்ல அருகணைந்து குனிந்து அவன் தலையைத் தொட்டு “வெம்மை இல்லை” என்றார். “ஆம், அஞ்சுவதற்கேதுமில்லை. நாளைமறுநாள் எழுந்துவிடுவான் என்றார்” என்றாள். “மூத்தவனிடமிருந்து செய்தி வந்ததா?” என்றார். சுபோத்யன் கூர்ஜரத்தில் நிகழும் அரசநிகழ்ச்சி ஒன்றுக்காக அஸ்தினபுரியின் தூதனாக அனுப்பப்பட்டிருந்தான். “இல்லை... செய்தி வந்தால் அங்குதானே வரும்?” என்றாள் சுருதை.

விதுரர் நீராடி உணவுண்டு மேலே சென்று உப்பரிகையில் வடக்கு நோக்கிய சாளரம் அருகே அமர்ந்துகொண்டார். அவருடைய காலம்சென்ற அன்னை சிவை அங்குதான் அமர்ந்திருந்தாள். வருடக்கணக்காக. வரைந்த சித்திரச்சீலை போல. அவள் மறைந்தபின்னரும் நெடுங்காலம் அவளுடைய தோற்றம் அங்கிருப்பதாகத் தெரிந்தது. சேடியரும் சேவகரும் அங்கே செல்வதற்கே நெடுங்காலம் அஞ்சினர். ஆனால் தனித்திருக்கவேண்டுமென விரும்பினால் விதுரர் இயல்பாகவே அங்குதான் வந்து அமர்ந்துகொள்வார்.

தாலத்தில் தாம்பூலத்துடன் சுருதை வந்து அருகே அமர்ந்தாள். அவள் வந்த அசைவை அறிந்தும் அவர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவள் தாம்பூலத்தை சுருட்டி நீட்டி “என்ன சிந்தனை?” என்றாள். அவர் அதை என்ன அது என்பது போல நோக்கிவிட்டு “ம்?” என்றார். “தாம்பூலம் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். அவர் அதை வாங்கி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். அந்த அசைவு அவரது முகத்தை இளகச்செய்தது. முகம் தளர்ந்தபோது அகமும் தளர்ந்தது. பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டார்.

“என்ன இக்கட்டு?” என்றாள் சுருதை. “இக்கட்டு இல்லாமல் இப்படி வந்து அமர்ந்திருக்கமாட்டேன் என்று தெரியாதா உனக்கு?” என்றார். “ஆம், தெரியும்...” என்று அவள் புன்னகை செய்தாள். விதுரர் சினத்துடன் தலைதூக்கி “அதற்காக உன்னிடம் செல்வழி ஒன்றும் கேட்டுக்கொள்வதற்காக வரவில்லை... வெறுமனே இருந்தபோது வரவேண்டுமென்று தோன்றியது, அவ்வளவுதான்” என்றார். அவள் புன்னகைத்து “நான் செல்வழி சொல்வேன் என்று எப்போது சொன்னேன்?” என்றாள். “ஏதோ இக்கட்டில் வந்திருக்கிறேன் என்று தாம்பூலத்துடன் வந்ததைப் பார்த்தேன்...” என்றார். “சரி, நான் இக்கட்டை கேட்கவில்லை. சொல்லவும் வேண்டாம்” என்றாள் சுருதை.

“சொல்லப்போவதுமில்லை” என்ற விதுரர் தாம்பூலத்தை மென்றபடி அவளை நோக்கினார். பின்னர் அவள் காதோரத்தில் இருந்த நரையை சுட்டிக்காட்டி “அதை வெட்டி அகற்றிவிடு...” என்றார். “ஏன் நரை நல்லதுதானே? வளர்ந்த மைந்தர் இருக்கையில்?” என்றாள் அவள் சிரித்தபடி. முதுமையின் தொடக்கம் நிகழ்ந்திருந்த முகத்தில் சிரிக்கும்போது கண்கள் ஒளிவிட பழைய சுருதை வந்து சென்றாள். “எனக்கொன்றும் இல்லை... உனக்கு வேண்டுமென்றால் அப்படியே விட்டுக்கொள்” என்றார் விதுரர். “உங்களுக்கும்தான் நரைத்துவிட்டது” என்றாள் சுருதை. “ஆம்... ஆனால் நான் அமைச்சன்” என்றார். “நரையுள்ளவன் சொல்லுக்கு பழைய கள்ளின் மதிப்பு” என்று நகைத்தார்.

சுருதை “நரையை வெட்டி மறைக்கமுடியாது. கவலையை மறந்து கடக்கமுடியாது என்பார்கள்” என்றாள். விதுரர் “இன்று அரசரைப் பார்த்தேன்...” எனத் தொடங்கினார். “சொல்லப்போவதில்லை என்றீர்களே?” என்றாள். “ஆம், சொன்னேன். உன்னிடம் சொல்லாமல் இருக்கமுடியாது... நீதான் என் அகத்துயருக்கு மருந்து. ஆகவேதான் தேடிவந்திருக்கிறேன். நான் மூடன் நீ அறிவாளி, போதுமல்லவா?” என்று அவர் சிடுசிடுத்தார். “போதும்” என்று அவள் சிரித்ததும் தானும் சிரித்தார். பின்னர் ஒவ்வொன்றாக காலைமுதல் நிகழ்ந்ததை சொன்னார்.

சுருதை பெருமூச்சுடன் “நீங்கள் நினைப்பது சரிதான். பெரிய விரிசல்தான்” என்றாள். “ஏன்?” என்றார் விதுரர். “ஏனென்றால் குந்திதேவி அரசரின் இளவல் பாண்டுவின் மனைவி” என்றாள் சுருதை. “அவ்வாறெல்லாம் எளிமையாக நினைக்கமுடியாது... நீ சொல்வது ஏதோ சமையலறைப்பூசல் போல ஒலிக்கிறது” என்றார் விதுரர். “சமையலறை இல்லாத வீடு உண்டா என்ன?” என்றாள் சுருதை. “உங்கள் நூல்கள் சொல்வதைவிட மிக எளிமையானதுதான் அது. அரசருக்கும் இளவலுக்கும் நடுவே இருந்தவள் அவள். தன் இளவலுடன் தன்னைவிட அணுக்கமாக இருக்க முடிந்தவள். அந்த எண்ணத்தில் இருந்து அரசரால் விலகவே முடியாது. அது சமையலறை உணர்ச்சிதான். ஆனால் சமையலறையில்தான் அனைத்துமே சமைக்கப்படுகின்றன.”

“அவள் முடிசூடியதை அவரால் ஏற்கமுடியாது என்கிறாயா?” என்றார் விதுரர். “ஆம், ஒருபோதும் ஏற்கமுடியாது. தன் பெருந்தன்மையால் அவர் அதை கடந்துசெல்ல முயல்வார். ஆனால் அது உள்ளே இருந்துகொண்டேதான் இருக்கும். அவருக்கு குந்திதேவிமேல் இருக்கும் அந்த விலக்கத்தைத்தான் கணிகர் கையாள்கிறார்.” விதுரர் நீள்மூச்சுடன் “நான் சோர்ந்துவிட்டேன். தெய்வங்களின் ஆணை என ஒன்றன் மீது ஒன்றாக நிகழ்கின்றன. வெறும் தற்செயல்கள். ஆனால் அவை முடிவெடுத்தவைபோல வந்துகொண்டிருக்கின்றன.”

“சோர்வதற்கு ஏதுமில்லை” என்று சுருதை சொன்னாள். “குந்திதேவியின் ஆணை ஒன்று எந்த மதிப்பும் இன்றி செல்வதை அரசர் அறியும்படி செய்யுங்கள். அரசரின் ஆணை மட்டுமே இங்கே நிலைகொள்ளும் என அவருக்குக் காட்டுங்கள். குந்திதேவி அவமதிப்புக்குள்ளாவாள் என்றால் அரசர் அகம் நிறைவடையும்.” விதுரர் அரைக்கணம் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கினார். “நீங்கள் எண்ணுவதை நானறிவேன். ஆனால் எனக்கு வயதாகிவிட்டது. தோள்மேல் மைந்தர் எழுந்துவிட்டனர்” என்றாள் சுருதை. “நான் என்ன எண்ணினேன்? உனக்கு பித்துப்பிடித்திருக்கிறது” என்று விதுரர் சீறினார். “சரி” என்று சுருதை நகைத்தாள்.

“என்ன சிரிப்பு? குந்தியை அவமதிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன் என நினைக்கிறாயா?” என்றார் விதுரர். “அவமதிப்பு என ஏன் எண்ணவேண்டும்? அது அவர்கள் அறிந்தே நிகழும் நாடகமாகக் கூட இருக்கலாமே?” என்றாள் சுருதை. அறியாமல் விதுரர் முகம் மலர்ந்தார். அதைக்கண்டு அவள் நகைத்தபடி “இப்போது தயக்கமில்லை அல்லவா?” என்றாள். விதுரர் நகைத்தபடி துப்புவதற்காக எழுந்தார். அவள் கலத்தை எடுத்து அருகே வைத்தபடி “சற்று துயிலுங்கள். மாலைக்குள் நான் எழுப்பிவிடுகிறேன்” என்றாள்.

பகுதி ஏழு : பூநாகம் - 4

விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்...” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள்.

விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” என்றார். “இல்லை” என்றான் கனகன். “மதுவனத்தில் இருந்து பலராமரே அவரை அனுப்பியிருக்கிறார். சூரசேனரின் முத்திரைத் தூதுடன் வந்திருக்கிறார்.” விதுரர் நிமிர்ந்து நோக்க “பலராமர் எந்த அரசியலிலும் ஈடுபடுவதில்லை. அவரது இளையோனுடன் இணைந்து மதுராவை வென்றபின்னர் அவர் தன் தந்தை வசுதேவரை அரசராக்கிவிட்டு மதுவனம் திரும்பிவிட்டார். அவருக்கு அவரது பாட்டனார் சூரசேனரே அண்மையானவராக இருக்கிறார். அவரது அகநிலை இன்னமும்கூட ஓர் அரசிளங்குமரருக்குரியதல்ல. ஆயர்குடி இளைஞனுக்குரியது என்கிறார்கள்” என்றான் கனகன்.

“ஆம்” என்றார் விதுரர். “அவர் மதுவனத்தின் காடுகளில் கன்று மேய்த்து எளிய ஆயர்பாடி வாழ்க்கையையே வாழ்கிறார். நம் இளவரசரும் அவருடன் கானுலாவி கதாயுத்தம் கற்றுக்கொண்டிருப்பதாகவே செய்தி வந்திருக்கிறது. இப்போது வந்திருக்கும் முத்திரைத்தூதில் இருப்பது சூரசேன அரசின் இலச்சினை அல்ல. மதுராபுரியின் இலச்சினை. மதுராபுரியின் இளவரசராக அதை பலராமர் அனுப்பியிருக்கிறார்” என்றான் கனகன்.

விதுரர் “சென்ற சில மாதங்களாகவே நான் மதுராபுரி பற்றிய செய்திகளை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். நாம் அக்கறைகொள்ளவேண்டிய சூழலே அங்குள்ளது” என்றார். கனகன் அதை அறிந்தவன் போல தலையசைத்தான். “நான் இளவரசரையும் அவரது தூதையும் பார்க்கிறேன். அதைப்பற்றிய முடிவை நான் எடுத்தபின்னர் அவர் அரசரை சந்தித்தால் போதுமானது. நீ விரைந்து சென்று இளவரசரிடம் என் அலுவலகத்தில் காத்திருக்கும்படி நான் கோரியதாக சொல்” என்றார் விதுரர். கனகன் தலைவணங்கி முன்னால் ஓடினான்.

விதுரர் அவரது அலுவலகத்தை அடைந்தபோது மூச்சிரைத்தார். அவரைக் கண்டதும் அங்கே இருந்த கனகன் எழுந்து “வணங்குகிறேன் அமைச்சரே” என்றபின் மேலே சொல்ல வாயெடுத்தான். “எங்கே இளவரசர்?” என்றார் விதுரர். “சற்றுமுன் இங்கே சகுனி வந்தார்...” என கனகன் சொல்லத் தொடங்கவும் “இங்கா?” என்றார் விதுரர். “ஆம்... இளவரசர் வந்த செய்திகேட்டு சந்திக்க ஆவல்கொண்டு வந்ததாகச் சொன்னார். கூடவே அவர் பாண்டவ இளவரசர்கள் மூவரையும் அழைத்து வந்தார்.”

விதுரர் பதற்றத்துடன் “அவர்களை எங்கே பார்த்தாராம்?” என்றார். “வரும் வழியில் அவர்கள் அரண்மனைக்கு வந்துகொண்டிருப்பதைப் பார்த்தாராம்... துரியோதனனை பார்க்க வாருங்கள் என அழைத்திருக்கிறார். அவர்களால் அதை மறுக்கமுடியாது அல்லவா?” என்றான் கனகன். “இப்போது அவர்கள் எங்கே?” என்றார் விதுரர். “அவர்களை அழைத்துக்கொண்டு அரசரைப் பார்க்க அவரே கிளம்பிச்சென்றுவிட்டார்.”

விதுரர் உரத்த குரலில் “மீண்டும் வென்றுவிட்டார்... உடனே நாம் செல்லவேண்டும். நாம் செல்வதற்குள் சகுனி பலராமரின் தூதை அரசரிடம் சொல்லிவிடாமலிருக்கவேண்டும்...” என்றார். சால்வையை சுற்றிப்போட்டுக்கொண்டு அவர் ஓட அவருடன் விரைந்தபடி “ஏன் அமைச்சரே?” என்றான் கனகன். “அந்தத் தூதில் என்ன இருக்கும்?”

“மூடா... இன்று நாம் பாண்டவர்களை அரசரை தனியாக சந்திக்கச்செய்து அவர் உள்ளத்தை ஆற்ற எண்ணியிருந்தோம். சகுனியுடன் அவர்கள் சென்றால் அது நிகழாது. சென்றதுமே துரியோதனன் கொண்டுவந்த பலராமரின் தூதை சகுனி அளித்துவிட்டால் பேச்சு முழுக்க அப்பக்கம் திரும்பிவிடும்.” விதுரர் குரல் தாழ்த்தி “மேலும் பாண்டவர் முன் அது பேசப்படுமென்றால் தானே அரசர் என்று காட்டுவதற்காக திருதராஷ்டிரர் விரைந்து பிழைமுடிவுகளையும் எடுக்கக்கூடும்” என்றார்.

அவர்கள் புஷ்பகோஷ்டத்தை அடைந்தனர். விதுரர் மூச்சுவாங்கி வியர்வையில் நனைந்திருந்தார். விப்ரர் “அரசர் படுக்கையறையில் இல்லை அமைச்சரே. மன்றறையில் அவருடன் இளவரசர் சகுனியும் நம் இளவரசர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். “அதைப்பற்றிப் பேசத்தான் வந்தேன்” என்றார் விதுரர். மன்றுசூழ் அறைக்குள் கணிகர் இருக்கிறாரா என்ற எண்ணம் விதுரர் நெஞ்சில் எழுந்தது. இருக்கிறார் என உள்ளுணர்வு சொன்னது.

உள்ளே வரும்படி ஆணை வந்ததும் தன்னுள் சொற்களை கோர்த்துக்கொண்டு விதுரர் உள்ளே சென்றார். திருதராஷ்டிரரின் முகத்தைக் கண்டதுமே தெரிந்துவிட்டது, தூது அவருக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று. ஓலை அவர் அருகே மூங்கில் பீடத்தில் கிடந்தது. தன்னைக் கோர்த்துக்கொண்டு அரசரை வணங்கி பீடத்தில் அமர்ந்துகொண்டார். நின்றிருந்த துரியோதனன் அவருக்குத் தலைவணங்கி புன்னகைசெய்ய சகுனியும் மெல்ல தலையசைத்து புன்னகையுடன் வணங்கினார். துரியோதனனுக்குப் பின்னால் துச்சாதனன் நின்றிருந்தான். மூத்த கௌரவர் இருபதுபேர் அப்பால் சுவரை ஒட்டி நின்றிருந்தனர். விதுரரைக் கண்டதும் அவர்களும் பாண்டவர்களும் அமைதியாக தலைவணங்கினர். சௌனகர் சற்றே எழுந்து விதுரரை வரவேற்றபின் அமர்ந்துகொண்டார்.

கணிகர் சற்று அப்பால் சிறியபீடத்தில் மின்னும் கண்களுடன் உடலை ஒடித்து வைத்திருப்பது போல அமர்ந்திருந்தார். அவர் எப்போதுமே அமர்வதற்கு அறைகளின் இருண்டபகுதிகளையே தேர்ந்தெடுக்கிறார் என்று விதுரர் எண்ணிக்கொண்டார். அத்துடன் அரசர் காதுகளில் மிகத்தெளிவாக அவரது சொற்கள் விழும் இடமாகவும் அது இருக்கும். அவர் அமர்ந்திருந்தது திருதராஷ்டிரரின் வலது பின்பக்கம். அவர் எப்போதும் தாடையை அப்பகுதி நோக்கியே தூக்குவார் என்பதை உற்று கணித்திருக்கிறார்.

மெல்லியகுரலில் இடைவெளியின்றி பேசிக்கொண்டே செல்வது கணிகரின் வழக்கம். அதை ஒரு உத்தியாகவே கொண்டிருந்தார். இடைவிடாத அந்தப்பேச்சு ஊடறுத்து விவாதிக்கவோ பிற வினாக்களுக்குச் செல்லவோ இடைவெளி அளிக்காதது. நாகத்தை மகுடி என கேட்பவர்களை மயங்கச்செய்துவிட்டிருக்கும் அது. அச்சொற்பெருக்கின் நடுவே தான் வலியுறுத்தும் சொற்றொடர்களை மட்டும் நன்றாக அழுத்தி இடைவெளிவிட்டு இன்னொருமுறை சொல்வார். சற்று கழித்து அதேவரிகளை அப்படியே மீண்டும் இருமுறை சொல்வார். அவை கேட்பவரின் உள்ளத்தில் மறு எண்ணங்கள் அற்றவையாக பதிந்துவிடும்.

கணிகர் அவரது முதன்மையான கருத்தை விவாதிப்பதே இல்லை என்பதை விதுரர் கண்டிருந்தார். அவற்றை அவர் கூரிய சொற்றொடர்களாக ஆக்கி சொற்பெருக்கின் நடுவே திரும்பத்திரும்ப வரும்படி அமைத்துக்கொள்வார். அவற்றைச் சுற்றி எளிய கூற்றுகளை அமைத்து அவற்றுக்கே வாதங்களையும் உதாரணங்களையும் அளிப்பார். அவரது பேச்சைக்கேட்பவர்கள் அந்த முதன்மைக்கருத்தை தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருப்பார்கள். அதை தங்கள் கருத்தாக வளர்த்துக் கொள்வார்கள். சற்று நேரம் கழித்து அவர்கள் அதை தங்கள் எண்ணமாகவே முன்வைப்பார்கள்.

கணிகர் அங்கிருப்பதே விதுரரை எரிச்சல்கொள்ளச் செய்தது. அப்பகுதியை நோக்கி திரும்பலாகாது என எண்ணிக்கொண்டார். அப்போதுதான் தான் இருக்கும் இருக்கையின் இடர் என்ன என்று அவருக்குப்புரிந்தது. திருதராஷ்டிர மன்னரின் நேர்முன்னால் அவ்விருக்கை இருந்தது. அவர் தன்னை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருப்பார். உடலசைவின் ஒலிகளைக் கொண்டு பார்வையளவுக்கே மனிதர்களை அறிய அவரால் இயலும். அந்த விழியற்ற நோக்கின் முன் அவர் பாதுகாப்பின்றி அமர்ந்திருக்கவேண்டும். கணிகர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து அவர் தன் குரல்மூலம் அவைக்கு வந்துவிட்டு மீண்டும் மறைந்துவிடமுடியும்.

வாசலில் சேவகன் தோன்றி அமைச்சர்கள் வந்திருப்பதை அறிவித்தான். திருதராஷ்டிரர் கைகாட்டியதும் அவன் சென்று அமைச்சர்களை உள்ளே அனுப்பினான். அத்தனை அமைச்சர்களும் வந்திருப்பதை விதுரர் வியப்புடன் நோக்கியபின் சகுனியை நோக்கினார். சகுனியின் விழிகள் எண்ணங்கள் ஒழிந்தவையாக இருந்தன. அமைச்சர்கள் அமர்ந்துகொள்ளும் ஓசைகள் கேட்டன. திருதராஷ்டிரர் மோவாயில் கைவைத்துக்கொண்டு பீடத்தில் சற்று சாய்ந்தவர் போல அமர்ந்திருந்தார்.

அனைவரும் அமர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதும் திருதராஷ்டிரர் “முதன்மைத் தூது ஒன்று வந்துள்ளது அமைச்சர்களே. அதை நாம் விவாதிக்கவேண்டும் என்றார் காந்தார இளவரசர்” என்றபின் துரியோதனனிடம் “அமைச்சர்களிடம் தூதை முறைப்படி சொல்...” என்றார்.

துரியோதனன் “அமைச்சர்களே, நான் மதுராபுரியின் இளவரசர் பலராமரிடமிருந்து தூதுடன் வந்திருக்கிறேன்” என்றான். “முறைமைப்படி அங்குள்ள சூழலையும் பின்புலத்தையும் முதலில் சொல்கிறேன். நீங்களும் அவற்றை பொதுவாக அறிந்திருப்பீர்கள்.”  விதுரர் கண்களை மூடிக்கொண்டார். திருதராஷ்டிரர் தன் உடல்வழியாக வெளிப்படுத்தும் சொற்களை பாராமலிருந்தால் தன்னால் சீராக சிந்திக்கமுடியும் என்று எண்ணினார். அறைக்குள் சுவர் ஓரமாக நின்றிருந்த பாண்டவர் மூவரும் குழப்பமான உடலசைவுகளைக் காட்டினர். அவர்களை திருதராஷ்டிரர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

“அமைச்சர்களே, மதுராபுரி யாதவர்கள் யயாதியின் மைந்தர் யதுவின் வழி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யமுனைக்கரை முழுவதும் பரவி பல சிற்றரசுகளை அமைத்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் அதிகமானவர்கள் அல்ல என்றாலும் பசுச்செல்வத்தால் களஞ்சியம் நிறையப்பெற்றவர்கள். இந்த பாரதவர்ஷத்தின் வளர்ந்துவரும் ஆற்றல் யாதவர்களே என்பது அனைவரும் அறிந்ததே” என்று துரியோதனன் சொல்லத் தொடங்கினான்.

“எட்டு பெரும் யாதவகுலங்களில் வல்லமை வாய்ந்தவை ஹேகயகுலமும் விருஷ்ணிகுலமும். கோசலத்தை ஆண்ட இக்ஷுவாகு குலத்து அரசனான சத்ருக்னன் லவணர்களை வென்று மதுராவை அமைத்த காலம் முதல் அவர்களே மதுராவை மாறிமாறி ஆண்டுவருகிறார்கள். ஹேகயனே இன்றைய மதுராவை பெருநகராக்கியவன். சென்ற யுகத்தில் அக்குலத்தைச்சேர்ந்த மாமன்னன் கார்த்தவீரியன் மதுரா நகரை பேரரசாக ஆக்கினான். கங்கைநிலத்தையும் வென்று இமயச்சாரல் வரை சென்றது அவன் கோல்.”

துரியோதனன் தொடர்ந்தான் “நம் யுகத்தில் விருஷ்ணிகுலத்து அரசர் விடூரதர் மதுராபுரியை ஆண்டார். அவருக்குப்பின் அவர் மைந்தர் சூரசேனர் ஆட்சிக்குவந்தார். விடூரதனின் தம்பியான குங்குரர் அன்று அனைத்து படைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் அனைத்து குலநெறிகளையும் மீறி விடூரதனின் குடியை மதுராபுரியில் இருந்து துரத்திவிட்டு அரசை கைப்பற்றிக்கொண்டார். சூரசேனனின் மைந்தர் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று அமைத்ததே மார்த்திகாவதி என்ற நகர். அவர் போஜர்குலத்தில் மணம்புரிந்து போஜர்களின் ஆட்சியை அங்கே அமைத்தார். மார்த்திகாவதி இன்று நம் சமந்த நாடு. மார்த்திகாவதியின் இளவரசி நம் அரசியாக அமர்ந்திருக்கிறார்.”

“குங்குரருக்குப்பின் அவரது மைந்தர் வஹ்னியின் கொடிவழி மதுராவை ஆண்டது. அவ்வரிசையில் வந்த ஆகுகர் காலத்தில் ஆக்னேயபதங்கள் விரிவடைந்தன. மதுராபுரி வணிக மையமாகியது. வணிகப்பாதைகளுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டதனாலும் கங்கைசெல்லும் படகுகளை ஆசுரநாட்டு கொள்ளையர்களிடமிருந்து காக்கவேண்டுமென்பதனாலும் ஆகுகர் மகதத்தின் சிற்றரசாக அமைய அவரே முன்வந்து ஒப்புக்கொண்டார். மகதத்துக்கும் மதுராவுக்குமான உறவு அன்று தொடங்கியது. மகதமன்னர் மகத்ரதரின் படைகளை ஆகுகர் கொண்டுவந்து யமுனைக்கரையிலும் ஆக்னேயபதங்களிலும் நிறுத்தினார். அன்றுமுதல் மதுராபுரியை மகதம் தன்னுடைய நெய்க்களஞ்சியமாகவே எண்ணி வந்திருக்கிறது.”

“அமைச்சர்களே, யாதவப்பெருங்குலங்கள் குங்குரரின் கொடிவழியை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அந்த முறைமீறலை யாதவர்களின் தெய்வங்கள் ஒவ்வொரு பெருங்குல உண்டாட்டின்போதும் சன்னதத்தில் வந்து கண்டித்து தீச்சொல்லிட்டன. ஆனால் மகதத்தின் துணை இருக்கும்வரை யாதவர்களால் மதுராவைத் தாக்கி குங்குரரின் கொடிவழி வந்த மன்னர்களை வெல்லமுடியாது என்பதனால் வருடம்தோறும் வஞ்சினத்தை மீளுறுதி செய்துகொண்டு காத்திருந்தனர்” என்றான் துரியோதனன்.

“குங்குரரின் வழியில் வந்த உக்ரசேனர் மதுராவை ஆளும்காலத்தில் அவர் மகதத்தின் படைகளைக் கொண்டு யாதவர்களின் அரசுகளான மார்த்திகாவதியையும் மதுவனத்தையும் வென்று ஒரு பெரிய அரசை அமைக்கும் எண்ணம் கொண்டிருந்தார். பிதாமகர் பீஷ்மர் தலையிடக்கூடுமென்ற அச்சமே அவரை தயங்கச்செய்தது” என்று துரியோதனன் தொடர்ந்தான். “உக்ரசேனரின் மைந்தர் கம்சர் தந்தையை சிறையிட்டு அரசை வென்றார். அவர் அரசுசூழ்தலில் தந்தையைவிட தேர்ச்சியும் பேராசையும் கொண்டிருந்தார்.”

“கம்சர் முடிசூடிக்கொண்டபோது உத்தரமதுராபுரி உக்ரசேனரின் இளையவராகிய தேவகரால் ஆளப்பட்டது. மார்த்திகாவதி குந்திபோஜராலும் மதுவனம் சூரசேனராலும் ஆளப்பட்டது. மூன்று அரசுகளையும் வெல்வதற்கான வாய்ப்புகள் கம்சருக்கு கனிந்து வந்தன. சூரசேனரின் மைந்தர் வசுதேவர் அனைத்து குலத்தடைகளையும் உதறிவிட்டு உக்ரசேனரிடம் அமைச்சராக வந்துசேர்ந்தார். கம்சரின் இளமைக்காலத் தோழரும் பேரமைச்சரும் ஆனார். மதுவனத்துடன் மதுராபுரிக்கு இருந்த பகை அழிந்தது. உத்தரமதுராபுரியின் தேவகரின் மகள் தேவகியை வசுதேவருக்கு மணம்புரிந்துவைத்தால் உத்தரமதுராபுரியையும் தன் கொடிக்கீழ் கொண்டுவர முடியுமென கம்சர் எண்ணினார். தேவகியும் வசுதேவரும் காதல்கொண்டிருந்தனர். யாதவகுலங்களில் மணமகனை பெண் தேர்வுசெய்யும் முறையே நிலவியது. மார்த்திகாவதியின் இளவரசியான குந்திதேவியை மணந்துகொண்டால் அவ்வரசும் தன் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று கம்சர் எண்ணினார்.”

“மகதத்தை மீறிச்செல்ல கம்சருக்கு எண்ணமிருந்தது என்கிறார்கள். மதுராபுரியின் செல்வம் முழுக்க மகதத்துக்கு கப்பமாகவே சென்றுகொண்டிருந்தது. எஞ்சிய செல்வம் எல்லைகளைக் காப்பதற்கு செலவாகியது. யாதவர்களின் மூன்று அரசுகளையும் போரின்றி தன்னுடன் ஒன்றாக்க முடியுமென்றால் மதுராபுரி மகதத்துக்கு கப்பம் கட்டுவதை நிறுத்திவிடமுடியும். வெறும் ஐந்தே வருடங்களில் கருவூலம் நிறையும். வல்லமை வாய்ந்த படகுப்படை ஒன்றை அமைத்தால் யமுனையின் கரைகளை முழுக்க வெல்லமுடியும் என கம்சர் எண்ணினார்.”

“கம்சரின் கனவில் கார்த்தவீரியன் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்தார் என்கிறார்கள். தன்னை கார்த்தவீரியரின் மறுபிறப்பு என அவரே நம்பினாராம். இமயமலையடிவாரத்தில் கார்த்தவீரியர் படைகள் எதுவரை சென்றனவோ அதை விட மேலும் ஒரு யோசனை தூரம் தன் படைகள் சென்றாகவேண்டும் என அவர் சொல்வதுண்டாம்” துரியோதனன் சொன்னான். “ஆனால் தன் கனவுகளை மகதம் அறிந்துவிடக்கூடாதென்பதற்காக மகதத்தின் அரசர் ஜராசந்தரின் மகள்முறைகொண்ட இரு இளவரசிகளை அவர் மணந்துகொண்டார்.”

“ஆம், அதில் ஒரு கணிப்பு உள்ளது. அவ்விரு இளவரசிகளுமே ஆசுரநாட்டின் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள். மூத்த அரசி ஆஸ்தி ஆசுரகுடியான சௌரத்தைச் சேர்ந்தவர். பெரும்புகழ்கொண்ட அசுர சக்ரவர்த்தியான சூரபதுமரின் குலம் அது. இளையவரான பிராப்தி ஜராசந்தரின் தாய்வழியான ஜாரத்தைச் சேர்ந்தவர். மகதம் தன்னுடன் பகைகொண்டாலும் ஆசுரகுலங்களின் பின்துணை இருக்கும் என கம்சர் எண்ணியிருக்கலாம்” என்றார் சௌனகர்.

“கம்சரின் பொறுமையின்மையால் அனைத்துக் கணிப்புகளும் பொய்த்தன என்கிறார்கள்” என்று துரியோதனன் தொடர்ந்தான். “மார்த்திகாவதியின் இளவரசி குந்திதேவியை என் சிறியதந்தையார் பாண்டு மணந்ததன் மூலம் அது அஸ்தினபுரியின் சமந்தநாடாக ஆகியது. தேவகரின் மகள் சுருதையை நம் அமைச்சர் விதுரர் மணந்ததன்மூலம் அவரும் நம்முடன் உறவுகொண்டார். சினம்கொண்ட கம்சர் தேவகரின் மகளை சிறையெடுத்து வசுதேவருக்கு மணமுடித்தார். அதன்பின்னர்தான் அவருக்கு ஒன்று தெரிந்தது, யாதவ முடி என்பது பெண்வழிச் செல்வது என. அவருக்குப்பின் தேவகியின் மைந்தனுக்கே அரசு செல்லும் என்று அறிந்ததுமே அவர் நிலைகுலைந்தார். அந்த மைந்தன் அவரைக் கொல்வான் என்று நிமித்திகர் உரைத்ததும் அவர் பித்துப்பிடித்தவராக ஆனார்.”

“கம்சர் மதுராவில் ஆடிய கொலைநடம் போன்ற ஒன்றை பாரதவர்ஷம் கண்டதில்லை என்கிறார்கள். அச்செய்திகள் வெளியே தெரியாமலேயே அவர் பார்த்துக்கொண்டார். தேவகியையும் வசுதேவரையும் அவர் சிறையிட்டார். தன் தங்கையின் ஏழு குழந்தைகளை அவர் கொன்றார். எட்டாவது மைந்தர் மட்டும் எவருமறியாமல் கொண்டுசெல்லப்பட்டு கோகுலத்தின் யாதவகுடிகளிடம் வளர்ந்தார். அம்மைந்தனைக் கொல்வதற்காக அவன் வயதுள்ள அத்தனை யாதவக்குழந்தைகளையும் கம்சர் கொன்றார். அந்த வெறியாலேயே எஞ்சிய யாதவகுடிகளையும் முழுமையாக பகைத்துக்கொண்டார். வசுதேவர் ஹேகயகுலத்து ரோகிணியை முன்னரே மணந்திருந்தார். அவளில் அவருக்குப் பிறந்தவர் என் ஆசிரியரான பலராமர்.”

“என் ஆசிரியரும் அவரது இளவல் கிருஷ்ணனும் சேர்ந்து கம்சர் கொண்டாடிய குலக்கூடல் நிகழ்வுக்குச் சென்றனர். அங்கே கம்சரையும் அவரது தம்பியரையும் மல்லர்களையும் தோள்போருக்கு இழுத்து கொன்றனர். யாதவமுறைப்படி கம்சரை தன் கைகளால் கொன்ற கிருஷ்ணனுக்கு உரியதாகியது மதுராவின் மணிமுடி. அவர் அதை சிறையில் இருந்த தன் தந்தை வசுதேவருக்கு அளித்தார். வசுதேவர் மதுராவின் அரியணையில் தன் இரு மனைவியருடன் அமர்ந்தார். கிருஷ்ணர் வேதாந்த ஞானத்தைக் கற்க குருகுலம் தேடி இமயச்சாரலுக்குச் சென்றார். என் குருநாதரான பலராமர் மதுவனத்துக்கே சென்று அங்கே யாதவகுடிகளின் தலைவரானார்.”

“சென்ற சில ஆண்டுகளாக மதுராபுரியில் நிகழ்ந்ததை நாம் கூர்ந்து அறியத் தவறிவிட்டோம் அமைச்சர்களே” என்று துரியோதனன் தொடர்ந்தான். “கம்சரின் விதவைகளான ஜராசந்தரின் இரு மகள்கள் ஆஸ்தியும் பிராப்தியும் மீண்டும் மகதத்துக்கே சென்றுவிட்டனர். அது வசுதேவர் செய்த பெரும்பிழை. என் குருநாதரும் அவர் இளவல் கிருஷ்ணனும் மீண்டும் மீண்டும் சொல்லிச்சென்ற ஒன்றை அவர் கருத்தில் கொள்ளவில்லை. அவ்விரு ஆசுரநாட்டு அரசியரும் பலராமரையும் கிருஷ்ணனையும் தங்கள் மைந்தர்களாகவே எண்ணியவர்கள். அவர்கள் மதுராபுரியில் இருக்கும் வரைதான் மதுராபுரிக்கு பாதுகாப்பு என்றும் அவர்களும் தன் அன்னையரே என்றும் கிருஷ்ணன் கிளம்புகையில் தன் அன்னையிடமும் தந்தையிடமும் பலமுறை வலியுறுத்திச் சொன்னான்.”

“ஆனால் அதிகாரம் சிலரை பெரியவர்களாக்குகிறது, சிலரை மிகச்சிறியவர்களாக்குகிறது. வசுதேவர் நாள்தோறும் அகம் குறுகிக்கொண்டே இருந்தார். ஆசுரகுலத்து அரசியரை அவர் அவமதித்து திருப்பியனுப்பியதாக சொல்கிறார்கள். அவர்களை எந்த அரசு விழாக்களுக்கும் அழைக்கவில்லை. அவையில் அமரச்செய்யவில்லை. பின்னர் அவர்களின் ஆடையணிகளுக்கும் சேவகர்களுக்கும் நிதியளிக்கப்படவில்லை. இறுதியில் அரண்மனையை விரிவாக்கிக் கட்டவிருக்கிறோம் என்றபேரில் அவர்களை சேவகர்கள் வாழும் சிறு இல்லங்களுக்குச் செல்லும்படி சொன்னாராம் வசுதேவர். கிருஷ்ணனின் சொல் மேல் கொண்ட பற்றால் அவர்கள் அங்கும் இருந்தனர்."

“கிருஷ்ணன் கிளம்பும்போது அவர்களிடமும் அவர்கள் நகரில் வாழவேண்டும் என்றும் திரும்பி வருகையில் அவர்கள் அங்கிருக்கவேண்டும் என்றும் கோரினான். அவர்கள் தன் அன்னையர் என்பதனால் அவர்களும் மதுராபுரிக்கு அரசியரே என்றான். அச்சொற்கள் அரசி தேவகியை கசப்படையச் செய்திருக்கலாம். அரசு மீண்டபின் அவரது உள்ளம் பொறாமையால் நிறைந்துவிட்டது என்கிறார்கள். தன் மைந்தனை பிறர் எண்ணுவதைக்கூட அவரால் தாளமுடியவில்லை. கோகுலத்து யாதவர்களான நந்தனும் யசோதையும் மதுராபுரிக்கு வரக்கூடாதென்று ஆணையிட்டார். தன் மைந்தன் மீண்டும் கோகுலம் செல்வதை தடுத்தார். தன் இன்பங்கள் அனைத்தையும் பிறர் பறித்துக்கொண்டதாக எண்ணினார். இளமைந்தனை கையால் கூடத் தொடமுடியாதவளானேன் என தினமும் உடைந்து அழுதார். ஆனால் தன் ஏழுமைந்தர்களின் இறப்புக்குக் காரணமானவன் என தன் கரிய மைந்தனையும் வெறுத்தார்.”

“ஆசுர அரசியர் இருவரையும் அரண்மனைப் பணிப்பெண்களாக பணியாற்றும்படி தேவகி ஆணையிட்டார் என்கிறார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “அவர்கள் அதற்கு மட்டும் ஒப்பவில்லை. அது தங்கள் பெருமைமிக்க அரசகுலத்திற்கு இழுக்காகும் என்றனர். அவ்வண்ணமெனில் உணவும் அளிக்கவியலாது என்று தேவகி சொல்லியபின் அவர்கள் மதுராவில் தங்கமுடியாமலாகியது. கண்ணீருடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். செல்லும்வழியில் ஒரு நீலக்கடம்பு மரத்தடியில் இரு கற்களை வைத்து கிருஷ்ணன் திரும்பிவரும்போது அவர்கள் அவனுக்களித்த வாக்குறுதியின்படி மதுராவிலேயே இருப்பதகாச் சொல்லும்படி சொல்லிவிட்டுச் சென்றனர்.”

“அவர்கள் மதுராவை நீங்கியபோதே ஜராசந்தர் செய்தியறிந்து உவகை கொண்டார். மகதப்படைகள் அதுவரை மதுராவை தாக்காதிருந்ததே ஆசுரகுலங்களின் தயக்கத்தால்தான். அந்தத் தடை நீங்கியது. அரசியர் இருவரும் மதுராபுரி எல்லைகடந்ததும் தன் படைத்தலைவனாகிய ஏகலவ்யனை அனுப்பி அவர்களை வரவேற்கச் செய்தார்” என்றான் துரியோதனன். மறைந்த பலபத்ரரின் மைந்தரும் அரண்மனை புரத்தலுக்குரிய அமைச்சருமான ஸ்வேதர் “துரோணாச்சாரியாரால் கட்டைவிரல் பெறப்பட்ட ஆசுரகுலத்து இளவரசன் அல்லவா?” என்றார்.

“ஆம், அமைச்சரே. அவன் தந்தை ஹிரண்யதனுஸ் மறைந்தபின் அவன் ஹிரண்யபதத்தின் அரசனாகிவிட்டான். கட்டைவிரல் இன்றியே அம்புவிடும் சதுரங்குலி என்னும் விற்கலை ஒன்றை அவனே உருவாக்கியிருப்பதாக சொல்கிறார்கள். அவனிடம் பாரதவர்ஷத்தின் மிகத்திறன் கொண்ட விற்படை ஒன்றிருக்கிறதாம். அவனை ஆசுரகுடிகள் ஹிரண்யகசிபுவின் மறுபிறப்பு என கொண்டாடுகிறார்கள். அவன் ஜராசந்தரின் தாய் ஜரையுடன் குலமுறை உறவு கொண்டவன். அவனுடைய அத்தைமுறை கொண்டவள் கம்சரின் இரண்டாவது அரசியான பிராப்தி.”

துரியோதனன் தொடர்ந்தான் “ஆசுர அரசியரை வரவேற்க ஜராசந்தர் ஏகலவ்யனை அனுப்பியது பெரும் அரசியல் உத்தி. மகதம் நேரடியாக மதுராமேல் படைகொண்டுசெல்லமுடியாது. உடனே அஸ்தினபுரி மதுராவுக்குத் துணைவரும். ஆனால் ஆசுரகுலத்தவர் படையெடுக்கலாம், அதில் தனக்குப் பங்கில்லை என மகதம் நடிக்க முடியும். அந்த சினத்தை மதுரா மீது ஆசுரகுலத்தவரிடம் உருவாக்க ஜராசந்தர் திட்டமிட்டிருக்கிறார். அதுவே நடந்தது. மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் பெரும்படை நான்குபக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்கியது.”

“அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கும்வரை மதுராவை மகதம் தாக்காது என எண்ணியிருந்தான் கிருஷ்ணன். ஆகவே யாதவர்கள் படைவல்லமையுடன் இருக்கவில்லை. ஏழுநாட்களில் மதுராவை ஏகலவ்யன் பிடித்துக்கொண்டான். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனைவழியாக தப்பி ஓடி மதுவனத்தை சென்றடைந்தார். ஏகலவ்யன் படைகள் பதினைந்துநாட்கள் மதுராவை சூறையாடின. ஏகலவ்யன் ஆயிரம் படகுகளுடன் இரு துறைமுகங்களையும் அழித்தான். கன்றுகளை எல்லாம் கொன்று அவன் படைகள் உண்டன. அமைச்சர்களே, இன்று ஆசுர குலத்தவர்கள் அல்லாதவர்கள் மீது ஆறாச்சினம் கொண்டிருக்கும் வீரன் என்றால் அது ஏகலவ்யனே. மதுராவின் அனைத்து வீடுகளையும் அவன் எரித்தான். அதற்கு மதுராவின் நெய்க்களஞ்சியத்தையே பயன்படுத்திக்கொண்டான்."

“ஏழு நாட்கள் மதுரா நின்றெரிந்தது என்கிறார்கள். மதுராவின் தெருக்களில் மக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தமையால் குதிரைகள்கூட நடக்கமுடியாமலாயின. மதுராவின் மண் ரத்தமும் சாம்பலும் கலந்து கருமைகொண்டது. முன்பு கம்சர் குழந்தைகளைக் கொன்றபோது அதை தடுக்காமலிருந்த மதுராபுரி மக்களின் அறப்பிறழ்வு ஊழாக எழுந்து வந்து தண்டித்தது என்றனர் நிமித்திகர்” என்றான் துரியோதனன். “எவ்வண்ணமென்றாலும் மதுரா அழிந்தது. அச்செய்தியை பலராமர் அறிந்தபோது நான் அவருடன் உள்காட்டில் ஒரு மந்தையின் நடுவே இருந்தேன். நாங்கள் அங்கிருந்து நாற்பதுநாட்கள் நடந்து மதுவனம் வந்துசேர்ந்தோம்.”

“அங்குவந்தபோது கண்டகாட்சி என்னை அகம் பதறச்செய்தது. கீழுலகிலிருந்து எழுந்து வந்ததுபோன்ற மனிதர்கள். சிதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட உடல்கள். அழுகி நாறும் புண்கள். எங்கும் அழுகுரல்கள், பெருவலி ஓலங்கள். அவர்களுக்கு எவரை வசைபாடுவதென்றே தெரியவில்லை. சூரசேனரை, பலராமரை, கிருஷ்ணனை, குலமூத்தாரை என அனைவரையும் மண் வாரி வீசி தீச்சொல்லிட்டு கூவி அழுதனர். அமைச்சர்களே, அவர்களில் ஒருவருக்குக் கூட கம்சரின் கொலைநடத்துக்குத் துணைபோனதன் ஊழ்வினை அது என்று தோன்றவில்லை. தாங்கள் குற்றமற்ற எளியமக்கள் என்றே அவர்கள் உண்மையில் நம்பினார்கள்.”

“மறுநாள் ஏகலவ்யனின் படைகள் ஆயிரம் படகுகளில் வந்து மதுவனத்தைத் தாக்கின. கொந்தளிக்கும் யமுனைப்பெருக்கில் அலைபாயும் படகுகளில் இருந்தபடி அம்புகளை எய்து கரையில் நிற்பவர்களின் கண்ணுக்குள் அம்பைச் செலுத்தும் வில்லாளிகளை அப்போதுதான் கண்டேன். அலைபாயும் படகுகளில் நின்ற அவர்களை எங்கள் அம்புகள் ஒன்றுகூட சென்று தொடவில்லை. அது போரே அல்ல, வெறும் படுகொலை.”

“அங்கிருந்த யாதவர் எவரும் பயின்ற படைவீரர்கள் அல்ல. வெறும் யாதவகுடிகள், நெய் வணிகர்கள். நூற்றாண்டுக்காலமாக அவர்கள் மகதவீரர்களை நம்பி வாழ்ந்தவர்கள். அவர்கள் அச்சமும் துயரமும் கொண்டிருந்தனர். நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்கள் கூட்டமாகச் சென்று அம்புகள் முன் விழுந்து இறக்கத்தான் எண்ணினர். என் குருநாதர் அவர்களைத் திரட்டி அனைத்துக் கன்றுகளையும் சேர்த்துக்கொண்டு மதுவனத்தின் மறுபக்கத்துக்கு காட்டுக்குள் கொண்டுசென்றார். அடர்ந்த காட்டுக்குள் செல்ல யாதவர்கள் கற்றிருக்கவில்லை. அவர்களின் ஆநிரைகளை பசுமையை மீறி கொண்டுசெல்வதும் கடினமாக இருந்தது. குழந்தைகளுடனும் உடைமைகளுடனும் அவர்கள் காட்டுமரங்கள் நடுவே திணறியும் விழுந்தும் அழுதபடி சென்றனர்.”

“ஏகலவ்யனின் படையினர் யமுனையின் கரைகளுக்கு வரமாட்டார்கள் என்றுதான் பலராமர் எண்ணினார். ஆனால் அவர்கள் மதுவனத்தில் புகுந்து அத்தனை வீடுகளையும் எரியூட்டினர். காட்டுக்குமேல் புகை எழுவதைக் கண்டோம். அதைக்கண்டு யாதவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். முதியவர்களை மதுவனத்தில் விட்டுவிட்டு வந்திருந்தனர். போர்நெறிப்படி அவர்களை ஏகலவ்யனின் படைகள் ஒன்றும் செய்யாதென்று எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எரியும் வீடுகளுக்குள் தூக்கி வீசிவிட்டன ஏகலவ்யனின் படைகள். காடுகளுக்குள் புகுந்து தெற்கே சென்றுகொண்டே இருந்தோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. உயிர் மட்டுமே யாதவர்களுக்கு எஞ்சும் செல்வமாக இருந்தது” என்றான் துரியோதனன்.

“தனிப்போரில் வெல்லற்கரியவராகிய என் ஆசிரியர் உளம்கலங்கி கண்ணீர் விடுவதைக் கண்டேன். நான் அவரது கால்களில் முட்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “இவ்விழிவுடன் மாள்வதே என் விதியோ!” என்று சொன்னபோது நான் அவர் கைகளைத் தொட்டு “நானிருக்கையில் அது நிகழாது குருநாதரே. அஸ்தினபுரி இருக்கிறது. நூற்றுவர் தம்பியர் இருக்கிறார்கள். பாரதவர்ஷத்தின் முதல் வில்வீரனாகிய என் நண்பன் கர்ணன் இருக்கிறான் என்றேன்” என்றான் துரியோதனன்.

பகுதி ஏழு : பூநாகம் - 5

விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். 'இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்' என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.

குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் கிருஷ்ணனுக்கு செம்பருந்தை தூதனுப்பினார். அவரிடம் எஞ்சிய ஒரே பருந்து அது. அதுவே இறுதி நம்பிக்கை. அது மீளாவிட்டால் நாம் இந்த வனத்தில் அழிவோம் என்றார். அப்போது நாங்கள் காட்டில் மலைக்குகை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தோம். கோடைகாலத்தின் நீராவியால் காடு நெளிந்துகொண்டிருந்தது. சிலநாழிகை நேரம்கூட ஓய்வெடுக்கமுடியாது. உணவு சேர்க்கவோ நீர் அள்ளிக்கொள்ளவோ முடியாது.

எங்களுக்குப்பின்னாலேயே ஆசுரப்படைகள் மலையேறிவந்தன. அவர்கள் காட்டை நன்கறிந்தவர்கள். காற்று வீசும் திசை தேர்ந்து நெருப்பு வைத்து அந்த நெருப்பால் வெந்த வெளி வழியாக எளிதில் வந்தனர். அந்நெருப்பால் அஞ்சிய விலங்குகளும் பாம்புகளும் பெருகி வந்து யாதவர்களை தாக்கின. புகையும் எரிகலந்த காற்றும் சூழ்ந்து மூச்சடைக்கச் செய்தன. காட்டுக்குள் புகுந்தபின்னர் ஒருநாழிகைகூட எவரும் துயின்றிருக்கவில்லை. இந்த நரகத்தைவிட ஆசுரர் கையால் இறக்கலாம் என்று பெண்கள் அழுதனர். கானக விலங்குகள் தாக்கியும் பாம்பு தீண்டியும் யாதவர்கள் இறந்தனர். உடல் ஓய்ந்தும் நோயுற்றும் நடக்கமுடியாமலானவர்களை அணுகிவரும் காட்டு நெருப்புக்கு இரையாக விட்டுவிட்டு முன்னேறிச்சென்றார்கள்.

ஏழுநாட்களில் செம்பருந்து செய்தியுடன் மீண்டு வந்தது. ஏகலவ்யன் செய்வது போர் அல்ல, அது அவனுடைய பெருவஞ்சம் என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான். 'ஏகலவ்யன் கருணை காட்டமாட்டான், யாதவகுடிகளை இறுதி உயிர்கூட விடாமல் அழிப்பான். ஆகவே ஆநிரைகளை கைவிட்டுவிட்டு மேலும் தெற்கே சென்றுகொண்டே இருங்கள்' என்று அச்செய்தி சொன்னது. பலராமர் காடுகளில் ஆநிரைகளை விட்டுவிட்டு வரும்படி யாதவர்களிடம் சொன்னார். “எங்கள் மைந்தர்களை விடுகிறோம். ஆநிரைகளை விடமாட்டோம்” என்று அவற்றின் கொம்புகளைத் தழுவி யாதவர் கண்ணீர்விட்டனர். அரசாணைக்கு இணங்கி அவற்றை கட்டவிழ்த்து காட்டில் விட்டுவிட்டு திரும்பி நோக்கி அழுதபடி நடந்தனர்.

யமுனைக்கரைக் காட்டைக் கடந்து தெற்குப்பெருநிலத்தின் காடுகளை அடைந்ததும் பலராமர் ஏழு தூதுவர்களை தொடர்ந்து வரும் ஏகலவ்யனிடம் அனுப்பி தீர்வு கோரி மன்றாடினார். மதுரைக்கோ யமுனைக்கரைகளுக்கோ மீண்டும் யாதவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள் என்று உறுதிகொள்வதாகவும் தென்னிலத்துப் புல்வெளிகளில் ஆநிரை மேய்த்து வாழ விட்டுவிடும்படியும் கோரினார். எந்நிலையிலும் எதிரியை எஞ்சவிடும் பிழையை செய்யப்போவதில்லை என்றும் எங்கு சென்றாலும் யாதவர்களின் இறுதிக் குழந்தையையும் கொன்றபின்னரே ஹிரண்யபதத்துக்கு மீளவிருப்பதாகவும் ஏகலவ்யன் சொன்னான். தூதுசென்றவர்களின் காதுகளையும் மூக்கையும் வெட்டிவிட்டு திருப்பியனுப்பினான். செய்திவந்த அன்று யாதவகுடிகள் அலறியழுததை இப்போதும் மெய்சிலிர்க்க நினைவுறுகிறேன் அமைச்சர்களே!

தெற்கே மழைகுறைந்த நிலம் வரத்தொடங்கியது. அடர்வற்ற காடும் ஊடே சிறு புல்வெளிகளும் பின் வறண்ட முள்காடுகளின் வெளி. நெடுந்தூரம் விரிந்து தொடுவானை தொட்டுக்கிடந்த அந்த நிலவிரிவைக் கண்டு யாதவர்கள் அலறி அழுதனர். சிம்மம் துரத்த ஓடும் ஆடுகள் எதிரே மலைப்பாறையைக் கண்டு திகைப்பது போல தோன்றியது. சிலர் திரும்பிவிடலாமென்றுகூட கூவினார்கள். ஆறு மலைப்பாறையில் முட்டிச்சுழிப்பதுபோல யாதவகுடிகள் தேங்கி அலைப்புறுவதைக் கண்டேன.

அப்போது தன்னந்தனியனாக இளையவனாகிய கிருஷ்ணன் வந்து சேர்ந்தான். புதர்களை விலக்கி அவன் வரும் ஓசைகேட்டதும் அனைவரும் அஞ்சி ஒளிந்துகொண்டனர். ஒவ்வொரு புற ஓசையையும் இறப்பெனக் காண அவர்கள் கற்றிருந்தனர். குழந்தைகள்கூட மூச்சடக்கிப் படுக்க கற்றிருந்தன. மரத்தின் மேலிருந்த திசைகாண் வீரர்கள் வருவது யாரென்று கண்டதும் கூச்சலிட்டபடி இறங்கினர். அதைக்கேட்டதும் அத்தனை யாதவர்களும் பெருவெள்ளம் போல மரக்கிளைகளை அசைத்தபடி கூச்சலிட்டுக்கொண்டே அவனை நோக்கி ஓடினர். செல்லும் வழியிலேயே கால்தடுக்கி விழுந்து உருண்டனர். ஒரு குலமே ஒருவனை நோக்கி கைநீட்டி பாய்ந்தோடுவதை முதல்முறையாகக் கண்டேன்.

நான் அப்போதுதான் கிருஷ்ணனைக் காண்கிறேன். அமைச்சர்களே, நான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே அவனே அழகன் என்பேன். என் நண்பன் கர்ணனைவிடவும் அழகன் என்றால் நீங்கள் நம்பப்போவதில்லை. அவனை நீங்களும் காணும் காலம் வரும். அவனைக் கண்டதுமே அதுவரை என்னிடமிருந்த ஐயத்தையும் சஞ்சலத்தையும் இழந்து திடம்பெற்றேன். அவன் மார்பையும் தோள்களையும் நீலவிழிகளையும் நோக்கிக்கொண்டிருந்தேன். கன்னங்கரியோன். ஒளியே கருமையாக ஆனவன். முகம் புன்னகைக்கக் கண்டிருக்கிறேன், அமைச்சர்களே, உடலே புன்னகைப்பதை அவனிடமே கண்டேன்.

யாதவப்பெண்கள் கூட்டம் கூட்டமாக அலறியபடி சென்று அவன் காலடியில்  விழுந்து சுருண்டு அழுதனர். குழந்தைகள் அவனிடம் தங்கள் உடலில் இருந்த புண்களைக் காட்டி முறையிட்டன. சிறுகுழந்தைகள் அவன் ஆடைபற்றி இழுத்து தங்களை நோக்கும்படிச் சொல்லி கூவி அழுதன. முதியோர் சிலர் அவன்மேல் மண்ணை அள்ளிவீசி தீச்சொல்லிட்டனர். சிலர் அவனை வெறிகொண்டு அடித்தனர். அத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு நடுவே அவற்றுடன் தொடர்பற்றவன் போல, இனிய தென்றலில் இசைகேட்டு நிற்பவன் போல நின்றிருந்தான். அவன் இரக்கமற்றவன் என்று ஒருகணம் எண்ணிக்கொண்டேன். கோடானுகோடி மாந்தரை அவனால் இமையசைவில்லாமல் கொல்ல முடியும். அமைச்சர்களே, அப்போது ஏகலவ்யனுக்காக இரக்கம் கொண்டேன்.

மெல்ல உணர்ச்சிகள் அவிந்தன. அவன் ஏழெட்டு சிறுகுழந்தைகளை தன்மேல் ஏற்றிக்கொண்டு அணுகி வந்தான். பிற குழந்தைகள் துள்ளிக்குதித்து நகைத்தும் கைநீட்டி எம்பியும் அவனைச்சூழ்ந்து வந்தன. அவன் அமர்ந்தபோது பெண்கள் தளர்ந்து அவன் காலடியில் வீழ்ந்தனர். அவன் ஆடைகளையும் காலடிகளையும் கிழவிகள் முத்தமிட்டுக்கொண்டே இருந்தனர். மெல்ல அழுகை ஓய்ந்தபோது அவர்கள் அவனை தொட்டுக்கொண்டே இருக்க விரும்பினர். அவன் அவர்களின் குழலைத் தடவினான். தோள்களை அணைத்தான். கன்னங்களின் ஈரத்தை துடைத்தான். கூந்தலிழைகளை காதுக்குப்பின் செருகிவைத்தான். ஒர் அன்னைப்பசு ஆயிரம் கன்றுகளை நக்குவதை அப்போது கண்டேன்.

அவனை எதிர்நோக்காமல் தேவகியும் வசுதேவரும் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் இருப்பதை அவன் காணவுமில்லை. அவன் என்னை நோக்கி “கௌரவரே, நீங்கள் இங்கிருப்பது எங்கள் நல்லூழ்” என்றான். மலர்கள் நிறைந்த தோட்டத்தில் உயிர்நண்பனைக் காணும் முதிரா இளைஞனுடையது போன்ற புன்னகை. நான் அவனருகே சென்று “நான் என் குருநாதருக்காக உயிர்கொடுக்க விழைகிறேன்” என்றேன். “ஆவதைச் செய்வோம்...” என்று அவன் சொன்னான்.

பின்னர் குருநாதரும் கிருஷ்ணனும் யாதவமூத்தோருடன் ஒரு பாறைமீது சென்று மன்று அமர்ந்தனர். நானும் இருந்தேன். கிருஷ்ணன் சொன்னான் 'ஏகலவ்யனை நான் அறிந்துள்ளேன். அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான் என்றால் இறுதிக்குருதித் துளி எஞ்சுவதுவரை அதை நிறைவேற்றவே முயல்வான்.' பலராமன் திகைத்து நோக்க மூத்தோர் அச்சக்குரல் எழுப்பினர். 'அவன் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விலகிச்செல்வோம். ஆசுரர் எவரும் அணுகமுடியாத நிலம் ஒன்றை கண்டடைவோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்' என்றான் கிருஷ்ணன்.

'ஆனால் உடனே ஏகலவ்யனை நாம் தடுத்து நிறுத்தியாகவேண்டுமே' என்று பலராமர் சொன்னார். 'அஸ்தினபுரி நினைத்தால் முடியும் என நினைக்கிறேன். ஒரு படையை அனுப்பி அவர்கள் மதுராவை தாக்கினால் ஏகலைவன் திரும்பிச் செல்வான். நாம் நம் பயணத்தை செய்யமுடியும்.' குலமூத்தார் அனைவரும் ஒரே குரலில் 'ஆம்... ஆம். அது முதன்மையான வழியே' என்றார்கள். எல்லா விழிகளும் என்னை நோக்கின,

கிருஷ்ணன் 'மூத்தவரே, அஸ்தினபுரியினர் இன்று அதற்கு துணியமாட்டார்கள். மகதம் நாள்தோறும் பெருகும் வல்லமை பெற்றுள்ளது. அவர்கள் அஸ்தினபுரியுடன் ஒரு போருக்கான தொடக்கத்திற்கு காத்திருக்கிறார்கள்... இன்று அங்குள்ள இளவரசர்கள் இளையோர். பீஷ்மரோ முதியவர். அஸ்தினபுரியை வெல்வதற்கான சரியான தருணம் இதுவே என ஜராசந்தன் எண்ணுகிறான்' என்றான். 'ஆனால் நமக்கு வேறு எவர் இருக்கிறார்கள்? அஸ்தினபுரியின் உதவி இல்லையேல் நாம் அழிவோம்... இதோ இந்த எல்லைக்கு அப்பால் வறண்ட நிலம். அதற்கப்பால் எங்கே உள்ளது நாம் தேடும் புதுநிலமென்றும் அறியோம். இந்தப் பாழ்நிலத்தில் ஏகலவ்யன் நம்மைத் தொடர்ந்தான் என்றால் நாம் அழிவது உறுதி' என்றார் குருநாதர்.

அப்போது நான் முன்சென்று நெஞ்சில் கைவைத்து சொன்னேன் 'நான் அஸ்தினபுரியின் இளவரசன். என் தந்தையின் செங்கோலே அஸ்தினபுரியை ஆள்கிறது. நானே செல்கிறேன். அஸ்தினபுரியின் படையுடன் நான் மதுராவை தாக்குகிறேன்.' அவர்கள் நிமிர்ந்து நோக்கினர். 'ஏகலவ்யனை வென்று மதுராபுரியை மீட்டு அளிக்கிறேன்... இது உறுதி' என்றேன். 'அவ்வண்ணமெனில் முறையான தூதாகவே அது அமையட்டும். மூத்தவரே, பாட்டனாரின் பெயரால் நீங்களே திருமுகம் எழுதுங்கள்' என்றான் கிருஷ்ணன்.

“அந்தத் தூதுடன் வந்திருக்கிறேன் அமைச்சர்களே. அஸ்தினபுரியின் வில்லவர் படைகளில் ஒன்று என்னுடன் வரட்டும். ஒரேமாதத்தில் ஏகலவ்யனை வென்றுமீள்கிறேன்” என்றான் துரியோதனன். “எனக்கு அமைச்சர்களும் அரசரும் ஒப்புதல் அளிக்கவேண்டும்.” சகுனி மெல்ல அசைந்து அமர்ந்த ஒலி கேட்டு விதுரர் நோக்கினார். அவரது விழிகள் எந்தச் சொல்லுமில்லாமல் வந்து விதுரரைத் தொட்டு மீண்டுசென்றன. விதுரர் அவையில் எழும் குரல்களுக்காகக் காத்திருந்தார்.

மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக்காவல் அமைச்சருமான கைடபர் “நானறிந்தவரை அத்தனை எளிதாக ஏகலவ்யனை வென்றுவிடமுடியாது இளவரசே. பாரதத்தின் மூன்று பெரும் வில்லாளிகள் என பரசுராமர், பீஷ்மர், துரோணர் பெயர் சொல்லப்பட்ட காலம் உண்டு. இன்று அர்ஜுனர், கர்ணர், ஏகலைவன் என்கிறார்கள்” என்றார். “அப்படியென்றால் கர்ணனை வரச்சொல்கிறேன். அவன் விந்தியமலையில் இருக்கிறான்...” என்றான் துரியோதனன்.

“அவ்வண்ணம் என்றாலும் வெற்றி உறுதி அல்ல” என்றார் அமைச்சர் ரிஷபர். “இது நாம் நடத்தும் முதல் போர். உண்மையில் இது மகதத்துக்கு எதிரான போரேயாகும். இதில் நாம் வென்றேயாகவேண்டும். வெற்றிகூட மிகச்சிலநாட்களில் கனிந்த பழத்தை மரத்திலிருந்து கொய்வதுபோல எளிதாக இருந்தாகவேண்டும். இந்த ஒருபோரிலேயே நம்முடைய ஆற்றல் மகதத்தை விட பலமடங்கு மேலானதென்று தெரியவேண்டும்” என்றார் சௌனகர்.“ ஆகவே அர்ஜுனரையும் அழைத்துக்கொள்ளுங்கள்.”

துரியோதனன் “அவ்வாறெனில் ஆகுக... இப்போது நாம் துணைக்குச் சென்றாகவேண்டும். அது என் வாக்கு” என்றான். கைடபர் “படைகொண்டு போவதை நாம் படகுகளில் செய்யலாகாது. ஏனென்றால் படகுகளில் இருந்து அம்பு விடும் வல்லமை நமக்கில்லை. ஆடும் இலக்குகளை தாக்கும் வல்லமை அவர்களுக்குண்டு” என்றார். ரிஷபர் “ஆசுரர்களைத் தாக்க நாம் எதற்கு மதுராசெல்லவேண்டும்? மிக எளிய இலக்கு நேராக ஹிரண்யபதத்தை தாக்குவதுதான். அதை எரியூட்டுவோம். ஏகலவ்யனின் அரண்மனையை மண்ணாக்கி எருதுகட்டி உழுவோம். ஷத்ரியர்களுக்கு எதிராக அவன் கை எழலாகாது” என்றார் அமைச்சரான சக்ரசேனர்.

சபை அவரை நோக்க சக்ரசேனர் “சினம் கொண்டு நிலையழிந்து வரும் ஏகலவ்யனை நமக்கு வசதியான திறந்தவெளியில் சந்திப்போம்... அவனை அழிப்பது எளிது” என்றார். “ஏகலவ்யனின் செயலைப்பற்றி மகதத்துக்கு ஓர் எச்சரிக்கையை அனுப்புவோம். எச்சரிக்கை சென்றால் நாம் தாக்கப்போவதில்லை என்றுதான் பொருள். மார்த்திகாவதியிடம் ஏகலவ்யனை தாக்கச் சொல்வோம். அவன் தன் படைகளில் பாதியை அத்திசை நோக்கித்திருப்புவான். அந்த நிலையில் நாம் மதுராவைத் தாக்கினால் காலையில் தொடங்கும் தாக்குதல் மாலையிலேயே முடிந்துவிடும்” என்றார் ரிஷபர்.

“முடிவுகளை நோக்கிச் செல்வதற்கு முன்பு நாம் படையெடுக்கப் போகிறோமா இல்லையா என்பதை விதுரர் சொல்லட்டுமே” என்றார் கணிகர். விதுரர் அந்தச் சொல்லாட்சியில் இருந்த கூர்மையை உணர்ந்து திரும்பி கணிகரை வணங்கி “முடிவு சொல்ல நான் யார்? நான் எளிய அமைச்சன். முடிவெடுக்கவேண்டியவர் அஸ்தினபுரியின் அரசர். பிதாமகர் பீஷ்மர் இல்லாத நிலையில் அவரே இங்கு முதல் மூதாதை” என்றபின் “என் எண்ணங்களை மட்டும் சொல்கிறேன். பிறவற்றை அவை கூடி முடிவெடுக்கட்டும். அரசர் இறுதிச்சொல்லை அளிக்கட்டும்” என்றார்.

திருதராஷ்டிரர் “மூடா, நீ சொல்வதை வைத்துத்தான் நான் முடிவெடுக்கவேண்டும் என்று தெரியாதா உனக்கு? சொல்” என்றார். விதுரர் “அவையினர் நோக்கவேண்டியது ஒன்றே. கம்சர் குழந்தைகளைக் கொன்றநாளில் இங்கே பிதாமகர் பீஷ்மர் இருந்தார். அங்கே நிகழ்வன இங்கே செய்திகளாக வந்துகொண்டுதான் இருந்தன. பிதாமகர் எத்தனையோ இரவுகளில் துயிலின்றி தவித்தார். நான் அவரிடம் சென்று உடனே நம் படைகளை மதுராவுக்கு அனுப்புவோம், இந்தப் பேரநீதி இங்கே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்னும் அவப்பெயர் எழலாகாது என்று கொதித்தேன். ஆனால் பீஷ்மர் என்னை தடுத்துவிட்டார்” என்றார்.

விதுரர் சொன்னார் “ஏனென்றால் அன்று நாம் மதுராவை வெல்லும் நிலையில் இல்லை. மதுராவை நாம் ஒரு நாள் பகலுக்குள் முழுமையாக வென்று அனைத்துக் காவல்மாடங்களையும் கைப்பற்றி படைகளை நிறுத்திவிட முடிந்தால் மட்டுமே அது வெற்றியென கொள்ளப்படும். தன் காவல்படைகளை திரிவேணி முனையில் நிறுத்தியிருக்கிறது மகதம். மதுராவரை வருவதற்கு அவர்களுக்கு ஒருநாள் பகலே போதுமானது. அவர்கள் வந்துவிட்டால் அதன்பின் அது சிறிய போர் அல்ல, பாரதவர்ஷத்தின் இரு சாம்ராஜ்யங்களின் போர். அது எளிதில் முடியாது. பல வருடங்கள் ஆகும். பல்லாயிரம்பேர் இறப்பார்கள் என்றார் பிதாமகர்.”

“இக்குழந்தைகள் வீரர்களாக மாறுவதற்குள் இறக்கிறார்கள் என்று கொள்வதே உடனடியாக செய்யக்கூடுவது என்று சொன்னார் பிதாமகர். சுயவெறுப்பும் கசப்பும் கொண்டிருந்தார். ஆம் அநீதியின் முன் கைகட்டி நிற்கிறோம், மேலும் பெரிய அழிவு நிகழக்கூடாதென்பதற்காக என்று சொல்லிவிட்டு தன் அம்புப்பயிற்சிக்கு சென்றுவிட்டார். நான் அங்கே திகைத்து நின்றேன். என் உணர்ச்சிகள் சரியானவை, ஆனால் தொலைநோக்கு அற்றவை. பிதாமகர் மேலும் நெடுந்தொலைவை நோக்கி அதைச் சொன்னார் என உணர்ந்தேன். இந்த அவையில் அவர் இருந்தால் என்ன உணர்வாரோ அதையே நானும் சொல்வேன்” என்றார் விதுரர்.

“அஸ்தினபுரி இன்று மகதத்துடன் போரைத் தொடங்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை” என்றார் விதுரர். “மறைந்த பேரரசி சத்யவதி செய்த பெரும்பிழை ஒன்றுண்டு. அஸ்தினபுரி பாரதவர்ஷத்தை வெல்லவேண்டும் என அவர் கனவுகண்டார். அக்கனவை ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டிருந்ததே அவரது பிழை. அது பாரதவர்ஷத்தில் பரவியது. ஒவ்வொரு நாடும் எச்சரிக்கைகொண்டு நமக்கெதிராகவே படை திரட்டி வலிமை கொள்ளத் தொடங்கியது. படைக்கூட்டுக்களை உருவாக்கிக் கொண்டன, மண உறவுகள் மூலம் வலிமையான அரசியல்கூட்டுகள் பிறந்தன.”

“ஆனால் அரசியின் இலக்கு பிழைத்தது” என்றார் விதுரர். “அவரது இரு மைந்தர்களுமே போர்புரியும் வல்லமை அற்றிருந்தனர். அவரது பெயரர்களும் போர்புரியும் நிலையில் இருக்கவில்லை. இன்றுதான் அஸ்தினபுரி படைக்கலம் எடுத்திருக்கிறது. மூன்று தலைமுறைக்குப்பின். இந்த காலகட்டத்தில் நம் எதிரிகள் அனைவருமே வல்லமை கொண்டுவிட்டனர். நமக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். எதிரியை எச்சரித்து வல்லமைகொண்டவர்களாக ஆக்கிவிட்டு வல்லமை இல்லாமல் நின்றோம் நாம். நாம் இதுவரை தப்பியதே பீஷ்மரைப்பற்றிய அச்சம் அவர்களிடமிருந்தமையால்தான்.”

“இன்றும் நாம் வல்லமைகொண்டவர்களல்ல அமைச்சர்களே” என்றார் விதுரர். “ஆம், நம்மிடம் இன்று இளஞ்சிங்கங்கள் போல இளவரசர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் படைபலம் மகதத்துடன் ஒப்பிடுகையில் பெரியதல்ல. மகதம் சென்ற மூன்று தலைமுறைக்காலமாக திருமண உறவுகள் மூலம் வலுப்பெற்றபடியே வந்துள்ளது. இன்று அதனுடன் கலிங்கம் முதல் காசி வரை உத்கலம் முதல் மாளவம் வரை துணைநாடுகள் உள்ளன. அவர்கள் அனைவருமே சென்ற நூறுவருடங்களில் கடல்வணிகம் மூலம் பெருஞ்செல்வம் ஈட்டியவர்கள். காடுதிருத்தி நாடு விரித்து படைபெருக்கியவர்கள்... போரைத்தொடங்குதல் மிக எளிது. நம் கையில் அது நிற்பது மிகமிக அரிது.”

“அரசே, நாம் இனிமேல்தான் மண உறவுகளை தொடங்கவேண்டும். நம் இளவரசர்களுக்கு முதன்மையான அரசகுலங்களில் இருந்து இளவரசியர் வரவேண்டும். அதன்பொருட்டே அவர்களின் திருமணத்தை இதுநாள் வரை தள்ளிப்போட்டுவந்தோம். அதில் முதன்மையான இக்கட்டு பட்டத்து இளவரசரின் யாதவக்குருதி. அதை தூய ஷத்ரியர் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு நாம் பிறர் அறியாத வாக்குறுதிகளை அளித்து கவர்ந்துதான் பெண்கொள்ள முடியும். ஒரு முதன்மை ஷத்ரியகுலம் நமக்குப் பெண்ணளித்தால்போதும் பிறர் வந்துவிடுவார்கள். அதற்காகவே காத்திருக்கிறோம்...” விதுரர் சொன்னார். “அப்படி சில மணமுறைகள் நிகழ்ந்துவிட்டால் நாம் நம் படைவல்லமையை பெருக்கிக் கொள்ளலாம். அதன்பின்னரே நாம் மகதத்தை உண்மையில் எதிர்த்து நிற்கமுடியும்.”

திருதராஷ்டிரர் “படைகளை இத்தருணத்தில் அனுப்புவது சரியானதல்ல என்று சொல்கிறாயா?” என்றார். “ஆம் அரசே, முற்றிலும் பிழையான முடிவு அது” என்றார் விதுரர். துரியோதனன் சினத்துடன் “நாம் அவர்கள் அழிவதை நோக்கி வாளாவிருக்கவேண்டுமா என்ன? அவர்களின் குருதிமீது நின்று நாம் வாழவேண்டுமா?” என்றான். “இளவரசே, எனக்கு உளவுச்செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன. யாதவர்கள் மென்பாலைநிலத்தைக் கடந்து கூர்ஜரத்தின் தெற்கே ஒழிந்து கிடக்கும் பெரும்புல்வெளி நோக்கிச் செல்கிறார்கள்... கிருஷ்ணன் அவர்களை வழிநடத்தி அழைத்துச்செல்கிறான். தகுதியான தலைமை கொண்டிருப்பதனால் அவர்கள் அங்குசென்று சேர்வதும் ஓர் ஊரை அமைப்பதும் உறுதி. இனிமேல் அவர்களுக்கு எந்த இக்கட்டும் இல்லை” என்றார் விதுரர் .

“ஆனால் ஏகலவ்யனின் வஞ்சினம்...” என்று துரியோதனன் சொல்லத் தொடங்க “ஆசுரநாட்டார் யாதவரைத் தொடர்ந்து அங்கே செல்ல முடியாது. ஏனென்றால் நடுவே உள்ள பாலைநிலத்தைக் கடக்க அவர்களால் இயலாது.  ஆசுரகுடிகள் மலைமக்கள். காட்டில் அவர்கள் திறன் மிக்கவர்கள். பாலையில் அவர்களால் செல்லமுடியாது. யாதவர்கள் புல்வெளியில் வாழ்ந்தவர்கள். பாலை என்பது காய்ந்த புல்வெளியே. மேலும் இது மழைமாதம். பாலைநிலம் மெல்லிய மழையுடன் இருக்கும் காலம். அவர்கள் மகிழ்ச்சியுடன் செல்வதாகவே செய்திகள் சொல்கின்றன” என்றார் விதுரர். துரியோதனன் தலையை இல்லை என்பது போல அசைத்தான்.

“நாம் யாதவர்கள் அங்கே ஒரு நகரை அமைப்பதற்கான செல்வத்தை அளிப்போம். அதை எவரும் அறியவேண்டியதில்லை. இப்போது நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி இது ஒன்றேயாகும்” என்றார் விதுரர். சௌனகர் “ஆம், அமைச்சர் சொல்வதை நானும் முழுமையாக ஏற்கிறேன். இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அது ஒன்றே” என்றார். முடிவுக்கு வந்துவிட்டது போல அமைச்சர் உடல்களில் ஒரு மெல்லிய அசைவு நிகழ்ந்தது. கூட்டமான மூச்சொலிகள் எழுந்தன. அவை திருதராஷ்டிரருக்கு அவர்களின் உள்ளத்தை உணர்த்தின. அவர் தன் கைகளைத் தூக்கி தலைக்குமேல் வளைத்து சோம்பல் முறித்தார்.

“குந்தி தேவியின் எண்ணமும் இதுவாகவே இருக்கும் என எண்ணுகிறேன்” என்றார் கணிகர். தொடர்பே அற்ற அந்த வரியால் திகைத்து விதுரர் திரும்பி நோக்க “மார்த்திகாவதி இனிமேல் யமுனைக்கரையின் ஒரே யாதவநாடாக அமையுமே” என்று சொல்லி மெல்ல புன்னகைத்தார் கணிகர். திருதராஷ்டிரர் சினத்துடன் “மார்த்திகாவதியை நாம் பிறகு நோக்கலாம். விதுரா மூடா... நம் படைகளை அனுப்பவேண்டாமென்றா சொல்கிறாய்?” என்றார். “ஆம் அரசே” என்றார் விதுரர்.

துரியோதனன் “அமைச்சரே, நான் யாதவர்களின் மன்றில் எழுந்து என் நெஞ்சைத்தொட்டு வாக்குறுதி அளித்தேன்... படைகளுடன் நான் வருவேன் என்று சொன்னேன்” என்றான். விதுரர் பேசுவதற்குள் கணிகர் “அது நீங்கள் தனிப்பட்ட முறையில் அளித்த வாக்குறுதி. அஸ்தினபுரியை அது கட்டுப்படுத்தாது. அஸ்தினபுரிக்கும் உங்களுக்கும் அரசியலுறவு ஏதுமில்லை அல்லவா?” என்றார். சீற்றத்துடன் துரியோதனன் திரும்ப “பலராமர் கேட்டால் என்ன சொல்வது என்று நான் சொன்னேன்... நம்மிடமும் வலுவான சொற்கள் இருக்கவேண்டும் அல்லவா?” என்றார் கணிகர் பார்வையை தாழ்த்தியவராக.

துரியோதனன் ஏதோ சொல்ல வர, திருதராஷ்டிரர் தொடையில் அறைந்து “கணிகரே, இது என் அரசு. அவன் என் மைந்தன். அது இல்லாமலாகவில்லை” என்றபின் “விதுரா, என் மைந்தனின் சொல்லை நாம் வீணாக்கலாகாது” என்றார். “அரசே, படை நீக்கம் என்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல... ஒன்றுசெய்யலாம். துரியோதனர் இங்கு வந்ததையும் படைகோரியதையும் சொல்லி படை அனுப்ப முடியாமைக்கு வருந்தி நீங்கள் ஒரு திருமுகம் அனுப்பலாம். அதில் யாதவ அரசு என்றும் அஸ்தினபுரியின் துணையரசே என்றும் நிகழ்ந்தவைக்கு மேலும் சில வருடங்களில் மும்மடங்காக பழிவாங்கப்படும் என்றும் வாக்களிக்கலாம். படைகளுக்கு நிகராக செல்வத்தை அனுப்புவதாக சொல்லலாம்” என்றார் விதுரர்.

“ஆம், அதுவே சிறந்த வழி. அக்கடிதம் படைகளை அனுப்புவதைவிட மேலானது. அது அனைத்தையும் சீரமைக்கும்” என்றார் சௌனகர். அமைச்சர்களும் ஒரே குரலில் ஆம் என்றனர். துரியோதனன் உரத்த குரலில் “தேவையில்லை... நான் என் தம்பியருடன் தனியாக செல்கிறேன். அவனுடன் போர் புரிந்து மடிகிறேன்...” என்று கூவினான். விதுரர் “இளவரசே, அரசியலில் தனிப்பட்ட உணர்ச்சிகளைக் கலப்பதை கடப்பதே அரசு சூழ்தலின் முதல் பாடம்” என்றார். திருதராஷ்டிரர் எழுந்துகொண்டு “ஆம், சிந்திக்கையில் அதுவே சரியெனப் படுகிறது. துரியோதனா, நான் உன்பொருட்டு உன் குருநாதரின் பாதங்களை வணங்கி திருமுகம் அனுப்புகிறேன்...” என்றார். சபையும் எழுந்தது.

துரியோதனன் நிமிர்ந்த தலையுடன் இறுகக் கடித்த வாயுடன் நின்றான். துச்சாதனன் வந்து அவன் அருகே நின்று பிற கௌரவர்களை நோக்கி விழியால் ஏதும் பேசவேண்டாமென்று சொன்னான். அவர்கள் மெல்ல மூத்தவனைச் சூழ்ந்து நின்றனர். விதுரரும் திருதராஷ்டிரரும் சகுனியும் முதலில் வெளியே சென்றனர். சௌனகரிடம் ஏதோ பேசியபடி கணிகர் சென்றார். அமைச்சர்கள் ஒவ்வொருவராக வெளியே செல்லத் தொடங்கினர். தருமன் வெளியே செல்லப்போகையில் துரியோதனன் சில அடிகள் முன்னகர்ந்து தொண்டையைக் கனைத்தான். தருமன் திகைப்புடன் திரும்பினான்.

துரியோதனன் இடறிய குரலில் “மூத்தவரே, தங்களிடம் கோருகிறேன். இந்நாட்டின் பட்டத்து இளவரசர் தாங்கள்... எனக்கு ஒரு படையை கொடுங்கள். நான் என் குருநாதருக்கு அளித்த ஆணையை நிறைவேற்றவேண்டும். இல்லையேல் நான் உயிர்வாழ்வதிலேயே பொருளில்லை” என்றான். தருமன் “நான் எவ்வாறு...” என்று திகைத்து அர்ஜுனனை நோக்க அர்ஜுனன் “நீங்கள் உங்கள் தனிப்பொறுப்பில் எல்லையிலுள்ள படைகளை அனுப்பமுடியும் மூத்தவரே. படைகள் சென்றுவிட்டபின் அரசரோ விதுரரோ ஏதும் சொல்லமுடியாது...' என்றபின் “படைகளுடன் நானும் செல்கிறேன். ஏகலவ்யனை கொன்றே மீள்வேன்” என்றான்.

தருமன் “நானா... படைகளுக்கு ஆணையா?” என்றார். “உங்கள் இலச்சினைக்கு அந்த அதிகாரம் உள்ளது மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “நான் விதுரரை கேளாமல் ஆணையிடமுடியாது. அதுவும் படைகளுக்கு...” என்று தருமன் தடுமாறியபடி சொன்னான். “படைகள் தேவையில்லை மூத்தவரே... ஆயிரம்பேர் கொண்ட ஒரே ஒரு சிறு காவல்படையை மட்டும் அனுப்ப ஆணையிடுங்கள்... போரில் நான் காயம்பட்டு விழுகிறேன். அல்லது உயிர்துறக்கிறேன். செல்லாமல் இங்கிருந்தால் நான் மனிதனல்ல, சடலம்” என்றான் துரியோதனன். அவன் குரல் உடைந்து மெலிந்தது. எழுந்த விம்மலை நெஞ்சுக்குள் அடக்கிக்கொண்டு கையை ஆட்டினான். துச்சாதனன் கண்ணீருடன் தலையை குனிந்துகொண்டான். கௌரவர்கள் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் தோள்களால் தொட்டனர்.

“நான் எப்படி ஆணையிடமுடியும்?” என்றான் தருமன். அர்ஜுனனை நோக்கி “இளையவனே நீயே சொல்! அமைச்சர்களைச் சூழாமல் அரசன் படைநீக்கத்திற்கு ஆணையிடும் மரபு எங்கேனும் உண்டா? படைத்தலைவர்களிடம்கூட கேளாமல் எப்படி ஆணையிட முடியும்?” என்றான். துரியோதனனிடம் “அது பெரும்பிழை” என்று சொல்லி கைகளை வீசினான். “உன் உணர்வுகள் எனக்குப்புரிகின்றன, தார்த்தராஷ்டிரனே. ஆனால் நான் ஒருபோதும் முறைமீறமாட்டேன். விதுரர் சொன்னதை கேட்டாயல்லவா? உன் செயலால் இருசாம்ராஜ்யங்கள் நடுவே ஒரு பெரும்போர் தொடங்கி பல்லாயிரம்பேர் இறப்பார்களென்றால் அதற்கு நானல்லவா பொறுப்பேற்கவேண்டும்? நான் இந்நகர மக்களின் எதிர்கால அரசன். இம்மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொள்ளமுடியும். நீ செய்வது உன் சொல்லுக்காக. அதன் விளைவாக இம்மக்கள் அழிவார்கள் என்றால் நான் அதை ஒப்பமாட்டேன்...”

துரியோதனன் மேலும் முன்னகர்ந்து கைகளைக் கூப்பி “பட்டத்து இளவரசே, நான் உங்களிடம் சரண் அடைகிறேன். எனக்கு நூறு வீரர்களையாவது அளியுங்கள்... வெறும் நூறு வில்லாளிகளை” என்றான். தருமன் “தார்த்தராஷ்டிரா, நீ இந்நாட்டை ஆளும் அரசரின் மைந்தன். பத்துபேருடன் நீ சென்றாலும் அது அஸ்தினபுரியின் படையெடுப்பெனவே கொள்ளப்படும்... அதன் விளைவுகள் அஸ்தினபுரியை அழிக்கும். உன் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இந்நகரின் பல்லாயிரம் குடிமக்களை எண்ணிப்பார்” என்றான். “உன் உடன்பிறந்தோர் உன் சொல்லுக்குரியவர்கள். ஆனால் அஸ்தினபுரியின் கொடியை நீ கொண்டுசெல்லலாகாது.”

தருமனின் வாதத்தால் நிறைவடைந்தவனாக அர்ஜுனன் திரும்பி துரியோதனனிடம் அவனை அமைதிப்படுத்த ஏதோ சொல்ல கை எடுத்தான். ஆனால் தருமன் தொடர்ந்து “உன் சொற்கள் அஸ்தினபுரியின் வாக்குறுதி அல்ல என்று கணிகர் சொன்னார் அல்லவா? அது யாதவர்களுக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் அதை கருத்தில்கொள்ள மாட்டார்கள்” என்றதும் திகைத்து கை அப்படியே நிற்க துரியோதனனை நோக்கினான். பாம்பை மிதித்தவன் போல துரியோதனன் உடலில் ஒரு அதிர்வு கடந்து சென்றது. முகம் உருகிவிடுவது போல வெம்மை கொண்டது. வாய் ஏதோ சொல்லவருவது போல இருமுறை அசைந்தது. பின் அவன் அம்புபட்ட காட்டுயானை போல வெளியே பாய்ந்துசென்றான்.

துச்சாதனன் உரக்க உறுமியபடி பின்னால் சென்றான். கௌரவர்கள் அனைவரும் துரியோதனனைப் போலவே இருந்தனர். அவர்கள் செல்லச்செல்ல துரியோதனன் ஒரு பெரிய பாதாளநாகம் போல வழிந்து சென்றபடியே இருப்பதாகத் தோன்றியது அர்ஜுனனுக்கு. பெருமூச்சுடன் திரும்பி “பாதாளமூர்த்திகளை எழுப்பிவிட்டீர்கள் மூத்தவரே” என்றான். “நான் சொன்னது விதுரர் விளக்கிய நியாயத்தை.... அவனுக்காக நாம் ஒரு போரை தொடங்கி இம்மக்களை பலிகொடுக்கக் கூடாது” என்றான் தருமன். “அது நியாயம். அதை சற்றுப்பிந்தியாவது மூத்த கௌரவர் விளங்கிக்கொள்வார். இறுதியாக நீங்கள் சொன்னது அப்படி அல்ல” என்றான்.

தருமன் குழப்பமாக “என்ன சொன்னேன்? அது உண்மை அல்லவா? யாதவர்கள் அவன் சொல்லை அஸ்தினபுரியின் சொல்லாக கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே அது அரசியல் ஒப்பந்தம் அல்ல” என்றான் தருமன். “மூத்தவரே, நீங்கள் சொன்னதன் உண்மையான பொருளை நீங்கள் உணரவில்லையா?” என்றான் அர்ஜுனன். “உண்மையான பொருளே அதுதானே? ஓர் அரசியல் ஒப்பந்தம் அதற்குரிய பொறுப்பு கொண்ட சிலரால் மட்டுமே....” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் உரக்க நகைத்து “இளையவனே, அறம் கற்றவர்களின் அகம் அறநூல்களை போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறது. பிற அகங்களை அது அறிவதில்லை...” என்றான். அர்ஜுனனின் தோளைத் தொட்டு “வா, கதை முடிந்துவிட்டது” என்றான்.

“நான் சொன்னதில் பிழை என்ன? யாதவசபை முறைப்படி நம்மிடம் எதையும் கோரமுடியாதென்றுதான் சொன்னேன்... அதாவது...” என்றான் தருமன். எரிச்சலுடன் இடைமறித்த அர்ஜுனன் “மூத்தவரே, உங்கள் சொல்கேட்டு இங்கே அகம் இறந்து சடலமாகச் சென்றவனும் என் மூத்தவனே. அவன் நெஞ்சின் வலியும் என்னுடையதே. இன்று அவனுடன் நானும் துயிலாதிருப்பேன்” என்றபின் வெளியே சென்றான்.

பகுதி எட்டு : மழைப்பறவை - 1

பீமன் ஒவ்வொரு வாசலாக நோக்கியபடி புழுதிபடிந்த தெருவில் மெல்ல நடந்தான். அவனுடைய கனத்த காலடியோசை தெருவில் ஒரு யானை செல்வதைப்போல ஒலியெழுப்பவே திரைச்சீலைகளை விலக்கி பல பெண்முகங்கள் எட்டிப்பார்த்தன. பெரும்பாலானவர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டு திகைத்து வணங்கினர். கிழவர்கள் கைகூப்பியபடி முற்றம் நோக்கி வந்தனர்.

ஆனால் எவரும் அவனை அணுகவோ பேசவோ முற்படவில்லை. தற்செயலாக அவனுக்கு நேர் எதிராக வந்துவிட்டவர்கள் அஞ்சி உடல்நடுநடுங்க சுவரோடுசுவராக ஒண்டிக்கொண்டனர். பீமன் தெருவில் நின்று சுற்றிலும் நோக்கினான். அங்கே நின்றிருந்த மெலிந்து வளைந்த கரிய மனிதன் அவனை வணங்கி “இளவரசே, அடியேன் வணங்குகிறேன். தாங்கள் தேடுவது தங்கள் இளையோனையா?” என்றான். பீமன் அவனை நோக்கி புன்னகைத்து “ஆம்... நான் இத்தெருவையே முதல்முறையாக காண்கிறேன்” என்றான்.

“ஆம், நாங்களும் தங்களை முதல்முறையாக காண்கிறோம்” என்றான் அவன். “அருகே வாரும்... உமது பெயர் என்ன?” என்றான் பீமன் புன்னகையுடன் அணுகியபடி. அவன் மேலும் பின்னடைந்து உடலை நன்றாகக் குறுக்கி நடுங்கியபடி “நான் எந்தப்பிழையும் செய்யாதவன் இளவரசே. நோயாளியும்கூட... மேலும்...” என்றான். பீமன் அருகே சென்று “உம்மை அறிமுகம் செய்துகொள்ளும்...” என்றான். அவன் நடுங்கும் கைகளைக் கூப்பி “என் பெயர் உச்சிகன்...” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான். “என்ன செய்கிறீர்?” என்றான் பீமன். “நான் சமையல் செய்வேன்... அதோடு இங்கு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும்படி பெண்களை அறிமுகம் செய்வதுண்டு.”

“சமையல் செய்வீரா?” என்றான் பீமன் ஆர்வத்துடன். “இங்கே என்ன சமையல் செய்வீர்கள்? எளிமையாக சுட்டோ வேகவைத்தோ உண்பீர்கள் அவ்வளவுதானே?” உச்சிகன் சற்றே தயக்கத்துடன் விழிகளைத்திறந்து “இங்குள்ளதும் சமையலே” என்றான். “என்ன செய்வீர்கள்?” என்றான் பீமன். “இளவரசே, மானுட நாக்கு எப்போதும் சுவையைத் தேடுகிறது. நீங்கள் உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொண்டு சுவையை உருவாக்குகிறீர்கள். நாங்கள் இங்கே கீழான பொருட்களில் எவை இருக்கின்றனவோ அவற்றைக்கொண்டு உணவை சுவையாக அமைக்கிறோம்.”

பீமன் அவனை நோக்கி கைகூப்பி “உச்சிகரே, நான் பாண்டுவின் மைந்தனாகிய பீமன். எனக்கு தங்கள் சமையலை சொல்லித்தந்தால் கடன்பட்டவனாக இருப்பேன். வேண்டும் குருகாணிக்கையையும் அளிப்பேன்” என்றான். உச்சிகன் அவனை ஓரக்கண்ணால் பார்த்து குழம்பி “தாங்கள் இதை கற்று என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றான். “நான் அன்னத்தில் இருந்து சுவை உருவாகும் விதத்தை அறிய விழைபவன் உச்சிகரே. உயிர் அன்னத்தை அறியும் விதத்தையே நாம் சுவை என்கிறோம். இப்புவியில் அருவும் உருவும் இணையும் ஒரு புள்ளியை நாம் அறிவதற்கான ஒரே தூலமான வழி சுவையை அறிந்துகொள்ளுதலே” என்றான்.

உச்சிகன் முகம் மலர்ந்து “நானெல்லாம்கூட நிறைய தத்துவம் பேசுவேன்... இப்போது பேசுவதில்லை. தத்துவம் பேசினால் நான் சந்திப்பவர்கள் என்னை அடிக்கிறார்கள்...” என்றான். “இப்போது நீங்கள் சொன்னவை கேட்க அழகாக உள்ளன” என்றபின் “தாங்கள் தங்கள் இளையவரைத் தேடி சென்றுகொண்டிருந்தீர்கள்...” என்றான். “அவன் எங்கே?” என்றான் பீமன். “அங்கே சபரை என்ற தாசியின் இல்லத்தில் நேற்று நான் அவரைக்கொண்டுசென்று விட்டேன்...” உடனே அவன் நடுங்கி “அவரே என்னிடம் கோரியதனால்தான்” என்றான்.

“அவன் அங்குதான் இருப்பான்... நான் பிறகு அவனை பார்க்கிறேன்” என்றான் பீமன். “முதலில் உங்கள் உணவை எனக்கு அளியுங்கள்” உச்சிகன் துடிப்புடன் “வாருங்கள்... இங்கே அருகேதான் என் மடைப்பள்ளி... உண்மையில் அது எளிய மக்களுக்கான சத்திரம். நாங்கள் அங்கே இரவெல்லாம் உணவை அளிக்கிறோம்” என்றபின் “தாங்கள் குதிரையில் வரவில்லையா?” என்றான். “இல்லை... நான் நடந்துசெல்வதையே விழைகிறேன்” என்றான் பீமன். “தாங்கள் நடக்கலாம். நடப்பதனால் களைப்படையாத ஒரே விலங்கு யானைதான்... உத்கலம் வரைக்கும்கூட யானையை நிற்காமல் கூட்டிச்செல்லமுடியும்...” என்றான் உச்சிகன்.

“என் இடத்துக்கு நீங்கள் வருவது தகாது என்பார்களே?” என்றான் உச்சிகன். “எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள்... என்னையும் அவர்கள் உங்களைப்போன்றவன் என்றே நினைப்பார்கள்” என்றான் பீமன். “பின்னர் என்னை எவரும் வந்து தண்டிக்கலாகாது... இப்பகுதியின் நூற்றுக்குடையோன் விரோகணன் கொடுமையானவன். எதற்கும் சவுக்கைத் தூக்கிவிடுவான். அவனிடம் அடிவாங்கிய தழும்புகள் என் உடலெங்கும் உள்ளன.” பீமன் “இனிமேல் என் பெயரைச் சொல்லும்...” என்றான். “அவன் நம்பாவிட்டால்..” என்றான் உச்சிகன். “நேராக வந்து என்னிடம் சொல்லும்...” உச்சிகன் புன்னகைத்து “அரண்மனையில் என்னை உள்ளே விடமாட்டார்களே” என்றான். “நான் உமக்கு ஒரு சொல்லை அளிக்கிறேன். அதைச் சொன்னால் விடுவார்கள்” என்றான் பீமன். “என்னைத்தேடி வருபவர்களெல்லாம் உம்மைப்போன்றவர்களே.”

உச்சிகனின் மடைப்பள்ளி பழையபாத்திரங்களும் விறகும் பலவகையான உணவுக்குப்பைகளும் நிறைந்திருந்தது. வெவ்வேறு வகையான மக்கள் அங்கே பாத்திரங்களைக் குவித்துப்போட்டு கழுவிக்கொண்டிருந்தனர். போர்க்களத்தைப்போல உலோக ஒலிகளும் பேச்சொலிகளும் கூச்சல்களும் கேட்டன. “அவர்களெல்லாம் இங்கே அறவுணவை உண்பவர்கள். நிகராக அவர்களே பாத்திரங்களைக் கழுவ வேண்டுமென்பது நெறி. அவர்களால் எதையும் கூச்சலிட்டே சொல்லமுடியும்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “ஏனென்றால் அவர்கள் சொல்வதை எவரும் செவிகொடுப்பதில்லை” என்றான் உச்சிகன். “வெறும் மக்கள். பெரும்பாலானவர்கள் குடிகாரர்கள், பிச்சைக்காரரகள்... இங்கே குடிகாரர்கள் பிச்சைக்காரர்களாக ஆவது இயல்பான மாற்றம்.”

பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தவர்கள் திகைத்து பீமனை நோக்கினர். அவர்கள் அவன் யாரென்றே அறிந்திருக்கவில்லை. எந்த அரசுக்கும் நிலத்துக்கும் சொந்தமற்ற மிதக்கும் குப்பைகள் அவர்கள் என்று பீமன் எண்ணிக்கொண்டான். அவனுடைய பேருடலைத்தான் அவர்கள் நோக்கினர். ஒருவன் “இவன் தின்றபின் நமக்கு மதிய உணவு எங்கே எஞ்சப்போகிறது?” என்றான். ஒரு கிழவி “இவனைத் தின்றுவிடவேண்டியதுதான்” என்று சொல்ல அவர்கள் அனைவரும் நகைத்தனர். பீமன் அவர்களை நோக்கி நகைத்து “அண்ணா, நான் சாப்பிடுவதைவிட அதிகமாக சமைப்பேன்” என்றான். “உன்னைப்பார்த்தாலே உணவுதான் நினைவு வருகிறது” என்றான் ஒருவன்.

பீமன் அவர்கள் நடுவே அமர்ந்துகொண்டான். “என் அன்னை என்னை உணவின் மேல் பெற்றிட்டாள்” என்றான். அவர்கள் நகைத்தனர். உச்சிகன் “உணவுண்ண வாருங்கள்” என்றான். “இங்கே கொண்டு வாரும் உச்சிகரே” என்றான் பீமன். “இங்கேயா?” என்றான் உச்சிகன். “ஆம், அங்கே நான் தனியாக அமர்ந்தல்லவா உண்ணவேண்டும்?” என்ற பீமன் “பிறர் உண்பதைவிட பன்னிருமடங்கு நான் உண்பேன்” என்றான்.

அப்பால் எச்சில்கள் குவியுமிடத்தில் அமர்ந்திருந்த இரு குரங்குகள் பீமனை நோக்கியபின் எழுந்து வால் தூக்கியபடி அருகே வந்தன. “போ” என ஒருவன் நீரை அள்ளித்தெறித்தான். அவை மெல்ல பதுங்கியபின் பீமனை நோக்கி புன்னகைசெய்தன. “ஒன்றும் செய்யவேண்டாம்... நான் பேசுவதைக் கேட்க வந்திருக்கின்றன” என்றான் பீமன்.

“நீ பேசுவதையா? அவை அறியுமா?” என்றான் ஒருவன். “ஆம் நான் பேசுவதை குரங்குகள் புரிந்துகொள்கின்றன. அவை என்னை ஒரு குரங்காகவே நினைக்கின்றன” என்றான் பீமன். “நாங்களும் அவ்வாறே நினைக்கிறோம்” என்று ஒரு பெண் சொல்ல அனைவரும் நகைத்தனர். பீமன் நகைத்து “நானும் அவ்வாறே நினைக்கிறேன் அக்கா” என்றான். அவள் “அக்காவா? நானா?” என்றாள். “ஏன் என்னைவிட இளையவளா நீ?” என்றான் பீமன். “நானா? எனக்கு என்ன வயது என்றே தெரியவில்லை... ஆனால் காவலர்கள் என்னை பிடித்துப் புணர்வதை நிறுத்தி சிலவருடங்களாகின்றன” என்று அவள் சொன்னாள். “அதன்பின்னர்தான் நாங்கள் தொடங்கினோம்” என்றான் ஒரு கிழவன். மீண்டும் சிரிப்பு எழுந்தது.

உச்சிகன் ஒரு பெரிய மரத்தாலத்தில் உணவைக் கொண்டுவந்து பீமன் அருகே வைத்தான். “நிறைய இருக்கிறது இளவரசே... நீங்கள் உண்ண உண்ண கொண்டுவருகிறேன்” என்றான். “இளவரசா, இவனா? எந்த நாட்டுக்கு?” என்றாள் ஒருத்தி. “வடக்கே அன்னமலை என்றொரு மலை இருக்கிறது. அதன் மேல் அன்னசத்திரம் என்று ஒரு நாடு... அதன் இளவரசர். இவர்பெயர் அன்னன்” என்றான் ஒருவன். அனைவரும் உரக்க நகைக்க “இவரது கொடி அகப்பை... இவரது படைக்கலம் சட்டுவம்...” என்றான். அங்கிருந்த அனைவரும் நகைத்துக்கொண்டனர்.

பீமன் உண்ணத்தொடங்கியதும் இருகுரங்குகளும் வந்து அந்தத் தட்டிலேயே அள்ளி உண்ணத்தலைப்பட்டன. “குரங்குகள் உண்ணும் உணவையா?” என்றான் ஒருவன். “குரங்குகள் சிறந்த உணவை அன்றி உண்பதில்லை” என்றான் பீமன். ஒரு குரங்கு உணவில் இருந்த ஏதோ ஒன்றை எடுத்து வீசியது. அவனிடம் இன்னொன்று ஏதோ சொன்னது. “காரம் கூடுதல் என்கிறது” என்றான் பீமன் “இளவரசே, எளிய சமையலின் விதிகளில் ஒன்று, காரம் உப்பு புளி கூடுதலாக இருக்கும் என்பது. வாசப்பொருட்களும் கூடுதலாக போடுவோம். ஏனென்றால் சமையற்பொருட்கள் சிறந்தவை அல்ல. புளித்தவை அழுகியவை புழுங்கியவை. அவற்றை நாவும் மூக்கும் அறியக்கூடாது.” பீமன் “பழகிவிட்டால் சுவையாகிவிடும்” என்றான்.

அவன் உண்பதை அவர்கள் வியந்து நோக்கினர். “நீ காலையிலேயே இத்தனை உணவை அருந்துவது வியப்பளிக்கிறது” என்றான் ஒருவன். “நான் அதிகாலையில் எழுந்து உணவருந்திவிட்டுத்தான் வந்தேன்” என்றான் பீமன். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நீ ஏன் போருக்குச் செல்லக்கூடாது? உன் எதிரே எவரும் நிற்கமுடியாதே?” என்றனர். “ஏன் போருக்குச் செல்லவேண்டும்? அதன் மூலம் எனக்கு மேலும் உணவு கிடைக்குமா என்ன?” என்றான் பீமன். “ஆம் அது உண்மை. அரசர்கள் மேலும் அதிகம் பெண்களைப் புணர்வதற்காக போரை நடத்துகிறார்கள். வீரர்கள் அதன்பொருட்டு சாகிறார்கள்” என்றான் ஒருவன்.

“என்னை ஒரு காவலன் ஒருமுறை அடித்தான். வடுகூட இருக்கிறது. நான் ஓர் அரசனை கூட்டத்தில் நின்று எட்டிப்பார்த்துவிட்டேன். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஏன் சிரித்தேன் என்று அடி.” பீமன் மென்றபடி “ஏன் சிரித்தாய்?” என்றான். “அவன் ஏதோ செடியோ மரமோ இல்லாத ஊரின் மனிதன் போலத் தெரிந்தான். பூக்களையும் கொடிகளையும் இலைகளையும் உலோகத்தில் செய்து உடலெங்கும் கட்டி வைத்திருந்தான். அவை சருகு நிறத்தில் இருந்தன. சேற்றில் விழுந்து சருகில் புரண்டு எழுந்தவன் போல ஒரு தோற்றம்... மடையன்” என்றான் அவன். பீமன் சிரித்து “இதையே நானும் நினைத்தேன்... ஆகவேதான் நான் எந்த அணிகளையும் அணிவதில்லை” என்றான்.

“அவன் பெயர் தருமன், அவன்தான் பட்டத்து இளவரசன் என்றார்கள்” என்றான் அவன். “நிறைய நூல்களைக் கற்றவனாம். ஆகவே அவனுக்கு நிறைய ஐயங்கள். அவன் அமர்ந்திருப்பதைப்பார்த்தேன். அமர்வதா எழுவதா என்ற ஐயத்துடன் இருந்தான்” என்றான். ஒரு பெண் “அவனுக்கு பின்பக்கம் மூலநோய் இருக்குமோ?” என்றாள். அனைவரும் சிரிக்க இன்னொருவன் “அவனுடைய சிம்மாசனத்தில் ஓர் ஓட்டை போட்டு அமரச்செய்ய வேண்டும்” என்றான். மீண்டும் சிரிப்பு. “அவர்கள் ஐந்துபேர் இருக்கிறார்களாம்...” என்றான் ஒருவன். “ஐந்து பேரும் ஐந்துவகை மூடர்கள் என்பதுதான் அவர்களின் சிறப்பாம்.”

உச்சிகன் பதறிக்கொண்டே இருந்தான். பீமனின் கண்களை அவன் கண்கள் வந்து தொட்டுச்சென்றன. பீமன் எழுந்து “சிறந்த உணவு உச்சிகரே. ஆனால் இவர்களுக்குத்தான் பிடிக்கவில்லை” என்றான் குரங்குகளைச் சுட்டிக்காட்டி. உச்சிகன் நகைத்து “அவை இங்கே வந்து நாங்கள் வீசும் பழைய காய்கறிகளை மட்டுமே உண்கின்றன” என்றான். பீமன் அவர்களை நோக்கி “நான் வருகிறேன்...” என்றான். “ஆம், உண்டபின் தாசியைத்தானே பார்க்கவேண்டும்?” என்றான் ஒரு கிழவன். அவர்கள் நகைத்துக்கொண்டு இயல்பாக விடைகொடுத்தனர்.

மீண்டும் சிறுபாதையை அடைந்தபோது பீமன் “நான் நீங்கள் சமைக்கும்போது மீண்டும் வருகிறேன் உச்சிகரே” என்றான். “இளவரசே, நீங்கள் எங்களை உளவறிய வந்தீர்களா?” என்றான் உச்சிகன். “உச்சிகரே நான் உங்களில் ஒருவன். என்னை என் அன்னை அரண்மனையில் பெற்றாள் என்றால் அது என் பிழை அல்ல. என் தமையனுக்கும் குலத்துக்கும் செய்யவேண்டிய கடன் என்பதனாலேயே அரண்மனையில் வாழ்கிறேன். பிறப்பில் இருந்து துறவு வழியாக அன்றி எவரும் தப்ப முடியாது....நான் உங்களை என் தோள்தோழராகவே எண்ணுகிறேன்” என்றான் . உச்சிகன் “என் நல்லூழ்” என்றான். பீமன் அவன் தோள்களைப்பற்றி தன்னுடன் அணைத்துக்கொண்டு “நம்புங்கள்” என்றான்.

அவன் தொட்டதுமே உச்சிகன் அழத்தொடங்கினான். “நான் ஏழை... எனக்கு யாருமே இல்லை... என் அன்னை ஒரு பரத்தை. ஆகவே...” என்று விக்கினான். “நான் உம்முடன் இருப்பேன்” என்றான் பீமன். “எனக்கு அடியை மட்டும்தான் அச்சம்... என்னை அனைவருமே அடிக்கிறார்கள்” என்றான் உச்சிகன். “இனிமேல் அடிக்கமாட்டார்கள்...” என்றான் பீமன். உச்சிகன் பீமன் அவனைத் தொட்டதுமே அதுவரை இருந்த அத்தனை அக விலக்கத்தையும் இழந்து பீமன் உடலுடன் ஒட்டிக்கொண்டான். “உம் உடம்பு யானை உடம்பு...” என்றான்.

“என்னை விருகோதரன் என்று அழையும்” என்றான் பீமன். “விருகோதரே, எனக்கு ஓர் ஐயம்... இதையெல்லாம் எப்படி செரிக்கிறீர்?” பீமன் “மிக எளிது... அணிவகுப்பில் முன்னால் செல்லும் யானை நின்றுவிடாமலிருக்க மிகச்சிறந்த வழி பின்னால் மேலும் யானைகளை அனுப்புவதே...” என்றான். உச்சிகன் உரக்க நகைத்து “ஆம்...” என்று சொல்லி மீண்டும் நகைத்தான். “என் இளையோனும் அங்கே அதைத்தான் செய்கிறான். புதியபெண்ணைக்கொண்டு பழைய பெண்ணை மறக்கிறான்” என்றான். “ஆம், இங்கே வருபவர்கள் அனைவருமே பெண்களை வெறுப்பவர்கள்தான்... அதை நான் அறிவேன்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “பெண்ணை விரும்புபவர்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்ணை விரும்பவேண்டியதுதானே?”

“அதோ அதுதான் அவள் வீடு. சற்று முதிர்ந்த கணிகை அவள். தடித்தவள். அவளை இளவரசர் விரும்புவார் என்று நான் எண்ணினேன்” என்றான் உச்சிகன். “ஏன்?” என்றான் பீமன். “ஏனென்றால் அவர் இளையவர்...” என்றபின் “செல்லுங்கள். நீர் என்னை அணைத்துக்கொண்டு நடப்பதை அத்தனை பேரும் பார்க்கிறார்கள். நீர் சென்றதும் நான் இவர்களிடமெல்லாம் தண்டல் செய்யலாமென்றுகூடத் தோன்றுகிறது” என்றான். பீமன் அவன் தோளில் அடித்து “மீண்டும் சந்திப்போம்” என்றபின் முன்னால் சென்று அந்த வீட்டின் வாயிலை அடைந்தான்.

அவன் வருவதை முன்னரே பார்த்திருந்த சபரை வாயிலில் நின்றிருந்தாள். விரைவாக உடைகளை அள்ளி அணிந்திருந்தாள். கூந்தலைச் சுழற்றி பின்னால் கட்டி உடலைக் குறுக்கி கைகூப்பி நின்றிருந்தாள். அவன் அருகே சென்றதும் அவள் மன்றாடும் குரலில் “நான் இளவரசரிடம் சொன்னேன்... அவர்தான்... என்னை மன்னிக்கவேண்டும். நான்...” என்று பேசத்தொடங்கினாள். பீமன் உள்ளே சென்று அறையின் அரையிருளில் பழைய ஈச்சையோலைப்பாயில் படுத்திருந்த அர்ஜுனனை நோக்கி ஒரு கணம் நின்றபின் அருகே சென்று குனிந்து அவன் தோளைத் தொட்டு “பார்த்தா” என்றான்.

அர்ஜுனன் திகைத்து எழுந்து சிலகணங்கள் விழித்தபின் வாயைத் துடைத்துக்கொண்டு “மூத்தவரே” என்றான். உடனே தன் உடையை துழாவி எடுத்து அணிந்துகொண்டு “தாங்கள் இங்கே..” என்றான். “உன்னை அழைத்துச்செல்லத்தான்...” என்றான் பீமன். “என்னையா... நான்...” என்றபின் அர்ஜுனன் தன்னை தொகுத்துக்கொண்டு எழுந்து விரைவாக ஆடைகளை சரிசெய்துகொண்டான். பீமன் வெளியே செல்ல அவனும் பின்னால் வந்தான். “அந்தப்பெண்ணுக்குரியதை கொடுத்துவிட்டாயா?” என்றான் பீமன். “அதெல்லாம் நேற்றே எடுத்துக்கொண்டுவிட்டாள்” என்றான் அர்ஜுனன்.

தெருவிற்குச் சென்றதும் அர்ஜுனன் “நான் புரவியில் வந்தேன்... நீங்கள்?” என்றான். “இங்கே புரவி வருமா என்றே தெரியவில்லை... நடந்து வந்தேன்” என்றான் பீமன். ஆனால் அதற்குள் தெருவின் மறு எல்லையில் பீமனின் ரதமோட்டி நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டான். “உங்கள் சாரதி பின்னாலேயே வந்திருக்கிறான்” என்றான் அர்ஜுனன். பீமன் “ஆம், அரசபதவி அல்லவா? சிதைவரைக்கும் வரும்” என்றபின் “நீ இங்குதான் இருக்கிறாய் என்று அறிவேன்” என்றான்.

அர்ஜுனன் “இதற்குள் மூழ்கிவிடலாகாது என்று எனக்கு நானே அணை போட்டுக்கொள்வேன் மூத்தவரே. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒன்று என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கிறது” என்றான். பீமன் ஒன்றும் சொல்லவில்லை. “பெருக்கில் செல்பவன் இறுதியாகப் பற்றிக்கொண்ட வேர் போலிருந்தார் நம் மூத்தவர் எனக்கு. அந்த வேர் நேற்று பெயர்ந்து வந்துவிட்டது. இனி வெள்ளம் முடிவுசெய்யட்டும் என் திசையை” என்றான் அர்ஜுனன். பீமன் ஏதேனும் சொல்வான் என அவன் எண்ணினான். மீண்டும் “அன்னை பின்னர் ஆசிரியர் என ஒவ்வொரு தெய்வமாக கல்லாகிக்கொண்டிருக்கின்றன மூத்தவரே” என்றான்.

பீமன் நகைத்து “அதனால்தான் கல்லையே தெய்வமாக வணங்கச் சொல்கிறார்களோ” என்றான். அர்ஜுனன் “இதில் என்ன நகைக்க இருக்கிறது?” என்று மூச்சிரைக்கச் சொன்னான். “நேற்று என் மூத்தவர் என் முன் உடைந்து நொறுங்கினார்” என்றான். தலையை அசைத்து “அவர் இன்னமும் என் மூத்தவரே. அவருக்காக உயிர்துறப்பதும் என் கடனே. ஆனால் அவர் இனி என் வழிகாட்டி அல்ல. என் தெய்வம் அல்ல” என்றான். பீமன் புன்னகை செய்து “இளையவனே, நீ மிக எளிதில் தெய்வங்களை உருவாக்கிக் கொள்கிறாய். மிக எளிதில் அவற்றை உடையவும் விடுகிறாய்” என்றான்.

“நீங்களும் அன்று அரசரின் அவையில் நம் மூத்தவருக்காக உங்களை முன்வைத்தீர்கள்...” என்று அர்ஜுனன் சினத்துடன் சொன்னான். “ஆம்....அது அவரை தெய்வமென்று எண்ணி அல்ல. எளிய மனிதர் அவர். எல்லா மனிதர்களையும் போல தன்னைத்தானே நிறுவிக்கொள்ளவும் பிறர் முன் நிலைகொள்ளவும் ஏதோ ஒன்றை அன்றாடம் பயில்கிறார். வில்லை கையாளமுடியாதவர் என்பதனால் சொல்லை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை நன்கறிந்த பின்னரே அவரை என் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டேன்” பீமன் சொன்னான்.

“அவரிடம் நான் எதிர்பார்ப்பது மெய்ஞானத்தை அல்ல. உலக ஞானத்தையும் அல்ல. அதெல்லாம் அவரைவிடவும் எனக்குத்தெரியும். அந்த ஞானத்தால்தான் அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரிடம் நான் காண்பது என் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பை. என்னையும் தானாகவே அவர் நினைக்கிறார் என்பதை உறுதியாக அறிவேன். அந்த அன்பு மட்டுமே அவர். வேறேதுமில்லை. அது எனக்குப் போதுமானது...” என்றான் பீமன்.

அர்ஜுனன் உரக்க “அந்த எளிமையான அன்பல்ல நான் தேடுவது. நான் தேடுவது வேறு” என்றான். “நீ தேடுவதற்கு அவரா பொறுப்பு?” என்றான் பீமன். “உன் எதிர்பார்ப்புகளை அந்த எளிய மனிதர் மேல் ஏற்றிவைத்து பின் அவரை வெறுப்பது என்ன நியாயம்?” அர்ஜுனன் “வெறுக்கவில்லை” என்றான். “ஏமாற்றம் மெல்ல வெறுப்பாகத் திரியும்... அதுவே இயல்பான பாதை...” என்றான் பீமன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஏமாறும்போது நம் ஆணவமல்லவா அடிபடுகிறது? நம் நம்பிக்கை பிழையென்றல்லவா அது சொல்கிறது? அந்தப்பழியை முழுக்க ஏமாற்றமளித்தவர் மேல் ஏற்றிக்கொண்டால் நாம் தப்பிவிடலாமே?” என்றான் பீமன் புன்னகையுடன்.

ரதத்தில் ஏறிக்கொண்டே அர்ஜுனன் “மூத்தவரே, நீங்கள் நச்சு நிறைந்த நகைப்பால் அகத்தை நிறைத்து வைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்...” என்றான் பீமன். “நம் பாட்டனார் விசித்திரவீரியர் அப்படித்தான் இருந்தார் என்று முதுசூதர் பூராடர் சொன்னார். அவரிடமிருந்து நான் பெற்றுக்கொண்டதாக இருக்கலாம் இது... இது என் கவசம்” என்றான் பீமன். “அந்தக் கசப்பால் உள்ளூர வைரம் பாய்ந்திருக்கிறீர்கள் மூத்தவரே. மூத்த எட்டிமரம்போன்றவர் நீங்கள். நீரிலோ நெருப்பிலோ அழியமாட்டீர்கள். சிதலரிக்க மாட்டீர்கள்...” என்றான் அர்ஜுனன். “நான் அப்படி அல்ல. எனக்குள் திசைகாட்டி முள்ளின் தவிப்பு ஓயவே இல்லை. கைவிடப்பட்டவனாகவே எப்போதும் உணர்கிறேன்.”

“நேற்று நான் செய்திருக்கவேண்டியதென்ன என்று எண்ணி எண்ணி இரவைக் கழித்தேன்” என்றான் அர்ஜுனன். “நான் சென்று துரியோதனரைப் பணிந்து அவரது வஞ்சினத்தை என் குலத்தின் சொல்லாக ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லியிருக்கவேண்டும். என் வில்லை அவர்முன் வைத்திருக்கவேண்டும். ஆனால் என்னால் மூத்தவரைக் கடந்து எதையும் செய்யமுடியாது. மூத்தவரிடம் நாம் விவாதிக்கவே முடியாது. கௌரவர்களின் கண்ணீர் என் நெஞ்சில் கற்சிலைமுகங்கள் போல அப்படியே பதிந்துவிட்டது மூத்தவரே. நாமறிவோம் துரியோதனரின் ஆணவம் என்ன என்று. நேற்று நம் மூத்தவர் முன் தலைகுனிந்து நின்றது அவரது இறப்பின் கணம்... அவர் என்னைக் கடந்துசென்றபோது அவர் உடலெங்கும் ஓடிய துடிப்பை நான் உணர்ந்தேன்.”

“அவன் என்னைக் கொல்ல முயன்றவன்” என்றான் பீமன். “ஆம், மறுகணமே அவ்வெண்ணம் வந்தது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நம் எதிரிகள். அவர்கள் அவ்வெண்ணத்தை ஒருபோதும் மறந்ததில்லை. நான் செய்வதற்கு ஏதுமில்லை. உடைவாளை எடுத்து கழுத்தை வெட்டிக்கொள்ளவேண்டும். அதைச்செய்வதற்கு மாற்றாக இங்கே வந்தேன்” என்றான் அர்ஜுனன். ரதம் தெற்குப்பெருஞ்சாலையை அடைந்தது. பீமன் “நான் உன்னை கூர்ந்து நோக்கிக் கொண்டே இருக்கிறேன் இளையவனே. நீ எளிதில் நிலைகொள்ளப்போவதில்லை என்றே தோன்றுகிறது” என்றான். “ஆனால் அது நல்லதுதான். எளிய விடைகளில் நீ அமைய மாட்டாய். மேலும் மேலுமென வினவி முழுமுதல் விடையைச் சென்று தொடுவாய். யார் கண்டது, நீ ஒரு யோகியாக ஆகக்கூடும். இச்சிறகடிப்பெல்லாம் ஞானத்தின் கிளைநுனியில் சென்று அமர்வதற்காகத்தானோ என்னவோ!”

அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “நீ தேடுவது எதைத் தெரியுமா?” என்றான் பீமன். “ஒரு ஞானாசிரியனை. முழுமையானவனை. முதல் ஞானாசிரியன் தந்தை, அதை நீ அடையவில்லை. தாய் உனக்கு எதையும் அளிக்கவில்லை. ஆசிரியனைக் கண்டுகொண்டாய். அவரோ உன் வினாக்களுக்கு மிக அப்பால் இருக்கும் எளிய மனிதர். பின் உடன்பிறந்தவனைக் கண்டுகொண்டாய். அவனையும் இதோ இழந்திருக்கிறாய்.” உரக்க நகைத்து “மாதா பிதா குரு வரிசையில் இனி உனக்கு தெய்வம்தான் குருவாக வந்தாகவேண்டும்.”

அர்ஜுனன் நகைத்து “ஏன் தோழனாக வரலாமே? சேவகனாக வரலாமே?” என்றான். “எதிரியாகக்கூட வரலாம்” என்றான் பீமனும் நகைத்தபடி. “ஆனால் எவராக இருந்தாலும் நீ எளிதில் கண்டடையப்போவதில்லை. நீ தேடுபவன் பேரன்புகொண்டவனாக இருக்கவேண்டும். உன்னுள் உள்ள தந்தையையும் தாயையும் இழந்த மைந்தனுக்கு அவன் தாயும் தந்தையுமாக வேண்டும். உன்னில் எழுந்த மாவீரன் கண்டு மலைக்கும் நிகரற்ற வீரனாகவும் அவன் இருக்கவேண்டும். உன்னை ஆளும் இந்திரனுக்குரிய விளையாட்டுத் தோழனாகவும் அமையவேண்டும். அனைத்துக்கும் அப்பால் நீ எழுப்பும் அத்தனை வினாக்களுக்கும் விளக்கம் அளிக்கும் பேரறிஞனாகவும் ஞானியாகவும் அவன் அமையவேண்டும்...”

பீமன் தொடையில் அடித்து நகைத்து “இதையெல்லாம் பிரம்மம் கேட்டுக்கொண்டிருந்தால் உனக்கு அது அனுப்பும் குரு எப்படி இருப்பார் தெரியுமா? சலவைக்காரியின் துணிமூட்டையைத் திருடி ஆடைகளை அணிந்துகொண்ட பித்தன் போலிருப்பார்.” அந்த குழந்தைத்தனமான கற்பனை அர்ஜுனனை வெடித்துச்சிரிக்கச் செய்தது. “ஒவ்வொரு தேவைக்கும் ஒன்றாக பெருங்கூட்டமாக ஆசிரியர்கள் வந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசிக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களை ஒருவரோடு ஒருவர் போரிடச் சொல்லவேண்டியதுதான்” என்றான் பீமன். “போரிட்டால் சரி. புணர்ந்து மேலும் குருநாதர்களை உருவாக்கிவிட்டால்?” என்றான் அர்ஜுனன். பீமன் ரதத்தின் தூணில் அறைந்து நகைத்தான்.

“எதற்காக என்னை அழைக்க வந்தீர்கள்?” என்றான் அர்ஜுனன். “மூத்தவர் தேடினார்... இன்று யாதவர்களிடமிருந்து ஒரு தூது வருகிறது” என்றான் பீமன். “முடிவுதான் எடுக்கப்பட்டாயிற்றே?” என்றான் அர்ஜுனன். “இது அரசியல் தூது அல்ல. வசுதேவரின் மைந்தன் கிருஷ்ணன் அவனே நேரில் வருகிறான். தன் அத்தையைப் பார்க்க...” என்றான் பீமன். “உதவி கோரத்தான் என்று தெளிவு. நேரில் உதவிகோரினால் அன்னை அதை மறுக்கமுடியாது. என்னசெய்யலாம் என்று மூத்தவர் தவிக்கிறார்” என்றான். அர்ஜுனன் “அவர் எப்போதுமே தவிக்கத்தானே செய்கிறார். இறுதி முடிவை அன்னை எடுப்பார். வேறென்ன?” என்றான்.

பகுதி எட்டு : மழைப்பறவை - 2

அரண்மனையை அடைந்ததும் பீமன் “நான் நீராடிவிட்டு மூத்தவரின் அவைக்கூடத்துக்கு வருகிறேன். நீயும் வந்துவிடு... விரிவான நீராட்டு தேவையில்லை” என்றான். அர்ஜுனன் தலையசைத்தபின் தன் அறைக்குள் சென்றான். சேவகன் வந்து பணிந்ததும் தன் மேலாடையை அளித்தபடி “நான் உடனே கிளம்பவேண்டும்... எளிய உணவு போதும்” என்றான். சேவகன் “மூத்தவர் செய்தி அனுப்பியிருந்தார்”“ என்றான்.”ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

ஆனால் நீராடி ஆடையணிந்ததும் அவனிடம் ஒரு சோர்வு வந்து குடியேறியது. அவன் அரண்மனையைவிட்டு வெளியே சென்று தோட்டத்தின் நிழல் வழியாக நடந்தான். ஒரு சாலமரத்தடியில் கட்டப்பட்டிருந்த கல்மேடையில் சென்று அமர்ந்துகொண்டான். மேலே கிளிகள் எழுப்பிய ஒலியை கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தான். கண்களை மூடியபோதுதான் அங்கே எத்தனை வகையான பறவைகள் இருக்கக்கூடும் என்ற வியப்பை அடைந்தான். பல்லாயிரம் பறவைகளின் விதவிதமான ஒலிகள் இணைந்து ஒற்றைப்பெருக்காக சென்றுகொண்டிருந்தன. குழறுபவை, அறைகூவுபவை, ஏங்குபவை, இசைப்பவை, தாளமிடுபவை, விம்முபவை, அழுபவை. இத்தனை உணர்ச்சிக்கொந்தளிப்புகள் சூழ நிகழ்கையில் மானுடர் அவற்றை அறியாமல் தங்கள் உலகில் வாழ்கிறார்கள்.

புவியை உண்மையில் நிறைத்திருப்பவை பறவைகள்தான் என எண்ணிக்கொண்டான். பூமியின் எண்ணங்களில் பெரும்பகுதி பறவைகளின் மொழியில்தான் இருக்கும். மானுடனின் ஒட்டுமொத்தக்குரலும் அவற்றில் ஒரு சிறுபகுதியே. உடனே புன்னகையுடன் அச்சிந்தனைகளைக் கேட்டால் தருமன் மகிழ்ச்சி அடைவார் என எண்ணிக்கொண்டான். அதை உடனே மேலும் தத்துவார்த்தமாக அவர் விரிக்கக்கூடும். பாண்டவர்கள் அனைவருமே தருமன்கள்தான். தருமனில் இருந்து விலகி ஒவ்வொன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வில்லை, பீமன் கதையை, நகுலன் குதிரைநூலை சகதேவன் சோதிடநூலை விரும்பிக்கற்பதாக சொன்னார்கள். அவர்களுக்கும் தேவைதானே தாங்கள் தருமன் அல்ல என்று நம்புவதற்கான ஒரு வழி.

மறுகணம் தருமனைப்போலவே பீமனும் தன்னிடம் இருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அந்த இறுதி எண்ணம் பீமனுடையது. அத்தனை சுவைகளுக்கும் மேல் ஒரு கைப்பிடி எட்டிச்சாறு. அப்படியென்றால் பாண்டவர்கள் யார்? ஒரே உள்ளத்தின் ஐந்து வகை எண்ணச்சரடுகளா? ஐந்து எண்ணங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொள்ளும் ஒற்றைப்புள்ளியா? இல்லை, நினைவறிந்த நாள் முதல் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒட்டியே வளர்ந்தவர்கள் என்பதனால் ஒருவரின் அகமொழி இன்னொருவருடையதுடன் கலந்துவிட்டிருக்கிறது, அவ்வளவுதான். வண்ணாத்தியின் காரப்பானையில் சேர்த்து வைத்து அவிக்கப்பட்ட பலவண்ணத் துணிகள் போல.

அவன் சற்றே கண்ணயர்ந்தபோது.பீமனின் கனத்த குரல் கேட்டது. “பார்த்தா...” அவன் எழுந்து அமர்ந்தான். “உன்னை அங்கே தேடினேன்” என்றான் பீமன். அர்ஜுனன் எழுந்து அமர்ந்து “மூத்தவரே, நான் எதற்கு அங்கே? தூது எதுவானாலும் என் குரலுக்கு அங்கே இடமில்லை. நான் செய்யக்கூடுவதாகவும் ஏதுமில்லை” என்றான். “நீங்களே என் பொருட்டு பேசிவிடுங்கள். நீங்கள் பேசாத எதையும் நான் பேசிவிடப்போவதில்லை.” பீமன் புன்னகையுடன் “ஆம், தூதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த இளம் யாதவனைப் பார்க்கலாமே என்று எண்ணினேன்.”

“அவனைப்பற்றி சூதர்கள் கதைகளைப் புனைந்து அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்துமூன்று வயதுக்குள் அவன் ஏழுகுருகுலங்களில் மெய்ஞானங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துவிட்டானாம். வேதவேதாந்தங்களில் அவன் அளவுக்கு கல்வி வசிட்டருக்கு மட்டுமே உள்ளதாம்... நூல்களைச் சுமந்து அலையும் இன்னொரு உயிர், வேறென்ன? நூல் கற்ற ஒருவனைத்தான் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவனைப்பற்றி கேட்டபோது சலிப்பாகவே இருந்தது. ஆனால் அவன் குழலிசைப்பான் என்று சொன்னார்கள். அப்போது சற்று ஆர்வம் வந்தது. நூலை மறக்காமல் குழலிசைக்கமுடியாது அல்லவா?” என்றான் பீமன்.

“எனக்கு ஆர்வமில்லை. அவன் வந்த வேலைமுடிந்து செல்லட்டும். அவனிடம் நான் அடைவதற்கொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்றே என் அகம் சொல்கிறது. இசையை அவன் ஏன் கற்றான் என்றே என்னால் சொல்லமுடியும். இப்போது நீங்கள் சொன்னீர்களே, கல்வியில் கரைகண்டவன் ஆனால் இசையறிந்தவன் என்று. அவ்வியப்பை உருவாக்குவதற்காக. மூத்தவரே, பிறரில் வியப்பை உருவாக்குவதற்காகவே வாழும் ஒருவனைப்போல அகம் ஒழிந்தவன் எவன்?” என்றான் அர்ஜுனன்.

“அவனைப்பற்றி நான் ஏதும் சொல்லமாட்டேன். ஆயினும் நீ அவனை சந்திக்கலாமென்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவனும் உன்னைப்போலவே பெண்களால் விரும்பப்படுபவன். பெண்களை அதைவிட விரும்புபவன்” என்றான் பீமன் நகைத்தபடி. “அவனைப்பற்றிய கதைகளைச் சொல்லும்போது விறலியரின் கச்சு அவிழ்ந்து நழுவுகிறது என்றும் அவர்களில் மதம்கொண்ட யானையின் வாசனை எழுகிறது என்றும் ஒரு சூதன் சொன்னான். அப்படி என்னதான் அவன் உன்னைவிட மேலானவன் என்று பார்க்கலாமே என்று தோன்றியது.”

அர்ஜுனன் நகைத்து எழுந்து “ஆம், அது சற்று ஆர்வத்துக்குரியதே...” என்றான். “வா, மூத்தவர் நூல்நெறிப்படி முடிவெடுக்கையில் ஐயங்களை அடைவார். அவற்றை நமக்கு விளக்கி அந்த ஐயங்களைக் களைவார். நம் உதவி அதற்காகவென்றாலும் அவருக்குத் தேவை” என்றான் பீமன். நகைத்துக்கொண்டே சால்வையை சரிசெய்தபடி அர்ஜுனன் அவனுடன் சென்றான். பீமன் “இளையவனே, மூத்தவர் பெரும் பரவசத்துடனும் பதற்றத்துடனும் இருக்கிறார். அவரே கையாளக்கூடிய முதல் அரசுசூழ்தல் நிகழ்ச்சி இது...ஏ னென்றால் இது நம் அன்னைக்கு நேரடியாக வந்த தூது. இதில் விதுரர் தலையிட விரும்பமாட்டார்” என்றான்.

தருமனின் அரண்மனைக்கு வெளியே சென்றதும் பீமன் “நீ எக்கருத்தையும் சொல்லாதே. மூத்தவர் நீ நேற்று அவரை புண்படுத்திவிட்டதாக நினைக்கிறார்” என்றான். “நானா, அவரையா?” என்றான் அர்ஜுனன். “அது ஒரு பாவனை இளையவனே. அதன் வழியாக அவர் நேற்றின் குற்றவுணர்ச்சியை வெல்கிறார்” என்றான் பீமன். அர்ஜுனன் “இந்த உளநாடகங்கள் என்னை சோர்வுறச்செய்கின்றன மூத்தவரே. நான் இப்போதுகூட திரும்பிவிடவே விழைகிறேன்” என்றான். “நீ என்னுடன் வந்தால்போதும்” என்றான் பீமன்.

அறைக்குள் நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த தருமனை அவர்கள் வணங்கினர். அர்ஜுனன் கிருஷ்ணனை அங்கே எதிர்பார்த்தான். அவன் பார்வையை அறிந்த தருமன் “இளைய யாதவன்தானே? நீங்கள் வந்தபின் அவனுக்கு நான் முகமாடல் அளிக்கலாமென நினைத்தேன்... அதுவல்லவா முறை?” என்றான். “அவன் அன்னையை சந்தித்துவிட்டானா?” என்றான் பீமன். “இன்னும் இல்லை. அவன் நேற்றுமாலையே வந்துவிட்டான். சொல்லப்போனால் துரியோதனன் கிளம்பியதுமே அவனும் கிளம்பிவிட்டான். துரியோதனன் அஸ்தினபுரியின் குரல் அல்ல என்று அறிந்திருக்கிறான்” என்றான் தருமன்.

சேவகனிடம் “யாதவனை வரச்சொல்” என்று ஆணையிட்டுவிட்டு “அன்னை இன்னும் அவனை சந்திக்கவில்லை. அவனை அந்தப்புரத்தில் சந்திக்க அவர் மறுத்துவிட்டார். இன்று முன்மதியம் மன்றுசூழ் அறையில் முறைமைப்படி சந்திப்பதாக சொன்னார். அவர் இப்போது சூரசேனரின் மகளோ மதுவனத்தின் சிறுமியோ மார்த்திகாவதியின் இளவரசியோ அல்ல, அஸ்தினபுரியின் அரசி என்று அவனுக்குச் சொல்ல விழைகிறார். எந்த உரையாடலும் அரசமுறைமைப்படியே நிகழமுடியும் என்றும் அதற்கப்பால் எதையும் எதிர்பார்க்கவேண்டாம் என்றும் சொல்ல நினைக்கிறார்” என்றபின் தருமன் புன்னகை செய்தான். “அதுவே முறை. ஆகவே அந்த முறைமையையே நானும் கடைபிடிக்க முடிவுசெய்தேன்.”

சிறிய குருவி ஒன்று சாளரம் வழியாக அறைக்குள் புகுந்து கொடி பறப்பதுபோல சிறகடித்து சுற்றிவந்தது. “இந்தக்குருவி பலநாட்களாக என்னை வதைக்கிறது... யாரங்கே?” என்றான் தருமன். சேவகன் வந்து பணிய “இந்தக் குருவியை துரத்துங்கள் என்று சொன்னேன் அல்லவா?” என்றான். “பலமுறை துரத்திவிட்டோம் இளவரசே... அது இங்குதான்...” என்றான் சேவகன். “மூடர்கள்” என்று தருமன் தலையை அசைத்தான். சேவகன் ஒரு நீண்ட கழியால் குருவியை துரத்தினான். அது சுழன்று சுழன்று பலமுறை பறந்து சாளரம் வழியாக வெளியே சென்றது. அவன் சாளரத்தை மூடினான். “மூடா, சாளரத்தை மூடினால் இங்கே மூச்சுத்திணற அமர்ந்திருக்க முடியுமா?” என்றான் தருமன். சேவகன் திகைக்க “வெளியே சென்று அது உள்ளே வரும் வழியிலேயே துரத்துங்கள்... மூடர்கள் மாமூடர்கள்!”

அவன் பதற்றமும் எரிச்சலும் கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். “மிகச்சிறிய பறவை” என்று சொல்லி பீமன் கால்களை நீட்டிக்கொண்டான். அவன் எந்தப் பொருளில் அதைச் சொன்னான் என்பதுபோல தருமன் சிலகணங்கள் பார்த்துவிட்டு “பார்த்தா... நான் சொல்வதை எவருமே புரிந்துகொள்ளவில்லை” என்றான். “நான் என் நியாயங்களுடன் தனித்துவிடப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் அவரவர் உலகியல் தேவைகளை நியாயங்களாக சொல்கிறார்கள். நான் என்றும் மாறாத நெறியை சொல்கிறேன்” என்றான்.

குருவி மீண்டும் வந்தது. அறைக்குள் சுவர்களில் சிறகு உரசி சுழன்று பறந்தது. தீப்பந்தத்தை சுழற்றுவதுபோல அது ஒலிப்பதாக அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். “யாரங்கே?” என்று தருமன் கூச்சலிட்டான். வந்து பணிந்த முதுசேவகனிடம் “என்ன செய்கிறீர்கள்? அத்தனைபேரையும் குதிரைக்கொட்டிலுக்கு அனுப்பிவிடுவேன்... அதை விரட்டுங்கள்” என்றான். சேவகர்கள் உள்ளே வந்து துணியைச் சுழற்றி வீசி அதை விரட்டினார்கள். “அது வரும் வழிகளில் நில்லுங்கள். மறுமுறை வந்தால் அனைவரும் தண்டிக்கப்படுவீர்கள்” என்றான் தருமன். “மூத்தவரே. அதைவிட அக்குருவியை தண்டிப்பதல்லவா எளிது” என்றான் பீமன். அவன் தன்னை நோக்கி நகைக்கிறான் என்று தருமனுக்கு புரிந்தது. “மந்தா இது விளையாடும் நேரமல்ல” என்றான்.

சேவகன் வந்து இளைய யாதவனின் வருகையை அறிவித்தான். வாயில் வழியாக உள்ளே வந்த உயரமான கரிய இளைஞனை அர்ஜுனன் மெல்லிய ஆர்வத்துடன் நோக்கினான். அந்த ஆர்வம் அவனுக்கும் பெண்களுக்குமான உறவைப்பற்றி பீமன் சொன்னதனால் உருவானது என்பதை எண்ணி அகத்தே புன்னகை செய்துகொண்டான். முதல் எண்ணமே அழகன் என்பதாகவே இருந்தது. உடனே கர்ணனுடன் ஒப்பிடத் தோன்றியது. கர்ணனைவிட சிறிய உடல். கர்ணனைவிட அழகானவனாக அவனை ஆக்கியது எது என்று அர்ஜுனன் சிந்தித்தான். அவன் உள்ளே வந்து வணங்கி முகமன் சொல்லி அமர்ந்தபோதெல்லாம் அதையே எண்ணிக்கொண்டிருந்தான்.

கிருஷ்ணன் வெண்பட்டாடை அணிந்து மஞ்சள்பட்டால் கச்சை கட்டியிருந்தான். பொன்னூல் வேலைகள் ஏதுமில்லாத எளிய செம்மஞ்சள் பட்டுமேலாடை. கைகளிலும் தோள்களிலும் கழுத்திலும் அணிகளேதுமில்லை. காதுகளில் மட்டும் எளிய கற்கள் ஒளிவிட்ட சிறிய குண்டலங்கள். குழலை தலையில் யாதவர்களுக்குரிய முறையில் சுருட்டிக் கட்டி அதில் ஒரு மயிற்பீலியை சூடியிருந்தான். சிறிய உதடுகள் அவனை குழந்தையெனக் காட்டின. அவை எப்போதும் சற்றுத் திறந்து தூய வெண்ணிறம் கொண்ட சிறிய பற்களைக் காட்டின. அவன் முகத்தில் ஓர் உறுப்பாகவே புன்னகை இருந்தது.

அவன் விழிகள் பெண்களுக்குரியவை என்ற எண்ணத்தை அர்ஜுனன் அடைந்தான். அல்லது மழலைமாறாத குழந்தைகளுக்குரியவை. அகன்று நீண்டு நீலம் கலந்து ஒளிவிடும் மான்விழிகள் அவை. அவன் தருமனிடம் முறைமைச்சொற்களை பேசிக்கொண்டிருக்கையில் அவ்விழிகளையே அர்ஜுனன் நோக்கிக்கொண்டிருந்தான். அவை சிறுகுழந்தைகளின் விழிகளைப்போல அனைத்து உரையாடல்களிலும் முழுமையாகவே பங்குகொண்டன. அனைத்து உணர்ச்சிகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தின. அதேசமயம் காதலில் விழுந்த கன்னியின் விழிகள் போல ஏதோ கனவில் நெடுந்தொலைவுக்கு அப்பாலும் இருந்தன.

கரிய விழிகள் அவை என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் ஒளிபட்டால் பசுமை மின்னும் மரகதக்கல்லின் கருமை அது என்று அசைந்தபோது தோன்றியது. சிலதருணங்களில் நீலநிறமாக அவை தெரிந்தன. பேசிக்கொண்டிருப்பதன் ஒவ்வொரு சொல்லும் அவனுக்கு பெருவியப்பையும் களிப்பையும் அளிப்பதுபோல. கூடவே அவையனைத்தையும் அவன் முன்னரே அறிந்திருப்பது போல. உடன்பிறந்த மூத்தவனின் பேச்சை பெருமிதத்துடன் கேட்கும் சிறிய தங்கையைப்போல. மைந்தனின் மழலையில் மகிழும் அன்னையையும் போல. அங்கிருப்பவன் ஒருவனல்ல, ஒவ்வொரு கணமும் உருமாறிக்கொண்டே செல்லும் நீலப்பெருநதி என்று அர்ஜுனன் எண்ணினான்.

மீண்டும் அந்தச் சிட்டுக்குருவி உள்ளே வந்தது. சிறகடித்து கிச் கிச் என்று ஒலியெழுப்பி சுற்றிவந்தது. தருமன் பற்களைக் கடித்தபடி “சித்ரகா...” என்றான். சித்ரகன் வந்து நின்றபோது அவன் உடல் குளிர்வந்தது போல நடுங்குவதை அர்ஜுனன் கண்டான். “இந்தச் சிட்டுக்குருவி இங்கே வரலாகாது என்று சொன்னேன்” என்றான் தருமன் மெல்லிய புன்னகையுடன். கண்களில் கத்திமுனையின் ஒளி தெரிந்தது. “அனைத்துச் சாளரங்களிலும் காவலுக்கு வீரர்கள் நின்றிருக்கிறார்கள் அரசே. இது பின்பக்கம் வழியாக நுழைந்து அறைகள் வழியாக வந்துவிட்டது” என்றான் சித்ரகன்.

“சிட்டுக்குருவிதானே? அது உள்ளே பறந்தால் என்ன?” என்றான் கிருஷ்ணன். “அதன் ஒலி என்னை கலைக்கிறது...” என்றான் தருமன். “நான் ஒவ்வொன்றும் அதன் இடத்தில் இருக்கவேண்டுமென விழைபவன்.” கிருஷ்ணன் புன்னகையுடன் எழுந்து “கேட்டுப்பார்க்கிறேன்” என்று கைநீட்டினான். பிச் பிச் பிச் என்று உதடுகளால் ஒலியெழுப்பினான். சிட்டு சுழன்றபடி கிச் கிச் கிச் என்றது. “இளவரசே, சிட்டுக்களில் உலகின் மாபெரும் சக்ரவர்த்தினியாகிய இவள் பெயர் வஜ்ரமுகி. இவளது அரசையும் அரண்மனையையும் இவளே வகுக்கிறாள். இவ்விடம் அவரது ஆட்சிக்குட்பட்டது என்கிறாள்” என்றான்.

அர்ஜுனன் புன்னகையை அடக்கி வேறுபக்கம் நோக்கினான். தருமன் எரிச்சல் கலந்த புன்னகையுடன் “ஓகோ” என்றான். அவனுக்கு அந்த யாதவ இளைஞன் சற்று அறிவுக்குறைவான துடுக்கன் என்ற எண்ணம் எழுந்திருப்பதை அவனால் உணரமுடிந்தது. சித்ரகன் சிட்டுக்குருவியை விரட்ட முயல அது சாளரம் வழியாக வெளியேற மறுத்தது. “மூடா, சாளரத்துக்கு அப்பால் வீரர்கள் நிற்கையில் அது எப்படி வெளியேறும்?” என்றான் தருமன். “வெளியேறினாலும் அது மீண்டும் வரும்” என்றான் கிருஷ்ணன் அறையை நோக்கியபடி. “இவ்வறைக்குள் அது எங்கோ கூடுகட்டி முட்டையிட்டிருக்கிறது.”

சித்ரகனிடம் “அப்படியே விட்டுவிடுங்கள்... அது எங்கு அமர்கிறது என்று பார்ப்போம்” என்றான். சித்ரகன் கழியை தாழ்த்தினான். சிட்டு ஒரு திரைச்சீலையில் சென்று அமர்ந்தது. “சித்ரகரே, இந்தத் திரைச்சீலையை புதிதாக அமைத்தீர்களா?” என்றான் கிருஷ்ணன். “ஆம்” என்றான் சித்ரகன். அதற்கு அப்பால் குருவியின் கூடு இருக்கக் கூடும்... பாருங்கள்!” சித்ரகன் உடனே தூணில் தொற்றி ஏறி “ஆம்... கூடு இருக்கிறது” என்றபின் “மூன்று முட்டைகள்... இல்லை நான்கு” என்றான்.

“அதை எடுத்து வெளியே கொண்டு ஏதாவது மரக்கிளையில் வை... அங்கே அது குஞ்சுபொரிக்கட்டும்” என்றான் தருமன். “அப்படி வைத்தால் அது சென்றுவிடாது... கூட்டை எடுத்து சற்று வெளியே வையுங்கள். அது கூட்டில் வந்து அமரும். உடனே மேலும் சற்று தள்ளிவையுங்கள். ஒவ்வொரு முறை அது அமர்ந்தபின்னரும் அதை தள்ளிவையுங்கள்... மெல்லமெல்ல வெளியே கூரையின் அடியில் கூட்டைப் பொருத்துங்கள்... இது மரங்களில் கூடுகட்டும் குருவி அல்ல. வீட்டுக்குருவி” என்றான். சித்ரகன் “ஆணை” என்றான்.

“நாம் வேறு அறையில் சென்று பேசலாமே” என்றான் கிருஷ்ணன். “வஜ்ரமுகியின் அரசில் நம் அரசியல் பேச்சுக்களை அவர்கள் விரும்பவில்லை.” அர்ஜுனன் புன்னகைசெய்தான். தருமன் “ஆம்...” என்றபின் எழுந்து நடந்தான். அர்ஜுனன் கிருஷ்ணன் அருகே சென்று “என் பெயர் பார்த்தன். இளையபாண்டவன்... உங்களைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன்” என்றான். கிருஷ்ணன் “உங்களைப் பற்றியும் பெண்கள் சொல்லி அறிந்திருக்கிறேன்” என்றான். அர்ஜுனன் உரக்க நகைத்து “உங்களைப்பற்றி பிறர் சொல்லமாட்டார்கள் என்று தெளிந்திருக்கிறீர்கள்” என்றான்.

“முனிவர்கள் சொல்வார்கள்” என்றான் கிருஷ்ணன். “அவர்களின் உள்ளம் மிகப்பெரியது. இளையோரை அவர்கள் முடிவில்லாமல் மன்னிக்கிறார்கள்.” அர்ஜுனன் “நீர் பதினெட்டு குருகுலங்களில் கல்விகற்றதாக சொல்லப்படுகிறதே” என்றான். “குறைத்துவிட்டீர். மொத்தம் முப்பத்திநான்கு.” அர்ஜுனன் “அத்தனை குருகுலங்களா?” என்றான். “ஆம், ஒன்றில் நான் நுழைந்ததுமே என்னை வெளியேற்றிவிடுவார்கள். அடுத்த குருகுலத்திற்கான தொலைவை முன்னதாகவே கணக்கிட்டுத்தான் நான் ஒரு குருகுலத்தையே தேர்வு செய்வேன்.” அர்ஜுனன் சிரிப்பை அடக்கி “அடடா ஏன்?” என்றான். “நான் ஒரு குருகுலத்தில் சேர்வது குரங்கை படகில் ஏற்றுவது போல என்று கார்க்கியாயனர் சொன்னார்” என்றான். அவன் முகம் மழலைக்குழந்தை போலிருந்தது.

“அப்படி என்னதான் செய்வீர்?” என்றான் அர்ஜுனன். “கேள்விகள் கேட்பேன்” என்றான் கிருஷ்ணன். “கேள்விகள் கேட்டால் என்ன?” என்று அர்ஜுனன் வியக்க “அதையே நானும் கேட்கிறேன்... கேள்விகள் கேட்டால்தான் என்ன?” பீமன் “யாதவரே, நீர் கேட்ட ஒரு கேள்வியைச் சொல்லும்” என்றான். “பலகேள்விகள்... எல்லாமே ஆதரமானவை. உதாரணமாக கார்க்கியாயனர் ஆத்மாவுக்கும் பிரம்மத்துக்குமான உறவை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார். மூடப்பட்ட குடத்திற்குள்ளும் வானமே இருக்கிறது. வெளியே எல்லையற்ற வானம் விரிந்துகிடக்கிறது. குடத்திற்குள் இருப்பதும் எல்லையற்ற வானமே. குடத்தை உடைத்துவீசிவிட்டால் அந்த குடவானம் வெளிவானமாக ஆகிவிடுகிறது என்றார்.”

“ஆம் குடாகாசம் மடாகாசம் என்னும் உவமை. அறிந்திருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “வில்வீரர்கள் வேதாந்தம் கற்பது நல்லது. பிரம்மத்தை எடுத்து பிரம்மத்தில் வைத்து பிரம்மத்தின் மேல் தொடுக்கும் பிரம்மமாக ஆகும்போது குறிதவறினாலும் அதுவும் பிரம்மமே என்ற நிறைவை அடையமுடியும்” என்று சிந்தனை கனத்த முகத்துடன் சொன்னான். அர்ஜுனன் சிரித்து “சொல்லும்...குடாகாசத்தில் உம் ஐயம் என்ன?” என்றான். “கார்க்கியாயனர் சொன்னார் குடத்துக்குள் உள்ள வானம் உருளை வடிவில் உள்ளது. கொப்பரைக்குள் உள்ள வானம் நீளுருளையாக உள்ளது. பெட்டிக்குள் சதுரமாக உள்ளது. அவ்வடிவங்கள் அழிந்தால் அந்த வானங்கள் அழிவதில்லை. அவை எங்கும் செல்வதும் இல்லை. அவை முன்புபோலவே அங்கே அப்படியேதான் இருக்கின்றன. ஏனென்றால் அவை முடிவிலாவானம் அளிக்கும் தோற்றங்களே.”

“ஆம், அதுவே வேதாந்த மெய்ஞானம்” என்றான் அர்ஜுனன். “நான் கேட்டேன், மிக எளிய ஐயம்தான், அதைக்கேட்டேன்” என்றான் கிருஷ்ணன். “வலைக்கூடைக்குள் இருக்கும் வானம் எப்படிப்பட்டது என்று. அது வலைக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் வலைக்கு வெளியேயும் பரவியிருக்கிறதே என்றேன். குருநாதர் அந்த வினாவுக்கு முன் சினந்து தன் தாடியை தானே பிடித்து இழுத்தபடி கைதூக்கி கூச்சலிட்டு என்னை வெளியே செல்லும்படி சொல்லிவிட்டார்.” அர்ஜுனன் சிரித்துவிட்டான். ஆனால் பீமன் “யாதவரே அது முதன்மையான வினா. வலைக்குள் உள்ள வானம் பல்லாயிரம் வாசல்கள் கொண்ட முடிவிலி அல்லவா?” என்றான். கிருஷ்ணன் “இந்தமெய்ஞானத்தைக் கற்பிக்க நான் ஒரு குருகுலம் தொடங்கலாமென்றிருக்கிறேன்” என்றான்.

துணைமன்றறைக்குள் நுழையும்போது யாதவனின் தோளுடன் அர்ஜுனனின் தோள் உரசிக்கொண்டது. அவன் நின்று யாதவனை உள்ளே செல்லும்படி சொன்னான். யாதவன் “இல்லை..” என்று சொல்லி அர்ஜுனனை உள்ளே செல்லும்படி கைகாட்டினான். அர்ஜுனன் உள்ளே சென்றபின் “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றான். “தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலத்தில் என் குடிகள் இருக்கின்றன” என்றான் கிருஷ்ணன். “உன் தமையன் உடனிருக்கிறாரோ?” என்றான் அர்ஜுனன். “ஆம்...” என்று சொன்ன கிருஷ்ணன் “உன் வில்திறத்தை அறிந்திருக்கிறேன். அதை நம்பி வந்தேன்” என்றான். “அது இனி உன் வில்”என்றான் அர்ஜுனன்.

அறைக்குள் தருமன் அமர்ந்திருந்தான். அவர்கள் அமர்ந்துகொண்டதும் “யாதவரே, அன்னையிடம் பேசுவதற்கு முன் உமது தூதை என்னிடம் நீர் சொல்லலாம்” என்றான். “இளவரசே, செய்திகள் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்” என்றான் கிருஷ்ணன். “நாங்கள் மதுராவை கைவிட்டுவிட்டோம். எங்கள் தோள்களில் ஆற்றல் நிறையும்போது வந்து மீண்டும் அதை வெல்வோம். ஆனால் இப்போது சென்றுகொண்டிருக்கும் இடம் தட்சிண கூர்ஜரம். அந்நிலத்தை நாங்கள் அடையும்போது கூர்ஜரத்தின் படைகள் எங்களை தடுக்கலாம்...”

“ஏன்?” என்றான் தருமன். “அது வீண் நிலம் அல்லவா? அது மானுடக்குடியிருப்பாவது அவர்களுக்கு நல்லது அல்லவா?” கிருஷ்ணன் “நேரடி நோக்கில் அது உண்மை. ஆனால் நாங்கள் வெறும் யாதவர்களாக செல்லவில்லை. மதுராவில் மணிமுடிசூடிய மன்னரான என் தந்தை வசுதேவர் எங்களுடன் வருகிறார். நானும் என் தமையனும் புகழ்பெற்ற போர்வீரர்கள். கம்சரை நாங்கள் கொன்றதை கூர்ஜரம் அறியும்” என்றான். “மூத்த பாண்டவரே, மணிமுடி உயிர்வல்லமை கொண்ட விதை. அதன் துகள் எங்கு சென்றுவிழுந்தாலும் முளைக்கும். தன் நாட்டுக்குள் ஒரு நாடு முளைக்க கூர்ஜரன் விரும்பமாட்டான்.”

சிலகணங்கள் சிந்தனைசெய்த பின் “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றான் தருமன். “எங்களுக்குத் தேவை ஒரு படை. கூர்ஜரத்தை வெல்ல அல்ல. எங்கள் எல்லைகளைக் காத்துக்கொள்ள. அந்தப்படை அஸ்தினபுரியின் படையாக இருக்கவேண்டும். அதை கூர்ஜரம் அஞ்சும்... சில வருடங்கள் அப்படை அங்கிருந்தாலே போதும். நாங்கள் வேரூன்றிவிடுவோம்” என்றான் கிருஷ்ணன். “சிறிய படை போதும். அப்படைக்குரிய செலவை கடனாகவே அஸ்தினபுரி அளிக்கட்டும். கப்பத்துடன் சேர்த்து அதை திருப்பி அளிப்பார்கள் யாதவர்கள்.”

தருமன் “நேற்று அரசர் தன் அவையில் அறிவித்த முடிவு என்னைக் கட்டுப்படுத்தும் யாதவரே” என்றான். “அஸ்தினபுரி இன்று எந்தப் போரிலும் ஈடுபட முடியாது. யாதவர்களுக்குத் தேவையான நிதியை அளிக்கமுடியும். அவ்வளவுதான்.” கிருஷ்ணன் “தங்கள் கருணையை நாடி வந்துள்ளோம் மூத்தவரே. எங்களுக்கு இன்று தேவை நிதி அல்ல ஒரு கொடி... அமுதகலசம் பொறித்த ஒரு கொடி மட்டும் எங்களுடன் இருந்தால் போதும்... ஒரு சிறிய படைப்பிரிவை அனுப்பினாலே போதும்... அதை எவரும் அறியப்போவதில்லை.”

“நானும் உடன் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி விழிகளில் சினத்துடன் நோக்கிவிட்டு “உங்கள் இக்கட்டை நாங்கள் நன்கறிந்துள்ளோம் யாதவரே. எங்கள் இக்கட்டை புரிந்துகொள்ளுங்கள். சிட்டுக்குருவியின் விரைவை யானையிடம் எதிர்பார்க்க இயலாது. எங்களுக்கு பல இடர்கள் உள்ளன. கூர்ஜரம் நடுநிலை நாடு. கூர்ஜரத்தின் நட்பு இல்லையேல் நாம் காந்தாரத்துடன் தொடர்புகொள்ளவே முடியாது. இந்தச் சிறிய சீண்டல் வழியாக கூர்ஜரம் நம்மிடமிருந்து விலகினால் மகதத்தின் கையில் சென்றுவிழும். இப்போதே நாம் சௌவீரர்களை வென்றதை அவர்கள் கசப்புடனும் ஐயத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்."

“நேர்மாறாகவும் நிகழலாம்... ஒரு சிறியபடையே அவர்களை வெல்லமுடியுமென்றால் கூர்ஜரம் மட்டுமல்ல, அத்திசையில் உள்ள அத்தனை நாடுகளும் அஸ்தினபுரியை அஞ்சும். அவை அனைத்தும் அஸ்தினபுரியின் நட்புநாடுகளாகும்...” என்றான் கிருஷ்ணன். “அது வெற்றிக்குப்பின் சிந்திக்கவேண்டியது. தோல்வியடைந்தால் என்னசெய்வது என்றுதான் அரசு சூழ்பவர் எண்ணவேண்டும்” என்றான் தருமன். “மூத்தவரே, அப்பால் மாபெரும் காந்தாரம் இருப்பது வரை கூர்ஜரன் அஸ்தினபுரியை அஞ்சுவான்... ஐயமே வேண்டாம்” என்றான் கிருஷ்ணன். “அந்த அச்சத்தாலேயே அவன் மகதத்தை நாடலாமே?” என்றான் தருமன்.

கிருஷ்ணன் அதே புன்னகையுடன் தலையை அசைத்து பெருமூச்சுவிட்டான். வாதத்தில் வென்றுவிட்டதை உணர்ந்த தருமன் மெல்லிய புன்னகையுடன் “அன்னை வரும்போது நீர் உமது தூதைச் சொல்லலாம். அவர்களும் இதையே சொல்வார்கள். அவர்கள் அரசரின் ஆணையை மீறிச் செல்லமுடியாது” என்றான். கிருஷ்ணன் புன்னகை மாறாமல் “என் கடமையைச் செய்கிறேன்” என்றான். “நான் உம் மீது பரிவுடன் இருக்கிறேன் யாதவரே, ஆனால் என்னால் இதையன்றி எதையும் செய்யமுடியாது” என்றபின் தருமன் மீண்டும் புன்னகை செய்தான்.

பகுதி எட்டு : மழைப்பறவை - 3

அந்தப்புரத்துக்கு வெளியே இருந்த குந்தியின் அரசவைக்கூடத்தில் அணுக்கச்சேடி பத்மை வந்து வணங்கி “அரசி எழுந்தருள்கிறார்கள்” என்று அறிவித்தாள். தருமன் எழுந்து பணிவாக நின்றான். கிருஷ்ணனின் முகத்தில் கேலி தெரிகிறதா என்று அர்ஜுனன் ஓரக்கண்ணால் பார்த்தான். புதிய இடத்துக்கு வந்த குழந்தையின் பணிவும் பதற்றமும்தான் அவன் முகத்தில் தெரிந்தன. முகப்புச்சேடி மார்த்திகாவதியின் சிம்ம இலச்சினை பொறித்த பொன்னாலான கொடிக்கோலுடன் வர அவளுக்குப்பின்னால் மங்கல இசை எழுப்பும் சேடியர் வந்தனர். நிமித்தச்சேடி வலம்புரிச்சங்கு ஊதி அரசி எழுந்தருள்வதை முறைப்படி அறிவித்தாள்.

மங்கலத்தாலம் ஏந்திய சேடியர் இடப்பக்கமும் தாம்பூலமேந்திய அடைப்பக்காரி வலப்பக்கமும் பின்னால் வர குந்தி மெல்ல நடந்து வந்தாள். அவளுக்குப் பின்னால் சாமரமும் சத்ரமும் ஏந்திய சேடியர் வந்தனர். குந்தி வெண்பட்டாடையால் கூந்தல் மறைத்து நடந்து வந்தாள். அவள் அமர்வதற்காக வெண்பட்டு விரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த பீடத்தை பத்மை இன்னொரு முறை சரிசெய்தாள். குந்தி அமர்ந்துகொண்டதும் தருமனும் பீமனும் வணங்கினர். கிருஷ்ணன் அதன் பின் வணங்க அர்ஜுனன் மெலிதாகத் தலைவணங்கியபின் அனைவருக்கும் பின்னால் சென்று நின்றுகொண்டான்.

“அஸ்தினபுரியின் சக்ரவர்த்தினிக்கு யாதவர்குலத்தின் வணக்கம். நெடுநாட்களுக்கு முன் நிமித்திகர் ஒருவர் தங்கள் பிறவிநூலை கணித்து தேவயானியின் அரியணையில் தாங்கள் அமர்வீர்கள் என்றார் என்று எங்கள் கதைகள் சொல்லுகின்றன. தேவயானியின் மணிமுடி என்ற பெயர் இப்போது மறைந்து அது குந்திதேவியின் மணிமுடி என்றே அறியப்படுகிறது என்ற செய்தியை இப்போது நகருக்குள் நுழைவதற்குள் அறிந்தேன்” என்றான் கிருஷ்ணன். “பாரதவர்ஷத்தின் பதாகை அஸ்தினபுரி. அதன் இலச்சினையாக மார்த்திகாவதியின் இளவரசி அமர்ந்திருப்பதை யாதவர்களின் நல்லூழ் என்றே சொல்லவேண்டும்.”

குந்தி கண்களில் சிறிய தத்தளிப்புடன் உதடுகளை அசைத்தாள். ஆனால் அவன் சொல்லிக்கொண்டே சென்றான். முகத்தில் பெரும்பரவசமும் சிறுகுழந்தைகளுக்குரிய உத்வேகமும் இருந்தன. “நான் இங்கு வரும்வரைக்கும் கூட அதன் சிறப்பென்ன என்று அறிந்து கொள்ளவில்லை. இந்நகரமே தங்கள் கொடிக்கீழ் தங்கள் கோலை நம்பி இருக்கிறதென்று அறிந்தபோது கிழக்குக்கோட்டை வாயிலில் நின்று அழுதேன்” என்றான். “நெடுங்காலமாக யாதவகுலம் அரசுக்கும் ஆட்சிக்குமாக போராடிவருகிறது. சென்ற யுகத்தில் ஹேகய குலத்து கார்த்தவீரியனின் கோல் இமயம் முதல் விந்தியம் வரை நிழல் வீழ்த்தியது என்ற கதைகளை கேட்டிருக்கிறேன். இந்த யுகத்தில் அப்படி ஒரு வெற்றி தங்கள் வழியாக நிகழவேண்டுமென நூல்கள் சொன்னது நிகழ்ந்திருக்கிறது.

குந்தியின் விழிகள் அரைக்கணம் அர்ஜுனனை வந்து தொட்டுச் சென்றன. அவள் கிருஷ்ணனின் பேச்சை நிறுத்த விரும்புகிறாள் என்பது அவள் உடலில் இருந்த மெல்லிய அசைவால் தெரிந்தது. ஆனால் ஒருவன் ஓவ்வொரு கருத்துக்கும் பேச்சின் ஒலியையும் விரைவையும் இடைவெளியே விடாமல் கூட்டிச்சென்றான் என்றால் அவனை நிறுத்த முடியாது என்று அர்ஜுனன் உணர்ந்தான். “யாதவர்கள் இன்று சிதறிப்பரந்திருக்கிறார்கள். ஆனால் அத்தனைபேரும் ஒரு பெயரால் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அஸ்தினபுரி எங்கள் அரசு என்று அவர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். சந்தையிலோ மன்றிலோ யாதவனுக்கு இன்று இருக்கும் மதிப்பு என்பது தாங்களே. யாதவர் என்பது ஒரு உலோகத்துண்டு, அதை நாணயமாக ஆக்குவது அதிலிருக்கும் குந்திதேவி என்னும் இலச்சினை.”

அவன் சொற்கள் அவளைச் சூழ்ந்துகொண்டே சென்றன. "பேரரசியே, இன்று அத்தனை துயரங்களில் இருந்தும் யாதவர்கள் விடுதலை ஆகிவிட்டனர். சில இடங்களில் கொற்றவைக்கு அருகே குந்திதேவியின் சிலையை வைத்து அவர்கள் நித்தம் மலர்வழிபாடு செய்கிறார்கள். ஆம், நான் அது சற்று முறைமீறியதென்று அறிவேன். ஆனால் யாதவர்களின் உள்ளத்தின் ஏக்கத்தைப்புரிந்துகொண்டால் அதை நாம் பொறுத்துக்கொள்ள முடியும். நூற்றாண்டுகளுக்குப்பின் இன்றுதான் அவர்கள் பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு கிடைத்திருக்கிறது. இன்றுதான் அவர்களுக்கு மண்ணில் ஒரு மானுடதெய்வம் அமைந்திருக்கிறது. இன்றுதான் இறையாற்றல்களின் வாளாக மண்ணில் திகழும் ஓர் அரசி அவர்களுக்கென அமைந்திருக்கிறார்கள்..."

கிருஷ்ணன் நகைத்தான். “அதிலுள்ள மெல்லிய வேடிக்கையையும் காண்கிறேன். பேரரசி என்ற சொல் இன்று ஒருவரையே குறிக்கிறது. பலராமரும் நானும் மட்டும் அல்ல வசுதேவரும் தேவகியும் கூட அச்சொல்லைத்தான் பயன்படுத்துகின்றனர். ஏன் முதியவரான சூரசேனர் கூட என்னிடம் பேரரசியை நான் வணங்கியதாகச் சொல் என்றுதான் சொன்னார். அவரது அனைத்து மைந்தர்களும் அச்சொல்லை அவர் சொல்லும்போது உடனிருந்தனர். அவர்களுடன் அவர்களின் மைந்தர்களும் இருந்தனர். அவர்கள் பேரரசி என்ற பெயரைத்தான் அறிகிறார்கள். அதனுடன் இணைந்துள்ள பெரும் புராணக்கதைகளை அறிகிறார்கள். அந்த அரசி ஒரு யாதவப்பெண் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடிவதில்லை. அதில் வியப்பதற்கென்ன உள்ளது என்று குலப்பாடகர் களமர் சொன்னார். மண்ணில் பிறந்த துருவன் விண்ணுக்கு மையமாக அமைந்திருப்பதையும்தான் காண்கிறோமே என்றார்.”

ஆம், அனைவருமில்லை. ஏனென்றால் மானுட உள்ளம் அத்தனை கீழ்மை கொண்டது. ஒளியூற்றான சூரியனிலேயே கரும்புள்ளிகள் உண்டு என்று வாதிடுபவர்கள் அவர்கள். மார்த்திகாவதியின் அரசி தேவவதியைப் போன்றவர்கள். ஆம், அவர்கள் தங்களைப்போன்ற ஒருவரால் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. பேரரசியின் உள்ளத்தில் அவரது முகமோ பெயரோ இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் ஒரு நாட்டுக்கு அரசி. யாதவர் குலச்சபைகளில் அவர் எழுந்து பேசமுடியும். பேரரசியான தாங்கள் இங்கே உண்மையில் ஒரு பாவையே என்றும் உண்மையான அதிகாரமேதும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் சொல்லும் கீழ்மையும் துணிவும் அவருக்கு இருந்தது.

ஆம், அதைக்கேட்டு யாதவர் சபைகளில் மூத்தோர் சினந்து எழுந்துவிட்டனர். கைகளை நீட்டிக்கொண்டு கூச்சலிட்டனர். ஆனால் தேவவதியைப் போன்றவர்களுக்கு அவர்களின் சிறுமையே ஒரு ஆற்றலை அளிக்கிறது. பேரரசியாகிய தாங்கள் உண்மையில் அஸ்தினபுரியில் ஒரு பொன்முடியும் பொற்கோலும் அளிக்கப்பட்டு அந்தப்புரப் பாவையாக அமரச்செய்யப்பட்டிருக்கின்றீர்கள் என்றார். “ஷத்ரியர்கள் நூறுதலைமுறைகளாக நாடாண்டவர்கள். அவர்கள் நடுவே இவள் என்ன செய்ய முடியும்? எளிய யாதவர்களிடம் இவளுடைய அரசுசூழ்தல் வியப்பேற்படுத்தலாம். அவர்கள் அதை சிறுமியின் விளையாட்டாகவே எண்ணி நகைப்பார்கள்” என்றார்.

நான் எழுந்து அந்தப்பேச்சு எத்தனை கீழ்மைகொண்டது என்று சொன்னேன். யாதவர்களின் காவல்தெய்வத்தைப்பற்றி அச்சொற்களை சொன்னமைக்காக அந்நாக்கை இழுத்து அறுத்தாகவேண்டும் என்றேன். ஆனால் யாதவச்சபையில் அச்சொற்களுக்கு ஒரு மெல்லிய செல்வாக்கு உருவாவதை சற்று கழித்தே கண்டேன். தேவவதி உரக்க கைநீட்டி 'நான் கேட்கிறேன், யாதவர்களின் மதுராவை கீழ்மகனாகிய மலைக்குறவன் வென்று எரியூட்டியபோது எங்கே போனாள் உங்கள் பேரரசி?' என்றார். “ஹேகயகுலத்து கார்த்தவீரியன் இருந்த அரண்மனையும் கட்டிய கோட்டையும் இடிக்கப்பட்டபோது நகரம் பன்னிருநாட்கள் நெய்யில் நின்றெரிந்தபோது உங்கள் அரசி என்ன செய்தாள்? அரண்மனையில் இருந்து அன்னம் உண்டு மகிழ்ந்திருந்தாளா? ஏன் இன்றுகூட மதுரா காட்டுவாசிகளால் ஆளப்படுகிறது. அவள் என்ன செய்யப்போகிறாள்?” என்றார்.

அச்சொற்களைக்கேட்டு யாதவசபை அமைதிகொண்டதைக் கண்டேன். என்னால் தாளமுடியவில்லை. அந்த அமைதியே ஓர் அவமதிப்பல்லவா? நான் பேரரசியர் பாரதவர்ஷம் முழுவதையும் கருத்தில்கொண்டே முடிவுகள் எடுக்கமுடியும் என்றேன். ஆனால் தேவவதி அரசி என்பதையே மறந்து எளிய யாதவப்பெண்போல வெறிகொண்டு கூந்தலைச்சுழற்றிக்கட்டியபடி சபை நடுவே வந்து உரக்கக் கூவினார் 'ஆம் அதை நம்புகிறேன். அப்படித்தான் இருக்கும். ஆனால் அது அவள் முடிவல்ல. அவள் சிறுமியாக கன்றுமேய்த்து வாழ்ந்த மதுவனத்தில் அவள் விளையாடிய மரப்பாவைகளைக்கூட தெய்வங்களாக வைத்து ஆலயங்கள் அமைத்திருக்கிறீர்கள். அவள் நடந்த மண் அமர்ந்த பாறை என்று நினைவுகூர்கிறீர்கள். அனைத்தையும் மிலேச்சன் எரித்து அழித்தானே. அவனுடைய வெறிநடம் அங்கு நடந்ததே. அது எவருக்கு எதிரான போர்? அது யாதவர்களுக்கு எதிரான போர் அல்ல. அது அவளுக்கு எதிரான அறைகூவல். அவள் அந்த அறைகூவலை ஏற்றாளா? நான் கேட்கவிரும்புவது அதையே. அவள் என்ன செய்தாள்?' என்று கூவினார்.

அவையில் எழுந்த தேவவதியின் குரலை இன்றும் கேட்கிறேன். 'அவள் ஒன்றுமே செய்யவில்லை. ஒரு எளிய வேடன் அவளை அவமதித்தான். அவள் நெஞ்சில் தன் கீழ்மைகொண்ட காலை வைத்து மிதித்து அவள் முகத்தில் உமிழ்ந்தான். அவள் குலத்தை நாட்டை பெயரை இழிவின் உச்சம் நோக்கி கொண்டுசென்றான். அதை சூதர்கள் பாடாமலிருப்பார்களா? பாரதவர்ஷத்தின் வரலாற்றில் என்றும் அது காயாத எச்சில்கோழை போல விழுந்துகிடக்கும். அவள் என்ன செய்தாள்?' என்று கூவியபின் சிரித்தபடி 'என்ன செய்தாள் என்று சொல்கிறேன். அவள் சென்று அந்த விழியிழந்த அரசரிடம் அழுது மன்றாடியிருப்பாள். ஒரு சிறிய படையை அனுப்பி யாதவர்களுக்கு உதவியதுபோல ஒரு நாடகத்தையாவது நடிக்கும்படி கண்ணீர் விட்டு கதறி கோரியிருப்பாள். அவர்கள் சுழற்றிச்சுழற்றி சில அரசியல்சொற்களைச் சொல்லி அவளை திருப்பியனுப்பியிருப்பார்கள். அவர்கள் படைகளை அனுப்புவார்கள் என்று சொன்னார்களா மாட்டார்கள் என்று சொன்னார்களா என்றுகூட அவளுக்கு புரிந்திருக்காது. அவளுடைய மொழியறிவும் நூலறிவும் யாதவர்கள் நடுவேதான் பெரியது, ஊருக்குள் பாறை போல. அங்கே இருப்பவை இமயமுடிகள்' என்றார்.

அவைமுழுக்க அதை ஏற்று அமைதி கொள்வதைக் கண்டேன். தேவவதி இகழ்ச்சியுடன் 'அவள் இந்நேரம் அமைதிகொண்டிருப்பாள். அவளுக்கு பட்டாடைகளும் வைரஅணிகளும் அளித்திருப்பார்கள். மேலும் சில அரசமரியாதைகளை அளிக்க ஆணையிட்டிருப்பார்கள். மேலும் ஒரு சங்கு அவள் நடந்துசெல்லும்போது ஊதப்படும். மேலும் ஒரு சேடி அவளுக்கு முன்னால் முரசறைந்து போவாள். எளிய யாதவப்பெண். என்ன இருந்தாலும் காட்டில் கன்றுமேய்த்து அலைந்தவள். அதிலேயே நிறைவடைந்திருப்பாள். யாராவது சூதனை அனுப்பி நீயே பாரதவர்ஷத்தின் அரசி என்று அவள் முன் பாடச்செய்தால் மகிழ்ந்து புல்லரித்திருப்பாள்' என்றார்.

எங்களை நோக்கி 'குந்தி அஸ்தினபுரியின் பாவை, அரசி அல்ல. நாம் அவளை அரசி என்று சொல்லக்கூடாது, நம் எதிரிகள் சொல்லவேண்டும். நம் எதிரிகளான அரசர்கள் அப்படி எண்ணவில்லை. அஸ்தினபுரியின் பணிப்பெண் என்றே நினைக்கிறார்கள். கூர்ஜரத்தின் அரசன் அவளை அப்படிச் சொன்னான் என்று என் ஒற்றர்கள் சொன்னார்கள். அவன் பேரரசன், சொல்லலாம். ஆனால் மலைவேடனாகிய ஏகலவ்யனும் அதையே எண்ணுகிறான் என்றால் அதன் பின் நாம் ஏன் அவளை அரசி என்கிறோம்? அதை சொல்லிச்சொல்லி நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்ளவேண்டாம்' என்றார்.

நான் சொல்லிழந்து நின்றேன். ஒரு மூத்தவர் கைநீட்டி 'கரியவனே, நீ சொல் கூர்ஜரத்தின் அரசன் அப்படிச் சொன்னது உண்மையா?' என்றார். நான் தலைகுனிந்தேன். ஏனென்றால் அவன் சொன்னது அரசவையில் வைத்து. அதை நம்மால் மறைக்க முடியாது. என்னால் ஒன்றுமட்டுமே சொல்லமுடிந்தது. நான் தேவவதியிடம் சொன்னேன் 'அரசியே. நான் சென்று பேரரசியின் கால்களில் விழுகிறேன். பேரரசியின் கோலை சரண் அடைகிறேன். எந்தப்பேரரசியும் நம்பிவந்தவர்களை கைவிடுவதில்லை.' தேவவதி நகைத்து 'போ... போய் அவளுடைய ஊட்டில்லத்தில் எண்வகை உணவை உண்டுவிட்டு வா. அவளால் அதைமட்டுமே ஆணையிட முடியும்' என்றார்.

அப்போது எனக்கு என்னதான் தோன்றியதோ தெரியவில்லை. என் நெஞ்சில் அறைந்து வெறிகொண்டு கூவினேன். 'நீங்கள் இப்போது குறைசொன்னது பாரதவர்ஷத்தின் யாதவப்பேரரசியை மட்டும் அல்ல. என் அத்தையை. விருஷ்ணிகுலத்தின் பதாகையை. இச்சொற்களைச் சொன்னதற்காக நாளை இதே அவையில் போஜர்கள் தலைகுனியவேண்டியிருக்கும்' என்றேன். அவையில் நின்று அறைகூவினேன் 'நான் சென்று அஸ்தினபுரியின் பெரும்படையுடன் வருகிறேன். மதுராமீது யாதவர்களின் கொடி பறக்கும்போது மீண்டும் இதே குலச்சபையில் எழுந்து நின்று இப்போது அரசி தேவவதி சொன்ன சொற்களைக் கேட்கிறேன். அவர் தன் கூந்தலை வெட்டிக்கொண்டு சபைமுன் வந்து நின்று விருஷ்ணிகளின் குந்திதேவி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்று சொல்லவேண்டும். செய்ய முடியுமா? அறைகூவுகிறேன், செய்யமுடியுமா?' என்றேன்.

தேவவதி எழுந்து இகழ்ச்சியுடன் நகைத்து 'சரி. அடுத்த சபைகூடலுக்கு நீ மதுராவை அஸ்தினபுரியின் உதவியுடன் வென்றுவராவிட்டால் சேலை அணிந்து வந்து நின்று எங்கள் குலத்தின் அரசி ஒரு அரசகுலப்பணிப்பெண் என்று சொல்லவேண்டும், சொல்வாயா?” என்றார். சொல்கிறேன் என்றேன். அந்த அவையில் நான் சொன்னவை என் சொற்கள் அல்ல. அவை விருஷ்ணிகுலத்தின் மண்மறைந்த மூதாதையரின் குரல்கள். அவர்கள் விண்ணில்நின்று தவிக்கிறார்கள். அவர்களின் குலம் இழிவடைந்து அழியுமா வாழுமா என்று கண்ணீருடன் கேட்கிறார்கள். நான் அதன் பின் அங்கே நிற்கவில்லை. நேராக தங்களை நோக்கி வந்தேன்.

கிருஷ்ணன் கூப்பிய கைகளை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டான். தூது முடிந்துவிட்டது என்று அர்ஜுனன் உணர்ந்த கணம் பீமனின் புன்னகைக்கும் விழிகள் வந்து அவன் கண்களை தொட்டுச்சென்றன. ஒரு சொல்கூட பேசாமல் குந்திதேவி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அறைக்குள் திரைச்சீலைகளை அசைக்கும் காற்றின் ஓசை மட்டுமே கேட்டது. தருமன் ஏதோ பேச உதடுகளை பிரிக்கும் ஒலி கேட்டதுமே இளைய யாதவன் குழந்தைகளுக்குரிய மெல்லிய திக்கல் கொண்ட குரலில் "இங்கே மூத்த இளவரசர்தான் விதுரரிடம் பேசி முடிவுகளை எடுப்பதாகச் சொன்னார்கள். ஆகவேதான் இதையெல்லாம் முன்னரே அவரிடம் சுருக்கமான வடிவில் சொல்லிவிட்டேன்” என்றான். தருமன் “ஆனால்” என பேசத்தொடங்க குந்தி கையசைவால் அவனை நிறுத்தினாள்.

அர்ஜுனன் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். முதிராச்சிறுவன் போன்ற பரபரப்பான சொற்களில் தொடர்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருக்கும்போது இதென்ன இவனுக்கு தூதுமுறையே தெரியாதா, கன்றுமேய்க்கும் யாதவன் போலப் பேசுகிறான் என்று அவன் எண்ணினான். தொடர்பற்றதுபோல நினைவுக்கு வந்தவற்றின் ஒழுங்கில் என சொல்லப்பட்ட அச்சொலோட்டம் முடிந்ததும் அது மிகச்சரியான இடத்துக்கு வந்திருப்பதை திகைப்புடன் உணர்ந்தான். திரும்ப அதை நினைவில் ஓட்டிப்பார்க்கையில் ஒவ்வொரு சொல்லும் மிகமிகக் கூரிய நுண்ணுணர்வுடன் எண்ணிக்கோர்க்கப்பட்டிருப்பதை அறிந்தான்.

குந்தி இனி செய்வதற்கேதுமில்லை. இளைய யாதவன் அவளுக்கு அளித்த தோற்றத்தைச் சூட அவள் மறுக்கலாம். அவள் உண்மையில் யாரோ அங்கே சென்று நிற்கலாம். அவளால் அது முடியாது. அங்கே அந்த அவையில்கூட அப்படி நிற்கமுடியும், யாதவசபையில் தேவவதி முன் நிற்க முடியாது. ஆயினும்கூட ஒருவேளை குந்தி மீறிச்செல்லலாம். ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது. அவள் உள்ளத்தில் ஓடுவதென்ன...? அர்ஜுனன் குந்தியின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். வெண்ணிறமான வட்டமுகம். பெரிய விழிகளின் இமைகள் சரிந்து சிறிய செவ்வுதடுகள் அழுந்தியிருக்க அவள் ஒரு சிறுமி போலிருந்தாள்.

குந்தி அசைவின் ஒலியுடன் நிமிர்ந்து அமர்ந்து மிகமெல்லிய குரலில் “பார்த்தா” என்றாள். அர்ஜுனன் தலைவணங்கினான். “நீ நம் படைகளில் முதன்மையான வில்லாளிகளின் அணிகளை கூட்டிக்கொள். சென்று மதுராவையும் மதுவனத்தையும் வென்று அத்தனை மிலேச்சர்களையும் கொன்றுவா... ஒருவர்கூட விடப்படலாகாது. அவர்கள் சமரசத்துக்கோ சரண் அடையவோ வந்தாலும் ஏற்கக்கூடாது .அத்தனைபேரின் மூக்குகளும் வெட்டப்பட்டு இங்கு கொண்டுவரப்படவேண்டும். என் காலடியில் அவை குவியவேண்டும். அவற்றைக்கொண்டு இங்கே ஒரு சத்ருசாந்தி வேள்வியை நான் செய்யவிருக்கிறேன்.” அர்ஜுனன் புன்னகையை உதடுக்குள் அழுத்தி “ஆணை” என்றான்.

“பேரரசி, எனக்கு ஒரு வரமருளவேண்டும்.... அர்ஜுனன் ஏகலவ்யனை மட்டும் விட்டுவைக்கட்டும்... நான் அவனை என் கையால் கொல்லவேண்டும். இல்லையேல் என் குலப்பழி நீடிக்கும்” என்று கிருஷ்ணன் கைகூப்பினான். குந்தி புன்னகைசெய்து “ஆம், அவன் உயிரை உனக்கு அளிக்கிறேன். விருஷ்ணிகளின் பழியும் நிறைவேறட்டும். அர்ஜுனா, எவர் மேலும் எவ்வகையிலும் கருணை காட்டவேண்டியதில்லை” என்றாள். “மதுராவை வென்றபின் கூர்ஜரனின் எல்லைகளை அழி. முடிந்தால் அவன் இளவரசர்களில் ஒருவனை கொல். அவன் தலைநகர் நோக்கிச் செல். அவன் தன் கையாலேயே எனக்கு ஒரு திருமுகம் எழுதி அனுப்பவேண்டும். அதில் பாரதவர்ஷத்தின் யாதவ சக்ரவர்த்தினியாகிய எனக்கு அவன் தெற்குக் கூர்ஜரத்தின் நிலங்களை பாதகாணிக்கையாக அளித்திருக்கவேண்டும்.”. அர்ஜுனன் “ஆணை” என்றான்.

கிருஷ்ணன் “பேரரசியாரின் சொற்களை இப்போதே அரசாணையாக உரிய இலச்சினையுடன் வெளியிட்டால் நாங்கள் இன்றே கிளம்பிவிடுவோம்” என்றான். தருமன் ஏதோ சொல்லப்போக கிருஷ்ணன் “திருதராஷ்டிரமன்னரிடம் கலந்து ஆணையிடவேண்டுமென்றால் நான் காத்திருக்கிறேன்” என்றான். குந்தி அவனை திரும்பி நோக்கியபின் “தருமா, ஓலையை எடுத்து ஆணையை எழுது” என்றாள்.

“ஆணை” என்றபின் தருமன் வெளியே ஓடி சேவகனிடம் ஓலையை கொண்டுவரச்சொன்னான். அவன் உடல் பதறிக்கொண்டிருப்பதையும் முகம் சிவந்திருப்பதையும் அர்ஜுனன் புன்னகையுடன் நோக்கினான். கிருஷ்ணன் “தளகர்த்தர்களிடம் தாங்களே தங்கள் சொல்லால் ஆணையிட்டால் மேலும் நிறைவடைவேன்” என்றான். “அது இங்கு வழக்கமில்லை. மேலும் தளகர்த்தர்கள்...” என்று தருமன் சொல்லத் தொடங்க “மூத்த பாண்டவரே, நான் இங்கு வரும்போதே வாயிற் சேவகர்களிடம் தளகர்த்தர்களை பேரரசி அழைக்ககூடும் என்று சொல்லியிருந்தேன். வெளியே அவர்கள் நின்றிருக்கிறார்கள்” என்றான் “இப்போதே அவர்களை அழைக்கமுடியும். பேரரசியின் சொற்கள் அவர்களை ஊக்கப்படுத்தும் அல்லவா?"

பீமன் அவனை மீறி மெல்ல சிரித்துவிட்டான். அர்ஜுனன் திரும்பி பீமனை கடிந்துநோக்க அவன் பார்வையை விலக்கினான். கிருஷ்ணன் வெளியே சென்று சேவகர்களிடம் “படைத்தலைவர்களை வரச்சொல்” என்றான். சேவகன் ஓலையைக் கொண்டுவர தருமன் மணைப்பலகையை மடியிலேயே வைத்து எழுத்தாணியின் மெல்லிய ஓசை கேட்க ஆணையை எழுதினான். நத்தை இலையுண்ணும் ஒலி என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

எழுதிமுடித்த ஓலையை குந்தி வாங்கி வாசித்து நோக்கிவிட்டு அவளுடைய இலச்சினையை பதித்துக்கொண்டிருக்கையில் தளகர்த்தர்களான ஹிரண்யபாகுவும் வீரணகரும் வந்து வணங்கி நின்றனர். குந்தி அந்த ஓலையை அவர்களிடம் அளித்து ஆணையை வாசிக்கும்படி கையசைவால் ஆணையிட்டாள். அவர்கள் கண்களில் கணநேரம் குழப்பம் மின்னிச் சென்றது என்றாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை வாசித்தபின் அவர்கள் தலைவணங்கினர்.

அவர்கள் செல்லலாம் என்பதுபோல கைவீசிக்காட்டிவிட்டு குந்தி எழுவதற்காக சேடிக்கு கைகாட்டினாள். சேடி அவள் மேலாடையை எடுத்தாள். கிருஷ்ணன் கைகூப்பி அருகே சென்று “பேரரசிக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் இதுவரை அஸ்தினபுரியின் பேரரசியென எனக்கு காட்சியளித்தீர்கள். நான் வந்தது இதற்காக மட்டும் அல்ல. என் தந்தையின் கைகளைப்பற்றிக்கொண்டு மதுவனத்தில் அலைந்த என் அத்தை பிருதையை பார்ப்பதற்காகவும்கூடத்தான்...” என்றான்.

குந்தியின் முகம் விரிந்தது. புன்னகை செய்து “அதற்கென்ன?” என்றாள். கிருஷ்ணன் அவளருகே சென்று தரையில் அவள் காலடியில் அமர்ந்துகொண்டு “அத்தை, நான் இதுவரை தங்களைப்போன்ற ஒரு பேரழகியை கண்டதில்லை” என்றான். குந்தி முகம் சிவந்து படபடப்புடன் தலை நிமிர்ந்து தளபதிகளை நோக்கினாள். அவர்கள் தலைவணங்கி வெளியே சென்றனர்.

அவர்கள் செல்வதை நோக்கியபின் குந்தி பற்களைக் கடித்து “நீ என்ன மூடனா? எங்கே எதைச்சொல்வதென்று அறியாதவனா?” என்றாள். அவள் கழுத்துகூட நாணத்தில் சிவந்திருந்தது. மூச்சிரைப்பில் தோள்களில் குழி விழுந்தது. “பொறுத்தருள்க அத்தை.... நான் மறந்துவிட்டேன். என்ன இருந்தாலும் எளிய யாதவன்” என்றான் கிருஷ்ணன். “என்ன பேச்சு இது... வேறெதாவது சொல்” என்றாள் குந்தி. “இல்லை, சிறுவயது முதலே உங்கள் அழகைப்பற்றிய விளக்கங்களைத்தான் கேட்டுவளர்ந்திருக்கிறேன். அவை எல்லாம் குலப்பாடகர்களின் மிகை என்று எண்ணினேன். அவர்களுக்கு அழகை சொல்லவே தெரியவில்லை என்று தங்களை நோக்கியதுமே நினைத்தேன்... யாதவர்கள் என்னும் வனத்தில் தங்களைப்போல் ஒரு மலர் இனி மலரப்போவதில்லை” என்றான்.

குந்தியின் கண்கள் கனிந்தன. மெல்ல அவன் தலையில் கையைவைத்து மயிரை அளைந்தபடி “உன்னிடம் மூத்தவர் பலராமரின் சாயல் சற்றேனும் இருக்கும் என நினைத்தேன். நீ யாரைப்போல் இருக்கிறாய் தெரியுமா?” என்றாள். கிருஷ்ணன் “என் பெரியதந்தையர் என்னைப்போல கரியவர்கள்தான்” என்றான்.

“இல்லை... உன் கண்கள் உன் பாட்டிக்குரியவை. என் அன்னை மரீஷை நல்ல கரிய நிறம் கொண்டவள். கருமை என்றால் மின்னும் கருமை. அவள் உடலில் சூழ இருக்கும் பொருட்களெல்லாம் பிரதிபலிக்கும் என்று கேலியாக சொல்வார்கள். நான் அன்னையின் கண்களை மறக்கவே இல்லை. வயதாக ஆக அவை இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. அவை உன்னிடம் அப்படியே அமைந்திருக்கின்றன. என் வாழ்நாளில் உன்னைப்போல எனக்கு அண்மையானவன் எவரும் இருக்கப்போவதில்லை என்று உன்னைக் கண்டதுமே எண்ணினேன். ஆகவேதான் என்னை இறுக்கிக் கொண்டேன்” என்றாள் குந்தி.

“மயக்கிவிட்டேன் அல்லவா?” என்று சொல்லி அவள் கால்களில் தன் தலையை வைத்தான் கிருஷ்ணன். “நீ சொன்ன சொற்களில் உள்ள மாயத்தை எல்லாம் நான் உணர்ந்தேன். பெரிய சிலந்திவலையாகப் பின்னி என்னை சிக்கவைத்தாய்... ஆனால் உன் வலையில் சிக்குவதுபோல எனக்கு இனிதாவது ஏது?” என்றாள் குந்தி. “உன்னைப் பார்க்கையில்தான் நான் அடைந்த பேரிழப்பு புரிகிறது. நான் உன் அத்தையென உன்னை இடையிலும் மார்பிலும் எடுத்து கொஞ்சியிருக்கவேண்டும். கோகுலத்தில் நீ வளர்வதை ஒற்றர்கள் சொன்னார்கள். அது கம்சனுக்கு தெரியக்கூடாதென்பதற்காகத்தான் நான் உன்னை அணுகவில்லை. ஆனால் என் ஒற்றர்கள் உன்னை பாதுகாத்தபடியேதான் இருந்தனர். உன்னைக் கொல்லவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றர்களை என் படைகள் கொன்று யமுனையில் மூழ்கடித்திருக்கின்றன.”

“ஆம், யமுனையின் கங்காமுகத்தில் நாளுக்கு மூன்று சடலங்கள் எழும் என்று அக்காலத்தில் சொல்வார்கள்” என்றான் கிருஷ்ணன். “அது உங்கள் ஒற்றர்களால் செய்யப்படுவதென்றும் எந்தை நந்தகோபர் அறிந்திருந்தார்” என்று அவன் சொன்னான். “உங்களைப்பற்றி என் மூத்த அன்னை ரோகிணிதான் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் மேல் பொறாமையும் வியப்பும் உண்டு.” குந்தி முகம் மலர்ந்து “ஆம், அவளும் நானும் ஒருகாலத்தில் களித்தோழிகள்” என்றாள்.

அர்ஜுனன் அவர்களையே நோக்கினான். குந்தி கிருஷ்ணனை பரவசம் ததும்பும் முகத்துடன் குனிந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவள் கால்களில் நன்றாகச் சேர்ந்து அமர்ந்து அவள் ஆடை நுனியைப்பற்றி கைகளால் சுழற்றியபடி சிறுவனைப்போலவே பேசிக்கொண்டிருந்தான். அவன் நடிக்கவில்லை என்று அர்ஜுனன் எண்ணினான். அவன் அன்னையர் முன் இயல்பாகவே மழலைமாறாத மைந்தனாக ஆகிவிடுகிறான் போலும். உடலில் மொழியில் விழியில் எல்லாம் அங்கிருந்தது ஒரு குழந்தை.

“நான் உன் ஓவியமொன்றை கொண்டு வரச்சொல்லியிருக்க வேண்டும். எந்த அன்னையும் ஏங்கும் இளமைந்தனாக இருந்தாய் என்றாள் சூதப்பெண் ஒருத்தி” என்ற குந்தி அவன் தலையை மேலும் வருடி “இப்போது இளைஞனாக ஆகிவிட்டாய்” என்றாள். “அத்தையும் மைந்தர்களும் கொள்ளும் உறவைப்பற்றி அறிந்திருக்கிறேன். மைந்தர்கள் எனக்கும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் இளமையில் நான் அவர்களின் பாதுகாப்பைப்பற்றியும் எதிர்காலம் பற்றியும் தீராத பதற்றத்தில் இருந்தேன். அவர்களின் குழந்தைப்பருவத்தை நான் கொண்டாடவே இல்லை. நீ என் கையில் இருந்திருந்தால் அனைத்தையும் அறிந்திருப்பேன்.”

“ஏன் இப்போது அறியலாமே” என்றான் கிருஷ்ணன். கன்னத்தை அவள் கால்களில் தேய்த்துக்கொண்டே. குந்தி “சீ, எருமைக்கன்று மாதிரி இருக்கிறாய்...” என்று அவன் தலையில் அடித்தாள். “உன்னை எப்படித்தான் பெண்கள் விரும்புகிறார்களோ!” என்றாள். “ஏன் நீங்கள்கூடத்தான் இப்போது விரும்புகிறீர்கள்” என்றான் கிருஷ்ணன். “ஆம்” என்றபின் அவள் சிரித்து “மைந்தர்கள் வளராமலிருப்பதைத்தான் அன்னையர் விரும்புகிறார்கள். நீ வளரவேபோவதில்லை என்று படுகிறது” என்றாள்.

பீமன் அர்ஜுனனை கண்களால் அழைத்தபின் வெளியே சென்றான். அர்ஜுனனும் செல்வதைக் கண்டபின்னர் தருமன் வெளியே வந்தான். கதவை மெல்ல மூடிவிட்டு அவர்கள் இடைநாழியில் சென்றனர்.

பகுதி எட்டு : மழைப்பறவை - 4

இடைநாழியில் நடக்கையில் பீமன் சிரித்தபடி “இன்னும் நெடுநேரம் மருகனும் அத்தையும் கொஞ்சிக்கொள்வார்கள்” என்றான். அர்ஜுனன் “பெண்களிடம் எப்படிக் கொஞ்சவேண்டும் என்பதை ஏதோ குருகுலத்தில் முறையாகக் கற்றிருக்கிறான்” என்று சிரித்தான். பீமன் “பார்த்தா, அன்னைக்கும் கொஞ்சுவதற்கென்று ஒரு மைந்தன் தேவைதானே? நம் மூவரையும் அன்னை அயலவராகவே எண்ணுகிறார். நகுலனையும் சகதேவனையும் கைக்குழந்தைப்பருவத்தை கடக்க விட்டதுமில்லை” என்றான்.

“அன்னை எப்போதேனும் முதிரா இளம்பெண்ணாக இருந்திருப்பாரா என்றே எனக்கு ஐயமிருந்தது. அது இப்போது நீங்கியது. அவருக்கு களியாடவும் நகையாடவும்கூட தெரிந்திருக்கிறது” என்றான் அர்ஜுனன். பீமன் “அத்தனை பெண்களும் சிறுமியராக ஆகும் விழைவை அகத்தே கொண்டவர்கள்தான். சிறுமியராக மட்டுமே அவர்கள் விடுதலையை உணர்ந்திருப்பார்கள். ஆனால் எங்கே எவரிடம் சிறுமியாகவேண்டும் என்பதை அவர்கள் எளிதில் முடிவுசெய்வதில்லை” என்றான். “அன்னையை சிறுமியாகக் காண்பது உவகை அளிக்கிறது. அவர் மேலும் அண்மையானவராக ஆகிவிட்டார்” என்றான் தருமன். சிரித்தபடி “அதற்குரிய மைந்தன் அவனே” என்றான் அர்ஜுனன்.

தருமன் “ஆம், என்ன இருந்தாலும் அவன் யாதவன், அவருடைய குருதி. அவர் அன்னையின் கண்கள் அவனுக்குள்ளன என்று சொன்னபோது அதை எண்ணிக்கொண்டேன். நமது முகங்களும் கண்களும் அவருடைய குலத்துக்குரியவை அல்ல” என்றான். பீமன் “இருக்கட்டும், நம்மனைவரின் பொருட்டும் அவன் அதைப்பெற்றுக்கொள்ளட்டும்” என்றான். அர்ஜுனன் தன் முகம் மலர்ந்திருப்பதை தானே உணர்ந்து திரும்பி நோக்கினான். பீமனும் தருமனும்கூட முகம் மலர்ந்திருந்தனர். “எனக்கு அவனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது” என்றான் தருமன். “பீதர்களின் களிப்பெட்டிகளைப்போல அவன் ஒருவனுக்குள் இருந்து ஒருவனாக வந்துகொண்டே இருக்கிறான்.”

அவர்கள் மீண்டும் அவைக்கூடத்தில் சென்று அமர்ந்தனர். தருமன் “அந்தச்சிட்டு மீண்டும் வருகிறதா?” என்றான். சேவகன் சித்ரகன் பணிந்து “இல்லை இளவரசே. அதை கூரையின் அடியில் வைத்துவிட்டோம். அங்கே மகிழ்ந்து இருக்கிறது” என்றான். அர்ஜுனன் “அனைத்தும் அறிந்தவனாக இருக்கிறான். சமையலறையில் ஊனுணவில் உப்பு மிகுந்துவிட்டால் என்ன செய்வதென்றுகூட அவனிடம் கேட்கலாம் என்று தோன்றுகிறது” என்றான். தருமன் “யாதவர்களுக்கு பறவைகளுடன் அணுக்கமான உறவு உண்டு என அறிந்திருக்கிறேன்” என்றான்.

பீமன் "அவள் பெயர் என்ன? வஜ்ரமுகி... அவள் நம்மிடம் கப்பம் ஏதும் கேட்பாளோ என்று ஐயப்படுகிறேன்” என்றான். தருமன் புன்னகைத்து “இளையவனே, இந்த யாதவன் பேசியதை என் நெஞ்சுக்குள் ஓடவிட்டுக்கொண்டே இருக்கிறேன். மகத்தான அரசியலுரை என்றால் இதுதான். அது தர்க்கத்தால் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உணர்ச்சிகளால் சொல்லப்படவேண்டும். அது அரசியலுரை என்று கேட்பவர் அறியவே கூடாது. வெற்றி அடைந்த பின்னரே அதன் முழு விரிவும் கேட்பவருக்கு தெரியவேண்டும்...” என்றான். “எவன் தன்னை முழுமையாக மறைத்துக்கொள்கிறானோ அவனே சிறந்த மதியூகி. ஆனால் அவன் சொற்கள் அவனை காட்டிக்கொண்டே இருக்கும். மதிசூழ் சொற்களையும் மதியூகம் தெரியாமல் அமைக்கமுடியுமென்றால் அதை வெல்ல எவராலும் இயலாது.”

பீமன் “மூத்தவரே, அதை தாங்கள் உணர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான். “என்றும் நம்முடன் இருக்கப்போகும் பெருவல்லமை அவன். அவன் கைகளை பற்றிக்கொள்வோம். அவன் துணையால் நாம் எதிர்கொள்ளப்போகும் பெருவெள்ளங்களை கடக்கமுடியும்.” தருமன் “ஆம், அவனை என்னால் அறிய முடியவில்லை. ஆனால் அவன் எனக்களிக்கும் அண்மையை எவரும் அளித்ததில்லை” என்றபின் “அனைவரையும் ஒரு பெரும் சதுரங்கக் களத்தில் வைத்து ஆடிக்கொண்டே இருக்கிறான். இந்த ஆடல் அவனுக்கு ஒரு பொருட்டும் அல்ல” என்றான். உரக்க நகைத்தபடி “அவன் ஏகலவ்யனின் குலத்தோரின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவருவதற்கான கூடைகளைப் பின்ன ஆணையிட்டுவிட்டு வந்திருந்தாலும் நான் வியப்படையமாட்டேன்” என்றான்.

அவர்கள் சற்று நேரம் அங்கே நிகழ்ந்ததை எண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தனர். “என்னதான் பேசிக்கொள்வார்கள்?” என்றான் அர்ஜுனன். “பெண்களிடம் திறம்படப் பேசுபவர்கள் பேச ஏதுமில்லாமலேயே நாழிகைக்கணக்காக பேசக்கற்றவர்கள்” என்றான் பீமன். “ஒன்றுமே தேவையில்லை. அவன் அங்கே அன்னையின் அழகை பல வகைகளில் மறைமுகமாக புகழ்ந்துகொண்டே இருப்பான், வேறென்ன?” என்றான் அர்ஜுனன். “அழகைப் புகழ்வதை பெண்கள் விரும்பும் விதம் வியப்பூட்டுவது. பேதை முதல் பேரிளம்பெண் வரை... புகழ்ச்சி வெறும் பொய் என்றாலும் உள்நோக்கம் கொண்டது என்றாலும் அதை அவர்கள் விலக்குவதே இல்லை” என்றான் தருமன்.

"ஆடியில் நோக்காத பெண் எங்கேனும் இருந்தால் அவள் புகழ்ச்சியை விரும்பமாட்டாள்” என்று பீமன் நகைத்தான். “அதிலும் அவன் பெருவித்தகன். வேண்டுமென்றேதான் அவன் தளபதிகள் முன்னால் அதைச் சொன்னான். அவர்கள் இளையோர். அவர்கள் முன் அழகுநலம் பாராட்டப்படுவதை அன்னையின் உள்ளே வாழும் இளம்பெண் விரும்பியிருப்பாள்.” தருமன் சினத்துடன் “இளையவனே, நீ நம் அன்னையைப்பற்றிப் பேசுகிறாய்” என்றான். “ஏன், அன்னையும் பெண்ணல்லவா?” என்றான் பீமன்.

தருமன் முகம் மாறி “இளையவனே, நீ மதுராவை வென்றுவிடுவாயா?” என்றான். “வென்றாகவேண்டும்... வெல்வேன்” என்றான் அர்ஜுனன். “அரசரின் ஆணையை அன்னை மீறிவிட்டார். ஆனால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அதை ஓலையில் பொறிக்கச்செய்துவிட்டான். தளபதிகள் அதை அறிந்துவிட்டனர். இனி அதை மாற்றுவதென்பது அன்னைக்கு பெரும் அவமதிப்பு. அதைச்செய்ய நாம் ஒப்பவே முடியாது” என்றான். பீமன் “ஆம்... ஆனால் பெரியதந்தை அதைச் செய்யமாட்டார். ஒருபோதும் அன்னையின் மதிப்பை அவர் குறைக்கமாட்டார்” என்றான். "பார்ப்போம்" என்றான் தருமன்.

“இன்னமுமா கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் தருமன் சற்றுநேரம் கழித்து. சாளரம் வழியாகச் சென்று தன் முட்டைகள் மேல் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்துக்கொண்டிருந்த சிட்டுக்குருவியை நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் தலை திருப்பி “அவர்கள் காலத்தை மறந்திருப்பார்கள்” என்றான். “அவர்கள் மெல்லமெல்ல அரச அடையாளங்களை இழந்திருப்பார்கள். எளிய யாதவர்களாக ஆகிவிட்டிருப்பார்கள். கன்றை பசு நக்குவதைப்போல அவனை அன்னை வருடிக்கொண்டிருப்பார். அவர் சூடிய மணிமுடியும் பட்டும் மறைந்து புல்வெளியில் அவனுடன் சென்றுகொண்டிருப்பார்” என்றான் பீமன். “மூத்தவரே, நீங்கள் சூதரைப்போல பேசுகிறீர்கள்” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்தான்.

சேவகன் அறிவிப்பை சொல்வதற்குள்ளாகவே அவனைக் கடந்து கனகன் துணையுடன் விதுரர் உள்ளே வந்தார். வந்ததுமே உரத்த குரலில் “இளவரசே, என்ன நிகழ்கிறது இங்கே? படைநீக்க அரசாணையை எப்படி அரசி பிறப்பிக்கலாம்?” என்றார். “பிறப்பித்துவிட்டார்கள். ஆகவே இனி அது அரசாணைதான்” என்று பீமன் திடமான குரலில் சொன்னான். “நான் என்ன செய்வது அமைச்சரே... அது அன்னையின் ஆணை அல்லவா?” என்றான் தருமன். விதுரர் மூச்சிரைத்தபடி நின்றார். “அமருங்கள் அமைச்சரே” என்றான் தருமன். விதுரர் அமர்ந்துகொண்டு தலையைப்பற்றிக்கொண்டார். “என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லை. அரசி எங்கே?” என்றார்.

“உள்ளே கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். “அவனை நான் அறிவேன். மாபெரும் மாயக்காரன் என்று சொன்னார்கள். ஆனால் இதை அவனால் நிகழ்த்தமுடியுமென நான் எண்ணவேயில்லை.... எத்தனை பெரிய மூடத்தனம்! அரசி இதைப்போல நிலைகுலைந்து போவார் என நினைக்கவேயில்லை” என்றபின் “அவன் பேசிக்கொண்டிருக்கையில் நீங்கள் அங்கே நின்றிருக்கவேண்டுமல்லவா?” என்றார். “அவர்கள் பேசிக்கொண்டிருக்கவில்லை அமைச்சரே. அத்தை தன் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். விதுரர் வாய் திறந்து நிமிர்ந்து நோக்கினார். சட்டென்று அவர் உடல் தளர்ந்தது.

பெருமூச்சுடன் “அரசியின் ஆணையுடன் குழம்பிப்போன தளபதிகள் அரசரைத் தேடி அவைக்கே வந்துவிட்டனர். அமைச்சர்கள் அத்தனைபேரும் கூடியிருந்த பேரவையில் வந்து நின்றனர். என்ன நிகழ்ந்திருக்கிறது என்று நான் கணிக்கவில்லை என்பதனால் அவர்களை பேசும்படி விட்டுவிட்டேன். அரசியின் ஆணையை அவர்கள் சொன்னதும் அதிர்ந்து கைகால்கள் நடுங்க நின்றேன். உண்மையில் நிகழ்ந்துவிட்ட பிழைகளை சீர்செய்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். மெல்லமெல்ல அரசரை இனிய மனநிலை நோக்கி கொண்டுவந்தபின் உங்களை அவைக்குக் கொண்டு செல்வதைப்பற்றி திட்டமிட்டுக்கொண்டிருந்தேன் ..."

“அரசியின் ஆணையை அவர்கள் சொன்னதும் அவையே திகைத்து அமைதிகொண்டது. நேற்று இரவு அரசர் அளித்த ஆணைக்கு நேர்மாறான ஆணை...” என்றார் விதுரர். “நமது நல்லூழ் அங்கே அரியணையில் அமர்ந்திருப்பது உடலுடன் உள்ளமும் விரிந்த மாமத வேழம். ஒரு சிறிய குரல் மாற்றம்கூட இல்லாமல் அரசியின் ஆணை என்றால் அது அஸ்தினபுரியின் கடமையே என்று திருதராஷ்டிரர் சொன்னார். அஸ்தினபுரியின் படைகள் உடனே கிளம்பட்டும் என்றார். மெல்ல அவையில் ஆறுதல் பரவுவதை உணர்ந்தேன். திரும்பி சகுனியை நோக்கினேன். அவர் விழிகளில் புன்னகையைக் கண்டேன். கணிகரின் விழிகளை நோக்கவே நான் துணியவில்லை.”

“அரசர் அறைபுகுந்ததும் நான் எழுந்து ஓடிவந்தேன்” என்றார் விதுரர். “நான் என்னசெய்வதென்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அங்கே நிற்கமுடியவில்லை. அரசியையோ உங்களையோ பார்த்துவிட்டு மேலே சிந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன்...” தருமன் “அமைச்சரே. நான் அனைத்தையும் சொல்கிறேன்” என்றான். விதுரர் சாய்ந்து கைகளைக் கோர்த்து அமர்ந்துகொண்டார். தருமன் சொல்லத்தொடங்கினான். தாழ்ந்த கண்களுடன் விதுரர் கேட்டிருந்தார்

விதுரர் பெருமூச்சுடன் “அவன் சூதுநிறைந்தவன் என அறிந்திருக்கிறேன். இங்கு அந்த சூதை நாம் ஏற்கலாகாது. நம் படைகள் எழுவதை சற்றே பிந்தச்செய்யும்படி ஆணையிட்டுவிட்டு வந்தேன். இதற்கு என்ன வழி என்று நாம் சிந்திப்போம். நம் அரசியின் ஆணை மீறப்படலாகாது. ஆனால் இப்போது படைகள் எழுவது அஸ்தினபுரி தற்கொலை செய்துகொள்வதற்கு நிகர். நம்மால் மதுராவையோ கூர்ஜரத்தையோ உடனடியாக வெல்வது இயலாது” என்றார். “ஆம்” என்றான் தருமன்.

“வெல்லமுடியும் அமைச்சரே” என்றான் அர்ஜுனன். “முடியாது பார்த்தா... நம் படைபலம் மிகக்குறைவு. கணக்குகளை நான் சொல்கிறேன். நேர்பாதிப்படைகள் இப்போது நகரில் இல்லை. மகதம் நம்மைச் சூழ்ந்து எதிரிகளை அமைத்து நம் படைகளை பிரித்துவிட்டது. நம் படைகள் பதினெட்டு பிரிவுகளாக வெவ்வேறு எல்லைகளில் நின்றிருக்கின்றன. அவற்றை நாம் விலக்க முடியாது. நகரப்பாதுகாவலை கைவிடவும் முடியாது. எத்தனை கூட்டி கணக்கிட்டாலும் ஈராயிரம் பேர்கொண்ட சிறிய படை அன்றி ஒன்றை இங்கிருந்து நீ கொண்டுசெல்லமுடியாது. மதுராவில் ஏகலவ்யனின் ஐந்தாயிரம் வில்லவர்கள் இருக்கிறார்கள். கூப்பிடு தூரத்தில் திரிவேணிமுகத்தில் படகுத்துறைகளில் மகதத்தின் ஐம்பதாயிரம் பேர் காத்திருக்கிறார்கள்" என்றார் விதுரர்.

“மேலும் கூர்ஜரம்... நினைத்தே பார்க்கமுடியவில்லை” என்று தலையை ஆட்டினார் விதுரர். “அங்கே அவர்கள் ஒன்றரை லட்சம்பேர் கொண்ட படையை வைத்திருக்கிறார்கள். நீ மாவீரனாக இருக்கலாம். ஆனால் போர் என்பது படைகளால் செய்யப்படுவது... அதை மறக்காதே!" அர்ஜுனன் ஏதோ சொல்ல முற்படுவதற்குள் “உன் அன்னை ஆணையிடலாம். அவர்களுக்கு போர் பற்றி ஏதும் தெரியாது. மேலும் இந்த ஆணையை அவர்கள் அரசியாக நின்று இடவில்லை. வெறும் யாதவப்பெண்ணாக நின்று இட்டிருக்கிறார்கள். அந்த ஆணையைக் கண்டு தளகர்த்தர்கள் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள்...”

“இந்தப்போரில் நிகழ்வது ஒன்றே... நீ களத்தில் இறப்பாய்” என்றார் விதுரர். உரக்கக் குரலெடுத்து “ஆம், அதுவே நிகழும். அத்துடன் அஸ்தினபுரியின் நம்பிக்கைகளில் ஒன்று அழியும். இப்போர் தோல்வியில் முடிந்தால் நமது வல்லமையின்மையை பாரதவர்ஷம் அறியும். அதன்பின் நாம் நம்மை அழிக்கக் காத்திருக்கும் பெருவல்லமைகள் முன்னால் நடுங்கி ஒடுங்கி நிற்கவேண்டியிருக்கும்... மாமன்னர் ஹஸ்தி இந்நகரை உருவாக்கியபின் இன்றுவரை அஸ்தினபுரி எவருக்கும் கப்பம் கட்டியதில்லை. நாம் நம் மக்களைக் காக்க மகதத்துக்கு கப்பம் கட்ட நேரும்...” என்றார்.

வாயிலில் சேவகன் சித்ரகன் வந்து கிருஷ்ணன் வருவதை அறிவித்தான். விதுரர் பல்லைக்கடித்து தாழ்ந்த குரலில் “நான் அவனிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். வெளியே மெல்லிய பேச்சுக்குரல் கேட்டது. சித்ரகனின் தோளை மெல்ல அணைத்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லி அவனை சிரிப்பை அடக்கவைத்தபின் அதே புன்னகை முகத்தில் நீடிக்க கிருஷ்ணன் உள்ளே வந்தான். விதுரர் அவனை வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தார். தருமன் “கிருஷ்ணா, இவர் எங்கள் பிதாவுக்கு நிகரான விதுரர்” என்றான். கிருஷ்ணன் வணங்கி “அஸ்தினபுரியின் அமைச்சருக்கு என் பாதவணக்கம்” என்றான்.

விதுரர் அவன் விழிகளை விலக்கி மெல்லியகுரலில் “அரசியின் ஆணையைப் பார்த்தேன்... அதைப்பற்றி பேசவேண்டியிருக்கிறது” என்றார். “விளக்கிப் பேசும்விதத்தில் அந்த ஓலை இல்லை அமைச்சரே. படைகள் இன்னும் சற்றுநேரத்தில் எழுந்தாகவேண்டும். நான் மாலையில் படைகளுடனும் இளையபாண்டவர்களுடனும் கிளம்புகிறேன்” என்றான் கிருஷ்ணன். அவன் குரல் மாறியிருப்பதை அர்ஜுனன் அறிந்தான். அதில் அவனிடம் எப்போதுமிருக்கும் மழலையென எண்ணச்செய்யும் சிறிய திக்கல் இருக்கவில்லை.

“அஸ்தினபுரியின் படைநகர்வை முடிவு செய்யவேண்டியவன் அமைச்சனான நான்” என்று விதுரர் சொல்லத் தொடங்கியதும் “இல்லை. எப்போதும் என் செயல்களை முடிவுசெய்பவன் நான் மட்டுமே. பிறிதொருவரை நான் ஊடாக விடுவதே இல்லை” என்று கிருஷ்ணன் மெல்லிய உறுதியான குரலில் சொன்னான். “இது அரசாணை. என் படைக்கலம் இன்று இதுவே. இதை மீறவோ விளக்கவோ எவர் முயன்றாலும் அவர்களை அழிப்பதே என் இலக்காக இருக்கும்" என்றான். விதுரர் திகைத்து "என்ன?" என்றார். அப்படி ஒரு சொல்லாட்சியை அவனிடம் அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

அவன் குரூரம் மெல்லிய இடுங்கலை உருவாக்கிய கண்களால் விதுரரின் முகத்தை நோக்கி மெல்ல புன்னகை செய்து "விதுரரே, இங்கே உங்கள் வலுவான எதிரி கணிகர். அவரைத் துணைகொண்டு ஒரே நாளில் உங்களை அரசருக்கு எதிரானவராகக் காட்டி இந்த அஸ்தினபுரியின் மக்களால் கல்லெறிந்து கொல்லவைத்துவிட்டு படைகளைக் கொண்டுசெல்லவும் என்னால் முடியும்... பார்க்கிறீர்களா?” என்றான்.

விதுரர் குரல்வளை அசைய வாயை மெல்ல அசைத்தபின் “அநீதி வீரனின் படைக்கலம் அல்ல...” என்றார். “நீதி என்றால் உங்களுடன் அரசியல்சொற்களில் சதுரங்கமாடுவதா என்ன? நான் அதற்காக வந்தவன் அல்ல. நான் ஒரு கூர்வாள். என் இலக்குக்கு நடுவே நிற்கும் எதுவும் வெட்டுப்பட்டாகவேண்டும்.... விலகுங்கள். இல்லையேல் தீராப்பழியுடன் உங்கள் வாழ்நாள் முடியும்” என்றான் கிருஷ்ணன். அவன் விழிகள் இமைக்காமல் விதுரர் மேல் படிந்திருந்தன.

“விதுரரே, இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது. அதை எண்ணிப்புழுங்கும் ஷத்ரியர்களின் அகத்தின் ஆழத்தை உங்களுக்கு எதிராகத் திரட்டுவது என்னைப்போன்ற ஒருவனுக்கு ஓரிரு சொற்களின் பணி மட்டுமே” என்றான் கிருஷ்ணன். “அப்படி உங்களை அழித்தால் உங்கள் மைந்தர்களையும் விட்டுவைக்க மாட்டேன். உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.”

நடுங்கும் கைகளைக் கூப்பி “ஆம், உன்னால் அதைச் செய்யமுடியும். ஏனென்றால் நீ கம்சனின் மருகனும்கூட” என்றபடி விதுரர் மெல்ல உடல் தளர்ந்தார். “இனி நீ கொண்டுசெல்லப்போகிறாய் அனைத்தையும். என் காலம் முடிந்துவிட்டது. நான் நம்பிய அறமும் நீதியும் முறைமையும் எல்லாம் வெறும் சொற்களாக ஆகிவிட்டன....” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.

“இல்லை விதுரரே, இது வேறு அறம்” என்றான் கிருஷ்ணன். விதுரர் சொல்லின்றி கைகூப்பிவிட்டு திரும்பி அறையை விட்டு வெளியே சென்றார். இயல்பாக புன்னகையுடன் திரும்பிய கிருஷ்ணன் “பார்த்தா, நாம் மூக்கு அறுவடைக்குக் கிளம்பவேண்டுமல்லவா?” என்றான். பீமன் புன்னகைசெய்து “நான் ஒன்றுகேட்கிறேன் இளையவனே, யாதவ அவையில் மார்த்திகாவதியின் அரசி தேவவதி நீ அன்னையிடம் சொன்னபடி சொன்னாளா என்ன?” என்றான். கிருஷ்ணன் “அவைச்செய்திகளை பொய்யாகச் சொல்லமுடியுமா மூத்தவரே” என்றான். “அப்படியென்றால் நீ சொன்ன பொய் என்ன?” என்றான் அர்ஜுனன்.

“அவர்கள் அச்சொற்களைச் சொல்லுமிடம் வரை நான் கொண்டுசென்றேன்” என்றான் கிருஷ்ணன் அதே புன்னகையுடன். “என்ன சொன்னாய்?” என்றான் பீமன். “வேறென்ன, அன்னையை மட்டுமீறி புகழ்ந்திருப்பான்” என்றான் அர்ஜுனன். கிருஷ்ணன் புன்னகைசெய்து “கூடவே, தேவவதியின் மார்த்திகாவதி யாதவர்களைக் காக்க முன்வராது அஸ்தினபுரிக்கு அடங்கிக்கிடந்ததையும் சுட்டிக்காட்டினேன். உன் அத்தைமட்டும் என்ன செய்தாள் என்று தேவவதி கேட்காமலிருக்க முடியாதல்லவா?” என்றான். “இத்தனை ஆண்டுகளாகியும் தேவவதிதான் அன்னையின் அக எதிரி என எப்படி அறிந்தாய்?” என்றான் பீமன். “அதை அத்தை பேர் சொல்லும்போது தேவவதியின் கண்களை நோக்கினாலே அறிந்துகொள்ளமுடியுமே” என்றான் கிருஷ்ணன்.

“எப்படியோ வென்றுவிட்டாய்... ஆனால் விதுரர் இங்கே சொன்னதைக் கேட்டால் எனக்கே தயக்கமாக இருக்கிறது” என்றான் அர்ஜுனன். “வெறும் இரண்டாயிரம் வில்வீரர்கள்.... அதற்குமேல் அஸ்தினபுரியிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது.” கிருஷ்ணன் “போதும்” என்றான். “என்ன சொல்கிறாய், இரண்டாயிரமா? அது ஒரு காவல்படை. போர்ப்படையே அல்ல” என்றான் தருமன். “நீ என் இளையவனை கொலைக்குக் கொண்டுசெல்கிறாய். நான் அதற்கு ஒப்ப மாட்டேன். எங்களில் ஒருவர் இறப்பினும் பிறர் இருக்கமாட்டோம்.”

“மூத்தவரே, பாண்டவர்களின் ஒருமையை பாரதவர்ஷமே அறியும்” என்றான் கிருஷ்ணன். “நானிருக்கும் வரை உங்கள் இளையவன் மேல் ஒரு சிறு அம்புகூட படாது. இதை என்றும் நிலைகொள்ளும் சொல்லாகவே கொள்ளுங்கள்.” தருமன் “ஆனால்....” என்றான். “மூத்தவரே யானையைவிட அங்குசம் மிகச்சிறியது. அங்குசம் எங்கே எப்போது குத்துகிறது என்பதே அதன் வலிமை. அது யானையை மண்டியிடச்செய்யும்... வெல்லும் வழிகளை நான் சொல்கிறேன்” என்றான் கிருஷ்ணன். தருமன் தலையசைத்தான். “அதை நான் பார்த்தனிடமும் பீமசேனரிடமும் விளக்குகிறேன். தங்களுக்கு இது புரியாது” என்றான்.

தருமன் புன்னகையுடன் “அது அறமில்லாத போர் அல்ல தானே?” என்றான். கிருஷ்ணன் “நம்புங்கள்... அது நேரடிப்போர்தான்” என்றான். தருமன் வெளியே சென்றதும் பீமன் “யாதவனே, ஒரே வினாதான் என் நெஞ்சில் உள்ளது...” என்று தொடங்க “அறிவேன். நான் அறமில்லாது விதுரரை அழித்துவிடுவேன் என்று சொன்னது மெய்யா என்பதுதானே?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “அச்சொற்களைக் கேட்டு என் நெஞ்சு நடுங்கிவிட்டது.”

கிருஷ்ணன் புன்னகையுடன் “மூத்தவரே, ஒன்று கொள்ளுங்கள். விதுரரைப்போன்ற ஒருவர் வாழ்வதே புகழுக்காகத்தான். அறச்செல்வர் என்ற பெயர் பெறுவதற்காகத்தான். அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டமுடியாது. இழிவடைதல் என்பதை நூறு இறப்புகளுக்கு நிகராகவே அவரது அகம் எண்ணும்” என்றான் கிருஷ்ணன். “அவை வெறும் சொற்கள் அல்ல. நான் பொய் சொல்வதில்லை. ஆனால் அது இறுதிப்படி. அதைச்செய்வதற்குமுன் நான் நூறு காலடிகள் வைப்பேன். நூறு வாய்ப்புகளை அவருக்கு அளிப்பேன்.”

அர்ஜுனன் “உன் ஆற்றல் அச்சுறுத்துகிறது யாதவனே” என்றான். பீமன் “ஆம், இருமுனையும் கைப்பிடியும்கூட கூர்மையாக உள்ள வாள் போலிருக்கிறாய்” என்றான். கிருஷ்ணன் புன்னகையுடன் “மூத்தவரே, பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர் கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத் தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது. நான் நூற்றாண்டுகளாக நிலம் நிலமாகத் துரத்தப்படும் யாதவர்களின் கண்ணீரில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன்.”

அவன் விழிகளில் மிகச்சிறிய ஒளிமாற்றம் ஒன்று நிகழ்ந்ததை அர்ஜுனன் கண்டான். “இன்று கிளைவிட்டு வான் நிரப்பி நிற்கும் முதுமரங்களால் ஆன இந்தப் பெருங்காட்டுக்குக் கீழே காத்திருக்கும் விதைகள் உள்ளன. பாலைவனத்து விதைகள் மூத்தவரே. நாளை அவை மண்பிளந்து எழுந்து வரும். அவை கோருவது நான்கு இலையளவுக்கு வானம். கையளவுக்கு வேர்மண். ஒரு காட்டுத்தீ எழுந்து இந்த முதுமரங்கள் அனைத்தும் கருகியழிந்த பின்னர்தான் அவை கிடைக்குமென்றால் அதுவே நிகழட்டும்.” அவன் சொல்வது என்ன என்று அர்ஜுனனுக்குப் புரியவில்லை. ஆனால் அவன் கால்கள் நடுங்கின. அவன் மெல்ல பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

புன்னகையுடன் கிருஷ்ணன் சொன்னான் “மகதத்தால் நம் மீது ஏவப்பட்டிருக்கும் இந்த மலைமக்கள் உண்மையில் நம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டியவர்கள். பாண்டவர்களே, எப்போதானாலும் நமக்கு இயல்பான களத்துணை இந்த காட்டுமனிதர்களே. ஆனால் இன்று அவர்களை அழிக்காமல் நாம் முன்னகர முடியாது. ஏனென்றால் அவர்கள் வலிமை ஒன்றையே இறையென எண்ணுபவர்கள். அவர்களை நம்முடன் சேர்த்துக்கொள்ளவும் நாம் நம் ஆற்றலைக் காட்டியாகவேண்டும். ஒருகையில் வாளுடன் அல்லது அவர்களுடன் நாம் நட்புக்குக் கைநீட்ட முடியாது.”

“ஆம்” என்றான் பீமன். கிருஷ்ணன் சொன்னான் “அவர்களும் இந்தக்காட்டில் முளைவிட்டெழ விழையும் விதைகளே. ஆனால் அவர்களில் முதலில் எழுந்தவர்கள் பெருமரங்களில் கொடிகளாகச் சுற்றி மேலெழுந்துவிடலாமென நினைக்கிறார்கள். பிற விதைகளின் மேல் நிழலை நிறைக்கிறார்கள். அவர்கள் முதலில் அழிக்கப்படவேண்டும். இனி எந்த காட்டினத்தாரும் நம் மீது படைகொண்டுவரலாகாது.” அர்ஜுனன் “ஏகலவ்யன் வெறும் காட்டினத்தான் அல்ல. அவன் துரோணரின் மாணவன்” என்றான். “நாம் அவனை வெல்வோம்” என்றான் கிருஷ்ணன்.

“நாம் இச்சிறு படையுடன் செய்யப்போவது என்ன?” என்றான் பீமன். “காட்டில் சிம்மத்தை சிட்டுக்குருவி துரத்தித்துரத்தி கொத்துவதை கண்டிருக்கிறேன். நாம் சிறியவர்கள் என்பது நமக்களிக்கும் ஒரே ஆற்றல் நம் விரைவுதான்” என்றான் கிருஷ்ணன். “எந்தப்படையும் நகர்விட்டுக் கிளம்புவதற்கு சில முறைமைகளை மேற்கொள்ளும். படைகளுக்கு புதுக்கச்சைகளும் புதிய படைக்கலங்களும் அளிக்கப்பட்டு முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க அணிவகுப்பும் கொடியடையாளம் அளிப்பும் நிகழும். கொற்றவை ஆலயத்தில் பூசனைகள் செய்யப்படும். வீரர்கள் வஞ்சினம் உரைத்து கங்கணம் அணிந்து தங்கள் இனியவர்களிடமிருந்து விடைபெறுவார்கள். அரசர் அவரே வந்திருந்து வாழ்த்தி விடைகொடுப்பார். படைகள் கோட்டையைக் கடக்கையில் பெருமுரசுகள் அதிர நகர் மக்கள் கூடி வாழ்த்தொலி எழுப்புவார்கள்.”

“அவை தேவை இல்லை என்கிறாயா?” என்றான் அர்ஜுனன். “அவை நிகழட்டும். துரியோதனர் தலைமையில் அவை நிகழ்ந்தால் அவரது கோரிக்கையை அஸ்தினபுரி ஏற்றுக்கொண்டது என்றே மகத ஒற்றர்கள் நினைப்பார்கள். அதற்குரிய போர்முறை வகுத்தல்களும் படைதிரட்டல்களும் அங்கே நிகழும். அப்படை எப்போது நகர் விட்டு எழும் என்பதை அவர்கள் நோக்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அந்தப்படை கோட்டையைக் கடக்கும்போது நாம் மதுரைமேல் நம் கொடியை பறக்கவிட்டிருக்கவேண்டும்” என்றான் கிருஷ்ணன்.

“நமது படை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரம் வில்லவர்கள் மட்டுமே. போர்ப்படைக்குரிய கொடிகள் முரசுகள் கழைச்செய்தியாளர்கள் எதுவும் தேவையில்லை. படைகளுக்குப் பின்னால் வரும் உணவு வண்டிகள், படைக்கலவண்டிகள் தேவை இல்லை. நாம் எங்கும் தளமடிக்கப்போவதில்லை. ஓர் இரவில் கங்கையைக் கடப்போம். அடுத்த பகலில் சப்தவனம் என்னும் அடர்காட்டில் ஒளிருந்திருந்து ஓய்வெடுப்போம். அன்று அங்குள்ள கிழங்குகளும் கனிகளுமே போதுமானவை. இரண்டாம் இரவில் யமுனையில் நுழைந்து நாம் மதுராவை பிடிப்போம். நாம் அவர்களை கொல்லத்தொடங்கியபின்னர்தான் ஹிரண்யபதத்தினரே அதை அறிவார்கள்.”

“இரண்டு இரவுகளிலா?” என்றான் அர்ஜுனன். “ஆம் பெரிய மரக்கலங்கள் தேவை இல்லை. எழுவர் மட்டுமே செல்லும் மிகச்சிறியபடகுகள் மட்டும் போதும். ஆனால் ஒவ்வொரு படகிலும் மூன்று பெரிய பாய்கள் இருந்தாகவேண்டும்.” பீமன் “மூன்று பாய்களா? ஒருபாய்க்கான கொடிமரம் மட்டுமே அவற்றில் இருக்கும்” என்றான். கிருஷ்ணன் “நான் கற்றுத்தருகிறேன். ஒரே கொடிமரத்தில் மூன்று பாய்களைக் கட்டலாம். இவ்வாறு” என்று கைகளை வைத்துக்காட்டினான் “இதை காந்தள் மலரின் இதழ்கள் என்பார்கள். அடுக்குப்பாய்கள் காற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அளிக்கும். முன்னிரவில் வடக்கிலிருந்து வழியும் இமயக்காற்று அவர்களை அம்புகளைப்போல கங்கைமேல் பறக்கச்செய்யும்.” என்றான்

“மேலும் இவை காற்றை வேண்டியவகையில் திருப்பி எதிர்க்காற்றிலும் எதிர்ஒழுக்கிலும் விரையச்செய்யும்" என்றான் கிருஷ்ணன் “இவை மூன்றையும் ஒற்றைப்பெரும்பாயின் மூன்று முறுக்குகள் என்றே கொள்ளவேண்டும். எடைமிக்க நாவாயை காற்றில் எடுத்துச்செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவை. அவற்றை ஊசிபோன்ற சிறிய விரைவுப்படகில் கட்டுவோம். நாரைகளுக்கு நிகரான விரைவுடன் அவை நீரில் பறந்துசெல்லும்.”

“நமக்கு ரதங்களும் தேவையில்லை. விரைவாகச் செல்லும் குதிரைகள் மட்டும் போதும். புரவிகள் மேல் எவரும் ஏறலாகாது. அவற்றை சேணங்கள் அணிவித்து ஒன்றுடன் ஒன்று கட்டி ஒரே திரளாக ஓட்டினால் அவை விடியும்போது சிரவணபதம் என்ற காட்டை அடையும். பகலில் அவற்றை அங்கே பதுங்கியமரச் செய்யவேண்டும். மறுநாள் இரவில் அங்கு வணிகர்களின் நான்கு பெரும்படகுகளை கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன். அவற்றை கங்கையைக் கடக்கச்செய்து கிரீஷ்மவனம் என்னும் இடத்தில் இறக்குவார்கள். அவை காடுவழியாகச் சென்று பின்னிரவில் மதுராவை அடைந்துவிடும்” என்றான் கிருஷ்ணன்.

“முதற்குதிரையை இடைவெளியில்லாமல் சவுக்கால் அடித்து ஓடவைக்கவேண்டும்... பின்னால் வருபவை அதைத் தொடர்ந்தோடும். நாம் படகுகளில் படைக்கலங்களுடன் உத்தரமதுராவுக்கு நடுவே உள்ள சரபம் என்னும் குறுங்காட்டை அடையும்போது குதிரைகளும் அங்கு வந்திருக்கும்...” பீமன் “நாம் யமுனையை அடையும்போது எதிர்நீரோட்டம் வரும்” என்றான். “ஆம் குதிரைகளும் அப்போது களைத்திருக்கும். இரு விரைவுகளும் நிகராக இருக்கும்” என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் “ஆனால் குதிரைமேலிருந்து தேராளிகளுடன் விற்போர் செய்யமுடியாது” என்றான். ”ஆம், ஆனால் நாம் தேரில் வருபவர்களுடன் போர் செய்யப்போவதே இல்லை” என்றான் கிருஷ்ணன். “நாம் குதிரையில் நகரின் வடகிழக்குக் கோட்டைவாயிலை நெருங்குவோம். படகுகள் மேற்கு துறைமுகப்பை நெருங்கும். அப்போது கிழக்கு வாயில் அருகே என் வீரர்கள் நெய்யூற்றி மரத்தாலான காவல் மாடம் ஒன்றை எரியூட்டுவார்கள். எரியெழுந்ததும் எரியெச்சரிக்கை முரசு ஒலிக்கும். நெருப்பை அணைக்க ஹிரண்யபதத்தினர் கூட்டம் கூட்டமாக ஓடுவார்கள். துயிலெழுந்தவர்களாதலால் அவர்கள் ஒழுங்குகொள்ள சற்று நேரமாகும். அதற்குள் நாம் கோட்டைவாயில்கள் வழியாக உள்ளே நுழைவோம்” என்றான் கிருஷ்ணன்.

“கோட்டையை நீ அங்கு உருவாக்கியிருக்கும் ஐந்தாம்படையினர் திறந்து வைத்திருப்பார்கள் அல்லவா?” என்றான் பீமன் சிரித்தபடி. “ஆம், ஆசுரநாட்டவரின் வரலாற்றில் அத்தனை தோல்விகளும் அவர்களுக்குள் உருவாகி வரும் காட்டிக்கொடுப்பவன் ஒருவன் வழியாக நிகழ்வதாகவே இருந்துள்ளன. இம்முறையும் அவ்வாறே” என்றான் கிருஷ்ணன். “யார்?” என்றான் அர்ஜுனன். “ஏகலவ்யனின் படைத்தலைவன் சுவர்ணபாகு” என்றான் கிருஷ்ணன். “என்ன வாக்குறுதி அளித்திருக்கிறாய்?” என்றான் அர்ஜுனன். “வென்ற மதுராவை சிற்றரசாக அறிவித்து அவனுக்கே அளிப்பதாக...” என்றான் கிருஷ்ணன்.

“ஆனால்” என்று அர்ஜுனன் பேசத்தொடங்கியதுமே “அவன் போரில் கொல்லப்படுவான். ஆகவே அந்த வாக்குறுதி  நிறைவேறப்போவதில்லை” என்றான் கிருஷ்ணன். “நாம் அவனைக் கொல்வதும் வாக்குறுதி மீறல்தானே?” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நாம் அவன் நமக்கு உதவியவன் என்பதை ஏகலவ்யன் அறியும்படி நடந்துகொள்வது வாக்குறுதி மீறல் அல்ல” என்று சொல்லி கிருஷ்ணன் மீண்டும் புன்னகை செய்தான். அர்ஜுனன் அவன் புன்னகையை நோக்கிவிட்டு விழிகளை திருப்பிக்கொண்டான்.

பகுதி எட்டு : மழைப்பறவை - 5

அந்திசாயும் நேரத்தில் அஸ்தினபுரியில் இருந்து எண்பது காதத்துக்கு அப்பால் இருந்த இருண்ட குறுங்காட்டுக்குள் முந்நூறு சிறிய நீள்படகுகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவை கங்கையில் விரைந்தோடும் காவல்படகுகள். எஞ்சியவை மீன்பிடிப்படகுகள். அவற்றின் அடிப்பக்கத்தில் தேன்மெழுகு உருக்கி பூசப்பட்டிருந்தது. படகுகள் மீதும் பாய்களிலும் கருமைகலந்த தேன்மெழுகு பூசப்பட்டிருந்தது. தச்சர்கள் அவற்றின் சிறிய கொடிமரங்களை விலக்கிவிட்டு பெரிய கழிகளை துளையில் அறைந்து நீளமான கொடிமரங்களை அறைந்து நிறுத்தினர். அரக்கையும் களிமண்ணையும் உருக்கி அவற்றை அழுத்தமாகப் பதித்தனர். நூறு தச்சர்களும் மீனவர்களும் பணியாற்றும் ஓசை காட்டுக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

மூடப்பட்ட சிறிய வண்டிகளில் வில்லம்புகளும் வாள்களும் நீண்ட பிடிகொண்ட வேல்களும் வந்து கொண்டிருந்தன. கவசங்களை எடுத்து தனித்தனியாகப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தனர் வீரர்கள். போருக்கு முன் வீரர்களிடம் உருவாகும் கூரிய பார்வையும் செயல்விரைவும் அவர்களிடமிருந்தது. ஆகவே அங்கே தேவைக்குமேல் சொற்களே பேசப்படவில்லை. பீமன் மாலைமுதலே அங்கிருந்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தான். நகுலனும் சகதேவனும் சேணம்பூட்டப்பட்ட போர்க்குதிரைகளுடன் கங்கை ஓரமாக குறுங்காடுகள் வழியாக அந்தியிலேயே கிளம்பிச்சென்றிருந்தனர்.

கிருஷ்ணன் வரைந்து காட்டிய வடிவில் படகுகளில் பாய்மரங்கள் கட்டப்பட்டன. மூன்றுபாய்மரங்களும் இணைந்து காந்தள் இதழ்கள் போல குவிந்திருந்தன. ஒன்றில் பட்ட காற்று சுழன்று இன்னொன்றைத் தள்ளி மீண்டும் சுழன்று மூன்றாவது பாயில் விழும்படி அமைக்கப்பட்டிருந்தது. மூன்றும் இணைந்து ஒரே விரைவாக எப்படி ஆகும் என்று தச்சர்களுக்கு புரியவில்லை. பாய்களை கொடிமரத்தில் கட்டி கொடிமரத்தை நூற்றுக்கணக்கான சிறிய கயிறுகளால் படகின் உடலெங்கும் பிணைத்திருக்கவேண்டும் என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான். ஆகவே படகுகள் விரிந்த பாய்களுடன் சிலந்திவலையில் சிக்கிய வண்ணத்துப்பூச்சிபோல இருந்தன.

கிருஷ்ணன் “பாயிலிருந்து விசை கொடிமரத்துக்குச் செல்லும். படகு கொடிமரத்துடன் நன்கு பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையேல் காற்றின் விரைவில் விசைதாளாது படகு உடைந்து விலகிவிடும்" என்றான். “அவ்வண்ணமென்றால் நாம் வலுவான வடங்களால் பிணைக்கவேண்டுமல்லவா” என்றான் பெருந்தச்சன் கலிகன். “இல்லை கலிகரே, எப்போதும் ஏதேனும் ஒருசில வடங்களின்மேல்தான் கொடிமரத்தின் விசை இருக்கும். அவை மூன்றுபாய்களின் மேல் காற்று அளிக்கும் அழுத்தத்தை தாளமுடியாமல் அறுந்துவிடும். ஏராளமான சிறிய கயிறுகள் என்றால் எத்திசையிலானாலும் விசையை பகிர்ந்துகொள்ள பல கயிறுகள் இருக்கும்” என்றான் கிருஷ்ணன்.

கலிகர் “நீர் மீனவரா?” என்றான். “இல்லை” என்றான் கிருஷ்ணன். “நான் இதை முன்னரே கண்டிருக்கிறேன். இது கலிங்கமாலுமிகளின் வழி. இதை எங்கு கற்றீர்?” என்றான் கலிகன். கிருஷ்ணன் புன்னகைசெய்தான். “சிறியகயிறுகளை அமைப்பதில் ஒரு பின்னல் கணக்கு இருக்கிறது. இல்லையேல் சில கயிறுகள் அறுபட்டு அந்த அறுபடலின் விசையே அனைத்தையும் அறுத்துவிடும்” என்றான் கலிகன். “நான் கற்பிக்கிறேன்” என்று கிருஷ்ணன் நிலத்தில் அமர்ந்து வரைந்து காட்டினான்.

அந்தியில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் குதிரைகளில் வந்துசேர்ந்தபோது வீரர்கள் பணிகளை முடித்து காத்திருந்தனர். அங்கே பந்தங்கள் ஏதுமிருக்கவில்லை. அந்தியிருளில் விழியொளியாலேயே அனைத்தும் தெரிந்தன. கிருஷ்ணன் இறங்கி ஒவ்வொரு படகையும் சென்று பார்த்தான். கயிறுகளை இழுத்தும் கொடிமரத்தை அசைத்தும் பார்த்தபின் திரும்பி வந்தான். அர்ஜுனன் கங்கையின் நீர் கரிய ஒளிப்பெருக்காக சென்றுகொண்டிருப்பதை நோக்கினான். வானில் விண்மீன்கள் பெருகிக்கொண்டிருந்தன. கிருஷ்ணன் அருகே வந்து வானை நோக்கியபின் “இன்னும் சற்றுநேரத்தில் பனிமலைக் காற்று வீசத்தொடங்கும்” என்றான். துணைத்தளபதி நாகசேனன் “ஆம் இளவரசே” என்றான்.

அவர்கள் காத்திருந்தனர். இருளுக்குள் ஒவ்வொருவரும் நிழலுருக்களாகத் தெளிந்து தெரிவதை அர்ஜுனன் நோக்கினான். நிழலுருக்களிலேயே ஒவ்வொருவரையும் துல்லியமாக அடையாளம் காணமுடிந்தது. பீமன் எதையோ வாயிலிட்டு மெல்லத் தொடங்கியபடி கைகளை தட்டிக்கொண்டான். கிருஷ்ணன் தன் கையில் இருந்த சிறிய பெட்டிக்குள் இருந்து ஒரு அரக்குத்துண்டை எடுத்தான். அது வெளிவந்ததும் மெல்ல ஒளிவிடத் தொடங்கியது. பின்னர் மின்மினி போல குளிர்ந்த இளஞ்சிவப்பு ஒளியாக ஆகியது.

“இமயமலையில் உள்ள ஒரு கொடியின் பாலால் ஆன அரக்கு இது. அதற்கு ஜ்யோதிர்லதை என்று பெயர். இரவில் ஒளிவிடும் உள்ளொளி கொண்டது. நீரில் நனைந்தாலும் ஒளிவிடும் நெருப்பு” என்று கிருஷ்ணன் சொன்னான். அதை அவன் அசைத்ததும் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய படகுகளுக்கு அருகே சென்று நின்றனர். மெல்லிய மூச்சொலிகளே செடிகள் நடுவே காற்று ஓடும் ஓசைபோல ஒலித்தன. படகுகளில் படைக்கலங்களும் கவசங்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.

இரண்டாம் முறை கிருஷ்ணன் கையசைத்ததும் வீரர்கள் மூங்கில் உருளைகள் மேல் வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளைத் தள்ளி கங்கையில் இறக்கினார்கள். கங்கையில் அவை இறங்குவது இருளில் எருமைகள் இறங்குவதுபோல ஒலித்தது. நீரில் துடுப்புகளால் தள்ளி ஒழுக்குமையத்தை அடைந்தனர். தொடர்ந்து படகுகள் இறங்கிக்கொண்டே இருந்தன. முன்னால் சென்ற படகு அப்பால் சிறிய கட்டை நீரில் மிதப்பதுபோலத் தெரிந்தது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒரே படகில் ஏறிக்கொண்டனர். அவர்கள் நீரில் இறங்கிய பின்னர் பீமனின் படகு நீரில் இறங்கியது.

கிருஷ்ணன் மீண்டும் அக்னிகந்தியை ஒருமுறை சுழற்றியதும் அனைவரும் பாய்களின் கட்டுகளை அவிழ்த்தனர். கங்கைக்குமேல் இணையான வான் நதியாகச் சென்றுகொண்டிருந்த காற்றுப்பெருக்கு பாய்களை வெறியுடன் அள்ளி விரித்து எடுத்துக்கொண்டது. குழிந்து புடைத்த பாய்களின் இழுவிசையில் கொடிமரங்களின் ஆப்புகள் முனகின. கயிறுகள் உறுமியபடி விசை கொண்டன. பிரம்மாண்டமான யாழ் ஒன்றில் இருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். இருளில் முடிவில்லாத ஆழத்தில் குப்புற விழுந்துகொண்டே இருப்பது போல அவர்கள் கங்கையில் சென்றனர்.

படகுகளுக்கு அத்தனை விரைவு இருக்கக்கூடும் என்பதையே அர்ஜுனன் உணர்ந்ததில்லை. கண்கள் காது மூக்கு என அனைத்து உறுப்புகளும் முற்றிலும் செயலிழந்துவிட்டன என்று தோன்றியது. இருளே காற்றாக மாறி அவற்றை அடைத்துக்கொண்டுவிட்டது. மூச்சு நெஞ்சுக்குள் பெரும் எடையுடன் அடைத்து விலாவை விம்மச்செய்தது. உடலில் சுற்றிக்கட்டியிருந்த ஆடைகள் தோல் கிழிபட்டு பறக்கத் துடிப்பதுபோல அதிர்ந்தன. படகின் தீபமுனையால் கிழிபட்டுத் தெறித்த நீர்த்துளிகள் புயல்காற்றில் அள்ளி வீசப்படும் மழைத்துளிகள் போல சீறிச்சென்றன, முகத்திலும் உடலிலும் கூழாங்கற்களை வீசியதுபோல அறைந்து சிதறின.

இருபக்கமும் இருள் மெழுகுநதி போல பின்னால் சென்றுகொண்டிருந்தது. வானில் அத்தனை விண்மீன்களும் உருகி ஒன்றான மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. அருகே வரும் படகுகள் தெரியவில்லை. படகில் அருகே இருப்பவனையும் உணரமுடியவில்லை. தன்னந்தனிய இருள்பயணம். பாதாளத்துக்கான வழி அத்தகையது என அவன் அறிந்திருந்தான். இருளின் விரைவு மட்டுமே கொண்டுசெல்லக்கூடிய ஆழம் அது. கங்கை ஒரு மாபெரும் நாகம் என்ற எண்ணம் உடனே வந்தது. அதன் படம் நோக்கி வழுக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டான். கரையோரமாக எங்கோ ஒரு சிதைவெளிச்சம் தெரிந்தது. அதன் செம்பொட்டு எரிவிண்மீன் போல கடந்துசென்றது.

பின்னர் கங்கையில் எதிர் அலைகள் வரத்தொடங்கின. படகுகள் விரைவழிந்து பெரிய அலைகளில் எழுந்து அமைந்தன. கிருஷ்ணனிடம் “எங்கு வந்திருக்கிறோம்?” என்றான் அர்ஜுனன். “கங்கையின் முதல் வளைவு... மச்சபுரி அருகே” என்றான் கிருஷ்ணன். “அத்தனை விரைவாகவா?” என்று அர்ஜுனன் சொன்னான். “நீ நேரத்தை அறியவில்லை...” என்றான் கிருஷ்ணன். வானத்தைத்திரும்பி நோக்கி “புரவிகள் சோமவனம் வந்து சேர்ந்திருக்கும் இந்நேரம். எரியம்பு அனுப்பச் சொல்லியிருந்தேன்” என்றான். “முன்னதாக வந்துசேர்ந்திருந்தால் நாம் எரியம்பை பார்த்திருக்க முடியாதே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆகவேதான் இந்த இடத்துக்கு நாம் வரும்போது எரியம்பு எழும்படி சொல்லியிருந்தேன்” என்றான் கிருஷ்ணன்.

பேசிக்கொண்டிருக்கையிலேயே வானில் எரியம்பு ஒன்று எழுந்து மறைந்தது. “வந்துவிட்டன... குதிரைகளை நீர் அருந்தவிட்டுவிட்டு மீண்டும் கிளம்புவார்கள்” என்றபின்னர் கிருஷ்ணன் அடுத்த எரியடையாளத்தைக் கொடுத்தான். அனைத்துப்படகுகளிலும் பாய்களைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து அவற்றின் கோணத்தை மாற்றினார்கள். பாய்கள் நடனத்தில் கைகள் அசைவதுபோல வளைந்தன. காற்று பாய்களை அறைந்து வளைத்து படகுகளைத் தூக்கி பக்கவாட்டில் தள்ளி நீர்ப்பெருக்கின் ஓரம் நோக்கி திருப்பிக் கொண்டுசென்றது.

“அடுத்த பெருக்குக்குள் நுழைகிறோமா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இங்கே நீரொழுக்கு குறைவு. கங்கை சமவெளியை அடைந்து விரிகிறது. ஆனால் நாம் காற்றின் விசையை பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்றான் கிருஷ்ணன். பாய்கள் தோள்கோர்த்துப் போரிடும் மல்லர்கள் போல ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு உச்சவிசையில் அசைந்தன. கயிறுகள் முனகின. படகுகள் கங்கையின் எதிரலைகள் மேல் எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து முன்னேறின.

விடிவெள்ளி எழுந்ததும் கிருஷ்ணன் கரையை நோக்கிக்கொண்டிருந்தபின் “சப்தவனம்” என்றான். அவனுடைய ஒளிச்சைகை தெரிந்ததும் வீரர்கள் படகுகளின் பாய்களைக் கட்டிய கயிறுகளை அவிழ்த்து இழுத்து திருப்பி திசைமாற்றினர். படகுகள் மீன்கூட்டம் போல ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு வளைவாக கரையோரக் காட்டை அடைந்தன. முதலில் கிருஷ்ணனின் படகு கரையை அடைந்தது. இறங்கி இடுப்பளவு நீரில் குதித்து படகை இழுத்து மணல்கரையில் வைத்துவிட்டு “படகுகளை இழுத்து கரைசேர்த்து தோளிலெடுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழையுங்கள். கரையிலோ நீரிலோ படகுகள் நிற்கலாகாது” என்றான்.

காட்டின் இலைச்செறிவுக்குள் படகுகளை சேர்த்துவிட்டு அவர்கள் உள்ளே சென்று மரத்தடிகளில் அமர்ந்தனர். சிலர் சென்று காய்களையும் கிழங்குகளையும் சேர்த்துக் கொண்டுவந்தனர். “பச்சையாகவே உண்ணுங்கள். புகை எழக்கூடாது” என்றான் பீமன். உண்டபின் அவர்கள் காட்டுக்குள் சருகுகளை விரித்துப்படுத்து துயின்றனர். காவல் வீரர்கள் முறைவைத்து மரங்களின் மேல் அமர்ந்து கங்கையையும் மறுபக்கம் காட்டையும் கண்காணித்தனர்.

இரவெழுந்து விண்மீன்கள் வெளிவரத்தொடங்கியதும் வீரர்கள் மீண்டும் படகுகளை சுமந்து கொண்டுசென்று நீரிலிட்டனர். படகுகள் ஒவ்வொன்றாக நீர்ப்பெருக்கை அடைந்தபோது எரியம்பு வானில் எழுந்தது. “குதிரைகள் படகுகளில் ஏறிக்கொள்கின்றன” என்றான் கிருஷ்ணன். பீமன் அர்ஜுனனிடம் “இத்தனை செயல்களை ஒருங்கிணைத்து போரை நடத்துவது எப்போதுமே நல்ல வழி அல்ல. ஒன்று தவறினாலும் அனைத்தும் பிழையாகும்” என்றான். கிருஷ்ணன் “தவறாது” என்றபின் புன்னகை செய்தான்.

அவர்களின் படகுகள் வளையும் பறவைகளின் சிறகுகள் போல பாய்களைச் சரித்து யமுனை கங்கையைத் தொடும் நீர்முனை நோக்கி சென்றன. எதிரலைகளில் படகுகள் எழுந்து எழுந்து விழுந்தன. “தழுவுமுகத்தின் பேரலைகளைக் கடந்துவிட்டால் விரைவு கொள்ளமுடியும்” என்றான் கிருஷ்ணன். அலைகளில் இருந்து சிதறிய நீர் முகத்தில் அறைந்தது. அவர்களனைவரும் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். யமுனையின் நீரில் மழைச்சேற்றின் வாசம் இருந்தது.

திரிவேணி முகத்திற்கு அப்பால் தொலைவில் மகதத்தின் சிறிய காவல்கோட்டையின் மீது பந்தங்களின் ஒளி தெரிந்தது. கங்கைப்பெருக்கில் ஆடியபடி நின்றிருந்த மகதத்தின் பெருங்கலங்களின் சாளரங்கள் வழியாகத்தெரிந்த வெளிச்சம் மிதக்கும் நகரம் போல தோற்றமளித்தது. இருளுக்குள் சிறிய படகுகள் செல்வதை அவர்கள் அறிய வாய்பில்லை. மேலும் பாய்களும் கருமையாக இருந்த அவற்றை கங்கையின் பனிப்புகைப்பரப்பில் சற்றுத்தொலைவிலேயே கூட காணமுடியவில்லை. ஆயினும் அனைவரும் அந்த வெளிச்சங்களை நோக்கியபடி நெஞ்சு அறைய கடந்துசென்றனர்.

யமுனையின் நீர்வெளியில் முழுமையாக நுழைந்துகொண்டதும் கிருஷ்ணன் அடுத்த எரியடையாளத்தை அளித்தான். படகுகளின் பாய்கள் மீண்டும் மாற்றிக்கட்டப்பட்டன. அதுவரை சாய்ந்து சென்றுகொண்டிருந்த படகுகள் எழுந்து நேராக விரையத் தொடங்கின. அலைகளில் அவை ஏறியமர்ந்து செல்ல அர்ஜுனன் தன் இடையை படகுடன் சேர்த்துக்கட்டியிருந்த தோல்பட்டையை விடுவித்துக்கொண்டான். இருபக்கமும் இருள் நிறைந்திருந்த கரையில் எந்த அடையாளமும் கண்களுக்கு தென்படவில்லை. அவன் எண்ணத்தை அறிந்தவன்போல கிருஷ்ணன் “நான் நன்கறிந்த நதிக்கரை... அங்கே நிற்கும் மரங்களைக்கூட என்னால் சொல்லமுடியும்” என்றான்.

அவர்கள் ஒரு வளைவை அடைந்ததும் அடுத்த எரியடையாளத்தை கிருஷ்ணன் அளித்தான். படகுகள் பாய்களை சுருக்கிக்கொண்டன. விரைவழிந்து ஒவ்வொன்றாக கரைநோக்கிச் சென்றன. செல்லச்செல்ல அவை ஒன்றுடன் ஒன்று நெருங்கி முகம் முட்டிக்கொண்டன. படகிலிருந்த வீரர்கள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டனர். முதல்படகு கரையோரமாகச் சென்றபோது அங்கே ஒரு எரியடையாளம் தெரிந்து மறைந்தது. அவர்கள் அணுகியபோது அங்கே நின்றிருந்த யாதவர்களின் சிறிய படை ஒன்று சிறியபடகுகளுடன் நீரில் குதித்து அணுகிவந்தது. அவர்கள் கொண்டு வந்த வடத்தை பற்றிக்கொண்டு முதல்படகு கரையணைந்தது.

படகுகள் ஒவ்வொன்றாக நெருங்கி ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன. படகுகளாலான ஒரு கரை உருவானது. அவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டி அவற்றின்வழியாக வீரர்கள் பொருட்களை அவிழ்த்து கரைசேர்க்கத் தொடங்கினர். கவசங்களை அணிந்துகொண்டு தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டனர். ஓரிரு சொற்களில் பேசிக்கொண்டனர். “இங்கிருந்து நோக்கினால் மதுராவின் கோட்டை தெரியும்” என்றான் கிருஷ்ணன். “புரவிகள் கிளம்பினால் அவற்றின் குளம்போசையை அவர்கள் கேட்பதற்குள் நாம் நெருங்கிவிடுவோம்.”

அவர்கள் குறுங்காட்டுக்குள் அமர்ந்துகொண்டனர். பொங்கிசென்றுகொண்டிருந்த காற்றில் சற்றுநேரத்திலேயே தலைமுடியும் ஆடைகளும் காய்ந்துவிட்டன. இனியகளைப்பு ஒன்று அர்ஜுனனை ஆட்கொண்டது. ஒருபோதும் அத்தகைய அமைதியை அவன் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு கணமும் தித்திப்பதுபோல தோன்றியது. மென்மையாக, மிக இதமாக காலத்தில் வழுக்கிச் சென்றுகொண்டிருப்பதுபோல. ஒரு சொல்கூட இல்லாமல் அகம் ஒழிந்து கிடந்தது. அவன் அதையே நோக்கிக் கொண்டு வேறெங்கோ இருந்தான். எத்தனை அமைதி என்று அவன் சொல்லிக்கொண்டான். அதை வேறெவருக்கோ சுட்டிக்காட்டுவது போல. எத்தனை அமைதி என்பது ஒரு நீண்ட சொல்லாக இருந்தது. அந்தச்சொல்லின் ஒரு முனை முதல் மறுமுனை வரை அவன் சென்றுகொண்டே இருந்தான்.

அவன் மெல்லிய ஒலி ஒன்றைக்கேட்டு விழித்துக்கொண்டான். கிருஷ்ணன் அருகே நின்றுகொண்டிருந்தான். “என்ன?” என்றான் அர்ஜுனன். “எரியம்பு... குதிரைகள் நெருங்கிவிட்டன.” அர்ஜுனன் திரும்பி படைவீரர்களைப் பார்த்தான். மரத்தடிகளில் வெவ்வேறு வகையில் படுத்து அவர்களெல்லாம் துயின்றுகொண்டிருந்தனர். “எழுப்பலாமா?” என்றான். “இல்லை. புரவிகளை மிகமெல்ல கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன். அவை வரும் குளம்போசை கேட்கலாகாது. மேலும் மெல்ல நடப்பதே அவற்றுக்குரிய ஓய்வும் ஆகும்...”

அர்ஜுனன் மீண்டும் போர்வீரர்களை நோக்கிவிட்டு “நன்றாகத் துயில்கிறார்கள்” என்றான். “நானும் தூங்குவேன் என்று எண்ணவேயில்லை.” கிருஷ்ணன் “போர்வீரர்கள் பொதுவாக களத்தில் நன்றாக உறங்குவதுண்டு” என்றான். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “பிற இடங்களில் அவர்களின் அகம் சிதறிப்பரந்துகொண்டே இருக்கும். இங்கே அவர்கள் முழுமையாகக் குவிகிறார்கள். போரில் ஒருவன் தன் முழு ஆற்றலையும் அறிகிறான். முழுமையாக வெளிப்படுகிறான். ஆகவேதான் போர் ஒரு பெரும் களியாட்டமாக இருக்கிறது. எதிரிகள் இல்லாதபோது போரை விளையாட்டாக ஆக்கி தங்களுக்குள் ஆடிக்கொள்கிறான்.”

அர்ஜுனன் புன்னகையுடன் “ஆனால் அவர்களின் இறப்பல்லவா அருகே இருக்கிறது?” என்றான். கிருஷ்ணன் “ஆம், அது அவர்களின் வாழும் காலத்தை இன்னும் குவிக்கிறது. இன்னும் பொருள் உடையதாகவும் அழுத்தமேறியதாகவும் ஆக்குகிறது...” என்றான். சிரித்து “இதோ இந்தப் படகுகளின் பாய்கள் போன்றது மானுடனின் உள்ளம். பிரபஞ்சம் பெருங்காற்றுகளின் வெளி. இப்போது பாய் அவிழ்க்கப்பட்டுவிட்டது. எண்ணங்கள் விலகும்போது மனிதர்கள் அடையும் ஆறுதல் எல்லையற்றது. அந்த நிறைவு அவர்களை கைக்குழந்தைகளாக்குகின்றன. கைக்குழந்தைகள் தூங்குவதை விரும்புபவை” என்றான்.

அர்ஜுனன் மீண்டும் வீரர்களை நோக்கினான். அவர்கள் கைக்குழந்தைகளைப் போலத்தான் தோன்றினார்கள். ஒருவரை ஒருவர் தழுவி ஒடுங்கி வாயால் மூச்சுவிட்டு மார்பு ஏறியிறங்க துயின்றார்கள். அத்தனை முகங்களும் தெய்வமுகங்கள் போல அமைதியால் நிறைந்திருந்தன. “இது ஒருவகை யோகம்” என்றான் கிருஷ்ணன். “யோகியர் நாடும் நிலையின் ஒருதுளி. கடும் வலிக்குப்பின்பு சற்று ஆறுதல் வரும்போதும் மனிதர் இந்த நிறைவை அறிகிறார்கள்.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “மனிதன்! ஒரு துளித் தேனுக்காக முழுத்தேனீக்களின் கொட்டுகளையும் வாங்கிக்கொள்ளும் கரடியைப்போன்றது இந்த எளிய உயிர்... இதை எண்ணி நீ வருந்துவதுண்டா?” என்றான். கிருஷ்ணன் “புன்னகைப்பதுண்டு” என்றான்.

ஆற்றின்மீது பின்னிரவின் விண்மீன்கள் விழியறியாமல் இடம் மாறிக்கொண்டிருந்தன. குளிர்காற்று எழுந்து பாசிமணத்துடன் சூழ்ந்து கடந்துசெல்ல குறுங்காடு ஓசையிட்டது. கோட்டையில் இருந்து ஒரு சிறிய எரியம்பு எழுந்து அணைவதை கிருஷ்ணன் நோக்கி “சுவர்ணபாகு கோட்டைவாயிலைத் திறந்துவிட்டான்” என்றான். அர்ஜுனன் சிரித்து “எளியமனிதன்!” என்றான் . கிருஷ்ணன் “ஆம், ஆசை கொண்டவன். ஆட்சியும் அதிகாரமும் எளிதென்று எண்ணும் எளிய சிந்தையும் கொண்டவன். ஹிரண்யபதத்தின் ஏழுபழங்குடிகளில் இரண்டாவது குடிகளின் தலைவன் அவன்.”

“பழங்குடிகள் திரண்டு அரசுகளை அமைப்பதிலுள்ள பெரும் இடர் இதுவே” புன்னகையுடன் கிருஷ்ணன் சொன்னான். “அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அரசர்கள் என்றே எண்ணுகிறார்கள்.” அர்ஜுனன் “ஆம், அதை நானும் அறிந்திருக்கிறேன்... அவர்களின் குடிகள் ஒருங்கு திரள்வதேயில்லை. ஒருபோதும் அவர்களிடம் குலப்போர்கள் முடிவதில்லை” என்றான்.

“அரசுகளாக திரண்டுள்ள பிறரிடம் அவர்களிடமில்லாத ஒன்று உள்ளது. அது கருத்துக்களின் அதிகாரம். அவர்களிடமிருப்பது பழக்கங்களின் அதிகாரம் மட்டுமே. அதை சடங்குகளாக்கி வைத்திருக்கிறார்கள். கருத்துக்களை உருவாக்கி நிலைநிறுத்தும் ரிஷி என்பவனை அடைந்த பின்னரே மானுடம் திரண்டு சமூகங்களாயிற்று. அறம் என்றும் நீதி என்றும் அன்பு என்றும் கருணை என்றும் ரிஷிகள் உருவாக்கிய கருத்துக்களில் ஒன்றே அரசன் என்பது" கிருஷணன் சொன்னான்.

“அதை மாற்றமுடியாததாக, அவர்கள் முன்வைத்தமையாலேயே சமூகங்கள் அரசனை மையமாக்கி நிலைகொண்டன. அரசனின் அதிகாரம் ஆதிதெய்வீகம் என்பதனால்தான் அவனுக்குக் கீழே குடிகள் பணிகின்றன. ஷத்ரிய நாடுகளுக்கும் பிறவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுவே. ஷத்ரிய நாடுகளில் அரசனை குடிகள் மாற்றமுடியாது. அரசனை மக்கள் மாற்றும் நிலை கொண்ட சமூகங்கள் ஒருபோதும் உள்பூசல்களைக் களைந்து போர்ச்சமூகங்களாக ஆக முடியாது” என்றான். “இதை காலத்தில் முன்னதாக உணர்ந்துகொண்டவைதான் ஷத்ரிய அரசுகள் என்றாயின.”

“யாதவ சமூகங்கள் இன்றும் அரசனை மாற்றும் வல்லமை கொண்டவை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆகவேதான் நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன். மதுராவை கைப்பற்றியபின்னரும் இங்கே நான் அரசமைக்கப்போவதில்லை. அங்கே கூர்ஜரத்தின் கடற்கரையில் ஒரு அரசை அமைப்பேன். அது முழுக்கமுழுக்க என் அரசு. அதன்மேல் என் அதிகாரம் எவராலும் மாற்றக்கூடியது அல்ல. யாதவர்கள் அமைக்கப்போகும் ஷத்ரிய அரசு அது” என்றான் கிருஷ்ணன்.

“அப்படியென்றால் ஷத்ரியர்கள் பிறகுடிகள் அரசமைப்பதைத் தடுப்பது இயல்பானதல்லவா? ஏனென்றால் அவர்களின் நெறிப்படி அவர்கள் மட்டுமே நாடாளும் இறையருள் கொண்டவர்கள். நாடாளமுயலும் பிறர் இறையருளை மீறுபவர்கள், ஆகவே 'தண்டிக்கப்படவேண்டியவர்கள்'" என்றான் அர்ஜுனன். “ஆம், அவர்கள் தங்கள் குலக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.. ஆகவே அவர்களை அழித்து அந்த அழிவின்மேல் புதிய ஷத்ரியர்கள் உருவாகி வந்தாகவேண்டியிருக்கிறது” என்றான் கிருஷ்ணன்.

“நீ ஒரு பேரழிவைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம் ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அக்கல்தொட்டியை உடைத்து எறிந்தாகவேண்டியிருக்கிறது. அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.

வானில் மீண்டும் ஒரு எரியம்பு தெரிந்தது. “வந்துவிட்டார்கள்” என்று சொல்லி கிருஷ்ணன் கைகாட்டினான். பீமன் எழுந்து படைவீரர்களை எழுப்பத் தொடங்கினான். அவர்கள் ஆழ்ந்த துயிலுக்குபிந்தைய புத்துணர்ச்சியுடன் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பினர். முகங்களில் தெரிந்த மலர்ச்சியை அர்ஜுனன் மாறிமாறி பார்த்தான். கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் எழுந்து நின்றனர். குறுங்காட்டுக்குள் இருந்து முதல் குதிரை தலையை அசைத்தபடி கால்களை தாளத்துடன் எடுத்துவைத்து வெளிவந்ததும் மெல்லிய ஒலி எழுந்தது படைகளிடமிருந்து.

“நிற்கவேண்டியதில்லை... குதிரைகளில் ஏறிக்கொள்ளுங்கள்” என்று பீமன் ஆணையிட அவர்கள் பாய்ந்து ஏறிக்கொண்டனர். மிக விரைவிலேயே அவர்கள் அனைவரும் குதிரைகளில் ஏறிக்கொள்ள கண்ணெதிரே சீரான குதிரைப்படை ஒன்று உருவாகி நின்றது. கிருஷ்ணன் நெருப்புக்காக எதிர்பார்க்கிறான் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். குதிரைகளின் மெல்லிய மூச்சொலிகளும் செருக்கடிப்பொலிகளும் சேணங்களின் உலோகங்கள் குலுங்கும் ஒலிகளும் சில இருமலோசைகளும் மட்டும் புதர்க்காட்டுக்குள் இருளில் கேட்டுக்கொண்டிருந்தன. குதிரை ஒன்று சிறுநீர் கழித்த வாசனை காற்றில் எழுந்து வந்தது. நாலைந்து குதிரைகள் அவ்வாசனைக்கு மெல்ல கனைத்தன.

படைவீரர்கள் ஒவ்வொருக்கும் மதுராநகரின் வரைபடம் முன்னதாகவே அளிக்கப்பட்டு அவர்கள் செய்யவேண்டியது தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருபதுபேர் கொண்ட பத்து குழுக்களாகப் பிரிந்து அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த இடங்களை தாக்கவேண்டும். அவை பெரும்பாலும் தூங்கும் வீரர்களின் கூடாரங்களும் குடில்களும். “இரவில் நாம் எத்தனைபேர் என்று அவர்கள் அறியமுடியாது. படைக்கலங்களை எடுக்கவோ குதிரைகளில் சேணம்பூட்டவோ அவர்களுக்கு நேரமிருக்காது. கொன்றுகொண்டே செல்லுங்கள்... அவர்கள் அச்சத்தில் இருந்து மீண்டுவிட்டால் நாம் அனைவரும் கொல்லப்படுவோம்” என்று அவர்களிடம் ஆணையிடும்போது யாதவன் சொன்னான்.

அப்போது அவர்களின் விழிகளில் தெரிந்தது என்ன என்று அவனால் உணரமுடியவில்லை. “அது ஆவல்தான்” என்றான் கிருஷ்ணன். “கொல்வதற்கான ஆணை எப்போதும் வீரர்களுக்குள் இருந்து தொன்மையான வனதெய்வங்களை எழுந்துவரச்செய்கிறது. அதன்பின் அவை படைக்கலங்களை எடுத்துக்கொள்ளும்.” அர்ஜுனன் “அவர்களும் கொல்லப்படலாம் என்று சொல்வது அச்சுறுத்துவது ஆகாதா?” என்றான். “இல்லை. கொல்வதற்கான சிறிய அறத்தடை அவர்களுக்கு இருக்கக்கூடும். கொல்லாவிட்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வலுவான நியாயம் அதைக் கடக்க அவர்களுக்கு உதவும்...” சிரித்தபடி “பாண்டவனே, போர்கள் படைக்கலங்களால் மட்டுமல்ல... சொற்களாலும்தான் செய்யப்படுகின்றன” என்றான்.

படைவீரர்கள் சிலர் அவர்கள் வந்த படகுகளில் கொடிக்கம்பங்களில் பந்தங்களைக் கட்டி அவற்றில் மீனெண்ணையை ஊற்றத்தொடங்கினர். கிருஷ்ணன் வானை நோக்கியபின் “பந்தங்கள்” என்றதும் வீரர்கள் படகுகளில் கட்டப்பட்ட பந்தங்களைக் கொளுத்தத் தொடங்கினர். படகுகளின் பந்தங்கள் அனைத்தும் எரியத் தொடங்கியதும் நீர்ப்பிம்பங்களுடன் சேர்ந்து காட்டுத்தீபோல நெளிந்தன.

கிருஷ்ணன் தன் படைக்கலப் பையில் இருந்து தட்டு போன்ற ஒன்றை எடுத்தான். அது ஒரு சக்கரம் என்று கண்டதும் அர்ஜுனன் “இது...” என்றான். “என் படைக்கலம்...” என்றபின் புன்னகையுடன் அதனுள் இருந்து ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சக்கரங்களை பிரித்தெடுத்தான். “போர்க்களத்தில் சக்கரத்தை எவரும் கையாண்டு நான் கண்டதில்லை” என்றான் அர்ஜுனன். “பார்!” என்றபடி கிருஷ்ணன் கண் தொட முடியாத விரைவுடன் அச்சக்கரங்களை செலுத்தினான்.

முதற்சக்கரம் யாழை மீட்டிய ஒலியுடன் காற்றில் சுழன்றுசென்று ஒருபடகின் கயிற்றைவெட்டியது. அடுத்தடுத்த ஏழு சக்கரங்களும் படகுகளின் இணைப்புகளை வெட்டின. வெட்டியவை சுழன்று ரீங்கரித்தபடி மீண்டும் அவன் கைகளுக்கு வந்து மீண்டும் சென்றன. அவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட பறவைகள் போல அவை கைக்கும் படகுகளுக்குமாக சுழன்றுகொண்டிருந்தன. சிலகணங்களுக்குள் அனைத்துப்படகுகளும் விடுபட்டு யமுனையின் பெருக்கில் செல்லத் தொடங்கின. “ஒருபோதும் ஓயாத அம்பறாத்தூணி போல” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “இவை வெயிலில் அழகிய வெள்ளி மீன்கள் போலப் பறக்கும். என் தமையனார் இதற்கு சுதர்சனம் என்று பெயரிட்டிருக்கிறார்” என்றான் கிருஷ்ணன்.

படையின் முகப்புக்குச் சென்று நின்று நோக்கியபின் செல்வோம் என்று கிருஷ்ணன் கைகாட்டினான். அவன் குதிரை மெல்ல முன்னால் சென்றது. அர்ஜுனன் அவனுக்குப்பின்னால் வலப்பக்கமாக தன் குதிரைமேல் வில்லுடன் சென்றான். அவர்களுக்குப்பின்னால் குதிரைப்படை குளம்புகள் புற்கள்மேல் பதியும் ஒலியுடன் மெல்ல வந்தது. ஈரமான முரசுத்தோலில் கோல்படும் ஒலி என்று அர்ஜுனன் நினைத்தான். அந்த உவமையை அவனே வியந்துகொண்டான். குழந்தைகள்தான் அத்தனை துல்லியமாக ஒப்பிடும். அப்போது அனைத்துப் புலன்களும் துல்லியமாக இருந்தன. ஒவ்வொன்றிலும் அவற்றுக்கான தெய்வம் வந்து குடியேறியிருந்தது. செவிகள் அங்கே எழுந்த ஒவ்வொரு ஒலியையும் தனித்தனியாகக் கேட்டன. நாசி அனைத்து வாசனைகளையும் அறிந்து அப்பொருளை காட்டியது. கண் இருளில் நிழலுருக்களாக நின்ற ஒவ்வொரு மரத்தையும் அடையாளம் கண்டது.

மதுராவின் கோட்டை தெரியத் தொடங்கியது. அது எத்தனை உகந்த இடம் என்று அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். அங்கிருந்து மதுராவின் வடக்குக் கோட்டைவாயில் மிக அருகே என்பதுபோலத் தெரிந்தது. உயரமற்ற முட்புதர்களும் சிறிய மரங்களும் மட்டும் கொண்ட நிலம் சீராகச் சரிந்து சென்று கோட்டையை அடைந்தது. புரவிகள் கிளம்பினால் கோட்டைவரை நிற்கவே முடியாமல் பாயத்தான் முடியும். கோட்டைமேல் சில பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நிழலுருக்களாக காவலர்களின் உருவங்கள் தெரிந்தன. மேற்குத் துறைவாயிலில் நின்றிருக்கும் பெரிய கலங்களின் வெளிச்சம் வானிலெழுந்து கோட்டைக்குமேல் தெரிந்தது.

கிழக்குக் கோட்டைவாயிலருகே ஒரு காவல்மாடம் எரியத் தொடங்கியதைக் கண்டதும் அர்ஜுனனின் உள்ளம் களிவெறிகொண்டது. அதை அக்கணமே அவன் உடல்வழியாக அறிந்து அவன் குதிரை எம்பி காலைத்தூக்கியது. காவல்மாடத்தில் நெய்பீப்பாய்கள் இருந்திருக்கவேண்டும். தீ விரைவிலேயே எழுந்து செந்நிறக் கோபுரம் போல ஆயிற்று. எரியறிவிப்புக்கான முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. நகரெங்கும் வீரர்கள் கலைந்து ஓசையிட்டனர். கொம்புகள் பிளிறின.

கிருஷ்ணன் புன்னகையுடன் திரும்பி நோக்கி “இதோ மதுரை” என்றான். அவன் கைகளைத் தூக்கியபோது எரியடையாளம் எழுந்தது. அஸ்தினபுரியின் குதிரைப்படை மாபெரும் கற்கோபுரம் ஒன்று இடிந்து சரிவது போல பேரொலியுடன் மதுராவின் கோட்டைவாயில் நோக்கி பெருகிச்சென்றது. குதிரைகளின் கனைப்புகளும் குளம்போசையும் வீரர்களின் போர்க்குரல்களும் பறக்கும் தலைப்பாகைகளும் மின்னிச்செல்லும் உலோகங்களுமென ஒரு பெருக்கில் தானும் சென்றுகொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான்.

மிகச்சரியாக அந்நேரத்தில் மறுபக்கம் நீர்ப்பெருக்கில் பந்தங்கள் எரியும் படகுகள் மிதந்து வருவதை மேலிருந்த வீரர்கள் கண்டனர். கோட்டைமேல் போர்முரசுகள் முழங்கின. கிழக்குவாயில் நோக்கி காவல்படைகள் ஓடும் ஒலிகள் கேட்டன. மதுராவின் மேற்குக் கோட்டைவாயில் உள்ளிருந்து திறக்கப்பட்டது. அதனுள் சிதறியோடும் வீரர்களின் உருவங்கள் தெரிந்தன.

ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று மிகக் கச்சிதமாக இணைந்திருந்தன. நூறுமுறை ஒத்திகைபார்க்கப்பட்ட நாடகம் போல. அர்ஜுனன் திரும்பி தன்னருகே காற்றில் விரைந்துகொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்தை நோக்கினான். அவனை முந்தையநாள் காலையில்தான் பார்த்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டான். அதற்குள் அவன் நூறுமுகங்கள் கொண்டு பெருகிவிட்டிருக்கிறான். அவனுடைய அத்தனை திசைகளையும் சூழ்ந்துகொண்டிருக்கிறான். மின்னிமின்னிச் சென்ற ஒளியில் தெரியும் கரிய முகம் கருவறைக்குள் அமர்ந்த தொன்மையான கருங்கல்சிலை போலிருந்தது.

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் - 1

துரியோதனன் திருதராஷ்டிரரின் அறைவாயிலில் வந்து நின்று விப்ரரிடம் “தந்தையாரை பார்க்கவிழைகிறேன்” என்றான். விப்ரர் “இளவரசே, அவர் சற்றுமுன்னர்தான் உணவருந்தினார். ஓய்வெடுக்கும் நேரம்” என்றார். “ஆம், அறிவேன். ஆகவேதான் வந்தேன்...” என்றான் துரியோதனன். “நான் விதுரர் அருகில் இல்லாமல் அவரைப் பார்க்கவிழைகிறேன்.” விப்ரர் அவனுக்குப்பின்னால் நின்றிருந்த துச்சாதனனை நோக்கிவிட்டு “நான் அவரிடம் சொல்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றார்.

விப்ரர் வந்து உள்ளே செல்லும்படி கைகாட்டினார். துரியோதனன் உள்ளே சென்று மெல்லிய இரும்புத்தூண்களால் தாங்கப்பட்ட மரக்கூரை கொண்ட கூடத்தில் நின்றான். இளம் சேவகன் ஒருவனால் வழிநடத்தப்பட்டு திருதரஷ்டிரர் நீரில் நடக்கும் யானை போல கனத்த கால்களை சீராக இழுத்து வைத்து நடந்து வந்தார். விழியுருளைகள் அசைய தலைதூக்கி அவர்களின் வாசனையை அறிந்தபின்னர் மெல்ல கனைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “விதுரனின் இளையமைந்தன் உடல்நிலை சீரடைந்துவிட்டதா?” என்றார். துரியோதனன் “ஆம் தந்தையே” என்றான்.

"அவனை என்னிடம் கூட்டிவரச்சொல்” என்றபடி அசைந்து அமர்ந்துகொண்டு “குண்டாசி படைக்களத்தில் காயம்பட்டுவிட்டான் என்றார்களே” என்றார். “பெரிய காயம் அல்ல... மருத்துவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் துச்சாதனன். “அவனையும் நான் பார்க்கவேண்டும்” என்றபின் கைகளை நீட்டினார். அதன் பொருள் அறிந்த துரியோதனன் அருகே சென்று அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். அவர் இன்னொரு கையை நீட்ட துச்சாதனன் அங்கே சென்று அமர்ந்தான். இருவரின் பெரிய தோள்களில் அவரது மிகப்பெரிய கைகள் அமைந்தபோது அவை சிறுவர்தோள்கள் போல மாறின. அவர் தோள்களை வருடியபடி மலர்ந்த முகத்துடன் தாடையை மென்றார்.

“நீ பயிற்சி எடுத்துக்கொண்டு சிலநாட்கள் ஆகின்றன துரியா”என்றார் திருதராஷ்டிரர். “தசைகள் சற்று இளகியிருக்கின்றன. கதாயுதம் பயில்பவனின் தோள்கள் இரும்பாலானவையாக இருக்கவேண்டும்” என்றார். துரியோதனன் “ஆம் தந்தையே, கூர்ஜரத்தில் இருந்து வந்தபின்னர் நான் பயிற்சிக்கே செல்லவில்லை” என்றான். “கதாயுதம் என்பது வலிமை. அதைப்பெருக்குவதை விட என்ன பயிற்சி இருக்கமுடியும்? யாதவ பலராமன் உனக்கு என்னதான் கற்றுத்தருகிறார்?” என்றார் திருதராஷ்டிரர் ஏளனமாக தலையை ஆட்டி. “மெலிந்த தோள்கொண்டவன் கையில் கதையை அளித்து உன் பலராமரிடம் அனுப்பினால் பயிற்றுவிப்பாரா என்ன?”என்றார்.

“தந்தையே, எத்தனை ஆற்றலிருந்தாலும் அதை குவித்துச் செலுத்தாவிட்டால் பயனில்லை. கதாயுதத்தை சுழற்றுகையில் அடிக்குப்பின் கதையை திரும்பவும் தூக்குவதற்கே கூடுதல் தோள்விசை செலவாகிறது. மிகக்குறைந்த விசையுடன் அதைத் தூக்கமுடிந்தால் மும்மடங்கு நேரம் அதை வீசமுடியும். மும்மடங்கு விசையுடன் அடிக்கவும் முடியும்” என்றான் துரியோதனன். “வீசும் விசையாலேயே திரும்பவும் கதையைத் தூக்கும் கலையையே கதாயுதப்போரின் நுட்பம் என்கிறார் ஆசிரியர். அதையே கற்றுக்கொண்டிருக்கிறேன்.” திருதராஷ்டிரர் நிறைவின்மையுடன் கையை அசைத்து “அந்த வித்தையை ஒரு எருமையோ யானையோ புரிந்துகொள்ளுமா? புரிந்துகொள்ளாதென்றால் அது சூது. அதை வீரன் ஆடலாகாது” என்றார்.

“தந்தையே, எருமையின் படைக்கலம் அதன் கொம்பு. ஒவ்வொரு மிருகத்திற்கும் அதன் படைக்கலம் கூடவே பிறக்கிறது. தெய்வங்கள் அதை அவற்றுக்கு கருவறையிலேயே பயிற்றுவித்து அனுப்புகின்றன. அதை அவை யுகயுகங்களாக கையாள்கின்றன. கதையை நாம் இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறோம். நாம் கற்பதெல்லாம் எருமை கொம்பைக் கையாள்வது போல நம் படைக்கலத்தை மிகச்சரியாக கையாள்வது எப்படி என்றுமட்டுமே” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரர் “கதாயுதம் மனிதனின் இரும்பாலான கை மட்டுமே. அதற்குமேல் ஒன்றுமில்லை” என்றார். “படைக்கலங்களை நான் வெறுக்கிறேன்... அவை மனிதனை பிரிக்கின்றன. தோள்கவ்விச் செய்யும் மற்போர்தான் மானுடனுக்கு இறைவல்லமைகளால் அளிக்கப்பட்டது” என்றார்.

துரியோதனன் திரும்பி துச்சாதனனை ஒருகணம் நோக்கிவிட்டு “தந்தையே, மதுராவில் இருந்து செய்திகள் வந்துவிட்டன” என்றான். அவர் “ஆம், சொன்னார்கள். யாதவன் வெற்றியடைந்துவிட்டான் என்றார்கள்” என்றார். “இங்கிருந்து வெறும் இரண்டாயிரம் புரவிவீரர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்கள். இரண்டாம் இரவிலேயே மதுராவைப்பிடித்து யாதவர்களின் கொடியை ஏற்றிவிட்டனர். கூடவே அஸ்தினபுரியின் கொடியும் ஏற்றப்பட்டது. மகதத்தின் கலங்கள் கங்கையிலிருந்து யமுனைக்குள் நுழைந்தபோது நமது கொடிகளை ஏந்திய காவல்படகுகளைக் கண்டு பின்வாங்கிவிட்டன” துரியோதனன் சொன்னான். “ஆனால் மகதம் எச்சரிக்கை கொண்டுவிட்டது இன்று காலைமுதல் மகதத்தின் ஐம்பது பெருங்கலங்கள் திரிவேணிமுகப்பை நோக்கிச் செல்கின்றன என்று செய்திவந்துள்ளது.”

திருதராஷ்டிரர் தலையசைத்தார். துச்சாதனன் “யாதவன் முன்னரே அனைத்தையும் முடிவுசெய்துவிட்டு வந்திருக்கிறான். இங்கே அவன் சொல் மறுக்கப்படாது என்ற உறுதி அவனுக்கு இருந்திருக்கிறது. நம் நாட்டின் எல்லையில் உள்ள ருசிபதம் என்னும் காட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்கள். அச்செய்தி அரசரான உங்களுக்குக்கூட அவர்கள் கிளம்பியபின்னரே தெரிவிக்கப்பட்டது” என்றான். திருதராஷ்டிரர் “ஆம்” என்றார். “நள்ளிரவில் நான் துயிலறையில் இருக்கையில் விதுரன் வந்து அதைச் சொன்னான்.”

துச்சாதனன் பற்களைக் கடித்துக்கொண்டு “பொறுக்க முடியாத கீழ்மை ஒன்று நிகழ்ந்தது தந்தையே. அதை தாங்கள் அறிந்திருப்பீர்களா என்று அறியேன். அர்ஜுனனின் சிறுபடை கிளம்பியதை மகத ஒற்றர்களிடமிருந்து மறைப்பதற்காக ஒரு போலிப் படைப்புறப்பாடு இங்கே ஒருங்கு செய்யப்பட்டது. அதை நம் மூத்தவரைக்கொண்டே நிகழ்த்தினர். மூத்தவரிடம் வந்து படைப்புறப்பாட்டுக்கு ஆணையிடப்பட்டிருப்பதாகச் சொன்னவர்கள் தளகர்த்தர்களான ஹிரண்யபாகுவும் வீரணகரும். அது அரசியின் ஆணை என்றாலும் தங்கள் ஒப்புதல் அதற்கிருக்கிறது என மூத்தவர் எண்ணினார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப மதுராவுக்கு படைபுறப்படுகிறது என்று நம்பினார்.”

துரியோதனன் உரத்தகுரலில் பேசியபடி எழுந்தான். “இரவெல்லாம் களத்தில் முன்னின்று முழுமையான படைப்புறப்பாட்டுக்கு அனைத்து ஆணைகளையும் பிறப்பித்தேன் தந்தையே. அதிகாலையில் எழுந்து நீராடி கவசங்கள் அணிந்து படையெழுவதற்காக தம்பியர் சூழ அரண்மனை முற்றத்திற்கு வந்தேன். அப்போது அது போலிப் படைப்புறப்பாடு என்றும், மதுராவை அர்ஜுனன் வென்றுவிட்டான் என்று பருந்துச்செய்தி வந்தது என்றும் என் சேவகன் சொன்னான். எந்தையே, அப்போது அவ்விடத்திலேயே எரிந்து அழியமாட்டேனா என்று ஏங்கினேன்...” நெஞ்சு விம்ம அவன் பேச்சை நிறுத்தினான்.

“செய்வதென்ன என்று அறியாமல் ஓடி விதுரர் அறையை அடைந்தேன். அச்செய்தி பொய் என அவர் சொல்லவேண்டுமென விழைந்தேன். என்னை அவர் பீடத்தில் அமரச்செய்தார். புன்னகையுடன் அது என் வெற்றி என்று சொல்லி நம்பவைக்க முயன்றார். பலராமரிடம் நானுரைத்த வஞ்சினத்தை என்பொருட்டு என் இளையோர் நிகழ்த்திவிட்டனர் என்றார். அதை நான் சென்று பலராமரிடம் சொல்லவேண்டும் என்று கோரினார்.” துரியோதனன் கால்தளர்ந்தவன் போல மீண்டும் அமர்ந்துகொண்டான். “தந்தையே, இத்தனை அவமதிப்புக்கு நான் என்ன பிழை செய்தேன்? எதற்காக நான் இப்படி சிறுமைகொண்டு அழியவேண்டும்?”

திருதராஷ்டிரர் தலையைச் சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தார். பின் “என்ன நிகழ்ந்தது என்று சொல்” என்று துச்சாதனனை நோக்கி முகவாயை நீட்டிச் சொன்னார். “அவர்கள் இரவே மதுராவை அடைந்து தூங்கிக்கொண்டிருந்த ஹிரண்யபதத்தின் வீரர்களை தாக்கியிருக்கிறார்கள். அங்கே ஐந்தாம்படையை உருவாக்கி முன்னரே கோட்டைவாயிலை திறந்து வைத்திருக்கிறார்கள். ஒற்றர்களைக்கொண்டு கிழக்குக்கோட்டை வாயிலில் நெருப்புவைத்து அவர்களின் பார்வையை திசை திருப்பியிருக்கிறார்கள். படகுகளில் வெறும் பந்தங்களைக் கட்டி கங்கையில் ஓடவைத்து அதை அணுகிவரும் ஒரு படையென காட்டியிருக்கிறார்கள். அனைத்துமே சூது... நடந்தது போரே அல்ல” என்றான் அவன்.

“உம்ம்” என்று திருதராஷ்டிரர் உறுமினார். “அங்கே அதன்பின் நிகழ்ந்தது ஒரு படுகொலை தந்தையே. மதுராவுக்குள் சென்றதுமே நம் வீரர்கள் ஹிரண்யபதத்தினரின் படைக்கலச்சாலைகளைத் தாக்கி எரியூட்டியிருக்கிறார்கள். உள்ளே தன்னை ஆதரிக்கும் யாதவப்பணியாளர்களை முன்னரே நிறைத்திருக்கிறான் இளைய யாதவன். அவர்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் முன்னரே நெய்பீப்பாய்களை வைத்திருக்கிறார்கள். ஆகவே அத்தனை படைக்கலச் சாலைகளும் நின்றெரிந்தன. ஹிரண்யபதத்தினர் தங்கள் விற்களை கையில் எடுக்கவேமுடியவில்லை” துச்சாதனன் சொன்னான். “அவர்கள் வெறும் கைகளுடன் நின்றனர். கொற்றவைக்கு பலிகொடுக்க மந்தைகளை வெட்டிக்குவிப்பதுபோல அவர்களை சீவி எறிந்திருக்கின்றனர் அர்ஜுனனின் வீரர்கள்.”

“மையச்சாலைகளின் ஒவ்வொரு சந்திப்பிலும் நெய்பீப்பாய்களை முன்னரே உருட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கின்றனர் யாதவச் சேவகர்கள். அவற்றை கொளுத்திவிட்டமையால் ஏகலைவனின் படைகள் ஒன்றாகத் திரளவே முடியவில்லை.பந்தமேந்தி கங்கையில் வந்த படகுகளைக் கண்டு படைகளின் பெரும்பகுதியினர் மேற்குத் துறைவாயிலை நோக்கி திரண்டு சென்றிருந்தனர். அவர்களுக்கும் எஞ்சிய நகருக்கும் நடுவே நெய்பீப்பாய்கள் எரியத் தொடங்கியதும் அவர்கள் துண்டிக்கப்பட்டனர். அவர்கள் கோட்டைவாயிலில் நின்று செயலிழந்து நோக்கிக்கொண்டிருக்க அவர்களின் தோழர்களை தெருக்களில் வெட்டித்தள்ளினர்.”

“தனித்தனி குழுக்களாக மாறி படைக்கலமோ தலைமையோ இல்லாமல் இடுங்கிய தெருக்களில் சிக்கிக்கொண்ட ஹிரண்யபதத்தினர் கைதூக்கி சரண் அடைந்தனர். அவர்களை கொல்லாமலிருக்கவேண்டுமென்றால் கோட்டையை காக்கும் படைகளில் உள்ள அத்தனை வீரர்களும் சரண் அடையவேண்டும் என்று அறிவித்திருக்கிறான் இளைய யாதவன். அவர்கள் ஒப்புக்கொண்டு படைக்கலம் தாழ்த்தியிருக்கின்றனர். அத்தனைபேரையும் சேர்த்து பெருமுற்றத்தில் நிற்கச்செய்தபின் அவர்களைச் சூழ்ந்துகொண்டு முழுமையாகவே கொன்று தள்ளிவிட்டனர். குவிந்த உடல்களை மாட்டு வண்டிகளில் அள்ளிக்கொண்டுசென்று யமுனைக்கரையின் அகழி ஒன்றுக்குள் குவிக்கிறார்கள். இப்போது அங்கே ஹிரண்யபதத்தின் ஒருவீரன் கூட உயிருடன் இல்லை” என்றான் துச்சாதனன். “தந்தையே, ஒருவர்கூட எஞ்சலாகாது என்பது குந்திதேவி இங்கே இருந்து பிறப்பித்த ஆணை.”

திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “ஏகலவ்யன் கொல்லப்பட்டானா?” என்றார். “இல்லை தந்தையே. அன்று அவர் மகதத்தின் படைகளுடன் திரிவேணிமுகத்தில் இருந்தார். மகதப் படைத்தலைவர் ரணசேனருடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. நாம் இங்கே அஸ்தினபுரியில் நிகழ்த்திய போலிப் படைநீக்கத்தை நம்பி அதைப்பற்றி விவாதிக்க ஏகலவ்யன் சென்றிருக்கிறான். ஆகவேதான் அவன் தப்பமுடிந்தது...” துச்சாதனன் சொன்னான். “அவனைக் கொல்வதாக கிருஷ்ணன் வஞ்சினம் உரைத்திருந்தான். ஆகவே அவனை மதுரா முழுக்க தேடியலைந்தனர். அவன் அங்கே இல்லை என்பதை விடிந்தபின்னர்தான் உறுதிசெய்துகொண்டனர். அவன் மதுராவில் இருந்திருந்தால் போர் இத்தனை எளிதாக முடிந்திருக்காது.”

தன் தலையை கைகளில் தாங்கி துரியோதனன் ஒடுங்கிய தோள்களுடன் அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரரின் தாடையை மெல்லும் ஒலி அறைக்குள் தெளிவாகக் கேட்டது. “அந்த யாதவனின் சக்ராயுதத்தில் குருதிவிடாய் கொண்ட பாதாளதெய்வம் ஒன்று வாழ்கிறது என்கிறார்கள்” என்று துச்சாதனன் தொடர்ந்தான். “ஏழு சக்கரங்களாக மாறி அது மின்னல்கள்போல சுழன்று பறந்து தலைகளை சீவிச்சீவித் தள்ளியதைக் கண்ட நம் வீரர்களே கைகூப்பி நின்றுவிட்டார்களாம். நூற்றுக்கணக்கான தலைகளை அது வெட்டித்தள்ளியது. ஆனால் அதன் மின்னும் உலோகப்பரப்பில் ஒரு துளிக்குருதிகூட படுவதில்லை என்று ஒற்றன் சொன்னான். அது யாதவன் கையில் திரும்பவரும்போது அப்போது உலைக்களத்தில் பிறந்து வருவதுபோல தூய்மையுடன் இருந்தது.”

துரியோதனன் பெருமூச்சுடன் “அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இனி இப்பாரதவர்ஷத்தின் அரசியலாடலில் ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டாகவேண்டிய முதல் மனிதன் அவனே” என்றான். “இங்கே ஒரு படைநகர்வுக்கான தூதுடன் வந்தவன் அரசராகிய உங்களை சந்திக்கவில்லை. அவன் தமையனின் முதல்மாணவனாகிய என்னை சந்திக்கவில்லை. அரசியின் அரண்மனையிலிருந்து நேராக ருசிபதம் சென்றுவிட்டான். அங்கே படகுகளையும் படைகளையும் ஒருக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு குந்திதேவியின் அதிகாரம் பற்றிய ஐயமே இருக்கவில்லை.”

திருதராஷ்டிரர் தன் தலையை கையால் பட் பட் என்று அடித்துக்கொள்ளத் தொடங்கினார். அது அவர் எரிச்சல்கொள்ளும் இயல்பென்று அறிந்த துரியோதனனும் துச்சாதனனும் எழுந்து நின்றனர். அவர் வழக்கமாக ஓரிரு அடிகளுக்குப்பின் கைகளை மேலே தூக்கி உறுமுவார். தன் தோள்களில் அறைந்துகொள்வார். ஆனால் இப்போது தலையில் அடித்துக்கொண்டே இருந்தார். மேலும் விரைவும் ஓசையும் கொண்டு சென்றது அந்த அடி. “தந்தையே” என்றான் துரியோதனன். மீண்டும் உரக்க “தந்தையே!” என்றான். அவர் நிறுத்திவிட்டு உரக்க உறுமினார். கையால் தன் பீடத்தின் கையிருக்கையை ஓங்கி அறைந்து அதை உடைத்து கையில் எடுத்து வீசினார். மீண்டும் உறுமினார்.

கொதிக்கும் மிகப்பெரிய கொதிகலம் போல திருதராஷ்டிரர் மூச்சிரைக்க அமர்ந்திருந்தார். கரிய உடலின் திரண்ட தசைகள் அவர் பெரும் எடை ஒன்றை எடுப்பது போல இறுகி அசைந்தன. கழுத்தில் தடித்த நரம்பு ஒன்று முடிச்சுகளுடன் புடைத்து நெளிந்தது. துரியோதனன் மெல்லிய குரலில் “தந்தையே. இது யாருடைய போர்? யாருக்காக இது நிகழ்ந்தது? யாதவர் நலன்களுக்காக அஸ்தினபுரியின் அனைத்து நலன்களையும் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது யார்? நான் என் குருநாதரிடம் அளித்த வஞ்சினத்தைக்கூட விட்டுவிட்டேன். அது அளித்த இழிவை என் நெஞ்சில்பட்ட விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் என் மதிப்புக்காக அஸ்தினபுரிக்கு தீங்கு விளையலாகாது என்று எண்ணினேன். அந்த எண்ணம் ஏன் அவர்களுக்கு எழவில்லை?”

“அதைப்பற்றி நீ பேசவேண்டியதில்லை” என்று உரக்க கைதூக்கி திருதராஷ்டிரர் சொன்னார். “இல்லத்தில் பெண்கள் அடங்கியிருக்கவேண்டும் என்று எண்ணுபவன் நான். அவர்கள் அரசியலின் இறுதிமுடிவுகளை எடுக்கக்கூடாது. ஏனென்றால் எளிய உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவர்கள் முதன்மை ஆணைகளை பிறப்பித்துவிடக்கூடும். ஆனால் அவர்களின் குரல் எப்போதும் கேட்கப்பட்டாகவேண்டும். அவர்கள் ஒருபோதும் அயலவர் முன்னால் அவமதிப்புக்கு ஆளாகக் கூடாது. குந்திதேவி ஆணை பிறப்பித்திருக்கக் கூடாது. ஆனால் அவள் ஆணையை பிறப்பித்துவிட்டால் அதற்காக அஸ்தினபுரியும் நீயும் நானும் உயிர்துறந்தாகவேண்டும். அதுவே நம் குலமுறையாகும். பெண்ணின் மதிப்புக்காக அழியத்துணியும் குலங்களே வாழ்கின்றன.”

“அவர்கள் யாதவ அரசி...” என்றான் துரியோதனன் எரிச்சலுடன். “ஆம், ஆனால் என் இளவலின் துணைவி” என்றார் திருதராஷ்டிரர். “தந்தையே, அதை அவர்கள் எண்ணவில்லை. தன் குலத்தான் ஒருவன் வந்து கோரியதும் அத்தனை பொறுப்புகளையும் உதறி வெறும் யாதவப்பெண்ணாக அவர்கள் அவனுடன் சென்றார்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், அது பெண்களின் குணம். ஆகவேதான் அவர்கள் முடிவுகளை எடுக்கக்கூடாதென்கிறேன். நாளை காந்தாரத்துக்கும் நமக்கும் போர் எழுந்தால் உன் அன்னை எந்தத் தரப்புக்கு துணை நிற்பாள் என்று எண்ணுகிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் சினத்துடன் பீடத்தை கையால் அடித்து “தந்தையே, நான் அதைப்பற்றி பேச இங்கு வரவில்லை” என்றான்.

அந்த ஒலி திருதராஷ்டிரரின் உடலில் அதிர்வாகத் தெரிந்தது. “பின் எதைப்பற்றிப் பேசவந்தாய்?” என்று இரு கைகளையும் தூக்கிக் கூவியபடி அவர் எழுந்தார். “சொல், எதைப்பற்றிப் பேசவந்தாய்?” தோள்களில் ஓங்கி அறைந்தபடி அறைக்குள் அவர் அலைமோதினார். இரும்புத்தூண்களில் முட்டிக்கொள்வார் என்று தோன்றியது. “இங்கே கண்ணிழந்து அமர்ந்திருக்கும் குருடனிடம் நீ என்ன அரசியல் பேசப்போகிறாய்?”

அவரது இலக்கற்ற சினம் துரியோதனனையும் சினம் கொள்ளச்செய்தது. “நான் என்னைப்பற்றிப் பேசவந்தேன்... நான் யார்? இந்த நாட்டில் எனக்கு என்ன உரிமை? உங்கள் குருதியில் பிறந்த எனக்கும் தாசிமைந்தர்களுக்கும் என்ன வேறுபாடு? தந்தையே, என் கோரிக்கையை அரசவையில் விதுரர் இடதுகைவீசி புறந்தள்ளினார். அதை அத்தனை அமைச்சர்களும் பார்த்திருக்கிறார்கள். அதே விதுரர் யாதவ அரசியின் ஆணையை தலைமேல் கொண்டு படைப்புறப்பாட்டுக்கு ஆவன செய்தார். இன்று அதோ அவையில் அமர்ந்து மகதத்துக்கு தூதோலை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் என் சொல்லுக்கு இனி என்ன மதிப்பு? சொல்லுங்கள்!”

“நீ என் மைந்தன்... அந்த மதிப்பு மட்டும் உனக்கு எஞ்சும்... நான் நாடிழந்து காட்டில் வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? மலைச்சாரலில் ஒரு எளிய மரம்வெட்டியாக இருந்திருந்தால் ஒரு மழுவை மட்டுமல்லவா உனக்கு அளித்திருப்பேன்” என்று திருதராஷ்டிரர் கூவினார். “பிறப்பளித்த தந்தையிடம் நீ எனக்கு என்ன தந்தாய் என்று கேட்க எந்த மைந்தனுக்கும் உரிமை இல்லை. மைந்தனிடம் எள்ளும் நீருமன்றி எதைக்கோரவும் தந்தைக்கும் உரிமை இல்லை...”

திருதராஷ்டிரர் மூச்சிரைக்கக் கூவியபடி தூண்களீல் முட்டிமுட்டி விலகிச்சென்றார். “நான் சொல்கிறேன், உனக்கு நாடில்லை. எந்தப்பதவியும் இல்லை. எந்த அடையாளமும் இல்லை, திருதராஷ்டிரனின் மைந்தன் என்பதைத் தவிர. அதை மட்டும்தான் உனக்கு அளிப்பேன்... வேண்டுமென்றால் அதை நீ துறக்கலாம்...” அவரது அந்த உச்சகட்ட வெறியை அதுவரை கண்டிருக்காத துச்சாதனன் அஞ்சி பின்னகர்ந்தான். அவரது கரங்களுக்குள் சிக்கும் எதையும் உடைத்து நொறுக்கிவிடுவார் போலத் தெரிந்தது. அவ்வெண்ணம் எழுந்த அக்கணமே அவர் தன் கரத்தைச் சுருட்டி இரும்புத்தூணை ஓங்கி அறைந்தார். மரக்கட்டுமானம் அதிர அரண்மனையே திடுக்கிட்டது. மேலிருந்து குளவிக்கூடுகள் உடைந்து மண்ணாக உதிர்ந்தன.

அவரது அடியால் வளைந்த இரும்புத்தூணைப்பிடித்து உலுக்கியபடி திருதராஷ்டிரர் பெருங்குரலில் அறைகூவினார் “இப்போது சொல், நீ என்னைத் துறக்கிறாய் என்றால் அவ்வண்ணமே ஆகட்டும். உன் எள்ளும் நீரும் எனக்குத் தேவையில்லை. இந்த நாட்டில் என் மைந்தன் இவன் என்று தோள்கள் பூரிக்க நான் தூக்கி வைத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான மைந்தர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் ஒரு துளிக் கண்ணீருடன் என்னை எண்ணி கங்கையில் கைப்பிடி நீரை அள்ளிவிடுவார்கள். அந்த நீர் போதும் எனக்கு... நீ என் மைந்தனல்ல என்றால் செல்...”

துரியோதனன் யானையெனப் பிளிறியபடி தன் நெஞ்சில் ஓங்கியறைந்தான். தன் தோள்களிலும் தொடையிலும் கைகளால் ஓசையுடன் அடித்தபடி முன்னால் பாய்ந்தான். “என்ன சொன்னீர்கள்? நான் உங்கள் மகனல்லாமல் ஆவதா? என்னிடமா அதைச் சொன்னீர்கள்?” துரியோதனனில் வெளிப்பட்ட திருதராஷ்டிரரின் அதே உடல்மொழியையும் சினத்தையும் கண்டு துச்சாதனன் மேலும் பின்னகர்ந்து சுவருடன் சேர்ந்து நின்றுகொண்டு கைகளை நீட்டி “மூத்தவரே. மூத்தவரே” என்று கூவினான். அவன் குரல் அடைத்து எவருடையதோ போல ஒலித்தது. நீட்டிய பெருங்கரங்களுடன் எழுந்த திருதராஷ்டிரர் தன் ஆடிப்பாவையுடன் முட்டிக்கொண்டதுபோல அவனுக்குத் தோன்றியது.

“என்ன சொன்னீர்கள்? நான் உங்களைத் துறப்பேன் என்றா? இந்த நாட்டின் எளிய அரசபதவிக்காக நான் உங்களைத் துறப்பேன் என்றா சொன்னீர்கள்? என்னைப்பற்றிய உங்கள் கணிப்பு அதுவென்றால் இதோ வந்து நிற்கிறேன். இதோ... என்னை உங்கள் கைகளால் கொல்லுங்கள்... “ அவன் நெஞ்சை நிமிர்த்தி அவர் அருகே சென்று அவரது கைகள் நடுவே நின்றான். “இதோ நிற்கிறேன்... திருதராஷ்டிரரின் மைந்தனாகிய துரியோதனன். கொல்லுங்கள் என்னை!” அவன் மார்பும் திருதராஷ்டிரரின் மார்பும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டன.

திருதராஷ்டிரர் தன் கைகளைச் சேர்த்து அவன் தோள்களைப் பற்றினார். அவரது உதடுகள் இறுகி தாடை சற்று கோணலாக தூக்கிக்கொண்டது. கழுத்தின் நரம்பு இழுபட்டு அதிர்ந்தது. “ம்ம்.. ம்ம்ம்...“ என்று முனகியபின் அவர் அவனை அள்ளி அப்படியே தன் தோள்களுடன் இறுக்கி அணைத்துக்கொண்டார்.

“தந்தையே தந்தையே” என்று தழுதழுத்த குரலில் துரியோதனன் விம்மினான். “தாங்களும் என்னை அறிந்துகொள்ளாவிட்டால் நான் எங்கே செல்வேன்? இப்புவியில் தாங்களன்றி வேறெவர் முன் நான் பணிவேன்?” என்று உடைந்த குரலில் சொன்னபின் அவர் தோள்களில் முகம் புதைத்து மார்புக்குள் ஒடுங்கிக்கொண்டான். அவர் தன் பெரிய கைகளால் அவன் முதுகை மெல்ல அறைந்தார். அவரது கண்களாகிய தசைக்குழிகள் ததும்பித்ததும்பி அசைந்து நீர்வடித்தன. தாடையில் சொட்டிய நீர் அவன் தோள்களில் விழுந்து முதுகில் வழிந்தது.

“தந்தையே, என்னால் அவமதிப்புகளை தாளமுடியவில்லை... எதன்பொருட்டும் தாளமுடியவில்லை. அறத்தின் பொருட்டோ தங்கள் பொருட்டோகூட தாள முடியவில்லை. அதுமட்டுமே நான் தங்களிடம் சொல்லவிழைவது... தந்தையே” என்று அவர் தோள்களில் புதைந்த உதடுகளுடன் துரியோதனன் சொன்னான். திருதராஷ்டிரர் மூச்சை இழுத்து விட்டபின் மூக்கை உறிஞ்சினார். “ஆம், நான் அதை அறிகிறேன்” என்றார். “இளவயது முதலே உன்னை நான் அறிவேன்...”

துரியோதனனை விட்டுவிட்டு திரும்பி தன் கைகளால் முகத்தை ஓசையெழத் தேய்த்துக்கொண்டு திருதராஷ்டிரர் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டார். கைகளால் தலையைத் தாங்கியபடி குனிந்து அமர்ந்தார். பின் மீண்டும் தலையை பட் பட் என்று அடித்துக்கொண்டார். முனகியபடி தலையை அசைத்தார். துரியோதனன் நீர் வழிந்த கண்களுடன் அவரை நோக்கியபடி நின்றான். பின் கீழே விழுந்துகிடந்த சால்வையை எடுத்து தன் முகத்தை துடைத்துக்கொண்டு பெருமூச்சுடன் வந்து தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அவன் விழிகளை தன் விழிகளால் தொட்டுவிடக்கூடாது என்பதை துச்சாதனன் உணர்ந்து தலையைக்குனித்துக்கொண்டு நின்றான். பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டபோது அப்போது நடந்த உணர்ச்சிமோதலில் பேசப்பட்ட சொற்கள் எத்தனை பொருளற்றவை என்பதை உணர்ந்தான். தந்தை சொல்ல நினைத்ததும் மைந்தன் விடையிறுக்க நினைத்ததும் அச்சொற்களில் இல்லை. அச்சொற்களை அவர்கள் ஒருபோதும் சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னதுமே அவை பொருளிழந்து போய்விடும். துச்சாதனன் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். அந்த உணர்ச்சிகளுக்காக நாணுபவர்கள் போல இருபக்கங்களிலாக உடல் திருப்பி தலைகுனிந்து அவர்கள் அமர்ந்திருந்தனர்.

திருதராஷ்டிரர் மெல்ல அசைந்து பெருமூச்சு விட்டார். அவர் என்ன சொல்லக்கூடும் என துச்சாதனன் எண்ணியகணமே அவர் “அர்ஜுனன் திரும்பி வருகிறானா?” என்றார். அதைக்கேட்டதுமே அதைத்தான் பேசமுடியும் என்று துச்சாதனன் உணர்ந்தான். பேசியவற்றுக்கு மிக அப்பால் சென்றாகவேண்டும். அந்தக்கணங்களை விட்டு விலகி ஓடியாகவேண்டும். அவற்றை நினைவுக்குள் புதைத்தபின் ஒருபோதும் திரும்பிப்பார்க்கலாகாது. அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டு மார்பில் கட்டிய கைகளை தொங்கப்போட்டான். துரியோதனன் விடைசொல்லட்டுமென காத்து நின்றான். துரியோதனன் தலைதூக்கியபின் சிவந்த விழிகளால் சிலகணங்கள் நோக்கிவிட்டு “கூர்ஜரத்துக்குச் செல்கிறான் என்று செய்திவந்தது” என்றான்.

“கூர்ஜரத்துக்கா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், இன்னும் ஒருவாரத்தில் அவன் கூர்ஜரத்தின் ஏதேனும் காவல் அரண்களைத் தாக்குவான். கூர்ஜரத்தின் தென்கிழக்குக் காவலரண் கூர்ஜர இளவரசன் கிருதவர்மனின் ஆட்சியில் உள்ளது. அவன் கிருதவர்மனைக் கொல்வான்” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரன் “ம்ம்” என்றான். “அது குந்திதேவியின் ஆணை. கூர்ஜரன் சரணடையவேண்டும். குந்திதேவிக்கு ஓர் அடைக்கல ஓலையை அனுப்பவேண்டும். அதை பெற்றுக்கொண்டே அர்ஜுனன் திரும்பி வருவான்.”

திருதராஷ்டிரர் “ஆனால் அவனிடம் படைகள் இல்லை... ஆயிரம்பேரை மதுராவில் விட்டுவைத்தபின்னரே அவன் செல்லமுடியும்” என்றார். “ஆம் தந்தையே. ஆனால் தங்கள் அறைக்குள் நுழைவது பாம்பு அல்ல மதவேழத்தின் துதிக்கை என்று மகதமும் கூர்ஜரமும் அறியும். நேற்று மதுராவை அவர்கள் கைப்பற்றியதுமே எல்லைப்படைகள் நான்கை மகதத்திற்குள் சென்று நிலைகொள்ள விதுரர் ஆணையிட்டார். கூர்ஜரன் தாக்கப்படும்போது அவனை அச்சுறுத்துவதற்காக சப்தசிந்துவில் நின்றிருக்கும் நம் படைகள் இணைந்து கூர்ஜரத்தின் வடகிழக்கு எல்லையை நோக்கிச் செல்ல விதுரர் ஆணையிட்டிருக்கிறார். சென்றிருப்பது அர்ஜுனனின் சிறிய குதிரைப்படை அல்ல, அஸ்தினபுரியின் முன்னோடிப்படை என்ற எண்னத்தை உருவாக்குகிறார்” என்றான் துரியோதனன்.

“ஆம். விதுரன் அவர்கள் தோற்றுமீள விடமாட்டான். ஏனென்றால் அவர்கள் எங்கள் உடன்பிறந்தோனின் மைந்தர்கள்” என்றார் திருதராஷ்டிரர். “இவ்வெற்றி குந்திதேவியின் குலத்தின் வெற்றி. மதுரா மட்டுமல்ல அஸ்தினபுரியே இன்று யாதவர்களுக்குரியதுதான் என்கிறார்கள் சூதர்கள்.” திருதராஷ்டிரர் “அவர்கள் யாதவர்கள் அல்ல, பாண்டவர்கள்” என்றார். துரியோதனன் தலையை அசைத்தபடி ஓசையின்றி ஏதோ சொன்னான். “எதுவாக இருப்பினும் இது பாண்டுவின் நாடு. அவன் மைந்தர்களின் வெற்றியை நாம் கொண்டாடியாகவேண்டும். இன்றுமாலை வெற்றிக்காக உண்டாட்டு ஒருங்கமைக்கப்பட்டிருப்பதாக விதுரன் சொல்லியனுப்பியிருந்தான்....” என்றார் திருதராஷ்டிரர். “நீங்கள் நூற்றுவரும் அதில் கலந்துகொண்டாகவேண்டும்... இது என் ஆணை!”

“ஆம் தந்தையே” என்று சொன்னபின் துரியோதனன் எழுந்தான். துச்சாதனனை நோக்கி கண்களைக் காட்டிவிட்டு திருதராஷ்டிரரை அணுகி அவர் காலைத் தொட்டான். அவர் அவன் தலையில் கைவைத்து “பொறுத்திரு மைந்தா... காலம் அனைத்தையும் சரிசெய்யும். உன் உணர்ச்சிகளை எல்லாம் நான் அறிகிறேன். ஆயினும் நான் முதியவன், பொறுமைகொள்ளவே நான் சொல்வேன். மானுட உள்ளம் பலவகை பொய்த்தோற்றங்களை உருவாக்க வல்லது. ஏனென்றால் உள்ளம் என்பது தன்முனைப்பின் ரதம் மீது நின்று ஆணவத்தை படைக்கலமாக ஏந்தியிருக்கிறது. பொறுத்திரு...” என்றார்.

“ஆம் தந்தையே” என்றபின் துரியோதனன் வெளியே சென்றான். துச்சாதனனும் வணங்கிவிட்டு அவனைத் தொடர்ந்தான்.

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் - 2

திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே வந்து நின்ற துரியோதனன் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு திரும்பினான். “உண்டாட்டுக்குச் செல்லவேண்டியதுதான் இளையவனே” என்றான். துச்சாதனன் பெருமூச்சு விட்டான். துரியோதனன் “மீண்டும் மீண்டும் நம்மை உலையில் தூக்கிப்போடுகிறார் தந்தை... ஆனால் அதுவே அவர் நமக்களிக்கும் செல்வம் என்றால் அதையே கொள்வோம். இப்பிறவியில் நாம் ஈட்டியது அதுவென்றே ஆகட்டும்” என்றான்.

அகத்தின் விரைவு கால்களில் வெளிப்பட அவன் நடந்தபோது துச்சாதனன் தலைகுனிந்தபடி பின்னால் சென்றான். தனக்குள் என “இன்று உண்டாட்டில் பட்டத்து இளவரசனுக்குரிய பீடத்தில் அவன் இருப்பான்” என்றான் துரியோதனன். “கோழை. தம்பியர் மேல் அமர்ந்திருக்கும் வீணன்.” இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து தலையை ஆட்டி “இளையவனே, அவன் முன் பணிந்து நின்ற அக்கணத்துக்காக வாழ்நாளின் இறுதிக்கணம்வரை நான் என்னை மன்னிக்கமாட்டேன்” என்றான். பின்பு நின்று “தந்தையின் ஆணையில் இருந்து தப்ப ஒரு வழி உள்ளது. நான் உயிர்விடவேண்டும்... இந்த வாளை என் கழுத்தில் பாய்ச்சிக்கொள்ளவேண்டும்.”

தலையை பட் பட் என்று அடித்து “ஆனால் அது வீரனுக்குரிய முடிவல்ல. அகம்நிறைந்து கொற்றவைக்கு முன்பாக நவகண்டம் செய்யலாம். போரில் முன்னின்று சங்கறுத்து களப்பலியாகலாம். இது வெறும் தற்கொலை” என்றான். திரும்பி சிவந்த விழிகளால் நோக்கி “அந்த உடைவாளை எடுத்து என் கழுத்தில் பாய்ச்சு என்றால் செய்வாயா?” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன் திகைத்து பின்னகர்ந்தபடி. “செய்” என்றான் துரியோதனன். “ஆணை” என்று துச்சாதனன் தன் வாளை உருவினான். அவ்வொலி இடைநாழியில் ஒரு பறவையின் குரலென ஒலித்தது.

துச்சாதனன் வாளைத் தூக்கிய கணம் “வேண்டாம்” என்று துரியோதனன் சொன்னான். “இறப்புக்குப் பின்னரும் இதே அமைதியின்மையை முடிவிலி வரை நான் அடைந்தாகவேண்டும்...” துச்சாதனன் உடைவாளை மீண்டும் உறையில் போட்டான். பின்னர் திரும்பி திருதராஷ்டரரின் அறை நோக்கி சென்றான். திகைத்துத் திரும்பி “இளையவனே” என்று துரியோதனன் அழைக்க துச்சாதனன் “என் பிழையை பொறுத்தருளுங்கள் மூத்தவரே. தங்களைக் கடந்து இதை நான் செய்தாகவேண்டும்” என்றபின் விப்ரரைக் கடந்து ஓசையுடன் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

திருதராஷ்டிரரின் ஆடைகளை சரிசெய்துகொண்டிருந்த சேவகன் அந்த ஒலியைக் கேட்டு திகைத்து திரும்பி நோக்கினான். “தந்தையே” என்று உரத்த குரலில் துச்சாதனன் கூவினான். “இதன்பொருட்டு நீங்கள் என்னை தீச்சொல்லிட்டு நரகத்துக்கு அனுப்புவதென்றாலும் சரி, உங்கள் கைகளால் என்னை அடித்துக்கொல்வதாக இருப்பினும் சரி, எனக்கு அவை வீடுபேறுக்கு நிகர். நான் சொல்லவேண்டியதை சொல்லியாகவேண்டும்.” திருதராஷ்டிரர் முகத்தை கோணலாக்கிய புன்னகையுடன் “உனக்கு நா முளைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

கதவைத்திறந்து உள்ளே வந்த துரியோதனன் பதைப்புடன் “இளையவனே” என்று கைநீட்டி அழைக்க “மூத்தவரே, என்னை அடக்காதீர்கள். என் நாவை நீங்கள் அடக்கினால் இங்கேயே உயிர்துறப்பேன். ஆணை” என்றான் துச்சாதனன். துரியோதனன் நீட்டிய கையை தாழ்த்தி தவிப்புடன் பின்னகர்ந்து சுவரோரமாக சென்றான். கதவைத்திறந்து வெளியே செல்ல அவன் விரும்பினான். ஆனால் அதைச்செய்ய அவனால் முடியவில்லை.

துச்சாதனன் மூச்சிரைக்க உடைந்த குரலில் “தந்தையே” என்றான். மீண்டும் கையை ஆட்டி “தந்தையே” என்று சொல்லி பாம்பு போல சீறினான். திருதராஷ்டிரர் தலையைத் தூக்கி செவியை அவனை நோக்கித் திருப்பி “சொல்... உன் தமையனுக்காக பேசவந்தாயா?” என்றார். “ஆம், அவருக்காகத்தான். இப்பிறவியில் எனக்காக எதையும் எவரிடமும் கோரப்போவதில்லை. தெய்வங்களிடம் கூட” என்றான் துச்சாதனன். அவன் தேடித்தவித்த சொற்கள் தமையனைப்பற்றி பேசியதும் நாவில் எழத்தொடங்கின. “எனக்கு தந்தையும் தாயும் அவர்தான். வேறெவரும் எனக்கு பொருட்டல்ல...”

“சொல்” என்றபடி திருதராஷ்டிரர் சாய்ந்துகொண்டு சேவகனிடம் வெளியே செல்ல கைகாட்டினார். அவன் தலைவணங்கி உள்ளறைக்குள் சென்றான். “என்னிடம் நிறைய சொற்கள் இல்லை தந்தையே. நான் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன். என் தமையனுக்கு நாடு வேண்டும். இனி அவர் எவரது குடியாகவும் வாழ்வதை என்னால் காணமுடியாது. நிலமற்றவராக, வெறும் அரண்மனைமிருகமாக அவர் வாழ்வதைக் கண்டு நாங்கள் பொறுத்திருக்கப்போவதில்லை” என்றான். திருதராஷ்டிரர் “நீ என் ஆணையை மீறுகிறாயா?” என்றார். “ஆம் மீறுகிறேன். அதன்பொருட்டு எதையும் ஏற்க சித்தமாக உள்ளேன்” என்றான் துச்சாதனன்.

திருதராஷ்டிரர் முகத்தில் தவிப்புடன் திரும்பி துரியோதனன் நின்றிருந்த திசையை நோக்கி காதைத் திருப்பினார். “துரியா, இவன் குரல் உன்னுடையதா?” என்றார். “தந்தையே அது என் அகத்தின் குரல். அதை மறுக்க என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “என் துயரத்திற்கு அடிப்படை என்ன என்று நான் நன்கறிவேன் தந்தையே. பிறந்தநாள்முதல் நான் அரசனென வளர்க்கப்பட்டவன். ஆணையிட்டே வாழ்ந்தவன். எனக்குமேல் நான் தங்களைத்தவிர எவரையும் ஏற்கமுடியாது. என் ஆணைகள் ஏற்கப்படாத இடத்தில் நான் வாழமுடியாது.”

“ஆனால் இது பாண்டுவின் நாடு. பாண்டவர்களுக்குரியது” என்றார் திருதராஷ்டிரர். “இத்தனைநாளாக நான் அவர்களை கூர்ந்து நோக்கி வருகிறேன். தருமனைப்பற்றி இங்குள்ள அத்தனைகுடிகளும் மனநிறைவை மட்டுமே கொண்டுள்ளனர். இந்நாட்டை ஆள அவனைப்போன்று தகுதிகொண்டவர் இல்லை. நீயும் பீமனும் அர்ஜுனனும் கர்ணனும் அவன் அரியணைக்கு இருபக்கமும் நின்றீர்கள் என்றால் அஸ்தினபுரி மீண்டும் பாரதவர்ஷத்தை ஆளும். பிரதீபர் ஆண்ட அந்த பொற்காலம் மீண்டு வரும்.”

திருதராஷ்டிரர் கைகளை விரித்து முகம் மலர்ந்து "நாளும் அதைப்பற்றித்தான் நான் கனவுகாண்கிறேன். எங்கள் பிழையல்ல, என்றாலும் நானும் என் இளவலும் எங்கள் தந்தையும் எல்லாம் இப்படிப்பிறந்தது வழியாக எங்கள் முன்னோருக்கு பழி சேர்த்துவிட்டோம். அப்பழியைக் களைந்தால் விண்ணுலகு செல்கையில் என்னை நோக்கி புன்னகையுடன் வரும் என் மூதாதை பிரதீபரிடம் நான் சொல்லமுடியும், என் கடனை முடித்துவிட்டேன் என்று. இன்று நான் விழைவது அதை மட்டுமே.”

உரத்த குரலில் துரியோதனன் இடைமறித்தான். “அது நிகழப்போவதில்லை தந்தையே. அது முதியவயதின் வீண் கனவு மட்டுமே... அவனை என்னால் அரசன் என ஏற்கமுடியாது. அவன் முன் என்னால் பணிய முடியாது.” பெருவலி கொண்டவன் போல அவன் பல்லைக் கடித்தான். “ஒருமுறை பணிந்தேன். என் குருநாதருக்கு நானளித்த சொல்லுக்காக. அந்த அவமதிப்பை இக்கணம்கூட என்னால் கடக்க முடியவில்லை. இனி என் வாழ்நாள் முழுக்க அணையாத நெருப்பாக அது என்னுடன் இருக்கும்... இல்லை தந்தையே, அக்கனவை விடுங்கள். அவன் என் அரசன் அல்ல.”

“மைந்தர்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கனவைவிட எது தந்தையிடம் இருக்கமுடியும்? என்னால் அக்கனவை விடமுடியாது. அது இருக்கும்வரைதான் எனக்கு வாழ்க்கைமேல் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கும்” என்றார் திருதராஷ்டிரர். “என் இளையோனுக்கு நான் அளித்த நாடு இது. அவன் மைந்தர்களுக்குரியது. அதில் மாற்றமேதும் இல்லை. நீங்கள் செல்லலாம்” என்றபின் எழுந்தார்.

துச்சாதனன் கைகூப்பி முன்னகர்ந்து “தந்தையே, தங்கள் சொல் அப்படியே இருக்கட்டும். தருமன் அஸ்தினபுரியை ஆளட்டும். இங்கே கங்கைக்கரையில் இந்த நாடு பொலிவுறட்டும். பாதிநாட்டை என் தமையனுக்களியுங்கள். அங்கே அவர் முடிசூடி அரியணை அமரட்டும்” என்றான். “இல்லையேல் தமையன் இறந்துவிடுவார். அவர் உயிர் வதைபடுவதை காண்கிறேன். என் கண்ணெதிரே அவர் உருகி உருகி அழிவதை காண்கிறேன். உங்கள் மைந்தர்களுக்காக இதைச்செய்யுங்கள்.”

“இல்லை, நான் வாழும்காலத்தில் அஸ்தினபுரி பிளவுபடப்போவதில்லை” என்றார் திருதராஷ்டிரர். இறங்கிய குரலில் “தந்தையே, பிளவுபடுவதல்ல அது. பிரிந்து வளர்வது. இங்கே தமையன் ஒவ்வொரு கணமும் உணர்வது அவமதிப்பை. அவரால் இங்கிருக்க முடியாது” என்றான் துச்சாதனன். “ஏதோ ஓர் இடத்தில் அது நேரடி மோதலாக ஆகலாம். தங்கள் கண்முன் தங்கள் மைந்தர்கள் போர்புரிவதைக் காணும் நிலை தங்களுக்கு வரலாம். அதைத் தவிர்க்க வேறு வழியே இல்லை. பாதிநாடு இல்லை என்றால் துணைநிலங்களில் ஒருபகுதியைக்கொடுங்கள்... அங்கே ஓர் சிற்றரசை நாங்கள் அமைக்கிறோம்.”

“இல்லை, அதுவும் என் இளையோனுக்கு அளித்த வாக்கை மீறுவதே. நான் பாண்டுவுக்கு அளித்தது விசித்திரவீரியர் எனக்களித்த முழு நாட்டை. குறைபட்ட நிலத்தை அல்ல. கொடுத்ததில் இருந்து சிறிதளவை பிடுங்கிக்கொள்ளும் கீழ்மையை நான் செய்யமுடியாது.” பெருமூச்சுடன் திருதராஷ்டிரர் எழுந்தார். “ஆனால் நீங்கள் கோருவதென்ன என்று தெளிவாகத் தெரியவந்ததில் மகிழ்கிறேன்...”

கைகூப்பி கண்ணீருடன் “தந்தையே, அப்பால் யமுனையின் கரையில் கிடக்கும் வெற்றுப்புல்வெளிப்பகுதிகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் நூற்றுவரும் அங்கே சென்றுவிடுகிறோம். அங்கே ஒரு சிற்றூரை அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “இல்லை. ஓர் அரசு அமைவதே அஸ்தினபுரியின் எதிரிகளுக்கு உதவியானது. அங்கே காந்தாரத்தின் செல்வமும் வருமென்றால் உங்கள் அரசு வலுப்பெறும். அது தருமனுக்கு எதிரானதாகவே என்றுமிருக்கும்.... நான் அதை ஒப்பமாட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாம் இதைப்பற்றி இனிமேல் பேசவேண்டியதில்லை என நினைக்கிறேன்.”

“தந்தையே, அவ்வாறென்றால் எங்களை இங்கிருந்து செல்ல விடுங்கள். யயாதியிடமிருந்து துர்வசுவும் யதுவும் கிளம்பிச்சென்றது போல செல்கிறோம். தெற்கே அரசற்ற விரிநிலங்கள் உள்ளன. பயிலாத மக்களும் உள்ளனர். நாங்கள் எங்கள் அரசை அங்கே அமைத்துக்கொள்கிறோம்” என்றான் துச்சாதனன். “அதையும் நான் ஒப்பமுடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் அஸ்தினபுரியின் இளவரசர்களே. நீங்கள் இந்நாட்டுக்கு வெளியே உருவாக்கும் ஒவ்வொரு நிலமும் அஸ்தினபுரிக்கு உரியவையே” என்றார் திருதராஷ்டிரர்.

“அப்படியென்றால் தமையன் இங்கே அவமதிப்புக்குள்ளாகி வாழவேண்டுமா? தாசிமைந்தர்களைப்போல ஒடுங்கி கைகட்டி அவன் முன் நிற்கவேண்டுமா?” என்று துச்சாதனன் உரத்து எழுந்த உடைந்த குரலில் கேட்டான். திருதராஷ்டிரர் திரும்பி துரியோதனனிடம் “மைந்தா, நான் உனக்கு நீ இன்றிருக்கும் தீரா நரகநெருப்பையே என் கொடையாக அளிக்கிறேன் என்றால் என்ன செய்வாய்?” என்றார். துரியோதனன் “தந்தையின் கொடை எதுவும் மூதாதையர் அருளேயாகும்” என்றான். “இங்கே ஒவ்வொரு நாளும் அவமதிப்புக்குள்ளாகவேண்டும் என்றும் அனைத்து தன்முனைப்பையும் இழந்து சிறுமைகொண்டு இவ்வாழ்நாளை முழுக்க கழிக்கவேண்டும் என்றும் நான் ஆணையிட்டால் என்னை நீ வெறுப்பாயா?” என்றார். “தந்தையே எந்நிலையிலும் உங்களை வெறுக்கமாட்டேன்” என தலை நிமிர்த்தி திடமான குரலில் துரியோதனன் சொன்னான்

“அவ்வாறென்றால் அதுவே என் கொடை” என்றார் திருதராஷ்டிரர். “இனி நாம் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை.” துச்சாதனன் உடைவாளை உருவியபடி முன்னால் வந்து கூவினான் “ஆனால் அதை நான் ஏற்கமாட்டேன். எனக்கு தந்தை என் தமையனே. அவருக்கு நரகத்தை விதித்துவிட்டு நீங்கள் நிறைவடையவேண்டியதில்லை. இதோ உங்கள் காலடியில் என் தலைவிழட்டும்” என்று வாளை உருவி கழுத்தை நோக்கி கொண்டு செல்லும் கணம் கதவு திறந்து விப்ரர் “அரசே” என்றார்.

துச்சாதனன் கை தயங்கிய அக்கணத்தில் துரியோதனன் அவன் தோளில் ஓங்கியறைந்தான். வாள் ஓசையுடன் மரத்தரையில் விழுந்தது. அதை துரியோதனன் தன் காலால் மிதித்துக்கொண்டான். விப்ரர் திகைத்து “அரசே, காந்தார இளவரசரும் கணிகரும் தங்களை காணவிழைகிறார்கள்” என்றார். அவர் கதவுக்கு அப்பால் நின்று கேட்டுக்கொண்டிருந்து சரியான தருணத்தில் உட்புகுந்திருக்கிறார் என்பதை துரியோதனன் அவர் கண்களில் கண்டான். துச்சாதனன் தலையை கையால் பற்றியபடி கேவல் ஒலியுடன் அப்படியே நிலத்தில் அமர்ந்துகொண்டான்.

திருதராஷ்டிரர் “வரச்சொல்... இது இங்கேயே பேசிமுடிக்கப்படட்டும்” என்றார். விப்ரர் வெளியேறினார். துரியோதனன் “இளையோனே... இனி இச்செயல் நிகழலாகாது. என் ஆணை இது” என்றான். திருதராஷ்டிரரின் தலை ஆடிக்கொண்டிருந்தது. துச்சாதனனை நோக்கி செவியைத் திருப்பி “மைந்தா, உன் ஒரு துளி குருதி என் முன் விழுமென்றால் அதன் பின் நான் என் வாழ்நாளெல்லாம் துயிலமாட்டேன். நான் அரசன் அல்ல. தந்தை. வெறும் தந்தை. மைந்தர்களின் குருதியைக் காண்பதே தந்தையரின் நரகம். ஆனாலும் நீ சொன்னதை என்னால் ஏற்கமுடியாது...” என்றார். கன்னங்களில் வழிந்து தாடையில் சொட்டிய கண்ணீருடன் துச்சாதனன் ஏறிட்டு நோக்கி உதடுகளை இறுக்கிக் கொண்டான்.

சகுனி உள்ளே வந்து இயல்பாக அவர்களை நோக்கிவிட்டு திருதராஷ்டிரரை வணங்கினார். அவர்கள் இருவருக்கும் அங்கே நிகழ்ந்தவை தெரியும் என்பதை விழிகளே காட்டின. விப்ரர் ஒலிக்காக திறந்துவைத்திருந்த கதவின் இடைவெளிவழியாக அவர்கள் உரையாடலை கேட்டிருக்கக்கூடும். ஆனால் சகுனி புன்னகையுடன் அமர்ந்தபடி “உண்டாட்டுக்கான ஒருக்கங்கள் நிகழ்கின்றன. இப்போதுதான் சௌவீர வெற்றிக்கான உண்டாட்டும் பெருங்கொடையும் முடிந்தது. மீண்டும் வெற்றி என்பது நகரை களிப்பிலாழ்த்தியிருக்கிறது” என்றார்.

கணிகர் அமர்ந்தபடி “நகரெங்கும் பாண்டவர்களை பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். பிரதீபரின் மறுபிறப்பு என்கிறார்கள் பார்த்தனை. ஹஸ்தியே மீண்டுவந்ததுபோல என்று பீமனை புகழ்கிறார்கள். நகரில் இத்தனை நம்பிக்கையும் கொண்டாட்டமும் நிறைந்து நெடுநாட்களாகின்றன என்றனர் முதியோர்” என்றார். “வெற்றி நம்பிக்கையை அளிக்கிறது. நம்பிக்கை வெற்றியை அளிக்கிறது.”

“ஆம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். .துரியோதனன் “நாங்கள் கிளம்புகிறோம் தந்தையே” என்றான். “இரு தார்த்தராஷ்டிரா, உன்னுடன் அமர்ந்து பேசத்தானே வந்தோம்?” என்றார் சகுனி. துரியோதனன் அமர்ந்துகொண்டான். துச்சாதனன் சால்வையால் முகத்தை துடைத்துக்கொண்டு சாளரத்தருகே சென்று சாய்ந்து நின்றான். சகுனி அவனைப் பார்த்தபின்னர் “இன்றைய உண்டாட்டின்போது வெற்றிச்செய்தியை அரசியே அறிவிக்கப்போவதாக சொல்லப்படுகிறது” என்றார். “ஆம், அது அவர்களின் வெற்றி அல்லவா? அதுவல்லவா முறை” என்றார் கணிகர்.

திருதராஷ்டிரர் வெறுமனே உறுமினார். சகுனி “கொற்றவை ஆலயத்தின் முன் உண்டாட்டுக்கும் பலிநிறைவு பூசைக்குமான ஒருக்கங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கௌரவர்கள் அங்கே சென்று ஆவன செய்யவேண்டும். தார்த்தராஷ்டிரனே, முதன்மையாக நீ அங்கே இருக்கவேண்டும். நீ விழாவுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது. ஏனென்றால் என்னதான் இருந்தாலும் தருமன் பட்டத்து இளவரசன், குந்தி பேரரசி, நாமெல்லாம் குடிமக்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். அரசகுலத்தவரை அகநிறைவுசெய்யவேண்டியது என்றுமே குடிமக்களின் கடமை” என்றார்.

துரியோதனன் “ஆம் மாதுலரே, அதற்காகவே நான் கிளம்பிக்கொண்டிருந்தேன்” என்றான். சகுனி “நான் அரசரை வந்து பார்த்து முகமன் சொல்லிக்கொண்டு போகலாமென்றுதான் வந்தேன். மாலையில் பலிநிறைவுப்பூசைக்கான ஒருக்கங்களில் பாதியை நானே செய்யவேண்டியிருக்கிறது. நெடுங்காலமாயிற்று அஸ்தினபுரி போர்வெற்றி கொண்டாடி. அதிலும் சத்ருநிக்ரகசாந்தி பூசை என்றால் என்ன என்றே இங்கே எவருக்கும் தெரியவில்லை. இங்குள்ள வைதிகர்களில் அதர்வ வைதிகர் எவருமில்லை. கணிகர் மட்டுமே அதர்வம் கற்றிருக்கிறார். அவர்தான் நின்று செய்யவேண்டியிருக்கிறது. பேரரசியிடம் அறிவித்துவிட்டோம்” என்றார்.

“அது என்ன பூசை?” என்றார் திருதராஷ்டிரர். சகுனி “நினைத்தேன், தங்களுக்குத் தெரிந்திருக்காது என்று... இங்கே அது பலதலைமுறைகளாக நிகழ்வதில்லை. நாங்கள் காந்தாரத்தில் அவ்வப்போது சிறிய அளவில் செய்வதுண்டு” என்றபின் கணிகரிடம் "சொல்லுங்கள் கணிகரே” என்றார். கணிகர் “வேதம் முதிராத தொல்காலத்தில் இருந்த சடங்கு இது. வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. அதற்கும் முந்தைய தொல்பழங்குடிகளிடமிருந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஏனென்றால், இன்றும் பல பழங்குடிகள் இதை முறையாக செய்து வருகிறார்கள்” என்றார்.

“அரசே, இது எதிரிகள் மீது முழுமையான வெற்றியை குறிக்கப் பயன்படும் ஒரு சடங்கு. எதிரிகளை வென்றபின் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்து குலதெய்வத்திற்கு படைப்பார்கள். வேதம் தொடாத குலங்களில் இறந்தவர்களுக்குச் செய்யவேண்டிய அனைத்து கடன்களையும் செய்து புதைப்பார்கள். வேதத் தொடர்புள்ள குடிகளில் நெய்யெரி வளர்த்து ஆகுதி செய்வது வழக்கம்” என்றார். “மூக்கிழந்தவர்கள் அநாசர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அநாசர்கள் இறந்தவர்களுக்கு நிகரானவர்கள். மானுடர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அவர்கள் இழந்துவிடுகிறார்கள். அடிமைகளாகவே அவர்கள் வாழமுடியும். அவர்களின் தலைமுறைகளும் இறந்தவர்களின் மைந்தர்களே” என்று கணிகர் சொன்னார் “ஆனால் வழக்கமாக உயிருடன் உள்ள எதிரிகளின் மூக்குகளைத்தான் வெட்டுவது வழக்கம். பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவருகிறார்கள்.”

பற்களை இறுகக் கடித்து தசை இறுகி அசைந்த கைகளால் இருக்கையைப் பற்றியபடி “யாருடைய ஆணை இது?” என்றார் திருதராஷ்டிரர். “குந்திதேவியே ஆணையிட்டதாக சொல்கிறார்கள்” என்றார் சகுனி. “அவள் இதை எங்கே அறிந்தாள்? யாதவர்களிடம் இவ்வழக்கம் உண்டா?” என்றார் திருதராஷ்டிரர். “முற்காலத்தில் இருந்திருக்கிறது... நூல்களில் இருந்தோ குலக்கதைகளில் இருந்தோ கற்றிருக்கலாம்” என்றார் சகுனி. திருதராஷ்டிரர் தன் இருகைகளையும் ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டார். பெரிய தோள்களில் தசைகள் போரிடும் மல்லர்கள் போல இறுகிப்பிணைந்து நெளிந்தன.

“காந்தாரரே, இவ்வழக்கம் அஸ்தினபுரியில் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். “மாமன்னர் யயாதியின் காலம் முதலே நாம் போரில் வென்றவர்களை நிகரானவர்களாகவே நடத்திவருகிறோம். அவர்களுக்கு பெண்கொடுத்து நம் குலத்துடன் இணைத்துக்கொள்கிறோம். அது யயாதியின் ராஜரத்ன மாலிகா சொல்லும் ஆணை.” திருதராஷ்டிரர் பற்களைக் கடிக்கும் ஒலியை கேட்க முடிந்தது. “அவ்வாறுதான் நம் குலம் பெருகியது. நம் கிராமங்கள் விரிவடைந்தன. நாம் மனிதர்களை இழிவு செய்ததில்லை. எந்தக் குல அடையாளமும் மூன்று தலைமுறைக்குள் மாற்றிக்கொள்ளத்தக்கதே என்றுதான் நாம் ஏற்றுக்கொண்ட யம ஸ்மிருதி சொல்கிறது...”

கணிகர் “ஆம் அரசே. ஆனால் இரக்கமற்ற போர்களின் வழியாக வெல்லமுடியாத நிலத்தையும் செல்வத்தையும் அடைந்த பின்னரே அஸ்தினபுரியின் மாமன்னர்களுக்கு அந்த ஞானம் பிறந்தது. கருணைகாட்டவும் பெருந்தன்மையாக இருக்கவும் அதிகாரமும் வெற்றியும் தேவையாகிறது” என்றார். “ஆனால் யாதவ அரசி இன்னும் உறுதியான நிலத்தை அடையாத குடியைச் சேர்ந்தவர். முற்றுரிமை கொண்ட செங்கோலும் முடியும் அவர்களின் குலங்கள் எதற்கும் இதுவரை அமையவில்லை” என்றார்.

திருதராஷ்டிரர் கைகளை ஓங்கி அறைந்துகொண்டு எழுந்தார். “ஆனால் அவள் இப்போது அஸ்தினபுரியின் அரசி. தேவயானியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவள். யயாதியின் கொடிவழியில் மைந்தர்களைப் பெற்றவள்...” என்று கூவினார். “அதை நாம் சொல்லலாம், அவர்கள் உணரவேண்டுமல்லவா?” என்றார் சகுனி. “இது இத்தனை சினமடையக்கூடிய செய்தியா என்ன? அவர்கள் இப்போதுதான் மைந்தர்கள் வழியாக உண்மையான அதிகாரத்தை சுவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கால்முளைத்த இளங்குதிரை சற்று துள்ளும். திசை தோறும் ஓடும். களைத்தபின் அது தன் எல்லையை அடையும். பேரரசி இன்னும் சற்று அத்துமீறுவார்கள். ஆனால் அதிகாரம் தன் கையை விட்டு போகாதென்றும் அதை அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றும் உணரும்போது அவர்கள் அடங்குவார்கள், நாம் சற்று காத்திருக்கலாம்” என்றார் கணிகர்.

திருதராஷ்டிரர் தன் கைகளை விரித்து ஏதோ சொல்லப்போவதுபோல ததும்பியபின் அமர்ந்துகொண்டார். “கணிகரே, இதே அரியணையில் மச்சர்குலத்து சத்யவதி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் பேரரசிக்குரிய பெருந்தன்மையை இழந்ததில்லை” என்றார் திருதராஷ்டிரர். “அவர்களுக்கு மாவீரர்களான மைந்தர்கள் இல்லை” என்றார் கணிகர். திருதராஷ்டிரர் “கணிகரே!” என உறும “அதுதானே உண்மை? பாரதவர்ஷத்தை சுருட்டிக்கொண்டுவந்து காலடியில் வைக்கும் மைந்தர்களைப் பெற்றிருந்தால் அவர்கள் அப்படி இருந்திருப்பார்களா என்ன?” என்று கணிகர் மீண்டும் சொன்னார்.

திருதராஷ்டிரர் எழுந்து. தன் சால்வைக்காக கைநீட்டினார். சகுனி எடுத்து அவரிடம் அளிக்க அதை சுற்றிக்கொண்டு திரும்பி கனைத்தார். விப்ரர் வாசலைத் திறந்து வந்து “அரசே” என்றார். “என்னை இசைகேட்க கூட்டிக்கொண்டு செல். உடனே” என்றார் திருதராஷ்டிரர். “மைத்துனரே, நான் உண்டாட்டுக்கு வரப்போவதில்லை. அதை அரசியிடம் சொல்லிவிடுங்கள்” என்றபின் விப்ரரின் தோள்களைப் பிடித்தார்.

சகுனியும் கணிகரும் துரியோதனனும் எழுந்து நின்றனர். “அரசே அது மரபல்ல. அரசர் இல்லாமல் உண்டாட்டு என்றால் அதை நகர்மக்கள் பிழையாக புரிந்துகொள்வார்கள்” என்றார் சகுனி. “அரண்மனைப்பூசல்களை மக்கள் அறியலாகாது” என்றார் கணிகர். “ஆம், அது உண்மை. ஆனால் இன்னமும்கூட அஸ்தினபுரியில் யயாதியை அறிந்த மூத்தோர் இருக்கக் கூடும். அவர்கள் நான் வந்து அந்தக் கொடிய சடங்குக்கு அமர்ந்திருந்தால் அருவருப்பார்கள். நான் ஒருவனேனும் இச்சடங்கில் இல்லை என்று அவர்கள் அறியட்டும். யயாதியின் இறுதிக்குரலாக இது இருக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர். பெருமூச்சுடன் தோள்கள் தொய்ய “செல்வோம்” என்று விப்ரரிடம் சொன்னார்.

கணிகர் “அரசே, மீண்டும் ஒருமுறை சிந்தியுங்கள். தாங்கள் வரவில்லை என்றால் அதை யாதவ அரசி கொண்டாடவே செய்வார்கள். முழு அரசதிகாரமும் அவர்களின் கைகளுக்குச் செல்வதற்கு நிகரானது அது. முதல் முறையாக ஓர் அரசச்சடங்கு அரசரில்லாமல் அரசியால் நடத்தப்படுகிறது. அது ஒரு முன்னுதாரணம். அதன்பின் எச்சடங்குக்கும் அதுவே வழியாகக் கொள்ளப்படும்” என்றார். “அதுவே நிகழட்டும். நான் இனி இந்தக் கீழ்மைநாடகங்களில் ஈடுபடப்போவதில்லை. இசையும் உடற்பயிற்சியும் போதும் எனக்கு. அதுவும் இங்கு அளிக்கப்படவில்லை என்றால் காடேகிறேன். அதுவும் அஸ்தினபுரியின் அரசர்களுக்கு ஆன்றோரால் சொல்லப்பட்ட கடன்தானே?”

திருதராஷ்டிரர் செல்வதை நோக்கியபடி சகுனியும் கணிகரும் நின்றனர். கதவு மூடப்பட்டதும் சகுனி புன்னகையுடன் திரும்ப அமர்ந்துகொண்டார். கணிகர் அருகே அமர்ந்து “முறைமையைச் சொல்லி அவரை விதுரர் அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார்” என்றார். சகுனி “இல்லை, நான் அரசரை நன்கறிவேன். அவர் கொதித்துக் கொந்தளித்தால் எளிதில் சமன் செய்துவிடலாம். இறங்கிய குரலில் சொல்லிவிட்டாரென்றால் அவருக்குள் இருக்கும் கரும்பாறை அதைச் சொல்கிறது. அதை வெல்ல முடியாது” என்றார்.

“இன்று பூசைக்கு அரசர் செல்லக் கூடாது. அரசர் செல்லாததை காரணம் காட்டி காந்தார அரசி செல்லமாட்டார். அவர்கள் இல்லாததனால் கௌரவர்கள் எவரும் செல்லலாகாது. காந்தாரர்களும் கௌரவர்களின் குலமுறை உறவினரும் ஆதரவாளர்களும் செல்லலாகாது. அரண்மனைக்குள் ஒரு பெரிய குடிப்பிளவு இருப்பது இன்று அஸ்தினபுரியின் அத்தனை மக்களுக்கும் தெரிந்தாகவேண்டும்” என்றார் கணிகர். “அந்தப்பிளவு இன்னும் நிகழவில்லையே. நிகழ்ந்தபின் நகர்மக்களை அறிவிக்கலாம் அல்லவா?” என்று சகுனி கேட்டார். “நாம் அறிவித்தபின் பிளவு பொருந்திவிடும் என்றால் பெரும் பின்னடைவாக ஆகிவிடும் அது.”

கணிகர் புன்னகைத்து “காந்தாரரே, மக்களின் உள்ளத்தை அறிந்தவனே அரசுசூழ்தலை உண்மையில் கற்றவன். பிளவே இல்லாதபோதுகூட அப்படி எண்ண ஒரு வாய்ப்பை அளித்தால் மக்கள் பேசிப்பேசி பிளவை உருவாக்கி விடுவார்கள். பேரார்வத்துடன் அதை விரிவாக்கம் செய்து பிறகெப்போதும் இணையாதபடி செய்துவிடுவார்கள். நாம் கொண்டிருக்கும் பிளவின் பின்னணியும் அதன் உணர்ச்சிநிலைகளும் மக்களால் இன்றுமுதல் வகைவகையாக கற்பனைசெய்யப்படும். தெருக்கள்தோறும் விவாதிக்கப்படும். நாளைமாலைக்குள் இந்நகரமே இரண்டாகப்பிரிந்துவிடும். அதன்பின் நாம் இணைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இணைவதற்கு எதிரான எல்லா தடைகளையும் அவர்களே உருவாக்குவார்கள்” என்றார்.

“நம் குலங்களன்றி நமக்கு எவர் ஆதரவளிக்கப்போகிறார்கள்” என்றான் துரியோதனன். “சுயோதனரே, அவ்வாறல்ல. நேற்றுவரை பாண்டவர்கள் அதிகாரமற்றவர்கள். ஆகவே அவர்களின் நலன்கள் பாராட்டப்பட்டன. இன்று அவர்கள் அதிகாரத்தை அடைந்துவிட்டனர். ஆகவே அவர்களுக்கு எதிரிகள் உருவாகியிருப்பார்கள். அதிகாரத்தை இழந்தவர்கள், இழக்கநேரிடுமோ என அஞ்சுபவர்கள், தங்கள் இயல்பாலேயே அதிகாரத்துக்கு எதிரான நிலையை மேற்கொள்பவர்கள், ஏதேனும் அமைதியின்மை உருவானால் நன்று என எண்ணுபவர்கள்... அப்படி ஏராளமானவர்கள் இருப்பார்கள்” என்றார் கணிகர்.

“அத்துடன் அவர்கள் யாதவர்கள். அவர்கள் அதிகாரம் அடைவதை விரும்பாத ஷத்ரியர்கள் பலர் இங்கு உண்டு” என்றார் சகுனி. “ஆனால் இந்நகரில் எளிய குடிகளே எண்ணிக்கையில் மிகை” என்றான் துரியோதனன். “அங்கும் நாம் மக்களை சரியாக கணிக்கவேண்டும் சுயோதனரே! யாதவர்களைவிட எளிய குடிகளும் நிகரான குடிகளும் அவர்களுக்கு எதிராகவே உளம் செல்வார்கள். தங்களை நூற்றாண்டுகளாக தங்களைவிட மேல்நிலையில் இருக்கும் ஷத்ரியர் ஆள்வதை அவர்கள் விரும்புவார்கள். தங்களில் இருந்து ஒருவர் எழுந்து வந்து ஆள்வதை விரும்ப மாட்டார்கள்” என்றார் கணிகர்.

“மக்கள் அழிவை விழைகிறார்கள்” என்றார் சகுனி நகைத்தபடி. “அல்ல. அவர்கள் விரும்புவது மாற்றத்தை. பிளவு என்பது என்ன? பிரிந்து பிரிந்து விரிவது அல்லவா? அத்தனை தொல்குலங்களும் பூசலிட்டுப்பிரிந்து புதிய நிலம் கண்டடைந்து விரிவடைந்திருக்கின்றன. அப்படித்தான் பாரதவர்ஷம் முழுக்க குலங்கள் பெருகின. நிலம் செழித்தது. அது மக்களுக்குள் தெய்வங்கள் வைத்திருக்கும் விசை. செடிகளை வளரச்செய்யும், மிருகங்களை புணரச்செய்யும் அதே விசை” என்றார் கணிகர். “சுயோதனரே, உங்கள் தம்பியரை வடக்குக் களத்துக்கு வரச்சொல்லுங்கள். நாம் இன்று சிலவற்றைப் பேசி முடிவெடுக்கவேண்டும்.”

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் - 3

வடக்கு யானைத்தளத்தை ஒட்டியிருந்த பெருங்களமுற்றத்தில் கோட்டைவாயில் அருகே இருந்த படைக்கலக் கொட்டில் முற்றிலும் காந்தாரர்களுக்கு உரியதாக இருந்தது. கனத்த காட்டுமரத்தூண்களுக்கு மேல் மரப்பட்டைக் கூரையிடப்பட்ட கொட்டிலின் உள்ளே மெல்லிய மூங்கில்களை சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட பெரிய முக்கோணவடிவ முகடுக்கூட்டின் மேல் கூரை அமைந்திருந்தமையால் உள்ளே நடுவில் ஒருவரியாக மட்டுமே தூண்கள் இருந்தன. மூங்கில்களால் ஆன சிலந்திவலை போல அமைந்திருந்த கூரையில் ஏராளமான பெரிய மரப்பானைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தமையால் எதிரொலிகள் இல்லாமல் எவர் குரலும் அங்கே துல்லியமாக ஒலிக்கும்.

வடக்குக் கோட்டைவாயிலுக்கு அப்பால் காந்தாரர்களின் ஏழு ஊர்கள் இருந்தன. அவற்றுக்கு காந்தாரத்தில் இருந்த தங்கள் ஊர்களின் பெயர்களையே அவர்கள் சூட்டியிருந்தனர். பீதபுரி என்றும் பிங்கலபதம் என்றும் பெயர்கொண்ட இடங்களில் பசுமையும் ஈரமும் எப்போதும் நிறைந்திருக்கும் முரண்பாட்டை அங்கே புதியதாக வரும் சூதர்கள்தான் முதலில் உணர்ந்தார்கள். அப்பகுதியே காந்தாரகங்கை என்று அழைக்கப்பட்டது. முன்பு அதற்கு அப்பாலிருந்த பெரும் சதுப்பும் அடர்காடும் புராணகங்கை என்று அழைக்கப்பட்டன என்று முதியோர் நினைவுகூர்ந்தனர். அங்கிருந்து யானைக்கூட்டங்கள் நகருக்குள் நுழைந்து பழகிய யானைகளுடன் போரிட்டதுண்டு என்றனர்.

அங்கே தொல்காலத்தில் கங்கை ஓடியதென்றும் அதன் தடமே அந்தப்பெரிய பள்ளம் என்றும் நிமித்திகர் சொன்னார்கள். யயாதியின் காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மையான நகரமான மாகேந்திரபிரஸ்தம் கங்கையின் கரையில் அமைந்திருந்த சிறிய அழகிய துறைநகரம். கங்கை விலகிச்சென்றபோது அது மறைந்தது. பின்னர் மாமன்னர் ஹஸ்தி தன் மூதாதையரின் நகர் இருந்த அவ்விடத்திலேயே தன் புதியநகரை அமைத்தார். அங்கே ஆழத்துப்பெருக்காக கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்றனர் மூத்தோர். மண்ணுக்குள் மூன்றடி ஆழத்தில் பெருகிச்செல்லும் நீரை காணமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

புராணகங்கை பெருகிவந்து கோட்டைக்கதவை உடைத்து நகரை மூழ்கடித்ததை மூத்தவர்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. அங்குதான் யானைகளைப் பயிற்றும் பெரிய வடக்குவெளி இருந்தது. அங்கிருந்த அனுமன் ஆலயத்திற்கு அருகேதான் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரருக்கும் இடையே மற்போர் நடந்தது என்று ஒரு முதிய வீரர் நினைவுகூர்ந்தார். அதன்பின் அங்கே நிகழ்ந்த போர்களை ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினர். அதை ஒட்டி இருந்த பெரிய வெற்று நிலத்தில் சகுனி உருவாக்கிய பெரிய கொட்டிலில்தான் காந்தாரர்களின் பன்னிரு குலங்களின் குலச்சபை வருடத்திற்கு ஆறுமுறை கூடி குடிப்பூசல்களை விசாரித்துவந்தது.

கௌரவர்கள் நூற்றுவரும் ஒன்றாகவே வந்தனர். துரியோதனன் தனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டு தலைகுனிந்து எண்ணங்களில் ஆழ்ந்திருந்தான். சகுனியின் ஒற்றனான சுகிர்தன் வந்து துச்சாதனனிடம் "கொட்டிலைச் சுற்றி எந்த மானுடரும் வரமுடியாதபடி காவல் அமைத்துவிட்டேன் இளவரசே” என்றான். “மாதுலர் வந்ததும் நீர் விலகிவிடும். ஆனால் தொலைவிலிருந்து கொட்டிலை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிரும்” என்றான் துச்சாதனன். “ஆணை” என்று தலைவணங்கி சுகிர்தன் விலகிச் சென்றான்.

சகுனியும் கணிகரும் சகுனியின் தேரில் வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கௌரவர்கள் எழுந்து வணங்கினர். சகுனி கௌரவர்களை ஒவ்வொருவராக நோக்கி தலை குலுக்கியபடி சென்று அமர்ந்துகொண்டார். அவர்களின் முகங்கள் ஒன்றுபோலவே இருந்தன. முகங்களில் இருந்த உணர்வுகளும் உடலசைவுகளும்கூட ஒன்றாக தெரிந்தன. அவர் “அனைவரும் வந்துவிட்டனரா?” என்றார். துச்சாதனன் “அனைவரும் இங்கிருக்கிறார்கள் மாதுலரே” என்றான். கணிகர் “எண்ணிப்பார்க்கவேண்டும் போலிருக்கிறதே” என்று சொல்லி தன் கரிய பற்களைக்காட்டி நகைத்தார்.

“குண்டாசி உடல்நலமின்றி இருந்தான் அல்லவா?” என்றார் சகுனி. குண்டாசி முன்னால் வந்து “மாதுலரே, நலம்பெற்று வருகிறேன்” என்றான். அவன் தோளில் தோல்பட்டையால் கட்டுபோடப்பட்டிருந்தது. “தோள்முழை இறங்கிவிட்டது” என்றான் துச்சாதனன். “மருத்துவர்கள் இப்போதுதான் உள்ளே நுழைத்திருக்கிறார்கள்... வலியில் முனகிக் கொண்டிருந்தான்.” அவன் தோள்களை நோக்கியபின் கணிகர் “உடன்பிறந்தார் நூற்றுவரும் கதாயுதம்தான் பயிலவேண்டுமா என்ன? இவன் தோள்கள் மெலிந்திருக்கின்றன. கதையின் எடைதாங்கும் எலும்புகளும் இல்லை” என்றார்.

“ஓரிருவர் வில்லும் வாளும் கற்றோம் கணிகரே” என்றான் துச்சாதனன். “எவருக்கும் அவை கைகளில் அமையவில்லை. வேறுவழியின்றி கதாயுதத்துக்கே வந்தோம். சற்று முயன்றால் அது கைவருகிறது.” சகுனி நகைத்து “இளவயதிலேயே அனைவரும் மூத்தவனை நோக்கி வளர்கிறார்கள். அவனைப்போலவே நடக்கிறார்கள், அசைகிறார்கள், பேசுகிறார்கள். சிந்தனையும் அவனைப்போலவே. ஆகவே அகத்தில் அவன் ஏந்திய கதாயுதம் நிலைபெற்றுவிடுகிறது. ஆகவே உடல் அதையன்றி பிறிதை ஏற்பதில்லை. நான் சிலரை பயிற்றுவிக்க முயன்று பார்த்தேன்...” என்றார். “கதை தனக்குரிய தோள்களை தானே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை கொண்ட படைக்கலம்” என்றபின் நகைத்து “இன்னும் ஒரு வருடத்தில் பாருங்கள். தினம் நூறு அப்பம் உண்பான்” என்றார்.

கணிகர் “எல்லா படைக்கலங்களும் தங்களுக்குரிய உடலையும் உள்ளத்தையும் உருவாக்கிக் கொள்கின்றன. உடல்களில் ஏறி அவை செல்கின்றன” என்றார். சகுனி “அனைவரும் அமருங்கள். இந்த அவைகூடலைப்பற்றி உங்கள் தமையன் சொல்லியிருப்பார். இது கௌரவர்களின் தனிக்கூட்டம். இங்கே பேசப்படும் ஒரு சொல்கூட உங்களைவிட்டு வெளியே செல்லக் கூடாது. உங்கள் அன்னையும் தந்தையும் அறியலாகாது. அணுக்கச்சேவகர் உய்த்துணரவும் கூடாது” என்றார். கௌரவர்கள் “ஆம் ஆம்” என்றனர்.

“இன்றுகாலை அரசரை உங்கள் தமையன்கள் அவரது அறையில் சந்தித்தனர். இன்றுமாலை நிகழவிருக்கும் உண்டாட்டுக்கு அரசர் செல்லப்போவதில்லை என்று தெரியவந்த்து. முன்பில்லாத வகையில் முறைமீறி யாதவ அரசி நிகழ்த்தும் பலிநிறைவுப்பூசையை அரசர் சினத்துடன் நோக்குகிறார். ஆகவே நீங்களும் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை” என்றார் சகுனி. “ஆம்” என்றனர் கௌரவர்.

‘இந்தப் பூசனை முடிந்ததும் நகரில் அரசகுலத்தில் உள்ள பூசல் அறியப்பட்டுவிடும். பிளவை மக்கள் பேசிப்பேசி பெருக்குவார்கள். எவர் எதைக்கேட்டாலும் அமைதியாக இருங்கள். எதையும் சொல்லவேண்டாம். அமைதி மேலும் கதைகளை உருவாக்கும். பிளவு வலுக்கும்.”

அவர்களை நோக்கியபடி சகுனி சொன்னார் “இன்று காலை உங்கள் தமையன்கள் உங்கள் தந்தையிடம் பேசியவற்றை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.” கௌரவர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். “அரசர் முடிவில் உறுதியுடன் இருக்கிறார். உங்கள் தமையன் பாண்டவர்களின் தாசனாக இங்கே வாழ்ந்தாகவேண்டும் என்று சொல்கிறார்” என்றார் சகுனி. கௌரவர்களிடம் மெல்லிய ஓசை எழுந்தது. துராதரன் “ஒருபோதும் அது நடவாது மாதுலரே” என்றான். “ஆம், அது அழுகிய மாமிசத்தை யானை உண்ணவேண்டுமெனச் சொல்வது போன்றது. ஒருநாளும் நடக்கப்போவதில்லை. ஆனால் உங்கள் தந்தை அதில் நிலைகொள்கிறார். அவரை மீறி எதுவுமே செய்யமுடியாது” என்றார் சகுனி.

சகுனி தொடர்ந்தார் “நாட்டில் பாதியை அவர் அளிக்கப்போவதில்லை. ஒரு சிறுதுண்டு நிலம்கூட கொடுக்கப்போவதில்லை. இந்நகரை விட்டு நீங்கள் நூற்றுவரும் நீங்கி உங்களுக்கென நிலத்தை கண்டடைவதற்கும் அவரது வாழ்த்து வரப்போவதில்லை. இந்நிலையில் உங்களுக்கிருக்கும் வழி ஒன்றே.” கௌரவர்களின் முகங்களை நோக்கி போதிய இடைவெளி விட்டபின் சகுனி சொன்னார் “நாட்டைப்பிரிப்பதன்றி வேறு வழியில்லை என்று அவர் எண்ணவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கூடிக்கூடி வரவேண்டும். அவர் கண்ணெதிரே ஒரு குருதிப்போர் நிகழும் என்ற நிலை வரவேண்டும்... அப்போது அவருக்கு வேறுவழி இருக்காதென்று எண்ணினோம்.”

“அது நிகழாதென்று இன்று காலையுடன் புரிந்துகொண்டோம்” என்றார் கணிகர். “அரசரின் சொற்கள் அதையே காட்டின. பாண்டவர் உயிருடன் இருப்பதுவரை அவர் சுயோதனர் நாடாள ஒப்பமாட்டார்.” அந்தச்சொற்களின் உட்பொருள் புரிந்து கௌரவர்களின் உடல்களில் ஓர் அசைவு ஓடியது. துஷ்கர்ணன் மூக்கை உறிஞ்சி கையால் தேய்த்தான். கணிகர் சொன்னார் “சபரரின் அரசநீதியான சதப்பிரமாணம் கொலையை அரசனின் அறமாகவே முன்வைக்கிறது.” மிக இயல்பாக எளிய ஒன்றைச் சொல்வதுபோல அவர் அதைச் சொன்னது முற்றிலும் திட்டமிடப்பட்டது என்று துச்சாதனன் உணர்ந்தான்.

“கொலைகள் இருவகை. தார்மிகம், அநிவார்யம் என்கின்றது சதப்பிரமாணம். எட்டுவகை தார்மீகக் கொலைகளை அரசன் செய்யலாம். போரில் அவன் எதிரிகளைக் கொல்லலாம். தனக்கு இரண்டகம் செய்த குடிகளைக் கொல்லலாம். முதன்மைச் செய்திகளை அறிந்த ஒற்றர்களை அவர்களின் பயன் முடிந்ததும் கொல்லலாம். நெருக்கமான அணுக்கச் சேவகர்கள் தேவைக்குமேல் தெரிந்துகொண்டவர்கள் என்றால் கொல்லலாம். அரசனின் அவையில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர்கள் சித்தப்பிறழ்வாலோ பிற நோய்களாலோ தங்கள் உள்ளக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள் என்றால் கொல்லலாம். தண்டனைக்குரிய குற்றவாளிகளைக் கொல்லலாம். அவையில் தன்னை அவமதித்தவர்களைக் கொல்லலாம். மல்யுத்தத்தில் எதிரியைக் கொல்லலாம்.”

“தார்மீகக் கொலைகளை செய்வதனால் அரசனுக்குப் பழியோ பாவமோ வருவதில்லை. புகழே உருவாகும்” என்றார் கணிகர். “அநிவார்யம் என்பவை தவிர்க்கமுடியாமல் அவன் செய்யும் கொலைகள். அரசனின் முதன்மை அறம் என்பது அரசனாக இருப்பதே. அரசனாக இருந்தபின் அவன் ஆற்றும் செயல்களையே தார்மிகம் என்கிறோம். அரசனாக ஆவதற்கும் அரசனாக நீடிப்பதற்கும் அவன் கொலைகள் செய்யலாம். அக்கொலைகள் அவனுக்குப் பழியையும் பாவத்தையும் சேர்க்கும். அவன் பெருங்கொடைகள் வேள்விகள் மற்றும் குடியறங்களைச் செய்து காலப்போக்கில் அந்தப் பழியிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.”

“அநிவார்யம் ஒன்பது வகை என்கின்றது சதப்பிரமாணம். தன் அரசுரிமைக்குப் போட்டியாக வருபவர்களை அரசன் கொல்லலாம். தன் உடன்பிறந்தார், தந்தையின் உடன்பிறந்தார், மற்றும் தாயாதிகள் இவ்வகையில் கொல்லத்தக்கவர். தன் அதிகாரத்துக்கு எதிராக வளர்ந்துவரும் குலத்தலைவர்களைக் கொல்லலாம். தன் கருவை ஏந்தியிருக்கும் பெண்ணை அவள் பின்னாளில் உரிமையுடன் வருவாளெனத் தோன்றினால் கொல்லலாம்” கணிகர் சொன்னார்.

“அரசன் தன் தவிர்க்கமுடியாத ஆட்சிச் செயல்களுக்குத் தடையாக அமையக்கூடிய மூத்தவர்களைக் கொல்லலாம். தன் புகழை அழிக்கும் சூதர்களைக் கொல்லலாம். தன்னை வெல்லக்கூடும் என்று அரசன் அஞ்சும் எதிரிநாட்டரசர்களையும் அவர்களின் குடும்பத்தவரையும் வஞ்சனையில் கொல்லலாம். தவிர்க்கமுடியாத காரணங்களால் செல்வத்தைக் கவர்வதற்காக வணிகர்களைக் கொல்லலாம். இன்றியமையாதபடி மக்களின் நோக்கை திசைதிருப்புவதற்காக குடிகளைக் கொல்லலாம். போரை தவிர்ப்பதற்காக தன் வீரர்களைக் கொல்லலாம்.”

“அநிவார்யம் ஒருபோதும் அரசனால் நேரிடையாக செய்யப்படக்கூடாது. அவற்றைச் செய்யும் ஏவலர்களையும் சதிகாரர்களையும் அவன் தன்னுடன் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றால் அவர்களையே பழிசுமத்தி தண்டிக்கவேண்டும். அநிவார்யக் கொலைகளுக்கான ஆணையை அரசன் தன் வாயால் பிறப்பிக்கலாகாது. அது அவன் அமைச்சரால் உய்த்தறியப்படவேண்டும். அதற்கு அவன் சான்றுகளை விட்டுவைக்கக்கூடாது“ என்றார் கணிகர். “அநிவார்யக் கொலைகளை அரசன் பின்னர் எண்ணிப்பார்க்கக் கூடாது. அக்கொலைகளை அவன் அரசை வெல்லவும் அதன்மூலம் மக்களின் நலன் கருதியும் செய்வானென்றால் அவனுக்கு மூதாதையரின் சினம் நிகழாது. எவருடைய தீச்சொற்களும் அவனை அடையாது.”

“அநிவார்யக் கொலைக்குப்பின் அரசன் செய்யவேண்டிய கழுவாய்களையும் நூல் வகுத்துரைக்கிறது. குடிமக்கள் கொல்லப்பட்டால் கொலையின் அளவுக்கு ஏற்ப நீர்நிலைகள் வெட்டப்படவேண்டும். பெண்கள் கொல்லப்பட்டால் அன்னசத்திரங்கள் அமைக்கப்படவேண்டும். அமைச்சரோ சூதரோ கொல்லப்பட்டால் கல்விச்சாலைகள் அமைக்கப்படவேண்டும். அரசகுலத்தோர் கொல்லப்பட்டால் மக்கள் வழிபடும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு அதில் நாள்பூசனை முறைமைகள் செய்யப்படவேண்டும். அந்த ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்குரிய திதி நாட்களில் அவர்களின் ஆன்மாக்கள் நிறைவுகொள்ளும்படி பூசைகள் செய்யப்படவேண்டும்.”

அச்சொற்களை கௌரவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அச்செயல்களுக்கு நூல்களின் பின்பலம் உள்ளது என்ற எண்ணம் அவர்களில் உருவாவது தெரிந்தது. துச்சாதனன் அதுவே கணிகரின் நோக்கம் என்றும் ஐயுற்றான். அவர் நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது சொற்கள் தடையின்றி வரவைக்கிறார். அவை ஐயமற்ற ஒலியுடன் இருக்கும், ஆனால் நினைவில் நிற்பதுமில்லை. துச்சாதனன் புன்னகையுடன் கணிகரை நோக்கினான். என்றோ ஒருநாள் அவர் தமையனுக்கும் எதிரியாவார், அன்று அவரை தான் கொல்லவேண்டியிருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“நாம் செய்வதற்கு இனி ஒன்று மட்டுமே உள்ளது” என்றார் கணிகர். “பாண்டவர்களும் அவர்களின் அன்னையும் இறந்தாகவேண்டும்.” ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கிவிட்டு “ஒருவர்கூட எஞ்சலாகாது. ஒருவர் எஞ்சினாலும் ஆட்சியை அவருக்கே அளிப்பார் உங்கள் தந்தை. ஆகவே நமக்கு வேறுவழியில்லை. இது அநிவார்யக் கொலை. ஆகவே இளவரசர் துரியோதனர் கொலைக்கு ஆணையிடவேண்டியதில்லை. நானே அந்த ஆணையை விடுக்கிறேன். கொலையை நிகழ்த்துபவர்களையும் நானே அமர்த்துகிறேன். அது கொலை என எவரும் அறியப்போவதில்லை. விபத்து என்றே தோன்றும். அவர்களின் இறப்புக்குப்பின் இயல்பாகவே இந்த நாடும் முடியும் சுயோதனரை வந்தடையும்.”

துரியோதனன் சற்று அசைந்தான். அவன் எதிர்ச்சொல் எழுப்பப்போகிறான் என்று துச்சாதனன் எண்ணிய கணம் சகுனி “வேறு வழியில்லை என்பதை இளவரசர் துரியோதனர் அறிவார். பாரதவர்ஷத்தை வென்று அறம்செழிக்க ஆளும்போது இந்தப்பாவம் நிகர்செய்யப்படுமென அவர் அறிந்திருப்பார்” என்றார். “இப்பழிக்கு உடனடியாகச் செய்யவேண்டிய கழுவாய் ஏது?” கணிகர் “இறப்பவர்கள் அரசகுடியினர். ஆகவே ஆறு ஆலயங்கள் அமைக்கப்படவேண்டும். யமன் மாருதன் இந்திரன் மற்றும் அஸ்வினி தேவர்களுக்கும் கொற்றவைக்கும்” என்றார். “உடன் எளியோர் இறப்பார்கள் என்றால் அதற்குரிய சத்திரங்களும் அன்னசாலைகளும் அமைக்கப்படலாம்.”

“நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றார் சகுனி. துரியோதனன் பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டான். கணிகர் துச்சலனிடம் “வெளியே சென்று அமைச்சனை வரச்சொல்க” என்றார். துச்சலனுடன் வந்தவன் புரோசனன் என்னும் சிற்றமைச்சன் என்று துரியோதனன் கண்டான். ஒற்றனாக இருந்து அமைச்சன் ஆனவன் உளவுப்பணிகளை ஒருங்கமைத்து வந்தான். ஒற்றைக்கண்ணும் வடுக்கள் நிறைந்த முகமும் கொண்ட வெண்ணிற உருவினனான புரோசனன் பெரிய பற்களைக் காட்டி இளித்துக்கொண்டே வணங்கினான். “அமரும் புரோசனரே” என்றார் கணிகர். அவன் அமர்ந்துகொண்டு மீண்டும் இளித்தான்.

“புரோசனர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார்” என்றார் கணிகர். “அமைச்சரே சொல்லும்!” புரோசனன் “இது முன்னாளில் சில அரசர்கள் செய்ததுதான். இதை ஜதுகிருகம் என்று சொல்கிறார்கள்” என்றான். “விருந்துக்கு வரும் நட்பரசர்களில் நமக்கு ஒவ்வாதவர்களையோ பிறநாட்டின் தூதர்களையோ கொல்வதற்குரிய வழிமுறை இது. அவர்கள் தங்குவதற்காக ஒரு அரக்குமாளிகையை அமைப்போம். மிக எளிதில் தீப்பற்றும் மெல்லியமரங்களைக்கொண்டு இது கட்டப்படும். தேவதாருமரக்கட்டைகள்தான் பெரும்பாலும். சுவர்கள் இரு பலகைகளால் ஆனவை. நடுவே அரக்கு ஊற்றி நிறைக்கப்பட்டிருக்கும்.”

“கூரையின் உத்தரங்களும் உட்குடைவானவை. உள்ளே அரக்கும் தேன்மெழுகும் நிறைக்கப்பட்டிருக்கும். மூங்கில்களுக்குள் விலங்குகளின் கொழுப்பை ஊற்றி குளிர்வித்து அவற்றை அடுக்கி கூரைச்சட்டங்கள் செய்யப்பட்டிருக்கும். தேன்மெழுகால் அவை இணைக்கப்பட்டிருக்கும். அறைகளின் அடித்தளத்தில் மண் இருக்காது. புகை எழுப்பி எரியும் குங்கிலியமும் அகிலும் நிறைக்கப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்டிருக்கும்” என்றான் புரோசனன். “ஒரு சிறு தீப்பொறி போதும். மொத்தவீடும் தீப்பற்றி கொழுந்துவிட்டு மேலெழுந்துவிடும். உத்தரங்களும் மூங்கில்களும் உருகி மேலே விழுவதனால் எவரும் தப்பமுடியாது.

“அதேசமயம் சுவர்கள் அனைத்துக்குள்ளும் வலுவான இரும்புக்கம்பிகள் இருக்கும். ஆகவே எரிந்துகொண்டிருக்கும் சுவர்களை உடைத்து வெளியேற முடியாது. கதவுகளும் இரும்புக் கம்பிகள் கொண்டவை. வாயிலை நோக்கிய வழிகளுக்குமேல் பெரும் அரக்குச் சட்டங்கள் இருக்கும். அவை உருகி விழுவதனால் எந்த வாயிலையும் உள்ளிருந்து நெருங்க முடியாது. அரக்குமாளிகை கால்நாழிகைக்குள் உருகி சாம்பலாகிவிடும்...” துரியோதனன் பெருமூச்சு விட்ட்டான். சகுனி “ஆம்... கூச்சலிடுவதற்குள் கூரை மேலே விழுந்து மூடிவிடவேண்டும்” என்றான்.

“இதை இங்கு நாம் அமைக்கமுடியாது. பாண்டவர்கள் இங்கே எரிந்தால் பழி எளிதாக கௌரவர்கள் மேல் விழும். நேரில் கண்டால் அரக்குமாளிகையின் தந்திரமும் வெளியாகும்” என்றார் கணிகர். “இங்கிருந்து வடக்கே கங்கையின் கரையில் வாரணவதம் என்னும் இடம் உள்ளது. அங்கே கஜாசுரனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்தி கோயில்கொண்டிருக்கும் சிவன் கோயில் உள்ளது. பிழைகளுக்குக் கழுவாய் தேடும் இடம் அது. பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கே வருகிறார்கள். அங்கே பாண்டவர்கள் செல்லட்டும். அங்கே அவர்கள் எரிந்தழிந்தால் அது மகதத்தின் சதியென்றே கொள்ளப்படும். அப்படி நாம் பரப்புவோம். அரக்குமாளிகை அது என்பதை இங்குவரை எவரும் கொண்டுவந்து சேர்க்கமுடியாது.”

“அதை எப்படிச்செய்ய முடியும்? அவர்கள் அங்கே செல்லவேண்டுமே” என்றான் துரியோதனன். “அதற்குரிய வாய்ப்பே இன்று வந்திருக்கிறது” என்றார் கணிகர். “இன்று உண்டாட்டுக்கு அரசர் செல்லாமலிருப்பது தொடக்கம். அது தருமனை துயர்கொள்ளச்செய்யும். அரசரை சந்திக்கவும் அவர் சினத்தை ஆற்றவும் முயல்வான். பிற பாண்டவர்கள் திரும்பி வந்தபின்னரும் அரசர் சினம் கொண்டிருப்பார் என்றால் அது ஒரு பெரிய இக்கட்டாகவே அவர்களுக்கு நீடிக்கும். நகரெங்கும் இந்தக் குலப்பிளவு பேசப்படும். ஒவ்வொருநாளும் அது வளரும் இப்பிளவைப்பற்றி பாண்டவர்களும் குந்தியும் அச்சமும் வருத்தமும் கொண்டிருப்பார்கள்.”

“அவர்கள் திருதராஷ்டிரரை சந்திப்பார்கள். திருதராஷ்டிரரும் தன் சினத்தை எவ்வாறேனும் கடக்கவும் தன் இளவலின் மைந்தர்களை மீண்டும் தோள்சேர்த்து அணைக்கவும் விழைபவராகவே இருப்பார். அதற்கு நாம் ஒரு வழி சொல்லிக்கொடுப்போம். பாண்டவர்கள் செய்தது பெரும்பிழை என்றும் சரண் அடைந்த ஹிரண்யபதத்தினரைக் கொன்றதும் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்ததும் அரசர் உள்ளத்தை வருத்தியிருக்கின்றன என்றும் அதற்குக் கழுவாயாக அவர்கள் வாரணவதம் சென்று அங்குள்ள முக்கண்ணன் ஆலயத்தில் ஒரு மண்டல காலம் நோன்பிருந்து பிழைதீர்த்து வரட்டும் என்றும் சொல்வோம். அவ்வாறு அவர்கள் கழுவாய் கொண்டு வருவார்கள் என்றால் அவர்களை ஏற்பதில் கௌரவர்களுக்கும் தயக்கமில்லை என்போம். தன் மைந்தர்கள் மீண்டும் ஒன்றாவதற்காக திருதராஷ்டிரர் அவ்வாறு அவர்களுக்கு ஆணையிடுவார்” என்றார் கணிகர்.

“ஆம், அது சிறந்தவழியே” என்றார் சகுனி. “திருதராஷ்டிரர் அத்தகைய ஒரு எளிய செயல்மூலம் அனைத்தும் சீராகிவிடுமென நம்பவே விழைவார். அது தந்தையரின் இயல்பு. அவர்கள் தனயர்களை வளர்ந்தவர்களாக எண்ணுவதே இல்லை. தனயர்களின் பகைமையை எளிய விளையாட்டாகவே எண்ணுவார்கள்.” கணிகர் “அத்தகைய மாளிகையை அமைக்க எத்தனை காலமாகும்?” என்றார். “அமைச்சரே, ஒரே மாதத்துக்குள் நான் அங்கே அவர்கள் ஐவரும் தங்கும் மாளிகையை அமைப்பேன். எனக்கு அதற்குரிய யவன சிற்பிகளைத் தெரியும்” என்றான் புரோசனன். “செல்வத்தை எண்ணிப்பார்க்கவே வேண்டியதில்லை. எவருக்கும் எத்தனை செல்வமும் அளிக்கப்படலாம். தேவையானவற்றை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்” என்றார் சகுனி.

“ஆனால் அந்த மாளிகை மிகப்பெரியதாக இருக்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசி இன்று பெரும் நிமிர்வுடன் இருக்கிறார். சிறிய இல்லமென்றால் அவர் அங்கே தங்க ஒப்பாமல் போகலாம். ஐவரும் அன்னையுடன் ஒரே மாளிகையில் தங்கியாகவேண்டும். ஆகவே அதைப் பார்த்ததுமே ஐவருக்கேகூட மிகப் பெரியது என்று தோன்றவேண்டும். மனம் கவரும் அழகுடன் இருக்கவேண்டும்.” புரோசனன் “ஆம், நான் சூத்ராகிகள் வரைந்த வாஸ்துமண்டலத்தை காந்தார அரசரிடம் காட்டுகிறேன். நான்கு சபைமண்டபங்களும் ஐந்து கோட்டங்களும் பொதுவான உணவுக்கூடமும் படைக்கலக்கூடமும் கொண்ட அரண்மனையாக அது இருக்கும். அங்கே சமையற்கூடம் அமையமுடியாது என்பது மட்டுமே குறை” என்றான்.

“அவர்கள் ஆலயத்தில் படைக்கப்பட்ட உணவை மட்டுமே அருந்தவேண்டும் என்று அங்குள்ள வைதிகர்களைக் கொண்டு சொல்லச்செய்கிறேன்” என்றார் கணிகர். “ஆனால் அரக்குமாளிகையில் எரியின் வாசம் இருக்குமல்லவா?” புரோசனன் “இல்லை அமைச்சரே. இல்லம் முழுமையாகக் கட்டப்பட்டபின் அதன் மேல் இமயத்தின் வெண்களிமண் பூசப்படும். பார்வைக்கு சுண்ணத்தாலான இல்லம்போலிருக்கும். சுண்ணத்தின் வாசமே அங்கிருக்கும்” என்றான். கணிகர் “அவ்வாறே ஆகுக” என்றபின் புன்னகையுடன் “ஆகுதி நிகழட்டும்... ஓம் ஸ்வாகா!” என்றார்.

“இச்செய்தியை எவரும் உய்த்துவிடலாகாது. புரோசனர் அங்குசென்று இல்லத்தை அமைக்கட்டும். அவர்கள் அங்கே செல்லும்போது முன்னரே அங்கே இல்லம் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவேண்டும். நாம் கட்டியதாகத் தெரியவேண்டியதில்லை” என்றார் கணிகர். “நாம் அஞ்சவேண்டியவர் விதுரரே. அவருக்கு சிறு ஐயம் எழுந்தாலும் நாம் பிடிக்கப்படுவோம். பிடிபட்டால் நம்மை கழுவேற்றுபவர் நம் தந்தையாகவே இருப்பார். அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றான் துச்சாதனன்.

“இந்த சந்திப்பை விதுரர் ஐயப்படமாட்டாரா?” என்றான் துராதனன். “அதற்காகவே இன்றே இதை வைத்தேன். இனிமேல் நாம் கூடிப்பேசப்போவதில்லை” என்றார் கணிகர். “இன்று நாம் சந்திப்பது மாலை உண்டாட்டை புறக்கணிப்பதற்காகத்தான் என்றே விதுரர் எண்ணுவார். ஆகவேதான் வெளிப்படையாக இச்சந்திப்பை அமைத்தேன்” என்றார் சகுனி. “நாம் கிளம்புவோம்...” என்றபின் எழுந்தார். கணிகர் மெல்ல எழுந்து வலியுடன் “தெய்வங்களே!” என்று முனகினார். “என்னை தேர்வரை கொண்டுசெல்லுங்கள்” என்றார்.

கௌரவர்கள் தலைகுனிந்து ஒரு சொல்கூட பேசாமல் கலைந்துசென்றார்கள். குண்டாசியின் கண்கள் கலங்கியிருப்பதை துரியோதனன் கண்டான். இளைய கௌரவர்கள் பலரின் முகங்களும் சிறுத்திருந்தன. சகுனி அவன் நோக்குவதைக் கண்டு “அவர்களுக்கெல்லாம் பீமன் வீரநாயகன். அவர்களுக்கு இது நெடுநாட்கள் நெஞ்சில் ஆறாவடுவாகவே இருக்கும்” என்று புன்னகைத்தார். துரியோதனன் “அவர்கள் சொல்லிவிடுவார்களா?” என்றான். கணிகர் “சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் சிந்தித்து எடுக்கும் முடிவல்ல. சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் சிந்தனையிலேயே மாறவும் கூடும். தமையனுக்கு முழுமையாகக் கடப்படுவது என்பது அவர்களின் உடலில் உறுப்பு போல பிறவியிலேயே வந்த இயல்பு. நினைத்தாலும் மீறமுடியாது” என்றார்.

சகுனி “ஆயினும் இவர்கள் அனைவரையும் நாம் கூட்டியிருக்கவேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன் கணிகரே” என்றார். “இல்லை. இது முதன்மையான செயல். இதில் அவர்களனைவருக்கும் பங்கு வேண்டும். கூட்டான பாவத்தைப்போல வலுவான பிணைப்பை உருவாக்குவது வேறில்லை” என்றபின் பற்களைக் காட்டி நகைத்தார். அவரை ஒருகணம் குனிந்து நோக்கிய துரியோதனன் கண்களில் மின்னிய கடும் வெறுப்பை துச்சாதனன் கண்டான். வாளை உருவி கணிகரின் தலையை வெட்டி எறியப்போகிறான் என்றே நினைத்தான். ஆனால் துரியோதனன் உதட்டை ஒருகணம் இறுக்கிவிட்டு முன்னால் நடந்து சென்றான். துச்சாதனன் தொடர்ந்தான்.

“தான் நல்லவன் என்று நம்பவும் வேண்டும். காமகுரோதமோகங்களை பின் தொடர்ந்து ஓடவும் வேண்டும். மானுடனின் முதன்மையான இக்கட்டே இதுதான்” என கணிகரின் குரலும் மெல்லிய சிரிப்பும் கேட்டது. துரியோதனன் சென்று தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். பின்னால் சென்ற துச்சாதனன் சாரதியின் தட்டில் அமர்ந்து குதிரைகளை தட்டினான். குதிரைகள் காலெடுத்து வைத்தபோது ரதம் ஒருகணம் அதிர்ந்தது. அது ஏதோ சொல்லப்போவது போல துச்சாதனனுக்குத் தோன்றியது. அவன் கையில் சவுக்குடன் துரியோதனனின் சொல்லுக்காகக் காத்திருந்தான்.

“மேற்குக்கரைக்கு” என்றான் துரியோதனன். ஏரிக்கு என்று துச்சாதனன் உணர்ந்துகொண்டான். துரியோதனன் வாயில் தூசு பட்டுவிட்டது போல துப்பிக்கொண்டே வந்தான். பலமுறை அவன் துப்பியதைக் கண்டபின்னர்தான் துச்சாதனன் அதிலிருந்த விந்தையை அறிந்தான். துரியோதனனிடம் ஒருபோதும் இல்லாத பழக்கம் அது. ஒருமுறை அவன் ரதத்தை நிறுத்தினான். துரியோதனன் ஓங்கி காறித்துப்பியபின் செல்லலாம் என்பதுபோல உறுமினான்.

அப்பால் அரண்மனையின் மகுடக்குவைகள் மேல் வெயில் பொழிந்துகொண்டிருந்தது. அமுதகலசக் கொடி காற்றில் துவண்டது. துச்சாதனன் முதல்முறை நோக்குவதுபோல அந்தக்கொடியை நோக்கினான். அது துவண்டு அசைந்ததனால் இலச்சினையை பார்க்க முடியவில்லை. விழிமறையும் வரை அவன் நோக்கிக்கொண்டே சென்றான். ஏரிக்கரையில் நின்றபோது துரியோதனன் இறங்கிச்சென்று அதன் கல்லாலான கரையில் அமர்ந்துகொண்டான். சற்று அப்பால் ரதத்தை நிறுத்திவிட்டு துச்சாதனன் கைகட்டி நின்றான்.

பலமுறை அவன் தமையனுடன் அப்படி வந்ததுண்டு. ஏரிக்கரையில் இரவெல்லாம் அமர்ந்திருப்பது துரியோதனனின் வழக்கம். அலைபுரளும் நீரில் அவன் எதைப்பார்க்கிறான் என்று துச்சாதனன் எண்ணிக்கொள்வதுண்டு. அவன் நீலநீரலைகளை திரும்பி நோக்கினான். மேகம்பரவிய வானம் நெளிந்துகொண்டிருந்தது. ஒருகணம் நீருக்குள் மிகப்பெரிய ஒரு கரிய நாகத்தின் உடல் நெளிவதான விழிமயக்கு ஏற்பட்டு துச்சாதனன் மெய்சிலிர்த்தான்.

பகுதி பத்து : மீள்பிறப்பு - 1

அஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது தருமன் சிடுசிடுத்த முகத்துடன் ரதத்தில் ஏறிக்கொள்வதை அர்ஜுனன் பார்த்தான். குந்தியை அவன் பார்க்கவில்லை. அவள் மிகுந்த சினம் கொண்டிருப்பதாக மாலினி சொன்னாள். நகுலனும் சகதேவனும் குந்தியை சந்திக்கச்சென்றபோது சந்திப்பு அளிக்கப்படவில்லை. அரசி சிறிய உடல்நலக்குறைவு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அவர்கள் இருவரையும் அது சோர்வுறச்செய்தது.

பயணம்பற்றிய உவகை பீமனிடம் மட்டுமே இருந்தது. “இங்கிருந்து எங்கு சென்றாலும் அது எனக்கு விடுதலையே” என்றான். “இளையவனே, அஸ்தினபுரியில் காற்று அசைவதே இல்லை. அது காற்றே அல்ல. பிறரது மூச்சு. இறந்தவர்களின் மூச்சுகளும்தான்.” அர்ஜுனன் “நாம் செல்லுமிடம் காடு அல்ல” என்றான். “அறிவேன். அந்த இடத்தில் நம் மூச்சுக்காற்று தேங்க சிலமாதங்களாகும். அதற்குள் திரும்பிவிடலாம்.” அர்ஜுனன் புன்னகைத்து “எனக்கும் இப்பயணம் பெரும் விடுதலையையே அளிக்கிறது மூத்தவரே” என்றான்.

“ஏன்?” என்றான் பீமன். அர்ஜுனன் அவன் பார்வையைத் தவிர்த்து “நான் செய்தவை வீரர்களுக்குரிய செயல்கள் அல்ல. அங்கே முக்கண்ணன் ஆலயத்தின் முன் ஒரு மண்டலகாலம் நோன்பிருந்தால் என் பிழைகள் சீர்பெறுமென்றால் நன்றல்லவா?” என்றான். பீமன் புன்னகையுடன் “நீ ஒருபோதும் மீளப்போவதில்லை பாத்தா. நீ வாழ்நாளெல்லாம் பிறரது வஞ்சினங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்” என்றான். அர்ஜுனன் நகைத்து “பெரும் தீச்சொல் போலிருக்கிறது மூத்தவரே” என்றான். சற்று சிந்தித்து “ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றபின் “எனக்கான ஒரு போரை நான் கண்டடையவே போவதில்லை. அதுவும் நன்றே” என்றான்.

அஸ்தினபுரியில் இருந்து அதிகாலையில் கிளம்பினார்கள். பீமன் “இளையவனே, நீ என்னுடன் வா” என்றான். “பயண ரதத்தில் பகலெல்லாம் அமர்ந்திருப்பது சலிப்பூட்டுகிறது. சலிப்படைந்த இன்னொருவன் அருகிருப்பது சலிப்பை சற்று குறைக்கலாம்” என்றான். அர்ஜுனன் சிரித்து “நஞ்சு ஊடுருவாத ஒரு சொல்லாட்சியை நீங்கள் சொல்லவே முடியாதா மூத்தவரே?” என்றான். பீமன் “நான் பெருநாகங்கள் உலவும் பாதாள உலகுக்குச் சென்று அங்கே வாசுகி அளித்த நஞ்சை அருந்தி வந்தவன் என்கிறார்கள் சூதர்கள்... கதைகளை கேட்டுக்கேட்டு காலையில் அருந்துவதற்கு ஒரு கோப்பை நஞ்சு கொண்டுவரும்படி சேவகனிடம் சொல்லுமளவுக்கு என் நா பழகிவிட்டது” என்றான்.

தேர்முற்றத்தில் விதுரரும் சௌனகரும் சகுனியும் துரியோதனனும் கௌரவர்களும் வந்திருந்தனர். சகுனி “எளிய சடங்குதான் இளவரசே... ஆனால் இங்குள்ள குலமூத்தாரையும் அரசரையும் அது நிறைவடையச் செய்யுமென்றால் நன்றல்லவா?” என்றார். தருமன் “ஆம்...” என்றான் அவன் முகம் கனத்து சோர்ந்திருந்தது. துரியோதனனிடம் சென்று தருமன் விடைபெற்றுக்கொண்டான். துரியோதனனின் முகம் கல்லால் ஆனதுபோலத் தோன்றியது. அவன் அடைந்த ஆடிப்பாவைப் பெருக்கம் போலிருந்தனர் கௌரவர். சௌனகர் “நல்லநேரம் நிறைவடையப்போகிறது” என்றார்.

அர்ஜுனன் விடைபெற்றபோது துரியோதனன் அவன் தோள்களைத் தொட்டான். அர்ஜுனன் “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். துரியோதனனின் இமையில் ஒரு மெல்லிய துடிப்பை கண்டான். அவன் “நலம் பெறுக” என்று அடைத்த குரலில் சொன்னான். சேவகன் வந்து “அரசியார் தேரிலேறிவிட்டார். பட்டத்து இளவரசரின் ரதமே முறைப்படி முதலில் செல்லவேண்டும் என்றார்” என்றான். தருமன் விதுரர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தோள்களைப்பற்றிக்கொண்டு மெல்ல அணைத்து தாழ்ந்த குரலில் பேசியபடியே அவனுடன் வந்தார். அவன் நகுல சகதேவர்களுடன் தன் ரதத்தில் ஏறிக்கொண்டு மீண்டும் விடைபெற்றான்.

தருமனின் ரதம் முன்னால் சென்றபின் பீமனின் ரதத்தில் அர்ஜுனன் ஏறிக்கொண்டான். கட்டடங்களின் நடுவே, மரங்களுக்குக் கீழே இருள் எஞ்சியிருந்தது. முற்றங்களில் வெண்ணிறப்பொருட்கள் மட்டும் தெரியும் தரைவெளிச்சம் எழுந்திருந்தது. ரதங்களின் ஒலி விடியற்காலையின் அமைதியில் எழுந்து அரண்மனைச் சுவர்களில் பல இடங்களில் எதிரொலித்தது. ரதங்கள் உள்கோட்டை வாயிலைக் கடந்ததும் காஞ்சனம் மும்முறை முழங்கியது. கொம்பு ஒன்று யானைக்குட்டி போல பிளிறியது. அதைக்கேட்டு அப்பால் கிழக்குவாயிலில் ஒரு கொம்பு ஒலித்து தொடர்ந்து முரசொலி எழுந்தது. அவர்களுடன் குந்தியின் மூடுரதம் வந்து இணைந்துகொண்டது.

கிழக்கு வானத்தின் அடியில் மிகமெல்லியத் தீற்றலாக செம்மை தெரிந்தது. அங்கே ஏதோ தீப்பிடித்து எரியத் தொடங்குவதுபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். குளிர்காற்றில் பனித்துளிகளும் மகிழமலர்களின் மகரந்தமும் இருந்தன. குளித்த ஈரம் விலகாத கூந்தலை தோளில் பரப்பி விட்டுக்கொண்டான். ரதங்கள் முழுவிரைவில் ஓடத் தொடங்கும்போது குழல் உலர்ந்து பறக்கத் தொடங்கிவிடும். அவர்கள் கடந்துசென்ற காவல்மாடங்களில் இருந்த வீரர்கள் முன்னால் வந்து நின்று வாழ்த்தி ஒலி எழுப்பினர்.

“அஸ்தினபுரியின் பாவத்தை கரைக்கச் செல்கிறோம். இன்னும் நிறைய மக்கள் வந்து நின்று வாழ்த்தியிருக்கலாம்” என்றான் பீமன். “அவர்களிடம் ஏதேனும் பாவங்கள் இருந்தால்கூட வாங்கிக்கொள்லலாம். அத்தனை தொலைவு செல்கிறோம். மொத்தமாகக் கொண்டுசென்று கரைத்தால் நல்லதுதானே?” அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “மூத்த தந்தையின் பாவங்கள் முற்றத்தில் வந்து அணிவகுத்துநின்றன, பார்த்தீர்களல்லவா?” என்றான். “அவர்கள் என்ன செய்வார்கள் பார்த்தா? அவர்கள் வெறும் கருவிகள்” என்றான் பீமன். “ஏதோ ஒரு அற நம்பிக்கையின் பேரில் அந்தக் கணிகனின் மண்டையை கதாயுதத்தால் தட்டி உடைத்து வீசாமல் செல்கிறேன். அதை எண்ணித்தான் நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றான்.

அர்ஜுனன் கூர்ஜரத்தில் இருந்து திரும்பி வந்தபோதே அஸ்தினபுரியின் மனநிலையில் பெரும் மாற்றம் உருவாகியிருப்பதை கண்டுகொண்டான். அவனுடைய படைகள் நகர்நுழைந்தபோது இருபக்கமும் மக்கள் கூடிநின்று மலர்களை அள்ளி வீசி ஆர்ப்பரித்தனர். ஆரவாரமும் திரளும் மும்மடங்கு கூடியிருந்தது. ஆனால் சௌவீரத்தை வென்று வந்தபோது எழுந்த இயல்பான வெற்றிக்கூச்சல் அல்ல அது என்று உடனே தெரிந்தது. வாழ்த்தொலிகளில் அறைகூவல் தெரிந்தது. வெறிகொண்டு துள்ளிக்குதித்து தொண்டை புடைக்கக் கூவியவர்கள் அனைவருமே எளிய யாதவர்கள் என்பதை சற்றுக்கழித்து அவன் உணர்ந்தான். பின்னர் அந்தத் திரளில் வணிகர்களோ ஷத்ரியர்களோ பெரும்பாலும் எவருமில்லை என்பதை கண்டறிந்தான்.

தன் அகம் நிறையழிந்து கலங்கியிருப்பதை அரண்மனையை அடைந்தபோது நன்றாகவே உணர்ந்தான். அவர்களை வரவேற்க சௌனகரும் விதுரரும் மட்டுமே அரண்மனை முகப்புக்கு வந்திருந்தனர். அர்ஜுனன் விதுரரிடம் “இம்முறை நேரடியாக அரசரைக் கண்டு அனைத்தையும் அவர் காலடிகளில் வைத்து பணியலாமென்று எண்ணுகிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் அருகே வந்து விழிதாழ்த்தி அவனுக்கு மட்டும் கேட்கும்படி “நீ வரும் செய்தியை நேற்றே அரசரிடம் சொல்லிவிட்டேன். உங்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். பலமுறை பல சொற்களில் அது முறையல்ல என்றேன். அவர் இறுகிவிட்டால் பின்னர் சொற்களால் பயனில்லை” என்றார்.

அர்ஜுனன் தன் அகத்தில் படபடப்பை உணர்ந்தான். “ஏன்?” என்றான். “உன்னிடம் மூக்குகளை வெட்டிக் கொண்டுவரச் சொன்னது பெரும் அறப்பிழை என்று எண்ணுகிறார்” என்றார் விதுரர். குந்தியின் உண்டாட்டுக்கு அவரும் கௌரவர்களும் வராமலிருந்ததை சொன்னார். “அவர்கள் வரவில்லை என்றதுமே குந்திதேவி நடுங்கிவிட்டார். அதன் பொருள் என்ன என்று அவருக்குத் தெரியும். தருமனை அனுப்பி அரசரிடம் அனைத்தையும் விளக்க முயன்றார். தருமனைச் சந்திக்க அரசர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அழைத்துக்கொண்டு படுக்கையறைக்கே செல்லலாம் என்று எண்ணினேன். விப்ரருக்கு தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் எந்நேரமும் அவருடன் சகுனியும் கணிகரும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.”

“நகரில் ஒரு பிளவைக் காண்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்டாட்டு முடிவதற்குள்ளேயே அது நிகழ்ந்துவிட்டது. யாதவர்கள் மணிமுடியை அறப்பிறழ்வான வழிகளில் அடைந்துவிட்டனர் என்று ஷத்ரியர்கள் சொல்லத் தொடங்கினர். ஓரிருநாட்களுக்குள் நகரின் சூத்திரர்கள் அனைவரும் அதையே சொல்கின்றனர்...” விதுரர் சொன்னார். “அரசர் அறமீறலை ஒப்பவில்லை என்றும், அவர் சினம்கொண்டிருக்கிறார் என்றும் படைகள் பேசிக்கொள்கின்றன.” விதுரர் கசப்புடன் புன்னகை செய்து “நான் மட்டும் மகதத்தின் அமைச்சனாக இருந்தால் இந்நேரம் படைகொண்டு அஸ்தினபுரியை சூழ்ந்திருப்பேன். மலர்கொய்வது போல இந்நகரை இன்று பிடிக்க முடியும்” என்றார்.

“யாதவர்கள் செய்வது தற்கொலைக்கு நிகரானது. அவர்களின் கூச்சலைப்போல எதிர்ப்பையும் காழ்ப்பையும் உண்டுபண்ணுவது பிறிதொன்றில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதை யார் சொல்வது? பார்த்தா, மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதையே நாம் மக்கள் என்கிறோம். அவர்கள் தங்கள் சிறுமையை கொண்டாடுவார்கள். சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவார்கள். சிறுமையை நட்டு வளர்ப்பார்கள். அந்த மூடத்தனத்துக்கு விலையாக குருதியும் கண்ணீரும் சிந்துவார்கள். வரலாறு என்பது வேறென்ன?”

அர்ஜுனன் “நான் என்ன செய்வது அமைச்சரே?” என்றான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இப்போது அரசியை காணவேண்டியதில்லை. அரண்மனையில் ஓய்வெடுங்கள். நாளை சென்று இயல்பான சந்திப்பாக அரசியைப் பாருங்கள்... கூர்ஜரனின் திருமுகம் கிடைத்ததா?” என்றார் விதுரர். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அதை அரசியிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு “என் கணிப்புகள் பொய்யானதற்காக மகிழ்கிறேன். கூர்ஜரம் இத்தனை விரைவில் பணியுமென நான் எண்னவில்லை” என்றார் விதுரர்.

“அது இளையயாதவனின் போர் சூழ்ச்சியின் வெற்றி” என்றான் அர்ஜுனன். “விரைவையே அவன் முதன்மை ஆற்றலாகக் கொண்டிருந்தான். என் படையையே மீன்கொத்தி என்றுதான் சொன்னான். விரைவாக நேராக இலக்கை நோக்கிப் பாய்வதும் தாக்கி இரையைக் கவ்வியதுமே தன் இடத்துக்கு மீள்வதும் அதன் வழி. மதுராவை அம்புபோல பாய்ந்துசென்று பிடித்தோம். மறுநாள் காலையில் கிளம்பி இரு பகலும் மூன்று இரவும் பயணம் செய்து கூர்ஜரத்தை அடைந்தோம். கூர்ஜரம் எங்கள் மதுரைவெற்றியின் செய்தியை அறிந்து பதறிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டிருந்தோம்” என்றான் அர்ஜுனன்.

“கூர்ஜரத்தின் இளையமன்னன் கிருதவர்மன் காலையில் காவல்கோட்டத்தை நேரில் பார்க்கவருவான் என்றான் இளையயாதவன். நாங்கள் அச்சமயம் அதைத் தாக்கினோம். முதல் அம்பிலேயே அவனை கொல்லச் சொன்னான். இளவரசன் கொல்லப்பட்டதுமே அவர்கள் நிலைகுலைந்துவிட்டனர். தலைமையை உருவாக்கிக்கொண்டு தங்களைத் தொகுக்க அவர்களால் முடியவில்லை. அதற்குள் காவல்மையத்தைப் பிடித்தோம். அனைவரையும் சிறையிட்டோம்.”

“அந்தக் காவல்மையம் கூர்ஜரத்துக்கு முதன்மையானது. அது தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலங்களின் விளிம்பில் உள்ளது. அங்கே அரசுகளோ மக்களோ இல்லை. எனவே நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே எந்தத் தாக்குதலும் நிகழ்ந்ததில்லை. அங்குள்ள கோட்டை அமைப்பும் காவல் அமைப்பும் எந்தவிதமான போருக்கும் சித்தமானவையாக இருக்கவில்லை. காவலர்கள் வணிகர்களின் மனநிலையுடன் இருந்தனர். அப்பகுதியின் வணிகர்களிடம் கையூட்டு பெறுவதற்கான இடமாகவே அது நெடுநாட்களாக இருந்துவந்திருக்கிறது. உண்டு கொழுத்து அசையமுடியாமல் கிடக்கும் கன்றுபோலிருந்தது அந்த மையம்.”

அர்ஜுனன் சொன்னான் “ஆனால் அது மிகமுதன்மையான இடம். அங்கிருந்து ஒரே நாளில் சிந்துவின் பெருக்கை அடையமுடியும். முறையான ஒப்புதல் திருமுகம் அளிக்கவில்லை என்றால் சிந்துவில் செல்லும் கலங்களின் பாய்களை எரியம்பால் எரிப்போம் என்று கூர்ஜரனுக்கு செய்தி அனுப்பினோம். அதை அவனால் தாளமுடியாது. அந்த காவல்மையத்தை கைப்பற்றாவிட்டால் சிந்துவின் வணிகம் நின்றுவிடும். கூர்ஜரமே அதை நம்பித்தான் உள்ளது. அஸ்தினபுரியின் படைநீக்கம் குறித்த செய்தியும் வந்ததும் கூர்ஜரன் பணிந்தான்.”

“போரில் தகவல்களே மிகப்பெரிய படைக்கலம்” என்றார் விதுரர். “இந்த இளைய யாதவன் அனைத்தையும் நுட்பமாக அறிந்திருக்கிறான். அவனுடைய ஒரு கணிப்புகூட பிழைக்கவில்லை என்பதை வியப்புடன் எண்ணிக்கொள்கிறேன்.” அர்ஜுனன் கண்களில் ஒளியுடன் “ஆம் அமைச்சரே. மண்ணில் அவனறியாத ஏதேனும் உள்ளனவா என்று தோன்றிவிடும். ஆனால் ஏதுமறியாத சிறுவனாகவே எப்போதும் இருப்பான். போர்கூட அவனுக்கு விளையாட்டே. களத்தில் குருதி சிதறப் போரிடுகையில் வாய்க்குள் பாடலை முணுமுணுக்கும் ஒருவன் இருக்கமுடியும் என்றே என்னால் நம்பமுடியவில்லை” என்றான்.

“பாட்டா?” என்றார் விதுரர். “ஆம். போரில் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது ஏதோ போர் மந்திரம் என எண்ணினேன். என்ன என்று கேட்டேன். அது சூதர்களின் காதல்பாடல். உன் கூர்முலைகளின் வேல்களால் என்னைக் குத்து. உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல் என்று பாடிக்கொண்டிருக்கிறான். போரின்போது பக்கவாட்டில் அவன் முகத்தை நோக்கினால் இனிய இசையொன்றைக் கேட்டபடி தென்றல் தவழும் புல்வெளியில் அமர்ந்திருப்பவன் போலிருக்கிறான். நூற்றுக்கணக்கில் தலைகளைக் கொய்து வீழ்த்தியபின் தன் இடையிலிருந்து இனிப்புப்பண்டம் ஒன்றை எடுத்து வாயிலிட்டு சுவைக்கிறான்.”

விதுரர் பெருமூச்சுடன் “விதி சிலரை விரும்பி உருவாக்கிக் கொள்கிறது” என்றபின் “அன்னையை சந்திக்கையில் எதைப்பற்றியும் பேசவேண்டியதில்லை” என்றார். “ஏன்?” என்றான் அர்ஜுனன் “அவர்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கிறார்கள். இதெல்லாமே திருதராஷ்டிர மன்னரின் சதி என்று நம்புகிறார்கள். மக்களிடமும் படைகளிடமும் வேற்றுமையை உருவாக்கி நாட்டைப் பிரித்து பாதியை தன் மைந்தர்களுக்கு அளிக்க அவர் முயல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். உங்களிடம் அவர்கள் பேசும் சொற்களெல்லாம் எப்படியோ சகுனியை அடைந்துவிடும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவற்றை உங்களிடம் அவர் பேசினார் என்பதே நமக்கு எதிரானதாக ஆகிவிடும்.”

அர்ஜுனன் சிரித்து “மூத்ததந்தை சதிசெய்கிறாரா? இதென்ன கதை! முழு அரசும் அவருடையது அல்லவா? அவர் அளித்த கொடை அல்லவா தருமரின் இளவரசுப்பட்டம்?” என்றான். “அதை அரசி மறந்துவிட்டார். அஸ்தினபுரியின் அரசு அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் இயல்பாகவே உரியது என்றும் திருதராஷ்டிரரும் கௌரவர்களும் அதை கவர்ந்துகொள்ள வந்த அயலவர் என்றும் எண்ணுகிறார். மானுட அகம் எந்த பாவனையையும் மேற்கொள்ளும். ஒருவாரம் ஒருபாவனையை மேற்கொண்டால் அது நம் அகத்தில் உண்மையென்றே நிலைகொண்டுவிடும்” என்றார் விதுரர்.

அர்ஜுனன் குந்தியை சந்தித்தபோது அவனுடைய எச்சரிக்கையை மீறி குந்தியின் கொந்தளிப்பை கேட்டு நிற்க நேர்ந்தது. “இளையவனே, இது நுண்ணிய சதி... நீயோ விதுரரோ இதை உணர முடியாது. நமக்கு எதிராக அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் தூண்டப்பட்டுவிட்டார்கள். சூதர்களும் சூத்திரர்களும் நம்மை வெறுக்கிறார்கள். தருமன் முடிசூட முடியாத நிலை உருவாகிவிட்டது. இது சகுனியின் வஞ்சம் என்று எண்ணினேன். கணிகரின் தீமையோ என்று ஐயுற்றேன். இல்லை. இது முழுமையாகவே விழியிழந்த அரசரின் சூழ்ச்சி. கொடுப்பது போலக் கொடுத்து எடுத்துக்கொள்ளும் ஆடல்...” என்றாள். மூச்சிரைக்க “இச்சதுரங்கத்தில் அவர் வெல்லப்போவதில்லை... நானும் சூழ்ச்சி அறிந்தவள்தான்” என்றாள்.

“அதை ஏன் அவர் செய்யவேண்டும்? இவ்வரசை அவர் அளிக்காவிட்டால்...” என்று அர்ஜுனன் தொடங்க “அளித்தாகவேண்டிய நிலை அன்று அவையில் இருந்தது. அளிக்காவிட்டால் அன்று ஷத்ரியர்களும் யாதவர்களும் பிற சூத்திரர்களும் நம்மை ஆதரித்திருப்பார்கள். இவ்வரசை நாம் எளிதில் வென்றிருப்போம். அதை அவர் நமக்களித்து அறமூத்தார் என்று பெயர் பெற்றார். இப்போது வஞ்சத்தால் நமக்கு எதிர்ப்பை உருவாக்குகிறார். நாம் செய்யும் செயல்களை திரித்துக்காட்டி நாம் அறம்பிழைப்பதாகச் சொல்லி பரப்புகிறார். நம்மை ஆதரித்த மக்களே நம்மை எதிர்க்கும்படி செய்துவிட்டார். இனி நாட்டை கூறுபோடுவார். பாதி அரசை அவர் தன் மைந்தர்களுக்காகப் பெறுவார்...”

குந்தி ஈரமான விழிகளுடன் மூச்சிரைக்க அவனை நோக்கினாள். முகம் வியர்வையில் நனைந்திருந்தது. “அவர்களுக்கு காந்தாரத்தின் பெரும் செல்வம் இருக்கிறது. ஷத்ரியர்களின் படைபலம் இருக்கிறது. மேலும் துணையரசுகளை திரட்டிக்கொள்ள முடியும். நமக்கு மதுராவும் மார்த்திகாவதியும் அன்றி பிற துணைநாடுகளே இல்லை. இளையவனே, ஒரே வருடத்தில் தருமனை வென்று எஞ்சிய அஸ்தினபுரியை அவர்கள் வெல்வார்கள்... இதுதான் அவர்களின் திட்டம். ஒருபோதும் நான் அவர்கள் வெல்லவிடப் போவதில்லை. நானும் அரசியலின் வழிகளை அறிந்தவளே.”

ஒருவாரம் திருதராஷ்டிரரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் விதுரர் வந்து அரசர் சந்திக்க அழைத்திருப்பதாகச் சொன்னார். செல்லும் வழியிலேயே திருதராஷ்டிரர் சொல்லப்போவதை சொல்லிவிட்டார். "அவருக்கு அந்த முக்கண் ஆலயம் பற்றி எவர் சொன்னது என்று தெரியவில்லை. அவரே ஏதேனும் நிமித்திகரிடம் கேட்டிருக்கலாம். அவர் அதை நம்புகிறார். அவரது அகம் விழைவதென்ன என்று எனக்குத் தெரிகிறது. இத்தனை சினத்தை நெஞ்சில் சுமந்து அவரால் வாழமுடியாது. அகம் குவிந்து இசைகேட்கமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். அவர் இதை மீளும் வழியாகவே எண்ணுகிறார். ஒரு கழுவாய்ச்சடங்கு மூலம் தன் இளையோரின் மைந்தர்கள் தன்னிடம் மீண்டு வரட்டுமே என எண்ணுகிறார்.”

தருமன் “ஆனால் நாங்கள் இந்நகரைவிட்டு விலகிச்செல்லவேண்டுமென எண்ணுகிறார் அல்லவா?” என்றான். “நாற்பத்தொருநாட்கள்தான் நோன்பு. சென்றுவர இரண்டுவாரம்... அவ்வளவுதானே?” என்றார் விதுரர். “அவரது எண்ணம் என்ன என்று எனக்குப்புரியவில்லை” என்று தருமன் சொன்னான். விதுரர் “அவரைச் சூழ்ந்திருக்கும் குரல்களையே நான் அவர் வழியாகக் கேட்கிறேன். அவர்கள் நம்மை என்னசெய்ய எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று இந்நகரில் உள்ள அமைதியின்மை முழுமையாகவே அவராலும் அவரை இயக்குபவர்களாலும் உருவாக்கப்பட்டது...” என்றபின் பெருமூச்சுடன் “ஆனால் நாம் அவரது ஆணைகளை ஏற்றாகவேண்டும். இன்னும் இந்நகரின் அரசர் அவரே” என்றார்.

அவையில் திருதரஷ்டிரர் அருகே சகுனியும் பின்பக்கம் கணிகரும் இருந்தனர். சௌனகர் வந்து அவர்களை வரவேற்று அழைத்துச்சென்று அரசர் முன் நிறுத்தினார். அவையில் நின்றிருந்த கௌரவர்கள் விழிகள் சந்திக்காமல் விலகிக்கொள்வதை அர்ஜுனன் கண்டான். சௌனகர் அரசரின் ஆணையை சுருக்கமாகச் சொன்னார். “நாம் இந்த அஸ்தினபுரியில் ஒரு அநாசனைக்கூட வைத்திருக்கவில்லை. ஆகவேதான் பாரதவர்ஷத்தின் பதாகை என்று இந்நகரை கிருஷ்ணதுவைபாயன வியாசர் வாழ்த்தினார். உங்கள் செயலால் அச்சொல் கறை கொண்டது. கழுவாய் தேடி வாருங்கள் என்று அரசர் ஆணையிடுகிறார்” என்றார் சௌனகர். “ஆணை” என்று தருமன் தலைவணங்கினான்.

அவர்கள் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார். அவர்கள் திரும்பும்போது திருதராஷ்டிரர் “மைந்தர்களே” என்று மெல்லியகுரலில் அழைத்தார். அவர்கள் நோக்கியபோது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “இதை ஒரு எளிய பயிற்சியாக எண்ணுங்கள். அங்கே உங்களுக்கு மிகச்சிறந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சொன்னார். அம்மாளிகையில் உங்களை மீண்டும் இளமையின் ஒளி சூழ்ந்துகொள்ளட்டும். களிறுகொண்டானின் பாதங்களில் உங்களுக்கு நிறைவும் கிடைக்கும்” என்றார். பின்னர் மேலும் தணிந்த குரலில் “தருமா, அரசன் நீதியை நிகழ்த்தினால் மட்டும் போதாது. அது நீதி என நம்பவைக்கவும் வேண்டும். அதற்கு எளிய வழி நீதிக்கு அவனும் கீழ்ப்பட்டவனாக இருப்பதே. இந்தப்பயணம் உங்கள் மீதான ஐயங்களை அகற்றும்” என்றார்.

தருமன் கைகூப்பி “தாங்கள் சொல்வன அனைத்தும் இறை ஆணையே” என்றான். திருதராஷ்டிரர் “பீமா, சென்று வருக. நாம் ஒரு நல்ல தோள்போர் செய்து நீணாள் ஆகிறது” என்றார். அச்சொற்கள் அவையை புன்னகைக்கச் செய்தன. பீமன் “வருகிறேன் தந்தையே” என்று வணங்கினான். வெளியே செல்லும்போது விதுரர் பின்னால் வந்தார். “அங்கே நீங்கள் தங்கும் மாளிகை சௌனகரின் உதவியாளனாகிய புரோசனனால் அமைக்கப்பட்டது... அனைத்து தேவைகளும் அங்கு நிறைவேற்றப்படும்” என்றார். குரல் தாழ்த்தி “அன்னை இவ்வாணையை ஏற்க மறுக்கலாம். அதைச் சொல்லிப் புரியவைத்து அழைத்துச்செல்வது உங்கள் பொறுப்பு. நம்முன் வேறு வழியே இல்லை” என்றார்.

கோட்டை வெளிவாயிலில் நின்றிருந்த கூட்டத்தைக் கண்டு முன்னால் சென்ற ரதங்கள் நின்றன. பீமன் “என்ன கூட்டம்?” என்றான். முன்னால் சென்ற ரதத்தில் இருந்து கனகனும் பிறரும் இறங்கி கூட்டத்தை நோக்கி செல்வது தெரிந்தது. பீமன் ரதத்தை விட்டு இறங்கி அருகே சென்றான். அங்கிருந்தவர்கள் அனைவருமே நகரிலுள்ள யாதவர்கள் என்று தெரிந்தது. குடித்தலைவர்கள் போல சிலர் முன்னால் நின்றிருந்தனர். குழந்தைகளை இடுப்பில் ஏந்திய பெண்களும் மூட்டைகளை ஏந்திய ஆண்களுமாக ஏராளமானவர்கள் அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்தனர்.

தருமன் “என்ன?” என்று கேட்டபடி அருகே வந்தான். கனகன் திரும்பிவந்து “அரசே, அவர்கள் யாதவர்கள். இந்த நகரில் அவர்கள் வாழ விரும்பவில்லை என்றும் தங்களுடன் வாரணவதத்துக்கே வந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்” என்றான். அதற்குள் பெரிய தலைப்பாகை அணிந்த முதியவர் முன்னால் வந்து உரத்தகுரலில் “அறப்பிழை நேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அறத்தைப்பற்றி யார் பேசுவது? இது ஒரு பெரும் சதி. தங்களை அறச்செல்வர் என்று பாரதவர்ஷமே கொண்டாடுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் இந்த அவப்பெயரை உருவாக்குகிறார்கள். இது கழுவாய்ப்பயணம் அல்ல, நாடுகடத்தல்” என்றார். 'ஆம்! ஆம்! அநீதி ! சதி!' என்றெல்லாம் கூட்டம் கூச்சலிட்டது.

தருமனின் முகம் மலர்ந்தது. கைகளைக் கூப்பியபடி “என் தந்தையின் ஆணையை ஏற்று செல்லவேண்டியது என் கடமை. அதைத் தடுக்காதீர்கள்” என்றான். “இக்கழுவாய் எனக்குத் தேவைதான். நான் செய்த பிழைகள் எனக்குத்தான் தெரியும். தெரியாத பிழைகள் பலநூறு இருக்கலாம். அவற்றில் இருந்தும் விடுபட்டு நான் மீள்வேன்” என்றான். “இல்லை அரசே. அங்கே வாரணவதத்தில் உங்களைக் கொல்ல சதி செய்யப்பட்டிருப்பதை சூதர்கள் சொல்கிறார்கள். நாங்களும் உடன் வருகிறோம். அயோத்திராமன் காடேகியபோது மக்களும் உடன் சென்றனர். அதைப்போல நாங்களும் வருகிறோம். நீங்கள் இருக்குமிடமே எங்களுக்கு அஸ்தினபுரி” என்று ஒரு பெண்மணி கண்ணீருடன் சொன்னாள்.

“அனைவரும் இங்கே இருக்கவேண்டும். அரசரின் ஆணைக்குப் பணிந்து சிறந்த குடிகளாக இருக்கவேண்டும். இது என் ஆணை” என்றான் தருமன். “அவர் எங்கள் அரசர் அல்ல. விழியிழந்தவனை அரசனாக ஏற்க மாட்டோம்” என்று ஒருவன் கூவினான். “அவரது அவநோக்கினால்தான் அஸ்தினபுரி இழிவடைந்தது. இன்று பாண்டவர்களால் வெற்றியும் புகழும் வரும்போது அவருக்குப் பொறுக்கவில்லை” என்று ஒரு பெண் முன்னால் நெருக்கியடித்து வந்து கைநீட்டி கூச்சலிட்டாள். “ஆம்... அவர் எங்கள் அரசர் இல்லை... நீங்கள்தான் அரசர்” என்று கூவியது கூட்டம். “நாங்களும் வருகிறோம்... ரதத்தை தொடர்ந்து வருகிறோம்... இங்கே வாழமாட்டோம்” என்றனர்.

தருமன் “என்னை தீராப்பழிக்குத் தள்ளாதீர்... தந்தைசொல் பிழைத்தவன் என்று அவப்பெயர் என்னைச் சூழுமென்றால் அதன் பின் உயிர் தரிக்கமாட்டேன்” என்று தழுதழுத்தான். கூட்டத்தினர் அழத் தொடங்கினர். விம்மல் ஓசைகள் சேர்ந்து எழுந்தன, சில பெண்கள் தரையில் அமர்ந்து தருமனின் கால்களைத் தொட்டு தலையில் வைத்து அழுதனர். முதியவர்கள் கண்ணீர் வழிய கைவிரித்து அவனை வணங்கினர். “நான் மீண்டு வருவேன். எனக்கு அறம் துணையிருக்கும். தீமை எண்ணிய உள்ளங்களை அறமே தண்டிக்கும். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்குத் துணை வரட்டும்... நீங்கள் என்னை அரசனாக ஏற்றுக்கொண்டீர்கள். ஆகவே, இனி நாடோ மண்ணோ இல்லையென்றாலும் நான் அரசனே” என்றான் தருமன்.

கூட்டம் வெறிகொண்டது போல கைதூக்கி கூச்சலிட்டது. வாழ்த்தொலிகளுடன் அலையடித்தது. கூப்பிய கைகளுடன் தருமன் தேரில் ஏறிக்கொண்டான். அர்ஜுனன் புன்னகையுடன் “மூத்தவர் நிறைவடைந்துவிட்டார்” என்றான். “ஆம், அவர் வரலாற்றில் வாழ்கிறார். எங்கே ராகவ ராமனைத் தொடர்ந்து குடிகள் வந்ததுபோல தன்னைத் தொடர்ந்து வராமலிருந்துவிடுவார்களோ என்று கலங்கிக்கொண்டே வந்திருப்பார்” என்றான் பீமன். அவர்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி தேர்களுக்குப்பின்னால் கைவீசியபடி ஓடினர்.

“அவர்களுக்கும் தெரியும், அவர்கள் ஒரு நாடகத்தில் நடிப்பது” என்றான் பீமன். “இவர்களை அழைத்துக்கொண்டு வாரணவதம் வரை சென்று அங்கே இவர்கள் வாழ்க்கை நலமாக அமையவில்லை என்றால் இதே நாவால் வசையும் உதிர்ப்பார்கள். கூடச் செல்லப்போவதில்லை என்று தெரிந்தே கைக்குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்” என்றான். “இல்லை, அந்த உணர்ச்சிகள் உண்மையானவை” என்றான் அர்ஜுனன். “எந்த உணர்ச்சியும் வெளிப்படும்போது உண்மையானதே” என்று பீமன் நகைத்தான்.

“அப்படியென்றால் இதை ஏன் செய்கிறார்கள்?” என்றான் அர்ஜுனன். “இதைச்செய்யாவிட்டால் அவர்கள் வரலாற்றில் இல்லை என்றல்லவா பொருள்? இருப்பதற்கு ஒரே வழி இதுதான்... வாய்ப்பு கிடைக்கையில் அந்த வேடத்தை நடிப்பது” என்ற பீமன் மேலும் நகைத்து “சற்று மிகையாகவே” என்றான்.

பகுதி பத்து : மீள்பிறப்பு - 2

ரதங்கள் கங்கைக்கரை படித்துறையை நெருங்கியபோது பீமன் மெல்லமெல்ல அவனுள் எப்போதுமிருக்கும் கசப்பை இழந்துவிட்டதை அர்ஜுனன் கண்டான். ஓடும் ரதத்தில் இருந்து மரக்கிளை ஒன்றைப்பற்றி மேலேறி மரக்கிளைகளை வளைத்தும் விழுதுகளில் ஆடியும் தலைக்குமேலேயே பறந்து வந்து மீண்டும் ரதத்தட்டில் குதித்து தோள்களில் அறைந்துகொண்டு நகைத்தான்.

“மூத்தவரே, அதை எப்படி செய்கிறீர்கள்? எப்படி அந்த விரைவு வருகிறது?” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் நான் மாருதன். காற்றின் மைந்தன்” என்றான் பீமன். "என் மூத்தவனாகிய அனுமனின் அருள் என்னிடமிருக்கிறது. இளமையில் நான் குரங்குகளின் பாலைக்குடித்து வளர்ந்தேன் என்கிறார்கள்” என்றபின் உரக்க நகைத்து “பார்த்தா, நான் புராணமாக இருப்பதையே விரும்புகிறேன். குருதியும் எலும்புமாக இருப்பதை அல்ல” என்றான் அர்ஜுனன் “அதற்கு கூடுதலாக ஒரு வால் உங்களுக்குத்தேவையாகும்” என்றான்.

கங்கைக்கரையில் அவர்களுக்கான படகுகள் காத்திருந்தன. கனகன் வந்து பணிந்து “படகில் ஒரு இரவும் பகலும். இரவு சுருதகர்ணம் என்ற இடத்தில் தங்குகிறோம். காலையில் கிளம்பி ஒருபகல் சென்றால் மாலையில் வாரணவதத்தை அடையமுடியும்” என்றான். பீமன் “மெதுவாகவே செல்வோம், விரைந்துசெல்வதற்கு போர் ஏதுமில்லையே” என்றான். “மூத்த இளவரசர் முடிந்தவரை விரைவாகச் சென்று மீளவேண்டும் என்கிறார். எத்தனை நாளாகும் செல்ல என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்” என்றான் கனகன். “அவரிடம் சொல்லுங்கள், அங்கே வாரணவதத்திலும் அரசியல் சதுரங்கக் களங்கள் உண்டு என்று” என்றான் பீமன்.

கனகன் புன்னகையுடன் வணங்கிவிட்டுச்சென்றான். “மூத்தவரே நீங்கள் அமைச்சர்களிடமாவது இத்தகைய பேச்சுக்களை பேசாமலிருக்கலாம்” என்றான் அர்ஜுனன். “ஆம், அதுவே முறை. ஆனால் முறைசார்ந்த எதையும் செய்யலாகாது என்று என் குலதெய்வமான குரங்குக்கு வாக்களித்திருக்கிறேன்” என்ற பீமன் அங்கே நின்ற மரக்கிளை ஒன்றைப்பற்றிக்கொண்டு எழுந்து காட்டில் மறைந்தான்.

அரசப்படகில் குந்தியும் பாண்டவர்களும் ஏறிக்கொண்டனர். படகின் அடியில் அரசிக்கான துயிலறை இருந்தது. மேலே ஆண்களுக்கான மூன்று துயிலறைகள் இருந்தன. பின்னால் வந்த படகில் உணவுப்பொருட்களும் சமையல்காரர்களும் ஏறிக்கொண்டனர். முன்னும் பின்னும் இரு காவல்படகுகளில் படைக்கலம் ஏந்தியவீரர்கள் ஏறினர். கட்டுகள் அவிழ்ந்து முதல் படகு அசைந்து கிளம்பியபின்னரும் பீமன் வரவில்லை. “மூத்தவர் இன்னும் படகில் ஏறவில்லை” என்றான் நகுலன். “வருவான்... அவன் ஒரு குரங்கு” என்றான் தருமன் சலிப்புடன்.

மரக்கிளை ஒன்றில் இருந்து சமையல்படகில் குதித்த பீமன் அங்கிருந்தே உரக்க “இளையவனே, என் இடம் இங்குதான். உனக்கு வேண்டிய உணவை மட்டும் எனக்குத் தெரிவி. நான் சமைத்துக் கொடுத்தனுப்புகிறேன்” என்றான். நகுலன் “மூத்தவரே, எனக்கு களிமண்ணில் சுட்ட கங்கைமீன்” என்றான். சகதேவன் “சுட்ட நாரை” என்றான். “சற்றுநேரத்தில் தேடிவரும்” என்றான் பீமன். “உணவுகூட போராகத்தான் இருக்கவேண்டுமா? காய்கறிகளை உண்டால் என்ன?” என்றான் தருமன். “மூத்தவரே, அவர்கள் ஷத்ரியர்கள். ஊனுணவை விலக்க தங்களைப்போல அறச்செல்வர்கள் அல்ல” என்றான் பீமன் உரக்க. அவனுடைய படகு பின்னால் நகர்ந்துசென்றது.

அர்ஜுனன் கரையை நோக்கியபடி நின்றிருந்தான். கங்கையின் பயணம் சலிப்பதேயில்லை. அது காலத்தில் பயணம் செய்வதுபோல. கங்கையின் வடக்கே செல்லச்செல்ல காலம் பின்னகர்ந்துகொண்டே செல்லும். நகரங்கள் பழையவையாக சிறியவையாக ஆகும். சிற்றூர்கள் மேலும் சிற்றூர்களாகி பின் பழங்குடி கிராமங்களாகும். அதன்பின் தவக்குடில்கள். அதன்பின் அடர்காடு. பனிமலைகளின் அமைதி.

தருமன் வந்து “இளையோனே உன்னை அன்னை அழைக்கிறாள்” என்றான். அர்ஜுனன் குந்தியின் அறைக்குச் சென்றான். மான்தோல் விரிக்கப்பட்ட மஞ்சத்தில் குந்தி அமர்ந்திருந்தாள். தாழ்ந்த அறையாதலால் மேலே திறந்திருந்த சாளரம் வழியாக அலைத்துமிகள் அவ்வப்போது உள்ளே வந்தன. நீரின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது, மாபெரும் பசு ஒன்று நாவொலிக்க அசைபோடுவது போல.குந்தி மெல்லிய குரலில் முறையாக கையை காட்டி “அமர்க இளையோனே!” என்றாள். அர்ஜுனன் அமர்ந்துகொண்டதும் “அனைத்துப் பயண ஏற்பாடுகளும் முறையாக உள்ளன என நினைக்கிறேன்’ என்றாள். அர்ஜுனன் “ஆம் அன்னையே” என்றான். தருமன் “கனகன் பொறுப்பேற்றிருக்கிறான்” என்றான்.அவள் அவனை விட்டு பார்வையை சற்று விலக்கி ஆர்வமின்றி கேட்பவள் போல “யாதவன் ஏன் மதுரையை மீண்டும் தலைநகராக்கவில்லை? மகதத்தை அஞ்சுகிறானா?” என்றாள்.

“மதுரையை வசுதேவரே ஆளப்போகிறார் என்றான்” அர்ஜுனன் சொன்னான். “அங்கே கூர்ஜரத்தின் தெற்கே கோமதி ஆற்றின் இரு மருங்கும் மிகவிரிந்த புல்வெளிகள் உள்ளன.காட்டுப்பசுக்கள் அங்கே மலிந்திருக்கின்றன. முன்னர் அங்கு கடலோரமாக அனர்த்தர்களின் குசஸ்தலி என்னும் சிறிய நகர் இருந்திருக்கிறது.அங்கிருந்து புல்லால் ஆன பாய்களும் பிறபொருட்களும் யவனநாடுவரை சென்றதனால் அதற்கு அப்பெயர் வந்தது என்கிறார்கள். அயோத்தியின் இக்‌ஷுவாகுக்கள் பாரதவர்ஷத்தை ஆண்ட காலகட்டத்தில் குசஸ்தலி முழுமையாகவே அழிந்தது. அப்பகுதி சதுப்பாகியது. அனர்த்தர்கள் இப்போது கூர்ஜரத்தின் சமந்தர்களாக வடபுலத்தில் குசமண்டலி என்னும் ஊரை அமைத்திருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக அந்நிலம் முழுமையாகவே கைவிடப்பட்டிருக்கிறது” என்றான்

“கைவிடப்பட்ட நிலத்தில் குடியேறலாகாது என்பது நூல்கள் வகுக்கும் நெறியல்லவா?" என்றான் தருமன். “அதற்கு அப்பால் கடல் நெடுந்தொலைவுக்கு இறங்கிச்சென்று பல நிலங்கள் வெளிவந்துள்ளன.பெரும்பாறைகள் கடலோரமாக எழுந்து நின்றிருக்கின்றன. அங்கே ஓர் ஊரை அவன் அமைக்கவிருக்கிறான்” என்றான் அர்ஜுனன். குந்தி திகைப்புடன் “சதுப்பிலா? அங்கே கன்றுகளும் வாழமுடியாதே?” என்றாள். “புல்வெளிகளில் ஊர்களை அமைப்பதல்லவா யாதவர்களின் வழக்கம்? மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கன்றுகளைப் பகிர்ந்துகொண்டு ஊரையும் அதனடிப்படையில் அமைக்கவேண்டும். தொன்மையான குலமுறைகள் உள்ளன அதற்கு” என்றாள்.

“அன்னையே, இளைய யாதவன் அமைக்க எண்ணுவது வழக்கமான ஒரு யாதவக்குடியிருப்பு அல்ல” என்றான் அர்ஜுனன். “அவன் அமைக்கவிருப்பது ஒரு நகரம். அதை அவனே முற்றதிகாரத்துடன் ஆளப்போகிறான். குலமுறை அதிகாரங்கள் சடங்குகள் அனைத்தையும் முழுமையாகவே நிறுத்திவிடுவான்” என்றான். குந்தி “நகரமா?” என்றாள். “ஆம், குலமுறை அரசுகளின் காலம் முடிந்துவிட்டது என்று அவன் எண்ணுகிறான். குலச்சபைகளால் ஆளப்படும் சிறிய அரசுகள் எல்லாமே வருங்காலத்தில் பெரும்போர்வீரனாலும் அவனால் நடத்தப்படும் படையாலும் ஆளப்படும் முற்றதிகார அரசுகளால் உண்ணப்பட்டுவிடும் என்கிறான்.”

அர்ஜுனன் குரலில் ஏறிய விரைவுடன் “அவன் சொன்னவை அனைத்தும் முழுமையான உண்மைகள். இனி பேரரசுகளின் காலம். ஒருங்கிணைந்த பெரும் படைகளைக் கொண்ட அரசுகளே இனி பாரதவர்ஷத்தை ஆளும். அவை பாரதப்பெருநிலத்தின் கருவில் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அது அஸ்தினபுரியா மகதமா கலிங்கமா என்பது ஊழின் கையில் உள்ளது. ஆனால் ஆரியவர்த்தத்தை முழுமையாகவே அடக்கி ஆளும் பேரரசு ஒன்று எழவிருக்கிறது. அது இன்றிருக்கும் நூற்றுக்கணக்கான சிறிய அரசுகள் அனைத்தையும் அழித்து தன்னுள் சேர்த்துக்கொள்ளும். இன்றைய பாரதவர்ஷம் ஒன்றோடொன்று முட்டி மண்டையை உடைத்துக்கொள்ளும் ஆட்டுப்பட்டி போலிருக்கிறது. யானைக்கொட்டகையாக அது மாறும். உள்ளே ஒரு வேழம் மட்டுமே இருக்கும்.”

“ஆம், அதை பேரரசி சத்யவதி தேவி சொல்லக்கேட்டிருக்கிறேன். அந்தப் பேரரசாக அஸ்தினபுரி அமையவேண்டுமென்று அவர் கனவு கண்டார்” என்றாள் குந்தி. “அத்தனை அரசர்களும் அந்தக்கனவையே காண்கிறார்கள். ஆகவே ஒரு பெரும்போர் நிகழும் என்று யாதவன் சொல்கிறான். அதை காட்டுத்தீ என்கிறான். அந்த நெருப்புக்குப்பின்னர் பெருமழை பொழியும். அதில் புதிய காடு முளைக்கும். அந்தப் பெருமழையின் மழைப்பறவை அவன் என்று சொன்னான்” என்றான் அர்ஜுனன்.

“வேசரத்தில் சாதகர்ணிகளின் பேரரசு உருவாகும் என்று இளைய யாதவன் சொல்கிறான்” என்றான் அர்ஜுனன். “ஆரியவர்த்தத்தில் சமநிலை ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டிருக்கிறது. அதில் நமது தரப்பை வலுப்படுத்துவது மட்டுமே இன்று ஒவ்வொரு அரசகுலத்துக்கும் உரிய அறைகூவல்.” குந்தி பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். “இங்குள்ள தொல்குடிகள் அவர்களின் குலச்சபைகளின் அதிகாரத்தை கடக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவை சடங்குகளாலும் நம்பிக்கைகளாலும் ஆனவை. ஷத்ரியர்களோ தங்கள் தொன்மையான பகைமைகளையும் தன்முனைப்புகளையும் விட்டு ஒருங்கிணைய முடியாதவர்களாக தேங்கிப்போயிருக்கிறார்கள். யாதவர்களுக்கு காலம் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்கிறான் கிருஷ்ணன்.”

அர்ஜுனன் சொன்னான் “யாதவர்கள் தங்கள் குலச்சபை அதிகாரங்களை முற்றாக உதறி போர்ச்சமூகமாக ஆகவேண்டும். அன்னையே, மான்களுக்கு தலைமை இருப்பதில்லை. ஆனால் வேட்டைச்செந்நாய்களோ தலைவனையே மையமாகக் கொண்டவை. அவன் யாதவர்கள் என்னும் மந்தையை செந்நாய்க்கூட்டமாக ஆக்க விழைகிறான். அதற்குத்தான் அவனே ஒரு நகரை உருவாக்க திட்டமிடுகிறான்.” குந்தி புன்னகையுடன் “அவனிடம் அதற்கான செல்வமிருக்கிறதா?” என்றாள்.

“அவனுக்கு பேரரசியாகிய அத்தை ஒருத்தி இருக்கிறாள். அவன் சொல்லை அவளால் மீறமுடியாது என்றான்.”  குந்தி சிரித்து “திருடன்...” என்றாள். “அத்துடன் கூர்ஜரத்தின் தெற்கே அனர்த்தர்களின் அந்தக் காவல் மையத்தை அவன் அதற்காகத்தான் குறிவைத்திருந்திருக்கிறான். அன்னையே, விசாகவர்மனின் காலம் முதலே ஒரு பெரும் வணிகமையம். அதன் மறைவுக்கருவூலங்களில் குவியல்குவியலாக பொன் இருந்தது. அதை அவன் குதிரைகளில் கட்டிச் சுமந்துகொண்டு சென்றான்.”

“நகரத்தை அமைக்கும் திட்டங்கள் போட்டு வைத்திருப்பானே?” என்றாள் குந்தி. “ஆம். நகரை முழுமையாகவே சூத்ராகிகளைக்கொண்டு வரைந்து அவ்வரைபடத்தை மனப்பாடம் செய்திருக்கிறான். எனக்கு வரைந்து காட்டினான். அவன் அமைக்கவிருப்பது ஒரு கடல்துறைமுக நகரம். பழைய குசஸ்தலிக்கு அப்பால் கோமதி ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் கடலுக்குள் நீண்டு நின்றிருக்கும் ஒரு தீபமுக நிலத்தில் அந்நகரம் அமையும். உறுதியான பாறைகளால் ஆன நிலம் அது. ஆகவே பல அடுக்குகளாக அதில் கட்டிடங்களை அமைக்க முடியும்.”

“அன்னையே. அந்நிலம் உண்மையில் கடலுக்குள் புகுந்து நிற்கும் ஒரு மலைச்சிகரம். ஆகவே கடலுக்குள் நெடுந்தொலைவுக்கு அப்பால் அது தெரியும். அங்கே அவன் ஒரு மாபெரும் நுழைவாயிலை அமைக்கப்போகிறான்” என்றான் அர்ஜுனன். “கோட்டை கட்டாமல் வாயில் கட்டப்போகிறானா என்ன? வாயிலுக்குள் நுழைய முதலில் ஒரு பெரும்பாதை தேவை அல்லவா?” என்றான் தருமன். “மூத்தவரே, அவன் அமைக்கவிருக்கும் நுழைவாயில் கடலை நோக்கி அமைந்திருக்கும்” என்றான் அர்ஜுனன்.

“கடலைநோக்கிய வாயிலா?” என்றபின் குந்தி சிரித்துவிட்டாள். “மூடச்சிறுவன், விளையாடுகிறானா என்ன?” அர்ஜுனன் “அன்னையே, அவன் விளையாடுகிறான் என்பதும் உண்மை. ஆனால் அவன் அதை கட்டவே எண்ணுகிறான்” என்றான். “கோட்டையின் அளவை வைத்துத்தானே நுழைவாயிலை கணக்கிடமுடியும்?” என்றான் தருமன். "இல்லை மூத்தவரே, அது தனியாக நிற்கும் ஒரு சிற்பம் மட்டும்தான். அது நூறு வாரை உயரம் கொண்டதாக இருக்கும் என்றான் அர்ஜுனன்.

குந்தி நகைத்து "குழந்தைக்கற்பனை போலுள்ளது. எண்பது என்றால் கிட்டத்தட்ட ஐநூறு அடி. சராசரி மானுடனை விட எழுபது மடங்கு உயரம்... அத்தனை உயரமுள்ள கட்டுமானம் ஏதும் பாரதவர்ஷத்தில் இல்லை. அதைக்கட்டும் ஆற்றலும் நம் சிற்பிகளிடம் இல்லை” என்றாள். “அன்னையே, அப்பகுதியின் கடல்பாறைகளைக் கொண்டே அதைக் கட்டப்போகிறான். கடல்பாறைகள் கடல்காற்றால் அரிக்கப்படுவதில்லை. அவற்றை நீருக்குள் இருந்து வெட்டி எடுப்பதனால் மிக எளிதாக மெலே கொண்டுவர முடியும்...”

தருமன் “அவற்றை எப்படி மேலேற்றுவான்? எப்படி மேலும் மேலும் அடுக்குவான்? எத்தனை யானைகளை அங்கே கொண்டுசெல்வான்? காந்தாரத்தில் ஆயிரம் யானைகள் சேர்ந்து கட்டும் கோட்டையின் பணி இருபதாண்டுகளாகியும் இன்னமும் முடியவில்லை தெரியுமா?” என்றான். அர்ஜுனன் “அதை நான் அவனிடம் கேட்டேன். எதிர்க்காற்றில் விரிந்த நூறு பாய்கள் கொண்ட ஒரு மரக்கலம் நூறு யானைகளுக்கு நிகரானது என்றான். கற்களை வடங்களால் பிணைத்து மரக்கலங்களுடன் இணைப்பார்கள். அவை பாய்விரித்து கடலுக்குள் செல்கையில் கற்கள் இழுபட்டு மேலெழுமாம்...” என்றான். சிரித்தபடி “காற்றே மண்ணில் வல்லமை வாய்ந்தது. நான் எனக்காக காற்றில் சிறகு விரிக்கும் பெரும்பருந்துகளை பணியமர்த்தப் போகிறேன் என்கிறான் யாதவன்” என்றான். தருமன் “வியப்பூட்டுகிறது. ஆனால் அவனால் முடியுமென்றும் தோன்றுகிறது” என்றான்

அர்ஜுனன் சிரித்து “ஒவ்வொன்றுக்கும் தீர்வு வைத்திருக்கிறான். மரத்தால் ஆன சாரங்களுக்கு பதில் பாலைவன மணலை நெடுந்தூரம் சரிவாகப் போட்டு சாரம் அமைப்பான். அதில் மாபெரும் கற்களை எளிதில் உருட்டி மேலே கொண்டுசெல்ல முடியும். லையானைகளையே மேலே கொண்டுசெல்லமுடியும். கல்லால் ஆன சக்கரங்களை அவற்றுக்கு கொடுத்தால் மேலும் பலமடங்கு பெரிய கற்களை ஏற்ற முடியும். பாய்மரக்கப்பல்களுக்கு அதில் பாறைக்கற்களை மேலேற்றுவது மிக எளிய பணி” என்றான். காற்றில் கையால் கோடு போட்டு விளக்கினான் “கட்டப்படும் பெருவாயில் அவ்வப்போதே மண்போட்டு மூடப்பட்டுவிடும். உச்சிப்பாறை வைக்கப்பட்டு அனைத்து கட்டுமானமும் இறுக்கப்பட்டபின் மணலை விலக்கினால் குழந்தை பிறந்துவருவதுபோல பெருவாயில் வெளிவரும்.”

“இதை எங்காவது எவரேனும் செய்திருக்கிறார்களா?” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே, சோனகநாட்டில் காப்பிரிகளின் ஓர் ஊர் உள்ளது. காப்பிடர்கள் என்று அம்மக்களை சொல்கிறார்கள். அங்கே பெருமுக்கோண வடிவில் நூறு வாரை உயரத்துக்கு கட்டுமானங்களை அமைத்திருக்கிறார்கள். அதை அவன் வணிகர்களிடமிருந்து அறிந்திருக்கிறான். அதைக் கட்டிய சிற்பிகளையே சந்தித்திருக்கிறான். அவர்களில் சிலரை வரவழைக்கவும் எண்ணியிருக்கிறான்.”

“வீண்வேலை” என்றாள் குந்தி. “குழந்தைகளின் பகற்கனவு... அவன் இன்னமும் வளராத மைந்தன்தான்.” அர்ஜுனன் “இல்லை அன்னையே, அவன் ஒவ்வொன்றையும் எண்ணியிருக்கிறான். நதிவணிகத்தின் யுகம் முடிந்துவிட்டது என்கிறான். நதிக்கரைகளில் செறிந்து அமைந்த நாடுகள் மெல்ல வலுவிழக்குமாம். இனி கடல்வணிகத்தின் யுகம். கூர்ஜரத்தின் தேவபாலபுரி இன்று பாரதவர்ஷத்தின் பெருந்துறைமுகம். கலிங்கம் அதன் துறைமுகங்களாலேயே வலுப்பெற்று வருகிறது. தாம்ரலிப்தியை எவர் ஆள்கிறார்களோ அவர்கள்தான் இனி கங்கைநிலத்தின் தலைவர்கள். அவன் தேவபாலபுரிக்கு நிகரான ஒரு துறைமுகத்தை உருவாக்க எண்ணுகிறான்” என்றான்.

“அன்னையே, அந்தப் பெருவாயில் ஓர் அழைப்பு. அங்கே அவன் பெருங்கலங்களுக்கு சுங்கம் கேட்கப்போவதில்லை.” குந்தி “நல்ல கதை, சுங்கமின்றி எப்படி நகருக்கு செல்வம் வரும்?” என்றாள். “அக்கலங்களுக்கு பொருள் கொண்டு விற்பவர்களிடமிருந்து சுங்கம் வாங்கமுடியும்... ஆனால் அதுவும் உடனடியாக அல்ல. பெருநாவாய்கள் வந்து அங்கே வணிகம் வலுத்து அங்கு அவர்கள் வந்துதான் ஆகவேண்டுமென்ற நிலை வந்தபின்னர் அவன் கோரும் சுங்கத்தை அவர்கள் அளித்துத்தான் ஆகவேண்டும். அதன்பின் கருவூலம் நிறைந்தபடியே இருக்கும்.”

“கணக்குகள் துல்லியமாகத்தான் இருக்கின்றன. ஆனால் தேவபாலபுரி மிக அருகிலேயே இருக்கிறது. ஏன் நாவாய்கள் இங்கே வரவேண்டும்?” என்று தருமன் கேட்டான். “மூத்தவரே, தேவபாலபுரத்தின் வணிகம் முழுமையாகவே சிந்துவை நம்பியிருக்கிறது. காந்தாரம், மாத்ரநாடு ,பால்ஹிகநாடு, சௌவீரம், சப்தசிந்துவின் சிறிய பழங்குடி அரசுகள் என வடக்கே இருக்கும் நாடுகளுக்கான கடல்முகம் அது. அவை பெரும்பாலும் பாலைவன நாடுகள், அல்லது பழங்குடிநாடுகள். அவற்றில் பெரும்பாலானவற்றில் நிலம் வருடத்தில் மூன்றுமாதம் பனி மூடிக்கிடப்பதும் கூட. அவற்றின் வணிகத்திற்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை எட்டப்பட்டுவிட்டது” என்றான் அர்ஜுனன்.

“அன்னையே, சிந்துவுக்கும் பாரதவர்ஷத்தின் விரிந்த மையநிலத்துக்குமான பாதை பெரும்பாலைநிலத்தால் தடுக்கப்பட்டுள்ளது. மாளவமும் விதர்பமும் விந்தியமலைக்கு அப்பால் உருவாகி வந்துள்ள நாடுகளும் இன்று மகாநதி வழியாக மட்டுமே கடலுக்குச் சென்றாகவேண்டிய நிலையில் உள்ளன. காடுகளையும் நான்கு நாடுகளைக் கடந்து பல கப்பங்களை அளித்து அங்கே செல்லவேண்டும். தென்கூர்ஜரத்தில் உருவாகி வரும் யாதவனின் துறைமுகம் அவர்களுக்கு மிக அண்மையில் உள்ளது. பாரதவர்ஷத்தில் வரும் வருடங்களில் பெரும் வல்லமையுடன் எழப்போகும் நாடுகள் கங்காபதத்துக்கு தெற்கே விந்தியனைச் சுற்றியுள்ள நிலத்திலேயே அமையும் என்று யாதவன் சொல்கிறான்.”

அர்ஜுனன் அக எழுச்சியுடன் சிறுவனைப்போல உரத்த குரலில் சொன்னான் “அந்தப் பெருவாயில் ஓர் அடையாளம். அன்னையே, இன்றுவரை பாரதவர்ஷத்தின் எந்த அரசனும் கடல்வணிகத்தை பொருட்டாக எண்ணியதில்லை. அவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. அவர்களிடம் சுங்கமென்றபேரில் கொள்ளையடிக்கவே அவர்கள் முயன்றிருக்கிறார்கள். கொள்ளையடிக்கும் குழுக்களை வளர்த்துவிட்டு அவர்களிடமும் கப்பம் கொள்கிறார்கள். அவன் நகரின் முகத்தோரணமான அந்ப்த பெருவாயில் ஓர் அழைப்பு. ஒரு நகரத்தின் புன்னகை அது என்றான் கிருஷ்ணன். பெருவாயில்புரம் என்றே அந்நகரம் அழைக்கப்படும் என்றான். அச்சொல்லே ஒரு செய்தியாக உலகமெங்கும் செல்லும். யவனர்களும் சோனகர்களும் பீதர்களும் அங்கே வருவதற்கு அச்சொல்லே போதுமான உறுதியை அளிக்கும்.”

“துவாரகை...” என்று குந்தி மெல்ல சொல்லிக்கொண்டாள். புன்னகையுடன் திரும்பி “துவராகை, பெருவாயில்கொண்டவள். மகத்தான பெயர்... இந்தப்பெயரை அவன் எப்படி அடைந்தான்?” என்றாள். அர்ஜுனன் "அவன் இந்தக் கனவுகளை எல்லாம் கோகுலத்தில் கன்றுமேய்த்துக் கொண்டிருக்கையிலேயே அடைந்துவிட்டான். அவன் தோழர்கள் சொன்னார்கள். அவன் ஏழுவயதாக இருந்தபோது மலைச்சரிவில் அவர்களை அமரச்செய்து இக்கனவுகளைச் சொல்வானாம். அவை அவர்களுக்கு வெறும் கதைகளாக இருந்தன. ஒவ்வொன்றாக அவை நிறைவேறுவதைக் கண்டு அவர்கள் அவனை விண்ணளக்கும் பெருமாளின் மானுட வடிவமென்றே எண்ணுகிறார்கள்.”

“துவாரகை...” என்று மெல்லிய குரலில் சொன்ன குந்தி “அவன் அகம் இப்பெயரில் உள்ளது இளையவனே. தன் நகரை ஒரு பெண்ணாக எண்ணுகிறான்” என்றபின் முகம்சிவந்து கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். அர்ஜுனன் “அழகிய இளம்பெண்ணாக... அன்னையே, அவள் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் அவன் கண்ணில் கண்டுவிட்டான்” என்றான். தருமன் “ஆனால் அரசு என்பது படைபலத்தால் ஆனது. அவன் ஒரு பெரிய படையை திரட்டியாகவேண்டும்...” என்றான்.

அர்ஜுனன் நகைத்து “அதற்குத்தான் அஸ்தினபுரி இருக்கிறதே என்றான்” என்று சொன்னான். தருமன் சினத்துடன் “அஸ்தினபுரி என்ன அவன் விளையாட்டரங்கு என எண்ணினானா?” என்றான். “மூத்தவரே, இதையே நான் கேட்டேன். இல்லை, அஸ்தினபுரி என் படைக்கலம் மட்டுமே. பாரதவர்ஷம் என் களம் என்றான்.”  “அப்படியென்றால் நாமெல்லாம்?” என்று தருமன் சீண்டப்பட்டவனாகக் கேட்டான்.

“சதுரங்கக் காய்கள்... வேறென்ன?” என்றபடி குந்தி எழுந்து கொண்டாள். “இன்று முழுக்க என் அகம் எரிந்துகொண்டிருந்தது பார்த்தா. யாதவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே இந்தப் பயணத்தை எண்ணினேன். என் அகத்தின் வெம்மை அவன் பெயர் கேட்டால் சற்று குளிரக்கூடும் என்று எண்ணினேன். அது பிழையாகவில்லை. இன்று இமயமுடியில் நின்று பாரதவர்ஷத்தைப் பார்க்கிறேன். அஸ்தினபுரியும் மகதமும் கலிங்கமும் என் காலடியில் கிடக்கின்றன” என்றாள். “துவாரகை... அச்சொல்லை உச்சரித்தபடியே நான் இன்னும் ஒருமண்டலம் இனிது உறங்கமுடியும்.”

அர்ஜுனன் தானும் அச்சொல்லை உச்சரித்தபடியே இருப்பதை அலைகளை நோக்கியவண்ணம் படகின் விளிம்பில் நின்றிருக்கையில் உணர்ந்தான். கங்கையின் காற்று அவனை பறவையென உணரச்செய்தது. தருமன் அவனருகே வந்து நின்றுகொண்டு “அன்னை தன்னை மேலும் மேலும் யாதவப்பெண் என்று காட்டிக்கொள்கிறாள். அது அவளுக்கு உகந்தது அல்ல” என்றான். “மூத்தவரே, இன்று நீங்களும் உங்களை யாதவ அரசன் என்று காட்டிக்கொண்டீர்கள்” என்றான் அர்ஜுனன். தருமன் கண்களில் சினத்துடன் நோக்கிவிட்டு திரும்பிச்சென்றான்.

பகல்முழுக்க நூல்கட்டிய அம்புகளால் மீன்களையும் நாரைகளையும் எய்து பிடித்தும் இரவில் விண்மீன்களை நோக்கியபடி படகின் அமரத்தில் மல்லாந்து படுத்தும் அர்ஜுனன் பயணம் செய்தான். யாதவர்கள் அங்கே கூர்ஜர நிலத்தில் குடில்களை கட்டியிருப்பார்கள். யவனச்சிற்பிகளையும் கலிங்கச் சிற்பிகளையும் கொண்டுவர யாதவனின் தூதர்கள் சென்றிருப்பார்கள். முதலில் அந்தப் பெருவாயில்தான் கட்டப்படும், அதன் பின்னரே அரண்மனை என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தான்.

“அது அமைந்தபின்னர்தான் தாங்கள் கன்றுமேய்க்கும் மக்கள் அல்ல, நாடாள்பவர்கள் என என் குலத்தவர் நம்புவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் கண்முன் அது வளரும். அவர்களின் கனவில் அது குடியேறும். அவர்களின் புராணமாக அது ஆகும். அவர்களை அது முழுமையாகவே மாற்றியமைக்கும்” அவன் சொன்னான். “முதலில் அதைக் கட்டி அதனடிப்படையிலேயே பிற கட்டடங்களை வடிவமைக்கமுடியும்.”

கிருஷ்ணனுடன் இருந்திருக்கலாம் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அவன் உணரும் தனிமை அவனுடன் இருக்கையில் மட்டும் முழுமையாக மறைந்துவிடுகிறது. அவனுடைய ஒவ்வொரு சொல்லும், அவனுடைய அனைத்து உடலசைவுகளும் மகிழ்வூட்டின. அவனுடன் இருக்கையில் ஒருகணம்கூட கண்ணையும் செவியையும் அகற்றமுடியவில்லை. அத்தனை முழுமையான அகக்குவிப்பு பிறகெப்போதும் நிகழ்ந்ததில்லை. துரோணரிடம் இருந்த நாட்களில் அவன் அகம் ஒவ்வொரு சொல்லுக்கும் குவிந்திருந்தது. ஆனால் அதை அவன் யோகம் எனப் பயின்றான். கிருஷ்ணனிடம் இருக்கையில் அவன் அகத்தை விலக்க எண்ணினாலும் முடியவில்லை.

என்னதான் செய்கிறான்? அவன் கற்பிப்பதில்லை. மகிழ்ச்சியடைய வைக்க முயல்வதில்லை. சொல்லப்போனால் அவனுக்காக எதையுமே செய்வதில்லை. அவன் தன்னை அறிகிறானா என்றுகூட ஐயம் வருவதுண்டு. எவரையாவது அறிகிறானா என்றே எண்ணி வியந்திருக்கிறான். முற்றிலும் தன்னுள் நிறைந்து ததும்பிக்கொண்டே இருப்பவன். அவன் பேசுவதும் செயல்படுவதும் எல்லாம் அவனுக்காக மட்டுமே. அவன் உடலசைவுகள் தீபச்சுடர்போல இயல்பானவை. சொற்கள் அதன் ஒளிபோல. அவன் அவனிலிருந்து முற்றிலும் தன்னியல்பாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறான். இருக்குமிடத்தை முழுமையாக நிறைத்துவிடுகிறான். அவனைப்போல முழுத்தனிமையில் இருப்பவர்களை அவன் கண்டதில்லை.

அவனுக்கு அத்தனை மனிதர்களும் முற்றிலும் நிகரானவர்கள்தான். குதிரைச்சூதனையும் சமையற்காரனையும் படைவீரர்களையும் ஒரே முகமலர்ச்சியுடன் தழுவிக்கொள்கிறான். அவன் அறியாத எவருமே இல்லை. பெயர்கள் உறவுமுறைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறான். ஒவ்வொருவரும் அவனே தன் அணுக்கத்தோழன் என்று எண்ணுகிறார்கள். அவன் அருகே வருகையில் முகம் மலர்கிறார்கள். அவன் ஒரு கூட்டத்தைக் கடந்துசெல்லும்போதே தீபம் கடந்துசெல்லும் உலோகப்பரப்புகள் போல அவர்களின் முகங்கள் ஒளிகொள்கின்றன. அவர்களில் ஒருவனே தானும் என அர்ஜுனன் அறிந்திருந்தான். ஆனால் அத்தனை அணுக்கமாகவும் அவனிருந்தான், அவனறியாத எதுவுமே தன்னிடமில்லை என்பதுபோல.

அவனிடம் கவர்வது அதுதான். குளிர்ந்த பெருநதி போன்றவன் அவன். அவனில் குதித்து நீராடமுடிகிறது. முடிவின்றி அள்ளிக்கொள்ள முடிகிறது. வியந்து சொல்லிழந்து நின்ற மறுகணமே அள்ளி முகத்தில் விட்டுக்கொள்ள முடிகிறது. ஆகவே அவன் ஒரு கணம்கூட சலிப்பூட்டுவதில்லை. துரோணருக்கும் அவனுக்குமான வேறுபாடே அதுதான். துரோணர் அவரது ஞானத்தை அவனுக்களித்துக்கொண்டிருந்தார். அவன் தன்னையே முழுமையாக அளித்துக்கொண்டிருந்தான். ஒருதடையும் இல்லாமல்.

அவனை “யாதவ மூடா... இதென்ன செய்கிறாய்? உனக்கென்ன அறிவுகெட்டுவிட்டதா?” என்று அவன் படைகளின் முன்னால் வைத்து கைநீட்டி கூவியிருக்கிறான். அவன் படைகளில் மிகக்கடையவன் கூட அதையே சொல்லமுடியும் அவனிடம். “உணவு நன்று அல்ல என்றால் அது ஏன் என்று சொல்லவேண்டும். பாதியை அப்படியே தட்டில் வைத்தால் என்ன பொருள்? அப்படியே எடுத்து தலையில் கொட்டிவிடுவேன்” என்று உணவு பரிமாறும் பரிசாரகன் அவனை நோக்கி கையை ஓங்குவான். “பேசாதே, இதுதான் இப்போது சிறந்த குதிரை... இதன் கோணல் பாலைவனத்துக்கு ஒரு பொருட்டல்ல... மெல்லிய திசைமாற்றத்தால் ஒன்றும் ஆகிவிடாது. ஆனால் ஓடவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இதை நீ எடுத்துக்கொண்டால் போதும்... நான் சொல்கிறேன்” என்று குதிரைக்காரன் அவனை அதட்டுவான்.

ஒவ்வொருவனுக்கும் மைந்தனாக இளையோனாக தோழனாக அவர்களின் இல்லங்களில் வளர்பவனாக இருந்தான். சாளரம் வழியாகத் தெரியும் மலைமுடி போல மிகத்தொலைவில் விண்துழாவி நின்றாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தருணத்திலும் வீட்டுப்பொருள் போல விழிக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பான். “நீ அரசனா? விளையாட்டுச் சிறுவனா? அதை முதலில் முடிவுசெய். மூடா, உன்னிடம் விளையாட எனக்கு நேரமில்லை” என்று அவன் தளபதி சுண்டு கூவுவான். சிரித்துக்கொண்டு “மூத்தவரே, தாங்களறியாததா? நான் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று அவன் தோளைத்தழுவி அவன் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசுவான். “விடு... உன்னிடம் பணியாற்றுவதை விட குரங்குக்கு பேன் பார்க்கலாம்...” என்று சுண்டு திரும்பிச்செல்வான்.

ஆனால் அவன் யாரென அவர்களனைவருமே அறிந்திருந்தார்கள். “அது யார் சொன்னது? இளையவனா? அப்படியெனில் அது சரியானதே. அவன் பிழையாக ஒன்றைச் சொல்லி நான் அறிந்ததே இல்லை” என்று சுண்டு ஒருமுறை சொன்னான். அர்ஜுனன் “இல்லை... பாலைநிலத்தில் அத்தனை தொலைவுக்கு ஒரே நாளில் செல்லமுடியாது. மணல் கொப்பளிப்பதனால் குதிரைகளின் கால்கள் களைக்கும்” என்றான்.

அர்ஜுனனிடம் “இளவரசே, இளையோன் சொன்னபின்னரும் எதற்கு ஐயம்?” என்றான் இன்னொரு படைத்தலைவனாகிய சக்ரசேனன். அர்ஜுனன் “பார்ப்போம்” என்றான். ஆனால் குதிரைகள் கிளம்பியதுமே அர்ஜுனனுக்குத் தெரிந்துவிட்டது. முந்தையநாள் பெய்த பனியால் பாலைமண் அழுந்திப்படிந்திருந்தது. அதன்மேல் சென்ற குதிரைகள் முன்னால் சென்ற குதிரையின் குளம்புச்சுவடுகளிலேயே கால் வைத்து நடந்தன. மணல் கொதிக்கத் தொடங்கும்போது அவர்கள் இலக்கை அடைந்துவிட்டிருந்தனர்.

அவனிலிருந்து வெளிப்படும் எல்லையற்ற ஒன்றை அவர்களனைவரும் முன்னரே கண்டிருந்தனர். அவன் சக்கரம் ஏழாகப்பிரிந்து மின்னலாகச் சுழன்று தலைகளை வெட்டித்தள்ளிக்கொண்டிருக்க ஒன்று நூறு ஆயிரமெனப் பெருகி அவன் களத்தை நிறைத்தபோது அவர்களின் விழிகள் இமைப்பிழந்து அவனை நோக்கியிருந்தன. அப்பேருருவம் முடிந்த மறுகணமே துணைத்தளபதியான பிரகதன் “அந்த மூடனிடம் என்ன செய்வதென்று கேளுங்கள் இளவரசே... அத்தனைபேரும் அவனை வேடிக்கை பார்க்கிறார்கள். அவன் என்ன நடனமா ஆடிக்காட்டுகிறான்?” என்றான். கிருஷ்ணன் திரும்பி புன்னகையுடன் “பிரகதரே, இனி நாம் வாணவேடிக்கையை தொடங்கவிருக்கிறோம்” என்றான். யாதவ வீரர்கள் நகைத்தனர். அவனுடைய பேருருத் தோற்றத்தை உடனே மறக்கவும் கையிலிருக்கும் களிப்பாவையாக அவனை மீண்டும் காணவும் அவர்கள் ஒவ்வொருவரும் விழைந்தனர்.

அர்ஜுனன் புன்னகையுடன் நின்றிருக்க அருகே வந்த தருமன் “நீ இளைய யாதவனை எண்ணிக்கொண்டிருக்கிறாய் அல்லவா?” என்றான். “ஆம்...” என்றான் அர்ஜுனன். “இளையோனே, நீ பெருங்காதல் கொண்டவன் போலிருக்கிறாய்!” அர்ஜுனன் சிரித்து “மூத்தவரே, எந்த ஆண்மகனுக்காவது ஒரு பெண்ணிடம் இத்தனை பெருங்காதல் எழுமா என்ன?” என்றான். அந்த வினாவின் நேரடித்தன்மையில் திகைத்த தருமன் “ஆம். பெண்கள் வேறு... அவர்கள் ஆர்வத்தை மட்டுமே அளிக்கிறார்கள். அணைத்துக் கொள்கிறார்கள். கரைத்துக்கொள்வதில்லை” என்றான். சிரித்தபடி “அவர்களின் பெண்மையால் நாம் கவரப்படுகிறோம். ஆனால் பெண்மை என்பது மிக எளிதாக மறுகரையைச் சென்றடையும் சிறு சுனைதான்...” என்றபின் “யாதவன் கடல்” என்றான் அர்ஜுனன்.

தருமன் தலையசைத்து “ஆம்” என்றான். “ அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன் இளையோனே. அவன் என் முன் வந்த கணம் முதல் என் சிந்தனை முற்றிலும் அவனுக்கு அடிமையாகிவிட்டது. அவன் சொல்வதற்கு அப்பால் ஒரு சொல்லைக்கூட என் உள்ளம் அடைவதில்லை. அவன் செய்வனவற்றின் மேல் சிறு ஐயம் கூட எழுவதில்லை. அவன் உள்ளங்களை வெல்லும் கலையை ரிஷிகளிடம் கற்றிருக்கிறான்...”

அர்ஜுனன் புன்னகை செய்து “ஆம், உங்கள் முன்னால் அவன் விதுரரை அச்சுறுத்தியபோது நீங்கள் விழிமயங்கி வெறுமனே நின்றீர்கள்” என்றான். தருமன் தலைகுனிந்து “ஆம், அவன் அவர் ஆணவத்தை உடைத்தான். அது என் ஆணவமும் கூட. மதியூகிகள் அனைவருக்குமே உள்ள தன்னுணர்வு அது. அவர்களால் அனைத்தையும் செய்யமுடியும் என. ஒரு பெருவீரன் தன் வாளால் அவர்களின் அத்தனை சதுரங்கக் காய்களையும் தட்டித் தெறிக்கச்செய்ய முடியும்... அவன் சொன்னது அதையே” என்றான்.

பெருமூச்சுடன் தருமன் “இத்தருணத்தில் அவன் நம்முடன் இருந்திருக்கலாம்... ஏதோ நிகழவிருக்கிறது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. ஆனால் சித்தம் செயலற்றிருக்கிறது” என்றான். அர்ஜுனன் “அது நம் உளமயக்காக இருக்கலாம் மூத்தவரே” என்றான். “இருந்தால் நல்லது...  இப்போது நம் மீது அன்புள்ள யாதவன் இங்கிருந்தால்...” என்றான் தருமன். “மூத்தவரே, அவன் அன்புள்ளவன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என்றான் அர்ஜுனன். தருமன் திகைப்புடன் பார்த்தான். “அவனிடம் அன்பே இல்லை என்று தோன்றும். ஒவ்வொரு கணமும் அன்பு அவனிடமிருந்து வருவதையும் உணரமுடியும்” என்றான் அர்ஜுனன்.

தருமன் நகைத்து “இறைவனுக்குரிய எல்லா அடையாளங்களையும் அவனுக்கு அளித்துவிட்டாய்....” என்றபின் “ஆம், அவன் ஒரு பெரும் புதிர். அன்னைகூட அவனை அன்பானவன் என்பதில்லை. அன்புக்குரியவன் என்றே சொல்கிறாள்” என்றான்.

பகுதி பத்து : மீள்பிறப்பு - 3

வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது வெண்ணிறமாக தலை தூக்கி நின்றது. மாலையொளியில் அதன் வெண்ணிற குவைமுகடுகள் மின்னிக்கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி நடுவே பறக்க வலப்பக்கம் குந்தியின் சிம்மக் கொடியும் இடப்பக்கம் தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடியும் பறந்தன.

குந்தி “இம்மாளிகையின் பெயர் என்ன?” என்றாள். புரோசனன் பணிந்து “தேஜோமயம் பேரரசி” என்றான். “வெண்ணிறமுள்ளதாகையால் உள்ளே எப்போதும் நல்ல ஒளி இருக்கும். ஆகவே சிற்பி இப்பெயரைச் சொன்னார். நானும் ஆம் என்றேன்.” குந்தி புன்னகையுடன் “ஆம், நல்லபெயர்” என்றாள். சிறுமியைப்போல கைகளை விரித்து “அகன்றது!” என்று சொல்லி திரும்பி தருமனிடம் “நாம் அறுவருமே இங்கே தங்கலாம்” என்றாள். தருமன் “ஆம், நமக்கு போதுமானதாக இருக்கும்” என்றான்.

அவர்களின் மகிழ்ச்சி அர்ஜுனனுக்குப் புரிந்தது. அது ஒருவகை நாடுகடத்தல் என்று அவர்கள் ஐயம் கொண்டிருந்தனர். அந்த மாபெரும் மாளிகை அந்த ஐயத்தைப் போக்கியது. அவர்களை திருதராஷ்டிரர் இளவரசர்களாகவும் பேரரசியாகவுமே எண்ணுகிறார் என்பதற்கான சான்று. குந்தி ஒரு சிறிய மரவீட்டை எதிர்பார்த்திருப்பாள் என நினைத்துக்கொண்டபோது அர்ஜுனன் புன்னகைத்தான். அக்கணமே பீமன் “தாங்கள் ஒரு மரக்குடிலை எதிர்பார்த்தீர்களோ அன்னையே?” என்றான். குந்தி திரும்பி சினம் மின்னிய விழிகளால் நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள்.

வாரணவதத்தின் கோட்டைவாயிலில் நுழைந்ததுமே குந்தி மகிழ்ச்சி கொள்ளத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்க ரதசாலை முழுக்க தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இல்லங்களின் முகப்புகளில் மலர்மாலைகள் தொங்கின. இருபக்கமும் கூடி நின்றிருந்த மக்கள் அஸ்தினபுரியையும் அரசியையும் பட்டத்து இளவரசையும் வாழ்த்தி குரலெழுப்பினர். “வாரணவதம் நமது ஆட்சியில் உள்ளதா என்ன?” என்று குந்தி கேட்டாள். “இல்லை பேரரசி. இது சிருங்கபதம் என்னும் மலைநாட்டைச் சேர்ந்தது. நமக்குக் கப்பம் கட்டுபவர்கள்” என்றாள் மாலினி. மலைப்பகுதிகளுக்குரிய பெருமுழவுகளும் பானைமுழவுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருந்தன.

நகர் வாயிலிலேயே புரோசனன் தன் படைகளுடன் வந்து பணிந்து குந்தியை வரவேற்றான். மங்கலவாத்தியங்கள் முழங்க தாலப்பொலி ஏந்திய இளையோர் அணிவகுத்து நின்று குந்தியை வாழ்த்தி குரலெழுப்பினர். கொற்றவை ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த சிறியமேடையில் குந்தி அமர்ந்திருக்க வாரணவதத்தின் குலத்தலைவர்கள் அவர்களின் கோல்களை அவள் பாதங்களில் வைத்துப் பணிந்து தேனும் கோரோசனையும் புனுகும் கையுறையாக அளித்தனர். குடிகள் அவளைக் காண முட்டி மோதினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் யாதவர்கள் என்பதை அர்ஜுனன் கண்டான்.

சடங்குகளுக்குப்பின் அரண்மனைக்குச் செல்லும்போது தருமன் “நம் மீது பேரன்பு கொண்டிருக்கிறார்கள் இளையோனே” என்றான். பீமன் “ஆம், நமக்கு கப்பம் கட்டுபவர்கள் அல்லவா?” என்றான். தருமன் அவனை நோக்கியபின் “இந்த ஊரின் ஆலயத்தை பெரியதாகக் கட்டவேண்டும்... அதை குலத்தலைவர்களுக்கு நான் வாக்குறுதியளித்துள்ளேன்” என்றான். அர்ஜுனன் “அது நிகழட்டும்” என்றான். மாளிகையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தருமன் முகமலர்ச்சியுடன் இருபக்கங்களையும் நோக்கியபடி வந்தான். தேவதாருக்கள் பச்சைநிறக் கோபுரங்கள் போல எழுந்து வான் தொட நின்றன. அவற்றின் உச்சிக்கிளைகள் பட்டு மேலே ஒழுகிச்சென்ற வெண்மேகம் கலைந்தது.

தேஜோமயத்தின் அத்தனை அறைகளும் புதியவையாக இருந்தன. “சேவகர்களும் பிறரும் தங்க மலைக்கு மறுபக்கம் குடில்கள் உள்ளன பேரரசி” என்றான் புரோசனன். “இங்கே நானும் என் சேவகனும் மட்டுமே தங்களுடன் தங்குவோம். வெளியே மலைச்சரிவில் காவலுக்கு படைகள் உண்டு. தாங்கள் இங்கே நோன்பிருக்கப்போவதனால் ஆலயத்தின் நோன்புணவை மட்டுமே அருந்தவேண்டும். நோன்புணவு அருந்தாதவர்கள் உங்களை தீண்டக்கூடாது. எனவே பிறரை அகற்றிவிட்டோம். நாங்களும் நோன்புணவு உண்பவர்களே...” என்றான்.

மஞ்சங்களும் இருக்கைகளும் குளியலறைகளும் அனைத்துமே பழுதில்லாமல் அமைக்கப்பட்டிருந்தன. நகுலன் “அழகிய இல்லம்... நம் அஸ்தினபுரியின் அரண்மனையை விடச் சிறப்பானது” என்றான். “இளையவனே, அது மாமன்னர் ஹஸ்தியின் காலம் முதல் இருந்து வரும் அரண்மனை” என்றான் தருமன். “அதைத்தானே சொன்னேன். அது பழையது... இதுதான் புதியதாக இருக்கிறது” என்றான் நகுலன். பீமன் நகைத்து “இது நகுலன் வந்து தங்கிய அரண்மனை என்று புகழ்பெறட்டும்... உன் வழித்தோன்றல்கள் அதற்காக எல்லா குறைகளையும் மறந்து இங்கே நெருக்கியடித்துக்கொண்டு வாழ்வார்கள்” என்றான்.

வாரணவதத்தின் சிவன்கோயில் இயற்கையாக அமைந்த ஒரு குகைக்குள் இருந்தது. மலையில் வெட்டப்பட்ட படிகளில் ஏறிச்சென்றபோது குகையின் சிறிய முகப்பு தெரிந்தது. உள்ளே கண்களை இல்லை என்றாக்கும் இருள். வெளியே பூசகரின் சிறிய இல்லமும் சேவகர்களின் நான்கு இல்லங்களும் இருந்தன. அவர்கள் அங்கே செல்லும்போது மழை ஓய்ந்து பிசிறுகளாக காற்றில் நீர்த்துளிகள் பறந்து இறங்கிக் கொண்டிருந்தன. வானில் மேகங்கள் சாம்பல்குவியல்கள் போல மூடியிருந்தன. அவ்வப்போது தெற்குத்திசை உறும அதைக் கேட்டு மலைமுடிகள் மறுமொழி எழுப்பின. அப்பால் மலையடுக்குகளின் மேல் மழை புகைத்திரை போல இறங்கியிருந்தது. மழைக்குள் ஏதோ பறவை குறுமுழவை விரலால் மீட்டியதுபோல ஒலியெழுப்பியது.

பனையோலைக்குடைகளைப் பிடித்தபடி சேவகர்கள் அவர்களுக்குப்பின்னால் வந்தனர். குந்தி மாலினி துணையுடன் மெல்ல காலெடுத்துவைத்து நடந்தாள். கரியபெரும்பாறை தொலைவில் இருள் என்றே தோன்றியது அருகே நெருங்கும்தோறும் அதன் பேருருவம் கண்களை நிறைத்து சித்தத்தை மலைக்கச்செய்தது. மழையில் நனைந்து சிலிர்த்த வானுருவ யானை. அது உருவாக்கும் மலைப்பு எதனால் என அர்ஜுனன் சிந்தித்தான். அது திசையை இல்லாமலாக்கிவிடுகிறது. திசை என்பது வானம், முடிவிலி. அந்தத் திட இருள் திசையில் சென்று நோக்கை முட்டிக்கொள்ளச் செய்கிறது. பிரக்ஞை அதை ஏற்காமல் தவிக்கிறது.

அப்பால் பலமடிப்புகளாக எழுந்து சென்ற மலைத் தொடரின் காலடியில் இருந்தது அந்தப்பாறை. அதன் நடுவே திறந்த வாய் போலிருந்தது குகை. பாறையின் அதன் விரிசல்களிலும் மடிப்புகளிலுமாக மழைநீர் வழிந்து சிறிய ஓடையாக மாறி கால்களை நனைத்துச் சென்றது. “இந்தப்பாறையை தமோவாரணம் என்கிறார்கள் பேரரசி. அக்காலத்தில் காளமுகம் என்ற பெரிய மேகம் வானை முழுமையாக மூடியிருந்தது. ஆகவே நூறு யுகங்களாக இங்கே சூரிய ஒளி படவேயில்லை. இங்கு தேங்கியிருந்த இருள் அப்படியே இறுகி ஒரு பாறையாக ஆகியது. மேலும் நூறு யுகங்கள் கடந்தபோது அது ஒரு யானையாக ஆகியது” என்றார் பூசாரி.

“அந்த யானை பிளிறியபடி தன் பெருங்கால்களை எடுத்துவைத்து மலையிறங்கத் தொடங்கியது. அதன் காலடிபட்டு பெரும்பாறைகள் உருண்டு சென்று கிராமங்கள் மேல் விழுந்தன. இடியோசை போல ஒலி எழுந்தது. மலையை ஏறிட்டு நோக்கிய அடிவாரத்து மக்கள் மேலிருந்து பெரும் இருள் இறங்கிவருவதைக் கண்டனர். அது ஓர் யானை என்று அறிந்தனர். அவர்கள் ஓடிச்சென்று மலையடிவாரத்தில் தவம் செய்துகொண்டிருந்த கபிலமுனிவரின் கால்களைப் பணிந்தனர்."

“கபிலரின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இங்கே வந்தார். மலையிறங்கி வந்த மாபெரும் யானையை தன் இடக்கையால் தடுத்து நிறுத்தினார். அதை கிழித்துக்கொன்று அதன் கரிய தோலை உரித்துப்போர்த்துக்கொண்டு இங்கே அமர்ந்தார். இந்த மலைப்பாறைதான் அந்தத் தோல். உள்ளே சிவன் லிங்கவடிவாக எழுந்தருளியிருக்கிறார்” என்றார் பூசாரி. “உள்ளே சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்வோம். அபிஷேக அன்னத்தை உண்டு நாற்பத்தொருநாள் இங்கே நோன்பிருப்பது பெருங்கழுவாய் எனப்படுகிறது. அக இருள் அகலும் என்று நூல்கள் சொல்கின்றன.”

குகைக்குள் நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டே இருந்தன. ஊறிச்சொட்டிய நீர்த்துளிகள் கல்லாக ஆனதுபோல மேலே பாறைக்கூம்புகள் தொங்கின. கல்லால் ஆன ஓடைகள். கல்லருவிகள். கற்சுழிகள். கல்லலைகள். சிறிய நெய்விளக்கை ஏந்தி முன்னால் சென்ற பூசாரி “இந்தக்குகை முடிவற்றது. பாதாளம் வரை செல்லும் என்கிறார்கள். இவ்வழியாக அக்காலங்களில் வாசுகியும் கார்க்கோடகனும் வெளிவந்ததை முனிவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதற்கு ஏழு கிளைகள் என்பதனால் சப்தபிலம் என்று இது அழைக்கப்படுகிறது. ஏழுதலையுள்ள கரியநாகம் என்று இதை சூதர்கள் பாடுவதுண்டு” என்றார்.

குகைக்குள் ஒரு சிறிய குடைவுக்குள் மூன்றடி உயரமான லிங்கம் இருந்தது. “இது தானெழுந்த லிங்கம்.ஆகவே ஆவுடை இல்லை. ஆவுடை இப்புவியேதான். ஆகவே இதை பூலிங்கம் என்பதுண்டு” என்றார் பூசகர். “அமர்ந்துகொள்ளுங்கள் தேவி!” அவர்கள் ஈரத்தரையில் அமர்ந்துகொண்டார்கள். “இங்கே எப்போதும் நீர் சொட்டிக்கொண்டுதான் இருக்கும். லிங்கம் அக்னி ரூபமானது. இருளின் குருதி இந்த நீர்த்துளி. இது லிங்கத்தை குளிர்விக்கிறது என்பது புராணம். எரியும் சித்தங்களை இந்நீர்த்துளிகள் குளிர்விக்கும் என்கிறார்கள்.”

இருளில் ஒரேயொரு சுடர் மட்டும் துணையிருக்க அமர்ந்திருக்கையில் அகம் கனவுக்குள் செல்வதை தவிர்க்கமுடியவில்லை. மெல்லிய சேறுபோல எண்ணங்கள் குழைந்து குமிழியிட்டன. குருதியின் வீச்சம் நாசியில் எழுவதுபோலிருந்தது. குமட்டுவதுபோலவும் தலைசுழல்வதுபோலவும் மூச்சுத்திணறுவதுபோலவும் தோன்றியது. ஆனால் அங்கிருந்து எழவும் முடியவில்லை. ஆம். குருதிதான். பச்சைக்குருதி. ஆனால் இங்கே அது எழக் காரணமே இல்லை. குகைக்குள் உள்ள கந்தக வாசனையா? இல்லை ஏதேனும் ஊனுண்ணி மிருகம் தன் இரையுடன் அமர்ந்திருக்கிறதா?

வெளியே வந்தபோதுதான் குந்தி அழுதுகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். அவளுடைய மெல்லிய விசும்பல் கேட்டுக்கொண்டே இருந்ததை நினைவுகூர்ந்தான். அவளை நோக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டான். தருமனின் விழிகளும் சிவந்து கலங்கியிருந்தன. அரண்மனைக்குச் செல்வது வரை அவர்கள் ஒன்றும் பேசவில்லை. குந்தி நேராக தன் அறைக்குள் சென்றுவிட்டாள். அர்ஜுனன் அரண்மனையின் முகப்புத்திண்ணையில் அமர்ந்து அப்பால் மலைச்சரிவில் தேவதாருக்களின் பசுஞ்செண்டுகள் மேல் படர்ந்து இறங்கிக்கொண்டிருந்த மேகங்களை நோக்கிக்கொண்டிருந்தான்.

இரவுணவுக்குப்பின் கூடத்தில் பேசிக்கொண்டிருக்கையில் குந்தி முழுமையாக மீண்டு வந்திருந்தாள். வெளியே குளிர்மேகம் இறங்கி சூழ்ந்து கொண்டிருந்தது. காவலர்களின் பந்தங்கள் நீருக்குள் போல மங்கலாக கரைந்து தெரிந்தன. “இளையவனே, இந்த இல்லம் எதனால் ஆனது?” என்றாள் குந்தி. “சுண்ணத்தாலும் மரத்தாலும் என எண்ணுகிறேன். சுண்ணவாசம் போகவில்லை” என்றான் பீமன். “ஆனால் ஒரு மர இல்லம் போல இது இல்லை. வெளியே நல்ல குளிர் இருக்கிறது. உள்ளே குளிரே தெரியவில்லை” என்றாள் குந்தி. “குளிர் நுழையாதபடி கட்டும் கலை அறிந்தவர்கள்” என்றான் தருமன். “மிக விரைவிலேயே கட்டியிருக்கிறார்கள். ஒரே மாதத்தில்” என்றான் பீமன்.

ஆனால் மறுநாள் ஆலயத்திற்குப் போய்விட்டு வரும்போது குந்தி மெல்லியகுரலில் “தருமா, நம் இல்லத்தை நாம் ஆராயவேண்டும்” என்றாள். “ஏன்?” என்றான் அவன். “நீ பார்த்திருக்க மாட்டாய். அங்கே ஒரு எறும்புகூட இல்லை. மரத்தாலான எந்த ஒரு கட்டடத்தையும் வண்டுகள் துளைக்கப்பார்க்கும். அவை வரவில்லை” என்றாள். “அத்துடன் பறவைகள் வந்து கூரைகளிலோ சாளரங்களிலோ அமரவில்லை. நேற்று ஒரு குதிரைவீரன் அணுகிவந்தான். நம் இல்லத்தைக் கண்டதும் குதிரை தயங்கி நின்றது. அஞ்சுவது போல!” பீமன் “அச்சம் அகத்தோற்றங்களை பெருக்குகிறது” என்றான். “இல்லை மந்தா. இன்று நீ நம் இல்லத்தின் சுவரை ஆராய்ந்து நோக்கு” என்றாள்.

திரும்பி வந்ததும் பீமன் தன் அறையின் சுவர்களை தட்டிப்பார்த்தான். மேலே ஏறி உத்தரங்களையும் மூங்கில்களையும் ஆராய்ந்தான். “அன்னையே, அரக்கும் மெழுகும் விட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இது. மேலே மூங்கில்கள் எவையும் குழாய்களாக இல்லை. உள்ளே சுண்னமோ களிமண்ணோ போட்டு கெட்டிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றான். “இத்தகைய ஒரு கட்டுமானத்தைப்பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை” என்றாள் குந்தி. “இது ஏன் கட்டப்பட்டது? சேவகர்கள் எவருமின்றி நாம் மட்டும் ஏன் இங்கே தங்கியிருக்கிறோம்?”

சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்தபின் குந்தி “தருமா நீ கிளம்பும்போது விதுரர் என்ன சொன்னார்?” என்றாள். “அருகே சாரதி இருந்தமையால் மிலேச்சமொழியில் ஒரு விடுகதையை சொன்னார். அதன் பொருளென்ன என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் தருமன். “சொல் அதை” என்றாள் குந்தி.

தருமன் “ஏழு வரிகள்” என்றான். “சுவர்களை அறியாதவன் விடுதலையை அறியான். குருதியை அறியாத மிருகமே மிகப்பெரிய ஊனுண்ணி. யானைகள் அஞ்சுவதை வளையில் வாழும் எலிகள் அஞ்சுவதில்லை. முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை. மண்ணின் பாதைகளனைத்தும் விண்ணிலுள்ளன. குருதியால்தான் உறுதியான முடிச்சுகள் போடப்படுகின்றன. புலன்களை உள்ளிழுக்கத்தெரிந்த ஆமையே நெடுநாள் வாழ்கிறது.”

குந்தி “தருமா, இச்சொற்களை நீ புரிந்துகொள்ளவில்லையா? அனைத்தையும் இந்த மாளிகையை வைத்தே புரிந்துகொள்ளப்பார். தத்துவார்த்தமாக சிந்தித்ததே நீ செய்த பிழை” என்றாள். “இம்மாளிகையின் சுவர்களை அறிந்துகொள் என்கிறார் முதல்வரியில். குருதியை அறியாத கொலைமிருகம் என்ன? நெருப்பு. அதை யானைகள் அஞ்சுகின்றன, எலிகள் அஞ்சுவதில்லை.” பீமன் எழுந்து “ஆம்” என்றான். எழுந்துசென்று சுவரை தன் கையால் ஓங்கி அறைந்தான். இருமுறை அறைந்தபோது சுண்ணம் உதிர்ந்து பலகை சிம்புகளாக உடைந்தது. உள்ளே அரக்கு உறைந்திருந்தது. “அரக்கும் மெழுகும்” என்றான் பீமன். “கணநேரத்தில் இந்த மாளிகை எரிந்து அழியும்... அருமையான சிதை அமைத்திருக்கிறான் புரோசனன்.”

அர்ஜுனன் தன் வாளை உருவியபடி எழுந்தான். “பொறு பார்த்தா” என்றாள் குந்தி. “முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை. நமக்கு நஞ்சுணவு ஊட்டப்படலாமென்று விதுரர் அஞ்சுகிறார். நாம் இங்கிருந்து தப்பி விண்மீன்களை துணைகொண்டு விலகிச்செல்லவேண்டும் என்கிறார் அடுத்த வரியில்.” கைகளை உரசியபடி எழுந்த பீமன் “அன்னையே, நாம் இப்போதே கிளம்புவோம்” என்றான். குந்தி “இல்லை, அடுத்த வரி என்ன? புலன்களை உள்ளிழுக்கத்தெரிந்த ஆமையே நெடுநாள் வாழ்கிறது என்கிறார் விதுரர். பொறுத்திருக்கச் சொல்கிறார். இவர்களின் நோக்கமென்ன என்று அறிவோம்.”

“நாம் இப்போதே கிளம்பினால் என்ன?” என்றான் பீமன். “மைந்தா, அரசர்கள் எப்போதும் ஒரேயொரு கொலைத்திட்டத்தை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள். அதில் எப்படியேனும் இரை தப்பிப்பிழைக்குமென்றால் கொல்வதற்கு மேலும் இரு அடுத்தகட்டதிட்டங்களை வைத்திருப்பார்கள். அதைத்தான் ஒன்று தவறினால் மூன்று என்று சொல்கிறார்கள். நாம் இங்கிருந்து தப்பினால் இதைவிட பெரிய ஆபத்தை சந்திப்போம். இவர்களை ஏமாற்றித்தான் நாம் தப்பிச்செல்லவேண்டும்” என்றாள் குந்தி. “கனகனை அழைத்து புரோசனனின் திட்டத்தை அறியச் சொல்வோம்.”

“எப்படி?” என்றான் தருமன். “இவர்கள் கொள்கைக்காகவோ குலத்துக்காகவோ இதைச் செய்யவில்லை. செல்வத்துக்காக செய்கிறார்கள். ஆகவே இவர்கள் அனைவருக்குமே செல்வத்தின் மேல் பேராசை உண்டு. புரோசனன் பெற்றதைவிட அதிக செல்வத்தை நாம் அளிப்போம். அவர்களில் ஒருவன் காட்டிக்கொடுப்பான்” என்றாள் குந்தி. அர்ஜுனன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். அவள் மீண்டும் பழைய குந்தியாக ஆகிவிட்டாள் என்று தெரிந்தது. இனிமேல் குகைக்குள் இருளில் இருந்தால் கண்ணீர் விடமாட்டாள்.

மறுநாளே கனகன் செய்தியுடன் வந்துவிட்டான். அவன் விழிகள் மாறியிருந்தன. அச்சத்துடன் அமர்ந்து இருபக்கமும் நோக்கியபின் தருமனிடம் “இளவரசே, நாம் அளித்த வைரங்களைப் பெற்றுக்கொண்டு புரோசனனின் உதவியாளனாகிய பிரமதன் அனைத்தையும் சொல்லிவிட்டான். உங்களை எரித்தழிக்கவே அவன் இந்த இல்லத்தை கட்டியிருக்கிறான்” என்றான். குந்தி விழிகளில் கூர்மையுடன் “உம்” என்றாள். “நீங்கள் அவனை நம்பி அச்சமும் காவலுமின்றி உறங்கத் தொடங்கியபின் இல்லத்தை மூடி தீவைத்துவிட்டு தப்பிச்செல்ல எண்ணியிருக்கிறான்.” பீமன் உரக்க உறுமியபடி கைகளை உரசிக்கொண்டான்.

“இளவரசே, அவன் இதன் அடியில் ஒரு சுரங்கத்தை வெட்டியிருக்கிறான். இல்லம் தீப்பற்றி எரியும்போது அந்தச் சுரங்கம் வழியாக அவன் மட்டும் தப்பிச்சென்று சௌவீர நாட்டை அடைய திட்டமிட்டிருக்கிறான். இங்கே எஞ்சும் எலும்புகளைக்கொண்டு அவனும் எரிந்தழிந்துவிட்டான் என்று அனைவரும் எண்ணுவார்கள். இதைக்கட்டியவன் புரோசனன். ஆகவே அவனும் இந்தத் தீயில் எரிந்தழிந்தால்தான் இது ஒரு விபத்து என்று அஸ்தினபுரியின் மக்கள் நம்புவார்கள். அவன் அணியும் மோதிரத்தையும் கல்மாலையையும் உதவியாளனாகிய கல்மாஷனுக்கு அணிவித்துவிட்டுச் செல்ல அவன் எண்ணியிருக்கிறான்” என்றான்.

“கனகரே, நீர் நாளையே திரும்பிச் செல்லும். விதுரரிடம் நான் சொன்னதாக நான்கு வரிகளைச் சொல்லும்!” என்றாள் குந்தி. “விதைகள் ஈர நிலத்திலேயே விழுந்தன. யானையைத் தாங்க எலியால் முடியும். நெய் எப்போதும் நெருப்பை தேடிக்கொண்டிருக்கிறது. புயல்வருவதை குளிர்காற்று அறிவிக்கும்” என்றாள். “ஆணை” என்றான் கனகன். “நம்மிடம் விதுரர் நேரடியாகவே சொல்லியிருக்கலாமே” என்றான் அர்ஜுனன். “அவருக்கு உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. அவரது கணிப்புகளைத்தான் சொல்லியிருக்கிறார்” என்றாள் குந்தி.

அன்றிரவு குந்தி “பீமா, அந்தச் சுரங்கவழியை கண்டடைந்து சொல்” என்றாள். அதன்பின் அந்த இல்லத்தில் துயிலமுடியாது என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அதுவரை திடமான இல்லமாக இருந்தது தழல்கொழுந்துகளாக மாறி சூழ்ந்திருந்தது. சுவர்களின் பார்வையை, சுவர்கள் வன்மத்துடன் பற்களைக் கடிக்கும் ஒலியை, சுவர்களின் மூச்சின் குளிர்த்தொடுகையை உணரமுடிந்தது. பீமன் வீடுமுழுக்க அலைந்து பின் திரும்பி வந்து “அன்னையே கண்டுபிடித்துவிட்டேன். கனத்த கற்பாளம் ஒன்றால் அது மூடப்பட்டிருக்கிறது. இந்த இல்லம் எரிந்தாலும் குகைக்குள் அனல் வரமுடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது” என்றான். ”புரோசனனின் அறைக்கு மிக அருகே உள்ளது அது” என்றான். “இங்குள்ள எந்தச்சுவரையும் உடைக்கமுடியாது. உள்ளே கனமான இரும்புக்கம்பிகள் உள்ளன...”

மறுநாள் வாரணவத மூர்த்தியை வணங்கி பிராமணர்களுக்கு அன்னமிட்டு திரும்பும்போது குந்தியின் கண்கள் கனத்திருந்தன. எவருமே துயின்றிருக்கவில்லை என்று தெரிந்தது. அவர்கள் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளவில்லை. அரண்மனையை அடைந்து உணவுண்டபின் குந்தி தன் அறைக்குச் சென்றாள். அவள் ஒய்வெடுக்கவில்லை, அறைக்குள் சுற்றி நடந்துகொண்டிருக்கிறாள் என்றான் நகுலன். பின்பு வெளியே வந்து “பீமா, நாம் அணிவதற்குரிய கனத்த கம்பளி ஆடைகளை எவரும் அறியாமல் வாங்கி வை” என்றவள் திரும்பி பின்முற்றத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணை நோக்கி “அவள் யார்?” என்றாள்.

“இங்குள்ள மலைக்குடிப் பெண். திரியை என்று பெயர். அவளும் அவள் ஐந்து மைந்தர்களும் புரோசனனுக்கு அரக்கும் மெழுகும் கொண்டு கொடுத்து வந்தவர்கள்” என்றான் தருமன். குந்தி “ஐந்து மைந்தர்களும் வந்திருக்கிறார்களா?” என்றாள். “ஆம் அன்னையே. அவர்கள் மலைமேல் இருந்து தோலும் புலிநகங்களும் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “அவர்களை இன்றிரவு இங்கேயே தங்கவை. இன்று அவர்கள் இங்கே சிறப்பான உணவு அருந்தட்டும்” என்றபின் விழிகளை நோக்காமல் குந்தி திரும்பிச்சென்றாள். தருமன் அர்ஜுனனை நோக்கினான். பீமன் “கம்பளியாடைகள் இன்றிரவே தேவைப்படும்” என்றான்.

மாலையில் திரியையும் அவள் ஐந்து மைந்தர்களும் அரண்மனையில் புரோசனனுடன் அமர்ந்து உணவருந்தினார்கள். பீமன் அவர்களுக்கு நெய்யன்னத்தை அள்ளி அள்ளி வைத்தான். திரியையின் மைந்தர்கள் மஞ்சள்நிறமான பெரிய உடலுடன் சிறிய கண்களும் அழுந்திய மூக்கும் மஞ்சள்நிறப் பற்களுமாக பீதர்களைப்போல் இருந்தனர். மலைகளில் சுமைதூக்கி அலைந்த வலுவான உடல்கள். உணவை அள்ளிய கைகளிலும் வாயிலும் நெடுந்தூரம் சுமைதூக்கி வந்த பசி தெரிந்தது. திரியை முதியவள். அவள் முகம் நிறைய சிறிய மருக்களுடன் காய்ந்த சுனையின் சேற்றுப்படுகை போல சுருக்கங்கள் அடர்ந்து தெரிந்தது. உணவைக் கண்டு அவள் சிரித்தபோது சுருக்கங்கள் இழுபட்டு கண்கள் முழுமையாகவே மூடிக்கொண்டன.

குந்தி சால்வையைப் போர்த்தியபடி உணவறைக்குள் வந்தபோது அவர்கள் அவளை நோக்கி சிரித்தனர். குந்தி “நாம் யவன மது கொண்டுவந்திருக்கிறோம் அல்லவா, அவர்களுக்குக் கொடு” என்றாள். பீமன் தலையசைத்தான். புரோசனன் “அரசியாரின் கருணை அடியவர்களுக்கும் தேவை” என்றான். “உங்களுக்கும்தான்” என்றாள் குந்தி. “இந்த இடம் என் அகத்தை எளிதாக்கிவிட்டது புரோசனரே. உங்களுக்கு நான் நன்றி சொல்லியாகவேண்டும்” என்றாள். புரோசனன் “ஏன் அச்சொற்கள் அரசி. நான் தங்கள் சேவகன் அல்லவா?” என்றான்.

அறைக்குள் வந்ததும் குந்தி “இன்றிரவு நாம் கிளம்புகிறோம்” என்றாள். அர்ஜுனன் “எதற்கு அவர்கள்?” என்றான். “நாம் இறந்துவிட்டதாக அஸ்தினபுரியினர் நம்பவேண்டும்... நாம் பிறர் அறியாமல் சிலகாலம் வாழவேண்டியிருக்கிறது” என்றாள் குந்தி. தருமன் “அன்னையே, இவர்கள் எளிய மக்கள்...” என்று சொல்லப்போக குந்தி “எளியமக்களின் உயிர்களை எண்ணுபவன் நாடாளமுடியாது. இவர்கள் இறப்பதனால் இவர்களைவிட எளிய பல்லாயிரம்பேர் காக்கப்படுவார்கள் என்றால் அதில் பிழையில்லை” என்றாள்.

தருமன் பெருமூச்சு விட்டான். குந்தி “உன் அறவுணர்வால் உன் மக்கள் தன் அரசனை இழக்கலாகாது. இவர்கள் புரோசனனின் ஆட்கள். இந்த அரக்குமாளிகையைக் கட்டியதில் தெரிந்தோ தெரியாமலோ பங்குகொண்டிருக்கிறார்கள்” என்றாள் குந்தி. தருமன் “நியாயங்கள் பல சொல்லலாம் அன்னையே. நாம் போர்களில் வீரர்களை பலிகொடுப்பதுபோல இவர்களை பலிகொடுக்கப்போகிறோம்” என்றான். “ஆம், அவ்வாறுதான். இறப்பில்லாமல் அரசியல் இல்லை” என்றாள் குந்தி.

அர்ஜுனன் “அன்னையே, நாம் யாரை அஞ்சுகிறோம்?” என்றான். குந்தி “உங்கள் பெரிய தந்தையை..” என்றாள். தருமன் “அன்னையே. இது...” என்று ஏதோ சொல்லத்தொடங்க “நன்றாக எண்ணிப்பார். நம்மை இங்கு அனுப்பியவர் யார்? அனுப்புகையில் அவர் சொன்ன சொற்கள் என்ன?” என்றாள் குந்தி. தருமன் நினைவுகூர்ந்து “இங்கே நமக்கு மிகச்சிறந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். இம்மாளிகையில் நம்மை ஒளி சூழ்ந்துகொள்ளட்டும் என்றார். களிறுகொண்டானின் பாதங்களில் நமக்கு நிறைவு கிடைக்கட்டும் என வாழ்த்தினார்” என்றான். “ஆம், அவரது அகம் அச்சொற்களில் அறியாமல் வெளிவந்துவிட்டது. நம்மை நெருப்புசூழும் என்றும் நாம் இறந்து அமைதிகொள்வோம் என்றும்தான் சொல்லியிருக்கிறார்” என்றாள் குந்தி.

“அன்னையே” என்றபின் அர்ஜுனன் நிறுத்திக்கொண்டான். “அதுவேதான்.. எனக்கு ஐயமே இல்லை. இது அரசரின் சதி. சகுனியும் கணிகரும் துரியோதனனும் அவரை சூழ்ந்திருக்கிறார்கள்” என்று குந்தி பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னாள். “அவர்கள் நம்மைக் கொல்ல முடிவெடுத்துவிட்டார்கள். கொலைமுயற்சியில் தப்பிய எதிரியை எவ்விலை கொடுத்தும் உடனே கொன்றாக வேண்டும் என்பது அரசநீதி. அவர்கள் நம்மை விடமாட்டார்கள். விஷம் வைக்கலாம். துயிலில் எரிக்கலாம். நம் பணியாளர்கள் அனைவருமே அரசருக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை.”

“விதுரர் சொன்னது அதையே” என்றாள் குந்தி. “விண்மீன்களை நோக்கி வழிகண்டுபிடித்து தப்பச் சொல்கிறார். அடுத்த வரி முதன்மையானது தருமா. குருதியால்தான் உறுதியான முடிச்சுகள் போடப்படுகின்றன என்பதன் பொருள் ஒன்றுதான். நாம் வலுவான உறவுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் நீங்கள் ஷத்ரியர்குலங்களில் பெண்கொள்ளவேண்டும். நமக்குப்பின்னால் நம்முடையதேயான படை ஒன்று நின்றிருக்க வேண்டும் . அஸ்தினபுரியின் படை நம்முடையதல்ல என்று உணருங்கள். அங்குள்ள யாதவர்கள் எவரும் போர்வீரர்களுமல்ல.”

“அதுவரை நாம் இறந்தவர்களாகவே இருப்போம்... நம்மை இவர்கள் தேடலாகாது. நாம் இறந்துவிட்டோம் என எண்ணி அஸ்தினபுரியில் துரியோதனன் முடிசூடட்டும். நாம் இல்லை என்று எண்ணி அவர்கள் ஆணவம் கொள்வார்கள். கர்ணனின் வில்லை நம்பி துரியோதனன் பாரதவர்ஷத்தை வெல்லும் கனவுகளை வளர்க்கத் தொடங்குவான். ஏனென்றால் சகுனி இருபத்தாறாண்டுகளாக அங்கே அமர்ந்திருப்பது அஸ்தினபுரியின் மணிமுடிக்காக அல்ல, பாரதவர்ஷத்தை ஆளும் செங்கோலுக்காக” என்றாள் குந்தி. “அந்த ஆணவம் அவர்களுக்கு எதிரிகளை உருவாக்கும். அவ்வெதிரிகளே நமக்குப் பின்பலமாக அமைபவர்கள்.”

“விதுரருக்கு நீங்கள் சொன்னது அதைத்தானா?” என்றான் தருமன். குந்தி தலையசைத்தாள் “யானையைத் தாங்க எலியால் முடியும். யானை தன் எடையாலேயே கட்டுண்டது. எலிகள் மண்ணுக்கு அடியில் கட்டின்றி பெருகிப்பரவும். வெளிவருகையில் அவை பெரும்படையாக இருக்கும். நெய் நெருப்பை தேருவது போல நம் குருதி உரிய உறவுகளைத் தேடுகிறது. நாம் சித்தமாகும்போது புயலை அறிவிக்கும் குளிர்காற்று போல செய்திகள் இயல்பாகவே அவரைத் தேடிவரும்” என்றாள் குந்தி. தருமன் பெருமூச்சுடன் “இன்றிரவுக்குப்பின் நாம் நாடோடிகள்” என்றான். “எலிகள்” என்றான் அர்ஜுனன். “எலிகளைப்போல வளையினூடாக தப்பிச் செல்லப்போகிறோம்.”

பகுதி பத்து : மீள்பிறப்பு - 4

பீமன் கனத்த காலடிகளுடன் உள்ளே வந்து தலையை மெல்ல ஆட்டினான். குந்தி எழுந்து பெருமூச்சுடன் “கிளம்புவோம்” என்றாள். பீமன் “இரண்டாவது இறப்பு இளையவனே” என்று புன்னகைத்தான். “மறுபிறப்பு என்பது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது மூத்தவரே. நாம் அறிந்தவை நம்மை எளிய காட்டுமனிதர்களாக வாழவைக்கின்றனவா என்று பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். “நான் குரங்கின் மைந்தன்... எனக்கு அது ஒரு பொருட்டல்ல” என்றான் பீமன்.

குந்தி தன் அறைக்குள் இருந்து “எந்த உடைமையையும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய சிறிய உடைமைகள் கூட நாம் எவரென்று காட்டிவிடும்” என்றாள். “ஒரு நாணயமளவுக்குக் கூட செல்வத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம். அஸ்தினபுரியின் நாணயங்களை மட்டும் தொடர்ந்து வந்து நம்மை பிடித்துக்கொள்ள முடியும். படைக்கலங்களைக்கூட செல்லும் வழியில் நாம் தேடிக்கொள்ளலாம். இங்குள்ள அனைத்து படைக்கலங்களிலும் அஸ்தினபுரியின் இலச்சினை உள்ளது. இங்கேயே பீமன் வாங்கிவந்த கம்பளியாடைகள் மட்டும் போதும்.”

பீமன் புன்னகையுடன் “இளையோனே, மறுபிறப்பு என்றால் அது ஆடையில்லாமலேயே நிகழவேண்டும்” என்றான். “முந்தைய முறை மீண்டும் பிறந்தபோது நான் கங்கையிலிருந்து எழுந்தோடி இலைகளை ஆடைகளாக அணிந்தேன். மானுட நாகரீகத்துக்கு மீண்டும் வந்துவிட்ட நிறைவை அடைந்தேன்.” .அர்ஜுனன் “முதல்முறை நீர், இம்முறை நெருப்பிலிருந்து பிறந்தெழப்போகிறீர்கள் மூத்தவரே” என்றான். “நான் காற்றின் மைந்தன். நீரில் அலையாவேன். நெருப்பில் தழலாவேன்...” என்றான் பீமன் நகைத்தபடி. “புராணங்களைப்போல இக்கட்டில் கைகொடுப்பவை வேறில்லை.”

ஓசையில்லாத காலடிகளுடன் அவர்கள் மெல்ல நடந்தனர். அரக்கில்லத்தில் துயில்மூச்சொலிகள் எழுந்தன. ”எத்தனை பேர்?” என்றான் தருமன். “புரோசனனும் அவன் உதவியாளனும். பின்னர் நமக்காக இறக்கப்போகும் அறுவர்” என்றான் பீமன். “அவர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்” என்றான் பீமன். “நாம் அஸ்தினபுரியில் உயிர்துறந்த அத்தனை குடிகளுக்கும் கடன்பட்டிருக்கிறோம் மூத்தவரே. அவர்கள் அறியாத சதுரங்கத்தில் வெட்டித்தள்ளப்படும் காய்கள் அல்லவா?” என்றான். “அவர்கள் ஓர் அரசின் பாதுகாப்பையும் நன்மைகளை அனுபவிக்கிறார்க்ள். ஆகவே அவர்களின் கடமை அது” என்றான் தருமன். “அப்படி நாம் சொல்கிறோம்” என்றபின் “இவர்களின் கடமை இது.... ஏமாற்றப்படுவது” என்றான்.

“உன்னுடன் நான் பேசவிரும்பவில்லை... உன் கசப்பு என்னை உப்புபோல அரித்து உள்ளூர அழிக்கிறது” என்றான் தருமன். குந்தி தன் அறையிலிருந்து வந்து “பீமா... உன் காலடியோசைதான் இம்மர இல்லத்தில் உரக்க ஒலிக்கிறது... மெல்ல காலெடுத்து வை” என்றாள். புரோசனனின் அறைக்குள் இரு குறட்டைகளும் உரையாடல் போல ஒலித்துக்கொண்டிருந்தன. அவர்கள் அதைக்கடந்து சென்றதும் பீமன் “ஒரு நல்ல சுரங்கத்தை அமைக்கத் தோன்றியதனால் இவனும் நம் நன்றிக்குரியவனே” என்றான்.

குந்தி சிறிய ஊன்நெய் விளக்கை ஏற்றிக்கொண்டாள். “புகையில்லாதிருக்கவேண்டும். ஆகவே குறைவான ஒளியே போதுமானது. சுரங்கத்திற்குள் நாம் மூச்சுத்திணறக்கூடும்” என்றாள். “இன்னொரு ஊன்நெய் கட்டியும் கையிலுள்ளது. சுரங்கம் அத்தனை தொலைவுதான் இருக்குமென எண்ணுகிறேன்” என்றான் பீமன். “அது எங்கு சென்று சேருமென்று ஒருமுறை போய்ப் பார்த்திருக்கலாம்” என்றான் தருமன். “மூத்தவரே, சுரங்கத்தின் கருங்கல் கதவு சுண்ணம்பூசப்பட்டு மரச்சுவருடன் கலக்கப்பட்டிருந்தது. அதை நான் எடுத்து நோக்கியிருந்தால் அந்த விரிசலே காட்டிக்கொடுத்திருக்கும்” என்றான் பீமன். அர்ஜுனன் புன்னகையுடன் “மறுபிறப்பில் எங்கு செல்வோம் என்று அறியாமலிருப்பதே அழகு” என்றான்.

சுரங்கத்தின் வாய் சுண்ணம்பூசப்பட்ட கல்லால் மூடப்பட்டிருந்தது. சுண்ணம்பூசப்பட்ட சுவரில் அதை அடையாளம் காணவே முடியவில்லை. பீமன் அதை நோக்கிச் சென்று அதன் கீழ்ப்பகுதியை காலால் ஓங்கி உதைத்தான். அது கோணலாகி கீழே உள்ளடங்கி மேலே வெளித்தள்ளியது. தசைகள் இறுகிப்புடைக்க அதைப்பிடித்து அசைத்து இழுத்து வெளியே எடுத்து தூக்கி அப்பால் வைத்தான். சிறிய படிகளுடன் கூடிய சுரங்கப்பாதை தெரிந்தது.. உள்ளே இருள் இருந்தது. “உள்ளே செல்லுங்கள்... நான் இதைக் கொளுத்திவிட்டு வருகிறேன்” என்றான் பீமன்.

அர்ஜுனன் “மூத்தவரே, இங்கு நெருப்பு எத்தனை விரைவாக எழும் என நாம் அறியோம். இல்லத்தின் நான்கு முனைகளையும் கொளுத்தாமல் இருந்தால் அவர்கள் தப்பிவிடக்கூடும். நான்கையும் கொளுத்திவிட்டு நீங்கள் இங்கு வருவதற்குள் நெருப்பு எழுந்து சூழ்ந்தது என்றால் அதில் அகப்பட்டுக்கொள்வீர்கள்” என்றான். “நீங்கள் உள்ளே செல்லுங்கள். நெருப்பை வைக்கும் கலையை நான் அறிவேன்”. நகுலனும் சகதேவனும் முதலில் செல்ல குந்தியும் தருமனும் தொடர்ந்து சுரங்கத்திற்குள் நுழைந்தனர். பீமன் குனிந்து தன் உடலை மிக ஒடுக்கி உள்ளே சென்றான். “மலைப்பாம்புக்கு ஏன் வளை இருப்பதில்லை என்று இப்போது புரிகிறது மூத்தவரே” என்றான் பீமன். “நான் நகைக்கும் நிலையில் இல்லை” என்றபடி உள்ளே மறைந்தான் தருமன் அந்தக்குகை ஒரு வாய் என அவர்களை விழுங்குவதாகத் தோன்றியது. .

அர்ஜுனன் தன்னுடன் சிறிய மூங்கில் வில் ஒன்றை எடுத்து வந்திருந்தான். நாணலால் ஆன ஏழு அம்புகளை தோளில் இருந்து எடுத்தான். அவற்றின் முனையில் அரக்குக்குமிழ் ஒட்டப்பட்டிருந்தது. அதை விளக்கில் பற்றவைத்து அங்கு நின்றவாறே தொடுத்தான். தீயுடன் பறந்து சென்ற அம்பு இல்லத்தின் சுவரில் முட்டிவிழுந்ததுமே பற்றிக்கொள்ளத் தொடங்கியது. அறைகளின் வாயில்கள் வழியாக குறி நோக்கி எய்த நான்கு அம்புகளால் அந்தக் கட்டடத்தின் நான்கு சுவர்முனைகளை பற்றவைத்துவிட்டு அர்ஜுனன் குகைக்குள் நுழைந்தான்.

அதற்குள் நெருப்பு பேருருவம்கொண்டு எழுந்துவிட்டது. பற்றிக்கொண்ட சுவர்கள் உடனே வெடித்து அரக்குக் குழம்பு வழிந்து பற்றிக்கொண்டது. சுவர்களே வாய்திறந்து அனல்குழம்பை உமிழ்வது போலத் தோன்றியது. வழிந்த அரக்கு நெருப்பாக மாறி பாய்ந்து இன்னொரு சுவரைப் பற்றிக்கொண்டது. விளையாடும் குரங்குக்கூட்டம் போல நெருப்பு கைகளை நீட்டி நீட்டி ஒவ்வொன்றையும் பற்றிக்கொண்டு தாவி ஏறுவதை அர்ஜுனன் கண்டான். செந்தழலால் ஆன திரைச்சீலைகள் படபடத்துப் பறந்தன. அனல் பறவைகள் உத்தரங்களில் இருந்து சிறகடித்து எழுந்து பிற உத்தரங்களில் சென்று அமர்ந்தன. தழல் எழுந்ததும் மேலே இருந்த மூங்கில்கள் வெடித்து நெய்யை சொட்டின. சொட்டு உதிரும்போதே நெருப்பாக ஆகி விழுந்த இடத்தில் தழல் அலையென பொங்கி எழுந்தது.

சுவர்களும் உத்தரங்களும் சட்டங்களும் தரையும் எல்லாம் உருகிக் குழைந்து மடிந்தன. அரக்குமாளிகை நீர்நிழல் போல நெளிந்தது. வெம்மையில் சிவந்து நெய்வாசனை எழுந்து நெருப்பு தொடாமலேயே அவை பற்றிக்கொண்டன. சுவர்கள் சினம் கொள்வது போலிருந்தது. பின் வெறியுடன் வெடித்து அனல் உமிழ்ந்தன. தீயின் ஒலி அத்தனை பெரியதென்று அர்ஜுனன் அப்போதுதான் உணர்ந்தான். தீ சிம்மம் போல கர்ஜனை செய்தது. இடியோசை போல நகைத்தது. புயல் நுழைந்த பனங்காடு போல இரைந்தது. அதற்குள் புரோசனனும் அவன் சேவகனும் அலறும் ஒலி எழுந்து மறைந்ததா இல்லை செவிமயக்கா என்ற ஐயம் எழுந்தது.

நெருப்பு நெருங்கி வருவதைக் கண்டபோதிலும் அவனால் வெளியேறமுடியவில்லை. விழிகளை அந்தத் தழல்கொந்தளிப்பை விட்டு விலக்க முடியாதவனாக மலைத்து நின்றிருந்தான். “இளையவனே அனல் வருகிறது... வா” என்றான் பீமன். மாபெரும் மலரிதழ்கள் போல தழல்கள் கூரையை அடைந்தன. கூரையின் பெரும் மரச்சட்டங்கள் அரக்குக் கட்டிகளாக மாறி உருகி எரிந்தபடி விழுந்து நெருப்பாக சிதறிப் பரவி வெடித்தன. சினத்துடன் “இளையவனே, உள்ளே அரக்க்குக்குழம்பு நுழைந்துவிம்... நான் இதை மூடவேண்டும்” என்றான் பீமன்.

தழல் ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்கொண்டது. இளநீல நிறமுள்ள பீடத்தின் மீது செந்நிறமாக ஏறி நின்று கரிய குழல் விரித்து சுழன்றாடியது. புகை குறைந்தபடியே வந்து பின்னர் அனல் வெறுங்காற்றில் நின்று நெளிந்தது. நெருப்பு நீராவதை அவன் கண்டான். பீமன் “விலகு” என அவனை தோளைப்பிடித்து இழுத்து பின்னால் தள்ளிவிட்டு கனத்த கற்கதவைத் தூக்கி சுரங்கவாசலை மூடினான். ஒளியைக் கண்ட கண்களுக்குள் இருள் நிறைந்து சுவர்போலாகியது. தோளைத் தொட்டு “நட” என்றான் பீமன்.

இடியொலியுடன் அரக்குமாளிகை கதவுக்கு அப்பால் விழுவதை அர்ஜுனன் கேட்டான். அவன் கருத்துக்குள் கண்ட நெருப்பு மேலும் பேருருவம் கொண்டிருந்தது. “வேள்வி!” என்றான். “என்ன?” என்றான் பீமன். “ஒரு வேள்வி... எரிந்தது மூன்று நெருப்புகளையும் இடையில் மைந்தர்களாக ஏற்றி வைத்திருக்கும் அன்னை.” பீமன் “பேசும் நேரமல்ல. வா” என்று முன்னால் சென்றான்.

உள்ளே சென்றபின்னரும் கண்களுக்குள் நெருப்பின் ஆடலே இருந்தது. கீழே உணவறையில் அந்த அறுவரும் எரிந்துகொண்டிருப்பதை ஒருகணம் எண்ணினான். ஆறு முகங்களும் தங்கள் முகங்களாகத் தெரிந்தன. எரியும் பீமனின் தருமனின் நகுல சகதேவர்களின் முகம். குந்தியின் முகம். அவன் கண்களை கொட்டி அந்தக் காட்சியை விலக்கினான். எரிவது அவர்களேதான். சதுரங்கத்தில் அவர்களுக்கு நிகராக வைக்கப்பட்ட காய்கள். அந்த இறப்பிலிருந்து எழவேண்டும். தழலை விலக்கி சிதையிலிருந்து மண்ணிலிறங்கி நடக்கவேண்டும். ஆனால் உடலெங்கும் அழல் பற்றி எரிந்துகொண்டேதான் இருக்கும். அதை அணைக்கவே முடியாது.

மூச்சுத்திணறுவதுபோல, உடம்பு வெம்மையில் பொசுங்குவது போல உணர்ந்தான். ஆனால் குகைக்குள் நீர்த்துளிகள் சொட்டும் குளிரே நிறைந்திருந்தது. இருண்ட குளிர். அதற்குள் பன்றிகள் உணவுண்பதுபோல அவர்களின் காலடிகள் சேற்றில் விழும் ஓசை. இருளுக்கு கண் பழகி வந்தது. நீண்டு சென்ற குகைப்பாதை உயிருடன் நெளிவதுபோல மெல்லிய ஒளியின் அசைவில் தோற்றமளித்தது.

சுரங்கத்தில் முழந்தாளிட்டே முன்னகர முடிந்தது. மாளிகையைக் கட்டிய புரோசனன் அவனே பிறர் அறியாமல் ஓரிரு உதவியாளர்களுடன் அதை வெட்டியிருக்கவேண்டும் என்று தெரிந்தது. சென்று சேரும் மறு எல்லையில் இருந்து தோண்டிக்கொண்டு வரப்பட்ட சுரங்கம் அது. மண்வெட்டியின் தடங்கள் எதிர் திசையை நோக்கியவையாக இருந்தன. இமயப்பகுதியின் மண் உறுதியற்றது என்பதனால் புரோசனன் மூங்கில்களை வளைத்து நட்டு தாங்கு கொடுத்திருந்தான்.

“இது சுரங்கம் தோண்டுவதற்கான பழைய முறை இளையவனே” என்றான் பீமன். மூங்கிலை வளைத்து அதன் மேல் மரப்பட்டைகளையோ மூங்கில்தட்டியையோ அமைத்து அந்தச்சட்டத்தை மண்ணில் பதிக்கவேண்டும். அதற்குள் உள்ள மண்ணை அள்ளி வெளியே எடுத்துக்கொட்டிக்கொண்டு அதை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கவேண்டும். அதன்பின் அடுத்த சட்டத்தை அதற்குள் பொருத்தி உள்ளே உள்ள மண்ணைத் தோண்டத் தொடங்கவேண்டும். மண் மூங்கில் வளைவுக்கு மேல் அமர்ந்திருக்கும்.”

அர்ஜுனன் மேலே இருந்த மூங்கிலைத் தட்டி நோக்கி “தாங்குமா?” என்றான். “வளைவாக இருப்பதனால் நாம் நினைப்பதை விட மும்மடங்கு எடைதாங்கும்... மேலும் மெல்ல இந்த வடிவத்தை மண் ஏற்றுக்கொள்ளும். வேர்கள் பின்னிவிட்டால் மூங்கில்வளைவில் மண்ணின் எடையே ஏறாது” என்றான் பீமன். மேலிருந்து நீர் ஊறி சொட்டிக்கொண்டிருந்ததனால் உள்ளே சேறு குழைந்தது. அதிலிருந்த கூழாங்கற்கள் உரசி முழங்கால்களின் தோல் உரிந்தது. அதில் நீர் பட்டு தீக்காயம் போல எரியத் தொடங்கியது.

முழங்காலால் நடந்து முன்னேறிய குந்தி மூச்சிரைக்க நின்றாள். “அன்னையே... கடினமாக உள்ளதா?” என்றான் தருமன். குந்தி “அரசியாக இருந்து பழகிவிட்டேன். மீண்டும் யமுனையை நீந்திக்கடந்த யாதவப்பெண்ணாக மாறவேண்டியிருக்கிறது” என்றாள். “கருவறைப்பாதை போலிருக்கிறது...” என்றான் தருமன். “முந்தைய பிறவியின் நினைவுகளெல்லாம் கருவறை விட்டு வெளிவரும் பாதையில்தான் ஒவ்வொன்றாக நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்.

“நெடுந்தூரம் ஆகிவிட்டதே” என்று நகுலன் சொன்னான். “இல்லை இளையவனே, நாம் இடர்படுவதனால் அந்த அகமயக்கு ஏற்படுகிறது... இன்னும் செல்லவேண்டும்” என்றான் பீமன். “அரக்கு மாளிகை எரிவதைக்கண்டு அத்தனை ஊர்மக்களும் ஓடிக்கூடுவார்கள். அவர்கள் பார்வைக்குப் படும்படி மேலே வர புரோசனன் திட்டமிட்டிருக்க மாட்டான். சுரங்கம் இன்னும் நெடுந்தொலைவுக்குச் செல்லும் என்றே எண்ணுகிறேன்.” விளக்கை ஏந்திய குந்தியின் கைகள் அலைபாய்ந்தன. “இளையவனே, நீ விளக்கை வாங்கிக்கொள்” என்றான் பீமன்.

குளிர்ந்த நீர் சொட்டிக்கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு வியர்வை வழிந்தது. இருளுக்குள் அவர்களின் முழங்கால்கள் சேற்றை மிதிப்பது குகையின் இருண்ட பாதையில் சென்று எங்கோ வளைவில் எதிரொலித்து திரும்பிவந்தது. அங்கிருந்து எவரோ அவர்களை நோக்கி பதுங்கி வருவதைப்போல கேட்டது. அவர்களின் மூச்சொலிகள் நாகங்களின் உரையாடல் போல ஒலித்தன. என்னென்ன கற்பனைகள் என அர்ஜுனன் புன்னகைத்துக்கொண்டான்.

குந்தி மூச்சிரைக்க அமர்ந்துகொண்டாள். “அன்னையே, என்ன செய்கிறது?” என்றான். “தலைசுற்றுகிறது” என்றாள் குந்தி. பீமன் “விளக்கு அவர்களின் அருகே இருக்கிறது. ஆகவே அவர்களால் போதிய பிராணனை அடையமுடியவில்லை” என்றான். விளக்கை கைமாற்றி பீமனிடம் கொடுத்தான் நகுலன். குந்தி குமட்டி வாயுமிழ்ந்தாள். “அது நல்லதுதான் அன்னையே... குடல் ஒழிந்திருப்பது உடலை மேலும் எளிதாக்கும்...” என்றான் பீமன்.

“கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்றான் தருமன். “விழுவது போல தோன்றுகிறது” என்று குந்தி சொன்னாள். “ஆம், ஆனால் சற்று நேரத்தில் அனைத்தையும் உங்கள் உடல் புரிந்துகொள்ளும்” என்றான் பீமன். குந்தி மூச்சிரைத்தாள். “இளையவனே, நம் தலைக்குமேல் உள்ளது மானுடர் வாழும் உலகம். நாம் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறோம்” என்றாள். “வீண் எண்ணங்கள் வேண்டாம் அன்னையே, எழுங்கள்” என்றான் தருமன்.

குந்தி மண்சுவரைப்பிடித்தபடி எழுந்துகொண்டாள். “மெல்ல நடந்துசெல்லுங்கள். செல்லும் தொலைவைப்பற்றி எண்ணவேண்டாம். வைக்கும் காலடிகளை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள். வழி திறக்கும்போது திறக்கட்டும்” என்றான் பீமன். சகதேவன் “மூத்தவரே, எங்காவது இந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகும்? நாம் புதைந்து போவோம் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அப்படி இடிந்து விழுந்திருந்தால் விளக்கு எரியாது” என்றான் பீமன்.

மூன்றுமுறை அமர்ந்து ஓய்வெடுத்தபின் குந்தி “இன்னும் நெடுந்தொலைவா?” என்றாள். “அன்னையே, புரோசனன் மலையின் சரிவுக்கு அப்பால் இருந்த தேவதாருக்காட்டுக்குள் இக்குகைப்பாதை மேலெழும்படி அமைத்திருப்பான் என்பது என் கணிப்பு. அப்படியென்றால் இது இனிமேல்தான் கீழிறங்கும். அதன்பின் சற்றுத்தொலைவில் மீண்டும் மேலேறிச்செல்லவேண்டும்” என்றான் பீமன். “நம் தலைக்குமேல் தேவதாருக்கள் நிற்கின்றனவா?” என்றான் நகுலன். “ஆம்... அவற்றின் ஆணிவேர்களைத் தவிர்த்துச்செல்வதற்காகவே இப்பாதை இத்தனை வளைவுகளுடன் இருக்கிறது” என்றான் பீமன்.

சுரங்கப்பாதை கீழிறங்கத் தொடங்கியது. மண்ணில் கால்பதிக்க மரப்பட்டைகளை பதித்திருந்தார்கள். அவற்றின்மேல் சேறு கரைந்து வழிந்தோடி இறங்கியது. "சுரங்கத்தின் மேல் கையை ஊன்றிக்கொண்டு இறங்கவேண்டாம். மூங்கில் நழுவக்கூடும்” என்றான் பீமன். கால்வழுக்கிய நகுலன் விழுந்து சென்றுகொண்டே அலறினான். “அஞ்சவேண்டாம், கீழே சேறுதான்” என்றான் பீமன். எழுந்து நின்ற நகுலன் “என் கையை கல் கிழித்துவிட்டது மூத்தவரே” என்றான்.

கீழே இறங்கியபோது இருபக்கமும் சுரங்கம் மேலெழ ஒரு படுகுழிக்குள் விழுந்து கிடக்கும் உணர்வு எழுந்தது. “பாதாளம் என்பது இதுதான்” என்றான் தருமன். “இந்தச் சுரங்கம் ஒரு நாகம்... நான்ம்இதன் உடலுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றான் நகுலன். “இச்சுரங்கமளவே உடலுள்ள ஒரு நாகம் எதிரே வந்தால் என்ன செய்வோம்?” என்றான் சகதேவன். நகுலன் “இந்தச் சுரங்கமே உண்மையில் ஒரு நாகத்தின் வளைதான்... நாமெல்லாம் அதற்குள் வழிதவறி வந்த எலிகள்” என்றான். தருமன் சினத்துடன் “பேசாமல் நடங்கள்... என்ன மூடப்பேச்சு இதெல்லாம்?” என்றான்.

மேலேறுவது அதுவரையிலான பயணத்தின் மிகக் கடினமான பகுதியாக இருந்தது. இருமுறை ஏறியபின் குந்தி நழுவி விழுந்தாள். பீமன் “நான் முன்னால் செல்கிறேன்” என்று சென்று ஏறி கைநீட்டி அவளை தூக்கிவிட்டான். மூங்கிலை சேற்றில் அறைந்து அதில் மரப்பலகைகளைக் கொடுத்து படி அமைத்திருந்தான் புரோசனன். “முடிவில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறோம்” என்றான் தருமன். “எனக்கு இது முடியாத கனவு என்று தோன்றுகிறது” என்று சகதேவன் சொன்னான். “முன்பெல்லாம் இதைப்போன்ற கனவுகள் வரும்போது நான் சிறுநீர் கழித்தபடி விழித்துக்கொள்வேன்.”

மேலேறிச்சென்ற ஒரு தருணத்தில் பீமன் “வந்துவிட்டோம்” என்றான். “எப்படித்தெரியும்?” என்றான் நகுலன். “கேள்” என்றான் பீமன். அர்ஜுனன் காற்றின் ஒலியைக்கேட்டுவிட்டான். கேட்டதுமே காற்று வந்து தொடுவதை உணரவும் முடிந்தது. அது ஒரு புறநிகழவாகக் கூடத் தோன்றவில்லை. ஓர் எண்ணம் போல, நினைவு போல வந்தது. “வெளிக்காற்றுதானா?” என்றான். “ஆம்... அது காட்டுக்குள் இருக்கும் சிறிய குடிலாகவே இருக்கும்.” தருமன் “திறந்திருக்கிறதா?” என்றான். “ஆம் திறந்துதானே வைக்கமுடியும்? கிளம்பும் இடம் மூடப்பட்டிருக்கிறதல்லவா?” என்றான்.

ஆனால் அது மேலெழும் வாயில் அல்ல என்பதை நெருங்கியதும் உணர்ந்தனர். மேலே திறந்திருக்கும்படி நடப்பட்ட ஒரு பெரிய மூங்கில்குழாய் அது. மேலிருந்து காற்று உள்ளே பீரிட்டு வந்துகொண்டிருந்தது. “எத்தனை ஆழமிருக்கும் மந்தா?” என்றான் தருமன். ஏமாற்றத்தை மறைக்க அவன் முயல்கிறான் என்று தெரிந்தது. “நல்ல ஆழமிருக்கும்... ஆகவேதான் மூங்கில் நடப்பட்டிருக்கிறது” என்றான் பீமன். "அத்துடன் இன்னும் பாதி தொலைவாவது எஞ்சியிருக்கும். ஆகவேதான் காற்றுக்கு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.”

ஆனால் அச்செய்தி பெரும் சோர்வு எதையும் அளிக்கவில்லை. பலவகையான அக ஓட்டங்கள் வழியாக சோர்வை எதிர்கொள்ளும் ,மனநிலையே உள்ளே இருந்தது. “இது முதல் மூங்கில்... இன்னும் இதைப்போல எத்தனை இருக்குமென்று தெரியவில்லை” என்றான் அர்ஜுனன். பீமன் நகைத்தபடி “நூற்றெட்டு மூங்கில்கள்கொண்டது ஒரு அக்ஷம் எனப்படுகிறது சுரங்கவியலில். அப்படி நூற்றெட்டு அக்ஷங்கள் செல்லமுடிந்தால் நாம் ஒரு மகாஅக்ஷத்தை அடைகிறோம்” என்றான். சிரித்தபடி நகுலன் “நூற்றெட்டு மகா அக்ஷங்கள் கொண்டது?” என்றான். குந்தி நகைத்து “பேசாமல் வரமாட்டீர்களா?” என்றாள்.

ஏமாற்றத்தை மறைக்க அகம் கொண்ட பாவனை அது என்றாலும் அந்த நகைப்பு அவர்களை விடுதலை செய்தது. அதுவரை இருந்த பதற்றமும் எரிச்சலும் கலந்த அகநிலை மாறி அவர்கள் சிரிக்கத் தொடங்கினர். “வெளியே சென்றால் நான் என்னை மூஷிக வம்சம் என்று சொல்லிக்கொள்வேன்” என்றான் நகுலன். “எலிகளைப்போல ஆற்றல் கொண்டவர்கள் இல்லை. ஐயமிருந்தால் யானை இதேபோல ஒரு வளையை அகழ்ந்து காட்டட்டுமே.” சகதேவன் “எலிகள் வளைகளில் இருந்து வளைகளை உருவாக்குகின்றன. நாமும் அதேபோல அகழ்ந்து ஒரு நகரத்தை இங்கே உருவாக்கலாம்” என்றான்.

“ஆம், மண்ணுக்கு அடியில் ஒரு நகரம். மூஷிகபுரி என்று அதற்குப்பெயர். அங்கே நாம் அரசர்கள். நாம் நாடாள்வது நம்மைத்தவிர எவருக்குமே தெரியாது” என்றான் சகதேவன். “இங்கே நாம் வெளிச்சத்திற்கு சில மின்மினிகளை வளர்க்கலாம்” என்றான் நகுலன். குந்தி “உணவுக்கு என்ன செய்வது?” என்றாள். “மேலே கிழங்குகளை நடவேண்டும். உள்ளிருந்தே அவற்றை கொய்து உண்ணலாம்” என்றான் சகதேவன். நகுலன் ‘ஒரு மூஷிகப்பெண்ணை மணந்தால் நம் குலம் ஒரே வருடத்தில் ஒரு பெரும்படையை அமைக்க முடியும்” குந்தி அவன் தலையைத் தட்டி சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அடுத்த மூங்கிலைப் பார்க்கையில் அவர்களை மேலும் சிரிப்பை நோக்கிக் கொண்டுசென்றது. “அக்ஷம்!” என்றான் நகுலன் சிரித்தபடி. பின்னர் அவர்கள் இயல்பாக பேசிக்கொள்ளத் தொடங்கினர். பீமன் அங்கிருந்து செல்லும் வழியைப்பற்றி சொன்னான். “நாம் வடக்கே இமயமலை நோக்கிச் சென்றால் குளிர்ந்த பகுதிகளையே அடைவோம். கீழிறங்கினால் அடிவாரத்துக் காடுகள் உள்ளன. நதிக்கரைகளில் சிறிய கிராமங்கள் உண்டு. அங்கே இப்போதுதான் மனிதர்கள் குடியேறத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் ஒரு ஊரைக்கூட அமைக்கலாம்.”

“அங்கே சென்றதும் நான் இருபது மனைவியரை மணக்கலாமென்றிருக்கிறேன். ஆளுக்கு இருபது மனைவியர் என்றால் நூறு வீடுகளை நாமே அமைக்க முடியும்” என்றான் நகுலன். “பேசாதே” என்றபின் குந்தி “நாம் விடிவதற்குள் அடர்காட்டுக்குள் சென்று விடவேண்டும் மந்தா” என்றாள். “சென்றுவிடலாம் அன்னையே” என்றான் பீமன்.

“மண்ணின் வழிகளெல்லாம் விண்ணில் உள்ளன என்றார் விதுரர்” என்றான் தருமன். “விண்மீன்களை நோக்கி திசைதேரும் கலையை நான் கற்றிருக்கலாம்.” பீமன் “எனக்குத்தெரியும்” என்றான். “எந்த நூலில் கற்றாய்?” என்றான் தருமன். “மூத்தவரே, விண்மீன்கள் நூலில் இல்லை, வானில் உள்ளன” என்றான் பீமன். நகுலன் உரக்க நகைத்தான். சகதேவன் அவனை தொட்டு அடக்கினான்.

அவர்கள் அப்பாதையை மறந்து உள்ளத்தை விலக்கிக் கொண்டதுமே உடலே அப்பயணத்தை நிகழ்த்தத் தொடங்கியது. அதற்குள் கற்றுக்கொண்டவை அதை வழிநடத்தின. அனிச்சையாக முழங்கால்களைத் தூக்கி வைத்து படிகளில் ஏறி வளைவுகளில் திரும்பி அவர்கள் சென்றனர். எந்த ஊருக்குச்செல்வது என்ற விவாதம் விரைவாக நடந்துகொண்டிருந்தபோது அப்பால் சுரங்கப்பாதை திறந்திருப்பது காற்று வழியாக தெரிந்தது. “இது வாயில்தான்” என்றான் பீமன். “காற்று உள்ளே பொழிந்துகொண்டிருக்கிறது.”

மேலும் சற்றுத்தொலைவு சென்றதும் “பொறுங்கள், நான் முன்னே செல்கிறேன்” என்றான் பீமன். “இப்பாதை குடிலுக்குள் திறக்கவில்லை. கிணற்றுக்குள் திறக்கிறது என்று எண்ணுகிறேன்.” அர்ஜுனன் அவன் ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று உடனே புரிந்துகொண்டான். ஆழமான நீருக்குள் கற்களோ காய்களோ உதிரும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் நெருங்கிச் சென்றனர். சுரங்கப்பாதை இருண்ட கிணறு ஒன்றுக்குள் சென்று முடிந்தது.

பீமன் அருகே சென்று எட்டிப்பார்த்தான். ”பாழுங்கிணறு” என்றான். “மிக ஆழமானது. கொடிகள் முளைத்து அடர்ந்திருக்கின்றன. மிக ஆழத்தில் நீர் தெரிகிறது. மேலே செல்லவும் நெடுதூரம் ஏறவேண்டும்.” அர்ஜுனன் அருகே வந்து “எப்படிச் செல்வது?” என்றான். “கயிறு கொண்டு வந்திருக்கவேண்டும்... சரி, நான் செல்கிறேன்” என்றான் பீமன். “மந்தா, வேண்டாம். உன் எடையை கிணற்றின் செடிகள் தாளாது” என்றான் தருமன். “குரங்குக்கு அதன் வழிகள் தெரியும் மூத்தவரே” என்றபடி பீமன் வெளியே சென்றான்.

வேர்களைப்பற்றியபடி அவன் தொற்றி இயல்பாக மேலே சென்றான். தலைக்குமேல் அவன் குரல் எதிரொலி சூழ கேட்டது. “அடர்காடு மூத்தவரே. கொடிகளால் நான் ஒரு வடம் செய்கிறேன்.” சற்றுநேரத்தில் ஒரு வடம் கீழிறங்கி வந்தது. அதில் தொங்கியபடி பீமன் “அன்னையே தங்களை நான் மேலே கொண்டுசெல்கிறேன்” என்றான். குந்தி கை நீட்ட அவள் இடையைப்பிடித்துத் தூக்கி தன் இடையிலிருந்த கொடியில் இறுகக் கட்டிக்கொண்டான். குந்தி அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள். அவன் மிக விரைவாக மேலே ஏறி அவளை இறக்கிவிட்டான். அதன்பின் அர்ஜுனன் மேலே வந்தான். பீமன் கீழே சென்று தருமனை மேலே தூக்கி வந்தான்.

நகுலனும் சகதேவனும் சிரித்துக்கொண்டே மேலே வந்தனர். நகுலன் “மூத்தவரே நான் ஒரு பெருங்குரங்குக்கு இளையவன்” என்றான். பீமன் நகைத்து அவன் தலையை தட்டினான். குந்தி திரும்பி நோக்கி “அதோ” என்றாள். அர்ஜுனன் “ஆம், அன்னையே அது நம் சிதை” என்றான். அப்பால் மலைச்சரிவில் அரக்குமாளிகை எரிவது ஒரு குங்குமத்தீற்றல் போலத் தெரிந்தது. குந்தி அதைநோக்கியபடி நின்றபின் பெருமூச்செறிந்தாள். தருமன் “அதைவிட்டு கண்ணெடுக்கத் தோன்றவில்லை இளையோனே.... நாம் அதை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று படுகிறது” என்றான்.

பீமன் வானை நோக்கியபின் “இது வடகிழக்கு... நாம் செல்லவேண்டிய திசை” என்றபின் “ஏழுமுனிவர்களும் என்னை நோக்கி புன்னகை புரிகிறார்கள்” என்றான். குந்தி மீண்டும் திரும்பி ஜதுகிரகத்தின் நெருப்பை நோக்கியபின் “செல்வோம்” என்றாள்.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 2

காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை மாற்றிக்கொண்டான். கூகையின் குரலில் காடு மெல்ல விம்மியது. ஈரக்காற்று ஒன்று கடந்து செல்ல, நீள்மூச்செறிந்தது. இருளுக்குள் நீர்த்துளிகள் சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பின்பு இலைகள் மேல் மீண்டும் மழை சொரியத்தொடங்கியது.

“அந்த இரண்டாவது முட்டை?” என்று சகதேவன் துயில் கனத்த குரலில் கேட்டான். “வினதை அதை மேலும் ஐநூறு வருடம் அடைகாத்தாள். அந்த ஐநூறு வருடமும் அவள் அகம் கொதித்துக்கொண்டே இருந்தமையால் முட்டை மிகச்சிறந்த வெம்மையுடன் இருந்தது. அதனுள் இருந்து தழல்போல ஒளிவிடும் சிறகுகளும் பொன்னிறமான கூரிய அலகும் நீலநிறவைரம் போல மின்னும் கண்களும் வெள்ளிபோல் மின்னும் கூர் உகிர்களும் கொண்ட பறவைக்குஞ்சு ஒன்று வெளியே வந்தது. அதை அவள் எடுத்து தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள்” என்றாள் குந்தி.

“அது கருடன்... நானறிவேன்” என்றான் சகதேவன் எழுந்து அமர்ந்து. “ஆம், அது கருடனேதான்” என்றாள் குந்தி. “அந்த மைந்தன் அன்னையே நீ அழுவதென்ன என்றான். நான் சிறைப்பட்டவள் மைந்தா என்றாள் வினதை. அன்னையே உரியகாலம் வரும்போது நான் உன்னை மீட்கும்பொருட்டு வருவேன் என்று சொல்லி வானிலெழுந்து மறைந்தான் அம்மைந்தன். முதல் மைந்தனின் தீச்சொல்லின் விளைவாக வினதை கத்ருவுக்கு அடிமையானாள்” என்றாள் குந்தி. “எவ்வாறு?” என்றான் நகுலன். சகதேவனும் எழுந்து குந்தியின் தோளை ஒட்டி அமர்ந்துகொண்டான். “கத்ருவும் அவளது ஆயிரம் மைந்தர்களும் சேர்ந்து செய்த சதியால் அவள் ஏமாற்றப்பட்டாள்” என்றாள் குந்தி.

குந்தி சொன்னாள். ஒருநாள் விண்ணில் இந்திரனின் குதிரையான உச்சைசிரவஸ் சென்றுகொண்டிருந்தது. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது பிறந்த தெய்வக்குதிரை அது. ஆயிரத்தெட்டு மங்கலங்களும் அமைந்தது. இளஞ்செந்நிறப் பிடரி மயிர் பறக்கும் ஏழு அழகிய தலைகளும் பால்வெண்ணிறமான உடலும் நுரைப்பெருக்கு போன்ற நீண்ட வாலும் பொன்னிறமான குளம்புகளும் கொண்டது. அதற்கு இந்திரன் விண்ணுலகின் ஒளிமிக்க வைரங்களால் கழுத்தணி அணிவித்திருந்தான். துருவனைப்போல் ஒளிவிடும் செவ்வைரத்தை நெற்றிச்சுட்டியாக பொருத்தியிருந்தான். அவ்வொளிகளை வெல்லும்படி அதன் விழிகள் நீல விண்மீன்கள் போல மின்னிக்கொண்டிருந்தன.

விண்ணில் சென்றுகொண்டிருந்த உச்சைசிரவஸைப்பார்க்க வினதையும் கத்ருவும் ஓடி வந்தனர். வினதையைப் பிடித்து நிறுத்திய கத்ரு “இளையவளே, அக்குதிரையின் வாலின் நிறமென்ன சொல்” என்றாள். “இதை அறியாதவர் எவர்? அதன் நிறம் வெண்மை” என்றாள் வினதை. “இல்லை. கருமை நிறம்” என்றாள் கத்ரு. வினதை அதை மறுத்தாள். “நீ சொல்வது உண்மை என்றால் நான் ஆயிரம் வருடம் உனக்கு அடிமையாகிறேன். இல்லையேல் நீ எனக்கு ஆயிரம் வருடம் அடிமையாகவேண்டும்” என்றாள் கத்ரு. வினதை அதை ஏற்றுக்கொண்டாள். நாளை வரும் உச்சைசிரவஸை பார்ப்போம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

கத்ரு தன் மைந்தர்களாகிய கருநாகங்களை அழைத்து “என் பந்தயத்தை நிறைவேற்றுவது உங்கள் கடமை” என்றாள். அவள் உள்ளத்தை அறிந்த ஆயிரம் கருநாகங்களும் பூமியின் எல்லையாகிய பூர்வசிருங்கம் என்னும் மலைமேல் ஏறிச்சென்று காத்திருந்தன. மறுநாள் கிழக்கே தோன்றிய உச்சைசிரவஸின் வால் அம்மலை மேல் உரசிச்சென்ற கணத்தில் அவை பாய்ந்து அதைக் கவ்விக்கொண்டு பறந்தன. அந்த வெண்ணிறக்குதிரையின் வால் கருமை நிறமாகத் தெரிந்தது.

உச்சைசிரவஸ் வானில் எழுந்து வருவதைப் பார்ப்பதற்காக தமக்கையும் தங்கையும் சூரியனின் முதற்கதிர் எழும் கிழக்குக் கடல் முனையில் சென்று நின்றனர். பூர்வசாகரம் என்னும் அந்தக்கடல் ஒவ்வொரு நாளும் காலையில் பொற்கடலாக ஆகும். அதன் அத்தனை மீன்களும் பொற்சிறகுகள் சூடி சூரியனைக் கண்டு எழுந்து பறந்து நீரில் மூழ்கி திளைக்கும். அதன் ஆழத்தில் வாழும் சிப்பிகள் மற்றும் சங்குகளின் ஓடுகள் பொன்னாக ஆகும். பொற்காலையில் உச்சைசிரவஸ் இடியோசையுடன் வானில் எழுந்தது. அதை ஏறிட்டு நோக்கிய வினதை திகைத்து கண்ணீர் விட்டாள். தன் மைந்தனின் தீச்சொல் வந்து சேர்ந்ததை உணர்ந்துகொண்டாள். கத்ரு நகைத்தபடி ஓடிவந்து தன் தங்கையின் கூந்தலைப்பிடித்துச் சுழற்றி இழுத்துச்சென்றாள். தன் அரண்மனைக்குக் கொண்டு சென்று “இனி ஆயிரம் வருடங்கள் நீ எனக்கு அடிமையாக இரு” என்றாள்.

ஆயிரம் மைந்தர்களைப்பெற்ற ஆணவத்தில் இருந்த கத்ரு வினதையை பலவாறாக அவமதித்தாள். அவள் மணிமுடியையும் சிம்மாசனத்தையும் வெண்குடையையும் பறித்து மரவுரி ஆடைகளை அணியக்கொடுத்தாள். அவள் பகல் முழுக்க தனக்குப் பணிவிடைசெய்யவேண்டும் என்றும் இரவு துயிலாமல் விழித்திருந்து மறுநாளைக்கான உணவைத் தேடிக்கொண்டுவரவேண்டும் என்றும் ஆணையிட்டாள். ஒவ்வொரு கணமும் கண்ணீர் வடித்தபடி கத்ருவின் அடிமையாக வினதை ஆயிரம் வருடம் வாழ்ந்தாள்.

விண்ணளக்கும் பறவைவடிவம் கொண்டிருந்த கருடன் ஐந்து திறன்கள் கொண்டவராக இருந்தார். அவரது சித்தம் மிகக்கூரியது. விண்ணிலும் மண்ணிலுமுள்ள ஞானங்கள் அனைத்தையும் அவர் பிறப்பிலேயே அறிந்திருந்தார். அவரது கூர் உகிர்கள் நிகரற்ற வல்லமை கொண்டிருந்தன. அவரால் மலைகளை கூழாங்கற்களெனத் தூக்கி விளையாட முடிந்தது. அவரது கண்கள் துருவ விண்மீனைப்போல நிலையான ஒளிகொண்டவை. வானில் பறந்தபடி மண்ணில் ஊரும் ஓர் எறும்பின் கண்களை அவரால் பார்க்க முடியும் அவரது சிறகுகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் நிகரானவை. பேரழகு கொண்டவை.

அவரது நிறம் அந்திவானின் செம்மஞ்சள் முடிவிலி வரை எழுந்ததுபோலிருந்தது. அவர் விண்ணில் சிறகடித்துச் சுழன்றபோது இன்னொரு ஆதித்யன் எழுந்தது போலிருந்தார். தேவர்களும் அசுரர்களும் வணங்கும் பேரெழில் கொண்டிருந்தார். அவரை கசியப பிரஜாபதியின் மிக உயர்ந்த ஓர் எண்ணமே தோற்றம் கொண்டு வந்தது என்றனர் முனிவர். அவர் சிறகுகள் காற்றையும் ஒளியையும் வானையும் துழாவி விளையாடின. அவரது சித்தம் விண்ணளந்தோன் பாதங்களில் எப்போதும் நிலைகொண்டிருந்தது.

அவர் அன்னையான வினதை எந்நேரமும் தன் மைந்தனின் தோற்றத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தாள். ஆகவே அடிமைவாழ்க்கையிலும் அவள் சோர்வுறவில்லை. அவள் கண்களின் ஒளி குறையவில்லை. மைந்தனை எண்ணிய அகஎழுச்சி உடலில் வெளிப்பட்டதனால் அவள் கத்ருவை விட அழகும் நிமிர்வும் கொண்டு விண்ணையும் மண்ணையும் ஆளும் சக்ரவர்த்தினி போலிருந்தாள். அதைக்கண்டு கத்ரு பொறாமையால் வெம்பினாள். அவளை மேலும் மேலும் வதைத்து தன் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டாள்.

ஒருநாள் கத்ருவின் நாகமைந்தர்கள் தங்கள் அன்னையிடம் வந்து பணிந்து “நாங்கள் சூரியனை வெல்லவேண்டுமென விழைகிறோம் அன்னையே” என்றனர். “எங்கள் பாதாள உலகில் இருளே நிறைந்துள்ளது... சூரியனை கட்டி இழுத்துக்கொண்டுசென்று அங்கே சிறைவைக்க விரும்புகிறோம்.” கத்ரு “விண்ணளக்கும் சூரியனை நோக்கிச் செல்வது உங்களால் இயலாதே” என்றாள். “உன் இளையவள் மைந்தன் சிறகுடையவன். அவனிடம் எங்களை அங்கே கொண்டு செல்லச்சொல். நாங்கள் கதிரவனை சுற்றி இழுத்து பாதாளத்திற்கு கொண்டுசெல்வோம்” என்றனர்.

கத்ரு வினதையை அழைத்து “உன் மைந்தனை அழைத்து என் புதல்வர்களைச் சுமந்து சூரியனை நோக்கிச் செல்லும்படி ஆணையிடு. நீ என் அடிமையாதலால் உன் மைந்தர்களும் என் அடிமைகளே” என்றாள். வினதை கண்மூடி ஊழ்கத்திலாழ்ந்து தன் மைந்தனை அழைத்தாள். அந்தியே பறவை வடிவில் வந்திறங்கியதுபோல கருடன் அவளருகே வந்திறங்கினார். அவள் தன் தமக்கையின் ஆணையை அவளிடம் சொன்னாள். “அவ்வாறே செய்கிறேன்” என்றார் கருடன்.

கருடன் ஆயிரம் பெருநாகங்களை தன் உகிர்களால் கவ்விக்கொண்டு சூரியனை நோக்கி பறக்கத் தொடங்கினார். மேலே எழும்தோறும் அவர்கள் வெம்மை தாளாமல் குரலெடுத்து அழத்தொடங்கினர். கருடன் சூரியனின் ஒளியால் கவரப்பட்டு அக்குரல்களைக் கேட்காமல் மேலும் மேலும் சென்றுகொண்டே இருந்தார். அவரது சிறகுகள் பொன்னொளி கொண்டு மேலும் ஆற்றல் பெற்றன. கருநாகங்களின் தோல் வெந்து கொழுப்பு உருகி வழியத் தொடங்கியது. அவை நெளிந்து தவித்து அன்னையை அழைத்துக் கதறின.

தன் மைந்தரின் கதறலை கத்ரு அன்னையின் அகத்தால் அறிந்தாள். கண்களை மூடிக்கொண்டு இந்திரனை நோக்கி இறைஞ்சினாள். “இந்திரனே, இப்புவியின் அனைத்து மாதரின் ஆழங்களையும் அறிந்தவன் நீ ஒருவனே. நான் கற்பனையிலும் கற்பு பிழைக்காதவள் என்றால் என் மைந்தர்களை காத்தருள்க!” என்றாள். இந்திரன் அச்சொல்லுக்கு அடிபணிந்தான். வானை அவனுடைய கருமேகங்கள் மூடி நாகங்களுக்கு குடையாக மாறின. விண்மூடி விரிந்த பெருமழையில் நாகங்கள் நனைந்து வெம்மையழிந்தன.

இந்திரனின் வஜ்ராயுதம் எழுப்பிய சுழல்காற்றால் கருடனின் உகிர்களில் இருந்து நாகங்கள் உதிர்ந்தன. விண்ணில் உருவான பெருவெள்ளப்பெருக்கு அவர்களை அள்ளி ரமணீயகம் என்னும் தீவுக்கு கொண்டுசென்றது. அங்கே நாகங்கள் வாழ்வதற்கான பல்லாயிரம் பெரும் புற்றுகளும் அவை உண்பதற்கான பறவைமுட்டைகளும் இருந்தன. பாதாளத்திற்கு இறங்கிச்செல்லும் படிக்கட்டுகள் கொண்ட பிலங்களும் இருந்தன. நாகங்கள் அங்கே சென்று மகிழ்ந்து அமைந்தன

கருடன் வினதையிடம் “அன்னையே, நான் விண்ணளக்கும் சிறகுடையோன். பறவைக்குலத்துக்கு அரசன். மண்ணிழையும் பாம்புகளுக்கு ஏன் நான் பணிவிடை செய்யவேண்டும்?” என்று கேட்டார். வினதை “அது உன் அன்னையின் மூடத்தனத்தால் விளைந்தது. ஆனால் அன்னையை அவளிருக்கும் சிறையில் இருந்து மீட்டு அரசபீடத்தில் அமரச்செய்யும் கடமை உனக்குண்டு” என்றாள். “நான் என்னசெய்யவேண்டும்?” என்று கருடன் கேட்டார். “அதை நாகங்களிடம் கேள். அவர்களும் அவர்களின் அன்னையும் நினைத்தால் மட்டுமே என்னை விடுவிக்க முடியும்” என்றாள் வினதை.

கருடன் நாகங்களிடம் சென்று பணிந்து “உடன்பிறந்தவர்களே, நான் என் அன்னையை உங்கள் ஏவல்பணியில் இருந்து மீட்க விழைகிறேன். அவளை மீண்டும் அரசியாக ஆக்க எண்ணுகிறேன், அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார். “எங்கள் அன்னையிடம் அதைக்கேளுங்கள்” என்றன நாகங்கள். கருடன் கத்ருவிடம் சென்று பணிந்து “அன்னையே, என் அன்னையை நீங்கள் விடுவிக்க நான் என்ன செய்யவேண்டும்?” என்றார்.

கத்ரு கருடனின் ஆற்றலை அறிந்தவளாகையால் எப்போதுவேண்டுமானாலும் அவரால் தன் மைந்தர்களுக்கு இடர் நிகழும் என அஞ்சிக்கொண்டிருந்தாள். ஆகவே அவள் நெடுநேரம் சிந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தாள் “விண்ணவரும் அசுரரும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமுதை எடுத்தார்கள் என்றும் அது இந்திரனின் தோட்டமாகிய நந்தனத்தில் உள்ளது என்றும் அறிந்தேன். அதை நீ கொண்டுவந்து என் மைந்தருக்கு அளிக்கவேண்டும். அதை உண்டு அவர்கள் இறவாவரம் பெற்றவர்களாக ஆகவேண்டும். அதன்பின் உன் அன்னையை விடுவிக்கிறேன்” என்றாள். “அதுவே செய்கிறேன்” என்றார் கருடன்.

கருடன் தனியாக விண்ணை வெல்லமுடியாதென்பதை அறிந்தார். அதற்கு நாகங்களின் படை ஒன்றை அமைத்தாகவேண்டும். நாகங்களிடம் சென்று “உடன்பிறந்தவர்களே, நாம் இணைந்து விண்ணை வெல்வோம். வெற்றியை பகிர்ந்துகொள்வோம். உங்களுக்கு அழிவின்மையின் அமுதும் எனக்கு என் அன்னையின் விடுதலையும் கிடைக்கும்” என்றார். கருடனின் ஆற்றலை நாகங்கள் அஞ்சிக்கொண்டிருந்தன. “நாம் அழிவின்மையை அடைந்தால் அதன்பின் இப்பறவையை அஞ்சவேண்டியதில்லை. இவனை நம் ஆற்றலால் வெல்லமுடியும். அழிவின்மையை அடைந்தபின் இவனுடன் போர் புரிந்து இவன் அன்னையுடன் இவனையும் அடிமைகொள்வோம்” என்றது மூத்த கருநாகம். ஆயிரம் தம்பியரும் அதை ஏற்று ஆரவாரம் செய்தனர்.

கருடன் தன் காலிலும் சிறகுகளிலும் நாகங்களை ஏற்றிக்கொண்டு பறந்து விண்ணுலகை அடைந்தார். அவர்களை எதிர்த்து பெருகிவந்த தேவர்களை நோக்கி நாகங்களையே அம்புகளாக எய்தார். அவை பறந்துசென்று தேவர்களைத் தீண்டி மயக்கமுறச் செய்தன. எப்போது முற்றிலும் எதிரிகளாக இருப்பவர்கள் அகமிணைந்து ஒன்றாகிறார்களோ அப்போது அவர்களின் ஆற்றல் இருமடங்காகிறது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி இணையான ஆற்றலை அடைந்தவர்களாக இருப்பார்கள். இருசாராரின் ஆற்றலும் இருதிசையில் விலகிச்சென்று வளர்ச்சிகொண்டதாகவும் ஒன்றை ஒன்று நிறைவடையச்செய்வதாகவும் இருக்கும். ஆகவே அது முழுமையான பேராற்றலாகி எதிரிகளை வெல்லும். கருடனும் நாகங்களும் இணைந்தபோது தேவர்களால் அந்த ஆற்றலை வெல்ல முடியவில்லை.

போர் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே கருடன் இந்திரனின் நந்தனம் என்னும் குறுங்காட்டுக்குள் புகுந்து அங்கே அமுதகலசம் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தை அடைந்தார். அதன் வாயிலில் திவாகரம் என்னும் இயந்திரம் தேவர்களால் நிறுவப்பட்டிருந்தது. மிகக்கூரிய முந்நூற்று அறுபத்தாறு இரும்புக் கத்திகளால் ஆன அது இந்திரனால் அன்றி எவராலும் நிறுத்தப்பட முடியாதது. அமுதகலசத்தின் மேல் அதன் கத்திகளின் நிழல் ஒவ்வொரு கணமும் கடந்து சென்றபடியே இருக்கும். ஊடே செல்லும் எவரையும் துணிக்கக் கூடியது. அதற்கு அப்பால் இமையாத விழிகளும் மலைகளையும் எரியச்செய்யும் அனல் நஞ்சும் கொண்ட விஸ்மிருதி, மிருதி என்னும் இரு நாகங்கள் காவலிருந்தன.

கருடன் அந்த இரு நாகங்களையும் நோக்கி “தமக்கையும் தங்கையுமான உங்கள் இருவரையும் நான் அறிவேன். இளையோளாகிய விஸ்மிருதி மறதியை உருவாக்குபவள். மூத்தவள் மிருதி இறப்பை அளிப்பவள். உங்களில் எவள் ஆற்றல் மிக்கவளோ அவளிடம் முதலில் மோதலாமென நினைக்கிறேன். ஆனால் என்னால் முடிவெடுக்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்” என்றார். மிருதி “இதிலென்ன ஐயம்? நானே வல்லமை வாய்ந்தவள். எதையும் எஞ்சவிடாமல் அழிப்பவள்” என்றாள். இளையோள் “இல்லை, நானே வல்லமை மிக்கவள். இறந்தவர்கள் தங்கள் வினைப்பயனை அடைந்து விண்ணுலகு செல்லமுடியும். நான் அவர்களை வாழும் சடலங்களாக ஆக்குகிறேன்” என்றாள். மூத்தவள் சீறி இளையோளைக் கொத்தினாள். இளையோளும் திரும்பி மூத்தவளை தீண்டினாள்.

இளையோள் அக்கணமே இறந்தாள். மூத்தவளோ தன் நினைவை இழந்து தீண்டுவதற்கும் ஆற்றலற்றவள் ஆனாள். கருடன் அந்த இயந்திரத்தை அணுகி கைதொழுது நின்று உலகளந்த விண்ணவனை எண்ணினார். அவரது ஆண்வம் கடுகளவாக சிறுத்தது. அவர் உடல் அதைவிடச் சிறியதாகியது. அந்த வாள்கள் தொடாமல் அவர் உள்ளே சென்று அமுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அதை தன் உகிர்களில் ஏந்தியபடி பறந்து ரமணீயகத் தீவை நோக்கி பறந்தார்.

அவர் அமுதுடன் செல்வதை வைகுண்டத்தில் பெருமாளின் அவையில் அமர்ந்திருந்த இந்திரன் அறிந்தான். அவன் தன் பொன்னிறமான வியோமயான விமானத்தில் ஏறி மின்னல்களை தெறிக்கச்செய்யும் வஜ்ராயுதத்துடன் வானில் எழுந்தான். “நில்...நில்” என்று கூவிக்கொண்டு கருடனை மறித்தான். கருடன் பெருமாளை எண்ணி கைகூப்பியபோது அவர் பக்தி பேருருவம் கொண்டது. பெருகிப்பெருகி விண்நிறைக்கும் மேகவிரிவாக ஆனார். இந்திரனின் வஜ்ராயுதத்தின் மின்னல்கள் அவரைச் சூழ்ந்தாலும் அவரை அவை தீண்டவில்லை.

“இந்திரனே, நீ தேவர்களுக்கு அரசன். உன்னை நான் அவமதிக்க விழையவில்லை. நீ தாக்கியதனால் என் ஒரு இறகு உதிர நான் ஒப்புகிறேன்” என்றார் கருடன். அந்த இறகு மண்ணில் விழுந்து செந்நிறமான கருடபக்‌ஷம் என்னும் மலைத்தொடராக அமைந்தது. இந்திரன் “அது தேவர் ஈட்டிய அமுது. அதை பிறர் உண்ணலாகாது. தீய எண்ணமுடையோர் அதை உண்டால் அவர்களை அழிக்கமுடியாது. அதை திருப்பிக்கொடு” என்றான். “இந்திரனே, இது தேவர்களுக்குரியது என்பதனால் இதை நானும் உண்ணவில்லை. ஆனால் என் அன்னையை விடுவிக்க இதை நான் கொண்டுசென்றேயாகவேண்டும். என் பிழையை பொறுத்தருள்க” என்றார்.

“அவ்வண்ணமென்றால் இந்த அமுதை நாகங்களுக்குக் கொடுத்து உன் அன்னையை மீட்டுக்கொள். அதை அவர்கள் உண்பதற்குள் நான் அதை மீட்டுக்கொள்ள வழிசெய்” என்றான் இந்திரன்.. “இதை நான் ரமணீயகத்தில் தர்ப்பையால் மூடி வைப்பேன். அவர்கள் இதைத் தேடும்போது நீ எடுத்துக்கொண்டு செல்” என்றார் கருடன். இந்திரன் அதற்கு ஒப்பினான். கருடன் கத்ருவிடம் வந்து விண்ணுலகை வென்று அமுதை கொண்டு வந்திருப்பதாகவும் தன் அன்னையை விடுவிக்கும்படியும் சொன்னார். கத்ரு அகம் மகிழ்ந்து வினதையை விடுவித்தாள்.

அமுதத்தை தர்ப்பையில் மூடிவைத்தபின் நாகங்களிடம் அதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார் கருடன். நாகங்கள் முண்டியடித்து அதைத் தேடின. அதைக் கண்டுகொண்டதும் அவை ஒரேசமயம் அதை கவ்வமுயன்றன. கலசம் கவிழ்ந்து அமுதம் தர்ப்பையில் சிந்தியது. அக்கணம் விண்ணிலிருந்து ஒரு வெண்பருந்தாகப் பறந்திறங்கிய இந்திரன் அமுதகலசத்தை கவ்விக்கொண்டு பறந்து விண்ணிலேறி மறைந்தான். நாகங்கள் சிந்திய அமுதத்தை நாவால் நக்கின. தர்ப்பையின் கூர்மையால் அவற்றின் நாக்குகள் இரண்டாகக் கிழிந்தன.

அமுதை உண்ணமுடியாத நாகங்கள் அழுது புலம்பின. தங்களை ஏமாற்றிய இந்திரனிடமே முறையிட்டன. இந்திரன் தோன்றி “நாகங்களே, அமுதத்தின் முதல்துளிகளை உண்ட உங்களில் சிலர் அழிவின்மையை அடைவீர்கள். அமுதம் பட்ட தர்ப்பையை நக்கிய எஞ்சியவர்கள் இறப்பை அடைந்தாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் மூலம் அழிவின்மை கொள்வார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு பல்லாயிரமாகப் பெரும் வரத்தை பெற்றிருக்கிறார்கள்” என்றான். நாகங்கள் அதில் மகிழ்ந்து நிறைவுற்றன.

“அவ்வாறாக கருடன் தன் அன்னையை மீண்டும் விண்ணுலகின் அரியணையில் அமர்த்தினார். அதன்பின் அவர் வைகுண்டம் சென்று உலகளந்தோனின் ஊர்தியாக ஆனார். அவரது சிறகுகளால் உலகம் புரக்கப்படுகிறது” என்றாள் குந்தி. கதைமுடியும்போது எழும் நீண்ட பெருமூச்சுடன் சகதேவன் திரும்பிப்படுத்தான். நகுலன் “அன்னையே, அதன்பின்னர் கத்ருவுக்கும் வினதைக்கும் பூசலே நிகழவில்லையா?” என்றான். “நிகழ்ந்திருக்கும். அது வேறு கதை... இந்தக் கதையில் இல்லை” என்றாள் குந்தி.

இளையவர் இருவரும் விரைவிலேயே துயின்றுவிட்டனர். பின்னர் தருமனின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. அர்ஜுனன் மழையை கேட்டுக்கொண்டே கிடந்தான். பீமன் ஒருமுறை புரண்டு மூச்செறிந்த பின் “அன்னையே, நான் ஒன்று கேட்கலாமா?” என்றான். குந்தி “ம்” என்றாள். “உங்களை நாங்கள் அரியணை ஏற்றுவோம் என்று உறுதிகொள்ளுங்கள். ஆனால் அதனால் நீங்கள் நிறைவடைவீர்கள் என்பது உறுதியா? ஏனென்றால் நாங்கள் ஐவருமே அதன் பொருட்டு எஞ்சிய வாழ்நாளை செலவிட வேண்டும்” என்றான்.

“எவரும் தன் அகம் தேடும் நிறைவைத்தான் தேடிச்சென்றாகவேண்டும். அங்கே சென்றபின் அந்நிறைவு நீடிக்குமா என செல்வதற்கு முன் அறியமுடியாது” என்றாள் குந்தி. “வாழ்க்கையின் இன்பம் என்பதே அப்படி சென்றுகொண்டிருப்பதே. அதன்பொருட்டு கணமும் சலிக்காமல் செயலாற்றுவதே, அச்செயலுக்காக அனைத்து ஆற்றல்களையும் குவித்து ஏவப்பட்ட அம்பாக ஆவதே கர்மயோகம் எனப்படுகிறது. அது நம்முள் உள்ள ரஜோ குணத்தை மேலெழுப்புகிறது. மாங்கனியின் புளிப்பு கனிந்து இனிப்பாக ஆவது போல ரஜோகுணம் கர்மயோகத்தால் கனிந்து சத்வகுணமாகும். அதுவே ஷத்ரியனுக்குரிய முழுமை என்பது. தன் கடமையை கர்மயோகமாக செய்யும் ஷத்ரியன் ராஜரிஷியாகிறான். மிதிலையின் ஜனகரைப்போல.”

“ஷத்ரியன் கர்மயோகத்தை துறக்கலாம். அப்படி துறப்பவர்கள் மேலும் முன்னகர்ந்து ஞானயோகம் நோக்கியே செல்லமுடியும். ஞானத்தை கருவியாகக் கொண்டு அங்கிருந்து விபூதியோகம் நோக்கி செல்லவேண்டும். அங்கே ஜீவன்முக்தராகி நிறைவடையவேண்டும். அதுவே தொல்நூல்கள் வகுத்துள்ள பாதை. கர்மத்தை யோகமாக ஆக்காமல் இயற்கை அளிக்கும் எளீய வாழ்க்கைச்சுழலில் சிக்கிக்கொள்பவன் பாமரன். அவன் தனக்களிக்கப்பட்ட அக ஆற்றலை வீணடிக்கிறான். ஒரு ஷத்ரியன் அதை தேர்வுசெய்வான் என்றால் அவன் தெய்வங்களுக்கு உகக்காதவன் என்றே பொருள்” என்றாள் குந்தி.

“அன்னையே, இந்தக்காட்டில் நாம் இனிய வாழ்க்கை ஒன்றை அமைக்க முடியும். நமக்குத் தேவையான அனைத்தும் இங்குள்ளன. இனியவானம், இனிய நீர், இனிய காற்று, இனிய தீ, இனிய மண். அவை அளிக்கும் தூய எண்ணங்கள்... இங்கே ஓர் நிறைவான வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள முடியும்” என்றான் பீமன். “வேறு எந்த இடத்தைவிடவும் நான் இங்கே நிறைவுடன் இருப்பேன் என நினைக்கிறேன். அஸ்தினபுரியில் நான் அடையும் நிறைவின்மை இக்காட்டில் நுழைந்ததுமே அழிந்தது.”

“இருக்கலாம். ஆனால் அதில் கர்மயோகம் இல்லை. ஆகவே அது தமோகுணம் நிறைந்த வீண் வாழ்க்கையே” என்றாள் குந்தி. “நீ காட்டை விரும்புகிறாய் என்றால் காமகுரோதமோகம் என விரிந்துள்ள ஆணவத்தை முழுமையாக அழித்து இங்கே ஒரு ஞானயோகியாக அமரமுடியுமா என்று பார்!” பீமன் ஒன்றும் சொல்லவில்லை. குந்தி “உன்னால் முடியாது. உனக்குள் உள்ள நஞ்சு அப்படி வாழ உன்னை விடாது.” என்றாள். பீமன் சினத்துடன் சரிந்து “ஆம், என்னுள் நஞ்சு உள்ளது. ஆனால் அதுவல்ல நான்” என்றான்.

“அதுதான் உன் சாரம். நாகம் நஞ்சாலேயே நாகமாகிறது. இல்லையேல் அது புழுதான்” என்றாள் குந்தி “நீ இங்கே அமைதியை உணர்வது அஸ்தினபுரி மீது கொண்ட வெறுப்பாலும் விலகலாலும்தான். இங்கிருந்தால் மெல்லமெல்ல நீ அஸ்தினபுரியை மறப்பாய். மறந்ததுமே இங்கும் அமைதியிழந்தவனாக ஆவாய். நிறைவுள்ள வாழ்க்கை என்பது எதற்கு எதிராகவும் அடையப்படுவது அல்ல. இங்கே இந்தச் செடிகள் முளைப்பதுபோல நீ எழுந்தால் அது உனக்கு நிறைவளிக்கும். ஆனால் நீ அங்கே என் வயிற்றில் அரசமைந்தனாக பிறந்துவிட்டாய்.”

“இனியும்கூட நான் இங்கே ஒரு வாழ்க்கையை அமைக்க என் அனைத்து அகஆற்றலையும் செலவிட முடியும். இக்காட்டினூடாக நான் இயற்கையையும் பிரம்மத்தையும் அறியமுடியும். இன்று காலை இக்காட்டுக்குள் நுழைந்தபோது அதை நான் அறிந்தேன். இங்கு நான் வேரோட முடியும்” என்றான் பீமன். “நகரில் பிறந்து வளர்ந்தாலும் யானை காட்டில் விடப்பட்டால் சின்னாட்களிலேயே காட்டுவிலங்காக ஆகிவிடுவதை கண்டிருக்கிறேன்.”

“ஆகக்கூடும்... ஏனென்றால் நீ மாருதன். உன்னை இக்குரங்குகள் ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுடன் நீ வாழவும்கூடும். ஆனால் அது ஒருபோதும் மானுடனுக்குரிய நிறைவாழ்க்கை அல்ல. விலங்குகள் தமோகுணம் நிறைந்தவை. அவற்றுடன் வாழ்பவன் தமோகுணம் மட்டும் கொண்டவனாவான். விளக்குகள் ஒவ்வொன்றாக அணையும் மாளிகை போல அவனுக்குள் ஞானமும் ஞானத்தைக் கையாளும் புலன்களும் அணையும்... அது ஆன்மாவை இருளறைக்குள் சிறையிடுவதே. சிறையுண்ட ஆன்மா உண்மையான உவகையை அடைவதில்லை. ஏனென்றால் விடுதலையையும் மகிழ்ச்சியையும் ஆன்மா ஒன்றெனவே கருதுகிறது.”

பீமன் சிலகணங்கள்  சொல்லற்று படுத்திருந்தான். அர்ஜுனன் இருளுக்குள் புன்னகைத்தான். குந்தியிடம் பீமன் அச்சொற்களால் உரையாடியிருக்கலாகாது என்று நினைத்துக்கொண்டான். “நீங்கள் தேடும் நிறைவு மட்டும் இன்னொன்றுக்கான எதிர்வினை அல்லவா?” என்று பீமன் கேட்கவேண்டும் என அர்ஜுனன் நினைத்தான். ஆனால் பீமன் “அன்னையே, இக்குரங்குகளின் வாழ்க்கை வீணா?” என்றான். “ஆம், அவை எந்த அறத்தையும் மண்ணில் நிலைநாட்டவில்லை. வெறுமனே காலத்தில் மிதக்கின்றன” என்றாள் குந்தி. “அறத்தின் பொருட்டு நிகழாத வாழ்க்கை வீணே.”

பீமன் ஒன்றும் சொல்லவில்லை. நெடுநேரம் மழையின் ஒலியே கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் குந்தியின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. பீமன் அசைவற்றுக்கிடந்தாலும் அவன் துயிலவில்லை என்பது அர்ஜுனனுக்குத் தெரிந்தது. பெருமூச்சுடன் பீமன் “எந்த அறம் அன்னையே?” என முனகினான். குந்தி அதைக் கேட்கவில்லை. அவள் மூச்சொலியை செவிகூர்ந்த பீமன் நீள்மூச்சுடன் “அறம் என்றால் என்ன?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். அர்ஜுனன் பீமனின் உடலில் தசைகள் தளரும் ஒலியை இருளுக்குள் கேட்டுக்கொண்டு கண்மூடி படுத்திருந்தான்.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 3

அதிகாலையிலேயே இரண்டு கருங்குரங்குகள் வந்து பீமனை எழுப்பின. குடிலுக்கு நேர்கீழே இருந்த இரு கிளைகளில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து வாயைக்குவித்து அவை குரலெழுப்பின. பீமன் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மெல்லிய கரிநூல்களை தட்டியபடி அவற்றைப் பார்த்தான். அர்ஜுனன் புரண்டுபடுத்து “என்ன சொல்கிறார்கள்?” என்றான். பீமன் குடிலுக்கு வெளியே சென்று கிளைகளில் கால்வைத்து நின்று “தெரியவில்லை” என்றபின் பக்கவாட்டில் நோக்கி “இதுவா?” என்றான். அர்ஜுனனை நோக்கி திரும்பி “ஒரு மலைப்பாம்பு… நம் வாசனையை அறிந்து வந்திருக்கிறது. நம் அளவைக்கண்டு பின்வாங்கி கிளையில் சுருண்டு அமர்ந்திருக்கிறது” என்றான்.

அர்ஜுனன் “உங்கள் குலத்தவர் எப்போதும் துணையிருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். “அவர்கள் ஓர் அரசு. ஒற்றர்கள், காவலர்கள், மேலாளர்கள், அரசன், அரசியர் என விரிவான அமைப்பு அவர்களுக்கு உண்டு” என்றபின் “ஆனால் அன்னை நம்பும் அறம் இல்லை” என்றான். அர்ஜுனன் சிரித்தான். பீமன் நூலேணிவழியாக இறங்கத் தொடங்கினான். “இன்னும் விடியவில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் குரங்குகளுக்கு விடிந்துவிட்ட்து” என்றபடி பீமன் மண்ணிலிறங்கி நின்று கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “இளையோனே, மரங்களில் இரவுறங்கும்போதுதான் தெரிகிறது, மண் எத்தனை மகத்தானது என்று” என்றான் பீமன்.

குரங்குகள் மேலே கிளைகளை உலுக்கி ஒலியெழுப்பியபடி தொடர பீமன் இலைத்தழைப்புகள் நடுவே நடந்துசென்றான். இலைகளில் இருந்து சொட்டிய நீரில் அவன் உடல் விரைவிலேயே ஈரமாகி சொட்டத் தொடங்கியது. அவன் அசைவில் இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகள் எம்பிக் குதித்து அகன்ற ஒலி எழுந்தது. மிக அருகே சல்லிக் கிளை நீட்சியில் பச்சைப்பாம்பு ஒன்று ஐயத்துடன் தீபட்ட பட்டு நூல் போல பின்னால் வளைந்து விலகியது. மரங்களுக்குமேல் குரங்குகள் கூடி சேர்ந்து ஒலி எழுப்பின. பீமன் அவற்றின் வினாக்களுக்கு எதிர்மொழி சொல்லிக்கொண்டே நடந்தான்.

புதர்களுக்கு அப்பால் ஒரு யானை இருளுடன் கரைந்து நின்றிருந்தது. செவிகளை பின்னால் மடித்து அவன் வாசனைக்காக துதிநுனி தூக்கி நீட்டியது. முரசில் கோல் இழுபடும் ஒலியில் உறுமி யாரென்று கேட்டது. அவன் நின்று அதை நோக்கினான். அதன் பெரிய தந்தங்கள் அடிமரம் போல இருளுக்குள் தெரிந்தன. அது அருகே வராதே என்றது. பீமன் அதை நோக்கி உரக்க உறுமி தான் யாரென்று சொன்னதும் அது எதிர்மொழி எழுப்பியபின் திரும்பி ஒரு கிளையை இழுத்து வளைத்தது. அதன் அருகே இன்னொரு பிடியானை நின்றிருப்பதை பீமன் அதன்பின்னர்தான் கண்டான்.

தரையில் புதர்களுக்கு அடியில் ஊறிச்சேர்ந்து ஓடிய மெல்லிய நீரோட்டத்தைக் கண்டு அதைத் தொடர்ந்துசென்றான். சிற்றோடைகள் அதிலிணைந்து அது பெருகி உருளைப்பாறைகளை தாவிக்கடந்து நுரைத்து கொட்டி ஒலியுடன் புதர்களுக்குள் மறைந்து மெல்லிய பளபளப்புடன் மீண்டு வந்து சென்றுகொண்டிருந்தது. அது சென்று சேர்ந்த சிற்றாற்றின் உள்ளே ஏராளமான பாறைகள் இருந்தன. நீரோட்டம் அவற்றில் மோதி வெண்நுரைக்கொந்தளிப்பாக ஓலமிட்டது. பீமன் ஆற்றை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் இரு கைகளையும் தூக்கி குரங்கு போல ஓலமெழுப்பி மெல்ல குதித்தான்.

குரங்குகள் அவன் தலைக்குமேல் நின்று கிளைகளை உலுக்கி கூச்சலிட்டன. ஓர் அன்னைக்குரங்கு அவனை நோக்கி குனிந்து உதட்டை நீட்டியது. பின் தொங்கி ஆடி இறங்கி கையூன்றி நடந்து வந்து ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டது. தொடர்ந்து குரங்குகள் இறங்கி வந்து பாறைகளில் அமர்ந்துகொண்டன. குழவிகளை வயிற்றில் அணைத்துக்கொண்ட அன்னையர், கனத்த வயிறு கொண்ட சூலுற்றவர், சிவந்த முகம் கொண்ட தாட்டான்கள் இருவர், வால்தூக்கி தாவித்தாவி விளையாடிய புன்தலை சிறுவர்கள். பீமன் நீரை அள்ளி முகத்தைக் கழுவினான். நாலைந்து சிறுவர்கள் வந்து குனிந்து நீரை வாயால் குடித்தபின் அவனை நோக்கி இதழ் நீட்டி சிரித்தனர். அன்னைக்குரங்கு தன் மைந்தனை நீர் அருகே செல்லவேண்டாம் என்று எச்சரித்தது.

முதிய தாட்டான் எம்பிக்குதித்து ஓசையிட்டபடி ஓடி கரையில் நின்று பிறரை விலகி வரும்படிச் சொல்லி எச்சரித்தது. வால்களைத் தூக்கியபடி குரங்குகள் பாய்ந்து காட்டின் முகப்பை அடைந்து அடிமரங்களில் தொற்றி ஏறிக்கொண்டன. உலர்ந்த கட்டை மிதந்து வருவதுபோல பெரிய முதலை ஒன்று அலையில்லாமல் அணுகியது. தாட்டான் பீமனை கரையை விட்டு விலகும்படிச் சொல்லி கூவி எம்பி எம்பிக் குதித்த்து. அன்னைக்குரங்கு ஒன்று அழத்தொடங்கியது. பீமன் நீரில் இறங்கி முதலையை அணுகி அதன் தலைமேல் ஓங்கி அறைந்தான். நீரில் அலைகிளர அது தன் வாலைச் சுழற்றி அவனை அறைய அதை இடக்கையால் பிடித்துக்கொண்டான். வலக்கையால் அதன் கீழ் வாயைப்பிடித்து தூக்கி எடுத்தான். வில்லை வளைப்பது போல வளைத்து சுருட்டி கையில் எடுத்தபடி கரையேறினான்.

குரங்குகள் ஓசையின்றி விழித்த சிறிய கண்களும் திறந்த சிவந்த வாய்களுமாக அசைவிழந்து இருந்தன. பின்னர் குட்டிகள் கூச்சலிட்டபடி வாலைத் தூக்கி கீழே பாய்ந்து ஓடிவந்தன. அணுகியதும் அச்சம் எழ விலகி இரு கால்களில் எழுந்து வாலை ஊன்றி நின்று வாயைத் திறந்து கூச்சலிட்டன. பீமன் அந்த முதலையை தன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு நடனமிட்டான். குட்டிகள் துள்ளி அவனருகே வந்து சுழன்று எம்பிக் குதித்து நடனமிட்டன. தாட்டான்கள் ஐயத்துடன் இறங்கி மரத்தடியில் அமர்ந்துகொள்ள அன்னையர் மைந்தரை வந்துவிடும்படிச் சொல்லி கூவின. இளமங்கையர் சிலர் கூவியபடி வந்து சேர்ந்துகொண்டனர்.

பீமன் முதலையை கீழே போட்டு அதன் தலையை மண்ணுடன் மிதித்து இறுக்கி இன்னொரு காலால் வாலையும் மிதித்துக்கொண்டான். ஒரு சிறுவன் ஐயத்துடன் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் வாயைக்குவித்து ஓசையிட்டான். “வா” என்றான் பீமன். அவன் அஞ்சி பின்னடைந்தான். பின்னர் “உண்மையாகவா?” என்று மெல்ல அருகே வந்தான். “ஆம், வா” என்றான் பீமன். அவன் அருகே வந்து மெல்ல முதலையை தொட்டுப்பார்த்தான். பின்னர் பாய்ந்து அதன்மேல் ஏறி அமர்ந்து இரு கால்களில் எழுந்து எம்பிக்குதித்தான். இன்னும் இரு சிறுவர் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் ஓடிவந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர்.

சற்று நேரத்தில் முதலையைச்சுற்றி குரங்குகள் குவிந்து கூச்சலிட்டு எம்பிக் குதித்தன. அதன் உடலை குனிந்து முகர்ந்தும் கடித்தும் நோக்கின. ஒரு சிறுவன் அதன் மங்கிய கண்களை குனிந்து நோக்கி கை விரல் நீட்டி தொடமுயன்றான். பின்னர் கூ என ஒலியெழுப்பி விலகி நின்று எம்பிக்குதித்து நடனமிட்டான். அத்தனை சிறுவர்களும் அதன் கண்களைத் தொட வந்து முண்டியடித்தனர். முதலையின் வால்நுனி நெளிந்துகொண்டே இருந்த்து. அதை பிடிக்கமுயன்ற குரங்குகள் அஞ்சி பின்னடைந்தும் பின்னர் நெருங்கி கைநீட்டியும் கூச்சலிட்டன.

பீமன் முதலையை விட்டான். அது திகைத்து இருகால்களை ஊன்றி தலைதூக்கி சுற்றிலும் நோக்கி திகைத்து நின்றது. குரங்குகள் ஓலமிட்டபடி விலகிச்சிதறி ஓடியபின் மெல்ல அச்சமிழந்து அருகே வந்தன. முதலில் வந்த சிறுவன் முதலையின் வாயருகே வந்து எழுந்து நின்று இரு பக்கங்களையும் சொறிந்தபடி எம்பி கூச்சலிட்டு நடனமிட்டான். முதலை திரும்பி நீரை நோக்கி ஓடி அலையில்லாமல் இறங்கி மூழ்கி மறைந்தது. கூச்சலிட்டபடி குரங்குகள் ஓடிச்சென்று நீர் விளிம்பருகே நின்று எம்பிக்குதித்து கூவின. சிறுவன் திரும்பி பீமனிடம் “சிறிய முதலை!” என்றான். பீமன் “ஆம்” என்றான். சிறுவன் “அதை நானே கொன்றிருப்பேன்” என்றான். அவன் அன்னை அவன் வாலைப்பிடித்து இழுத்து “வா” என்று அதட்டிவிட்டு பீமனை நோக்கி புன்னகைத்தாள்.

ஆற்றின் பொடிமணல் எடுத்து பல்தேய்த்தபின் நீரில் இறங்கி உடலின் கரியை கழுவிவிட்டு பீமன் கரையேறினான். ஈரம் சொட்டும் உடலுடன் அவன் காட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ ஒன்றை உணர்ந்து எச்சரிக்கையானான். குரங்குகள் அக்கணமே ஒலிஎழுப்பின. அவன் தன் வலக்கையை நீட்டி அருகே நின்ற சிறிய மரம் ஒன்றைப்பற்றினான். சிலகணங்கள் அசைவிழந்து நின்றான். எதிரே நின்ற பெரிய வேங்கைமரத்தின் பின்னால் ஒரு காலையும் தோளையும் கண்டான். மரத்தை அசைத்து வேருடன் பிடுங்கிக்கொண்டான். காலால் உதைத்து அதன் கிளைக்கவைக்குமேல் இலைத்தழைப்பை ஒடித்து வீசிவிட்டு வேர்க்கவையை தலையாக்கி கதைபோல பிடித்தபடி முன்னால் நகர்ந்தான்.

“யாரது?” என்றான் பீமன். மரத்தின் பின்னாலிருந்து மெல்ல விலகி முன்னால் வந்தவள் அவனளவுக்கே உயரமும் பருமனும் கொண்ட கரிய பெண். இடையில் புலித்தோலால் ஆன ஆடை மட்டும் அணிந்திருந்தாள். உடலெங்கும் வெண்சாம்பல் பூசப்பட்டிருந்தது. எருமைக்கன்றின் பெரிய கருவிழிகளும் கூரிய சிறு மூக்கும் குவிந்த சிறிய உதடுகளும் கொழுத்த கன்னங்களும் கொண்ட வட்ட முகம். மண் அணிந்த யானைமத்தகம் என எழுந்த கரிய முலைகள். குதிரைத் தொடைகள். நகர்ப்பெண்கள் போல ஒருபக்கமாக ஒசிந்து நிற்காமல் இரு கால்களையும் சற்றுப் பரப்பி வேங்கை மரமென இறுகிய இடையும் கல்லால் செதுக்கப்பட்ட்து போன்ற உறுதியான வயிறுமாக நேராக நின்றாள். அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவன் விழிகளை அவள் விழிகள் சந்தித்தன.

“நீர் யார்?” என்று அவள் கனத்த குரலில் கேட்டாள். நகர்ப்பெண்களின் குரலில் இருந்த மென்மையும் குழைவும் அற்ற நேர்க்குரல். குறுமுழவை கையால் மீட்டியதுபோல. ஆனால் அதில் மேலும் பெண்மையின் அழகு இருந்தது. பீமன் புன்னகையுடன் “என் கையில் படைக்கலன் இருக்கிறது. ஆகவே நீ அதைச் சொல்வதே உனக்கு நல்லது” என்றான். அவள் தூய வெண்பற்கள் ஒளிவிட புன்னகைத்து “நீ எப்படி எங்கள் மொழியை பேசுகிறாய்?” என்றாள். “பைசாசிகம் என்று சொல்லப்படும் மொழிகள் அனைத்துமே ஒரே சொல்லமைப்பு கொண்டவை... நான் அவற்றை கற்றிருக்கிறேன்” என்றான் பீமன். “பைசாசிகம் என்றால்?” என்றாள் அவள். “பேய்கள்... குருதியுண்ணும் தீய தெய்வங்கள்” என்றான் பீமன் புன்னகையுடன்.

அவள் கழுத்தைத் தூக்கி உரக்க நகைத்தபோது கண்கள் இடுங்கி முகம் பேரழகு கொண்டது. “சரியாகவே புரிந்துவைத்திருக்கிறீர்கள். நாங்கள் கண்ணுக்குத்தெரியாமல் மறையும் பேய்கள். உங்கள் குருதியை உண்ணுபவர்கள்...” என்றாள். “இங்கே அரக்கர்கள் வாழ்வதாக படகோட்டி சொன்னான்... நீ அரக்கர்குலப் பெண்ணா?” என்றான் பீமன். “ஆம், என்ன ஐயம்?” என்றாள். “அப்படியென்றால் மாயமாக மறைந்துபோ பார்ப்போம்” என்று பீமன் அவளை நெருங்கினான். அவள் மெல்ல அசைந்தாள். மறுகணம் அங்கே அவளிருக்கவில்லை. அவன் திகைத்து நின்று திரும்ப நோக்க தலைக்குமேல் மரக்கிளையில் அமர்ந்து சிரித்து “இங்கிருக்கிறேன்” என்றாள்.

பீமன் மரப்பொந்தில் காலெடுத்து வைத்து கிளையில் ஏறி நிமிர்ந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவன் சிறிய அச்சத்துடன் நோக்கியபோது இன்னொரு மரக்கிளையில் இருந்து கைகொட்டிச் சிரித்தாள். பீமன் நகைத்து “ஆம், ஒப்புக்கொள்கிறேன். நீ மாயம் அறிந்தவள். பேய்மகள்” என்றான். அவள் கீழிறங்கியது ஒரு இலை உதிர்வதுபோலிருந்தது. பீமன் ஓசையுடன் இறங்கி கைகளை விரித்து நின்றான். அவள் “என் பெயர் இடும்பி. இந்தக் காட்டின் அரசனின் தங்கை” என்றாள். பீமன் “நான் அஸ்தினபுரியில் பிறந்தவன். என் பெயர் பீமன்” என்றான்.

“இங்கே நாங்கள் அயலவரை உள்ளே விடுவதில்லை. அவர்களை உடனே கொன்றுவிடுவோம்” என்றாள் இடும்பி. “நீ என்னைக் கொல்லவில்லையே?” என்றான் பீமன். “நேற்று நீங்கள் உள்ளே நுழைந்ததுமே உங்கள் வாசம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. என் தமையன் என்னிடம் உங்களைக் கொன்று மீளும்படி ஆணையிட்டார். நீங்கள் காட்டில் வரும்போது நான் பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “குரங்குகள் சொல்லவில்லையே” என்றான். “குரங்குகளை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும்” என்றாள் அவள்.

“உங்களை நான் கண்காணித்தேன். உங்களைக் கொல்வது எளிதல்ல என்று புரிந்துகொண்டேன். உங்கள் இளையவர் மாபெரும் வில்லாளி. அவர் பறவைகளை ஒலியை மட்டும் கேட்டு அம்பெய்து வீழ்த்துகிறார். அது அம்புகூட இல்லை. வெறும் நாணல். அப்பறவையின் நரம்புமையத்தில் அம்பு பட்டால் மட்டுமே அதைக்கொல்லமுடியும். அது அவருக்கு மிக எளிதாக இருக்கிறது. அவர் காவல் காக்கும்வரை பிறரை ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்தேன்” என்றாள் இடும்பி. “உங்களை மொத்தமாகக் கொல்ல என்னால் முடியாது என்று கணித்தேன். எங்கள் குலம் படைதிரண்டு வந்தாகவேண்டும். அதற்குமுன் ஒருவரைக் கொன்று தூக்கிக்கொண்டு சென்றால் என் ஆற்றலுக்கு இழிவில்லாமலிருக்குமே என எண்ணினேன்.”

“கொன்று உண்பதுண்டா?” என்றான் பீமன். “ஆம், உண்போம். ஏனென்றால் எந்த விலங்காக இருந்தாலும் கொல்லப்பட்டால் அது உணவு. அதை வீணடிக்கலாகாது. உண்ணும் நோக்கமில்லாது கொல்வது காட்டுத்தெய்வங்களுக்கு உவப்பானதும் அல்ல. ஆகவே பெரும்பாலும் உண்போம். அல்லது எங்கள் நாய்களுக்கும் வளர்ப்புப் புலிகளுக்கும் உணவாகக் கொடுப்போம்“ என்றாள் இடும்பி. “ஆகவே நான் காத்திருந்தேன்... உங்களுக்கு மிக அருகே... நான் அருகே இருக்கும் உணர்வு உங்கள் இளையோனுக்கு இருந்தது. ஆகவே அவர் துயிலவேயில்லை.”

“அவன் எப்போதுமே பூனைபோல உறங்குபவன்” என்றான் பீமன். “துயிலிலேயே அவனால் ஒலிகளைக் கேட்டு அம்பு தொடுக்க முடியும். அவன் துயிலவில்லை என்று நீ உணர்ந்தது நன்று. இல்லையேல் அருகே வந்த கணமே கொல்லப்பட்டிருப்பாய்.” இடும்பி “காலையில் நீங்கள் நீராட வந்தபோது பார்த்தேன். உங்களைக் கொன்றால் எனக்கு குலத்தில் மதிப்பு உயரும் என எண்ணி பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “ஆகவே நாம் போரிடப்போகிறோம்... நீ என்னை கொல்லவிருக்கிறாய், இல்லையா?” என்றான்.

“இல்லை....” என்று அவள் சொன்னாள். “நீங்கள் குரங்குகளுடன் விளையாடியதைக் கண்டேன். அவற்றுடன் நீங்கள் பேசினீர்கள். அவை உங்களை ஒரு குரங்காக எண்ணின.” பீமன் “ஆம், நான் அவற்றின் முலையுண்டு வளர்ந்தவன்” என்றான். “அதைக் கண்டு வியந்தேன். நீங்கள் காட்டுக்கு அயலவர் அல்ல. காட்டுக்கு அயலவர் காட்டில் வாழலாகாது என்பதே எங்கள் குலநெறி... உங்களைக் கொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தேன். மேலும் நீங்கள் எனக்கு இணையான உடல் கொண்டவர். அத்தகைய ஒருவரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். தங்களை நான் கணவனாக ஏற்றுக்கொண்டேன். அதைத் தங்களிடம் தெரிவிக்கவே நின்றேன்” என்றாள் இடும்பி.

பீமன் புன்னகையுடன் “நான் உன்னை ஏற்காவிட்டால் என்ன செய்வாய்?” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உங்களை போருக்கு அழைப்பேன். உங்களை வென்று என் கணவனாக எடுத்துக்கொள்வேன்...” அவன் மேலும் அருகே சென்று அவள் விழிகளை நோக்கி “தோற்றால்?” என்றான். “அது உங்கள் கையால் இறப்பது அல்லவா?. அதுவும் எனக்கு உகந்ததே” என்றாள். பீமன் “எனக்கு நிகரானவள் நீ என எப்படி அறிவது?” என்றான். அவள் “என்னுடன் மற்போரிடுங்கள்... அறிவீர்கள்” என்றாள்.

பீமன் மெல்ல காலை பின்னால் வைத்து விலகி கைவிரித்து சமபதத்தில் நின்றான். இடும்பி அவனை நோக்கியபின் உரக்க ஒலியெழுப்பி ஓடிவந்து அவன்மேல் மோதினாள். அவன் நகைத்தபடி அவள் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். அவள் அவன் இடையில் காலைவைத்து எம்பிக் குதித்து அவனுக்குப்பின்னால் சென்று அவன் கைகளை முறுக்கிக்கொண்டாள். அவன் குப்புற குனிந்து அவளைத் தூக்கி மண்ணில் அறைந்தான். அவள் மேல் பாய்ந்து முழங்காலால் அவள் தொடைகளை மிதித்து வலக்கையின் கட்டை விரலைப் பற்றி வளைத்தான். அவள் தன் இடக்கையால் அவனை ஓங்கி அறைந்தாள். அந்த ஓசை காட்டுக்குள் நெடுந்தொலைவு எதிரொலி செய்தது.

அடியின் விசையால் பீமன் பக்கவாட்டில் சரிய அவள் எழுந்து அவன் மேல் எடையுடன் விழுந்து இரு கால்களாலும் அவன் தொடைகளை மிதித்து வலது முழங்கையால் அவன் மார்பை மண்ணுடன் அழுத்திக்கொண்டாள். ஒரு பெண்ணிடம் அத்தனை உடலாற்றல் இருக்குமென்பதை அவன் கற்பனையும் செய்திருக்கவில்லை. அவள் அழுத்தத்தால் அவன் மூச்சு இறுகியது. விலா எலும்புகள் உடைவதுபோலத் தெறித்தன. அவள் “தோற்றுவிட்டீர்கள்” என்றாள். அவன் முழு மூச்சையும் இழுத்து தலையைத் தூக்கி அவள் தலையை முட்டினான். இருவர் தலைக்குள்ளும் ஒலியும் ஒளியும் வெடிக்க ஒரு கணம் செயலிழந்தனர். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சரித்து அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.

இறுதி விசையுடன் அவள் அவனை புரட்டினாள். ஆனால் அவன் அவள் கைகளை விடவில்லை. அவள் காலை ஊன்றி எம்பி அவன் தோள்மேல் சரிந்து மறுபக்கம் சென்று அவன் முதுகுக்குப்பின்னால் கைகளை வளைத்தாள். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சுழற்றி வீழ்த்தினான். இருவரும் மூச்சிரைத்தனர். அவள் நெற்றியால் அவன் மூக்கை இடிக்க அவன் முகம் திருப்பி அதை தன் கன்ன எலும்பில் வாங்கிக்கொண்டான். அவள் அவன் இடையை உதைப்பதற்கு தன் கால்களை மடிக்க அவன் அந்தக்காலை இன்னொரு காலால் மிதித்தான். சிலகணங்கள் அசைவற்று விழிகள் தொட்டு அமைந்திருந்தனர். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அவனைத் தூக்க முயன்றாள்.

பீமன் நகைத்து “உன்னுடையது பெண் உடல். அதன் மிக வலுக்குறைந்த பகுதியை நான் கண்டுகொண்டேன்” என்றான். “இந்த மணிக்கட்டுகள். அவை சிறியவை. என் கைகளுக்குள் முற்றிலும் அடங்கிவிடுபவை. நீ எத்தனை முயன்றாலும் அவற்றை நான் விடப்போவதில்லை.” அவள் கூச்சலிட்டபடி அவனைத் தூக்கி சுழற்றிவீசினாள். அவன் அக்கைகளை விடாததனால் அவன் மேல் அவளும் வந்து விழுந்தாள். அவர்களின் உடல்பட்டு சிறிய புதர்கள் ஒடிந்து சரிந்தன. உருளைக்கற்கள் உருண்டு விலகின. சரிவில் உருண்டு எழுந்தபோது அவன் மீண்டும் அவளை மண்ணுடன் அழுத்திக்கொண்டான். அவள் உடல் ஆண்களின் உடல் போலன்றி மென்மையுடையதாகவே இருந்தது. ஆனால் அது இறுக்கமும் உறுதியும் கொண்ட மென்மை.

இடும்பி புன்னகைத்து “ஆம்” என்றாள். “தோற்றுவிட்டாயா?” என்றான் பீமன். “ஆம், முதல்முறையாக” என்றாள் இடும்பி. பீமன் எழுந்து கைகளை விரித்து குரங்கு போல ஒலிஎழுப்ப அப்பால் மரக்கிளைகளில் ஒடுங்கி அமர்ந்து காத்திருந்த குரங்குகள் இலைகளையும் கிளைகளையும் காற்றுபோல அசைத்தபடி பாய்ந்து வந்து கீழே தடதடவெனக் குதித்து வாலைத்தூக்கி கூச்சலிட்டபடி ஓடிவந்து சூழ்ந்துகொண்டன. சிறுவர்கள் எம்பிக்குதித்தும் கிளைகளில் தொங்கிச் சுழன்றாடியும் கூவினர். “கேலி செய்கிறார்களா?” என்றாள் இடும்பி. “இல்லை, நீ என் மனைவி என அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.”

இடும்பி நகைத்து குனிந்து ஒரு குரங்குச்சிறுவனை நோக்கி கை நீட்ட அவன் பல்லி போல ஒலி எழுப்பியபின் அவள் கையை நோக்கி தன் கையை நீட்டினான். அவள் அக்கைகளை அடித்தாள். “நாங்கள் குரங்குகளை கொல்வதில்லை. அவை எங்கள் முன்னோர்களின் மறுபிறப்பு என்று நினைக்கிறோம்” என்றாள். “அவர்களும் எங்களை அஞ்சுவதில்லை.” பீமன் “அவர்களிலும் இதேபோல ஆணும் பெண்ணும் போரிட்டே ஒன்றுசேரவேண்டும் என்னும் வழக்கம் உள்ளது.” இடும்பி சிரித்து “எங்கும் அப்படித்தானே?” என்றாள். “எங்கள் அரண்மனையில் ஒன்றுசேர்ந்தபின் போரிடுவார்கள்” என்றான் பீமன்.

சில பெண்குரங்குகள் இடும்பியை அணுகி அவள் கால்களைத் தொட்டு நோக்கின. அவள் அமர்ந்ததும் அவள் கூந்தலையும் காதுகளையும் மூக்கையும் தொட்டு இழுத்தும் உதடுகளைக் குவித்து அவளை முகர்ந்தும் ஆராய்ந்தன. “எனக்கு நீ பொருத்தமானவள்தானா என்று நோக்குகின்றன” என்றான் பீமன். இடும்பி அக்கணம் நாணினாள். அவள் பெரிய விழிகளின் இமைகள் தாழ்ந்து முகம் ஒருபக்கம் திரும்பியது. “உன்னைப்போல் ஒரு பேரழகியை நான் எங்கும் கண்டதில்லை” என்றான் பீமன். “நான் பெண்களை அருவருத்தேன். என் வாழ்வில் பெண்ணே இருக்கப்போவதில்லை என்று எண்ணியிருந்தேன்.”

இடும்பி “ஏன்?” என்றாள். “அங்கே நகரத்தில் பெண்களெல்லாம் அருவருக்கத்தக்க வாசனைப்பொருட்களை உடம்பில் பூசியிருப்பார்கள். சுண்ணமும் மஞ்சளும் குங்குமும் என பலவகை வண்ணங்களை தடவியிருப்பார்கள். கண்களைக் கூசவைக்கும் வண்ணங்களை ஆடைகளாகவும் அணிகளாகவும் அணிந்திருப்பார்கள்... மெல்லிய உடல்கள். ஆடையில்லாதபோது புழுக்கள் போலிருப்பார்கள். ஆடைகள் அணிந்து பூச்சிகளாக ஆகிவிடுவார்கள்... அருவருப்பானவர்கள்” என்றான் பீமன். “அத்துடன் அவர்கள் எப்போதும் செயற்கையான பாவனைகள் கொண்டவர்கள். கூந்தலை நீவுவது, ஆடைதிருத்துவது, இமைகளை அடித்துக்கொண்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்துவது என பல நடிப்புகளை இளமையிலேயே கற்றிருக்கிறார்கள். உன்னைப்போல நேராக நின்று விழிநோக்கி திடமாகப் பேசுபவர்களே அங்கில்லை. ஒசிந்து நின்று ஓரக்கண்ணால் நோக்கி குழந்தைகளைப்போல மழலைபேசுவார்கள்...”

“சீ” என்று சொல்லி இடும்பி நகைத்தாள். “உன்னை தெய்வங்கள் எனக்கு அனுப்பிய துணையாக உணர்கிறேன் ஆனால் நான் உன்னை மணம்புரிந்துகொள்ளவேண்டும் என்றால் என் அன்னையின் ஆணை வேண்டும். அவள் எங்களை ஷத்ரிய குடிகளில் இருந்து பெண்தேடி மணம்புரிவதற்காக அழைத்துச்செல்கிறாள். அதற்காகவே எங்களுக்கு இதுவரை மணம்புரிந்து வைக்காமலிருக்கிறாள்... உன்னை அவள் ஏற்கமாட்டாள்” என்றான். “அவர்களை நான் மற்போருக்கு அழைக்கலாமா?” என்றாள் இடும்பி. பீமன் நகைத்து “அழைக்கலாம். அவளுக்காக நான் களமிறங்குவேன்” என்றான்.

“என்னதான் செய்வது?” என்றாள் இடும்பி. “அவளிடம் மன்றாடுவோம்... என் மூத்தவரே இன்னும் மணம் புரியவில்லை. ஆகவே அவள் பெரும்பாலும் ஒப்பமாட்டாள்” என்றான் பீமன். இடும்பி “நான் அவர்களுடன் இருப்பேன். அவர்களுக்கு பணிவிடைகள் செய்வேன். அவர்கள் என் மேல் கருணை கொள்ளச்செய்வேன்” என்றாள். பீமன் “வா பார்ப்போம்” என்றான். “அவர்களுக்கு நான் உயர்ந்த பழங்களையும் மலைத்தேனையும் எடுத்துவருகிறேன்...” என்று அவள் கொடி ஒன்றைப்பற்றி எழுந்து மறைந்தாள்.

கொடிக்கூடையில் தேனடைகளும் பழங்களும் கிழங்குகளுமாக அவள் வந்தாள். பீமன் “இவற்றைப் பார்த்தால் நான் அன்னையை மீறி உன்னை மணந்துகொள்வேன் போலுள்ளதே” என்றான். அவள் சிரித்து அவன் தோளை தன் கையால் அறைந்து “அவ்வாறு உங்களுக்கு குலமுறை இருந்தால் அன்னையை மீறி நீங்கள் என்னை மணக்க நான் ஒப்புவேனா என்ன?” என்றாள். “நீ எப்படி காற்றில் மறைகிறாய்?” என்றான் பீமன். “அது எங்கள் மாயம்” என்று அவள் சிரித்தாள். அவன் அவளைப் பிடித்து நிறுத்தி “சொல்” என்றான்.

“எளிது... நாங்கள் ஓர் உடலசைவை அளிக்கிறோம். அது ஒரு திசைநோக்கி நாங்கள் விலகப்போவதாக உங்களுக்குக் காட்ட. அறியாமல் உங்கள் விழி அத்திசைநோக்கி திரும்பும். அதேகணம் மறுதிசையில் எழுந்து மறைந்துவிடுவோம். ஒரே கணத்தில் நிகழும் ஒரு செயல். பயிற்சியால் அடையப்படுவது” என்றாள் இடும்பி. “எனக்குக் கற்றுக்கொடு” என்றான் பீமன். “குரங்குகளுடன் பேச எனக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றாள் அவள்.

அவர்கள் சிரித்தபடியே சென்றனர். பீமன் “அன்னை இருக்குமிடம்... சிரிக்காதே” என்றான். அவள் உதட்டை அழுத்திக்கொண்டு “ஏன்?” என்றாள். “சிரிப்பது எங்கள் குலத்தில் பெண்மையல்ல என்று கருதப்படுகிறது” என்றான் பீமன். அவள் வெடித்துச்சிரித்து நின்றுவிட்டாள். பீமனும் நகைத்து “உண்மை...” என்றான். இடும்பி “அழவேண்டும் என்பார்களா?” என்றான். “அழும்பெண்களே அழகானவர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றான். அவள் உடல் குலுங்க சிரித்தாள். கைகளால் சிரிப்பை அடக்கமுயன்று மீண்டும் சிரித்தாள். “வா” என்றான் பீமன்.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 4

சிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா!” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்?” என்றாள். “அடக்கமில்லாதவள் என்று. முறைமைகள் அறியாதவள் என்று” என்றதுமே பீமனும் சிரித்துவிட்டான். “எங்கள் குலத்தில் சிரிக்காமல் வந்தால்தான் அப்படி எண்ணுவார்கள். அயலவரை நோக்கியதுமே சிரிப்பதுதான் இங்கே முறைமை” என்றாள் இடும்பி.  “நாங்கள் சிரிப்பை ஒடுக்கி ஒரு உயர்ந்த பண்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம்” என்றான் பீமன்.

“ஏன்?” என்று அவள் அவனுடைய கேலியை புரிந்துகொள்ளாமல் கேட்டாள். “எங்கள் அரசுகளில் தனக்குமேல் இருப்பவர்களின் முன்னால் சிரிக்கக் கூடாது” என்றான் பீமன். “ஆனால் ஒவ்வொருவருக்கும் மேல் இன்னொருவர் இருந்துகொண்டிருக்கிறார். ஆகவே சிரிக்கும் இடமே எங்கள் நாடுகளில் இல்லை… தனியறையில் கணவன் மட்டும் சிரித்துக்கொள்ளலாம். அரசர்கள் மட்டும் அவையில் சிரிக்கலாம்.” இடும்பி “பெண்கள்?” என்றாள். “அவர்கள் சமையலறைக்குள்ளும் குளியலறைக்குள்ளும் தனியாகச் சிரிப்பார்கள்.” இடும்பி ஐயத்துடன் அவனை நோக்கியபின் “நான் அறிந்ததில்லை” என்றாள். “நீ இக்காடு விட்டு விலகாமலிருக்கும்வரை ஏராளமானவற்றை அறியாமலிருப்பாய். மகிழ்ச்சியுடனும் இருப்பாய்” என்றான் பீமன்.

அவள் அந்த ஐயத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு காட்டுக்குள் இருந்து குடிலை நோக்கி வந்தாள். பீமன் முன்னால் நடக்க அவள் பின்னால் தயக்கமாக காலெடுத்துவைத்து நான்கு பக்கமும் நோக்கியபடி வந்தாள். அவர்களுக்கு மேல் மரக்கிளைகளில் குரங்குக்கூட்டம் இலைகளை உலைக்கும் காற்று போல தொடர்ந்து வந்தது. குடிலுக்குக் கீழே கனலாகச் சிவந்து கிடந்த நெருப்பருகே குந்தி நீராடி வந்து கூந்தலை விரித்து அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் இருந்த புண்களில் தருமன் பச்சிலை பிழிந்து விட்டுக்கொண்டிருந்தான். மரப்பட்டைகளை கல்லால் அடித்துப்பரப்பி தன் கால்களை அதன்மேல் வைத்து கத்தியால் வெட்டி பாதணிகளை செய்துகொண்டிருந்தான் நகுலன். சகதேவன் அருகே குனிந்து நோக்கி நின்றிருந்தான்.

அப்பால் மடியில் வில்லை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டுத் திரும்பி பீமன் பின்னால் வந்த இடும்பியைக் கண்டு வில்லைத்தூக்க அவள் அவனை நோக்கி உரக்க உறுமினாள். பீமன் அர்ஜுனனை நோக்கி கைகாட்டி தடுத்தான்.அனைவரும் அஞ்சி எழுந்து நோக்க குந்தி மட்டும் கூர்ந்து நோக்கி அசையாமல் அமர்ந்திருந்தாள். தருமன் திகைத்து கைநீட்டி “இளையோனே, உன் பின்னால்” என்றான். பீமன் “பார்த்தா, இவள் இடும்பி. இந்தக்காட்டின் அரக்கர்குலத்து அரசன் இடும்பனின் தங்கை. என்னுடன் நட்பு கொண்டாள்” என்றான்.

அர்ஜுனன் புன்னகையுடன் வில்லைத் தாழ்த்தினான். தருமன் “இளையோனே, என்ன இது? நட்பா? இவளிடமா? இவள் அரக்கி. மாயமறிந்தவள். நூல்களில்…” என்று பேசத்தொடங்க பீமன் “மூத்தவரே, இவள் என்னுடன் காட்டுமுறைப்படி நட்பு கொண்டிருக்கிறாள்” என்றான். அர்ஜுனன் தலைதாழ்த்தி “இளையோன் வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். திகைத்துத் திரும்பிய தருமன் “பார்த்தா, என்ன சொல்கிறாய்?” என்றான். அர்ஜுனன் “பார்த்தால் தெரிவதைத்தான்... அவர்கள் இருவர் முகங்களிலும் உள்ள பொலிவு காட்டுகிறதே” என்றான். தருமன் ஐயத்துடன் பீமனை நோக்கினான்.

“என்ன சொல்கிறார்?” என்று இடும்பி கேட்டாள். “என் துணைவியாகிய உன்னை இளையவனாகிய அவன் வணங்குகிறான்” என்றான் பீமன். “நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “உன் குலமுறைப்படி செய்” என்றான் பீமன். இடும்பி தன் நெஞ்சில் கைவைத்து அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். தருமன் பதறியபடி “மந்தா, நீ எளிய உள்ளம் கொண்டவன். அரக்கர்கள் மாயம் நிறைந்தவர்கள் இவள் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று தெரியாது... அவர்கள் நம் ஊனை உண்ண எண்ணுபவர்கள்” என்றான். பீமன் நகைத்து “மூத்தவரே, இவளுக்கு நம்மை உண்ண எந்த மாயமும் தேவை இல்லை. பிடியானைபோல பேராற்றல் கொண்டவள்” என்றான்.

“ஆனால்...” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் திரும்பி “மூத்தவரே, என் உடலும் உள்ளமும் தங்களுக்குரியது. ஆகவே நான் இவளுக்கு எந்த சொல்லையும் அளிக்கவில்லை. என்னை விழைவதாகச் சொன்னாள். முடிவெடுக்கவேண்டியவர் என் அன்னையும் தமையனும். அவர்கள் நாங்கள் ஷத்ரிய குலங்களில் பெண்கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவே எங்கள் குலம் மீட்படைவதற்கான வழி. ஆகவே உன்னை ஏற்க மறுப்பார்கள் என்றே சொன்னேன். அவள் உங்களை வணங்கவேண்டும் என்றாள். ஆகவே அழைத்துவந்தேன். உங்கள் சொல் ஏதும் எனக்கு ஆணையே. அதை நீங்கள் சொல்லிவிட்டால் இவளிடம் விலகிச்செல்லச் சொல்லிவிடுவேன்” என்றான்.

அவன் கண்களைக் காட்டியதும் இடும்பி சென்று தருமன் முன் முழந்தாளிட்டு அமர்ந்து பணிந்தாள். அவன் காலடியில் காணிக்கைப்பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி வைத்தாள். பின்னர் தன் நெஞ்சில் கையை வைத்து எடுத்து அவன் கால்களைத் தொட்டாள். தருமன் திகைத்தபின் “என்ன பொருள் இதற்கு?” என்றான் பீமனை நோக்கி. “உங்களை சரணடைகிறாள். உங்கள் ஆணைக்கு கட்டுப்படுவாள்” என்றான் பீமன். தருமன் “அனைத்து நலன்களும் உனக்கு அமைவதாக” என்றான். பின்னர் “அவளிடம் சொல், அன்னையைச் சென்று பணியும்படி. அன்னையின் ஆணை நம்மை கட்டுப்படுத்தும் என்று சொல்” என்றான்.

பீமன் அதைச் சொன்னதும் இடும்பி குந்தியை நோக்கி மெல்ல நடந்து சென்றாள். குந்தி சுருங்கிய விழிகளுடன் இடும்பியையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பீமன் இடும்பியிடம் “அன்னையை வணங்கு” என்றான். அவள் இறகு காற்றில் செல்வது போல புல் அசையாமல் மெல்ல நடந்து சென்று குந்தி அருகே முழந்தாளிட்டு அமர்ந்து நெஞ்சைத் தொட்டு அவள் காலில் வைத்தாள். குந்தி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கியபின் பைசாசிக மொழியில் “உன் பெயரென்ன?” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா?” என்றாள். “வீரர்” என்றாள் இடும்பி. குந்தி “அவன் அஸ்தினபுரியின் இளவரசன். ஒருநாள் பாரதவர்ஷம் முழுக்க அவன் கைகளுக்கு அஞ்சி காலடிகளை வணங்கும்” என்றாள். அவள் சொன்னதென்ன என்றே இடும்பிக்கு புரியவில்லை. புன்னகையுடன் சரி என தலையசைத்தாள்.

“நீ இவனை ஏன் மணம்புரிய விழைகிறாய்?” என்றாள் குந்தி. “என்னை மணம்புரிய வந்த என் குலத்து இளைஞர்கள் அனைவருமே என்னுடன் போர்புரிந்து இறந்தனர்” என்றாள் இடும்பி. “நான் எனக்கிணையான வீரனை விழைகிறேன். அவர் மைந்தனை பெற்றெடுப்பேன்.” குந்தி கைகளை நீட்டி அவள் தலையைத் தொட்டாள். தலையில் இருந்து கைகள் வருடி அவள் கன்னங்களைத் தொட்டு காதைப்பற்றிக்கொண்டன. திரும்பி பீமனிடம் “இளையோனே, காடே அஞ்சும் பிடியானை போலிருக்கிறாள். இவளே உனக்குத் துணைவி” என்றாள். “இவள் கண்களில் நிறைந்திருக்கும் காதலைப் போல அரிய ஒன்றை நீ வாழ்வில் எப்போதும் காணப்போவதில்லை. உன்னை நம் குலமூதாதையர் வாழ்த்தியிருக்கிறார்கள்.”

தருமன் முகம் மலர்ந்து முன்னால் சென்று “அன்னையே, நான் இப்போது அதைத்தான் எண்ணினேன். இப்பெருங்காதலுக்கு நிகராக பேரரசுகளும் குலப்பெருமைகளும் அமைய முடியுமா என்று. இவள் நம் குலத்தின் முதல் மாற்றில்லப் பெண்ணாக அமைய அனைத்துத் தகுதிகளும் கொண்டவள்…” என்றான். “அத்துடன் அவளும் நல்லூழ் கொண்டவள். நம் இளையோன் அகம் நிறைந்தளிக்கும் பெருங்காதலை அவள் பெற்றிருக்கிறாள்.” குந்தி “ஆம்…இவளுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்” என்றாள்.

தருமன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் மூத்தவர்துணைவியை காலடி பணிந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்” என்றான். அர்ஜுனன் அருகே வந்து குனிந்து இடும்பியின் கால்களைத் தொட்டான் “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள் இடும்பி திகைத்து. “உன்னை மூத்தவர் துணைவியாக ஏற்கிறான். நீ இவனுக்கு இனி அன்னைக்கு நிகரானவள். உன் குலவழக்கப்படி அவனை வாழ்த்து” என்றான் பீமன். அவள் தன் இடக்கையால் அவன் தலையை மெல்ல அடித்து “காட்டை வெல்வாயாக” என்றாள். நகுலனும் சகதேவனும் அவளை வணங்கியபோது வாழ்த்தி விட்டு இருகைகளாலும் தூக்கி தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள். “உங்கள் கரங்களைப்போலவே எடை கொண்டவை மூத்தவரே” என்றான் நகுலன். “சற்று அழுத்தினார்கள் என்றால் இறந்துவிடுவோம்.”

தருமன் சிரித்துக்கொண்டு “இளையவனே, வேறெந்த வகையில் இக்குடியின் முதல்மணம் நிகழ்ந்திருந்தாலும் என் தந்தை அகம் நிறைந்திருக்க மாட்டார். அவர் விழைந்தது காட்டையே. காட்டின் மகளை அவர் விண்ணிலிருந்து வாழ்த்துகிறார் என்று அறிகிறேன்” என்றான். “ஆனால் எங்கு எப்படி நிகழ்ந்தாலும் இது நம் குடியின் முதல் மணம். முதலில் நாம் இனிப்பு உணவு சமைத்து மூதாதையருக்குப் படைத்து உண்போம். அவள் குடியில் மணமுறை எப்படி என்று கேட்டு அறிந்து சொல். அது எதுவானாலும் நானே சென்று அனைத்தையும் பேசி நிறைவுசெய்கிறேன்.”

அர்ஜுனன் “இம்முறை மூத்தவர் அமரட்டும். நான் இனிப்புணவு சமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். “ஆம் அதுவே முறை. இளையோரே, நீங்கள் மலர்கொய்து மாலையாக்குங்கள்…” என்றான் தருமன். “இந்தக் காட்டில் நம் குடியின் முதல் பெருமங்கலம் நிகழவிருக்கிறது. குடிதேடி பிடியானை வருவது போல பெருமங்கலம் ஏதுமில்லை என்கின்றன நிமித்திக நூல்கள்” என்றான். குந்தி புன்னகையுடன் இடும்பியை இடைசுற்றி வளைத்து அணைத்து அழைத்துச்சென்றாள்.

அர்ஜுனன் இடும்பி கொண்டுவந்த கிழங்குகளையும் தேனையும் எடுத்துக்கொண்டு அடுப்பு மூட்டச்சென்றான். “பார்த்தா, கிழங்குகளைச் சுட்டு அவை ஆறியபின் தேனை ஊற்று. தேன் சூடாகிவிடக்கூடாது” என்றான் பீமன். “நானும் உணவு உண்ணத்தெரிந்தவனே” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். சமைப்பதைப்பற்றி பேசினேன்” என்றான் பீமன். “அவற்றில் பெரிய கிழங்குகளை மிதமான சூட்டில் சற்று கூடுதல் நேரம் வேக விடவேண்டும். அவற்றை கனத்த கற்கள் நடுவே வைத்து கற்களைச் சுற்றி நெருப்பிடு. கற்களின் சூட்டில் அவை வேகவேண்டும். தழல் நேராகப் பட்டால் தோல் கரியாகிவிடும். கல் பழுத்ததும் உடனே நெருப்பை அணைத்துவிடு” என்றான் பீமன். குந்தி பீமனிடம் “நீ அவளருகே இப்பாறைமேல் அமர்ந்துகொள்... சமையலை அவன் பார்த்துக்கொள்வான்” என்றாள்.

அர்ஜுனனின் பின்பக்கத்திடம்“அவற்றில் வாழைக்கனியை சுட்டு உண்ணலாம். தேன் ஊற்றி உண்டால் சிறப்பாக இருக்கும்” என்றபின் பீமன் “எங்கே அமர்வது?” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா?” என்றாள் குந்தி. “இல்லை...” என்றாள் இடும்பி. “கருவேங்கை பூத்தது போலிருக்கிறாய்” என்றாள் குந்தி. இடும்பி வெட்கி நகைத்தாள். “கரும்பாறைமேல் மாலைவெயில் படுவதுபோலிருக்கிறது இவள் வெட்கம்...” என்றாள் குந்தி.

அப்பால் மரங்களில் இருந்து குரங்குகள் குரலெழுப்பி கிளைகளை உலுக்கி எழுந்தமைந்தன. “என்ன சொல்கிறார்கள்?” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா?” என்றான் பீமன். குரங்குகளில் குட்டிகள் கிளைகளில் தொங்கி இறங்கின. குரங்குச் சிறுவன் ஓடிவந்து வாலைத் தூக்கியபடி எழுந்து நின்று இருவரையும் மாறிமாறி நோக்கியபின் தருமனை நோக்கி பல்லி போல உதட்டைச் சுழித்து ஒலியெழுப்ப அதே ஒலியில் பீமன் மறுமொழி சொன்னான்.

தருமன் “துடிப்பான சிறுவன்” என்றான். “ஆம் மூத்தவரே, இந்தக் குலத்தில் மிகத் துணிவானவன் இவன். பின்னாளில் குலத்தலைவனாகப் போகிறவன்” என்றான் பீமன். “இவன் பெயர் என்ன?” என்றான். “அவர்களின் மொழியிலுள்ள பெயரை நாம் அழைக்க முடியாது.” தருமன் குனிந்து அவனை நோக்கி “இளையவன்... புழுதிநிறமாக இருக்கிறான். இவனுக்கு சூர்ணன் என்று பெயரிடுகிறேன்” என்றான். பீமன் நகைத்து “அழகியபெயர்... அவனிடம் சொன்னால் மகிழ்வான்” என்றான். சூர்ணன் மீண்டும் தருமனை நோக்கி ஒலி எழுப்பினான்.

“என்ன சொல்கிறான்?” என்றான் தருமன். “நீங்கள் யார் என்றான். எங்கள் குலத்தலைவன் என்றேன்” என்ற பீமன் மேலே சொல்வதற்குள் தருமன் சிரித்து “போதும், அவன் என்ன சொல்கிறான் என்று அறிவேன். பெருந்தோள்களுடன் நீ இருக்க நான் எப்படி தலைவனாக இருக்கிறேன் என்கிறான் இல்லையா?” என்றான். பீமன் உரக்க நகைத்து “ஆம்” என்றான். “ஆகவேதான் நான் காட்டில் இருக்க விரும்பவில்லை” என்றான் தருமன்.

“இளையோரே, நீண்டு பரந்த கல் ஒன்றைக் கொண்டுவருக” என்றாள் குந்தி. நகுலனும் சகதேவனும் தேடிக்கொண்டு வந்த நீண்ட கல்லை அப்பால் நின்றிருந்த கனிநிறைந்து மூத்த அத்திமரத்தின் அடியில் சமமாக அமைத்து அதன் மேல் ஏழு சிறிய கூம்புக் கற்களை நிற்கச்செய்தாள். குனிந்து ஆர்வத்துடன் நோக்கிய சகதேவன் “அன்னையே, இவை என்ன?” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்... நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா?” நகுலன் “ஆம்” என்றான்.

குந்தி அதன் கீழே மண்ணில் மூன்று கூம்புக்கற்களை நட்டாள். தருமன் அருகே வந்து “மண்ணில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கும் மூன்று மூத்தோர். இல்லையா அன்னையே?” என்றான். குந்தி அவனை நோக்காமல் “ஆம், பீஷ்மர், துரோணர், கிருபர்” என்றாள். தருமன் இன்னொரு கல்லை எடுத்து நீட்டி “இக்கல்லையும் வையுங்கள் அன்னையே” என்றான். கற்களை அமைத்துக்கொண்டிருந்த அவள் கைகள் அசைவிழந்து நின்றன. அவள் நிமிரவில்லை. தருமன் “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்றான்.

குந்தி சினத்துடன் கையை உதறியபடி எழுந்தாள். “மூடா, உன்னையும் உன் தம்பியரையும் எரித்துக்கொல்ல ஆணையிட்டவரையா இம்மங்கல நிகழ்வுக்கு அமர்த்துகிறாய்?” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா?” அவன் கையிலிருந்து அக்கல்லை வாங்கி வீசிவிட்டு “இனி இவ்வாழ்வின் ஒவ்வொருகணமும் நான் எண்ணி வெறுக்கும் மனிதர் இவர்” என்றாள்.

தருமன் தன் சமநிலையை இழக்காமல் “அன்னையே, உங்கள் உணர்வுகளை நான் அறிவேன்” என்றான். “ஆனால் குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்தல் முறையல்ல.”

அவள் பெருஞ்சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கை நீட்டி இடைமறித்து “ஆம், அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் பிழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்றான் தருமன்.

“உன் வெற்றுச்சொற்களைக் கேட்க எனக்குப் பொறுமை இல்லை...” என்று சொல்லிவிட்டு குந்தி திரும்பிக்கொண்டாள். தருமன் அவன் இயல்புக்கு மாறான அக எழுச்சியுடன் முன்னால் காலெடுத்துவைத்து “நில்லுங்கள் அன்னையே... என் சொற்களை நீங்கள் கேட்டாக வேண்டும்...” என்று மூச்சிரைக்க சொன்னான். “அன்னையே, பெரும்பிழை செய்தது நாம் என்பதே உண்மை. இந்தக்காட்டின் தனிமையில்கூட அதை நமக்குநாமே ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாம் அறதெய்வங்களை மட்டும் அல்ல நம் மூதாதையரையும் பழிக்கிறோம் என்றே பொருள்.”

குந்தி சினத்தில் இழுபட்ட சிவந்த முகத்துடன் “என்ன பிழை?” என்றாள். “முதல்பிழை செய்தவன் நான். சௌவீரத்தின் மீதான வெற்றி அஸ்தினபுரியை ஆளும் மூத்த தந்தைக்குரியது. மணிமுடியை அவரது காலடியில் வைத்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தில் என் அகம் நிலைபிறழ்ந்துவிட்டது. தந்தையையும் அரசரையும் குழப்பிக்கொண்டுவிட்டேன். அதன் பின் நிகழ்ந்ததெல்லாமே நம் தரப்பில் பிழைகளே. நாம் சௌவீரத்தின் வெற்றிச்செல்வத்தை மூத்த தந்தையிடம் அளித்தபின் அவரிடம் கேட்டு வேள்விக்காக பெற்றிருக்கவேண்டும்” என்றான் தருமன்.

குந்தியின் முகத்தில் குருதி தோலை மீறிக் கசிவதுபோலிருந்தது. அதை நோக்கியும் தருமன் பேசிக்கொண்டே சென்றான். “அனைத்தையும் விட பெரிய பிழை நீங்கள் மதுராவை வென்றுவர அரசரை மீறி ஆணையிட்டது. ஹிரண்யபதத்தின் வீரர்களின் மூக்கை அறுத்துவர ஆணையிட்டது பிழையின் உச்சம்... அப்பிழைகளுக்கான தண்டனையாகவே எங்களைக் கொல்ல மூத்ததந்தை ஆணையிட்டார் என்றால் அதுவும் தகுந்ததே. குற்றமிழைத்தவர் தண்டனையைப்பற்றி விவாதிக்கும் தகுதியற்றவர். தலைகுனிந்து தண்டனையை ஏற்றுக்கொள்வதே அவர் செய்யவேண்டியது.”

“நிறுத்து மூடா” என்று குந்தி கூவினாள். “நிறுத்து... உன் சொற்களைக் கேட்டு அரசியலறியும் நிலையில் நான் இல்லை. என் மைந்தர்களே என் உலகம். அவர்களைக் காப்பதே என் அறம். அவர்கள் வெல்வதே என் இலக்கு. ஏனென்றால் நான் அன்னை. வேறு எதுவும் எனக்கு பொருட்டல்ல. வஞ்சத்தால் என் மைந்தரைக் கொல்ல முயன்ற மூத்தவரின் கீழ்மையை ஒருபோதும் என் நெஞ்சு ஏற்காது...“ என்றாள். “அன்னையே” என்றான் தருமன் உடைந்த குரலில். “ நான் உன் அன்னை. இது என் ஆணை” என்றாள் குந்தி. தருமன் உதடுகள் இறுக கழுத்துநரம்பு ஒன்று அசைய ஒருகணம் நின்றபின் “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி விலகிச் சென்றான்.

குவிக்கற்களுக்கு மேல் மலர்களை வைக்கும்போது குந்தி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். நகுலனும் சகதேவனும் அவளிடம் ஒன்றும் பேசத் துணியவில்லை. அவள் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள். பின்னர் மலர் வைப்பதை நிறுத்திவிட்டு திரும்பி தருமனை நோக்கினாள். அவன் ஒரு சிறியபாறைமேல் தலைகுனிந்து அமர்ந்து சுள்ளி ஒன்றால் தரையில் கோடுகளை இழுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒடுங்கிய தோள்களையும் நெற்றியில் கலைந்துகிடந்த குழலையும் அவள் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள்.

பின் அவள் எழுந்து “இளையோரே, மலர்களை மாலையாக்கி மூதாதையருக்கு சூட்டுங்கள்” என்றபின் தலையாடையை இழுத்துவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள். அவன் தலை தூக்கி நோக்கியபின் மீண்டும் தலைகுனிந்துகொண்டான். அவன் விழிகள் சிவந்து நீர்படர்ந்திருந்தன. காய்ச்சல் கண்டவன் போல அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். குந்தி அவன் தோளைத் தொட்டு “மூத்தவனே” என்று மெல்ல அழைத்தாள். அவன் “நான் தங்களை எதிர்த்துப்பேசியதை பொறுத்தருள்க அன்னையே” என்றான்.

அவள் மெல்ல விம்மியபடி அவன் தோளில் தலை சாய்த்து “நீ எனக்கு யாரென்று அறிவாயா?” என்றாள். “நீ உன் தந்தையின் வாழும் வடிவம். உன் முகமோ அசைவோ அவர் அல்ல. ஆனால் உன்னுள் அவர் தன்னை பெய்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றாள் . அவன் திரும்பி அவளை நோக்கினான். அந்த நெகிழ்ச்சியை ஒருபோதும் அவளில் கண்டதில்லை. அவள் பிறிதொருத்தியாக ஆகிவிட்டது போல் தெரிந்தாள்.

குந்தி பெருமூச்சுடன் “நீ உன் பெரியதந்தையின் சிலையுடன் வந்ததை சற்றுக்கழித்து நினைத்தபோது அதையே உணர்ந்தேன். குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்... உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.”

“ஆம், நானும் அதை உள்ளூர உணர்கிறேன். அச்சொற்கள் என் தந்தையுடையவை” என்றான் தருமன். “மூத்தவருக்காக அல்ல. என் கணவருக்காக அந்தக்கல் அங்கே அமரட்டும். நம் வணக்கங்களையும் மலரையும் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள் குந்தி. சிலகணங்கள் அகச்சொற்களை அளைந்தபின் “உன் தந்தையை நான் நினைக்காது ஒருநாள் கூட கடந்து சென்றதில்லை. அவரை மார்த்திகாவதியின் மணஏற்பு அவையில் நோக்கிய அந்தக்கணம் முதல் ஒவ்வொரு நாளும் நினைவில் கற்செதுக்குபோல பதிந்துள்ளது.” அவள் ஏதோ சொல்லவந்தபின் தயங்கினாள். பின் அவனை நோக்கி “உன்னிடம் மட்டுமே நான் சொல்லமுடியும்” என்றாள். அவன் அவளை வெறுமனே நோக்கினான்.

“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்...” என்றாள்

“ஆனால் சௌவீர மணிமுடியை அணிந்து மயிலணையில் அமர்ந்து பெருங்கொடையளித்து முடிந்ததுமே என் அகத்தில் பெரும் நிறைவின்மையையே உணர்ந்தேன். அடியற்ற ஆழமுடைய ஒரு பள்ளம். அதில் பாரதவர்ஷத்தையே அள்ளிப் போட்டாலும் நிறையாது. இப்புவியின் எந்த இன்பமும் அதை நிரப்ப முடியாது.” குந்தி கைகளைக் கூட்டி அதன் மேல் வாயை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். பின் மெல்லியகுரலில் “இன்று நான் அறிந்தேன்... இந்தப் பெண் கொண்டது போன்ற இத்தகைய பெருங்காதலை நான் அறியாததனால்தான் என் அகத்தில் அந்தப் பெரும் பள்ளம் உருவானதோ என்று. உன் தந்தையை நான் விரும்பினேன். அவர் மேல் இரக்கம் கொண்டிருந்தேன். அவருக்கு அன்னையும் தோழியுமாக இருந்தேன்.” குந்தி ஒருகணம் தயங்கினாள்.

பின்னர் “உன்னைப்போன்று எளிய மானுடர்மேல் கருணைகொண்டவனே இதைப் புரிந்துகொள்ளமுடியும் மைந்தா! நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது? தெரியவில்லை. அவன் எத்தகைய சான்றோனாக இருப்பினும், எத்தனை பேரன்புகொண்டவனாக இருப்பினும் அந்தக் கசப்பு எழுந்து அவள் நெஞ்சின் அடியில் உறைந்துவிடுகிறது. பின்னர் எந்த உணர்ச்சியின் முனையிலும் குருதித் தீற்றல் போல படிந்துவிடுகிறது. அவர் மேல் அதை அன்னையின் சலிப்பாக மாற்றி வெளிப்படுத்தினேன். தோழியின் சினமாக ஆக்கி காட்டினேன். அக்கறை, பதற்றம் என்றெல்லாம் மாறுவேடமிட்டு வெளிவந்தது அக்கசப்பே. இப்போது தெரிகிறது, உன் தந்தையின் அகத்தின் ஆழமும் அதை எப்படியோ அறிந்திருந்தது என. ஆகவேதான் அவர் எப்போதும் காட்டில் இருந்தார். நான் அவருடன் வாழ்ந்தேன் என்றாலும் அவருடன் இருந்த நேரம் மிகமிகக் குறைவே.”

“அதில் உங்கள் பிழையென ஏதுமில்லை அன்னையே” என்றான் தருமன். “நீங்கள் ஊழ்வினையைச் சுமக்க நேர்ந்த பெண். வாழ்க்கை அளிக்கும் உணர்ச்சிகளை நாம் நம்முள் கொண்டு அலைகிறோம்” என்றான். “தந்தை உங்களை அறிந்திருந்தார். உங்கள் மேல் சற்றும் சினம் கொண்டிருக்கவில்லை. அவர் உங்களைப்பற்றி என்னிடம் பேசிய தருணங்களின் முகபாவனையை நன்கு நினைவுறுகிறேன். அவர் கண்களில் பெரும் பரிவும் அன்புமே வெளிப்பட்டது.” குந்தி “ஆம், அதை நானும் அறிவேன். அவர் என் கனவில் ஒருபோதும் அன்பில்லாத விழிகளுடன் வந்ததில்லை” என்றாள்.

குந்தியின் முகம் மலர்ந்தது. புன்னகையுடன் திரும்பி “இன்று இப்பெண்ணின் காதலைக் கண்டு எரிந்த என் அகம் மறுகணமே குளிர்ந்து அவளை ஏற்றுக்கொள்ள முடிந்தபோது நான் என்னைப்பற்றி நிறைவடைந்தேன். அன்று நான் எவ்வண்ணம் வெளிப்பட்டிருந்தாலும் உன் தந்தை விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண் என்னுள்ளும் வாழ்கிறாள்” என்றாள். தருமன் “வெளிப்படுத்தபடாதுபோன அன்பென இவ்வுலகில் ஏதும் இருக்கமுடியாது அன்னையே. அவர் இன்றில்லை. ஆனால் அவரது உணர்ச்சிகளை தாங்கள் இன்று நினைவுகூர முடியும். அதில் தெரிந்த காதலை நீங்கள் அறியவும் முடியும். அந்தக் காதல் உங்களிடமும் வாழ்கிறது.”

குந்தி பேசாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்தன. “இல்லையேல் நீங்கள் அவரை இத்தனைகாலம் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொள்ள மாட்டீர்கள்... அது குற்றவுணர்ச்சியால் என நீங்கள் எண்ணுகிறீர்கள். மனிதர்களால் குற்றவுணர்ச்சியையும் நன்றியுணர்ச்சியையும் எளிதில் கடந்துசெல்லமுடியும். கடக்கமுடியாததும் காலம்தோறும் வாழ்வதும் அன்பே” என்றான் தருமன். “உங்களுக்குள் ஆழ்ந்த காதல் இருந்திருக்கிறது அன்னையே. ஆனால் அதை இயல்பாக வெளிப்படுத்தும் சூழல் அமையவில்லை. அவ்வளவுதான்.”

“ஆம், இருக்கலாம்...” என்றாள் குந்தி.புன்னகையுடன் குனிந்து “இங்கே இப்படி வந்தமர்கிறீர்களே, இதுவே என் தந்தைமேல் நீங்கள் கொண்டுள்ள காதலுக்குச் சான்று. என் தந்தையே நான் என உங்கள் அகம் உணர்கிறது. என்னிடம் மட்டுமே அது தன்னைத் திறக்க முடிகிறது“ என்றான் தருமன். முகம் மலர்ந்து “ஆம்” என்று சொல்லி வெண்பற்கள் தெரிய குந்தி சிரித்தாள். “ஆனால் என்னருகே இப்படி வந்து அமர்வதற்குக்கூட உங்களுக்கு இத்தனை காலம் தேவைப்படுகிறது.” என்றான் தருமன். குந்தி சிரித்துக்கொண்டு எழுந்தாள்.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 5

குந்தியும் தருமனும் இறைபீடம் அருகே வந்தபோது நகுலனும் சகதேவனும் மூதாதைக் கற்களுக்கு மலர்மாலை சூட்டியிருந்தனர். குந்தி தூக்கி வீசிய திருதராஷ்டிரருக்குரிய கல்லை எடுத்து சற்று அப்பால் தனியாக நிற்கச்செய்திருந்தான் சகதேவன். கைதவறி விழுந்தது போல அதன் அருகே ஒரு மலர் போடப்பட்டிருந்தது. குந்தி அதை நோக்கியதும் அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். குந்தி “சகதேவா, அதையும் எடுத்து பீடத்தின் அடியில் மண்ணில் வை” என்றாள். கூர்ந்த விழிகளுடன் திரும்பிய அர்ஜுனன் “அது யார்?” என்றான். “உன் பெரியதந்தை திருதராஷ்டிரர்” என்றாள் குந்தி. “உன் தந்தையால் வணங்கப்பட்டவர், ஆகவே உங்களாலும் வணங்கப்படவேண்டியவர்.”

அர்ஜுனன் இயல்பாக தருமனை நோக்கியபின் பார்வையை திருப்பிக்கொண்டு “படையலுணவை கொண்டுவரலாமா?” என்றான். “உணவுகளை தனித்தனியாக இலைகளில் கொண்டு வா” என்றாள் குந்தி. “மூத்தவனே, மணமக்களை அழைத்துவா!”. தருமன் புன்னகையுடன் சற்று அப்பால் இளவெயிலில் பாறைமேல் அமர்ந்திருந்த இடும்பியையும் பீமனையும் பார்த்தான்.

அவர்களை ஆவலுடன் வாய் திறந்து நோக்கியபடி குரங்குகள் அமர்ந்திருந்தன. பீமன் இடும்பியிடம் சிரித்தபடி ஏதோ பேசிக்கொண்டிருக்க சில பெண்குரங்குகள் அவன் காலைப்பிடித்து அசைத்து அவனிடம் தாங்களும் பேசின. அவன் அவர்களை பார்வையால் விலக்கி பேசிக்கொண்டிருந்தான்.தருமன் “என்ன பேசுவார்கள் அப்படி?” என்றான் நகுலன் “மூத்தவரே காதல்கொண்டவர்கள் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். நான் கண்டிருக்கிறேன்” என்றான். குந்தி சிரித்து “போய் அழைத்துவா” என்றாள்”

தருமன் பீமனை அணுகி பீமனிடம் “இளையோனே, தந்தையரின் வாழ்த்துக்களைப் பெற வா” என்றான்.தருமனை நோக்கி ஓடிவந்த சூர்ணன் எழுந்து நின்று வாயில் கைவைத்து நோக்கியபின் பீமனிடம் “விசித்திரமான மனிதன்...” என்று சொன்னான்.பீமன் பொய்ச்சினத்துடன் “விலகிப்போ” என்றான். தருமன் “சூர்ணனுக்கு என் மேல் ஓர் இளக்காரம் இருந்துகொண்டே இருக்கிறது இளையவனே” என்றான். சூர்ணன் மேலும் ஏதோ சொல்ல இடும்பி உரக்கச் சிரித்தாள். பீமன் அவள் சிரிப்பைப் பார்த்தபின் சற்று தாழ்ந்த தொனியில் “இவர்கள் வெளிப்படையாகச் சிரிப்பவர்கள் மூத்தவரே” என்றான். “சிரிக்கையில் மிக அழகாக இருக்கிறாள். இளையோனே, நம் குலத்தில் முதல் மகவு இவளைப்போன்ற பெண்ணாக இருந்தால் நல்லது” என்றான். “பெண்பிறந்த குலம் அரசு முளைக்கும் ஈரநிலம் என்பார்கள்”

பீமன் திரும்பி இடும்பியிடம் அதைச் சொல்ல அவள் மீண்டும் உரக்கச்சிரித்தாள். அவன் அவள் கையைப்பற்றி “வா” என்றான். அவர்களை சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் எங்கே போகிறீர்கள் என்ன என்பது போல பார்த்தனர். தன் வாலைப்பிடித்து இழுத்த இன்னொரு சிறுவனை துரத்திக்கொண்டிருந்த சூர்ணன் அரைவட்டமடித்து ஓடிவந்து பீமனை நோக்கியபின் வாருங்கள் நானே அழைத்துச்செல்கிறேன் என்ற பாவனையில் வாலைத்தூக்கியபடி கைகளை ஊன்றி முன்னால் சென்றான். அவன் அனைத்து தோரணைகளிலும் அவனுடைய குலத்தின் மூத்த குரங்கை போலி செய்வது தெரிந்தது. இடக்காது சற்று கிழிந்திருந்த அந்த முதுகுரங்கு அடிக்கடி கையால் காதை தொட்டுக்கொள்வதுபோலவே சூர்ணனும் செய்தான்.

பீமனும் இடும்பியும் குரங்குகள் சூழ மரத்தடியை நோக்கி வந்தனர். சூர்ணனை சிறுமி ஒருத்தி வாலைப்பிடித்து இழுக்க அவன் சீறி பற்களைக் காட்டி கடிப்பதற்காக தாவிச்சென்றான். இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சீறிக்கொண்டு முன்னும் பின்னும் சென்றபின்னர் ஒன்றுமே நிகழாதவர்கள் போல ஓடி முன்னால் வந்தனர். “அவள் மண் நிறமானவள். ஆகவே அவள் பெயர் தூளிகை” என்றான் தருமன். “அவனுக்கு நிகரானவள். சிறந்த மைந்தர்களை அவர்கள் பெறக்கூடும்.”

நகுலன் “இவர்களில் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் மாதம் இது என நினைக்கிறேன். மணமங்கலத்துக்கு உகந்தது” என்றாள் குந்தி. தூளிகை ஓடிச்சென்று மூதாதையர் பீடத்தில் ஏற முயல பீமன் அவளை ஒலியெழுப்பி கண்டித்தான். அவள் திரும்பி அத்தி மரத்தில் ஏறி அடிமரத்தின் பட்டைப்பொருக்கிலேயே தொற்றி தலைகீழாக அமர்ந்து கீழே நோக்கி கண்களைச் சிமிட்டினாள். சூர்ணன் ஓடிச்சென்று முன்னால் அமர்ந்துகொண்டு பின்னங்காலால் கழுத்தைச் சொறிந்துகொண்டு நோக்கியபின் அண்ணாந்து பீமனிடம் “இதெல்லாம் என்ன?” என்றான்.

பீமன் “உணவை உண்ணப்போகிறோம்” என்றான். “உண்ணாமல் ஏன் நின்றிருக்கிறீர்கள்?” என்றான் சூர்ணன். பீமன் “பேசாமல் இரு” என்றான். “அப்படியே பாய்ந்து உண்ணவேண்டியதுதானே?” என்றான் சூர்ணன் மீண்டும் “இந்தக் கற்களுக்கு ஊட்டியபின்னரே உண்போம்” என்றான் பீமன். “கற்களுக்கா? ஏன்?” என்றான் சூர்ணன். “இவை எங்கள் முன்னோர்கள்”. சூர்ணன் நம்பாமல் தன் அன்னையை நோக்கினான். அன்னை ‘எனக்கென்ன தெரியும்?’ எனஉதடுகளை நீட்டிக்காட்ட அவன் சலிப்புடன் தலையில் கையால் தட்டியபடி பின்னால் திரும்பி வந்து தன் தாயின் வயிற்றுக்கு அடியில் அமர்ந்துகொண்டான். பீமன் நகைக்க “என்ன?” என்றான் தருமன். பீமன் அந்த உரையாடலைச் சொன்னான். தருமன் “அவர்களுக்கு மூதாதையர் இல்லையா என்ன?” என்றான். “இருக்கிறார்கள். ஆனால் இறப்புக்குப்பின் அவர்கள் எவ்வகையிலும் வாழ்வதில்லை” என்றான் பீமன். “மனிதர்கள் இறப்புக்குப்பின்னர்தான் வாழத்தொடங்குகிறார்கள்” என்றான் தருமன்.பின்னர் சிரித்தபடி “அதன்பிறகுதான் மனிதவாழ்க்கையில் கூடுதலாக ஈடுபடவும் செய்கிறார்கள்”

குரங்குகள் கால்மடக்கி அமர்ந்துகொண்டு சலிப்புடனும் சற்று ஐயத்துடனும் நிகழ்வதை நோக்கின.பொறுமையிழந்தபோது உடலைச் சொறிந்துகொண்டோ இன்னொரு குரங்கை நோக்கி சீறியோ கலைந்தன. அப்போது மூத்தகுரங்கு திரும்பி சினம் கொண்ட விழிகளால் நோக்கி கண்டித்தது. அர்ஜுனன் உணவை இலைகளில் பரப்பி வைத்து மலரிட்டு வணங்கினான். அதன்பின் பீமனும் இடும்பியும் சென்று மலரிட்டு மூதாதையரை வணங்கினர். படைக்கப்பட்டிருந்த உணவையும் அவர்களின் மலரிடும் கைகளின் அசைவுகளையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய குரங்கு அவர்களின் உடல் பார்வையை மறைக்கவே பக்கவாட்டில் தாவிச் சென்று அத்திமரத்தில் ஏறிக்கொண்டது. உடனே ஏழெட்டு பெரிய குரங்குகள் பாய்ந்து மரத்தில் ஏறி கிளைகளில் அமர்ந்து குனிந்து நோக்கின. மரம் அதிர்ந்து அதிலிருந்து கனிகளும் மலர்களும் உதிர்ந்தன. குந்தி முகம் மலர்ந்து “அது மூதாதையரின் வாழ்த்து! பெருந்திறல் கொண்ட மைந்தன் பிறப்பான் என்பதற்கான சான்று” என்றாள்.

மணமக்கள் மூதாதையரை வணங்கியபின் குந்தியையும் தருமனையும் வணங்கினர். குந்தி “நன்மகன் பிறந்து வரட்டும்” என்றாள். தருமன் “இளையோனே, இக்காட்டின் அத்தனை தெய்வங்களின் அருளும் நம் மூதாதையர் வாழ்த்தும் உன்னுடன் இருக்கட்டும்” என்றான். நகுலன் “மங்கலஇசை மட்டும்தான் குறைகிறது” என்றான். சகதேவன் “காட்டின் ஒலி கேட்கிறதே... அது இசைதானே?” என்றான். “உண்ணும் நிலையில் உணவு உள்ளதா இளையவனே, இல்லையேல் மூதாதையருக்குப் படைப்பதுபோல எனக்கும் படைத்து மலரிட்டு வணங்கிவிடு...” என்றான் பீமன். அர்ஜுனன் “நான் பாரதவர்ஷத்தின் மாபெரும் சமையற்காரரின் இளையவன்.என் கையில் அவரது கையின் வெம்மை உள்ளது ” என்றான். பீமன் நகைத்தான்.

உணவுண்பதற்காக அவர்கள் வட்டமாக அமர்ந்துகொள்ள பின்பக்கம் வழியாக பீமனின் மடிமேல் ஏறி மறுபுறம் குதித்து வந்த சூர்ணன் நடுவே நின்று சுற்றி இருப்பவர்களை நோக்கி திகைத்தபின் “என்ன செய்கிறீர்கள்” என்றான். “உண்ணப்போகிறோம்” என்றான் பீமன் “அதற்கு ஏன் இப்படி அமர்கிறீர்கள்? வானைநோக்கி ஊளையிடப்போகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்”. பீமன் “நாங்கள் இப்படித்தான் உண்போம்”என்றான் பீமன். சலிப்புடன் தலையைத் தட்டியபடி திரும்பிய சூர்ணன் தருமனை தலைசரித்து நோக்கி கையை சுட்டி ஏதோ சொல்லப் போன போது தூளிகை பீமனின் மடியில் ஏறுவதைக் கண்டு பாய்ந்து ஓடிவந்து அவளை சீறி விலக்கி மீண்டும் பீமன் மடிமேல் ஏறி அமர்ந்துகொண்டான். தருமன் “அவர்களும் நம்முடன் உணவுண்ணட்டும்... நம் குலத்தின் முதல் மணநிகழ்வு பொதுவிருந்து இன்றி நிகழவேண்டியதில்லை” என்றான். பீமன் புன்னகைத்து “ஆம்” என்றபின் குரங்குகளிடம் தங்கள் வட்டத்துடன் வந்து அமர்ந்து தங்களுடன் உணவுண்ணும்படி சொன்னான். பெரிய குரங்கு தலையை வேண்டாமென்பது போல மேலும் கீழும் அசைத்து “அதனாலென்ன, நாங்கள் இங்கிருக்கிறோம்” என்றது.

பீமன் “எங்கள் மகிழ்ச்சிக்காக” என்றான். பெரியகுரங்கு “அது முறையல்ல...” என்றது. ஆனால் முதிய பெண்குரங்கு ஒன்று “நாங்கள் வருகிறோம்” என்றது. அதை நோக்கி பெரியகுரங்கு சீறியதென்றாலும் பெண்கள் கைகளை ஊன்றி நிரையாக நடந்து வந்து குந்தி அமர்ந்துகொண்டனர். அவர்களை நோக்கியபின் மூத்தகுரங்கையும் நோக்கி சற்று சிந்தித்த பின்னர் ஆண்குரங்குகளும் வந்து அமர்ந்தன. பெரிய குரங்கை ஒரு பெண்குரங்கு அழைக்க அது சீறியது. பீமன் அதை நோக்கி “என்னை வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். அது அவனை சில கணங்கள் இமைக்காது நோக்கிவிட்டு உடலை சொறிந்தது. பார்வையை விலக்கி அத்தி மரத்தை நோக்கிவிட்டு ஒரு ஈயை துரத்தியது. பின்பு மெல்ல கைகளை ஊன்றி நடந்துவந்து பீமனின் அருகே இருந்த ஒரு குரங்கை மெல்லிய உறுமலில் எழுந்து விலகச் செய்துவிட்டு அமர்ந்துகொண்டது. உறுமுவதுபோல “உனக்காக. நீ முதலையை அஞ்சாத வீரன்” என்றது.

பீமன் சூர்ணனிடம் “இங்கே எங்களுடன் அமர்ந்து பழங்களை உண்” என்றான். “அந்தப் பெரிய பழத்தை எனக்குக் கொடுத்தால் நான் மரங்களில் அமர்ந்து உண்பேன்” என்றான் சூர்ணன். பீமனின் கைகளின் நடுவே புகுந்து அவன் முன்னால் அமர்ந்து ஏறிட்டு நோக்கி “நான் பழங்களை எடுத்துக்கொள்ளலாமா?” என்றாள் தூளிகை. பீமன் “வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான். சூர்ணன் பாய்ந்து சென்று மிகப்பெரிய அத்திப் பழத்தை எடுத்துக்கொண்டு தூக்கமுடியாமல் கீழே போட்டு மீண்டும் எடுத்துக்கொண்டு தருமனை நோக்கியபின் பீமனிடம் “அவன் என் பழத்தை பறித்துக்கொள்ள நினைக்கிறான்” என்றான். தூளிகை தருமனை நோக்கியபின் “அவரா?” என்றாள். “ஆம், விசித்திரமான மனிதன்” என்றான் சூர்ணன்.

குந்தி அனலில் சுட்டு தேன் ஊற்றப்பட்ட கிழங்குகளையும் சுட்ட பழங்களையும் இலைகளில் பரிமாறினாள். சிரித்தபடி “குரங்குகளுடன் உணவுண்பதை அன்னை எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்” என்றான் பீமன். “ஆம்... ஆனால் அவர்களிடம் மதிப்புமிக்க ஏதோ ஒன்று உள்ளது. பண்பட்ட பழங்குடியினர் போலிருக்கிறார்கள்” என்றாள் குந்தி. “இதற்குமுன்னரும் நெடுநாள் காட்டில் வாழ்ந்திருக்கிறேன். காட்டையும் கண்டதில்லை, குரங்குகளையும் அறிந்ததும் இல்லை.” அர்ஜுனன் “நீங்கள் எங்களையும் அறிந்ததில்லை அன்னையே” என்று அவளை நோக்காமல் சொன்னான். குந்தி முகம் சிவந்து ஒருகணம் திகைத்தபின் “ஆம், உண்மைதான்” என்றாள்.

சூர்ணன் அத்திப்பழத்தை காலால் உருட்டி விட்டுவிட்டு மீண்டும் பழங்களை நோக்கி சென்றான். “ஏன் அந்தப்பழத்தை உண்ணவில்லை?” என்றான் பீமன். “நான் அந்தச் சிறிய பழத்தை உண்பேன்” என்றான் சூர்ணன். “சரி, இந்தப்பழத்துக்கு என்ன?” என்று பீமன் கேட்டான். “இது கெட்ட பழம். மனிதர்கள்தான் உண்பார்கள். நாங்கள் சிறந்த பழங்களையே உண்போம்” என்றபின் பாய்ந்து சென்று ஒரு சிறிய அத்திப்பழத்தை எடுத்துக்கொண்டான். சூர்ணனின் அன்னை அந்தப் பெரிய பழத்தை எடுத்துக்கொண்டு “அவன் அப்படித்தான் நிறைய உணவை வீணடிப்பான்” என்றாள். “இந்தக்காட்டில் உணவு நிறைய உள்ளது.... நான் இளமையில் அப்பால் ஒரு வரண்ட காட்டில் இருந்தேன். அங்கே நாங்கள் பெரும்பாலும் தளிரிலைகளையே உண்போம்” என்றது முதிர்ந்த குரங்கு ஒன்று. “இந்த இளையவர்களுக்கு உணவின் அருமை தெரியவில்லை.”

குந்தி அர்ஜுனனை நோக்காமல் “நீ சொல்வது உண்மைதான் இளையோனே, நான் உங்களை அறிந்ததே இல்லை. என் உள்ளமெங்கும் நிறைந்திருந்தது அச்சமும் ஐயமும்தான். அவற்றைப்போல கண்களை மறைக்கும் திரை வேறில்லை” என்றாள். “இப்போது எண்ணும்போது வியப்பாகவே உள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நான் எண்ணியதை முழுக்க ஒற்றை வரியாக சுருக்கிவிடலாம். தருமன் முடிசூடி அஸ்தினபுரியை ஆளவேண்டும், அவ்வளவுதான்.” பீமன் புன்னகையுடன் “அந்த விழைவு இன்றில்லையா?” என்றான்.

குந்தி “ஆம், உள்ளது. ஆனால் அதுவல்ல இன்று எனக்கு முதன்மையானது. இந்தக்காட்டில் நுழைந்ததுமே என் அகம் திறந்தது. நேற்று இரவு மரத்தில் மைந்தருடன் அமர்ந்திருக்கும் அன்னைமந்தி போல் உணர்ந்தேன். அப்படி இருப்பது அளித்த நிறைவை அங்கே அஸ்தினபுரியில் அரியணையில் தேவயானியின் மணிமுடி சூடி அமர்ந்தால் அடைய முடியாது. இளையோனே, மனிதர்கள் சின்னஞ்சிறிய இடத்தில் உடலால் உடலை அறிந்துகொண்டு ஒட்டி கூடி வாழும்படி பிறந்தவர்கள். மலைமக்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். எளியவர்களின் இல்லங்களும் சிறிதே. மாளிகைகளின் விரிந்த அறைகள் மனிதர்களை ஒருவரை ஒருவர் விலக்குகின்றன. ஒவ்வொருவரையும் தனிமையாக்கி ஐயங்களால் அகத்தை நிறைக்கின்றன” என்றாள்

“நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்” என்றாள் குந்தி. “அதில் நான் ஒரு எளிய மலைமகளாக ஒரு சிறிய புற்குடிலில் உங்களுடன் வாழ்கிறேன். நீங்கள் மிகச்சிறியவர்கள். பீமன் மட்டும் என்னளவு இருக்கிறான். பிற நால்வரையும் நான் என் உடலிலேயே சுமந்துகொண்டு நடக்கிறேன். வேட்டையாடி உணவைப் பகிர்ந்து அளிக்கிறேன். ஒரு மலையருகே சென்று நின்றபோது குரங்குகளின் ஒலியை கேட்டேன். நிமிர்ந்து நோக்கினால் ஏராளமான குரங்குகள் மேலிருந்து கீழே நோக்கி ஒலியெழுப்பின. நடுவே உங்கள் தந்தை தெரிந்தார்...” பீமன் நகைத்து “இரவில் அனைவர் கனவிலும் குரங்குகள் வந்திருக்கும். ஒரு கணம் ஓயாமல் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்...” என்றான்.

“நான் உங்கள் தந்தையிடம் தேனை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றேன். அவர் மலைத்தேன் தட்டுக்களை கயிற்றில் கட்டி தலையில் சூடியபடி பாறைகளில் குரங்கைப்போல தொற்றி இறங்கி வந்தார். அவரது உடலெங்கும் தேன் வழிந்தது. நீங்கள் ஐவரும் அவரை நெருங்கி அவர் உடலை நக்கி அந்தத் தேனை அருந்துவதைக் கண்டு நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். சிரிப்பில் என் உடல் அதிர்வதை நானே உணர்ந்து விழித்துக்கொண்டேன். பின்னர் இருளுக்குள் முகம் மறைத்து ஏங்கி கண்ணீர் விட்டேன்” என்றாள் குந்தி.

அவள் முகம் சிவந்திருந்த்து. கண்ணீரை மறைப்பது போல பார்வையை திருப்பியபின் பெருமூச்சுடன் ஆடைநுனியால் முகம் துடைத்து புன்னகையுடன் நோக்கி “இனி எனக்கு எது முதன்மையானது என்று அப்போது தெரிந்தது. நீங்கள் ஒருபோதும் பிரியாமலிருக்கவேண்டும். எப்போதும் உங்களுடன் நான் இருக்கவேண்டும். நான் முதியவளாகிவிட்டேன். இனி உங்களுடன் எனக்கு எந்தத் தடையும் இல்லை” என்றாள். தூளிகை தன் அன்னையை அணைத்துக்கொண்டு துயிலில் ஆழ்ந்து சரிந்து விழுந்து எழுந்து திகைத்து நோக்கினாள். சிரித்தபடி துள்ளிச்சென்ற சூர்ணன் அவள் வாலைப்பிடித்து இழுத்துவிட்டு ஓட இருவரும் ஒருவரையொருவர் துரத்தியபடி ஓடி மரத்தின் மேல் ஏறிக்கொண்டனர்.

முதிய குரங்கு “சிறந்த உணவு என்று சொல்லிவிடமுடியாது” என்றது. ஒரு பெண்குரங்கு “உங்களுக்கு இப்போது குடல் தளர்ந்துவிட்டது” என்றாள். முதியவர் அவளை நோக்கி பற்களைக் காட்டி சீறியபின் பீமனிடன் “இப்போதுள்ள பெண்களுக்கு முறைமைகளே தெரியவில்லை” என்றார்.பீமன் “ஆம், உலகம் சீரழிந்து வருகிறது” என்றான். முதியவர் துயரத்துடன் தலையை அசைத்து “உணவு பெருகிவிட்டது... ஒழுக்கம் அழியாமலிருந்தால்தான் வியப்பு” என்றார்”.

அவர்கள் உணவு உண்டு முடித்து எழுந்து கைகளை கழுவிக்கொண்டபோது குரங்குகளும் நீரோடை வரை வந்து அவர்களை தலை தூக்கி நோக்கின. குனிந்து நீர் அருந்தி தாடையில் துளி வழிய நோக்கிய பெரிய குரங்கு “இனிமேல் நீ என்ன செய்வாய்?” என்றது. “பேசிக்கொண்டிருப்பேன்” என்றான் பீமன். “பேசிக்கொண்டா?” என்றது குரங்கு வியப்புடன். “அது பெண்கள் செய்வது அல்லவா?” பீமன் “நாங்கள் வேறு வகையில் பேசிக்கொள்வோம்” என்றான். குரங்கு சிலகணங்கள் அவனை நோக்கி இமைகளை மூடித்திறந்தபின்னர் கையூன்றி நடந்து சென்று இளவெயிலில் அமர்ந்துகொண்டது. அது உறுமியதும் இரு பெண்கள் அதை நோக்கி வந்து உடலில் இருந்து உண்ணிகளை பொறுக்கத் தொடங்கினர். பீமனும் அதனருகே சென்று வெயிலில் புல்மேல் மல்லாந்து படுத்து தலைக்குமேல் கைகளை வைத்துக்கொண்டான்.

குந்தி இடும்பியை அழைத்துக்கொண்டு நூலேணியில் ஏறி மேலே சென்றாள். நகுலனும் சகதேவனும் ஒரு பெரிய மூங்கிலை வெட்டி வில் செய்யத் தொடங்கினர். தருமன் சென்று அமர்ந்த பாறையருகே அர்ஜுனன் சென்று அமர்ந்துகொண்டு “மூத்த தந்தையை நிறுவும்படி நீங்கள் சொன்னீர்களா மூத்தவரே?” என்றான். “ஆம்" என்றான் தருமன். "அவரே நமக்கு இன்றிருக்கும் தந்தை. இன்று இந்த பேருருவம்கொண்ட மலைமகளை நம் உடன்பிறந்தான் மணந்ததை அறிந்தால் பெரிதும் மகிழக்கூடி அவர் நெஞ்சில் அறைந்துகொண்டு நடனமிடுவார்.” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் சற்றுநேரம் வெயிலில் கிடந்த பீமனை நோக்கிக் கொண்டிருந்தான். பின்பு “மூத்த தந்தை உங்களிடம் கோரியிருந்தால் நீங்கள் அரசை அளித்திருப்பீர்களா?” என்றான்.

“இளையவனே, அரசை அல்ல, உயிரையும் விண்ணுலகையும்கூட கோர தந்தைக்கு உரிமை உள்ளது என்கின்றன நூல்கள்” என்றான் தருமன். அர்ஜுனன் “நான் மூத்தவரிடம் பேசினேன். நம்மைக்கொல்ல மூத்த தந்தை ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார் என்று அவர் நினைக்கிறார். வஞ்சத்தால் எரித்தழிப்பது என்பது அகம் குறுகிய கீழ்மகனின் சிந்தையிலேயே எழமுடியும் என்றும் பெரியதந்தையார் ஒருபோதும் அதை செய்யமாட்டார் என்றும் சொல்கிறார்” என்றான். தருமன் “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான். “பெரியதந்தை அகம் விரிந்த மாமதவேழம். ஆனால் அவர் ஷத்ரியரும்கூட. ஷத்ரியர்கள் அரசு சூழ்தலில் அறத்தை கால்தளையாக உணரும் தருணங்கள் உண்டு...” என்றான் அர்ஜுனன். “எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நான் இவ்வாறு செய்வேனா என்று. செய்யமாட்டேன் என்றே முதலில் தோன்றியது. ஆனால் பின்னர் நினைத்துக்கொண்டேன், உரியமுறையில் உந்தப்பட்டால் செய்வேன் என்று. மூத்தவரே போர்முனையில் அறம் என்பதற்கு இடமில்லை”

அர்ஜுனன் சொன்னான் “அவர் நம்மை சிறையிலடைக்க ஆணையிட்டிருக்கலாம். கொல்லவும் ஆணையிட்டிருக்கலாம். தன் மைந்தனுக்கு முடியை அளிக்க அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்பதே உண்மை. ஆனால் அதைச்செய்வதற்கு ஏராளமான அரசியல் தடைகள் உள்ளன. அஸ்தினபுரியில் யாதவர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் நாட்டுமக்களில் அவர்களே பெரும்பாலானவர்கள். குலச்சபைகள் நம்மைத்தான் ஆதரிக்கின்றன. நட்புநாடுகளும் நம்மை ஏற்றுக்கொண்டுவிட்டன. நாம் தொடர்ந்து வெற்றிகள் பெற்று செல்வத்தை கொண்டுவந்திருக்கிறோம். ஆகவே அவரால் அதை செய்யமுடியாது. அவருக்கு இந்த மதிசூழ்கை சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கலாம். அனைத்துக் கோணங்களிலும் வாதிட்டு அவரை ஏற்கவைத்திருக்கலாம். அரையுள்ளத்துடன் அவர் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம்...” அர்ஜுனன் சொன்னான்.

“ஆம், நெறிகளை அறிந்து ஏற்றவரே அறத்தை கடைப்பிடிக்க முடியும். நூலறியாதவர் விலங்குள்ளம் கொண்டவர்தான். பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவராக இருப்பினும் கூட அவர் அகம் காமகுரோதமோகங்களால் கொண்டுசெல்லப்படலாம்” என்றான் தருமன் .”ஆனாலும் அவர் இதைச் செய்வாரா என்றே என் அகம் ஏங்கித்தவிக்கிறது”.அர்ஜுனன் “மூத்தவரே, அவர் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி ஒன்றைச்செய்ய கௌரவர் துணிவார்கள் என நான் நம்பவில்லை. கௌரவர் நூற்றுவரையும் கட்டுப்படுத்தும் ஆணையை அவர்களின் தந்தையே விடுத்திருக்க முடியும்.ஒருவேளை அவர் நேரடியாக ஆணையிட்டிருக்காமல் இருக்கலாம். தன் அமைதி மூலமே ஒப்புக்கொண்டிருக்கலாம்” என்றான் அர்ஜுனன். தருமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அர்ஜுனன் “வென்று செல்பவர்கள் அறத்தை கருத்தில் கொள்வதில்லை. எப்போதும் அறம் பற்றிய குரல் எழுவது பாதிக்கபட்டவர்களிடமிருந்து மட்டுமே” என்றான்.

தருமன் வலிகொண்டவன் போன்ற முகத்துடன் “இளையோனே, அறம் நின்று கொல்லும் என்கின்றன நூல்கள். அவை பொய்சொல்வதில்லை” என்றான். அர்ஜுனன் சலிப்புடன் எழுந்து “மூத்தவரே, நீங்கள் எப்போது இந்தப் பழஞ்சொற்களை விட்டு வெளியே வரப்போகிறீர்கள்?” என்றான். “இந்த நூல்களும் அவற்றிலிருந்து நீங்கள் அள்ளி எடுக்கும் வீண்சிந்தனைகளும் உங்களை பயனற்றவராக ஆக்குகின்றன என்று நீங்கள் அறியவில்லையா? உங்களைச் சூழ்ந்திருக்கும் விழிகளிலும் சொற்களிலும் உள்ள ஏளனத்தை உறுதியாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்...” என்றான். கசப்புடன் முகம் சுளித்து “எங்கும் தோற்காத வில்லும் கதையும் கொண்டிருந்தும் நாம் தோல்வியும் சிறுமையும் அடைகிறோம் என்றால் அது உங்களது இந்த இயல்பினாலேயே” என்று சொல்லி எழுந்துகொண்டான்.

தருமன் தளர்ந்த குரலில் “ஆம் இளையோனே, நான் நீங்கள் நால்வரும் சுமந்தாகவேண்டிய எடையாகவே இருக்கிறேன். என்னைச்சூழ்ந்து ஏளனம் நிறைந்திருப்பதை ஒவ்வொரு முறையும் காண்கிறேன். முழுமையான தனிமையிலேயே என் காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை நான் என் இறப்பிலும் விண்பயணத்திலும்கூட முற்றிலும் தனியனாகவே இருப்பேன்” என்றான். “ஆனால் என் இயல்பு இது. இதை மீறி என்னால் எதையும் செய்ய இயலாது. இந்த உடலை இந்தக் குரலை நான் அடைந்த்துபோலவே இந்த எண்ணங்களையும் அடைந்திருக்கிறேன்.”

உரத்தகுரலில் “ஆனால் அவை நாடாளும் ஷத்ரியர்களுக்குரியவை அல்ல. நீங்கள் அரசாளப்போகிறவர். அமைச்சுப்பணி செய்யும் பிராமணனோ காவியம் கற்கும் சூதனோ அல்ல” என்றான் அர்ஜுனன். சினத்துடன் “நீங்கள் கொண்டிருப்பது ஒரு பாவனை. அறம் என நீங்கள் அந்த உதவாத பழைய நூல்களில் இருந்து எடுத்துக்கொள்பவை உங்களை செயல்களின் பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளும் உத்திகள் மட்டுமே” என்றான். “அந்நூல்களை இனியேனும் சிந்தையில் இருந்து உதறுங்கள். இதோ நாம் அரசும் குடியும் குலமும் செல்வமும் ஏதுமில்லாமல் வெறும்காட்டில் வந்து நின்றிருக்கிறோம். நம் முன் நமது கைகளும் எண்ணங்களும் மட்டுமே உள்ளன. ஷத்ரியர்களாக எழுந்து நமது மண்ணை வென்றெடுப்போம். நம் மூதாதையருக்கு நாம் செய்யவேண்டிய கடன் அதுவே.”

தருமன் கசப்பு படிந்த மென்சிரிப்புடன் “இவ்வினாக்களை நீ இன்னமும் கூட கூர்மையுடன் கேட்கலாம் பார்த்தா. நான் இவற்றை பலநூறுமுறை எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அறம் என்ற சொல்லை ஒரு திரையாகத்தான் கொண்டிருக்கிறேனா? வெறும் கேடயமாக வைத்திருக்கிறேனா? என் இயலாமைகள்தான் அதை நோக்கி என்னை கொண்டு செல்கின்றனவா? எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும், எவ்வளவு ஆழத்திற்குச் சென்று உசாவினாலும், இல்லை என்றே என் அகம் சொல்கிறது இளையோனே. நீ சற்று முன் சொன்னாயே, ஆற்றலற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களுமே அறம் எனக்கூவுகிறார்கள் என்று. அது உண்மையாக இருக்கலாம். என் உடலோ அகமோ எதுவோ ஒன்று என்னை எப்போதும் ஆற்றலற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளச் செய்கிறது. அவர்களில் ஒருவனாக உணரச் செய்கிறது.”

அந்த அக எழுச்சியில் தருமன் தனக்குரிய சொற்களை கண்டுகொண்டான்.“வெற்றுச் சொற்கள் என நீங்கள் சொல்லும் இந்நூல்கள் என்றோ வாழ்ந்த நம் முன்னோடிகளின் எண்ணங்கள். அவற்றை நாம் அறியவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்ற பெருவிழைவால் அவர்கள் அதை ஏட்டில் எழுதினார்கள். ஒவ்வொரு முறை ஏடு ஒன்றைத் தொடும்போதும் நான் எண்ணுவதுண்டு. இச்சொற்களை எழுதுகையில் அந்த மூதாதை அகம் எப்படி கனிந்திருக்கும் என்று. என்றோ காலத்தின் மறு எல்லையில் பிறக்கவிருக்கும் மைந்தர்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்றும் உவகையும் நிறைவும் அடையவேண்டும் என்றும் அவர் எண்ணியிருக்கிறார். தாங்கள் அடைந்த இடர்களை அவர்கள் அடையக்கூடாது என்று உறுதிகொண்டிருக்கிறார்...”

“நூல்கள் வெறும் சொற்களல்ல பார்த்தா! சென்று மறைந்த நம் மூதாதையரின் வாழ்த்துக்கள் அவை. அவர்களின் கண்ணீர் ,புன்னகை, கனிவு அனைத்தும் அடங்கியவை. நூல்களைத் தொடும்போது நான் அவர்களை மிக அண்மையில் அறிகிறேன். நீங்கள் ஷத்ரியர்கள். வாளேந்தியவர்கள். அதனாலேயே வாளையும் தோளையும் நம்புபவர்கள். உங்களுக்கு உதவாத தடைகளையும் ஐயங்களையும் மட்டும் அளிக்கும் சொற்குவியல்களாக இவை இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். நீ என்றல்ல, அத்தனை ஷத்ரியர்களுக்கும் நூல்களும் அறமும் உள்ளூர இளக்காரத்தையே அளிக்கின்றன” என்றான் தருமன். அகவிரைவால் அவன் சொற்கள் திக்கின. “ஆனால் நான் தோள்வல்லமை இல்லாத ஒரு தந்தையின் மைந்தன். அவரது உடலாக இப்புவியில் வாழும் பொருட்டு வந்தவன். என் கையில் படைக்கலம் நிலைக்கவில்லை. என் தோள்களில் வலிமையும் திரளவில்லை. அது இந்நூல்களின் சொற்களை நான் கற்று உள்வாங்கவேண்டுமென்பதற்காக என் தந்தை இட்ட ஆணை என்றே கொள்கிறேன்.”

அர்ஜுனன் பொறுமையின்றி தலையை அசைத்தான். தலைநிமிர்ந்து திசைமுடிவை நோக்கியவனாக தருமன் சொன்னான் “ஆம், நான் உறுதியுடன் இருக்கிறேன். நான் அறநூல்களின்படியே வாழப்போகிறேன். என்னால் மூத்தவர்களை மீற முடியவில்லை. என் இளையோர் மீதான அன்பிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அனைத்தையும்விட என் தன்முனைப்பும் ஆசைகளும் என்னை அலைக்கழிக்கின்றன. அறத்தில் நான்கொண்டிருக்கும் பற்றே அறம் நிலைக்கும் அரசொன்றை என் மக்களுக்கு அளிக்கவேண்டுமென்ற கனவையும் என்னுள் நிறைக்கிறது. அவ்வரசை அடையும் பாதையில் நான் அறத்தை சிறிது சிறிதாக இழப்பதையும் உணர்கிறேன். பார்த்தா, ஒவ்வொருநாளும் என் அறநம்பிக்கையில் செய்துகொள்ளும் சமரசங்களால் ஆனது என்றே உணர்கிறேன். ஒவ்வொரு சமரசத்துக்குப்பின்னரும் தனிமையில் நான் உருகி அழிகிறேன். ஆகவே என் வாழ்க்கை என்பது பெரிய வதையாகவே இக்கணம் வரை இருந்துள்ளது.”

தருமன் அர்ஜுனனை நோக்கி “ஆயினும் நான் அதைத்தான் செய்யப்போகிறேன். அறநூல்கள் சொல்லும் வாழ்க்கையை அன்றி பிறிதை ஏற்கமாட்டேன். இறுதிக்கணம் வரை. இத்தனை சொற்களை எழுதிவைத்த முன்னோர் அவற்றை ஒருவன் வாழ்க்கையில் நிறைவேற்ற முயன்றான் என்பதை அறியட்டும். அவர்கள் மகிழட்டும். நான் தோற்றேன் என்றாலும் அவர்கள் மகிழவே செய்வார்கள்” என்றான். அர்ஜுனன் “மூத்தவரே, நான் இதற்கு அப்பால் ஒன்றும் சொல்ல விழையவில்லை. உங்கள் எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.நான் ஷத்ரியன், வெற்றிக்கு நிகராக எதையுமே என்னால் ஏற்றுக்கொள்ளவும் இயலாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன், என் வெற்றி என்பது தங்கள் வெற்றியே” என்றான். தருமன் புன்னகையுடன் “ஆம், நான் அதை அறிவேன்” என்றான்.

குந்தியும் இடும்பியும் இறங்கி வருவதை அர்ஜுனன் நோக்கி புன்னகைத்தான். இடும்பி புலித்தோலால் ஆன ஆடையை இடையில் சுற்றி வளைத்து மேலாடையாகவும் அணிந்திருந்தாள். அது அவளுக்கு பழக்கமில்லாததனால் இடக்கையால் அதை தோளுடன் அழுத்திப்பிடித்து வலக்கையால் அதன் இடைப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டிருந்தாள். குரங்குகள் அதைக் கண்டு திகைத்து எழுந்து ஒன்றுசேர்ந்து ஓசையிட்டன. பீமன் எழுந்து அமர்ந்து சிரித்துக்கொண்டே “யார் இவள்? அஸ்தினபுரியின் இளவரசியா?” என்று சொல்ல இடும்பி தலைகுனிந்து முகம்பொத்தினாள். குந்தி முகம் சிவக்கச் சிரித்து “அவளுக்கு நாணவும் தெரிந்திருக்கிறது” என்றாள்.

“அன்னை மலர்ந்துவிட்டாள்” என்றான் தருமன். “இந்தக்காட்டில் மைந்தருடன் அண்மையாக இருப்பது அவள் அகத்தின் முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்துவிட்டது.” அர்ஜுனன் “ஆம் மூத்தவரே. ஆனால் அது தொடங்கியது இக்காட்டில் அல்ல. முன்தினம் சுரங்கப்பாதையில் தமையன் அவர்களைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டபோது” என்றான். தருமன் புருவங்கள் சுருங்க திரும்பி நோக்கினான். “அதன்பின்னர்தான் அவர்களுக்கு நம்மைத் தொடுவதற்கான தயக்கம் இல்லாமலாகியது. நம்மைத் தொட்டபின்னரே அவர்களால் நெருங்க முடிந்தது. அவர்கள் இத்தனை நாள் தேடியது இதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

குந்தி இடும்பியை அணைத்தபடி வந்து பீமனை நெருங்கியதும் மறுகையால் இயல்பாக அவன் இடையையும் வளைத்து அணைத்துக்கொள்வதை தருமன் நோக்கினான். “இளையோனே, நீங்கள் இருவருமே இருவகையில் கூரியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே மனிதர்களை கிழித்துச்சென்று அறிந்து மதிப்பிட்டபடியே இருக்கிறீர்கள்” என்றான் தருமன். “ஆனால் உங்களைவிட பலமடங்கு கூரியவன் இளைய யாதவன். அவன் எவரையும் ஆராய்வதில்லை. எவரையும் விளக்கிக்கொள்வதுமில்லை. இந்தக் குட்டிக்குரங்கு போல அவன் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு விளையாடுகிறான்.”

அர்ஜுனன் முகம் மலர்ந்து “இங்கே இப்போது நான் விழையும் அனைத்தும் இருக்கிறது மூத்தவரே, அவனைத் தவிர” என்றான். “அவன் இங்கிருந்தால் இந்தக்காடே இன்னொன்றாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொரு விலங்கும் அவனை அறியும். இந்தக்குரங்கள் அவனையன்றி எவரையுமே பொருட்டாக எண்ணாது.” தருமன் “வழிபடு தெய்வம் கிடைத்தவனைப்போல் இருக்கிறாய்” என்றான். “இல்லை, அவன் என் நண்பன்” என்றான் அர்ஜுனன்.

குந்தியும் பீமனும் சிரித்தபடி அருகே வந்தனர். குந்தி “மூத்தவனே, இவளிடம் கேட்டேன். இவள்குலத்து மணமுறை என்ன என்று. அதை அவர்களின் குலமூத்தார்தான் முடிவெடுக்கவேண்டும் என்கிறாள். நாம் கிளம்பி இவள் குடிக்குச் செல்வோம்” என்றாள். தருமன் “ஆம், கடமைகள் பல உள்ளன” என்றான். சூர்ணன் அருகே வந்து ஏறிட்டு தருமனை நோக்கி கைசுட்டி “வேடிக்கையான மனிதன்!” என்றான். பீமன் “போ” என்று அதை துரத்தினான். “அது என்ன சொல்கிறது என்று கேட்கப்போவதில்லை” என்று சொல்லி தருமன் நகைக்க அனைவரும் சேர்ந்துகொண்டனர்.

ஒரே நாளில் காடு அனைவருடைய கட்டுக்களையும் அவிழ்த்து இணைத்து நிறுத்திவிட்டது என்று அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். வாழ்க்கையின் அந்தத் தருணத்தை எந்நாளும் மறக்கப்போவதில்லை என்று தோன்றியது.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 6

அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும் பார்த்தபடி அர்ஜுனன் பின்னால் வந்தான். அவர்களைச் சூழ்ந்து மரங்கள் வழியாக வந்த குரங்குகள் உரக்க சேர்ந்தொலி எழுப்பின. அதே ஒலியை எழுப்பி அவற்றைப்போலவே பீமன் உடலை ஆட்டி மறுமொழி சொன்னான். “அவர்களின் எல்லை முடிகிறது என்கிறார்கள் மூத்தவரே. இனி வேறு குலத்தின் எல்லை வருகிறது” என்றான் பீமன். “எல்லையை மீறி அவர்கள் வருவதில்லை. வந்தால் பெரும்போர் நிகழும்.”

சூர்ணன் மரத்திலிருந்து ஓசையுடன் விழுந்து ஓடிவந்து பீமனை அணுகி அவன் காலில் தொற்றி தோளில் ஏறி காதைப்பிடித்து ஆட்டியபடி பறவை போல அகவல் ஒலி எழுப்பினான். “உன்னைப்பிரிவதில் வருந்துகிறானா?” என்றான் தருமன். “இல்லை. உங்களை விட்டுவிட்டு நான் மட்டும் அவர்களுடன் இருந்துவிடச்சொல்கிறான்” என்றான் பீமன். சூர்ணனை அவன் தலையைத் தடவி வாலைப்பிடித்து இழுத்து ஆறுதல்படுத்தினான். சூர்ணன் அதை ஏற்றுக்கொண்டு இறங்கி இரு காலில் நின்று தருமனை நோக்கி உதட்டைக் குவித்து நீட்டி “வேடிக்கையான மனிதன்” என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று மரத்தில் ஏறிக்கொண்டான். பிறகு குதித்து திரும்பி வந்து நின்ற இடத்தில் சில துளிகள் சிறுநீரை விட்டுவிட்டு மீண்டும் தருமனை நோக்கி கைநீட்டி கண்களைச் சிமிட்டி “விசித்திரமானவன்” என்று சொல்லிவிட்டு திரும்பி மரத்தில் ஏறி கிளைகளுக்குள் சென்று அமர்ந்தான்.

“என்ன செய்கிறான்?” என்றான் தருமன். “இந்தப் பகுதியில் உள்ள குரங்குக்குலத்திற்கு ஓர் அறைகூவலை அந்த சிறுநீர்த்துளி வழியாக விட்டுவிட்டுச் செல்கிறான். அவர்கள் போருக்கு அறைகூவுவார்கள்...” என்றான் பீமன். “ஒரு நாலைந்து உயிர்கள் போவதற்கு வழிவகுத்துவிட்டான்” என்று சொல்லி புன்னகையுடன் திரும்பி சூர்ணனை நோக்கியபடி “இளையோனே, அவன் ஒருநாள் இந்தக்குலத்தை வென்று இப்பகுதியை கைப்பற்றுவான்” என்றான் தருமன். பீமன் நகைத்து “ஆம், அவன் இப்போதே அரசனாக வளர்ந்துவருகிறான்” என்றான். “பிறரது இறப்பு அவனுக்கு ஆழ்ந்த உவகையை அளிக்கிறது. போரைத் தொடங்கிவிட்டு தான் சாகாமலிருக்கவும் இதற்குள் கற்றுக்கொண்டிருக்கிறான்.”

இருபக்கமும் வாழைக்கூட்டங்கள் செறிந்திருந்தன. தரையில் சருகுகள் மிதிபட்ட குழிவுகளில் ஈரம் ஊறி நிறைந்தது. “இளையோனே, இந்தக்காட்டுக்குள் மலைமக்களுக்கு உணவுக்கு வறுதியே இருக்க வாய்ப்பில்லை” என்று தருமன் சொன்னான். “ஆம், ஆகவேதான் இந்தக்காட்டை அவர்கள் இத்தனை இரக்கமில்லாமல் பாதுகாத்து வருகிறார்கள்” என்றான் அர்ஜுனன். “இதன் எல்லைகளுக்கு மிகச்சிறந்த காவலை ஏற்படுத்தியுள்ளனர். இதற்குள் நுழைபவர்கள் அனைவரையும் தேடிக்கொல்கின்றனர். இக்காடுபற்றிய அச்சம் இப்பகுதியில் எங்கும் தலைமுறை தலைமுறையாக நிலவுகிறது.” பீமன் “யார் கண்டது, சூதர்கள் இதற்கும் இங்கே வந்து பரிசு பெற்றுச் செல்கிறார்களோ என்னவோ! அச்சமே மிகச்சிறந்த காவலன் என்பார்கள்” என்றான்.

வாழைக்காட்டில் இருந்து ஒரு பெரிய குரங்கு மெல்ல வந்து அவர்களின் வழியில் நின்றது. இடும்பி கையை வாயில் வைத்து ஓர் ஓசையை எழுப்பியதும் அது மெல்ல பின்வாங்கி வாழைமேல் ஏறி மரக்கிளை ஒன்றில் அமர்ந்துகொண்டு முழவு போல ஒலியெழுப்பியது. அப்பால் பல இடங்களில் அந்த ஓசை மீண்டும் மீண்டும் கேட்டது. “நிறைய குரங்குகள் உள்ளன” என்றான் பீமன். “அவள் என்ன சொன்னாள்?” என்றான் தருமன். “அவர்களுக்கும் இக்குரங்குகளுக்கும் இடையே நல்லுறவு உள்ளது” என்றான் பீமன். “அவள் தன் குலத்தைச் சொன்னாள். அதை குரங்குகள் ஏற்றுக்கொள்கின்றன.”

“குரங்குகள் மட்டும் இவர்களின் உணவை உண்ணாதா என்ன? கேட்டுச்சொல்” என்றான் தர்மன் . பீமன் அதைக் கேட்டதும் இடும்பி திரும்பிப்பார்த்து “இங்குள்ள குரங்குகளே இத்தோட்டத்திற்குக் காவல். அவை பெருங்கூட்டமாக மரங்களின்மேல் அமர்ந்து தாக்குவதனால் இங்கே யானைகள் நுழைவதில்லை” என்றாள். தருமன் நகைத்து “ஆம், குரங்குகளுக்கு அடிமரத்தை உண்ணும் வழக்கம் இல்லை” என்றான். மீண்டும் சிரித்து “இன்னும் சற்று சீர்ப்படுத்தினால் இந்த வாழைக்காட்டை பயன்படுத்திக் கொள்வதற்காகவும் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் இடும்பர்கள் குரங்குகளிடம் வரி கொள்ளவும் முடியும்” என்றான். பீமன் நகைத்து “வால் வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கலாம். வாலை அறுத்துக்கொண்டால் வரி செலுத்தவேண்டிய தேவை இல்லை என்று கருணையுடன் ஒரு சலுகையும் அளிக்கலாம்” என்றான். தருமன் வெடித்துச்சிரித்தபடி இடையில் கைவைத்து நின்றுவிட்டான்.

குந்தி திரும்பிப்பார்த்து “இங்கே எல்லோருமே மாறிவிட்டோம். இவன் இப்படி நகைத்து நான் பார்த்ததே இல்லை” என்றாள். பீமன் தருமனின் அதேகுரலில் “நூல்களில் நகைப்பு ஐந்து வகை என்று சொல்லப்பட்டிருக்கிறது மந்தா. ஒன்று சிரிப்பு வரும்போது சிரிப்பது. இன்னொன்று சிரிப்பு வராதபோது சிரிப்பது. மூன்று சிரிப்பதுபோல் சிரிப்பது. நான்கு சிரிப்பு போல அல்லாது சிரிப்பது. ஐந்து சிரிக்காமல் இருப்பது” என்று சொன்னான். தருமன் கண்களில் நீர் வரச் சிரித்து “போதும்... குரங்குகள் ஏற்கனவே என்னை வேடிக்கையானவனாக எண்ணுகின்றன” என்றான். அர்ஜுனன் “ஆம், நானும் கண்டேன். அந்த குட்டிக்குரங்கு ஏன் மூத்தவரை ஏளனம் செய்கிறது?” என்றான் . பீமன் “நான் அவனிடம் சொன்னேன், மூத்தவர் எங்கள் அரசர் என்று. அவனால் நம்பவே முடியவில்லை” என்றான்.

குந்தி இடும்பியை நோக்கி “இவள் வழி கண்டுபிடித்து செல்கிறாள். ஆனால் இங்கே தரையில் எங்குமே காலடிபட்ட தடமே இல்லை. இக்காட்டில் இதுவரை ஓர் ஒற்றையடிப்பாதையைக்கூட நான் கண்டதில்லை” என்றாள். “இவர்கள் தரையில் நடப்பவர்களே அல்ல அன்னையே. பெரும்பாலும் மரங்களின் மேல் விரைவாக தாவிச்செல்கிறார்கள். மரக்கிளைகளில் முழுமையாக மறைந்துகொள்ளும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆகவேதான் இவர்களை பறப்பவர்கள் என்றும் காற்றில் கரையும்கலை அறிந்தவர்கள் என்றும் கங்கையின் மறுபக்கமுள்ளவர்கள் நினைக்கிறார்கள்” என்றான் பீமன். “இத்தகைய அடர்ந்தகாட்டில் தரை முழுக்க உடைந்த மரங்களாக இருக்கும். அவற்றின் மட்கிய பட்டைகளில் விரியன்பாம்புகள் நிறைந்திருக்கும். தரையில் விரைவாகச் செல்லமுடியாது. இறப்பும் நிகழும். ஆகவே இவர்கள் மரங்கள் வழியாகச் செல்வதை தேர்ந்திருக்கிறார்கள்.”

நாய்களின் பெருங்குரல் ஒலி கேட்கத்தொடங்கியது. அவ்வொலியைக் கேட்டதும் அதுவரை அவர்களைப் பின்தொடர்ந்து மரங்களுக்குமேல் வந்த குரங்குகள் பின்வாங்கிவிட்டன. நாய்களில் ஒன்று இடும்பியை உணர்ந்து முனகலாக ஒலி எழுப்ப மற்ற நாய்கள் மெல்ல அடங்கி சீரான குரலில் குரைக்கத் தொடங்கின. இடும்பி உரக்கக் குரலெழுப்பி அவளை அறிவித்ததும் நாய்கள் முனகியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டன. இடும்பி “எங்கள் ஊர்” என்றாள். “எங்கே?” என்றான் பீமன்.

இடும்பி கையை சுட்டிக்காட்டி “அங்கே” என்றாள். தருமன் நிலத்தில் ஒரு ஊரை எதிர்பார்த்து விழிதுழாவ அர்ஜுனன் பெருவியப்புடன் “மூத்தவரே, மரங்களின் மேல் பாருங்கள்” என்றான். வட்டவடிவ முற்றம் ஒன்றைச் சுற்றி கிளை விரித்து நின்றிருந்த பெருமரங்களின் கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடில்கள் ஊசல்கள் போலத் தொங்கிக்கிடந்தன. “தூக்கணாங்குருவியின் கூடுகள் போல!” என்றாள் குந்தி. மரக்கிளைகளில் கனத்த கொடிவடம் ஒன்றைக் கட்டி இறக்கி அதில் குடில்களைக் கட்டி தொங்கவிட்டிருந்தனர். “ஒற்றை வடத்தில் அந்தக்குடில் எப்படி நிற்கிறது?” அர்ஜுன்ன் “தூக்கணாங்குருவிக்கூடு எப்படி நிற்கிறதோ அப்படித்தான் என்று நினைக்கிறேன்” என்றான்.

காற்றில் மெல்ல ஆடியபடி நின்றிருந்த குடில்களின் உள்ளே குழந்தைகள் அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. ஒரு குடிலை வேகமாக ஆட்டி அதிலிருந்து ஒரு சிறுவன் இன்னொரு குடிலுக்கு தாவிச்சென்றான். அருகே நெருங்கியபோதுதான் முந்நூறுக்கும் மேற்பட்ட தொங்கும் குடில்கள் இருப்பதை அர்ஜுனன் அறிந்தான். “எங்கும் எந்த படைக்கலமும் கண்ணுக்குத்தெரியவில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “இங்கே இவர்களுக்கு எதிரிகளே இல்லை. வழிதவறி வருபவர்களை உடனே கொன்றுவிடுவார்கள். இவர்களைப்பற்றிய அச்சமூட்டும் புராணங்களே இவர்களுக்கு அரணாக உள்ளன” என்றான் பீமன்.

இடும்பி நரியின் ஊளை போன்ற ஓர் ஒலியை எழுப்பினாள். அதைக்கேட்டதும் அத்தனை குடில்களில் இருந்தும் குழந்தைகள் எட்டிப்பார்த்தன. மரக்கிளைகளின் இலைச்செறிவுக்குள் இருந்து நீரிலிருந்து மீன்கள் எழுவதுபோல மனிதர்கள் வந்துகொண்டே இருந்தனர். அனைவரும் உடலெங்கும் நீறுபூசி தோல் ஆடை அணிந்திருந்தனர். சிலகணங்களில் குரங்குப்படை போல மரக்கிளைகளிலேயே அவர்களைச்சூழ்ந்து கொண்டு இலையசையும் ஒலியுடன் கூடவந்தனர். அவர்களின் சிவந்த பெரிய விழிகள் அவர்களின் உடலசைவுகளுடன் சேர்ந்து அசைந்தன. அவர்களின் மூச்சொலிகளை கேட்க முடியும் என்று தோன்றியது. குழந்தைகளில் ஒன்று ஏதோ கேட்க நாலைந்து குழந்தைகள் அதை அடக்கின. நாய்கள் தலைதாழ்த்தி வலைபோல விரிந்து வால்களைத் தூக்கி நாசி நீட்டி காத்து நின்றன.

மரங்களில் இருந்து இழிந்து மண்ணில் நின்ற ஒரு முதியவர் “இடும்பி, இவர்கள் யார்? உணவுக்காகக் கொண்டுவந்தாய் என்றால் அவன் ஏன் படைக்கலம் வைத்திருக்கிறான்?” என்றார். “தந்தையே, இவர்கள் அஸ்தினபுரியின் இளவரசர்கள். படைவீரர்களிடமிருந்து தப்பி காட்டுக்குள் வந்திருக்கும் நல்லவர்கள். அந்த ஆற்றல் மிக்கவரை நான் என் கணவராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்றாள் இடும்பி. அவர்களில் பலர் அதிர்ச்சியடைந்தது போல அசைந்தனர். நாலைந்து முதியவர்கள் நீர்த்துளி உதிர்வதுபோல மண்ணில் குதித்து நிமிர்ந்து நின்றனர். முதியவர் “என்ன சொல்கிறாய்?” என்றார். “இது நம் குடியில் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது என்று நீ அறியமாட்டாயா?”

பீமன் முன்னகர்ந்து “வணங்குகிறேன் தந்தையே. நான் இவளை என் துணைவியாக ஏற்றிருக்கிறேன். அதற்கு நீங்கள் முன்வைக்கும் அத்தனை தேர்வுகளையும் சந்திக்க சித்தமாக இருக்கிறேன். அனைத்து குலச்சடங்கு முறைகளுக்கும் முழுமையாக உடன்படுகிறேன்” என்றான். முதியவர் வெருண்டு “இவன் நமது மொழி பேசுகிறான்! நமது மொழியை எப்படி கற்றான்?” என்றார். “தந்தையே, வெளியே உள்ள காடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் நம் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்கிறார்” என்றாள் இடும்பி. “இவர் நம்மவராக ஆக விழைகிறார்.” முதியவர் “இவனா? இவன் பிளக்கப்பட்ட மரம் போன்ற நிறம் கொண்டிருக்கிறான். நாம் நமது முன்னோர்களான பாறைகளின் நிறம் கொண்டவர்கள்” என்றார் முதியவர்.

பின்னால் நின்றிருந்த இன்னொரு முதியவர் “இவன் புழுக்களை போலிருக்கிறான்... அந்தப்பெண் கனிந்த பழம்போலிருக்கிறாள். இத்தகைய நிறமுள்ள அனைத்தையுமே நாம் உணவாகவே உண்டு வருகிறோம்” என்றபின் கரிய பற்களைக் காட்டி புன்னகைத்து “இவர்களையும் உண்போம்... நீ இவர்களை ஏமாற்றி இங்கே கொண்டுவந்திருக்கிறாய் என நினைக்கிறேன். அஞ்சாதே. இனிமேல் இவர்கள் இங்கிருந்து தப்பமுடியாது” என்றார்.

இடும்பி நெஞ்சில் அறைந்து உரத்தகுரலில் “தந்தையே, இவர் என் கணவர். இவர்கள் என் உறவினர். இவர்களை கொல்லமுயல்பவரை அக்கணமே நான் கொல்வேன்” என்று கூவினாள். அவர்கள் அந்தக் குரலை எதிர்பார்க்காதவர்கள் போல திகைத்து வாய் திறந்தனர். இன்னொரு முதியவர் “நீ எண்ணுவது ஒருபோதும் நிகழாது. உன் தமையன் இக்குடியின் அரசன். அவன் இவர்களை ஏற்கப்போவதில்லை. அதை நீ அறிவாய்” என்றார். “ஆம், ஆனால் நான் இவரை நம் குடியின் முன் நிறுத்தப்போகிறேன். இவர் நம் குடியை அறைகூவுவார். இவரை எவரேனும் தனிப்போரில் கொல்ல முடிந்தால் இவர்களை நாம் கொன்று உண்ணலாம்” என்றாள் இடும்பி.

அவர்கள் சுருங்கிய விழிகளுடன் அவளையே நோக்கி அசைவற்று நின்றனர். பின்னர் ஒருவர் பற்களைக்காட்டி சிரித்து “இவனது உடலைவைத்து நீ பிழையாக மதிப்பிடுகிறாய் மகளே. இவன் எத்தனை ஆற்றல் கொண்டவனாக இருந்தாலும் நமது மாயங்களை அறிந்தவனல்ல. மேலும் இடும்பனை வெல்ல எந்த மானுடனாலும் முடியாது” என்றார். “நான் என் தமையனுடன் பலமுறை போரிட்டிருக்கிறேன். நான் அறிவேன் அவரை. இவர் என்னை வென்றவர்” என்றாள் இடும்பி. “என்னை வென்ற ஒருவரையே நான் ஏற்றாகவேண்டும்.”

மரக்கிளைகளுக்குப் பின்னாலிருந்து மேலும் இடும்பியின் குடிகள் வந்துகொண்டே இருந்தனர். முலைகள் சுருங்கித் தொங்கிய முதுமகள் ஒருத்தி முன்னால் வந்து கைகளை நீட்டி “மகளே, நீ சொல்வதற்கு நம் குலமுறைகளின் ஒப்புதல் உண்டு. இவனை நமது குலத்தின் நெறிகளின்படி போரில் வெல்வதே முறை” என்றபடி அவளைப் பிடித்து முன்னால் அழைத்துச் சென்றாள். இடும்பி திரும்பி பீமனை புன்னகையால் அழைத்துவிட்டு அவர்களுடன் நடந்தாள். பீமன் அவள் பின்னால் செல்ல அவன் பின்னால் பிறர் நடந்தனர்.

சினத்துடன் கீழ்வாயை முன்னால் நீட்டிய முதியவர் “ஆனால் நம் எல்லைக்குள் அயலவன் படைக்கலம் ஏந்தக்கூடாது. இவன் வில்லை உதறவேண்டும்” என்றார். தன் வளைந்த விரல்களால் அர்ஜுனனைச் சுட்டி “அவன் கண்களைப் பார்க்கிறேன். அவை மிகக்கூரியவை. அவனால் குறிதவறாமல் அம்புகளை செலுத்தமுடியும்.” பீமன் திரும்பி அதை அர்ஜுனனிடம் சொல்ல அவன் “மூத்தவரே...” என ஏதோ சொல்லத் தொடங்கினான். தருமன் “நமக்கு வேறுவழி இல்லை பார்த்தா. பீமனை எவரும் வெல்லமுடியாது” என்றான். அர்ஜுனன் வில்லையும் அம்புகளையும் நிலத்தில் வீசினான்.

அந்தக் குடில்களின் நடுவே இருந்த வட்டவடிவமான புல்வெளியில் அவர்கள் அமரவைக்கப்பட்டனர். அங்கே மண்ணுக்கு அடியில் பெரிய பாறை இருப்பதனால்தான் மரங்கள் முளைக்கவில்லை என்று பீமன் எண்ணினான். காட்டில் அங்குமட்டும்தான் வெயில் விழுந்தது. படிகத்தாலான ஒரு கோபுரம் போல வெயில் அங்கே எழுந்து நிற்பதாகத் தோன்றியது. மறு எல்லையில் நீண்ட பெருங்கல் ஒன்று கிடைமட்டமாக வைக்கப்பட்டு அதன் மேல் நிறுத்தப்பட்டிருந்த உருளைக்கல் முன்னால் காலையில் சுடப்பட்ட ஊனுணவு படைக்கப்பட்டிருந்தது. “இவர்களுக்கும் தெய்வங்கள் உள்ளன” என்றான் தருமன். “மூதாதையர் இல்லாத குடிகள் உண்டா?” என்றான் அர்ஜுனன்.

வெயிலை நேராக நோக்க கண்கூசியது. அதனுள் விழுந்த சருகுகள் பளபளத்தபடி கீழிறங்கின. பீமன் அந்தக்குடில்களை ஏறிட்டுப்பார்த்தான். அவை கனத்த மூங்கில்களை கொடிபோல வளைத்து கட்டப்பட்டிருந்தன. அவன் பார்ப்பதைக் கண்ட தருமன் “நான் அப்போதே அதை பார்த்துவிட்டேன் இளையோனே. மூங்கில்களையும் பிரம்புகளையும் இளமையிலேயே வேண்டிய வடிவில் வளைத்து வளர்க்கிறார்கள். அவற்றைக்கொண்டு குடில்களைக் கட்டியிருக்கிறார்கள். உள்ளே நன்றாக முதுகை நீட்டிப்படுப்பதற்கான இடமிருக்கிறது. புல்அடுக்கி மேலே தோல் வேய்ந்து சிறந்த படுக்கைகளை செய்திருக்கிறார்கள். இவர்கள் குடில்கள் படுப்பதற்கான இடம் மட்டுமே” என்றான்.

“ஏன் இப்படி கட்டவேண்டும்? உறுதியான இந்த நிலத்தில் கட்டியிருக்கலாமே. இவர்கள் விலங்குகளுக்கு அஞ்சுபவர்களா என்ன?” என்றாள் குந்தி. “பாம்புகளுக்கு அஞ்சி முற்காலத்தில் இப்படி கட்டியிருப்பார்கள். பின்னர் அதுவே பழகிவிட்டிருக்கும். அசையாத குடிலில் அவர்களுக்கு துயில் வராது என நினைக்கிறேன்” என்றான் தருமன். பீமன் இடும்பியிடம் “உன் தமையனார் எங்கிருக்கிறார்?” என்றான். அவள் “நாள்தோறும் அவர் காட்டைச்சுற்றிவருவார்” என்றாள். “இவர்களின் குலப்பெயர் என்ன?” என்றாள் குந்தி. “இடும்பர்கள். இவர்கள் அனைவருமே இடும்பர்களும் இடும்பிகளும்தான்... தனித்தனியாகப் பெயரிடும் வழக்கம் இங்கில்லை” என்றான் பீமன்.

நாய்கள் அவர்களைச் சூழ்ந்து வியூகம் அமைத்து அமர்ந்திருந்தன. அசையாமல் சிறிய பழுப்புநிறப் பாறைகள் போல. குந்தி “அவை நம்மை காவல் காக்கின்றன” என்றாள். “தலைவன் பீமனை மட்டுமே பொருட்படுத்துகிறான்” என்றான் தருமன். “இவர்கள் மனித இறைச்சியை நாய்களுக்கு அளித்து வளர்க்கிறார்கள். பீமன் அவர்களில் ஆவலை கிளப்புகிறான்.” குந்தி “என்ன பேச்சு இது” என்று சொல்ல தருமன் நகைத்தான்.முதலில் அந்தத் தருணத்தின் இறுக்கத்தைக் கடப்பதற்காக அவர்கள் செயற்கையாக எளிய உரையாடலை நிகழ்த்தினர். பின்னர் அந்த உரையாடலே அவர்களை இயல்பாக்கியது. அனைவர் முகத்திலும் புன்னகை ஏற்பட்டது. “இங்கே இவர்கள் சமையலறை எதையும் வைத்திருப்பதாகத் தெரியவில்லை இளையவனே. நீ தோற்றால் நம்மை பச்சையாகவா உண்பார்கள்?” என்றான் தருமன். பீமன் “அங்கே மலைச்சரிவில் அடுமனைகளை வைத்திருக்கிறார்களாம். இவர்கள் ஊனுணவை அங்குள்ள பெரிய கற்கள் மேல் போட்டு கற்களைச் சுற்றி தீவளர்க்கிறார்கள். கல்லின் சீரான வெம்மையில் ஊன் வேகிறது” என்றான். “இவர்கள் கருகியதை உண்பதில்லை.” தருமன் “சிறந்த முறை. அரசகுடியினருக்கு ஏற்றது” என்று சொல்லி சிரித்தான். குந்தி “வாயை மூடு...என்ன கீழ்மைப் பேச்சு?” என்று சினந்தாள். “அன்னை அஞ்சுகிறார்கள்” என்றான் நகுலன். “இந்த மூடர்கள் பேசுவது என் மைந்தர்களைப்பற்றி...” என்றாள் குந்தி.

காட்டுக்குள் மெல்லிய முழவொலி எழுந்தது. இடும்பி “தமையன்!” என்றாள். ஒருவர் “எழுந்து நில்லுங்கள்! அரசர் வருகிறார்!” என்றான். பீமன் எழுந்து நிற்க பிறரும் எழுந்து நின்றனர். முழவொலி மேலும் வலுத்தது. மரங்களில் இருந்து பல இளம் இடும்பர்கள் குதித்தனர். இறுதியாக கன்னங்கரிய பேருடலுடன் அரசன் இடும்பன் கிளையில் ஆடி மண்ணில் இறங்கி நின்று இடையில் கைவைத்து அவர்களை நோக்கினான். நுரைபோலச் சுருண்ட முடியை நீட்டி சடைத்திரிகளாக ஆக்கி தோளில் விட்டிருந்தான். தாடியும் மீசையும் முகத்தில் சிறிய சுருள்களாகப் பரவியிருந்தன. கழுத்தில் எலும்புகளைக் கடைந்துசெய்த வெண்மணிகளால் ஆன மாலையை அணிந்திருந்தான். அவன் முன்னரே அனைத்தையும் அறிந்திருந்தான் என்று தெரிந்தது. தருமன் மெல்லிய குரலில் “மூத்த தந்தையே விழியுடன் எழுந்து வந்தது போலிருக்கிறான்” என்றான்.

சிவந்த விழிகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கியபின் “நான் வந்த்து இவர்களைக் கொல்லவே” என்று தங்கையிடம் சொன்னான். “இந்தக்காட்டில் நாம் ஒருபோதும் அயலவரை நுழையவிடக்கூடாது. இது நம் மூதாதை தெய்வங்கள் நமக்கு இட்ட ஆணை.” இடும்பி “மூத்தவரே, நான் இவரை என் கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, என்னையும் இவரையும் கொல்லவேண்டும். கொல்லுங்கள் என அறைகூவுகிறோம்” என்றாள். “நம் குலமுறைப்படி நீங்கள் அறைகூவும் தனிமனிதனை தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். மூதாதையர் சான்று நிற்கட்டும்!”

இடும்பனின் பெரிய உதடுகள் விரிந்து நடுவே இடைவெளி விழுந்த அகன்ற வெண்பற்கள் தெரிந்தன. அவன் குரல் தழைந்தது. “நீ என் தங்கை. என் கைகளைப்பிடித்து காட்டை அறிந்தவள். இந்தக்காட்டுக்கு அப்பால் உனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கிருந்தாலும் வெளியுலகை ஒவ்வொருநாளும் அறிந்துகொண்டிருக்கிறேன். பலமுறை மாறுவேடங்களில் அங்கே சென்று பார்த்தும் வந்திருக்கிறேன்” என்றான். இரு கைகளையும் விரித்து இடும்பியை நோக்கி “நான் உன் மூத்தவன், உன் குருதி. நான் சொல்வதைக் கேள்” என்றான். இடும்பி “நான் உங்கள் தங்கை மட்டும் அல்ல, பெண்ணும்கூட” என்றாள்.

“நீ அரசியும்கூட” என்றான் இடும்பன் சினத்துடன். “ஏன் இக்காட்டுக்குள் அயலவர் வரக்கூடாது, வந்தவர் திரும்பக்கூடாது என நம் முன்னோர் வகுத்தனர் என்று புரிந்துகொள். நாம் வாழும் இக்காட்டைப்போல பலநூறு காடுகள் இந்த கங்கைச்சமவெளியெங்கும் இருந்தன. அவையனைத்திலும் நம்மைப்போன்ற தொல்குடிகள் வாழ்ந்தனர். அக்காடுகள் அனைத்தும் இன்று அழிந்து ஊர்களாக நகரங்களாக ஆகிவிட்டன. அங்கே கோட்டைகளும் துறைகளும் சந்தைகளும் வந்துவிட்டன. அங்கெல்லாம் பலவண்ணங்களை உடலில் தாங்கிய மக்கள் வந்து மொய்த்து நிறைந்துவிட்டார்கள். அழுகிய ஊனில் புழுக்கள் போல அவ்வூர்களில் அவர்கள் நெரிபடுகிறார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் துரத்தப்பட்டு மலைகள் மேல் ஏறிச்சென்று மறைந்தனர். எஞ்சியவர்கள் அவ்வூர்களில் அடிமைகளாக வாழ்கிறார்கள்.”

“அங்கே ஊர்களில் வண்ணம்கொண்டவர்கள் தவளைகள் போல பெருகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேராசை அதைவிடப் பெரியதாக வளர்கிறது. பெரும்பசி கொண்ட நெருப்பு போன்றவர்கள் அவர்கள். உண்ணும்தோறும் பசி பெருகும் தீயூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு பெருங்காடுகள்கூட கையளவான காய்கள் போலத்தான். அயலவர் இங்கு வரமுடியும் என்றால் விரைவிலேயே இங்கு அவர்களின் படைகள் நுழையும். அவர்கள் முடிவில்லாமல் பெருகிவருவார்கள். நாம் அறியாத படைக்கலங்களை வைத்திருப்பார்கள். யானைகளையும் குதிரைகளையும் பழக்கி அவர்களுக்காக போரிடச்செய்வார்கள். நெருப்பு அவர்களின் தெய்வம். காட்டுக்கு நெருப்பு எதிரி என்று நீ அறிவாய். ஆகவே நமக்கும் நெருப்பு எதிரியே. தீயை ஏவி இக்காட்டை அவர்களால் முழுமையாகவே அழிக்கமுடியும். நமது ஆற்றலும் மாயங்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.”

“குலத்துடன் அழிந்த கானகர்கள் செய்த பிழையே அயலவர்களை நம்பி அவர்களைத் தங்களுடன் பழக விட்டதுதான். சிறிய பொருட்களுக்கு ஆசைப்பட்டும் வெளியுலகில் இருந்து அவர்கள் கொண்டுவந்து காட்டும் பகட்டுகளில் மயங்கியும் அவர்கள் தங்கள் இல்லங்களை தாங்களே கொளுத்திக்கொள்ளும் பெரும்பிழை செய்தார்கள்… தங்கள் மைந்தர்களை அடிமைகளாக்கினார்கள்.நாம் ஒருபோதும் அப்பிழையை செய்யக்கூடாது” என்றான் இடும்பன். பீமன் அவனுடைய திரண்டபெருந்தோள்களையும் சிறிய அசைவுகளிலேயே இறுகி நெளியும் தசைகளையும் நோக்கியபடி நின்றிருந்தான். இடும்பி “மூத்தவரே, நான் இனி என் உள்ளத்தை மாற்றிக்கொள்ளமுடியாது. நான் இவர் துணைவி” என்றாள்.

தருமன் “அவன் சொன்னதை என்னிடம் சொல்” என்றான். பீமன் சொன்னதும் தருமன் இடும்பனிடம் “அரசே, நான் இன்னமும் அஸ்தினபுரியின் இளவரசனே. அந்நிலையில் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். உங்கள் தங்கை அஸ்தினபுரியின் முதல் அரசியாகவே மதிக்கப்படுவாள். உங்களை எங்கள் அரசுடன் மணவுறவு கொண்ட குலமாகவே அஸ்தினபுரி கருதும். உங்கள் தனியுரிமைகளை ஒருபோதும் மீறமாட்டோம். பிறர் மீற முயன்றால் அஸ்தினபுரியின் அரசும் இருபெருவீர்ர்களின் ஆற்றலும் உங்களுக்குத் துணையாக இருக்கும்” என்றான்.

பீமன் அதைச் சொன்னதும் இடும்பன் கையை வீசி கடும் சினத்துடன் “வண்ணமக்களை நம்பக்கூடாது. அவர்களின் ஒரு சொல்லையும் செவிகொள்ளக்கூடாது. அவர்கள் நம் முன்னாலிருந்து உயிருடன் மீளக்கூடாது. என் முந்தையோரின் மூன்று ஆணைகள் இவை” என்றான். அவன் குடியினர் கைதூக்கி “ஆம்! ஆம்!” என்றனர். பீமன் மீண்டும் அவனிடம் பேசப்போக “பேசாதே!” என்று இடும்பன் கூவினான். “உன் ஒரு சொல்லைக்கூட நான் கேட்கப்போவதில்லை.”

இடும்பி ஏதோ சொல்வதுபோல அசைய “நீயும் இனிமேல் பேசவேண்டியதில்லை...” என்று இடும்பன் கூவினான். “பேசுவது வண்ணமக்களின் வழி. பேச்சைப்போல நாம் வெறுக்கவேண்டிய பிறிதொன்றில்லை.” இடும்பி “அப்படியென்றால் நீங்கள் விழைவதைச் செய்யலாம். இவரையும் என்னையும் கொல்லலாம்...” என்றாள். இடும்பன் நிமிர “மூதாதையர் வகுத்த முறைப்படி அதைச்செய்க” என்றாள் இடும்பி.

இடும்பன் கடும் சினத்துடன் தன் தோளில் ஓங்கி அறைந்தான். “இவர்கள் என் குடிகள் அல்ல. இக்காட்டில் வாழும் விலங்குகளும் அல்ல. இவர்கள் வண்ணமக்கள். நம்மை அழிக்க வந்தவர்கள். இவர்களிடம் எந்தக் குலமுறையும் கடைப்பிடிக்கப்படவேண்டியதில்லை என்பதே தொல்நெறி... இல்லையேல் தந்தையர் சொல்லட்டும்...” என்று முதியவர்களை நோக்கி திரும்பினான்.முதியவர்கள் பேசுவதற்கு முன்பு “ஆனால் நம் குலத்துப்பெண் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாள்” என்று ஒரு முதியவள் சொன்னாள். “அவளிடம் நாம் குலநெறிபேணவேண்டும் அல்லவா?”

ஒரு முதியவர் “வண்ணமக்கள் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அவர்களிடம் எந்த நெறியும் பேணப்படவேண்டியதில்லை. அவர்களை மறைந்திருந்து கொல்லலாம். நஞ்சூட்டியும் நீரிலும் நெருப்பிலும் தள்ளியும் அழிக்கலாம். அவர்களை நாம் பார்த்த கணம் முதல் எத்தனை விரைவாக அழிக்கிறோமோ அத்தனை நன்று. மூதாதையர் நெறி அதுவே” என்றார். அனைத்து கிழவர்களும் கைகளைத் தூக்கி “ஆம்” “ஆம்” என்றனர். “நம் குலத்துப்பெண் நம் ஆணையை ஏற்கவேண்டும். இல்லையேல் அவளும் கொல்லப்படவேண்டியவளே” என்றார் இன்னொருவர். “ஆம்... அவள் விலகிச்செல்லட்டும்... இது என் ஆணை” என்றான் இடும்பன்.

“நான் என் கணவனுக்காக உயிர்துறக்கவே விழைகிறேன்!” என்றாள் இடும்பி. சினத்துடன் பற்களைக் கடித்து “கொல்லுங்கள்!” என்று இடும்பன் கூவியதும் அத்தனை இடும்பர் இடும்பிகளும் கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பியபடி அவர்களைச் சூழ்ந்தனர். இடும்பி தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி பீமனின் முன்னால் வந்து நின்றாள். அர்ஜுனன் இடையில் கைவைத்து இமைகூட அசையாமல் அவர்களை நோக்கி நின்றான். பீமன் உரக்க “விலகு... உன் தமையனின் அச்சத்தை நான் புரிந்துகொள்கிறேன்” என்றான்.

இடும்பன் கைகாட்டி மற்றவர்களை நிறுத்திவிட்டு “அச்சமா? உன்னிடமா?” என்றான். “ஆம், இப்போது நீ சொன்னவை அனைத்தும் என் மீது நீ கொண்ட அச்சத்தாலேயே” என்றான் பீமன். “அச்சமில்லை என்றால் என்னுடன் போருக்கு வா!” இடும்பன் இதழ்கோணி நகைத்து “உன்னைக்கொல்ல எனக்கு ஒரு கைகூட தேவையில்லை” என்றான். பீமன் திரும்பி மூதாதையராக நிறுவப்பட்டிருந்த கல்லை நோக்கி “இதோ உங்கள் குலத்தின் தலைவனை நான் அறைகூவுகிறேன். அவன் ஆண்மகன் என்றால் அச்சமற்றவன் என்றால் இவன் என்னிடம் தனிப்போர் புரியட்டும். அவனுக்கு உகந்த இடத்தில் உகந்த முறையில் அந்தப்போர் நிகழட்டும்... இல்லையேல் அவனும் அவன் மூதாதையரான நீங்களும் வெறும் கோழைகள் என்றே பொருள்” என்று கூவினான்.

இடும்பர்கள் சினத்துடன் கைகளால் உடலை அறைந்துகொண்டு உறுமினார்கள். இருவர் பீமனை நோக்கி கைகளை விரித்துக்கொண்டு வந்தனர். அவர்களை கையசைத்து நிறுத்திய இடும்பன் “நீ விட்ட அறைகூவலை ஏற்கிறேன். நாம் போர்புரிவோம்...” என்றான். “நான் உன்னை வென்றால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்றான் பீமன். “நீ உயிருடன் இருக்கப்போவதில்லை” என்றான் இடும்பன். “சொல், நான் வென்றால் எதை அடைவேன்?” இடும்பன் இடும்பியை நோக்கியபின் “என் தங்கையை எடுத்துக்கொள். உன்னை இக்குடி ஏற்றுக்கொள்ளும்” என்றான். “ஆம், நாம் போர் புரிவோம்” என்று பீமன் சொன்னான்.

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 7

இடும்பவனத்தின் தெற்கு எல்லையில் இருந்த மூதாதையரின் நிலத்துக்கு இடும்பன் நடந்துசெல்ல அவன் குலத்தினர் சூழ்ந்து சென்றனர். பீமனை இடும்பி அழைத்துச்சென்றாள். பின்னால் பாண்டவர்கள் சென்றனர். தருமன் “அன்னையே, தாங்கள் அங்கு வராமல் இங்கேயே இருக்கலாமே” என்றான். குந்தி மெல்லிய ஏளனத்துடன் “நான் ஷத்ரியப்பெண் அல்ல என்று எண்ணுகிறாயா?” என்றாள். பீமன் “அன்னை வரட்டும். அவர் என் போரை இதுவரை நேரில் பார்த்ததில்லை அல்லவா?” என்றான். குந்தி புன்னகை செய்தாள்.

இடும்பர்களின் மூதாதை நிலம் சிறிய குன்று. அதில் மரங்களேதும் இருக்கவில்லை. அதன்சரிவில் அடர்த்தியான வாசனைப்புல் படர்ந்து காற்றில் அலையடித்தமை அக்குன்றை ஒரு பச்சைத் திரைச்சீலை என தோன்றச்செய்தது. குன்றின் உச்சியில் திறந்த வாயின் கீழ்த்தாடைப்பற்கள் போல வரிசையாக சப்பைக்கற்கள் நின்றிருப்பது தெரிந்தது. மேலேறிச்சென்றதும்தான் அவை எத்தனை பெரியவை என்பது புரிந்தது. ஐந்து ஆள் உயரமான கனத்த பட்டைக்கற்கள். சீரான இடைவெளியுடன் செங்குத்தாக நாட்டப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே காற்று சீறி வந்துகொண்டிருந்தது.

அவர்கள் அக்கற்களின் அடியில் சென்று கூட்டமாக நின்று கைகளைத் தூக்கியபடி மெல்ல அசைந்து கனத்த தாழ்ந்தகுரலில் ஓர் ஒலியை எழுப்பத் தொடங்கினர். பீமனின் அருகே நின்றிருந்த இடும்பியும் கைகளைத் தூக்கி அவ்வொலியை எழுப்பி காற்றிலாடும் மரம் போல அசைந்தாடினாள். அவர்களின் ஆட்டம் சீராக, ஒற்றை அசைவாக இருந்தது. ஒலி மெல்ல இணைந்து ஒன்றாகி ஒரே முழக்கமாக ஒலித்தது. சிலகணங்களில் அந்த ஓசை பீமனையும் உள்ளிழுத்துக்கொண்டது. தன் இரு கைகளையும் தூக்கி மெல்ல அசைந்தாடியபடி அவனும் அவ்வொலியை எழுப்பினான்.

நீண்ட சடைகளை தோள்மேல் அணிந்திருந்த முதியவர் இரு கைகளையும் தட்டியதும் அவர்களின் ஒலி நின்றது. அவ்வொலி கண்ணுக்குத்தெரியாத சரடால் அவர்களை கட்டி அசைத்தது போல அது அறுந்ததும் அவர்கள் அனைவருமே உடல் தளர்ந்து பெருமூச்சுடன் தள்ளாடினர். முன்னால் சரிந்தனர். ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒற்றைச்செடி போல அசைந்தனர். மரக்கூட்டங்களில் ஒலித்த பறவைகளின் ஒலிகள் மிக உரத்துக்கேட்பது போல, பெருகிச்சூழ்வதுபோலத் தோன்றியது. புல்லின் அலைகள் கொந்தளித்துக்கொண்டிருப்பது போன்ற விழிமயக்கு உருவானது. நிலையற்று அசையும் நிலத்தில் அசைவையே அறியாதவை என அக்கற்கள் நின்றன.

இடும்பன் சென்று அந்தக் கற்களை ஒவ்வொன்றாகத் தொட்டு தலையைத் தாழ்த்தி வணங்கியபடி வந்தான். இடும்பி முன்னால் சென்று அதேபோலத் தொட்டு வணங்கினாள். நாற்பத்தாறு பெருங்கற்கள் அங்கே நின்றிருந்தன. இடும்பன் வந்து நடுவே நின்றதும் முதியவர் அவன் அருகே வந்து சிறிய முள்ளால் அவன் கைவிரலில் ஆழமாக குத்தினார். விரலை அழுத்தி துளித்த குருதியை நடுவே நின்றிருந்த கல்லின் மீது பூசி மீண்டும் வணங்கிவிட்டு இடும்பன் பின்னகர்ந்தான். இடும்பியும் அதன்மேல் குருதி சொட்டி வணங்கினாள்.

அத்தனை இடும்பர்களும் சேர்ந்து கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பினர். இடும்பன் தன் தோள்களில் ஓங்கி அறைந்தபடி முன்னால் வந்து நின்றான். பீமன் “இங்கே நெறிகள் ஏதாவது உள்ளனவா?” என்றான். “கொல்வதுதான்… வேறொன்றுமே இல்லை” என்றாள் இடும்பி. “நான் அவரைக் கொல்ல விழையவில்லை” என்றான் பீமன். “அப்படியென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். வேறு வழியே இல்லை” என்று இடும்பி சொல்லி தலையை திருப்பிக்கொண்டாள்.

பீமன் தன் மேலாடையைக் களைந்து நகுலனிடம் அளித்துவிட்டு இரு கைகளையும் முன்னால் நீட்டி இடும்பனை நோக்கியபடி அசைவற்று நின்றான். இடும்பன் உரக்க உறுமியபடி தொடையையும் தோளையும் தட்டிக்கொண்டு முன்னால் வந்தான். அவன் தோள்கள் தன் தோள்களை விட இருமடங்கு பெரியவை என்பதை பீமன் கண்டான். அவன் கைகளுக்குள் அகப்பட்டுக்கொண்டால் மீளமுடியாது.

அவன் விழிகள் இடும்பன் மேலிருந்து விலகவில்லை. உலகில் இடும்பனன்றி எதுவுமே இல்லை என்பதுபோல அவன் அசைவற்று நோக்கி நின்றான். இடும்பனின் அசைவுகளுக்கு ஏற்ப அவனையறியாமலேயே அவன் தசைகள் மட்டும் அசைந்து சிலிர்த்தன. கணங்கள் நீண்டு நீண்டு செல்ல ஒரு வெடிப்பு நிகழ்ந்ததுபோல இடும்பன் கூச்சலிட்டபடி அவன் மேல் பாய்ந்து அவனைப்பிடிக்க வந்தான். பீமன் அந்த விசையை கணித்து விலகிக்கொள்ள அவன் தடுமாறி திரும்பி பற்களைக் காட்டி கூவினான்.

இடும்பன் சினம் கொண்டு கூவியபடி மீண்டும் பிடிக்கவந்தான். மூன்றாம் முறை எளிதில் அவனைப்பிடிக்க முடியாது என்று இடும்பன் புரிந்துகொண்டான். கைகளை நீட்டி பாய்ந்து வந்த விசையில் தன்னிடமிருந்து விலகிச்சென்ற பீமனை தலையில் எட்டி அறைந்தான். அந்த அறைதல் ஓசை அனைவரையுமே திடுக்கிடச்செய்தது. பீமன் தலைக்குள் சூரியன் வெடித்ததுபோல உணர்ந்தான். நீண்ட ரீங்காரத்துடன் அவன் தலை தரையை மோத அவன் அப்பால் எங்கோ சிதறிக்கிடந்தான்.

இடும்பன் வெறிச்சிரிப்புடன் அவனை ஓங்கி மிதிக்க வந்தான். பீமனின் சித்தம் மயங்கி பரவிக்கொண்டிருக்க அவன் உயிர் தன்னை காத்துக்கொண்டது. மூன்றுமுறை உதைத்தும் முடியாமல் போகவே இடும்பன் கடும் சினம் கொண்டு இருகைகளையும் முட்டிக்கொண்டு பாய்ந்து அவன் மேல் விழுந்தான். பீமன் புரண்டுகொண்டு கையூன்றி எழுந்து தன் வலுவான காலால் இடும்பனின் தலையை ஓங்கி அறைந்தான். இடும்பனை அந்த அடி ஏதும் செய்யவில்லை. தலையை சிலுப்பியபடி பற்கள் தெரிய சீறிக்கொண்டு அவன் பாய்ந்தெழுந்தான்.

புல்லில் ஊன்றி வந்த இடும்பனின் கால்களைத்தான் பீமன் நோக்கினான். அவன் உடலுக்கு ஒவ்வாதபடி அவை முழங்காலுக்குக் கீழே சிறியதாக இருந்தன. பாதங்கள் சிறுவர்களுடையவைபோல தெரிந்தன. இடும்பன் மீண்டும் அடிக்க வந்தபோது கையூன்றி நிலத்தில் அமர்ந்த பீமன் தன் காலைச் சுழற்றி இடும்பனின் இடது கணுக்காலில் ஓங்கி அறைந்தான். அலறியபடி நிலம் அதிர கீழே விழுந்த இடும்பன் மேல் தாவி அவன் நெஞ்சுக்குழியை ஓங்கி மிதித்தான்.

இருமியபடி இடும்பன் எழமுயல பீமன் தன் காலால் இடும்பனின் தலையை அறைந்தான். இடும்பன் மீண்டும் மல்லாந்து விழுந்தபோது அவனுடைய வலது கணுக்காலை ஓங்கி அறைந்தான். இடும்பன் எழமுயன்றபோது காலால் அவன் கண்களை நோக்கி அடித்தான். சூழ நின்ற இடும்பர்கள் அவர்களை அறியாமலேயே போருக்குள் வந்துவிட்டிருந்தனர். ஒவ்வொரு அடிக்கும் அவர்களிடமிருந்தும் ஒலி எழுந்தது.

இடும்பனிலிருந்து வலியின் ஒலி எழுந்தது. அவன் விரைவாகப்புரண்டு கைகளை ஊன்றி எழுந்து நின்று கால்களை ஊன்ற முடியாமல் பக்கவாட்டில் சரிந்தான். அவன் இரு கால்கணுக்களும் உடைந்துவிட்டிருந்தன. எழுந்தபோது அவன் உடலின் பெரிய எடையை தாளாமல் அவை மடிந்தன. நிலத்தில் புரண்டு சென்ற இடும்பனை துரத்திச்சென்று அவன் இடையில் உதைத்தான் பீமன்.

வலியுடன் அலறிய இடும்பன் இருகைகளையும் ஓங்கி மண்ணிலறைந்து ஊன்றி கைமேல் எழுந்து கால்களை மேலே தூக்கியபடி நின்றான். அவன் கைகள் கால்களைவிட வலுவாக மண்ணில் ஊன்றியிருந்தன. கைகளை ஊன்றி துள்ளி குன்றின் சரிவில் பாய்ந்தோடி உருண்டு கீழே இறங்கி விளிம்பில் கிளை தாழ்த்தி நின்ற மரம் ஒன்றை அணுகி அதன் கிளையில் தொற்றி மேலேறி கால்களால் கிளையைப்பற்றிக்கொண்டு அமர்ந்து நெஞ்சில் ஓங்கி அறைந்து அறைகூவினான். “மூத்தவரே, முதலைக்கு நீர் போன்றது அவனுக்கு மரக்கிளைகளின் பரப்பு” என்றான் அர்ஜுனன். “அவன் கால்கள் மட்டுமே வல்லமையற்றவை.” பீமன் திரும்பாமல் “ஆம்” என்றபடி சீரான கால்வைப்புகளுடன் நடந்து அணுகினான்.

பீமன் மரக்கிளைகள் மேல் ஏறியதைக் கண்ட தருமன் “இவனும் குரங்குதான் பார்த்தா” என்றான். அர்ஜுனன் விரைந்து ஓடி பீமனைத் தொடர்ந்தான். பீமன் மரக்கிளைவழியாக அடிமரத்தை அடைந்ததும் போர்க்கூச்சலுடன் இடும்பன் அவனை தாக்க வந்தான். பீமன் அவன் பிடியில் இருந்து கிளைகள் வழியாகத் தாவித் தாவி விலகிச் சென்றபடி இடும்பன் கிளைகளைப்பிடிக்கும் முறையையும் தாவும் முறையையும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான்.

ஒரு பெரிய கிளையில் இருந்து நெடுந்தூரம் காற்றில் தாவி மறுகிளை ஒன்றைப்பற்றி வளைத்து ஆடி அருகே வந்து இடும்பன் அவனை பற்றிக்கொண்டான். மூச்சுத்திணறியபடி பீமன் அவன் பிடியில் தொங்கிக்கிடந்தான். இடதுகையால் இடும்பனை வலுவில்லாமல் அறைந்தான். பின் தன் காலைத்தூக்கி வளைத்து கிளையை மிதித்து உச்சவிசையில் உந்தி இடும்பனை விலக்கினான். பிடிவிட்டு இடும்பனும் பீமனும் கிளைகளில் முட்டி மோதி கீழே வந்தனர்.

பிடிவிலகியதை அறிந்த இடும்பன் ஓங்கி மரத்தை அறைந்து கூவியபடி கிளைகள் வழியாகப் பாய்ந்து வந்தான். பீமன் விலகிச்செல்வதற்குள் அவன் பீமனை அறைந்தான். அடியின் விசையில் தெறித்த பீமன் மரக்கிளைகளை ஒடித்தபடி விழுந்து ஒரு கிளையை பற்றிக்கொண்டான். அர்ஜுனன் கீழே வந்து நின்று “மூத்தவரே, அவன் வல்லமை மிக அதிகம். அவன் கைகளுக்கு சிக்காதீர்” என்று கூவினான். நடுவே நின்ற சிறு கிளைகளை உடலாலேயே ஒடித்து உதிர்த்தபடி இடும்பன் பீமனை அணுகினான். பீமன் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து அவனிடமிருந்து தப்பமுயல அவன் சுழன்று வந்து மீண்டும் பிடித்துக்கொண்டான்.

பீமன் தன் கழுத்தை அவன் பிடியிலிருந்து காக்க கைகளை தோளுக்குமேல் வைத்துக்கொண்டான். இடும்பன் அவனை வளைத்து நெஞ்சோடு சேர்த்து வலக்கையால் இறுக்கியபடி இடக்கையால் கிளைகளைப்பற்றி ஆடி காற்றில் எழுந்து சென்றான். பருந்து சிறியபறவையை கவ்விப்பறப்பது போலவே தெரிந்தது. அர்ஜுனன் அருகே வந்து நின்ற தருமன் “இளையோனே! எடு வில்லை!” என்று கூவினான். அர்ஜுனன் “பார்ப்போம்” என்றான். தருமன் “அவர்களால் பறக்க முடியும் என்பது உண்மைதான். கொல் அவனை...” என்று கூவி அவன் தோளைப்பிடித்து உலுக்கினான். “மூத்தவரே, அவர் எளிதில் தோற்பவரல்ல. பார்ப்போம்” என்றான்.

“அவர்கள் மாயம் தெரிந்தவர்கள்... பார்க்கும்போதே கண்ணிலிருந்து அவன் மறைந்துவிடுகிறான்... அவன் என் இளையோனை கொல்வான். அவன் இறந்தால் அதன்பின் நான் உயிருடன் இருக்கமாட்டேன்” என்றான் தருமன். அர்ஜுனன் “அவர் இறக்கமாட்டார். எனக்கு வில் தேவையில்லை. இந்த உடைந்த கிளைகளே போதும் அவனை வீழ்த்த. அஞ்சாமலிருங்கள்” என்றான். மேலிருந்து கிளைகள் உடைந்து விழுந்து கிளைகளில் சிக்கி நின்றன. மேலும் கிளைகள் வந்து விழ அவை கொத்தாக கீழே கொட்டின. இலைகளும் தளிர்களும் சிறிய கிளைகளுடன் மழையாக பொழிந்துகொண்டிருந்தன.

மேலே நோக்கியபடி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். இடும்பி அழுதுகொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இருகைகளையும் மார்பில் அடிப்பவள் போல அசைத்தபடி உதடுகளை அசைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். மேலிருந்து பெரிய மரம் விழுவதுபோல கிளைகளை ஒடித்துக்கொண்டு பீமன் கீழே வந்தான். இடும்பி அவனை நோக்கி ஓடினாள். பீமன் மண்ணில் விழுந்த விசையை வளைந்தும் ஒடிந்தும் கிளைகள் குறைத்தமையால் அவன் விழுந்ததுமே வலியுடன் புரண்டு எழுந்தான். இடும்பி அவனை அணுகி அவனை எழுப்ப கைநீட்டினாள். அதற்குள் பருந்து போல மேலிருந்து இறங்கிய இடும்பன் மீண்டும் அவனை இடக்கையால் எடுத்துக்கொண்டு மேலெழுந்து சென்றான்.

மரங்களுக்குமேல் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தபடி அவர்கள் கீழே ஓடினார்கள். “வானில் மேகங்களுக்குள் சண்டையிடுகிறார்கள்!” என்றான் நகுலன். “இடும்பன் கண்ணுக்குத்தெரியாமல் மறைகிறான்” என்றான் சகதேவன். பீமன் இடும்பனை உதறிவிட்டு தாவி தழைத்து நின்ற மரம் ஒன்றின் மேல் விழுந்து கிளைகளில் சறுக்கி இறங்க இடும்பன் கீழே வந்து அவனை அடிக்கப்போனான். பீமன் புரண்டுகொள்ள அடி மரத்தின்மேல் விழுந்து இலைகள் அலைபாய மரம் அதிர்ந்தது.

கீழே விழுந்து மண்ணில் நின்ற பீமனை இடும்பன் மரக்கிளையில் கால்களை பின்னி தலைகீழாகத் தொங்கியபடி அறைந்தான். அவன் வேர்கள் மேல் விழுந்து புரண்டு எழுந்து ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி இடும்பன் மேல் வீசினான். அக்கணம் அங்கே மறைந்த இடும்பன் இன்னொரு மரத்தின் மேலிருந்து இறங்கி பீமனை அறைந்தான். அடி வெடிப்பொலியுடன் விழ பீமன் தெறித்து விழுந்து இடும்பனின் இரண்டாவது அடியில் இருந்து உருண்டு தப்பினான். அவன் மூக்கிலும் வாயிலும் குருதி வழிந்துகொண்டிருந்தது. நிற்கமுடியாமல் தள்ளாடி விழுந்து மீண்டும் எழுந்தான். அவன் பார்வை மங்கலடைந்திருக்கவேண்டும். இடும்பன் பின்பக்கம் வந்து அவனை அறைந்தபோது தடுக்கமுடியாதவனாக அதை வாங்கிக்கொண்டான். இடும்பன் அவனை மேலும் மேலும் அறைந்தபின் தூக்கி சுழற்றி வீசினான்.

இறந்தவன் போல பீமன் அங்கேயே கிடந்தான். மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கியபடி இரு பெருங்கைகளையும் விரித்து வீசிக்கொண்டு இடும்பன் காத்திருந்தான். “பார்த்தா... இதுவே நேரம்” என்றான் தருமன். “அவனை நீ போருக்கு அழை!” அர்ஜுனன் “இன்னமும் மூத்தவரின் ஆணை வரவில்லை” என்றான். “அவன் சித்தம் கலங்கியிருக்கிறது. அவனால் நிற்கவே முடியவில்லை. இதுவரை இடும்பனை அவனால் ஒரு அடிகூட அடிக்கமுடியவில்லை” என்றான் தருமன்.

நகுலன் “குரங்குகள்” என்றான். அர்ஜுனன் நோக்கியபோது மரக்கிளைகளின் மேல் குரங்குகள் வந்திருப்பதை கண்டான். கரிய உருவும் குட்டைவாலும் உள்ள கரடிபோன்ற பெரிய குரங்குகள். கிளைகளில் அமர்ந்தபடி அவை போரை நோக்கிக்கொண்டிருந்தன. பீமன் கையூன்றி எழுந்ததும் மீண்டும் அவனை அறைந்து வீழ்த்தினான் இடும்பன். பீமன் புரண்டு எழுந்து ஓடிச்சென்று ஒரு கிளையில் ஏறிக்கொண்டான். நகைத்தபடி கிளைவழியாகச் சென்ற இடும்பன் பீமனை அறைந்து மீண்டும் மண்ணில் விழச்செய்தான்.

கரிய முதுகுரங்கு ஒன்று மண்ணில் தாவி பீமனை அணுகி இருகாலில் எழுந்து நின்று நாய்க்குட்டியின் குரைப்பு போல ஒலியெழுப்பியது. இடும்பன் கிளைவழியாக வந்து அதை அறைந்தான். ஆனால் தலை கூட திருப்பாமல் அது அவன் அடியை தவிர்த்தது. சீற்றத்துடன் அவன் திருப்பித்திருப்பி அடித்தான். அது அவனை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பீமனை நோக்கி ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. பீமன் அதை நோக்கி அதே ஒலியில் ஏதோ சொன்னான். பின்னர் பின்னால் பாய்ந்து சென்று மெல்லிய மரக்கிளைகள் இரண்டை பற்றிக்கொண்டு மேலே எழுந்து சென்றான். குரங்கு திரும்பி இடும்பனை நோக்கி வெண்பற்களைக் காட்டி தலையைத் தாழ்த்தி சீறியபின் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டது.

பொறுமையிழந்திருந்த இடும்பன் பாய்ந்து கிளைகள் வழியாகச் சென்று பீமனை அணுக பீமன் விலகிச்சென்றான். “அந்தக்குரங்கு மிகச்சரியான திட்டத்தை அளித்துவிட்டது மூத்தவரே. இன்னும் சற்றுநேரத்தில் இடும்பன் கொல்லப்படுவான்” என்றான் அர்ஜுனன். “இன்னும் ஒரு அடிகூட பீமன் அடிக்கவில்லை” என்றான் தருமன். “அடிக்கப்போகிறார்” என்றான் அர்ஜுனன்.

பின்னால் வந்து நின்ற குந்தி பெருமூச்சுடன் “இடும்பனின் எடை மிகுதி. அவனால் நுனிக்கிளைகளை அணுக முடியாது. பீமனிடம் நாலைந்து நுனிக்கிளைகளை ஒரே சமயம் பற்றிக்கொள்ளும்படி அக்குரங்கு சொல்லியிருக்கிறது” என்றாள். தருமன் அதை அதன்பின்னரே அறிந்தான். பீமன் மெல்லிய சிறு கிளைகளையே பிடித்துக்கொண்டு சென்றான். சிலசமயம் அக்கிளைகள் உடைந்தபோது இன்னொன்றில் நின்றுகொண்டான். இடும்பன் நெஞ்சில் அறைந்து கூவியபடி பீமனை பிடிக்கத் தாவி அந்தக் கிளை ஒடியவே இன்னொன்றில் விழுந்து அதைப்பிடித்துக்கொண்ட கணம் தாவி வந்த பீமன் இடும்பனை ஓங்கி தோளில் அறைந்தான்.

வெறிக்கூச்சலுடன் இடும்பன் பீமனைப்பிடிக்கத் தாவினான். இருவரும் கிளைகள் வழியாகப் பறந்தபோது ஒரு கிளை நழுவி இடும்பன் நேராக மண்ணில் வந்து விழுந்தான். அதேகணம் மேலிருந்து இடும்பன் மேலேயே பீமன் குதித்தான். இடும்பன் பெருங்குரலில் அலறியபடி எழுவதற்குள் அவன் கழுத்தை தன் கைகளால் பற்றிக்கொண்டு ஒரே மூச்சில் வளைத்து ஒடித்தான். எலும்பு தசைக்குள் ஒடியும் ஒலி கேட்டது. இடும்பனின் கால்கள் மண்ணில் இழுபட்டு துடிதுடித்தன. பீமனின் முதுகிலும் தோளிலும் தசைகள் இறுகி அசைந்தன. இரையை இறுக்கி உண்ணும் மலைப்பாம்பு போலிருந்தான்.

அந்த கணத்தின் துடிப்பு அங்கிருந்த அனைவர் உடலிலும் குடியேறியது. அர்ஜுனன் தன் கைகளை இறுக்கிக்கொண்டான். தருமன் “உலோகங்கள் உரசிக்கொள்வதுபோல உடல் கூசுகிறது இளையவனே” என்றான். “என் கால்கள் தளர்கின்றன. என்னை பிடித்துக்கொள்!” நகுலன் தருமனை பிடித்துக்கொள்ள அவன் தள்ளாடி ஒரு வேரில் அமர்ந்தான். குந்தி புன்னகையுடன் “அவன் தோள்களில் ஜயன் விஜயன் என்னும் இரு நாகங்கள் வாழ்கின்றன என்று சூதர்கள் பாடுவதுண்டு” என்றாள்.

பீமனின் தசைகள் தளர்ந்தன. இடும்பனை விட்டுவிட்டு எழுந்து நின்று தள்ளாடி கால்களை அகற்றி வைத்து கைகளால் கண்களை மூடிக்கொண்டான். அவனைச்சுற்றி மரக்கிளைகளில் இருந்து பலாப்பழங்கள் உதிர்வதுபோல குரங்குகள் குதித்தன. அவை இரு கால்களில் எழுந்து நின்று இருகைகளாலும் நெஞ்சில் அறைந்துகொண்டு இளம்நாய்கள் குரைப்பதுபோல ஒலியெழுப்பின. இடும்பி ஓடிச்சென்று பீமனைப்பிடித்தாள். ஒரு குரங்கு அவளை நோக்கி வெண்ணிறப்பற்களைக் காட்டி சீறி திரும்ப பீமன் ஒற்றைச் சொல்லில் அதை தடுத்தான்.

இடும்பி பீமனை அழைத்துச்சென்று மரத்தடியில் படுக்கச்செய்தாள். அவன் நெஞ்சு ஏறி இறங்கியது. இருமியபோது வாய் நிறைய குருதி வந்தது. கைகால்களில் மெல்லிய வலிப்பு வந்து சென்றது. இடும்பி எழுந்து காட்டுக்குள் ஓடினாள். குந்தி ஓடி அருகே சென்று பீமனின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள். தருமன் பதைப்புடன் “இளையோனே, இங்கே மருத்துவர்கள் உண்டா?” என்றான். அர்ஜுனன் “மூத்தவரின் துணைவிக்குத் தெரியும்” என்றான். இடும்பி கைநிறைய பச்சிலைகளுடன் வந்தாள். அவற்றைக் கசக்கி சாற்றை பீமனின் வாய்க்குள் பெய்தாள். கசப்பு தாளாமல் அவன் உடல் உலுக்கிக் கொண்டது.

குரங்குகள் இடும்பனைச் சுற்றிவந்தபடி கைகளை மார்பில் அறைந்து அந்த ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தன. இடும்பர் குலத்து மூத்தவர்கள் சடலத்தை அணுகியபோது அவை எழுந்து கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டன. மூத்த இடும்பர் இடும்பனின் தலையைப் பிடித்து சற்று தூக்கி வைத்து அடியில் ஒரு மரக்கிளையை வைத்தார். கைகால்களை ஒழுங்காகத் தூக்கி வைத்தபின் எழுந்து நின்று தன் தலையில் மும்முறை அறைந்து வானத்தை நோக்கி மெல்ல ஓசையெழுப்பினார். அவரது குலத்தவர் அனைவரும் அதேபோல தலையை அறைந்து ஓலமிட்டனர். இடும்பியும் எழுந்து நின்று அதையே செய்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

பீமன் கண்விழித்து அவர்களை நோக்கியபின் குந்தியின் கைகளைப்பற்றி புன்னகை செய்தான். இடும்பி அவன் இரு கைகளையும் தன் தோளில் எடுத்து முதுகில் அவனை தூக்கிக்கொண்டு நடந்தாள். பின்னால் பாண்டவர்களும் குந்தியும் சென்றனர். பீமனை கொண்டுசென்று ஒரு பாறைமேல் படுக்கச்செய்துவிட்டு அவள் மேலும் பச்சிலைகளை பறித்துக்கொண்டு வந்தாள். குடிலுக்குச் சென்று பெரிய குடுவை ஒன்றை எடுத்து வந்து அதை நகுலனிடம் கொடுத்து அப்பச்சிலைகளை அதில் சாறுபிழியும்படி கைகாட்டினாள்.

அவன் பிழிந்துகொண்டிருக்கையிலேயே காட்டுக்குள் ஓடிச்சென்று கிளைகளில் ஏறி மேலே சென்று மறைந்து பின் கைகளில் இரு உடும்புகளுடன் மீண்டு வந்தாள். உடும்புகளின் கழுத்தை பற்களால் கடித்து உடைத்து தலைகீழாக குடுவையில் பிடித்து அழுத்தி கொழுத்த குருதியை அதில் வீழ்த்தினாள். வால் சுழற்றி தவித்த உடும்புகளின் கண்கள் பிரமித்து அவர்களைப் பார்த்தன. பச்சிலைச்சாற்றையும் உடும்புச்சோரியையும் நன்றாகக் கலக்கி பீமனிடம் கொடுக்க அவன் அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தான்.

“சரியாகிவிடும்... இன்னும் இருமுறை குடித்தால்போதும்” என்றாள் இடும்பி. “அசையக்கூடாது... மூன்றுநாட்கள் படுத்திருக்கவேண்டும்!” பீமனின் ரத்தம் வழிந்த வாயைப்பார்த்தபின் “இவன் இவர்களில் ஒருவன் என்பது இப்போதுதானே தெரிகிறது” என்றான் தருமன். “அவன் மாருதன். பெருங்காற்றுகளின் மைந்தன். ஆகவேதான் மாருதர்கள் வந்து அவன் வெற்றியை கொண்டாடுகிறார்கள்” என்று குந்தி சுட்டிக்காட்டினாள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சூழ்ந்து மரக்கிளைகள் முழுக்க குரங்குகள் அமர்ந்திருந்தன. “நாம் விலகிச்செல்வோம். அவர்கள் அருகே வரட்டும்” என்றான் அர்ஜுனன்.

அவர்கள் விலகியதுமே குரங்குகள் அருகே வந்தன. பெரிய தாட்டான் குரங்கு ஒன்று பீமனின் வாயை முகர்ந்து நோக்கியபின் நெஞ்சில் தலைவைத்துப்பார்த்தது. பெண்குரங்குகள் அவன் கைகளையும் கால்களையும் பிடித்துப்பார்த்தன. ஒரு குட்டி அவன் முகத்தருகே சென்று மிக அண்மையில் மூக்கை வைத்து நோக்கி பற்களைக் காட்டியது. புன்னகையுடன் அர்ஜுனன் “என்னிடம் சண்டைக்கு வா என்கிறான்” என்றான். “அப்படியா?” என்றான் தருமன். “ஆம், அவனுக்குப் பொறாமை” என்றான் நகுலன். “அழகிய குட்டி. அவனுக்கு சுபாகு என்று பெயரிடுகிறேன்” என்றான் தருமன்.

இரு பெண்குரங்குகள் கைகளில் பச்சிலைகளுடன் வந்து பீமனுக்குக் கொடுப்பதைக் கண்ட குந்தி “இடும்பி அளித்த அதே பச்சிலை... குரங்குகளிடமிருந்து இவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம்” என்றாள். பீமன் அந்தப்பச்சிலையை வாங்கி மென்றான். பச்சிலையை வாயிலிட்டு மென்ற ஒரு குரங்கு எச்சிலை அவன் புண்கள் மேல் உமிழ அவன் எரிச்சலில் முகம் சுளித்து அசைந்தான்.

“எங்கோ இவர்களின் குலமூதாதை அனுமன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சிரஞ்சீவி என்கிறார்கள்...” என்றான் தருமன். “ஆம் மூத்தவரே, இன்று அவர் போரிடும்போது அதை உணர்ந்தேன். அவரது காவல்தெய்வம் அவருடன் இருந்துகொண்டிருக்கிறது” என்றான் அர்ஜுனன். “இதோ வந்து அவரது புண்களை ஆற்றுவதும் அவரே. விரைவிலேயே மூத்தவர் நலமடைந்துவிடுவார்.”

பெரிய மரக்கிளைகளை வெட்டி படுக்கைபோல கட்டி அதன்மேல் இடும்பனின் உடலை தூக்கிவைத்தனர் இடும்பர் குலத்து மூத்தவர்கள். ஈச்சைமரத்தின் பச்சை இலைகளால் உடலை நன்கு மூடி நாராலும் கொடிகளாலும் கட்டினர். முகம் மட்டும் திறந்திருந்தது. அதை நான்கு பேர் தூக்கிக்கொள்ள பிறர் தலையை அறைந்து மெல்லிய ஒலியுடன் அழுதபடி பின்னால் வந்தனர். அவர்களின் அழுகையும் ஒரே குரலாக பிசிறின்றி சேர்ந்திருந்தது. மரக்கிளைகளில் தொங்கிய இல்லங்களில் இருந்து கொடிஏணிகள் வழியாக இறங்கி வந்த குழந்தைகள் திகைத்தவர்களாக நோக்கி நின்றனர். இடும்பியும் அவர்களுடன் அழுதபடி சென்றாள்.

பீமன் கையூன்றி எழுந்தான். அர்ஜுனனும் தருமனும் அருகே ஓடினர். “இளையவனே, நீ அசையக்கூடாது...” என்றான் தருமன். “இல்லை, நான் அங்கே அவர்களுடன் செல்லவேண்டும். அவர்களின் குலத்தில் ஒருவனாகப் போகிறேன். அவர்கள் குலம் கண்ட மாவீரர்களில் ஒருவன் அவன்” என்றான் பீமன். அவனால் நிற்கமுடியவில்லை. அர்ஜுனனும் தருமனும் அவனை இருபக்கமும் பிடித்துக்கொண்டனர்.

மெல்ல காலடி வைத்து பீமன் நடந்தான். அவன் எடையை தாளமுடியாமல் இருவரும் தள்ளாடினர். பீமன் வலப்பக்கம் காலெடுத்துவைத்தபோது முழு எடையும் தருமன் மேல் பதிய அவன் பதறி “பிடி… பார்த்தா” என்றான். கனத்த கற்சிலை ஒன்றை கொண்டுசெல்வதுபோல் தோன்றியது அர்ஜுனனுக்கு. தருமனின் குரல் கேட்டு இடும்பி திரும்பி நோக்கினாள். ஓடி அருகே வந்து அவர்களை விலகச் சொல்லிவிட்டு பீமனை தன் வலுவான வலக்கையால் பிடித்துக்கொண்டு நடத்திசென்றாள்.

அந்த ஊர்வலம் குன்றின் சரிவை அடைந்தது. மூங்கில்தட்டு சரிந்து மேலெழுந்தபோது பச்சை ஓலை சுற்றிக்கட்டப்பட்ட உடலின் மேல் சடைகள் தொங்கிய இடும்பனின் பெருமுகம் நேர் முன்னால் தெரிந்தது. விழிகள் திறந்திருந்தன. இடும்பன் அவர்களின் தெய்வங்களின் முகத்தை அடைந்திருந்தான். “இங்கே திறந்த விழிகளுடன்தான் சடலங்களை அடக்கம்செய்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் தருமன். கூட்டம் மேலேறிச்செல்ல பீமன் நின்று “என்னைத் தூக்கு” என்றான். இடும்பி அவன் இருகைகளையும் மீண்டும் முதுகில் கொடுத்து எளிதாக தூக்கிக்கொண்டாள்.

காற்று ஒன்று கடந்துசென்றபோது குன்றின் புற்பரப்பு அலையடிக்க அது நெளிந்து வானிலெழப்போவதுபோல் தோன்றியது. மேலே வானத்தின் புன்னகை போல நின்றிருந்த மாபெருங்கற்களின் வரிசையை அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கினான். “இன்னொரு பெருங்கல்...” என்றான் தருமன். “ஒருவேளை நமது பேரரசுகள் தூசுகளாக அழியும். நமது பெயர்களெல்லாம் மறக்கப்படும். அப்போதும் இந்தக் குன்றின் உச்சியில் திசைகள் சூழ இவை நின்றிருக்கும்.”

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 1

பீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின் உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத் தோன்றியது. நீளமான கால்களை இயல்பாக எடுத்துவைத்து பீஷ்மர் நடந்தாலும் உடன்செல்ல விதுரர் மூச்சிரைக்க ஓடவேண்டியிருந்தது. நெடுநாளைய காட்டுவாழ்க்கையால் நன்றாக மெலிந்திருந்த பீஷ்மரின் உரம்பெற்ற உடல் புல்மேல் செல்லும் வெட்டுக்கிளிபோல் தோன்றியது. அவரது வெண்ணிறத் தோல் தென்னாட்டின் வெயிலில் செம்புநிறம் கொண்டிருந்தது.

அவர்களைக் கண்டதும் விப்ரர் எழுந்து வணங்கி பேசாமல் நின்றார். விதுரர் மெல்லிய குரலில் “ஓய்வெடுக்கிறாரா?” என்றார். “ஆம்...” என்ற விப்ரர் மெல்ல “ஆனால் அதை ஓய்வு என்று சொல்லமுடியுமா என்ன?” என்றார். விதுரர் பேசாமல் நின்றார். “ஆற்றொணாத் துயரம் என்று கேட்டிருக்கிறேன் அமைச்சரே, இன்றுதான் பார்க்கிறேன். எச்சொல்லும் அவரை தேற்றமுடியவில்லை” என்றார் விப்ரர்.

விதுரர் திரும்பி பீஷ்மரை நோக்க அவர் அதனுடன் தொடர்பற்றவர் போல சற்று திரும்பிய தலையுடன் ஒளிநிறைந்த சாளரத்தை நோக்கி நின்றார். தாடியின் நரைமயிர்கள் ஒளிவிட்டன. வாயை இறுக்கி வெறும் பற்களை மெல்லும் வழக்கம் அவரிடம் குடியேறியிருந்தது. அவர் ஒலியாக மாறாத எதையோ சொல்லிக்கொண்டிருப்பதைப் போல. அது அவரை மிகவும் முதியவராகக் காட்டியது.

விதுரர் பெருமூச்சுடன் “பிதாமகர் சந்திக்க விழைகிறார். இப்போது சந்திப்பது பொருத்தமாக இருக்குமா?” என்றார். விப்ரர் “நான் சென்று பார்க்கிறேன்” என்றார். ”துயில்கிறார் என்றால் விட்டுவிடுங்கள். விழித்திருக்கிறார் என்றால் பிதாமகரின் வருகையை சொல்லுங்கள். பிதாமகரைப் பார்ப்பது அவரை சற்று ஆறுதல்கொள்ளச்செய்யலாம்” என்றார் விதுரர்.

விப்ரர் “அமைச்சரே, தாங்களறியாதது அல்ல, துயின்று எட்டு மாதங்களுக்கு மேலாகிறது. இரவும் பகலும் நான் உடனிருக்கிறேன். ஒரு கணம்கூட அவர் துயின்று நான் காணவில்லை. மூன்றுமாதங்கள் துயிலிழந்திருக்கும் ஒருவர் சித்தம் கலங்கிவிடுவார் என்றுதான் மருத்துவர் சொல்கிறார்கள். அரசருக்கோ அவர்கள் சித்தம் கலங்கச்செய்யும் மருந்துகளைத்தான் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யவனமதுவோ அகிபீனாவோ சிவமூலிகையோ அவர் அகத்தை மங்கச்செய்யவில்லை” என்றார். “எவர் வருகையும் அவரை தேற்ற முடியாது. பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சொல்லைத்தவிர எதையும் அவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்” என்றபின் உள்ளே சென்றார்.

மீண்டும் விதுரர் பீஷ்மரைப் பார்த்தார். எந்த உணர்ச்சியும் இன்றி நின்றிருந்த முதியவர் அக்கணம் விதுரரில் கடும் கசப்பை எழுப்பினார். இவர் வழக்கமான சொற்களைச் சொல்லி திருதராஷ்டிரரின் துயரை கூட்டிவிட்டுச் செல்லப்போகிறார் என்று தோன்றியதுமே ஏன் முதியவர்கள் அனைவருமே வழக்கமான சொற்களில் அமைந்துவிடுகிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அவர்களின் மூத்தவர்கள் முதியவயதில் சொன்னவை அவை. வழிவழியாக சொல்லப்படுபவை. உண்மையில் வாழ்க்கை என்பது புதியதாக ஏதும் சொல்வதற்கில்லாத மாறா சுழற்சிதானா? அல்லது வாழ்க்கைபற்றி ஏதும் சொல்வதற்கில்லை என்பதனால் அத்தருணத்திற்குரிய ஒலிகள் என அச்சொற்களை சொல்கிறார்களா?

விப்ரர் வெளியே வந்து உள்ளே செல்லலாம் என்று கையசைத்து தலைவணங்கினார். கதவைத்திறந்து உள்ளே சென்ற விதுரர் பீஷ்மரை உள்ளே அழைத்தார். இருக்கையில் தளர்ந்தவராக அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் எழுந்து கைகூப்பியபடி கண்ணீர் வழிய நின்றார். பீஷ்மர் அருகே வந்து திருதராஷ்டிரரை சிலகணங்கள் நோக்கிவிட்டு உடலில் கூடிய விரைவுடன் முன்னகர்ந்து திருதராஷ்டிரரை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். திருதராஷ்டிரர் யானை பிளிறுவதுபோல ஒலியெழுப்பி அவரது நெஞ்சில் தன் தலையை அழுத்திக்கொண்டு தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார். ஒரு சொல்கூட இல்லாமல் பீஷ்மர் திருதராஷ்டிரரின் தோள்களை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

திருதராஷ்டிரரின் அழுகை ஏறி ஏறி வந்தது. ஒருகட்டத்தில் ஒலியில்லாமல் அவரது உடல் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்னர் அவர் நினைவிழந்து பின்னால் சாய பீஷ்மர் தன் நீண்ட கைகளால் அவரது பேருடலை தாங்கிக்கொண்டார். அவர் அருகே ஓடிவந்த சேவகனை விழியாலேயே விலக்கிவிட்டு எளிதாகச் சுழற்றி அவரைத் தூக்கி இரு கைகளில் ஏந்திக்கொண்டு மறுவாயில் வழியாக உள்ளே சென்று அவரது மஞ்சத்தில் படுக்கவைத்தார். சேவகனிடம் “குளிர்ந்த நீர்” என்றார். சேவகன் கொண்டுவந்த நீரை வாங்கி திருதராஷ்டிரரின் முகத்தில் தெளித்தபடி “மல்லா, மல்லா... இங்கே பார்” என்று அழைத்தார்.

திருதராஷ்டிரரை பீஷ்மர் அப்படி அழைத்து விதுரர் கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை. மற்போர் கற்றுத்தந்த நாட்களில் எவரும் அருகில் இல்லாதபோது அழைத்திருக்கலாம். திருதராஷ்டிரரின் இமைகள் துடித்தன. வாய் கோணலாகி தலை திரும்பி காது முன்னால் வந்தது. கரகரத்த குரலில் “பிதாமகரே” என்றார். ”மல்லா, நான்தான்...” என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரர் கைகளை நீட்டி பீஷ்மரின் இருகைகளையும் பற்றி தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார். “நான் இறக்கவிழைகிறேன் பிதாமகரே... இனி நான் உயிருடன் இருந்தால் துயரை மட்டுமே அறிவேன்.” அவர் உதடுகள் வெடித்து மீண்டும் அழுகை கிளம்பியது. கரிய பெருமார்பும் தோள்களும் அதிர்ந்தன.

பீஷ்மர் சொற்களில்லாமல் அவர் கைகளுக்குள் தன் கைகளை விட்டுவிட்டு அமர்ந்திருந்தார். மெல்லிய விசும்பலுடன் ஓய்ந்து தலையை இருபக்கமும் திருப்பி அசைத்துக்கொண்டே இருந்தார் திருதராஷ்டிரர். அவர் அடங்கிவருவதாக விதுரர் எண்ணிய கணம் மீண்டும் பேரோலத்துடன் அலறியபடி தன் தலையில் கையால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அழத்தொடங்கினார். கால்கள் படுக்கையில் மூச்சுத்திணறுபவருடையது போல அசைந்து நெளிந்தன. நெடுநேரம் அருவியோசை போல அவ்வொலி கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் கேவல்கள். மழை சொட்டி ஓய்வதுபோல விம்மல்கள்.

"தண்ணீர் கொடு" என சேவகனுக்கு பீஷ்மர் கைகாட்டினார். தண்ணீரை சேவகன் நீட்டியதும் வாங்கி குடம்நிறையும் ஒலியுடன் குடித்துவிட்டு மார்பில் நீர் வழிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் மீண்டும் தன் தலையை அறைந்து அழத்தொடங்கினார். அழுகை வலுத்துக்கொண்டே சென்றது. அங்கே நிற்கமுடியாதவராக விதுரர் சாளரத்தருகே ஒதுங்கி வெளியே நோக்கினார். ஆனால் முதுகில் அலையலையாக வந்து அடித்தது அவ்வழுகை. இரு கைகளையும் பற்றி இறுக்கி பற்களைக் கிட்டித்துக்கொண்டு அவ்வொலியைக் கேட்டு நின்றிருந்தார். வெடித்துத் திரும்பப்போகும் கணம் கதவு திறந்து விப்ரருடன் மருத்துவன் உள்ளே வந்தான்.

திருதராஷ்டிரரின் வாயைத் திறந்து அகிபீனா கலந்த நீரை குடிக்கச்செய்தான். அவர் முகத்தைச்சுளித்துக்கொண்டு அதைக்குடித்தார். இன்னொரு சேவகன் கொண்டு வந்த சிறிய அனல்கலத்தில் சிவமூலிகைப்பொடியைத் தூவி நீலப்புகை எழுப்பி அவரது படுக்கையருகே வைத்தான். பீஷ்மர் எழுந்து அருகே வந்து வெளியே செல்லலாம் என்று கைகாட்டி நடந்தார். வலியறியும் விலங்குபோல திருதராஷ்டிரர் முனகியபடி மீண்டும் அழத்தொடங்க அந்த ஒலியை பின்னால் தள்ளி கதவை மூடிக்கொண்ட கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். திருதராஷ்டிரரும் பீஷ்மரும் ஒருவரையொருவர் அழைத்ததைத் தவிர ஒரு சொல்கூட உச்சரிக்கவில்லை.

பீஷ்மர் நிமிர்ந்த தலையுடன் கைகளை வீசி நடந்தார். எத்தனை உயரம் என்று விதுரர் எண்ணிக்கொண்டார். தன் வாழ்நாளெல்லாம் பிறரை குனிந்தே நோக்கும் ஒருவரின் அகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? மலைமுடிகள் போன்ற தனிமை. உச்சிப்பாறையில் கூடுகட்டும் கழுகு போலிருக்குமா அவரில் திகழும் எண்ணங்கள்? கவ்விச்செல்லும் சில கணங்களில் மட்டுமே மண்ணை அறியும் பறவைகளா அவை?

எதிரே வந்த சேவகன் வணங்கினான். விதுரர் விழியால் என்ன என்று கேட்டதும் “காந்தார இளவரசர் பிதாமகரை சந்திக்க விழைகிறார்” என்றான். விதுரர் “பிதாமகர் இன்றுதான் வந்திருக்கிறார். ஓய்வெடுத்தபின் நாளை காலை சந்திப்பார் என்று சொல்” என்றார். அவன் தலைவணங்கி “காந்தாரர் இங்குதான் இருக்கிறார்” என்றான். “இங்கா?” என்றார் விதுரர். “ஆம், அடுத்த அறையில்.” விதுரர் எரிச்சலுடன் பல்லைக்கடித்தார். சகுனியைக் காணாமல் பீஷ்மர் மறுபக்கம் போகவே முடியாது. “உடன் எவர்?” என்றார். “கணிகர்” என்றான். அவர் பீஷ்மரை நோக்கியதுமே பீஷ்மர் சந்திக்கலாம் என்று சைகை செய்தார்.

பீஷ்மர் உள்ளே நுழைந்ததுமே சகுனி எழுந்து வணங்கினார். எழமுடியாதென்று அறிந்ததனால் கணிகர் அங்கே முன்னரே நின்றிருந்தார். அவர் இடையை நன்கு வளைத்து வணங்கினார். ஒருகணம் கூட பீஷ்மரின் விழிகள் அவரில் பதியவில்லை. சகுனி “பிதாமகரிடம் முதன்மையான சிலவற்றை உரையாடலாமென எண்ணினேன்” என்றார். பீஷ்மர் “அரசியல் சார்ந்தா?” என்றார். “ஆம். அஸ்தினபுரி இன்றிருக்கும் நிலையில்...” என சகுனி தொடங்க “இவர் யார்?” என்று கணிகரை சுட்டிக்காட்டி பீஷ்மர் கேட்டார்.

“இவர் என் அமைச்சர். அத்துடன்..." என்று சகுனி சொல்லத் தொடங்க “அவர் வெளியேறட்டும். அஸ்தினபுரியின் அரசியலை காந்தார அமைச்சர் அறியவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர். சகுனி ஒருகணம் திகைத்தபின் கணிகரை நோக்கினார். கணிகர் “அடியேன், அரசியல் மதிசூழ்கையில்...” என சொல்லத் தொடங்க பீஷ்மர் திரும்பாமலேயே வெளியே செல்லும்படி கைகாட்டினார். கணிகர் தன் உடலை மெல்ல அசைத்து சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்லிய வலிமுனகலுடன் வெளியே சென்றார்.

கணிகர் வெளியே சென்றதும் பீஷ்மர் அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரியின் செய்திகள் உங்கள் அமைச்சருக்கு தெரியவேண்டியதில்லை. அது என் ஆணை” என்றார். “பணிகிறேன் பிதாமகரே” என்றபடி சகுனி மெல்ல அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “ஓநாய் கடித்த செய்தியை அறிந்தேன். புண் இன்னமுமா ஆறவில்லை?” என்றார் பீஷ்மர் கண்களிலும் முகத்திலும் குடியேறிய கனிவுடன். குனிந்து சகுனியின் கால்களை நோக்கி “வலி இருக்கிறதா?” என்றார்.

“புண் ஆறிவிட்டது பிதாமகரே. ஆனால் நரம்புகள் சில அறுந்துவிட்டன. அவை இணையவேயில்லை. எப்போதும் உள்ளே கடும் வலி இருந்துகொண்டிருக்கிறது” என்றார் சகுனி. “திராவிடநாட்டு மருத்துவர்கள் ஆற்றல் மிக்கவர்கள்...” என்றார் பீஷ்மர். “எனக்கு சிலரைத் தெரியும்.” சகுனி “இவ்வலி நான் உயிருடன் இருப்பது வரை நீடிக்கும் என அறிந்துவிட்டேன்” என்றார். பீஷ்மர் “நான் பார்க்கிறேன்” என்றார்.

சகுனி பேச்சை மாற்றும்பொருட்டு விதுரரை நோக்கிவிட்டு “பாண்டவர்களின் இறப்புச்செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். அந்த விழியசைவால் பீஷ்மரும் எண்ணம் மடைமாற்றப்பட்டார். ”ஆம், திராவிடநாட்டில் இருந்தேன். அங்கிருந்து கிளம்பிவந்தேன்” என்றார். சகுனி குரலைத் தாழ்த்தி “அரசரை பார்த்திருப்பீர்கள். செய்திவந்து எட்டுமாதமும் பன்னிருநாட்களும் ஆகிறது. அச்செய்தியை அறிந்த நாளில் இருந்த அதே துயர் அப்படியே நீடிக்கிறது” என்றார். பீஷ்மர் “அவன் ஒரு வனவிலங்கு போல. அவற்றின் உணர்ச்சிகள் சொற்களால் ஆனவை அல்ல. ஆகவே அவை சொற்களையும் அறியாது” என்றார். “ஆனால் விலங்குகள் மறக்கக்கூடியவை. அவன் அகமோ அழிவற்ற அன்பு நிறைந்தது.”

"அவர் இத்துயரைக் கடந்து உயிர்வாழமாட்டார் என்று அத்தனை மருத்துவர்களும் சொல்லிவிட்டனர்” என்றார் சகுனி. “இல்லை, அவனுடைய உடலாற்றலும் உயிராற்றலும் எல்லையற்றவை. எத்தனை கரைந்தழிந்தாலும் அவன் பெருமளவு எஞ்சுவான்” என்றார் பீஷ்மர். “இன்னும் சிலமாதங்கள் அவன் துயருடன் இருப்பான். அதன் பின் தேறுவான். ஆனால் ஒருபோதும் இத்துயரில் இருந்து மீளமாட்டான். எண்ணி எண்ணி அழுதபடியே எஞ்சியிருப்பான்.” தாடியைத் தடவியபடி “இக்குடியின் மூத்தார் அனைவரும் திரண்டு உருவெடுத்தவன் அவன். ஆலயக்கருவறையில் அமர்ந்திருக்கும் பெருங்கற்சிலை” என்றார்.

சகுனி தத்தளிக்கும் விழிகளால் விதுரரை நோக்கிவிட்டு “பிதாமகரே, நான் சொல்லவருவது அதுவே. அரசர் இந்நிலையில் இருக்கிறார். சொல் என ஒன்று அவர் செவியில் நுழைவதில்லை. பட்டத்து இளவரசர் எரிகொள்ளப்பட்டார். அரசு இன்று கையறு நிலையில் இருக்கிறது. செய்திவந்த அன்று இனி அஸ்தினபுரி எஞ்சாது என்றே நானும் எண்ணினேன். ஆனால் சில நாட்களிலேயே நகர் எழுந்துவிட்டது. அரண்மனை மீண்டு விட்டது. அவர்கள் அரசை எதிர்நோக்குகிறார்கள். அரசோ அதோ படுக்கையில் தீராத்துயருடன் செயலற்றிருக்கிறது” என்றார்.

பின்னர் விதுரரை நோக்கி புன்னகைத்து “அமைச்சரின் மதிசூழ்கை இந்த நாட்டை மட்டுமல்ல பாரதவர்ஷத்தையே ஆள்வதற்குப் போதுமானது என்பதை எவரும் அறிவார். சென்ற பல ஆண்டுகளாக இந்நாடு அவரது ஆணைகளால்தான் ஆளப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஷத்ரியர் அந்த ஆணைகள் அரசரால் அளிக்கப்படுகிறது என நம்பியே அதை தலைக்கொண்டார்கள். மக்கள் அரசரின் சொல் இங்கே நின்றிருக்கிறது என ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அமைச்சரின் சொல் தன் சொல் என்று அரசர் எண்ணுவதை அனைவரும் அறிவர்” என்றார்.

கண்கள் மெல்ல இடுங்க சகுனி “ஆனால் இன்று சொற்களை அரசர் கேட்கும் நிலையில் இல்லை என அனைவரும் அறிவார்கள். ஆணைகள் அரசருடையவை அல்ல என்ற பேச்சு இப்போதே வலுவாக இருக்கிறது. அது நாள்செல்லச்செல்ல வளரும் என்றே எண்ணுகிறேன்” என்றார். “இன்று பிதாமகர் வந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததுமே நான் மகிழ்ந்தேன். அனைத்து இக்கட்டுகளும் அகன்றுவிட்டன. இத்தருணத்தில் முடிவெடுக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவர் நீங்கள்.”

பீஷ்மர் தாடியை நீவியபடி தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தார். “பிதாமகரே, நான் விளக்கவேண்டியிருக்காது. எங்கிருந்தாலும் செய்திகளை நீங்கள் அறிந்துகொண்டுதான் இருப்பீர்கள். யாதவ அரசியும் இளையபாண்டவர்களும் சற்றே அத்து மீறிவிட்டனர். நாம் மகதத்தை சீண்டிவிட்டோம். மகதத்தின் எட்டு படைப்பிரிவுகள் நம் எல்லையை அழுத்திக்கொண்டிருக்கின்றன. கூர்ஜரத்தைத் தாக்கியது வழியாக மேற்கெல்லை நாடுகளனைத்தையும் பகைத்துக்கொண்டிருக்கிறோம். நாடு இன்றிருப்பதுபோல பகைசூழ்ந்த நிலையில் என்றும் இருந்ததில்லை” சகுனி சொன்னார். “இப்போது தேவை வலுவான ஓர் அரசு. அதை தலைமைதாங்கி நடத்தும் போர்க்குணம் கொண்ட இளம் அரசன்.”

பீஷ்மர் தலையசைத்தார். “இனிமேல் நாம் எதற்காக காத்திருக்கவேண்டும்? துரியோதனன் மணிமுடியுடன் பிறந்தவன்” என்றார் சகுனி. விதுரர் “காந்தாரரே, முன்னரே தருமனுக்கும் துரியனுக்கும் இடையே முடிப்பூசல் இருந்தது நாடறியும். அவர்களின் இறப்புக்குப்பின் உடனே முடிசூடும்போது குடிகள் நடுவே ஒரு பேச்சு எழும்” என்றார். “ஆம், சிலர் சொல்லக்கூடும். ஆனால் பீஷ்மபிதாமகரே அம்மணிமுடியை சூட்டுவாரென்றால் எச்சொல்லும் எழாது” என்றார் சகுனி.

விதுரர் மேலும் சொல்ல முனைவதற்குள் பீஷ்மர் கையமர்த்தி “சௌபாலர் சொல்வது உண்மை. அரசரில்லை என்ற எண்ணம் குடிகளிடையே உருவாகலாகாது. அரசு என்பது ஒரு தோற்றமே, சுழலும் சக்கரத்தில் மையம் தோன்றுவதுபோல. சுழற்சி நிற்கலாகாது. மையம் அழிந்து சக்கரம் சிதறிவிடும்” என்றார். சகுனியின் முகம் மலர்ந்தது. “இன்னும் நான்கு மாதங்களில் பாண்டவர்களின் ஓராண்டு நீர்க்கடன்கள் முடிகின்றன. அதன்பின்னர் துரியோதனனே முடிசூடட்டும். அவன் அஸ்தினபுரியை ஆளவேண்டுமென தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன என்றால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார்.

“கௌரவர்களுடன் வந்து தங்களை அரண்மனையில் சந்தித்து ஆசிபெறுகிறேன் பிதாமகரே” என்றார் சகுனி. “இளையோருக்கான நீர்க்கடன்களை நான் செய்தியறிந்த நாள் முதல் செய்து வருகிறேன். இங்கே எவர் செய்கிறார்கள்?” என்றார் பீஷ்மர். சகுனி “குண்டாசி செய்கிறான்” என்றார். பீஷ்மர் நின்று புருவங்கள் சுருங்க “குண்டாசியா? ஏன்?” என்றார். “அவன் செய்யலாமென்று ஏற்றான். மேலும் அவன் பீமன் மேல் ஆழ்ந்த அன்புள்ளவன்” என்று சகுனி தடுமாறினார்.

பீஷ்மர் “அப்படியென்றால் துரியோதனனுக்கு அன்பில்லையா?” என்றார். “அன்பில்லை என்று எவர் சொல்லமுடியும்? குண்டாசி பெருந்துயருற்றான். அவன் துயரைக் கண்டு...” பீஷ்மர் கைகாட்டி “துரியன் ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்தானா?” என்றார். சகுனி “அவர்...” என்று தொடங்க “ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்யப்பட்ட கங்கைக்கரைக்குச் சென்றானா?” என்று மீண்டும் கேட்டார் பீஷ்மர். “இல்லை” என்றார் சகுனி “அவரால் இளையோரின் இறப்பை எளிதாகக் கொள்ளமுடியவில்லை. மேலும்...”

போதும் என்று கைகாட்டிவிட்டு பீஷ்மர் திரும்பி நடந்தார். சகுனி பின்னால் வந்து “இதில் ஒளிக்க ஒன்றுமில்லை. துரியோதனர் பாண்டவர்கள் மேல் கொண்ட சினம் அப்படியேதான் இருக்கிறது. அவரை அவர்கள் அவமதித்துவிட்டார்கள் என எண்ணுகிறார். மதுராவின் மீதான படையெடுப்பு ஒத்திகையை அவரைச் செய்யவைத்து ஏமாற்றினார்கள்... அவர் தருமனிடம் கால்தொட்டு இறைஞ்சியும் அவரை புறக்கணித்தார்கள். அனைத்தையும் ஒற்றர்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். “அந்தச் சினம் இறப்புச்செய்திக்குப் பின்னரும் நீடிக்கிறதா என்ன?” என்றார் பீஷ்மர்.

பீஷ்மர் திரும்பாமல் நடக்க “ஆம். அது பிழை என நான் அறிவேன். ஆனால் துரியோதனர் ஷாத்ர குணம் மேலோங்கியவர். அவமதிப்புகளை அவர் மறப்பதேயில்லை. அந்தச் சினம் இப்போது பெருமளவு அடங்கி வருகிறது. ஆனால் முதல் நீர்க்கடன் நடந்தபோது அந்தக் கசப்பு நெஞ்சில் இருக்கையில் அதை மறைத்து நீர்க்கடன் செய்வது முறையல்ல. ஆகவே இளையோன் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். அதுவே உகந்தது என நான் எண்ணினேன்” என்றார் சகுனி. பீஷ்மர் தலையசைத்தபடி மறுபக்கம் இடைநாழியை நோக்கி நடக்க சகுனி வாசலிலேயே சுவர் பற்றி நின்றுகொண்டார்.

வெளியே நின்றிருந்த கணிகர் பணிவுடன் உடல் வளைத்து வணங்க பீஷ்மர் அவரை நோக்காமலேயே வெளியே சென்று ரதத்தை கொண்டுவரும்படி கைகாட்டினார். ரதம் வந்து நின்றதும் வழக்கம்போல படிகளில் மிதிக்காமல் தரையில் இருந்தே ஏறிக்கொண்டு பீடத்தில் அமர்ந்தார். திரும்பி விதுரரிடம் தன்னுடன் ஏறிக்கொள்ளச் சொல்லி கைகாட்டினார். விதுரர் ஏறிக்கொண்டதும் அவர் “ம்” என சொல்ல ரதம் கிளம்பியது.

பீஷ்மர் சாலையை விழிகள் சுருக்கி நோக்கியபடி தாடியை நீவிக்கொண்டு “விதுரா, நீ சென்று அந்த மாளிகையின் எரிதடத்தை பார்த்தாயா?” என்றார். “இல்லை, செய்திகளைத்தான் கேட்டேன்” என்றார் விதுரர். “செய்திகளை நானும் கேட்டேன். நான் அங்கே செல்ல விரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். “அங்கே ஒன்றுமில்லை. பலமுறை மழைபெய்து சாம்பல் முழுமையாகவே கரைந்துவிட்டது. எலும்புகளை கொண்டுவந்துவிட்டோம். அந்த இடத்தில் கொற்றவைக்கு ஓர் ஆலயம் அமைக்க சூத்ராகிகளை ஆண்டுமுடிவன்று அனுப்பவிருக்கிறோம்.”

“எரிதடம் இல்லையென்றாலும் அந்த இடத்தை நான் பார்க்கவேண்டும். அந்தச் சூழலை. அங்குள்ள மக்களை.” பீஷ்மர் தாடியை விட்டதும் அது பறக்கத் தொடங்கியது. “துரியன் நீர்க்கடன்களைச் செய்ய மறுத்தான் என்றால் அது பகையால் அல்ல. பகை என்றால் அது அந்த இறப்புச்செய்தியைக் கேட்டதுமே கரைந்துவிடும். அந்நாள் வரை அப்பகையை அவன் தன்னுள் வைத்து வளர்த்திருப்பான். அந்த இடம் ஒழிந்து பெரும் வெறுமையே சூழும். எங்கும் பகைவரே அகம் உருகி நீத்தார் அஞ்சலி செய்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “துரியன் மறுத்தது குற்றவுணர்வால் இருக்கலாம்.”

“பிதாமகரே...” என்றார் விதுரர். “நான் அதை கண்டுவிட்டேன் என உணர்ந்ததுமே சகுனி பதறிவிட்டான். உடனே நான் நிறைவுகொள்ளும்படி ஒரு தர்க்கத்தை உருவாக்கி சொன்னான். அந்தத் தர்க்கம் பழுதற்றது என்பதனாலேயே ஐயத்திற்கிடமானது” என்றார் பீஷ்மர். “காந்தாரன் நான் முன்பு கண்டவன் அல்ல. அவன் கண்கள் மாறிவிட்டன. அவன் உடலெங்கும் உள்ள கோணல் முகத்திலும் பார்வையிலும் வந்துவிட்டிருக்கிறது. அவனுக்குள் நானறிந்த சகுனி இல்லை.” விதுரர் படபடப்புடன் தேரின் தூணை பிடித்துக்கொண்டார்.

பீஷ்மர் “அவனிடமிருக்கும் விரும்பத்தகாத ஒன்று எது என்று எண்ணிப்பார்த்தேன். வெளியே கணிகரை மீண்டும் பார்த்ததுமே உணந்தேன். அவரை முதலில் பார்த்ததுமே அறிந்துகொண்டேன், அவர் தூய தீமை உறைந்து உருவான ஆளுமை கொண்டவர். பொறாமை, சினம், பேராசை, காமம் என்றெல்லாம் வெளிப்பாடு கொள்ளும் எளிய மானுடத் தீமை அல்ல அது. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வங்களுக்குரிய தீமை. தீமை மட்டுமேயான தீமை. நோய், இறப்பு போல இயற்கையின் கட்டமைப்பிலேயே உறைந்திருக்கும் ஆற்றல் அது. அவரது விழிகளில் வெளிப்படுவது அதுவே. அதை மானுடர் எதிர்கொள்ள முடியாது.”

விதுரர் தன் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டார். “அது தன் ஆடலை நிகழ்த்தி அடங்கும். அதை நிகர்க்கும் தெய்வங்களின் பிறிதொரு விசையால் நிறுத்தப்படும்... நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் பீஷ்மர். “அவரை அணுகுபவர் அனைவரின் விழிகளும் அவரை எதிரொளிக்கத் தொடங்கும். அவர் தன்னைச்சூழும் அத்தனை உள்ளங்களிலும் தன்னை ஊற்றி நிறைத்துச் செல்வார். சகுனியின் விழிகளில் தெரிந்தது கணிகரின் விழிகள். துரியனின் விழிகளிலும் அவரே தெரிவார் என நினைக்கிறேன்.”

பெருமூச்சுடன் பீஷ்மர் சொன்னார் “என் எண்ணங்கள் முதியவனின் வீண் அச்சங்களாக இருக்கலாம். என் விழிமயக்காக இருக்கலாம். இருந்தால் நன்று. ஆனால் நான் அங்கே செல்லவேண்டும். பாண்டவர்கள் வஞ்சத்தால் கொல்லப்படவில்லை என என் அகம் எனக்குச் சொல்லவேண்டும். அது வரை என் அகம் அடங்காது. மணிமுடியுரிமை குறித்த முடிவையும் எடுக்க மாட்டேன்.”

விதுரர் “பிதாமகரே” என்றார். ஓசை எழவில்லை. மீண்டும் கனைத்து நாவால் உதடுகளை துழாவியபின் “பிதாமகரே” என்றார். “சொல்... வஞ்சம் என நீ அறிவாய் அல்லவா? உன் பதற்றத்திற்கு வேறு மூலம் இருக்க இயலாது” என்றார் பீஷ்மர். “பிதாமகரே, வஞ்சம் நிகழ்ந்தது உண்மை. ஆனால் பாண்டவர்கள் இறக்கவில்லை” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்றார் பீஷ்மர். அதுவரை அவரிடமிருந்த நிமிர்வு முழுமையாக அகன்று வயோதிகத் தந்தையாக ஆகி கைகள் நடுங்க விதுரரின் தோளைத் தொட்டு “சொல்... அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என் மைந்தர் இறக்கவில்லையா?” என்றார்.

விதுரர் “அவர்கள் நலமாக இருக்கிறார்கள். எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வாரணவதத்து மாளிகையில் இருந்து தப்பிவிட்டார்கள்” என்றார். “தெய்வங்களே...” என நடுங்கும் குரலில் கூவியபடி கண்களில் நீருடன் பீஷ்மர் கைகூப்பினார். பின்னர் மெல்ல விம்மியபடி அந்தக் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டார். மேலும் இருமுறை விசும்பி மூச்சிழுத்தபின் அப்படியே அமர்ந்திருந்தார். அந்த மாற்றம் விதுரரை புன்னகை செய்யவைத்தது. அவர் சொல்லச்சொல்ல முகத்தை நிமிர்த்தாமலே கேட்டுக்கொண்டிருந்தார் பீஷ்மர்.

“இன்று அரசரின் கடுந்துயரைக் கண்டதும் சொல்லிவிடலாம் என்று என் அகம் எழுந்தது...” என்று விதுரர் சொன்னதுமே “சொல்லாதே. அவன் அறிந்தால் துரியோதனனை கொன்றுவிடுவான். ஐயமே இல்லை. நான் அவனை அறிவேன்” என்றார் பீஷ்மர். “ஆனால் இந்தத் துயர்... இதில் அரசர் இறப்பாரென்றால்...” என விதுரர் சொல்ல “இறக்க மாட்டான். இருப்பான்” என்றார் பீஷ்மர். பெருமூச்சுடன் தலையசைத்து “மாவீரர்கள் நெருப்பு போல, அவர்களை எங்கும் ஒளித்துவைக்க முடியாது. அவர்கள் இருக்கும் இடம் விரைவிலேயே தெரிந்துவிடும். அப்போது அவனும் அறிந்துகொள்ளட்டும்” என்றார்.

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 2

ஹரிசேனர் வந்து பீஷ்மரின் தேர் அருகே நின்று தலைவணங்கினார். பீஷ்மர் படைப்பயிற்சிச் சாலையின் விரிந்த முற்றத்தில் இறங்கி அவரை வெறுமனே நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தன் முதல்மாணவரைப்பார்க்கும் பீஷ்மர் என்ன சொல்வார் என்று சில கணங்களுக்கு முன் தன் உள்ளம் எண்ணியதை உணர்ந்து விதுரர் புன்னகைசெய்தார். பீஷ்மர் அங்கிருந்து எப்போதுமே அகலாதவர்போன்ற பாவனையுடன் படிகளில் ஏறி இடைநாழியில் நடந்து உள்ளே சென்றார்.

ஹரிசேனர் பீஷ்மரைப்போலவே நன்கு நரைத்த குழலும் தாடியுமாக நீண்ட வெண்ணிற உடலுடன் இருந்தார். அவர் புன்னகையுடன் “வருக அமைச்சரே” என்று சொன்னபோதுதான் அவரை தான் பார்த்தும் பன்னிரண்டு வருடங்களாகின்றன என்று விதுரர் எண்ணிக்கொண்டார். விதுரர் தலைவணங்கியபோது ஹரிசேனர் “துரோணர் வந்திருக்கிறார்” என்றார். “இங்கா?” என்றார் விதுரர். “ஆம்... அவருக்கு குருநாதர் இன்று வருவது தெரியாது. இங்கு வந்தபின்னர் குருநாதர் வருகையை அறிந்து பார்க்கவேண்டும் என காத்திருக்கிறார்” என்றார் ஹரிசேனர்.

விதுரர் பீஷ்மரின் அறைக்குள் சென்றார். நீண்ட கால்களை ஒன்றன்மேல் ஒன்றாக ஒடித்து மடித்ததுபோல வைத்தபடி ஒடுங்கி அமர்ந்து சாளரத்தை நோக்கிக்கொண்டிருந்த பீஷ்மர் திரும்பி உள்ளே வரும்படி தலையை அசைத்தார். விதுரர் சென்று அமர்ந்துகொண்டார். உயரமுள்ளவர் என்பதனால் பீடங்களில் கால்களை நீட்டி வைத்து கைகளைப் பரப்பி அமர்பவராகவே பீஷ்மரைக் கண்டிருந்தார். இந்த உடல்மொழியின் மாற்றம் அவரது அகத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டார்.

ஹரிசேனர் உள்ளே வந்ததும் பீஷ்மர் கண்ணசைத்தார். ஹரிசேனர் “துரோணர்” என்றதும் பீஷ்மர் தலையசைக்க அவர் வணங்கி வெளியே சென்றார். அவர் சொற்களே இல்லாதவராக ஆகிவிட்டிருந்தார். இளமையில் சிறுவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளிருந்து பொங்கிவரும் சொற்களின் விரைவால் ஏரியின் மடை என உடலும் உதடுகளும் அதிர்கின்றன. சொல்பவை அனைத்தும் பின்பு எண்ணங்களுக்குச் சென்றுவிடுகின்றன. சொற்பெருக்காக நிகழ்ந்துகொண்டிருக்கிறது சித்தம். சொற்கள் ஒவ்வொன்றாக சுருங்கி மறையுமோ? சித்தமும் ஒழிந்து கிடக்குமோ? பின்னர் புன்னகையுடன் நினைத்துக்கொண்டார். வாழ்க்கையைச் சொல்லவும் எண்ணவும் அத்தனை சொற்களும் சைகைகளும் போதும் போலிருக்கிறது.

மீண்டும் மீண்டும் பீஷ்மரை மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம் என்ற எண்ணம் வந்ததும் அவராக தன்னை எண்ணிக்கொண்டிருப்பது தெரிந்தது. தான் சென்று சேரக்கூடும் உருவம். உடனே மீண்டும் அகத்தில் எழுந்த புன்னகையுடன் சென்று சேர விழையும் உருவம் என எண்ணிக்கொண்டார். இந்த உருவம் எனக்கு வாய்க்கவில்லை. இது வாழ்நாள் முழுக்க பிறமானுடரை குனிந்தே நோக்கியவரின் அகம். அத்தனைபேர் நடுவிலும் நிமிர்ந்து நின்றாகவேண்டியவரின் தனிமை. விதுரர் புன்னகையுடன் சற்று அசைய பீஷ்மர் திரும்பி “யாதவன் என்ன செய்கிறான்?” என்றார். விதுரர் “யார்?” என்றதுமே உணர்ந்து “அவன் கூர்ஜரத்தின் தெற்கே நகரம் ஒன்றை அமைக்கிறான் என்று செய்திகள் வந்தன.”

“ஆம், துவாரகை” என்றார் பீஷ்மர். “அவனுக்கு நிதி எங்கிருந்து வருகிறது?” விதுரர் “பழைய குசஸ்தலி சேற்றில் மூழ்கி மறைந்த நகரம். அவன் அங்கே அகழ்வுசெய்து பொற்குவைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ஒற்றர்கள்” என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “இருக்கலாம். அதைவிடப் பெரிய நிதியை அவன் யவனநாட்டு கலங்களில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறான் என நினைக்கிறேன்” என்றார். “அவர்கள் ஏன் நிதியை அளிக்கவேண்டும்?” என்றார் விதுரர். “அவர்களுக்கு உகந்த ஒரு துறைமுகநகரம் அமைவது நல்லதல்லவா? அவர்கள் அளிக்கும் நிதியை இரண்டே வருகைகளில் மீட்டுவிடுவார்கள். ஆனால் அது நமக்கெல்லாம் பெருந்தொகை.”

“கடல்வணிகத்தின் கணக்குகள் எனக்குப் புரியவில்லை” என்றார் விதுரர். பீஷ்மர் “நான் இப்படி ஒரு நகரை அமைப்பதைப்பற்றி கனவுகண்டிருக்கிறேன். தேவபாலபுரிக்கு என் இளமையில் சென்றிருந்தேன். அங்கே சிந்துவின் சேறு வந்து சூழ்ந்து கடலின் ஆழம் குறைந்து கொண்டிருந்தது. மறுபக்கம் பாய்மரத்தின் கணக்கும் கலையும் வளர்ந்து வருவதைக் கண்டேன். விளைவாக மரக்கலங்கள் பெரிதாகிக்கொண்டே செல்வதை அறிந்தேன். விரைவிலேயே தேவபாலபுரம் பெருங்கலங்களால் கைவிடப்படும் என்று தோன்றியது” என்றார்.

“துறைமுகங்களை சென்றகாலங்களில் ஆற்றின் கழிமுகங்களில்தான் அமைத்தனர். கடலோதத்தில் கலங்கள் கரைக்குள் நுழைய முடியும் என்பதனால். ஆனால் இன்று கலங்கள் பெரியதாகிக்கொண்டே செல்கின்றன. கழிமுகச்சேறு அவற்றுக்கு பெரும் இடராக உள்ளது. கடலுக்குள் நீண்டிருக்கும் மலைதான் இனி துறைமுகங்களுக்கு உகந்தது என எண்ணினேன். பெருங்கலங்கள் ஆழ்கடலிலேயே நின்றிருக்கும். அவற்றை அணுக கரையின் நீட்சி ஒன்று கடலுக்குள் சென்றிருந்தால்போதும். அத்தகைய இடங்களைத் தேடி சிற்பிகளையும் ஒற்றர்களையும் அனுப்பினேன். என் ஒற்றர்கள் இன்று துவாரகை அமையும் இந்த கடல்பாறைமுனையைப்பற்றி முன்னரே என்னிடம் சொல்லியிருந்தனர்” பீஷ்மர் சொன்னார்.

“ஆனால் படகுகளில்தானே உள்நிலத்துப் பொதிகள் வந்துசேரமுடியும்?” என்றார் விதுரர். பீஷ்மர் "ஆம், அதற்கு சிந்து போன்ற பெருநதிகளைவிட உகந்தது கோமதி போன்ற சிறிய நதிகளே. அவை அதிக சேற்றைக்கொண்டுவருவதில்லை. பொதிகளை சிறிய படகில் கொண்டுவரலாமே” என்றார். விதுரர் “ஆம், உண்மைதான். அந்தத் துறைமுகம் வளரும். வளரும்போது அதன்மேல் பெருநாடுகளின் விழிகள் படும். வளர்ச்சியைப்போல ஆபத்தைக் கூட்டிவருவது பிறிதில்லை” என்றார். பீஷ்மர் நகைத்து “அது அமைச்சரின் சொற்கள் விதுரா. ஷத்ரியன் அதை இப்படிச் சொல்வான், நேமாறாக. வளர்ச்சியே எதிரிகளை குறைக்கும் வழி” என்றார்.

விதுரர் சிலகணங்கள் கைகளில் முகம் வைத்து அமர்ந்திருந்துவிட்டு “அவன் எனக்கு அச்சமூட்டுகிறான் பிதாமகரே. நெறிகளை ஒருகணம்கூடத் தயங்காமல் கடந்துசெல்கிறான்” என்றார். “அவனைப்பற்றி ஒவ்வொன்றையும் அறிந்துகொண்டுதான் இருந்தேன்” என்றார் பீஷ்மர். “தாங்கள் வாழும் காலகட்டத்தை மீறிச்செல்பவர்கள் நெறிகளை பொருட்டாக எண்ணுவதில்லை. ஏனென்றால் அவை நிகழ்காலத்தால் வகுக்கப்படுபவை. அவன் எதிர்காலத்தின் மைந்தன்.”

விதுரர் சினத்துடன் “அவனால் அஸ்தினபுரி பெரும் இக்கட்டுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது பிதாமகரே. அவன் தன் இனியவஞ்சத்தால் யாதவ அரசியைக் கவர்ந்து அஸ்தினபுரியை போரில் ஈடுபடுத்தினான். அதை நான் எதிர்த்தேன். அப்போது என்னை அவமதித்தான்” என்றார். மூச்சிரைக்க கண்களில் நீர் பரவ அன்று நிகழ்ந்ததை எல்லாம் சொன்னார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை பரவுவதைக் கண்டதும் விதுரர் சினத்துடன் எழுந்து “சிரிக்கவேண்டாம் பிதாமகரே... நான் அக்கணத்தில் அங்கே உருகி இறந்ததைப்போல் உணர்ந்தேன்” என்றார். “இறந்தாய், மீண்டும் பிறக்கவில்லை” என்றார் பீஷ்மர். நெஞ்சு விம்மி உதடுகள் அதிர தளர்ந்த கால்களுடன் விதுரர் அமர்ந்துகொண்டார்.

”விதுரா, உன் அச்சங்களும் எச்சரிக்கைகளும் தேர்ந்த அரசியல்மதியாளன் அறிந்து சொல்லவேண்டியவை. அவற்றை நீ சொன்னதில் எப்பிழையும் இல்லை. நீ பாரதவர்ஷத்தின் மாபெரும் அமைச்சன். ஆனால் நீ அரசன் அல்ல. அமைச்சன் நாடாளக்கூடாது, அரசனே ஆளவேண்டும் என வகுத்த முன்னோர் அறிவில்லாதவர்களும் அல்ல. அரசனை இயக்கும் விசையை ஷாத்ரம் என்றனர் நூலோர். அதன் விசையை கட்டுக்குள் வைத்திருக்கும் நடைமுறை அறிவையும் நூலறிவையும் அளிப்பவர்கள் அமைச்சர்கள். அரசன் சிறந்த அமைச்சர்களை வைத்திருக்கவேண்டும், அவர்களின் சொற்களை கேட்கவேண்டும். ஆனால் தன் வீரம் அளிக்கும் துணிவால் அவர்களைக் கடந்து சென்று முடிவுகளை எடுக்கவும் வேண்டும்” என்றார் பீஷ்மர்.

திகைப்புடன் நோக்கிய விதுரரைப் பார்த்து பீஷ்மர் புன்னகையுடன் சொன்னார் “அன்று நான் அவையில் இருந்திருந்தால் ஒன்றைத்தான் கேட்டிருப்பேன், உன்னிடமும் எனக்கு நானேயும். நாம் மகதம் நம்மை தாக்கிவிடக்கூடும் என அஞ்சி ஒடுங்கி யாதவர்களுக்கு உதவுவதைத் தவிர்க்கிறோம். ஆனால் மகதம் நம்மைத் தாக்கினால் என்ன செய்வோம்? எதிர்கொள்வோம் அல்லவா? அந்த எதிர்கொள்ளலை ஏன் யாதவக் கிருஷ்ணனின் பொருட்டு செய்யக்கூடாது? அதைச்செய்யும் அளவுக்கு யாதவனின் உறவு நமக்கு மதிப்புள்ளதா? ஆம் என்றால் அதைச் செய்வதில் என்ன பிழை? அந்த வினாக்களின் அடிப்படையில்தான் முடிவெடுத்திருப்பேன்.”

“ஆனால்...” என விதுரர் சொல்லத் தொடங்கியதுமே கையசைத்த பீஷ்மர் “படையெடுப்பு உன்னை மீறி நிகழ்ந்தது. மதுரா கைப்பற்றப்பட்டது. கூர்ஜரம் தோற்கடிக்கப்பட்டது. என்ன நடந்தது? நீ எண்ணியதுபோல மகதம் படை கொண்டுவந்ததா என்ன? நீ நிலைமையை வென்று செல்லவில்லையா என்ன? அதற்கு உன் கூர்மதி உதவியதே! அதை ஏன் அந்தக் இக்கட்டு நிகழும் முன்னரே நாமே முடிவெடுத்து செய்திருக்கக் கூடாது” என்றார். விதுரர் “ஏன் ஆபத்தை வரவழைக்கவேண்டும்?” என்றார்.பீஷ்மர் நகைத்து “அதுதான் அமைச்சனின் உள்ளம். ஷத்ரியனின் உள்ளம் என்பது தேவை என்றால் ஆபத்தை நோக்கிச் செல்வதே. அறைகூவல்களை சந்திப்பதற்கான துணிவே ஷத்ரியனை பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது.”என்றார்

பீஷ்மர் சொன்னார் “நான் யாதவனுக்கு படைகளை அளித்திருப்பேன். நம்மை நம்பி அவன் தூதுவந்தது பாரதவர்ஷத்தின் அத்தனை அரசுகளுக்கும் தெரியவரும். நாம் அவனை கைவிட்டோமென்றால் அதன் மூலமே நாம் வலுவற்றவர்கள் என்பதை அத்தனை மன்னர்களுக்கும் தெரிவித்தவர்களாவோம்.” விதுரர் நிமிர்ந்து இமைக்காமல் நோக்கினார்.

”சிந்தித்துப்பார்” என்றார் பீஷ்மர். “யாதவ அரசியின் நாடும் அவள் குலமும் மகதத்தால் அழிக்கப்பட்டது. அவள் பிறந்த மண் சூறையாடப்பட்டு அவள் தந்தையே நாடிலியாக ஓடநேர்ந்தது. அவள் குருதிச் சுற்றமாகிய தமையனின் மைந்தன் நேரில் வந்து உதவிகோருகிறான். அவர்கள் குலத்தில் மருகன் என்பவன் மைந்தனுக்கும் மேலானவன். அத்தையின் உடைமையிலும் குடியிலும் உரிமைகொண்டவன். அவனுக்கு உதவாமல் நாம் திருப்பி அனுப்பினோமென்றால் அது அளிக்கும் செய்தி என்ன?”

விதுரை குனிந்து நோக்கி மெல்லிய புன்னகையுடன் பீஷ்மர் சொன்னார், “எந்த ஷத்ரியனும் அதை ஒரே கோணத்தில்தான் புரிந்துகொள்வான். உதவும் நிலையில் அஸ்தினபுரி இல்லை என்று. அது வலுவற்றிருக்கிறது, அஞ்சிக்கொண்டிருக்கிறது என்று. உண்மையில் நாமிருக்கும் நிலையைவிட மிகக்குறைவாகவே நம்மை அது காட்டும். அன்று யாதவன் உன் சொல்படி திரும்பியிருந்தால்தான் அஸ்தினபுரியை மகதம் தாக்கியிருக்கும். உண்மையில் நம்மைக் காத்தவன் அவனே” .

“அத்துடன் மிகச்சிறியபடையைக்கொண்டு அவன் மதுராவை மீட்டான். கூர்ஜரத்தை வென்றான். அது மகதத்தையும் பிற ஷத்ரியர்களையும் நடுங்கச் செய்திருக்கும். எண்ணிப்பார், பாண்டவர்கள் இறந்த செய்தி வந்தபின்னரும் ஏன் நம்மீது மகதமோ கூர்ஜரமோ படைகொண்டு வரவில்லை? ஏனென்றால் அர்ஜுனன்தான் இறந்தான், யாதவன் இருக்கிறான் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றார் பீஷ்மர் “விதுரா அவன் நூறு அர்ஜுனன்களுக்கு நிகர். ஆயிரம் பீமன்களுக்கு நிகர். இன்று பாரதவர்ஷத்தின் அவன் முன் போரில் நிற்கத்தக்கவன் நான் ஒருவனே.அதுவும் கூடிப்போனால் ஒருநாள்... அவன் யாரென்று நீ இன்னமும் அறியவில்லை.நீ எண்ணிக்கொண்டிருப்பதுபோல அவனை நாம் காக்கவில்லை. அவன் நம்மைக் காக்கிறான். அப்போரைப் பற்றி சற்றேனும் சிந்தனைசெய்திருந்தால் நீ அறிந்திருப்பாய்!”

”அவன் நெறிகளை மீறிச்சென்று போர்புரிந்தான். அது போரல்ல, ஏமாற்றுவேலை” என்றார் விதுரர். “நெறி என்பதுதான் என்ன? நம் மூதாதையர் காலகட்டத்தில் போரிடும் படைகளில் இருபக்கமும் நிகரான எண்ணிக்கையில்தான் வீரர்கள் இருக்கவேண்டும் என்பதே நெறி. நூறுபேரை ஒரு மன்னன் களமிறக்கினால் அவன் எதிரியும் நூறுபேரையே அனுப்பவேண்டும். அவர்களின் தனிப்பட்ட வீரத்தால் வெற்றி நிகழவேண்டும். இன்றும் பெரும்பாலான பழங்குடிகளின் நெறி அதுவே. ஆயிரம்பேர் கொண்ட சிறுகுடியை வெல்ல ஐந்தாயிரம் படைவீரர்களையும் யானைகளையும் குதிரைகளையும் அனுப்பும் நம் போர்நெறியைக் கண்டால் அவர்கள் திகைத்து கலங்கிப்போய்விடுவார்கள்” என்றார் பீஷ்மர் சிரித்தபடி.

“நீ செய்ததும் நம் மூதாதையரால் போர்நெறியல்ல என்றே கொள்ளப்படும். படைகளை எல்லைக்குக் கொண்டுசென்று தாக்கப்போவதாக அச்சுறுத்தி அவர்களைக் கலைத்தாய் அல்லவா?” என்றார் பீஷ்மர். “அது களச்சூழ்ச்சி” என்றார் விதுரர். “இன்னொருவருக்கு அது வஞ்சகம்” என்றார் பீஷ்மர். “கோணங்கள் மாறுபடுகின்றன, அவ்வளவுதான்!” விதுரர் சீற்றத்துடன் “என்ன சொல்கிறீர்கள் பிதாமகரே, சரணடைந்தவர்களை கொல்லலாமா? நாசிகளை வெட்டுவது எந்த நெறியின்பாற்படும்?” என்றார்.

“நான் இன்று ஒன்றைத்தான் பார்ப்பேன்“ என்றார் பீஷ்மர். “அதன் மூலம் என்ன நிகழ்ந்தது? அந்த உச்சகட்ட அழிவு உருவாக்கிய அச்சத்தின் விளைவாகவே போர் அத்துடன் நின்றது. அதற்கு மேல் எவரும் சாகவில்லை. இல்லையேல் மதுராமீது ஆசுரநாட்டினரின் சிறிய படையெடுப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். ஒவ்வொருநாளும் இங்கே இறப்பு எண்ணிக்கை வந்துகொண்டிருக்கும்.”

சிரித்தபடி எழுந்த பீஷ்மர் “இன்று பாரதவர்ஷம் முழுக்க அநாசர்களான அடிமைகளை வைத்து வேலைவாங்கும் வழக்கம் உள்ளது. அதை நான் ஒப்ப மாட்டேன். அஸ்தினபுரியில் அதற்கு இடமில்லை. ஆனால் இறந்தவர்களின் நாசிகளை வெட்டுவது ஒன்றும் கொடும்செயல் அல்ல. அது அவர்களை அச்சுறுத்துவதுதான். நெறிசார்ந்த போரைவிட சற்று நெறிமீறிய வெறும் அச்சம் நல்லது. அது எவரையும் கொல்வதில்லை” என்றார்.

“அப்படியென்றால் நெறி என்பதுதான் என்ன?” என்றார் விதுரர். “இன்றைய நெறி ஒன்றே. போரை கூடுமானவரை தவிர்ப்பது. போர் நிகழுமென்றால் அது போருக்கென எழும் படைவீரர்கள் நடுவே மட்டும் நிகழவேண்டும். எளிய குடிகளில் எவரும் போரில் இறக்கலாகாது. வேளாண்நிலம் அழியவோ நீர்நிலைகள் மாசுறவோ கூடாது. வணிகமும் தொழிலும் அழிக்கப்படலாகாது” என்றார் பீஷ்மர். விதுரர் எண்ணங்களின் எடையுடன் நின்றார். “அந்த நெறியை ஒருபோதும் யாதவன் மீறமாட்டான் என்றே நான் எண்ணுகிறேன். அவன் சீற்றமே போர் என்றபேரில் மக்களையும் மண்ணையும் சிதைக்கும் அரசுகளுக்கு எதிராகத்தான்.”

ஹரிசேனர் வந்து வணங்கியதும் துரோணர் உள்ளே நுழைந்து தலை வணங்கி “பிதாமகருக்கு வணக்கம். தங்களைச் சந்திப்பது குறித்து சற்றுநாட்களாகவே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். துரோணரை வணங்கி அமரச்செய்துவிட்டு பீஷ்மர் அமர்ந்தார். விதுரர் எழுந்து சாளரத்தின் ஓரமாக நின்றுகொண்டார். தன் கால்கள் ஏன் நடுங்கிக்கொண்டிருக்கின்றன என எண்ணிக்கொண்டார். வசைபாடப்பட்டவர் போல, தீயசெய்தி ஒன்றைக் கேட்டவர் போல அகம் கலங்கி இருந்தது.

”பாண்டவர்களின் இறப்புச்செய்தியை அறிந்து வந்தீர்கள் என்றார்கள்” என்றார் துரோணர். “ஊழின் பெருந்திட்டத்தை மானுடரின் எளிய சித்தம் ஒருபோதும் தொட்டறிய முடியாது. இறப்பு அதன் பேருருவுடன் எழுந்து நிற்கும்போது நாம் நம் சிறுமையை உணர்கிறோம்.” அந்த வெற்று முறைமைச்சொற்கலைக் கேட்டபோது விதுரர் அதுவரை தன்னில் இருந்த நடுக்கம் அகன்று உடம்பெங்கும் சினம் அனலாகப் பரவுவதை உணர்ந்தார். “அவ்வகையில் இறப்பும் நல்லதே. அது நாம் பரம்பொருளை உணரும் தருணம் அல்லவா?” என்று துரோணர் சொல்லிக்கொண்டே சென்றார். “என் முதல்மாணவன் என்று பார்த்தனைச் சொன்னேன். அவனை இழந்தது எனக்குத்தான் முதன்மையான துயர். ஆனால் என்ன செய்யமுடியும்?”

தாடியை நீவியபடி புன்னகையுடன் பீஷ்மர் தலையசைத்தார். நீள் மூச்சுடன் துரோணர் தொடர்ந்தார் “இன்று இருப்பவர்களில் கர்ணனும் என் மாணவனே. அர்ஜுனனுக்கு நிகரானவன். அஸ்வத்தாமனும் கர்ணனுடன் வில் குலைக்க முடியும்.” வெளியே சென்றுவிட்டால் என்ன என்று விதுரர் எண்ணினார். ஆனால் உடலை அசைக்க முடியவில்லை. “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனை பலராமரின் மாணவர் என்று சொல்கிறார்கள். துரியோதன மன்னர் உண்மையில் கதாயுத்தத்தின் அடிப்படைகளை என்னிடம்தான் கற்றார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அத்துடன் அவருக்கு வலக்கை கர்ணன் என்றால் இடக்கை அஸ்வத்தாமன் அல்லவா?”

பீஷ்மர் “அஸ்வத்தாமன் எப்படி இருக்கிறான்?” என்றார். துரோணர் முகம் மலர்ந்து “நலமாக இருக்கிறான். அவன் நாடாளவே பிறந்தவன் என்கின்றனர் சூதர். இன்று பாரதவர்ஷம் முழுக்க அவனைப்பற்றியே மன்னர்கள் அஞ்சுகிறார்கள். சத்ராவதி இன்று பாரதவர்ஷத்தின் பெரும் துறைமுகமாக ஆகிவிட்டது. நாளொன்றுக்கு இருநூறு பெருநாவாய்கள் வந்துசெல்கின்றன அங்கே. கருவூலம் மலைத்தேன் கூடு போல பெருத்து வருகிறது. சில வேள்விகளைச் செய்யும் எண்ணம் அவனுக்கு உள்ளது. அதன்பின் அவனை சத்ரபதி என்றே ஷத்ரியர்களும் எண்ணுவார்கள்.”

துரோணரின் குரல் உரக்க எழுந்தது. கைகளை வீசி கிளர்ச்சியுடன் “இத்தனை அரசு சூழ்தலை அவன் எங்கிருந்து கற்றான் என்றே நான் வியப்புறுவதுண்டு. அவன் அன்னை அவனுடன் இருக்க விழைந்து சத்ராவதிக்கே சென்றுவிட்டாள். அங்கே அவளுக்கென கங்கைக்கரையிலேயே அரண்மனையும் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரும் அளித்திருக்கிறான். என்னை அங்கே அழைத்தான். நான் இங்குதான் என் ஆசிரியப்பணி என்று சொல்லிவிட்டேன்” என்றார். பீஷ்மர் “அவன் நல்லரசை அமைப்பான் என்று நான் எண்ணினேன்... நல்லது” என்றார்.

துரோணர் இருக்கையில் முன்னகர்ந்து “அவனைப்பற்றி பாடிய ஒரு சூதன் இன்று பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தியாகும் வீரமும் ஞானமும் உடையவன் அஸ்வத்தாமன் மட்டுமே என்றான். அந்தக்காவியத்தை இங்கே என்னிடம் கொண்டுவந்து காட்டினான்” என்றார். அதன்பின்னரே அவர் பிழை நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்தார். உடலை அசைத்து “நான் சொன்னேன், அது நிகழும் என்று. பாரதவர்ஷத்தை கௌரவ இளவரசர் ஆளும் நாள் வரும். அப்போது அருகே வில்லுடன் நிற்பவன் அவன். அவன் கொடிக்கீழ் பாரதவர்ஷம் அன்றிருக்கும் அல்லவா?:”என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “உண்மை” என்றார்.

விரைவாக பேச்சை மாற்றிய துரோணர் “புதிய மாணவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார். “அவர்களை தங்கள் படைக்கலப்புரையைக் காட்டவே அழைத்துவந்தேன். தாங்கள் இங்கிருப்பது அவர்களின் நல்லூழ். அவர்களை தலைதொட்டு வாழ்த்தவேண்டும்” என்றார். “அழைத்துவாருங்கள்” என்று பீஷ்மர் சொன்னதுமே துரோணர் எழுந்து அவரே கதவைத்திறந்து வெளியே சென்றார். பீஷ்மர் திரும்பி விதுரரை நோக்கி கண்கள் ஒளிர மெல்ல நகைத்தார். விதுரர் “அர்ஜுனன் இறந்தாலும் அரசில் தன் இடம் குறையாது என்று காட்ட விழைகிறார்” என்றார். பீஷ்மர் “இதை நீ கண்டிருக்கலாம் விதுரா, பொதுவாக இளையோரின் இறப்பு முதியவர்களுக்கு பெருந்துயரை அளிப்பதில்லை. அவர்கள் தாங்கள் இன்னும் இருக்கிறோம் என்ற எண்ணம் வழியாக அதை கடந்துவிடுகிறார்கள்” என்றார்.

விதுரர் மேலே பேசுவதற்குள் துரோணர் உள்ளே வந்து வணங்கி “நால்வரை இங்கே அழைத்துவந்தேன் பிதாமகரே. இன்று என் மாணவர்களில் இவர்களே வல்லமை வாய்ந்தவர்கள்...” என்றார். திரும்பி ”உள்ளே வாருங்கள்... பிதாமகரின் பேரருள் உங்களுடன் இருக்கட்டும்” என்றார். நான்கு இளைஞர்களும் இடையில் கச்சையாடை மட்டும் அணிந்து உள்ளே வந்தனர். துரோணர் “நான்கு முத்துக்கள் இவர்கள்... இவன் ஜயத்ரதன். சிந்துநாட்டு அரசர் விருதக்ஷத்ரரின் மைந்தன். வில் இவனை நீர் காற்றை அறிவதுபோல அறிகிறது.”

வெண்ணிறமான மெலிந்த உயரமான தோற்றம் கொண்டிருந்த ஜயத்ரதன் வந்து பீஷ்மரை பணிந்தான். பீஷ்மர் “அறம் உன்னுடன் இருக்கட்டும். வெற்றி உன்னை தொடரட்டும்” என்று வாழ்த்தி மார்போடு அணைத்துக்கொண்டார். “உன் தந்தையை நான் நன்கு அறிவேன். உன் தாயை அவர் மணந்தபோது சிந்துவுக்கு வந்து சிலநாட்கள் தங்கியிருக்கிறேன். பின்னர் ஒருமுறை அவரது விருந்தினராக அங்கே வந்தேன்” என்றார். துரோணர் “அரசர் விருதக்ஷத்ரர் துவராடை அணிந்து துறவியாகி காடு சென்றுவிட்டார். சிந்துவின் கரையில் கபிலசிலை என்ற இடத்தில் குடில்கட்டி தவ வாழ்க்கை வாழ்கிறார்” என்றார். “ஆம் அறிவேன்... அவர் எண்ணியதை எய்தட்டும்” என்றார் பீஷ்மர்.

கரிய உறுதியான உடலுடன் நின்ற இளைஞனைத் தொட்டு “இவன் சாத்யகி. விருஷ்ணிகுலத்தவன். இன்று கூர்ஜரத்தின் கடற்கரையில் பெருந்துறைநகரை அமைக்கும் இளைய யாதவன் கிருஷ்ணனுக்கு மைந்தன் முறை கொண்டவன்” என்றார் துரோணர். சாத்யகி வந்து வணங்கியதும் பீஷ்மர் “உன் குலம் வெல்லட்டும். நீ பெரும்புகழ்கொள்வாய்” என வாழ்த்தினார். “உன் சிறியதந்தையை நான் பார்த்ததே இல்லை. கிருஷ்ணன் என்று அவனை மட்டுமே இன்று பாரதவர்ஷத்தில் அனைவரும் சொல்கிறார்கள்” என்றார். “தங்களைப் பார்க்க சிறியதந்தை வருவதாக இருக்கிறார்" என்றான் சாத்யகி. “தங்களைப்பற்றி பெருமதிப்புடன் அவர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.” பீஷ்மர் நகைத்து “இருவரின் விழைவையும் தெய்வங்கள் நிகழ்த்திவைக்கட்டும்” என்றார்.

துரோணர் சிவந்த நிறமுள்ள அழகிய இளைஞனைத் தொட்டு “இவன் சிசுபாலன். சேதிநாட்டு தமகோஷனின் மைந்தன்” என்றார். அவன் வந்து வணங்கியதும் ”வெற்றியும் புகழும் உடனிருக்கட்டும்” என வாழ்த்திய பீஷ்மர் “அழகிய இளைஞன். உன் தந்தையிடம் சொல், நான் பொறாமையுடன் எரிந்தேன் என்று” என்று சொல்லி அவனை அணைத்து தோளைத் தட்டினார். “தந்தை தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்” என்று சிசுபாலன் சொன்னான். “ஆம், பலமுறை நான் கலிங்கத்துக்குச் செல்லும் வழியில் உங்கள் அரண்மனையில் தங்கியிருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.

துரோணர் பத்துவயதான சிறுவன் ஒருவனைத் தொட்டு “இவன் திருஷ்டத்யும்னன். பாஞ்சாலத்தின் இளவரசன்” என்றான். “ஆம், இவன் வேள்வியில் தோன்றியவன் என்று சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். அனல்வண்ணனாக அல்லவா இருக்கிறான்... வா வா” என்றார் பீஷ்மர். அவன் வெட்கி வளைந்தபடி வந்து அவரைப் பணிய அப்படியே அள்ளி தோளில் வைத்துக்கொண்டு “இவனுக்கு ஓர் தமக்கை இருப்பதாகச் சொன்னார்கள். அவள் கருநிறம் கொண்ட பேரழகி என்று சூதர்கள் பாடிப்பாடி மயங்கினார்கள்” என்றார்.

விதுரர் “திரௌபதியைப்பற்றி சூதர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதே பாஞ்சாலத்தின் ஆட்சியை அவள்தான் நிகழ்த்துகிறாள் என்கிறார்கள். இளமைப்பருவம் இல்லாமல் முதிர்ந்த உள்ளத்துடன் பிறந்தவள், கையில் சங்கு சக்கரம் கொண்டு வந்த சக்ரவர்த்தினி என்றெல்லாம் சொல்கிறார்கள்” என்றார். பீஷ்மர் உரக்க நகைத்து “ஆம் ஆம், அறிந்தேன். அவள் கூந்தலைப்பற்றியே நிறைய கவிதைகளை பாடிக்கேட்டிருக்கிறேன். நேரில் அந்தக்கூந்தலை பார்க்கவேண்டும்” என்றார்.

துரோணர் “என் நண்பனின் மைந்தன் என்பதனால் இவன் என் மைந்தனேதான். உண்மையில் இவனை பாஞ்சாலநாட்டு அமைச்சர்கள் துருபதனின் ஓலையுடன் என்னிடம் கொண்டுவந்தபோது நான் கண்ணீர்விட்டு அழுதேன். பிதாமகரே, வஞ்சம் தலைக்கேறி நான் இவன் தந்தையை அவமதித்தேன். அந்தப் புண் அவன் நெஞ்சில் ஆறிவிட்டது. ஆனால் என்னுள் அது புரையோடிவிட்டது. குற்றவுணர்ச்சி என்னை சூலைநோய் போல் வதைத்துக்கொண்டிருந்தது. இவனை அள்ளி மார்போடணைத்தபோது நான் அனைத்தையும் மறந்தேன். என் வாழ்க்கை நிறைவுற்றது என உணர்ந்தேன்” என்றார். “பார்வைக்கும் இவன் தந்தையைப்போலவே இருக்கிறான். அக்னிவேசரின் குருகுலத்திற்கு வந்த யக்ஞசேனனின் அந்த விழிகள் இவனிடமிருக்கின்றன.”

“தந்தையரின் பாவங்களை மைந்தர் கழுவுவது என்பது இதுதான்” என்றார் பீஷ்மர். ”துரோணரே, உமது மைந்தன் இவனுக்கு துணையாக இருப்பான் என்றால் பாஞ்சாலம் வெல்லற்கரிய நாடாகவே இருக்கும். வஞ்சம் என்பதே பாவங்களில் முதன்மையானது என்கிறது வசிட்டநீதி. நீங்கள் இருவரும் கொண்ட வஞ்சத்தை இவர்களின் நட்பு நிகர்செய்யட்டும். அதுதான் உங்கள் இருவரையுமே விண்ணில் நிறுத்தும் நீர்க்கடன்” என்றார் பீஷ்மர். ”ஆம்” என்றார் துரோணர். “ஆகவேதான் இவனை என் நெஞ்சிலேயே ஏற்றிக்கொண்டேன். நானறிந்த அனைத்து ஞானத்தையும் இவனுக்களிக்க உறுதி கொண்டேன்.” பீஷ்மர் கண்கள் கனிய ”அவ்வாறே ஆகுக” என்றார்.

பீஷ்மர் திரும்பி நால்வரையும் தன் நீண்டகரங்களால் சேர்த்து அணைத்து “காடு மீண்டும் பூத்துக்கனிந்துவிட்டது துரோணரே. நம் நட்புநாடுகளில் மாவீரர்கள் உருவாகி வருகிறார்கள்” என்றார். “ஆசிரியரின் பாதங்களருகே அமர்ந்திருங்கள். உள்ளும் புறமும். அவரது உடலின் ஒவ்வொரு அசைவும் உங்களுக்குக் கற்பிக்கிறது என நினைவுறுங்கள்” என்றார். அவர்கள் “ஆம்” என்று தலைவணங்கினர். பீஷ்மர் ”ஆசிரியர்தொழிலின் அழகும் மேன்மையும் இதுதான் துரோணரே. புதிய முகங்கள் வாழ்க்கைக்குள் வந்துகொண்டே இருக்கும். காலமும் உள்ளமும் தேங்குவதே இல்லை.”

துரோணர் சிரித்து “ஆம், நான் புதிய மாணவர்களைக் கண்டதும் புதியதாக பிறக்கிறேன். அதற்கு முன்னாலிருந்த அனைத்தையும் உதறிவிடுகிறேன்” என்றார். “பழைய மாணவர்களை நான் எண்ணுவதே இல்லை. இன்று என் உலகம் இவர்களால் ஆனதே. வியப்பு என்னவென்றால் இவர்களுக்கு நான் கற்பிக்கும் படைக்கலஞானமும் இப்போது புதியதாக உருவாகி வருவது என்பதுதான்.” பீஷ்மர் “ஆம், ஞானம் பிரம்மம் போல உருவற்றது. கற்றல் என்பது உபாசனை. அது அக்கணத்தில் ஞானத்தை உருக்கொள்ளச் செய்கிறது. இவர்களுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் அந்த கற்றல்மேடையில் தன் முடிவிலியில் இருந்து ஞானம் பிரிந்து அக்கணத்திற்குரிய ஞானமாக பிறந்து எழுகிறது.”

“அனைத்தும் என் குருநாதர் அக்னிவேசரின் அருள். தங்கள் கருணை” என்றார் துரோணர். “இப்பிறவியில் ஆசிரியனாக வாழ்ந்து நிறைவுறுவேன் என நினைக்கிறேன்.” சட்டென்று உரக்க நகைத்து “இறந்தால் என் அன்புக்குரிய மாணவன் கையால் இறக்கவேண்டும் என ஒருநாள் எண்ணிக்கொண்டேன். ஆசிரியனாகவே இறக்க அதுவல்லவா வழி?” விதுரர் அதைக்கேட்டு திகைப்புடன் பீஷ்மரை நோக்கினார். இளைஞர்களும் பதற்றம் கொண்டது தெரிந்தது. பீஷ்மர் “துரோணரே, அத்தனை ஆசிரியர்களும் மாணவர்கள் நெஞ்சில் இறக்கிறார்கள். அந்த இறப்பின் கணத்தில் இருந்தே மாணவன் பிறந்தெழுகிறான்” என்றார். “ஆகவே ஆசிரியனைக் கொல்லாத நல்ல மாணவன் இருக்க முடியாது.”

“அது நிகழட்டும்” என்று துரோணர் நகைத்து திருஷ்டத்யும்னனைத் தொட்டு தன்னருகே இழுத்து “செல்வோம்” என்றார். அவர்கள் மீண்டும் பீஷ்மரை வணங்கி விடைபெற்றனர். திருஷ்டத்யும்னனை தோள்சுற்றி அணைத்துக்கொண்டு துரோணர் நடந்துசென்றார். ஜயத்ரதன் ஏதோ மெல்லிய குரலில் சொல்ல சாத்யகி புன்னகையுடன் துரோணரையும் பீஷ்மரையும் நோக்கினான். விதுரர் நெஞ்சில் ஒரு எடை ஏறி அமர்ந்தது போல உணர்ந்து பீஷ்மரை நோக்க பீஷ்மர் அமர்ந்துகொண்டு கையில் ஓர் உடைவாளை எடுத்துப்பார்க்கத் தொடங்கினார்.

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 3

விதுரர் கிளம்பும்போது பீஷ்மர் புன்னகையுடன் அவர் பின்னால் வந்து “நான் உன்னை வருத்துவதற்காக சொல்லவில்லை” என்றார். விதுரர் தலைகுனிந்து நின்றார். “உன் உடலை நோக்கிக்கொண்டே இருந்தேன். உன் உள்ளம் கொதிப்பதை உணர்ந்தேன்.” விதுரர் உடலில் இருந்து ஒரு சொல் வெளியேற எண்ணி மெல்லிய அசைவை உருவாக்கி உள்ளே திரும்பிச் சென்றது. பீஷ்மர் அவர் தோளில் கைவைத்து “அறிவின் நிழல் ஆணவம். முதுமையில் நிழல் பெரிதாகிறது” என்றார்.

சினத்துடன் தலைதூக்கி “நான் என்ன ஆணவத்தை வெளிப்படுத்தினேன்?" என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் படைகளுக்கு நீயே ஆணையிட வேண்டும் என்று யாதவனிடம் சொன்னாய் அல்லவா?" என்றார் பீஷ்மர். “எந்த நெறிப்படியும் அமைச்சருக்கு அந்த இடம் இல்லை. அப்படியென்றால் ஏன் அதைச் சொன்னாய்? நீ விழையும் இடம் அது. அத்துடன் உன்னை யாதவன் எளிதாக எண்ணிவிடலாகாது என்றும் உன் அகம் விரும்பியது.”

உயரத்தில் இருந்து குனிந்து நோக்கி விதுரரின் தலையைத் தடவியபடி பீஷ்மர் சொன்னார் “மைந்தா, அவன் முன் நீ தோற்ற இடம் அது. அச்சொல்லைக் கொண்டே உன்னை அவன் முழுமையாக புரிந்துகொண்டுவிட்டான். உன் ஆணவத்தையும் விழைவையும் மதிப்பிட்டான். நீ புகழை இழப்பதை இறப்பைவிட மேலாக எண்ணுவாய் என்று உணர்ந்துகொண்டான். உன் நிலையை நீ பெருக்கிக் காட்டுவதற்கான அடிப்படை உணர்வு என்பது சூதன் என்ற உன் தன்னுணர்வே என்று கணித்துக்கொண்டான். அனைத்தையும் சொற்களால் அறுத்து வீசினான்.”

“அவன் சினந்தோ, நாவின் கட்டிழந்தோ அதைச் செய்யவில்லை. தெளிவான கணிப்புகளின்படி சொல்லெண்ணியே அதை சொல்லியிருக்கிறான். உன்னை முழுமையாக உடைத்து தன் வழியிலிருந்து அகற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறான். அதை அடைந்துவிட்டான்” என்றார் பீஷ்மர். விதுரர் சினத்துடன் “இனியும்கூட நான் அவனை எதிர்க்கமுடியும். அவன் கனவுகளை உடைத்து அழிக்கமுடியும்” என்றார்.

பீஷ்மர் “இல்லை விதுரா, இனி உன்னால் முடியாது. உன் அகம் பதறிவிட்டது. உன் ஆற்றல் இருந்தது நீ மாபெரும் மதியூகி என்ற தன்னுணர்வில்தான். அது அளிக்கும் சமநிலையே உன்னை தெளிவாக சிந்திக்கவைத்தது. அவன் அதை சிதைத்துவிட்டான். சினத்தாலும் அவமதிப்புணர்வாலும் சித்தம் சிதறிய விதுரனை அவன் மிக எளிதாக கையாள்வான்... அவன் வென்றுவிட்டான். அதை நீ உணர்வதே மேல். உன் அறிவாணவத்தை அவன் கடந்துசென்றுவிட்டான்” என்றார். விதுரர் “நான் அவ்வாறு எண்ணவில்லை. என் பொறுப்பிலிருக்கும் நாட்டைக் காப்பது என் கடன். அதில் எனக்கு மாற்றமில்லை” என்றார்.

பீஷ்மர் “நீ சொல்லும் சொற்களை மீண்டும் எண்ணிப்பார். அறிவின் ஆணவம் மூன்று வழிகளில் வெளிப்படுகிறது. நான் அறிவேன் என்ற சொல். என் பொறுப்பு என்ற சொல். எனக்குப்பின் என்றசொல். அரசியல் மதியூகிகள் அவற்றை மீளமீள சொல்லிக்கொண்டே இருப்பார்கள்” என்றார். ”இது ஒரு தருணம், நீ உன்னை மதிப்பிட்டுக்கொள்ள. இல்லையேல் உனக்கு மீட்பில்லை.” விதுரர் “வணங்குகிறேன் பிதாமகரே” என்றபின் தேர் நோக்கி நடந்தார்.

பின்னால் வந்த பீஷ்மர் “நீ அமைச்சனாக நடந்துகொள்ளவில்லை. ஆனால் குந்தி அரசியாக நடந்துகொண்டாள். மதுராவை பிடிக்க அவள் ஆணையிட்டதும், அதைச்செய்ய யாதவனால் முடியும் என மதிப்பிட்டதும், கட்டியை வாளால் அறுத்து எறிவதுபோல அந்த இக்கட்டை அச்சத்தைக்கொண்டு ஒரே வீச்சில் முழுமையாக முடிக்கச் சொன்னதும் பேரரசியரின் செயல்களே" என்றார். விதுரரின் முகம் மலர்ந்தது. “ஆம் பிதாமகரே. நான் அவர்களின் சொல்லில் இருந்த ஆற்றலை எண்ணி பலமுறை வியந்திருக்கிறேன். நகரங்களை அழிக்கும் சொல் என்று புராணங்களில் நாம் கேட்பது அதுதான் என எண்ணிக்கொண்டேன்” என்றார்.

பீஷ்மர் “நலமாக இருக்கிறாள் என நினைக்கிறேன். இங்கே வெறும் ஆட்சியாளராக இருந்தாள். காட்டில் மைந்தருடன் அன்னையாகவும் இருக்கமுடிந்தால் அவள் முழுமையான அரசியாவாள். பொதுமக்களுடன் வாழ்ந்து அவர்களில் ஒருவராக தன்னை உணர்ந்தாளென்றால் பாரதவர்ஷம் நிகரற்ற பேரரசி ஒருத்தியை அடையும்” என்றபின் “அவ்வாறே நிகழட்டும்” என்று வாழ்த்தினார். விதுரர் தலைவணங்கி சாரதியை தொட்டார். தேர் உருண்டது.

அந்தி இருண்டு வந்துகொண்டிருந்தது. ஓரிரு காவல்மாடங்களில் பந்தங்களை கொளுத்திவிட்டிருந்தனர். சகடங்களின் ஒலியும் மக்களின் பேச்சின் இரைச்சலும் இணைந்து அழுத்தமான கார்வையுடன் சூழ்ந்திருந்தன. கோடைகாலமாதலால் காற்றில் இருந்த நீராவி காதுகளைத் தொட்டது. முதற்கோட்டைவாயிலின் வலப்பக்கம் நின்றிருந்த பெரிய மாமரத்தில் காக்கைக்கூட்டங்கள் கூடி பெருங்குரல் எழுப்பி கலைந்து அமைந்துகொண்டிருந்தன. குழல் பறக்க தேர்த்தட்டில் நின்றிருந்த விதுரர் சிறிது நேரம் கழித்துத்தான் தன் முகம் புன்னகைத்துக் கொண்டிருப்பதை கண்களின் சுருக்கமாகவும் கன்ன மடிப்பாகவும் உணர்ந்தார். அதை முகத்தில் மறைத்தபின்னரும் அகத்தில் அதன் ஒளி எஞ்சியிருந்தது.

அமைச்சுமாளிகைக்குச் செல்லவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால் வீடுதிரும்பும் எண்ணம் அரண்மனை வளைப்புக்குள் நுழைந்ததும் ஏற்பட்டது. தேரைத்திருப்பும்படி சாரதியிடம் சொல்லியபின் கண்களை மூடி அமர்ந்திருந்தார். ரதத்தில் இருந்து இறங்கி படிகளில் ஏறிச்சென்றதும் சுருதை ஒலிகேட்டு எதிரே வந்தாள். “பிதாமகர் வந்திருக்கிறார் என்றார்கள்...” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். “அவருடன்தான் இருந்தேன். அவர் அரசரைப் பார்க்கப் போனபோது உடன் சென்றேன்” என்றபின் “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்று சொல்லி படியேறி மேலே சென்றார்.

தன் படுக்கையறையில் விரித்திருந்த மஞ்சத்தில் கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு சுவரையே நோக்கிக்கொண்டிருந்தார். சுருதை அருகே வந்து “இரவுணவை இங்கே அருந்துவீர்களா?" என்றாள். “ஆம்” என்றார். அவள் சில கணங்கள் தயங்கியபின் “சுசரிதன் தங்களைப் பார்க்கவேண்டுமென விழைகிறான்” என்றாள். விதுரர் புருவத்தை மட்டும் அசைத்தார். ”அவனை யாதவபுரிக்கு அனுப்புவதாக சௌனகரின் ஆணை வந்துள்ளது. தங்கள் வாழ்த்துக்களை விழைகிறான்.” விதுரர் எழுந்து அமர்ந்து “வரச்சொல்” என்றார்.

மெலிந்த கரிய சிற்றுடலும் ஒளிமிக்க கண்களுமாக சுசரிதன் அவரது இளமைக்காலத் தோற்றத்தை கொண்டிருந்தான். உள்ளே வந்ததுமே “வணங்குகிறேன் தந்தையே” என்று சொல்லி குனிந்து அவர் பாதங்களைத் தொட்டான். “புகழுடன் இரு!” என்றார் விதுரர். “என்னை துவாரகைக்கு அனுப்புகிறார் பேரமைச்சர். நான் செல்லும் முதல் அரசமுறைத் தூது இது. அதுவும் துவாரகைக்கு. இங்கே அத்தனை பேருமே அந்நகரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளைய யாதவனை ஷத்ரியர்களெல்லாம் அஞ்சுகிறார்கள்.”

விதுரர் அவன் உவகையை நோக்கிக்கொண்டிருந்தார். “அவனை வெல்ல இன்று பாரதவர்ஷத்தில் எவருமில்லை தந்தையே. அவன் முன் பரசுராமரும் பீஷ்மரும் கர்ணனும் எல்லாம் சிறுவர்கள் போல என்கிறார்கள். யாதவர்கள் உலகை ஆளும் காலம் வந்துவிட்டது என்கிறார்கள்” என்று அவன் சற்றே உடைந்த குரலில் கூவினான். குரல்வளை ஏறியிறங்கியது.

விதுரர் கசப்பான புன்னகையுடன் “யார், யாதவர்களா சொல்கிறார்கள்?" என்றார். அவன் அந்த ஏளனத்தை உணராமல் "ஆம், நம்மவர்தான் சொல்கிறார்கள். நம்மவர் நடையே மாறிவிட்டது. நான் துவாரகைக்குச் சென்றால் திரும்பி வரப்போவதில்லை. அங்கேயே அமைச்சனாக இருந்துவிடுவேன்” என்றான். "எனக்கு இங்கே எதிர்காலம் இல்லை. துணையமைச்சனாகவும் தூதனாகவும் வாழ்ந்து மறையவேண்டியிருக்கும்.”

விதுரர் கண்களைச் சுருக்கி “அங்கு சென்றபின் அம்முடிவை எடு” என்றார். சுசரிதன் தன் அக எழுச்சியில் அவரது குரல் மாறுபடுவதை உணரவில்லை. உரத்தபடியே சென்ற குரலில் “அவனைப்பற்றி கேள்விப்படுவதை வைத்துப் பார்த்தால் அவன் ஒவ்வொரு மனிதனையும் அறிந்த இறைவனுக்கு நிகரானவன். எளிய குதிரைக்காரர்கள் கூட அவர்களுக்கு மிகநெருக்கமானவன் அவனே என்கிறார்கள். நேற்று ஒரு சூதப்பாடகன் சொன்னான். இந்த பாரதவர்ஷத்தில் இனி எளிய மக்களை வெறும் மானுடத்திரளாக எவரும் எண்ணமுடியாது என்று. ஏனென்றால் பாரதவர்ஷத்தில் வாழும் ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்த ஒரு மன்னன் வந்துவிட்டானாம்...” என்றான்.

விதுரர் “போதும்...” என்று கைகாட்டினார். “தூது செல்லும் முன் தூதன் செல்லுமிடத்தை நன்கு அறிந்துகொள்ளவேண்டும். மிகையுணர்ச்சிகள் எதையும் அடைந்து விடக்கூடாது” என்றார். சுசரிதன் “தந்தையே, இந்த நகரம் பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் உரியது. இனி இங்கே பறக்கப்போவது காந்தாரத்தின் கொடி. ஷத்ரியர்களுக்குப் பணிந்து தோளை ஒடுக்கி நான் ஏன் இங்கே வாழவேண்டும்?" என்றான். அவன் எல்லையை மீறிவிட்டதை அவனே உணர்ந்ததை இறுதிச்சொற்களில் வந்த தயக்கம் காட்டியது. ஆனால் ஏதோ ஒரு வெறி அவனை மேலும் இட்டுச்சென்றது. பழுத்த கட்டியின் கண்ணையே அடிப்பது போல “ நீங்கள் இங்கே எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும். உங்கள் சொற்கள் மீறப்பட்டதன் துயரம் உங்களை வாட்டுகிறது” என்றான்.

விதுரர் சிவந்த முகத்துடன் “நீ அஸ்தினபுரியின் தூதன், அதை எந்நிலையிலும் மறக்கலாகாது” என்றார். "ஆம், நான் அஸ்தினபுரியின் தூதன். ஆனால் அஸ்தினபுரியினர் யாதவர்களை அழித்துவிட்டனர். பாண்டவர்கள் சதியால் கொல்லப்பட்டார்கள் என்று ஒவ்வொரு யாதவனும் சொல்கிறான். இனி இது எங்கள் நகர் அல்ல. யாதவர்களின் அரசர் துவாரகையின் அதிபரே” என்று சுசரிதன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே விதுரர் சினத்துடன் எழுந்து ”போதும்” என்று உரக்கக் கூவினார். சுசரிதன் திகைத்து பின்னடைந்தான்.

“நீ யாதவன் அல்ல, தெரிகிறதா? நீ யாதவன் அல்ல!" என்று விதுரர் நடுங்கும் கையை நீட்டி கூச்சலிட்டார். “நீ சூதன். சூதப்பெண்ணின் வயிற்றில் பிறந்த சூதனின் மைந்தன்” என்று சொல்லி அடிக்கப்போவதுபோல அவனை நோக்கி வந்தார். சுசரிதன் தடுமாறிய குரலில் "அன்னைவழியில்தானே நீங்கள் சூதர்? அப்படியென்றால் நான் யாதவன் அல்லவா?" என்றான்.

விதுரர் “சீ, மூடா! என்னை எதிர்த்தா பேசுகிறாய்?” என்று கையை ஓங்கியபடி ஓர் எட்டு எடுத்து வைத்தார். அதை எதிர்பாராத சுசரிதன் பின்னகர்ந்து சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவன் கண்களைச் சந்தித்த விதுரர் மெல்லத் தளர்ந்து பெருமூச்சு விட்டு “செல்” என்று மட்டும் சொன்னார். அவன் உதடுகளை அசைத்து ஏதோ சொல்லவந்தான். பின்னர் சுவரைப்பிடித்துக்கொண்டு நடந்து வெளியேறினான். விதுரர் சிலகணங்கள் நின்றுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.

என்ன நிகழ்ந்தது என அவர் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். பிள்ளைகளிடம் அவருக்கு எப்போதுமே நெருக்கமான உறவு இருந்ததில்லை என்றாலும் அவர் அவர்களை கண்டித்ததோ சினந்ததோ இல்லை. ஆகவே எப்போதும் ஓர் இயல்பான உரையாடலே அவர்களிடையே நிகழ்ந்து வந்தது. சுசரிதன் இந்த நாளை ஒருபோதும் மறக்கமாட்டான் என எண்ணிய மறுகணமே பல ஆண்டுகளுக்குப்பின் அவன் இந்நாளை எண்ணி புன்னகை புரியக்கூடும் என்றும் நினைத்துக்கொண்டார். இந்த விரிசல் வழியாக அவன் அவருக்குள் நுழையும் வழி கிடைத்துவிட்டது.

தந்தை தன் மிகச்சிறிய பகுதியையே மைந்தர்களிடம் காட்டமுடியும். அந்தச் சிறிய பகுதியைக்கொண்டு அவர் உருவாக்கும் தன்னுரு மிகப்பொய்யானதே. மைந்தர்கள் அந்தப்பொய்யுருவை இளமையில் நம்புகிறார்கள். பின்னர் அதை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு தருணத்திலும் முயல்கிறார்கள். ஏனென்றால் அந்தப்படிமை மைந்தனுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிழைகளோ கீழ்மைகளோ அற்றது. தன் பிழைகளையும் கீழ்மைகளையும் அறியத் தொடங்கும் வயதில் தந்தையை உடைத்து அவரிலும் அவற்றைக் காணவே மைந்தர் விழைகிறார்கள்.

அந்தமோதலே மைந்தரின் வளரிளமைப் பருவத்தில் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் இடையே எங்கும் நிகழ்கிறது. ஆனால் முழுமையாக உடைபட்டதுமே தந்தை இரக்கத்துக்குரிய முதியவராக ஆகிவிடுகிறார். எப்போது தந்தையை எண்ணி மைந்தர் சிரிக்கத் தொடங்குகிறார்களோ அங்கு அவர்களுக்கிடையேயான உறவு மீண்டும் வலுப்படுகிறது. தந்தை மைந்தனாகிவிடுகிறார். தனயர்கள் பேணுநர்களாகி விடுகிறார்கள்.

விதுரர் புன்னகையுடன் திரும்பிப் படுத்தார். வாழ்க்கையின் ஒரு சிறிய தருணத்தைக்கூட தத்துவமாக ஆக்காமல் இருக்க முடியவில்லை. உள்ளே நிறைந்திருக்கும் சொற்களை கருத்துக்களாக ஆக்கும் விசைகளை மட்டுமே நிகழ்வுகளில் இருந்து பெற்றுக்கொள்கிறேன். விசைமிகுந்த அனுபவங்கள் துயர்மிக்கவையாக இருந்தாலும் அகத்துள் ஆணவம் மகிழ்ச்சியையே அடைகிறது. பீஷ்மர் சொன்னது சரிதான், ஆணவத்தை விழித்திருக்கும் நேரமெல்லாம் அளைந்துகொண்டிருக்கிறேன். துயின்றபின் ஆன்மா ஆணவத்தையே அளைகிறது. கனவுகளில்...

விதுரர் எழுந்து அகல்விளக்கை எடுத்துக்கொண்டு அருகிருந்த சுவடி அறையை அடைந்தார். தன் இடையிலிருந்த சிறு திறவியால் ஒரு பெட்டியைத் திறந்து உள்ளிருந்து பெரிய தாழ்க்கோலை எடுத்தார். அறையின் தாழ்த்துளைக்குள் விட்டு இருமுறை வலமும் ஒருமுறை இடமும் மீண்டும் ஒருமுறை வலமும் மீண்டுமொருமுறை இடமும் சுழற்றி அதைத் திறந்தார். இருளில் தன் நிழல் துணைவர கைவிளக்குடன் நடந்து குனிந்து ஆமையோட்டு மூடியிட்ட சுவடிப்பெட்டியைத் திறந்தார். அதற்குள் சுவடிகளுக்கும் சுருட்டிய பட்டு லிகிதங்களுக்கும் நடுவே இருந்த சிறிய தந்தப்பேழையை எடுத்து மெல்லத்திறந்தார். உள்ளே அஸ்வதந்தம் என்ற அந்த சிறிய வைரம் இருந்தது. எளிய வெண்கூழாங்கல் போலத்தான் இருந்தது. எளிய பழுப்புநிறம். அதில் அகல்சுடரின் ஒளி ஒரு நுனியில் பிரதிபலித்தது. வேல்நுனியின் குருதிப்பூச்சு போல.

விதுரர் அதையே நோக்கிக்கொண்டிருந்தார். வைரம் சினம்கொண்டபடியே செல்வது போலிருந்தது. வெம்மை கொண்டு பழுத்து கனன்று அது தழலாகியது. இருளில் அது மிதந்து நிற்பதுபோல விழிமயக்கு உருவானது. அதைவிட்டு கண்களை விலக்க முடியவில்லை. இருதழல்கள். அலைத்தழலை புன்னகைத்தது நிலைத்தழல். விதுரர் அகல்சுடரை ஊதி அணைத்தார். ஒளிகுறைந்து அறை மறைந்து வைரச்சுடர் மட்டும் தெரிந்தது. பின் விழிவிரிந்தபோது அந்த ஒளியில் அறைச்சுவர்கள் மெல்லியபட்டுத்திரை போல தெரிந்தன. ஆமாடப்பெட்டியின் செதுக்குகள், தந்தப்பேழையின் சித்திரங்கள் எல்லாம் வைரச்செவ்வொளியில் துலங்கித்தெரிந்தன. பூனைவிழிபோல, மின்மினி போல. அது செம்மையா பொன்னிறமா என்றே அறியமுடியவில்லை.

http://www.jeyamohan.in/wp-content/uploads/2014/12/VENMURASU_PIRAYAGAI_57.jpg

பின் எப்போதோ விழித்துக்கொண்டு அதை மீண்டும் பெட்டிக்குள் வைத்து மூடினார். எழுந்தபோதுதான் உடல் நன்றாக வியர்த்திருப்பதை உணர்ந்தார். வெளியே வந்து கதவை மூடி தாழ்க்கோலை சிற்றறைக்குள் வைத்து அதை திறவியால் மூடிக்கொண்டிருந்தபோது சுருதை படுக்கையறைக்குள் இருப்பதை உணர்ந்தார். ஒருகணம் அறியாமல் உடலில் வந்த அதிர்வை உடனே வென்று இயல்பாக வந்து படுக்கையறைக்குள் நுழைந்தார். அவள் சுசரிதனைப்பற்றி பேசமாட்டாள் என்று அவர் அறிந்திருந்தார். தானும் பேசலாகாது என எண்ணியபடி வந்து படுத்துக்கொண்டார்.

"உணவு அருந்துகிறீர்களா?" என்றாள் சுருதை. “இல்லை, எனக்குப் பசியில்லை” என்று அவர் சொன்னார். அவள் பெருமூச்சுடன் “துயில்கிறீர்கள் என்றால் நான் செல்கிறேன்” என்றாள். அந்த இயல்புநிலை அவரை சினம் கொள்ளச்செய்தது. அவளுடைய பாவனைகளைக் கிழித்து வெளியே இழுத்து நிறுத்தவேண்டும் என்ற அக எழுச்சியுடன் “நான் அந்த வைரத்தை நோக்கிக்கொண்டிருந்தேன்” என்றார். “தெரியும்” என்று அவள் சொன்னாள். “எப்படி?" என்றார் விதுரர் கடும் முகத்துடன். “தோன்றியது.”

“எப்படித் தோன்றியது?" என்று உரக்கக் கேட்டபடி விதுரர் எழுந்தார். “விளையாடுகிறாயா? நான் மதியூகி. என்னிடம் உன் சமையலறை சூழ்ச்சிகளை காட்டுகிறாயா?” சுருதை சற்றும் அஞ்சாத விழிகளால் அவரை ஏறிட்டு நோக்கி “சற்று முன் சுசரிதனிடம் எதற்காக சினம் கொண்டீர்கள் என்று அறிந்திருந்தால் அதை கணிப்பதில் என்ன தடை இருக்க முடியும்?" என்றாள். “எதற்காகச் சினம் கொண்டேன்?" என்று பற்களை இறுக்கியபடி விதுரர் கேட்டார்.

“அவன் யாதவர்களின் முழுமுதல் தலைவன் என்று கிருஷ்ணனைச் சொன்னான். அதை உங்களால் தாளமுடியவில்லை. அவன் முன் அவமதிக்கப்பட்டதை நீங்கள் ஒருகணமும் மறக்கவில்லை” என்றாள் சுருதை. பொங்கி எழுந்த சினத்தால் விதுரரின் உடல் சற்று மேலெழுந்தது. உடனே அதை அடக்கியபடி சிரித்து “சொல்” என்றார். “ஆனால் அதற்கு முன் நீங்கள் அவனை அவமதித்தீர்கள். பாண்டவர்களின் முன்னால் அரசையும் படைகளையும் நடத்துபவர் நீங்கள் என்று சொன்னது அதற்காகவே.” கண்களில் சீற்றத்துடன் பற்கள் மட்டும் தெரிய சிரித்து “சொல், எதற்காக நான் அவனை அவமதிக்கவேண்டும்?" என்றார்.

“ஏனென்றால் இந்த நகரின் யாதவர்கள் உங்களைத்தான் தங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் எண்ணிவந்தனர். நான் யாதவகுலத்தவள் என்பதனால். ஒவ்வொருநாளும் உங்கள் முன் வந்து பணிபவர்களில் பெரும்பாலானவர்கள் யாதவர்கள். அவர்களுக்கு நீங்கள் அடைக்கலமும் அளித்துவந்தீர்கள்.” விதுரர் “அவமதிக்கத் தொடங்கிவிட்டாய். முழுமையாகவே சொல்லிவிடு” என்றார்.

சுருதையின் விழிகள் மெல்ல மாறுபட்டன. அவற்றில் இருந்த இயல்பான பாவனை விலகி கூர்மை எழுந்தது. “மதுராவுக்கு உதவவேண்டாமென நீங்கள் முடிவெடுத்ததே அதற்காகத்தான். மதுராவை இளைய யாதவன் வென்று அரசமைத்ததை உங்கள் அதிகாரத்துக்கு வந்த அறைகூவலாகவே உங்கள் ஆழ்மனம் எண்ணியது. மதுராவை ஏகலவ்யன் கைப்பற்றியதை அது நிறைவுடனேயே எதிர்கொண்டது. இளைய யாதவன் வந்து உங்களிடம் மன்றாடியிருந்தால் ஒருவேளை படைகளை அனுப்பியிருப்பீர்கள்....” அவள் கசப்பான புன்னகையுடன் “இல்லை, அப்போதும் அனுப்பியிருக்க மாட்டீர்கள். அவன் உங்கள் அடிபணிந்து நிற்பவனல்ல என்று அவனைக் கண்டதுமே உணர்ந்துவிட்டீர்கள்” என்றாள்.

விதுரர் விரிந்த புன்னகையுடன் “எத்தனை சிறந்த மணவுறவிலும் மனைவியின் உள்ளத்தில் ஆழ்ந்த கசப்பு ஒன்று குடியிருக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. அது சிறந்த மணவுறவாக இருக்கும் என்றால் அந்தக்கசப்பை அவள் மேலும் மேலும் உள்ளே அழுத்திக்கொள்வாள். அதன்மேல் நல்லெண்ணங்களையும் இனியநினைவுகளையும் அடுக்கி மறைப்பாள். ஆனால் அழுத்த அழுத்த அது விரைவு மிக்கதாக ஆகிறது. இப்போது வெளிப்படுவது அதுதான்” என்றார். சுருதை சீற்றத்துடன் “ஆம், உண்மைதான். கசப்புதான். இங்கே நான் அரசியாக வரவில்லை. ஆனால் அரசனின் மகளாக வந்தேன். இங்கு வந்தபின் ஒருமுறையேனும் நீங்கள் உத்தரமதுராபுரிக்கு வரவில்லை. எந்தை தேவகரை இங்கு அழைக்கவுமில்லை” என்றாள்.

சுருதையின் விழிகளில் தெரிந்த பகைமையைக் கண்டு விதுரரின் அகம் அஞ்சியது. முற்றிலும் அயலவளான ஒரு பெண். இருபதாண்டுகாலம் உடன் வாழ்ந்தும் ஒருகணம் கூட வெளிப்பட்டிராதவள். “...அது ஏன் என்று எனக்குத்தெரிந்தது. நீங்கள் சூதர். யாதவர்களின் அரசர் முன் உங்கள் ஆணவம் சீண்டப்பட்டது. அந்தத் தாழ்வுணர்ச்சியை நான் புரிந்துகொண்டேன். ஆனால் என் தந்தையின் நகரில் ஹிரண்யபதத்து அசுரர்படைகள் புகுந்து சூறையாடியபோது அவர் அங்கிருந்து உயிர்தப்பி மார்த்திகாவதிக்கு நாடிலியாகச் சென்று தங்கியபோது நீங்கள் வாளாவிருந்தீர்களே அதை நான் ஒருபோதும் என் அகத்தில் பொறுத்துக்கொண்டதில்லை. மதுராவை வென்று என் தந்தைக்கு உத்தரமதுராபுரியை அளித்த இளைய யாதவனையே என் தலைவனாக என்னால் கொள்ளமுடியும்.”

“முடித்துவிட்டாயா?" என்றார் விதுரர். உண்மையிலேயே அவள் அப்போது முடித்துக்கொண்டு எழுந்துசென்றால் நல்லது என்றே அவர் நினைத்தார். “இல்லை, இப்போது உள்ளே சென்று நீங்கள் எடுத்துப்பார்த்தது எதை என நான் எப்படி அறிந்தேன் தெரியுமா? உங்கள் மைந்தன் நாவில் உங்கள் சிறுமையும் யாதவன் பெருமையும் வெளிவந்தபோது நிலையழிந்தீர்கள். சென்று அந்த வைரத்தை எடுத்து நோக்கியிருப்பீர்கள். இந்த அஸ்தினபுரியின் பாதிக்கு நிகராகக் கொடுக்கப்பட்ட வைரம். அது உங்கள் அறையின் ஆழத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அதை உங்களுக்கு அளித்தவர் பாண்டு. அவர் இன்றில்லை..."

“சீ, வாயை மூடு!” என்று எழுந்து அவளை அறைய கையோங்கி முன்னால் சென்றார் விதுரர். நடுங்கும் கையுடன் அசையாமல் நின்றபின் மீண்டும் அமர்ந்துகொண்டார். அந்த விசையில் மஞ்சம் அசைந்தது. “ஏன் அடிக்கவேண்டியதுதானே? என்ன தயக்கம்?" என்றாள் சுருதை. விதுரர் “போ வெளியே” என்றார். “அடிக்க முடியாது. நூலறிந்த ஞானி அல்லவா?” என்றாள் சுருதை. ”ஆம், மனைவியை அடிக்கும் ஆண்கள் எளிதில் அவளை கடந்துசெல்லமுடியும். இப்போது அதை உணர்கிறேன்” என்றார் விதுரர்.

சுருதை ”உங்களால் முடியாது. உங்களிடமில்லாதது அதுதான்... ஷாத்ரம். நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது. அதை என்று உணர்ந்து உங்கள் ஆசைகளை களைகிறீர்களோ அன்றுதான் விடுதலை அடைவீர்கள்” என்றாள். “அந்த ஆசைகள் அனைத்தும் உங்களில் நிறைந்திருக்கும் அச்சங்களாலும் தாழ்வுணர்ச்சியாலும் உருவானவை. நீங்கள் எவரென்று உங்கள் எண்ணங்களும் செயல்களும் திட்டவட்டமாகவே காட்டுகின்றன. அதற்குமேல் ஏன் எழவிரும்புகிறீர்கள்? தன் நீள்நிழல் கண்டு மகிழும் குழந்தைக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?"

“போ...” என்று விதுரர் கைகாட்டினார். சுருதை எழுந்து தன் கூந்தலை சுழற்றிக்கட்டி திரும்பி “என் மைந்தன் நாளை அவன் வாழ்வின் தொடக்கத்தை எதிர்கொள்ளப் போகிறான். அவனை சிறுமைசெய்வதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். எவராக இருந்தாலும். இந்த வார்த்தைகளை உங்கள் முகம் நோக்கிச் சொல்லவே வந்தேன்” என்றபின் வெளியே சென்றாள். அவள் சென்றபின்னரும் அங்கே அவள் தோற்றம் இருப்பது போலிருந்தது. அது சுருதைதானா அல்லது எதேனும் தெய்வம் அவளுருவில் வந்து செல்கிறதா?

இரவின் ஒலிகளைக் கேட்டபடி விதுரர் படுக்கையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பின்னர் மஞ்சத்தில் படுத்துக்கொண்டு சுடரை ஊதி அணைத்தார். சூழ்ந்த இருள் மெல்ல வெளிறி அறையின் நிழலுரு தெரியத் தொடங்கியது. சாளரத்துக்கு அப்பால் விண்மீன்கள் செறிந்த வானம் மிக அண்மையில் தெரிந்தது. காற்றே இல்லாமல் மரக்கிளைகள் அனைத்தும் உறைந்து நின்றன. மிக அப்பால் காவலர்கள் ஏதோ பேசிச்சென்றார்கள். ஒரு காவல் குதிரை குளம்பொலியுடன் சென்றது. வடக்குக் கோட்டைமுகத்தில் யானை ஒன்று மெல்ல உறுமியது.

மூச்சுத்திணறுவது போலிருந்தது. சிந்தனைகளாக உருப்பெறாமல் உதிரி எண்ணங்களாக ஓடிக்கொண்டிருந்தது சித்தம். பின்னர் அவர் உணர்ந்தார், அது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது என. சுருதையின் சொற்களை. அவற்றை விட்டு விலகி நான்கு திசைகளிலும் சென்று சுழன்று அவற்றையே வந்தடைந்துகொண்டிருந்தார். அச்சொற்களை முழுமையாக நினைவுகூர அவரது அகம் அஞ்சியது. அவற்றின் நுனியைத் தீண்டியதுமே விதிர்த்து விலகிக் கொண்டது. மீண்டும் சுழற்சி. நெருப்புத்துளிமேல் வைக்கோலை அள்ளிப்போடுவது போல வெற்றுச் சொற்களை அள்ளி அள்ளி அதன் மேல் போட்டுப்போட்டு சலித்தார்.

எழுந்து வந்து வடக்கு உப்பரிகையில் அமர்ந்துகொண்டார். வெளியே மண்சாலையில் பந்தத்தின் ஒளி செந்நிறமாக சிந்திக்கிடந்தது. நீளநிழலுடன் ஒரு முயல் அதன் வழியாக தாவி ஓடியது. அங்கே அமர்ந்திருந்து அன்னை அந்த முயலின் முதுமூதாதையரை பார்த்திருப்பாள். தலைமுறை தலைமுறையாக அவை அவளையும் பார்த்திருக்கும். அவளை ஒரு கற்சிலை போல தெய்வம் போல அவை எண்ணியிருக்கும். அவளை அவை நினைவுகூர்ந்தால்தான் உண்டு. சிவை என்ற பெயரைச் சொல்லும் எவர் இன்றிருக்கிறார்கள்?

அவர் காந்தாரத்தின் இளைய அரசி சம்படையை நினைத்துக்கொண்டார். எப்போதும் அரண்மனையில் அணங்கு பிடித்த ஓர் அரசி இருந்துகொண்டுதான் இருப்பாள் என்று தீச்சொல் உண்டு என்று சூதர்கள் சிலர் சொல்லி கேட்டிருக்கிறார். அவ்வேளையில் அது உண்மை என்றே தோன்றியது. அவளை ஓரிருமுறை அவர் அரண்மனை உப்பரிகையில் ஒரு நிழல்தோற்றமாக மட்டுமே பார்த்திருக்கிறார். நிழல்தான், உடல் மறைந்தபின்னரும் எஞ்சும் நிழல். சூதப்பெண் சிவையின் நிழல் இந்த உப்பரிகையில் எஞ்சியிருக்கக் கூடும்.

அவர் அங்கேயே கண்மூடி அமர்ந்திருந்தார். அன்னையை அருகே உணரமுடிந்தது. எழுந்து சாளரம் வழியாக வானைநோக்கியபோது வடக்கு முனையில் துருவன் ஒளிவிடுவதை நோக்கினார். விழிகளை விலக்கவே முடியவில்லை. ஆவல், அச்சம், அமைதியின்மை ஏதுமற்ற நிலைப்பு. தான் மட்டுமே தன்னுள் நிறைந்திருப்பதன் முழுமையான தனிமை.

=====================================================

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 4

தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார். “விலகிவிடுங்கள்” என்று சுருதை சொன்னாள். விதுரர் “இல்லை, அது நிலையானது” என்றார். ”வந்துவிடுங்கள்” என்றாள் சுருதை. “எனக்கு அச்சமில்லை. இது எனக்கு பிடித்தமானதே” என்றார் விதுரர். மீண்டும் சுருதை அழைத்தபோது விழித்துக்கொண்டார்.

நன்றாகவே விடிந்திருந்தது. சாளரம் வழியாக வந்த ஒளிக்கற்றைகள் அறைக்குள் பரவியிருந்தன. கண்கள் அந்த ஒளிக்கு நன்றாகவே கூச விதுரர் இமைகளை மூடிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். "அரண்மனையில் இருந்து காந்தார அரசி செய்தியனுப்பியிருந்தார். தூதன் வந்து நெடுநேரமாகிறது” என்றாள் சுருதை. அவர் நீர்வழியும் கண்களைத் துடைத்தபடி எழுந்து அவளை நோக்கினார். அவள் முகம் இயல்பாக இருந்தது, நேற்று நடந்தவை எல்லாம் அவள் அறியாமல் அவர் கனவில் நடந்தவையா என்று ஐயம் எழுப்பும்படியாக.

அவர் அவள் கண்களை நோக்கினார். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரை வந்து தொட்டன அவை. “என்ன செய்தி?” என்றார். “செய்தி என ஏதுமில்லை, காந்தார அரசி சந்திக்கவிழைவதாக சொல்லப்பட்டது” என்றாள் சுருதை. “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். “பிதாமகர் பீஷ்மரைப்பற்றியதாகவே இருக்கும். அவர் நேற்றுவந்ததுமே சில முடிவுகளை எடுத்திருப்பார்.” அது முற்றிலும் உண்மை என விதுரர் உடனே உணர்ந்தார். புன்னகையுடன் “அரசியலில் நீ அறியாத ஏதுமில்லை போலிருக்கிறது. இங்கும் சில ஒற்றர்களை ஏற்படுத்தவேண்டியதுதான்” என்றார். சுருதை நகைத்தாள்.

அவளிடம் நேற்று அவள் பேசியதைப்பற்றி ஏதாவது சொல்லலாம் என்று எண்ணியதுமே அதைப்பற்றி ஏதும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தோன்றியது. அது அவளிடமிருந்து வெளிப்பட்டதுமே அவள் எதிர்திசையை நோக்கி ஓடத் தொடங்கியிருப்பாள். இரவெல்லாம் துயிலாமல் காலையில்தான் நிலைகொண்டிருப்பாள். அந்த நிலைகொள்ளலின் நிறைவையே அவள் முகம் காட்டுகிறது. மீண்டும் அதை கலைப்பதில் பொருளில்லை.

சுருதை கொண்டு வைத்திருந்த மரத்தாலத்தில் நறுமணப்பொடி கலந்த இளவெந்நீர் இருந்தது. அதை அள்ளி முகம் கழுவிக்கொண்டு திரும்பி அவள் தோளில் கிடந்த துணியால் முகத்தை துடைத்துக்கொண்டார். “நீராடியதுமே கிளம்பிவிடுங்கள். அவர்கள் காத்திருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றாள் சுருதை. “நான் உணவை எடுத்து வைக்கிறேன்” என அவள் திரும்பியதும் அவர் அவள் இடையை வளைத்து பின்னின்று அணைத்துக்கொண்டார். அவள் அசையாமல் தலைகுனிந்து நிற்க அவள் பின்னங்கழுத்தில் முகத்தைவைத்து “என் மேல் சினமா?” என்றார்.

“சினமா?” என்று சுருதை கேட்டாள். "ஆம்” என்றார் விதுரர். “இதற்கு நான் என்ன சொல்வது? நான் இறந்தபின்னர்தான் அதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவள் இடறியகுரலில் சொன்னாள். அவர் அவளைத் திருப்பி தன்னுடன் இறுக்கி அவள் தோளின் வளைவில் முகம் புதைத்துக்கொண்டார். “பிறிது என ஒன்றும் இல்லை எனக்கு...” என்று அவள் சொல்ல “நான் ஒரு தருணத்திலும்...” என விதுரர் தொடங்கினார். “வேண்டாம்” என்று அவள் சொன்னாள். அவர் அவள் கன்னங்களிலும் கழுத்திலும் முத்தமிட்டார்.

இளையவளாக இருந்தநாளை விட முதுமையின் தொடக்கத்தில் சற்றே தளர்ந்த அவள் உடல்தான் அழகுடன் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. கழுத்திலும் தோள்களிலும் மாந்தளிர் நிற மேனியில் மெல்லிய வரிகள். இளம்பாளையில் தெரிபவை போல. கண்களும் உதடுகளும் கனிந்திருப்பவை போல தோன்றின. இவள் அளவுக்கு எனக்கு அண்மையானவள் என எவருமில்லை என்ற எண்ணம் வந்தது. வேறு எவருக்கும் அகத்தைக் காட்டியதுமில்லை. மிகமிக அரிய ஒன்றை அவரிடமிருந்து எடுத்துக்கொண்டவள். “நான் உனக்குமட்டுமே என்னை முழுமையாக படைத்திருக்கிறேன் சுருதை” என்று சொன்னார். சொன்னதுமே எத்தனை எளிய சொற்கள் என்று தோன்றியது. காவியங்களிலன்றி எவரும் இத்தருணங்களில் நல்ல சொற்களை சொல்வதில்லை போலும்.

“வேண்டாம்” என்று சுருதை சொன்னாள். “ம்?” என்றார் விதுரர். “சொல்லவேண்டாம்” என்றாள். அவர் “ம்” என்றார். அவள் மார்பின் துடிப்பை, மூச்சின் வாசத்தை உணர்ந்துகொண்டிருந்தார். பின்பு அவள் அவரை சற்று விலக்கி “நேரமாகிக்கொண்டிருக்கிறது” என்றாள். விதுரர் சிரித்து “எத்தனை நேரம் என்று கணக்கு வைத்திருக்கிறாயா என்ன?” என்றார். சிரித்தபடி அவரை மெல்ல அடித்துவிட்டு சுருதை வெளியே சென்றாள். அவர் மலர்ந்த முகத்துடன் சிலகணங்கள் நின்றபின் பொருளின்றி அறைக்குள் சில எட்டுகள் நடந்தார். முகம் சிரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து இறுக்கிக்கொண்டார்.

நீராடி வந்தபோது சுசரிதன் தலைப்பாகையும் பட்டு மேலாடையும் அணிந்து அவரைக்காத்து நின்றிருந்தான். அவன் விழிகள் தயங்கி கீழே சரிந்தன. “வா” என்றார் விதுரர். அவன் அருகே வந்ததும் அவன் தோளைத் தொட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டார். கோழிக்குஞ்சு போன்ற மெல்லிய மயிர்பரவிய ஒடுங்கிய முகம். மென்மயிர் புகைக்கரி போல பரவிய சிறிய மேலுதடு. அவன் குனிந்து அவர் கால்களைத் தொட்டான். “ஒவ்வொரு கணமும் சொல்லும் சொற்களை கண்காணித்துக்கொண்டிரு. சொன்னபின் சொன்னவற்றை மீண்டும் எண்ணிப்பார். அப்படிப் பார்க்கத் தொடங்கினாலே காலப்போக்கில் உன் சொற்கள் சுருங்கி அடர்ந்துவிடும்” என்றபின் அவன் தலையில் கைவைத்து “விழைவது அடைவாய்” என வாழ்த்தினார்.

உணவருந்தி ஆடையணிந்து கொண்டிருக்கும்போது சுருதை வந்து “நேற்றுமாலை பீஷ்மர் அரசரை சந்தித்திருக்கிறார்” என்றாள். விதுரர் திரும்பாமலேயே ”ம்” என்றார். ”அவரிடம் சொல்லிவிட்டீர்களா?” என்றாள். “என்ன?” சுருதை இதழ்விரிய நகைத்து “யாதவ அரசியும் மைந்தரும் வாழ்கிறார்கள் என்பதை.” விதுரர் திடுக்கிட்டு நோக்கி “உனக்கு எப்படித் தெரியும்?” என்றார். சுருதை “அவர்கள் இறந்திருந்தால் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என நான் அறிவேன்” என்றாள். விதுரர் அவளை அணுகி அவள் கண்களை உற்று நோக்கி “மேலும் என்ன அறிவாய்?” என்றார். சுருதை சிரித்தவிழிகளுடன் “அனைத்தும்” என்றாள்.

விதுரர் சிலகணங்கள் அவளையே நோக்கினார். ”சிலவற்றை தெரிந்துகொள்ளும்போது துயர்தான். ஆனால் முழுதறிந்திருக்கிறோம் என்ற உவகைக்கு அது சிறிய இழப்பே” என்றாள் சுருதை. விதுரர் பெருமூச்சு விட்டார். சுருதை வந்து அவரை அணைத்துக்கொண்டாள். மெல்லிய குரலில் அவர் செவியில் “என் கைகளில் நான் வளைத்திருப்பது என் உடலளவுக்கே நானறிந்த ஒருவர் என்பது பெரிய வரம் அல்லவா?” என்றாள். விதுரர் “நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய் என்று தெரியவில்லை” என்றார். பின்னர் “ஆனால் ஒரு மனிதர் இன்னொருவரை முழுதறியலாகாது. அந்த மனிதரை விரும்ப முடியாது” என்றார். ”அது ஆண்களின் அகம். பெண்கள் அப்படி அல்ல. நாங்கள் உள்ளத்தால் அன்னையர்” என்றாள் சுருதை.

விதுரர் அவள் கழுத்தில் முகம் சேர்த்து “அன்னையாகவே இரு சுருதை. சிலசமயம்...” என்றார். “ம்?” என்றாள் சுருதை. “சிறுமையும் கீழ்மையும் கொண்ட ஒருவனாகவே என்னை நீ அறிய நேரும். அப்போதும் அன்னையாகவே இரு!” அவள் மெல்ல சிரித்து அவர் தலையை வருடி “என்ன பேச்சு இது?” என்றாள். சிலகணங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தபடி இருந்தனர். “எப்போதும் என்னிடமிருக்கும் தனிமை உன்னருகே இல்லாமலாகிறது” என்றார் விதுரர் பெருமூச்சுடன். சுருதை “அதற்காகத்தானே?” என்றாள். விதுரர் “நான் கிளம்புகிறேன். என்ன பேசப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் எவர் எது சொன்னாலும் இன்று அவர்களை முழுமையாகவே ஏற்றுக்கொள்வேன் என்று தோன்றுகிறது” என்றார்.

ரதம் காந்தார மாளிகை முன் வந்து நிற்பது வரை உள்ளத்தில் அந்த மலர்ச்சி இருந்தது. இறங்கும்போது எதையோ எண்ணி அகம் நடுங்கியது. அது ஏன் என்று துழாவியபடி மெல்லிய பதற்றத்துடன் இடைநாழியில் நடந்தார். ஏதும் சிக்கவில்லை. உப்பரிகை ஒன்றில் ஒரு திரைச்சீலை ஆடக்கண்டு அகம் அதிர்ந்தது. உடனே நினைவுக்கு வந்தது, அந்த காந்தார அரசி. அவள் பெயர் சம்படை. ஆம், அதுதான் அவள் பெயர். அவளை நேற்று எண்ணிக்கொண்டேன், அன்னையுடன் இணைத்து சிந்தனை செய்தேன். அதன்பின் எப்போதோ வந்து படுத்தேன். இல்லை அதற்குப்பின்னர்தான் துருவனைப் பார்த்தேன்.

சின்னஞ்சிறுமியாக அவள் அரண்மனை வாயிலில் கொட்டும் மழையில் வந்திறங்கியதை துல்லியமாக நினைவுகூர முடிந்தது. பதற்றமும் ஆவலும் நிறைந்த பெரிய விழிகள். சற்று பொன்னிறம் கலந்தவை. சிறிய உதடுகள். எதையோ கேட்கப்போவதுபோல மேலுதடு சற்று வளைந்திருக்கும். உள்ளூர ஓடும் எண்ணங்கள் அவ்வப்போது முகபாவனைகளில் விழியசைவுகளில் உடலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அடிக்கடி தன் மூத்தவர்களை பார்த்துக்கொண்டும் ஓரக்கண்ணால் தனக்கு இணையான வயதுள்ள தசார்ணையை நோக்கிக்கொண்டும் இடைநாழி வழியாக நடந்தாள்.

பெருமூச்சுடன் விதுரர் எண்ணிக்கொண்டார், கூடவே வேறெதையோ எண்ணினேனே? ஆம், துருவன். விண்ணிலிருந்து இமைக்காமல் மண்ணை நோக்குபவன். அன்னை சிவையும் இந்த காந்தார அரசியும் அப்படித்தானே இமைக்காமல் நோக்கிக்கொண்டு அசைவிழந்திருந்தனர். என்ன மூடத்தனம்! அவர்களின் அகத்தில் பெரும்புயல்கள் சூழ்ந்து வீசியிருக்கலாம். அலைகடல் கொந்தளித்துக்கொண்டிருக்கலாம். அவர்கள் அகத்தையும் வெளியையும் அனைத்துக் கதவுகளையும் மூடி துண்டித்துக்கொண்டவர்கள் மட்டுமே. அன்னையின் விழிகளில் ஒருபோதும் நிறைவை, நிலையை கண்டதில்லை. அவை எப்போதும் புல்நுனியின் பனித்துளிபோல தத்தளித்துக்கொண்டுதான் இருந்தன.

அரண்மனைக்காவலன் அவரை வணங்கி உள்ளே அழைத்துச்சென்றான். அவர் உள்கூடத்தில் பீடத்தில் அமர்ந்து தலைகுனிந்து தரையை நோக்கிக்கொண்டிருந்தார். உள்ளிருந்து காந்தாரியின் அணுக்கச்சேடி ஊர்ணை வந்து வணங்கி “அமைச்சரின் வருகையை அரசிக்குத் தெரிவித்தேன். உள்ளே மலர்வாடியில் அரசியர் இருக்கிறார்கள். அங்கே அழைத்துவரச்சொன்னார்கள்” என்றாள். விதுரர் எழுந்து “உள்ளேயா?” என்றார். “ஆம்” என்றாள் ஊர்ணை. ”வருக” என்று அழைத்துச்சென்றாள்.

ஊர்ணையிடம் ஏதேனும் கேட்கவேண்டும் என்று விதுரர் எண்ணினார். ஆனால் அவர் ஆவல் கொண்டிருப்பதை அவள் அறியக்கூடாது. காந்தாரியர் எவருமே நுட்பமான உள்ளம் கொண்டவர்கள் அல்ல. ஆகவே ஊர்ணையும் அவ்வாறுதான் இருப்பாள் என்று எண்ணியதுமே புன்னகை எழுந்தது. “அரசியர் எந்நிலையில் இருக்கிறார்கள்? என் மேல் சினம் கொண்டிருக்கிறார்களா?” என்றார். அவள் திரும்பி “தங்கள் மேல் சினமில்லை” என்றாள். ”அப்படியென்றால் சினத்துடன் இருக்கிறார்கள் இல்லையா?” என்றார் விதுரர். “அதை நான் எப்படிச் சொல்வது? நான் எளிய சேடி” என்றாள் ஊர்ணை.

விதுரர் “ஆம், ஆனால் அரசியார் உங்கள் சொற்களையே மெய்யாக எண்ணுவதாக கேள்விப்பட்டேன்” என்றார். “ஆம், அவர்கள் என்னை நம்புகிறார்கள். ஏனென்றால் நான் எந்நிலையிலும் அவர்களுக்கு கட்டுப்பட்டவள். அவர்களின் நலனை நாடுபவள்.” விதுரர் “அதை நான் அறியமாட்டேனா என்ன? அரசியர் மாமன்னர் இங்கு வருவதில்லை என்பதில் சினம்கொண்டிருப்பார்கள் இல்லையா?” என்றார். “இல்லை, மாமன்னர் துயரம்கொண்டிருப்பதே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் துயரமேதும் கொள்ளவில்லை. அகிபீனா உண்டு மயங்கிக்கிடக்கிறார் என்று இளைய அரசி சொன்னார்கள்” என்றாள் ஊர்ணை. “உண்மையில் அரசர் இங்கே வந்து நெடுநாட்களாகிறது. குந்திதேவி இறந்த செய்தி வருவதற்கு எட்டுநாட்களுக்கு முன் இறுதியாக வந்தார்.”

“அப்படியா? அன்று நீங்களும் இருந்தீர்களோ?” என்றார் விதுரர் நடையை மெதுவாக ஆக்கியபடி. “ஆம், அவர்கள் அவரைப்பார்த்ததுமே பூசலிட்டு அழுதனர். அவர் ஏதோ சொல்லத் தொடங்கியபோது பேசவிடாமல் கூச்சலிட்டனர். அவர் பெரிய அரசியை நோக்கி பேசிக்கொண்டிருந்தார். அவர் சொல்வதைக் கேட்காமல் பெரிய அரசி சினத்துடன் எழுந்துசென்று தன் அறைக்குள் தாழிட்டுக்கொண்டார். அரசர் மேலும் சினத்துடன் வெளியே வந்து வைசிய அரசி பிரகதியின் அரண்மனைக்குச் செல்லும்படி தேரோட்டியிடம் ஆணையிட்டார்” என்றாள் ஊர்ணை.

விதுரர் “அரசியரின் துயரம் அரசருக்குத் தெரியவில்லை” என்றார். “ஆம், அரசர் சினத்துடன் பதினொரு தேவியர் இருந்தும் இங்கே இருள்தான் நிறைந்திருக்கிறது. பதினொருவரும் விழிகளை இழந்தவர்களாக இருக்கிறீர்கள் என்று கூவினார். நான் நிறைவையும் இன்பத்தையும் அடையவேண்டுமென்றால் அங்குதான் செல்லவேண்டியிருக்கிறது என்றார்” என்றாள் ஊர்ணை. "அரசர் கடும் சினத்துடன் இருந்திருக்கிறார்” என்றார் விதுரர்.

“ஆம். இருகைகளையும் ஓங்கி அறைந்து அவன் மட்டும் வைசியமகன் இல்லை என்றால் யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன். பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான் என்று கூவியபடி தேரில் ஏறிக்கொண்டார். தேர் சென்றதுமே இரண்டாவது அரசி வெளியே ஓடிவந்து என்னிடம் எங்கே செல்கிறார் அரசர் என்று கேட்டார்கள். பிரகதியிடம் என்று சொன்னேன். என்னை அடிக்க கை ஓங்கினார்கள். என்னை நோக்கி உன் முதலைமுகத்துடன் அரசரை தேருக்கு இட்டுச்சென்றாயா என்று கேட்டார்கள். நான் என்ன செய்வேன்? ஒன்றும் தெரியாத எளிய சேடி. எனக்கு என்ன கடமையோ அதைச் செய்கிறேன். இங்கே நடப்பது எதையும் எங்கும் சொல்வதில்லை. என்னைப்பற்றி தாங்களே அறிவீர்கள்... இதோ இந்த வாயில்தான்” என்றாள் ஊர்ணை.

உள்ளே காந்தாரி ஒரு மரப்பீடத்தில் அமர்ந்திருக்க அருகே மூத்த காந்தாரியர் நால்வர் அமர்ந்திருந்தனர். இருவர் சற்று அப்பால் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அனைவரும் விதுரரை நோக்கித் திரும்ப சத்யசேனை எழுந்து கையை நீட்டி உரக்கக் கூவியபடி அருகே வந்தாள். “அந்த யாதவப்பெண்ணும் அவள் போட்ட குட்டிகளும்தான் எரிந்து போய்விட்டார்களே? இன்னுமா எங்கள் மைந்தர்கள் தாசிமகன்களாக இந்நகரில் வாழவேண்டும்? விழியிழந்தால் அறிவிழந்து போய்விடவேண்டுமா என்ன? நீங்கள் கற்றவர் அல்லவா? நீங்கள் சொல்லக்கூடாதா?”

விதுரர் “நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேனே அரசி” என்றார். “நேற்று பீஷ்மபிதாமகர் வந்தபோது கந்தார இளவரசரே வந்து அனைத்தையும் பேசிவிட்டார். பிதாமகர் ஆவன செய்வதாகக் கூறினார்.” சத்யவிரதை சினத்துடன் எழுந்து “போதும். எங்களுக்கும் ஒற்றர்களும் நலம்விரும்பிகளும் உண்டு. நேற்று அரசரை சந்தித்துவிட்டு பீஷ்மர் வந்ததுமே தமையனார் சென்று பேசிவிட்டார். மூத்தவனுக்கு முடிசூட்டுவதைப்பற்றி பீஷ்மர் உறுதியும் அளித்தார். ஆண்டுநிறைவுக்குப்பின் அது நிகழும் என்றார். அதன்பின் அவருடன் சென்றவர் நீங்கள். சென்று இறங்கியதுமே அவர் உள்ளம் மாறிவிட்டது” என்றாள்.

“நான் ஒன்றும் அறியேன் அரசி. நாங்கள் சென்றதும் அங்கே துரோணர் வந்தார். அவரது மாணவர்கள் வந்தனர். துரோணர் அவரது மாணவர்களில் ஜயத்ரதன், சிசுபாலன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் என்ற நான்கு மாவீரர்களை அறிமுகம் செய்தார். அவர்களைப்பார்த்து பீஷ்மபிதாமகர் மகிழ்ந்தார். துரோணரிடம் அவர் நெடுநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது அகம் எப்போது மாறியது என்று தெரியவில்லை அரசி. அவர் மாறியதே எனக்கு இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும்” என்றார் விதுரர். அவர் எண்ணியதுபோலவே காந்தாரிகள் குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அத்தனை செய்திகளையும் பெயர்களையும் கடந்து அவர்களால் சிந்திக்கமுடியவில்லை.

விதுரர் "பீஷ்மர் என்ன சொன்னார் என நான் அறியலாமா?” என்றார். “ஆண்டுமுடிவுக்குப் பின்னரும் சிலவருடங்கள் காத்திருக்கலாம் என்கிறார். அஸ்தினபுரியின் நட்புநாடுகள் துரியோதனனை ஏற்குமா என்று பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்.” விதுரர் “இதென்ன மூடத்தனம்? பிதாமகரா அப்படிச் சொன்னார்? அஸ்தினபுரியின் அரசர் யாரென்று நட்புநாடுகளா முடிவெடுப்பது?” என்றார். “மூடத்தனம்தான். ஐயமே இல்லை” என்றாள் காந்தாரி. “நமக்கிருக்கும் நான்கு துணையரசுகள் யாதவர்களுடையது என்கிறார். அவர்களின் ஒப்புதலைப்பெறவேண்டும் என்கிறார்.”

“பீஷ்மபிதாமகர் வேறு ஏதோ திட்டம் வைத்திருக்கிறார்” என்றார் விதுரர். “யாதவர்களை அஞ்சுபவர் அல்ல அவர்.” காந்தாரி ”நானும் அதையே எண்ணினேன். அவரது திட்டம் எதுவாக இருக்கக் கூடும்?" என்றாள். “திருதராஷ்டிர மாமன்னர் இன்னும் சற்றுநாள் அரசராக நீடிக்கட்டும் என நினைக்கிறார். ஒருவேளை துரோணரின் மாணவர்கள் குண்டலம் அணியட்டும் என காத்திருக்கப்போகிறாரோ?” என்றார் விதுரர். முற்றிலும் தொடர்பற்ற அந்தக் கூற்று அவர் கணக்கிட்டதைப்போல காந்தாரியரை திகைக்க வைத்தது. காந்தாரி “எனக்கு ஒன்றும் புரியவில்லை விதுரரே. இந்த அரசியல் சதிகளை எண்ணினால் என் தலைக்குள் ஏதோ வண்டுகள் குடியேறுவதுபோல இருக்கிறது” என்றாள்.

சத்யசேனை சினத்துடன் “இதில் என்ன சிந்தனை தேவையிருக்கிறது? இன்றிருக்கும் மூத்த இளவரசன் என்றால் துரியோதனன் மட்டுமே. ஆணைகளை புரிந்துகொள்ளாத இடத்தில் அரசர் இருக்கையில் முடியை அவருக்கு அளிப்பதில் என்ன தடை இருக்க முடியும்?” என்றாள். விதுரரின் உள்ளத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. அவர் விழிகள் இடுங்க முகம் இணக்கமாக ஆகியது. “அரசி, பீஷ்மபிதாமகருக்கு ஐயங்கள் இருக்கலாம்” என்றார். “என்ன ஐயம்?” என்றாள் சத்யசேனை கண்களை சுருக்கியபடி. “அரசு சூழ்தலில் நிகழ்வதுதானே?” என்றார் விதுரர். “என்ன ஐயம் விதுரரே?” என காந்தாரி உரத்த குரலில் கேட்டாள்.

“தருமன் பட்டத்து இளவரசன். அவன் தம்பியர் மாவீரர். அனைவரும் ஒரே தீநிகழ்வில் அழிந்தார்கள் என்றால் அதன்பின் ஏதேனும் சதி இருக்கலாமோ என்ற ஐயம் மக்களுக்கு வரலாம். அவ்வண்ணம் வரலாகாதே என பிதாமகர் அஞ்சலாம்” என்றார் விதுரர். “என்ன சொல்கிறீர்? அவர்களை என் மைந்தர்கள் கொன்றார்கள் என்கிறீர்களா? பழி பரப்புகிறீர்களா?” என்று சத்யசேனை கூவியபடி அடிக்க வருபவள் போல அவரை நோக்கி வந்தாள். விதுரர் தடுப்பது போல கைநீட்டி “நான் அவ்வண்ணம் சொல்லவில்லை அரசி. அந்த எண்ணம் யாதவர்களிடம் இருக்கிறதா என்ற ஐயத்தை பிதாமகர் அடைந்தாரோ என நான் ஐயப்படுகிறேன்... அதுவன்றி பிதாமகரின் நடத்தையை வேறு எவ்வகையிலும் விளக்கிவிட முடியாது.”

காந்தாரியர் கொதிப்புடன் அவரைச் சூழ்ந்து நின்றனர். சத்யவிரதை “இது இறுதிச்சதி. வஞ்சத்தால் என் மைந்தரின் முடியுரிமையைப் பறிப்பதற்கான முயற்சி” என்று சொன்னாள். “ஒருபோதும் இதை ஒப்புக்கொள்ளமாட்டோம். நாங்களே அவைக்கு வந்து அதைக் கேட்கிறோம். அவ்வாறு ஐயமேதுமிருந்தால் அங்கேயே அதை அரசரும் பிதாமகரும் தீர்த்துவைக்கட்டும். வெறுமே பழிசுமத்தி முடியுரிமையைப் பறிப்பதை ஏற்க மாட்டோம்... தமையனாரை சந்தித்து பேசுகிறோம்” என்றாள் சத்யசேனை.

“விதுரரே” என்று காந்தாரி தன் கனத்த கைகளை நீட்டி அழைத்தாள். “நீங்கள் அப்படி ஐயுறுகிறீர்களா?” விதுரர் எழுந்து கைகூப்பி “அரசி, இவ்வினாவை என்னிடம் கேட்கலாமா? அரசியின் குருதிமரபை நான் அறியமாட்டேனா?” என்றார் விதுரர். “அவர்கள் அப்படி செய்யக்கூடும் என்று நான் நினைக்கவில்லை விதுரரே. ஒருவேளை என் தமையன் அதற்கும் துணியக்கூடும். அவருடன் இருக்கும் கணிகன் அதை அவருக்கு சொல்லவும்கூடும். ஆனால் என் மைந்தன் அதை ஒருபோதும் செய்யமாட்டான். அவனால் அச்சிறுமையை எண்ணிக்கூட பார்க்கமுடியாது... விதுரரே, அவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.”

சட்டென்று அவள் உதடுகளை அழுத்தி அழத்தொடங்கினாள். கண்களைக் கட்டியிருந்த துணி நனைந்து ஊறி கன்னத்தில் வழிந்தது. “அவன் பிறந்தநாள் முதலே பழி சுமந்து வாழ்பவன். அத்தனை தீமைகளுக்கும் உறைவிடமாக அவனை காட்டிவிட்டனர் சூதர்கள். யாதவ அரசி அவனைப்பற்றிய தீயசெய்திகளை பரப்புவதை தன் வாழ்நாளெல்லாம் செய்துவந்தாள். ஆனால் அவனை நான் அறிவேன். என் மைந்தன் நிறைந்த உள்ளம் கொண்டவன். அவனால் இழிவை நோக்கி இறங்க முடியாது.” விசும்பி அழும் காந்தாரியை நோக்கியபடி விதுரர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

“நீங்கள் சொன்னீர்களே, அவன் என் குருதி என்று... இல்லை... அவன் வேழத்தின் நெஞ்சு கொண்ட திருதராஷ்டிரரின் மைந்தன். என் கணவரை நான் நெஞ்சில் இறைவடிவமாக நிறுத்தியிருப்பது அவர் என் கழுத்தில் தாலியணிவித்தார் என்பதற்காக மட்டும் அல்ல. நானறிந்த மானுடரிலேயே விரிந்த மனம் கொண்டவர் அவர் என்பதனால்தான். அவன் அவரது மைந்தன் விதுரரே. அவன் சிறுமையை செய்யமாட்டான். இதை நீங்கள் நம்புங்கள். உங்களிடம் பேசுபவர்களிடம் சொல்லுங்கள்... பிதாமகர் அவனை அப்படி ஐயுற்றார் என்றால் அது அவன் நெஞ்சில் ஈட்டியை நுழைப்பதற்கு நிகர். அவரிடம் அதை சொல்லுங்கள் விதுரரே!” அவள் தோள்கள் குலுங்கின. சத்யசேனை அவள் முகத்தை தன் மேலாடையால் துடைத்தாள்.

மெல்லிய விசும்பல்களாக காந்தாரி அழும் ஒலி தோட்டத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. காலையொளியில் நீண்டு கிடந்த நிழல்களுடன் பூமரங்கள் அசைவற்று நின்றன. மிக அப்பால் ஏதோ முரசின் ஒலி கேட்டது. காந்தாரியின் கைவளைகளின் ஒலியும் ஆடையின் சரசரப்பும் கேட்டன. விதுரர் தன் அகத்தை மிகுந்த விசையுடன் உந்தி முன்னால் தள்ளினார். மேலும் நெருங்கிச்சென்று “ஒருவேளை அது உண்மை என்றால்...” என்றார். காந்தாரி திடுக்கிட்டு முகத்தைத் துடைத்த கைகளுடன் நிமிர்ந்தாள். வாய்திறந்து காதை அவரை நோக்கி திருப்பினாள்.

“அரசி, ஒருவேளை மூத்தமைந்தர் ஏதோ ஒரு அகஎழுச்சியில் அதைச் செய்திருந்தால்? அவர் அவமதிக்கப்பட்டிருந்தார். சிறுமைத் துயரில் எரிந்துகொண்டிருந்தார். எவரேனும் தங்கள் தீய சொற்களால் அவரை அதற்கு உந்தியிருந்தால்?” காந்தாரி கைகளை மடிமேல் வைத்தாள். வளையல்கள் ஒலித்தன. அவள் உடல் நீள்மூச்சில் ஆடியது. “விதுரரே, அவ்வாறென்றால் அவன் திருதராஷ்டிரரின் மைந்தன் அல்ல என்று பொருள். அவன் குருதி பொய். அவன் அன்னையின் கற்பும் பொய்” என்றாள்.

பற்களைக் கடித்து தடித்த வெண்கழுத்தில் நீலநரம்புகள் புடைத்து எழ மெல்லிய குரலில் காந்தாரி சொன்னாள் “அவனை அதன்பின் என் மைந்தன் என கொள்ளமாட்டேன். அவன் என்னருகே வந்தால் அவன் நெஞ்சில் என் குறுவாளை ஏற்றுவேன். இல்லை என்றால் அவனுக்கு ஈமக்கடன்களைச் செய்து என் மைந்தனல்ல என்று விண்ணுலகில் வாழும் என் மூதன்னையருக்கு அறிவிப்பேன்.” அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது. “அதன் பின் நான் வடக்கிருந்து உயிர்துறப்பேன். அவனைப்பெற்ற பாவத்தை அவ்வாறு கழித்தபின் அன்னையர் அடியை சென்று சேர்வேன்.”

“அரசி, திருதராஷ்டிரரே அவ்வாறு செய்திருந்தால்?” என்றார் விதுரர். “ஒருகணம் நிலைதடுமாறி அவர் ஆமென ஒப்பியிருந்தால்?” காந்தாரி சீற்றத்துடன் எழுந்தாள். “அவ்வாறென்றால் என் தெய்வம் பேயென்றாகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை இழிந்ததாகிறது. அக்கணமே சென்று தீயில் இறங்கி தூய்மைபெறுவேன்.” மேலும் கைநீட்டி ஏதோ சொல்ல முயன்றபின் உடைந்து அழுதபடி அமர்ந்துகொண்டாள். “விதுரரே, நீர் பேசுவதென்ன?” என்றாள் சத்யசேனை.

“அரசியரே, துரியோதனரோ திருதராஷ்டிரரோ இவ்வாறு நான் எண்ணுவதை அறிந்தாலே என் நெஞ்சில் வாளை ஏற்றிவிடுவார்கள் என அறிவேன்” என்றார் விதுரர். “நான் அரசியிடம் கேட்டது ஒரே நோக்கத்துடன்தான். அரசி எவ்வகையில் எதிர்வினையாற்றினார்கள் என்று நான் பீஷ்மபிதாமகரிடம் சொல்லவேண்டும் அல்லவா?” காந்தாரி “அரசு சூழ்தலில் எதுவும் நிகழும் என்பதே முதல்பாடம் விதுரரே. ஆகவேதான் உங்கள் நெஞ்சு அவ்வகையில் செல்கிறது. ஆனால் நான் பெண், அரசு சூழ்தலின் பாதை எதுவானாலும் குலப்பெண்கள் நெறிமீறுவதில்லை...” என்றாள்.

“ஆம் அரசி. அஸ்தினபுரியின் அரண்மனையில் கொற்றவை வாழும் வரை ஒருபோதும் இங்கு அறம் ஒளிகுன்றுவதில்லை” என்றார் விதுரர். “நான் இங்கு வந்தது ஒரு சொல்லுடன்தான். பிதாமருக்கு ஐயம் இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் தயங்குகிறார். அதை நாம் அவரிடம் பேசமுடியும். அவர் பிதாமகர்மட்டுமே. அஸ்தினபுரியின் அரியணை மேல் அவருக்கு முறைசார்ந்த உரிமை என ஏதுமில்லை.” சத்யசேனை “ஆம், அதை நான் நேற்றே சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றாள்.

“அரசர் நோயுற்றிருக்கிறார். அந்நிலையில் நெறிகளின்படி அரசரின் அதிகாரம் பட்டத்தரசியிடம் வந்து சேர்கிறது. காந்தார அரசி இன்று அஸ்தினபுரியின் முழுமையான பொறுப்பில் இருப்பவர் என்பதை சொல்லவிழைகிறேன். அவர் தன் மைந்தனை பட்டத்து இளவரசர் என அறிவித்து முடிசூடும்படி ஆணையிடலாம். அதை மறுக்க அரசர் ஒருவருக்கு மட்டுமே உரிமை உள்ளது” என்றார் விதுரர். “ஆண்டுமுடிவு நாளின் சடங்குகளுக்குப்பின் மறுநாளே துரியோதனர் பட்டத்து இளவரசராக முடிசூடுவார் என்றும் அடுத்த வளர்பிறையில் ஹஸ்தியின் மணிமுடி அவர் சென்னியில் இருக்கும் என்றும் அரசியின் திருமுகம் ஒன்று வெளியானால் அனைத்து வினாக்களும் முடிவடைந்துவிடும்.”

”நான் அதற்குரிய அனைத்தையும் செய்கிறேன்” என்று விதுரர் தொடர்ந்தார். “ஆமென்று அரசி சொன்னால் இன்று மதியமே முறையான ஆணை நகர்ச்சந்திகளில் முழங்கும். அதன்பின் எந்த ஐயத்திற்கும் இடம் இல்லை.” காந்தாரி பெருமூச்சுடன் “இல்லை விதுரரே, அவனுக்கு இப்போது மணிமுடி தேவை இல்லை. இப்படி ஒரு ஐயம் சற்றேனும் இருக்கையில் அவன் மணிமுடி சூடினால் அது அவனுக்கும் அவன் தந்தைக்கும் இழுக்கே. அவன் முன் வந்து நின்று இந்த நாடு விண்ணப்பிக்கட்டும். மணிமுடியை முழுமனதுடன் பிதாமகரும் குலக்குழுவினரும் அவனுக்கு அளிக்கட்டும்...” என்றாள்.

“நான் சொல்வதென்ன என்றால்...” என்று விதுரர் சொல்லத் தொடங்க “பழியின் சாயல்கொண்ட ஒன்றை அவன் செய்தாலே அது சிறுமைதான். அவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவனாகவே இதுவரை இருக்கிறான். இனிமேலும் அவ்வண்ணமே இருக்கட்டும் என் சிறுவன்” என்றபின் காந்தாரி எழுந்துகொண்டு தன்னை உள்ளே அழைத்துச்செல்ல கைகாட்டினாள். அவள் உள்ளே செல்வதை விதுரர் நோக்கி நின்றபின் தோள்களை தொங்கவிட்டு பெருமூச்சுவிட்டார்.

காந்தாரியரிடம் வணங்கி விடைபெற்று திரும்பும்போது விதுரர் நெடுமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தார். திரும்பி தன் இல்லம் சென்று வடக்கு உப்பரிகையில் அமரவேண்டுமென எண்ணினார்.ஊர்ணையிடம் “சம்படை என்னும் அரசிதானே அணங்குபீடித்தவள்?” என்றார் விதுரர். “ஆம், அதோ அந்த உப்பரிகையில்தான் எந்நேரமும் இருப்பார்” என்றாள் ஊர்ணை. விதுரர் திரும்பி அத்திசை நோக்கி நடந்தார். “அவர்களை அனைவரும் மறந்துவிட்டார்கள். அவர்கள் அங்கே ஒரு திரைச்சீலை ஓவியம்போல இருந்துகொண்டிருக்கிறார் என்று சேடி ஒருத்தி சொன்னாள்” என்றபடி ஊர்ணை பின்னால் வந்தாள்.

மேற்கு உப்பரிகையை அடைந்தபோது விதுரரின் நடை தளர்ந்தது. கால்கள் செயலிழந்து உள்ளங்கால்கள் வியர்வையால் ஈரமாகின. சறுக்கிவிழுந்துவிடுவோம் என அஞ்சியவர் போல அங்கேயே நின்றார். அவர் வந்த ஒலியைக் கேட்டு திரும்பி நோக்கியபின் சம்படை மீண்டும் சாளரத்துளைகள் வழியாக வெளியே நோக்கினாள். அரச உடைகளுடன் முழுதணிக் கோலத்தில் இருந்தாள். ஆனால் உடல் வற்றி அனல்பட்ட இலைபோல தோல் கருகிச் சுருங்கியிருந்தது. பற்கள் முற்றிலும் உதிர்ந்து உதடுகள் உள்நோக்கிச் சென்று மூக்கு பறவை அலகுபோல அதன் மேல் வளைந்து நின்றது. அழுக்குக் கூழாங்கற்கள் போன்ற உயிரற்ற விழிகள். முண்டுகள் புடைத்த சுள்ளிக்கைகள். நகம் நீண்டு வளைந்த விரல்கள். அங்கே இருந்தது இறப்பைஎட்டிவிட்ட முதிய உடல்.

விதுரர் அவளை நோக்கியபடி அங்கேயே நின்றிருந்தார். ஊர்ணை “ ”வருடக்கணக்காக காலைமுதல் மாலை வரை இங்குதான். அணங்கு அவர்களின் குருதியை குடித்துக்கொண்டிருக்கிறது” விதுரர் தன்னையறியாமல் அவளை அழைப்பது போல கையெடுக்க ஊர்ணை “அவர்களிடம் நாம் பேசமுடியாது” என்றாள். “ஆம், அவர்களை நான் நன்கு அறிவேன்” என்றார் விதுரர்.

பகுதி பதின்மூன்று : இனியன் - 1

இடும்பவனத்தின் எல்லைக்கு அப்பால் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் பின்னிரவில் தனிமையாக பீமன் நின்றிருந்தான். கொதிக்கும் சமையற்பெருங்கலம் போன்ற சிறிய குளம் அது. அடியில் இருந்த வற்றாத ஊற்று மண்ணுக்குள் சென்றுகொண்டிருந்த ஆழ்நதி ஒன்றின் வாய். அதிலிருந்து கொப்பளித்தெழுந்த நீர் மண்ணுக்குள் வாழும் நெருப்பில் சூடாகி மேலெழுந்து ஆவி பறக்க தளதளத்துக்கொண்டிருந்தது. வெண்ணிறமான களிமண்ணால் ஆன வட்டவடிவக் கரைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்கள் கிளைதழைத்து நின்றிருந்தன.

மிக அப்பால் சாலிஹோத்ரர்களின் தெய்வவடிவமான ஒற்றை ஆலமரம் ஒரு சிறுகாடு போல விழுதுகள் பரப்பி நின்றிருந்தது. அதற்குள் அவர்களின் தெய்வமான ஹயக்ரீவரின் சிறிய ஆலயம் இருந்தது. அதன்மேல் விழுதுகள் விழுந்து கவ்வியிருக்க ஆலமரம் கையில் வைத்திருக்கும் விளையாட்டுப்பொருள் போலிருந்தது ஆலயம். அப்பால் சாலிஹோத்ரர்களின் குடில்கள் பனிபடர்ந்த புல்வெளியின் நடுவே தெரிந்தன.

அந்தக்காலையில் நூற்றுக்கணக்கான காட்டுக்குதிரைகள் அங்கே வால் சுழற்றியும் பிடரி மயிர் சிலுப்பி திரும்பி விலாவில் மொய்த்த பூச்சிகளை விலக்கியும் குளம்புகளை எடுத்து வைத்து மேய்ந்துகொண்டிருந்தன. வெண்குதிரைகள் சிலவே இருந்தன. பெரும்பாலானவை வைக்கோல் நிறமானவை. குட்டிகள் அன்னையருக்கு நடுவே நின்று மேய்ந்துகொண்டிருந்தன. சாலிஹோத்ரர்களின் பெரும்புல்வெளியில் புலிகள் வருவதில்லை. ஆகவே குதிரைகள் நடுவே கூட்டம்கூட்டமாக மான்களும் நின்றுகொண்டிருந்தன.

பீமன் கைகளை கட்டிக்கொண்டு வானில் தெரிந்த துருவனை நோக்கி நின்றிருந்தான். ஒவ்வொரு முறை நோக்கும்போதும் துருவனின் பெருந்தனிமை அவன் நெஞ்சுக்குள் நிறைந்து அச்சமூட்டும். விழிகளை விலக்க எண்ணியபடி விலக்க முடியாமல் நோக்கிக்கொண்டு நிற்பான். அப்போது ஒழுகிச்செல்லும் எண்ணங்களுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை, இருந்துகொண்டிருக்கிறேன் என்பதைத் தவிர. விண்மீன்களை குதிரைகளும் காட்டெருமைகளுமெல்லாம் நோக்குகின்றன. அவை என்ன எண்ணிக்கொள்ளும்? இருக்கிறேன், இங்கிருக்கிறேன் என்றல்லாமல்?

விழிவிலக்கி பெருமூச்செறிந்தபோது விடிவெள்ளி எழுந்து வருவதைக் கண்டான். அது சற்று முன் அங்கிருக்கவில்லை. ஆனால் அவன் காலத்தை உணராமல்தான் நின்றிருந்தான். அது எவரோ ஏற்றும் சிறிய கொடிபோல எழுந்து வந்தது. அசைவது தெரியாமல் மேலேறிக்கொண்டிருந்தது. கரிச்சான் ஒன்று தொலைவில் காட்டுக்குள் ஒலியெழுப்பியது. இன்னொரு கரிச்சானின் எதிர்க்குரல் எழுந்தது. பதறியதுபோல கூவியபடி ஒரு பறவை சிறகடித்து புல்வெளியை தாழ்வாக கடந்துசென்றது.

அவன் நடந்து காட்டின் விளிம்பை நோக்கிச் சென்றான். இருளுக்குள் இருந்து காடு மெல்ல எழுந்து வருவதை நோக்கிக் கொண்டு நின்றான். சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் ஒன்றில் இருந்து சங்கொலி எழுந்தது. அதன்பின் ஒவ்வொரு குடிலாக செவ்விழிகளை விழித்து எழுந்தன. குடில்களின் கூரைகளிலுள்ள இடைவெளிகள் வழியாக விளக்கொளியின் செவ்வொளிச் சட்டகங்கள் பீரிட்டு வானிலெழுந்து கிளைவிரித்தன. அசைவுகளும் பேச்சொலிகளும் எழுந்ததும் குதிரைகள் நிமிர்ந்து குடில்களை நோக்கின. அன்னைக்குதிரை ஒன்று மெல்ல கனைத்ததும் அவை இணைந்து கூட்டமாக ஆகி சீரான காலடிகளுடன் விலகிச் சென்றன.

குடில்களில் இருந்து கைவிளக்குகளுடன் சாலிஹோத்ரரின் மாணவர்கள் வெளியே சென்றனர். அவர்கள் வெந்நீர்க்குளம் நோக்கிச் சென்று நீராடி மீண்டு மையமாக இருந்த வேள்விச்சாலையில் குழுமுவதை காணமுடிந்தது. அரணிக்கட்டைகளை கடைவதை பீமன் கற்பனையில் கண்டான். நெய்யும் சமித்துகளுமாக மாணவர்கள் அமர்கிறார்கள். அவர்களுடன் தருமனும் இருப்பான். சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக்கொண்டிருப்பான். அவன் உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்கும்.

வேள்விநெருப்பு எழுந்துவிட்டதை மேலெழுந்த புகை சொன்னது. புகையை காணமுடிந்தபோதுதான் புல்வெளிமேல் வெளிச்சம் பரவியிருப்பதை பீமன் உணர்ந்தான். கீழ்வானில் இருள் விலகி கிழக்கே செந்நிறம் படரத்தொடங்கியிருந்தது என்றாலும் காடு நன்றாக இருண்டு இலைகளிலிருந்து நீர்சொட்டும் ஒலியுடன் அமைதியாக இருந்தது. நீண்டதூரத்துக்கு அப்பால் கருங்குரங்கு ஒன்று நாய்க்குரைப்பு போல ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்து ஒளிவிடும் பாம்பு போல ஓசையில்லாமல் வெளிவந்த சிற்றோடை புற்களுக்குள்ளேயே நெளிந்தோடி பாறை இடுக்கு ஒன்றில் பத்தி விரித்து எழுந்து சரிந்தது.

பீமன் இடையில் கையை வைத்துக்கொண்டு காத்து நின்றான். காற்று ஒன்று நீர்த்துளிகளை பொழியச்செய்தபடி காடு வழியாக கடந்துசென்றது. சிலபறவைகள் எழுந்து இலைகளில் சிறகுரச காட்டுக்குள்ளேயே சுழன்றன. நெடுந்தொலைவில் கருங்குரங்கு “மனிதன், தெரிந்தவன்” என்றது. அதற்கும் அப்பால் நெடுந்தொலைவில் இன்னொரு குரங்கு “நம்மவனா?” என்றது. “ஆம்” என்றது முதல் காவல்குரங்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் முதுஇடும்பரின் சொல்லை சான்றாக்கி இடும்பியை மணமுடித்தான். பெருங்கற்களாக நின்றிருந்த மூதாதையரின் நடுவே சிறுகல் ஒன்றை நட்டு அதற்கு ஊனுணவைப் படைத்து மும்முறை குனிந்து வணங்கினான். நெஞ்சில் அறைந்து போர்க்குரலெழுப்பி எதிர்ப்பு ஏதேனும் இருக்கிறதா என்று வினவினான். எவரும் எதிர்க்காதபோது அவளைத் தூக்கி தன் தோளில் எடுத்துக்கொண்டு அவர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த தொங்கும் குடில் நோக்கி ஓடினான். சூழ்ந்து நின்றிருந்த இடும்பர்கள் கைதூக்கி கூச்சலிட்டு நகைத்தனர்.

அந்த மணநிகழ்வில் குந்தியும் பிற பாண்டவர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இடும்பர்களின் குடிநிகழ்வுக்குள் இடமில்லை என்று முதுஇடும்பர் குழு சொல்லிவிட்டது. இடும்பன் இறந்த ஏழாவது நாள் அவனுக்காக அங்கே குன்றின்மேல் ஒரு பெருங்கல் நாட்டப்பட்டது. அவர்களின் குடிமூத்தவர்கள் மூதாதைக்கற்களின் குன்றின் மேலேயே அப்பெருங்கற்களின் அருகே புல்லடர்ந்த தரையை கூர்ந்து நோக்கியபடி நடந்தனர். பின்னர் சிறிய ஆழமான குழிகளைத் தோண்டி அங்கே மரங்களின் வேர்கள் சென்றிருக்கும் வழியை தேர்ந்தனர். அதன்பின்னர் ஓர் இடத்தைத் தெரிவு செய்து பெரிய வட்டமாக அடையாளம் செய்தபின் தோண்டத் தொடங்கினர்.

பத்துவாரை நீளமும் நான்கு வாரை அகலமுமாக சிறிய குளம்போல வெட்டி மண்ணை அள்ளிக் குவித்தனர். அவர்கள் தோண்டுவதை அக்கற்கள் விழிவிரித்து நோக்கி நிற்பதுபோலத் தோன்றியது. ஒரு ஆள் ஆழம் தோண்டியதுமே அடிப்பாறை வரத்தொடங்கியது மண்ணை அகற்றி பாறையை அடையாளம் கண்டதும் அதன் பொருக்குகளின் இடைவெளியில் உலர்ந்த மரக்கட்டைகளை அடித்து இறுக்கியபின் நீர்விட்டு அதை ஊறச்செய்தனர். மரக்கட்டை ஊறி உப்பி பாறையை உடைத்து விரிசலிடச் செய்தது. நான்குபக்கமும் அப்படி விரிசலை உருவாக்கி நீள்வட்டமாக அவ்விரிசலை ஆக்கியபின் மேலே சுள்ளிகளை அடுக்கி தீப்பற்றச் செய்தனர். பாறை சுட்டுக் கனன்றதும் அனைவரும் சேர்ந்து மரப்பீப்பாய்களில் அள்ளிவந்த நீரை ஒரேசமயம் அதன் மேல் ஊற்றினர்.

குளிர்ந்ததும் பாறை மணியோசை எழுப்பி விரிசலிட்டு உடைந்தது. மூத்த இடும்பர் இறங்கி நோக்கி தலையசைத்ததும் கூடி நின்றவர்கள் உரக்கக் குரலெழுப்பி கொண்டாடினர். அடிப்பாறையில் இருந்து பட்டை உரிந்ததுபோல சூடாகிக் குளிர்ந்த பாறை உடைந்து பிரிந்து நின்றது. அதன் இடைவெளியில் ஆப்புகளை இறக்கி அறைந்து எழுப்பி அதன் வழியாக கனத்த கொடிப்பின்னல் வடங்களைச் செருகிக் கட்டி அத்தனை பேரும் சேர்ந்து இழுத்து தூக்கினர். பாறை சற்று அசைந்து மேலேறியதும் மேலே அள்ளிப்போடப்பட்ட மண்ணைத் தள்ளி குழியை அந்த அளவு வரை நிரப்பினர். அந்த மண்மேல் பாறைப்பட்டையை வைத்து சற்று இளைப்பாறியபின் மீண்டும் தூக்கி மண்ணிட்டனர்.

குழி நிரம்பியபோது எட்டு ஆள் உயரமும் விரித்த கையளவு அகலமும் முழங்காலளவு தடிமனும் உள்ள பெரும் பாறைக்கல் மேலே வந்து கிடந்தது. அதன் ஒரு முனையைத் தூக்கி அதன் அடியில் கனத்த உருளைத்தடிகளை வைத்து வடங்களைப்பற்றி இழுத்து தள்ளிக்கொண்டு சென்றனர். பீமன் அதில் கலந்துகொள்வது ஏற்கப்படவில்லை. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாகச் சேர்ந்து ஒரே குரலில் மந்திரம்போல தொன்மையான மொழி ஒன்றில் ஒலி எழுப்பியபடி அதை தள்ளிக்கொண்டு மூதாதைக்கற்களின் அருகே சென்றனர். அங்கே நான்கு ஆள் ஆழத்திற்கு செங்குத்தான குழி ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்தது.

அக்குழிக்குள் ஒரு காட்டுப்பன்றி விடப்பட்டிருந்தது. முதுஇடும்பர் சிறு கைவிளக்கைக் கொளுத்தி அந்தக் குழிக்குள் போட்டார். அனைவரும் கைதூக்கி மெல்ல ஆடியபடி ஒரே குரலில் மந்திரத்தைச் சொல்ல அந்தக்கல்லை எட்டு பெரிய வடங்களில் எட்டு திசை நோக்கி இழுத்தனர். கல் எடையிழந்தது போல எளிதாக எழுந்தது. மூத்த இடும்பர் அதை மெல்லத்தொட்டு இழுத்து அக்குழிக்குள் வைத்தார். அவர்கள் அதை அக்குழிக்குள் இறக்க உள்ளே இருந்த பன்றியை நசுக்கி குருதியை உண்டபடி கல் உள்ளே இறங்கி அமைந்தது.

பாதிப்பங்கு மண்ணுக்குள் சென்று நின்றபோது அக்கல் அங்கிருந்த பிற மூதாதைக்கற்களில் ஒன்றாக ஆகியது. அதற்கு உயிரும் பார்வையும் வந்ததுபோலிருந்தது. அதைச்சுற்றி குழியில் கற்களைப்போட்டு பெரிய மரத்தடிகளால் குத்தி இறுக்கிக்கொண்டே இருந்தனர். நெடுநேரம் அக்கற்கள் அதற்குள் இறங்கிக்கொண்டிருந்தன. அதுவரை அங்கிருந்தவர்கள் அந்தப்பாடலால் மயக்குண்டு அசைந்தாடிக்கொண்டிருந்தனர். கற்கள் நடுவே சேறு கரைத்து ஊற்றப்பட்டது. கற்கள் நன்றாக இறுகியதும் முது இடும்பர் அதைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டு மெல்லிய ஓலமொன்றை எழுப்பினார். அனைவரும் அந்த ஓலத்தை ஏற்று முழங்கினர்.

மூதாதைக்கல்லுக்கு சுடவைத்த முழுப்பன்றி படைக்கப்பட்டது. கிழங்குகளும் காய்களும் கனிகளும் தேனடைகளும் தனியாக விளம்பப் பட்டன. முது இடும்பர் அந்தப் படையலுணவின் மேல் தன் கையை நீட்டி மணிக்கட்டின் நரம்பை மெல்லிய சிப்பியால் வெட்டினார். சொட்டிய குருதியை அதன்மேல் சொட்டிவிட்டு ஒரு துளியை எடுத்து மூதாதைக்கல் மேல் வைத்தார். அதன்பின் அத்தனை இடும்பர்களும் வந்து தங்கள் கைவிரலை வெட்டி துளிக்குருதி வரவழைத்து அந்த உணவில் சொட்டியபின் மூதாதைக்கல்லின் மேல் அதைப் பூசினர்.

முதுஇடும்பரின் கால்களில் இருந்து மெல்லிய நடுக்கம் ஏறி அவர் உடலை அடைந்தது. அவரது முழங்கால் அதிர மெல்லமெல்ல தாடையும் தோள்களும் வலிப்பு வந்தவைபோல துடித்தன. “ஏஏஏஏ” என்று அவர் ஓலமிட்டார். இருகைகளையும் விரித்தபடி கூவியபடியே அந்தப் பெருங்கற்களைச் சுற்றி ஓடினார். அவரிடம் ஒரு கோலை ஒருவன் கொடுத்தான். அதைச்சுழற்றியபடி அவர் துள்ளிக்குதித்தார். ஒரு கணத்தில் கோலின் நுனி மட்டும் அவ்வப்போது தரையை வந்து தொட்டுச்செல்ல கோல்சுழலும் வட்டம் ஒரு பெரிய பளிங்குக்கோளம் போல காற்றில் நின்றது. அதனுள் முதுஇடும்பர் நின்றிருப்பதாக விழித்தோற்றம் எழுந்தது.

விரைவின் ஒரு கட்டத்தில் கோல் சிதறி தெறித்துச் செல்ல அவர் வானிலிருந்து விழுபவர் போல மண்ணில் விழுந்தார். அவரது வாயில் இருந்து எச்சில் வெண்கோழையாக வழிந்தது. கழுத்துநரம்புகள் அதிர்ந்தபடியே இருந்தன. கையால் தரையை ஓங்கி அறைந்தபடி அவர் குழறிய குரலில் பேசத்தொடங்கினார். அதைக்கேட்டு பீமன் அஞ்சி பின்னடைந்தான். அது இறந்த இடும்பனின் அதேகுரலாக ஒலித்தது.

குரலாக எழுந்த இடும்பன் பீமனை இடும்பர் குடிக்குள் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்தான். அவன் இடும்பியை மணந்து பெறும் மைந்தர்கள் இடும்பர்களாக இருக்கலாம். அவனை அவர்களின் காடும் குருதியும் ஏற்க மண் நிறைந்த மூதாதையர் ஒப்பவில்லை. ஆகவே அவன் இடும்பவனத்துக்குள் பகலில் வந்துசெல்லலாம், இரவில் தங்கக்கூடாது. பிறர் இடும்பவனத்திற்குள் வரவே கூடாது. இடும்பி அன்றி பிற இடும்பர்களை பார்க்கவும் கூடாது. “குலம் நிறம் மாறலாகாது. காட்டுக்குள் சூரியன் இறங்கலாகாது. ஆணை ஆணை ஆணை” என்று சொல்லி அவன் மீண்டான்.

முது இடும்பரின் நெஞ்சு ஏறி இறங்கியது. தலையை அசைத்துக்கொண்டே இருந்தவர் விழித்து செவ்விழிகளால் நோக்கி தன் முதிய குரலில் “நீர்” என்றார். ஒருவன் குடுவை நிறைய நீரைக்கொண்டுவந்து கொடுக்க எழுந்து அமர்ந்து அதை வாங்கி மடமடவென்று குடித்து மூச்சிரைத்தார். உடலெங்கும் வழிந்த நீருடன் கைகளை ஊன்றி கண்மூடி அமர்ந்திருந்தார்.

இன்னொரு முதுஇடும்பர் கைகாட்ட அனைவரும் வந்து படையலுணவை அள்ளி உண்ணத் தொடங்கினர். அன்னையர் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டியபின் தாங்கள் உண்டனர். இடும்பி பன்றி ஊனை கிழங்குடன் சேர்த்து கொண்டுவந்து பீமனுக்கு அளித்தாள். அவன் உண்டதும் அவள் முகம் மலர்ந்து “தமையன் உங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றாள். “ஆம்” என்று பீமன் சொன்னான். “அவரை நான் கொன்றிருக்கலாகாது.” இடும்பி “ஏன்? அவர் மண்ணுக்கு அடியில் மகிழ்வுடன் அல்லவா இருக்கிறார்? இதோ மண்ணுக்குமேல் அவரது கை எழுந்து நிற்கிறது. அந்த மலைகள் உடைந்து தூளாகிப் போகும் காலம் வரை அவர் இங்கே நிற்பார்” என்றாள். பீமன் தலையசைத்தான்.

ஏழுநாட்களும் பாண்டவர்களும் குந்தியும் இடும்பவனத்தின் அருகே ஒரு பாறைக்குமேல் சிறுகுடில் கட்டி வாழ்ந்தனர். அவர்களை வெளியேறும்படி குடி ஆணையிட்டதும் விடிகாலையிலேயே அவர்கள் இருந்த குடில் எரியூட்டப்பட்டது. அவர்கள் மேல் சாம்பலைத் தூவி அனுப்பிவைத்தனர். இடும்பி குந்தியையும் பாண்டவர்களையும் காடுவழியாக அழைத்துச்சென்று இடும்பவனத்துக்கு அப்பால் மறுபக்கம் விரிந்த புல்வெளியின் நடுவே இருந்த சாலிஹோத்ரரின் தவக்குடிலை சுட்டிக்காட்டினாள். “அவர் மாயங்கள் அறிந்தவர். அரக்கர்கள் அவரை அஞ்சுகிறார்கள். ஆகவே எவரும் அங்கே செல்வதில்லை” என்றாள்.

அங்கே பறந்த கொடியைக் கண்ட குந்தி “அது சாலிஹோத்ர குருகுலம் என தோன்றுகிறது. சாலமரத்தின் இலை கொடியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும்” என்றாள். தருமன் திரும்பி நோக்க “வாரணவதம் வரும்போதே இங்குள்ள அனைத்து குருகுலங்களைப்பற்றியும் தெரிந்துகொண்டேன். கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர் இங்குள்ள சாலிஹோத்ரசரஸ் என்ற ஊற்றின்கரையில் ஹயக்ரீவரை தவம்செய்ததாக அவரது நூலில் எழுதியிருக்கிறார்” என்றாள்.

அவர்கள் புல்வெளியில் நடந்து மாலையில் சென்று சேர்ந்தனர். அவர்கள் வருவதை உயர்ந்த மரத்தின் உச்சியில் இருந்து நோக்கிய சாலிஹோத்ரரின் மாணவன் ஒருவன் ஒலியெழுப்ப கைகளில் வில்லம்புகளுடன் நான்கு மாணவர்கள் வந்து விரிந்து நின்றனர். ஒரு முதியமாணவன் அருகே வந்து அவர்களிடம் “நீங்கள் யார்?” என்றான். “ஷத்ரியர்களான நாங்கள் நாடோடிகள். சாலிஹோத்ர ரிஷியை சந்திக்க விழைகிறோம்” என்றான் தருமன். “அவள் இங்கே வரக்கூடாது. புல்வெளிக்கு வரும் அரக்கர்களை நாங்கள் அக்கணமே கொல்வோம்” என்றான் மாணவன். பீமன் இடும்பியிடம் காட்டுக்குள் செல்ல கைகாட்டினான்.

அவர்களை அருகே வந்து நோக்கியபின் அவன் குடில்களை நோக்கி அழைத்துச் சென்றான். மரப்பட்டை கூரையிடப்பட்ட பெரிய மையக்குடிலுக்குள் சாலிஹோத்ரர் கணப்பருகே அமர்ந்திருந்தார். கனத்த மயிரடர்ந்த காட்டுமாட்டின் தோல் விரிக்கப்பட்ட குடிலின் கூரையும் சுவர்களும் கூட மயிர்செறிந்த தோலால் ஆனதாக இருந்தன. குந்தியையும் பாண்டவர்களையும் கண்டதுமே சாலிஹோத்ரர் “அஸ்தினபுரியின் அரசியையும் மைந்தரையும் வரவேற்கிறேன்” என்றார். தருமன் “தாங்கள் எங்களை அறிந்தமை மகிழ்வளிக்கிறது உத்தமரே. ஆனால் நாங்கள் ஒளிந்து வாழவே இக்காட்டுக்குள் வந்தோம்” என்றான்.

“ஆம், கங்கையின் மறுபக்கம் நிகழ்பவை பறவைகள் வழியாக எனக்கு வந்து சேரும். அரக்கு மாளிகை எரிந்ததை அறிந்தேன். இடும்பர்கள் ஐந்து இளைஞர்களையும் அன்னையையும் பிடித்துச்செல்கிறார்கள் என்று மாணவர்கள் சொன்னதும் அது நீங்களே என உணர்ந்தேன்.” தருமனின் நெஞ்சில் ஓடிய எண்ணத்தை வாசித்து “எங்களால் எந்த உதவியும் செய்யமுடியாது. இடும்பவனத்துள் நுழையும் கலை எங்களுக்குத் தெரியாது. இடும்பர்களால் புல்வெளியில் வந்து போரிட முடியாது. ஆகவே நாங்கள் இங்கே வாழ்கிறோம். எங்கள் எல்லை என்பது காட்டின் விளிம்புதான்” என்றார்.

குந்தி “நாங்கள் சிலநாட்கள் இங்கு வாழ விழைகிறோம் முனிவரே” என்றாள். “நலம் திகழட்டும். ஒரு குடிலை உங்களுக்கு அளிக்கிறேன். இங்கு நீங்கள் இருப்பதை எவரும் அறியப்போவதில்லை. இங்கே சூழ்ந்திருப்பது அடர்காடு. நாங்கள் தலைமுறைக்கு ஒருமுறை ஒரே ஒரு மாணவனை மட்டும் பிற குருகுலங்களுக்கு அனுப்புகிறோம். கல்வியாலும் தவத்தாலும் நாங்கள் இங்கே அடைந்தவற்றை அவன் மானுடகுலத்துக்கு அளிப்பான்...” என்றார் சாலிஹோத்ரர். “கங்கைக்கு மறுகரையில் இருக்கும் ரிஷபபுரி சந்தைக்கு மட்டுமே எங்கள் மாணவர்கள் செல்வார்கள்.”

அவர்கள் அங்கே தங்கினார்கள். தருமன் அவனுக்குப் பிடித்தமான வாழ்க்கைக்குள் நுழைந்த நிறைவை அடைந்தான். சாலிஹோத்ர குருமரபின் தொன்மையான தர்க்கநூலான தண்டவிதண்ட பிரபோதினியை அவனுக்கு சாலிஹோத்ரர் ஒவ்வொரு நாளும் வகுப்பெடுக்கத் தொடங்கினார். காலையில் அக்னிகாரியம் முடிந்ததும் ஆசிரியரிடம் நூல்கேள்வி அதன்பின் ஸ்வாத்யாயம் அதன்பின் தனிமையில் மனனம் என்று அவன் நாட்கள் சென்றன. குந்தி சாலிஹோத்ரரின் மாணவர்களை தன் ஒற்றர்களாக்கி கங்கைக்கு அப்பால் அனுப்பி செய்திகளை பெறத் தொடங்கினாள்.

அனைவரையும்விட சாலிஹோத்ரரின் குருகுலம் நகுலனைத்தான் முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. இருநூறுகாதம் விரிந்திருந்த அப்பெரும்புல்வெளி அஸ்வபதம் என்றே அழைக்கப்பட்டது. புல்வெளியிலும் அப்பாலிருந்த அரைச்சதுப்பிலும் நூற்றுக்கணக்கான காட்டுக் குதிரைக்கூட்டங்கள் இருந்தன. அந்தக்குதிரைகளை பிடித்துப் பழக்கும் கலை பயின்ற வேடர்கள் அங்கே வந்து தங்கிச்செல்லும் வழக்கமிருந்தது. அங்கே வந்து தங்கிய முனிவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான உரையாடல் வழியாக உருவானதே சாலிஹோத்ர குருமரபு.

வருடத்திற்கு ஒருமுறை இளம்குதிரைகளைப் பிடித்து பயிற்றுவித்து கங்கைக்கு அப்பால் கொண்டு சென்று விற்பது சாலிஹோத்ரர்களின் குருகுலத்தின் நிதிமுறைமையாக இருந்தது. அந்த செல்வத்தால் வருடம் முழுவதற்கும் தேவையான துணிகள், உணவுப்பொருட்கள் போன்ற அனைத்தையும் அவர்கள் வாங்கிக்கொண்டனர். வேள்விக்குரிய நெய்யும் பிறவும் புல்வெளிகளில் அவர்கள் வளர்த்த பசுக்களில் இருந்து கிடைத்தன. அவர்கள் பழக்கிய குதிரைகள் சிந்திக்கத் தெரிந்தவை என்ற புகழ் இருந்தது. பேரரசர்களின் பட்டத்துப்புரவிகள் சாலிஹோத்ர முத்திரை கொண்டவையாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை கங்காபதத்தில் நிலவியது.

குதிரைகள் வழியாகவே மண்ணையும் விண்ணையும் அறிந்து வகுத்துக்கொண்டனர் சாலிஹோத்ரர்கள். குதிரையின் கால்களில் காற்றும் பிடரியில் நெருப்பும் தொடைகளில் நிலமும் விழிகளில் வானும் வாலில் நீரும் குடிகொள்வதாக அவர்கள் வகுத்தனர். அவர்களின் தத்துவச் சொற்களெல்லாம் குதிரைகளை குறித்தவையாக இருந்தன. நகுலன் அவர்களின் குதிரையியலில் முழுமையாக உள்ளமிழந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் குதிரைகளை நோக்கியபடி, குதிரைகளைப் பயிற்றுவிக்கும் அஸ்வகிரந்திகர்களுடன் இருந்தான். அவன் பேச்சில் குதிரைகளன்றி பிற திகழாமலாயின.

அர்ஜுனன் புன்னகையுடன் “நகுலன் அவன் தெய்வத்தை கண்டுகொண்டுவிட்டான் மூத்தவரே” என்றான். “ஆம், அஸ்வினிதேவர்கள் அவனை பிறப்பித்ததற்கான காரணம் முழுமையடைகிறது” என்றான் பீமன். “சிறிய துளைவழியாகப் பார்த்தால் மட்டுமே காட்சியளிக்குமளவுக்கு பேருருக்கொண்டது இப்புடவி” என்றான் தருமன். “குதிரையின் வாலைப்பிடித்துக்கொண்டு விண்ணகம் புகமுடியும் என்கின்றன நூல்கள். அந்தப் பேறு அவனுக்கு கிடைக்கட்டும்.”

ஒவ்வொரு நாளும் இரவில் சாலிஹோத்ரரின் குடிலுக்குத் திரும்பி காலையில் காட்டுக்குள் நுழைந்து இடும்பியுடன் வாழ்ந்துகொண்டிருந்தான் பீமன். அவனுக்கும் இடும்பிக்குமாக கட்டப்பட்ட தொங்கும் குடிலில் இரவில் அவள் மட்டுமே இருந்தாள். அவன் அணிந்த தோலாடை ஒன்றை அவனாக எண்ணி தன்னருகே வைத்துக்கொண்டு அதை முகர்ந்து அவனை அருகே வரவழைத்து கண்மூடித் துயின்றாள். காலையில் எழுந்ததுமே காட்டினூடாக விரைந்து புல்வெளி விளிம்பில் நின்று அவனை கூவியழைத்தாள்.

இடும்பிக்கு காட்டில் தெரியாத ஏதுமிருக்கவில்லை என்று பீமன் உணர்ந்தான். அவள் தோளிலேறி காட்டுக்குள் பறந்து அலையத் தொடங்கியபின் ஒட்டுமொத்தமான ஒரு பெருவியப்பாக இருந்த காடு மெல்ல தனித்தனியாகப்பிரிந்தது. மரங்களும் செடிகளும் கொடிகளும் புல்லும் காளான்களும் பெயரும் அடையாளங்களும் கொண்டன. விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என விரிந்தது உயிர்க்குலம்.

ஓரிரு மாதங்களில் ஒவ்வொரு வகை பறவையின் குரலையும் தனித்தனியாக கேட்கமுடிந்தது. பின்னர் ஒவ்வொரு பறவையையும் அறியமுடிந்தது. ஒவ்வொரு விலங்கின் கண்களையும் நோக்கமுடிந்தது. அனைத்துக்கும் அவன் பெயரிட்டான். எங்கு எப்பறவை எவ்வேளையில் இருக்கும் என்று அவனுக்கு தெரியவந்தது. சிறுகூட்டுக்குள் இருந்த முட்டையின் மேல் விழுந்திருந்த கோலத்தைக் கொண்டே அது எந்தப்பறவையின் முட்டை என்று அறியலானான். இரண்டு வருடங்களில் காடு என்பது முழுமையாகவே கண்முன் இருந்து மறைந்து போயிற்று. அது உயிர்க்குலங்களாக ஆகியது.

மேலும் இரண்டுவருடங்களில் ஒவ்வொரு உயிரும் இன்னொன்றுடன் இணைவதை அறியலானான். காட்டெருதும் சிட்டுக்குருவியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஓருயிராகத் தெரிந்தன. கருடனும் நாகமும் ஒன்றாயின. ஒரு கணத்தில் யானையும் எலியும் ஒன்றே என அவன் உணர்ந்தபோது பெரும் அகவிம்மலுடன் காடு என்பது ஓருயிரே என்று அறிந்தான். அதன்பின் அவன் முன் காடு எனும் செடி நின்றிருந்தது. காடு எனும் விலங்கு அவனுடன் பேசியது. காடு எனும் அகம் அவனை அறிந்துகொண்டது.

அவனால் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது அந்த மூதாதைக்குன்றின்மேல் நின்றிருந்த பெருங்கற்கள்தான். அவற்றைப்பற்றி அவர்களுக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. “ பேச்சு வழியாக நாம் மூதாதையரை அடைய முடியாது. அவர்கள் நம்மிடம் பேசவேண்டுமென்றால் நம்மை நாடிவருவார்கள். நம் கனவில் அவர்கள் நிகழ்வார்கள்” என்றாள் இடும்பி. “அவை விழியுள்ள கற்கள்.” அக்கற்களின் அருகே நின்று ஏறிட்டுப் பார்க்கையில்தான் அவ்விடத்துக்கு தான் முற்றிலும் அயலவன் என்று உணர்வான். அவை அவனை நோக்கி விழிதிறக்கவேயில்லை.

பகுதி பதின்மூன்று : இனியன் - 2

காட்டுக்குள் பறவைகள் துயிலெழுந்து இலைக்கூரைக்கு மேல் சுற்றிப்பறந்தன. சற்றுநேரத்தில் பறவையொலிகளால் காடு முழங்கத் தொடங்கியது. புல்வெளியில் இருந்து ஒரு நரி வாலை காலிடுக்கில் செருகியபடி ஓடி பீமனை அணுகி அஞ்சி பின்னடைந்தபின் திரும்பி புதருக்குள் சென்று மறைந்தது. புதரில் இருந்து ஒரு காட்டுக்கோழி ஓடி புல்வெளியை நோக்கிச் சென்றது. புல்வெளியில் இருந்து நீரோடையின் ஒளியுடன் வந்த பாம்பு காட்டுக்குள் நுழைவதை நோக்கியபடி நின்றவன் புன்னகையுடன் காலை ஓங்கி தரையில் மிதித்தான். பாம்பு அதிர்ந்து வளைந்து அசையாமல் நின்றபின் பாய்ந்தோடி மறைந்தது.

தூரத்தில் குறுமுழவின் ஒலி போல இடும்பியின் குரல் கேட்டது. அவன் முகம் மலர்ந்து வாயில் தன் கையை வைத்து முழவொலி எழுப்பினான். கால்களை மாற்றிக்கொண்டு சிலகணங்கள் மெல்லிய தவிப்புடன் நின்றபின் ஓடிச்சென்று ஒரு மரக்கிளையைப்பற்றி எழுந்து மேலே சென்றான். இலைத்திரள்வழியாக கிளைகளை தொட்டுத்தொட்டு பறந்து சென்று பச்சை இருளுக்குள் மூழ்கினான்.

நீருக்குள் மீன்கள் முகம் தொட்டுக்கொள்வதுபோல ஈரத்தால் குளிர்ந்திருந்த பச்சைஇலைகளின் தழைப்புக்குள் அவனும் இடும்பியும் சந்தித்துக்கொண்டனர். இடும்பி அவனைக் கண்டதும் சிரித்தபடி உரக்க குரலெழுப்பினாள். அவனும் குரலெழுப்பி தன் தோள்களில் அடித்துக்கொண்டான். அருகே சென்றதும் இருவரும் இறுகத்தழுவிக்கொண்டு புதர்கள் மேல் விழுந்தனர். நகைத்தபடி புல்லில் உருண்டு எழுந்து மீண்டும் கிளைகளில் தொற்றி ஏறினர்.

இடும்பி அவனைப்பிடித்து தள்ளிவிட்டு கிளைகள் வழியாக விரைந்தாள். அவன் கூச்சலிட்டபடி கிளைகளில் விழுந்து தப்பி மீண்டும் மேலேறி அவளை துரத்தினான். மரக்கிளைகளில் அவர்கள் தொற்றித்தொற்றிப் பறந்தனர். இலைகளில் ஊடுருவி, சிறுகிளைகளை வளைத்துக்கொண்டு சென்றனர். இடும்பி பெரிய மூங்கில்கழைகளைப் பற்றி உடலின் எடையாலேயே வளைத்து வில்லாக்கி தன்னை அம்பாக்கி பாய்ந்து காற்றில் சென்று இன்னொரு கழையில் பற்றிக்கொண்டாள்.

அவளுடைய விரைவை அவன் அடைய முடியவில்லை. அவள் தோன்றிய இடத்திலிருந்து கணநேரத்தில் மறைந்தாள். மிக அருகே தோன்றி காதுக்குள் சிரித்துக்கொண்டு மீண்டும் மறைந்தாள். காடெங்கும் நிறைந்திருப்பது போல தோன்றினாள். சிலகணங்களில் காடே அவனைச்சூழ்ந்து சிரிக்கத் தொடங்கியது. மரங்களும் புதர்களும் அவனை நோக்கி நகைத்து கையசைத்தன.

மூச்சிரைக்க பீமன் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டான். அவள் மரக்கிளை ஒன்றில் தலைகீழாகத் தொங்கி அவன் முன் கைவீசி ஆடியபடி சிரித்தாள். “மைந்தன் எங்கே?” என்றான் பீமன். “மூத்த இடும்பியரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்” என்றாள் இடும்பி. “அன்னை அவனைத் தேடினாள். நீ அவனை சிலநாட்கள் என்னிடம் விட்டுவிடு” என்றான். “இடும்பன் தன் குடியைவிட்டு ஒருநாள் இரவுகூட அகன்றிருக்கலாகாது” என்று அவள் சொன்னாள்.

அவள் எப்போதுமே சொல்வதுதான் அது. பீமன் நீள்மூச்சுடன் “இன்று அவனை அங்கே கொண்டுசென்று காட்டவேண்டும். அன்னை நாலைந்துமுறை கேட்டுவிட்டாள்” என்றான். “ஆம், அவனும் பாட்டியை தேடுகிறான். ஆனால் அங்கே இருக்கும் கிழவிகளுக்கு அவனை அங்கே கொண்டுசெல்வதே பிடிக்கவில்லை. அவனை நீங்கள் மந்திரத்தால் கட்டிவிடுவீர்கள் என்கிறார்கள்” என்றாள். பீமன் “அது உண்மை... என்னையே மந்திரத்தால்தான் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்றான்.

இடும்பி தலைகீழாகத் தொங்கியபடி சிந்தித்தபின் பறந்து சென்று இருகைகளிலும் பெரிய பலாப்பழங்களுடன் வந்து அவனருகே அமர்ந்தாள். அதை உடைத்து சுளைகளை எடுத்து பீமனிடம் கொடுத்தாள். “மைந்தன் ஒரு சொல்லும் இதுவரை பேசவில்லை. அமைதியாகவே இருக்கிறான்” என்றாள். பீமன் “அவன் என் மைந்தன். நான் பேசவும் நெடுநாளாயிற்று” என்றான். “அவன் ஊமை என்று குடிமூத்தார் ஒருவர் சொன்னார்” என்றாள் இடும்பி. பீமன் நகைத்து “அவன் கண்களில் சொற்கள் இருக்கின்றன” என்றான்.

பழத்தை உண்டுமுடித்ததும் இடும்பி அவனை தன் கைகளால் அள்ளி தோளிலேற்றிக்கொண்டாள். பீமன் “ஆயிரக்கணக்கானமுறை உன் தோளில் ஏறி பறந்துவிட்டேன். ஆனாலும் கீழே விழுந்துவிடுவேன் என்ற அச்சம்தான் வயிற்றில் தவிக்கிறது” என்றான். இடும்பி “ஒருபோதும் நிகழாது... நான் உங்களை என் வயிற்றால் அல்லவா சுமந்துசெல்கிறேன்” என்றபடி மரக்கிளைகளைப் பற்றி காற்றில் ஆடிச்சென்றாள். அந்தக் கூற்றிலிருந்த கூர்மை பீமனை வியக்கச் செய்தது. மிகக் குறைவான சொற்கள் மட்டுமே கொண்ட மொழி என்பதனால் அவர்கள் எப்போதுமே சுருக்கமாகத்தான் பேசினார்கள். காவியத்தில் இருக்கும் வரிகளைப்போல.

அவள் முதுகிலிருந்தபடி பீமன் கீழே ஓடிமறைந்த பசுங்காட்டை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கிளைகளை கண்ணால் பார்க்கவில்லை, கைகளில் அவளுக்கு கண்களிருக்கின்றன என்று அவனுக்கு எப்போதுமே தோன்றும். தனித்தனியாக இரு நாகங்கள் போல அவள் கைகள் பறந்து சென்று கிளைகளைப் பற்றி அவ்விரைவிலேயே வளைத்துவிட்டு தாவிச்சென்றன. அவள் உடல் அக்கைகளுக்கு நடுவே மண்ணுடனும் கிளைகளுடனும் தொடர்பேயற்றதுபோல காற்றில் சென்றுகொண்டிருந்தது.

இடும்பர்கள் மரங்களில் செல்லும் கலையை பீமனால் கற்கவே முடிந்ததில்லை. விரைவிலேயே அவன் மூச்சிரைக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அந்த நுட்பத்தை புரிந்துகொண்டான். அவன் தாவுவதற்கு தன் தோள்வல்லமையையே பயன்படுத்தினான். அவர்கள் கிளைகளை வளைத்து அந்த விசையைக்கொண்டே தாவிச்சென்றனர். அவனால் அந்தக் கணக்குகளை அடையவே முடியவில்லை. ”நீங்கள் கிளைகளில் தாவுவதில்லை, நீந்துகிறீர்கள்” என்றான்.

இடும்பி நகைத்து “இங்கே ஒரு வயதுக்குள் ஒரு குழந்தை இதை கற்றுக்கொள்ளும். கற்றுக்கொள்ளாத குழந்தை பிறகெப்போதுமே கற்றுக்கொள்ளாது” என்றாள். “நீ நம் மைந்தனைப்பற்றி சொல்கிறாயா?” என்றான் பீமன். “ஆம், நம் மைந்தனுக்கு ஒரு வயது தாண்டிவிட்டது. இன்னமும் அவன் கிளைகளில் ஏறவில்லை. அவன் தூய இடும்பன் அல்ல என்கிறார்கள். அவன் உங்கள் மைந்தன், அவனை உங்களிடமே தந்து அனுப்பிவிடும்படி சிலர் சொல்கிறார்கள்.”

“மகிழ்வுடன் கொண்டுசெல்வேன்” என்றான் பீமன். “அன்னை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மைந்தனை நம்முடன் கொண்டுசெல்லலாம் என்று. அவன்தான் பாண்டவர்களின் முதல் பெயரன். மறைந்த மன்னர் பாண்டு அவனையே முதலில் வாழ்த்துவார்.” இடும்பி “நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், அவன் இந்தக்காட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவனுடைய பெருந்தோற்றமே அவனை அங்கெல்லாம் அயலவனாக்கிவிடும். அரக்கன் என்ற சொல் அச்சத்துடன் மட்டுமே சொல்லப்படவேண்டும். ஒருபோதும் ஏளனத்துடன் சொல்லப்படலாகாது.”

அவர்கள் இடும்பக்குடியின் விளிம்பில் மண்ணில் இறங்கினார்கள். இருவர் உடல்களிலிருந்தும் நீர்த்துளிகள் சொட்டின. குடில்களுக்குக் கீழே காவல்நின்ற நாய்க்கூட்டம் பீமனின் வாசனையைப் பெற்றதும் குரைக்கத் தொடங்கியது. எட்டு நாய்கள் அம்புமுனை போன்ற வடிவில் எச்சரிக்கையுடன் காதுகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தன. அணுகும்தோறும் அவை விரைவழிந்து மெல்ல காலெடுத்துவைத்தன. நூலால் கட்டி இழுக்கப்படுவதுபோல நாசியை நீட்டியபடி முன்னால் வந்த தலைவன் உறுமியது.

இடும்பி ஒலியெழுப்பியதும் அது வாலை ஆட்டியபடி காதுகளை மடித்தது. பிறநாய்களும் காதுகளை மடித்து வாலை ஆட்டியபடி அங்கேயே நின்றன. "இத்தனை நாட்களாகியும் இவை என்னை ஏற்றுக்கொள்ளவேயில்லை” என்றான் பீமன். “நீங்கள் அங்கே சாலிஹோத்ரரின் குடிலில் இருக்கிறீர்கள். அங்கே அவர்கள் வேள்விகளைச் செய்து புகையெழுப்புகிறார்கள். அந்த வாசம் உங்கள் உடலில் உள்ளது” என்றாள் இடும்பி. “அத்துடன் உங்கள் உடன்பிறந்தாரும் அன்னையும் உங்களை தீண்டுகிறார்கள். அந்த வாசமும் உள்ளது.”

“என் அன்னையின் கருவறை வாசமே இருக்கும். அதை நான் விலக்கமுடியாதல்லவா?” என்றான் பீமன். அவர்கள் நெருங்கியபோது முதல்நாய் வாலைச் சுழற்றி வீசியபடி காதுகளை நன்றாக பின்னால் மடித்து உடலைத் தாழ்த்தி ஓடிவந்தது. இடும்பியின் உடலை தன் உடலால் உரசியபடி சுற்றியது. பிறநாய்கள் ஓடிவந்து எம்பிக்குதித்து அவள் விரல்களை முத்தமிட்டன. ஒருநாய் ஓரக்கண்ணால் பீமனை நோக்கி மெல்ல உறுமியபின் இடும்பியை நோக்கிச் சென்று காதுகள் பறக்க எம்பிக்குதித்து மெல்ல குரைத்தது.

இடும்பி மெல்லியகுரலில் அவற்றுடன் பேசியபடியே சென்றாள். மேலும் நாய்கள் வந்து அவளை சூழ்ந்துகொண்டன. குடில்களுக்குக் கீழே தரையெங்கும் அவை உண்டு மிச்சமிட்ட எலும்புகள் மண்ணில் மிதிபட்டன. அவள் அணுகியதும் குடிலில் இருந்த கிழவர் ஒருவர் வாயில் கைவைத்து சங்கு போல ஒலியெழுப்ப குடில்களுக்குள் இருந்து குழந்தைகள் வந்து எட்டிப்பார்த்து சிரித்துக்கொண்டே கூச்சலிட்டன. குடில்களை ஆட்டி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பறந்தன. கிளைகள் வழியாக தாவிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டு கூச்சலிட்டு குதித்தன.

பீமன் நூலேணி வழியாக ஏறி கிழவர் இருந்த குடிலுக்குள் நுழைந்தான். முதுஇடும்பர் “நீ காட்டில் ஒலியெழுப்பியதைக் கேட்டேன்...” என்று கரியபற்களைக் காட்டி சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் ஒரு இலையில் தீயில் சுட்ட பலாக்கொட்டைகளை வைத்திருந்தார். அதை அவனை நோக்கி தள்ளிவைத்து “உயிர் நிறைந்தவை” என்றார். இடும்பி கொடிவழியாக இன்னொரு குடிலுக்குள் நுழைந்து மறைந்தாள். முதுஇடும்பர் “அவள் மைந்தனைப்பற்றித்தான் நேற்றிரவு பேசினோம். அவன் பேசுவதில்லை. அவன் கைகளுக்கு மரங்களும் பழகவில்லை” என்றார்.

பீமன் “நாங்கள் சற்று பிந்தியே அவற்றை கற்கிறோம்” என்றான். “ஆனால் அரக்கர்கள் மூன்று மாதத்தில் எழுந்து அமர்வார்கள். ஆறு மாதத்திலேயே பேசத்தொடங்குவார்கள். ஒருவயதில் கிளைகளில் நீந்துவார்கள். உன் மனைவி ஆறுமாதமே ஆகியிருக்கையில் காட்டின் எல்லையில் ஆறு வரை சென்று வருவாள்” என்றார் முதுஇடும்பர். பீமன் அவர் சொல்லவருவதென்ன என்று சிந்தனைசெய்தபடி பார்த்தான்.

முதுஇடும்பர் “அவனால் ஏன் கிளைகளில் நீந்தமுடியவில்லை தெரியுமா? அவன் இடும்பர்கள் அனைவரையும் விட பெரியவன். இரண்டு மடங்கு பெரியவன். ஒருவயதான குழந்தை, ஆனால் என் இடையளவுக்கு இருக்கிறான். நான்குவயது குழந்தைகளைவிட எடை கொண்டிருக்கிறான்” என்றார். பீமன் “ஆம்” என்றான். “அவன் மிகச்சிறந்த போர்வீரனாக வருவான்.” முதுஇடும்பர் “எங்கள் போர்களெல்லாம் கிளைகளில் அல்லவா? பறக்கமுடியாவிட்டால் அவனை எப்படி அரக்கன் என்று சொல்லமுடியும்?” என்றார்.

பீமன் அவர் சொல்லப்போவதற்காக காத்திருந்தான். “அவனை நீங்கள் கொண்டுசெல்ல முடியாது. அங்குள்ள எளிய மானுடர்களைவிட இருமடங்கு உயரமும் எடையும் கொண்டவனாக இருப்பான். அவனால் அங்கே வாழமுடியாது. இங்கும் அவனால் வாழமுடியாது. பறக்காதவனை இடும்பனாக ஏற்பதும் குலஉரிமைகளை அளிப்பதும் முடியாது.” பீமன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆகவே, அவனை இடும்பர் குலத்தில் இருந்து விலக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். இக்காட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள புல்வெளியில் அவன் வாழலாம். அவன் தானாகவே உணவு தேடி உண்பதுவரை அவன் அன்னை அவனுக்கு உணவு கொண்டு கொடுக்கட்டும். அதன்பின் இடும்பர்களின் நண்பனாக அவன் அங்கே இருக்கலாம்” முதுஇடும்பர் சொன்னார் “அவன் கால்களைப் பார்த்தேன்... எடை மிக்க யானைக்கால்கள். இடும்பர்களுக்குரியவை குரங்குக் கால்கள். அவனால் பச்சையில் நீந்தவே முடியாது. அவன் புல்வெளிகளில் வாழ்வதற்காகவே மூதாதையரால் படைக்கப்பட்டிருக்கிறான்.”

பீமன் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தான். முதுஇடும்பர் “நீயே இப்போதுதான் காட்டை அறியத் தொடங்குகிறாய். உன் கைகளும் கால்களும் இன்னும்கூட காட்டை அறியவில்லை. துணைவியின் தோளிலேறி காட்டைச் சுற்றுகிறாய். ஆகவேதான் உன் மைந்தனின் உடலும் காட்டை அறியவில்லை” என்றார். “காட்டை அறிவது நம்மால் முடியாது. அன்னை தன் குழந்தையை கைநீட்டி எடுத்துக்கொள்வதுபோல காடு நம்மை எடுத்துக்கொள்ளவேண்டும்...” பீமன் தலையசைத்தான்.

“நாங்கள் காட்டின் மைந்தர்கள். அப்பால் வாழ்பவர்கள் நெருப்பின் மனிதர்கள். அவர்கள் நெருப்பை வழிபடுகிறார்கள். ஒவ்வொருநாளும் நெருப்பை ஏற்றி வானத்துக்கு அனுப்புகிறார்கள். காடுகளை நெருப்பிட்டு அழித்து அங்கே தங்கள் வீடுகளை கட்டுகிறார்கள். நீ அவர்களில் ஒருவன். உன் உடல் நெருப்பின் நிறம் கொண்டிருக்கிறது. உன் உடலில் புகையின் வாசம் எழுகிறது” என்றார் முதுஇடும்பர். “காட்டுக்கு எதிரானது நெருப்பு. காடும் நெருப்பும் காலம் தொடங்கியது முதலே போரிட்டுவருகின்றன. நீ எங்களில் ஒருவனல்ல. உன் மைந்தனும் அப்படித்தான்.”

“அவன் உங்களைப் போலிருக்கிறான்” என்றான் பீமன். “இல்லை, எங்களைவிடவும் பெரியவனாக இருக்கிறான். ஆனால் அவன் எங்களவன் அல்ல. எங்களவன் என்றால் இதற்குள் அவனை காடு அறிந்திருக்குமே?” பீமன் பெருமூச்சுடன் பார்வையை விலக்கிக் கொண்டான். “நாளை மறுநாள் முழுநிலவு. அன்று நாங்கள் குலம்கூடி முடிவெடுத்து அவனை காட்டிலிருந்து விலக்கி புல்வெளிக்கு அனுப்பலாமென நினைக்கிறோம்” என்றார் முதுஇடும்பர். பீமன் ஏதோ சொல்லவந்ததுமே தெரிந்துகொண்டான் அவை அவரது சொற்கள் அல்ல, அவனிடம் அவற்றைச் சொல்ல அவர்களால் அவர் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார் என.

நூலேணி வழியாக குழந்தையுடன் இடும்பி இறங்கிச்சென்றாள். அவள் தோளுக்குப்பின்னால் இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தொங்கிய பெருங்குழந்தை மயிரே இல்லாமல் பளபளத்த பெரிய தலையுடன் கன்னங்கரிய உடலுடன் இருந்தது. கொழுத்துருண்ட கைகால்களால் அன்னையை கவ்விப்பற்றி நாய்களை நோக்கி உரத்தகுரலில் உறுமியது. நாய்கள் அவனை நோக்கிக் குரைத்தபடி எம்பிக்குதித்தன. நாய்களின் தலைவன் அவனை நோக்கி மூக்கை நீட்டி வந்தபின் வாலை அடிவயிற்றில் செருகி பின்னால் சென்று குந்தி அமர்ந்து ஊளையிட்டது. ஆங்காங்கே நின்றிருந்த நாய்களும் ஊளையிடத் தொடங்கின.

பீமன் நூலேணிவழியாக இறங்கி இடும்பியை நோக்கி சென்றான். அவள் இடையில் இருந்த மைந்தன் அவனை நோக்கித் திரும்பி உருண்ட விழிகள் மலர்ந்து வெண்ணிறப்பற்களைக் காட்டி சிரித்தான். அரக்கர்குல இயல்புக்கேற்ப அவன் பெரிய பற்கள் முழுமையாகச் செறிந்த வாயுடன்தான் பிறந்தான். பிறந்த மூன்றாம்நாளே அவனுக்கு ஊனுணவு அளிக்கத் தொடங்கினர். காட்டெருமையின் கழுத்தை அறுத்து ஊற்றி எடுத்த பசுங்குருதியை பனையோலைத் தொன்னையில் பிடித்து அவனுக்கு ஊட்டினர். அவன் உண்ணும் விரைவையும் அளவையும் கண்டு பீமனே திகைத்தான். இரண்டாம் வாரமே எழுந்து அமர்ந்து கைகளால் தரையை அறைந்து ஆந்தைபோன்ற பெருங்குரலில் உணவு கோரி வீரிட்டழுதான்.

பீமன் அருகே சென்று மைந்தனை நோக்கி கைநீட்டினான். அவனைக் கண்டதுமே குழந்தை கால்களை உதைத்து எம்பிக் குதித்து பெருங்குரலில் சிரித்தது. அவன் அதை தன் கையில் வாங்கிக் கொண்டான். குனிந்து அதன் பெரிய உருண்டவிழிகளையும் சற்று தூக்கிய நெற்றியையும் நோக்கினான். அதன் உடலில் முடியே இருக்கவில்லை. எடைமிக்கக் கரும்பாறைபோலிருந்தான். பீமன் அவனைச் சுமந்தபடி நடந்தான். இடும்பி அவன் பின்னால் வந்தாள். அவன் கைநீட்டி அவளைத் தடுத்தபின் மைந்தனுடன் முன்னால் நடந்து சென்று காட்டுக்குள் புகுந்தான்.

மைந்தனை தன் தோளில் ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தான். எதிரே வந்த எருது சிவந்த கண்களை உருட்டி கொம்பு தாழ்த்தி நோக்கி “யார்?” என்றது. “மைந்தன்” என்றான் பீமன் ”கரியவன்” என்றது எருது. அவன் இலைகள் வழியாகச் சென்றபோது உவகையுடன் கால்களை உதைத்து கைகளை விரித்து கூச்சலிட்டு மைந்தன் குதித்தான். மூங்கில்கூட்டமருகே நின்றிருந்த நான்கு யானைகளில் மூத்த யானை திரும்பி அவனை நோக்கி ஓசையிட்டது. மேலே வந்த குரங்கு “ அழகன்...” என்றது. பிடியானை ஒன்று துதிக்கை தூக்கி பெருங்குரல் எடுத்து அவனை வாழ்த்தியது.

மைந்தன் துள்ளிக்கொண்டே இருந்தான். அவன் எடையில் பீமனின் தோள்கள்கூட களைப்படைந்தன. அவன் ஓர் ஓடைக்கரையில் பாறைமேல் அமர்ந்து அவனை தன் மடியில் வைத்துக்கொண்டான். அவனை உதைத்து பின்னால் தள்ளிவிட்டு மைந்தன் எம்பி முன்னால் பாய்ந்து அதேவிசையில் தலைகுப்புற விழுந்து உருண்டு கீழே சென்று புல்லில் விழுந்தான். எரிச்சலுடன் முகம் சுளித்து அழுதபடி அருகே நின்ற சிறிய மரம் ஒன்றை ஓங்கி அறைய அது வேர் அசைந்து எழ சரிந்தது.

பீமன் எழுந்து புன்னகையுடன் அதை நோக்கியபடி நின்றான். பெரிய கரும்பானை போன்ற தலையை ஆட்டியபடி குழந்தை அவனை நோக்கி கையை நீட்டி ஏதோ சொன்னான். வாயிலிருந்து எச்சில் குழாய் வழிய தவழ்ந்து சென்று ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைக்குமேல் எடுத்துக்கொண்டபோது அப்பால் வந்திறங்கிய நாரையைக் கண்டான். விரிந்த கண்களுடன் நாரையை நோக்கி சிலகணங்கள் வியந்தபின் கல்லை அப்படியே விட்டுவிட்டு நாரையை நோக்கி கைநீட்டி உரக்கக் கூவினான். கல் அவன் மண்டையிலேயே ஓசையுடன் விழுந்து சரிந்து கீழே விழுந்தது. அவன் இயல்பாகத் திரும்பி கல்லை நோக்கிவிட்டு மீண்டும் நாரையை நோக்கி கூச்சலிட்டு எம்பினான். பாய்ந்து சேற்றில் விழுந்து தவழ்ந்து செல்லத் தொடங்கினான்.

பீமன் “டேய், பானைமண்டை” என்றான். மைந்தன் திரும்பி கண்களை உருட்டி நோக்கி பற்கள் தெரிய நகைத்து கைகளை தலைக்குமேல் தூக்கி ஆட்டினான். எச்சில் வழிந்து பெரிய செல்லத்தொந்தியில் வழிந்தது. சிரிக்கும்போது உருண்ட கரிய முகத்தில் வெளிப்பட்ட சீரான வெண்பற்களும் கண்களில் எழுந்த ஒளியும் பீமனை பேருவகை அடையச்செய்தன. கைகளைத் தட்டி நீட்டி “பானைமண்டையா, என் அழகா... செல்லமே” என்றான். குழந்தை இருகைகளாலும் மண்ணை அறைந்தபடி அவனை நோக்கி தவழ்ந்தோடி வந்தான்.

”இனி உன்பெயர் பானைமண்டையன். கடோத்கஜன்” என்றான் பீமன். அவனை குனிந்து எடுத்து தூக்கி அந்தப் பெரிய தொப்பையில் முகத்தை அழுத்தி “கடோத்கஜா, மைந்தா” என்றான். சிரித்துக்கொண்டே கைகால்களை நெளித்து கடோத்கஜன் துள்ளினான். “என் செல்லமே, என் அரசனே, என் பேரழகனே” என்று சொல்லி பீமன் அவனை முத்தமிட்டான். ”பறக்க மாட்டாயா நீ? எங்கே பற” என்று அவனை தூக்கி வீசி பிடித்தான். காற்றில் எழுந்த கடோத்கஜன் சிரித்தபடியே வந்து அவன் கைகளில் விழுந்தான். அவன் எச்சில் பீமனின் முகத்திலும் கண்களிலும் வழிந்தது.

தோள்தளர்ந்து பீமன் கடோத்கஜனை கீழே வைத்தான். அவன் தந்தையின் காலைப்பிடித்து எழுந்து தலை தூக்கி நோக்கி கூச்சலிட்டு துள்ளினான். “அதோ பார், நாரை... நாரை!” என்றான் பீமன். “ந்தையே...ன்னும்” என்றான் கடோத்கஜன். பீமன் திகைத்து “அடேய் பாவி. நீ பேசுவாயா?” என்றான். கடோத்கஜனின் கனத்த உதடுகள் அவன் சொன்ன சொற்களுக்கு தொடர்பற்ற முறையில் நெளிந்து பின் குவிந்தன. “த்தூக்கு... ன்னும் ன்னும்” என்றான் கடோத்கஜன். “மூடா, பேசத்தெரிந்தா இதுவரை வாயைமூடிக்கொண்டிருந்தாய்?” என்றான் பீமன் சிரிப்புடன். “ன்னும் ன்னும் தூக்கு, த்த் தூக்கு! ” என்று கடோத்கஜன் கால்களை மாறிமாறி உதைத்தான்.

“போதும், இனி என்னால் முடியாது” என்றான் பீமன். அவனை கைகளால் அடித்து “வேண்டும்... வேண்டும்... ன்னும்!” என்றான் கடோத்ககஜன். “அடேய், நீ அரக்கன். நான் மனிதன். உன்னை இனிமேலும் தூக்கினால் என் கை உடைந்துவிடும்” என்றான் பீமன். “நான் இறந்துவிடுவேன்... இதோ இப்படி” என்று நாக்கை நீட்டி காட்டினான். கடோத்கஜன் சிரித்து “ன்னும்” என்றான். “நீ என்ன அரசனா? உனக்கு நான் என்ன அரசவை நடிகனா? மூடா, அரக்கா. நான்தான் அரசன். தெரியுமா?” என்றான் பீமன். கடோத்கஜன் சிறுவிரலை நீட்டி சுட்டிக்காட்டி “ரக்கன்” என்றான். “யார் நானா? நல்ல கதை. டேய் நீ அரக்கன். நான் மனிதன்” என்றான் பீமன். கடோத்கஜன் எல்லாம் தெரியும் என்பதுபோல புன்னகை செய்து “நீ ரக்கன்” என்றான்.

“சொல்லிச் சொல்லி என்னை அரக்கனாகவே ஆக்கிவிடுவாய் போலிருக்கிறதே” என்றான் பீமன். அவன் கையைப்பிடித்து அவன் மார்பில் வைத்து “சொல், அரக்கன்” என்றான். கடோத்கஜன் பீமன் மேல் இரக்கம் கொண்டவனைப்போல புன்னகை செய்து “ரக்கன்” என்றான். அதே கையை தன் மார்பில் வைத்து “தந்தை” என்றான். “ந்தை” என்றான் கடோத்கஜன். “தந்தை பாவம்” என்றான் பீமன். சரி என்று கடோத்கஜன் தலையசைத்தான்.

உடனே நினைவுக்கு வந்து “தூக்கு... ந்தையே தூக்கு” என வீரிட்டான். ”தூக்க முடியாது. தந்தை பாவம். அரக்கன் பெரியவன்” என்றான் பீமன். கடோத்கஜன் பீமனின் தொடையில் கையால் அடித்து “போடா!” என்றான். “அடேய், நான் உன் தந்தை” என்றான் பீமன். “நீ சீச்சீ...போடா” என்று கடோத்கஜன் பாய்ந்து பீமனின் தொடையை கடித்தான். பீமன் “ஆ” என்று கூவினான். மறுகணமே கடோத்கஜன் வேண்டுமென்றே மென்மையாகத்தான் கடிக்கிறான் என்று தெரிந்தது. சிரித்துக்கொண்டே அவனை மீண்டும் தோள்மேல் தூக்கிக்கொண்டான். அவன் கண்களை நோக்கினான். சிரிப்பு ஒளிர்ந்த கண்களுடன் “ந்தை பாவம்” என்றான் கடோத்கஜன்.

ஒருகணத்தில் அகம் பொங்க பீமன் “ஆம், என் மைந்தா! என் அரசே! உன்னிடம் மட்டுமே தந்தை தோற்பேன். உன்னிடம் மட்டுமே இரக்கத்தை நாடுவேன்” என்று அவனை அணைத்துக்கொண்டு இறுக்கினான். “நீ பெருங்கருணை கொண்டவன். என்றும் அவ்வண்ணமே இரு என் செல்லமே” என்றான்.

பகுதி பதின்மூன்று : இனியன் - 3

இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல் அலையடித்தது. அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்து சுழன்று இறங்கி அமைந்தன. பச்சைவெளிக்கு அடியில் இருந்து பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது.

தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்று அவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச் சொறிந்தபின்னர் கிளைகளில் தாவி மேலேறி வந்து சற்று அப்பால் அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்றது. “சூரியனைப் பார்க்கிறோம்” என்றான் பீமன். அது திரும்பிப்பார்த்தபின் “ஆம், நன்கு கனிந்திருக்கிறது” என்று ஆர்வமின்றி சொல்லி “இங்கே உணவு கிடைக்கிறதா?" என்றது. “இல்லை, இளவெயில்தான் இருக்கிறது” என்றான் பீமன். அது உதடுகளை நீட்டி ஏளனமாகப் பார்த்தபின் புட்டத்தைச் சொறிந்து கொண்டு தொங்கி இறங்கிச் சென்றது.

“கு கு க்குரங்கு” என்றான் கடோத்கஜன். பீமனின் வலக்கையை அவன் தன் இருகைகளாலும் இறுக்கிப்பிடித்திருந்தான். குரங்கு எளிதாகத் தாவி இறங்குவதைப் பார்த்தபின் “தாவி த்த்தாவி... போ” என்று தலையை ஆட்டியபின் நிமிர்ந்து “த தத் தந்தையே” என்றான். "சொல் மைந்தா” என்றான் பீமன். “அ... அக் அந்தக் குரங்கைச் சாப்பிடலாமா?" பீமன் அவன் மண்டையை அறைந்து “குரங்கை சாப்பிடுவதா? மண்டையா, மூடா. அது நம் மூதாதையர் அல்லவா?" என்றான். கடோத்கஜன் புருவம் தூக்கி மண்டையை உருட்டி சூரியனைப் பார்த்தான். “அ அப்பம்!” என்றான்.

கீழிருந்து ஒரு பெரிய நாரை சிறகுகளை விரித்து காற்றில் நீச்சலிட்டு மேலேறி “ர்ர்ராக்!” என்று குரல் கொடுத்து வளைந்து சென்றது. கடோத்கஜன் சிந்தனையுடன் தலைதூக்கி பீமனை நோக்கினான். "நாரையை சாப்பிடலாமா என்று கேட்கிறாயா?" என்றான் பீமன். அவன் ஆம் என்று தலையை அசைத்தான். “சாப்பிடலாம்... உன்னால் பிடிக்க முடியுமா?" கடோத்கஜன் எம்பி “நான் ந்ந்நான் வளர்ந்தபின்!" என்று சொன்னபோது பிடியை விட்டுவிட்டான். ”ஆ” பதறிப்போய் பீமனைப்பற்றிக்கொள்ள பீமன் நகைத்தான்.

“நான் உ உங்களை கடிப்பேன்” என்றான் கடோத்கஜன் சினத்துடன். பீமன் அவன் மண்டையைத் தட்டி “நீ கடிக்க மாட்டாய்” என்றான். “ஏன்?" என்றான் கடோத்கஜன். “ஏனென்றால் நீ என் மைந்தன்.” அவன் பெருமிதத்துடன் சிரித்து “க... கடோத்கஜன் அரக்கன்!" என தன் நெஞ்சில் தொட்டு “நீ நீங்கள் தந்தை" என்றான். பீமன் சிரித்தான். கடோத்கஜன் அவனை தன் பெரிய கருங்கைகளால் சுற்றி வளைத்து அணைத்துக்கொண்டு “நீ... நீங்கள் நல்ல தந்தை...” என்றபின் ஒருகையை மட்டும் எச்சரிக்கையுடன் விரித்துக்காட்டி “ப்ப்ப் பெரியவர்!" என்றான்.

பீமன் சிரித்து அவனை அணைத்து அவன் வழுக்கை மண்டையில் முகத்தை உரசி “ஆம், நான் நல்ல தந்தை...” என்றான். “நீ... நீங்கள் பெரியவர்” என்றான் கடோத்கஜன். “யானை போல!”  பீமன் “என்னை விடப் பெரியவர் ஒருவர் இருக்கிறார்” என்றான். கடோத்கஜன் “எங்கே?" என்றான். “அஸ்தினபுரியில்... உன் தாத்தா அவர். திருதராஷ்டிரர் என்று பெயர்” கடோத்கஜனை அந்தப் பெயர் ஆழ்ந்த அமைதியுறச்செய்தது. “சொல், அவர் பெயரென்ன?" அவன் பேசாமல் வாயைக் குவித்து உருண்ட கண்களால் நோக்கினான்.

“சொல்” என்றான் பீமன். “சொன்னால் உனக்கு நான் முயல் பிடித்து தருவேன். சுவையான முயல்!” கடோத்கஜன் கைகளை விரித்து பத்து விரல்களையும் காட்டி “நான்கு முயல்!" என்றான். “ஆமாம், நான்கு முயல். சொல், திருதராஷ்டிரர்.” கடோத்கஜன் பார்வையை திருப்பிக்கொண்டான். “என் செல்லம் அல்லவா? என் கரும்பாறைக்குட்டி அல்லவா? சொல் பார்ப்போம். திருதராஷ்டிரர்.” அவன் கைசுட்டி “நா ந்ந்நா நாரை!" என்றான். “மண்டையா, பேச்சை மாற்றாதே. சொல். திருதராஷ்டிரர்.” அவன் “ந்ந்நாரை எனக்கு வேண்டும்“ என்றான். “சொல்வாயா மாட்டாயா?" அவன் தன்னை தொட்டுக்காட்டி “நாரை?" என்றான்.

“சொல்லாவிட்டால் உனக்கு முயல் தரமாட்டேன்.” கடோத்கஜன் தன் பெரிய தலையை அகன்ற கைப்பத்திகளால் பட் பட் என அடித்துக்கொண்டான். பீமன் உவகையுடன் “இதேதான்... இதே அசைவைத்தான் அவரும் செய்வார். உன் பெரிய தாத்தா. திருதராஷ்டிரர்” என்றான். கடோத்கஜன் ஏறிட்டு நோக்கி உதடுகளை மட்டும் மெல்ல அசைத்தான். “சரிதான்... சொல்... சொல் என் சக்ரவர்த்தியே!” கடோத்கஜன் “தி திட்டராத்” என்றான். “மண்டையைப்பார்... மூடா. நான் சொல்கிறேன் பார். திருதராஷ்டிரர்... திருதராஷ்டிரர்” என்றான் பீமன். “சொல் பார்ப்போம்!”

மீண்டும் தன் மண்டையை தட்டியபின் கடோத்கஜன் “எனக்கு ம்மு முயல்?" என்றான். “சொன்னால்தான்” என்றான் பீமன். அவன் உதடுகளைக் குவித்தபின் “அன்னையிடம் போகிறேன்” என்றான். பீமன் “அன்னை இதோ வந்து விடுவாள்” என்றான். அவன் “அன்னையிடம் போகிறேன்” என்று சிணுங்கியபின் பீமனின் கையை மெல்லக் கடித்து “நீ... நீங்கள் க்க்க் கெட்டவர்” என்றான். “சரி” என்றான் பீமன்.

கடோத்கஜன் தலையை தந்தையின் மார்பில் சரித்து சூரியனை நோக்கி “த... தந்தையே" என்றான். “என்ன?" என்றான் பீமன். “அது என்ன?" என்றான் சூரியனை சுட்டிக்காட்டி. “மண்டையா, நூறுமுறை சொன்னேனே. அது சூரியன். அதன் கீழே தெரிவது அருணன்.” கடோத்கஜன் இரு கைகளையும் நீட்டி அசைத்து “அதை தின்னலாமா?" என்றான். “சரிதான். நீ அரக்க மைந்தன்” என்றான் பீமன். “அது, அது இனியது!" என்றான் கடோத்கஜன். அவன் வாயிலிருந்து எச்சில் மார்பில் வழிந்தது.

"மண்டையனுக்கு நான் ஒரு கதை சொல்லவா?" என்றான் பீமன். “ஆம்" என்று சொல்லி கடோத்கஜன் திரும்பி அமர்ந்துகொண்டு “க்க்க்க் க கதை! பெரிய கதை!" என்று கைகளை தலைக்குமேல் விரித்து விழிகளை உறுத்து உதடுகளை துருத்திக்காட்டினான். ”ஆம், பெரிய கதை!" என்றான் பீமன். “இங்கிருந்து தெற்கே மலைகளுக்கெல்லாம் அப்பால் ஒரு காடு இருந்தது. அதை கபிவனம் என்று முன்னோர் சொல்வதுண்டு. அஞ்சனவனம் என்று இன்று அதை சொல்கிறார்கள். அங்கே மனிதர்களே இல்லை. அரக்கர்களும் அசுரர்களும் இல்லை. குரங்குகள் மட்டும்தான் வாழ்ந்துவந்தன.”

“க்கு... குரங்குகள்!” என்று கடோத்கஜன் கனவுடன் கண்களை மேலே செருகியபடி சொன்னான். “ந்நீ நிறைய குரங்குகள்” என்று கையை விரித்தான். “ஆம் நிறைய குரங்குகள். அவை மிக வலிமையானவை. வானத்தில் பறக்கவும் கண்ணுக்குத் தெரியாமல் மறையவும் அவற்றால் முடியும். அந்த அஞ்சன வனத்தில் அஞ்சனை என்று ஒரு பெரிய பெண் குரங்கு இருந்தது. கன்னங்கரிய நிறம் கொண்டிருந்ததனால் அவளுக்கு அந்தப்பெயர். அவள் மிகப்பெரிய கைகளும் மிகப்பெரிய கால்களும் கொண்டிருந்தாள். சிறிய காதுகளும் நாவல்பழம் போன்ற கண்களும் அவளுக்கு இருந்தன. அவளுடைய குரல் இடியோசை போல ஒலிக்கும். அவளுடைய வால் நூறுயானைகளின் துதிக்கை போல வலிமையானது.”

கடோத்கஜன் “த... தந்தையே, எனக்கு வால்?” என்றான். “நீ பெரியவனானதும் உனக்கும் வால் முளைக்கும்” என்றான் பீமன். “என்ன சொன்னேன்? அஞ்சனை இருந்தாள் இல்லையா?” கடோத்கஜன் “அ அஞ்சனை” என்றான். “க் க் கு குரங்கு!” என்று கைகளை விரித்து வெண்பற்களைக் காட்டி கண்கள் ஒளிர சிரித்தான். “ஆம், அஞ்சனை. அவள் அந்தக்காட்டில் அஞ்சனக்குகை என்ற குகையில்தான் வாழ்ந்தாள். அவள் கேசரி என்ற ஆண்குரங்கை கணவனாக ஏற்றாள். கேசரி சிங்கம்போல சிவந்த பெரியதாடியுடன் இருந்தான். ஆகவே அவனை மற்ற குரங்குகள் அப்படி அழைத்தன.”

கேசரிக்கும் அஞ்சனைக்கும் ஓர் ஆசை எழுந்தது. அந்தக்காட்டிலேயே அவர்களைப்போல வலிமையானவர்கள் இல்லை. உலகத்திலேயே வலிமையான குழந்தையைப் பெறவேண்டும் என்று அஞ்சனை நினைத்தாள். உலகிலேயே வலிமையானது எது என்று அவள் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். சூரியன் வெப்பமானவன், ஆனால் மழைவந்தால் அணைந்துவிடுவான். இந்திரன் ஆற்றல் மிக்கவன், ஆனால் வெயிலில் மறைந்துவிடுவான். அக்கினி நீரால் அணைபவன். எதனாலும் தடுத்து நிறுத்த முடியாதவன் காற்று. மலைகளைப் புரட்டிப்போட காற்றால் முடியும். ஊசியின் துளைவழியாக ஊடுருவிச்செல்லவும் முடியும். ஆகவே அவள் காற்றை தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினாள்.

அஞ்சனை ஆயிரம் வருடம் காற்றை தவம்செய்தாள். அதன்பின் காற்றுதேவன் அவள் முன் தோன்றினான். புயல்காற்றாக ஆயிரக்கணக்கான மரங்களை வேருடன் பிடுங்கி வீசியபடி வந்து பெரும் சுழல் காற்றாக மாறி வானையும் மண்ணையும் இணைக்கும் தூண் போல நின்று புயலோசையாக அஞ்சனையிடம் 'நீ விழைவது என்ன?' என்றான். அவனது பேருருவிற்குள் நூற்றுக்கணக்கான யானைகள் சுழன்று பறந்துகொண்டிருந்தன. பெரிய பாறாங்கற்களும் வேரற்று எழுந்த மரங்களும் சுழன்றன. கீழே புழுதியாலான பீடமும் வானில் மேகங்களாலான முடியும் சுழன்று கொண்டிருந்தன.

'தேவனே, உன்னைப்போன்ற மைந்தன் எனக்குத் தேவை' என்று அஞ்சனை சொன்னாள். 'என் மைந்தன் மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவவேண்டும். விண்ணை அள்ளி மண்ணில் நிரப்பவேண்டும். அவன் பஞ்சுத்துகள்களுடன் பறந்து விளையாடும் குழந்தையாக இருக்க வேண்டும். மரங்களை வெறிநடனமிடச்செய்யும் அரக்கனாகவும் இருக்கவேண்டும். காட்டுநெருப்பை அள்ளிச்செல்லவேண்டும். அகல் சுடருடன் விளையாடும் தென்றலாகவும் இருக்கவேண்டும். பெருங்கடல்களில் அலைகளை கொந்தளிக்க வைப்பவனாகவும் மென்மலரிதழ்களைத் தொட்டு மலரச்செய்பவனாகவும் அவன் விளங்க வேண்டும். மழையைக் கொண்டு வருபவனாகவும் வெயிலை அள்ளிச்செல்பவனாகவும் திகழவேண்டும்.'

'அவன் செல்லமுடியாத இடங்களே இருக்கக் கூடாது. அவனில் அத்தனை பூந்தோட்டங்களின் நறுமணங்களும் இருக்கவேண்டும். அவன் குழந்தைகளின் சிரிப்பையும் கன்னியரின் இனிய குரலையும் ஏந்திச்செல்லவேண்டும். நான்கு வேதங்களும் அவனில் நிறைந்திருக்கவேண்டும். மானுடர் அறியும் ஞானத்தையெல்லாம் அவர்கள் நாவிலிருந்து வாங்கி தன்னுள் வைத்திருந்து அவர்கள் செவிகொள்ளும்போது அளிப்பவனாக அவன் அமையவேண்டும். மூச்சாக ஓடி நெஞ்சில் நிறைபவனாகவும் இறுதிச் சொல்லாக மாறி இறைவனுடன் கலப்பவனாகவும் அவன் இருக்கவேண்டும். எவர் கண்ணுக்கும் படாதவனாகவும் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு கணமும் அறியப்படுபவனாகவும் திகழவேண்டும். தேவா, நீயே என் மைந்தனாக வரவேண்டும்' என்றாள்.

'அவ்வாறே ஆகுக!' என்று சொல்லி வாயுதேவன் மறைந்தான். மேலெழுந்து சுழன்ற யானைகளும் பாறைகளும் மரங்களும் பெரும் குவியலாகக் குவிந்து விழுந்தன. சருகுகளுக்குள் இருந்து துதிக்கை சுழற்றியபடி பிளிறிக்கொண்டு யானைகள் திகைத்து ஓடின. முயல்களும் மான்களும் புழுதியை உதறியபடி கூச்சலிட்டுக்கொண்டு தாவி ஓடின. பாம்புகள் மட்டும் அங்கேயே மயங்கிக்கிடந்தன. காற்று நின்ற இடத்தில் ஒரு மண்குன்று இருந்தது. அதை நோக்கி அஞ்சனை புன்னகைசெய்தாள். ஓடிச்சென்று தன் கணவனிடம் அனைத்தையும் சொன்னாள்.

“அஞ்சனை கருவுற்று நூறுமாதங்கள் அக்கருவை தன் வயிற்றில் சுமந்தாள். அதன்பின் அவளுக்கு ஓர் அழகான குரங்குக்குழந்தை பிறந்தது. அவன் மாந்தளிர் நிறத்தில் இருந்தான். தர்ப்பைப் புல்லால் ஆன படுக்கையில் தீப்பிடித்ததுபோல அவன் தோன்றினான்” என்றான் பீமன். அந்த உவமை புரியாமல் கடோத்கஜன் சற்று நெளிந்து அமர்ந்து “திருதராஷ்டிரர்!” என்றான். பீமன் திடுக்கிட்டு “அடேய்... சொல்... சொல்” என்று கூவி கடோத்கஜனை பிடித்து தூக்கினான். கடோத்கஜன் வெட்கி கண்களைத் தாழ்த்தி உதடுகளைக் குவித்தான். “சொல் என் கண்னே... என் செல்லமே சொல்!” அவன் உதடுகளை மெல்ல அசைத்து மெல்லிய குரலில் “திருதராஷ்டிரர்” என்றான். பீமன் அவனை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட்டு “என் செல்லமே! என் அரசனே!” என்று கூவி சிரித்தான்.

திமிறி விலகி கைகளை விரித்து கடோத்கஜன் “தீ” என்று கூவினான். “ஆமாம், தீ போல இருந்தான். அவன் முகவாய் இரண்டாகப் பிளந்தது போல இருந்தது. குரங்குகளுக்கு அப்படித்தானே இருக்கும்?” கடோத்கஜன் சிரித்து தன் வாயை குரங்கு போல வைத்துக்காட்டினான். “ஆமாம்... இதேபோல. ஆகவே அவன் அன்னை அஞ்சனை அவனை ஹனுமான் என்று அழைத்தாள். இரட்டைமுகவாயன் அழகான குரங்காக இருந்தான். அவன் முகம் சிவப்பாக இருந்தது. அவன் கைகளும் கால்களும் மென்மையான மயிரடர்ந்து இளம்புல் முளைத்த மண் போல் தெரிந்தன. அவனுடைய வால் குட்டி நாகப்பாம்பு போல் இருந்தது.”

கடோத்கஜன் “த் த்த தந்தையே எனக்கு வால்?” என்றான். “உனக்கும் முளைக்கும்” என்றான் பீமன். “அஞ்சனையின் வால் அவள் விரும்பிய அளவுக்கு நீளக்கூடியது. அவள் குகைக்குள் மகனை விட்டுவிட்டு வால் நுனியால் அவனுக்கு விளையாட்டுக்காட்டிக்கொண்டே காடு முழுக்கச் சென்று நிறைய பழங்களும் காய்களும் கிழங்குகளும் கொண்டு வந்து அவனுக்குக் கொடுப்பாள்.” கடோத்கஜன் ஆவலுடன் “முயல்?” என்றான். “ஆம், முயலும். ஆனால் ஹனுமான் முயல்களை சாப்பிட மாட்டான். அவற்றுடன் விளையாடுவான்.” கடோத்கஜன் ஐயத்துடன் “ஏன்?” என்றான். ”ஏனென்றால் குரங்குகள் காய்களையும் கனிகளையும்தான் உண்ணும்.” கடோத்கஜன் குழப்பத்துடன் “ஹனுமான்!” என்றபின் “திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர்” என்றான். “இனி இதையே சொல்லிச் சொல்லி சலிப்பூட்டு... மண்டையா!” என்று பீமன் அவன் தலையைத் தட்டினான். கடோத்கஜன் தலையைத் தடவி “ஆ! திருதராஷ்டிரர்” என்றான்.

அஞ்சனையின் மைந்தன் பெரிய குறும்புக்காரனாக வளர்ந்தான். இளமையிலேயே அவன் வானத்தில் பறக்கத் தொடங்கினான். உயர்ந்த மரங்களில் ஏறி அமர்ந்து அவன் பழங்களை உண்பான். பறவைகளுடன் சேர்ந்து பறப்பான். மான்களுடன் சேர்ந்து துள்ளி ஓடுவான். சிங்கத்தின் பிடரியைப்பிடித்து உலுக்கிவிட்டு சிரித்துக்கொண்டே கிளைகளில் ஏறிக்கொள்வான். அவன் தந்தையான வாயுதேவனின் அருள் அவனிடமிருந்தது. அவன் மூங்கிலை வாயில் வைத்தால் இனிய இசை வந்தது. அவன் தொட்டதுமே மலர்கள் மலர்ந்தன. அவன் கடந்துசென்றபின் புல்வெளியில் காலடித்தடமே எஞ்சவில்லை.

அவனுடைய வால்தான் அனைவருக்கும் இடர் அளித்தது. அவனை பின்னால் இழுக்க அஞ்சனை அவன் வாலைப்பிடித்து இழுத்தால் அவன் வாலை நீட்டிக்கொண்டே சென்றுவிடுவான். அதன்பின் அவள் அந்த வாலைச்சுருட்டிக்கொண்டே காடு முழுக்க அலைவாள். வால் ஒரு பெரிய மலைபோல அவளுக்குப்பின்னால் உருண்டு வரும். இறுதியில் எங்கோ ஓரிடத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் ஹனுமானைப்பிடித்து இழுத்து வருவாள்.

அவன் வாலை சிங்கம் பிடித்துவிட்டது என்றால் உடனே அவன் சிங்கத்தின் வயிற்றுக்கு அடியில் ஓடி சுழன்று வாலாலேயே அதைக் கட்டி வரிந்து சுருட்டி விடுவான். ஒருநாள் அவன் காட்டில் துயின்றுகொண்டிருக்க அருகே வாலுக்குள் ஒரு சிங்கம் அழுதுகொண்டிருப்பதை அஞ்சனை பார்த்தாள். அதை அவள் விடுதலை செய்தாள். அதன்பின் அந்தச்சிங்கம் தன் வாலையே அஞ்சியது.

இரவில் ஹனுமான் அன்னை அருகே துயில்கையில் அவன் வால் சுருங்கி சிறிய பாம்புக்குட்டி போல ஆகி அவன் காலுக்குள் சென்றுவிடும். அவன் தன் வாலை வாய்க்குள் போட்டு சப்பும் வழக்கம் கொண்டிருந்ததனால் அன்னை அந்த வாலை இழுத்து குகைக்கு அருகே ஒரு மரத்தில் கட்டிவைத்தாள். காலையில் எழுந்ததுமே துள்ளிக்கொண்டு காட்டுக்குள் செல்வது ஹனுமானின் வழக்கம். கூடவே அந்த மரத்தையும் பிடுங்கிக்கொண்டு சென்றான். அதில் இருந்த பறவைக்குஞ்சுகள் சிறகடிக்காமலே தாங்கள் பறப்பதை அறிந்து அஞ்சி கூச்சலிட்டன. அவற்றின் அன்னையர் வந்து அங்கிருந்த மரத்தைக் காணாமல் கூவினர்.

ஒருநாள் ஹனுமான் தன் தந்தை கேசரியின் மடியில் மர உச்சியில் அமர்ந்து வானத்தை நோக்கிக்கொண்டிருந்தான். காலையில் சிவப்பு நிறமாக சூரியன் எழுந்து வந்தது. 'தந்தையே அது என்ன?' என்று ஹனுமான் கேட்டான். 'அது சூரியன்' என்று கேசரி சொன்னார். ”அது நன்கு கனிந்திருக்கிறதா?' என்றான் ஹனுமான். 'ஆமாம்...' என்றார் கேசரி. 'தந்தையே அதை உண்ணலாமா?' என்று ஹனுமான் கேட்டான். எரிச்சல் கொண்ட கேசரி 'ஆமாம், சுவையானது. போய் தின்றுவிட்டு வா' என்றார்.

அக்கணமே மர உச்சியில் இருந்து பாய்ந்து எழுந்த ஹனுமான் மேகங்களை அளைந்து வாலைச்சுழற்றிக்கொண்டு சூரியனை நோக்கி பறக்கத் தொடங்கினான். மேலே செல்லச்செல்ல அவன் சிவந்து ஒரு எரிமீன் போல ஒளிவிட்டான். விண்ணைக் கடந்து சென்று சூரியனை கடிக்கப்போனபோது அருகே ராகு நிற்பதைக் கண்டான். குரங்குப்புத்தியால் உடனே சித்தம் விலகி திரும்பி ராகுவை விளையாடுவதற்காக பிடிக்கப்போனான்.

அருகே சென்றதும் கேதுவைக் கண்டு மீண்டும் சிந்தை விலகி கேதுவை பிடிக்கப்போனான். அவர்கள் இருவரும் அஞ்சி அலறினர். அப்போது தன் வால் பிடரியில் படவே அது என்ன என்று பிடித்துப்பார்த்தான். அதற்குள் அங்கே இந்திரனின் ஐராவதம் வந்தது. அதை விளையாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி அதன் துதிக்கையைப்பிடித்து தன் வாய்க்குள் வைத்து ஊதலாக ஊதினான். ஐராவதத்தின் உடல் உப்பி காற்றுத்துருத்தி போல ஆகியது. வாய் திறந்து அது அலறியது. அதன் மேலிருந்த இந்திரன் சினம்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் ஹனுமானை அடித்தான். மயக்கம் அடைந்த ஹனுமான் அலறியபடி தலைகீழாக மண்ணில் விழுந்தான்.

“ஆ” என்றபடி கடோத்கஜன் எழுந்து பீமனின் முகத்தைப் பிடித்தான். “ஆனால் அவன் வாயுவின் மைந்தன் அல்லவா? அவன் கீழே விழுந்தபோதே வாயு அவனை பிடித்துக்கொண்டார்” என்றான் பீமன். கடோத்கஜன் கைகளைத் தட்டி உரக்க நகைத்தான். ”சொல்லுங்கள்... க் கதை சொல்லுங்கள்” என்றான்.

வாயுவில் ஏறிய ஹனுமான் 'தந்தையே, பாதாளத்துக்குச் செல்லுங்கள்' என்று ஆணையிட்டான். மைந்தனைத் தூக்கிக் கொண்டு காற்று பாதாளத்திற்குள் சென்றுவிட்டது. பூமியில் எங்கும் காற்றே இல்லை. கடல்கள் அசையாமல் துணிப்பரப்பு போல ஆயின. கிளைகளும் இலைகளும் அசையவில்லை. நெருப்புகள் அசையவில்லை. தூசி அசையவில்லை. பூச்சிகளின் சிறகுகள் அசையவில்லை. உலகமே அசைவிழந்தது ஆகவே மக்களின் உள்ளங்களும் அசைவிழந்தன. விளைவாக சிந்தனைகள் அசைவிழந்தன. இறுதியில் பூமியே செயலற்றது.

மலர்கள் மலரவில்லை. அதைக்கண்ட வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கைகளை கூப்பி சரஸ்வதியிடம் முறையிட்டன. சரஸ்வதிதேவி பிரம்மனின் தாடியைப்பிடித்து இழுத்து உடனே வாயுவைத் தேடிப்பிடித்துக்கொண்டுவர வேண்டும் என்று ஆணையிட்டாள். பிரம்மன் அவள் சினத்துக்கு பயந்து பாதாளத்திற்குள் சென்றார். அங்கே மைந்தனை மார்பில் போட்டு கொஞ்சியபடி வாயு படுத்திருந்தார். பிரம்மன் சென்று வாயுவிடம் மேலே வரும்படி சொன்னார். 'என் மைந்தனை அவமதித்த இந்திரன் அவனிடம் பணிந்து பொறுத்தருளக்கோரவேண்டும்' என்றார் வாயு. 'சரி, நான் இந்திரனிடம் சொல்கிறேன்' என்று சொல்லி பிரம்மன் விண்ணுலகு சென்றார்.

முதலில் இந்திரன் மறுத்தான். 'ஓர் குரங்குக்குட்டியிடம் நான் மன்னிப்பு கோருவதா?' என்று சீறினான். பிரம்மா வற்புறுத்தியபோது 'சரி, நான் ஒரு சொல் மட்டும் சொல்கிறேன். என் உடன்பிறந்தவனாகிய வாயுவின் மைந்தன் அவன் என்பதனால்' என்று சொல்லி இந்திரன் ஒத்துக்கொண்டான். வாயுவிடம் பிரம்மன் சென்று சொன்னதும் அவர் தன் மைந்தனை தோளிலேற்றி வானில் எழுந்து வந்தார்.

வாயு இந்திரனை அணுகியதும் ஹனுமான் பாய்ந்து இறங்கி அருகே சென்று அவனது குதிரையான உச்சைசிரவஸின் மூக்கினுள் தன் வால் நுனியைப் போட்டு ஆட்டினான். உச்சைசிரவஸ் பயங்கரமாகத் தும்மியது. ஒரு தலை தும்மியதும் ஏழு தலைகளும் வரிசையாகத் தும்மின. இந்திரன் அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே ஹனுமானை அள்ளி எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு 'உனக்கு என்ன வேண்டும்?' என்றான்.

'வஜ்ராயுதம் வேண்டும். விளையாடிவிட்டு தருகிறேன்' என்று ஹனுமான் கேட்டான். 'அய்யோ, அது வானத்தையே இரண்டாகப்பிளக்கும் வாள் அல்லவா' என்று இந்திரன் பதறும்போதே ஹனுமான் அதை கையில் எடுத்துக்கொண்டு பாய்ந்து ஓடிவிட்டான். இந்திரனும் தேவர்களும் பதறி அவனைத் துரத்த அவன் பாய்ந்து மேகங்களில் மறைந்தான். அவர்கள் எங்கும் தேடி இறுதியில் ஒரு மரத்தின் உச்சியில் கண்டுபிடித்தனர். ஒரு மாம்பழத்துக்கு வஜ்ராயுதத்தைக்கொண்டு தோல்சீவிக்கொண்டிருந்தான் ஹனுமான்.

கடோத்கஜன் கைதட்டிச் சிரித்து “குரங்கு” என்றான். “ஆமாம், அழகான குட்டிக்குரங்கு” என்றான் பீமன். “இந்திரன் அந்தக் குரங்கை அள்ளி அணைத்து முத்தமிட்டான். தேவர்களெல்லாம் அவனை கொஞ்சினார்கள். அதன்பின் மும்மூர்த்திகளும் கொஞ்சினர். அவன் அவர்களின் கால்களுக்குக் கீழே தவழ்ந்துபோய் தேவர்களின் பூந்தோட்டமான அமராவதியின் தோட்டத்தில் மரங்கள்தோறும் துள்ளி அலைந்தான். அமுதகலசம் இருந்த மண்டபத்திற்குள் சென்று கலத்தில் வாலைவிட்டு எடுத்து நக்கி நக்கி அமுதத்தையும் வயிறு நிறைய உண்டான். அதைக்கண்டு சிரித்த இந்திரன் உன்னை எந்த படைக்கலமும் கொல்லாது. நீ இறப்பற்றவனாக இருப்பாய் என்று வாழ்த்தினார்.”

கடோத்கஜன் “அ அதன்பின்?” என்றான். “அதன்பின் அவர் மகிழ்ச்சியாக காட்டில் நீண்ட வாலுடன் வாழ்ந்தார்” என்றான் பீமன். “அவர் எ எ எங்கே?” என்றான் கடோத்கஜன். “அவர் தெற்கே காட்டில் இருக்கிறார். எனக்கு அவர்தான் மூத்தவர். உனக்கு பெரியதந்தை” என்றான். கடோத்கஜன் ஐயத்துடன் தலை சரித்து நோக்கி “ப்ப் பெரியதந்தை?” என்றான். “ஆம்” என்றான் பீமன். சிலகணங்கள் அவன் சிந்தித்தபின் மண்டையை கையால் தட்டி “திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர்” என்றான். “நிறுத்து மண்டையா... அதையே சொல்லாதே” என்றான் பீமன்.

“த தந்தையே எனக்கு வால்?” என்று தன் பின்பக்கத்தை தொட்டுக்காட்டி கடோத்கஜன் கேட்டான். அந்த இடத்தை தன் கையால் தட்டி “முளைக்கும்... நீ அரக்கன். நான் மனிதன். உன் பெரிய தந்தை வானரர்... நாமெல்லாம் உறவினர்” என்றான் பீமன். “தந்தையே, நான் அந்த சூரியனை உண்ணலாமா?” என்றான் கடோத்கஜன். “ஆம், போய் தின்றுவிட்டு வா” என்று சொல்லி கடோத்கஜனைத் தூக்கி வானத்தில் வீசினான் பீமன்.

“தந்தையே!” என அலறியபடி அவன் வானில் சுழன்று வளைந்து மரங்களுக்குமேல் இலைத்தழைப்பில் விழுந்து கிளைகளை ஒடித்தபடி கீழே சென்றபோதே பிடித்துக்கொண்டான். அவன் எடையில் வளைந்த கிளையில் இருந்து தாவி இன்னொரு கிளையைப்பிடித்தான். அக்கணமே அவனுக்கு கிளைகளின் நுட்பம் முழுமையாகத் தெரியவந்தது. உரக்க நகைத்தபடி அவன் கிளைகளில் இருந்து கிளைகளுக்குத் தாவினான். சிலமுறை தாவியபோது அவன் விரைவு கூடியது. ஒருகட்டத்தில் அவன் பறவைபோல காற்றில் பறந்து பறந்து அமைந்தான்.

பீமன் எழுந்து நின்று கைவீசி நகைத்தான். இடும்பர்களிலேயே கூட எவரும் அப்படி மரங்கள் மேல் பறப்பதை அவன் கண்டதில்லை. இரு கைகளையும் விரித்து வந்து அவனருகே அமர்ந்த கடோத்கஜன் “த... தந்தையே! நான் ஹனுமான்!” என்றான். “நீ ஹனுமானின் மைந்தன்” என்றான் பீமன். “ஆம்!” என்றபின் கடோத்கஜன் பாய்ந்து சுழன்று காற்றில் ஏறி இலைப்பரப்பின் மேல் நிழல் விழுந்து வளைந்து தொடர பறந்து சென்று கிளைகளுக்குள் மூழ்கி மறைந்து அப்பால் கொப்பளித்து மேலெழுந்தான்.

பகுதி பதின்மூன்று : இனியன் - 4

பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் சற்றுத் தள்ளி பீமன் நடந்தான்.

நெளியும் பச்சைப் புல்வெளியை மேலாடையாகப் போர்த்தி நின்ற மூதாதையரின் குன்றை அணுகியதும் பெண்கள் உரக்க குரவையிட்டனர். ஆண்கள் கழிகளைத் தூக்கி உறுமல் போல ஒலியெழுப்பினர். அதன் உச்சியில் வரிசையாக நின்ற பெருங்கற்களின் பல்வரிசையால் குன்று வானத்தின் மேகக்குவை ஒன்றை மெல்லக் கடித்திருந்தது. அவர்கள் அந்த மேட்டின் புல்லை வகுந்தபடி ஓடி ஏறத்தொடங்கினர். பெருங்கற்களின் அருகே சென்றதும் அதை மூன்றுமுறை சுற்றிவந்து தலைவணங்கி அமர்ந்தனர். முதியபெண்கள் மூச்சிரைக்க இறுதியாக வந்து சேர்ந்ததும் இடும்பர்கள் மட்டும் வட்டமாக சுற்றி அமர்ந்துகொள்ள பீமன் விலகி கைகளை மார்பின் மேல் கட்டியபடி நின்றுகொண்டான்.

குலமூத்தவர்கள் கடோத்கஜனை நடுவே கொண்டுவந்து நிறுத்தினர். மூங்கில்களும் குடுக்கைகளும் ஒலிக்க குரவையொலிகள் முழங்க கடோத்கஜனின் இடையில் இருந்த மான்தோல் ஆடையை கழற்றி வீசினர். அவன் கால்களை விரித்து கரும்பாறையை நாட்டி வைத்ததுபோல அவர்கள் முன் நின்றான். ஐந்து முதியவர்கள் பெருங்கற்களின் அடியில் இருந்து சிவந்த மண்ணை அள்ளி குடுக்கையில் வைத்து நீர்விட்டு சேறாகக் குழைத்து அவன் உடலெங்கும் பூசினர். உதடுகளைக் குவித்து சில ஒலிகளை எழுப்பியபடி நடனம்போல கைகளையும் உடலையும் அசைத்து விரல்களில் சீரான நடன வளைவுகளுடன் அவர்கள் சேற்றைப் பூச கடோத்கஜன் அசையாமல் நின்றான். அலையலையாக விரல்தடம் படிய சேறு அவன் மேல் படர்ந்தது.

முகத்திலும் இமைகளிலும் காதுமடல்களிலும் இடைவெளியின்றி சேறு பூசப்பட்டபோது கடோத்கஜன் ஒரு மண்குன்று போல நின்றான். மண் கண்விழித்து நோக்கி பெரிய பற்களைக்காட்டி புன்னகை செய்தது. அவர்கள் அவனை தங்கள் கழிகளால் மும்முறை தலையில் தட்டி வாழ்த்தினர். கடோத்கஜன் சென்று அந்த பெருங்கற்களைச் சுற்றிவந்து வணங்கினான். மூன்று முதியவர்கள் தேவதாரு மரத்தில் குடைந்து செய்யப்பட்ட பழைமையான மரப்பெட்டியில் இருந்து ஏழு மூங்கில் குவளைகளை எடுத்து பரப்பி வைத்தனர். அவற்றின் அருகே உடம்பெங்கும் சாம்பல் பூசிய குலமூத்த முதியவர் அமர்ந்துகொண்டார். அவருடைய வலது கைக்கு அருகே இன்னொரு அகன்ற மூங்கில்பெட்டி வைக்கப்பட்டது. அதில் ஒரே அளவிலான உருண்ட கூழாங்கற்கள் இருந்தன.

குலமூத்தார் கைகாட்டியதும் அனைவரும் கைகளைத் தூக்கி சேர்ந்தொலி எழுப்பினர். முதியவர் கையை நடனம் போல குழைத்து முதல் கல்லை எடுத்து ஒரு முனகல் ஒலியுடன் குவளையில் போட்டார். கடோத்கஜன் குன்றின் சரிவில் விரைந்தோடி மரக்கிளையை தாவிப்பற்றி மேலேறி இலைத்தழைப்புக்குள் மறைந்தான். பெண்கள் கூச்சலிட்டு சிரிக்க சிறுவர்கள் பின்னால் ஓடி அவன் சென்ற திசையை நோக்கியபடி நின்று குதித்தனர். அவன் சென்ற இடத்தில் காட்டுக்குள் கிளைகளில் ஓர் அசைவு கடந்துசெல்வது தெரிந்தது.

முதியவர் வாயை கூட்டியும் பிரித்தும் சீராக ஒலிகளை எழுப்பியபடி கூழாங்கற்களை எடுத்து குவளைக்குள் போட்டுக்கொண்டிருந்தார். அனைவரும் கடோத்கஜன் ஓடிய திசையையும் கூழாங்கற்கள் போடப்படும் குவளைகளையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் நின்றனர். முதல் குவளை நிறைந்ததும் சிறுவர்கள் கூச்சலிட்டனர். உரக்க ஓர் ஒலி எழுப்பி மெல்ல அதை எடுத்து வைத்துவிட்டு இரண்டாவது குவளையில் கற்களை போடத் தொடங்கினார் முதியவர்.

மெதுவாக பீமனும் அங்கிருந்த உள்ளக் கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டான். பதற்றம் கொண்டு அருகே வந்து நின்று கூழாங்கற்களை பார்த்தான். காலத்தை கண்ணெதிரே தூலமாகப் பார்க்கமுடிந்தது. காலத்தின் அலகுகளான ஒவ்வொரு எண்ணத்தையும் பார்க்கமுடிந்தது. அவ்வெண்ணத்தை நிகழ்த்தும் ஊழை. முதியவர் கற்களை எடுத்துப்போடும் விரைவு கூடிவருவதாகத் தோன்றியது. நிலைகொள்ளாமல் அவன் கடோத்கஜன் சென்ற காட்டை நோக்கினான். பின்னர் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசியபடி அங்கேயே இடம் மாறி நின்றான். பின்னால் ஓடிச்செல்லலாமா என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான்.

மூன்றாவது குவளை பாதி நிறைவதற்குள் காட்டின் புதர்ச்செறிவுக்குள் இருந்து தோளில் ஒரு எருமைக்கன்றுடன் கடோத்கஜன் குதித்து புல்லில் ஏறி ஓடிவந்தான். அவனைக் கண்டதும் கூட்டம் ஆரவாரம் செய்தது. ஆனால் அவன் தோளில் இருந்த கனத்த எருமைக்கன்றைக் கண்டதும் அவர்கள் திகைத்து அமைதியானார்கள். பெண்கள் அச்சத்துடன் வாயில் கைவைக்க கிழவர்கள் கண்களை கைகளால் மறைத்து சற்று குனிந்து உதடுகளை இறுக்கி உற்று நோக்கினர்.

அவர்களின் திகைப்பைக் கண்டதும் கடோத்கஜன் முகத்தில் புன்னகை விரிந்தது. தொலைவிலேயே அவன் வெண்ணிறமான பற்கள் தெரிந்தன. அவர்களைப் பார்க்காமல் விழிகளைத் திருப்பி இயல்பாக நடப்பவன் போல பெரிய கால்களை வீசி தூக்கி வைத்து அணுகினான். அருகே வர வர மிக மெல்ல நடந்து வந்து அந்த எருமைக்குட்டியின் உடலை மூதாதைக்கல் முன் போட்டான். கூழாங்கற்களைப் போட்ட முதியவர் மூங்கில்குவளையை எடுத்துக் கவிழ்த்தபின் மூன்றுமுறை கைகளைத் தட்டி “ஃபட் ஃபட் ஃபட்” என்றார்.

முதலில் ஒரு முதியவள் கைதூக்கி கூவியதும் அங்கிருந்த அனைவரும் இருகைகளையும் தூக்கி உரக்கக் கூவினர். சிறுவர்கள் அவனை நோக்கி கூச்சலிட்டபடி ஓடினர். பெண்கள் பின்னால் சென்று கடோத்கஜனைச் சுற்றி நின்று அவன் மேல் கைகளை வைத்து குரவையிட்டனர். கிழவர்கள் அமர்ந்து அந்தக் கன்றின் உடலை கூர்ந்து நோக்கினர். ஒருவர் அதன் வாய்க்குள் கையை விட்டு நாக்கை இழுத்து நோக்கினார். அது புதியதாக கொல்லப்பட்டதுதானா என உறுதிப்படுத்துகிறார் என்று பீமன் எண்ணினான். இடும்பி வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே சிறு துள்ளலுடன் ஒற்றைச் சொற்களைக் கூவியபடி அதைச் சுற்றிவந்தாள். நினைத்துக்கொண்டு ஓடிவந்து கடோத்கஜனின் தலையில் அடித்தாள்.

பின்னர் துள்ளலுடன் பீமனிடம் ஓடிவந்து “இந்தக்குடியிலேயே மிக விரைவாக வேட்டையாடி வந்தவன் இவன்தான். என் மூத்தவர் கூட மூன்று குவளை நேரம் எடுத்துக்கொண்டார்" என்றாள். அவளுடைய பெரிய கரிய உடல் உவகையின் துள்ளலில் சிறுகுழந்தைபோலத் தெரியும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டு புன்னகைத்தான். இடும்பி ”அதுவும் எருமைக்கன்று! எடைமிக்கது!” என்று கூவினாள். அவன் மறுமொழி பேசுமுன் அவனைக் கட்டிப்பிடித்து அவன் மார்பில் தன் தலையால் மோதியபின் சிரித்தபடியே திரும்பி ஓடி தன் குலத்துப் பெண்களுடன் சேர்ந்துகொண்டாள். அவளால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. அங்குமிங்கும் அலைக்கழிந்தாள். மீண்டும் மைந்தனை நோக்கி வந்தாள். அவன் தலையை தன் தலையால் முட்டி சிரித்தாள்.

குடிமூத்தார் வந்து கடோத்கஜன் தோளைத் தொட்டு அவனை வாழ்த்தினர். அவன் அவர்கள் வயிற்றைத் தொட்டு வணங்கினான். இருவர் அந்த எருமைக்கன்றை தூக்கிக்கொண்டு அருகே இருந்த பாறைக்கூட்டம் நோக்கி சென்றனர். பீமனும் அவர்கள் பின்னால் சென்றான். கடோத்கஜனை அவர்கள் ஒரு பாறைமேல் அமரச்செய்தபின் அவனைச் சூழ்ந்து அமர்ந்து கைகளைத் தட்டிக்கொண்டு பாடத்தொடங்கினர். அவர்கள் பாடுவதை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பீமன் சென்றான். அந்த மொழி புரியவில்லை. அவர்களே பேசிய தொன்மையான மொழியில் அமைந்த பாடலாக இருக்கலாம் என்று தோன்றியது. தொலைவில் நாய்கள் வெறிகொண்டு குரைத்த ஒலி கேட்டது. ஆயினும் அவை குடில்களை ஒட்டிய தங்கள் எல்லைகளை விட்டு வரவில்லை.

எருமையை அவர்கள் திறமையாக தோலுரித்தனர். கொம்பு முளைத்து பின்பக்கமாக வளையத்தொடங்கிய இளவயதுக் கன்று அது. பெரிய வாழையிலைகளை விரித்து அதன் மேல் அதைப் போட்டு நான்கு கால்களின் முதல் மூட்டுகளிலும் கத்தியால் வளையமாக தோலை வெட்டினர். இரு முன்னங்கால்களின் அடிப்பக்கத்திலும் நீள்கோடாக தோலைக் கிழித்து அந்தக்கோட்டை கால்கள் மார்பைச் சந்திக்கும் இடத்தில் இணைத்து அதை நீட்டி வயிறு வழியாகக் கொண்டு சென்று பின்னங்கால்கள் சந்திக்கும் இடத்தில் நிறுத்தி மீண்டும் இரு கிளைகளாகப்பிரித்து இரு பின்னங்கால்களின் மூட்டில் வெட்டப்பட்ட வளையம் வரை கொண்டுசென்றனர்.

தோல்கிழிக்கப்பட்ட கோட்டில் மெல்லிய குருதித் தீற்றல் உருவாகி சிறிய செங்கருநிற முத்துகளாகத் திரண்டு நின்றது. முன்னங்காலிடுக்கில் மார்பின் அடியில் இருந்த கோட்டுச்சந்திப்பில் இருந்து மேலும் ஒரு கோட்டை இழுத்து கீழ்த்தாடை வரை கொண்டுவந்து அதை இரு கோடுகளாகப் பிரித்து கன்னம் வழியாக காதுகளின் அடியில் கொண்டுசென்று மேலேற்றி கொம்புகளுக்குப் பின்னால் மேல் கழுத்தில் இருந்த குழியில் கொண்டு இணைத்தனர். பின்னங்கால்களின் சந்திப்பில் இருந்து ஒருகோட்டை இழுத்து அதை மேலே கொண்டுசென்று வால் முதுகை சந்திக்கும் இடத்தின் மேலாக வளைத்து மறுபக்கம் கொண்டுவந்து மீண்டும் இணைத்தனர்.

அத்தனை துல்லியமாக தோலுரிப்பதை பீமன் பார்த்ததே இல்லை. அவர்களின் கைகளில் ஐயமே இல்லாத நேர்த்தி இருந்தது. நால்வர் நான்கு கால்களிலில் தோலை உடலில் இருந்து பிரித்து உரிக்கத் தொடங்கினர். சிறிய கூர்மையான உலோகத் தகட்டை அந்தக் கோட்டில் குத்தி மெல்லச் செலுத்தி தோலை விரித்து விலக்கி அந்த இடைவெளியில் முனைமழுங்கிய சப்பையான மூங்கில்களைச் செலுத்தி மேலும் மேலும் நெம்பி விரித்து அந்த இடைவெளிகளில் கைகளை நுழைத்து அகற்றி மிக எளிதாக தோலை உரித்தனர். தோல் நன்கு விரிந்ததும் பின்னர் தோலையே பிடித்து இழுத்து விலக்கத் தொடங்கினர். மெல்லிய ஒலியுடன் தோல் பிரிந்து வந்தது.

செந்நிறமான தசைநார்களுடன் வெண்ணிற எலும்பு முடிச்சுகளுடன் நான்கு கால்களும் முழங்காலுக்கு மேல் உரிந்து இளங்குருத்து போல வெளித்தெரிந்தன. கால்களில் இருந்து உரித்துக்கொண்டே சென்று வயிற்றில் விரித்து அப்படியே மடித்து முதுகு வழியாக தோலைக் கழற்றி முழுமையாகவே எடுத்துவிட்டனர். எருமையின் தலை காதுக்கு அப்பால் கொம்புகளுடன் கருமையாக இருந்தது. வாலும் கரிய தோலுடன் அப்படியே இருந்தது. முழங்கால் மூட்டுக்குக் கீழே அதன் நான்கு கால்களும் எஞ்சியிருந்தன. பிற இடங்களில் அது இளஞ்செந்நிறமான தோல் கொண்ட எருமைபோலவே தோன்றியது.

தோலைக் கழற்றி எடுக்கையில் ஒரு இடத்தில்கூட மூட்டுகளிலோ மடிப்புகளிலோ சிக்கிக் கொள்ளவில்லை. உள்ளிருக்கும் தசைப்பரப்பு எங்குமே கிழிந்து குருதி வெளிவரவில்லை. உள்ளே ஓடிய நீலநரம்புகள் தெரிய ஆங்காங்கே வெண்ணிறமான கொழுப்புப் பூச்சுடன் எருமை பாய்ந்து எழுந்துவிடும் என எண்ணச்செய்தபடி கிடந்தது. அதன் பின்தொடை முதுகை சந்திக்கும் இடத்திலும் முன்னங்கால் மார்பை சந்திக்கும் இடத்திலும் உள்ளே எழுந்த உறுதியான எலும்புகள் புடைத்துத் தெரிந்தன.

பீமன் அவர்களுக்கு உதவுவதற்காக கை நீட்ட முதிய இடும்பர் வேண்டாம் என்று கைகாட்டி விலகிச் செல்லும்படி சொன்னார். அவன் நிமிர்ந்து கைகட்டி நின்றுகொண்டான். அவர்கள் அதைச்செய்வது ஒரு மாபெரும் வேள்விக்கான அவிப்பொருளை ஒருக்கும் வைதிகர்களின் முழுமையான அகஒருமையுடனும் கைநேர்த்தியுடனும் ஒருங்கிணைப்புடனும் இருந்தது. ஒருவர் அதன் வயிற்றில் கத்தியை மென்மையாக ஓட்டி தசையைப்பிளந்து சிறிய பேழையொன்றின் மூடிகளைத் திறப்பதுபோல இருபக்கமும் விலக்கினார். உள்ளிருந்து சுளைக்குள் இருந்து விதை வருவது போல எருமையின் இரைப்பையும் ஈரல்தொகையும் மெல்லச்சரிந்து வந்தன. குருதி கலந்த நிணம் பெருகி இலையில் வடிந்தது.

அவர்கள் அந்த இரைப்பைத்தொகையை கருக்குழந்தையை கையிலேந்துவதுபோல எடுத்தனர். தொப்புள்கொடி போல மஞ்சள்நிறமான கொழுப்புருளைகள் பொதிந்த குடல் சுருளவிழ்ந்து நீண்டு வந்தது. அதை ஒருவர் இரைப்பையில் இருந்து வெட்டி தன் முழங்கையில் அழுத்திச் சுருட்டியபடி அதனுள் இருந்த பச்சைநிறமான புல்குழம்பை பிதுக்கி வெளியே கொட்டினார். பீமன் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தான். விரல்நுனிகள் குளிர்ந்து நடுக்கம் எழுந்து தோளிலும் கழுத்திலும் தசைநார்கள் இழுத்துக்கொண்டன. விழக்கூடாது என அவன் எண்ணும் கணத்திலேயே கால்கள் வலுவிழக்க மண்ணில் மல்லாந்து விழுந்தான். வியப்பொலியுடன் அவர்கள் அவனை நோக்கி எழுவதை இறுதியாக உணர்ந்தான்.

மழைச்சாரலில் நனைந்துகொண்டு அஸ்தினபுரியின் தெருவில் நடந்துகொண்டிருந்தான். முகத்தில் நீரைத்தெளித்து குனிந்து நோக்கிய கிழவரை நோக்கியபடி விழித்துக்கொண்டான். எழுந்து அமர்ந்து கையூன்றியபடி எருமையை நோக்கினான். அது உயிருடன் இருப்பது போல அசைந்துகொண்டிருந்தது. குடல்குவையை கையிலிருந்து உருவி தனியாக எடுத்து வைத்தபின் கையை துடைத்துக்கொண்டிருந்தார் முதியவர். வாழைப்பூநிறத்தில் பளிங்குக்கல் போல பளபளப்பாக இருந்த ஈரலையும் இளஞ்செந்நிறத்தில் செம்மண்நீர் சுழிக்கும் ஓடையில் சேர்ந்து நிற்கும் நுரைக்குவை போலிருந்த துணையீரலையும் இன்னொரு கிழவர் கத்தியால் வெட்டி எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். எருமையின் இதயம் பெரிய சிவந்த விழி ஒன்றின் வெண்படலம் போல குருதிக்குழாய் பின்னலுடன் இருந்தது. பீமன் தலைகுனிந்து விழிகளை விலக்கிக் கொண்டான்.

“நான் அப்போதே சொன்னேன், நீ அஞ்சுவாய் என்று” என்று நீர் தெளித்த கிழவர் கண்களைச் சுருக்கி புன்னகைத்தபடி சொன்னார். பீமன் சீற்றத்துடன் ஏறிட்டு “நான் என் கையாலேயே மான்களையும் பன்றிகளையும் கொன்று உண்பவன்” என்றான். “அப்படியென்றால் ஏன் அஞ்சி வீழ்ந்தாய்?” பீமன் கண்களை மூடிக்கொண்டு “தெரியவில்லை” என்றான். அவர் தலையை ஆட்டி சிரித்துக்கொண்டே விலகிச்சென்றார். பீமன் பல்லைக்கடித்தபடி எழுந்து எருமையை நோக்கினான். கிழவர் அதன் விலாவெலும்புக்குள் கையை விட்டு உள்ளே இருந்த இணைப்பை வெட்டி நுரையீரல் அடுக்குகளை மெல்ல உருவி எடுத்தார். அவற்றை இலையில் நிணம் சொட்ட வைத்தார்.

பீமன் பிடிவாதமாக அவற்றை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கிழவர் மார்புக்குவை வழியாகவே கையை விட்டு எருமையின் மூச்சுக்குழலையும் உணவுக்குழலையும் பற்றி வெட்டி இழுத்தார். அவரது விரல்நுனிகள் எருமையின் திறந்த வாய்க்குள் ஒருகணம் தெரிந்து மறைந்தன. பீமனின் உடலில் ஒரு தவிப்பு இருந்தாலும் அவன் பார்வையை விலக்காமல் நிலைக்கச் செய்திருந்தான். அவர் கையை எடுத்தபோது எருமை ஆடியது. அப்போதுதான் தன் நடுக்கம் ஏன் என்று பீமன் உணர்ந்தான். அந்த எருமையின் முகம் விழித்த கண்களுடன் நீண்டு சரிந்து புல்லைத் தொட்டுக்கிடந்த நாக்குடன் தெரிவதுதான். அதன் விழிகளில் அதன் இறுதிக்கணத்தின் எண்ணம் உறைந்து எஞ்சியிருப்பதுபோலிருந்தது.

பெருமூச்சுடன் எழுந்து அவன் எருமையின் அருகே சென்று நின்றான். அவனுக்குப்பின்னால் இடும்பி ஓடிவரும் ஒலி கேட்டது. மூச்சிரைக்க வந்து இடையில் கையை வைத்து அவனருகே நின்று “சிறந்த எருமை... அவன் ஒரே அழுத்தில் அதன் மூச்சை நிறுத்திவிட்டான்” என்றாள். குனிந்து அதன் நாக்கைப் பிடித்து இழுத்து ”புல் இன்னும் மணக்கிறது... தூய எருமை...” என்றாள். பீமன் “ஆம்” என்றான். “சுவையானது” என்றாள் இடும்பி. கிழவர் நிமிர்ந்து நோக்கி “தன் உடல்மேல் கொண்ட நம்பிக்கையால் ஓடாமல் நின்றிருக்கிறது... வலுவான கொம்புகள் கொண்டது. உன் மைந்தன் என்பதனால் அதை வெல்லமுடிந்தது. இல்லையேல் இந்நேரம் அவன் விலாவெலும்புகளை எண்ணிக்கொண்டிருப்போம்” என்றார்.

எருமையை அவர்கள் தூக்கினார்கள். அதன் வால் மயிர்க்கொத்துடன் தொங்கி காற்றிலாடியது. அவர்கள் கொண்டுசென்றபோது குளம்புகளுடன் கால்கள் அசைய அது காற்றில் நடப்பது போலிருந்தது. “சுடப்போகிறார்கள்...” என்றாள் இடும்பி. “நான் எருமையைப்பற்றி அவர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று திரும்பி ஓடினாள். பீமன் திரும்பிப்பார்த்தான். தொலைவில் கடோத்கஜன் பாறைமேல் அசையாமல் அமர்ந்திருந்தான். அந்தத் தொலைவில் அவன் ஒரு மண்சிலை எனத் தோன்றினான். ஏழு வயதான சிறுவன் அக்குலத்திலேயே உயரமானவனாக இருந்தான்.

பீமன் ஒருகணம் நெஞ்சுக்குள் ஓர் அச்சத்தை அடைந்தான். விழிகளை விலக்கிக் கொண்டதும் அந்த அச்சம் ஏன் என்ற எண்ணம் ஏற்பட்டது. அரக்க குலத்தவர் பேருடல் கொண்டவர்கள். ஆனால் கடோத்கஜன் அவர்களுக்கே திகைப்பூட்டுமளவுக்கு மாபெரும் உடல் கொண்டிருந்தான். முழுமையாக வளர்ந்தபின் அவன் திருதராஷ்டிரரையே குனிந்து நோக்குமளவுக்கு பெரியவனாக இருக்கக் கூடும். பீமன் மீண்டும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பை அடைந்தான். திரும்பச் சென்று கடோத்கஜனை போருக்கு அழைக்கவேண்டும் என்று ஓர் எண்ணம் அவன் உள்ளே மின்னிச் சென்றது. மறுகணம் அந்த எண்ணமே அவன் உடலை உலுக்கச் செய்தது. அச்சம் என்பதுதான் மானுடனின் உண்மையான ஒரே உணர்வா என்ன?

எருமையை அவர்கள் கொண்டுசென்று பீடம்போல தெரிந்த ஒரு பாறைமேல் வைத்தனர். அதைச்சுற்றி எருமையின் உடலைத் தீண்டாமல் பாறைப்பலகைகளை அடுக்கி மூடினர். பாறைப்பலகைகளுக்கு வெளியே கனத்த விறகுகளை அடுக்கினர். விறகுகளுக்கு நடுவே மெல்லிய சுள்ளிகள் கொடுக்கப்பட்டன. பெரிய சிதை ஒன்று அமைக்கப்படுவது போலிருந்தது. அல்லது வேள்விக்குரிய எரிகுளம். காய்ந்த புல்லில் நெருப்பிட்டு பற்றவைத்தபோது மெல்ல சுள்ளிகள் எரிந்து நெருப்பு ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எழுந்து செந்தழல்களாகி திரண்டு மேலெழுந்தது. அனல்வெம்மை அருகே நெருங்கவிடாமல் அடித்தது.

கிழவர்கள் விலகி நின்று ஏதோ மந்திரத்தை சொல்லத் தொடங்கினர். அனைவரும் இணைந்து ஒரே குரலில் சீரான தாளத்தில் அதைச் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் நேரத்தை கணிக்கவே அதைச்செய்கிறார்கள் என்று பீமன் எண்ணினான். அதற்கேற்ப ஒரே புள்ளியில் அவர்கள் அனைவரும் அதை நிறுத்திவிட்டு பாய்ந்து சென்று நீண்ட மூங்கில்கழிகளால் விறகுகளை தள்ளிப்பிரித்து தழலை சிறிதாக்கினர். மண்ணை அள்ளி தீக்கதிர்கள் மேல் வீசி அணைத்தனர். தீ அணைந்து கனத்த புகை எழத்தொடங்கியதும் அவர்கள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டனர். ஒருவர் தன் இடையில் இருந்த தோல்கச்சையில் இருந்து தேவதாரு மரத்தின் பிசின் கட்டிகளை எடுத்துக் கொடுக்க வாங்கி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினர். கண்கள் அனலை ஊன்றி நோக்கிக்கொண்டிருந்தன.

ஊன் வெந்த வாசனை நன்றாகவே எழத்தொடங்கியது. அவர்கள் பிசினை உமிழ்ந்துவிட்டு எழுந்து கழிகளால் விறகுகளை உந்தி விலக்கினர். பெண்களை நோக்கி ஒருவர் கைகாட்ட அவர்கள் அனைவரும் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி முழுமையாகவே நெருப்பை அணைத்தனர். ஆனால் பாறைகளில் இருந்து எழுந்த வெம்மை அணுகமுடியாதபடி காற்றில் ஏறி வீசியது. பெண்கள் இடையோடு இடை சேர்த்து கைபின்னி மெல்ல பாடியபடி சுற்றிவந்தனர். காற்று பாறைமேல் வீசி வெம்மையை அள்ளி அவர்கள் மேல் வீசியது. அது சுழன்று வந்தபோது ஊன்நெய் உருகும் வாசனையுடன் வெம்மை காதுகளைத் தொட்டது.

பின்னர் பெண்கள் வாழையிலைகளை மண்ணில் விரிக்க, முதியவர்கள் சுற்றிச்சுற்றிச் சென்று கழிகளால் பாறைப்பலகைகளை தள்ளினார்கள். பாறைகள் கனத்த ஒலியுடன் சரிந்து விழ உள்ளே பொன்னிறத்தில் வெந்த எருமை பாறையில் கொம்புடன் படிந்திருந்தது. மூங்கில்கழிகளில் கனத்த கொடிக்கயிறுகளைக் கட்டி கொக்கிகளாக்கி அதன் கொம்பிலும் கால்களிலும் போட்டு இறுக்கி இருபக்கமும் நின்று இழுத்தனர். எருமை பாறையில் இருந்து கால்கள் மேலிருக்க எழுந்தது. அப்படியே அதை இருபக்கமும் நின்று இழுத்து காற்றில் மிதக்கவைத்து அனல்பாறைகளை விட்டு வெளியே கொண்டுவந்தபோது பெண்கள் குரவையிட்டனர்.

எருமையை வாழையிலைமேல் வைத்தனர். அதன் உடலில் இருந்து ஆவி எழுந்தது. உருகிய கொழுப்பு வடிந்து வாழையிலையில் வழிந்தது. அதன் வாலில் கொடியாலான வடத்தைக் கட்டி சுழற்றி உள்ளே கொண்டு சென்று எலும்பில் கட்டினர். அதன் கால்களில் குளம்புகள் உருகி வடிவிழந்து சுருண்டிருந்தன. கொம்புகளும் உருகி வளைந்து குழைந்தன. அதன் கால்களை இரண்டிரண்டாக சேர்த்துக் கட்டி அதன் நடுவே மூங்கிலை நுழைத்து இருவர் தூக்கிக்கொண்டனர். அவர்கள் எருமையுடன் முன்னால் செல்ல குழந்தைகள் கூச்சலிட்டபடி பின்னால் சென்றன. பெண்கள் கைகளைக் கொட்டி பாடியபடி தொடர்ந்தனர்.

பெருங்கற்களுக்கு முன்னால் மூன்று மூங்கில்கழிகள் சேர்த்து முனை கட்டப்பட்டு நின்றன. அவற்றின் நடுவே எருமை தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டது. கடோத்கஜன் எழுந்து எருமை அருகே நின்றான். பெண்கள் குடில்களில் இருந்து பெரிய கொடிக்கூடைகளில் காய்களையும் கனிகளையும் கிழங்குகளையும் மலைத்தேனடைகளையும் கொண்டுவந்து வைத்தனர். ஆண்கள் குடிலுக்கு அருகே காட்டில் புதைக்கப்பட்டிருந்த பெரிய மண்கலங்களை தூக்கிக் கொண்டுவந்தனர். வடிவம் திரளாமல் செய்யப்பட்டிருந்த கனத்த மண்கலங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த கிழங்குகளும் பழங்களும் புளித்து நுரைத்து வாசமெழுப்பின. குடிசைக்கு அருகே நாய்கள் கிளர்ச்சியடைந்து குரைத்துக்கொண்டே இருக்கும் ஒலி கேட்டது.

தேனடைகளை எடுத்து தொங்கும் எருமையின் மேல் பிழிந்தனர். தேன் வெம்மையான ஊன்மீது விழுந்து உருகி வழிந்து வற்றி மறைந்தது. தேனடைகள் மிகப்பெரிதாக இருந்தன. எருமையின் உடலின் ஊன்குகைக்குள் அவற்றைப் பிழிந்து விட்டுக்கொண்டே இருந்தனர். ஊனில் தேனூறி நிறைந்து கீழே சொட்டத் தொடங்கியதும் நிறுத்திக்கொண்டனர். கிழங்குகளையும் காய்களையும் பச்சையாகவே பரப்பி வைத்தனர். மதுக்கலங்களை அவர்கள் களிமண்ணால் மூடியிருந்தனர். அவற்றிலிருந்த சிறிய துளைவழியாக நுரையும் ஆவியும் கொப்பளித்துத் தெறித்தபோது கலங்கள் மூச்சுவிடுவதுபோலத் தோன்றியது. கலங்களின் களிமண் மூடிகளை உடைத்துத் திறந்தபோது எழுந்த கடும் துவர்ப்பு வாசனையில் பீமன் உடல் உலுக்கிக் கொண்டது.

ஒரு கிழவர் நாய்களுக்கு உணவளிக்கும்படி ஆணையிட்டார். நாலைந்துபேர் ஓடிச்சென்று குடலையும் இரைப்பையையும் பிற உறுப்புகளையும் சிறிய துண்டுகளாக வெட்டி மூங்கில் கூடைகளில் எடுத்துக்கொண்டு சென்றனர். நாய்கள் உணவு வரக்கண்டதும் துள்ளிக் குரைத்தன. ஊளையிட்டு சுழன்றோடின. உணவை அவை உண்ணும் ஒலியை கேட்கமுடிந்தது. ஒன்றுடன் ஒன்று உறுமியபடியும் குரைத்துக் கடிக்கச் சென்றபடியும் அவை உண்டன. அவர்கள் திரும்பி வந்ததும் மூத்த இடும்பர் படையல் செய்யலாம் என கை காட்டினார்.

உணவை கற்களுக்குப் படைத்தபின் அவர்கள் எழுந்து நின்று கைகளை விரித்து ஒரே குரலில் ஒலியெழுப்பி உடலை வலப்பக்கமும் இடப்பக்கமும் அசைத்து மெல்ல ஆடி மூதாதையரை வணங்கினர். குனிந்து நிலத்தைத் தொட்டு நெஞ்சில் வைத்துக்கொண்டனர். முதியவர் இருவர் கடோத்கஜனிடம் உணவை குடிகளுக்கு அளிக்கும்படி சொன்னார்கள். மண்பூசப்பட்ட வெற்றுடலுடன் கடோத்கஜன் எழுந்து பெரிய பற்கள் ஒளிர சிரித்தபடி சென்று மூங்கில்குவளையில் அந்த கரிய நிறமான மதுவை ஊற்றினான். அதன் நுரையை ஊதி விலக்கிவிட்டு வந்து எருமையின் தொடைச்சதையை வெறும் கையால் பிய்த்து எடுத்தான்.

ஊனும் மதுவுமாக அவன் விலகி நின்ற பீமனை அணுகி “தந்தையே, தங்களுக்கு” என்றான். பீமன் திடுக்கிட்டு குலமூத்தாரை நோக்கினான். கண்கள் சுருங்க அவர்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தனர். “அவர்களுக்குக் கொடு!” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்” என்றான் கடோத்கஜன். பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள் நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன். அவனை எவரும் மறுக்க முடியாது" என்றாள். பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரிய விழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான். அவன் அகம் பொங்கி கண்களில் நீர் பரவியது. கைநீட்டி அவற்றை வாங்கிக்கொண்டான். “உண்ணுங்கள் தந்தையே!” என்றான் கடோத்கஜன். பீமன் அந்த இறைச்சியை கடித்தான். ஆனால் விழுங்கமுடியாதபடி தொண்டை அடைத்திருந்தது. சிலமுறை மென்றபின் மதுவைக்குடித்து அதை உள்ளே இறக்கினான்.

பகுதி பதிமூன்று : இனியன் - 5

பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன.

முகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி படுத்தான். அவனுக்குக் கீழே அந்த மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. அவன் உள்ளத்தின் சொற்களாகவே அவை ஒலித்தன. அங்கு வந்து படுத்த சற்று நேரத்திலேயே மதுவின் மயக்கத்தில் அவன் துயின்றுவிட்டான். கங்கைப்படகு ஒன்றில் அவனை பாயாக கட்டியிருப்பதுபோன்ற கனவு வந்தது. அவன் காற்றில் உப்பி அதிர்ந்துகொண்டே இருந்தான். அவனைக் கட்டிய கொடிமரத்தில் இருந்தும் கயிறுகளில் இருந்தும் விடுபடுவதற்காக மூச்சை இழுத்து முழுத்தசைகளையும் இறுக்கி முயன்றான். அவனுக்குக் கீழே கங்கை நுரைத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் விழித்துக்கொண்டு எழுந்து சாய்ந்து படுத்தபடி முகில்களை நோக்கினான். பெரிய மலைபோன்ற முகிலுக்குப்பின்னால் சூரியன் இருந்தது. அதன் கதிர்கள் முகிலின் விளிம்புகளில் தோன்றி விரிந்து நிற்க அது ஒளிவிடும் வலையில் நின்றிருக்கும் சிலந்தி போலிருந்தது. அவன் புன்னகை செய்தான். தருமன் ஆயிரம் கரங்கள் விரித்த தெய்வம் போல என்று சொல்லியிருக்கக் கூடும். முகில்களின் இடைவெளி உருவாக்கிய ஒளித்தூண்களால் காட்டின் மேல் வானை கூரையாக அமைத்திருப்பதாக அவன் எண்ணிக்கொண்டான். மீண்டும் புன்னகை செய்துகொண்டான். ஒன்றுமே செய்யாமலிருக்கவேண்டும். உலகிலிருந்து எவ்வகையிலோ அயலாகிவிட்டிருக்கவேண்டும். இத்தகைய கவித்துவக் கற்பனைகள் உள்ளத்தில் எழுந்துகொண்டே இருக்கும்போலும்.

அவன் மூதாதைக்கற்களின் முற்றத்தை விட்டு கிளம்பும்போது இடும்பர்கள் அனைவருமே கள்மயக்கில் நிலையழிந்துவிட்டிருந்தனர். குழந்தைகள் வானிலிருந்து வீசப்பட்டவை போல புல்வெளியில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பெண்கள் சிலர் படுத்துக்கிடந்தபடியே கைநீட்டி குழறிப்பேசியும் சிரித்தும் புலம்பியும் புரண்டனர். புல்வெளியின் கீழ்ச்சரிவில் சில ஆண்கள் கூடி நின்று உரக்க கைநீட்டிப் பேசி பூசலிட்டனர். மரத்தடியில் தனியாக அமர்ந்து மேலும் குடித்துக்கொண்டிருந்தனர் சிலர். முதியவர்கள் தேவதாருப்பிசினை மென்றபடி புல்லில் அமர்ந்திருந்தனர். அவர்கள் விழிகள் வெறிமயக்கில் பாதி சரிந்திருந்தன. தலை அவ்வப்போது ஆடி விழுந்தது.

உருகிய கொம்புகளும் குளம்புகளுமாக தசை ஒட்டிய எலும்புக்கூடாக குட்டி எருமை தொங்கிக்கிடந்தது. மேலும் ஒரு முழு எருமையைச் சுட்டு அப்பால் தொங்கவிட்டிருந்தனர். அதன் விலாப்பகுதியில் தசை மிச்சமிருந்தது. அவற்றில் காகங்கள் அமர்ந்து பூசலிட்டு கூவியும் சிறகடித்து எழுந்தமர்ந்தும் ஊனைக் கொத்திக்கிழித்து உண்டன. வாயில் அள்ளியபடி பறந்து அப்பால் நின்ற மரங்களுக்குச் சென்றன. கடோத்கஜன் கைகால்களை விரித்து வெற்றுடலுடன் துயில்வதை பீமன் கண்டான். அப்பால் பெண்கள் நடுவே இடும்பி கிடந்தாள். அவன் மெல்ல எழுந்து நடந்து விலகியபோது கிழவர்களில் இருவர் திரும்பி நோக்கியபின் தலைஆட இமைசரிந்தனர்.

காட்டில் நடக்கும்போது பீமன் தனிமையை உணர்ந்தான். மீண்டும் சாலிஹோத்ரரின் தவச்சாலைக்கு செல்லத் தோன்றவில்லை. அங்கே அப்போது மாலைவேளைக்கான வேள்விக்கு ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருக்கும். தருமன் முழு ஈடுபாட்டுடன் அதில் மூழ்கியிருப்பான். நகுலனும் சகதேவனும் அவனுக்கு உதவுவார்கள். அர்ஜுனன் பின்பக்கம் புல்வெளியில் அம்புப்பயிற்சி செய்யலாம். அல்லது காட்டின் விளிம்பில் அமர்ந்து பறவைகளை நோக்கிக்கொண்டிருக்கலாம். குந்தி தன் குடிலில் அன்றைய பணிகளை முடித்துவிட்டு நீரோடையில் குளித்து ஆடை மாற்றிக்கொண்டு வேள்விக்காக சாலிஹோத்ரரின் பெருங்குடிலுக்கு வந்திருப்பாள்.

வாழ்க்கை ஒரு தாளத்தை அடைந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் பிறிதைப்போலவே விடிந்தன. நிகழ்வுகளின்றி முடிந்தன. தருமன் சாலிஹோத்ர குருகுலத்தில் வைசேஷிக மெய்யியலையும் நியாயநூலையும் கற்றுத்தேர்ந்தான். சாலிஹோத்ர நீதிநூல் பன்னிரண்டாயிரம் சூத்திரங்கள் கொண்டது. அவற்றை முழுமையாக மனப்பாடம் செய்து அவற்றுக்கான ஆறுவகை உரைகளையும் கற்றான்.

அர்ஜுனனுக்கு சாலிஹோத்ரர் அவர்களின் தேகமுத்ராதரங்கிணி நூலைக் கற்பித்தார். ஒருவரின் எண்ணங்கள் இயல்பாக உடலில் எப்படி வெளிப்படும் என்ற கலையை சாலிஹோத்ர மரபு ஆயிரமாண்டுகளாக பயின்று தேர்ந்திருந்தது. தொலைவில் நிற்கும் ஒரு அயலவர் அல்லது விலங்கு அடுத்த கணம் என்னசெய்யக்கூடும் என்பதை அவரது உடலின் தசைகளிலும், விழிகளிலும் நிகழும் மெல்லிய மாற்றம் மூலமே உய்த்தறிய அர்ஜுனன் பயின்றான். எதிரே வரும் நாய் திரும்பிப்பாயும் இடத்தில் அது சென்றுசேரும்போது அவனுடைய வில்லில் இருந்து கிளம்பிய களிமண்ணுருண்டையும் சென்று சேர்ந்தது.

”மூத்தவரே, இவர்களின் உடல்வெளிப்பாட்டுக் கலையின் உள்ளடக்கம் ஒன்றே. உடலசைவுகளை நம் சித்தத்தால் அறிந்துகொள்ளக் கூடாது. நம் சித்தத்தின் அச்சம், விருப்பம், ஐயம் ஆகியவற்றை நாம் அந்த அசைவுகள் மேல் ஏற்றி புரிந்துகொள்வோம். பிற உடலின் அசைவுகளை நம் அகம் காண்கையில் முற்றிலும் சித்தத்தை அகற்றுவதையே இந்நூல் கற்பிக்கிறது. சித்தமில்லா நிலையில் நாம் அவர்களின் உடலை உள்ளமெனவே அறிகிறோம். மானுட உடலை மானுட உடல் அறியமுடியும். ஏனென்றால் மண்ணிலுள்ள மானுட உடல்களெல்லாம் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்பிண்டமாகவே இங்கே இயங்குகின்றன என்று தேகமுத்ராதரங்கிணியில் ஒரு பாடல் சொல்கிறது” என்றான்.

பீமன் புன்னகைத்து “அதைத்தான் விலங்குகள் செய்கின்றன. விலங்காக ஆவதற்கும் மனிதர்களுக்கு நூல்கள் தேவையாகின்றன” என்றான். அர்ஜுனன் நகைத்து “ஆம், விலங்குகளை விலங்குகளாக வாழச்செய்யும் நூல்களையும் நாம் எழுதத்தான்போகிறோம்” என்றான். தருமன் “பார்த்தா, நீ அவனிடம் ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்? அவன் மெல்லமெல்ல விலங்காகவே ஆகிவிட்டான். எந்த நூலும் அவனை மீண்டும் மானுடனாக ஆக்கமுடியாது” என்றான்.

குந்தி சாலிஹோத்ரரின் மாணவர்கள் சிலரை தன் பணியாட்களாக அமைத்துக்கொண்டாள். அவர்கள் கங்கையைக் கடந்து சென்று வெவ்வேறு நகரங்களின் செய்திகளை கொண்டுவந்தார்கள். அவள் சலிக்காமல் ஓலைகளை அனுப்பிக்கொண்டே இருந்தாள். எவற்றுக்கும் அவள் விரும்பிய பயன் நிகழவில்லை. ”நாம் எவரிடமும் முறையாக பெண்கேட்க முடியாது. எவரேனும் சுயம்வரம் அமைத்து அரசர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே நாம் செல்லமுடியும்” என்று குந்தி சொன்னாள். “பாரதம் முழுக்க எங்கு சுயம்வரம் நிகழ்ந்தாலும் அதை எனக்கு அறிவிப்பதற்கான செய்தியமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.”

“நாம் இப்போது செய்யவேண்டியது மகத மன்னன் ஜராசந்தனின் மகளை மணந்து அஸ்தினபுரியின் மீது படைகொண்டு செல்வதுதான்” என்றான் பீமன். “விளையாட்டுப்பேச்சு வேண்டாம். நாம் காத்திருக்கிறோம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள் குந்தி. “அன்னையே, இது நீண்டநாள் காத்திருப்பு. மூத்தவருக்கு இப்போது முப்பத்தைந்து வயதாகிறது. முறைப்படி மணம் நிகழ்ந்திருந்தால் அவரது மைந்தனுக்கு நாம் இளவரசுப்பட்டம் சூட்டியிருப்போம்” என்றான் அர்ஜுனன்.

“ஆம். ஆனால் அதற்காக ஷத்ரியர்கள் அல்லாதவர்களிடம் நாம் மணவுறவு கொள்ளமுடியாது. முதல் இளவரசனுக்கு அவ்வாறு நிகழ்ந்தால் பிறருக்கும் அதுவே நிகழும். நமக்குத் தேவை ஷத்ரிய அரசன் ஒருவனின் பட்டத்தரசிக்குப் பிறந்த மகள்...” என்றாள் குந்தி. தருமன் திரும்பி பீமனை நோக்கி புன்னகைசெய்தபின் ஏட்டுச்சுவடிகளைக் கட்டி எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அர்ஜுனன் ”முடிசூட முடியாததனால் அங்கே துரியோதனனுக்கும் மணம் நிகழவில்லை” என்றான்.

குந்தி “பார்த்தா, பாரதவர்ஷம் முழுக்க அரசர்கள் மிகப் பிந்தித்தான் மணம்புரிந்துகொள்கிறார்கள்” என்றாள். பீமன் சிரித்துக்கொண்டே “அது நல்லது. முதுமைவரை அரசனாக இருக்கலாம். இல்லையேல் பட்டத்து இளவரசன் தந்தையின் இறப்புக்கு நாள் எண்ணத் தொடங்கிவிடுவான்” என்றான். குந்தி நகைத்து “ஆம், அதுவும் ஒரு காரணம்தான்” என்றாள்.

மரக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டதும் கீழிருந்து ஒரு குரங்கு மேலே வந்து எதிரே அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்?” என்றது. “வானைப் பார்ப்பதற்காக” என்றான் பீமன். அது வானை நோக்கியபின் “வெயிலில் வானை பார்க்கமுடியாதே?” என்றது. ”குரங்குகள் நிலவைத்தானே பார்க்கவேண்டும்?” பீமன் “ஆம், ஆகவேதான் துயிலப்போகிறேன்” என்றான். குரங்கு தலையை கையால் இருமுறை தட்டியபின் வாயை நீட்டி மூக்கைச் சுளித்துவிட்டு தாவி இறங்கிச்சென்றது.

பீமன் எழுந்து கீழிறங்கப்போனபோது அப்பால் இலைத்தழைப்புக்கு மேல் கடோத்கஜன் மேலெழுந்து வந்து “தந்தையே” என்று கைநீட்டினான். பீமன் அவனை நோக்கி கையசைத்ததும் அவன் கிளைப்பரப்பின் மேல் தாவித்தாவி வந்து அருகணைந்து “தாங்கள் அகன்றதை நான் காணவில்லை. தாங்கள் இல்லை என்றதும் இங்கிருப்பீர்கள் என்று உணர்ந்தேன்” என்றான். பெரிய கரிய கைகளை விரித்து “எங்கள் உணவை தாங்கள் விரும்பவில்லையா? சொல்லியிருந்தால் வேறு உணவுக்கு ஒருங்குசெய்திருப்பேனே?” என்று கேட்டான்.

பீமன் “சுவையான ஊன்” என்றான். ”நான் நன்கு உண்டேன் மைந்தா. நீ அதை கண்டிருக்கமாட்டாய்” என்றான். கடோத்கஜன் அருகே அமர்ந்து கொண்டு “தாங்கள் அகச்சோர்வடைவதைக் கண்டேன். அது ஏன் என்றும் புரிந்துகொண்டேன்” என்றான். பீமன் “அகச்சோர்வா?” என்றான். “ஆம், அப்பாலிருந்து என்னை நோக்கினீர்கள். ஒருகணம் தங்கள் உடல் என்னை நோக்கித் திரும்பியது. என்னைத் தாக்க வரப்போகிறீர்கள் என எண்ணினேன். திரும்பிச் சென்றுவிட்டீர்கள். அதன் பின் நான் சிந்தித்தேன். உங்கள் உணர்வை அறிந்தேன்.”

பீமன் “நீ வீண் கற்பனை செய்கிறாய்” என்றான். ஆனால் அவன் முகம் சிவந்து உடல் அதிரத்தொடங்கியது. “தந்தையே, நீங்கள் என் உடலைக் கண்டு உள்ளூர அஞ்சினீர்கள். நான் உங்கள் குலத்து மானுடரைவிட இருமடங்கு பெரியவனாவேன் என்று உங்கள் உடன்பிறந்தாரை காண்கையில் உணர்கிறேன். எங்கள் மொழியில் சொற்கள் குறைவு என்பதனால் நாங்கள் எதையும் மறைக்கமுடியாது. ஆகவே அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் எங்களால் முடியும்...” என்றான்.

பீமன் உடல் தளர்ந்து பெருமூச்சுடன் “ஆம் மைந்தா. உன்னை நான் அஞ்சினேன். இளமையிலேயே உன்னிடம் போரிட்டால் மட்டுமே என்னால் உன்னை வெல்லமுடியும் என ஒரு கணம் எண்ணினேன். அந்த எண்ணம் என்னுள் எழுந்தமைக்காக என்னை வெறுத்தேன். அதுவே என் உளச்சோர்வு” என்றான். ”உன் குலத்தின் உள்ளத்தூய்மை கொண்டவன் அல்ல நான். நீ என்னை வெறுக்க நேர்ந்தால் கூட அது உகந்ததே. நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.”

குரல் தழைய இருகைகளையும் கூட்டி தலைகுனிந்து அமர்ந்து பீமன் சொன்னான் “என்னைவிட வலிமைகொண்டவன் ஒருவன் இவ்வுலகில் உள்ளான் என்ற எண்ணத்தை என் அகத்தால் தாளமுடியவில்லை. அது உண்மை. அதன்மேல் எத்தனை சொற்களைக் கொட்டினாலும் அதுவே உண்மை.” கடோத்கஜன் பெரிய விழிகளை விரித்து அவனை நோக்கி அமர்ந்திருந்தான். “மைந்தா, நான் விட்ட மூச்சுக்காற்றிலேயே அச்சமும் ஐயமும் வெறுப்பும் கலந்திருந்தது... அத்துடன் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமுடியாத நிகழ்வொன்றை அடைந்தேன். என் அகத்தில் அழியாத நச்சுச்சுனை ஒன்று அமைந்தது.”

பீமன் சொல்லி முடிப்பது வரை கடோத்கஜன் அசைவற்ற விழிகளுடன் கேட்டிருந்தான். அரக்கர்கள் கேட்கும்போது முழுமையாகவே உள்ளத்தைக் குவிப்பவர்கள் என்றும் ஒரு சொல்லையும் அவர்கள் தவறவிடுவதில்லை என்றும் பீமன் அறிந்திருந்தான். ”அன்று நான் இறந்திருக்கலாமென இன்று எண்ணுகிறேன் மைந்தா. என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் இந்த நஞ்சை இங்கே உங்களுடன் வாழும்போதுகூட என்னால் அகற்றமுடியவில்லை என்றால் நான் உயிர்வாழ்வதில் என்ன பொருள்?” என்றான். ”இப்போது அறிகிறேன். இதிலிருந்து எனக்கு மீட்பே இல்லை.”

கடோத்கஜன் “தந்தையே, நீங்கள் மீண்டுவந்ததுமே அந்த உடன்பிறந்தாரை கொன்றிருக்கவேண்டும்” என்றான். “கொன்றிருந்தால் விடுதலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் இருப்பதுதான் உங்களை கசப்படையச் செய்கிறது.” பீமன் அவனை நோக்கி சிலகணங்கள் சித்தம் ஓடாமல் வெறுமே விழித்தபின் “மூர்க்கமான தர்க்கம். ஆனால் இதுவே உண்மை” என்றான்.

“நீங்கள் அவர்களை கொல்வீர்கள். அதுவரை இந்தக் கசப்பு இருக்கும்...” என்றான் கடோத்கஜன். “நாங்கள் ஏன் தோற்றவர்களை உடனே கொன்றுவிடுகிறோம் என்பதற்கு எங்கள் குலமூதாதை இந்தக் காரணத்தையே சொன்னார். தோற்கடித்தவர்களை கொல். கொல்லப்பட்ட விலங்கை உண். இல்லையேல் அது உனக்குள் நஞ்சாக ஆகிவிடும் என்றார்.” பீமன் புன்னகைத்து “இங்கே எல்லாம் எத்தனை எளிமையாக உள்ளன” என்றான்.

“நான் என்ன சொல்லவேண்டும் தந்தையே?” என்றான் கடோத்கஜன். “நான் என் மூதாதையரின் பெயரால் உறுதியளிக்கிறேன். எந்நிலையிலும் உங்களுக்கோ உங்கள் குலத்திற்கோ எதிராக நானோ என் குலமோ எழாது. எங்களை உங்கள் குலம் வேருடன் அழிக்க முயன்றாலும் கூட, பெரும் அவமதிப்பை அளித்தாலும்கூட இதுவே எங்கள் நிலை. என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் உரியது.”  பீமன் அவன் கைகளைப் பிடித்து “வேண்டாம் மைந்தா. இதை உன்னை சொல்லவைத்தேன் என்ற இழிவுணர்ச்சியை என்னால் கடக்கமுடியாது” என்றான்.

அதைச் சொல்லும்போதே அவன் கண்கள் நிறைய தொண்டை அடைத்தது. ”இழிமகனாக உன் முன் நிற்கிறேன். ஆம், உன்னிடம் முழுமையாகவே தோற்றுவிட்டேன்” என்றான். உள்ளத்தின் எழுச்சிக்குரிய சொற்களை அவனால் அடையமுடியவில்லை. “நீயன்றி எவரும் என் அகமறிந்ததில்லை. என் அகத்தின் கீழ்மையைக்கூட நீ அறிந்துவிட்டாய் என்பதில் எனக்கு நிறைவுதான்...” கணத்தில் பொங்கி எழுந்த அக எழுச்சியால் அவன் மைந்தனை அள்ளி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான். “நீ பெரியவன்... நான் கண்ட எந்த மாமுனிவரை விடவும் அகம்நிறைந்தவன். உன்னை மைந்தனாகப் பெற்றேன் என்பதனால் மட்டுமே என் வாழ்வுக்கு பொருள் வந்தது” என்றான்.

கடோத்கஜனின் பெரியதோள்களை பீமன் தன் கைகளால் சுற்றிக்கொண்டான். பெரிய தலையை தன் தோளுடன் சேர்த்தான். “இப்போது நீ மிகப்பெரியவனாக இருப்பது என் அகத்தை நிறையச் செய்கிறது. மானுட அகத்தின் விந்தைகளை தெய்வங்களாலேயே அறியமுடியாது” என்றான். முகத்தை அவன் காதுகளில் சேர்த்து “மைந்தா, நான் தெய்வங்களை வணங்குவதில்லை. இச்சொற்களை நான் வேறெங்கும் சொல்லமுடியாது. உன் தந்தையை எப்போதும் மன்னித்துக்கொண்டிரு” என்றான்.

அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதை கடோத்கஜன் அறிந்திருந்தான். பறவைகள் சில இலைகளுக்குள் இருந்து சிறகடித்து எழுந்த ஒலியில் பீமன் கலைந்தான். மலர்ந்த முகத்துடன் பெருமூச்சு விட்டான். விழிநிறைந்து தேங்கிய நீரை இமைகளை அடித்து உலரச்செய்தான். மீண்டும் பெருமூச்சு விட்டு “மூடனைப்போல் பேசுகிறேனா?” என்றான். கடோத்கஜன் புன்னகைசெய்தான். “மூடா, நீ இவ்வினாவுக்கு இல்லை என்று சொல்லவேண்டும்” என்று சொல்லி சிரித்தபடி அவனை அறைந்தான் பீமன். கடோத்கஜன் நகைத்தபடி கிளையில் இருந்து மல்லாந்து விழுந்து இன்னொரு கிளையைப்பற்றி எழுந்து மேலே வந்து இரு கைகளையும் விரித்து உரக்கக் கூவினான்.

கீழே இடும்பியின் குரல் கேட்டது. “உன் அன்னையா?” என்றான் பீமன். ”ஆம், அவர்கள் என்னுடன் வந்தார்கள். நான் தங்களுடன் தனியாகப் பேசியதனால் அவர்கள் கீழேயே காத்து நின்றிருக்கிறார்கள்” என்றான் கடோத்கஜன். பீமன் குரல் கொடுத்ததும் இடும்பி மேலே வந்தாள். கடோத்கஜன் அவளை அணுகி பிடித்து கீழே தள்ள அவள் இலைகளுக்குள் விழுந்து அப்பால் மேலெழுந்து வந்தாள். அவன் மீண்டும் அவளைப் பிடித்து தள்ளச்சென்றான். பீமன் அவர்களுக்குப்பின்னால் சென்று அவனை பிடித்துக்கொண்டான். இருவரும் கட்டிப்பிடித்தபடி கிளைகளை ஒடித்து கீழே சென்று ஒரு மூங்கில் கழையை பிடித்துக்கொண்டனர்.

உரக்கநகைத்தபடி இடும்பி அவர்களை அணுகி “அவனை விடாதீர்கள்... பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூவினாள். அதற்குள் பீமனை உதறி மரக்கிளை ஒன்றைப் பற்றி வளைத்து தன்னை தொடுத்துக்கொண்டு கடோத்கஜன் மேலே சென்றான். இடும்பி பீமனை அணுகி “உங்கள் கைகளில் என்ன ஆற்றலே இல்லையா?” என்று அவன் முதுகில் அடித்தாள். அவன் அவளை வளைத்துப்பிடித்து “என் ஆற்றல் உன்னிடம் மட்டும்தான்” என்றான். அவள் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு மேலே சென்றாள். அவன் தொடர்ந்தபடி “நீ முடிந்தால் அவனை பிடித்துப்பார். அவன் அரக்கர்களிலேயே பெரியவன்” என்றான். இடும்பி திரும்பி நகைத்து “ஆம், அவனைப்பார்த்தால் எனக்கே அச்சமாக இருக்கிறது” என்றாள்.

பீமன் முகம் மாறி “இத்தனை நேரம் தந்தையிடம் பேசுவதுபோல அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். “பிறவியிலேயே அனைத்தையும் அறிந்த முதிர்வுடன் இருக்கிறான். எங்கள் குலத்திற்கே உள்ள சிறுமைகள் இல்லை. உன் மைந்தன் நீலவானம் போன்ற அகம் கொண்டவன்...” இடும்பி “சிறுமைகள் என்ற சொல்லை நீங்கள் சொல்லாத நாளே இல்லை. அது என்ன?” என்றாள். “சிறுமைகள் வழியாகவே அதை புரிந்துகொள்ளவும் முடியும்” என்றான் பீமன்.

மேலிருந்து கடோத்கஜன் அவர்களை அழைத்து கூவிச்சிரித்தான். “முதிராச் சிறுவனாகவும் இருக்கிறான்” என்றபின் பீமன் மேலே எழுந்து அவனைப்பிடிக்கச் சென்றான். கடோத்கஜன் அவன் அணுகிவரும் வரை காத்திருந்துவிட்டு சிரித்துக்கொண்டே எழுந்து மறைந்தான். “அவனை வளைத்துக்கொண்டு வாருங்கள். நான் மறுபக்கம் வழியாக வருகிறேன்” என்றாள் இடும்பி. “ஏன் அவனைப் பிடிக்க வேண்டும்?” என்றான் பீமன். “என் மைந்தன் இறுதிவரை எவராலும் பிடிக்கப்பட மாட்டான்.”

“நாணமில்லையா இப்படிச் சொல்ல? ஆண்மகன் எங்கும் தோற்கலாகாது” என்றாள் இடும்பி கண்களில் சிரிப்புடன். “இவனிடம் தோற்பதனால்தான் நான் நிறைவடைகிறேன். என் இறுதிக்கணத்தில் இவன் பெயர் சொல்லித்தான் விழிமூடுவேன். இவன் நினைவுடன்தான் விண்ணகம் செல்வேன்” என்றான் பீமன். இடும்பி அருகே எழுந்து வந்து அவனை அணைத்து கனிந்த விழிகளுடன் “என்ன பேச்சு இது?” என்றாள். அவளுடைய பெரிய முலைகள் அவன் உடலில் பதிந்தன. “உன் முலைகளைப்போல என்னை ஆறுதல்படுத்துபவை இல்லை என நினைத்திருந்தேன். அவன் விழிகள் இவற்றைவிட அமுது ஊறிப்பெருகுபவை” என்றான் பீமன். நகைத்தபடி அவனை தள்ளிவிட்டாள்.

பக்கத்து மரத்தில் இருந்து வந்த கடோத்கஜன் அவர்கள் நடுவே கையை விட்டு விலக்கி தலையை நுழைத்து நின்றுகொண்டான். அவர்கள் அளவுக்கே அவனும் எடையும் இருந்தான். “நானில்லாமல் நீங்கள் சேர்ந்து நிற்கக் கூடாது. கீழே யானைகளெல்லாம் அப்படித்தானே செல்கின்றன?” என்றான். “அது குட்டியானை. நீ என்னைவிடப்பெரியவன்” என்றாள் இடும்பி. “நான் ஏன் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் அன்னையே?” என்று கடோத்கஜன் சிந்தனையுடன் கேட்டான். “ஆலமரம் ஏன் பிற மரங்களைவிடப் பெரிதாக இருக்கிறது?” என்றாள் இடும்பி. பீமன் வெடித்துச் சிரித்தான்.

கடோத்கஜன் “சிரிக்காதீர்கள்... இத்தனை பெரிதாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சிறுவர்கள் எவரும் என்னுடன் விளையாட வருவதில்லை” என்றான். இடும்பி ”பெரியவர்களுடன் விளையாடு. இல்லையேல் யானைகளுடன் விளையாடு” என்றாள். பீமன் திரும்பி கடோத்கஜனைப் பிடித்து மரத்துடன் சேர்த்து அழுத்தி “இதோ உன்னைப் பிடித்துவிட்டேன்” என்றான். “இல்லை, நானே வந்தேன். நானேதான் வந்தேன்” என்றான் கடோத்கஜன். “உன்னைப் பிடிக்கத்தான் அப்படி சேர்ந்து நின்றோம்... நாங்கள் அப்படி சேர்ந்திருந்தாலே நீ வந்துவிடுவாய்” என்றான் பீமன். “அந்தப் பிரம்புக்கொடியைப் பிடுங்கு... இவனைக் கட்டி தூக்கிக் கொண்டு போய் உன் குடிகளுக்குக் காட்டுவோம்.”

இடும்பி திரும்புவதற்குள் கடோத்கஜன் பீமனைத் தூக்கிக்கொண்டு தாவி மேலே சென்றான். பீமன் அவன் தோளில் அடித்துக்கொண்டே இருந்தான். மேலே சென்றபின் பீமனை தூக்கி வீசினான். பீமன் விழுந்து கிளையொன்றைப் பிடித்துக் கொண்டான். இடும்பி ஓடி அவனருகே வந்து அவனைப் பிடித்து தூக்கினாள். “அவனை விடாதே” என்று கூவியபடி பீமன் கடோத்கஜனை நோக்கி பாய்ந்துசென்றான். சிரித்தபடி இடும்பியும் பின்னால் வந்தாள்.

அந்தி சாயும்வரை அவர்கள் மரங்களில் தாவி பறந்து விளையாடினார்கள். களைத்து மூச்சிரைக்க உச்சிக்கிளை ஒன்றில் சென்று பீமன் அமர்ந்ததும் இடும்பியும் வந்து அருகே அமர்ந்தாள். எதிரே கடோத்கஜன் வந்து இடையில் கைவைத்து காலால் கிளைகளைப் பற்றிக்கொண்டு நின்றான். பீமன் அவனைப்பார்த்து சிரித்தபடி இடும்பியை சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான். கடோத்கஜன் பாய்ந்து அருகே வந்து அவர்கள் நடுவே தன் உடலைப் புகுத்திக்கொண்டான்.

பீமன் மைந்தனின் உடலைத் தழுவி தன்னுடன் சேர்த்துக்கொண்டான். கண்களை மேற்குவானில் நிறுத்தியபடி மைந்தனின் தோள்களையும் மார்பையும் கைகளையும் கைகளால் தடவிக்கொண்டிந்தான். கைகள் வழியாக அவனை அறிவதுபோல வேறெப்படியும் அறியமுடியவில்லை என்று எண்ணிக்கொண்டான். “மைந்தா, நான் உன் பெரியபாட்டனாரைப் பற்றி சொன்னேன் அல்லவா?” என்றான். “ஆம், திருதராஷ்டிரர்” என்றான் கடோத்கஜன். “அவருக்கு விழிகள் இல்லை என்பதனால் மைந்தர்களை எல்லாம் தடவித்தான் பார்ப்பார். அவர் தடவும்போது அவர் நம்மை நன்றாக அறிந்துகொள்வதாகத் தோன்றும்” என்றான் பீமன்.

“குரங்குகள் யானைகள் எல்லாமே மைந்தர்களை தடவித்தான் அறிகின்றன” என்றாள் இடும்பி. “நானும் உங்களைத் தொட்டு இறுக்கிப்பிடிக்கும்போதுதான் அறிகிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான் . மெல்ல பீமனின் முழங்கையை கடித்து “கடித்துப்பார்க்கும்போது இன்னும்கூட நன்றாகத் தெரிகிறது.” இடும்பி சிரித்தபடி “என் பாட்டி சொன்னாள், முற்காலத்தில் அரக்கர்கள் மூதாதையரை தின்றுவிடுவார்கள் என்று...” என்றாள். பீமன் “மூதாதையர் நம் உடலாக ஆகிவிடுவார்கள் என்பதனால் அப்படி உண்ணும் வழக்கம் இன்னமும்கூட சில இடங்களில் உள்ளது என்கிறார்கள்” என்றான்.

இடும்பி “அழகிய சூரியன்” என்றாள். அந்திச்செம்மையில் அவள் முகம் அனல்பட்ட இரும்புப்பாவை போல ஒளிர்ந்தது. அப்பால் மரங்களின் மேல் குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து வந்தன. கைகளை மார்பின் மேல் கட்டியபடி அமர்ந்து சூரியன் அணைவதை அவை நோக்கின. அவற்றின் தலையிலும் கன்னங்களிலும் மெல்லிய மயிர்கள் ஒளியில் ஊறி சிலிர்த்து நின்றன. செம்மை படர்ந்த மேகங்கள் சிதறிப்பரந்த நீலவானில் பறவைக்கூட்டங்கள் சுழன்று கீழிறங்கிக் கொண்டிருந்தன. காடுகளுக்குள் அவை மூழ்க உள்ளே அவற்றின் குரல்கள் இணைந்து இரைச்சலாக ஒலித்தன.

செங்கனல் வட்டமாக ஒளிவிட்ட சூரியன் ஒரு பெரிய மேகக்குவையில் இருந்து நீர்த்துளி ஊறிச் சொட்டி முழுமைகொள்வதுபோல திரண்டு வந்து நின்றபோது இலைப்பரப்புகளெல்லாம் பளபளக்கத் தொடங்கின. பீமன் பெருமூச்சுடன் பார்வையை விலக்கி அப்பால் சிவந்து எரியத் தொடங்கிய மேகத்திரள் ஒன்றை நோக்கினான்.

அந்தியின் செம்மை கனத்து வந்தது. மேகங்கள் எரிந்து கனலாகி கருகி அணையத் தொடங்கின. தொடுவானின் வளைகோட்டில் ஒரு சிறிய அகல்சுடர் போல சூரியன் ஒளி அலையடிக்க நின்றிருந்தான். செந்நிறமான திரவத்தில் மிதந்து நிற்பது போல. மெல்ல கரைந்தழிவதுபோல. செந்நிறவட்டத்தின் நடுவே பச்சைநிறம் தோன்றித்தோன்றி மறைந்தது. ஏதோ சொல்ல எஞ்சி தவிப்பது போலிருந்தான் சூரியன். பின்னர் பெருமூச்சுடன் மூழ்கிச்சென்றான். மேல்விளிம்பு கூரிய ஒளியுடன் எஞ்சியிருந்தது.

சூரியனில் இருந்து வருவதுபோல பறவைகள் வந்துகொண்டே இருந்தன. மேலே பறக்கும் வெண்ணிறமான நாரைகள் சுழற்றி வீசப்பட்ட முல்லைச்சரம் போல வந்தன. அம்புகள் போல அலகு நீட்டி வந்த கொக்குகள். காற்றில் அலைக்கழியும் சருகுகள் போன்ற காகங்கள். கீழிருந்து அம்புகளால் அடிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுபவை போல காற்றிலேயே துள்ளித்துள்ளி தாவிக்கொண்டிருந்தன பனந்தத்தைகள். காட்டுக்குள் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்டது. இலைத்தழைப்புக்குள் காடு முழுமையாகவே இருண்டு விட்டது. மேலே தெரிந்த இலைவிரிவில் மட்டும் ஒளி பரவியிருந்தது. கூரிய அம்புமுனைகள் போல இலைநுனிகள் ஒளித்துளிகளை ஏந்தியிருந்தன.

இலைக்குவைகளுக்குள் இருந்து கரிய வௌவால்கள் காட்டுத்தீயில் எழுந்து பறக்கும் சருகுக்கரித் திவலைகள் போல எழுந்து வானை நிறைத்துச் சுழன்று பறந்தன. சூரியவட்டம் முழுமையாகவே மறைந்தது. மிகச்சரியாக சூரியன் மறையும் கணத்தில் ஏதோ ஒரு பறவை “ழாக்!” என்று ஒலியெழுப்பியது. மேலுமிரு பறவைகள் குரலெழுப்பி எழுந்து காற்றில் சுழன்று சுழன்று செங்குத்தாக காட்டுக்குள் இறங்கின.

மேகங்கள் துயரம்கொண்டவை போல ஒளியிழந்து இருளத் தொடங்கின. அவற்றின் எடை கூடிக்கூடி வருவதுபோல் தோன்றியது. அனைத்துப்பறவைகளும் இலைகளுக்குள் சென்றபின்னரும் ஓரிரு பறவைகள் எழுந்து சுழன்று இறங்கிக்கொண்டிருந்தன. பீமன் “செல்வோம்” என்றான். கடோத்கஜன் பெருமூச்சுவிட்டான். மெல்லிய ஒலி கேட்டு திரும்பி நோக்கிய பீமன் இடும்பி அழுவதைக் கண்டான். ஏன் என்று கேட்காமல் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான்.

பகுதி பதின்மூன்று : இனியன் - 6

இருண்ட காட்டுக்குள் கண்களுக்குள் அஸ்தமனத்தின் செவ்வொளி மிச்சமிருக்க பீமனும் இடும்பியும் கடோத்கஜனும் சென்றனர். மரங்கள் இருளுக்குள் திட இருள் வடிவுகளாக நின்றன. சீவிடுகளின் ஒலி திரண்டு இருட்டை நிரப்பத்தொடங்கியது. அவ்வப்போது கலைந்து பறந்த சில பறவைகள் நீரில் அறைவதுபோல இருளில் ஒலியெழுப்பி சிறகடித்தன. சிறகுகள் மரங்களிலும் கிளைகளிலும் உரசும் ஒலியுடன் அவை சுழன்றன. எங்கோ சில இடைவெளிகளில் வழிந்த மெல்லிய ஒளியில் மின்னிய இலைகள் ஈரமானவை போல் தோன்றின.

பொந்துக்குள் சுருண்ட மலைப்பாம்பின் விழிபோல இருளுக்குள் மின்னிய சுனையில் பீமன் குனிந்து நீரள்ளி குடித்தான். கடோத்கஜன் இலை ஒன்றை கோட்டி நீரை அள்ளி இடும்பிக்குக் கொடுத்தான். நீரில் ஒரு தவளை பாய்ந்துசெல்ல இருளின் ஒளி அலையடித்தது. மேலிருந்து ஓர் இலை சுழன்று சுழன்று பறந்து வந்து நீரில் விழுந்தது. சுனைக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிலந்தி வலைகளில் சிக்கியிருந்த சிறிய இலைகள் அந்தரத்தில் தத்தளித்தன. பீமன் பெருமூச்சு விட்டு தன் தாடியை துடைத்துக்கொண்டான். மீண்டும் பெருமூச்சு விட்டு கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்தான்.

ஈரக்கையை உதறிவிட்டு ”தந்தையே, நீங்கள் யாரையாவது அஞ்சுகிறீர்களா?” என்றான் கடோத்கஜன். பீமன் அதிர்ந்து திரும்பி நோக்கி சிலகணங்கள் தயங்கிவிட்டு “ஆம்” என்றான். “கர்ணன் என் கனவில் வந்துகொண்டே இருக்கிறான், மைந்தா. அவனை நான் அஞ்சுகிறேன் என்பதை எனக்கு நானேகூட ஒப்புக்கொள்வதில்லை” என்றான். “நான் அவனை கொல்கிறேன்” என்றான் கடோத்கஜன். பீமன் அவன் கையைப் பற்றி “வேண்டாம்... நீ அவனை கொல்லக்கூடாது” என்றான். “ஏன்?” என்றான் கடோத்கஜன். “கொல்லலாகாது” என்றான் பீமன். இருளில் விழிகள் மின்ன நோக்கி ”தங்கள் ஆணை” என்றான் கடோத்கஜன்.

“ஆனால் அவன் என்னை கொல்வானென்றால் நீ அவனை களத்தில் சந்திக்கவேண்டும். என்பொருட்டு அவனிடம் வஞ்சம் தீர்க்கவேண்டும்” என்றான் பீமன். கடோத்கஜன் “நான் அவனை வெல்வேன்” என்றான். பீமன் புன்னகையுடன் அவன் தலையைத் தட்டி ”அது எளிதல்ல மண்டையா. அவன் சூரியனின் மைந்தன் என்கிறார்கள்” என்றான். ”நான் காற்றின் வழித்தோன்றல் அல்லவா?” என்றான் கடோத்கஜன். பீமன் புன்னகையுடன் அவனை அருகே இழுத்துக்கொண்டு “ஆம்” என்றான்.

இடும்பி முன்னால் சென்று ”விரைவிலேயே முழுதிருள் அடர்ந்துவிடும்” என்றாள். பீமன் “ஆம்... உங்கள் குடிகள் இப்போது குடில்களுக்கு திரும்பிவிட்டிருப்பார்கள். இருளில் குடிலுக்கு மீண்டாகவேண்டியது உங்கள் கடன் அல்லவா?” என்றான். கடோத்கஜன் “அவர்கள் எனக்காக காத்திருக்கட்டும்...” என்றான். ”அரசன் என்பவன் நெறிகளை காக்கவேண்டியவன், மைந்தா” என்றான் பீமன். “நான் நெறிகளை அமைக்கிறேன்” என்றான் கடோத்கஜன். “அரக்கர்கள் இன்றுவரை நச்சுப்பாம்புகளையே பெரிதும் அஞ்சிவந்தனர். அவர்கள் தரையிறங்காமலிருப்பதே அதனால்தான். நான் நச்சுப்பாம்புகளை பிடித்துவந்து ஆராயப்போகிறேன். அவற்றை வெல்வதெப்படி என்று கற்று என் குடிக்கு சொல்லப்போகிறேன்.”

பீமன் “ஆம், அறிந்ததுமே அச்சம் விலகிவிடுகிறது” என்றான். கடோத்கஜன் “இடியோசையை பாம்புகள் அஞ்சுகின்றன. இந்திரனிடம் உள்ளது நாகங்களை வெல்லும் வித்தை என்று தோன்றுகிறது” என்றான். இடும்பி “போதும், இருளில் பாம்புகளைப் பற்றி பேசவேண்டாம்” என்றாள். கடோத்கஜன் சிரித்துக்கொண்டே “அன்னையே, தந்தையின் இரு கைகளும் இரு பாம்புகள், அறிவீர்களா?” என்றான். “வாயை மூடு” என்று இடும்பி சீறினாள். “ஆம், பாட்டி சொன்ன கதை அது. ஜயன் விஜயன் என்னும் இரு பாம்புகள்... வெல்லமுடியாத ஆற்றல்கொண்டவை.” அருகே சென்று அவளைப்பிடித்து “அவற்றை அஞ்சுகிறீர்களா?” என்றான். “பேசாதே...“ என்று சொல்லி இடும்பி முன்னால் பாய்ந்து செல்ல சிரித்தபடி கடோத்கஜன் அவளை துரத்திச்சென்றான்.

காட்டுவிளிம்பில் புல்வெளியில் இறங்கியதும் பீமன் குந்தியின் குடில்முன் ஒற்றை அகல்சுடர் இருப்பதைக் கண்டு “அன்னை உங்களைப் பார்க்க விழைகிறாள்” என்றான். இடும்பி “நானும் அவர்களைப் பார்க்க விரும்பினேன். இன்று நம் மைந்தன் தலைமை ஏற்ற நாள் அல்லவா? காணிக்கைகளை கொண்டுவரவேண்டுமென எண்ணியிருந்தேன். விளையாட்டில் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றாள். “இவனைப் பார்ப்பதைத் தவிர அன்னைக்கு வேறேதும் தேவைப்படாது” என்றான் பீமன். கடோத்கஜன் “பாட்டியிடம் நான் இன்றுமுதல் அரசன் என்று சொல்லியிருந்தேன்... மணிமுடி உண்டா என்று கேட்டார்கள். இல்லை, கோல் மட்டுமே என்றேன்” என்றான்.

குடிலைச்சுற்றி கூட்டம் கூட்டமாக மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன. பின்னிரவில் முழுமையாகவே மானுட ஓசைகள் அடங்கியபின்னரே குதிரைகள் வரும். அங்கே மனிதர்களும் நெருப்பும் இருப்பதனால் புலி அணுகாது, மனிதர்கள் தேவைக்குமேல் வேட்டையாடுவதில்லை என மான்கள் அறிந்திருந்தன. அவர்கள் புல்வெளியில் நடந்து சென்றபோது தரை வழியாகவே ஒலியை அறிந்து வெருண்டு தலைதூக்கி காதுகளை முன்னால் கோட்டி, வால் விடைத்து, பச்சைநிற ஒளி மின்னிய கண்களால் நோக்கின. அவர்களின் ஒவ்வொரு காலடியும் அவற்றின் உடலில் தடாகத்து நீரில் அலையெழுவது போல அசைவை உருவாக்கியது. “பூட்டிய வில்லில் அம்புகள் போல நிற்கின்றன தந்தையே” என்றான் கடோத்கஜன். “விற்கலையையும் கற்கத் தொடங்கிவிட்டாயா?” என்றான் பீமன். கடோத்கஜன் “சிறியதந்தை எனக்கு அடிப்படைகளை கற்பித்தார்” என்றான்.

பேச்சொலி கேட்டு குடிலின் உள்ளிருந்து குந்தி எட்டிப்பார்த்தாள். கடோத்கஜனைக் கண்டதும் ஓடிவந்து கைகளை விரித்து “பைமீ... வா வா... உச்சிப்போது முதலே உனக்காகத்தான் காத்திருந்தேன்...” என்றாள். கடோத்கஜன் ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு அப்படியே தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு சுழன்றான். குந்தி “மெல்ல மெல்ல... அய்யய்யோ” என்று சிரித்துக்கொண்டே கூவி அவன் தலையை தன் கையால் அறைந்தாள். பீமனும் இடும்பியும் சென்று குடில் முன்னால் இருந்த மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டு சிரித்தபடி நோக்கினர். கடோத்கஜன் குந்தியுடன் புல்வெளியில் ஓடினான். மான்கள் குளம்புகள் ஒலிக்க பாய்ந்து வளைந்து விழுந்து துள்ளி எழுந்து விலகின.

குந்தியை தூக்கிச் சுழற்றி மேலே போட்டு பிடித்தான் கடோத்கஜன். இருளுக்குள் அவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. குந்தி மூச்சுவாங்க உரக்க சிரித்து “மூடா... வேண்டாம்... பீமா, இவனைப்பிடி! இதென்ன இத்தனை முரடனாக இருக்கிறான்! பைமீ... அரக்கா... அரக்கா... என்னை விடு” என்று கூவிக்கொண்டிருந்தாள். பீமன் “அன்னையை குழந்தையாக்கும் கலை இவனுக்கு மட்டுமே தெரிகிறது” என்றான். “அவர்களை காட்டுக்குள் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறான். குலத்தவர் என்னிடம் சினந்து சொன்னார்கள். அவர்களுக்கு மைந்தனிடம் அதைச் சொல்ல அச்சம்...” என்றாள்.

அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சாலிஹோத்ரரின் பெருங்குடிலின் உள்ளிருந்து வந்தனர். அரையிருளில் அவர்களின் ஆடைகளின் வெண்மை அசைவது தெரிந்ததும் இருவரும் எழுந்தனர். அர்ஜுனன் “மூத்தவரே, இன்று உங்கள் மைந்தன் குடித்தலைமை கொள்கிறான் என்றானே” என்றான். “அத்தனை பேரிடமும் சொல்லியிருக்கிறானா? எப்போது சொன்னான்?” என்றான் பீமன். “நேற்று முன்தினம் அவன் எங்களை காட்டுக்குள் கூட்டிச்சென்றான்” என்றான் நகுலன்.

பீமன் நகைத்து “மானுடர் அவர்களின் காடுகளை தொடக்கூடாதென்பது நெறி. இடும்பர்கள் உடனே உங்களை கொன்றிருக்கவேண்டும்” என்றான். அர்ஜுனன் “அவனைப்பார்த்தாலே அவர்கள் தலைகுனிந்து விலகிச் செல்கிறார்கள்... ஒவ்வொரு கண்ணிலும் அச்சம் தெரிந்தது. மூத்தவரே, அரக்கர்குலத்திலேயே இவனளவுக்குப் பெரியவர் எவரும் இல்லை என நினைக்கிறேன்” என்றான். அப்பால் குந்தி “அய்யய்யோ... என்ன இது” என்றாள். கடோத்கஜன் அவளை தன் இருகைகளிலும் தூக்கி தலைக்குமேல் சுழற்றினான்.

”எங்களை அவன் தன் தோளில் ஏற்றி உச்சிமரக்கிளைக்கு கொண்டுசென்று கீழே வீசினான். நாங்கள் கிளைகள் வழியாக அலறியபடி மண்ணில் விழுவதற்குள் வந்து பிடித்துக்கொண்டான். மூத்தவரே, அவன் காற்றின் சிறுமைந்தன். அவன் ஆற்றலுக்கு அளவே இல்லை” என்றான் நகுலன். சகதேவன் “மதகளிறின் மேல் என்னை ஏற்றிவிட்டுவிட்டான். அது இவன் குரலைக் கேட்டு அஞ்சி மூங்கில்காடு வழியாக வால் சுழற்றிக்கொண்டு ஓடியது. அஞ்சி அதன் காதுகளைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டேன்” என்றான்.

அர்ஜுனன் இடும்பியிடம் தலைதாழ்த்தி “வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். நகுலனும் சகதேவனும் வந்து குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். ஒவ்வொரு முறை அவர்கள் வணங்கும்போதும் இடும்பி வெட்கி மெல்லிய குரலில் சிரித்துக்கொண்டுதான் ”நலம் திகழ்க” என்று வாழ்த்துவது வழக்கம். கடோத்கஜனை நோக்கியபடி ”அரசனாக ஏழுவயதிலேயே ஆகிவிட்டான். நம் மூத்தவருக்கு முப்பத்தி ஐந்து வயதாகிறது, இன்னமும் இளவரசர்தான்” என்றான் நகுலன்.

“அதற்கென்ன செய்வது? நம் மூதாதை ஒருவர் அறுபத்தாறு வயதில் பட்டமேற்றிருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “மூத்தவர் இன்னமும் உரிய ஆட்சிமுறை நூல்களை கற்று முடிக்கவில்லை... ஐயம்திரிபறக் கற்றபின்னரே ஆட்சி. அதில் தெளிவாக இருக்கிறார்.” நகுலனும் சகதேவனும் சிரித்தனர். ”அன்னைக்கு இன்று ஏதோ செய்தி வந்திருக்கிறது. காலைமுதலே மகிழ்ச்சியுடன் இருக்கிறார்” என்றான் அர்ஜுனன் அப்பால் அமர்ந்தபடி. "மூத்தவரிடமும் அதை சொல்லியிருக்கிறார். அவர் வழக்கம்போல கவலைகொண்டு நூல்களை ஆராயத் தொடங்கிவிட்டார்.”

கடோத்கஜன் குந்தியுடன் திரும்பி வந்தான். குந்தி “பைமீ, போதும்... இறக்கு என்னை” என்று சொல்லி மூச்சுவாங்கினாள். அவளை இறக்கி விட்ட பின் அவன் திரும்பி நகுலனிடம் “சிறிய தந்தையே, நாம் ஒரு விற்போரில் ஈடுபட்டாலென்ன?” என்றான். “இரவிலா? இரவில் அரக்கர்களுக்கு மாயம் கூடிவரும் என்றார்களே” என்றான் நகுலன். “நல்ல கதை. இரவில் பாம்புகளை அஞ்சி நாங்கள் உறிகளில் துயில்கிறோம்” என்றான் கடோத்கஜன். இடும்பி “விளையாட்டுக்கெல்லாம் இனிமேல் நேரமில்லை. போதும்” என்றாள்.

குந்தி மூச்சிரைக்க அமர்ந்து ஆடைகளை சீராக்கிக் கொண்டதும் இடும்பி குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினாள். “அனைத்து நலன்களும் சூழ்க” என்று குந்தி அவளை வாழ்த்தினாள். கடோத்கஜன் அர்ஜுனனின் அம்பறாத்தூணியில் இருந்து ஒரு நாணல் அம்பை எடுத்து வானில் எறிந்தான். அது சுழன்று திரும்ப வந்ததைக் கண்டு அஞ்சி விலகி ஓடினான். அர்ஜுனன் அதை கையால் பிடித்தபின் கடோத்கஜனின் தலையில் ஓங்கி அறைந்து சிரித்தான். “அம்புகள் மாயம் நிறைந்தவை” என்று கடோத்கஜன் விழிகளை உருட்டி சொன்னான். “அவற்றில் பறவைகளின் ஆன்மா வாழ்கிறது.”

இடும்பி “இன்று மைந்தன் கோலேந்தி குடித்தலைவனானான் அரசி. இதுவரை இடும்பர் குடியில் இவனளவு விரைவாக எவரும் வேட்டையாடி மீண்டதில்லை. அதுவும் பெரிய எருமைக்கன்று. குடித்தலைவர்கள் சொல்லடங்கிப்போனார்கள்” என்றாள். இன்னொரு அம்பை எடுத்து குறி பார்த்து குடிலின் கூரையை நோக்கி விட்ட கடோத்கஜனை நோக்கிய குந்தி “அவன் உங்கள் குடியில் தோன்றிய முத்து” என்றாள். “அவன் ஒரு வீரியம் மிக்க விதை. இத்தனை ஆற்றல் கொண்டவனாக அவனை உருவாக்கிய தெய்வங்களுக்கு மேலும் சிறந்த நோக்கங்கள் இருக்கவேண்டும்.”

சிலகணங்கள் அவனை நோக்கியபின் சொற்களைத் தேர்ந்து குந்தி சொன்னாள் “உங்கள் குலவழக்கப்படி நீங்கள் இந்தக் காட்டை கடப்பதில்லை என்று அறிவேன். ஆகவே உங்கள் குடிக்கு வெளியே அவன் மணம் முடிக்கவும் போவதில்லை.” இடும்பி அவள் சொல்லப்போவதை எதிர்நோக்கி நின்றாள். “ஆனால் அவன் அவனுக்குரிய மணமகளை கண்டடையவேண்டுமென விழைகிறேன். அரக்கர்குலத்துக்கு வெளியே ஆற்றல் மிகுந்த ஓர் அரசகுலத்தில் அவன் தன் அரசியை கொள்ளவேண்டும். அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தனின் வழித்தோன்றல்கள் ஷத்ரியர்களாகி நாடாளவேண்டும்...”

இடும்பி கைகூப்பி “தங்கள் சொற்களை ஆணையாகக் கருதுகிறேன்” என்றாள். “இடும்பர்நாடு என்றும் அஸ்தினபுரியின் சமந்தநாடு. பாரதவர்ஷத்தை அஸ்தினபுரி ஆளும்போது அதன் சக்ரவர்த்தியுடன் குருதியுறவு கொண்டவர்களாகவே இடும்பர்குலத்து அரசர்கள் கருதப்படுவார்கள்” என்றாள். அவள் சொல்லப்போவதை இடும்பி உய்த்தறிந்துகொண்டதுபோல அவள் உடலில் ஓர் அசைவு வெளிப்பட்டது. ”நாங்கள் நாளை விடிகாலையில் கிளம்புகிறோம். இத்தனைநாள் இங்கே காத்திருந்ததே வலுவான ஷத்ரிய குடி ஒன்றில் என் மைந்தன் மணம்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். அந்த வாய்ப்பு வந்துள்ளது” என்றாள்.

“வெற்றி நிறைக” என்றாள் இடும்பி. “என் குடியின் முதல் மாற்றில்லமகள் நீயே. நீ என் முதல்மைந்தனின் துணைவியாக இருந்திருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியாகவும் உன்னையே எண்ணியிருப்பேன்” என்றபின் குந்தி திரும்பி கடோத்கஜனை அருகே அழைத்தாள். கீழே விழுந்த அம்பை ஓடிச்சென்று எடுத்த அவன் திரும்பி அருகே வந்தான். “இவன் அஸ்தினபுரியின் முதல் இளவரசன். பீமசேனஜனன் என்றே இவன் அழைக்கப்படவேண்டும். உன் குலமும் இவனை அஸ்தினபுரியின் இளவரசனாகவே எண்ண வேண்டும்” என்றாள் குந்தி.

கடோத்கஜன் “நீங்கள் கிளம்புகிறீர்களா, பாட்டி?” என்றான். குந்தி புன்னகையுடன் ஏறிட்டு நோக்கி “ஆம், பைமி. நாங்கள் நாளை காலை கிளம்பிச் செல்கிறோம். எங்கள் நோக்கம் நிறைவேறுமெனத் தெரிகிறது” என்றாள். அவள் அருகே வா என்று கைநீட்ட அவன் அவள் காலடியில் அமர்ந்தான். அவன் தலை அவள் உயரத்திற்கு இருந்தது. மென்மயிர் படர்ந்த பெரிய தலையை வருடியபடி “நீ அரசன், உனக்கு அளிப்பதற்கு எங்களிடம் ஏதுமில்லை. உன்னிடம் கோரிப்பெறுவதற்கே உள்ளது. உன் தந்தையருக்கு என்றும் உன் ஆற்றல் துணையாக இருக்கவேண்டும்” என்றாள்.

“எண்ணும்போது அங்கே நான் வந்துவிடுவேன்” என்றான் கடோத்கஜன். “பைமசைனி, நீ அழியாப்புகழ்பெறுவாய். உன் குருதியில் பிறந்த குலம் பெருகி நாடாளும்” என்றாள் குந்தி. பெருமூச்சுடன் அவன் செவிகளைப் பிடித்து இழுத்து “அஸ்தினபுரியின் அரண்மனையில் உனக்கு அறுசுவை உணவை என் கையால் அள்ளிப் பரிமாறவேண்டும் என விழைகிறேன்... இறையருள் கூடட்டும்” என்றாள்.

அப்பால் தருமன் வருவது தெரிந்தது. “அன்னையே, அது யார் பைமசைனியா?” என்றான் தருமன். “மூடா, இன்று உச்சி முதலே உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். நீ கோலேந்தி நிற்பதை நான் காண வேண்டாமா?” கடோத்கஜன் அவனை நோக்கி ஓடிச்சென்று “நான் தந்தையுடன் மர உச்சியில்...” என்றபின் அவன் கையில் இருந்த சுவடிகளை நோக்கி ”இந்தச் சுவடிகளை நான் எப்போது வாசிப்பேன்?” என்றான். ”அரக்கர்கள் வாசிக்கலாகாது, வேள்வி செய்யலாகாது. அது அவர்களின் குலநெறி” என்றான் தருமன் கடோத்கஜனின் தோளை வளைத்தபடி.

“நான் வேள்விசெய்யப்போவதில்லை. ஆனால் வாசிப்பேன்” என்றான் கடோத்கஜன். குந்தி “பைமி, உன் தந்தையரை வணங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொள்” என்றாள். கடோத்கஜன் சுவடிகளைக் கொடுத்தபின்னர் தருமனின் கால்களைத் தொட்டு வணங்கினான். “அழியாப்புகழுடன் இரு மைந்தா” என்றான் தருமன். “காடுறைத் தெய்வம் என்று கேட்டிருக்கிறேன். உன் வடிவில் பார்த்தேன். என்றும் உன் அன்பு என் குடிக்குத் தேவை.” கடோத்கஜன் அர்ஜுனனையும் நகுலனையும் சகதேவனையும் வணங்கி வாழ்த்து பெற்றான்.

குந்தி எழுந்து அவனை மீண்டும் அணைத்து “நூல்களைக் கற்க நீ விழைந்தது நன்று, மைந்தா. ஆனால் எந்த குருகுலத்திலும் சென்று சேர்ந்து நூல்களை கற்காதே. உன் காடும் முன்னோரும் கற்பித்தவற்றை இழந்துவிடுவாய்” என்றாள். “நூல்களை உன் காட்டுக்குக் கொண்டுவரச்சொல். அங்கேயே அமர்ந்து வாசித்து அறிந்துகொள். நீ பிறவியிலேயே பேரறிஞன். மொழிகளையும் நூல்களையும் கற்பது உனக்கு விளையாட்டு போன்றது” என்றாள். அவன் தலையை கைதூக்கி தொட்டு “பைமசேனா, பெருவாழ்வு அடைக” என்றாள்.

இடும்பி மீண்டும் குந்தியை வணங்கி விடைபெற்றாள். கடோத்கஜன் பீமனை வணங்கியபோது அவன் மைந்தனை அள்ளி நெஞ்சுடன் அணைத்து பெருமூச்சு விட்டான். கடோத்கஜன் பீமனின் அணைப்பில் தோளில் தலைவைத்து நின்றான். பீமன் மீண்டும் பெருமூச்சு விட்டான். ஏதோ சொல்லப்போவதுபோலிருந்தது. ஆனால் அவனிடமிருந்து பெருமூச்சுகள்தான் வந்துகொண்டிருந்தன. பின்பு கைகளைத் தாழ்த்தி “சென்று வா, மைந்தா...” என்றான். கடோத்கஜன் திரும்பி குந்தியை நோக்கி தலைவணங்கிவிட்டு நடந்தான். இடும்பி அவனைத் தொடர்ந்து சென்றாள்.

இருவரும் இருளுக்குள் சென்று மறைவது வரை அவர்கள் அங்கேயே நோக்கி நின்றனர். இடும்பி திரும்பித்திரும்பி நோக்கிக்கொண்டு தளர்ந்த நடையுடன் சென்றாள். கடோத்கஜன் ஒருமுறைகூட திரும்பவில்லை. அவர்கள் செல்லச்செல்ல பீமனின் விழிகள் மேலும் கூர்மை கொண்டு அவர்களை நோக்கின. காட்டின் எல்லைவரைக்கும் கூட வெண்ணிற அசைவாக அவர்களின் தோலாடை தெரிந்தது. பின்னர் மரங்கள் அசைவதையும் அவன் கண்டான்.

தருமன் பீமனின் தோளைத் தொட்டு “அன்னை சொன்னது உண்மை, மந்தா” என்றான். “இங்கே இவர்களின் பேரன்பில் நீ முழுமையாகவே சிக்கிக் கொண்டுவிட்டாய். இத்தருணத்தில் உன்னை இங்கிருந்து மீட்கவில்லை என்றால் பிறகெப்போதும் முடியாது” என்றான். அர்ஜுனன் “இங்கே மூத்தவரின் வாழ்க்கை முழுமைகொள்ளுமென்றால் அதன்பின் அவர் எதை நாடவேண்டும்?” என்றான். குந்தி “அவன் பாண்டவன். அஸ்தினபுரியின் மணிமுடிக்கும் குடிகளுக்கும் அவன் செய்தாகவேண்டிய கடமைகள் உள்ளன” என்றாள்.

தருமன் “மந்தா, பாஞ்சால மன்னன் துருபதன் தன் மகளுக்கு சுயம்வர அறிவிப்பு செய்திருக்கிறார். அன்னைக்கு அச்செய்தி இன்றுகாலைதான் வந்தது. நாம் அதற்காகவே இங்கிருந்து கிளம்பவிருக்கிறோம். எவ்வகையிலும் அவ்வுறவு நமக்கு நலம் பயப்பதே” என்றான். அர்ஜுனன் திகைப்புடன் “துருபதனா? அவரை நாம்...” என்று சொல்லத் தொடங்க தருமன் “ஆம், அதைப்பற்றித்தான் நான் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரை நாம் வென்று அவமதித்தோம். நாம் அவர் மகளை முறைப்படி மணக்க அவர் ஒப்ப மாட்டார். ஆனால் சுயம்வரத்தில் ஷத்ரியர்கள் எவரும் பங்குகொள்ளலாம்” என்றான்.

அர்ஜுனன் “ஆனால்...” என்று மீண்டும் தொடங்கினான். தருமன் “நாம் அவளை வென்றால் அதன்பின் துருபதன் தடையேதும் சொல்லமுடியாது, பார்த்தா. அவர் நம்முடன் மணவுறவு கொள்வது போல நமது இன்றைய நிலையில் சிறப்பானது ஏதுமில்லை. பாரதவர்ஷத்தின் மிகத்தொன்மையான நான்கு அரசகுடிகளில் ஒன்று பாஞ்சாலம். அவர்களின் கொடிவழியும் நம்மைப்போலவே விஷ்ணு, பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்றே வருவது. பாண்டவர்களாகிய நமக்கு இன்று இல்லாத ஷத்ரிய மதிப்பு அவர்களின் குடியில் மணம்செய்தால் வந்துவிடும். பாஞ்சாலத்திடம் மணமுடித்தால் பின்னர் உங்கள் அனைவருக்கும் ஷத்ரிய அரசிகள் அமைவார்கள்” என்றான்.

தருமன் குரலைத் தாழ்த்தி “நம்மிடம் தோற்றபின் சென்ற பதினேழாண்டுகாலத்தில் அவர் தன் படைகளை மும்மடங்கு பெருக்கி வல்லமை பெறச்செய்திருக்கிறார். ஒரு அக்‌ஷௌகிணி அளவுக்கு படைகள் முழுப் படைக்கலங்களுடன் இருப்பதாக ஒற்றர்கள் சொல்கிறார்கள். அவர் குலங்கள் ஐந்தும் பிரிக்கமுடியாத ஒற்றுமை கொண்டவை. இன்று தன் மைந்தர்களுக்கு அத்தனை குலங்களில் இருந்தும் பெண்கொண்டு அவ்வொற்றுமையை துருபதன் பேணி வளர்த்திருக்கிறார்” என்றான். “இயல்பிலேயே பாஞ்சாலர்கள் மாவீரர்கள் பார்த்தா. துருபதனின் தம்பி சத்யஜித்தின் வீரத்தை நாமே பார்த்தோம். பட்டத்து இளவரசன் சித்ரகேதுவும் பெருவீரன்.”

“துருபதனின் பன்னிரு மைந்தர்களும் மாவீரர்கள்தான்” என்றாள் குந்தி. “சுமித்ரன். பிரியதர்சன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் அனைவருமே அக்னிவேச குருகுலத்தில் பயின்றவர்கள். இளையமைந்தன் திருஷ்டத்யும்னன் துரோணரிடம் பயில்கிறான். அத்துடன் அவன் அக்னிவேசரின் மாணவனும் மாவீரனுமாகிய சிகண்டி என்னும் இருபாலினத்தவனை தன் மைந்தனாக எரிசான்றாக்கி ஏற்றுக்கொண்டிருக்கிறான். பாஞ்சாலத்தில் மணம்கொள்பவன் இன்று பாரதவர்ஷத்தின் மாவீரர்கள் பதினைந்துபேரை தனக்கு உறவினராக்கிக் கொள்கிறான்.”

“நாம் இன்று படைபலமில்லாத தனியர். பாஞ்சாலத்தின் படைகளை நீ தலைமை ஏற்று நடத்தமுடியும் என்றால் நாம் அஸ்தினபுரியையே போரில் வென்றெடுக்க முடியும்” என்றான் தருமன். “நம்மை அதர்மத்தில் அழித்துவிட்டு அஸ்தினபுரியை கௌரவர்கள் ஆள நாம் ஒருபோதும் ஒப்பக்கூடாது. அதன் பெயர் ஆண்மையே அல்ல. நம் குலத்திற்கே அது இழுக்கு. நாம் திரும்பிச் செல்வதற்காகவே ஒளிந்து வாழ்கிறோம். நம் படைகள் அஸ்தினபுரியை நோக்கி செல்லும்போது அவர்கள் அறியட்டும் பாண்டுவின் குருதியின் நுரை எப்படிப்பட்டது என்று.”

பீமன் “அங்கே பிதாமகர் உள்ளவரை எவராலும் அஸ்தினபுரியை வெல்லமுடியாது” என்றான். குந்தி “ஆம், ஆனால் போரை தொடங்க முடியும். சமரசப் பேச்சுக்கு வரும்படி அவர்களை கட்டாயப்படுத்த முடியும். நாம் இன்று இலக்காக்குவது அஸ்தினபுரியின் மணிமுடியை அல்ல. பாதி அரசை மட்டுமே. முழுமையான நாட்டை வெல்வதற்கு நாம் பிதாமகரின் இறப்புவரை காத்திருக்கலாம்” என்றாள்.

பீமன் சிரித்து “விரிவாகவே அனைத்தையும் சிந்தித்துவிட்டீர்கள், அன்னையே” என்றான். “ஆம், நான் பாஞ்சால இளவரசியைப்பற்றி எண்ணத் தொடங்கி நெடுநாட்களாகிறது. அவள் பிறந்ததுமே சூதர்கள் எனக்கு செய்திகொண்டு வந்தனர். நூறு வெவ்வேறு நிமித்திகர் அவள் பிறவிநூலைக் கணித்து அவள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி ஆவாள் என்று குறியுரைத்தனர் என்றனர் சூதர். பாரதவர்ஷத்தை ஆளும் அரசி தனக்கு மகளாகவேண்டும் என்பதற்காகவே துருபத மன்னன் சௌத்ராமணி என்னும் வேள்வியைக் செய்து அதன் பயனாக அவளைப் பெற்றான் என்றார்கள்.”

“எளியவழி, சக்ரவர்த்தினியை மணந்தால் சக்ரவர்த்தி ஆகிவிடலாம்” என்றான் பீமன். குந்தி சினத்துடன் “மந்தா, இது நகையாடலுக்குரியதல்ல. அவளைப்பற்றி நான் அறிந்ததெல்லாம் வியப்பூட்டுபவை. அவள் சக்ரவர்த்தினியாகவே பிறந்தவள் என்கிறார்கள். கருவறையில் சிம்மம் மேல் எழுந்தருளிய கொற்றவை போன்று கரியபேரெழில் கொண்டவள் என்கிறார்கள். ஏழுவயதிலேயே அரசநூல்களையும் அறநூல்களையும் கற்றுமுடித்தாளாம். பைசாசிகமொழிகள் உட்பட ஏழு மொழிகளை அறிந்திருக்கிறாளாம். பன்னிரு உடன்பிறந்தாரும் அவள் சொல்லைக் கேட்டே நாடாள்கிறார்கள் என்கிறார்கள் ஒற்றர்கள்” என்றாள்.

“அன்னையே, அத்தகைய சக்ரவர்த்தினி ஏன் நாடற்றவரும் தூய ஷத்ரியக் குருதி அற்றவருமாகிய மூத்தபாண்டவர் கழுத்தில் மாலையிடவேண்டும்?” என்றான் பீமன். “ஆம், அந்த ஐயமே என்னை வாட்டிக்கொண்டிருந்தது. இன்று காலை வந்த செய்திதான் என்னை ஊக்கம் கொள்ளச் செய்தது” என்றாள் குந்தி. “பாரதவர்ஷத்தின் மாவீரனையே தன் மகள் மணம்கொள்ளவேண்டுமென துருபதன் எண்ணுகிறான். அவனே அவள் அமரும் அரியணையை காக்கமுடியும் என்று அவன் நம்புவது இயல்பே. ஆகவே மணம் கொள்ளலுக்கு அவன் போட்டிகளை அமைக்கவிருக்கிறான். எந்தப்போட்டி என்றாலும் அதில் பார்த்தனோ பீமனோ வெல்வது உறுதி.”

அர்ஜுனன் பெருமூச்சுடன் “அன்னையே, இவற்றை முழுமையாக அறிந்து என்ன செய்யப்போகிறோம்? தாங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள். மூத்தவர் ஒப்புக்கொண்டு விட்டார். கட்டுப்படுவது எங்கள் கடமை” என்றான். எழுந்துகொண்டு “இளையோரே, நான் துயில்கொள்ளச் செல்கிறேன். வருகிறீர்களா?” என்றான். நகுலனும் சகதேவனும் அன்னைக்கு தலைவணங்கிவிட்டு அவன் பின்னால் சென்றனர். தருமன் “இறுதியாக சில ஆப்தமந்திரங்களை எனக்கு மட்டும் பயிற்றுவிப்பதாக சாலிஹோத்ரர் சொன்னார். நான் அங்கு செல்கிறேன்” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்றான்.

பீமனும் எழ எண்ணினான். ஆனால் உடலை அசைக்கும் ஆற்றல் அந்த விழைவுக்கு இருக்கவில்லை. தலைகுனிந்து இருளில் விழிவெளிச்சத்தாலேயே துலங்கிய மண்ணை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான். குந்தியும் தூரத்தில் காற்றில் அசைந்த இருண்டகாட்டை நோக்கிக் கொண்டிருந்தாள். சில மான்கள் தும்மல் போல ஓசையிட்டன. அவை காதுகளை அடித்துக்கொள்ளும் ஒலி கேட்டது. மிக அருகே ஒரு மான் குறிய வாலை விடைத்து அசைத்தபடி கடந்து சென்றது. அதன் பின்னால் சென்ற சிறிய மான் ஒன்று அவர்களை நோக்கியபடி நின்று தலைதாழ்த்தி காதை பின்னங்காலால் சொறிந்தபின் கண்கள் மின்ன திரும்பிக்கொண்டது.

குந்தி மெல்ல அசைந்த ஒலி கேட்டு பீமன் திரும்பினான். “மந்தா, உன்னை இங்கிருந்து பிரித்துக்கொண்டு செல்கிறேன் என எண்ணி சினம் கொள்கிறாயா?” என்றாள் குந்தி. “சினமேதும் இல்லை, அன்னையே” என்றான் பீமன். குந்தி “நான் முதியவள். என் சொற்களை நம்பு. இவர்கள் வேறு உலகில் வாழ்பவர்கள். இவர்களின் பேரன்பை நான் அறிந்துகொள்கிறேன். ஆனால் நீ அவர்களுடன் இணைந்து வாழமுடியாது. நீ அஸ்தினபுரியில் என் வயிற்றில் பிறந்துவிட்டாய்” என்றாள். பீமன் தன் கைகளை நோக்கி சிலகணங்கள் இருந்தபின்  “உண்மைதான், அன்னையே” என்றான்.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 1

கர்ணன் நீராடிக்கொண்டிருக்கும்போதே துரியோதனன் அவன் மாளிகைக்கு வந்து முகப்புக்கூடத்தில் காத்திருந்தான். சேவகன் நீராட்டறைக்கு வந்து பணிந்து அதைச் சொன்னதுமே கர்ணன் எழுந்துவிட்டான். நீராட்டறைச்சேவகன் “பொறுங்கள் அரசே” என்றான். “விரைவாக” என்று சொல்லி கர்ணன் மீண்டும் அமர்ந்தபடி “நீராடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்” என்றான். திரும்பிய சேவகனிடம் “வருந்துகிறேன் என்று சொல்” என்றான்.

உடலைக்கழுவியதுமே எழுந்து இடைநாழி வழியாக ஓடி ஆடைகளை அணிந்துகொண்டு ஈரக்குழலுடன் வெளியே வந்து “வணங்குகிறேன் இளவரசே... தங்களை காண வருவதற்காக நீராட அமர்ந்தேன். தாங்களே வருவீர்கள் என்று எண்ணவில்லை. வரும் மரபும் இல்லை...” என்று மூச்சிரைத்தான்.

துரியோதனன் புன்னகையுடன் “வரக்கூடாதென்றும் மரபு இல்லை. நீ அங்கநாட்டு அரசன். அப்படியென்றால் இங்கு நீ அரசமுறையில் வந்து தங்கியிருக்கிறாய் என்றே பொருள்” என்றான். கர்ணன் புன்னகையுடன் அமர்ந்துகொண்டு “முதிர்ந்துவிட்டீர்கள்...” என்றான். “ஆனால் சிலவருடங்களாகவே போர்ப்பயிற்சி இல்லை என நினைக்கிறேன். தோள்களில் இறுக்கம் இல்லை. உடல் தடித்திருக்கிறது.”

துரியோதனன் புன்னகையுடன் “செய்தி வந்த அன்று எட்டு நாழிகைநேரம் இடைவெளியே இல்லாமல் கதைசுழற்றினேன். உதிரம் முழுக்க வியர்வையாகி வழிந்தோடிவிடும் என்று தோன்றியது. ஆனால் மறுநாள்காலை தூக்கி வைத்த கதாயுதம்தான். ஏழுவருடங்களாக தொட்டே பார்க்கவில்லை” என்றான். அவன் விழிகளை நோக்காமல் கர்ணன் சாளரம் நோக்கி திரும்பிக்கொண்டு “அவர்களைப் பற்றி மேலதிகச் செய்திகள் ஏதேனும் உண்டா?” என்றான்.

துரியோதனன் “மேலதிகச் செய்திகளா?” என்றான் வியப்புடன். “இல்லை, அவர்களின் இறப்பை ஐயப்படும்படி...” என்றான் கர்ணன். துரியோதனன் உரக்க நகைத்து “நீ அரசு சூழ்பவன் என்பதை காட்டிவிட்டாய்... அவர்களின் எலும்புகளை நான் கண்ணால் பார்த்தேன்” என்றான். கர்ணன் பெருமூச்சுடன் “நெருப்புக்கும் பாம்புக்கும் எப்போதும் ஒரு மேலதிக எச்சரிக்கையை வைத்திருப்பது நன்று. வெட்டி வீசப்பட்ட பாம்பின் தலை கடித்து இறந்தவர்கள் உண்டு” என்றான்.

சிலகணங்கள் உற்று நோக்கியபின் மெல்லிய சிரிப்புடன் “நீ ஐயப்படுவதற்கான காரணம் என்ன?” என்றான் துரியோதனன். துரியோதனனில் அந்த எள்ளல்நகைப்பு புதிதாக குடியேறியிருப்பதை கர்ணன் கண்டான். அதற்கும் அவன் பேசும் பொருளுக்கும் தொடர்பிருக்கவில்லை. எப்போதும் ஒரு முகத்தசை நெளிவு போல அவனிடமிருந்தது அது. “அவர்கள் மொத்தமாக அழிவதென்பது ஒரு பெரிய நிகழ்வு. அத்தனை பெரிய நிகழ்வு எளிதாக முடிந்துவிடுமா என்ற ஐயம்தான்.” துரியோதனன் உரக்க நகைத்து “கதைகேட்கும் குழந்தைகளின் பிடிவாதம் அது” என்றான்.

“இருக்கலாம்” என்றான் கர்ணன். துரியோதனனிடம் இருந்த அடுத்த மாற்றத்தை அவன் கண்கள் அறிந்தன. அனிச்சையாக அடிக்கடி வலதுதொடையை ஆட்டிக்கொண்டே இருந்தான். அந்த அசைவை அவனே உணரும்போது நிறுத்திக்கொண்டு தன்னை மறந்து பேசத்தொடங்கியதும் மீண்டும் ஆட்டினான். அவன் தன் தொடையை நோக்குவதைக் கண்டு துரியோதனன் அசைவை நிறுத்திக்கொண்டு கையை தொடைமேல் வைத்தான். “உன் ஐயம் முதல்முறையாக என்னிலும் ஐயத்தை கிளப்புகிறது” என்றான்.

“நான் இங்குவருவதுவரை நீங்கள் முடிசூடவில்லை என்று அறிந்திருக்கவில்லை” என்றான் கர்ணன். “பாண்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி நான் விந்தியமலையில் இருக்கும்போதே வந்துசேர்ந்தது. திருவிடத்தைக் கடந்து செல்லும்போது நீங்கள் முடிசூடிவிட்டீர்கள் என்று ஒரு சூதனின் கதையை கேட்டேன். அதன்பின் நான் காடுகளில் குருகுலங்களிலேயே இருந்தேன். நேற்று மாலை அஸ்தினபுரியை நெருங்கிக்கொண்டிருக்கையில் ஒரு வணிகன் பேச்சுவாக்கில் சொன்னதைக் கொண்டுதான் நீங்கள் முடிசூடவில்லை என்றறிந்தேன்.”

துரியோதனன் “அது பிதாமகரின் முடிவு” என்றான். “அதற்கேற்ப தந்தையும் ஏழெட்டு மாதத்தில் நலம்பெற்றுவிட்டார். நம் சமந்த நாடுகளின் ஒப்புதல் பெற்றபின் நான் முடிசூடலாம் என்று முதலில் சொன்னார் பிதாமகர். சமந்த நாடுகளில் சில கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தன. குலக்குடிகளில் ஷத்ரியர்கள் தவிர அனைவருமே என்னை எதிர்த்தனர். இறுதியாக துவாரகையில் இருந்து யாதவனின் செய்தி வந்தது. நான் முடிசூட்டிக்கொண்டால் அஸ்தினபுரிமேல் யாதவர்கள் போர் அறிவிப்பு செய்வார்கள் என்று.”

“இளைய யாதவனா?” என்றான் கர்ணன். “அவனைப்பற்றிய கதைகளைத்தான் தென்னகத்திலும் கேட்டுக்கொண்டிருந்தேன்.” துரியோதனன் கசப்புடன் நகைத்து “ஆம், யாதவர்கள் பாரதவர்ஷம் முழுக்க பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே இந்த நாட்டின் உண்மையான குடிகள் இன்று. அவர்கள் நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த தலைவன் அவன்” என்றான்.

“இன்று அவன் அத்தனை யாதவகுடிகளையும் ஒருங்கிணைத்துவிட்டான். கடல்வணிகம் மூலமும் கூர்ஜரத்தை கொள்ளையிடுவதன் மூலமும் பெரும் செல்வத்தை சேர்த்து வைத்திருக்கிறான். அவன் மகதத்துடன் சேர்ந்துகொண்டு நம்மைத் தாக்கினால் அஸ்தினபுரி அழியும். ஆகவே பிதாமகர் அஞ்சினார். இன்னும் சற்று பொறுப்போம், நானே நேரில் சென்று யாதவர்களிடம் பேசுகிறேன் என்றார். அமைச்சும் சுற்றமும் அரசரும் அதை ஏற்றுக்கொண்டனர். பேச்சுவார்த்தைக்காக மும்முறை பிதாமகர் துவாரகைக்குச் சென்றார். எதுவும் நிகழவில்லை" என்றான் துரியோதனன்.

”பிதாமகர் இப்போது என்னதான் சொல்கிறார்?” என்றான் கர்ணன். “சிறந்த ஷத்ரிய அரசொன்றில் இருந்து நான் பட்டத்தரசியை கொள்வேன் என்றால் முடிசூட்டிக்கொள்ளலாம் என்று சொன்னார். ஷத்ரிய அரசர்களின் பின்துணையை நான் அதன் மூலம் அடையலாம் என்றார். கலிங்கத்திலும் மாளவத்திலும் வங்கத்திலும் கோசலத்திலும் இளவரசியர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கு பெண்தர மறுத்து விட்டார்கள்.”

“ஏன்?” என்றான் கர்ணன். “எளிய விடைதான். நான் முடிசூடிக்கொள்வேன் என்றால் பெண்கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் பெண்கொடுத்தால் மட்டுமே நான் முடிசூடமுடியும்” என்று துரியோதனன் சிரித்தான். கர்ணன் சிலகணங்கள் முகவாயை தடவியபடி இருந்துவிட்டு நிமிர்ந்து “பீஷ்ம பிதாமகர் பாண்டவர்கள் சாகவில்லை என்று நினைக்கிறார்” என்றான். துரியோதனன் விழிகள் அசையாமல் நோக்கி உதடுகள் மெல்ல அசைய “ஏன்?” என்று முணுமுணுத்தான்.

“ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அவருக்குத் தோன்றியிருந்தால் உங்களை அரசனாக ஆக்கியிருப்பார். ஐயமே இல்லை” என்றான் கர்ணன். “ஒவ்வொன்றும் அவரது திட்டமே. இந்நாட்டின் மக்களிடையே உங்களைப்பற்றி இருக்கும் எண்ணமென்ன என்று அவர் அறிவார். எங்காவது ஒரு நாட்டின் சமந்த மன்னர்களிடம் கேட்டு அரசனுக்கு முடிசூடும் வழக்கம் உண்டா என்ன?” துரியோதனன் “நான் அவர் என் தந்தை மேலுள்ள அன்பினால் அவரை அரசராக வைத்திருக்கிறார் என்று நினைத்தேன்” என்றான்.

“இல்லை” என்று கர்ணன் மீண்டும் உறுதியாக சொன்னான். “இது வேறு. அவர் பாண்டவர்களிடமிருந்து செய்தி ஏதும் வரும் என்று காத்திருக்கிறார்.” துரியோதனன் “ஏழுவருடங்களாகின்றன” என்றான். “ஆம், பாண்டவர்கள் வலுவான ஒரு துணைக்காக காத்திருக்கலாம் அல்லவா? அந்தத் துணை கிடைத்தபின்னர் அவர்கள் வெளிப்படலாம் அல்லவா?” துரியோதனன் தலையை இல்லை என்பதுபோல அசைத்து “கர்ணா, நான் அவர்களின் எலும்புகளை பார்த்தேன்” என்றான்.

கர்ணன் சினத்துடன் “எலும்புகளை பார்த்தீர்கள், உடல்களை அல்ல” என்றான். “எதிரி அழிந்தான் என்று அரசன் தன் விழிகளால் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கின்றன நூல்கள்.” துரியோதனன் பெருமூச்சு விட்டு “அவர்கள் இருக்கிறார்கள் என்கிறாயா?” என்றான். “இருக்கலாம்... அதற்கான சான்றுகள் பீஷ்மபிதாமகரின் நடத்தையில் உள்ளன” என்ற கர்ணன் எழுந்து “நான் உடனடியாக காந்தார இளவரசரை பார்க்கவேண்டும்” என்றான்.

“கிளம்புவோம்” என்று துரியோதனன் எழுந்துகொண்டான். “நான் பெரும்பாலும் தினமும் அவரை காண்கிறேன். அவர் இன்றுவரை என்னிடம் எதையும் சொன்னதில்லை” என்றபின் வெளியே நடந்தான். கர்ணன் பின்னால் நடந்தான். தலைகுனிந்து நடந்த துரியோதனன் தேர் அருகே சென்றபோது நின்று திரும்பி “இத்தனை தூரம் நடந்து வருவதற்குள் நான் உறுதியாகவே உணர்ந்துவிட்டேன், அவர்கள் சாகவில்லை. இருக்கிறார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் இறந்திருக்கவே வாய்ப்பதிகம்” என்றான் கர்ணன்.

“இல்லை, அவர்கள் இருக்கிறார்கள்” என்றான் துரியோதனன். “அவர்களின் எலும்புகளை நான் பார்த்தேன். ஒருகணம்தான். உடனே பார்வையை விலக்கி கொண்டுசெல்லும்படி சொல்லிவிட்டேன். பிறகு ஒருகணம்கூட அவற்றை நான் நினைக்கவில்லை. நினைக்காமலிருக்க எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவை நினைவில் எழவே இல்லை, அவ்வளவுதான். ஆனால் ஒரே ஒருமுறை கனவில் வந்தன. அன்று எழுந்து அமர்ந்து உடல்நடுங்கினேன். பின் அதையும் முழுமையாக மறக்கும் வித்தையை என் அகம் கண்டுகொண்டது.”

அவன் பேசட்டும் என்று கர்ணன் காத்திருந்தான். “என்னிடம் ஒரு தாலத்தில் எலும்புகளை காட்டுகிறார்கள். நான் ஒவ்வொரு எலும்பாக எடுத்து இது வெள்ளாட்டின் எலும்பு இது சிறுத்தையின் எலும்பு என்று சொல்கிறேன். விழித்துக்கொண்டேன்” என்றான் துரியோதனன். “நான்காண்டுகள் கழித்து இதோ நடந்துவருகையில் சற்றுமுன் கண்டது போல அக்கனவை என் அகத்திலிருந்து எடுத்தேன். அந்த எலும்புகளில் யானையின் எலும்புகள் இல்லை.”

கர்ணன் ரதத்தின் தூணைப்பற்றிக்கொண்டு நின்றான். அவன் முகத்தை தலைதூக்கி நோக்கிய துரியோதனன் “ஆம், அவை வேறு ஆறுபேரின் எலும்புகள். அவர்கள் தப்பிவிட்டார்கள். அந்தத் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றான். தேரில் ஏறிக்கொண்டு “காந்தார அரண்மனை” என்று ஆணையிட்டபின் “ஒவ்வொன்றாக நினைவிலெழுகின்றது. அனைத்தையும் என் அகம் அடையாளம் கண்டு எண்ணி எடுத்து என் அகத்தில் சேர்த்து வைத்திருக்கிறது. அந்தத் திட்டத்தை அறிந்துகொண்டவர் விதுரர். அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அவர் மட்டும் ஒருவகை தவிப்புடனேயே இருந்தார். அதை அப்போதே கணிகர் கண்டு சொல்லவும் செய்தார். ஆனால் அதை அப்போது ஒதுக்கிவிட்டோம்.”

“வெற்றிகரமாக அனைத்தும் நிகழவேண்டுமே என்ற கவலையில் வெற்றிகரமாக நிகழும் என்ற பொய்நம்பிக்கையை மனிதர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்” என்றான் கர்ணன் புன்னகைத்தபடி. “ஆகவே அதற்கு எதிரான அனைத்து சான்றுகளையும் புறக்கணிப்பார்கள். அவற்றைக் கண்டு சொல்பவர்களை ஊக்கத்தை அழிப்பவர்கள் என்றும் அவநம்பிக்கையாளர்கள் என்றும் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் அகம் அனைத்தையும் அறிந்துகொண்டேதான் இருக்கும். அவையெல்லாம் ஆன்மாவின் அடித்தட்டில் மூழ்கி சுஷுப்தியின் சேற்றில் புதைந்து கிடக்கும்.”

“விதுரர் நிலைகொள்ளாதவராக இருந்தார். அவர் பதற்றமடைந்துகொண்டிருக்கையில் சால்வையை மாற்றிமாற்றி அணிவது வழக்கம். அதை அன்று செய்தார். தருமன் அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பும்போது அவர் அவன் தோள்களை பற்றிக்கொண்டு சற்றுதூரம் சென்றார்.” கர்ணன் “அப்படியென்றால் அவருக்கு உறுதியாக உங்கள் திட்டம் தெரியாது. மெல்லிய ஐயம் மட்டும் இருந்திருக்கலாம். அவர் எச்சரித்திருக்கிறார். உறுதியாக அறிந்திருந்தால் போகவேண்டாமென்றே தடுத்திருப்பார்” என்றான்.

“இறுதிக்கணம் வரை அவரிடம் தத்தளிப்பு இருந்துகொண்டே இருந்திருக்கலாம். அவரது உளமயக்கா இல்லை ஐயத்திற்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறதா என்று... ஆகவே பூடகமாக ஏதேனும் சொல்லியிருக்கக்கூடும்” என்று கர்ணன் தொடர்ந்தான். “அந்த ஐயத்தை மட்டும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பிவிட்டால் போதும் என அவர் அறிவார். ஐயம் அகவிழி ஒன்றை திறந்துவிட்டுவிடுகிறது. புறவிழிகளைவிட பன்மடங்கு கூரியது. ஒருபோதும் உறங்காதது. அது ஆபத்தை கண்டுபிடித்துவிடும்.”

துரியோதனன் “ஆம்” என்றான் சிலகணங்கள் கழித்து. “அவர் அந்த ஐயத்தை எப்படி அடைந்தாரென்றும் இன்று என்னால் அறியமுடிகிறது. அவர் குண்டாசியின் முகத்தை பார்த்திருக்கக் கூடும். அந்த அவைக்கூட்டத்திற்குப் பின் அவன் நடுங்கிக்கொண்டே இருந்தான். தனிமையில் அமர்ந்து ஏங்கினான். எவர் விழிகளையும் ஏறிட்டுப்பார்க்க முடியாதவனாக ஆனான். அச்செய்தியை அவன் அகத்தால் தாளமுடியவில்லை.” தேரின் தூணில் தாளமிட்டபின் “ஆனால் அவர்கள் இறந்த செய்தி வந்தபோது அவன் நான் எண்ணியது போல உடைந்து போகவில்லை. அழுதுபுலம்பி காட்டிக்கொடுக்கவுமில்லை. அவன் எளிதாக ஆனதுபோல் தோன்றியது. அவன் முகம் மேலும் தெளிவுகொண்டதாக எண்ணிக்கொண்டேன்.”

“அதுவும் புரிந்துகொள்ளக்கூடியதே” என்றான் கர்ணன். “அந்தச் செய்தியை தாளாமல் அவன் அடைந்த பெருவதை முடிந்துவிட்டது என்ற ஆறுதல்தான் அது. பாண்டவர்கள் மீது கொண்ட அன்பால், அதன் விளைவான குற்றவுணர்ச்சியால் அவன் துயர்பட்டிருப்பான். ஒரு கட்டத்தில் துயர் மட்டுமே பெரிதாக நின்றிருக்கும். அந்தத் துயரிலிருந்து விடுபடுவதை மட்டுமே விழைந்திருப்பான். அதன்பொருட்டு பாண்டவர்களை வெறுக்கவும், அவர்களை அழிக்க சதிசெய்ததை நியாயப்படுத்தவும் முயன்றிருப்பான். அந்த உள்ளப்போராட்டமே அவனை அடுத்தகட்ட வதைக்கு கொண்டுசென்றிருக்கும். அவர்களின் இறப்புச் செய்தி அவனை கணநேரத்தில் விடுவித்திருக்கும். உளையும் கட்டி இருக்கும் விரலை வாளால் வெட்டி வீசுவதற்குநிகர் அது. வாளின்புண்ணை மட்டும் ஆற்றிக்கொண்டால்போதும்.”

துரியோதனன் அதன்பின் ஒன்றும் பேசவில்லை. தேர் காந்தாரமாளிகையின் முற்றத்தில் நின்றபோது தேர்ச்சேவகன் வந்து குதிரையின் சேணங்களை பற்றிக்கொண்டான். துரியோதனன் பாய்ந்து இறங்கி கர்ணனுக்காக காத்து நின்றான். கர்ணன் உயரமானவர்களுக்கே உரிய விரைவின்மையுடன் நீண்டகால்களை மெல்ல எடுத்துவைத்து இறங்கினான். துரியோதனன் “கர்ணா, நான் வியப்பது அதையல்ல. அவர்கள் இறக்கவில்லை என்று தெரிந்ததும் என்னுள் ஏற்பட்ட ஆறுதலையும் நிறைவையும்தான்” என்றான். “இப்போது தேரில்வரும்போது எடையற்ற இறகு போல் உணர்ந்தேன். சென்ற ஏழுவருடங்களில் நான் உண்மையான மகிழ்ச்சியை அடைந்தது இப்போதுதான்.”

கர்ணன் “நீங்கள் அந்தச் சதியை அப்போதே ஏற்றுக்கொண்டிருக்க மாட்டீர்கள் இளவரசே” என்றான். “ஏனென்றால் அச்செயல் உங்கள் தந்தைக்கு உகக்காத ஒன்று. ஒவ்வொரு கணமும் உங்கள் நெஞ்சில் எடையுடன் அமர்ந்திருந்தது அவ்வெண்ணமே” என்றான். துரியோதனன் “ஆம், இதைவிடச் சிறப்பாக என் அகத்தை எவரும் அறிந்துவிடமுடியாது. சென்ற ஏழுவருடங்களில் ஒன்பதுமுறை மட்டுமே நான் தந்தையின் அவைக்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் விழிகளற்றவராக இருப்பது எத்தனை சிறந்தது என எண்ணிக்கொண்டேன். விழியிருந்தால் நான் அவர் பார்வைமுன் உடைந்து சரிந்து கதறியிருப்பேன்” என்றான்.

உரக்க நகைத்து “என் இளையோரின் விழிகளையே என்னால் ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை கர்ணா... இத்தனைநாள் திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் செய்தேன். மதியவெயில் சரிந்தபின்னர் படுக்கை விட்டெழுந்தேன். இங்கே வந்து மாதுலரிடம் சதுரங்கமாடினேன். குடித்தேன். நிலையழிந்து சரிந்து தேரில் விழுந்து விடியற்காலையில் சென்று படுக்கையில் விழுந்தேன். ஏழுவருடங்களை சகடம்சேற்றில் புதைந்த தேரைத் தள்ளுவதுபோல தள்ளி நீக்கிக் கொண்டிருந்தேன்.”

சகுனியின் அணுக்கச்சேவகர் கிருதர் வந்து வணங்கினார். துரியோதனன் “மாதுலர் எழுந்துவிட்டாரா?” என்றான். “அவர் காலையிலேயே எழுந்துவிட்டார்” என்றார் கிருதர். “காலையில்தானே நான் சென்றேன்” என்று துரியோதனன் வியக்க அவர் ஒன்றும் சொல்லவில்லை. “கணிகர் வந்துள்ளாரா?” என்றான் துரியோதனன் மீண்டும். “இல்லை... அவர் பின்மதியம்தான் வருவார்” என்றார் கிருதர். துரியோதனன் “எங்கள் வருகையை அறிவியுங்கள்” என்றான். கிருதர் சென்றதும் “வியப்புதான். மாதுலர் பெரும்பாலும் துயில்வதேயில்லை” என்றான். கர்ணன் புன்னகையுடன் “துயிலும் சகுனித்தேவரை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அவர் பாறைமறைவில் காத்திருக்கும் ஓநாய். கண்களை மூடினாலும் கூட சித்தம் விழித்திருக்கும்” என்றான்.

“அவருக்கு பாண்டவர் உயிருடனிருப்பது தெரிந்திருக்குமா?” என்றான் துரியோதனன். கர்ணன் “உறுதியாகத் தெரிந்திருக்கும்.” என்றான். கிருதர் வந்து “வருக” என்றார். அறைக்குள் கால்களை ஒரு சிறிய பீடம் மீது நீட்டிவைத்து பகடையாடிக்கொண்டிருந்தார் சகுனி. கர்ணனைக் கண்டு அவர் திரும்பியபோது வலியில் முகம் சுளித்து ஒருகணம் கண்களை மூடினார். கர்ணன் “வணங்குகிறேன் காந்தாரரே” என்றான். “சிறப்புறுக” என்று வாழ்த்திய சகுனி அமரும்படி கைகாட்டினார்.

கர்ணன் அமர்ந்ததும் சகுனி “எங்கிருந்தாய்?” என்றார். கர்ணன் “வேசரநாட்டில்... அதன்பின் சிலகாலம் திருவிடத்தில்” என்றான். சகுனி தலையசைத்து “விற்கலைகளில் இங்கிலாதவற்றை கற்றிருப்பாய் என நினைக்கிறேன்” என்றார். கர்ணன் புன்னகைத்தான். “அவன் சென்றபோதிருந்த நிலை அல்ல இப்போது. இன்று அர்ஜுனன் இறந்துவிட்டான். அவன் எவரையும் எதிரியென்றே எண்ணவேண்டியதில்லை” என்றான் துரியோதனன். ஏறிட்டு துரியோதனன் முகத்தை நோக்கியதுமே அவன் சொல்லவருவதென்ன என்று சகுனி புரிந்துகொண்டார். புன்னகையுடன் தாடியைத் தடவி “ஆம், அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்” என்றார்.

சிலகணங்கள் அமைதி நிலவியது. ஒவ்வொருவர் நெஞ்சிலும் ஒரு சொல் எழுந்து ததும்பி கனத்தது. துரியோதனன் “அதை எப்போதிருந்து அறிவீர்கள்?” என்றான். “எலும்புகளைப் பார்த்ததுமே” என்றார் சகுனி. துரியோதனன் உடலை அசைத்தபோது பீடம் முனகியது. பெருமூச்சுடன் எளிதாகி துரியோதனன் “தாங்கள் என்னிடம் சொல்லவே இல்லை. ஒரு சிறு சான்றுகூட உங்கள் சொல்லிலும் செயலிலும் வெளிப்படவில்லை” என்றான். “சொல்லியிருந்தால் உன் உடலிலேயே அது வெளியாகியிருக்கும். உன் உடன்பிறந்தார் உன் விழிகளைக்கொண்டே அதை அறிந்திருப்பார்கள். அதன்பின் அது எவ்வகையிலும் மறைபொருள் அல்ல.”

“ஆம்” என்றான் துரியோதனன். சகுனி சிரித்துக்கொண்டு “ஆகவே அது மறைபொருளாகவே இருக்கட்டுமென எண்ணினேன். அவர்கள் வெளிப்படுவதற்குள் நீ மணிமுடி சூட்டிக்கொள்ள முடியும் என்று திட்டமிட்டேன்” என்றார். கர்ணன் “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்றான். சகுனி “எங்கிருந்தார்கள் என்பது மட்டும்தான் தெரியும்” என்றார். “இடும்பவனத்தில்... அங்கேயே ஏழுவருடங்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அச்செய்தியை நான் அறிந்தேன். அதுவும் மிகநுட்பமாக ஒற்றர் செய்திகளைக்கொண்டு நானே உய்த்தறிந்ததுதான்.”

சகுனியே சொல்லட்டும் என அவர்கள் காத்திருந்தனர். “என் பிழை நான் படைசூழ்தலிலும் கணிகரை நம்பியது” என்றார் சகுனி. “அரசு சூழ்தலில் அவர் நிகரற்றவர். ஆனால் அவரது அனைத்துத் திறன்களும் ஓர் அறைக்குள்தான் நிகழமுடியும். மானுடரின் அகத்தில் வாழும் இருளுக்குள் அவரால் கருநாகம்போல ஓசையின்றி நுழைய முடியும். அதுவே அவரது ஆற்றல். படைசூழ்வது முற்றிலும் வேறானது. அங்கே மனிதன் இயற்கைமுன் நிற்கிறான். மண்ணையும் வானையும் எதிர்கொள்கிறான். தன் அச்சத்தாலும் ஆசையாலும் ஐயத்தாலும் அவன் இயக்கப்படுவதில்லை. தன் அடிப்படை விலங்குணர்வால் இயக்கப்படுகிறான்.”

“ஒருமுறையேனும் படைநடத்திச் செல்லாத எவரும் படைசூழ்பவனின் அகத்தை அறியமுடியாது. அக இருளின் சிறுமைகளில் இருந்து விடுபட்டு அவன் அடையும் ஆற்றலையும் நம்பிக்கையையும் உணர்ந்துகொள்ள முடியாது” என்றார் சகுனி. “அரக்குமாளிகையில் அவர்கள் இல்லை என்றதுமே நான் அதைச்சுற்றி ஆய்வுசெய்யச் சொன்னேன். அந்த மூடன் புரோசனன் நீண்ட சுரங்கப்பாதை ஒன்றை அதற்கு அமைத்திருந்திருக்கிறான், அவன் தப்பிச்செல்வதற்காக. அதனூடாக அவர்கள் தப்பிச்சென்றதை உணர்ந்தேன். கணிகர் அவர்கள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்று எட்டு கணிப்புகளை அளித்தார்.”

“அவர்கள் தங்களுக்கு உதவக்கூடிய நாடுகளுக்கே செல்வார்கள் என்று நான் கணித்தேன். துவாரகைக்குச் செல்லும் வழியில் அவர்களைப் பிடிக்க வலைவிரித்தேன். அவர்கள் மகதத்தை நோக்கி செல்வார்கள் என்றார் கணிகர். ஜராசந்தனிடம் அஸ்தினபுரியை கைப்பற்றி அவனிடமே அளிப்பதாக உடன்படிக்கை இட்டு படைபெற்று அஸ்தினபுரியை தாக்குவார்கள் என்றார். அதை தருமன் செய்யமாட்டான் என்று நான் எண்ணினேன். ஆயினும் அவ்வழியிலும் காத்திருந்தேன்.”

“அனைத்து ஷத்ரியநாடுகளிலும் அவர்களைத் தேடி என் ஒற்றர்கள் அலைந்தனர். சேர்ந்து சென்றால் ஐயத்திற்கிடமாகும் என அவர்கள் பிரிந்துசெல்வார்கள் என்று கணித்தேன். பீமன் ஆசுரநாடுகளுக்கும் அர்ஜுனனும் குந்தியும் யாதவர் நாடுகளுக்கும் தருமன் தொலைதூரக் கடலோர நாடுகளுக்கும் செல்லக்கூடுமென எண்ணினேன். ஏழாண்டுகாலம் ஒவ்வொருநாளும் இங்கிருந்து ஒற்றர்செய்திகளுக்காக செவிகூர்ந்தேன். அவர்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று கணிகர் சொன்ன இடும்பவனத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.”

“இங்கே ஓர் அறையில் இருந்துகொண்டு சிந்திக்கும் மதிசூழ்கையாளன் இடும்பவனத்திற்குள் நுழைவதையே மிகமிகப் பிழையான முடிவாக எண்ணுவான். சித்தச்சமநிலை கொண்ட எவரும் அம்முடிவை எடுக்கப்போவதில்லை என மதிப்பிடுவான். அவர்கள் அயலவரைக் கண்டால் அக்கணமே கொன்று உண்பவர்கள். அவர்களின் காட்டில் அயலவர் வாழ ஒப்பமாட்டார்கள். அதில் எந்தவித சித்தநெகிழ்வும் அறமுறையும் அற்றவர்கள். தன்னந்தனியாக அக்காட்டுக்குள் செல்வது தற்கொலையேதான். அவர்கள் எவ்வகையிலும் பாண்டவர்களின் எதிர்காலத்திற்கு உரியவர்கள் அல்ல. இடும்பவனத்துக்கு அப்பாலுள்ளது மிகப்பெரிய புல்வெளி. மீண்டும் அடர்ந்த காடு...”

“ஆனால் நாம் இப்படி எண்ணக்கூடும் என்பதே இடும்பவனத்தை அவர்களின் முதல்தேர்வாக ஆக்கிவிடுகிறது. பீமனைப்போன்ற ஒரு தோள்வீரனும் பார்த்தனைப்போன்ற வில்வீரனும் இருக்கையில் அங்கு சென்றால்தான் என்ன என்ற துணிச்சல் எழுவதும் இயல்பே” என்றார் சகுனி. “நான் விதுரரை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். அவருக்கு பாண்டவர்கள் இருக்குமிடம் தெரியும் என்று எண்ணினேன். அவருக்கு வரும் அத்தனை செய்திகளையும் அறிந்துகொண்டிருந்தேன். பின்னர் அறிந்துகொண்டேன், அவருக்கே பாண்டவர்கள் இருக்கும் இடம் தெரியாது என. தெரிந்துகொள்ள அவரும் நாடெங்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தார். செய்திகள் ஏதும் வராமை கண்டு அவரும் பதற்றத்துடன் இருந்தார்.”

”அதுதான் என்னை ஏமாற்றியது” என்று சகுனி தொடர்ந்தார். “அவர் அவர்களை இடும்பவனத்திற்குக் கொண்டு சென்று விடும்படி சொல்லவில்லை. கங்கைக்கு அப்பால் கொண்டுவிடும்படி மட்டுமே சொல்லியிருந்தார். அங்குள்ள காட்டைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. கங்கைக்கு அப்பாலுள்ள மலைக்கிராமங்களில் எதிலேனும் பாண்டவர்கள் செல்லவேண்டும், சென்றதுமே செய்தியனுப்பவேண்டும் என அவர் எண்ணியிருந்தார். மிகவும் பிந்தியே அவரும் இடும்பவனம் பற்றி அறிந்தார். அங்கே பாண்டவர்கள் சென்றிருக்கக் கூடுமென அவரும் எண்ணவில்லை.”

“அங்கே செல்லலாம் என்ற முடிவை பார்த்தன் எடுத்திருப்பான்” என்றான் கர்ணன். “இல்லை அது பீமனின் முடிவு. ஏனென்றால் அது குரங்குகளின் காடு. அவை இருக்கும் வரை அவன் படைகளால் பாதுகாக்கப்பட்டவனே. அவை அவனை சாகவிடாது என அவன் அறிவான்” என்றார் சகுனி. “பீமன் அங்கே இடும்பர்குலத் தலைவன் இடும்பனைக் கொன்று அவன் தங்கை இடும்பியை மணந்திருக்கிறான். அவர்களுக்கு ஒரு மைந்தன் பிறந்திருக்கிறான். அவன் பெயர் கடோத்கஜன். இத்தனைநாளும் அவர்கள் அருகே உள்ள சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்திருக்கிறார்கள்.”

“சாலிஹோத்ர குருகுலமா?” என்று கர்ணன் கேட்டான். “அவர்களைப்பற்றி கேள்விப்பட்டதே இல்லையே!” சகுனி “அவர்கள் அதர்வ வேதத்தின் ஒரு பிரிவை சார்ந்தவர்கள். சாலிஹோத்ர மரபு தனக்கென தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் கொண்டது. சாலிதீர்த்தம் என்ற சுனையையும் அதனருகே நின்றிருக்கும் சாலிவிருக்‌ஷம் என்னும் மரத்தையும் அவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் அவர்களின் தெய்வம். அஸ்வசாஸ்திரத்தில் அவர்கள் ஞானிகள். பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை வருடத்திற்கு ஒருமுறை கொண்டுவந்து கங்கைக்கு மறுபக்கம் ரிஷபபுரி என்னுமிடத்தில் உள்ள சந்தையில் விற்பது மட்டுமே அவர்களுக்கும் புறவுலகுக்குமான தொடர்பு. பலநூற்றாண்டுகளாக இப்படித்தான். ஆகவே அவர்களைப்பற்றி நம் மெய்ஞான மரபுகள் எதற்குமே அறிமுகம் இல்லை” என்றார்.

“குந்திதேவி அங்கிருந்து சாலிஹோத்ரரின் மாணவர்கள் வழியாக ஓலைகளை கொடுத்தனுப்பி பாரதவர்ஷம் முழுக்க இருக்கும் தன் ஒற்றர்களிடம் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருமுறைகூட அஸ்தினபுரிக்கோ துவாரகைக்கோ செய்தி அனுப்பவில்லை. நாம் அச்செய்திகளை இடைமறிக்கக் கூடுமென்று எண்ணிய அவர்கள் மதிநுட்பத்தை எண்ணி நான் வியந்துகொண்டே இருக்கிறேன்.” கர்ணன் “எப்படி இப்போது தெரியவந்தது?” என்றான். “சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்து அவர்கள் கிளம்பி கங்கையைக் கடந்தபோதே அவர்களை ஒற்றர்கள் கண்டுகொண்டார்கள். அதன்பின்பே அவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரிந்தது.”

துரியோதனன் “இப்போது அவர்கள் எங்கே?” என்றான். “கங்கையைக் கடந்து சபரிதீர்த்தம் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து காளகூடக் காட்டுக்குள் சென்றுவிட்டார்கள்.” துரியோதனன் எழுந்து “காளகூடக் காட்டுக்கா? அப்படியென்றால் அவர்கள் சத்ராவதிக்குள் நுழையப்போகிறார்கள்” என்றான். “அங்கே அஸ்வத்தாமன் ஆள்வதை அவர்கள் அறிவார்கள். அவன் அர்ஜுனன் மீது காழ்ப்புகொண்டவன். அவர்கள் நேராக காடுவழியாக உசிநாரர்களின் நிலத்துக்குத்தான் செல்வார்கள். உசிநாரபூமி வெறும் மலைக்காடு. மலைவேடர்களும் யாதவர்களும் வாழும் ஓரிரு சிற்றூர்கள் மட்டும் கொண்டது.”

“அவர்கள் அங்கே ஏன் செல்லவேண்டும்?” என்று கர்ணன் கேட்டான். “உசிநாரர்களிடம் மணவுறவு கொள்ள அவர்கள் விழைய மாட்டார்கள். உசிநாரர்கள் வேடர்குலத்து அரசர்கள். படைபலம் குறைந்தவர்கள். சத்ராவதியை அஞ்சிக்கொண்டிருப்பவர்கள்.” சகுனி “அங்கமன்னரே, அவர்கள் செல்வது காம்பில்யத்திற்கு. அங்கே துருபதன் தன் மகளுக்கு சுயம்வரம் அறிவித்திருக்கிறான்” என்றார்.

“ஆம், அவளைப்பற்றி கேட்டிருக்கிறேன்” என்று துரியோதனன் சொன்னான். “பிதாமகர் பீஷ்மர் அவளை எனக்காகக் கேட்டு அவரே நேரில் சென்று துருபதனிடம் பேசினார். அவளுக்கு சுயம்வர அறிவிப்பு வரும், அப்போது வாருங்கள் என்று துருபதன் சொல்லிவிட்டார்.” சகுனி “அவர் அப்படி சொல்லவில்லை என்றால்தான் வியப்பு. அவள் பேரழகி என்கிறார்கள். அரசு சூழ்தலில் நிகரற்றவள் என்று ஷத்ரியநாடுகள் முழுக்க அறியப்பட்டுவிட்டாள். அனைத்தையும் விட அவள் பிறவிநூலை கணித்த நிமித்திகர் அனைவருமே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆவாள் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

துரியோதனன் “அப்படியென்றால் மகதனும் வந்து வாயிலில் நின்றிருப்பான். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியாக ஆவதுதானே அனைவருக்கும் கனவு?” என்றன். சகுனி புன்னகைத்து “அது வெறும் கனவு மட்டும் அல்ல. பாஞ்சாலம் இன்று வைத்திருக்கும் படைகளையும் அவற்றை தலைமைதாங்கி நடத்தும் ஐந்து குலங்களைச் சேர்ந்த பன்னிரு இளவரசர்களையும் கொண்டு நோக்கினால் அது ஒரு பெரும் வாக்குறுதியும்கூட” என்றார்.

“அங்கு செல்கிறார்களா?” என்று கர்ணன் தனக்குத்தானே என சொன்னான். “ஆம், துருபதன் இன்று நடுநிலை எடுக்க விழைகிறான். எவருக்கு பெண் கொடுத்தாலும் பகைமையை ஈட்டநேரும். இளவரசி கணவனை தேர்வுசெய்தால்கூட அது அரசியல் சூழ்ச்சியாகவே கருதப்படும். படைக்கலப்போட்டி ஒன்று வைத்து வெல்பவனுக்கே இளவரசி என்றால் ஷத்ரியர்கள் எவரும் எதிர்க்கமுடியாது. வென்று இளவரசியை மணப்பவனை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்” என்றார் சகுனி. “அதுவே பாண்டவர்களை ஈர்க்கிறது. அர்ஜுனனும் பீமனும் செல்வது அதை எண்ணியே. அங்குள்ள உடல்வலுப்போட்டிகளில் பீமன் வெல்லமுடியும். விழிகூர்மைப் போட்டிகளில் அர்ஜுனன் வெல்வான்.”

அவர்கள் அவரது சொற்களை முன்னரே ஆன்மாவால் கேட்டுவிட்டிருந்தனர். சகுனி “அவர்களை வெல்லவேண்டும் என்றால் நீங்களிருவரும் செல்லவேண்டும்” என்றார். “எங்கோ ஒரு களத்தில் கர்ணன் அர்ஜுனனையும் தார்த்தராஷ்டிரன் பீமனையும் எதிர்கொண்டாகவேண்டும். மண்ணுக்காக நிகழும் அந்தப்போர் இன்றே பெண்ணுக்காக நிகழட்டுமே!”

“ஆம் மாதுலரே, அதுவே சிறந்த வழி. முதலையை விழுங்கிய மலைப்பாம்பின் கதையை இளமையில் கற்றிருக்கிறேன். அதுபோல இருக்கிறது பாண்டவர்களுக்கும் நமக்குமான போர். வாழ்வுமில்லை, சாவுமில்லை. இங்கே இப்படி முடிந்தால் நன்றே. எந்த முடிவென்றாலும்” என்றபின் துரியோதனன் திரும்பி கர்ணனிடம் “என்ன சொல்கிறாய்?” என்றான். “ஆம்” என்றான் கர்ணன்.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 2

கர்ணன் காலையில் துரியோதனனின் மாளிகைக்குச் சென்றபோது கூடத்தில் சுபாகுவும் ஜலகந்தனும் அமர்ந்திருந்தனர். அவனைக்கண்டதும் எழுந்து வணங்கி “மூத்தவர் படைக்கலச்சாலையில் இருக்கிறார் மூத்தவரே” என்றனர். “அழைத்துச்செல்லுங்கள்” என்றான் கர்ணன். அவர்கள் அவனை அழைத்துச்செல்லும்போது மெல்லிய புன்னகையுடன் “நெடுநாட்களுக்குப் பின்னர் கதாயுதத்தை கையில் எடுக்கிறார் இல்லையா?” என்றான். “ஆம், மூத்தவரே. அவருக்கு என்ன ஆயிற்று என்றே எங்களுக்கு அச்சமாக இருந்தது. குடிப்பதும் உறங்குவதுமன்றி எதையுமே அவர் செய்யவில்லை. இப்போது மீண்டுவிட்டார்.”

கர்ணன் புன்னகையுடன் தலையசைத்தான். “விடிகாலையில் எழுந்து கதையை எடுத்தார். இன்னும் கீழே வைக்கவில்லை. ஏழுவருட இடைவெளிக்குப்பின் இப்படி ஒரேவிரைவாக ஈடுபடலாகாது என்று களப்பயிற்சியாளர் சொன்னார். ஆனால் மூத்தவர் எதையும் செவிகொள்ளவில்லை.” கர்ணன் இடைநாழியினூடாகச் செல்கையில் ஒரு தூணருகே ஆடியபடி நின்று கீழே விழுந்து கிடந்த சால்வையை குனியாமல் எடுக்க முயன்றுகொண்டிருந்த குண்டாசியைக் கண்டு ஒரு கணம் திகைத்து “அது யார், குண்டாசியா?” என்றான். குண்டாசி மிகவும் மெலிந்து தோளெலும்புகள் புடைத்து கைமூட்டுகள் திரண்டு கழுத்தில் எழுந்த குரல்வளையுடன் எலும்புருக்கி நோயாளி போல் இருந்தான்.

”அவனால் பாண்டவர்கள் இறந்த விதத்தை தாளமுடியவில்லை” என்றான் ஜலகந்தன். கர்ணனுக்கு எவ்வளவு தெரியும் என அவன் ஐயப்படுவது தெரிந்தது. அவன் விழிகள் சுபாகுவின் விழிகளை தொட்டுச்சென்றன. கர்ணன் “ஆம், பெரிய சதிகளை முதிரா மனங்களால் தாள முடிவதில்லை” என்றான். சுபாகு அவனை அறியாமலேயே ஜலகந்தனை நோக்கிவிட்டு அருகே வந்து கர்ணனின் கைகளை பற்றிக்கொண்டு “என்னாலும் மாதக்கணக்கில் துயில முடியவில்லை மூத்தவரே. பித்துப்பிடித்தவனைப்போல இருந்தேன். இப்போதுகூட அவர்கள் என் கனவில் வருகிறார்கள். அவர்களுக்கு ஆலயம் அமைத்துவிட்டால் சரியாகிவிடும் என்றான் நிமித்திகன். ஆனால் பிதாமகர் பீஷ்மர் அதற்கு ஒப்பவில்லை. அவர் வேறு நிமித்திகர்களைக் கொண்டுவந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் ஆலயம் அமைத்தால் போதுமென்று சொல்லிவிட்டார்” என்றான்.

குண்டாசி அவனை திரும்பி நோக்கினான். அவன் கண்கள் குழிந்து எலும்புவளையத்திற்குள் கலங்கிய சேற்றுக்குழி போல அசைந்தன. கன்ன எலும்புகள் புடைத்து பற்களுடன் மோவாய் முன்னால் எழுந்து அவன் முற்றிலும் இன்னொருவனாக தெரிந்தான். சுபாகு “பெருங்குடிகாரன். காலைமுதல் இரவு வரை குடிதான்” என்று மெல்ல சொன்னான். குண்டாசி கர்ணனை நோக்கி கைவிரலைச் சுட்டி சித்தம் அசைவிழந்து ஒருசில கணங்கள் நின்றான். பின்னர் “நீங்கள் கர்ணன்... ஆ!அங்கநாட்டரசே! அங்க மன்னரே! ஆ!” என்றான். சுபாகு “விலகு... தள்ளிப்போ” என்று கையை ஓங்கினான். குண்டாசி வாயில் வழிந்த எச்சிலை கையால் துடைத்து “ஆகா, அங்க மன்னர்! ஆ!” என்றான்.

கர்ணன் அவனிடம் ஏதும் பேசாமல் கடந்து சென்றான். குண்டாசி ”அங்க மன்னரே, நான் மதுவருந்தியது உண்மை. மது என்பது... ஆனால் அதை விடுங்கள். நல்லவர்கள் மது அருந்தலாம் என்று மருத்துவ நூல்கள் சொல்கின்றன. அதுவும் தேவையில்லை. நீங்கள் அங்க மன்னர். ஆனால்...” என்று சொல்லி சிரித்து “எனக்குத் தெரியும். நீங்கள் துரியோதன மாமன்னரை எரித்துக்கொன்றுவிட்டு அஸ்தினபுரியின் அரசனாக விரும்புகிறீர்கள்... அங்க மன்னரே, நில்லுங்கள்” என்று குழறினான். சுபாகு திரும்பி “போடா” என்று அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான்.

“ஆ” என்று கன்னத்தைப் பொத்தி அலறியபடி குண்டாசி நிலத்தில் குந்தி அமர்ந்தான். “எல்லோரும் என்னை அடிக்கிறார்கள்! என்னை அடிக்கிறார்களே” என்று அழத்தொடங்கினான். மறுபக்கம் படியிறங்கி உள் முற்றத்தை அடைந்தபோதே களத்தின் ஓசைகள் கேட்கத் தொடங்கின. “முன்கால், மறுகால், துதி, முன்கால், மறுகால், துதி, முன்கால், மறுகால்” என்று களத்தாசான் உரக்க வாய்த்தாரி சொல்லிக்கொண்டிருந்தார். கர்ணன் களத்தை அடைந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். துச்சாதனனிடம் கதை பொருதிக்கொண்டிருந்த சத்யசந்தனின் தோளில் கதை விழ அவன் ”ஆ” என்று அலறி பொத்திக்கொண்டு அமர்ந்தான்.

துச்சாதனன் ”எந்நிலையிலும் உன் விழி விலகக்கூடாது. கதை ஒரு அடியைத்தான் தேடுகிறது. இரண்டாவது அடியை வாங்கும் வீரன் மிகக்குறைவே” என்றபின் “வருக மூத்தவரே, நேற்றே வந்துவிட்டீர்கள் என்றார் மூத்தவர்” என்றான். “ஆம், நேற்று முழுக்க காந்தார மாளிகையில் இருந்தேன்” என்றபடி கர்ணன் சென்று மரப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். அப்பால் நின்றிருந்த யுயுத்சுவை நோக்கி சிரித்து “இங்கே இவன் என்ன செய்கிறான்?” என்றான். துச்சாதனன் சிரித்து “அவன் ஒருநாள் இந்த அஸ்தினபுரியை ஆள்வான் என்று நிமித்தக்குரல் உள்ளது மூத்தவரே. கதையை கண்ணாலாவது பார்த்து வைத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான்.

யுயுத்சு நாணத்துடன் புன்னகை செய்து அருகே வந்து வணங்கினான். அவன் மெல்லிய வெளிறிய தோள்களும் விலாவெலும்புகள் எழுந்த சற்று வளைந்த உடலும் கொண்ட இளைஞனாக ஆகியிருந்தான். “விதுரரின் புதிய செல்லப்பிராணியா?” என்று அவன் தோளை அடித்தபடி கர்ணன் கேட்டான். சிரித்தபடி துச்சாதனன் “ஆம், தருமர் மறைந்தபின்னர் இவனை தோளிலேற்றிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கவளம் உணவுக்கும் அறநூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவனை கொண்டுவந்துவிட்டார்” என்றான். ”பத்துநாள் பட்டினிபோட்டால் அந்த அறநூல்களை எரித்து சமைத்து உண்ணும் நிலைக்கு வந்துவிடுவான்” என்றான் கர்ணன்.

அந்நேரம் முழுக்க அவன் விழிகள் துரியோதனனையே நோக்கிக்கொண்டிருந்தன. வியர்வையின் மேல் புழுதி படிந்து கரைந்து வழிந்துகொண்டிருந்த உடலுடன் துரியோதனன் கனத்த கதையை சுழற்றி அடித்துக்கொண்டிருக்க அவனைச்சூழ்ந்து துச்சலனும் சுவர்மனும் சோமகீர்த்தியும் உபநந்தனும் சலனும் விகர்ணனும் துராதாரனும் வீரபாகுவும் நின்று கதைகளால் அடித்துக்கொண்டிருந்தனர். எட்டு கதைகளையும் அவன் தன் கதாயுதத்தால் தடுத்துக்கொண்டிருந்தான்.

மூச்சுவாங்க அவன் நிறுத்தி புருவங்களின் வியர்வையைத் துடைத்தபின் திரும்பி நோக்கினான். “தசைகள் உடைந்திருக்கும்...” என்றான் கர்ணன். “ஆம், நாளை கடும் வலி இருக்கும். நீராட்டறைக்கு இரு வைத்தியர்களை வரச்சொல்லியிருக்கிறேன்” என்றபடி துரியோதனன் அருகே வந்தான். பிறர் விலகிச் சென்றனர். அவர்கள் பேசிக்கொள்ள வசதியாக துச்சாதனன் பிற தம்பியரை மறுபக்கம் இருந்த சிறுகளத்திற்கு அழைத்துச்சென்றான். துரியோதனன் அருகே இன்னொரு பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

“என்ன சொல்கிறார் மாதுலர்?” என்று துரியோதனன் வெயில் பரவிய செம்மண் முற்றத்தை நோக்கியபடி கேட்டான். “பாஞ்சாலத்திற்கு சுயம்வரத்துக்குச் செல்வதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால்...” என்றபின் சிலகணங்கள் தயங்கி “அவருக்கு ஐயங்கள் இருக்கின்றன” என்றான் கர்ணன். “என் மீதா? நான் பீமனிடம் தோற்பேன் என்றா?” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். சினத்துடன் விழிகளைத் தூக்கிய துரியோதனன் “ஒருவாரம்... என் தசைகளை இரும்பென ஆக்கிக் காட்டுகிறேன்” என்றான். கர்ணன் புன்னகைத்து “அவன் எப்போதுமே இத்தகைய பயிற்சியில் இருந்துகொண்டிருப்பவன்” என்றான்.

“ஆம், ஆனால் அவன் வெறும் குரங்கு. நான் யானை. என் அறிவு பலமடங்கு பெரியது. பாரதவர்ஷத்தின் மாபெரும் கதாயுதஞானியின் மாணவன் நான்“ என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகையுடன் “அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் ஐயம்கொள்ள அடிப்படை இருக்கிறது என்கிறேன். பீமன் மட்டும் நமக்கு அறைகூவல் அல்ல. ஜராசந்தனும் வருகிறான். அவனும் மாவீரன் என்றே சூதர்கள் சொல்கின்றனர். அவனுக்கு ஆசுரகுலத்தின் கதாயுதமுறைகள் தெரிந்திருக்கலாம். இன்றுவரை அவனை நாம் எவரும் எந்தக் களத்திலும் பயிற்சியிலும் சந்தித்ததில்லை. அவன் யாரென்றே நாமறியோம்” என்றான்.

துரியோதனன் “ஆகவே?” என்று சினத்துடன் கேட்டான். “ஆகவே வாய்ப்புகளை மிகைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார் காந்தாரர்” என்றான் கர்ணன். துரியோதனன் அவனை சினம் மின்னிய சிறிய விழிகளால் நோக்கி சிலகணங்கள் கழித்து “அப்படியென்றால் நீ? உன்னை எவர் வெல்லப்போகிறார்கள்? அர்ஜுனனா?” என்றான். “இல்லை, அவனை நான் வெல்லமுடியும். நான் பரசுராமனிடம் வித்தைகற்று மீண்டிருக்கிறேன். அவன் வெறுமனே காடுசுற்றியிருக்கிறான்” என்றான் கர்ணன். “ஆனால் அங்கே இளைய யாதவன் வருகிறான் என்று ஒற்றுச்செய்தி வந்துள்ளது.”

துரியோதனன் “அவன் வில்லாளி அல்ல என்றுதானே சொல்கிறார்கள்” என்றான். “அவனுடைய படைக்கலம் சக்கரம். ஆனால் அவன் வில்லில் இப்புவியில் இன்றிருக்கும் எவரைவிடவும் மேலானவன் என்று சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான் கர்ணன். “அவன் யாரென்றும் நாமறியோம். என்ன நிகழவிருக்கிறது என்று இங்கிருந்து இப்போது நம்மால் சொல்லிவிடமுடியாது என்பதே உண்மை.”

பெருமூச்சுடன் துரியோதனன் தளர்ந்தான். “என்ன திட்டம் வைத்திருக்கிறார் மாதுலர்?” என்றான். கர்ணன் “இன்று நீங்கள் பாஞ்சாலத்தின் சுயம்வரத்துக்கு அஸ்தினபுரியின் வெறும் இளவரசராகவே செல்ல முடியும். எந்த அடையாளங்களும் இல்லாதவராக. அதனால் கூட நீங்கள் வெல்லாமலிருக்கலாம்” என்றான். துரியோதனன் புரியாமல் பார்க்க “சுயம்வரங்கள் எங்குமே அதை நிகழ்த்தும் அரசனின் சிற்பிகளின் பங்களிப்புடன்தான் அமைக்கப்படுகின்றன. யார் வெல்லவேண்டும் என அந்த அரசன் பெரும்பாலும் முன்னரே முடிவெடுத்திருப்பான்” என்றான் கர்ணன்.

“அப்படி செய்யமாட்டார்கள். அது இழுக்கு” என்று துரியோதனன் சொல்ல கர்ணன் புன்னகையுடன் தலையை அசைத்து “அரசியலில் எதுவும் நிகழும்...” என்றான். “அது வஞ்சம்” என்று துரியோதனன் குரலை எழுப்ப “எரிமாளிகை அமைப்பதும் வஞ்சமே” என்றான் கர்ணன். துரியோதனன் திகைத்ததனால் உயர்ந்திருந்த அவன் கனத்த கைகள் உயிரற்றவை போல தொடைமேல் விழுந்தன. “அனைத்தும் அரசு சூழ்தலில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் ஏன் வாய்ப்புகளை அளிக்கவேண்டும்?”

துரியோதனன் பெருமூச்சுடன் உடலைத் தளர்த்தி கால்களை நீட்டிக்கொண்டான். “காந்தாரர் அதற்குத்தான் திட்டமொன்று வைத்திருக்கிறார்” என்றான் கர்ணன். துரியோதனன் ஆர்வமில்லாமல் அமர்ந்திருந்தான். “நாம் கிளம்புவதற்குள் உங்களை அரசிளங்குமரராக அறிவிக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்.” துரியோதனன் கசப்பான புன்னகையில் உதடுகள் கோணலாகி இழுபட “விளையாடுகிறாரா? ஏழுவருடங்கள் நடக்காததா இனிமேல்?” என்றான். “ஏழுவருடங்கள் இக்கனி கனிந்து வந்தது என்று ஏன் எடுத்துக்கொள்ளலாகாது?” என்றான் கர்ணன்.

“என்ன செய்யவிருக்கிறார்?” என்றபடி துரியோதனன் எழுந்துகொண்டு கைகளை தூக்கினான். “அரசரின் அவையில் பாஞ்சாலத்தின் சுயம்வரத்தைப்பற்றி சொல்லப்போகிறார். அது அரசர் காந்தாரத்திற்கு மகட்கொடை பெறச் சென்ற நிகழ்ச்சிக்கு நிகரானது. அன்று பீஷ்மபிதாமகர் அவரை அஸ்தினபுரியின் அரசிளங்குமரனாக அறிவித்துவிட்டுச் சென்றமையால்தான் அது நிகழ்ந்தது. இன்று அவர் மைந்தனுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரவிருக்கிறார். அரசருக்கு அது புரியும்.”

”அவர் ஏற்பதல்ல இங்கே வினா” என்று குனிந்து நிமிர்ந்தபடி துரியோதனன் சொன்னான். “நமது அவை ஏற்கவேண்டும். குலத்தலைவர் ஏற்கவேண்டும்... விதுரர் ஏற்கவேண்டும். அனைத்தையும் விட பிதாமகர் பீஷ்மர் ஏற்கவேண்டும்.” கர்ணன் புன்னகைத்து “அவர்கள் மறுக்கமுடியாத ஒரு இக்கட்டில் அகப்பட்டுக்கொள்ளும் இடம் ஒன்று அமைந்துள்ளது. அதை உணர்ந்துதான் காந்தாரரும் கணிகரும் இந்தத் திட்டத்தை அமைத்துள்ளனர்” என்றான்.

“இளவரசே, இன்று பாரதவர்ஷத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஆண்மகன் என்றால் அது இளையயாதவன்தான். பெண் என்றால் பாஞ்சாலன் மகள் மட்டுமே. அவளைப்பற்றி ஒவ்வொருநாளும் சூதர்பாடல்களை கேட்டுக்கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் நமது மக்கள். அவள் கைகளில் சங்கும்சக்கரமும் இருப்பதனால் அவள் பாரதவர்ஷத்தை ஆள்வது உறுதி என்று நிமித்திகர் சொல்கிறார்கள். அவள் இங்கே நம் நகரின் அரசியாக வரவேண்டுமென்ற ஆசை இங்குள்ள ஒவ்வொருவர் அகத்திலும் உள்ளது.”

“அதைவிட முதன்மையானது, அவள் பிற ஷத்ரிய அரசர்கள் எவருக்கும் உரிமைப்படலாகாது என்பது. அது ஓர் அச்சமாகவே இங்கே படர்ந்துள்ளது” கர்ணன் சொன்னான். துரியோதனன் புன்னகைத்து ”பாஞ்சாலன் மகளின் சுயம்வரம் பாரதவர்ஷத்தையே பதற்றமடையச்செய்துவிடும் போலிருக்கிறதே” என்றான். “அது தொடங்கி பலமாதங்களாகின்றன. சுயம்வரத்திற்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டன என்று சூதர்கள் பாடத்தொடங்கி ஒரு வருடமாகிறது. அச்செய்தியை அறிந்த நாள்முதல் ஆட்டத்தின் இறுதிப் பகடைக்கு இருபக்கமும் நின்றிருப்பவர்கள் போலிருக்கிறார்கள் பாரதவர்ஷத்தின் மக்கள் அனைவரும்.”

”ஆம்... இது ஒரு முதன்மையான தருணம். வாய்ப்பானது” என்று சொன்னபடி இடையில் கையூன்றி துரியோதனன் எழுந்து நின்றான். “ஆனால், ஷத்ரியமன்னர்கள் அவளை கொள்ளக்கூடும் என்ற அச்சம் சென்ற சில மாதங்களாகவே இல்லாமலாகி வருகிறது என்று காந்தாரர் சொல்கிறார். அவளை இளைய யாதவனே வெல்லமுடியும் என பெரும்பாலும் உறுதி கொண்டுவிட்டார்கள்” கர்ணன் சொன்னான்.

“அது இயல்வதா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் துரியோதனன். “வீரம் மட்டுமே கணிக்கப்படும் என்றால் அவனன்றி எவரும் அவளை வெல்ல முடியாது” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கண்களை நோக்கி நின்றான். “இளவரசே, அவன் ஒருவகையில் அமானுடன். அவனுக்கிணையாக இன்னொரு வீரன் இனி இப்பாரதமண்ணில் தோன்றப் போவதில்லை. புராணங்கள் சொல்லும் ராகவ ராமனுக்கு நிகரானவன்” என்றான் கர்ணன். “ஆனால் பாஞ்சாலன் அவனுக்கு மகள்கொடை கொடுக்க தயங்கலாம். அவன் யாதவன், பாஞ்சாலம் தொன்மையான ஷத்ரிய அரசு.”

துரியோதனன் பெருமூச்சுவிட்டு “ஆக, நமது குடி மட்டுமே நமக்கு துணையாக உள்ளது” என்றான். “ஆம், இன்று நமது மக்கள் அனைவருமே யாதவ கிருஷ்ணன் பாஞ்சாலத்துக் கிருஷ்ணையை மணந்துசெல்லக்கூடும் என அஞ்சுகிறார்கள். அவன் அமைத்துள்ள மாநகரைப்பற்றியும், அங்கே குவிந்துகொண்டிருக்கும் செல்வம் பற்றியும் இங்கே ஒவ்வொரு நாளும் சூதர் பாடுகிறார்கள். அவனிடம் இல்லாதது குலக்குருதி ஒன்றே. பாஞ்சாலன்மகள் அதையும் அளிப்பாள். அவள் அரியணை முன் தலைவணங்க இங்குள்ள சிறிய ஷத்ரிய அரசுகளுக்கு அகத்தடை ஏதுமிருக்காது. அதையே இன்று யாதவன் நாடுகிறான்.”

“அத்துடன் பாஞ்சாலனின் பெரும்படையும் பன்னிரு படைத்தலைவர்களும் யாதவனுக்கு கங்கைக் கரையில் ஆதிக்கத்தை அளிக்கும். அவனிடமுள்ள குறைபாடு என்பது அவன் நாடு தென்கிழக்கே நெடுந்தொலைவில் உள்ளது என்பதே. கங்கைக்கரையில் பாஞ்சாலத்தின் துணை அவனுக்குக் கிடைக்கும் என்றால் சிந்துவெளியும் கங்கைவெளியுமாக ஆரியவர்த்தமே அவர்களிடம் சென்றுவிடும்.”

“அதன் முதல் பலியாடு அஸ்தினபுரியே என அறியாத வீரர் இங்கில்லை. பாஞ்சாலத்திற்கும் மதுராவிற்கும் நடுவே இருக்கிறது அஸ்தினபுரி. அப்படி ஒரு மணம் நிகழுமென்றால் ஆயிரமாண்டுகால நிறைவரலாறு கொண்ட அஸ்தினபுரி அழிந்தது என்றே பொருள்” என்றான் கர்ணன். ”யாதவன் பெருங்கனவுகள் கொண்டவன். இப்பாரதவர்ஷத்தை வெல்லவே அவன் விழைகிறான். ஒரு யாதவ அரசை அமைப்பதற்கல்ல. மேலும் குந்தியும் பாண்டவர்களும் கொல்லப்பட்டபின் அவனுக்கு இவ்வரசின் மேல் எந்தவிதமான பற்றும் இருக்க வாய்ப்பில்லை.”

“ஆகவே வேறு வழியே இல்லை. பாஞ்சாலன் மகளை அஸ்தினபுரி அடைந்தாகவேண்டும். யாதவன் அடையவும் கூடாது. இன்று இந்நகரின் அத்தனை உள்ளங்களும் விழைவது அதையே” என்று கர்ணன் சொன்னான். “இந்த நிலையில் யாதவனைவிட உங்களை ஒருபடி மேலாக பாஞ்சாலன் எண்ணுவதற்கான காரணம் ஒன்றே. நீங்கள் தொன்மையான ஷத்ரிய கொடிவழியில் முடிசூடவிருப்பவர் என்ற அடையாளம். அவ்வடையாளத்துடன் சென்றாலொழிய நீங்கள் அவளை வென்றுவர முடியாது.”

”அதை தந்தையிடம் அவர் ஏற்கும்படி சொல்லமுடியுமா?” என்றான் துரியோதனன். “அவரிடம் சிறிதுசிறிதாகச் சொல்லி புரியவைத்துவிட்டார்கள். இன்று அவர் உள்ளம் நம் பக்கம் வந்துவிட்டது.” துரியோதனன் முகம் மலர்ந்து அமர்ந்துகொண்டு கர்ணன் கைகள் மேல் தன் கைகளை வைத்து “உண்மையாகவா?” என்றான். “ஆம், உங்களுக்கு முடிசூட அவையில் பீஷ்மர் ஒப்புக்கொண்டார் என்றால் அவருக்கு முழு ஒப்புதலே என்று காந்தாரரிடம் நேற்று அவர் சொல்லிவிட்டார்.”

”பீஷ்மர் ஒப்புக்கொள்ள மாட்டார். பாண்டவர்கள் இறக்கவில்லை என அவர் விதுரரிடமிருந்து அறிந்திருப்பார்” என்றான் துரியோதனன். “ஆம், ஆனால் அதை அவரால் அரசரிடம் சொல்லமுடியாது. இக்கட்டில் இருப்பவர் விதுரர். நீங்கள் மணிமுடிசூட ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் தன் மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப யாதவ கிருஷ்ணன் பாஞ்சாலியை ஏற்கவேண்டும் என விழைகிறார் என்றே பொருள் என்று அரசரை நம்பவைத்துவிட முடியும். உங்கள் மணிமுடிசூடலுக்கு எதிராக ஒரு சொல், ஓர் அசைவு விதுரரிடமிருந்து வெளிவந்தால் கூட மொத்த அவையுமே அவரை துரோகி என்று எண்ணும்படி செய்வார் கணிகர்.”

துரியோதனன் தலையசைத்தான். “அஸ்தினபுரியின் அரசப்பேரவையை நாளை மறுநாள் மாலையில் கூட்டும்படி அரசாணை சென்றுவிட்டது. குலத்தலைவர்கள் வந்து கூடுவார்கள். பேரவையில் ஒரே உணர்வுதான் இருக்கும். எப்படியேனும் பாஞ்சாலத்தை வென்றெடுப்பது, பாஞ்சால இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக்குவது. அதற்குத் தேவையான எதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதை மறுக்கும் எதையும் கடும் சினத்துடனேயே எதிர்கொள்வார்கள்” என்றான் கர்ணன். “அவை உங்களுக்கு முடிசூட்டப்படுவதை முழுமனதுடன் ஏற்கும் என்பது உறுதி. அதன்பின் பீஷ்மர் ஏதும் சொல்லமுடியாது.”

துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “இதைப்போல பல தருணங்கள் என் கைகள் வழியாக நழுவிச்சென்றிருக்கின்றன கர்ணா. அதுதான் எனக்கு அச்சமூட்டுகிறது” என்றான். கர்ணன் ”இளவரசே, இதுபோல ஒரு தருணம் இதற்குமுன் அமைந்ததில்லை” என்றான். “இன்றுவரை அஸ்தினபுரியின் பேரவை ஒரேகுரலில் உங்களுக்காக பேசியதில்லை. நாளை மறுநாள் அது பேசும். அவர்கள் அவைக்கு வந்து அமர்வதற்குள்ளாகவே அந்த முடிவை எடுக்கும் உணர்வெழுச்சிகள் அவர்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும்.”

“கணிகர் ஒன்று சொன்னார். அரசுசூழ்தலில் முதன்மையான ஞானம் அது” என்று கர்ணன் தொடர்ந்தான். “கல்லையும் மண்ணையும் வெற்றிடத்தில் இருந்து உருவாக்க முடியாது. அதைப்போலவே நியாயங்களையும் உணர்ச்சிகளையும்கூட ஏதுமில்லாமல் உருவாக்கிவிட முடியாது. உண்மையான சந்தர்ப்பம் ஒன்று அமையவேண்டும். அதன் மேல் நியாயங்களையும் உணர்ச்சிகளையும் உருவாக்கலாம். அவற்றை மேலும் மேலும் வளர்த்து எடுக்கலாம் என்றார் கணிகர். அதைக்கேட்டு நான் சிலகணங்கள் வியந்து சொல்லிழந்துபோனேன்.”

“வெற்றிடத்தில் நியாயங்களை உருவாக்கலாமென நினைப்பவர்கள் பிறரது அறிவுத்திறனை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றார் கணிகர். ஒரு நியாயத்தை நாம் சொல்லத் தொடங்கும்போது கேட்பவர்களில் முதலில் உருவாகவேண்டியது நம்பிக்கை. கூடவே எழும் அவநம்பிக்கைகளையும் ஐயங்களையும் மெல்லமெல்ல களைந்து நம் நியாயத்தை நாம் கட்டி எழுப்பலாம். ஆனால் முதலில் அவநம்பிக்கை உருவாகுமென்றால் அடித்தளத்தில் விரிசல் விழுகிறது. கட்டி எழுப்பஎழுப்ப விரிசல் அகன்றபடியேதான் செல்லும்.”

“தருணங்கள் அமைவதற்காகக் காத்திருப்பதே அரசு சூழ்தலில் முதல் விதி என்று கணிகர் சொன்னார். இது அத்தகைய தருணம். இந்த நியாயங்கள் நாம் உருவாக்கியவை அல்ல. வரலாற்றில் எழுந்து வந்தவை. உண்மையிலேயே பாஞ்சாலத்தை அஸ்தினபுரி இன்று வென்றெடுக்கவில்லை என்றால் அழிவை நோக்கி செல்லும். இந்த நியாயத்துடன் நாம் நமது நோக்கத்தையும் இணைத்துக்கொள்கிறோம். நீந்தும் குதிரையின் வாலை பிடித்துக்கொள்வதுபோல என்றார் கணிகர்.” கர்ணன் புன்னகைத்து “இத்தருணத்துக்காகவே ஏழுவருடம் காத்திருந்தோம் என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான்.

“நான் இளவரசாக முடிசூடுவது நிகழ்ந்தால்கூட பாண்டவர்கள் திரும்பி வந்தால் மணிமுடியை அவர்களுக்கு அளிக்கவேண்டியிருக்கும் அல்லவா?” என்றான் துரியோதனன். “அஸ்தினபுரியின் மணிமுடியுடன் சென்று பாஞ்சாலியை நீங்கள் வென்றுவந்தால் எவரும் அதை சொல்லத் துணியமாட்டார்கள். பாஞ்சாலனும் அதை ஒப்பமாட்டான். உங்கள் தந்தை எண்ணினால்கூட பாண்டவர்களுக்கு நாட்டின் ஒருபகுதியை அளிக்கும் முடிவையே எடுக்கமுடியும். தந்தை இருப்பதுவரை நாம் அதை அவர்களிடம் விட்டுவைக்கலாம்” என்றான் கர்ணன். “காந்தாரமும் பாஞ்சாலமும் இரு பக்கம் இருக்கையில் பாரதவர்ஷத்தை வெல்வது ஒன்றும் பெரிய வேலை அல்ல.”

“எண்ணும்போது அனைத்தும் எளிதாக இருக்கிறது” என்றான் துரியோதனன். “ஆனால் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. எதிரே அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பது விதி. அதன் விழிகளையும் விரல்களையும் காணாமல் ஆடவேண்டியிருக்கிறது.” கர்ணன் “பார்ப்போம், இம்முறை அதை வெல்லமுடியும்” என்றான். “கர்ணா, பாஞ்சாலன் அமைத்திருக்கும் போட்டி வில்வித்தை என்றால்?” என்றான். “நான் சென்று வெல்கிறேன்” என்றான் கர்ணன்.

”யாதவன் இல்லையேல் எவரும் எனக்கு நிகரல்ல. யாதவனே வென்றால்கூட நீங்கள் அவனை அங்கேயே போருக்கு அழைக்கலாம். அத்தனை ஷத்ரியர்களும் உங்களுடன் இணைவார்கள், அங்கே தன்னேற்பு அவையிலேயே அவனை வென்று கன்னியுடன் நாம் மீளலாம். அதுவும் ஷத்ரியருக்கு உகந்த முறையே” கர்ணன் சொன்னான். “நாம் வென்று மீண்டாகவேண்டும். அதற்குரிய நெறிமீறல்களைச் செய்தாலும் பிழையில்லை. வெற்றியால் அவற்றை ஈடுகட்டுவோம்.”

“மூதாதையர் அருள் துணை நிற்கட்டும்” என்றபின் “நான் நீராடி வருகிறேன். மாதுலரை சென்று பார்ப்போம்” என்று கைகளை உரசிக்கொண்டான் துரியோதனன். அவன் திரும்பியதும் அப்பால் நின்றிருந்த மகாதரன் வந்து வணங்கி “நீராட்டறையில் பரிசாரகி காத்திருக்கிறான் மூத்தவரே” என்றான். துரியோதனன் கனத்த காலடிகளை வைத்து நடந்தான். கர்ணன் உடன் நடந்தபடி “உங்கள் இளவல் குண்டாசியை பார்த்தேன்” என்றான்.

“ஆம், அவனை எண்ணி வருந்தாத இரவில்லை” என்றான் துரியோதனன். “அவனுள் ஓர் உடைவு நிகழ்ந்துவிட்டது. அதைவிட்டு மீள முடியவில்லை.” கர்ணன் “அவனை இதில் சேர்த்திருக்கக் கூடாது” என்றான். “கணிகர் நேர்மாறாக சொல்கிறார். அவனுடைய எல்லை தெளிவானது நல்லதே என்கிறார்.” கர்ணன் “அவர்கள் மீண்டு வந்தால் அவன் சென்று அவர்களுடன் சேர்ந்துகொள்வான்” என்றான்.

“கணிகர் அவன் நமக்கெதிரான முதன்மை சான்றுகூறி என்றார். அவனை கொன்றுவிடலாமென்று ஒருமுறை சொன்னார். வாளை உருவி அவர் கழுத்தில் வைத்து மறுமுறை அச்சொல்லை அவர் சொன்னாரென்று நானறிந்தால் அவரது தலை கோட்டைமுகப்பில் இருக்கும் என்றேன். திகைத்து நடுங்கிவிட்டார்” என்றான் துரியோதனன். “அவருக்கு தார்த்தராஷ்டிரர்களைப்பற்றி தெரியவில்லை. வாழ்வெனில் வாழ்வு சாவெனில் சாவு. நாங்கள் தனித்தனி உடல் கொண்ட ஒற்றை மானுடவடிவம்.”

துரியோதனன் சென்றதும் கர்ணன் கூடத்து இருக்கையில் அமர்ந்து தன் கைகளை நோக்கிக்கொண்டிருந்தான். அருகே வந்து நின்ற காஞ்சனதுவஜன் “தாங்கள் ஏதேனும் அருந்துகிறீர்களா மூத்தவரே?” என்றான். “குண்டாசி எங்கே?” என்றான் கர்ணன். ”மீண்டும் மது அருந்தி விட்டான். துயில்கிறான்” என்றான் காஞ்சனதுவஜன். கர்ணன் எழுந்து “அவனை எனக்குக் காட்டு” என்றான்.

இருண்ட சிறிய அறையில் தாழ்வான மஞ்சத்தில் உடலை நன்றாக ஒடுக்கி ஒரு மூலையில் சுருண்டு துயின்றுகொண்டிருந்தான் குண்டாசி. அவன் எச்சில்கோழை மெத்தைமேல் வழிந்து உலர்ந்திருந்தது. அறைமுழுக்க புளித்த மதுவின் வாடை நிறைந்திருந்தது. கர்ணன் அவன் மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்தான். குண்டாசியின் மெலிந்து மூட்டு வீங்கிய கால்களை தன் கைகளால் மெல்ல வருடினான். சிடுக்குபிடித்த முடி விழுந்து கிடந்த சிறிய மெலிந்த முகத்தை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 3

அரசப்பேரவை பெரும்பாலும் அரசரின் பிறந்தநாளான மார்கழி இருள்நிலவு நாளில்தான் கூடும். அதைத்தவிர அரச முடிசூட்டுவிழா, இளவரசுப்பட்டமேற்பு விழா போன்ற விழாக்களை ஒட்டியும் பேரவை கூட முரசறிவிப்பு நிகழ்வதுண்டு. ஆகவே பேரவைக்கூட்ட அறிவிப்பு வந்ததுமே அஸ்தினபுரியின் மக்கள் பரபரப்பு கொண்டனர். கூடங்களிலும் சாலைமுனைகளிலும் சந்தைகளிலும் அதைப்பற்றிய பேச்சுகளே ஒலித்துக்கொண்டிருந்தன.

சகுனி அவரது ஒற்றர்கள் வழியாக அந்தப் பேச்சை வழிநடத்தினார். பாஞ்சால இளவரசியை மகதமன்னன் மணம்செய்து கொள்ளப்போவதாக முதலில் செய்தி பரவியது. எதிர்ச்செய்திக்கே உரிய விரைவுடன் அது நகரை மூடிக்கொண்டது. பதற்றமும் கொந்தளிப்புமாக மக்கள் கூச்சலிட்டனர். “அஸ்தினபுரி அழிந்தது” என்றார் ஒரு பெரியவர். “என்ன செய்கிறார்கள் இளவரசர்கள் இங்கே? ஆயிரம்கால் மண்டபத் தூண்கள் போல அரண்மனை நிறைந்து நின்றிருக்கிறார்களே? செல்லவேண்டியதுதானே? இறந்தால்கூட அதில் ஒரு மதிப்பு இருந்திருக்குமே?” என்று கொந்தளித்தார்.

“அவர்கள் என்ன செய்வார்கள்? இன்று அஸ்தினபுரியில் அவர்களின் இடம் என்ன? தாசிமைந்தர்களின் இடம். எந்த முகத்துடன் சென்று பாஞ்சாலனிடம் பெண் கேட்பார்கள்?” என்று சொன்னவன் ஒற்றன். “பெண் கேட்டுச்சென்றபோது நாங்கள் சூதர்களுக்கு பெண்கொடுப்பதில்லை என்று பாஞ்சாலன் சொல்லிவிட்டானாமே” என்றவனும் ஒற்றனே. “அப்படியா சொன்னான்? அஸ்தினபுரியின் இளவரசனை நோக்கி அப்படி சொன்னான் என்றால் அவன் யார்? எப்படி அவன் துணிந்தான்?” என்றார் இன்னொரு முதியவர்.

மதியத்திற்குள் பாஞ்சாலம் அஸ்தினபுரியை அவமதித்துவிட்டது என்றும், அவமதிப்பதற்காகவே மகதத்துக்கு பெண்கொடுத்தது என்றும், பாஞ்சால இளவரசியை அடைந்த மகத மன்னன் பெரும்படையுடன் அஸ்தினபுரியை வெல்ல வரப்போகிறான் என்றும் செய்திகள் பெருகின. ஒவ்வொருவரும் அதில் ஒரு கதையை சேர்த்தனர். “நாமே இச்செய்தியை பரப்பவில்லை என்றால் பாண்டவர்களைப்பற்றிய நற்செய்தி ஏதோ வந்துள்ளது என்ற கணிப்பே முதலில் எழும். அப்படி செய்தி ஏதும் வரவில்லை என்ற உண்மை தெரிந்ததும் ஏமாற்றம் எழும். அந்த ஏமாற்றம் கௌரவர் மீதான சினமாக ஆகும்” என்றார் கணிகர். “வதந்திகள் காட்டுத்தீ போல. மிக வல்லமை வாய்ந்த படைக்கலம் அது, காற்றை அறிந்தவனுக்கு.”

மறுநாள் மகதன் பாஞ்சாலியை மணக்கவில்லை, சுயம்வர அறிவிப்புதான் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி பரவியது. அது அனைவரையும் ஆறுதல்படுத்தியதென்பதனால் முந்தைய செய்தியைவிட விரைவாக பரவியது. “ஆனால் சுயம்வரத்தில் பாஞ்சாலியை மகதன் மணப்பது உறுதி” என்றான் வணிகனாக வந்த ஒற்றன். “ஏனென்றால் நம் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டவர் அல்ல. அவரை பாஞ்சாலன் அவையிலேயே அமரச்செய்ய மாட்டான். அவரில்லை என்றால் அவையில் வெல்லமுடியாத கதாயுதம் ஏந்தி நிற்பவன் ஜராசந்தனே. அவன் பாஞ்சாலியை மணப்பான்.”

“நம் இளவரசர் ஏன் பட்டம் சூடக்கூடாது? தடுப்பது யார்?” என்றான் ஒருவன். “பிதாமகர் பீஷ்மர் விரும்பவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள்” என்றான் ஒரு படைவீரன். “ஏன்?” படைவீரன் அக்கறையற்ற பாவனையில் “அவர் விதுரரின் பேச்சையே கேட்கிறார். விதுரர் இளவரசர் முடிசூடக்கூடாதென்று விழைகிறார்” என்றான். நாலைந்து பேர் அவனைச்சுற்றி கூடிவிட்டனர். “ஏன்?” என்று ஒருவர் கேட்டார். “மூடர்களாக இருக்கிறீர்களே. மகதன் எப்படி பாஞ்சாலியை அடைய முடியும்? அவனை ஒரே அடியில் வீழ்த்தி வெல்ல யாதவகிருஷ்ணனால் முடியும். இன்று பாரதவர்ஷத்தில் பாஞ்சாலியை வெல்லும் திறனுடைய வீரன் அவனே.”

“ஆனால் அவன் ஷத்ரியனல்ல. அவன் யாதவன்” என்றான் ஒருவன். “ஆமாம், ஆனால் அவையில் அனைவரையும் அவன் வெல்வான் என்றால் அவன் பெண்ணை பைசாசிக முறைப்படி தூக்கிக்கொண்டு செல்லமுடியுமே!” அவன் மேலே பேசாமல் கிளம்பிச்சென்றுவிட்டான். சிலநாழிகைக்குள் அஸ்தினபுரியே விதுரர்தான் அனைத்தையும் நிகழ்த்துகிறார் என்று பேசத்தொடங்கியது. விதவிதமான சதிவேலைகள் விரித்துரைக்கப்பட்டன.

“தேவகனின் தூதுடன் அவன் வந்தது முதலில் விதுரரின் மனைவி சுருதையை பார்க்கவே. மறுநாள்தான் அவன் யாதவ அரசி குந்தியையே சந்தித்திருக்கிறான்” என்றான் ஒருவன். “இது ஒரு மாபெரும் சதித்திட்டம். அஸ்தினபுரியை ஒதுக்கிவிட்டு யாதவப்பேரரசு ஒன்றை அமைக்கும் வேலை தொடங்கி எட்டாண்டுகள் கடந்துவிட்டன” என்றான் ஒரு குதிரைக்காரன். “அஸ்தினபுரி இப்போதே தோற்றுவிட்டது. நம் மைந்தர்கள் துவாரகைக்கு கப்பம் கொடுப்பார்கள். இங்குள்ள யாதவர்கள் அவர்களை அடேய் என்று அழைத்து சாட்டையாலடிப்பார்கள்.”

சதித்திட்டங்களைப் பற்றி பேசுவது அனைவருக்கும் பிடித்திருந்தது. அவர்கள் எந்த அளவுக்கு அதிகாரத்தை விட்டு வெளியே எளிய மனிதர்களாக இருந்தார்களோ அந்த அளவுக்கு மாபெரும் சதித்திட்டங்களை கற்பனை செய்தார்கள். சிக்கலான சதித்திட்டங்களை சொல்பவர் நுண்ணறிவுடையவராக, பிறர் அறியாததை அறிந்தவராக தோன்றினார். ஆகவே ஒருவர் ஒரு சதித்திட்டத்தை விளக்கி முடித்ததுமே “அதில் ஒரு சின்ன செய்தியை சேர்க்க விரும்புகிறேன்” என்று இன்னொருவர் இன்னொரு சதித்திட்டத்தை சேர்க்கத் தொடங்கினார்.

சதிவலை விரிந்தபடியே சென்றது. விதுரர் கிருஷ்ணனின் ஆதரவாளராக அஸ்தினபுரியை வழிநடத்திச்செல்வதாக அவர்கள் சொன்னார்கள். “அஸ்தினபுரி யானை. அதைவைத்து கல்லெடுக்கச்செய்து அவன் தன் அரசை கட்டுகிறான்.“ அஸ்தினபுரியின் படைகளைக் கொண்டு யாதவன் மதுராவையும் கூர்ஜரத்தையும் வென்றான் என்றார்கள். “நம் களஞ்சியத்தில் மிகப்பெரிய துளை இருக்கிறது. அந்தத் துளை துவாரகையில் திறக்கிறது. சிந்தித்துப்பாருங்கள். வெறும் யாதவன், தோற்று நகரை விட்டு ஓடிச்சென்றவன், எப்படி இத்தனை குறுகிய காலத்தில் பாரதவர்ஷத்தின் மாபெரும் நகரம் ஒன்றை நிறுவினான்?”

“சென்ற பதினைந்தாண்டுகளில் அஸ்தினபுரியில் ஏதேனும் புதிதாக கட்டப்பட்டிருக்கிறதா? ஒரு காவல்கூடமாவது? ஏன்? ஏனென்றால் அஸ்தினபுரி துவாரகையை கட்டிக்கொண்டிருந்தது. கண்ணிழந்த அரசனின் முகத்துக்குக் கீழே நாடு திருடு போய்க்கொண்டிருந்தது.” ஒரு நச்சுச்சுழல் போல அந்த ஐயம் பெருகியது. ஓர் ஐயம் முன்வைக்கப்படுகையில் திகைக்க வைப்பதாகவும் நீதியுணர்ச்சியை சீண்டி “சேச்சே, என்ன பேச்சு இது? விதுரர் இல்லையேல் இந்த நாடே இல்லை” என்று எவரையும் சொல்லவைப்பதாகவும் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை அதைக் கேட்டதும் “ஆம், அதில் உண்மை இருக்கலாம். நாம் என்ன கண்டோம்? நாம் எளிய குடிகள். நமக்கு சொல்லப்பட்டதை நம்பக்கூடிய நிலையில் இருப்பவர்கள்” என்றனர்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் போகங்களில் திளைக்கிறார்கள் என்று அவர்கள் நம்பினர். அந்த போகங்களை அவர்கள் தங்கள் பகற்கனவுகளால் நுரைத்து நுரைத்து பெருக்கிக் கொண்டனர். ஆகவே அவர்களனைவர் மேலும் பொறாமை கொண்டு வெறுத்தனர். அவ்வெறுப்பைக் கொண்டு அவர்களை புரிந்துகொள்ள முயன்றனர். “அரசனை அணுகுவதென்றால் என்ன? அவன் விரும்பும் அனைத்தையும் செய்வதுதானே? அதைச்செய்பவன் எதற்கும் துணிந்தவனாகவே இருப்பான். தேவை என்றால் அரசனையும் அழிப்பான். நாம் அவன் நமக்குக் காட்டும் முகத்தைத்தான் நம்புகிறோம். ஒருவன் நாற்பதாண்டுகாலமாக அரண்மனையின் பூனையாக சுற்றிவருகிறான் என்பதே சொல்கிறதே அவன் யார் என்று” என்றார் ஒரு கிழவர். அவரை சூழ்ந்திருந்தவர்கள் தலையசைத்தனர்.

சொல்லப்பட்டவை சலித்தபோது மேலும் பெரிய கதைகள் கிளம்பின. “பார்த்தனும் பாண்டவர்களும் கொல்லப்பட்டனர். அது சதி. அதைச்செய்தவர் யார்” என்றார் ஒருவர். அனைவரும் அவரை நோக்கினர். அவர் நான்குபக்கமும் நோக்கியபின் “சொல்லுங்கள்! ஒரு கொலை நிகழ்ந்தால் அதில் நலன் பெறுபவர் அல்லவா முதலில் ஐயப்படவேண்டியவர். இன்று பாண்டவர்கள் இருந்திருந்தால் தருமர் அரசனாகியிருப்பார். அவர் நூலறிந்தவர். அறம் உணர்ந்தவர். அவருக்கு அமைச்சரின் சொற்களை நம்பி ஆட்சி செய்யவேண்டிய தேவை இல்லை” என்றார்.

“ஆனால் இன்று? விழியிழந்த அரசருக்கு அரண்மனைக்குள்ளேயே நடமாட ஐந்துபேர் தேவை. அவரை அமரச்செய்து ஆட்சி செய்வது யார்?” மூச்சொலிகள் மெல்ல எழுந்தன. “ஆனால்...” என ஒருவர் கமறும் தொண்டையுடன் சொல்லி “அப்படி சிந்தித்தால்...” என்றார். “நான் சொல்கிறேன் ஏன் என்று. அன்று தருமர் முடிசூடியிருந்தால் முதலில் என்னசெய்வார்? கருவூலக் கணக்கை கேட்பார். அப்படி கேட்டிருந்தால் துவாரகையின் மேல் ஒரு கல் ஏறி அமர்ந்திருக்காது....” என்றார்.

“சிந்தித்துப்பாருங்கள். விதுரரின் இரு மைந்தர்களும் எங்கிருக்கிறார்கள்? எங்கே? சொல்லுங்கள்!” மெல்லிய குரலில் ஒருவர் “துவாரகையில்...” என்றார். “அப்படியென்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெரிந்தே புறக்கணிக்கிறீர்கள்” என்று சொல்லி அவர் சிரித்தார். ”இனிமேலாவது புரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் யாதவர்களின் நுகம் சுமக்கவேண்டுமா என்று முடிவெடுங்கள்.”

குலத்தலைவர்கள் நகருள் நுழைந்தபோது வீரர்கள் வழியாக அப்பேச்சு அவர்கள் காதுகளையும் அடைந்தது. “என்ன இது வீண்பேச்சு?” என்றனர். ஆனால் அப்படி ஓர் உணர்வு மக்களிடமிருப்பதே அவர்களை கட்டுப்படுத்தியது. அவர்கள் ஒவ்வொருவராக நகர் நுழைய நுழைய மக்கள் அவர்களை சாலைகளிலேயே மறித்து கூச்சலிட்டனர். ”பாஞ்சால இளவரசி வேண்டும். அஸ்தினபுரி படை கொண்டு செல்லட்டும். நாங்களும் உயிர்கொடுக்கிறோம். பாஞ்சால இளவரசி இன்றி எவரும் நகர்நுழையவேண்டியதில்லை” என்று கூவினர்.

“என்ன நடக்கிறது இங்கே?” குகர் குடித்தலைவர் மாத்ரர் கேட்டார். “மக்கள் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்றான் அவரது மைந்தன் சித்தன். ஒரு முதியவர் கைக்கோலைதூக்கி “குடித்தலைவர்களே, கேளுங்கள்! யாதவன் பாஞ்சாலியை அடைந்தான் என்றால் அதன்பின் நாங்கள் உயிர்வாழ்வதில் பொருளில்லை. இந்தக் கோட்டைமேல் ஏறி குதித்து இறப்போம்!. அஸ்தினபுரியை அசுரக்குருதிகொண்ட ஜராசந்தன் கைப்பற்றுவதைக் காண நாங்கள் உயிருடன் இருக்கமாட்டோம்” என்று குரல் உடைய கூவினார்.

மக்களின் வெறி ஏறி வரும்தோறும் யாதவர்கள் அஞ்சினர். தொடக்கத்தில் யாதவகிருஷ்ணனுக்காக வாதிட்டனர். ஆனால் உணர்ச்சிகளின் விரைவு அவர்களை அச்சுறுத்தியது. எவரும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. தாங்கள் நம்புவதை பிறர் உடைத்துவிடக்கூடாதே என்ற கொதிப்புடன் இருந்தனர். வாதங்களில் மூன்றாவது வரியிலேயே வசை எழுந்தது. பிறர் சொற்களைக் கேட்காமல் கூச்சலிட்டனர். வாதங்களில் ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு திரித்துப் பொருள்கொண்டு இளக்காரம் செய்தனர். வசைபாடினர்.

யாதவர்கள் மெல்ல அமைதியானார்கள். அது மேலும் அவர்கள் மேல் சினம் கொள்ளச்செய்தது. “அத்தனைபேருக்கும் அனைத்தும் தெரிந்திருக்கிறது, பார்த்தீர்களா? அவர்களிடமிருக்கும் அந்த அமைதியை காணுங்கள். அவர்கள் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். நாம் அனைத்தையும் புரிந்துகொண்டதைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். அஸ்தினபுரிமேல் யாதவனின் படைகள் எழும் நேரம்கூட இவர்களுக்குத் தெரிந்திருக்கும்...”

“ஒற்றர்கள். நம் கோட்டைகளில் வளைபோட்டு கொடுக்கும் எலிகள்.” ஒருகுரல் “ஆனால் அவர்கள் இங்கே பிறந்தவர்கள்” என்றால் உடனே ”அப்படியென்றால் இந்தப்பழிகளைக் கேட்டு அவர்கள் ஏன் தலைகுனிந்து செல்கிறார்கள்?” என்று இளைஞர்கள் கூவினார்கள். “முதலில் யாதவர்களை நாம் கண்காணிக்க வேண்டும். அவர்கள் நம் குடித்தலைவர்கள் முன் வந்து நிற்கட்டும்.” ஒரு கிழவர் “அவர்களுக்கு இந்நகர் ஒரு பொருட்டே அல்ல. தருமன் நாடுவிட்டுச் சென்றபோது இந்நகரை உதறி கூடவே செல்லத்தலைப்பட்டவர்கள் என நாம் அறிவோம்” என்றார். அந்நினைவு சரியான தருணத்தில் எழுந்தது. அனைவரும் திகைப்புடன் சொல்லிழந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.

அந்நிலையில் யாதவகிருஷ்ணனின் கருடக் கொடியை அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயில் முன்னால் நின்ற அரசமரத்தின் கிளையில் யாரோ கட்டினார்கள். காலையில் கொடியை வீரர்கள் எவரும் காணவில்லை. அதற்குள் வணிகர்கள் கண்டுவிட்டனர். கொடி உடனே அகற்றப்பட்டது. ஆனால் மதியத்திற்குள் கோட்டையின் நான்கு வாயில்களிலும் நூற்றுக்கணக்கான யாதவர்கள் திரண்டு சென்று யாதவக் காவலர்களின் உதவியுடன் கருடக்கொடிகளை ஏற்றிவிட்டனர் என்ற செய்தி பரவியது. ஷத்ரியர்களும் வணிகர்களும் தெருக்களில் கூடி கூச்சலிட்டனர்.

“யாதவர்களை பாதுகாப்பவர்களை கண்டுபிடியுங்கள்!” என்று ஒரு வணிகர் கூச்சலிட்டார். “இது எவருடைய நகரம்? இதை காக்க உயிர்கொடுக்கப்போவது யார்?” என்று முதிய ஷத்ரியர் ஒருவர் உடைவாளை உருவி மேலே தூக்கி ஆட்டி கூச்சலிட்டார். “அஸ்தினபுரி அழிகிறது...“ குடித்தலைவர்கள் அந்தக் கொந்தளிப்பின் நடுவே தங்கள் மூடுவண்டிகளில் அமர்ந்து மெல்ல நகர்ந்து அரசவை நோக்கி சென்றனர்.

மாலை அவைகூடுவதற்கு முன்னரே அனைத்தும் முடிவாகிவிட்டன. குடித்தலைவர்கள் அவர்கள் தங்கியிருந்த மாளிகைகளின் சோலையிலேயே கூடி பேசிக்கொண்டனர். “பாஞ்சால இளவரசி வந்தாகவேண்டும். பிறிது எதையும் கேட்க அவர்கள் சித்தமாக இல்லை. இந்நகரமே அந்த ஒற்றை எண்ணத்துடன் நம்மை சூழ்ந்திருக்கிறது” என்றார் வணிகர்குலத்தலைவரான குபேரர். “துரியோதனருக்கு இளவரசுப்பட்டம் அளிக்கவேண்டும். வலுவான படையுடனும் பெரும்பரிசுச்செல்வத்துடனும் அவரும் கர்ணதேவரும் காம்பில்யத்துக்கு கிளம்பவேண்டும். அதைத்தான் நம்மிடம் குடிகள் ஆணையிடுகிறார்கள்.”

“முடிசூட்டவேண்டியது அரசர். நாமல்ல” என்றார் வேளாண்குடித்தலைவரான நதீஜர். “ஆம். ஆனால் இன்று அரசர் முடிசூட்ட மறுப்பாரென்றால் அது அஸ்தினபுரிக்கு எதிரான விதுரரின் சதியாக மட்டுமே பொருள்படும். அதை நம்மில் எவர் ஏற்றுக்கொண்டாலும் நமது குடிகளை நாம் சந்திக்க முடியாது.” மாத்ரர் சோர்ந்த குரலில் “மக்களின் உணர்ச்சிகள் குவிந்துவிட்டால் அதை நாம் வெல்ல முடியாது. இனி தர்க்கங்களுக்கு இடமில்லை” என்றார்.

“ஏன் தர்க்கம் செய்யவேண்டும்?” என்று சினத்துடன் கேட்டபடி ஷத்ரியர்குலத்தலைவர் பத்ரசேனர் எழுந்தார். “துரியோதனர் பட்டம் சூடிச் சென்று பாஞ்சாலத்தை அச்சுறுத்தி அவ்விளவரசியை வென்று வரவேண்டும். அதைச்செய்வது மட்டுமே நம் நாட்டைக் காக்கும் ஒரே வழி. அதைச் செய்ய எவருக்கு தடை இருக்க முடியும்? துவாரகை அங்கே எழுகிறது. இங்கே பாஞ்சாலம் அதனுடன் கைகோர்க்கிறது. நடுவே அரசனற்ற அஸ்தினபுரி தோள்மெலிந்த சூதனின் சொற்களைக் கேட்டு சோர்ந்துகிடக்கிறது.”

“நாம் குடித்தலைவர்கள் மட்டுமே” என்றார் நதீஜர். “ஆம், ஆனால் நம் குடிகளே இவ்வரசு. இன்று நான் அவையில் பிறிது எதையும் பேசப்போவதில்லை. எழுந்து ஒன்றை மட்டும் சொல்லப்போகிறேன். பிதாமகர் பீஷ்மரின் முகத்தை நோக்கி. இன்று மாலை இதே அரசப்பேரவையில் துரியோதனர் முடிசூட்டப்படவேண்டும்.” நதீஜர் ”முடியா?” என்றார். ”ஆம், மணிமுடி. இளவரசுப்பட்டமெல்லாம் இனி தேவையில்லை. அந்தப்பசப்புகளுக்குப் பின்னால் இருந்த சதிகளை எல்லாம் நானும் அறிவேன். இனி அதை நாங்கள் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை. இனி சூதனின் ஆணையை நாங்கள் ஏற்கமாட்டோம்.”

பிற குலத்தலைவர்கள் அச்சத்துடன் சமைந்து அமர்ந்துவிட்டார்கள். ”பீஷ்மரை எதிர்ப்பது தந்தையை எதிர்ப்பது போல” என்றார் நதீஜர். “ஆம், ஆனால் தந்தையின் மூடத்தனம் நம் அரசையும் நம் குடிகளையும் அழிக்கும் என்றால் நம் மக்களை அடிமைகளாக்குமென்றால் அந்தத் தந்தையின் நெஞ்சில் வேலை ஏற்றி நிறுத்துவதும் ஷத்ரியனாகிய மைந்தனின் கடமையே. இனி முடியாது. இன்று மாலை துரியோதனர் அரசராக ஆக வேண்டும். இன்றே அவர் கிளம்பி பாஞ்சாலம் செல்லவேண்டும்” என்றார் பத்ரசேனர்.

“பீஷ்மர் எவர் ஆணையையும் ஏற்பவர் அல்ல” என்றார் மாத்ரர். “வேண்டாம். அவரது ஆணையை நாங்களும் ஏற்க மாட்டோம். இன்று அந்தச் சூதன் ஒரு சொல் மாற்றுக்கருத்து சொன்னான் என்றால் அந்த காட்டிக்கொடுக்கும் வஞ்சகனை நான் எழுந்து வெட்டிப்போடுவேன், அவை முன்னால் வெட்டுவேன். என்னை பீஷ்மர் கொல்லட்டும். அவை நடுவே என் சடலம் கிடக்கட்டும். ஷத்ரியர் அறியட்டும், இச்சதியைக் கண்டபின் நான் உயிர்வாழவில்லை என்று. அவர்கள் முடிவெடுக்கட்டும்.”

பத்ரசேனரின் பெருங்குரல் அவர்களை நடுங்கச்செய்தது. இருகைகளையும் தூக்கி அவர் கூவினார் “இன்று அவையில் ஒரே முடிவைத்தான் எடுக்கமுடியும்... வேறெதையும் நான் ஒப்ப மாட்டேன். குடித்தலைவர்களாகிய உங்களிடமும் சொல்கிறேன். எந்தக்குடி இந்த முடிவை எதிர்க்கிறதோ அதை யாதவர்களுக்கு ஆதரவான குடியாகவே என் குடி கொள்ளும். எவர் ஒரு எதிர்ச்சொல் சொன்னாலும் அந்த அவையிலேயே அக்குடிக்கு எதிராக ஷத்ரியப் பெருங்குடி தீராப்போரை அறிவிக்கும். அந்தக்குடிகளில் ஒரு உயிர் எஞ்சுவது வரை ஷத்ரியர் போரை நிறுத்த மாட்டார்கள்.” தன் உடைவாளை உருவி தன் வலக்கையை வெட்டி பெருகிய குருதியை தூக்கி தரையில் சொட்டியபடி “கொற்றவை மேல் ஆணை” என்றார் பத்ரசேனர்.

யாதவர் குலத்தலைவரான நசீகர் “நான் பத்ரசேனரின் ஒவ்வொரு சொல்லையும் ஆதரிக்கிறேன். என் குடி அவருடன் இருக்கும்” என்றார். பிறர் “நாம் அனைவரும் ஒரே குரலில் சொல்வோம். இன்றே துரியோதனர் முடிசூடியாகவேண்டும். இன்றிரவே பாஞ்சாலத்துக்கு படைகிளம்பியாகவேண்டும். பாஞ்சால இளவரசி அஸ்தினபுரிக்கு வந்தாகவேண்டும். வேறெந்த சொல்லையும் கேட்க நாம் சித்தமாக இல்லை. மறுத்து ஒரு சொல்லை எவர் சொன்னாலும் அவர் நம் முதல் எதிரி. அவரைக் கொன்று அக்குருதியைக் கண்ட பின்னரே அடுத்த சொல்லை நாம் பேசுவோம். அச்சொல்லை அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே நாம் எழுந்து வஞ்சினம் உரைத்து அவைவிட்டு நீங்குவோம்” என்றனர். குடித்தலைவர் எண்மரும் “ஆம்” என்றனர். “அது பீஷ்மரே ஆனாலும்” என்றார் பத்ரசேனர். குடித்தலைவர்கள் “ஆம்” என்றனர்.

அரைநாழிகைக்குள் ஒற்றர் வழியாக அதை விதுரர் அறிந்தார். வாழ்வில் முதல்முறையாக அவரது கட்டுப்பாட்டை மீறி அச்சமும் துயரும் வெளிப்பட்டது. “தெய்வங்களே!” என்று கூவியபடி நடுங்கும் கைகளை தொழுவதுபோல நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார். தொடைகளும் தோள்களும் அதிர்ந்தன. கழுத்து நரம்பு இழுபட்டு துடிக்க உதடுகளை இறுக்கிய கணமே மெல்லிய கேவல் வெளிப்பட்டது. கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அதன்பின் அவர் அதை கட்டுப்படுத்தவில்லை. முகத்தை கைகளில் தாங்கி அழுதார். கூப்பிய கைகள் வழியாக கண்ணீர் வழிந்தது.

ஒற்றன் அவரை நோக்கியபடி நின்றான். அவன் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. விதுரர் தன்னை உணர்ந்து அவனை திரும்பிப்பாராமல் சுவடி அறைக்குள் சென்றுவிட்டார். கைக்குச் சிக்கிய சுவடிக்கட்டு ஒன்றை எடுத்து பிரித்துக்கொண்டு அமர்ந்து வாசிக்க முனைந்தார். எழுத்துக்கள் நீர்மேல் அசைவதுபோல தெரிந்தன. சுவடிகளை வெறுமனே புரட்டிக்கொண்டிருந்தபோது ஓர் உலுக்கல் போல யாதவகிருஷ்ணனின் நினைவு வந்தது. கைகள் நடுங்க சுவடியை வைத்துவிட்டார்.

அவன் அவரை முகம் நோக்கி மிரட்டியபோது ஒருகணம் நெஞ்சு நடுங்கிப்போயிற்று என்றாலும் அது வெறும் சொற்கள் என்றே பின்னர் தோன்றியது. அஸ்தினபுரியின் மக்களை அவர் பிறந்த நாள்முதல் அறிந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான தருணங்களில் நகரம் அவரது அறிவால் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலைமுறைக்காலம் உண்மையில் அவர்தான் ஆட்சி செய்தார். ஒரு முறைகூட முறைமை மீறப்பட்டதாக, எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததில்லை. பல்லாயிரம்பேர் அவரது திறம்பிறழாத நீதியை உணர்ந்து கைகூப்பி அழுது அவர் காலில் விழுந்திருக்கிறார்கள். அவரது துலாமுள்ளை நம்பி எளியவர்கள் ஒவ்வொரு நாளும் கூப்பிய கைகளுடன் அரண்மனை முற்றத்தில் வந்து நிற்கிறார்கள்.

ஆனால் வெறும் ஒரு ஐயத்தைக்கொண்டு அனைத்தையும் உடைத்து அழித்துவிட்டிருக்கிறார்கள். வெளியே அவர் மேல் கடும் வெறுப்புடன் கூச்சலிடும் அத்தனைபேரும் அவரது நீதியின் நிழலை அடைந்தவர்கள். ஆனால் அனைத்தையும் உணர்வெழுச்சியால் மறந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படித்தானா? அவர்கள் இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இருந்தார்களா? அவரது நீதியுணர்ச்சியையும் கருணையையும் உணரும்போதே அவர்கள் உள்ளத்தின் ஒரு மூலையில் இக்கசப்பு ஊறத் தொடங்கிவிட்டதா?

பெருந்தன்மை சினமூட்டுகிறது. கருணை எரிச்சலை அளிக்கிறது. நீதியுணர்ச்சி மீறலுக்கான அறைகூவலை அளிக்கிறது. மானுடன் தன்னுள் உறையும் தீமையை நன்கறிந்தவன். இன்னொருவனின் தீமையை காண்கையில் அவன் மகிழ்கிறான். அவனை புரிந்துகொள்ள முடிகிறது. அவனை கையாள முடிகிறது. பிறன் நன்மை அவனை சிறியவனாக்குகிறது. அதை புரிந்துகொள்ளமுடியாத பதற்றம் எழுகிறது. சீண்டப்படும் சீற்றம் எழுகிறது. எளியமனிதர்கள் என்றால் சிறிய மனிதர்கள் என்றே பொருள். மக்கள்! மானுடம்! ஆனால் ஒருவருடன் ஒருவர் முரணின்றிக் கலக்கும் மிகச்சிறிய மனிதர்களின் திரள் அல்லவா அது? அதன் பொதுக்குணம் என்பது அந்தச்சிறுமையின் பெருந்தொகுதி மட்டும்தானா?

மக்களை வெறுக்காமல் ஆட்சியாளனாக முடியாது என்று ஒரு சொல்லை அவர் அடிக்கடி கேட்டிருந்தார். சௌனகருக்குப் பிடித்தமான சொல் அது. “கடிவாளத்தை விரும்பும் குதிரை இருக்கமுடியாது அமைச்சரே. அது பொன்னாலானதாக இருந்தாலும்” புன்னகையுடன் ஒருமுறை சௌனகர் சொன்னார். “எங்கோ ஒருமூலையில் கணவனை வெறுக்காத பத்தினியும் இருக்கமுடியாது.” விதுரர் “இவ்வகைச் சொற்களை உருவாக்கிக் கொள்வது நம்மை அறிஞன் என்று காட்டும். அதை கேட்பவன் அடையும் திகைப்பில் நம் ஆணவம் மகிழ்கிறது” என்றார். “இருக்கலாம்” என்று சொல்லி சௌனகர் சிரித்தார்.

மக்களுக்காக வாழ்பவர்கள் பெரும்பாலும் மக்களை அறியாதவர்கள். அவர்களைப்பற்றிய தங்கள் உணர்ச்சிமிக்க கற்பனைகளை நம்புபவர்கள். அந்நம்பிக்கை உடையாத அளவுக்கு வலுவான மடமை கொண்டவர்கள். புனிதமான மடமை. தெய்வங்களுக்குப் பிடித்தமான மடமை. அந்த மடமையில் சிக்கி தெய்வங்களும் அழிகின்றன. ராகவ ராமன் தெய்வத்தின் மானுட வடிவம் என்கிறார்கள். அவன் மக்களின் மாண்பை நம்பியவன். அவர்கள் விரும்பியபடி வாழ முயன்றவன். அவர்கள் துயரையும் அவமதிப்பையும் மட்டுமே அவனுக்களித்தனர். அவன் செய்த பெரும் தியாகங்களை முழுக்க பெற்றுக்கொண்டு மேலும் மேலும் என்று அவனிடம் கேட்டனர்.

மனைவியை மைந்தரை இழந்து வாழ்ந்தான். சரயுவில் மூழ்கி இறக்கையில் என்ன நினைத்திருப்பான்? இதோ ஏதுமில்லை இனி, அனைத்தையும் அளித்துவிட்டேன் என்று அவன் அகம் ஒருகணம் சினத்துடன் உறுமியிருக்குமா? சரயுவின் கரையில் நின்றிருப்பார்கள் மக்கள். அவன் உண்மையிலேயே தன்னை முழுதளிக்கிறானா என்று பார்த்திருப்பார்கள். ஏதும் எஞ்சவில்லை என்று கண்டபின் மெல்ல, ஐயத்துடன், “என்ன இருந்தாலும் அவன் இறைவடிவம்” என்றிருப்பார்கள்.

அந்த ஒரு வரியில் இருந்து அவனைப்பற்றிய கதைகளை சூதர்கள் உருவாக்கத் தொடங்கியிருப்பார்கள். அக்கதைகளை கேட்டுக்கேட்டு தன் குற்றவுணர்வை பெருக்கிக்கொள்வார்கள் மக்கள். அக்குற்றவுணர்வின் கண்ணீரே அவனுக்கான வழிபாடு. அவன் தெய்வமாகி கருவறை இருளின் தனிமையில் நின்றிருப்பான்.

விதுரர் நெடுமூச்சுடன் மீண்டும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டார். மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும் முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல. இந்நிலையில் அவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான். இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை இருந்திருக்கும்.

அவர் உடல் சிலிர்த்தது. அக்கணம் அதை முழுமையாக உணர்ந்தார். ஆம், புன்னகைதான் செய்திருப்பான். அந்தப்புன்னகை. தன்னை அறியாமலேயே எழுந்துவிட்டார். அக எழுச்சியால் அவரால் அமர முடியவில்லை. அறைக்குள் நிலைகொள்ளாமல் சுற்றிவந்தார். ஆம், அந்தப் புன்னகை. தெய்வங்களே, அந்தப்புன்னகையை எப்படி காணத் தவறினேன்? இத்தனை காவியம் கற்றும் அதை காணமுடியவில்லை என்றால் நான் வெறும் ஆணவக்குவை மட்டும்தானா?

அந்தப்புன்னகை அந்தப்புன்னகை என்று சொல்லிக்கொண்டே இருந்தார் விதுரர். அச்சொல் தன்னுள் மழைத்துளி சொட்டும் தாளமென ஓடிக்கொண்டே இருப்பதை உணர்ந்து திகைத்தார். அவன் புன்னகையை கண்முன் கோட்டைச்சுவரை நிறைத்து வரையப்பட்ட பேரோவியம் போல கண்டார். ஒளிமிக்க உதயம் போல. அல்லது அலையடிக்கும் ஆழ்தடாகம் போல. உள்ளிழுத்து மூழ்கடித்துவிடும் புன்னகை.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 4

கனகன் வேண்டுமென்றே காலடி ஓசை கேட்க வந்து “பேரவைக்குச் செல்ல பிதாமகர் வந்து இறங்கிவிட்டார். இடைநாழி வழியாக இங்கே வருகிறார்” என்றான். “இங்கா?” என்று திகைத்து எழுந்த விதுரர் முகத்தை மேலாடையால் துடைத்துக்கொண்டார். திரும்பி ஒரு சிறிய ஆடியை எடுத்து தன் முகத்தை நோக்கி புன்னகை செய்தார். அப்போதுதான் தன் முகம் எப்படி துயரத்தை சுருக்கங்களாக்கி வைத்திருக்கிறது என்று தெரிந்தது. உதடுகளை விரித்து புன்னகையை நடித்தார். மெல்ல முகம் புன்னகை கொண்டதாக ஆகியது. சால்வையை சரிசெய்தபடி எழுந்து வெளியே ஓடினார்.

இடைநாழியில் விரைந்து சென்று பீஷ்மரை எதிரேற்று வணங்கினார் விதுரர். நீண்ட கால்களை விரைந்து வைத்து வந்த பீஷ்மர் காற்றில் பாய்ந்து வருபவர் போல தோன்றினார். கைகளை வீசியபடி சினத்துடன் “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றார். “தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார் விதுரர். பீஷ்மர் “விதுரா, மக்களிடம் ஆணைபெற்று ஆள்பவன் ஒருபோதும் நல்லாட்சியை அளிக்க முடியாது. மக்களின் உணர்ச்சிகளை எந்த மூடனும் தூண்டிவிட்டுவிட முடியும்...” என்றார். “ஏனென்றால் அவர்களுக்கு வரலாற்றில் பங்கே இல்லை. வரலாற்றில் பங்கெடுப்பதாக நடிக்கும்பொருட்டு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கே தீவைப்பார்கள். மூடர்கள்.”

விதுரர் “ஆனால் அது அவர்களின் ஒருங்கிணைந்த எண்ணமாக இருக்கையில்...” என்றார். “ஒருங்கிணைந்த எண்ணமா? எத்தனை நாழிகை அது ஒருங்கிணைந்ததாக இருக்கும்? சொல்! நான் இன்றே இதை ஷத்ரியர்கள் தங்கள் மேலாதிக்கத்துக்காக செய்யும் சதியாக பிறர் கண்களுக்கு மாற்றிக் காட்டவா? இதே குலத்தலைவர்கள் வந்து ஷத்ரியர்களுக்கு எதிராகப்பேசுவார்கள். பார்க்கிறாயா?” என்றார் பீஷ்மர். “மக்களின் எண்ணம் ஒருங்கிணைந்து இருந்த தருணமே வரலாற்றில் இல்லை. அது குறுகிய வழியில் செல்கையில் விரைவுகொண்டு கொந்தளிக்கும் நதியே. கரைகட்ட அறிந்தவன் அதை எளிதில் விரித்துப்பரப்பலாம்.”

“ஆம், நான் அதை அறிவேன். என்னால் அதை செய்யமுடியாது. அதற்கும் ஒரு ஷாத்ர வல்லமை தேவை” என்றார் விதுரர். “ஆனால், இப்போது என்னை கொன்று உண்ணவேண்டுமென பசி கொண்டுவிட்டார்கள். இன்று துரியோதனனுக்கு முடி சூட்டவில்லை என்றால் அது என் சதி என்றே எண்ணப்படும். என்னால் அதன் பின் அஸ்தினபுரியில் வாழமுடியாது. இம்மக்களின் நினைவில் நான் கசப்பாக ஆகிவிடுவேன்.” விதுரர் கண்களைத் திருப்பி “அது எனக்கு இறப்புக்கு நிகர் பிதாமகரே” என்றார்.

பீஷ்மர் பற்களைக் கடித்து குனிந்து “ஆகவே? ஆகவே என்ன செய்யவேண்டும் என்கிறாய்?” என்றார். “இளவரசர் முடிசூடட்டும்” என்றார் விதுரர் மெல்ல. “முடியா? மணிமுடியேவா?” என்றார் பீஷ்மர் உரக்க. “ஆம், வேறு வழியில்லை” என்றார் விதுரர். வெடித்தெழுந்த குரலுடன் கையை வீசி “ஒருபோதும் நடக்காது” என்றார் பீஷ்மர். பின் தன்னை அடக்கி மூச்சுக்குள் “அவர்கள் இருக்கிறார்கள்...” என்றார்.

”ஆம், பிதாமகரே. ஆனால் நாம் இன்று இருக்கும் நிலையை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அரசர் தங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்? இன்றுவரை அஸ்தினபுரியில் தங்கள் சொல் மீறப்பட்டதில்லை. இன்று நிகழ்ந்தது என்றால்?” என்றார் விதுரர்.

பீஷ்மர் சிலகணங்கள் கூர்ந்து நோக்கி “அப்படி நிகழும் என்கிறாயா?” என்றார். விதுரர் “அரசர் உணர்ச்சிமயமானவர். அந்த ஷத்ரிய குலத் தலைவர் பத்ரசேனர் அவர் சொன்னது போல கழுத்தறுபட்டு அவையில் விழுவார் என்றால் அவர் தங்களை மீறக்கூடும். அரசர் தன்னை ஒரு ஷத்ரியப் படைவீரனாக எண்ணிக்கொள்பவர். அவர்களில் ஒருவரென்றே அவர்களாலும் கருதப்படுபவர். பத்ரசேனரின் உணர்ச்சி அவரை அடித்துச் சென்று சேர்த்துவிடும்” என்றார்.

பீஷ்மர் தயங்கி பார்வையை விலக்கினார். “பிதாமகரே, ஒருவன் முழுப்பொய்யையே சொன்னாலும் முழுமூடத்தனத்தையே சொன்னாலும் அதன்பொருட்டு உயிர்துறப்பான் என்றால் அதை தெய்வங்கள் வந்து தொட்டு உண்மையாக ஆக்கிவிடும்” என்றார் விதுரர். ”பத்ரசேனர் சொன்னது வீண் சொல் அல்ல. அவரை நான் அறிவேன்.”

தோள்கள் தளர பீஷ்மர் போகட்டும் என்பது போல கையை அசைத்தார். விதுரர் “நான் சொல்வதை சிந்தியுங்கள் பிதாமகரே” என்றார். பீஷ்மர் பெருமூச்சு விட்டு “ஆம், அவன் என் மாணவன்” என்றார். “உள்ளாழத்தில் எங்கோ ஓரிடத்தில் அவன் என்னை மறுத்துப்பேச விழைந்திருக்கவும் கூடும்.”

“பிதாமகரே, அவரை குறைகூறி பயனில்லை. இன்று அவர் சொல்லில் இருக்கும் விசை அவருடையது அல்ல. ஏரியின் முழுநீரும் வந்து முட்டும் மதகின் உச்சகட்ட அழுத்தம் அது. மதயானைகளின் மத்தகங்களை விட நூறு மடங்கு ஆற்றல் கொண்டது” என்று விதுரர் சொன்னார். “இப்போது அதற்குப் பணிவோம். இவ்விசை அதிகநேரம் நீடிக்காது. அதன்பின் ஆவதைச் செய்வோம்.”

பீஷ்மர் தாடியைத் தடவியபடி “ஆம்... அதுவே விவேகம் என்று தோன்றுகிறது” என்றார். பின்னர் புன்னகைத்து அவர் தோளைத் தொட்டு “வா” என்றார். விதுரர் மீண்டும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டார். பீஷ்மரும் புன்னகைதான் செய்கிறார். ஆனால் அது சோர்ந்த புன்னகை. மைந்தரை எண்ணி மனம் கசந்த தந்தையின் புன்னகை.

அவன் புன்னகை எப்படி இருக்கும் இத்தருணத்தில்? வெளியே கொந்தளிக்கும் இந்த மூட மக்கள்திரளை அவன் முழுமையாக மன்னிப்பான். அவர்களை நோக்கி கனிந்து நகைப்பான். உள்ளிருந்து அவர்களை ஆட்டிவைக்கும் சதிகாரர்களை? அவர்களையும்தான். ஆனால் அகம் கனிந்து, புன்னகை விரிந்து, அவர்களின் தலைகளை வெட்டி வீசுவான். விதுரர் புன்னகை செய்தார்.

அப்புன்னகையுடன் அவர் அவை நுழைந்தபோது அவர் முகத்தை முதலில் வந்து தொட்ட கணிகரின் கண்கள் திகைப்புடன் விலகிக்கொள்வதை விதுரர் கண்டார். அதை கண்ட சகுனியும் அவர் முகத்தை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டார். பீஷ்மரை அனைவரும் எழுந்து வணங்கி வரவேற்றனர். அவர் தன் பீடத்தில் அமர்ந்து கால்களை விரித்து அதன்மேல் கைகளை வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

விதுரர் தன் மேல் பதிந்திருந்த கண்களின் கூர்முனைகளை உணர்ந்துகொண்டு எவரையும் நோக்காமல் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டார். நிமிர்ந்து தலைதருக்கி அமர்ந்துகொண்டு எதிரே இருந்த சாளரத்தை நோக்கி முகத்தை திருப்பிக்கொண்டார். அது தன் முகத்தை ஒளியுடன் காட்டும் என அவர் அறிந்திருந்தார்.

துரியோதனனும் அவன் தம்பியரும் அரசருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தனர். துரியோதனன் அருகே கர்ணன் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனன் இருந்தான். துரியோதனன் முகம் முச்சந்தியில் வைக்கப்பட்ட ஆடி போல கணம்தோறும் ஒன்றைக் காட்டியது. மீசையை நீவியபடி கர்ணன் அமைதியாக இருந்தான். தென்னகப் பயணத்துக்குப்பின் அவன் மேலும் பலமடங்கு ஆழம்கொண்டவனாக ஆகிவிட்டதாகத் தோன்றியது.

பேரவை முழுமையாகக் கூடியதும் நான்கு வெளிவாயில்களும் மூடப்பட்டன. சேவகர்கள் அனைவரும் வெளியே சென்றனர். வெளியே காவல்வீரர்களின் பாதக்குறடு ஒலி மட்டும் மெல்ல கேட்டது. அவையில் சிலர் தும்மினர். யாரோ ஏதோ முணுமுணுத்தனர். தலைக்குமேல் ஆடிய பட்டுப்பெருவிசிறி அறையின் வண்ணத்தில் அலைகளை கிளப்பியது. சாளரத் திரைச்சீலைகள் காற்றில் படபடத்தன. அப்பால் ஏதோ ஒரு மரத்தில் ஒரு காகம் கரைந்தது. மிகத்தொலைவில் யானைக்கொட்டிலில் ஒரு யானை உறுமியது. எங்கோ ஆலயமணி ஒன்று ஒலித்து அடங்கியது.

விப்ரர் வந்து “அரசரின் வருகை” என்றார். பீஷ்மரும் துரோணரும் கிருபரும் தவிர பிறர் எழுந்து நின்றனர். சஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் மெல்ல நடந்து வந்தார். அவர் மிக மெலிந்திருந்தாலும் உடலின் எலும்புச்சட்டகமே அவரை பேருருவாகக் காட்டியது. தோள் எலும்புகளும் முழங்கை எலும்புகளும் பெரிதாக புடைத்திருந்தன. விலா எலும்புகள் நடக்கும்போது தோலுக்குள் அசைந்தன.

அவரது தோற்றம் பேரவையில் எழுப்பிய உணர்ச்சி மெல்லிய ஒலியாக வெளிப்பட்டது. அவர் நோயுற்றிருக்கிறார் என அவர்கள் அறிந்திருந்தாலும் மெலிந்த திருதராஷ்டிரரை அவர்களால் கற்பனை செய்யவே முடிந்திருக்கவில்லை. யாரோ தொண்டையைக் கமறினர். வாழ்த்தொலி ஒன்று மெல்ல எழுந்தது. “அஸ்தினபுரியாளும் குருகுல முதல்வர் திருதராஷ்டிரர் நீடூழி வாழ்க!” தொடர்ந்து வாழ்த்துக்கள் எழுந்து அவைமுகடு முழங்கியது.

முதல் முறையாக வாழ்த்தொலிகள் உண்மையான உணர்ச்சிகளுடன் எழுவதாக விதுரர் எண்ணினார். “ஹஸ்தியின் தோள்கொண்ட எங்கள் குலப்பதாகை வாழ்க! மண்ணில் இறங்கிய விண்ணகத்து வேழம் வாழ்க!” விதுரர் திரும்பி நோக்கியபோது அத்தனை குலத்தலைவர்கள் முகங்களும் உருகிக் கொண்டிருப்பதை பார்த்தார். இரு கைகளையும் கூப்பி தன் முகத்தை அதில் வைத்துக்கொண்டார். அவர் நெஞ்சமும் பொங்கி எழுந்தது.

அமர்ந்ததுமே கை தூக்கி அவையை அடக்கிவிட்டு உரத்த பெருங்குரலில் திருதராஷ்டிரர் சொன்னார் “இங்கு வருகையில் என்னிடம் விப்ரர் சொன்னார், என் தம்பி விதுரனை சிலர் குறை சொல்வதாக. அத்தனை பேருக்கும் ஒன்று சொல்கிறேன். அவனே இந்நகரம். அவனே வாழும் விசித்திரவீரிய மாமன்னன். என் தந்தையை நானாளும் கோல்கீழ் நின்றபடி ஒரு சொல் சொல்லத் துணிந்தவன் அக்கணமே என் எதிரியே!”

திகைத்து தன்னை அறியாமலேயே விதுரர் எழுந்துவிட்டார். கால்கள் வலுவற்றிருக்க நிற்க முடியாமல் மீண்டும் பீடத்தில் விழுவது போல அமர்ந்தார். திருதராஷ்டிரர் தன் முழங்கால் மேல் ஓங்கி அறைந்து கூவினார்.

“என்ன சொன்னீர்கள்? அவன் யாதவர்களுக்காக சதி செய்கிறானா? ஏன் செய்யவேண்டும்? இப்போது இச்சபையில் அவன் சொல்லட்டும், அஸ்தினபுரியின் முடியும் கருவூலமும் அவனுக்குரியது. அவன் அளித்தால் அது யாதவர்களுக்குரியது. இவ்வரசும் இம்முடியும் இங்குள்ள எவரும் என் இளையோனுக்கு நிகரானவரல்ல. ஆம், எவரும்” ஓங்கி தன் தோளில் அறைந்தார் திருதராஷ்டிரர் . அந்த ஒலியில் அவை அதிர்ந்த அசைவு எழுந்தது. “என் மைந்தரோ, பிதாமகர் பீஷ்மரோ கூட.”

கை தூக்கி திருதராஷ்டிரர் கூவினார். “யார் அதைச் சொன்னது? பத்ரசேனரே நீரா?” பத்ரசேனர் எழுந்து கைகூப்பி “ஆம், அரசே” என்றார். “இச்சபையில் என் இளையோனிடம் பிழைபொறுக்கக் கோரவேண்டுமென உமக்கு ஆணையிடுகிறேன். இல்லையேல் இப்போதே என்னிடம் மற்போரிட வாரும். வென்றால் இம்மணிமுடியை நீரே எடுத்துக்கொள்ளும். உமது குடி இங்கு ஆளட்டும். நானும் என் இளையோனும் வாளை நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு விசித்திரவீரியரும் எந்தையரும் வாழும் விண்ணுலகு செல்கிறோம்... வாரும்!” என்றபடி திருதராஷ்டிரர் எழுந்தார். பெரிய கைகளை விரித்து அவர்களின் தலைமேல் கவிந்தவர் போல நின்றார்.

பத்ரசேனர் கைகூப்பி உறுதியான குரலில் “அரசே, நீங்கள் என் கண் அறிந்த தெய்வம். ஆனால் என் சொல்லுக்காக அவைநடுவே சாவதே நான் செய்யக்கூடியது. என் சொற்களில் மாற்றமில்லை. இங்கே இப்போதே அஸ்தினபுரியின் மணிமுடி துரியோதனருக்கு வழங்கப்படவேண்டும். இன்றே பாஞ்சாலம் நோக்கி மணிமுடியுடன் பெண்கொள்ள அவர் சென்றாகவேண்டும். அதை அரசர் ஆணையிடவேண்டும். அந்த மணிமுடியை விதுரரே எடுத்து இளவரசர் தலையில் அணிவிக்கட்டும். அதன்பின் அவரைப்பற்றி நான் சொன்னதற்கு அவை நடுவே நான் பிழைபொறுக்கக் கோருகிறேன்” என்றார். “ஒரு சொல் அவர் எதிராகச் சொல்வாரென்றாலும் அவரைக் கொல்ல எழுவேன். இச்சபையில் உங்கள் கையால் இறப்பேன். என் உடைவாள் மேல் ஆணை!”

திருதராஷ்டிரர் “பிதாமகர் சொல்லட்டும்” என்றார். பீஷ்மர் ”மைந்தா, இந்த அவையில் நீ சொன்ன அன்பு நிறைந்த சொற்களுக்காக உன் மூதாதையர் விண்ணகத்தில் மெய்சிலிர்த்து கண்ணீர் விடுகிறார்கள். இங்கே நானும் அவர்களுடன் இணைந்திருக்கிறேன். நீ சொல்! நீ சொல்வது என் தந்தையரின் சொல்” என்றார்.

திருதராஷ்டிரர் பேச வாயெடுப்பதற்குள் கணிகர் “நான் அயலவன். ஆனால் அஸ்தினபுரியின் நலம் விழைவோன். அஸ்தினபுரியின் மணிமுடி சார்ந்த பேச்சில் நானோ காந்தாரரோ சொல்ல ஏதுமில்லை. ஆனால் இன்றுள்ள முதல் பணி பாஞ்சால இளவரசி அஸ்தினபுரிக்கு வந்தாகவேண்டும் என்பதே. தேவயானியின் அரியணையில் அவள் அமர்ந்தாகவேண்டும். அதைப்பற்றி மட்டும் எண்ணுவோம்” என்றார். சகுனி “ஆம், அதையே நான் சொல்ல விழைகிறேன். நம்மிடமிருந்து நமது அரசு தவறப்போகிறது. அதுவே இங்கு நாம் கூடுவதற்கான பின்னணி” என்றார்.

திருதராஷ்டிரர் “காந்தாரரே, அதை நான் உணர்ந்தே இருக்கிறேன். என்னிடம் விரிவாக அதை கணிகர் சொன்னார். நானும் ஒற்றர்களிடம் பேசினேன். பாஞ்சாலத்தை நாம் எவரிடமும் விட்டுக்கொடுக்க முடியாது. அதற்குரியவற்றை செய்தே ஆகவேண்டும்” என்றார்.

விதுரர் கைகூப்பி எழுந்ததும் அவை அமைதிகொண்டது. அவர் செருமியபின் “அரசே, நானும் அதையே சொல்கிறேன். அதன் பொருட்டு இளவரசர் துரியோதனர் முடிசூடுவதும் தகும் என்பதே என் எண்ணம். ஹஸ்தியின் மணிமுடியுடன் அவர் சென்று பாஞ்சாலனின் அவையில் அமரட்டும். திரௌபதியை வென்றுவரட்டும். உடனே நாம் செய்யவேண்டியது அதுவே” என்றார்.

பத்ரசேனர் “ஆம், அது நிகழட்டும்” என்றபின் எழுந்து வந்து தன் உடைவாளை உருவி விதுரர் முன் தாழ்த்தி “அமைச்சரே, நான் சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்நாட்டின் மேல் கொண்ட பற்றினாலேயே. உங்களை நான் ஐயுற்றதும் அதனால்தான். இப்போது என் குலத்தின் தெய்வமான இந்த வாளை உங்கள் முன் தாழ்த்தி பொறுத்தருளும்படி கோருகிறேன்” என்றார். விதுரர் “நிகழ்ந்தவற்றை மறப்போம்” என்றார்.

பீஷ்மர் “முடிசூடுவதில் சில முறைமைகள் உள்ளன” என்று தொடங்கியதும் விதுரர் “அம்முறைமைகளை பட்டத்து அரசியாக பாஞ்சாலி வந்ததும் செய்வோம். அரியணை காத்திருக்கட்டும். கங்கை அபிஷேகம் செய்து முடிசூடி கோலேந்தி மூத்தோர் வாழ்த்துகொள்வதே முதன்மையானது. அது இங்கே இந்த அவையிலேயே நிகழட்டும்” என்றார். சகுனி “அமைச்சர் சொன்னது முறையானதென்று நானும் எண்ணுகிறேன்” என்றார்.

பீஷ்மர் “இந்த அவையில் எவருக்கேனும் மறுஎண்ணம் உண்டா?” என்றார். பேரமைச்சர் சௌனகர் எழுந்து “மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா? மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா? மாற்று எண்ணம் உள்ளவர் உண்டா?” என்று மும்முறை கேட்டார். ”இல்லை” என்று அவை விடை சொன்னதும் “அவை அரசரின் முடிவை ஏற்றுக்கொண்டது என்று அறிவிக்கிறேன்” என்றார். “முடிசூடும் இளவரசர் வாழ்க! ஹஸ்தியின் தோள்கொண்ட துரியோதனர் வாழ்க” என்றார்.

திரும்பி “கருவூலத்தில் இருக்கும் ஹஸ்தியின் மணிமுடியை எடுத்துவருக!” என்றார். கருவூலக்காப்பாளரான பூரணரும் அரண்மனை செயலமைச்சரும் மறைந்த களஞ்சியக்காப்பு அமைச்சர் லிகிதரின் மைந்தருமான மனோதரரும் கருவூலம் நோக்கி ஓடினர். அவர்களைத் தொடர்ந்து பிற துணையமைச்சர்களும் சென்றனர்.

சௌனகர் சேவகரிடம் “அரசியரை முழுதணிக்கோலத்தில் அவைக்கு வரச்சொல்லுங்கள். கங்கை நீரும் மஞ்சள் அரிசியுமாக ஏழு வைதிகர் உடனே வந்தாகவேண்டும்” என்று ஆணையிட கோட்டையின் தலைமைக் காவலரும் அமைச்சர் விப்ரரின் மைந்தருமான கைடபர் விரைந்தோடினார்.

சௌனகர் விதுரர் அருகே வந்து குனிந்து “வேள்வி ஏதும் தேவையா?” என்றார். ”அனல் சான்று தேவையல்லவா?” விதுரர் “இல்லை. மண்ணாள்வதற்கு புனலே சான்று. ஆன்மாவை ஆள்வதற்கே அனல். இம்மணிமுடிசூட்டல் ஓர் அடையாளத்துக்காகத்தான். வைதிகர் கங்கைநீரூற்றிய பின் அரசர் மணிமுடியை எடுத்து மைந்தர் தலையில் வைக்கட்டும். அவர் கோலேந்தி நின்றதும் மூத்தோரும் அவையும் மஞ்சள்அரிசியிட்டு வாழ்த்தட்டும். அதுவே மணிமுடி சூடியதாக ஆகிவிடும். அரியணை ஏற்பதற்கான வேள்விகளை பின்னர் விரிவாகச் செய்யலாம்” என்றார்.

துரியோதனன் இறுகிய முகத்துடன்தான் அமர்ந்திருந்தான். அவன் அகம் இன்னமும்கூட அங்கு நிகழ்வனவற்றை நம்பவில்லை என்று விதுரருக்குத் தோன்றியது. ஆனால் கௌரவர்கள் அனைவரும் முகம் முழுக்க சிரிப்புடன் உடல்கள் உவகையில் அசைய கைகள் அலைபாய நின்றனர். துச்சாதனன் தம்பியரிடம் மாறி மாறி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

கணிகர் ஒளிரும் சிறு விழிகளுடன் அவையை நோக்கி அமர்ந்திருந்தார். அவையில் வந்து இருளில் அமர்ந்து நோக்கும் எலிபோல ஒவ்வொரு குலத்தலைவரின் முகமாக அவர் நோக்கிக்கொண்டிருப்பதை விதுரர் கண்டார். சகுனி பீஷ்மரின் முகத்தையும் திருதராஷ்டிரர் முகத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். சஞ்சயன் அங்கே நிகழ்வதைச் சொல்ல தலைசரித்து திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் சொற்களுக்கேற்ப அவர் முகம் மாறிக்கொண்டிருந்தது.

பேரவையின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. அவர்கள் அங்கே வந்தபோதிருந்த கிளர்ச்சி அவிந்து பரபரப்பு கூடியது. ஆனால் அவர்கள் பெருமளவில் உவகை ஏதும் கொள்ளவில்லை என்று தோன்றியது. உண்மையில் அவர்களில் மெல்லிய ஏமாற்றம்தான் ஓடிக்கொண்டிருப்பதாக விதுரர் எண்ணினார். அவர்கள் இன்னும் பெரிய கொந்தளிப்பை, உணர்ச்சி நாடகத்தை எதிர்பார்த்திருக்கலாம். தங்கள் வாழ்நாள் முழுக்க சொல்லிச் சொல்லித் தீராத சில அங்கே நிகழும் என்று எண்ணியிருக்கலாம். துரியோதனன் முடிசூடப்போகிறான் என்றானதுமே அவர்களுக்குள் அவனைப்பற்றி இருந்த ஐயங்களும் அச்சங்களும் மேலெழுந்து வந்திருக்கலாம். விதுரர் புன்னகையுடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

பேரவையின் கதவு திறந்து இளைய கௌரவன் சுஜாதன் மெல்ல நடந்து வந்து துரியோதனன் அருகே நின்று ஏதோ சொல்ல அவன் மெல்ல எழுந்தான். திருதராஷ்டிரர் திரும்பி “என்ன?” என்றார். ”மதுராவில் இருந்து குருநாதர் பலராமர் வந்திருக்கிறார். என்னை உடனே பார்க்கவேண்டும் என்கிறார்” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரர் “தக்க தருணம். முடிசூடும் வேளையில் நட்பரசர் ஒருவர் இருப்பது முறைப்படி மிக நன்று. தெய்வங்களே அவரை அனுப்பியிருக்கின்றன” என்றார். “அவரை இங்கே வரச்சொல்!”

துரியோதனன் தயங்கி “அவர் எதன்பொருட்டோ கடும் சினத்துடன் வந்திருக்கிறார்.” “சினம் இங்கு அவைக்கு வந்து நீ மணிமுடி சூடவிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டதும் தீர்ந்துவிடும். அவரது நல்வாழ்த்து உனக்குத்தேவை.” திருதராஷ்டிரர் உவகையுடன் நகைத்து “ஆம், அதுவே முறை. தாய் தந்தை குருநாதர் தெய்வம் என நால்வரும் கூடி வாழ்த்த வேண்டும். அவர் வரட்டும்...” என்றார்.

சுஜாதன் வெளியே செல்ல கூடவே துச்சாதனனும் சென்றான். அவை முழுக்க பதற்றமான மெல்லிய பேச்சொலி நிறைந்திருந்தது. பீஷ்மர் “அவர் சினம் கொண்டிருப்பது எதற்கென்று நீ அறிவாயா?” என்று கேட்க துரியோதனன் “இல்லை பிதாமகரே” என்றான். விதுரர் “அவர் கட்டற்ற முந்துசினத்துக்குப் புகழ்பெற்றவர்” என்றார். திருதராஷ்டிரர் சிரித்து “ஆம், நெய்க்கடல் என்றே அவரை சொல்கிறார்கள்” என்றார். “ஆனால் தன் மாணவன் முடிசூடக்கண்டால் குளிர்ந்து பனிக்கடலாகிவிடுவார்.”

பலராமர் உள்ளே நுழைந்ததுமே துரியோதனன் ஓடிச்சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவனை நோக்காமல் அவையை நோக்கி உரத்த குரலில் கையைத் தூக்கி “அஸ்தினபுரியின் பிதாமகரையும் அரசரையும் குடிகளையும் வணங்குகிறேன். நான் வந்தது என் மாணவனை நோக்கி ஒரு வினாவை எழுப்ப மட்டுமே...” என்றார்.

திருதராஷ்டிரர் “அவன் எந்த முறைமையையும் மீறுபவனல்ல. அதை நான் வாக்குறுதியாகவே அளிக்க முடியும் பலராமரே. உங்கள் ஐயம் எதுவோ அதை அவை முன்னால் கேட்கலாம். இத்தருணத்தில் அவனை வாழ்த்த அவன் ஆசிரியரே வந்தது நல்லூழ் என்றே இந்நகர் எண்ணுகிறது” என்றார்.

பலராமர் “ஆம், பேரவை கூடுகிறது. அங்கு சென்று கேளுங்கள் என்றுதான் என் இளையோன் சொன்னான். நான் வந்ததே அதற்காகத்தான்” என்றார். விதுரரின் அகம் திடுக்கிட்டது. அவர் விழிகள் கணிகரின் விழிகளைத் தொட்டு மீண்டன. கணிகரின் முகம் வெளுத்து உதடுகள் இறுகிவிட்டதை உணர்ந்ததுமே அவர் புன்னகை புரிந்தார். பீஷ்மரை நோக்கினார். பீஷ்மரின் விழிகள் விதுரரை வந்து தொட்டு புன்னகைத்து மீண்டன. அவர் மெல்ல அசைந்து அமர்ந்தார்.

“அமருங்கள் யாதவரே” என்றார் திருதராஷ்டிரர். பலராமர் “நான் அமர வரவில்லை. துரியோதனா, நீ என் மாணவனாகிய பகனை ஏன் கொன்றாய்? அடேய், ஒருசாலை மாணாக்கனை ஒருவன் கொல்லவேண்டும் என்றால் அவ்வாசிரியனின் ஒப்புதலுடன் களம் குறிக்கவேண்டும் என்றுகூட அறியாத வீணனா நீ? நானறியாமல் என் மாணவனைக் கொன்றவன் என் எதிரியே. இதோ நான் அறைகூவுகிறேன். எடு உன் கதாயுதத்தை. உன் தலையை பிளந்துபோட்டபின்னரே நான் மதுராபுரிக்கு மீள்வேன்” என்று கூவினார்.

கைகூப்பியபடி நின்ற துரியோதனன் திகைத்து “என்ன சொல்கிறீர்கள் குருநாதரே?” என்றான். “நான் ஏழு வருடங்களாக அஸ்தினபுரியை விட்டு விலகவில்லை. ஐயமிருந்தால் இங்குள்ள எவரிடமேனும் கேளுங்கள்!” பலராமர் திகைத்து திரும்பி நோக்க விதுரர் “ஆம், அவர் அஸ்தினபுரியை விட்டுச் செல்லவில்லை. அப்படி ஒரு போர் நிகழ்ந்திருந்தால் அது ஒரு பகலுக்குள் இங்கிருந்து சென்று வரும் தொலைவில் நிகழ்ந்திருக்கவேண்டும்” என்றார்.

“இல்லை, பகன் ஏகசக்ர நகரை ஆட்சிசெய்து வந்தான். அது சத்ராவதிக்கு அப்பால் கங்கைக்கரையில் உள்ளது” என்றபோது பலராமர் குரல் தணிந்தது. தனக்குத்தானே கேட்பதுபோல “நீ அவனைக் கொல்லவில்லையா?” என்றார். ”இல்லை குருநாதரே. அவரைப்பற்றி நான் தங்களிடமிருந்து மட்டுமே அறிந்திருக்கிறேன்” என்றான் துரியோதனன்.

பலராமர் குழப்பத்துடன் “அப்படியென்றால் அவனைக் கொன்றவன் யார்? ஜராசந்தனா? ஒருபோதும் அவனால் கொல்லமுடியாது. குறித்த நேர்ப்போரில் அவனைக் கொல்ல இன்று உன்னால் மட்டுமே முடியும். இல்லையேல் உன் தந்தை கொன்றிருக்கவேண்டும். இல்லையேல் பீஷ்மர் கொன்றிருக்கவேண்டும்” என்றார்.

பீஷ்மர் “நானும் ஏழாண்டாக இந்நகரை விட்டு விலகவில்லை பலராமரே” என்றார். “ஐயமிருந்தால் சான்று அளிக்கிறேன்.” பலராமர் “தேவையில்லை. தங்கள் சொற்களே போதும்” என்றபின் “என் சித்தம் குழம்புகிறது. இன்றிருக்கும் இளையோரில் பகனைக் கொல்ல வேறு எவராலும் முடியாது... அதையே என் இளையவனும் சொன்னான். பகனைக் கொல்லும் ஆற்றல் கொண்டவர்களில் பீமன் இறந்துவிட்டான், இருப்பவன் துரியோதனன். எனவே அவனே கொலையாளி, சென்று அவையிலேயே அவனை நிறுத்தி கேளுங்கள் என்றான்” என்று சொல்லி முகவாயை கையால் வருடிக்கொண்டார்.

அவையில் ஓர் இறுக்கமான அமைதி நிலவியது. எண்ணியிராத கணத்தில் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி “ஆ!” என்று கூவிய திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து “ஆம், அது பீமன். பீமனேதான். அத்தனை தெளிவாக உணர்கிறேன். அவன் சாகவில்லை. பகனைக் கொன்றவன் அவன்தான்... பிதாமகரே, என் மைந்தர் இறக்கவில்லை” என்று கூவினார்.

பெரிய வெண்பற்கள் தெரிய உரக்க நகைத்தபடி பீடத்தை விட்டு முன்னால் ஓடிவந்து கைகளை தலைக்குமேல் தூக்கி ஆட்டி நடனம்போல அசைந்தபடி “அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்!” என்று கூச்சலிட்டார். கைகளைத் தட்டியபடி பித்தனைப்போல சிரித்து பின் நெஞ்சில் ஓங்கி அறைந்து “ஆம், அவர்கள் இருக்கிறார்கள். என் தெய்வங்கள் கருணை கொண்டவை... மைந்தா துரியோதனா! அவர்கள் அந்த எரிநிகழ்வில் சாகவில்லை... இருக்கிறார்கள்” என்றார்.

பேரவையில் பெரும்பாலானவர்கள் திகைத்து அமர்ந்திருந்தனர். விதுரர் கணிகரை நோக்கினார். அவர் கண்களை மூடிக்கொண்டு உடலை முற்றிலும் குறுக்கி அங்கில்லாதது போல் இருந்தார். சகுனி கைகளை இறுக இணைத்துக்கொண்டு கழுத்துநரம்புகள் புடைக்க சிவந்த முகத்துடன் சுருங்கி அமர்ந்திருந்தார். பலராமர் “ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக சொன்னார்கள்...” என்றார். “என் இளையோனும் அதைத்தானே சொன்னான்?”

பீஷ்மர் “பகன் கொல்லப்பட்டதை எவர் சொன்னார்கள்?” என்றார். பலராமர் “ஏகசக்ர நகரியில் இருந்து வந்த ஒரு சூதன் என்னிடம் சொன்ன கதை அது. நான் அதை முழுதும் கேட்கவில்லை. செய்தியை அறிந்ததுமே சினம் கொண்டு எழுந்து விட்டேன்” என்றார்.

பீஷ்மர் “அவன் இங்குள்ளானா?” என்றார். “ஆம், அவன் என்னுடன் வந்திருக்கிறான்” என்றார் பலராமர். பீஷ்மர் உறுதியான மெல்லிய குரலில் “அவன் இங்கு வரட்டும். அங்கே நிகழ்ந்ததை அவன் விரிவாகவே சொல்லட்டும்... அப்போது தெரியும், கொன்றது பீமனா இல்லையா என்று. வரச்சொல்லுங்கள்” என்றார்.

சௌனகர் “அரசே, பீமசேனரும் பாண்டவர்களும் உயிருடன் இருந்தால் எந்த முடிசூட்டுச் சடங்கும் தேவை இல்லை. அஸ்தினபுரியின் முடிக்குரிய இளவரசன் உயிருடன் இருக்கிறான்... நாம் செய்யவேண்டியது அவனை இங்கே திரும்பச் செய்வது மட்டும்தான்” என்றார். “ஆம்” என்றார் திருதராஷ்டிரர். “தருமன் இறக்கவில்லை. நான் உறுதியாக அறிவேன். பீமன் இருக்கிறான் என்றால் தருமனும் இருக்கிறான். அவனே நம் இளவரசன். அர்ஜுனனும் பீமனும் சென்று பாஞ்சாலியை வெல்லட்டும். குடித்தலைவர்களின் கோரிக்கை நிறைவடைய அதுவே வழி.”

“முதலில் சூதன் பாடலைக் கேட்போம்” என்றார் பீஷ்மர். விப்ரர் வெளியே ஓடி சூதனை அழைத்துவர சேவகர்களை அனுப்பினார். துரியோதனன் பின்னகர்ந்து சுவரில் சாய்ந்து தலைகுனிந்து நின்றான். அவனைப்போலவே அவன் தம்பியரும் ஆகிவிட்டதாகத் தோன்றியது. கலைந்த சிறு பேச்சுக்களுடன் அவையினர் மெல்ல அமர்ந்துகொண்டனர்.

விதுரர் மீண்டும் கிருஷ்ணனின் புன்னகையை நினைத்துக்கொண்டார். மானுட உள்ளங்கள் முடிந்தவரை ஓடிக் களைத்து சென்று அமரும் இடத்தில் முன்னதாகவே வந்து புன்னகையுடன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இங்கிருக்கும் இத்தனை மானுடப்பெருந்திரளும் இதன் காமகுரோத மோகங்களும் இவை போடும் பல்லாயிரம் கணக்குகளும் எப்படித்தான் பொருளாகின்றன?

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 5

அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர்.

“நான் அதை நேரில் பார்க்கவில்லை. அகிசத்ரத்தில் ஒரு முதுசூதரிடமிருந்து அப்பாடலை முழுமையாகக் கற்றேன். அதையே நானறிவேன்.” விதுரர் “நெருப்பு என்பது பற்றிக்கொண்டு பரவுவதுதானே?” என்றார். “நான் அப்பாடலை முழுமையாக பாடலாமா?” என்றான் சூதன். “ஆம், அதையே எதிர்நோக்குகிறோம். உமது பெயரென்ன?” சூதன் தலைவணங்கி ”உரகபுரியைச் சேர்ந்த என் பெயர் பிரமதன்” என்றான். “அமர்ந்துகொள்ளும்” என்றார் விதுரர்.

பிரமதன் அமர்ந்துகொண்டு அந்தக் கருவியை தன் மடியில் வைத்து மெல்ல ஆணியை இழுத்து சுதிசேர்த்ததும் திருதராஷ்டிரர் “பிரமதரே, அது என்ன கருவி?” என்றார். “அது யாழோ வீணையோ அல்ல. ஓசை மாறுபட்டிருக்கிறது.” பிரமதன் “இதன் பெயர் மதுகரம். ஒற்றைத்தந்தி மட்டுமே கொண்டது. ஆனால் இதன் நீளத்தை விரலால் மீட்டி ஏழு ஒலிநிலைகளுக்கும் செல்லமுடியும்” என்றான். ஒருமுறை அவன் விரலோட்ட அந்த ஒற்றைத்தந்தி யாழ் ”இங்கிருக்கிறேனய்யா” என்றது.

திருதராஷ்டிரர் ஆர்வத்துடன் “இதில் அலையொலி நிற்குமா?” என்றார். “மானுடக் குரல் பேசாது. வண்டின் குரல் எழும். ஆகவேதான் இதற்கு மதுகரம் என்று பெயர். திரிகர்த்தர்களின் இசைக்கருவி இது. மரக்குடத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இது பட்டுநூல் நரம்பு” என்றான் பிரமதன். “மானுடக்குரலின் அடிக்கார்வையுடன் மட்டுமே இது இணைந்துகொள்ளும். இதன் சுருதியில் பாடுவதென்பது மிகச்சிலராலேயே இயலும். பெண்களால் இயலாது.”

“பாடும்” என்றார் திருதராஷ்டிரர் புன்னகையுடன். “புதிய ஒலியைக் கேட்டு நெடுநாளாகிறது.” பிரமதன் அதை மெல்ல மீட்டத்தொடங்கியதும் மெல்லிய வண்டின் இசை எழுந்தது. வண்டு சுழன்று சுழன்று பறந்தது. பின் அந்த ஒலியில் செம்பாலைப்பண் எழுந்தது. துடித்தும் அதிர்ந்தும் தொய்ந்தும் எழுந்தும் பண் தன் உருவைக்காட்டத் தொடங்கியதும் திருதராஷ்டிரர் முகம் மலர்ந்து “சிறப்பு! மிகச்சிறப்பு!” என்றார். சூதன் பண்ணுடன் தன் குரலை இழையவிட்டு மெல்ல பாடத்தொடங்கினான்.

“விண்படைத்த பெரியோன் வாழ்க! அவன் உந்திமலர் எழுந்த பிரம்மன் வாழ்க! பிரம்மன் மடியிலமர்ந்து சொல்சுரக்கும் அன்னை வாழ்க! சொல்லில் மலர்ந்த சூதர் குலம் வாழ்க! சூதர் பாடும் மாமன்னர்கள் வாழ்க! அம்மன்னர்கள் ஆளும் நிலம் வாழ்க! அந்நிலத்தைப் புரக்கும் பெருநதிகள் வாழ்க! நதிகளை பிறப்பிக்கும் மழை வாழ்க! மழை எழும் கடல் வாழ்க! கடலை உண்ட கமண்டலத்தோன் வாழ்க! அவன் வணங்கும் முக்கண்ணோன் வாழ்க!”

சான்றோரே கேளுங்கள்! வடக்கே உசிநாரர்களின் சிறுநகரமான சிருங்கபுரிக்கு அருகேயிருந்த கிருஷ்ணசிலை மலைச்சாரலில் ஊஷரர்கள் என்னும் நூறு அரக்கர்குடியினர் வாழ்ந்தனர். கரிய சிற்றுடலும் ஆற்றலற்ற கால்களும் சடைமுடிக்கற்றைகளும் கொண்டிருந்த அவர்கள் காடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடியும், பறவைகளை பொறிவைத்துப்பிடித்தும், காடுகளில் கிழங்கும் கனிகளும் தேடிச்சேர்த்தும் உண்டு வாழ்ந்தனர். முயல்தோலையும் பெருச்சாளித்தோலையும் ஆடையாக அணிந்திருந்தனர். மரக்கிளைகளுக்குமேல் நாணலால் குடில்கள் கட்டி வாழ்ந்தனர். கூராக வெட்டிய மூங்கில்களை அவர்கள் படைக்கலமாகக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணசிலை மலைச்சாரலை ஒவ்வொரு வருடமும் உசிநார நாட்டு யாதவர்கள் தீவைத்து எரித்து புல்வெளியாக்கினர். உழவர்கள் புல்வெளிகளை அவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி கழனிகளாக்கினர். கழனிகள் நடுவே சேவல்களும் நாய்களும் காக்கும் ஊர்கள் அமைந்தன. ஊர்கள் நடுவே வணிகர்களின் சந்தைகள் எழுந்தன. சந்தைகளில் சுங்கம் கொள்ள ஷத்ரியர்கள் வந்தனர். ஷத்ரியர்களிடம் நிதிபெற்று பிராமணர்கள் அங்கே வந்து வேள்வி எழுப்பினர். யாதவர்களின் நெருப்பு ஒவ்வொன்றும் வேள்வி நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. வெம்மைகொண்ட உலோகப்பரப்பின் ஈரம் போல காடு கண்காணவே வற்றி மறைந்துகொண்டிருந்தது.

அரக்கர் வாழும் புதர்க்காடுகளை யாதவர்கள் தீவைத்து அழித்தனர். யாதவர்களிடம் வரி கொண்ட ஷத்ரியர்கள் புரவிகளிலேறி வந்து அவர்களைச் சூழ்ந்து வேட்டையாடி கொன்றனர். தங்கள் மூங்கில் வேல்களைக்கொண்டு அவர்களை எதிர்க்கமுடியாமல் புல்வெளிகளில் ஆண்கள் செத்து விழ அரக்கர் குலப்பெண்கள் மேலும் மேலும் மலையேறிச்சென்று காடுகளுக்குள் ஒடுங்கிக் கொண்டனர். நாடு சூழ்ந்த காட்டுக்குள் இருந்து விலங்குகள் மறைந்தன. உணவில்லாமலானபோது அரக்கர்கள் மேயவந்த கன்றுகளை கண்ணியிட்டுப் பிடித்து கொண்டுசென்று உரித்து சுட்டு உண்டனர். கன்றுகளைக் கொல்லும் அரக்கர்களைக் கொல்லும்படி யாதவர்கள் உசிநார அரசனிடம் கோரினர். அரசாணைப்படி புரவிப்படைகள் காடுகளுக்குள் ஊடுருவி அரக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று போட்டன.

பகலெல்லாம் காட்டில் புதர்களுக்குள் ஒளிந்து உறங்கியபின் இரவில் எழுந்து இருளின் மறைவில் ஊர்களுக்குள் இறங்கி கன்றுகளைக் கொன்று தூக்கிச் சென்று உச்சிமலையின் குகைகளுக்குள் புகையெழாது சுட்டு உண்டு வாழ்ந்தனர் அரக்கர்கள். பலநாட்களுக்கொருமுறை மட்டுமே உணவுண்டு மெலிந்து கருகிய முட்புதர்கள் போலாயினர். காடுகளுக்குள் அவர்கள் செல்லும்போது நிழல்கள் செல்வதுபோல ஓசையெழாதாயிற்று. அவர்களின் குரல்கள் முணுமுணுப்புகளாயின. அவர்களின் விழிகள் ஒளியிழந்து உடும்புகளைப்போல அருகிருப்பதை மட்டுமே பார்த்தன.

ஊஷரர்குலத்துத் தலைவனாகிய தூமன் என்னும் அரக்கனுக்கும் யமி என்ற அரக்கிக்கும் பன்னிரண்டு மைந்தர்கள் பிறந்தனர். பதினொரு குழந்தைகளும் பசித்து அழுது நோய்கொண்டு இறந்தன. யமி பன்னிரண்டாவதாகக் கருவுற்றபோது அரக்கர்கள் மலையுச்சியின் குகை ஒன்றுக்குள் பதுங்கி இருந்தனர். அவர்களைக் கொல்வதற்காக குதிரைகளில் வில்லும் அம்புமாக ஷத்ரியர்கள் காடெங்கும் குளம்படி எதிரொலிக்க அலைந்துகொண்டிருந்தனர். யமியின் வயிறு மலைச்சுனையின் பாறைபோல கரிய பளபளப்புடனிருந்தது. அவள் கைகளும் கால்களும் மெலிந்து அப்பாறை இடுக்கில் முளைத்த கொடியும் வேரும்போலிருந்தன. அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. இருளை நோக்கியபடி குகைக்குள் அசையாது படுத்திருந்தாள்.

நாட்கணக்காக உணவில்லாமலிருந்த யமி குகைக்குள் குழியானைப்பூச்சி அள்ளிக்குவித்த பொடிமண்ணை அள்ளி உண்டு பசியடக்கக் கற்றிருந்தாள். மண் அவள் வயிற்றையும் நெஞ்சையும் சிந்தையையும் அணைத்தது. நாளெல்லாம் காற்றை உணராத அடிமரம் போல அசைவிழந்து அமர்ந்திருந்தாள். பத்துமாதமானபோது அவளே அறியாமல் மடியிலிருந்து நழுவி விழுந்த பாக்கு போல சின்னஞ்சிறு குழந்தை பிறந்தது. தவளைக்குஞ்சு போல மெல்லிய கைகால்களும் சிறிய தலையும் கொண்டிருந்த அக்குழந்தை உருண்ட பெருவயிறுடன் இருந்தது. வாயருகே காதுகொண்டு வைத்துத்தான் அப்பேற்றை எடுத்த அரக்கர்குல முதியவள் மண்டரி அது அழுவதை கேட்டாள்.

யமியின் உடலில் இருந்து குருதியே வரவில்லை என்றாள் முதியவள் மண்டரி. விழித்த கண்களுடன் உலர்ந்த உதடுகளுடன் அவள் குகையின் மேல்வளைவை நோக்கி கிடந்தாள். அவளை பெயர் சொல்லி அழைத்தபோது ஏற்கனவே இறந்திருந்த அவள் மூதாதையர் உலகில் இருந்து மெல்ல “ம்” என்று மறுமொழி அளித்தாள். மீண்டும் அழைத்தபோது மேலும் மூழ்கி கடந்து சென்றிருந்தாள். அவள் கைகால்கள் இறந்துவிட்டிருந்தன. வெயிலில் நெளிந்து காய்ந்து மடியும் மண்புழு என நாக்கு அசைந்து இறந்தது. இறுதியாக கண்களும் இறந்து இரு கரிய வடுக்களாக எஞ்சின. அவள் குழந்தையை பார்க்கவேயில்லை.

மெல்லிய வெண்ணிறப்பூச்சுடன் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஏறிட்டு நோக்கவும் அதன் தந்தை தூமன் மறுத்துவிட்டான். அதை மலைச்சரிவில் வீசி எறியும்படி அவன் சொன்னான். பசியில் வெறித்த விழிகளுடன் அவனைச் சூழ்ந்திருந்தது அவன் குடி. முதியவள் “அவனிடம் மூதாதையர் சொல்லியனுப்பியதென்ன என்று நாமறியோம் அல்லவா?” என்றாள். அச்சொற்கள் அங்கே காற்றில் சுழன்று மறைந்தன. தூமன் திரும்பி நோக்கவேயில்லை.

உரித்து பாறைகளில் காயப்போடப்பட்ட தோல் போல அவர்கள் அங்கே ஒட்டிச்சுருங்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் கண்ணெதிரே முயல்கள் சென்றன. எழுந்து அவற்றைப்பிடிக்கும் உடல் விசை அவர்களிடம் எஞ்சவில்லை. தொலைவில் அவர்களைக் கொல்லும் புகை வெண்ணிற வலையென சூழ்ந்து வந்துகொண்டிருந்தது. எழுந்து ஓடவும் அவர்களின் கால்களில் ஆற்றலிருக்கவில்லை. “இங்கே இறப்பதே மூதாதையர் ஆணை என்றால் அவ்வாறே ஆகட்டும்” என்றான் தூமன்.

முதியவள் மைந்தனை தன் வறுமுலையுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் அகம் கனிந்துருகியும் முலைகள் கருணையற்றிருந்தன. காம்புகளைக் கவ்வி உறிஞ்சிய குழந்தை ஓசையின்றி நடுங்கிக்கொண்டிருந்தது. அன்றே அது இறந்துவிடும் என்று அவள் எண்ணினாள். ஆனால் மதியம் பாறைக்கவைக்குள் இருந்து அசைந்து வழிந்து வெளிவந்த பெரும் மலைப்பாம்பு ஒன்றை அவர்கள் கண்டனர். வெடித்தெழுந்த உவகைக்கூச்சலுடன் ஓடிச்சென்று அதைச்சூழ்ந்துகொண்டனர். தூமன் அதை கவைக்கழியால் பிடித்துக் கொள்ள பிறர் கல்லால் அடித்துக் கொன்றனர்.

அதன் உடலின் குருதியும் கொழுப்பும் அவர்களை இறப்பிலிருந்து காப்பாற்றிய அருமருந்தாயின. முதியவள் பாம்பின் கொழுப்பைத் தொட்டு மைந்தனின் வாயில் வைத்தாள். சிறுசுடர் நெய்யை வாங்குவது போல அவன் அதை வாங்கிக்கொண்டான். மைந்தன் பிழைத்துக்கொள்வான் என்று அவள் எண்ணினாள். அதன்பின்னரே அவனுக்கு அவள் பெயரிட்டாள். அவன் வீங்கிய வயிற்றை வருடி “பகன்” என அவனை அழைத்தாள்.

தூமன் அதன்பின்னரே அம்மைந்தனை திரும்பிப் பார்த்தான். ஒரு கணம் அதன் பெருவயிற்றை நோக்கியபின் திரும்பிக்கொண்டான். பிறகெப்போதும் அவன் மைந்தனை நோக்கவிலல்லை. ஒருசொல்லேனும் பேசவும் இல்லை. குழந்தையை கையிலெடுத்து முதியவள் “நீ வாழவேண்டுமென்பது நாகங்களின் ஆணை” என்றாள். பாம்புக்கொழுப்பை அவன் கைகால்களில் பூசினாள்.

பாம்பின் இறைச்சியை கையில் ஏந்தியபடி அவர்கள் மலை ஏறி மறுபக்கம் சென்றனர். கீழே மூன்று பக்கமும் தீயிட்டு எரிக்கப்பட்ட காட்டின் பாம்புகளும் எலிகளும் மழை நீர் போல காட்டுப்புதர்களின் அடியில் அவர்களை நோக்கி வந்தன. புகை பெருவெள்ளமென சூழ்ந்தது. புரவிகள் பொறுமையிழந்து துள்ள வில்லேந்திய வீரர்கள் அனல் உண்டு விரித்திட்ட கரிந்த நிலம் வழியாக வந்துகொண்டிருந்தனர்.

“இம்மைந்தன் பிறந்த வேளை நம்மைக் காத்தது” என்றாள் முதியவள். “அப்பால் நமக்கு நல்லூழ் காத்திருக்கலாகும்” என்று அவள் சொன்னபோது தூமன் அவனை திரும்பி நோக்கினான். பெருமூச்சுடன் ஏதோ சொல்லவந்தபின் உதடுகளை இறுக்கிக்கொண்டான். அவர்கள் மலைகளைக் கடந்து காளகூடம் என்னும் காட்டை அடைந்தனர். உசிநாரர்களின் எல்லைக்கு அப்பாலிருந்த அது எவருக்கும் உரியகாடாக இருக்கவில்லை. அங்கே யாதவர்களோ ஷத்ரியர்களோ வரத்தொடங்கவில்லை.

அடர்ந்த புதர்களுக்குள் முயல்களும் பெருச்சாளிகளும் செறிந்திருந்தன. மான்களும் காட்டுஆடுகளும் அவர்களுக்குக் கிடைத்தன. மரங்கள் மேல் குடில்கட்டி அவர்கள் குடியேறினர். அங்கு அவர்களின் உடல் வலுக்கொண்டது. முகங்களில் புன்னகை விரியத் தொடங்கியது. ஆனால் தூமன் கவலை கொண்டிருந்தான். அங்கு ஏன் பிறர் வந்து குடியேறவில்லை என்பது சிலமாதங்களில் தெரிந்தது. குளிர்காலத்தில் அங்கே வடக்கே இருந்து பெருக்கெடுத்துவந்த கடும் குளிர்காற்றில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமை கொண்டன. உயிர்களெல்லாம் வளைகளுக்குள் சென்று ஒண்டின. இலைகளில் இருந்து காலையில் பனிக்கட்டிகள் ஒளிரும் கற்களாக உதிர்ந்தன.

ஆனால் அவ்விடம் விட்டுச் செல்வதில்லை என்று தூமன் முடிவெடுத்தான். அங்கேயே மலைக்குகைகளுக்குள் நெருப்பை அமைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்தனர். மலையில் இருந்து தவறிவிழுந்து இறந்த யானையின் ஊன் அவர்கள் அக்குளிர்காலத்தைக் கடக்க உதவியது. அதன் தோலை உரித்து மலைக்குகைக்குத் திரையாக்கினர். கடும்குளிரில் மூதாதையரை எண்ணியபடி அந்தக்குகைக்குள் வாழ்ந்தனர். அவர்களில் சிலரே அடுத்த சூரியனைக் கண்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கே வாழும் கலை தெரிந்திருந்தது.

அக்குடியின் மிகச்சிறிய குழந்தையாக பகன் வளர்ந்தான். அவன் கால்கள் தவளைக்கால்கள் போல வலுவிழந்து வளைந்திருந்தன. மூன்று வயதாகியும் அவன் கையூன்றி கால்களை முதலை வாலை என இழுத்துவைத்து மண்ணில் தவழ்ந்தான். விலாவெலும்புகள் தெரியும் ஒடுங்கிய மார்பும் மெலிந்த தோள்களும் கூம்பிய சிறுமுகமும் கொண்டிருந்தான். உலர்ந்த பெரிய புண்போன்ற வாயும் எலிகளுக்குரிய சிறுவிழிகளுமாக காலடியில் இழைந்து வந்த அவனை அவன் குடியினர் குனிந்து நோக்கினர். சினம் கொண்டபோது காலால் எற்றி அப்பால் தள்ளினர். அடிவயிறு தெரிய புழுதியில் மல்லாந்த பின் ஓசையின்றி கைகளால் நிலத்தை அள்ளி புரண்டு எழுந்து மீண்டும் அவன் அவர்களைத் தொடர்ந்தான்.

அவனை அவர்கள் புழு என்றனர். ஏனென்றால் வீங்கிய பெருவயிற்றை சுமந்தலைய முடியாதவனாக அவன் எப்போதும் எங்கேனும் அமர்ந்து பிறரை நோக்கிக் கொண்டிருந்தான். அவன் விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. அவனுக்கு பசியே இருக்கவில்லை. அவன் உணவைக் கோருவதை எவரும் கண்டதில்லை. ஆகவே அவன் இருப்பதே அவன் உடல் காலில் தட்டுப்படும்போது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்தது. முதியவள் அவளுடைய உணவின் துண்டுகளைக் கொடுத்து அவனை வளர்த்தாள்.

தூமன் தன் குடியுடன் மலைமாடு ஒன்றை வலைக்கண்ணி வைத்துப் பிடித்தபோது அதன் கொம்புகள் மார்பில் நுழைய குருதி கக்கி உயிர்விட்டான். அவனை மலையுச்சிக்குக் கொண்டுசென்று பெரும்பள்ளத்தில் வீசுவதற்கு முன் மண்ணில் கிடத்தி வெற்றுடலாக்கினர். அவன் கச்சையை அவிழ்த்தபோது அதற்குள் ஒரு பொன்மோதிரம் இருப்பதைக் கண்டு அவன் குடியினர் திகைத்தனர். சிறுகுழந்தைகள் கைவளையாக அணியத்தக்க பெரிய வளையம் கொண்ட அது அழகிய நுண்செதுக்குகளுடன் ஒளிவிடும் செவ்வைரம் பதிக்கப்பட்டதாக இருந்தது. வெளியே எடுத்ததும் செங்குருதியின் ஒரு துளி எனத் தெரிந்தது. மெல்ல செங்கனல் போல எரியத் தொடங்கி சிற்றகல் சுடர் போல அலையடித்து ஒளிவிட்டது.

தூமனின் மைந்தனாக எஞ்சியவன் பகன் மட்டுமே. அந்த மோதிரத்தை அவனுக்கு அளித்தனர் மூத்தவர்கள். அவர்கள் கையில் இருந்து ஒளிவிட்ட வைரத்தைக் கண்டு அஞ்சி அவன் பின்னடைந்து முதியவளின் தோலாடையைப் பற்றி அவள் முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான். “இது என்ன? அனல் போலிருக்கிறது. ஆனால் சுடவில்லையே?” என்று கேட்ட இளம்அரக்கனிடம் முதியவள் “இது ஒரு கல். வைரம் என்று பெயர்” என்றாள். “கல்லா? கல்லுக்கு எப்படி இந்த ஒளி வந்தது?” என்றார்கள் அவர்கள்.

முதியவள் புன்னகைத்து “நம் முன்னோர் சொல்லிவந்த கதையையே நான் அறிவேன். மண்ணுக்கு வெளியே தெரியும் பாறைகளெல்லாம் உள்ளே எரிந்துகொண்டிருக்கும் கனலின் கரியே. நம் காலுக்குக் கீழே அணையாத அனல் கொழுந்துவிட்டுக்கொண்டிருக்கிறது. அந்தச் செந்தழல்கடலின் சிறு துளி இது. தழலுருவான மண்ணின் ஆழம் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்பதற்காக வைத்திருக்கும் விழி. இது பூமியின் சினம்” என்றாள். அவர்கள் அதைச் சூழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர். சிறுவனாகிய பகன் அவர்களின் கால்களுக்குள் தன் தலையைச் செலுத்தி எவருமறியாமல் அதை நோக்கினான்.

அக்கணம் அதுவும் அவனை நோக்கியது. அவன் அஞ்சி பார்வையை விலக்கியபோதிலும் காணாச்சரடால் அவன் விழிமணியுடன் அது தொடுத்துக்கொண்டது. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். “இது இவன் உரிமை. இவன் தந்தை இவனிடம் ஒரு சொல்லும் பேசியதில்லை. அச்சொற்களெல்லாம் இந்தக் கற்கனலில் இதோ ஒளிவிடுகின்றன. என்றாவது அவன் அதைக் கேட்கட்டும்” என்று சொல்லி அதை களிமண்ணால் மூடி இலையில் சுற்றி தன்னிடமே வைத்துக்கொண்டாள் முதியவள். குனிந்து அவள் பகனை நோக்கியபோது அவன் விழிமயங்கி நிற்பதைக் கண்டாள். “மைந்தா” என்று அழைப்பதற்குள் அவன் மல்லாந்து விழுந்து தன் கைகால்களை இழுத்துக்கொண்டு துடிக்கத் தொடங்கினான்.

அன்றிரவு குகைக்குள் விறகனலின் வெம்மையருகே முதியவளின் வறுமுலைகளின் வெம்மையில் முகம் வைத்துக் கிடக்கையில் பகன் துயிலவில்லை. தொடர்ந்து பெருமூச்சுகள் விட்டு அசைந்துகொண்டிருந்தான். அரைத்துயிலில் புரண்ட முதியவள் அவன் விழிகளின் ஒளியைக் கண்டு “மைந்தா, துயிலவில்லையா?” என்றாள். அவன் “அது எவருடையது?” என்றான். “எது?” என்று கேட்டதுமே அவள் அவன் கேட்பதென்ன என்று புரிந்துகொண்டாள். “அந்தக் கைவளை?” என்றான் அவன். “அது கைவளை அல்ல மைந்தா. கைவிரல் மோதிரம்” என்று அவள் சொன்னாள்.

அவன் சிறு நெஞ்சு விம்மி அமைய பெருமூச்சுவிட்டு “எவருடைய விரல் அது? பேருருக்கொண்ட வானத்துத் தெய்வங்களா?” என்றான். அவள் அவன் புன்தலையை மெல்ல வருடி “பிறிதொருநாள் சொல்கிறேன். இன்று நீ துயில்க!” என்றாள். “அதை அறியாமல் நான் துயிலமுடியாது மூதன்னையே” என்றான் பகன். அவள் அவன் குரலில் அந்தத் தெளிவை அதுவரை கேட்டதில்லை. திகைத்து மீண்டும் குனிந்து அவன் விழிகளுக்குள் ஒளிவிட்ட அனலை நோக்கினாள். “ஆம், அவ்வாறென்றால் சொல்லவேண்டியதுதான்” என்றாள். அதன்பின் மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினாள்.

படைப்பு முடிந்து களைத்து ஓய்வெடுக்க காலத்தை இருண்ட படுக்கையாக்கி கால்நீட்டி சரிகையில் பிரம்மன் “யக்ஷாமஹ!” என்று உரைத்தார். அவரது சொல்லில் இருந்து யக்‌ஷர்களும் யக்‌ஷிகளும் உருவானார்கள். அவர் அவர்களைக் கண்டு வியந்து “ரக்ஷாமஹ!” என்று உரைத்தார். அச்சொல்லில் இருந்து ராக்ஷசர்களும் ராக்ஷசிகளும் பிறந்தனர். யக்‌ஷர்களுக்கு விண்ணையும் ராக்‌ஷசர்களுக்கு மண்ணையும் அளித்தார் பிரம்மன். “ஒளியும் இருளையும் போல ஒருவரை ஒருவர் உண்டு ஒருவரை ஒருவர் நிரப்பி என்றும் வாழ்க!” என்று அவர்களை பிரம்மன் வாழ்த்தினார்.

அரக்கர்கள் கருவண்டுகளாக மாறி விண்ணில் பறக்க முடியும். யட்சர்களோ பொன்தும்பிகளாகி மண்ணில் இறங்க முடியும். அரக்கர்களே யட்சர்களைக் காணமுடியும். யட்சர்களிடம் பேசவும் மண உறவு கொள்ளவும் மைந்தரைப்பெறவும் முடியும். யட்சர்களுடன் இணைந்து அரக்கர் குலம் பெருகியது. மண்ணில் எண்ணியதுவரை வாழவும் மடிந்தபின் கரும்பாறையாகி காலத்தைக் கடக்கவும் அரக்கர்களுக்கு வரமளித்தார் பிரம்மன். இம்மண்ணில் நிறைந்திருக்கும் பாறைகளெல்லாம் வாழ்ந்து நிறைந்த அரக்கர்களே. அவர்களின் பெரும்புகழ் வாழ்க!

காலத்தனிமையில் எண்ணங்களில் மூழ்கி இருக்கையில் பிரம்மன் நெஞ்சில் “மூலம்?” என்ற வினா எழுந்தது. “ஏது?” என அவர் சித்தம் பல்லாயிரம் முறை எண்ணி எண்ணிச் சலிக்க அறியாமல் தன் விரலால் மண்ணில் ஹேதி என்று எழுதினார். அவ்வெழுத்திலிருந்து எழுந்த அரக்கன் ஹேதி என்று தன்னை உணர்ந்தான். புன்னகையுடன் பிரம்மன் அச்சொல்லை பிரஹேதி என்றாக்கினார். அச்சொல்லில் எழுந்தவன் தன்னை பிரஹேதி என்றழைத்தான்.

ஹேதியும் பிரஹேதியும் தங்களுக்குரிய மணமக்களைத் தேடி அலைந்தனர். அம்மணமக்களை பிரம்மன் அப்போதும் படைக்கவில்லை. ஆயிரமாண்டுகாலம் மண்ணை ஆயிரம் முறை சுற்றிவந்து தேடியபின்னர் பிரஹேதி துறவியாகி காட்டுக்குள் சென்று தவம் செய்து முழுமையடைந்தான்.

ஹேதி மணமகளைத் தேடிக்கொண்டு மேலும் ஆயிரமாண்டுகாலம் அலைந்தான். காணாமல் களைத்து முதுமை எய்திய ஹேதி தனித்து தன் மயானமண்ணில் நிற்கையில் கரியபேருருவுடன் காலன் அவன் முன் தோன்றினான். காலன் கண்களில் தெரிந்த ஒளியைக் கண்டு நடுங்கிய ஹேதுவின் அச்சம் கரிய நிழலாக அவனருகே விழுந்தது. அவளை அழகிய கரிய பெண்ணாக அவன் கண்டு காமம் கொண்டான். அந்தக் காமம் அவளுக்கு உயிர்கொடுத்தது. அவளை அச்சம் என்றே அவன் அழைத்தான்.

பயா அவனுடைய வாழ்க்கையை அளிக்கும்படி தந்தையிடம் கோர யமன் திரும்பிச்சென்றான். ஹேது பயாவை மணந்தான். அச்சத்தை வென்றவன் நிகரற்ற பேரின்பத்தை அடைந்தான். அவன் அறிய ஏதுமிருக்கவில்லை. அவன் சென்றடைய இடமும் இருக்கவில்லை. அக்கணம் மட்டுமே என்றானவனே இன்பத்தை அறிகிறான்.

ஒருநாள் கூதிர்காலத்தில் இடியோசையுடன் இந்திரன் எழுந்த வானின் கீழ் அவர்கள் நின்றனர். இந்திரனின் வஜ்ராயுதத்தைக் கண்டு பயா ஆசைகொண்டு கைநீட்டினாள். துணைவியின் கோரிக்கைக்கு ஏற்ப ஹேதி வானில் எழுந்து மின்னலை கையால் பற்றி அள்ளிக்கொண்டு வந்தான். அவன் உடலில் பாய்ந்த மின்னலின் பேரொளி அவள் உடலுக்குள் புகுந்து ஒரு மைந்தனாகியது. மின்னல்களை கூந்தலாகக் கொண்ட அக்கரியகுழந்தைக்கு அவர்கள் வித்யுத்கேசன் என்று பெயரிட்டனர்.

வித்யுத்கேசன் ஆண்மகனாகியதும் அவன் தனக்குரிய மணமகளைத் தேடி பூமியை ஏழுமுறை சுற்றிவந்தான். சோர்ந்து அவன் தென்கடல் முனையில் நிற்கையில் செந்நிற ஒளியுடன் அந்தி வானில் நிறைவதைக் கண்டு அதன்மேல் காமம் கொண்டான். அந்தியில் இருந்து அவனை நோக்கி செந்நிறக் குழலும் பொன்னிற உடலும் கொண்ட அழகி ஒருத்தி கடல்மேல் நடந்து வந்தாள். சந்தியாதேவியின் மகளான சாலகடங்கை தேவி அவனை தழுவிக்கொண்டாள். அவள் தொட்டதும் அவனும் பொன்னானான்.

அவர்களுக்கு பொன்னிறமான கூந்தல் கொண்ட அழகிய குழந்தை பிறந்தது. நிகரற்ற அழகுடன் இருந்த சுகேசனை கடற்கரையில் படுக்க வைத்துவிட்டு அலைகளில் ஏறி தன் கணவனுடன் காதலாடிக்கொண்டிருந்தாள் அவன் அன்னை சாலகடங்கை. குழந்தை பசித்து தன் கையை வாயில் வைத்து சங்கொலி போல முழங்கி அழுதது.

விண்ணில் முகில்வெள்ளெருது மேலேறி செஞ்சடை கணவன் துணையிருக்க சென்றுகொண்டிருந்த அன்னை பார்வதி அவனை குனிந்து நோக்கினாள். அவன் பேரழகைக் கண்டு அவள் உள்ளம் நிறைந்தது. அவள் முலைகனிந்து பால் மழைத்துளியாக அவன் இதழ்களில் விழுந்தது. குழந்தை அதை உண்டு இன்னமும் என்றது. சிரித்தபடி தேவி ஒரு சிறு மழையானாள்.

ஆலமுண்டவனின் அருகமைந்த சிவையின் முலைகுடித்து வளர்ந்த சுகேசன் தெய்வங்களுக்கிணையான ஆற்றலும் ஒளியும் கொண்டவனாக ஆனான். அரக்கர்களின் எல்லையை மீறி விண்ணேறிப்பறந்து ஒளிமிக்க வானில் விளையாடிக்கொண்டிருந்த தேவவதி என்னும் கந்தர்வ கன்னியைக் கண்டு காதல்கொண்டான். அவள் தந்தையான கிராமணியை வென்று அவளை கைப்பிடித்தான்.

சுகேசனுக்கும் தேவவதிக்கும் மூன்று மைந்தர்கள் பிறந்தார்கள். மாலி, சுமாலி, மால்யவான் என அவர்கள் அழைக்கப்பட்டார்கள். மூன்று உடன்பிறந்தவர்களும் சிவனை எண்ணி பெருந்தவம் செய்தனர். அத்தவப்பயனைக்கொண்டு மயனை மண்ணில் இறக்கி கடல் சூழ்ந்த தீவில் அவர்கள் தங்களுக்கென அமைத்த நகரமே இலங்கை. அங்கே அவர்கள் விண்ணவரும் நாணும் பெருவாழ்க்கை வாழ்ந்தனர்.

சுமாலி கேதுமதியை மணந்தார். கேதுமதி பத்து மைந்தரையும் நான்கு அழகிய பெண்களையும் பெற்றாள். பகை, புஷ்போஷ்கடை, கைகசி, கும்பிநாசி. அதன்பின்னர் சுமாலி தாடகை என்னும் யக்‌ஷர் குலத்து அழகியை மணந்தான். தாடகையின் வயிற்றில் சுபாகுவும் மாரீசனும் பிறந்தனர். அவர்களின் இளையோளாகப் பிறந்தவள் கைகசி.

பேரழகியான கைகசியை விஸ்ரவஸ் என்னும் முனிவர் கண்டு காதல்கொண்டார். அவர்கள் ஸ்லேஷ்மாதகம் என்னும் சோலையில் நிறைவாழ்க்கை வாழ்ந்து அரக்கர் குலச் சக்ரவர்த்தியான ராவண மகாப்பிரபுவை பெற்றனர். இலங்கையின் அரசனாகப்பிறந்த அரக்கர்கோமான் திசையானைகளை வென்றான். விண்மையமான கைலாயத்தை அசைத்தான். விண்ணவரும் வந்து தொழும்வண்ணம் இலங்கையை ஆண்டான்.

அயோத்தியை ஆண்ட ரகுகுலத்து ராமன் தன் துணைவியுடன் காடேகியபோது அவளைக் கண்டு காமம் கொண்டு கவர்ந்துசென்றான் ராவணன். ராமன் கிஷ்கிந்தையின் வானரப்படையை துணைகொண்டு இலங்கையைச் சூழ்ந்து வென்று ராவணனைக் கொன்றான். வென்றவன் போலவே வீழ்ந்தவனும் தெய்வமானான்.

பகனின் தலையை வருடி முதியவள் சொன்னாள் "மைந்தா, சுமாலியின் முதல்மகளான பகாதேவியின் கொடிவழி வந்த அரக்கர் குலம் நாம். நீ அரக்கர்குல வேந்தன் ராவணனின் வழித்தோன்றல் என்றுணர்க!” பகன் மெல்லிய குரலில் முனகினான். “ராகவராமனின் அம்புபட்டு களம்பட்டார் உன் மூதாதை ராவணன். அவரது உடலை அரக்கர்கள் எடுத்துச் சென்று எரிமூட்டினர். இலங்கை எரிந்து அணைந்துகொண்டிருந்தது. மூதாதையின் இருபது கரங்களின் எண்பது விரல்களில் இருந்த மோதிரங்களைக் கழற்றி குலத்துக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.”

“இந்த மோதிரம் அவரது இடது இறுதிக்கையின் சிறுவிரலில் போடப்பட்டிருந்தது. நம் குலத்து மூதாதையரால் வழிவழியாக காக்கப்பட்டு வருவது. நாம் நாடிழந்தோம். குலமிழந்தோம். காடுகளில் வாழத்தொடங்கினோம். காடுகளில் இருந்து காடுகளுக்கென பின்வாங்கிக் கொண்டே இருக்கிறோம். உடல்வலுவிழந்தோம். சித்தவிரைவை இழந்தோம். கோடைகாலத்து இலைகள் போல உதிர்ந்து அழிந்துகொண்டிருக்கிறோம்.”

பகன் எழுந்து முதியவளின் இடையைப்பிடித்து இழுத்தான். “இரு இரு” என அவள் தடுப்பதற்குள் அவள் தோல்கச்சையை இழுத்து அந்த இலைப்பொதியை தன் கையில் எடுத்தான். அதை விரித்து அந்த மோதிரத்தை கையிலெடுத்து வைரத்தை அனல் சுடர்ந்த விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 6

அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன.

அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “மைந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி ஏறி வந்தது. காலையில் அவன் உடலில் இருந்து எழுந்த அனலால் அவளே விலகிப்படுத்துக்கொண்டாள். விடிந்தபின் அவனைச் சூழ்ந்த குலத்தவர் அவன் அவ்வனலில் இருந்து மீளமாட்டான் என்றனர். வெளியே வீசிக்கொண்டிருந்த கடுங்குளிர் காற்றில் அவனைக் கொண்டுசென்று போடும்படி சொன்னார்கள். முதியவள் “இல்லை, அவன் சாகப்போவதில்லை. அவன் வழியாக மூதாதையரின் சொற்கள் சென்றுகொண்டிருக்கின்றன” என்றாள்.

ஏழுநாட்கள் கடும் வெம்மையுடன் அவன் நினைவழிந்து கிடந்தான். முதியவள் கனிச்சாறை முயலின் குருதியுடன் கலந்து அவனுக்கு இலைக்குவையால் ஊட்டிக்கொண்டிருந்தாள். அவன் உதடுகள் கருகின. கண்ணிமைகள் கருகின. விரல்கள் வளைந்து ஒன்றன் மேல் ஒன்று ஏறிக்கொண்டன. வாய் முற்றிலும் உலர்ந்தது. நெஞ்சில் மூச்சசைவால் மட்டுமே அவன் உயிருடன் இருந்தான். ஏழுநாட்களாகியும் அவன் இறக்காதது கண்டு அவன் குடி வியந்தது. “அவனை காட்டின் குருதிப்பேய்களில் ஒன்று ஆட்கொண்டிருக்கிறது. அவன் உடலில் ஓடும் அனலை அது குடிக்கிறது” என்றனர் முதியவர்.

எட்டாவது நாள் அவன் கண்விழித்தான். மெல்லிய குரலில் “நீர்” என்றான். வறண்ட உதடுகளை அஞ்சிய நாகம் போல நாக்கு வந்து வருடிச்சென்றது. முதியவள் அவள் பிடித்துவந்திருந்த முயலைக்கொன்று அதன் குருதியின் சில துளிகளை அவனுக்கு ஊட்டினாள். அவன் நா அதை நக்கி உண்டது. செவ்விழிகளைத் திறந்து “இன்னும்” என்றான். அவள் மேலும் குருதியை அவனுக்கு அளித்தாள். அவன் எழுந்து அமர்ந்து “விடாய்... விடாய் தீரவில்லை” என்றான். அவள் அந்த முயலை அவனிடம் கொடுத்தாள். அவன் அதன் குருதிக்குழாயை தன் வாயில் வைத்து முற்றிலும் உறிஞ்சிக்குடித்தான்.

மூன்றுநாட்களில் அவன் பன்னிரண்டு முயல்களை உண்டான். எழுந்து அமர்ந்த நான்காம் நாள் அவள் கண்ணிவைத்து பிடித்துக் கொண்டு வந்த மானின் குருதியை முற்றிலுமாக உண்டான். நலம் பெற்று எழுந்தபின் அக்குடியே அஞ்சும் பெரும்பசி கொண்டவனானான். அவனே காட்டுக்குள் சென்று தினமும் ஒரு மானை உண்டான். வீங்கிப்பெருப்பதுபோல சில மாதங்களிலேயே இரண்டு மடங்கு பெரிதானான். அவன் கைகளும் கால்களும் திரண்டன. தோள்கள் வீங்கிப்பருத்தன. குரல் முழக்கம் கொண்டது. நாளொன்றுக்கு இரண்டு மான்களை முழுமையாக உண்ணத் தொடங்கினான்.

அவனில் மண்மறைந்த மூதாதையர் வந்து குடியேறியிருப்பதாக முதியவள் சொன்னாள். நூற்றாண்டுகளாக அவர்களுக்கு முறையான படையல்கள் செய்யப்படவில்லை. அவர்களின் பெரும்பசி அவனில் குடிகொண்டிருக்கிறது. அவன் உணவைத்தவிர எதையும் எண்ணாதவனாக இருந்தான். விடியலில் காட்டில் நுழைந்து காட்டெருதைத் துரத்தி கற்களால் அடித்துக்கொன்று உரித்து சுட்டு பகல் முழுக்க உண்டு வெள்ளெலும்பாக ஆக்கி மீண்டான். இரவில் படுத்து சற்றே துயில்கையிலேயே மீண்டும் பசிகொண்டு கல்லாலான கதாயுதத்துடன் காட்டுக்குள் நுழைந்தான்.

முதியவள் இறக்கும்போது அவனுக்கு பதினாறு வயது. அவன் ஊஷரர் குலத்தின் தலைவனாக ஆகியிருந்தான். அக்குடியில் அத்தனைபேரும் அவனால் குனிந்து நோக்கப்படுபவர்களாக இருந்தனர். மெலிந்து உயிர்விட்டுக்கொண்டிருந்த முதியவள் அவன் கைகளைப்பற்றி “இலங்கையை நீ மீட்கவேண்டும் மைந்தா” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பது அங்கிருந்த பிறருக்குப் புரியவில்லை. அவள் அந்த மோதிரத்தை அவனுக்கு அளித்தாள். அது அவன் விரலுக்குப் பொருத்தமானதாக இருந்தது. அவன் கையைப்பற்றியபடி அவள் உயிர்விட்டாள்.

அன்றே அவன் கிளம்பி காடுகள் வழியாகச் சென்று மதுவனத்தை அடைந்தான். அங்கே புல்வெளி நடுவே பலராமரின் கதாயுதப் பயிற்சிசாலை இருந்தது. விடியற்காலையில் அவர் நீராடுவதற்காக யமுனையை அடைந்தபோது அவர் முன் அவன் இரு கைகளையும் விரித்தபடி வந்து நின்றான். அவரை விட அரைப்பங்கு உயரமானவனாகவும் கரிய உடலின்மேல் சடைவிழுதுகள் தொங்கிய பெரிய தலை கொண்டவனாகவும் இருந்த அவனைக்கண்டு பலராமரின் மாணவர்கள் தங்கள் படைக்கலங்களை எடுத்தனர். அவர் அவர்களைத் தடுத்து “யார் நீ?” என்றார்.

“கதைப்போர் கற்றுக்கொள்ள வந்தேன் குருநாதரே” என்றான் பகன். “நான் காடாளும் அரக்கர்களுக்கு கற்றுத்தருவதில்லை” என்று பலராமர் சொன்னார். பகன் தன் மோதிரத்தை எடுத்துக்காட்டி “நான் இலங்கையை ஆண்ட ராவணனின் கொடிவழி வந்தவன்” என்றான். அதை வாங்கி நோக்கிய பலராமர் திகைத்தார். பகன் “நான் உங்கள் மாணவனாக ஆவேன். அல்லது யமுனையில் விழுந்து இறப்பேன். பிறிதொன்றை பேசவேண்டாம்” என்றான். அவனை கைநீட்டித் தடுத்த பலராமர் “சிவனருள் கொண்ட குலம் நீ. மறுக்க நான் தகுதியற்றவன்” என்றார்.

அவன் வந்து அவர் கால்களைப் பணிந்தான். “ஒருபோதும் எளிய மாந்தரை கொல்ல மாட்டேன் என்று எனக்கு வாக்களிப்பாய் என்றால் என் கலையை உனக்களிப்பேன்” என்றார். மண் தொட்டு வாக்களித்து அவரிடம் மாணவனாக ஆனான் பகன். “பேருருக் கொண்டவனாக இருக்கிறாய். அது உன் ஆற்றல். ஆனால் எக்கலையிலும் எது ஆற்றலோ அதுவே எல்லையுமாகும். உன் பேருருவே நீ காணமுடியாதவற்றை உருவாக்கும். நீ செய்யமுடியாதவற்றை சமைக்கும். அவற்றை அறியமுடியாத ஆணவத்தையும் உனக்களிக்கும்” என்றார் பலராமர்.

எட்டாண்டுகள் பலராமரிடம் தங்கி கல்விகற்றான் பகன். இரும்புக் கதையை சுழற்றியடித்து பேராலமரத்தை வேருடன் ஒடித்திடும் வல்லமைகொண்டவன் ஆனான். கல்விமுதிர்ந்து குருநாதரிடம் வாழ்த்துபெற்றான். “அறமும் வழுவும் இருக்கும் வரை, மானுடம் குலங்களென சிதறிக்கிடக்கும் வரை போரின்றி உலகமையாது. ஆனால் படைக்கலம் கொண்டு போருக்கெழுபவனே போரில் கொல்லப்படவேண்டும். உழுதுண்டு வாழ்பவனும் கன்று மேய்ப்பவனும் வணிகனும் நூல்கற்றோனும் சூதனும் வைதிகனும் கொல்லப்படலாகாது. அந்நெறிக்கு நீ கட்டுப்பட்டவன் என்பதை நான் உனக்களிக்கும் இந்த இலச்சினை மோதிரம் உனக்கு அறிவுறுத்தட்டும். அவ்வண்ணமே ஆகுக!” என்றார் பலராமர். அவர் கால்களைத் தொழுது அவன் கிளம்பினான்.

நாடுகள் தோறும் நடந்து தன் குடிகளைத்தேடி காளகூட மலைக்காடு நோக்கி மீண்டு வந்தான். அவன் விட்டுச் சென்றபோதிருந்த காடு முழுமையாகவே அழிக்கப்பட்டிருந்தது. அங்கே பன்னிரு சிற்றூர்களும் சந்தையும் துறைமுகமும் அமைந்திருந்தன. அங்கே அவனைக்கண்ட மக்கள் அஞ்சி ஓடினர். வீரர்கள் ஏற்றிய வில்லுடன் புரவிகளில் வந்து அவனை சூழ்ந்துகொண்டனர். அவன் கையில் இருந்த பலராமரின் மோதிரமே அவனைக் காத்தது. அவன் ஊரைவிட்டு விலகி மலையேறிச்சென்றான். மரங்கள் முளைக்காத உச்சிக்காட்டில் பாறைக்குகைகளுக்குள் சிதறிப்பரந்திருந்த தன் குடிகளைக் கண்டடைந்தான். அவனைக் கண்டதும் அவர்கள் கதறியழுதபடி ஓடிவந்து காலில் விழுந்தனர். குழந்தைகள் அவன் கைகளைப்பற்றி கண்ணீர்விட்டன.

அவர்கள் மெலிந்து நோயுற்று புண்கள் அடர்ந்த உடலும் நாற்றமடிக்கும் கூந்தலுமாக புதைகுழிகளில் இருந்து பாதிமட்கிய பிணங்கள் எழுந்துவந்தது போலிருந்தனர். அவர்கள் வாழ்ந்த குகைகள் கூட்டம்கூட்டமாக பிணங்களை அள்ளிப்போட்ட புதைகுழிகளாகவே தோன்றின. அவர்கள் வாழ்ந்த மலையுச்சியில் விலங்குகளேதும் இருக்கவில்லை. காய்கனிகளை அளிக்கும் மரங்களும் இருக்கவில்லை. மலைச்சுனைகளில் ஊறும் நீரை உண்டு மலைப்புதர்களின் விறகுகளை எரித்து குகைகளுக்குள் அவர்கள் வாழ்ந்தனர். நாணல்களைப் பின்னி உருவாக்கிய வலைகொண்டு பிடித்த சிறிய பூச்சிகளையும் வண்டுகளையுமே உணவாகக் கொண்டனர்.

கீழிருந்த காளகூடக்காடு முழுமையாகவே உத்தரபாஞ்சால நாட்டுக்குரியதாக ஆகியிருந்தது. அங்கே வேட்டையாடவும் மலைப்பொருள் சேர்க்கவும் கன்றுமேய்க்கவும் சத்ராவதியின் ஷத்ரியர்களுக்கு வரிகொடுத்து உரிமைப் பட்டயம் பெற்ற மக்கள் வந்து குடியேறியிருந்தனர். குதிரைகளும், யானைகளும், நெடுந்தூரம் பறக்கும் வேல்களும் நினைத்த இடத்தை தீமூட்டும் அரக்குபதித்த எரியம்புகளும் அவர்களிடமிருந்தன. காட்டின் எல்லைகள் முழுக்க உயர்ந்த மரங்களில் காவல்மாடங்களைக் கட்டி இரவும் பகலும் அவர்கள் கண்காணித்தனர்.

பகன் தன் மக்களைத் திரட்டி காளகூடத்தின் காட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். நூற்றெட்டு முறை அக்கிராமங்களை அவன் தாக்கினான். அவர்கள் படைக்கலப் பயிற்சியற்றவர்களாகவும் பசியால் மெலிந்தவர்களாகவும் இருந்தனர். பசியின் வெறியே அவனுடன் அவர்களை செல்லவைத்தது. தன் வல்லமை வாய்ந்த கதாயுதத்துடன் பகன் காவல்மாடங்களை உடைத்தான். கிராமங்களுக்குள் புகுந்து தீயிட்டான். ஆயர்களையும் வேளிர்களையும் அடித்துத் துரத்தி அவர்களின் களஞ்சியங்களை கொள்ளையிட்டு மலைமேல் கொண்டு சென்றான்.

மலையுச்சியில் கற்களை அடுக்கி சிருங்கசிலை என்ற கோட்டையை அவன் கட்டினான். அதன்மேல் இரவும் பகலும் தன் குடிகளை காவல் நிறுத்தினான். ஓராண்டு வாழ்ந்தாலும் உண்டு தீராத அளவுக்கு ஊனையும் ஊன்நெய்யையும் தானியங்களையும் கொண்டுசென்று நிறைத்தான். அவன் குடிகள் உண்டு உடல்தேறினர். போரிட்டு கை தேறினர். மலையிடிந்து பாறைக்கூட்டம் இறங்குவதுபோல பகன் தன் படைகளுடன் வரும் ஒலி கேட்டு காளகூடத்தின் கிராமங்கள் அலறி விழித்துக்கொண்டன.

பகன் பிரமாணகோடியிலும் வாரணவதத்திலும் அமைந்த துறைமுகங்களைத் தாக்கி கலங்களை தீயிட்டான். சந்தைகளில் புகுந்து களஞ்சியங்களை கொள்ளையடித்து அவர்களின் கழுதைகளிலேயே ஏற்றி மலைமேல் கொண்டுசென்றான். மலைமேல் சிருங்கசிலையில் நூறு கல்வீடுகள் எழுந்தன. அவற்றில் இலங்கையை ஆண்ட அரக்கர்கோன் ராவணனின் வீணைச்சின்னம் வரையப்பட்ட கொடிகள் பறந்தன. வலுமிக்க குதிரைகளை கொள்ளையடித்துச்சென்று அவற்றை மலைச்சரிவில் இறங்குவதற்குப் பழக்கி அவன் உருவாக்கிய படை பறக்கும்புரவிகள் என்று ஊராரால் அழைக்கப்பட்டது. ஆயர்குடிகளும் வேளார் கிராமங்களும் அவனுக்கு திறையளித்தன. சந்தையும் துறைமுகமும் அவன் ஆணையின் கீழ் வந்தன.

சூதர் அவனைத் தேடி குன்றேறிச் சென்றனர். ஈசலும் மலையரிசியும் ஊன்கொழுப்பும் கலந்து சமைத்த நல்லுணவை அவன் அள்ளி அள்ளி வைக்க உண்டு நெய்வழிந்த கையை யாழிலேயே துடைத்தனர். அவன் ஊற்றிய மலைத்தேன் கலந்த நறுங்கள்ளை குடித்து அவன் குடியை வாழ்த்திப்பாடினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் அவன் புகழ்பரவியது. அவன் தோள்வல்லமையை இளைஞர் ஏத்தினர். அவன் கொடைவண்மையை எளியோர் வாழ்த்தினர். அவன் வரிகொள்ளும் நாடு பகநாடு என்றழைக்கப்பட்டது.

அப்போது சத்ராவதி அஸ்வத்தாமனின் ஆட்சியின் கீழே வந்தது. தனக்குரிய காளகூடக் காடு பகனின் ஆட்சிக்குச் சென்றுவிட்டிருப்பதை உணர்ந்த அஸ்வத்தாமனின் பெரும்படை சத்ராவதியில் இருந்து காளகூடத்திற்குள் நுழைந்தது. கங்கைவழியாக படகில் வந்த பெரும்படை ஒன்று பிரமாணகோடியை அடைந்தது. இருபக்கத்திலிருந்தும் படைகள் எழுந்து காளகூடத்தை முழுமையாகவே சுற்றிக்கொண்டன. பகனைக் கொன்றபின்னரே நாடுமீள்வதென்று அஸ்வத்தாமன் வஞ்சினம் சொல்லியிருப்பதாக பகன் அறிந்தான்.

சத்ராவதியின் பெரும்படையை நேரில் எதிர்கொள்ளும் ஆற்றல் பகனின் படைகளுக்கிருக்கவில்லை. அரக்கர்கள் தங்கள் படைகளுடன் சிருங்கசிலையிலேயே இருந்தனர். இரவின் இருள்மறைவில் அம்புக்கூட்டம் போல மலையிலிருந்து இறங்கி சத்ராவதியின் படைகளைத் தாக்கி முடிந்தவரை கொன்றுகுவித்துவிட்டு மலையேறிச்சென்று பாறைக்கோட்டைக்குள் மறைந்துகொண்டனர். மலையேறிச்சென்ற சத்ராவதியின் படைகள் மீது மலைவிளிம்பு முழுக்க வைக்கப்பட்டிருந்த பெரும்பாறைகளை உருட்டி விட்டனர் அரக்கர்கள். கொலையானைகளைப்போல உறுமியபடி இறங்கிவந்த பாறைகள் சத்ராவதியின் வீரர்களைக் கொன்று குருதியில் குளித்தபடி அடிவாரத்தை அடைந்தன.

எட்டுமுறை முயன்றபின் சத்ராவதியின் படை மலையேறும் திட்டத்தை கைவிட்டது. மலையைச்சுற்றி தன் படைகளை நிறுத்திவிட்டு பாஞ்சாலத்தவர் காத்திருந்தனர். “அவர்களை ஒருபோதும் வெல்லமுடியாது அரசே. அவர்களின் தலைவன் வெல்லமுடியாத பேருருவம் கொண்டவன்” என்றான் முதன்மைத்தளபதியாகிய திரிகரன். அஸ்வத்தாமன் புன்னகைத்தபடி “காலந்தோறும் மக்கள் சமவெளிகளிலேயே வாழ்ந்துள்ளனர். உச்சிமலைகளில் அல்ல. அது எதனாலோ அந்த அடிப்படை இன்றும் அவ்வண்ணமே இருக்கும். அவர்கள் மலைமேல் வாழமுடியாது. நாம் காத்திருப்போம்” என்றான்.

வருடம் முழுக்க சத்ராவதியின் படைகள் அங்கேயே காத்திருந்தன. பனிபெய்யத் தொடங்கியபோது தோல்களால் கூடாரமடித்து அனலெழுப்பி அங்கிருந்தனர். குளிர்காலம் முழுக்க மலைமேலேயே பகனின் படைகள் இருந்தன. குளிர் முடிந்து கோடை தொடங்கியபோது சிருங்கசிலையில் உணவு குறையத் தொடங்கியது. குதிரைகளுக்கு புல் அளிக்கமுடியாமலானபோது அவற்றை அவர்கள் கொன்று உண்டனர். தானியக்குவைகள் ஒழிந்தன. ஊன்விலங்குகள் அழிந்தன. மழைக்காலம் வந்தபோது அவர்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். மழைமுடிந்தபோது அவர்களிடம் உணவே எஞ்சியிருக்கவில்லை.

பசியில் வெறிகொண்ட பகனின் படைகள் மலையிறங்கி வந்து ஓநாய்கள் ஆட்டுமந்தையை என சத்ராவதியின் படைகளைத் தாக்கின. ஆனால் அஸ்வத்தாமன் அதற்குள் மிகச்சிறந்த தொடர்புமுறையை அமைத்திருந்தான். அவர்கள் இறங்கும்போதே மோப்பநாய்கள் குரைக்கத் தொடங்கின. முரசொலி மூலமும் எரியம்பு மூலமும் செய்தியறிந்த படைகள் இரு திசைகளின் படைநிலைகளில் இருந்தும் கிளம்பி அங்கே வந்து அவர்களை சூழ்ந்துகொண்டன. அவர்கள் எரியம்புகளையே பெரிதும் கையாண்டனர். அஸ்வத்தாமன் எரியை ஆள்வதில் பெரும்திறல் கொண்டிருந்தான்.

“கொல்லவேண்டாம். முடிந்தவரை புண்படுத்தி அனுப்புங்கள். அங்கே மலைமேல் அவர்களுக்கு மருத்துவர்கள் இல்லை” என்று அஸ்வத்தாமன் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தான். அம்புமுனைகளில் நவச்சாரமும் கந்தகமும் கலந்து எரித்து அவர்களைத் தாக்கினர் சத்ராவதியினர். அனல் பட்ட உடலுடன் மலைமேல் மீண்ட அரக்கர்கள் புண் அழுகி காய்ச்சல் கண்டு இறந்தனர்.

நாள் செல்லச்செல்ல அரக்கர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக சத்ராவதியின் படைகள் மேலேறி தளம் அமைத்தன. பெரும்பாறைகளின் அடியில் குழிதோண்டி கற்களை அடுக்கி அறைகளை அதற்குள் கட்டிக்கொண்டனர். மேலிருந்து உருண்டு வரும் பாறைகள் அவர்களை தாக்கமுடியவில்லை. மேலும் மேலும் அணுகி குழிதோண்டி அறையமைத்தனர். மேலிருந்து அவர்களை காணமுடியும் அண்மை வரை அவர்கள் வந்தனர். சிருங்கசிலையை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பகன் உணர்ந்தான். தேர்ந்த இருபது அரக்கர்குலத்து வீரர்களுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்தான்.

“நாங்கள் உங்களை இங்கே விட்டுச்செல்கிறோம். சத்ராவதியின் படைவீரர்கள் உங்களை பிடிக்க வரும்போது கைகளைக் கூப்பிக்கொண்டு அவர்கள் முன் பணியுங்கள். அடிமைப்பட்டவர்களைக் கொல்வதை அவர்களது நெறிநூல்கள் ஒப்புவதில்லை” என்று பகன் தன் குடிப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொன்னான். பெருமழை பெய்து வானும் மண்ணும் நீரால் மறைக்கப்பட்டிருந்த இரவில் அவர்களிடம் விடைபெற்று தன் வீரர்களுடன் குன்றிறங்கிய நீரோடை வழியாக ஓசையின்றி தவழ்ந்து கீழே வந்தான்.

மழையில் அவர்கள் வரும் ஒலியை சத்ராவதியினர் அறியவில்லை. அவர்களின் காவல்நாய்களுக்கும் மோப்பம் கிடைக்கவில்லை. அவற்றைப் பற்றி நெரித்துக் கொன்றுவிட்டு முதல் படைத்தளத்தை அவன் தாக்கியபோதே அவர்கள் அதை அறிந்தனர். முழவுகளின் ஓசை எழவில்லை. எரியம்புகள் ஒளிரவில்லை. படைநிலைக்குள் மழைக்குளிருக்கு ஒடுங்கித் துயின்ற வீரர்களைத் தாக்கியது பகனின் படை. அவர்கள் விழித்தெழுவதற்குள்ளேயே மண்டையோடுகள் உடைந்து மூளை சிதறித் தெறித்தது. அலறல்கூட எழாமல் அனைவரும் உடைந்து சிதறினர். ஏழு படைநிலைகளில் எவரையும் மிச்சம் வைக்காமல் கொன்றுவிட்டு மறுபக்கம் காட்டுக்குள் சென்றனர் பகனும் வீரர்களும்.

மறுநாள் மழை விட்டபின் தேடிவந்த ஒற்றை நாய் சொன்ன செய்தியை வைத்தே நிகழ்ந்ததை அறிந்தான் அஸ்வத்தாமன். அவன் குதிரையில் வந்திறங்கி படைநிலைக்குள் நுழைந்தபோது மூளைக்கோழையில் கால்வழுக்கி சுவரைப்பற்றிக்கொண்டான். நசுக்கப்பட்ட வீரர்கள் குருதியும் நிணமும் சிதற செத்துக் குவிந்திருந்தனர். ஏதோ ஒரு கணத்தில் அஸ்வத்தாமனின் அகத்தில் ஒரு நரம்பு முறிந்தது. “கொல்லுங்கள் அரக்கர்களை” என அவன் ஆணையிட்டான். “இனி பொறுத்தால் நாம் ஆண்மக்களல்ல!”

வெறிகொண்ட சத்ராவதியின் வீரர்கள் நாற்புறமும் சூழ்ந்து மலைமேல் ஏறிச்சென்றனர். பகன் சிருங்கசிலையில் இருப்பதாகவும் அரக்கர்களிடம் அவர்களை வெல்லும் ஏதோ சில மாயப்படைக்கலங்கள் எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் எண்ணினர். ஆகவே இடைவெளியில்லாமல் எரியம்புகளை சிருங்கசிலையை நோக்கி எய்தபடி மேலேறிச்சென்றனர். அணுகிச் சூழ்ந்தபின் எரியம்புகளின் புகையால் மூடியிருந்த கோட்டைக்குள் எட்டுநாழிகை நேரம் மேலும் அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தனர். நச்சுப் புகை கக்கும் ரசங்களை சிறுகுடுவைகளிலாக்கி அம்புகளின் முனைகளில் பொருத்தி ஏவும் முறையை அஸ்வத்தாமன் உருவாக்கியிருந்தான். அம்புகள் சென்று விழுந்த இடங்களில் இளநீலப் புகையுடன் தழல் எழுந்தது. சிருங்கசிலையில் இருந்து ஓர் எதிரம்புகூட திரும்பி வரவில்லை என்பதை அவர்கள் நெடுநேரம் கழித்தே உணர்ந்தனர்.

புகைக்குள் நுழைந்து அவர்கள் உள்ளே சென்றபோது அங்கே ஐநூறுக்கும்மேல் பெண்களும் குழந்தைகளும் செத்துப் பரவியிருப்பதைக் கண்டனர். அன்னையரை அணைத்த குழந்தைகள் ஒரே அம்பில் கோர்க்கப்பட்டிருந்தன. குழந்தைகள் கொதிக்கும் ரசம் விழுந்து வெந்து துடித்தன. உயிருடன் பற்றி எரிந்த அன்னையின் கையில் இருந்து கதறிக்கொண்டிருந்தது பாதி வெந்த கைக்குழந்தை. உருகும் பசுஞ்சதையின் நாற்றம் நிறைந்த மலைவீடுகளுக்குள் விஷரசத்தை முகர்ந்து மூச்சடைந்து நீலம்பாரித்த உடல் உதற செத்துக்கொண்டிருந்தனர். இறுதிமுனகல்கள் ஒலித்த இருள் விரைத்துச் சூழ்ந்திருந்தது.

நடுவே ஒருகணம் திகைத்து நின்ற அஸ்வத்தாமன் திரும்பி ஓடி தன் புரவிமேல் ஏறிக்கொண்டு “இந்த மலைக்குடியிருப்பை முழுமையாகவே கொளுத்தி அழியுங்கள். எந்தத் தடமும் எஞ்சவேண்டியதில்லை. நம் சிந்தையிலும்” என்றான். அவனது புரவி வால்சுழல மலைச்சரிவில் இறங்கிச்செல்ல உருளைச் சிறுபாறைகள் கூடவே பாய்ந்திறங்கின. நேராக கங்கைக்கரைக்குச் சென்ற அவன் நாற்பத்தொரு நாட்கள் அங்கே நோன்புணவு உண்டு பழிதீர் சடங்குகள் செய்தான்,

பகனும் அவன் வீரர்களும் காடுவழியாக எவருமறியாமல் பயணம் செய்து உசிநாரபூமியினூடாகச் சென்றனர். சிற்றூர்களை இரவில் கடந்தனர். ஒவ்வொரு இடத்திலும் சிருங்கசிலையில் என்ன நடந்தது என்று விசாரித்துக்கொண்டே சென்றனர். பகனின் உடல் பதறிக்கொண்டே இருந்தது. தன் பெரிய கைகளால் தலையை தடவிக்கொண்டும் நெஞ்சைப் பற்றிப் பிசைந்துகொண்டும் அவன் நடந்தான். கிரௌஞ்சபக்‌ஷம் என்ற சிற்றூரின் படித்துறையில் அமைந்த மதுக்கடையில் அமர்ந்திருந்த முதுபாணனிடமிருந்து சத்ராவதியின் படை சிருங்கசிலையில் இருந்த பாறைநகரை முழுமையாகவே எரித்து அழித்ததை அறிந்தனர். ஆடைகளில்லாமல் கைதூக்கி வெளியே வந்து சரண் அடைந்து கதறிய பெண்களையும் குழந்தைகளையும் அம்புகளால் துளைத்தும் எரிரசத்தால் கொளுத்தியும் அழித்தபின் அவர்களை குவித்துப்போட்டு தீமூட்டியது உத்தரபாஞ்சாலத்தின் பெரும்படை என்றான் சூதன்.

“எத்தனை தலைமுறைகள்! எத்தனை பேரரசுகள்! அன்றும் இன்றும் அவ்வண்ணமே கொன்று குவிக்கப்படுகிறார்கள். சேர்த்துக் கொளுத்தப்படுகிறார்கள். அள்ளிப் புதைக்கப்படுகிறார்கள். அக்கணமே மறக்கப்படுகிறார்கள். எளியமக்கள் அநீதியால் கொல்லப்படுவது மிகநன்று. அப்போதுதான் அவர்களுக்காக ஒரு துளி விழிநீராவது சிந்தப்படுகிறது. ஓரிரு சொற்களையாவது காவியங்கள் சொல்லிவைக்கின்றன. ஒருதலைமுறைக்காலமாவது அவர்களின் நினைவுகள் வாழ்கின்றன” என்றான் சூதன் கள்மயக்கில் உரக்க நகைத்துக்கொண்டு. அவனைச்சூழ்ந்திருந்தவர்கள் திகைத்து நோக்கியிருந்தனர்.

“அவர்களை புகழ்பெறச்செய்த அஸ்வத்தாமனை வாழ்த்துவோம். மானுடக்குப்பைகளை வீரசொர்க்கத்துக்கு அனுப்பிய உத்தரபாஞ்சாலத்தின் மாவீரர்களை வாழ்த்துவோம். அவர்களின் கையால் பரிசுபெற்று இங்கே மதுக்கடையில் மூக்குவழியாகவும் குடித்து மகிழும் என்னையும் வாழ்த்துவோம். ஓம் அவ்வாறே ஆகுக!” என்று அவன் தன் மூங்கில்கோப்பையால் தரையைத் தட்டி கூவினான். வாயில் மதுவின் கோழை வழிய “ஆம், அறம் வாழும் மண் இது. வென்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் வீழ்ந்தவர்களுக்கு வீரசொர்க்கத்தையும் அளிக்கும் பேரறத்தைச் சொல்லி இன்னொரு கோப்பை மதுவை அருந்துவோம்!”

தலையில் அறைந்தபடி கண்ணீர் விட்டு அழுத பகனை அங்கிருந்தோர் சூழ்ந்துகொண்டனர். “இதோ இந்த அரக்கனும் அழுகிறான். அறம் எத்தனை வல்லமைகொண்டது தோழரே. அது அரக்கர்களையே அழச்செய்கிறது. அறம் உயர்ந்த கரும்பின்சாற்றில் பிறக்கிறது. மண்ணில்புதைந்த பானைகளில் இனிய வாசத்துடன் நுரைக்கிறது. நமது நாசிகளை எரிக்கிறது. குடல்களை உலுக்குகிறது. நமதுசித்தங்களில் இனிய நினைவுகளாகப் பெருகி கண்ணீராக வெளிவருகிறது. அறம் வளரட்டும். அது நுரைத்துப் பெருகியெழட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!” என்று சூதன் பாட அவனைச்சூழ்ந்திருந்தவர்கள் குவளைகளை நிலத்தில் அடித்து கண்ணீருடன் நகைத்தனர்.

நெஞ்சில் அறைந்து அழுதபடி வெளிவந்த பகன் ஆற்றங்கரைச் சதுப்பில் அமர்ந்து குமட்டி உமிழ்ந்தான். இரண்டுநாட்கள் உண்பதை எல்லாம் குமட்டிக்கொண்டிருந்தான். விழிநீர் வழிய விம்மியபடி நெஞ்சில் ஓங்கி அறைந்தும் நிலத்தை மிதித்தும் முனகினான். பற்களைக் கடித்து கைமுட்டிகளை இறுக்கி தலையை அசைத்து தனக்குள் பேசிக்கொண்டே இருந்தான். அவனை கள்மயக்கிலேயே அழைத்துச்சென்றனர் வீரர்கள். அருகே நின்றிருக்கும் மரத்தை கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். ஒருமுறை தன் நெஞ்சில் அதை அறையப்போக வீரர்கள் எழுவர் அவன் கைகளை பற்றிக்கொண்டனர்.

பின்னர் சரயுவின் சதுப்பில் விழுந்து பாதிபுதைந்தவன் போல ஓர் இரவும் இருபகல்களும் துயின்றான். எழுந்ததும் தன் கைவிரல்களில் இருந்து ராவணனின் மோதிரத்தையும் பலராமரின் மோதிரத்தையும் உருவி சரயுவின் நீரில் வீசினான். நேராகச் சென்று கரையொதுங்கி நின்றிருந்த வணிகப்படகு ஒன்றை ஒரே அடியில் சிம்புகளாக நொறுக்கி அதற்குள் இருந்த அத்தனை பேரையும் தலை உடைத்துக் கொன்றான். அதில் இருந்த உணவையும் பொன்னையும் எடுத்துக்கொண்டு நடந்தான்.

செல்லும் வழியெங்கும் எதிர்ப்பட்ட அத்தனைபேரையும் கொன்றபடி சென்றான் பகன். கிராமங்களுக்குள் நுழைந்து கண் தொட்டு கை எட்டிய அனைவர் தலைகளையும் உடைத்து வீசினான். முதியவர் பெண்கள் குழந்தைகள் என எந்த வேறுபாட்டையும் அவன் சித்தம் அறியவில்லை. கொன்ற சடலங்களின் குருதியை அள்ளி தன் முகத்திலும் உடலிலும் பூசிக்கொண்டு வெறிச்சிரிப்புடன் நடனமிட்டான். ஒருவேளை உணவுக்காக, ஒரு குவளை மதுவுக்காக கொன்றான். எதிரே வந்தமைக்காக கொன்றான். எட்டிப்பார்த்தமைக்காக கொன்றான். ஊருணியில் ஒருவாய் நீர்குடிப்பதற்காக அங்கே நீரள்ளி நின்றிருந்த அத்தனை பெண்களையும் கொன்றான். அவர்களின் கைகளில் இருந்த குழந்தைகளைப் பிடுங்கி வானில் வீசி அவர்கள் கீழே இறங்கி வருகையில் கதையால் அடித்து சிதறச்செய்து நகைத்தான்.

கொல்லக்கொல்ல அவன் விழிகள் மாறிக்கொண்டே வருவதை வீரர் நோக்கினர். அவனை அறிந்த நாள்முதல் அவற்றில் அவர்கள் கண்ட பெருந்துயர் ஒன்று முழுமையாக அகன்றது. அங்கே எப்போதும் மின்னும் இளநகை குடியேறியது. கொல்வதற்காகவே அவன் ஊர்களுக்குள் புகுந்தான். ஒருவர் கூட எஞ்சாமல் கொன்றபின் குருதி சொட்டும் கதையுடன் கனத்த காலடிகளை தூக்கிவைத்து ஒளிரும் விழிகளும் ஏளனநகைப்புமாக நடனமிட்டபடி அவ்வூரை விட்டு நீங்கினான். அவனை அவன் வீரர்கள் அஞ்சினர். அவன் விழிகளை நோக்குகையில் அவர்களின் முதுகெலும்புகள் குளிர்ந்து அதிர்ந்தன. அவன் மிகத்தாழ்ந்த ஓசையில் சொல்லும் ஒற்றைச் சொல்லைக்கூட இடியோசையென அவர்கள் கேட்டனர். “அவன் விழிகள் தெய்வங்களுக்குரியவை. மானுடர்மேல் உருண்டு செல்லும் காலத்தின் சக்கரம் அவன்” என்றான் ஒரு அரக்கவீர்ன்.

இருபத்தேழு நாட்கள் பயணம் செய்து உசிநாரபூமியைக் கடந்து சரயு நதியின் கரையில் அடர்காட்டின் நடுவே தன்னந்தனியாக இருந்த ஏகசக்ரபுரி என்ற சிறுநகரை அடைந்தனர். சரயுவில் மீன்பிடிக்கும் மச்சர்களும் காட்டுப்பொருட்களை சேர்த்து விற்கும் உசிநாரர்களும் வாழும் ஆயிரம் வீடுகள் கொண்ட அந்நகரின் கல்லடுக்கிக் கட்டப்பட்ட சிறுகோட்டையைக் கடந்து நகர்ப்புறத்து ஆயர்குடியில் குருதிவழியும் கதையுடன் அவன் நுழைந்தபோது அங்கிருந்த பெண்களும் முதியவரும் அஞ்சி ஓலமிட்டனர். செல்லும்வழியில் நின்ற எருமைகளையும் காளைகளையும் தலையுடைத்துக் கொன்றான். அவன் வேண்டுவதென்ன என்று கேட்க வந்த மூன்று முதியவர்களின் முதல்சொல் உதடுகளில் இருக்கவே தலைகளை உடைத்தான். ஊரெங்கும் ஓலமிட்டபடி ஓடி அங்கிருந்த உணவை முழுக்க அள்ளி உண்டபின் விலகிச்சென்றான்.

ஏகசக்ரபுரிக்கு அப்பால் இருந்த சிறிய மலையின் மேலே ஏறிச்சென்றனர் பகனும் அவன் வீரர்களும். அங்கே இருள் நிறைந்த பெரும் பிலம் ஒன்றிருந்தது. அதற்குள் ஒரு நீரோடை சென்றது. அங்கே அவர்கள் தங்கினர். கதாயுதத்தை அருகே வைத்துவிட்டு படுத்துத் துயின்ற பகன் அருகே அவன் வீரர்கள் சூழ்ந்து படுத்துக்கொண்டனர். அவர்களின் கனவுக்குள் கை கூப்பிக் கதறியபடி அவர்களின் பெண்களும் குழந்தைகளும் அரக்கும் ரசமும் பட்டு உயிருடன் எரிந்து உருகிவழிந்து கரியாகி விழுந்தனர். துயிலிலேயே அவர்கள் கண்ணீர் விட்டு விம்மியழுதனர். யானை பிளிறும் ஒலி கேட்டு திகைத்து எழுந்தவர்கள் துயிலில் நெஞ்சில் அறைந்து கதறியழும் பகனைக் கண்டனர். எழுந்து அவனைச் சூழ்ந்து அமர்ந்து அவர்களும் அழுதனர்.

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 7

“ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது.

ஆனால் நாணல்களைப் பின்னி உருளைப்படகுகளை கட்டத்தெரிந்த ஏகசக்ரநகரியின் மக்கள் அப்பாறைகள் வழியாக மிக எளிதாக நழுவி வந்து மலைப்பொருட்களை விற்றனர். பொருட்களை வாங்கிக்கொண்டு அவ்வொழுக்கில் அவர்கள் கட்டி வைத்திருந்த பெரிய வடங்களைப்பற்றி படகுகளை மேலேற்றி தங்கள் நகருக்கு திரும்பிச்சென்றனர். திரேதாயுகத்தில் தசரதன் கோசலத்தை ஆட்சி செய்த காலம் முதலே ஏகசக்ரநகரி தன்னந்தனி அரசாகவே இருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நூறு மலைக்கிராமங்களுக்கு அதுவே சந்தைமையம்.

அந்நகரத்திற்கு அரசன் இருக்கவில்லை. அங்கே வாழ்ந்த ஏழுகுலங்களின் தலைவர்களின் குழுவால் ஆளப்பட்டது. நகரைச்சுற்றியிருந்த அடர்காடுகளில் இருந்து காட்டெருதுகளும் யானைகளும் மட்டுமே அவர்களை தாக்கக்கூடியவையாக இருந்தன. சரயுவின் பெருக்கைக் கடந்து எந்தப்படையும் அவர்களை நெருங்க முடியாது. ஆகவே அவர்கள் அந்நகரைச் சுற்றி மலைப்பாறைகளைக்கொண்டு உயரமற்ற கோட்டை ஒன்றை கட்டிக்கொண்டனர். காவலுக்கு வேல்களும் அம்புகளும் ஏந்திய சிறு படை ஒன்றை அமைத்திருந்தனர்.

அரசப்படைகளின் காவலற்ற ஏகசக்ரநகரி சிலநாட்களிலேயே பகனால் முழுமையாக கைப்பற்றப்பட்டது. ஒவ்வொருநாளும் கதாயுதத்துடன் அவன் நகரில் நுழைந்து மக்களைக் கொன்று குவித்து களஞ்சியங்களைச் சூறையாடி உணவுண்டு மீண்டான். அவனைத் தடுக்க ஏகசக்ரநகரியின் மக்கள் அமைத்த படைகள் அவன் தன் பெரும் கதாயுதத்துடன் கைகளை விரித்து வெறிச்சிரிப்புடன் உள்ளே வரும்போதே அஞ்சி ஓடினர். மக்கள் தங்கள் இல்லங்களுக்குள் குழிகள் தோண்டி அறைகள் அமைத்து அதனுள் ஒளிந்து உயிர்தப்பினர்.

கோசலத்திற்கு முழுமையாக அடிமைப்பட்டு கப்பம் கொடுத்து தங்களைக் காக்கும்படி கோரலாமென்றும் அவர்களை தங்கள் படகுகளிலேயே அழைத்துவரலாம் என்றும் வணிகரும் ஆயரும் வேளிரும் அடங்கிய குலச்சபை முடிவெடுத்தது. ஆனால் அச்சபையில் இருந்த குலமுதியவர் ஒருவர் “மைந்தரே, எந்த அரக்கனை விடவும் கொடியது அரசு என்று அறியுங்கள். இவனுக்கு வயதாகும். நோயுறக்கூடும். உளம் கனியவும் கூடும். அரசோ மூப்போ நோயோ கருணையோ அற்றது. கொடிய அணங்குபோல நம்மைக் கைப்பற்றி நம் குருதியை நாமறியாமலேயே உண்பது. நம் குருதியை குடிக்கும்தோறும் மேலும் வளர்வது. நம்மைக் கொன்று உண்ணும்பொருட்டு நம்மையே தன் காலடியில் விழுந்து மன்றாடவைக்கும் அளவுக்கு மதியூகம் கொண்டது. எண்ணம் முந்தி அரசை நாம் இங்குகொண்டுவந்தால் பின்னர் ஒருபோதும் ஏகசக்ரபுரி அதன் விடுதலையை மீட்டெடுக்க முடியாது” என்றார்.

குலத்தவர் திகைத்து கலைந்த ஒலி எழுப்பினர். “இவன் நம்மைக் கொன்று அழிப்பதை எப்படி எதிர்கொள்வது? எத்தனை நாள்தான் இங்கே அஞ்சி வாழ்வது?” என்றனர். குலமுதியவர் “அரசுக்கும் இவனுக்குமான வேறுபாடுதான் என்ன? அரசு நம்முடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. அது நம் குருதியை உண்ணுவதை நம்முடன் பேசி வரையறை செய்துகொள்கிறது. இவனிடமும் நாம் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இவனும் நமது காவலனே. இவன் இன்னொரு அரக்கன் இங்கு வராமல் நம்மைக் காப்பான் அல்லவா?” என்றார். குலச்சபை அதையே செய்யலாமென்று முடிவெடுத்தது.

முதியவர் பகனிடமிருந்து ஊரைக் காக்கும் வழி ஒன்றை சொன்னார். பகனின் வீரர்களில் ஒருவனை மட்டும் சாலையில் வெட்டிய படுகுழியில் வீழ்த்தி அவர்கள் பிடித்தனர். அவன் இறந்துவிட்டான் என்று எண்ணி பகன் திரும்பிச்சென்றபின் அவனை சிறையிலடைத்து அவன் மொழி அறிந்த வணிகர்களை வைத்து அவனிடம் அன்புடன் பேசினர். பேசிப்பேசி அவனை அவர்களுக்கு இசையச் செய்தனர். அவனுக்கு அவ்வூரின் அழகிய இளம்பெண் ஒருத்தி மணமகளாக அளிக்கப்படுவாள் என்றனர். அவன் பகனிடம் பேசி ஊருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளச் செய்வான் என்றால் அம்மணமகளுடன் இனிதுவாழமுடியும் என்று வாக்களித்தனர்.

அவன் அதற்கு ஒப்புக்கொண்டு மலையேறிச்சென்று பகனைப் பார்த்தான். மெல்லமெல்லப் பேசி அவன் உள்ளத்தை கரைத்தான். ஏகசக்ரநகரியின் மக்கள் கோசலத்திற்கு அடிமைப்பட்டு அங்கே கோசலத்தின் பெரும்படை வந்திறங்கி விட்டால் அதன் பின் அங்கு வாழ்வது முடியாதது என்றான். ஏகசக்ரநகரி பகனை அரசனாக ஏற்று கப்பம் கட்ட ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொருநாளும் ஏகசக்ரநகரியில் இருந்து ஒரு வண்டி நிறைய உணவு குன்றேறி பகனின் குகைக்கே வந்துசேரும். அதை உண்டு அவன் அவர்களின் காவலனாக அங்கே குகைக்குள் வாழமுடியும். “அரசே, நாம் இங்கு தங்கி வலிமைபெறுவோம். நம்குடியை இங்கே பெருக்குவோம்” என்றான் அவன்.

பகன் கதையை வீசி நகைத்து “வெறும் உணவால் அமைவேனா? இச்சிறிய மானுடரை என் கையால் கொல்லவேண்டும். ஒவ்வொருநாளும் குருதி படாமல் இந்த கதாயுதம் அமையாது” என்றான். அவன் சிறிய செவ்விழிகள் சுருங்கி பற்கள் சீறி வெளித்தெரிந்தன. “என் சினத்துக்கு உணவு வேண்டும். அவர்களிடம் சொல். இந்த மலைத்தெய்வம் பலியின்றி அமையாது என்று.”

அதற்கும் ஏகசக்ரநகரி மக்கள் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஒருவன் வண்டிநிறைய உணவுடன் மலையேறி வந்து பகனின் கதைக்கு பலியாவான் என்றனர். பகன் அதற்கு ஒப்புக்கொண்டதும் ஏகசக்ரநகரே விழாக்கொண்டாடியது. குலத்தலைவர் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவன் என பகனுக்கு உணவுடன் சென்று பலியாகும் முறைமை அங்கே அமைந்தது. ஒவ்வொரு மாதமும் முப்பது இளைஞர்கள் குலதெய்வத்தின் கோயில் முன் குடவோலை முறைப்படி தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதும் அவர்கள் நெற்றியில் பச்சைகுத்தி அவர்களை பகனுக்கான பலிகளாக குலச்சபை அறிவித்தது.

அவர்கள் தங்கள் குலத்துக்காக உயிர்கொடுக்கும் புனிதர்கள் என்று கருதப்பட்டனர். குலதெய்வ ஆலயத்திலேயே தங்கி முப்பது நாட்கள் நோன்பிருந்து குலத்தவரால் வணங்கப்பட்டனர். ஒவ்வொருநாளும் அவர்களுக்கு தங்கள் குலத்தில் ஒரு வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. அவர்களை வணங்கினால் மூதாதை அருள்கொண்டு நோய்கள் தீருமென்றும் குழந்தைகள் நலம்பெறும் விளைகள் செழிக்கும் கன்றுகள் பெருகும் என்றும் நம்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வுறவும் கொள்ளாமல் வாழ்ந்தனர்.

குறித்த நாட்களில் மூதாதையருக்குச் செய்யவேண்டிய நீத்தார் கடன்களை முடித்து எழுந்த அவர்களின் கால்களைக் கழுவி குடும்பத்தினர் வாழ்த்து பெற்றனர். அவர்களின் கழுத்தில் மாலையிட்டு கண்ணீருடன் உணவு வண்டியில் ஏற்றியபின்னர் திரும்பி நோக்காமல் நடந்து தங்கள் இல்லத்தை அடைந்து கதவுகளை மூடிக்கொண்டனர். ஏழுநாட்களுக்குப்பின் அவர்களுக்கு நீர்க்கடன்களைக் கழித்து கோட்டைக்கு தெற்கே இருந்த புல்வெளியில் நடுகல் நாட்டி மாலைசூட்டி படையலிட்டு வணங்கினர்.

நாட்கள் செல்லச்செல்ல அதை இறக்கப்போகிறவனின் இல்லத்தார் அன்றி பிறர் எண்ணாமலாயினர். எண்ணுவது அளிக்கும் துயரை வெல்வதற்கான வழி அதை அறியாதவர்களாக ஆகிவிடுவதே என ஏகசக்ரபுரி கற்றுக்கொண்டது. தங்கள்முறை என்றோ வரப்போகிறது அதற்குள் எதுவும் நிகழலாமென்று எண்ணி ஆறுதல்கொண்டனர். நடுகற்கள் பெருகப்பெருக நினைத்தாலே நெஞ்சுநடுங்கவைத்த அந்நிலம் மேலும் மேலும் இயல்பாக ஆனது. அங்கே ஒருமுறை படையலிட்டபின் எவரும் திரும்பச்செல்லவில்லை.

அது ஏகசக்ரபுரியின் வெற்றி என்றே கொள்ளப்பட்டது. கோசலத்துக்குச் சென்றிருந்தால் நூறுமடங்கு கப்பம் கட்டவேண்டியிருக்கும் என்றும் கோசலத்தின் போர்களில் ஏகசக்ரபுரியின் இளைஞர்களும் இழுக்கப்பட்டு மும்மடங்கு வீரர்கள் இறந்திருப்பர் என்றும் வாதிட்டனர். பகனைப்பற்றிய கதைகளை அவர்களே சொல்லிச் சொல்லி பரப்பினர். அவன் ஒருவண்டி உணவையும் உணவைக்கொண்டுசெல்லும் வண்டியின் மாடுகளையும் அதை ஓட்டிச்செல்பவனையும் உண்டு பசியடங்குவான் என்றனர். இரவுகளில் அவனுடைய பேரோசை இடி என மலைகளில் ஒலிக்கும் என்றனர். அவ்வச்சமே ஏகசக்ரநகரிக்கு பெருங்காவலாக ஆகியது. தனிமனிதர்களின் துயர்களை அறியாமல் கடந்துசெல்வதே வெற்றிக்கான பாதை என்றறியாத அரசு எங்குள்ளது?

அந்நகருக்கு ஒருநாள் முதியவள் ஒருத்தியை தோளில் தூக்கிக்கொண்ட அரக்க வடிவம் கொண்ட ஒருவனும் அவனுடைய நான்கு உடன்பிறந்தவர்களும் வந்தனர். அவர்கள் உசிநாரபூமியின் காட்டை நடந்தே கடந்துவந்திருந்தமையால் தாடியும் முடியும் வளர்ந்து வெயில்மழையில் கறுத்து தவக்கோலம் பூண்டிருந்தனர். காட்டுத்தோலால் ஆன ஆடையை அணிந்து பசியால் மெலிந்து போயிருந்த அவர்கள் ஐவரும் தங்களை காட்டில் தவக்குடில் அமைத்து வாழ்ந்த முனிவர் ஒருவரின் மைந்தர்கள் என்றும் அந்தப் பெண் முனிபத்தினி என்றும் சொன்னார்கள். முனிவர் மண்நிறைவடைந்த பின்னர் காட்டுக்குள் வாழ அவர்கள் விரும்பவில்லை. அம்மைந்தர் மானுடரைக் கண்டு இல்லறவாழ்க்கையை வாழவேண்டுமென்று தான் அவர்களை கூட்டிவந்ததாக அன்னை சொன்னாள்.

ஏகசக்ரநகரியின் வைதிகர்தெருவில் அவர்கள் அலைந்து எளியதோர் பிராமண இல்லத்தில் அடைக்கலம் புகுந்தனர். ஓர் அன்னையும் இளமைந்தனும் புதுத்துணைவியும் மட்டும் வாழ்ந்த அவ்வில்லத்தில் இடமில்லை என்பதனால் புல்லைக்கொண்டு அவர்கள் ஒரு துணைக்குடில் கட்டிக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஐந்து முனிகுமாரர்களும் நகருக்குள் சென்று உணவை இரந்துபெற்று மீண்டனர். மூத்தவர் அறவுரை ஆற்றியும் இளையோன் ஒருவன் சோதிடம் பார்த்தும் பொருளீட்டி உணவை பெற்றனர். அவர்கள் கொண்டுவந்த உணவை இரண்டாகப் பிரித்து பாதியை அவ்வரக்க வடிவினனுக்கு அளித்து எஞ்சியதை ஐவரும் பகிர்ந்துண்டனர்.

அரக்கவடிவு கொண்டவன் தன்னை விருகோதரன் என்று சொல்லிக்கொண்டான். நகரில் அவன் சென்றாலே அவனை அஞ்சி மக்கள் விலகி ஓடினர். அவன் உணவை இரந்தபோது எவரும் அளிக்கவில்லை. அவன் சரயுவின் கரையில் சென்று அங்கே இருந்த குயவர்களிடம் சேர்ந்துகொண்டான். ஆற்றங்கரையின் களிமண்ணை அள்ளி கரைக்குக் கொண்டுசென்று அரைத்து கூழாக்கும் பெரும்பணியில் அவர்கள் நூறு கழுதைகளை பயன்படுத்திவந்தனர். அவன் அப்பணியை தானே செய்வதாகச் சொல்லி மேலும் நூறுகழுதைகளுக்கு நிகராக உழைத்தான். அவர்கள் அளித்த பணத்தில் அவன் உணவை வாங்கிக்கொண்டு சென்று மறைந்திருந்து முழுமையாகவே உண்டான். பின்னர் வீடுதிரும்பி தன் இளையோர் கொண்டுவந்த உணவிலும் பாதியை உண்டான்.

ஏகசக்ரநகரை விட்டு சரயு வழியாக கோசலத்தை அடைய அவர்கள் எண்ணியிருந்தனர். இரந்துண்டு ஈட்டிய பணத்தைக்கொண்டு ஒரு படகை அமர்த்திக்கொண்டு அவர்கள் கிளம்பவிருந்த அன்று இரவில் அவர்கள் தங்கிய இல்லத்தில் அழுகையொலியைக் கேட்டு அவ்வன்னை சென்று விசாரித்தாள். அந்த இளம்வைதிகன் அழுதுகொண்டிருந்தான். அவன் மனைவி சினத்துடன் தன் வயிற்றைத்தொட்டு கூச்சலிட்டு அழுது மன்றாடினாள். அவன் அன்னை அழுது சோர்ந்து சுவர் மூலையில் சுருண்டிருந்தாள்.

என்ன நிகழ்கிறது என முனிபத்தினி கேட்டாள். இளம்வைதிகன் பகன் அங்கே வந்த கதையை சொன்னான். அந்தமாதம் உணவுடன் பலியாகச் செல்லவேண்டிய முப்பதுபேரில் அவனே முதல்வன். அவன் குலக்குழு குடவோலையிட்டு தெரிவுசெய்ததில் முதலில் வந்தபெயர் அவனுடையது. “அது எவர் செயலும் அல்ல. ஊழின் தேர்வு. நான் சென்று மடிவதே நன்று. தன் குடிக்காக இறப்பவர்களே அதை வாழவைக்கிறார்கள். எந்தப் பெருங்குடியும் அதன் ஒரு பகுதியின் அழிவை கொண்டே தான் வாழ்கிறது. அதில் துயருற ஏதுமில்லை” என்றான்.

அவன் மனைவி “செல்வமில்லாதவனின் மனைவி நான். உங்கள் குழந்தையை என் கருவில் சுமந்திருக்கிறேன். உங்கள் அன்னையின் பொறுப்பும் என்னுடையதே. நீங்கள் பலியானால் நான் என் கற்பையும் என் குழந்தையின் உயிரையும் அன்னையின் வாழ்வையும் காத்துக்கொள்ள முடியாது என்பது உறுதி. நீங்கள் இறந்தபின்னர் உங்களுக்காக நீர்விட எவரும் இல்லையென்றால் விண்ணுலகில் உங்கள் மூதாதையர் பசித்து விடாய்கொண்டு அழிவார்கள். ஒருவன் தன் மூதாதையருக்கும் உறவினருக்கும் செய்யும் கடமைகளுக்குப் பின்னரே குலத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் கடமைகள் வருகின்றன” என்றாள்.

”ஆம், ஆனால் என்னை என் குடி தேர்வுசெய்த பின் நான் செய்வதற்கேதும் இல்லை” என்றான் கணவன். “இன்றிரவே சேர்த்த சிறு செல்வத்துடன் சரயு வழியாக தப்பிச்செல்லலாம்” என்றாள் மனைவி. “நான் தப்பிச்சென்றால் அவர்கள் இன்னொருவனை அனுப்புவார்கள். அவன் உயிருக்கு நான் கடன்பட்டவன் ஆவேன்” என்று கணவன் மறுத்தான். “உங்கள் அன்னையும் மனைவியும் குழந்தையும் இறப்பார்களென்றால் அதற்கு நீங்கள் கடன்பட்டவரல்லவா?” என்று மனைவி சீற்றத்துடன் கேட்டாள்.

“என் குருதியால் உங்களுக்கு உணவீட்டி அளித்திருக்கிறேன். உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ளும் இடத்திலும் இருக்கிறேன். நான் யாரென்றே அறிந்திராத அந்த அயலவனின் பழியே பெரிது. உங்கள் பழி என்மேல் படியும். அவன் பழி என் மூதாதையர் மேல் விழும். உங்கள் சொல் என் மேல் விழட்டும். நான் நரகுலகில் அதன்பொருட்டு சென்று அகாலத்தில் எரிகிறேன். ஆனால் என் மூதாதையர் மேல் பழிவிழ ஒப்புக்கொண்டேன் என்றால் அதைவிடப் பெரும்பாவம் பிறிதில்லை” என்றான் கணவன்.

முனிபத்தினியைக் கண்ட மனைவி “அன்னையே, என் துயரைக் கேளுங்கள். நான் என் குடித்தலைவரின் காலில் சென்று விழுந்தேன். இந்நகரின் ஆட்சியாளர்கள் அனைவரையும் கண்டு கதறினேன். ஒரு நகர் வாழ்வதற்காக ஒருவன் இறப்பதில் என்ன பிழை என்றே அனைவரும் கேட்டனர். அவர் எனக்கு முழு உலகாக இருப்பவர், என் விழிநீரிலா இந்நகரம் வாழவேண்டும் என்றேன். எவரோ ஒருவர் விழிநீரில்தான் நாமனைவருமே வாழ்கிறோம் பெண்ணே என்றார் நீதியறிந்த என் குல முதியவர். நெரிசலிட்ட நகர்த்தெருவில் நின்று கதறினேன். என் உலகை அழித்தா நீங்கள் உண்ணவேண்டும் மானுடரே என்றேன். ஒவ்வொரு விழியும் என்னைத் தவிர்த்து விலகின. 'உன்னுடையது என் துயரல்ல, ஆகவே அது நான் அறியவேண்டுவதும் அல்ல' என்றே ஒவ்வொரு முகமும் என்னிடம் சொன்னது” என்றாள்.

“தெருவில் சென்ற ஒரு முதியவளின் ஆடையைப்பற்றி இழுத்து கேட்டேன். என் கணவன் நாளை இறக்கிறான். அது உன் மைந்தன் என்றால் நீ இப்படி எளிதாகக் கடந்து செல்வாயா என்று. நேற்று இன்னொருவன் சென்றபோது நீ இப்படித்தானே கடந்துசென்றாய்? என்றாள் அவள். அன்னையே, அக்கணம் அறிந்தேன். இவ்வுலகில் தான் என்றும் பிறர் என்றும் ஒரே ஒரு பிரிவினையே உள்ளது. தன் அறம், தன் நீதி, தன் இன்பம், தன்குலம், தன்குடி, தன்நலன் என்றே மானுடம் இயங்குகிறது. ஒவ்வொருவரும் வாழும் உலகில் பிறன் என்பவனே இல்லை” என தலையில் அறைந்து அழுதாள் வைதிகன் மனைவி.

முனிபத்தினி அமைதியாக “பிறந்தநாள் முதல் பிறனுக்காக வாழும் ஒருவனின் அன்னை நான்” என்றாள். “இவ்வில்லத்தில் இருந்து ஒருவன் செல்வதாகத்தானே கூற்று? நாங்களும் இவ்வில்லத்தினரே. என் மைந்தனை அனுப்புகிறேன்” என்றாள். திகைத்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் மனைவி. “என் மைந்தன் விருகோதரன் உன் கணவன் பொருட்டு பகனிடம் செல்வான்” என்றாள் முனிபத்தினி. “இல்லை, என்பொருட்டு ஒருவன் இறக்க நான் ஒப்பமாட்டேன்” என்று வைதிகன் பதறிக்கூவினான். “அது அயலவர் பழிகொண்டு மூதாதையரை இருளில் ஆழ்த்துவது. அதை நான் எக்காலமும் ஏற்கமுடியாது” என்றான்.

புன்னகையுடன் “என் மைந்தன் பலியாக மாட்டான். அவன் அவ்வரக்கனைக் கொன்று மீள்வான்” என்றாள் முனிபத்தினி. ஐயம் கொண்ட வைதிகனிடம் தன் இரண்டாவது மைந்தனை அழைத்து அவனுக்கு சான்றுகாட்டு என்றாள். அவன் சிரித்தபடி தன் இரு விரல்களால் அந்த இல்லத்தின் இரும்புத்தூணை வளைத்துக்காட்டினான். திகைப்புடன் வைதிகன் அவ்வரக்க மைந்தன் உணவுடன் செல்ல ஒத்துக்கொண்டான். “முறைப்படி நீங்கள் வண்டியில் உணவுடன் மலைப்பாதையில் செல்லுங்கள். என் மைந்தன் வழியில் வந்து உங்களிடமிருந்து வண்டியை பெற்றுக்கொள்வான்” என்றாள் முனிபத்தினி.

மறுநாளே வைதிகன் பெரிய வண்டியில் ஏற்றிய படகில் நிறைக்கப்பட்ட உணவும் தளும்பும் மதுக்குடங்களுமாக பகனின் மலை நோக்கி கிளம்பினான். பகனுக்கு பலியாகிறவர்கள் எவருமறியாமல் விடியற்காலையிலேயே சென்றுவிடவேண்டும் என்றும் அவன் குடியினர் எவரும் ஓசையிட்டு பிறரை எழுப்பலாகாது என்றும் நகரத்தில் முறையிருந்தது. ஒவ்வொரு நாளும் செல்லும் பலிவீரர்கள் மரக்கிளையில் இருந்து உதிரும் இலைகள் என்றன அவர்களின் நீதிகள். அவை ஓசையின்றி மென்மையாகவே நிலம் தொடவேண்டும். பூத்து எழும் புதுத்தளிர்கள் அதை அறியவே கூடாது.

வைதிகனின் வண்டி மலைப்பாதையில் சற்று தொலைவு சென்றதும் விருகோதரன் வந்து அவனை இறக்கிவிட்டுவிட்டு தான் ஏறிக்கொண்டான். வைதிகன் அஞ்சி ஒரு மரத்தடியில் நின்றான். அவன் மனைவி தெய்வங்களைத் தொழுது கண்ணீர் விட்டு கோட்டைவாயிலில் நின்றாள். விடியலின் இருளில் விருகோதரன் உரக்கக் குரலெழுப்பிப் பாடியபடி மலைச்சாலையில் சென்றான்.

மலைச்சரிவை அடைந்ததுமே அவன் வண்டியை நிறுத்திவிட்டு அவ்வுணவை முழுமையாகவே உண்டான். கள்பானைகளை குடித்தபின் அவற்றை தூக்கிப்போட்டு உடைத்து விளையாடினான். பகனின் வீரர்கள் மேலிருந்து உணவு வருவதைக் கண்டு பசியுடன் பாறைமுனை மேல் வந்து நின்று நோக்கினர். மதுக்குடங்களை எற்றி விளையாடும் பேருருவத்தானைக் கண்டு அவர்கள் ஓடிச்சென்று பகனிடம் சொன்னார்கள்.

“என்னை அஞ்சி நடுங்கும் சிற்றுயிர்களை நசுக்கி சலித்துவிட்டேன். இன்று ஒரு சிறந்த மற்போருக்கு என் தோள்கள் எழுகின்றன” என்று நகைத்தபடி பகன் குகைவிட்டு எழுந்து வந்தான். கீழே வண்டியுடன் உணவை உண்டு படகிலிருந்த பருக்கைகளைப் பொறுக்கி வாயிலிட்டுக்கொண்டிருந்த விருகோதரனைக் கண்டு தொடைகளையும் தோள்களையும் அறைந்து உரக்க நகைத்தபடி அணுகினான். ஆனால் அவன் ஒலியை விருகோதரன் பொருட்படுத்தவில்லை, அவன் அணுகியபின்னரும் திரும்பிப் பார்க்கவில்லை.

சினம் தலைக்கேறிய பகன் அவனை ஓங்கி அறைந்தான். விருகோதரன் விலகிக்கொள்ள அந்த அடி வண்டியை சிம்புகளாக நொறுக்கியது. மாடுகள் அஞ்சி சிறுநீர் கழித்தன. விருகோதரன் திரும்பி பகனை நோக்கி புன்னகைத்து உண்டவாயை புறங்கையால் துடைத்தபடி புன்னகையுடன் ”என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டான். அந்த பொருட்படுத்தாமை கண்டு தன் அனைத்து சீர்நிலைகளையும் இழந்த பகன் அருகே நின்ற மரத்தைப் பிடுங்கி விருகோதரனை அடித்தான். அதை வலக்கையால் பற்றி இடக்கையால் பகனின் விலாவில் அறைந்தான் விருகோதரன்.

அவர்களுக்கிடையே தொடங்கிய போரை பகனின் வீரர்கள் நகைத்தபடி விலகி நின்று நோக்கினர். பகன் விருகோதரனைவிட அரைமடங்கு பெரியவனாக இருந்தான். விருகோதரனின் இடையளவுக்கு தடிமனாக இருந்தன பகன் கைகள். அவன் காலை ஓங்கி மிதித்தபோது அருகே இருந்த பாறைகள் அதிர்ந்து மண்ணை உதிர்த்தன. போர் சிலகணங்களில் முடிந்துவிடுமென அவர்கள் எண்ணினர். ஆனால் விரைவிலேயே அவர்கள் அறிந்தனர் போர் என்பது ஆற்றலால் மட்டுமே ஆனது அல்ல என்று.

பகனின் பேருருவே அவனுக்கு தடையாக இருந்தது. விரைவாகத் திரும்பவோ தன்னை அணுகியிருப்பதைக் காணவோ அவனால் முடியவில்லை. அவனுடைய விலாப்பகுதியில் மிக அண்மையில் எப்போதும் தன்னை வைத்துக்கொண்டான் விருகோதரன். கீழ்விலா எலும்பிலேயே மீண்டும் மீண்டும் தாக்கினான். ஒருபோதும் வலியை அறிந்திராத பகன் அந்த அடிகளால் உரக்க கூச்சலிட்டான். சினம் கொண்டமையால் தான் கற்ற போர்க்கலையையும் அவன் மறந்தான். விருகோதரனைப் பிடிக்க அவன் பாய்ந்தபோது அவன் கால்களைத் தடுத்து மறித்து வீழ்த்தினான். பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்த பகனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்து அவன் மூச்சை உடைத்தான்.

விருகோதரன் இருகைகளையும் வீசி காலை உதைத்து துள்ளி எழமுடிந்தது. பகன் கைகளை ஊன்றி புரண்டுதான் எழுந்தான். இரண்டாவது முறை விழுந்து பகன் எழுவதற்காகப் புரண்டபோது முன்னரே எழுந்துவிட்டிருந்த விருகோதரன் அவன் முதுகின்மேல் பாய்ந்து கழுத்தை தன் கரங்களால் பிணைத்து முழங்காலால் அவன் முதுகெலும்பை ஓங்கி முட்டி உடைத்து அக்கணமே கழுத்தின் சங்கையும் நெரித்து வளைத்தான். பகனின் கழுத்தெலும்பு ஒடிவதை அவன் வீரர்கள் கேட்டு உடல்சிலிர்த்தனர். உடைந்த கழுத்துடன் நிலத்தில் கைகளை அறைந்து கால்களை மண் கிளம்ப உதைத்து துடித்துக்கொண்டிருந்த பகன் மேல் ஏறி அமர்ந்து அவன் இரு கைகளையும் இரு கால்களையும் ஒவ்வொன்றாக உடைத்துச் சுழற்றினான்.

வாயிலும் மூக்கிலும் குருதி வழிய விழித்த கண்களுடன் மல்லாந்து கிடந்த பகன் மேல் ஏறி நின்று அவன் வீரர்களை நோக்கினான் விருகோதரன். அவர்கள் அஞ்சி கைகூப்பினர். “இனி நீங்கள் ஏகசக்ர நகரிக்குள் நுழையலாகாது. இங்கிருந்து கிளம்பி மறுபக்கம் காட்டுக்குள் சென்று விடுங்கள். உங்கள் சுவடு நகருக்குள் தெரிந்தால் தேடிவந்து உங்களைக் கொல்வேன்” என்றான். அவர்கள் பின் காலெடுத்துவைத்து ஓடி மறைந்தனர்.

பகனின் சடலத்தை தோளில் தூக்கியபடி மாடுகளை ஓட்டிக்கொண்டு விருகோதரன் திரும்பி வந்தான். காத்து நின்றிருந்த வைதிகன் அதைக்கண்டு அஞ்சி திரும்ப கோட்டை நோக்கி ஓடினான். அப்போதும் விடிந்திருக்கவில்லை. பகன் உடலை கோட்டைமுன் வீசிவிட்டு விருகோதரன் “எவர் கேட்டாலும் நான் என் மந்திரம் ஒன்றைச் சொன்னேன். பேருருவம் கொண்ட பூதம் ஒன்று வந்து பகனைக் கொன்று சுமந்துவந்து இங்கே போட்டது என்று கூறுங்கள்” என்றான். வைதிகன் நடுங்கும் கைகளைக் கூப்பி “அதைக் கேட்டு என்னை வேறு அரக்கர்களை அழிக்க அனுப்புவார்களே. மேலும் அரக்கர்கள் என்னைத் தேடிவருவார்களே” என்று சொல்லி அழுதான். “அஞ்சவேண்டாம். அப்போது நான் தேடிவருவேன்” என்றான் விருகோதரன்.

அன்றே தன் உடன்பிறந்தாரையும் அன்னையையும் அழைத்துக்கொண்டு அவன் சரயுவின் படகு ஒன்றில் ஏறி ஏகசக்ரநகரியை விட்டுச் சென்றான். அந்த வைதிகன் இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டுக்கொண்டே நகரின் உள்ளே ஓடி அவன் பகனை கொன்றுவிட்டதாக அறிவித்தான். அவனை பித்தன் என்றும் அச்சத்தில் சித்தம் கலங்கியவன் என்றும்தான் ஊரார் நினைத்தனர். ஆனால் வெளியே வந்து கோட்டைமுகப்பில் குன்றெனக் கிடந்த பகனின் உடலைக் கண்டதும் வாயடைத்துப் போயினர்.

பிரமதன் பாடி முடித்தான் “ஏகசக்ரநகரியின் தலைமை வைதிகனாகவும் ஊரே அஞ்சும் ஆற்றல்கொண்டவனாகவும் விளங்கும் கலிகன் அவ்வாறுதான் உருவானான். அவன் கொன்ற நூறு அரக்கர்களை விவரிக்கும் கலிகபிரதாபம் என்ற நூலை எழுதியவர் சண்டர் என்ற பெயருள்ள சூதர். அவரே இக்கதைகளை கலிகரிடமிருந்து கேட்டறிந்துகொண்டு கலிகபிரஹசனம் என்ற அங்கத நூலையும் இயற்றினார். அவரிடமிருந்து நான் கற்றதே இப்பாடல். அவர் வாழ்க!”

பாடல் முடிந்தபோது பேரவையே நகைத்துக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் உரக்க நகைத்தபடி எழுந்து கைகளை மேலே தூக்கி ”அது வேறெவரும் அல்ல. என் மைந்தன் பீமனே. அவனும் அவன் அன்னையும் உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள். உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். சரயு வழியாக அவர்கள் சென்ற இடமென்ன என்று கண்டு சொல்லட்டும்” என்றபின் திரும்பி “விதுரா, மூடா, நீ என்ன சொன்னாய்? அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இல்லையா? நான் சொன்னேனே, என் மைந்தன் பீமன் அத்தனை எளிதாக இறக்க மாட்டான் என்று. அவனுக்கு என் மூதாதையரின் அருள் உண்டு. அவனை பெரும்படையெனச் சூழ்ந்து காப்பது அவர்களின் கருணை” என்றார்.

சொல்லிவரும்போதே அவர் குரல் உடைந்தது. “எங்கோ இருக்கிறான். நலமாக இருக்கிறான்” என்றவர் தளர்ந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு தன் முகத்தை கைகளில் ஏந்தி மூடியபடி தோள்குலுங்க அழத்தொடங்கினார். அதுவரை சிரித்துக்கொண்டிருந்த பேரவை எழுந்து திகைத்த முகத்துடன் அவரை நோக்கியது. விதுரர் சஞ்சயனை நோக்கி அரசரை உள்ளே அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 1

தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தின் தெற்குவாயிலில் இருந்து கிளம்பிய ரதசாலை அரசகுலத்தின் மயானத்தைக் கடந்து வெவ்வேறு குலங்களுக்குரிய பன்னிரு பெருமயானங்களுக்கு அப்பால் சிறுபாதையாக மாறி கங்கையில் இறங்கிய சிற்றாறு ஒன்றின் நீர் ஊறி சதுப்பாகி கோரைப்புல் மண்டிக்கிடந்த தாழ்நிலத்தை அடைந்ததும் மறைந்தது. காற்று அலையடித்துச் சென்றுகொண்டிருந்த பொன்னிறமான புல்பரப்புக்குள் சேற்றில் பாதிப்பங்கு புதைந்து சற்றே சரிந்து அமைந்திருந்த சிறிய கற்கோயில் விண்ணிலிருந்து விழுந்ததுபோல நின்றது. அதன் மேல் பறவைகளின் எச்சம் வெண்சுண்ணம்போல வழிந்து மூடியிருந்தது. மூடாத சிறிய வாயிலுக்கு அப்பால் இருளுக்குள் அமைந்திருந்தாள் இருள் ஆளும் இறைவி.

தெற்குக் கோட்டைவாயில் கனத்த அடிமரங்களால் ஆனது. அது நெடுங்காலமாக திறக்கப்படாமல் மண்ணில் கனத்துப் புதைந்து கொடிகள் படர்ந்தேறி இலைவிரித்து ஆட மேலே கோட்டை முகட்டின் காவல்மாடம் கைவிடப்பட்டு உடைந்த மரக்கூரையில் சருகுகள் பரவியிருக்க எழுந்து நின்றிருந்தது. ஓர் உடல் மட்டும் நுழையும் அளவே இருந்த திட்டிவாயிலை உள்ளிருந்து கனத்த குட ஓசையுடன் திறந்து நரைகுழல் கற்றைகளை தோளில் பரப்பி மான்தோலாடை உடுத்து காதுகளில் சிறிய வெள்ளிக்குண்டலங்களும் கையில் கங்கணமும் அணிந்த கணியர் குலத்து முதுபூசகர் ஒருவர் சாலைக்கு வந்தார். கதவுக்கு அப்பால் பொறுமையிழந்த காட்டுவிலங்கொன்றின் உறுமலென முழவின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

அவருக்குப் பின்னால் கையில் உருவிய உடைவாளுடன் இடையில் மரவுரி மட்டும் அணிந்து நீள்குழலை இடைவரை விரித்திருந்த இளம்படைவீரன் ஒருவன் குனிந்து வெளிவந்து நின்றான். சிவமூலிப்புகையால் சிவந்த விழிகளும் எச்சில் ஊறிச் சிவந்த உதடுகளும் சற்று வீங்கிய முகமும் கொண்டிருந்த அவன் உடலில் முழவின் ஒவ்வொரு அதிர்வொலியும் அம்புகளைப்போல சென்று பதிவதை கண்களாலேயே காணமுடிந்தது. அவன் கழுத்தில் வெட்டுண்டவை போல தசைகள் வலிப்பு கொண்டு அதிர்ந்தன. கால்கள் மண்ணை விட்டு எழத்தவிக்க நிலையழிந்து ஆடிக்கொண்டிருந்தான்.

தொடர்ந்து முழவும் பறையும் துடியும் ஏந்திய மூன்று சூதர்களும் அவர்களுக்குப்பின்னால் பூசைத்தாலங்கள், மதுக்குடங்கள் ஏந்திய மூன்று இளம்சூதர்களும் வந்தனர். நன்கு வளைந்த முதுகும் முதுமையால் செதில்களாகி மின்னிய தோலுக்குள் எலும்புகள் உந்தி அசையும் மெலிந்த உடலும் கொண்ட முதுகணியர் சற்று வளைந்து சுள்ளிபோலாகிவிட்டிருந்த கால்களை விரைவாகத் தூக்கி வைத்து விரல்கள் வளைந்து பின்னியிருந்த கைகளை வீசி கண்களைச் சுருக்கி பாதையை மட்டும் நோக்கியபடி நடந்தார். அவருக்குப்பின்னால் பிறர் சென்றனர். முழவோசை அவர்களைத் தூக்கிச் செல்வதுபோல் தோன்றியது. தொலைவிலிருந்து நோக்கியபோது முழவோசையே அவர்களின் காலடியென எண்ணச்செய்தது.

முழவின் ஒலி அமைதி நிறைந்து கிடந்த மயானங்களுக்குள் நெடுந்தொலைவுக்குச் சென்று பெரிய நடுகற்களில் பட்டு அதிர்ந்தது. மரங்களின் நிழல்களும் இலைநுனிகளும்கூட அதனால் அதிர்வதுபோல் தோன்றியது. புதர்களுக்குள் ஓய்ந்து துயின்ற நரிகள் வெருண்டு எழுந்து செவிகளை முன்கோட்டி நாசி நீட்டி மெல்ல காலெடுத்து வைத்து வெளிவந்து நோக்கின. இளம்நரி ஒன்று எழுந்து செவிகளை விடைத்து தலையைத் தூக்கி கூர்ந்து நோக்கி மெல்ல உறுமியது. அதன் அன்னை “ஜிஹ்வா, உள்ளே வா” என்று பின்னாலிருந்து அழைத்தது.

வைக்கோல் நிறமும் கூழாங்கல்போன்ற விழிகளும் கொண்டிருந்த ஜிஹ்வன் “உணவு! உணவு வருகிறது!” என்றான். “இல்லை, அவர்கள் வேறு ஏதோ செய்யப்போகிறார்கள்” என்று அன்னை சொன்னது. “என் வயிற்றில் வாழும் தேவி சொல்கிறாள். அது உணவு” என்றான் ஜிஹ்வன். புதருக்குள் இருந்து முகம் மட்டும் நீட்டிய கிழட்டு நரியான காகுகன் “நான் இதுவரை இப்படி எவரும் சென்றதை கண்டதில்லை. உணவாகக்கூடிய எதுவும் அவர்களிடமில்லை” என்றான். பின்னர் வாயைச் சுருக்கி தென்னைவேர்நுனிகள் போல பற்கள் தெரியச் சிரித்து ”ஒருவேளை அவர்கள் நரிகளை வேட்டையாடக்கூட வந்திருக்கலாம்” என்றான்.

ஜிஹ்வன் வாலை ஒருமுறை குலைத்து வீசிவிட்டு “என்னால் அவர்களைப் பார்க்காமலிருக்க முடியாது” என்றபடி புதர்களுக்குள் பாய்ந்து மறைந்தான். அன்னைநரிக்குப்பின்னால் நின்றிருந்த இன்னொரு சிறிய நரியான பூமிகன் “மூத்தவரே, நானும் வருகிறேன்” என்று சொல்லி அவன் பின்னால் ஓடினான். அன்னை பின்னால் செல்வதா வேண்டாமா என்று தவித்து முதியநரியை நோக்க “செல், உனக்கு வேறென்ன வழி?” என்றது. அன்னை முன்னங்கால்களால் மண்ணைக் கீறியது. “அங்கே உணவு வருமென்றால் என்னை நோக்கி கூவு... வந்துவிடுகிறேன். நான் வயிறு நிறைய உண்டு நீண்டநாள் ஆகிறது. என் பற்களும் தேய்ந்துவிட்டன” என்றது முதியநரி.

அன்னை புதருக்குள் சென்று இலைகளில் இருந்த தன் மைந்தரின் வாசனையை முகர்ந்தபடி ஓசையில்லாமல் ஊடுருவிச் சென்றது. அப்பால் புதருக்குள் மைந்தரின் வாலசைவு தெரிந்ததும் நின்று சுற்றுமுற்றும் நோக்கியபின் மெல்ல அணுகி அவர்களுக்குப்பின்னால் நின்றுகொண்டது. அவர்கள் கோரைப்புல் விரிவில் மிதந்து அலைபாய்வது போல் சிற்றாலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கிக் கொண்டிருந்தனர். பூமிகன் நாக்கை நன்றாக நீட்டி தலையை தாழ்த்தி மெல்ல முனகினான். ஜிஹ்வன் திரும்பாமலேயே தன் தோள்முடிகளைச் சிலிர்த்து அவனை எச்சரித்தான்.

முதுகணியரும் சூதர்களும் புற்பரப்புக்கு நடுவே இருந்த சிறிய பாறை ஒன்றின்மேல் ஏறி அமர்ந்துகொண்டனர். கோரைப்புல்வெளியில் அவர்கள் வந்த பாதை வகிடு போல நீண்டுகிடக்க காலடிகள் அழுந்திய சேற்றுப் பள்ளத்தில் நீர் ஊறி நிறையத் தொடங்கியது. அவர்களின் உடல்பட்டு கலைந்த சிறிய பூச்சிகள் எழுந்து அந்திச்செம்மை பரவிய காற்றில் புகைச்சுருள் போல சுழன்று பறந்தன. முழவுகளை ஏந்தியவர்கள் வாய்க்குள் பூச்சிகள் நுழையாமலிருக்க மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டனர். வாளேந்தியவன் பாறைமேல் அமரப்போய் அப்படியே குப்புற விழுந்தான். முதுகணியர் அவனை திரும்பி நோக்கியதும் இருவர் அவனை புரட்டிப்போட்டு எழுப்ப முயன்றனர். அவர் அவன் கிடக்கட்டும் என்று கண்களால் சொன்னார்.

தீராவலி கொண்டவன் போல அவன் பாறைமேல் மெல்ல நெளிந்துகொண்டும் முனகிக்கொண்டும் கிடந்தான். முழவையும் பறையையும் துடியையும் வைத்துவிட்டு சூதர்கள் உடல்குவித்து அமர்ந்துகொண்டனர். தாலங்களை மடியில் வைத்தபடி பிறர் பின்னால் அமர்ந்தனர். முதுகணியரின் ஒடுங்கிய கரிய முகத்தில் தாடைக்குக் கீழே மட்டும் மெல்லிய வெண்தாடி புதர்ச்சிலந்தியின் வலைக்கூடுபோல பரவியிருந்தது. பரந்த மூக்கின் கீழே மீசையாக சில முடிகள் வெண்சுருள்களாக தெரிந்தன. கண்களைச் சுருக்கி அணைந்துவரும் சூரியனை நோக்கியபடி அவர் அமர்ந்திருந்தார்.

அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. சிறிதுநேரத்திலேயே சதுப்பைவிட்டு எழுந்து வந்த கொசுக்களின் படை அவர்களை சூழ்ந்துகொண்டது. அந்தியின் ஒளியில் கொசுக்கள் அனல்துளிகள் போல் சுழன்றன. காதருகே அவற்றின் ரீங்காரம் எழுந்துகொண்டே இருந்தது. சிலர் கைகளை வீசி அவற்றை துரத்தினர். சால்வைகளால் முகத்தையும் உடலையும் முழுமையாகவே மூடிக்கொண்டனர். கிழவரின் உடலெங்கும் கொசுக்களே சால்வைபோல போர்த்திமூடியிருந்தன. அவர் அவற்றை அறிந்ததாகவே தெரியவில்லை.

ஜிஹ்வன் திரும்பி பூமிகனை நோக்கியபின் பின்னங்காலில் அமர்ந்து கொண்டான். பூமிகனும் மேலும் அருகே சென்று பின்னங்காலில் அமர்ந்து தமையனை நக்க முயல உடலை அசைத்து வேண்டாம் என்றான் ஜிஹ்வன். அன்னை பின்னால் அமர்ந்துகொண்டு தன் முன்னங்கால் பாதத்தை தூக்கி நாநீட்டி நக்கியது. அவற்றைச் சுற்றி கொசுக்கள் அடர்ந்து சுழன்றன. அவற்றைக் கடந்து புதருக்குள் ஒரு கீரி சென்றது. பிடிக்கலாமா என்ற பார்வையை பூமிகன் ஜிஹ்வன் மேல் வீச வேண்டாம் என்று ஜிஹ்வன் காதை மட்டும் அசைத்தான். எதிரே பாறைமேல் அமர்ந்திருப்பவர்களை நோக்கியபடி அவையும் அமர்ந்திருந்தன. காட்டுக்குள்ளும் புல்வெளியிலும் எழுந்த ஒலிகளுக்கு அவற்றின் செவிகள் மட்டும் தன்னிச்சையாக எதிர்வினை அளித்துக்கொண்டிருந்தன.

ஜிஹ்வன் மூச்சிழுத்து மெல்லச் சிலிர்த்து இடதுகாதை மட்டும் நுனிமடித்து தலையை தாழ்த்தினான். உடனே பூமிகனும் அன்னையும் தரையோடு உடலை ஒட்டி படிந்துகொண்டனர். ஜிஹ்வன் திரும்பி மெல்ல காலடி எடுத்துவைத்து சற்று முன்னால் சென்று தூக்கிய முன்வலதுகாலுடன் அசையாமல் நின்று நோக்கி இருகாதுகளையும் பின்னால் மடித்து வாலை குலைத்தான். இரு நரிகளும் எழுந்து புதர்களுக்குள் தவழ்ந்து அதன் இரு பக்கங்களிலும் சென்று நின்றன. ஜிஹ்வன் தன் முன்னங்காலால் மண்ணை மெல்ல பிறாண்டி வண்டு முரள்வதுபோல ஒலியெழுப்பினான்.

அப்பால் தாழ்ந்து இலைகனத்து தரைதொட்ட கிளைகளுடன் நின்ற நெல்லிமரத்திற்கு அப்பால் ஒருவன் நின்றிருந்தான். கரிய உடலெங்கும் சாம்பல்பூசி புலித்தோலாடையை இடையில் அணிந்து, நெற்றியில் செந்நிறமான மூவிழி வரைந்து, சடைமுடிக்கற்றைகளை தோளில் பரப்பி கையில் கூர்முனை செதுக்கப்பட்ட நீள்கழியுடன் நின்று அந்த பூசகர்குழுவை நோக்கிக் கொண்டிருந்தான். அவன் இருவிழிகள் அவர்களை நோக்க நுதல்விழி அப்பால் அணைந்துகொண்டிருந்த சூரியனை நோக்கி வெறித்து அசைவிழந்திருந்தது. சடைமுடியில் பிசிறி நின்றிருந்த மயிர்களில் அந்திச்செம்மை பட்டு அவை ஒளியுடன் தெரிந்தன. ஜிஹ்வன் கால்களை பின்னால் எடுத்துவைத்து “அவன் நம்மவன்” என்றான்.

புதர்களுக்குள் கூடுகாத்தான் குருவி எழுந்து அவர்களை திசைதிருப்பி அழைத்துச்செல்வதற்காக தலைக்குமேல் சிறகடித்து அம்புபட்டதுபோலச் சென்று விழுந்து எழுந்து மீண்டும் சிறகடித்துக்கூவியது. அவர்கள் அசையாமலிருக்கக் கண்டு விலகிச்சென்று தன் பேடையிடம் ஏதோ சொன்னது. கோரையடர்வுக்குள் ஓடிய கீரி ஒன்றின் அசைவு மேலே தெரிந்தது. வடக்கிலிருந்து வந்த காற்று புல்லில் அலையடித்துக்கொண்டு சென்று சதுப்பின் நடுவே செந்நிற ஒளியாக ஊறிவழிந்து சென்றுகொண்டிருந்த ஆற்றுநீரைத் தொட்டு மறுபக்கம் சென்று தொலைவில் இருள்குவியல்களாகத் தெரிந்த காட்டின் மரக்கிளைகளை அசையச்செய்தது.

கோரைவெளிக்குமேல் அழுகியசேற்றும்ணம் கொண்ட நீராவி நிறைந்திருந்தது. புதர்களின் உள்ளேயும் அப்பால் சேற்றுக்கதுப்பிலும் நீர்விளிம்புகளிலும் அமர்ந்திருந்த கொக்குகள் ஒவ்வொன்றாக சிறகடித்து எழுந்து காற்றிலேறி காடுநோக்கி விலகிச் சென்றன. சிற்றாலயத்தின் மேலே அமர்ந்து ஓயாமல் கரைந்துகொண்டிருந்த காகங்களில் ஒன்று எழுந்து சென்றதும் பிற காகங்களும் கூச்சலிட்டபடி எழுந்து பின்தொடர்ந்தன. மைனாக்கள் காற்றில் அலையும் சருகுகள் போல சிறகசைத்து சுழன்று சுழன்று சென்று மறைந்தன. சதுப்பில் பெரிய மேழித்தலைகள் போலத் தெரிந்த சாம்பல்நிறமான நாரைகளும் விறகுபோன்ற அலகுகளை சதுப்பில் தாழ்த்தித் தாழ்த்தி எடுத்துக்கொண்டிருந்த கூழைக்கடாக்களும் மட்டும் எஞ்சின. மேலே மெல்லிய ஒளி நிறைந்த வானில் மிக உயரத்தில் பனங்குருவிகள் பாய்ந்துகொண்டிருந்தன.

பின்னர் நாரைகள் ஒவ்வொன்றாக பெருஞ்சிறகுகளை விரித்து காற்றில் மிதந்து ஏறி மறைந்தன. கூழைக்கடாக்களும் மறைந்தபின் கோரைப்பரப்பில் உயிரசைவு அகன்றது. சேற்றுக்கலங்கலில் செம்மை மறைந்து நீலநிற ஒளி எஞ்சியது. வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக விழிதிறந்து வந்தன. மிகத்தொலைவில் ஏதோ நரி ஊளையிட்டது. பூமிகன் காதுகளை அசைத்து மெல்லிய குரலில் “அவன் ஜூகு” என்றான். “நம் புல்வெளியில் நுழையவிருக்கிறான்.” ஜிஹ்வன் பேசாதே என்று முதுகுத்தோலை மட்டும் அசைத்து எச்சரித்தான்.

சதுப்புக்கு மறுபக்கம் காட்டில் இருந்து நிழல் போல ஒரு காட்டுஆடு எச்சரிக்கையுடன் நடந்துவருவதை காணமுடிந்தது. பூமிகன் “சுவையானது” என்று சொல்ல மெல்லிய முனகலால் ஜிஹ்வன் “பேசாதே” என்றான். மேலும் நாலைந்து காட்டு ஆடுகள் நடந்து சேற்றில் காலூன்றி வந்து நீர் அருகே குனிந்தன. அவை பேசிக்கொள்ளும் ஒலி கேட்டது. மேலும் காட்டு ஆடுகள் வந்தன. தொடர்ந்து பெரிய உடலைத் தூக்கி வைத்து காட்டுமாடு ஒன்று வந்தது. அதன் துணை காட்டின் விளிம்பிலேயே நின்றிருந்தது. பின்னர் அது வந்தபோது அதனுடன் குட்டி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து காட்டுமாடுகள் வந்துகொண்டே இருந்தன.

“ஆம், நாம் சென்றிருந்தால் அவை நம்மைக் கொன்றிருக்கும்” என்றான் பூமிகன். ஜிஹ்வன் ஒன்றும் சொல்லவில்லை. இருட்டு கனத்து காட்டுமாடுகளும் ஆடுகளும் மறைந்தன. அப்போது அவற்றின் ஒலிகள் மேலும் துல்லியமாக கேட்கத்தொடங்கின. பாறையில் அமர்ந்திருந்தவர்களை வானப்பின்னணியில் நிழலுருவாக காணமுடிந்தது. பாறையில் கிடந்தவன் எழுந்து ஏதோ குழறினான். சூதர்களில் ஒருவர் அவனுக்கு ஏதோ கொடுக்க அவன் அதை வாயிலிட்டு மென்றுகொண்டு தலையை தன் முழங்கால்களில் புதைத்து அமர்ந்துகொண்டான்.

காற்று முழுமையாக நிலைத்தபோது சேற்றின் வாசனை கனத்து வந்தது. நீராவி காதுகளை வெக்கைகொள்ளச்செய்தது. ஜிஹ்வன் காதுகளை மெல்ல மடித்துக்கொண்டே இருந்தான். திரும்பி நெல்லிமரத்துக்கு அப்பால் நின்றவனை நோக்கினான். அவன் அங்கேயே இன்னொரு மரமென நின்றிருந்தான். ஒரு கோரைப்புல்நுனிகூட அசையவில்லை. விண்மீன்கள் வானில் நிறைந்து உதிரப்போகின்றவை என அணுகி வந்தன. பூமிகன் மூக்கைத் தூக்கி அண்ணாந்து நோக்கி நாக்கால் வாயை நக்கிக்கொண்டு “சிறியவை” என்றான். அவன் அன்னை “பேசாதே...” என்றது.

மிக அப்பால் காற்று கிளைகளை அசைத்தபடி பெருகிவரும் ஒலி கேட்டது. மழை வருவதுபோல. கோரைவெளியில் காற்று நுழைந்தபோது பல்லாயிரம் பாம்புகள் இணைந்து சீறும் ஒலி எழுந்தது. காற்றுடன் வந்த சருகுகளும் இலைகளும் புழுதியும் அனைவரையும் மூடி மூழ்கடித்தன. காற்று ஒரே ஒருமுறை வானம் வாய்குவித்து ஊதியதுபோல வந்து முழுமையாகக் கடந்துசென்றது. ஆற்றுக்கு அப்பால் காடு ஓலமிடத்தொடங்கும்போது கோரைப்புல்வெளியில் ஓரிடத்தில் சிவந்த நெருப்பு தயங்கியபடி கோரையின் உடலில் பற்றிக்கொண்டு கீழிறங்குவதைக் காணமுடிந்தது. புல்பொசுங்கும் வாசம் எழுந்தது.

அன்னைநரி வாலைக் குலைத்தபடி எழுந்து பின்னால் செல்ல பூமிகன் ஓரிரு அடிகள் எடுத்துவைத்து கூடச்சென்றபின் ஜிஹ்வன் திரும்பவில்லை என்று கண்டு திரும்பிவந்து நின்று நோக்கினான். அந்த அசைவில் அப்பால் நெல்லிமரத்தடியில் நின்றவன் திரும்பி நோக்கி அக்கறையில்லாமல் மீண்டும் பூசகர்களை நோக்கினான். முதுகணியர் எழுந்து அந்த நெருப்பை நோக்கி இரு கைகளையும் விரித்தார். பின்னர் அதை நோக்கி வெறிகொண்டவர் போல ஓடினார். ஒரு சூதன் பறையை எடுத்து ஓங்கி அறைந்தான். சூழ்ந்திருந்த இருளில் அந்தக் கோலின் அடி விழுவதுபோலிருந்தது. பின்னர் துடிப்பான தாளத்துடன் பறை அதிரத் தொடங்கியது.

முதுகணியர் அந்த நெருப்பை அணுகி தன் இடைக்கச்சையில் இருந்த சிறிய நெய்ப்பந்தத்தில் நெருப்பை பற்றவைத்துக்கொண்டு திரும்பி வந்தார். அவருக்குப்பின்னால் புல்லில் பற்றிக்கொண்ட நெருப்பு புகையுடன் பரவி மெல்ல வலுவிழந்து கீழிறங்கத்தொடங்கியது. அப்பகுதியில் இருந்து கீரிகளும் பாம்புகளும் விலகிச்செல்வதன் அசைவுகளை கேட்க முடிந்தது.

முதுகணியர் சிற்றாலயத்தின் முன்னால் வந்து நின்றார். பறையேந்தியவன் ஆலயத்தின் இடப்பக்கம் சென்று நின்றான். முழவை முழக்கியபடி இன்னொரு சூதன் அருகே சென்று நின்று அடிக்கத் தொடங்கினான். நெடுந்தொலைவில் கோட்டைச்சுவரில் அவ்வொலி தனியாகக் கேட்டது, அங்கிருந்து எவரோ இசையுடன் வந்துகொண்டிருப்பதுபோல. பூமிகன் திரும்பி ஐயத்துடன் நோக்கிவிட்டு அன்னையை கேள்வியுடன் நோக்கி வாலைக் குலைத்து கடைவாயை நக்கிக்கொண்டான்.

முதுகணியர் தன் கையிலிருந்த சிறிய பந்தத்தைச் சுழற்றி தழல் எழச்செய்தபின் சிற்றாலயத்திற்குள் நுழைந்தார். உள்ளே சுவரில் சுதைபூசப்பட்டு அதில் ஆளுயரத்தில் வரையப்பட்டிருந்த உக்ரசண்டிகைதேவி வண்ண ஓவியத்தின் விழிகள் செவ்வொளி பட்டு உயிர்கொண்டது போல எழுந்து வந்தன. முதுகணியர் கைநீட்ட அவரது மாணவர்கள் பூசனைப்பொருட்களை கொண்டுசென்று அவர் அருகே வைத்தனர். தாலத்தில் இருந்து ஏழு சிறிய நெய்ப்பந்தங்களை எடுத்து பற்றவைத்து ஓவியத்தின் அருகே நட்டார். அவை மெல்ல துணிபொசுங்கும் ஒலியுடன் சுடரெழுந்து நெய்வாசனையுடன் இதழ்விரித்து ஒளிவிடத் தொடங்கின.

பந்தங்களின் ஒளி எழுந்தபோது செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்கள் கலந்து வரையப்பட்ட சண்டிகையின் தோற்றம் துலங்கி வந்தது. முழவும் பறையும் எழுப்பிய தாளத்துக்கு இசைய பந்தங்களின் தழல் ஆடுவதாகவும் அதற்கேற்ப தேவியின் ஓவியம் நெளிவதாகவும் வெளியே வணங்கி நின்ற சூதர்களுக்கு விழிமயக்கு ஏற்பட்டது. அவர்களின் உடல்களிலும் அந்தத் தாளம் அறியாமலேயே வெளிப்படத்தொடங்கியது.

சண்டிகை கிளை தழைத்த கனிமரம் போல இருபது கைகள் கொண்டிருந்தாள். வலப்பக்கக் கைகளில் சூலம், வாள், வேல், சக்கரம், பாசச்சுருள், கேடயம், கதை, உடுக்கு, வஜ்ரம் ஆகியவை இருந்தன. வலதுகீழ்க்கை அஞ்சல் முத்திரை காட்டியது. இடது கைகளில் நாகச்சுருள், கேடயம், மழு, துரட்டி, சக்ரபாசச்சுருள், மணி, சிம்மக்கொடி, உழலைத்தடி, ஆடி ஆகியவை இருக்க இடது கீழ்க்கரம் வரமருள் முத்திரை காட்டியது. விரிந்த பெருவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்கள் பந்த ஒளியில் அனலாக சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் பன்றித்தந்தங்கள் வளைந்திருக்க நடுவே குருதியாலான அருவியென நீளநாக்கு கழுத்துவரை தொங்கிக்கிடந்தது.

செந்நிறமுலைக்குவைகள் நடுவே கருநிறப் பளிங்காலான முலைக்காம்புகளிலும் அனல்துளிகள் அசைந்தன. உந்திச்சுழியில் தாமரை வரையப்பட்டிருந்தது. விரித்த கால்களுக்கு நடுவே செந்நிறத் தழல் போல பிளந்தகன்ற அல்குல் வாயிலுக்குள் மும்மூர்த்திகளின் சிறிய உருவங்கள் வரையப்பட்டிருந்தன. இருபக்கமும் வளைந்து விரிந்திருந்த தொடைகளுக்குக் கீழே வலக்கால் மண்ணில் ஊன்றி மறைந்திருக்க இடக்கால் செந்நிறமான அடிப்பாதம் தெரிய தூக்கப்பட்டிருந்தது. பாதப்பரப்பில் மேலே சங்கும் கீழே சக்கரமும் நடுவே தாமரையும் இருந்தன.

தேவிக்கு முன்னால் தாலங்களை வைத்து அவற்றில் படையல்பொருட்களை பரப்பினார் முதுகணியர். பொரிக்குவைகள் மூன்று. மலர்க்குவைகள் மூன்று. மதுக்குடங்கள் மூன்று. நடுவே சங்கு, மணி, காசுகள் என மூன்று மங்கலக்குவைகள். தேவிமுன் அமர்ந்து விரைவான கைமுத்திரைகளுடன் மந்திரங்களை சொல்லத் தொடங்கினார். முழவும் பறையும் உச்சவிரைவு கொண்டு மானுடக்கைகளை விட்டு பறந்தெழுந்து இருளுக்குள் தங்களைத் தாங்களே நிகழ்த்திக்கொண்டிருந்தன. ஒரு கணத்தில் விரைந்தோடும் புரவி காற்றில்பறந்து எழுந்ததுபோல அவற்றுடன் வந்து இணைந்து அவ்விரைவிலிருந்து மேலே சென்றது துடி.

துடியோசை முந்தியதும் பறையும் முழவும் ஓய்ந்தன. துடி அதிர்ந்து அதிர்ந்து ஒருகட்டத்தில் அதை செவிகளால் கேட்கமுடியாதென்று தோன்றியது. அதன் சொற்களெல்லாம் இணைந்து ஒற்றைச் சொல்லாக ஆனதுபோல. அது ஓர் உறுமல் மட்டுமே என்பதுபோல. அதனுடன் இணைந்ததுபோல “ஏஏஏ!” என்ற பேரொலியுடன் பாறையில் படுத்திருந்த வீரன் தன் வாளைச் சுழற்றியபடி பாய்ந்தோடி வந்தான். அவன் விழிகள் வெறித்து முகம் தழலால் ஆனதுபோலிருந்தது. அலறலில் தொண்டைநரம்புகள் புடைத்து பின்னித் தெரிந்தன.

வாளைச்சுழற்றியபடி அவன் ஆடினான். உடலில் அனல்பற்றி எரிய துடித்துத் துள்ளுவதுபோல. கைகளும் கால்களும் உடலில் இருந்து பிய்ந்து தெறித்துவிடுமென்பதுபோல. கூந்தல் அலைகள் சுழன்று பறந்தது. இடையாடை அவிழ்ந்து விழுந்தது. உடுக்கின் தாளத்தின் மூன்று ஒலியடுக்குகளும் ஒரு வடமாக முறுகி முறுகி முறுகி கேட்பவர்களின் தலைநரம்புகளை முறுக்கி முறுக்கி முறுக்கிச் சென்று டிண்ண்ண்ண் என்ற ஒலியுடன் அறுந்து மென்சதைக் கதுப்பில் பாய்ந்து மறையும் அம்பு போல ஒலி அமைதியில் புதைந்து மறைந்த துடிப்பில் அங்கிருந்த அத்தனை உடல்களும் வில்நாண் உமிழ்ந்த அம்பு என துடித்து காற்றில் எழுந்தன.

அக்கணத்தில் அவன் இடக்கரம் அவன் மேல் கடுவஞ்சம் கொண்டது என எழுந்து அவன் குழலை முறுகப்பற்றி மேலிழுத்துத் தூக்க அவன் கழுத்து நீண்டு தசை தெறித்த அதே நேரம் வலக்கரம் சீறிச்சுழன்று வந்து குரல்வளையை வெட்டி முதுகெலும்பில் முட்டி சீவிச்சென்றது. வாள் பாய்ந்த கணமே இடக்கரத்தால் தலை மேலே தூக்கப்பட்டது. தலையிலிருந்து உடலுக்கு வந்த ஒரு செங்குருதிக் கோழைச்சரடு வளைந்து துவள அதிர்ந்து கீழே விழுந்த உடலின் கால்கள் ஓடத்தவித்து மண்ணில் உதைத்து உதைத்து தாவ குருதிகொப்பளித்த கழுத்தின் வெட்டுவாயை அச்சாக்கி அவன் உடல் அரைவட்டமாகச் சுழன்றது. குழலைப்பற்றி தலையை எடுத்த இடக்கரம் அதை மண்ணில் உருட்டியது. வாளை முறுகப்பற்றிய வலக்கரம் இழுத்து இழுத்து துள்ளியது.

முதுகணியர் உள்ளிருந்து ஒரு சிறிய சுரைக்காய் கொப்பரையுடன் வெளியேவரும்போது தாலமேந்தியவர்களில் ஒருவன் அலறியபடி விரைத்து நடுங்கிய இருகைகளையும் நீட்டி உடல் துள்ள முன்னால் பாய்ந்தான். “பிடி! பிடி!” என முதுகணியர் கூவினார். அவனைப்பிடித்த இரு துணைவர்களையும் ஒரேகணத்தில் தூக்கி இரு திசைகளிலும் வீசிவிட்டு அவன் குனிந்து அந்த வாளை எடுத்து இடக்கையால் தன் குழலைப்பிடித்து இழுத்து வலக்கையால் கழுத்தைவெட்டி அதிர்ந்து எம்பிக்கொண்டிருந்த முதல்சடலம் மீதே விழுந்தான். அதன் மேல் கிடந்து துடித்தான்.

கீழே விழுந்த துணைவர் இருவரும் எழும்போது இரு தலைகளுடன் இரு கைகள் துள்ளியதிர்ந்துகொண்டிருந்தன. கண்களிலும் உயிர் எஞ்சியிருந்தது. உதடுகளும் இறுதிச்சொல்லை சொல்லி முடித்திருக்கவில்லை. அவ்வுடல்களின் நுரையீரல்களில் இருந்து வெளியே வந்த காற்று குருதியுடன் சேர்ந்து குமிழியிட்டுக்கொண்டிருந்தது. குருதிவாசம் காற்றிலெழுந்தது. குருதிக்கொப்புளங்கள் வெடிக்கும் ஒலி. நிறமற்றது என செவ்வொளியில் விழிமயக்கு காட்டிய குருதி மண்ணில் விழுந்து ஊறி பரவத் தொடங்கியது.

முதுகணியர் கையில் கொப்பரையுடன் இரு உடல்களையும் நோக்கி நின்றார். ஓரிரு கணங்களில் அனைத்தும் முடிந்துவிட்டது. அல்லது அது ஒரு பாழ்கனவு. அல்லது ஒரு நாடகத்தின் கணம். அல்லது... அவர் அருகே அமர்ந்து அந்த வாளை இறந்தவன் கையில் இருந்து பிடுங்கினார். கையில் அப்போதும் உயிர் இருந்தமையால் பிடிவிட்ட அவன் விரல்கள் யாழ் வாசிக்கும் கலைஞனைப்போல அசைந்தன. அவர் மேலே கிடந்தவனின் உடலைப்பற்றிச் சரித்து அவன் கழுத்திலிருந்து குமிழி வெடித்துக் கொப்பளித்த குருதியை அக்கொப்பரையில் ஊற்றினார். தலையற்ற உடல் எதையோ எண்ணிக்கொண்டதுபோல ஒருமுறை நெஞ்சு விம்மியது.

அவனை புரட்டிப்போட்டுவிட்டு கீழேகிடந்தவன் கழுத்திலிருந்து வழிந்த குருதியை கொப்பரையில் பிடித்தார் முதுகணியர். நிறைந்த கொப்பரையுடன் அவர் உள்ளே நுழைந்ததும் இருவர் சென்று இரு தலைகளின் நிணச்சரடுகளையும் வெட்டினர். முடியைப்பற்றிய கைகளுக்குள் வாளைக்கொடுத்து நெம்பி பிடியை விடுவிக்கவேண்டியிருந்தது. இருதலைகளின் முடிகளும் குருதியில் ஊறி உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் போலிருந்தன. அவர்கள் முடியைப்பிடித்து தலைகளைத் தூக்கியபோது வழுக்கி தலைகள் கீழிறங்கின. மனிதத்தலைக்கு அத்தனை எடை உண்டு என அப்போதுதான் அவர்கள் அறிந்தனர். ஒருவரை ஒருவர் நோக்கியபின் முடியைச் சுழற்றிப்பிடித்து தூக்கிக்கொண்டு சிற்றாலயத்தின் வாயிலில் வைத்தனர்.

முதுகணியர் அவற்றை எடுத்துக்கொண்டு உள்ளே இருந்த தேவியின் கால்களுக்குக் கீழே வாய் மேலிருக்கும்படி வைத்தார். இரு சிறியபந்தங்களைக் கொளுத்தி அவற்றின் வாயில் நட்டார். அவர் கைகாட்ட முழவும் பறையும் உடுக்கும் சேர்ந்து ஒலித்தன. அவர் குருதிநிறைந்த கொப்பரையை பொரிமேல் கவிழ்த்து மலருடன் சேர்த்துப் பிசைந்து தாலத்தில் பத்து உருளைகளாக உருட்டிக்கொண்டார். அதை தேவி முன் படைத்து மும்முறை வணங்கி எழுந்தார்.

உருளைகளை தாலத்துடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்து நின்று முதல் உருளையை தென்மேற்கு திசை நோக்கி வீசினார். எட்டுத்திசைகளை நோக்கியும் உருளைகளை வீசி ஒன்பதாவது உருளையை வானம் நோக்கி வீசினார். பத்தாவது உருளையுடன் திரும்பிப்பார்க்காமல் கோட்டைநோக்கி நடந்தார். பறையும் முழவும் உடுக்கும் முழங்க பிறர் அவருக்குப்பின்னால் ஓடினர்.

அவர்கள் சென்று மறைவதை பூமிகன் முன்னங்காலை எம்பி காதுகளை முன்னால் கோட்டி நோக்கினான். திரும்பி ஜிஹ்வனை நோக்கி “அது பரவும் தீ அல்ல” என்றான். அதற்குள் அவன் வாயிலிருந்து எச்சில் கொட்டியது. அவன் அன்னையும் எச்சில் ஊறிய வாயை நாவால் துழாவியபடி எழுந்தது. “நில்” என்றான் ஜிஹ்வன். “அவன் என்ன செய்யபோகிறான் என்று பார்ப்போம்.”

நெல்லிமரத்தடியில் நின்றவன் கோரைப்புல் வழியாகச் சென்று சிற்றாலயத்தை அடைந்து பந்தங்களின் ஒளியில் நடனமாடுவதுபோலத் தெரிந்த சண்டிகையைப் பார்த்தபடி சற்று நேரம் நின்றான். அந்தச் சடலங்களை இழுத்து வந்து சிற்றாலயத்தின் முன்னால் ஒன்றன்மேல் ஒன்றாக குறுக்காகப் போட்டான். அவை சந்திக்கும் இடத்தை மேடைபோல ஆக்கி அதன் மேல் ஏறி மலரமர்வில் கால்மடித்து அமர்ந்தான். இருகைகளையும் சித்தமுத்திரையாக குவித்துக்கொண்டு கண்மூடி அமர்ந்தான்.

ஜிஹ்வன் அவனை நோக்கிக் கொண்டு எழுந்து நின்றான். பூமிகன் “இறந்துவிட்டானா?” என்றான். ஜிஹ்வன் “இல்லை” என்றபின் கால்களை மடித்து அமர்ந்து கொன்டான். ”எவ்வளவுநேரம்!” என்று முனகியபடி பூமிகன் அதனருகே அமர அன்னைநரி அப்பால் நன்றாகவே படுத்துவிட்டது. மெல்லிய காற்று புல்வெளியை அலையடிக்கச்செய்து கடந்துசென்றது. ஆற்றுக்கு அப்பால் யானைக்கூட்டம் ஒன்று வந்து இறங்கி சேறாடுவது ஒலிகள் வழியாகத் தெரிந்தது. மந்தையில் இருந்த இரு குட்டிகள் அடிக்கடி சங்கொலி போல பிளிற அன்னையர் அவற்றை வயிறு அதிர உறுமி அடக்கினர்.

விண்மீன்கள் இடம் மாறின. ஏதோ எண்ணமொன்று எழுந்ததுபோல ஒரு விண்மீன் சற்று ஒளிர்ந்து முகிலில் மறைந்தது. சதுப்பிலிருந்து கிளம்பிய மின்மினிகள் அவனைச்சூழ்ந்து பறந்துகொண்டிருந்தன. பந்தங்கள் எரிந்து அணைந்துவிட்ட இருளில் அந்த மின்மினி ஒளியாலே அவன் தெரிந்தான். அவன் அங்கிருப்பதை கண் அறிகையிலேயே உள்ளம் அறியாமலாகிவிட்ட விந்தையை ஜிஹ்வன் எண்ணிக்கொண்டிருந்தான்.

அவன் கைகளைத் தூக்கி “ஓம்”” என்றான். “ஓம், ஹ்ரீம், ஸ்ரீம், ஹம்” என்று பன்னிருமுறை முழங்கியபின் எழுந்து கோரைநடுவே நடந்து சென்று இருளில் மறைந்தான். “செல்வோம்... அன்னையை எழுப்பு” என்றான் ஜிஹ்வன். “விடிவதற்குள் நாம் உண்டுவிடவேண்டும். அக்கரையில் இருந்து கழுதைப்புலிகள் வரலாம். ஓநாய்கள் கூட வரலாம்” என்றான் பூமிகன். “அன்னையே... உணவு...” அன்னைநரி எழுந்து நான்கு கால்களையும் நீட்டி ஊன்றி முதுகை வளைத்து சோம்பல் முறித்தபின் முன்னால் ஓடும் மைந்தரை தொடர்ந்து சென்றது.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 2

கையிலிருந்த தாலத்தில் குருதிக்கவளத்துடன் விரைந்த நடையில் முதுகணியர் மயானங்களைக் கடந்து திட்டிவாயிலுக்குள் நுழைந்து மண்பாதையில் சென்று தெற்குரதவீதியை அடைந்தார். அவர் வருவதை தொலைவிலேயே அங்கு கூடி நின்றவர்கள் பார்த்துவிட்டனர். அவர் கோட்டைக்கதவைக் கடந்ததும் காவல்மேடை மேல் நின்ற வீரன் விளக்கசைக்க நகர் முழுக்க நூற்றுக்கணக்கான முரசுகளும் கொம்புகளும் மணிகளும் பேரொலி எழுப்பத்தொடங்கின.

நகரத்தெருக்களில் கூடியிருந்த மக்கள் கைகளைத் தூக்கி “ஐந்து அன்னையர் புகழ் வாழ்க! பன்னிரு உடனுறை அன்னையர் புகழ் வாழ்க!” என்று கூவினர். விழாவுக்காக பெண்களும் குழந்தைகளும் செந்நிற மேலாடையும் ஆண்கள் செந்நிறத்தலைப்பாகையும் அணிந்திருந்தனர். செம்மலர்தோரணங்கள் ஆடிய இல்லங்களின் முகப்புகளில் ஏழுமுகக் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு அப்பமும் மலரும் இளநீரும் படைக்கப்பட்டிருந்தன.

தெற்குரதவீதியின் தொடக்கத்தில் செம்பட்டுத்தலைப்பாகை சூடி செங்கச்சை அணிந்து நின்றிருந்த ஐந்து முதன்மைப் பூசகர்களும் கைகளில் மங்கலத்தாலங்களுடன் ஐம்பெரும் வாத்தியங்கள் பின்னால் ஒலித்துவர முதுகணியரை எதிர்கொண்டனர். மெல்லிய உடல் உளஎழுச்சியால் புல்நுனி வெட்டுக்கிளிபோல் தாவி அவர் அணுகியதும் வாழ்த்துக்கூச்சல்கள் உச்சத்தில் எழுந்தன. அவர் அவர்கள் முன்னால் வந்து காற்றிலாடும் மரம்போல நின்றார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கியபின் அவரது கைகளில் இருந்த ஊன்சோறை ஐந்து பூசகர்களும் வாங்கினர். அவர்களைச் சூழ்ந்து வாழ்த்தொலிகளும் மேளமும் காற்றை அதிரச்செய்தன. ஊன்கவளத்தை ஐந்தாகப் பகுத்து தங்கள் கைகளில் இருந்த தாலங்களில் எடுத்துக்கொண்டனர். செம்பட்டால் அதை மூடி மேலே செவ்வரளி மலர் வைத்து எடுத்துச்சென்றனர். அவர்கள் திரும்பிப்பார்க்கலாகாது என நெறியிருந்தது.

காற்று நின்றதும் அது அள்ளிச்சென்ற துணி நிலம் சேர்வது போல முதுகணியர் தொய்ந்து கீழே விழப்போக இருவர் அவரை பற்றிக்கொண்டனர். அவர் கைகளை மட்டும் அசைத்து குடிக்க நீர் கேட்டார். ஒருவர் ஓடிச்சென்று குவளையில் நீருடன் வந்தார். அவரை அள்ளிச்சென்று பாதையோரமாகவே ஒரு மண்டபத்தின் திண்ணையில் படுக்கச்செய்தனர். நீரை அவர் ஆவலுடன் தலைதூக்கி குடித்தார். பின்னர் உதடுகளை இறுக்கியபடி கண்களை மூடிக்கொண்டார். தலையை மெல்ல அசைத்து விழிகளின் முனைகளில் இருந்து நீர் வழிந்து காதுகளை நிறைக்க அழத்தொடங்கினார்.

ஐந்து பூசகர்களும் தெற்குவீதியின் திருப்பத்தில் வந்ததும் தங்கள் மேளக்காரர்களுடனும் அகம்படியினருடனும் ஐந்தாகப்பிரிந்தனர். முதல்பூசகரான விருபாக்‌ஷர் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த துர்க்கையின் ஆலயம் நோக்கி சென்றார். அவர் வருவதைக் கண்டதும் துர்க்கையின் ஆலயமுகப்பில் இருந்து எரியம்புகள் வானிலெழுந்து வெடித்துச் சிதறின. ஆலய முகப்பிலிருந்த பெரிய முரசுமேடையில் சரிந்தமைந்திருந்த பெருமுரசு இடியோசை எழுப்பத்தொடங்கியது.

ஆலயத்தின் மரத்தாலான பன்னிரண்டு அடுக்குக் கோபுரத்தின் நடுவே அமைந்திருந்த மாபெரும் கண்டாமணியின் நா சுழன்று ஒலித்த ரீங்காரம் முரசின் கார்வையுடன் கலந்து ஒரு கொழுத்த திரவமாக ஆகி காதுகளையும் வாயையும் நிறைத்து உடலில் புகுந்து நெஞ்சையும் வயிற்றையும் தலையையும் நிரப்பி காதுச்சவ்வை உள்ளிருந்து மோதியது. அந்த அழுத்தம் தாளாமல் அனைவரும் வாயைத் திறந்து திறந்து மூடினர். ஒலியதிர்வுகளில் அங்கிருந்த அத்தனை கட்டடங்களும் மரங்களும் மிதந்து நின்றன. அலைகளில் நெற்றுகளைப்போல அவ்வொலி அவர்களை எற்றி அலைக்கழித்தது.

கோபுரம் சூடிய பேராலயம் இரண்டு துணைக்கருவறைகளுக்கு நடுவே மையப்பெருங் கருவறை கொண்டதாக இருந்தது. அருகே இரு பக்கமும் இரண்டு துணைச் சிற்றாலயங்கள் இருந்தன. அவற்றைச் சுற்றிவளைத்த பெரிய மண்சுவருக்கு நான்கு மூலையிலும் முரசுமேடைகள். நான்கு வாயில்களிலும் மூன்றடுக்குக் கோபுரங்கள். மரச்சிற்பங்கள் நிழலுருக்களாகத் தெரிய விண்மீன்கள் நிறைந்த வானத்தின் பகைப்புலத்தில் எழுந்த கோபுரங்களில் அத்தனை நெய்விளக்குகளும் ஏற்றப்பட்டு மலைத்தீ எனத் தெரிந்தது.

ஆலயமுகப்பிலிருந்து மங்கலவாத்தியக்குழுக்களும் மலர்த்தாலமேந்திய அணிப்பரத்தையரும் நிறைகுடமேந்திய வைதிகரும் விருபாக்‌ஷரை எதிர்கொண்டு வரவேற்றனர். அவர்கள் நடுவே பட்டுமணிமுடி சூடி வைரக்குண்டலங்கள் பந்த ஒளியில் கனலாகச் சுடர்விட செம்பட்டு மேலாடை சுற்றிய சத்யஜித் உருவிய உடைவாள் ஏந்தி நடந்து வந்தார். விருபாக்‌ஷர் தன் கையிலிருந்த குருதிச்சோற்றுத் தாலத்துடன் அவர்களை அணுகியதும் சத்யஜித் அவர் முன் நின்று தன் வாளை பந்தச் செவ்வொளி மின்ன மும்முறை தாழ்த்தி தலை வணங்கினார். பின்னர் வாளுடன் தாலத்துக்குத் துணையாக நடந்தார்.

ஆலயத்தின் மேற்கு நோக்கிய பெருவாயில் வழியாக விருபாக்‌ஷர் உள்ளே நுழைந்தார். அங்கே நின்றிருந்த துணைப்பூசகர் எழுவர் அவரை வணங்கி சூழ்ந்து நடந்தனர். சத்யஜித் உருவிய வாளுடன் வந்து பலிமண்டபத்தின் அருகே இடப்பக்கம் நின்றுகொண்டார். விருபாக்‌ஷர் அந்த செம்பட்டுத் தாலத்தை பலிமேடைமேல் வைத்து முழுதுடல் நிலம்பட விழுந்து வணங்கிவிட்டு உள்ளே சென்றார்.

இரு துணைக் கருவறைகளில் வலப்பக்கத் துணைக் கருவறையில் சங்கு சக்கரமேந்திய மேல்கைகளும் கதையேந்திய கீழ் இடக்கரமும் அஞ்சல் காட்டிய கீழ் வலக்கரமும் கொண்டு மஞ்சள் பட்டு அணிந்து நாராயணி நின்றிருந்தாள். இடப்பக்கத் துணைக்கருவறையில் பிறைசூடிய மணிமுடியும் மான் மழுவேந்திய மேல்கைகளும் சூலமேந்திய இடக்கீழ்க்கரமும் அஞ்சல் காட்டிய கீழ்வலக்கரமுமாக நீலநிறப் பட்டணிந்து சிவை நின்றிருந்தாள். நடுவே எழுந்த பெரிய கருவறையில் மூன்று ஆள் உயரத்தில் சுதையாலான உக்ர துர்க்கையின் பெருஞ்சிலை கோயில் கொண்டிருந்தது.

தழலெனப்பறக்கும் பிடரிமயிர்கொண்ட சிம்மம் வால் சுழற்றி, உகிர் புடைத்த வலது முன்னங்கால் முன்னெடுத்து வைத்து, சற்றே தலைதாழ்த்தி, செங்குருதி சொட்டிய வாய் திறந்து உறுமிய கோலத்தில் நின்றிருக்க அதன் முதுகின் மேல் வலக்காலை தூக்கி வைத்து, இடக்கால் நிலத்தில் மலர்ந்த செந்தாமரை மேல் ஊன்றி, இடை சுழற்றித் திரும்பிய கோலத்தில் துர்க்கை நின்றிருந்தாள். வட்டமாக விரிந்த பத்து கரங்களில் வலது மேல் கை நான்கில் வில்லம்பும், கதையும், மின்னலும், பாதிமலர்ந்த தாமரையும் கொண்டிருந்தாள். இடது மேல்கை நான்கில் திரிசூலமும், பாசமும், மணியும், விழிமணிமாலையும் ஏந்தியிருந்தாள். இடது கீழ்க்கரம் அஞ்சல் காட்ட வலது கீழ்க்கரம் அருளல் காட்டியது.

அன்னையின் பாதம் அமைந்த தாமரையைச் சுற்றி மலர்முற்றம் அமைக்கப்பட்டு அதில் நூற்றெட்டு அகல்கள் நெய்ச்சுடர் கூப்பி மெல்ல அசைந்தன. இருபக்கமும் நூற்றெட்டுத் திரிகள் சுடர்ந்த அடுக்கு விளக்குகள் கொன்றைப்பூங்கொத்து கீழிருந்து மலர்ந்ததுபோல நின்றிருந்தன. அன்னையின் நேர்முன்னால் பலிமண்டபம் இருந்தது. அதில் தாலத்தில் வைக்கப்பட்ட குருதிச்சோற்றை செம்பட்டை விலக்கி மலரிட்டு வைத்தனர். பல்லியமும் முழவும் பறையும் கொம்புகளுமாக சூதர்கள் சூழ்ந்து நின்றனர். மங்கலப்பரத்தையர் இரு வரிசைகளாக நின்றனர்.

மடைப்பள்ளியில் இருந்து வெம்மை பறந்த சோற்றுருளைகளை பெரிய மரத்தாலங்களில் பூசகர்கள் கொண்டுவந்து பலிமண்டபத்தில் வைத்தனர். ஆயிரத்தெட்டு உருளைகளாக உருட்டப்பட்ட கோதுமை, அரிசி, வஜ்ரதானியம் ஆகியவற்றால் ஆன அன்னம் ஒன்பது குவைகளாக குவிக்கப்பட்டது. அவற்றின் மேல் செவ்வரளி, செந்தாமரை, செந்தெச்சி மலர்கள் வைக்கப்பட்டன. விருபாக்‌ஷர் உக்ர துர்க்கையின் ஆலயத்திற்குள் சென்று வலம்புரிச்சங்கை எடுத்து ஊதினார். உடனே நாராயணியின் ஆலயத்திலும் சிவையின் ஆலயத்திலும் பூசகர்கள் சங்குகளை ஊதினர்.

ஐந்து பூதங்களை, மலர்களை, விலங்குகளை, மனிதர்களை, அளித்தலை, போற்றலை சுட்டும் கைமுத்திரைகளுடன் விருபாக்‌ஷர் மந்திரங்களைச் சொல்லி மலர்செய்கையை தொடங்கினார். பிற இரு ஆலயங்களிலும் பூசகர்கள் மந்திரங்கள் உருவிட்டு மலரளித்தனர். கொடிகள் போல கைகள் சுழன்று தேவியின் முன் விரலிதழ்கள் விரிந்து மலராகி உதடுகளாகி ஒருசொல்லைச் சொல்லி மீண்டன.

ஆலயவாயிலில் ரதம் வந்து நிற்கும் ஒலிகேட்டு பரத்தையர் திரும்பி நோக்கினர். வாழ்த்தொலிகள் ஏதுமில்லாமல் மூவர் கைகூப்பியபடி உள்ளே வந்தனர். ஒரு பரத்தை பெரியவிழிகளைத் திருப்பி நோக்கி மெல்லிய குரலில் “அஸ்தினபுரியின் இளவரசர்கள்” என்றாள். மெல்லிய குரல் ஆனதனாலேயே அனைவரும் அதைக் கேட்டனர்.

குழல்சூடிய மலர்மாலைகள் அசைய அணிநகைகள் ஒசிய வளையல்கள் ஒலிக்க இடைகள் மெல்லத் துவள அத்தனைபேரும் மான்கூட்டம் போன்ற அசைவுகளுடன் திரும்பி நோக்கினர். அத்தனை விழிகளும் ஒருவனை மட்டுமே நோக்கின. அறியாது குழல் நீவி செவிக்குப்பின் சரிக்கவோ, மேலாடை நீக்கி அமைக்கவோ, கழுத்தைத் தொட்டு இறங்கி அணிதிருத்தவோ அசைந்த கரங்களுக்கிணங்க இளமுலைகள் விம்மி குழைந்தன. மென்கழுத்து சரிவுகளில் மூச்சு நின்று மெல்லத் துடித்தது. செவ்விதழ்கள் வெம்மை கொண்டு கனத்தன. விழிகளில் குருதிவரிகள் எழ இமைகள் படபடத்தன. ஓரிரு மூச்சொலிகள் எழுந்தன.

இளம்பரத்தை “உயரமானவரா துரியோதனர்?” என்றாள். இன்னொருத்தி விம்மிய மூச்சுடன் “இவரன்றி எவர் இளவரசியை கொள்ளமுடியும்? மணஏற்பு முடிந்துவிட்டதடி” என்றாள். உற்று நோக்கிய பேரிளம்பெண் “அஸ்தினபுரியின் முதல் கௌரவர் பேருடல் கொண்டவர் என்கிறார்கள். மணிக்குண்டலமிட்டவர் அவர்தான். அருகே வருபவர் அவரது இளையோன் துச்சாதனர். அவரும் பேருடல் கொண்டவரே. உயரமானவர் யாரென்று தெரியவில்லையடி” என்றாள். இன்னொருத்தி “தோழனா? தளகர்த்தனா?" என்றாள். ”வாயை மூடு மூடப்பெண்ணே. அவரல்லவா பாரதவர்ஷத்தின் பேரரசன் போலிருக்கிறார்?”

ஒருத்தி மெல்ல முன்னகர்ந்து அருகே நின்ற சூதரின் சால்வையைப்பிடித்து இழுத்து கடந்துசெல்பவர்களைக் காட்டி “அவர்கள் யார்?" என்றாள். அவர் “அஸ்தினபுரியின் இளவரசர்கள்” என்றார். "அது தெரியும்... உயரமானவர்?" என்றாள் அவள். “அதைத்தானே கேட்பீர்கள்? அவர் அங்கநாட்டரசர் கர்ணன்.” அவள் திகைத்து “அவரா?” என்றாள். “ஆம், பாரதவர்ஷத்திலேயே யாதவ கிருஷ்ணனை தவிர்த்தால் அவர்தான் பேரழகன் பெருவீரன் என்கிறார்கள்.” அவள் நோக்கி “இவரைவிடவா ஒருவன் அழகு?" என்றாள்.

பிறபெண்கள் அவள் மேலாடையை இழுத்து “சொல்லடி... யாரவர்?" என்றார்கள். அவள் திரும்பி “கர்ணன். அங்கநாட்டரசர்” என்றாள். அவன்மேலேயே விழிநாட்டியிருந்த பரத்தையரில் ஒருத்தி “ஆம், அவரைப்பற்றி சூதர்கள் பாடியதை கேட்டிருக்கிறேன். வெறும் சொற்களென்றல்லவா எண்ணினேன்?" என்றாள். "சூதர்கள் மூடர்கள். அவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? ஒரு ஆடல்பரத்தை நடித்துக்காட்டவேண்டும் அவனழகை” என்றாள் ஒருத்தி. “நடிக்கிறாயாடீ?" என ஒருத்தி கேட்க அவள் “மேடையிருந்தால் நடிப்பதற்கென்ன?" என்றாள். அவள் தோழிகள் சிரிக்க அப்பால் நின்றிருந்த ஆலய ஸ்தானிகர் திரும்பிப்பார்த்தார். அவர்கள் சிரிப்பை உறையச்செய்து மந்திரம் நிகழ்ந்துகொண்டிருந்த கருவறையை நோக்கினர்.

அவர்கள் மூவரும் அரசகுலத்தவருக்குரிய இடத்தில் சென்று நின்றுகொண்டனர். கர்ணன் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு தோளில் புரளும் குழலுடன் நிமிர்ந்து நின்றான். அவன் தோள் அளவே இருந்த துரியோதனன் தன் பெரிய கைகளை விரல்பின்னி இடைமுன் வைத்தபடி நிற்க பின்பக்கம் துச்சாதனன் நின்றான். பெண்கள் கூடிய அவையில் அவர்களின் கைகள் என்னசெய்வதென்றறியாமல் அலைக்கழிந்தன. அதை அவர்களின் உள்ளம் இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. ஆலயத்தின் ஸ்தானிகர்களில் ஒருவர் அருகே சென்று அவர்களிடம் ஏதோ சொல்ல துரியோதனன் கையசைத்து மறுத்து புன்னகைசெய்தான்.

வெளியே ரதச்சகடங்கள் ஒலித்தன. ஒருத்தி “யாரடி அது?" என்றாள். இன்னொருத்தி “யாராக இருந்தால் என்ன? இனி இந்த புவிக்கு இன்னொரு ஆண்மகன் தேவையில்லையடி” என்றாள். அவளை கிள்ளியபடி இருவர் சிரிக்க சற்று முதிய பரத்தை “அமைதி” என்று பல்லைக்கடித்தாள். அவர்கள் கேளாமலேயே சூதர் திரும்பி நோக்கி “அவர் காம்போஜ மன்னர் சுதட்சிணன்” என்றார். “நாங்கள் கேட்கவில்லையே” என்றாள் ஒருத்தி. சிரிப்பொலி எழ சூதர் பொருள் அறியாமல் தானும் சிரித்து “பின்னால் வருபவர் உசிநார இளவரசர் சிபி” என்றார். பரத்தையரில் ஒருத்தி “மண்ணும் மணியும் நிகரென நோக்கும் நுண்விழியோன்” என்றாள். அத்தனை பேரும் சிரித்து ஸ்தானிகரை நோக்கி வாய்பொத்தி அடக்கியபின் மீண்டும் பீறிட்டுச் சிரித்தனர்.

இளவரசர்கள் சென்று ஒருவரை ஒருவர் வாழ்த்துரைத்து வணங்கி தனித்தனியாக நின்றுகொண்டனர். அனைவரும் ஒருமுறை கர்ணனை நிமிர்ந்து நோக்கியபின் விழிகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உள்ளத்தால் அவனையன்றி பிறரை அறியவில்லை என்று தெரிந்தது. ரிஷபநாட்டு பிரத்யும்னனின் மைந்தனாகிய சாருசேனன் உயரமற்றவன். அவன் உள்ளே வந்ததுமே கர்ணனை நோக்கி திகைத்து ஒரு கணம் நின்றுவிட்டான். பின்னர் தன்னை உணர்ந்து ஓடிச்சென்று தனித்து நின்றான்.

ஆலயத்தின் பெருவாயிலுக்கு அப்பால் பெருமுரசு அதிர்ந்ததும் அனைவரும் திரும்பி நோக்கினர். ஸ்தானிகர் மூவர் வாயிலை நோக்கி ஓடினர். ஆலயத்தின் இருபக்கங்களில் இருந்தும் இரு வீரர்கள் ஐந்துமுக நெய்ப்பந்தங்களுடன் சென்று வாயிலின் இருமருங்கிலும் நின்றுகொண்டனர். கருவறைக்குள் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த பூசகர்களையும் வாளுடன் நின்றிருந்த சத்யஜித்தையும் தவிர அனைவருமே வாயிலில் விழிநாட்டினர்.

பெருவாயிலுக்கு அப்பால் இருந்து பட்டாடையும் ஒளிரும் நகைகளும் அணிந்த சேடிகள் ஐவர் கையில் பூசைத்தாலங்களுடன் மெல்ல நடந்துவந்தனர். அவர்களைத் தொடர்ந்து துருபதனின் இளைய அரசி பிருஷதி பூத்தாலமேந்தி வந்தாள். அவளுக்கு சற்றுப்பின்னால் மணித்தாலமேந்தி வந்த திரௌபதியின் தலையும் நெற்றியின் வைரச்சுட்டியும் மட்டும் தெரிந்தது. அவ்வளவே தெரிந்தும் அவள் பேரழகி என அறிந்துவிட்ட உள்ளத்தை எண்ணி வியந்தான் துரியோதனன்.

அன்னை சற்று விலகியதும் திரௌபதி பந்தங்களின் செவ்வொளியில் முழுமையாக வெளிப்பட்டாள். அவள் அணிந்திருந்த அரக்குநிறப் பட்டாடையின் மடிப்புகள் சற்றுமுன்னர் அணிந்ததுபோல குலையாமலிருந்தன. நடப்பதன் நெளிவுகளேதும் அவளுடலில் நிகழவில்லை. சீராக ஓடும் பேராற்றில் செல்லும் படகுபோல காற்றில் மிதந்து வந்தாள்.

கர்ணனின் கைகள் மார்பிலிருந்து தாழ்ந்த ஒலி கேட்டு துரியோதனன் திரும்பி நோக்கினான். நிமிர்ந்து அவன் விழிகளுக்குள் தெரிந்த செஞ்சுடர்ப்புள்ளிகளை பார்த்தான். கர்ணனின் இடக்கை அவனை அறியாமலேயே மேலெழுந்து மீசையை நீவிக்கொண்டது. துரியோதனன் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவள் இயல்பாக ஆடைநுனியை இடக்கையால் பற்றி வலக்கையில் தாலத்துடன் பெருவாயிலைக் கடந்து மண்டபத்தை அடைந்தபோது அச்சூழலை தொட்டுச் சுழன்ற விழிகள் கர்ணனை அடைந்து திகைத்து அசைவிழந்து உடன் தன்னை உணர்ந்து விலகிக்கொண்டன.

அவளுக்கு கர்ணனை முன்னரே தெரியும் என்ற உளப்பதிவுதான் துரியோதனனுக்கு முதலில் எழுந்தது. இவன் எங்கே இங்கு வந்தான் என்று, இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று, இவனா அவன் என்று, இவன் என்னை அறிவானா என்று அவை எண்ணியதென்ன என்று அவன் வியந்துகொண்டிருக்கையில் அவள் முகத்தைத் திருப்பி முகவாயை சற்று தூக்கி கர்ணனை நேருக்குநேர் நோக்கினாள். அவள் நோக்குவது அவன் மார்பை என்று அப்போது துரியோதனன் உணர்ந்தான். ஐயத்திற்குரிய ஏதோ ஒன்றை அவன் மார்பிலோ தோளிலோ கண்டாளா? அல்லது வியப்பிற்குரிய ஒன்றை?

துரியோதனன் திரும்பி கர்ணனின் மார்பை ஒருகணம் நோக்கினான். நீலப்பட்டு மேலாடையை தோளில் தழையவிட்டிருந்தான். மயிரற்ற விரிந்த கரிய மார்பின் தோளருகே இறுகிய தசைவளைவில் பந்தச்சுடர்கள் மறுஒளிர்வு கொண்டிருந்தன. அழகன் என்று துரியோதனன் எண்ணிக்கொண்டான். பாதாளக் கருநாகங்கள் போல தசை இறுகி உருண்டு நீண்ட கரங்கள். இறுகிய சிற்றிடை.

திரௌபதியின் விரிந்த விழிகள் வந்து துரியோதனனை பார்த்தபின் விலகிச்சென்றன. அவள் தன் குழலை காதருகே இருந்து மெல்ல விலக்கி பின்னோக்கி நீவி நிமிர்ந்து கருவறைக்குள் நோக்கினாள். துரியோதனன் அவளையே நோக்கிக்கொண்டு நின்றான். அவள் கன்னத்தை, கழுத்தின் பளபளக்கும் வளைவை, தோளின் கருந்தேன் குழைவை அவன் பார்வை ஊன்றி நோக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய நோக்கை எவர் உடலும் அறியாமலிருக்க முடியாது. ஆனால் அவள் ஒரு கணம் கூட திரும்பவில்லை. பெண்ணுடலைக் காக்கும் தேவதை அதை அறிந்ததாகவே தெரியவில்லை.

சால்வையைப் பற்றியிருந்த கைகள் தழைய துரியோதனனின் தோள்கள் தளர்ந்தன. அவ்வசைவில் கர்ணன் திரும்பிப்பார்த்துவிட்டு விழிவிலக்கிக் கொண்டான். அக்கணம் முரசுப்பரப்பில் கோல் விழுந்த அதிர்வுடன் துரியோதனன் உணர்ந்தான், அவ்விழிகளுக்கு அப்பாலிருந்த கர்ணனின் அகம் அவனை நோக்கவே இல்லை என. மறுகணமே திரௌபதியின் விழிகள் தன்மேல் பதிந்தபோது அவளும் தன்னை நோக்கவில்லை என்று தெரிந்தது. அவன் உடல் பதறத் தொடங்கியது. மீண்டும் சால்வையை இழுத்துப்பற்றிக்கொண்டு பற்களைக் கடித்தான். அவன் தாடை இறுகி மீள்வதைக் கண்டு துச்சாதனன் அவனை அறியாமலேயே மெல்ல அசைந்தான். அதை அவன் உணர்ந்து திரும்பி நோக்கி மீண்டான்.

மீண்டும் மீண்டும் அவளுடைய அந்த ஒருகணநோக்கு அவன் முன் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது. அது மின்னுவது தன் இமையசைவால்தான் என்றும் காற்றின் திரையில் அது ஓர் ஓவியமாக வரையப்பட்டிருப்பதாகவும் தோன்றியது. பெருமூச்சுடன் அவன் விழிகளை மூடி தலையை குனிந்து கொண்டான். இல்லை என ஒருமுறை அசைத்தபின் தலை தூக்கினான். அவளுடைய அந்த நோக்கை மிக அண்மையில் மிகநுணுக்கமாக பார்க்கமுடிந்தது. உள்ளே ஆளற்ற இல்லத்தின் சாளரங்கள் போன்ற வெற்று நோக்கு.

எடைமிக்க பாறைகளைத் தூக்குவதுபோல விழிகளைத் தூக்கி அவன் கர்ணனை நோக்கினான். அவன் விழிகள் அவளை நோக்கியே மலர்ந்திருப்பதைக் கண்ட கணமே தசைதெறிக்க பாறை கைநழுவுவதுபோல விழிகள் விலகிச் சரிந்தன. மீண்டும் அவளை நோக்கினான். அவள் நின்றிருந்த நிமிர்வை அறிந்ததும் அவளைக் கண்ட முதற்கணமே அகம் அறிந்தது அதைத்தான் என்று உணர்ந்தான். அவள் தலை எப்போதும் நிமிர்ந்துதான் இருந்தது. அதற்கேற்ப முகவாயை சற்று மேலே தூக்கி அனைத்தையும் நோக்கினாள். விழிகள் நேராக வந்து நோக்கிச் சென்றன. முகத்தை தூக்கியிருப்பதனால் இமைகள் சற்றுச் சரிந்து அவள் மெல்லிய மயக்கத்தில் இருப்பதுபோல தோன்றவைத்தது.

வியப்புடன் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டான் துரியோதனன். பெண்ணுடல்களில் நிகழும் நெளிவுகளும் குழைவுகளும் அவளில் முற்றிலும் இருக்கவில்லை. இரு தோள்களும் நிகராக இருபக்கமும் விரிந்திருந்தன. அந்த நிகர்நிலை உடலெங்கும் இருந்தது. சங்குசக்கரமேந்திய விஷ்ணுவின் சிலைகளிலும் மலர்சுடர் ஏந்திய சூரியனின் சிலைகளிலும் மட்டுமே தெரியும் நிகர்நிலை. அதை சிற்பிகள் ஏதோ சொல்லிட்டு அழைப்பதுண்டு. சமபங்கம். பெண் சிலைகளேதும் அவ்வகையில் பார்த்ததில்லை.

சிலைதான். திருவிடத்தில் இருந்து கொண்டுவந்த கடினமான கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலை. நெற்றி வளைவு மூக்கில் இறங்கி பெரிய இதழ்களை அடைந்த வளைவுகளில் இருந்தது பெருஞ்சிற்பியின் கைத்திறன். கோடானுகோடி சிற்பங்களைச் செய்து அவன் அடைந்த முழுமையின் கணம். வாள்வீச்சென தூரிகை விழுந்து உருவான சித்திரம். ஒருகணத்தில் பிரம்மனின் கனவு நிகழ்ந்திருந்தால் மட்டுமே அவ்வுருவை அவன் அடைந்திருப்பான்.

திரும்பி மீண்டும் கர்ணனை நோக்கினான். அவனிலும் முதல்பார்வையில் தன்னைக் கவர்ந்தது அந்த நிமிர்வுதான் என அப்போது உணர்ந்தான். நிகரற்றவன் என அவனே அறிந்திருப்பதுபோல. நிமிர்வும் உடலின் சமநிலையும் ஒன்றா என்ன? ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.

அவள் கூந்தலை அப்போதுதான் நோக்கினான். ஐந்து பிரிசடைகளாக அவற்றைப் பின்னி இறக்கி இடைக்குக் கீழே அவற்றை ஒன்றாக்கிக் கட்டியிருந்தாள். முழங்கால்வரை நீண்டுகிடந்த கூந்தல் கரிய பாறையில் இருளுக்குள் ஓசையின்றி வழிந்துகொண்டிருக்கும் மலையருவி போலிருந்தது. கூந்தலிழைகளின் பிசிறுகளில் பந்தங்களின் செவ்வொளி சுடர்விட்டது. அருகே நின்றிருந்த அவள் அன்னையின் நகைகளில் கால்பங்கைக்கூட அவள் அணிந்திருக்கவில்லை. அவள் மூக்கில் இருந்த வெண்வைரம் தனித்த விண்மீன் என அசைவற்று நின்றது.

அசையாத விண்மீன். அவள் கூந்தல் காற்றில் அலையிளகியது. ஆடை மெல்லப்பறந்து அமைந்தது. அசைவில்லாத விண்மீனுக்கு என்ன பெயர்? துரியோதனன் பெருமூச்சுடன் கைகளை மீண்டும் கட்டிக்கொண்டான். துருவன்! அச்சொல் உள்ளத்தில் எழுந்ததும் அவன் புன்னகை செய்தான். துருவ விண்மீனை எப்போது அவன் நோக்கினான் என்று எண்ணிக்கொண்டான். எப்போதுமே பார்த்ததில்லை என்று தோன்றியதுமே பார்த்ததில்லை என்றால் எப்படி நினைவிலெழுகிறது என்றும் எண்ணிக்கொண்டான்.

சிவையின் கருவறையில் இருந்து பூசகர் வெளியே வந்து கையில் இருந்த சுடரால் பலிமண்டபத்தில் இருந்த நெய்விளக்கொன்றை ஏற்றினார். நாராயணியின் கருவறையில் இருந்து வந்த பூசகர் மறுபக்கமிருந்த நெய்விளக்கை ஏற்றினார். ஆலயப் பாங்கர் சங்கொலி எழுப்பியதும் விருபாக்‌ஷர் உக்ர துர்க்கையின் மையக்கருவறைக்குள் இருந்து கையில் தழல்பறந்த பந்தத்துடன் வெளியே வந்தார். அனைத்து வாத்தியங்களும் இணைந்து பேரொலி எழுப்ப மங்கலப்பரத்தையரின் குரவை ஒலிகள் சூழ பலிமண்டபத்தருகே நின்று குவிக்கப்பட்டிருந்த உணவை பந்தத்தின் தீயால் ஏழுமுறை வருடிச் சுழற்றினார்.

ஊட்டுமந்திரத்தைக் கூவியபடி குருதிச்சோற்றை எடுத்து அங்கிருந்த பெருஞ்சோற்று உருளைகள் மேல் வீசினார். துதிகளுடன் மலர்களையும் வீசிவிட்டு. சைகையால் துர்க்கையிடம் பலி ஏற்கும்படி சொன்னார். பன்னிருமுறை அச்சைகையை செய்தபின் உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டார். அனைவரும் கருவறையை நோக்கி கைகுவித்து நின்றனர். முரசும் பறைகளும் முழவுகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இணைந்த பேரொலி போர்க்களத்தில் நின்றிருக்கும் உணர்வை அளித்தது. வெடித்துவெடித்துக் கிளம்பும் ஒலி ஆலயச்சுவர்களை துணித்திரைகளாக நெளியச்செய்தது.

கதவு மணியோசையுடன் திறக்க உள்ளே நூற்றெட்டு சுடர்களின் ஒளியில் துர்க்கை பெருந்தழல் வடிவம்போல தோன்றினாள். விருபாக்‌ஷர் நூற்றெட்டு நெய்ச்சுடர்கள் எரிந்த அகல்கொத்தைச் சுழற்றி அன்னைக்கு சுடராட்டு செய்தார். பின் ஐம்பத்தாறு சுடர்கள். பின் நாற்பத்தொரு சுடர்கள். பின் பதினெட்டு சுடர்கள். பின் ஒன்பது சுடர்கள். ஐந்து சுடர்கள் கொண்ட சிறிய விளக்கு ஒரு மலர்ச்செண்டு போலிருந்தது. மூன்று சுடர் கொண்ட சிறுவிளக்கால் சுடராட்டியபின் ஒற்றைத்திரி விளக்கை மும்முறை சுழற்றி அதை கையில் எடுத்து வெளியே வந்து அந்த உணவுக்குவைமேல் வைத்தார்.

அதன்பின் சிவைக்கும் நாராயணிக்கும் அதேபோன்று சுடராட்டு காட்டப்பட்டது. சிறு விளக்குகள் சோற்றுக்குவைகளின் மேலேயே வைக்கப்பட்டன. விருபாக்‌ஷர் வெண்கல வாளால் சோற்றை ஏழுமுறை வெட்டினார். பின் அதில் ஒரு சிறுபகுதியை அள்ளி வாளுடன் நின்ற சத்யஜித்துக்கு அளித்தார். அவர் அதை பெற்றுக்கொண்டு ஒருவாய் உண்டார். பின்னர் அரசிக்கும் திரௌபதிக்கும் அவ்வுணவை அளித்தார். அரசகுலத்தவர் அனைவருக்கும் அவ்வுணவு அளிக்கப்பட்டது.

மீண்டும் பெருமுரசு ஒலித்தபோது அரசியும் திரௌபதியும் மூன்று தேவியரையும் வணங்கிவிட்டு திரும்பினர். கரிய தழல் போல செந்நிற நகமுனைகளுடன் அவள் கைகள் குவிந்தன. பின் கருங்குருவியின் அலகு போல இரு நகவளைவுகள் மேலாடையை நுனியை மெல்லப்பற்றித் தூக்கி அமைத்தன. செந்நிற நகங்கள் மின்னும் பட்டுக்கால்கள் கல்தரையை ஒற்றி ஒற்றி முன் சென்றன.

தாலங்களுடன் சேடியர் முன்னால் செல்ல அவர்கள் பின்னால் சென்றனர். அவள் மீண்டும் ஒருமுறை பார்ப்பாள் என்று துரியோதனன் நோக்கிக்கொண்டு நின்றான். அவள் கனத்தகூந்தல் மெல்ல அசைந்தாடியது. காற்று அவளை கையிலேற்றிக் கொண்டு சென்றது. வெளியே அவர்களின் வருகையை அறிவிக்க சங்கொலி எழுந்தது.

பெருமூச்சுடன் கர்ணன் திரும்பி துரியோதனனிடம் "அவள் பாஞ்சாலனின் மகள். கிருஷ்ணை” என்றான். அந்தச் சொற்களின் பொருளின்மையை உணர்ந்து துரியோதனன் இதழ்கோட புன்னகைசெய்தான். கர்ணன் அதை உணராமல் “கிருஷ்ணை என அவளுக்கு பெயர் வைத்தவனை வணங்குகிறேன்” என்றான். அக்கணம் துரியோதனன் உள்ளத்தில் ஒரு கூரிய புன்னகை எழுந்தது. “இளைய யாதவன் பெயரும் கிருஷ்ணன்தான்...” என்றான். பாம்பு தீண்டியதுபோல கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனன் விழிகளை சந்தித்தபின் “ஆம்...” என்றான்.

”ஐந்து தேவியரின் ஆலயத்திற்கும் அவள் இன்றிரவு சென்று வழிபடுவாள் என நினைக்கிறேன்” என்றான் துரியோதனன். சற்று மிகையாக சென்றுவிட்டோமோ என்ற உணர்வில் ஓர் அடி பின்னகரும் பொருட்டு. கர்ணன் “இளைய யாதவன் வந்திருக்கிறானா?” என்றான். “ஆம், வந்துள்ளான் என்றார்கள். மாதுலரும் கணிகரும் நாளை வருகிறார்கள்..." யாதவன் பெயருடனேயே கணிகரும் சகுனியும் துரியோதனனுக்கு நினைவுக்கு வருவதை எண்ணி கர்ணன் அவனை அறியாமலேயே புன்னகை செய்தான். அப்புன்னகை துரியோதனனை குழப்பவே அவன் “பாண்டவர்களும் வந்திருக்கலாம். இந்நகரில் அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்” என்றான்.

“நம் ஒற்றர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்றான் கர்ணன். அவன் குரலில் இருந்த இயல்புத்தன்மை உருவாக்கப்பட்டது என உணர்ந்தவனாக “தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எளிதில் ஒளிய முடியாது” என்றான் துரியோதனன். அவனுக்கு கர்ணனின் அந்தப்புன்னகை அப்போதும் குழப்பத்தையே அளித்தது. அவர்கள் வெளியே வந்தபோது கர்ணன் யாதவனைப்பற்றி ஏதேனும் கேட்பான் என துரியோதனன் எதிர்பார்த்தான். அவன் ஒருசொல்லும் சொல்லவில்லை. விண்மீன்கள் விரிந்த வானை நோக்கி “நாளை பின்னிரவு வரை...” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று துரியோதனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் அதை கேட்கவில்லை.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 3

துரியோதனன் ரதத்தில் ஏறிக்கொண்டதும் பின்னால் வந்த கர்ணன் ரதத்தூணைப் பிடித்தபடி சிலகணங்கள் விழிசரித்து ஆலய வாயிலை நோக்கி நின்றான். பின்னர் வலக்காலை தேர்த்தட்டிலேயே தூக்கிவைத்து ஏறிக்கொண்டு அமராமல் நின்று கொண்டான். அவன் ரதத்தில் ஏறுவதும் இறங்குவதும் பீஷ்மரைப்போல் இருப்பதாக துரியோதனன் எப்போதும் எண்ணிக்கொள்வதுண்டு. குழப்பம் கொள்கையில் கைகளை மார்பில் கட்டி தலையை சற்றே சரித்து தொலைவில் விழிநாட்டி நிற்பதும் பீஷ்மரைப்போலவே. துரியோதனன் “மாளிகைக்கா?" என்று கேட்டதுமே அவன் அகத்தை தன் அகம் எத்தனை நுட்பமாக பின் தொடர்கிறது என உணர்ந்துகொண்டான்.

பெருமூச்சுடன் கலைந்த கர்ணன் “அவர்கள் அடுத்த ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்கள் அல்லவா?” என்றான். துரியோதனன் “ஆம், ஐந்து அன்னையரில் அடுத்தவள் லட்சுமி. மேற்குதிசையில் அவள் ஆலயம் இருக்கிறது” என்றபின் உதடுவளைந்த புன்னகையுடன் “வடக்கே சரஸ்வதி, கிழக்கே சாவித்ரி, தெற்கே ராதாதேவி...” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலையும் திருப்பாமல் நின்றான். துரியோதனன் சாரதியிடம் “லட்சுமி ஆலயம்” என்றான். ரதம் சகடம் அதிர கிளம்பி வளைந்து தெற்குரதவீதியில் நுழைந்து இருபக்கமும் நெரிசலிட்ட மக்கள் திரளைக் கடந்து சென்றது. அவர்களுக்குப் பின்னால் துச்சாதனன் தனி ரதத்தில் தொடர்ந்து வந்தான்.

ரதமுகடில் பறந்த அஸ்தினபுரியின் கொடியைக் கண்ட மக்கள் சுட்டிக்காட்டி பேசிக்கொள்வதை துரியோதனன் நோக்கினான். அனைவர் விழிகளும் கர்ணன் மீதுதான் என்று அறிந்ததும் அவன் தன் பெரிய இடக்கையால் தலையை வருடி குழலை கழுத்தில் சேர்த்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். பின்னர் கைகளைக் கட்டிக்கொண்டு காலை நீட்டி கண்மூடி அமர்ந்துகொண்டான். கண்களை மூடியபோது அக்காட்சி மேலும் துல்லியமாகத் தெரிந்தது. ரதத்தட்டில் கைகளை மார்பில் கட்டியபடி பறக்கும் குழலுடன் நிமிர்ந்து நின்றிருக்கும் கர்ணன் தெருவில் நெரிந்து நிறைந்த மக்கள்திரள் மேல் கந்தர்வனைப்போல பறந்து சென்றான்.

நூற்றுக்கணக்கான விழிகள். விரிந்து அசைவிழந்து மின்னுபவை. வியப்பும் மகிழ்வும் தெரிபவை. காமம் கொண்ட பெண்விழிகளை அவனால் அத்தனை அண்மையில் காணமுடிந்தது. அனலில் இட்டு பழுக்கச்செய்தவை போன்ற விழிகள். வெம்மையே நீர்மையாக ஆகி படர்ந்தவை. அவ்விழிகளை எங்கே கண்டான்? ஆம், துர்க்கையின் ஆலயத்தில் கூடி நின்ற பரத்தையரில். மழைகாத்துக் கிடக்கும் பாலைநிலம் போல உடல்களில் பரந்திருந்த வெம்மை. உடலசைவுகளில் வெளிப்பட்ட காமம்! அத்தனை அப்பட்டமாக காமம் வெளிப்பட்டு அவன் கண்டதே இல்லை.

முகம் சுளித்து அவன் விழிதிறந்தபோது முகங்கள் அருவி என அவன் மேல் பொழிந்துகொண்டிருந்தன. ஆனால், காமம் எப்போதுமே அப்படித்தானே வெளிப்பட்டிருக்கிறது? காமம் போல அத்தனை திட்டவட்டமாக வெளிப்படுத்தியாகவேண்டிய வேறு ஏது உண்டு இவ்வுலகில்? விழைவு போல ஐயமற்றதாக, திரிபோ மாற்றோ இல்லாததாக பிறிது ஏது உள்ளது? ஆம், அவன் அதுவரை கண்ட அத்தனை காம வெளிப்பாடுகளும் நேரடியானவை, மறைவற்றவைதான். காமம் கொண்டவர்கள் தெய்வங்களுக்கு முன் நின்றிருக்கிறார்கள். உடல்கள் ஆடை துறப்பதற்கு முன் உள்ளங்கள் துறந்துவிடுகின்றன.

பார்வைவெள்ளப் பெருக்கின் கீழ் நின்றிருந்த கர்ணனை நோக்கினான். அவன் எதையும் அறியவில்லை போல. அல்லது அவன் அகம் அறிகிறது. இப்பார்வைகளில் ஒன்று குறைந்தால், ஒன்று விலகினால் அவன் அகம் பற்றி எரியும். துரியோதனன் புன்னகை செய்துகொண்டான். தன் காமத்தை எவரேனும் இப்படி உணர முடியுமா? உணர்ந்தபின் காமத்தில் ஆடுதல் கூடுமா?

பொன்னிறமாக ஒளிவிட்ட வெண்கலத்தகடுகள் வேய்ந்த ஏழடுக்கு கோபுரம் மக்களின் தலைகளுக்கும் வணிகர்களின் தோலால் ஆன கூடார முகடுகளுக்கும் வேப்பமரங்களின் இலைச்செண்டுகளுக்கும் மேல் எழுந்து தெரிந்தது. அதன் மேலிருந்த மணி அதிர்ந்துகொண்டிருக்க பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. “இளவரசி முற்றத்தை அடைந்துவிட்டாள்” என்றான் துரியோதனன். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

அவர்களின் ரதம் எதிரே வந்த புரவிக்கூட்டத்தால் தடுக்கப்பட்டது. அப்பால் பெருமுற்றத்தில் பாஞ்சாலத்தின் பட்டத்து இளவரசன் சித்ரகேதுவின் தேர் நிற்பதை துரியோதனன் கண்டான். “இங்கே ஆலயக்காவலனாக பட்டத்து இளவரசனே வந்திருக்கிறான் போலும்” என்றான். அதை கர்ணன் கேட்டதாகத் தெரியவில்லை. முதலில் சேடியர் சென்ற ரதம் சென்று நின்றது. அவர்கள் இறங்கி ஆடை திருத்திக்கொண்டு தாலங்களை கையிலெடுத்துக்கொண்டனர். மலர்களையும் கனிகளையும் அவற்றில் சீர்ப்படுத்தி வைத்தனர்.

பிருஷதியும் திரௌபதியும் சென்ற மூடுரதம் முற்றத்தில் வளைந்து நின்றதும் வீரர்கள் வந்து குதிரைகளின் கடிவாளங்களை பிடித்துக்கொண்டனர். ரதத்தின் மறுபக்கத்து வாயில் திறந்து முதலில் பிருஷதி இறங்கினாள். அதன்பின் திரௌபதியின் வலக்கால் தெரிந்தது. பின்னர் இடக்கால். மெல்ல மண்ணை ஒற்றி நடந்து ரதத்தின் விளிம்பிலிருந்து அவள் வெளிவந்தாள். துரியோதனன் திரும்பி கர்ணனை நோக்கினான். கர்ணன் அங்கில்லை என்று தோன்றியது.

சேடியர் முன்னால் செல்ல முரசும் கொம்புகளும் சேர்ந்து உருவாக்கிய கார்வையின் ரீங்காரத்துடன் திரௌபதி பொன்வண்டு பறப்பது போல பெருவாயிலைக் கடந்து உள்ளே சென்றாள். வாயிலில் நின்ற வீரன் சங்கெடுத்து ஊதினான். உள்ளிருந்து இரு பந்தங்களுடன் இருவர் அவர்களை நோக்கி வந்தனர். அந்தச் செவ்வொளியில் அவள் நுழைந்து சுடர்ந்து உள்ளே சென்று மறைந்தாள். இடைதாழ்ந்து அலைபாய்ந்த நீள்கூந்தலின் காட்சி அப்போதும் விழிகளில் எஞ்சியிருந்தது. கண்களை மூடித்திறந்தபின்னரும் அதை காணமுடிந்தது.

எதிரே வந்த குதிரைகளில் பாஞ்சால வீரர்கள் இருந்தனர். வங்கநாட்டுக் கொடியுடன் ஒரு ரதம் சென்று லட்சுமியின் ஆலயமுகப்பில் நின்றது. அவர்களின் ரதம் வெவ்வேறு இடங்களில் தயங்கியும் தேங்கியும் ஆலயத்தின் பெருவாயிலை நோக்கிச் சென்று திரும்பியது. உள்ளே வரிசையாக அமைந்த எட்டு சிறிய கருவறைகளுக்கு மேலே எழுந்த பெரிய கருவறையில் இருமேல்கரங்களிலும் தாமரையும் இடக்கையில் அஞ்சல் முத்திரையும் வலக்கையில் அருளல் முத்திரையுமாக ஆளுயரமான சுதைச்சிலையாக லட்சுமிதேவி ஏழடுக்குத் தாமரை மேல் அமர்ந்திருந்தாள். அந்தக்கருவறையில் இருந்து இறங்கிவந்த பதினெட்டு படிகளும் பொன்பூசப்பட்டிருந்தன.

இருபக்கமும் நான்குநான்கு கருவறைகளில் எண்திருமகளிர் கோயில்கொண்டிருந்தனர். முகப்பில் இருந்த பலிமண்டபத்திற்கு வலப்பக்கம் பெண்கள் நின்றிருக்கும் வண்ணங்கள் தெரிந்தன. பந்த ஒளிகளில் பட்டாடைகள் மின்னி அசைந்தன. துரியோதனன் இறங்கப்போனபோது கர்ணன் கை நீட்டித் தடுத்து “வேண்டாம், செல்வோம்” என்றான். துரியோதனன் “ஏன்?" என்றான். “சென்றுவிடுவோம்” என்றான் கர்ணன். அவன் முகத்தில் எரியம்பு துளைத்தவனின் வலி தெரிவதைக் கண்டு வியப்புடன் திரும்பி ஆலயத்தை நோக்கியபின் துரியோதனன் “செல்க, அரண்மனைக்கு” என்று சாரதியிடம் சொன்னான்.

தேர் அசைந்ததும் கர்ணன் இருக்கையில் ஓசையுடன் அமர்ந்து தொடைகளில் கைவைத்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். துச்சாதனன் திகைப்புடன் ஆலயத்தின் உள்ளே இன்னொரு முறை நோக்கியபின் அவர்களை பின் தொடர்ந்தான். அவன் எண்ணுவதென்ன என்று கேட்கவேண்டுமென எழுந்த அகத்தை துரியோதனன் அடக்கிக் கொண்டான். ஆனால் தன் உடலெங்கும் ஏன் மெல்லிய உவகை பரந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டபோது அவ்வெண்ணத்தை அவனாலேயே சந்திக்கமுடியவில்லை. ஒரு கதாயுத்தத்தில் வென்றபின்பு வரும் தோள்மிதப்பு. அல்லது பெண்ணுறவுக்குப்பின் எழும் தனித்த உள்ளுவகை.

மீண்டும் அவன் கர்ணனை நோக்கினான். உள்ளூர ஒரு குறுநகை ஊறியது. ஏதேனும் சொல்லவேண்டும். என்ன சொல்வது என்று தேடினான். யாதவக்கண்ணனைப் பற்றி சொல்லலாம். அதுதான் இவனை நிறையழியச் செய்கிறது. ஆனால் அதையே மீண்டும் சொல்வது எப்படி? அவன் தலையை கையால் வருடிக்கொண்டான். மீசையை முறுக்கியபடி ஒதுங்கி வழிவிட்டவர்களின் முகங்களையே நோக்கினான். அவர்கள் பார்ப்பது ஒரு மானுடனை அல்ல. உடல்கொண்டு வந்த கந்தர்வனை. அவனையன்றி பிறிது எதையும் அவர்கள் பார்க்கவில்லை. அந்தத் தெருவில் அப்போது ஒருவனே இருந்தான். அவனைச்சூழ்ந்து மின்மினிக்கூட்டங்களாக பறந்த விழிகளும்.

காம்பில்யத்தில் கங்கைக்கரையோரமாக இருந்த சோலைகளில் அந்த மணஏற்பு நிகழ்வுக்காகவே கட்டப்பட்டிருந்த மரத்தாலான மாளிகைகளில் அரசர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாளிகைகளின் முகப்பில் இருந்த காவல்குடில்களில் அவர்களின் கொடிகள் பறந்தன. கங்கையை ஒட்டியபடி சென்ற மண்சாலையில் முதன்மையாக துதிக்கை தூக்கிய யானை பொறிக்கப்பட்ட மகதத்தின் பொன்னிறக்கொடி பறந்துகொண்டிருந்தது. ஜராசந்தன் முந்தையநாளே வந்துவிட்டான் என்று ஒற்றர்கள் சொல்லியிருந்தனர்.

அப்பால் அஸ்தினபுரியின் அமுதகலசம் பொறிக்கப்பட்ட செந்நிறக் கொடி நீர்க்காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. கர்ணன் துரியோதனனைத் தொட்டு “நாம் சற்றுநேரம் கங்கைக்கரையில் அமர்ந்திருக்கலாமே?” என்றான். துரியோதனன் “ஆம்...” என்றபின் தேரோட்டியிடம் திரும்பி கங்கை நோக்கிச் செல்லும்படி சொன்னான். மென்மணல்விளிம்பை அடைந்ததும் நிறுத்தச்சொல்லி இறங்கிக்கொண்டான். கர்ணன் இறங்கி கைகளை மெல்ல ஆட்டியபடி நீரை நோக்கிச் சென்றான். பின்னால் வந்த தேரில் இருந்த துச்சாதனனை ஒருமுறை நோக்கிவிட்டு துரியோதனன் பின்னால் நடந்தான். துச்சாதனன் இறங்கி அங்கே நின்ற பெரிய அத்திமரத்தடியை நோக்கி நடந்தான்.

துரியோதனன் கர்ணனின் பின்னால் சென்று நின்றான். அவனுக்கு அப்பால் கங்கையின் நீர்ப்பெருக்கின் மேல் ஒளிரும் விழிகளுடன் பெரும்படகுகள் சென்றுகொண்டிருந்தன. மிக அருகே சென்ற ஒரு படகில் கொடிகள் பறக்கும் சடசடப்பும் பாய்மரக்கயிறு இழுபட்டு முனகுவதும் கேட்டது. தூரத்தில் காம்பில்யத்தின் துறைமுகத்தில் நின்றிருந்த படகுகளில் இருந்து எழுந்த ஒளி வானில் செந்நிறப் பனிப்படலம்போல் தெரிந்தது. அதில் அப்படகுகளில் நடமாடுபவர்களின் நிழல்கள் பறக்கும் பூதங்கள் என அசைந்தன.

துரியோதனன் கர்ணனிடம் எதையாவது சொல்ல விழைந்தான். அப்போது சொல்லவேண்டியது என்ன என்று அவனால் தெரிவுசெய்ய முடியவில்லை. கர்ணனிடம் யாதவக் கண்ணனைப் பற்றி சொன்னதில் இருந்த சிறுமையை அப்போதுதான் அவன் முழுதுணர்ந்தான். உடனே அதைப்பற்றிய தன் வருத்தத்தைத் தெரிவிக்க கையைத் தூக்கி மறுகணமே தழைத்தான். அதைச் சொல்லத் தொடங்கவில்லை என்பதற்காக தன்னை பாராட்டிக்கொண்டான்.

கர்ணன் திரும்பாமலேயே “பதினைந்தாண்டுகாலம் நான் எங்கிருந்தேன் என்று அறிவீர்களா?” என்றான். முதலில் அவன் சொன்னதை துரியோதனன் விளங்கிக்கொள்ளவில்லை. அக்குரல் வேறு எங்கிருந்தோ ஒலித்தது போலிருந்தது. “என்ன?” என்று கேட்டான். கர்ணன் ”பதினைந்தாண்டுகாலம் நான் பரசுராமருடன் இருந்தேன்” என்றான். பெருமூச்சுடன் “தென்னகத்தில்...” என்று சொல்லி தலையசைத்தான்.

துரியோதனன் “ஆம், அறிவேன்” என்றான். கர்ணன் “அன்று படைக்கலப்பயிற்சியில் நீங்கள் என்னை அங்கநாட்டரசனாக முடிசூட்டியிருக்கவில்லை என்றால் சென்றிருக்க மாட்டேன்” என்றான் கர்ணன். “அது வரை நான் என்னை தனியனாக சூதனாக மட்டுமே எண்ணியிருந்தேன். நான் வில்திறன் கொண்டது என் இயல்பினாலும் என் தன்மதிப்பை எங்கும் இழந்துவிடக்கூடாதே என்பதனாலும் மட்டும்தான்.”

துரியோதனன் கர்ணனின் அருகே மேலும் ஒரு அடிவைத்துச் சென்று நின்றான். கர்ணன் “ஆனால் அன்று நீங்கள் என்னை மணிமுடி சூட்டி அரசனாக்கினீர்கள். அந்த அவைநடுவே நானடைந்த இழிவை எல்லாம் பெருமையாக்கினீர்கள். அன்று உங்கள் தோள்தழுவி களம் விட்டு விலகுகையில் நான் சொன்னேன், என் வாழ்வும் இறப்பும் உங்களுக்காகவே என” என்றான். துரியோதனன் “ஆம், அதை நான் ஏற்றுக்கொண்டது ஒரே அடிப்படையில்தான். என் வாழ்வும் இறப்பும் உனக்காகத்தான் என்பதனால்... நான் விழைவது அந்த நட்பை மட்டுமே” என்றான்.

“அந்த உளவிரிவை உங்கள் ஒவ்வொரு அசைவிலும் அறிகிறேன். இளவரசே, அஸ்தினபுரியின் மணிமுடியோ மண்ணோ அல்ல தங்கள் தந்தை தங்களுக்களித்திருக்கும் கொடை. மதவேழத்தின் மத்தக நிமிர்வும் முடிவில்லா பெருந்தன்மையும்தான்” என்றான் கர்ணன். “ஆம் கர்ணா, உண்மை” என்றபடி துரியோதனன் அவன் தோளைத் தொட்டான். “ உன்னிடமன்றி இதை நான் எவரிடமும் சொல்ல முடியாது. என்னைக் கடந்து என் அகம்புக எவரும் இல்லை” என்றான்.

சிலகணங்கள் தன் எண்ணங்களைத் தொகுத்து “அன்று அவையில் பீமன் உயிருடனிருப்பதை அறிந்து எந்தை மகிழ்ந்து நடமிட்டபோது நான் கண்ணீர் மல்கினேன். அவர் செய்யக்கூடுவது அதுவே என்று நான் அறிவேன். அதையன்றி வேறெதை அவர் அங்கே செய்திருந்தாலும் அகம் உடைந்திருப்பேன். மலைமேல் ஏறி அமர்ந்து அசையாமல் காலப்பெருக்கைக் கடந்துசெல்லும் பெரும்பாறையாக மட்டுமே அவரை என்னால் எண்ணமுடியும்...” என்றான்.

“அன்றிரவு என் இளையோர் என்னைச்சூழ்ந்து அமர்ந்து துயருற்றனர். ஒரு சொல் என்னிடம் சொல்ல எவரும் துணியவில்லை. ஆனால் நான் இயல்பாக இருந்தேன். என் துணிவுக்குச் சான்றாக அவர்கள் அதைக் கொண்டனர். அவர்கள் துயின்ற பின் என் மஞ்சத்தில் படுத்தபடி புன்னகை செய்தேன். நாளை அவர்கள் மீண்டு வந்து நான் செய்ததை எந்தையிடம் சொல்லி அவர் தன் கதாயுதத்தால் என் தலையை பிளப்பாரென்றாலும் அதை உவகையுடன் ஏற்பேன். அவர் செய்யக்கூடுவது அதுவே.”

“ஆம், அதை பிறரைவிட அறிந்தவன் தருமன். ஆகவே ஒருபோதும் அதை அரசரிடம் அவன் சொல்ல மாட்டான்” என்றான் கர்ணன். துரியோதனன் தலைகுனிந்து “ஆம், அதை நானும் அறிவேன்” என்றபின் முகத்தை கைகளால் வருடிக்கொண்டு “கர்ணா, மலைச்சிகரங்கள் சூழ்ந்த வெளியில் கூழாங்கல் என சிறுத்து நின்றிருக்கிறேனா?" என்றான். “திருதராஷ்டிரரின் மைந்தனிடம் சிறுமை கூடாது. இச்சொற்களன்றி வேறு சான்றே அதற்குத் தேவையில்லை” என்றான் கர்ணன்.

துரியோதனன் பெருமூச்சு விட்டான். "சொல்... நீ பரசுராமரிடம் எதற்காகச் சென்றாய்?" என்றான். கர்ணன் ”இளவரசே, அன்று அக்களத்தில் அறிந்தேன். என்றோ ஒருநாள் பெரும்போர் ஒன்றில் நான் பாண்டவர்களுக்கு எதிராக படைநிற்கப் போகிறேன். உங்களுக்காக, உங்கள் தம்பியருக்காக அதில் நான் வென்றாகவேண்டும். ஆனால் நான் களப்போர் கற்கவில்லை. தனிப்போரில் என் திறம் பார்த்தனுக்கு நிகரானதல்ல என்று துருபதனுடனான போரில் அறிந்து கொண்டேன்” என்றான்.

“ஆகவே அதை எனக்குக் கற்பிக்கும் திறனுடையவரை தேடிச்சென்றேன். சூதர்களிடம் கேட்டேன். குருகுலங்களில் விசாரித்தேன். பரசுராமரன்றி பிறர் அதற்கு உதவமாட்டார்கள் என்று உணர்ந்து அவரைத் தேடிச்சென்றேன்” என்றான் கர்ணன். “விந்தியனைக் கடந்து தெற்கே தண்டகாரண்யத்தையும் வேசரத்தையும் கடந்து திருவிடத்தின் முனையில் அவரை கண்டுகொண்டேன். முதல் பார்க்கவராமரின் அன்னையின் நாடாகிய ரேணுபுரியின் அருகே அடர்காட்டுக்குள் பரசுராமரின் குருகுலம் இருந்தது.”

கர்ணன் “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். பதின்மூன்றாவது பரசுராமர் தண்டகாரண்யத்தில் பஞ்சாப்ஸரஸ் என்ற இடத்தில் தவம் செய்தார். முதல்பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப்பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார் என அறிந்திருப்பீர்கள். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள்” கர்ணன் சொன்னான்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார். கிழக்குதிசையை அத்துவரிய ராமனும் வடக்கை உதகாத ராமனும் மத்திய தேசத்தை ஆசியப ராமனும் ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்ட ராமனும் அதற்கு அப்பால் உள்ள திருவிடத்தை சதசிய ராமனும் வழிநடத்தினர். பரசுராமரின் கதையைச் சொல்லும் சூர்ப்பவிஜயம் என்னும் புராணம் இதைச் சொல்கிறது.

சதசியகுலத்தைச் சேர்ந்தவர் இன்றிருக்கும் பரசுராமர். படைக்கலத்திறனும் படைத்திறனும் நூல்திறனும் அரசுசூழ்திறனும் அமைந்தவர். அவரைநாடியே நான் சென்றேன். காடுகள் எழுந்த மலைகளையும் நீர் பெருகிய பேராறுகளையும் வெயிலில் வெந்துகிடந்த பாழ்நிலங்களையும் கடந்து சூதர்களின் சொற்களையே வழிகாட்டியாகக் கொண்டு அவரை சென்று அடைந்தேன். ரேணுநாட்டின் பிரதீபம் என்னும் காட்டுக்குள் அவரது குருகுலம் இருந்தது. அவரை நான் சென்றடைந்தபோது என் தாடி மார்பை எட்டியிருந்தது. என் குழல் சடைபிடித்து தோளில் விரிந்திருந்தது.

அடர்காட்டின் நடுவே கோதாவரி நதிக்கரை ஓரத்தில் அமைந்த அவரது யானைத்தோல் கூடாரத்தின் முன் மாணவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டேன். அதிகாலையில் அவர் செய்து முடித்திருந்த வேள்வியின் நெய்ப்புகை மரக்கிளைகளின் இலையடர்வுகளில் தங்கி மெல்ல பிரிந்துகொண்டிருந்தது. நான் உள்ளே அழைக்கப்பட்டேன். அங்கே புலித்தோல் விரிக்கப்பட்ட யோகசிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பரசுராமர். நீண்ட வெண்ணிறமான தாடி விரிந்த கரியமார்பில் பரவிக்கிடந்தது. தோளிலும் முதுகிலுமாக வெண்குழல் கற்றைகள் கிடந்தன. வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியுமாக என்னை ஏறிட்டு நோக்கியதுமே “நீ ஷத்ரியனா?" என்றார்.

“இல்லை ஆசிரியரே, நான் சூதன்” என்றேன். என்னை கூரிய விழிகளால் நோக்கி “ஷத்ரியனுக்குரிய தோற்றத்துடன் இருக்கிறாய்” என்றார். “அங்கநாட்டுச் சூதனாகிய அதிரதனுக்கும் ராதைக்கும் மைந்தன் நான். அஸ்தினபுரியின் இளவரசராகிய துரியோதனரின் அணுக்கத்தவன்” என்றேன். “அந்த அனலைத் தொட்டு ஆணையிடு. நீ ஷத்ரியன் அல்ல என்று” என்றார். நான் அந்த அனல்மேல் கையை வைத்து “நான் சூதன். அறிக அனல்” என்றேன். அவர் தாடியை நீவியபடி மெல்ல சரிந்தமர்ந்து “நீ கோருவதென்ன?” என்றார்.

“நான் இயல்பிலேயே ஷாத்ரகுணம் கொண்டிருக்கிறேன். ஆகவே என்னால் சவுக்கேந்தி குதிரைக்காரனாக வாழ முடியவில்லை. துரோணரிடம் விற்கலை கற்றேன். குலத்தின் பொருட்டு அவரால் அவமதிக்கப்பட்டேன். என் தன் மதிப்பைக் காக்கும் விற்கலை எனக்குத்தேவை” என்று அவரிடம் சொன்னேன். அவர் என் விழிகளை நோக்கி “மண்ணாள விழைகிறாயா?” என்றார். “விற்கலையில் இனி நீ அறிய ஏதுமில்லை என உன் விழிகளும் விரல்களும் சொல்கின்றன” என்றார்.

நான் “ஆம், ஆசிரியரே. என் ஆணவம் அரியணையின்றி அமையாது” என்றேன். புன்னகையுடன் “பாரதவர்ஷம் முழுக்க புதிய ஷத்ரியர்களை உருவாக்குவதே என் முதலாசியரின் ஆணை. நீ இங்கிருக்கலாம். போர்க்கலை பயிலலாம். என்னிடமே அனல்சான்று பெற்று ஷத்ரியனாகு. மண்ணை வென்று புனல்சான்று பெற்று முடிசூடு. உனக்கு பார்க்கவர்களின் வாழ்த்துரை துணையிருக்கும்” என்றார். அவர் பாதங்களை வணங்கி அருகமர்ந்தேன்.

அவர் கையில் இருந்த நூலை விரித்து ஏழு சுவடிகளைத் தள்ளி ஏழுவரிகளைக் கடந்து ஏழு சொற்களை எண்ணி “அஹம்” என்று வாசித்தபின் நிமிர்ந்து “ஷத்ரியனின் முதல் சொல் நான் என்பதே. எனக்கு, என்னுடையது என்பதிலிருந்துதான் அவனுடைய அனைத்துச் சொற்களும் தொடங்கவேண்டும். ஷத்ரியன் என்பவன் அடங்கா விழைவினால் ஆனவன். அவன் வெல்வதெல்லாம் அவ்விழைவுக்கு அவியாகவேண்டும். அவி என்பது அனலை வளர்ப்பதே என்று அறிக” என்று முதல் அறவுரையைச் சொல்லி என்னை அவரிடம் சேர்த்துக்கொண்டார்.

பன்னிரு ஆண்டுகாலம் நான் அவருடன் இருந்தேன். முதலில் அவரது சொற்களைக் கற்றேன். பின்னர் சொற்குறிப்புகளை உணர்ந்தேன். அதன்பின் அவரது எண்ணங்களை அறியலானேன். இறுதியில் அவருடன் இணைந்து என் அகம் சிந்திக்கத் தொடங்கியபோது அவரது மாணவனாக ஆனேன். இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். நான் கற்றது எதை என இன்று என்னால் சொல்லிவிடமுடியாது. நான் மெல்லமெல்லக் கரைந்து அவராக ஆனேன். முதல்பரசுராமருக்கும் எனக்குமான தொலைவென்பது இருபெயர்களின் ஒலிமாறுபாடு மட்டுமே என அறிந்தேன்.

என்னை திருவிடத்துக்கும் அப்பால் தமிழ்நிலத்திற்கு அனுப்ப அவர் எண்ணியிருந்தார் என்றறிந்தேன். பதினைந்தாண்டுகள் அவருடைய அறிவின் பொழிகலமாக அமைந்தபின் நான் அமைக்கவேண்டிய பேரரசின் நெறிகளைத்தான் அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பிறரிடம் தன் கனவுகளை ஏற்றிவிடவே மானுடர் எப்போதும் முயல்கிறார்கள். ஆனால் ஆசிரியர் போல தன்னை முழுமையாக இன்னொருவரிடம் பெய்து நிறைக்கும் மானுட உறவென மண்ணில் பிறிது ஏதுமில்லை.

ஆசிரியருடன் மாணவன் கொள்ளும் உறவென்பது ஆடிப்பாவையை நோக்கி விடப்பட்ட அம்பு போன்றது. நெருங்கிநெருங்கிச் செல்லும் முதற் காலகட்டம். அவரைத் தொடும் கணம் நிகழ்ந்ததுமே அவன் விலகிவிலகிச் செல்லத் தொடங்குகிறான். மேலும் மேலுமென அவரில் தன்னைக் காண்கிறான். பின் தன்னை விலக்கி விலக்கி அவரைக் காண்கிறான். விதைமுதிரும்போது கனியின் காம்பு நொய்கிறது. விதைக்குள் இருக்கும் முளை மண்ணுக்காக ஏங்குகிறது. அந்தத் தருணத்தை நான் அறிந்தேன். அவரது சொல்லுக்காகக் காத்திருந்தேன்.

கல்விமுடிந்தது என்பதை முடிவுசெய்பவர் ஆசிரியர். அதன்பின் அவன் அவருக்கு அயலவன். மாணவனிடம் அவர் காணிக்கை கேட்பதே அவன் அயலவனாகிவிட்டான் என்பதனால்தான். அம்முடிவை நோக்கிச் செல்வதென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே நிகழும் நுண்மையான சமர். தான் கற்றதென்ன என்பதை மாணவன் அறிவான். ஆகவே அவன் விடுபட விழைகிறான். அவன் மேலும் கற்கவேண்டியதென்ன என்று ஆசிரியரே அறிவார். அவர் அதை அவனுக்கு உணர்த்த விழைகிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறார்கள்.

இளவரசே, ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம் தோறும் வளர்வது. பிரிவதென்பது வளரும் பெருவலியுடன் ஒவ்வொரு சரடாக வெட்டிக்கொள்வது. எத்தனை எழுச்சியுடன் அணுகினார்களோ அத்தனை துயர் மிக்கது அகல்வது. நான் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் என் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் சொற்களில் அவர் தன்னை கண்டெடுத்துக்கொண்டிருந்தார். துலாமுள் நிலையழிந்தாடிக்கொண்டிருந்த நாட்கள்.

கோதையின் கரையில் நின்றிருந்தோம். மீன்கள் துள்ளித்துள்ளி அமிழ்வதை நோக்கி நீரலைகளின் ஒளி அலையடித்த வெண்தாடியுடன் நின்றிருந்த ஆசிரியர் திரும்பி என்னிடம் “இதில் ஒரு மீனை வெல்ல உனக்கு எத்தனை கணம் பிடிக்கும்?” என்றார். நான் “அதை நான் என் அம்பில் கோர்க்க முடியும். வெல்வேனா என்று அறியேன்” என்றேன். “ஏன்?” என்றார். “ஆசிரியரே, வெற்றியும் தோல்வியும் இருசாராராலும் மாற்றுப்புரிதல் வழியாக ஏற்கப்படுவதே. தோல்வியை ஏற்காதவனை எவரும் வெல்ல முடியாது” என்றேன்.

புன்னகையுடன் என் தோளில் கையை வைத்து “வில்லென்பது என்ன என்று அறிந்தவனின் சொல் இது” என்றார். பின்னர் திரும்பிச்சென்று அரசமரத்தடியில் அமர்ந்துகொண்டார். தாடியை அவரது கைகள் நீவியபடியே இருப்பதைக் கண்டேன். நீர்வெளி நோக்கி சுருங்கிய கண்களில் இருந்த ஒளியை இதழ்களின் புன்னகையைக் கண்டு அருகே நின்றேன். “அமர்ந்துகொள்” என்றார். நான் அமர்ந்ததும் “மீண்டும் அஸ்தினபுரிக்கே செல்கிறாயா?” என்றார்.

பதினைந்தாண்டுகளில் அவர் நான் திரும்பிச்செல்வதைப்பற்றி முதன்முறையாகப் பேசுகிறார் என்று உணர்ந்ததும் என் உள்ளம் கொப்பளித்தெழுந்தது. உடலெங்கும் ஓடும் குருதியின் விரைவை உணர முடிந்தது. “ஆம், நான் கடன்பட்டவன்” என்றேன். அவர் ஏதோ சொல்லவந்தபின் கையை ஊன்றிச் சரிந்து என் மடியில் தலைவைத்து கண்மூடிக்கொண்டார். “தவிர்க்கமுடியாதது ஆசிரியனின் வெறுமை” என்றார். அச்சொற்கள் வழியாக அவரது அகத்தை அறிந்தேன். அவர் என்னை விடமறுப்பது ஏன் என்று. புன்னகையுடன் அவரது தலையை என் தொடையில் ஏந்திக்கொண்டேன்.

அவர் இருமுறை பெருமூச்சுவிட்டார். பின்பு துயிலத் தொடங்கினார். காற்று அவரது மெல்லிய பனித்தாடியை அசைப்பதை மூச்சில் அவரது மூக்குத்துளைகள் விரிவதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் எழுந்ததும் "நான் எங்கும் செல்லவில்லை ஆசிரியரே” என்று சொல்லிவிடலாமா என எண்ணினேன். அவர் விழித்திருந்தால் அப்போதே அதை சொல்லியிருப்பேன். மெல்ல அந்த அகநெகிழ்விலிருந்து விலகினேன். இலக்கே கல்வியை பொருளுள்ளதாக்குகிறது. கடமைகளே வீரனை வாழ்க்கையுடன் பிணைப்பவை. ஆம், எல்லாவற்றையும் சொற்களால் முறையான தர்க்கங்களாக ஆக்கிக்கொள்ள முடியும்.

என் தொடையின் அடியில் ஏதோ கடிப்பதை உணர்ந்தேன். அனிச்சையாக தொடை துடித்து விலக ஆசிரியர் “ம்ம்” என்றார். ஒருவேளை அதுவே இறுதித் தேர்வாக இருக்கமுடியும் என்று உணர்ந்தேன். அரசமரத்தின் வேருக்குள் ஒரு துளையில் இருந்த வண்டு என் தசையை கொட்டித் துளைக்கத் தொடங்கியது. அதன் இல்லத்தின் வாயிலை என் தசை முழுமையாகவே மூடியிருந்தது போலும்.

வலி தசைகளில் இருந்து நரம்புகள் வழியாக உடலெங்கும் பரவுவதை உற்று நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலி அலையலையாகப் பரவுகிறது. ஓர் அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையேயான இடைவெளியில் நிறையும் அமைதியை, அப்போது நரம்புகள் தளர்ந்து அடுத்த அலைக்காக காத்திருப்பதைக் கண்டேன்.

வலியால் ஆன காலம். வலியால் ஆன தாளம். கேட்கும் ஒலிகளெல்லாம் வலியால் ஆனவையாக இருந்தன. விழிதூக்கி நோக்கியபோது அத்தனை காட்சிகளும் வலியால் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு எண்ணத்துடனும் வலி இருந்தது. ஏதோ ஓர் இடத்தில் வண்டு நின்றுவிட்டது. அக்கணம் வரை அதற்கு எதிர்வினையாற்றிய தசை அதை எதிர்பார்த்து துடித்தது. இன்னும் இன்னும் என்றது. பின்னர் அடங்கி காத்திருந்தது. வண்டு மீண்டும் கடித்தபோது விரைந்தெழுந்து அதை எதிர்கொண்டது.

நான் கற்ற சொல் அனைத்திலும் அந்த வலி பரவுவதை உணர்ந்தேன். பதினைந்தாண்டுகாலத்தின் ஒவ்வொரு கணமும் வலியாக மாறி விரிந்து கிடந்தது. வலியில் திளைத்த அந்த அரைநாழிகை நேரம் அப்பதினைந்தாண்டுகளுக்கு நிகராக நீண்டிருப்பதை அறிந்தேன். உள்ளே ஏதோ நரம்பில் அந்த வண்டின் கொடுக்கு மெல்லத் தொட்டது. உடலெங்கும் மின்னலடித்தது போல ஓடிய வலியில் தொடை அதிர கையால் அழுத்தி அதை வென்றேன். அதற்கு மிக அருகே இன்னொரு நரம்பு கூசி மிகக்கூசி மேலும் கூசி காத்திருந்தது. அந்தக் கூச்சமே என் விழியிலிருந்து நீராக வழிந்தது.

நெடுங்காலத்திற்குப் பின், விதைகள் ஆலமரமாகி, பாறைகள் மணல்களாகி, கோதை வறண்டு மறைந்து மீண்டபின், வண்டு அசைந்து சென்று அந்நரம்பை மெல்லத் தீண்டியது. என் பற்களெல்லாம் கூசின. செவிக்குள் கண்களுக்குள் தலையின் இருபக்கமும் புழுக்களென நரம்புகள் சுண்டி நெளிந்தன. மிக அப்பால் பனிக்குடம் உடைந்து சிதறியதுபோல ஏதோ சொல் உடைந்தது. ஒன்றோடொன்று முட்டி உடைந்த பளிங்குக் குரல்கள். கண்களுக்குள் ஓர் ஒளித்துளி உடைந்து தெறித்தது.

வண்டு தன் சிறகுகளால் குடைந்துகொண்டு தசைக்கதுப்புக்குள் மெல்லப்புரண்டபோது என் வாழ்நாளில் அதுவரை அறியாத உடலின்பம் ஒன்றை அடைந்தேன். காமத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. இறப்புக்கு நிகரானது. என் முதுகெலும்பு குளிர்ந்து சொடுக்கிக்கொண்டது. விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள தொண்டைக்குள் நாக்கு இறங்கி நிற்க காலம் முழுதாக அழிந்து எங்கோ மறைய மீண்டு வந்தபோது மலைப்பாறைக்கூட்டம் வந்து உடல்மேல் பொழிந்ததுபோல் வலியின் அலைகள். அடியில் குருதிக்குழம்பாகக் கிடந்த என் சித்தம் கோரியது. அந்த உடலின்பத்தை மேலும் மேலும் என கெஞ்சியது.

மெல்லிய இன்னொரு சிறகுத்துடிப்பு. தசைகள் குழைந்து உருகின. குருதி இன்பக்கொப்பளிப்பாக பல்லாயிரம் ஓடைகளில் நுரைத்து வழிந்தது. தசை என்னும் இன்பக்கதுப்பு. அதில் ஒரு கருவண்டு. அது என்றும் அங்கிருக்கவேண்டும். ஒருபோதும் விலகலாகாது. அதுவே என் வாழ்வின் பேரின்பம். என் இருப்பின் சாரம். மாயமா? பெருவலி எப்போது பேரின்பமாகியது. வலியும் இன்பமும் ஒன்றன் இரு முகங்களா? கண்ணீர் வழிய அங்கே அமர்ந்திருந்தேன்.

கர்ணன் பெருமூச்சுடன் பேசுவதை நிறுத்திவிட்டு நீர் வெளியை நோக்கி நின்றிருந்தான். துரியோதனன் அவன் பேசுவது புரியாதவனாக திரும்பி அப்பால் நின்ற துச்சாதனனை நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 4

கர்ணன் திரும்பி தன் ஆடையை விலக்கி தொடையில் இருந்த வடுவை காட்டினான். உலோகநாணயம் ஒன்றை ஒட்டிவைத்தது போல கருமையாக பளபளத்தது. “இன்றும் இந்த வடுவை நான் கையால் தொட்டு அவ்வலியின் பேரின்பத்தை அறிவதுண்டு. ஓர் அழகிய நகை போல இதை அணிந்திருக்கிறேன்.”

“தனித்த இரவுகளில் எண்ணங்களால் துயில்மறந்து போகும்போது இது மெல்ல உயிர்கொள்வதை அறிந்திருக்கிறேன். இதன் மீது கையால் தொட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால் கோதையின் ஒளிமிக்க கரையை, அன்று வீசிய காற்றை, நீர்ப்பாசி வாசனையை அறியமுடியும். மிகத்தொலைவில் கேட்கும் முணுமுணுப்பு போல வலி எழத்தொடங்கும். பின் மூண்டு எழுந்து துடித்து பற்றி எரிந்து என் தசைகளில் படர்ந்து ஏறும்.”

பின்பு புன்னகையுடன் “எத்தனை பெரிய வரம். ஒருபோதும் சொல்லாக மாற்றி அணைத்துவிடமுடியாத இன்பம் ஒன்றை அடைவது. ஒவ்வொரு கணமும் அதனுடன் வாழ்வது” என்றான். துரியோதனன் “நீ சொல்வதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வடு நன்கு ஆறியதுபோலத்தான் தெரிகிறது. மருத்துவரிடம் வேண்டுமென்றால் காட்டலாம்” என்றான்.

கர்ணன் புன்னகையுடன் கையை வீசி மறுத்துவிட்டு மீண்டும் கங்கையை நோக்கி திரும்பினான். துரியோதனன் “பின் என்ன நிகழ்ந்தது?" என்றான். கர்ணன் புன்னகையுடன் திரும்பி நோக்கிவிட்டு ”ஒரு நல்ல கதை” என்றான். “சூதர்கள் பாட விரும்புவார்கள்.”

தொடையில் எழுந்த வலியுடன் பரசுராமர் விழித்தெழும்வரை நான் அசையாமல் அமர்ந்திருந்தேன். திடுக்கிட்டு இமைகள் சுருங்கி அசைய அவர் முனகினார். குனிந்து நோக்கியபோது விழித்து என் விழிகளை நோக்கி திகைத்தார். எழுந்து அமர்ந்து தாடியை நீவியபடி விழி சுருக்கி என்னை நோக்கினார். பின் தன் கை விரல்களை நோக்கினார். நான் “ஆசிரியரே, என்ன பார்க்கிறீர்கள்?” என்றேன். “ஒருகனவு” என மெல்ல முணுமுணுத்தார். “குரூரமான கனவு” என்று மேலும் மெல்ல சொல்லிக்கொண்டார்.

நான் அவர் சொல்வதைக் கேட்க காத்திருந்தேன். அவர் அனிச்சையாகத் திரும்பி தன் தோளில் கையால் தொட்டு முன்னால்கொண்டுவந்து நோக்கினார். சூடான கொழுங்குருதியை பார்த்தபின் திகைத்து என் தொடையைப்பார்த்தார். திடுக்கிட்டு எழுந்துவிட்டார்.

தசைக்குள் இருந்து கருக்குழந்தை வெளிவருவதுபோல குருதியைத்துழாவியபடி வண்டு வெளியே வந்தது. பொன்னிறச்சிறகுகள் கொண்ட கருவண்டு. வழியும் குருதியில் வழுக்கி வந்து நின்று சிறகுகளை உதறி சிலிர்த்துக்கொண்டபின் எழுந்து மெல்லிய ரீங்காரத்துடன் பறந்து சென்று சிறகுகள் கனத்து சரிந்து வேரில் விழுந்தது. புரண்டு எழுந்து வேர்முனையில் நின்று சிறகுகளை அதிரச்செய்தபின் மீண்டும் எழுந்து பறந்தது.

“வண்டு!" என்றபின் “அது உன் தொடையை துளைத்திருக்கிறது” என்றார். “ஆம்” என்றேன். “நான் கனவில் கண்டது அதைத்தான்... நீ ஒரு வண்டாக என் விலாவைத் துளைத்து நுழைந்தாய். என் இதயத்தை குத்திக்குடைந்தாய். நான் அந்தப்புண்ணைத் தொட்டு பசுங்குருதியை முகர்ந்தேன்.”

அவர் என் விழிகளை உற்று நோக்கினார். “வலியில் மகிழாமல் எவராலும் இத்தனை நேரம் அதில் ஈடுபட்டிருக்க முடியாது” என்றார். நான் விழிதாழ்த்தினேன். சிலகணங்கள் கழித்து தலைதூக்கியபோதும் அவர் என்னை நோக்கி தாடியை நீவியபடி இருப்பதைக் கண்டேன். “சொல்!” என்றார். நான் “ஆசிரியரே!” என்றேன். உரக்க “சொல்!" என்றார். நான் “ஆசிரியரே, நான் எதைச் சொல்வது?" என்றேன்.

“வலியில் திளைக்க எப்படி கற்றாய்?" என்றார். நான் பெருமூச்சு விட்டேன். “எளிய சூதனல்ல நீ” என்றார். நான் “நான் சூதரின் மைந்தன்..." என்று சொல்லத் தொடங்க “நீ வீழ்ந்தவன்...” என்றார். ”துரோகத்தை வஞ்சத்தை பழியை அவமதிப்பை அடைந்தவன். சூதர்களுக்குரியதல்ல அத்தகைய பெருந்துயர்கள்.”

நான் பதில் சொல்லவில்லை. குரல் உரத்து எழ “ஷத்ரியனின் குருதியா நீ?” என்றார் ஆசிரியர். “ஆம்” என்றேன். “ஆம், அதை நான் முன்னரே எப்படியோ அறிந்திருந்தேன். நீ துயருடன் ஒவ்வொரு கணமும் வாழ்பவன்...” நான் “ஆசிரியரே, என்னை மன்னியுங்கள்” என்று சொல்லி கைகூப்பினேன். “பொய்யனே, இக்கணமே உன்னை கொல்கிறேன்” என்று கூவியபடி திரும்பி அருகே நின்ற நாணல் ஒன்றை பறித்தெடுத்தார்.

“அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி நான் கைகூப்பி நின்றேன். அவர் ஓங்கிய கையுடன் “இழிமகனே, நீ அறிந்திருப்பாய். என் குருமரபின் கடமையே ஷத்ரியர்களை வெல்வதே என்று. ஷத்ரியக் குருதியுடன் நீ என்னிடம் பயில்வது எத்தனை பெரிய பிழை என்று” என்றபோது அவரது உடல் நடுங்கியது. கண்களில் நீர் கட்டி குரல் இடறியது.

“ஆசிரியரே, நான் ஷத்ரியனல்ல. ஷத்ரியனாகவும் போவதில்லை” என்றேன். அவர் “நிறுத்து மூடா! மானுடர் குருதியால் இயக்கப்படுகிறார்கள். சித்தத்தால் அல்ல...” என்றார். ”எவரும் வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதில்லை. எண்ணியபடி ஆடுவதுமில்லை.”

“ஆசிரியரே, என் குருதியை ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்று உறுதி சொல்கிறேன்” என்றேன். அவர் கையில் இருந்த நாணலைத் தூக்கி “பேசாதே... உன் சொற்களைக் கேட்க நான் விழையவில்லை” என்றபின் சிலகணங்கள் அசைவிழந்து நின்றார். பின் பெருமூச்சுடன் தோள் தளர்ந்து “உன்னைக் கொல்ல என்னால் ஆகாது. மாணவன் மைந்தனைவிட மேலானவன். உனக்காக என் குருமரபின் பழிச்சொல்லை நானே ஏற்கிறேன்” என்றார்.

மெல்ல அவரது உடல் குமிழிகள் உடைந்து நுரை அடங்குவதுபோல எளிதானது. என்னை நோக்காமல் “நீ ஒரு சொல்லை எனக்களிக்கவேண்டும். அதுவே நான் கோரும் குருகாணிக்கை. ஒருபோதும் ஷத்ரியர்களுக்காக உன் வில் எழக்கூடாது” என்றார்.

நான் கைகூப்பி “ஆசிரியரே, அச்சொல்லை அளிக்க என்னால் இயலாது. நான் இங்கு வந்ததே என் தோழருக்காக படைநின்று பொருதும்பொருட்டே. என் வாழ்வை அவருக்கும் அவர் குலத்திற்கும் அளித்துள்ளேன். அச்சொல்லில் இருந்து இப்பிறவியில் வழுவமாட்டேன்” என்றேன்.

சினத்துடன் திரும்பி “மாணவனின் உயிரும் உள்ளமும் ஆசிரியருக்கு உரிமையானவை. முழுப்படையலின்றி மாணவன் உள்ளத்தை ஆசிரியர் ஏற்கலாகாது” என்றார் பரசுராமர். “அதை தாங்கள் முன்னரே கேட்டுக்கொள்ளவில்லை ஆசிரியரே. கேட்டிருந்தால் நான் இக்கல்விக்கே ஒப்பியிருக்க மாட்டேன். என் வில் தார்த்தராஷ்டிரருக்கு உரியது” என்றேன்.

பரசுராமர் “நான் கோருவது குருகாணிக்கை. கல்விக்குக் காணிக்கையில்லை என்றால் அவ்வித்தை பயன் தராது போகும்” என்றார். “என்னை வாழ்த்துங்கள் ஆசிரியரே, அதுவன்றி எந்தக் காணிக்கையையும் அளிக்கிறேன்” என்றேன். “ஷத்ரியர்களுக்காக நீ வில்லெடுப்பாய் என்றால் எதுவும் எனக்குரியதல்ல... விலகிச் செல். உன்னை நான் வாழ்த்தவில்லை. நீ கற்ற வித்தை உனக்கு கைகொடுக்காது” என்றார். “ஆசிரியரே” என நான் கைகூப்பி பணிந்து நின்றேன். ”செல்... விலகிச்செல்” என்று கூவினார்.

“ஆசிரியரே, நான் வித்தையை இழப்பேன் என்றால் அது உங்களுக்கல்லவா இழிவு?" என்றேன். ”நீ என்னை ஏமாற்றி கற்றுக்கொண்டாய் என்ற இழிவைவிட பெரியதல்ல அது. மூடா, நீ ஷத்ரியனும் அல்ல. ஷத்ரியனுக்கு வெற்றியும் புகழுமே முதன்மையானது. எளிய உணர்ச்சிகளை பெரிதென எண்ணுவதனாலேயே நீ ஷத்ரியன் அல்லாதானாய். என்றோ ஒருநாள் உன் இறுதி சமர்களத்தில் உன் ஷாத்ரம் உன்னை கைவிடுவதாக!” என்றபின் அந்த நாணலை நீர் நோக்கி வீசி விட்டு திரும்பி நடந்தார்.

நான் அங்கேயே நின்றிருந்தேன். அவர் திரும்பிப் பார்ப்பார் என்று எதிர்பார்ப்பவன் போல. அவரைத் தொடர்ந்து ஓடி அவர் கால்களில் விழுந்து கதறவேண்டுமென எண்ணினேன். ஆனால் அவரை நான் நன்கறிவேன், ஒருபோதும் சொற்களை மீட்டுக்கொள்பவரல்ல அவர். அவரது உருவம் இலைத்தழைப்புகளுக்கு அப்பால் மறைந்தது.

பெருமூச்சுடன் திரும்பினேன். என் காலில் இருந்து குருதி வழிந்து மண் நனைந்திருந்தது. மேலாடையை உருவி அப்புண்ணை கட்டிக்கொண்டிருக்கையில் அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. என்னை சூதன் என்று இழிவுசெய்தது அஸ்தினபுரி. இதோ ஷத்ரியன் என்று ஆசிரியர் பழிக்கிறார். வாய்விட்டு நகைத்தபடி அங்கே அமர்ந்துவிட்டேன்.

கர்ணன் சிரித்துக்கொண்டு “பின்னர் எண்ணும்போதெல்லாம் அதற்காக சிரித்தேன். அங்கிருந்து மீளும் வழி முழுக்க தனிமையில் நகைத்துக்கொண்டே இருந்தேன்” என்றான். துரியோதனன் உள்ளக்கொதிப்புடன் கைகளை நீட்டியபடி முன்னால் வந்து “நீ அந்த வாக்குறுதியை அளித்திருக்கவேண்டும். உனக்கு தென்னகத்தில் ஒரு பேரரசை உன் ஆசிரியர் அமைத்துத் தந்திருப்பார். கர்ணா, நீ அடைந்த அனைத்து இழிவுக்கும் அதுவல்லவா விடை? என்ன மூடத்தனம் செய்துவிட்டாய்? இனிமேல் உன் ஆசிரியரை சந்திக்க முடியுமா? அவ்வாக்குறுதியை அளிக்கமுடியுமா?" என்றான்.

“அது முடிந்து விட்டது” என்றான் கர்ணன். “என்ன மூடத்தனம் இது. சிந்தித்துப்பார், அங்கநாட்டை நான் உனக்களித்ததே நீ அடைந்த குல இழிவை சற்றேனும் போக்கத்தான். அதற்குக் கைமாறாக அவ்விழிவை முற்றிலும் அகற்றும் ஒரு பெருவாய்ப்பை தவறவிட்டாய் என்றால்... ஒருபோதும் நீ செய்திருக்கக் கூடாது” என்றான் துரியோதனன்.

“இளவரசே, என் சொல் நானிருக்க இறக்கலாகாது” என்றான் கர்ணன். “அச்சொல்லை நான் உனக்கு திரும்ப அளிக்கமாட்டேனா? இதோ...” என்றான் துரியோதனன். கர்ணன் இடைமறித்து “இளவரசே, எளிய சூதன் என்றாலும் கர்ணன் ஒருபோதும் கொடுத்ததை திரும்ப வாங்குவதில்லை” என்றான். “உங்கள் பொருட்டு களத்தில் நிற்பது என் கடன். எதிரே பரசுராமரே வில்லேந்தி வந்து நின்றாலும்கூட.”

பின்னர் மேலும் ஏதோ சொல்ல விழைபவன் போல கைகளை விரித்தான். எவரிடமோ சரணடைவதுபோல அக்கைகளை மலர்த்தினான். தோள்கள் தொய்ய விலகிச் சென்று சில அடிகள் வைத்து சேற்றுப்பரப்பை நக்கி அலையடித்துக்கொண்டிருந்த நீர்விளிம்பில் கால்வைத்தான். குனிந்து நீரை அள்ளி விட்டு முகத்தைக் கழுவினான்.

துரியோதனன் அவன் செய்வதை நோக்கியபடி அசையாமல் நின்றான். முகத்தின் ஈரத்தை விரல்களால் வழித்து விட்டு கர்ணன் திரும்பியதும் துரியோதனன் “நீ ஷத்ரிய மைந்தனா?” என்றான். “ஒருபோதும் அதை நீங்கள் என்னிடம் கேட்கலாகாது அரசே” என்றான் கர்ணன். “இது நான் உங்களிடம் கோரும் அருள்.” அவன் விழிகளை கூர்ந்து சிலகணங்கள் நோக்கியபின் துரியோதனன் ”ஆகுக” என்றான்.

கர்ணன் திரும்ப ரதம் நோக்கி நடக்கத் தொடங்க துரியோதனன் தொடர்ந்து சென்றான். இருவரும் ரதத்தட்டில் ஏறி நின்றுகொண்டனர். குதிரைகளின் குளம்படித்தடம் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த சோலைகளின் இருளுக்குள் எதிரொலித்து அங்கே பறவைகள் கலைந்து ஒலியெழுப்பின. அவர்களின் ரதங்களை தொலைவிலேயே காவல்மாடத்து வீரர்கள் கண்டுவிட்டிருந்தனர். பந்தங்கள் சுழன்று அடையாளம் காட்ட முரசு ஒன்று முழங்கியது. வேல்களுடன் காவலர்கள் முகப்பு நோக்கி ஓடிவந்தனர்.

”பாண்டவர்கள் இந்நகரில்தான் இருக்கிறார்கள்...” என்றான் கர்ணன். “அர்ஜுனன் வந்திருப்பான்.” துரியோதனன் ”ஆம், ஆனால் அவர்கள் இன்னமும் கூட தங்களை துருபதனுக்கு அறிவித்துக்கொள்ளவில்லை“ என்றான். “அவர்கள் காத்திருக்கிறார்கள்...” என்றான் கர்ணன். துரியோதனன் "யாதவனும் காத்திருக்கிறான். அவர்கள் இன்னமும் யாதவனிடமும் தங்களை காட்டிக்கொள்ளவில்லை” என்றான். கர்ணன் “எப்படியென்றாலும் நாளை மாலைவரை” என்றான்.

அச்சொற்களை கர்ணன் முன்னரே சொன்னதை துரியோதனன் நினைவுகூர்ந்தான். ஒன்றிலிருந்து ஒன்றாக தொடர்கண்ணிகள் விரிந்து அனைத்தும் அவனுக்கு தெளிவாகியது. அதற்குள் ரதங்கள் மாளிகை முற்றத்தைச் சென்றடைந்து நின்றன. வீரர்கள் வந்து கடிவாளங்களை பற்றிக்கொண்டனர். கர்ணன் இறங்கி “நான் சற்று ஓய்வெடுக்கிறேன்... நீண்டபயணத்தின் களைப்பு” என்றபடி தலைவணங்கிவிட்டு விலகிச்சென்றான். அவன் செல்வதை துரியோதனன் நோக்கிக் கொண்டு நின்றான்.

துச்சாதனனை நோக்கி தலையசைத்துவிட்டு துரியோதனன் மாளிகைக்குள் சென்று தன் அறையை அடைந்தான். ஆடைச்சேவகனும் அணுக்கச்சேவகனும் காத்து நின்றிருந்தனர். அணிகளைக் கழற்றி உடலை இளநீராட்டச்செய்து மாற்றாடை அணிந்து தன் மஞ்சத்து அறைக்கு வந்தான். கட்டிலில் அமர்ந்துகொண்டு இருண்ட மரக்கூட்டங்கள் தெரிந்த சாளரத்தையே நோக்கிக் கொண்டிருந்தான்.

வெளியே தொலைவானில் விண்மீன்குவைகள் தெரிந்தன. அவன் எழுந்து சென்று சாளரத்தருகே நின்று விண்மீன்களை நோக்கினான். எத்தனை லட்சம், கோடி, கோடானுகோடி... இத்தனை விண்மீன்களும் மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள். ரிஷிகள், மாவீரர்கள், பத்தினிகள். இங்கே முட்டி மோதி அடைந்தும் துறந்தும் வாழ்வதெல்லாம் இப்பெருவெளியில் நின்று ஒளிரும் ஒரு ஒளிப்புள்ளியாக ஆவதற்காகத்தானா?

கூட்டம் கூட்டமாக செறிந்துகிடந்தன விண்மீன்கள். ஆனால் ஒவ்வொன்றும் தன்னந்தனிமையில் நின்று மின்னிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவற்றில் ஏதோ ஒன்று துருவவிண்மீன். பிற அனைத்தும் திசையும் இடமும் மாறுகையிலும் மாறாதது. அவன் அதை நோக்குவதற்காக வடதிசையை விழிகளால் துழாவினான். ஒரே விண்மீன்களை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

சலித்துப்போய் திரும்ப வந்து அமர்ந்துகொண்டான். சற்று நேரம் மஞ்சத்தையே நோக்கிக் கொண்டிருந்துவிட்டு சேவகனை அழைத்து சதுரங்கப்பலகையை விரிக்கச்சொன்னான். அதில் காய்களை விரித்து ஒரு சூழ்கையை அமைத்துவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். எதிரே இருட்டு அமர்ந்திருந்தது. அது தன் கைகளை நீட்டி காய்களை நகர்த்தும் என்பது போல, அதன் ஆடலென்ன என்று உய்த்துணர விழைபவன் போல அவன் அமர்ந்திருந்தான்.

ரீங்காரத்துடன் ஒரு சிறிய பூச்சி விளக்கை நோக்கிச் சென்றது. அவ்வொலி கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சிலகணங்கள் கழித்துத்தான் அதற்காக தன் அகம் ஏன் திடுக்கிட்டது என்று புரிந்தது. விரைந்து சென்று கதவருகே ஒரு கணம் தயங்கிவிட்டு திறந்து வெளியே சென்றான். காவல்வீரன் தலைவணங்கி பின்னால் வந்தான். அவனை கையசைத்து அனுப்பிவிட்டு இடைநாழி வழியாக நடந்து சென்று கர்ணனின் அறைவாயிலில் நின்றான்.

குரலெடுப்பதற்குள் கர்ணனே கதவைத் திறந்தான். ”துயிலவில்லையா?" என்றான் துரியோதனன். கர்ணன் புன்னகையுடன் “வாருங்கள் இளவரசே” என உள்ளே அழைத்தான். உள்ளே சென்றதும் அவனும் சதுரங்கப்பலகையை விரித்திருப்பதை, ஒரு காய்கூட நகர்த்தப்படாமலிருப்பதை துரியோதனன் கண்டான். அவனுடைய புன்னகையைக் கண்ட கர்ணன் “ஆம், நானும்தான்” என்றான்.

“அந்த வலியை சற்று முன் உணர்ந்தேன்” என்றான் துரியோதனன். “அதை நான் சொல்லியிருக்கக் கூடாது” என்றான் கர்ணன். “இல்லை, நீ சொன்னது ஏன் என்றும் எனக்குப்புரிந்தது...” சிரித்தபடி “சற்றுப் பிந்தியேனும் அனைத்தையும் புரிந்துகொள்ளும் திருதராஷ்டிரரின் மைந்தன் நான்” என்றான். கர்ணன் புன்னகைசெய்தான். “நான் வந்தது அதைப்பற்றிப் பேசத்தான்.”

கர்ணன் “அதில் பேசுவதற்கென்ன இருக்கிறது?” என்றான். துரியோதனன் தன் கைகளை நோக்கியபடி சிலகணங்கள் அமர்ந்துவிட்டு “அல்லது என்னைப்பற்றிப் பேச...” என்றான். “வலியைப்பற்றி சொன்னாய் அல்லவா? நான் என்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன். இனி என் வாழ்நாளில் நான் எப்போதேனும் மகிழ்ச்சியை அறிவேனா என வியந்தேன்.” கர்ணன் புன்னகை செய்தான்.

“கர்ணா, எனக்கு ஒருநாளும் இயல்பாக துயில் வந்ததில்லை” என்றான் துரியோதனன். “இப்போது இடைநாழியில் வருகையில் எண்ணிக்கொண்டேன். நான் இறுதியாக மகிழ்ச்சியுடன் இருந்தது எப்போது என்று. முன்பு, இளமையில், நானும் பீமனும் தோள்தழுவி வாழ்ந்த நாட்களில். அன்று உவகையன்றி வேறேதும் இருக்கவில்லை. கனவென சென்றுவிட்டன அந்நாட்கள்.”

”அன்றெல்லாம் ஒவ்வொருநாளும் பிரியமுடியாமல் பேசிக்கொண்டிருப்போம். பேசிய இறுதி நகைச்சுவை நெஞ்சில் சுவைக்க முகமெல்லாம் சிரிப்புடன் படுக்கையில் விழுவேன். காலையில் எழும்போது துயிலுக்குமுன் இருந்த சிரிப்பு தாவி வந்து இதழ்களில் திகழும். ஏன் சிரிக்கிறேன் என்று எழுந்தபின் ஒருகணம் சிந்தித்து அதன்பின்னர்தான் அறிவேன்” துரியோதனன் சொன்னான்.

“பீமனிடம் நல்லுறவு கொள்ள இன்னும் தருணமிருக்கிறது” என்றான் கர்ணன். “ஆம், அவன் இன்னமும் கூட என்னை நோக்கி தன் தோள்களை விரிக்கக்கூடும். ஆனால் நான் விலகி நெடுந்தொலைவுக்கு வந்துவிட்டேன்” என்றான் துரியோதனன். “ஆனால்...” என கர்ணன் சொல்லத் தொடங்க “அதைப்பற்றிப் பேசிப்பயனில்லை. அது முடிந்துவிட்டது” என்றான். “நீ சொன்னாயே போர் என. ஆம். ஒருபோர் நிகழும். நான் அதில் அவனை கதையுடன் சந்திப்பேன். எங்களில் ஒருவர் எஞ்சுவோம். ஊழின் பாதை அது மட்டுமே.”

கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. துரியோதனன் பெருமூச்சுடன் “ஆனால் ஏன் இந்த வாழ்க்கை? உன்னிடமே நான் சொல்லமுடியும் கர்ணா. என் நாட்டை மணிமுடியை அடைந்தால் நான் மகிழ்வேனா? இல்லை. பாரதவர்ஷத்தையே அடைந்தாலும் எனக்கு நிறைவிருக்காது. ஓரிரு கணங்களுக்குமேல் என் உவகை நீடிக்காது. ஏன் ஹிரண்யனைப்போல விண்ணையே வென்றாலும் நான் மகிழப்போவதில்லை” என்றான். “மணிமுடி நெருங்கும்போது நான் உவகையை இழக்கிறேன். அதை இழந்த சிலநாட்களிலேயே மீண்டும் வஞ்சம் கொள்கிறேன்... ”

“உயிர்களுக்கெல்லாம் வாழ்க்கையின் இலக்காக இருப்பது ஆனந்தமே என்கின்றன நூல்கள். புழுவும் பூச்சியும் விழைவது இன்பத்தை. என் வாழ்க்கையில் இன்பமே இல்லை என்றால் நான் ஏன் வாழவேண்டும்?” என்ற துரியோதனன் கசப்புடன் நகைத்து “வீண்வினா என்று அறிவேன். என் தமையன் தருமன் இதைக்கேட்பதில் பொருளுண்டு... ஆனால் என்னாலும் கேட்காமலிருக்க முடியவில்லை. வாழ்நாள் முழுக்க துயரை மட்டுமே அடைவேன் என உறுதியாக உணர்பவன் ஏன் உயிர்வாழவேண்டும்?” என்றான்.

“இளவரசே, இன்பத்தை நாடுபவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். புகழை நாடுபவர்களே அதை அடைகிறார்கள்” என்றான் கர்ணன். “அது ஊழின் வழி. இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை என்பது மிகச்சிலரால் மட்டுமே ஆடப்படுவது. அவர்களின் கடன் என்பது ஊழின் ஆடலை தான் நடிப்பது மட்டுமே. இங்கு நூறுநூறு இல்லங்களில் துணிகள் உள்ளன. ஆமாடப்பெட்டிகளுக்குள் மடித்தும் சுருட்டியும் வைக்கப்பட்டு வாசத்துடன் துயில்கின்றன. மாடமுகட்டில் பறக்கும் கொடியின் துணி அவ்வாழ்க்கையை விழைய முடியாது. காற்றில் அது துடிதுடித்தாகவேண்டும்.”

துரியோதனன் “நல்ல உவமை” என்று சிரித்தான். கர்ணன் “ஆம், அதுவே உண்மை. ஒரே வினாவை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உலக இன்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. அதன்பொருட்டு இங்குள்ள முகமற்ற பல்லாயிரம் பேரில் ஒருவராக நீங்கள் வாழமுடியுமா? அப்படியென்றால் இக்கணமே கிளம்புங்கள். உங்கள் இன்பங்கள் இவ்வறைக்கு வெளியே காத்திருக்கின்றன” என்றான்.

துரியோதனன் பெருமூச்சுடன் “ஆம், உண்மைதான். என்னால் முடியாது” என்றான். “நீங்கள் வரலாற்றின் மேல் பிறந்து விழுந்தவர். உங்களால் வரலாற்றின் மீது மட்டுமே வாழமுடியும்” என்றான் கர்ணன். “வரலாறென்பது கோடானுகோடி மக்களின் கனவுகளும் விழைவுகளும் சமர்களும் சரிவுகளும் கலந்து உருவான நிகழ்வுப்பெருவெள்ளம். அதன் முதல் அலையெழுச்சி நீங்கள். உங்கள் வழியாகவே துவாபர யுகம் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“அதற்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கவேண்டுமா என்ன?” என்றான் துரியோதனன். “ஆம், போராடுவதும்கூட அதன் இச்சையை நிகழ்த்துவதேயாகும். அது நம்மை மீறியது. நாம் அறியமுடியாதது. அது மும்மூர்த்திகளும் ஆடும் சதுரங்கம்” என்று கர்ணன் சொன்னான். துரியோதனன் பெருமூச்சுடன் “சொற்கள் எத்தனை எளிதாக இருக்கின்றன. துயர்களை சொல்லாக மாற்றிக்கொள்ள முடியும் என்றால் சொற்களாலேயே தீர்வையும் கண்டுகொள்ளமுடியும் போலும்” என்றான்.

கர்ணன் புன்னகைத்து “உண்மையை நெருங்குகையில் எவரும் அழகிய சொல்லாட்சிகளை சொல்லி விடுகிறார்கள்” என்றான். துரியோதனன் உரக்க நகைத்து “அவ்வப்போது வரலாற்றுக்கு நானும் சில சொற்றொடர்களை விட்டுச்செல்கிறேனே. வரலாற்றுநாயகர்களின் கடமையல்லவா அது?" என்றான்.  இருவரும் உரக்க நகைத்தனர்.

துரியோதனன் எழுந்துகொண்டு “நான் ஒரு சொல்லை சொல்லிவிட்டுச் செல்லவே வந்தேன்” என்றான். கர்ணன் சிரிப்புடன் “வரலாற்றிடமா?" என்றான். “உன்னிடம்...” என்றபின் துரியோதனன் வெளிப்பக்கமாகத் திரும்பிக்கொண்டு “நாளை துருபதன் போட்டிக்காக அமைத்திருப்பது விற்பொறி” என்றான்.

கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் நெஞ்சின் துடிப்பை கேட்கமுடியும் என்று தோன்றியது. “அதை வெல்லப்போவது நீதான்” என்றான் துரியோதனன். “அது என் கடன்” என்றான் கர்ணன். ”எப்படியென்றாலும் பாஞ்சால இளவரசியை வெல்லாமல் நாம் இந்நகர் நீங்குவதில்லை. அதை பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லிவிட்டே வந்தேன்.”

“அவளை வென்று துணை கொள்ளப்போவதும் நீயே” என்றான் துரியோதனன். கர்ணன் திகைத்து எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? நாம் இங்கு வந்தது...” என்று தொடங்க கையமர்த்திய துரியோதனன் “அரசியல் கணிப்புகளை நான் பேசவரவில்லை. ஆணும் பெண்ணும் கண்டுகொள்வதை கந்தர்வ கணம் என்கின்றன நூல்கள். அது நிகழ்ந்ததை நான் கண்டேன்” என்றான்.

“இளவரசே, தாங்கள் சொல்வது...” என்று குழறியபடி கர்ணன் பின்னால் நகர்ந்தான். “உன் விழிகளை நான் நோக்கினேன். அவை கந்தர்வனின் விழிகள். அவள் விழிகளும்தான். அங்கே உங்கள் இருவரையும் அணுகி நோக்கியது நான் மட்டுமே.” கர்ணன் தவிப்புடன் “இளவரசே, வீண் சொற்களாகப் போகின்றன இவை. அவள் ஷத்ரியகுலத்து இளவரசி. பாரதவர்ஷத்தின் பேரரசி என்கின்றனர் நிமித்திகர். பேரரசர்கள் அவளை எண்ணி இங்கு வந்துள்ளனர்” என்றான்.

“ஆம், நீ நாளைய பேரரசன். இன்று உன் பின்னால் பாரதவர்ஷத்தின் முதன்மைப் பேரரசு ஒன்றின் பெரும்படை நின்றிருக்கிறது” என்றான் துரியோதனன். “நாளை அவை எழுந்து வில் சூடி அவளை வெல்! அவள் கை பற்றி மேடையேறுகையில் ஷத்ரியர் வரிசையில் ஒரு சொல் எழுந்தாலும் அஸ்தினபுரியின் படையுடன் நான் உன்னுடன் நின்றிருப்பேன்.”

பதைப்புடன் கைகள் அசைய கர்ணன் “இல்லை இளவரசே, நான்...” என மீண்டும் தொடங்கினான். புன்னகையுடன் அருகே வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு துரியோதனன் “பரசுராமனின் வில்லுடன் நீ அவையெழுந்தால் எவரும் முன்னிற்க முடியாது” என்றான். “இத்தருணம் இதற்கெனவே அமைந்தது என்று அறிக!”

கர்ணன் கண்களில் நீர் பரவியது. அவன் தலைகுனிந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். “அங்கநாட்டுக்கு அரசன் ஆனதல்ல இழிவுபடுத்தியவர்களுக்கான விடை. பாஞ்சால இளவரசியின் கைபற்றி அஸ்தினபுரியின் அவை புகுவதுதான். அது நிகழட்டும்!” கர்ணன் நெஞ்சு ஏறியிறங்கியது. புன்னகையுடன் அவன் கைகளை இறுக்கி “இது திருதராஷ்டிரரின் மைந்தனின் வார்த்தை” என்றான் துரியோதனன்.

அவன் திரும்பி வாயிலை நோக்கி சென்றபோது கர்ணன் அவன் உடலில் எழுந்த வழக்கமற்ற விரைவுடன் இரு எட்டில் அவனை நெருங்கி வந்து “இளவரசே, நீங்கள் சொன்னது உண்மையா?" என்றான். “என்ன?" என்று துரியோதனன் அவன் பதற்றத்தை நோக்கி புன்னகைத்தபடி கேட்டான். “அவள் என்னை... என் மேல்...” என்றான் கர்ணன். துரியோதனன் ”ஆம், நான் கண்டேன். அவள் விழிகளில் நிறைந்திருந்த காதலை தெய்வங்களும் கண்டிருக்கும். கர்ணா, மணஏற்பு முடிந்து விட்டது. அவள் உன்னையன்றி எவரையும் ஏற்கமாட்டாள்” என்றான்.

கர்ணன் புன்னகைத்தபோது ஒளிமிக்க பல்வரிசையுடன் அவன் பேரழகனாகத் தெரிந்தான். அவன் தோள்களைத் தொட்டபடி “எனக்கு மட்டும் அல்ல, அங்கு நின்றிருந்த அத்தனை பெண்களுக்கும் அது தெரிந்துவிட்டது. அவர்களில் எவரோ மணஏற்பு முடிந்துவிட்டது என்று மெல்ல சொன்னதையே நான் கேட்டேன்” என்றான். கர்ணன் முகத்தில் நாணம் வந்து விழிகள் சரிந்தன. பற்களைக் கடித்து நாணத்தை அடக்கியபின் திரும்பி அறைக்குள் சாளரத்தை நோக்கி திரும்பி விட்டான்.

உரக்கச்சிரித்து “இரவை தேன் ஊறி நிரப்பட்டும்” என்றபின் துரியோதனன் வெளியேசென்றான். கால்களை வழக்கத்தை மீறி வீசி வைப்பதாகத் தெரிந்தபோது ஒன்று தோன்றியது, அவன் உவகையுடன் இருந்தான். இடைநாழியில் காற்றில் செல்லும் மெல்லிய சால்வையென ஒழுகினான். “ஆம், இது உவகையே. உவகையேதான்” என்று தன்னுள் சொல்லி புன்னகைத்துக் கொண்டான்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 5

லட்சுமிதேவியின் ஆலயத்தின் படிகளில் ஏறி உள்ளே நுழைகையில் திரௌபதி மெல்ல ஒரே ஒரு அடி எடுத்துவைத்தாள். அவள் அணிகள் அசைந்த ஒலியில் உருவான மாறுதலை உணர்ந்த அணுக்கச்சேடியான மாயை மெல்ல தன் விரைவைக் குறைத்து அவள் குரல் கேட்கும் அண்மைக்கு வந்து செவியை மட்டும் அவளை நோக்கி திருப்பினாள். திரௌபதி மெல்லியகுரலில் “உள்ளே வருகிறாரா?" என்றாள். மாயை கூந்தலை சரிசெய்தபடி தலைதிருப்பி விழியோட்டித் திரும்பி இதழ்களை மட்டும் அசைத்து “இல்லை இளவரசி. அவர்களின் ரதம் உள்ளே நுழையவேயில்லை” என்றாள்.

திரௌபதியின் இதழ்களில் விரிந்த மெல்லிய புன்னகையை மாயை கண்டாள். அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் திரௌபதியின் செயல்கள் எப்போதுமே அவள் எண்ணியிருக்காதபடி செல்பவை என அறிந்திருந்தாள். ஆலயத்திற்குள் நுழைந்து பூசெய்கைத் தாலத்தை ஸ்தானிகரிடம் அளித்துவிட்டு கருவறைக்கு முன்னால் பெண்களின் இடத்தில் அவள் விலகி நின்றுகொள்ள திரௌபதி வந்து அருகே இளவரசியின் பீடத்தில் நின்றாள். அப்பால் பட்டத்தரசியின் பீடத்தில் பிருஷதி நின்றதும் ஸ்தானிகர்கள் இருவர் அவளுக்கு மங்கலத்தாலம் அளித்து முறைமை செய்தனர்.

அவர்களைச் சுற்றி ஆலயத்தின் மங்கலவாத்தியங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. ஒரு பெரிய பட்டுத்திரைபோல அவ்வொலி அவர்களை சூழ்ந்துகொள்ள மிகத் தனிமையாக அங்கே நிற்பதுபோல் தோன்றியது மாயைக்கு. பிருஷதி குனிந்து திரௌபதியிடம் ஏதோ கேட்க அவள் கழுத்தை வளைத்து அதைக்கேட்டு இல்லை என தலையசைத்து ஏதோ சொன்னாள். மாயை அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். சின்னஞ்சிறிய பறவைகளுக்குரிய எச்சரிக்கையும் கூர்மையும் அவள் அசைவுகளில் எப்போதுமிருக்கும். கூடவே வேங்கையின் விரைவற்ற தோரணையும் கூடுவதன் விந்தையே திரௌபதி, பாஞ்சால இளவரசி. பாரதவர்ஷத்தை ஆள்வதற்கென்றே அனலிடை எழுந்த மகள்.

கருவறை முன் குவிக்கப்பட்டிருந்த அன்னப்படையலின் மீது மலர்களை அள்ளி வீசி சைகைகளும் மந்திரங்களுமாக பூசை செய்தபின் பூசகர் உள்ளே சென்றார். திரௌபதியின் உதடுகளின் அசைவில் அவள் குரலை மாயை பார்த்தாள். “யார் அவர்?” மாயை “நான் விசாரித்துச் சொல்கிறேன் இளவரசி” என்றபின் மேலும் சற்றுநேரம் ஆலயத்திற்குள் தேவிக்கு நிகழும் பூசனையை நோக்கி நின்றாள். பின்னர் இயல்பாக நடந்து மேலாடையை சரிசெய்தபடி விலகிச்சென்றாள். ஆலயமுற்றத்திற்குச் சென்று அங்கே தேர்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்த நூற்றுக்குடையவனிடம் பேசிவிட்டு திரும்பிவந்து மீண்டும் திரௌபதி அருகே நின்றாள்.

திரும்பியபோது திரௌபதியின் விழிகள் வந்து அவள் விழிகளை தொட்டுச்சென்றன. திரௌபதி தன் விழிகளை வைரம்போல உறுதியின் ஒளியாக மாற்றிக்கொண்டிருந்தாலும் முதல்முறையாக அவற்றுக்குள் ஓர் எண்ணத்தின் உயிரசைவு தெரிந்தது. ஒருபோதும் அவளில் வெளிப்படாதது. மாயை தனக்குள் புன்னகைசெய்துகொண்டாள். இதோ நீ சக்ரவர்த்தினி அல்லாதாகிவிட்டிருக்கிறாய். இதோ எளிய கன்னியாக என் முன் நின்றிருக்கிறாய். இதையல்லவா நான் இத்தனை நாள் எதிர்பார்த்திருந்தேன். இப்போது நீ எதுவாக எஞ்சுகிறாயோ அதுவே நீ.

மாயை தன் உள்ளத்தின் இளநகை விழிகளிலோ முகத்திலோ திகழாதபடி முற்றிலும் இறுக்கிக்கொண்டாள். அந்தச்சிறிய கால அளவைக்கூட அவளால் காத்திருந்து கடக்கமுடியவில்லை என்றால் அவளுக்குள் என்ன நிகழ்கிறது? மிக மென்மையான ஒன்று. மொட்டின் இதழ்கள் அல்லிப்பொதியை உடைத்து மணத்துடன் வெளிவருவதுபோன்றது. மிக மெலிந்தது. ஆமுகத்து கங்கை போல. ஆனால் அணைகட்டமுடியாத பெருவல்லமை கொண்டதும் கூட.

மாயை தன் எண்ணத்தை அடக்கியபோது உருவான சிறிய உடல் மாறுதல் வழியாகவே அதை அறிந்தவள்போல திரௌபதியின் விழிகள் பின்வாங்கின. அனல் பட்ட மலரிதழ்போல அவை சுருண்டு விலகுவதாக மாயை எண்ணினாள். அவள் விழிகளை சந்திக்க மூன்றுமுறை முயன்றாள். அவை முழுமையாகவே தேவியில் நிலைத்திருந்தன. சுடராட்டுகளின் சுழல்தல்களை கரிய மென்முகத்தின் கன்னக்கதுப்பின் வளைவின் ஒளியாகவே காணமுடிந்தது. ஒருவரை தவிர்ப்பதற்கு மிகச்சிறந்த வழி உண்மையிலேயே பிறிதொன்றில் மூழ்கிவிடுதல் என்று அறிந்த சூழ்மதி அவள். அப்போது அவள் சுடராட்டன்றி எதையும் அகத்தாலும் அறியவில்லை.

மாயை ஓர விழிகளால் அவளையே நோக்கிக் கொண்டிருந்தாள். பளபளக்கும் கருங்குழலின் அலைநெளிவு படிந்த சிறிய நெற்றிக்குக் கீழ் நீரலையென வளைந்தெழுந்த சிறு மூக்கு. சற்றே குமிழ் கொண்ட முகவாய். கைக்குழந்தைக் கன்னங்கள். கனத்தபீலிகள் கொண்ட பெரிய விழிகள். அவற்றில் எப்போதுமிருக்கும் கூர்மையின் ஒளி. நோக்குகையிலும் நோக்கவில்லை என எண்ணச்செய்யும் நிமிர்வு .

ஆனால் அவளை பேரழகியாக்கியது அவள் இதழ்கள். மிகச்சிறியவை. மேலுதடு அப்போது பொதியவிழ்ந்த மலரிதழ் என சற்று வளைந்து கனத்து மடிந்த கீழுதடுகள். ஆழ்ந்த கருஞ்செந்நிறம் கொண்டவை. சற்று முந்தைய கணத்தில் குருதி உண்டு எழுந்தவை போல அவற்றின் உள்குழிவில் ஈரச்செம்மை. மாயை தன் உள்ளத்தை திருப்பிக் கொண்டாள். எப்போதுமே அந்த எண்ணம் வந்து திகழ்ந்துவிடுகிறது. பசுங்குருதி. மானுடக்குருதி. அவ்வுதடுகளில் ஊறிக்கனிந்து ஒளிர்ந்து நிற்பது அதுதான்.

திரௌபதி விழிகளை அப்பால் திருப்பிக்கொண்டு மெல்லிய குரலில் “யார்?” என்றாள். மாயை சற்று உள்ளதிர்ந்தாள். முதல்முறையாக திரௌபதி தன் நிமிர்வை இழந்து இறங்கிவந்திருப்பதை உணர்ந்தபோது அது நிகழக்கூடாதென்றே தன் அகம் விழைகிறதென்று உணர்ந்தாள். நழுவிச்சரியும் மதிப்புமிக்க ஒன்றைப் பற்ற பதறும் கை போல தவித்தது உள்ளம். அவள் எங்கு வழுக்குகிறாள் என்று எக்கணமும் காத்திருக்கும் என் அகம் அது நிகழும்போது ஏன் ஏமாற்றம் கொள்கிறது. இது நான் என் ஆழத்துச் செப்புக்குள் பொத்தி வைத்திருக்கும் கருமுத்து. இதன் மதிப்பைத்தான் ஒவ்வொரு கணமும் கணித்துக்கொண்டிருக்கிறேன்.

தழல் மலரானது போல. தசையாகி உயிர்துடிப்பது போல. அவள் திரும்பிய முகத்தில் சிறிய இதழ்கள் ஒன்றுடன் ஒன்று அழுந்தி கன்னக்குவை சற்றே மடிந்திருந்தது. அவள் கழுத்தின் குழியில் இதயம் துடிப்பது தெரிந்தது. கன்னத்தில் சரிந்திருந்த சுருள்மயிர்க்கற்றை நிழலுடன் சேர்ந்து ஆடியது. இடைகடந்து விழுந்திருந்த நீள்கூந்தலில் அலைகள் எழ மெல்ல அசைந்து நின்றாள்.

மாயை மெல்லிய குரலில் “அவர் பெயர் கர்ணன்” என்றாள். திரௌபதியின் நீண்ட மென்கழுத்தில் ஒரு சிறிய அசைவாக மூச்சு கடந்துசென்றது. அவளுக்கு கர்ணன் யாரென்று தெரியும், உறுதிசெய்யத்தான் கேட்கிறாள் என்று மாயை அறிந்துகொண்டாள். “அஸ்தினபுரியின் இளவரசர் அருகே நின்றிருந்த பெருந்தோளர். சுயோதனர். அவர் இளவல் அருகே நின்றவர், துச்சாதனர். அஸ்தினபுரியின் இளவரசரால் அங்கநாட்டரசராக முடிசூட்டப்பட்டவர் கர்ணன். சூதரான அதிரதனுக்கும் ராதைக்கும் பிறந்தவர். வசுஷேணன் என்று பிறவிப்பெயர்” என்றாள்.

“நெடுநாள் ஆரியவர்த்தத்தில் இல்லை என்றார்களே?" என்றாள் திரௌபதி நெற்றிக்கூந்தலை திருத்தியபடி இயல்பாகத் திரும்பி. எதையும் சொல்லாத விழிகள் அல்லவா என மாயை அகநகையுடன் எண்ணிக்கொண்டாள். “ஆம், அவர் துரோணரிடம் வில்பயின்றார். துரோணரால் அவமதிக்கப்பட்டார் என்கிறார்கள். அதன்பின் நிஷாதர்களிடமோ கந்தர்வர்களிடமோ வில்தேர்ந்து வந்து பாண்டவனாகிய அர்ஜுனனை களத்தில் வென்றார். மேலும் திறன் தேடுவதற்காக தென்திசை சென்று அகத்தியரிடம் கற்றுத்தேர்ந்தார் என்கிறார்கள்.”

திரௌபதி “பரசுராமரிடம் என கேள்விப்பட்டேன்” என்றாள். மாயை புன்னகையுடன் தலையசைத்தாள். ஆலயத்தின் உள்ளிருந்து மணியோசையுடன் பூசகர் வெளியேவந்து பலியேற்புச் சடங்குகளை செய்யத் தொடங்கினார். ஊண்கொள்ளலும் மலர்கொள்ளலும் முடிந்ததும் திரௌபதி கைகூப்பி வணங்கி விட்டு திரும்பினாள். அவள் வெளியே செல்வதைச் சுட்டும் சங்கு முழங்கியது. திரௌபதி அவள் இயல்புக்கேற்ப மிதந்து செல்பவள் போல வாயிலை நோக்கி சென்றாள்.

அருகே நடக்கையில் திரௌபதியின் உடல் அதிர்ந்துகொண்டிருப்பதை மாயை தன் உடலால் உணர்ந்தாள். அதெப்படி உணரமுடிகிறது, வெறும் உளமயக்கா அது என ஐயம் கொண்டு சற்று விலகியபின் மீண்டும் அருகே சென்றாள். அதை தெளிவாகவே உணரமுடிந்தது. கண்களை மூடிக்கொண்டபோதும் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அப்பால் எவரோ வந்து நிற்கையில் மூடப்பட்ட கதவு கொள்ளும் அதிர்வு அது. இல்லாதது எனினும் உணரமுடிவது. மாயை அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று உளம் கூர்ந்தாள். அவளுக்குள் எண்ணங்கள் எங்கே பாய்கின்றன. நிலையழிந்த சிறுகுருவி அவ்வுள்ளம். அடுத்தகணம் எங்கு செல்லும் என அதுவே அறியாது.

“அவர் அணிந்திருந்த அந்த மணிக்கவசம் எங்குள்ள மரபு?” என்றாள் திரௌபதி. மாயை சற்று திகைத்து “எவர்?” என்றாள். ஒருகணம் சினந்து கனன்ற திரௌபதியின் பார்வை வந்து மாயையை தொட்டுச்சென்றது. அவள் சற்று குன்றி பின்பு மேலும் திகைத்து “எவரை சொல்கிறீர்கள் இளவரசி?” என்றாள். திரௌபதியின் இதழ்கள் அழுந்தி கீழுதடு முன்னால் வந்து சென்றது. அவள் கடும்சினம் கொள்வதன் குறி அது என அறிந்த மாயை சற்று பின்னடைந்தாள்.

ஆலயவாயிலை நோக்கிச் சென்ற திரௌபதியின் இடை சற்று ஒசிந்து அந்த மென்வளைவில் செம்பந்த ஒளி மின்னியது. கைவளை ஒலிக்க காதில் குழை ஆடி கழுத்தில் தொட்டு விலக, மெல்லத் திரும்பி “சூரியபடக் கவசம்... அவர் நெஞ்சில் அணிந்திருந்தது...” என்றாள். மாயை கால்கள் தளர சற்று அருகே சென்று அவளை நோக்கினாள். தன் அச்சமும் குழப்பமும் உண்மையானவை என மறுஎண்ணத்தால் உணர்ந்தபின்னரே திரௌபதி தணிந்து வந்து அதைச் சொல்கிறாள் என்று அவளுக்குப்புரிந்தது. “இளவரசி, தாங்கள் சொல்வதை நான் எவ்வகையிலும் அறியேன்” என்றாள்.

திரௌபதி நின்றுவிட்டாள். அவள் இமைகள் நன்றாக மேலெழுந்து விரிந்த கருவிழிகள் மாயையை நோக்கி திகைத்து சிலகணங்கள் நின்றன. ”நீங்கள் சொல்வது அங்கநாட்டரசர் கர்ணனை சற்று முன் துர்க்கை ஆலயத்தில் பார்த்ததை பற்றித்தானே?" என்றாள் மாயை. “ஆம்” என்றாள் திரௌபதி. மாயை பொருள் திரளா நோக்குடன் நிற்க திரௌபதி “அவர் தன் மார்பில் செவ்வைரங்களால் ஆன சூரியபடம் பொறிக்கப்பட்ட பொற்கவசம் அணிந்திருந்தார், அதைக் கேட்டேன்” என்றாள்.

“எப்போது?” என மூச்சின் ஒலியில் மாயை கேட்டாள். “உள்ளே நாம் செல்லும்போதே... நாம் விலகும்போதும் அவர் மார்பில் அது இருந்தது. தேரில் அக்கவசம் சுடர அவர் எழுந்து நின்றதை நான் கண்டேன்.” மாயை சற்று முன்னால் வந்து உறுதியாக “இளவரசி, நான் அவரை பலமுறை உறுதியாகவே பார்த்தேன். அவர் மார்பில் நகை ஏதும் அணிந்திருக்கவில்லை” என்றாள். திரௌபதியின் உதடுகள் மிகமெல்ல ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விடுபட்டன. அந்த ஒலியைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.

“அவர் காதுகளில் இளஞ்செந்நிற ஒளிசுடர்ந்த குண்டலங்களைக் கண்டேன் மாயை.” சட்டென்று மாயையின் உடல் சிலிர்த்தது. கதைகளில் கேட்டது. அப்படி நிகழக்கூடுமா என்ன? ஆனால் அந்த மாயங்களுடன் வருபவர்கள் கந்தர்வர்கள் அல்லவா? குளிர்ந்தபோதுதான் அக்கணங்களுக்குள்ளேயே உடல் வியர்த்திருந்ததை அவள் அறிந்தாள். “நீ பார்க்கவேயில்லையா?” என்றாள் திரௌபதி. “இல்லை இளவரசி... அதை தாங்கள் மட்டுமே கண்டிருக்கிறீர்கள்... தங்கள் உளமயக்காக இருக்கலாம்.”

திரௌபதி இதழ்களின் இருபக்கமும் சிறிய மடிப்புகள் விழ வெண்பற்களின் கீழ்நுனி ஒளியுடன் தெரிய புன்னகை செய்தாள். அவள் குழல் திருத்தித் திரும்பியபோது அவள் கழுத்து மிகமென்மையாக சொடுக்கி அசைந்தது. பெண்ணின் உள்ள எழுச்சியை வெளிப்படுத்தும் அசைவு அது என மாயை அறிந்திருந்தாள். அவள் கரியகன்னங்களில் கழுத்தில் வெம்மை ஏறிக் கனல்கொண்டதுபோல தெரிந்தது. மூச்சில் முலைக்குவைகள் சற்றே அசைய மேலுதட்டை இழுத்து பற்களால் கடித்து “ஆம்” என்றாள்.

பிருஷதி முன்னால் சென்று நின்று திரும்பி நோக்க திரௌபதி இயல்பாக முன்னால் சென்றாள். மாயை பின்னால் நடந்தபடி “ஒருவேளை அவர் தென்னகத்தில் மாயங்கள் கற்றிருக்கலாம். அங்கே உளமயக்கும் விழிமயக்கும் காலமயக்கும் கற்பிக்கும் பெருமாயர் உள்ளனர் என்று நூல்களில் அறிந்திருக்கிறேன்...” என்றாள். திரௌபதி திரும்பாமலேயே புன்னகை செய்தாள். “உண்மை இளவரசி. அவர் ஏதோ மாயம் செய்திருக்கிறார்” என்றாள் மாயை.

திரௌபதி வாய்விட்டு நகைத்தபடி திரும்பி “ஆம், அவர் செய்த மாயம்தான்... நானறிவேன்” என்றாள். அச்சிரிப்புடன் அவள் திரும்பியபோது எதிரே நான்கு பரத்தையர் நடுவே கையில் மலர்க்கூடையுடன் படியேறி வந்த கரிய உருவம் கொண்ட அந்தண இளைஞன் அவள் முகத்தைக் கண்டு விழிமலைத்து அசையாமல் நின்றுவிட்டான். அவள் அவனை நோக்கியபடி படிகளில் இறங்க மாயை அவனையே திகைப்புடன் நோக்கினாள்.

இளவரசியை அப்படி விழிமூடாமல் நேர்நோக்கு கொள்வது பெருங்குற்றச்செயல் என்று அறிந்த இளம்பரத்தை அதை அவன் அறிந்திருக்கவில்லை என்பதை கவனித்து படியில் இறங்கி வந்து அவன் தோளைத்தொட்டு மிரண்ட விழிகளுடன் மேலே செல்லலாம் என்றாள். அவன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் விழிகள் திரௌபதியில் நிலைத்திருக்க இதழ்களில் ஒரு சொல் உறைந்து நின்றது.

பிருஷதியின் முன்னால் சென்ற ஆலயத்தின் ஸ்தானிகராகிய அந்தணன் திரும்பி நோக்கி அவனருகே ஓடிச்சென்று சினத்துடன் கையில் இருந்த வெள்ளிப்பூணிட்ட பெருந்தடியை ஓங்கி “விலகிச்செல் மூடா” என்று கூவி அடிக்கமுனைந்த கணம் அவன் பாம்புப் படம்போல தலை திருப்பி நோக்கினான். அந்தத் தடி சுழன்று எழுந்தபோது ஒருகணம் கூட அவன் உடல் அனிச்சையாக அச்சம் கொள்ளவில்லை. பதறி விலகவும் இல்லை. அவன் விழிகள் மட்டுமே அதை எதிர்கொண்டன. அவ்விழிகளைக் கண்டதும் ஸ்தானிகர் கையிலிருந்த தடி தாழ்ந்தது.

அவன் விலகிக்கொள்ள திரௌபதி அவனை விழிதூக்கி நோக்கியபடி கடந்து சென்றாள். கையில் மலர்க்கூடையுடன் அவன் அவளை இறுதிப்படி வரை திரும்பி நோக்கினான். தடியுடன் ஸ்தானிகர் அவளை நோக்கி ஓடிவந்து “பித்தன்போலிருக்கிறான் இளவரசி... விழிகளை நோக்கினால் தெரிகிறது... பொறுத்தருளவேண்டும்” என்றார். திரௌபதி தன் தேர் அருகே நின்று மீண்டும் திரும்பி அவனை நோக்கினாள். அவன் அங்கேயே படிக்கட்டின் நடுவே நின்று அவளை நோக்கிக்கொண்டிருந்தான். இரு பரத்தையர் அவனருகே வந்து அவன் கைகளைப்பற்றி மேலே அழைத்தனர்.

“அவனை தண்டிக்கிறோம் அரசி” என்றார் ஸ்தானிகர். “இப்போதே காவலர்களை வரவழைத்து... அடேய்!” என திரும்பிய அவரை அவள் மெல்லிய குரலால் தடுத்தாள். “வேண்டாம்...” என்றாள். அவர் “இளவரசி...” என்று தவிக்க “அவரை நீங்கள் தண்டிக்க முடியாது...” என்றபின் தேரில் ஏறிக்கொண்டாள். மாயை ஒருமுறை திரும்பிப்பார்த்தபின் தானும் தேரில் ஏறிக்கொண்டாள். திரௌபதி மான்தோல் இருக்கையில் அமர்ந்துகொண்டு திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே நோக்கிக்கொண்டு வந்தாள்.

அவள் முகத்தை மாயை நேராகவே நோக்கினாள். விழிகள் சுடர, முகமெங்கும் செம்மை ஓட திரௌபதி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். மாயைக்கு மீண்டும் அச்சம் வயிற்றை குளிரச்செய்தது. “இளவரசி, உண்மையிலேயே தாங்கள் அவர் நெஞ்சில் மணிக்கவசத்தை பார்த்தீர்கள் என்றால் அது மாயம்தான்... நாம் சென்றதுமே நிமித்திகரை வரவழைத்து...” என்றதும் திரௌபதி திரும்பி நோக்கி “தேவையில்லை மாயை. அது என் கற்பனை என்று சொன்னேன் அல்லவா?” என்றாள்.

“அந்தக்கற்பனை தங்கள் உள்ளத்தில் எப்படி வந்தது? அதைத்தான் பார்க்கவேண்டும். இளவரசி, தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்று பாடாத சூதர் இல்லை. ஆரியவர்த்தத்தின் பேரரசர்கள் அனைவரும் அதற்காகவே வந்திருக்கிறார்கள். நாளை தாங்கள் எடுக்கப்போகும் முடிவின் அடிப்படையிலேயே தேசங்களின் எதிர்காலங்கள் முடிவாகப்போகின்றன. இந்நிலையில் தங்கள் உள்ளம் தெளிவாக இருக்கவேண்டும். அதை ஒருவர் மாயமாக கவர முடியும் என்றால்...”

அவள் பேசுவதை திரௌபதி அறிந்தது போலவே தெரியவில்லை. “கர்ணன் சூதர்குலத்தவர். அங்கநாட்டு மணிமுடியைச் சூடினாலும் இன்னமும் ஷத்ரியர்களால் ஏற்கப்படாதவர். அவருக்கு ஆரியவர்த்தத்தை வென்று பேரரசை அமைக்கும் கனவு இருக்கலாம். அதன்பொருட்டே அவர் வந்திருக்கிறார். அஸ்தினபுரியின் இளவரசர் மூடர். கர்ணன் அவருக்கு துணையாக வரவில்லை என்றுகூட அறியாதவர்” என்றாள் மாயை. “நான் சொல்வதை கேளுங்கள் இளவரசி... நாம் இதை இப்படி விடக்கூடாது.”

திரௌபதி புன்னகையுடன் திரும்பி “நாளை மணத்தன்னேற்பில் இளையபாண்டவர் அர்ஜுனனை இவர் வெல்லக்கூடுமா?” என்றாள். மாயை சற்று திகைத்து “இளையபாண்டவரா? அவர்கள் எரிபட்டார்களே” என்றாள். “இல்லை. அவர்கள் உயிருடனிருக்கிறார்கள் என்று ஒற்றர் செய்திவந்தது. ஏகசக்ரநகரியில் பகன் கொல்லப்பட்டான் என்று தெரிந்ததுமே தந்தை சொல்லிவிட்டார். இளையபாண்டவராகிய பீமசேனர் உயிருடனிருக்கிறார் என்று. அவர்கள் கங்கைக்கரையில் இடும்பவனத்தில் இருந்ததாக பின்னர் செய்திவந்தது. ஏழாண்டுகளுக்குப்பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள் என்றால் அது இங்கே மணத்தன்னேற்பு நிகழ்வுக்காகவே!”

மாயை ”ஆனால் அவர்கள் இங்கு வந்ததாக எவரும் சொல்லவில்லையே” என்றாள். “வந்துவிட்டார்கள்” என்றாள் திரௌபதி. அவள் விழிகளைக் கண்டதுமே மாயை புரிந்துகொண்டு திகைப்புடன் தேரின் திரைச்சீலையை பிடித்துக்கொண்டு “அவரா?” என்றாள். திரௌபதி மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆம்” என்றாள். மாயை பெருமூச்சுடன் தளர்ந்து இருக்கையில் அமர்ந்துவிட்டாள். ”என்ன?” என்றாள் திரௌபதி? “அனைத்தும் ஏதோ கூத்து போலிருக்கின்றன இளவரசி. அவர் ஏன் அந்தணராக வரவேண்டும்?”

“அவர்களில் மூத்தவருக்கு அந்தணர் வேடமன்றி பிற ஏதும் பொருந்தாது என்கிறார்கள்” என்று திரௌபதி சிரித்தாள். ”சொல், அர்ஜுனனும் கர்ணனும் மணநிகழ்வில் வில்லேந்தினால் எவர் வெல்வார்?” மாயை “அதை எப்படி சொல்லமுடியும் இளவரசி?” என்றாள். "எவர் வென்றாலும் அதை ஷத்ரியர் ஏற்கமாட்டார்கள். நாளை மணமண்டபத்தில் குருதி விழுவது உறுதி.” திரௌபதி சிரித்து “ஆம், குருதி விழாமல் விழா முடிந்தால் அதிலென்ன சிறப்பு?” என்றாள்.

அவளை அணுகிச்செல்லும்போது ஓர் இடத்தில் எப்போதும் அடையும் அச்சத்தை மாயை அடைந்தாள். அவள் பெண்ணல்ல, பெண்ணுருக்கொண்டு தீயில் எழுந்த கொற்றவை என்று சூதர்கள் பாடுவது உண்மை என்று தோன்றும் கணம் அது. அவள் பார்வையை விலக்கிக்கொண்டு திரைச்சீலையின் அலையடிப்பை நோக்கிக்கொண்டிருந்தாள். வெளியே நகரத்தின் ஓசைகள் கேட்டன. சகட ஒலி. வணிகக்கூச்சல்கள். வாழ்த்தொலிகள்.

”இருவரையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன் மாயை” என்றாள் திரௌபதி. “ஒருவர் இவ்வுலகை நோக்கி கொடுத்துக்கொண்டே இருப்பவர். ஒருவர் அனைத்தையும் அள்ளி எடுத்துக்கொண்டே இருப்பவர். கர்ணனிடம் இனிய தயக்கம் ஒன்றிருக்கிறது. அவர் விழிகளில் தெரிந்த நாணம் அழகானது. அவரது தயக்கம் என்னுள் ஓர் அன்னையை எழுப்புகிறது. அத்துடன்...” திரௌபதி கண்களில் நாணம் சிவக்க சிரித்து “அவர் கண்களில் தெரியும் ஒன்று உண்டு. அவர் இதுவரை பெண்ணை அறிந்ததில்லை” என்றாள்.

மாயையும் சிரித்துவிட்டாள். “ஆம், அதை அறிவது மிக எளிது” என்றாள். “ஆனால் இவர் பெண்களில் திளைப்பவர். அவருடன் வந்த பரத்தையரின் உடல்களிலேயே அது தெரிந்தது. அத்தனைபேரும் விழையும் காதலன்.” மாயை ஒரு கணம் திரௌபதியை நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டாள். “கோட்டைக் கதவுகளை உடைத்து உட்புகுந்து வெல்பவர்... மாயை, உண்மையைச் சொல். பெண்பித்தர்களை விரும்பாத பெண் உண்டா இவ்வுலகில்?”

“இளவரசி, என்ன பேச்சு இது?” என்றாள் மாயை சினத்தில் முகம் சிவக்க. “உண்மையைச் சொல்” என்றாள் திரௌபதி சிரித்துக்கொண்டே அவள் கையைப்பிடித்து. “நான் சொல்லப்போவதில்லை” என்றாள் மாயை. “நீ அவனைப் பார்த்தாய். உன் காமம் அவனை அறிந்தது. ஆகவேதான் நான் சொல்லாமலேயே நான் அவனைக் குறிப்பிடுவதை உணர்ந்தாய்!” மாயை நுண்ணிதாக நிலையழிய அவள் உடலில் அவ்வசைவு வெளிப்பட்டது.

திரௌபதி “சொல்” என்று சொன்னபோது அவள் குரல் மாறியிருந்தது. மாயை திடுக்கிட்டு அவள் முகத்தைப்பார்த்தாள். அங்கே ஆணையிடும் அரசியைக் கண்டு தலைதாழ்த்தி மிக மெல்லியகுரலில் “ஆம், பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள்.

“ஏன்?" என்றாள் திரௌபதி அதே கூர்குரலில். “ஏனென்றால்...” என்று மாயை இழுத்தபின் “அத்தனை பெண்களும் அவனை பார்க்கிறார்கள். எதனால் அவனுக்கு அத்தனை பெண் என்று அகம் வினவுகிறது. அதை அறியாமல் அகம் அடங்காது. ஆகவே நாம் அவனை பார்க்கிறோம்.”

மாயை மூச்சிரைக்க “அதோடு, அவன் எப்போதுமே காமத்தை நினைவுபடுத்துகிறான். அவன் அதுவன்றி வேறல்ல. அவனைப் பார்க்கையிலேயே உள்ளம் கிளர்கிறது” என்றாள். திரௌபதி மீண்டும் புன்னகை செய்து “ஆம்” என்றாள். “அத்துடன் இன்னொன்றும் உள்ளது. அத்தனை பெண்ணைக் கண்டவனுக்கு தான் மட்டும் மிகமிகத் தனித்தவள், அவன் வேறெங்கும் அடையமுடியாதவள் என ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள்.”

மாயை முலைகள் விம்மி அமைய பெருமூச்சு விட்டு கன்னக்குழலை விரல்நுனியால் ஒதுக்கி கழுத்தை வருடி வளை ஒலிக்க கைதாழ்த்தி மெல்ல உடல் ஒசிந்து விழிதிருப்பி “நாம் வேறெதையாவது பேசுவோமே இளவரசி” என்றாள். அவளை கூர்ந்து நோக்கி தனிக்குரலில் “எதை அஞ்சுகிறாய்?" என்று திரௌபதி கேட்டாள். மாயை ஒருகணம் அவளை நோக்கி பின் பார்வையை விலக்கிக்கொண்டு தன் கையைப்பார்த்தாள். அது திரைச்சீலையை கசக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பிடியை விட்டு மடியில் கைகோர்த்து வைத்து சற்று முன்னால் குனிந்தாள்.

”நான் உண்மையிலேயே அவனுக்கு அரியவள் அல்லவா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள் திரௌபதி. திடுக்கிட்டு திரும்பி நோக்கிய மாயை “இளவரசி... தாங்கள்...” என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்திக்கொண்டாள். அவள் அறிந்த திரௌபதி முழுமையாகவே மாறிவிட்டிருந்ததை கண்டாள். அவள் உடலுக்குள் பிறிதொருத்தி குடியேறியிருந்தது போல. ஆலயங்களில் வாழும் அணங்கு அவளில் நுழைந்திருக்குமோ என்று மாயை ஒரு கணம் எண்ணிக்கொண்டாள்.

“சொல், நீ கேட்க வந்தது என்ன?” என்று திரௌபதி கேட்டாள். “ஒன்றுமில்லை இளவரசி” என்றாள் மாயை. திரௌபதி அவள் விழிகளுக்குள் நோக்கி “கர்ணனைக் கண்டதும் நான் காதல்கொண்ட பேதையானேன் என்று எண்ணியாய் அல்லவா?” என்றாள். மாயை “இல்லை இளவரசி...” என்றபின் தலைதூக்கி அவள் விழிகளை சந்தித்து “ஆம், அப்போது அப்படி தோன்றியது” என்றாள். இமைசரித்து குரல் தழைய “நான் அதை விழைந்தேன் இளவரசி” என்றாள்.

“அது உண்மைதான்” என்றாள் திரௌபதி. மாயை முகம் மலர்ந்து மெல்லிய துள்ளல் உடலில் நிகழ தலைதூக்கி “காதல்கொள்வது இனியது இளவரசி. மானுடர் மேலும் கீழும் பதினான்கு உலகங்களின் வாழ்க்கையையும் மண்ணிலேயே வாழ்கிறார்கள் என்கின்றனர் சூதர். காதல்கொண்டவர்கள் விண்ணுக்கு மேல் கந்தர்வர்களின் உலகில் வாழ்கிறார்கள்” என்றாள். திரௌபதி “ஆம், அதை உணர்கிறேன். இனிய இசை முடிந்தபின் சிலகணங்கள் நீளும் மீட்டலாக உள்ளம் மாறிவிட்டதுபோலிருக்கிறது” என்றாள்.

“அதை கந்தர்வர்களின் இசை என்பார்கள்... அகம் மட்டுமே கேட்கும் இசை அது.” திரௌபதி புன்னகைகொண்டு “கர்ணன் இனிய காதலன் மாயை. பேரழகன். நிமிர்வும் தருக்கும் கொண்டவன். கூடவே நாணமும் தயக்கமும் நிறைந்தவன். அவன் உடல் என்னைக் கண்ட கணம் முதல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என்னை அவன் விழிகள் வழிபட்டன. என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் அவன் பேரழகை காண்பான். என் கால்கள் தொட்ட மண்ணையே தூயது என எண்ணுவான்” என்றாள்.

பின்னர் சிரித்து “பாவம், என் பின்னால் வந்து இவ்வாலயத்திற்குள் நுழையக்கூட அந்த ஆண்மகனால் முடியவில்லை. ஆண்மை திரண்டவன் நாணம் கொள்வதைப்போல மகளிர் விரும்புவது வேறில்லை. எப்பெண்ணும் விழையும் முழுமையான காதலன் அவனே” என்றாள்.

மாயை மலர்ந்த முகத்துடன் “ஆம், இளவரசி” என்றாள். “அங்கே நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது நீங்கள் இருவரும் ஒன்றின் இருபாதிகள் என. முழுமையான இணை என்பது அரிதாகவே மண்ணில் நிகழ்கிறது.” திரௌபதியின் கண்களில் சிரிப்பு மேலும் முனைகொள்ள, முகம் சற்று இறுகியது. “ஆனால் என் அந்தப்புரத்திற்கு நள்ளிரவில் வரச்சொல்வதென்றால் அர்ஜுனனையே தேர்ந்தெடுப்பேன். அச்சமும் நாணமும் அற்றவன். தயக்கங்களின்றி என்னை கையகப்படுத்தக்கூடியவன். இருள் வழியாக வந்து உள்ளங்களுக்குள் நுழையும் இந்திரன்” என்றாள்.

“இளவரசி!” என்று தவிப்புடன் சொல்லி இருகைகளையும் இறுக்கி தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டாள் மாயை. “அப்படியும் ஓர் ஆண்மகன் தேவைதானே மாயை? அவனுக்கு நான் ஒரு பொருட்டே அல்ல. வெறும் உடலென்பதற்கு அப்பால் என்னை அவன் பொருட்படுத்தவே போவதில்லை. என் அகம் அவனுக்கு தெரியவே போவதில்லை.” கனன்ற முகத்துடன் மாயையை நோக்கியபடி திரௌபதி சொன்னாள் “வெறும் உடலாக பெண்ணை எண்ணுபவன் அல்லவா உண்மையான காமத்தை அவளுக்குக் காட்டமுடியும்?”

“என்ன சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை இளவரசி” என்று சற்று தழுதழுத்த குரலில் மாயை சொன்னாள். “காமமும் காதலும் போரிடட்டும். வெல்வது எதுவென்று பார்ப்போம்” என்றபடி திரௌபதி சாய்ந்து அமர்ந்து தன் தொடைகள் மேல் கைகளை நீட்டிக்கொண்டாள். பின்னர் தனக்குள் என மெல்ல சிரித்து “இரண்டும் வெல்லமுடியும் என்றால் நன்று” என்றாள்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 6

சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு முன்னால் சென்றாள்.

ஆலயத்தின் வலப்பக்க தேர்முற்றத்தில் அரசரதம் கிடந்தது. அதனருகே நின்ற காவலரைக் கண்டதும் அது துருபதனுக்குரியது என மாயை உணர்ந்தாள். அவள் அதை எண்ணியதுமே திரௌபதியின் வளையலோசை கேட்க, அவளும் அதை கண்டுவிட்டாளென்று தெரிந்துகொண்டாள். அவர்கள் படிகளில் ஏறியதும் உள்ளிருந்து ஸ்தானிகர்கள் இருவர் தொடர அமைச்சர் கருணர் அவர்களை நோக்கி ஓடிவந்தார். மேலெழுந்த பெரிய வெண்நெற்றியில் வியர்வை ஊறி ஊர்த்துவதிலகம் கசிந்து மூக்கில் வழிந்து குருதித்துளியாக நின்றது. முகமன் சொல்லி வாழ்த்தியபடியே கைகூப்பி நின்றார்.

மாயை அவரைக் கடந்து சென்று பின்னால் திரும்பாமல் நின்றாள். கருணர் பிருஷதியிடமும் திரௌபதியிடமும் முறைமைசார்ந்த வரவேற்புச்சொற்களை சொன்னபின்னர் “அரசர் வந்து இரண்டுநாழிகையாகிறது. நீங்கள் வரவில்லையா என்று வினவினார்” என்றார். பிருஷதி அவர்கள் கிளம்ப சற்று நேரமாகியது என்றாள். “அத்தனை பாஞ்சாலமக்களும் ரதவீதிகளில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்றாள். “ஆம் அரசி. என்ன செய்ய முடியும் அதற்கு? இது அவர்கள் வாழ்க்கையின் பெருநிகழ்வு அல்லவா?” என்றார் கருணர். “மேலும் நூற்றெட்டு நாடுகளின் ஷத்ரியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் அரசப்படையினர் காம்பில்யத்தின் விழாக்கோலம் காண தெருக்களில் நிறைந்திருக்கிறார்கள்.”

அவர்கள் பேசிக்கொண்டே படிகடந்ததும் கருணர் மெல்ல “தாங்கள் இங்கே துணைமண்டபத்தில் சற்று ஓய்வெடுக்கலாமே” என்றார். பிருஷதி “இல்லை, இன்னும் இரு ஆலயங்களையும் தொழுதுவிட்டால் அரண்மனைக்கு மீள்வோம். அங்கே என்னைக்காத்து ஒப்பனைச்சேடியரும் அணிவணிகரும் அமர்ந்திருக்கின்றனர். நான் சென்றுதான் முடிவெடுக்கவேண்டும்” என்றாள். அதற்குள் திரௌபதி “ஆம் அமைச்சரே, சற்று ஓய்வெடுப்போம்” என்றாள். ”எதற்கடி? இதோ, இன்னும் இரு ஆலயங்கள் மட்டும்தானே?" என்றாள் பிருஷதி. திரௌபதி அதற்கு மறுமொழி சொல்லாமல் நடக்க கருணர் வணங்கி “இவ்வழி அரசி” என்று கைகாட்டினார்.

துணைமண்டபம் ஒருபக்கம் மட்டும் திறந்த மரக் கட்டுமானம். அதற்குள் இருந்த மரத்தாலான நான்கு பீடங்களில் ஸ்தானிகர்கள் விரைவாக வெண்பட்டை விரித்துக்கொண்டிருந்தனர். இரு சேவகர் சுவர்களில் இருந்த கல்லகல்களில் நெய்விட்டு விளக்கேற்றினார்கள். கருணர் “அமர்க அரசி... தாங்கள் அருந்த சற்று இன்நீர் கொண்டு வருகிறேன்” என்றார். “தேவையில்லை...” என்று பிருஷதி சொல்ல திரௌபதி “கொண்டுவாருங்கள் அமைச்சரே” என்றாள். அவர் தலைவணங்கி திரும்பிச்செல்ல திரௌபதி சென்று ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.

பிருஷதி சலிப்புடன் அருகே அமர்ந்தபடி “எதற்கடி இங்கே? உனக்கென்ன களைப்பு? தேரில் அமர்ந்திருக்கத்தானே செய்தாய்?" என்றாள். சேவகர் தலைவணங்கி வெளியேறுவதை நோக்கியபின் திரும்பிய திரௌபதி “அங்கே அரசரும் பட்டத்தரசியும் நின்றிருக்கிறார்கள்” என்றாள். பிருஷதி புரிந்துகொண்டு மறுகணம் திரும்பி மாயையை நோக்கினாள். அவ்விழிகளை சந்திக்காமலிருக்கும் காலம் மாயைக்கு அமையவில்லை. தன் விழிகளில் அரசி எதைக் கண்டாள் என்று மாயைக்குப் புரியவில்லை. அவள் கடும் சினத்துடன் “ஏன் அரசரின் மறுபக்கம் நான் நின்றால் என்ன? நானும் பட்டத்திற்குரியவளே” என்றாள்.

திரௌபதியின் நகை ஒளிர்ந்த விழிகள் வந்து மாயையை தொட்டுச்சென்றன. மாயையின் தோள்கள் மெல்லத் தளர்ந்தன. “அன்னையே, தொல்பெருந்தாயின் ஐந்து ஆலயங்களும் ஐந்து பாஞ்சாலக்குடிகளுக்குரியவை. துர்க்கை ஆலயம் சிருஞ்சயர்களுக்கும் லட்சுமி ஆலயம் கிருவி குலத்திற்கும் சாவித்ரியின் ஆலயம் துர்வாசகுலத்திற்கும் பிருதிவி ராதையின் ஆலயம் கேசினி குலத்திற்கும் உரியது. இந்த ஆலயம் சோமக குலத்திற்குரியது... சோமககுலத்து பட்டத்தரசி அகல்யைக்கே இங்கு முதலிடம்.”

அவள் வேண்டுமென்றே அதைச் சொல்கிறாள் என்று மாயைக்கு புரிந்தது. ஆனால் பிருஷதி சினம் கொண்டு “அப்படியென்றால் அரசரை என்னுடன் மீண்டும் துர்க்கை ஆலயத்திற்கு வரச்சொல். அது எங்கள் குலத்திற்குரியது” என்றாள். திரௌபதியின் விழிகள் மாயையை வந்து தொட்டுச்சென்றன. ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்பட்ட ரசத்துளி போல அவற்றிலிருந்த சிரிப்பைக் கண்டு மாயை அணிகள் ஒலிக்க உடல் ஒசிந்து விழிவிலக்கிக் கொண்டாள். “நான் கருணரிடம் சொல்கிறேன்... இப்போதே” என்றாள் பிருஷதி.

“அன்னையே, நாம் திரும்பச்செல்லமுடியாது. அது முறைமை அல்ல” என்றாள் திரௌபதி. பிருஷதி தளர்ந்து “அப்படியென்றால் இதை வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள்... யார் செய்தது?” என்றபின் விம்மல் கலந்த குரலில் “வேறுயார் அவள் மைந்தன் அல்லவா இப்போது பட்டத்து இளவரசன்? இந்த முதியவர் அந்தப்புரத்தை விட்டு நீங்குவதே இல்லை. சென்ற பலவருடங்களாக இங்கே அவன் கோல் அல்லவா திகழ்கிறது. எனக்கு நிகழும் அவமதிப்புகள் ஒவ்வொரு நாளும் ஏறித்தான் வருகின்றன” என்றாள். கைவளை ஒலிக்க உச் என ஒலியெழுப்பி மேலாடையை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டாள்.

“அன்னையே, முற்காலத்தில் பாஞ்சாலத்தை அன்னை அரசியர் ஆண்டதாக சொல்கிறார்களே?” என்றாள் திரௌபதி. பிருஷதி முகம் மலர்ந்து “ஆம், அதெல்லாம் கதைகள். இளவயதில் என் மூதன்னை என்னை மடியில் அமரச்செய்து அக்கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பாஞ்சாலத்தின் அரசகுலம் பிறந்தது மாமன்னர் புருவின் குருதியில் இருந்து. அதற்கு முன்பு பாஞ்சாலத்தை ஆண்டவர்கள் மூதன்னையர். அன்னையரின் அவை ஒன்றுக்குத்தான் முழு மண்ணுரிமை. அவர்களில் மூத்தவரை அவை தங்கள் தலைவியாக தேர்ந்தெடுக்கும். அவளே அரசி. ஆண்களெல்லாம் அன்னையருக்கு மைந்தர்களாகி சொல்பணிந்து நடந்தனர்” என்றாள்.

“அன்று இங்கே போர்கள் இல்லை. எவரும் மேல்கீழ் என்றில்லை. முற்றறம் திகழ்ந்தது என்கிறார்கள். அரசாளும் மூதன்னை ஒவ்வொருநாளும் புலர்காலையில் கங்கைக்கரைக்குச் சென்று கை நீட்டி அன்னையே, இங்கு அறம் திகழ்கிறதென்றால் அசைவற்று நில் என்று சொல்வாள். கங்கை குளமாகத் தேங்கி அசைவிழக்கும். அந்த நீரில் இறங்கி நீராடி மீள்வாள். அன்று இங்கே வழிபடப்பட்டவள் தெற்குத்திசையை ஆளும் உக்ரசண்டி தேவி மட்டுமே. அவள் ஆலயத்திற்குச் சென்றதும் மூதன்னை கைகாட்டும்போது காற்று நின்றுவிடும். தன் கைவிரல் நுனியால் அவள் தொட்டதும் அகநெருப்பால் சுடர் பற்றிக்கொள்ளும். அச்சுடர் ஏற்றி தேவியை வணங்கி மீள்வாள்."

“அன்னை அமர்வதற்கு கல்லால் ஆன பேரிருக்கை ஒன்று இருந்தது. அவள் ஏந்த பச்சை மரக்கிளையால் ஆன கோல். அவள் மணிமுடி ஒவ்வொருநாளும் புதுமலர்களைக் கோர்த்து அமைக்கப்படுவது. முடிசூடி கோலேந்தி பீடம் கொண்டு அவள் ஆணையிட்டால் வான் மழை இறங்கியது. மண் முப்போகம் விளைந்தது. ஐந்து பெரும்பருக்களும் அவள் ஆணைக்குக் கீழே அமைந்தன” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் “அவளுக்கு உடைவாள் இல்லை அல்லவா?” என்றாள். “ஆம், நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா? அன்னையின் சொல்லுக்கே காட்டுவிலங்கும் கடும்பகையும் அஞ்சி கட்டுப்பட்டன. பேரன்னை ஒருபோதும் படைக்கலம் தொடுவதில்லை” என்றாள் பிருஷதி.

”இறுதி அன்னையின் பெயர் கிருஷ்ணை. உக்ரசண்டிகை போன்று எரிவிழிகளும் கரிய உடலும் கொண்டவள். அவளுக்கு நூறு மைந்தர் பிறந்து அனைவரும் இறந்தனர். முலைப்பாலும் கண்ணீரும் ஒழுக அவள் மெலிந்து ஒடுங்கினாள். எஞ்சிய ஒரே மைந்தனை அவள் நெஞ்சோடு சேர்த்து வளர்த்தாள். மைந்தன்மேல் கொண்ட பேரன்பால் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள். ஒருநாள் அவன் மூதன்னையின் கல்லிருக்கையில் கோலேந்தி மணிமுடிசூடி அமர விழைந்தான். அது விலக்கப்பட்டது என்றாள் அன்னை. அவன் அவளிடம் கெஞ்சி மன்றாடினான். உணவொழிந்து ஊடினான். அன்னை அகம் இரங்கி அவ்வாறே ஆகட்டும் என்றாள்.”

“அதன்படி ஒருநாள் இரவில் எவரும் அறியாது அவன் அன்னையின் கல்லிருக்கையில் அமர்ந்து முடிசூடி கோலேந்தினான். அப்போது விண்ணில் மேல்திசையில் இடியோசையுடன் பெருமின்னல் எழுந்தது. இந்திரனின் வீரியம் மென்மழையாக அவன் மேல் பொழிந்தது. விண்ணவர்க்கரசன் அவனை மன்னனாக ஏற்றுக்கொண்டான். அதன்பின் அன்னை அவ்வரியணையில் அமர்ந்தால் மேகங்கள் விலகிச்சென்றன. மைந்தன் கோலேந்தினால் மட்டுமே மழை விழுந்தது. ஐந்து குலமும் கூடி நிமித்திகரை அழைத்து நெறி தேர்ந்தபின்னர் அன்னையின் மைந்தனையே அரசனாக ஆக்கின. பாஞ்சாலத்தை ஆண்ட அன்னையரின் ஆட்சி முடிந்தது” பிருஷதி சொன்னாள்.

மாயை திரௌபதியையே நோக்கிக்கொண்டிருந்தாள். பாஞ்சாலத்துப் பெண்களெல்லாம் பலமுறை கேட்ட கதையை ஏன் மீண்டும் அன்னையைக்கொண்டு சொல்லவைக்கிறாள் என்று எண்ணியபோதே திரௌபதியின் விழிகள் அவள் விழிகளை மீண்டும் வந்து தொட்டுச்சென்றன. எளிய அன்னையரைப்போல நூறுமுறை சொன்ன கதையையே மீண்டும் முழு ஈடுபாட்டுடன் சொல்லவும் அவ்வுணர்ச்சிகளில் முழுமையாக மூழ்கவும் பிருஷதியால் முடிந்தது. அவள் துயர் நிறைந்த பெருமூச்சுடன் “மைந்தரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் அன்னையர்” என்றபின் விழிகளை துடைத்துக்கொண்டாள்.

“இல்லை இந்திரனிடமா?” என்றாள் திரௌபதி. ”இந்திரன் என்னடி செய்வான்? அரியணையில் அமரச்செய்தவள் அன்னை அல்லவா?" என்றாள் பிருஷதி. மாயை உதடுகளைக் கடித்து சிரிப்பை அடக்கி வேறுபக்கம் நோக்கினாள். “அன்னையே, அன்றெல்லாம் மூதன்னையர் ஐந்து குலங்களில் இருந்தும் ஐந்து கணவர்களைக் கொள்ளும் வழக்கமிருந்தது அல்லவா?” என்றாள் திரௌபதி. மாயை அறியாமல் விழிதிருப்பி திரௌபதியை நோக்கி உடனே விலக்கிக்கொண்டாள். அவள் அதைச் சொல்லவைத்தது அதற்காகத்தான் என்று புரிந்துகொண்டாள்.

பிருஷதி கண்களைச் சுருக்கி நோக்கி “அதில் ஏளனத்திற்கு என்ன இருக்கிறது? பாஞ்சாலப் பெருங்குடிகளில் அன்றும் இன்றும் அன்னையர் பல கணவர்களைக் கொள்ளும் வழக்கம் உண்டு. வடக்கே ஹிமவானின் மடி முழுக்க இவ்வழக்கம்தான். பால்ஹிக, திரிகர்த்த, லோமச, கின்னர, குலிந்த, உசிநார, பாஞ்சாலம் என்று ஏழு அன்னையர்நாடுகளை சொல்வார்கள். இங்கெல்லாம் குடியும் குலமும் அன்னையரால்தான் அமைக்கப்பட்டன. தெய்வங்கள் அன்னையரால் ஊட்டப்பட்டன. மைந்தர் அன்னையரின் அடையாளத்தையே கொண்டனர். அன்னையரெல்லாம் அரசியராகவே அறியப்பட்டனர். ஒவ்வொருகுடியிலும் ஒன்றுக்குமேற்பட்ட தந்தையர் இருந்தனர்” என்றாள் பிருஷதி.

“நம்குடியில் அப்படி இருந்ததா?" என்றாள் திரௌபதி. பிருஷதி “ ஏன்? என் மூதன்னைக்கே நான்கு கணவர்கள் இருந்தனர். நான் இளமையில் மூன்று கணவர்களுடன் மூதன்னை தன் மலையடிவாரத்து கான்வீட்டில் வாழ்வதை கண்டிருக்கிறேன்... இன்று பால்ஹிகர்களும் திரிகர்த்தர்களும் அன்னைவழி ஆட்சிமுறைமையை விட்டுவிட்டார்கள். ஆனால் உசிநாரர்களிடமும் குலிந்தர்களிடமும் அவ்வழக்கம் சிறுகுலங்களில் நீடிக்கிறது. கின்னரர்களிலும் லோமசர்களிலும் அரியணை அமர்பவளும் அன்னையே. நம் குடிகளில் கூட சத்ராவதிக்கு வடக்கே உசிநாரபூமியின் எல்லைகளில் வாழும் கிருவிகளிலும் துர்வாசர்களிலும் பலகணவர்களை மணந்த பலநூறு அன்னையர் உள்ளனர்” என்றாள் பிருஷதி. “இப்போதுதான் எல்லா பெண்களும் தங்களை நேரடி ஷத்ரிய குலம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் சொல்லிக்கொள்ள நாணுகிறார்கள்.”

திரௌபதி நாக்கால் கன்னத்தை உள்ளிருந்து உப்பச்செய்து உதட்டைக் குவித்து மாயையை நோக்கி புருவம் தூக்கி “இப்போது என்னடி சொல்கிறாய்?" என்றாள். பிருஷதி திரும்பி மாயையை நோக்கியபின் “என்ன?" என்றாள். “எனக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்கள் வேண்டும் என்றேன். பதறுகிறாள்” என்றாள் திரௌபதி. பிருஷதி அந்தக்கேலியை புரிந்துகொள்ளாமல் “அவ்வழக்கம்தான் இன்று இல்லையே. இன்று நாமும் கங்காவர்த்தத்தின் பிற ஷத்ரியர்களைப்போல அரசனுக்கு அடங்கி அந்தப்புரங்களில் வாழ்கிறோம்” என்றாள்.

“அதைத்தான் நான் பேசிக்கொண்டு வந்தேன் அன்னையே. இந்த மணத்தன்னேற்பில் நான் ஏன் ஒருவரை மட்டும் தெரிவுசெய்யவேண்டும்? ஏன் என் மூதன்னையைப்போல ஐந்துபேரை தேர்வு செய்யக்கூடாது? இதோ இந்த ஐந்து ஆலயங்களிலும் ஆலயத்திற்கு ஒரு கணவன் எனக்காக நின்றிருந்தால் நம் குலத்திற்கே அது சிறப்பல்லவா?” மாயை சிரிப்பை அடக்கி மேலும் பின்னகர்ந்தாள். பிருஷதி அந்த எள்ளலையும் புரிந்துகொள்ளாமல் “ஆனால் நாளை வில்வித்தை அல்லவா ஒருங்கமைத்திருக்கிறார்கள்? அஸ்தினபுரியின் பார்த்தன் வந்து அதை வென்று உன்னை மணம் செய்துகொள்ளவேண்டுமென்றல்லவா உன் தந்தை எண்ணுகிறார்?" என்றாள்.

“ஆம். ஆனால் அவன் தோள்கள் சிறியவை அல்லவா? பெருந்தோள் கொண்ட வீரனை நான் விழையலாகாதா?" என்றாள் திரௌபதி. “அய்யோடி, உன் விருப்பத்தை முன்னரே சொல்லியிருக்கலாமே? நான் வேண்டுமென்றால் தந்தையிடம் சொல்லி போட்டியை மாற்றச் சொல்கிறேன். கதாயுத்தம் வைப்போம். பீமனோ துரியோதனனோ ஜராசந்தனோ அதில் வெல்வார்கள்” என்றாள் பிருஷதி. “அப்படியென்றால் நான் அர்ஜுனனை நோக்கி காதல் கொள்வேனே? விழிகூர்ந்த வில்லவனையும் எனக்குப் பிடித்திருக்கிறதே?"

பிருஷதி சினத்துடன் “என்னடி சொல்கிறாய்? விளையாடுகிறாயா என்ன?” என்றாள். ”அன்னையே, உங்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒற்றைத்திறன் மட்டும் கொண்ட பெண்ணா என்ன? வீரர்களை எனக்கு கண்டடைகிறீர்கள். ஆனால் என் அகம் முழுக்க நிறைந்திருப்பவை அரசுசூழ்நெறிகளும் அறநூல்களும் அல்லவா? என்னுடன் நூலுரைத்து அமர்ந்திருக்காத ஒரு வீரனை நான் எப்படி பகலில் பொறுத்துக்கொள்ள முடியும்?” பிருஷதி வாய் சற்று திறந்திருக்க சிலகணங்கள் மகளை நோக்கிவிட்டு திரும்பி மாயையை அனிச்சையாக நோக்கி உடனே கடும் சினம் கொண்டு “வாயை மூடு... என்ன பேச்சு இது? ஷத்ரியர் காதில் விழுந்தால் உன்னை பரத்தை என்பார்கள்” என்றாள்.

“அன்னையே, பரத்தையரைக் கண்டு பொறாமை கொள்கிறேன்.” பிருஷதி பதறிப்போய் மீண்டும் மாயையை நோக்கிவிட்டு “என்னடி சொல்கிறாய்?" என்றாள். “ஆணை அறியத் துடிக்காத பெண் உண்டா? அவர்களல்லவா ஆணை அணுகி உள்ளும் புறமும் அறிகிறார்கள். அத்தனை வகை ஆண்களையும் அறிகிறார்கள்?” பிருஷதி சினத்துடன் கையை வீசி எழுந்துகொண்டு “நீ என்னை சீண்டுகிறாய்... என்னைப்பார்த்தாலே உனக்கு இப்போதெல்லாம் ஏளனம்தான்...” என்றாள். திரௌபதியும் சிரித்தபடி எழுந்துகொண்டு “உங்களை சினம் கொள்ளவைக்கவே கேட்டேன்... விளையாட்டுக்கு” என்றாள். “இதிலெல்லாமா விளையாடுவது?” என்றாள் பிருஷதி. திரும்பி மாயையை நோக்கி “என்னடி சிரிப்பு? வெளியே சென்று அரசர் வழிபட்டுவிட்டாரா என்று பார்” என்று சீறினாள்.

மாயை வெளியே சென்றபோது கருணர் ஓடிவந்து “அரசர் இளைய அரசியை அழைத்தார். அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். மாயை உள்ளே சென்று வணங்கி “அரசர் பார்க்கவிழைகிறார்” என்றாள். பிருஷதி மேலாடையை சரிசெய்து “அந்த பட்டத்துக்காரி சென்றுவிட்டாளா?" என்றாள். “தெரியவில்லை அரசி” என்றாள் மாயை. “சென்று பார். அவள் அருகே நின்றாள் என்றால் நான் என்ன செய்வேன் என்றே எனக்குத்தெரியாது... அவள் முகத்தைப்பார்த்தாலே...” என்றபின் திரும்பி திரௌபதியிடம் “என்ன சிரிப்பு? அவள் முகம் என்ன அரசியின் முகம் போலவா இருக்கிறது? யார் அவள்? மலையடிவாரத்தில் கொடி கொய்து கூடைசெய்துகொண்டிருந்தவள்...” என்றாள்.

அவர்கள் வெளியே வந்ததும் கருணர் வணங்க பிருஷதி “என்ன வேண்டுமாம் உங்கள் அரசருக்கு? அவளுடன் கிளம்பி அடுத்த ஆலயத்திற்குச் செல்லவேண்டியதுதானே" என்றாள். கருணர் “தங்களைப் பார்க்கவேண்டுமென அரசர் விழைகிறார் அரசி” என்றார். “என்னைத்தான் தினம் அந்தப்புரத்தில் பார்க்கிறாரே. அவையில் பார்ப்பதற்கு நான் தேவையில்லை. சோமக குலத்தின் கூடைமுடைபவள்தான் தேவை...” என்றாள். கருணரின் விழிகள் ஒருகணம் மாயையை வந்து தொட்டுச்சென்றன.

மண்டபத்தின் அருகே துருபதன் நின்றிருந்தார். அவர் அருகே சற்று கூன்விழுந்த தோள்களுடன் ஏற்றிக்கட்டிய குடுமி கொண்ட முதிரிளைஞன் ஒருவன் நின்றிருந்தான். அந்தணன் என்பது முப்பிரிநூலில் இருந்து தெரிந்தது. அரசருக்கு அப்பால் அகல்யை மேலாடையை கையில் பற்றியபடி நின்றிருக்க அவள் விழிகள் திரும்பி பிருஷதியைப் பார்ப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது. “கண்களைப்பார். கழுகின் கண்கள். எங்கிருந்தாலும் என்னை பார்த்துவிடுவாள். என் உதட்டசைவைக் கொண்டே நான் பேசுவதை கேட்டுவிடுவாள்...” என்றாள் பிருஷதி.

”அப்படியென்றால் பேசவேண்டாமே” என்றாள் திரௌபதி. ”ஏன் பேசக்கூடாது? நான் என்ன அவள் அடிமையா? என் குடிக்கும் இங்கே ஐந்தில் ஒருபங்கு இடமிருக்கிறது” என்றாள் பிருஷதி. திரௌபதி சிரித்துக்கொண்டு முன்னால் சென்றாள். முதிரிளைஞனிடம் பேசிக்கொண்டிருந்த துருபதன் திரும்பி அவள் வருவதைக் கண்டு முகமன் சொன்னார். அவள் அருகே சென்று தலைவணங்கி விலகி நின்றாள். முதிரிளைஞன் தலைவணங்கி “பாஞ்சாலத்தின் இளவரசியை வணங்குகிறேன். என்பெயர் கல்பகன். காம்போஜத்திலிருந்து இங்கே வந்திருக்கும் வைதிகன். தங்களை சந்தித்தமை என் மூதாதையர் வாழ்த்தால் நிகழ்ந்த பேறு” என்றான்.

திரௌபதியின் பார்வை அவன் விழிகளை சந்தித்தபோது அவை ஒரு கணம்கூட பதறி விலகவில்லை என்பதை மாயை கண்டாள். மிக இயல்பாக அவை திரும்பி தன் விழிகளை நோக்கி புன்னகைத்து தலைவணங்கியபோது அவளும் தலைவணங்கி புன்னகை செய்தாள். அவன் அரசரிடம் “என் போன்ற குடிகள் இளவரசியரை வெளியே விழி பார்த்துப் பேசும் வழக்கமே பிற ஷத்ரியநாடுகளில் இல்லை அரசே” என்றான். துருபதன் “ஆம், தெற்கே வங்கத்தில் அவர்கள் முகபடாமிட்டுக் கொண்டுதான் வெளியே வருகிறார்கள்” என்றார். “ஆனால், பாஞ்சாலம் என்றுமே பெண்களின் நாடு.”

“கல்பகரே, நீங்கள் வேள்விகள் செய்வதுண்டோ?” என்றாள் திரௌபதி. துருபதன் “இல்லை, இவர் நெறிநூல் அறிஞர். நான் வந்ததுமே ஸ்தானிகர் வந்து சொன்னார். காம்போஜத்தில் இருந்து நெறிநூல் முழுதறிந்த வைதிகர் ஒருவர் வந்திருக்கிறார், சிலநாட்களாக இங்கே மாலையில் அவர் நூலுரை நிகழ்த்துகிறார் என்று. பார்க்க விழைந்தேன்” என்றார். திரௌபதி அவனை நோக்கி புன்னகையுடன் “எந்த குருமரபு?” என்றாள். “தைத்ரிய ஞானமரபில் பிங்கல குருமரபு. என் ஆசிரியர் வசிஷ்டரின் வரிசையில் வந்தவர்.”

“என்னென்ன நூல்கற்றிருக்கிறீர்?” என்றாள் திரௌபதி விழிகளை விலக்காமல். அவள் விழிகளை அவ்விதம் சஞ்சலமின்றி நோக்கும் முதல் ஆண்மகன் அவன் என மாயை எண்ணிக்கொண்டாள். ”பராசர சம்ஹிதையும் வசிஷ்டநீதியும் முதன்மை நூல்கள். அரிதான பிரஹாஸ்பத்யம் உட்பட அனைத்து நூல்களையும் கற்றிருக்கிறேன். இளவரசி கனிந்தால் விரும்பிய நூலை நினைவிலிருந்தே பாடம் சொல்லவும் முடியும்.” துருபதன் “அவளுக்கும் முதன்மை ஈடுபாடு நெறிநூல்களிலேயே. துர்வாசகுருமரபில் இருந்து ஏழு ஆசிரியர்களிடம் கற்றிருக்கிறாள்” என்றார்.

திரௌபதி புன்னகைத்தபடி “நெறிகளைக் கற்கும்தோறும் மேலும் கற்கவேண்டியிருக்கிறது” என்றாள். அவன் “நெறிகற்று முழுமைகொண்ட எவரும் மண்ணில் இருக்கமுடியாது. கணந்தோறும் மாறும் இவ்வுலகுக்கு ஏற்ப நெறிகளும் மாறவேண்டியிருக்கின்றது” என்றான். “ஐயமற்ற நீதி என ஒன்றை நூல்கற்ற ஒருவர் சொல்லவே முடிவதில்லை...” என்றாள் துரௌபதி. “ஆம் இளவரசி, அதுவே நெறிநூல்களின் இயல்பு” என்றான் கல்பகன்.

“அது ஏன் என நினைக்கிறீர்கள்?” என்றாள் திரௌபதி. “இளவரசி, மானுடரை தொகுத்துப் பொதுமைப்படுத்தி அதன் வழியாகவே நீதிகளை நாம் உருவாக்குகிறோம். மானுட இயல்பையும் வாழ்க்கைத்தருணங்களையும் அவற்றின் பொதுக்கூறுகளின் அடிப்படையில் தொகுத்து மையத்தை உருவகித்து அம்மையத்தை அனைவருக்குமாக வகுத்துரைப்பதன் பெயரே நீதி” என்றான் கல்பகன். “எல்லா நீதிகளும் பொதுக்கூற்றுக்களே. அவை மனிதன் என்கின்றன, ஆண் என்கின்றன, பெண் என்கின்றன. அன்னை என்பதில்லை, மைந்தன் என்பதில்லை. எவர் குலத்தையும் பெயரையும் சொல்வதில்லை."

“பொதுமைப்படுத்தி பெறப்படும் அந்த மையப்புள்ளி என்பது ஒரு உருவகமே. நெறிவகுப்பவனின் கற்பனையில் உள்ள அம்மையத்தில் மட்டுமே எந்த நீதியும் முழுமையாக பொருள் பெறுகிறது. எனவே நீதியை நூல் சொல்லும் வரிபிறழாது நடைமுறைப்படுத்தும் அரசன் மொத்த மானுடத்தையே குற்றவாளிகளாக்கித் தண்டிக்கவேண்டியிருக்கும். மானுடவரலாற்றில் பெரும் கொடுமைகள் நீதியின் பெயரால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன” கல்பகன் தொடர்ந்தான்.

“எனவே நெறிவகுக்கும் முனிவனின் பணியும் நீதிவழங்கும் அரசனின் பணியும் முற்றிலும் எதிரெதிரானவை இளவரசி. ஒவ்வொரு வகுக்கப்பட்ட நீதியில் இருந்தும் பல்லாயிரம் விலக்குகள், பிறழ்வுகள், கழிவுகள் வழியாக ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய தனிநீதியை கண்டடைதலே அரசனின் கடமை. நெறிவகுப்பாளன் கடந்து வந்த தொலைவை முழுக்க நேர்எதிராக திரும்பிச்செல்லும் பயணம் அது. ஒவ்வொரு தனிவழக்கிலும் அது நிகழ்ந்தாகவேண்டும். அவ்விரு பயணங்களும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டிருக்கவேண்டும். அது ஓயாத பெருஞ்செயல்பாடு.”

திரௌபதியின் முகம் மாறியது “ஆம்“ என்றாள். எண்ணச்சுமையுடன் அவள் விழிகள் சரிந்தன. பின் காதணி கழுத்தில் மோத நிமிர்ந்து “கல்பகரே, இத்தனை செறிவாக எவரும் என் வினாவுக்கு இன்றுவரை விடை சொன்னதில்லை” என்றாள். “நான் இளமையில் நீதி என்பது சமரசமற்றதாகவே இருக்கமுடியும் என நம்பிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறை அவ்வாறு நீதி வழங்கியபோதும் அது சற்றுப் பிழையாகவும் இருப்பதையே கண்டேன். அப்பிழை என் தேர்ச்சிக்குறைவால் என்றெண்ணி ஒவ்வொரு தீர்ப்புக்குப்பின்னரும் கலக்கம் கொண்டேன்.” கல்பகன் “இளவரசி, மாற்றமற்ற நீதி என்பது தெய்வங்களுக்குரியது. அதன்படி தெய்வங்களை மட்டுமே விசாரணைசெய்து தண்டிக்கமுடியும்” என்றான். திரௌபதி சட்டென்று சிரித்து விட்டாள்.

“மானுடர் காமகுரோதமோகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அக்காமகுரோதமோகங்கள் கொண்ட நாம் அரியணை அமர்ந்து நீதிவழங்க முற்படுகையில் ஒவ்வொரு குற்றத்தையும் அவ்வடிப்படை இச்சைகளைக் கொண்டே புரிந்துகொள்ளவேண்டும். மாறாத நீதி என்பது கருணை அற்றது. அன்பின் விளைவாக மெல்ல கூர்மழுங்கும் நீதியையே மானுடம் கோரி நிற்கிறது. அன்பின் பொருட்டு எங்கே எவ்வண்ணம் நீதியை சமரசம் செய்துகொள்ளலாம் என்பதே அரசன் அறிந்தாகவேண்டியது.”

“அப்படியென்றால் எதற்கு இத்தனை நூல்கள்? தன் அகச்சான்றின்படி அரசன் ஆணையிடலாமே?” என்றார் துருபதன். ”அரசே, அகச்சான்று என்பது வாள். அதை நெறிநூல்களில் ஓயாது தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அதில் நம் தன்னலம் துருவாகப்படிந்துவிடும்” என்றான் கல்பகன். திரௌபதி “ஆம்... அது ஓர் அணிச்சொல். ஆனால் எனக்குள் அது பெரும் பொருள் கொள்கிறது” என்றாள்.

கருணர் அப்பால் பந்த ஒளியில் வந்து நின்றார். துருபதன் அவரை நோக்கியபின் “மீண்டும் நாம் சந்திப்போம் கல்பகரே. அரண்மனைக்கு வருக” என்றபின் தலையசைத்தார். கல்பகன் துருபதனையும் பிருஷதியையும் திரௌபதியையும் முறைப்படி வணங்கிவிட்டு மாயையை நோக்கி அன்புடன் புன்னகைத்து வணங்கி பின்னகர்ந்தான்.

திரௌபதி கருவறைக்குள் வெண்தாமரையின் ஒன்பது இதழடுக்குகளுக்கு மேல் வெள்ளைக்கலையுடுத்தி யாழ் ஏந்தி நின்றிருந்த சரஸ்வதியை நோக்கி வணங்கினாள். இடதுமேல் கையில் விழிமணிமாலையும் வலது கீழ்க்கையில் ஏடும் அமைந்திருந்தன. இருபக்கமும் நெய்விளக்குகள் அசையாச்சுடர்களுடன் நின்றிருக்க எங்கும் நோக்காத நோக்குடன் தேவி கனவில் ஆழ்ந்திருந்தாள்.

அவள் கைகூப்பி கண்மூடி ஆழ்ந்து மீண்டு திரும்புகையில் அருகே நின்றிருந்த கல்பகன் விழிகளைச் சந்தித்தாள். அவளை அதுவரை கூர்ந்து நோக்கி நின்றிருந்த அவன் அவள் நோக்கின் முன் சற்றும் நிலையழியாமல் புன்னகைத்து “தங்கள் விருப்பத்தெய்வம் சொல்மகள் என்று எண்ணுகிறேன் இளவரசி” என்றான். திரௌபதி புன்னகைத்து “இல்லை... ஐந்து தேவியர் முன்னரும் ஒன்றையே உணர்கிறேன்” என்றாள். அவன் புன்னகைசெய்தான்.

அவள் வாயில் நோக்கி நடக்கையில் துருபதன் அகல்யையை நோக்கி “அடுத்து நாம் செல்லவிருப்பது சாவித்ரி தேவியின் ஆலயம் அல்லவா?” என்றார். அவள் பிருஷதியை ஓரக்கண்ணால் பார்த்தபடி தலையசைத்தாள். “செல்வோம்” என்றார் துருபதன். அவள் பிருஷதி மேல் விழி நாட்டி தலையாட்டியபின் முன்னால் செல்ல அவளுடன் துருபதனும் நடந்தார். பிருஷதி மெல்ல ஒரு எட்டு பின்னால் வந்து திரௌபதியிடம் “அவள் பார்வை முழுக்க என்னிடமே இருந்தது... பார்த்தாயா?” என்றாள். “தங்கள் பார்வை முழுக்க அவர்கள் மேல்தான் இருந்தது அன்னையே” என்றாள் திரௌபதி. மாயை புன்னகைத்தாள்.

துருபதன் நின்று திரௌபதி அருகணைந்ததும் மெல்ல “யாரென்று தெரிகிறதா?” என்றார். திரௌபதி ஆம் எனத் தலையசைத்துப் புன்னகை செய்தாள். அப்பால் அகல்யை நின்று அவர் பிருஷதியை அணுகவே பின்னடைந்தார் என்று எண்ணி முகம் சிவந்து கழுத்தைச் சொடுக்கி மேலாடையை விரைவாக இழுத்துக்கொண்டாள். பிருஷதி அதைக்கண்டு புன்னகைத்து திரௌபதியை நோக்கி உதட்டைக் குவித்துக்கொண்டு திரும்ப திரௌபதி திரும்பி மாயையை நோக்கிப் புன்னகை செய்தாள்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 7

திரௌபதி சரஸ்வதி ஆலயத்தில் இருந்து வெளியே வந்து தேரில் ஏறிக்கொண்டதும் பின்னால் ஏறிய மாயை குனிந்து தேரோட்டியிடம் “சாவித்ரி தேவியின் ஆலயம்” என்றாள். தேர் கிளம்பியதும் திரௌபதியின் அருகே அமர்ந்து மேலாடையை சீரமைத்துக்கொண்டு வெளியே கேட்ட ஒலிகளை செவிகூர்ந்து “அவர்கள் மையத்தேர்ச்சாலையை அடைந்துவிட்டார்கள் இளவரசி” என்றாள். திரௌபதி எண்ணங்களால் எடைகொண்டவள் போல இருக்கையில் சாய்ந்து அகம் குவியா நேர்நோக்குடன் அமர்ந்திருந்தாள்.

பின்னர் கலைந்து திரும்பி நோக்கி “இவரைப்பற்றி என்ன நினைக்கிறாய் மாயை?" என்றாள். “யாரைப்பற்றி?” என்றதுமே மாயை புரிந்துகொண்டு “தூயவர்” என்றாள். “அவர் யாரென எண்ணுகிறாய்?” என்றாள் திரௌபதி. மாயை அவ்வினா வழியாகவே அதை தன்னுள் உசாவத் தலைப்பட்டு உடனே உணர்ந்துகொண்டு திகைத்து தலைதிருப்பி “அவரா?" என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “தூயவர் இளவரசி" என்றாள் மாயை. திரௌபதி “ஏன் சொல்கிறாய்?” என்றாள். “தங்களை நோக்கிய அதேவிழிகளுடன் அதே நிறைநகையுடன் என்னையும் நோக்கினார்” என்றாள் மாயை.

உடனே அவளுக்கு அச்சொற்றொடர் அமைந்தது. “அரசி, மானுடரில் உயர்வும்தாழ்வும் காணாதவர்கள்கூட பெண்களில் அழகையும் அழகின்மையையும் அளவிடாமலிருக்க முடியாது. முனிவர்கள் கூடவிதிவிலக்கல்ல தேவி. ஏனென்றால் அது மானுட ஆழத்தை ஆளும் பாதாளநாகங்களின் ஆணை. உங்களைக் காணும் விழிகள் அனைத்தும் என்னைக் கண்டு கணத்துளிநேரம் சுருங்கி பின் விரிந்து இயல்பாவதை இளமைமுதலே கண்டுவருகிறேன். நான் பெண்ணென்று வளர்ந்ததே அப்பார்வைகள் முன்னால்தான். இன்றுதான் இருவரையும் இரு ஆன்மாக்களாக மட்டுமே நோக்கும் ஓர் ஆண்மகனின் விழிகளைக் கண்டேன்.”

திரௌபதி புன்னகையுடன் திரும்பி நோக்கி “அது ஏன் என்று சொல்லவா?” என்றாள். மாயை ஏறிட்டு நோக்கினாள். “முற்றிலும் காமம் அற்ற நோக்கு அவருடையது. அது ஆண்மகனின் நோக்கே அல்ல என்று தோன்றியது எனக்கு” என்றாள் திரௌபதி. “ஆண்கள் இருவகை. பெண்ணைக்கண்டதும் தன்னை விலங்குக்கு ஒப்புக்கொடுத்து விழிகளால் உறுப்புகளை வருடுபவர்கள். அவ்விழிகளை அகத்தின் ஆயிரம் கைகளால் பற்றி அடக்கி பெண்ணின் முகத்தில் மட்டுமே நிறுத்துவதில் வெற்றிபெற்றவர்கள்.” புன்னகையுடன் இதழ்களைக் கடித்து “விழி அலைச்சல் குறைந்தவன் நிறைய பெண்களை பார்த்தவன்” என்றாள்.

மாயை தலையசைத்தாள். திரௌபதி “இவர் விழிகள் உடலையும் நோக்கின. தன்னியல்பாக வந்து நம் விழிகளில் அமைந்தன. பெண்களையே பார்க்காதவர் என்பது தெரிந்தது. ஆயினும் விழிகளில் காமம் இல்லை” என்றபின் விழிசரிய ஒரு கணம் சிந்தித்து “அப்பார்வை நம்மை ஏன் துணுக்குறச் செய்கிறது? காமம் நிறைந்த பார்வைகளை மட்டுமே கண்டு அதற்கு பழகிவிட்டிருக்கிறோமா? பிற நோக்குகளை எதிர்கொள்ள நாம் கற்றிருக்கவில்லையா?” என்றாள். புன்னகையுடன் தலைசரித்து “நான் சந்திக்கும் முதல் உடல்நோக்கா விழிகள் இவை மாயை” என்றாள்.

“ஆம், இளவரசி. என் அன்னை நோக்குவதைப்போல் உணர்ந்தேன்” என்றாள் மாயை. திரௌபதி வியந்து திரும்பியதில் குழலைக் கட்டிய மணிச்சரம் சரிந்து காதோரம் ஆடியது. “அன்னையா?” என்றாள். “ஆம், அதை நானே பலமுறை வினவிக்கொண்டேன். தந்தை அல்ல. அன்னை.” திரௌபதி தலையை அசைத்தபின் திரும்பிக்கொண்டு கையால் தேரின் திரைச்சீலையை விரித்து வெளியே நோக்கியபடி சற்று நேரம் அமர்ந்திருந்தபின் தனக்குத்தானே என “உண்மைதான்” என்றாள்.

பின்னர் திரும்பி கண்களின் கீழ் ஒரு விந்தையான சுருக்கம் விழ “அவர் தந்தை ஆண்மையற்றவர் என்கிறார்கள்” என்றாள். அவள் அகம் செல்லும் தொலைவு முழுக்க அப்பார்வையிலேயே தெரிய மாயை அமைதியாக நோக்கினாள். “சொல்!” என்றாள் திரௌபதி. “சொல்லுங்கள் இளவரசி” என்றாள் மாயை. “அந்த காமமற்ற நோக்கு அதனால்தானா?” மாயை அதற்கும் வெற்றுநோக்கையே அளித்தாள். “சொல்லடி, இப்போது என்னுள் அவர் மேல் பொங்கி எழும் வெறுப்பு எதன் பொருட்டு?” என்றாள் திரௌபதி மீண்டும்.

மாயை தன் உதட்டை இறுக்கிய சிறு அசைவைக் கண்டு கண்களில் சினம் மின்ன, புருவம் குவிந்து எழ “சொல்லடி” என்றாள் திரௌபதி. “நான் அறியேன்” என்றாள் மாயை. “என்ன?" என்றாள் திரௌபதி. மெல்லியகுரலில் “உங்களிடம் அப்படி ஒரு வெறுப்பு உள்ளதா என்று...” என்றாள் மாயை. மேலும் சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு தலையைத் திருப்பிக்கொண்டு வெளியே நோக்கினாள் திரௌபதி. பின்னர் மீறி எழுந்த சினத்துடன் திரும்பி “காமம் அறவே இல்லாமல் ஒரு பெண்ணை நோக்குபவன் அவளை அவமதிக்கிறான்” என்றாள். அவள் உதடுகளில் இருந்த சுழிப்பை மாயை அப்போதுதான் முதல்முறையாக பார்த்தாள்.

“ஏனென்றால் பெண் காமத்தால் ஆக்கப்பட்டவள்” என்றாள் திரௌபதி. “பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணின் காமம் அவள் மேல் பொழிந்து அவளை வடிவமைத்திருக்கிறது. அருவிக்குக் கீழிருக்கும் பாறையின் வளைவும் மென்மையும் அவள் உடலில் நிகழ்ந்திருக்கின்றன. ஆண் காமத்துடன் நோக்காவிட்டால் அவள் உடல் பொருளிழந்துவிடுகிறது. ஆண்மகன் உடலுக்கு எந்நிலையிலும் வலிமை என்னும் பொருள் உள்ளது. காமம் இல்லையேல் பெண்ணின் இந்த மெல்லிய தசைத்திரள் போல இழிந்தது பிறிதென்ன?”

மாயை தன்னுள் ஒரு மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். ”என்னடி நோக்குகிறாய்? சொல், நீ என்ன நினைக்கிறாய்?" என்று உரத்தகுரலில் திரௌபதி கேட்டாள். அவள் விழிகள் ஈரப்படலம் கொண்டிருந்தன. மாயை என்ன சொல்வதென்று அறியாமல் திகைக்க “சொல்லடி, காமம் இன்றி உன்னை நோக்குபவன் உன்னை சிறுமைசெய்கிறான் அல்லவா? அவன் காண்பது ஆற்றல் அற்ற நெளியும் வெற்றுடலை அல்லவா? வெறும் ஒரு புழுவை அல்லவா?” என்றாள்.

“இளவரசி, அவர் என்னை நோக்கியபோது அதில் சற்றும் காமம் இல்லை என்பது எனக்கு உவகையையே அளித்தது” என்றாள் மாயை. “நான் இந்த உடலில் இருந்து விடுபட்டுவிட்டதாக உணர்ந்தேன். இன்னொரு பெண்ணிடம் பேசும்போது அவள் உடலை உணர்ந்துகொண்டே இருப்பேன். ஆணிடம் பேசும்போது என் உடலை உணர்ந்து கொண்டிருப்பேன். எங்கிருந்தாலும் அங்கு என் உடல் எனக்களிக்கும் படிநிலை என்ன என்றுதான் கணித்துக்கொண்டிருப்பேன். பிறர் என்னை வைக்கும் படிக்கு மேல் நான் இருக்கிறேன் என்ற உணர்வுடன் என் அகம் தவித்துக்கொண்டிருக்கும். அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் கண்காணித்துக்கொண்டிருக்கும். உடல்திரண்ட நாள் முதல் என் எண்ணமெல்லாம் என் உடலை எங்கு வைப்பதென்பதைப்பற்றியே.”

”உடலின்றி அவர் முன் நிற்க முடியும் என எண்ணுகையில் எடையற்று காற்றில் எழுவதுபோல் தோன்றியது. எவரிடமாவது என் அகத்தைத் திறந்து பேசுவேன் என்றால் அவரிடம்தான்” என்று மாயை தொடர்ந்தாள். “கல்வியாலோ தவத்தாலோ அடைந்த நிறைநிலை அல்ல அது இளவரசி. கல்வியும் தவமும் எவரையும் தன்னை ஒருபடி மேலாக எண்ணச்செய்கிறது. அஸ்தினபுரியின் பட்டத்து இளவரசரின் மேன்மை என்பது ஒன்றில்தான். அவர் தன்னை எளியவரில் ஒருவராக இயல்பாகவே உணர்கிறார். என்னை நோக்கி அவர் செய்த ஒரு புன்னகையே அதற்குச் சான்று.”

நோவுபோல ஈரம் பரவிய விழிகளுடன் திரௌபதி அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். தொலைவில் எழும் காற்றை மெல்லிய அசைவாகக் காட்டும் தளிரிலைகளாக அவள் இதழ்கள் துடித்தன. தாழ்ந்த கூர் குரலில் “நீ அடைந்த விடுதலையை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால் நீ உன்னை அழகற்றவள் என எண்ணுகிறாய்...” என்றாள். மாயை முதல் கணம் உளம் அதிர்ந்தாலும் உடனே மீண்டுவிட்டாள். "நீ உன் உடலை வெறுப்பதனால் உன் உடலை உணராத நோக்கு உவகையளிக்கிறது” என்று மீண்டும் அவள் விழிகளை நோக்கி திரௌபதி சொன்னாள்.

மாயை விழிகளை அசையாமல் திரௌபதி மேல் நாட்டி “அவ்வாறே இருக்கட்டும் இளவரசி... “ என்றாள். அந்த நிறைநிலை கண்டு மேலும் சினம் கொண்ட திரௌபதி உரக்க “உன்னை எனக்கு நிகராக நோக்கியதன் வழியாக அவர் என்னை அவமதித்தார். உன்னுள் ஒளிந்திருக்கும் எளிய சேடி அதைக்கண்டு உவகை கொள்கிறாள். அவ்வளவுதான்” என்றாள். கூந்தலை நீவி பின்னால் செருகி சற்றே நிமிர்ந்து அமர்ந்து “அதுவும் உண்மையென்றே கொள்வோம். அதனாலென்ன?" என்றாள் மாயை.

மூச்சு சீறியதில் முலைகள் எழுந்தமர திரௌபதி “இல்லை, நீ என்னிடம் ஒன்றை ஒளிக்கிறாய். நீ அவரை பற்றி சொன்ன சொற்களில் இருப்பது அதுவே. அவர் உன்னை நோக்கிய கண்களில் எங்கோ நுண்ணிய காமம் இருந்தது. என்னை நோக்கியபோது எழாத காமம் அது. அவரது தன்னிழிவு கொண்ட அகம் என் நிமிர்வின் முன் குன்றுகிறது. உன்னைப்போன்ற சேடியிடமே அது இயல்பாக காமம் கொள்கிறது. ஏனென்றால் அவர் ஷத்ரியமகன் அல்ல. யாதவ அரசியின் எளிய மைந்தர். தன்னை யாதவனாக, சூதர்களுக்கு நிகராக எண்ணுகிறார்.”

“நீ அக்காமத்தை உள்ளூர சுவைக்கிறாய். அதைத்தான் இச்சொற்களாக மாற்றி உனக்கே சொல்லிக்கொள்கிறாய்” என்று திரௌபதி பல்லிறுகிய உச்சரிப்புடன் சொன்னாள். “அவர் காமக்கனவுகள் முழுக்க சூதப்பெண்கள் நிறைந்திருக்கலாம். மணிமுடிசூடிய பட்டத்து இளவரசன் என்ற சுமை அவரை அழுத்தி கட்டுப்படுத்தியிருக்கலாம். நீ ஒரு அடி முன்னால் எடுத்து வை. இலை நுனியில் தேங்கிய துளி. சற்றே தொட்டால் போதும்.”

மாயை மேலும் விரிந்த புன்னகையுடன் “இதெல்லாம் பொய் என நீங்களே அறிவீர்கள் இளவரசி. இச்சொற்கள் என்னைப் புண்படுத்துமென எண்ணுகிறீர்கள். புண்படுத்தவில்லை என்றும் இப்போது அறிந்திருப்பீர்கள்” என்றாள். மேலும் ஏதேனும் சொல்லவேண்டும் என்று அவள் அகம் எழுந்தது. அதை வென்று உடைத்து சொற்களாக்கி அதில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கோர்த்தாள். “எதற்காகவோ உங்களுக்கு ஒரு தன்வதை இப்போது தேவைப்படுகிறது... அதைக்கொண்டு நீங்கள் நிகர்செய்துகொள்ள ஏதோ உள்ளது உங்களுக்குள்.”

கசப்புடன் “உளறாதே” என்று சொல்லி மீண்டும் திரையைப்பற்றி விலக்கி வெளியே நோக்கினாள் திரௌபதி. முகத்தில் கடந்து செல்லும் சாலையின் வண்ண வேறுபாடுகள் ஒளியடிக்க ”அல்லது அவர் பெரிய நடிகர். சில குருகுலங்களில் விரும்பியபடி விழியை அமைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறார்கள். அத்தனை திறம்பட ஒளித்துக்கொள்கிறார் என்றால் உள்ளே வேறேதோ உள்ளது. அழுகியது, இருண்டது. இன்றே என் ஒற்றர்களை அனுப்பி அவர் எங்கு செல்கிறார் என்பதை நோக்கி எனக்கு அறிவிக்க ஆணையிடுகிறேன். ஆலயங்களெல்லாம் அணிப்பரத்தையரால் சூழப்பட்டவை. அவரை ஒரு இழிந்த பரத்தையுடன் சேர்த்துப் பிடித்து இழுத்து என்முன் கொண்டுவந்து நிறுத்தச் சொல்கிறேன்... பார்க்கிறாயா?”  என்றாள்.

“அப்படி அவரை பிடித்துக்கொண்டு வந்து உங்கள் முன் விட்டார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் இளவரசி” என்றாள் மாயை. “சீ, வாயை மூடு. நான் ஏன் ஏமாற்றமடையவேண்டும்?” என்றாள் திரௌபதி. ”ஏனென்றால் இதுவரை உங்கள் அகத்தை இப்படி ஓர் ஆண்மகன் கலைத்ததில்லை.” திரௌபதி “உளறாதே” என்றாள். “கர்ணன் முன்னும் அர்ஜுனன் முன்னும் அசையாத உங்கள் ஆணவம் இங்கே நிலையழிந்திருக்கிறது.” திரௌபதி சீற்றத்துடன் “போதும்” என்றாள். மாயை ஆம் என தலையைத் தாழ்த்த அவள் திரும்பி வெளியே நோக்கத் தொடங்கினாள்.

மாயை திரௌபதியின் மின்னும் கன்னங்களை நோக்கி அமர்ந்திருந்தாள். கரிய தோலைப்போல மின்னுவது பிறிதில்லை. கரிய இரவில் வளையும் நீர்ப்பரப்புகள் கொள்ளும் விண்ணொளி. ஐயமே அற்ற கோடுகளால் பிரம்மன் வரைந்த ஓவியம். வடிவத்தை அன்றி பிறிது எதையும் மானுடன் உணரலாகாது என்றே அவளை இருண்டவளாக்கிவிட்டான் போலும். நீள் கழுத்தில் மெல்லிய மடிப்புகளில் ஈரத்தின் பளபளப்பு. மார்பின் கதுப்பில் சரப்பொளியின் இதழ் ஒன்று குத்திய மெல்லிய அழுத்தம். அதிகாலை கங்கைக்கரைச் சதுப்பில் காலூன்றிச் சென்ற சிறு குருவியின் உகிர்த்தடம்.

மெல்ல திரௌபதியின் தோள்கள் தளர்ந்தன. திரையைப்பற்றிய கைகளை விட்டுவிட்டு மார்பின் மேல் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அமர்ந்து தலையைத் தருக்கி “இவர் இங்கிருக்கிறார் என்றால் இளையோன் பீமனும் இங்கே எங்காவதுதான் இருப்பார்” என்றாள். மாயை தலையசைத்தாள். திரௌபதி "நான் அவரை பார்க்க விழைகிறேன். இப்போதே” என்றாள். மாயையை நோக்கி அவள் விழிகளில் தன் விழிகளை வீம்புடன் கோர்த்துக்கொண்டு ”வெறும் உடலான ஒருவன்... வெறும் தசைத்திரள்" என்றாள்.

“வெறும் தசைத்திரளென இப்புவியில் ஏதும் இல்லை இளவரசி” என்றாள் மாயை. ”அப்படியென்றால் அவரை நான் அப்படி ஆக்குகிறேன். அங்கே துர்க்கை ஏறி அமர்ந்திருக்கும் சிம்மம் போன்று... என் காலடியில் அவர் கிடக்கவேண்டும்.” அவளுடைய குவிந்த மெல்லிய உதடுகளுக்குமேல் நீராவிபட்டதுபோல் வியர்த்திருந்தது. கன்னத்தில் ஈரவியர்வையில் மயிரிழைகள் ஒட்டியிருந்தன. மாயை “இக்கூட்டத்தில் அவர் எங்கிருக்கிறார் என்று எப்படி அறிவது?” என்றாள்.

“அவர் பேருடல் கொண்டவர் என்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் அவர் ஒளிய முடியாது... பார்த்துக்கொண்டே வா. இந்தத்தெருவில் எங்கோதான் அவர் இருப்பார்.” மாயை ஏதோ சொல்வதற்குள் “அவர் இளையோன் அங்கே ஆலயத்தில் இருக்கிறார். அவர்களின் மூத்தவரை சிலகணங்களில் சென்று காக்கும் தொலைவில்தான் எப்போதும் தம்பியரில் ஒருவர் இருப்பார்... பார்” என்றாள் திரௌபதி. மாயை தலையசைத்தாள். திரௌபதி மெல்ல அசைந்து அமர்ந்து “அதை விட அவரை இன்றே நான் காண்பதில்தான் காவியத்தின் வடிவஅமைதி உள்ளது. இது ஒரு காவியம். இத்தனை உச்சங்களால் காவியம் மட்டுமே நிகழமுடியும்” என்றாள்.

மாயை திரும்பி அவள் விழிகளை நோக்கிவிட்டு மீண்டும் விழிதிருப்பினாள். என்ன சொல்கிறாள்? ஆனால் அவள் அதை நம்பித்தான் சொல்கிறாள் என்றன அவள் விழிகள். தன்னை ஏற்கனவே ஒரு பெருங்காவியத்திற்குள் வாழ்பவளாக எண்ணத் தொடங்கிவிட்டாளா என்ன? காவியத்தை நிகழ்த்தி முடிப்பதற்காகத்தான் அவள் காலத்தில் கடந்துசெல்கிறாளா? அவளுடைய நேர்நடையும் நிமிர்நோக்கும் நினைவில் எழுந்தன. அவை அவள் கொண்ட காவியத் தோரணைகளா என்ன? புன்னகை எழ உதடுகளை கடித்துக்கொண்டு தலையைத் தாழ்த்தி வெளியே தெரிந்த மக்கள் திரளை நோக்கினாள்.

அவன் தெரியக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். இது மூச்சடைக்கவைக்கும் பொருட்செறிவு கொண்ட காவியமல்ல, எளிய மாந்தர் வாழும் பொருளற்ற வாழ்க்கைவெளி என ஆகட்டும். அவன் வரக்கூடாது. தெய்வங்களே, இந்தப் பெருங்காவியத்தின் இரக்கமற்ற ஒருமையை உங்கள் படைக்கலங்களால் உடைத்துச் சிதறடித்து என்னை விடுவியுங்கள். இதை ஒழுங்கற்றதாக்குங்கள். காவியத்திற்குள் இப்படி உடல்கள் முட்டி மோதி சாலையோரங்களில் சுழிக்குமா என்ன? குதிரைகளும் வண்டிகளும் முட்டிக்கொண்டு விலகமுடியாது தத்தளிக்குமா என்ன? இதோ எதையோ தின்றுகொண்டிருக்கும் பேதைக்கு காவியத்தில் என்ன இடம்? இப்பேதைமுகங்களுக்கும் கள்வெறிச்சிரிப்புகளுக்கும் காவியத்தில் என்ன பொருள்?

இன்னும் சற்று தொலைவில் சாவித்ரிதேவியின் பேராலயம். இருண்ட வானில் அதன் கோபுரவிளக்கு செவ்விண்மீன் என சுடர்திகழ்கிறது. அங்கே ஒலிக்கும் பெருமுரசும் கண்டாமணியும் கலந்த நாதம் காற்றில் எழுகிறது. இன்னும் சற்று தூரம் மட்டுமே. அவன் விழிகளில்படக்கூடாது. படுவானென்றால் என் வாழ்க்கை என்னுடையதல்ல. என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பெருங்காவியமொன்றின் ஒற்றை அசைச் சொல் மட்டுமே நான். என்னைப்போன்றவர்கள் அக்காவியத்தின் ரதசக்கரத்தில் நசுங்கும் கூழாங்கற்கள். உதிரப்பெருக்கின் ஊற்றுகள். பெரிய கணக்குகளின் எண்கள்.

அதற்குள் அவள் அவனை பார்த்துவிட்டாள். சாலையோரத்தில் கூடி நின்று எதையோ நோக்கிக்கொண்டிருந்த கூட்டத்தில் பெரிய மஞ்சள்நிற உடலுடன் கைகளை பின்னால் கட்டி குனிந்து நோக்கி நின்றிருந்தான். தோளில் சுருளற்ற நீள்குழல் கற்றைகள் கிடந்தன. இடையில் தோலாடை. அவனேதான், பிறிதொருவன் அவனைப்போல் இருக்க இயலாது. ஊன்மலை. கைகள், கால்கள், பெருந்தோள் என எழுந்த தூய ஆற்றல். மரங்களைத் தூக்கிச் சுழற்றும் பெருங்காற்று. அவன் உடலின் உப்புவாசத்தை அவள் அகம்வாழ்ந்த பெண்மிருகம் அறிவதுபோல் தோன்றியது.

அவனைக் கண்டதைச் சொல்லாமல் கடந்துவிடலாம் என்று ஒருகணம் மாயை எண்ணினாள். அதுவும் அக்காவியத்தை சிதறடிக்குமல்லவா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவளே “இளவரசி அதோ” என சொல்லிவிட்டாள். திரௌபதி திடுக்கிட்டு “யார்?" என்றாள். மாயை தயங்கி “பீமசேனர்...” என்றாள். திரௌபதி அதை விளங்கிக்கொள்ளாதவள் போல சிலகணங்கள் நோக்கிவிட்டு “ரதம் முன் செல்லட்டும்” என்றாள்.

மாயையின் அகத்தின் நாண் தளர்ந்தது. உடலில் பரவியிருந்த குளிர்வியர்வையை உணர்ந்தாள். கூடவே தன் அகம் ஏமாற்றம் கொள்வதையும் அறிந்தாள். இது மிக எளிய வாழ்க்கைதான். மானுடருக்கு எந்தப் பங்கும் இல்லாத தற்செயல்களின் பெருவெளி. உடல்களில் பற்றி எரிந்து உண்டுசெல்லும் உயிரெனும் காடெரியின் நடனம். வேறொன்றுமில்லை.

ஆயினும் தெய்வங்களே, தொலைந்துபோய் கண்டெடுக்கப்படாவிட்டாலும் காவியத்தில் வாழ்வதற்கல்லவா ஏதேனும் பொருள் உள்ளது. ஏதும் நிகழாத எளிய வாழ்க்கை ஆன்மாவை சிறுமைசெய்கிறது. தற்செயல்களை மானுடர் அஞ்சுவது அது அவர்களை வெறும் கிருமிகளாக சிறுத்துப்போக வைக்கிறது என்பதற்காகவா? ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு எளியோனின் உள்ளமும் ஏங்கிக்கொண்டிருப்பது காவியம் வந்து தீண்டும் பெருவாழ்க்கை கணங்களுக்காகத்தானா?

மறுகணம் அவள் புன்னகைத்தாள். எத்தனை நேரமாகியிருக்கும்? கால்நாழிகைகூட கடந்திருக்காது. அதற்குள் எத்தனை எண்ணங்கள். காவியத்தில் வாழ்வதா? மானுடருக்கு அது இயல்வதுதானா? அது ஓர் கனவு. ஓர் ஆணவ எழுச்சி. வேறேதுமில்லை. எளியமானுடர் தற்செயலின் பொருளின்மையில் முட்டித் திகைத்துச் சுழன்று புண்பட்டு குருதிவழிய வீழ்ந்தும் எழுந்தும் மடியும் எளிய வாழ்க்கை. அதை சொல் வந்து தொடுகிறது. ஒவ்வொன்றையும் எடுத்துக்கோர்த்து பொருள் கொடுத்து காவியமாக்குகிறது. வாழ்க்கையை நோக்கி மானுடன் பழிப்புகாட்டுவதற்குப் பெயர்தான் காவியம்.

ஆம், அதுதான் உண்மை. நான் பன்னிரண்டு ஆண்டுகாலம் அமர்ந்து கற்ற காவியங்களுக்கெல்லாம் ஒரே நோக்கம்தான். எளிய மானுடரை அமானுடராக உணரச்செய்வது. முகில்மீதேறிப் பறப்பதை கனவுகாண்கின்றன குழந்தைகள். தேவர்களும் அசுரர்களும் பறக்கிறார்கள். தெய்வங்கள் பறக்கின்றன. மண்ணில் எவருக்கும் ஆர்வமில்லை. விரிந்த வானம், ஒளிமிக்க வானம், நிலையற்ற வானம், அதுவே கனவு. அவள் புன்னகைசெய்தாள். அக்காவியக்கல்வியால்தான் அவள் இளவரசியின் சேடியாக இருக்கிறாள். இல்லையேல் அரண்மனைப் புறத்தளத்தில் பணிப்பெண்ணாக இருந்திருப்பாள். ஆம். காவியத்தை உண்ணமுடியும், உடுக்க முடியும்...

திடமான மென்குரலில் “நிறுத்து” என்றாள் திரௌபதி. வெளியே எட்டிப்பார்த்து தேருடன் புரவியில் வந்த வீரனிடம் “அங்கே நின்றிருக்கும் பேருடல்கொண்டவனை பார்த்தீரா?” என்றாள். “ஆம் இளவரசி. பால்ஹிகநாட்டவன் என்று தோன்றியது. பீதர்களின் நிறம் கொண்டவன்” என்றான் அவன். “அவனை இங்கே அழைத்துவாரும்” என்றபின் திரையை மூடிவிட்டு திரும்பி அவளை நோக்கி புன்னகை செய்தாள். “வெறும் மூடத்தனம் என்று தோன்றியது. ஆனால் இதைக் கடந்துசென்றால் நான் உணரும் வெறுமையை என்னால் இரவெல்லாம் தாளமுடியாது என்று பின்னர் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

மாயை புன்னகைத்தாள். ”காவியம் என்று சொன்னதும் நீ எண்ணியதையெல்லாம் நான் வாசித்தறிந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் நீயும் உன் குலமுறையினரும் காண்பீர்கள். நான் கால்தொட்டு நடந்த மண்ணிலிருந்து காவியங்கள் முளைத்தெழும். அவற்றில் பெருங்காவியம் பிறவற்றை உண்டு வளரும்.” அவள் விழிகளை நோக்கி ஒரு கணம் நெஞ்சு அதிர்ந்து விழிவிலக்கினாள் மாயை. அப்பால் குதிரை வீரன் பீமனுடன் வருவது தெரிந்ததும் அவள் அகம் படபடத்தது. திரும்பி “இளவரசி, இதை எதற்காகச் செய்கிறீர்கள்?” என்றாள்.

திரௌபதி கன்னங்களில் சிறிய குழிகள் மலர சிரித்தபடி “வெறும் உடல் ஒன்றைக் காண்பதற்காக” என்றாள். ”கண்டு?" என்றாள் மாயை. திரௌபதி “தெரியவில்லையடி. ஏதோ செய்யவேண்டுமென்று தோன்றியது. இச்செயல் நெஞ்சில் எழுந்தது. ஆனால் இது எனக்குள் பிறிது எதையோ எடை நிகர்க்கிறது.” மாயை மீண்டும் அணுகிவந்த பீமனை நோக்கியபடி “அரக்க வடிவினன்...” என்றாள். பின்பு “இளவரசி, அவர் வெறும் ஊன்குன்று அல்ல” என்றாள்.

“எப்படி சொல்கிறாய்?” என்ற திரௌபதி வெளியே நோக்க “ஆம், அறிவில் தன் மூத்தவருக்கும் இளையவருக்கும் நிகரானவர்... இதற்குள் தாங்கள் யாரென்று அறிந்துவிட்டார். அத்துடன் அவர் உடலுடன் நீங்கள் விளையாட விழைவதையும் தெரிந்துகொண்டுவிட்டார்” என்றாள் மாயை. அவள் விழிகள் அவனை நோக்கிக்கொண்டு மலர்ந்திருக்க இதழ்கள் மெல்ல பிரிந்தன. மாயை அவ்விழிகளை நோக்கினாள். காட்டு விலங்கின் விழிகள் என எண்ணிக்கொண்டாள்.

அக்கணம் திரௌபதி நீள்மூச்சொலிக்க பின்னால் சாய்ந்துகொண்டு “ஆனால் அவருள் எளிய விலங்கு ஒன்று வாழ்கிறது” என்றாள். மாயை அச்சொல்லால் சற்று அதிர்ந்து உதடுகளை அழுத்திக்கொண்டபின் அவள் விழிகளை நோக்கினாள். “எத்தனை ஆற்றல் மிக்க விலங்கும் அன்பின் தளையை அறுக்கவியலாது” என்றாள் திரௌபதி. மாயை புன்னகை செய்தாள்.

வெளியே வீரன் “இளவரசி, அவனை அழைத்துவந்துவிட்டேன்” என்றான். திரௌபதி திரையை விலக்கி வெளியே பாதியுடலைக் காட்டிச் சரிந்து பீமனை நோக்க அவன் தலைவணங்கி “பாஞ்சால இளவரசியை வணங்குகிறேன்” என்றான். திரௌபதி “உன்னை அங்கே கூட்டத்தில் பார்த்தேன். நீ யார்?" என்றாள்.

பீமன் “என் பெயர் ஹடன். பால்ஹிக நாட்டவன். பிறப்பால் சாரஸ்வத அந்தணன். அங்கே சரஸ்வதி ஆலயத்தின் மடைப்பள்ளியில் பணிபுரிகிறேன்” என்றான். “வேதமோ நூலோ கற்றிருக்கிறாயா?” என்றாள் திரௌபதி. “இல்லை இளவரசி. நான் சமையல்காரன்” என்றான் பீமன். “உகந்த தொழில்.” திரௌபதி திரும்பி மாயையை நோக்கி சிரித்தபடி “வைக்கோல்போரில் கட்டப்பட்ட எருது என்பார்கள்” என்றாள்.

மாயை பீமனின் பெருந்தோள்களை நோக்கிக் கொண்டிருந்தாள். திரௌபதி “நான் இவளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தேன். சிபிநாட்டு பால்ஹிகரைப்பற்றி... அவர் தன் தமையன் தேவாபியை தோளில் ஏற்றிக்கொண்டு வேட்டைக்குச் செல்வார் என்றும் குதிரைகளை ஒற்றைக்கையாலேயே துரத்திப்பிடிப்பார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய உடல்வலுவுள்ள எவரும் மண்ணில் இல்லை என்றாள் இவள். அப்போதுதான் உன்னை நோக்கினோம்” என்றாள்.

பீமன் தலையைத் தாழ்த்தி வணங்கினான். ஒரு கணம் அவன் விழிகள் வந்து தன்னை தொட்டுச்சென்றபோது இரு கைகள் வந்து இருமுலைகளையும் அள்ளிப்பற்றிச் சென்றதுபோல் மாயை உணர்ந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு திரையால் உடலை மூடிக்கொண்டாள். அவன் கைகளை நோக்கினாள். வெண்ணிற வேர்களுடன் பிடுங்கிய அடிமரம் போன்ற கைகள். அறியாமலேயே தன் கைகள் திரையை விலக்கிவிட்டிருப்பதைக் கண்டு மீண்டும் திரையை மூடிக்கொண்டாள்.

திரௌபதி “இவ்விரு புரவிகளையும் அகற்றிவிட்டு ரதத்தை நீயே இழுத்துச்செல்ல முடியுமா?” என்றாள். “சாவித்ரியின் ஆலயம் வரை செல்லவேண்டும். குதிரைகளுக்கு நிகரான விரைவு வேண்டும்” என்றாள். பீமன் விழிகளில் ஒரு சிறிய நகை வந்து சென்றதைக் கண்டு அதை உணராத நடிப்புடன் “உனக்கு பத்துகழஞ்சு பொன்னை பரிசாக அளிக்கிறேன்” என்றாள்.

பீமன் தலைவணங்கி “அந்தப்பொன் எனக்கு மூன்றுநாட்களுக்கு நிறையுணவாகும். நான் சித்தமே இளவரசி” என்றான். திரும்பி மாயையை ஒருகணம் நோக்கிவிட்டு தேரோட்டிக்கு விழிகளால் ஆணையிட்டு திரௌபதி படிகளில் கால்வைத்து கீழிறங்கினாள். அவள் என்னசெய்யப்போகிறாள் என்று மாயை திகைத்த விழிகளுடன் நோக்க “காவியத்தில் நம்பமுடியாதவை நிகழவேண்டும் மாயை” என்று மெல்லிய குரலில் சொல்லி இதழ்கோட்டி திரௌபதி புன்னகை செய்தாள்.

திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்த தேரோட்டி இறங்கி விலகிக்கொள்ள பீமன் குதிரைகளை அவிழ்த்து கடிவாளத்தை அவன் கையில் கொடுத்தான். குனிந்து தன் பெரிய கைப்பத்திகளை மண்ணில் உரசி ஒன்றுடன் ஒன்று அடித்துவிட்டு தேரின் இரு நுகங்கள் நடுவே வந்து நின்றான். அவன் அங்கே நின்றபின்னர்தான் பின்னால் வந்த காவலர்கள் அவனிடம் ஆணையிடப்பட்டதென்ன என்று உணர்ந்தனர். அனைவர் விழிகளும் எண்ணங்கள் வெளிப்படாமல் இறுகிக்கொண்டன.

பீமன் நுகத்தடியை பற்றித்தூக்கியதும் திரௌபதி தேரோட்டியின் கையிலிருந்த கரிய குதிரைச் சவுக்கை வாங்கிக்கொண்டு படியில் கால்வைத்து ஏறி நுகமேடையில் அமர்ந்துகொண்டாள். மாயை சிறுசாளரம் வழியாக எட்டிப்பார்த்து திகைப்புடன் “இளவரசி!” என்றாள். “அங்கேயே இரு” என்றபின் திரௌபதி தன் சவுக்கை காற்றில் சுழற்றி ஓசையெழுப்பினாள்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 8

மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து கைகளால் பற்றி கன்னத்தை அழுத்திக்கொண்டாள். அவள் நெஞ்சுக்குள் மூச்சும் இதயத்துடிப்பும் ஒன்று கலந்தன.

நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. ஆணின் தோளின் பின்பக்கத் தசைகளை அவள் அதுவரை அத்தனை கூர்மையாக நோக்கியதில்லை. புயத்தின் முன்பக்க அரவுபட தசையே விழிகளை முழுமையாக ஈர்த்துக்கொள்வதனால் போலும். பின் தசை குதிரையின் கழுத்துக்குக் கீழே இறுகி நெகிழும் தசைகளை ஒத்திருந்தது. நீரலை போன்ற மெல்லிய அசைவு. ஆனால் உறுதி ஆற்றல் என அது பொருள் தந்தது.

தோளில் இருந்து அவ்வசைவு இறங்கி விலா நோக்கிச் சென்றது. உடல் பெருத்திருந்தமையால் அவன் தலை சிறிதெனத் தெரிந்தது. பிடரிமயிர் வியர்வையில் திரிதிரியாக விலக தலைக்குக்கீழே காளைக்கழுத்தின் தசைமடிப்புகள் செறிந்து தெரிந்தன. இரு நுகங்களையும் தூக்கிய போது கைகளுக்கு அடியில் குதிரையின் அடிவயிறு போன்ற மென்மையான தசை இறுகியது. விலாவெலும்புகள் ஆற்றுமணலில் காற்று உருவாக்கிய மடிப்புவளைவுகள் என வரிவரியாக எழுந்தன.

கனத்த சகடங்களும் வெள்ளியாலான தகடுகள் மூடிய சிற்பச்செதுக்குகளும் கொண்ட பெரிய தேரை அவன் எளிதாக இழுத்துக்கொண்டு நடந்தான். சுருட்டிக் கவ்வும் இரண்டு மஞ்சள் மலைப் பாம்புகள். இரு பாறைப்பாளங்களாக விரிந்த முதுகின் நடுவே முதுகெலும்பு நீருக்குள் பாறைகள் என வரிசையாகத் தெரிந்த முண்டுகளாக எழுந்து பின் வளைந்து பள்ளமாகி ஓடையென ஆழம் கொண்டு இடையிலணிந்த தோலாடைக்குள் புகுந்து மறைந்தது. பெருந்தோள்விரிவுடன் இயையாத சின்னஞ்சிறிய இடைக்குக் கீழ் குதிரைத்தொடைகள்.

அவன் காலடியின் அதிர்வை வண்டியினூடாக அவளால் உணரமுடிந்தது. காலடி அதிர்வை ஏற்கும் யானத்து நீர்ப்படலமென அவள் உடல் அவ்வதிர்வை வாங்கிக்கொண்டது. தொடைகளில் முலைகளில் கழுத்தின் பின்னால் அவள் அவ்வதிர்வுகளை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடல் அவ்வதிர்வுகளில் சிலிர்த்தது. அறியாமல் அவள் கை மேலெழுந்து கன்னத்தையும் கழுத்தையும் வருடி கீழிறங்கி முலைவிளிம்பில் நின்ற ஆரத்தின் முகமணியைப் பற்றி மெல்ல திருகிக்கொண்டது.

தேர் சாலைவழியாக சென்றபோது இருபக்கமும் நின்றிருந்த மக்கள் திகைத்து வாய் திறந்து நோக்குவதை மாயை கண்டாள். அது கடந்துசென்றபின்னரே அவர்கள் வியப்பொலியை எழுப்பினர். அந்தப்பார்வைகளை கற்பனைசெய்து அவள் அடைந்த கூச்சத்தை விரைவிலேயே கடந்தாள். எளிய மக்கள். விந்தைகளுக்கு அப்பால் வாழ்பவர்கள். உச்சங்களை அறியாதவர்கள். அவர்களின் விழிகள் நடுவே பறந்துசெல்லும் யக்‌ஷி நான்.

தேர்ச்சகடம் ஒரு கல்லில் ஏறியிறங்க குடம் அதிர்ந்து நடுங்கி அவள் இடமுலை சென்று தூணில் முட்டியது. ஓர் ஆணின் கை வந்து அதைத் தொட்டது போல அவள் துணுக்குற்றாள். பின்பு உள்ளங்காலை குளிரச்செய்து, தொடைகளை நடுங்கச்செய்து, உடலைக் கூசி மெய்சிலிர்க்கவைத்து, கண்களில் நீர்நிறைய, செவிகளில் ரீங்காரம் கேட்க, விழிப்பார்வை அலையடிக்க, தொண்டை அடைக்க, இடமும் காலமும் கரைந்தழிந்து மறைய, அவளை அலையெனச் சூழ்ந்து கவ்வி விழுங்கி பின்பு உமிழ்ந்து விடுவித்த காமஉச்சம் ஒன்றை அடைந்தாள்.

மீண்டு நெஞ்சுள் நிறைந்த மூச்சை உந்தி வெளிவிட்டபடி இடமுலையை தூணில் அழுத்தி தலையை அதில் சாய்த்து சாளரம் வழியாக வெளியே நோக்கி நின்றாள். தேர் சிறிய கற்களில் விழுந்தெழுந்து அதிர்ந்து சென்றுகொண்டிருந்தது. பீமனின் முதுகின் நடுப்பள்ளத்தில் வியர்வை உருண்டு கீழிறங்கி ஆடைக்குள் மறைந்தது. இரு தோள்களுக்குமேலும் இறுகி வளைந்திருந்த தசையின் தாளத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்த அசைவை தன் காலடிப்பலகையில் தூணில் தன் உடலில் நெஞ்சில் விழும் அடிகளாக உணர்ந்தாள். எடையற்று மிதக்கும் நெற்றை கீழிருந்து எற்றி எற்றி தள்ளிச்சென்றன அலைகள்.

நுகமேடையில் ஒருகாலை தொங்கவிட்டு ஊசலாட்டியபடி தலை நிமிர்ந்து அமர்ந்திருந்த திரௌபதியின் விழிகளும் அவன் தசைகளிலேயே ஊன்றியிருந்தன. வலக்கையில் சுருட்டி வைத்திருந்த கரிய நிறமான சவுக்கை வருடிக்கொண்டிருந்த அவளது இடக்கையின் நடுக்கத்தை மாயையால் உணர முடிந்தது. திரும்பவில்லை என்றாலும் அவளும் தன் நோக்கை உணர்ந்துகொண்டிருக்கிறாள் என்று மாயை அறிந்தாள். அவள் உடலிலும் வண்டியின் அந்த தாளம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

செவிகளின் குழைகள் அந்தத் தாளத்தில் கூத்தாடின. புறங்கழுத்தின் மென்மயிர்ப்பிசிறுகள். பக்கவாட்டில் தெரிந்த கன்னத்தின் மெல்லிய பூனைமயிர். கழுத்தின் மூன்று ஒளிக்கோடுகள். வளைந்து தொய்ந்து பின் திரண்டு புயங்களாகிக் குழைந்து இறங்கிய தோளில் புதுப்பாளையின் மென்மையான வரிகள். அசைவில் திரும்புகையில் சற்றே தெரிந்து மறைந்த இமைப்பீலிகள். அமர்ந்திருந்தமையால் சற்று ஒசிந்த இடையில் விழுந்த வெட்டு மடிப்பு. அதற்கப்பால் சற்றே தாழ்ந்த சேலைக்கட்டு இருந்த இடத்தில் சருமத்தில் துணி அழுந்திய தடம். அரக்கில் பதிந்த அரசமுத்திரை...

கருநாகம் என நாபறக்க தன் மடியில் சுருண்ட குதிரைச்சவுக்கை இடக்கையால் நீவி வலக்கையில் விரித்து எடுத்தாள் திரௌபதி. அவள் செய்யப்போவதென்ன என்று உணர்ந்ததும் மாயை தேர்த்தூணை இறுகப்பற்றிக்கொண்டாள். திரௌபதியின் கையில் இருந்து சுருளவிழ்ந்து பறந்த சவுக்கின் கரிய நாக்கு பீமனின் தோளைத் தொட்டு வருடி கீழிறங்கி வளைந்து அவளை நோக்கிவந்து அவள் மார்பைத் தொட்டுத் தளர்ந்து சுருண்டு கைகளில் அமைந்தது. அக்கணம் சகட ஒலி வெடிக்க தேர் முன்னெழுந்து சாலையில் உருண்டோடியது.

தலைகுப்புற பள்ளமொன்றில் விழுந்து விழுந்து பாறைகளில் முட்டித் திரும்பி புரண்டு சென்று எங்கோ நின்று ஓய்ந்தபோது மாயை தன் கைநகங்கள் உள்ளங்கைகளில் குருதி கசிய புதைந்திருப்பதை உணர்ந்தாள். இதழ்களில் பல் பதிந்திருந்தது. தேர் சாவித்ரியின் ஆலயத்தின் முன்னால் நின்றபோது அவள் மீண்டு நாவால் இதழ்களில் விழுந்த பற்தடத்தை வருடிக்கொண்டாள்.

ஊழ்கத்திலமர்ந்த தேவி என அசையாமல் நுகமேடையில் அமர்ந்திருந்தாள் திரௌபதி. அப்பால் விரிமுதுகில் நீர் வழிந்த தடமென சவுக்கின் நீள்முத்திரை. அதுவே ஒரு நாக்கு போல. ஒரு தலைகீழ் செஞ்சுடர் போல. அல்லது அடிமரத்தில் ஒட்டியிருக்கும் அரவுக்குஞ்சு. பீமன் திரௌபதியை நோக்கி ஒருகணம் கூட திரும்பவில்லை. தலையை சற்றே தூக்கி உலுக்கி வியர்வையில் ஊறிய குழல்கற்றைகளை முதுகுக்கு கொண்டுவந்தான். அத்தனை பேருருவுக்கு எவ்வளவு சிறிய செவிகள். குதிரைக்கும் செவிகள் சிறியவைதான்.

தேரைக்கண்டதும் பெருமுரசும் சங்குகளும் முழங்க ஆலய முகப்பிலிருந்து ஓடிவந்த காவலர்கள் திகைத்து சற்று விலகி நின்றனர். தேரை முற்றத்தில் ஏற்றி வளைத்து நிறுத்திவிட்டு திரும்பிய பீமன் தன் இடைக்கச்சையை அவிழ்த்து கழுத்தையும் முகத்தையும் துடைத்தான். இருகைகளின் விரல்களையும் பின்னி நீட்டி சுள்ளிஒடியும் ஒலியில் நெட்டிமுறித்தபின் கழுத்தை இருபக்கமும் திருப்பி எளிதாக்கிக்கொண்டு விலகி ஆலயத்தின் வாயிலை நோக்கும் பாவனையில் விழிவிலக்கி நின்றான்.

பின்னால் குதிரைமேல் பெருநடையாக வந்த காவலர்களும் குதிரைகளுடன் ஓடிவந்த தேரோட்டியும் அணுகி திரௌபதியை நோக்கி நின்றனர். நுகமேடையில் அமர்ந்திருந்த திரௌபதி தன்னை மறந்தவள் போலிருந்தாள். மாயை மெல்ல "இளவரசி” என்றாள். அவள் கலைந்து திரும்பி மாயையை நோக்கினாள். செவ்வரி படர்ந்த கண்களின் நீர்ப்படலத்தில் பந்தவெளிச்சம் மின்னியது. நீராவி நிறைந்த நீராட்டறையிலிருந்து வெளிவந்தவள் போலிருந்தது முகம். பொருளற்ற நோக்குடன் அவளைத் தொட்ட விழிகள் திரும்பி சேவகர்களை நோக்கின. அவள் அகத்தில் காலமும் சூழலும் நுழைவதை உடலிலேயே காணமுடிந்தது.

விளையாட்டுச்சிறுமி போல காலை ஊசலாட்டி மெல்ல நழுவி இறங்கி ஆடையைப்பற்றி சுழற்றி இடைவழியே மறுகைக்கு கொண்டுவந்தாள். தேருக்கு உள்ளிருந்து தூணைப்பற்றிக்கொண்டு இறங்கிய மாயை திரைச்சீலையைப் பற்றியபடி விரிந்த விழிகளுடன் நின்றாள். திரௌபதி திரும்பி தன் குழலை நீவி பின்னால் செருகி முலைக்குவட்டில் ஒசிந்திருந்த சரப்பொளி மாலையை இழுத்து சரிசெய்து நிமிர்ந்து பீமனை நோக்கி விழியால் அருகழைத்தாள்.

பீமன் வந்து அருகே பணிந்து நின்றதும் புன்னகையுடன் “அரிய ஆற்றல் வீரரே. அந்தணர்களில் இத்தனை ஆற்றலை எவரும் கண்டிருக்கமாட்டார்கள்” என்றபின் தலையை சற்றுச் சரித்து தன் கழுத்தில் இருந்த ஆரமொன்றை தலைவழியாக கழற்றினாள். அவ்வசைவில் அவள் நீண்ட கழுத்து ஒசிய கன்னங்களிலும் ஒளி விழுந்து மறைந்தது. மாலையின் பதக்கம் அவள் முலைக்குவைக்குள் இருந்து சரப்பொளி மாலையின் அடுக்குகளுடன் சிக்கி மேலெழுந்து வந்தது. அதை விலக்கி எடுத்து உள்ளங்கையில் இட்டு குவித்து அவனிடம் நீட்டி “இது உங்களுக்குப் பரிசு” என்றாள்.

அவளுடைய நீண்ட கைகளை நோக்கியபடி பீமன் திகைத்து நின்றான். அவள் அதை அளித்தபோது சிற்றாடை கட்டிய சிறுமியைப்போலிருந்தாள். நிமிர்வுகொண்ட அரசமகளுக்குள் இருந்து கதவைத் திறந்து குதித்து வந்து நிற்பவள் போல. பீமன் தன்னை மீட்டு மீண்டும் தலைவணங்கி அதை பெற்றுக்கொண்டான். “எத்தனை ஆற்றல்... இத்தனை எளிதாக இழுத்துக்கொண்டு வருவீர் என அறிந்திருந்தால் தேரை சுமந்துவரமுடியுமா என்று கேட்டிருப்பேன்.” அவள் சிரிப்பும் சிறுமியை போலிருந்தது. குரலில் கலந்திருந்த மழலையை மாயை எப்போதுமே கேட்டதில்லை.

“வேண்டுமென்றால் சுமக்கிறேன் இளவரசி” என்றான் பீமன். “அய்யோ! வேண்டாம்” என்று வெட்கி அவள் சற்று உடல்வளைந்தாள். மாயை வியப்புடன் அவளையே நோக்கி விலகி நின்றாள். “நான் மகிழ்ந்தேன், ஆனால் என் தோழி மிக அஞ்சிவிட்டாள். தேருக்குள் அவள் அஞ்சும் ஒலிகள் கேட்டன” என்றாள் திரௌபதி. மாயை தன் வலக்கையால் உதடுகளை அழுத்தி பார்வையை விலக்கி தோள்குறுகினாள். பீமன் அரைக்கணம் அவளை நோக்கியபின் ”சாலையில் குதிரைக்குளம்புகளால் பெயர்க்கப்பட்ட கற்கள் இருந்தன இளவரசி” என்றான்.

“ஆம், இம்மண விழாவில் சாலையெங்கும் குதிரைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன” என்றாள் திரௌபதி. “மணவிழாவுக்குத்தான் நீரும் வந்திருப்பீர் இல்லையா?” பீமன் “ஆம் இளவரசி” என்றான். திரௌபதி இதழ்களின் இருபக்கமும் மெல்லிய மடிப்பு விழ சிரித்து “மணநிகழ்வுக்கு வருக...” என்றாள். பீமன் அவனை அறியாமல் நிமிர்ந்து நோக்க “அங்கே நீங்கள் போதும் எனும் அளவுக்கு உணவு கிடைக்கும்” என்றாள். “வருகிறேன் இளவரசி” என்றான் பீமன்.

தலையை அசைத்துவிட்டு மறுகணமே மிடுக்குடன் தலைதூக்கி புருவத்தால் ஸ்தானிகரிடம் செல்லலாம் என்று சொல்லி திரௌபதி நடந்தாள். மாயை தளர்ந்த காலடிகளுடன் அவளுக்குப்பின்னால் சென்றாள். கற்படிகளில் ஏற அவளால் முடியவில்லை. காய்ச்சல் கண்டு உடலின் ஆற்றல் முழுக்க ஒழுகிச்சென்றதுபோலிருந்தது. காய்ச்சலேதான். உடலெங்கும் இனிய குடைச்சல் இருப்பதுபோல, வாயில் கசப்பும் கண்களில் காந்தலும் இருப்பதுபோல. எண்ணங்கள் சிறகற்று காலற்று புழுக்களாக நெளிந்தன.

படிகளில் ஏறி ஆலயவாயிலின் வழியாக அப்பால் தெரிந்த சாவித்ரிதேவியின் ஆளுயரச்சிலையை நோக்கினாள். வலப்பக்கம் நீலநிற துர்க்கை, மஞ்சள் நிற லட்சுமி முகங்களும் இடப்பக்கம் வெண்ணிற சரஸ்வதி, பச்சை நிற ராதை முகங்களும் நடுவே பொன்னிற முகத்தில் விரிந்த விழிகளுடன் சாவித்ரி செந்நிறத் தாமரைமேல் நின்றிருந்தாள். பத்து கரங்களில் இடது கீழ்க்கரம் அஞ்சல் முத்திரை காட்டியது. மேற்கரங்களில் கதையும் அமுதகலசமும் பொன்னிறத்தாமரையும் இருந்தன. வலது கீழ்க்கரம் அடைக்கலம் என தாள் காட்டியது. மேற்கரங்களில் பாசமும் சூலமும் மழுவும் இருந்தன. இரு பக்க மேற்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தாள்.

இரண்டாம் பூசனை நிகழ்ந்துகொண்டிருந்தது. உள்ளிருந்து பிருஷதி வந்து “எங்கு சென்றீர்கள்? சற்றுநேரம் காத்திருந்துவிட்டு நான் உள்ளே வந்துவிட்டேன்” என்றாள். “நாங்கள் ஓர் அரக்கனை வைத்து தேரை இழுக்கச்செய்தோம்” என்றாள் திரௌபதி. அதை விளங்கிக்கொள்ளாமல் பிருஷதி “அரக்கனையா? ஏன்” என்றபின் திரும்பி “உளறாதே... நீ காவியம் படிப்பது இப்படி உளறுவதற்காகத்தானா?” என்றாள்.

“பட்டத்து இளவரசர் வந்திருக்கிறாரா?” என்றாள் திரௌபதி. ஒருகணம் மாயையின் விழிகள் வந்து திரௌபதியின் விழிகளை தொட்டுச்சென்றன. “ஆம், பட்டத்து இளவரசனேதான். கோட்டைக்காவலன் வேலுடன் நிற்பதைப்போல் நின்றுகொண்டிருக்கிறான். முடிசூடியவனெல்லாம் அரசனா என்ன? அரசன் என்றால் அவன் அரசனுக்குரிய நிமிர்வுடன் இருக்கவேண்டும்...“ என்றாள் பிருஷதி. “திருஷ்டத்யும்னன் எங்கே?” என்றாள் திரௌபதி புன்னகைத்து. அப்போதுதான் அவள் விளையாடுகிறாள் என உணர்ந்த பிருஷதி “எங்கிருக்கிறான் என எனக்கென்ன தெரியும்? அவனுக்கு இங்கே ஏது இடம்?” என்றபின் “வா” என உள்ளே சென்றாள்.

அவர்கள் பேச்சை சித்தத்தில் ஏற்றாமல் உடன் சென்ற மாயை சித்ரகேது வாளேந்தி நின்றிருப்பதைக் கண்டபின்னரே பக்கவாட்டில் அரசத்தேர் கொடி துவள நிற்பதை நோக்கினாள். திரௌபதி படிகளில் மேலேறி பலிமண்டபத்தின் வலப்பக்கமாகச் சென்று பெண்கள் நிற்கும் இடத்தில் நின்றாள். அவளருகே தாலமேந்தி நின்ற மாயை மீண்டும் தேவியை ஏறிட்டபோது அறியாமல் நாணி விழி விலக்கிக் கொண்டாள். பாஞ்சால இளவரசர்களான மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் சித்ரகேதுவின் இருபக்கங்களிலும் நின்றிருந்தனர்.

சித்ரகேதுவின் அருகே நின்றிருந்த முதுசூதர் “சரஸ்வதி வாக்தேவியின் முழுமை. இவள் சாவித்ரி. வாக்கில் குடிகொள்ளும் ஒளி என்பர் கவிஞர். வேதவேதாங்கங்களில் சந்தமாக குடிகொள்கிறாள். நீரலைகளிலும் இளமலர்களிலும் பறவைகளின் சிறகுகளிலும் ஒளியாகத் திகழ்கிறாள். மூன்று தலைகளும் எட்டு பொற்சிறகுகளும் கொண்ட ஒளிவடிவான காயத்ரி அன்னையின் மகள். ஒவ்வொருநாள் காலையிலும் அன்னை சூரியனுக்கு முன் எழுந்து இப்புவியில் உள்ள அனைத்தையும் தன் கைகளால் தொடுகிறாள். இரவின் இருளில் அவை வெறும் பொருளாக அமர்ந்திருக்கின்றன. அன்னையின் அருளால் அவை பொருள் கொள்கின்றன” என்றார்.

திரௌபதியை நோக்கி தலைவணங்கி “ஒவ்வொரு பொருளுடனும் பிணைந்திருக்கும் கனவுகளால் ஆன பிறிதொரு உலகை ஆள்பவள் அன்னை. ஆகவே அவளை ஸ்வப்னை என்கின்றன நூல்கள். சொற்கள் சரஸ்வதியின் ஒளியால் பொருள் கொள்கின்றன. அன்னையின் ஒளியால் கவிதையாகின்றன. எட்டு பளிங்குச் சிறகுகளுடன் அநுஷ்டுப்பாகி பறக்கிறாள். ஒன்பது வெள்ளிச்சிறகுகளுடன் ப்ருஹதியாகி ரீங்கரிக்கிறாள். பத்து பொற்சிறகுகள் கொண்டு பங்க்தி ஆகிறாள். பன்னிரு அனல் சிறகுகளுடன் த்ரிஷ்டுப்பாகிறாள். பன்னிரண்டு வைரச்சிறகுகளுடன் அவளே ஜகதி ஆகிறாள். இருபத்தாறு விண்நீலச் சிறகுகளுடன் உத்க்ருதியாகிறாள். அன்னை உருவாக்கும் அழகுகள் எல்லையற்றவை” என்றார் சூதர்.

கைகளைக் கூப்பி விழிகளைத் தூக்கி அன்னையை நோக்கி நின்றிருந்த திரௌபதியை மாயை ஓரக்கண்ணால் பார்த்தாள். அங்கிருந்து விரைவில் அகன்றுவிடவேண்டும் என்றுதான் அவளுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. உள்ளே மணியோசைகள் எழுந்தன. அன்னைக்குப்பின்னால் பொன்னிறப்பட்டுத்திரைகளை சுழற்றிச் சுழற்றிக் கட்டியிருந்தனர். அவற்றுக்குப்பின்னால் இருந்த நெய்விளக்குகளில் சுடர்கள் எழுந்தபோது இளங்காலை என பட்டுத்திரைகள் ஒளிகொண்டன.

முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் மணிகளும் சேர்ந்து ஒலித்தன. மேலும் மேலும் விளக்குகள் சுடர்விட கருவறைக்குள் பொற்பெருக்காக புலர்காலை நிறைந்தது. இருபக்கமும் நின்றிருந்த பூசகர்கள் வெண்கவரி வீசினர். முதன்மைப்பூசகர் சுடர்ச்செண்டைச் சுழற்றி ஒளியாட்டு காட்டினார். நெஞ்சு விம்ம கண்களை மூடிக்கொண்டாள்.

ஒற்றைச்சுடருடன் வெளியே வந்த முதன்மைப்பூசகர் படையலுணவின் மேல் கவளத்தை வீசி வாள் போழ்ந்து பங்கிட்டு முதல் கவளத்தை சித்ரகேதுவுக்கு அளித்தார். அருகே நின்றிருந்த மித்ரனும் யுதாமன்யுவும் விரிகனும் சுரதனும் சத்ருஞ்ஜயனும் கவளத்தை பகிர்ந்து உண்டனர். திரௌபதியும் கவளத்தை உண்டபின் கைகூப்பி தொழுதாள்.

சித்ரகேது வாளைத் தாழ்த்த ஸ்தானிகர் வந்து அதை வாங்கிக்கொண்டார். திரௌபதி “வணங்குகிறேன் மூத்தவரே” என்று சித்ரகேதுவிடம் சொன்னாள். அவன் அருகே வந்து “தந்தையை சரஸ்வதியின் ஆலயத்தில் பார்த்தீர்கள் என்றார்கள் சேவகர்” என்றான். “ஆம், அரசியும் அவரும் துர்க்கை ஆலயத்திற்கு செல்கிறார்கள்” என்றாள் திரௌபதி.

“இன்றிரவு முழுக்க பூசனைகள்தான். காம்பில்யம் தொன்மையான நகரம். இங்கே மானுடரைவிட தெய்வங்கள் கூடுதல்” என்ற சித்ரகேது “ராதாதேவியின் ஆலயத்தை வழிபட்டபின் நீங்கள் சென்று ஓய்வெடுக்கலாம் இளவரசி” என்றான். “ஆம், நான் களைத்திருக்கிறேன். ஆனால் என்னால் துயிலமுடியுமா என்று தெரியவில்லை” என்றாள். “நீங்கள் துயின்றாகவேண்டும் தமக்கையே. நாளை பேரழகுடன் அவை நிற்கவேண்டுமல்லவா?” என்றான் சுரதன். திரௌபதி அவனை நோக்கி புன்னகை செய்தாள்.

அவன் அருகே வந்து “எத்தனை அரசர்கள் வந்துள்ளார்கள் என்று ஒற்றனை கணக்கிட்டு வரச்சொன்னேன். நூற்றெட்டு அரசர்கள் மணம்நாடி வந்துள்ளனர். எழுபத்தெட்டு முதிய அரசர்கள் விருந்தினராக வந்திருக்கிறார்கள்” என்றான். “நெடுந்தொலைவிலிருந்து வந்திருப்பவர் தென்னக்கத்தின் பாண்டிய மன்னர். தங்களைப்போலவே கருமையானவர். நூல்கற்றவர், பெருவீரர் என்கிறார்கள்.”

திரௌபதி “எல்லா அரசர்களுக்கும் சூதர்கள் அளிக்கும் புகழ்மொழி ஒன்றே அல்லவா?” என்றாள். மித்ரனும் யுதாமன்யுவும் நகைக்க சத்ருஞ்சயன் “ஆம், இளையவளே. நேற்று ஒருவரை மலையென எழுந்த தோள்கள் கொண்டவர் என்று சூதர் பாடக்கேட்டு நானும் இவனும் நேரில் காணச்சென்றோம். கீழே விழுந்த பல்லி போன்ற உடல்கொண்டவர். ஆனால் தட்சிணகோதாவரியில் ஒரு துறைமுகத்தை ஆள்கிறார்” என்றான்.

“அத்தனைபேரின் அடைமொழிகளிலும் தவறாமல் வருபவர்கள் பாண்டவர்கள்தான் இளையவளே” என்றான் மித்ரன். “வில்லவன் என்றால் பாண்டவனாகிய அர்ஜுனனுக்கு நிகரானவன். தோள்வலிமை கொண்டவன் என்றால் பீமனுக்கு நிகரானவன். அவர்கள் இப்போது இல்லை என்பதனால் இவர்களே பாரதவர்ஷத்தில் நிகரற்றவர்கள்...” திரௌபதி புன்னகைத்து “அவர்கள் வந்து அவைநின்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?” என்றாள்.

அவர்கள் அனைவரின் விழிகளும் ஒரே கணம் மாறுபட்டன. “அவர்கள் வரக்கூடும் என்றே தந்தை எண்ணுகிறார் இளவரசி. அரண்மனையின் பொறிவில் அர்ஜுனனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது” என்றான் மித்ரன். திரௌபதி புன்னகைத்து “சிறுத்தைகளை பொறிவைத்துத்தான் பிடிக்கிறார்கள்” என்றாள். மித்ரன் நகைத்து “யானைகளை குழிதோண்டி பிடிக்கலாம்... பார்ப்போம்...” என்றான். சத்ருஞ்சயன் “குழிக்குள் பெண்சிம்மம் காத்திருந்ததென்றால் யானை என்ன செய்யும்?” என்றதும் உடன்பிறந்தவர்கள் நகைத்தனர்.

பிருஷதி படையலுணவை பெற்றுக்கொண்டு அருகே வந்து சீற்றத்துடன் “போதுமடி. நாம் செல்லவேண்டிய ஆலயம் இன்னும் ஒன்று எஞ்சியிருக்கிறது” என்றாள். அகல்யையின் மைந்தர்களின் விழிகளை தவிர்த்தாள். அவர்கள் கண்களில் சிரிப்புதான் இருந்தது. மித்ரன் “சிம்மம் செந்நிறமானது... இளைய அன்னையை சிம்மம் என்று சொல்லலாம். மூத்தவள் கருஞ்சிறுத்தை” என்றான். பிருஷதியின் முகம் மாறுபட்டது. புன்னகையை கடுகடுப்பால் அடக்கிக்கொண்டு “போதும்... எனக்கு எவர் புகழ்மொழியும் தேவையில்லை... நாங்கள் சூதர் பாடலை தாலாட்டாகக் கேட்டு வளர்ந்த குலம்” என்றாள்.

“ஆம், அதைத்தான் சொன்னேன்” என்றான் மித்ரன். “சிம்மம் தன்னை சிம்மம் என்று எப்போதும் அறிந்திருக்கிறது. சிறிய உயிர்களுக்குத்தான் தன்னை தனக்கே நிறுவிக்கொள்ளவேண்டியிருக்கிறது.” பிருஷதி மேலும் மலர்ந்து ”நாளை எத்தனை அரசர்கள் பங்குகொள்கிறார்கள் மைந்தா?” என்றாள். மித்ரன் ஒருகணம் திரௌபதியை பார்த்துவிட்டு புன்னகையுடன் “நூற்றி எட்டு அரசர்கள்...” என்றான். “நூற்றேழுபேரையும் வெல்லும் ஒருவனை தேர்ந்தெடுக்கவேண்டியது இளையோள் கடமை என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றான் சத்ருஞ்சயன்.

”ஆம், அதைத்தான் செய்யவேண்டும்” என்று புரிந்துகொள்ளாமல் நிமிர்வுடன் சொன்ன பிருஷதி “இவள் அனைத்தும் அறிந்தவள். ஆகவேதான் இவளை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி என்கிறார்கள்” என்றாள். “இவளை மணப்பவன் சக்ரவர்த்தி” என்று சொல்லி திரௌபதியின் தோளை தொட்டாள். மித்ரன் “சக்ரவர்த்தி என ஒருவன்தான் இருக்கவேண்டுமா என்ன? நம்குலத்தில் ஐவர் வழக்கம்தானே?” என்றான்.

பிருஷதி முகம் சிவந்து “சீ! என்ன பேச்சு இது?” என்றபின் திரௌபதி தோளைத் தள்ளி “வாடி” என்றாள். திரௌபதி திரும்பி புன்னகைத்தபடி பிருஷதியுடன் வெளியே நடந்தாள். “இதென்ன எல்லோரும் ஒரே பேச்சையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றாள் பிருஷதி. “நான் என்ன கண்டேன்? உண்மையிலேயே நம் குலவழக்கம் அதுதானோ?” என்றாள் திரௌபதி. “பேசாமல் வாடி... இந்தப்பேச்சே கீழ்மை” என்றாள் பிருஷதி. “நீங்கள்தானே சொன்னீர்கள் கீழ்மை அல்ல என்று. என் முப்பாட்டியைப்போல நானும் அங்கே மேடையில் ஐவருக்கும் மாலையிட்டால் ஷத்ரியர் என்ன சொல்வார்கள்?”

“பேசாமல் வா” என்று பிருஷதி முன்னால் நடந்தாள். பின்னால் சென்றபடி “உண்மையிலேயே அதைத்தான் நினைக்கிறேன்” என்றாள். “வாயை மூடு” என்று சற்று உரக்கவே சொன்ன பிருஷதியை சேவகர் சிலர் திரும்பி நோக்கினர். அவள் விரைந்து முன்னால் நடந்து விலகிச்சென்றாள். திரௌபதி மெல்ல நடையைத் தளர்த்த மாயை வந்து இணைந்துகொண்டாள்.

“தேவி முன் நிற்கமுடியவில்லையடி” என்றாள் திரௌபதி. மாயை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து உடனே விழிகளை விலக்கிக் கொண்டாள். “அந்த உடலை நான் அறிந்தவிதம்...” என்று சொல்லவந்து மாயை நிறுத்திக்கொண்டாள். “துர்க்கையின் சிம்மம் என்றே நான் உணர்ந்தேன் தேவி...” என்றாள் மாயை. திரௌபதி “ஆம்” என்றாள். “ஆனால்...” என ஏதோ சொல்லவந்து நிறுத்திக்கொண்டு “நீ அவர்கள் இருவரின் உருவ ஒற்றுமையை கண்டாயா?” என்றாள்.

மாயை திகைத்து அக்காட்சியை அகத்தில் கண்டு நெஞ்சில் கையை வைத்தாள். திரௌபதி “ஆம், இருவரும் ஒன்றுபோலிருந்தனர். நிறமும் தோற்றமும். அதை அப்போதே கண்டேன் என இப்போதுதான் தெரிகிறது. படியேறி வந்த அர்ஜுனனைக் கண்டு நான் திகைத்தது அவன் கர்ணனைப்போல் இருப்பதை என் விழி அறிந்ததனால்தான்... ஆனால் அவ்வொற்றுமையை என் சித்தம் அறிவதற்குள்ளேயே வேறுபாட்டை அது அறிந்துகொண்டிருந்தது” என்றாள். மாயை ஒன்றும் சொல்லவில்லை. “ஏனென்றால் அது நான் தேடிக்கொண்டிருந்த வேறுபாடு.”

பிருஷதி அப்பால் சென்று நின்றபடி “வாருங்களடி” என்றாள். மாயை உதட்டை சுழித்தபடி “ஏன் இத்தனை சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம் இளவரசி? அறிவதற்கு இத்தனை சொற்கள் எதற்கு? நாம் அறியவிரும்பாத எதையாவது இச்சொல்சூழ்கையால் ஒளிக்க முயல்கிறோமா?” என்றாள். திரௌபதி சினத்துடன் “எதை?” என்றாள். “நாம் இன்னமும் சொல்லாக ஆக்கிக்கொள்ளாத ஒன்றை” என்றாள் மாயை. “இப்படிப்பேசினால் நீ காவியம் கற்றவள் என நிறுவப்படும், இல்லையா?” என்றாள் திரௌபதி ஏளனத்துடன். “இந்த ஏளனம்கூட ஒரு பாவனையோ?” என்றாள் மாயை. திரௌபதி சட்டென்று சிரித்து “போடி” என்றாள்.

பிருஷதி “என்னடி பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்? அரண்மனையில் பேசாத பேச்சா இங்கே?” என்றாள். திரௌபதி “வந்துகொண்டிருக்கிறோம்” என்று அவளிடம் சொல்லிவிட்டு “சொல்” என்றாள். மாயை “இளவரசி, அந்த மஞ்சள் அரக்கனை நீங்கள் இன்னமும் போகச்சொல்லவில்லை. தேரை சுமக்கவேண்டுமோ என எண்ணி அவன் அங்கே காத்திருக்கிறான்” என்றாள். திரௌபதி திடுக்கிட்டு “அய்யோ... நான் அவனை பரிசளித்து அனுப்பினேனே” என்றபடி திரும்பியதுமே மாயை விளையாடுகிறாள் என உணர்ந்து “என்னடி விளையாட்டு?” என்றாள்.

“ஏன் திடுக்கிட்டீர்கள்? அவனை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் ஏன் அந்த விலக்கம்?” என்றாள் மாயை. “விரும்பினேன். அப்போது அவன் பேருடல் என்னை முற்றாக சூழ்ந்திருந்தது. என் ஐம்புலன்களாலும் அவனை அறிந்தேன். ஆனால் அக்கணங்கள் முடிந்ததுமே அவ்வுடலை உதறிவிட்டு வெளியேறவே விழைந்தேன்” என்றாள் திரௌபதி. மாயை “ஏன்?” என்றாள். ”தெரியவில்லை!” “ஆண் உடலின் ஊன்வாசம் கலவியின்போதன்றி பெண்களுக்குப் பிடிப்பதில்லை என்பார்கள்” என்றாள் மாயை.

“என்ன?” என்றாள் திரௌபதி கண்களைச் சுருக்கி. “அர்ஜுனன் உங்களை உடல்மட்டுமாக உணரச்செய்தான். இவன் உடலை மட்டுமே அறிபவளாக உங்களை ஆக்குகிறான். காமத்தோடு அன்றி வேறெவ்வகையிலும் நீங்கள் இவர்களுடன் இருக்க முடியாது.” திரௌபதியின் விழிகள் சற்றே அசைந்து ஏதோ எண்ணம் ஓடிச்சென்றதை காட்டின. “பின் எவருடன் நான் இருக்கமுடியும் என்கிறாய்?” என்றாள் திரௌபதி. “கர்ணனுடன்... அவன்முன் நீங்கள் கன்னியிளம்பேதையாக நாக்குழற கால் நடுங்க நின்றிருக்கலாம். இன் சொல் பேசலாம். இரவும் பகலும் பேசினாலும் தீராத உள்ளத்தை அவனுடன் இருக்கையில் மட்டுமே கண்டடைவீர்கள்.”

திரௌபதி பெருமூச்சு விட்டு “என்னடி இக்கட்டு இது? ஒருத்தி தன் உள்ளத்தின் கண்ணிகளிலேயே இப்படி மாட்டிக்கொள்ள முடியுமா என்ன?” என்றாள்.

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 9

மீண்டும் தேரில் ஏறிக்கொண்டபோது திரௌபதி முற்றிலுமாக சொல்லடங்கி அமர்ந்திருந்தாள். ஆனால் மாயை பேச விரும்பினாள். ஓர் எண்ணம் முடிவதற்குள்ளாகவே அடுத்தது எழுந்தது. ஒவ்வொன்றும் முழுமையான கூரிய சொற்றொடர்களாகவே உருவம் கொண்டு வந்தன. “நீங்கள் ஆண்களில் தேடுவதென்ன இளவரசி?” என்றாள். “நீங்கள் நீர் நிறைந்து கரைகளை முட்டும் ஒரு பெருநீர்த்தேக்கம். இன்னமும் நிகழாத ஆற்றல். எடையாக மட்டுமே இருந்துகொண்டிருக்கும் விசை. நீங்கள் தேடுவது வெளிப்படும் வழிகளை மட்டுமே. இந்த ஆண்கள் ஒவ்வொருவரும் ஒரு திறப்பு. பேராறொன்றின் தடங்கள்...”

திரௌபதி சலிப்புடன் “நீ என்ன காவியம் இயற்றப்போகிறாயா?” என்றாள். அந்த ஏளனத்தில் அகம் சுருங்கி மாயை அமைதியானாள். “சொல்” என்றாள் திரௌபதி. “இல்லை, நான் வெறுமனே சொற்றொடர்களை உருவாக்குகிறேன்...“ என்றாள் மாயை. "தாழ்வில்லை, சொல். சொற்றொடர்களின் வழிகள் ஏதேனும் என்னைத் தொடுகிறதா என்று பார்க்கிறேன்.” மாயை “மொழி பொருளை கண்டடைவதில்லை இளவரசி, உருவாக்குகிறது” என்றாள். ”அதுவும் பராசரரின் நூலில் உள்ள வரியே” என்றாள் திரௌபதி. மாயை சிரித்து “ஆம், இத்தனை நூல்கள் இருக்கையில் நாம் புதியதாக ஏதும் சொல்ல முடிவதேயில்லை” என்றாள்.

சற்றுநேரம் அவர்களிடையே ஆழ்ந்த அமைதி நிலவியது. வண்டியின் சகட ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. திரௌபதி பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள். திரும்பி “இன்று நான் என் அனைத்து சமநிலைகளையும் இழந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். மாயை புன்னகை செய்தாள். “என்ன ஆயிற்று எனக்கு? ஏன் இப்படி இருக்கிறேன் இன்று?" என்றாள் திரௌபதி மீண்டும். “இளவரசி, இன்று நீங்கள் கன்னியாக இருக்கும் இறுதிநாள்” என்றாள் மாயை.

அச்சொற்கள் தீப்பொறிகள் வந்து விழுவதைப்போல திரௌபதியை நடுங்கி விலகச் செய்தன. அறியாமல் அவள் தன் நெஞ்சில் கைவைத்தாள். “நீங்கள் திரும்பப்பெற முடியாத ஒன்றை இழக்கப்போகிறீர்கள் இளவரசி. மணநாளுக்கு முந்தையநாள் நிலைகுலையாத பெண்ணே இல்லை. எளிய பெண்கள் நெஞ்சுருகி அழுவதை கண்டிருக்கிறேன்.” திரௌபதி சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஏன்?" என்றாள். “மீளமுடியாத ஒரு பயணத்தை தொடங்கவிருக்கிறீர்கள்...” என்றாள் மாயை. திரௌபதி சற்று நேரம் சிந்தித்தபின் “அதுவும் முழுக்க முழுக்க பகடையாட்டம்போல. எத்தனை மூடத்தனம் இல்லையா?" என்றாள்.

“ஆம், ஆனால் நூறாயிரம் கோணங்களில் நுணுகிச் சிந்தித்து முடிவெடுத்தாலும் அது பகடையாட்டமே” என்றாள் மாயை சிரித்தபடி. திரௌபதி எண்ணம் துளித்து நின்ற விழிகளால் நோக்கினாள். மாயை “நாம் அறியாத ஒருவரை அறிந்த சிலவற்றைக் கொண்டு தெரிவுசெய்வதில் என்ன இருக்கிறது? அறிந்திருந்தாலும் கூட அதில் என்ன பயன்? மானுடர் காலந்தோறும் மாறுபவர்கள் அல்லவா?" என்றாள். “அப்படிப்பார்த்தால் அத்தனை முடிவுகளும் நிலையற்றவைதானே?” என்றாள் திரௌபதி. ”ஆம், ஆனால் இம்முடிவு மட்டும் எப்போதைக்குமாக எடுக்கப்படுகிறது. மறுஎண்ணத்திற்கே இடமற்றது.”

மீண்டும் ஓர் பேச்சின்மை அவர்கள் நடுவே விரிந்தது. பெருமூச்சுடன் அதிலிருந்து கலைந்து வந்த திரௌபதி வலிய வரவழைத்த புன்னகையுடன் “சொல்லடி, நான் இதுவரைக்கும் கண்டவர்களில் எனக்குரியவர் எவர்?” என்றாள். மாயை “அதில் நான் என்ன சொல்ல இருக்கிறது இளவரசி?" என்றாள். "சொல்” என்றாள் திரௌபதி. “முடிவெடுக்கவேண்டியவர் நீங்கள்” என்றாள் மாயை மீண்டும். “நீ நானேதான். எனக்கிருக்கும் அழகின் ஆணவமும் இளவரசியென்ற பொறுப்பும் இல்லாத நான்தான் நீ. சொல்” என்றாள் திரௌபதி.

“இளவரசி, ஒவ்வொருவராக சொல்கிறேன். உங்கள் உள்ளம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆண்மகன் கர்ணனே. அவர் முன்னர் மட்டுமே உங்கள் உள்ளத்தில் நாணம் எழுந்தது. அவரையன்றி எவரை அடைந்தாலும் நீங்கள் நிறைவடையப்போவதில்லை” என்றாள். முகம் மலர்ந்து திரௌபதி “ஆம்” என்றதுமே மாயை ”ஆனால் அவர் ஒருபோதும் பேரரசராகப் போவதில்லை. அவரது துணைவியாக நீங்கள் சிற்றரசாகிய அங்கத்தின் சிறிய அரண்மனையை மட்டுமே ஆளமுடியும். அஸ்தினபுரியின் முடிகாண் விழாக்களில் சுயோதனரின் துணைவியாகிய பட்டத்தரசிக்கு அருகே நின்று அவள் ஆடைநுனியை பிடிக்கவேண்டும். அவள் கை களைக்கையில் தாலத்தையும் கோலையும் வாங்கிக்கொள்ளவேண்டும்” என்றாள்.

திரௌபதியின் உள்ளம் கொண்ட விலக்கம் உடலில் சிறிய அசைவாக தெரிந்தது. ஏதோ சொல்ல வருபவள் போல அவள் இதழ்கள் விரிய மாயை “ஆம் இளவரசி, அவர் மாவீரர். இன்று பெரும்படைகளை அவரால் நடத்தமுடியும். நினைத்தால் பாரதவர்ஷத்தை வெல்லவும் அவரால் முடியும். ஆனால் அவரது குருதியில் கலந்துள்ள மூன்று இயல்புகளால் அவர் புவியாள முடியாது” என்றாள். “ஒன்று, அவர் மிகமிகத் தனியர். சக்ரவர்த்திகள் காந்தப்பாறைகளைப்போல தொடுவன அனைத்தையும் தன்மேல் திரட்டிக்கொள்பவர்கள். இரண்டு அவர் பெரும் கொடையாளி என்கிறார்கள். அதை அவரை நோக்கியதுமே உணர்ந்தேன். தனக்கென எதையும் எண்ணா பெருங்கருணை கொண்டவர். இளவரசி, இவ்வுலகையே தன்னுடையதென எண்ணுபவர்களே சக்ரவர்த்திகளாக ஆகிறார்கள்.”

“அத்துடன் அவர் துரியோதனருக்கு இரண்டாமவனாகவே என்றும் இருப்பார். ஒரு தருணத்திலும் மீறிச்செல்லமாட்டார்” என்றாள் மாயை. திரௌபதி மீண்டும் ஏதோ சொல்லவர “இளவரசி, பாரதவர்ஷத்தை ஆளப்போகிறவர் துரியோதனர் அல்லது அவரைக் கொல்பவர். ஐயமே தேவை இல்லை” என்றாள் மாயை. திரௌபதி பெருமூச்சுடன் “ஆம்” என்றாள். மாயை புன்னகையுடன் “கர்ணன் முன் நீங்கள் பேதைக்காதலியாக ஆனீர்கள். அவ்வண்ணமே அவர் முன் முழுவாழ்நாளையும் கழிக்க முடியும் என்றால் உங்களுக்குரியவர் அவரே!” என்றாள்.

கழுத்திலிருந்த நீண்ட சங்கிலி ஒன்றை கையில் பற்றி சுழற்றிக்கொண்டிருந்த திரௌபதி அதை தன் பற்களிடையே வைத்துக் கடித்து “சொல்” என்றாள். “துரியோதனர் உங்கள் மேல் காதல்கொண்டிருக்கிறார். ஆனால் தன் நண்பனின் காதலை உணர்ந்ததுமே அதை தன்னுள் மூழ்கடித்துக்கொண்டார். இளவரசி, உடனே நீங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக ஆகவேண்டுமென்றால் அவரை மணப்பதே முதல் வழி. நீங்கள் மணந்துகொண்டதனாலேயே அவரது அரியணை உறுதியாகும். இருநாடுகளின் படைகள் இணைந்துகொள்ளும் என்றால் பாரதவர்ஷம் காலடியில் பணியும்.”

“மாவீரர். சக்ரவர்த்தியாக ஆவதற்கென்றே பிறந்தவர். ஆணைகளிட்டுப் பழகிய கண்கள். அடிபணியவைக்கும் சொற்கள். பெருந்தன்மையும் பெருங்கருணையும் கொண்ட மாமனிதர்” என்றாள் மாயை. “ஆனால் ஈவிரக்கமற்றவர். இளவரசி, அவர் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்றால் குருதியாறு ஓடவேண்டும். அப்படி அமைந்த அரசும் அடுத்த தலைமுறையில் அழியும். இரக்கமற்ற எவரும் பேரரசுகளை ஆண்டதில்லை.”

திரௌபதி போகட்டும் என கைகளை வீசி “அர்ஜுனன்?” என்றாள். “அர்ஜுனன் உங்களை வென்றெடுக்கக் கூடுமென்று என் அகம் சொல்கிறது. அவர் மண்ணையும் பெண்ணையும் ஆளும் அனைத்து ஆற்றலும் கொண்டவர், தோளிலும் நெஞ்சிலும். உரிமை கொள்பவர், வென்று மேல் செல்பவர், செய்துமுடிப்பவர், திரும்பி நோக்காதவர். இளவரசி, இரக்கமற்ற இச்சை கொண்ட ஆண்மகன் வெற்றியை மட்டுமே காண்பான். அவ்விச்சை முடியும் வரை.”

திரௌபதி புன்னகைத்தாள். “இளவரசி, உங்கள் காமம் என்றும் அவரை நோக்கியே எழும். ஆனால் நீங்கள் பாரதத்தின் சக்ரவர்த்தினியே ஆனாலும் அவருக்கு வெறும் உடல்தான். உங்கள் ஒரு சொல்லும் காமம் முடிந்தபின் அவர் செவியில் நீடிக்கப்போவதில்லை. பொருட்படுத்தாத ஆண் பெண்ணுக்கு அழியாத பெரும் அறைகூவல். அவரை வெறுப்பீர்கள். ஆனால் ஒவ்வொருநாளும் அவரையே எண்ணிக் கொண்டிருப்பீர்கள். அவரை ஒரு முறை முழுமையாக வென்றால் அமைதிகொள்ளலாம் என எண்ணுவீர்கள். அது இறுதிக்கணம் வரை நிகழாது. ஏனென்றால் கர்ணனைப்போலவே அவரும் முற்றிலும் தனியர். கர்ணனின் தனிமையை உங்கள் காதலால் நீங்கள் போக்கமுடியும். அர்ஜுனனின் தனிமையை அணுகவே முடியாது.”

“தருமன்?” என்றாள் திரௌபதி புன்னகையுடன். “கால்களற்ற விலங்கு” என்றாள் மாயை சிரித்துக்கொண்டே. திரௌபதி சிரித்ததில் சங்கிலியை விட்டுவிட்டாள். “அவர் தம்பியரின் தோள்களில் நிற்பவர். தனக்கென ஏதுமற்றவர். அவரை நீங்கள் மணந்தால் அமர்ந்து சொல்பழகலாம்.” திரௌபதி மீண்டும் சங்கிலியை எடுத்துக் கடித்தபடி “பீமனைப்பற்றி சொல்” என்றாள்.

“இளவரசி, அவரை நீங்கள் மணந்தால் பாரதவர்ஷத்தை ஆளமுடியும்” என்றாள் மாயை. “நிகரற்ற வீரன். ஐயமே இல்லை. இவ்வாழ்க்கையில் அவருக்கு தோல்வி என்பதே நிகழப்போவதில்லை.” திரௌபதி புருவத்தைத் தூக்கி “நீ என்ன நிமித்திகப்பெண்ணா?” என்றாள். “இல்லை. ஆனால் வெறும் பெண்ணுக்கே சில ஆழ்புலன்கள் உண்டு. அவரைச்சுற்றி ஏதோ ஒன்று இருக்கிறது. மகத்தானது. தெய்வங்கள் மட்டுமே சூடியிருக்கும் ஒளி அது. அவரை அது ஒருபோதும் தோற்க விடாது. இளவரசி, கர்ணனோ அர்ஜுனனோ கூட தோற்கலாம். இந்த மஞ்சள் அரக்கன் எங்கும் எந்நிலையிலும் தோற்கமாட்டார்.”

“அப்படியென்றால் அவர்தானா? போட்டியை மாற்றியமைக்க சொல்லிவிடலாமா?” என்றாள் திரௌபதி அதே சிரிப்புடன். “நீங்களே அறிவீர்கள் இளவரசி. அவர் தன் தமையனுக்கு கடன்பட்டவர். ஒருபோதும் அவர் தனக்காக வாழப்போவதில்லை. அன்புக்குக் கட்டுப்பட்ட விலங்கு என்றீர்கள், அது உண்மை. ஆனால் முழுமையாகவே அவர் தன் தமையனின் அன்பில் அமைந்துவிட்டார். தெய்வங்கள் கூட அவரை மீட்க இயலாது.”

“ஐவரையும் மணப்பதென்றால் சரிதான்” என்றாள் திரௌபதி சிரித்தபடி. “ஐவரும் ஒன்றாகவேண்டுமே?” என்று மாயை சிரித்தாள். “ஐவரையும் ஒன்றாக்கும் மாயமேதும் உள்ளதா என்று முனிவர்களிடம் கேட்போம். கங்கைக்கரையில் ஐந்து நெருப்புகளுக்கு நடுவே ஒற்றைக்காலில் நின்று ஆயிரமாண்டுகாலம் தவம்செய்கிறேன். ஐவரும் இணைந்த ஆண்மகன் ஒருவனுக்காக.”

“அப்படி ஒருவன் பிறந்து அவன் உங்கள் எதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றாள் மாயை. “போடி” என்றாள் திரௌபதி. “இளவரசி, இளைய யாதவனைப்பற்றி சூதர் பாடுவதைக்கேட்டால் அப்படித்தான் தோன்றுகிறது.” திரௌபதி சீற்றத்துடன் “போடி, அவர்கள் அவனை தெய்வமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்...” என்றாள். மாயை சிரித்தபடி “நாளை மணத்தன்னேற்பு நிகழ்வில் நீங்கள் ஒன்றை ஏற்க முடியும். நான்கை இழந்தாகவேண்டும்” என்றாள்.

“அப்படியென்றால் என்னதான் செய்வது?” என்று திரௌபதி கேட்டபோது உதடுகள் சிரித்துக்கொண்டுதான் இருந்தன என்றாலும் கண்கள் மாறுதலடைந்துவிட்டிருந்தன. “அதைத்தான் நான் சொல்லமுடியாது என்றேன். விதியை நம் மதி உணர்வதைவிட ஒர் எளிய பகடை நன்றாகவே அறியும். அதற்கே அப்பொறுப்பை அளித்துவிடலாம்” என்றாள் மாயை. திரௌபதி சில கணங்கள் மாயையை நோக்கிவிட்டு பின்பு புன்னகை செய்தாள்.

அதன்பின் இருவரும் பேசவில்லை. திரௌபதி முழுமையாகவே எண்ணங்களில் மூழ்கி சற்று தலைசரித்து இமைகள் சரிய அமர்ந்திருந்தாள். ரதம் ராதாதேவியின் ஆலயத்தை அணுகியது. வெளியே எழுந்த முரசொலியை கேட்டுத்தான் அவள் விழிப்படைந்து பெருமூச்சுடன் தன் ஆடையையும் குழலையும் நீவித்திருத்திக்கொண்டு திரைச்சீலையை விலக்கி வெளியே வந்தாள்.

கோயிலின் முதிய ஸ்தானிகர் கூப்பிய கரங்களுடன் அவர்களை நோக்கி ஓடிவந்தார். “அன்னையின் அருள்பெற வந்த இளவரசியின் அருளை நாங்கள் பெற்றோம்” என முகமன் சொன்னார். ”நான் கேசினிகுலத்து நிருபன். தலைமை ஸ்தானிகன். கூந்தல்வழிபாட்டுக்காக மூதன்னையர் மூவர் காத்திருக்கிறார்கள். தாங்கள் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. வருக!” என ஆற்றுப்படுத்தினார்.

பின்னால் பிருஷதியின் ரதம் வந்து நின்றது. நிருபருடன் வந்த வேறு இரு ஸ்தானிகர்கள் அரசியை வரவேற்க அந்த ரதம் நோக்கி சென்றனர். ஸ்தானிகர் அவர்களை படிகளில் ஏற்றி ஆலயத்தின் பெருவாயிலை நோக்கி கொண்டுசென்றார். ஐந்து அன்னையர் ஆலயங்களும் ஒரேவடிவம் கொண்டவை. உள்மண்டபங்களின் அமைப்பில் மட்டுமே சிறிய வேறுபாடுகள் இருந்தன. வாயிலை அடைந்ததுமே உள்ளே எழுந்த கருவறை தெரிந்தது.

உள்ளே வெள்ளைப்பசுவின் மீது பச்சைப்பட்டாடை அணிந்து அன்னை அமர்ந்திருந்தாள். எட்டு கைகளில் வலது கீழ்க்கையில் அஞ்சல் முத்திரையும் மேல்கைகளில் பசுங்கதிரும் அமுதகலசமும் கன்றுமேய்க்கும் வளைதடியும் கொண்டிருந்தாள். இடது கீழ்க்கையில் அடைக்கல முத்திரையும் மேல் கைகளில் கனியும் தாமரை மலரும் கோடரியும் ஏந்தியிருந்தாள். இருபக்கமும் எரிந்த நெய்விளக்குகளின் ஒளியில் அன்னையின் வெள்ளிச்சிலை பொன்னொளி கொண்டு மின்னியது.

ஸ்தானிகர் “இவ்வழி இளவரசி...” என அழைத்துச்சென்றார். பிருஷதி பூசைத்தட்டை சேவகர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு முன்னால் சென்றாள். திரௌபதியின் நடை சற்று தளர்ந்ததுபோல மாயை உணர்ந்தாள். ஸ்தானிகர் “முன்பு ஐங்குலங்களுக்கும் அன்னையரே பூசகர்களாக இருந்தார்கள். இப்போது எங்கள் கேசினி குலம் மட்டுமே அன்னையரை பூசகர்களாகக் கொண்டுள்ளது...” என்றார். ”பிறப்பும் மணமும் பலியும் வழிபாடும் இறப்பும் விண்ணேற்றமும் அன்னையராலேயே செய்யப்படுகின்றன... ”

ஆலயத்தின் வலப்பக்கம் கேசினி அன்னையின் ஆளுயர சிறிய செங்கல் முடிப்புரை இருந்தது. அதன் சிறுவாயில் முன் இருந்த பலிபீடத்தில் தெச்சி அரளி மலர்களுடன் பலிச்சோறு படைக்கப்பட்டிருக்க இருபக்கமும் செந்தழல் கிழிந்து பறக்கும் பந்தங்கள் எரிந்தன. அதன் முன்னால் கனத்த மரத்தூண்களுடன் மூன்றடுக்கு மண்டபம் ஒன்றில் மூன்று மூதன்னையரும் முகம் நோக்கி அமர்ந்திருந்தனர்.

சுருக்கங்கள் செறிந்த கரிய உடலும் வற்றிய முகமும் கொண்ட முதுபெண்டிர் புலித்தோல் ஆடை அணிந்து நெற்றியில் செந்நிறத்தில் முக்கண் வரைந்து புலிநகத்தாலான இளம்பிறை சூடியிருந்தனர். மாயை மெல்லியகுரலில் “இவர்களின் நீள்சடைகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...” என்றாள். சடைகளா என விழிதுழாவிய கணத்திலேயே திரௌபதி கண்டுகொண்டாள். அவர்களின் தோளில் இருந்து இறங்கி அமர்ந்திருந்த புலித்தோல் பீடத்தைச் சுற்றி தரையில் விரிக்கப்பட்டிருந்தன சடைக்கற்றைகள்.

சற்று முன்னால் சென்று சேவகர்களிடம் ஆணைகளை இட்டு மீண்டு வந்த ஸ்தானிகர் “இளவரசி, தாங்கள் மட்டும் மும்முறை கால்கழுவி வலக்கால் வைத்து மண்டபத்தில் ஏறிக்கொள்ளுங்கள். அரசி வெளியே வலப்பக்கமாக நின்றுகொள்ளவேண்டும்” என்றாள். பிருஷதி “செல்” என்று திரௌபதியிடம் சொல்லிவிட்டு ”தாலத்தை என்ன செய்வது ஸ்தானிகரே?” என்றாள். “தங்கள் பூசனையை அன்னையர் இறுதியில்தான் ஏற்றுக்கொள்வார்கள் அரசி” என்றார் ஸ்தானிகர்.

திரௌபதி நன்னீரால் கால் கழுவிவிட்டு வலக்கால் எடுத்துவைத்து மண்டபத்தில் ஏறினாள். கங்கையின் கரிய களிமண்ணால் செய்யப்பட்டு உலர்ந்து சுருங்கிய சிற்பங்கள் போல அமர்ந்திருந்த மூன்று அன்னையரின் முகத்திலும் விழிகளிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள் மூன்று அன்னையரையும் முறைப்படி மும்முறை கால்தொட்டு வணங்கினாள். மண்டபத்தில் சிறிய இரட்டைத் தந்தி வாத்தியமான குஜ்ஜிதத்துடன் நின்றிருந்த சூதப்பெண் “அன்னையரின் கூந்தலை எடுத்து தலைதொட்டு வணங்குங்கள் இளவரசி” என்றாள்.

திரௌபதி அந்தச் சடைகளை அருகே நோக்கியபோது ஒருவகை அச்சத்தையே அடைந்தாள். மூன்றுவாரைக்குமேல் நீளம் கொண்டிருந்தன அவை. கருவேங்கையின் மரவுரி போல உயிரற்றவையாக தோன்றின. அவள் அவற்றின் நுனியை எடுத்து தன் நெற்றிமேல் வைத்து வணங்கிவிட்டு அவர்களின் முன்னால் போடப்பட்டிருந்த புலித்தோல் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவளுக்கு வலப்பக்கமாக சூதப்பெண் தன் குஜ்ஜிதத்துடன் அமர்ந்தாள்.

“பாஞ்சாலத்தின் இளவரசி, மூதன்னையரின் அருள் தங்களை சூழ்வதாக! இன்று பங்குனி மாதம் முழுநிலவு. வானிலும் மலையுச்சிகளிலும் நதிகளிலும் காட்டிலும் வாழும் அன்னையர் அனைவரும் அகம் நிறைந்து கனிவுகொள்ளும் நாள். அவர்கள் ஒவ்வொருவரின் சொற்களும் உங்களை வாழ்த்துவதாக! ஆம். அவ்வாறே ஆகுக!” திரௌபதி தலைவணங்கினாள்.

“இளவரசி, பாஞ்சாலத்தின் கன்னியின் காவல்தெய்வங்களாகிய மூதன்னையர் அவள் நீள்குழலில் குடிகொள்கிறார்கள். பாரதவர்ஷத்தின் வேறெந்த பகுதியின் பெண்களுக்கும் இங்குள்ள பெண்களைப்போல் நீள்குழல் வளர்வதில்லை. மகள் பிறந்தால் ஒருவயது நிறைவுக்குப்பின் முதல் கருநிலவில் இங்கே கேசினி அன்னையின் முன் வைத்து கருமுடி களைந்து படைத்து வணங்குவர். பின்னர் அக்குழந்தையின் தலையில் முளைப்பது கேசினி அன்னையின் அருள். என்றும் அக்கன்னியுடன் இருந்து அவளை ஆள்பவள் அவள். மூத்த பெருங்குடியின் மூதன்னையாகிய கேசினியை வாழ்த்துவோம்!”

சூதப்பெண் தொடர்ந்தாள். முற்காலத்தில் காம்பில்யம் பேரன்னையாகிய உக்ரசண்டிகையால் ஆளப்பட்டது. இது ஊராக மாறுவதற்குமுன் சண்டகம் என்னும் அடர்காடாக இருந்தது. அக்காட்டின் நடுவே கோரைப்புல் அடர்ந்த சதுப்பின் விளிம்பில் நின்றிருந்த மாபெரும் அத்தி மரத்தில் கானுறைத் தெய்வமான உக்ரசண்டிகை குடியிருந்தாள். காற்றில்லாமல் காடே அசைவிழந்து நிற்கும் நடுமதியத்தில் கூட அந்த மரம் மட்டும் கிளைசுழற்றி இலைபறக்க ஓலமிட்டுக்கொண்டிருக்கும். அக்காடே அவ்வொலியைக் கேட்டு அஞ்சி கிளைதாழ்த்தி நின்றிருக்கும். குரங்குகளோ பறவைகளோ அம்மரத்தை அணுகுவதில்லை.

ஒருநாள் பசியால் தளர்ந்த தன் ஐந்து மைந்தர்களுடன் நம் குலத்தின் மூதன்னையாகிய கேசினி அங்கே வந்து சிற்றாறில் நீர் அருந்திவிட்டு அம்மரத்தடியில் அமர்ந்தாள். பழுத்து நிறைந்து நின்ற அத்திமரத்தைக் கண்டு குழந்தைகள் எழுந்து கைநீட்டின. அன்னை அம்மரத்தின் கீழ்க்கிளைகளில் தொங்கிய கனிகளைப் பறித்து தன் குழந்தைகளுக்கு அளித்தாள். காடு திகைத்து அசைவிழந்தது. அத்திமரம் கிளைசுழற்றி பேரோலமிட்டு வெறிகொண்டது, அருவியின் ஒலி போல உக்ரசண்டிகையின் குரல் எழுந்தது.

”என் கனிகளைக் கொய்து உண்டு பெரும்பிழை செய்துவிட்டீர். உங்களை பலிகொண்டு குருதியுண்டு பசி தீர்வேன்” என்ற அறைகூவலுடன் இருபெருங்கிளைகளை கொடுங்கைகளாக விரித்து அத்திமரம் குனிந்து வந்தது. மூதன்னை கேசினி “பசிகொண்ட மைந்தர்களை ஊட்டும் அன்னைக்கு நிகரல்ல எந்தப்பெருந்தெய்வமும். இது உண்மை என்றால் அடங்குக இக்காட்டரசி” என்று கூவியபடி தன் தோளில் சுருட்டிவைத்திருந்த நீள்குழலின் கற்றை ஒன்றைப் பிடுங்கி அவ்விரு கிளைகளையும் கட்டினாள்.

கைகள் கட்டுண்டு திகைத்த உக்ரசண்டிகை திமிறி கூச்சலிட்டாள். அந்தக் கட்டில் இருந்து தப்பமுடியாது என்று தெரிந்ததும் பணிந்து வணங்கி தன்னை விடுவிக்கும்படி கோரினாள். “நானும் என் மைந்தரும் வாழும் நகரமாகுக இக்காடு. அதன் காவல்தெய்வமாக நீயே அமர்க!” என்றாள் கேசினி. “வருடமொருமுறை மானுட ஊன்பலி எனக்கு அளிக்கப்படவேண்டும்” என்றாள் சண்டிகை. “அவ்வண்ணமே ஆகுக” என்றாள் கேசினி. சண்டிகை “நான் நகர் அமைபவள் அல்ல. கொலைமறப்பவளும் அல்ல. நான் இச்சதுப்பிலேயே உறைவேன்” என்றாள்.

கேசினி “அவ்வண்ணமென்றால் நகர்காக்கும் தெய்வங்களை நீயே படைத்தருள்க!” என்றாள். சண்டிகை “உன் மைந்தரிடம் ஆளுக்கொரு கல்லெடுத்து என் கால்களிலும் கைகளிலும் தலையிலும் வைக்கும்படி சொல்” என்றாள். அவ்வைந்து கற்களிலும் அன்னையின் அருளின் துளி குடியேறியது. ஐந்து பெரும் பருவடிவங்களாக அவர்கள் அன்னைக்கோலம் கொண்டனர். அவர்களைக் கொண்டு வந்து இங்கே நிலைநிறுத்தினர் மைந்தர்.

எரியே துர்க்கை. நீர் லட்சுமி. காற்று சரஸ்வதி. வானம் சாவித்ரி. இங்குறையும் ராதை மண்வடிவானவள். மற்றவர்களை நான்கு எல்லைகளிலும் நிறுவினாள் அன்னை. அவள் மைந்தர்கள் இந்நகரை அமைத்தனர். அன்னை இறைவடிவம் கொண்டபோது இங்கே அவளுக்கு சிற்றாலயம் அமைத்தனர். இங்கே அவர்களின் மகளிருக்கு கூந்தல்வழிபாடு செய்யும் முறை அன்று தொடங்கியது. குழலினி அன்னையின் புகழ் வாழ்க.

சூதப்பெண் பாடி முடித்ததும் ஸ்தானிகர் கைகாட்ட இரு சேடிகள் மண்டபத்தில் ஏறி திரௌபதியின் நீண்ட குழலில் இருந்த அணிகளையும் மணிகளையும் விலக்கினர். அதன் முடிச்சுகளை அவிழ்த்து நீட்டி மண்ணில் பரப்பினர். முழவுகளுடனும் உடுக்குகளுடனும் சூதர்கள் கேசினி அன்னையின் சிறிய கருவறையின் முன் சென்று நின்றனர். கோட்டைச்சுவர்மேல் பெருமுரசம் இமிழ சங்கொலி எழுந்தது. பிருஷதியும் மாயையும் கைகூப்பினர்.

மூன்று இளம்பூசகர்கள் தெற்குவாயில் வழியாக உள்ளே வந்தனர். இருபக்கமும் வந்தவர்களில் ஒருவர் கையில் ஒரு ஈச்சங்குருத்தும் இன்னொருவர் கையில் அத்திமரக்கிளையும் இருந்தன. நடுவே வந்தவர் கமுகுப்பாளையை தொன்னையாகக் கோட்டி இரு கைகளில் ஏந்தி சிந்தாமல் நடந்து வந்தார். அருகே வந்தபின்னரே அவர் எடுத்துவந்தது குமிழி வெடிக்கும் புதுக்குருதி என்று தெரிந்தது.

வெளியே காலபைரவியின் பலிபீடத்தில் கழுத்தறுக்கப்பட்ட செம்மறியாட்டின் குருதியை முதுபூசகர் வாங்கி கேசினியின் ஆலயத்திற்குள் கொண்டு சென்றார். வாத்தியங்களும் வாழ்த்தொலிகளும் அதிர்ந்து அதிர்ந்து காற்றை நிறைத்தன. கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு செய்யப்பட்ட கேசம் இருந்தது. ஐந்து பிரிகளாகப்பிரிக்கப்பட்டு விரிந்திருந்த அந்த முடிப்பீலிகளின் மேல் குருதித்துளிகளை விட்டு நீவினார் பூசகர். நீராட்டும் சுடராட்டும் நீறாட்டும் முடிந்தபின் குருதித்தொன்னையை கையில் ஏந்தி வெளியே வந்து மண்டபத்தை அடைந்து அதை படிகளில் வைத்தார்.

சூதப்பெண் அந்தத் தொன்னையை எடுத்து பசுங்குருதியை அன்னையரின் சடைக்கூந்தல் திரிகளின் மேல் தெளித்து வணங்கினாள். பின்பு திரௌபதியின் பின்பக்கம் தொன்னையை வைத்து அமர்ந்துகொண்டாள். நீண்டு தரையில் வழிந்திருந்த அவள் குழலை ஐந்தாகப் பகுத்து கரிய ஓடைகளாக நீட்டிவிட்டபின் அந்தக் குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசினாள். சூழ்ந்திருந்த சூதர்களின் முழவுகளும் மணிகளும் பெண்களின் குரவையொலியும் இணைந்து திரைபோல அவர்களை சூழ்ந்துகொண்டன.

ஐந்து குழல்பிரிகளிலும் குருதியை முழுமையாக நீவியபின் அவற்றைத் தூக்கி மென்மையாக முறுக்கினாள். அவற்றிலிருந்து கொழுத்த செங்குருதி சொட்டியது. குழல்பிரிகள் பலியாட்டில் இருந்து உருவி எடுக்கப்படும் குடல்கள் போலிருப்பதாக எண்ணிய மாயை உடனே உதட்டைக் கடித்து தலையை மெல்ல திருப்பி அவ்வெண்ணத்தை விலக்கிக் கொண்டாள். பெருமுழவின் தோலில் விழுந்த உருளைக்கோல் அவள் அடிவயிற்றிலேயே தாக்குவதுபோல தோன்றியது. கால்தளர்ந்து காதுகளில் வெம்மையான ஆவி படிவதுபோல் உணர்ந்தாள்.

முறுக்கிய கூந்தல் திரிகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மடித்துச் சுருட்டி பெரிய ஐந்து கொண்டைகளாக திரௌபதியின் தோளிலும் முதுகிலும் அமைத்தாள் சூதமகள். திரௌபதி கண்மூடி கைகூப்பி அமர்ந்திருந்தாள். அன்னையரில் ஒருத்தி கைகாட்டியதும் ஓசைகள் அடங்கின. அவள் எழுந்து வந்து குருதியைத் தொட்டு திரௌபதியின் நெற்றியில் வைத்து வாழ்த்தினாள். மூன்று அன்னையரும் வாழ்த்தி முடித்ததும் கைகூப்பியபடி எழுந்த திரௌபதி கேசினி அன்னையின் கோயில் முன் சென்று நின்றாள்.

அவளைச்சூழ்ந்து சேடிப்பெண்கள் மரவுரிகளால் ஆன சேலைகளால் மறைத்துக்கொண்டனர். ஆலயத்தின் உள்ளிருந்து ஏழு மண்குடங்களில் மஞ்சள் நீரை எடுத்து வெளியே வைத்தார் பூசகர். சேடிகள் அதை எடுத்து அவள் தலையில் கொட்டி கூந்தலை கழுவினர். உள்ளேயே குழல்துவட்டி மாற்றாடை அணிந்தாள். மரவுரியை விலக்கியதும் பசும்மஞ்சள் பட்டாடை அணிந்து அவள் நின்றிருந்தாள். பூசகர் அன்னையின் உடலில் இருந்து மஞ்சள் பொடியை எடுத்து அவள் நெற்றியில் இட்டு வாழ்த்தினார்.

கேசினியை வணங்கியபின் திரௌபதி ராதையின் சன்னிதிமுன் சென்று நின்றாள். பிருஷதியும் மாயையும் அவள் இருபக்கமும் நின்றிருந்தனர். மாயை அவளை ஓரக்கண்ணால் நோக்கினாள். அவள் அங்கில்லை என்று தோன்றியது. கனவிலிருப்பவள் போல, பித்தி போல தெரிந்தாள். அவள் கண்களை பக்கவாட்டில் பார்த்தபோது மிகப்பெரிய நீர்த்துளிகள் போலிருந்தன. அவற்றுக்குள் எங்கோ ஆழத்தில் நெருப்புத்துளிகள் சுழன்றன.

ஐந்து பருப்பொருட்களில் முதல்வியே

ஐந்து ஆதாரங்களின் தலைவியே

ஐந்து அழகுகளின் உறைவிடமே

முடிவற்ற விதைகள் உறங்கும் வயிறே

வற்றாத முலைகொண்டவளே

உன்னை வாழ்த்துகிறேன்

உள்ளே பூசகரின் பெருங்குரலில் மந்திரம் ஒலித்தது. “ரஸவாஹினி, சனாதனி, பரமானந்தஸ்வரூபிணி, மானினி, புஷ்பிணி, மகாமாயே நமஹ!" மாயை அன்னையின் பாதங்களை நோக்கினாள். அவள் காலடியில் கங்கையின் வண்டல் மண்ணை பரப்பி நவதானியங்களை விதைத்து முளைக்கவைத்திருந்தனர். பச்சைமென்பரப்பு புதிதாகப்பிறந்த மான்குட்டியின் தோல் போலிருந்தது.

பெருமணியோசையுடன் பூசனை முடிந்ததும் காற்று அடங்கி கொடி தணிவதுபோல திரௌபதியின் உடல் தளர்ந்தது. பிருஷதி “செல்வோம்” என்றாள். திரௌபதி அதை கேட்கவில்லை. பிருஷதி அவள் தோளைத் தொட்டு “வாடி” என்றாள். திரௌபதி கனவுநடையில் அவளைத் தொடர்ந்து சென்றாள். படிகளில் இறங்கியபோது மாயை ஓரக்கண்ணால் நோக்கினாள். திரௌபதி தன்னுணர்வுடன் இருப்பதாகவே தெரியவில்லை.

திரௌபதி இருக்கையில் அமர்ந்ததும் சகடங்கள் அசைய தேர் ஓசையிட்டு அசைந்தது. அவள் ஐந்து மடங்கு எடைகொண்டுவிட்டதுபோல் தோன்றியது. மாயை பெருமூச்சு விட்டாள். காதுகளில் அப்போதும் வாத்தியநாதமும் வாழ்த்தொலிகளும் கேட்டன. கண்களை மூடியபோது கொழுங்குருதித் துளிகளைக் கண்டு கண்களைத் திறந்தாள். விழுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது. நெற்றியும் கழுத்தும் வியர்த்தன. திரைச்சீலைகளை விலக்கிக்கொண்டாள்.

மெல்லிய விசும்பல் ஓசை கேட்டு மாயை திரும்பிப்பார்த்தாள். திரௌபதி உதடுகளை பற்களால் கடித்து அழுத்தியபடி அழுதுகொண்டிருந்தாள். பட்டு மேலாடை நுனியால் தன் மூக்கையும் கண்களையும் அழுத்தித் துடைத்தாள். விம்மலில் அவள் கழுத்து அதிர்வதை தோள்கள் குலுங்கி மீள்வதை நோக்கியபின் திரும்பி சாலையை நோக்கினாள். குதிரைவீரர்களின் கூட்டம் ஒன்று நடந்துசென்றவர்களை கூவி விலக்கியபடி கடந்து சென்றது. பின்னாலிருந்து வந்த நான்கு குதிரைவீரர்கள் ரதங்களைக் கண்டு விரைவழிந்தனர். எதிரே ஒரு சிறிய திறந்த ஒற்றைக்குதிரைத் தேர் வந்தது.

அதில் நின்றிருந்த கரிய இளைஞனைக் கண்டதும் மாயை குளிர்ந்த தொடுகை ஒன்றை நெஞ்சில் உணர்ந்தாள். அவன் தலையில் மயிற்பீலி சூடி மஞ்சள்பட்டாடையை தோளில் அணிந்திருந்தான். அவன் விழிகள் எவரையும் பார்க்கவில்லை. மாயை திகைத்து திரையை நன்றாக விலக்க திரௌபதி தன்னியல்பாக தலைதிருப்பி நோக்கியபின் நெய்பட்ட தழல் என உடலில் எழுந்த விரைவுடன் எட்டி வெளியே நோக்கினாள். அவன் தேர் கடந்து சென்றிருந்தது. தேர்த்தூணுக்கு அப்பால் அவன் வலது தோளும் ஒரு காலும் மட்டும் தெரிந்தன. சற்றே அசைந்த தலையில் இருந்த மயிற்பீலியின் விழி அவர்களை பார்த்துச்சென்றது.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 1

சிறிய குடிலுக்குள் நான்கு சப்பட்டைக் கற்களால் மூடப்பட்டு எரிந்துகொண்டிருந்த மீன்நெய் விளக்கை எடுத்து அதைத் தூண்டி சுடரெழுப்பி கையில் எடுத்துக்கொண்டு குந்தி வெளியே சென்றாள். குடிலை ஒட்டி தற்காலிகமாக கோரைப்புல் தட்டிகளைக்கொண்டு கூரையிட்டு மரப்பட்டைகளால் சுவரமைத்து கட்டப்பட்டிருந்த சாய்ப்புக் கொட்டகைக்குள் நுழைந்து தரையில் போடப்பட்டிருந்த மரப்பலகைகள் மேல் துயின்றுகொண்டிருந்த மைந்தர்களை நோக்கியபடி சிலகணங்கள் நின்றாள்.

அர்ஜுனன் எழுந்து “விடிந்துவிட்டதா அன்னையே?” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. அவன் செவிகள் துயில்வதில்லை. காலடியோசையிலேயே அவளை அறிந்திருந்தான். அர்ஜுனன் எழுந்து அருகே படுத்திருந்த தருமனை மெல்லத் தொட்டு “மூத்தவரே” என்றான். தருமன் கண்விழித்து எழுந்து சிலகணங்கள் பொருளில்லாமல் குந்தியின் கைகளில் இருந்த சுடரை நோக்கியபின் “என்ன?” என்றான். “விடிந்துவிட்டது...” அவன் திரும்பி அவனருகே கிடந்த பீமனை நோக்கி “இவனை எழுப்புவதற்குள் வெயிலெழுந்துவிடுமே” என்றான்.

அர்ஜுனன் நகுலனையும் சகதேவனையும் தொட்டு எழுப்பினான். அவர்கள் எழுந்ததுமே “விடிந்துவிட்டதா?” என்றார்கள். நகுலன் ஓடிச்சென்று பீமனின் மேல் ஏறி அமர்ந்து உலுக்கி “மூத்தவரே... உணவு! மலைபோல உணவு!” என்று கூவ சகதேவன் சிரித்தான். பீமன் பேருடலை புரட்டி திரும்பிப்படுத்தான். அவன் தோள்களைத் தூக்கியதும் அக்குளில் இருந்து கரடிகளுக்குரிய வாசனை எழுந்தது. “என்ன?” என்று அவன் சலிப்புடன் கேட்டான். "வயிறு நிறைய உணவு!” என்றான் நகுலன்.

எழுந்து அமர்ந்து இடையாடையை சரியாக உடுத்துக்கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்து “எங்கே?” என்றான் பீமன். “இன்று பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்பு. அத்தனை பிராமணர்களுக்கும் உணவுண்டு... தாங்கள் உணவுடன் ஒரு மற்போரே செய்யமுடியும்.” பீமன் அவனை தூக்கியபடி எழுந்து சுழற்றி முதுகின்பின்னால் கொண்டுசென்று வீசி நிற்கவைக்க அவன் நகைத்தபடி “இரவு முழுக்க துயிலிலும் உண்டுகொண்டே இருந்தீர்கள் மூத்தவரே” என்றான். பீமன் “உண்ணாமல் போனவற்றால் ஆனது என் கனவு” என்றான்.

“நீ அந்த நகையைக்கொண்டு நன்றாக உண்டிருக்கலாம்” என்றான் தருமன். பீமன் புன்னகையுடன் “மரவுரியுடன் நம்மை மணமண்டபத்திற்குள் விடமாட்டார்கள்” என்றான். குந்தி “புலரி முதற்கதிரிலேயே நாம் அரண்மனைக்குள் சென்றுவிடவேண்டும் மைந்தரே. அங்கே இன்று பெருங்கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள். உள்ளே செல்லமுடியாமல் போகுமென்றால் அனைத்தும் வீணாகிவிடும்” என்றாள். தருமன் “ஆம், கிளம்புவோம்” என்றான்.

கையில் அகல்சுடருடன் குந்தி நடக்க முன்னால் பீமன் செல்ல இறுதியாக அர்ஜுனன் வர அவர்கள் கங்கை நோக்கி சென்றனர். அவர்களின் நிழல்கள் வான் நோக்கி எழுந்து ஆடின. பாதையோரத்து மரங்களின் இலைத்தழைப்புகள் ஒளிவிட்டமைந்தன. உள்ளே சில பறவைகள் கலைந்து குரலெழுப்பின. ஒற்றையடிப்பாதை மேடேறியதும் நூற்றுக்கணக்கான படகுகளின் விளக்குகள் உள்ளும் புறமும் சுடர்ந்த கங்கையின் நீர்வெளி தெரியத் தொடங்கியது. செவ்வொளிகள் குருதிபோல நீருக்கு மேல் வழிந்து நெளிந்தாடின.

குந்தி “துர்வாசர் வந்திருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “என் குருநாதர் என அவரையே எண்ணுகிறேன். ஐந்து பாஞ்சால குலங்களில் ஒன்றாகிய துர்வாச குலத்திற்கு அவரே முதல்வர் என்றார்கள். மணமண்டபத்தில் இன்று அவர் குருபீடத்தில் அமர்ந்திருப்பார். அரண்மனைக்குச் செல்வதற்குள் அவரை சென்று சந்தித்துவிட எண்ணினேன்.” அவள் அத்தகைய பேச்சுக்களை எப்போதும் தருமனை நோக்கியே சொல்வாள் என்பதனால் பிறர் அமைதிகாக்க தருமன் சிந்தித்தபடியே சென்றான்.

“அவர் நமக்கு வழிகாட்ட முடியும் என எண்ணுகிறேன்” என்று குந்தி மீண்டும் சொன்னாள். “அன்னையே, முனிவரென்றாலும் அவர் துர்வாச குலத்தவர். தன் குலத்துக்கு மீறிய ஒன்றை சொல்லமாட்டார்” என்றான் தருமன். “ஆம், ஆனால் அவர் என்னை கைவிட்டுவிட முடியாது” என்றாள் குந்தி. "இந்த நகரிலிருந்து நாம் பாஞ்சாலியுடன் மட்டுமே மீளவேண்டும். இல்லையேல் அனைத்தும் இங்கு முடிந்துவிட்டதென்றே பொருள்.” அவள் அதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தமையால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

“அவையில் தோற்றால் நாம் ஷத்ரியரின் ஏளனத்துக்கு ஆளாவோம். பாஞ்சாலியை துரியோதனன் மணந்தால் அதன்பின் அவன் அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவனாக ஆவதை நம்மால் தடுக்க முடியாது. நாம் உயிருடனிருப்பது தெரிந்த பின்னர் இங்கு எங்கும் நாம் வாழமுடியாது. யாதவபூமிக்கு செல்லவேண்டியதுதான்.” அர்ஜுனன் “அஞ்சவேண்டாம் அன்னையே, இன்று நாம் வெல்வோம்” என்றான்.

“யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என உசாவியறிந்தேன்” என்றான் தருமன். ”மகதத்தின் ஜராசந்தன் வந்திருக்கிறான். மச்சநாட்டு கீசகன் வந்திருக்கிறான். நூற்றெட்டு ஷத்ரிய மன்னர்களும் வந்திருக்கிறார்கள். இளையோனின் கதாவல்லமை எப்படி இருந்தாலும் அவனால் ஜராசந்தனையும் கீசகனையும் ஒரே சமயம் எதிர்கொள்ளமுடியுமா என்று பார்க்கவேண்டும்.” பீமன் “நான் அவர்களை கொல்வேன்” என்றான்.

அதை கேளாதவன்போல தருமன் “கர்ணனும் துரியோதனனும் நேற்று துர்க்கை ஆலயத்திலிருந்து இளவரசியைத் தொடர்ந்து லட்சுமி ஆலயம் வரை வந்தார்கள் என்கிறான் பார்த்தன். அவர்களின் இலக்கு தெளிவானது. கர்ணன் தென்னகத்தில் பரசுராமரின் மாணவனாக இருந்தான் என்றும் இன்று பாரதவர்ஷத்தின் நிகரற்ற வில்லாளி அவனே என்றும் சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாதபோது அவனே தொடர்ந்தான் “நாம் எளிதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என்றே சொல்ல வருகிறேன்.”

குந்தி கங்கைக்கரையில் விளக்குடன் அமர்ந்துகொண்டாள். அவர்கள் காலைக்கடன்களை முடித்து நீரிலிறங்கி நீராடிவந்தனர். அதன் பின் அவள் இறங்கி நீராடி கரையேறினாள். திரும்பும்போது குந்தி ”நாம் அஞ்சவேண்டியது முதன்மையாக யாதவ கிருஷ்ணனைத்தான்” என்றாள். தருமன் திரும்பி “அவன் வந்திருக்கிறான் என்றார்கள்” என்றான். குந்தி ”இந்த மணத்தன்னேற்பில் வில்லுடன் அவன் எழுந்தால் அவன் வெல்வதைப்பற்றிய ஐயமே இல்லை” என்றாள். “உண்மை” என்றான் தருமன். பிறர் ஒன்றும் சொல்லவில்லை.

குந்தி “அவனுக்கு பேரரசு ஒன்றை அமைக்கும் எண்ணமிருக்கிறது. அதற்கு பாஞ்சாலமகளை மணப்பதைப்போல சிறந்த வழி என ஏதுமில்லை. அவன் அவளை வென்றால் இன்று இந்த மணமேடையிலேயே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என முடிசூட்டிக்கொள்ளலாம்” என்றாள். தருமன் “ஆம், நான் நேற்றெல்லாம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். நேற்று இளவரசியை அண்மையில் கண்டேன். கிருஷ்ணை. இப்புவியில் எவருக்கேனும் அவள் முற்றிலும் பொருத்தமானவள் என்றால் அவனுக்குத்தான். அவன் பெண்ணாகி வந்ததுபோல் இருக்கிறாள்” என்றான்.

“அவனை நேரில் கண்டு மன்றாடினால் என்ன என்று எண்ணினேன். ஆனால் சகுனியும் கணிகரும் வந்திருக்கிறார்கள் என்றனர் ஒற்றர். அவனைச்சுற்றி எங்கும் ஒற்றர்கள் இருப்பார்கள்.” பீமன் “அன்னையே, நாம் இங்கு வந்ததுமுதலே நம்மை இவ்வரசின் ஒற்றர்கள் அறிவார்கள் என எனக்குத் தோன்றுகிறது” என்றான். குந்தி “ஆம், அறியட்டும் என்றே நானும் எண்ணினேன். விருகோதரா, நீ எங்கும் ஒளிய இயலாது. நாம் வந்துள்ளோம் என்றும் மணமண்டபத்தில் அர்ஜுனன் எழுவான் என்றும் துருபதன் அறிவது நல்லது. அது உங்களுக்குப் பாதுகாப்பு” என்றாள்.

அர்ஜுனன் திடமான குரலில் “நான் வந்திருப்பதை யாதவன் அறிவான். ஆகவே அவன் மணமண்டபத்தில் எழமாட்டான்” என்றான். குந்தி பரபரப்புடன் “நீ அவனிடம் பேசினாயா?” என்றாள். “இல்லை. நான் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தபோது என்னை அவன் தேரில் கடந்துசென்றான்” என்றான் அர்ஜுனன். “அவன் உன்னைப் பார்த்தானா?” என்று கேட்டு குந்தி நின்றுவிட்டாள். “அன்னையே, அவன் எதையும் பார்க்காமல் கடந்துசெல்பவன் அல்ல.” சிலகணங்கள் நின்றபின் குந்தி முகம் மலர்ந்து “அதுபோதும்...” என்றாள்.

அவளுடைய நம்பிக்கை அவர்களனைவரிடமும் பரவியது. குடிலுக்குத் திரும்பி பீமன் முந்தையநாள் வாங்கி வந்திருந்த பட்டாடைகளை அணிந்துகொண்டிருந்தபோது நகுலன் “புத்தம்புதிய கலிங்கப்பட்டு... பட்டாடை இடையில் நிற்குமா என்றே ஐயம் எழுகிறது” என்றான். “நிற்காவிட்டாலும் நல்லதுதான். வைதிகர்களின் பட்டாடைகள் இடையில் நிற்பதில்லை” என்றான் சகதேவன். “நாம் உணவருந்திவிட்டுச் செல்வதே சிறப்பு என நினைக்கிறேன்... மணமேடையில் அமர்ந்தபின் உணவுக்காக எழ முடியாது” என்று பீமன் சொல்ல “அதை நீ நினைவுபடுத்தவில்லை என்றால் வியந்திருப்பேன்” என்றான் தருமன். அந்த எளிய கேலிகளுக்கே அவர்கள் உரக்க நகைத்துக்கொண்டனர்.

குந்தி வெண்ணிற ஆடை அணிந்து வந்து கிழக்கு நோக்கி நின்றாள். ஐந்து மைந்தர்களும் அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினர். “வென்று வருக!” என அவள் வாழ்த்தினாள். தருமன் பெருமூச்சுடன் திரும்பி வானத்தை நோக்கியபின் நடந்தான். தம்பியர் பின் தொடர்வதை குடில்முன்னால் நின்று குந்தி நோக்கிக் கொண்டிருந்தாள்.

காம்பில்யத்தில் கங்கைக்கரை ஓரமாக இருந்த எளிய வைதிகர்களின் சேரியில் இருந்து கிளம்பி சிறிய மண்பாதை வழியாக அவர்கள் மையச்சாலைக்கு வந்தபோது வெண்ணிறச் சுவர்கள் துலங்க மாளிகைகள் இருளை விலக்கி எழுந்து வந்தன. வண்ணங்கள் துலங்கத் தொடங்கின. மாளிகைகளின் குவைமுகடுகளுக்கு அப்பால் வானில் மேகங்கள் ஒவ்வொன்றாக பற்றிக்கொண்டன.

வியர்வை வீச்சம் எழ நாலைந்து குதிரைகளில் இரவெல்லாம் காவல் காத்து முறை மாறி மீண்ட காவலர்கள் கடந்துசென்றனர். குளம்பொலிகள் மாளிகைச்சுவர்களில் எதிரொலித்தன. மெல்லமெல்ல நகரம் விழித்தெழத்தொடங்கியது. அத்தனை சந்துகளில் இருந்தும் புற்றிலிருந்து ஈசல்கள் போல புத்தாடை அணிந்த மக்கள்திரள் எழுந்து வந்து பெருஞ்சாலையை நிறைத்தது. சாலை சந்தைமுனையைக் கடந்து மையநகருக்குள் சென்றபோது தோளோடு தோள்முட்டாமல் நடக்கவே முடியாமலாகியது.

களிகொண்ட மக்களின் பேச்சொலிகள் கலந்து ஒற்றை பெருமுழக்கமாக ஆகி நகரை மூடியிருந்தது. கங்கையில் நீராட்டப்பட்ட பன்னிரு யானைகள் துதிக்கைகளில் சங்கிலிகளை எடுத்துக்கொண்டு இருள்குவைகள் என சென்றன. சாலையின் முனையில் முதல் யானை நிற்க பிற யானைகள் ஒன்றன் மேல் ஒன்று முட்டித் திரள ஒரு யானை சற்று விலகி பக்கவாட்டில் செல்ல துதிக்கை நீட்டியது. அருகே சென்ற பாகன் அதை பைசாசிக மொழியில் அதட்ட அது துதிக்கையை திரும்ப எடுத்துக்கொண்டு மீண்டும் வரிசையில் இணைந்துகொண்டது.

சிலந்தி வலைபோல குறுக்காக சிறிய சாலைகளால் இணைக்கப்பட்ட எட்டு அரசப்பெருஞ்சாலைகளின் நடுவே இருந்தது அரண்மனைக்கோட்டம். கிழக்குப்பெருஞ்சாலையில் சகடங்கள் ஒலிக்க , கொடிகள் இளங்காற்றில் பறக்க, பொன்மின்னும் அணித்தேர்கள் மட்டும் சென்றன. அவர்கள் அதை அடைந்தபோது காவல் முகப்பில் இருந்த காவல்மாடத்தின் முன்னால் நின்ற வேலேந்திய காவலன் பணிந்து “இது அரசரதங்களுக்கு மட்டுமே உரிய சாலை உத்தமரே. வைதிகர்களுக்கும் பரத்தையருக்கும் வடக்குச்சாலையும் பெருவணிகர்களுக்கும் பெருங்குடித்தலைவர்களுக்கும் இசைச்சூதர்களுக்கும் மேற்குச்சாலையும் பிறருக்கு தெற்குச்சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என்றான்.

அவர்கள் அரண்மனைக்கோட்டத்தை சுற்றிக்கொண்டு சென்றார்கள். அவ்வேளையில் சிறிய துணைச்சாலைகள் முழுக்க உள்ளக்கிளர்ச்சி தெரியும் முகங்களுடன் மக்கள் பேசிக்கொண்டு நின்றிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்றாலயங்களில் பூசைகள் செய்யப்பட்ட மணியோசைகளும் தூபவாசமும் வந்தன. சாலைப்பூதங்களுக்கு முன்னால் ஊனுணவு படைக்கப்பட்டிருந்தது. மூதன்னையர் ஆலயங்களில் இன்கூழும் கணபதி ஆலயங்களில் அப்பங்களும் படைக்கப்பட்டிருந்தன. படைக்கப்பட்டு எடுத்த உணவை கூடிக்கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்தவர்கள் விரைந்த கையசைவுகளுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“அங்கே பார், வைதிகன் ஒருவன் அரக்கனை பெற்றிருக்கிறான்” என எவரோ சொல்ல வேறு எவரோ கேட்காதவண்ணம் ஏதோ சொன்னார். அடக்கப்பட்ட சிரிப்பொலிகள் எழுந்தன. “ஐவரில் ஒருவன் அரசனைப்போல் இருக்கிறான்” என்று ஒரு பெண் சொன்னாள். இன்னொருத்தி அதற்குச் சொன்ன மறுமொழி அவர்கள் அனைவரையும் வெடித்துச் சிரிக்கவைத்தது. வண்ண ஆடை அணிந்த பெண்கள் சிலர் மலர்க்கூடைகளுடன் சென்றனர். அத்தனை விழிகளும் சரிந்து வந்து அர்ஜுனனை தொட்டுச் சென்றன.

வடக்குச்சாலையில் வைதிகர்கள் மூங்கிலில் கட்டப்பட்ட பட்டு மஞ்சல்களில் வந்து காவல்கோட்ட முகப்பில் நின்றிருந்த படைவீரனிடம் தங்கள் பெயரையும் குலத்தையும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுகொண்டிருந்தனர். செம்பட்டு மஞ்சலில் சரிந்து கிடந்த வெண்ணிறமான முதியவர் பீமனை ஆர்வமின்றி விழிதொட்டு உடனே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். போகிகளை நிறுத்தச்சொல்ல தூக்கிய கைகளுடன் திறந்த வாயும் விழித்த கண்களுமாக அவர் கடந்துசென்றார்.

மூங்கில்பல்லக்குகளில் முதிய வைதிகர் சென்றனர். ஏதோ குருகுலத்திலிருந்து வேதமாணவர்கள் மஞ்சள்நிறச் சால்வைகளை போர்த்தியபடி உரக்கப்பேசிச் சிரித்துக்கொண்டு வந்து பீமனைக் கண்டு திகைத்து ஓசையடங்கி ஒருவரை ஒருவர் தொட்டு அவனைச் சுட்டிக்காட்டி ஒருவரோடொருவர் முட்டி நின்றனர். பீமன் அவர்களில் ஒரு சிறுவனை நோக்கி புன்னகைத்தான். அவன் திகைத்து சற்றுபெரிய ஒருவனின் சால்வையைப் பற்றிக்கொண்டு பின்னடைந்தான்.

“உன் பெயர் என்ன?” என்றான் பீமன். அவன் சிறிய வெள்ளெலி போல பதைத்து பின்னடைந்து தாடையை மட்டும் நீட்டி “சுண்டு” என்றான். “காயத்ரி சொல்கிறாயா?” என்றான் பீமன். அவன் ஆமென தலையசைத்தான். “நிறைய சொல்லாதே. நான் நிறைய சொன்னதனால்தான் வீங்கி இவ்வளவு பெரிதானேன்...” என்றபின் தன் வயிற்றைத் தொட்டு “உள்ளே முழுக்க காயத்ரி நிறைந்திருக்கிறது” என்றான். சுண்டுவின் விழிகள் தெறித்துவிடுபவை போல தெரிந்தன.

முன்னால் சென்றுவிட்டிருந்த தருமன் அலுப்புடன் “மந்தா, என்ன அங்கே? வா” என்று அழைத்தான். பீமன் விழிகளை உறுத்து நோக்கிவிட்டு சென்று சேர்ந்துகொண்டான். பிற சிறுவர்கள் சென்றபின்னரும் சுண்டு அங்கேயே நின்று பீமனை நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் சற்று அப்பால் சென்றபின் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்தான். சுண்டு வெட்கி வளைந்தபின் தன் தோழர்களை நோக்கி ஓடினான்.

வடக்குவாயில் காவலனிடம் தருமன் "தைத்ரிய ஞானமரபில் பிங்கல குருமரபு. என் பெயர் கல்பகன். இவர் என் மாணவர்” என்றான். காவலன் பீமனை நோக்க “அவர் பால்ஹிகநாட்டைச்சேர்ந்தவர். அங்கே அனைவரும் பேருடல் கொண்டவர்கள்தான்” என்றான். இன்னொரு காவலன் உள்ளிருந்து வந்து பீமனை திகைப்புடன் நோக்க மேலும் ஒருவன் உள்ளிருந்து வந்து “ஷத்ரியர்கள் ஏன் இங்கே வருகிறார்கள்?” என்றான். “இவர்கள் பிராமணர்கள்...” என்றான் முதல் காவலன்.

அவர்கள் கடந்துசெல்லும்போது அவன் மெல்ல “நாட்டில் பிராமண உணவு பெருத்துப்போய்விட்டது” என்பது காதில் விழுந்தது. வடக்குச்சாலை நேராக அரண்மனைக்கோட்டத்தின் வடக்குப் பெருவாயிலை நோக்கி சென்றது. மரத்தாலான கோட்டைமுகப்புக்கு மேல் பெருமுரசு இளவெயிலில் மின்னிய தோல்வட்டத்துடன் அமர்ந்திருந்தது. கீழே வேல்களுடன் நின்ற காவலர்கள் எவரையும் தடுக்கவில்லை. இடையில் சிறிய கொம்பு ஒன்றை கட்டியிருந்த காவலர்தலைவன் இறங்கி வந்து பீமனை நோக்கிக் கொண்டு நின்றான். ஒருகணத்தில் அவன் விழிகள் பற்றிக்கொண்டன. பீமன் அவனை நோக்கி புன்னகைத்து விட்டு உள்ளே சென்றான்.

பித்தளைச் சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் வேள்விக்கான பொருட்களை வைதிகர் சிலர் தள்ளிக்கொண்டு சென்றனர். இருவர் வெண்ணிறப்பசு ஒன்றை முன்னால் தழையைக் காட்டி கூட்டிக்கொண்டு செல்ல பசு ஐயத்துடன் நின்று வால் தூக்கி சிறுநீர் கழித்தது. அரண்மனைக்கோட்டத்தின் முகப்பில் மரத்தாலான மூன்றடுக்குக் கட்டடம் ஒன்று எழுந்து நின்றது. அதன் பெரிய தூண்களில் எல்லாம் பட்டுசுற்றப்பட்டு உத்தரங்களில் பாவட்டாக்களும் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. மேலே உயர்ந்த கொடிமரம் மீது பாஞ்சாலத்தின் விற்கொடி பறந்தது. அருகே சற்று சிறியதாக சத்யஜித்தின் விருச்சிகக் கொடி.

அது அமைச்சு நிலையம் என்று அங்கே தெரிந்த தலைப்பாகைகள் காட்டின. கவலையுடன் வெளியே வந்த ஒருவர் முற்றத்தில் நின்ற சிறிய தேரில் ஏறிக்கொள்ள குதிரை செருக்கடித்து தரையில் பாவப்பட்டிருந்த கருங்கல் மேல் குளம்புகளின் லாடங்கள் தாளமிட கடந்துசென்றது. உள்ளே வந்த வைதிகர்கள் முற்றத்தில் கூடி திரண்டு பக்கவாட்டில் திறந்திருந்த வாயிலை நோக்கி சென்றனர். அங்கே மரத்தாலான மேடை மேல் நின்றிருந்த சத்யஜித் அவர்களை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்று உள்ளே செல்லுமாறு கோரினார்.

பீமனைக் கண்டதுமே சத்யஜித்தின் விழிகள் விரிந்தன. அவர் அருகே நின்றிருந்த காவலர்தலைவன் விழிகளும் ஒளிகொண்டன. ஆனால் எவ்வித முகமாறுபாடும் இல்லாமல் கைகுவித்து “தங்கள் வாழ்த்துக்களால் இந்த அரண்மனை நிறைக வைதிகர்களே” என்று சொல்லி வணங்கினார். தருமன் பிராமணர்களுக்குரிய முறையில் இடக்கையால் ஆசியளித்து விட்டு உள்ளே சென்றான்.

காம்பில்யத்தின் அரண்மனைத் தொகுதிகளின் வடகிழக்கே மூன்றுபக்கமும் ஏழடுக்கு அரண்மனைக் கட்டடங்களால் சூழப்பட்ட சிம்சுமாரசக்ரம் என்னும் மாபெரும் உள்முற்றம் முழுமையாகவே கூரையிடப்பட்டு பந்தலாக ஆக்கப்பட்டிருந்தது. ஏழடுக்கின் கூரைவிளிம்பில் இருந்து மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து முக்கோணங்களின் வரிசைகளாக்கி அவற்றை வளைக்கப்பட்ட மூங்கில் விற்களால் இணைத்துப்போடப்பட்டிருந்த கூரை வானம் போல மிக உயரத்தில் தெரிந்தது.

அங்கிருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான மெல்லிய மூங்கில்தூண்கள் அனைத்திலும் சுற்றப்பட்டிருந்த பொன்னிறமான பட்டாடைகள் அசைய அந்தப்பந்தல் பூத்த கொன்றைமரக்காடு போலிருந்தது. அதற்குள் அப்போதே பாதிக்குமேல் வைதிகர்கள் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். அவர்கள் அமர்வதற்கு உயரமற்ற மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டு . பந்தலெங்கும் ஆங்காங்கே சிறிய பீதர்நாட்டு தூபச்சட்டிகள் வைக்கப்பட்டு நறுமணப்புகை எழுந்துகொண்டிருந்தது. குடிநீரும் இன்னுணவுகளும் பரிமாறும் சேவகர்கள் நீலநிற தலைப்பாகைகளுடன் ஓசையின்றி நடமாடினர்.

இடம் பிடித்தவர்கள் எழுந்து நின்று பின்னால் வருபவர்களை நோக்கி கூவி அழைத்தனர். தாங்கள் மரவுரி போட்டு இடம்பிடித்த இடங்களில் அமர்ந்திருந்தவர்களை எழும்படிச் சொல்லி கூவினர். ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு சிரித்து நலம் விசாரித்தனர். அங்கே அவர்களின் குரல்களினாலான முழக்கம் எழுந்து காற்றாகி தலைக்குமேல் அலையடித்தது. பீமனைக் கண்டதும் அப்பகுதியில் உருவான அமைதியைக் கண்டு பிறர் திரும்பி நோக்கினர். ஒருவன் எழுந்து விலகி இடம் அளித்தான்.

“சற்று பின்பக்கம் அமர்ந்துகொள்வோம்...” என்றான் தருமன். “நமது முகங்கள் ஷத்ரியர்களுக்கு தெரியலாகாது. ஆனால் நாம் எழுந்து செல்வதற்கான வழியும் இருக்கவேண்டும். குடிநீர்குடமருகில் வருவதற்கான வழி உகந்தது.” அவர்கள் அமர்ந்துகொண்டதும் பீமன் தரையிலேயே கால்மடித்து அமர்ந்தான். அவன் தலை அப்போதும் பிறர் தலைகளைவிட சற்று மேலெழுந்து தெரிந்தது.

வைதிகர்களின் சபைக்கு முன்னால் பட்டுத்துணிச்சுருளாலான வேலி ஒன்று கட்டப்பட்டிருக்க அதற்கு அப்பால் அரைவட்ட வடிவமான மணமுற்றம் மலரணிசெய்யப்பட்டு காத்திருந்தது. அங்கே உயரமற்ற மணமேடையில் மூன்று அரியணைகள் இருக்க சற்று அப்பால் ஒற்றை மயிலிருக்கை ஒன்று விரிந்த நீலத்தோகையுடன் இருந்தது. அவற்றின் அருகே வேலுடன் காவலர்கள் நின்றிருந்தனர். மணமுற்றத்தில் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு மேலே வெண்பட்டு வளைவில் இருந்து மலரணிக்கொத்துக்கள் தொங்கின. சித்திர எழினிகளும் வண்ணப்படாம்களும் சூழ்ந்த பின்பக்கத்தில் இரு அணிவாயில்களில் செவ்வண்ணத் திரைகள் காற்றில் நெளிந்தன.

மணவரங்குக்கு வலப்பக்கமாக மூன்றுநெருப்புகளும் வாழும் மூன்று எரிகுளங்கள் அமைக்கப்பட்டு அவற்றைச் சுற்றி வேள்விசெய்யும் வைதிகர் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குரிய நெய்யையும் சமித்துக்களையும் கொடுக்க பின்னால் உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களருகே நூற்றெட்டு பொற்குடங்களில் கங்கைநீர் மாவிலையால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. வேள்விக்காக நடப்பட்ட பாஞ்சாலர்களின் அத்திமரக்கிளையில் மஞ்சள்பட்டு கட்டப்பட்டிருந்தது.

மணவரங்குக்கு இடப்பக்கமாக மங்கல வாத்தியங்களுடன் சூதர்கள் அமர்ந்திருந்தனர். முழவுகளும் யாழ்களும் கிணைகளும் அவர்களின் மடியில் காத்திருந்தன. யாழேந்திய சிலர் அதன் ஆணிகளையும் திருகிகளையும் சுழற்றி சுருதி சேர்த்துக்கொண்டிருக்க சிலர் முழவுகளை மூடிய பட்டுறைகளை கழற்றினர். ஒருவர் கிணை ஒன்றின்மேல் மெல்ல விரலோட்ட அது விம்மிய ஒலி அத்தனை இரைச்சலிலும் காட்டில் எழும் சிம்மக்குரல் என தனியாக கேட்டது.

தூண்களைப் போலவே தடித்த மலர்மாலைகள் மேலிருந்து தொங்கி காற்றில் மெல்ல ஆடி நின்றன. பூவரசமலரிதழ்கள் போல மஞ்சள் பட்டை விரித்துக் கட்டி அணிமலர்களை உருவாக்கி கூரைக்குவைகளில் அமைத்திருந்தனர். சூழ்ந்திருந்த மாளிகைகளின் முகத்திண்ணைகளிலும் மேலே எழுந்த ஆறு உப்பரிகைகளிலும் அரண்மனை மகளிர் வண்ணப்பட்டாடைகள் ஒளிவிட பொன்வண்டுகள் மொய்ப்பதுபோல வந்து குழுமினர்.

மணவரங்கின் அரியணைகளுக்கு நேர் முன்னால் ஷத்ரியர்களுக்கான அரங்கில் அரைவட்ட வடிவில் நூற்றுக்கணக்கான பீடங்கள் செம்பட்டு விரிக்கப்பட்டு நிரைவகுத்திருந்தன. அவற்றின் மேல் பொன்னிறப் பட்டாலான தூக்குவிசிறி வெளியே இருந்து இழுக்கப்பட்ட சரடால் அசைந்துகொண்டிருந்தது. அங்கே தூண்களில் தொங்கிய அணித்திரைகளும் கூரையிலிருந்து இழிந்த பட்டுத்தோரணங்களும் காற்றில் அலையடித்தன.

மணவரங்குக்கு இடப்பக்கம் வணிகர்களும் குலத்தலைவர்களும் அமரும் அரங்கு பெரும்பாலும் நிறைந்துவிட்டிருந்தது. தலைப்பாகைகளின் வண்ணங்களால் அப்பகுதியே பூத்துக்குலுங்கியது. அங்கே வாயிலில் சித்ரகேது நின்று ஒவ்வொருவரையாக வரவேற்று உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு குலத்துக்கும் உரிய கொடிகள் அவர்கள் இருந்த இடத்துக்குமேல் பறந்தன. சிருஞ்சயர்களின் மகரக்கொடி. கிருவிகளின் இலைக்கொடி. கேசினிகளின் நண்டுக்கொடி. சோமகர்களின் பனைமரக்கொடி துர்வாசர்களின் எருதுக்கொடி. அக்கொடிகளுக்குக் கீழே போடப்பட்ட பீடங்களில் குலத்தலைவர்கள் அமர்ந்தனர். அருகே அவர்களின் குலமூத்தார் அமர்ந்துகொண்டனர்.

ஒவ்வொரு வணிகக்குழுவுக்கும் அவர்கள் விற்கும்பொருட்களின் சித்திரம் பொறித்த வெண்கொடி இருந்தது. பொன்வணிகர்களின் இலட்சுமிக்கொடி. கூலவணிகர்களின் கதிர்க்கொடி. கூறை வணிகர்களின் வண்ணத்துப்பூச்சிக் கொடி. கடல்பொருள் வணிகர்களின் சங்குக்கொடி. வைசியர், சூத்திரர் குலத்தலைவர்களும் தங்களுக்குரிய கொடிகளை கொண்டிருந்தனர். மேழிக்கொடியுடன் வேளிர்களும் மீன்கொடியுடன் மச்சர்களும் வளைதடிக்கொடியுடன் யாதவர்களும் விற்கொடியுடன் வேடர்களும் கோடரிக்கொடியுடன் காடர்களும் அமர்ந்திருந்தனர்.

மிகவிரைவிலேயே அரங்குகள் நிறைந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருக்கவே வெற்றிடங்கள் முழுமையாக மறைந்து பின்பக்கம் முகங்களால் ஆன பெரிய சுவர் ஒன்று எழுந்தது. மானுடக்குரல்கள் இணைந்து இணைந்து குரலற்ற ஓசையாகி பின் முரசுமுழக்கம் போலாயின. சுற்றி நோக்கியபோது தனிமுகங்கள் மறைந்து முகங்கள் துளிகளாகி ஒட்டுமொத்தப்பெருக்காகி அலையடிப்பதுபோல் தெரிந்தது.

ஷத்ரியர் வரும் வாயிலில் துருபதன் செம்பட்டாடையும் பொற்கவசமும் கச்சையில் மணிகள் பதிக்கப்பட்ட பொன் வாளுமாக நின்றிருந்தார். அவருக்கு இருபக்கமும் அவரது மைந்தர்கள் சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் அணியாடைகளுடன் நின்றிருந்தனர். முதலில் வந்தவன் போனநாட்டரசனாகிய சங்கன். அவனுடைய நிமித்திகன் முதலில் வந்து சங்கொலி எழுப்பி அவன் வருகையை அறிவித்தான்.

சேவகர்கள் இருவர் கொடியும் மங்கலத்தாலமும் ஏந்தி முன்னால் வர கையில் செங்கோலுடன் மணிமுடி சூடி போஜ நாட்டரசன் சுதட்சிணன் நடந்து வந்தான். அவனுக்குப்பின்னால் வெண்கொற்றக்குடையை பிடித்தபடி இருசேவகர் வர கவரிவீசியபடி மேலும் இருவர் இருபக்கத்திலும் வந்தனர். அடைப்பக்காரனும் தாலமேந்தியும் இருபக்கமும் தொடர்ந்தனர்.

ஜனமேஜயன் போஜனை அழைத்துவந்து அவனுக்கான பீடத்தில் அமர்த்தினான். செங்கோலை சேவகனிடம் அளித்துவிட்டு போஜன் அமர்ந்துகொண்டான். சேவகர்கள் குடையையும் சாமரங்களையும் எடுத்துக்கொண்டு விலகி மறுபக்கம் செல்ல, தாலமேந்தியும் அடைப்பக்காரனும் மட்டும் இருபக்கமும் நின்றுகொண்டனர். போஜன் அமர்ந்துகொண்டு கால்களை நீட்டி தாலமேந்தியிடம் இன்னீர் வாங்கி அருந்தினான். அப்போது மீண்டும் சங்கொலி எழுந்தது. வாயிலில் கலிங்கக்கொடி தெரிந்தது.

தருமன் பீமனிடம் “சென்ற பதினைந்து நாட்களாக இங்கே இனிய கலைநிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடந்தன என்று கேட்டேன் மந்தா. வந்து பார்க்கலாம் என எண்ணினேன். எவரேனும் என்னை அறிந்துவிடுவார்கள் என்று பார்த்தன் சொன்னதனால் தவிர்த்தேன்” என்றான். “ஆம், இங்கே வேள்விகள் நடந்துகொண்டிருப்பதாகவும் பேரூட்டு இருந்தது என்றும் என்னுடன் மடைப்பள்ளியில் இருந்த பிராமணன் சொன்னான்” என்றான் பீமன்.

முரசொலி எழுந்ததும் தருமன் திரும்பிப்பார்த்தான். மகதத்தின் துதிக்கை தூக்கிய யானை பொறிக்கப்பட்ட பொன்னிறக்கொடியுடன் கொடிச்சேவகன் உள்ளே வந்தான். நான்குபக்கமும் திரண்டிருந்த அத்தனை கூட்டமும் திரும்பி வாயிலை நோக்க பார்வைகளால் அகழ்ந்து எடுக்கப்பட்டவன் போல வெண்குடை சூடி சாமரச்சிறகுகள் இருபக்கமும் அசைய ஜராசந்தன் உள்ளே வந்தான். அவையெங்கும் வியப்பொலிகள் இணைந்த முழக்கம் எழுந்தது.

பீமன் ஜராசந்தனையே நோக்கிக்கொண்டிருப்பதை கண்ட தருமன் “பெருந்தோளன் மந்தா” என்றான். பீமன் ஆம் என தலையசைத்தான். “உனக்கு நிகரானவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். உன்னைவிட ஆற்றல்கொண்டவன் என்று இப்போது தோன்றுகிறது” என்றான் தருமன் மீண்டும். பீமன் மறுத்துரைக்கவேண்டுமென அவன் எதிர்பார்த்தான். ஆனால் பீமன் “ஆம் மூத்தவரே, அவரது தோள்கள் என்னிலும் பெரியவை” என்றான்.

செங்கழுகின் இறகுபோன்ற தலைமுடியுடன் செம்மண்நிற உடலுடன் ஜராசந்தன் சென்று தனக்குரிய பீடத்தில் அமர்ந்துகொண்டான். சேவகன் நீட்டிய பானத்தை மறுத்துவிட்டு அங்கே கூடியிருந்த கூட்டத்தை தன் விழிகளால் துழாவினான். "உன்னைத்தான் தேடுகிறான் மந்தா” என்றான் தருமன். பீமன் புன்னகைத்து “ஆம்...” என்றான்.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 2

ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன், ஜயசேனன்... பலருடைய பெயர்களைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இந்த மணத்தன்னேற்பில் பங்கெடுத்து வெல்லப்போவதுமில்லை. ஆனால் தொன்மையான ஒரு ஷத்ரியகுலத்தின் இளவரசிக்கான மணநிகழ்வுக்கு அழைக்கப்படுவதே ஓர் அடையாளம்.

அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சக்ரவர்த்திகள் போல பட்டாலும் பொன்னாலும் வைரங்களாலும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களின் குல அடையாளம்தான் அவற்றில் அணிவடிவில் வெளிப்பட்டது. மச்சநாட்டரசனாகிய கீசகன் அவன் மணிமுடியிலேயே மீன் அடையாளம் கொண்டிருந்தான். வேடர்குலத்து அரசனாகிய நீலன் அவன் தோளணிகளை இலைவடிவிலும் மணிமுடியை மலர் வடிவிலும் அமைத்திருந்தான். அவர்களின் செங்கோல்களிலும் அந்த தனித்துவம் இருந்தது. காரூஷதேசத்து கிருதவர்மனின் செங்கோலின் மேல் உண்மையான மனித மண்டையோடு இருந்தது.

இருக்கைகளை அமைப்பதில் ஓர் திண்மையான ஒழுங்குமுறை இருந்தது. அது அப்போதுள்ள அரசர்களின் படைவல்லமை அல்லது நாட்டின் விரிவை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. தொன்மையான வேதகாலத்து நிலப்பிரிவினையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதல் மூன்றுவரிசைகளிலும் தைத்ரியம், சௌனகம், கண்வம், கௌசிகம் ஆகிய நிலங்களைச் சேர்ந்த அரசர்கள் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில் ஜைமின்யம், பைப்பாதம், சாண்டில்யம், கபித்தலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மன்னர்கள் அமர்ந்திருந்தனர். காம்போஜம், வேசரம், ஆசுரம், வாருணம், காமரூபம், திருவிடம் போன்ற நிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தனர்.

சகுனியுடன் கணிகரும் உள்ளே நுழைவதைக் கண்டு தருமன் திரும்பி பீமனைப் பார்த்தான். முதலில் கௌரவ இளவரசர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு உள்ளே வந்தனர். துர்விகாகன், துர்முகன், துஷ்பிரதர்ஷணன், விகர்ணன், சலன், பீமவேகன், உக்ராயுதன், பாசி, சாருசித்ரன், சராசனன், விவித்சு, சித்ரவர்மன், அயோபாகு, சித்ராங்கன், வாலகி, சுஷேணன், மகாதரன், சித்ராயுதன் என அவர்கள் ஆடிப்பாவைகள் போல பேருடலுடன் வந்துகொண்டே இருந்தனர். அனைவரும் அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினையையும் காந்தாரத்தின் ஈச்சை இலை இலச்சினையையும் அணிந்திருந்தனர்.

“படைபோல இளவரசர்களை திரட்டிக்கொண்டுவந்திருக்கிறார்கள் மந்தா” என்றான் தருமன். பீமன் தலையசைத்தான். “ஏன் என்று தெரிகிறதா? அஸ்தினபுரியின் கௌரவர்களின் எண்ணிக்கை வல்லமையைக் காட்ட நினைக்கிறார்கள். மிகச்சிறந்த வழிதான். உண்மையிலேயே இங்குள்ள ஒவ்வொருவர் முகத்திலும் அந்த திகைப்பும் அச்சமும் தெரிகிறது.” தருமன் அவர்களை மீண்டும் நோக்கி “காந்தார இலச்சினையையும் அணியச்செய்ததும் மிகச்சிறப்பான சூது. மந்தா, ஒரு பெரிய அவையில் சொற்கள் எவராலும் கேட்கப்படுவதில்லை. இலச்சினைகளும் செய்கைகளும் மட்டுமே பொருளை அளிக்கின்றன” என்றான்.

பீமன் புன்னகை செய்தான். தருமன் “மரவுரி அணியாமல் பட்டு அணிந்து வந்தமைக்காக உனக்குத்தான் வாழ்த்துரைக்க வேண்டும்” என்றான். “கணிகர் உடனிருக்கிறார். ஆயினும் மாதுலர் சகுனி நிலைகொள்ளாமலிருக்கிறார். அவர் தன் தாடியை நீவுவதிலிருந்தே அது தெரிகிறது.” பீமன் “ஆம் மூத்தவரே, அவரது விழிகள் நம்மைத் தேடுகின்றன” என்றான். “அவர் வில்லாளி. விரைவிலேயே நம்மை அறிந்துவிடுவார்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே தருமன் “பார்த்துவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பீமன்.

சகுனி காந்தார முறைப்படி இளவரசருக்குரிய பட்டுமுடியும் பின்பக்கம் முடிச்சிடப்பட்ட மேலாடையும் அணிந்திருந்தார். ஈச்ச இலை இலச்சினைகொண்ட பொன்னணிகளை இருதோள்களிலும் சூடி செந்நிறமான தாடியும் ஓநாயின் செம்மணி விழிகளுமாக பீடத்தில் சற்று வளைந்து அமர்ந்திருந்தார். அந்த அவையில் அமர்ந்திருந்தவர்களிலேயே அவரும் கணிகரும் மட்டும்தான் கோணலாக அமர்ந்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் உடலில் இருந்த வலி அந்தக் கோணலில் தெரிந்தது. பீமன் சகுனிக்காக இரக்கம் கொண்டான். அவரது வலி அந்த பெருமண்டபத்தின் தரைவழியாகவே அவனை வந்தடைவதுபோலிருந்தது.

துரியோதனன் உள்ளே வந்தபோது பல்லாயிரம்பேர் கூடியிருந்த அந்த அரங்கில் குகைக்குள் காற்று கடந்துசெல்வதுபோன்ற உருவற்ற முழக்கம் ஒன்று எழுந்தது. அத்தனை தலைகளும் அவனை நோக்கி திரும்பின. ஒருகணம் கடந்ததும் மரக்கூட்டத்தில் மழை இறங்குவதுபோல ஒரு பேரொலி பிறந்துவந்து சூழ்ந்துகொண்டது. அஸ்தினபுரியின் அமுதகலச முத்திரைகொண்ட மணிமுடியும் இளம்செம்பட்டு மேலாடையும் கழுத்தில் செவ்வைரங்கள் ஒளிவிட்ட ஆரமும் காதுகளில் மணிக்குண்டலங்களும் மணிகள் பதிக்கப்பட்ட பொற்கச்சையுமாக எவரையும் பார்க்காத விரைவற்ற நடையுடன் அவன் வந்தான்.

அவனுக்குப்பின்னால் நிமித்திகன் மீண்டும் அறிவிப்பு செய்ய கர்ணன் அங்கநாட்டின் துதிக்கை கோர்த்த இரட்டையானை முத்திரை கொண்ட மணிமுடி சூடி இளநீலப்பட்டு மேலாடை அணிந்து நிமிர்ந்த தலையுடன் நடந்துவந்தான். அவன் தோளுக்குக் கீழேதான் துரியோதனன் தெரிந்தான். துரியோதனனைக் கண்டு எழுந்த ஓசைகள் மெல்ல அடங்கி அந்தப் பெருங்கூட்டமே பாலைமணல் வெளிபோல ஓசையற்று அமைவதை பீமன் கண்டான். கர்ணனின் உயரமே அவனை அவையில் வேறொருவனாகக் காட்டியது. அவன் கௌசிகநாட்டின் அரசர்களின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். அமர்ந்தபோதுகூட அருகே நின்றிருந்த பிரத்யும்னன் அளவுக்கு உயரமிருந்தான்.

பீமனின் அருகே இருந்த இளம்வைதிகன் “அவனா கர்ணன்?” என்று இன்னொருவனிடம் கேட்டான். ”மூடா, கர்ணனுக்கு அறிமுகம் தேவையா? இப்புவியில் அவனைப்போல் பிறிதொருவன் இல்லை” என்றான் முதுவைதிகன். “பரசுராமரிடம் கற்றிருக்கிறானாமே?” என்றான் ஒரு பிராமணன். “ஆக்னேய ஷத்ரியனாக அவனை அவர் முழுக்காட்டு செய்திருக்கிறார் என்றார்கள்” என்றார் ஒரு கிழவர். “இல்லை, அப்படிச்செய்தால் அவன் அங்கநாட்டை ஆளமுடியாது. அஸ்தினபுரிக்கும் துணையாக இருக்கமுடியாது. பரசுராமரின் மழு ஷத்ரியர் அனைவருக்கும் எதிரானது. அவர்களை எதிர்ப்பேன், ஒருபோதும் கப்பம் கட்டமாட்டேன் என்று எரிதொட்டு ஆணையிடாமல் பரசுராமர் முழுக்காட்டுவதில்லை” என்றார் பெரிய தலைப்பாகை அணிந்திருந்த ஒருவர். அவர் ஒரு பண்டிதர் என பீமன் நினைத்தான்.

”யாரவன்? ஆண் வேடமிட்ட பெண் போலிருக்கிறான்?” என்றான் ஒரு வைதிகன். “அவன் விராட மன்னனின் மைந்தன் உத்தரன். அருகே இருப்பவன் அவன் தமையன் சங்கன்” என்றான் இன்னொருவன். “உத்தரனுக்கும் பாண்டுவைப்போல காட்டில் மைந்தர்கள் பிறப்பார்களோ?” என ஒரு இளம் வைதிகன் கேட்க அத்தனைபேரும் நகைத்தனர். பீமன் சினத்துடன் தன் தோள்களை இறுக்கி பின் தளர்த்தினான். தருமனின் விழிகள் வந்து அவனைத் தொட்டு எச்சரித்து மீண்டன.

”மஞ்சள்நிற பாகை அணிந்தவன் சந்திரசேனன். சமுத்ரசேனனின் மைந்தன்” என்று ஒருவன் சொன்னான். “காம்போஜ மன்னர் சுதட்சிணர் எங்கே?” குரல்கள் கலைந்து கொண்டே இருந்தன. “சிந்து தேசத்து அரசன் ஜயத்ரதன். அவனும் பாஞ்சால இளவரசர் திருஷ்டத்யும்னனும் துரோணரின் சாலைமாணாக்கர்கள்.” “சேதிநாட்டரசன் சிசுபாலன் ஏன் மச்சர்களுடன் அமர்ந்திருக்கிறான்?” ”அஸ்வத்தாமா இன்னும் வரவில்லை.” “அவருக்கு அழைப்பு இல்லை போலிருக்கிறது.” “அழைப்பு அனுப்பாமல் இருக்கமுடியுமா என்ன?”

பீமன் அஸ்வத்தாமனை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் சங்கொலி எழ இளைய யாதவனாகிய கிருஷ்ணன் சாத்யகி தொடர உள்ளே வந்தான். அவையில் மீண்டும் ஆழ்ந்த அமைதி நிலவியது. கிருஷ்ணனை துருபதனின் மைந்தன் சுமித்திரன் எதிர்கொண்டு அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். அந்தச் செயல்கள் மிக மெல்ல அசையும் திரைச்சீலையில் தெரிவதுபோல அவைக்குள் அமைதி ஆழம் கொண்டிருந்தது.

அந்த அமைதி சற்று வேறுவகையில் இருப்பதாக பீமன் எண்ணினான். அது அகஎழுச்சியின் விளைவான அமைதி அல்ல. ஒருவிதமான ஒவ்வாமை அதிலிருந்தது. அது தன்னிச்சையான மெல்லிய உடலசைவுகளிலும் சிறிய தொண்டைக்கனைப்புகளிலும் வெளிப்பட்டது. சப்த சிந்துவின் மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணன் சென்று அமர்ந்தான். அவனருகே இருந்த ஜயத்ரதன் ஒருகணம் ஏறிட்டு நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். அப்பால் இருந்த சேதிநாட்டு சிசுபாலன் கைநீட்டி தன் சேவகனை அழைத்து கடுமையாக ஏதோ சொல்லி தன் கையில் இருந்த தாம்பூலத்தை அவன் மேல் எறிந்தான். கிருஷ்ணன் மேலிருந்து அரசர்களின் நோக்கு சிசுபாலன் மீது திரும்பியது. சேவகன் தலைவணங்கி அகல சிசுபாலன் ஏதோ சொன்னான். அரசர்கள் பலர் புன்னகை செய்தனர்.

அஸ்வத்தாமனுக்காகவே அவை காத்திருந்தது என்று தோன்றியது. சங்கொலியுடன் அவன் உள்ளே நுழைந்தபோது அவை எளிதாக ஆகும் உடலசைவுகள் பரவின. பச்சைநிறப் பட்டின் மேல் மணியாரங்கள் சுற்றப்பட்ட முடியும் பொன்பட்டு சால்வையும் அணிந்து அஸ்வத்தாமன் கைகூப்பியபடி நடந்துவந்தான். அவனை துருபதனே அழைத்துவந்து அவையில் அமரச்செய்தார். அரசர்களின் நுழைவாயிலில் நின்றிருந்த வீரன் அதைமூடினான்.

துருபதன் நடந்து சிறியவாயில் வழியாக உள்ளே செல்ல அரங்குக்கு வெளியே முரசமேடையில் அமர்ந்த இரட்டைப் பெருமுரசங்கள் முழங்க கொம்புகள் பிளிறியபடி சேர்ந்துகொண்டன. கோல்நிமித்திகன் முன்பக்கம் அரைவட்ட மணமுற்றத்தின் நடுவே வந்து நின்று தன் கோலைத்தூக்கியதும் பெருமுரசங்கள் ஓய்ந்து காற்று ரீங்காரமிட்டது. அவன் தன் கைக்கோலை தலைமேல் ஆட்டி உரக்கக் கூவியதை அவையின் ஒன்பது நிலைகளில் நின்றிருந்த பிற நிமித்திகர் கேட்டு திரும்பக்கூவினர்.

“பாற்கடல் அமைந்த பரந்தாமனின் மைந்தர் பிரம்மன். அவர் மைந்தரான அத்ரி பிரஜாபதியை வாழ்த்துவோம். அவரது மைந்தர் சந்திரன். சந்திரகுலத்து உதித்த புதன், புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி, பூரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி, அஜமீடன், நீலன், சாந்தி, சுசாந்தி, புருஜன், அர்க்கன், பர்ம்யாஸ்வன் என நீளும் குலமுறையில் வந்த பாஞ்சால மூதாதையை வணங்குவோம். பாஞ்சாலன் குருதியில் உதித்த முத்கலன், திவோதாசன், மித்ரேயு, பிருஷதன், சுதாசன், சகதேவன் கொடிவழியில் பிறந்த மாமன்னர் சோமகரின் புகழ் நிலைக்கட்டும். சோமகரின் மைந்தர் யக்ஞசேனராகிய துருபதர் என்றும் வாழ்க! அவர் செங்கோல் வெல்க!”

”அவையினரே, இங்கு காம்பில்யத்தை தலைநகராக்கி பாஞ்சாலப்பெருநிலத்தை ஆளும் அரசர் துருபதரின் இளைய பிராட்டி பிருஷதியின் கருவில் பிறந்த மகள் கிருஷ்ணையின் மணத்தன்னேற்பு நிகழ்வு தொடங்கவுள்ளது. காம்பில்யத்தை பெருமைகொள்ளச்செய்யும் மாமன்னர்கள் அனைவரையும் இவ்வரசகுலம் வணங்கி வரவேற்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் முன்னும் துருபதரின் மணிமுடி தாழ்கிறது.”

அவன் கோல்தாழ்த்தி விலகியதும் வைதிகர்கள் உபவேள்வியை தொடங்கினர். சத்யஜித் இளமூங்கிலால் ஆன அரசரின் செங்கோலை எந்தி வேள்விக்காவலனாக நின்றிருந்தார். மூன்று எரிகுளங்களில் மூன்று தூயநெருப்புகள் தோன்றின. ஆஜ்யாகுதி தொடங்கியதும் நெருப்புகள் நாநீட்டி எழுந்து பறக்கத் தொடங்கின. ஸ்வஸ்திவாசனம் தொடங்கியது. வேதநாதம் கேட்டு அவை கைகூப்பி அமர்ந்திருந்தது.

வேள்வி முடிந்ததும் நிமித்திகன் கைகாட்ட சூதர்களின் மங்கலப்பேரிசை தொடங்கியது. முழவுகளும் கிணைகளும் பெரும்பறைகளும் கொம்புகளும் சங்கும் மணியும் இணைந்து ஒரு மொழியாக மாறி அகச்செவி மட்டுமே அறியும்படி பேசத்தொடங்கின. பொன்மஞ்சல்திரைகளுக்கு அப்பால் வாழ்த்தொலிகள் எழுந்தன. அவை முழுக்க காற்று போல அசைவு கடந்துசென்றது.

மங்கலத்தாலம் ஏந்திய நூற்றெட்டு அணிப்பரத்தையர் பட்டாடையும் பொலனணிகளும் பொலிய ஏழு நிரைகளாக வந்தனர். கனிகள், தானியங்கள், பொன், சங்கு, மணி, விளக்கு, ஆடி, மலர் என எட்டு மங்கலங்கள் பரப்பபப்ட்ட தாலங்களை ஏந்தி இருபக்கமும் நின்றனர். அவர்களைத் தொடர்ந்து பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களையும் சேர்ந்த ஐந்து மூத்தவர்கள் நடந்து வந்தனர். சோமக குலத்து முதியவர் தன் கையில் இருந்த செண்பக மலர்க்கிளையை தூக்கியபடி வந்து நின்றார். தொடர்ந்து கொன்றைமரக் கிளையுடன் கிருவிகுலத்தலைவரும் வேங்கைக்கிளையுடன் துர்வாச குலத்தலைவரும் மருதக்கிளையுடன் சிருஞ்சயகுலத்தலைவரும் பாலைக்கிளையுடன் கேசினிகுலத்தலைவரும் வந்து நின்றனர்.

தொடர்ந்து காம்பில்யத்தின் விற்கொடி ஏந்திய கொடிக்காரன் நடந்து வந்தான். தொடர்ந்து வெண்தலைப்பாகை அணிந்த முதுநிமித்திகர் வலம்புரிச்சங்கு ஊதியபடி அரங்குக்கு வர அவருக்குப்பின்னால் அகல்யையும் பிருஷதியும் இருபக்கமும் நடக்க துருபதன் கையில் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி நடந்துவந்தார். பாஞ்சாலர்களின் மணிமுடி ஐந்து மலர்களால் ஆனதுபோல பொன்னில் செய்யப்பட்டு மணிகள் பதிக்கப்பட்டிருந்தது. துருபதனைக் கண்டதும் அவையிலிருந்தோர் கைதூக்கி உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். வாழ்த்தொலி எழுந்து மங்கல இசையை முழுமையாகவே விழுங்கிக்கொண்டது.

ஐந்து பெருங்குலத்தலைவர்களும் சேர்ந்து அரசனையும் அரசியரையும் இட்டுச்சென்று அரியணைகளில் அமரச்செய்தனர். செங்கோல் ஏந்தி அரியணையில் அமர்ந்த துருபதனின் இருபக்கமும் சத்யஜித்தும் சித்ரகேதுவும் வாளேந்தி நிற்க பின்னால் அவரது மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன் ஆகியோர் நின்றனர். வாழ்த்தொலிகள் எழுந்து அலையலையாக மாளிகைச் சுவர்களை அறைந்து மீண்டுவந்தன.

அமைச்சர் கருணரும் தளகர்த்தர்களும் வந்து அவையில் நிறைந்தனர். பீமனிடம் அர்ஜுனன் “சிகண்டி எங்கே?” என்றான். தருமன் திரும்பி “மங்கலநிகழ்வில் அவனைப்போன்றவர்களுக்கு இடமில்லை என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் கங்காவர்த்ததுக்கு அப்பால் பலகுலங்களில் ஹிஜடைகளே மங்கலவடிவங்கள்” என்றான்.

வைதிகர்கள் வேள்வியன்னத்தை மூன்றாகப் பகிர்ந்து அரசனுக்கு ஒரு பங்கையும் குலத்தலைவர்களுக்கு ஒருபங்கையும் அளித்து ஒரு பங்கை எடுத்துக்கொண்டனர். அரசனின் பங்கை அவர்களில் முதியவர் எழுந்து துருபதனிடம் அளிக்க அவர் அதை இரண்டாகப் பகிர்ந்து ஒன்றை தன் மைந்தர்களிடம் அளித்தார். தன் பங்கை மூன்றாகப் பகிர்ந்து மனைவியருக்கு அளித்து தான் உண்டார்.

நிமித்திகன் சங்கை ஊதியதும் அவை மீண்டும் அமைதிகொண்டது. அவன் தன் கோலை எடுத்து வீசி உரத்தகுரலில் அறிவித்தான் “பாஞ்சால மன்னர் துருபதருக்கும் அரசி பிருஷதிக்கும் பிறந்த இளவரசி கிருஷ்ணையின் திருமணத்தன்னேற்பு விழா நிகழவிருக்கிறது. அவை அறிக!” அவன் விலகியதும் துருபதன் தன் கோலை ஏவலனிடம் அளித்துவிட்டு எழுந்து வந்து நின்று கைகூப்பி சொன்னார். அவர் குரலை கேட்டுச்சொல்லிகள் எதிரொலித்தனர்.

“அவையோரே, பெருங்குடியினரே, அயல்மன்னர்களே, உங்கள் அனைவரையும் பாஞ்சாலத்தின் ஐங்குல மூதாதையர் வணங்குகிறார்கள். அதிதிவடிவாக வந்து என்னை அருள்செய்தமைக்கு நான் தலை வணங்குகிறேன். இது என் அரசமகளின் மணத்தன்னேற்பு நிகழ்வு. அவள் யாஜ உபயாஜ மகாவைதிகர்கள் சௌத்ராமணி வேள்வியை இயற்றி எரியில் இருந்து எழுப்பி என் துணைவியின் கருப்பைக்குள் குடிவைத்த தெய்வம். கொற்றவையின் வடிவம் அவள் என்றனர் நிமித்திகர். வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் கொண்டு பிறந்தவள் என்பதனால் பாரதவர்ஷத்தையே அவள் ஆள்வது உறுதி என்றனர்.”

“பிறந்ததே மெய்யறிவுடன் என என் மகளை சொல்வேன். இந்நாட்டை விளையாட்டென அவளே ஆண்டு வருகிறாள். அவளறியா நெறிநூல் எதுவும் என் சபைவந்த எவரும் கற்றதில்லை. காவியமும் வேதாந்தமும் கற்றுணர்ந்தவள். வாளெடுத்தும் வில்லெடுத்தும் போர் புரியத் தேர்ந்தவள். எனக்கும் என் மைந்தருக்கும் அன்னையாகி என் குடியை நிறைப்பவள்.” துருபதன் அச்சொற்களில் சற்றே அகம் விம்மி நிறுத்தினார்.

“ஆகவே அவளுக்குகந்த மணமகனைக் கண்டடைய விழைந்தேன். எங்கள் ஐங்குலத்தில் ஒன்றாகிய துர்வாசகுலத்தின் முதல்வர் மாமுனிவர் துர்வாசர் இங்கே மலைக்குகை ஒன்றில் வந்து தங்கியிருக்கிறார். அவரிடம் பேசி அவராணைப்படி இந்த மணத்தன்னேற்பு ஒழுங்கமைவு செய்யப்பட்டுள்ளது.” துருபதன் கைகாட்ட ஒரு சேவகன் சென்று நீண்டு தொங்கிய வடம் ஒன்றை இழுத்தான். மேலே தொங்கிய பொன்னிறத் திரைச்சுருள் ஒன்று அகன்றது. அங்கே செந்நிறம் பூசப்பட்ட இரும்புக்கூண்டு ஒன்று தெரிந்தது.

பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கிவிட்டு மேலே பார்த்தான். ஐந்து வாயில்கள் கொண்ட கிளிக்கூண்டு போலிருந்தது அது. பன்னிரு சேவகர்கள் பெரிய மரத்தொட்டி ஒன்றை கொண்டுவந்து அந்தக் கூண்டுக்கு நேர்கீழே அமைத்தனர். அதில் குடங்களில் கொண்டுவந்த நீரை ஊற்றினர். போட்டி என்ன என்று பீமனுக்குப் புரிந்தது. அர்ஜுனனை நோக்கி அவன் புன்னகைசெய்தான். அர்ஜுனன் “அந்த வில்லில்தான் சூது இருக்கும் மூத்தவரே” என்றான்.

ஏழு வீரர்கள் செந்நிறப்பட்டால் மூடப்பட்டிருந்த மிகப்பெரிய நுகம்போன்ற ஒன்றை எடுத்துவந்தனர். சிலகணங்கள் கடந்தே அது ஒரு வில் என பீமன் உணர்ந்தான். அவை நடுவே இருந்த நீண்ட மரமேடைமேல் அதை வைத்தனர். செந்நிற பட்டு உறை நீக்கப்பட்டதும் கரு நிறமாக மின்னிய பெரிய வில் வளைந்து செல்லும் நீரோடை போல அங்கே தெரிந்தது. அதைப்பார்ப்பதற்காக பலர் எழுந்தனர். பிறர் அவர்களை கூச்சலிட்டு அடக்கினர். ஓசையை கட்டுப்படுத்த வீரர்களும் முதியவர்களும் கைவீசினர். சிலகணங்களுக்குப்பின் அவையே சொல்லிழந்து அந்தப் பெருவில்லை நோக்கிக்கொண்டிருந்தது.

துருபதன் “அவையினரே, மாமுனிவர் வியாஹ்ரபாதரின் மைந்தர் சிருஞ்சயரில் இருந்து எங்கள் ஐங்குலங்களில் ஒன்றான சிருஞ்சய குலம் தோன்றியது. தோள்முதிரும் இளமையை அடைந்தபோது அன்னையிடமிருந்து தன் தந்தையைப்பற்றி அறிந்த சிருஞ்சயர் அவரைத் தேடி வாழ்த்து பெறும்பொருட்டு ஏழு காடுகளையும் ஏழு நதிகளையும் ஏழு மலைமுடிகளையும் கடந்து வியாஹ்ரவனத்தை அடைந்தார். அங்கே மண்ணில் பதிந்த இரண்டு புலிப்பாதத் தடங்களைக் கண்டு அவற்றை பின்தொடர்ந்து சென்று உச்சிமலைக்குகை ஒன்றில் தனிமையில் வாழ்ந்த புலிப்பாதம் கொண்ட முனிவரை சந்தித்தார்” என்றார்.

புலியென உறுமியபடி எழுந்து வந்த வியாஹ்ரபாதர் சிருஞ்சயரைக் கண்டு "இங்கே மானுடர் வரக்கூடாது ஓடிவிடு, இல்லையேல் கொல்வேன்" என்றார். “தந்தையே, நான் உங்கள் மைந்தன், என்பெயர் சிருஞ்சயன்” என்றார் அவர். “நீ என் மைந்தனாக இருந்தால் ஒரே அம்பில் அதோ தெரியும் அந்த மலைமுடியை உடைத்து வீசு, அதன்பின் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்” என்று வியாஹ்ரபாதர் சொன்னார். “என் அன்னைக்காக அதை நான் செய்தாகவேண்டும்” என்று சொல்லி சிருஞ்சயர் மீண்டார்.

வியாஹ்ரவனத்தில் ஏழு சண்டிகைதேவியர் குடிகொண்ட கடம்பமரம் ஒன்றிருந்தது. காட்டில் வருகையில் காற்றில்லாதபோதும் அம்மரம் கூத்தாடுவதைக் கண்டு அதில் காட்டன்னையர் குடியிருப்பதை உணர்ந்து அதன் கீழே அமர்ந்து தவமியற்றினார் சிருஞ்சயர். அன்னையர் பேருருக்கொண்டு வந்து அவரை அச்சுறுத்தினர். மரக்கிளைகளாக நீண்டு அடித்துக் கொல்ல முயன்றனர். கொடிகளாக எழுந்து பின்னி நெரித்தனர். வேர்களாகி கவ்வி உண்ண முயன்றனர்.

அஞ்சாமல் ஒருகணமும் சித்தம் பிறழாமல் அமர்ந்து மூன்றாண்டுகாலம் ஊழ்கமியற்றினார் சிருஞ்சயர். அன்னையர் அவரது பெருந்தவம் கண்டு கனிந்து அவர் முன் ஏழு தளிர்மரங்களாக முளைத்து எழுந்து வந்து நின்று அவருக்கு என்னவேண்டும் என்று கேட்டனர். அவர் தன் தந்தையின் ஆணையை சொன்னதும் அன்னையர் அருகே உள்ள வியாஹ்ரநாதம் என்னும் சிற்றாற்றின் கரைக்கு செல்லும்படி சொன்னார்கள். "ராகவராமன் முன்பு ஜனகசபையில் ஒடித்த கிந்தூரம் என்னும் வில்லை இந்திரன் வான்வழியே கொண்டு செல்லும்போது அதன் நிழல் அங்குள்ள குளிர்நீர்ச்சுழி ஒன்றுக்குள் விழுந்தது. அந்நிழல் அங்கே ஒரு நிகர்வில்லாக இன்றும் கிடக்கிறது. அதை நீ எடுத்துச்செல்" என்றார்கள்.

ஜனகனுக்கு சிவன் அளித்த வில் அது. ஆகவே மூன்றுமாதகாலம் சிவனை எண்ணி பூசனைசெய்து தவமியற்றி கருணை பெற்றபின் நீருக்குள் குனிந்து நோக்கிய சிருஞ்சயர் அந்த வில்லை கண்டுகொண்டார். பாறைகளில் நீர் வழிந்த தடமாக அது தெரிந்தது. அருகே நீர்த்தடங்களாக அதன் அம்புகள் தெரிந்தன. அவற்றை மெல்ல பிரித்து எடுத்தார். அது மிகப்பெரிய எடைகொண்டதாகையால் நீர்வழியாகவே அதை இழுத்துக்கொண்டு வியாஹ்ரபாதர் தங்கிய குகை வாயிலுக்குச் சென்றார். தன் அன்னையை எண்ணி ஒரே மூச்சில் அதைத் தூக்கி அம்பைச் செலுத்தினார். மலைமுடி உடைந்து நான்கு துண்டுகளாக குகை வாயிலில் விழுந்தது.

வெளியே வந்த வியாஹ்ரபாதர் மைந்தனை ஏற்று தன்னுடன் அணைத்துக்கொண்டார். அவர் தலையைத் தொட்டு நன்மக்கள் பேறும் நாடும் அமைய வாழ்த்தினார். அவர் அருளால் மாமன்னராகிய சிருஞ்சயர் நாடுதிரும்பியபின் வீரர்களை அனுப்பி இந்த வில்லைக் கொண்டுவந்து தன் குலதெய்வமாக கோயில் ஒன்றில் நிறுவினார். இந்த வில்லுக்கு தினமும் பூசையும் வருடத்தில் ஒருமுறை பலிக்கொடையும் அளிக்கப்படுகிறது.

“சிருஞ்சய குலத்தின் அடையாளமான கிந்தமம் என்ற இந்த வில்லே பாஞ்சாலத்தின் கொடியிலும் அமைந்துள்ளது. இதை எடுத்து நாணேற்றும் வீரனையே என் மகள் மணக்கவேண்டும் என்பது துர்வாச மாமுனிவரின் ஆணை. அதன்படியே இது இங்கே உள்ளது.” மக்களிடமிருந்து சிறிய நகைப்பு கிளம்பி வலுத்து அரங்கம் முழங்கத் தொடங்கியது. ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல பேச்சொலிகள் எழுந்து கூரையை மோதின.

“இன்று ஒருநாளிலேயே அடுத்த ஐம்பதுவருடத்திற்கான ரத்தபலியை பெற்றுவிடும் போல் இருக்கிறதே” என்றான் ஒரு பிராமணன். “இதை பீமன் தூக்க முடியும். அர்ஜுனன் நாணை இழுத்தால் கர்ணன் அம்பை எய்யலாம்...” என்றார் ஒரு முதியவர். “இளவரசி மூவரை மணக்கவேண்டுமா என்ன?” என்றான் ஒருவன். “மூடா, அம்புகளை யாதவன் எடுத்துக்கொடுக்கவேண்டாமா?” என்றான் இன்னொருவன். “நால்வரா?” என்று இன்னொரு வைதிகன் சிரிக்க “நால்வரையும் ஒருங்கமைக்க நாம் தருமனை கொண்டுவரலாம்... ஐந்து கணவர்கள் பாஞ்சாலத்தில் வழக்கம்தானே!” என்றான் மற்றொருவன்.

எங்கும் பற்களும் சிரிக்கும் விழிகளும் தெரிந்தன. துருபதன் “அவையோரே, மேலே தெரியும் அந்த கிளிக்கூண்டின் பெயர் கன்யாமானசம். பெண்ணின் மனம் போன்றது அது என்று அதைச்செய்த கலிங்கச்சிற்பி சொன்னார். அதனுள் ஐந்து இயந்திரக்கிளிகள் உள்ளன. எங்கள் ஐந்து குலங்களை அவை குறிக்கின்றன. கிளிகள் மாறிமாறி கூண்டிலிருந்து வெளியே தலை நீட்டும். போட்டிக்கு வரும் வீரன் மேலே கிளிக்கூண்டை நோக்கலாகாது. குனிந்து நீரில் நோக்கி மேலே அம்பெய்து தொடர்ச்சியான ஐந்து அம்புகளால் ஐந்து கிளிகளையும் வீழ்த்தவேண்டும். அவனுக்கே என் மகள் என்று அறிக. ஐந்தில் ஒன்று பிழைத்தாலும் அவள் கரம்பிடிக்க மாட்டாள்” என்றார்.

அவை முழுக்க அமைதியாகியது. அதுவரை சிரித்துக்கொண்டிருந்தவர்கள் அந்தப்போட்டியில் இருந்த அறைகூவலின் முழுமையை உணர்ந்து இறுக்கமாயினர். “பாஞ்சாலன் அரண்மனையில் அழியாத கன்னி ஒருத்தி வாழப்போகிறாள்” என்றார் ஒருவர். “அவளை குலதெய்வமாக்கி படையலிட்டு பூசனைசெய்யலாம். எந்த வீரன் இதை செய்யமுடியும்?” என்றான் இன்னொருவன். “அப்படியல்ல, யாரோ ஒருவனால் மட்டும் இதைச்செய்ய முடியும். அவனை எண்ணி அமைக்கப்பட்ட பொறி இது...” என்றார் ஒரு முதியவர்.

பீமன் அர்ஜுனனை நோக்கினான். அர்ஜுனன் விழிகள் அந்தக் கூண்டிலேயே அமைந்திருந்தன. தருமன் “பார்த்தா, உன்னால் முடியுமா?” என்றான். “முடியாவிட்டால் நான் மீள்வதில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 3

பாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து யவனத்துப் பொலன்வணிகரும் பீதர்நாட்டு அணிவணிகரும் கலிங்கக் கூறைவணிகரும் காத்திருந்தனர். நாலைந்துமாதங்களாகவே அவள் பொன்னும் மணியும் துணியுமாக வாங்கிக்கொண்டிருந்தாலும் மணமங்கல நாள் நெருங்க நெருங்க அவை போதவில்லை என்ற பதற்றத்தையே அடைந்தாள். அவள் தவறவிட்ட சில எங்கோ உள்ளன என்று எண்ணினாள். மேலும் மேலும் என அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

பீதர்களின் மரகதக்குவைகள் அவளுக்கு அகக்கிளர்ச்சியை அளித்தன. ஆடகப்பசும்பொன்னை கையால் அளைய அளைய நெஞ்சு பொங்கிக்கொண்டே இருந்தது. இரவு நீள நீள சேடியர் வந்து அவள் அருகே நின்று தவித்தனர். அவள் ஆணைக்காக அந்தப்புரமே காத்திருந்தது. அவள் ஓரக்கண்ணால் தன்னருகே நின்ற சேடியை நோக்கி திரும்பி “என்னடி?” என்றாள். “மங்கலப்பரத்தையர் நூற்றுவர் அணிசெய்து வந்திருக்கிறார்கள். அரசி ஒரு முறை நோக்கினால் நன்று.” கடும் சினத்துடன் “அதையும் நானேதான் செய்யவேண்டுமா? இங்கு நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்றாள் பிருஷதி. சேடி ஒன்றும் சொல்லவில்லை.

சற்று தணிந்து “சரி, நான் வருகிறேன். அவர்களை சற்று காத்திருக்கச் சொல்” என்றாள். கலிங்க வணிகர்களிடம் “மீன்சிறைப் பட்டு என ஒன்று உள்ளதாமே... அது இல்லையா?” என்றாள். நீல நிறமான பெரிய தலைப்பாகையும் நீலக்குண்டலங்களும் அணிந்த கரிய நிறமான கலிங்க வணிகன் புன்னகை செய்து “அரசி, சற்று முன் நீங்கள் மதுகரபக்ஷம் என்று சொல்லி வாங்கிக்கொண்ட பட்டைத்தான் அப்படி கூறுகிறார்கள்” என்றார். பிருஷதி “அது எனக்குத்தெரியும். மீன்சிறைப்பட்டு என்பது திருப்பினால் வானவில் தெரியவேண்டும்“ என்றாள். “அரசி, மதுகரபக்ஷமும் அப்படித்தான். வானவில் தெரியும்.”

பிருஷதி அப்படியே பேச்சை விட்டுவிட்டு திரும்பி “அவர்களை வந்து நிற்கச்சொல்” என்று ஆணையிட்டுவிட்டு “நான் எடுத்தவற்றை முழுக்க உள்ளே கொண்டு வையுங்கள்” என சேடியருக்கு ஆணையிட்டாள். எழுந்து புறக்கூடத்திற்கு சென்றாள். அவள் காலடியோசை கேட்டு அங்கே பேச்சொலிகள் அடங்குவதை கவனித்தபடி  நிமிர்ந்த தலையுடன் சென்று நோக்கினாள். நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் முழுதணிக்கோலத்தில் நின்றனர். அழகியரை மட்டுமே தேர்ந்து நிறுத்தியிருந்தாள் செயலிகை. அவர்களைக் கண்டதுமே முதற்கணம் அவளுக்குள் எழுந்தது கடும் சினம்தான்.

“ஏன் இவர்கள் இத்தனை சுண்ணத்தை பூசிக்கொண்டிருக்கிறார்கள்? எத்தனை முறை சொன்னேன், நறுஞ்சுண்ணம் குறைவாகப்போதும் என்று. சுண்ணம் இடிக்கும் பணிப்பெண்கள் போலிருக்கிறார்கள்... “ என்றாள். செயலிகை “குறைக்கச் சொல்கிறேன் அரசி” என்றாள். “இவள் என்ன இந்த மணிமாலைகளை எங்காவது திருடிவந்தாளா? இப்படியா அள்ளி சுற்றுவது? முள் மரத்தில் கொடி படர்ந்தது போல் இருக்கிறாள்...” செயலிகை “அவளை சீர்செய்ய ஆணையிடுகிறேன் அரசி” என்றாள்.

அத்தனை விழிகளிலும் உள்ளடங்கிய ஒரு நகைப்பு இருப்பதாக பிருஷதிக்கு தோன்றியது. அவள் உள்ளே வருவதற்கு முன் அவர்களெல்லாம் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அச்சிரிப்பு தன்னைப்பற்றித்தான். தன் பெரிய உடலைப்பற்றியதாக இருக்கலாம். தளர்ந்த நடையைப்பற்றியதாக இருக்கலாம். இளமையில் அவளும் இவர்களைப்போல கொடியுடலுடன்தான் இருந்தாள். அந்தப்புரத்தில் எவரானாலும் உடல்பெருக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருநாளும் இந்த மூடப்பெண்களுடன் அல்லாடினால் உடல் வீங்காமல் என்ன செய்யும்? செயலிகை மானினியின் விழிகளில் கூட சிரிப்பு இருந்ததோ?

பிருஷதி சினத்துடன் “அனைவரும் கேளுங்கள்! அணிவலத்தில் எவரேனும் ஒருவரோடு ஒருவர் பேசியதாகத் தெரிந்தால் மறுநாளே மீன்வால் சவுக்கால் அடிக்க ஆணையிட்டுவிடுவேன். இரக்கமே காட்டமாட்டேன்” என்றாள். வெறுப்புடன் ஒவ்வொரு முகமாக நோக்கியபின் “இந்த நாட்டில் அழகான பெண்களே இல்லை. பொன்னும் பட்டும் போட்ட குரங்குகளை நிரை நிறுத்தியதுபோலிருக்கிறீர்கள்... எனக்கு வேறுவழி இல்லை” என்றாள். செயலிகை “எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் ஆணையிடுங்கள் அரசி... அகற்றிவிடுகிறேன்” என்றாள். “நூற்றெட்டு பேரையும் அகற்றச் சொன்னால் செய்ய முடியுமா?" என்றாள். செயலிகை வெறுமனே நின்றாள்.

“காலையில் அத்தனைபேரும் புதியதாக விழித்தெழுந்தவர்கள் போலிருக்கவேண்டும். அமர்ந்து துயின்றீர்கள் என்றால் முகத்தில் தமக்கைதேவியின் வெறுமை தெரியும்...” என்றபின் “நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படியே இவர்கள் இங்கே நின்றிருக்கட்டும்” என்றாள். “விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் அரசி. துயிலாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் மானினி. நிறைவின்மையுடன் முகத்தைச் சுருக்கி அவர்களை நோக்கியபின் “உன்னிடம் ஒப்படைக்கிறேன்...” என்றாள்.

பிருஷதி மீண்டும் அணிவணிகர்களிடம் வந்தபோது அவர்கள் அவளை முதல்முறையாக பார்ப்பவர்கள் போல முகம் மலர்ந்து பரபரப்பு கொண்டு “வருக அரசி... புதிய மணிகளை இப்போதுதான் தெரிவுசெய்து வைத்தேன்... இவற்றை சமுத்ராக்ஷங்கள் என்கிறார்கள். கடலரசன் தன் பார்வையை இவற்றில் குடிகொள்ளச் செய்திருக்கிறான். இவற்றை சூடுபவர்கள் ஆழியின் அமைதியை அகத்தில் அறிவார்கள். சக்ரவர்த்திகள் அணியவேண்டிய மணி...” என்றார் முதியபீதர்.

பிருஷதி சலிப்புடன் அமர்ந்துகொண்டு அவற்றை நோக்கியபடி “அரண்மனைக் கருவூலமே உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது. இவை எங்கேனும் உதிர்ந்து குவிந்திருக்கின்றனவோ யார் கண்டது?” என்றபடி அவற்றை கையில் வாங்கிப்பார்த்தாள். ஒவ்வொன்றாக அள்ளி நோக்கிக் கொண்டிருந்தபோது அவளுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஒரேகணத்தில் அவையனைத்திலும் அவள் ஆர்வத்தை இழந்தாள். அதை அவளே உணர்ந்து திகைத்தாள். உண்மையாகவா என அவள் அகம் மீள மீள நோக்கிக் கொண்டது. உண்மையிலேயே அவள் உள்ளம் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிட்டிருந்தது. வயிறு நிறைந்தபின் உணவை பார்ப்பதுபோல.

அவள் வேண்டுமென்றே மணிகளை அள்ளி நோக்கினாள். வண்ணக்கூழாங்கற்கள். பயனற்றவை, பொருளற்றவை. உள்ளம் விலகியதுமே அவற்றின் ஒளியும் குறைந்துவிட்டது போலிருந்தது. அவள் மெல்ல எழுந்துகொண்டு செயலிகை மானினியிடம் “இவர்களிடம் வாங்கியவற்றுக்கு விலைகொடுத்தனுப்பு” என்றாள். உடலின் எடை முழுக்க கால்களில் அமைந்ததுபோல் உணர்ந்தாள். அப்படியே சென்று படுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்ன ஆயிற்று தனக்கு என அவள் அகத்தின் ஒரு முனை வியந்துகொண்டே இருந்தது.

தன் அறைக்குச்சென்று படுக்கையில் அமர்ந்துகொண்டு கால்களைத் தூக்கி மேலே வைத்தாள். அறையை அவள் சிலநாட்களுக்கு முன்புதான் முழுமையாகவே அணிசெய்திருந்தாள். புதிய மரவுரி விரிக்கப்பட்ட தரை. புத்தம்புதிய திரைகள். பொன்னென துலக்கப்பட்ட விளக்குகள். நீலத்தடாகம் போன்ற ஆடிகள். ஆனால் அனைத்தும் முழுமையாகவே அழகை இழந்துவிட்டிருந்தன. மிகப்பழகிய வெறுமை ஒன்று அங்கே நிறைந்திருந்தது. ஒவ்வொன்றிலும் அந்த வெறுமையை உணரமுடிந்தது. சித்திரச்சுவர்கள் வண்ணத்திரைச்சீலைகள் அனைத்தும் பொலிவிழந்திருந்தன. சுடர்கள் கூட ஒளியிழந்திருந்தன.

பிருஷதி இயல்பாக அழத்தொடங்கினாள். கண்ணீர் வழிந்து கன்னங்களின் வெம்மையை உணர்ந்ததுமே ஏன் அழுகிறேன் என அவள் உள்ளம் வியந்தது. ஆனால் அழுந்தோறும் அவள் வெறுமை மிகுந்து வந்தது. அவளுடைய விசும்பல் ஓசையை அவளே கேட்டபோது நெஞ்சு உடையும்படி கடுந்துயர் எழுந்தது. தலையில் அறைந்து கூவி அலறினால் மட்டுமே அதை கரைத்தழிக்க முடியும் என்பதுபோல, வெறிகொண்டு சுவரில் தலையை மோதி உடைத்தால் மட்டுமே நிறையழிந்து நிலைகொள்ள முடியும் என்பதுபோல.

காலையோசை கேட்டதும் அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். ஆனால் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தமையால் கண்கள் சிவந்து மூக்கு கனிந்திருந்தது. மானினி வந்து ”முதற்சாமம் ஆகிறது அரசி” என்றாள். “எனக்கு சற்று தலைவலிக்கிறது” என்றாள் பிருஷதி. இதை இவளிடம் ஏன் சொல்கிறேன், இவளை ஏன் நான் நிறைவுகொள்ளச்செய்யவேண்டும்? "கிருஷ்ணை எழுந்துவிட்டாளா?” மானினி “ரூபதையிடம் இளவரசியை எழுப்ப ஆணையிட்டுவிட்டேன்” என்றாள். “ஆம், நேரமாகிறது” என பிருஷதி முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்துக்கொண்டாள். “தாங்கள் நீராடலாமே?” என்றாள் மானினி. பிருஷதி “ஆம், அதற்கு முன் நான் அவளை நோக்கிவிட்டு வருகிறேன்...” என்றாள்.

நீராட்டறைக்குள் பேச்சொலிகள் கேட்டன. சேடி ஒருத்தி அவளை எதிர்கொண்டு “வருக அரசி... இளவரசி நீராடுகிறார்கள்” என்றாள். “என்னை அறிவி” என்றதும் தலைவணங்கி உள்ளே சென்றாள். அவள் மீண்டு வந்து தலைவணங்கியதும் பிருஷதி மணிகள் கோர்த்து அமைக்கப்பட்ட திரையை விலக்கி உள்ளே சென்றாள். நெய்விளக்குகள் சூழ எரிந்த நீள்வட்டமான நீராட்டறை திரௌபதிக்கு மட்டுமே உரியது. அதன் நடுவே முத்துச்சிப்பி வடிவில் செய்யப்பட்ட மரத்தாலான பெரிய வெந்நீர்தொட்டியின் அருகே நின்ற மருத்துவச்சியும் நீராட்டுச்சேடியும் தலைவணங்க அப்பால் தெரிந்த திரௌபதியைக் கண்டதும் பிருஷதி திகைத்து கால்நடுங்கி நின்றுவிட்டாள்.

தொட்டியில் நிறைந்து குமிழி வெடித்த செங்குருதியுள் மீன்மகள் போல திரௌபதி மல்லாந்து கிடந்தாள். அவளுடைய முகமும், கூர்கருமுனைகள் எழுந்த முலைகள் இரண்டும் நீருக்குமேல் பெருங்குமிழிகளாக தெரிந்தன. அவளைக்கண்டதும் திரௌபதி கால்களை நீருக்குள் உந்தி மேலெழுந்து கையால் தலைமயிரை வழித்து பின்னால் தள்ளி முகத்தில் வழிந்த செந்நீரை ஒதுக்கியபடி புன்னகை செய்தாள். பிருஷதி கால்களை நிலத்தில் இறுக ஊன்றி தன் நடுக்கத்தை வென்று “இதென்ன நீருக்கு இத்தனை வண்ணம்?" என்றாள். “கருசூரப்பட்டையும் குங்குமப்பூவும் கலந்த நன்னீர் அரசி... இன்றைய நீராட்டுக்கெனவே நான் வடித்தது” என்றாள் மருத்துவச்சி.

திரௌபதி சிரித்தபடி “குருதி என நினைத்தீர்களா அன்னையே?” என்றாள். “நானும் முதற்கணம் அப்படித்தான் எண்ணினேன்...” மூழ்கி கவிழ்ந்து கால்களை அடித்து துளிதெறிக்க திளைத்து மீண்டும் மல்லாந்து “உண்மையிலேயே குருதியில் நீராடமுடியுமா என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பிருஷதி “என்னடி பேச்சு இது? மங்கலநிகழ்வன்று பேசும் பேச்சா?” என்றாள். “ஏன்? பாஞ்சாலத்தின் தெய்வங்களுக்கு முதன்மை மங்கலம் குருதி அல்லவா?” என்றாள் திரௌபதி. “போதும்” என்றபடி பிருஷதி அருகே வந்து நின்றாள்.

திரௌபதியின் நிறையுடலை பார்ப்பதற்காகவே வந்தோம் என அவள் அப்போதுதான் புரிந்துகொண்டாள். "என்ன பார்க்கிறீர்கள் அன்னையே?” என்றாள் திரௌபதி. ”உன்னுடலை இறுதியாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் நீரை வாயில் அள்ளி நீட்டி உமிழ்ந்தாள். அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒரு கணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படி சொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சு விட்டாள். “நெடுநேரம் நீராடவேண்டாம். நேரமில்லை” என்றாள். ”முதல்நாழிகைதான் ஆகிறது அன்னையே...” என்றாள் திரௌபதி. பிருஷதி கடும் சினத்துடன் “அணிசெய்துகொள்ள வேண்டாமா?” என்றாள். அந்தச்சினம் ஏன் என அகத்துள் அவளே திகைத்துக்கொண்டாள். ஆனால் திரௌபதி புன்னகைத்துக்கொண்டு நீருக்குள் புரண்டாள்.

மருத்துவச்சி “லேபனம் செய்துகொள்ளுங்கள் இளவரசி” என்றாள். திரௌபதி நீரில் எழுந்து நின்றாள். செந்நிற நீர் அவள் உடல் வழியாக வழிந்தது. அருவியருகே உள்ள கரும்பாறை அவள் உடல் என பிருஷதி எப்போதுமே எண்ணிக்கொள்வதுண்டு. உறுதியும் மென்மையும் இருளும் ஒளியும் ஒன்றேயானது. மென்குழம்பெனக் குழைந்து அக்கணமே வைரமானது. நீண்ட குழலை சேடி இரு கைகளாலும் அள்ளி மெல்ல நீர் வழிய சுருட்டினாள். நெற்றி அப்படி தீட்டப்பட்ட இரும்பு போல மின்னுவதை எவரிலும் அவள் கண்டதில்லை. கடைந்து திரட்டிய கழுத்து. ஒன்றுடன் ஒன்று முற்றிலும் நிகரான முலைகள். அவள் கைகளை தூக்கியபோது அவை உறுதியுடன் இழைந்தன. ததும்பும் நீர்த்துளிகள். கருநிறச் சங்குகள்.

மருத்துவச்சி அவளை பீடத்தில் அமரச்செய்து கால்களில் லேபனத்தை பூசத் தொடங்கினாள். தொப்புளில் வழிந்து தேங்கிய செந்நீர் மென்மயிர் பரப்பில் கலைந்து வழிந்து அல்குல் தடம் நோக்கி இறங்கியது. மருத்துவச்சியும் சேடியும்கூட அவள் உடலை சிவந்த விழிகளுடன் நோக்குவதாக, அவர்களின் உளம் விம்முவது முலைகளில் அசைவாக எழுவதாகத் தோன்றியது. ஒருகணம் பொருளற்ற அச்சம் ஒன்று எழுந்தது. அங்கே ஏன் வந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என வியந்தாள்.

“கையை நீட்டு கிருஷ்ணை” என்றாள். திரௌபதி சிரித்தபடி தன் உள்ளங்கைகளை நீட்டிக்காட்டினாள். செண்பகமலர் நிறமான உள்ளங்கைகள். பிருஷதி குனிந்து அந்த ரேகைகளை பார்த்தாள். சங்கும் சக்கரமும். அவள் பிறந்த மறுகணம் கைகளை விரித்து நோக்கிய வயற்றாட்டி “அரசி!" என கூச்சலிட்டு குருதி வழியும் சிற்றுடலைத் தூக்கி அவளிடம் காட்டியபோதுதான் அவற்றை முதலில் நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை. “சங்கு சக்கர முத்திரை! அரசி, விண்ணாளும் திருமகள் மண்ணில் வந்தால் மட்டுமே இவை அமையும் என்கின்றன நிமித்திக நூல்கள்!" என்றாள் வயற்றாட்டி.

அப்போதும் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சிந்தை நனைந்த துணிபோல ஒட்டிக்கிடந்தது. சேடியர் குனிந்து மகவின் கைகளை நோக்கி கூவினர். ஒருத்தி வெளியே ஓடினாள். அவளை நோக்கியபோதுதான் வெளியே நின்றிருக்கும் அரசரைப்பற்றி அவள் எண்ணினாள். அவரிடம் அவள் மகவின் கையில் உள்ள சங்குசக்கர வரிகளைப்பற்றி சொல்வதை உள்ளூர நிகழ்த்திக்கொண்டபோது சட்டென்று அவள் உடல் சிலிர்த்தது. அகம் பொங்கி எழுந்தது. குழவியை வாங்கி மடியில் மலரச்செய்து அந்த வரிகளை நோக்கினாள். அகம் உருகி கண்ணீர்விட்டு விம்மினாள்.

அதன்பின் எத்தனை ஆயிரம் முறை இந்த வரிமுத்திரைகளை அவள் நோக்கியிருப்பாள்! எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள்! அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன் கைகளை எப்போது பற்றப்போகிறேன்?” என்றாள். பொருளற்ற சொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தை அவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல் இவை என்னுடையவை அல்ல அல்லவா?”

மருத்துவச்சி புன்னகைத்து “தடாகம் தாமரையை உரிமைகொள்ள முடியாது என்பார்கள் அரசி” என்றாள். பிருஷதி அந்த அணிக்கூற்றை முற்றிலும் பொருளற்ற சொற்களாகவே அறிந்தாள். விழிகளை தூக்கி மருத்துவச்சியை உயிரற்ற ஒன்றைப்போல பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டாள். தன் சொற்களில் மகிழ்ந்த மருத்துவச்சி “பொன்னும் மணியும் சந்தனமும் மலரும் மகளிரும் பிறந்த இடம் விட்டு தகுதியுள்ள கரங்களுக்குச் சென்றபின்னரே பொருள்கொள்கின்றன” என்றாள். உண்மையாக எதையும் உணராதபோதுதான் அணிச்சொற்கள் அழகாக இருக்கின்றன போலும். பிருஷதி “நீராடி வா... நேரமாகிறது” என்றபின் திரும்பி நடந்தாள்.

அவள் நீராடி அணிசெய்யத் தொடங்கினாள். மானினி அவளுக்கு மணிநகைகளையும் பொலனணிகளையும் எடுத்து நீட்டியபோது ஒவ்வொன்றும் அவளுக்கு அகவிலக்கத்தையே அளித்தன. அவள் முகத்தில் எழுந்த சுளிப்பைக் கண்டு அவள் இன்னொன்றை எடுத்தாள். பலமுறை விலக்கியபின் அவள் ஒன்றை வாங்கிக்கொண்டாள். அந்த அணி படும்போதும் இறந்த உடல் ஒன்றைத் தொட்ட கூச்சத்தை அவள் உடல் உணர்ந்தது. அவற்றையெல்லாம் கழற்றி வீசிவிட்டு எளிய ஆடை ஒன்றை அணிந்தால் என்ன என்று எண்ணி மறுகணமே அது  ஆகக்கூடியதில்லை என அறிந்தாள்.

பட்டும் நகைகளும் அணிந்து சுண்ணமும் செந்தூரமும் பூசி மலர்சூடி அணிநிறைந்தபோது மானினி பேராடியை சற்றே திருப்பி அவளை அவளுக்குக் காட்டினாள். அதில் தெரிந்த உருவத்தைக் கண்டு அவள் திகைத்து மறுகணம் கசப்படைந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு விரைந்து விலகிச்சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே வீசிய இளங்குளிர் காற்று ஆறுதலளித்தது. தன் உடலில் அந்த ஆடிப்பாவையைத்தான் அத்தனை பேரும் பார்க்கிறார்கள் என எண்ணிக்கொண்டபோது கூச்சத்தில் உடல் சிலிர்த்தது. மானினி வணங்கி “சேடியர் ஒருங்கிவிட்டனர் அரசி” என்றாள்.

“இளவரசி அணிகொண்டுவிட்டாளா?” என்றாள். அவள் விழிகளை சந்திக்க நாணினாள். பெண் என்று இவ்வணிகளை, இவ்வாடைகளை, இம்முலைகளை சுமந்துகொண்டிருக்கிறேன். இவற்றுக்கு அப்பால் தனிமையில் நின்றுகொண்டிருக்கிறேன். அப்படி அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று தோன்றியது. முதல் அணியை அவள் பூண்டது எப்போது? ஆனால் முதிரா இளமையில் வனநீராட்டுக்குச் செல்ல அன்னையுடன் கிளம்பியபோது முழுதணிக்கோலத்தில் ஆடியில் தன்னைக்கண்டு வியந்து நின்றது அவளுக்கு நினைவிருந்தது. திரும்பித்திரும்பி தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.

தலைமுதல் கால்வரை. ஒவ்வொரு அணியையும். ஒவ்வொரு உறுப்பையும். திரும்பி முதுகை நோக்குவதற்காக உடலை ஒடித்து திருப்பினாள். கைகளை விரித்தும் தலையைச் சரித்தும் புன்னகைத்தும் சினந்து உதடு நீட்டியும் பாவாடையை அள்ளித் தூக்கியபடி மெல்ல குதித்தும் நோக்கிக்கொண்டே இருந்தாள். அவளை அரண்மனை எங்கும் தேடிய அன்னை கண்டடைந்ததும் பூசலிட்டபடி ஓடிவந்து அடித்து கைபற்றி இழுத்துச்சென்றாள். அவள் திரும்பி இறுதியாக ஆடியை நோக்கினாள். ஏங்கும் விழிகளுடன் பிருஷதி அவளை விட்டு விலகி ஆடியின் ஆழத்துக்குள் சென்று மறைந்தாள்.

அந்த ஆடிச்சித்திரம் வெறும் நினைவு அல்ல. மீள மீள உள்ளே ஓட்டி ஓட்டி அச்சித்திரத்தை மேலும் மேலும் தீட்டிக்கொண்டிருந்தாள். கனவுகளில் மீட்டுக் கொண்டு ஒளிஏற்றிக்கொண்டிருந்தாள். அந்த ஆடியில் அன்று தெரிந்த பிருஷதி என்றும் அவளுக்குள் இருந்தாள். அவள்தான் தான் என என்றும் அவள் உணர்ந்தாள். அந்த பிருஷதியின் மேல் குடிகொண்ட உடல் முதிர்ந்து தளர்ந்து எடை மிகுந்து வலியும் சோர்வும் கொண்டு விலகிச்சென்றபடியே இருந்தது. அவள் தனித்து திகைத்து நின்றிருந்தாள்.

இப்போது சென்று சத்ராவதியின் அரண்மனையில் அவளுடைய பழைய அறையின் அந்த ஆடியில் நோக்கினால் அதில் அவளை காணமுடியும். அழியா ஓவியமென அங்கே அவள் தேங்கி நின்றிருப்பாள். என்னென்ன எண்ணங்கள். இப்படி என்னுள் எண்ணங்கள் குலைந்து சிதறியதே இல்லை. இவ்வெண்ணங்களை என்னுள் ஏதோ ஒன்று செலுத்திவிட்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் பொன்னும் மணியும் சலித்ததில்லை. ஆடி பொருளிழந்ததில்லை. என்ன ஆகிறது எனக்கு? என்னை ஆண்ட தெய்வமொன்று கைவிட்டுச் சென்றுவிட்டதா? நானறியாத தெய்வம் என்னுள் குடிகொண்டுவிட்டதா?

திரௌபதியின் அணியறைக்குள் ஏழு சேடியர் அவளை மணிமங்கலம் கொள்ளச்செய்துகொண்டிருந்தனர். சந்தனபீடத்தில் கிழக்குமுகமாக அவள் அமர்ந்திருக்க செந்நிறமான காரகிற் சாந்தை ஆமையோட்டில் குழைத்து கையிலெடுத்தபடி நின்றிருந்த தொய்யிற்பெண்டு செங்கழுகின் இறகின் முனையை பளிங்குக் கல்லில் மெல்லத்தீட்டி கூர்படுத்திக் கொண்டிருந்தாள். சேடி திரௌபதியின் முலைகளில் இருந்து மென்பட்டாடையை விலக்கினாள். இரு கைகளையும் பின்னால் ஊன்றி மார்பை மேலே தூக்கி முலைக்குமிழ்களை விம்மச்செய்து அவள் அமர்ந்திருக்க செஞ்சாந்தில் இறகுமுனையால் தொட்டு இருமுலைகளுக்கும் மேல் கழுத்துக்குழியின் நேர்கீழாக ஒரு சுழியை போட்டாள்.

தொய்யிற் கோடுகள் உயிர் கொண்டு பிறந்து வந்து வழிந்து சுழித்துச் சுழன்று அவள் மெல்லிய கருமேனியில் படிந்து பரவின. ஒன்றுடன் ஒன்று பின்னி விரிந்துகொண்டே இருந்தன. மகரிகா பத்ரம் என்னும் இலைத்தொய்யில். அவள் உடல்வெம்மையில் காரகில் உலர்ந்ததும் மாந்தளிர் நிறத்தில் மின்னத்தொடங்கியது. முலைக்கண்களைச்சுற்றி கோடுகள் செறிந்து வளைந்து மீண்டும் விரிந்து தோளுக்கு மேல் ஏறின. நோக்கியிருக்கவே அவள் முலைகள் இரண்டும் இரு அணிச்செப்புகளாக ஆயின. கூர் அலகு கொண்ட இரு மாந்தளிர்ப் பறவைகள். ஆழ்கடலின் சித்திரம் பதிந்த சிப்பிகள். நீர்க்கோலம் செறிந்த இரு பெரும் சாளக்கிராமங்கள். தொய்யில் இளந்தளிர்க்கொடிகளாக அவள் வயிற்றை நோக்கி இறங்கியது. படர்ந்து இடையின் விரிவை மூடி அல்குல் நோக்கி இறங்கியது. அவள் அசைந்தபோது சித்திரமுலைகள் ததும்பின.

“சக்கரவாகங்கள் நீந்தும் குளிர்ந்த நதி” என்று ஒரு சூதப்பெண் சொல்ல திரௌபதி அவளை நோக்கி சிரித்தாள். அவள் உடலை சுண்ணமும் சந்தனமும் சேர்த்திடித்த பொடி பூசி மென்பட்டால் துடைத்து ஒளிகொண்டதாக ஆக்கினர். உள்ளங்கைகளிலும் கால்வெள்ளையிலும் செம்பஞ்சுக்குழம்பு. மருதாணிச் சிவப்பால் கைவிரல்கள் காந்தள் மலர்கள் என மாறின. கால்விரல்கள் சற்றே சுருண்ட கோவைப்பழங்கள்.

அணிப்பெட்டிகளை சேடியர் திறந்தனர். ஒளியா விழிமயக்கா ஒளியெனும் எண்ணம் தானா என ஐயுறச்செய்தபடி பெட்டிக்குள் அணிகள் மின்னின. ஒவ்வொன்றாக ஒருத்தி எடுத்துக்கொடுக்க இருவர் அணிபூட்டத்தொடங்கினர். வலது காலின் சிறுவிரலில் முதல் விரல்மலரைப் பூட்டி அணிசெய்யத்தொடங்கினர். கால்விரல்கள் பத்திலும் முல்லை, அரளி, தெச்சி, முக்குற்றி, செந்தூரம், ஆவாரம், சிறுநீலம், கூவளம், செம்மணி, பாரிஜாதம் என சிறுமலர்களின் வடிவில் செய்யப்பட்ட அணிகளை பூட்டினர். கணுக்கால்களில் தழைந்த பொற்சிலம்பு. அதன்மேல் தொடுத்து மேற்பாதங்களில் வளைந்த வேம்பின் இலையடுக்குகள் போன்ற செறிமலர்.

இடையில் அணிந்த பொன்னூல்பின்னலிட்ட செம்பட்டுச் சேலைக்குமேல் நூற்றெட்டுத் தொங்கல்கள் கொண்ட மேகலை. அதன் முன்படாம் அவள் இடையில் தழைந்து அல்குலை மூடிப்பரந்து சிறுமணிகளுடன் தொங்கியது. முதல் பெருமணி அனல் என தொடைகள் நடுவே நின்றது. ஆடைக்குமேல் வலத்தொடையில் பதினெட்டு இடத்தொடையில் ஒன்பது வளைவுகளாக தொங்கிய தொடைச்செறி. அணிக்கச்சையின் இடப்பக்க முடிச்சில் செவ்வைரங்களை விழிகளாகக் கொண்ட பொற்சிம்மம் வாய்திறந்திருந்தது.

இளமுலைகளை அணைத்து ஏந்தியிருந்த பட்டுக்கச்சைக்குமேல் ஆயிரத்தெட்டு தளங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை யானையின் நெற்றிப்படாம் என தழைந்து கொப்பூழை தொட்டது. அதன்நடுவே அனல்வரி என செம்மணிமாலை. விண்மீன் வரி என நீலமணி மாலை. பன்னிரு செண்பகமலர்களைத் தொடுத்ததுபோல பதக்கமாலை. கண்மணித்தாலி. கருகுமணித்தாலி. நாகபடத்தோள்வளைகள். நாகவிழிகளில் எழுந்த நீலமணிக் கற்கள். காதுகளில் ஆடிய செம்மலர் தோடுகள். அவற்றின் அல்லிவட்டமாக இளஞ்சிவப்புவைரங்கள் புல்லிவட்டமாக எரிவைரம். மேல்காதில் காதுமலர்.

மூக்கில் தொங்கிய புல்லாக்கின் செம்மணி அவள் இதழ்களின் ஈரச்செம்மைக்குமேல் ஒளித்துளியென நின்றாடியது. இருபக்கமும் தட்டாரபூச்சியின் விழிகளென நுண்வைரங்கள் செறிந்த மூக்குத்திகள். நெற்றிமேல் ஆடிய சுட்டியில் ஒளியுமிழும் இளநீல வைரங்கள். கூந்தலைத் தழுவிச் சரிந்தது ஆரச்செறி. அதிலிருந்து ஒரு சரடு சென்று செவிமலரை தொட்டது. கூந்தலை ஐந்து சரடுகளாகப் பகிர்ந்து பொன்மலர்கள் பூட்டிப்பின்னி கூட்டிய பிணைவில் வைரம் பொறித்த மலர்க்குவையை அமைத்தனர். கடகங்கள் செறிந்த கைகள் நெளியும் கருநாகங்கள். மோதிரங்கள் வளைத்த கைவிரல்கள் கருநாகக் குழவிகள். நகங்களின் ஒளி பொன்னகையை வெல்கின்றதா?

பிருஷதி விழிமலர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தாள். தொண்டை உலர்வதுபோல, வயிறு முரசுத்தோல் என அதிர்வதுபோல, கால்கள் குளிர்ந்து தொய்வடைவதுபோல, அவ்வப்போது விழியொளியே குறைந்து மீள்வதுபோல உணர்ந்தாள். அணிசெய்த சேடியர் பின்னகர்ந்தபின் ஆடியை கொண்டுவந்து திரௌபதியிடம் அளித்தனர். அவள் அதை வாங்கி தன்னை நோக்கியபோது அவள் விழிகளை பிருஷதி நோக்கினாள். அவை அவளறிந்த விழிகள் அல்ல. வாளெடுத்து பலிக்களம் வரும் பூசகனின் தெய்வ விழிகள். அணங்கெழுந்த விழிகள். குருதி மணம் பெற்ற கானுறை வேங்கையின் எரி திகழ் விழிகள்.

பிருஷதி அச்சத்துடன் சற்று பின்னடைந்து அவ்வசைவு தன் உடலில் நிகழவில்லை என உணர்ந்தாள். “எழுக இளவரசி” என்றாள் அணிச்சேடி. "இன்று எட்டாவது தாராபலம் பொருந்திய மைத்ர நன்னாள். அணிகொண்டு எழுந்த பெண்ணைச்சூழ்ந்து விண்ணகத்தின் கந்தர்வர்கள் காவல் காக்கும் நேரம்...” திரௌபதி எழுந்து தன் கைகளை தொங்கவிட்டபோது எழுந்த வளையலோசை கேட்டு பிருஷதி திடுக்கிட்டாள். அந்த அதிர்வை அறிந்தவள் போல திரௌபதி திரும்பி நோக்கினாள். சற்றும் அறிமுகம் அறியா விழிகள் உடனே திரும்பிக்கொண்டன. மங்கலச்சேடியர் வெளியே குரவையொலி எழுப்பினர். சேடியர் இருவர் அவளை கைபிடித்து அழைத்துச்சென்றனர். அவள் மேகத்திலேறிச்செல்பவள் போல நடந்து சென்றாள். அவள் அறைநீங்கியபோது மறுபக்கச் சுவரில் விழுந்த நிழலைக் கண்டு தன் நெஞ்சை பற்றிக்கொண்டாள். அது முற்றிலும் புதிய ஒருத்தி.

வெளியே வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் சேர்ந்து எழுந்தன. மானினி வந்து “அரசி, வருக” என்றாள். அவள் வியர்த்த கைகளால் தன் ஆடையைப்பற்றி முறுக்கியபடி உலர்ந்த தொண்டையை வாய்நீரை விழுங்கி ஈரப்படுத்தியபடி அவளுடன் நடந்தாள். அந்தப்புரத்து மாளிகையின் சுவர்களும் மரப்பொருட்களும் கூரையும் திரைகளும் எல்லாம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்தன. திரௌபதி மாளிகையைவிட்டு வெளியே சென்றகணம் வெளியே பெருமுரசு இடிவரிசை என முழங்க கொம்புகளும் குழல்களும் இணைந்துகொண்டன. அந்தப்புர முற்றத்தில் கூடி நின்றிருந்த மக்கள் திரள் பொங்கி ஆரவாரித்தது.

வாயிலை அடைந்து நிலையைப்பற்றியபடி பிருஷதி நின்றாள். பெருமுற்றத்தில் பதினெட்டு வெண்குதிரைகள் அணிக்கோலத்தில் நின்றிருக்க அவற்றின்மேல் வெள்ளிக்கவசமணிந்த வீரர்கள் ஒளிவிடு வாள்கள் ஏந்தி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பெரிய வெண்புரவியில் உருவிய வாளுடன் திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். தொடர்ந்து நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் கைகளில் தாலங்கள் ஏந்தி நிரை நின்றனர். மங்கலவாத்தியமேந்திய சூதர்களின் நிரைகளுக்குப் பின்னால் பொன்னூல் குச்சங்களும் பூவேலைகளும் அணிசெய்த செம்பட்டு முதுகை மூட, கொம்புகளில் பொற்குமிழ்களும், உருகிவழிந்த பொன்னருவி என நெற்றிப்பட்டமும் அணிந்து பட்டத்துயானை செவியாட்டி நின்றது.

திரௌபதி யானையை அணுகியதும் பாகன் கையசைக்க யானை பின்னங்கால் மடித்து பாதி அமர்ந்தது. அவள் அதன் விலாவில் தொங்கிய பட்டுச்சரடின் முடிச்சுகளில் கால்வைத்து ஏறி அதன் முதுகின் மேல் செம்பட்டுப் பீடத்துடன் இருந்த பொன்பூசிய அம்பாரிமேல் அமர்ந்துகொண்டாள். முன்னங்கால் இழுத்து பின்னங்கால் தூக்கி யானை எழுந்ததும் அவள் விண்ணகமேறும் விமானத்தில் அமர்ந்திருப்பவள் என மேலெழுந்தாள். முற்றத்திலும் அப்பால் அரசவீதியிலும் செறிந்திருந்த பெருங்கூட்டம் அவளைக் கண்டதும் கைவீசிக் கொந்தளித்து கூச்சலிட்டு ஆர்ப்பரித்தது. அந்த கொந்தளிக்கும் மானுட உடல்களின் அலைகளுக்குமேல் மிதப்பவள் போல அவள் விண்ணில் அசைந்தாடிச் சென்றாள்.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 4

அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின் பெருமுரசு கொம்புகள் இணைய முழங்கத் தொடங்கியது. அருகே இருந்த வைதிகர் அர்ஜுனனை நோக்கி “இளவரசி பட்டத்துயானைமேல் நகர்வலம் வருகிறார்கள். அரண்மனை முகப்பை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றார்.

தருமன் திரும்பிப்பார்த்து “நகர்வலமா?” என்றான். “ஆம், இன்றுதானே இந்நகர் மக்கள் அவளை இறுதியாக காணமுடியும்? இளவரசியர் மணமுடித்தபின் தாய்வீட்டுக்குத் திரும்பி வரும் வழக்கம் ஷத்ரியரிடம் இல்லை அல்லவா?” என்றார். அறிந்த செய்தி என்றாலும் அப்போது அதை எண்ண அர்ஜுனனின் அகம் சற்று அதிர்ந்தது. திரும்பி பீமனை நோக்கிவிட்டு “ஆம், இன்றுடன் அவர் பாஞ்சாலத்திற்குரியவர் அல்ல” என்றான். “ஆம், அவர் இனி பாரதவர்ஷத்தையே வெல்லலாம். பாஞ்சாலத்தை இழந்துவிடுவார்” என்றார் வைதிகர். மீண்டும் தன்னுள் ஓர் அகநகர்வை அர்ஜுனன் உணர்ந்தான்.

”ஏழு ரதவீதிகளிலும் முழுதணிக்கோலத்தில் இளவரசி சுற்றிவரவேண்டும் என்பது முறைமை. அவர்களை குடிமக்கள் அனைவரும் இன்று பார்த்துக்கொள்ளலாம். அதற்காக அத்தனை வீதிகளிலும் மங்கலநிறைகள் அமைத்து மலர்க்குவைகளுடன் மக்கள் நின்றிருக்கிறார்கள்” வைதிகர் சொன்னார். “பாஞ்சாலத்தில் இருந்து பிறநாட்டுக்கு இளவரசியர் செல்வதில்லை. ஐங்குலங்களுக்குள்ளேயே மணமுடித்தல்தான் இங்கு வழக்கம். இளவரசி பாரதவர்ஷத்தையே ஆளக்கூடியவள் என்பதனால் துருபத மன்னர் இதை ஒருங்கமைத்திருக்கிறார்.” அவர் மேலும் பேச விழைவது தெரிந்தது. ஆனால் அர்ஜுனன் அவரை தவிர்க்க விரும்பினான். அப்போது எந்தக்குரலையும் கேட்கத் தோன்றவில்லை.

மீண்டும் அவன் விழிகள் அரசர்களின் நிரையை சுற்றிவந்தன. பெரும்பாலான அரசர்கள் அங்கு வருவதற்கு முன்னரே போட்டியில் அவர்கள் வெல்ல முடியாதென்று அறிந்திருந்தனர். வெல்லப்போவது யார் என்ற ஆவல் மட்டுமே அவர்களிடமிருந்தது. கிந்தூரத்தைக் கண்டதும் அவர்களின் எதிர்பார்ப்பு மேலும் கூர்மைகொண்டது. விழிகள் கிந்தூரத்தைத் தொட்டு பின் திரும்பி அரசரவையில் இருந்த கர்ணனையும் யாதவ கிருஷ்ணனையும் தேடிச்சென்று மீண்டன. அரசர்கள் அனைவரின் விழிகளும் கூடியிருந்த பெருந்திரளுக்குள் சுழன்று வருவதை அர்ஜுனன் கண்டான். அவன் எண்ணியதையே மெல்லிய குரலில் பீமன் சொன்னான். “அத்தனை பேரும் உன்னைத்தான் தேடுகிறார்கள் பார்த்தா!” அர்ஜுனன் தலையசைத்து புன்னகை செய்தான்.

ஜராசந்தன் இரு கால்களையும் விரித்து சாய்ந்து அமர்ந்து பெருந்தோள்கள் புடைக்க கைகளை மார்பின் மீது கட்டி ஆணவம் தெரிய நிமிர்ந்து அமர்ந்திருந்தான். ஜயத்ரதன் உடலெங்கும் பதற்றம் தெரிய சரியும் சால்வையைத் தூக்கி தோளில் போட்டபடி அமர்ந்திருக்க சிசுபாலன் தன்னருகே கர்ணன் அமர்ந்திருப்பதை உடலால் உணர்ந்தபடி விழிகளால் நோக்காது அமர்ந்திருந்தான். தன்னை முழுமையாகவே உள்ளொடுக்கி சிலையென அமர்ந்திருந்தார் சகுனி. வலியெழுந்த காலை சற்றே நீட்டி அதன்மேல் பொன்னூல் சித்திரங்கள் நிறைந்த சால்வையை போட்டிருந்தார். அருகே கணிகர் இருந்த பீடம் ஒழிந்திருப்பதாகவே தோன்றியது. அதன்மேல் போடப்பட்ட ஒரு மரவுரி போலத்தான் அவர் இருந்தார்.

துரியோதனன் ஜராசந்தனைப்போலவே கைகளை மார்பின் மேல் கட்டி கால்களை விரித்து அமர்ந்து தொடைகளை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தான். அவனருகே துச்சாதனன் துரியோதனனின் நிழலென்றே தெரிந்தான். பின்பக்கம் கௌரவர்கள் துச்சாதனனின் நிழல்கள் போலிருந்தனர். ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கும் விதத்திலேயே அவர்களின் அகநிலை தெரிந்தது. எவர் எந்த உணர்வுடன் இருக்கிறார்கள் என்று. எவருடைய எதிரி எவர் என்று. அங்கே உடல்களே இல்லாமல் உள்ளங்கள் வந்து அமர்ந்திருப்பது போல.

அர்ஜுனன் கர்ணனை மீண்டும் நோக்கினான். கிந்தூரத்தை நோக்கிய கர்ணனின் விழிகள் முகங்களால் நிறைந்திருந்த பேரவையை சூழ்ந்து மீண்டன. மீண்டும் கிந்தூரத்தை நோக்கி திரும்பியபோது அர்ஜுனனின் விழிகளை கர்ணனின் விழிகள் சந்தித்தன. அவன் உடலில் அதிர்வறியும் நாகம் என ஓர் அசைவு நிகழ்ந்தது. அர்ஜுனன் உடலிலும் அவ்வசைவு நிகழ பீமன் திரும்பி நோக்கி “பார்த்துவிட்டானா?” என்றான். கர்ணனை நோக்கியபின் “ஆம், பார்த்துவிட்டான்” என்றான் அர்ஜுனன் புன்னகையுடன். “இத்தனை கூட்டத்தில் எப்படி பார்த்தான்?”

“உன் பார்வையால்தான்” என்றான் பீமன். ”உன் பார்வை வேல்முனை போல அவன் மேல் ஊன்றியிருந்தது. அவன் அமைதியிழந்தது அதனால்தான்.” அர்ஜுனன் “நான் யாதவனை நோக்கவே விழைகிறேன். விழிகள் கர்ணனை மட்டுமே நோக்குகின்றன” என்றான். பீமன் “அவன் அமர்ந்திருப்பதைப்போலவே நீ அமர்ந்திருக்கிறாய். இருகைகளையும் கால்முட்டுகள் மேல் ஊன்றி சற்றே முன்னால் குனிந்து” என்றான். அதன்பின்னர் அதை உணர்ந்த அர்ஜுனன் தன் கைகளை எடுத்து பின்னால் சாய்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொள்ள கர்ணனும் அதேபோல பின்னால் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டான். பீமன் சிரித்தபடி திரும்ப நோக்கினான். கர்ணன் பின்னால் சாய்ந்ததும் கைகளை முட்டில் வைத்து முன்னால் சாய்ந்து அமர்ந்திருந்த ஜயத்ரதன் பின்னால் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டான்.

பீமனும் அர்ஜுனனும் சேர்ந்து நகைக்க தருமன் திரும்பி “என்ன?” என்றான். பீமன் “ஒன்றுமில்லை மூத்தவரே” என்றான். “துரியோதனன் பதற்றமாக இருக்கிறான் பார்த்தா. அவன் கர்ணன் மேல் ஐயம் கொண்டிருக்கிறான். நீ வெல்லக்கூடும் என்று எண்ணுகிறான். ஆனால் கர்ணன் ஐயமே கொள்ளவில்லை” என்றான். பீமன் திரும்பி தருமனை நோக்க “கிந்தூரம் கொண்டு வைக்கப்பட்டபோது நான் கர்ணனின் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் முகத்திலோ உடலிலோ சற்றும் திகைப்பு எழவில்லை. முதற்கணத்துக்குப்பின் அவன் உவகை கொள்வதையே கண்டேன். இந்த வில்லை அவனன்றி எவரும் வளைக்க முடியாது என எண்ணுகிறான். அவன் வென்றுவிட்டதாகவே நம்புகிறான்” என்றான். சோர்ந்த விழிகளுடன் “பார்த்தா, நான் அவன் வெல்லக்கூடும் என அஞ்சுகிறேன்” என்றான்.

அவன் விழிகளை சந்திக்காமல் திரும்பிக்கொண்டு அர்ஜுனன் பேசாமலிருந்தான். “மந்தா, ஏதாவது நிகழாவிட்டால் கர்ணனே வெல்வான். ஐயமே இல்லை” என்றான். பீமன் ”இளையோனும் வெல்வான் மூத்தவரே” என்றான். “இல்லை. கிந்தூரம் அவை வந்தபோது நான் இவன் முகத்தையும் நோக்கினேன். இவன் உள்ளத்தில் தோன்றி அணைந்த ஐயத்தை உடலே காட்டியது.” பீமன் அர்ஜுனனை நோக்க அவன் திரும்பி நோக்காமல் ”மூத்தவரே, அந்த வில்லில் ஏதோ மந்தணப்பொறி உள்ளது. அது என்னவென்று தெரியாமல் முடிவாக ஏதும் சொல்ல முடியாது” என்றான். தருமன் எரிச்சலுடன் “அதைத்தான் நான் சொன்னேன். நீ முழு நம்பிக்கையுடன் இல்லை. அவன் நம்புகிறான்” என்றான்.

அர்ஜுனன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அப்பால் அவையில் நகைப்பொலி எழுந்தது. தருமன் “யாரது?” என்றான். தெற்குவாயில் வழியாக வணிகர் அவையில் நுழைந்து விட்ட பலராமர் அங்கே நின்று கூவி சேவகரை அழைத்தார். துருபதன் அவரை கண்டுவிட்டு கைநீட்டி ஆணையிட அவர் மைந்தர்கள் ஜனமேஜயனும் சத்ருஞ்சயனும் ஆணையிட்டபடி முன்னால் சென்றனர். அவர்கள் பலராமரை அந்த நெரிசலில் இருந்து அழைத்து பந்தலின் ஓரமாக கொண்டுவந்து அரசரின் அவைக்குள் அழைத்துக்கொண்டனர். பலராமர் உரக்க கைநீட்டி கிருஷ்ணனை நோக்கி ஏதோ சொன்னபடி சென்று அவன் அருகே அமர்ந்துகொண்டார். அரசர் அவையில் சகுனியையும் கணிகரையும் தவிர பிறர் அவரை நோக்கி சிரித்தனர்.

ஒலி பருப்பொருள் போல பெருகி வந்து நிறைவதை அர்ஜுனன் அப்போதுதான் அறிந்தான். வாழ்த்தொலிகளும் வாத்தியஒலிகளும் இணைந்து உருவான பெருமுழக்கம் அரசவீதியில் இருந்து கிழக்குவாயில் வழியாக உள்ளே வந்தது. மாபெரும் குமிழிகளாக அது வெடித்தது. பெரும்பாறைக்கூட்டங்கள் போல ஒன்றை ஒன்று முட்டி உருண்டு வந்து உடைந்து பரவி அலையலையாக நான்கு பக்கமும் சுவர்களைச் சென்று முட்டியது. ஒலியாலேயே திரைச்சீலைகள் அதிரமுடியும் என்று அப்போதுதான் அர்ஜுனன் கண்டான். கிழக்குவாயிலினூடாக அணிப்பரத்தையர் மங்கலத்தாலங்களுடன் வண்ணங்கள் உருகி ஆறென வழிந்து வருவதுபோல வந்தனர். அவர்களுக்குப்பின்னால் பேரொலியில் முழுமையாகக் கரைந்துபோய் வெறும் அசைவுகளாகவே தெரிந்த வாத்தியங்களுடன் சூதர்கள் வந்தனர்.

அணிநிரைகள் அரங்கு நடுவே இருந்த பாதை வழியாக மணமுற்றத்தை நோக்கிச்சென்றன. அப்பால் விண்ணில் ஓர் அசைவு என தெரிந்தவள் திரௌபதி என மறுகணமே அவன் அகம் கண்டுகொண்டது. அவள் ஒளிரும் அணிகளுடன் வானில் அசைந்து நீந்தி வந்துகொண்டிருந்தாள். அவள் ஏறிவந்த பட்டத்துயானை ஒளிரும் முகபடாமும் பொற்குமிழ்கள் பதிக்கப்பட்ட மாபெரும் வெண்தந்தங்களுமாக நுழைந்து செவிகளை வீசியபடி அரங்கு நடுவே வந்து நின்றது. சில அரசர்கள் அவர்களை அறியாமலேயே இருக்கையில் எழுந்து நின்றுவிட்டனர்.

அக்காட்சியில் இருந்து சிலகணங்கள் கடந்தபின் விடுபட்டபோதுதான் அதைக் கண்ட கணங்களில் அவன் இல்லாமலிருந்தான் என்று உணர்ந்தான். நெஞ்சு அதிரும் ஒலி காதுகளில் கேட்டது. தொடர்பே அற்றதுபோல அவன் தொடை துடித்துக்கொண்டிருந்தது. முந்தைய கணத்தில் அவன் நெஞ்சில் இருந்த 'பட்டத்து யானை’ என்ற சொல் உதிராத நீர்த்துளி போல அவன் சித்தநுனியில் நின்று தயங்கியது. 'ஆம், பட்டத்து யானை' என பொருளின்றி அவன் சொல்லிக்கொண்டபோது தன்னை உணர்ந்து பெருமூச்சுடன் சூழலை உணர்ந்தான். அவன் உடலில் இருந்தும் அந்தக் கணம் விலக தோள்கள் தளர்ந்தன.

”கருமுகில் மேல் கருநிறத்தில் சூரியன் எழுந்ததுபோல” என்று ஒரு பிராமணன் சொன்னதைக் கேட்டபோது பொருள்திரளாத நோக்குடன் திரும்பிவிட்டு மறுகணம் சினம் பற்றி எரியப்பெற்றான். மூடன், முழுமூடன். எங்கோ கற்ற வீண்மொழி ஒன்றை அத்தருணம் மீது போடுகிறான். மேலும் ஒரு கவிக்கூற்றை அவன் சொன்னான் என்றால் அவன் தலையை பிளக்கவேண்டும். எத்தனை எளிய சொற்கள். ஆனால் மீண்டும் அவளை நோக்கியபோது அவள் அப்படித்தான் தெரிந்தாள். பெண் சூரியன். அசைவுகளில் அவள் அணிந்திருந்த வைரங்கள் கதிர்கள் என சுடர்விட்டன.

வாழ்த்தொலிகள் பொங்கி எழுந்து அடங்கி மீண்டும் பொங்கின. அரங்கு முழுக்க களிவெறி நிறைந்த விழிகள், கூச்சலில் திறந்த வாய்கள், அசைந்துசுழலும் கைகள். யானை பின்னங்கால்களை மடித்து முன்னங்கால்களை நீட்டி தாழ்ந்து அமர்ந்தது. அவள் அதன் முன்னங்கால் மடிப்பில் மிதித்து கீழே இறங்கினாள். இரு சேடியர் அவளை அணுகி இருபக்கமும் நின்று அவள் மேலாடை நுனியை பற்றிக்கொண்டனர். பட்டத்துயானைக்குப் பின்னால் மணிகள் ஒளிவிட்ட வெண்புரவியில் வெண்ணிறத் தலைப்பாகையும் வெண்மணிக் குண்டலங்களும் ஒளிரும் பொற்கச்சையுமாக வந்த திருஷ்டத்யும்னன் இறங்கி அவளருகே வந்து அவள் வலக்கையைப் பற்றி அரங்கு நடுவே அழைத்துவந்தான்.

மணமுற்றத்தில் அரசனின் அருகே நின்றிருந்த பாஞ்சால இளவரசர்கள் மூன்றடி எடுத்து முன் வைத்து அவளை வரவேற்றார்கள். திருஷ்டத்யும்னன் அவளை கைபற்றி வேள்வி மேடைக்கு கொண்டுசென்றான். அவள் குனிந்து மூன்று எரிகுளங்களையும் வணங்கினாள். வைதிகர் எரிகுளத்துச் சாம்பலை துளி தொட்டு அவள் நெற்றியில் அணிவித்தனர். அரியணையில் அமர்ந்திருந்த துருபதனையும் அரசியரையும் முறைப்படி வணங்கி வாழ்த்து பெற்றாள். சத்யஜித்தையும் உடன்பிறந்த மூத்தவர்களையும் வணங்கிவிட்டு திரும்பி மூன்று பக்கமும் நோக்கி அவையை வணங்கினாள். அவையில் எழுந்த வாழ்த்துரைகளுக்கு தலை தாழ்த்தியபின் பின்னகர்ந்து நின்றாள்.

மங்கல இசை முழங்க திருஷ்டத்யும்னன் அவளை கைபற்றி அழைத்துச்சென்று மேடையில் இடப்பட்டிருந்த செம்பட்டுப்பீடத்தில் அமரச்செய்தான். இரு அணிச்சேடியரும் அவளுக்கு இருபக்கமும் துணை நிற்க அவன் அவளருகே நின்றான். கோல்காரன் எழுந்து கைகாட்ட இசை அவிந்தது. வாழ்த்தொலிகள் அடங்கி அவை விழிகளாக மாறியது. கோல்காரன் தன் வெள்ளிக்கோலை மேலே தூக்கி ”அவை அமர்ந்த அரசர்களே, பெருங்குலத்து மூத்தோரே, குடியீரே, அனைவரையும் பாஞ்சாலத்தின் மூதாதையரின் சொல் வாழ்த்துகிறது. இன்று இந்த மணமங்கல அவையின் பதினாறாவது விழவுநாள். எட்டு விண்மீன்களும் முழுமைகொண்டு முயங்கிய மைத்ரம் என்னும் விண்தருணம். இச்சபையில் பாஞ்சாலத்து இளவரசியின் மணத்தன்னேற்பு நிகழ்வு இப்போது தொடங்கவிருக்கிறது. தொல்நெறிகளின்படி இம்மணநிகழ்வு முழுமைபெறும். இளவரசியை மாமங்கலையாகக் காண விண்ணில் கனிந்த விழிகளுடன் வந்து நின்றிருக்கும் அன்னையரை வணங்குகிறேன். அவர்கள் அருள் திகழ்க!” என்றான்.

திருஷ்டத்யும்னன் பாஞ்சாலியிடம் குனிந்து ஏதோ சொல்ல அவள் அவனை நோக்கி புன்னகை செய்தாள். பீமன் அர்ஜுனனிடம் “அவள் இங்கில்லை பார்த்தா. அணங்குகொண்டவள் போலிருக்கிறாள்” என்றான். தருமன் புன்னகையுடன் “சுயம்வரம்தான் இவ்வுலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் உச்சநிலை வாழ்த்து. சூதில் ஒரே ஒரு கணத்தில் அனைத்தையும் முடிவுசெய்வதாக பகடை மாறிவிடுகிறது. அப்போது அதில் ஆயிரம் கரங்களுடன் ஊழின் பெருந்தெய்வம் வந்து குடியேறுகிறது” என்றான். அர்ஜுனன் அச்சொற்களைக் கேட்டாலும் பொருள்கொள்ளாதவனாக திரௌபதியை நோக்கிக்கொண்டிருந்தான்.

அரசர் அவையில் எவரும் எழவில்லை. அவை நிறைந்திருந்த பல்லாயிரம் விழிகளும் அவர்கள் மேல் பதிந்திருக்க அதை உணர்ந்தமையால் சிலிர்த்த உடல்களுடன் அசைவில்லாது அமர்ந்திருந்தனர். எவருமே கிந்தூரத்தை நோக்கவில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். அது அங்கில்லாதது போல வேறெதையோ தீவிரமாக எண்ணி விடைகாணமுடியாதவர்கள் போல அவர்கள் முகத்தோற்றம் கொண்டிருந்தனர். காம்போஜ மன்னன் சுதட்சிணன் சரிந்த சால்வையை சற்று முன்னால் குனிந்து எடுத்தான். அவ்வசைவில் அனிச்சையாக அத்தனை அரசர்களும் அவனை நோக்கித்திரும்ப அவையின் அனைத்துவிழிகளும் அவனை நோக்கின. அவை மெல்லிய ஓசை ஒன்றை எழுப்பியது.

அந்த மாபெரும் பார்வையை உணர்ந்து திகைத்து இருபக்கமும் நோக்கிய சுதட்சிணன் அதை மேலும் தாளமுடியாதவனாக எழுந்து நடுங்கும் கால்களை நிலத்தில் அழுந்த ஊன்றி சால்வையை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு முன்னால் நடந்தான். மணமேடையின் இடப்பக்கம் நின்றிருந்த சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் இசைத்து அவனை வரவேற்றனர். அவன் நிமிர்ந்த தலையுடன் மேலே சென்று துருபதனுக்கு தலைவணங்கி அவையை நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு கிந்தூரத்தை அணுகினான். அவன் உள்ளூர நடுங்கிக்கொண்டிருப்பதை அத்தனை தொலைவிலேயே அர்ஜுனனால் நோக்க முடிந்தது.

சுதட்சிணன் குனிந்து கிந்தூரத்தின் மையத்தைப் பற்றி அதை தூக்கினான். அது அசைக்கமுடியாதபடி எடைகொண்டிருக்கும் என அனைவரையும்போல அவனும் எண்ணியிருந்தமையால் அதை முழு ஆற்றலையும் செலுத்தி தூக்க அது சற்று எளிதாக மேலெழுந்ததும் தடுமாறி பின்னகர்ந்தான். இடக்காலை பின்னால் நீட்டி சற்றே கால்மடித்து நின்று நிலைகொண்டபின் அதை கைகளில் பிடித்துக்கொண்டான். கீழே சுருண்டுகிடந்த அதன் நாணை எடுக்கக் குனிவதற்குள் அது துள்ளி மறுபக்கமாக வளைந்து அவனைத் தூக்கி பின்னால் தள்ளியது. அவன் மல்லாந்து புழுதியில் விழ அவன்மேல் வில் விழுந்தது.

அவையில் வியப்பொலியும் பின் மெல்லிய நகைப்பொலிகளும் எழுந்தன. கைகளை ஊன்றி எழுந்த சுதட்சிணன் கிந்தூரத்தை அச்சத்துடன் நோக்கிவிட்டு தலைகுனிந்து தன் பீடம் நோக்கி சென்றான். அக்கணமே அவையிலிருந்து இன்னொருவன் எழுந்தான். அவனை திருஷ்டத்யும்னன் தன் தமக்கைக்கு அறிமுகம் செய்துவைத்தான். முன்னால் அமர்ந்திருந்த வைதிகர் திரும்பி தருமனிடம் “அவர் ஹ்ருதீகரின் புதல்வராகிய கிருதவர்மன். அவர் அக்னிவேசரின் மாணவர். வில்தேர்ந்தவர்” என்றார்.

கிருதவர்மனும் வில்லை தூக்கினான். நாணையும் கையில் எடுத்தான். அதைப்பூட்டுவதற்குள் கிந்தூரம் துள்ளி அவனை தூக்கி வீசியது. அவன் கீழே விழ வில் மேலுமொருமுறை நின்று அதிர்ந்து மறுபக்கம் விழுந்தது. "சேணமறியாத இளம்புரவி போலிருக்கிறது...” என்றான் ஒரு வைதிகன். “அது வெறும் வில் அல்ல. அதற்குள் ஏதோ மலைத்தெய்வம் வாழ்கிறது. அதைவெல்லாமல் அவ்வில்லை பூட்டமுடியாது” என்றான் இன்னொருவன். பூருவம்சத்து திருடதன்வாவும் அதனால் தூக்கிவீசப்பட்டான். மேலும் மேலும் ஷத்ரியர் எழுந்து வந்து அதை எடுத்துப்பூட்ட முயன்று மதம் கொண்ட எருதின் கொம்பால் முட்டப்பட்டவர்கள் போல தெறித்து விழுந்தனர்.

மாத்ரநாட்டு சல்லியன் எழுந்து தன் நீண்ட பெருங்கரங்களைப் பிணைத்து நீட்டியபடி நீளடி எடுத்துவைத்து மணமுற்றம் நோக்கிச்செல்ல பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கினான். “மூத்தவரே, அதனுள் உள்ள பொறி மிக நுட்பமானது. முற்றிலும் வெல்லமுடியாதது என்பது தெரிந்தால் எவரும் அணுகமாட்டார்கள். அது முதலில் தன்னைத் தூக்கவும் ஏந்தவும் இடமளிக்கிறது. அதை நோக்குபவர்கள் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை அடையச்செய்கிறது” என்றான். தருமன் புன்னகைத்து தாடியை நீவியபடி “மிகச்சிறந்த சூதாடி எப்போதுமே முதல் ஆட்டத்தை எதிரிக்கு அளிப்பான்...” என்றான்.

சல்லியன் கிந்தூரத்தை தூக்கி நிலைநாட்டி தன் இடக்கால் கட்டைவிரலால் அதன் கீழ்நுனியை பற்றியபடி வலக்கையால் அதன் மையத்தைப்பிடித்து நிறுத்திக்கொண்டு இடக்கையால் நாணை பற்றிக்கொண்டு தன் முழுதுடலாலும் அந்த வில்லை உணர்ந்தபடி சிலகணங்கள் அசைவற்று நின்றார். அவருடன் அவையும் சிந்தை அசைவிழந்து காத்து நின்றது. எச்சரிக்கை கொண்ட நாகம் போல சல்லியனின் இடக்கை நாணை வில்லின் மேல் நுனி நோக்கிக் கொண்டு சென்றது. எதிர்நோக்காத கணம் ஒன்றில் அவரது வலக்கால் வில்லின் நடுவளைவை மிதித்து அதை வளைக்க இடக்கை நாணை எடுத்து மேல்நுனிக்கொக்கியில் வீசி இழுத்தது. வண்டு முரளும் ஒலியுடன் வில் வளைந்து நாணை அணிந்துகொண்டது.

அவையில் வியப்பொலி முழங்க கையைவிட்டு வில்லை சற்றே அசைப்பதற்குள் வில் உலோக ஒலியுடன் முற்றிலும் நிமிர்ந்து நாணை அறுத்துக்கொண்டு அவர் கையில் சுழன்று தலைகீழாகி அவரை சுழற்றித்தள்ளியது, சல்லியன் காலை ஊன்றி விழாமல் நின்ற கணம் வில்லில் இருந்து தெறித்த நாண் அவர் தோளை ஓங்கி அடித்தது. அவர் அதை பிடித்துக்கொண்டாரென்றாலும் அந்த அடியில் அவர் தோளின் தசை கிழிந்து குருதி தெறித்தது. வில் குழைந்து கீழே விழ அவர் அதை பிடிக்க முயன்றபோது அதன் ஒரு முனை மேலெழுந்து மறுமுனை அவர் காலை அடித்தது. அவர் அதை விட்டுவிட்டு பின்னகர்ந்து குருதி வழிந்த தன் தோளை அழுத்திக்கொண்டு திகைப்புடன் நோக்கினார். அறுபட்ட நாகம் போல அது துள்ளிக்கொண்டிருந்தது.

“அதற்குள் விசைப்பொறி இருக்கிறது...” என்றான் அர்ஜுனன். “நாம் அதற்குக் கொடுக்கும் விசையை அது வாங்கிக்கொண்டு செயல்படுகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரையும் ஒவ்வொருமுறையில் வீழ்த்துகிறது. இன்னொருவரை அது வீழ்த்திய முறையைக் கொண்டு நாம் அதை புரிந்துகொண்டதாக எண்ணக்கூடாது.” பீமன் “அந்தப் பொறியை அறியாமல் அதை அணுகுவதில் பொருளில்லை” என்றான். அர்ஜுனன் “ஆம் மூத்தவரே, மேலும் மேலும் அரசர்கள் அதன்முன் தோற்கும்போது அதன் சூது புலப்படக்கூடும்” என்றான்.

ஜராசந்தன் எழுந்து சால்வையை பின்னால் சரித்து பெருந்தோள்களை விரித்து யானைநடையுடன் மணமுற்றம் நோக்கி சென்றான். சூதர்களின் வரவேற்பிசை அவன் கிந்தூரத்தை அணுகியதும் நின்றது. கிந்தூரத்தை நோக்கியபடி அவன் சில கணங்கள் அசைவற்று நின்றான். அவையில் வீசிய காற்றில் அவன் செந்நிறமான குழல் நாணல்பூ போல அசைந்தது. மிக மெல்ல குனிந்து வில்லை நடுவே வலக்கையால் பற்றி எளிதாகவே எடுத்தான். அதன் கீழ் நுனியை வலக்காலால் அழுந்த மிதித்து கையால் நடுவே பற்றி இறுக்கி வளைத்தான். வில் எழுப்பிய முனகல் ஓசை அவை முழுக்க கேட்டது.

அர்ஜுனன் திரௌபதியின் விழிகளை நோக்கினான். அவள் எதையும் பார்க்காதவளாக அமர்ந்திருந்தாள். ஜராசந்தன் கிந்தூரத்தின் நாணை இடக்கையில் எடுத்து மேல் வளைவின் முதல் கொக்கியை நோக்கி நீட்டுவதற்குள் அது அவன் வலக்காலை தட்டி விட்டபடி மண்ணிலிருந்து எழும் பருந்து போல விம் என்ற ஒலியுடன் துள்ளி அவன் தலைக்குமேல் விரிந்தது. அவன் அதை பிடிக்கச்செல்ல நிலைகுலைந்து மண்ணில் விழுந்தான். அவனுடைய பேருடல் மண்ணை அறைந்த ஒலியை அர்ஜுனன் கேட்டான். அவையெங்கும் மெல்லிய நகைப்பொலி எழுந்தது. அவன் அனிச்சையாகத் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவளது எதையும் பாராத விழிகள் அவ்வண்ணமே இருந்தன.

ஓர் எண்ணம் அவனுள் எழுந்தது. அவளுக்குத் தெரியும், எவர் வெல்வார் என. ஜராசந்தனை அவள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அரைக்கணம் கூட அவனையோ வில்லையோ நோக்கவில்லை. அவன் அவள் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் விழுந்ததை அவள் முன்னரே அறிந்தவள் போலிருந்தாள்.

துரியோதனன் எழுந்து மாதுலரை வணங்கிவிட்டு மணமுற்றம் நோக்கி வந்தபோதும் அவள் விழிகள் அவனை நோக்கவில்லை. துரியோதனனை திரும்பி நோக்கியபோது அவன் அதை அறிவான் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். அவன் திமிர்த்த பெருநடையில் வந்துகொண்டிருந்தபோதும் விழிகள் அவளையே நோக்கிக்கொண்டிருந்தன. முற்றத்தை அணுகியதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தவில்லை என்று அவனுக்கு புரிந்துவிட்டது, மிகமெல்லிய ஒரு தயக்கம் அவன் கால்களில், உடலில் தெரிந்தது. அத்தனை சிறிய உளநகர்வை எப்படி உடல் காட்டுகிறது? அதை எப்படி அத்தனை தொலைவில் அறியமுடிகிறது?

ஏனென்றால் அந்த மணமுற்றத்தில் வந்து நிற்கும் ஒவ்வொருவராகவும் அவனே நடித்துக்கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் வந்து தூக்கி வீசப்படுகிறான். துரியோதனன் மேல் வந்த இரக்கத்தை அவனே வியப்புடன் எண்ணிக்கொண்டான். கிந்தூரம் அவனை தூக்கி வீச அவன் மல்லாந்து மண்ணில் விழுந்து சினத்துடன் ஓங்கி தரையை கையால் அறைந்தபடி எழுந்துகொண்டான். கைகளை ஒன்றுடன் ஒன்று தட்டியபடி உடலெங்கும் தசைகள் கொப்பளித்து அசைய மூச்சிரைத்தபடி நின்றான். தன் முழு அக ஆற்றலாலும் சினத்தை அவன் அடக்கிக் கொள்வதை காணமுடிந்தது. பின்னர் பெருமூச்சுடன் தோள்களை தளர்த்தினான். தலைகுனிந்து நடந்து விலகினான். அவன் தன் முழு உடலாலும் திரௌபதியை உணர்ந்துகொண்டிருக்கிறான் என அர்ஜுனன் உணர்ந்தான்.

சேதிநாட்டரசன் சிசுபாலன் வில்லை நாணேற்றிவிட்டான். அதை தூக்கி அந்த நீர்த்தொட்டி நோக்கி சென்று நிறுத்தி அம்பு பூட்டும்போது தூக்கி வீசப்பட்டான். சிந்து தேசத்து அரசன் ஜயத்ரதன் வந்தபோது அவை எங்கும் எதிர்பார்ப்பின் ஒலி ரீங்கரித்தது. அவன் வந்து அவையை வணங்கி கிந்தூரத்தை எடுத்து நாணேற்றி கையில் ஏந்திக்கொண்டான். அவையில் திகைப்பும் பின் எதிர்பார்ப்பும் எழுந்தது. அர்ஜுனன் திரௌபதியின் விழிகளை நோக்கினான். அவள் இமைகள் பாதி சரிந்திருந்தன.

ஜயத்ரதன் வில்லுடன் சென்று நின்றான். மூச்சிரைக்க நின்று தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு அம்பை நாணேற்றினான். வில் அவன் தலைக்குமேல் புடைத்து விம்மும் பாய்மரங்களை ஏந்திய கொடிமரம் போல நின்று அதிர்ந்தது. அவன் எய்த அம்பு மேலெழுந்து கிளிக்கூண்டை அடைந்தது. அடுத்த அம்பை எடுக்க அவன் திரும்பிய கணம் அவன் வில்லின் கீழ்நுனியை மிதித்திருந்த காலின் வலு விலக வில் அவனை தூக்கி அடித்தது. அவை எங்கும் அவனை பாராட்டுவதுபோன்ற ஒலிகள் எழுந்தன. ஒரு வைதிகன் “இந்த வில்லை எவனும் பூட்டிவிடமுடியாது” என்றான்.

பீமன் திரும்பி அர்ஜுனனிடம் “பார்த்தா, அந்த வில் அவள் அகம். அவளை அறியாமல் அதை வெல்ல முடியாது” என்றான். தான் எண்ணிக்கொண்டிருந்ததையே சொற்களாகக் கேட்டு அர்ஜுனன் திகைத்து திரும்பிப்பார்த்தான். ”எவர் வெல்வதென்று அவள் முடிவெடுக்கிறாள்... ” என்றான் பீமன். அர்ஜுனன் “ஆம் மூத்தவரே” என்றான்.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 5

மேலும் இரு மன்னர்கள் தோற்று விலகியபின் எவரும் எழவில்லை. கிந்தூரத்தை சேவகர்கள் எடுத்து மீண்டும் அதன் பீடத்தில் வைத்துவிட்டு விலகிச்சென்றனர். மண்ணை அறைந்து அமைந்த மாபெரும் சவுக்கு போல அது அங்கே கிடந்தது. அவையினர் அனைவரும் கர்ணனை நோக்கிக்கொண்டிருக்க அவன் அப்பார்வைகளை முழுதுணர்ந்து முற்றிலும் விலக்கி நிமிர்ந்த தலையுடன் கனவில் என மூடிய விழிகளுடன் அமர்ந்திருந்தான். அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவளும் அதேபோல எதையும் நோக்காமல் எங்கோ அகம்நிலைக்க அமர்ந்திருந்தாள்.

"உனக்காகக் காத்திருக்கிறான் பார்த்தா” என்றான் பீமன். அர்ஜுனன் ஆமென தலையை அசைத்தான். “நீ எதற்காகக் காத்திருக்கிறாய்?” என்று பீமன் மேலும் குனிந்து கேட்டான். “அவன் எழுவதற்காக.” பீமன் சிலகணங்கள் விழிசரித்து சிந்தித்துவிட்டு “அவன் நீ எழுவதை எதிர்பார்க்கிறான்” என்றான். அர்ஜுனன் விழிகளை திரௌபதியில் நிறுத்தி “அவன் அந்த வில் தன்னை அழைப்பதற்காக காத்திருக்கிறான் மூத்தவரே” என்றான். பீமன் திரும்பி நோக்கினான். ஏதோ சொல்ல விழைபவன் என மெல்ல உதடுகள் பிரிந்தன. பின் தலையை அசைத்தபடி திரும்பிக்கொண்டான்.

நேரம் செல்லச்செல்ல அங்கிருந்த அமைதி எடைகொண்டு குளிர்ந்தபடியே வந்தது. அவை அசைவற்ற மாபெரும் திரைச்சீலைச்சித்திரம் போல ஆகியது. எங்கோ சில செருமல்கள் ஒலித்தன. அணிபடாம் ஒன்று காற்றில் திரும்பும்போது அதைப்பிணைத்திருந்த வண்ணவடம் எழுப்பிய முறுகல் ஒலி எழுந்தது. துருபதனும் அவன் மைந்தர்களும் கர்ணனை நோக்காமல் இருக்க சித்தத்தை இறுக்கிக்கொண்டு முகத்தையும் உடலையும் இயல்பாக வைத்திருந்தனர். பிருஷதி பாஞ்சாலியை நோக்கிவிட்டு அரங்கிலிருந்த கூட்டத்தில் விழி ஓட்டி தேடினாள். ஒரு கட்டத்தில் அவள் தன்னை கண்டுவிட்டாள் என்றுகூட அர்ஜுனன் எண்ணினான்.

திரௌபதியின் ஆடையின் கீழ்நுனி மட்டும் காற்றில் படபடத்தது. அவள் கால்களில் சிறகுகள் கொண்ட யக்ஷி என்பதுபோல. அவள் உடலெங்கும் வைரங்கள் நூறு விழிகள் என திறந்து பேரவை நோக்கி இமைத்துக்கொண்டிருக்க அவள் முகவிழிகள் முற்றிலும் நோக்கிழந்திருந்தன. தருமன் அர்ஜுனனை நோக்கி தழைந்து “பார்த்தா, அவள் ஒருபோதும் அவனை அழைக்கமாட்டாள்...” என்றான். “அழைப்பதென்றால் முன்னரே அழைத்திருப்பாள்.” அர்ஜுனன் திரௌபதியை நோக்கியபடி தலையை ஆட்டினான்.

கர்ணன் மெல்ல அசைந்ததும் அவ்வசைவு அவைமுழுக்க நிகழ்ந்தது. அவையில் எழுந்த அவ்வசைவை ஓரக்கண்ணால் கண்டு அவன் திகைத்து சுற்றிலும் நோக்கினான். திரும்பி துரியோதனனை நோக்கினான். மீண்டும் கிந்தூரத்தை நோக்கிவிட்டு அரைக்கணம் விழிகளால் அர்ஜுனனை நோக்கினான். அவன் நோக்கு திரௌபதியைத் தொடும்போது உள்ளம் கொண்ட அதிர்வை அர்ஜுனனால் காணமுடிந்தது. கர்ணன் மீசையை நீவிவிட்டு விழிகளை விலக்கி கிழக்கு வாயிலில் முற்றத்து ஒளி வெள்ளித்திரைச்சீலை என தொங்கிக்கிடப்பதை நோக்கினான். அவன் முகத்திலும் விழிகளிலும் அவ்வொளி அலையடித்தது.

அவன் தன் முழு அக ஆற்றலாலும் திரௌபதியை நோக்குவதைத் தவிர்க்கிறான் என்று அர்ஜுனன் உணர்ந்தான். இருவர் மேலும் அவன் சிந்தை ஊன்றி நின்றிருந்தது. கணங்கள். கணங்களே இழுபட்டு நீண்டன. ஒரு கணத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெதுவாக செல்ல முடிந்தது. இதோ அவன் கழுத்து அசைகிறது. இதோ விழிகள் திரும்புகின்றன. அவ்விருப்பை அவன் உடலெங்கும் உணரமுடிந்தது. அவன் விரல்கள் அதிர்ந்துகொண்டிருக்கின்றனவா? இன்னொரு நீள்கணம். மேலும் ஒரு நீள்கணம். அடுத்த கணத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் உணர்ந்துகொண்டான், அவன் திரும்பப்போகிறான் என. அதை எப்படி உணர்ந்தேன் என அவன் எண்ணி வியந்துகொண்டிருக்கும்போதே கர்ணனின் தலை திரும்பியது.

அந்தக் காட்சிக்கணத்தை நெடுநேரம் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஊழின் ஆயிரம் கரங்கள் எழுந்து முகவாயைப்பற்றி, தலையைக் கவ்வி, அழுத்தி, இழுத்துத் திருப்புவதுபோல. அவன் இமைகள் மேலெழுந்தன. கரிய சிறுமணி விழிகள் அவளை நோக்கின. அவன் மாந்தளிர் நிறமான உதடுகள் மெல்ல பிரிந்தன. அர்ஜுனன் விழி மட்டும் திருப்பி திரௌபதியை நோக்கினான். அவளில் எதுவுமே நிகழவில்லை. ஒரு கணம் உலகம் இல்லாமலிருந்தது. மறுகணம் அவனுள் பல்லாயிரம் பறவைகள் சிறகடித்து வானிலெழுந்தன. வண்டின் சிறகு போல காலம் அதிரத்தொடங்கியது.

கர்ணனின் கண்கள் வந்து அர்ஜுனனை சந்தித்தபோது அவன் மிகமெல்ல புன்னகை புரிந்தான். சவுக்கடிபட்ட கன்னிப்பெண்குதிரை என கர்ணன் அதிர்வதை, அவன் கை எழுந்து மீசையை தொடுவதை அர்ஜுனன் கண்டான். கர்ணன் எழுந்து சால்வையைச் சுழற்றி தோளிலிட்டபோது பேரவையில் இருந்து முரசுக்கார்வை போல ஒலி எழுந்தது. துருபதனும் மைந்தர்களும் கர்ணனை திகைத்தவர்கள் போல நோக்க பிருஷதி இரு கைகளையும் நெஞ்சைப்பற்றுவது போல வைத்துக்கொண்டாள்.

கர்ணனின் கால்கள் எத்தனை நீளமானவை என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். சில எட்டுக்கள்தான் வைப்பதுபோலிருந்தது, அவன் பறந்துசெல்பவன் போல மணமுற்றத்தை அணுகினான். ஒரு கணம் விழிதிருப்பி திரௌபதியை நோக்கிவிட்டு மீண்டும் கர்ணனிலேயே விழிபதித்திருந்தான் அர்ஜுனன். அவன் உடலை முழுமுற்றாக விழிகளால் அள்ள விழைபவன் போல. நீண்ட பெரிய கைகள் காற்றை துழாவுகின்றன. நிமிர்ந்த நெஞ்சில் ஆரம் சரிகிறது. தோள்களில் இருந்து கருங்குழல் புரிகள் காற்றில் அலைபாய்ந்து பின்னால் விழுகின்றன. அவையை நெருங்கிக்கொண்டே இருந்தான். அவையும் அங்கிருந்த அனைவரும் திரைச்சீலை ஓவியங்களாகி மங்கலாகி இல்லாமலாயினர். அவனும் அர்ஜுனனும் மட்டும் எஞ்சினர். பின் அர்ஜுனனும் இல்லாமலானான். கர்ணன் மட்டுமே அங்கே சென்றுகொண்டிருந்தான்.

கர்ணன் திரௌபதியையே நோக்கிக்கொண்டு நடந்து வில்லை நோக்கி சென்றான். அவள் பெரிய விழிகளின் இமைகள் சரிந்திருந்தமையால் அவனுடைய உயரத்தில் இருந்து நோக்கியபோது துயில்வதுபோலிருந்தாள். சிறிய கருஞ்சிவப்பு உதடுகள் குமிழென இணைந்து ஒட்டியிருந்தன. நெடுநேரம் அவற்றை நாவு தொடாததனால் உலர்ந்து சுருங்கிய மென்மலரிதழ்கள் போலிருந்தன. சிறியமூக்கின் நுனிவளைவுக்கு மேல் வியர்வை பனித்திருந்தது.

தன் ஒவ்வொரு அடியும் அவளில் அதிர்வாக நிகழ்வதை கர்ணன் உணர்ந்தான். மூடிய தனியறைக்குள் மூச்சால் அசைக்கப்படும் சுடர். திடீரென அவன் ஓர் மாறுபட்ட உணர்வை அடைந்தான். அவளை நோக்கி நடக்க நடக்க அவளில் இருந்து விலகிச்செல்வதாகத் தோன்றியது. அமர்ந்திருந்தபோது அவளுக்கு மிக அண்மையில் இருந்தான். அவள் கழுத்துக்குழியில் இதயத்தின் துடிப்பை பார்க்க முடிந்தது. மெல்லிய கன்னத்தில் நேற்று அரும்பியிருந்த சிறுமுத்தை காணமுடிந்தது. மார்பின் சரிவில் மணியாரம் அழுந்திய தடத்தை விழிதொடமுடிந்தது. அவன் எடுத்து முன்வைத்த ஒவ்வொரு எட்டும் அவனை விலக்கியது.

அந்த விந்தையை மறுகணம் அச்சமாக உணர்ந்தான். இல்லை அவளை நெருங்குவேன், நெருங்கியாகவேண்டும், எவ்வண்ணமேனும் அவளருகே சென்றாகவேண்டும், இதோ சென்று கொண்டிருக்கிறேன், இதோ என் முன் அமர்ந்திருக்கிறாள், இதோ அவளை தொட்டுவிடுவேன், இதோ என அவன் விலகிக்கொண்டே இருந்தான். பின் ஒரு தருணத்தில் அவன் உடலில் அத்தனை தசைகளும் தளர்ந்தன. கால்கள் உயிரற்று குளிர பாதம் வியர்த்து வழுக்குவதுபோல் தோன்றியதும் தன்னை சிந்தையால் இறுக்கிக்கொண்டு திரும்பி அப்பால் அமர்ந்திருந்த அர்ஜுனனை நோக்கினான்.

அங்கே அவன் விழிகளில் எழுந்த கூர்சுடருடன் சற்றே விரிந்த மீசையற்ற இதழ்களுடன் நோக்கி அமர்ந்திருந்தான். அவனருகே வலப்பக்கம் இரு பெருங்கைகளையும் பிணைத்து சற்று முன்குனிந்து பீமன். இடப்பக்கம் என்ன நிகழ்கிறது என்ற வியப்பு மட்டுமே தெரியும் விழிகளுடன் தருமன். அப்பால் நகுல சகதேவர்கள். அவர்களன்றி அந்தப் பேரவையில் எவரும் இருக்கவில்லை. ஐந்து விழிகள். ஐந்தும் பின் ஒன்றாயின. அர்ஜுனன் மட்டும் அங்கே அமர்ந்திருந்தான். அவன் விழிகள் மட்டும். விழிகளில் எழுந்த கூரொளி மட்டும். கூர்சுடராக திகழ்ந்த ஒரு புன்னகை மட்டும்.

ஒரு புன்னகை. யாருடையது அது? தெய்வங்களே, என்னை இன்னமும் தொட்டு வாழ்த்தாத என் மூதாதையரே, எவரது புன்னகை அது? ஊழே, பெருவெளியே, காலப்பெருநதியே எவர் புன்னகை அது? நான் நாளும் காண்பது. தெருவில் களத்தில் அவையில் என்னுள் எழும் கனவுகளில் என்றும் திகழ்வது. அப்புன்னகையிலிருந்து ஒரு கணம் நான் விலகுவேன் என்றால் அக்கணம் இன்னொருவனாக வாழத்தொடங்குகிறேன். ஒளிபோல, பின்னர் புகை போல, பின்னர் மென் திரைச்சீலைகள் போல, அதன்பின் பளிங்குப்பாறைகள் போல அவனைச்சூழ்ந்தது அப்புன்னகை. ஓடி அதில் தலையை முட்டி கபாலத்தை உடைத்துக்கொள்ளமுடியும். குருதி வழிய நிணத்துண்டாக அதன் அருகே விழுந்து துடிதுடிக்கமுடியும்...

என்னென்ன உளமயக்குகள்! எண்ணங்கள். அவை பெருகிப் பெருகிச்செல்கின்றன. கங்கை, கிளை பிரிவதையே பயணமாகக் கொண்டு திசைதேராது எழும் பெருக்கு. இதோ வந்தடைந்துவிட்டேன். இந்த மணமுற்றத்தில் மிகச்சிறிய ஒர் எறும்பு வந்து நிற்கிறது. அதன் தலைக்குமேல் பேருருவ மரங்களின் அடித்தூர்கள் என கால்கள். அப்பால் வான் நிறைத்து குனிந்து நிற்கும் முகங்கள். வங்கன், கலிங்கன், மகதன், மாளவன்... துரியோதனா என் தோள்களை பற்றிக்கொள். என்னை உன் நெஞ்சில் சாய்த்துக்கொள். தனியன். கைவிடப்பட்டவன். ஒருவிழியாலும் பார்க்கப்படாதவன். இப்புவியில் நீயன்றி ஏதுமற்ற பேதை. எந்தையே, என் இறையே, உன் கைவெம்மையிலன்றி கருணையை அறியாத உன் மைந்தனை நெஞ்சோடு சேர்த்துக்கொள்...

மிக அருகே அவன் திரௌபதியின் முகத்தை நோக்கினான். சரித்த விழிகளுடன் ஒட்டிய உதடுகளுடன் காற்றில் அலையும் தனிக்குழல் சுருள்களுடன் அது சிலைத்திருந்தது. மிக அண்மை. அதன் மென்மயிர்பரவலை காணமுடிந்தது. இதழ்களின் இரு முனைகளிலும் கீழிறங்கிய மயிர்தீற்றல். கண்களுக்குக் கீழே சுருங்கிய மென்தோலின் ஈரம். கீழிதழ் வளைவுக்கு அடியில் சிறிய நிழல். அவன் கிந்தூரத்தை நோக்கினான். அதில் புன்னகை என ஓர் ஒளி திகழ்ந்தது. அவன் நிழல் அதில் நீரோடையிலென தெரிந்தது. அணுகியபோது காலடியோசை கேட்ட நாகம் போல அது மெல்ல நெளிந்தது. உயிர்கொண்டு ஒருங்குவதுபோல். அந்தப்புன்னகை மேலும் ஒளிகொண்டது.

அவன் கிந்தூரத்தை நோக்கியபடி ஒரு கணம் நின்றான். பின்கழுத்தில் ஒரு விழிதிறந்துகொண்டதுபோல திரௌபதியை நோக்க முடிந்தது. அவள் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. தொடுகையை உதறும் குழந்தையின் அசைவு. அவன் நெஞ்சில் முரசுக்கோல் விழுந்தது. பேரொலியை செவிகளில் கேட்க முடிந்தது. விழிகளில் காட்சியாகிய அனைத்தும் அந்தத் தாளத்தில் அதிர்ந்தன. குருதி அந்தத் தாளத்தில் உடலெங்கும் நுரைத்தோடியது. பின்னர் காதுமடல்களில், கழுத்தில், குளிர்வியர்வையை உணர்ந்தபடி காலத்தை மீட்டுக்கொண்டபோது கடும் சினம் எழுந்து அவனை தழலாக்கியது. சிலகணங்களில் அவனை முழுக்கத் தழுவி எரித்துக்கொண்டு எழுந்து நின்று கூத்தாடியது.

அவன் தன் கைகளை ஓங்கித் தட்டிய ஒலி கேட்டு திரைச்சீலை ஓவியம் என சமைந்திருந்த அவை திடுக்கிட்டு உயிர்கொண்டு விழிகளாகியது. அவன் குனிந்து கிந்தூரத்தின் இடதுநுனியை தன் வலக்காலால் ஓங்கி மிதித்து விம்மி எழுந்த அதன் வளைவின் நடுவே இடக்கையால் பற்றி தூக்கி நீட்டியபோது அவை குரல்கள் கரைந்த பெருமுழக்கமாக ஒலித்தது. அவன் உடலில் மானுட உடலை இயற்கையின் முதல்வல்லமையாக சமைத்துவிளையாடும் போர்த்தெய்வங்கள் எழுந்தன.

கிந்தூரத்தை தூக்கியபடி அவன் மேலே தொங்கிய கிளிக்கூண்டின் கீழே வந்து நின்றான். முதல் ஆண்தொடுகையை அடைந்த கன்னியென கிந்தூரம் கூசி சிலிர்த்து தன்னை ஒடுக்கியது. பின்னர் திமிறி அவன் பிடியை விடமுயன்று துள்ளியது. பிடியின் வன்மையை உணர்ந்து அடங்கிக் குழைந்தது. அவ்வன்மையை அது அஞ்சியது. அதை விரும்பியது. அதை உதற விரும்பி திமிறியது. அவ்வசைவுகள் வழியாக அவனுக்கு அடிமைப்பட்டு அவன் கையிலொரு குளிர்மலர் ஆரம் போல நெளிந்தது.

ஆனால் அதற்குள் எங்கோ ஒன்று கரந்திருந்தது. எவருமறியமுடியாத ஒன்று. எவர் தொட்டாலும் அவர் அறியக்கூடிய ஒன்றை அளித்து எவருக்குமறியாமல் தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கும் மந்தணப்பொறி. தன்னை நிகழ்த்தும்போதே தன் ஆற்றலை அறிந்து மேலும் ஆற்றல் கொள்வது. தன் ஆற்றலில் முடிவிலாது மகிழ்வது. அந்த மாயப்பொறி வில்லின் உள்ளே திகைப்பதை, அதிர்வதை அவன் உணர்ந்தான். கிந்தூரம் அஞ்சிய இளம்புரவிபோல நடுங்கிக்கொண்டிருந்தது.

கர்ணன் தன் இடக்கையால் கிந்தூரத்தின் மையத்தைப்பற்றி தோளின் முழுவல்லமையையும் அதன் கீழ் விளிம்புக்கு அளித்து சற்றே உடலை எழுந்தமரச்செய்தபோது பறவையை சிறுமலர்க்கிளை போல அவனை அது ஏற்றுக்கொண்டது. அவன் அதை பட்டு மேலாடை போல தன் தோளிலணிந்துகொள்ளமுடியும் என்று தோன்றியது. அவையினருக்கு அவன் மலர்கொய்வதுபோல அதை நாணேற்றியதாகத் தோன்றியது. ஆனால் பெருந்தோளாற்றல் அதில் நிகழ்ந்திருப்பதை படைக்கலப்பயிற்சி கொண்ட அனைவரும் உணர்ந்தனர். ஓசையின்றி சிலைத்து அமர்ந்திருந்தது சூழ்ந்த பேரவை .

கிந்தூரத்தின் நடுக்கம் அணைவதற்காக கர்ணன் காத்து நின்றான். அவனுக்கு முன்னால் சிறுகுளத்தில் நீர் பசுவின் விழி என தெரிந்தது. அதன் சூழ்ச்சி என்ன என்று அப்போது அவன் உணர்ந்தான். கிந்தூரத்தை ஊன்றும் தரை மரத்தாலானது. அதன் மேல் அந்த பெரிய மரத்தொட்டியில் நீர் வைக்கப்பட்டிருந்தது. கிந்தூரத்தின் ஒவ்வொரு அசைவும் அந்த நீரில் அலைகளைக் கிளப்பியது. வில் முற்றிலும் அதிர்வழிந்தாலொழிய நீராடியில் அலையடங்கி படிமம் தெளியாது.

கர்ணன் வில்லின் இடைவளைவைப்பற்றி அதன் கால்நுனியை மிதித்து விழிகளை தொலைவில் ஆடிய ஒரு திரைச்சீலையை நோக்கி நிறுத்திக்கொண்டு நின்றான். அவன் மூச்சு அவிந்தது. நெஞ்சில் எழுந்த ஓசை தேய்ந்தழிந்தது. எண்ணங்கள் மட்டும் பாம்புக்குஞ்சுகள் போல ஒன்றை ஒன்று தழுவி வழுக்கி நெளிந்தன. ஒரு பாம்பு இன்னொன்றை விழுங்கியது. அதை இன்னொன்று விழுங்கியது. எஞ்சிய இறுதிப்பாம்பு தன் எடையாலேயே அசைவிழந்து தன்னை தானே முடிச்சிட்டுக்கொண்டது. சுருண்டு அதன் நடுவே தன் தலையை வைத்து மூடாத விழிகளுடன் உறைந்தது. ஓம் ஓம் ஓம்.

கர்ணன் பரசுராமரின் பாதங்களை கண்டான். புலிக்குட்டிகளின் விழிகள் போல வெண்ணிற ஒளி கொண்ட நகங்கள். நீலநரம்பு இறங்கிக் கிளைவிட்ட மேல் பாதம். அவன் முகத்தில் புன்னகை விரிந்தது. நீராடியில் மேலே தொங்கிய கிளிக்கூண்டுக்குள் இருந்து முதற்கிளி வெளியே தலைநீட்டி ’வெல் என்னை’ என்று விழிஉருட்டியது. "முதற்கிளி, சோமகம்” என்றான் கோல்நிமித்திகன். அவன் கை சாட்டைச்சொடுக்கல் போல பின்னால் சென்று அம்பை எடுத்ததையும், நாணொலிக்க வில் சற்று அமைந்து மீண்டதையும், அடிபட்டு உடைந்த பாவைக்கிளியின் மரச்சிம்புகள் சிதறி காற்றில் பரவி சுழன்று இறங்கியதையும் அவையினர் ஒருகணமெனக் கண்டனர். மேலுமொரு கணம் கடந்தபின்னர் அவை ஒரே குரலில் ஆரவாரம் செய்தது.

இரண்டாவது கிளியை நோக்கியபோது கர்ணன் தன் உடற்புலனால் அர்ஜுனனைக் கண்டான். அவன் விழிகள் திகைத்திருப்பதை நெற்றியின் இருபக்கமும் நீலநரம்புகள் புடைத்திருப்பதை. அர்ஜுனன் அருகே சரிந்த பீமன் மெல்லியகுரலில் “பார்த்தா, இவன் வெல்வான்” என்றான். அர்ஜுனன் “அவன் வெல்வதே முறை மூத்தவரே. வில்லுக்குரிய தெய்வங்களின் அன்புக்குரியவன் அவன் மட்டுமே” என்றான். பீமன் “அவனிடம் அச்சமில்லை...” என்று சொல்லி தன் கைகளை மீண்டும் இறுக்கிக்கொண்டான் தருமன் பெருமூச்சுடன் “பார்த்தா, நாடும் முடியும் கைவிட்டுபோகின்றன. ஆனால் இச்சபையில் மானுடர் தோற்று வித்தை வெல்கிறது. நாமனைவருமே எழுந்துகூத்தடவேண்டிய தருணம் இது” என்றான்.

அர்ஜுனன் கர்ணனை நோக்கி விரிந்த விழிகளாக அமர்ந்திருந்தான். காதுகளில் எரியும் இரு விழிகள் போல குண்டலங்கள் சுடர்ந்தன. பெரிய தோள்களின் நடுவே புலர்கதிர் என பொன்னொளி கொண்ட கவசம். தன் விழிகளுக்கு மட்டுமே அவை தெரிகின்றன என அர்ஜுனன் அறிந்தான். அவள் காண்கிறாளா? ஒருகணம் அவள் அதைக் கண்டாள் என்றால் அனைத்தும் முடிவாகிவிடும். அவள் விழிதூக்கவேண்டும். அவனை பார்க்கவேண்டும். அவள் விழிகள் ஏன் சரிந்திருக்கின்றன. எடைகொண்டவை போல. எங்கிருக்கிறாள் அவள்?

கர்ணன் தலைக்குமேல் வளைந்த பெரிய கருங்கால் வேங்கை மரம்போல நின்ற கிந்தூரத்துடன் நின்றான். கெண்டைக்கால் பந்தில், பின்தொடை இறுக்கத்தில், தோளிலேறிய நாணில், கழுத்தில் சுண்டி நின்ற நரம்புத்தந்திகளில் மிகமெல்ல நிகழ்ந்த அசைவு விரலை நோக்கிச் செல்வதை அர்ஜுனன் கண்டான். மீண்டும் வலக்கரம் மின்னலென துடித்தணைய அம்பு எழுந்து கிருவிகுலக் கிளியை உடைத்துச் சிதறடித்து அவன்மேல் மலரிதழ்களாக பொழிந்தது. சூதர்களின் அவையில் இருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. ஓரிரு ஒலிகளுக்குப்பின் மொத்த குடிகளவையும் வாழ்த்தொலியுடன் வெடித்துக்கிளம்பியது.

கைகளும் வண்ணத்தலைப்பாகைகளும் சால்வைகளும் சூழ அலையடிக்க நின்று கர்ணன் துரியோதனனை நோக்கினான். துரியோதனனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து தாடையில் சொட்டிக்கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி நெஞ்சில் வைத்து எதையும் நோக்காதவன் போல அமர்ந்திருந்தான். புன்னகையுடன் இன்னொரு அம்பை எடுத்து சிருஞ்சயக் கிளியை வீழ்த்தி விட்டு வில்லை தாழ்த்தி அரசரவையை நோக்கினான். கங்கனும் கலிங்கனும் மாளவனும் மண்சிலைகள் போலிருந்தனர். ஜராசந்தன் இரு பெருந்தோள்களும் புடைக்க கைகளை பீடத்தின் இருபக்கமும் ஊன்றி மறுகணம் எழப்போகிறவன் போல் அமர்ந்திருந்தான்.

அவையில் சுழன்ற கர்ணனின் விழிகள் கிருஷ்ணனை நோக்கி உரசி மீண்டன. அவையில் அவன் நுழைந்தபோது பிறரைப்போல அவனை திரும்பி நோக்கி ‘இவனா’ என எண்ணியபின் ஒரு கணம்கூட அதுவரை அவனை தான் உணரவில்லை என அப்போது அறிந்தான். எந்த தனித்தன்மையும் இல்லாதவன், ஒரு பசு அருகே இருக்குமென்றால், ஒரு வளைதடி கையில் வைத்திருந்தானென்றால் கன்றுமேய்த்து மலையிறங்கிய யாதவன் என்றே தோன்றுபவன். எளியவரின் கூட்டத்தில் முழுமையாக மறைந்துவிடக்கூடியவன். இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது.

யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல. என்ன சொல்கிறான்? எதையும் சொல்லவில்லை. சொல்லுமளவுக்கு நெருங்கவில்லை. ஒரு சொல்லுக்கு அப்பால்தான் நின்றிருக்கிறான். எதையோ அறிந்திருக்கிறான். எதை? இங்கிருக்கும் எவரும் அறியாத ஒன்றை. நிகழும் கணத்தில் நின்று நிகழவிருக்கும் கணத்தை கண்டவனின் விழியொளி. கர்ணனின் இடத்தோள் தன்னிச்சையாகத் துடிக்கத் தொடங்கியது. இன்னொரு முறை அவன் விழிகளை நோக்கவேண்டும் என எழுந்த நெஞ்சை முழுவிசையாலும் அழுத்தி வென்றான். வில் விம்மியதை அம்பு சீறியதை துர்வாசகுலக் கிளி உடைந்து காற்றில் அதன் பொய்யிறகு சுழன்று சுழன்று எழுதி எழுதி இறங்கியதைக் கண்டான்.

பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். கிந்தூரம் அவன் கைகளின் வெம்மையில் உருகிக்கொண்டிருந்தது. அதன் உடல்வளைவு அவன் எண்ணத்தின் வளைவுடன் பொருந்திவிட்டதுபோல. அவன் இன்றி அது முழுமையாகாதென்பது போல. அவன் விழவுகளின் கருவி மட்டுமே என்பதுபோல. கோல்காரன் உரக்க “ஐந்தாவது கிளி. கேசினி” என்றான். அச்சொல் அவன் மேல் இரும்புருளை என விழுந்தது. கேசினி கேசினி கேசினி... அவள் துள்ளும் துவளும் அலையிளகும் அமைந்தெழும் சுருள்கூந்தல். இத்தனை நீள்கூந்தல் பெண்ணுக்கு எதற்கு? அவளுடன் இரவிலும் நீங்கா நிழல் என. அவளைச் சுமந்தலையும் கரிய தெய்வம் என...

அவன் அறியாமலேயே திரும்பி திரௌபதியை நோக்கிவிட்டான். அவள் அப்படியே சரிந்த இமைகளும் இணைந்து ஒன்றான இதழ்களும் சிலைக்கருமுகமுமாக அமர்ந்திருந்தாள். மானுடர் மறந்த பெரும்பாலையின் இருண்ட கருவறைக்குள் அமர்ந்த கொல்வேல் கொற்றவை. இன்னும் எவருக்கும் அருள்புரியாதவள். பலிகொள்வதன்றி மானுடத்தை அறியாதவள். ஒரு சொல். சொல்லென்றாகும் ஒரு அசைவு. அசைவென உணரச்செய்யும் ஒரு முகபாவனை. அகம் தொட்டு அகம் அறியும் ஒன்று... ஏதுமில்லை. கற்சிலை. வெறும் கற்சிலை. கருங்கற்சிலை. கன்னங்கரிய சிலை. குளிர்சிலை. குளிர்ந்துறைந்த காலப்பெரும்சிலை...

கர்ணன் தலைக்குமேல் வளைந்த துதிக்கை கொண்ட மதவேழம் என நின்றது கிந்தூரம். அம்பை எடுத்தபோது தன் உடலெங்கும் ஏதோ ஒன்று துடிப்பதை உணர்ந்தான். அச்சமில்லை. இல்லை, அது பதற்றம் இல்லை. சினம். ஆம், கடும் சினம். உடலின் ஒவ்வொரு நரம்பிலும் நின்று அதிர்ந்தது அது. எவர் மீது இச்சினம்? பெருஞ்சினமென்பது மானுடர் மீதாக இருக்கவியலாது. எண்ணத்தின் நுனியில் பற்றி எரிந்து தசைகளில் தழலாகியது. அனலில் தளிர்ச்சுருள்கள் சுருண்டு நெளிந்தன. விரல்களில் எழுந்து கிந்தூரத்தை நடுங்கச்செய்தது சினம். நீராடி நெளிந்தது. மேலே தொங்கிய கிளிக்கூடு புகைச்சித்திரமாகக் கலைந்தது.

கர்ணன் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் பரசுராமரின் பாதங்களை நினைத்தான். நீரில் இறங்கி நிற்கிறார். மெல்லிய அலைகளில் வந்து அவர் கால்களை தொட்டுத் தயங்கி தொட்டுத் தயங்கி செல்கிறது ஒரு சிறுமலர். நீலமலர். கோதை. ஒளிபெருகி நிறைந்தோடும் காலைநதி. அமைதியில் மெல்ல உதிர்ந்தது ஓர் இலை. கண்காணாத சிலந்திவலையில் சிக்கி ஒளிவெளியில் நின்று அதிர்ந்து அதிர்ந்து ஓசையின்றி கூவியது ஒற்றைநாக்கென ஒரு சிறு செவ்விலைசருகு.

குனிந்து நோக்கியபோது நீர்ப்பரப்பில் கேசினி தெளிந்த விழிகளுடன் மிக அருகே தெரிந்தது. அவன் அதை நோக்கிப்புன்னகை செய்தான். இரைநோக்கிச் செல்லும் புலியின் முன்கால் என அவன் கை ஓசையின்றி அம்பு நோக்கிச் சென்றது. அம்பைத் தொட்ட கணம் அவன் தன் தொடைக்குள் வண்டின் மெல்லிய நெருடலை அறிந்தான். ஒரு கணத்தின் தொடக்கத்தில் ஓர் எண்ணமாகத் தோன்றிய அது உடனே தசைக்குறுகுறுப்பாக மாறி வலியாகியது. சிறகுவிரித்து அதிர்ந்து ரீங்கரித்தபடி மெல்லச் சுழன்றது வலி. வெல், வெல் அதை, வெல் என அவன் சித்தம்கூவியது. விழிகளே, கைகளே, வெல்லுங்கள் அதை.

கேசினிமீது படர்ந்த நீரலை அதை இழுபடச்செய்து இரண்டாக்கி ஒன்றாக்கியது. அவன் கையில் இருந்த கிந்தூரம் வன்மத்துடன் முனகியபடி இறுகி முற்றிலும் எதிர்பாராதபடி நெளிந்து விலகியது. அதிலிருந்து எழுந்த அம்பு விலகிச்சென்று கிளியை விரலிடை அகலத்தில் கடந்து சென்று காற்றில் வளைந்து சிறகு குலையச் சுழன்றபடி கீழே இறங்கி தரையாக அமைந்தபலகையில் குத்தி நின்றது. மூன்றும் ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிந்தன. அதற்கு முந்தைய கணத்திலேயே அந்நிகழ்வை தன் அகம் முற்றிலும் அறிந்துகொண்டதை அறிந்து அவன் திகைத்து நின்றான்.

கிந்தூரம் அவன் கையை உதறிவிட்டு துள்ளி நிலத்தில் விழுந்து சினத்துடன் நாண் அதிர துள்ளி அடங்கியது. அதை பொருளற்ற விழிகளுடன் வெறித்தபடி கர்ணன் நின்றான். அவன் விழிகள் திரும்பி இறுதியாக அவளை நோக்கின. அவள் அவ்வண்ணமே அங்கிருந்தாள். அவனைச்சூழ்ந்து ஆழ்ந்த அமைதியில் இருந்து ‘சூதன்!’ என்று ஒரு குரல் ஒலித்தது. எவரோ நகைத்தனர். “சூதனுக்கு வில்வசப்படும். ஷத்ரியர்களின் தெய்வம் வசப்படாது” என்றது இன்னொரு குரல். கர்ணன் தளர்ந்த கால்களுடன் திரும்பி நோக்காமல் ஷத்ரிய அவை நோக்கிச் சென்றான். அவனுக்கு மேல் விண்ணில் முகில் உப்பரிகை மேல் அமர்ந்து கீழ்நோக்கிய முகங்களில் எல்லாம் சிரிப்பு தெரிந்தது.

அவன் அணுகியதும் ஷத்ரிய அவை சிரிக்கத் தொடங்கியது. தன்னிச்சையாக எழுந்த சிரிப்பை அவர்கள் வேண்டுமென்றே பெருக்கிக் கொண்டனர். மேலும் மேலும் சிரித்து ஒரு கட்டத்தில் கண்களில் வன்மம் நிறைந்திருக்க வெறும் கொக்கரிப்பாகவே ஒலித்தனர். அவன் ஒவ்வொரு விழியாகக் கடந்து சென்றான். அவை நடுவே இருந்து எழுந்து வந்த துரியோதனன் தன் பெரிய கைகளை விரித்து அவனை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டான். கண்ணீரில் ஈரமான கன்னங்களை அவன் தோளில் வைத்து ”தெய்வங்களை தவிர அனைத்தையும் வென்றுவிட்டாய் கர்ணா” என்றான். துச்சாதனன் அருகே வந்து கர்ணனின் தோள்மேல் கைகளை வைத்தான்.

அப்பாலிருந்து ஜராசந்தன் பீடம் ஒலிக்க எழுந்து விரித்த பெருங்கைகளுடன் கர்ணனை நெருங்கினான். அவை சிரிப்பை மறந்து திகைப்புடன் அவனை நோக்கியது. ஜராசந்தனைக் கண்டதும் துரியோதனன் சற்றே பின்னடைய அவன் கர்ணனை அள்ளி அணைத்துக்கொண்டு உணர்வெழுந்து குழைந்த குரலில் “வில் என்பது என்ன என்று இன்று அறிந்தேன். அங்கநாட்டரசனே, மகதத்தின் முதல் எதிரியாகிய உன் முன் இதோ எளிய வீரனாக நான் தலைவணங்குகிறேன். வில்தொட்டு எழுந்த என் மூதாதையரின் அத்தனை வாழ்த்துக்களையும் இதோ உனக்களிக்கிறேன்” என்றான். தன் மணியாரம் ஒன்றை கழற்றி கர்ணனின் கழுத்தில் அணிவித்தான்.

ஷத்ரிய அவையில் நிறைந்திருந்த அமைதிக்கு அப்பால் குடிமக்கள் அவையில் இருந்து முதுசூதன் ஒருவனின் வாழ்த்தொலி வெடித்தெழுந்தது. பின்னர் நாற்புறமும் சூழ்ந்திருந்த பேரவையே வாழ்த்தொலிகளால் பொங்கிக் கொந்தளித்தது. கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 6

வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத் தொடங்கியதை அர்ஜுனன் கண்டான். ஆனால் பாண்டவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை பாதிக்கும் மேற்பட்டவர்கள் அறிந்திருந்தனர். அங்கே வரும்போது அவர்களிடம் எதிர்பார்ப்பும் இருந்தது.

பாண்டவர்கள் இறப்பில் இருந்து மீண்டு பாஞ்சாலியை வெல்ல வந்துள்ளார்கள் என்பது ஒரு கதையாகவே அவர்களிடமிருந்தது. அதுவரை அர்ஜுனன் வரவில்லை என்பதனால் கதையில் இருந்து உண்மையென உருக்கொண்டு வந்துகொண்டே இருந்த அச்செய்தி மீண்டும் கதையாக மாறிவிட்டது. அர்ஜுனனின் அருகே அமர்ந்திருந்த கிழவர் “நான் சொன்னேனே, அவர்கள் வரவில்லை. என் நரைத்தகுடுமியின் அனுபவத்தில் எத்தனை கதைகளை பார்த்திருப்பேன்...” என்றார்.

குடிச்சபையிலிருந்த அனைவரும் அரசரவைகளுக்கு அப்பால் பல திசைகளில் விழியோட்டிக்கொண்டிருந்தனர். துருபதனும் மைந்தரும் வேதியர் அவையை நோக்கக் கூடாது என முடிவெடுத்தவர்கள் போல இறுகிய கழுத்துக்களுடன் மறுபக்கம் நோக்கினர். மகத மன்னன் ஜராசந்தன் வந்து அவன் பீடத்தில் அமர்ந்ததும் அரசர் அவையில் அனைவரும் மீண்டும் தங்கள் இடங்களில் அமைந்தனர். கர்ணன் தன் இருக்கைக்குச் சென்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். துரியோதனன் கைகளை மார்பில் கட்டி கிந்தூரத்தில் விழிநாட்டி இருந்தான்.

இரு சேவகர்கள் நீள்கயிறு ஒன்றைப்பற்றி இழுக்க மேலிருந்த கிளிக்கூடு கீழிறங்கியது. அதன் பொறிக்குள் மீண்டும் ஐந்து கிளிகளை வைத்து கயிற்றைப்பற்றி மேலேற்றினர். அது அவையெங்கும் புது நம்பிக்கையை உருவாக்கியது. கிழவரே “அர்ஜுனன் வந்திருக்கிறான். அவனுக்காகத்தான்...” என்றார். இன்னொருவன் “இல்லை, எவராலும் கிளிகள் வீழ்த்தப்படவில்லை என்றால் தெய்வங்களுக்கு முறையாக பூசனைகள் செய்யவேண்டும் அல்லவா?" என்றான்.

அர்ஜுனன் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாதவனின் விழிகள் அவனை நோக்கி திரும்பவேயில்லை என்றாலும் அவன் தன் நோக்கை முழுமையாகவே உணர்ந்திருக்கிறான் என்பதை அர்ஜுனன் அறிந்தான். இரையை நோக்கி பாய்வதற்கு முந்தைய கணத்தில் முற்றிலுமாக செயலற்று உறைந்த வேங்கை. பீமன் குனிந்து “பார்த்தா...” என்றான். அர்ஜுனன் “இன்னும் முடிவாகவில்லை மூத்தவரே” என்றான். பீமன் “ஆம், நானும் அவனைத்தான் பார்க்கிறேன்” என்றான்.

அச்சொற்களை சொன்னபடியே அவன் எழுந்து தன் கைகளை பேரொலியுடன் தட்டினான். வைதிகர் அவை திடுக்கிட்டு பலர் எழுந்துவிட்டனர். துருபதனும் மைந்தர்களும் திரும்பி பீமனை நோக்க பீமன் “பாஞ்சால அரசே, பால்ஹிக நாட்டு வைதிகன் நான். ஷத்ரியரை வென்ற அந்த வில்லை இம்மணவரங்கில் நாணேற்ற விழைகிறேன்” என்றான். அவனை நோக்குவதற்காக குடிகளவையில் பலர் எழுந்துகொள்ள பிறர் அவர்களை கூச்சலிட்டு இழுத்து அமரச்செய்தனர். இடம் பெயர்ந்து அமர முயன்றவர்களை நோக்கி சேவகர்கள் கூச்சலிட்டனர். புலிபுகுந்த காட்டுக்குள் குரங்குக்கூட்டம் பதற்றம் கொள்வதுபோலிருந்தது அவையின் ஒலி.

ஜராசந்தன் இருகைகளாலும் பீடத்தின் கைப்பிடியைப் பற்றியபடி, பெரும் எடையை தூக்குபவன் போல அசைந்த தோள்தசைகளுடன் சற்று தலையை முன்னால் தாழ்த்தி, சிறிய முதலைவிழிகளால் கூர்ந்து நோக்கினான். அவனுக்கு அப்பால் அமர்ந்திருந்த துரியோதனனும் அதே பாவனை கொண்டிருந்தான். அவன் தொடை துடித்துக்கொண்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். இரு பெருங்கைகளையும் தூக்கி அசைத்தபடி பீமன் மணமுற்றம் நோக்கி சென்றான். அவன் கைகள் மிகப்பெரிதாக இருந்தமையால் உள்ளங்கையும் மணிக்கட்டும் சிறியவையாக தோன்றின. மலைப்பாம்பின் தலை போல.

அரைக்கண்ணால் அரசகுலத்தின் ஆணையை எதிர்நோக்கியபடி ஒரு வீரன் பீமனை நோக்கி வர அவனை மிகஎளிதாகத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நெடுந்தூரத்திற்கு வீசிவிட்டு பீமன் தடையை தாண்டி மணமுற்றத்தை அடைந்தான். காற்றில் கைகால்கள் சுழல எழுந்து கீழே விழுந்தவனுக்கு எந்த காயமும் படவில்லை. அமர்பவன் போல விழுந்து திகைத்து உடனே கை ஊன்றி அவன் எழுந்துவிட்டான். அவையினர் முழுக்க அவனை நோக்கி சிரித்தனர். சிரிப்பைக் கண்டு அவன் தன்னை நிமிர்த்திக்கொள்ள அது மேலும் சிரிப்பை உருவாக்கியது.

தருமன் “இவன் பீதர்நாட்டு கழைக்கூத்தாடிகளுடன் இருக்கவேண்டியவன் பார்த்தா. பெருங்கூட்டத்தை மகிழ்விக்க இவனால் முடிகிறது" என்றான். அர்ஜுனன் சிரித்தபடி “ஆம், மூத்தவரே. அவர் போர்க்களத்தில்கூட பார்வையாளர்களை மகிழ்விக்க விழைபவர்” என்றான். பீமன் மணமுற்றத்திற்குச் சென்று தன் கைகளை விரித்து தசைகளை அலையிளகச்செய்தான். அவன் வயிறு பல துண்டுகளாக மாறி இறுகியது. அப்படியே கைகளை வீசி குனிந்து இரு உள்ளங்கைகளையும் ஊன்றி அவற்றை பாதங்களாக எளிதாக எடுத்துவைத்து நடந்தான். அவையெங்கும் சிரிப்பும் கூச்சல்களும் எழுந்தன.

தலைகீழாக கிந்தூரத்தை அடைந்து நின்றபின் ஒரே பாய்ச்சலில் மீண்டும் நிமிர்ந்தான். கைகளால் தன் உடலில் படபடவென அடித்துக்கொண்டான். அவன் எதைச்செய்தாலும் சிரிக்கும் நிலைக்கு அவை வந்திருந்தது. ஜராசந்தன்கூட சற்றே சாய்ந்து கைகளால் முகவாயைத் தாங்கி சிரித்துக்கொண்டிருந்தான். துருபதன் வாயை கைகளால் பொத்திக்கொண்டு தோள்கள் குலுங்க நகைத்தார். கர்ணனின் முகம் மட்டும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சிலையெனத் தெரிந்தது.

பீமன் சிரித்தபடியே குனிந்து மிக இயல்பாக இரு கைகளாலும் கிந்தூரத்தைப்பற்றி எளிதாகத் தூக்க முயன்று திகைத்து அதிர்ந்து மேலும் முயன்று பரிதவித்து முழு வல்லமையுடன் அதைத் தூக்க முயன்று கால்கள் தரையில் வழுக்கி அதன் அடியிலேயே விழுந்தான். அவன் மேல் பீடத்துடன் வில் சரிய அடியில் சிக்கி அவன் தத்தளித்தபின் முழு மூச்சுடன் அதை தள்ளி உருட்டிவிட்டு எழுந்து துள்ளி விலகினான். அவையின் சிரிப்பு நின்று அனைவரும் அவனை நோக்கி வியந்து நின்றனர்.

அவன் அது மிகச்சூடாக இருப்பது போல தொட்டு நோக்கிவிட்டு உடல்நடுங்கி பின்னகர்ந்தான். மீண்டும் மிகமிக கூர்ந்த உடலசைவுகளுடன் அதை அணுகி மெல்ல கையால் தொட்டு நோக்கி விட்டு திடுக்கிட்டு பின்னால் வந்தான். நாலைந்துமுறை உடலைச் சொறிந்துகொண்டு நான்குபக்கமும் நோக்கி இளித்தபின் மீண்டும் அதை நோக்கினான். சினத்துடன் பர்ர் என சீறினான். அவை ஒரேபெருஞ்சிரிப்பில் வெடித்தது. ஒருவரை ஒருவர் அறைந்தும் தழுவியும் அனைவரும் சிரித்துக் கொந்தளித்தனர். பீமன் மெல்ல காலெடுத்து வைத்து கிந்தூரத்தை அணுகி தரையில் கிடந்த அம்பு ஒன்றை கண்டு அஞ்சி உடல் நடுங்கி துள்ளி விலகினான்.

சிரிப்பலைகள் நடுவே மெல்ல மீண்டும் அணுகி நின்று கால்களாலும் கைகளாலும் தரையை பிறாண்டி பர்ர் என ஒலியெழுப்பி பற்களைக் காட்டி இளித்தான். நாலைந்து முறை பொய்யாக பாய முயன்றபின் ஒரே பாய்ச்சலாக கிந்தூரம் மேல் குதித்து அதை கட்டித்தழுவி தரையில் புரண்டு அதன் அடியில் சென்று மறு பக்கம் வந்து எழுந்து நின்று ஆறுதல் கொண்டு சிரித்தபடி அவையை நோக்கினான். தப்பிவிட்டேன் என்பதுபோல கையை அசைத்தான். அவையில் சிலர் சிரிப்பு தாளமுடியாமல் நெஞ்சைப்பற்றிக்கொண்டு குனிந்துவிட்டனர்.

அர்ஜுனன் திரௌபதியை நோக்கினான். முதல்முறையாக அவள் விழிகள் இமை எழுந்து பார்வை கொண்டிருந்தன. கண்கள் ஒளிவிட்ட நகைப்பு இதழ்களிலும் திகழ சிறிய உதடுகள் மெல்ல திறந்து இரு வெண்பற்களின் நுனி தெரிந்தது. அவளுடைய நீண்ட கை எழுந்து நெற்றிக்கூந்தலை நீவி காதருகே செருகியது. கடகங்கள் சரிந்து ஒன்று மேல் ஒன்றென விழுந்தன. கழுத்தில் ஒரு மெல்லிய சொடுக்கல் நிகழ இதழ்கள் மேலும் விரிந்து இருபக்கமும் மடிந்து புன்னகை சிரிப்பாக ஆனது. பீமன் அவள் ஒருத்தியை மகிழ்விக்கவே அனைத்தையும் செய்கிறான் என்று அவன் உணர்ந்தான்.

“மூத்தவர் இளவரசியை முன்னரே எங்கோ பார்த்திருக்கிறார்” என்றான் அர்ஜுனன். ”ஆம், நானும் அதையே எண்ணினேன்” என்றான் தருமன். பீமன் அவ்வளவுதான், முடியாது என்ற பாவனையுடன் திரும்பி நாலைந்து அடிகள் தூக்கி வைத்து உடனே திரும்பி ஒற்றைக்கையால் அந்த வில்லை தூக்கி நிறுத்தி இடது காலால் அதன் நாணை தூக்கி இடக்கையால் பற்றி மேலே எடுத்து மேல்கொக்கி நோக்கி வீசினான். ஒற்றைக்கையால் கிந்தூரத்தை வளைத்து நாணேற்றினான்.

ஒரு சிலகணங்களுக்குப்பின்னரே அவன் என்ன செய்தான் என்பதை அவை அறிந்தது. அவனைச்சூழ்ந்து உடல்களின் அசைவுகளும் கூச்சல்களும் அலையடித்தன. பீமன் கிந்தூரத்தை தூக்கி தலைக்குமேல் வீசிப்பிடித்து சுழற்றி அதன் நாணால் தன் முதுகைச் சொறிந்துக்கொண்டான். திரௌபதி வெடித்துச்சிரித்தாள். முகவாயை சற்றே மேலேற்றி கழுத்து நீளம் கொள்ள தோள்கள் அதிர அவள் சிரிப்பதைக் கண்டபோது ஒரு கணம் அர்ஜுனன் பொறாமையின் வெம்மையை உணர்ந்தான்.

மேலே தொங்கிய கிளிகளை நோக்கி தலையை தாழ்த்தி உடலைக் குறுக்கியபின் கிந்தூரத்தை தூக்கி வீசிவிட்டு பீமன் ஓடிவந்து வைதிகர் அவையை நோக்கித் தாவி மறுபக்கம் வந்தான். நகுலனும் சகதேவனும் பாய்ந்துசென்று அவனை தழுவிக்கொண்டனர். தருமன் “மந்தா, நீ குரங்குப்பாலை சற்று மிகையாகவே அருந்திவிட்டாய் என நினைக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். பீமன் அர்ஜுனனிடம் “பார்த்தா, அதற்குள் சில சுருள்விற்கள் இருக்கின்றன. உருளும் எடைக்குண்டுகள் போடப்பட்டுள்ளன” என்றான். “அந்தப்பொறி நெகிழ்ந்துவிட்டது மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

”யாதவன் எழுந்து வரக்கூடும்” என்றான் தருமன். ”அவன் உடலில் ஓர் அசைவைக் காண்கிறேன்.” அர்ஜுனன் திரௌபதியையும் கிருஷ்ணனையும் நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் ”அவள் காத்திருப்பது அவனுக்காகவே” என்றான். அர்ஜுனனை திரும்பி நோக்கிய தருமன் திகைப்புடன் திரௌபதியை நோக்கினான். அர்ஜுனன் பெருமூச்சுடன் உடல் தளர சற்று பின்னகர்ந்த கணம் அவையில் யாதவக்கிருஷ்ணன் எழுந்தான். தன் சால்வையை சரித்து அருகே நின்றிருந்த சேவகனிடம் அளித்துவிட்டு அப்பால் இருந்த பலராமரிடம் மெல்லிய கையசைவால் வணக்கம் சொல்லிவிட்டு நடந்து வந்தான்.

“ஒரு மயிலிறகு பறந்து வருவது போல” என்றான் தருமன். கிழவர் திரும்பி நோக்கி “அவன் யாதவனல்லவா? அவர்கள் சுயம்வரத்தில் பங்கெடுக்க நூல் ஒப்புதல் உண்டா?" என்றார். தருமன் “மணத்தன்னேற்பு என்பதே பலவகை மன்னர்களும் பங்குகொள்ளும் மணநிகழ்வுக்காக அமைக்கப்பட்டதுதான் வைதிகரே” என்றான். “இங்கே குடி அல்ல, வீரமே கணக்கிடப்படுகிறது. இது மிகத் தொன்மையான ஒரு மணமுறை. வீரத்தின் அடிப்படையில் அரசகுலங்களிணையவேண்டுமென விழைந்தனர் மூதாதையர்.”

நகுலன் “மூத்தவர் நூல்கற்றவர் என எப்படி அறிகிறார்கள்?" என்றான். “ஒருமுறை கூட கிந்தூரத்தை வெல்வது பற்றி எண்ணாமலிருக்கிறார் அல்லவா?" என்றான் பீமன். நகுலனும் சகதேவனும் சீறும் ஒலியுடன் எழுந்த சிரிப்பை கைகளால் பொத்தி அழுத்திக்கொண்டனர். தருமன் திரும்பி “நகைப்பு வேண்டாம். நம்மை அனைவரும் பார்த்துவிட்டனர்” என்றான். அவையினர் அனைவருக்குமே அவர்கள் யாரென தெரியும் என்பது கண்களில் இருந்து தெரிந்தது.

அர்ஜுனன் வில்லை நோக்கிச் சென்ற கிருஷ்ணனை விட்டு விழிகளை விலக்கவில்லை. அவன் அணுக அணுக திரௌபதியின் உடல் பாறை களிமண் பாகாவது போல நெகிழ்வதை கண்டான். அவளுடைய வலக்கை எழுந்து நாகம் படமெடுத்தது போல வளைந்து காதில் தொங்கிய குழையை தொட்டுத் திருகி கழுத்தை வருடி கீழிறங்கி முலைக்குவையில் இருந்த பதக்கத்தைத் தொட்டு திருப்பி விளையாடத் தொடங்கியது. இடக்கையால் ஆடையின் மடிப்புகளை அழுத்திக்கொண்டு கால்களை அசைத்து ஒன்று சேர்த்துக்கொண்டாள்.

அவன் கிந்தூரத்தை அணுகியதும் அவை அமைதியடைந்தது. காற்றில் ஒரு அணிப்படாம் திரும்பும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. முள்காட்டில் காற்று செல்வது போல மூச்சொலிகள் சீறின. ஒரு கயிறு அவிழ்ந்து முரசுப்பரப்பு ஒன்றை தொட அது விம்மிய ஒலியில் அவையில் பெரும்பாலானவர்கள் திடுக்கிட்டனர். கிருஷ்ணன் துருபதனை நோக்கி தலைவணங்கி அவையையும் வணங்கியபின் கிந்தூரத்தை எதிர்கொண்டு கைகளை இடையில் வைத்து நின்றான். அவன் கருங்குழலில் சூடிய மயிற்பீலியின் விழி அண்மையில் எவரோ வந்தது போல் வியந்து வானை நோக்கியது.

ஒருகணம் கூட அவன் திரௌபதியைத் திரும்பி நோக்கவில்லை. அவள் மார்பிலிருந்த பதக்கத்தை விட்டுவிட்டு கைகளை மடிமேல் சேர்த்து பிணைத்துவைத்துக்கொண்டாள். மெல்லிய இதழ்கள் சற்றே பிரிந்திருக்க மூக்குத்துளையை விரியச்செய்து முலைகளை அசைத்து மூச்சு எழுவதை அர்ஜுனனால் காணமுடிந்தது. அவள் இடக்கால் அனிச்சையாக சற்று நீள நூபுரத்தின் மெல்லிய ஒலியை கேட்க முடிந்தது. அவளிடமிருந்து எழும் மெல்லிய வாசத்தைக்கூட உணரமுடியும் என்று தோன்றியது.

கிருஷ்ணன் குனிந்து கிந்தூரத்தை தொட்டான். அதன் இடமுனையை தன் வலக்காலால் அழுத்தியதும் பாம்பு நெளிந்து படமெடுப்பது போல அது எழுந்தது. இயல்பாக நீண்ட இடக்கையால் அதன் நடுவளைவை தொட்டு தன் முன் நிறுத்தினான். வலக்கையால் அதன் நாணைத் தொட்டு மெல்ல எடுத்து அதை கொக்கியில் மாட்டி விழிதொட முடியாத ஒரு கணத்தில் இறுக்கிவிட்டான். மணமாலை ஏற்கும் நாணத்துடன் வளைந்து நாண் பூண்ட வில் இனியதொரு முனகலுடன் மெல்ல நெளிய அதன் கரிய வளைவை நீவி நிறுத்தினான். முலைநடுவே முத்தாரத்தை அணிவிக்கும் கையழகுடன் நாணை சீரமைத்தான்.

அவன் நடந்து சென்றபோது இடைவளைத்த இணைத்தோழி என அது உடன் சென்றது. மதுமயக்கில் தலை கனத்த பரத்தை என அவன் தோளில் சாய்ந்து தளர்ந்தது. கிளிக்கூண்டின் முன் அவன் நின்று அதை தன் முன் நிறுத்தி அதன் வளைவை இடக்கையால் பற்றிக்கொண்டபோது அதன் உடல் சற்றும் அதிரவில்லை. அதன் நாண் மட்டும் யாழ்நரம்பு போல மீட்டிக் கொண்டிருந்தது. பேரவை விழிகளாக மாறி அவனைச் சூழ்ந்திருந்தது. அர்ஜுனன் கர்ணனை நோக்கினான். அவன் அங்கில்லை என்பதுபோல இருந்தான்.

கிருஷ்ணனின் நெஞ்சை அறிந்து அதற்கேற்ப இயைந்து கொண்டது கிந்தூரம். அவன் தோளில் கோதையென குழைந்து விழவிரும்பியது. அவன் காலடியில் சிற்றோடையென தழுவிச் சுழன்று செல்ல ஏங்கியது. கழுத்தை சுற்றிக்கொள்ளும் கைகளாக அவன் முகத்தை மூடிக்கொள்ளும் கருங்குழலாக அவனுடன் இருக்க விம்மியது. அது ஒரு வில்சூடலாக தெரியவில்லை. அங்கே வில்லும் அவனுமன்றி எவருமிருக்கவில்லை.

மெல்லிய சொடுக்கலாக கிந்தூரத்தில் ஓர் அசைவு நிகழ்ந்தது. அம்பு அதுவே சிறகடித்தெழுவது போல மேலே சென்று முதல் கிளியின் ஒரே ஒரு இறகை மட்டும் கொய்து கீழிறங்கியது. காற்றில் அந்த வெள்ளை இறகு புகைக்கீற்று போல மிக மெல்ல சுழன்று தவித்து திசைமாறி மீண்டும் சுழன்று கீழிறங்கிக்கொண்டிருக்கையில் அடுத்த கிளியின் ஒற்றை இறகை அம்பு கொய்து காற்றின் அலைகளில் ஏற்றி வைத்தது. படாம் ஒன்று அசைந்ததை உணர்ந்து அவ்விறகு திடுக்கிட்டு விலகியது.

நான்கு இறகுகள் ஒளிநிறைந்த வான்மேடையில் ஒன்றை ஒன்று தழுவிக்கொள்ள விழைபவை என சுழன்றன. ஐந்தாவது கிளி கூண்டிலிருந்து எட்டிப்பார்த்து தலையசைத்தது. விழிமூடி ஒரு கணம் நின்ற கிருஷ்ணன் கிந்தூரத்தை நிலத்தில் வைத்துவிட்டு அவையை வணங்கினான். திரும்பிப்பாராமல் அரசர் அவை நோக்கி மீண்டு சென்றான்.

அவனை தொடர்ந்த விழிகள் ஒரு கணத்தில் நிகழ்ந்ததை உணர்ந்தன. அனைத்து உடல்களும் அவற்றை இழுத்துக்கட்டியிருந்த அகச்சரடுகளில் இருந்து விடுபட்டு மூச்சொலிகளுடன் முனகல்களுடன் தளர்ந்து மீண்டன. துருபதன் முகவாயை வருடியபடி சத்யஜித்தை நோக்க அவர் குனிந்து ஏதோ சொன்னார். ஜராசந்தன் கிருஷ்ணனை ஓரவிழியால் தொடர்ந்தான். சகுனி குனிந்து துரியோதனனிடம் ஏதோ சொல்ல அவன் தலையசைத்தான்.

கிருஷ்ணன் அவைப்பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் பலராமர் கடும் சினத்துடன் கைகளை அசைத்தபடி அவனிடம் பேசத்தொடங்கினார். அவனருகே இருந்த சாத்யகியும் உடல் முழுக்க எழுந்த அக விரைவு தெரிய பேசினான். கிருஷ்ணன் மைந்தர்களின் பேச்சை புன்னகையுடன் பார்க்கும் தந்தையை போல அவர்களிடம் ஓரிரு சொற்கள் சொன்னான். அவன் விழிகள் வந்து அர்ஜுனனைத் தொட்டதும் அர்ஜுனன் எழுந்து தன் கைகளை தட்டினான்.

அவை திரும்பி நோக்கியது. எந்த ஒலியும் எழவில்லை. அனைவரும் அவனை அறிந்திருந்தனர். அவர்கள் எண்ணி விழைந்த கணம் அப்படி நிகழுமென எதிர்பாராதவர்கள் போல அவர்களின் முகங்கள் சொல்லற்றிருந்தன. அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி அவை முற்றம் நோக்கிச் சென்றான். ”அவையீரே, அரசே, நான் சாமவைதிகன். என்பெயர் புஷ்பகன். முறையாக வில் தேர்ந்தவன். இந்த அவையில் சிவதனுசை குலைக்க எனக்கு ஒப்புதலளிக்கவேண்டும்.” துருபதன் கையசைக்க சூதர்களின் இசை எழுந்து அடங்கி அவனை வரவேற்றது.

சீரான காலடிகளுடன் அர்ஜுனன் மணமுற்றத்தை அடைந்து நின்றான். வீரர்கள் கிந்தூரத்தை சீர்ப்படுத்தி வைத்துக்கொண்டிருக்க அவன் திரும்பி திரௌபதியை நோக்கினான். அவள் விழிகளை அவன் விழிகள் தொட்டன. சிலகணங்களுக்குப்பின் விலகிக்கொண்டபோது அவன் நெஞ்சு ஒலிப்பதை அவன் கேட்டான். திரும்பி அவையை வணங்கிவிட்டு கிந்தூரத்தை நோக்கிச் சென்றான். கீழே மரப்பீடத்தில் வில் அவனை நோக்கி ஒரு மாபெரும் புருவம் போல வளைந்திருக்க அதன் கீழே அந்த பார்வை அவன் மேல் நிலைத்திருந்தது. அவன் அதை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான்.

யாதவன் வில்லை எடுத்ததை மீண்டும் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் நீண்டு ஒரு தனிச்செயலாக மாறி செயல்களின் தொடராக அது தெரிந்தது. அந்த வில்லின் அத்தனை மந்தணப்பொறிகளையும் அமைப்பின் சூதையும் அவனால் காணமுடிந்தது. இத்தனை எளிதாக அறியும்படியா அதை அமைப்பார்கள் என அவன் ஒரு கணம் வியந்தான். அது ஒரு பொறி என்பதனாலேயே எத்தனை மகத்தானதாக இருப்பினும் எல்லைக்குட்பட்ட இயக்கம் கொண்டது. அதை புரிந்துகொண்ட கணமே தோற்றுவிட்டது. அவன் புன்னகை செய்தான்.

அதனுள் இருந்த மூன்று இரும்பு சுருள்வில்கள் எடைமிக்க பன்னிரு இரும்புக்குண்டுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்திருந்தன. வில்லைத் தூக்கியதுமே பன்னிரு இரும்புக்குண்டுகளும் கீழே வந்து வில்லின் எடைச் சமநிலையை அழித்தன. மேல் நுனியை கீழ்பகுதியின் எடை பக்கவாட்டில் தள்ளி அதை ஏந்தியவனை நிலையழியச் செய்தது. நாணைப்பற்றி இழுத்ததும் அதனுடன் இணைந்த சுருள்வில் இழுபட பன்னிரு குண்டுகளும் மேலே தூக்கப்பட்டு வில்லின் சமநிலை தலைகீழாக மேலிருக்கும் பகுதி எடைகொண்டு கீழே வந்து அதை ஏந்தியவனை தூக்கி வீசியது.

கிந்தூரத்தின் அனைத்து விசைகளும் அதை ஏந்துபவனின் தோளில் இருந்தே பெறப்பட்டன. அவன் கைகள் இழுப்பதற்கு நேர் எதிர்திசையில் சுருள்விற்கள் முறுகின. அவன் விட்டதும் அவன் நினைத்திருக்காதபடி குண்டுகளை பகிர்ந்து வில்லின் எடைச்சமநிலையை மாற்றியமைத்தன. அதன் இணைவுகளின் கணித முடிவின்மையே அதன் சூது. ஒவ்வொரு கணமும் அது மாறிக்கொண்டிருந்தது. முன்பிலாத ஒரு அமைப்பை அடைந்தது.

அர்ஜுனன் தன் கைகளை நீட்டி நோக்கியபின் கிந்தூரத்தின் கீழ்முனையை காலால் அழுத்தி அதை தூக்கி உடனே நடுப்பக்கத்தைப்பற்றி யாதவன் ஏந்தியது போல சற்றே சாய்த்து தோள்மேல் வைத்துக்கொண்டான். அதன் உருளைகள் கீழிறங்குவதற்குள் நாணை இழுத்து அதே விரைவில் மேலே கொண்டு சென்று பூட்டினான். வில்லின் உருளைகளின் மேலே எழுந்து வில் சமநிலை இழக்கப்போவதை ஒரு கணம் முன்னதாகவே அறிந்து தன் தோளால் மேலிருந்த எடையைத் தாங்கிக்கொண்டான்.

வில்லுடன் அவன் சென்று கூண்டின் கீழே நின்றபோது அவை அமைதியுடன் சூழ்ந்திருந்தது. போட்டி முடிவுற்றுவிட்டதை அனைவருமே அறிந்திருந்தனர். அர்ஜுனன் இடக்கையில் ஏந்திய வில்லின் கீழ் முனையை ஊன்றி குனிந்து தெளிந்த நீர்ப்பரப்பை நோக்கினான். அழுக்கற்ற ஆடி போல மேலே தொங்கிய கிளிக்கூண்டை காட்டியது. முதல்கிளி தலைநீட்டி சிறுவிழிகளை உருட்டி நோக்கியது. அவன் அதை நோக்கிக்கொண்டிருக்கையிலேயே அக்கிளி நீண்டு பிரிந்து ஒன்றாகியது.

அர்ஜுனன் தன் கால்கட்டைவிரலை உணர்ந்தான். அங்கே முழு உள்ளத்தையும் செலுத்தி அசைவிழக்க வைத்தான். கணுக்கால்களை கெண்டைக்கால் தசைகளை தொடைகளை இடையை முழுமையாக அவிழ்த்து விட்டு அசைவிழக்கச் செய்தான். அத்தனை தசைகளும் கட்டவிழ்ந்தன. அத்தனை நரம்புகளும் தொய்வடைந்தன. மார்பு, தோள், புயங்கள், முதுகு, கழுத்து என ஒவ்வொரு உறுப்பும் முற்றிலும் அடங்கியது. இமைகள் அடங்கின. விழிகள் அசைவற்றன. சித்தம் அசைவற்றது. ஒற்றைச் சொல்லாகியது. அச்சொல் அசைவற்றது. தனக்கு புவியில் முதன்மையான சொல் எது என அவன் அறிந்தான்.

கீழே மிக அண்மையில் தெளிவாக கிருவிகுலத்துக் கிளியின் விழி தெரிந்தது. மறுகணம் அது உடைந்து நீர்ப்பரப்பை நோக்கி வந்தது. கூண்டிலிருந்து சோமகக்கிளி வெளியே தலைநீட்டியதுமே சிதறிப் பொழியத் தொடங்கியது. சிருஞ்சயக்கிளியை அடித்தபோது அவ்வாறு ஆயிரக்கணக்கான கிளிகளை அவன் அடித்திருப்பதாகத் தோன்றியது. துர்வாசக்கிளியை அவன் அடித்ததை அறியவேயில்லை. அவையில் இருந்து ஒற்றைப்பெருமூச்சு கிளம்பியது.

கேசினிக்கிளி தலைநீட்டியதும் அம்புடன் எழுந்த அவன் கை அசைவழிந்தது. அவன் எண்ணங்கள் அக்கைக்குச் சென்று சேரவில்லை. என்ன என்ன என்ன என்று சித்தம் தவித்தது. செய் செய் செய் என ஆணையிட்டது. ஆனால் அவன் கை அப்பால் தனித்து நின்றிருந்தது. அவனைச்சூழ்ந்து உச்சநிலையின் அமைதியில் இறுகியிருந்தது அவை. அவன் நாற்புறமும் சூழ்ந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தான்.

எச்சரிக்கையுடன் புற்றிலிருந்து தலைநீட்டும் பாம்பென அவ்வெண்ணம் அவனில் எழுந்தது. வேண்டாம், திரும்பிவிடு. அதை அவனே திகைப்புடன் நோக்கி ஏன் என்றான். விலகிவிடு. ஆம், அதைத்தான் விவேகி செய்வான். விலகு. அகன்றுசெல். அதுவே உனக்களிக்கப்பட்ட அறைகூவல். உன் ஆணவத்தை வெல். உன் தனிமையை வெல். இக்கணம் இனி உனக்கு அளிக்கப்படாது. விலகு. வில் தாழ்த்து. ஒருகணம். ஒருகணத்திலேயே அனைத்தும் முடிவாகின்றன. மூடா, இப்புடவியே ஒரு கணத்தில் உருவானது. விலகு. இக்கணம். இக்கணம்....

அவன் உடலெங்கும் பற்றி எழுந்து கண்களைக் கனலச்செய்தது வெம்மை. விரல்நுனிகள் நடுங்கின. கீழே கேசினி நீண்டு நெளிந்து சுருங்கி வளைந்து நடமிட்டது. அர்ஜுனன் கிருஷ்ணனை நோக்கி விழிதூக்கினான். இமைப்புக்கணத்தின் தொடக்கம் முதல் பாதிவரை சென்று சினம்கொண்டு விலகிக்கொண்டான். பற்களைக் கிட்டித்தபடி கண்களை மூடி பின் திறந்து திரும்பி திரௌபதியை நோக்கினான். துடித்து விலகிக் கீழே நோக்கினான். பளிங்கில் வரைந்த ஓவியம் போன்றிருந்தது கேசினி. அவன் கை சிமிட்டியது. கேசினி சிதறி இறகுமழையாக விழுந்தது.

ஒருசில கணங்கள் அவை அசைவற்று ஒலியற்று இருந்தது. பின்னர் வெடித்தெழுந்து ஆர்ப்பரித்தது. வில்லை தாழ்த்தி நிமிர்ந்தபோது தன் உடலெங்கும் சினம் அதிர்வதைத்தான் அர்ஜுனன் உணர்ந்தான். பற்கள் இறுக கடிபட்டிருப்பதை தாடையுடன் கழுத்து நரம்புகள் இழுபட்டிருப்பதை உணர்ந்து வாயைத்திறந்து எளிதாக்கினான். அப்போதுதான் கைகள் நகங்களுடன் இறுகப்பற்றப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

உடலெங்கும் வியர்வை பூத்து குளிர் உணர்வாக தெரிந்தது. மூச்சை இழுத்து விட்டான். ஆம் ஆம் ஆம் ஆம் என அவன் சித்தம் இருந்தது. ஆம் என நீளொலி எழுப்பி மீட்டி முடிக்கப்பட்ட யாழ் என அவிந்தது. அவன் விழிதூக்கி யாதவனை நோக்கினான். அங்கே புன்னகை இருந்தது. அறிந்த புன்னகை, கடந்த புன்னகை, இனிய எள்ளல் கொண்ட முதுதந்தையின் புன்னகை.

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 7

சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை

புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்” என்று ஒரு தனிக்குரல்

பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத் தூக்கி உரக்கக் கூச்சலிட்டு

நடனமிட்டனர். அலையலையாக மேலாடைகளைத் தூக்கி வீசினர். யாரோ “அவர்கள் வைதிகர்கள்

அல்ல. அவர்கள் பாண்டவர்கள்” என்று கூவியதை எவரும் செவிகொள்ளவில்லை. அப்பால்

குடிகளவையிலும் பெருங்கூச்சலும் கொண்டாட்டமும் திகழ்ந்தது.

எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை கொண்ட

அனைவரையும் வென்றுவிட்டான் என்பது. என்றும் அவர்களின் அகம் காத்திருந்த

தொன்மம். அப்படி வெல்பவன் பெரும் வில்திறன் கொண்டவன், எளியோன் அல்ல என்பதை

அவர்களின் அகம் அறிந்திருந்தாலும் அகமே அதை ஏற்க விழையவில்லை.அந்த நிகழ்வை

அங்கேயே புராணம் ஆக்கிவிட விழைந்தனர். ஒரு புராணத்தின் உள்ளே நின்றிருக்கும்

உணர்வில் துள்ளிக்குதித்து மெய்மறந்து கூச்சலிட்டனர்

திருஷ்டத்யும்னன் திரௌபதியின் அருகே குனிந்து “அவையில் வென்றவர்களை இளவரசி

ஏற்றாகவேண்டும் என்று நெறி ஏதும் இல்லை. இளவரசியின் தேர்வுக்கு அவர்கள்

வருகிறார்கள் அவ்வளவுதான். அவள் மாலை அவள் உள்ளமே என்கின்றன நூல்கள்” என்றான்.

அவனை நோக்கி இதழ்மடிய புன்னகைத்துவிட்டு திரௌபதி திரும்பி அருகே நின்றிருந்த

தோழியரை நோக்கினாள். அவர்கள் தங்களுக்கு பின்னால் வந்த சேடியர் ஏந்திய

தாலத்தில் இருந்து ஐவகை மலர்களால் பின்னப்பட்ட மாலையை எடுத்து அவள் கைகளில்

அளித்தனர். திருஷ்டத்யும்னன் திரும்பி சூதரையும் மாகதரையும் நோக்கிக் கைகாட்ட

மங்கல இசை எழுந்தது.

இதழ்கள் புன்னகையில் விரிந்து பல்முனைகள் சரமென தெரிய அவள் தன் கைகளில் மாலையை

எடுத்துக்கொண்டபோது நினைத்திராதபடி அவை முழுதடங்கியது. அனைவரும் அப்போதுதான்

அந்நிகழ்வின் முழுப்பொருளை அறிந்தது போல. அங்கிருந்த ஒவ்வொரு ஆணுள்ளமும்

அர்ஜுனன் மேல் அழுக்காறு கொண்டதுபோல. அவள் மாலையுடன் சில எட்டுகள்

வைப்பதற்குள் அவையில் மங்கல இசை மட்டும் ஒலித்தது. மக்களின் ஆரவாரம்

துணையின்றி அது திகைத்தது போல பொருளற்று பந்தலின் காற்றில் சுழன்று பரவியது.

திரௌபதி அர்ஜுனனின் முகத்தை நோக்கினாள். அவன் அவள் நடந்து வருவதைக் கண்டு

திகைத்தவன் போலவோ அதன் பொருள் விளங்காதவன் போலவோ நின்றான். அவன் முகத்தில்

சற்றும் உவகை இல்லாததை அவள் கண்டாள். ஒருகணம் அவளும் திருஷ்டத்யும்னனும் விழி

தொட்டுக்கொண்டனர். அவள் அணுகிவந்த ஒவ்வொரு ஓசையையும் அவன் உடல் அறிந்ததுபோல

தெரிந்தது. அவள் வைத்த ஒவ்வொரு அடியையும் அவன் தன் உள்ளத்தால்

பின்னெடுத்துவைக்க உடல் உறைந்து நின்று தவித்தது.

அவள் தன் அணியோசைகள் அவனுக்குக் கேட்கும் தொலைவை அடைந்ததும் அர்ஜுனன் விரல்

தொட்ட நீர்ப்பாவை எனக் கலைந்து திரும்பி அவை நோக்கி கைகூப்பினான். திரௌபதி

இடையின் உலோகம் போன்ற இறுகிய வளைவு நடையின் அசைவில் ஒசிய, முலைகள் மேல்

சரப்பொளியின் இதழ்கள் நலுங்க, மேகலை மணிகள் குலுங்கி ஒளிர, நூபுரம் ஒலிக்க

அவனருகே வந்து சற்றே முகவாய் தூக்கி அவனை விரிந்த கருவிழிகளால் நோக்கினாள்.

அவள் விழிகளை தொட்டதும் அவன் நோக்கு பதறி விலகியது. தொடிவளைகள் ஒலியுடன்

பின்னகர்ந்து ஒன்றன் மேல் ஒன்றாக இணைந்துவிழ, அவள் கைதூக்கி மாலையை அவன்

தோளிலணிவிக்க முனைந்ததும் அரசர் அவையில் இருந்து கிருஷ்ணன் எழுந்து கை நீட்ட

மங்கல இசை அணைந்தது. இறுதியாக முழங்கிய முழவு விம்ம்ம்ம் என ஒலித்து மெல்ல

அடங்கியது. யாதவன் ஒலி மிகாத குரலில் திருஷ்டதுய்ம்னனிடம் “இளவரசே,

வைதிகமுறைப்படி இளவரசி அந்தப்பிராமணனுக்கு மாலையிடுவதற்கு முன் காலைத் தொட்டு

வணங்கவேண்டும்” என்றான். “வைதிகச்செயல்களில் அவனுக்கு அவள் அறத்துணைவி. ஒரு

சொல்லும் மிகாது வாழ்பவள் என்பதற்கான அறிவிப்பும் தொடக்கமும் அதுவே.”

திருஷ்டத்யும்னன் அந்த கூற்றில் இருந்த ஏதோ ஒரு பொருந்தாமையை உணர்ந்து மறுகணமே

அதில் ஒளிந்திருந்த பொறியை தொட்டறிவதற்குள்ளே சத்யஜித் “அவள் பாஞ்சால இளவரசி.

ஷத்ரியப்பெண்” என்றார். ”இங்கே ஷத்ரிய முறைப்படித்தான் தன்னேற்பு நிகழ்கிறது.”

திருஷ்டத்யும்னன் அனைத்தையும் உடனே கண்முன் கண்டுவிட்டான். திகைப்புடன்

திரும்பி நோக்கி திரௌபதியின் கண்களைச் சந்தித்து விலகினான்.

ஷத்ரிய அவையில் அச்சொற்கள்ள் விழுந்ததுமே விழிகளெல்லாம் மாறுபட்டன. கிருஷ்ணன்

“அவ்வண்ணமென்றால் ஆகுக” என்று சொல்லி அமர்ந்ததுமே தன் தொடையை அறைந்து ஒலி

எழுப்பியபடி எழுந்த ஜராசந்தன் உரத்தகுரலில் “நிறுத்துங்கள்… இதற்கு

ஷத்ரியர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது!” என்று கூவினான். துருபதன்

கைதூக்கி ஏதோ சொல்ல முயல அவை ஓசையடங்கி செவிகூர்ந்தது. பாஞ்சாலி திரும்பி

ஜராசந்தனை நோக்க கூந்தலை முடிந்திருந்த முத்துமாலை சரிந்து இடக்கன்னத்தைத்

தொட்டுத் தொட்டு அசைந்தது. அவள் புன்னகையுடன் அவனை நோக்கி அதை எடுத்து

கூந்தலில் செருகினாள்.

திருஷ்டத்யும்னன் கைதூக்கி உரத்த குரலில் “இங்கே மணத்தன்னேற்பு

நிகழ்ந்திருக்கிறது மகதரே. நெறிகளின் படி வென்றவனை இளவரசி ஏற்கிறாள்… இது

எங்கள் குலமுறை. அதை ஏற்றே இங்கே நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றான். ஜராசந்தன்

கைகளைத் தூக்கி முன்னால் வந்தபடி “ஷத்ரியர் அவையில் பிராமணர்கள் பங்கெடுக்கும்

முறை எங்குள்ளது?” என்றான். அவனை சூழ்ந்து எழுந்து நின்ற கலிங்கனும் மாளவனும்

”ஆம், நாங்கள் அதை அறிய விழைகிறோம்” என்றனர்.

திருஷ்டத்யும்னன் “இந்த அவைக்கூடலின் நெறியை நான் உங்களனைவருக்கும் அனுப்பிய

ஓலையிலேயே சொல்லியிருந்தேன். பிராமணர் ஷத்ரியர் மட்டுமல்ல வைசியரோ சூத்திரரோ

கூட இந்த வில்லேந்தலில் பங்குகொள்ளலாம். வென்றவரில் தனக்குகந்தவரை பாஞ்சால

இளவரசி தேர்வு செய்வாள்” என்றான். ”பாஞ்சாலம் தன் நெறிகளை உங்கள் குலங்கள்

முதிர்ந்து ஷத்ரியர்களாக ஆவதற்கு நெடுங்காலம் முன்னரே வேத நெருப்பிலும் வாளின்

ஒளியிலும் எழுதிவைத்துவிட்டது ஷத்ரியர்களே. இங்கே நீங்கள் எதிர்ப்பது

பாஞ்சாலத்தின் நெறிகளை என்றால் எழுங்கள். வில்லேந்துங்கள். அதை முடிவு

செய்வோம்” என தன் உடைவாளில் கைகளை வைத்தான்.

பீனொருக்கையில் இருந்து எழுந்த சல்லியன் கைகளைத்தூக்கி ஷத்ரியர்களை

அடக்கிவிட்டு “பாஞ்சால இளவரசே, நாங்கள் இங்கே பாஞ்சாலத்தின் நெறிகளைப்பற்றி

பேசவில்லை. துருபதனின் கோலுக்கு எதிராக எழவும் இல்லை. இங்கே ஷத்ரியர் நடுவே

எழும் வினா இதுவே. பாஞ்சாலத்தின் இளவரசியை இந்தப்பிராமணனுக்கு நீங்கள்

அளிக்கவிருக்கிறீர்கள் என்றால் இக்கடிமணத்திற்குப்பின் அவள் யார்?

அவ்வைதிகனுடன் சென்று அவர்களுக்கு வேள்விப் பணிவிடைகள் செய்து பிராமண

பத்தினியாக வாழவிருக்கிறாளா?” என்றார்.

திருஷ்டத்யும்னன் சற்று தடுமாறி திரும்பி துருபதனை நோக்க அவர் வணங்கி

“அவையோரே, அவளை நான் பாரதத்தின் சக்ரவர்த்தினியாகவே பெற்றேன். அவ்வண்ணமே

வளர்த்தேன். அதற்காகவே அவள் மணமுடிக்கிறாள். அதில் ஏதும் மறுசொல் மறுசிந்தை

இல்லை” என்றார். ஷத்ரியர்கள் சிலர் கைகளைத் தூக்கி சினத்துடன் ஏதோ சொல்ல

எழுந்தனர். சல்லியன் அவர்களை கைகளைக் காட்டி அடக்கினார். ஒருகணம் அவர் பார்வை

திரௌபதியின் விழிகளை தொட்டு மீண்டது. அவள் அவர் கண்களை நோக்கிப்புன்னகை

செய்தாள்.

சல்லியன் தடுமாறி விழிகளை விலக்கிக்கொண்டு உடனே சினத்துடன் தன்னை மீட்டு

வஞ்சத்துடன் புன்னகைத்து மீசையை நீவியபடி “நன்று. தந்தையர் இத்தகைய

பெருங்கனவுகளுடன் வாழ்வது உகந்ததுதான். ஆனால் இனி அவள் நாடு எது? இந்த

இளம்பிராமணன் அவளை எங்கே கொண்டுசெல்லவிருக்கிறான்? அவளுக்கு பாஞ்சாலநாட்டு

மணிமுடி அளிக்கப்படுமா? இல்லை, பாதிநாட்டை அளிக்கவிருக்கிறீர்களா?” என்றார்.

திருஷ்டத்யும்னன் “அது பாஞ்சாலநாட்டின் முடியுரிமை பேச்சு. அதைப் பேசவேண்டிய

அவையல்ல இது” என்றான்.

“ஒப்புகிறேன்” என்றார் சல்லியன். அவர் விழிகளில் புன்னகை மேலும் விரிந்தது.

“நாங்கள் அறியவிழைவது ஷத்ரியப்பெண்ணாகவே வாழவிழையும் இவளை மணக்கும்

இப்பிராமணன் இனிமேல் ஷத்ரியனாக ஆகப்போகிறானா என்றுதான்.”

திருஷ்டத்யும்னன் அச்சொற்களின் தொலைபொருளை தொட்டு எடுப்பதற்குள்ளாகவே துருபதன்

“ஆம், இவர் இனிமேல் ஷத்ரியரே” என்றார்.

”அவ்வண்ணமென்றால் இங்குள்ள ஷத்ரிய அரசர்களில் எவருடைய நிலத்தையோ இவர்

ஏற்கவிருக்கிறார் இல்லையா?” என்றார் சல்லியன். “நாங்கள் எதிர்ப்பது அதையே.

யமஸ்மிருதியின்படி தன் நிலத்தின் ஒரு துண்டைக்கூட இழக்காமலிருக்கும்

பொறுப்புள்ளவன் ஷத்ரியன். ஆகவே ஒருதருணத்திலும் ஷத்ரியன் புதிய ஷத்ரிய

குலங்கள் உருவாக ஒப்புக்கொள்ளக்கூடாது. அவன் தன் அனைத்து வல்லமைகளாலும்

ஷத்ரியனாகி எழும் பிறனை வெல்லவும் கொல்லவும் கடமைப்பட்டவன்.”

கிருஷ்ணன் அப்பால் தன் இருக்கையில் அமர்ந்தபடியே “ஒருவேளை அவர் மாறுவேடமிட்ட

ஷத்ரியராக இருக்கலாமே” என்றான். சல்லியன் திரும்பி அவனை நோக்கிவிட்டு

“அவ்வண்ணமென்றால் இந்த அவையில் அவன் சொல்லட்டும், எந்தகுலம் எந்த கொடிவழி எந்த

நாடு என்று. சான்று வைக்கட்டும்” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன்

பேசாமலிருந்தான். கூட்டத்தின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கூரிய விழிகளால்

அவையை நோக்கியபடி நின்றான்.

துரியோதனன் சற்று அசைந்ததும் அவன் தொடையில் கை வைத்துத் தடுத்துவிட்டு சகுனி

எழுந்து கையைத்தூக்கி மெல்லிய குரலில் “அவன் ஷத்ரியன் என்பதற்கு ஒரே

சான்றுதான் அளிக்கப்படமுடியும். இச்சபையில் ஷத்ரியர்களை எதிர்த்து அவன்

வெல்லட்டும்” என்றார். ஷத்ரியர்கள் “ஆம், ஆம்” என்றனர். ஜராசந்தன் தன் வில்லை

எடுத்தபடி முன்னால் பாய கலிங்கனும் வங்கனும் மாளவனும் விற்களை எடுத்துக்கொண்டு

கைகளுக்குத் தோலுறை போட்டபடி நாணொலி எழுப்பினர். அவர்களுக்குப்பின்னால்

ஷத்ரியர்கள் அனைவரும் விற்களையும் வாள்களையும் உருவியபடி எழ அவர்களின்

காவலர்கள் துணைவீரர்களுக்காக கூச்சலிட்டபடி பின்னால் ஓடினர். உலோகங்கள் உரசிச்

சீறும் ஒலிகளாலும் காலடியோசைகளாலும் அவை நிறைந்தது.

துருபதன் கைகளை விரித்து “அமைதி! அமைதி” என்று கூவியபடி முன்னால் வந்து

ஷத்ரியர்களைத் தடுக்க முற்பட்டார். சத்யஜித் பாஞ்சால வீரர்களை அழைத்தபடி

அரங்கின் பின்னால் ஓட துருபத புத்திரர்கள் வாள்களை உருவியபடி முன்னால்

ஓடிவந்தனர். ”அரசியரை உள்ளே கொண்டுசெல்லுங்கள்” என்று துருபதன் கூவினார்.

சிலகணங்களிலேயே மணமுற்றம் போர்க்களமாக ஆகியது. முதல் அம்பு எழுந்து அர்ஜுனன்

தோளருகே செல்ல அவன் மிக எளிதாக உடலை வளைத்து அதைத் தவிர்த்தான். மேலும்

அம்புகள் அவனைத் தொடாமல் கடந்து பின்னால் சென்றன. ஓர் அம்பு நெஞ்சில்

பாய்ந்திறங்க அணிச்சேடி ஒருத்தி அலறியபடி மேடையில் குப்புறவிழுந்தாள். பிறர்

அலறியபடி ஓடி திரைகளுக்கு அப்பால் சென்றனர். அரசியரை சேடிகள் இழுத்துக்கொண்டு

செல்ல பிருஷதி “ திரௌபதி….இளவரசி” என்று கைநீட்டி கூவினாள்.

திரௌபதி புதுக்குருதியின் வாசனையை உணர்ந்தாள். அர்ஜுனன் அசையாமல் நிற்கக்

கண்டு முன்னோக்கி ஓடிவந்த ஷத்ரியர் திகைத்து ஒரு கணம் நின்றனர். முதலில்

சிந்தை மீண்ட கலிங்கன் “கொல்… கொல் அவனை” என்று கூவியபடி வில்லை வளைத்து விட்ட

அம்பு சற்றே குனிந்த அர்ஜுனனின் தலைக்குமேல் கடந்துசென்றது. வெறும் கையுடன்

நின்ற அர்ஜுனனை நோக்கி வாளைச் சுழற்றியபடி காமரூப இளவரசர்களான சித்ராங்கதனும்

தனுர்த்தரனும் ஓடிவந்தனர்.

திருஷ்டத்யும்னன் மேடைக்குக் குறுக்காக ஓடி வந்து திரௌபதியை அணுகி “இளவரசி,

போர் முனையிலிருந்து விலகுங்கள்” என்றான். அவனுக்குப் பின்னால் வாளும்

கேடயங்களுமாக ஓடிவந்த வீரர்களை நோக்கி “எதிர்கொள்ளுங்கள்… அரசமேடையில் ஏறும்

எவரும் நம் எதிரியே” என்றான். திரௌபதி கையசைவால் திருஷ்டதுய்ம்னனை

விலக்கிவிட்டு சென்று தன் இருக்கையில் முன்பு அமர்ந்ததுபோல நிமிர்ந்த தலையுடன்

அமர்ந்துகொண்டாள். விழிகள் மட்டும் அங்கு நிகழ்வனவற்றை நோக்கி அசைய, இதழ்களில்

புன்னகை விரிந்தது.

குடிகளவையெங்கும் மக்கள் கூச்சலிட்டபடி கலைந்து ஒருவரை ஒருவர் தள்ளியபடி ஓடி

பின்னால் ஒதுங்கினர். கீழே விழுந்தவர்கள் மிதிபட்ட பீடங்களுடன் உருண்டு

அலறியபடி எழுந்து இறுதியாக ஓடினர். பின்னால் நின்றவர்களை முன்வரிசையாளர்கள்

முட்டி பின்னால் தள்ள அவர்கள் நான்கு பெருவாயில்களையும் நோக்கிச்செல்ல முயன்று

அவ்வழியாக வாள்களுடன் உள்ளே வந்த பாஞ்சால வீரர்களால் தடுக்கப்பட்டு தேங்கி

பதறிக் கூவினர். சற்றுநேரத்திலேயே குடிமக்கள் அவைகளின் முன்பகுதி முழுமையாகவே

ஒழிந்து அங்கே கைவிடப்பட்ட மேலாடைகளும் மிதிபட்டுச் சரிந்த பீடங்களும்

தாம்பூலத்தாலங்களும் கவிழ்ந்த நீர்த்தொன்னைகளும் உடைந்த குடுக்கைகளும்

சிதறிப்பரவியிருந்தன.

பன்னொரு பாஞ்சாலவீரர்கள் அம்புபட்டு சரிய அவர்களின் சடலங்களை தாவிக்கடந்து

ஷத்ரியர்கள் மணமேடை நோக்கி வந்ததை பார்த்து நின்ற அர்ஜுனன் இடக்கையை நீட்டி

ஒரு வீரனின் வாளைப்பிடுங்கி அதே அசைவில் அதை வீசி முன்னால் வந்த

சித்ராங்கதனின் தலையை வெட்டி வீழ்த்தினான். பின்னால் வந்தவர்கள்

சித்ராங்கதனின் உடல் குப்புறக்கவிழ்வதையும் அவன் தலை மறுபக்கம் பார்ப்பதுபோல

திரும்பி பின் துவண்டு செஞ்சேற்றுக்கற்றைகள் நீள தனியாக விழுவதையும் கண்டனர்.

அவன் கால்களும் கைகளும் தரையை அள்ளத்துடிப்பவை போல இழுத்துக்கொள்ள அவன் மேல்

கால் தடுக்கிதிகைத்த தனுர்த்தரன் மறுகணமே விலகி சுழன்று தலையில்லாமல் அவன்

மேலேயே விழுந்தான். அவன் தலை அவன் முதுகின்மேலேயே விழுந்து அப்பால் உருண்டது.

சுழன்று வந்த அர்ஜுனனின் வாளில் இருந்து தெறித்த பசுங்குருதி திரௌபதியின் மேல்

செம்மணியாரம் போல முகத்திலும் இடத்தோளிலுமாக சாய்வாக நீண்டு விழுந்தது.

மூக்கிலும் மேலுதட்டிலும் கன்னத்திலும் வழிந்து கழுத்திலும் தோளிலும் சொட்டிய

குருதியைத் துடைக்கக் கூட அவள் கைகளைத் தூக்கவில்லை. குருதி இதழ்களில்

படாமலிருக்க வாயை சற்று உள்ளிழுத்துக்கொண்டாள்.

வைதிகர்கள் அலறியபடி மறு எல்லைக்கு ஓடி பந்தல்சுவரின் விளிம்புகளில் ஒட்டி

அஞ்சிய வெள்ளாடுகளென கூச்சலிட்டுக் கொண்டிருக்க பீமன் பீடங்களை மிதித்து

பாய்ந்து வந்தான். வந்தவழியிலேயே பந்தல்காலாக நின்றிருந்த பெருமரம் ஒன்றை

காலால் ஓங்கி உதைக்க அது முனகல் ஒலியுடன் முறிந்து பக்கவாட்டில் சாய்ந்தது.

அதை இருகைகளாலும் தூக்கி சுழற்றியபடி யானை போல பிளிறிக்கொண்டு அவன் வந்து

அர்ஜுனன் முன்னால் நின்றான்.

அவன் கையில் இருந்த தூணின் பருமனைக்கண்டதுமே முன்வரிசை ஷத்ரியர்

அஞ்சித் தயங்கினர். அவர்கள் பின்னடைவதற்கு இடமளிக்காமல் பின்னாலிருந்து

ஷத்ரியர்கள் கூச்சலிட்டபடி வந்தனர். முன்னால் வந்த மணிபூரக மன்னன் சித்ரரதனும்

அவன் தளபதியும் மண்டை உடைந்து பின்னால் சரிய அவர்களின் மூளைக்குழம்பு சிதறி

பிற ஷத்ரியர் மேல் தெறித்தது. அர்ஜுனன் சுமித்திரன் கொண்டுவந்த வில்லை வாங்கி

அம்புகளை தொடுக்கத் தொடங்கினான். முன்னால் வந்த பிருதுவும் விப்ருதுவும் அம்பு

பட்டு வீழ்ந்தனர்.

பிருஷத்ஹரன் தோளில் பட்ட அம்புடன் ஓலமிட்டு பின்னடைய ஜயசிம்மனின் வெட்டுண்ட

தலை அவன் முன் வந்து விழுந்தது. அதன் இதழ்கள் ஏதோ சொல்ல வந்தவை போல அசையக்

கண்டு பிருஷத்ஷத்ரன் அலறியபடி பின்னடைந்தபோது அவன் தலை வெட்டுண்டு பின்னால்

சென்றது. ஜயசிம்மனின் உடல்மேலேயே அவன் கைகளை விரித்தபடி விழுந்தான். பீமன் தன்

கையில் இருந்த பெருந்தூணைச்சுழற்றிக்கொண்டு ஷத்ரியர் நடுவே செல்ல கிருதபாலனும்

சுதர்மனும் அவர்களின் பன்னிரு படைவீரர்களும் தலையுடைந்து விழுந்து துடித்தனர்.

மேகநாதனின் மண்டையோட்டின் மேல் பகுதி குருதிசிதற தெறித்து நெடுந்தொலைவில்

சென்று விழுந்தது. பீமனின் கையில் இருந்த மரத்தூண் குருதி வழிந்து

செந்நிணத்தால் ஆனதுபோல மாறியது. அதை சுழற்றியபோது மூளைநிணமும் குருதியும்

செந்நிற மேலாடைகள் போல வளைந்து வளைந்து தெறித்தன

தருமனும் நகுலசகதேவர்களும் வாள்களுடன் அரங்க முகப்புக்கு வந்தனர். நகுலனும்

சகதேவனும் பீமனின் பின் புலத்தை பாதுகாத்தபடி வாள் சுழற்றிச் செல்ல அர்ஜுனனின்

இடப்பக்கத்தை காத்தபடி தருமன் வில்லுடன் நின்றான். சல்லியனின் வில்லை பீமன்

அடித்து உடைத்தான். அவர் பின்னடைந்து ஒரு பீடத்தில் ஏறிக்கொள்ள அவர் தோளை

கதையால் அடித்து அலறியபடி தெறிக்கச்செய்தான்.

அவைக்களங்களில் நான்குபக்கமும் மக்கள் அலறிக்கொண்டிருந்தனர். துருபதன் கண்ணீர்

வழிய “நிறுத்துங்கள்! போரை நிறுத்துங்கள்…” என்று உடைந்த குரலில்

கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். சத்யஜித்தின் தலைமையில் பாஞ்சாலப்படைகள்

இருதரப்பினர் நடுவே புகுந்தபோது அவர்களை அடித்துப்பிளந்தபடி வந்த ஜராசந்தன்

பீமனுடன் தன் கதையால் மோதினான். இருவரும் உறுமல்களுடனும்

போர்க்கூச்சல்களுடனும் மாறி மாறி அறைந்த ஒலியில் அவையின் திரைச்சீலைகள்

அதிர்ந்தன. ஜராசந்தனின் அறைபட்டு ஒரு தூண் உடைந்து அதன் மேலிருந்த கூரை

இறங்கியது.

பீமனின் அடியில் ஜராசந்தனின் இரும்புக் கதை நசுங்கியது. அவன் சினக்கூச்சலுடன்

பாய்ந்து பீமனை தோளில் அடிக்க கீழே விழுந்த பீமன் புரண்டு எழுந்து மீண்டும்

தன் தூண்தடியை கையிலெடுத்துக்கொண்டு அலறியபடி ஓங்கி அடித்தான். அவர்களின் போர்

ஒலி மெல்ல மெல்ல போரிட்டுக்கொண்டிருந்த பிறரை நிலைக்கச்செய்தது.

படைக்கலங்களைத் தாழ்த்தியபடி விழிகள் அச்சத்துடன் வெறிக்க அவர்கள் இருவரையும்

நோக்கிக்கொண்டிருந்தனர். கீழே வெட்டுண்டும் தலையுடைந்தும் கிடந்த பிணங்களை

மிதித்து குருதிக்கூழாக்கியபடி மூச்சொலிகள் எழ இருவரும் சுழன்று சுழன்று போர்

புரிந்தனர். தன் பீடத்தில் திரௌபதி தன் பாதி மூடிய விழிகளுடன் இருவரையும்

நோக்கியபடி அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் வழிந்த குருதி

துளித்துக் கனத்து உலர்ந்து பொட்டுகளாக மாறிவிட்டிருந்தது.

கிருஷ்ணன் பலராமரிடம் ஏதோ சொல்ல பின்னிருக்கையில் இருந்து அவர் கூச்சலிட்டபடி

எழுந்து இருகைகளையும் தூக்கியபடி ஓடிவந்து பீமனின் கையில் இருந்த மரத்தைப்

பற்றித் தடுத்து அதே விரைவில் திரும்பி ஜராசந்தனின் இடையில் உதைத்து அவனை

பின்னால் சரியச்செய்தார். “போதும்!” என அவர் கூவ பீமன் கடும் சினத்துடன்

மார்பில் ஓங்கி அறைந்து கூவியபடி கைகளை ஓங்கி முன்னால் சென்றான். பலராமர்

எடையற்றவர் என காற்றில் எழுந்து பீமனை ஓங்கி அறைந்தார். கன்னத்தில் விழுந்த

அந்த அடியின் விசையால் நிலைகுலைந்து பீமன் பின்னால் சரிந்து ஒரு மரப்பீடத்தை

முறித்தபடி விழுந்தான். அதே விரைவில் திரும்பி எழமுயன்ற ஜராசந்தனை மீண்டும்

மிதித்து ஒரு தூணை நோக்கி தெறிக்கச் செய்தார் பலராமர். தூண் உடைய அதன்

மேலிருந்த பாவட்டா அவன் மேல் விழுந்தது.

இரு கைகளையும் விரித்து தலையை சற்றுத் தாழ்த்தி இருவரையும் ஒரே சமயம்

எதிர்க்கச் சித்தமானவராக அசைவற்று நின்று மிகமெல்ல ஓர் உறுமலை பலராமர்

எழுப்பினார். அந்த ஒலி இருவருக்குமே ஐயத்திற்கிடமற்ற செய்தியைச் சொன்னது.

பீமன் தன் தோள்களைத் தளர்த்தி தலைதாழ்த்தி மெல்லப் பின்வாங்கினான். ஜராசந்தன்

எழுந்து கைநீட்டி ஏதோ சொல்ல முயல பலராமர் மீண்டும் உறுமினார். அவன்

தனக்குப்பின்னால் நின்றவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு பின்னகர்ந்தான்.

கிருஷ்ணன் பின்னாலிருந்து கைகளை தூக்கியபடி முன்னால் வந்தான். “ஷத்ரியர்களே,

இந்த அவையில் இந்தப்பிராமணன் ஷத்ரியர்களை எதிர்க்கும் வல்லமை கொண்டவன் என்பது

நிறுவப்பட்டுள்ளது. இதுவே இப்போதைக்குப் போதுமானது. இவன் இனிமேல் நாட்டை

வெல்வான் என்றால் அந்நாட்டுக்குரியவனே அதை எதிர்க்கவேண்டும். அதுவே

நூல்முறையாகும்” என்றான்.

“இந்தப்பிராமணன் எப்படி பாஞ்சால இளவரசியைக் கொள்ள முடியும்? இவன்…” என்று

கலிங்கன் கூச்சலிட்டான். “கலிங்கரே, உங்களுக்காகவே நான் போரை நிறுத்தினேன்.

இவன் இந்த அவையில் இத்தனை ஷத்ரியர்களையும் வென்று செல்வான் என்றால் அதன்பின்

பாரதவர்ஷத்தையே வென்றவன் என்றல்லவா அறியப்படுவான்?” என்றான் கிருஷ்ணன்

புன்னகையுடன். ஜராசந்தன் “ஆம், அவனை நான் களத்தில் சந்திக்கிறேன்” என்றான்.

கிருஷ்ணன் வாய்விட்டு நகைத்து “இறந்தவர்கள் மறுபடியும் எழுவார்கள் மகதரே.

அப்போது உங்கள் படைகளும் எழட்டும்” என்றான். ஜராசந்தன் ஒருகணம் கிருஷ்ணனை

நோக்கிவிட்டு திரும்பி “ஆம், ஒரு இரும்புக்கதை அவனுக்காகக் காத்திருக்கிறது

யாதவரே. உமது நண்பனின் தமையனிடம் சொல்லும்” என்று சொன்னபின் இரு கைகளையும்

ஓங்கி அறைந்து ஒலியெழுப்பியபடி திரும்பிச் சென்றான். அவனை தொடர்ந்து சில

ஷத்ரியர்களும் சென்றனர்.

ஷத்ரியர்களின் நடுவே நின்ற தாம்ரலிப்தன் ஏதோ சொல்ல முயல ஜாம்பவதியின் மைந்தனான

சாம்பன் “அவர்கள் யாரென்று இன்னுமா தெரியவில்லை? விலகிச்செல்லுங்கள்…. “

என்றான். ஷத்ரியர்களில் பலர் திகைத்து திரும்பி அவர்களை நோக்கினர். அவர்கள்

திரும்பி கௌரவர்களை நோக்க அவர்கள் பார்வைகளை விலக்கி திரும்பிச்சென்றனர்.

கிருஷ்ணன் புன்னகை செய்தபடி “இனி மணத்தன்னேற்புக்கு எத்தடையும் இல்லை இளவரசி”

என்றான். திரௌபதி சீற்றத்துடன் அவனை நோக்கி தலைதிருப்பி அவன்

சிரிப்பைக்கண்டதும் விழிமுனைகள் சற்று சுருங்க திரும்பிக்கொண்டாள். கிருஷ்ணன்

“துருபதரே, உமது மகள் தகுதியானவர்களை அடைந்திருக்கிறாள்” என்றான். துருபதன்

என்ன சொல்வதென்று அறியாமல் பதைப்புடன் தன் மைந்தர்களை நோக்கினார்.

திருஷ்டத்யும்னன் கைகாட்ட சூதர்கள் இசை எழுப்பினர். சுற்றிலும் விழுந்து

கிடந்த பிணங்கள் நடுவே மங்கல இசை ஒலிக்க அர்ஜுனன் கிருஷ்ணனையும் திரௌபதியையும்

மாறி மாறிப்பார்த்தான். கிருஷ்ணன் அவை நோக்கி திரும்பி

“பாஞ்சாலப்பெருங்குடிகள் வருக. இளவரசி மணம் கொள்ளும் நேரம் இது” என்றான்.

அவர்கள் தயங்கியபடி உடைந்த பீடங்களையும் உதிர்ந்த அம்புகளையும் கடந்து அருகே

வந்தனர். எவரோ ஒரு முதியவர் உரத்த குரலில் வாழ்த்தொலிக்க சிலர்

திருப்பிக்கூவினர்

திரௌபதி எழுந்து கிருஷ்ணனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அர்ஜுனனை அணுகி தன்

கையில் இருந்த மாலையை அர்ஜுனன் கழுத்தில் போட்டாள். அவன் அதைத் தலைகுனிந்து

ஏற்றுக்கொள்ள தன்னை மீட்டுக்கொண்ட துருபதன் திரும்பி அணிச்சேடிகளை அருகே

வரச்சொல்லி கைகாட்டினார். நடுக்கம் விலகாமல் அணுகிய அவர்களின் கைத்தாலங்களில்

இருந்து மலர்களை அள்ளி திரௌபதியின் மேல் போட்டார்.

சத்யஜித்தும் துருபதன் மைந்தர்களும் மலர்களை அள்ளி அவள் மேல் போட்டனர்.

வீரர்களால் உள்ளே கொண்டுசெல்லப்பட்ட அரசியர் இருவரும் திரும்ப வந்தனர்.

பிருஷதி கண்ணீருடன் ஓடிவந்து மலர்களை அள்ளி மகள் மேல் போட்டு இடறிய குரலில்

“நிறைமங்கலம் கொள்க! வெற்றியும் புகழும் பெறுக! விண்ணில் ஒளிமீனாக அமைக” என்று

வாழ்த்தினாள். அதுவரை கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்த மக்கள் முன்வந்து

வாழ்த்துக்களைக் கூவினர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெளியே முரசொலிகளும்

சேர்ந்து செவி நிறைத்தன.

ஆனால் அவர்கள் அனைவரும் ஊக்கமிழ்ந்திருந்தனர். அங்கு நிகழ்பவை தங்களுக்கு

முற்றிலும் அயலானவை என அறிந்தவர்கள் போல. அவற்றில் தாங்கள் ஒரு பொருட்டெனவே

இல்லை என உணர்ந்தவர்கள் போல.ஒவ்வொருவரும் வீடு திரும்பவே விழைந்தனர். அவர்கள்

நன்கறிந்த வீடு. அவர்களை அறிந்து அணைத்து உள்ளே புதைத்துக்கொள்ளும் வீடு.

அவர்களுக்கென இருக்கும் இடம்

தருமனும் பீமனும் அர்ஜுனனின் இருபக்கமும் நிற்க பின்னால் நகுலனும் சகதேவனும்

நின்றனர். கழுத்தில் விழுந்த மாலையை எடுத்து மீண்டும் திரௌபதியின் கழுத்தில்

போட்டான் அர்ஜுனன். அது அவள் கொண்டையில் சிக்க பிருஷதி முடியை எடுத்து

சரிசெய்தாள். கலைந்த சரப்பொளியை சீர் செய்தபடி திரௌபதி அர்ஜுனன் முகத்தை

நோக்கினாள். அவன் முகம் ஏதோ ஐயம் கொண்டதுபோல, எவ்வண்ணமேனும் அங்கிருந்து செல்ல

விழைபவன் போலத் தோன்றியது.

திரௌபதி குருதியும் மலரிதழ்களும் ஒட்டிய முகத்துடன் திரும்பி கிருஷ்ணனை நோக்க

அவன் புன்னகை செய்து “இளவரசி, இன்றுடன் அரசியாகிறீர்கள். எட்டு மங்கலங்களும்

திகழ்க!” என்று வாழ்த்தினான்.

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 1

புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை சின் முத்திரை பிடித்து வைத்துக்கொண்டு கண்களை மூடி எண்ணங்களின் ஒழுக்கை நோக்கி அமர்ந்திருந்தார். முரசொலி அப்போதும் கேட்டுக்கொண்டிருந்தது. வரும் வரும் வரும் என அது சொல்வதுபோல. உடைந்து சிதறிப்பெருகும் எண்ணங்கள். அவை மீளமீள ஒன்றையே சென்று தொட்டுக்கொண்டிருந்தன.

அவர் தன்னை கலைத்துக்கொண்டு கண்களைத் திறந்தபோது முரசொலி இது இது இது என சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டார். காவல்மாட முரசுகள் எப்போதோ ஒலித்து ஓய்ந்துவிட்டிருந்தன. அஸ்தினபுரியின் வெவ்வேறு முனைகளில் ஆலயங்களில் மணிகள் முழங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையின் பல இடங்களில் திரைச்சீலைகள் விடிகாலைக் காற்றில் அலையடித்தன. ஓரிரு சாளரக்கதவுகள் முனகியபடி அசைந்தன. எங்கோ எவரோ ஏதோ கூவ குதிரைக்குளம்பொலி ஒன்று துடிதாளமென கடந்துசென்றது.

அவர் எழுந்துகொண்டு ஓலைப்பெட்டியைத் திறந்து முந்தையநாள் வரை பறவைகள் வழியாக வந்திருந்த ஓலைகளை சீர்ப்படுத்தி வாசித்தார். எட்டு வெவ்வேறு ஒற்றர்கள் அளித்த செய்திகள். பின்னர் அவற்றை அடுக்கிக் கட்டி பெட்டிக்குள் வைத்து பூட்டியபின் எழுந்து வெளியேவந்தார். அவரது காலடிகளுக்காக காத்து வெளியே நின்றிருந்த சேவகன் தலைவணங்கினான். “நீராட்டறை சித்தமாகிவிட்டதா?” என்று அவர் கேட்டார். அவன் தலையசைத்தான்.

அவர் இடைநாழியில் நடக்கையில் சேவகன் “சிசிரர் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றான். பாஞ்சாலத்தின் தலைமை ஒற்றன். விதுரர் தலையசைத்து சில அடிகள் வைத்தபின் ”நீராட்டறைக்கு வரச்சொல்” என்றார். சேவகன் முகத்தில் சற்று தயக்கமும் பின் ஒப்புதலும் தெரிந்தன. அவர் பெருமூச்சுடன் இடைநாழியில் அறைவாயில்கள் வழியாக விழுந்துகிடந்த செவ்வொளிப்பட்டைகள் வழியாக கனன்று கனன்று நடந்தார். அவரது காலடியோசைகளை அரண்மனையின் தொலைதூரச்சுவர்கள் திருப்பி உச்சரித்தன.

நீராட்டறைச்சேவகன் அவரை வணங்கி வரவேற்று அழைத்துச்சென்றான். வெந்நீர்க்கலங்கள் ஆவி எழ ஒருங்கியிருந்தன. மரத்தாலத்தில் லேபனங்களும் தைலங்களும் நறுமணப்பொடிகளும் சித்தமாக இருந்தன. நீராட்டறைச்சேவகன் அவர் ஆடைகளைக் களைந்தான். அவர் பீடத்தில் அமர்ந்ததும் தலையில் சிரோசூர்ணத்தைப் பரப்பி விரல்களால் பிசைந்து ஒரு மெல்லிய துணியால் சுருட்டிக் கட்டி கொண்டை போல ஆக்கினான்.

அவன் அவரது காலடியில் அமர்ந்து தைலத்தை உடலெங்கும் பூசத்தொடங்கியபோது வாசலில் சிசிரன் வந்து நின்றான். சேவகன் தலைவணங்கி வெளியேறினான். நீராட்டறைச் சேவகன் தைலத்தை தேய்த்துக்கொண்டு குனிந்திருக்க சிசிரன் அருகே வந்து நின்று “அனைத்துச்செய்திகளையும் தொகுத்து அறிந்துவந்திருக்கிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் தலையசைத்தார்.

“அவையில் நிகழ்ந்ததை முன்னரே கனகரே வந்து சொல்லியிருப்பார்” என்று சிசிரன் சொன்னான். “அவையில் யாதவகிருஷ்ணன் ஒரு சிறிய நாடகத்தை நிகழ்த்தினார். மணமண்டபப் பூசல் வழியாக அவர்கள் பாண்டவர்கள் என்பது அனைத்து ஷத்ரியர்களுக்கும் ஐயமில்லாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே அது ஜராசந்தருக்கும் சல்லியருக்கும் தெரிந்திருந்தது. அவையிலிருந்த தொலைதூர தேசத்து அரசர்கள் பாண்டவர்களை பார்த்தவர்கள் அல்ல. அவையில் அர்ஜுனனின் வில்திறத்தையும் பீமனின் தோள்திறத்தையும் அவர்கள் நேரில் கண்டனர். பாண்டவர்களின் ஒற்றுமையும் அங்கே வெளிப்பட்டது.”

“அது பாரதவர்ஷத்தின் அரசர்களனைவருக்கும் தெளிவான செய்தியாக வெளிப்பட்டது. அஸ்தினபுரியின் மாவீரர்களான பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது கங்காவர்த்தத்தின் பழைமையான ஷத்ரியகுலத்தின் உறவினர். அவர்களுடன் பன்னிரு தளபதிகள் தலைமை ஏற்கும் பெரும்படை இன்று உள்ளது. ஷத்ரியர் உண்மையிலேயே திகைப்பும் அச்சமும் அடைந்துவிட்டனர். அவைக்களம் நீங்கியபோது அவர்கள் கூச்சலிட்டு பேசிக்கொண்டும் கிளர்ச்சிகொண்ட உடலசைவுகளுடனும் சென்றார்கள்” சிசிரன் தொடர்ந்தான்.

வைதிகர்கள் பாண்டவர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பாண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தங்களில் ஒருவனின் வெற்றி என்றே அதை கருதினர். திரௌபதியை கைபற்றி அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் அவர்கள் நடுவே நின்றபோது முதியவைதிகர் மஞ்சளரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர். வேள்வியன்னம் கொண்டுவந்து ஊட்டினர். அவர்கள் வைதிகர்களின் வாயில் வழியாக வெளியேறி அகன்றனர்.

துருபதனின் ஒற்றர்கள் அவர்களை தொடர்ந்தனர். அவர்கள் ஐவரும் வைதிகர் சூழ காம்பில்யத்தின் எல்லைக்கு அப்பால் கங்கைக் கரையோரமாக இருந்த அவர்களின் குடிலுக்கு சென்றனர். அது புறவைதிகர்களின் சேரி. சேரியின் எல்லையில் இருந்து குயவர்களின் குடில்கள் தொடங்கி கங்கைக்கரைச் சதுப்பை நோக்கி இறங்குகின்றன. குயவர் வரிசையில்தான் அவர்கள் தங்களுக்கென கட்டிக்கொண்ட சிறிய குடில் இருந்தது.

வைதிகர்களின் மூன்று சிற்றாலயங்களில் பூசனை முடித்து அவர்கள் அளித்த அன்னவிருந்தை அருந்தி அவர்கள் சேரியை அணுகும்போது இருட்டிவிட்டது. தேர்ப்பெருஞ்சாலையிலேயே வைதிகரிடமிருந்து பிரிந்து அவர்கள் கிளைச்சாலைக்குள் நுழைந்துவிட்டனர். அந்நேரம் வைதிகர்தெருவில் எவருமில்லை. கங்கைக்கரையின் வேள்விச்சடங்குகளுக்கும் ஆலயப்பூசனைகளுக்கும் கொடைபெறுவதற்கும் சென்றிருந்தனர். குயவர் தெருக்களில் மாலையில் எவரும் மதுமயக்கில்லாமல் இருப்பதில்லை.

அவர்கள் வருவதை முன்னரே குந்திதேவி அறிந்திருந்தாள் என்று தோன்றுகிறது. குடிலை அவர்கள் நெருங்கியதுமே கையில் ஐந்து மங்கலங்கள் கொண்ட மண்தாலத்துடன் அவள் வெளியே வந்து திரௌபதியை எதிர்கொண்டாள். அகல்சுடர் கங்கைக்காற்றில் அணையாமலிருக்க தன்னை நிறுத்தி மறைத்துக்கொண்டு உடலை கோணலாக்கி அருகே வந்து அவள் நின்றபோது அர்ஜுனனிடம் திரௌபதியின் கையைப்பற்றிக்கொண்டு முன்னால் சென்று அன்னையை வணங்கும்படி தருமன் சொன்னான்.

”ஆனால் குந்திதேவி அவர்கள் ஐவரும் சேர்ந்து நின்று நடுவே திரௌபதியை நிறுத்தி தன்னை வணங்கும்படி சொன்னார்கள்” என்று சிசிரன் சொன்னதும் தலைகுனிந்து லேபனப் பூச்சை ஏற்றுக்கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்தார். “ஆம், அமைச்சரே. அது தருமனை திகைக்கச்செய்தது. அவர் ஏதோ சொல்ல முயல குந்திதேவி ஒற்றைச் சொல்லால் அடக்கினார். நடுவே திரௌபதி நின்றுகொள்ள அவரது வலப்பக்கம் தருமனும் இடப்பக்கம் அர்ஜுனனும் நின்றனர்.”

விதுரர் ”தருமனுக்கு இடப்பக்கம் திரௌபதி நின்றாளா?” என்றார். “ஆம், அமைச்சரே” என்றான் சிசிரன். “ம்ம்” என விதுரர் தலையை அசைத்தார். “திரௌபதியின் இருபக்கங்களிலாக பீமனும் நகுலனும் சகதேவனும் நின்றனர். ஐவருக்கும் சேர்த்து குந்திதேவி சுடராட்டு செய்து மங்கலம் தந்து வரவேற்றார்கள். அறுவரிடமும் தன்னை ஒருமித்து கால்தொட்டு வணங்கும்படி ஆணையிட்டார்கள். அவர்கள் அவ்வண்னமே செய்தபோது மஞ்சள்நீரையும் அவர்கள் சென்னியில் தெளித்து மஞ்சளரிசியும் மலரும் தூவி வாழ்த்தினார்கள்.”

“அவர்கள் உள்ளே சென்றனர். சற்று நேரம் கழித்து நமது ஒற்றர்களால் அமர்த்தப்பட்டிருந்த முதுபார்ப்பனியை குடிலுக்குள் அனுப்பினோம். ஆனால் அப்போது அவர்கள் பேசிமுடித்துவிட்டிருந்தனர். அவளைக் கண்டதும் குந்திதேவி உணவை சற்று கழித்து கொண்டுவந்தால் போதும் என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்றான் சிசிரன். “தருமனின் முகம் சிவந்து கண்கள் கலங்கி குரல் உடைந்திருந்ததாக முதுபார்ப்பனி சொன்னாள். பீமன் தலைகுனிந்து அப்பால் அமர்ந்திருக்க அர்ஜுனன் கைகளை கட்டிக்கொண்டு கூரியவிழிகளால் நோக்கியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தார். சகதேவனும் நகுலனும் சற்று அப்பால் தரையில் அமர்ந்திருந்தனர்.”

“அவள்?” என்றார் விதுரர். “பாஞ்சால இளவரசி அங்கே நிகழ்வனவற்றுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாதது போல் நின்றிருந்தார்கள். அவரது முகத்திலோ இதழ்களிலோ இல்லாவிட்டாலும் விழிகளுக்குள் ஒரு மென்புன்னகை இருந்தது என்று முதுபார்ப்பனி சொன்னாள்.” விதுரர் தலையசைத்து பின் பெருமூச்சுடன் எழுந்துகொண்டார். அவர் உடலை நீவிக்கொண்டிருந்த நீராட்டறைச் சேவகன் எழுந்து சென்று வெந்நீரை அளாவினான்.

வெந்நீராட்டுக்கான வெண்கல இருக்கையில் அமர்ந்தபடி விதுரர் “அவள் ஏதேனும் சொன்னாளா?” என்று கேட்டார். சிசிரன் “அதை முதுபார்ப்பனி கேட்க முடியவில்லை” என்றான். ‘நான் அதை கேட்கவில்லை. அவள் பேசிய ஒலியாவது காதில் விழுந்ததா என்றேன்” என்றார் விதுரர். சிசிரன் “இல்லை, அவர் ஒரு சொல்லும் சொல்லவில்லை, அவர் உதடுகள் பிரிந்ததாகவே தெரியவில்லை என்றே முதுபார்ப்பனி சொன்னாள்” என்றான்.

விதுரரின் உள்ளங்கால் மேல் வெந்நீரை மெல்ல ஊற்றி அவரது கால்விரல்களை மெல்ல நீவி இழுத்தான் நீராட்டறைச் சேவகன். உள்ளங்கால் குழிவில் கைகளால் அழுத்தினான். குதிகாலுக்குப்பின் அழுத்திக்குவித்தான். விதுரர் நினைத்துக்கொண்டு நகைத்தார். நீராட்டறைச் சேவகன் அவரது குதிகால்களில் வெந்நீரை விட்டுக் கொண்டிருப்பதை கூர்ந்து நோக்குபவர் போல விழியசையாமலிருந்தார். பின்னர் திரும்பாமலேயே “குந்தி முன்னதாக எவரையேனும் சந்தித்தார்களா?” என்றார்.

“ஆம், பாண்டவர்கள் காம்பில்யத்தின் அரண்மனைக்குச் சென்றபோது அவர்கள் அருகே இருந்த சப்தவனம் என்னும் சோலைக்கு சென்றார்கள். அது பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் ஒன்றான துர்வாசகுலத்திற்கு உரியது. அங்கே மாமுனிவர் துர்வாசர் வந்து தங்கியிருந்தார். துர்வாசரிடம் குந்திதேவி நீண்ட உரையாடலில் ஈடுபட்டார். பேசியதென்ன என்று அறிய முடியவில்லை. ஆனால் அப்பேச்சு மைந்தர்களைப்பற்றியதாக இருக்கலாமென்று அவரது விழிகளில் இருந்து தெரிந்தது என நம் ஒற்றன் சொன்னான்.”

விதுரர் அவன் மேலே சொல்வதற்காக காத்திருந்தார். “அன்றிரவு முழுக்க அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறுகுடிலில் மரவுரிப்படுக்கையில் திரௌபதி நன்றாகத் துயின்றார். நகுலனும் சகதேவனும் வெளியே சென்று அருகே இருந்த இன்னொரு வைதிகனின் இல்லத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டனர். பீமன் சற்று நேரத்தில் வெளியே வந்து கங்கைக்கரையில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த அன்னசாலைக்குச் சென்று எஞ்சிய உணவை முழுக்க கேட்டு வாங்கி உண்டுவிட்டு அங்கேயே படுத்துத் துயின்றார்” சிசிரன் தொடர்ந்தான்.

அர்ஜுனன் வெளியே வந்து குடிலின் திண்ணையில் துயிலாது இரவெல்லாம் காவலிருக்க உள்ளே அகல்விளக்கொளியில் தருமனும் குந்திதேவியும் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். இரவெல்லாம் அப்பேச்சு நீண்டது. அவ்வப்போது தருமனின் குரல் துயரத்துடனும் சினத்துடனும் எழுந்தும் உடைந்தும் வெளிப்பட்டது. குந்திதேவி மெல்லிய குரலில் பேசினாலும் சிலசமயங்களில் அவர்களின் குரலும் மேலெழுந்து ஒலித்தது. இடையே நீண்ட சொல்லின்மை இருவரிலும் குடியேற அவர்கள் சுடரையோ இருளையோ நோக்கியபடி அசைவழிந்து அமர்ந்திருந்தனர். மெல்லிய இயல்பான உடலசைவு ஒருவரில் நிகழ்கையில் மற்றவர் கலைந்து ஏறிட்டு நோக்க அந்நோக்கில் இருந்து சொல்பிறக்க மீண்டும் பேசத் தொடங்கினர்.

காலையில் குந்தியும் திரௌபதியும் அர்ஜுனன் துணையுடன் கங்கையில் நீராடி மீண்டனர். நகுலனும் சகதேவனும் பீமனும் நீராடிவிட்டு தனித்தனியாக வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. நன்கு விடிந்ததும் தனிப்புரவியில் திருஷ்டத்யும்னன் குடில்முற்றத்தில் வந்திறங்கினார். அர்ஜுனன் எழுந்து அவரை வரவேற்றார். அவர் அர்ஜுனனுக்கு முகமன் சொன்னபின் திண்ணையில் அமர்ந்துகொள்ள உள்ளிருந்து திரௌபதி வந்து திருஷ்டத்யும்னனுக்கு முகமன் சொன்னார். அவர் ஓரிரு சொற்களில் ஏதோ கேட்க திரௌபதி புன்னகையுடன் மறுமொழி சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

உள்ளிருந்து குந்திதேவி வந்தபோது திருஷ்டத்யும்னன் எழுந்து வணங்கினார். அவர்கள் முறையான முகமனுக்கும் வணக்கத்திற்கும்பின் திண்ணையின் வலதுமேட்டில் ஈச்சம்பாய் மேல் அமர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் பின்னால் தருமன் அமர அர்ஜுனன் சுவரில் சாய்ந்து நின்றார். பிற மூவரும் ஓரிரு சொற்களில் விடைபெற்று விலகிச் சென்றனர். பீமன் தலைகுனிந்து கங்கைக் கரையோரமாகச் செல்ல இளையோர் இருவரும் தங்களுக்குள் பேசியபடி சென்று ஒரு ஆலமரத்தடியில் நின்றுகொண்டனர். ஆலமரத்தின் உலர்ந்த பிசினை எடுத்து இருவரும் வாயிலிட்டு மென்றனர்.

விதுரர் புன்னகைசெய்தார். சிசிரன் அதை நோக்கி தானும் புன்னகைசெய்து “அவர்களின் பேச்சை கேட்க முடியவில்லை. அங்கே நானே ஒரு குயவனாக தொலைவில் நின்று நோக்கினேன். அவர்கள் பேசிக்கொண்டதை வைத்துப் பார்த்தால் அவர்கள் பேசிக்கொண்டவை திருஷ்டத்யும்னனுக்கு முன்னரே தெரியும் என்று தோன்றியது. அவர் முகவாயை கையால் வருடியபடி தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தார். மாற்றுச் சொல் எதையும் கேட்க விழையாத உறுதியுடன் குந்திதேவி பேச அப்பால் தருமன் தன் தலையை கையால் ஏந்தியபடி குனிந்து அமர்ந்திருந்தார்” என்று தொடர்ந்தான்.

திருஷ்டத்யும்னன் நெடுநேரம் கழித்து எழுந்து தலைவணங்கினார். குந்திதேவி எழுந்து மீண்டும் இறுதியாக ஏதோ சொன்னபடி உள்ளே செல்ல திருஷ்டத்யும்னன் திரும்ப அமர்ந்துகொண்டு தருமனை நோக்கினார். அவர் தலைதிருப்பவில்லை. திருஷ்டத்யும்னன் அர்ஜுனனை நோக்கி ஏதோ கேட்க அவர் தமையனை நோக்கி கைசுட்டினார். திருஷ்டத்யும்னன் தருமனிடம் ஏதோ கேட்க தருமன் தன் தலையை கைகளால் வருடிக்கொண்டு எழுந்து நடந்து விலகினார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் திரௌபதியை சந்திக்க விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் உள்ளே சென்றதும் திரௌபதி வந்து குந்தி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துகொண்டார்.

இருவரும் முகத்தோடு முகம் நோக்காமல் பேசிக்கொண்டனர். திருஷ்டத்யும்னன் தயக்கத்துடன் விழிகளை அப்பால் இருந்த குடிலையும் அதனருகே நின்ற சாலமரத்தையும் நோக்கியபடி பேச தலைகுனிந்து திரௌபதி மறுமொழி சொன்னார். ஏதோ சொன்னபோது திருஷ்டத்யும்னன் விரைந்து திரும்ப இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. திரௌபதி புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டு ஓரிரு சொற்களை சொன்னபின் எழுந்துகொண்டார். விடைபெற்றுச்செல்ல விழைவதாக சொல்லியிருக்கலாம். அர்ஜுனன் வெளியே வந்து கைதட்டி தன் உடன்பிறந்தவர்களை அழைத்தார். அவர்கள் வந்தபோது குந்திதேவியும் உள்ளிருந்து வந்தார்கள். அவர் அவர்களை வணங்கி விடைபெற்று குதிரையில் ஏறிக்கொண்டார்.

அவர் சென்றதும் மீண்டும் பாண்டவர்கள் கலைந்து நான்குபக்கமும் செல்லத் திரும்பியபோது திரௌபதி இளையபாண்டவர்களிடம் அவர்கள் வாயிலிட்டு மென்றுகொண்டிருந்ததை சுட்டிக்காட்டி துப்பும்படி ஆணையிட்டாள். இருவரும் துப்பிவிட்டு நாணி தலைகுனிந்தார்கள். அவள் புன்னகையுடன் அவர்களிடம் உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு அவர்களுடன் தானும் சென்றாள். குந்தி தேவி புன்னகையுடன் அவள் சென்ற திசையை நோக்கினாள். தருமனும் அவள் சென்றதை நோக்கிவிட்டு அன்னையை நோக்காமல் திரும்பி அகன்றார். பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்வதையும் அர்ஜுனன் திரும்ப புன்னகைசெய்வதையும் கண்டேன்.

விதுரர் சிரித்துக்கொண்டு தன் தலைமேல் இருந்து முகத்தில் வழிந்த நீரை கையால் துடைத்தபின் “பாஞ்சால இளவரசர் எங்கே சென்றார்?” என்றார். “அவர் நேராக சென்றதே துர்வாசரை காண்பதற்குத்தான்.” விதுரர் தலையசைத்தார். நீராட்டறைச் சேவகன் அவர் மேல் வெந்நீரை ஊற்றி தலையை விரல்விட்டு நீவி கழுவினான். சிசிரன் காத்திருந்தான். விதுரர் போதும் என்று கைகாட்டினார். அவர் குழலை நீராட்டறைச் சேவகன் மரவுரியால் துடைக்கத் தொடங்கியதும் சிசிரன் “அரண்மனை ஒற்றர்கள் அளித்த செய்திகள் நேராகவே வந்திருக்கும்” என்றான். ஆம் என தலையசைத்து அவன் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார்.

உடல் துவட்டி நறுமணத்தைலப்பூச்சும் சுண்ணப்பூச்சும் முடித்து வெளிவரும் வரை அவர் ஏதும் பேசவில்லை. ஆடைமாற்றிக் கொண்டிருக்கையில் அறைக்குள் வந்த சுருதை கதவருகே நின்று “உணவருந்திவிட்டுத்தானே?” என்றாள். “ஆம்” என்றார் விதுரர். அவள் ஓரிரு கணங்கள் தயங்கிவிட்டு “அரசரை சந்திக்கவிருக்கிறீர்களா?” என்றாள். விதுரர் “ஆம்” என்றார். அவள் ஒரு அடி முன்னால் வந்து “இளவரசர்கள் இன்று மீள்கிறார்களோ?” என்றாள்.

விதுரர் தன்னை அறியாமலேயே “எந்த இளவரசர்கள்?” என்று கேட்டுவிட்டு சிரித்துவிட்டார். “பேசவைத்துவிடுவாய்... நான் தவறிவிட்டேன்” என்றார். “நான் ஏதும் கேட்கவில்லை. வெறுமனே பேசலாமே என்று கேட்டேன். எனக்கென்ன?” என்று அவள் திரும்ப அவர் பாய்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டார். “என்ன இது? நான் உன்னிடம் கெஞ்சவேண்டுமா என்ன?” சுருதை “பின் என்ன? நான் உங்களிடம் அரசியல் பேசவா வந்தேன்?” என்றாள்.

விதுரர் அவளை இடைவளைத்து அணைத்து முகத்தை நோக்கி “அரசியல் பேசத்தான் வந்தாய்... இல்லை என்று சொல்!” என்றார். அவள் தன் விழிகளைச் சரித்து புன்னகையில் கன்னங்கள் ஒளிபெற “ஆமாம், அதற்குத்தான் வந்தேன்... என்ன அதற்கு?” என்றாள். “ஒன்றும் இல்லை யாதவ அரசி. தாங்கள் அரசியல் செய்திகளை அறியாமலிருந்தால்தான் வியப்பேன்” என்றார். “கேலி தேவையில்லை. விருப்பமிருந்தால் சொல்லுங்கள்” என அவள் திமிற அவர் அவளை இறுக்கி அவள் கன்னங்களில் முத்தமிட்டார்.

அவள் மெல்ல அவருடன் இயைந்தபடி “பாண்டவர்கள் இறக்கவில்லை என்பது இப்போது அரசருக்கு தெரிந்திருக்கும் அல்லவா?” என்றாள். “ஆம், அது நேற்றே தெரிந்துவிட்டது. அவர் ஐயங்களில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். நான் செய்திகளை முழுதறிந்தபின் சென்று சந்திக்கலாமென்று எண்ணினேன்” என்றார் விதுரர். “எப்படியென்றாலும் எதிர்கொள்ளவேண்டிய நிலை அல்லவா அது?” என்றாள் சுருதை. ”அரக்குமாளிகையை கௌரவர்கள் அமைத்ததை இனிமேல் எப்படி மறைக்கமுடியும்?”

“மறைத்தாகவேண்டும்” என்றார் விதுரர். “முடிந்தவரை மறைக்காமல் எனக்கு வேறுவழி இல்லை. அரசர் அது எரிநிகழ்வு என்றே எண்ணியிருக்கிறார். அதில் அவர்கள் எப்படியோ பிழைத்து இத்தனைநாள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள் என நினைக்கிறார். அப்படி அவர்கள் ஒளிந்து வாழ்ந்தமைக்கு கௌரவர் வழிவகுத்திருப்பார்களோ என்றே ஐயப்படுகிறார். அதற்கே அவர் கொதித்துக்கொண்டிருக்கிறார் என்றார்கள்.”

சுருதை அவரை தழுவி இறுக்கி உடனே விலகி “உணவருந்த வாருங்கள்” என்றாள். அவர் சால்வையை எடுத்து தோளிலிட்டபடி “அவர் அறிந்ததைக்கூட காந்தாரி அறிந்திருக்க மாட்டார். அவர் அறிந்தால் குருகுலத்தையே தீச்சொல்லால் பொசுக்குவார்” என்றபடி அவள் பின் நடந்தார். சுருதை சில கணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவர்கள் இருவரும் அறிவதே நல்லது” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று விதுரர் சினந்தார்.

சுருதை “ஆம், இது எளியசெய்தி அல்ல. அஸ்தினபுரியில் இப்படி ஒரு வஞ்சம் இதுவரை நிகழ்ந்ததில்லை. நீங்கள் அதைச் சொன்ன நாள் முதல் ஒருநாள்கூட அதை எண்ணாமல் நான் துயின்றதில்லை. ஒவ்வொரு முறை அதை எண்ணும் போதும் என் உடல் துடிக்கிறது. சூதில் உடன்பிறந்தவரைக் கொல்வதென்பது கீழ்மை. அதிலும் அன்னையைக் கொல்ல அனல் ஏந்துவதென்பது கீழோர் நாணும் கீழ்மை. அதைச்செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது” என்றாள்.

“எளிய முறையில் நீ சொல்வதெல்லாம் உண்மை. ஆனால் அது எளிதாக முடியாது. மைந்தர் நூற்றுவரையும் சகுனியையும் கணிகரையும் கழுவிலேற்றவே அரசர் முடிவெடுப்பார். ஐயமே இல்லை. அவரது பெருஞ்சினத்தையும் நான் அறிவேன். அதற்குப்பின் அவரும் காந்தார அரசியரும் உயிர்சுமக்க மாட்டார்கள். உறுதி” என்றார் விதுரர். சுருதை “ஆம், அதையும் நான் சிந்தித்தேன். ஆனால் அப்படி நிகழுமென்றால் அதுவும் இயல்பென்றே கொள்ளவேண்டும். இங்கே நீதி திகழ்கிறது என பாரதவர்ஷம் உணரட்டுமே” என்றாள்.

விதுரர் “இல்லை, நான் மக்களை அறிவேன். மக்கள் கருத்து என்பது காற்றுக்கேற்ப திசைமாறும் மழை. அரக்குமாளிகைச் செய்தி அறியவருமென்றால் பாண்டவர்கள் மேல் கனிவும் கௌரவர்மேல் பெரும்சினமும் கொள்ளும் இந்நாட்டு மக்கள் கௌரவர்கள் கழுவேற்றப்பட்டால் உளம் மாறிவிடுவார்கள். சிலநாட்களிலேயே கௌரவர்கள் மூதாதைதெய்வங்களாக பலிபெற்று கங்கைக்கரையோரம் கோயில் கொள்வார்கள். அவர்களைக் கொன்ற பழி பாண்டவர்களை வந்தடையும். இழிசொல் படிந்த நாடும் முடியும்தான் பாண்டவர்களிடம் வந்துசேரும்” என்றார்.

“அதற்காக அவர்களை விட்டுவிடுவதா?” என்றாள் சுருதை சினத்தில் சிவந்த முகத்துடன். “வேறு வழியே இல்லை” என்றார் விதுரர். “என்ன செய்யவிருக்கிறீர்கள்?” விதுரர் பெருமூச்சு விட்டு “அறியேன். இரவெல்லாம் என் நெஞ்சு அதை எண்ணியே உழன்றது. இன்னும் எந்த வழியும் திறக்கவில்லை” என்றார். சுருதை “பாவத்தை ஒளிப்பவர்களும் பாவமே செய்கிறார்கள்” என சீறும் குரலில் சொன்னாள்.

அவர் உணவருந்த அமர்ந்தபோது பணிப்பெண்ணிடமிருந்து உணவைப் பெற்று அவளே பரிமாற வந்தாள். அவர் அவளை நிமிர்ந்து நோக்கி “சரி, என்ன சினம்? போதும்” என்றார். அவள் உதட்டை இறுக்கியபடி அக்காரமிட்டு அவித்த கிழங்குகளையும் தேன்கலந்த தினையுருண்டைகளையும் எடுத்து வைத்தாள். “சரி, விடு அதை” என்றார் விதுரர். அவள் சற்றே புன்னகை செய்து “சரி” என்றாள்.

விதுரர் “இனி உன் நெஞ்சில் துடித்துக்கொண்டிருக்கும் அடுத்த வினாவை எழுப்பு” என்றார். “என்ன வினா?” என்றாள் சுருதை. “திரௌபதியைப் பற்றி” என்று அவள் கண்களை நோக்கி புன்னகைத்தபடி அவர் சொன்னார். அவள் பார்வையை விலக்கியபடி “அவளைப்பற்றி எனக்கென்ன?” என்றாள். “ஒன்றுமில்லையா?” என்றார் விதுரர். சுருதை “ஏன்? நான் என்ன கேட்பேன்?” என்றாள். “நீ கேட்க விழைகிறாய்” என்றார் விதுரர். அவள் சினத்துடன் “இல்லை” என்றாள். “சரி, கேட்கமாட்டாய் அல்லவா? உறுதியாக கேட்கமாட்டாய் அல்லவா?”

சுருதை மேலும் சினத்துடன் “கேட்பேன். ஏன் கேட்டால் என்ன?” என்றாள். விதுரர் சிரித்து, ‘சரி கேள்” என்றார். அவளும் அடக்கமாட்டாமல் சிரித்து வாயை கைகளால் பொத்திக்கொண்டு அருகே பீடத்தில் அமர்ந்துவிட்டாள். “ஆம், கேட்கவேண்டும். நேற்றுதான் எனக்கு செய்தி வந்தது. அதுமுதல் உள்ளம் நிலைகொள்ளவில்லை.” விதுரர் நகைத்து “இந்த அரண்மனையில் செய்தியறிந்த எந்தப்பெண்ணுக்கும் அகம் நிலைகொள்ளப்போவதில்லை” என்றார்.

“ஏன்?” என்று அவள் முகத்தில் சிரிப்பு இருக்க கண்களைச் சுருக்கியபடி கேட்டாள். ”தாங்கள் தவறவிட்ட எஞ்சிய நால்வர் எவரென எல்லா பெண்களும் பட்டியலிடுகிறார்கள் என்று அறிந்தேன்.” சுருதை சினந்து “என்ன பேச்சு இது... மூடர்களைப்போல” என்று சொல்ல விதுரர் உரக்கச்சிரித்தார். “போதும்... மூடத்தனமாகப் பேசி கீழிறங்கவேண்டாம்” என்றாள் சுருதை. “சரி,சொல்” என்றார் விதுரர்.

“ஐவரையும் மணக்க விரும்புவதாக அவளே சொன்னாளாமே” என்றாள் சுருதை. விதுரர் சிரித்தபடி “சரிதான் அதற்குள் பெண்கள் இப்படி வந்துவிட்டீர்களா?” என்றாள். சுருதை சற்றே சினந்து “நான் சொல்லவில்லை. செய்திகள் அப்படி சொல்கின்றன. அவர்களின் பாஞ்சாலக்குடிகளில் அரசியர் ஐந்துகுலங்களில் இருந்து ஐந்து கணவரை மணக்கும் முறை இருந்ததாமே?” என்றாள். ”ஆம், ஆனால் உனது யாதவர்குடிகளிலும் அவ்வழக்கம் இருந்ததே!”

சுருதை சீற்றத்துடன் “யார் சொன்னது? ஐந்துபேரை எல்லாம் மணப்பதில்லை” என்றாள். “ஆம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவரை மணப்பதுண்டு...” என்றார் விதுரர். சுருதை “அது இப்போது எதற்கு? இப்போது எவரும் அதை செய்வதில்லை. நெடுங்காலம் முன்பு நடந்தவை அவை. இவர்களின் நிலத்தில் இப்போதும் பெண்கள் பல ஆடவரை மணக்கிறார்கள். உடன்பிறந்தார் அனைவருக்கும் ஒரே மனைவி என்பது அங்கே எல்லா முறைமைகளாலும் ஏற்கப்பட்டிருக்கிறது” என்றாள்.

“சரி” என்றார் விதுரர் சுருதையின் சினத்தை சற்று வியப்புடன் நோக்கியபடி. “ஆகவே அவளே கோரியிருக்கிறாள் என்கிறார்கள். ஏனென்றால் அவள் விரும்புவது தேவயானியின் மணிமுடியை, அஸ்தினபுரியின் அரியணையை. வென்றவன் இளையோன். அவன் மனைவியாக இங்கே வந்தால் அவள் அரசி அல்ல. தருமனின் துணைவியே அஸ்தினபுரிக்கு பட்டத்தரசியாக ஆகமுடியும். அதை அறிந்துதான் இதை செய்திருக்கிறாள்.” விதுரர் மெல்லிய புன்னகையுடன் “சரி, அப்படியென்றால்கூட அவள் தருமனையும் அர்ஜுனனையும் மட்டும் மணந்தால் போதுமே. எதற்கு ஐவர்?” என்றார்.

“அங்கேதான் அவளுடைய மதியூகம் உள்ளது. மூத்தவரையும் மூன்றாமவரையும் மட்டும் எப்படி மணக்க முடியும்? நடுவே இருப்பவர் பீமசேனர். அவரது பெருவல்லமை இல்லாமல் பாண்டவர்கள் எங்கும் வெல்லமுடியாது. மேலும் அவளுக்கு பீமசேனரை முன்னதாகவே தெரியும். அவர்கள் நடுவே உறவும் இருந்திருக்கிறது.”

விதுரர் கண்களில் சிரிப்புடன் “அப்படியா?” என்றார். “சிரிக்கவேண்டாம். உங்கள் ஒற்றர்கள்தான் என்னிடமும் சொன்னார்கள். மணநிகழ்வுக்கு முந்தையநாள் காம்பில்யத்தின் தெருக்களில் அவளை வைத்து அவர் ரதத்தை தன் கைகளாலேயே இழுத்துச் சென்றிருக்கிறார். அதை நகரமே கண்டிருக்கிறது.” விதுரர் “சரி அப்படியென்றால்கூட ஏன் ஐந்துபேர்?” என்றார். ”இதென்ன மூடக்கேள்வி. மூன்றுபேரை எப்படி அவள் மணக்க முடியும்? ஐந்துபேரை மணக்க அவளுடைய குலமுறை வழிகாட்டல் உள்ளது. ஆகவே அதை சொல்லியிருப்பாள்.”

“அவள் சொல்வதை இவர்கள் ஏன் ஏற்கவேண்டும்?” என்றார் விதுரர் எழுந்தபடி. சுருதை பின்னால் வந்துகொண்டே “வேறுவழி இருக்கிறதா இவர்களுக்கு? அவளிடமல்லவா படையும் நாடும் இருக்கிறது இன்று? அவளை அழைத்துக்கொண்டு நகர்புகுந்தால் மட்டுமே அவர்கள் இங்கே ஆற்றல் கொண்டவர்களாக ஆகமுடியும்...” விதுரர் கைகளைத் துடைத்தபடி “அனைத்தையும் சிந்தித்துவிட்டாய்” என்றார்.

“அப்படியென்றால் உண்மையில் நடந்ததுதான் என்ன?” என்றாள் சுருதை. “சற்றுமுன் சிசிரன் அனைத்தையும் விரிவாக சொன்னான். பாண்டவர்கள் மணநிகழ்வுக்குச் சென்றபோது குந்தி துர்வாசரைச் சென்று பார்த்திருக்கிறார். பாஞ்சாலத்தின் ஐங்குலங்களில் மூத்தது துர்வாசபெருங்குலம். அதன் மூத்தஞானி இன்று அவர்தான். அவர் அந்த வழிமுறையைச் சொல்லியிருக்கிறார். குந்தி அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.”

“ஏன், அதனால் என்ன நன்மை?” என்றாள் சுருதை. “தன் மகள் பாரதவர்ஷத்தை ஆளவேண்டும் என்பதே துருபதனின் கனவு. ஐவரையும் அவள் மணக்கும்போது அது உறுதிப்படுகிறது. ஒரு போர் நிகழாமல் அஸ்தினபுரியின் மணிமுடியை அடையமுடியாதென்று துருபதன் எண்ணுகிறார். அப்படி மணிமுடி எய்தப்படும்போது பாண்டவர் ஐவரில் எவர் எஞ்சியிருந்தாலும் திரௌபதியே பேரரசி. இந்த ஐந்துமணம் மூலம் அந்த முழுமுற்றான வாக்குறுதி அவருக்கு அளிக்கப்படுகிறது.”

சுருதை “ஆம்” என்றாள். விதுரர் “நாளையே மேலும் ஷத்ரிய அரசர்களிடமிருந்து பாண்டவர்கள் அரசிகளை கொள்வார்கள். வலுவான புதிய உறவுகள் உருவாகும். அப்படி எது உருவானாலும் திரௌபதியின் இடம் மாறாது என்று உறுதியாகிவிட்டது” என்றார். ”அந்த ஐயம் துருபதனுக்கு மட்டுமல்லாது பாஞ்சாலப்பெருங்குடிகளுக்கும் இருப்பது இயல்பே. ஏனென்றால் ஐந்து மைந்தர்களில் சிலருக்கு தன் யாதவகுலத்திலேயே குந்தி பெண் கொள்வாள். அவ்வரசியே குந்திக்கு அண்மையானவளாகவும் இருப்பாள். அது நிகழும்போது திரௌபதி இரண்டாமிடத்திற்கு செல்லக்கூடும். அவ்வாறு நிகழமுடியாதென்பதற்கான வெளிப்படையான ஒப்புதலே இந்த மணம்.”

”இதன்மூலம் குந்தி பாஞ்சாலத்தின் அனைத்துக்குடிகளுக்கும் ஓர் அறிவிப்பை அளிக்கிறார். பாண்டவர்களின் குலமே திரௌபதியின் காலடியில் வைக்கப்பட்டிருக்கிறது என்று. அவளே இனி அஸ்தினபுரி என்று. பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும் அது ஒரு பெரும் செய்தியே” என்றார் விதுரர். “குந்தியின் இச்செய்தி பெரும் வெற்றியையே அளித்திருக்கிறது. துருபதனும் பாஞ்சாலத்தின் ஐம்பெருங்குலங்களும் அதை தங்கள் வெற்றி என்று கொள்கிறார்கள். அங்கே காம்பில்யத்தில் கொண்டாட்டமும் களியாட்டமும்தான் நிகழ்கின்றன. ஐந்து மாவீரர்கள் தங்கள் அரசுடன் அவள் காலடியில் கிடக்கிறார்கள்!”

சுருதை பெருமூச்சுடன் “ஆனால் இங்கே அஸ்தினபுரியில் அது அதிர்ச்சியையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்கும்” என்றாள். விதுரர் நகைத்து “இல்லை... எளியமக்களின் அகம் முதலில் அதிர்ச்சிகொள்ளும். பின்னர் அவளை அவர்கள் வியப்புடன்தான் நோக்குவார்கள். அவள் செய்கைக்கான பின்புலத்தை தேடி அடைவார்கள். பேசிப்பேசி நிறுவிக்கொள்வார்கள். தாங்கள் செய்யமுடியாத ஒன்றை செய்தவள் என்றே பெண்கள் எண்ணுவார்கள். தங்கள் இல்லத்துப் பெண்களைப்போன்றவள் அல்ல அவள், பேருருவம் கொண்டவள் என்று ஆண்கள் எண்ணுவார்கள் ” என்றார்.

“இந்த ஒரு செயலாலேயே திரௌபதி பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினிகள் எவரைவிடவும் உயர்ந்தவளாக எண்ணப்படுவாள். வரலாறெங்கும் அவள் பெயர் சக்ரவர்த்திகளும் பணிவுடன் உச்சரிக்கும் ஒன்றாகத் திகழும். அவளை காவியங்கள் வாழ்த்தும். தலைமுறைகள் வணங்கும்” என்றார் விதுரர். “ஏனென்றால் இது நிகரற்ற அதிகாரத்தை ஐயத்திற்கிடமில்லாமல் வெளிக்காட்டுகிறது. வரலாற்றுநாயகர்களும் நாயகிகளும் அதிகாரத்தால் உருவாக்கப்படுபவர்கள்.”

சுருதை உதட்டை இழுத்துக் கடித்து பார்வையைத் தழைத்தபின் “அவள் வென்றிருக்கலாம், ஆனால்...” என்றாள். சிரித்துக்கொண்டு “விடமாட்டீர்களே” என்றபடி விதுரர் திரும்பி “நான் இன்று அரசரை சந்திக்கவிருக்கிறேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நிகழுமென உள்ளம் சொல்கிறது” என்றபின் அவள் முன்நெற்றியின் நரை கலந்த மயிர்ச்சுருளை வருடிவிட்டு “வருகிறேன்” என்றார்.

அவர் பின்னால் வந்த சுருதை “அவள் எப்படி இதை ஏற்றுக்கொண்டாள் என்றுதான் என் நெஞ்சு வினவிக்கொள்கிறது” என்றாள். விதுரர் “ஆகவேதான் அவளை கொற்றவையின் வடிவம் என்கிறார்கள்” என்றபடி வெளியே சென்றார்.

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 2

விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை மூன்றுநாட்களாக சந்திக்கவில்லை என்பதே முதன்மையானது” என்றபின் ஒருகணம் தயங்க விதுரர் தலையசைத்தார். கனகன் “நேற்றுமுன்னாள் இரவில் அவரே ஒற்றர்தலைவர் சத்யசேனரை அழைத்து பேசியிருக்கிறார்” என்றார்.

விதுரர் நின்று “என்ன?” என்றார். கனகன் “என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நேற்றுகாலை சத்யசேனரின் ஓலைகள் பறவைகளில் சென்றிருக்கின்றன. ஓலைகளில் ஒன்றை உத்தர கங்காபதத்தில் வைத்து கைப்பற்றி அதன் மந்தணமொழியை வாசித்தோம். அச்செய்தி சற்றுமுன்னர்தான் எனக்கு வந்தது. காம்பில்யத்தில் இருந்து கிளம்பும் அஸ்தினபுரியின் படைகளில் துரியோதனருடன் கணிகரும் சகுனியும் இருந்தாகவேண்டும் என்பது அரசரின் ஆணை.”

விதுரர் படபடப்புடன் “சிறைப்படுத்தவா?” என்றார். கனகன் “ஆணை அவ்வாறல்ல. ஆனால் சிறைதான் அது. அவர்களுக்கு அது தெரியாது என்பதே வேறுபாடு” என்றான். விதுரர் இதழ்களைக் கோட்டி “தெரியாமலிருக்குமா என்ன?” என்றார். “ஆம், அதையும் சத்யசேனர் சொல்லியிருப்பார். அரசரின் ஆணைகள் தெளிவான திட்டமொன்றை காட்டுகின்றன. நேற்றே வட எல்லை தளபதியான சுருதவர்மருக்கும் ஆணைசென்றிருக்கிறது.”

சொல் என்பதுபோல விதுரர் நோக்க கனகன் “நமதுபடைகள் எட்டு பிரிவுகளாகப் பிரிந்து காம்பில்யத்தில் இருந்து இளவரசரும் காந்தாரரும் வரும் நீர்வழியை முழுமையாக காவல் காக்கவேண்டும் என்று” என்றபின் “எவ்வகையிலும் காந்தாரர் தப்பிச்செல்லக்கூடாதென்று அரசர் எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.” விதுரர் விழிகளைத் தாழ்த்த “அரசர் என்னை அழைத்தும் சில பணிகளை சொன்னார். அவை எவ்வகையிலும் எண்ணக்கூடியவை அல்ல. நான் உங்கள் ஒற்றன் என்பதனால் என்னை அனைத்தில் இருந்தும் விலக்குகிறார். அது உங்களையும் விலக்குவதே.”

விதுரர் ”வேறென்ன ஆணை?” என்றார். “நேற்றிரவு மனோதரரும் கைடபரும் அரசரை சந்தித்திருக்கிறார்கள். இன்று விடியற்காலையில் அஸ்தினபுரியின் படைகள் அன்றாடப்பயிற்சி போல இடம்பெயர்ந்தன. நான் கோட்டை மேல் ஏறி நோக்கியதுமே என்ன நிகழ்கிறதென்று புரிந்துகொண்டேன். அஸ்தினபுரியின் படைகள் காந்தாரப்படைகளை பல சிறிய துண்டுகளாக பிரித்துவிட்டன. காந்தாரப்படைகளும் சிறையிடப்பட்டுவிட்டன.”

விதுரர் புன்னகைத்து “விழியறியாதவர் என்கிறார்கள். அரசரால் பாரதவர்ஷம் முழுக்க அமர்ந்த இடத்திலிருந்தே படைகளை அனுப்பமுடியும்” என்றார். “ஆம், காந்தாரருக்கும் கணிகருக்கும் கழுவை செதுக்கவும் ஆணையிட்டிருப்பாரோ என ஐயமாக இருக்கிறது.” திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் விழிகளை நோக்கிய விதுரர் “இது நகைப்புக்குரியதல்ல. அவர் முதலில் கழுவேற்றப்போவது தன் நூறு மைந்தரைத்தான்” என்றார்.

கனகன் திகைத்தபடி “ஆம், நேற்றுமுதல் இங்குள்ள அத்தனை கௌரவர்களுக்கும் காவலர்கள் மாறிவிட்டனர். இயல்பான மாற்றம் என்று எண்ணினேன்” என்றான். விதுரர் “அனைவரையும் சிறையிட்டுவிட்டு அரசர் காத்திருக்கிறார்” என்றார். “அவருக்குத்தேவை பாண்டவர்களை எரிக்க முனைந்தவர் எவர் என்ற சான்று. மறுகணமே ஆணையிட்டுவிடுவார். நான் அவரை அறிவேன். இமையசைக்காமல் பல்லாயிரம்பேரை கொலைக்களத்துக்கு அனுப்ப ஆணையிடும் ஷத்ரியர் அவர்...”

கனகன் திகைத்து சொல்லிழந்து அச்சொல்லின்மை உடலெங்கும் ததும்ப நின்றான். விதுரர் “இன்று என்னுடன் அஸ்தினபுரியின் மூதாதையர் துணைநிற்கவேண்டும்... வேறெதையும் நான் நம்பியிருக்கவில்லை” என்றபின் திரும்பி நடந்தார். சில எட்டுகள் சென்றபின் திரும்பிய விதுரர் “என் மேல் இன்னமும் அரசருக்கு நம்பிக்கை இருக்கிறது. என் சேவகர்கள் எவரும் மாறவில்லை” என்றார். கனகன் ஒளியின்றி புன்னகைத்தான்.

விப்ரர் எழுந்து விதுரரை வணங்கினார். “அரசர் என்ன செய்கிறார்?” என்றார் விதுரர். “இசை கேட்கிறார்” என்று விப்ரர் சொன்னதும் விதுரரின் அகம் அதிர்ந்தது. விப்ரரின் விழிகளைத் தொட்டு விலக்கிக்கொண்டார். உள்ளே செல்லும்போதே இசை கேட்டது. யாழிசை அத்தனை கூர்மையாக இருக்கும் என்று, அதன் ஒவ்வொரு அதிர்வும் செவிகளைத் துளைத்து விழிகளை அதிரச்செய்து பார்வையை அலையடிக்கவைக்கும் என்று விதுரர் அப்போதுதான் உணர்ந்தார்.

இசைக்கூடத்தில் முதியசூதர் யாழிசைக்க அருகே இளம்சூதன் ஒருவன் முழவுடன் அமர்ந்திருந்தான். அப்பால் கைகட்டி இசைகேட்டு நின்றிருந்த சஞ்சயன் அவர்களின் வருகையைச் சொல்ல திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. விதுரர் வந்திருப்பதை அவர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இசை தொடர்ந்துகொண்டிருக்க விதுரர் பீடத்தில் ஓசையின்றி அமர்ந்தார். அமரும்போதே அனைத்தையும் அரசரே தொடங்கட்டும் என்று எண்ணிக்கொண்டார்.

இசை முடிந்ததும் திருதராஷ்டிரர் கையசைத்து அவர்களை அருகழைத்து பரிசில்களை அளித்தார். இளைஞனிடம் அவன் தாளமிட்டதில் உள்ள சில நுட்பமான பிழைகளை சுட்டிக்காட்டியபின் அவன் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். அவர்கள் குனிந்து பணிந்து வெளியேறியபின் அவர் விதுரனுக்கு எதிர்த்திசையில் முகத்தைத் திருப்பியபடி அமர்ந்திருந்தார். விதுரர் தலைகுனிந்து காத்திருந்தார். விப்ரர் வணங்கி வெளியேறினார். சற்றுக்கழித்து சஞ்சயனும் வெளியேறினான்.

நேரம் சென்றுகொண்டிருந்தது. அந்த அறை புற ஒலிகள் கேளாமல் அமைக்கப்பட்டிருந்தமையால் காதுகளே இல்லாமலாகிவிட்டது போல விதுரர் உணர்ந்தார். அது இருட்டு போலவே ஒரு பருப்பொருள் நிலையாக இருந்தது. அவர் விட்ட மூச்சின் ஒலி அவருக்கே கேட்டது. அரசரின் உடலுக்குள் குருதி ஓடும் குமிழியோசையைக்கூட கேட்கமுடியும் என்று தோன்றியது.

ஓசையின் வழியாகவே காலம் ஓடுகிறதென்று விதுரர் உணர்ந்தார். எண்ணங்களுக்கு காலமில்லை. பல்லாயிரம் காதம் பலநூறு பாதைகள் வழியாகப் பிரிந்து பிரிந்து ஓடியபின்னரும் காலம் அப்படியே நின்றது. அல்லது சித்தம் அறியாமல் அது வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறதா? இப்போது எழுந்து வெளியே சென்றால் ஆண்டுகள் கடந்திருக்குமா? மூடத்தனம். வெற்றுச்சொற்களின் வரிசை. ஆனால் சிந்தைகளை அளவிடவேண்டியிருக்கிறது. அள்ளவேண்டியிருக்கிறது.

சற்று அப்பால் தரையில் விழுந்திருந்த ஒளிக்கீற்றை விதுரர் நோக்கினார். வெளியே எங்கோ அசைந்த ஒரு செந்நிறத் திரைச்சீலையின் அசைவில் அது நிறம் மாறி கொண்டிருந்தது. அந்தத் தாளத்தை நோக்கினார். அது காலமாகியது. கணங்களாகியது. கடந்தது, நிகழ்ந்தது, வரவிருந்தது. காலமென நீண்டது. அதுவரை அறுபட்ட கொடிச்சரடு என துடிதுடித்த சித்தம் அமைதிகொண்டது. காலத்தின் மேல் கால் நீட்டிப் படுத்து கண்ணயர்ந்தது அகம்.

நெடுநேரம் கடந்து விதுரர் அசைந்து அமர்ந்தார். திரும்பி திருதராஷ்டிரரை நோக்கினார். விழியிழந்த மனிதர் அங்கே இல்லை என்று தோன்றியது. ஓர் இருட்டு மூலைபோல அவர் அமர்ந்திருந்தார். விழிக்கோளங்கள் ததும்பிக்கொண்டே இருந்தன. அவரது உள்ளமா அவை? உள்ளத்தை இப்படி காணமுடியும் என்றால் நல்லதுதான். ஆனால் அவை அவர் அறிந்த எந்த மொழியிலும் பொருள்கொள்ளாத சொற்கள். இரு குருதிக்குமிழிகள். ஒருபோதும் உலராதவை.

விதுரர் தொண்டையைக் கனைத்து “அழைத்ததாகச் சொன்னார்கள்” என்றார். திருதராஷ்டிரர் “இல்லை” என்றார். விதுரர் “இளவரசர்கள் காம்பில்யத்தில் இருந்து கிளம்பிவிட்டார்கள். இன்று மாலை அவர்கள் வந்துசேரக்கூடும்” என்றார். திருதராஷ்டிரர் தலையை அசைத்தார். “அங்கே காம்பில்யத்தில் மணமுற்றத்தில் தோன்றி பாஞ்சாலியை வென்றவன் அர்ஜுனன் என்றார்கள். அது உண்மையா என்று பார்க்க ஆளனுப்பியிருந்தேன்.” விதுரர் திருதராஷ்டிரர் தலையாட்டுவதை கண்டபின் “அச்செய்தி உண்மை. அவர்கள்தான் வென்றிருக்கிறார்கள். உறுதிசெய்தபின் தங்களை வந்து பார்க்கலாமென்றிருந்தேன்” என்றார்.

“சொல்” என்றார் திருதராஷ்டிரர். “இன்று காலை ஒற்றுச்செய்திகள் முழுமையாக வந்தடைந்தன. பாஞ்சாலக் குலவழக்கப்படி பாண்டவர் ஐவரையுமே பாஞ்சாலி மணக்கவேண்டும் என்று குந்திதேவி ஆணையிட்டிருக்கிறார். அதை தருமன் எதிர்த்திருக்கிறான். பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் அதை மூத்தவரின் முடிவுக்கே விட்டுவிட்டனர். அன்னையின் ஆணை உறுதியாக இருந்தமையால் தருமன் அம்முடிவை ஏற்றிருக்கிறான். அதை திருஷ்டத்யும்னன் வழியாக முறையாக துருபதனுக்கும் அறிவித்துவிட்டார்கள்.”

திருதராஷ்டிரர் முகத்தில் எந்த மாறுதலும் நிகழவில்லை. ”துருபதனுக்கும் குந்திக்கும் துர்வாசகுலத்து மூத்தவரான துர்வாச முனிவரின் ஆணை சென்றிருக்கிறது. துருபதன் பாண்டவர்களை தன் அரண்மனைக்கு அழைத்திருக்கிறார். இரண்டுநாட்களுக்குப்பின் முழுநிலவு நாளில் அரண்மனையிலேயே அவர்களுக்கு அவர்களின் குலமுறைப்படி மணநிகழ்வுகள் நடைபெறும் என்று செய்தி வந்திருக்கிறது” என்றபின் மீண்டும் நோக்கிவிட்டு “நாம் அதற்கு முறைப்படி வாழ்த்தும் பரிசில்களும் அளிக்கவேண்டும். நானே அஸ்தினபுரியின் சார்பாக சென்று மணநிகழ்வில் கலந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். நான் செல்வது தாங்கள் செல்வதாகவே ஆகும்” என்றார்.

திருதராஷ்டிரர் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “அவர்களை முறைப்படி அஸ்தினபுரிக்கு அழைக்கிறேன். அவர்களுக்கு ஏதேனும் மனத்தாங்கல்கள் இருக்குமென்றாலும் அவற்றை பேசி தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.” திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் திரும்பி “விதுரா, அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாக ஏன் என்னிடம் சொன்னாய்? அவர்கள் வாழ்வதை நீ அறிந்திருந்தாய் அல்லவா” என்றார்.

“இல்லை அரசே, நான் அறிந்தது அதுவே. அவர்கள் எரிநிகழ்வில் இறந்ததாகவே எனக்கு செய்திவந்தது...” என்றார் விதுரர். “என் முகத்தை நோக்கி சொல்.... நான் உண்மையை மட்டுமே அறியவிழைகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்வதெல்லாம் உண்மை” என்றார் விதுரர். திருதராஷ்டிரர். “நம் மூதாதையர் மேல், வியாசரின் சொல்லின் மேல் ஆணையிடு” என்றார். “மூதாதையர் மேல் ஆணையாக, வியாசகவிமேல் ஆணையாக நான் உண்மையை மட்டுமே சொல்கிறேன்” என்றார் விதுரர்.

திருதராஷ்டிரர் சற்று திகைத்ததுபோல அவரது பெரிய கைகள் தசை இறுகி வந்து மடிமீது இணைந்துகொண்டன. உடலுக்குள்ளேயே அவர் உடல் புரண்டு அமைந்தது. பெருமூச்சுடன் “சொல், என்ன நடந்தது?” என்றார். விதுரர் ”கேளுங்கள் அரசே” என்றார். திருதராஷ்டிரர் தணிந்த குரலில் “இளையோனே!” என்று அழைத்தார். அவரால் மேலும் பேசமுடியவில்லை. “விதுரா” என மீண்டும் அழைத்தபின் கைகளை விரித்தார். “சொல்லுங்கள் மூத்தவரே” என்றார் விதுரர்.

“என் மேல் கருணை காட்டு... இத்தனை நாட்களாக என்னுள் எரிந்துகொண்டிருந்த வினாவுக்கு விடையளி. அந்த எரிநிகழ்வில் ஏதேனும் சூது உண்டா? அவர்கள் அதில் தப்பியபின் ஏன் இங்கே வராது ஒளிந்தனர்?” திருதராஷ்டிரரின் எழுந்தமர்ந்த நெஞ்சை நோக்கியபோது ஒரு கணத்தில் கரையழிந்து அனைத்தையும் சொல்லிவிடுவோம் என்று விதுரர் எண்ணினார். உடனேயே இறுக்கிக்கொண்டு அக்கணத்தைக் கடந்தார். “சொல்” என்று திருதராஷ்டிரர் சொன்னபோது அவரது தொண்டை அடைத்திருந்தது. ”சொல் இளையவனே. நான் பிழை செய்தேனா?”

“நீங்கள் ஒருபோதும் பிழைசெய்ய இயலாதவர் மூத்தவரே” என்றார் விதுரர். “அப்படியென்றால் பிழை செய்தவர்கள் யார்? என் மைந்தர்களா? அந்த எரிநிகழ்வு அவர்களால் செய்யப்பட்டதா?” விதுரர் “இல்லை அரசே, அவர்கள் தங்கள் மைந்தர்கள்” என்றார், “அப்படியென்றால் யார்? சகுனியா? கணிகனா? யார்? அதைச்சொல்!”

விதுரர் “அரசே, அது வெறும் தற்செயல். அதிலிருந்து அவர்கள் தப்பியதும் தற்செயலாக இருக்கலாம். நாம் வீண் உளச்சித்திரங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். திருதராஷ்டிரர் “அவர்கள் ஏன் இங்கே மீண்டுவரவில்லை? ஏன் ஒளிந்தனர்?” என்றார். “அரசே, அவர்கள் அதை சதி என ஐயுற்றிருக்கலாம்.” திருதராஷ்டிரர் “அப்படியென்றால் அவர்கள் என்னிடமல்லவா வந்து சொல்லியிருக்கவேண்டும்? அவர்களுக்கு ஏன் என் மேல் நம்பிக்கை இல்லாமலாயிற்று?” என்றார்.

“அவர்கள் என்னிடமும் சொல்லவில்லையே” என்றார் விதுரர். முதல்முறையாக அந்தச் சொற்றொடரில் திருதராஷ்டிரரின் உள்ளம் அமைந்தது. “ஆம், உன்னை விட அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை. ஏன் உன்னிடமும் அவர்கள் வரவில்லை?” விதுரர் “அவர்களுக்கு ஏன் அவ்வண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை?” என்று சொல்லி நீள்மூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டார்.

“அரசே, அவர்களே அதற்குரிய மறுமொழியை சொல்லட்டும். நானே நேரில் சென்று அவர்களை அழைத்து வருகிறேன். அவர்கள் தங்கள் முன் நின்று என்ன நிகழ்ந்தது, ஏன் ஒளிந்துவாழ்ந்தனர் என்று சொல்லட்டும். அவர்களின் சொற்களன்றி எதற்கும் பொருளில்லை” அதை சொல்லி முடிக்கும்போதே விதுரரின் அகம் பதறத் தொடங்கியது. குந்தியின் சினமெழுந்த விழிகள் எண்ணத்தில் வந்தன.

அதற்கு இப்போதே ஒரு அணைபோட்டு வைத்தாலென்ன என்ற சிந்தை எழுந்ததுமே திருதராஷ்டிரர் ”ஆம், விதுரா. அவர்கள் இங்கே வரும்வரை நீ அவர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியதில்லை. அவர்களை அழைத்துவர நான் காந்தாரியை அனுப்புகிறேன். அவள் குந்தியிடம் பேசி அழைத்து வரட்டும்” என்றார். விதுரர் “அதற்கு அரசி...” என்று சொல்ல “என் ஆணைக்கு அப்பால் எண்ண அவளால் இயலாது. ஆணையிட்டுவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர்.

விதுரர் பெருமூச்சு விட்டார். அவரது உடல் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டே இருந்தது. ஒருகணம் அனைத்திலிருந்தும் விடுவித்துக்கொண்டு காடேகினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. மறுகணத்திலேயே அது மறைந்தபின்னர்தான் அதற்குள் இனிய காட்டுக்குடிலை, குளிர்ந்த காலையை, சூரிய ஒளியை, பறவைகளின் ஒலியை அது தன் எண்ணத்தில் எழுப்பியிருக்கிறது என்று புரிந்தது. அவ்வெண்ணம் தன் உடலையே எளிதாக ஆக்கிவிட்டதை உணர்ந்தார். பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டார்.

விப்ரர் வந்து வணங்கி நின்றார். அவரது காலடியோசையை அறிந்த திருதராஷ்டிரர் “ம்?” என்றார். “காம்பில்யத்திலிருந்து ஒரு சூதன் வந்துள்ளான்” என்றார் விப்ரர். “முந்திவருவதற்காக கங்கையை சிறுபடகில் கடந்திருக்கிறான். நேராக அரண்மனை முன் வந்து நின்று பாட விழைகிறான்.” திருதராஷ்டிரர் புன்னகையுடன் “அவர்களுக்கு கதைகள் விளைந்து கொண்டே இருக்கின்றன” என்றார்.

விப்ரர் புன்னகை செய்தார். “வரச்சொல்... உண்மையை அவன் பாடுவான் என்று உனக்குத் தோன்றுகிறதா?” என்றார். “அரசே, மெய்விளைவது நெல்விளைவதுபோல. கதைவிளைவது புல்விளைவதுபோல....” என்ற விப்ரர் சிரித்து “நெல்லும் ஒரு புல்லே” என்றார். திருதராஷ்டிரர் சிரித்துவிட்டு “மூடா, நீயும் மதிசூழக் கற்றுவிட்டாய்” என்றார்.

திருதராஷ்டிரரின் அமைதிதான் தன்னை நிலையழியச் செய்திருக்கிறது என்று விதுரர் உணர்ந்தார். சூதர்பாடலைக் கேட்க தன் அகம் குவியாதென்று தெரிந்தது. இளைய சூதன் உள்ளே வந்ததுமே அவன் சற்று மூடன் என்பதும், மூடத்தனத்தின் விளைவான தன்னம்பிக்கையும் மிகையார்வமும் கொண்டவன் என்பதும் தெரிந்தது. மங்கலான கண்களும் பளிச்சிடும் சிரிப்புமாக அவன் மிடுக்குடன் உள்ளே வந்து “அஸ்தினபுரியின் அரசரை ஸ்வேதகுலத்துச் சூதன் சிம்ஹிகன் வாழ்த்துகிறேன்” என்றான்.

அச்சொற்களைக்கொண்டே அனைத்தையும் புரிந்துகொண்ட திருதராஷ்டிரர் புன்னகைத்து “தங்கள் வாழ்த்து இந்நாளின் பெரும் பரிசு சூதரே. அமர்க!” என்றார். சூதன் அமர்ந்துகொண்டு தன் குறுமுழவை மடியில் வைத்தபின் விதுரரை யாரிவர் என்பது போல நோக்கினான். “காம்பில்யத்தில் இருந்தீர்களோ?” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, நான் காம்பில்யம் செல்வதற்குள் விழவு முடிந்துவிட்டது. அனல் தொட்டு அனல் பற்றுவதுபோல நாதொட்டு நா அறிந்த கதைகளைக் கற்றுக்கொண்டு சொல்லவந்தேன்” என்றான் சிம்ஹிகன்.

“சொல்லும்!” என்றார் திருதராஷ்டிரர். அவன் தன் முழவை இருவிரலால் ஒலிக்கவைத்து பாடத்தொடங்கினான். இறை வாழ்த்துக்கள், அவன்பிறந்த குருமரபுக்கான வணக்கங்கள், அவன் பிறந்த பாஞ்சாலநாட்டின் குலமுறை கிளத்தல்கள், அஸ்தினபுரியின் அரசனுக்கும் அவன் குலத்துக்குமான வாழ்த்துக்கள்... முழவின் ஒலி தன் புறந்தலையிலேயே விழுவதாகத் தோன்றியது. பின்னர் அவன் விரல்கள் அடிப்பதே தன் தலையைத்தான் என்று பட்டது. விதுரர் கண்களை மூடிக்கொண்டார்.

சிம்ஹிகன் காம்பில்யத்தின் மணத்தன்னேற்புக் கதைக்குள் சென்றான். துருபதமன்னர் துர்வாசரை வணங்கி அருளுரை கேட்டு மணத்தன்னேற்பை அறிவித்ததையும் அதைக்கேட்டு நூற்றெட்டு ஷத்ரிய அரசர்களும் அணிக்கோலத்தில் நகர்புகுந்ததையும் விவரித்தான். கிந்தூரத்தின் கதையைச் சொன்னபின் பாஞ்சாலியின் நீராட்டையும் அணிபூணுதலையும் பாடினான். திருஷ்டத்யும்னன் துணையுடன் பிடியானையில் அவள் அவை வந்து இறங்கியதையும் அவளைக்கண்ட ஒவ்வொரு அரசரும் அடைந்த விழைவையும் விவரித்தான்.

திருதராஷ்டிரர் சிரித்து “கழுவேற்றும் காட்சியில்கூட சிருங்காரத்தை கொண்டுவருபவர்கள் இவர்கள்” என முனகிக்கொள்ள சிம்ஹிகன் அதை தனக்கான பாராட்டாகக் கொண்டு தலைவணங்கி புன்னகைத்துக்கொண்டு தொடர்ந்து பாடினான். ஒவ்வொரு மன்னராக வந்து கிந்தூரத்தை எடுக்க முயன்று தூக்கி வீசப்பட்டார்கள். இறுதியில் அர்ஜுனன் அதை எடுத்து மேலே தெரிந்த இலக்கை அடித்து கன்னியை கரம்பற்றினான். “பார்த்தன்! அஸ்தினபுரியின் வில்வீரன். விஜயன். இந்திரனின் மைந்தன். கிரீடி, சவ்யசாசி, அனகன், பாரதன்! தன்னிகரற்ற தனஞ்சயன்!” சூதன் விரைவுத்தாளமிட்டு குரலெழுப்பினான்.

திருதராஷ்டிரர் முகம் நெகிழ்ந்தது. தொடைகளில் கையை ஊன்றி “ஆம், இன்று பாரதவர்ஷத்தில் அவனுக்கு நிகரென எவருமில்லை” என்றார். சூதன் பாண்டவர்கள் வைதிகவேடத்தில் பாஞ்சாலியுடன் சென்று குயவனின் இல்லத்தில் தங்கியிருந்த குந்தியைக் கண்ட காட்சியை சொன்னான். “அன்னையே, எங்களுக்கு ஒரு அறப்பொருள் கிடைத்துள்ளது” என்றான் அர்ஜுனன். “அதை நிகராக பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று குந்தி சொன்னாள். தருமன் “அன்னையே, என்ன வாக்கு இது!” என்று திகைத்தான்.

குந்தி வெளியே வந்தாள். தான் சொன்ன சொல்லின் பொருளென்ன என்று அறிந்ததும் திகைத்து நின்றாள். ஆனால் “மண் பிழைத்தாலும் மாதர் சொல்பிழைக்கலாகாது மைந்தா” என்றாள். சூதன் பாடிக்கொண்டிருக்கையிலேயே தொடையைத் தட்டியபடி திருதராஷ்டிரர் சிரித்தார். “விதுரா மூடா, நம்மவர் மண்ணாலான ஒரு பாரதவர்ஷத்தின் மேல் சொல்லால் ஆன நூறாயிரம் பாரதவர்ஷங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

சூதன் பாடி முடித்ததும் திருதராஷ்டிரர் அவனுக்கு பரிசில் அளித்தார். “நல்லது சூதரே. நிறைய புதியகதைகள். நீங்கள் தெற்கே மாளவத்திற்கோ கலிங்கத்திற்கோ செல்வதற்குள் மும்மடங்கு பெரிய கதை உம்மிடமிருக்குமென நினைக்கிறேன்” சூதன் அதையும் பாராட்டென்று கொண்டு “ஆம் அரசே, தங்கள் அருள்” என்று தலைவணங்கினான். “பாஞ்சாலியின் நீள்குழலை நீர் விவரித்ததை விரும்பினேன். அக்குழல் மேலும் நீண்டு வளர்க!” என்றார் திருதராஷ்டிரர். சூதன் மீண்டும் தலைவணங்கினான்.

அப்போது விதுரர் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. அனைத்தும் நலமாகவே முடியப்போகின்றன. அதை திருதராஷ்டிரரின் ஆழம் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறது. ஆகவேதான் அவர் சினத்தையும் துயரையும் கடந்து உவகையுடன் இருக்கிறார். அந்த உவகை வெறும் பாவனை அல்ல. அகத்திலெழுந்த அனலை கட்டுப்படுத்தும் முயற்சி அல்ல. அது உண்மையான உவகை. உள்ளே எங்கோ சுடர் இல்லாமல் சிரிப்பில் அந்த ஒளி எழாது. ஆம், அனைத்தும் சிறப்பாகவே முடியவிருக்கின்றன.

இன்னும் சற்றுநேரத்தில் அனைத்தும் சீரடைந்துவிடும். இன்னும் சிலநாழிகைகளுக்குள். அப்போது அதை அத்தனை உறுதியாக விதுரர் உணர்ந்தார். ஆம், இன்னும் சற்றுநேரத்தில். இதோ, நெஞ்சு படபடக்கத் தொடங்கிவிட்டது. ஏதோ செய்தி வரப்போகிறது. எல்லாவற்றையும் சீராக்கிவிடுவது. அந்த உள்ளுணர்வை அவரது சித்தம் ஏளனத்துடன் நோக்கிக்கொண்டிருந்தது. ஆனால் உள்ளூர அது வலுவடைந்தபடியே இருந்தது.

திருதராஷ்டிரர் தன் இருக்கையில் கைகளால் தட்டியதும் சஞ்சயன் வந்து நின்றான். அவர் கைநீட்ட அதை அவன் வந்து பற்றிக்கொண்டான். திருதராஷ்டிரர் “மாலையில் பார்ப்போம். பாண்டவர்களின் மணநிகழ்வில் பங்கெடுத்து அவர்களை அழைத்துவர காந்தாரியை நாளைக்காலை அரசமுறைப்படி காம்பில்யத்துக்கு அனுப்பலாமென எண்ணுகிறேன். அச்செய்தியை அவர்களுக்கு பறவைத்தூதாக அனுப்பிவிட்டேன். மாலைக்குள் காம்பில்யத்திலிருந்து மறுஓலை வரக்கூடும்” என்றார் திருதராஷ்டிரர் “அனைத்து முறைமைகளும் செய்யப்படவேண்டும். செல்பவள் தேவயானியின் மணிமுடியைச் சூடிய பட்டத்தரசி...”

விதுரர் தலைவணங்கினார். திருதராஷ்டிரர் உள்ளே சென்றதும் அவர் நெஞ்சு ஏமாற்றத்தில் சுருங்கியது. வெறும் விருப்பக்கற்பனைதானா அது? அதற்குள் என்னென்ன பாவனைகள். எத்தனை அகநாடகங்கள். கசப்பான புன்னகையுடன் அவர் எழுந்து வெளியே சென்றார். விப்ரரின் வணக்கத்தை ஏற்றபின் இடைநாழியில் நின்ற கனகனை நோக்கி சென்றார். கனகன் அவரை நோக்கி வந்தபோதே அவன் விழிகளில் அவர் ஒரு செய்தியைக் கண்டார்.

“சொல்” என்றார் விதுரர். “அரசருக்கு சற்றுமுன் ஓலை ஒன்று வந்துள்ளது...” என்றான் கனகன். விதுரர் படபடப்புடன் “காம்பில்யத்தில் இருந்தா?” என்றார். “ஆம்...” என்றான் கனகன். ”செம்பருந்து அதைக் கொண்டுவந்தது. அதை கைடபர் அரசரின் மந்தண அறைக்கு கொண்டுசென்றார்.” விதுரர் சலிப்புடன் “அது துருபதரின் ஓலை. பேரரசி காந்தாரி பாண்டவர்களின் மணநிகழ்வுக்குச் செல்கிறார். அதற்கான ஒருக்கங்கள் நிகழ்த்துவதற்கான ஒப்புதல் கடிதம் அது.”

கனகன் விழிகளை சற்று அசைத்து “அவ்வாறல்ல அமைச்சரே. கைடபரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அந்த ஓலையுடன் அவர் அரசரின் மந்தண அறைநோக்கிச் சென்றபோது மேலாடை ஒரு கதவின் தாழில் சிக்கியது. அவர் அதை சலித்தபடி இழுத்து கிழித்துவிட்டார்”. விதுரர் சிலகணங்கள் அவனைக் கூர்ந்து நோக்கியபின் “ஆனால் அரசர் மந்தண அவைக்குச் சென்றுவிட்டாரே” என்றார். “தாங்கள் இப்போது அவருடன் இருக்கவேண்டும்”

விதுரர் முடிவெடுத்து திரும்பி நடந்தார். கனகன் பின்னால் வந்தபடி “நான் ஒரு ஓலையை கொண்டுவரச்சொன்னேன். நாடுதிரும்பும் கௌரவர்களை ஓர் இடத்தில் மகதத்தின் படைகள் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கின்றன. அச்செய்தியை கொண்டுவந்த பறவை ஓலை அது. அதை மிகைப்படுத்தி அரசரிடம் சொல்லி அதற்கெனத்தான் சந்திக்கவந்ததாக தாங்கள் சொல்லிக்கொள்ளலாம்”என்றான். விதுரர் கைநீட்ட அவன் அந்த ஓலையை அளித்தான்.

விதுரர் இசைச்சாலையை சுற்றிக்கொண்டு திருதராஷ்டிரரின் மந்தண அறையை அடைந்தார். அங்கே விப்ரர் வாயிலில் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் விப்ரர் தலைவணங்கியதிலிருந்தே உள்ளே கைடபர் இருப்பதை விதுரர் அறிந்தார். “என் வருகையை அறிவியுங்கள் விப்ரரே” என்றார் விதுரர். விப்ரர் உள்ளே சென்று மீண்டு வந்து அவரை உள்ளே செல்லும்படி தலைவணங்கி கைகாட்டினார்.

காலடிகள் பஞ்சாலானவைபோல, மண்ணைத் தொடாமல் நடப்பதுபோல ஓர் உணர்வை விதுரர் அடைந்தார். ஆனால் அத்தகைய உச்சகணங்களில் உடலை உள்ளத்தால் உந்தி நிமிர்த்திக்கொள்வது உதவுமென கற்றிருந்தார். உடல் நிமிர்ந்ததும் உள்ளமும் அதை நடிக்கத் தொடங்கிவிடும். முகவாயை சற்றே தூக்கி கண்களை நிலைக்கச்செய்து சீராக நடந்து அறைக்குள் சென்று திருதராஷ்டிரர் முன் நின்று தலைவணங்கி “ஓரு முதன்மைச்செய்தி. அதை சொல்லிவிட்டுச் செல்ல விழைந்தேன்...” என்றார்.

“நீ இந்த ஓலைக்காகத்தான் வந்தாய் இளையவனே” என்று சொல்லி அந்த ஓலையை திருதராஷ்டிரர் நீட்டினார். அவரது முகத்தை நோக்கிய விதுரர் அதில் புன்னகை இருப்பதைக் கண்டதும் அகம் தெளிந்தார். ஓலையை வாங்கி சுருள் நீட்டி வாசித்தார். அது தருமனால் திருதராஷ்டிரருக்கு எழுதப்பட்டிருந்தது. அவர் முதலில் அதை ஒரே விழியோட்டலில் வாசித்து முடித்தார். அதன் உள்ளடக்கத்தை அவரது அகம் வாங்கிக்கொண்டு அனைத்துச்சுமைகளையும் இழந்து சிறகடித்து எழுந்தது. அதன்பின் சொல் சொல்லாக விழிதொட்டுச் சென்றார்.

முறைமைசார்ந்த முகமன்களுக்குப்பின்னர் தருமன் காம்பில்யத்தில் நிகழும் மணநிகழவை முறைப்படி அறிவித்திருந்தான். பாஞ்சால குலமுறைமையின் படி அந்த மணவிழா நிகழ்வதாகவும் பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியை மணப்பதாகவும் ஓரிரு வரிகளில் எழுதியிருந்தான். “எந்தையே, இப்புவியில் பாண்டவர்களாகிய எங்களுக்கு இன்றிருக்கும் வாழும் மூதாதை நீங்கள் மட்டுமே. தங்கள் நல்வாழ்த்துக்கள் இன்றி நாங்கள் முழுமானுடராக வாழமுடியாது. தேவர்களுக்கும் விண்ணவர்க்கும் நீத்தாருக்கும் அறத்திற்கும் எங்களை கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர் தாங்களே. பாண்டவர்களாகிய நாங்கள் தங்கள் பாதங்களில் சிரம் வைத்து வாழ்த்துக்களை நாடுகிறோம்.”

வாரணவத மலையடிவாரத்தின் எரிநிகழ்வுக்குப்பின் நாங்கள் காடுபுகுந்தோம். புறவுலகு எங்களை அறியாமல் ஏழுவருடங்கள் வாழ்ந்தோம். நாங்கள் இறந்துவிட்டதாக அஸ்தினபுரியிலும், பாரதவர்ஷம் முழுவதும் எண்ணப்பட்டது. அது அப்படியே தொடரட்டுமென முடிவெடுத்தவன் நானே. எந்தையே, அது தங்களுக்காக நான் எடுத்த முடிவு. நாங்கள் உயிருடனிருப்பது வரை தாங்கள் தங்கள் மைந்தன் துரியோதனன் அஸ்தினபுரியின் முடியைச் சூட ஒப்ப மாட்டீர்கள் என்று அறிந்திருந்தேன். ஷத்ரியர் பகைக்க, உடன்பிறந்தோர் அகம்சுருங்க அம்மணிமுடியை ஏற்க நான் விழையவில்லை.

நாங்கள் தங்கியிருந்த வாரணவதத்தின் மாளிகை மகதத்தின் ஒற்றர்களால் கட்டப்பட்டது. நாங்கள் துயில்கையில் எங்களை எரித்தழிக்க அவர்களின் ஒற்றனாகிய புரோசனன் திட்டமிட்டான். அதை அறிந்ததும் அவனையும் அவனுடனிருந்தவர்களையும் எரித்துவிட்டு நாங்கள் குகைப்பாதை வழியாக தப்பிச்சென்றோம். மறுபக்கம் இடும்பவனம் புகுந்ததும்தான் அது பாரதவர்ஷத்தின் மானுடர் எவரும் நுழைந்திராத அரக்கர்களின் காடு என்றறிந்தோம். அங்கேயே நாங்கள் இருந்துகொண்டால் நாங்கள் இறந்துவிட்டதாக நீங்கள் எண்ணுவீர்கள் என்று நான் கருதினேன். நீங்கள் என் இளையோன் துரியோதனனுக்கு மணிமுடிசூட்டவேண்டுமென்பதற்ககாவே இதைச் செய்தேன்.

அது பெரும்பிழை என நான் அறிவேன். தங்களுக்கு பெருந்துயரை அளித்துவிட்டேன். ஆனால் அஸ்தினபுரி சென்று முட்டிய இக்கட்டுநிலையில் இருந்து வெளிவர பிறிதொரு வழியை நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் என் மேல் சினம் கொள்வீர்கள் என நன்கறிவேன். தங்கள் சினமும் எனக்கு பேரன்பின் தொடுகையே. தங்கள் பாதங்களில் என் தலையை வைக்கிறேன். என் சிறுமைகளெல்லாம் அகலட்டும்.

எந்தையே, இடும்பவனத்திற்குள் நாங்கள் வாழ்ந்ததும் நல்லூழே. தங்களுக்கு நிகரான தோள்வல்லமை கொண்ட மைந்தன் ஒருவனை அங்கே பீமன் பெற்றான். கடோத்கஜன் என அவனுக்கு நாங்கள் பெயரிட்டோம். பெருமை மிக்க ஹஸ்தியின் தோள்கள் அடுத்த தலைமுறையிலும் நீள்கின்றன. தங்கள் நல்வாழ்த்துக்களை என் கரிய குழந்தையரக்கனுக்காகவும் நான் கோருகிறேன். ஒருநாள் தாங்கள் அவனுடன் தோள்தழுவிப்போரிடும் காட்சியை காணும் பேறை என் விழிகள் அடையவேண்டும்.

அஸ்தினபுரிக்கு அரசே, என்றும் எங்கள் பெருமை உங்கள் உதிரத்துக்குரியவர்கள் என்பதே. வேழம் மானுடனாக வந்து அமர்ந்திருந்த பெருமையை ஹஸ்தி வழியாக பெற்றது நம்குலம். இன்றும் அது நீடிக்கிறது. என்றும் அது நீடிக்கும். வேழங்கள் கடந்துசெல்லும் எளிய பாதையே நான் என்று அறிகிறேன். என் பிழைபொறுத்து என்னையும் என் இளையோரையும் வாழ்த்துங்கள்! மூத்தபாண்டவன் யுதிஷ்டிரன்.

கண்ணீர் மறைத்த கண்களை பலமுறை கொட்டி உதடுகளை இறுக்கி விதுரர் தன்னை தொகுத்துக்கொண்டார். கண்ணீர் உலர்ந்தபோது மூக்குக்குள் நீர் நிறைந்திருந்தது. அதைமேலிழுத்து மூச்சில் கரைத்தார். வெள்ளுப்பை அள்ளித் தின்றதுபோலிருந்தது தொண்டை. திருதராஷ்டிரர் கம்மிய குரலில் “என் மைந்தன்!” என்று கைகளை விரித்தார். “விதுரா, மூடா, அவன் இம்மண்ணில் வாழும் பாண்டு அல்லவா?”

அடைத்த குரலில் “ஆம் மூத்தவரே” என்றார் விதுரர். “மூடன், என்ன சொல்கிறான் பார்த்தாயா? மூடா, மூடா, நீயும் நானும் யார்? வெறும் மனிதர்கள். இக்குடியில் பிறந்தமையால் மட்டுமே சொல்லிலும் நினைவிலும் வாழப்போகும் பதர்கள்... அவனோ காலங்களைக் கடந்து காலடி எடுத்துவைத்து நடந்துசெல்லும் பேரறத்தான்... அவன் என் மைந்தன் என்பதற்கு அப்பால் நான் எதை விழைய முடியும்! தெய்வங்களே, விண்நிறைந்த மூதாதையரே, என்னை வாழ்த்தினீர்கள். என் மேல் பேரருள் சொரிந்தீர்க்ள்!”

விதுரர் பார்வையை சாளரம் நோக்கி திருப்பிக்கொண்டார். கண்ணீரில் ஒளிமிக்க சதுரம் மங்கலடைந்தது. உடனே உணர்வு மாறி திருதராஷ்டிரர் சிரித்தார். ”மூடன், சிறுமூடன். என்னை வேழம் என்கிறான். ஹஸ்தி என்கிறான். விதுரா, நீ அறியமாட்டாயா என்ன? இவன் குலமுறைமை அறிந்த யயாதி. நீதியறிந்த புரு. அவர்கள் ஒரு பெரும் தொடர். இப்பேரறத்தார் நடந்துசெல்லும் பாதையை செப்பனிடும்பொருட்டே அறிவற்ற நாங்கள் பெரியபாதங்களுடன் வேழவடிவம் கொண்டிருக்கிறோம்...”

விதுரர் பெருமூச்சுகள் வழியாக தன்னை எடையிழக்கச் செய்தார். திருதராஷ்டிரர் எழுந்து இரு கைகளையும் விரித்தபடி சொன்னார் “விதுரா. நீ இன்றே புறப்படு. காம்பில்யத்திற்குச் சென்று ஐவரையும் அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொள். என் தோள்வல்லமை முழுக்க உன் கைகளுக்கு வரட்டும். அவர்களை இறுக்கிக்கொள்... அவர்களிடம் சொல், என் நாடும் கோலும் முடியும் அவர்களுக்குரியவை என்று.”

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3

விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள். நீண்டபயணத்தால் களைத்துவிட்டிருந்த படகோட்டிகள் படகுகளைக் கட்டியதுமே ஆங்காங்கே படுத்து துயிலத் தொடங்கினர். இரவுக்காவல் வீரர்கள் மட்டும் நீண்ட வேல்களும் வாள்களுமாக படகுகளின் அமரங்களில் காவலிருக்க விண்மீன்கள் முழுதாக எழுவதற்குள்ளாகவே அனைவரும் துயின்று விட்டிருந்தனர்.

விதுரர் தன் பெரும்படகின் மூன்றாம் அடுக்கின் கூரைமேல் அமர்ந்து அப்பால் பற்றி எரியும் காடு போல் தெரிந்த காம்பில்ய நகரையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் அருகே நின்றிருந்த கொடிமரத்தின் மேல் அஸ்தினபுரியின் கொடி படபடத்துக்கொண்டிருந்தது. கொடிமரத்தின்மேல் ஏதோ பெரிய பறவை ஒன்று வந்து அமர்வதுபோலவும் எழுந்து விலகுவதுபோலவும் தோன்றிக்கொண்டிருந்தது. முதலில் சற்று வேடிக்கையாக இருந்த அது நேரம் செல்லச்செல்ல வதையாக மாறியது. அதை நிறுத்தமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது காற்று மேலும் வலுக்க சிறகடிப்பொலி துடிப்பொலியாகியது. அங்கே ஒரு பறவை கட்டிப்போடப்பட்டிருப்பது போல. அது உச்ச விசையுடன் விடுபடத் துடிப்பதுபோல.

கீழிருந்து படிகள் வழியாக குண்டாசி மேலே ஏறிவந்தான். தலைவணங்கி கொடிமரத்தூணுக்கு அப்பால் பாதிமறைந்து தயங்கி நின்ற அவனை நோக்கி அருகே வரும்படி விதுரர் கையசைத்தார். அவன் அருகே வந்து அவர் காலடியில் அமர்ந்துகொண்டான். “துயிலவில்லையா?” என்றார் விதுரர். அவன் பெருமூச்சுவிட்டபின் சிலகணங்கள் கடந்து “இரவுகளில் துயில்வது கடினம் தந்தையே” என்றான். கௌரவர்களில் அவன் மட்டுமே அவரை தந்தையே என்று அழைத்தான். அவர் அவன் தலையைத் தொட்டு “மருத்துவர்கள் அளித்த மருந்துகளை அருந்துகிறாய் அல்லவா?” என்றார்.

குண்டாசி “ஆம், அவை பெரும்பாலும் என்னை துயிலச் செய்கின்றன. துயில் விட்டு எழுவது என்பது ஒவ்வொருநாளும் நான் அடையும் பெரும் வதை” என்றான். விதுரர், “சோமன் இரக்கமற்றவன் என்பது மூத்தோர் சொல். மிக இனியவன். இனிமையாலேயே கொல்பவன். சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள். அவற்றை அவன் எளிதில் தவறவிடுவதில்லை. அவன் கையிலிருந்து அவற்றை மீட்பது கண்ணீராலும் தவத்தாலும்தான் முடியும். நீ மீண்டுவிட்டாய். அதை உன் முகத்தைப் பார்க்கும் எவரும் அறியமுடியும்” என்றார்.

குண்டாசி “எனக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன் தந்தையே” என்றான். மெல்ல சிரித்தபோது பக்கவாட்டில் அவன் கண்களில் தீப்பந்தத்தின் செவ்வொளி மின்னியது. “ஆனால் குடி இனியது என்று மட்டும் சொல்லாதீர்கள். மூடர்களுக்கு மட்டுமே அது இனியது. அறிந்தவனுக்கு அது காலடியில் அதலம் வாய்திறந்த மலைவிளிம்பில் அறுந்துகொண்டே வரும் வேரில் பற்றியபடி தொங்கிக்கொண்டிருப்பது போன்றது... ஒவ்வொரு கணமும் அச்சம், துயரம். நினைவழிவது ஒன்றைத்தவிர அதிலிருந்து தப்ப வழி இல்லை. ஆகவே மீண்டும் குடிக்கிறோம்...” என்றான்.

பற்களைக் கடித்தபடி குண்டாசி சொன்னான் “குடிகூட பெரிய நோயல்ல தந்தையே. அது உருவாக்கும் அகநிலைகள்தான் சித்தச்சிதறல். மீளவே முடியாது சுழற்றியடிக்கும் பெருநரகம். என்னென்ன பாவனைகள். எத்தனை விதமான அகநடிப்புகள்.” தலையை கையால் மெல்ல அறைந்துகொண்டான். “ஏன் குடிகாரன் ஆனேன் என்று எதையேனும் கற்பித்துக்கொள்ளாமல் அறிவுடையோன் வாழமுடியாது. அது அவனுடைய பிழைதான் என எண்ணிக்கொண்டால் அவன் தன்னிரக்கத்தால் செத்துவிடுவான். ஆகவே பிறரை குற்றம் சாட்டுகிறான். குலத்தை, குடும்பத்தை, உறவினரை, உயிர்கொடுத்த தந்தையை. அனைவரும்தான் அவனை குடிகாரனாக்கியவர்கள். ஒவ்வொருநாளும் ஒரு புதிய எதிரியை கண்டடைகிறான். அவர்கள் மேல் வெறுப்பும் கசப்பும் கொள்கிறான். வசைபாடுகிறான். காறி உமிழ்கிறான், ஏளனம் செய்கிறான். அந்தக்கசப்பு வழியாக அவன் அந்தநாளை ஓட்டுகிறான். கள்மயக்கின் இடைவெளிகள் வழியாகத் தெரியும் தன்னுணர்வை கடந்துசெல்கிறான்.”

“உச்சகட்ட வெறுப்பும் சினமும் மூண்டு எழுகையிலேயே முற்றிலும் இயலாமையையும் அறியும் ஒருவனைப்போல இரக்கத்திற்குரியவன் யார்?” அவன் தொடர்ந்தான். “அவன் தன்னை கோமாளியாக்கிக் கொள்கிறான். ஆணவம் மிக்கவனாக காட்டுகிறான். தன்னந்தனித்து நின்று உலகின் முன் அறமுரைப்பவனாகவும் ஊழால் பழிவாங்கப்பட்டவனாகவும் அநீதியாக புறக்கணிக்கப்பட்டவனாகவும் சித்தரித்துக்கொள்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு வேடம். ஒவ்வொன்றும் கடும் தன்னிரக்கத்திலேயே சென்று முடியும் என்பதை அவன் நன்கறிவான். அழுது கண்ணீர்வடிய அவன் துயில்கிறான். அதே தன்னிரக்கம் மீதூற விழித்தெழுகிறான்.” குண்டாசி உடனே சிரித்தான். “தந்தையே, நான் அடிவாங்கி அழுது துயின்றேன் என்றால் விழித்தெழுகையில் ஒரு மெல்லிய நிறைவை உணர்வேன். நான் செய்தவற்றுக்குரிய தண்டனையையும் முன்னரே பெற்றுவிட்டேன் அல்ல்வா?”

“நான் குடிப்பவர்களை எப்போதும் பார்த்துவருகிறேன்” என்றார் விதுரர். “ஒவ்வொரு போருக்குப்பின்னரும் குடிவெறியர்கள் கூடிவிடுவார்கள். போரற்ற நிலையிலும் குடிவெறியர்கள் உருவாகிறார்கள். பாரதவர்ஷம் அவர்களிடம் கருணை காட்டுவதில்லை. குடி மீறிப்போன வீரர்கள் உடனடியாக படைக்கலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். வைசியர்களும் சூத்திரர்களும் தொழில்களில் இருந்து அகற்றப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் தனிச்சமூகமாக மாறிவிடுகிறார்கள். நகரின் மானுடக்குப்பைகளாக வாழ்ந்து விரைவிலேயே செத்துவிடுகிறார்கள். பாரதவர்ஷத்தின் அத்தனை நகரங்களிலும் அடித்தளங்களில் குடிகாரர்கள் நிறைந்திருக்கிறார்கள். நகரம் விரிவாகும்தோறும் அவர்களும் பெருகுகிறார்கள். ஆம், குப்பைகள், கழிவுப்பொருட்கள்... வேறுவழியே இல்லை.”

குண்டாசி “குடிக்காதவர்களுக்கு குடிகாரர்களின் உலகம் தெரியாது. குடிப்பவர்கள் பிறரைப்பற்றி நினைப்பதில்லை” என்றான். விதுரர் சிரித்து “நமது சமூகங்கள் போரையும் உழைப்பையும் மையமாக்கியவை மைந்தா. அவற்றில் இருந்து விலகியவனை அழித்தபடிதான் அவை மேலே செல்லமுடியும்” என்றார். குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டபடி அமைதியானான். விதுரர் அவனை ஓரக்கண்னால் நோக்கிக்கொண்டிருந்தார். அவன் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. உலர்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் நக்கியபடி முகத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதுபோல கன்னங்களையும் மூக்கையும் காதுகளையும் நடுங்கும் விரல்களால் வருடியபடி மறுகணம் எழுந்து செல்லப்போகிறவன் போல அமர்ந்திருந்தான். அவன் உண்மையிலேயே மீண்டுவிட்டானா? மீளமுடியுமா?

குண்டாசி “தந்தையே, நான் உண்மையிலேயே மீண்டுவிட்டேனா?” என்றான். விதுரர் திடுக்கிட்டு “இது என்ன வினா? ஐயமிருந்தால் ஆடியில் பார். உன் முகமும் கண்களும் எல்லாம் மாறியிருக்கின்றன. மட்கிய மரம் முளைவிட்டெழுவதைப்போல நீ உயிர்கொண்டுவிட்டாய் என்கிறார்கள் அரண்மனையிலுள்ள அனைவரும். இன்னும் சில நாட்களில் நீ முழுமையாகவே மீண்டு விடுவாய்” என்றார். குண்டாசி சிரித்து “நீங்கள் திடுக்கிடுவதைக் கண்டேன் தந்தையே” என்றான்.

விதுரர் அவன் தலைமேல் கை வைத்து “ஆம், என் அகம் ஏங்குகிறது. ஏனென்றால் உன்னை மண்ணில் வந்த தேவருலகக் குழந்தைபோல பார்த்தவன் நான். கௌரவர்களிலும் பாண்டவர்களிலும் நான் உனக்களித்த முத்தங்களை எவருக்குமே அளித்ததில்லை” என்றார். அவர் கண்களில் கண்ணீர் நிறைந்தது. “உனக்காக தனிமையில் நான் விட்ட கண்ணீரை உன் அன்னையும் விட்டிருக்க மாட்டாள்.” குண்டாசி கைநீட்டி அவரது பாதத்தை தொட்டான். “தந்தையே, இது தங்களுக்காக. இனி இல்லை...”

விதுரர் ”ஆனால் இன்றும் நீ குடித்தாய்” என்றார். “ஆம், குடிக்காமலிருக்க முடியவில்லை. சற்று குடித்தேன். ஓரிரு மிடறு. அவ்வளவுதான். மீண்டுவிடுவேன் தந்தையே. உறுதியாக மீண்டுவிடுவேன்” என்றான் குண்டாசி. “நான் மீள்வதும் வாழ்வதும் என்னிடமில்லை. அது அங்கே காம்பில்யத்தில் நாளை நடப்பதில் இருக்கிறது. அவர்களுக்குத் தெரியும் என்ன நிகழ்ந்தது என்று. நாளை அவர்கள் என்னைக் கண்டதும்...” குண்டாசி தொழுவது போல மார்பில் கைகளை வைத்துக்கொண்டான். “நான் சென்று அவர்களின் காலடியில் விழுந்துவிடுவேன். எந்த அவையாக இருந்தாலும். இந்நகரே சூழ்ந்திருந்தாலும்... ஆம். அது மட்டுமே நான் செய்யக்கூடுவது.”

“தருமனின் ஓலையைப்பற்றி சொன்னேனே?” என்றார் விதுரர். “உன்னை அவன் அள்ளி தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்வான்... ஐயமே இல்லை.” குண்டாசி, “அது எனக்கு வியப்பூட்டவில்லை தந்தையே. அவர் அவ்வாறுதான் செய்யமுடியும்.. அர்ஜுனரும் நகுல சகதேவர்களும்கூட என்னை ஏற்பார்கள். நான்...” அவனால் பேசமுடியவில்லை. மூச்சு அடைக்க சிலகணங்கள் தவித்தபின் “மூத்தவர் பீமன் என்னை ஏற்கவேண்டும்... அவர் ஏற்காவிட்டால் என்னை நான் ஏற்கமுடியாது” என்றான்.

“அவன் ஏற்காமலிருக்க மாட்டான். அவர்கள் நால்வருமே மூத்தவனின் குரல்களன்றி சிந்தை அற்றவர்கள்” என்றார் விதுரர். “ஏற்பார். அவரது சொல்லும் சித்தமும் ஏற்கும். ஏனென்றால் அது மூத்தவரின் ஆணை. தந்தையே, அவரது தோள்களும் கரங்களும் ஏற்கவேண்டும். அவரது உடல் என்னை ஏற்கவேண்டும். அதை அவர் என்னை தொடும்போதே நான் உணர்ந்துகொள்வேன்.... அதன்பின்னர்தான் நான் கள்மயக்கில்லாமல் துயில்வேன்.”

“மைந்தர் உள்ளங்களில் மூதாதையர் வந்தமரும் கணங்கள் உண்டு மைந்தா. மூதாதையரை வேண்டிக்கொள். நாம் அவர்களின் குருதி. அவர்களின் கனவுகளின் நுனி. அவர்கள் விண்ணுலகில் இருந்து நம்மை கனிந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அவர்கள் கைவிட மாட்டார்கள்” என்றார் விதுரர். “விசித்திரவீரியரைப் பற்றி இன்னும் சொல்கிறார்கள் சூதர்கள். பெருங்கருணை கொண்ட மாமனிதர். மானுடரின் சிறுமையை முழுதறிந்தபின்னரும் சிரித்துக்கொண்டு கடந்து சென்றவர். அவரது வாழ்த்து உன்னுடனும் என்னுடனும் இருக்கட்டும்...”

குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டான். ”தந்தையே, இந்நாட்களில் ஒருமுறை விசித்திரவீரியரை எண்ணிக்கொண்டேன். அங்கே குஹ்யமானசம் என்னும் குளத்தின் அருகே குடிலில் வாழும் ஸ்தானகமுனிவர் விசித்திரவீரியரின் தோழர் என்றார்கள். அவரைக் காண்பதற்காக சென்றேன். கூரை விலகிப் பறந்த சிறுகுடிலில் சுள்ளிக்கட்டு போல ஒட்டிச்சுருங்கிய உடலுடன் அமர்ந்திருந்தார். எரியும் விழிகள் மட்டும் இல்லையேல் இறந்த உடலென்றே சொல்லிவிடலாம். அவரை வணங்கி காலடியில் அமர்ந்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்லவிருக்கிறார் என்று எதிர்பார்த்தேன்.”

“அவர் விசித்திரவீரியரிடம் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். அதன்பின் பேசவே இல்லை. இப்போது இரண்டு தலைமுறைக் காலமாகிறது.” குண்டாசி “ஆனால் அவர் என் கனவில் வந்தார். சிரித்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் வழிய உடல் அதிர சிரித்துக்கொண்டிருந்த அவரைக் கண்டதும் நான் விழித்துக்கொண்டேன். நானும் சிரித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். அதன்பின் நானும் சிரிக்கத் தொடங்கினேன்” என்றார்ன். விதுரர் மீண்டும் அவன் தலையைத் தொட்டு “அது விசித்திரவீரியரின் நகைப்பு. அது உனக்கு என்றும் ஒளியாக உடனிருக்கட்டும் மைந்தா” என்றார்.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலில் முதற்சாமத்தின் சங்கு ஒலித்தது. பெருமுரசம் ஒருமுறை முழங்கி அமைந்தது. “இந்நகரம் இன்று துயிலாது” என்றான் குண்டாசி. “அதன் நினைவில் என்றும் வாழப்போகும் நாள் அல்லவா?” விதுரர் “மைந்தா, நகரங்கள் மானுடரைவிட நீண்ட வாழ்நாள் கொண்டவை. அவற்றுக்கு சக்ரவர்த்திகள்கூட கங்கைக்கு குமிழிகளைப் போலத்தான்” என்றார். பந்த வெளிச்சத்தில் நிழல்கள் நீண்டு வானிலெழுந்து ஆடிகொண்டிருந்தன.

“தந்தையே, நீங்கள் பாண்டவர்களை நகருக்கு அழைத்துவந்தபின் என்ன நிகழும்?” என்றான் குண்டாசி. ”உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை மைந்தா. மணிமுடியை துறப்பதாக தருமன் எழுதியிருக்கிறான். ஆனால் அது அவன் அன்னையின் முடிவென்று தோன்றவில்லை. அவ்வாறு அவன் மணிமுடிதுறந்தாலும் அரசர் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அஸ்தினபுரிக்கு தருமனே அரசன் என்றே அவர் சொல்கிறார். நாட்டை அளிக்க துரியோதனன் ஒப்பமாட்டான். சகுனியும் கணிகரும் ஒப்பமாட்டார்கள்.”

சிலகணங்களுக்குப்பின் “நாட்டை இரு பகுதிகளாகப் பிரிப்பது அன்றி வேறு வழியே தெரியவில்லை. அதை அரசர் ஏற்றுக் கொண்டாரென்றால் அனைத்தும் சின்னாட்களில் முறையமைந்துவிடும் என நினைக்கிறேன்” என்றார் விதுரர். குண்டாசி “இளையோனாகப் பிறந்தமை பெரும் வரம் என உணர்கிறேன் தந்தையே. சுமைகள் இல்லை. கடமைகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் ஒரு போரில் மூத்தவருக்காக தலையுடைந்து மூளைசிதறி செத்து விழுந்தால்போதும். வீரசொர்க்கம். முழுமை....” அவன் சிரித்ததை சினத்துடன் திரும்பிப்பார்த்த விதுரர் “என்ன பேச்சு இது... மூடு வாயை” என்றார்.

குண்டாசி மேலும் சிரித்தபடி எழுந்து கீழே செல்ல திரும்பினான். “மீண்டும் குடிப்பதற்கா?” என்றார் விதுரர். “என்னை பொறுத்தருளுங்கள் தந்தையே. என் உடலுக்குள் இருக்கும் பேய் இனியும் காத்திருக்காது...” என்றபின் அவன் படிகளில் இறங்கினான். “வேண்டாம் மைந்தா” என்றார் விதுரர். “ஒரு மிடறு. சற்றே துயிலும் வரை... ஒரே ஒரு மிடறு” என்றான் குண்டாசி படிகளில் இறங்கியபடி. விதுரர் பெருமூச்சுடன் உடலை தளர்த்திகொண்டார்.

அவர் சற்றுநேரம் அமர்ந்தபடியே துயின்றிருக்கவேண்டும். போர்முரசின் ஒலியும் படைக்கூச்சல்களும் கேட்டு விழித்துக்கொண்டார். கொலைதிகழ் பெருங்களத்தில் குருதியாடியபடி சென்றுகொண்டே இருந்த கனவை நினைத்து வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தார். வாய்திறந்து நீர்க்காற்றில் துயின்றிருந்தமையால் தொண்டை உலர்ந்து தோலால் ஆனதுபோலிருந்தது. அவர் படிகளின் வழியாக இறங்கிய ஒலி கேட்டு ஓடிவந்த சேவகன் “விடியலுக்கான முரசு அது உத்தமரே. முதற்கதிர் எழும்போது நமது அணிப்படகுகள் நகரணையவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இளைய அரசர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் துறைக்கு வந்து நம்மை வரவேற்கிறார்கள்” என்றான்.

விதுரர் “குண்டாசியை எழுப்பு” என்றபடி நீராடச்சென்றார். நீராடி புதுப்பட்டாடையும் வைரஅணிகளும் பொற்பிடி வைத்த உடைவாளுமாக அவர் படகுமுகப்புக்கு வந்தபோது முழுதணிக்கோலத்தில் குண்டாசியும் வந்துவிட்டிருந்தான். அவன் காதுகளில் இரு விண்மீன்கள் என நீலநிற வைரத்துளிகள் ஒளிதிரும்ப அசைந்தன. விதுரர் கைகாட்ட படகிலிருந்து எரியம்பு ஒன்று எழுந்தது. காம்பில்யத்தில் இருந்து எரியம்பு எழுந்ததும் படகுகள் பாய்களை விரித்தன. முகில்சூடிய மலைமுடிகள் போல அவை நீரில் எழுந்து துறைமேடை நோக்கி சென்றன.

படகுகள் அணுகியபோது காம்பில்யத்தின் கோட்டையின் ஏழு காவல்மாடங்களிலும் நின்றிருந்த வீரர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியையும் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் பறக்கவிட்டனர். துறைமேடை முழுக்க நூற்றுக்கணக்கான மூங்கில்கள் நடப்பட்டு அவை தளிரிலைகளாலும் மலர்களாலும் மூடி அணிசெய்யப்பட்டிருந்தன. தளிரும் மலரும் கலந்த தோரணங்கள் செறிவாகக் கட்டப்பட்டு துறைமேடையே பூத்த காடாக மாறிவிட்டிருந்தது. நான்கு வரிசைகளாக மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்கள் நின்றனர். அவர்களின் நடுவே எண்மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் நிற்க அவர்களைச் சூழ்ந்து மின்னும் கவசங்கள் அணிந்த படைவீரர்கள் ஒளிவிட்ட வாள்களும் வேல்களுமாக நின்றனர்.

துறைமுகப்பில் வேறு கலங்களேதும் நிற்கலாகாதென்று ஆணையிருந்தமையால் அஸ்தினபுரியின் முதற்கலம் கரையணைந்தபோது அது நீராடும் யானையின் அடிவயிற்றை முட்டும் பரல்மீன் எனத் தோன்றியது. துறையில் இருந்து பசுவின் நாக்கு போல நீண்டு வந்த மரப்பாதை மரக்கலத்தை தொட்டதும் கலத்திலிருந்த மங்கலவாத்தியமேந்திய சூதர்கள் இசைத்தபடி நிரைவகுத்து இறங்கிவந்தனர். கரையில் நின்றிருந்த சூதர்களும் இசைக்கத் தொடங்க துறைமேடையே பெரும் இசைக்கருவி என முழங்கியது. இரண்டாவது படகிலிருந்து அஸ்தினபுரியின் அணிப்பரத்தையர் இறங்க அவர்களை காம்பில்யத்தின் அணிப்பரத்தையர் எதிர்கொண்டு மங்கலம் காட்டி வரவேற்றனர்.

விதுரரின் பெரும்படகு கரையணைந்தபோது கோட்டைமேல் பெருமுரசு முழங்கியது. கோட்டைவாயிலைக் கடந்து உள்ளிருந்து அரசகுலத்து அணிநிரை துறைமுகப்பு நோக்கி வந்தது. முகப்பில் ஏழு சூதர்கள் மங்கலம் முழக்கி வர தொடர்ந்து தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் வந்தனர். முகபடாமிட்ட பட்டத்துயானையும் செவிகளில் வைரங்கள் சுடரும் அரசப்புரவியும் பொற்கவசமிட்ட கொம்புகள் கொண்ட வெள்ளெருதும் வந்தன. அவற்றுக்குப்பின்னால் இளையமன்னர் சத்யஜித்தும் இளவரசர் சித்ரகேதுவும் உருவிய உடைவாளுடன் நடந்து வந்தனர். பாஞ்சாலத்தின் விற்கொடி துவண்ட நான்கு அணித்தேர்கள் அவர்களை தொடர்ந்து வந்தன.

விதுரர் படகிலிருந்து மரப்பாதை வழியாக இறங்கி வந்தபோது அணிப்பரத்தையர் அவர்மேல் மலர்களையும் மஞ்சளரிசியையும் தூவி வாழ்த்துக்கூவினர். மங்கல இசையின் ஒலியில் காட்சிகளே அதிர்ந்தன. சத்யஜித்தும் சித்ரகேதுவும் அருகே வந்து அவர்முன் வாள்களைத் தாழ்த்தி தலைவணங்கி முகமன் கூறி வரவேற்றனர். அவர் தலைவணங்கி அஸ்தினபுரியின் அரசரின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்கள் முன்னால் வந்து குண்டாசியை வாழ்த்தி வரவேற்றனர்.

சத்யஜித்தும் சித்ரகேதுவும் விதுரரை வரவேற்று கொண்டு சென்று ரதங்களில் ஏறச்செய்தனர். அவற்றில் அஸ்தினபுரியின் கொடியும் ஏற்றப்பட்டது. அவர்கள் நின்றுகொண்டு கைகூப்பி வாழ்த்துக்களை ஏற்றபடி நகரத்தெருக்கள் வழியாக சென்றனர். முன்னால் பட்டத்துயானையும் அணிப்புரவியும் களிற்றெருதும் சென்றன. பின்னால் இளைய அரசரும் இளவரசரும் வந்தனர். மலர்மாலைகளும் தளிர்த் தோரணங்களும் கொடிகளும் பாவட்டாக்களும் மலர்வளைவுகளுமாக அணிக்கோலம் பூண்டிருந்த நகரின் இரு மருங்கிலும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும் நின்றிருந்த மக்கள் வாழ்த்துரை கூவி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர்.

மலர்மழை மஞ்சளரிசிமழை வழியாக விதுரர் சென்றார். அவர் சென்ற வழியெங்கும் காவல்மாடங்களில் இருந்து அணிமுரசுகள் ஒலித்தன. அஸ்தினபுரியின் சீர்வரிசைகளை கொண்டுவந்த பன்னிரு வண்டிகள் அவர்களைத் தொடர்ந்து வந்தன. அரண்மனைக் கோட்டை வாயிலை அடைந்தபோது அகம்படியினரும் அணிநிரையினரும் சூழ துருபதனே வந்து அவரை அழைத்து உள்ளே கொண்டு சென்றார். அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் அரசகுலத்துப்பெண்டிர் நால்வர் வந்து விதுரரை மஞ்சள் திலகமிட்டு வரவேற்றனர்.

அரண்மனைக்குள் சென்றதும் துருபதன் வணங்கி “தங்கள் வருகை அஸ்தினபுரியின் அரசரே நேரில் வந்ததற்கு நிகர் அமைச்சரே. சற்று ஓய்வெடுத்து உடைமாற்றி வருக. சுடரொளி நிறம்மாறும் நேரத்தில் மணநிகழ்வு என நிமித்திகர் நேரம் வகுத்தளித்திருக்கிறார்கள்” என்றார். விதுரர் ”அவ்வண்ணமே ஆகுக” என்றார்.

“இம்மணநிகழ்வில் அரசர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை அமைச்சரே” என்றார் துருபதன். “அனைவரும் நேற்று முன்தினமே அகன்றுவிட்டனர். அவர்களுக்கு இம்மணநிகழ்வு உகந்ததாக இல்லை என்றனர்” என்றபின் புன்னகைத்து “ஆனால் அதுவல்ல உண்மை. மகதமன்னர் ஜராசந்தர் சென்றபின் அவரது சமந்தர்களும் துணைமன்னர்களும் இருக்க விரும்பவில்லை. அஸ்தினபுரியின் இளவரசர் சென்றபின் அவர்களின் மன்னர்குழாமும் சென்றுவிட்டனர். இங்கிருப்பவர்கள் எங்கள் அருகமைந்த சில சில சிறு மன்னர்கள்மட்டுமே. உசிநாரர்களுக்கும் காளகூடர்களுக்கும் குலிந்தர்களுக்கும் வேறு வழியில்லை. என் எல்லைப்புறத்து அரசர்கள்...”என்றார்.

“அஸ்தினபுரி பாண்டவர்களை ஏற்கிறதா என்ற ஐயம் அரசர்களுக்கு இருப்பது இயல்பே. எந்த அரசகுலத்து மணநிகழ்வும் அரசியல்கூட்டுதான் என அரசர்கள் அறிவார்கள்” என்றார் விதுரர். “இந்நிகழ்வுக்குப்பின் பாண்டவர்கள் அஸ்தினபுரியில் நகர்நுழைகையில் அந்த அச்சம் விலகும்.” துருபதனின் விழிகள் மாறுபட்டன. “இங்கிருந்து அவர்களை தாங்கள் அஸ்தினபுரிக்கு அழைத்துச்செல்லவிருப்பதாக செய்தி வந்தது. அது எனக்கு உவகை அளித்தது. ஆனால் தருமன் அங்கே பட்டத்து இளவரசராகத்தான் நகர்நுழைகிறாரா என அறிய விரும்பினேன்” என்றார்.

“ஆம், பட்டத்து இளவரசராகத்தான். அதுவே அரசரின் ஆணை” என்றார் விதுரர். துருபதன் முகம் மலர்ந்து “அப்படித்தான் நானும் எண்ணினேன். அஸ்தினபுரியின் அரசர் மதவேழமென அகம் விரிந்த மாமனிதர் என்றனர். சில ஐயங்கள் நிலவின. அவை வெறும் வீண்சொற்கள் என நான் அறிவேன். ஆயினும் நான் வினவ எண்ணினேன். அது என் கடமை என்பதனால்...” என்றார். விதுரர் புன்னகைத்து “ஐயங்கள் இயல்பே. அவர்கள் காடுறைந்தமை எழுப்பிய வினாக்கள் அவை. அவற்றை அவர்களின் நகர்நுழைவு முழுமையாகவே அகற்றிவிடும்” என்றார்.

“அவ்வாறே ஆகுக” என்றபின் துருபதன் விடைபெற்றார். அவர் செல்வதை நோக்கியபின் அறைக்கதவை சாற்றிய குண்டாசி “அவர் ஒன்றிலேயே உறுதிகொண்டுவிட்டார் தந்தையே. தன் மகள் பேரரசியாகவேண்டும் என்பதையன்றி எதையும் அவர் எண்ணவில்லை” என்றார். விதுரர் பெருமூச்சுவிட்டு “அவரைப்பற்றி சூதர்கள் சொல்லும் கதைகள் அச்சமூட்டுகின்றன. ஒன்றுக்காக மறுபிறப்பு கொள்ளும் மானுடர் அதற்காக மட்டுமே வாழ்கிறார்கள். அவர்கள் வில்லில் இருந்து கிளம்பிவிட்ட அம்புகள்” என்றார்.

கதவை மெல்லத்திறந்த சேவகன் “பாண்டவர்கள்” என்று அறிவித்தான். குண்டாசி தீபட்டவனைப்போல எழுந்து பின்னால் விலகி சுவர் அருகே சென்று இரு கைகளையும் சுவரில் ஒட்டிக்கொண்டு நின்றான். வலிப்பு கொள்ளப்போகிறவனைப்போல முகமும் உடலும் இழுபட்டு கழுத்துத்தசைகள் இறுகின. அவனை திரும்பி நோக்கியபின் விதுரர் வாயிலை நோக்க தருமன் வந்து கதவைப்பற்றியபடி நின்றான். உணர்ச்சிகளை வெல்ல உதடுகளை கடித்திருந்தான்.

விதுரர் அவனைக் கண்டதும் அனைத்தையும் மறந்தார். அவன் இளமையை கடந்து விட்டிருப்பதாகத் தோன்றியது. நெற்றி மேலேறி மூக்கு சற்று புடைத்து கழுத்துத் தசைகள் மெல்லத் தளர்ந்து இன்னொருவன் எனத் தோன்றினான். அவன் விழிகள் மேலும் கனிந்து விட்டிருந்தன. அவனை நோக்கி கைநீட்டினார். அவனை அள்ளி மார்போடணைக்க எண்ணிய உள்ளம் மறுகணமே தழைந்து அவன் மடியில் தலைவைத்துக்கொள்ள விழைந்தது. ஏன் என மறுகணமே வியந்தது. அவனுடையவை அன்னையின் விழிகள். ஆம், அதனால்தான். ஆனால் ஆண்மகனில் எப்படி வந்தது அன்னைநோக்கு?

தருமன் அருகே வந்து குனிந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவனை அள்ளி தன் தோளுடன் அணைத்துக்கொண்டார். அத்தனை தடைகளையும் கடந்து அவரிடமிருந்து அழுகை எழுந்தது. தருமனின் தோள்களில் தன் முகத்தை புதைத்தபடி அவர் கண்ணீர் விட்டார். வெம்மையுடன் துளிகள் அவன் தோளில் விழுந்து வழிந்தன. கால்கள் தளர்ந்து அவன் மேலேயே தன் எடையை முழுக்க சுமத்திக்கொண்டார்.

அவன் தோலின் மணத்தை அறிந்தார். மடியில் தூக்கிவைத்து அவர் கொஞ்சிய அந்த இளமைந்தனின் வாசனை. இத்தனை வளர்ந்தபின்னரும் அது எஞ்சியிருக்கிறதா என்ன? உடலில் அல்ல. உள்ளத்திலும் அல்ல. அவையெல்லாம் மாறிவிட்டன. இது ஆழத்தின் வாசனை. கருவறைவிட்டு மானுடன் கொண்டுவருவது. இறந்தபின் விண்ணுலகு சென்றால் மூதாதையர் இப்படித்தான் தம் மைந்தர்களை அறிந்துகொள்வார்கள். அவனை இறுக அணைக்கவே அவர் நெஞ்சு எழுந்தது. ஆனால் உடல் துவண்டு அவன் மேல் ஆடையென கிடந்தது.

தருமன் அவரை மெல்ல விலக்கி திரும்பிப்பார்த்தான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றிருந்தார்கள். தருமன் அவர்களைப் பார்த்து தலையசைக்க அவர்கள் வந்து விதுரரை வணங்கினர். விதுரர் கண்ணீர் தாடியில் வழிந்து சொட்ட அவர்களை நோக்கி கைவிரித்தார். ஒவ்வொருவரும் வளர்ந்து மாறியிருந்தனர். தனித்து வேரூன்றி கிளைவிரித்த மரங்களாகிவிட்டிருந்தனர். மைந்தர் வளர்ந்திருப்பது ஏன் அத்தனை உவகையை அளிக்கிறது! ஏன் அத்தனை துயரத்தையும் உடன் சேர்த்துக்கொள்கிறது!

விதுரர் அவர்களை சேர்த்து அணைத்துக்கொண்டார். அர்ஜுனனின் தோள்களை மாறி மாறி முத்தமிட்டார். நகுலனையும் சகதேவனையும் இரு கைகளாலும் தலையைப்பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு குழல்கற்றைகளை முகர்ந்தார். அவர்களின் கன்னங்களை வருடினார். இளமைந்தர் முகங்களுக்கே உரிய எண்ணைப்பிசுக்கு. சிறிய பருக்கள். கையை உறுத்தும் மென்மயிர் பரவல். அவர்களின் தோள்தசைகள் இறுகி விட்டிருந்தன. அவர்களின் கையிடுக்கில் இருந்து புதுப்புனுகின் வாசனை எழுந்தது. அந்த வாசனை அவர்கள் தலைமுடியில் இருந்தது. தோளிலும் விலாவிலும் இருந்தது.

அவர்களின் உடல்கள் மட்டுமே அவர் முன் இருந்தன. நறுமணம் மிக்க நீரோடையென அவரை அவை சுழித்துச்சென்றன. ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு வாசனை. தருமனின் உடலில் மாவுவாசனை. அர்ஜுனன் உடலில் கந்தமண்ணின் வாசனை. நகுலனில் வாழைமட்டையின் வாசனை. சகதேவனில் தாழைமடல் வாசனை. முகர்ந்து முகர்ந்து தீராத வாசனைகள். வாசனைகள் வழியாக அவர்களை அவர் கைக்குழந்தைகளாக மீட்டுக்கொண்டார். சிந்தனையில்லாமல் நேற்றும் நாளையும் இல்லாமல் அவர்களுடனிருந்தார். எளிய விலங்கு போல.

பீமன் வந்து வாயிலில் நின்ற ஓசைகேட்டு அவர் மீண்டு வந்து நோக்கினார். அவன் குண்டாசியை கண்களைச் சுருக்கிப் பார்த்தான். பிறர் அவனை அடையாளம் காணவேயில்லை என்று விதுரர் உணர்ந்தார். ”இவன்...” என அவர் சொல்ல முற்படுவதற்குள்ளேயே பீமன் அடையாளம் கண்டு கொண்டு இரண்டு காலடிகளில் அவனை நெருங்கி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குண்டாசி அலறியபடி சுவர்மூலை நோக்கி விழுந்தபோது அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடு சாய்த்து “குடிக்கிறாயா? குடிக்கிறாய் அல்லவா? மூடா” என்று கிட்டித்தபற்களுடன் கூவினான். “சொல்... குடிக்கிறாயா?”

குண்டாசி திணறியபடி இருகைகளாலும் அவன் கையை பற்றியபடி “இல்லை மூத்தவரே... இல்லை மூத்தவரே!” என்றான். பீமன் பற்களை இறுக்கி “இனி ஒரு சொட்டு உன் வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன்” என்றான். “இல்லை மூத்தவரே... இனி குடிக்கமாட்டேன்” என்றான் குண்டாசி. பீமனின் கை தளர அவன் துவண்டு விழப்போனான். பீமன் அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு “மூடா, மூடா” என்றான். தன் பெரிய கைகளால் அவன் தோள்களை மாறி மாறி அடித்தபின் மார்புடன் இறுக்கிக்கொண்டான்.

வாயிலில் வந்து நின்ற சேவகன் “மணநிகழ்வுகளுக்கான நேரம் நெருங்குகிறது. அணிச்சேவகர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். விதுரர் புன்னகையுடன் நகுலனை விலக்கி “செல்க. அணிசெய்து மணமகன்களாக மேடைக்கு வருக” என்றார். அவன் புன்னகையுடன் பார்வையை விலக்கிக் கொண்டான். தருமன் இதழ் கோணலாக புன்னகை செய்து “அனைத்தும் ஒரு நடிப்பு என ஆயிரம் முறை படித்திருக்கிறோம் அமைச்சரே. அதை அறியும் கணங்கள் இப்போதுதான் தொடங்குகின்றன” என்றான்.

அவர்கள் விடைபெற்று கிளம்பினர். பீமன் குண்டாசியை அதுவரை தன் கைகளுக்குள்தான் வைத்திருந்தான். அவனை விலக்கி இரு தோள்களையும் பற்றி குனிந்து நோக்கி “மூடா, இனி குடித்தாயென்றால்...“ என்று சொல்லத் தொடங்க “இல்லை மூத்தவரே” என்றான் குண்டாசி. பீமன் அவன் தோள்களைப் பற்றி மும்முறை உலுக்கிவிட்டு பிடியை விட்டான். திரும்பி விதுரரை வணங்கிவிட்டு வெளியே சென்றான்.

விதுரர் பெருமூச்சுடன் குண்டாசியிடம் “நிறைவடைந்தாய் அல்லவா?” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இதற்குமேல் என்ன?” என்றார் விதுரர் மீண்டும். “தந்தையே, அவரது உள்ளம் என்னை ஒருபோதும் விலக்கவில்லை என அறிந்தேன். அவரது ஆன்மா என்னை முழுமையாக ஏற்றுத்தழுவியது இப்போது... ஆனால்” அவன் விழிகள் சஞ்சலத்துடன் அசைந்தன. “அவர் உடலால் ஆனவர் தந்தையே. அவர் உடல் என்னை ஏற்கவில்லை. அது இனி ஒருபோதும் எங்களை ஏற்காது.”

“என்ன சொல்கிறாய்?” என்று மூச்சடைக்கும் குரலில் கேட்கும்போதே விதுரர் அந்த வெறும்கூற்று உண்மை என எப்படி தன் அகம் எண்ணுகிறதென்றும் வியந்துகொண்டார். “ஆம், அதுதான் உண்மை. அதை என் உடல் அறிந்தது. வெறும் சதைதான். ஆனால் அது அன்னம் அல்லவா? தெய்வம் அல்லவா? அதற்குத்தெரியும்" என்றான் குண்டாசி. பின்பு சிரித்துக்கொண்டு “ஒருநாள் அவர் கையால் என் தலை உடைந்து தெறிக்கும் தந்தையே. சற்று முன் அதை அத்தனை அருகே உணர்ந்தேன்.”

“வாயை மூடு...” என்று விதுரர் சீறினார். “மீண்டும் குடிப்பதற்காக இதையெல்லாம் சொல்கிறாய்...” குண்டாசி “இல்லை தந்தையே. இது உண்மை என நீங்களும் அறிவீர்கள்” என்றான். “இந்தக் கணத்தை நோக்கி சிரிக்கக் கற்றுத்தந்த ஸ்தானக முனிவரைத்தான் இப்போது எண்ணிக்கொள்கிறேன்.”

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 4

பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன,. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் விடியலின் எரிசெயல் நிகழ்ந்துகொண்டிருந்தது.

சோலைக்கு வெளியே தன் அகம்படியினருடன் கருணர் எரிசெயல் முடிவதற்காக காத்திருந்தார். மிக இளமையில் அவர் முந்தைய துர்வாசரை பாஞ்சாலத்தின் பேரவைக்கூட்டம் ஒன்றில் கண்டிருந்தார். முதிய ஆலமரம்போல சடைகள் தொங்க உடல்குறுகிய முதியவர். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று சூதர்கள் சொன்னார்கள். நூற்றுப் பதின்மூன்றாவது துர்வாசரே முதியவர்தான் என்று கேட்டிருந்தார். எரிகுளத்தின் செந்தழலின் அலைப்புறும் ஒளியில் அமர்ந்திருந்த துர்வாசரை அப்பால் நின்று நோக்கியபோது அவரே ஒரு தழல் என்று தோன்றியது.

வேள்விமுடிந்து துர்வாசர் எழுந்து தன் குடிலுக்குள் சென்றபின் கருணர் அருகே அணுகி பிறவைதிகர்களையும் துர்வாசரின் மாணவர்களையும் வணங்கினார். அவர்கள் அளித்த வேள்வியன்னத்தை உண்டபின் காத்திருந்தார். துர்வாசர் அழைப்பதாக ஆணைவந்ததும் குடிலுக்குள் சென்று புலித்தோல் மேல் மலரமர்வில் இருந்த துர்வாசரின் முன் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினார். அவர் வாழ்த்துரை சொல்லி எழுந்தமர ஆணையிட்டார். அணைந்துகொண்டிருக்கும் அனல் என செந்நிறம் கலந்த கருஞ்சடைக்கற்றைகளும் மெலிந்து இறுகிய செந்நிற உடலும் புலிக்கண்களும் கொண்டிருந்த துர்வாசர் அவரை நோக்கி “சொல்” என்றார்.

“அடியேன் பெயர் கருணன். பாஞ்சாலத்தின் பேரமைச்சன். தங்களை இன்று காம்பில்யத்தில் நிகழும் இளவரசியின் மணநிகழ்வுக்கு அழைத்துச்செல்ல ஆணையிடப்பட்டிருக்கிறேன். எழுந்தருளல் வேண்டும்” என்றார் கருணர். அவரை கூர்ந்து நோக்கி “உன் தந்தை பெயர் என்ன?” என்றார் துர்வாசர். “சௌனக வைதிக மரபைச்சேர்ந்தவர் அவர். ரிக்வைதி. பன்னிரு ஆண்டுகளுக்கு முன் காலம்சென்ற அவரை தேவசன்மர் என்று அழைத்தனர்” என்றார் கருணர். “எனக்கு முன் அவர் பாஞ்சாலத்தின் பேரமைச்சராக இருந்தார்.”

துர்வாசர் தலையசைத்து “ஆம் அறிவேன். அவனுடைய இருபத்தெட்டாவது நாள் முதல்மயிர் கழித்தல் என் முன் நிகழ்ந்தது” என்றார்.கருணர். உடல் சிலிர்த்தது என்றாலும் அவரது சித்தம் வினாக்களாக பெருகி எழுந்தது. ஆனால் துர்வாசர் தொடர்ந்து “உங்கள் குலத்தையே நான் அறிவேன். தேவசன்மனின் தந்தை திருணதூமன் என்னிடம் சிலகாலம் வேதம் பயின்றிருக்கிறான். அவனுக்கு இருந்த இழுவை நோய் என்னுடன் தொடரமுடியாது செய்தது. அவன் தந்தை சுதாமனை சௌனகவனத்தில் வசிட்ட குருமரபில் ஒருவனாக கண்டிருக்கிறேன். அவன் தந்தை சுகாசர் பிரீதை என்னும் வனமகளை மணந்தது என் முன்னிலையில்தான்” என்றார். கருணரின் அனைத்து வினாக்களும் நீர் பட்டவை போல அணைந்தன. சித்தம் குளிர்ந்து கல்லாகிக் கிடந்தது.

துர்வாசர் பெருமூச்சுடன் “ஆம், இதுவும் என் கடனே. இவை என்னிலிருந்து தொடங்கவேண்டுமென்பது ஊழ் எனக்கொள்கிறேன். கிளம்புவோம்” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று கருணர் வியந்துகொண்டாலும் எதுவும் கேட்கவில்லை. துர்வாசரையும் அவரது ஏழு மாணவர்களையும் அழைத்துச்சென்று அணிப்படகில் கங்கையைக் கடந்து காம்பில்யத்தை அடைந்தார். துறவுக்கொள்கைப்படி துர்வாசர் உயிர்களின் மேல் ஏறுவதில்லை என்பதனால் நகரின் சாலைகளில் தன் மாணவர்களுடன் நடந்தே சென்றார். இருமருங்கும் கூடிய நகர் மக்கள் மண்டியிட்டு நிலத்தில் நெற்றிதொட வணங்கினர். அவர் கால்கள் பட்ட மண்ணை குனிந்து அள்ளி நெற்றியில் அணிந்தனர்.

எதிரே புரவியில் வந்த ஒற்றர்தலைவர் சிம்மர் விலகி துர்வாசர் செல்ல வழிவிட்டு வணங்கி நின்றபின் கருணரிடம் வந்து “அங்கே மணமேடை ஒருங்கி விட்டது அமைச்சரே. மணமக்கள் ஐவரும் மேடைக்கு வந்துவிட்டனர். அஸ்தினபுரியின் அமைச்சர் விதுரர் வந்து அவையமர்ந்திருக்கிறார். அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்றார். “நான் நேரத்தை வகுக்கவில்லை சிம்மரே. இது முனிவரின் பாதை. நான் தொடர்கிறேன்” என்றார் கருணர்.

சிம்மர் கைகாட்ட அவரது ஒற்றன் ஒருவன் புரவியில் திரும்பி விரைந்தான். அவன் சென்று சற்று நேரத்தில் அரண்மனையின் முரசுகள் முழங்கத் தொடங்கின. துர்வாசர் அரண்மனையின் கிழக்கு முற்றத்தை அடைந்தபோது அரண்மனைக்கு மேல் இருந்த நான்கு காவல்மாடங்களிலும் பெருமுரசுகள் அதிர்ந்தன. அரண்மனைக்குள் இருந்து சத்யஜித்தும் சித்ரகேதுவும் முழுதணிக்கோலத்தில் வந்து துர்வாசரை உடல் மண்படிய வணங்கி உள்ளே அழைத்துச்சென்றனர்.

சுயம்வரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஏழடுக்குப் பந்தல் மீண்டும் சீரமைக்கப்பட்டு வண்ணப் பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மலர்மாலைகளும் கொண்டு அணிசெய்யப்பட்டிருந்தது. குடிகளவையிலும் வைதிகர் அவையிலும் மக்கள் நிறைந்து செறிந்திருந்தனர். அரசரவையில் மட்டும் உசிநார மன்னர் சுசேனர், திரிகர்த்த மன்னர் உத்தவன், குலிந்த மன்னர் சுபாங்கதன், லோமச நாட்டரசர்களான விதண்டர் தண்டர், பால்ஹிக நாட்டு சித்ரரதன், கின்னரநாட்டின் அரசர் சோமசேனர் என அன்னைவழி முறைமைகொண்ட பிற ஆறுநாடுகளின் அரசர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் தனித்தனியாக தங்கள் அமைச்சர்களும் தளபதிகளும் சேவகர்களும் சூழ அமர்ந்திருந்தனர்.

மங்கலவாத்தியங்கள் நின்று நிமித்திகர் வரவறிவிக்க கைகூப்பியபடி துர்வாசர் உள்ளே நுழைந்ததும் மூன்று அவைகளிலும் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வாழ்த்தி வணங்கினர். பொன்பட்டுத் தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் அணிசெய்யப்பட்டிருந்த நீளமான மணமேடையில் இடப்பக்கமாகப் போடப்பட்டிருந்த அரியணையில் அமர்ந்திருந்த துருபதன் தன் தேவியருடன் எழுந்து நின்று கைகூப்பி தலைவணங்கினான். ஏழு வலம்புரிச்சங்குகள் ஒன்று நின்ற முனையிலிருந்து ஒன்று தொடங்க நீண்டு பெருங்குரலில் அவரை வாழ்த்தின.

பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களில் இருந்தும் குலத்தலைவர்கள் கைகளில் தங்கள் குலங்களுக்குரிய இலச்சினைக்கோல்களுடன் இணைந்து வந்து துர்வாசரை கால்தொட்டு வணங்கி அவை நோக்கி கொண்டு சென்றனர். அவரை புலித்தோலிட்ட பீடத்தில் அமரச்செய்து பின்னகர்ந்தனர். அகலிகையும் பிருஷதியும் முழுதணிக்கோலத்தில் தொடர, மணிமுடி சூடி செங்கோல் ஏந்திய துருபதன் வந்து துர்வாசரின் பாதங்களை பணிந்தார். மூவரும் அவரது கால்களை பொற்தாலத்தில் வைத்து மலரிட்டு பூசை செய்தார்கள்.

துருபதனின் இளையோனாகிய சத்யஜித்தும் அவர் துணைவி கிருதையும் துர்வாசருக்கு பாதபூசனை செய்தனர். அதன்பின் துருபதனின் மைந்தர்களான சுமித்ரன். ரிஷபன், யுதாமன்யு, விரிகன், பாஞ்சால்யன், சுரதன், உத்தமௌஜன், சத்ருஞ்ஜயன், ஜனமேஜயன், துவஜசேனன், திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒவ்வொருவராக வந்து அடிவழிபாடு செய்தனர். துர்வாசர் அவர்களின் தலைமேல் மலர் போட்டு வாழ்த்தினார். அவர்கள் மும்முறை வணங்கி புறம்காட்டாது பின்சென்றனர்.

மணமேடையில் இடப்பக்கம் போடப்பட்ட அரியணயில் துருபதன் செங்கோல் ஏந்தி மணிமுடி சூடி அமர அவன் இருபக்கமும் அகலிகையும் பிருஷதியும் அமர்ந்தனர். இரு சேவகர்கள் பிடித்த வெண்கொற்றக்குடை அவர் மேல் கவிந்திருந்தது. அவர்களுக்குப்பின்னால் போடப்பட்ட பீடங்களில் சத்யஜித்தும் கிருதையும் துருபதனின் மைந்தர்களும் அவர்களின் துணைவியரும் அமர்ந்தனர். அவர்களைச் சூழ்ந்து தாலங்கள் ஏந்திய சேடியரும் சேவகரும் நின்றனர்.

துர்வாசர் திரும்பி கருணரிடம் “சிகண்டி எங்கே?” என்றார். அவர் பதறி நான்குபக்கமும் நோக்கியபின் ஓடிச்சென்று ஒற்றர்தலைவர் சிம்மரிடம் “சிம்மரே சிகண்டி எங்கே?” என்றார். “ஏன்?” என்றார் சிம்மர். “முனிவர் கேட்கிறார்” சிம்மர் “உங்களுக்குத் தெரியாததா அமைச்சரே? அவர் மங்கல நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை” என்றார். “அவரை அழைத்துவாருங்கள். உடனே” என்றபின் கருணர் திரும்பிச்சென்று “அவர் மடைப்பள்ளியை நடத்துகிறார். இதோ வந்துகொண்டிருக்கிறார்” என்றார். துர்வாசர் தலையசைத்துவிட்டு கைகளைக் கட்டியபடி கண்மூடி காத்திருந்தார்.

அவையில் சலசலப்பு ஒலிக்க சத்யஜித் வந்து கருணரிடம் என்ன நிகழ்கிறது என்று கேட்டார். அவர் மெல்லிய குரலில் விடை சொன்னார். ஆனால் அதற்குள் எப்படியோ அவையெங்கும் துர்வாசர் சிகண்டிக்காக காத்திருப்பது தெரிந்துவிட்டது. பேச்சொலிகள் எழுந்து முழக்கமாக நிறைந்தன. அனைவர் விழிகளும் சிம்மர் உள்ளே சென்ற மணமேடை வாயிலை நோக்கிக்கொண்டிருந்தன. தௌம்யரின் மாணவர்களின் வேதமுழக்கம் மட்டும் அவ்வுணர்ச்சிகளுடன் தொடர்பற்றதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. அவையில் எழுந்த ஒலியே சிகண்டி வருவதை காட்டியது. சிம்மர் தொடர சிகண்டி அவையின் உள்வாயில் வழியாக வந்தார்.

சிகண்டி வெண்ணிற மேலாடையும் கீழாடையும் உடுத்து காதுகளில் மணிக்குண்டலம் ஒளிர திடமான காலடிகளுடன் நடந்து வந்தார். அவரது கரிய பேருடலில் மேலாடைக்குள் கனத்த முலைகள் அசைந்தன. தோளில் சரிந்த கூந்தலிழைகளில் நரைக்கற்றைகள் கலந்திருந்தன. அவரது முகவாயில் கரிபடிந்த சிலந்திவலை என இருந்த மெல்லிய தாடியிலும் வாயோரங்களில் மட்டும் எழுந்து கத்திமுனை என சுருட்டிவிடப்பட்டிருந்த மீசையிலும் நரை இருக்கவில்லை. மதம்படிந்த சிறிய விழிகளுடன் துர்வாசரை அணுகி நின்றார். கருணர் மெல்ல “முனிவருக்கு அடிவழிபாடு செய்க இளவரசே” என்றார்.

சிகண்டி உறுதியான குரலில் “அடிபூசனை செய்வதென்பது முழுமையாக என்னை படைப்பதாகும். அதன்பின் அவரது ஆணைக்கு நான் முற்றிலும் கட்டுப்பட்டவன் ஆவேன். இம்மண்ணில் எவருடைய ஆணைக்கும் நான் பணியமுடியாது” என்றார். துர்வாசர் சிரித்தபடி “உனக்கான ஆணைகள் உன் அன்னையால் அளிக்கப்பட்டுவிட்டன என நான் அறிவேன் மைந்தா. நீ என்னை பணியவேண்டியதில்லை. ஆனால் என் வாழ்த்துக்களை நான் வழங்கியாகவேண்டும்... வருக!” என்றார். சிகண்டி அருகே சென்று தலைகுனிந்து வணங்க அவர் பிறரை வாழ்த்தியதுபோல மலர் எடுத்து அவர் தலையிலிட்டு “வெற்றியும் புகழும் சிறக்கட்டும்” என வாழ்த்தினார். சிகண்டி வணங்கி துருபதனின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டார்.

மணமேடைக்கு வலப்பக்கமாக மூன்று நெருப்புகளும் வைதிகரால் பேணப்பட்டு தழலாடிக்கொண்டிருந்தன. பாஞ்சாலத்தின் தலைமை வைதிகரான தௌம்யர் அவியன்னத்தை கொண்டுவந்து துர்வாசருக்கு வழங்கினார். அவர் அதை உண்டதும் பிறருக்கும் அவியன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது. துருபதன் அதை பகிர்ந்து தன் துணைவியருக்கு அளித்து உண்டார். அவரது மைந்தரும் அவ்வண்ணமே செய்தனர். மீண்டும் நெய்யூற்றப்பட்டு வேள்வித்தீ மேலெழுந்தது.

முதுநிமித்திகரான பத்ரர் தங்கள் குலத்தின் ஏழு இளநிமித்திகர்களுடன் முன்னால் வந்து துர்வாசரை வணங்கி மணநிகழ்வு எழுதிய ஓலையை அவரிடம் அளித்து வணங்கினார். துர்வாசர் அதைத் தொட்டு வாழ்த்தி திருப்பியளித்ததும் அவர் அதை தலைக்குமேல் தூக்கிக் காட்ட அவை வாழ்த்தொலி எழுப்பி முழங்கியது. கோல்காரன் அதை அவரிடமிருந்து வாங்கி மேடைமேல் நின்று உரக்க வாசித்தான். அவையில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நின்றிருந்த ஒன்பது நிமித்திகர்கள் அதை கேட்டு மீண்டும் கூவினர்.

நிமித்திகன் முழுமுதல் அன்னை உக்கிரசண்டியையும் அவளுடைய ஐந்து தோற்றங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சாவித்ரி, ராதை ஆகியோரையும் துதித்தான். ஐந்துகுலத்தையும் பாஞ்சாலமன்னனின் குலமுறையையும் வாழ்த்தினான். அதன்பின் முறையாக மண அறிவுப்புசெய்தான். “அவையீரே, ஐங்குலத்தீரே, மூதாதையரே, தெய்வங்களே! அனைவரும் அறிக! சந்திரன் நலம்நிறைந்த புஷவிண்மீனை அணுகும் இந்நாளில் பாஞ்சாலத்து இளவரசி கிருஷ்ணையை அஸ்தினபுரியின் பாண்டவர்களாகிய ஐவருக்கும் முறைப்படி கைப்பிடித்தளிக்க முடிவெடுத்திருக்கிறோம். விண்ணை ஆளும் மும்மூர்த்திகளும் பெண்ணை ஆளும் தேவர்களும் வந்து இம்மணத்தை வாழ்த்துக! ஓம்!ஓம்! ஓம்!”

அவை அதனுடன் இணைந்துகொண்டு ஓங்கார ஒலியெழுப்பியது. சத்யஜித்தும் சித்ரகேதுவும் பத்ரரும் கருணரும் சென்று அவையின் மறுபக்கம் தனியறையில் இருந்த பாண்டவர்கள் ஐவரையும் அழைத்துவந்தனர். பாண்டவர்கள் அவர்களுக்கு யாதவ கிருஷ்ணனால் அளிக்கப்பட்ட அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களில் பீமனிடம் மட்டுமே திருமணம் கொள்வதற்குரிய களிப்பு இருப்பதாகத் தோன்றியது. நகுலனும் சகதேவனும் நாணிக்கூசியவர்கள் போலிருந்தனர். அர்ஜுனன் முகம் சிலைப்பட்டிருந்தது. தருமன் துயர் கொண்டவனைப்போல தலையை குனிந்திருந்தான்.

சத்யஜித் வணங்கி “இளவரசர்களே, மணமேடைக்கு வருக” என்றார். தருமன் பெருமூச்சுடன் பீடத்தில் இருந்து எழுந்தார். "மணமகன்களுக்கு துணைவர்கள் எவர்?” என்றார் பத்ரர். தருமன் வெறும் விழிகளால் நோக்க பத்ரர் “யாதவர்கள் உங்கள் துணைவர்கள் அல்லவா? அவர்கள் இருந்திருக்கலாம்” என்றார். “நிமித்திகரே, அவர்கள் அஸ்தினபுரியின் துணைநாட்டுக்கு அரசர்கள். அஸ்தினபுரியின் இளவரசர்கள் சென்றபின் அவர்கள் இங்கிருக்க முடியாது” என்றான் தருமன். “ஆம், அது முறையே” என்றார் கருணர்.

பத்ரர் அவரை நோக்கிவிட்டு “பாஞ்சாலத்தின் சேவகர்களே பாங்கர்களாக வரட்டும். மாலையை வாங்கவும் அணிகளை அளிக்கவும் அருகே துணைவன் நின்றாகவேண்டும்” என்றார். கருணர் வெளியே சென்று அவையமைச்சரை அழைத்து ஆணையிட ஐந்து பாங்கர்கள் விரைந்து வந்தனர். தருமன் தளர்ந்த காலடிகளுடன் முன்னால் நடக்க பாங்கன் அவனுக்கு வலப்பக்கம் நடந்தான். தொடர்ந்து தலையைத் தூக்கி பெரிய கைகளை ஆட்டியபடி பீமன் சென்றான். அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் மணப்பேரவையில் நுழைந்ததும் மக்களின் வாழ்த்தொலி எழுந்து அலையடித்து சூழ்ந்துகொண்டது. மங்கலப்பேரிசை அதனுடன் இணைந்துகொண்டது. மக்களின் வாழ்த்துச் சொற்களையே முழவுகளும் கொம்புகளும் முரசுகளும் சொல்லிக்கொண்டிருப்பதாக தோன்றியது கருணருக்கு. பாண்டவர்கள் ஐவரும் சென்று துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்துகொண்டு மணமேடையில் நிரை வகுத்து நின்றனர்.

மண அரங்கின் வலப்பக்க வாயில் வழியாக இரு சேடிகளால் நடத்தப்பட்டு குந்தி வந்தாள். அவள் வெள்ளை மேலாடையால் முகத்தை முழுமையாக மறைத்திருந்தாலும் நிமிர்ந்த தலையுடன் சீரான நடையுடன் அவைக்கு வந்து வணங்கினாள். நிமித்திகன் தன் அணிக்கோலைத் தூக்கி “விருஷ்ணிகுலத்து யாதவமன்னர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் குந்திபோஜனின் அறப்புதல்வியும் அஸ்தினபுரியின் பாண்டு மன்னரின் பேரரசியும் மணமக்கள் ஐவரின் அன்னையுமாகிய பிருதைதேவியை வாழ்த்துகிறது இப்பேரவை” என்று அறிவித்தான்.

குந்தி வந்து துர்வாசரை வணங்கி மலர்வாழ்த்து பெற்றாள். அவளை சேடியர் கொண்டுசென்று மணஅரங்கின் வலப்பக்கமாகப் போடப்பட்ட பீடத்தில் அமரச்செய்தனர். அவள் அமர்ந்ததும் இடப்பக்க வாயில் வழியாக விதுரரும் குண்டாசியும் நிமித்திகனின் வாழ்த்துடன் உள்ளே வந்து துர்வாசரை வணங்கி அவளருகே பீடத்தில் அமர்ந்தனர். இரு குடியினரும் இருபக்கமும் அமர நடுவே மணமகன்கள் நின்றனர்.

பத்ரர் சென்று வணங்கி தௌம்யரிடம் மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோரினார். அவர் ஒப்புதலளித்ததும் அவர் அதை நிமித்திகனிடம் சொல்ல நிமித்திகன் கோல்தூக்கி அவையை அமைதிகொள்ளச்செய்து “பாஞ்சாலப் பெருங்குடிகள் ஐந்தின் குலமுறைப்படி ஏழு மணச்சடங்குகளினூடாக இங்கு பாஞ்சாலமகள் அஸ்தினபுரியின் மருமகளாவாள். மூதாதையரும் ஐம்பருக்களும் தெய்வங்களும் துணைநிற்கட்டும்” என்று வாழ்த்தினார். வலம்புரிச்சங்குகள் ஓங்காரமிட்டு அமைய பெருமுரசும் கொம்புகளும் ஒலித்தெழுந்தன. மங்கலப்பேரிசை மீண்டும் தொடங்கியது.

பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச் சேர்ந்த மூதாதையர் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளை கொண்டுவந்தனர். துர்வாசகுலத்திற்கு மருதமும், சிருஞ்சயருக்கு வேங்கையும், கிருவிகளுக்கு கடம்பும், சோமகர்களுக்கு செண்பகமும். கேசினிகளுக்கு பாலையும். மருதமரக்கிளையை அர்ஜுனனும் வேங்கையை பீமனும் கடம்பை நகுலனும் செண்பகத்தை சகதேவனும் பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.

பாண்டவர்களின் குலமூதாதையர் சார்பில் விதுரர் எழுந்து ஐங்குலத்தலைவர்களிடம் அவர்களின் பெண்ணை மகற்கொடையாக கேட்டார். கிருவிகுலத்தலைவர் பத்துபொன் கன்யாசுல்கமாக கேட்டார். சோமகர் இருபது பொன் கேட்டார். சிருஞ்சயர் முந்நூறு பொன் என்றார். துர்வாசர் நாநூறு என்று சொல்ல கேசினிகுலத்தலைவர் ஐநூறு பொன் என்றார். விதுரர் ஐநூறு பொன் அடங்கிய பட்டுக்கிழியை அவர்களிடம் அளிக்க அவர்கள் மகற்கொடைக்கு ஒப்புக்கொண்டனர்.

குடிமூத்தார் ஐவரும் பாண்டவர்களை அழைத்துச்சென்று துருபதன் முன்னால் நிறுத்தி அவரது மகளை பாண்டவர்களுக்கு அளிக்கும்படி கோரினர். அவர் அவர்க்ளைப் பணிந்து ஆணையை ஏற்பதாக அறிவித்தார். அவர் திரும்பி தன் தேவியர் இருவரிடமும் அதைச் சொல்ல அவர்களும் அவ்வாறே ஆகுக என்றனர். அரசர் தன் அமைச்சரிடம் ஆணையிட சங்குகள் முழங்கின. அவையெங்கும் உடலசைவும் பேச்சொலியும் நிறைந்தது.

வலது வாயிலில் இருந்து எண்மங்கலத் தாலமேந்திய பன்னிரு அணிப்பரத்தையர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து உருவிய வாளேந்தி முன்னால் வந்த திருஷ்டத்யும்னனால் வழிநடத்தப்பட்டு இருபக்கமும் இரு சேடியரால் துணைக்கப்பட்டு திரௌபதி மணமேடை நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் அவையெங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. பாஞ்சால முறைப்படி செந்நிற மரவுரியாடை அணிந்து நகைகளேதும் இல்லாமல் மலர்களைக் கொண்டு மட்டுமே அணிசெய்திருந்தாள். கையில் ஒரு நிறைநாழியில் வஜ்ரதானியமும் தினையும் கோதுமையும் கலந்து அதன்மேல் ஒரு அத்திப்பழத்தை வைத்திருந்தாள்.

நிறைநாழியை மணமேடைநடுவே வைத்துவிட்டு துர்வாசரை அணுகி வாழ்த்துபெற்றாள். ஐந்து குலமூதாதையரை வணங்கியபின் தன் தந்தையையும் அன்னையரையும் சிறியதந்தையையும் தமையனையும் வணங்கிவிட்டு மேடையில் வந்து நின்றாள். ஐந்து குலத்தில் இருந்தும் ஐந்து முதிய மாமங்கலையினர் மணமேடைக்கு வந்து அவளை மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் குலத்திற்குரிய மலர்க்கிளைகளால் அவள் நெற்றியைத் தொட்டு மாமங்கலையாக வாழ்கவென்று சொல்லளித்தனர்.

மூதன்னையர் மேடையில் விரிக்கப்பட்ட மரவுரியில் அவளை கிழக்கு நோக்கி அமரச்செய்தனர். மரத்தாலத்தில் உமியும் மண்ணும் கலந்து பரப்பி அவள் முன் வைத்தனர். திரௌபதி தொன்மையான மொழியில் அமைந்த மந்திரங்களை அவர்கள் சொல்லக் கேட்டுச் சொன்னபடி அதில் அந்த நிறைநாழியில் இருந்த மூன்று தானியங்களை ஐந்துமுறை அள்ளி விதைத்தபோது சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர். ஏழுமுறை நீரூற்றிவிட்டு அவள் வணங்கினாள். முளைநிலம் சேடியரால் எடுத்துக்கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் ஐந்துகுலங்களையும் சேர்ந்த ஐந்து இளம் அன்னையர் மணமேடைக்கு வந்தனர். கிருவிகுலத்தவள் கன்றுமேய்க்கும் வளைதடியையும் சோமககுலத்தவள் கட்டுக்கயிற்றுச் சுருளையும் சிருஞ்சயகுலத்தவள் பால்கறக்கும் சுரைக்குடுவையையும் துர்வாச குலத்தவள் தயிர்கடையும் மத்தையும் கேசினி குலத்தவள் நெய்க்குடத்தையும் அளித்தாள். மேடையில் கொண்டுவைக்கப்பட்ட மரத்தாலான பசுவின் சிலையருகே வைக்கப்பட்ட சிறிய மரச்சம்புடத்தில் தேன், தயிர், நெய் மூன்றையும் கலந்து செய்யப்பட்ட மூவமுதை திரௌபதி கொண்டுசென்று தன் தந்தைக்கும் அன்னையருக்கும் அளித்தாள்.

ஐந்து குலங்களையும் சேர்ந்த ஐந்து கன்னியர் மணமேடைக்கு வந்து திரௌபதிக்கு சிறிய தூண்டிலையும் மீன்வலையையும் மீன்வளைவையும் மீன்கூடையையும் மண்குடுவையையும் அளித்தனர். அவள் மேடையில் வைக்கப்பட்ட மரத்தொட்டியில் போடப்பட்ட மரத்தாலான சிறிய மீனைப் பிடித்து எடுத்துச்சென்று தன் தந்தையின் இளையோனிடம் அளித்தாள்.

முரசு தாளம் மாறுபட்டு ஒலிக்கத் தொடங்கியது. விதுரரை அணுகிய பத்ரர் வணங்கி மகள்கொடை நிகழவிருப்பதாக அறிவித்தார். விதுரர் எழுந்து கைகளைக் கூப்பியபடி நடந்து சென்று பாண்டவர்களை அணுகி அவர்களை அழைத்துக்கொண்டு துருபதன் அருகே சென்றார். துருபதன் தன் அரசியருடனும் இளையோருடனும் எழுந்து நின்றார். திருஷ்டத்யும்னனால் அழைத்துவரப்பட்ட திரௌபதி அவரது வலப்பக்கம் வந்து நின்றாள்.

பத்ரர் அருகே நின்று மணச்சடங்குகளை செய்வித்தார். மங்கல இசையும் குரவையொலிகளும் எழுந்து சூழ துருபதன் தன் மகளின் வலது கையைப் பற்றி தருமனின் வலதுகையில் வைத்தார். பிறநால்வரும் தங்கள் கைகளை அக்கைகள்மேல் வைத்தனர். மஞ்சள்நிறச் சரடால் அக்கைகளை சேர்த்துக் கட்டினார் பத்ரர். ஐந்துகுலத்தலைவர்களும் வந்து மணமக்களை அரிசியும் மலருமிட்டு வாழ்த்தினர்.

சேவகர் ஊற்றிய மஞ்சள்நீரில் தன் கைகளை மும்முறை கழுவிக்கொண்டபோது துருபதன் கண்கலங்கி உதடுகளை இறுக்கிக் கொண்டார். விழிநீர் வழியக்கூடாது என அவர் முயன்றாலும் மூன்றாவது முறை நீர்விட்டபின் மஞ்சள்பட்டால் கைகளைத் துடைத்தபோது விம்மி அழுதுவிட்டார். அதுவரை தலைகுனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த பிருஷதியும் அழுதபடி மேலாடையால் முகம் மறைத்தாள்.

திரௌபதியை கைப்பிடித்தபடி திரும்பிச்சென்ற தருமனின் மறுகையை பற்றியபடி பீமன் செல்ல அவன் கைகளைப்பற்றியபடி அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் சென்று துர்வாச முனிவரை ஒரேசமயம் கால்தொட்டு வணங்கி வாழ்த்து பெற்றனர். திரும்பி குந்தியை அணுகி வாழ்த்து பெற்றனர். அவள் முகத்தை மறைத்த திரையுடன் இருகைகளையும் தூக்கி வாழ்த்தினாள். விதுரரை வணங்கி வாழ்த்து பெற்றபின் அவர்கள் மேடையில் நின்றனர்.

குறைகளைவுச் சடங்குக்காக தௌம்யர் வேள்விக்கு இருக்கையாக போடப்பட்டிருந்த தர்ப்பைகளில் இருந்து ஐந்து கீற்றுகளை எடுத்து வந்து அவர்கள் ஐவருக்கும் அளித்தார். அவர்கள் வரிசையாகச் சென்று திரௌபதியின் நெற்றியையும் புருவத்தையும் தர்ப்பையால் மும்முறை வருடினர். மஞ்சள்நீரை அள்ளி அவள் மேல் மும்முறை தூவினர். தருமன் அவளை கைபற்றி அழைக்க அவள் தன் உடலில் இருந்து மூன்று மலர்களைப் பறித்து திரும்பிப்பாராமல் பின்பக்கம் போட்டுவிட்டு அவனை நோக்கி மூன்று அடி எடுத்துவைத்தாள்.

ஐவரும் அவள் கைபற்றி மணமேடைவிட்டு கீழிறங்கினர். பொற்பூணிட்ட கொம்புகள்கொண்ட வெண்ணிறப்பசுக்கள் ஐந்தை சேவகர் கொண்டு வந்து நிறுத்தினர். தௌம்யர் அருகே வந்து நின்று வேதமந்திரங்களை சொல்லிக்கொடுக்க அவர்கள் அதை உச்சரித்தபடி கட்டுக்கயிற்றைப் பற்றி ஐந்து வைதிகர்களுக்கு அப்பசுக்களை அளித்தனர்.

மீண்டும் மேடையேறி ஐவரும் கைசேர்த்து திரௌபதிக்கு அஸ்தினபுரியின் முறைமைப்படி மஞ்சள்பட்டாடை, மணிகள் பதிக்கப்பட்ட அணிகள், மலர்மாலைகள், குங்குமம், மஞ்சள் என ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலத்தை அளித்தனர். அவள் அதை வாங்கியபின் சேடிகளால் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டாள். தௌம்யர் வந்து தருமனை அழைத்துச்சென்று வேள்விப் பீடத்தில் அமர்த்தினார். பிறபாண்டவர்கள் உடன் அமர்ந்துகொண்டனர். வைதிகர் வேதமோத அதைக்கேட்டுச் சொன்னபடி அவன் நெருப்பில் நெய்யும் சமித்தும் அவியும் இட்டு வணங்கினான்.

மங்கல நீராடி பாண்டவர்கள் அளித்த பட்டாடையையும் நகைகளையும் அணிந்து மலர்சூடி குங்குமமும் மஞ்சளும் தொட்டு திரௌபதி மீண்டும் மேடைக்கு வந்தாள். தருமன் அவளுக்கு ஐந்துமங்கல மலர்களால் ஆன மாலையை அணிவிக்க அதை அவள் அவனுக்கு திரும்ப அணிவித்தாள். மும்முறை மாலைமாற்றியபின் தருமன் பின்னால் செல்ல பீமன் முன்வந்து மாலைமாற்றினான். ஐவரும் மாலைமாற்றிக்கொண்டபின் முரசின் தாளம் விரைவு கொண்டது. அலையெழுவதுபோல சூழ்ந்திருந்த அரங்கினர் முழுவதும் எழுந்து நின்றனர்.

சோமக குலத்தின் மூத்தார் இல்லத்தில் கரவறையில் தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வந்த தொன்மையான மரத்தாலத்தில் கூழாங்கல், ஒருபிடி மண், சிறுகுவளையில் கங்கைநீர், செண்பக மலர், அத்திக்கனி, புலிநகம், கஸ்தூரி, மயிற்பீலி ஆகிய எட்டு மலைமங்கலங்களுடன் தாலியை வைத்து எடுத்துச்சென்று துர்வாசரிடம் நீட்டினர். அவர் எழுந்து அதை மும்முறை தொட்டு வாழ்த்தினார். குலமூத்தார் வரிசையாக தொட்டு வாழ்த்த துருபதனின் சோமககுலத்தின் மூத்தவர் தாலத்தை கொண்டுசென்று முதுவைதிகர் தௌம்யரிடம் அளித்தார். அவர் அதை வேள்வித்தீ முன் வைத்து வேள்விச்சாம்பலைத் தூவி வாழ்த்தி கொண்டுசென்று பத்ரரிடம் கொடுத்தார்.

மரவுரிநூலை திரித்து மஞ்சள் பூசி செய்யப்பட்ட சரடில் குலமுறையும் காப்பும் எழுதப்பட்ட பனையோலையை இறுகச்சுருட்டிக் கட்டி உருவாக்கப்பட்ட தாலியை துருபதனும் அவன் துணைவியரும் தொட்டு வாழ்த்தினர். பின் குந்தியும் விதுரரும் தொட்டு வாழ்த்தினர். துருபதனும் குடியினரும் ஒருபுறம் நிற்க குந்தியும் விதுரரும் மறுபுறம் நிற்க தருமன் அதை தன் நடுங்கும் கரங்களால் எடுத்து திரௌபதியின் கழுத்தில் கட்டி முதல்முடிச்சை போட்டான். அதன்பின் பாண்டவர் நால்வரும் நான்கு முடிச்சுகளை போட்டனர்.

மேளமும் குரவையும் திரை என சூழ்ந்திருந்தன. அவையினர் வாழ்த்துக்களைக் கூவியபடி வீசிய மஞ்சளரிசியும் மஞ்சள் மலர்களும் அவர்களைச் சுற்றி மழையாகப் பெய்தன. சற்று நேரத்தில் வசந்தகாலக் கொன்றைமரத்தடி போல பொன்விரிப்பு கொண்டது மணமுற்றம். ஐந்து முறை முடியப்பட்ட தாலியுடன் திரும்பிய திரௌபதி அவை நோக்கி வணங்கினாள்.

தருமன் பாஞ்சாலியின் கைகளை பற்றிக்கொள்ள பாண்டவர்கள் அவன் கைதொட்டு கைகோர்த்தனர். அறுவரும் கைபற்றியபடி அவியேற்று எழுந்தாடிய மூவெரியை சுற்றி ஏழு காலடிகளை எடுத்து வைத்தனர். ஒவ்வொரு காலடிக்கும் தௌம்யர் வேதமந்திரங்களை சொன்னார். ஏழாவது அடியை வைத்ததும் அவர்கள் அமர்ந்து வேள்வித்தீயை வணங்கி அதன் சாம்பலை நெற்றியிலணிந்துகொண்டனர்.

அறுவரும் கைபற்றியபடி சென்று குந்தியை வணங்கினர். அவள் அரிமலரிட்டு வாழ்த்தியதும் விதுரரை வணங்கினர். பின்னர் துருபதனையும் துணைவியரையும் வணங்கினர். துருபதன் எங்கிருக்கிறோமென்று அறியாதவர் என மயக்குற்ற முகத்துடன் பாவையென அவர்களை வாழ்த்தினார். பிருஷதி திரௌபதியை வாழ்த்தியபோது மீண்டும் மேலாடையால் முகம் துடைத்து அழத்தொடங்கினாள்.

ஒற்றர்தலைவர் சிம்மர் வந்து கருணர் அருகே குனிந்து “அமைச்சரே, அடுத்த சடங்கு உக்ரசாமுண்டி ஆலயத்திற்குச் சென்று சுடராட்டு செய்தல்” என்றார். “இளவரசியுடன் பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமென்பது நெறி. சேடியர் எவரெல்லாம் செல்லலாம் என்று சொல்லுங்கள்.” கருணர் “இளவரசியின் அணுக்கத்தோழி மாயை எங்குமே தென்படவில்லையே. அவள் உடன் செல்லட்டுமே” என்றார்.

சற்று தயங்கியபின் “அவள் சூல்மங்கலம் கொண்டிருக்கிறாள். அவை நிற்கக் கூடாது என்று அரசி சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவள் அழகியல்ல. ஆகவே அவைச்சடங்குகள் எதிலும் அவளை சேர்க்கவேண்டாமென்பது அரசியின் எண்ணம்” என்றார் சிம்மர். “இது அவைச்சடங்கு அல்ல. இதற்கு பார்வையாளர்கள் இல்லை. மாயை உடன்செல்லட்டும். அவளுக்குத்தான் சடங்குகளும் இளவரசியின் உள்ளமும் தெரியும்” என்றார் கருணர். “சூல்மங்கலம் கொள்வது சண்டிக்கு உகந்தது என்று நான் சொன்னதாக சொல்க!” சிம்மர் தலையசைத்து “ஆணை” என்றபின் விலகிச்சென்றார்.

பாண்டவர்கள் திரௌபதியை கரம்பற்றியபடி சென்று நின்றுகொண்டதும் தௌம்யர் அமர்ந்து திரும்பி மங்கல அவியளிப்புக்கு ஆணையிட்டார். வைதிகர் வேதமந்திரங்களை சொன்னபடி நெய்யூற்ற எரிகுளங்களில் தழல் எழுந்தது. வாழ்த்தியவர்கள் மீண்டும் தங்கள் பீடங்களில் அமர்ந்தனர். மூன்றுவகை அவியூட்டலுக்குப்பின் மணமங்கலம் நிறைவடையும் என்று அறிந்திருந்த மக்கள் சற்று சோர்ந்தவர்களாக உடல் தொய்ந்து அமர்ந்து மெல்லிய குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். அவர்களின் பேச்சொலி எழுந்து அவைப்பந்தலின் மேல் வியர்வைவெம்மையும் வேள்விப்புகையும் மலர்மணமும் கலந்த படலமாக நிறைந்திருந்த காற்றில் ரீங்கரித்தது.

மெல்லிய குரலோசையாக கேட்டாலும் கிழக்கு வாயிலருகே நிகழ்ந்தது பூசலென அனைவரும் அறிந்தனர். அச்சோர்வில் பரபரப்பு இனிதாக இருந்ததனால் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்று எட்டிப்பார்த்தனர். கருணர் காவல்வீரர்கள் தொடர ஒருவர் உள்ளே வந்துவிட்டதையும் அவரை தொடத்தயங்கிய காவலர்கள் அவரை அழைத்துக்கூவியபடி படைக்கலங்களுடன் பின்னால் ஓடிவருவதையும் கண்டார்.

புகைக்கு அப்பால் தெரிந்த அம்மனிதரை முதலில் தெருவிலிருந்து காவலர் அயர்ந்தவேளையில் உட்புகுந்த களிமகனோ பித்தனோ என்றுதான் எண்ணினார். எழுந்து கைநீட்டி ஆணையிடப்போனபோதுதான் அவர் உக்ரகாபாலிகன் என்று தெரிந்தது. திகைத்து ஒரு கணம் நின்றபின் அவர் “நில்லுங்கள்...” என்று கூவியபடி இடைபாதை வழியாக அவரை நோக்கி ஓடினார். வீரர்கள் திகைத்து நின்றுவிட காபாலிகர் மட்டும் நிமிர்ந்த உடலுடன் காட்டெருது போல தரையதிர நடந்து வருவதைக் கண்டு திகைத்து நின்று சற்று பின்னடைந்தார்.

அவர் கையில் இருந்த கருகிய காட்டுமரத்தின் உச்சியில் புதிய மண்டையோடு ஒன்று இருந்தது. சுண்ணமாக மாறாது இன்னமும் உயிர்ச்செம்மை எஞ்சியிருந்த ஓடு. வலக்கையில் அதேபோன்ற இன்னொரு மண்டையோட்டை ஏற்புக்கலமாக வைத்திருந்தார். சடைக்கற்றைகள் பரவிய இறுகிய தோள்களிலும் காட்டுவேங்கையின் தூரெனத் திரண்ட மார்பிலும் சாம்பல். விழிகள் அனல்துளிகள் போலிருந்தன.

ரிஷபர் துருபதனின் அருகிருந்து உருவிய வாளுடன் தாவி “யார் இவரை உள்ளே விட்டது மங்கல நிகழவில்?” என்று கடும் சினத்துடன் கூவியபடி ஓடிவந்தார். துர்வாசர் “படைத்தலைவரே, அவர் வரவேண்டியவர்” என்றார். உக்ரகாபாலிகர் மேடையை நோக்கி “நான் அவள் கையால் இரவல் கொள்ள வந்தேன்” என்றார். அவை முழுக்க அசைவற்று விழியுறைந்து அவரை நோக்கி நின்றது. துர்வாசர் “காபாலிகரே, இங்கு நீர் கொள்ளும் ஏற்பு இக்குடியை நலம்பெறச் செய்யட்டும்” என்றார்.

துருபதன் அருகே வந்து கைகூப்பி “காபாலிகரை வணங்குகிறேன். தங்கள் அடிகள் இந்நகரிலும் அரண்மனையிலும் பட்டது என் நல்லூழ். தாங்கள் நாடுவதென்ன என்று அருள்புரியவேண்டும்” என்றார், காபாலிகர் “நான் அவள் கையில் இருந்து ஏற்க வந்தேன்” என்றார். அவர் குரல் குகைப்புலியின் உறுமலென ஒலித்தது.

துருபதன் திரும்பி நோக்க திரௌபதி கைகூப்பியபடி முன்னால் வந்தாள். அவளைக் கண்டதும் மண்டையோடு தொங்கிய யோகதண்டத்தை தலைக்குமேல் தூக்கிய காபாலிகர் “அன்னை வாழ்க. அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க!” என்றார். அவர் தன் மண்டையோட்டை நீட்டியபோது அதில் என்ன போடுவது என்பது போல திரௌபதி தவிப்புடன் இருபக்கமும் நோக்கினாள்.

அவளருகே நின்ற சேடியர் தாலத்தை நீட்டினர். அவள் அவற்றை விழிகளாலேயே விலக்கினாள். துருபதன் திரும்பி பத்ரரை நோக்க அவர் பின்வரிசை நோக்கி ஓடினார். அதற்குள் திரௌபதி அவர் விழிகளை கூர்ந்து நோக்கியபடி தன் கூந்தலில் சூடியிருந்த செங்காந்தள் மலரை எடுத்து அவரது மண்டையோட்டு ஏற்புக்கலத்தில் போட்டாள். அவர் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கியபின் மீண்டும் தன் ஊழ்கத்தடியை தூக்கி “அன்னையே வாழ்க!” என்றபின் திரும்பி நடந்தார்.

என்ன நடந்தது என்றே கூட்டத்தினருக்கு புரியவில்லை. அனைவரிடமும் இருந்து எழுந்த ஒலி பெரும் முழக்கமாக ஒலித்தது. துர்வாசர் கைதூக்கி மணநிகழ்வுகள் தொடரட்டும் என ஆணையிட மங்கல இசை பெருகி எழுந்தது. அந்த இசை பதற்றமடைந்திருந்த அவையினரை ஆறுதல்படுத்தியது. கனத்த குளிர்மழை போல அவர்கள் மேல் அது பெய்து நிறைய அவர்கள் மெல்ல மெல்ல அமைந்தனர். தௌம்யர் கைகாட்ட வைதிகர் மீண்டும் வேதம் முழங்கத் தொடங்கினர்.

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 5

நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது.

காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் இருபக்கமும் நிரைவகுத்த எரிபந்தங்களின் நடுவே படைக்கலங்களுடன் அணிகொண்ட வீரர்களின் முகப்பில் நின்றிருந்த ரிஷபர் நிலைகொள்ளாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். இருண்ட வானில் எரியம்பு எழுந்தமைவதைக் கண்டதும் அவர் திரும்பி கைகாட்ட, அறிவிப்பாளன் குழற்சங்கை எடுத்து ஊதினான். கோட்டைமேடைமேல் இருந்த பெருமுரசம் சினமெழுந்த யானையின் வயிறு போல உறுமத் தொடங்கியது. கூட்டமாக யானைக்கன்றுகள் பிளிறுவதுபோல கொம்புகள் முழங்கின.

ஒற்றைக்குதிரை இழுத்த திறந்த பந்தத்தேர் நாற்புறமும் பன்னிரு எண்ணைப்பந்தங்கள் எரிய முதலில் வந்தது. காற்றில் நெருப்புகள் கிழிந்து பறந்துகொண்டிருக்க நடுவே நின்றிருந்த எண்ணைச்சேவகன் கலத்திலிருந்து நீண்ட அகப்பையால் அள்ளி அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தான். துடிதாளமென குளம்புகள் ஒலிக்க, உருவிய வாளுடன் அமர்ந்த வீரர்களுடன் நான்கு படைக்குதிரைகள் அதைத் தொடர்ந்து வந்தன. அதன்பின் செந்தழலென படபடத்துப் பறந்த பாஞ்சாலத்தின் விற்கொடியுடன் கொடிச்சேவகன் வெண்குதிரையில் வந்தான். பந்தங்களின் வெளிச்சத்தில் வெள்ளிச்சிற்பங்களில் பொன்மின்ன, செந்நிறத் திரைச்சீலைகளில் தழல்நெளிய, இரட்டைக்குதிரைகள் இழுத்த அரசரதம் வந்து சகட ஒலியுடன் நின்றது. கடிவாளம் இழுபட்ட குதிரைகள் பற்கள் தெரிய தலைதிருப்பி விழித்த கருங்கண்களில் பந்தச்சுடர்களை காட்டின.

கூடிநின்ற வீரர்களும் ஐங்குலத்துப் பூசகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். ரிஷபர் ஒடிச்சென்று தலைவணங்கி நின்றார். ரதவாயில் திறந்து வெள்ளிப்படிகளில் காலெடுத்து வைத்து கையில் பூசைத்தாலத்துடன் மாயை இறங்கிவந்தாள். தொடர்ந்து திரௌபதியின் கரிய வெற்றுக்கால்கள் திரைவிலக்கி வந்து படிகளில் மெல்ல அமைந்தன. செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய அவள் இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் உரத்தன. ரதத்தின் பின்னால் வந்த வண்டியில் இருந்து இறங்கிய தலைமைச் சேடி அழைக்க ரிஷபர் அருகே சென்றார். அவள் சொன்னதைக் கேட்டு அவர் கையசைத்ததும் முரசுகளும் கொம்புகளும் நின்று மங்கல வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின.

திரௌபதியும் மாயையும் காதிலும் முலைகள் மேலும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்தனர். தாலங்களில் மங்கலப் பொருட்களுடன் நின்ற ஐந்துகுலப் பூசகர்களும் அருகே வந்தனர். கிருவிகுலப் பூசகர் மண், கல், வேர், கனி, பொன் என ஐந்து மண்மங்கலங்களை தாலத்தில் ஏந்தி வந்து திரௌபதியின் முகத்தை மும்முறை உழிந்து வாழ்த்தினார். சிருஞ்சய குலப்பூசகர் நீர்ச்சிமிழ், பரல்மீன், முத்து, சங்கு எனும் நான்கு நீர்மங்கலங்களையும் சோமக குலப்பூசகர் சுடர், நெய், வைரம் என்னும் மூன்று எரிமங்கலங்களையும் துர்வாசகுலப் பூசகர் வெண்கொக்கின் இறகு, தளிரிலை என இரண்டு வளிமங்கலங்களையும் கேசினி குலப்பூசகர் விண்மங்கலமான ஆடியையும் தாலத்தில் ஏந்திவந்து அவளை வாழ்த்தினர்.

ஐந்து பருக்களின் மங்கலங்களையும் ஒன்றாக்கி ஒரு பெரியதாலத்தில் பரப்பி அதன் நடுவே மண் அகலில் சுடரை ஏற்றி அவளிடம் அளித்த சோமக குலத்து மூத்தபூசகர் “தேவி, இப்பூசனைப்பொருட்களை உக்ரசண்டிகைக்குப் படைத்து வழிபடுங்கள். ஐந்து பருக்களும் அன்னையின் அடிப்பொடியே ஆகுக. கொல்வேல் தொல்பாவை வாழ்த்துடன் மீளுங்கள். ஓன்று நினைவுகூர்க. இச்சுடர் இங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வது வரை அணையலாகாது. மீண்டும் இதை கொளுத்தும் எப்பொருளும் தங்களுக்கோ தோழிக்கோ அளிக்கப்படாது. இதைக்கொண்டு அன்னையின் ஆலயவிளக்குகளை ஏற்றுங்கள். அவ்விளக்கிலிருந்து மீண்டும் ஒரு சுடர்பொருத்திக்கொண்டு மீளுங்கள்” என்றார்.

கிருவிகுலத்து முதுபூசகர் ”நீங்கள் கொண்டுவரும் அச்சுடரால் ஐந்து அன்னையர் ஆலயங்களிலும் நெய்விளக்குகள் ஏற்றப்படும். இரவெல்லாம் பூசனைகளும் விடியலில் பலியும் முடிந்தபின் ஐந்து அன்னையரின் சுடர்களில் இருந்தும் ஐந்து சுடர்கள் கொண்டுசெல்லப்படும். முதல்சுடர் தென்திசை ஆளும் மூதன்னையரின் நினைவுக்கற்களுக்கு முன் ஏற்றப்படும். இரண்டாவது சுடர் கன்னித்தெய்வங்களுக்கும் மூன்றாம் சுடர் கருநிறைத் தெய்வங்களுக்கும் நான்காம் சுடர் முலையெழு பசுக்களுக்கும் ஏற்றப்படும். ஐந்தாம் சுடர் அந்தப்புரத்தின் தென்மேற்கு மூலையை ஆளும் கன்னிகை யட்சிக்கு முன் ஏற்றப்படும். அத்துடன் இந்த மணச்சடங்குகள் முடிவடைகின்றன. இந்நகரில் அனைத்துக் கடன்களையும் நிறைத்து கனி மரத்தை என நீங்கள் விடுதலை கொள்வீர்கள். அன்னையர் வாழ்த்துக்களும் பெண்ணை தொடரும் தெய்வங்களும் மட்டுமே உங்களுடனிருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

திரௌபதி அந்தத் தாலத்தில் எரிந்த சிறிய நெய்ச்சுடரை விழிகளுக்குள் அனல்துளிகள் தெரிய நோக்கிக்கொண்டிருந்தாள். மாயை “தாலத்தை வாங்கிக்கொள்ளுங்கள் அரசி” என்றாள். திரௌபதி பாவை என கைநீட்டி அதை வாங்கிக்கொண்டதும் சோமகபூசகர் மாயையிடம் “தேவிக்குத் துணைசெல்க! அன்னையின் பூசனைக்கான முறைமைகளை நீ அறிவாய்” என்றார். “ஆம்” என்றாள் மாயை. ”அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர்.

பூசகர் கைகாட்ட மீண்டும் பெருமுரசுகளும் கொம்புகளும் ஒலிக்கத் தொடங்கின. அவர்கள் இருவரும் பெருஞ்சாலையின் கை என பிரிந்த சிறுவழியில் நடந்து கோட்டையின் தென்வாயிலை கடந்தனர். அவர்கள் வெளியேறியதும் சிறுவாயில் மூடப்பட்டது. ஒலிகளும் ஒளிகளும் மெல்ல பின்னிட அவர்களுக்கு முன் எண்ணை ஊறி நிறைந்தது போல மங்கிய ஒளியுடன் வானும் கரிய கறைவடிவங்களென காடும் விரிந்தன. நிலவு முழுமையாகவே முகில்திரைக்கு அப்பாலிருந்தது. கண்முன் வளைந்த வடக்கு வான்சரிவில் விண்மீன்கள் தோன்றிக்கொண்டிருந்தன. தாலத்திலிருந்த சிறிய சுடர் நாற்புறமும் நெருக்கிய இருளால் எற்றப்பட்டு அலைப்புற்றுத் தவித்தது. அசைகையில் சிறிய நாக்கு போலவும் அமைகையில் கூர்வேல் ஒன்றின் தங்கமுனைபோலவும் அது உருமாறிக்கொண்டிருந்தது.

திரௌபதியின் நீண்ட குழல் அவள் நடையில் அலையிளகியது. உடலில் உரசிய மரவுரி பிறிதொரு மூச்சொலி என கேட்டது. திரௌபதியின் உடலின் வெம்மையை மாயையால் உணர முடிந்தது. செல்லச்செல்ல அவ்வெம்மை ஏறிஏறி வருவதைப்போல் தோன்றியது. அது அவளை மேலும் அவளருகே இழுத்தது. சுடரொளியில் இருவர் நிழல்களும் பொங்கி அவர்களுக்குப்பின்னால் வானோக்கி எழுந்து அசைந்தன. பேருருவக் கைகளை காடுகளுக்கு மேல் வீசி மரங்களுக்கு மேல் காலெடுத்து வைத்து நடந்தனர்.

புதர்களுக்குள் இரு அனல்துளிகளை மாயை கண்டாள். உடனே மேலும் இரு புள்ளிகள் தெரிந்தன. முதல்நரி அசையாமல் தலைதூக்கி நோக்கிக்கொண்டிருக்க இன்னொன்று தலையைத் தாழ்த்தி மெல்ல முனகியது. சுடரிலிருந்து விலகியதுமே விழிகள் கூர்மைகொண்டமையால் நரியின் அசைவை காணமுடிந்தது. நின்றிருந்த நரியின் கழுத்துமயிரின் சிலிர்ப்பு கூட தெரிந்தது. மாயை திரௌபதியை நோக்கினாள். அவள் நிமிர்ந்த தலையுடன் வானொளி தெரிந்த விழிகளுடன் நடந்துகொண்டிருந்தாள். சற்றே தூக்கிய முகவாயின் கீழ் கழுத்தின் வளைவில் வழியும் எண்ணையின் மென்னொளி. கன்னத்து புன்மயிர்க்கோவையை நனைத்திருந்தது எந்த முகிலில் கரந்த நிலவொளி என்று தெரியவில்லை.

நிலவில்லாத வானுக்கு எங்கிருந்து ஒளிவருகிறது என மாயை எண்ணிக்கொண்டாள். வானம் ஒரு திரை என்பார்கள் சூதர்கள். அதற்கப்பால் உள்ளன மூதாதையர் வாழும் உயிர்ப்புலகு. அவ்வுலகின் ஒளி திரைவழியாக கசிகிறதா? அங்கிருந்து இறங்குவதா கோரைப்புல் சூடி நின்ற செண்டுகளை சிலிர்த்து அசையச்செய்து செல்லும் இளங்குளிர்காற்று? மூதன்னையரே காற்றென வந்து மரங்களில் அசைகிறார்களா? அப்பால் மரக்கூட்டங்கள் இருளாக அலையடித்தன. அலையசைவு கூடியிருக்கிறதா?

அப்போதுதான் தன் குழல்கற்றை எழுந்து முன்னால் பறந்துகொண்டிருப்பதை மாயை உணர்ந்தாள். உதிரி மயிர்க்கற்றைகள் கன்னங்களில் படிந்து இதழ்களில் உரசின. கனத்த மரவுரி ஆடை உடலைக்கவ்வியபடி துடித்தது. அகல்சுடர் கைபட்டு அழிந்த குங்குமத்தீற்றல் போல சரிந்து பறந்தது. குறுகி அணையப்போய் மீண்டும் எழுந்தது. அவர்களைச் சூழ்ந்து பல்லாயிரம் செண்டுகளை ஏந்திய கோரைப்புல்வெளி அலையடித்தது. மாலையிளவெயிலில் அவை தழலென ஒளிவிடும். அவை விழையும் தழல். அவற்றின் வேர் உறிஞ்சும் நீரின் உயிர். காய்ந்த புல்லும் சதுப்புச்சேறும் பாசியும் கலந்த மணம். மிகத்தொலைவில் இருளில் கிடக்கும் தீட்டப்பட்ட வாள் என, கரிய தோலின் வடு என சிற்றாறின் நீரொளி. அதற்கு அப்பால் காடு கொந்தளிப்பதை கேட்க முடிந்தது. வளியருவி ஒசை வேறெங்கோ இருந்து கேட்டது.

மாயை அச்சத்துடன் திரௌபதியின் தாலத்தில் எரிந்த சுடரை நோக்கினாள். வண்டின் சிறகு போல சுடர் அதிர்ந்துகொண்டிருந்தது. திரௌபதி நின்று குனிந்து தன் தாலத்திலிருந்து முன்னாலெழுந்து பறந்த சுடரை நோக்கி ஒரு கணம் நின்றாள். அவள் கூந்தல் எழுந்து தாலம் மேல் விழுந்தது. இடக் கையால் தாலத்தை தோள்மேல் ஏந்திக்கொண்டு கூந்தலை அள்ளிச் சுழற்றி பெரிய கொண்டையாக்கி கட்டினாள். அகல்சுடரை வலக்கையால் எடுத்துகொண்டு குனியாமல் உடல்தாழ்த்தி அமர்ந்து அகல்நெய்யை புல்லின் காய்ந்த கூளத்தில் ஊற்றி அதன் மேல் சுடரை வைத்து பற்றவைத்தாள். அவள் என்ன செய்கிறாள் என ஒரு கணம் கடந்தே மாயை உணர்ந்தாள். அச்சத்துடன் “அரசி!” என்று அவள் அழைத்தாள்.

திரௌபதி அவளைக் கேளாதவள் போல ஒற்றைக்கையாலேயே தன் ஆடையை களையத் தொடங்கினாள். இடையில் செருகியிருந்த கொசுவத்தை எடுத்து சுழற்றி தோளிலிருந்து விடுவித்து காற்றில் வீசி கையில் சுருட்டி பந்தாக்கி வலக்கையில் எடுத்துக்கொண்டு நின்றாள். அவள் செய்வதன் பொருளை உணர்ந்த மாயையும் தன் தாலத்தை நிலத்தில் வைக்காமலேயே ஆடையைக் கழற்றி வலக்கையில் எடுத்துக்கொண்டு அசையாமல் நின்றாள்.

கோரையில் பற்றிய நெருப்பிலிருந்து பச்சைத்தழை கருகும் புகைமணம் எழுந்தது. தைலமெரியும் மணமாக அது மாறியது. மஞ்சளாகவும் பின் சற்றே நீலமாகவும் கலைந்து பரவிய காற்றால் ஊதப்பட்டு சுடர் சடசடவென்ற ஒலியுடன் சிதறி எழுந்து கோரைத் தாள்களில் பற்றி ஏறியது. பக்கவாட்டில் இருந்து வீசியகாற்று கோட்டையில் மோதிச்சுழன்று அவர்களுக்குப்பின்னாலிருந்து விசையுடன் வீசியது. காற்றில் ஏறி திளைத்தாடிய தழல் ஒன்றிலிருந்து ஒன்றென எழுந்து கோரைத்தாள்களை கவ்விக்கொண்டு விரிந்தது. ஒளிமிக்க திரவம் கலத்திலிருந்து கொட்டப்பட்டு சிதறிப்பரவுவது போல தழல் நாற்புறமும் வடிவற்ற பரப்பாக விரிவதை மாயை கண்டாள்.

அப்பால் புதர்களில் இருந்து நரிகள் ஊளையிட்டன. கோரைகளை வகுந்தபடி அவை ஓடுவது தெரிந்தது. புகையும் கரிச்சுருள்களுமாக வெங்காற்று மேலெழுந்து சென்றது. நெருப்பு அணையுடைத்துப் பரவும் நீரென நான்கு பக்கமும் பெருகி விரிந்தது. அது எரித்துச்சென்ற பின் கிடந்த சாம்பல் படிந்த சதுப்பின் மேல் காலெடுத்து வைத்து திரௌபதி நடந்தாள். பொசுங்கித் தீராத புற்குற்றிகள் கால்பட்டு கனல்பொறிகளாகி சிதறின. உடைந்த கற்சில்லுகளில் அனல் பளபளத்தது. சதுப்பில் வெந்த தவளைகள் மல்லாந்து கால் நீட்டி துடித்துத் துடித்து விழுந்துகொண்டிருந்தன. வெந்து உரிந்த பாம்புகள் வளைந்து அதிர்ந்து சொடுக்கி நீண்டன.

அருகே தேங்கிய நெருப்பு என ஒளிவிட்டது நீர்ப்படலம் என்று மாயை கண்டாள். திரௌபதி தன் மரவுரியாடையை அந்த நீரை நோக்கி வீசியபின் அதற்கு வந்து சேர்ந்த அகன்ற நீரோடை வழியாக நடக்கத் தொடங்கினாள். மாயையும் ஆடையை நீரில் போட்டுவிட்டு அவளை பின்தொடர்ந்தாள். சதுப்பு நீரோடையில் முழங்கால் வரை அழுந்தும் சேறுதான் இருந்தது. கலங்கி எழுந்த சேற்றில் புளித்த மாவின் வாசனை எழுந்தது. சிறுதவளைகள் புல்வெளியில் இருந்து நீர் நோக்கி தாவின. அவர்களைச் சூழ்ந்து செந்தழலால் ஆன ஏரி அலையடித்தது. ஓடிக்களைத்த புரவிக்கூட்டம் போல மூச்சிரைத்து, செம்பொறிகள் வெடித்துச் சிதறி கொப்பளித்தது கானெரி.

நீரும் நெருப்பாகி ஒளிவிட நெருப்பில் நீந்திச்சென்றுகொண்டிருப்பது போல மாயை உணர்ந்தாள். திரௌபதியின் உடலில் வியர்வை பரவி கரிய வளைவுகளில் எல்லாம் செவ்வொளி தெரிந்தது. நெருப்பேந்திய முலைகள். உருகிக்கொண்டிருக்கும் இரும்புச்சிலை என தோள்கள். ஊதிக் கனலும் கரி என விழிகள். எக்கணமும் தழலாக வெடித்து எரிந்து நின்றாடக்கூடும் என்றிருந்தாள்.

நெருப்பலைப்பெருக்கு நடுவே உக்ரசண்டிகையின் ஆலயம் மிதந்து அலைவுறுவது தெரிந்தது. அதன் கருவறைக்கு முன்னாலிருந்த பாறைப்பரப்பைச் சூழ்ந்து அனலின் அலைகள் அறைந்து சுழித்தெழுந்தன. அருகே நின்றிருந்த பாலைமரம் இலை பொசுங்கி தழைந்து அசைந்தது. அதிலிருந்த பறவைக்கூட்டம் கலைந்து வானிலெழுந்து புகைவெளியில் திசையழிந்து கூவி சிறகடித்து மோதிச்சுழித்தது. தொலைவில் இன்னொரு மரம் பற்றிக்கொண்டது. தீநாக்கு வானிருளை நக்க நீண்டு நெளிந்தது. அப்பால் சிற்றாறின் சதுப்பில் ஓடிய நீர்த்தடங்கள் செந்நெருப்பு வரிகளாக இருந்தன. குளம்புத்தடங்கள் செவ்விழிகளாகத் தெரிந்தன. ஆறு எரிப்பெருக்கென வழிந்து வளைந்தோடியது.

பாறையை அடைந்ததும் திரௌபதி குனிந்து எரியும் கோரைத்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டு நடந்தாள். காலடியால் நடைபாதையென ஆகியிருந்த சதுப்புத்தடத்தின் இருபக்கமும் தீ நின்றெரிந்தது. அவள் ஆலயத்திற்குள் சென்று பூசைத்தாலத்தை தேவியின் முன் வைத்தாள். அன்னை காலடியில் இருந்த கல்லகலில் நெய் ஊற்றி தன் கையில் எரிந்த கோரையால் அதன் திரியை ஏற்றினாள். மாயை தனது தாலத்தை கொண்டு சென்று சண்டிகையின் ஆலயப்படிகளில் வைக்க அதை திரௌபதி எடுத்துக்கொண்டாள்.

சூழ்ந்து கொந்தளித்த செந்தழல் ஒளியில் சுவரோவியமாக எழுந்தருளிய சண்டிகையும் கனலுருவாக தெரிந்தாள். செம்மை, மஞ்சள், வெண்மை நிறங்களால் ஆன அன்னையின் இருபது கைகளில் இருந்த படைக்கலங்களும் விழித்த வட்டவிழிகளில் பதிக்கப்பட்ட செம்பளிங்குக் கற்களும் சுடர்ந்தன. வெறிநகையில் விரிந்த வாயின் இருபக்கங்களிலும் வளைந்த பன்றித்தந்தங்களில் குருதி என அனலொளி வழிந்தது. குருதி வழிய பிளந்த அல்குல் வாயிலுக்குள் இருந்த மும்மூர்த்திகளின் விழிகளும் எரிந்தன.

நெருப்பு நாய்க்குட்டிகளென வந்து காலை முத்தமிட்டது. மாயை துள்ளி விலகி ஓடி பாறைமேல் ஏறிக்கொள்ள உவகைகொண்ட நாய்க்குட்டிகள் துள்ளிக்குதித்து துரத்திவந்தன. அவள் ஓடிச்சென்று பாறைப்பரப்பில் ஏறிக்கொண்டாள். அதன் மேல் வெள்ளெலும்புகள் சிதறிக்கிடந்தன. ஊன் எஞ்சிய தடித்த தொடை எலும்புகள். வளைந்த விலாவெலும்புகள். அவள் கால்களால் அவற்றைத் தட்டி விலக்கியபின் நின்று கொண்டு ஆலயத்திற்குள் பூசை செய்துகொண்டிருந்த திரௌபதியை நோக்கினாள். எதிர்த்திசையிலிருந்து எழுந்து வந்த காற்று கோரைப்புல்வெளிமேல் எழுந்து பரவ மொத்தப்புல்வெளியும் கருகி ஒளியிழந்து குப்பென்று மீண்டும் செந்தழல்பரப்பாகியது. தெற்குக்கோட்டை வாயில் வரை நின்ற பல மரங்கள் எரிந்து எழுந்தன.

மாயை கைகளை நெஞ்சில் சேர்த்துக் குவித்தபடி காற்றுவரும் வடக்கு திசையை திரும்பி நோக்கினாள். காற்று புகைத்திரையை அள்ளி விலக்க வானில் எழுந்து நிறைந்திருந்த விண்மீன்கள் தெரிந்தன. சிலகணங்களிலேயே அவள் அசையாத விழியாக குனிந்து அத்தழலாட்டத்தை நோக்கிக்கொண்டிருந்த துருவனை கண்டுகொண்டாள். மயக்குற்றவள் போல அண்ணாந்து அதையே நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

[பிரயாகை முழுமை]


Venmurasu V

Prayagai is the story of Draupadi's birth, youth and marriage with the Pandavas. In parallel it describes the rise of Krishna and his city of Dwaraka.!